வேப்பமரம்
மாவை வரோதயன்வேப்பமரம்

மாவை வரோதயன்

----------------------------------------------


வேப்பமரம்


மாவை வரோதயன்தேசிய கலை இலக்கியப் பேரவை

------------------------------------------------

தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடு - 98

நூற்பெயர் : வேப்பமரம்
ஆசிரியர் : மாவை வரோதயன்
பதிப்பு : நவம்பர், 2002
வெளியீடு : தேசிய கலை இலக்கியப் பேரவை
அச்சிட்டோர் : கௌரி அச்சகம்
முகப்பு ஓவியம் : இரா. சடகோபன்
விநியோகம் : சவுத் ஏசியன் புக்ஸ்,
வசந்தம் (பிறைவேற்) லிமிடட், 44, மூன்றாம் மாடி,
கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி,
கொழும்பு -11.
தொலைபேசி : 335844.

வசந்தம் புத்தக நிலையம் 405, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்.
விலை : ரூபா. 150/=

Title : Veppamaram
Author : Maavai Varothayan
Edition : November, 2002
Publishers : Dheshiya Kalai Ilakkiyap Peravai
Printers : Gowry Printers
Cover Design : R. Shadagopan
Distributors : South Asian Books,
Vasantham (Pvt) Ltd,
No. 44, 3rd Floor,
C.C.S.M. Complex,
Colombo -11.
Tel : 335844.

Vasantham Book House,
405, Stanly Road,
Jaffna.
ISBN No : 955-8637-14-9955-8637-13-0
Price : Rs. 150/=

----------------------------------------

பதிப்புரை

தேசிய கலை இலக்கியப் பேரவை இதுவரை பன்னிரு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளது. எமது பேரவையின் ஸ்தாபகருள் ஒருவரும் தாயகம் ஆசிரியரும் எழுத்தாளருமான க. தணிகாசலம் எழுதிய பிரம்படி, கதை முடியுமா ஆகிய இரு நூல்களும் எஸ்.என்.வாகீசன் எழுதிய ஏன், நந்தினி சேவியர் எழுதிய அயற்கிராமத்தைச்சேர்ந்தவர்கள், இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் எழுதிய வெட்டுமுகம், என்னுடையதும் அம்மாவினுடையதும், மணல்வெளி அரங்கு ஆகியனவும் நீர்கொழும்பூர் முத்துலிங்கம் எழுதிய ஒரு ஜனனத்தின் அஸ்தமனம் சோ.ரஞ்சகுமார் எழுதிய மோகவாசல், க.சட்டநாதனின் சட்டநாதன் கதைகள், கே.எஸ்.சிவகுமாரனின் இருமை, தாமரைச் செல்வியின் ஒரு மழைக்கால இரவு ஆகிய நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன.

எமது பேரவையின் கொழும்புக் கிளையின் இலக்கியச் செயலர் மாவை வரோதயனின் பன்னிரு சிறுகதைகளைக் கொண்ட தொகுதி 'வேப்பமரம்' என்ற தலைப்பில் வெளிவருகிறது. இவரது 'இன்னமும் வாழ்வேன்' என்ற கவிதைத் தொகுதியை கடந்த வருடம் வெளியிட்டோம். இந்நூல் எமது நூல் வெளியீட்டில் 98வது நூலாகும்.

எமது ஈழத்து எழுத்தாளர்களின் புனைகதைகளே சமகால மக்களின் வாழ்வையும் பண்பாட்டையும் நெருக்கீடுகளையும் இழப்புக்களையும் எதிர்ப்புக்களையும் வெறுப்புக்களையும் விருப்புக்களையும் விரக்தியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தி மக்களின் அன்றாட வாழ்வின் அனுபவத் தெளிப்புகளுடன் உறவாடும் வல்லமையுடையனவாகும்.

தமிழ்வாசகர்கள் வழமை போல் தமது வீட்டு நூலகங்களில் இந்நூலை வேண்டிப் பக்குவப்படுத்தியும;; உறவினர், நண்பர்கள், அயலவர்களுடன் இச் சிறுகதைகளின் அனுபவச் சித்தரிப்புக்களின் வெளிப்படுதிறனை கலந்துறவாடவும், இந்நூலைப் பயன்படுத்தி எம்மை உற்சாகப்படுத்தும்படியும் வேண்டுகின்றோம்.

அட்டைப்படம் வரைந்தும், பக்கவடிவமைப்பு செய்தும் தந்த கவிஞரும் ஓவியரும் பத்திரிகையாளரும் சட்டத்தரணியுமான இரா. சடகோபன் அவர்களுக்கும் கணனி வடிவமைத்த சிந்தியா, சோபனா, ஆகியோருக்கும், இந்நூலை அச்சிட்டு வழங்கிய கௌரி அச்சகத்தினருக்கும், திரு. எஸ். இராஜரட்ணம் அவர்களுக்கும் எமது நன்றிகள்.

விமர்சனங்களை வரவேற்கிறோம்.

தேசியகலை இலக்கியப் பேரவை
இல. 44இ 3-ம் மாடி,
கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி
கொழும்பு - 11
தொலைபேசி : 335844.

----------------------------------------------

முன்னுரை

சிறுகதை யன்னலினூடாகப் பார்ப்பது என்றும் நாவல் கதவினூடாப் பார்ப்பது என்றும் சொல்லுகிறார்கள். எப்படிப் பார்த்தாலும் அந்தப் பார்வை பார்க்கின்றவனுடைய மனதிலே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினால் அது எழுதியவனுக்கு வெற்றி.

எனக்கு இப்போது முன்னர் படித்த சிறுகதையொன்று ஞாபகத்திற்கு வருகிறது. அக்கதையில், பாடசாலை ஆசிரியை ஒருவர் ஒரு மாணவியிடம் ஏன் பென்சில் கொண்டு வரவில்லை என்று அதட்டுகிறார். இது நித்தம் நித்தம் நடக்கிற நாடகம்தான். ஆனால் அந்த மாணவி பென்சில் கொண்டு வருவதாகவில்லை. களைத்துப்போன ஆசிரியை தானே ஒரு பென்சிலை கடையில் வாங்கி மாணவிக்கு பரிசாகக் கொடுக்கிறார். அதை மாணவி வேண்டாம் என்று சொல்லுகின்றாள். "எனக்கு இனி பென்சில் தேவையில்லை! நாளையிலிருந்து நான் ஒரு வீட்டிற்கு வேலைக்குப் போகின்றேன்" என்று சொல்லி கதையை கதாசிரியர் முடிக்கின்றபோது நெஞ்சை என்னவோ செய்கின்றது.

சிறுகதை மன்னன் இலங்கையர்கோனும் தகழி சிவசங்கரம்பிள்ளையின் செம்மீன் போன்று உண்மைச் சம்பவங்களை வைத்து கதை புனைவதிலே மிகவும் வல்லவர். வெள்ளிப்பாதசரம் ஒரு உண்மைச் சம்பவம். அதற்கு தனது சிறந்த கற்பனையால் மெருகு கொடுத்து செல்லையாவையும் நல்லம்மாவையும் சாகாத பாத்திரங்கள் ஆக்கியவர். உண்மைப் பெயர்களைக்கூட அவர் மாற்ற விரும்பவில்லை.

இவை எல்லாவற்றையும்விட எழுதுகின்றவன் மனச்சாட்சி உள்ளவனாகவிருக்க வேண்டும். உள்ளத்திலே உண்மையொளி உண்டானால் வாக்கினிலே ஒளி உண்டாகும். அந்த மனச்சாட்சியும் உண்மையொளியும் 'வேப்பமரம்' தந்த இந்த வித்தியாசமான கவிஞனுக்கு உண்டு.

இதற்கு நான் முன்னுரை எழுதுவது ஒரு விபத்து என்று நினைக்கின்றேன். என்னை விட தகுதிகளில் பலமடங்கு கூடியவர்கள் எழுதாமல் நான் ஏன் எழுதவேண்டும்?

தேசிய கலை இலக்கியப் பேரவையைச் சேர்ந்த என் அன்புக்குரிய தேவர் இந்தக் கலைஞனை எனக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது கொழும்பில் பரீட்சைத் திணைக்களத்தில் இவர் பணிபுரிந்தார். எனது தேவையொன்றிற்காக இவரைச் சந்தித்தேன். முதல் சந்திப்பிலேயே நான் அரசாங்க உத்தியோகத்தர் பற்றி வைத்திருந்த அபிப்பிராயத்தை மாற்றியமைத்தார். அன்றிலிருந்து இன்றுவரை இவர் எனது விருப்பத்துக்குரியவரானார்.

இவரைக் காணுகின்ற போதெல்லாம் எமது கிராமத்திலிருந்த சில மிடுக்கானவர்களையும் சற்று தள்ளியிருந்த ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையும் என் நினைவுக்கு வந்து போவார்கள். காரணம் இவர்கள் நெற்றிக் கண்ணைக் கண்டு பயப்படாதவர்கள். மனச்சாட்சியை ஏலம் போடாதவர்கள். இவரின் சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை எழுதக் கிடைத்தமை பற்றிப் பெருமை கொள்கிறேன்.

1. "அதற்குள் ஒருவர் கூனிக் குறுகி வந்து நிற்கிறார். அதிபரின் அலுவலக வாசலில் வந்து நின்றவர் ஒரு பெற்றாராக இருக்க வேண்டும். கொட்டப் பெட்டிக்குள் வைத்து எடுத்து உடுத்தது போல் கசங்கிய வெள்ளை வேட்டி, ஆங்காங்கே வாழைக் கயர், செம்பாட்டு மண் படிந்த வெள்ளை சேட்டு. சந்தையால் வருகிறார் போல. வாயில் வெற்றிலைக் காவி வேறு"....

2. "கண்ணுக்கெட்டிய தூரம்வரை பரந்த வயல்வெளி பச்சைப் பசேலென்று. இடையிடையே வெட்டிக்கொண்டு ஓடும் நீர்பாசன வாய்க்கால்கள். கொக்குகளும் மீன் கொத்திகளும் சிட்டுக்குருவிகளும் மனித சஞ்சாரம் கண்டு எழுந்து பறக்கின்றன. வயலின் நடுவில்தான் பெரியப்பாவின் வீடு. தட்டியைத் திறந்துகொண்டு வீட்டின் எல்லைக்குள் நுழைகின்றேன்."

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுதானே பதம் பார்ப்பார்கள். இ;ங்கு நான் இரண்டு சோறுகள் தந்துள்ளேன். அனைத்தையும் நீங்களே பதம் பார்த்துக்கொள்ளுங்கள்.

சமகாலப் பிரச்சினைகள் கதையாகப் பின்னப்பட்டுள்ளன. மண்வாசனையும் பிரதேச சொற் பிரயோகங்களும் பல்வேறு குணாதிசயங்களைக் கொண்ட மக்களும் வந்து போகின்றார்கள். ஒவ்வொரு கதையும் எமக்கு ஒவ்வொரு படிப்பினையை விட்டுச் செல்கின்றன. கவிஞராகப் புறப்பட்டு கதைஞராக வந்தமை கதைகளில் நன்கு மிளிர்கின்றன.

நிறைவாக வாசகர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். எமது எழுத்தாளர்கள், கலைஞர்களை ஆதரியுங்கள். விலைகொடுத்து நூல்களை வாங்கிப் படியுங்கள். பரிசுப்பொருளாக நூல்களை வாங்கிக் கொடுங்கள். வீடுகளிலே நூல்நிலையங்களை ஏற்படுத்துங்கள்.

மாவை வரோதயன் அவர்களுடைய இந்நூலை வெளியிட்டு உதவிய தேசிய கலை இலக்கியப் பேரவைக்கும் எனது நன்றிகள்.

அன்புடன்,
சோக்கல்லோ சண்முகநாதன்
வத்தளை
31-10-2002.

--------------------------------------------

எனது நோக்கில்...

அந்த நிகழ்வுகள் இரண்டு தசாப்தங்களைக் கடந்தும் இன்னும் மனத்திரையில் நிழலாடுகின்றன. கவிதை எழுதத் தொடங்கிய காலத்திலேயே சிறுகதைகளும் எழுத முயற்சித்தேன். நான் எழுதிய கதைகளைத் தேர்வுக்காகக் காட்டியபோது 'இப்படியெல்லாம் எழுதுவது சிறுகதை அல்ல' என்று சொன்னார்களே தவிர எப்படி எழுதுவது என்று சொன்னதில்லை.

எண்பதுகளின் நடுக்கூற்றில் எழுத்தாளர் வேல் அமுதன் அவர்களின் தொடர்பு கிடைத்தது. மதி கலைஞர் வட்டத் (மகவம்)தில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் கிட்டியது. மாதாந்த மகவம் சந்திப்புகளின் வரிசையில் ஓர் நாள் சிறுகதைப் பட்டறை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் அவர்கள் செயல் விளக்கம் அளித்தார். அதுவரை முழங்கையால் முழம் அளந்து கதைக் கலையைக் கிழித்துக் கொண்டிருந்த எனக்கு அடிமட்டம் கிடைத்தது. அதன் பின் யாழ்-உள்ளூர்ப் பத்திரிகைகளான முரசொலி, சஞ்சீவி (உதயன்)களில் எனது கதைகள் பிரசுரமாயின.

1990ல் ஏற்பட்ட வலி-வடக்கு இடப்பெயர்வு என்னை எதையும் எழுத முடியாது தடுத்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அனுபவங்களை மட்டும் உள்வாங்க வைத்தது. மீண்டும் தொடங்கிய மிடுக்கில் பொன்.இராஜகோபால் அவர்களின் அனுசரணை கிடைத்தது. முதலில் வீரகேசரியிலும், பின் தினகரன், தினக்குரல் என்று என் கதைகள் பிரசுரமாயின. சில புலம்பெயர்ந்த தேசப் பத்திரிகைகளில் மறுபிரசுரமும் ஆகின. சில போட்டிகளில் பரிசுகளும் கிடைத்தன.

