Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையாகிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

பல்கலைப் பேரறிஞர்

தேசிய விருதுபெற்ற பேராசிரியர்

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

M.A., M.P.Ed., Ph.D., D.Litt., D.Ed., FUWAI

விளையாட்டுப் பதிப்பகம்

"லில்லி பவனம்”

8/1, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு,

தி. நகர், சென்னை - 600 017.

தொலைபேசி: 4342232

நூல் விபர அட்டவணை

நூலின் பெயர் ⁠: கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

மொழி ⁠: தமிழ்

பொருள் ⁠: கிரேக்க ஒலிம்பிக் நிகழ்வுகள்

ஆசிரியர் ⁠: டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

(1937 - 2001)

பதிப்பு ⁠: நவம்பர் - 2001

நூலின் அளவு ⁠: கிரவுன்

படிகள் ⁠: 1200

அச்சு ⁠: 11 புள்ளி

தாள் ⁠: வெள்ளை

பக்கங்கள் ⁠: 144

நூல்கட்டுமானம் ⁠: பேப்பர் அட்டைக்கட்டு

விலை ⁠: ரூ. 30-00

உரிமை ⁠: பதிப்பகதாருக்கு

தயாரிப்பு ⁠: ராஜ்குமார் செல்லையா

ராஜ்மோகன் செல்லையா

வெளியிட்டோர் ⁠: விளையாட்டுப் பதிப்பகம்

8/1, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு

தி. நகர், சென்னை - 600 017.

அச்சிட்டோர் ⁠: எவரெடி பிரிண்டர்ஸ்

தி. நகர், சென்னை - 600 017

பதிப்புரை

அகில உலக நாடுகள் அனைத்தும் அமைதியோடும், அன்போடும், நட்புறவோடும், ஆனந்தத்தோடும் ஒன்றாகச் சேர்ந்து வாழவேண்டும் இதற்குத் துணைபுரிவது விளையாட்டுக்கள்தான். தனிமனிதனின் உடல் நலத்திற்கும், உள்ள நலத்திற்கும் பேருதவியாய்த் திகழ்வது விளையாட்டுக்களேயாகும் விளையாட்டுகளுக்கு ஈடாக வேறு ஒன்றையும் கற்பனை செய்து கூட பார்க்க இயலாது.

மனித வரலாறு என்றும் இனியவை; புதியவை; எண்ணிலடங்காத அற்புதங்கள் நிறைந்தவை; மன எழுச்சிக்கு விருந்தானவை; படிக்கப் படிக்க ஆச்சரியத்தை தரும் கருத்துக் கருவூலமாகத் திகழ்பவை. அதிலும், கிரேக்கர்களின் விளையாட்டு ஆர்வத்தையும், தனித்தன்மை மிக்க வாழ்க்கையையும் சுவையான தமிழில், மனதைக் கவரும் வகையில் படைத்த என் தந்தையின் எழுத்தாற்றல், படிப்போர் நெஞ்சம் மகிழும், புதிய உத்வேகம் பெறும் என்பது திண்ணம்.

விளையாட்டுக் களஞ்சியம் எனும் மாத இதழை என் தந்தையார் இருபத்து நான்கு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி வந்தார். அதில், பல்வேறு தலைப்புகளில் சுவையாக எழுதி வந்ததையாவரும் அறிந்ததே. தற்போது நாங்கள் ஒவ்வொன்றாக தொகுத்து தமிழ் மக்களுக்காக புத்தக வடிவில் வெளியிட்டு வருகிறோம்.

துடித்தெழும் தமிழக இளைஞர் கூட்டம் ஒலிம்பிக் பந்தயம் சென்று வாகைசூடவேண்டும் என்ற பேரார்வத்தில் இந்நூலை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.

லில்லி பவனம்

சென்னை - 17

ராஜ்மோகன் செல்லையா

டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா

1937 – 2001

ஒரு பார்வை

"பல்கலைப் பேரறிஞர் - என்று படித்தவர்களால் பாராட்டப்பட்ட டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா M.A., M.P.Ed., Ph.D., D.Litt., D.Ed., FUWAI அவர்கள், உடலியல், விளையாட்டு, கதை, கவிதை, நாடகம் இலக்கிய ஆய்வுகள். ஆங்கிலம் - தமிழ் அகராதி, கலைச் சொல் அகராதி, இன்னும் பல்வேறு தலைப்புக்களில் இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.

இவர் எழுதிய சிறந்த நூல்களுக்காக மூன்று முறை தேசிய விருது பெற்றுள்ளார். தமிழக அரசின் விருதையும் பெற்றிருக்கிறார்.

உடல் காக்கும் கலையை உலக மக்களுக்கு உணர்த்தி உற்சாகம் ஊட்டுவதற்காக, "விளையாட்டுக் களஞ்சியம்" என்னும் மாத இதழைத் தொடர்ந்து 25 ஆண்டுகளாக நடத்தினார்.

விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் - தமிழ் அகராதி விளையாட்டுத் துறையில் கலைச் சொல் அகராதி,போன்ற நூல்கள் இவரது விளையாட்டு இலக்கியப் பணிக்கு நல் முத்திரைகளாகும். விளையாட்டு ஆத்திச்சூடி, சிந்தனைப் பந்தாட்டம் முதலிய நூல்கள் இவரது கவித்திறனை விளக்கும் நூல்கள்.

இசை, நடனம் மற்றும் இசைக்கருவிகளில் பயிற்சி தருவதற்காக "சஞ்சு கல்சுரல் அகாடமி"- என்ற நிறுவனத்தை அமைத்து, அதன் தலைவராக இருந்து செயல்பட்டார்.

 ஒய். எம். சி. ஏ. உடற் கல்விக் கல்லூரியில் ஆய்வுத்துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றிய அனுபவமானது. "திருக்குறள் புதிய உரை" எனும் நூலின் முழுமைக்கு, மேலும் செழுமை ஊட்டி இருக்கிறது.

திருமூலர் திருவள்ளுவர், வள்ளலார் போன்றவர்களுக்குப் பிறகு, தேகத்தின் தெய்வாம்சம் பற்றி மக்களிடையே, மகிமையை வளர்க்கும் பணியைக் கடந்த நாற்பது ஆண்டுகளாகச் செய்து வந்தார்.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற கொள்கையில் நம்பிக்கையுடைய இவர், எங்கும் முதல், எதிலும் முதல் என்பதுபோல பல அரிய காரியங்களை நிறைவேற்றினார்.

கல்லூரி மாணவராகத் திகழ்ந்தபோது சென்னைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் போன்றவை நடத்திய ஓடுகளப் போட்டிகளில் வெற்றி வீரராகத் திகழ்ந்திருக்கிறார்.

தான் பெற்ற வெற்றியும், புகழும் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்காக "விளையாட்டு இலக்கியத் துறை" என்ற புதிய துறையை உருவாக்கினார்.

முதன் முதலாக விளையாட்டுத்துறை இலக்கிய நூலை 1964ம் ஆண்டில் எழுதிமுடித்த இவர், சிலநூறு நூல்களைப் படைத்திருக்கிறார்.

விளையாட்டு இலக்கியத்திற்காக தான் வகித்து வந்த எல்லாப் பதவிகளையும் விட்டு விட்டு, முழுநேர எழுத்தாளராக வாழ்ந்து சாதித்துக் காட்டினார்.

முதன் முதலாக 1987 - ஆம் ஆண்டு உடற்பயிற்சி செய்வதற்கென்று "விளையாட்டு இசைப்பாடல்கள்" என்ற ஒலி நாடாவை தயாரித்து வெளியிட்டார்.

முதன் முதலாக, தெய்வத்தன்மையுள்ள தேகத்தைத் திறம்படக்காக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, 1994 - ஆம் ஆண்டு "ஓட்டப் பந்தயம்" என்ற திரைப்படத்தை தயாரித்துத் திரையிட்டுள்ளார்.

முதன் முதலாக சென்னைத் தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விளையாட்டு மற்றும் உடல் நலத்தின் மேன்மையை, கடந்த 30 ஆண்டுகளாக உலகுக்கு உணர்த்தினார்.

முதன் முதலாக அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகளிலும் கடந்த முப்பது ஆண்டுகளாக, தேக நலத்தின் தேவைகளை தெளிவுபடுத்தினார்.

விளையாட்டுத் துறை பற்றிய கருத்துக்களை கடந்த முப்பது ஆண்டுகளாக, நாளிதழ், வார இதழ், மாத இதழ்களில், கட்டுரை, கவிதைகளாக படைத்து மகிழ்ந்தார்.

முதன் முதலாக “உடற் கல்வி மாமன்றம்” என்ற அமைப்பை 1996ம் ஆண்டு தொடங்கி, மாணவர்களுக்கு தேக நலத்தில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகின்ற தேர்வுப் போட்டிகளை நடத்தி, பல ஆயிரம் ரூபாயைப் பரிசாக வழங்கி பணியாற்றினார்.

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள், வள்ளுவர் வணங்கிய கடவுள் முதலிய நூல்கள் இவரது தமிழ் இலக்கிய ஆய்வு உணர்வினை புலப்படுத்தும் நூல்கள்.

வள்ளுவர் தமது திருக்குறளில் உடல் ஒழுக்கம், உடல் நலம் - ஆன்மபலம் முதலியவற்றை வளர்க்கும் விதத்தை வலியுறுத்தி விளக்கியிருக்கிறார் என்பதை, திருக்குறள் புதிய உரை என்ற ஆய்வு நூலை முதன் முதலாக எழுதி தமிழ் நெஞ்சங்களை மகிழச் செய்தார்.

தேசிய விருது பெற்ற நூலாசிரியர், பல்கலைப் பேரறிஞர்

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

அவர்களைப் பற்றி

தினமணி நாளிதழ்

விளையாட்டு, உடல் நலம், உடற்பயிற்சி, உடற்கல்வி, யோகாசனம், மனநலம் குறித்த ஆய்வுநூல்களை இவர் எழுதியுள்ளார்.

முதன் முதலாக விளையாட்டுத் துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

விளையாட்டு இசைப்பாடல்கள் என்னும் ஒலிநாடாவை 1978-ம் ஆண்டு வெளியிட்டார்.

விளையாட்டுக்களின் பெருமையை உணர்த்தும் வகையில் "ஓட்டப் பந்தயம்” எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதன் கதை, வசனம், பாடல்கள், இசை, பின்னணிக்குரல், நடிப்பு, தயாரிப்பு முதலிய பொறுப்புகளையும் ஏற்று திரையிட்டார்.

உடற்கல்வித் துறையில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு தமிழ்நாடு அளவிலே “உடற் கல்வி கலைமாமணி” என்ற விருதையும், ஒவ்வொரு பள்ளியிலும் சிறந்து விளங்கும் உடற்கல்வி ஆசிரியப் பெருமக்களுக்கு "உடற்கல்வி ஜீவ ஜோதி” என்ற விருதையும் வாங்கிப் பாராட்டி வந்தார்.

ஒலிம்பிக் பந்தயத்தின் கதை, விளையாட்டுக்களின் வரலாறும் வழிமுறைகளும், விளையாட்டுக்களின் கதைகள் முதலிய நூல்களுக்காக 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

தமிழ் நாட்டுச் சடுகுடுப் பாடல்களும் சடுகுடு ஆட்டமும் என்னும் நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்துள்ளது.

சென்னை அமைந்துள்ள ஒய். எம். சி. ஏ. கல்லூரியில் பேராசிரியராகவும், ஆய்வுத் துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

உலகப் பொதுமறை திருக்குறளுக்கு புதிய சிந்தனையுடன் (அறத்துப்பால் மட்டும்) திருக்குறள் புதிய உரை என்ற நூலையும் எழுதியுள்ளார்.


பொருளடக்கம்

1. மதங்கள் விளையாட்டுக்களை எப்படி உண்டாக்கின்?

2. கடவுள்களின் கதைகள்

3. மதங்களும் வழிபாடுகளும்

4. மக்களும் விழாக்களும்

5. கதையும் காரணமும்

6. பந்தயம் பிறந்த கதை

7. பந்தயத்தில் பங்குபெற பயங்கர விதிமுறைகள்

8. பந்தயக் களமும் பார்வையாளர்களும்

9. போட்டிக்கு முன்னே!

10. கட்டழகு வந்தக் காரணம்

11. பந்தயம் நடந்த விதம்

12. ஐந்து நாள் விழா

13. பிறந்த மேனியுடன் போட்டி

14. வெற்றியும் வெகுமதியும்

15. வலிமையும் திறமையும்

16. கிரேக்க பந்தயங்களின் வீழ்ச்சி

17. கிரேக்கர்களின் வீரக் கதைகள்

18. வீராதி வீரன் மிலோ

19. பண்பாட்டு வீரன் பயிலஸ்

20. தில்லுமுல்லு வீரன் தியாஜனிஸ்

21. இரண்டு கெட்டான் ஈதிமஸ்

22. கீர்த்தி பெற்ற கிளியோமிடஸ்

23. வலிமைக்கோர் பொலிடாமஸ்

24. வாயாடி டியோக்சிபஸ்

25. தனிவரம் பெற்ற தயாகரஸ்

26. விதியால் வீழ்ந்த டோரியஸ்

27. அதிகாரிகளிடத்திலே அதிகாரம்

28. பிறந்தமேனியும் பெருமையும்


1.மதங்கள் விளையாட்டுகளை எப்படி உண்டாக்கின?

மதம் - ஒரு விளக்கம்

மதம் என்றால் கொள்கை என்று விளக்கம் கூறுவார்கள். மதம் என்றால் வெறிகொண்ட மனநிலை என்றும் கூறுவார்கள். யானையின் மதம் என்பதை நாம் இங்கு நினைவில் கொள்ளலாம்.

ஒருவரது உயர்ந்த வாழ்வுக்கும், உன்னத மகிழ்ச்சிக்கும், ஒப்பற்ற சிறப்புக்கும் மதமே உதவுகிறது. வழிகாட்டுகிறது. வாழ்வாங்கு வாழவைக்கிறது. வளப்படுத்துகிறது. வசப்படுத்துகிறது. நெறிப்படுத்துகிறது. எல்லோரையும் இணக்கமாக உறவாடவைக்கிறது. உயிராக உலவ வைக்கிறது.

மதமில்லாத மனிதக் கூட்டம் இந்த மண்ணிலே எங்குமில்லை. அவரவர்கள் விரும்புகிற அளவில், ஆண்டவர்களைப் படைத்துக் கொண்டு - அன்பால் சேர்ந்து, பண்பால் நெருங்கி, பயத்தால் ஒன்றுபட்டு, பக்தியால் திளைத்து வாழ்கின்றார்கள்.

மதம் வந்த கதை

ஆதிகாலத்தில் வாழ்ந்த மக்களிடையிலிருந்தே இந்த எண்ணம் ஏற்றமுற ஆரம்பித்து இருந்தது என்று நாம் அறியலாம்.

ஆதிகாலத்தில், அறிவுத் தெளிவு ஏற்பட்ட காலத்திலிருந்த மக்களுக்கு, அதாவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழிபாடு செய்வதிலே விருப்பம் ஏற்பட்டது. யாரை?

தங்களைவிட எல்லாவற்றிலும் சிறந்தவராக உள்ளவருக்கு, அல்லது யார்வது தாங்கள் விரும்பும் ஒருவருக்கு மரியாதை செலுத்துகின்ற மனோபாவத்தின் தொடக்கமே, இப்படி வழிபாட்டு மரபாக மலர்ந்து வந்தது. அக்காலத்து மக்கள், தாங்கள் வணங்கி வழிபட வேண்டும் என்ற ஓர் உள்உணர்வின் வெளிப்பாடாகவே இந்த வழிபாட்டு முறை வளர்ந்து மிகுதியாகவும் தொடங்கியது.

அறிவுவளர்ச்சியும் அனுபவ முதிர்ச்சியும் மக்களிடையே முகிழ்த்தெழுந்த ஒவ்வொரு காலக் கட்டத்திலும், மக்கள் தாங்கள் வணங்க விரும்பியவற்றை, விளக்குவதற்கு முயற்சித்தனர். அதற்காக, படங்கள் மூலமாக எழுதித் தெரியப்படுத்தினர். அந்த உருவத்தையே கடவுள் என்றனர். கடவுள்கள் என்று கற்பித்தனர்.

இக்காலத்து மக்கள் இப்படிப்பட்ட கடவுளர்களை ஏற்க மறுத்து ஏதோதோ காரணங்களைக் கூறி மறுப்பார்கள். வெறுப்பார்கள். அக்கால கடவுளர்கள் மக்களைக் கவர்ந்த ஒரு தலைவர், அல்லது தனிப்பட்ட ஒரு மனிதர் என்பதாகவும் விளக்கம் கூறுவார்கள். எப்படியிருந்தாலும், அக்கால மக்களிடையே கடவுள் என்றும், வழிபாடு என்றும், மரபு என்றும் பல்வேறு நிலையில் வளர்ச்சியுற்ற வழக்கங்கள் நிறைந்து தொடர்ந்து வந்து விட்டன. மனிதரிடையே நிறைந்து விட்டன.

மதமும் வாழ்க்கையும்

எல்லா நாட்டு மக்களுக்கும், வேறுபட்ட இனத்தவர்க்கும் மதமானது.அதாவது வழிபாட்டு வழக்கமானது, வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டிருந்தது. அவர்களது ஒவ்வொரு உணர்விலும் கடவுள் நம்பிக்கை இழையோடியிருந்தது. ஒவ்வொரு செயலிலும் உற்சாகம் ஊட்டும் உயிரோட்டம் காரணமாக வெளிப்பட்டுக்கிடந்தது.

ஆகவே, ஒவ்வொரு நாடும், அதன் இனவழி மக்களும், தங்களை ஆள்கின்ற சக்திகள் (Powers) இந்த பிரபஞ்சத்தில் நிறைய இருக்கின்றன என்று நம்பினார்கள். இந்த உலகையே ஆள்கின்ற சக்திகளாகவும் அவை விளங்குகின்றன என்பதையும் நேர் முகமாகக் கண்டு, தெளிந்து கொண்டார்கள்.

சூரியன், சந்திரன், புயல், பூமி, கடல், இடி, மின்னல், மழை போன்றவைகள் தங்களைக் காக்கின்ற சக்திகள், ஆள்கின்ற அதிசயங்கள் என்று தெரிந்ததுடன் அவைகள் எல்லாம் அதிகமான சக்தியுடைய, மனித சக்திக்கும் அப்பாற்பட்ட வல்லமை வாய்ந்த கடவுள்களின் வேலைகள் என்றும் பரிபூரணமாக உணர்ந்து நம்பினார்கள்.

இஸ்ரேல் போன்ற நாடானது, ஒரே ஒரு கடவுள், அதற்கு அளப்பரிய ஆற்றல் உண்டு என்று நம்பியது. ஆனால் இந்தியா போன்ற நாடுகள் பல்வேறு கடவுளர்களைப் போற்றி வணங்கும் நாடுகளாகப் பெருகிக் கொண்டிருந்தன.

மனிதர்களும் கடவுள்களும்

மனிதர்கள் கடவுள்களைப் படைத்தார்கள் என்று நம்புவது ஒரு புறம். கடவுள்கள் தாம் மனிதர்களைப் படைத்தார்கள் என்று நம்புவது மறுபுறம். இருபுறமும் திரிபுரமாக நம்மைச் சுற்ற வைத்து, திகைத்துத் திண்டாட வைக்கின்றன.

முதலில், கடவுள்கள் மனிதர்களைப் படைத்தார்கள் என்று நம்பிக்கையூட்டுகின்ற பல்வேறு நாடுகளில் உலவும் கதைகளில், ஒரு சில கதைகளை நாம் இங்கே காண்போம்.

இது ஒரு பாபிலோனியக் கதை

தியாமட் என்ற சமுத்திரம் ஒன்று இருந்தது. அதற்கு, அவளுடைய குழந்தைகள் மேல் மகா கோபம் ஏனென்றால், அந்தக் குழந்தைகள் சதா சத்தமிட்டுக் கொண்டிருந்தன. தொந்தரவு தந்து கொண்டிருந்தன. அதனால், சமுத்திரத்தாய், தன் குழந்தைகளை அழித்து விடவேண்டுமென்று ஆத்திரத்துடன் முடிவு செய்தாள்.

தங்களுடைய தாயின் சதித்திட்டத்தைத் தெரிந்து கொண்ட குழந்தைகள், தாயை எதிர்த்தன. தாக்கின. ஆனாலும், தாயின் கோபம் முன்னே அவர்களால் தாக்குப் பிடிக்க இயலவில்லை. அவர்கள் தோற்றுப் பின்னோடினார்கள்.

குழந்தைகளின் கடைசியானவன் மார்டக் (Marduk) என்பவன் அவன் எப்படியும் தன் தாயை வென்றாக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டான். கடவுளர்களை வேண்டிக் கொண்டு, தன்னுடைய இலட்சியம் வெற்றி பெறத் துணை கோரினான்.

கடவுளர்களும் கருணையுடன் செவிமடுத்து, உதவினர் புதிய சக்திகள் அவனுக்கு மாயமாக வந்துசேர்ந்தன. இறுதியாக, எல்லை இல்லா ஆற்றல் உடைய சமுத்திரத்தாயை வென்று வீழ்த்தினான் மகனாகிய மார்டக்.

தன் தாயின் உடலை, மீனை இரண்டாகக் கிழிப்பது போல, கிழித்தான். மேலும் கீழுமாக எறிந்தான். மேலே எறிந்த பகுதி வானமாயிற்று. கீழே விழுந்த பகுதி பூமியாயிற்று.

பூமியிலே இரண்டு ஆறுகள் - அவள் கண்களிலிருந்து ஆறாகப் பெருகி ஓடின. அவற்றிற்கு டைக்ரிஸ், எபரேடஸ் என்று பெயர்.

பிறகு, தியாமட் தனது தாயின் தளபதியாக விளங்கிய கிங்கு (Kingu) என்பவனையும் கொன்று, அவனிடமிருந்த மந்திர மாத்திரையைப் பெற்றான். அதன் மகத்துவம் என்ன வென்றால், எல்லா உயிரினங்களையும் கட்டுப் படுத்தக் கூடிய ஆற்றல் அதற்கு இருப்பதுதான்.

மார்டக்கின் தந்தையின் பெயர் என்கி (Enki) என்கிற இயா அவர் அந்த கிங்குவின் இரத்தத்தால் மனிதனைப் படைக்குமாறு ஆலோசனை அளித்தார்.

அப்படி மனிதனைப் படைத்தான் மார்டக். அந்த மனிதனுக்கு உரிய வேலையானது, தேவர்களுக்கு உண்ண உணவும் குடிக்க பானமும் பூமியில் விளைவிக்கிற வேலையாகும். இதனால், கடவுள்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள உதவியாக இருக்கும் என்று நம்பினர்.

இப்படியாக, மார்டக், கடவுள்களின் தலைவனாக உயர்ந்தான். பாபிலோனில் பிரசித்திப் பெற்றான்.

பாபிலோனில் மனிதன் படைக்கப்பட்ட கதை இப்படிப்பாட்டாகப் பாடப்பட்டது (கி.மு.1000) என்றால், கி.மு.1635-ல் இன்னொரு படைப்புக் கதை அங்கே ஆரவாரத்துடன் எழுந்தது.

இதுவும் பாபிலோனிய நாட்டில் தான், அங்கு எழுந்த அட்ராசிஸ் இதிகாசத்தில் எழுதப்பட்டுள்ள கதை.

மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பாகவே, கடவுள்கள் இருந்ததாக, இந்தக்கதை தொடங்குகிறது.

கடவுளர்களுக்குக் கால்வாய்கள் தோண்டுவதும், மண்ணைக் கிளறுவதும் போன்ற வேலைகளை மிகுதியாக இருந்தன. அந்த வேலைகள் அவர்களுக்குக் கடுமையாகவும், மிகக் கொடுமையாகவும் இருந்ததால், வேலை செய்ய விருப்பமில்லாமலும், வெறுப்போடும் ஒன்று கூடினர். வேலை நிறுத்தம் செய்தனர் (Strike).

அத்துடன் நின்று விடாமல், என்லில் (Enlil) எனும் மண்ணாளும் கடவுளின் வீட்டை எரித்துத் தள்ளினர்.

இந்த என்லில் என்பது யார் என்று நாம் தெரிந்து கொள்வது அவசியம் பாபிலோனியர்களின் மதத்தில், உள்ள தலைமைக் கடவுளின் பெயர் அனு (Anu) இந்தக் கடவுளின் ஒரே மகன் என்லில்.

தந்தை அனுவோ விண்ணுலகத்திற்கு அதிபதி என்லிலோ மண்ணுலகிற்கு அதிபதி.

மண்ணுலகில் இருந்து வேலை செய்து வந்த கடவுள்கள் வெறுப்புற்று, வீட்டை எரிக்க வந்தனர், அந்தக் கூட்டத்தைக் கண்ட என்லில், விண்ணுலகிலிருந்த தன் தந்தையிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டான். அதன்படி, வேலை நிறுத்தம் செய்து, கூட்டத்தை வழிநடத்தி வருகிற தலைவனைக் கொன்று விடவேண்டும் என்பது தான் அந்தக்கட்டளை.

அப்படியே, வேலை நிறுத்தத் தலைவனைக் கொன்று விட்டு, அவனுக்குப் பதிலாக, ஒரு மனிதனை (Man) வேலை செய்கிற மாற்றாளாகப் படைக்க வேண்டும் என்ற கட்டளையும் வந்து சேர்ந்தது.

வேலை நிறுத்தம் செய்த தலைவனைக் கொன்று அவனுடைய தசைகள் இரத்தத்துடன், களிமண்ணையும் சேர்த்துப் பிசைந்து, மனிதன் உருவாக்கப்பட்டான். பின்னர் அந்த மனிதனோ, வேலைசெய்யும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டான். வேலைகளை மனிதன் தொடர, கடவுள்கள் ஓய்வு பெற்றுக் கொண்டார்கள் என்ற கதை இதோடு நின்றுவிடவில்லை.

மனிதன் தன் இனத்தை விருத்தி செய்தான், மக்கள் உற்பத்தி பெருகுகிறது. மக்களின் சத்தம். அவர்கள் போட்ட கூக்குரல் எல்லாம், கடவுள்களைத் தொந்தரவு செய்தன. அவர்களின் சத்தத்தைக் குறைக்க, கடவுள்கள் எத்தனையோ வழிகளில் முயற்சித்தாலும், அவர்களால் முடியவில்லை.

அதனால், மக்களை அழித்திட, பஞ்சங்கள், பிளேக் நோய்கள் போன்ற பலவற்றை அனுப்பி வைத்தனர் அதில் அகப்பட்டு, மனிதர்கள் அழிந்தாலும், ஆத்திரமடைந்த கடவுள்களுக்கு அந்தக் காட்சியும், அவல நிகழ்ச்சியும் போதவில்லை. இன்னும் மோசமான சூழ்நிலைகளை உண்டாக்கினர். ஆனாலும், அவற்றிலிருந்துதப்பிப்பிழைக்க, தூய நீரின் கடவுளாக விளங்கிய அன்கி எனும் கடவுளின் மூலம் செய்தி அனுப்பினர்.

2. கடவுள்களின் கதைகள்

அதாவது ஒவ்வொரு குறிப்பிட்ட செயலுக்கும் ஒவ்வொரு கடவுள் பொறுப்பாக இருப்பதால், அந்தந்தக் கடவுளுக்கு வேண்டிக் கொண்டும், விண்ணப்பித்துக் கொண்டும் காணிக்கை அளித்தால், மக்களுக்கு விடுதலை கிடைக்கும் என்பதுதான் அந்த அமைதித் தூது.

தூய நீர்க்கடவுளான அன்கி, ஒருமுறை தண்ணீரால் மனித இனத்தை அழிக்க முற்பட்டபோது, மக்கள் படகு மூலம் தப்பித்து கடவுளுக்குக் காணிக்கை செலுத்தியதன்றி, உயிர்ப் பொருட்களை படைத்தார்கள். கடவுள்களும் ஈக்கள் வடிவம் கொண்டு, பறந்து வந்து அவர்கள் படைத்த உணவுப் பொருட்களை உண்டு மகிழ்ந்ததாக ஒரு கதை.

கடவுள்களை வணங்க, வாழ்த்த என்பதுடன் நில்லாமல், பிரார்த்தனை என்றும் காணிக்கை என்றும் வளர்ந்து, இறுதியில் வேள்வி, உயிர்ப்பலி உணவுப் படையல் என்று விரிந்து வந்தது என்பதை நாம் இங்கே தெரிந்து கொள்ள வேண்டும். இந்த காலக் கட்டம் கி.மு. 1200 வது ஆண்டிலிருந்து வந்தது. என்பது நமது ஆய்வுக்கு உரிய கருத்தாகும்.

கடவுள்தான் மனிதனைப் படைத்தார் என்று பைபிள் கூறுவதையும் முதலில் நாம் தெரிந்து கொள்வோம்.

பைபிள் குறிப்பு:

ஆதியில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார். முதல் அறு நாட்களில், வெளிச்சம் உண்டாக்கி, இரவு பகல் என்று பிரித்தார். ஆகாய மண்டலத்தை அமைத்தார். நீர்ப்பகுதியை ஒதுக்கினார். விளை பொருட்களை உண்டாக்கினார். சூரிய சந்திரர்களை, ஆகாய மண்டலத்தில் உதயமாக்கினார். கோடிக்கணக்கான உயிர்ப் பிறவிகளை உற்பத்தி செய்தார். மிருகங்களைப் படைத்தார்.

அதன்பிறகு, நமது சாயலின் படி, நமக்கொப்பாக மனிதனை உண்டாக்குவோமாக, சமுத்திர மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், காட்டு மிருகங்களையும், பூவுலகம் முழுவதையும், பூமியிலுள்ள ஊர்வன யாவற்றையும், அவர்கள் ஆளக் கடவர்கள் என்று கடவுள் சொன்னார்.

கடவுள் மனிதனைத் தமது சாயலாகப் படைத்தார்.

கடவுளின் சாயலாகவே அவனைப் படைத்தார்.

இப்படி விளக்கம் தருகிறது விவிலிய நூல் ஆகவே, கடவுள்தாம் மனிதனைப் படைத்தார் என்ற செய்தியையும் அநேக மதங்களின் வேத நூல்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன. ஆனால், அதே நேரத்தில், மனிதர்கள்தாம் கடவுள்களைப் படைத்தார்கள் என்ற சேதியையும் நாம் இங்கே தெரிந்து கொள்வது பயன் தரத்தக்கதாகும்.

கடவுள்கள் யார்?

மனிதர்கள் தங்களுக்கு மேற்பட்ட அதீதமான சக்திபடைத்தவைகளைக் கண்டு முதலில் பயந்தனர். பிறகு மதித்தனர். பிறகு துதித்தனர் பின்னர் அடிபணிந்து, அவைகளே கதி என்று நம்பினர். அப்படியே வழிவழியாக, மரபாக, மதமாக மாற்றிக் கொண்டனர்.

மக்கள் பயந்ததால் ஏற்பட்ட நம்பிக்கை; நம்பிக்கைகள் விளைவித்துத்தந்த கற்பனைகள், கற்பனைகள் வடித்துத் தந்த காட்சி அமைப்புகள்; காட்சிகளில் லயித்த மனங்கள் உற்பத்தி செய்த பெயர்கள் எல்லாம் நமக்கு இன்று ஆச்சரியத்தையே அளிக்கின்றன.

கடவுள்களை மனிதர்கள் படைத்தார்கள் என்பதிலே சுவாரசியமான செய்திகள் உண்டு. அதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால், கடவுள்களுக்கும் குடும்பம் உண்டு. அவர்களுக்கும் பந்த பாசம், கோபதாபம், வேதனைகள் சோதனைகள், விவகாரங்கள் விமரிசனங்க்ள என்று நிறைய இருக்கின்றன.

நமது நாட்டிலே பரமசிவன் பார்வதி, முருகன், கணபதி, இப்படியெல்லாம் குடும்பத்தைப் பார்ப்பது போல, உலகத்திலே அக்காலத்தில் பிரபலமாக விளங்கிய சில நாடுகளின் கடவுள்கள் பெயர்களையும் குடும்ப உறவையும் இனி காண்போம்.

1. கானான் தேசத்துக் கடவுள்கள்

1. பால் (Baal) - மழை, பனி, அறுவடைக்கான கடவுள்

2. அனாட் (Anat) - பால் கடவுளின் மனைவி காதல் கடவுள்

3. எல் (EI) - கடவுள்களின் தலைவன்

4. அஷெரா (Asherah) - எல் கடவுளின் மனைவி, கடல் தெய்வம்

5. ஷமாஷ் (Shamash) - சூரியக் கடவுள்

6. ரெஸ்கெப் (Reshef) - போருக்கும், பாதாள லோகத்துக்கும் கடவுள்.

7. டேகன் (Dagan) - பயிர்களுக்குக் கடவுள் 2. பாபிலோனிய தேசத்துக் கடவுள்கள்

1. அனு (Anu) - வானுலகை ஆளும் கடவுள்

2. என்லில் (Enlil) - அனுவின் மகன். கடவுள்களின் அரசன்

3. என்கி (Enhi) - தண்ணீர்க் கடவுள்

4. ஷமாஷ் (Shamash) - சூரியக் கடவுள், நீதிக் கடவுள்

5. சின் (Sin) - சந்திரக் கடவுள்.

6. அடாட் (Adad) - மழைக்கும் புயலுக்கும் கடவுள்

3. கிரேக்க - ரோம் நாட்டுக் கடவுள்கள்

1. சீயஸ் (Zeus) - கிரேக்க கடவுள்களின் தலைவன். ஜூபிடர் (Jupiter) - ரோமானியர்களுக்குரிய கடவுள் தலைவன்.

2. ஹீரா (Hera) - சீயசின் மனைவி, பெண் கடவுள்

ஜூனோ (Juno) - ரோமானியப் பெண் கடவுள்

3. என்கி (Poseidon) - கிரேக்க கடல் தெய்வம்.

நெப்டியூன் (Neptune) - ரோமானிய கடல் தெய்வம்.

4. ஏரிஸ் (Aries) போர்த்தெய்வம்

5. ஹெர்மஸ் (Hermes)-கிரேக்க கடவுள்களின் தூதுவன்

மெர்குரி (Mercury) - ரோமானிய கடவுள்களின் தூதுவன்

6. ஹேட்ஸ் (Hades) - இறப்பின் கடவுள்

புளுட்டோ (Pluto) - ரோமானிய இறப்புக் கடவுள்.

7. ஹெபாஸ் டஸ் (Hephaestus) - கைத்தொழில் கடவுள்.

வல்கன் (Vulcan) - ரோமானியக் கைத் தொழில் கடவுள்.

8. அப்போலோ (Appollo) - அறிவு தெய்வம்.

9. ஆர்டமிஸ் (Artemis) - வேட்டை தெய்வம்.

டயானோ (Diana) - ரோமானிய வேட்டை தெய்வம்.

10. அதீனா (Athena) - போர்த்தெய்வம்

மினர்வா (Minerva)- ரோமானிய போர்த்தெய்வம்.

11. அப்ரோடைட் (Aphrodite) - காதல் தெய்வம்

வீனஸ் (Venus) - ரோமானிய காதல் தெய்வம்.

12. டெமிட்டர் (Demiter)- அறுவடை தெய்வம்

சிரிஸ் (Ceres) - ரோமானிய அறுவடை தெய்வம்.

4. எகிப்திய நாட்டுக் கடவுள்கள்

1. ரீ(Re) - சூரியக் கடவுள்

2. தாத், கோன்ஸ் (Thoth, Khons) - சந்திரக் கடவுள்கள்.

3. நட் (Nut) - வான மண்டலக் கடவுள்.

4. ஜெப் (Geb) - மண்ணுலகக் கடவுள்

5. ஹேபி (Hapi) உணவுக்கான கடவுள்.

6. அமுன் (Amun) - இயற்கைத் தெய்வம்.

7. மாட் (Maat)- உண்மை, நீதி, ஒழுங்குக் கடவுள்.

8. தோத் (Thoth) - கல்விக் கடவுள்

9. டா (Path) - கைத்தொழில் கடவுள்

10. ஆசிரிஸ் (Osiris) (இறப்புப் பிறகு) நம்பிக்கை கடவுள்

கடவுள்களின் பெயர்கள் அந்தந்த நாட்டுக்குரியவை. கடவுள்களின் பொறுப்புக்கள், வகித்த இலாக்காக்கள் பற்றி அறிகிறபோது நமக்கு இரண்டு உண்மைகள் தெரிகின்றன.

பெரிய சக்தி என்று பயந்ததற்கும், தேவை என்று பயன்பட்டதற்கும், உருவங்கள் கொடுத்து, கடவுள்களைப் படைத்து விட்டார்கள் என்பது தான்.

சூரியன், சந்திரன், இயற்கை, மழை, பனி, புயல், வெள்ளம், கடல், இடி, மின்னல், நெருப்பு, இறப்பு, போன்றவற்றிற்கு பயந்து படைத்த கடவுள்கள்.

காதல், அன்பு, உணவு, அறுவடை, போர், உண்மை, நீதி, ஒழுக்கம், அறிவு என்கிற அன்றாட வாழ்வில் பயன்படுத்தியவற்றிற்கு உருவம் தந்து உருவாக்கிய கடவுள்கள்.

சரித்திரங்களையும், சாம்ராஜ்யங்களையும் உருவாக்கிப் பெயர் படைத்த சில நாடுகளின் கடவுள்களை இதுவரை பார்த்தோம்.

இந்திய நாடும் எந்த நாட்டிற்கும் இளைத்ததல்லவே?

வீர புராணங்களாகட்டும் இதயம் கவரும் இதிகாசங்களா கட்டும்! எல்லா நாடுகளுக்கும் இணையான, அல்ல அல்ல, இணையற்ற நாடாகவே, நமது தாய்த்திரு நாடு விளங்குகிறது.3. மதங்களும் வழிபாடுகளும்

கடவுள்கள் மனிதர்களைப் படைத்தார்களா அல்லது மனிதர்கள் கடவுள்களைப் படைத்தார்களா என்ற ஆராய்ச்சிக்கு நாம் போக வேண்டியதில்லை. இதில் இறங்கி விட்டு, குழம்பியவர்களும், மயங்கியவர்களுமே அதிகம். தெளிவடைந்தவர்களே இல்லை.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.

கடவுள்களுக்கும் மனிதர்களுக்கும் உணர்ச்சி மயமான உறவுகள் உண்டு. விட்டு விலகிப் போய் விட முடியாத சொந்தம் உண்டு. பந்தம் உண்டு. இரண்டுமே இரண்டறக் கலந்து போன இனமாக இருக்கிறது என்பதை யாரும் மறுக்கவே முடியாது.

