உலகத்தமிழ்

டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலுஉலகத்தமிழ்

டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு‎பதிப்புரை

தமிழ் எழுத்தாளர்களின் நன்மைக்காக, எழுத்தாளர்களின் சொந்த முயற்சியால், எழுத்தாளர்களே நடத்தி வருவது தமிழ் எழுத்தாளர்கள் கூட்டுறவுச் சங்கம். தமிழ் நாடு முழுவதும் பரவியிருக்கும் பல எழுத்தாளர் இதில் உறுப்பினராய் இருக்கின்றனர். இச் சங்கம் இதுவரை தமிழ் உறவு என்னும் வெளியீட்டு முத்திரையின் கீழ் 90 தமிழ் நால்களைப் பல துறைகளிலும் வெளியிட்டிருக்கிறது!.

இது 66வது நூலின் மூன்றாவது பதிப்பு.

பாரிசில் நடந்த மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டுக்குத் தமிழக அரசின் பிரதிநிதியாகச் சென்று வந்த சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் திரு. நெ. து. சுந்தரவடிவேலு அவர்கள், தமது பயண அனுபவங்களையும் மாநாட்டு நிகழ்ச்சிகளையும் தமது எண்ணவோட்டங்களுடன் கலந்து சுவையாக அளித்துள்ளார்கள், நம் கருத்துகளிலும் எதிரொலிக்க வல்லவை. இவை; பதிக்கத்தக்கவை கூட.

இதனைச் சங்கத்தின் வாயிலாக வெளிக் கொணர இசைந்தமைக்குத் திரு. நெ. து. சுந்திரவடிவேலு அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழ் எழுத்தாளா தன்னம்பிக்கையுடன் தமது இலக்கிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு, தமிழ் உறவு நூல்களை வாங்கித் தமிழ் மக்களும் கல்வி நிறுவனங்களும் நூலகங்களும் பேராதரவு தரவேண்டுகிருேம்.2/96. பெரிய தெரு,

சென்னை-5

20–7 – 1977 ‘தமிழுறவாளர்’

 நெடுநாளைய பழக்கத்தின் கொடுமையால் நாணி நாணி ஒதுங்கிப்பெரியவர்கள் கண்களில் படாமல் நிற்கும் என்னையும் பாரிசு மாநாட்டிற்கு அரசின் பிரதிநிதிகளில் ஒருவராக அனுப்பி வைத்தார் தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் கருணாநிதி. தமிழ் நாட்டின் தன்னேரிலாத முதல்வர், தமிழ்த் தாயின் தவப்புதல்வர், கலைஞர் கருணாநிதி அவர்களின் நல்லாதரவு. மூன்றாம் உலகத் தமிழ் மாநாட்டிலும் நான் கலந்துகொள்ளும் நற்பேற்றினை நல்கிற்று. அப்பெரு மகனார்க்கு எப்படி நன்றி சொல்ல? கைம்மாறு கருதா மாரிமாட்டு என்னாற்றுங் கொல்லோ உலகு?

முன்றாம் உலகத் தமிழ் மாநாட்டில், மாணவனாயிருந்து கற்றதோடு, ‘கல்விபற்றிக் கவி பாரதி’ என்னும் தலைப்பில் கட்டுரையொன்றும் கொடுக்கும் நல் வாய்ப்பையும் பெற்றேன்.

மாநாட்டிற்குச் சென்ற போதும், மாநாட்டில் கலந்து கொண்ட போதும், பின்னரும் நான் கண்டவை பல; கேட்டவை பலப்பல. அவை என் உள்ளத்தில் எழுப்பிய எண்ணங்கள், தொடர் கட்டுரைகளாய் உருப்பெற்றன.

நான் கற்றுக்குட்டி எழுத்தாளன். எனவே, என் எழுத்துக்களில் உண்மை உறுத்துமளவிற்கு இலக்கிய நயம் இல்லாமல் இருந்தால் வியப்பிற்குரியதன்று: எனினும் உலகத் தமிழ் மாநாடு பற்றி நான் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளை வெளியிட மனமுவந்து முன் வந்தார் ‘கல்கண்டு’ ஆசிரியர் திரு. தமிழ்வாணன் அவர்கள். இருபது ஆண்டுகளாக கல்கண்டில் எழுத யாருக்கும் இடம் கொடாத தமிழ்வாணன் என்னத் தொடர்ந்து எழுத விட்டது என்னுடைய சிறப்பா? இல்லை. விளக்கஞ் சொல்ல முடியாத நற்பேறு. திரு. தமிழ்வாணன் கொடுத்த உரிமை இன்று ‘உலகத்தமிழ்’ என்னும் நூலாகக் காட்சியளிக்கிறது.

என் இளமைப் பருவத்தில், திரு. சேஷாசலம் அய்யர் அவர்கள் நடத்திய ‘கலா நிலையம்’ மூலம் என் தந்தை எனக்கு ஊட்டிய தமிழ்ப்பற்று. எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த நல்லாசிரியர்கள் திருவாளர் நரசிம்மாச்சாரி யாராலும், திருவாளர் நமச்சிவாய முதலியாராலும் காத்து வளர்க்கப்பட்டது. பண்டிதர் எஸ். எஸ். அருணகிரிநாதர், திரு. வி. க., மறைமலை அடிகளார். சோமசுந்தர பாரதியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகிய தமிழ்ப் பெரி யார்களின் எழுத்துக்கள் என் தமிழ்ப் பற்றிற்கு நெய் வார்த்து வளர்த்தன, வளர்க்கின்றன.

ஆழ்ந்த புலமை மிகுந்தால் சலனம் குறையலாம். பற்றுமட்டுமே மிகுந்துள்ள எனக்கு, தமிழைத் தமிழாகக் காக்கவேண்டுமே என்னும் துடிப்பு. தகுதியில்லாவிட்டாலும் தாயிடம் பற்றுக் கொண்டு, தாய்க்குக் தீங்கு நேராதபடி காக்கத் துடிக்கும் நிலையில் உள்ளவன் நான். எனவே, தமிழணங்கு. உலகப் புகழுக்கு மயங்கி கண்டவர்களிடம் போய்ச் சிக்கிவிடக்கூடாதே என்று கவலைப்படுகிறேன். அவள் உலக அரங்கில் காட்சியளிக்கும் போது அவளுக்குச் சிறு தீங்கும் நேராவண்ணம் விழிப்பாயிருந்து காக்கும் ஆற்றல் மறவர்கள் தமிழ் மொழிக்குத் தொடர்புடைய, தமிழ் மொழியின் தொன்மையை எடுத்து விளக்கத் துணைபுரியக் கூடிய பல்வேறு துறைகளிலும் அறிஞர்களான தமிழ் மறவர்கள்-பலர் தேவையென்பதை பெரிதும் உணர்கிறேன். அவ்வுணர்வை இயல்பாய் கொட்டியுள்ளேன். மெருகிட்டுக் காட்ட ஆற்றல் அற்றேன். இளைஞர்களைத் தூண்டும் என்னும் ஆசையால், என் ஏக்கத்தை உருவாக்கியுள்ளேன். ஆக்கத்தில் திளைப்போர் பொறுத்தருள்க.

பாரிசு மாநாட்டிற்கு என்னை அனுப்பி வைத்த தலைவர் நல்லவர், வல்லவர், முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு மிகப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். காலமெல்லாம் நன்றியுடையவனாவேன்.

‘கல்கண்டில்’ வெளியான கட்டுரைகளைத் தொகுத்து, ‘உலகத் தமிழ்’ என்னும் தலைப்பில் இந்நூலை வெளியிடும் தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி. அதன் செயலர் திரு. க. சோமசுந்தரம் அவர்களுக்குத் தனி நன்றி உரியதாகும்.

கட்டுரைகளுக்கு இடம் தந்து என்னை ஊக்கிய திரு. தமிழ்வாணன் அவர்களுக்கும், அவரோடு தொடர்புபடுத்திய ‘சத்திய கங்கை’ ஆசிரியர் திரு. பகீரதன் அவர்களுக்கும் நெஞ்சு நிறைந்த நன்றி.சென்னை-30

21-12-1971 நெ. து. சுந்தரவடிவேலுபொருளடக்கம்

1 விண்ணிலே தமிழ் … 9
2 வினாத்தாள் விடவில்லை … 15
3 வீழ்த்தும் எழுத்து ஜெர்மானியர் … 20
4 ஜினிவாவில் முதல் நாள் … 28
5 சுவிட்சர்லாந்தின் சிறப்பு … 33
6 உல்லாசப் பயணம் … 37
7 கோட்டைவிட்ட கோட்டை … 44
8 உலகப் பல்கலைக்கழகச் சேவை … 51
9 போசிரியர்களின் பணி … 61
10 நாசக் கருவிலே மானுடம் … 65
11 பாரிசில் தமிழ் முழக்கம் … 70
12 தொல்பொருள் ஆராய்ச்சி … 77
13 யாரை நம்புவது? … 81
14 ஒரடி உயர்ந்தோம் … 85
15 மாநாட்டு உரைகள் … 90
16 கல்வி பற்றிக் கவி பாரதி … 95
17 நம் பொறுப்பு … 99
18 இதழ்களின் தமிழ்ப் பணி … 103

 

1. விண்ணிலே தமிழ்எவெரெஸ்டைப் பிடித்தேன்; கனவிலல்ல; உண்மையாகவே! சிரிக்காதீர்கள். பம்பாயில் எவரெஸ்டைப் பிடித்தேன். நான் பிடித்தது, இமாலயச் சிகரத்தையன்று எவெரெஸ்ட் ஒட்டலையும் அன்று; ஏர் இந்தியாவிற்குச் சொந்தமான விமானம் ஒன்றின் பெயர் தான் எவெரெஸ்ட். அதைப் பிடித்துப் பாரிசிற்குப் புறப்பட்டேன்-மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ளத்தான்.

அவ்வானவூர்தி குறிப்பிட்ட நேரத்தில் பம்பாயை விட்டுப் புறப்பட்டது. நம்மாலும் குறித்த நேரப்படி செயலாற்ற முடியுமென்பதை அது காட்டிற்று. திருப்தி யோடும் மகிழ்ச்சியோடும் வானிலே பறந்தேன்.

வானவூர்திக்குள் நுழைந்ததும், "வாங்க, இலண்டன் வருகிறீர்களா?" என்று தமிழிலே வரவேற்றார் விமானத் தொண்டர் ஒருவர். "இப்போது பிராங்போர்ட் வரை; அங்கிருந்து ஜினிவா; பின்னர் பாரிசு; அப்புறம் இலண்டன் வழியாகச் சென்னை" என்று பதில் கூறினேன். எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தைக் காட்டினார்.

மண்ணிலும் விண்ணிலும் தேன் தமிழ் ஒலிக்கக் கேட்ட மகிழ்ச்சியோடு இடத்தில் அமர்ந்தேன். இவரைப் போன்று ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர் புதுப்புதுப் பணிகளிலே - இக்காலப் பணிகளிலே - நுழைந்து, பண்ணுடைத் தமிழைப் பாரெல்லாம் ஒலிக்கும் நாள் எந்நாளோ? அந் நாள் விரைவதாக!’ என்ற உளத்தால் வழுத்தினேன்.

பறந்துகொண்டிருக்கையில் அந்தத் தமிழ் இளைஞர் என்னிடம் வந்து புன்முறுவலோடு நின்றார். "தங்களைக் கல்வி இயக்குநராகவே அறிவேன். புரசை புனித பால் உயர்நிலைப்பள்ளியில நான் படித்தபோதே தங்களைத் தெரியும். தங்களுக்கு என்ன உதவி வேண்டும்? என்று அன்போடு கேட்டார். இயக்குநரை நினைக்கிறவர்களும் உள்ளார்களே என்று உணர்ந்து மகிழ்ந்தேன். அந்த இளைஞர் பெயர் திருமலை. புரசைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்து கொண்டேன்.

ஊர்தி வானத்தை எட்டியதும், பழச்சாறு வழங்கப்பட்டது. அதைச் சுவைத்துக் குடித்து முடித்ததும், காலைச் சிற்றுண்டி பரிமாறத் தொடங்கினர். சிற்றுண்டி பேருண்டியாகவே இருந்தது. முதலில் பலவகைப் பழக் கலவை; அடுத்து 'சிரயல்ஸ்'- அதாவது, பாலில் ஊற வைத்து உண்ணும் சோளப்பொரி, பிறகு பூரியும் கொண்டைக்கடலைக் கறியும்; உப்புமா, காய்கறி; கட்லட் இன்னும் முடியவில்லை. ஒரு தட்டுத் தயிர்; பர்பி; பாலடை; பழம்; காப்பி அல்லது தேநீர். இத்தனையும் சேர்ந்ததே சிற்றுண்டி பெயருக்கும் பொருளுக்கும் பொருத்தமுண்டா!

சிற்றுண்டி முடியும் சமயம்.

இப்போது அகமதாபாத்திற்கு மேலே பறக்கிறோம். இருபத்தைந்தாயிரம் அடி உயரத்தில் இருக்கிறோம். தில்லியில் பளிச்சென்று வெளிச்சமாயிருக்கிறது என்று விமானமோட்டி அறிவித்தார்.

சிற்றுண்டி களைப்புத் தீருமுன் தில்லியை அடைந்து விட்டோம். குறித்த நேரத்தில் சேர்ந்துவிட்டோம். அங்கு நாற்பத்தைந்து நிமிடங்கள் தங்கல். தில்லியில் இந்தியப் பேரரசின் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருக்கும் டாக்டர் கரன்சிங் அவர்கள் விமானமேறி ஞர்கள். கன்னியாகுமரியும் காசுமீரமும் இணைந்து செல்வதாக இருந்தது இந்நிகழ்ச்சி. பிறகு அங்கிருந்து விமானம் டெஹ்ரானுக்குப் புறப்பட்டது.

“இருபத்தொன்பதாயிரம் அடியில் எண்ணுாற்று அறுபது கிலோ வேகத்தில் பறக்கிறோம். 2,660 கிலோ தூரத்திலுள்ள டெஹ்ரானுக்குப் போய்ச் சேர மூன்று மணி இருபது நிமிடம் ஆகலாம். விமானம் பாகிஸ்தானிலுள்ள முல்டான், ஆப்கானிஸ்தானத்திலுள்ள காந்தாரம் ஆகிய நகரங்களின் மேல் பறந்து சென்று டெஹ்ரானைச் சேரும்,” என்று விமானயோட்டி அறிவித்தார்.

முல்டான் என்றதும் முதலில் தமிழ் பாட்டில் பல நகரங்களில் வந்து வட்டித் தொழில் நடத்தும் மூல்தானியர் நினைவிற்கு வந்தனர். வருவாய்க்கேற்பச் செலவைக் கட்டுப்படுத்தத் தெரியாது தவிக்கும் தமிழரை நினைந்து ஏங்கினேன்.

ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை

போகாறு அகலாக் கடைஎன்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் வள்ளுவர் கூறிய அறிவு விதை இன்னும் எத்தனை காலத்திற்கு முளைக்காதிருக்குமோ என்று வருந்தினேன். கவலைக் காரிருளில் மின்னல் பளிச்சிட்டது.

குருநானக் மூல்டான் நகருக்குச் சென்ற நிகழ்ச்சி நினைவிற்கு வந்தது. அவர் சென்றபோது மூல்டானில் சமயத் தலைவர்கள் பலர் இருந்தனர். குருநானக்கின் வருகை அவர்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே சீடர்கள் லம் கோப்பை நிரம்பப் பாலை அவருக்கு அனுப்பி

வைத்தனராம். மூல்டானில் ஏற்கனவே அமுதம் நிறைந்துள்ளது. மேற்கொண்டு அமுதத்தைக் கொள்ள இடமில்லை” என்று அதன்முலம் உணர்த்தினராம். குருநானக் வெகுளவில்லை; மணமுள்ள சிறிய மென்மலர் ஒன்றை அப்பாலின்மேல் இட்டு, பால் சிந்தாமல் திருப்பி அனுப்பினராம்.

தொடர்பு?

மனித வாழ்க்கைக்கு வேண்டிய அறிவு - அமுதம் - தமிழில் நிறைந்திருக்கிறது. மற்றவர்கள் போட்டியைப் பற்றியே கருத்தையெல்லாம் அழியவிடுவதற்குப் பதில் அவ்வமுதத்தை உண்டு, தெளிவும் தெம்பும் பெற்று ஆக்கப் பணிகளில் ஈடுபடுவோம் என்று உறுதி கொண்டேன்.

அக்கருத்தோட்டத்தைக் கலைக்க வந்தாள் கன்னி.

“என்ன குடிக்கிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டே நின்றாள் விமானப் பணிமங்கை. “ஒன்றும் வேண்டா” என்று தலையாட்டினேன். “ஒன்றுமே வேண்டாவா? சேம்பெய்ன், வெள்ளை ஒயின், சிவப்பு ஒயின், பீர்-” இவற்றுள் ஏதாவது கொஞ்சம் கொடுக்கட்டுமா? என்றாள். மீண்டும். எதுவும் வேண்டாவென்று நான் கூறியது அவளுக்குத் திருப்தியைக் கொடுக்கவில்லை. "ஆரஞ்சுச் சாறாவது குடியுங்கள்" என்று கொண்டு வந்து வைத்து விட்டாள். சிறிது நேரத்தில் சிற்றுண்டி கொடுக்கப்பட்டது. இப்போது அது சிற்றுண்டியே.

சிற்றுண்டி பரிமாறிய பின், தட்டு முட்டுச் சாமான்களை எடுத்து வைத்துவிட்டு, அம்மங்கை பயணிகளோடு உரையாடினாள்; என்னிடமும் உரையாடினாள். “எங்கே போகிறீர்கள்? எத்தனே நாள் இருப்பீர்கள்?” என்பதிலே உரையாடல் தொடங்கிற்று. “என்ன அலுவல்?” என்ற கேள்விக்குப் போயிற்று. நான் யாரென்று அறிந்ததும், “பம்பாய் மாநிலத்தில் கல்வி இயக்குநராக இருந்த மூல் என்பவரைத் தெரியுமா? அவரது சொந்தக்காரி நான். மூல் குடும்பங்கள் சிலவே” என்று கேள்வியும் அறிவிப்பும் சேர்ந்து வந்தன. அவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குநராக இருந்தவர். “அவரைப் பார்த்தறியேன், கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றதும் மகிழ்ந்தாள். இப் பணிமங்கையோ பம்பாய் பல்கலைக் கழகப் பட்டதாரி; முதுகலை இலக்கியப் (எம். ஏ.) பட்டத்திற்குப் படித்துக்கொண்டிருக்கையில் இப் பணிக்கு வந்து விட்டாளாம். இலக்கிய ஆர்வம் இன்னும் நீடிக்கிறதாம். சிற்சிலபோது, திங்கள் இதழ்களுக்குக் கட்டுரை எழுதித் திருப்தி அடைவதாகத் கூறினாள். தமிழ் நாட்டில் கல்வி விரைந்து பரவியுள்ளதாகப் பாராட்டினாள். தமிழ் நாட்டு மாணவர்கள் அமைதியாக இருப்பவர்கள் என்றும் புகழ்ந்தாள். மாண்டிசாரி பள்ளிகளில் அவளுக்கு ஆசையாம். அவை பல ஏற்பட வேண்டும் என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டாள்.

பல நிமிடங்கள் ஓடின. காந்தாரத்திகுத் தெற்கே பறப்பதாக விமானமோட்டி கூறவும் சாளரததின் வழியே பார்த்தோம். பல நூறு கிலோ தூரம் பொட்டல் காடாகக் காட்சியளித்த மலைப்பகுதிகளைக் கண்டுவந்த எங்களுக்கு, காந்தாரம் பசுமையாகக் காட்சி தந்தது. இதிகாச காந்தாரி நொடிப்பொழுது நினைவில் வந்து மறைந்தாள். மீண்டும் பச்சை தோன்றா நிலப் பரப்பு. டெஹ்ரான் வரும்மட்டும் அப்படியே. டெஹ்ரானைச் சுற்றியும் பாலைக் காட்சியே. பெட்ரோல் வளத்தால் வளர்ந்துள்ள நாகரிக நகரம் அது. வானத்திலிருந்து பார்க்கையில் புதிதாகவும் ஒழுங்காகவும் கட்டப்பட்ட நகரமாகத் தோன்றிற்று விமான நிலையத்தைச் சுற்றிச் சோலை

களைக் கண்டோம். இச்சிறு பாலையில் சோலையமைக்க பெரும்பாடு பட்டுமல்லாது, புது விஞ்ஞான அறிவும் பயன்பட்டிருக்கும். இயற்கைப் பசுமையே காணாத அப் பகுதியில், விஞ்ஞான அறிவின் துணைகொண்டு, பெரும் பணமும் உழைப்பும் செலவழித்து வளர்க்கும் பசுமை தழைத்துப் பரவுவதாக!

டெஹ்ரான் வந்தடைவதற்குமுன், மீண்டும் தண்ணி ஊற்றினார்கள். எந்தத் 'தண்ணி' யும் வேண்டாவென்று மறுத்த என்னை, மேனாட்டுப்பாட்டிகள் இருவர் பரிதாபத்தோடு பார்த்தது தெரிந்தது. பரிதாபப்படட்டும்! நானா குறைந்து விடப்போகிறேன்?

'தண்ணி' போட்டதும் பகல் உணவு பரிமாறினர்கள் அப்பப்பா எத்தனை வகைச் சாப்பாடு! மிளகுத் தண்ணி சூப்பு, சைவப் புலவு, காய்கறிக் குருமா; நான்கு வகைக் காய்கறிப் பதார்த்தம், பூரி; உருளைக்கிழங்கும் பட்டாணியும் கலந்து சமைத்த கறி, தயிர்க் காராபூந்தி: ஐஸ்கிரீம்; பழங்கள், காப்பி அல்லது தேநீர்; பிஸ்கோத்தும் பாலாடையும்; இடைஇடையே 'மது' எவ்வளவு தடுத்தும் கேளாமல், ஒவ்வொரு வகையும்-மது நீங்கலாக-எனக்கும் பரிமாறினர்கள். மாமிச உணவினர்க்கு இதற்கு மேலும்.

சாப்பாட்டுப் போட்டியில் வெற்றி பெறும் நிலையில் இருந்த என் மாணவப் பருவத்தில்கூட இவ்வளவும் சாப்பிட்டிருக்க முடியாது, வயிறு ஒட்டிப்போன இப்போதோ, தொட்டுத்தொட்டுக் கொறித்து விட்டு வைத்து விட்டேன். ஐயோ ஒன்றும் உண்ணவில்லையே. நன்றாக இல்லையோ என்று வருந்தினர் பரிமாறுவோர். இவ்வளவு உணவுப் பொருள்கள் வீணாகிறதே என்று ஏங்கினேன் நான்.

 

2. வினாத்தாள் விடவில்லைடெஹ்ரானுக்கு தொண்ணூறு கிலோ துாரத்தில் பறக்கும்போது இப்படியொரு அறிவிப்பு வந்தது.

“டெஹ்ரானுக்குத் தொண்ணுாறு கிலோவில் இருக்கிறோம். ஆகவே இறங்கத் தொடங்குகிறோம். 31000 அடியிலிருந்து 19000 அடிக்குச் சில நிமிடங்களில் இறங்கிவிடுவோம். அவரவர் இடத்தில் அமர்ந்து, கச்சைகளைக் கட்டிக்கொள்ளுங்கள்” என்று அறிவிக்கப் பட்டது.

மிக உயரத்தில் இருந்தாலும், முன்னெச்சரிக்கையாக, முன்னதாகாகவே தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தினை இது பதிய வைத்தது. தன் உணர்ச்சிகளே , தன் நாவைக் கட்டி வைத்தால்தான் சட்டென்று உயரத்தில் இருந்து கிழே இறங்கினாலும் தீங்கு விளையாது. நிலையில் திரியாது பெருமையோடு வாழ முடியும் என்னும் தெளிவு பிறந்தது.

டெஹ்ரானைக் குறித்த நேரத்தில் அடைந்து விட்டோம். டெஹ்ரான் விமான நிலயத்தில், பயணிகள் தங்குமிடத்தில், இளைஞர் இருவர் முன் வந்து, “எவ்வளவு தூரம் செல்கிறிர்கள்?” என்று தமிழில் வினவினர். சென்னை எம். ஐ. டி. யில் பெளதிகத் துறை ஆசிரியராகவுள்ள திரு. வெங்கடேசன் ஒருவர்; மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பகுதி நேர ஆசிரியராகவும், மற்ற கேரம் சாடர்டு அக்கௌண்டண்டாகவும் பணியாற்றும் திரு சந்திரன் மற்றொருவர். இருவரும் 'புல்பிரைட்' உபகாரச் சம்பளம் பெற்றுக்கொண்டு அமெரிக்காவிற்கு மேல்படிப்பிற்குச் செல்கிறார்கள்

அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் 9.500 பேர் உள்ளனர். அவர்களுள் எண்ணுாறு, தொள்ளாயிரம் பேர் தமிழ் நாட்டவர். ஆகவே அவர்கள் நம் நாட்டில் இருப்பதாகவே நினைத்துக்கொண்டு அமைதியாகவும் நன்றாகவும் படித்துத் தங்களுக்கு நன்மையும் நாட்டுக்குப் பெருமையும் தேடிக்கொண்டு வர வாழ்த்தினேன். பாடத் திறமையோடு ஆங்கில மொழி அறிவும் நன்றாக இருந்ததால், அவ்விளைஞர்களுக்கு அமெரிக்காவில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பட்டிக் காட்டுப் பரமசிவன்களுக்கு இவ்வாய்ப்புகள் வேண்டுமே? அவர்கள் ஆங்கில அறிவும் வளர்ந்தால் நன்மை.

டெஹ்ரான் விமான நிலையத்திலே பயணிகள் தங்குமிடத்தில் நான் கண்டதைச் சொல்லவேண்டும் அல்லவா? அங்கே மேனாட்டு நாகரிகம் விரைந்து பரவுகிறது. பெண்களில் பலர், மேனாட்டுப் பெண்களைப் போலக் கெளன் அணிந்திருந்தனர். முழங்காலுக்கு மேல் ஆன கெளன் போட்டுக்கொண்டிருந்த அவர்கள் ஏனோ முக்காடும் போட்டிருந்தார்கள்; 'பர்தா'வின் பயன் எதையும் அந்த முக்காடு கொடுப்பதாகத் தோன்றவில்லை. ஆனாலும் குட்டைக் கௌன் அணிந்திருந்த பெண்கள் அதை ஏன் விடவில்லை? நெடுநாளாகத் தொடரும் பழக்கம், பயன்படாத போதும், நீங்காச் சுமையாகத் தொடர்வதற்கு இது ஒர் எடுத்துக் காட்டாகும்.

முக்காடில்லாத, குட்டைக் கெளன் அணிந்த இளம் பெண்கள் இருவர் பயணிகளிடம் ஆங்கில வினாத்தாள்களை வழங்கினர். காலமெல்லாம், வினாத்தாள்; அது வெளியாகாமல் இருக்க வேண்டுமே; தவறாகாதிருக்க வேண்டுமே; பாடத் திட்டத்திற்கு அப்பால் போகாதிருக்க வேண்டுமே," என்ற கவலையோடு இருக்கும் எனக்கு இது சிறிது எரிச்சலை ஊட்டிற்று. ஆயினும், அதைப் பூர்த்தி செய்து தரும்படி நல்ல ஆங்கில உச்சரிப்போடு இனிமையாக வேண்டியதைத் தட்ட முடியவில்லை. வினாத்தாளைப் பார்த்தேன். பெயர் குறிப்பிடக் கேட்கவில்லை. " எங்கள் ஊரில் தங்குவீர்களா? தங்காவிட்டால் காரணம் என்ன? காலமின் மையா? இங்குள்ள வசதிக்குறைவா? இங்கு உங்களுக்கு என்னென்ன வசதிகள் தேவை?" இப்படிப்பட்ட கேள்விகள் இருந்தன. நாங்கள் மூவரும்-தமிழர்கள் பதில் எழுதிக்கொடுத்தோம். இரான் நாட்டிற்குப் பயணிகள் வருவதைப் பெருக்குவதற்காக இந்த ஆய்வு என்று குறித்திருந்தார்கள். பெண்கள் இத்தகைய வேலை மட்டுமா செய்கிறார்கள்? துப்புரவுப் பணிகளையும் பராமரிப்புப் பணிகளையும் பெண்கள் செய்யக் கண்டோம். ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாவதற்கான இவ்வறிகுறிகள் நம்பிக்கை ஊட்டுவன.