சட்டத்தரணி சோ.தேவராஜா, இன்னும் இலக்கிய நண்பர்களுடன் தேசிய கலை இலக்கியப் பேரவையில் கலந்து பேசும் சந்தர்ப்பங்கள் என்னை ஊக்குவித்தன. ஓர் இரவிலேயே ஒரு கதை எழுதி முடித்துவிட்டுத் தூங்கும் அளவுக்கு வேகமும் பயிற்சியும் இருந்தது.

இந்த அலையும் நெடு நாள் நிலைக்கவில்லை. அவை எனது அனுபவ தரிசனங்களின் பதிவாக இருப்பதும், நல்ல சிறுகதைகளா என்ற கேள்வி என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தன. யாரோ கூறியது போல் 'இலக்கண எல்லைகளைத் தேடிவைத்துக் கொண்டு இலக்கியம் படைக்க முடியாத வேதனை' என்னையும் முடக்கி வைத்தது. கூடவே இயந்திர மய வாழ்க்கைக்குள் எடுபட்ட அகமன உளைச்சல்களும் சிருஷ்டிக்குரிய அமைதியைக் குலைத்தன. ஆறப் போட்டு வைத்து மீண்டும் என் அனுபவங்களைத் தொகுத்தேன். இந்த வரலாற்றின் இரண்டு தசாப்த காலத்தில் தோன்றியவைதான் இந்தத் தூரத்து உரிமைகள்.

சிறுகதை, அதன் பாரம்பரியம், வடிவம், உருவம், உள்ளடக்கம், கதை, கரு, கதை சொல்லும் பாங்கு, உத்திகள், மொழிநடை, பகைப்புலம், முரண், செய்தி என்று என்னவெல்லாம் பிரித்து, வகுத்து ஆராயப்படுகின்றனவோ அவற்றை விட எனது அனுபவத்தை, நான் கண்ட முரண்பாட்டை, செய்தியை இன்னொரு வாசகனுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். அதுவே என் சிறுகதை நோக்கு எனலாம். மீதி ஆய்வாளர்களினதும் விமர்சகர்களினதும் பங்கு என்று நம்புகின்றேன்.

படைப்பு காலத்தால் செய்யப்படும் பணி என்பது போல் பகுப்பாய்வு காலம் செய்ய வேண்டிய பணியாகட்டும்.

எனது சிறுகதைகளைப் பிரசுரித்த பத்திரிகைகளுக்கும், எனது வேண்டுகோளை ஏற்று முன்னுரை வழங்கிய கலைஞர்.தா.சண்முகநாதன் அவர்களுக்கும் என்னை ஊக்குவித்து இச் சிறுகதைத் தொகுப்பை வெளிக்கொணரும் தேசிய கலை இலக்கியப் பேரவையினருக்கும் என் நன்றிகள் உரித்தாகட்டும்.

நன்றி.

மாவை வரோதயன்.
12.09.2002.

-------------------------------------------------------

பொருளடக்கம்

1. சப்பாத்தும் சப்பாத்தியும் ...
2. உரித்துகள் ...
3. பெருவாழ்வு ...
4. மறைத்தல் ...
5. புரிதல் என்பது ...
6. வேப்பமரம் ...
7. ஒற்றைத்திருக்கல் ...
8. அடகு மோதிரம் ...
9. விலகல் ...
10. உள்ள வயல் ...
11. அந்தகம் ...
12. குருக்கன் ...

-----------------------------------------------------

சமர்ப்பணம்


உள்நாட்டுப் போர் வந்து
உருக்குலைந்த இந்த மண்ணில்
தம் ஆணி வேரிழந்து
தடம் மாறித் தத்தளிக்கும்
அனைத்து உயிர்களுக்கும்!

-----------------------------------------------------------

1 சப்பாத்தும் சப்பாத்தியும் ...

'அஞ்சல் அலுவகம்', யாழ்ப்பாணம்!' முகப்புச் சுவரில் சீமெந்தால் எழுதப்பட்டிருந்த அந்த எழுத்துக்களிடையே எத்தனை சன்னப்பதிவுகள்? "இது கோட்டை ஷெல்லடியில வந்திருக்குமோ, இல்லாட்டி இந்தியன் ஆமி அடிபாட்டில வந்திருக்குமோ"..... என்னுடைய புல ஆராய்ச்சிக்கு நான் சாதகமான தகவல்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

வெள்ளைக்காரன் தபாற் சேவையை அறிமுகப்படுத்திய காலத்தில் கட்டிய பழைய சுண்ணாம்புக்கற் கட்டிடம். கச்சேரி முதற்கொண்டு பள்ளிக்கூடங்கள், முக்கியமான அரச அலுவலகங்கள் எல்லாம் இந்த யாழ்-கண்டி வீதியை அண்மித்தே அமைக்கப்பட்டிருக்கின்றன. "முந்தி கோட்டையில் இருந்து சிறிலங்கன் ஆமி செல் அடித்திருந்தாலும் வந்து முன்னால விழுந்து வெடிச்சிருக்கும், கண்டி றோட் கொண்வென்ற் சந்தியில இந்தியன் ஆமியோட நிண்டு அடிபட்டிருந்தாலும் கட்டிடத்தில சன்னம் பட்டிருக்கும். எண்டாலும் பெரிய சேதம் இல்லை."

அஞ்சல் அலுவலகத்தின் முகப்புப் பகுதியில் நல்ல நிழல். வேம்பு, மா, பொன்னுச்சி செவ்விளநீர் மரம், என்று ஒரே சோலை. கீழே ஓரிரண்டு சீமெந்து இருக்கைகள். அக்காவின் அலுவலாக வந்த நான் இந்த நிழலில் இருந்து வரலாற்று ஆராய்ச்சிசெய்து கொண்டிருக்கிறேன்.

அக்கா இன்னும் 'கியூ'வில் நிற்கிறார். நேரம் ஒரு மணியாகின்றது. இந்தப் போஸ்ட் மாஸ்ரர்மார் கொஞ்சம் மனச்சாட்சி உள்ளவர்கள் போலும், சாப்பாட்டு நேரத்திலும் மக்கள் பணியில் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். "அக்கா தனிய வரலாம் எண்டால் வேளைக்கு வந்திருக்கலாம். பன்னிரெண்டு மணிக்கு கம்பஸ் லெக்சர்ஸ் முடிஞ்சு கந்தர்மடம் வந்துதானே அக்காவ சைக்கிளில கூட்டிக்கொண்டு வரவேண்டியிருந்தது."

அமைதிப்படை வந்து இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில் நாங்கள் 'இந்தியன் ஆமி'யுடன் வாழப்பழகிக் கொண்டோம். தங்களால் அழிக்கப்பட்ட கட்டிடங்களிலேயே இந்திய இராணுவம் குடியிருக்கிறது. முக்கியமான சந்திகள், அரச நிறுவனங்கள், ஆஸ்பத்திரி என்று அவர்கள் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். இந்த அஞ்சல் அலுவலகத்திலும் அவர்களது காவலரண்கள் இருக்கத்தான் செய்கின்றன.

"முந்தி அக்காவை, இந்த யாழ்ப்பாணம் ரவுண் எல்லாம் தனிய சைக்கிளில சுத்தித் திரிவினம். ஒரு பிரச்சினையோ, பயமோ இல்லை. இப்ப அக்காமாருக்கும் பாதுகாப்பில்ல. எங்களுக்கும் இல்ல, ஆளுக்காள் துணையாகப் போக வேணும்."

அக்காவின் கணவர் முன்பு இங்கு யாழ்ப்பாணக் கச்சேரியிலதான் வேலை பார்த்தார். இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்தது, அதை அமுல்படுத்த என்று அமைதிப்படை வந்தது. அந்த அமைதிப் படையோடு போட்டிப் போராளி இயக்கக் குழுக்களும் வந்து இறங்கின.

முதலில் எல்லாம் சாதகமாகவே இருந்தன. சிறிலங்கா இராணுவத்தை முடக்கிவிட்டதாக ஒரு இறுமாப்பும் இருந்தது. சொற்பகாலத்திலேயே அமைதிப்படை அழித்தொழிக்கும் படையாகித் தன் சுயரூபத்தை வெளிக்காட்டியது. ஈன இரக்கம் இல்லாமல் நாங்கள் பழிவாங்கப்பட்டோம். வைத்தியசாலை, வீதியோரம், அகதிமுகாம், பல்கலைக்கழகம் எல்லாம் பிரேதங்கள் கிடந்தன. விவசாயத்தோட்ட நிலங்கள், கட்டிடங்கள், பாடசாலைகள், எல்லாம் 'கற்றப்பில்லர்'களின் பாதம் பட்டு கருவிழந்தன. இறங்கி, ஏறி, அடி உதை வாங்கி, எத்தனை அவலங்கள்...

யாழ்ப்பாண நகரமும், பிரதான வீதிகளும் அமைதிப் படையுடனான யுத்தகளமாக இருத்த நிலை மாறி, ஊரடங்குச் சட்டங்கள் மெல்ல மெல்லத் தளர்ந்து போக்குவரத்துகள் தொடர கொஞ்சம் வழமை நிலை திரும்பியது. அடுத்த நாடொன்று எம்மை ஆக்கிரமித்து ஆளுவதை அப்போதுதான் உணர்ந்தோம்.

இந்த வழமை நிலைக்குள் புல்லுருவிக் கூட்டங்களும் தங்கள் பேராண்மைத்தனத்தை நிலைநாட்ட முயன்றன. பலவந்த அரசியல், பழமைக் குரோதங்களுக்கான பழிவாங்கல் என்று தொடர்ந்த அமைதி காப்புக்கள் அத்தானுக்கும் யாழ்ப்பாணத்தில் இருக்க முடியாத நிலையை ஏற்படுத்தின.

எப்படியோ தப்பிச் சென்று, தனது உத்தியோகத்தை கொழும்புக்கு மாற்றிக் கொண்டார். அவர் கொழும்புக்குப் போன காலத்தைப் போல இல்லை. இப்போது இன்னும் கொஞ்சம் நிலைமையில் முன்னேற்றம் இருக்கிறது. கொழும்புக்கான பஸ்போக்குவரத்துகள் தாராளமாக நடைபெறுகின்றன. ரெயில் சேவையும் விரைவில் தொடங்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

வெள்ளைக்காரன் காலத்தில் போடப்பட்ட தண்டவாளங்கள், சிலிப்பர்க் கட்டைகள் எல்லாம் கழற்றப்பட்டு, பங்கர்களாக மாறி ரெயில் போன தடங்கள் தரவைகளாகி ஏழை அகதிகளின் குடிசைகளுமாகிவிட்டன. இப்போது புனர்நிர்மாணப் பணி என்ற பெயரில் யாழ்ப்பாணம் மீளக்கட்டி எழுப்பப்படுகின்றது.

ஆனாலும் அத்தான் விடுமுறைக்கேனும் வருவதில்லை. அவரது 'மணி ஓடர்' மட்டும் மாதாமாதம் வரும். இல்லையேல் அக்கா கொழும்பு போய்த்தான் சந்திக்க வேணும்.

அத்தான் அனுப்பிய மணியோடர் நேற்றுத்தான் வந்தது. இன்று வெள்ளிக்கிழமை. சனி, ஞாயிறு காசு மாற்ற முடியாது. அதனால் இன்று எப்படியும் காசு எடுக்க வேண்டும் என்ற அவசரத்தில் அக்கா என்னையும் இழுத்துக்கொண்டு வந்தார்.

"அடுத்த கவுண்டரில வாறகலெக்ஷன எடுத்துத்தான் இஞ்சால மணியோடர்க்காறருக்குக் குடுக்கினம் போல, அதுதான் பிந்துது" எனது அருகில் இருந்த பெரியவர் தாமத விளக்கம் சொன்னார். அது சரியாகவுந்தான் இருக்கும்.

ஏதேதோ யுத்த நிலைக்கான அழைப்புபோல் இந்திய ஜவான் ஒருவன் கூச்சலிட்டான். அஞ்சல் அலுவலகத்தின் நாற்புறமும் இருந்து 'டிக், டக், சரக் சரக், இன்னும் சப்பாத்துச் சத்தங்களும் சலசலப்புக்களும் கேட்டன.

'யானை வரமுன் மணியோசை' இது பழைய பழமொழி. இப்போது நாய்கள் குரைக்க அந்த கடலை எண்ணெய் மணம் வருகின்றது. அதுகூட மூக்குக்கும், மனதுக்கும் பழக்கப்பட்டு இருந்தாலும்கூட திடீரென்று நினைவூட்டப்படும்போது அந்நியமாகவே தெரிகின்றது.

அஞ்சல் அலுவலக வாசலில் நின்றவன் ஓடிப்போய் சலூட் அடித்து, 'கேற்'றைத் திறக்கின்றான். ஒன்று, இரண்டு, மூன்று,..... வாகனத் தொடரணி, சின்னதாக இரண்டு, பெரிதாக ஒன்று. வாகனத்தில் வந்தவர்கள் பாய்ந்து குதித்து காவல்நிலைகளை எடுக்க நடுவில் வந்த ஜீப்பில் இருந்து பெரியவன் இறங்கி சுற்றும் முற்றும் பார்த்து ஆசுவாசப்படுகிறான்.