கடவுள்களை மக்கள் மிகவும், மரியாதையோடு மட்டுமல்லாது, உயிராகப் பாவித்து வணங்குகின்றார்கள் என்பதை அறிந்து கொண்ட மன்னர்கள். பக்தி விஷயத்தில் தங்கள் இஷ்டம் போல் வணங்க வேண்டும் என்று மக்களைக் கட்டாயப்படுத்திய போதும், அவர்கள் அந்தக் கட்டளைக்கு மசிய வில்லை. தண்டனை என்ற சட்டம் போட்டும் அவர்கள் பணிய வில்லை என்பதற்கு எத்தனையோ சான்றுகள் உள்ளன.

கி.மு. 14ம் நூற்றாண்டில், எகிப்தை ஆண்ட மன்னர்களில் அதிகம் பிரசித்தம் வாய்ந்தவனாக விளங்கியவன் பரோவா அகேந்தேன் என்ற மன்னன். தன் ஆட்சிக்கு உட்பட்ட மக்கள், கண்ட கண்ட கடவுள்களை வணங்குவதைக் கண்டு கோபமடைந்த மன்னன், இந்த இழிந்த வழக்கத்தை விட்டு விடுங்கள். சூரிய கடவுளை மட்டும் வணங்குங்கள் என்று கட்டளையிட்டுப் பார்த்தான். வேலியிட்டு, வழக்கத்தைத் தடுத்துப் பார்த்தான். மன்னனின் வேண்டுகோளும், கடுமையான சட்டமும் மக்கள் மனதை மாற்ற முடியவில்லை, எகிப்து மக்களின் கடவுள்கள் நம்பிக்கை இப்படி இருந்திருக்கிறது.

நமது தமிழ் நாட்டில் மத மாற்றங்கள் செய்ய, உயிர்த் தியாகங்கள் செய்த கதைகள் நிறையவே இருக்கின்றன. திருநாவுக்கரசரை சுண்ணாம்புக் காள்வாயில் வைத்துக் கல்லோடு கட்டி கடலில் போட்டதும், கேட்பாரையும் கலங்க வைக்கும் கதையாகும், மதவெறி காரணமாக, கழுவேற்றப்பட்ட பக்தர்கள் கதையும் பதை பதைக்கச் செய்வனவாகும்.

சில சமயங்களில், மன்னனே, கடவுள் அவதாரம் என்று போற்றப்பட்டும், கோயில் எடுக்கப்பட்டும் கௌரவம் பெற்ற நிகழ்ச்சிகளும் சரித்திரங்களில் இருக்கத்தான் இருக்கின்றன.

நமது தமிழ் மரபில் இந்தக் கருத்து உண்மையாகக் காணலாம். மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம் என்ற பாடலைப் பாருங்கள். மன்னனை இறை என்று அழைத்ததும், மன்னன் வசிக்கும் இடத்தை கோயில் என்று அழைத்ததும், இந்தக் கருத்துக்கு ஏற்புடைத்தாக இருப்பதைப் பாருங்கள்.

கி.மு. 27ம் ஆண்டு முதல் கி.பி. 14-ம் ஆண்டு வரை, ரோம் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்தவன் அகஸ்டஸ் என்ற மன்னன்.

இவனது ஆட்சி காலத்தில், இவன் செய்த பெரிய காரியம், ரோமானிய மதத்தை சீரமைத்துத் தந்ததுதான். இவன் மதத்தைக் காட்டி, மக்களைப் பயப்படும்படிச் செய்து தன் ஆட்சியை நிலை நாட்டிக் கொண்டான்.

இவனைக் கண்டு மக்கள் அஞ்சவும் செய்தார்கள். அன்பு காட்டவும் செய்தார்கள். மக்களுக்கு அமைதியான நல்வாழ்வு அளித்ததன் காரணமாக, நாடழிக்க வந்த பகைவர்களை வெற்றி கண்டு, மக்களையும் நாட்டையும் காத்ததன் காரணமாக, அகஸ்டஸ் கடவுளாகக் கொண்டாடப்பட்டான். பெரிய கோயில் ஒன்று அவனுக்காக கட்டப்பட்டது. அவன் உயிரோடு வாழ்ந்த காலத்திலேயே அவன் ஆண்டவன் ஆனான். அவனுக்காக கோயில். அவனுக்காக வழிபாடு. இப்படி மனிதன், மகேசனாக மாறிய கதையும் உண்டு.

சில நாடுகளில், மக்களின் மதவெறியை, மன்னர்கள் தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டிருந்திருக்கின்றார்கள். கடவுள்களுக்கும் மக்களுக்கும் மத்தியில், மன்னர்களே இருந்து, மதங்களையும் வளர்த்து, தங்களையும் உயர்த்திக் காத்துக் கொண்டனர்.

மண்ணை ஆண்ட மன்னர்கள், மதங்களில் உள்ள வலிமை மிக்க வழிபாட்டுக்கும், பிரார்த்தனைக்கும் முக்கியத்துவம் தந்து, தங்களை தலைமை பூசாரிகளாகவும் ஆக்கி, பொறுப்பேற்றனர்.

வழிபாடுகளில் அவர்கள் வழக்கமாகப் பங்கு கொள்ள முடியாத காரணத்தால், அவர்களின் பிரதி நிதிகளாக உதவி பூசாரிகள் பலரை அரசர்கள் நியமித்தனர்.

இந்த தருணங்களைப் பயன்படுத்திக் கொண்டு, தங்களையும் கடவுளாகக் கும்பிட வேண்டும் என்று மக்களை வணங்க வைத்தனர். கோவில்களை கடவுள்களுக்காகக் கட்டுகிறபோது, தங்கள் பெயரால் தான் அவை கட்டப் படவேண்டும் என்று கட்டுப் பாட்டை விதித்தனர். சில கோவில்களில், தங்களது சிலைகளையும் மன்னர்கள் வைத்து, வணங்கச் செய்தனர்.

தஞ்சை நகரில் பெருங்கோயில் தனைக் கட்டுவித்த பேரரசன் இராச இராச சோழனின் பெயரையும், அவன் திருவுருவச் சிலை, கோயிலில் இடம் பெற்றிருப்பதையும், இங்கே நாம் ஒரு சான்றாகக் கூட கொள்ளலாம்.

கடவுளும் வழிபாடும்

மதங்கள் விளையாட்டுக்களை எப்படி உண்டாக்கின என்கிற ஆராய்ச்சிக்கு உதவுகிற, முக்கியமான குறிப்பு ஒன்றை இங்கே நாம் காண்போம்.

கடவுள் நம்பிக்கை உடைய மக்கள் எல்லோருக்கும், கோவில்களுக்கு உள்ளே சென்று, வழிபட வாய்ப்புக் கிடைக்கவில்லை. பொதுமக்களில் பலர், கோவிலுக்குச் செல்ல முடியாமல் தடை இருந்தது. அதனால், வாசலுக்கு வெளியே சென்று வணங்கி மகிழ்கிற வாய்ப்பு மட்டுமே கிடைத்தது.

தெய்வச் சிலையை நேரில் தரிசிக்க முடியாத நிலையில் திகைப்படைந்த மக்களை, திருப்திபடுத்த, மன்னர்கள் பலர் ஒரு புது முறையைக் கொண்டு வந்து மகிழ்வித்தார்கள்.

அதாவது, விழாக் காலத்தில் தெய்வச் சிலையைத் தூக்கிக் கொண்டு வெளியே உலாவரச் செய்த போது, மக்கள் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

தெய்வச் சிலைகள் திரு உலா வருவதற்காக, தேர்கள் வந்தன, பல்லக்கு, சப்பரம் என்று பல முறைகள் தோன்றின.

அலங்கரிக்கப்பட்ட ஆபரணங்களை அணிந்த அழகு நிலையில், ஆண்டவன் திருக் கோலம் கண்டு, மக்கள் மகிழ்ச்சிப் பெருக்கில் திகைத்த சான்றுகளை, எல்லா நாட்டு புராணங்களும் இதிகாசங்களும், பெருவாரியாக பிரபலமாக விவரித்திருக்கின்றன.

தெய்வத் திருச்சிலை, திருவுலா வந்தபோது, மக்கள் தரிசித்தது மட்டுமின்றி பிரார்த்தனைப் பொருட்களைப் படைத்து, பூஜித்தனர். வீதியெல்லாம் ஆடம்பரம் விமரிசையாக நடந்தேறியது.

வீடுகளும் வீதிகளும் விழாக்கோலம், தெய்வத்தரிசனத்தால் தங்கள் தேக அசௌகரியங்கள் எல்லாம் தீர்ந்து போகும், துன்பங்கள் யாவும் தொலைந்து போகும் என்ற தொலையாத நம்பிக்கையை, மக்கள் மனதிலே ஊட்டின. இப்படி கோவிலுக்கு வெளியே வந்தன திருச்சிலை உலாக்கள்.

தங்களுக்கு துன்பங்களும் நோய்களும் வந்து சேர்வது, கடவுள் தங்களுக்கு வழங்குகிற தண்டனைகள் என்றே மக்கள் அன்றும் நம்பினர். இன்றும் நம்புகின்றார்கள். ஆகவே, தங்கள் பாவங்களை, தெய்வச்சிலைகள் முன்னே அறிக்கையிட்டு, வேண்டிக் கொண்டார்கள்.

இப்படித்தான், திருவிழாக்களும் வழிபாடுகளும் கடவுளை வணங்குகிற மரபுகளும் மாறிக்கொண்டே வந்தன.

விரதமும் வழிபாடும்

இஸ்ரேல் நாட்டில் மதவிழாக்கள் இப்படித்தான் ஆரம்பமாயின. அந்தந்த விளைச்சல் காலங்களில் தான், மதவிழாக்கள் விமரிசையாக இடம் பெற்றன.

புதிதாக வீட்டுக்கு வந்த விளைபொருட்களை, தெய்வத்திற்குக் காணிக்கையாகப் படைத்து, வணங்கி வழிபட, அந்தக் காலங்களே வசதியாக இருந்தது போலும். விழாக்கள் எல்லாமே, நிலங்களில் நிறைய விளையச் செய்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லும் வகையிலே தான் அமைந்திருந்தன. அவற்றை அவர்கள் அறுவடைத் திருநாள் என்று போற்றினர். நம் தமிழர்களோ, பொங்கல் திருநாள் என்று சாற்றினர்.

அடிக்கடி நடைபெற்ற திருவிழாக்கள் எல்லாம், மக்களை ஒன்று கூட்டவும், உள்ளத்தால் ஒன்று படவும் உதவின. மகிழ்ந்த மக்கள், விருந்துகள் நடத்தி, ஒருவருக்கொருவர் உபசரித்து, வைபவமாகக் கொண்டாடவும், விழாக்கள் உதவின.

மக்கள் ஆண்டவனை நோக்கி வணங்கி, தங்களை சமர்பிப்பது போல விரதமும் இருக்க ஆரம்பித்தனர். தேசம் முழுவதும் ஒரு நாளைக் குறித்து, உண்ணா விரத நாளாக சுட்டிக் காட்டி, தேசிய விரதம் இருக்கவும் செய்தனர். நம் நாட்டில் அமாவாசை விரதத்தை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

தேசத்தின் திருப்புமுனை

விரதமும், விழாக் கோலமும், நாட்டு மக்களிடையே பிரபலமாயின, சில சமயங்களில், நாட்டில் நடைபெற்ற முக்கிய சரித்திர நிகழ்ச்சிகளை நினைவு படுத்தவும், விழாக்கள் நடைபெற்றன.

நாடு பகைவர்களால் முற்றுகையிடப்பட்ட நிகழ்ச்சி, அல்லது தங்கள் நாடு அன்னியர்க்கு அடிமையாக்கி, அதிலிருந்து விடுதலைபெற்ற நிகழ்ச்சி, நாட்டுத் தலைவரின் தியாக மரணம். போன்ற நிகழ்ச்சிகளை மக்கள் நினைவில் வைத்துக் கொண்டு போற்ற வேண்டும். இதய எழுச்சியைப் பெற வேண்டும் என்பதற்காகவும், விழாக்கள் எடுக்கப்பட்டன.

விரதமும் வேட்கையும்

விழா நாட்கள் என்ற போது கொண்டாடி மகிழ்ந்தனர். விரத நாட்களில் மக்கள் எதையுமே சாப்பிடவில்லை. தாகம் எழுந்தபோது கூட தண்ணீரும் குடிக்கவில்லை. அந்த விரத நாள் முழுவதும், பிரார்த்தனையும், உண்ணா நோன்புமே பேரெழுச்சியாக இடம் பெற்றிருந்தன.

அதிகபக்தி கொண்ட மக்களில் சிலர், ஆவேச வெறி கொண்டவர்களாகி, தாங்கள் அணிந்திருந்த ஆடைகளைக் கிழித்துக் கொண்டனர். சிலர் கோணிப் பைகளில் உடைகளைத் தைத்து அணிந்து கொண்டனர், சிலர் தங்கள் முடிகளை வாரிக் கொள்ளாமல், அலங்கோலமாக, அவிழ்த்து விட்டுக் கொண்டனர். இன்னும் சிலர் தங்கள் தலை மீதும், தேகத்தின் மீதும், புழுதியையும் சாம்பலையும் பூசிக் கொண்டனர். சிலர்தேகத்தை அழுக்காக்கி அருவெறுப்புடன் பார்த்துக் கொண்டனர்.4.மக்களும் விழாக்களும்

மக்கள் மதங்களை மனப்பூர்வமாக விரும்பினார்கள். விரும்பியதுடன் நில்லாது. வெறித் தனமாக பின்பற்றினர். அதன் விளைவுதான் வீணான நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டது.

உடைகளைக் கிழித்து, உடலை அழுக்காக்கி, வெறுக்கத்தக்க அளவில் செயல்பாடுகளை வளர்த்து, தங்களது மத அபிமானங்களை மற்றவர்களுக்குக் காட்டிக் கொண்டனர். அபிமானங்களால் ஏற்படுகிற காரியங்களை, அவர்கள் அவமானங்களாக ஏற்றுக் கொள்ள வில்லை.

மதம் மனதோடு இருக்க வேண்டும். செயல்கள் செம்மையாக சீரான வழிகளில் நடக்க வேண்டும். வீணான வெறி வேண்டாம். அன்பே அருமையான வழி என்று அன்று ஏசுபிரான் போதித்தார். யாரும் ஏற்கவில்லை.

வெளிப்புற ஆடம்பரமும், கேவலமான நடத்தைகளும் பக்தியல்ல. இருதயத்தின் இதமான மாற்றமே, உண்மையான பக்தி என்று, மகான்கள் போதித்ததை, மக்கள் கேட்டார்கள். ஆனால், பின்பற்றத்தான் இல்லை.

மதமும் விழாவும்

தனிப்பட்டவர்கள் தன்னந்தனியாக இருந்து கடவுளை வணங்கினால், அதனை ஜெபம் என்றனர். சிலர் தொழுகை என்றனர், வேறு சிலர் வழிபாடு என்றனர்.

அதையே மக்கள் கூட்டங்கூட்டமாகக் கூடி, கடவுளைக் கும்பிடுகிறபோது, விழா என்றனர். மதவிழா என்றனர். விழாவானது பக்தியை வெளிப்படுத்தாமல் போனதால் தான், விழா வேடிக்கை என்ற பெயரையும் பெற்றது. இங்கே நாம் எண்ணிப் பார்ப்பது நல்லது.

மக்களை ஒன்று திரட்ட, மன்னர்களும், மதவாதிகளும் உண்டாக்கிய சந்தர்ப்பங்களே, மதவிழாக்களாக மாறிவந்தன. அதனால்தான் ஏகப்பட்ட விழாக்களும் ஏற்படுத்தப்பட்டன.

ஒவ்வொரு விழாவின் ஆரம்பகாலத்தைக் குறித்துக் காட்ட, குழலூதியும் கொம்பூதியும் (Trumpet) மக்களுக்கு அறிவித்தனர்.

இந்த அறிவிப்பு ஏன் என்றால், விழா நாட்களில், மக்கள் அனைவரும் வேலைக்குப் போகாமல், ஓய்வாக இருக்க வேண்டும் அத்துடன், அமைதியான மனதுடன் பிரார்த்தனையும் செய்ய வேண்டும். இந்த அறிவிப்பு, இதற்காகத்தான் முதலிலேயே தரப்பட்டது.

விழாக் காலத்தில், இறைவனைத் தரிசித்து வேண்டிக் கொள்கிறபோது, வெறும் தானிய வகைகளைக் காணிக்கையாகக் கொடுக்கும் பழக்கம் மட்டும் இல்லாமல், இரத்த பலிகொடுக்கின்ற புதுப்பழக்கத்தையும் மக்கள் மேற்கொண்டார்கள்.

இரத்தபலி கொடுக்க, ஆடுகளே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு, பலியாயின. இப்படி கொடுக்கின்ற இரத்த பலியானது, தருகின்ற மக்களின் பாவங்களை இறைவன் மன்னிக்கின்றான் என்கிற குருட்டு நம்பிக்கை, மக்களிடையே பரவிக் கிடந்தது.

சில சமயங்களில், விழாக்களின் போது, இறைவனுக்குப் பழங்களைப் படைத்து மகிழ்கின்ற பழக்கமும் தொடர்ந்து வந்திருக்கிறது.

நம் தமிழ் நாட்டில், பழம் பூக்கள் போன்றவை படையல் பொருட்களாகத் திகழ்வது, நமக்கெல்லாம் நன்கு தெரியும்.

போர்க்காலத்தில் அன்றைய தமிழ் வீரக்குடிமக்கள், கொற்றவை என்கிற காளி தெய்வத்தின் முன்னே வேண்டிக்கொள்வார்களாம். போரில் வெற்றி பெற்றுத் திரும்பினால், தாய் நாட்டுக்கு வென்ற பெருமை வந்து விட்டால், திரும்பவும் இந்த கோயில் சன்னதிக்கு வந்து, தங்களையே உயிர்ப்பலி தருவதாக வேண்டிக் கொள்வார்களாம்.

அதேபோல், வெற்றிபெற்றுவிட்டால், கொற்றவைக்கு விழா எடுத்து, அவள் சன்னதியின் முன்னே, வீரர்கள் மேளம் கொட்டி, பாட்டிசைத்து, உக்ரவ தாண்டவம் ஆடி, அந்த உச்சக்கட்டத்தில், ஒரு கையில் பிடித்திருக்கும் கத்தியைக் கொண்டு, மற்றொருகையில்தலைக் குடுமியைப் பற்றிய படி, வெட்டிக்கொள்வார்களாம்.

வேகமாக ஆடிக்கொண்டிருக்கும்போது, கழுத்தை வெட்டிக் கொண்டால், தலையில்லாத முண்டமானது அதே வேகத்தில் ஆடிக் கொண்டிருந்தபடியே இருக்கும். அப்படி பல வீரர்கள் தங்களைப் பலி கொடுத்துக் கொண்டதால், ஏற்பட்ட காட்சியானது, பயங்கரமாக இருக்கும் என்றெல்லாம், நம்மவர் வீரம் பற்றிப் பேசிக்களிப்பார்கள்.

பக்தி என்கிறபோதும், படையல் என்கிற போதும், பலி என்கிறபோதும், எந்தநாடாக இருந்தாலும், நடப்பில் ஒன்றாக இருப்பதைக் குறிக்கவே, இந்தக் கருத்தை, இங்கே குறிப்பிட்டோம்.

வெட்டவெளியில் நம் நாட்டவர்கள், சிலையமைத்துக் கும்பிட்டார்கள் என்றால், ஆதிகால இஸ்ரேல் நாட்டு வரலாறானது, அக்கால மக்கள் முகாம் அமைத்து (Tent) திருவிழா கொண்டாடினார்கள் என்று கூறுகிறது.

எதை மக்கள் இறைவனிடமிருந்து எதிர்ப்பார்த்தார்களோ, அந்தப் பொருளையே, இறைவனுக்கு அர்ப்பணிக்கிற பழக்கமும், எல்லா நாட்டு மக்களிடையேயும் இருந்து வந்திருக்கிறது.

தண்ணீர் ஊற்றி, இறைவனுக்குப் படைத்து, விழா கொண்டாடிய பழக்கம், நல்ல மழையை எதிர்ப்பார்த்து செய்கிற விழாவாக இருந்தது என்பதை ஒரு வரலாற்றாசிரியர் குறிப்பிட்டுக் காட்டுகின்றார்.

கழுதைகளுக்குக் கல்யாணம் செய்து வைக்கின்ற பழக்கம், தமிழ்நாட்டு கிராம மக்களிடையே இன்னும் இருந்து வருகிறது. இசைக் கச்சேரி செய்வதும், நல்ல மழையை எதிர்ப்பார்த்தே செய்கின்றார்கள்.

ஆக, மதப் பழக்கத்தில், மிகுதியாக இடம் பெற்றிருந்த மரபுகள் மக்களைக் கவர்ந்த விழாக்கள், காணிக்கைகள், படையல்கள், விழாச் சேவைகள், பிரார்த்தனை, உண்ணா நோன்பு என்பவைகளாக விரிவடைந்து கொண்டே வந்திருக்கின்றன.

வீதிக்கு வந்த விஷயங்கள்

குடும்ப வாழ்க்கையும் மத விஷயங்களும், ஒன்றுக் கொன்று இணைந்து, இணைபிரியாமலே, ஆரம்பம் முதல் இருந்து வந்திருக்கின்றன. மத விவகாரங்களும், ஒரு சமுதாய அமைப்பு போலவே, மக்கள் வாழ்வுடன், பின்னிப் பிணைந்தே கிடந்தன.

எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளையும் தாங்கள் சார்ந்துள்ள மதத்தையே பின்பற்றுமாறு அறிவுறுத்தினர். வாழ வைத்தனர். வழிநடத்தினர். அந்த வாழ்வையே கட்டாயமாக்கினர். அதற்காக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு, மதசம்பந்தமான கருத்துக்களைக் கூறியதுடன், அதிசயம் விளைவிக்கத் தக்க கதைகளையும் கூறிவந்தனர்.

பெற்றோர்கள் பேசுகின்ற கருத்துக்களும், விவரிக்கின்ற விந்தைமிகு கதைகளும், குழந்தைகளை அதிசயப்பட வைத்தன. அவர்கள் அந்தக் கடவுள்கள் பற்றியும், அவர்களின் வரலாறு பற்றியும் அறிந்து கொள்ள ஆவல் கொண்டனர். இதனால், அடிக்கடி தங்கள் பெற்றோர்களை அதிகமாகக் கேள்விகள் கேட்டும் தொந்தரவு செய்தனர்.

இப்படிப்பட்ட இனிய சந்தர்ப்பங்களை மேல் நாட்டவர்க்கு வழங்கியது சபாத் (Sabbath) என்று அழைக்கப்பட்ட ஓய்வு நாள்தான் அதாவது, வாரத்தின் ஏழாவது நாள் தான் சபாத் என்பதாகும். ஆமாம் அது அனைவருக்கும் ஓய்வு நாளாகும்.

இந்த ஓய்வு நாளின்போது, யாரும் எந்த வேலையையும் செய்யக் கூடாது. அதே சமயத்தில், சும்மா உட்கார்ந்து கொண்டு சோம்பேறியாகவும் இருக்கக் கூடாது. தூங்கிக் கழிக்கவும் கூடாது.

அதற்காக அவர்கள் மேற் கொண்ட வழி முறைதான் கடவுள் ஈடுபாட்டை மிகுதியாக வளர்த்து விட்டது. அதாவது, அந்த நாள் மக்கள், ஓய்வு நாளின் போது, கடவுள் மக்களுக்காக செய்த நன்மைகள் பற்றியும் பேசி, போற்றிக் கொண்டிருக்கும் திருக்காரியங்களையே செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாய நெறிமுறையை, பின்பற்றினார்கள்.

பெற்றோர்களிடம் - குழந்தைகள் கேள்விகள் கேட்பதும், விளக்கம் பெறுவதும், அந்த நினைவுடனேயே கடவுளைப் பிரார்த்தனை செய்வதுமாக அந்த ஓய்வு நாள் கழியும்.

அது போலவே, பெற்றோர்களும் தாங்கள் விளக்கிய கடவுள் மகிமை செய்த இடத்தைத் திருத்தலமாகப் போற்றி, அழைத்துக் கொண்டு போய் காட்டினர். குழந்தைகளும் கதையில் கேட்ட இடத்தை, நேரில் கண்டு ஈடுபாட்டுடன் வணங்கினர். காணிக்கை செலுத்தினர்.

திருத்தலங்களில் அமைந்துள்ள கோயில்களில் பணி செய்திடும் குருமார்களும், மக்களுக்கு பிரசங்கம் செய்து கடவுள் பக்தியை மேலும் வளர்த்தார்கள். அதற்காகவே, கோயில்களில் பிரார்த்தனை மண்டபங்கள் அமைக்கப்பட்டன. மக்கள் பயபக்தியுடன், பிரசங்கங்களைக் கேட்டு பக்தி ரசனையில் திளைத்தார்கள்.

கடவுள் மக்களுக்கு அருள் பாலித்து நன்மை செய்த இடம், அற்புதம் நிகழ்த்திய திருத்தலம் என்பதை எடுத்துக்காட்ட கற்களைப் பதித்த (Stones) இடம், புனிதத்தனம் என்று மக்களால் போற்றி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

குழந்தைகள் மனதிலே மத உணர்வு வேரூன்ற இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள், பிரசங்கங்கள், பிரார்த்தனைகள், விழாக்கோலங்கள், விருந்து வைபவங்கள் எல்லாமே உதவி வந்தன. உத்வேகம் ஊட்டின.

இப்படியாக மத விஷயங்கள், கோயில்களிலிருந்து வெட்ட வெளியான பிரதேசத்திற்கு வந்தன. மதமே வாழ்க்கை, வாழ்க்கையே மதம் என்ற பற்று, பாசமுடன் பிறந்து வளர்ந்து வேரூன்றி, விலக்க முடியாத வெறியாகிப் போனது தான், விந்தைமிகு செயலாகும்.

இஸ்ரேலிய மக்களின் விழாக்கள், இறைவனுக்குத் துதிபாடவும், நன்றி கூறவும் பயன்பட்டன என்றால், கிரேக்க நாட்டு மக்கள் நடத்திய விழாக்கள் கொஞ்சம் மாறுபட்ட கூர்மையான மதிநுட்பத்துடன் திகழ்ந்தன. அந்த மாறுபட்ட அணுகுமுறையே, விளையாட்டுக்கள் வளர்ச்சிபெற உதவின.

 5. கதையும் காரணமும்

உள்ளத்திற்கு உணர்ச்சியும், உடலுக்கு எழுச்சியும், வாழ்வுக்கு மலர்ச்சியும் மகிழ்ச்சியும் தருவன விளையாட்டுப் பந்தயங்களே. சாதி மத பேதங்கள் சாடாத, ஏற்றத்தாழ்வு ஏறிட்டுப் பார்க்காத இனியதொரு சமுதாயத்தை உருவாக்கித் தருவது விளையாட்டுப் பந்தயங்களே. மனித இனத்தின் வலிமைக்கு வடிகாலாக, தனி மனிதன் திறமைக்கு ஊன்றுகோலாக விளங்குவதும் விளையாட்டுப் பந்தயங்கள தாம்.

நூற்றுக்கணக்கான நாடுகள் நேயத்துடன் கலந்து கொள்ள. ஆயிரக்கணக்கான வீரர்களும். வீராங்கனைகளும் ஆர்வத்துடன் போட்டியிட, இலட்சக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து அமைத்தப் பந்தயக் களத்திலே, கோடிக்கணக்கான மக்கள் குதூகலத்துடன் கண்டுகளிக்குமாறு, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக நாடுகள் எல்லாம் குறித்த ஓரிடத்தில் கோலாகலமாகக் கொண்டாடி நடத்தப் பெறும் பந்தயத்திற்கே ஒலிம்பிக் பந்தயம் என்று பெயர்.

விளையாட்டுப் பந்தயங்கள் என்று அழைக்காமல், ஒலிம்பிக் பந்தயங்கள் என்று ஏன் அழைக்க வேண்டும்? என்ற சந்தேகம் வருவது இயற்கையே. இந்தக் கேள்விக்கு விடை தெரிய வேண்டுமானால், நாம் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்லத்தான் வேண்டும்.

நல்ல உடலிலே நல்ல மனம் என்ற கொள்கையைக் கடைப்பிடித்து, வலிவும் வனப்பும்தான் வாழ்வுக்குத் தேவை

என்று வாழ்நாள் முழுவதும் செயலாற்றி வந்த நாடு கிரேக்க நாடு. இந்த நாட்டிலே உள்ள புனிதமான இடம் ஒலிம்பியாவாகும். இப்புனித மண்ணிலே தோன்றிய விளையாட்டுக்களைத்தான் ஒலிம்பிக் பந்தயங்கள் என்று அந்நாட்டினர் அழைத்தனர்.

ஒலிம்பியாவிலே, கிரேக்க நாட்டுக் கடவுளர்களில் சியஸ் என்று அழைக்கப் பெறும் தலைமைக் கடவுளின் கோயில் இருந்தது. (நம் நாட்டுக் கடவுளான சிவனைப் போல), சீயஸ் சிலையமைந்த அக்கோயிலின் முன்னே அமைக்கப் பெற்ற விளையாட்டு அரங்கத்திலே தான் அத்தனைப் பந்தயங்களும் அந்நாளில் நடந்தேறின.

சீயஸ் என்ற கடவுளுக்கும், விளையாட்டுப் பந்தயங்களுக்கும் என்ன தொடர்பு என்று கேட்கலாம் கடவுளைக் காட்டித்தான் இந்தக் கதையே தொடங்குகிறது உலகத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகவும். 40 அடி உயரம் அமைந்ததாகத் திகழும் சீயஸ் பீடத்தின் முன்னே நிகழ்கின்ற விளையாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும், கடவுளால் தான் தொடங்கப் பெற்றன என்பதற்கு பல கதைகள், பல புராண வரலாறுகள். தேவைக்கு அதிகமாகவே உள்ளன.

பொலிவான, வலிவான உடல் மட்டும் கொண்டவர்கள் அல்லர் கிரேக்கர்கள் கவின் மிக்கக் கற்பனைகளோடு கதை புனைவதிலும், சிலை வடிப்பதிலும் வல்லவர்கள் நம் நாட்டுப் புராணக் கதைகளுக்கும் சற்றும் சளைத்தவையல்ல அவர்கள் கூறும் கதைகள். விளையாட்டுப் பந்தயங்களைத் தொடங்கி வைத்தது மட்டுமல்ல, விளையாட்டரங்கத்தை அளந்து கட்டி முடித்தவரும் கடவுளேதான் என்று கூறும் அளவுக்கு அவர்கள் கதைகள் அழகாகச் செல்லுகின்றன.

கதையின் காரணத்தை அறியப் புகுந்தால், அவர் தம் வாழ்க்கைமுறை அவ்வாறு இருந்ததுதான் காரணம் என்பதை நாம் அறியலாம். கிரேக்கர்கள் இயற்கையின் அழகைப் புகழ்ந்தனர் போற்றினர். பக்தியுடன் வணங்கினர். இயற்கையின் வடிவிலே இறை உருவை அமைத்தனர். இயற்கை வழி இயங்கும் இறைவன் நினைவைத் தாங்கும் உடலை, உள்ளத்தை, வலிமையோடும் திறமையோடும் வைத்திருக்கும் வாழ்வைத் தொடங்கினர். தொடர்ந்தனர். அதன் காரணமாகவே, உடலைப் பேணும் உயர்ந்த நெறியைக் காத்தனர்.

நம் நாட்டு சித்தர் திருமூலர் கூறிய கருத்தின்படியே அவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.

அதாவது,

உடம்பின் உள்ளே உத்தமன் கோயில் கொண்டான் என

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்பது போல

இதய நிலை மட்டும் அப்படி அவர்களுக்கு அமையவில்லை. இயற்கைச் சூழ்நிலையும் அவ்வாறுதான் அமைந்திருந்தது. கிரேக்க, நாட்டைச் சுற்றிலும் உள்ள நாடுகள் அனைத்தும், தாங்களே தலைமை ஏற்று மற்ற நாடுகளை ஆளவேண்டும் என்று விரும்பின பிறரை ஆளவேண்டும் என்றால் அடக்குமுறைதானே முன்னே எழும்: ஆசை ஆவேசத்தைத் தூண்டிவிட்டது.

விருப்பத்தை நிறைவேற்ற, எல்லா நாடுகளும் போரையே சரண் புகுந்தன. போருக்குத் தேவை படைக்கலன்கள் என்றாலும், படைக்கலன்களைப் பயன்படுத்த பலமான உடலும் தேவையன்றோ! இக்காலம்போல, பீரங்கியும் வெடிகுண்டும், விமானத் தாக்குதலும் அக்காலத்தில் இல்லையே!

ஆகவே, ஒவ்வொரு அரசும் தங்கள் குடிமக்களைப் பலம் வாய்ந்தவர்களாக மாற்ற முயன்றது. அதற்குத் துணைதரும் உடலழகுப் பயிற்சிகளை உற்சாகத்துடன் செய்து, உடலை வளர்க்கத் தூண்டியது. தங்களைக் காத்துக்கொண்டால் தானே, பிற நாடுகளையும் அடக்கித் தலைமை ஏற்க முயும்! ஆகவே, தற்காப்புக்காகவும், தாய்நாட்டைக் காக்கவும் பெற்ற உடல்வளத்தில் விளைந்த திறமையை, வெளிப்படுத்த விரும்பினர். அதற்கு மேடையாக அமைந்ததுதான் இந்த ஒப்பற்ற ஒலிம்பிக் பந்தயங்கள்.

ஒப்புவமை இல்லாத ஒலிம்பிக் பந்தயம் கிரேக்க மக்களை எத்தகைய நிலையில் வாழச் செய்து வாழ்வில் மிளிரச் செய்தது, என்பதை இனி வரும் பகுதிகளில் காண்போம்.

6. பந்தயம் பிறந்த கதை

கிரேக்க நாட்டிலே கடவுளுக்குக் குறைச்சல் இல்லை, வீரத்தில் அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையைவிட, மதத்தில் அவர்கள் ஆழ்ந்த பற்றும், அதிக நம்பிக்கையும் வைத்திருந்தார்கள். அதனாலேயே, அழகு என அவர்கள் ரசித்ததற்கும், அலங்கோலம் என்று அருவெறுப்பு அடைந்ததற்கும்கூட உருவம் அமைத்தனர். அவற்றையெல்லாம் வல்லமை உள்ள கடவுள் என்று வணங்கினர். அந்தக் கடவுளர்களுக்குத் தலைமை தாங்குவதுதான் சீயஸ் என்னும் பெயரமைந்த கடவுள்.

சீயஸ், கரானாஸ் என்ற இரண்டு தலைமைக் கிரேக்கக் கடவுளர்கள், பூமியை யார் ஆள்வது என்று போட்டியிட்டனர். அந்த்ப் போட்டியில், சீயஸ் தன் பகைவனான கரானாசைக் கொன்று வெற்றி கண்டதற்காகவே இம்மாபெரும் போட்டியினைத் தொடங்கி வைத்தார். என்பது ஒரு புராண வரலாறு, பந்தயம் தோன்றியதைப் பற்றி பிண்டார் என்ற புலவரும், மற்றவர்களும் மேற்கூறிய கதையைப் பாடிவைத்துச் சென்றிருக்கின்றனர்.

மதம் வாழ்க்கைக்கு முகம் போன்றது என்று வாழ்ந்து வந்த கிரேக்க மக்களிடையே, ஒரு காலத்தில் மன வேற்றுமை எழுந்தது. மதக் குழப்பம் மிகுந்தது. இவ்வாறு குழப்பத்தால் துன்புறுகின்ற நேரத்தில் பிளேக் என்ற கொடிய நோயும் மக்களிடையே பரவி அழித்தது, வதைத்தது. அலறிப்புடைத்த மக்கள் ஆண்டவனைத் தொழுதனர். அந்நாளில், வானத்தில் இருந்து அசரீரீ ஒன்று எழுந்தது. அந்த ஆணையின் படியே, அந்நாட்டை ஆண்ட அரசனான இபிடஸ் என்பவன் ஒலிம்பிக் பந்தயத்தைத் துவக்கினான்.

இப்படி ஒரு கதையை, கிரேக்கப் புராணம் கூறுகிறது. கதை என்றால் வளரும் அல்லவா! இன்னொரு புராணக் கதையும் ஒலிம்பிக் பிறப்பிற்கு உண்டு.

ஹிராகிலிஸ் என்ற அரசனுக்கும், அகஸ் எனும் அவனது பகைவனுக்கும், மல்யுத்தப் போட்டி ஒன்று நடந்தது. அந்தப் போட்டியில், அகஸை, ஹிராகலிஸ் வென்றதோடல்லாமல், கொன்றும் விட்டான். அந்நிகழ்ச்சியைக் கொண்டாடி மகிழ்வதற்காக, தனது தந்தை சீயஸ் என்பவருக்கு ஒலிம்பியா என்ற இடத்தில் கோயில் ஒன்றைக் கட்டினான். அந்தக் கோயிலின் முன்னே, விளையாட்டுப் பந்தயங்கள் நடக்க விளையாட்டு அரங்கம் ஒன்றைத் தானே அளந்து கட்டி முடித்தான்.

மேலே கூறிய புராணக் கதையைவிட, பொருத்தமான அதே சமயத்தில், சுவைமிக்க இன்னொரு நிகழ்ச்சியும் உண்டு. அதையும் கீழே காண்போம்.

கி.மு. 9-ம் நூற்றாண்டு, கிரேக்க நாட்டிலே ஓடும் கீர்த்தி மிக்க நதியான ஆல்பியஸ் கரையில் அமைந்த, அழகான பகுதியான ஒலிம்பியாவில் உள்ள பிசா (Pisa) எனும் நாட்டை, ஓனாமஸ் (Opnomaus) என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு அழகும் அறிவும் நிறைந்த பெண் ஒருத்தி இருந்தாள். அவள் பெயர் ஹிப்போடோமியா. அவளைத் திருமணம் செய்து கொள்ள அந்நாட்டு இளைஞர்கள் அனைவரும் விரும்பினர். அடுத்தடுத்து முயன்றனர். மங்கையோடு மகுடமும், மன்னர் பதவியும் அல்லவா சேர்ந்து வருகிறது! தன் கண்ணான மகளின் கரம் பிடிக்க வந்த கட்டிளங் காளையர்க்கெல்லாம் கட்டளை ஒன்றைப் பிறப்பித்தான் மன்னன். இது விசித்திரமான கட்டளை மட்டுமல்ல கொடுமையானதுங்கூட.

திருமணம் செய்துகொள்ளத் தயாராக வரும் இளைஞன், அந்த அளவரசியின் அந்தப்புரத்திற்குச் சென்று அவளைக் கவர்ந்துதன் தேரில் ஏற்றிக் கொண்டு நாட்டின் எல்லையைக் கடந்துத் தப்பி ஓட வேண்டும். பின்னால் துரத்தி வரும் மன்னன் கைகளில் அந்த இளைஞன் தப்பி விட்டால், திருமணம். சிக்கி விட்டால் மன்னன் கையிலுள்ள கூர் ஈட்டி அவன் மார்பில் பாயும், மணம் அல்லது மரணம் இதுதான் அவனுக்குக் கிடைக்கும் பரிசு.