டெஹ்ரானை விட்டுப் புறப்பட்டோம் அங்கு ஆஸ்திரேலியக் குடும்பம் ஒன்று விமானத்தில் ஏறியது. கணவன், மனைவி, நான்கு வயதுப் பையன் ஒரு வயதுக் குழந்தை ஆக நால்வர். பையன் துருதுரு வென்று இருந்தான். என் பக்கத்தில் இருந்த சாளரத்தின் வழியே பார்ப்பதற்காக அருகில் வந்து நின்றன். புதியவனாகிய என்னை எப்படித் தாண்டிப் போவது என்று தயங்கினான். "மாமாவிற்கு 'ஹலோ' சொல்லி விட்டு அனுமதிகேள்" என்று தந்தை ஊக்குவித்தார். "ஹலோ மாமா, சாளரம் வழியே பார்க்கலாமா?" என்று கேட்டான், நான் அனுமதித்தேன். வேடிக்கை பார்த்து அவன் மகிழ்ந்தான்; எனக்குக் காட்டிக்காட்டிப் பூரித்தான். இன்பத்தைத் தனியே துய்க்க முடியுமா!

நாங்கள் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தோம். கீழே கண்ணுக் கெட்டிய தூரம் வெள்ளை வெளேரென்று மேகக் கடல். விமானத்திற்குச் சில அடி உயரத்தில் கருமேகம். இரண்டையும் சுட்டிக்காட்டிச் சிறுவன் சிரித்தான்.

இஸ்தான்புல் நகரத்தின் மேல் 900 கிலோ வேகத்தில் பறக்கிறோம் என்று அறிவிக்கப்பட்டது. அதை எட்டிப் பார்த்துவிட்டு, தந்தையிடமிருந்த நிலப் படத்தில் அந்தரைக் காட்டும்படி கேட்டான். தந்தை படத்தை விரித்தார். சிட்னியைக் காட்டினர். சிங்கப்பூரைக் காட்டினார். வந்த வழியெல்லாம் காட்டிக் கொண்டு . வந்தார். சிறுவன் இயல்பாகக் கற்றான்; எளிதாகக் கற்றான். பத்து வயதுப் பையனான பிறகே நில நூல் பாடத்தில் முதல் முதலாகச் சிட்னியையும் சிங்கப், பூரையும் பற்றிக் கேட்கப் போகிற எங்களுர்ப் பையன் பின்தங்காமல் என் செய்வான்?

ஆஸ்திரேலியர் நான்கு வயது மகனைக் கட்டிப் போடாமல், இங்கும் அங்கும் நின்று காணவும் கேட்கவும் கற்கவும் பொறுமையாக உதவினார். துணை நின்றார், கைக்குழந்தையையும் அப்போதைக்கப்போது ஏந்தி விளயாட்டுக் காட்டிவந்தார். நம் காட்டுத் தந்தையர்களும் இப் பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக, மனைவியின் பொறுப்புகளில் பங்கு ஏற்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

டெஹ்ரானுக்கம் பிராங்க்போர்ட்டிற்கு மிடையில் மீண்டும் ‘தண்ணி’; அப்புறம் பகல் உணவு. மாமிச உணவுத்தட்டை எனக்குக் கொடுக்கமுயன்றார் நான், மரக்கறி உணவினன்’ என்றேன். சில நிமிடங்கள் கழித்து வந்து “மரக்கறி உணவு வரவில்லே. தகவல் இல்லை போலும்” என்று போய்விட்டார் 'பரிமாறுபவர்'. நான் மரக்கறி உணவினன் என்று தில்லிவரை தகவல் கொடுத்தவர்கள், மேற்கொண்டு ஏனோ கொடுக்கவில்லை, அதுவும் நன்மையாகவே முடிந்தது. டெஹ்ரானிலிருந்து பிராங்க்போர்ட்டிற்கும், பிராங்க்போர்ட்டிலிருந்து ஜினிவாவிற்கும் பட்டினியாகவே பயணம் செய்ததால், செரியாமைக்கு ஆளாகாமல் தப்பினேன்.

டெஹ்ரான்-பிராங்க்போர்ட் பயணம் ஐந்தரை மணிக்குமேல் ஆயிற்று. ஒரே மூச்சில் நீண்ட நேரம் பறக்க வேண்டியதாயிற்று. மனத்தில் சலிப்புத் தட்டிற்று. அப்போது இக் கட்டுரை எழுதத் தொடங்கினேன்.

கிழக்கே இருந்து மேற்கே சென்றால் மணி நேரம் குறைந்து கொண்டே போகும். எங்கெங்கே இறங்குகிறோமோ, அங்கெல்லாம் மணியைப் பார்த்து மாற்றி வைத்துக் கொள்வது உண்டு. ஊருக்கு ஊர் மாற்றாமல் கடைசியாக மாற்றிக்கொள்வோமென்று இருந்து விட்டேன். பிராங்க்போர்ட்டில் இறங்கியபோது என் கைக்கடிகாரத்தில் 7-40 மணி (இரவு). ஆனால் பிராங்க்போர்ட் நேரம் பிற்பகல் 3 மணி. சென்னைக்கும் பிராங்க்போர்ட்டிற்கும் மணி வேற்றுமை 4-மணி 40 நிமிடங்களாகும். மணிக்கணக்கில் நாமே முந்தி மூத்த குடி; கருத்திலும் உழைப்பிலும் கூட முந்தியிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்?3. வீழ்ந்தும் எழுந்த ஜெர்மானியர்பிராங்க்போர்ட் என்றதும் பலருக்கு இக்காலத்தில் துணைக்கருவிகள் பல நினைவிற்கு வரும். விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பயணிகளுக்காக வரி விதிக்காத கடைகள் உண்டு. மது வகைகளேப் பலர் வாங்கிக் கொண்டு போவர். புகைப்படக் கருவிகள், படங்காட்டும் கருவிகள், நாடாப்பதிவு இயந்திரங்கள் ஆகியவற்றை நம்மவர் வாங்க முயல்வர். இவை எதிலும் எனக்கு அக்கறை இல்லை. எனவே, நான் கடைகளில் காலத்தைச் செலவழிக்கவில்லை. குழுமியுள்ள மக்களைக் கவனித்தேன்.

பிராங்க்போர்ட் பெரிய விமானச் சந்திப்பு! குறிப்பிட்ட ஒரு நிமிடத்தில் பல ஊர்களுக்கு விமானங்கள் புறப்படுவதைக் கண்டேன். அன்று சரியாக நான்கு மணிக்கு முன்று ஊர்களுக்கு வானவூர்தி புறப்பட்டது. ஊர்தி புறப்பாட்டு அறிவிப்புக்காக மக்கள் துடிப்போடு காத்திருப்பதே ஒரு காட்சி. அங்கு எல்லா நாட்டு மக்களையும் சில மணி நேரத்தில் கண்டுவிடலாம். சமுதாய இயல் ஆய்வாளர்களுக்கு பிராங்க்போர்ட் விமானப் பயணிகள் தங்குமிடம் சிறந்த ஆய்வுக்கூடம். எத்தனே வகையான ஆண்கள் எத்தனே வகைத் தோற்றங்களில் பெண்கள்!

நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது தலை முடியை ஒழுங்காக வெட்டிக்கொள்ளாத மாணவர்களின் முடியைப் பற்றி, 'சோதாப் பையன் சிங்கக் குட்டிக் கிராப்' என்று குறிப்பிடுவது உண்டு. பிராங்க்போர்ட்டில் அத்தகைய கிராப் தலைகள் பலவற்றைக் கண்டேன். ஆண்கள் தலைமுடிமட்டுமன்று காடாக வளர்ந்திருப்பது, பெண்கள் தலையும் புதாகாடு-பெருங்காடு எனத் தோன்றும். இது அங்கு வளர்ந்துவரும் நாகரிகம். மக்கள் காட்டுக்காலத் தோற்றத்திற்குத் திரும்ப விரும்புகிறார்கள் போலும்!

தோற்றமிருக்கட்டும். பழக்கவழக்கத்தைக் கவனிப்போம். அவர்களைப் பார்க்கிறபோது, ‘ஆயிரம் ஆயிரம் ஒளிகொள் வழியில் இறக்கை கட்டிப் பறக்கின்றார்கள்’ என்ற பாரதிதாசனின பாடல் நினைவிற்கு வந்தது. சுறுசுறுப்பு, அநேகமாக மேனாட்டு மக்களின் மூச்சாகவே மாறிவிட்டது. மெல்ல, ஆடி அசைந்து நடத்தல் உல்லாசப் போதில் மட்டுமே. மற்ற நேரங்களில் ஒட்டமும் நடையுமாகவே பார்க்கமுடியும் கறுசுறுப்பும் உழைப்புமே ஜெர்மானிய மக்களை முன்னுக்குக் கொண்டு வந்தன.

ஜெர்மானியை நினைக்குமபோது என் வயதினருக்கு உலகப் போர் இரண்டும் நினைவிற்கு வரும். ஜெர்மானியப் பேரரசை விரிவுபடுத்தி அதன் ஆளுகைக்குள் பல நாடுகளையும் கொண்டுவர முயன்றதன் விளைவு முதல் உலகப் போர். அது கி.பி. 1914 முதல் 1918 வரை கடந்தது. அது விற்போரன்று; ஈட்டிப் போரன்று; வாட்போரன்று; பெருஞ் சேதம் விளைவித்த போர். முடிவு என்ன? ஜெர்மனி தோற்றது . இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய காடுகளின் நேசக் குழு வென்றது. போரில் வென்றவன் வாழ்க்கையில் வென்றவனல்லன் போரில் தோற்றவன் நாட்டில் தோற்றவனல்லன்.

ஜெர்மனியின் தோல்வி, அந்நாட்டில் மன்னர் ஆட்சியை ஒழிக்க உதவிற்று மக்கள் ஆட்சியின்பேரால் இனவெறி எழுந்தது; வளர்ந்தது. இட்லர் என்பார்;

தலைமை தாங்கித் தூண்டி வளர்த்த இனவெறி; ஆளப் பிறந்தவர்கள் ஜெர்மானியர்களே என்ற அகந்தை; போர்க்கருவிகளின் குவியல், யூத வேட்டை ஆகியவை இரண்டாவது உலகப் போரில் கொண்டு சேர்த்தன. உலகம் முழுவதையும் கட்டியாளத் திட்டமிட்டுப் போர் முரசு கொட்டினார் இட்லர். கி. பி. 1939 முதல் 1945 வரை முன்பைவிடக் கடுமையான, கொடுமையான, கோரமான பெரும்போர் உலகைக் கெளவிக்கொண்டது. இங்கிலாந்து, இரஷ்யா ஆகிய நேச நாடுகளின் அஞ்சாமை, தியாகம்; அமெரிக்க போன்ற நாடுகளின் துணை, அணுக்குண்டு கண்டுபிடிப்பு ஆகியவை ஜெர்மனிக்கும் அதன் துணைவர்களான இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் தோல்வியைத் தந்தன. இப்போரில் அழிந்த நகரங்கள் பலப்பல; பாழான பகுதிகள் எத்தனை எத்தனையோ!

தோல்வியின் விளைவாக, ஜெர்மனி இரு கூறுகள் ஆயிற்று. மேற்குப் பகுதி நேசகாடுகளின்-அதாவது இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா ஆகியவற்றின் ஆதிக்கத்தில் வந்தது. கிழக்குப் பகுதி இரஷ்யாவின் ஆதிக்கத்தில் வந்தது. பிரிந்த ஜெர்மனி, பிரிந்த ஜெர்மனியாகவே இருக்கிறது. இருபத்தைந்து ஆண்டுகளாகியும் வெவ்வேறு அரசுகளாகவும், பொருளாதார அமைப்புகளுடையதாகவும் உள்ளது ஜெர்மனி.

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி அடுத்தடுத்துக் குண்டுமாரிக்கு ஆளானது. நகரங்களில் பெரும் பலானவை சாம்பலான பிறகே ஜெர்மனி அடி பணிந்தது. வளத்தோடும் வலிவோடும், செல்வத்தோடும் மாட மாளிகைகளோடும், பெருந் தொழிற் கூடங்களோடும் போரைத் தொடங்கிய ஜெர்மனி வள மிழந்து, வலிவிழந்து, பொருள் இழந்து, வீடிழந்து, தொழிற கூடமிழந்து சுடுகாடாகிக் கிடந்தது. இருபத் தைந்து ஆண்டுகளுக்குமுன் அந்நிலை.

வீரன் வீழ்வதுண்டு; அழுவதில்லை; அயர்ந்து கிடப் பதுமில்லை. தகாத தலைமைக்கு ஆட்பட்டு, தகாத செயலில் இறங்கி, தகாத வழியே சென்று முரிந்து வீழ்ந் தார்கள் ஜெர்மானிய மக்கள், தகாத வழி சென்றாலும் ஆண்மையாளர் அல்லவா ஜெர்மானியர்!. எனவே, தோல்வியை எண்ணி ஏங்கி ஏங்கி குறை சொல்லிக் காலத்தை விணாக்கவில்லை. மாறாக, எழுந்தார்கள்; நிமிர்ந்தார்கள்; உழைத்தார்கள், ! உள்ளன்போடு உழைத்தார்கள்; உண்மையாக உழைத்தார்கள்; உறுதியாக உழைத்தார்கள்; கூடுதலாக உழைத்தார்கள்; குறிக்கோள் தெளிவோடு உழைத்தார்கள்.

ஆம்! “அமைதியாக வாழ்வோம். ஆனால் யாரையும் அண்டி வாழோம், வளமாக வாழ்வோம். ஆனால் வாங்கி வாங்கி வாழோம். தாங்களே தனக்குதவி எனவே நம் நாட்டை நாமே கடின உழைப்பால் உயர்ந்துவோம்,” என்று தெளிந்து, அக்குறிக்கோளை அடைய அனைவரும் பாடுபட்டனர். நாடு என்ன கொடுத்தது என்று கோபிக்கவில்ல. தோல்வியடைந்தாலும், நாட்டுக்கு "நாம் கொடுப்போம்" என்று கூடுதல் தொழில் செய்தனர் புதிய ஜெர்மானியர். வாங்கும் சம்பளத்திற்கு குறிப்பிட்டக் காலம் முழுவதும் நொடியும் வீணாக்காது பாடுபட்டனர். முழுக் கவனத்தோடு தொழில் புரிந்தனர். ஊதியத்திற்கான வேலையோடு நின்று விடாமல் நாட்டுத் தொண்டாக நாள் தோறும் ஊதியம் இல்லாப் பணியினை ஒரு மணி நேரம் செய்தானர். எனவே தொடர்ந்து சில ஆண்டுகள் இப்படிச் செய்ததால் தொழில்கள் வளர்ந்தன, வீடு

கள் உயர்ந்தன, பொருள்கள் நிறைந்தன, செல்வம் பெரு கிற்று; பொருளாதாரம் வளர்ச்சியுற்றது. இக்தியாவைப் போன்ற பெரும் நாடுகளுக்குக்கூட நிதியுதவி செய்யும் அளவிற்குப் பதினைந்து ஆண்டுகளில் உயர்த்துவிட்டது மேற்கு ஜெர்மனி. உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ! இது தமிழ் மொழி; ஆனால் ஜெர்மானியர் வாழ்வின் முச்சு நமக்கும் அது முச்சாகும் நாள் எந்நாளோ! நாமும் அவரவர் பணியினை வஞ்சனையின்றி ஆர்வத்தோடும் நாணயத்தோடும், நொடியும் விணாக்காது ஆற்றும் நாள் எந்நாளோ!

பிராங்க்போர்ட் விமான நிலையத்தில் பயணிகள் கூடத்தில் அமர்ந்து, அந்நாட்டின் அழிவையும் மீண்டும் புத்துயிர் பெற்று, வளமும் வலிவும் பெற்றுப் பெருமை யோடு வாழ்வதையும் எண்ணி, அதைப்போல் நாமும் உயர்வது எந்நாள் என்று ஏங்கியது என் மனம் அது இமைப்பொழுதில் தெற்கே நெடுந் தூரத்திற்கு தாவி விட்டது. பல்லாயிரக்கணக்கான மைல்களுக்குக்கப்பால் சென்று இறங்கியது. அதோ ஆப்பிரிக்காவில், பெல்ஜியன் காங்கோவில் லாமபரீன் என்னும் ஊரில் ஐம்பதாண்டுக்காலம் மருத்துவ நிலையத்தை நடத்திய சான்றோர் ஆல்பர்ட் சுவைட்சர். என்ன கம்பிரமான தோற்றம்! ஐம்பத்தைந்து ஆனடுகளுக்கு முன் அவர் மருத்துவத் தொண்டைத் தொடங்கிய மாட்டுத் தொழுவம் மின்னி மறைந்தது.

மாட்டுத் தொழுவத்து மருத்துவமனை இன்று கட்டட வசதியுடைய மருத்துவமனை. தொள்ளாயிரம் பேர் இருந்து நலம் பெறும் பெருமனை! இன்னும் முன்னேற்றமடைய வேண்டியிருக்கும் அப்பகுதிக்கு யாரும் சென்று பணீபுரிய முன்வராத மோசமான பகுதிக்கு, போய்த் தொண்டுபுரிய முடிவு செய்தார் ஆல்பர்ட் சுவைட்சர். பிழைக்க வழியின்றிப் போனாரா? பிஜிக்கும் நெட்டாலுக் கும் மோரிசுக்கும் வயிற்றுப் பிழைப்பிற்காகப் போக வேண்டிய நிலையை நம்மவருக்கு ஏற்படுத்தினோமே, அதைப் போன்ற நெருக்கடியால் காங்கோவிற்குக் குடி யேறினரா சுவைட்சர்? இல்லை, இல்லை.

தத்துவப் பேராசிரியர் பணியில் வீற்றிருந்த டாக்டர் ஆல்பர்ட் சுவைட்சர் தம் இருபத்தேழாம் வயதில் கவனிப்பாரற்று நோய் நொடியில் மடிந்து கொண்டிருந்த காங்கோ மக்களுக்கு மருத்துவஞ் செய்து தொண்டுபுரிய விருப்பங்கொண்டார். ஜெர்மானிய நாட்டின் மருத்துவப் படிப்போ நீண்டபடிப்பு; ஏழாண்டுப் படிப்பு. ஏற்கெனவே தத்துவத்தில் பேரறிஞர். டாக்டர் பட்டம் பெற்றுப் பேராசிரியராக விளங்கிய சுவைட்சர், இருபத்தேழு வய திற்குமேல் புதிய நீண்ட மருத்துவப் படிப்பில் முனைந் தார்; தவறாமல் தேறினார் முப்பத்து நான்காவது வயதில் காங்கோவிற்குச் சென்றார்.

அன்றைய காங்கோவில் பெரிதும் காட்டுக் கால நிலை. மாட்டுத் தொழுவமே அவருக்குக் கிடைத்தது. அதில் மருத்துவமனையைத் தொடங்கினர். உயிர்களைப் போற்றல் அவரது சமயம்; அவரது நெறி, அவரது வாழ்க்கை. இலட்சக்கணக்கான நோயாளிகளைக் குணப் படுத்திய இப் பேரறிஞர் சுவைட்சருக்கு, ‘மக்கட் சேவைக்கான ‘நோபல் பரிசு’ கிடைத்தது. அது அவருக்குப் பெருமையன்று, மக்கள் இனத்தின் நன்றி யுணர்ச்சிக்கு அடையாளம்.

பரிசுப் பணத்தை மருத்துவ சாலைக்குச் செலவிட்டார். அடிக்கடி ஐரோப்பாவிற்குச் சென்று காங்கோ மக்களின் தேவைகளை விளக்கிச் சொற்பொழிவு ஆற்றி நிதி திரட்டினர். அது மட்டுமா? அவர் மேலை நாட்டு இசையில் வல்லுநர்; அதிலும் பேரறிஞர் பட்டம் பெற்றவர். எனவே இசைக் கச்சேரிகள் பல நடத்தியும் பணம் திரட்டினர். இவையெல்லாம் என் மனக்கண் முன் விரைந்தன.

அன்றொரு நாள், அமெரிக்கச் சிறுவன்-பன்னிரண்டு வயதுப் பையன்-முன்னின்று தொடங்கிய ’லாம்பரின் நிதி’ யை இத்தாலிய நாட்டு விமானத்தில் சென்று அப் பெரியவரிடம் ஒப்படைத்த செய்தியும் படமும் நினை விற்கு வந்தன.

"தங்கள் நேரத்தை எடுத்துக் கொள்வதற்காவும் தொந்தரவு கொடுப்பதற்காகவும் மன்னியுங்கள்' என்ற பீடிகையோடு, பல இலட்சம் ரூபாய்களை டாக்டர் ஆல்பர்ட் சுவைட்சரிடம் பணிவோடு அச்சிறுவன் வழங்கிய படம் நம் சென்னைச் செய்தித் தாளிலும் வெளியானது. பெருந்தொகையைக் கொடுக்கும் சிறுவனுக்கும் பணிவாகக் கொடுக்கக் கற்றுக் கொடுத்துள்ள மேனாட்டுப் பண்பினை எண்ணி எண்ணிப் பூரிப்பதுண்டு நான். மாறாக, முறையற்ற வேண்டுகோளோடு போகும் போதும் விறாப்போடு செல்லும் போக்கினேயும் கண்டு கண்டு, பணியுமாம் என்றும் பெருமை’ என்னும் திருக் குறள் ஏட்டுச் சுரைககாய்தானோ என்று ஏங்குவதும் உண்டு. இத்தனை எண்ணங்களும் நல்ல பருவத்துக் குற்றால அருவியெனப் பொழிந்தன.

அவ் வித்தகர் டாக்டர் ஆல்பர்ட் சுவைட்சரின் நுண்மாண் நுழைபுலம் நெஞ்சை பள்ளிற்று. தத்து வத்தில் பேரறிஞர், மேனாட்டு இசைக் கலையில் பேரறிஞர், மருத்துவத்தில் பேரறிஞரான பிறகும் காலை முதல் நள்ளிரவு வரை காட்டுப் பழக்கமுடைய நோயாளிகள் பலரோடு போராட வேண்டியதாக இருந்தும், ஓயாது படித்தார்; எழுதினார். கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான படிப்புப் பெற்றிருந்த அவர் இந்தியத் தத்துவங்களைப் பற்றியும் விரிவாகப் படித்து அறிந்தார்; திருக்குறளையும் அவர் கற்றார். கசடறக் கற்றார், ஏற்கெனவே அவ்வழி நின்றவர்; எனவே, திருக்குறளின் சிறப்பினை உணர்ந்தார். ஒப்பு நோக்கித் திருக்குறளிலும் சிறந்த நூலொன்றைத் தாம் அறிந்ததில்லை எனத் தம் வாழ்க்கை வரலாற்றில் எழுதியுள்ளார். அவர் கற்றதால், அவர் போற்றியதால், அவர் எடை போட்டுக் காட்டியதால், மேனாட்டு மக்களிடையே நம் திருக்குறளின் பெருமை பரவிற்று நாம் யாரும் பரப்ப முடியாத அளவுக்குத் திருக்குறள் அறிமுகமாயிற்று.

பேரறிஞர் சாதனையாளராக இருத்தல் அரிது. வல்லவர் நல்லவராக இருத்தல் அதனிலும் அரிது. பேரறிஞர் சாதனை மேருவாக, நல்லவராக, தூற்றலுக்கும் தொல்லைகளுக்கும் அஞ்சாது நெடுங்காலம் தொண்டாற் றல் அத்தி பூத்தாற்போலாம். ஆனால் பேரறிஞர் காட்டுக்குள்ளே மக்களுக்காகத் தொடர்ந்து ஐம்ப தாண்டுக் காலம் தொண்டாற்றி மறைந்தார். அந்தச் சாதனை மேருவை, சான்றோரை, ஈந்த ஜெர்மனியை வணங்கிற்று என் நெஞ்சம். என் தமிழ்த் திருநாட்டிலும் ஒர் ஆல்பர்ட் சுவைட்சர் தோன்ற அருள்வாய் என்று முணுமுணுத்தது வாய்.

 

4. ஜினிவாவில் முதல் நாள்“நீங்கள் ஜினிவா செல்ல வேண்டியவர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் ஏறுசீட்டு அப்படிக் காட்டுகிறது. அப்படியானால் உடனே புறப்படுங்கள். ஜினிவா பயணிகளுக்குக் குரல்கொடுப்பது காதில் விழவில்லையா?” என்ற பக்கத்தில் வீற்றிருந்த ஆங்கிலேயர் நினைவுபடுத்தினார். நொடிப் பொழுதில் கருத்துலகத்திலிருந்து விடுபட்டு எழுந்தேன்.

பிராங்க்போர்ட்டிலிருந்து ஜினிவாவிற்கு சுவிஸ் விமானத்தில் பயணமானேன். அது குறித்த நேரத்தில் புறப்பட்டது. தெற்கு நோக்கிப் பறந்தது; விமானத்தில் உட்காரும் இடத்துக்கு மேலே பரண் போன்ற இடம் உண்டு. நம் விமானங்களில் திறந்த பரண்களே காணலாம். எனவே அவற்றில் கைப்பையைக் கூட வைக்கக் கூடாது என்பது விதி; சுவிஸ் விமானத்தில் பரணுக்கு வலைப் பின்னல் இருந்தது. எனவே பயணிகள் சிறு பைகளையும் சிறு பெட்டிகளையும் காலுக்கடியில் வைத்துக் கொண்டு தொல்லைப்படவில்லை; வலைப் பரணில் வைத்து விடுகிறார்கள்.

ஒரே ‘ஒடுவழி’யில் ஒன்றன் பின் ஒன்றாக என் விமானமும், அதற்குமுன் மற்றொரு விமானமும் செல்லக் கண்டேன். முன்னையது மேலேறியதும் நான் சென்ற விமானமும் மேலே கிளம்பிப் பறந்தது.

நாளோ, மப்புமந்தாரமற்ற நாள். எனவே நெடுந்தூரம் தெளிவாகத் தெரிந்தது. நாங்கள் கடந்து சென்ற பகுதியும் பெரிதும் மலைப்பகுதியே. விமானத் திற்கு இரு பக்கமும் மலைத் தொடர். பனிமலைத் தொடரும் கண்டோம். அதற்குப் பெயர் ஆல்ப்ஸ் மலைத் தொடர். மலையுச்சியிலும், பள்ளத் தாக்குகளிலும் ஊர்கள் தென்பட்டன. அப்பகுதியில் மலைக் காட்சி ரம்மியமானது. எங்கும் பசுமைத் தோற்றம். உயர்ந்த மரக் காடுகள் இருபக்கங்களிலும் அழகிய மலைக் காட்சிகளைக் கண்டுகொண்டே இருக்கையில் ஜினிவாவை நாங்கள் நெருங்கிவிட்டோம். அதற்கான அறிவிப்பு வந்தது. அவர்கள் ஆணைப்படி இருக்கைக் கச்சையைக் கட்டிக்கொண்டோம். புகை பிடித்துக் கொண் டிருந்தவர்கள் சிகரெட்டை அணைத்து விட்டார்கள்.

கீழே நீர் மயம். அது ஜினிவா ஏரி. அதன் நீளம் 96 கிலோ மீட்டர்கள். அதன் தென் கரையில் ஜினிவா நகரம் உள்ளது. கரையோரம் முழுதும் சிற்றுார்கள். நகரங்கள். ஏரியில் ஏராளமான படகுகள் மின்னின. இதுவும் பார்க்கத்தக்க காட்சி.

பிராங்க்போர்ட்டிலிருந்து ஜினிவாவிற்குப் போய்ச் சேர ஐம்பத்தைந்து நிமிடங்களே பிடித்தன. இதற்கிடையில் சிற்றுண்டி-பலமான உண்டியே பரிமாறினார்கள். ஆனால் எனக்குப் பயனில்லை. ஏன்? மரக்கறிச் சிற்றுண்டி இல்லை. அதற்கான தகவல் வரவில்லையென்று தங்களுக்கு வந்த குறிப்பினைப் பார்த்து விட்டுக் கையை விரித்துவிட்டார்கள். நல்ல வேளையாகக் காப்பியும் பிஸ்கோத்தும் கைகொடுத்தன.

ஜினிவா நகரம், ஏரியின் கரையில் அமைந்துள்ள அழகிய நகரம்; பெருநகரமன்று, அதன் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடிக்குக் காரில் செல்லுவதானால் பதினைந்து நிமிடங்களுக்குமேல் தேவை இல்லை.

நான் சென்றபோது நல்ல கோடைக் காலம். ஐரோப்பிய நகரங்கள் பலவற்றிலிருந்து கோடை விடுமுறைக்கு வந்துள்ளவர்களை எங்கும் கண்டேன். எப்பக்கம் நோக்கினும் உணவுச் சாலைகள்; சிற்றுண்டிக் கடைகள்; ஐஸ்கிரீம் விற்பனைக்கான பெட்டிக் கடைகள்.