ஏதோ விபரீதம் நடக்கப்போகின்றது என்று நான் ஊகிப்பதற்கிடையில், பெரிய ட்றக்கில் இருந்து பெரும் பெரும் அலுமீனியப் பாத்திரங்கள் கைமாறுகின்றன. என்னுள் ஒரு அமைதிப் பெருமூச்சு எழுந்து ஐதரசன் பலூனாக விடுபட்டுப் பறக்கிறது.

எத்தனை 'றவுண்ட் அப்'களில் அகப்பட்டு, தலையாட்டி, முகமூடி பார்த்துத் தப்பியிருக்கிறேன். அதுவும் இப்போது கம்பஸ் காட் இருப்பதால் கொஞ்சம் நிம்மதி.

வந்த வாகனங்கள் ஒவ்வொன்றாகத் திரும்பிப் போகின்றன. ஆனால் நாய்களின் குரைப்பு மட்டும் இன்னமும் ஓயவில்லை. அந்த மணம் குறையும் மட்டும் நாய்களும் குரைக்கும்.

சற்று நிமிடத்துக்கெல்லாம் அங்கு காவலில் நின்றவர்கள் ஆள் மாறி ஆள் சாப்பிடப்போனார்கள். அவ்வளவு விரைவில் சாப்பிட்டார்களா, அல்லது அளவாகப் பகிர்ந்துவிட்டு வந்தார்களோ தெரியாது. அஞ்சல் அலுவலகத்தின் பின் பக்க விடுதியிலிருந்து தலைமை ஜவான் ஒருவன் ஒரு அலுமினீயப் பாத்திரத்துடன் வந்து என்னைத் தாண்டி அப்பால் சென்றான்.

அஞ்சல் அலுவலகத்தின் மேற்குப்பக்க மதிலில் தன் நெஞ்சை வைத்துத் தொங்கினான்! "ஏய் இங்கு வா! எல்லாம் குடு துண்ணு" என்று, கூறிவிட்டு, வெற்றுப் பாத்திரத்துக்காகக் காத்து நின்றான்.

* * *

அஞ்சல் அலுவலகத்தின் மேற்குப் பக்கம் ஒரு அகன்ற கழிவுக் காண் ஓடை, மழைக்காலம் தவிர மற்ற நாளில் அதில் தண்ணீர் வராது. இரண்டு பக்கமும் பெரிய அணைக்கட்டுக்கள், அதில் சில சேரிக் குடியிருப்புக்கள், பழைய கள்ளிப் பலகைகள் அவற்றின் சுவர்கள், பொலித்தீன் சீலைகளும், குடைச் சீலைகளும் அவற்றின் கூரைகள்.

மலையகத்தில் இருந்து காலத்துக்குக் காலம் விரட்டப்பட்ட தொழிலாளி மக்கள் இடம் பெயர்ந்து அகதிகளாகி, பிழைக்க வழிதேடி வந்து தஞ்சம் அடைந்த இடங்கள் அவை. யாழ்ப்பாண நகருக்குள்ளோ, ஊருக்குள்ளோ இடம் கிடையாத காரணத்தால் அவர்கள் இதில் ஒதுங்கிவிட்டார்கள்.

நகர சபையில் சுகாதாரத் தொழிலாளிகளாக வேலை பார்ப்பது, தவிர்ந்த நேரங்களில் நகர மரநிழல்களில் அமர்ந்து செருப்பு, குடைகள் தைப்பது அவர்களின் தொழில்.

இந்தக் குடியிருப்புப் பிரதேசச் சிறுவர்கள் இந்த ஓடைவெளியில் பந்தடித்து விளையாடுவார்கள்.

விளையாடிக் கொண்டிருந்த பையன்களில் செங்கனின் மகன் சுட்டியின் கைகளுக்குத்தான் சப்பாத்திப் பாத்திரம் எட்டியிருக்கிறது. அஞ்சல்ஓட்டப் போட்டியை தடைதாண்டி ஓட்டமாக ஓடிப்போய் அந்தப் பாத்திரத்தை தன் தாயிடம் கொடுத்துவிட்டு கணநேரத்தில் திரும்பி ஓடிவந்து அந்தத் தலைமை ஜவானிடம் வெறும் பாத்திரத்தை ஒப்படைத்து மீண்டும் தாயிடம் ஓடினான். இப்போ அந்தச் சேரிச் சிறாரில் பலர் செங்கன் வீட்டில் கூடி சப்பாத்திகளைக் கடித்து இழுத்து, கிழித்து சுவைத்து மகிழ்ந்து கொண்டிருந்தனர்.

செங்கனின் அடுத்த வீடு பெருமாளுடையது. பெருமாளின் மகள் அப்போதுதான் பாடசாலை விட்டு வந்திருந்தாள். அவள் விடயத்தை அறிந்து அங்கு ஓடப் புறப்பட, தாய் தடுத்து விட்டாள். "பொறுபுள்ளே! இப்புடியே போனீன்னா யூனிபோம் அழுக்காயிடும், கழட்டிப்புட்டு போடீ' என்று அவளை நிறுத்தி வெள்ளைச் சட்டையைக் கழற்றிவிட்டு அனுப்பினாள். அதற்குள் செங்கன் வீட்டில் சப்பாத்தி காலியாகி விட்டிருந்தது.

அழுது கண்களைக் கசக்கிக்கொண்டு வந்த மகளைக் கண்டதும் பெருமாளின் மனைவி பொருமினாள். மகளின் வெறும் முதுகிலும் 'தொம் தொம்' போட்டு, வார்த்தைகளாலும் செங்கனின் மனைவியைத் திட்டினாள். "ஏன்டீ அம்பட்டும் துண்ணுட்டியாடி, ஏம் புள்ளக்கும் இம்பட்டு துண்டு குடுத்தியாடீ,.." "ஏய்.... எம்புள்ளதானே இன்னக்கி வாங்கினா, ஓம் புள்ள வாங்கினா துண்டு தருமாடீ...."

வாய்த் தர்க்கம் குடுமிச் சண்டைவரை வளர்ந்து பெரும் சேரிக்கலவரம் மூளும் நிலை எழுந்தது. காவல் நின்ற ஜவான்கள், அஞ்சல் அலுவலகம் வந்தவர்கள் எல்லாம் வேடிக்கை பார்க்க, நல்ல நண்பகல் பொழுதுபோக்கும் கிடைத்தது.

சிங்கராசா அந்தப் பகுதியில் சண்டியன்தான். சிங்கன், சிங்கன் என்று கூப்பிட அது மருவி செங்கன் என்றாகிவிட்டது. அவனது அயல்வீட்டுப் பெருமாள் நல்லவன். இருவரும் உற்ற நண்பர்களும் கூட. வேலை முடிந்து ஒன்றாகவே தவறணைப் பக்கம்போய் ஆளுக்கு இரண்டு 'பிளா' அடித்து விட்டுத்தான் வீட்டுக்குச் சாப்பிட வருவார்கள்.

தூரத்தில் வரும்;போதே சத்தம் கேட்டு செங்கனும் பெருமாளும் ஓடி வந்தனர். ஏதோ சேரிக்குள் தீ என்பது அவர்களது ஊகம். ஆனால் பெண்கள் இருவரும் துவந்த யுத்தத்தின் உச்சியில் கொண்டைமயிர்ப் பிடியில் வழுவாது நிற்கின்றனர். தத்தம் கணவன்மார் வந்ததும் பிடிவிலகி, தம் முறையீடுகளை அவசர அவசரமாக முன்வைக்கின்றனர்.

கணவன்மார் எதிரணித் தலைவியைப் பிடித்து தன் கண் முன்னால் அடிக்க வேண்டும் என்பது இரு பெண்களினதும் ஆவேச எதிர்பார்ப்பா, இல்லை செங்கனும், பெருமாளும் மோதிக் கொள்வார்களோ, இது சப்பாத்தி கொடுத்த ஜவான்களின் எதிர்பார்ப்பு. என்ன இருந்தாலும் செங்கன் சண்டியன் அல்லவா, களேபரத்துக்குப் பயந்த பிள்ளைகள் வியர்த்து நின்றனர்.

பெருமாள் எதையும் சொல்லத் துணியாது திகைத்து நின்றான். செங்கன் வாயில் இருந்த குறைபீடியைத் 'துப்பி' "தூ.... நாய்ங்களா! ஏன்டீ அவுங்கட எச்சியத் திங்கிறதுக்கு றகள பண்ணுறீங்க!" உறுமினான். கேட்டபடி நிமிர்ந்து பார்த்தான். வேடிக்கை பார்ப்பவர்களில் அமைதிப்படை ஜவான்களும் இருந்தார்கள். செங்கன் மறுபடி ஒருமுறை காறித்துப்பிவிட்டு மனைவி பிள்ளைகளை இழுத்துக்கொண்டு குடிசைக்குள் போகிறான்.

[1990]

---------------------------------------

2 உரித்துகள்

அப்படி இறந்தவனச் சுமந்தவனும் இறந்திட்டான். அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்.... அப்படி..." திடீரென என் செவிகளுக்குள் புகுந்த பாடல் வரிகளால் என் கவனம் திரும்புகிறது.

ட்ரபிக் நெரிசலான காலி வீதியில் கொள்ளுப்பிட்டியில் இருந்து பம்பலப்பிட்டியைக் கடந்து பஸ் வெள்ளவத்தைக்குள் நுழைவதற்குள் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பறந்து விட்டன. வவுனியாவிற்கு அப்பால் இருந்து இன்று அதிகாலை புறப்பட்ட பயணம். ஒவ்வொரு தடையாகத் தாண்டி இப்போது நேரம் மாலை ஆறரை மணியாகிவிட்டது.

ஒன்றன் பின் ஒன்றாக தம்முள் வரிசைப்பட்டு நிற்கும் பஸ்கள், கார்கள். இடையில் ஒவ்வொன்றாக முந்திக் கொள்ள புகுந்து கொள்ளும் மோட்டார் சைக்கிள்களும், ஓட்டோக்களும் ஏதோ வழிமறிப்புப் போராட்டம் போல் ஒவ்வொன்றும் மாறி மாறி 'கோர்ன்' அடித்தபடி ஆமை வேகத்தில் நகர.... எனக்கு நித்திரைத் தூக்கம் ஒருபுறம், பயணக்களைப்பு, சலிப்பு மறுபுறம். உடல் அசதியைக் கூட்டிக் கொண்டிருந்தது.

எங்கோ பறந்து கொண்டிருந்த மனப்பறவையை நடிகர் அசோகனின் பாடல் அடித்து மினி பஸ்ஸிற்குள் போட்டுவிட்டது. சுற்று முற்றும் திரும்பிப் பார்க்கிறேன். நான் இருந்த பஸ் இன்னும் பம்பலப்பிட்டி கதிரேசன் கோவிலடியில் தான் நகர்ந்து கொண்டிருக்கிறது.

நடைபாதையில் விழிப்புலன் இழந்த ஒருவன் துவாயை விரித்துப் போட்டுவிட்டு தன் மத்தளத்தை முழங்காலுக்குள் அடக்கிக் கொண்டு பாட்டுப்பாடி கோவிலுக்குப் போவோர் வருவோரை சிந்திக்க வைக்கும் முயற்சியில் இருக்கிறான்; அவனது மகனான இருக்க வேண்டும்; ஓர் சிறுவன் அருகில் இருந்து சல்லரி வாசிக்கிறான்.

அந்தப் பாடல்தான் என்னையும் துணுக்குற வைத்தது. 'பெரியப்பா' எல்லாமே ஓர் கனவுபோல பெரியப்பா.... என்னுள் ஓர் சுமையாக... உறுத்தலாக.... ஏன் இப்படி ஆனார்?...

நான் வேலையென்று புறப்பட்டு கொழும்புக்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாகின்றன. நில அளவைத் திணைக்களத்தில் படவரைஞர். இவ்வளவிற்கும் நான் தேடியது நல்ல மனிதர்களைத் தவிர வேறு எதுவும் இல்லை.

ஒவ்வொரு முறையும் யாராவது உதவி கேட்டு ஊரிலிருந்து கொழும்பிற்கு வருவார்கள். உறவினர், நண்பர் என்று வந்து கேட்டால் என்னால் மறுக்க முடிவதில்லை. 'பாஸ்போர்ட்டில் இருந்து எயர்போர்ட் வரை பென்சன் அப்பீலில் இருந்து வங்கிக் கணக்கு, காசு வரை எல்லா உதவிகளும் நானே செய்து கொடுக்க வேண்டி வரும்.

ஏன் தங்குமிட வசதி, இதர செலவுகள்.... என்று என்கையாலும் போட வேண்டி வந்துவிடும். இந்த இலட்சணத்தில் நான் சம்பளத்தை எடுத்து எங்கே சேமிப்பது? அம்மாவிடம் இருந்து ஏச்சும் பேச்சும்தான் கடிதமாக வரும்.

போனமாதமும் ஒரு ஞாயிற்றுக் கிழமை. அன்று விடுமுறை என்பதால் கட்டைக் காற்சட்டையை மாட்டிக்கொண்டு காலையிலேயே புறப்பட்டுவிட்டேன்.

கவிதாஸில் ஒரு ஹோர்லிக்ஸ் குடித்து விட்டு அருகில் ஞாயிறு வீரகேசரியையும் வாங்கிக் கொண்டு நேரே கடற்கரைக்குப் போய் ஒரு நல்ல பாறையாகப் பார்த்து அமர்ந்து கொள்ள வேண்டும். ஒருபுறம் தொலைவில் காலி முகத்திடல், கட்டிடங்கள், மறுபுறம் மவுண்ட் லவேனியா, எதிரே பரந்து விரிந்த கடலில் ஏகப்பட்ட கற்பனைகள் வரும். அதோடு பத்திரிகை வாசிப்பு, அலைகள் சுமந்து வரும் காற்று அப்படியே முகத்தில் வந்து அடிக்கும் போதுள்ள சுகமே அலாதி. இந்த அனுபவிப்பின் பின் தான் நான் அன்றைய புறோக்கிறாமைப் போடுவேன்.