பாராண்டவன் போட்ட நிபந்தனையை ஏற்றுக்கொண்டு பதின்மூன்று காளையர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். பாதி வழியிலே பிடிபட்டு, பரலோகம் சென்றனர். ஆமாம்... ஈட்டியை வீசி எறிவதில் எமனையும் விடக் கொடியவன் மன்னவன், போட்டியில் கலந்து கொண்டோர் அனைவரும் பயங்கரமாகக் கொல்லப்பட்ட நிகழ்ச்சியைக் கண்டும் கேட்டும் நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. மக்கள் இதயத்தில் மயக்கம் சூழ்ந்தது. இளவரசியை மணக்க இனி யாரும் துணிய மாட்டார்கள் என்று எல்லோரும் எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு இளைஞன் வந்தான். விளக்கினைத் தேடி வருகின்ற விட்டில் பூச்சியாக அவன் வருவதைக் கண்டு, பார்த்தவர்கள் பரிதாபப்பட்டார்கள். அவன் பெயர் பிலாப்ஸ்.

அவன் வாலிபன்மட்டுமல்ல. கட்டுடல் கொண்டவன், கூரிய மதியும் வீரிய செயலும் கொண்டவன் போலவே தோன்றினான். இல்லையேல், பூக்காடு என்று எண்ணிக் கொண்டு சாக்காட்டை நோக்கி வேகமாக வந்திருக்க மாட்டானல்லவா?

போட்டி தொடங்கி விட்டது. பேரழகி ஹிப்போடோமியா பக்கத்தில் இருக்க, தேரிலே புறப்பட்டு விட்டான் பிலாப்ஸ், எல்லையைக் கடக்கப் போகிறானா? அல்லது ஈட்டியால் கொல்லப்படப் போகிறானா? இறைவனுக்கே வெளிச்சம்.

போட்டி பயங்கரமாகத் தொடங்கி விட்டது. தேர், புழுதி மீற புறப்பட்டது. புயல் வேகத்தில் போகிறது அவனது தேர், பின் தொடர்கிறது மன்னன் ஒனாமஸின் அழகுத் தேர். கையிலே ஈட்டி, கண்களிலே கொடுரம். முகத்திலே கர்வம். ஏன்? உலகில் உள்ள குதிரைகளிலே நம் குதிரைகள் தான் ஒப்பற்றவை. வலிமையுள்ளவை. விரைவாக ஓடக் கூடியவை என்பது அவன் நம்பிக்கை அவனுடைய ஈட்டி தான் அகில உலகிலும் கூர்மையானது, குறி தவறாதது என்ற ஓர் ஆணவ எண்ணம். குதிரைகள் பாய்கின்றனவா. பறக்கின்றனவா என்றவாறு மன்னன் தேர் முன்னேறி, முன்னே போகும் தேரை விரட்டிப் பிடிக்க, இரு தேர்களுக்கும் இடையேயுள்ள தூரம் குறைய, இதோ பிடிப்பட்டான் பிலாப்ஸ் என்ற நிலையிலே!

திடீரென ஓர் சத்தம்... ஆமாம்! மடமடவென்று அச்சாணி முறிந்தது. படபடவேன்று சக்கரங்கள் பிய்த்துக் கொண்டு பறந்தோடின. மமதையோடு தேரோட்டிய மன்னன், முகம் குப்புற மண்ணிலே விழுந்தான். கழுத்து முறிந்து இறந்தான் பழி வாங்கப் பாய்ந்துவந்த மன்னன், பாதி வழியிலே விழுந்து பயங்கர விபத்துக்கு உள்ளானான். விதிதான் அவனை வீழ்த்தியதா? இல்லை... சதியா? ஆமாம் பிலாப்ஸின் சதி.

பிலாப்சின் சதியல்ல... மதி. அவனது மதி செய்த சதி மன்னனது தலைவிதியை நிர்ணயித்தது. போட்டியிட வந்த பிலாப்ஸ், வீரத்தை மட்டும் பயன்படுத்தவில்லை. விவேகத்தையும் பயன்படுத்தினான். பேரழகியைப் பெறுகின்ற இந்த உயிர் போகும் போட்டியில் தான் வெற்றி பெற்றால், தான் பெறப் போகின்ற ராஜ்யத்தில் பாதிப் பங்கு தருவதாக மன்னனது தேரோட்டியான மிர்டிலாஸ் என்பவனிடம் கூறி, தனது சதிக்கு உடந்தையாக்கினான். சதிக்கு உள்ளான தேரோட்டி, மன்னன் போட்டிக்குப் புறப்படுவதற்கு முன்னர், தேரின் அச்சாணியைக் கழற்றி விட்டு பாதி ராஜ்யம் பெற பகற் கனவு கண்டு கொண்டிருந்தான்.

இந்த சாரதியின் சதியால் தான், தேர் கவிழ்ந்தது மன்னன் மடிந்தான். மங்கை, பிலாப்சுக்கு மாலையிட்டாள். மணாளனாக மாறிய பிலாப்ஸ், மன்னனாகவும் மாறிவிட்டான். மாமனாரைத் தான் இந்தப் போட்டியில் இழந்தானே தவிர, மகுடத்தை அவன் இழக்கவில்லை. வெற்றி பெற்ற வேகத்தோடு, அரச பாரத்தைச் சுமந்த மன்னன், அடுத்து ஒரு பெரும் பழியையும் சுமந்து கொள்ள ஆயத்தமானான். அதுதான் சதிக்குக் கிடைத்தப் பரிசு, மிர்டிலாசை ஆசை காட்டிக் கூட்டிச் சென்று, மலையுச்சியிலிருந்து கீழே தள்ளி அவனையும் கொன்று விட்டான் பிலாப்ஸ்.

வெஞ்சினத்தால் வீர இளைஞர்களைக் கொன்ற மன்னனை வஞ்சனையால் கொன்றான், வஞ்சத்தால் எஜமானனைக் காட்டிக் கொடுத்தக் கயவனை, கபடத்தால் கொன்றான். மண்ணும் பெண்ணும் கிடைத்த மாபெரும் மகிழ்ச்சியை, மக்களுக்கு உணர்த்த வேண்டாமா? ஆகவே, பிசா எனும் நகரத்திற்கு சில மைல் தூரத்திற்கு மேற்கே, ஹெலாஸ் என்ற அழகான பகுதியின் அருகே இருக்கும் எல்லிசில் உள்ள பள்ளத்தாக்குப் பகுதியான ஒலிம்பியாவில், அந்தப் புனிதமான இடத்தில், தான் பெற்ற வெற்றியைக் குறிக்க விளையாட்டுக்களை ஆரம்பித்தான், அதோடு மத விழாவாகவும் கொண்டாடினான்.

இவ்வாறு ஒலிம்பிக் பந்தயம் உண்டானதன் காரணத்தை பல்வேறு கதைகள், புராணங்கள் பலபடக் கூறுகின்றன என்றாலும், நம் கண் முன்னே காணுகின்ற ஒலிம்பிக் பந்தயம் போலவே, அந்நாளில் சிறப்பாகக் கொண்டாடப்பெற்றிருக்கின்றன என்பதற்கும் ஆதாரங்கள் நிறைய உள்ளன.

கிரேக்கர்கள், நாகரிகம் மிகுந்தவர்களாக வாழ்ந்த போதிலும், சிந்தையிலே தெய்வ பக்தி நிறைந்தவர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். தெய்வம் போற்றி, சுவை மணம் மிகுந்தப் பொருட்களைப் படைக்கும் நம்மவர் பழக்கத்திற்கு பதிலாக, விளையாட்டுப் பந்தயங்களை விமரிசையாக நடத்தி வந்தனர். ஆண்டவன் பேரால் மட்டுமல்ல ஆண்மையுள்ள வீரனின் வெற்றித் திரு நாளிலும், வீர மரணம் எய்திய பெருநாளிலும் கூட, பந்தயங்கள் நடந்திருக்கின்றன.

ஆரம்ப நாட்களில், ஒலிம்பிக் பந்தயங்களை பிசா நாட்டினர் மட்டுமே நடத்தி வந்தனர்; ஏனெனில், தொடக்கத்திற்கான தகுந்த கதையின் கருவே அந்நகரில் தானே அமைந்து இருக்கிறது. ஆண்டுகள் செல்லச் செல்ல, அந் நாட்டின் அருகாமையில் வாழ்ந்த எல்லிஸ் நகர மக்கள் அவர்களுக்குத் துணை போயினர். சேர்ந்து பந்தயங்களை நடத்தினர். பந்தயத்தின் மகிமை பெருகப் பெருக ஸ்பார்டா எனும் நாட்டினரும் பங்கு பெற்றனர், இவ்வாறாக, ஒலிம்பிக் பந்தயங்களில் உள்ளம் ஈடுபட்ட நாட்டினர் அனைவரும் ஒன்று சேர்ந்து, போட்டிகளில் கலந்து கொண்டனர். ஆனால், பங்கு பெறுவோர் அனைவரும் கிரேக்க நாட்டினராகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாய விதியும் கூடவே இருந்தது. கட்டாயமாகவே தொடர்ந்து வந்தது.

நாடுகளுக்குள்ளே எழுந்த போட்டி மனப்பான்மையும், தலைமைத் தன்மையும், பந்தயம் நடக்கவும், பலமான உடல் பெறவும் காரணமென்று முன்னரே குறிப்பிட்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம், இருந்தும், எவ்வாறு பகைநாடுகள் கூடி, பந்தயங்களை நடத்தின என்றும் நீங்கள் கேட்கலாம்?

போர் என்பது அவர்களுக்குப் பொழுதுபோக்குப் போல, எப்பொழுது பார்த்தாலும் யாருடனாவது யுத்தம் செய்து கொண்டுதான் இருப்பார்கள். அதற்காக, பந்தயங்களே நிறுத்தி வைத்துவிட முடியுமா? ஆகவே, அவர்களுக்குள்ளே ஓர் ஒப்பந்தமும் உடன்படிக்கையும் செய்து கொண்டனர்.

ஒலிம்பிக் பந்தயம், கிரோமினியா என்ற மாதத்தில் மட்டுமே நடைபெறுவதால், அந்த மாதத்தில் யாருமே போர் செய்யக்கூடாது. யுத்தத்தை நிறுத்திவிட வேண்டும். அமைதியாக இருந்து, ஆற்றல் மிகுந்த பந்தயக் களத்தில் பங்கு பெற்றிட வேண்டும். சண்டைபோடும் நாடுகள் பந்தயம் நடக்கும்போது சமரசமாகவே இருக்க வேண்டும் என்ற சபதத்தை கி.மு. 884-ல் எடுத்துக் கொண்டதாகவும், அந்த விதி 1278 ஆண்டுகள் தொடர்ந்து வந்ததாகவும் சரித்திரச் சான்றுகள் பகர்கின்றன.

இந்த அடிப்படையிலேதான் அனைத்து நாடுகளும் போட்டிகளில் கலந்து கொண்டன, போட்டியிட்டன, ஆனால், போர் புரியும் கருவிகளுடன் யாரும் பந்தயத்திடலுக்குள் நுழையவே கூடாது. அவ்வாறு, போர்க் கருவிகளுடன் ஒலிம்பியாவுக்குள் வர நேர்ந்தால், அவர்கள் எல்லிஸ் என்ற இடத்திற்குச் சென்று, கருவிகளைப் பத்திரமாகக் கொடுத்து வைத்துவிட்டு, பந்தயம் முடிந்த பிறகு மீண்டும் போய் எடுத்துக் கொள்ள்வேண்டும். பகைவர்களோடு கலந்துறவாடவும், நெருங்கி நிற்கவும், பேசவும் போன்ற நிலைமை ஏற்படும். என்றாலும், நண்பர்களாகவே பழகவேண்டும், எந்தவிதமான அசம்பாவித நிகழ்ச்சிகளும் நடக்கக்கூடாது என்று அவர்கள் கட்டுப் பாட்டோடு இருந்தபோதிலும், சில சமயங்களில், எல்லை மீறிய நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடந்து இருக்கின்றன.

இருந்தாலும், கிரேக்கர்கள் சத்தியத்திற்கும், சம்பிரதாயத்திற்கும் கட்டுப்பட்டே, சண்டையின் வெறியை மறந்து, சமதானத்தோடு பந்தயங்களில் கலந்துகொண்டு பேரின்பம் அடைந்தார்கள்.

எதிரிகளாக இருந்தாலும் எதிரிகளுடனே பந்தய வீரராகப் போரிட்டாலும் அமைதி காத்தனர். ஆங்காரத்தை நீத்தனர், அழகும் ஆண்மையும் பண்பாடும் பந்தயக் களத்திற்குப் பெருமை சேர்த்தனர்.

 7. பந்தயத்தில் பங்குபெற பயங்கர விதிமுறைகள்

மதச் சடங்கு போலவும் அதே சமயத்தில் வீர விழா போலவும் விமரிசையாகக் கொண்டாடப்பெறும் விளையாட்டுக்களில் வீரர்கள் போட்டியிட வேண்டுமென்றால், அதற்குரிய விதிகள் மிகவும் கடுமையாகவே இருந்தன. அந்த விதிகளைப் பின்பற்றுகின்ற வீரர்கள்தான் பந்தயக் களத்திற்குள்ளே நுழைய முடியும். பங்குபெற முடியும். விதிகள் அவ்வாறு கடுமையாக அமைந்திருந்தன.

போட்டியிலே கலந்து கொள்கின்ற வீரன், கலப்பற்றவனாக, தூய்மையான கிரேக்கக் குடிமகனாக இருக்க வேண்டும். நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடக்க இருக்கும் பந்தயங்களுக்காக, அவன் பத்து மாதங்கள் இடைவிடா முயற்சியுடன் சிறப்பான பயிற்சியும் செய்திருக்க வேண்டும். திருமணமானவர்கள். குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றவர்கள் எல்லாம் போட்டியில் கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு தன்னைத் தகுதியுடையவனாக மாற்றிக்கொண்ட வீரன், தன் பெயர், முகவரி, மற்றும் பரம்பரை பற்றிய உண்மை முழுவதையும் விளக்கி, எல்லிஸ் என்னும் இடத்திற்குச் சென்று, தன் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அந்தப் பெயர்ப் பட்டியலை வைத்துக் கொண்டு, கலே நாடிகை எனும் ஒலிம்பிக் அதிகாரிகள் பத்து பேர் அடங்கிய குழு ஒன்று முகவரி அறிந்து, வீரனைப் பற்றிய முழு உண்மைகளையும் பரிபூரணமாக ஆராய்ச்சி செய்யும்.

அவ்வீரனுடைய பரம்பரை, அவனது குணாதிசயம், இயற்கையான உடல் திறமை, வலிமை, பெருமை அத்தனையையும். தீர விசாரித்து, தெரிந்த பிறகு, அவன் தூய்மையான கிரேக்கன, கலப்பற்றவன் ஒழுக்கசீலன், வலிமையுள்ள உடலாளன் (Athlete) என்று முடிவு செய்து பந்தயத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்புக்குப் பரிந்துரை செய்யும். போட்டியில் பங்குபெற்ற அனைவரும், நாடுகள் சார்பாகப் போட்டியிடாமல், தனிப்பட்ட முறையிலேதான் ஆர்வத்துடன் போட்டியிட முன்வந்தனர்.

ஒலிம்பிக் அதிகாரிகளின் கடுமையானத் தேர்விலே வெற்றி பெற்ற வீரர்கள் அனைவரும், ஒலிம்பிக் பந்தயம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னே, எல்லிஸ் நகரத்தில் வந்து கூடுவர். அந்த ஒரு மாத காலத்தில், அவர்கள் ஒலிம்பிக் அதிகாரிகளின் நேரடிப் பார்வையின் கீழ், கடுமையான பயிற்சிகள் பெறுவர். உடலுக்கான பயிற்சிகள் மட்டும் கடுமையானதாக இல்லை. உணவு முறையும் அப்படித்தான் அமைந்திருந்தது. மாதக் கணக்காக அவ்வீரர்கள், வெறும் பழங்களையும், தண்ணிரையுமே ஆகாரமாக உட்கொள்ள வேண்டியிருந்தது.

பிறகு, காலம் மாற மாற, உணவு முறையில் உள்ள கடும் விதிகள் தளர்ந்தன. வெறும் பழங்கள் மட்டுமல்லாமல், கறியும் மதுவும் தரப்பட்டன. இத்துடன், தங்கள் தசைகள் எழிலாகத் தோற்றமளிக்கவும் ஏற்ற முறையில் போட்டிகளில் ஒத்துழைக்கவும் உடல் முழுவதும் ஒரு வகை எண்ணெய் தடவிக் கொண்டே பயிற்சிகள் செய்தனர். அந்தக் கால அளவிற்குள், சிறப்புப் பயிற்சி பெற்ற வீரர்களில் சிறந்தவர்களையும், வல்லவர்களையும் மட்டுமே தேர்ந்தெடுத்து, பந்தயத்தில் கலந்துகொள்ள அந்த அதிகாரிகளும் பயிற்சியாளர்களும் அனுமதித்தார்கள். அத்தகைய வீரர்களே போட்டியிடமுடிந்தது.

 8. பந்தயக் களமும் பார்வையாளர்களும்

ஒலிம்பிக் பந்தயம் என்றால் கிரேக்க நாட்டு மக்களுக்கு மிகவும் விருப்பம். பந்தயம் நடக்க இருக்கும் நாளுக்கு, பல மாதங்களுக்கு முன்னமேயே பார்வையாளர்கள் தங்களை ஆயத்தம் செய்த கொண்டு விடுவார்கள்.

ஒலிம்பிக் பந்தயம் பார்ப்பது என்பது, புனிதமான இறைவன் ஆலயத்திற்குப் போய்வரும் மதச் சம்பிரதாயம் போன்று அவர்கள் எண்ணியே நடந்தனர். விழைந்தனர். பார்த்து மகிழ்ந்தனர். உழவர் முதல் உழைப்பாளிகள் வரை, உல்லாசபுரியில் வாழ்கின்ற செல்வர் முதல், அரசர்கள், வணிகர்கள் வரை அத்தனை பேரும் பந்தயம் பார்க்கக் கூடி விடுவார்கள். ஒலிம்பியா பள்ளத்தாக்கு முழுவதுமே கூடாரமாகத்தான் காட்சியளிக்கும்.

ஒலிம்பிக் போட்டிகள் கோடை காலத்தில், அதாவது ஏப்ரலில் இருந்து ஜூலை மாதம் வரை உள்ள இடைப்பட்ட நாட்களில் தான் எப்பொழுதும் நடந்தன. பார்வையாளர்கள் அனல் கக்கும் வெயிலில் அமர்ந்து கொண்டு, அவதிப்பட்டுக் கொண்டே ஆனந்தத்துடன் பந்தயங்களைப் பார்த்து மகிழ்ந்தனர்.

எங்கும் இளமை பவனிவரும் இன்ப நேரமல்லவா? எங்கும் எழுச்சியும் மகிழ்ச்சியும்தான் எதிரொலிக்கும். தமிழ்நாட்டில் பொங்கல் விழாவின்போதும், ஏறு தழுவும் விழாவின்போதும் நம் தமிழகக் காளையர்கள் நடந்து கொள்வதைப் போலத்தான்.

விழா நாட்களைக் குறித்து விமரிசையாகப் பாடி மகிழ்வார் புலவர்கள். விழி மயக்கும் ஓவியங்களைத் தீட்டி, மக்களைக் கவர்வர் ஓவியர்கள். சிந்தனைக்கு உயிர் கொடுத்து, செழுமை சிந்து பாடும் சிறந்த வீரர்களைச் சிலைவடித்துக் களிப்பார்கள் சிற்பிகள். பார்ப்போருக்கும் பங்கு பெறுவோருக்கும் படைக்கப்பட்ட வீர விருந்துதான் ஒலிம்பிக் விளையாட்டுக்கள். வீரமும் விவேகமும், ஆற்றலும் ஆண்மையும் ஒன்றுடன் ஒன்று அலைபோல மோதிக்கொள்ளும் அருமையான களமல்லவா பந்தயக்களம்: போட்டி தொடங்குவதற்கு முன் எத்தனை எத்தனை ஆர்ப்பாட்டங்கள்.

ஒலிம்பிக் பந்தயத்தின் திடல் 215 கெஜ நீளமும், 35 கெஜ அகலமும் கொண்டதாகும். அந்த பந்தயத்திடலைச் சுற்றி நாற்பதினாயிரம் மக்களுக்குமேல் அமர்ந்து வேடிக்கை பார்க்கக் கூடிய உட்காரும் இடம், புல் தரையினாலும் படிக்கட்டு போன்ற அமைப்புக்களுடனும் கட்டி முடிக்கப் பெற்றிருந்தன. இந்தப் பந்தயத் திடல், நாற்பது அடி உயரமுள்ள சீயஸ் என்ற கடவுளின் சிலையிருக்கும் பீடத்திற்கு எதிரிலேயே எழிலாக அமைக்கப்பட்டிருந்தது.

பந்தயம் நடத்துவதற்குரிய செலவுகள் அனைத்தும், பொதுமக்கள் மனமுவந்து வாரி வழங்குகின்ற பெருங்கொடையின் மூலமும், நகரங்கள் நல்குகின்ற தானத்தாலும், போட்டியில் பங்கு பெறுகின்ற வீரர்கள் இழைக்கின்ற தவறுகளுக்கரிய அபராதத்தின் மூலமும் மற்ற விரும்பத்தகாத காரியங்களுக்கான அபராதத்தின் மூலமும் சேர்ந்த தொகைகளால்தான் சரிகட்டப் பெற்றன.

9. போட்டிக்கு முன்னே!

ஒலிம்பிக் பந்தயம் தொடங்குவதற்குள், கிரேக்க நாடே சுறுசுறுப்படைந்துவிடும். பந்தய மைதானத்தில் பொதுமக்கள் புகுந்து, தங்கள் இடத்தை அடைந்து, பரபரக்கும் விழிகளோடு, துறுதுறுவென்று அமர்ந்திருப்பார்கள். அவர்கள் குறுகுறுத்த விழிகளிலே சிக்கிய வீரர்களுக்கு, ஒலிம்பிக் பந்தய அதிகாரிகளும், வீரர்களின் பெற்றோரும், உடன் பிறந்த சகோதரர்கள் அனைவரும், சீயஸ் பீடத்தின் முன்னே அணிவகுத்து நின்று கொண்டிருப்பார்கள். ஆமாம், பந்தயம் தொடங்குவதற்கு முன் அழகான அணிவகுப்பு கடவுள் பீடத்தின்முன் கவின்பெற நடக்கும், அத்தனை பேரும் வீர சபதம் எடுத்துக் கொள்வார்கள்.

சீயஸ் பீடத்திலே, பன்றி ஒன்று பலியிடப்படும். பன்றியின் ரத்தத்தைத் தொட்டு, பந்தயத்தில் கலந்து கொள்ளும் வீரர்கள், முதலில் உறுதி கூறுவார்கள். அதாவது, நாங்கள் எல்லோரும் கலப்பற்ற தூய கிரேக்கர்களே! பந்தயத்திலே போட்டியிடுவதற்காக பத்து மாதம் உரிய பயிற்சிகளை உண்மையோடு செய்திருக்கிறோம். போட்டியிட வந்திருக்கும் நாங்கள். போட்டியிலே வெற்றி பெறுவதற்காக விரும்பி எந்தவிதக் கீழ்த்தரமான செய்கைகளையும், முறைகளையும் பின்பற்றமாட்டோம்.

உடலாளர்களான வீரர்கள் மட்டும்தான் உறுதி எடுப்பார்களா, கடவுள்முன் சத்தியம் செய்வார்களா என்றால் இல்லை. போட்டியை நடத்துகின்ற பந்தய அதிகாரிகள் அத்தனை பேரும் பன்றியின் ரத்தத்தின்மீது சீழ்க்கண்டவாறு உறுதி கூறுவார்கள். நாங்கள் ஒலிம்பிக் போட்டி நிகழ்ச்சிகள் அனைத்தையும் நியாயமான வழியிலே, பாரபட்சமற்ற முறையிலே நடத்துவோம். சொல்லோடு மட்டும் அல்லாது செயலளவிலும் அவர்கள் சிறப்பாகச் செய்து காட்டினார்கள்.

அவ்வாறு உறுதி எடுக்கும் அதிகாரிகள் அனைவரும், எல்லிஸ் நகரத்தில் வாழ்கின்ற மதிப்பும் சிறப்பும் மிக்கப் பெருந்தகையாளர்கள் ஆவார்கள். அவர்கள் உரியவர்களால் பத்து மாதங்களுக்கு முன்னரே தேர்ந்தெடுக்ப்பட்டு, அவர்களுக்கென்று ஒதுக்கியுள்ள தனிச்சிறப்புமிக்க வீடுகளில் தங்கி, நடுவராகப் பணியாற்றும் பொறுப்பினைக் கற்றுக் கொள்வார்கள். அதற்குப் பிறகு அவர்கள் எடுக்கின்ற முடிவே இறுதியானதாக இருக்கும். அதை யாரும் எதிர்த்துக் கிளர்ச்சி செய்ய முடியாது. நடுவர்கள் தவறிழைத்தால், அவர்களைத் தண்டிக்கும் உரிமை நாடாளுமன்றத்திற்குத்தான் உண்டு. முதன் முதலில் ஒருவரே நடுவராகப் பணியாற்றினார். பிறகு 10 பேர்கள் வரை நடுவராகப் பணியாற்றும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். அவர்களில், வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான ஒருவரே, நடுவர்களின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கூறியவாறு, உறுதியும் சபதமும் எடுத்த பிறகு, ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்ப காலத்தில் ஒரே நாள் மட்டும்தான் நடைபெற்றன. பிறகு, விளையாட்டுக்களிலே மக்கள் காட்டிய ஈடுபாடும், விளையாட்டுத்துறையிலே பெற்ற அனுபவங்களும், அபூர்வ கண்டுபிடிப்புகளும் ஒலிம்பிக் பந்தயங்களில் நிறையப் போட்டி நிகழ்ச்சிகளைப் புகுத்திய தன் காரணமாக, பந்தயங்கள் 5 நாட்கள் நடைபெறக்கூடிய அளவுக்கு விரிந்தன; வளர்ந்தன.

ஒலிம்பிக் பந்தயம் தோன்றிய காலம் 3000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். முதன் முதலாகத் தொடங்கிய ஒலிம்பிக் பந்தயம், கி.மு. 1253ம் ஆண்டிற்கும் கி.மு. 884ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திற்குள் தான் இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.. ஆனால் கி.மு. 776-ம் ஆண்டு நடந்த பந்தயத்தில் இருந்துதான், வரலாற்று ஆதாரங்கள் காட்டப் பெற்று, அதுவே முறையான முதல் பந்தயம் என்றும் கருதப்படுகிறது.

10. கட்டழகு வந்தக் காரணம்

பந்தயங்களில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் கடுமையான சூழ்நிலையையும், கட்டுப்பாடு நிறைந்த விதிகளையும் முன் கண்டோம். அதே சமயத்தில், போட்டியாளர்களிலே உள்ள வீரர்களை வாலிபர்கள், மனிதர்கள் என்று இரு பிரிவாகப் பிரிக்க அதிகாரிகள் மிகவும் சிரமப்பட்டார்கள்.

காரணம், அவர்களுடைய உடல் வளர்ச்சியே. ஆகவே வயது வித்தியாசத்தில் அவர்களால் பிரிக்க முடியாததால், அவர்களது உடல் வளர்ச்சியை உன்னிப்பாக உணர்ந்து, ஆராய்ந்த பிறகுதான் பகுக்க முடிந்தது. இவ்வாறு உடல்திற நிலையில் கிரேக்கர்கள் வலிமையோடும். வனப்போடும் வாழ்ந்ததற்கு என்ன காரணம் என்று அறிந்தோமானால், நாம் உண்மையிலேயே வியப்பில் மூழ்கி விடுவோம். கிரேக்கர்களின் வாழ்க்கைமுறை அப்படி வரை முறையோடு இருந்தது.

குறையுடலோடு பிறந்தாலும், நோயோடு தோன்றினாலும், அக்குழந்தைகள் சமூகத்திற்கும், இனத்திற்கும் இழுக்கு என்று வாளால் கொன்று புதைத்தத் தன்னிகரில்லா தமிழினம் போன்று, கிரேக்கர்களும், ஓர் உயர்ந்த முறையைக் கையாண்டார்கள்.

குழந்தை பிறந்த ஒருசில நாட்கள் கழித்து, பெற்றோர்கள் அந்நகரத்தை ஆளும் பெரியவர்களிடம் கொண்டு சென்று தங்கள் குழந்தையைக் காட்டுவார்கள். ஆய்வுக்காக வந்து அக்குழந்தையை ஆவலோடும் ஆராய்ச்சிக்கண் கொண்டும் பார்த்து, அக்குழந்தை வலிமையான தேகத்தோடு இருந்தால், பெற்றோர்கள் கையில் கொடுத்து அனுப்புவார்கள். நோய் கொண்டோ அல்லது குறையுடல் கொண்டு பிறந்திருந்தாலோ, அக்குழந்தையை மலைச்சரிவுக்குத் தூக்கிச் சென்று, அங்கே போட்டுவிட்டு வந்து விடுவார்கள். அங்கே அனாதையாக அக்குழந்தை கத்திக்கத்தி மெல்லச் சாகும் குழந்தைக்கு அது கொடுமையான சாவாக இருந்தாலும், கொடுமையான ஆண்மையில்லாத தன்மையுள்ள இளைஞர்களை அந்நாட்டினர் கனவிலும் விரும்பவில்லை என்பதாலேயே கடுமையாக நடந்து கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு, வாழ்வதற்கு உரிமை பெற்ற பெற்றோருடன் வந்த ஒரு குழந்தை, ஏழு வயது வரைதான். தன் வீட்டிலே வாழும். அதற்குப் பிறகு, அப் பாலகன் கடுமையும் சோதனையும் நிறைந்த இராணுவ வாழ்க்கை போன்ற அமைப்புக்கு அனுப்பப்படுகிறான். அங்கே, உடல் வலிமை திறமை, ஆண்மை, செழுமை பெறத்தக்க உடலியற் பயிற்சிகளை அவன் அனுதினம் செய்கிறான்.

ஏழு வயது பாலகனாகப் போனவன், முப்பது வயது வாலிபனாக வெளியே வருகிறான் என்று ஸ்பார்ட்டா நாட்டின் சரித்திரம் கூறுகிறது.

அவர்கள் அனைவரும் சோம்பேறி வாழ்க்கையை வெறுத்தவர்கள். அழகில்லா, ஆண்மையில்லா உடலோடு வாழ்வது பாவம், கேவலம் என்று ஒவ்வொரு இளைஞனும் எண்ணினான். பெற்றோர்களும் அவ்வாறே கருதினார்கள். அதனால்தான், அழகான உடல் கொண்ட போட்டியாளர்களை, வயதைக் கொண்டு பிரிக்க இயலாமல், உடலின் ஆற்றலைக் கொண்டு போட்டிக்காகப் பிரித்தார்கள்.

11. பந்தயம் நடந்த விதம்

முதன் முதலாகத் தொடங்கிய ஒலிம்பிக் பந்தயம் ஒரேநாள் மட்டும்தான் நடந்தது. என்றால், போட்டியும் ஒன்றே ஒன்றுதான் நடந்தது. அதுதான் ஓட்டப் போட்டி(Foot race) அந்த ஒருபோட்டியில் வெற்றிபெறுவதற்குள், வீரர்கள் பலமுறை அதாவது கால் இறுதிப் போட்டி, அரையிறுதிப் போட்டி, இறுதிப் போட்டி என்று அடைய மிகவும் சிரமப்பட்டுத்தான் ஓடவேண்டியிருந்தது அவர்கள் ஓடிய தூரம் 215 கெஜ தூரம்தான்.

அதிகாலையிலேயே ஓட்டப்போட்டி ஆரம்பமாகிவிடும். அதிகாரிகள் அனைவரும், பந்தயம் முடிவு பெறுகின்ற இறுதிக் கோட்டில், தங்களுக்கென அமைக்கப்பட்டிருக்கும் மரத்தாலான உயர்ந்த முக்காலிகளில் அமர்ந்துகொண்டு விடுவார்கள். ஒரு தேர்வோட்ட முறையில் (Heat) ஓடுவதற்கு 4 பேர்தான் அனுமதிக்கப்பட்டனர். ஆகவே அந்த நான்கு பேர் யார் யார். என்பதற்காகச், சீட்டுப் போட்டு பெயர்களைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களே ஓடவும் அனுமதிக்கப்பட்டனர்.

ஓடத்தொடங்கும் கோட்டில் வந்து அவர்கள் நிற்பார்கள். அந்தக் கோடு வெண் சலவைக் கல்லால் ஆக்கப்பட்டிருந்தது. அதேபோல, ஓட்ட முடிவெல்லைக் கோடும் (Finishing Line) தங்கமுலாம் பூசியக் கற்களால் பதிக்கப்பெற்றிருந்தன. அங்கே தான் அதிகாரிகள் வீரர்களைத் தேர்ந்தெடுக்க வீற்றிருந்தனர்.

ஓட்டத்தைத் தொடங்கி வைக்க இப்பொழுது விசில் அல்லது துப்பாக்கி வெடிச் சத்தத்தைப் பயன்படுத்துகின்றார்கள். அந்தக் காலத்தில், விசிலோசைக்கும் வெடியோசைக்கும் பதிலாக, முரசத்தைப் பயன்படுத்தினார்கள், முரசம் முழங்கினால் ஓடவேண்டும் என்ற விதிக்கேற்ப வீரர்கள் ஓடி வெற்றி பெற்றார்கள்.

வீரர்கள் ஓடிய வேகத்தையும் நேரத்தையும் குறிக்க, இன்றுபோல் அன்று நிறுத்துக் கடிகாரம் (Stop watch) இல்லை. ஆகவே, ஓட்ட நேரத்தை, முயல் ஓடியது போல வேகமாக ஓடினான், குதிரைபோல விரைவாக ஓடினான் என்பதற்காக, முயல் வேகம், குதிரைவேகம் என்று கணக்கிட்டுக் கொண்டனர். இவ்வாறு நடத்திய முதல் ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற்ற முதல் வீரனின் பெயர் கரோபஸ் என்பதாகும்.

ஒரே ஓட்டப் பந்தயம் என்று இருந்தது 13வது ஒலிம்பிக் பந்தயத்தில் மாறியது. ஓட்டத்தின் எல்லையைப் பல அளவுகளில் நிர்ணயித்து, பல பிரிவுகளாக்கி, அவற்றிலே போட்டிகள் நடத்தினர். இதனால், பந்தயங்கள் நடக்கும் நேரமும் அதிகமாகியது. இளைஞர்களுக்கு ஓட்டப் பந்தயம், அத்துடன் குத்துச்சண்டை, மல்யுத்தம், தட்டெறிதல், தேரொட்டப் போட்டிகளும், ஒலிம்பிக் நிகழ்ச்சிகளில் சேர்ந்துகொண்டன.

காலம் செல்லச் செல்ல, நிகழ்ச்சிகள் கூடலாயின, 76வது ஒலிம்பிக் பந்தயங்களின்போது, போட்டி நிகழ்ச்சிகள் பெருகிப் போகவே, நடத்துகின்ற நேரமும் மாறிக்கொண்டே வந்தது. போட்டி நிகழ்ச்சி எப்பொழுது நடைபெறுகின்றது என்பதை நிர்ணயிக்க முடியாததால், இரவு நேரங்களில்கூட நடத்துகின்ற நிலை ஏற்பட்டது. அதனால் போட்டியாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க அந்நிலையே காரணமாயிற்று, பகல் முழுதும் தேரோட்டப் போட்டியை நடத்திவிட்டு, எங்களை இரவு நேரத்திலே, நிலா ஒளியிலே, குத்துச் சண்டைபோட வைக்கின்றீர்களே என்று குத்துச்சண்டை வீரர்க்ள இதயம் குமுறி, எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். இருந்தாலும் ஒலிம்பிக் நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை மிகுந்துகொண்டே தான் வரலாயின. அதனால், ஒரே நாள் நடந்துவந்த பந்தயம் கி.மு.5-ம் நூற்றாண்டில், 5 நாள் பந்தயமாக மாறியது.

நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இப்பந்தயங்களை அமைதியின் சின்னம் என்றே எல்லோரும் கருதினர். அதற்குரிய காலமும் பத்துமாதம் என்றே கூறினர். தங்களுக்குள்ளே ஆயிரம் வேற்றுமையும் விரோதமும் நிறைந்திருந்தாலும், பந்தயங்களை மிக மிகப் பக்தியோடும் பண்போடும் கிரேக்கர்கள் நடத்தி மகிழ்ந்திருக்கின்றனர்.12. ஐந்து நாள் விழா!

ஐந்து நாட்கள் பந்தயங்கள் எத்தனை விமரிசையாக நடத்தப்பெற்றன என்று அறியும் ஆவல் அனைவருக்கும் எழுவது இயற்கைதான். கி.மு. 452-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயம் பற்றிய குறிப்பை ஓரளவு அறிந்தால், அக்காலத்திய மக்களின் ஆர்வமும், ஆண்மைப் பெருக்கும் ஆற்றலும் நமக்கு நன்றாகப் புரியும்.

பந்தயத்தின் முதல் நாளன்று, போட்டியிடும் பயிற்சி மிக்க வீரர்கள். அவர்களது தந்தையர், சகோதரர்கள், பந்தய அதிகாரிகள் அனைவரும் சீயஸ் பீடத்தின் முன்னே அணிவகுத்து நின்று, பன்றி ரத்ததத்தின் மீது சபதமும் சத்தியமும் செய்து கொள்கின்ற நிகழ்ச்சியே பிரதான நிகழ்ச்சியாகும்.

இரண்டாம் நாளில்தான் எழுச்சிமிக்கப் போட்டிகள் நடைபெறும், காலையில் குதிரைப் பந்தயமும், தேர் ஓட்டப் போட்டியும், மாலையில் முக்கியமான உடலாண்மை நிகழ்ச்சிகளாகிய ஓட்டம், தட்டெறிதல், வேலெறிதல், எடை ஏற்றிக்கொண்டுத் தாண்டுதல், மல்யுத்தம் போன்றவற்றில் விறுவிறுப்பு மிகுந்த போட்டிகளும் நடைபெறும்.