ஜினிவா விமான நிலையத்தில் ‘தானேற்றி’ எக்ஸ்கலேட்டரில் செல்ல வேண்டியதாயிற்று. அது எனக்குப் பிடிப்பதில்லை. வேறு வழி? பல்லைக் கடித்துக் கொண்டு. சமாளித்து விட்டேன். சுங்கச் சாவடியில் நேரமாக வில்லை; நொடியில் என்னை அனுப்பிவிட்டனர். மேனாடுகளில் பெட்டி தூக்க ஆள் கிடைப்பது அரிது. தள்ளு வண்டியில் பெட்டியை ஏற்றி நானே தள்ளத் தொடங்கினேன். பத்தடி தள்ளியதும் நண்பர் திரு. சிதம்பர நாதன் இந்த நோஞ்சானிடமிருந்து அதைப் பறித்துக் கொண்டார். இவரைப் பற்றிப் பின்னர் சொல்கிறேன்.

திரு. சிதம்பரநாதன் தம் காரில் என்னை ஒட்டலுக்கு அழைத்துச் சென்றார் பெட்டியை அறையில் வைத்துவிட்டு ஜினிவாவைச் சுற்றிப் பார்க்கச் சென்றோம்.

ஜினிவா ஏரியின் தென் கோடியில், பொங்குபுனல் உண்டு. இது இயற்கையானதன்று; செயற்கையானது. இயந்திர உதவியால் நீர் பொங்கி, உயர்ந்து விழ்கிறது. எவ்வளவு உயரம் பொங்கி எழுகிறது? சுமார் 160 மீட்டர் உயரத்திற்குப் பொங்குகிறதாம்.

கோடைக் காலம் முழுவதும், ஜினிவா ஏரியில் படகுகள் நிறைந்திருக்கும். ஜினிவா நகரில் பல படகுத் துறைகள் இரு கரைகளிலும் உள்ள ஊருக்கு ஊர் படகுத் துறைகள். பெரிய ஊர்களில் ஒன்றுக்கு மேற் பட்ட படகுத் துறைகள உள்ளன. விசைப் படகுகள் வந்து தங்கி ஆட்களை இறக்கவும் ஏறறவுமான துறைகள ஏரியில் உள்ளன.

பயணப் படகுகள் மட்டுமல்ல, ஏரியில் காண்பது. ஏராளமான உல்லாசப் படகுகளும் உள்ளன.

அதோ துடுப்புப் படகு அது ஒரு வகை. இதோ மிதி படகு இது ஒரு வகை. முந்தியதைச் செலுத்தப் பயிற்சி தேவை. பிந்தியதற்கு அவ்வளவு பயிற்சி தேவை இல்லை. பிந்தியது ஆபத்துக் குறைவானது. அதில் இரு பெடல்கள் உள்ளன. இருவர் உட்கார்ந்து கொண்டு, ஆளுக்கொரு பெடலை மிதித்தால் படகு ஒடும். விரும்பிய படி திருப்பச் சுக்கான் உண்டு. பல துடுப்புப் படகுகளும் மிதிபடகுகளும் மிதக்கின்றன. பாய்ப் படகுகளும் செல்லுகின்றன. பாய்ப் படகுகளைச் செலுத்தத் திறமையும் பயிற்சியும் அதிகம் வேண்டும். இத்தனை வகைப் படகுகளும் வாடகைக்குக் கிடைக்கும். உடம்பு நோகாமல் படகுப் பயணம் செய்ய விரும்புவோர்க்கும் வசதி உண்டு. விசைப் படகுகள் ஏராளம்.

அவற்றை அமர்த்திக் கொண்டு ஏரியில் நெடுந்துரமோ, சிறிது தூரமோ சுற்றி வரலாம்.

மிதி படகைப் பத்து பன்னிரண்டு வயது சிறுவர் சிறுமியர் எடுத்துக் கொண்டு போய்விடுகின்றனர். பெரியோர் துணைகூட இல்லாமல் ஏரியில் சுற்றிவிட்டு வருகின்றனர்; தம் முயற்சியிலும், அஞ்சாமையிலும் தாமே செயல் புரிவதிலும் மேனாட்டுச் சிறுவர் சிறுமியர் இளமையிலேயே பழகுவதைக் கண்டோம். போற்ற வேண்டிய பழக்கந்தானே இது.

ஏரியில் நீந்தி விளையாடுவோரும் பலர். நாம் குற்றால அருவியில் மூழ்கி மகிழ அவாவுவது போல், மேனாட்டு மக்கள் கடல்களிலும் ஏரிகளிலும் நீந்தி விளையாடப் பேராவல் கொள்கின்றார்கள். அதற்காகக் கோடைக் காலத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்கள். கோடையில் தங்களுக்கு உரிய விடுமுறை எடுத்துக்கொண்டு, குடும்பம் குடும்பமாகக் கடற்கரை ஊர்களுக்கும், ஏரிக்கரை ஊர்களுக்கும் சுற்றுலாச் செல் வார்கள். ஜினிவா நகரின் மக்கள் தொகையைவிடப் பயணிகள் தொகை அதிகம். இடுப்புக் கச்சையும் மார்புக் கச்சையும் மட்டும் அணிந்து கடற்கரை, ஏரிக்கரை ஓரங்களில், திறந்த வெளியில் படுத்துக் கொண்டு, வெய்யில் காய்வதில் மேனாட்டு மக்களுக்குப் பித்து.

ஜினிவா, பல உலக அவைகளுக்குத் தலைமைநிலையம். முன்பு உலக நாடுகளின் கழகம் (League of Nations) இங்கிருந்து பணியாற்றியது. இப்போது ஐக்கிய நாடுகள் அவையின் (யூ. என். ஒ.வின்) பிராந்திய அலுவலகங்கள் இங்கிருந்து பணி புரிகின்றன. உலகச் சுகாதார சபை யின் தலைமையிடமும் இதுவே. ஐ. எல். ஒ , அதாவது அனைத்துலகத் தொழிலாளர் நிலையத்தின் தலைமை இடம் ஜினிவா.

உலக அவைகள் சிலவற்றின் தலைமை இடமாக இருக்கும் ஜினிவா, சுவிட்சர்லாந்தின் தலைநகர் அன்று. அந்நாட்டின் தலைநகர் பெர்ன்.

சுவிட்சர்லாந்தை நினைத்ததும், கடிகாரம் மனக்கண் முன் தோன்றும். நெடுங்காலமாகக் கடிகார உற்பத்திக்குப் பெயர் பெற்றது இந்த நாடு. பெருந் தொழிற் கூடங்களில் மட்டுமன்று கடிகார உற்பத்தி, கடிகாரங் களுக்கான சிறுசிறு பகுதிகளையெல்லாம், வீட்டுத் தொழிலாகச் செய்கிறார்களாம். அவரவர் வீட்டிலிருந்த படியே துல்லியமான கருவிகளைக் கொண்டு நுட்பமான பகுதிகளைச் செய்து, தொழிற்சாலைக்குக் கொடுக்கின் றனர். தொழிற்சாலைகளில் அவற்றை உரிய வண்ணம் பொருத்திச் சரிபார்த்து, ஒட வைத்துச் சோதித்த பிறகு விற்பனைக்கு அனுப்புகிறார்கள். சுவிட்சர்லாந்து, நவீன மருந்துகள் உற்பத்திக்கும் முக்கியமானது.

 

5. சுவிட்சர்லாந்தின் சிறப்புசுவிட்சர்லாந்து ஒரு மொழி நாடன்று; நான்கு மொழி நாடு. ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, ரோமான்சு ஆகிய நான்கும் ஆட்சி மொழிகள். ஒவ்வொரு கான்டனில் (பிராந்தியத்தில்) ஒவ்வொரு மொழி செல்வாக்குப் பெற்று விளங்குகிறது. நாட்டாட்சியில் நான்கிற்கும் இடம். இவற்றிற்கு எழுத்து ஒன்றே.

சுவிட்சர்லாந்தில் பிராந்திய அரசிற்கே அதிக அதிகாரம் நாட்டாட்சிக்கு வரையறுக்கப்பட்ட குறைந்த அதிகாரமே.

சட்ட மன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சரியாக நடக்காத போது, திரும்ப அழைத்துக் கொள்ள வாக்காளர்களுக்கு உரிமை உண்டு. இத்தனை வாக்காளர்கள், திருப்பி அழைக்கும்-அதாவது பதவி நீக்கக் கோரிக்கையில்-கையெழுத்திட்டால் சட்டமன்ற உறுப்பினர் தம் பதவிக் காலம் முடிவதற்குமுன் விலகி விட வேண்டும் இது அரசியல் சட்டம்.

சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் மனம் போன போக்கிலே நடந்துகொள்ளாதபடி இது தடுக்கிறது. எனவே, அங்கே சட்ட மன்ற உறுப்பினர் கூடுவிட்டுக் கூடு பாய முடியாது; தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிக்கு மாறாகச் செயல்பட முடியாது. திரும்ப அழைக்கும் உரிமை வாக்காளருக்கு இருப்பது மக்களாட்சிக்குத் துணை! தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைத் தடம் புரண்டு உருளாதபடி கட்டை போடுகிறது.

சுவிட்சர்லாந்து அழகிய நாடு; மலைவளமும் வன வளமும் செறிந்த நாடு; பயிர் வகைகளும் தொழில் வகைகளும் செழித்த நாடு. மக்கள் வளமும் பெற்ற நாடு. சுவிஸ் மக்கள் உடல் நலம் உடையவர்கள். குழந்தைகள் அத்தனையும் கொழுகொழுவென்று இருக்கின்றன. உடல் நலத்தோடு சுறுசுறுப்பும் மிகுதி. இரண்டும் எதற்குப் பயன்படுகின்றன? நல்வாழ்விற்குப் பயன்படுகின்றன. நீண்ட நெடுங்காலமாக, ஒன்றி வாழும் வழியிலே வளர்ந்தவர்கள் சுவிஸ் மக்கள். அவர்களது மனவளமும் பெரிது. பல நூற்றாண்டுகளாகப் பல மொழி மக்களும் இணைந்து ஒன்றி, ஒரே நாட்டவராக வாழ்கிறார்கள். இதைத் திரு. சிதம்பரநாதனிடம் கூறி மகிழ்ந்தேன்.

“ஆம். நாட்டில் வாழும் நான்கு மொழிகளுக்கும் ஒரே உரிமை கொடுத்திருப்பதால் மொழிப் பகை இல்லை. அரசியல் அதிகாரம் மைய அரசிலே குவியாமல் பிராந்திய ஆட்சிகளுக்கும் பரவி இருப்பதால் அரசியல் போட்டிப் புயல்கள் மைய அரசினை ஆட்டிப் படைப்ப தில்லை.

அது மட்டுமா? சின்னஞ் சிறு நாடாயிருப்பினும் பன்னூறு ஆண்டுகளாகத் தன் காலில் நின்று வளம் பெற்ற நாடு சுவிட்சர்லாந்து. அத்தனைக் காலமாக நடுநிலைமை நாடாக இயங்கி வரும் நாடு இது.

பிரான்ஸ் ஒரு பக்கமும், ஜெர்மனி எதிர்ப் பக்கமும் நின்று நடத்திய ஐரோப்பியப் போர்களின் போதும் நடுநிலைமை வகித்த நாடு. பின்னர், உலகப் போர்களின் போதும், எப்பக்கமும் சேராமல் தனித்து, நடு நிலைமைக் கொள்கையைப் பின்பற்றியது. இந் நாட்டிலுள்ள பிரஞ்சு மொழியினரால் பிரான்ஸின் பக்கம் நாட்டைச் சேர்க்க முடியவில்லை. அதேபோல் ஜெர்மானிய மொழியினரால் ஜெர்மனியின் பக்கம் நாட்டை இணைக்க முடியவில்லை. ஜெர்மனியும் இத்தாலியும் இணைந்து போராடியது தெரியும். அப்போதும் சுவிஸ்-ஜெர்மன் மொழியினரும், சுவிஸ்-இத்தாலிய மொழியினரும் கூட்டுச் சேர்ந்து, ஜெர்மனியக் கூட்டின் பக்கம் சுவிட்சர்லாந்தை இழுத்துக் கொண்டு போக முடியவில்லை என்று வரலாற்றை (சுருக்கப் படத்தை) நினைவு படுத்திக் கொண்டோம்.

மெய்தான்; இந்நாடு, கூட்டுச் சேராக் கொள்கையை முழங்கவில்லை. அதை மூச்சாக்கிக் கொண்டது. நெடுங் காலமாக அவ்வழியே இயங்குகிறது. எப்படி இயங்கு கிறது. இது?

சுவிஸ் மக்கள் மொழி அடிப்படையை வைத்துத் தங்களைப் பிரஞ்சுக்காரர்கள், ஜெர்மானியர்கள், இத்தாலி யர்கள் என்று பிரித்துக் கொள்ளவில்லை; பேசும் மொழி எதுவாயினும் வாழும் நாட்டுக் குடிகளாகி விட்டனர். சட்டப்படி மட்டுமன்று, சிந்தனைப்படியும். எனவே, சுவிஸ் மக்களது பற்று சுவிட்சர்லாந்துக்கே தங்கள் மொழி பேசும் ஆதிநாடு என்று சொல்லிக் கொண்டு சுவிஸ் மக்கள் யாரும் பிரான்சிடமோ ஜெர்மனியிடமோ காதல் கொள்வதில்லை. பிற நாட்டிடம் பற்றுப் பதியமாகவில்லை. போர் நெருக்கடியின் போதும் கட்சி சேராதிருக்கிறார்கள். எனவே, அவரவர் வாழும் பகுதிகளில் அவரவர் மொழிக்கு உரிமையும் வாழ்வும் கிடைக்கின்றன. அதே நேரம் தங்களையும் தங்கள் நாட்டையும் தேவையில்லாத சண்டைகளில் சிக்க வைக்காமல், சீரழியச் செய்யாமல் காக்க முடிகிறது என்பதை உணர்ந்தேன். இது நமக்கும் பாடமானால் வாழக் கற்றுக்கொளவோம். குறிப்பாகத் தமிழர்கள் உணர்ச்சி வயப்படாமல் இப்பாடத்தைக் கசடறக் கற்றல் நல்லது; அதற்குத் தக நிற்றல் பின்னும் நல்லது அந்நிலை உருவானால் நம் அருமைத் தமிழ்மொழி, ஒரு நாட்டின் ஒரு மொழியாக நின்றுவிடாது. பல நாட்டின் உயிர் மொழியாக-ஆட்சி மொழியாக ஒளிரும்.

இப்படிச் சிந்தனைச் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கையில், ‘வருந்துகிறோம்’ என்ற இரு குரல் கேட்டு நானும் நண்பரும் திடுக்கிட்டு நின்றோம். நொடியில் நிமிர்ந்து நோக்கினோம்; கண்டோம். என்ன கண்டோம்?

காளையும் பாவையும் கைகோத்து நிற்பதைக் கண்டோம். ஜினிவா ஏரிக்கரை ஓரமாகக் கைகோத்து, கதைகள் பல சொல்லி, மகிழ்ந்து, மெல்ல உலாவி வந்த காதலர்களைக் கண்டோம். காதல் உலகிலே மிதந்து வந்த அவர்கள், நாங்கள் எதிர்ப்படுவதை ஏறிட்டுப் பார்க்கவில்லை. எங்களை நெருங்கிய போதே-எங்களோடு மோதுவதற்கு நொடி முன்னரே-மற்றவர் இருப்பதை உணர்ந்தனர். நடைபாதை யாருக்கு உரிமை என்று வழக்காடாமல், அதிலே நேரத்தையும் உணர்ச்சியையும் பாழாக்காமல், தங்கள் பண்பாட்டு வழியில் விரைந்து, ‘வருந்துகிறோம்’ என்று இருவரும் கூற, எங்கள் மோதல் தவிர்க்கப்பட்டது.

‘வருந்துகிறோம்’ என்று தலை தாழ்த்திவிட்டு நாங்களும் நடந்தோம். அவர்களும் அதையே செய்தார்கள்.

எங்கள் பேச்சு, சுவிஸ் மக்களது அன்றாட வாழ்க் கையைப் பற்றிச் சுழன்றது.

அம் மக்கள் தத்தம் வேலையையே கவனிப்பவர்கள். ‘அண்டை வீட்டில் நடப்பதை எட்டிப் பார்க்காதிருப்பதற்கே குட்டைக் கழுத்தைக்’ கொடுத்ததாக நம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நம்மை இடித்துரைக் கிறார் நெட்டைத் கழுத்தைக் கொடுத்தாற்கூடப் பக்கத்தில் எட்டிப் பார்க்காத பக்குவம் படைத்த மக்கள், அம்மக்கள். பிறர் விவகாரங்களில் தலையிடுவது அவர்கள் மரபன்று. எனவே, குடும்பத்திற்குக் குடும்பம் சண்டையிடுவது அரிது; அரிதிலும் அரிது.

 

6 உல்லாசப் பயணம்சிக்கனத்தைக் கடைப்பிடிப்பவர்கள் சுவிஸ் மக்கள். வங்கிக் கணக்கு வைக்காத மக்களே இல்லை எனலாம். காசு பணமாக வீடுகளில் பூட்டி வைப்பதோ, வெளியூர்களுக்கு எடுத்துச்செல்வதோ, அவர்கள் வழக்கமன்று. மாறாகச் சில்லறைச் செலவுகளுக்கான பணம் மட்டுமே ரொக்கமாகக் கையில் இருக்கும். மற்றப் பணத்தை வங்கியிலேயே வைத்திருப்பார்கள் தேவையான போதே வாங்கிக்கொள்வார்கள். கடைச் சாமான்களுக்கும், ஓட்டல் சாப்பாடுகளுக்கும், ‘செக்’ கொடுப்பது சாதாரண நிகழ்ச்சி. ஏதோ பணக்காரர்கள் மட்டுமே இப்படிச் செய்கிறார்களா? இல்லை; எல்லோருமே இப்படித் தான்.

முதல்தேதி வாங்கிய முந்நூறு ரூபாய்களைக் கையில் வைத்துக்கொண்டு, மூன்றாவது வாரம் வரை செலவு செய்துவிட்டு, நான்காவது வாரத்திற்கு நான்கு பக்கமும் பார்க்கும் நம் நிலை நினைவிற்கு வந்தது. வாழத் தெரிந்தவர்களைப் போல, நாமும் மாதச் சம்பளத்தை வங்கிக் கணக்கில் வரவுசெய்யச் சொல்லிவிட்டு, அவ்வப் போதைக்கு வேண்டியதை மட்டும் வாங்கிக் கொள்வது முறைக்கு வந்துவிட்டால் எப்படியிருக்கும்? இப்படி ஒரு கேள்வி பிறந்தது.

“நன்றாயிருக்கும் குறைந்த பட்சம் நான்காம் வாரத்தின் நான்கு நாள் செலவு வரையிலாவது அந்த முர்நூறு ருபாய் ஊதியம் நீளும்,” என்பது பதில். இதில் அற்புதம் ஒன்றுமில்லை.

‘எவ்வளவு ஊதாரியானாலும், கையில் ரொக்கம் வைத்துக்கொண்டு செலவு செய்யும்போது வரும் தாராளம், வங்கியிலே இருந்து வாங்கிச் செலவு செய்யும் போது வருவதில்லை’ என்பது விளக்கம்.

மதுரை டி. வி. எஸ். உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் அனுபவம் எங்கள் பேச்சை வளர்த்தது. என்ன செய்தார்கள் அவர்கள்? எலலோரையும் போல, அவர்களும் மாதச் சம்பளத்தைக் கையிலே பெற்றுக்கொண்டிருந்தார்கள். வீட்டிலே பூட்டி வைத்துக்கொண்டு செலவு செய்துவந்தார்கள். எல்லோரையும் போல அவர்களுக்கும் போதாமை, மாதந்தோறும்.

ஈராண்டிற்கு முன் புதிய சோதனை செய்து பார்த்தார்கள் டி. வி. எஸ். பள்ளி ஆசிரியர்கள். மாதச் சம்பளத்தை வங்கியின் மூலம் செலுத்தும்படி கோரினார்கள்.நிர்வாகமும் ஒப்புக்கொண்டது சம்பளப் பட்டு வாடா இப்படியே நடந்தது. பல மாதங்களுக்குப் பின் கணக்குப் பார்த்தார்கள். எல்லோர் கணக்கிலும் இல்லாவிட்டாலும், பலர் கணக்கில், மாத சம்பளம் எஞ்சியிருக்கக் கண்டார்கள். ‘கையிலே சம்பளம் பெற்றிருந்தால் வெற்றாட்களாகவே தொடர்ந்திருப்போம். வங்கி வரவுச் சம்பளம் தங்கிச் சேருது’ என்று சம்பந்தப்பட்டவர்கள் மகிழ்ந்தார்கள்.

இதைச் சொல்லி மகிழ்ந்தேன். நல்ல தெம்பிலே உள்ள மல்யுத்த வீரர்; அவரது உடம்பிலே ஓடுகிறது உயிர்த் துடிப்புள்ள குருதி, இரண்டொரு நொடி சிறிது இரத்தத்தை ஓரிடத்தில் நிறுத்தினால் என்ன ஆகும்? அவர் மயங்கி விழ்வார் இரத்தம் இருந்தால் போதாது. ஒடினால்தான் உயிர் வாழ்க்கை. அதேபோல் பணம் இருந்தால் போதாது. ஒடி, உதவினால்தான் பொருளாதார உயிர் மாறாகக் கோடிகோடி வீடுகளில் பூட்டிப்பூட்டி வைத்தால், நாட்டின் பொருளாதாரம் மயங்கிக் கிடக்கும். எனக்குத் தெரிந்தால் போதுமா?

சுவிஸ் நாடு வங்கிகளுக்குப் பெயர் போனது என்பதைச் சிதம்பரநாதன் நினைவுபடுத்தினர்.

அந்நாட்டில் வங்கிக் கணக்கு பரம இரகசியம். அதை யாருக்கும் ஒருபோதும் வெளியிடக்கூடாது என்பது அந் நாட்டுச் சட்டம். எனவே, சுவிஸ் மக்கள் மட்டுமல்லாது, பிற நாட்டவர்கள்-இலட்சக்கணக்கானவர்கள்-தங்கள் பணத்தைக் கறுப்பானாலும் வெள்ளையானாலும் சுவிஸ் நாட்டு வங்கிகளில் போட்டு வைத் திருக்கிறார்கள். இதுவும் அந் நாட்டுப் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பெருந்துணை செய்கிறது.

இதையெல்லாம் பேசிக்கொண்டே நடந்தோம். இயற்கை வெளிச்சம் மறையவில்லை. மணியென்னவென்று கைக் கடிகாரத்தைப் பார்த்தோம். ஒன்பது காட்டிற்று. ‘இரவு ஒன்பது மணிக்கும் பகல் வெளிச்சமா!’ என்று வியந்து கொண்டே கார் ஏறித் திரும்பினோம்.

நான் ஜினிவாவிற்குப் போய்ச் சேர்ந்தது வெள்ளிக் கிழமை மாலை.

சனி, ஞாயிற்றுக் கிழமை-இரு நாள்களும் விடுமுறை மேனாட்டார் விடுமுறை நாள்களை வீட்டில் கழிப்பது அரிது. அந்நாள்களில் அலுவலகங்களில் காக்கை குருவியைக்கூடக் காண முடியாது. வார விடுமுறையின்போது, வெளியூருக்கு மகிழ்ச்சி யுலா, பிக்னிக் செல்லாவிட்டால் அவர்களுக்குத் தூக்கம் வராது. இப் பழக்கம் மேனாடுகளில் வாழும் நம்மவர்களையும் விடவில்லை.

எனவே, அடுத்த நாள் வெளியூருக்குக் காரில் சென்றுவரத் திட்டமிட்டார் சிதம்பராாதன். சனிக் கிழமை மாலை தமிழ்நாடு நிதியமைச்சர் மாண்புமிகு மதியழகன் ஜினிவா வருவதாக ஏற்பாடு. எனவே அவரை விமான நிலையத்தில் வரவேற்கவும் விரும்பினார். அதற்குத் தோதாக, ஜீனிவாவிற்கு நாற்பத்தைந்து கிலோ தூரத்திலுள்ள ‘அன்னசி’ என்ற இடத்திற்குப் போக முடிவு செய்தோம்.

மறுநாள் காலையிலே சிதம்பரநாதன் காரில் அவர், அவரது மனைவி, அவரது மகன் குமார், நான் ஆகிய நால்வரும் புறப்பட்டோம். கார் சிட்டெனப் பறந்தது.

சென்னையில் நாற்பது கிலோ மீட்டர்களுக்கு மேலும் வெளியூர் நீண்ட பயணத்தில் ஐம்பது கிலோ மீட்டர்களுக்கு மேலும் காரை வேகமாக ஒடவிடுவதில8ல. அவ்வளவு குறைந்த ஓட்டத்திலும் என் கண் சாலையின் மேலேயே இருக்கும்; அடிக்கடி ‘பார்த்து, பார்த்து’, என்று காரோட்டியை நச்சரிப்பேன்.

ஜினிவா-அன்னசி சாலையில், தொண்ணுறு, நூறு கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஒட்டினார் சிதம்பரநாதன். அதை நான் பொருட்படுத்தவில்லை. அங்கே திடீரெனத் துணிச்சல் வந்துவிட்டதா? அப்படியொன்று மில்லை. ஆபத்து இருந்தால் அல்லவா துணிச்சல் தேவைப்பட?

நடுத் தெருவில் நின்று பழைய கதை பேசுவோர் கிடையாது. அங்கெல்லாம் வண்டி வழி வண்டிக்கே; நடக்கும் ‘மன்னருக்கு’ நடை பாதையே. ‘பிரேக்கை’ சோதிக்கும் எருமை தெருவிலே வராது. பயமறியாத இளங்கன்றும் சாலையிலே ஓடாது. ஆட்டுக் குட்டி துள்ளியோட இடம் வேறு. எங்கிருந்தோ சட்டென்று தாவித் தொடரும் நாயும் நடுத்தெருவில் தலை காட்டாது. கட்சி மாறிகள் போல் ஒடும் காரோட்டிகள் இலர். வாகனச்சாலை வாகனங்களுக்கே அதிலும் விரைவு வழி விரைவு வண்டிகளுக்கே மெள்ள ஒட்டுவோர்க்கத் தனி வழி. இந்நெறிகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுகின்றன. எனவே எவ்வளவு விரைந்து சென்றாலும் மெத்தென இருக்க முடிந்தது. சுவிஸ் நாட்டு நெடுஞ்சாலைகள் நன்றாக அமைக்கப்பட்டுள்ளன. அகலமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் ; ஒரே திசையில் மூன்று கார்கள் செல்லும்படி சாலைகள் அகன்றுள்ளன. வழி நெடுகிலும் கோடிட்டுத் தடம் பிரித்துள்ளனர். ஒரு தடத்திலிருந்து மறு தடத்திற்குச் சட்டென்று மாறினால் தீங்கு: சனி, ஞாயிறுகளில் பெருந் தீங்கு.. ஒவ்வொரு தடத்திலும் சங்கிலித தொடர்போல வரும் வண்டியோடு மோத நேரிடும். ஆகவே முன்கூட்டியே, பின் விளக்கையும் கைகாட்டியையும் போதிய தூரம் போட்டுக் காட்டிய பிறகே, தடம் மாறலாம்.

ஜினிவாவில் இருந்த நாங்கள் அன்னசிக்கு விரைந்தோம். வெளியூர் மக்கள் ஜினிவாவை நோக்கிப் பறந் தனர். மொத்தத்தில் சாலையெல்லாம் கார் மயம்; நினைக் கும் முன் பறக்கும் கார்மயம். அன்னசியை அடைந்தோம். இடந்தேடிக் காரை நிறுத்தினோம். மேனாட்டு நகரங்களில் கார் வாங்குவது எளிது. அதை நிறுத்த இடம் பிடிப்பது அரிது. குடியிருக்கும் பல குடும்பங்களுக்கும் கார் இருக்கும். அத்தனை கார்களையும் தெருவிலே கூட, வீட்டின் முன்பே நிறுத்த முடியாது. அக்கம் பக்கத்திலும் அலைந்தே இடம் காண வேண்டும்.

அன்னசி அழகிய ஊர். அது பிரான்ஸ் நாட்டில் உள்ளது. அங்கு ஏரியொன்று உண்டு ஜினிவா ஏரியளவு பெரியதன்று. ஆயினும் வசீகரமானது; பயணிகளை ஈர்ப்பது. அந்த ஏரியில் படகில் சுற்றிவரக் கருதினோம்

காரைப் பூட்டிவிட்டுப் புறப்பட்டோம் புறப்படு வதற்கு முன்னே தாகசாந்தி செய்து கொண்டோம். வகைவகையான பழச்சாறுகளை டப்பாக்களில் நிரப்பி, சீல் வைத்து, கடைக்குக் கடை விற்கிறார்கள். எந்த நேரம் எந்த விட்டிற்குப் போனாலும் , டப்பாச் சாறுகளைப் பெறலாம்.