ஆனால் அன்று அதற்கெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்காமற் போய்விட்டது. ரீயைக் குடித்துவிட்டு பேப்பரையும் வாங்கிக் கொண்டு காலி வீதியைக் குறுக்கறுக்கும் போதே என் புறோக்கிறாம் மாற்றப்பட்டு விட்டது.

நடைபாதையில் ஒருவர் குந்திப்பிடித்தபடி இருக்கிறார். வேட்டி, சேர்ட் அதற்கு மேலே சுவற்றர் தலையைச் சுற்றி 'மப்ளர்' வாயில் எரிந்து அணையத் துடிக்கும் சுருட்டை அணையாதிருக்கப் போராடிக் கொண்டிருக்கிறார். ஆஸ்துமா வேறு அவரை ஈய்த் தெடுக்கிறது. தெரிந்த முகமாகவும் இருக்கின்றதே! உற்றுப் பார்க்கிறேன் 'பெரியப்பா...' பெரியப்பாதான்.

கதைப்பதா, விடுவதா.... எனக்குள் ஒரு தடுமாற்றம். பிற்போக்குத்தனம். உடனடியாக அவர் என்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. பேசாமற் போய்விடலாமா என்றும் நினைத்தேன். ஆனாலும் மனம் துணிவு கொண்டது. நானாகவே கதையைக் கொடுத்தேன்.

ஏறத்தாழ பத்து வருடத்தின் பின் அன்று தான் நான் பெரியப்பாவுடன் கதைக்கிறேன். என் அப்பாவுக்கும் அவர் அண்ணனான என் பெரியப்பாவுக்கும் இடையில் ஏற்பட்ட சிறு பிணக்கு சகோதர உறவையே தூரத்தில் தள்ளிவிட்டது.

பெரியப்பா தன் மூத்த மகள் பவானிக்கு ஒரு திருமணம் செய்து வைத்தார். என் அப்பாவிற்கோ அந்த மாப்பிள்ளையை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அப்பா அறிந்த அளவில் அந்த மாப்பிள்ளை ஒரு பெண்ணின் தற்கொலைக்குக் காரணமாக இருந்தவனாம். இது அப்பா தன் அலுவலக மட்டத்தால் அறிந்த தகவல்.

அதைப் பெரியப்பாவிடம் எடுத்துச் சொல்லப் போக, அது அவருக்குப் பிடிக்காமல் பெரியப்பா அப்பாவைப் பிடித்து வெளியே விட்டு உறவை முறித்து, தொடர்பறுத்து வைத்ததெல்லாம் பத்து வருடத்திற்கு முந்திய நிகழ்வுகள்.

அதன் பின் அப்பாவின் கட்டளை எமக்கு மேலே, பெரியப்பாவின் வாசற்படி மிதிக்கக் கூடாதென்று. அதன் மறுதலை பெரியப்பா வீட்டில் கதை பேச்சு வைக்கவும் முடியாது என்பதும் பின்பு நான் அப்பாவிடம் அடிவாங்கிய போதுதான் புரிந்தது.

அதன் பின் நான் அவர்கள் வீட்டில் யாருடனும் கதைத்ததில்லை. அன்றுதான் பெரியப்பாவுடன் பத்து வருடங்களின் பின் கதைத்தேன்.

பழைய தவறுகளை, குரோதங்களை வைத்து இன்னமும் பழிவாங்கிக் கொண்டிருக்கும் மனோநிலையில் நாம் இருக்க முடியாது தானே! இன்று தமிழர் சமுதாயத்தின் பரப்பு சாலப் பரந்து விரிந்து விட்டது. இப்போது அப்பாவும் எம்மை அதிகம் முன்பு போல் கண்டிப்பதில்லை. 'வளர்ந்த பிள்ளைகளுக்கு சுயபுத்தி இருக்க வேண்டும். சரியான பாதையை தேர்ந்து நடக்க வேண்டும்' என்பார்.

என் குணத்தையும் மாற்ற முடியாது. 'போன சந்ததியினர் கொண்ட கசப்புகள் அர்த்தமற்றவை' என்று மறந்து விட்டேன். பெரியப்பாவும், அவரது பிள்ளைகளும் அப்படித்தான். என்னையும் தமது ஒரு சகோதரனாகவே மதித்தனர். உறவுமுறையும் அப்படித்தானே!

இப்போது பெரியப்பாவின் மனைவி, மகள், இரண்டு மகன்மார் எல்லோரும் ஜேர்மனியில் பெரியப்பா மட்டுந்தான் இலங்கையில்.

பெரியப்பா வெள்ளைக்காரர் ஆட்சியில் பி. டபிள்யூ. டி யில் (பொது வேலைகள் திணைக்களம்) றோலர் ஓட்டுனராக இருந்தவர். வவுனியா ரவுணில் இருந்து காங்கேசன்துறை வெளிச்ச வீட்டடி வரை தான்தான் றோட்டுப் போட்டதாகச் சொல்லுவார். எப்போதும் அதையே சொல்லிச் சொல்லி மார்தட்டிக் கொள்ளுவார்.

ஊரில் அளவெட்டியில் சொந்தமான வீடு, வளவு, தோட்டம்; இயக்கச்சியில் தென்னந்தோப்பு; முரசு மோட்டையில் வயல்.... என்று பல லட்சம் பெறுமதியான சொத்துக்களுக்கு அவர் உரித்தாளன். அவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு வரமுடியாது என்று பெரியப்பா ஊருடனேயே இருந்து விட்டார்.

அவ்வப்போது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மனைவி, பிள்ளைகளுடன் கதைக்க என்று கொழும்பிற்கு வருவார். அதுவும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு போக்குவரத்துகள் சீரற்றிருந்த காலத்தில் ஊரில் இருந்து வவுனியாவிற்கு சைக்கிளிலேயே வருவார்.

அப்படிப்பட்டவர் இறுதியாக வந்தபோதுதான் கடுமையாக நோய்வாய்ப் பட்டிருந்தார். உடலும் தளர்ந்திருந்தார். அன்று என் கண்ணில் அகப்பட்டபடியினால் தப்பினார்.

அன்று அதிகாலைதான் வவுனியாவில் இருந்து புகையிரதம் மூலம் கொழும்புக்கு வந்திருந்தார். தான் வழமையாக தாங்கிக் கொள்ளும் 'லொட்ஜ்'ற்கு செல்லும் வழியிலே இயலாமையால் வீதியில் அமர்ந்திருந்தார். பின் அன்று முதல் இரண்டு வாரங்கள் என்னுடன் தான் தங்கியிருந்தார். உடல் நிலை சற்றுத் தேறிய பின்தான் பிள்ளைகள் அனுப்பிய சில ஆயிரங்களுடன் ஊருக்குப் புறப்பட்டார்.

இந்த தடவை பெரியப்பா சற்று மனம் மாறியிருந்தார். சில காலமாவது மனைவி, பிள்ளைகளுடன் சென்று ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். என்னிடம் தான் அதற்கான பயண ஏற்பாடுகள் செய்யும் பொறுப்பையும் ஒப்படைத்தார். அதற்குள் 'எதற்கும் ஒருதரம் ஊருக்குப் போய் வீடு, வளவை யாரிடமாவது பராமரிக்கும் பொறுப்பை கொடுத்து விட்டு வரலாம்' என்றுதான் அவசரமாகப் போனார்.

ஒரு வார காலத்துக்குள்ளேயே திரும்பியும் வந்தார். திரும்பி வரும் போதுதான் அவரது வாழ்வுப் பயணத்திலும் திருப்பங்கள் நடந்தேறிவிட்டன.

பெரியப்பாவின் முரசுமோட்டை வயலில் ஒரு குடும்பம் இருக்கிறது. தனது வயலைப் பராமரிக்கவென்று இருத்தப்பட்ட குடும்பம் என்றுதான் பெரியப்பா என்றும் சொல்லுவார். ஆனால் ஊரில் வேறுவிதமாகப் பேசிக் கொள்வார்கள். பெரியப்பாவுக்கு முரசுமோட்டையில் வேறு மனைவியும் மகளும் இருப்பதாகச் சொல்லுவார்கள். உண்மை அறியாமல் கதைப்பது தவறு என்று யாரும் அவ்விடயம் பற்றி அலட்டிக்கொள்வதில்லை.

கடைசியாக பெரியப்பா கொழும்புக்கென்று வரும்போதும் வழமைபோல் முரசுமோட்டையில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்து விட்டுப் புறப்படவே சென்றிருந்தார். ஆனால் காலன் முந்திக்கொண்டு விட்டான்.

நேற்று முன்தினம் நான் அலுவலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருக்கும் போதுதான் எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. ஜேர்மனியில் இருந்து பெரியப்பாவின் மகள் பவானி அக்காதான் கதைத்தார்.

'அப்பாவுக்குக் கடுமை என்று முரசுமோட்டையில் இருந்து ரெலிகிராம் வந்திருக்கு. உடன ஒருக்கா முரசுமோட்டைக்குப் போய்ப் பார்த்து, வேண்டிய ஒழுங்கச் செய்து அப்பாவ கொழும்புக்குக் கொண்டுவரப் பாருங்கோ...."

அக்காவின் அவலம் கலந்த வேண்டுகோள் தவிர்க்க முடியாது. சரியோ பிழையோ எனக்கும் பெரியப்பாதானே! மனம் தாங்கவில்லை. உடனடியாகவே புறப்பட்டு பலத்த கஸ்ரங்கள் மத்தியில் பவானி அக்கா கொடுத்த தகவல்களின் உதவியோடு ஒருவாறு பெரியப்பாவின் முரசுமோட்டை வீட்டை அடைந்து விட்டேன்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரே பரந்த வயல்வெளி. பச்சைப் பசேலென்று. இடையிடையே வெட்டிக் கொண்டு ஓடும் நீர்பாசன வாய்க்கால்கள். கொக்குகளும், மீன் கொத்திகளும், சிட்டுக் குருவிகளும் மனித சஞ்சாரம் கண்டு எழுந்து பறக்கின்றன. வயலின் நடுவில்தான் பெரியப்பாவின் வீடு. தட்டியைத் திறந்து கொண்டு வீட்டின் எல்லைக்குள் நுழைகிறேன்.

வெள்ளைக் கொடிகட்டி முன்னால் சிறிய பந்தல் போடப்பட்டுள்ளது. பந்தருள் நாலைந்து கதிரைகள், ஒரு வாங்கு போடப்பட்டிருந்தது. ஓரிரு பெரியவர்கள் அமர்ந்திருந்து வெற்றிலை பாக்குப் போட்டபடி அரசியல் அலசலில் இருக்கிறார்கள்.

பயணப் பையுடன் என்னைக் கண்டவுடன் அமைதி காத்தபடி என் வரவை எதிர் கொள்கின்றனர். நான் வெளியே வந்த ஒரு பெரியவரிடம் என்னை அறிமுகப் படுத்துகின்றேன். பெரியவர் 'பிள்ளை! இஞ்ச ஆட்கள் கொழும்பால வந்திருக்கினை. துரை ஐயாவின்ர பெறாமகனாம்.

உள்ளே இருந்து வந்த நடுத்தர வயதுப் பெண்மணி ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடித்து ஒப்பாரி வைக்கிறாள். கண்ணீர் சிந்தி, மூக்கைத் துடைத்து, கையை உதறி, என்னையும் கட்டிப் பிடித்து, ஒரே ஒப்பாரி.

'பெரியப்பா வருவது, தங்குவது, குடும்பத்தைப் பராமரிப்பது. அன்பு காட்டுவது, கடைசியாக வந்த போது ஆஸ்த்மா நோயுடன் இருதய வலியும் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் அனுமதித்தது, உயிர் போனது, வெளிநாட்டுக்கு அறிவித்தது...., எல்லா விடயமும் எனக்கு ஒப்பாரியிலேயே கூறப்பட்டது.

ஓர் இளம் பெண்; இருபத்தைந்து வயதிற்குள் இருக்கும். திருமணம் செய்தவள் போலப் படுகின்றது. முகத்தைப் பார்த்தால் எங்கள் குடும்பத்தில் ஒருவர் போன்ற முகச்சாயல் தெரிகிறது. ஆனால் சற்று கறுப்பு. எனக்கு தேனீர் கொணர்ந்து தருகிறாள். சற்று நேரத்திற்கெல்லாம் என்னால் நிலைமைகளை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

நோய்ப் படுக்கையில் இருக்கும் பெரியப்பாவை கொழும்பில் மருத்துவம் செய்வதற்காக அழைத்துவரப் போனவன் நான்.

அவரது மரண திகதியின் மூன்றாம் நாள் தான், அங்கு சென்றிருக்கிறேன். பெரியப்பாவின் பூதவுடலைக் கூட காணக் கிடைக்கவில்லை. ஈமக் கிரியைகள் யாவும் நான் செல்லும் முதல் நாளே நடைபெற்று முடிந்து விட்டன.

என்னால் உடனடியாக கொழும்பு திரும்ப முடியவில்லை. அங்கு ஓர் இரவு தங்கியிருந்து விட்டு இன்று அதிகாலை புறப்பட்டு இன்னும் எனது அறைக்குப் போய்ச் சேர முடியவில்லை.

பஸ் ஒருவாறு தடைகளைத் தாண்டி வெள்ளவத்தை வந்து விடுகின்றது. பஸ் நடத்துனர் மீண்டும் மீண்டும் சத்தமிட்டபடியால் நான் இறங்க வேண்டிய விடயம் நினைவுக்கு வர நான் அவசர அவசரமாக இறங்குகிறேன்.