மூன்றாம் நாள், வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் பரிபூரண ஒய்வு நாள் அதாவது, விருந்து நிகழும் விழாநாள். வீரர்கள், அதிகாரிகள், வீரர்களின் மிக நெருங்கிய உறவினர்கள், பார்வையாளர்கள் அனைவரும் ஒன்று கூடி ஊரெல்லாம் கொண்டாடி, ஊர்வலமாக வந்து, சீயஸ் கோயிலின் முன் சிங்காரமாக அணிவகுத்து நிற்பார்கள். அந் நிகழ்ச்சியினைப் பொதுமக்கள் ஆரவாரத்துடன் வரவேற்பார்கள். அப்பொழுது, அந்நிகழ்ச்சிகளைப் பெருமைபடுத்தும் பொருட்டு, 100 காளை மாடுகளை பீடத்திலே வைத்துப் பலியிடுவார்கள். விழாக்கோலம் விருந்துக் கோலத்தில் மகிழும். அன்று முழுதும் ஆனந்த ஆராவாரம் நிறைந்து, கிரேக்கம் முழுமையுமே எதிரொலிக்கும்.

நான்காம் நாள் ஒட்டப் பந்தயம் நடக்கும். அதைத் தொடர்ந்து, மல்யுத்தம், குத்துச் சண்டை, இருவர் செய்கின்ற தனிச் சண்டை (துவந்த யுத்தம்) நடக்கும்.

இவ்வாறு நான்கு நாட்கள் நடந்து முடிந்த பந்தயங்களைவிட, ஐந்தாம் நாள் நடக்கும் போட்டிகளே உண்மையான உடல் திறமைக்கும், உடல் வலிமைக்கும் நெஞ்சுரத்திற்கும், சோதனைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கின.

போர்க்களத்திலே ஒரு வீரன் தன்னைக் காத்துக் கொள்வதற்காக அணிந்துகொள்ளப் பயன்படுத்துகின்ற கவச உடைகளான. இரும்பாலான தொப்பி மார்புக் கவசம், கால் கைகளுக்குரிய ஆடைகள் அத்தனையையும் அணிந்து கொண்டு, தாண்டுதல், எறிதல், ஓடுதல் முதலிய ஐந்து போட்டிகளிலும் பங்கு பெறவேண்டும்.

இவ்வாறு ஒலிம்பிக் பந்தயங்கள், வடக்கே மலையும், தெற்கில் ஆல்பியஸ் என்ற ஆறும், மேற்கில் கிலாடஸ் என்ற ஆறும் அணி செய்ய, அமைந்துள்ள ஒலிம்பியாவின் கிழக்குப் பக்கமாக உள்ள ஹிப்போடிராம் என்ற பந்தயப் பாதையில்தான் குதிரைப் பந்தயம் தேர்ப் பந்தயம் நடக்க ஐந்து நாட்கள் சிறப்பாகவும் செழுமையாகவும் நடந்தன என்று வரலாற்றுச் சான்றுகள் விரித்துரைக்கின்றன.

13. பிறந்த மேனியுடன் போட்டி

ஒலிம்பிக் போட்டியில் ஓடிய, தாண்டிய வீரர்கள் அனைவரும் பிறந்த மேனியுடனேயே போட்டியிட்டனர் என்றால் நமக்கு ஒரே வியப்பாக இருக்கிறதல்லவா! பைத்தியக்காரர்கள் என்று நமக்குப் பேசத் தோன்றுகிறதல்லவா! நமக்கு வியப்பாக இருப்பது அவர்களுக்கு அது வியப்பாக இல்லை, ஏன்? வெட்கமாகக்கூடத் தோன்றவில்லை. தங்களுக்கு அதுதான் கௌரவம் என்றே எண்ணி திருப்தியுற்றனர்.

கேவலம் மானத்தைக் காக்கும் உடை கூடவா இல்லை என்றால், அவர்களுக்கில்லாத ஆடையா! பின் ஏன் அவர்கள் பிறந்த மேனியுடன் நிர்வாணமாகப் பந்தயத்தில் பங்கு கொண்டனர்? அதுதான் அவர்களின் குறிக்கோள். தாங்கள் பெற்றிருக்கும்பெருமைமிக்க உடலின் பேரழகை, கலையழகு சொட்டும் கட்டுமஸ்தான தேகத்தை, தான் ரசித்து அனுபவிப்பது போலவே, மற்றவர்களும் காண வேண்டும் ரசித்து மகிழ வேண்டும் என்று விரும்பினர்.

உடலழகை ஊரே பேணுகின்றது! அவரவர் காத்த உடல் அழகை, ஆடை மறைக்காத ஆற்றலுள்ள தேகத்தை, அத்தனை மக்களும் அப்படியே கண்டு ரசிக்க வேண்டும் என்றே எண்ணினர். மத சம்பந்தப்பட்ட விழாவாக இருந்தாலும், உடல் வலிமைக்கும் உகந்த விழாவாக அது இருந்ததால், நாடே ஏற்றுக் கொண்டது, போற்றி நின்றது.

ஆண் இனம் போற்றியது என்றால், பெண் இனம் என்ன செய்தது? தடையை ஏற்றுக் கொண்டது. பெண்கள் யாரும் பந்தயக் களத்திற்குள்ளே நுழையவே அனுமதிக்கப்பட வில்லை. பின், போட்டியாளர்களாக எப்படி உள்ளே நுழைய முடியம்?

நாடே கோலாகலமாகக் கொண்டாடி மகிழும் போது வீரர்களைப் பெற்றெடுத்த வீராங்கனைகள். வீர மூட்டி விவேகம் ஊட்டி, வீரர்களை அல்லும் பகலும் காத்து வளர்த்த அன்னைமார்கள் அனைவரும். வீட்டிற்குள்ளேயே ஏங்கிக் கிடந்தனர். ஓங்கி உயர்ந்த புகழில் ஒலிம்பிக் பந்தயம் நடக்கும் போது உள்ளத்தில் ஏக்கத்தோடு ஒதுங்கிக் கிடந்த பெண்கள், மறைந்திருந்தாவது பார்க்கக் கூடாதா என்றால், ஏமாற்றிப் பார்க்கும் பெண்களுக்கு என்ன தண்டனை தெரியுமா? மரண தண்டனை!

விளையாட்டை வேடிக்கைப் பார்க்கச் செல்லும் வீரத்தாய்க் குலத்திற்குப் பரிசு-மரண தண்டனை! அதுவும் எப்படி என்றால், குற்றவாளியாகக் கருதப்பட்ட பெண்ணை மலையுச்சிக்குக் கொண்டு போய், அங்கிருந்து கீழே தூக்கி எறிந்து விடுவார்கள். உடல் சிதறிப் போகும் மரண தண்டனையை மாபாவிகள் நிறைவேற்றியதால்தான் அந்தத் திடல் பக்கம் போகவே அனைவரும் அஞ்சினர். அடங்கினர்.

அச்சம் எத்தனை நாள் ஆட்டிப் படைக்கும்? காலம் எத்தனை நாள் கொடுமையை செய்யும்? தடைகள் எத்தனை நாள் வழியை அடைத்து நிற்கும்? போட்டியிட வழியில்லை பார்வையாளராக வரும் பாக்கியம் கூட இல்லையே என்ற அப்பாதையை மாற்றினாள் ஒரு பெண், மரண தண்டனையை வெறும் தூசி என்று எண்ணி அரங்கிற்குள் நுழைந்து விட்டாள் ஆண் உடையோடு. மாற்றுடை போட்டு வேடமேற்று வந்த அந்த மங்கையை யாரும் கவனிக்கவில்லை. உள்ளே சென்று எல்லோரும் அமர்ந்திருக்கும். இடத்தில் உட்கார்ந்து, நிகழ்ச்சிகளில் மனம் லயித்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

குத்துச் சண்டைப் போட்டித் தொடங்கி விட்டது. பிசிடோரஸ் என்ற பெயருள்ள வீரன் போட்டியில் கலந்து கொண்டான். அவன் செய்த சண்டை எல்லோருக்கும் மயிர் சிலிர்க்க வைக்கக் கூடியதாக இருந்தது. தன் எதிரியை எளிதாக மட்டும் அல்ல. இலாவகத்தோடும் சண்டையிட்டு மாபெரும் வெற்றியும் பெற்று விட்டான்.

பார்வையாளர் பகுதியிலே, மாறு வேடத்தில் பதுங்கியிருந்த மங்கைக்கோ அளவில்லாத ஆனந்தம்! ஆனந்தம் மிதமிஞ்சி வெறியாகியது. அந்த வெறி தந்த ஆவேசத்தினால், தன்னை இழந்தாள். தன் நிலையை மறந்தாள், ஓடிப் போய் அவனை ஆரத் தழுவிக் கொண்டாள். ஆசை தீர முத்தமிட்டாள், அவள் நடந்து கொண்ட ஆவேச நிலையிலே; அவள் தலைப்பாகைக் கலைந்தது. ஒப்பனை உருவிழந்தது. ஆண் பெண்ணானது கண்டு அந்த அரங்கமே. அதிர்ச்சியுற்றது, ஆத்திரமடைந்தது.

ஆமாம்! பெண்ணொருத்தி உள்ளே புகுந்து விட்டாள் என்றதும், பிரளயமே வந்து விட்டது போன்ற ஓர் உணர்வு மக்கள் மருண்டனர். மயங்கினர். பரிதாபத்திற்குரிய பெண்ணைப் பலமுறை பார்த்தனர். தானாகவே சாவைத் தேடி வந்த தையலைக் கண்டு ஆத்திரப்பட்டவர் பலர். அனுதாபப்பட்டவர் சிலர்.

அதிகாரிகளின் முன்னே நிறுத்தப்பட்டாள் அந்தப் பெண். மரண தண்டனை நிச்சயம் என்ற முடிவுக்கே எல்லோரும் வந்து விட்ட நேரம், மங்கையோ, மாணவாக்கு மூலம் போல, தன் கதையைக் கூறத் தொடங்கினாள். அதிகாரிகளும் குறுக்கிடவில்லை.

என் பெயர் பிரன்ஸ், போட்டியில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற பிசிடோரஸ் என் மகன், என் தந்தை. தயாகரஸ் மற்றும் என் சகோதரர்கள் அனைவருமே ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெற்ற வீரர்கள்தான். வெற்றி வீரர் பரம்பரையில் வந்த எனக்குக் கணவனாக வாய்த்தவரும் பெரிய வீரர்தான். அவர், தன் மகனை ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி வீரனாக்கி விடவேண்டுமென்ற ஒரே குறிக்கோளோடு உழைத்தார். இராப்பகலாக, உழைத்தார். ஆனால், அதற்குள் என் கணவர் அகால மரணமடைந்துவிட்டார்.

அவருடைய நோக்கத்தை, குறிக்கோளை நிறைவேற்றினால்தான் என் மனம் சாந்தியடையும், அவர் ஆத்மாவும் சாந்தியடையும். ஆகவே, அவர் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டு, என் மகனுக்கு தினமும் பயிற்சியை நான் கொடுத்தேன். அவனைப் பந்தயத்திற்கும் அனுப்பி வைத்தேன். அவன் எவ்வாறு சண்டை செய்கிறான் என்பதைப் பார்க்க எனக்கு ஆவல் எழுந்தது. அதை சட்டம் தடுத்தது. இருந்தாலும், என்னால் சட்டத்தை மீறாமல் இருக்க முடியவில்லை. என் மகன் வெற்றி பெற்று விட்டான். என் கனவு நிறைவேறியது இறப்பதற்கு இப்பொழுதும் நான் தயார். மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன் மரணத்தை.

சொல்லி முடித்தாள் அன்னை தன் கதையை. என்ன சொல்ல முடியும் அவர்களால்? மன்னிக்கும் பழக்கமே இல்லாதவர்கள் கேட்டார்கள். அன்னையர் குலத்திற்கும் வீரம் உண்டா? போட்டியில் கலந்துகொள்ளுவதற்கான பயிற்சி தரும் தீரம் உண்டா? குழந்தைகளைப் பெற்றுத் தரமட்டும் தெரிந்தவர்கள் அல்லர் குலம் காக்கும் அழகு மகளிர், வீரமகளிராகவும் வாழ முடியும் என்ற உண்மையை அன்று உணர்ந்தனர். பிரனிசை மன்னித்தனர். பெரும் தடையை நீக்கி, பெண்கள் பார்வையாளர்களாக வரலாம். போட்டிகளில் பங்குபெறலாம். என்ற விதிகளையும் சேர்த்தனர்.

இந்த வீர நிகழ்ச்சிக்குப் பிறகு, பெண்களும் போட்டியிட்டனர். 128வது ஒலிம்பிக் பந்தயம் ஒன்றில், தேர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட ஒரு பெண் பெலிச்சி என்பவள் வெற்றி பெற்றாள் என்றால், பெண்களுக்குரிய ஆர்வம் எவ்வளவு என்பது புரிகிறதல்லவா! அதற்குமுன்னே பெண்களுக்கும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஹிரா என்ற இடத்தில் போட்டி நடக்கும் என்றும். 100 கெஜ ஓட்டமே நடந்தது என்றும் ஒரு குறிப்பு கூறுகிறது. தாய்ப்பாசம் தந்த வீரம், பெண்களுக்கு விடிவெள்ளிபோல் தோன்றி, ஓர் நிரந்தர நன்மையைத் தந்துள்ளதே!

14. வெற்றியும் வெகுமதியும்

இவ்வாறு ஆர்வத்துடன் உடல் அழகைப் பெருக்கி, ஆண்மையைக் காத்து, திறமையை வளர்த்து பதினோரு மாதங்கள் கடுமையான பயிற்சி செய்து, ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெற்றால் - என்ன பரிசுதந்தார்கள் என்று கேட்கலாம் பரிசு என்பது இலையும் மலரும் கொண்ட ஓர் மலர் வளையம்.

ஆலிவ் என்ற மரத்தின். இலைக்குச்சி மலர்களால் ஆன மலர் வளையம் மலர் வளையமா? இதற்கா இத்தனைப்பாடு? இதற்காகவா இத்தனைப் போராட்டம்? ஆர்ப்பாட்டம்? ஆலிவ் மலர் வளையத்திற்கா இத்தனை ஓட்டம் கூட்டம் எல்லாம்? ஆமாம்! அங்கேதான் கிரேக்கர்களின் தெய்வ பக்தியே நிறைந்து கிடக்கிறது. சிறந்து விளங்குகிறது.

புதிய ஒலிம்பிக் பந்தயத்திலே வெற்றி பெற்ற வீரர்களுக்குத் தங்கப் பதக்கங்களும், வெற்றியைத் தொடர்ந்தோர்களுக்கு வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும் கொடுக்கின்றார்கள். ஆனால், முன்னாள் ஒலிம்பிக் பந்தயத்தில் ஆலிவ் மலர் வளையம் மட்டுமே சூட்டி மகிழ்ந்தார்கள்.

ஆலிவ் மலர்வளையம் செய்யப் பயன்படுகின்ற ஆலிவ் மரங்கள். தற்போது ரூபியா என அழைக்கப் பெறும் ஆல்பியஸ் என்ற ஆற்றின் கரையிலே வளர்ந்தவை. அவை சிறப்பும் தெய்வாம்சமும் மிகுந்த சீயஸ் கோயிலின் அருகிலே வளர்ந்தமையால், மேலும் புனிதத்தன்மைபெற்று விளங்கின.

அந்த ஆலிவ் மலர் வளையத்தை மணி முடியில் தாங்கிய வெற்றி வீரன். மாபெரும் புண்ணியம் செய்தவன் என்று மக்களால் மதிக்கப் பெற்றான். பாராட்டப் பெற்றான்.

ஆலிவ் மலர் வளையம் சூட்டப்பெற்ற வீரன், அவன் பிறந்த நகரத்திலே சிறந்த பெரிய மனிதனாகக் கருதப்பட்டான். அவனுக்கு மக்கள் தந்த அன்பளிப்புகள், அரும்பரிசுகள் அனைத்தும் மலைபோல் குவிந்து கிடக்கும். நகரத்தைச் சுற்றி மதில்களும், மக்கள் நுழைந்து உள்ளே வர பெரிய வாயில்களும் உள்ள அந்நகரத்திலே இந்த ஒலிம்பிக் வீரன் உள்ளே வர பலர் பயன்படுத்தும் பாதையில் வராமல். நெடிதுயர்ந்த மதிலில் நுழைவாயில் ஒன்றை அமைத்து, தனியாக அவ்வீரனை மட்டும் வரச்செய்வார்களாம்.

இவ்வாறு தனி வழியே செல்லும் இனிய புகழ்கொண்ட அந்த எழில்மிகு வீரனுக்கு காலமெலாம் உணவும், உடையும், உறங்க இல்லமும் இலவசமாகவே கிடைக்கும். இத்தனைக்கும் மேலாக, இன்னுமொரு பெருமையும் கிடைக்கும், வெற்றி பெற்ற வீரனின் பெயரைத் தெருக்களுக்கும் சூட்டுவார்கள் நகரத்தார்கள். அவன் வாழ்க்கையிலே ஓர் உயர்ந்த நிலையை அடைந்துவிடுகிறான் என்பதைக் காணும் மக்கள், ஏன் ஒலிம்பிக் பந்தயத்திற்காக உயிரைக் கொடுத்துப் பழகமாட்டார்கள்? பயிற்சி செய்ய மாட்டார்கள்? நாடே போற்றும் நிலையை, வீரர்களிலே வெற்றி பெற்றவனைக் கண்ட ஒருவன், தன் நண்பனைப் பார்த்துக் கூறுகிறான்!

உணக்கு வந்த புகழும் பொருளும் அளவு கடந்தவை நீ வாழ்க்கையில் பெற முடியாத இன்பத்தை யெல்லாம் பெற்றுவிட்டாய், இனி நீ இறந்துபோனாலும் பரவாயில்லை என்று அவன் அடைந்த சுகத்தின் அளவை வருணிக்கும் தன்மையைப் பார்க்கும்போது, வெற்றி வீரன் பெற்ற மாபெரும் புகழ் இனிதே நமக்கு விளங்கும்.

வீரனுக்குப் புகழ் நிரம்பும், சிலை எழும்பும்... அவனைப் புகழ்ந்து பாடல்கள் பிறக்கும், இத்தனையும் வெற்றி வீரனுக்குத்தான்.

ஒலிம்பிக் பந்தயத்திலே கலந்து கொண்டு தோற்றவனுக்கு என்ன கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்? தலை குனிவுதான்; அவமானம்தான், சரிதான் கிடக்கட்டும் என்ற சமாதானம் கூட கூறவேண்டாம்!.... எவரும் ஏறெடுத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்... ஏளனப் பார்வை எதிரே வந்து அவர்களை அம்பாய் குத்தும், புன்னகை புரிவோர்கூட இருக்க மாட்டார்கள் என்ற இழிநிலை ஏற்படும், அந்த அளவுக்குத் தோல்வியை அவர்கள் எதிர்த்தார்கள். பகைத்தார்கள்.

தோற்றவர்கள் படுகின்ற பாடுதான் அவர்களுக்குத் தெரியுமே! தோல்வியை வீரர்கள் தாங்கிக் கொண்டாலும் அவன் வசிக்கின்ற நகர மக்கள் விரும்ப மாட்டார்கள். தோல்வியைத் தாங்கிக் கொள்ள மாட்டார்கள் என்று போட்டியிடும் வீரர்களுக்கும் தெரியும்! சீயஸ் கோயில் முன்னே, பன்றி ரத்தத்தைத் தொட்டு, நாங்கள் வெற்றி பெறுவதற்காகக் குறுக்கு வழியை, கீழ்த்தரமான செய்கைகளைப் பின்பற்ற மாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தாலும்கூட, ஒரு சிலர் வெற்றி பெறுவதற்காக குறுக்கு வழியைக் கையாளாமல் இல்லை.

98வது ஒலிம்பிக் பந்தயம் நடந்தபோது ஒரு நிகழ்ச்சி, குத்துச் சண்டையில் கலந்து கொண்ட எபிலஸ் என்ற வீரன், தன்னுடன் போட்டியிடுவதற்காக இருந்த மூன்று வீரர்களுக்கு. லஞ்சம் கொடுத்து, தன்னுடன் போட்டியிட வேண்டா மென்றும், தன்னை வெற்றி வீரனாக (Champion) ஆக்கி உதவ வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டான்.

பணம் வாங்கிக் கொண்டு; அவர்களும் ஒதுங்கிக் கொண்டார்கள், இந்தச் செய்தி, அதிகாரிக்குத் தெரிந்து விட்டது. அவனை அவமானப்படுத்தியதோடு மட்டுமல்ல. அவனுக்குப் பெருந்தொகை ஒன்றையும் அபராதமாகவும் விதித்தார்கள்.

இவ்வாறு குறுக்கு வழிகளைக் கையாண்டகோணல் மதி கொண்ட வீரர்களிடம், கொடுமையான முறையில் அபராதத்தை வசூலித்தார்கள். வசூலித்தத் தொகையை செலவழித்து, குற்றம் செய்த வீரர்களைப் போலவே சிலைகளை செதுக்கி, ஒலிம்பிக் பந்தயக் களத்தின் தலைவாசலிலே வரிசையாக நிறுத்தி வைத்தனர்.

1300 ஆண்டுகள் ஒலிம்பிக் பந்தயம் நடந்தாலும், இவ்வாறு அபராதம் தந்து சிலை வடிவானவர்களின் எண்ணிக்கை 13பேர் தான் என்று நாம் அறியும்போது, குறுக்கு வழியை யாரும் அதிகமாக விரும்பவில்லை என்றே உணர முடிகிறது. இதுபோன்ற சிலைகளுக்கு சேன் (Zane) என்று பெயர். இவ்வாறு சிலை அடைத்ததன் நோக்கம். இத்தகைய அலங்கோலமான, அவமானகரமான சிலைகளைப் பார்க்கும் போதாவது, மற்ற வீரர்கள் மனிதப் பண்பாட்டுடனும் வீரப் பெருந்தன்மையுடனும் நடந்து கொள்வார்கள் என்று நம்பியே, அயோக்கியர்களுக்கும் இந்நாட்டினர் சிலை அமைத்தனர்.

அதிகாரிகள் மட்டும் சிலை சமைக்கவில்லை. நாட்டு மக்களும் தாங்கள் விரும்பிய வீரனுக்கு, அவன் உண்மையாக போரிட்டாலும், தவறினை இழைத்துச் சண்டையிட்டாலும் சரி, எதற்கும் கவலைப்படாமல் சிலை அமைத்தார்கள், அதற்கும் ஒரு வரலாறு உண்டு.

தவறாகவே போட்டிகளில் போட்டியிடுவான் என்பதற்காக, தியாஜனிஸ் என்பவனை ஒலிம்பிக் பந்தயங்களிலிருந்தே பங்கு பெறாமல் நீக்கி வைத்திருந்தார்கள் அதிகாரிகள் ஆனால், அவன் ஆற்றலையும் வெற்றிபெறும் விவேகத்தையும் கண்ட அந்நகர மக்கள், அவனுக்கு சிலை ஒன்றைச் செய்து வைத்திருந்தார்கள்.

அந்தச் சிலையைக் கண்டு, ஆத்திரமடைந்த ஒரு வீரன், ஏற்கனவே தியாஜனிசிடம் தோற்றவன் தான். அவனுக்கா சிலை என்று ஆத்திரம் கொண்டு இரவிலே சென்று, அச்சிலையை உதைத்து உடைத்தான். உடைந்துபோன அச்சிலை, அவன்மீதே விழ, அவன் அதே இடத்திலே நசுங்கி இறந்து போனான். அதைக் கண்டு, சிலையான பிறகும் கூட, தன் எதிரியைக் கொன்று வீழ்த்தும் ஆற்றல் தியாஜனிசிடம் தான் உண்டு. என்று கூறி அந்நகர மக்கள் மகிழ்ந்தனராம். எப்படி கதை!

இந்தப் பயங்கரப் போட்டியிலே, இதற்குமுன் நடந்திருந்த ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி வீரனாகத் திகழ்ந்த அரேசியன் என்பவன். இந்தப் பந்தயத்திலும் கலந்து கொண்டு, மீண்டும் வெற்றி பெறத் துடித்துக் கொண்டிருந்தான். போட்டி ஆரம்பமாயிற்று. இருவரும் வீராவேசத்தோடும், இரைமீது பாய்கின்ற புலிபோலும் போரிட்டனர்.

அரேசியன் தான் பலவானாயிற்றே! ஆகவே, அவன் தன் எதிரியின் காலைப் பிடித்துக் கடுமையாக முறுக்கிக் கொண்டிருந்தான். எதிரியோ, அவன் கழுத்தைப் பிடித்து அழுத்தி நெறித்துக்கொண்டிருந்தான். அந்தப்பிடி இறுகியதன் காரணமாக, அரேசியன் அதே இடத்தில் இறந்துபோனான். அதே சமயத்தில், அவனது கைகள் எதிரியின் காலை வலிமையாகப் பிடித்து முறுக்கியதால், வலி பொறுக்க மாட்டாத எதிரி, தன் கையை உயரே தூக்கித் தன் தோல்வியை ஒப்புக் கொண்டான். எனவே, இறந்தவன் போட்டியில் வெற்றி பெற்றான் என்று அதிகாரிகள் தீர்ப்புக் கூறினர். எப்படி இருக்கிறது முடிவு?

வெற்றிபெற வேண்டும் என்று வீரமாக வந்து, அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டப் பின்னும், நாளைக்குக் குத்துச் சண்டைப் போட்டி உண்டு என்று அறிந்ததும் இரவோடு இரவாக ஒலிம்பியாவை விட்டே ஓடிவிட்டான் என்றும், அவன்பெயர் சாராபியன் என்றும் ஓர் சரித்திரக் குறிப்புக் கூறுகின்றது.

ஆகவே, கோழையான வீரர்களும்கூட அக்கூட்டத்திலே இருந்திருக்கின்றனர் என்பது புரிகிறது.

போட்டியிலே கலந்துகொள்ள வந்துவிட்டால், எக்காரணத்தைக் கொண்டும் பின் வாங்கக்கூடாது. இந்த விதியை மீறினால், 1500க்கு மேற்பட்ட ரூபாய்களை அவர்கள் அபராதமாகக் கட்டவேண்டும். அவனால் அபராதத்தைச் செலுத்த முடியவில்லை என்றால் அவனிருக்கின்ற நகரம் அந்தப் பணத்தைக் கட்டவேண்டும். நகரத்தினரும் கட்ட மறுத்தால், ஒலிம்பிக் பந்தயத்திலிருந்தே அந்நகரம் ஒதுக்கி வைக்கப்படும் என்ற விதி கடுமையாகப் பின்பற்றப் பட்டிருக்கிறது.

ஒலிம்பிக் பந்தயத்திலே வெற்றி பெற்ற வீரர்கள் அனைவரும், நாட்டின் புகழ் மிக்க நாயகர்களாக விளங்கினர் அவர்கள் இறந்துபோன பிறகுங்கூட சிறு தெய்வங்கள் பெறுகின்ற வழிபாட்டினைப்போல, வழிபாட்டையும் வணக்கத்தையும் மக்களிடமிருந்து பெற்றனர்.

வெற்றி பெற்ற வீரன் வசிக்கின்ற நகரம் அல்லது அவன் வாழ்கின்ற நகர எல்லை முழுவதும் கடவுள்களின் பெருங்கருணை எப்பொழுதும் பொழிகின்ற நிலமாக விளங்கும் என்பது மக்களின் நம்பிக்கை, புனித ஆலிவ் மலர் வளையத்தோடு தான் பிறந்த நகரத்திற்கு வருகின்ற வீரனை, அந்நகர மக்களே ஆரவாரத்துடன் வரவேற்பு தந்து வாழ்த்துரைப்பார்கள் அவர்கள் தரவில்லையென்றாலும்கூட அதுபோன்ற ஆனந்தமயமான கோலாகலமான வரவேற்பை ஒலிம்பிக் வெற்றி வீரன் எதிர்ப்பார்ப்பதும் உண்டு.

சிபாடஸ் என்ற ஒரு வீரன். 6வது ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றிபெற்றுத் தன் தாயகம் திரும்பினான். அவ்வீரனைக் கண்டு யாரும் எதிர்கொண்டு அழைக்கவில்லை, வரவேற்கவில்லை. வாழ்த்தொலி எழுப்பவில்லை. மலர்மாரித் தாவவில்லை. மனம் திறந்து அழைக்கவில்லை. ஆத்திரம் கொண்ட அவ்வீரன், தன் நகரத்தைச் சபித்துவிட்டான். விளைவு என்ன தெரியுமா? அவன் இட்ட சாபம் 74வது ஒலிம்பிக் பந்தயம் நடக்கும்வரை தொடர்ந்து வந்தது.

அசையா என்ற அந்த நகரத்தில் இருந்து ஒரு வீரனால் கூட ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றிபெற முடியவில்லை வீரன் வயிற்றெரிச்சலோடு இட்ட சாபமல்லவா அது சாபம் நின்று பேசியது எத்தனையோ முயன்றும் வெற்றியே அந்த நகரத்திற்குக் கிடைக்கவில்லை.

இந்த விவரம் அறிந்த அந்நகரத்திலுள்ள பெரியவர்கள் ஒன்றுகூடி, டெல்பி என்ற இடத்திற்குச் சென்று ஆண்டவனை வணங்கிக் கேட்டு என்ன காரணம்? என்று அறியத் துடித்தனர். அங்கிருந்து அசரீரீ ஒன்று எழுந்தது. அதன்படியே, சாபம் இட்ட வீரனான சிபாடஸுக்கு அந்நகர மக்கள் சிலை ஒன்றை அமைத்தனர். அதற்குப் பிறகு வந்த, அடுத்த ஒலிம்பிக் பந்தயத்திலேயே, ஓட்டப் பந்தயத்தில் சாஸ்தரதாஸ் என்ற வீரன் வெற்றி பெற்றான் என்று ஒரு நிகழ்ச்சி நவில்கின்றது. செத்தும் சிலை பெற்றான் சிபாடஸ்.

 15.வலிமையும் திறமையும்

ஒலிம்பிக் பந்தயம் மத சம்பந்தமான நிகழ்ச்சி என்று முன்னரே குறிப்பிட்டோம். அதே நேரத்தில், உடல் வலிமைக்கும் உன்னத இடத்தை அளித்து, உயர்ந்த நோக்கத்தோடு இயங்குகின்ற ஒப்பற்ற பந்தயம் என்றும் கூறினோம். அவ்வாறு உடல் வலிமை பெற்று வாழ்ந்த வீரர்கள் ஒரு சிலரைப்பற்றி வரலாறுகள் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன.

போலிடோமஸ் என்ற வீரன் ஒருவன், வெறுங்கையாலேயே ஒரு சிங்கத்தை அடித்துக் கொன்றான் என்றும், காலாலேயே ஒரு காளை மாட்டை மிதித்துக் கொன்றான் என்றும், வெகுவேகமாக ஓடிய தேரை பின்னிருந்து இழுத்து நிறுத்தினான் என்றும் வரலாறு கூறுகின்றது. அது உண்மையோ பொய்யோ, எப்படி இருந்தாலும் உடல் வலிமைக்கு அவர்கள் மிகவும் முக்கியத்துவம் அளித்தனர் என்பது மட்டும் நமக்கு நன்கு புலனாகின்றது.

உடல் வலிமையால் மட்டுமல்ல, உணவு உண்ணுவதிலும்கூட அவர்கள் பெரிய அசகாய சூரர்களாகத்தான் திகழ்ந்திருக்கின்றனர். கி.மு. ஆறாம் நூற்றாண்டில். மிலோ என்ற ஓர் மல்யுத்த வீரன் 6 முறை ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெற்றவன். அவன் ஒருவனே, ஒரு காளை மாடு முழுவதையும் ஒரே சமயத்தில் தின்றான் என்றும் கூறுகின்றனர்.

இவ்வாறு வலிமைக்கு முதலிடம் கொடுத்துப் போட்டியை வைத்துக் கிரேக்கர்கள், மிருகங்கள் போல சில சமயங்களில் வெறித்தன்மையோடு, விளையாட்டுக்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஒரு சமயம், ஒன்பது மைல் தூரம் உள்ள தேர்ப் பந்தயப் போட்டியில் கலந்துகொண்ட நாற்பது பேர்களில், பந்தயத்தின் கடைசிக் கோட்டைக் கடந்தவன் அதாவது உயிரோடிருந்தவன் அர்சிலஸ் என்ற ஒரே ஒரு வீரன்தான். மீதி முப்பத்தொன்பது வீரர்களும், வரும் வழியிலேயே தேர்ச்சக்கரங்களினால் இடிபட்டும், கீழே வீழ்ந்தும் தேரிலிருந்து வீழ்ந்து மிதிபட்டும், இறந்து ஒழிந்தனர். இவ்வாறு நசுங்கிச் சாகும் முரட்டுத்தனமான பந்தயங்களிலும் கூட அவர்கள் அதிக ஈடுபாடு காட்டியுள்ளனர்.

இவ்வாறு நாட்டின் தற்காப்புக்காகவும், நாட்டு மக்களின் நல்லெழில் நிறைந்த உடலழகுக்காகவும், உறுதிக்காகவும், மதத்தோடு இயைந்த பக்தி வாழ்க்கை வாழ்வதற்காகவும் ஒலிம்பிக் பந்தயங்கள் உண்டாயின. தோன்றியதன் பணியை, பந்தயங்களும் பாரபட்சமற்ற முறையில் நாட்டினருக்கும் செய்தன. கிரேக்க நாடு கீர்த்தியுடனும், செழிப்புடனும் செம்மாந்த நிலையில் வாழ்ந்த வரைக்கும், ஒலிம்பிக் பந்தயங்கள் பீடும் பெருமையும் பெற்றுத்தான் விளங்கின. ஆனால், காலம் தன் கோலத்தை செய்யத் தொடங்கியது. அதன் விளைவு....?

ஒலிம்பியாவில் நடந்தது வெறும் விளையாட்டுப் பந்தயங்கள் மட்டுமல்ல. வேடிக்கையாகப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மட்டும் அல்ல; அவை ஆண் மக்களின் திறமைக்கும், வலிமைக்கும் உரைகல்லாக இருந்தன. நாட்டு மக்களின் நலத்தைக் காக்கும் நிறைகளமாக விளங்கின.

அந்தப் பந்தயங்களிலே மாபெரும் மன்னர்கள் மட்டுமல்ல; வாழ்க்கையின் அடிமட்டத்தில் வாழ்ந்த குடிமக்கள் வரை சமமாகப் பங்கு பெற்று போட்டியிட்டனர், வெற்றி பெற்றனர். விரும்பிய புகழ் பெற்றனர்.

முதன் முதலாக நடந்த ஒலிம்பிக் பந்தயத்திலே வெற்றிபெற்ற வீரனின் பெயர் எல்லிஸ் நகரத்தைச் சேர்ந்த கரோபஸ் என்பதாகும். அவன் செய்த தொழில் சமையல், சமையல்காரனாக வாழ்ந்த கரோபஸ், உணவை மட்டும் சமைக்க கற்றுக் கொண்டிருக்கவில்லை. உடலையும் சீரும் சிறப்புமாக அமைக்கக் கற்றுக் கொண்டிருந்தான். வெற்றி பெற்றான். சாதாரண குடிமகன் அவன் மட்டுமா வெற்றி பெற்றான்?

பேரறிஞர் என்று புகழப்பட்ட பிளேட்டோ கூட தன் இளமை வாழ்வில் ஒரு முறை மல்யுத்தப் போட்டி ஒன்றில் வெற்றி வீரராக வந்து பரிசு பெற்றிருக்கின்றார்.

சாம்ராஜ்யத்தைக் கட்டிக் காத்த, நம்மால் மகா அலெக்சாந்தர் என்று வருணிக்கப்பட்ட அலெக்சாந்தர்கூட போட்டியிட்டுத் தோற்றிருக்கிறார். யார் தோற்றார் யார் வென்றார் என்பது அங்கு பிரச்சினை இல்லை. திறமைதான் அங்கு ஆட்சி செய்தது.

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டின் மத்தியிலே, பெரிய சரித்திர ஆசிரியரான கிரடோடசும் தத்துவ மேதையான சாக்ரட்டீஸீம் பெருங்கவியான பிண்டாரும், சீயஸ் என்ற கடவுளின் சிலையை செதுக்கிய ஓவிய மேதையான பிடிலசும் உலவிய இடத்திலே. மாமன்னன் அலெக்சாந்தரும் மகாகர்வம் நிறைந்த நீரோ மன்னனும் பங்கு பெற்ற பந்தயக் களத்திலே, தனி மனிதனின் திறமையே கொடிகட்டிப் பறந்தது. திறமையை மட்டுமே வாழ்த்தினர். வரவேற்றனர், சிலையாக்கினர், சிறப்புமிக்கப் பாடல்களில் புகழ்ந்தனர்.

சிறந்த உடல் உள்ளவர்களால்தான் சிறந்த கலைகளையும், சிறப்பான இலக்கியங்களையும் உருவாக்க முடியும் என்று தமிழினம் காட்டிய வரலாற்றுக்கு, இன்னும் ஒரு சான்று கிரேக்க இனந்தான். வளமான உடலில்தான் வளமான மனம் வாழும், வளரும், உண்மைதானே!

ஒன்றுக்கொன்று பகை நாடாக இருந்தாலும் கூட ஒலிம்பிக்பந்தயத்திலே ஒற்றுமையும் அமைதியுமே ஓங்கி இருந்தது. பங்கு பெற்றவர்கள் பயமில்லாமல் வாழ்ந்தனர், பகையில்லாமல் பழகினர். போட்டி நிகழ்ச்சிகளிலே பொருதினர்.

பந்தயங்களிலே படபடப்பு இருந்தது பரபரப்பு இருந்தது. உணர்ச்சி மயம் நிறைந்து இருந்தது உற்சாகம் பொங்கி வழிந்தது. வெற்றி பெற்றவர்கள். சிரித்தார்கள். ஆனந்த வெறியிலே விழுந்து புரண்டார்கள் தோற்றவர்கள் துடித்தார்கள். துவண்டார்கள். அழுதார்கள். கூனிக்குறுகிப் போனார்கள். போட்டியாளர்கள் மட்டுமல்ல - பார்வையாளர்கள் கூட தோற்றவர்களுக்காக அழுதார்கள். வெற்றி பெற்றவர்களுக்காக கைதட்டி மகிழ்ந்தார்கள், விண்ணளாவக் கத்தி வாழ்த்தினார்கள்.

இவ்வாறு, ஒலிம்பிக் பந்தயம் முழுவதும் உணர்ச்சி மிக்கக் கலை வண்ணமாகவே திகழ்ந்தது. எத்தனையோ பகுதிகளிலிருந்தும், பட்டி தொட்டிகளில் இருந்து மூலை முடுக்குகளில் இருந்தும் வீரர்கள் போட்டியிட வந்தார்கள். அவர்கள் வந்த பகுதியை, வாழ்ந்த இடத்தை மறந்து, ஒலிம்பியா பந்தயக் களத்திற்குள் நுழைந்தவுடன் தன்னையே மறந்து, தான் ஒரு ஒலிம்பிக் வீரன் என்ற ஒரே நினைவுடன் ஒரே இனத்தவராக மாறிவிட்டனர். இறைவனது திருப்பெயரைக் கூறி, தன் திறமையை வெளிப்படுத்த முனைந்தனர் என்ற அளவிலேதான் ஒலிம்பிக் பந்தயங்கள் நடந்து வந்தன. இன்பங்களை அள்ளித் தந்தன.