ஜினிவாவிலிருந்து ஆரஞ்சுச் சாறும் அன்னாசிச் சாறும் கொண்டுவந்திருந்தோம். அன்னாசிச் சாறு அருந்தி விட்டு நாங்கள் அருகில் இருந்த ஏரிக்குச் சென்றோம். படகுத் துறையொன்றுக்குச் சென்று மிதி படகை வாடகைக்கு எடுத்துக் கொண்டோம. திருமதி சிதம்பரநாதனும் செல்வன் குமாரும் முன்னே அமர்ந்து படகை மிதித்து ஒட்டினர். நானும் நண்பரும் பின்னே இருந்து திட்டமிட்டோம். அன்னசிக்கு வரும் வழியெலலாம் பேசிக்கொண்டு வந்தும் திட்டம் தீட்டுதல் முடிய வில்லே. அதைத் தொடர்ந்தோம். படகில் அப்படி யென்ன திட்டம் அது? நல்ல திட்டமே, சதித் திட்டமன்று, ஆக்கத் திட்டமே; அழிவுத் திட்டமன்று.

மேலே வெயில்; ஆயினும் இளங்காற்று சில்லென வீசி மகிழ்வித்தது. படகுப் பயணத்தை நாங்கள் மிகவும் ரசித்தோம்; மக்கள் வெயில் காயும் துறையை ஒதுக்கி விட்டு, பிற துறைகளைக் கண்டு மகிழ்ந்தோம். பொடிச் சிறுவரும் சிறுமியரும் ஏரியில் முழ்கி நீந்தி விளையாடக் கண்டோம். கீழே பாத்தோம். ஆழக் குறைவு மட்டுமன்று; மணற் பாங்கான நிலம் துணைபுரிவது தெரிந்தது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் வங்காள விரிகுடாவின் கரையோரத்திலுள்ள தொண்டிக் கடற்கரைப் பகுதியில் நெடுந்துாரத்திற்குக் கடல் ஆழமற்றிருப்பதாகக் கேள்வி. அங்கே மாணவ மாணவியர் நீராடி மகிழ வாய்ப்புகள் செய்ய வேண்டுமென்று சில ஆண்டுகளுக்கு முன் நினைத்தது உண்டு. சோவியத் ஒன்றியத்திலுள்ள ஆர்டெக் மாணவர் பாசறையைக் கண்ட போது அரும்பி மலர்ந்த நினைப்பு அது உதிர்ந்த இதழான அது மீண்டும் மனம் விசியது. நல்லவர் எவராவது செய்து முடிக்கட்டுமே!

விளையாடிய அலுப்புத் தீரக் கரையோரப் புல்வெளியில் உட்கார்ந்து, சாண்டவிச்சும், கொக்கோகோலாவும் சாப்பிடும் இளைஞர்களையும் கண்டோம். காகித உறைகளையும் மூடிகளையும் ஆங்காங்கே, அப்படியப்படியே போட்டுவிடுவதில்லை. குழந்தைகள் கூட, தாங்கள் உண்டு முடித்ததும் உறைகளையும் பிறவற்றையும் ஒழுங்காகத் திரட்டி எடுத்துக்கொண்டு போய், பக்கத்திலுள்ள குப்பைக்கூடையில் எறிந்துவிட்டு வருவதைக் கண்டு மகிழ்ந்தோம். வாயைக் கொப்பளிக்கிறேன் என்று எச்சில் தானம் செய்வோர் யாரும் என் கண்ணில் தென்படவில்லை.

 

7. கோட்டைவிட்ட கோட்டைஅன்னசிப் பாசறையை நாங்கள் விரைவில் மாற்றி விட்டோம்; மாண்புமிகு திரு. மதியழகனை வரவேற்கப் புறப்பட்டோம் வழியில் ஒரூரில் தங்கி, நாங்கள் உணவு உண்டுவிட்டு நேரே விமான நிலையத்திற்கு விரைந்தோம். குறிப்பிட்ட நேரத்திற்குப் பத்து நிமிடம் முன்னரே போய்ச் சேர்ந்தோம். அமைச்சர் வரும் விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக வருவதாக அறிந்தோம். கா த்துக்கிடக்க விரும்பவில்லை. எனவே, நான் ஒட்டலுக்குச் சென்றேன். சிதம்பரநாதன் விட்டிற்குத் திரும்பினார். குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து என்னை மட்டும் அழைத்துக் கொண்டு விமான நிலையத்தை அடைந்தார் நண்பர் நாதன்.

காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, அதற்கெதிரில் இருந்த மீட்டரில் காசைப் போட்டுவிட்டு, விமான நிலையத்திற்குள் சென்றோம்

மாண்புமிகு திரு. மதியழகனும், மாண்புமிகு திரு. பரூக் மரைக்காயரும் என்னையும், நான் அறிமுகப்படுத்திய நாதனையும் கண்டு பெரு மகிழ்வு கொண்டனர். வெளிநாடுகளில் இருக்கும்போது, அறிமுகமான யாராவது நம்மை வந்து அழைத்துப் போவார்களா என்னும் பேராவல் எழும். அது நிறைவேறிவிட்டால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையேது? என்னேப்போன்று பல முறை பிற நாடு சென்று ஏங்கியவர்க்கே இவ்வுணர்ச்சியின் ஆழம் தெரியும்.

அவர்களை அழைத்துக்கொண்டு வெளியே வந்தோம். அவர்களை வரவேற்க நமது துாதுவரகத்திலிருந்து ஒருவர் வந்திருந்தார். உலக சுகாதார சபையில் பெரிய அதிகாரியாக உள்ள இலங்கைத் தமிழர் டாக்டர் சுந்தரம் என்பவரும் வந்திருந்தார். அவரது காரும் சிதம்பரநாதனின் காருக்கு அருகில் இருந்தது.

கார்களுக்கு அருகில் வந்ததும், நாதனின் காருக்கு இடப்புறம் நிறுத்தியிருந்த காரின் சொந்தக்காரர் நாதனிடம் ஏதோ கூறினார்

“ஆ! காசு தீர்ந்து விட்டதா? டிக்கெட் கொடுப்பதற்குமுன் வந்துவிட்டேன். நல்லவேளை; அபராதச் சீட்டு வரவில்லை” என்று படபடப்பாகக் கூறிக் கொண்டே, மீட்டரில் மீண்டும் காசு போட்டார்.

கார் நிற்கும் நேரத்தின் அளவிற்கேற்பக் காசு போட வேண்டும். போட்ட காசு தீர்ந்து விட்ட பிறகும் அங்கேயே நிற்க வேண்டுமானால் மீண்டும் காசு போட வேண்டும், தவறினால் அபராதம் அங்கேயே விதிக்கப்படும். வேறு பேச்சுக்கு இடமில்லை. இரண்டாவது முறை காசு போட வேண்டிய நேரத்தில் அவர் விமான நிலையத்திற்குள் இருந்து விட்டார்.

படபடப்போடு காசு போட்டுக் கொண்டிருக்கையில் திரு. சுந்தரம், அமைச்சர் இருவரையும் தம் காரில் ஏற்றிக்கொண்டிருந்தார். மாண்புமிகு திரு. மதியழகன் காரின் (மன் இடத்தில் அமர்ந்தார். அவர் தமது வலக்கையை மேலே உயர்த்தி வைத்திருப்பதைக் கவனியாமல் கதவைச் சாத்தினார் சுந்தரம்.

‘ஆ! என்று கேட்டதும் விரைந்து கதவைத் திறந்தார். அமைச்சரது வலது கையில் நடுவிரல் காயம் பட்டிருந்தது. அமைச்சர் கோபப்படவில்லை. “விரலில் வேறு பக்கம் அழுத்தியிருந்தால், எலும்பு முறிந்திருக்கலாம்; இவ்வளவோடு விட்டதே!” என்று எங்களுக்கு ஆறுதல் கூறினர்.

விமான நிலைய மருத்துவ நிலையத்தில் மருந்து இட்டு, ஒட்டுப் போட்டுவிட்டுப் புறப்பட்டோம். ஒய்வெடுக்காமல், ஜினிவாவைச் சுற்றி வந்தோம். வெறிச்சோடியிருந்த கடைத் தெருவின் வழியாக ஏரிக் கரைக்குச் சென்றோம். ‘பொங்கு புனலை’க் கண்டு பூரித்தோம்; மலர்க் கடிகாரத்தைக் கண்டு மகிழ்ந்தோம்.

ஜினிவா நகரத்தில் பார்க்க வேண்டிய காட்சிகளுள் ஒன்று மலர்க் கடிகாரம். கடிகார முகம் மலர்ச் செடிகளாலும் புற்களாலும் அமைக்கப்பட்டது. எண்களையும் மலர்களாலேயே அமைத்துள்ளனர். அதன் அடியில், நிலத்தில் பாதுகாப்பாக, கடிகாரக் கருவியை புதைத்து வைத்துள்ளனர். அதோடு சாதாரண கடிகாரத்தில் உள்ளது போல இரண்டு முட்கள் இணைந்துள்ளன. ஒன்று மணி காட்டுகிறது; மற்றொன்று நிமிடத்தைக் காட்டுகிறது. நான், 1951ல் என் மனைவியோடு, ஜினிவா போனபோது இம் மலர்க் கடிகாரத்தைக் கண்டு மகிழ்ந்தேன். அன்று போல், இன்றும் அது பசுமையாகவே இருக்கக் கண்டேன்.

முன்பு உலக நாடுகளின் கழக (League of Nations’) அலுவலகமாயிருந்து, இப்போது ஐக்கிய நாடுகளின் அவைக்குரிய பிராந்திய அலுவலகமாக இருக்கும் பெரிய அழகிய கட்டிடத்தைச் சுற்றிப் பார்த்தோம். அவை மண்டபம், குழு அறைகள் எங்களைக் கவர்ந்தன. அவை மண்டபப் படுதாக்கள் இந்தியப் பட்டால் ஆனவை. அவற்றை இந்தியா ஆதியில், தனது நன்கொடையாக வழங்கிற்று என்று கேள்விப்பட்டுப் பெருமிதம் கொண்டோம்.

அவை மண்டபத்தில் நாங்கள் மட்டுமே இருந்தோம். அவைத் தலைவர் இடத்தில் அமர்ந்து பார்த்தால் என்ன என்கிற குறும்பு எண்ணம் எழுந்தது ஒருவருக்கு. அதன் மாண்பினைக் குறைக்கும்படி கருதக் கூடாது என்று அவரை நெறிப்படுத்தி அழைத்து வந்தார் மாண்புமிகு மதியழகன்.

அன்றிரவு அனைவர்க்கும் நண்பர் சிதம்பரநாதன் வீட்டில் விருந்து சன்ன அரிசிச் சோறும், சாம்பாரும், ரசமும், தயிரும், பூரியும், காய்கறிகளும் ஜினிவாவில் இருக்கிறோமென்பதையே மறக்க வைத்தன. நல்ல சமையல்; நல்லுபசாரம்: விருந்தோம்பலும் பிரமாதம். அவரவர் ஒட்டலுக்குத் திரும்ப நள்ளிரவாகி விட்டது.

அடுத்த நாள் பிற்பகல், மாண்புமிகு மரைக்காயரும், மாண்புமிகு மதியழகனும் ரோமிற்குப் புறப்பட வேண்டும். எனவே முற்பகலில், ஜினிவாவில் சில பகுதிகளைக் காட்டினோம் . பின்னர் விசைப்படகில் அமைச்சர்களோடு ஏரியில் பயணஞ் செய்தோம். அந்த விசைப் படகை ஒட்டியவர் கலகலப்பான பேர்வழி. வாட்ட சாட்டமான சிறுவன் ஒருவன் அப் பயணத்தில் எங்களோடு வந்தான். புகைப்படம் எடுக்க முயன்றோம். வெட்கப்பட்டான். கேப்டன்’ சிறுவனைச் சரிக்கட்டி, எங்களோடு நின்று படம் எடுத்துக் கொள்ளச் செய்தார்.

முந்திய நாள் மலர்க்கடிகாரத்தைக் கண்டபோது, புகைப்படமெடுக்கப் போதிய ஒளி இல்லை. எனவே ஞாயிறன்று எல்லோரும் சேர்ந்து, மலர்க்கடிகாரத்தின் அருகில் நின்று படம் பிடித்துக் கொண்டோம். அமைச்சர் இருவரும் காட்சிக்கு எளியவர், நட்புக்கு இனியவர் என்பதை அங்கிருந்தவர்களே உரைக்க முடியும்.

பிற்பகல் நானும் நாதனும் வெளியூர் போவதாகத் திட்டம் அப்போது நண்பர் சுந்தரம் அமைச்சர்களோடு இருந்து வழியனுப்புவதாக ஏற்பாடு. அதன் படி நண்பர் சுந்தரம் வீட்டிற்கு அமைச்சர்கள் சென்றார்கள். செல்லுமுன் நிதி அமைச்சர் என்னைத் தனியாக அழைத்துப் பேசினார்; உலகப் பல்கலைக் கழகச் சேவையின் பொது அவைக்கூட்டத்தைச் சென்னையில் நல்லபடி நடத்திக்கொடுக்கச் சொன்னார்; அரசினர் வேண்டிய நிதி உதவி செய்யக்கூடும் என்றார்; பாரிசில் சந்திக்கும் போது, நிதி உதவி கோரும் கடிதத்தைக் கொண்டு வரச் சொன்னார்.

நானும் நாதனும் அவரது விட்டிற்குச் சென்று திருமதி நாதனையும் செல்வன் குமாரையும் அழைத்துக் கொண்டு வடக்கு நோக்கி விரைந்தோம். சுவிஸ் நாட்டுப் புறங்களைக் காணவேண்டுமென்பது எங்கள் நோக்கம். அது நிறைவேறிற்று. பல ஊர்களைப் பார்த்துக்கொண்டு சென்றோம். வழியில் ஓரூரில், ஏரிக்கரையோரம் புல் வெளியில் இருந்து பகலுணவு உண்டோம்.

கிச்சிலிப்பழச் சாதம், தயிர்ச்சோறு, உருளைக் கிழங்குப் பொரியல், அப்பளம், ஊறுகாய் பகல் உணவாயின. சாப்பாட்டிற்கு முன்பு, பழச்சாறும் அருந்தினோம். சாப்பாட்டிற்குப் பின், ஐஸ்கிரீம். இத்தனையும் வீட்டிலிருந்து எங்களோடு வந்தன.

லூசேன் என்ற நகரத்தைத் தாண்டி, குருயர் அணைக்குச் சென்றோம். அந்நாட்டின் பெரிய அணை அது. அணையைவிட வழியிலுள்ள ஊர்களும் காட்சிகளும சிறந்தவை.

அணையை விட்டுப் பல கிலோ மீட்டர் சென்றதும் குருயர் என்ற ஊரை அடைந்தோம்.

இவ்வூர் உயர்ந்த மேட்டுப் பூமியில் உள்ளது. மிகத் தொன்மையான ஊர். பழைய கோட்டையொன்று இங்கே இருக்கிறது. அதற்குள் இரண்டு மாடி அரண்மனை. கோட்டையையும் அரண்மனையையும் காண வருவோர் கூட்டம் பெரிது.

ஊரை நெருங்கியதும், ஊருக்கு வெளியே வாகனங்கள் தங்குமிடத்தைக் கண்டோம். அங்கேயே காரை நிறுத்திவிட்டோம். ஏன் தெரியுமா? ‘தங்கள் ஊருக்குள் யாரும் காரில் வந்து தொல்லை கொடுக்கக்கூடாது; வயதானவர்களும் குழந்தைகளும் அச்சமின்றி நடமாட வேண்டும்’ என்பது அவ்வூரார் கருத்தாம். அப்படியே விதித்துவிட்டார்கள்.

‘எங்கள் ஊருக்குள் எந்த மாற்றுக் கட்சியான் தலை காட்டுகிறான் பார்க்கலாம்’ என்று காட்டுக்கால தர்பார் நடத்திய ஊர்த்தலைவர்களைப் பற்றி, நான் சிறுவனாக இருந்தபோது கேள்விப்பட்டதுண்டு. அந்நிலை நினைவிற்கு வந்தது.

ஊருக்குள் நடந்து அதன் உச்சியில் இருக்கும் கோட்டைக்குச் சென்ருேம். ஊர் சிறியது. ஒரே தெரு. இரு மருங்கிலும் பழைய வீடுகள். கோட்டைக்குள் செல்ல நுழைவுக் கட்டணம் உண்டு. அந்த வசூலைக் கொண்டு கோட்டையை நன்கு பராமரிக்கிறார்கள். கோட்டை அமைந்துள்ள இடம் அக்காலப் பாதுகாப்பிற் குத் தக்க இடம். பழைய அரண்மனையைக் காணும் போது, அக்கால மன்னர்களைப் பற்றி எனக்குப் பரிதாபம் ஏற்படும், ஏன்? இன்று நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்க்கும் கிடைக்கும் ஓடுநீர் வசதி, மின்சார விளக்கு வசதி, குளியல் வசதி, அக்கால மன்னருக்குக் கிடையாதே!

இக் கோட்டையின் வரலாறு வேடிக்கையானது. அதற்கு உரிய கடைசிப் பிரபு ஒர் ஊதாரி. கடன் வாங்கிச் செலவு செய்து வந்தான். கடனில் மூழ்கி விட்டான்; கோட்டைவிட்டான். கோட்டை ஏலத்திற்கு வந்தது. செல்வன் எவனோ ஏலமெடுத்தான். பல்லாண்டிற்குப் பின் ஊருக்குக் கொடுத்துவிட்டான்.

இவ்வூர் பாலாடைக்கு, சீஸ்’ஸ்-க்கு நெடுங்கால மாகப் பெயர் போனதாம். அங்குள்ள மாடிக் கட்டடம் ஒன்றின் வயது முந்நூறுக்கு மேல். தெருவின் இரு மருங்கிலும் சிற்றுண்டிச்சாலை. தெருவைக் கூழாங்கற்கள் பதித்து உருவாக்கியுள்ளனர். தெருவைக் கடந்து செல்லும்போது திருமதி நாதனின் புடவையை வியப் போடு பார்த்தனர்.

சிற்றுண்டிச்சாலை யொன்றிற்குச் சென்றோம். உள்ளே சென்று உண்பதைவிட வெளியே இருந்து உண்பதற்கே அங்குள்ளவர்களுக்கு மோகம். நாங்களும் வெளியே, வண்ணக் குடைகளின் நிழலில் அமர்ந்து காப்பியருந்தினோம்.

இருட்டும் வேளையில் புறப்பட்டு ஜினிவாவிற்குத் திரும்பினோம். ஊர் வந்த சேர ஒன்பது மணிக்கு மேலாகிவிட்டது. தும்பும் தூசியும் குறைவாகவும், குளுமை நிறைந்தும் நாள் முழுதும் வீசிய மலைக்காற்று அலுப்பைக் கொடுக்காமல் காத்தது

 

8. உலகப் பல்கலைக் கழகச் சேவைஜூலைத்திங்கள் மூன்றாம் நாள் காலை 8-45 மணிக்கு, நண்பர் நாதன் நான் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்தார். நான் சிற்றுண்டி உண்டுவிட்டு, பெட்டியோடு ஆயத்த மாயிருந்தேன். ஒட்டலுக்கு கட்டவேண்டியதைக் கட்டி விட்டு வெளியேறினோம், நேரே நாதன் அலுவலகத் திற்குச் சென்றோம்.

திரு. சிதம்பரநாதன், ‘உலகப் பல்கலைக் கழகச் சேவை’ என்னும் உலக அமைப்பின் செக்ரடரி ஜெனரல். அந்த அமைப்பின் அலுவலகம் பழைய ஜினிவாவில் இருக்கிறது. அது அமைந்துள்ள தெரு குறுகலானது. நாதன் தம் காரை நிறுத்துவதற்காகக் குறுகிய தெருக்களைச் சுற்றிச் சுற்றி வந்தார். கடைசியில் ஒரு கோடியில் இடம் கிடைத்தது. அங்கே நிறுத்திவிட்டு ஐந்து நிமிடம் நடந்து அலுவலகம் சேர்ந்தோம்.

“இந்தப் பாடுபடுவதற்குப் பதில், வீட்டிலிருந்து நடந்தே வந்துவிடலாம் போலிருக்கிறது” என்றேன்.

“ஆம். நண்பர்கள் வரும்போது பயன்படவே கார்!” என்று புன்முறுவலோடு பதிலுரைத்தார்.

நண்பர்கள் என்றால் யார்? அவர்கள் எப்போதோ வருபவர்களா?

நண்பர்கள் பல நாட்டவர்கள். வாரத்திற்குப் பாதி நாள் யாராவது வந்து போய்க்கொண்டிருப்பார்கள். அவர்களோடு தொடர்பு கொண்டு திட்டமிட்டு ஊக்கு வித்துச் சேவை செய்வதே உலகப் பல்கலைக் கழகச் சேவையின் (உ.ப. சே.) வேலை.

அலுவலகக் கட்டடத்தை நெருங்கினோம் பழங்காலக் கட்டடமாகக் காட்சியளித்தது. பழைய கட்டடமோ? என்றேன். ஆம். மிகப் பழையது. பல நூற்றாண்டுகளுக்கு முன், கிறித்துவச் சமயாச்சாரியர்களுள் ஒருவராக விளங்கிய கால்வின் இக் கட்டடத்தில் இருந்தே சமயத் தொண்டாற்றினர்' என்று நாதன் விளக்கினார். அத் தெருவிற்குத் ‘கால்வின் தெரு’ என்று பெயர்.

பழம் பெரும் கட்டடத்தில், புதியதொரு மானுடத் தொண்டு நடக்கிறது; ஐம்பது ஆண்டுகளாக நடக்கிறது. எத்தகைய தொண்டு அது?

இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பத்தாண்டுக் கால வரம்பில் முதல் உலகப்போர் நடந்தது. முன்னரெல்லாம் கண்டப் போராக இருந்தது அப்போது உலகப் போராக மூண்டது. விளைவு? சொல்லொணாத் துன்பம் எழுத முடியாத அழிவு: கணக்கிட முடியாத ஆட்சேதம்.

முன்னர் மாட மாளிகைகளாக எழுந்து நின்றவை போரின் முடிவில் கற்குவியல்களாக, பிணங்களை அடக்கிக் கொண்டிருக்கும் குவியல்களாயின. பெரும் பெரும் ஆலைகளெல்லாம் நாற்றமடிக்கும் இடிபாடுகளாயின. கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் இத்தகைய அழிவிலிருந்து தப்பவில்லை. கல்லூரிகள் இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க இயலவில்லை. வகுப்பறைகளைக் காணோம் விடுதிகளைக் காணோம். படிக்க நூல்கள் உண்டா? அவையும் அழிந்து போயின. விளக்கு உண்டா? முயன்று உற்பத்தி செய்தாக வேண்டும். இவை கிடக்கட்டும்; உண்ண உணவு கிடைத்ததா? மாணவர்க்காவது உடுத்த உடையுண்டா? போட்டுக் கொள்ள காலணி எங்கே? நாளெல்லாம் அல்லற்பட்ட மாணவர் சமுதாயம் படுத்து உறங்கவாவது இடமுண்டா?

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். இதோ ஒரு பல்கலைக் கழகத்தின் நிலை:

வியன்னா பல்கலைக் கழகம். அங்கே பதினையாயிரம் மாணவ மாணவியர். அவர்களில் ஆயிரத்து நானூறு பேர் பெண்கள். அவர்களுக்கு ஒரே வேளை உணவு. சுரீரென்று தைக்கும் பனித்தரையில் வெறும் காலோடு நடக்க வேண்டிய நிலை பலருக்கு. மேலும் பலருக்கு ஒட்டைகள் நிறைந்த காலணி உடையாவது போதிய அளவு உண்டா? இல்லை. மாற்றுடை இல்லாதவர்களே பெரும்பாலோர், உறங்கும்போது வேற்றுடை இல்லை. எங்கே உறங்கினார்கள் தெரியுமா? பலருக்குக் படுக்கை அறை கிடையாது. எனவே, புளி முட்டைகள் போல் கழிவறைப் பாதைகளில்கூட உருண்டு உறங்கினார்கள். இன்னும் என்ன கொடுமை வேண்டும்! இத்தனை கொடுமைகளின் விளைவாக நோய்கள் தாக்கி உலுக்கின.

மண்ணாசை பிடித்த, ஆதிக்கவெறி பிடித்த நாட்டுத் தலைவர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றிய ஐரோப்பிய நாடுகளிலே போர் முடிந்த வேளை. அப்பொழுது அனுபவித்த அவல நிலைக்கு இஃது ஒர் எடுத்துக்காட்டு. மற்றப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் நிலையும் கொடுமையானதே; கடுமையானதே.

இதை அறிந்த நல்லோர் சிலர் கசிந்து உருகினர். தீயோரைத் திட்டிக்கொண்டே ஆறுதல் அடையாமல், அழிவிலிருந்து ஆக்கத்திற்கு உயர்த்த உறுதி கொண்டனர்: உழைக்க முன்வந்தனர். கட்டாயம் ஏதுமின்றி, விரும்பிக் கொடுக்கும் பணத்தையும் பொருள்களையும் திரட்டி, பஞ்ச நிவாரண வேலை, பட்டினி ஒழிப்புப்பணி, நோய் நீக்கும் மருத்துவ சேவை, தன்னுதவிக்கு உதவி, உடைக்கொடை, நூல் கொடை ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்தனர். இவ்வேறுபாடுகளைக் கவனிக்க, ஐரோப்பிய மாணவர் நிவாரணம் என்ற பெயரில் ஒரமைப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். அதன் மூலம் பலர், இத்தகைய மாணவர் தொண்டிலே குதித்தனர்.

எடுத்த எடுப்பிலே அன்னதானம்; உடைதானம்; மருந்துக் கொடை எப்போதும் கொடை கொடுத்துக் கொண்டிருப்பது கொடுப்போர்க்கும் நல்லதன்று; பெறுவோர்க்கும் நல்லதன்று. திடீர் ஆபத்தில் கொடை வாங்கலாம். விரைவில் அதிலிருந்து விடுபடவேண்டும்.தன் காலில் நிற்க வேண்டும்; தன் உழைப்பினால் வாழ வேண்டும்.

இரண்டாவது கட்டத்தில் அப்படியே ஏற்பாடு செய்தனர். உடை தைக்க, பழுது பார்க்க வேண்டிய கருவிகளைத் தந்து உதவினர். மாணவர்கள் ஓய்ந்த நேரத்தில் தங்களுக்கும் மற்ற மாணவர்களுக்கும் உடை தைத்து உதவினார்கள். காலணி தைக்கவும் கருவிக் கொடை விடுதியைக் கட்டிக் கொடுக்கவில்லை. விடுதி கட்டுவதற்கான பொருள்களைத் தந்தனர். முறை தெரிந்த கட்டட வல்லுநர்களின் ஆலோசனையை அவர்களுக்கு ஈந்தனர். இவற்றையெல்லாம் பெற்ற மாணவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொண்டு வறுமையினின்றும் பட்டினியிலிருந்தும் படிக்க முடியா மையிலிருந்தும் விடுபட்டு, தன்னம்பிக்கை பெற்று தன்னூக்கத்தைத் திரும்பப் பெற்று, தம் முயற்சியினால் மறுவாழ்வு- நல்வாழ்வு-பெற்றார்கள்.

ஐரோப்பிய மாணவர் நிவாரணம் (ஐ. மா. நி.) பெற்ற தொண்டு அனுபவமும், அமைப்பும் வீணாகாமல் தொடர்ந்து பற்பல நாடுகளில் பற்பல நெருக்கடிகளின் போது, கைகொடுத்து உதவின. இரண்டாம் உலகப் போரின் போதும், அதற்குப் பிறகும், அதன் சேவை அறிந்தது. ஐரோப்பவிற்கு அப்பால் அவதிப்பட்ட நாடுகளின் மாணவர்களுக்கெல்லாம் அதன் நீண்ட கரம் எட்டி உதவியது. 1920ஆம் ஆண்டில் ஐ. மா.நி என்ற பெயரில் முளைத்த இச் சேவா நிலையம் இன்று, உலகப் பல்கலைக் கழகக்சேவை (உ.ப.சே.) என்ற புதுப் பெயரில் உலகத்தின் அறுபத்தெட்டு நாடுகளில் விழுதுவிட்டு, நிழல் தந்து துணை புரிகிறது. உ. ப. சே.யின் பொது அவை ஈராண்டுக்கு ஒரு முறை கூடும்; வெவ்வேறு நாடுகளில் கூடும். இவ்வாண்டு (1970) உ. ப. சே. யின் பொன் விழா ஆண்டு. பொன் விழா ஆண்டில் கூடும். பொது அவைக் கூட்டம், சென்னையில் கூடிற்று. எழும்பூர் ஸ்பர்டாங் ரோட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஐந்து மாடிக் கட்டடத்தில் கூடிற்று. ஆகஸ்டு 22 ஆம் தேதி முதல் 29ஆம் நாள் வரை கூடி, அடுத்த

இரண்டாண்டிற்கான திட்டங்களை வேலை முறைகளை முடிவு செய்தது.