நேரே அறைக்குச் சென்று நன்கு குளித்துவிட்டு வந்து எங்காவது ஒரு நல்ல இறைச்சிக் கொத்து 'வெட்டி'விட்டு நிம்மதியாக நல்ல நித்திரை கொள்ள வேண்டும்.....' என்பது என் தற்போதைய தீர்மானம்.

களைதீர நன்றாக குளித்து விட்டு தலையைத் துவட்டிக் கொண்டு றூமுக்குள் நுழையும் போது வீட்டுக் கார அன்ரியின் குரல் கேட்டது. "சுரேஷ் உமக்கு ஜேர்மன் கோல்..."

'பெரியப்பாவின் பிள்ளைகளாகத்தான் இருக்க வேண்டும்!' நான் நினைத்துச் சென்றது சரியாக இருந்தது.

முதலில் பெரியப்பாவின் மகன் கதைத்தார். சில நிமிடங்களின் பின் மகள் தொலைபேசியில் அழைத்தார். பின் பெரியம்மா கதைத்தார். பின் மற்ற மகன். யாவருமே நான்தான் தமது பிரதிநிதி என்னும் முறையில் என்னிடம் நடந்த சம்பவங்களைக் கேட்டறிந்தனர். தந்தையின் ஈமச் சடங்கில் எனக்கும் பங்குபற்ற முடியாமற் போனதையிட்டு கவலைப் பட்டனர்.

நானும் என் பங்கிற்கு அவர்களுக்கு ஆறுதல் கூறிச் சமாளித்தேன். 'எம்மால் என்ன செய்ய முடியும். காலம் நியமித்தபடி யாவும் நடந்து முடிகின்றன என நம்மை நாம்தான் தேற்றிக் கொள்ள முடியும்'

இப்போது எனக்கு ஓரளவு மன நிம்மதியாக இருந்தது. பெரியப்பாவின் பிள்ளைகள் எல்லோருடனும் கதைத்தாகி விட்டது. அவர்களையும் அமைதிப்படுத்தி விட்டதாக திருப்தியடைந்தேன்.

இரவுச் சாப்பாட்டையும் முடித்து விட்டு, 'இனி நிம்மதியாகப் படுப்போம்' என்று நினைக்க நேரம் 9 மணியாகிவிட்டது. மீண்டும் ரெலிபோன் அழைப்பு. ஜேர்மன் அழைப்பு. பவானி அக்காதான் எடுத்தார்.

'தம்பி! அப்பாட்ட எங்கட வீட்டுக் காணி உறுதிகள் இருந்திருக்கும். அதப்பற்றி உம்மட்ட ஏதும் சொன்னவரோ! இல்லாட்டி அங்க முரசு மோட்டையில அவர் வரேக்குள்ள கொண்டந்த பாக்குக்குள்ள என்றாலும் இருக்கும்.... இல்லாட்டி முரசு மோட்டையில ஏதும் சொன்னவையே!'

எனக்கு எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. எப்படியும் சொல்லித்தான் ஆக வேண்டும்.... "ஓமோம் ஓ...மோம்... அவை உறுதியளைக் காட்டினவை. எல்லா உறுதியளும் அவையளிட்ட இருக்கு. எல்லாம் அவற்ற முரசுமோட்டை மகளின்ர பெயரில எழுதியிருக்கு. எல்லாம் பெரியப்பாவின்ர பெருவிரல் அடையாளத்தோட இருக்கு.

நான் சொல்லி முடிக்குமுன் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

[1993]

--------------------------------------------------

3 பெருவாழ்வு

அசதி மேலீட்டால் எழும்ப முடியாமல் படுத்திருந்தான் குணம். "என்னப்பா! இன்னும் எழும்பேல்லையே! ராஹினியை பள்ளிக்கூடம் கூட்டிக்கொண்டு போக வேணுமில்லே!.." மனைவி ராணி அரட்டினாள்.

திங்கட் கிழமை என்றால் இப்படித்தான். முதல் இரு நாட்களும் ஓய்வெடுத்த தோசத்தால் பள்ளிப் பிள்ளைகளே புறப்படத் தயங்குவார்கள். அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் கூட திங்கட் கிழமையை ஒரு விசனத்துடனேயே வரவேற்பார்கள்.

முன்னால் சந்தி முடக்கில் உள்ள லொத்தர்காரன் காலை ஆறு மணிக்கே தன் ஒலிப்பெருக்கியையும் கூட்டிப் பூட்டிக் கொண்டு தொடங்கி விட்டான். வாகனங்களின் இரைச்சல்கள் வேறு அவனை உறக்கம் கொள்ள விடவில்லை.

ஆஹ்.... ஹா.... ஆழ்ந்த கொட்டாவியுடன் இப்போது குணம் எழுந்திருந்தான். "பிள்ளை வெளிக்கிட்டாளே!..." கேட்டபடி குளியல் அறைப் பக்கம் போனான். இப்போதும் ராணியின் புறுபுறுப்பு அவனுக்குக் கேட்டுக் கொண்டிருந்தது.

"எத்தின அலுவல் கிடக்குது?' பாண், பால் வாங்க வேணும். அதோட மத்தியானத்திற்கு மரக்கறி வாங்க வேணும். ரெண்டு நாள் உடுப்புகள் எல்லாம் அப்பிடியே பாத்ரூமில கிடக்குது.... கெதியா வாங்கோ அப்பா! பாணை என்டாலும் முதல் வாங்கிக் கொண்டு வாங்கோ! இவளும் ஒண்டும் சாப்பிடுறாள் இல்லை.... உனக்கு இப்ப சாப்பிட என்ன வாங்கித் தாறது?..."

மகள் ராஹினியின் தலையை வார்ந்தபடி பட்டியல் போட்டுக் கொண்டிருந்தாள் ராணி.

குணத்திற்குத் தெரியும். ராணி நேற்று சூசகமாகக் கூறினாள். இன்று கட்டாயம் கோரிக்கை விடுப்பாள். நாளை அல்லது நாளை மறுதினம் போராட்டம் தொடங்குவாள். வாறகிழமை சம்பளம் என்றும் அவளுக்குத் தெரியும். 'ப்ரிஜ்' வீடு வந்து சேர்ந்த பின்புதான் அவள் தன்னை கணவனாக மதிப்பாள் என்பதையும் குணம் அறிவான்.

குணம் அவளது வார்த்தைகளில் கேட்டவற்றை மட்டும் காதில் வாங்கிக் கொண்டு தன் வழமையான புறப்பாடுகளில் ஈடுபட்டிருந்தான்.

குணம், ராணி தம்பதியர்க்கு ஒரே பிள்ளை ராஹினி. வயது எட்டு இருக்கும். அருகில் இருக்கும் பெண்கள் கல்லூரியில் படிக்கிறாள்.

சென்ற ஒரு வருடத்திற்கு முன்வரை ராணியும், மகளும் யாழ்ப்பாணத்தில் தம் சொந்த வீட்டில்தான் இருந்தார்கள். குணம் தலைநகர் கொழும்பில் தனியார் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் கணக்காளராக இருப்பதால் அவன் மட்டும் கொழும்பில் ஓர் அறை எடுத்துத் தங்கியிருந்தான்.

அப்போதெல்லாம் குணத்திற்கு அவ்வளவு பிரச்சினைகள் இருந்ததில்லை. ஏழாயிரம் ரூபா சம்பளத்தில் நாலாயிரம் ரூபாவை அப்படியே மனைவியிடம் அனுப்பி விடுவான். மீதி மூவாயிரம் ரூபாய்க்குள் அவன் தன் தேவைகளைப் பார்த்துக் கொள்வான்.

அப்போதும் கூட ராணி 'அது வேண்டும், இது வேண்டும்....' என்று ஏதாவது உறவினர்களின் சுபகாரியங்கள் வரும்போது எழுதுவாள்.

இவனும் பதிலுக்கு 'இவ்வளவுதான் என்னால் அனுப்ப முடியும். இதற்குள் சமாளித்துக் கொள்' என்று எழுதிக் கொள்வான். வருடத்தில் இரண்டு அல்லது மூன்று தடவை ஊருக்குப் போய் மனைவி, பிள்ளைகளுடன் இருந்து விட்டு வருவான்.

அப்போதெல்லாம் அவனுக்கு குடும்பத்தில் அவ்வளவு பிரச்சினைகள் இருந்ததில்லை. தன் வேலையுண்டு, தன் பாடுண்டு என்று தன் குடும்ப நினைவுகளோடு, மகளின் எதிர்காலக் கனவுகளோடு இருந்து கொள்வான்.

ராணிக்கும் யாழ்ப்பாணத்து நிலைமைகள் மோசமானதோடு கணவனின் தொடர்பு கிடைப்பது கடினமானது. குணத்திடம் இருந்து உரிய காலத்தில் பணம் வருவதும் கஷ்டம். நாள் செல்லச் செல்ல யுத்த நிலவரங்கள் வலுத்ததோடு ராணியால் தனியே சீவனம் நடத்துவதென்பது கடினமாகிவிட்டது.

இந்த நிலையில்தான் குணம் தன் மனைவியையும் மகளையும் கொழும்பிற்கு அழைத்துக் கொண்டான். சொந்தமாக நிலபுலம் இல்லாதவர்கள் கொழும்பில் வசிப்பதென்றால், அதுவும் சிக்கனமாக குடும்பம் நடத்துவதென்றால் கல்லில் நாருரிக்கும் நிலைதான். அவர்கள் கொழும்பிற்கு வந்தபின்தான் குணத்தின் குடும்ப வாழ்விலும் பிச்சல் பிடுங்கல்கள் வளரத் தொடங்கின.

வாடகைக்குத்தான் எத்தனை வீடு பார்த்தாலும் ராணிக்குத் திருப்தி வராது. ஏதாவது குறை இருக்கத்தான் செய்யும். பிள்ளையின் பள்ளிக்கூடம், கோவில், மார்க்கற், பஸ்ஸ்ரான்ட், .... எல்லாம் அருகில் இருக்க வேண்டும். அப்படி அமைந்து விட்டால் 'பாத்ரூம் சரியில்லை, குசினி வடிவில்லை. அறைகள் அளவில்லை...., என்று குறைகள் நீளும். இப்படி அவர்கள் பார்த்து பார்த்து தள்ளிவிட்ட குடியிருப்புகள் அனேகம்.

பொறுமை தாழாமல் குணத்தின் நிர்பந்தத்தின் மேல்தான் அவர்கள் இந்த வீட்டில் குடிவந்தார்கள். அதுவும் வெள்ளவத்தையில், காலி வீதிக்கு அருகாமையில் கிடைப்பதற்கு 'கொடுத்து' வைத்திருக்க வேண்டும். இருந்தும் அவள் இந்த வீட்டில் நிம்மதியாக குடும்பம் நடத்திய நாளே இல்லை என்றாகி விட்டது.

குணம் பெயருக்கேற்ற நற்குணமானவன்தான். அதனால் வளைந்து கொடுத்து குடும்பத்தை நடத்துகிறான். வந்த இந்த ஆறு மாத காலத்தில் அவள் 'காஸ் குக்கர், தளவாடங்கள், மின்விசிறி, றேடியோ, ரி.வி..., என்று வாங்கிச் சேர்த்த பொருட்களால் வீட்டை நிரப்பி விட்டாள்.

ஒரு படுக்கை அறை, ஒரு விறாந்தை, ஒரு குசினி, குளியலறை, மலசலகூடம் இவ்வளவுமே அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட 'அனெக்ஸ்' தனி ஒருவனின் சம்பாதிப்பு. இதற்குள் வீட்டு அட்வான்ஸ், வாடகை, எலெக்றிசிற்றி பில், வோட்டர் பில், பிள்ளையின் படிப்புச் செலவுகள் என்று மாதம் பதினையாயிரத்திற்கு மேல் செலவு சுட்டிக்காட்டி நிற்கும்.

இதற்குள் மாதம் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டமோ, திருமண வைபவமோ, உறவினரில் யாருக்காவது விருந்து வழங்கவேண்டிய நிலையோ வந்துவிடும். இவை எல்லாம் பணச் சுமையாக குணத்தின் தலையில்தான் ஏறிக்கொள்ளும்.

சீதனம் என்று ஏதோ ஓரிரு லகரங்கள் திருமண காலத்தில் ராணியின் பெயரில் வங்கியில் போடப்பட்டிருந்தன. அது கூட சீதனமாகக் கிடைத்த வீட்டைத் திருத்துவதிலும், அழகுபடுத்துவதிலும் ஓரிரு வருடத்திற்குள்ளேயே காலியாகி விட்டது. பின் அந்த வீட்டையும் யாரோ இடம் பெயர்ந்து வந்த அகதிகளிடம் பொறுப்பு கொடுத்து விட்டு வந்தது மட்டுமே மிச்சம்.

இப்போது மாதச் சம்பளத்தை விட மேலதிகமாக உழைக்க வேண்டிய நிர்பந்தம் குணத்திற்கு. 'கொமிஷன் பிஸ்னஸ்' தான் அவனுக்கு அவ்வப்போது கைகொடுத்து வந்தது. பாஸ்போட் எடுத்துக் கொடுப்பது, வெளிநாட்டு முகவர்களுக்கு ஆள் சேர்த்துக் கொடுப்பது, விமான ரிக்கற் பதிவு.... இன்னும் கொழும்பில் தரகுப் பணம் கிடைக்கக்கூடிய நாகரீகமான ஓரிரு வேலைகளும் அவ்வப்போது செய்து வந்தான்.