16 கிரேக்க பந்தயங்களின் வீழ்ச்சி

உதயமாகி, ஒளிதந்து, உலகைக் காத்து, ஓப்பற்ற மகிழ்ச்சியில் மக்களை ஆழ்த்திய சூரியன், ஒளி குறைந்து உலகைவிட்டே மறைந்து போவதுபோல், கற்பனையில் காணுகின்ற இன்பங்கள் அனைத்தையும் கண்ணெதிரே கொண்டுவந்து நிறுத்தி, காட்சியாக்கி, மாட்சிமை நிறைந்த மனிதகுலத்தின் சக்தியை மன்பதைக்கு, வெளிப்படுத்திக் களித்த கிரேக்க மக்களுக்குக் காலம் கடும் சோதனையைக் கொடுத்தது.

அருகே இருந்த ரோமானிய சாம்ராஜ்யம் புகழிலும், பெருமையிலும், வலிமையிலும், வாழ்க்கைத் தரத்திலும், நாகரிகத்திலும் மேம்பாடடையத் தொடங்கிய போது கிரேக்க நாடு பீடிழந்தது. பெருமையிழந்தது. ஆமாம். கிரேக்கர்களை வென்று, ரோமானியர்கள் ஆளத் தொடங்கினர். நாட்டின் சரித்திரப் பெருமை சிறப்பாற்றல் நலியத் தொடங்கவே, மக்களின் மனதிலே மாபெரும் பெருமையுடன் உங்கலப் பொருளாய் வீற்றிருந்த விளையாட்டுக்களின் மகிமையும் நலியத் தொடங்கியது.

விளையாட்டுக்களிலே மக்கள் எவ்வளவு ஆர்வம் கொண்டிருந்தனர் என்பதை நாம் அறிந்திருந்தாலும், இதோ இந்த சான்றினைப் படித்துப் பாருங்கள். விளையாட்டு வீரர்களின் திறமையைக் கேளுங்கள்.

எல்லா வீரர்களுமே, எல்லா போட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றனர். போட்டியிடுகின்ற அத்தனை வீரர்களுக்கும், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இந்த நிகழ்ச்சிதான் வரும் என்பதே தெரியாது. வரையறையோ, விதிமுறையோ கிடையாது என்றாலும், அவர்கள் ஆர்வத்துடன் அயராது போட்டியிட்டனர். அந்த அளவுக்கு, அவர்களுக்கு உடலில் நெஞ்சுரமும், பேராற்றலும் நிறைந்திருந்தன.

முதலாவதாக, எல்லோரும் நீளத்தாண்டலில் பங்கு பெற்றனர். அதிலே குறிப்பிட்ட அளவு தாண்டியவர்கள் மட்டுமே தேர்ந்து எடுக்கப்பட்டனர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே வேலெறியும் போட்டியில் (Javelin Throw) கலந்து கொள்ள அனுமதிக்கப் பெற்றனர். விரைவோட்டத்திற்குத் (Sprint) தேர்வு செய்யப் பெற்றனர்.

இவ்வாறு ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் முதலாவதாக வந்தவர்களைத் தேர்ந்தெடுத்தவர்கள், விரைவோட்டம் ஓடியபிறகு, மூன்று பேரை மட்டுமே சிறந்தவர்கள் என்ற தெரிவு செய்தனர். இவ்வாறு முன்னால் ஓடிவந்த மூன்றுபேர் மட்டுமே நான்காவது நிகழ்ச்சியான தட்டெறியும் (Discus Throw) போட்டிக்கு அனுமதிக்கப் பெற்றனர். இந்நிகழ்ச்சியிலும் இறுதியாக அதிக தூரத்தை எறிந்த இருவரும் வெற்றி வீரர்களாகக் கருதப்பட்டனர்.

இந்த இருவரும் வெற்றி வீரன் (Champion) எனும் விருதைப்பெற மல்யுத்தம் செய்தனர் அதில் வெற்றி பெற்றவனே வீரன் என அழைக்கப் பெற்று பாராட்டப் பெற்றான், பரிசளிக்கப் பெற்றான்.

ஆக, ஒரு போட்டியிடும் உடலாளன் (Athlete) வெற்றி, வீரனாக வர, அவன் நீளத் தாண்டல், வேலெறிதல், விரைவோட்டம் ஓடுதல், தட்டெறிதல், மல்யுத்தம் செய்தல் என்ற ஐந்து நிகழ்ச்சிகளிலும் வெற்றி பெறவேண்டியிருந்தது.

இவ்வாறு மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்ற ஒரு வீரனுக்குப் பரிசு மட்டும் அல்ல. சிறப்புப் பரிசும் தந்து கெளரவித்தார்கள். அதுதான் அவனைப் போன்ற சிலை சமைத்துப் பெருமைப் படுத்தியது.

இத்தகைய பெருமை மிக்க விளையாட்டுக்களை நடத்திய கிரேக்க நாடு, ரோமானியர்கள் கையிலே பிடிபட்டுப் போனவுடன் புகழிலே மட்டும் கீழ் நிலையடையவில்லை. தூய கலப்பற்ற கிரேக்கர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். என்று காக்கப்பட்டு வந்த கடுமையான விதி, தூள் தூளாகப் பொடிபட்டுப் போக தூக்கி எறியப்படுவதையும், மணியான மரபு மண்ணாகிப் போவதையும் கண்டு சகித்துக்கொண்டு மாற்றார்களையும் போட்டிக் களத்திற்குள் புகவிட்டு இழிநிலைக்கு ஆளாயினர். கிரேக்கர்களுக்கு மட்டுமே உரிமையாக இருந்த பந்தயம், மெசபடோமியா, ரோம் போன்ற வேற்று நாட்டு வீரர்களுக்கும் பொதுவாகிப் போனது.

அடிப்படை விதியே ஆட்டம் காணத் தொடங்கியபோது, அங்குள்ள மக்களும் ஆர்வமிழக்கத் தொடங்கினர் விளையாட்டுக்களில் முன்பிருந்த ஆர்வம் மட்டுமல்ல. மத சம்பந்தமான மரபும் புனிதத் தன்மையும் வீழத் தொடங்கின. நாடும் வலிமையை இழக்கத் தொடங்கியது. உள் நாட்டு பாசி படியலாயிற்று. பந்தயங்களில் கலந்து கொள்ளக் கூடிய விதிமுறைகளைப் பற்றியே, போட்டியாளர்கள் கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினர். அதாவது மாறுபட்ட முறையில்!

போட்டியில் பங்கு பெற பத்து மாதங்கள் பயிற்சி செய்ய வேண்டும் என்பது அந்த விதி! அவ்வாறு பத்து மாதங்கள் பயிற்சி செய்யவேண்டும் என்றால், அவனால் வேறு எந்த வேலையும் செய்யமுடியாது. அதற்குத் தேவையான பொருளாதார வசதியும் வேண்டும், பயிற்சிக்குப்பிறகு தேவைப்படுகின்ற ஓய்வைப் பெறுகின்ற நலமார்ந்த குடும்பச் சூழ்நிலையும் துணைதர வேண்டும். இத்தனையும் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஆர்வத்துடன் ஒலிம்பிக் பந்தயங்களில் பங்கு பெற விரும்பும் ஒரு போட்டியாளனுக்கு ஆகின்ற செலவு முழுவதையும் அவனோ அல்லது அவனது குடும்பமோதான் ஏற்றுக்கொள் வேண்டியிருந்தது.

பயிற்சிக்கு மட்டுமல்ல, அவன் ஒலிம்பிக் பந்தயங்களுக்குப் போய் வருகின்ற செலவைக் கூட அந்தத் தனி மனிதனேதான் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இவ்வாறு, பயிற்சிக்கும் பந்தயம் நடக்கும் ஒலிம்பியாவுக்கும் போய்வர செலவழித்து, போட்டி ஒன்றில் வெற்றி பெற்றால், அந்த வெற்றியை ஆர்ப்பாட்டமாக, ஆனந்தத்துடன் கொண்டாட வேண்டுமென்றால், அந்தக் கொண்டாட்டத்திற்காகும் செலவைக்கூட, அவனே தான் ஏற்க வேண்டிய நிலையில் அந்நாளில் அவன் இருந்தான். இந்தச் செலவை, கஷ்டத்தை மட்டுமா போட்டியாளர்கள் நினைத்தார்கள்? இன்னும் என்னென்னமோ நினைத்தார்கள்?

தேர் ஓட்டப் பந்தயங்களில் பங்குபெறும் தேரோட்டியே தான், குதிரைகளையும் தேரையும் கொண்டுவர வேண்டியிருந்தது. அப்பந்தயக் குதிரைகளைப் பராமரிக்கும் செலவு எவ்வளவு ஆகும் என்பதை அனுபவிக்கும் போது தான் நமக்குப் புரியும். உயிரை வெறுத்து, தேரோட்டப் போட்டியில் பங்குபெற்று ஒருவன் வெற்றி பெற்றால், பரிசு கிடைப்பது தேரோட்டியான வீரனுக்கு அல்ல; அவனுக்குக்குதிரைகளைத் தந்த குதிரைக்குச் சொந்தக்காரனே பரிசுக்கு உரியவனாக இருந்தான். ஆகவே, இந் நிகழ்ச்சியின் கொடுமையையும் எண்ணிப் பார்க்கத் தொடங்கி விட்டார்கள் வீரர்கள்.

இவ்வளவு செலவையும் ஏற்றுக்கொண்டு, சிரமத்துடன் பயிற்சி செய்து, உயிரை துரும்பாக நினைத்துப் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு என்ன பரிசு கொடுத்தார்கள்? ஆலிவ் மலர் வளையம்தானே! இறைவன் கோயில் அருகே வளர்ந்த ஒரே காரணத்தால் ஆலிவ் மரங்கள் புனிதம் மிகுந்தவை என்பதை பக்திப் பெருக்கில் வாழ்ந்த முற்கால மக்கள் ஒத்துக்கொண்டனர். உண்மையுடன் வழிபட்டனர். பெருமையுடன் ஏற்றுக் கொண்டனர். ஆனால், பாதை மாறிப்போன பிற்கால மக்களுக்கு, அந்நியர் ஆட்சியில் அடங்கிக் கிடந்த மக்களுக்கு எவ்வாறு புரியும்?

இலையாலான மலர் வளையப் பரிசு எங்களுக்குத் தேவையில்லை என்ற அளவுக்கு கிரேக்க நாட்டு வீரர்கள் கேவலமாகப் பேசத் தொடங்கினர். வெறும் புகழ் ஆரவாரம், வெற்றுக் கூச்சல், வீணான பேச்சு வார்த்தை அலங்காரம் எல்லாம் வாழ்க்கைக்கு உதவாது என்று வாதாடவும் தொடங்கி விட்டார்கள். இவ்வாறு பேசியவர்கள் இறுதியாக, வெற்றிக்குப் பரிசாகப் பணமும், விலையுயர்ந்த பரிசுப் பொருள்களுமே வேண்டும் என்று விரும்பினர், வற்புறுத்தினர் வேறு வழியில்லை... அவர்கள் வளர்ந்த வளர்ப்பு அவ்வாறு? பெற்றப் பண்பாடு அப்படி.

நாட்டுப் பற்றோடும், நல்லிறைவன் திருப்பெயரோடும், நனிசான்ற உடல் ஆற்றலோடும் இணைந்த மத விழாவாகவும், மாண்புமிகு விளையாட்டு விழாவாகவும், கிரேக்க நாட்டிலே கொண்டாடப் பெற்ற ஒலிம்பிக் பந்தயங்கள், நாளா வட்டத்திலே தமக்குரிய மகத்துவத்தை, மேம்பாட்டை இழக்கத் தொடங்கின.

புனித விழாவாகப் புவியிலே பிறப்பெடுத்த பந்தயத்திடல், மேலும் மேலும் வியாபாரத் தலமாக, வம்பர்கள் கூடி வாயாடி மகிழும் மடமாக, வேடிக்கைக் காட்டும் சர்க்கஸ் கூடாரமாக, பொழுது போகாதவர்கள் ஏனோதானோவென்று வேடிக்கைப் பார்த்துப் பொழுதைக் கழிக்கும் இழிநிலை அரங்கமாக மாறத் தொடங்கியது.

இத்தனைக்கும் மேலாக, இன்னொரு நிகழ்ச்சி நடந்தது, மண்ணாளும் மன்னன் நீரோ செய்த அக்கிரமங்கள் தான் ஒலிம்பிக் பந்தயங்கள் ஒழிந்து போவதற்கே காரணமாக அமைந்தன. மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம், மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது தன்னிகரில்லாமல் தரணியிலே வாழ்ந்த தமிழர்களின் கொள்கை, தாயே தன் குழந்தைக்கு நஞ்சு ஊட்டினால் தடுப்பார் யார்? என்பது போல, ஆண்டவன் திருத்தலத்தோடு தொடர்புள்ள அரங்கத்தில், அருமையான விதிகளையுடைய பந்தயங்களை அரசனே மாற்றினான் என்றால், மக்கள் எப்படி மதிப்பார்கள்? ரோம் எரியும்போது பிடில் வாசித்தான் நீரோ என்பார்களே, அதே நீரோதான், கிரேக்கர்கள் கட்டிக் காத்த, கண்ணான கோட்டையை மண்மேடாக்கினான். அவ்வாறு அவன் என்ன செய்தான்?

நீரோ என்ற அந்த மன்னன், பந்தயத்தில் போட்டியாளனாகப் பங்கேற்று, பல வெற்றிகளைப் பெற்றிருக்கின்றான்! எப்படி? அங்கேதான் மன்னனின் மாபாதகச் செயலும் அடாவடித்தனமும் அடங்கிக் கிடக்கிறது. சாம்ராஜ்ய சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த நீரோ மன்னன், தன்னுடைய ஆட்சியின்கீழ் அடங்கிய கிரேக்க மண்ணிலே ஒலிம்பிக் பந்தயம் நடக்கும்பொழுது, தானும் பங்கு பெறுவான்.

தனக்குள்ள 5000 மெய்க்காப்பாளர்களோடு அவன் போட்டியிடுவான். போட்டியிடும் அத்தனை பேரும் மன்னனுக்கு வேண்டியவர்கள். அவர்கள் போட்டியிடுவது போல பாவனை செய்வார்கள். கடைசியாக, போட்டியில், வெல்பவன் நீரோவாகத்தான் இருப்பான். இப்படியாக எல்லாப் போட்டிகளிலும், தான் கலந்துகொண்டு அத்தனைப் போட்டி நிகழ்ச்சிகளிலும் அவனே முதலாவதாக வந்தான். தன்னைத் தவிர, வெற்றி வீரன் வேறு யாரும் இல்லை. வேறு யாரும் இருக்கக்கூடாது என்ற ஓர் இழிந்த சூழ்நிலையை உண்டுபண்ணி விட்டான். அது மட்டுமல்ல; ஒலிம்பிக் போட்டிகளிலே இல்லாத புதிய புதிய போட்டி நிகழ்ச்சிகளை, அவ்வப்போது, தனக்கேற்ற வகையில், தனக்கேற்ற முறைகளில் உண்டாக்கியும், மாற்றி அமைத்தும் வெற்றி பெற்றான். சிறந்த வீரனாகக்கூட வெற்றி பெற்றான். அவன் தேர் ஓட்டப் போட்டியிலும் வெற்றி பெற்றான். எப்படி? வெற்றி பெற்ற லட்சணம் இப்படித்தான்.

தேர் ஓட்டப் பந்தயத்தில் மன்னன் நீரோவும், அவனைச் சேர்ந்த மற்ற (உடலாளர்களும்) வீரர்களும் போட்டியிட்டனர். வேகமாகத் தேரோட்டி வந்த மன்னன் பாதி வழியிலே திடீரென்று தேரிலிருந்து விழுந்துவிட்டான். மற்றவர்களுக்கு என்ன? தேரை ஓட்டிக்கொண்டு முதலாவதாகச் சென்று வெற்றி பெறவேண்டியதுதானே முறை? போட்டியில் பங்குகொண்ட அத்தனைபேரும், கீழே விழுந்த மன்னன் எழுந்து, தேரில் ஏறிக்கொண்டு, மீண்டும் தேரை ஓட்டும் வரை அதே இடத்தில் காத்துக்கொண்டு நின்றனர்.

மன்னன் பிறகு தேரில் ஏறி ஓட்டிச் சென்று முதலாவது இடத்தை அடையும் வரை, அவர்கள் அவன் பின்னால்தான் ஒட்டிச் சென்றிருக்கிறார்கள். மன்னனுக்குப் பயந்து கொண்டு மற்றவர்கள் போட்டிகளில் பின்வாங்க, மன்னன் நீரோ, தானே எல்லா நிகழ்ச்சிகளிலும் போட்டியிட்டு அத்தனைப் போட்டிகளிலும் தானே முதலாவது இடத்தைப் பிடித்து வெற்றி வீரனாக வந்திருக்கிறான். புகழ் மிக்க, பேராற்றல் மிக்கதோர் ஒலிம்பிக் பந்தயத்தைப் புழுதியிலும் கேவலமாக, பொய் நிறைந்த களமாக மாற்றிவிட்டான்.

அத்துடன் விட்டானா! அந்த நாட்டை ஆள்கின்ற அரசன் என்ற ஆணவத்தாலோ என்னவோ, தானே தலையாய வீரன் என்று எண்ணிக்கொண்ட கர்வத்தாலோ என்னவோ, ஆண்டவனே வந்து அளந்து கட்டிமுடித்து ஆரம்பித்த விளையாட்டுப் பந்தய மைதானம் என்று மக்கள் நம்பி வழிபட்ட மைதானத்திற்குள்ளே, ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டு வாழத் தொடங்கிவிட்டான். கடவுள் குடியேறியிருந்த இடம் என்று மக்கள் வணங்கிய திடலில் மனிதன் குடியேறி, அந்த புனிதத் தன்மையையும் மாறா மரபையும் மதிப்பையும், மண்ணோடு மண்ணாக்கி விட்டான். இந்த நிலையில்தான் இறப்பா பிழைப்பா என்ற இழுபறி நிலையில் ஒலிம்பிக்பந்தயங்கள் இருந்தன.

நீரோவினால் மக்கள் நெஞ்சங்கள் புண்ணாயின. மன்னனின் மாபாதகச் செயலாலும், மக்களுக்கு மதத்தின் மேல் இருந்துவந்த பிடிப்பும் துடிப்பும் நழுவிப் போனதாலும், ஒலிம்பிக் பந்தயங்கள் சரிவர நடைபெறவில்லை. கிரேக்கன் ஒருவன் வெற்றி வீரனாக வரக் கூடிய வாய்ப்பை ரோம் நாட்டினர் அளிக்கவும் இல்லை. அனுமதிக்கவும் இல்லை.

ஆட்சியாளருக்கு முன்னால், ஆற்றலும் திறமையும் போட்டியிட முடியவில்லை, இவ்வாறு ஒலிம்பிக் பந்தயம் உயர்ந்த நிலையில் இருந்து தாழ்ந்த நிலையை ஆரத் தழுவிக் கொண்டிருந்தது. நீரோவுக்குப் பின் வந்த ரோம் நகரை ஆண்ட மன்னனான முதலாம் தியோடசிஸ் என்பவன், மத எரிச்சலின் காரணமாக, கி.மு. 394 ம் ஆண்டு ஒலிம்பிக் பந்தயத்தைத் தடை செய்தான்.

காலங் காலமாக, கிரேக்கர்களால் 292 முறை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வந்த ஒலிம்பிக் பந்தயங்கள், மன்னன் இட்ட சட்டத்தால் மறைக்கப்பட்டன. புனிதமான விழாவும் ஆழப் பெருங்குழியில் இட்டுப் புதைக்கப்பட்டது. பந்தயம் மட்டும் நிறுத்தப்படவில்லை. பந்தய மைதானத்திலே புனிதத்தின் திருவுருவாக வைத்துக் காக்கப்பட்ட சீயஸ் சிலை, பந்தயம் நிறுத்தப்பட்ட மறு ஆண்டே (கி.மு. 339) உடைக்கப்பட்டது.

விழா நிறுத்தப் பெற்ற பிறகு, நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அனைத்தும், இப்படி ஒரு அதிசயமான பந்தயம் அவனியிலே இருந்ததா என்று எல்லோரும் ஆச்சரியத்துடன் கேட்குமளவுக்கு, மறையத் தொடங்கின. கோதர்கள் (Coths) அடிக்கடி படையெடுத்து வந்து கொள்ளையடிக்கத் தொடங்கினார்கள்.

இவ்வாறு அந்நியப் படையெடுப்பால், ஒலிம்பியா அவதிப்பட்டபொழுது, ரோமை ஆண்ட மன்னன் இரண்டாம் தியோடசிஸ் இட்ட ஆணையால், எல்லாக் கோயில்களும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. கண்ணுக்குத் தோன்றக்கூடிய சான்றுகள் எல்லாம் காவலர்களால் அழிக்கப்பட்டன.

கோயில்கள் மட்டும் இடிபடவில்லை கோயிலின் முன்னே அமைந்திருந்த சுற்றுச் சுவர்கள் அனைத்தையும் இடித்துத் தரைமட்டமாக்குமாறு மன்னன் கொடுத்த கட்டளை சிறப்பாக நடந்தேறியது. 45000, 50000 மக்களுக்கு மேல் அமர்ந்து வேடிக்கைப் பார்க்கும் அளவுக்குச் சுற்றி வளைத்துக் கட்டப்பட்ட ஒலிம்பிக் பந்தய மைதானமும், அதனைச் சார்ந்த மதில்சுவர்களும் மண்மேடாயின.

இந்தக் கொடுமையைக் கண்ட இயற்கைக்கே பொறுக்கவில்லை போலும், தானும் தன் கை வரிசையைக் காட்டத் தொடங்கியது, சீயஸ் கோயிலை நெருப்பு எரித்துப் பொசுக்கியது.

ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, அங்கே எழுந்த பூகம்பத்தால், எஞ்சியிருந்த இடங்களும், மறைந்தொழிந்து மண்ணுள் அடங்கின. சுவடே இல்லை. சான்றுகள் எங்கே இருக்கப்போகின்றன! வரலாற்றுக் கருவூலங்களை பூகம்பம் மட்டும் புதைக்கவில்லை.... புனிதமான ஆலிவ் மரங்களை வளர்த்த புனிதமான ஆல்பியஸ் ஆறும் பொங்கியெழுந்து பெரு வெள்ளத்தைக் கொண்டு வந்து மீதியிருந்த மண்மேட்டையும் கரைத்து, சாதாரணத் தரையாக மாற்றி அழித்து ஆறுதல் அடைந்தது.

அழகான பள்ளத்தாக்கிலே, ஒப்புயர்வற்ற ஒலிம்பியா பகுதியிலே அதற்குப் பிறகு கோயிலும் இல்லை. குடியிருப்பும் இல்லை இறைவனை வணங்கவும் அதைப்பற்றி நினைக்கவும் யாரும் இல்லை காலம் மனிதனைக் கொண்டு வளர்த்தது காலமே மனிதனைக் கொண்டு அழிக்க வைத்தது.

ஒலிம்பிக் பந்தயத்தின் பீடும் பெருமையும், சீரும் சிறப்பும் எல்லாம் காலத்தால், மனிதனின் ஆங்காரக் கோலத்தால் அழிந்தன. அடுத்தடுத்து ரோமை ஆண்ட அரசர்கள், பந்தயத்தைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படக்கூட இல்லை.

பதினைந்து நூற்றாண்டுகள் பறந்தோடின. ஒலிம்பிக் பந்தயம் என்று ஒன்று இருந்ததாகவும், அது கிரேக்க நாட்டிலே நடந்ததாகவும் மக்கள் பேசிக் கொண்டனர். ஒரு சில குறிப்புக்கள் அவர்களுக்கு உதவின. பழைய ஒலிம்பிக் மறைந்தாலும், அது கிரேக்க நாட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடந்து அழிந்தாலும், இன்று அகில உலகமெங்கும் அவனி போற்றும் ஆண்மையாளன் திரு. பியரி கூபர்டின் பிரபு அவர்களால் புதிய ஒலிம்பிக் பந்தயம் தோற்றுவிக்கப்பட்டு உலக வரலாற்றில் தனித்துவ மிக்க நிகழ்ச்சியாக மக்களிடையே பேரெழுச்சியை, கிளர்ச்சியை உருவாக்கியுள்ளது என்பது வரலாறு காட்டும் உண்மை.

17. கிரேக்கர்களின் வீரக் கதைகள்

உலக நாடுகளுக்கிடையே ஒப்பற்ற முறையிலே நடக்கின்ற விளையாட்டுப்போட்டிகளை, ஒலிம்பிக் பந்தயங்கள் என்று அழைக்கிறோம். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, உலக நாடுகளில் விரும்பி ஏற்று நடத்த விரும்புகின்ற ஒரு நாட்டில், பதினாறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகின்ற போட்டிகள் உலக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

விளையாட்டு வீரர்களின் விழுமிய புகழுக்கு முத்தாய்ப்பான வாய்ப்பை வழங்கும் ஒலிம்பிக் பந்தயங்களை, புதிய ஒலிம்பிக் பந்தயங்கள் என்று அழைக்கின்றார்கள்.

அப்படியென்றால், பழைய ஒலிம்பிக் பந்தயங்கள் என்று ஒன்று இருந்திருக்க வேண்டும் விளையாட்டு வீரர்கள் பங்கு பெற்ற சுவையான சம்பவங்களும் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகின்றதல்லவா!

ஆமாம்! பழைய ஒலிம்பிக் பந்தயங்களை பிரபலமாக நடத்திப் பெருமை பெற்ற நாடாகத் திகழ்ந்தது கிரேக்க நாடாகும். உடல் வலிமைக்கும், வனப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அதனை மத விழாவாக, வீர விழாவாக நடத்தி வெற்றிகரமாக வாழ்ந்திருந்த நாடு கிரேக்க நாடாகும்.

ஒலிம்பிக் பந்தயங்களில் பங்கு பெறுவதற்காக உவப்புடன் முன் வந்த வீரர்களை, விழா நடத்தும், விழாக் குழுவினர் எத்தகைய கடுமையான விதி முறைகளுடன் வரவேற்றனர், வழிப்படுத்தினர், விளையாட அனுமதித்தனர், கொடுமையாகத் தண்டித்தனர் என்றெல்லாம் அறிகின்ற பொழுது, கிரேக்கர்கள் நடத்திய கீர்த்தி மிகு விழாவான ஒலிம்பிக் பந்தயங்களை, தங்கள் உயிரினும் மேலாக நேசித்தனர் என்பதையே நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொள்ள விரும்புகின்ற வீரன் ஒருவன், கலப்பற்ற தூய கிரேக்கனாக இருக்க வேண்டும் என்பது முதல் விதி.

அவன் திருமணம் ஆகாதவனாக, எந்த குற்றவாளிப் பட்டியலிலும் இல்லாதவனாக, இருக்கவேண்டும் என்பது அடுத்த விதி, அதிலும், அவன் பந்தயங்களில் கலந்து கொள்ள விரும்பி மனுச்செய்து கொண்ட பிறகு, கலே நாடிகை எனும் குழுவால் பரிசீலிக்கப்பட்டுத் தேர்ந் தெடுக்கப்பட்டான். பின்னரே ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொள்ள அனுமதியளிக்கப்பட்டான் என்றும் வரலாறு விரித்துரைக்கின்றது.

வெற்றி பெற்ற வீரன் ஒருவன் கிரேக்கத்திலேயே சிறந்த வீரனாகக் கருதப்பட்டான். அவனை வளர்த்து ஆளாக்கிய நாட்டில் அவன் ஒரு குட்டி தேவதை பெறுகின்ற அத்தனைச் சிறப்பினையும், வணக்கத்தையும், வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டான். அவன் அழகை சிலை வடித்தார்கள். பொன்னையும் பொருளையும் பரிசாக அளித்தார்கள் அந்த நாட்டினர்.

எல்லோரும் சென்று வருகின்ற கோட்டை வாயிலில் அவனை சென்று வரவிடாது. கோட்டைச் சுவரை இடித்து அவனுக்கு எனத் தனிவழி அமைத்து ஆரவாரத்துடன் வரவேற்றனர். வாழ்த்தினர். வணங்கினர் என்று வரலாறு புகழ் பாடுகின்றது.

புனித ஒலிம்பியா மலையில் வளர்ந்த ஆலிவ் மரத்தின் மலர் கொடிகள் வளையங்களாக, வெற்றி வீரன் தலையிலே அணியப் பெறும் பொழுது, அவன் பிறந்ததன் பெரும் பயனை அடைகின்றான் என்ற அளவில், ஆரவாரத்துடன், அளவிலா ஆனந்தத்துடன் பழைய ஒலிம்பிக் பந்தயங்களை கிரேக்கர்கள் நடத்தினார்கள்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே, கிரேக்கர்கள் நடத்திய ஒலிம்பிக் பந்தயங்கள் கீர்த்தியின் உச்ச நிலையை அடைந்திருந்தன. வரலாற்றாசிரியர்கள் ஆராய்ச்சி குறிப்புக்கும் எட்டாத காலத்திலேயே, அவர்கள் வாழ்க்கை முறையில் செம்மாந்த நிலையில், செழிப்பார்ந்த நாகரிகக் கலைகளில் நாளெலாம் நடமாடித் திளைத்திருந்தனர்.

வரலாற்றாசிரியர்களின் குறிப்புக்கள் எது சரியான வருடமென்று ஒன்றுக்கொன்று வழக்காடிக் கொண்டிருக்கின்றன என்றாலும், ஒரு ஆண்டினை மட்டும் சரியான தென்று எல்லோரும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். அதற்கு முன்னரே பழைய ஒலிம்பிக் பந்தயங்கள் கோலாகலமாக கொண்டாடப் பட்டிருக்கின்றன. என்றால், வரலாற்றுக் குறிப்புக்கு வடிவம் கொடுத்த ஆண்டு என கி.மு.776ஆம் ஆண்டையே அவர்கள் குறித்துக் காட்டுகின்றனர்.

அந்த ஆண்டு, முதன் முதலாக நடந்த ஒட்டப் போட்டியில் வெற்றி பெற்ற வீரன் எனும் புகழைப் பெற்றிருப்பவன், அதிலும் முதன் முதல் ஒலிம்பிக் வெற்றி வீரன் எனும் அழியாப் புகழைப் பெற்றிருக்கும் வீரன் கரோபஸ் என்பவன். சமையற் தொழில் செய்து தன் வாழ்க்கையை நடத்தியவன், எத்தனை சாதுர்யமும், சாமர்த்தியமும், சக்தியும் நிறைந்தவனாக வாழ்ந்திருக்கிறான் பார்த்தீர்களா!

வரப்போகின்ற வீரக் கதைகளில் பல, புராணக் கதைகள் போல வருணிக்கப்படுவதை நீங்கள் அறிந்து கொள்ளும் பொழுது, இவைகளெல்லாம் உண்மையிலேயே நடந்தனவா இல்லையா என்று நீங்கள் சந்தேகத்தில் சலனம் அடையாமல் படித்தால் வியப்பூட்டும் செய்திகளை அறிந்து கொள்ளலாம்.

ஒலிம்பிக் பந்தயங்கள் கிரேக்கத்தில் நடைபெற்றன என்பது உண்மை என்று, எல்லோரும் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். அப்படியென்றால், இப்படி நம்ப முடியாத பலகதைகள் எப்படி உருவாயின என்றால், இது உண்மையிலே நடந்தனவா அல்லது வரலாற்றாசிரியர்களின் வளமார்ந்த கற்பனையா என்பதை நாமே ஊகித்து உணர்ந்து கொள்ள வேண்டியதுதான், வேறு வழியில்லை.

வீரக் கதைகளின் கதாநாயகர்களாக விளங்குபவர்கள் எல்லோரும், பழைய ஒலிம்பிக் பந்தயங்களிலே பங்கு பெற்றவர்கள், பாங்குடன் வெற்றி பெற்றவர்கள், பலராலும் பாராட்டப்பட்டவர்கள் என்பதற்கு எள்ளளவும் ஐயமின்றி, ஆதாரங்களுடன் பல குறிப்புக்கள் ஆங்காங்கே காணப்படுவதும் உண்மைதான். ஆனால், வாழ்க்கையிலே உண்மையில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளை வருணிக்கும் பொழுது, நம் நாட்டில் உலவும் புராணநாயகர்களான அர்ச்சுனன், பீமன், கர்ணன், இராமன், கண்ணன் போன்றவர்களையும் மிஞ்சிப் போய் விடுகின்ற அளவில் தான் இந்தவீரக் கதைகள் அமைந்திருக்கின்றன.

ஆகவே தான், விளையாட்டு உலகில் வளமாக வாழ்ந்த வீரர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை, வீரக் கதைகள் என்ற தலைப்பிலே வடித்துத்தந்துள்ளேன். இக் கதைகளிலே வரும் இனிய அவ் வீரர்கள், தங்கள் தேகத்தை எந்த அளவில் தரமும் திறமும் உள்ளனவாக வளர்த்துக் கொண்டிருந்தனர் என்ற ஒரு கனிவான உண்மைதான் நம்மைக் களிப்பில் ஆழ்த்தும்.

வலிமையையும் திறமையையும் அவர்கள் பொல்லாத செயலுக்குப் புறம் போக்கிவிடாமல், நல்லவைக்ளைக் காக்க, நாட்டுக்கு உழைக்க அவர்கள் எவ்வாறு பயன்படுத்திப் புகழ் பெற்றார்கள் என்ற பேருண்மையை நாம் அறியும்போது, அவர்களின் செம்மாந்த வாழ்வின் நோக்கம் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும்.

சக்தி ஒருவரது தேகத்தில் மிக மிக, பக்தியும் பண்பாடும் மிகுதியாகும் என்பது பெரியோர்களின் கருத்தாகும். அத்தகைய பேருண்மையை வெளிப்படுத்தும் சான்றுக் கர்த்தாக்களாக அமைகின்ற வீரர்களின் கதையை அறிவதின் மூலம், புத்துணர்ச்சியும் பேரின்ப எழுச்சியும் பெறுவோம் என்ற எண்ணத்தில், இனி வீரர்கள் உலகைக் காண்போம் வாருங்கள்!18. வீராதி வீரன் மிலோ

பாரதக் கதையிலே வரும் கதாநாயகர்களில் வலிமைக்குப் புகழ் பெற்றவன் பீமன், அவன் உண்ணும் உணவையும், பண்ணிய யுத்தங்களையும் பார்க்கும்பொழுது, நம்மையறியாமலேயே ஒரு வீர எழுச்சியினைப் பெறுவதும் உண்டு.

வண்டி வண்டியாக சோற்றை உண்டு, குடங்குடமாகப் பால் தயிர் குடித்து, மரங்களைப் பிடுங்கி, மலைகளைக் கிள்ளி பகாசுரனோடு சண்டைபோட்டான் என்று படிக்கும்பொழுது, இப்படியும் ஒரு மனிதனா என்று எண்ணுகிறோம். புராணக் கதையின் புகழ் பெற்ற வீரனான பீமன், பலவான் என்கிற பெரும் புகழ் பெற்றவனாக இன்றும் மிளிர்கிறான்.

அதேபோல, இராமாயணத்தில் வரும் அனுமனின் ஆற்றலும் அளவிடற்கரியதாகும். சஞ்சீவி மலையையே கையால் பெயர்த்தெடுத்துச் சென்றதும், இலங்கைக்குச் செல்லக் கடலைத் தாண்டிச் சென்றதும் எல்லாம் அனுமனின் வீரதீர நிகழ்ச்சிகளாகும்.

உண்மையாக நடந்ததென்று உலகிலே பிரகடனப் படுத்தப்பட்டிருக்கும் பழைய ஒலிம்பிக் பந்தயங்களிலே, பீமனையும் அனுமனையும் மிஞ்சுகின்ற அதிக சாதகங்கள் புரிகின்ற ஒரு வீரனாக அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறான். வருணிக்கப்பட்டிருக்கிறான் இந்த மிலோ.

அவன் வீரக் கதையைப் படியுங்கள்.

கிராட்டன் (Croton) எனும் நகரத்தைச் சேர்ந்தவன் மிலோ, இந்தக் கிராட்டன் நகரம் தென் இத்தாலியில் உள்ளது. கீர்த்தி மிக்க வீரர்களை கிரேக்கத்தின் ஒலிம்பிக் பந்தயங்களுக்குப் பலமுறை அனுப்பி, வெற்றி பெறச் செய்து, புகழ் பெற்று விளங்கிய நகரம்தான் கிராட்டன். என்றாலும், மிலோ திறமை மிக்க வீரனாக வந்து, ஒலிம்பிக் பந்தயங்களில் பல முறை வெற்றிகளைப் பெறத் தொடங்கியதும்தான், கிராட்டன் நகரம் பெரும் புகழ் பெற்றது என்கிற அளவுக்கு மிலோவின் வெற்றிப் பட்டியல் நீண்டு சென்றது. நிலைத்து நின்றது.

கி.மு. 576ஆம் ஆண்டு கிரேக்கத்தில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்திற்கு, கிராட்டனிலிருந்து 6 வீரர்கள் சென்றனர். அவர்கள் 6 பேரும் ஓட்டப் பந்தயத்தில் முதலாவது வந்த ஏழு பேர்களில் இடம் பெற்று இருந்தனர் என்பது வரலாறு, இதுபோன்ற வெற்றி மிகுந்த வீர சாதனை, இன்றைய முன்னணி நாடுகளான ரஷ்யாவும், அமெரிக்காவும் தங்கள் வீரர்களை அனுப்பிக் கூட செய்ததில்லை எனவும் பல வரலாற்றாசிரியர்கள் அபிப்பிராயப் படுகின்றனர்.

அத்தகைய ஆற்றல் மிக்க வீரர்களை ஆதரித்து, ஆளாக்கி அனுப்பி வைத்து, அரும்பெரும் வெற்றிகளை ஈட்டிய இந்த கிராட்டன் நகரத்திலேதான் வீரன் மிலோவும் தோன்றினான். ஏற்கனவே புகழ் பெற்ற கிராட்டன் நகரத்தவன் மிலோ என்ற புகழைப் பெறாமல், மிலோ பிறந்த பூமி கிராட்டன் என்று புகழப்படும் அளவுக்கு பராக்கிரமம் மிக்கவனாகத் திகழ்ந்தான்.

நான்காண்டுகளுக்கு ஒரு முறைதான் ஒலிம்பிக் பந்தயங்கள் நடக்கும். அதற்கிடையே ஆங்காங்கே பிதியன் பந்தயங்கள் (Pythian Games); இஸ்த்மியான் பந்தயங்கள் (lsthmian Games);நிமியன் பந்தயங்கள் (Nemean Games); என்கின்ற பெயர்களிலும் சிறப்புற பந்தயங்கள் நடந்து வரும்.