இக்கட்டடத்தைப் பற்றிச் சில சொற்கள். இது ஐந்து மாடிக் கட்டடம். பதினாறு இலட்ச ரூபாய்க் கட்டடம். எதற்கு இது? உ. ப. சே.யின் சென்னை மையம் இது. இங்கே என்ன உண்டு? மருத்துவ சோதனை நிலையம் உண்டு. ‘எக்ஸ்ரே’ படம் பிடிக்க, பல் வைத்தியம் செய்ய, கண் சோதனை செய்ய, காது சோதனை பார்க்கக் கருவிகள் உள்ளன. சென்னையிலுள்ள மருத்துவ நிபுணர்கள் இந் நிலையத்தை நடத்துவார்கள். மருத்துவ சோதனை நிலையம் மட்டுமல்ல இது. நூலகம் இருக்கும்; கலைக்கூடம் இருக்கும்; மாணவர் விடுதியுண்டு; வங்கி வசதியும் உண்டு.

கட்டடத்திற்கு எங்கிருந்து பணம் வந்தது தெரியுமா? டென்மார்க் அரசு, எல்லாவற்றிற்குமாகப் பதினெட்டு இலட்சம் ரூபாய் வழங்கிற்று. தளவாட சாமான்களுக்கான இரண்டு இலட்சம் ருபாயை நாம் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறோம்.

ஆ! என்ன தவறு செய்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்!

ஜினிவாவின் சிறப்பைக் காட்டிக் கொண்டிருந்தவன் திடீரென முன்னறிவிப்பின்றி, பொத்தெனச் சென்னையின் தொல்லையில் உங்களை இறக்கிவிட்டேனா? அதிர்ச்சி அடையாதீர்கள்!

மீண்டும் ஜினிவாவிற்குப் பறந்து செல்வோம். இதோ, உ. ப. சே. யின் அலுவலகம். நானும் சிதம்பரநாதனும் உள்ளே நுழைந்தபோது காலை 9.25 மணி. அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் அவரவர் இடத்தில் இருந்தனர். அதுமட்டுமா? அலுவலில் முழ்கியிருந்தனர்!

“ஒன்பது மணி, அதிகாலையல்லவா?” என்று கேட்டேன்.

பல அலுவலகங்கள் 8-30 மணிக்கே தொடங்கி விடும் என்ற பதில் வந்தது. கல்விக்கூடங்களும் அவ்வளவு காலையில் தொடங்கி விடுமாம். பனிக் காலங்களில் கூட அப்படியாம்.

உலகப் பல்கலைக் கழகச் சேவையின் பொன் விழா அவைக் கூட்டத்தைச் சென்னையில் நடத்துவது என்று இரண்டு நாள்களும் காரில் பயணஞ் செய்யும்போது திட்டமிட்டோம். அதுபற்றிய நிகழ்ச்சி நிரல்கள், செயல் முறைகள், செலவுக் கணக்குகள், வருவாய் வழிகள் ஆகியவற்றைப் பற்றி ஆலோசித்து முடிவு செய்தவற்றை நாங்கள் எழுத்து வடிவில் உருவாக்கினோம். அவற்றைத் தட்டெழுத்தாக்கினோம்.

தமிழ் நாட்டு அரசிடம் நிதி உதவி கோரும் கடிதத் தையும் ஆயத்தஞ் செய்தார் சிதம்பரநாதன்.

உ. ப. சே. ஐம்பதாண்டுக் காலமாகப் பல்கலைக் கழகப்பணி புரிந்துளது. எதிர்காலத்தில் பல்கலைக் கழகச் சமுதாயத்தைக் கொண்டு பொதுச் சமுதாயத்திற்குச் சேவை செய்ய வேண்டுமென்னும் எண்னம் கருக்கொண்டிருக்கிறது. எந்தச் சேவையைப் பொதுச் சமுதாயத்திற்குச் செய்வது? எவ்வளவு செய்வது? எப்படிச் செய்வது? இவற்றைப்பற்றிச் சென்னையில் நடக்கும் அவையில் முடிவு செய்வார்களென்று அறிந்தேன்.

இவ்வாண்டு அனைத்துலகக் கல்வி ஆண்டு. எனவே, கல்விபற்றிய பொதுச் சமுதாயச் சேவை பொருத்தமாக இருக்குமென்று கருதப்பட்டது. முதியோர் கல்வி அத்தகைய சேவையின் முளையாகத் தோன்றிற்று.

1969ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள் சென்னை நகரில் கூடிய முதியோர் கல்விக் கருத்தரங்கில், என்னால் படைக்கப்பட்டு, கருத்தரங்கால் செப்பம் செய்யப்பட்ட, ‘தமிழ் நாட்டிற்கான முதியோர் கல்வி ஐந்தாண்டுத் திட்டம்’ நினைவில் மின்னிற்று. அதன் உருவம் என்ன?

தமிழ் நாட்டின் மக்கட்தொகை மதிப்பு நான்கு கோடி தமிழ் நாட்டில் எழுதப் படிக்கத் தெரியாதவர் மதிப்பு நூற்றுக்கு அறுபது விழுக்காடு. இவ்வளவு பெரிதா என்று திகைக்காதீர்கள். இரண்டு கோடிப் பேருக்குமேல் நம் செந்தமிழ் நாட்டில், தேன்மொழியாம் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட நம் உடன்பிறப்புகள் தற்குறிகள்!

வறுமையினால் ஒரு தமிழன் கற்கவில்லையென்றல் இங்குள்ள எல்லோரும் நாணவேண்டும். என் ஆணை யன்று; பாவேந்தர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆணை, தாசரின் தாசர்களாகிய நமக்கு இட்ட ஆணை.

எழுதப் படிக்கத் தெரியாதவர்கள், ஐந்து வயதிற்கு உட்பட்டவர்களும் உண்டு; தள்ளாதவர்கள் உண்டு. எழுத்தறிவு இயக்கத்தை எந்நாட்டில் தொடங்கினாலும், பச்சைக் குழந்தைகளையும் பாட்டன் பாட்டிகளையும் கணக்கில் சேர்க்காமல் விட்டுவிடுவது வழக்கம். சாதாரணமாகப் பதினைந்து முதல் நாற்பது வயதுக்குள் அடங்கியவர்களுக்கே எழுதப் படிக்கக் கற்றுக் கொடுப்பது வழக்கம்.

இம் மரபுப்படி 15-40 வயதினர் ஒரு கோடிப் பேருக்கு-எழுதப் படிக்கத் தெரியாத ஒரு கோடிப் பேருக்கு-எழுத்தறிவு ஊட்ட வேண்டுமென்பது அந்தத் திட்டம். எத்தனை ஆண்டுகளில் ஒரு கோடிப் பேருக்கு எழுதப் படிககச் சொல்லிக் கொடுப்பது? ஐந்தாண்டில் சொல்லிக் கொடுப்பதாகக் குறிக்கோள்.

அப்படியானால் ஆண்டிற்கு இருபது இலட்சம் மக்களுக்கு எழுத்தறிவு வரவேண்டும். இதற்கு முதியோர் நிலையங்கள் எத்தனை தேவை? நாற்பதாயிரம் முதியோர் கல்வி நிலையங்கள் தேவை. முதியோர் கல்வி பெற ஆறு மாதங்களே தேவை. ஒவ்வொரு முதியோர் நிலையமும் ஆண்டிற்கு இரு குழுக்களுக்குச் சொல்லிக் கொடுக்கலாம். குழு ஒன்றில் சராசரி இருபத்தைந்து பேர் இருக்கலாம்.

சுருங்கக் கூறின், 40,000 முதியோர் கல்வி நிலையங்களைத் தொடங்கி, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஒரு பிரிவு முதியோரைச் சேர்த்துக் கொடுத்தால், வயது வந்தோர் அனைவரும் ஐந்தாண்டில் எழுதப் படிக்கத் தெரிந்து கொள்வார்கள். இதற்கு எவ்வளவு செலவு? எட்டு, ஒன்பது கோடி ரூபாய்கள்; ஒர் ஆண்டுக்கு அன்று: ஐந்தாண்டுகளுக்கு பகுதி நேர ஆசிரியர்களுக்குச் சம்மானம்; விளக்குச் செலவு; நூல்கள், எழுது பொருள் வாங்கச் செலவு: கண்காணிப்புச் செலவு; அத்தனையும் சேர்ந்த மொத்தச் செலவு எட்டு, ஒன்பது கோடிகளே.

இதைக் கூறியதும் நாதனுக்குப் புதுத் தெம்பு. முதலில் முன்னோடித் திட்டத்தைத் தொடங்கினால் என்ன என்று நாதன் கேட்டார்.

சிறிதாகவோ பெரிதாகவோ தொடங்கிச் சோதனை செய்தல் நல்லது. இதுவே கற்றவர் மற்றவர்க்கு ஆற்றும் நன்றிக்கடன் என்று முடிவு செய்தோம். அதற் காகச் சிறு திட்டமொன்றைத் தீட்டி, ஒழுங்குபடுத்திக் கொண்டோம்.

உ. ப. சே. பொது அவைக் கூட்டத்திற்கான திட்டக் குறிப்பையும், முதியோர் கல்வி முன்னோடித் திட்டத்தையும் விரைந்து தட்டெழுத்தாக்கித் தந்தனர் அலுவலர்.

ஜினிவாவில் ஆக வேண்டியது முடிந்தது. பகல் உணவிற்குப்பின் திட்டமிட்டபடி, பிற்பகல், 2-30 மணிக்கு ஜினிவாவிலிருந்து பாரிசிற்குப் பயணமானேன். விமான நிலையத்திற்கு நாதனும் அவரது மனைவியும் வந்திருந்து வழியனுப்பினார்கள்.

ஏர் இந்தியாவின் பிரதிநிதியொருவர், ஜினிவா விமான நிலையத்தில் என்னோடிருந்து, பயணச் சடங்குகளை எளிதாக முடித்து வைத்தார். அவர் சுவிஸ் நாட்டவர். அவரது மனைவியும் அலுவல் பார்த்துச் சம்பாதிப்பதாகக் கூறினார்.

தம் நாட்டில் வருமான வரிப்பளு அதிகமென்று குறைப்பட்டுக் கொண்டார் அவர். எவ்வளவு சுமை என்றேன். இருவரது வருவாயில் நூற்றுக்கு இருபது விழுக்காடு வரி வங்கிக் கொள்வதாகக் குறைப்பட்டார். நானும் என்னைப் போன்ற சம்பளக்காரர்களும் இங்கே விழிபிதுங்க வரி கொடுப்பதைக் கூறி, அவரை ஆறுதல் படுத்த நினைத்தேன். வினாடியில் தெளிவு மின்னிற்று. ‘தோழனோடும் ஏழைமை பேசேல்’ என்னும் பழமொழி நினைவிற்கு வந்து வாயை அடைத்தது. (குறையில்லாப் பெரியவனாகவே பாரிசிற்குப் புறப்பட்டேன்.)

 

9. பேராசிரியர்களின் பணிஜினிவாவை விட்டுப் பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்பட்ட விமானம், ஏர்பிரான்ஸ் விமானம் 3-30 மணிக்குப் பாரிசை அடைந்தது. இறங்கித் தரை மேல் நின்றது; கதவு திறக்கப்பட்டது . ஏணி பொருத்தப்பட்டது. ஆயினும் யாரும் இறங்காதபடி வாசற்படியில் நிறுத்தப்பட்டோம் ஏன்? விமானத்திலிருந்து அழைத்துக் கொண்டு போக வேண்டிய பேருந்து வண்டி வந்து சேரவில்லை. ஐந்து நிமிடத் தாமதத்திற்குப் பின் வந்து சேர்ந்தது. விமானத்திலிருந்து இறங்கி பேருந்து வண்டியில் வெளியே சென்றோம்.

ஜினிவாவில் விமானக் கம்பெனியார்கள் பெட்டியை எடை போட்டு எடுத்துக் கொண்டார்கள். அப்போது நம் ஊர்களில் கொடுப்பது போல அட்டைச் சீட்டு கொடுக்கவில்லை. தவறிவிட்டார்களோ என்று சீட்டைக் கேட்டேன்.

‘சீட்டு இல்லை. பாரிசு விமான நிலையத்தில் சீட்டேதும் காட்டத் தேவையில்லே. அவரவர் மூட்டையை அவரவர் சும்மா எடுத்துக் கொள்ள வேண்டியதே’ என்று பதில் வந்தது.

அப்படியே பாரிசில் என் பெட்டியைக் கண்டதும் யாரிடமும் எந்தச் சீட்டும் கொடுக்காமல் அதை எடுத்துக் கொண்டேன்.

விமான நிலையத்தில் இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த திரு அய்யர், சார்போர்ன் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருக்கும் டாக்டர் காசி ஆகிய இருவரும் என்னைக் கண்டு, பாரிசிற்கு அழைத்துச் சென்றனர்.

பாரிசில் ‘லத்தின் பகுதி’ என்றழைக்கப்படும் பகுதியில், நெடுஞ்சாலையொன்றில் அமைந்திருக்கும் ஒட்டல் ஆப்சர்வேடாரில் நான் தங்க ஏற்பாடு செய்திருந்தனர் தூதரகத்தார்.

அங்குப் பெட்டியைப் போட்டுவிட்டு மாநாடு நடக்கும் இடத்தைப் பார்க்க விரும்பினேன். மாநாட்டு இடமாகிய பிரான்ஸ் கல்லூரி, நான் தங்கியிருந்த ஓட்டலிலிருந்து முக்கால் கிலோ மீட்டர் தூரம். பேராசிரியர் காசி என்னை அங்கு அழைத்துக் கொண்டு போனர். புதிய ஊரில் இடம் அடையாளம் கண்டு கொள்ளத் தகுந்தவழி நடந்து செல்வதே. நெடுந்துாரம் இல்லை யாகையால் நடந்தே சென்றோம்.

தொன்மை வாய்ந்த அக் கல்லூரியில் நுழைந்து தமிழ் மாநாட்டு அலுவலகத்திற்குச் சென்றோம்.

“வாருங்கள்; வாருங்கள். எப்போது வந்தீர்கள்?” என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். யாருடைய குரல் அது?

பேராசிரியர் தனிநாயகமே அப்படி வரவேற்றார், முன்பெல்லாம் அவரைக் கத்தோலிக்கப் பாதிரியாரின் அங்கியில் கண்டவன் நான். அன்று மற்றவர்களைப் போலச் சாதாரண உடையில் இருந்தார். நொடிப் பொழுது திகைத்துச் சமாளித்துக் கொண்டேன். ஐரோப்பிய நாடுகளில் கிருத்துவப் பாதிரிகளுக்கு இப்போது தனி அங்கி கிடையாதென்று பின்னர் மறைத் திரு. ஞானப்பிரகாசம் அடிகளார் கூறத் தெரிந்து கொண்டேன்.

பேராசிரியர் தனிநாயகம் உள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். கண்ட காட்சி என்ன? பேராசிரியர் சுப்பிரமணியம், டாக்டர் பிலியோசா, திரு. நாகசாமி ஆகிய மூவரும் தனித்தனியே வரிசையாக நின்று கொண்டு மெய் மறந்து மடமடவென்று பணி புரிந்து கொண்டிருந்தார்கள். எதிரே அடுக்கி வைக்ககப் பட்டுள்ள தாள்களில் ஒவ்வொன்றை எடுத்து இந்தியர் இருவரும் கொடுக்க, பிரெஞ்சு நண்பர் பிலியோசா அவற்றை உறையில் இட்டுக் கொண்டிருந்தார். சிவ பூசையில் கரடி புகுந்தாற்போல் புகுந்துவிட்டேன். தெரியாத்தனமே. முதலில் பிலியோசாவிற்கு அறிமுகஞ் செய்யப்பட்டேன். அவர் கைகுலுக்கி விட்டு வேலையில் மூழ்கிவிட்டார். மற்றவர் இருவரும் அப்படியே.

‘ஆகா! இவர்கள் தமிழ்ப்பற்று எத்துணை! எத்துணை’ என்று பெருமிதம் கொண்டேன். பல்லாயிர கிலோமீட்டர் கடந்து வந்து, கவர்ச்சிகரமான பாரிசின் காட்சிகளையும் கலைகளையும் கூடச் சிந்தியாமல், பேராசிரியப் பெருமக்களெல்லாம், எழுதப் படிக்க மட்டுமே தெரிந்த சாதாரண மக்கள் செய்யவேண்டிய ‘மடிப்பாளர்’ பணியைச் செய்து கொண்டிருக்கிறார்களே! இவர்களது தமிழ்த் தொண்டிற்கு யாரும் கை கொடுப்பார் இல்லையே என்று ஏங்கினேன்.

‘உங்கள் பணியில் நானும் சிறிது நேரம் பங்கு கொள்ளலாமோ’ என்று கேட்டுப் பார்த்தேன். ‘பரவாயில்லை. நாங்களே முடித்து விடுகிறோம்’ என்ற பதில் வந்தது. அதோடு விட்டு விட்டேன்.

மாநாட்டுப் பணியில் பங்கு கொண்டு உதவ முன் வந்தும் மாநாட்டாளர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை யென்று சொன்னார்களே? அது எவ்வளவு உண்மையோ! எதிரில் மாநாட்டுப் பிரதிநிதிகள் சிலர் அமர்ந்திருந்தனர். இலங்கைப் பிரதிநிதிகள் இருவர், நம் டாக்டர் மு. வ. ஆகியோர் இருந்தனர். அவர்களோடு அளவளாவினேன். சில நிமிடங்களில் -

‘உங்களுக்குச் சிவப்பு வண்ணப் பை இருக்கலாமா அல்லது நீல வண்ணப் பையே வேண்டுமா?’ என்று கேட்டார் அங்கிருந்த மற்றொருவர்.

‘சிவப்பைக் கண்டு மிரள்கிறவன் அல்லன் நான். எந்த வண்ணத்திலும் இருக்கலாம், எனக்குக் கொடுப்பது’ என்றேன்.

சிவப்புப் பை கிடைத்தது. அதில் மாநாட்டுக் கட்டுரைகளும், கால அட்டவணையும் சில தகவல்களும் இருந்தன. அடுத்த நாள் பாரிசில் நடக்கவிருந்த தேசியத் திருநாள் அணி வகுப்பைப் பார்க்க நுழைவுச் சீட்டும் இருந்தது.

வேலை செய்கிறவர்களைக் கெடுக்கக் கூடாதல்லவா? எனவே நெடுநேரம் அங்கே தாமதிக்காமல் திரும்பி விட்டோம்.

அங்கிருந்து பேராசிரியர் காசியின் வீட்டிற்குச் சென்றோம். அது பாரிசின் வெளிப்புறத்தில் உள்ளது. பாதாள இரயிலில் செல்லுவதற்கே அரை மணிக்கு மேல் பிடித்தது.

அவரது இல்லத்தில் இந்திய உணவு கிடைத்தது அதை முடித்துக்கொண்டு ஒட்டலுக்குத் திரும்ப நள்ளிரவு ஆகிவிட்டது. ஒட்டல்வரை காசி என்னுடன் வந்தார். ஆகவே சமாளித்தேன்.10. நாசக் கருவிலே மானுடம்அடுத்த நாள்-அதாவது ஜூலை 14ஆம் நாள்; பிரஞ்சு மக்களுக்குத் தேசியத் திருநாள்; வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நன்னாள்; புரட்சிப் பெருநாள். 1789 ஆம் ஆண்டில் ஜூலை 14 ஆம் நாளன்று வாழ்வு கெட்டு, வறுமை மிஞ்சி, வேறு வழி யேதுமின்றிப் பிரஞ்சு மக்கள் கிளர்ந்து எழுந்து சென்று பாஸ்டீல் என்னும் மையச் சிறையைத் தாக்கி உடைத்துத் தகர்த்துத் திறந்த நாள். புரட்சியின் தொடக்க நாள். மன்னராட்சியைக் கவிழ்த்துவிட்டு மக்களாட்சியை அமைத்த பிரஞ்சுப் புரட்சியின் தொடக்க நாள். மக்களாட்சி அமைந்த பிறகு வரலாற்றுச் சிறப்புடைய இந்நாளை ஆண்டாண்டுதோறும் திருவிழாவாகக் கொண்டாடி வருகிறார்கள். அன்று எல்லா அலுவலகங்களுக்கும் விடுமுறை. பணிமனைகளுக்கும் அதுவே. கடைகளுக்கும் விடுமுறை பெரும்பாலும் உணவுச்சாலைகளுக்கும் அப்படியே. எல்லா உணவுச் சாலைகளையும் மூடுவதில்லை. எல்லா நகரங்களிலும் உணவுச் சாலையையே நம்பி வாழ்வோர் ஏராளம். உணவுச்சாலைகள் அத்தனையும் மூடிக் கிடந்தால் ஏராளமானவர்கள் பட்டினிதானே! பல்லாயிரக்கணக்கானவர்களைப் பட்டினி போட்டா திருவிழா கொண்டாடுவது! பட்டினி வாட்டம் ஏற்படாதபடி தெருவுக்குத் தெரு, சில உணவுச் சாலைகளை மட்டும் திறந்துவைக்க, உரிமையாளர்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொள்கின்றார்கள். அடியோடு ஓட்டல் மூடு விழா அன்று இல்லை.

அன்று போக்கு வரத்து நிலை எப்படி? நாட்டுத் திருவிழா என்று சொல்லி, எல்லோரையும் நடராசர்கள் ஆக்கி விடவில்லை. ‘மெட்ரோ’ (பாதாள இரயில்), பேருந்து வண்டிகள், வாடகைக் கார்கள் ஆகியவை ஞாயிறு விடுமுறையின் போது எவ்வளவு ஒடுமோ அவ்வளவு ஒடுகின்றன. இது நமக்குப் பாடம். மன்னிக்க வேண்டும். படிப்பதாக இருந்தால் அல்லவா?

கட்டிக்காக்க முளைப்பது ஆட்சி, அந்த ஆட்சி கால ஒட்டத்தில் பிறவி மன்னர் ஆட்சியாக இறுகிவிடுகிறது. மக்களை விட்டு எட்டிப் போய்விடுகிறது. சுற்றியிருப்போரின் சுழற்சியே ஆட்சியாகி விடுகிறது. இது முற்றினால் கட்டும் இல்லை; காவலும் இல்லை என்னும் நிலை வளரும்; வறுமையும் பசியும் வாட்டமும் கொதிப்பும் தொடரும். இவை, சிற்சில சமயங்களில் புரட்சியாக வெடிக்கும். பெரும் புரட்சியாகி ஆட்சி முறையையே மாற்றும். அப்படிப்பட்ட புரட்சியே பிரஞ்சுப்புரட்சி.

‘உரிமை, ஒருநிலை, உடன்பிறப்புணர்ச்சி’ என்னும் அரசியல் மறைமொழி இன்று பலரும் அறிந்தது அன்று. அது பிரஞ்சு மக்களின் விடுதலைப் பாணியாக ஒலித்தது.

உரிமை வேட்கை உந்த, பாரிசு மக்கள் திரண்டெழுந்து பாஸ்டீல் சிறையை நோக்கி நடந்தார்கள். அவர்களது போர்ப் பரணி வானைப் பிளந்தது. அம் மக்கள் எழுப்பிய புழுதிப்புயல் வானை முடிற்று.

அரண்மனையிலிருந்த பதினாறாம் லூயி மன்னர் மேல் மாடியிலிருந்து இதைக் கண்டார். இராணி ‘அன்டாய்னெட்’ உடன் இருந்தார். மக்கள் பெருங்கூட்டமாகி இப்படிக் கத்திக் கொண்டு திரிவதற்குக் காரணத்தை அறிய விரும்பினார். ரொட்டி இல்லேயென்று கிளர்ச்சி செய்ததாகக் கேள்விப்பட்டார்.

அரண்மனை வாழ்வு மட்டுமே அறிந்தவர் அல்லரா? நாட்டின் அவலமறியாதவர் அல்லரா? ஆயினும், நல்லவர் அல்லரா? நல்லவர் கருணைபுள்ளம் பேசிற்று. இதோ கேளுங்கள்:

“ஐயோ பாவம் ரொட்டியில்லாவிட்டால் ‘கேக்’ சாப்பிடுவது தானே! இதற்கேன் இப்படிக் கத்த வேண்டும்’ என்று பரிதாபத்தோடு ஆலோசனை கூறினர், அதன் விலையறியாத இராணி.

“அரிசி எங்கே கிடைக்கவில்லை? பங்கீட்டுக் கடையில் குறித்த விலைக்குக் கிடைக்காவிட்டால் என்ன? மூலைக்கு மூலை கூடையிலே அரிசி, கூடுதல் விலைக்குக் கிடைக்கிறதே?” இப்படி எங்கோ கேட்டது நினைவிற்கு வந்தால், அது என் குற்றமன்று; உங்கள் நினைவாற்றலின் குற்றம்.

பாரிசிற்குச் செல்வோம். வாருங்கள். ஜூலை 14 ஆம் நாள் காலை, பேராசிரியர் காசி நான் தங்கியிருக்த ஒட்டலுக்கு வந்தார். இருவருமாக வாடகைக் காரில் பேரணி நடக்கும் சாம்பலிசி என்னும் இடத்திற்குச் சென்றோம்.

குடியரசு நாளில் சென்னையில் அணிவகுப்பு நடப்பதைப் பார்த்திருக்கிறோம். அதேபோல் பாரிசில் அவர்களது தேசியத் திருநாளன்று நடந்தது. பார்வையாளர்களுக்குத் தரத்திற்கு ஏற்றபடி, இடம் ஒதுக்கியிருந்தார்கள். அமர்ந்து காண வாய்ப்புப் பெற்றோர் உண்டு. நின்று காணச் சீட்டுப் பெற்றவர்கள் நாங்கள். இது அங்கே சென்ற பிறகே தெரிந்தது. அணிவகுப்பிற்கு முன் கோபித்துக்கொண்டு திரும்பி வந்துவிடவோ வழியில்லை. எனவே தமிழ் நாட்டுப் பிரதிநிதிகளாகிய நாங்கள், எங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் சென்று நின்று கொண்டிருந்தோம்.

மாணவனாக நிற்கும் தண்டனை அனுபவித்ததில்லை. அதற்கு ஈடு பாரிசில், இந்த அணிவகுப்பில் கூடியிருந்த மக்களின் இடியிலிருந்து மறைத்திருவாளர்கள் ஞானப் பிரகாசம், இராசமாணிக்கம், காசி ஆகியோர் கூடி வளைத்துக் கொண்டு என்னைக் காத்தனர்.

அணிவகுப்புப் பெருநடை ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் நிகழ்ந்தது. காலாட்படை, குதிரைப்படை, பீரங்கிப் படை, டாங்கிப் படை, ஏவுகணைப் படை, பல்வேறு நாசக் கருவிப் படை, மருத்துவப் படை என நீண்ட அணிவகுப்பினைக் கண்டோம். பல்வகைப் போர் விமானங்கள் வானில் பறந்து சென்று நாட்டின் வலிமையை முழங்கின.

கவண் எறிவதிலே தொடங்கி ஏவுகணை வரை நாசக் கருவிலேயே வளர்ந்துள்ள மானுடத்தைக் கண்டு வருந்தி வாடினேன். நுட்பத் தொழிலாளர் பல இலட்சம் பேர்களையும், மலைமலையாக மூலப் பொருள் களையும், கோடிகோடிப் பணத்தையும் பாழாக்கி, பட்டாளத்தையும் போர்க் கருவிகளையும் குவிக்கும் மானுடம், அதை விடுத்துத் தங்கள் தங்கள் பகுதி வாழ் மக்கள் அனைவருக்குமாகிலும் மனித வாழ்வு.நல்வாழ்வு அளிக்கப் பட்டிருக்கலாமே என்று ஏங்கிற்று என் பேதை உள்ளம். அறிவியல், நுட்பத் தொழில் இயல் ஆகியவற்றின் துணைகொண்டு, எங்கோ வெகுதுாரத்தில் உள்ள நிலாவையும் எட்டிப் பிடித்துவிட்டதே மானுடம்! விரைந்து சென்று, விரிந்த உலகங்களைக் காணக் கற்ற மனித சமுதாயம், அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுத்து அன்பு நீரில் கழுவி அமைதிப்பண்டம் செய்யலாமே! இப்படியும் பாய்ந்தது என் மனக் குரங்கு.