மனைவி ராணிக்கோ தான் ஒரு எக்கவுண்டனின் மனைவியாக ஊரறிய வாழ வேண்டுமென்று ஆசை. குணத்திற்கோ தன் குடும்ப நிம்மதிக்காக பணத்தைத் தேடி அலைய வேண்டிய நிலைமை.

"நேரம் போட்டுது கெதியாய்ப் போட்டு வாங்கோ" அலாரக் குரலுடன் குணத்திற்கும் மகளுக்கும் சாப்பாடு போட்டு 'ரிபின் கரியரில்' எடுத்து வந்தாள் ராணி.

குணம் காலையில் சாப்பிடுவதில்லை. மதிய உணவு மட்டும் எடுத்துச் செல்வான். 'ரிபின் கரியரை' மேசை மேல் வைத்தபடி "ப்ரிட்ஜ் என்றால் எவ்வளவு சுகம்?" இரவே சமைச்சு வைச்சுப் போட்டு விடிய சூடாக்கிக் கட்டிக் கொண்டு பொகலாம். காலமை எழும்பி அந்தரப்படத் தேவையில்லை. மரக்கறியக் கூட பழுதாகாமல் வச்செடுக்கலாம்....."

ராணி 'ப்ரிஜ்' வாங்குவதற்கான விண்ணப்பம் போட்டாள். "சரி, சரி காசுகள் வரட்டும் வாங்குவம்...' குணம் கடிந்தபடி மகளையும் அழைத்துக் கொண்டு வீதிக்கு இறங்கினான்.

"தம்பி குணம்! உம்மட்டத்தான் வாறன்!" சின்னத்தம்பியர் முன்னால் வந்து நிற்கிறார். "என்ன தம்பி! என்ர மருமகன ஜேர்மனிக்கு அனுப்புறனெண்டு மூண்டு லச்சம் வாங்கி இண்டைக்கு மூண்டு மாதம் ஆச்சுது! இண்டைக்கு அதின்ரை வட்டி என்ன? பெடியன் கொழும்பில நிற்கிற செலவென்ன? சும்மா விளையாட்டே!"

"ஓமண்ணை! உங்கட ஆளுக்கு வாற வியாழக்கிழமைதான் பிளைட், "நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம்..." வந்தவர் முடிக்க முன்னம் குணம் வாயில் வந்த தவணையைக் கூறி அமர்த்தினான்.

குணம் ஒன்றும் வெளிநாட்டிற்கு ஆள் அனுப்பும் ஆள் அல்ல. இன்னொரு முகவருக்கு ஆள் சேர்த்துக் கொடுப்பது இவனது பணி. அதில் ஆளுக்கு மூவாயிரம், ஐயாயிரம் என்று 'கொமிசன்' கிடைக்கும். சுகமாகப் போய்ச் சேர்ந்துவிட்டால் பாராட்டுவார்கள், புகழ் பரவும், இன்னும் தேடி வருவார்கள். இதனால் வரும் இடைஞ்சல்களுக்கும் இவன் தானே முகம் கொடுத்தாக வேண்டும்.

"என்னெண்டாலும் தம்பி குணம்! வாறகிழமை பெடியன் போயிட வேணும். இல்லையெண்டால் அடுத்த நாளே காசு மூண்டும் என்ர கையில வர வேணும். நான் இதுக்காகத்தான் யாழ்ப்பாணத்தில இருந்து வந்தனான்! பெடியன கொழும்பில வச்சிருக்கிற வில்லங்கங்களும் உமக்கு விளங்கும் தானே! நான் சொன்னது நினைவில இருக்கட்டும்! நான் வாறன்!" வந்தவர் முறுகிவிட்டுப் போனார்.

பிள்ளை அப்பாவின் முகத்தைப் பார்த்தது. "அம்மா! கடைசியா ஸ்கூல்ல என்ன 'பொயம்' படிச்சனீங்கள்?" குணம் மகளின் கவனத்தைத் திருப்பியபடி நடக்கத் தொடங்கினான்.

மனைவியின் உதய உச்சாடனத்தை விட வழியில் வந்த சின்னத்தம்பியர் கொடுத்த அபிஷேகம் குணத்தைத் தடுமாற வைத்தது. ஏதோ ஒரு பொய்யைச் சொல்லி அவரை அனுப்பிவிட்டாலும், அவரது கட்டளை கண்டிப்பானது. தவறினால் தற்கொலைதான் செய்யும் நிலை வரும்.

குணம் மகளை பாடசாலையில் விட்டுவிட்டு அலுவலகத்திற்குச் செல்லுமுன் எப்படியும் அந்த ஏஜென்சியிடம் சென்று சின்னத்தம்பியின் மருமகனின் பயணத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் காசையாவது திரும்ப வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்.

மனத்தில் தொடராக எண்ணங்களை பரப்பிக் கொண்டு காலிவீதியைக் குறுக்காகக் கடந்தான் பஸ் நிலையத்தை நோக்கி. சற்று வினாடிகளுக்கெல்லாம் 'கிறீச்' என்ற கொடூர ஓசையுடன் வெள்ளை நிற வான் ஒன்று கொஞ்சம் அப்பால் சென்று நின்றது.

குணம் இரத்தத் தோயலில் புரண்டு கிடந்தான். அவசர அவசரமாக அவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள்.

செய்தி கிடைத்து ஆஸ்பத்திரிக்கு ஓடி வருகிறாள் ராணி! அழுது புலம்புகிறாள். குணத்தின் நிலை கவலைக்கிடமானது என்று மட்டும் நின்றவர்கள் சொன்னார்கள்.

[14-01-1996 வீரகேசரி]

---------------------------------------------------

4 மறைத்தல்

துரைராஜா மாஸ்ரரின் வீடு களைகட்டியிருந்தது. உறவினர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். குசினிப் பக்கம் பலகாரம், பட்சணம் சுடுவது பற்றியே பேச்சு. என்ன சுடுவது, எப்படி சுடுவது, என்ன அனுமானம் என்று ஒரே அடுக்களை மும்முரம். மாஸ்ரரின் இளைய மகன் வேந்தன் வீட்டினைச் சோடிக்கும் முயற்சியில் இருந்தான். அவனது பள்ளி நண்பர்கள் ஓரிருவர் ஆலாய்ப் பறந்துகொண்டிருந்தனர்.

துரைராஜா மாஸ்ரர் வழமையான காலைப் புறப்பாடுகளோடு கண்ணாடி முன் வந்து தலையை வாரிக் கொண்டிருந்தார். வலதுபக்க நெற்றியிலும் காதோரமும் 'சில்வர் பெயின்ற்' நரை அவரை மெல்லப் பரிகசித்தது. சில காலமாகவே இந்த நரை படிப்படியாக வந்திருந்தாலும் இன்று அது அவருக்கு வித்தியாசமாகப்பட்டது. ஏதோ ஒன்றை உறுத்துவது போல, அடையாளப்படுத்துவதாகப் பட்டது. நாற்பது வயதின் நெகிழ்வுதான் அது.

'மூத்த மகளே வயதுக்கு வந்துவிட்டாள். இனி என்ன, இன்னும் 'பெடியன்' ஆக இருக்க முடியுமா? இனி முதுமையின் சாயல் இருக்கத்தானே செய்யும்? ஒன்றா, இரண்டு பெண் பிள்ளைகளாச்சே! கடைக்குட்டி வேந்தன், இனி அவன் வளர்ந்து படித்து, உழைத்து... அது முடியாத காரியம். என் பிள்ளைகளை நான்தானே உழைத்து வாழவைக்க வேண்டும். இப்போதைக்கு படிக்கிறார்கள் என்று இருந்துவிடலாம். பின்பு கல்யாணம், காட்சி என்று வரும்போதுதானே கஷ்டங்கள் வரும்.'

'வீடு, வளவு, சீதனம், சீர்வரிசை... என்று இன்னும் என்னென்ன தேவைகள் வருமோ... அதைவிட பிள்ளைகளை வளர்த்து, படிப்பித்து ஆளாக்குவதற்கிடையில்... போராட்டம், விடுதலை என்று மாறிவிட்டால்...' ஒன்றுக்கு மேல் ஒன்றாக சிந்தனைகள்.

தலையை வாரிவிட்டு உடுப்பையும் ஒருதரம் சரி பார்த்துவிட்டு 'ஹெல்மெட்'டையும் எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தார் மாஸ்ரர். மனைவி பின்னால் வழியனுப்ப வந்தாள். "ஏழு மணிக்கெல்லாம் என்ன வெய்யில்? இப்பிடி பத்த வைக்குதே! அங்க இங்க சுணங்கிட்டு நிக்காதீங்க! நேரத்துக்கு கந்தோர் வேலைய முடிச்சிட்டு, சாமான்களையும் வாங்கிட்டு நேரத்துக்கு வரப்பாருங்க! வேலைன்டா நிறைய இருக்கு!" மனைவியின் வழியனுப்பலோடு தன் 'ஹொண்டா'வில் விரைகிறார் துரைராஜா மாஸ்ரர்.

ஆரையம்பதியில் 'துரைராஜா மாஸ்ரர்' என்றால் எல்லோருக்கும் தெரியும். இப்போதும் அவரை யாவரும் 'மாஸ்ரர்' என்று அழைத்தாலும் அவர் மட்டக்களப்பு கல்வித் திணைக்கள அலுவலகத்தில் கல்வி செயற்திட்ட அதிகாரி. சாதாரண ஆசிரியராகப் பணியை ஆரம்பித்தவர் மேலும் படித்து முன்னேறி இந்தளவிற்கு வந்திருக்கிறார். அவரது ஆரம்பகால படிப்பித்தல் ஆரையம்பதி மத்திய மகா வித்தியாலயத்தில் தொடங்கியதால் ஊரவர்கள் அவரை 'மாஸ்ரர்' என்றே அழைத்தனர். இன்றும் அப்படியே அழைக்கின்றனர்.

அவரது சேவை பாடசாலை மட்டத்தில் மட்டுமல்ல சமூக, ஊர் மட்டத்திலும் பரந்திருந்தது. தன்னலமற்ற பண்பாட்டால் ஊரில் யாவராலும் மதிக்கப்படும் ஒருவர்.

நாளை அவரது மூத்த மகள் பிரியாவிற்கு பூப்பு நீராட்டு விழா. எல்லா ஆயத்தங்களும் ஆகிவிட்டன. மீதி செலவிற்கு கொஞ்சப் பணம் வங்கியில் எடுக்க வேண்டும். வேறும் சில வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க வேண்டும். இரண்டு மூன்று நாட்களாவது கொண்டாட்டம் தொடரும். வீட்டில் நிற்க வேண்டும்.

கந்தோரில் லீவு போட வேண்டும். எல்லாவற்றிற்கும் மட்டக்களப்பு 'ரவுணு'க்குப் போய் வருவதே அன்றைய 'புறோகிறாம்'.

அரை மணி நேரத்துள் வந்துவிடக்கூடிய தூரம்தான். துரைராஜா மாஸ்ரர் தன் காரியாலயத்திற்கு வந்து சேர ஒன்பது மணியாகிவிட்டது. வழிக்கு வழி 'செக்கிங்'. இறங்கி உருட்டி, நடந்து, வரிசையில் நின்று பைகள், பெட்டிகள் சுத்தமான பரிசோதனைக்கு உள்ளாக்கி விலத்தி வருவதற்குள் வேண்டாம் வேண்டாம் என்றாகி விடும்.

இதற்குள் இராணுவத்தினரின் கிண்டல்களுக்கும், கேலித்தனங்களுக்கும், பரிகாசங்களுக்கும் பதிலளித்தாக வேண்டும். எத்தனையோ மாணவர்களைப் படிப்பித்து மனிதராக்கியவர் துரைராஜா மாஸ்ரர். இவர் சாதாரண சிப்பாய்களை 'சேர்' என்று விழிக்க வேண்டிய நிர்பந்தம்.

தலைவிதியை நொந்தபடி கந்தோருக் குள்ளே போய் கையெழுத்தைப் போட்டுவிட்டு தன் வேலையில் இறங்கி விடுகிறார் மாஸ்ரர். நேரம் பத்தரை மணியாகிவிட்டது. கந்தோரில் சக அதிகாரிகளிடம் விடயத்தைக் கூறிவிட்டு, வேண்டியவர்களிடம் அழைப்பும் விடுத்துவிட்டு, 'லீவ் சிற்'றையும் எழுதி வைத்துவிட்டுப் புறப்பட்டவர் நேரே வங்கிக்குப் போகிறார்.
வங்கியில் தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு சந்தைப் பகுதிக்குள் மோட்டார் சைக்கிளைச் செலுத்தினார். மோட்டார் சைக்கிளை வாகன பாதுகாப்புப் பகுதியில் விட்டுவிட்டு வாங்கவேண்டிய பொருட்களின் பட்டியலைத் தேடிக் கையில் எடுத்தபடி 'சுப்பர் மாக்கற்'றுக்குள் நுழைகிறார் மாஸ்ரர். அது வார நாளாக இருந்ததாலும், கடந்த இரண்டு மூன்று தினங்கள் தொடர்ந்து யுத்த அதிர்வுகளின் பின் இன்று அமைதியின் அறிகுறிகள் தெரிந்ததாலும் சந்தையுள் சனக் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

சற்று நேரத்திற்கெல்லாம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்வுடன் ஒரு வெடிச் சத்தம் கேட்கிறது. பூமியோடு ஏதும் வால்வெள்ளி வந்து முட்டி மோதிவிட்டதோ என்ற திகைப்பு. கண்ணை மூடித் திறப்பதற்குள் யாவும் நடந்து விட்டது. 'சுப்பர் மாக்கற்' கட்டடத்தின் ஒரு பகுதி அரை உயிரில் தொங்குகிறது. எங்கும் அவலக் குரல்கள். உயிர் போகும் முனகல் ஒலிகள். யாரும் யாரையும் பார்க்க முடியாத நிலை. உயிர் தப்பியவர்கள் மட்டும் ஓடித் தப்பித்து விடுகிறார்கள்.