மிலோ மல்யுத்தத்தில் கெட்டிக்காரன், அவன் மாணவர்களுக்காக (Boys) நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில்தான் முதன் முதல் பங்கு பெற்றான். அந்த ஆண்டு கி.மு. 540. அதன் பின், மனிதர்களுக்கான (Men) மல்யுத்தப்போட்டியில் 5 ஒலிம்பிக் பந்தயங்களில் வெற்றி பெற்றிருக்கிறான். அதாவது 20 ஆண்டுகள் தொடர்ந்தாற் போல் (கி.மு. 540 லிருந்து கி.மு. 520 வரை) அவனே வெற்றி பெற்றிருக்கிறான். அவனை வெல்ல யாருமே இல்லை என்ற வல்லமை மிக்க வீரனாகவே விளங்கி இருக்கிறான்.

இதற்கிடையிலே நடைபெற்ற பிதியன் பந்தயங்களில் 6 முறையும், இஸ்த்மியான் பந்தயங்களில் 10 முறையும், நிமியன் பந்தயங்களில் 9 முறையும், வெற்றி பெற்று சிறந்த வீரனாகவே விளங்கியிருக்கிறான் மிலோ.

இவ்வாறு 6 முறை ஒலிம்பிக் பந்தயங்களில் மல்யுத்தத்தில் வெற்றி பெற்ற வீரன் மிலோ, ஏழாவது தடவை ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து கொண்டபோது டிமாஸ்தியஸ் என்ற ஒரு வீரனிடம் தோற்றுப்போனான்.

ஒரு மனிதன் குறைந்தது ஏழு அல்லது எட்டு ஆண்டுகள்தான் தன் உடலில் ஆற்றலில், குறையாமல் வைத்திருந்து திறம்பட செயல்பட முடியும். அதற்கு மேல் ஆற்றல் வரவரக் குறைந்து போய்விடும் என்று தற்போதைய விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறுகின்றனர்.

நான்காண்டுகளுக்குள்ளே ஒரு மனிதனின் ஆற்றலும் ஆண்மையும் முன்பிருந்ததைவிட நாளுக்கு நாள் குறைந்துக்கொண்டே வருகின்றது என்கின்ற தத்துவத்தினைக் கொண்டுதான். நான்காண்டுகளுக்கு ஒரு முறை பழைய ஒலிம்பிக் பந்தயங்கள் நடத்தப் பெற்றன என்பதற்கும் ஒரு கதை கிரேக்கத்தில் உண்டு.

நம் நாட்டிலே சிவபெருமானைப் போல, சகல விதங்களிலும் தலைமை பீடம் ஏற்றிருக்கும் கடவுளாக சியஸ் என்ற கடவுள் பெருமைப்படுத்தப்படுகிறார். அங்கே சீயஸ். என்ற கடவுளுக்கும், கரானாஸ் என்ற கடவுளுக்கும் தலைமை பதவி காரணமாகப் பெரும் சண்டை ஏற்பட்டதாம். அந்தப் போரில், தன் பகைவனான கரானாசைக் கொன்று வெற்றி பெற்றதற்காக, இம்மாபெரும் விளையாட்டுப் பந்தயங்களைத் தொடங்கி வைத்தாராம் என்று ஒரு கிரேக்க புராணம் கூறுகிறது.

இதோ இன்னொரு புராணக்கதை, கடவுளை பற்றிய நிகழ்ச்சிகள்தான் என்றாலும், அவைகளுக்கும் காலவரையரையும் வைத்திருக்கின்றார்கள்.

சுமார் கி.மு. 1253ம் ஆண்டு தலைமைக் கடவுளின் தாங்கொணா கோபத்திற்கு ஆளாகி, சாபத்தை ஏற்றுக் கொள்கிறான் ஹிராகிலிஸ் என்பவன், கடவுளுக்கு வந்தது கோபம். அவரிட்ட கட்டளையோ மிகவும் மட்டமானதாக இருந்தது. கிரேக்கத்திலுள்ள எலிஸ் என்ற இடத்திற்குச் சென்று, தவறுக்குரிய தண்டனையை அனுபவி என்பதுதான் அவரது கட்டளை.

சீற்றத்தால் எழுந்த தண்டனையை சிரமேற் கொண்டு, சொல்லொணா சோகத்துடன், எலிஸ் நகரம் செல்லுகிறான். அந்த நாட்டை ஆளும் அகஸ் என்ற மன்னனைக் காணுகின்றான். வரவேற்ற மன்னன் தந்த வேலையோ... வெட்கம்! வெட்கம்! வீரன் ஒருவன் செய்யக்கூடிய வேலையா?

மந்தை மந்தையாகக் கட்டியிருக்கும் அரண்மனைக் குதிரைலாயத்தை சுத்தம் செய்கின்ற பணி, ஹிராகிலிஸ் மனம் நொந்து போனான். கேவலமான பணிதான். கடவுளுக்குப் பணிந்தாக வேண்டுமே? என்ன செய்வது! ஒப்புக் கொண்டான். அந்தப் பணியை சிறப்பாகச் செய்ய முடியாது என்பது அரசனின் வாதம். செய்து முடித்துவிடுவேன் என்பது ஹிராகிலிசின் எதிர்வாதம். முடிவு!

இருவருக்கும் போட்டியே வந்து விட்டது. ஹிராகிலிஸ் குதிரை லாயத்தை ஒழுங்காகக் கழுவித் தூய்மைப் படுத்தி விட்டால், மொத்த மந்தையில் பத்தில் ஒரு பகுதியை ஹிராகிலிசுக்கு மன்னன் தந்து விட வேண்டும் என்பது போட்டியின் நிபந்தனை. ஹிராகிலிசால் முடியாது என்ற நம்பிக்கையில் மன்னன் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டான். பணி தொடங்கிவிட்டது.

ஹிராகிலிசுக்கும் தேவ வல்லமை உண்டல்லவா? ஆகவே, அவன் ஒரு சாரியத்தைக் குறுக்கு வழியில் ஆற்றத் தொடங்கினான். வேறொன்றுமில்லை. எலிஸ் நகரத்திலே ஓடுகின்ற ஆல்பியஸ் என்ற ஆற்றைத் திருப்பிக் குதிரை லாயத்தில் விட்டு சுத்தமாகக் கழுவி, சுருக்கமாகத் தன் பணியை முடித்துக்கொண்டான்.

எவ்வளவு பெரிய குதிரைக் கொட்டில்! எத்தகைய மாபெரும் வேலை? இவ்வளவு எளிதாக ஆற்றைத் திருப்பிவிட்டு, காரியத்தை முடித்துக் கொண்டானே என்ற கோபம் ஒரு பக்கம்! போட்டியின் நிபந்தனையின் படி, பத்தில் ஒரு பாகம் மந்தைகளைப் பிரித்துத் தர வேண்டுமே என்ற பேரிடி இன்னொரு பக்கம். அரசனாயிற்றே! அநியாயமாக விவாதம் செய்தால் ஆதரிக்க ஆள் இல்லாமலா போகும்!

மன்னன் மறுத்தான், ஹிராகிலிஸ் செய்தது தவறு என்று ஆரவாரம் செய்தான். அங்கு வந்த ஆல்பியஸ் ஆற்றினால் குதிரை லாயம் முழுவதும் நனைந்து, சேறும் சகதியும் போல மாறிவிட்டது. செய்த முறை தவறு. இதற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்றெல்லாம் குற்றச்சாட்டுக்களை அள்ளிக் கொட்டினான். வேலை செய்த வீரனால் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கோபத்தின் சிகரமானான்.

வீரனும் மன்னனும் சண்டையில் இறங்கிவிட்டனர். பலவான் யார் என்ற போட்டிச் சண்டையிலே மன்னன் அகசை, மாவீரன் ஹிராகிலிஸ் கொன்று விட்டான். மந்தைகள் முழுவதையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். அதோடு மட்டுமல்ல, மாபெரும் புகழ் வாய்ந்த மணி நாடாகிய எலிஸ் நாட்டிற்கும் தானே மன்னன் என்ற ஓர் அறிக்கையை விடுவித்து, மகுடத்தையும் சூட்டிக்கொண்டான்.

தவறு செய்யப்போய், தண்டனை பெற்றுத்தானே மண்ணுலகத்திற்கு வர நேர்ந்தது! வந்த இடத்திலே இன்னொரு குற்றம். குற்றத்திற்குத்தண்டனை குதிரை லாயம் கழுவுவது. இன்னொரு குற்றத்திற்கு ஏற்றமிகு மன்னன் பதவி, அவனால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை, அவனுக்கென்று மனசாட்சி ஒன்று இருக்கிறதே! குத்திக் காட்ட ஆரம்பித்துவிட்டது.

செய்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்துகொள்ள வேண்டும்! மனதுக்குள்ளே இடிக்கும் மனச் சான்றுக்கு அமைதி கொள்ளுமாறு காரியம் செய்ய வேண்டும்! அதே நேரத்தில் தான் பெற்ற பெற்றியை, தலைமைப் பேற்றைத் தரணிக்கும் உணர்த்தவேண்டுமே! எல்லாம் ஒட்டு மொத்தமாகச் சேர்த்து ஒரு பணியைத் தொடங்கினான். அந்த நிகழ்ச்சிக்கு ஆதாரமாய், அமைந்ததுதான் இந்த ஒலிம்பிக் பந்தயம். ஆகவே ஒலிம்பிக் பந்தயம் ஹிராகிலிஸ் என்பவனால், தன் தந்தை சீயஸ் கடவுளுக்கு, ஒலிம்பியா என்ற இடத்திலேகோயில் கட்டி, தொடங்கப்பெற்றது என்பது புராணக்கதை. கேட்க சுவையாக இருக்கிறதல்லவா?

பல்வேறு புராணக் கதைகள் படிக்கவும் கேட்கவும் சுவையாக இருந்தாலும், உலகத்தில் ஒலிம்பிக் பந்தயம் என்ற ஒன்று இருந்தது, நடந்தது என்ற உண்மையை உலகினர் ஒத்துக்கொண்டார்கள். நான்காண்டகளுக்கு ஒரு முறைதான் அப் பந்தயங்களும் நடந்தன என்பதற்கும் ஆதாரம் இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை நடத்தாமல், நான்காண்டுகளுக்கு ஒரு முறை ஏன் நடத்தப்பெற்றது? என்று உங்களைப் போலவே எல்லோரும் கேட்கின்றனர். அதற்கும் ஒரு கதையை ஆதாரமாக வைத்திருக்கின்றனர். அந்தக் கதையையும் பார்ப்போமா!

தாய்தான் குடும்பத்திற்குத் தலைமைப் பதவி ஏற்று, வழி நடத்திக் கொண்டிருந்த காலம் அதுவாக இருக்கலாம். இல்லையென்றால், ஒரு கூடுடத்திற்கு பெண் ஏன் தலைவியாக இருக்க வேண்டும்? அந்தத் தலைமைப் பதவியை ஏற்பவள் - இரண்டு தகுதிகளில் ஏதாவது ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும். ஒன்று அவள் அந்தக் கூட்டத்தினருக்கான தலைமைப் பெண் பூசாரியாக இருக்க வேண்டும். அல்லது பதவிக்கு வருவதற்கு முன்னர், பெண்களுக்கு என்று நடக்கின்ற புனிதமான பந்தயங்களான ஓட்டப் பந்தயங்களில், அல்லது சில சமயங்களில், மல்யுத்தம் போட்டி ஒன்றில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இப்படியாகத் தலைமைப் பதவிக்கு வந்து ராணியாக முடிசூட்டிக்கொண்டு விடுவாள் ஒரு பெண்.

ராணி என்றால் ராஜா வேண்டுமல்லவா? அவ்வாறு ராணிக்குக் கணவனாக வரத் தகுதியும் யோக்கிதையும் வேண்டாமா அந்தத் தகுதியைத் தந்தது விளையாட்டுப் பந்தயங்களே! மனிதர்களுக்கான ஓட்டப் பந்தயங்களில் வெற்றிபெற்ற முதல் வெற்றி வீரனே கணவனாகவும், மன்னனாகவும் ஆகக்கூடிய மாபெரும் வாய்ப்பைப் பெற்றுவிடுகிறான். விளையாட்டுப் போட்டிகளிலே வெற்றி பெற்ற பெண் ராணியாகவும், ஆண் அரசனாகவும் மாறி, அந்த மக்களை ஆள்கின்றார்கள்.

பெண் என்றால் சகல விதிகளும் பரிந்து பேசுமே! அக்காலத்திலும் அந்த முறைதான் இருந்திருக்கிறது. ஒரு முறைப் பட்டத்திற்கு வந்துவிட்ட ராணி, தன் வாழ்நாள் முழுதும் ராணியாகவே இருப்பாள். இறப்பாள். ஆனால், ராஜாவாக வந்தவனுக்கு? அங்கேதான் ஆண் பட்டவேதனை மலிந்து கிடக்கிறது.

ராஜாவாகப் பதவி ஏற்றவனுக்குரிய காலம். 49 அல்லது 50 முழுநிலாக் காலம். அதாவது, அவன் 50 பெளர்ணமியைப் பார்க்கலாம். அதுவரை அரண்மனையின் சுகத்தை, அழகியின் துணையை, அரச பதவியின் ஆனந்தத்தை அனுபவிக்கலாம். சுகிக்கலாம். அந்த காலம் முடிந்த பிறகு, மீண்டும் ஒரு விளையாட்டுப் பந்தயம் நடக்கும். அந்தப் பந்தயத்தில், அரசனும் கலந்துகொள்வான். மற்றக் கட்டிளங் காளையர்களும் பங்கு பெற்றுப் போட்டியிடுவார்கள்.

அந்தப் போட்டியிலே வெற்றி பெறுகின்ற வீரனுக்குக் கிடைக்கக்கூடிய பரிசோ, பெறற்கரிய பரிசுதான். ஆமாம். அந்த வீரனுக்கு அரச பதவியும் கிடைக்கும். அந்தப்புரத்து ராணியும் கிடைப்பாள். என்ன? முன்னே இருந்த மன்னன் என்ன ஆனான்? போட்டியிலே அவன் வெற்றி பெற்றால் மீண்டும் மன்னர் பதவியும், ராணிக்குக் கணவர் என்ற உரிமையும் கிடைக்கும். வெற்றிபெற்றவன் அந்த இடத்தைப் பிடித்துக் கொள்வான். அந்த வீரனுக்கு ராணி மாலையிடுவாள். மனைவியாவாள், மகுடம் அவன் தலையில் சூட்டப்படும்.

தோற்ற அரசன் கதியோ அதோ கதிதான். தலைமைக் கடவுள் இருக்கும் பீடத்திலே அவன் தலையை வைக்கச் செய்து துண்டித்துவிடுவார்கள். ஆமாம். பலிபீடத்திலே மரணம் அடைவதுதான் தோற்ற அரசனுக்குரிய தண்டனை. சில சமயங்களில், அவனைக் கொண்டுபோய் மலை உச்சியில் நிறுத்திக் கீழே தள்ளி விடுவார்கள். அறிவுள்ள அரசன், தன் முதுகில் பாராசூட்டை யாருக்கும் தெரியாமல் கட்டிக்கொண்டு மலையிலிருந்து கீழே விழும்போது, தப்பித்துக்கொண்டு விடுவான். ஆகவே மரண தண்டனை நிச்சயம் என்று தெரிந்தும் வீரர்கள் போட்டியிட்டனர்.

ஆனால், 49 அல்லது 50 முழு நிலாக் காலத்திற்குப் பிறகு, ராணியானவள் கணவன்மார்களை மாற்றிக் கொண்டேயிருந்தாள். ஆமாம், அவளிருக்கும் காலம் வரை அவளே ராணி. நம் புராணத்தில் கூட, இந்திரனாக யார் வந்தாலும், இந்திராணி ஒருத்தியே இருப்பாள் என்று இருக்கிறதே! அதே போல்தான்.

அந்தக் கால வரையறைதான் (49 அல்லது 50 பெளர்ணமி காலம்) 48 மாதங்கள் கிட்டத்தட்ட ஆகிறது. என்ற அடிப்படையில் நான்காண்டுகள் என்று முடிவு கட்டியிருக்கின்றனர். அத்துடன், நான்கு ஆண்டுகளுக்கு மேல், ஓர் ஆண் மகனால் உடல் திறனை முன்போல கட்டிக் காத்துக் கொண்டிருக்க முடியாது என்ற நம்பிக்கையில்தான், நான் காண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பந்தயம் நடந்திருக்கிறது.

இந்தக் கதை உண்மையோ அல்லது கட்டுக்கதையோ, நமக்குத் தெரியாது. இருந்தாலும், ஒரு மனிதனின் ஆற்றல் நான்காண்டுகள் வரைதான் இருக்கும். இதற்குப் பிறகு குறையும் என்ற உடல் தத்துவ ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து கிரேக்கர்கள் இந்தப் பந்தயத்தை நடத்தி மகிழ்ந்தனர் என்பது பொருந்தும்.

ஆனால், மிலோவோ, இருபத்தி நான்கு ஆண்டுகள் தன் தேகத்திறனில் கிஞ்சித்தும் குறையாமல், வெஞ்சமர் புரிந்து வெல்லும் அஞ்சா நெஞ்சினனாக, ஆற்றல் மிகுமறவனாக வாழ்ந்திருக்கின்றான். அத்தகைய ஆற்றல் மிகு வீரனைப் பற்றி அற்புதமான பல, கதைகள் அந்நாளில் உலவி வந்திருக்கின்றன.

பல ஆண்டுகளுக்கு முன் மறைந்துபோன மல்யுத்த வீரர் கிங்காங் என்பவரை மாமிசமலை என்றே அழைப்பார்கள். அவர் சாப்பிடும் அளவை 100 முட்டை, பத்து கிலோ கறி என்பது போல ஆளுக்கு ஆள் அவ்வளவு இவ்வளவு என்று வித்தியாசமான அளவில் கூறி, மற்றவர்களை வியப்பில் ஆழ்த்துவார்கள். நம் காலத்து மல்யுத்த வீரர் நிலையே இப்படி என்றால், பயங்கர மல்யுத்தம் புரிகின்ற ஒலிம்பிக் பந்தய வீரனது உணவு அளவைப் பற்றி எவ்விதம் கூறியிருப்பார்கள் என்பதற்குக் கீழே விளக்கப்பட்டிருக்கும் உணவின் அளவே சான்றாக அமையும்.

வீரன் மிலோவின் அன்றாட உணவானது 20 பவுண்டு கறி, 20 பவுண்டு ரொட்டி. 18 பின்ட் ஒயின் என்பதாகக் குறிப்பிடுகின்றார்கள். அவனுக்கு இருந்தது வயிறா அல்லது ஏற்றம் இறைக்கும் சாலா என்று தான் நமக்கு எண்ணத் தோன்றுகிறது.

இதையும் மிஞ்சிவிடுவது போல இன்னொரு உணவின் அளவு பாருங்கள், ஒலிம்பிக் பந்தயம் நடக்கின்ற நாளில், நான்கு வயதுள்ள கன்றுக்குட்டி ஒன்றைத் தோளில் போட்டு சுமந்து கொண்டு, ஒலிம்பியாவில் உள்ள பந்தயம் மைதானம் முழுவதையும் சுற்றித் திரிந்து வருவானாம். பிறகு, அதே நாளில் அதைக் கொன்று, அதை ஒரே நாளில் தின்று தீர்த்து விடுவானாம். அப்படியென்றால் அவன் உணவு உட்கொள்ளும் ஆற்றலையும் சக்தியையும் பாருங்களேன்!

இப்படி உண்பவனுக்கு இராட்சச பலம் இருக்காதா? ஆமாம்! அவனது தேக பலத்தையும் மனித சக்திக்கு அப்பாற்பட்டதாகத்தான் கூறியிருக்கின்றார்கள்.

ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு, புனித ஆலிவ் மலர் வளையம் பரிசு உண்டு. பாராட்டு உண்டு. புகழ் உண்டு என்று முன் கதையில் விவரித்திருந்தோம் அல்லவா! அதையும் விட, இன்னொரு உரிமையை அந்த வெற்றி வீரர்களுக்கு அளித்திருந்தார்கள். அதாவது தங்களைப் போல சிலை ஒன்றைச் செய்து, ஒலிம்பியா மண்டபத்தில் வைத்துக்கொள்ளலாம் என்பதுதான்.

சிலை அமைத்துக் கொள்வது என்பது சாதாரண வசதி படைத்தவர்களால் முடியாத காரியம். ஏராளமான நிதி வசதியுள்ளவர்கள் அல்லது அவ்வீரன் வாழ்கின்ற நகரத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து பணம் திரட்டி உதவி செய்தால்தான் உண்டு. வீரன் மிலோ எவ்வாறோ தன்னைப் போல சிலை ஒன்றை செய்து முடித்து, தன் நகரத்திலிருந்து ஒலிம்பியா மைதானம் வரை தானே தூக்கிச் சென்று வைத்து மகிழ்ந்தானாம். அப்படியென்றால் அவனது ஆற்றலும் மனோதிடமும், எத்தகையதாக இருந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.

அவன் உடல் வலிமையைப் புகழ்ந்து பேச வேறு பல கதைகளையும் கூறியிருக்கின்றார்கள். அதையும் பார்ப்போம்.

மிலோ தன் உள்ளங்கையில் மாதுளங்கனி (Pomegranate) ஒன்றை வைத்து மூடிக் கொள்வானாம். அதனை எத்தகைய சக்தி வாய்ந்தவன் வந்து அவன் மூடிய கையைத் திறக்க முயற்சித்தாலும், அவனது மூடிய கையை திறக்கவே முடியாதாம். இதில் என்ன விசேஷம் என்றால், இந்தக் கைமூடி திறக்கும் திறமையான போராட்டத்தில், மிலோவின் உள்ளங்கைக்குள் இருக்கும் மாதுளங்கனியை கொஞ்சங் கூட கசங்காமல் காப்பாற்றி வைத்துக் கொள்கின்ற அதிசயமான சக்தியை படைத்தவனாக விளங்கியிருக்கிறான் மிலோ.

கை விரல்களின் வலிமைக்கு ஒரு கதை என்றால், கடிய சுமைதாங்கும் கால்களுக்கும் ஒரு கதை விடாமலா இருப்பார்கள்! அதையும் கேளுங்கள்.

எண்ணெய் அதிகமாக பூசப்பெற்ற வழ வழப்பு நிறைந்த ஒரு பெரிய இரும்புத் தட்டின் மீது (Discus) அவன் ஏறி நின்று கொள்வானாம்! ஆள் நிற்கும் பொழுதே நிலையாக நிற்க முடியாமல் வழுக்கி விழச் செய்யும் தன்மை வாய்ந்த தட்டின் மீது ஏறி நின்று கொண்டிருக்கும் மிலோவை, எத்தகைய பலவான் வந்து பிடித்துப் பிடித்துத் தள்ளினாலும், அவனை அந்தத் தட்டிலிருந்து அப்பால் கீழே தள்ளிவிட முடியாதாம். பயங்கரமாக வழுக்கும் தட்டின் இடத்திலும், கெட்டியாகப் பிடித்துக் கொள்கின்ற காலூன்றும் சக்தியைக் கொண்டிருந்தான் மிலோ.

முன்னர் நாம் கூறியவாறு போட்டிக் களமான பிதியன் பந்தயங்களில் வெற்றி வீரர்களுக்குப் பரிசாக மலர்வளையத்தால் முடிசூட்டுவதுடன் ரிப்பனையும் மாலையாக அணிவித்துப் பாராட்டுவதும் உண்டு. அந்த ரிப்பனை தன்முன் நெற்றியில் படுமாறு தலையைச் சுற்றிக் கட்டிக் கொண்டு விடுவானாம். பின்னர், தனது நெற்றி நரம்பினைப் படைக்கச் செய்து, கட்டியிருக்கும் ரிப்பனை அறுத்தெறிந்து விடும் ஆற்றல் படைத்தவன் என்றும் கூறியிருக்கிறார்கள்.

மாபெரும் மல்யுத்த வீரனாக வாழ்ந்தவன் மிலோ, சர்வ வல்லமை படைத்த விளையாட்டு வீரனாக மட்டு மல்லாமல், தன் தாய் நாடு காக்கும் தியாக சீலனாகவும்

விளங்கியிருக்கிறான். ஆண்மை மிக்க அரும்மறவர்கள் வாழும் நாடு, அனைத்து நலன்களையும் நிறைத்தல்லவோ வைத்திருக்கும்! அந்த லட்சியத்தில் தானே கிரேக்க நாடு, விளையாட்டுப் பந்தயங்களைப் பிரபலமாக நடத்திக் கொண்டு வந்தது!

கி.மு. 512ம் ஆண்டு, சிபேரிஸ் என்ற நாட்டுடன் அவனது நாடு போரிட நேர்ந்தது. அவனது நாட்டு வீரர்களை உற்சாகப்படுத்த, மிலோ படைவீரர்கள் மத்தியிலே நின்று உற்சாகப் படுத்தினானாம். ஹிராகிலிஸ் என்பவன் வைத்திருந்த கதைபோல (பீமன் கதை போல) இவன் ஒன்றைச் செய்து எடுத்துக் கொண்டு, ஒலிம்பிக் பந்தயத்தில் பெற்ற வீர முடியை ஒய்யாரமாக அணிந்து கொண்டு, அந்த நாட்டுப் படைத் தளபதி போல, வீரர்களிடையே புகுந்து சென்று, உற்சாகமாகப் பேசி ஊக்கப்படுத்திப் போரிடத் தூண்டினான். அந்த மாவீரனைப் பார்த்த போர் வீரர்களும், மனதில் வீரம் பொங்கப் போராடி வெற்றி பெற்றார்கள். உயிருக்கும் அஞ்சாத வீரனாக நடைபோட்டவண்ணம் மிலோ வீரர்களை ஊக்குவித்திருக்கிறான்.

(நமது நாட்டில் சீனாவுடன் போர் நடந்தபோது, நமது இராணுவ வீரர்கள் மத்தியில் சினிமா நடிக நடிகைகள் சென்று, ஆடிப்பாடி உற்சாகம் ஊட்டியதையும் நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை.)

வலிமைபெற்ற வீரன் ஒருவனுக்கு எங்கு சென்றாலும் பெருமையும் புகழும் உண்டு என்பதற்கு மிலோ சான்றாக வாழ்ந்திருக்கிறான். கணிதம் பயின்றவர்களுக்கு பித்தகோரஸ் என்னும் தத்துவ ஞானியின் பெயர் நன்றாகத் தெரிந்திருக்கும், கணித சாத்திரத்தில் வல்லவர் அவர். அவரது மகள் மியூவா (Muia) என்பவளை மிலோ தன் மனைவியாக்கிக் கொண்டிருக்கிறான்.

இவர்களுக்கு வாரிசாகப் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. மங்கையான அந்தப் பெண்ணை மணம் புரிந்து கொள்ள டெமாசீட்ஸ் எனும் மருத்துவன் வந்தான். அவன் அந்நாட்டு அரசருக்கு மருத்துவம் செய்பவன். புகழ்பெற்ற மருத்துவன், அந்த நாட்டு வழக்கப்படி, பெண் வீட்டாரே மணமகனுக்கு டௌரிபோல வரதட்சணையாகப் பணம் தந்து எல்லா செலவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால், வீரன் மிலோவின் நிலை வேறுவிதமாக அமைந்திருந்தது. மணமகனே மிலோவுக்கு ஏராளமான பணத்தைக் கொடுத்து, அவனது மகளை மணம் புரிந்து கொண்டான். மிலோவின் புகழ், அவனது சமுதாய மரபையே மாற்றி அமைத்திருக்கிறது என்றால் பாருங்களேன்.

இத்தகைய வீரனின் இறப்பை, சாதாரண மரணமாகக் கூறாமல், வீரமரணமாகவே வரலாற்றாசிரியர்கள் கூறியிருக்கின்றார்கள். காட்டில் ஒரு நாள் மிலோ தன்னந்தனியாகப் போய்க் கொண்டிருந்தான். அப்பொழுது வழியிலே வீழ்ந்து கிடந்த ஒரு பெரிய மரத்தின் அடிப்பகுதியில் சிறுபிளவு ஒன்று தெரிந்ததைப் பார்த்துவிட்டு, அதில் கையை விட்டுப் பெரிதாகப் பிளந்திட முயற்சித்தானாம். வலிமை பொருந்திய வீரன், தன் சக்தியை வேண்டாத இடத்திலே சென்று பரிட்சித்துப்பார்க்கப்போய், அடிமரத்தைப் பிளந்து கொண்டே போகும் பொழுது, திடீரென்று பிளவின் சக்தி திரும்பவே, எதிர்பாராத விதமாக பிளவின் இடையிலே மாட்டிக் கொண்டானாம்.

பிரிக்கப்பட்ட அடிமரம் படிரென்றுசேர்ந்து கொள்ளவே, அதன் இடையில் பிடிபட்டுப்போன மிலோவால் வெளிவர முடியாமல் மாட்டிக் கொண்டு விட்டான். காட்டிலே தனியன். கதறினாலும் துணைக்கு யார் வருவார்! அவன் அலறலைக் கேட்டு ஓநாய் கூட்டம் தான் வந்ததுபோலும், ஓநாய் கூட்டத்திற்கு அவன் இரையாகிப்போனான் என்பதாக அவன் முடிவைக் கூறுகின்றார்கள். பலமுள்ளவன், பயனற்ற காரியம் ஒன்றைச் செய்து பலியாகிப் போனான் என்பதற்கு உதாரணமாக, மிலோவின் ஜீவியம் முடிந்திருக்கிறது.

ஆண்மையும் ஆற்றலும் மிக்க வீரனான மிலோ தனது வயதான காலத்திலும் வீதியிலே நடந்து வருகின்ற பொழுது, பார்க்கின்ற இளைஞர்கள் எல்லோரும் மிலோவைப் போல தாங்களும் வரவேண்டும். வளர வேண்டும் என்று ஆசைப்படுவார்களாம். அத்தகைய கவர்ச்சி மிக்க வீரனாக இருந்தான் மிலோ. அவ்வாறு ஆசைப்பட்டவர்களில் ஒருவன் பெயர் பயிலஸ். இனி மிலோவைக் குருவாகப் பாவித்து தன்னை வளர்த்துக் கொண்ட பயிலஸ் என்பவனின் கதையைக் காண்போம்.19. பண்பாட்டு வீரன் பயிலஸ்

வீரர்களைப் பார்த்த பின்னால், அவர்களைப் போலத் தானும் வரவேண்டும் என்ற லட்சிய வேகம் கொண்டு, வீரர்களாக ஆனவர்கள் எத்தனையோ பேர் வரலாற்றிலே உண்டு. அத்தகைய வரிசையில் தலையாய இடம்பெற்றவன் பயிலிஸ் (Phayllus) ஆவான்.

ஒலிம்பிக் பந்தயத்தில் போய் பயிலஸ் பங்கு பெறவில்லை. போட்டியிடவில்லை. வெற்றி பெறவில்லை. ஆனால் வெற்றி பெறாமலேயே, தன் நாட்டு மக்களிடையே மல்யுத்த வீரன் மிலோவை விட, பெரும் புகழ் பெற்றவனாக பயிலஸ் விளங்கினான் என்றால், அவனது சிறப்பாற்றலை என்னென்பது!

பயிலஸ் தாண்டும் ஆற்றல் மிக்க வீரன் ஆவான். அவன் வெகு விரைவாக ஓடிக்கடக்கும் விரைவோட்டக் காரனும் ஆவான். ஆனால், மற்ற நிகழ்ச்சியான மல்யுத்தம் செய்வதில் சுமாரான ஆற்றல் உள்ளவன். தட்டெறியும் போட்டியில் அதிக தூரம் எறிகின்ற ஆற்றலும் இல்லாதவன். ஐந்து நிகழ்ச்சிப் போட்டிகளில் வெற்றி பெறத்தக்க வல்லமை அவனுக்கு இல்லாவிட்டாலும், ஒரு சில உள்நாட்டுப் பந்தயங்களில் பெற்ற வெற்றியையும் அதனால் அவனுக்குக் கிடைத்த பாராட்டையும் ஆசையையும் வைத்துக் கொண்டு, கி.மு. 480ம் ஆண்டு, கிரேக்கத்தில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்திற்குச் செல்ல விரும்பினான். ஆசை வேகத்தின், ஆவேசத்தில் புறப்பட்டும் விட்டான்.

நாம் முன் கதையில் கூறியபடி, ஒலிம்பிக் பந்தயம் நடப்பதற்கு முன், எல்லிஸ் என்னும் இடத்தில் ஒரு மாதத் தனிப் பயிற்சி நடக்கும். அதில் கலந்து கொள்வதற்காக, தன்னுடைய கப்பலிலே பயிலஸ் பயணமானான். கிரேக்க நாட்டை பயிலஸ் அடைந்த பொழுது, ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொள்கின்ற காரியத்தை விட, வேறொரு முக்கியமான கடமை அவனுக்காகக் காத்திருந்தது போல, அவசரமாக அமைந்திருந்தது.

பாரசீக நாட்டின் கப்பல் படையானது, கிரேக்க நாட்டின் மீது படையெடுத்து, அதனை வென்று விடுகின்ற நிலைமையில போர் மூண்டிருந்த நேரம் அது. தான் எதற்காக வந்தோம் என்பதை பயிலஸ் மறந்தான். தாயகம் காக்கின்ற பெரும் பணியே அவன் தலையாய நோக்கமாக இருந்ததால், தான் வந்த சொந்த வேலையை மறந்தான்.

கிரேக்கக் கப்பல் படையுடன் தன் கப்பலையும் ஒன்றாக சேர்த்தான். மேற்குக் கிரேக்கப் பகுதியின் ஒரே பிரதிநிதியாக, கிரேக்கத்திற்காகப் பயிலஸ் போரிட்டான். இறுதியில், ஆட்டிப் படைத்த அச்சத்திற்கு ஆளாகி நின்ற கிரேக்கம், வெகுண்டு வந்த பகைவர்களை விரட்டியடித்து வெற்றி பெற்றது. கப்பல் படையுடன் வந்த பாரசீகத்தார், கதிகலங்கி கடலிலே கலம் செலுத்தி, விரைந்தோடி மறைந்தனர்.

போர் முடிந்து, ஒலிம்பிக் பந்தயக் களம் நோக்கிப் புறப்பட்டான் பயிலஸ் பந்தயத்தில் கலந்துகொள்ள பரபரப்புடன் சென்று பார்த்தால், பந்தயங்கள் நடந்து முடிவு பெற்றிருந்தன. எழுச்சியுடன் வந்த வீரனுக்கு, ஏமாற்றமே பரிசாக அமைந்தது. அதற்காக அவன் கலங்கவோ, தன் விதியை சபித்துக் கொள்ளவோ இல்லை; நற்றவ வானினும் நனி சிறந்தத் தாயகத்தைப், போரிட்டுக் காத்தோம் என்று பரம திருப்தியடைந்து போனான் பயிலளல். என்றாலும், பந்தயங்களில் தான் கலந்து கொள்ள வேண்டும். பரிசு பெற வேண்டும் என்ற ஆசையு வேகமும் வெறியும் அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டேதான் இருந்தன.

இரண்டு ஆண்டுகள் இவ்வாறு பறந்தோடின. கி.மு. 478ம் ஆண்டு பிதியன் பந்தயங்கள் நடந்தன அதில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில், பயிலஸ் மீண்டும் புறப்பட்டான். ஒரு தாண்டும் போட்டியில் கலந்து கொண்டபோது, தவறி விழுந்து காலை காயப்படுத்திக் கொண்டான். அத்துடன் அவனது பந்தயத்தில் கலந்து கொள்ளும் ஆசையின் சகாப்தம் முடிவு பெற்று விட்டது.

ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்துகொண்டுவெற்றிபெற்று, ஆலிவ் மலர் வளையம் சூட்டிக்கொள்ள வேண்டும் என்ற அந்த ஆவல். அவன் வாழ்நாளில் கடைசிவரை நிறைவேறாமலே போய் விட்டது. பாவம்!

சுய நலத்தில் அவன் ஊறியிருந்ததால், நாடுபோனால் எனக்கென்ன என்று கூறி விட்டு ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்துகொண்டிருப்பான். வெற்றியும் பெற்றிருப்பான். ஆனால், பொது நலம் நிறைந்த, தியாகப் பண்புள்ள, கடமை வீரனாக இருந்ததால், அவன் நாடு காக்கும், நல் வீரனாகப் போரிட்டான். விளையாட்டுப் பந்தயங்களில் வெற்றிபுெறா விட்டாலும், வெற்றித் திருமகனாகத் திரும்பி வந்த பயிலசை, அவனது சேவையைப் புகழ்ந்து, அவனை ஏற்றுக் கொண்டு நாடே வாழ்த்தியது.

வரலாற்றில் தலையாய இடம் தந்தது. வளமான தேகம் தனி மனிதன் வாழ்க்கையை மட்டும் உயர்ந்த அல்ல, வாழ்விக்கும் நாட்டிற்கும் சேவை செய்யத்தான், என்ற இனிய மொழிக்கு என்றும் சான்றாக அல்லவா பயிலஸ் திகழ்கிறான்! நாடு காத்த தீரனுக்கு ஏடுகள் புகழாரம் சூட்டி மகிழ்ந்தன. அதைவிடவேறு பரிசு என்ன வேண்டும்?

20. தில்லுமுல்லு வீரன் தியாஜனிஸ்

உயிருக்கும் மேலாக, ஒலிம்பிக் பந்தயங்களை மதித்தார்கள் கிரேக்கர்கள். அதைப் புனித விழா என்று போற்றினார்கள். களங்கம் எதுவுமின்றி நடத்திட வேண்டும், என்று கவனத்தோடும் கருத்தோடும் பாதுகாத்தார்கள். தலைமைக் கடவுளான சீயசுக்குப் பன்றியைப் பலியிட்டு, அந்த ரத்தத்தின் மூலம் விசுவாசப் பிரமாணம் செய்து கொண்டு விளையாட்டுக்களைத் தொடங்கினார்கள். போர்க்காலமாக இருந்தாலும், ஆயுதங்களை வேறிடத்தில் வைத்துவிட்டு, ஓரிடத்தில் பொறுமை காட்டி அமைதி காத்து, பந்தயங்களை நடத்திடவேண்டும் என்று விதிமுறை அமைத்து வெற்றிகரமாக நடத்தினார்கள்.

அவர்கள் மத்தியிலே தீரமுள்ளவர்கள், தியாகப் பண்பு நிறைந்தவர்கள்தானே திகழ்ந்திட முடியும் தில்லுமுல்லுக்காரன் ஒருவன் வீரனாக சிறந்திருக்க முடியும் என்றால், அதுதான் தியாஜனிசிடம் இருந்த திறமை என்று ஒத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. திறமையின் முன்னே, சட்டமும் விதியும் சில சமயங்களில் சரணாகதியடைந்து விடவில்லையா? அது போல் தான்! அப்படி சட்டத்தை வளைத்தவன் கதையை இனி தொடர்ந்து காண்போம்.