அவ்வேளை பார்த்துப் பேரணியும் முடிந்தது. நாங்கள் திரும்பினோம். அணிவகுப்பு நடந்த இடத்திற்கு அருகில், பெரிய மாதா கோயில் உள்ளது. ‘மகதலேன் மாதா கோயில்’ என்று பெயர். கம்பீரமாக எழுந்து விளங்கும் அது பழமையானது. பல படிகள் ஏறி உள்ளே சென்று பார்த்தோம். வேடிக்கை பார்ப்போர் கூட்டம் பெரிது. இதற்கிடையில் தொழுவோர் சிலர். சந்தை இரைச்சலிலே மக்கள் கூடி வழிபட வேண்டியுள்ளதை இது நினைவூட்டியது.

பகல் உணவை அருகில் இருந்த உணவுச்சாலையில் முடித்துக் கொண்டு தங்குமிடத்திற்கு ‘மெட்ரோ’வில் திரும்பினேன்.

பிற்பகல் மாநாட்டுத் தகவல்களைப் படித்து அறிந்து கொண்டேன். மாலைப் பொழுதை அருகிலிருந்த ‘லக்ஸம்பர்க்’ பூங்காவில் தனியே கழித்துவிட்டு ‘தானே பரிமாறிக்கொள்ளும்’ உணவு விடுதிக்குச் சென்றேன். பிரஞ்சு மொழி தெரியாததோடு, காய்கறி உணவினனாகவும் இருந்தது தொல்லையாக இருந்தது. அரை வயிறு உண்டுவிட்டு வந்து சேர்ந்தேன்.

திரு ம பொ. சி. அவர்கள் இரவு வந்து சேர்ந்தார். நான் தங்கியிருந்த ஒட்டலிலே தங்கினர். ஒருவருக்கொருவர் துணை. அங்காவது கெருக்கமாகப் பழக வாய்ப்புக் கிடைத்தது.

 

11. பாரிசில் தமிழ் முழக்கம்மாநாட்டன்று குறித்தநேரத்திற்கு முன்பே நானும் திரு. ம. பொ. சியும் மாநாட்டுக்குச் சென்றோம். எழுபது எண்பது பேர் போலப் பல நாடுகளிலிருந்தும் வந்திருந் தனர். இலண்டனிலிருந்து ஐம்பது தமிழர்கள் மறுநாள் பேருந்து வண்டியிலேயே வந்து சேர்ந்தார்கள்.

மாநாடு உரிய காலத்தில் தொடங்கிற்று. தொடக்க நிகழ்ச்சியில் டாக்டர் மால்கம் ஆதிசேஷய்யா கலந்து கொண்டார். அவர் அப்போது யூனெஸ்கோவின் பேரியக்குநராக இருந்தார். அவர் மும்மொழியில் முழங்கினார். பிரஞ்சிலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் உரை நிகழ்த்தினர். ஆங்கிலத்திலும் பிரஞ்சிலும் பேசியதன் மூலம் நம் தாய் மொழியின் சிறப்பையும் தொன்மையையும் உலகறியச் செய்தார்; நம்மோடு வாழ்பவர்களே நேற்றுவரை ‘மதராசி மொழி’ என்று சொல்லக் கேட்டுக் குமுறிய நமக்கு, உலகமெல்லாம் தமிழைப்பற்றி அறியச் செய்தது வான் மழையாக இருந்தது. நெடுநாள் நாப்பழக்கம் இன்மையால், அவரது தமிழ் ‘மழலை’யாக இனித்தது. பாரிசில் உலகக் கருத்தருங்கில் தமிழை முழக்கிய அவருக்கு நம் நன்றி.

பேரறிஞர் ஆதிசேஷய்யாவின் மொழி, மழலையாக இனித்தது. கருத்தோ முதிர்ந்து சிந்திக்க வைத்தது.

“இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அழியாமல், குறையாமல், நிலைத்திருக்கும் தமிழ் மொழியே தமிழ் மக்களின் இடையறாத தொடர்ச்சிக்குப் பெரிதும் காரணமாகும். இது சமுதாயததின் சிறப்பு மொழியாக, மதம், கல்வி போன்ற துறைகளுக்கு மட்டும் பயன் படவில்லை. மக்களின் அன்றாட வாழ்வோடு இரண்டறக் கலந்து ஜீவ சக்தியுடன் இன்றும் விளங்குகிறது” என்று அவர் கூறியபோது ஆர்வம் பொங்கி வழியாமல் இருக்குமா? ‘உயிராற்றல்’ என்ற இன்றைய தமிழ் வழக்கைப் பாரிசு வாழ் பெரியவர் கையாளாதது விலகியிருத்தலின் விளைவு.

பழங்குடி மக்களான திராவிடர்களின் நாகரிகமே, இந்திய உப கண்டத்தின் நாகரிகத்திற்கு முன்னோடி என்பது ஆராய்ச்சியாளர் கருத்து என்று சுட்டிக் காட்டினார் ஆதிசேஷய்யா.

“உலக சக்தியையும், வாழ்க்கையில் உறுதியான நம்பிக்கையையும் குறளிலே கண்டார். ஆல்பர்ட் சுவைட்சர். இலக்கியம், தத்துவம் இவற்றில் தனிச் சிறப்புடன் விளங்கும் இப் புராதன நூல் எளிய நீதி நெறியின் வழியே இயங்கும் மனித இனத்தையே இலட்சியமாகச் சித்திரிக்கிறது என்று அவர் கூறுகிறார்” என்று இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த மனிதராக விளங்கி மறைந்தவர் மூலம் திருக்குறளின் பெருமையைப் பன்னாட்டு அறிஞர்களுக்கு நினைவு படுத்தினார்.

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்பதை நினைவு படுத்தி தமிழனின் ஆழ்ந்த இதய பூர்வமான மனிதாபி மானத்தை உலகிற்குக் காட்டினார். அதன் பூரண சமாதான இயல்பே தனிச் சிறப்பு ஆகும் என்றார், ‘முதலியார், செட்டியார்’ என்பதை மறக்க முடியாத இக்காலத் தமிழரை எண்ணி ஏங்குவோன் பித்தன் அன்றோ?

“தமிழ் ஆராய்ச்சி, சங்க காலத்தோடு நின்று விடக் கூடாது, அண்ணாதுரை கால இலக்கியத்தையும் ஆராய வேண்டும்.

“தமிழ் ஆராய்ச்சி, பூரண உயிர்த்துடிப்புள்ள ஒரு கலாசாரத்தோடு சம்பந்தப்பட்டது. இந்த ஆராய்ச்சி இன்று, நல்லதொரு கலாசாரத்தின் நறுமணத்தை உலகெங்கும் பரப்புவதற்குரிய சாதனமாகத் தமிழை உயர்த்த வேண்டும். இதுவே நமது குறிக்கோளென்று நான் நினைக்கிறேன்” என்று சிறப்புரை நிகழ்த்தினார் திரு.ஆதி சேஷய்யா.

அடுத்துத் தமிழ்நாட்டு முதலமைச்சர், மாண்புமிகு கலைஞர் கருணுநிதி சிறப்புரையாற்றினார். முந்திய உரையில், தமிழின் மழலை இனிமையை உணர்ந்தோம். கலைஞரின் சிறப்புரையில் தமிழின் பெருமிதத்தை உணர்ந்தோம். வழக்கம்போல் அவரது பேச்சு சிறப் பாகவும் கருத்துடையதாகவும் அமைந்தது.

கலைஞர் தமக்கே உரிய வெண்கலக் குரலில் கணீ ரெனத் தமிழிலேயே பேசினர். எங்கள் உள்ளமெல்லாம் குளிர்ந்தது.

“கண் மருத்துவம் பார்த்துக்கொள்ள வந்த இடத்தில், அதையும் தள்ளிவைத்துவிட்டு, தமிழ் மாநாட்டில் கலந்து கொள்வதற்குக் காரணம், தமிழனுக்கு கண்ணிலும் இனியது தமிழ் மொழி” என்று உணர்ச்சியோடு கூறியதை, தமிழ் நாட்டிலுள்ள கோடிக் கணக்கானவர்கள் கேட்டிருக்க வேண்டும்.

அவரது உரை, தமிழ்ப் பற்றினை ஊட்டுவதாக மட்டும் நின்று விடவில்லை.

“தமிழின் வளர்ச்சியில் பிரான்ஸ் கொண்டுள்ள ஆழ்ந்த நாட்டம் தமிழ்-பிரஞ்சு அகராதி ஒன்றை வெளியிட்டதன் மூலம் காட்டப்பட்டது” என்று நினைவு படுத்தி புதிய நட்புறவை வளர்த்தார்.

“தமிழ் பரவியுள்ளது. தமிழர்கள் உலகெங்கும் சென்றுள்ளார்கள். ஆனால் தமிழ் மொழி, மொரிசியஸ் போன்ற நாடுகளில் மறைந்து வருகிறது. இன்னும் வேறு சில நாடுகளில் உள்ள தமிழர்களும் தம் தாய் மொழியை மறந்துவிடக்கூடிய அபாயத்திலுள்ளனர்” என்று சுட்டிக் காட்டி, நம்மை எச்சரித்தார்.

“இந்த நிலைமை தொடர்ந்து நிலவ அனுமதிக்கக் கூடாது” என்று அவர் கூறியபோது அனைவரும் ஒப்பினர். என்ன செய்ய வேண்டும்? கலைஞர் கூறக் கேட்போம்.

“தமிழர்கள் வாழ்கின்ற நாடுகளிலெல்லாம் தமிழைக் கற்பதற்கான வாய்ப்பும், தமிழனோடு தொடர்ந்து தொடர்பு வைத்துக்கொள்வதற்கான வாய்ப்பும் வகையும் செய்யப்பட வேண்டும்.” என்று அவர் கூறிய ஆலோசனையை உளத்தால் ஏற்றுக் கொண்டோம். பணத்தைப் பற்றி எண்ணாமல், மொழிக்காகத் தொண்டாற்றிய மணி, திருநாவுக்கரசுகளும், சிவமுத்துகளும், அருணகிரிநாதர்களும், நூற்றுக் கணக்கில், இளந்தலைமுறையில் கிடைத்தால். கடல் கடந்த நாடுகளிலும் தமிழைக் காக்கலாம் என்னும் எண்ணம் என்னுள் எழுந்தது.

பிற நாட்டுத் தமிழரிடையே தமிழ் தழைத்து நிற்பதற்கான வழியைக் கூறிவிட்டு, நம் நாட்டில் செய்ய வேண்டியதை எடுத்துரைத்தார்.

வரலாற்றுக் காலலந்தொட்டு ஆழ்ந்த புலமை பெற்ற மொழியாகும் தமிழ். அது ஒரு செழுமையான மொழி.

“ஆனால் அந்த முதுமையும் தற்போதைய வளர்ச்சியும் மட்டுமே போதாது. நாம் பழைய மகிமையில் ஒய்ந்திருக்கக் கூடாது. “சிந்தனைகளை உணர்த்தவும், அறிவியல் வளமிக்க விண்வெளிப் பயணக் காலத்தின் புதுச் செய்திகளைத் தெரிவிக்கவும் ஏற்ற கருவியாக, தமிழ் மாற வேண்டும் என்பதை நாம் உணரவேண்டும். தொழில் நுணுக்கம், அறிவியல், மருத்துவம் முதலியவற்றைக் கற்பிப்பதற்கு ஏற்ற பயிற்று மொழியாக இது வந்தாக வேண்டும்' என்பதை வற்புறுத்தினார். மேலும் கூறுகையில்:

“தமிழ் வல்லுநர்களும் ஆராய்ச்சியாளர்களும் ஆராய்ச்சி செய்துவிட்டு, அதோடு தம் பணி முடிந்ததென்று எண்ணிவிடக் கூடாது.

“இம் மாநாடு, மூன்று பணிகள்மீது கவனம் செலுத்த வேண்டும்.

“முதலாவதாக, தமிழ் நாட்டுக்கும் பிற நாடுகளுக்கு மிடையே மாணவர்கள் பரிமாற்றத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

“இரண்டாவதாக, தமிழை ஒரு நவீன மொழி யாக்கும் வண்ணம், ‘ஆங்கில-தமிழ் அகராதி’யைத் தயாரிக்கும் பணியில் இறங்க வேண்டும்.

“மூன்றாவதாக, உலகின் பல வேறு நாடுகளிலும் தமிழைப் பரப்பவும் வளர்க்கவும் வேண்டும். இப்படி மூன்று திட்டங்களைத் தந்தார். இவற்றிற்குத் தமிழ் நாட்டு அரசு இயன்ற எல்லா உதவிகளையும் செய்யும்” என்று உறுதி கூறி உவகையில் ஆழ்த்தினார்.

இக் காலம் விரைவுக் காலம் எதிலும் படபடப்பு. மின்னலைப் போன்று விரையவே அவா. எனவே, அமைதியாக, ஆழ்ந்து நுணுகிப்பார்த்து உண்மையின் முழுமையைக் காண நேரமில்லை. நுண்மாண் நுழைபுலமுமில்லை. அத்தகையோர் ஆராய்ச்சியின் விளைவு குருடர் கண்ட யானையே. இந்நிலையும் நீடிக்கக் கூடாதல்லவா?

எனவே கலைஞர், ஆராய்ச்சியாளர்களை நெறிப்படுத்தினார். இதோ அவ்வுரை:

“அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்களைப் போன்றவர்கள் இங்கே கூடியுள்ள தமிழ் அறிஞர்கள். அவர்கள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் முழு உடல் நலத்தையும் தர முயல்கிறார்கள்.

“இப்படிப்பட்ட கடுமையான அறுவை சிகிச்சைகளுக்கு எல்லாம் குழந்தை இரையாகலாமா என்று எண்ணி, அந்த சிகிச்சையைத் தடுக்கக்கூடாது தாய்.

“அதே நேரத்தில், அறுவைச் சிகிச்சைக்காரர்களும் கண்டபடி தம் கத்தியை ஒட்டக் கூடாது.”

இது நமது மொழி ஆராய்ச்சியாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய அறிவுரை. தம் விருப்பத்திற்கேற்ப எதையோ ஒன்றைப் பிடித்துக்கொண்டு, வலிந்து விளக்கவும் வாதிடவும் கூடாதல்லவா?

மாநாட்டின் முதல் நாள், முற்பகல் நிகழ்ச்சி பெரியவர்களின் ஊக்க உரைகளோடு முடிவடைந்தது. அலுவல் நிகழ்ச்சிகளும் கருத்துப் பரிமாற்றங்களும் பிற்பகலில் தொடக்கம்.

பகல் உணவிற்கு இடந்தேடினோம், தமிழ் மாணவத் தொண்டர்கள் தங்கள் விடுதிக்கு அழைத்துச் சென்றனர். விடுதி நெடுந்தொலைவில். ‘யூனெஸ்கோ’விலிருந்து வந்த பேருந்துவண்டி பேருதவியாற்று.

மாணவர் விடுதியைப் பற்றிச் சில சொற்கள். பாரிசு நகரப் பல்கலைக் கழகம், பாரிசாருக்கு மட்டுமன்று; பிரெஞ்சுக்காரருக்கு மட்டுமன்று. அதில் பல நாட்டு மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களுக்காக விடுதிகள் பல ஒரே பரந்த வளைவுவுக்குள், பதினைந்து விடுதிகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்டாரால் கட்டப்பட்டது. இந்தியாவும் அங்கு நல்லதொரு விடுதியைக் கட்டியுள்ளது. மேனாட்டு நகரத்தில் இருப்பதால் மேனாட்டுப்பாணியில் இருக்கிறது. விடுதிகளுக்கான அடி மனை பிரஞ்சு நாட்டின் கொடை. விடுதி கட்டும் செலவு அந்தந்த நாட்டைச் சேர்ந்தது. ஒவ்வொரு விடுதிக்கும் அந்தந்த நாட்டின் பெயர் இடப்பட்டுள்ளது. இந்திய மாளிகையில், தமிழ் மாநாட்டுக்கு வந்தோர் சிலர் தங்கியிருந்தனர்.

அங்கே ஒரு விதி, நல்ல விதியும் கூட எந்த விடுதி யிலும் மாணவர் அனைவரும் ஒரே நாட்டினராக இருக்கக் கூடாது. இந்திய மாளிகையில் இந்தியர் பாதிப்பேர். மற்றவர் பல நாடுகளையும் சேர்ந்தவர். இப்படியே கம்போடிய மாளிகையில் கம்போடியாவைச் சோந்தோர் பாதிப்பேர்; இந்தியரும் பிறரும் மற்றப் பாதிப் பேர். ஏன் இந்தக் கலவை? இன்றைய உலகில் தனித்து ஒதுங்கி இருத்தல் நல்லதன்று. விடுதிகளில் பல நாட்டு இளைஞர்களும் கூடி வாழ்தல், அனைத்துலக நல்லெண்ணத்திற்கு ஆடிகோலும். பல நாடுகளிடையே ஒற்றுமையை வளர்ப்பதற்குத் துணை புரியும். கல்வியாளர்களுடைய கருத்து இது. எனவே பல நாட்டவரும் ஒரே விடுதியில் கூடி வாழவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். நாட்டு வெறியூட்டுவோருக்கிடையே, மானுடத்தை வளர்க்கத் துடிக்கும் நல்லோர் சிலருடைய அவா இது. இந்த அவா வெற்றி பெற்றால் நன்மையே.

விடுதிகள் அத்தனையும், பரந்த பசும்புற்றரை நிறைந்த சோலைகளுக்கிடையே அழகாகக் காட்சியளிக்கின்றன.

பல விடுதிகளுக்கும் பொதுவாக உணவு விடுதி. அது பொது மக்களுக்கான உணவு விடுதியன்று. மாண வர்களுக்கும் அவர்கள் விருந்தினருக்குமான விடுதி. மாணவத் தோழர்கள் எங்களுக்காக விருந்தினர் சீட்டு வாங்கிக் கொடுத்தார்கள்.

இவ்வுணவுச்சாலையில் பரிமாறும் முறை கிடையாது. தமக்குத் தாமே பரிமாறிக் கொள்ளவேண்டும் ஒவ்வொரு வரும் தட்டையேந்தி, வரிசையில் நின்று நகர்ந்து, சமைத்து வைத்துள்ள பண்டங்களில் பிடித்தமான வற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெரியவர்கள் எல்லோரும் தட்டேந்தி நின்றோம். வரிசையில் நகர்ந்தோம். ‘இன்று உணவுப் பண்டங்கள் அவ்வளவு நன்றாக அமையவில்லையே’ என்று அங்கலாய்த்தார்கள் மாணவ நண்பர்கள். காய்கறியே உண்ணும் உங்களைப் போன்றவர்களுக்கு இவை போதாவே என்று இரங்கினார்கள். அருமையான பால் கிடைத்தது. பகல் உணவோடு. ஒருவழியாகச் சமாளித்தோம்.

சிறிது அரட்டைக்குப் பிறகு பிற்பகல் கூட்டத்திற்குப் புறப்பட்டோம். நேரத்திற்குப் போய்ச் சேர்ந்தோம்.

 

12 தொல்பொருள் ஆராய்ச்சிபிற்பகல் நிகழ்ச்சியில் இரு தலைப்புகள் பற்றிக் கட்டுரை கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். சிந்து வெளி எழுத்துக்கள் என்பது ஒரு தலைப்பு, தொல் பொருள்-அகழ் ஆராய்ச்சி என்பது மற்றொரு தலைப்பு இரண்டிற்குமாகக் கிடைத்த நேரம் இரண்டு மணிகளே, ‘சிந்து வெளி எழுத்துக்கள்’ பற்றிய கருத்துரைகளை முதலில் கேட்டோம். அன்றைய கருத்துரைகள் சிந்து வெளிநாகரிகத்தைப் பற்றி அல்ல; சிந்து வெளி எழுத்துகளைப் பற்றியே.

புதையுண்டு கிடந்த ஹரப்பா, மொகஞ்சதாரோ பகுதிகளைப் பல்லாண்டுகளுக்கு முன், அகழ்ந்து பார்த்து அவற்றின் நாகரிகச் சிறப்பை உலகறியச் செய்தார் மேனாட்டு அறிஞர். அந்நாககரிகம் நம் நாகரிகம் என்றிருந்த தமிழர்களாகிய நாம் திடீரென ஒரடி உயர்ந்து விட்டோம். உரிமையான அப்பெருமிதம் தமிழ் அறிஞர்கள் சிலரையாவது அவ்வாராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபடுத்தும் என்று எதிர்பார்த்தவர்கள் உண்டு. இன்றும் எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் உண்டு. அறிஞர் யாரும் தம்முடைய தனி ஊக்கத்தால் மட்டும் செய்துவிடக் கூடியதா தொல்பொருள் ஆராய்ச்சி? அதுவும் பிற நாட்டிற்குச் சென்று நிகழ்த்த வேண்டிய ஆராய்ச்சி? அத்தகைய ஆராய்ச்சிக்கு அரசுகளின் உதவி வேண்டும். உலக அவைகளின் துணை வேண்டும்.

தவத்திரு ஹீராஸ் பாதிரியார் வெளிப்படுத்தியவற்றை வைத்துக்கொண்டு பிறநாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மேலும் ஆராய்ந்தனர். சோவியத் ஆராய்ச்சியாளர் இதில் ஈடுபட்டனர். “சிந்து வெளிச் சித்திர எழுத்துகள் திராவிடமொழி எழுத்துகள்” என்ற முடிவிற்கு வந்தனர்.

ஸ்காண்டினேவிய நாடுகளின் ‘ஆசியக் கல்விக் கழகம்’ என்றொரு ஆராய்ச்சி நிலையம் உண்டு. அதன் சார்பில் சிந்துவெளி எழுத்துக்கள் ஆராய்கிறார்கள். அவர்களில் ஒருவர் திரு. அஸ்போ பர்போலா என்பவர். அவர் சில முடிவுகளுக்கு வந்துள்ளார். அவை அண்மையில் நூலாக வெளிவருமாம். அவற்றைப்பற்றிக் கோடிட்டுக் காட்டினர். அவை வருமாறு :

‘இலக்கியம், தொல்பொருள், இந்தியாவிலும் பிற நாடுகளிலும் கிடைத்த மொழியில் சான்றுகள் ஆகியவை எங்கள் ஆராய்ச்சிக்கு அடிப்படை.

சமஸ்கிருதம் ‘இந்தோ ஐரோப்பிய’ மொழி. இந்து மதம் ‘இந்தோ ஐரோப்பிய’ மதம் அன்று. இந்து மதத்தின் முதன்மொழி சமஸ்கிருதமன்று. இந்து மதத்தின் வேர் ஆரிய மொழி அல்லாத ஒன்றில் இருக்க வேண்டும். சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள் இந்துக்கள். அவர்கள் திராவிடர்கள். இந்து மதம், திராவிட மொழியிலிருந்து சமஸ்கிருத மொழிக்கு மாற்றப்பட்டிருக்கலாம்.

சிந்து வெளி எழுத்துகள் திராவிட எழுத்துக்களே இக் கருத்துக்களைப் பதினைந்து இருபது நிமிடங்களில் பர்போலா கூறினார். நேரக்குறைவால் இங்கொன்றும் அங்கொன்றுமாகக் காட்டியதாகவே தோன்றிற்று அவரது விரிவான நூல் வெளியானல், கருத்திற்குப் போதிய தகவல்கள் கிடைக்குமோ என்னவோ?

திரு. பர்போலா பேசியதை மறுத்து, திரு. சுவலபில் பேசினார். இவர் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர். இவர் தமிழ் நாட்டிற்கு வந்து, நம்மோடு சேர்ந்து தமிழ்த் தொண்டு ஆற்றியது பலருக்குத் தெரியும். தமிழ் ஐயாக்களிடம் பாராட்டுதலைப் பெற்றவர். இப்போது அமெரிக்க நாட்டில் ஒரு பல்கலைக் கழகத்திலே பணிபுரிகிறார்.

‘புள்ளிவிவர’ முறைப்படி மட்டும் சிந்துவெளி எழுத்துகளை அடையாளம் கண்டுகொள்வது சரியன்று. மொழியியல் அடிப்படையிலும் அடையாளம் காண வேண்டும். இதுவரை நடந்திருக்கும் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் திராவிட மொழியாக இருக்கக்கூடும். என்று சொல்லலாமே ஒழிய, ‘திராவிட மொழிதான்’ என்று கூறுவதற்கு இல்லை. இது திரு. சுவலபில் கருத்து. திரு. சுவலபில் அவர்களைத் தமிழை வளர்க்க வந்த அக்கால அவதாரமாக உச்சிமேல் வைத்துப் போற்றியவர்கள் உண்டல்லவா? அவர்களுக்கு இது ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் கொடுக்கலாம்.

அடுத்து திரு. ஐ. மகாதேவன் சிந்துவெளி எழுத்தைப்பற்றிப் பேசினர்; பர்போலாவைப்போல் கம்ப்யூட்டரை வைத்து ஆராயவில்லை. வேறு வழியில் ஆராய்ந்தாராம். சிந்துவெளி எழுத்து திராவிட எழுத்தே என்ற முடிவிற்கு வந்துள்ளதாக விளக்கினார். விரைவில் வெளியாக இருக்கும் அவரது நூலில் தெளிவாகவும் விவரமாகவும் பார்த்துக்கொள்ளச் சொன்னர். சுவலபிலால் ஏற்பட்ட அதிர்ச்சிக்கு மகாதேவன் மருந்து முழுக்கப் பயன்பட்டதோ என்னவோ?

“முன்பு, தமிழ் எழுத்து பிராம்மி எழுத்திலிருந்து வந்த தென்றும் சொன்னவரல்லவா இவர்?” என்று இடைவேளை முணுமுணுப்பு என் காதில் விழுந்தது.

“கருத்து முதிர்ச்சி காலத்தின் இயற்கை விளைவல்லவா?” என்றேன்.

கருத்தரங்கில் திரு. மகாதேவன் பேசியதும் சிந்து வெளி எழுத்தைப்பற்றிக் கேள்வி கேட்க ஒருவர் முயன்றார் பயனில்லை. பதில் இதோ:

‘இங்குக் கொடுக்கப்பட்டுள்ள நேரமோ சிறிது. எடுத்துக் கொண்டுள்ள பொருளோ பெரிது. இதைப் பற்றி இங்கேயே விரிவாக அலசிப் பார்த்து, முடிவிற்கு வரமுடியுமா? இத்தகைய அறிஞர் அவையில் பல்வேறு கருத்துக்களைப் படைக்கிறோம் நோக்கம் என்ன? அறிஞர்கள் இவற்றைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து, தெளிவான முடிவிற்கு வரத் தூண்ட வேண்டும். இதற்காகவே பெரிய பொருள் பற்றி, சிறிது நேரத்தில் கூறிவிடும் ஏற்பாடு இப்போது எந்த முடிவிற்கும் வர வேண்டா. தொடர்ந்து ஆராய்ந்து பார்த்து முடிவு காணுங்கள்.’

‘இப்போது, தேநீருக்கு நேரமாகிவிட்டது. வாருங்கள் போகலாம்.’ எனவே முடிவு எடுக்கவில்லை.

எவ்வளவு மிகைப்படாத உண்மை. ‘தேநீர்’ எத்தனை முறை மாநாட்டவர்களுக்குக் கைகொடுத்தது தெரியுமோ? தேநீர் வாழ்க.

 

13. யாரை நம்புவது?தமிழர் மூத்தகுடி தமிழ் முத்தமொழி. முதுமைக்கு அயர்வு எளிது. எனவே, நாம் கருவூலங்களைக் காக்காமல் கைவிட்டுவிட்டோம். வரலாற்றை வகையாக எழுதி வைக்கத் தவறி விட்டோம். அண்மைக் காலத்தில் நம் நாகரிகமும் கலையும் மொழியும் உலக அறிஞர்களின் கருத்துக்களைக் கவர்ந்தன. அதன் விளைவுகளில் ஒன்று அனைத்துலகத் தமிழ்க் கல்வி ஆராய்ச்சி மன்றம். இது சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.

பல்வேறு நாட்டுத் தமிழ் அறிஞர்களும் ஒன்று கூடி ஆலோசிக்க, ஏற்பாடு செய்ய நினைத்தது மன்றம் அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. எங்கே நடத்துவது? மலேசி யாவின் தலைநகரான கோலாலம்பூரில் முதல் கருத்தரங்கு. அங்குத் தமிழர் மிகப் பலர்; எனவே கருத்தரங்கு மாநாடாக வளர்ந்துவிட்டது.