ரவுணில் அவசர அவசரமாக கடை கண்ணிகள் இழுத்து மூடப்படுகின்றன. ஆங்காங்கே ஓரிரு துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் மட்டும் இத்தனைக்கும் பதிலாகக் கேட்டன.

பெரிதாக ஏதும் மோதல்கள் இல்லை என்று புரிகிறது. ஆனால் சந்தைத் தொகுதிக்கு மட்டும் என்ன நடந்தது என்பது மட்டும் புரியவில்லை. ஒரு புகை மண்டலம் அவ்விடத்தை மூடிக் கிடக்கிறது. பொலிசாரும் இராணுவத்தினரும் ஆங்காங்கே ஓடித் திரிகின்றனர். சிலர் அசையாமல் அப்படியே தமது காவற் கடமையில் நிற்கின்றனர். பொதுமக்களில் சிலர் சம்பவம் நடைபெற்ற ஸ்தலத்துக்குள் புகுந்து விபத்தில் அகப்பட்டவர்களைக் காக்க முயற்சித்தாலும் அச்சம் தடுத்தது.

சற்று நிமிடங்களுக்கெல்லாம் ஓரிரு 'அம்புலன்ஸ்' வண்டிகள் சகிதம் மீட்புக் குழு வந்துவிடுகிறது. அதிலும் பொலிஸ் பகுதியினர்தான் வந்து குதித்தனர். சிதைந்த உடல்களையும், இறந்தவர்களையும், காயப்பட்டவர்களையும் கட்டிடச் சிதைவுக்குள் இருந்து வேறுபடுத்திக் கொண்டிருந்தனர்.

உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தவர்கள் அம்புலன்ஸ்களில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டனர். இறந்த உடல்களை ஆஸ்பத்திரிக்கு அடையாளம் காண்பதற்காக அனுப்பினர்.

எங்கும் சிதறிய சதைத் துண்டங்களும் உடல் பாகங்களும், இரத்தத் தெறிப்புகளும் சொட்டுக்களும்.... சகிக்க முடியாத அளவு மனப்பிழிவை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.

இன்னும் எங்கோ அவலமாக முனகல் சத்தம் ஒரு மரக்கறிக் குவியலின் கீழிருந்து வருகிறது. சலித்துப் போன நிலையில் ஒரு பொலிஸ்காரன் அவ்விடத்தைக் காலால் விலத்துகிறான். இரண்டு பெண்கள் ஒருவருக்கு மேல் ஒருவராக குறுக்காகக் கிடக்கின்றனர்.

மற்றும் இரு பொலிஸ்காரரை உதவிக்கழைத்து முதலாமவன் அந்த இரு பெண்களையும் வெளியே தூக்குகிறான். ஒருத்தியின் உயிர் போய் விட்டது. மற்றவளுக்கும் ஆங்காங்கே உடலில் சிராய்ப்புக் காயங்கள். அந்தப் பொலிஸ்காரன் இறந்த பெண்ணின் முகத்தை அப்போதுதான் பார்த்தான். பார்த்தவன் 'ஓ.... என்று கதற ஆரம்பித்து விட்டான். இறந்தவள் அவனது மனைவி. அயல் வீட்டுக்காரியுடன் சந்தைக்கு வந்தவள் சமாதியாகி விட்டாள்.

துரைராஜா மாஸ்ரரின் மனைவி வீட்டிற்குள் சென்று சுவர் மணிக்கூட்டில் நேரத்தைப் பார்ப்பதும் வெளியே வந்து வீதியைப் பார்ப்பதுமாக இருக்கிறார். "சாமான் வாங்கெண்டு போன மனுசனை இன்னும் காணேல.... சாமான்கள் வாங்கிட்டு வாறெண்டாலும் ரெண்டு மணிக்குள்ள வந்திரிக்க வேணுமே! மட்டக்களப்பிலயும் குண்டு வெடிச்சதாம். பதினொரு மணிக்கெல்லாம் இவர் சந்தைக்குள்ளையா போயிருப்பார். இல்லையே! இந்த மனிசன் வேலை, வேலை எண்டு சாகிற ஆள் இல்லவா. எங்கயெண்டாலும் கல்விக்கந்தோர் பள்ளிக் கூடத்திலதான் நிண்டிருப்பார்...."

"கந்தோர் முடிஞ்சு வாறெண்டாலும்.... இப்ப ஆறுமணியாகுது.... இதுக்குள்ள வந்திரிக்க வேணும்!" துரைராஜா மாஸ்ரரின் மனைவி பலவாறும் யோசித்து தடுமாறிக் கொண்டிருந்தார்.
வாசலில் ஒருவன் சைக்களில் வந்து மணியடித்தான். "அம்மா மட்டக்களப்பு குண்டு வெடிப்பில துரைராஜா மாஸ்ரருக்குக் கொஞ்சம் காயம். ஆஸ்பத்திரியில வேலை செய்யிற ஆள் ஒருத்தர்தான் விசயம் சொல்லி அனுப்பியிருந்தார். அதுதான் நான் வந்தனான் சொல்லிட்டுப் போக" வந்தவன் ஊர் இளைஞன்தான். சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

துரைராஜா மாஸ்ரரின் மனைவி தலையில் அடித்துக் குளறத் தொடங்கி விட்டாள். அதற்குள் அயலவரும் கூடி விட்டிருந்தனர்.

இதற்குப் பொறகு ரவுணுக்குப் போக பஸ்ஸ{ம் இல்லையே! கார் ஒண்டப் பிடிச்சுப் போறெண்டாலும் விடமாட்டான்களே. றோட் எல்லாம் கட்டை போட்டு மூடியிருப்பாங்களே!" மாஸ்ரரின் மனைவி, பிள்ளைகள், அயலவர், உறவினர் யாவரும் துடித்துப் போயிருந்தனர்.

மாஸ்ரரின் மனைவி இரவு பூராவும் ஒரே அழுகையாக இருந்தாள். இயன்றளவு அருகில் இருந்தவர்கள் சமாதானப்படுத்திப் பார்த்தார்கள். மாஸ்ரருக்கு ஒண்டும் ஆகியிருக்காது சின்னக் காயமாய் இருக்கும். காலையில போய் ஆஸ்பத்திரியில் பாப்பம். பிள்ளைகள் எதுவும் புரியாமல் தேம்பி அழுதபடி தூங்கிவிட்டிருந்தனர்.

இதற்குள் கூடியிருந்தவர்களின் விமர்சனங்கள் வேறு. நடந்த சம்பவங்களைப் பற்றி ஊகங்களும், கேள்விப் பட்டவற்றின் திரிபுக் கதைகளும், தத்தமது அறிவுக்கெட்டிய புலனாய்வுகளும் தொகுப்புகளுமாக பக்கம் பார்த்து, பயந்து பயந்து கதைத்துக் கொண்டிருந்தனர். இரவு யாவருக்கும் தூக்கமின்றியே கடந்தது.

இரவு ஒன்பது மணிக்கு வானொலிச் செய்தியும் விட்டு வைக்கவில்லை. 'மட்டக்களப்பு சந்தைத் தொகுதியில் இன்று காலை பதினொன்றரை மணியளவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இருபது பொதுமக்கள் கொல்லப்பட்டனர். நாற்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது... தீவிரவாதிகளின் நாசகாரச் செயலாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இராணுவ தளபதி.... தலைமையில் பூர்வாங்க விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.'

இராணுவ தளபதி சக பாடிகளுடன் இரவுவேளையில்தான் ஆஸ்பத்திரிக்குள் வந்தார். தன் பூர்வாங்க விசாரணைகளை நெறிப்படுத்துவதற்காக காயப்பட்டிருந்தவர்களின் வாக்கு மூலங்களை அவரின் உதவியாளன் ஒருவன் எழுதிக் கொண்டிருந்தான்.

"பத்தரை மணி அப்படி ஒரு கொமோண்டோ ஜீப் மார்க்கற்றுக்குள்ள வந்தது. எல்லா இடமும் செக்பண்ணிட்டுதான் போனாங்க. ஆனா எங்கட கடைக்குப் பின்னாலதான் குப்பை எல்லாம் போடுற காம்பறா இருக்குது. அந்தப் பக்கமாத்தான் வெடிச்சத்தம் வந்திச்சு. செக் பண்ண வந்தவங்க கூட அந்தப் பக்கமெல்லாம் கவனமா நிறைய நேரம் தேடி தேடிப் பாத்திட்டுத்தான் போனாங்க".
இது பாதிக்கப்பட்ட ஒருவனின் வாக்குமூலம். எழுதிக் கொண்டிருந்தவனை தளபதி இரகசியமாகக் கடிந்தான். அடுத்த நபரின் வாக்குமூலம் எடுப்பதற்குள் இந்த வாக்குமூலம் கிழித்து வீசப்பட்டது. இல்லையேல் சாதகமான அறிக்கை தயாரிக்க முடியாதே!

விடிந்ததும் விடியாததுமாக துரைராஜா மாஸ்ரரின் மனைவியும் இளைய மகளுமாக ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டு விட்டனர். வீட்டடியில் பஸ் எடுத்து ஆஸ்பத்திரி வாசலுக்கு வந்து சேர காலை பத்துமணியாகி விட்டது. நேற்றைய நிகழ்வினால் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாம்.

ஆஸ்பத்திரியுள் யாரையும் அனுமதிக்கவில்லை. 'இனி பன்னிரண்டு மணிக்குத்தான் உள்ளே போக விடுவாங்கள்." சுடுதண்ணிப் போத்தல், பிஸ்கற், பெட்சீற் தலையணி...., என்று இரு கைகளிலும் சாமான்களுடன் வாசலில் காத்திருந்தனர் தாயும் மகளும்.

உச்சி வெயில் கொடூரமாக எரிக்கிறது. ஒவ்வொரு நாளும் வருகின்ற சூரியன்தான் இன்றும் வந்திருக்கிறது. தன் கடமையில் சற்றும் பிறழாத சூரியன் பகலில் நடக்கின்ற அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் இந்த ஒரு சூரியன்தான் சாட்சி. சூரியன் தர்மத்தின் சின்னமா! உலக இயக்கத்திற்கே மூலம் சூரியனல்லவா! ஏன் மக்களில் பாரபட்சம் பார்க்க வேண்டும்! பட்டகாலிலே படுவது போல.

பன்னிரண்டு மணிக்கு ஆஸ்பத்திரி மணி அடிக்கப்பட்டது. வாசலில் வரிசையில் நின்றவர்கள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழையத் தொடங்கினர். துரைராஜா மாஸ்ரர் அனுமதிக்கப் பட்டிருந்த 'வாட்டை', ஒருவாறு மனைவியும், மகளும் கண்டுபிடித்து விட்டனர். ஒவ்வொரு ஆளாக பார்த்து பார்த்து வருகின்றனர். அடையாளம் காண்பதில் அத்தனை சிரமம்.

"அம்மா! அங்க அப்பா..." மகள்தான் முதலில் அடையாளம் கண்டாள்.

வெள்ளைப் போர்வையால் இடுப்புவரை போர்க்கப் பட்டிருந்தது. துரைராஜா மாஸ்ரர் ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறார். அரட்டவா, விடவா.... என்று இவர்கள் யோசிக்க அடுத்த கட்டிலில் இருந்தவர் இவர்களை அடையாளம் கண்டு விடுகிறார்.

"நீங்கள்.... இந்த ஐயாவோட வீட்டுக் காரங்களா...?"

"ஓம், ஓம்" மாஸ்ரரின் மனைவிக்கு கண்கள் கலங்கி விட்டன.

"இந்த ஐயாவுக்கு முழங்காலுக்குக் கீழ.... சிதைஞ்சு போச்சு. இப்பதான் ஒப்பறேசன் தியேட்டரால கொண்டந்து விட்டிருக்கு. முழங்காலுக்குக் கீழ இரண்டு காலும் எடுத்தாச்சு"

மாஸ்ரரின் மனைவி 'ஓ...' என்று கதற ஆரம்பித்து விட்டாள். தலையில் அடித்து அலறினாள். சற்று நேரத்திற்கெல்லாம் அறிவு மயங்கி அப்படியே வீழ்ந்து விடுகிறாள். மகள் தானும் சேர்ந்து அழுதாள். நடந்தவை ஒன்றும் அவளுக்கு சரியாக விளங்கவில்லை.
சற்று நேரத்திற்கெல்லாம் துரைராஜா மாஸ்ரர் சுயநினைவு பெற்று விழித்துக் கொள்கிறார். மனைவி மகளை அருகில் பார்த்ததும் அவருக்கு நிலைமை விரைவில் விளங்கி விடுகின்றது. இடுப்பிற்கு கீழ் உணர்ச்சி அவ்வளவாகத் தெளியவில்லை. உடல் உணர்வில் மாஸ்ரர் அனுமானித்துக் கொள்கிறார்.

முகமும் கறுத்து, உடலும் மெலிந்தது போல் பலவீனமாக இருக்கிறது. நாவின் வறட்சி வயிறின் வெறுமை அவருக்கு சோர்வைத் தருகிறது. கையில் ஏற்றி விடப்பட்ட 'சேலைன்' ஒன்றுதான் வெளியே போன இரத்தச் சொட்டுகளுக்காக உள்ளே ஏறிக் கொண்டிருக்கிறது.

கூடி நின்றவர்களின் முயற்சியால் அறிவு தெளிய மாஸ்ரர் மனைவிக்கு ஆறதல் சொல்லுகிறார். மனைவியால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. விக்கித்துப் போய் பிரமையில் நிற்கிறாள்.