தியாஜனிஸ் எனும் அந்த வீரன், தாசஸ் (Thasos) என்ற நகரத்தைச் சார்ந்தவன். அந்த நகரில் கிரேக்கக் கடவுளனா சீயஸ் எனும் கடவுளுக்கும் மனித இனத்தின் அழகு மங்கையான அல்க்மின் (Alcmene) என்பவளுக்கும் பிறந்த ஹிராகிலிஸ் என்பவனுக்கு ஒரு கோயில் இருந்தது. அந்தக் கோயிலில் மதகுருவாக (பூசாரியாக) (Priest) வேலை செய்து வந்தவரின் மகன் தான் இந்த தியாஜனிஸ்.

இவன் தன் பலத்தில், ஆற்றலில், மிகுந்த நம்பிக்கையையும் மாறாத கர்வத்தையும் வைத்துக் கொண்டு திரிந்தான். மிலோ தனது சிலையை, தானே தூக்கிச் சென்று ஒலிம்பியா மைதானத்தில் வைத்த வரலாற்று நிகழ்ச்சியை, இவன் என்றும் மறக்காமலேயே நினைவில் கொண்டிருந்ததால், அதைப்போல் தானும் ஒரு வீர தீர செயலைச் செய்ய வேண்டுமென்று விரும்பினான். அதனால் தனது எட்டாம் வயதில் இப்படி ஒரு காரியத்தைச் செய்துவிட்டான்.

நகரின் ஒரு மூலையில் எங்கேயோ இருந்த ஒரு கோயிலுக்குச் சென்று, அங்கு இருந்த சாமி சிலையை மட்டும் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டான்.

சேதி அறிந்த அவ்வூரார், அவன் வீட்டுக்கு வந்து ஆத்திரத்துடன் திட்டித் தீர்க்கவே, அவன் தெரியாமல் செய்து விட்டான் என்று தியாஜனிஸின் பெற்றோர், பணிவுடன் வேண்டிக் கொண்டனர். அவன் செய்த பிழையை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

மீண்டும் அந்த சிலை இருந்த இடத்திற்கு, அவனே தூக்கிக் கொண்டு சென்று வைத்து விட்டால், அவனை மன்னிக்கிறோம் என்று ஊரார் உரைத்தவுடன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, அதன்படி அந்த சிலையைக் கொண்டு சென்று வைத்த சாமர்த்தியசாலி அவன்.

வலிமையுடன், வேறுபல திறமைகளையும் வளர்த்துக் கொண்டு எழில் வீர வாலிபனானான் தியாஜனிஸ், ஒலிம்பியா சென்று, ஒலிம்பிக் பந்தயங்களில் 2 முறை வென்று புகழடைந்தான். ஒன்று குத்துச்சண்டைப்போட்டி, மற்றொன்று பங்க்ராசியம் எனும் போட்டி, அதாவது குத்துச் சண்டையும், மல்யுத்தமும் இணைந்து உருவான பயங்கரப்போட்டி அது.

அந்தப் பயங்கரப் போட்டியில், ஒரு வீரன் இன்னொரு வீரனை அடிக்கலாம். கடிக்கலாம். உதைக்கலாம். குத்தலாம்.

அழுத்தலாம். நகத்தால் பிறாண்டலாம்; என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்றால் பாருங்களேன். அத்தனைப் பயங்கரப் போட்டியில் வென்றவன் தியாஜனிஸ்.

இதைத்தவிர, எங்கெங்கு போட்டிகள் நடந்தாலும், அங்கே போய் கலந்து கொண்டு, ஏறத்தாழ 1400 முறை வெற்றி பெற்றிருக்கிறான். 22 ஆண்டுகள் வரை, இவனை குத்துச் சண்டையில் யாராலும் வெற்றி பெற முடியவில்லை என்ற தன்மையில்; இவன் குன்றாத வலிமை கொண்டவனாக விளங்கினான்.

ஒலிம்பிக் பந்தயத்தில் ஒருவன் வெற்றி பெற்று விட்டான் என்றால், அவன் உயர்ந்த ஆற்றல்மிக்க வீரன் என்பதே பொருளாகும். அதனால், அவன் சாதாரணமாக நடக்கின்ற பந்தயங்களில் கலந்து கொள்ளவே கூடாது என்பது சம்பிரதாயம். அது ஒரு மனிதாபிமான அடிப்படையில் அமைந்திருந்த மரபும் ஆகும்.

மீறி யாராவது அவ்வாறு போய் கலந்து கொண்டால், அது நல்ல மதிப்பையோ, நாட்டாரிடம் கெளரவத்தையோ அளிக்காது. ஆனால், இந்த தியாஜனிஸ் கொஞ்சம் கூட கெளரவம் பார்க்காதவன். அவனுக்கு வேண்டியது வெற்றியும் பரிசும்தான்.

மிகச்சிறிய அளவில் நடக்கின்ற போட்டிப் பந்தயங்களுக்கும் கூட தியாஜனிஸ் போவான். இவன் வருகையைக் கண்டவுடன், போட்டியில் பங்குபெற வந்த போட்டியாளர்கள் பயந்து கொண்டு, போட்டியிடாமல் விலகிக் கொள்வார்கள்.

பிறகென்ன? தியாஜனிஸ் போக வேண்டியது. வெற்றி வீரன் என்று அறிவிக்கப்பட வேண்டியது. பரிசினைப் பெற்றுக் கொள்ளவேண்டியது. இப்படியாகத்தான் 1400க்கு மேற்பட்ட வெற்றிகளையும் பரிசுகளையும் பெற்றான் என்று சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றார்கள்.

வெகுமதிக்காகத்தான் தியாஜனிஸ் இவ்வாறு வெறி கொண்டு அலைந்தான் என்று அவன் அரிய வரலாற்றை ஆராய்ந்தோமானால், இவன் வெற்றிபெறுவதற்காக எதையும் செய்யத் தயாராக இருந்தான் என்றும் அறிகிறோம். இப்படியும் ஒரு வீரன் இருந்தான் என்பதுபோல இவனும் வாழ்ந்தான் என்று தானே நம்மால் நினைக்கத் தோன்றுகிறது!

பாரசீகத்தார் படையெடுத்து வந்த போது, பந்தயத்தில் கலந்து கொள்ள இருந்த பயிலஸ் எங்கே? பந்தயத்தை மறந்து தன்னை மறந்து போரிட்ட தியாகம் எங்கே? வெற்றியும் வெகுமதியும் தான் சிறந்த வாழ்க்கை என்று வெறி பிடித்தலைந்த வீரன் தியாஜனிஸ் எங்கே?

கி.மு. 480 ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளச் சென்றான் தியாஜனிஸ், முதல் நிகழ்ச்சி குத்துச் சண்டை. இரண்டாவது போட்டி பங்க்ராசியம். இரு போட்டிகளிலும் கலந்து கொள்வதென்று தியாஜனிஸ் முடிவுசெய்திருந்தான்.

முதல் போட்டியாக குத்துச் சண்டைப் போட்டி (Boxing) நடந்தது. அதில், முந்தைய ஒலிம்பிக் போட்டியில் குத்துச் சண்டையில் வெற்றி பெற்ற, பெருவீரன் ஈதியமஸ் (Euthymus) என்பவனுடன் பொருத நேர்ந்தது.

மிகவும் போராடியே தியாஜனிசால் அதில் வெற்றி பெற முடிந்தது. அதிகமாகக் களைத்துப் போயிருந்த தியாஜனிசுக்கு, அடுத்த போட்டியும் காத்திருந்தது. அதுதான் அந்தப் பயங்கர பங்கராசியப் போட்டியாகும்.

களைத்துப் போயிருந்த தியாஜனிஸ் போட்டியிட விரும்பவில்லை. ஒலிம்பிக் பந்தயத்தின் விதிகளின்படி, யாரும் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளவும் முடியாது. ஆனால் பங்கு பெறாமல் இருக்கவும் முடியாது இருந்தாலும் தியாஜனிஸ் விலகிக் கொண்டு போட்டி நடவாமல் தவிர்த்துவிட்டான்.

ஒலிம்பிக் போட்டியில் இததான் முதல்தடவையாக, போட்டியில்லாமல் ஒருவனுக்கு வெற்றி போய்ச் சேர்ந்தது. டிராமியஸ் என்பவன் வெற்றி வீரனாக அறிவிக்கப்பட்டான். ஒலிம்பிக்கில் போட்டியிடாமல் வெற்றி பெற்ற முதல் வீரன் என்ற பெருமையையும் பெற்றான்.

இவ்வாறு நடைபெற்ற துரோக நிகழ்ச்சியைக் கண்டு ஒலிம்பிக் அதிகாரிகள் ஒருமித்த ஆத்திரம் அடைந்தனர். அப்பொழுதேதியரஜனிசை அழைத்து விசாரனை நடத்தினர். ஒலிம்பிக் போட்டியானது, சிறப்பு மிக்க சீயஸ் கடவுளின் பெருமைக்காக நடத்தப்படுவதால், அதற்கு இழுக்குத் தேடித் தந்தவனை தகுந்த முறையில் தண்டித்துவிடத் தீர்மானித்தனர்.

கண்ணைப்போல் போற்றும் கடவுளை அவமதித்தற்கு ஓர் அபராதம். ஒப்பற்ற ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நிர்வாகத்தை நிலைகுலைய வைத்த செயலுக்காக இன்னொரு அபராதம். குத்துச்சண்டைப் போட்டியில் முறையற்ற கடுமையான முறைகளில் ஈதிமஸ் என்பவனைத் தாக்கிக் காயப்படுத்தியதால் அதற்கும் ஒரு அபராதம் என்று பல்முனைத்தாக்குதல் என்பது போல, ஒலிம்பிக் நிர்வாகத்தினர் அபராதத் தொகையை மிகுதிப்படுத்திக் காட்டினர்.

இவ்வாறு அபராதத்தை கடுமையாக விதித்ததால், தியாஜனிசை இனிமேல் குத்துச்சண்டையில் பங்கு பெறாமல் தடுத்துவிட வேண்டும், என்பதுதான் அவர்களது ரகசியத் திட்டமாக அமைந்திருந்ததுபோலும், அவர்கள் நினைத்தது ஒன்று. ஆனால் நடந்ததோ வேறு.

எவ்வாறோ அபராத தொகையை சரிசெய்து, கடவுளுக்கான அபராதத் தொகையையும், நிர்வாகத்திற்கான அபராதத்தையும் கட்டிவிட்டான் தியாஜனிஸ். ஆனால், ஈதிமசுக்குக் கொடுக்க வேண்டிய ஈட்டுத்தொகையைத்தான் அவனால் கொடுக்க முடியவில்லை.

எதிரி ஈதிமசை தனியே அழைத்தான். அவனிடம் ஒரு ரகசிய உடன்படிக்கையை செய்து கொண்டான். தன்னிடம் பணம் இல்லை என்றதால், தந்திரமான முறையிலே தான் அந்த ஒப்பந்தம் அமைந்திருந்தது.

அதாவது, கி.மு. 476ம் ஆண்டு நடக்கப்போகின்ற குத்துச் சண்டைப் போட்டியில், தியாஜனிஸ் கலந்து கொள்ளாமல் விட்டுக் கொடுத்துவிடவேண்டியது. அவ்வாறு வெற்றியை பெற்றுத்தரும் தியாஜனிசுக்கு அவன் கொடுக்க வேண்டிய அபராதத் தொகையை வாங்கிக் கொண்டதாக சரிகட்டிக் கொள்வது என்பதுதான் அந்த ரகசிய உடன்படிக்கையாகும்.

ஒலிம்பிக் வெற்றியில் கொண்டிருந்த பேராசையின் காரணமாக, ஈதிமசும் இந்த யோசனையை ஏற்றுக் கொண்டான். இது தெரிந்துபோனதால், குத்துச்சண்டையில் பங்கு பெறவே கூடாது என்று தியாஜனிஸ் விலக்கப்பட்டு விட்டான். மீண்டும், அவனால் குத்துச் சண்டைப் போட்டியில் பங்கு பெற முடியாமலே போயிற்று.

பணத்திற்காக எதையும் செய்கின்ற பழக்கம், புனிதமான ஒலிம்பிக் பந்தயங்களிலும் பின்பற்றப்பட்டது. தான் பணம் கொடுத்து, லஞ்சம்போல தனது போட்டிப் பாதையை ராஜபாட்டையாக்கிக் கொண்ட ஈதிமசும், தொடர்ந்து நடைபெற்ற கி.மு. 476, கி.மு. 472ம் ஆண்டுகளின் பந்தயங்களில் எளிதாக குத்துச் சண்டையில் வெற்றிபெற்று புகழடைந்தான். ஆனால், பங்கராசியப் போட்டியில் மட்டும் வெற்றி பெற்றான் தியாஜனிஸ்

வெற்றி வீரன் தியாஜனிசின் வீரத்தையும் பலத்தையும் பலரும் பாராட்டினர். அவனை கௌரவிக்கும் வகையில், தாசஸ் நகரத்தினர் அவனைப்போல சிலை ஒன்றையும் செய்து நிறுவினர். தனக்கும் சிலை என்றதும், தியாஜனிசுக்குத் தலை கால் புரியவில்லை.

கருத்துக் குழப்பம் மிகுதியாகும் அளவிற்கு தியாஜனிஸ் நினைவில் கர்வம் பெருக்கெடுத்தோடி விட்டது. தன்னை மனிதப் பிறவி என்பதையே அது மறக்கடித்துவிட்டது. தன்னை மகேசன் பரம்பரை என்று மார்தட்டிப் பேசும் அளவுக்குக் கொண்டு சென்று விட்டது. அவனது டமார வாயும் அடிக்கடி அலற ஆரம்பித்து விட்டது.

ஆமாம், அவன் தன்னைப்பற்றி உயர்வாகப் பறைசாற்றத் தொடங்கினான். ஹிராகிலிஸ் எனும் தெய்வம் வாழும் கோயிலில் பூசாரியாக வேலை செய்யும் மனிதரின் மகனல்ல நான், நான் கடவுளின் குமாரன் என்றான்.

ஆகவே, ஒரு குட்டிக் கடவுளுக்குரிய சகல விதமான பூசைகளும், புனிதச் சடங்குகளும், மரியாதையும் எனக்கு நீங்கள் செய்திடவேண்டும் என்று மக்களிடம் முதலில் வாதாடத் தொடங்கினான், பிறகு அனைவரையும் வம்பிழுக்கத் தொடங்கியும் விட்டான்.

ஒரு முறை கோயில் திருவிழா ஒன்று நடந்து கொண்டிருக்கும் பொழுது, தனக்குரிய உன்னதமான கெளரவம் தனக்குத் தரப்படவில்லையென்று கலாட்டாவே செய்தான் என்று புளூடார்ச் எனும் ஆசிரியர் குறித்துக் காட்டுகின்றார்.

இப்படி தரம் மாறிப் போன தியாஜனிசுக்கு, அநேக விரோதிகள் அவனைச்சுற்றி எப்பொழுதும் இருந்தார்கள் என்பது உண்மைதான். என்றாலும், அவனை எதிர்த்திட யாருக்கும் தைரியமே இல்லை.

இவ்வாறு வாழ்நாள் முழுவதும் வரட்டு ஜம்பத்திலும் அதே சமயத்திலும் வல்லமை நிறைந்தவனாகவும் இருந்து, மாற்றார்களும் மதிக்கும் வண்ணம் வாழ்ந்து காட்டினான் தியாஜனிஸ் என்றால், அது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

இருந்த பொழுது அவனைப்பற்றி எல்லோரிடையிலும் இருந்த மதிப்பு, இறந்த பிறகு இன்னும் அதிகமாயிற்று என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! நம் நாட்டில் முகராசி, கவர்ச்சி என்பார்களே, அது அவனுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்ததுபோலும்.

தியாஜனிஸ் சிலை நிறுவப்பட்டது என்பதை முன்னரே கூறியுள்ளோம். தியாஜனிஸ் உயிரோடிருந்தபோது, அவனை எதுவும் செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தான் எதிரி ஒருவன்.

அன்றைய தினம் ஆங்காரம் மிகுதியாகிப்போய் உயிரோடிருக்கும் பொழுதுதான் அவனை அடிக்க முடியவில்லை. அவனது சிலையையாவது அடித்து ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வோம் என்ற நப்பாசை மிகுதியால், நள்ளிரவு நேரத்தில் சிலையருகே சென்றான். தன் ஆத்திரம் தீர, ஆவேசமும் ஆசையும் அடங்க, சாட்டையால் சிலையை அடித்துத் தீர்த்தான்.

அந்த அடியால் அசைந்த சிலை, அவன் மீதே விழ, அந்த எதிரியும் அதே இடத்தில் நசுங்கிச் செத்தான்.

மறுநாள் காலையில் வந்து பார்த்த மக்கள், சிலையின் கீழ் ஒருவன் செத்துக்கிடப்பதை அறிந்து வியந்தார்கள். தியாஜனிசைப் போற்றினார்கள் ஏன் தெரியுமா?

உயிரோடிருந்த பொழுது எல்லோரையும் வென்று புகழ் பெற்றான். செத்துச் சிலையான பிறகும் கூட, தன் எதிரியைக்கொன்று வென்று கிடக்கிறானே என்பதாக அவர்கள் கற்பனை செய்து கொண்டு அவன் வலிமையை வாயாராப் புகழ்ந்தார்கள்.

அவர்கள் புகழ்ந்தால் போதுமா? அரசாங்கம் அதனைப் பார்த்துக்கொண்டு வாளா இருக்கமுடியுமா?

ஓருயிரைப் போக்குகின்ற எந்த ஜீவனுக்கும் அல்லது எந்தப் பொருளுக்கும் சரியான தண்டனையை நல்கிட வேண்டும் என்பதே அந்தக் காலத்தில் அந்நாட்டின் சட்டமாக இருந்தது. அதன்படி, ஓர் மனித உயிரைக் கொல்லக் காரணமாக இருந்த சிலைக்கும் உரிய தண்டனை தந்தாக வேண்டும் என்று அரசு சார்பில் உறுதியாயிற்று.

அந்தத் தீர்ப்பின்படி, கப்பல் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்டு, நடுக்கடலில் தூக்கியெறியப்பட்டது கொலைகார தியாஜனிஸ் சிலை.

சிலையின் சிறப்பு மேலும் பெருகுவது போல பல சம்பவங்கள் அதற்குப்பிறகு தோன்றின. தியாஜனிஸின் பேர் ராசிக்கு இன்னும் உயிர் இருந்தது போலும்! அது வேலை செய்யத் தொடங்கிற்று.

தியாஜனிஸ் வாழ்ந்த நகரமான தாசஸ் நகரத்தில் பஞ்சம் பெருகியது. பயிர்கள் விளைச்சலிழந்தன. நாடே வறுமையில் உழலத் தொடங்கியது. மருண்ட மக்கள், வேறு வழி அறியாது டெல்பி (Delphi) எனும் இடத்திற்குச் சென்று அருள்வாக்குக் கேட்க நின்றார்கள். அப்பொழுது அசரீரி (Oracle) ஒன்று எழுந்தது.

தாசஸ் நகரத்து அதிகாரிகள், தங்கள் அரசியல் எதிரிகளை எல்லாம் திரும்பவும் அழைத்துக்கொள்ள வேண்டும் என்று அசரீ ஆணையிட்டது.

அஞ்சிக் கொண்டிருந்த அதிகாரிகள் அந்த ஆணைக்கு அடங்கினர். அதன்படி எதிரிகளை அழைத்து அரவணைத்துக் கொண்டனர். என்றாலும் பஞ்சம்போன பாடில்லை. பழைய நிலையே நீடித்து வந்தது. ஆகவே மீண்டும் டெல்பியை நோக்கிப் படையெடுத்தார்கள் தங்கள் குறையைச் சொல்ல.

நீங்கள் தியாஜனிசை மறந்து விட்டீர்கள் என்று அசரீரீ சொல்லிவிட்டது. தியாஜனிஸ் இறந்தல்லவோ போய் விட்டான்! அவனை எங்கே போய் பிடிப்பது? அர்த்தம் விளங்காமல் துடித்துப் போய் நின்றவர்களுக்கு, வைத்த சிலையின் ஞாபகம் வந்தது.

அதைத்தான் நடுக்கடலில் போய் தூக்கியெறிந்து விட்டோமே என்ற நினைவு வந்ததும், பெரிதும் குழம்பினார்கள். கடலில் போய் எங்கே தேடுவது? பஞ்சப் பிரச்சினையை விட பெரிய பிரச்சினையாக இந்த நினைவு வாட்டி வதைத்தது.

சில நாட்கள் கழித்து, செம்படவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்று, வலைவீசிய பொழுது, தியாஜனிஸ் சிலை வந்து சிக்கிக் கொண்டது. கனமாயிருக்கிறது என்று கடினப்பட்டு வலையை இழுத்தவர்களுக்கு சிலையாயிருந்தது மிகவும் ஏமாற்றமாக இருந்தாலும், அதிகாரிகளை ஆனந்தப்பட அதுவே போதுமானதாக அமைந்துவிட்டது.

சிலை வந்து சேர்ந்து, பீடத்தில் அமர்த்தப்பட்டபோது, தாசஸ் நகரத்துப் பஞ்சம் தீர்ந்துசெழிப்படைந்தது, மக்களுக்கு தியாஜனிஸ் மேலிருந்த அன்புமாறி இப்பொழுது பக்தியாகிவிட்டது.

மீண்டும் சிலை காணாமற் போனால் கஷ்டத்துக்குள்ளாக நேரிடும் என்று எண்ணிய அவர்கள், அந்த சிலையை பீடத்தோடு பீடமாக சேர்த்து, இரும்புச்சங்கிலியால் பிணைத்து விட்டார்கள். இப்பொழுது அவர்களிடம் பயபக்தி அதிகமாயிற்று.

வாழ்க்கையில் அபரிதமான வலிமையும் ஆற்றலும் கொண்டு வாழ்ந்த வீரர்களைப் போற்றி வைத்திருக்கும் சிலைகளுக்கு, நோய்களைத் தீர்க்கும் தெய்வ சக்தி வந்து விடும் என்ற நம்பிக்கை, அக்கால மக்களுக்கு இருந்திருக்கிறது. அந்த நம்பிக்கையின் விளைவாக தியாஜனிஸ் சிலைக்கு மேலும் புகழ் வந்து குவியலாயிற்று.

நோய்களைத் தீர்த்து வைக்கும் தெய்வசக்தி நிறைந்தது நம் தியாஜனிஸ் சிலை என்று தாசஸ் நகரத்து மக்களின் நம்பிக்கையின் வேகம் பெருகலாயிற்று. அதனால் அந்தச் சிலையைத் தரிசிக்க வருபவர்களின் கூட்டமும் பெருகலாயிற்று.

பக்கதர்கள் கொண்டு வரும் காணிக்கையும் பெருகலாயிற்று, காணிக்கை நிறைந்தவுடன் அதைக் கணக்கிடவும் கண்காணிக்கவும் ஒரு நீதிபதியே நியமிக்கப்பட்டிருந்தார் என்றால் பாருங்களேன்!

ஓராண்டு காலத்தில் வசூலான காணிக்கைத் தொகையை வைத்துக்கொண்டு, தியாஜனிஸ் சிலைக்கு எவ்வாறு பெருமையும் மரியாதையும் செலுத்தலாம் என்பதையும் தீர்மானிக்க ஒரு குழு உருவாக்கப்பட்டிருந்தது என்றால், தியாஜனிஸ் ஒரு ஜெகதலப் பிரதாபன் என்று கூறுவதைத் தவிர, வேறென்ன கூற முடியும் வேறு எப்படி நினைக்கத் தோன்றும்?

உண்மையான உடலமைப்புள்ள, சாதாரண மனிதனாக வாழ்ந்த வீரன் ஒருவன், செத்தபிறகு தெய்வ வாழ்வு பெறுகின்ற விந்தையான கதையாக அல்லவா தியாஜனிஸ் வாழ்வு நிறைவு பெற்றிருக்கிறது. வாழ்க தியாஜனிஸ் என்று வாழ்த்துவோமாக!

அடுத்தது தியாஜனிஸ் ரகசிய உடன்பாடு செய்து கொண்ட ஈதிமஸ் எனும் வீரனைப் பற்றிக் காண்போம்.

21. இரண்டு கெட்டான் ஈதிமஸ்

ஒருவன் ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றிபெற்று புகழடைந்து விட்டான் என்றால், அவனை இந்திரன் சந்திரன் என்று நம்மவர்கள் போல புகழந்து பேசி, ஓகோ என்று வானளாவ உயர்த்தி, கதை கட்டி விடுகின்ற பழக்கம், கிரேக்கத்தில் நம்மைவிட சற்று அதிகமாகவே இருந்திருக்கிறது.

அந்த வீரன் எப்படிப்பட்டவன் என்பதைக் கூட அவர்கள் எண்ணிப்பார்ப்பதுமில்லை. அந்த இரண்டுங்கெட்டான் நிலைக்கு உள்ளாகியிருந்த ஈதிமசுக்கும் அதே போல புகழும், புராணம் தோற்பதுபோன்ற பின்னணியில் உள்ள கதையும் உருவாயின.

தியாஜனிசிடம் தோற்று ஈதிமஸ், பணத்தைக் காட்டி, அவனைப் பக்குவப்படுத்தி, தான் வெற்றி பெற சமரசம் செய்து கொண்ட சுத்த சுகுணவீரன் என்பது, பின்னர் அடுத்து வந்த ஒலிம்பிக் பந்தயத்தில் குத்துச்சண்டைப் போட்டியில் வெற்றி பெற்ற மகாவீரன் என்பதையும் நீங்கள் தியாஜனிஸ் கதையில் படித்தீர்கள்.

இத்தாலியின் மேற்குக் கரையோரப் பகுதியில் தெமிசா என்றொரு நகரம் இருந்தது. அந்த நகரில் பொலைட்ஸ் என்றொரு வீரன் இருந்தான். அவன் ஒரு சமயம் போர் செய்து கொண்டிருக்கும் பொழுது அகால மரணமடைந்து விட்டான். அதன்பின் அந்த வட்டாரத்தில் அவன் பேயாகத் திரிந்து கொண்டிருந்தானாம்.

பேயாகத் திரிந்த பொலைட்ஸ், தெமிசா நகரத்து மக்களை ஒரு பயங்கர நிலைக்கு ஆளாக்கியிருந்தான்.

அதாவது, வருடத்திற்கு ஒருமுறை தனக்கொரு கன்னிப்பெண்ணைக் கொண்டு வந்து காணிக்கையாகத் தரவேண்டும் என்று தெமிசா நகரத்து மக்களைத் தொந்தரவு செய்து பயமுறுத்தி வந்தான். பெண்ணாசை பேயையும் விடவில்லை பார்த்தீர்களா?

தெமிசா நகரத்து மக்களும், அஞ்சி நடுநடுங்கி வருடம் ஒரு பெண்ணைத்தானே இழக்கிறோம் என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டு, ஆண்டுக்கு ஒரு முறை அழகான பெண்ணொருத்தியை அனுப்பிக் கொண்டிருந்தார்களாம். (பகாசூரன் ஒரு பையனையும் உணவையும் கேட்டதாகவும், பீமன் சென்று பகாசூரனைக் கொன்றதாகவும் நம் நாட்டுப் பாரதக் கதையில் இருக்கிறதே!)

வழக்கம் போல, பேய்க்குப் பெண்ணை அனுப்புகின்ற நாளும் வந்தது. கன்னிப் பெண்ணையும் தேர்ந்தெடுத்தாகி அனுப்புகின்ற சமயத்தில், ஈதிமஸ் அந்த நகரத்திற்கு வந்து சேர்ந்தான். அழகே உருவான ஒரு பெண் நிற்பதைக் கண்டான்.

அந்த அழகி சாகப்போகிறாள் என்பதை அறியாமல், அவள் அழகிலே தன் மனதைப் பறிகொடுத்தான் ஈதிமஸ். காலங் கடந்து போனநிலை என்று தெரிந்து கொண்ட பின்னும் எண்ணத்தை விட்டு விடவும் அவனுக்கு மனமில்லை.

தான் விரும்பிய பெண்ணுக்காகப் பேயுடன் போரிடவும் தயார் ஆனான். பேயைத் தோற்கடித்து, வென்று தொலைத்ததுமின்றி பெண்ணையும் மணந்து கொண்டான். அந்தத் தெமிசாநகரத்து மக்களுக்கு நிரந்தரவிடுதலையையும் அச்சத்திலிருந்து வாங்கித் தந்தான் என்பது ஒரு கதை.

இந்த ஈதிமசும் ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு தன்னை ஒரு மனிதப்பிறவி என்று கூறாமல், தெய்வப் பிறவி என்று பேசினான். நதிக்கடவுளான காசினஸ் (Caecinus) தான் தனது தந்தை என்று கூறியதை பலரும் ஏற்றுக் கொள்ளத்தான் செய்தனர்.

பேயைக் கொன்ற கதையும் இவன் வாழ்க்கை வரலாற்றுடன் சேர்ந்து கொண்டது. மனிதனாக நடமாடி, ஆவியுடன் போராடி வாழ்ந்த ஈதிமஸ், நிலையில் இரண்டுங்கெட்டானாக இருந்தாலும், சரித்திரத்தில் வீரனுக்குரிய புகழ் நிலையிலிருந்து விழாமல் இன்றுவரை வாழ்ந்து வருகிறான்!

 22. கீர்த்தி பெற்ற கிளியோமிடஸ்

கிளியோமிடஸ் என்பவன் சிறந்த குத்துச்சண்டை வீரன். அஸ்திபாலா எனும் நகரத்தைச் சேர்ந்தவன். ஒலிம்பிக் பந்தயத்தில் குத்துச்சண்டைப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற வேகத்துடன் வென்றவனுக்கு எத்தனை எத்தனை அதிர்ச்சிகள் காத்துக் கொண்டிருந்தன தெரியுமா?

ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் இகஸ் (lccus) என்பவனுடன் பொருத நேர்ந்தது. இறுதிப் போட்டியான அந்தப் போட்டியில், இருவரும் கடுமையாகக் குத்திக் கொண்டனர்.

படாத இடத்தில் அடிபட்டு இகஸ் மரணமடைந்து விட்டான். எதிர்பாராத விதமாக இது நடக்கவில்லை என்று ஒலிம்பிக் அதிகாரிகள் முடிவு செய்து, கிளியோமிடிசை அந்தப் போட்டியிலிருந்து விலக்கி விடுகின்றார்கள்.

வெற்றிக்கு வெற்றியும், புகழும் புனிதமும் மிக்கப் பரிசும் பறிபோன நிலையில், கிளியோமிடஸ் மனமுடைந்து ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தான். போட்டியில் பரிசிழந்த கலக்க நிலை. முகத்திலே பட்ட குத்துக்களினால் ஏற்பட்ட மயக்கநிலை.

தன்னை மறந்த நிலையில் வந்துகொண்டிருந்த கிளியோமிடஸ் வழியிலே ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. அதனருகில் ஆடி அசைந்து சென்றான். அசந்துபோய் நின்றான்.

என்ன செய்கிறோம் என்று தெரியாத நிலையில் அவன் அந்த பள்ளிக்கூடக் கூரையைப் பிடித்து இழுக்க, கூரை இடிந்து விழுந்தது. பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த 60 குழந்தைகளும் உள்ளேயே நசுங்கி இறந்து போகின்றனர். கிளியோமிடிஸ் திகைத்துப் போய் நிற்கிறான்.

செய்தியறிந்த அந்த ஊர்மக்கள், அவனை பிடித்துத் தாக்கிட விரட்டிக்கொண்டு ஓடிவருகின்றனர். பயந்து போன கிளியோமிடிஸ், முடிந்த வரை ஓடி இனி ஓட முடியாது என்ற நிலையில், அதீன் (Athene) எனும் கோயிலுக்குள் ஓடி நுழைந்து கொள்கிறான்.

அடைக்கலம் என்று கோயிலுக்குள் புகுந்தவன், மறைவாகப் பதுங்கிக் கொள்ள இடம் பார்க்கிறான். இடம் அமையவில்லை. அருகே ஒரு பெரிய கனமான பெட்டி ஒன்று இருப்பதைப் பார்க்கிறான்.

அதுவே அவனுக்கு, அந்த நேரத்தில் பாதுகாப்பான இடமாகத் தெரிகிறது.

பெட்டியைத் திறந்து அதனுள் புகுந்து மூடிக் கொள்கிறான்.

ஆத்திரத்துடன் விரட்டிக் கொண்டு வந்த அஸ்திபாலா நகரத்தினர், கோயிலுக்கு வெளியே வந்து நிற்கின்றனர். கதவு உள் தாழ்ப்பாள் போட்டிருப்பதைக் காண்கின்றனர். நீண்ட நேரப்போராட்டத்திற்குப் பிறகு, கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று ஆளுக்கொரு பக்கமாகத் தேடுகின்றனர்.

அவனைக் காணவில்லை என்ற கோபத்தில் பெட்டிக்குள் தான் அவன் இருக்கிறான் என்று கத்திக், கொண்டே கனத்த பெட்டியை வெகுநேரம் கஷ்டப்பட்டுத் திறக்கின்றனர். பெட்டியும் காலியாகக் கிடைக்கிறது.

என்ன ஆச்சரியம் கிளியோமிடஸ் அங்கும் இல்லை கோயிலுக்குள் நுழைந்ததைப் பார்த்தோம். வேறு எங்கே போயிருப்பான்! வெளியே செல்ல வழி ஏதும் இல்லை? என்று வியப்பாலும் அச்சத்தாலும் சிலையாகி நின்றனர் அனைவரும்.

பிறகு, தங்களது முக்கியமான மனிதர்களில் சிலரை டெல்பி எனும் இடத்திற்கு அனுப்பி, அருள்வாக்குக் கேட்டு வருமாறு அனுப்புகின்றனர். கிளியோமிடஸ் என்ன ஆனான், எங்கே போனான் என்று கேட்ட அஸ்திபாலா நகர முக்கியஸ்தர்களுக்கு, மேலும் ஒரு அதிர்ச்சி.

குத்துச் சண்டைக்காரர்கள் என்றால் கடவுளுக்குக் கருணையுள்ளம் உண்டு. இப்பொழுது அவன் குட்டிக் கடவுள். (Demigod) ஆகிவிட்டான். ஆகவே, அவனுக்குள்ள மரியாதை எல்லாம் நீங்கள் செய்ய வேண்டும் என்று அந்த அசரீகூறியது. கேட்டவர்கள் கலங்கிப் போனார்கள்.

அவர்களும் வேறு வழியின்றி அசரீரீ வாக்கை தேவவாக்காக ஏற்றுக் கொண்டு, கிளியோமிடஸை குட்டித் தெய்வமாக ஏற்றுக்கொண்டார்கள்.

சாதாரண வாழ்க்கையிலே சரித்திரப் புகழைப் பெற முடியாத கிளியோமிடஸ், குட்டித் தேவதையாக மாறுகின்ற பெரும் பேரினை பெற்றுக் கொண்டான்.

சிறந்த வீரர்களுக்கு வரலாற்றில் மந்திர தந்திர சக்தியை புனைந்து, பரபரப்பு ஊட்டும் மாயா ஜாலக் கதைகளை கற்பனை சாதுர்யத்துடன் படைத்துவிடுகின்ற ஆற்றலை, கிரேக்கர்கள் சற்று அதிகமாகவே பெற்றிருந்தார்கள் போலும்.

அக்காலத்தில் அத்தகைய கதைகள் ஆனந்த உலகத்திற்கு அழைத்துச் சென்றிருக்கலாம். ஆனால் இது போன்ற மாயாஜாலக் கதைகள் நம்மை ஒரு புதிரான, புரியாத புதிய உலகிற்குத்தான் அழைத்துச் செல்கின்றன. இத்தகைய வீரக்கதைகள் சில சமயங்களில் நமக்கு கோரக் கதைகளாகவும் தெரிகின்றன.23. வலிமைக்கோர் பொலிடாமஸ்

தெசாலி என்னும் பகுதியில், ஸ்காட்டுசா என்னும் நகரில் வாழ்ந்து வந்தான் பொலிடாமஸ். இவன் பங்கராசியம் எனும் குத்துச் சண்டையும், மல்யுத்தமும் கலந்த பயங்கரப் போட்டியில், ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றான். கி.மு. 408 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் பந்தயம் ஒன்றில் கலந்து கொண்டு, ஒரே முறைதான் வெற்றி பெற்றான் என்றாலும், இவன் புகழ் மாவீரன் மிலோவையும் மிஞ்சக் கூடியதாக அமைந்திருந்தது.

இவன் மிகுந்த வலிமையுடையவன் என்பதனால் மட்டும் மற்றவர்கள் பொலிடோமலைப் புகழவில்லை. எல்லா ஒலிம்பிக் வீரர்களையும் விட உயரமானவனாகவும் இருந்தான் என்பதனால்தான் என்று கூறுகிறார் பசானியாஸ் எனும் ஆராய்ச்சி வல்லுநர்.

வலிமையில் மிகுந்தவன் பொலிடாமஸ் என்பதை வற்புறுத்துகின்ற வகையிலே பல கதைகள் உலவி வருகின்றன.

ஒலிம்பியஸ் என்ற மலைக்குப் போனானாம் பொலிடாமஸ். தன்னந் தனியனாகப் போனவன் எதிரே சிங்கம் ஒன்று எதிர்பட்டுத் தாக்கியபோது, அவன் தன் வெறுங் கையாலேயே அடித்துக் கொன்றான் என்பதாக ஒரு கதை. இது அவனுடைய அஞ்சாமையையும் போரிடும் ஆற்றலையும் விளக்குவதாக அமைந்திருப்பதைக் காணலாம்.

ஒருமுறை பொலிடாமஸ், ஒரு காளைமாட்டின் பின்னங்கால்கள் இரண்டையும் பிடித்துக் கொண்டானாம்; தப்பி ஓடுவதற்காகத் திமிறி கொழுத்த காளையினை இவன் விட்டுவிடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டானாம். முழு முயற்சியுடன், முண்டியடித்துக் கொண்டு, அவன் கையிலிருந்து காளைதப்பித்து ஓடிவிட்டது என்று பார்த்தால், பொலிடாமசின் கைகளில் காளைமாட்டின் குளம்புகள் இருந்தனவாம். இந்த நிகழ்ச்சியையும் அவன் அரிய வலிமையை விளக்குவதற்காகக் குறித்திருக்கின்றனர்.

பந்தயக்குதிரைகள் போலபாய்ந்து செல்லும் குதிரைகள் பூட்டிய சாரட்டு வண்டி ஒன்று, வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் பொழுது, அதன் பின்புறம் இவன் சென்று, ஒரு கையால் வண்டியைப் பிடித்து இழுத்து நிறுத்திவிட்டான் என்பதாக மற்றொரு நிகழ்ச்சி.