புலவர் சிலர், ‘உவப்பத் தலைக்கூடி, உள்ளப் பிரிவதற்குப் பதில்’ பெருமக்கள் நூற்றுக் கணக்கில் கூடும் மாநாடாகிவிட்டது. அடுத்துச் சென்னையில் கூடியது கருத்தரங்கு. சென்னே தமிழ் நாட்டின் தலைநகர மல்லவா? காதுங்காதும் வைத்ததுபோல் கருத்தரங்கு நடத்த முடியுமா? அக் கருத்தரங்கு, உலகம் புகழும் மாநாடாக, பல்லாயிரக் கணக்கானவர்கள் வந்திருந்து கேட்கும் மாநாடாக உருப்பெற்றது. உலகப் புகழ்பெற்ற இதன் சிறப்பினை நான் கூறத் தேவையில்லை

மூன்றாவது கருத்தரங்கு பாரிசில் கூடியது, பாரிசில் உள்ள தமிழர்களை விரல்விட்டு எண்ணி விடலாமல்லவா? இங்கேயாவது, ‘புலவர்களுக்குள்ளே கருக்தரங்காக்கி விடலாம்’ என்று நினைத்தார்கள் போலும். நினைத்தது ஒன்று, நடந்தது வேறொன்று. இங்கும் அவர்கள் எதிர் பார்த்ததைவிட அதிகம் பேர் கூடிவிட்டோம். உள் நாட்டுத் துணையேதுமின்றித் துணிந்து நடத்தி விட்டார்கள் மாநாட்டை.

தமிழ் இலக்கியமும் கலையும் விரிந்தன. எவ்வளவோ அழியவிட்ட பிறகும் விரிந்து கிடக்கின்றன. எனவே நான்கு நாள் கருத்தரங்கில் தமிழ்த்துறையின் அடியும் முடியும் காட்ட முடியுமா? காட்டும் வித்தையைக் கையாள முயலாவிட்டால் சும்மாவிடுவோமா? முடியாததை முடித்துவைக்க முயன்றனர் மாநாட்டு அமைப்பாளர்.

சங்க இலக்கியம், இக்கால இலக்கியம், தொல் பொருள் ஆராய்ச்சி, கல்வெட்டுகள், தமிழ்நாட்டின் வெளிநாட்டுத் தொடர்புகள், வெளிநாட்டுத் தமிழர்கள், தமிழும் சமஸ்கிருதமும் ஆகிய தலைப்புகளிலே கட்டுரைகள் அனுப்பும்படி கோரியிருந்தனர்.

கருத்தரங்கோ நான்கு நாள். தொடக்க நிகழ்ச்சி அரை நாள்; நிறைவு நிகழ்ச்சி அரைநாள். பாக்கி மூன்று நாள்களுக்குள் இத்தனை தலைப்புப்பற்றியும் கருந்தரங்கு கள். இந் நிலையில், சிலர் தத்தம் கருத்துகளைக் கூற மட்டுமே முடியும்? அலசிப் பார்க்கவே நேரமில்லை; முடிவெடுக்க நேரமேது? நேரமிருப்பினும் அத்தனை பொருள்பற்றியும் முடிந்த முடிவு கூற முடியுமா?

பெரிய வலையாக வீசி, எல்லோரையும் நிறைவு படுத்துகிற முறையில் தலைப்புகளைப் போட்டிருந்தார்கள் மாநாட்டு அமைப்பாளர்கள். அப்படியும் விட்டோமா?

கம்பனைப் பற்றிய கருத்துரையில்லையே என்று கசிந்து உருகினார் கம்பதாசனொருவர். “அது எங்கள் குறையன்று; கட்டுரை வராதகுறை!” என்ற மாநாட்டவர் உரைக்க, சிலர் அதை அரசின் குறையாகத் திருப்ப முயன்ற முயற்சி, பரிதாபத்திற்குரியதாக இருந்தது. தமிழ்த் தொண்டு புரிய முன்வருவோர், எத்தனை திடீர்ச் சுழல்களைச் சமாளிக்க வேண்டியவர்களாக உள்ளனர் என்பது விளங்கிற்று.

சோவியத் ஆராய்ச்சியாளரின் கருத்தை சுவலபில் மறுத்தபோது;

‘வல்லரசுகள் இரண்டு நம்மை வலுச்சண்டைக்கு இழுத்துவிடுகின்றனவோ?’ என்று அருகிலிருந்த அறிஞர் ஒருவர் என் காதோடு உரைத்தார். முன் வரிசையில், உட்கார்ந்திருந்ததால் பதில் கூறக் கூசினேன். அரசியல் கண்ணோட்டத்தை அலட்சியப்படுத்தலாமா? பின்னர் வெளியே அவரிடம் கூறிய என் பதில், உங்களுக்குமே.

அவர்கள் நோக்கம் எப்படியும் இருக்கட்டும். நாம் விழிப்பாக இருக்கவேண்டும். நாம் முன்னேற வேண்டும்; நெடுந்தூரம் முன்னேற வேண்டும்; விரைவாக முன்னேற வேண்டும். துறைக்கு ஒரு நூல் என்று வெளியிடுவதோடு அக நிறைவு கொள்ளாமல் துறைக்கு நூறு நூல் என்று வெளியிட்டுக் குவிக்கவேண்டும். அவற்றை வாங்கிப் படிக்குமாறு, மக்களுக்குச் சாவி கொடுக்க வேண்டும். இத்தனை ஆக்க வேலைகள் நம் முன்னே நிற்கின்றன. இவற்றை அப்படியே விட்டு விடலாமா? இதிலே முழு மூச்சாக முனைய வேண்டியவர்களை யெல்லாம் பழைய சண்டைக்கு-எதிலிருந்து எது வந்தது? எதிலிருந்து எது, எவ்வளவு, கடன்வாங்கிற்று?” என்கிற சண்டைக்கு-இழுத்து விடலாமா? இழுத்து விட்டால் தமிழின் எதிர்காலம் என்ன ஆவது எல்லோருமே வலுச் சண்டையில் சிக்கிக்கொண்டால் எப்படி? நீங்களும் சிந்தித்துப் பாருங்கள்..

தமிழர் தம் காலில் நிற்கவேண்டும். தமிழின் தொன்மையையும் பெருமையையும் உலகறியச் செய்ய யாரையோ நம்பியிருத்தல் நல்லதன்று. தமிழ்ப் பற்றும் தமிழறிவும் உடைய தமிழர் பலர், பல முறைகளிலும் ஈடுபட்டுக்கற்றுத் தேர்ந்து, தமிழ்த் தாத்தாவைப் போல் நம்மிலும் நாலு மேதைகள் சிந்துவெளி நாகரிகத்தையும் எழுத்தையும் ஆராயும் வாய்ப்பும் சூழ்நிலையும் பெற்றிருந்தால், அமெரிக்கப் பேராசிரியரை நம்பிப் பிழைப்பதா, சோவியத் சார்பாளரை நம்பி வாழ்வதா என்ற அவலநிலை வராதே! இப்படி அலைமோதுகிறது என் எண்ணம்.

 

14 ஓரடி உயர்ந்தோம்தேநீர் அருந்திய பின்னர், மீண்டும் கூடினோம். தமிழ்நாட்டில் நடந்த தொல்பொருள் ஆராய்ச்சி பற்றிய கட்டுரையை திரு.நாகசாமி படித்தார்.

இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை, தமிழ் நாட்டுத் தொல் பொருள் ஆய்வுத்துறை, சென்னைப் பல்கலைக் கழகத்தின் தொலபொருள் துறை புதுச்சேரியிலுள்ள இந்தியக் கழகம் ஆகியவை நடத்திய ஆய்வுகளைச் சுட்டிக்காட்டினார். அவை, அவ்வப்போது, ஆங்காங்கே, கண்ட உண்மைகள் அனைத்தையும் சொல்ல நேரமேது? எனவே சிற்சில தகவல்களைச் சுட்டினார்.

புகழ்பெற்ற பாண்டியர் துறைமுகம் கொற்கை. நூறாண்டுகளுக்கு முன், டாக்டர் கால்ட்வெல் கொற்கையில்யி நடத்திய ஆராய்ச்சியை நினைவிற்குக் கொண்டு வந்தார்.

டாக்டர் கால்ட்வெல்லின் ஆராய்ச்சி முடிவுகளேத் தமிழில் நூலாக்கி வெளியிட்டால் என்ன என்று தோன்றிற்று. காதல், அரசியல் ஆகியவற்றிற்கு அப்பால் எதைப் படிக்கப் போகிறோம் என்று குறுக்குச்சால் ஒட்டிற்று சிந்தனை. நாம் படிக்காவிட்டாலும், வெளி நாட்டாராவது படித்து தொடர்ந்து ஆராய்ந்து, உலகறியச் செய்தார்களே என்றது அதே மூளை.

தமிழ் நாட்டின் தொல்பொருள் ஆய்வுத்துறை அண்மையில் கொற்கையில் ஆய்வு நடத்திற்றாம். கி.மு முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை தேதி குறிக்கக்கூடிய எழுத்துகள் குறித்த மண்பாண்டங்கள் கிடைத்தனவாம். புதையுண்ட முத்துச் சிப்பிகள் நிரம்மக் கிடைத்தனவாம். சங்கு வளையல்கள் வடிவாகாத பல நிலைகளிலே ஏராளமாய்க் கிடைத்தன. கொற்கையின் தொன்மைக்குக் குறிப்புகள் சில கிடைத்தன. ஆயினும் மேலும் ஆழ்ந்து ஆய்வு நடத்த வேண்டும் என்று எடுத்துரைத்தார். கொற்கையில் கிடைத்த கரிப்பொருள்களை ஆராய்ந்த டாட்டா ஆராய்ச்சி நிலையம் அதன் காலம் கி. மு. 785 ஆம் ஆண்டு என்ற முடிவிற்கு வந்துள்ளது. அதாவது அதன் வயது 2755 ஆண்டுகள். கொற்கை 2755 ஆம் ஆண்டிற்கு முன் சிறந்துவிளங்கிய துறைமுகம். இது தமிழ்ப் பற்றாளர் உரையன்று, விஞ்ஞான ஆராய்ச்சியின் விளைவு என்று கேட்டபோது ஒரடி உயர்ந்து விட்டோம்.

புதைபொருள் ஆராய்ச்சியாளருக்கு அத் துறை ஈடுபாடு மட்டும் போதாது; அந் நாட்டு மொழி இலக்கியத்தில் தோய்வு தேவை. அதாவது தமிழ் நாட்டில் ஆய்வு நடத்துபவருக்குத் தமிழ் இலக்கிய மூழ்கலும் தேவை எனபதை திரு. நாகசாமி விளக்கினார்.

மாமல்லபுரச் சிற்பங்களும், காஞ்சிக் கைலாசநாதர் கோயில் முதலியனவும் ஆகம முறைப்படி கட்டப் பட்டுள்ளதைக் தொட்டுக் காட்டினர். ஆகமங்களை அறியாதவர் அச் சிற்பங்களையும் கட்டடங்களையும் ஆயும் போது முழு உண்மையையும் உணராது இடர்பபடுவார் என்பதை விளக்கினார்

காவிரிப்பூம்பட்டின ஆராய்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டார். அங்கே அகழ்ந்து எடுக்கப்பட்ட கப்பல் துறை, நீர்த்தேக்கம், புத்த விகாரம் ஆகியவற்றைக் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அதே புத்த விகாரத்தைப் பற்றி, ‘அபிதம்மாவதாரா,’ ‘புத்த வம்சக் கதை’ ஆகிய பிராகிருத நூல்களில் குறித்திருப்பதை எடுத்துக் காட்டினார். பிராகிருத ஆராய்ச்சியாளர், அந்நூல்கள், கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று. முடிவு செய்துள்ளனர். அதாவது, காவிரிப்பூம்ப்ட்டின: புத்த விகாரம் 1600 ஆண்டுகளுக்கு முந்திய பிராகிருத நூலில் குறிக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு தொன்மையானது புகார் நகரம். இன்னும் எவ்வளவு தொன்மையானது? தொடர்ந்து ஆராய்ந்தால் தெரியும்.

தொன்மை வாய்ந்த நாகரிகத்தை, மொழியை, இலக்கியத்தை, கலைகளை, சிற்பங்களை ஆராய்வோர்க்கு ஒரு துறைப் புலமை போதாது; பல துறைத் தொடர்பு தேவை. ஒரு மொழிப் புலமை போதாது; பல மொழிப் புலமை தேவை. பல்வேறு துறையில் உயர்ந் தவர்களோடு தொடர்பு கொண்டு, உண்மைச் சிதரல் களை இணைத்து, மெய்யுருவம் கொடுக்கும் நோக்கும் போக்கும் தேவை.

சிற்பக்கலை ஆய்வு தட்டுப்படும்போது, ஆகம அறிவு, விளக்கந்தரும். தமிழ் ஆராய்வு திகைப்பை ஊட்டும்போது, பிராகிருத நூலறிவு வழிகாட்டுகிறது. மொழியறிவும் திட்டவட்டமாகக் காட்டக் கூடாததை புதிய விஞ்ஞான ஆய்வு முறைகளும் கருவிகளும் தெளிவாகக் காட்டுகின்றன.

எல்லோரும் எல்லாத் துறைகளிலும் விற்பன்னர் ஆதல் அரிது; பலமொழி மேதையாவதும் அரிது. அதற்காக, ஒன்றே போதும் என்பது ஆராய்ச்சிக்கு ஆகாது. செல்லும் வாயெல்லாம் சென்று, அவ்வத் துறை வல்லுநர்களையும் பயன்படுத்திக் கொண்டு ஆராய்ந்தால், அறிதற்கு அரிய நம் தொன்மையை ஒரளவாவது உலகறியச் செய்யலாம். பெறற்கரிய பெருமை, நமக்குள்ளே மட்டுமன்றி, உலக அறிஞர்களிடமும் பெறலாம். காஞ்சியிலும், பாலாறு கடலோடு கலக்கும் இடமாகிய வாசவசமுத்திரம், வயலூர் ஆகிய ஊர்களிலும் கண்ட புதைபொருள்களைப் பற்றிச் சொல்லப்பட்டது.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில், காஞ்சியில் ஆராய்ச்சி நடப்பதை, நான் இப்போது நினைவு படுத்துகிறேன்.

சென்னைப்பல்கலைக் கழகத்தின் சார்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர்த் திருச்சி மாவட்டத்தில் நடத்திய புதைபொருள் ஆராய்ச்சியைப் பற்றியும் திரு நாகசாமி குறிப்பிட்டார். திருச்சியில்,திருக்காம்புலியூர், ஆலக்கரை, உறையூர் ஆகிய மூன்று இடங்களில் சென்னைப் பல்கலைக் கழகத் தொல் பொருள்துறை ஆராய்ச்சி செய்தது. நூற்றுக் கணக்கான தொல் பொருள்களை அகழ்ந்தெடுத்தது. அவற்றின் காலம் கி. மு. முதல் நூற்ரறாண்டு முதல் கி. பி முதல் நூற்றாண்டு வரை என்று கருதப்படுகிறது. அவற்றை வகைப்படுத்தி மதிப்பிட்டு, அறிக்கை வந்தது. இதைப்பற்றி வெகு சில செய்திகளே கூறினார். ஏன்? பேராசிரியர் மகாலிங்கத்தின் மேல் பொறாமையா? அச்சிடப்படாத அறிக்கை அது. எனவே, பல குறிப்புகள் கொடுக்கவில்லை.

ஒரு பல்கலைக்கழகத்தின் பணிகள் பல. அவற்றிலே சிறந்தது அறிவின் எல்லைகளை நகர்த்திக் கொண்டே போவது. அதாவது புதிய உண்மைகளை அறிந்தால்- புதிய உண்மைகளைக் கண்டுபிடித்தால் போதுமா? குடத்தில் இட்ட விளக்காக வைக்கலாமா? ஆகாது. வெளியிடவேண்டும்; நூல்களாக வெளியிட வேண்டும் உலகறியச் செய்ய வேண்டும்.

பயிருக்குப் பருவம் துணை நல் விளைச்சலுக்கு மண் வளம் தேவை; இல்லையேல் ஏற்ற உரமாவது வேண்டும்.

நூல்களே வாங்குவோர், படிப்போர், நூல் வெளியீட்டிற்குத் தூண்டுகோல் . இத்துரண்டுகோல், நம்மிடம் உண்டா? சென்ற காலப் படம் என்ன? நூலை வாங்குதல் தாட்சணியத்திற்காக இதுவே, நம் பட்டறிவு.

முதல் இழந்தாலும் பரவாயில்லை; இத்தலை முறையிலாவது, ஏடுகளை ஆற்றுக்கும் செல்லுக்கும் இரையாக்காமல் அச்சாக்கி அடுக்கி விடலாமென்றால், பரிந்துரை வரும் புற்றீசல் போல். எதற்காக எவ்வெப்போதோ சிறப்பு மலர்களுக்கு எழுதிய சிற்றுரைத் தொகுப்புகளை யெல்லாம் நூலாக்கி வெளியிட.

சும்மா இருப்பதுவே இத்தகைய தொல்லைகளிலிருந்து தப்பும் வழி. எனவே இதுவரை திருக்கம் புலியூர் கண்டுபிடிப்புகள் புதை பொருள்களாகவே நின்று விட்டன. ஆனால் எல்லாக் காலமும் உலகியல் தெரிந்தவர்கள் காலமாக இருக்குமா? இப்போது திருக்காம்புலியூர் ஆராய்ச்சி நூலாக வெளிவருகிறது. இக் கட்டுரை வெளியாகும் போது, அந்நூலும் கிடைக்கும். என்ன அசட்டுத் துணிவு!

எங்கோ இழுத்து வந்து விட்டேனே! வாருங்கள், பாரிசு மாநாட்டிற்கே செல்வோம்.

‘அகல அகல ஆழ்ந்து பார்த்தால், தமிழ் தொன்மையானது; தமிழ்க்குடிகள் மூத்தவர் மட்டுமல்லர்; நாகரிகத்தின் உச்சியை எட்டிப் பிடித்தவர் என்று விளங்குகிறது’ என்று ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. ஆதி ரோமாபுரி ஆதித்தமிழனோடு தொடர்பு கொண்டிருந்தது, பண்டைக் கிரேக்கம் நம் முன்னோ ருடன் கலந்து வாழ்ந்தது. இக்காலம் இளந்தமிழராவது அந்நாகரிக வரலாறுகளில் மூழ்கி, நம் சிறப்பினையும் தொடர்பினையும் ஒளிவிடச் செய்யும் முத்துக்களை எடுத்துவர மாட்டார்களாவென்று எங்கள் நெஞ்சம் ஏங்கிற்று.

மாநாட்டில் படிக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் இல்லை. இதனால் தமிழர் பலருக்குக் காப்பு. அவர்களுக்குத் தமிழ் ஒலிக்காதா என்ற ஏக்கம்.

 

15. மாநாட்டு உரைகள்பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் தமிழும் பிற கலாசாரங்களும்’ என்பது பற்றி அரிய கட்டுரையொன்றைப் படித்தார். தமிழர்களும் தாய் மொழியும், இந்திய மொழிகளோடும் கீழை நாடுகளோடும் கொண்டிருந்த தொடர்புகளை உறவுகளை, கோடிகாட்டினார். பக்தி இயக்கம் தமிழகத்திலே பிறந்து, இந்தியாவின் பிற பகுதிக்குப் பரவிற்று என்று விளக்கினார். ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியவர்களின் முதல் தேவாரப்பாடல்கள் தாய்லாந்தில் மந்திரங்களாகப் பாடப்படுவதாகக் கூறினார். சையாமில் திருப்பாவை திருவெம்பாவை பாடப்படுவதைக் கூறினார். ஆதியில், அவர்களிடம் தமிழ்ப் பண்பைப் பரப்பியதை நினைவு படுத்தினார். பேராசிரியரது தமிழ்மொழி வரலாறு என்னும் நூலில் இவற்றை விரிவாகப் பார்த்துக் கொள்ளலாம்.

பேராசிரியர் மு.வ. சங்ககால இலக்கியம் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை கொடுத்தார். எவை எவை துாது சென்றன, எப்படித் தூது சொல்லின என்பதைச் சுருக்கிக் கூறினார். அகத்துறை பற்றியது அது.அருமையாக இருந்தது என்றார்கள். நெஞ்சோடு கிளத்தலைப் பற்றியும் தூது விடுதலைப் பற்றியும் எனக்குப் பற்று ஏற்படவில்லை. காரணம் வாழ்க்கை கசப்பிலே வளர்ந்து விட்டதால் போலும்.

பிற நாடுகளில் குடியேறிய தமிழர்கள் எப்படி நம் சமயப் பழக்கங்களே எடுத்துச் சென்றார்களோ, அப்படியே நம் சாதிப்பிரிவுகளையும் எடுத்துச் சென்றார்கள். சில நாடுகளில் குடியேறிய நூறு ஆண்டுகளிலேயே அவர்கள் தமிழை மறந்து வருகிறார்கள். இவற்றையெல்லாம் நம்முன் நிறுத்திச சிந்திக்க வைத்தார் பேராசிரியர் தனிநாயகம்.

மாநாட்டுக் கட்டுரைகள் சங்க காலத்தோடும் பிற நாடுகளோடும் நின்றுவிடவில்லை. இக் கால இலக்கியம் பற்றியும் சிலர் படித்தார்கள்.

புதுச்சேரியின் முதல் அமைச்சராக உள்ள மாண்பு மிகு பருக் மரைக்காயர் அவர்கள், ‘புதுவையில் தமிழ் வளர்ச்சி’ என்பது பற்றிக் கட்டுரை படித்தார்.

பிரெஞ்சு ஆட்சிக் காலத்திலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் வாழ்ந்த புலவர் பெருமக்களின் தரத்திற்கு எவ்வகையிலும் குறைவு காண முடியாத அளவிற்குத் திறஞ்சான்ற மொழிப் புலமையால் தமிழைப் புதுவை வளர்த்து வந்ததைச் சுட்டிக் காட்டினார். அத்தகைய தமிழ்ப் புலவர்களின் பட்டியலைத் தந்தார்.

வீரமாமுனிவரின் படைப்புகளாகிய தமிழ் இலக்கியங்களும், சதுரகராதி போன்ற நூல்களும் புதுவையில் தான் அச்சேறி வெளிவந்தன என்பதைக் கூறிப் பெருமிதங்கொண்டார். பிரஞ்சு-தமிழ் அகராதி தந்த பாதிரிமார்களின் தொண்டைக் குறிப்பிட்டுப் போற்றினார்.

இயற்கையிலே மேன்மை பெற்ற தமிழ், புதுவைப் பெரு நிலத்தில் புத்துணர்வு பாய்ச்சும் நாட்டுரிமை பெற விழிப்பூட்டும்—-விடிவெள்ளியாக விளங்கலாயிற்று. இதை எடுத்துக்காட்டிப் பாரதியாருக்கு அடைக்கலம் தந்து, அவரது நாட்டுணர்வுக் கனலை, அவியாது காத்து, அதனால் உரிமையுணர்வூட்டும் தமிழைப் புதுவை வளர்த்தது’ எனப் பெருமை கொண்டார்.

படித்த புலவர்களிடையே தவழ்ந்து வந்த தமிழ் நடையைப் பாமரர்களும் புரிந்து கொள்ளும் அளவில் எழுச்சி தரும் எளிய தமிழ் நடையாக மாற்றியது பாரதியாரின் தனிச் சிறப்பாகும். திரு. மரைக்காயரின் கூற்றை யாரே மறுப்பார்? புலிக்குச் சிங்கம் பிறந்தது போல் பாரதிக்குப பிறகு பாரதிதாசன் விளங்கினார்’ என்றார்.

‘தமிழகத்தின் மறுமலர்ச்சி இயக்கத்திற்குப் பாரதி தாசன் பாடல்கள் கால்கோள் விழாக்கள் எடுத்தன. தமிழர்களிடையே புரட்சி மனப்பான்மை துளிர்க்கலா யிற்று என்பதையும் நினைவூட்டினார்.

‘தமிழர்களிடம் மறைந்து கிடந்த மொழியுணர்வைத் தட்டியெழுப்பப் பாரதிதாசன் பாடலகள் பேராற்றல் உடையவனவாக விளங்கின’ என்று அவர் கூறிய போது எம் தலைகள் ஒப்பின. பாரதிதாசனின், ’அழகின் சிரிப்பு’ உலகப் பொது இலக்கியமாக விளங்கும் புதுமைச் சிறப்பினது. பாரதிதாசனின் அரிய பல படைப்புகள் உலகமொழிகளில் உலாவரும் நாளைக் காண விரும்பினார்.

‘வளரும் தமிழகத்தில் பாவேந்தரின் அடிச்சுவடு பற்றி மறுமலர்ச்சித் தமிழகம் விளக்கமுறும் என்பதில் ஐயமில்லை.’

இவ்வாறு கட்டுரைத்தார் மாண்புமிகு மரைக் காயர்.

பேராசிரியர் ஆஷர் இக்கால இலக்கியத்தை மதிப்பிட்டார்.

இக்கால இலக்கியத்தில் பாடல்களைக் குறிப்பிட்டார். ‘இராமலிங்க அடிகளார், பாரதியார், பாரதிதாசன், கவி மணி ஆகியோரது பாடல்களுக்குச் சிறப்பிடம் உண்டு. அதைக் காண முயல வேண்டும்’ என்று கூறினார், நாமக்கல் கவிஞர், பெரியசாமித் தூரன், புலவர் குழந்தை, அழ. வள்ளியப்பா ஆகியோர் என் கண்முன் தோன்றினர். மற்றவர்கள் முன்னே நிற்காதது என் குறை..

இக்கால இலக்கியம் பெரிதும் உரைநடை என்று குறிப்பிட்டார் ஆஷர். தமிழ் உரைநடை வளர்ச்சி பற்றிக் கருத்தாக ஆய்வதற்கு இடமுண்டு என்றார். நாளிதழ்களும் பிற இதழ்களும் பேச்சு நடைப்பக்கம் போவதை நினைவுபடுத்தினார். இதற்கு நேர்ர்மாறாக, நூலாசிரியருள் சிலர் கடுநடையைப் பின்பற்றுகிறார்கள் என்பது ஆஷர் கருத்து. நடைகளிலே இருவேறு போக்கு உள்ளன. பொருளிலும் பல ஓட்டங்கள் உள்ளன.

எங்குமே, இன்றைய இலக்கியத்தில் புதினம் நல்ல இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறது. தமிழ் மொழியில் வேதநாயகம்பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் புதினத்தின் தொடக்கம். ராஜம் அய்யரின், கமலாம்பாள் சரித்திரமும், மாதவையரின் நூல்களும் அவ் வழியே வந்தவை என்றார். இந் நூற்றாண்டின் தொடக்கத்தில் துப்பறியும் நாவல்கள் பல வந்தன என்றார். ரங்க ராஜூ, வடுவூர் துரைசாமி அய்யங்கார், பண்டிதர் அருணகிரிநாதர் ஆகியோர் எங்கள் நினைவிற்கு வந்தனர். கல்கி அவர்களின் வரலாற்றுப் புதினங்களும், டாக்டர் மு.வ வின் நூல்களும் கவனிக்கத்தக்கன என்றார். மு.வ. வின் நூல்கள் பண்டைத் தமிழ்ப் பாடல்களில் காணும் ஒழுக்க இலட்சியங்களை விளக்குவன என்றார்.

சிறுகதைகளின் காலம் குறுகியது என்று கூறி, ‘பரமார்த்த குருகதை’ முதலியவற்றை நினைவு கூர்ந்தார். புதுமைப் பித்தனின் எழுத்துகளை விரிவாகக் கவனிக்க வேண்டுமென்றார்.

தமிழில் புதினங்கள், சிறுகதைகள் வளர்ந்த அளவு நாடகங்கள் பெருகவில்லை என்பது ஆஷர் கருத்து. ஆயினும் தமிழில் பல உரைநடை நாடகங்களும், பாட்டு நாடகங்களும் உள்ளன என்று ஒப்புக்கொண்டார். சினிமாக் கதைப் பெருக்கத்தையும் மறக்கக் கூடாது என்றார். மேடைத் தமிழ் எழுத்துத் தமிழ் வளர்ச்சிக்குத் துணையாவதையும் குறிப்பிட்டார்.

தான், தமிழ் நாட்டில் வளர்ந்து வரும் தமிழ் இலக்கியத்தின் தன்மைகளைக் காட்டியதால் பிற இடங்களில் தமிழ் இலக்கியம் உருவாகவில்லையென்று பொருளல்ல. இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளிலும் தமிழ் இலக்கியம் வளர்கிறது. தமிழ் இலக்கியத்தில் மேனாட்டுக் காற்று சிற்சில சமயம் வீசினாலும் சிறந்த தமிழ் நூல்களில் மொத்தத்தில் தமிழ் மணமே கமழ்கிறது’ என்று ஆஷர் முடித்தார்.

 

16 கல்வி பற்றிக் கவிபாரதிதமிழ் அறிஞர் முன்னே நானும் ஒர் கட்டுரை படைத்தேன். சிறிய கட்டுரையே. ’கல்வி பற்றிக் கவி பாரதி’ என்பது தலைப்பு.

மொழியும் கல்வியும் ஏறக்குறைய ஒரே தன்மையன. கல்வி, தனி மனித வளர்ச்சிக்கு வழி; தனி மனிதனைச் சமுதாயத்தோடு இணைக்கும் இணைப்பு. எல்லாக் காலப் பெரியவர்களும் கல்வியின் தேவையை, சிறப்பை எடுத்துக் காட்டினர்கள்.

ஆல்பர்ட் சுவைட்சர் என்ற உலகப் பெருந் தொண்டர், பேரறிவாளர், ‘மானுடத்தின் நறுமலர் திருக்குறள், உலகத்தின் தலைசிறந்த நீதிநூல்’ என்றார், அந்நூல் கூறுகிறது. ‘யாதானும நாடாமல் ஊராமால் என்னொருவன் சாந்தணையும் கல்லாதவாறு’ என்று. கிரேக்கஞானி அரிஸ்டாட்டிலும் இப்படியே கூறுகிறார்.

பேரரசுகளின் தலையெழுத்து இளைஞர் கல்வியிலே இருக்கிறது. ஆளும் கலையைப் பற்றி ஆய்ந்தவர்கள் அனைவரும் இம் முடிவிற்கே வந்தனர்.

ஆளும் கலையைப் பற்றி, மன்னர் மன்னன் நெப்போலியனுக்கு மேல் யாரே சிந்தித்தார்? நெப்போலியன் சொன்னார்:

‘ஆட்சியின் முதல் நோக்கம் ‘பொதுக்கல்வி’யாக இருக்கவேண்டும்’ என்று.

கல்வியின் பெருக்கத்தோடு, தரமும் தேவை. இதையே பிரஞ்சு அறிஞர் மாண்டேயன், ‘யார் நிரம்பப் படித்தவர் என்று கேட்பதைவிட, யார் நன்றாகப் படித்தவர்’ என்று கேட்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

இவற்றை மாநாட்டின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன்.

பாண்டிய மன்னர், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கல்வியின் சிறப்பினைக் கோடிட்டுக் காட்டுவதையும் காட்டினேன்.

தமிழ் மறையாம் திருக்குறள், கல்விக்கே முதலிடம் கொடுத்திருக்கிறது. கல்விக்குத்தான் நான்கு அதிகாரங்கள்; நாற்பது குறட்பாக்கள். அவையும், சமுதாயப்பாலாகிய பொருட் பாலில் இடம் பெற்றிருப்பதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். பொருட்பாலிலும், இறை மாட்சிக்கு அடுத்து வைத்துள்ள நுட்பத்தையும் உணர வேண்டும்.

கல்வியைப் போற்றும் நல்லோர் மரபில் வந்தவர், தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார். அவர் தமிழ் நாட்டைப் போற்றிப் பாடி மகிழும் போதும்,

கல்வி சிறந்த தமிழ் நாடு- புகழ்க்

கம்பன் பிறந்த தமிழ்நாடு

பல்வித மாயின சாத்திரத் தின் மணம்

பாரெங்கும் வீசும் தமிழ்நாடுஎன்றே பூரிக்கிறார். இது, அவருக்குக் கல்வி, கவிதை, பல்கலை ஆகியவற்றின்பால் இருந்த பேரார்வத்தைக் காட்டுகிறது.

கல்வி பற்றிப் பாரதியின் கருத்தென்ன?

பன்னருங் கல்வியாக இருக்க வேண்டும், ஏன்?

படிப்பவர் பல வகையினர். எனவே பலவகையாக அமைய வேண்டும். கல்வி வழுக்கையாக இருக்கலாமா? ஆகாது. அது தேர்ந்த கல்வியாக வேண்டும். கல்விப் பெருங்கடலாக விளங்க வேண்டும். அதில் மாணவர் தமக்கு வேண்டியதைத் தேடிப் பெற வேண்டும் மற்றவர் உமிழ்வதை அள்ளிக் கொள்வது கல்வியா என்ன?

பாரதி, ‘தேடுகல்வி’ என்று கூறுவதை ஆழ்ந்து உணர்வோம். ‘ஓது பல்பலநூல்வகை’ என்று ஆணையிடுவதையும் சிந்திப்போம். அத்தகைய தேடிப் பெற்ற கல்வியின் விளைவு எதுவாக வேண்டும்? பல்கலைத் திறமையாக, பல்விதமாயின சாத்திர வழியாக விளைய வேண்டும். அத்தகைய கல்வி, வாழ்க்கைக் கல்வி. இத் தகைய கல்வியைப் பெற்றாரா பாரதியார்?

அவர் பெற்றது குறுகிய கல்வி. வாழ்க்கைக்கு உதவாத கல்வி; அடிமை உணர்ச்சியை ஊட்டும் கல்வி; பயனற்ற கல்வி. தாம் பெற்ற கல்வியை, ‘பேடிக்கல்வி’ ‘அற்பர் கல்வி’, ‘மண்படு கல்வி’ என்றெல்லாம் குறை கூறுகிறார் பாரதியார், தம் பள்ளிக்கூடக் காலத்தைப் பற்றிப் பாடும்போது.

‘தந்தைக்கு ஓராயிரம் செலவு. ஆயினும் தனக்கு எள் துணையும் பயனில்லை’ என்று வேதனைப்படுகிறார் பாரதியார்.

‘கல்வி பயனற்றதாக உள்ளதே! இதை அழித்து விடு, என்று கூறவில்லை பாரதியார். மாறாக, கல்வியை எல்லோருக்கும் உரிமையாக்க ஆணையிடுகிறார், பழமைப் பிடிப்பால் கல்வியை அலட்சியப் படுத்துபவர்கள் இருப்பார்கள் என்பதை உணர்கிறார். அவர்கள்மீது பொங்கியெழுகிறார். கல்வியிலாதோர் ஊரைத் தேடிக் கண்டு பிடிக்கக் கட்டளையிடுகிறார். அதைச் சுட்டுப் பொசுக்கி விடச் சொல்லுகிறார், அத்தகைய ஊர் அவமானத்தின் அடையாளம் என்று கருதினர் போலும், இவற்றை அறிஞர் சிந்தனைக்குப் படைத்தேன். கல்வி வளர்ச்சிக்குத் துணைநிற்க வேண்டினேன். கல்விச் சீர்திருத்தத்திற்குத்தோள் கொடுக்க வேண்டினேன். என் கட்டுரை ஆங்கிலத்கில் இருந்தது. அதைப் படித்து முடித்ததும் தொடர்ந்து தமிழில் அதே தலைப்பில் பேசி னேன். அப்போது பாரதி பாடல்கள் சிலவற்றை ஒப்பு விக்க நல்வாய்ப்புக் கிடைத்தது.

கல்வி எல்லோருக்கும் ஆம், பெண்களுக்கும், சரிநிகர் வாய்ப்புக் கொடுக்கக் கட்டளையிடுகிறார். ‘எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்’ என்று பாடுவதை இப்போது நினைவிற்குக் கொண்டு வாருங்கள்!

கல்வி முறையில்இருந்த குறையை நன்றாய் உணர்ந் தார் பாரதியார். மெய்யாய் உணர்ந்தார் பாரதியார். தம் இயலபுக்கேற்பப் பச்சையாகக் காட்டுகிறார். ஆயினும், மண்படு கல்வி என்று சொல்லி ஏழை மாணவனை ஏமாற்றித் திசை திருப்ப முயலவில்லை.

மனித உரிமையிலும் கல்வி உரிமையிலும் அவருக்கு அளவுகடந்த பற்றுதல். உள்ளத்தைத் தான் பகிர்ந்து கொள்ள முடியும் என்ற தெளிவும் இருந்தது. அவருக்குத் தொலைநோக்கு. அலை ஒய்ந்து தலை மூழ்க முடியாது, கல்வி மாற்றத்திற்காக கல்வி பெறுதலைத் தள்ளிப் போடுவது தவறு என்பது தெரிந்தது.

அன்ன சத்திரம் ஆயிரம் கட்டல், ஆலயம் பதினாயிரம் காட்டல் இவற்றைவிட, ‘ஒரேழைக்கு எழுத்தறிவித்தல், சிறந்த புண்ணியம்’ என்பது பாரதியார் கருத்து. அதைப் பாரிசில் விரித்தேன். இங்கும் விரிக்கிறேன். கொள்வாருண்டோ?

 

17. நம் பொறுப்புஇம்மாநாட்டில், டாக்டர் ஜீன் பிலியோசா ‘சமஸ்கிருதமும் தமிழும்’ என்பது பற்றிய கட்டுரையைப் படித்தார். ‘இரண்டும் வெவ்வேறு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. இரண்டும் இந்திய மொழிகள். இரண்டும் ஒன்றோடு ஒன்று உறவுகொண்டு வளர்ந்தன. ஐரோப்பாவில் இலத்தின் மொழி கொண்டிருந்த இடத்தை சமஸ்கிருதமும் இந்தியாவில் கொண்டிருந்தது. தமிழ், தமிழநாட்டிலும் பிறநாடுகளிலும் தமிழர் மொழியாகப் பயன்பட்டு வந்திருக்கிறது’ என்று புலியோசா கருதுகிறார்.

இலங்கை நீதிபதி தம்பையா, ‘ஆரிய சட்டங்கள்’ பற்றிப் பேசினார். ஆங்கில நாட்டில் எழுதாச் சட்டம் உருவானது போல், இலங்கையில் ‘தேசவளமை’ -அதாவது நாட்டு மரபு, சட்டமாக உருவெடுத்தது என்று விளக்கினர்.

‘தமிழ்ச் சமுதாயமும் வாணிகமும்’ என்னும் தலைப்பில் பேராசிரியர் அரசரத்தினம் கட்டுரை இருந்தது. பண்டை நாள் தொட்டுத் தமிழர் வாணிகத்துறையில் சிறந்து விளங்கியதை விளக்கினார். அவர் வாணிகத்தின் பொருட்டுப் பிற நாடுகளுக்குச் சென்ற தமிழர் தங்கள் நாகரிகத்தைப் பரப்பியதை எடுத்துரைத்தார்.

‘தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் முருக வழிபாடு’ பற்றி மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த திரு. ஹின்ஸ் பெகர்ட் பேசினார்.

மேலும் பலர் பேசினர். எல்லோருடைய பேச்சுக்களையும் சுருக்கிக் கூறவும் இடமிராது.

இம்மாநாட்டில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி, பாரிசு மாணவர் தமிழ் மன்றத் தொடக்கம். இது மாநாட்டிற்கு அப்பாற்பட்டது. தமிழ் பேசுவதற்கு வாய்ப்பில்லாமல் தவித்த எங்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்தது. இம் மன்றத்தைக் கூட்டுவித்த திரு. ஜமாலுதீன், தமிழ் மாணவர் மன்றம் அன்று இது. மாணவர் தமிழ் மன்ற மாதலின் எல்லா நாட்டு மாணவர்களும் தமிழோடு தொடர்புகொண்டு அம் மொழியில் ஈடுபட இது கருவி யாக இருக்கும். பல்வேறு துறையில் மாணவர்களாக உள்ளவர்கள், தமிழைப் பயிலவும் ஆராயவும் இந்த மன்றம் வழிவகுக்கும்’ என்று கூறி விளக்கினர். திரு ஜமாலுதீன் பாரிசில் படிக்கும் தமிழ் மாணவர்; எங்களுக்கெல்லாம் பெருந்துணையாக இருந்தவர்.

மாணவர் தமிழ் மன்றத் தொடக்க விழாவிற்கு, புதுவை முதல் அமைச்சர் மாண்புமிகு திரு, பருக் மரைக் காயர் தலைமை தாங்கினார். தமிழைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து மாறி, தமிழைப் பரப்ப வேண்டுமென்ற நிலைக்கு வந்துள்ளதைச் சுட்டிக் காட்டினார். தமிழ் மன்றம் அத்தொண்டைச் செய்து, ஓங்கும்படி வாழ்த்தினார்.

மன்றத்தைத் திரு மதியழகன் தொடங்கி வைத்தார். இம் மன்றத்தை வாழ்த்துவதற்குத் தமிழுலகமே வந்திருக்கிறது என்று நினைவு படுத்தி, இதைத் தொடங்கும் மாணவர்கள் நற்பேறு பெற்றவர்கள் என்றார். தமிழின் பெருமையையும் அது எங்கும் பரவி வரும் இயல்பையுங் கண்டு பெருமிதம் அடைந்தார். இயற்கைதானே!

அம் மன்றத் தொடக்க விழாவில் அமெரிக்கப் பேரறிஞர் திரு பிராங்க்ளின், சுவிட்சர்லாந்து, தமிழ் அறிஞர் டாக்டர் கெல்லர், இலங்கைத் தமிழர் டாக்டர் சிவஞான சுந்தரம், திரு தெ. பொ. மீ., திரு ம. பொ. சி., திரு கி. வா. ஜ. ஆகியோர் அருமையாகப் பேசினார்களாம். எதிர்பார்க்கக் கூடியதே, அங்கு மேனாட்டு அறிஞர்கள் கூட தமிழில் உரையாற்றினர்களாம். இவற்றையெல்லாம் கேட்டு மகிழும் வாய்ப்பினை இழந்து விட்டேன். ஏன்?

அதே கட்டடத்தில், அதே நேரத்தில் கடந்த— சென்னையில் நிறுவ இருக்கும் அனைத்து நாடுகளின் தமிழ்க் கல்விக் கழகத்தின் ஆலோசனைக் குழுக் கூட்டத் தில் கலந்து கொள்ள வேண்டியவனாகிவிட்டேன். அந்த ஆலோசனைக்குழுக் கூட்டத்திற்காகவே நான் பாரிசுக்குச் செனறது. அக் குழுவில் பலரும் இருந்தனர். முதல் இரண்டாண்டுகளில் புதிதாக அமைக்கப் போகும் தமிழ்க் கழகம் ஆற்ற எண்ணியுள்ள வேலைத் திட்டத் தைப்பற்றிக் கடுமையான வாதம். ஒரு நிலையில், தமிழைத் தொடங்குவதற்குப் பதில் வேறு துறையைத் தொடங்கி விடுவார்களே என்ற அச்சம் கூட ஏற்பட்டது. பல நாட்டவர் கூடும்போது ஆளுக்கொரு பக்கம் இழுத்தல் சாதாரணம். அதன் விளைவாகச் சில வேளை, ‘பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிவதுமுண்டு.’ அத்தகைய ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டது தமிழ்க் கல்விக் கழகம். தமிழ் மொழித் திட்டத்திலே தொடங்கி, பிறகே சமூக இயல், வரலாறு, தொல் பொருள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளலாமென்ற முடிவுக்குத் கொண்டு வரப் பெரும்பாடுபட வேண்டியிருந்தது.

மாணவர் தமிழ்மன்றத்தில் நானும் பேசுவதாக அறிவித்திருந்தார்கள். ஆலோசனைக் குழுவிலிருந்த எனக்கு ஒரு முறைக்குமேல் அழைப்பு வந்தது குழுவி லிருந்து விடுதலை பெற்று, அநேகமாகக் கடைசி நேரத் தில் தமிழ் மன்றத்திற்குப் போய்ச் சேர்ந்தேன்.

“பழம் பெரும் அரண்மனையிலே பாவலர் போற்ற, காவலர் இமையாது காக்க, அரியணைமேல் கொலு வீற்றிருந்த தமிழ்த்தாயை, உலக அரங்கிலே கொண்டு வந்து நிறுத்திவிட்டோம். இது நம் பொறுப்பினைப் பன்மடங்கு அதிகமாக்கிவிட்டது.

“மக்களிடையே வந்துவிட்ட தலைவர் கென்னடிக்குப் போதிய பாதுகாப்புச் செய்யத் தவறியது எத்தனை தீங்காக முடிந்தது! அது நமக்குப் படிப்பினை. அரண்மனையை விட்டு அழைத்து வந்துள்ள நம் தமிழ் அன்னையைக் காக்க மிக விழிப்பாயிருக்க வேண்டும். புதிய பாதுகாப்பு முறைகளை அறிந்து, நன்கு பயின்று கொள்ள வேண்டும். தமிழைக் கற்பதில் எவ்வளவு ஆர்வங் கொண்டிருந்த போதிலும்; வெளிநாட்டார் நம் மொழியைக் காப்பாற்றுவார் என்று ஏமாந்து விடக் கூடாது. இளைஞர்கள் அதிக விழிப்போடும் அதிக ஆர்வத்தோடும், தேவையான அத்தனை அறிவையும் பெற்றுத் தமிழைப் பாதுகாக்க வேண்டு'மென்று வேண்டிக் கொண்டேன், அறுபதை எட்டும் நான் வேறு என்ன செய்ய முடியும்?

இதைப் பற்றியே இரவு பகலாய்ச் சிந்தித்தேன், சிந்திக்கிறேன். என்னுள் எழும் அச்சத்தை உங்களிடம் சொல்லாமல் யாரிடம் சொல்ல?

நாட்டுப் புறத்தில் நல்ல மூக்குமுழியோடு பிறந்து, கள்ளம் கபடு அறியாது வளர்ந்த சிவப்புக் கன்னி பொருத்தி புகழ் ஆசையால் உந்தப்பட்டு, தன்னந் தனியே திக்குத் தெரியாத புது நகரத்திற்கு வந்தால் என்ன ஆவாள்? அத்தகைய நிலைக்குக் கன்னித் தமிழை ஆளாக்கி விடுவோமோ என்ற அச்சம் என்னை அலைக் கழிக்கிறது. நான் அஞ்சிப் பயன் என்ன? ஏழை சொல், அம்பலம் ஏறுமோ?

 

18. இதழ்களின் தமிழ்ப் பணிமாநாட்டிற்குத் திரும்பிப் போவோம். இக்காலத் தமிழ் இலக்கியத்தை மேலும் சிறிது கவனிப்போம். சென்னை, இலயோலா கல்லூரிப் பேராசிரியர் மறைத் திரு. ஞானப்பிரகாசம் அடிகளாரின் உரையைக் கேட்போம். 1969-ஆம் ஆண்டு தமிழில் வெளியான, வார, மாத இதழ்களைப் பற்றிய ஆராய்ச்சியுரை யொன்றை அவர் நிகழ்த்தினார்.

சென்ற ஆண்டு அக் கல்லூரிப் பேராசிரியர் சிலரும், மாணவர் சிலரும் சேர்ந்து தமிழ் வார மாத இதழ்களை ஆராய்ந்தார்களாம். ஏன்? பல இலட்சக் கணக்கானவர்கள் வீடுகளிலும் வெளியிலும் அலுவலகங்களிலும் படிப்பவை இவையே. இவையே, அத்தனை மக்களின் நோக்கையும் போக்கையும் உருவாக்குகின்றன. இவ்விதழ்கள் எவ்வகை, படிப்போர் அவ்வகை.

‘கல்கி’ ‘ஆனந்தவிகடன்’ ‘தினமணி கதிர்’ ‘குமுதம்’ ‘கல்கண்டு’ ஆகிய வார இதழ்கள் அவர்களால் ஆராயப் பட்டன, ‘கலைக்கதிர்’, ‘தீபம்’, ‘மஞ்சரி’, ‘கண்ணதாசன்’ ஆகிய மாத இதழ்களும் ஆராய்ச்சிக்கு உட்பட்டவை.

வார இதழ்கள் பெரிதும் சிறுகதைகளை நம்பியுள்ளனவாம். இச் சிறுகதைகள் பெரும்பாலும், காதல், கலப்புக் திருமணம், சமூக முன்னேற்றம் ஆகியவை பற்றி இருந்தனவாம். இவை கதைக்கு வற்றாத ஊற்றல்லவா?

சென்ற ஆண்டு காந்தி நூற்றாண்டு அல்லவா? அவ் வாண்டில் சிலராவது காந்தியை நினைத்தார்களாம். சிலருக்குக் காந்தியம் - சிறு கதைகளுக்கு உடலாக உதவிற்றாம். லாட்டரிச் சீட்டால் விளையும் கேடுகளைப் பற்றியும் சிலகதைகள் வந்தனவாம்.

மனிதர்கள் பால் அன்பு, கீழ்ப்படிதல், தியாகம் ஆகியவற்றைப் பல கதைகள் போதித்தனவாம். கதையை முடிப்பதற்குத் தற்கொலை கைகண்ட மருந்தாக இருந்ததாம் பலருக்கு.

கடவுள் நம்பிக்கை எவ்வளவு இடம் பெற்றது இக் கதைகளில்? இதை ஒருவர் ஆராய்ந்தாராம். ஆத்திகர் அதிர்ச்சி அடைய வேண்டாம். இருநூறு சிறுகதைகளை வெளியிட்ட ஒரு வார இதழ் 9 கதைகளில் கடவுளைப் பொதுவாக இழுத்ததாம். அதே இதழ், ஒரே ஒரு கதையில் மட்டுமே கடவுளை மையமாக வைத்ததாம். எல்லா வார இதழ்களிலும் வந்த 725 சிறுகதைகளில் 43ல் மட்டுமே கடவுள் கம்பிக்கையை அடிப்படையாக வைத் துள்ளனராம். 122 கதைகளில் கடவுள் பற்று பொதுவாக வருகிறதாம். இப் பத்திரிகையாளர்கள் யாரும் நாத்திகர் அல்லர் என்பதை நினைவு படுத்துகிறேன். அது எப்படியோ போகட்டும்.

பெரும்பாலான சிறுகதைகளில் கருத்துச் சிறப்போ, உணர்ச்சி உயர்வோ இல்லையாம். பொழுது போக்க மட்டுமே பயன்படுபவை பலவாம். இக் கதைகளில் தேவைக்கும் அதிகமாகப் பிறமொழிச் சொற்கள் கையாளப்பட்டதைச் சுட்டிக்காட்டி வேதனைப்பட்டது - மறைத்திரு. ஞானபபிரகாச அடிகளாரின் தமிழ் உள்ளம். பல இதழ்கள் மொழித் துய்மையைப் பொருட்படுத்து வதே இல்லையாம்! இருபது ஆண்டுகளுக்கு முன் எல்லோருக்கும் தெரிந்திருந்த வடமொழிச் சொற்கள் இப்போது பெரும்பாலோருக்குப் புரியாதனவாக உள்ளன. அதை அறியாது பழைய வடமொழிச் சொற்களைப் பெய்வதிலேயே சிலர் மகிழ்ச்சியடைகிறார்களாம். பிற மொழிச் சொற்களை அப்படியே இறக்குமதி செய்துகொள்வது தமிழ் மொழியின் சொல் வளத்தைக் குறைத்து விடுமோ என்று வேதனைப்பட்டார். மெய்யன்றோ?

விற்பனைப் பெருக்கத்திலேயே குறியாக இருப்பதால் தமிழ் இதழ்கள். தமிழ்ச் சமுதாயத்தின் ஞானிகளாகவும் குரவர்களாகவும் இருந்து தொண்டாற்றும் கடமையினை மறந்து விடுவார்கள் என்று அஞ்சினார். காரிருளில் மின்னல் கீற்றுகளையும் காட்டினார் அடிகளார். கல் கண்டில் வரும் துப்பறியும் கதைகளில் நல்ல தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவதற்காக அதன் ஆசிரியர்-தமிழ் வாணனுக்குப் பாராட்டுக் கூறினார்.

‘கலைக்கதிர்’ திங்கள் இதழ், பலதுறை அறிவியலையும் துாய தமிழிலே தருவதிலே முன்னோடியாக இருந்து, தனி இடம் பெற்றுள்ளதை எடுத்துக்காட்டி மகிழ்ந்தார்.

‘கல்கண்டை’ உண்டு மகிழ்ந்தார்களாம் ஆராய்ச்சியாளர்கள். இவ்வார இதழில் பால் உணர்ச்சிக் கதையே கிடையாது; செய்தித் துணுக்குகள் ஏராளம். 1969ஆம் ஆண்டில் 5981 துணுக்களின் மூலம் அறிவினை வளர்த்தாராம் ‘கல்கண்டு’ ஆசிரியர். இவ்வகையில் படிப்போர்க்குப் பலதுறை அறிவு ஏற்படுகிறதாம். இத்தனை தகவல் துணுக்குகளில், அரசியல் பற்றி 568; இயற்கை மருத்துவம் பற்றி 586; பொது ஆலோசனை 327; பெண்களுக்கு அறிவுரை 344; சினிமா உலகம் பற்றி 1652 — இடம் பெற்றனவாம். திரு தமிழ்வாணன் அவர்களே, இப்படிக், கணக்கப் போட்டு பார்த்திருப்பாரோ என்னவோ?

இன்றைய மனிதனுக்கு அமைதியாக உட்கார்ந்து முழு சாப்பாடு உண்ண நேரமில்லை. இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம், விரைந்து விழுங்கிவிட்டு வேலையைப் பார்க்க, வேண்டியதாக இருக்கிறது. இதேபோல், பொறுமையாக, நீண்ட கட்டுரைகளைப் படித்து அறிந்து கொள்ளப் பலருக்கு நேரமில்லை. எனவே, பயனுள்ள சிறு சிறு தகவல்களின் மூலம் மக்களுக்கு அறிவூட் டுவதாகக் கல்கண்டு’ ஆசிரியர் கூறினாராம்.

ஆராய்ச்சி உரை மேலும் கூறுவது இதோ:

‘கல்கண்டு, முதல் எழுத்திலிருந்து கடைசி எழுத்து வரை திரு. தமிழ்வாணனுடையது. ஒருவரே அத்தனையும் எழுதி வருகிறார். எவ்வளவு காலமாக? இருபத்திரண்டு ஆண்டுகளாக, தனியொரு ஆசிரியரே வார இதழ் முழுவதையும் எழுதிடும் வியத்தகு புதுமை திரு. தமிழ்வாணனால் நிகழ்வதாகக் கூறிப் பூரித்தார். அவையைச் சுற்றிப் பார்த்தேன்; சுட்ட பழங்களையும் கண்டேன்.

தமிழ்வாணனின் இத்தகைய பெருமைக்கு, நான் கறுப்புப் பொட்டாக நேர்ந்து விட்டேன். குற்றவாளி நானல்லன். இது என் திட்டத்தின் விளைவன்று; நான் தேடியபெருமையன்று. இது திடீர் விளைவு, இதுவே என் வாழ்க்கை. யான் என்ன செய்வேன்?

மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு சீரும் சிறப்புமாக முடிந்தது. சென்னையில், அனைத்து நாடுகளின் தமிழ் கல்விக் கழகத்தை அமைப்பதைப் பற்றிய திட்டத்திற்கு ஒப்புக் கொண்டு கலைந்தது.

நான்காவது உலகத் தமிழ் மாநாடு இலங்கையில் நடக்குமாம். அது 1973 இல் இருக்கலாம்.

மாநாடு முடிந்த அன்று இரவே, நான் பாரிசை விட்டுக் கிளம்பிவிட்டேன். அங்கிருந்து இலண்டன் சென்றேன். ஒரிரவு அங்குத் தங்கிவிட்டு, மறுநாள் பிற்பகல் அங்கிருந்து புறப்பட்டேன். மாஸ்கோ, டெல்லி பம்பாய் வழியாகத் திரும்பினேன்.

முடிப்பதற்கு முன் ஆசையொன்றை வெளியிட்டு விடுகிறேன்.

பாரிசு மாநாட்டிலிருந்து திரும்பி வந்த நான் மறுபடியும் கனடா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் ஒரு திங்கள் பயணஞ் செய்ய நேர்ந்தது. கடைசியாக, சிங்கப்பூரைப் பார்த்துவிட்டு மலேசியா விமான சர்விஸ் மூலம் சென்னைக்குப் புறப்பட்டேன். வானூர்தி மேலே கிளம்பியதும் சாப்பாட்டுப் பட்டியலைக் கொடுத்தார்கள். என்ன கண்டேன்? ‘தக்காளி ரசம்’, ‘பூரிக்கிழங்கு’ ‘சோறு’, ‘கோழிக்கறி’, ‘பாலாடை’ இப்படியாகத் தமிழ் உணவுகளைத் தமிழில் அச்சிட்டிருந்தார்கள். ஆங்கிலத்தில், மலேசியா மொழியில், அச்சிட்டதோடு தமிழிலும் அச்சிட்டிருந்தார்கள். கண்டு புளங்காங்கிதம் அடைந்தேன். இந்திய விமானங்களில், தமிழைக் காண இயலா விட்டாலும், மலேசியா-சிங்கப்பூர் விமானத்திலாகிலும் அதுஇடம் பெற்றுள்ளதே என் பூரிப்பு. மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் உள்ள தமிழர்கள் இதைக் காப்பாற்றிக் கொள்ளும் விவேகத்தோடு நடந்துகொள்ள வேண்டு மென்ற ஆசை, தவறு இல்லையே.

தமிழ் காற்றிலேறி விண்ணெலாம் முழங்கும் நிலை உருவாகும். நாம் பற்றோடு நின்று விடாமல், பதற்றத்தைக் குறைத்துக் கொண்டு; துறைதொறும் துறை தொறும் வல்லுநர்களாகி, வீரத்தையும் விவேகத்தையும் இணைத்துக் கருமம் சிதையாது பாடுபடவேண்டும்.வணக்கம்