இவன் வலிமை உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பரவியது. பொலிடாமசின் பலத்தைப் பற்றி பலபடக் கேள்விப்பட்ட பாரசீகத்து மன்னன், தன் அரசவைக்கு அவனை வரவழைத்தான். தன் மெய்க்காப்பாளர்கள் மூவரை அவனுக்கு அறிமுகப்படுத்தி, இவர்களை வென்று அவனது வலிமையை நிரூபிக்குமாறு கேட்டுக் கொண்டான். அதை சவாலாகவே ஏற்று, சக்திமிகந்த அந்த மூன்று வீரர்களையும் வென்று தன் வலிமையை நிரூபித்தான் என்பதாக மற்றொரு நிகழ்ச்சி.

இவ்வாறு சக்தியும் திறமையும் மிக்க பொலிடாமஸ், கி.மு. 404ல் நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயத்திற்கு வந்தான். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகின்ற போட்டியில், மீண்டும் தன் வெற்றியை நிலைநாட்டிக் கொள்ளச் சென்றான். ஆனைக்கும் அடிசறுக்கும் என்பார்களே அதுபோல் அவன் நிலையாயிற்று.

அவனும் சாதாரண மனிதன்போல் நாளுக்கு நாள் நலிந்து வருகிறான் என்பது போல நிலை ஆயிற்று, புரோமர்கஸ் எனும் வீரனிடம் பொலிடாமஸ் தோற்றுப்போனான். சிங்கத்தைக் கொன்றவன். பாரசீக வீரர்களை வென்றவன். புரோமாகஸ் எனும் வீரனிடம் தோற்றுப் போனானே என்றாலும், பொலிடாமசின் வீரம் பழுதுபட்டுப் போகவில்லை. பாழாகி விடவில்லை; வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு இரு கண்கள் போன்றவைதானே. பொலிடாமசும் வீரத்துடனே தோல்வியை ஏற்றுக் கொண்டான்.

இத்தகைய ஆற்றல்மிக்க வீரனின் மரணமும் மிலோவின் மரணம் போலவே, வீரமரணமாக அதாவது வலிமை மிக்க மரணமாகவே அமைந்துவிட்டிருந்தது.

ஒருநாள், பொலிடாமஸ் தன் நண்பர்களுடன் நிழலுக்காக ஒரு குகையில் தங்கியிருந்த பொழுது, குகையின் மேற்கூரையானது சரிந்து விழத் தொடங்கியது. பயந்து அலறிய நண்பர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, சரிந்த பாறையினை இரு கைகளாலும் தாங்கிப் பிடித்துக் கொண்டான் பொலிடாமஸ்.

அவசர அவசரமாக அவனது நண்பர்கள் குகையை விட்டு வெளியேறினர். ஆனால், கூரையின் பாரம் தாங்க முடியாமல், பொலிடாமஸ் அந்தக் குகைக்குள்ளேயே நசுங்கி செத்துப் போனான்.

வீரர்கள் சாதாரணமாக இறப்பதில்லை. வீரமரணமே எய்துவார்கள் என்ற நெறியை இதுவரை நாம் படித்த எல்லா கதைகளுமே வலியுறுத்திக் கொண்டேதான் வருகின்றன. பொலிடாமஸ் கதையும் அது போலவே அமைந்திருக்கிறது. வியப்பில்லையே!

24. வாயாடி டியோக்சிபஸ்

வாழ்க்கையில் மனிதன் உயர உயர, அவன் வாயடக்கமாகவும் நாணயமாகவும் நடந்துகொள்ளும் பொழுதுதான், அவன் பெறுகின்ற புகழும்பேறும் நிலைத்து நிற்கிறது. அவன் சிறிதளவு தன் நிலையிலிருந்து தாழ்ந்து விட்டாலும், அது அவன் புகழை இடித்துத் தூளாக்கும் வெடிகுண்டாகிவிடும். அதற்கு சான்றாகத் திகழ்கிறான் டியோக்சிபஸ்.

கி.மு.336ல் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் பங்கராசியம் எனும் போட்டியில் வெற்றி பெற்ற வீரன் டியோக்சிபஸ். எந்தப் போட்டியாளனும் இவனுடன் போட்டியிடப் பயந்து ஒதுங்கிக் கொண்டான் என்றால், இவனது வல்லமையின் மிகுதியை நினைத்துப் பாருங்கள் பெற்ற வெற்றியையும், பெருமை மிக பரிசையும் ஏந்திக் கொண்டு, டியோக்சிபஸ் தன் தாயகமான ஏதென்சுக்கு வருகிறான்.

வெற்றி வீரனுக்கு வீர வரவேற்பளிக்கிறது ஏதென்ஸ் நகரம், வலிமையின் தாயகமான ஏதென்ஸ் நகரமே திரண்டு வந்து, வானளாவிய வாழ்த்தொலியை எழுப்பி வரவேற்றது. உற்சாகம் பெற்ற மக்கள், வீரனை சாரட்டு வண்டியிலே உட்கார வைத்து ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தின் நடுவே ஒப்பற்ற உருவமாக அமர்ந்து, மமதையெனும் மகுடம் சூட்டிய பேருருவமாக அமர்ந்து வருகிறான். அவனது கண்கள் ஆச்சரியத்தால் தன்னைப் பார்க்கும் அனைவரின் மீதும் சுற்றி ஆலவட்டம் போட்டுக்கொண்டு வருகின்றன.

அந்தக்கும்பலிலே ஒருத்தி அழகுப் பெட்டகமாக நின்று கொண்டிருக்கிறாள். ஆண்மையின் உருவமாக அலங்காரத்துடன் வீற்றிருக்கும் டியோக்சிபசைப் பார்த்து, ஏதோ நையாண்டியாகப் பேசுகிறாள். பழுத்தமரத்தில் கல்லடி விழும். அதற்காக மரம் எதிர்த்து கல் வீசுவதில்லையே!

டியோக்சிபஸ் தன்னை மறந்து விடுகிறான். ஒப்பற்ற ஒலிம்பிக் பந்தயத்தின் உன்னத வெற்றிவீரன் என்பதை மறந்துவிடுகிறான். பெண் பேசிய நையாண்டி வார்த்தைக்குத் தானும் பதிலடி தரவேண்டும் என்று விரும்புகிறான். வாயடக்கத்தை இழந்தவனின் வாய், வேறுவிதமாக வார்த்தைகளைப் பொழிந்தது.

ஏ பெண்ணை! இந்த வல்லமை வாய்ந்த மாவீரனின் கைகளில் ஏற்கனவே இருந்தவள் தானே நீ! இதோ உன் வல்லமை வாய்ந்த வீரனைப் பார்த்துக் கொள். அருகிலிருந்த அனைவரின் காதுகளிலும் தெளிவாகவே விழுந்தன அவன் கூறிய மொழிகள். அவளும் அவமானத்தால் கூனிக் குறுகிப் போனாள்.

வீரனின் வாய்வார்த்தைகள் வதந்தியாகப் பரவின. காட்டுத்தீயை விட வேகமும் கொடுமையும் மிக்கதாக அவ்வார்த்தைகள் பரவிச் சென்றன. அவன் வேடிக்கையாகக் கூறிய வார்த்தைகள், அவள் குடும்பத்தையே அதிரவைத்தன. அது அவள் தங்கையின் வாழ்க்கையையும் பாதித்தது. கேலி மொழி ஒரு குடும்பத்தையே பாழாக்கிவிட்டது!

நாடறிந்த ஒருவன் எதைப் பற்றிப் பேச வேண்டுமென்றாலும் யோசித்து, நாவடக்கத்துடன் பேச் வேண்டும் என்பது இதனால் புலனாகின்றதன்றோ!

டியோக்சிபஸ் மாவீரனாகத் திகழ்ந்ததால், அவனுக்கு அரண்மனையில் பணியாற்றும் பெரும்பேறு கிடைத்தது. அவன் மகா அலெக்சாந்தரின் மனங்கவர்ந்த வீரனாகி விட்டான். மன்னன் அருகில் இருந்திடும் வாய்ப்பும் கிட்டி விட்டதென்றால், மாபெரும் பொறுப்பும், வந்துவிட்டது என்பது தானே பொருள்!

பாரசீகத்தின் மீது படையெடுத்து விட்டிருந்தான் மகா அலெக்சாந்தம். படைகள் செல்கின்ற போது, மன்னனுடன் டியோக்சிபஸும் கூடவே செல்ல வேண்டியதாயிற்று.

செல்கின்ற வழியில் காரக்ஸ் எனும் மற்றொரு வீரனுடன் வாய்வார்த்தை முற்றி, அதுவே சவாலிடும் அளவுக்கு வளர்ந்து, கடைசியில் துவந்தயுத்தம் (Duel) பண்ணுகின்ற தன்மைக்கு முற்றிவிட்டது.

காரக்ஸ் என்பவன் கையிலேவேல், ஈட்டி, சுத்தி முதலிய பயங்கர ஆயுதங்களுடன், உடல் முழுவதும் இரும்புக் கவசம் பூட்டிக் கொண்டு வந்து நின்றான். டியோக்சிபசோ, பிறந்த மேனியனாக, தேகம் முழுவதும் ஆலிவ் எண்ணெயை தேய்த்துக் கொண்டு, கையில் ஒரு கதாயுதத்துடன் (Club) வந்து எதிர் நின்றான். துவந்த யுத்தம் கோபாவேசமாகத் தொடங்கியது.

முதலில் காரக்ஸ் எறிந்த வேலை, கதையால் தட்டி விட்டுத் தப்பித்துக் கொண்டான் டியோக்சிபஸ். பிறகு குறிபார்த்து எறிந்த ஈட்டியையும் தடுத்துத் தள்ளி விட்டான். முயற்சியில் தோல்வியடைந்ததால் கோபமடைந்த காரக்ஸ், கத்தியை உறையிலிருந்து உருவ முயன்றபோது. ஒரு கையைப் பிடித்துக் கொண்டு, மறுகையால் அவனைத் தடுமாறி விழுமாறு தள்ளிவிட்டான். ஒலிம்பிக் பந்தயத்தில் பங்கராசியப் போட்டியில் வெற்றிபெற்ற வீரனல்லவா இவன்!

மல்யுத்த தந்திர முறைகள் தெரிந்திருந்ததால், அந்த காரக்சைத் தரையில் தள்ளிவிட்டு, மல்லாந்து விழுந்துகிடந்த அவனது கழுத்தில் ஒரு காலை வைத்து மிதித்து, கோபமாக அழுத்திக் கொண்டிருந்தான்.

இவ்வாறு செய்த டியோக்சிபஸ்சின் செயல் அலெக்சாந்தரது படைவீரர்களுக்கு, ஆனந்தத்தை அளிக்கவே, அவர்கள் ஆனந்த ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினார்கள். ஆனால், காரக்சு என்ற வீரனோ அலெக்சாந்தருக்குக் கிணையாக வந்த மெசிடோனியன் எனும் மன்னர் படையைச் சேர்ந்தவன்.

ஆகவே, அந்த மன்னனுக்கும் அவனது படை வீரர்களுக்கும் இது பெரிதும் வெறுப்பையே தந்தது. அவர்கள் ஒருவாறு சமாதானம் செய்து, இருவரையும் சண்டை போடாமல் விலக்கி விட்டார்கள்.

இந்த சண்டை நிகழ்ச்சிக்குப் பிறகு, டியோக்சிபஸ் முன்போல தனது மன்னனின் அன்புக்குரியவனாக இல்லாமல், சற்று ஒதுங்கியே இருந்து வந்தான். அலெக்சாந்தர் மன்னன் இவன் மேல் கோபமாக இருக்கிறான், முன்போல அன்பாக இல்லை என்பதை புரிந்து கொண்டு அதனை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் இவன் எதிரிகள்.

எதிரிகள் கூடி, ஒரு பயங்கரமான திட்டத்தைத் தீட்டினார்கள், அதன்படி, ஒரு தங்கக் கோப்பையைக் கொண்டு போய், அவன் இருந்த அறையில் ஒளித்து வைத்து விட்டு, டியோக்சிபஸ்ஸைத் திருடன் என்று குற்றம் சாட்டத் தொடங்கினார்கள். தான் திருடவில்லை என்று எவ்வளவோ மறுத்துப் பார்த்தும், யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவனது அறையை சோதனையிட வேண்டும் என்று எதிரிகள் வற்புறுத்தினர்.

தங்கக் கோப்பையைத் தன் அறையில் கண்டதும், வீரனுக்கு அவமானம் தாங்க முடியவில்லை. இனிமேல் வாழ்வது மரியாதை அல்ல என்று மனம் நொந்து, டியோக்சிபஸ் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனான். வஞ்சகத்தால் தீர்த்துக் கட்டினோம் என்று எதிரிகள் கைகொட்டி நகைத்து மகிழ்ந்தனர்.

வாழ்க்கையில் புகழ் அதிகமாக வரவர, புகழுக்குரியவன் பத்திரமாக இருக்க வேண்டும்; புத்திசாலித்தனமாகப் பேச வேண்டும் சாதகம் தேடி சதி செய்திடக் காத்திருக்கின்ற

எதிரிகளின் தந்திரத்துக்கு ஆளாகாமல், மிகவும் எச்சரிக்கையாகவும் வாழ வேண்டும் என்ற நீதியை உலகுக்கு உணர்த்துகின்ற வாழ்க்கையைத்தான் வாழ்ந்து காட்டியிருக்கிறான் டியோக்சிபஸ்.25. தனிவரம் பெற்ற தயாகரஸ்

ஒருவர் ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெறுவது என்பதுவே மிகவும் ஆச்சரியமான அதிசயமான செய்தி. அதிலும் ஒரு பரம்பரையே ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெறுகின்றது என்றால், அது வீரப் பரம்பரையாகத்தானே இருக்கமுடியும்!

அத்தகைய திறமை மிக்கப் பரம்பரையை தொடங்கி வைத்துச் சிறப்படைந்தவன் தயாகரஸ் என்ற வீரன். இவன் குத்துச் சண்டையில் கி.மு. 464ஆம் ஆண்டு ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெற்றிருந்தான். இவன் செய்த சண்டையின் சிறப்பினையும் நுண் திறனையும் அறிந்த பிண்டார் எனும் பெரும் கவிஞர், எழுச்சி மிக்கப் பாடலால் இவனது வீரத்தைப் புகழ்ந்து பாடினார். அந்தப் புகழ்ச்சி வரிகள், அன் எனும் கோயில் சுவர்களில் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருந்தன என்று ஒரு வரலாற்றுக் குறிப்புக் கூறுகிறது.

இத்தகைய இணையிலா வீரனின் பரம்பரையும் இவனைப் போலவே, வீரமிக்கவர்களாக, வெற்றியாளர்களாகவே விளங்கியிருக்கிறார்கள்.

தயாகரசின் மூத்த மகன் டமாகெடஸ் (Damagetus) என்பவன். பங்கராசியம் எனும் போட்டியில், 452ம் ஆண்டில் வென்றான், அதனைத் தொடர்ந்து கி.மு. 448ம் ஆண்டிலும் வென்று தன் வெற்றியின் மேன்மையை நிலைநாட்டினான்.

மூத்தவனுக்கு இளையவன் சளைத்தவன் அல்லன் என்று நிரூபிப்பது போல், தயாகரசின் இரண்டாவது மகன் அகுசிலாஸ் (Acusilaus) என்பவனும் ஒலிம்பிக் பந்தயத்தில் குத்துச் சண்டைப் போட்டியில் வெற்றி பெற்றான்.

கி.மு. 464ஆம் ஆண்டில் ஒலிம்பிக் பந்தய மைதானத்திற்குள் நுழைந்த தயாகரஸ், தன் மைந்தர்கள் வெற்றியைக் காண 16 ஆண்டுகள் கழித்தே வந்திருந்தான் பந்தய மைதானத்திற்கு, இரண்டு மைந்தர்களும் வெற்றிபெற்ற பிறகு, தங்களது தந்தையை தங்கள் தோள்களில் சுமந்து வலம் வந்து பொழுது, வீரமக்களைப் பெற்ற மாவீரன் தயாகரஸ் என்று எல்லோரும் வாயார வாழ்த்தி மகிழ்ந்தார்கள்.

இந்த பரம்பரையின் வீரம் இத்துடன் முடிந்துபோய் விடவில்லை; தயாகரசின் மூன்றாவது மகன் டோரியஸ் (Doreeus) என்பவன், பங்கராசியம் எனும் போட்டியில் கி.மு. 432 கி.மு. 428 கி.மு. 424 ஆம் ஆண்டுகளில் நடந்த மூன்று பந்தயங்களிலும் தொடர்ந்தாற் போல வென்று, தன் தந்தையின் புகழ் வரலாற்றில் மேலும் பல இனிய வாழ்த்துக்களைச் சேர்த்தான்.

மகன்களின் வீரம் தயாகரசை பேரானந்தத்தில் ஆழ்த்தியது என்றால், தயாகரசின் மகள் பிரனிஸ் என்பவள், ஒலிம்பிக் பந்தய வரலாற்றிலே பெரும் புரட்சியையே செய்துவிட்டாள்.

பிரனிஸ் (Psrenics) என்பவளும் ஒரு ஒலிம்பிக் பந்தய வெற்றி வீரனைத் தான் மணந்து கொண்டிருந்தாள். அவர்களுக்கு ஒரு அண் குழந்தை பிறந்தது. அவர்க்ள அவனுக்கு பிசிடோரஸ் என்று பெயரிட்டார்கள். அவனைக் குத்துச் சண்டை வீரனாக்கி, ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெற்று. வீர பரம்பரையின் பெருமையைக் காக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் பயிற்சியளித்துக் கொண்டிருந்தான் அவனது தந்தை, தன் கணவன் அகால மரணமடைந்து விடவே அவனுக்குப் பயிற்சியளிக்கும் பொறுப்பை தாயான பிரனிஸ் ஏற்றுக்கொண்டாள்.

பிசிடோரசும் பந்தயத்தில் கலந்து கொள்ளும் தகுதி பெற்று விட்டான். பந்தயத்தில் நடக்கும் போட்டியில் தன் மகன் எப்படி சண்டை இடுகிறான் என்று பார்க்க வேண்டும் என்ற ஆசை, தாய்க்குத் தாயாயும் சண்டை பயிற்சிக்குக் குருவாகவும் விளங்கிய அவளுக்கு இருக்கதா என்ன? அவள் ஆசைக்குக் குறுக்கே நின்றது கிரேக்க நாட்டுச் சட்டம்.

பந்தய மைதானத்திற்குள் பெண்கள் நுழையக் கூடாது என்பது தான் கடுமையான சட்டம். மீறி யாராவது வந்ததையோ, மறைந்திருந்துப் பார்ப்பதையோ கண்டுபிடித்து விட்டால், பிடிபட்டவர்களுக்கு உடனே மரண தண்டனை என்பது தான் அந்தக் கொடுமையான சட்டம்.

பிரனிஸ் தன் உயிரைத் துச்சமாக மதித்தாள். தன் மகன் சண்டையிடுவதைப் பார்த்தேயாக வேண்டும் என்று முடிவெடுத்தாள், ஆணைப்போல மாறு வேடம் அணிந்தாள். பந்தய அரங்கிற்குள் நுழைந்து, பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து கொண்டாள். பந்தயங்கள் தொடங்கின. பிரனிஸ் மைந்தன் பிசிடோரஸ் குத்துச் சண்டை தொடர்ந்தது. தன் மகன் வெற்றி பெற்றான் என்று அறிந்ததும், பார்வையாளர்கள் பகுதியிலிருந்த பிரனிஸ், பாய்ந்து சென்று, தன் மகனை ஆரத் தழுவி, முத்தமிட்டுக் களிகூர்ந்தாள்.

அந்த வேகத்திலும் ஆவேசத்திலும் தன்னை மறந்தாள். அத்துடன் நின்றால் பரவாயில்லையே! அவளது ஆடை குலைந்தது. மாறுவேடம் கலைந்தது. பெண்ணொருத்தி உள்ளே வந்துவிட்டாள் என்ற பெருங்குரல் அரங்கிற்குள்ளே அலறியது. சட்டத்தை மீறிய பெண்ணைத் தண்டிக்க வேண்டுமென்ற நிலையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டாள்.

பிரனிஸ் தன் கதையைக் கூறினாள். தன் பரம்பரையைப் பற்றிக் கூறினாள். தன் மகனுக்குத் தான் பயிற்சி அளித்த விதத்தை விவரித்தாள். தன் மகன் சண்டையைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலை விளக்கினாள். தன் கடமை முடிந்தது. தன் உயிரைத் தர தனக்கு ஆட்சேபனை இல்லை. மரண தண்டனையை மனமார வரவேற்கிறேன் என்று வாக்குமூலம் அளித்தாள்.

அப்பொழுதுதான் ஒலிம்பிக் அதிகாரிகளுக்கு உணர்வு வந்ததுபோலும், பெண்களுக்கும் போட்டியில் இவ்வளவு ஆர்வமா என்று தெரிந்து கொண்டனர். கடுமையான விதிகளைத் தளர்த்திட விரும்பினர். பெண்களும் பந்தய மைதானத்திற்குள் வரலாம் என்று அனுமதி அளித்தனர். பின்னர் பெண்கள் பந்தயத்தில் கலந்து கொண்ட வரலாறும் தொடர்ந்தது.

இவ்வாறு உயிரையும் திரணமாக மதித்து, ஒலிம்பிக் விதிகளையே மீறி புரட்சியையும் புது மாற்றத்தையும் அளித்த பிரனிஸ், தன் தந்தை தயாகரசுக்கு மேலும் புகழினையே அளித்திருக்கிறாள்.

ஆரம்ப காலத்தில், பெண் குலத்திலிருந்து ஒரே ஒரு பெண்ணை மட்டும் பார்க்க அனுமதித்திருந்தனர். அவள் கோயில் தலைமைப் பூசாரியான பிரிஸ்டஸ் ஆப் டெமிடர் (Priestesc of Demeter). அதன் பின் ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து கொள்கின்ற வீரனுடைய தாய் தந்தை, மகன் என்பவர்கள் மட்டுமே வரலாம் என்று அனுமதித்திருந்தனர்.

வருபவர்கள் ஆணா பெண்ணா என்பதை அறிய பந்தயத்தில் போட்டியிடும் வீரர்களைப் போலவே, பயிற்சியாளர்களும் பிறந்தமேனியுடனே வரவேண்டும் என்ற கடுமையான வழியையும் ஏற்படுத்தினார்கள்.

இவ்வாறு தயாகரஸ் பரம்பரையினர், ஒலிம்பிக் பந்தயங்களில் தோன்றி, ஒரு புது சகாப்தத்தையும் பெரும் புரட்சியையும் உண்டு பண்ணிவிட்டார்கள். தயாகரஸ் தனி வரம்பெற்ற வீரன் போலவே கிரேக்க வரலாற்றில் கீர்த்தியுடன் இன்றும் விளங்குகிறான். ஏனெனில்.

தக்கார் தகவிலார் என்பார் அவரவர்தம்

எச்சத்தார் காணப்படும் என்பது பொய்யா மொழியின்

பொன்மொழியல்லவா!26. விதியால் வீழ்ந்த டோரியஸ்

டோரியஸ் எனும் வீரனின் கதை வீரக்கதையா சோகக் கதையா என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. இவன் ஒலிம்பிக் பந்தயத்தில் குத்துச் சண்டைப் போட்டியில் வெற்றி பெற்ற வீரனே வீரன் என்பதால், இவனுக்குத் தனி மரியாதையும் இனிய புகழும் இருக்கத்தான் இருந்தது.

கிரேக்கத்தின் முக்கிய இரு நாடுகள் ஏதென்சும் ஸ்பார்ட்டாவும் ஆகும். இவ்விரு நாடுகளுக்கிடையே அடிக்கடி சண்டை நடப்பது சகஜமாக நடக்கக் கூடியதுதான். அந்தச் சண்டை டோரியஸ்ஸின் தலைவிதியையே மாற்றக்கூடியதாக இருந்தது.

டோரியஸ் ஏதென்ஸ் நாட்டில் வசிப்பவன். ஏதென்ஸ் ஸ்பார்ட்டாவுடன் சண்டையிடும் போது, ஏதென்ஸ் நாட்டுக்காகப் பணியாற்றாமல் எதிர்ப்புப் பணியில் இறங்கி வேலை செய்தான். அவனை எதிரி என்று தீர்மானித்து, கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு நாடு கடத்தி விடலாம் என்று தீர்மானித்து, இத்தாலியில் உள்ள தூரி என்னும் இடத்திற்கு அனுப்பிவிட்டனர்.

வேறு இடம் போனதும்தான் டோரியஸுக்கு வீரம் வந்தது போலும், அங்கிருந்து படையைத் திரட்டிக் கொண்டு வந்து கி.மு. 410ம் ஆண்டு ஏதென்ஸ் மீது படையெடுத்தான். அந்தப் போரில் டோரியஸ் தோற்றான். கைதியானான். மீண்டும் நீதி மன்றம் அவனை விசாரித்தது. இப்பொழுது மரண தண்டனை விதித்தது.

டோரியஸ் ஒலிம்பிக் பந்தயத்தில் குத்துச் சண்டைப் போட்டியில் பங்கு பெற்று, வெற்றியடைந்து, ஏதென்ஸ் நாட்டுக்குப் புகழ் தேடித்தந்தான் என்ற ஒரே காரணத்திற்காக, அவன் மரண தண்டனையை ரத்து செய்தார்கள், மரணத்தின் கோரப்பிடியிலிருந்து விடுதலையடைந்தான் டோரியஸ்.

இதற்கிடையில் ஏதென்ஸுக்கும் ஸ்பார்ட்டாவுக்கும் நடைபெற்ற போரில், ஸ்பார்ட்டா வெற்றி பெற்றது. ஸ்பார்ட்டாவின் கீழ் ஏதென்ஸ் வந்து விட்டது. எந்தச் சண்டையிலும் கலந்து கொள்ளாமல் டோரியஸ் இருந்தபோது, ஸ்பார்ட்டா அரசால் கைது செய்யப்பட்டான். குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு மரண தண்டனைக்குள்ளானான்.

மனிதாபிமானம் நிறைந்த விதியானது, அவனது மரண தண்டனையை மாற்றி வைத்தது. ஆனால் டோரியசின் தலைவிதி, அவனை வாழவிடவில்லை. மரண தண்டனையாலேயே உயிரை இழந்தான். ஆற்றங்கரையின் மரமும், அரசனறிய வாழ்கின்ற மக்கள் வாழ்வும் எப்பொழுதும் ஆபத்துக்குள்ளாகும் என்பது பழந்தமிழ் பாட்டன்றோ! ஆற்றங்கரையில் இருக்கின்ற மரம் அடி பெயர்ந்து விழுந்ததுபோல, அரசுக்குத் தெரிந்த புகழ்பெற்று வாழ்ந்த டோரியஸ், விதியால் வீழ்ந்தான் என்றாலும் வரலாறு அவனை மறக்காமல் வாழ வைத்திருக்கிறது.27. அதிகாரிகளிடத்திலே அதிகாரம்

இது வரை ஒன்பது கிரேக்க நாட்டுப் புகழ்மிக்க வீரர்களைப் பற்றி தெரிந்து கொண்டோம். புகழேணியில் அவர்களை ஏற்றி வைத்த ஒலிம்பிக் பந்தயங்கள் எல்லாம். இசைவிழா நாடகவிழா போல, மக்கள் மாமன்றம் கூடிநடத்தும் மதத்தின் பெயரால் அமைந்த திருவிழா போலவே நடத்தப்பட்டிருக்கின்றன.

மத விழாக்களைப் போலவே, கோயிலும் ஆராதனையும் கொண்டாட்டமும் ஆக, பந்தயங்கள் கோலாகலமாக அந்தந்த மாநிலத்தில் நடத்தப்பட்டன.

விளையாட்டுக்களை நடத்துகின்ற அதிகாரிகளாக ஹலேநாடிகை (Helanodikai) எனும் குழு மற்ற மாநிலங்களில் பணியாற்றும் நீதிபதிகளைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்டது. போட்டியாளர்கள் பயங்கர விதிகளுக்கு உட்பட்டு, பங்கு பெற்றது போலவே அதிகாரிகளும் பயந்துகொண்டு தான் தங்களது முடிவைக் கூறவேண்டியவர்களாக இருந்தார்கள். சில சமயங்களில் அபராதம் கட்டுகின்ற நிலைமைக்கும் ஆளானார்கள் என்றால் பாருங்களேன்.

கி.மு. 396ம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சி இது. போலிமாஸ், லியான் என்று இரண்டு ஓட்டக்காரர்களிடையே ஏற்பட்ட முடிவின் பேதத்தால், முடிவு செய்த அதிகாரிகள் மாட்டிக் கொண்டார்கள்.

போலிமாஸ் என்பவன் தான் முதலில் வந்தான், வென்றான் என்று மூவரில் இருவர் தீர்ப்பளித்தனர். ஒருவரோ லியான்தான் வென்றான் என்று கூறினார். இதை அறிந்த லியான், அங்கிருந்த ஒலிம்பிக் கவுன்சிலிடம் சென்று முறைகேடு நடந்து விட்டது, நீங்கள் தான் தீர்ப்பளிக்க வேண்டும் என்று முறையிட்டுக் கொண்டான்.

கவுன்சிலின் நிர்வாகக் குழு கலந்தாலோசித்து, அதிகாரிகள் தோற்றவனுக்கு நஷ்டஈடு தரவேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதே சமயத்தில் முதலில் வந்தவன் என்று தீர்மானிக்கப்பட்ட முடிவு மாற்றப் படவில்லை. அதிகாரிகள் நஷ்ட ஈடு கட்டுகின்ற நிலைமையில் நிறுத்தப்பட்டதால், நிம்மதியில்லாமலே அந்த நீதிபதி வேலையை செய்து கொண்டிருந்தனர் என்று வரலாறு கூறுகின்றது.

போட்டிகள் எல்லாம் முடிந்தவரை விடியற்காலையிலேயே நடத்தினார்கள். காரணம் என்னவென்றால், சூரிய வெப்பம் தாக்காத குளுமை வேளை நன்றாக ஓடத் தாண்ட என்ற அளவில், அதிக சுறுசுறுப்பை உண்டாக்கும் என்பதால் தான்.

ஒரு பந்தயம் நடந்து மறுபந்தயம் நடக்கின்ற இடைவெளிக்குள், பந்தயத்திடல் முழுவதும் புல் புதராக மண்டிவிடும். இந்தப்புல் அகற்றிப் பிடுங்கும் பணியை, போட்டியில் பங்கு பெறும் உடலாளர்கள்தான் செய்திருக்கின்றார்கள். அவர்கள் புல் பிடுங்கி தரையை செதுக்கி வேலை செய்வதைப் பார்த்து வேறு அடிமைகள் இல்லையா இதனைச் செய்ய, என்று மற்றவர்கள் கேட்கின்ற நிலையில், போட்டியிடுபவர்கள் பொறுமையாக வேலை செய்திருக்கின்றார்கள்.

விளையாட்டுப் போட்டிகளை எல்லாம், பெரும் பணக்காரர்கள் மனமுவந்து அளித்த பெருங்கொடையினால் தான் நடத்தப்பட்டிருக்கின்றன. போட்டியாளர்கள் தங்கள் மேனியில் தேய்த்துக் கொள்ள ஆலிவ் எண்ணெய் தருவதிலிருந்து மற்றும் அத்யாவசியமான பொருட்களை அளிப்பது வரை பணக்காரர்கள் கொடையே பரிணமிக்கச் செய்திருக்கின்றன. செல்வந்தர்களின் செம்மாந்த வள்ளல் தன்மை தான், நாட்டின் சிறப்பையே வானளாவ உயர்த்தியிருக்கின்றன.28. பிறந்தமேனியும் பெருமையும்

விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்ற போட்டியாளர்கள், பிறந்த மேனியுடனே பங்கு பெற்றார்கள். அதற்கும் ஒரு சில காரணங்களைக் காட்டுகின்றார்கள் வரலாற்றாசிரியர்கள்.

கி.மு. 720ம் ஆண்டு, மெகாரா எனும் இடத்தைச் சேர்ந்த ஒருவீரன். அவன் பெயர் ஒரிசிப்பஸ். அவன் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டான். ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும்பொழுது பாதிவழியில், அவன் அணிந்திருந்த கால்சட்டை கழன்று விழுந்து விடுகிறது. என்றாலும் அவன் வெற்றி பெற்று விடுகிறான். ஆகவே ஒன்றுமில்லாமல் ஓடுகின்ற முறையே பின்பற்றப்பட்டது என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.

ஏதென்ஸ் நகரத்தார் புதுமை செய்ய வேண்டும் என்று விழைந்தார்களாம். ஓடிக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு ஓட்டக்காரர் கால்சட்டை நழுவி விழுந்து, தடுமாறி அவரும் கீழே விழுந்துவிட ஏதுவாக இருப்பதால், எப்பொழுதும் பிறந்த மேனியுடனேயே ஓட வேண்டும் என்ற விதியை அமைத்து விட்டார்களாம்.

கிரேக்க நாட்டவர்கள், உடலை மிகவும் செம்மையுடனும் சிறப்புடனும், கட்டுடலாகவும் வைத்துக் கொண்டிருந்ததால், பிறர் பார்த்து மகிழவும், அவர்கள் மகிழ்ச்சியில் தாங்கள் மகிழ்ந்துபோகவும் கூடிய சூழ்நிலை அமைந்ததால், பிறந்த மேனி விதியை பெரிதும் ஆதரித்தனர் என்றும் ஒரு கருத்து கூறப்பட்டிருக்கிறது.

அதற்கு சான்றாக ஒரு கருத்தைக் கூறுகின்றார்கள். கிரேக்கர்கள் எப்பொழுதும் தங்கள் நண்பர்களுடன் இருக்கும் பொழுது கூட திறந்த மேனியராக இருக்க விரும்பினார்கள் என்பதாகும்.

அவ்வளவு அடக்கு முறையைக் கையாண்ட கிரேக்கர் காலத்திலேயே, ஆண்களுக்குப் பெண்கள் சிறிதும் சளைத்தவர்கள் அல்லர் என்பதாக, ஒரு சில நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றார்கள்.

பெண்களுக்காக நடந்த ஓட்டப்பந்தயத்தை ஹிப்போடோமியா எனும் அரசி, தன் திருமணமானது பிலாப்ஸ் என்பவனுடன் நடந்ததைக் கொண்டாடும் முகத்தான் ஆரம்பித்தாள் என்று ஒரு வரலாறு கூறுகின்றது.

பெண்களுக்கான ஓட்டப் பந்தயமும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டது. அதுவும் ஹீரா எனும் பெண் தெய்வத்தை வணங்கி நடத்தப்பட்டது. ஆண்கள் நடத்திய பந்தயங்கள் சீயஸ் எனும் கடவுள் சிலை முன்னிலையில் நடத்தப்பட்டது போல.

16 பெண்கள் அடங்கிய குழு ஒன்று நெய்த அழகிய (மேலாடை) அங்கி (Robe) ஒன்றை ஹீரா தெய்வச்சிலைக்கு அணிவித்து, விளையாட்டு விழாவைக் கொண்டாடினார்கள். திருமணம் ஆகாத கன்னியர்களே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். அவிழ்ந்த முடி, இடுப்பிலிருந்து முழங்கால் வரை தொங்குகின்ற இடைக்கச்சை (Tunic), இடுப்புக்கு மேலே திறந்த மேனியராகவே அவர்கள் ஓடினார்கள். ஆனால், அவர்களுக்கென்று தனியாக விளையாட்டு மைதானம் அமைந்திருந்தது.

வெற்றிபெற்ற வீராங்கனைக்கு ஆலிவ் மலர் வளையம் உண்டு. ஆண்களுக்குரிய பரிசு போல்தான். ஆனால், அதற்கடுத்து, அற்புதமான விருந்தும் உண்டு. அதாவது, ஹீரா தெய்வத்திற்குப் பலியிட்ட காளை மாட்டின் கறித்துண்டும் கிடைக்கும். வெற்றி பெற்றவர்கள், தங்களைப் புகழ்கின்ற சிறப்புக் குறிப்புக்களுடன் சிலை எழுப்பிக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டார்கள்.

இத்தகைய சிறப்புடன் ஒலிம்பிக் பந்தயங்கள் கிரேக்க நாட்டில் நடத்தப்பெற்றன. வலிமையான தேகத்தைப் பெற்று, வாழ்வாங்கு வாழ்ந்த அவர்கள், வரலாற்றில் வானளாவிய புகழுடன் வாழ்கின்றனர்.

தங்கள் தேகத்தில் திறமும் திறனும் நிறைந்திருந்த நாட்களின் தேனினுமினிமையாக, அவர்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. அவர்களிடையே திறம் குறைய ஆரம்பித்ததும், வாழ்க்கைத் தரமும் குறையத் தொடங்கியது. ரோமானியர்களிடம் தோற்றனர். அவர்கள் கட்டிக் காத்த ஒலிம்பிக் பந்தயம் காற்றிலடிபட்ட பட்டமாகத் துடித்தது. கடைசியில் நூலறுந்த பட்டமாகியது. இறுதியில் தேய்ந்தே அழிந்தது. அதைத்தான் கிப்னிஸ் என்ற வரலாற்றாசிரியர் கூறுகிறார்.

அநேக நாடுகள் எவ்விதச்சுவடும் இல்லாமல் அழிந்தே போயின. காலமெல்லாம் வரலாறு வடித்துக் காட்டுகின்ற உண்மையாகவே நம்மிடையே உலவுகின்றன. அவ்வாறு நாடுகள் எல்லாம் அழிந்து போனதற்குரிய காரணம் என்ன வென்றால் - அது மிகவும் சாதாரண காரணம் தான். அவர்களும், அந்த நாடும் அழியக் காரணம் மக்கள் தங்கள் உடல் திறனை (Physical Fitness) இழந்ததினால்தான் வீழ்ந்தார்கள் என்பதே.

வீறுபெற்று விளங்கிய வீரர்களை உருவாக்கிய கிரேக்கம் வீழ்ந்தது. மக்கள் தங்கள் உடல் திறனின் சக்தியை உணர்ந்து கொள்ளாமல் இருந்ததால்தான், என்ற உண்மையை அறியும்போது, ஒரு நாடு உயர வேண்டுமானால், உடல்திறன் நிறைந்த மக்களையே வளர்க்க வேண்டும் என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறதல்லவா!

உடல் திறனை வளர்ப்போம். உயர்ந்த வாழ்வு வாழ்வோம் வீர பரம்பரையைத் தோற்றுவிப்போம். வேண்டிய எல்லாம் வேண்டியாங்கு பெறுவோம் என்ற இலட்சியத்தை நாம் அடைய இன்றே முயல்வோம்.

நலமுடன் வாழும் நாளே நனிசிறந்த நன்னாள் என்போம். இவ் வீரக்கதைகள் கூறும் விளக்கம் இதுவே. வாருங்கள்! சொல்லும் செயலும் ஒருங்கிணைந்து செல்லும் உயர்வாழ்வு வாழ்வோம்.