"கோர யுத்தத்தின் விபத்துக்களில் தம் குடும்பத் தலைவனையே இழந்தவர்கள் எத்தனை பேர். உன் கணவனுக்கு இரண்டு கால்கள் மட்டுமே இயலாமற் போயிருக்கிறது. விடிவொன்று இருக்குமானால் அதற்கு விலையென்று ஒன்று கொடுத்துத்தானே வாங்க வேண்டும். அதுவே விதியென்றும் இருந்து விட்டுப் போகட்டும்..." ஆனாலுமென்ன சூரியனில் கறை பட்டுத்தானேவிட்டது.

[23-06-1996 தினகரன் வாரமஞ்சரி]

--------------------------------------------

5 புரிதல் என்பது

'தாத்தா!.... கோல் ஃபுறம் கனடா' என் சின்னவள் கூச்சலிட்டுக் கொண்டு முன்னறைக்கு ஓடினாள். தாத்தா அப்போதுதான் தன் காலைக் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். என் மகளின் குரலால் உணர்வு பெற்றவராய் வேட்டியை சரிப்படுத்திக் கொண்டு ஹோலுக்குள் வந்து ரிஸீவரைக் கையில் எடுத்தார்.
"அப்பா! நான் சுரேன் கதைக்கிறன். எப்பிடி அப்பா! சுகமாய் இருக்கிறீங்களே!" கனடாவில் இருந்து அவரது இளைய மகன்தான் பேசினான்.

"சுரேன்! ஏன் கன நாளாய்க் கதைக்கேல?.. கடிதமும் போடேல...?"

"சரியான வேலையப்பா!"

'வேற என்ன புதினம்...?'

'அப்பா! ஒரு குட் நியூஸ். நான் வாற மாதம் கொழும்புக்கு வாறன். வக்கேசன் ஒன்று கிடைச்சிருக்கு. வண் மந்த்தான் நிற்கலாம். நான் வர முன்னுக்கு அறிவிக்கிறனே!' என்று சொல்லிய சுரேன், வழமை போல குடும்ப விவகாரங்களைக் கதைத்தான். பேசி முடிந்ததும் ரிஸீவரை வைத்து விட்டு என்னிடம் வந்தார் தாத்தா.

'தம்பி, சுரேன் வாற மாதம் கொழும்புக்கு வரப்போறானாம். வாற நேரத்தில பார்த்து அவனுக்கு ஒரு கால் கட்டுப் போட்டு விட்டுவிடவேணும். உமக்கு ஆரும் தெரிஞ்ச பகுதியள் இருந்தால் சொல்லும். சுரேனுக்குப் பொருத்தமா... உமக்குத் தெரியும் தானே!...' தாத்தா கூறிக் கொண்டு தன் அறைக்குச் சென்றார்.

சிவஞானம் மாமா எனக்கும் மாமா முறை. இளைப்பாறிய அரசாங்க உத்தியோகத்தர். மனைவி, பிள்ளைகள் என்று ஒவ்வொருவராக கனடாவில் குடியேறி விட்டனர்.
சிவஞானம் மாமாவையும் பிள்ளைகள் எவ்வளவோ வற்புறுத்திக் கூப்பிட்டுப் பார்த்தார்கள். மாமா அசையவில்லை.

சூழ்நிலைகள் ஒத்து வராது. சுதந்திரம் இல்லை. 'கெட்டாலும் செத்தாலும் இந்த மண்ணில் தான்' என்று இருந்து விட்டார். யாழ்ப்பாணத்தில் வீடுவளவு, தோட்டம், வடலி என்று வசதிகள் இருந்தாலும் தனியே இருப்பதில் பல சிரமங்கள்.

வீடு வாசலைப் பராமரிப்பதோ, தன்னைப் பேணுவதோ சிரமமான காரியம்;. மனைவி, பிள்ளைகளுடன் தொடர்பு கொள்வதும் கடினம். எனவே கொழும்பு எதற்கும் வசதி என்று என்னுடன் வந்து ஒட்டிக் கொண்டு விட்டார்.

அறுபது வயது தாண்டி விட்டாலும் ஆள் திடகாத்திரமான மனிதர். அனுபவசாலி. எதிலும் கட்டுமட்டான ஆள்.

காலையில் நித்திரையால் எழும்புவதில் இருந்து படுக்கப் போகும் வரை எல்லாம் சிஸ்ரமற்றிக் தான். ஆஸ்பத்திரிப் பக்கம் போவது அவமானம் என்று கருதும் ஜாதி.

சிவஞானம் மாமா இப்போது மருமகள் தேடும் படலத்தில் இறங்கி விட்டார். சாதகக் குறிப்புகள் கொடுப்பதும் வாங்குவதும், பொருத்தம் பார்ப்பதும், சீதனம், ஆதனம் பற்றிப் பேசுவதும், அறிந்தவர், தெரிந்தவரிடம் விசாரிப்பதும், மகன் வந்த கையுடன் பார்;ப்போம்... என்பதுமாக அவர் இப்போது ஒரே ஓட்டம் தான். கால்களில் சக்கரம் கட்டிக் கொண்ட மாதிரி.

சுரேன் கனடாவில் எட்டு வருடங்களுக்கு மேல் வசிப்பவன். அண்ணனின் உதவியால் அங்கு போய் அங்கேயே படித்து உத்தியோகமும் பார்ப்பவன்.

வங்கி ஒன்றில் அசிஸ்ரன்ற் எக்கவுண்டன் ஆக வேலை பார்க்கிறானாம். வயதும் முப்பது ஆகிறது. தகுதிக்கு ஏற்றாற் போல் பெண் தேடவும் வேண்டும். குலம், கோத்திரம் சரிப்பட்டு வரவேணும். இந்தக் காலத்தில் அது கஷ்டமான விடயந்தானே!

சுரேனும் கொழும்பு வந்து சேர்ந்து விட்டான். எனது வீட்டில்தான் சிவஞானம் மாமாவுடன் தங்கியிருக்கிறான். மாமாவுக்கு இப்போது வேலைப்பளு கூடி விட்டது. பெண் பார்க்கும் படலம் பெரிதும் சிரமமானதாகி விட்டது. வாரத்தில் குறைந்தது மூன்று பெண்களையாவது இருவரும் பார்த்து வந்தார்கள். ஒருநாள் கோவிலுக்கு பெண் வீட்டாரை வரச் செய்து கும்பிடப் போவது போல் பெண் பார்ப்பது, இன்னொரு நாள் சைனீஸ் ரெஸ்டோரண்டில் சாப்பிடப்போவது போல அவர்களையும் அங்கே வரச் சொல்லி பெண் பார்ப்பது. வீடு வசதி உள்ளவர்கள் என்றால் வீட்டிற்குச் சென்று பார்ப்பது என்று பெண் பார்க்கும் படலம் ஓய்ந்தபாடில்லை.

சுரேன் கொழும்பு வந்து இரண்டு கிழமைகள் கழிந்து விட்டன. எந்தப் பெண்ணும் செலக்ட் பண்ணப்பட்டதாகத் தெரியவில்லை.

பெண் எடுப்பாக இல்லை, நிறம் போதாது, ஆங்கில அறிவு மட்டு, குடும்பப் பின்னணியில் ஏதோ குழப்பம் இருக்கிறது. சீதனத்தில் பிசகு... என்று ஒவ்வொன்றாக தட்டிக்கொண்டிருந்தது.

சுரேனுக்கும் சலித்து விட்டது. சிவஞானம் மாமாவுக்கோ இவனை இந்த முறை விட்டால் பிறகு எந்தக் காலமோ தெரியாது... எப்படியும் இவன் திரும்பிப் போவதற்கிடையில் பார்த்து ஒன்றை பொருத்தியாக வேண்டும் என்ற பிடிவாதம்.

அதற்காக அவசரப்பட்டு வில்லங்கமான ஒன்றில் மாட்டிவிடவும் அவருக்கு விருப்பமில்லை. என்ன இருந்தாலும் ஆயிரம் காலத்துப் பயிர். அதிலும் தனது பயிர். இன்றை உலகமும் மெத்தப் பயங்கரமானது என்பதிலும் மிகக் கவனமாக இருந்தார்.

எறும்பூரக் கற்குழியுமோ இல்லையோ, மாமா சிரமப்பட்டதில் கடைசியாக பயன் கிட்டியது. சுரேனுக்கும் ஒரு பெண் பார்த்து பிடித்தாகி விட்டது. அதுவும் கனடாப் பிள்ளைதான். பெயர் ரேவதி. குடும்பம் கனடாவில். இந்தப் பிள்ளையும் ஒரு வருடத்துக்கு முன் ஸ்பொன்சரில் போனவள்தான். டொரொன்டோவில் தாய் சகோதரங்களுடன் இருந்து விட்டு அண்மையில் தான் கொழும்பு வந்திருந்தாள். சில காலம் கொழும்பில் இருந்துவிட்டு திரும்பப் போவதற்காக தன் சித்தப்பா வீட்டில் தங்கியிருக்கிறாள்.

இனியும் நுணுக்கமாக ஆராய்ந்து காலத்தைக் கடத்துவதில் சுரேனுக்கு விருப்பமில்லை. ஏனோ அவனுக்கு இந்தப் பெண்ணை, ரேவதியைப் பிடித்துவிட்டது. மற்ற விடயங்களும் சரிப்பட்டு வரும் போல் பட்டதால் சிவஞானம் மாமாவும் இந்தப் பெண்ணையே சுரேனுக்கு கட்டி வைக்கலாம் என்று தீர்மானித்தார்.

இன்னாருக்கு இன்னாரென்று எப்போதோ எழுதி வைத்த விடயம் என்பது போல் அர்த்தம் புரியாமல் இவர்களுக்கும் ஆளை ஆள் பிடித்து விட்டது.

திருமணத்துக்கு நாள் குறித்து சகல ஏற்பாடுகளும் செய்ய ஆரம்பித்தனர். சிவஞானம் மாமா கனடாவுக்கும் செய்தி அனுப்பினார்.

சிவஞானம் மாமாவின் மனைவி, மூத்தமகன், குடும்பம், மகள் குடும்பம் எல்லாம் ஸ்காபரோவில் தான் இருக்கிறார்கள். அவர்களில் யாரும் சுரேனின் திருமணத்திற்கு வர முடியாத நிலை.

சுரேனின் அம்மா கொழும்பு வருவதானால் மூத்த மகனின் பிள்ளைகளைப் பராமரிப்பதில் சிரமங்கள் அதிகம். மருமக்கள், பிள்ளைகள் யாவரும் ஷிப்ட் வேலைக்குச் செல்பவர்கள். அவர்களுக்கு லீவு எடுப்பது கடினம். வேலையை விட்டு விலகினால் இன்னொரு வேலை தேடுவது குதிரைக் கொம்பு. எனவே, அவர்கள் தம்மால் வர முடியாது என்று முன்கூட்டியே அறிவித்து விட்டார்கள். அவர்களது கொம்பிளிமென்ற்ஸ் மட்டும் டொலர் டொலராக வந்திறங்கியது.
மனைவி, பிள்ளைகள் வரவில்லை என்று சிவஞானம் மாமா தளர்ந்துவிடவில்லை. எடுத்த காரியம் முற்றுப் பெற வேண்டும் என்பதில் அதிகம் அக்கறை காட்டத் தொடங்கினார்.

திருமண மண்டப ஏற்பாடுகளில் இருந்து, உறவினர், நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பது வரை சகல ஆயத்தங்களும் ரெடி.

திருமண நாளுக்கு இன்னும் ஒரு வாரம் தான். அப்போது தான் சிவஞானம் மாமாவின் மனைவி நடுச் சாமத்தில் தொலைபேசியில் அழைத்தார்.

"மெய்யேப்பா! இந்தச் சம்பந்தத்தை சுரேனுக்கு அவசரப்பட்டுச் செய்ய வேண்டாம். அந்தப் பெட்டை நடத்தை அவ்வளவு சரியில்லையாம். இஞ்ச ரொரொன்டோவில இருக்கேக்க ஒரு பெடியனோட தொடர்பாம். பிறகு ஏதோ பிசகுப்பட்டு, கரு கலைக்கிற அளவுக்குப் போட்டுதாம். அதுதானாம் உங்க வந்து இருக்கிறாளாம். ஏன் அதுக்குள்ள சுரேனைத் தள்ளுவான்?" என்று மாமி பொரிந்தாள்.

"எதுக்கும் யோசிச்சுச் செய்யுங்கோ! நான் பிறகு ஆறுதலாய்க் கதைக்கிறன்" என்று படபடப்பாய் சொல்லிவிட்டுப் பதிலுக்குக் காத்திராமல் ரெலிபோனை திருமதி சிவஞானம் வைத்து விட்டார்.

மாமா விக்கித்துப் போனார்!
இருந்தும் சுரேனின் தலையீடு இப்போது நேரடியாக இருந்ததால் சுரேனைச் சந்திக்க ஆரம்பத்தில் மறுத்த ரேவதி அரை மனதுடன் பின்னர் சம்மதித்தாள்.

இருவரும் மனம்விட்டுப் பேசியதில் ஒரு தெளிவு பிறந்தது.

ரேவதி அண்ணனின் ஸ்பொன்சரில் தாயுடன் கனடா சென்றவள். அங்கு உடனடியாக வேலையெதுவும் தேடிக்கொள்ள முடியாத நிலையில் அங்கேயே படிப்பைத் தொடர நினைத்திருக்கிறாள் ரேவதி.

கல்வி நிலையம் ஒன்றில் சேர்ந்து பிரெஞ்சு, கொம்பியூட்டர் வகுப்புகளுக்குச் சென்று வந்திருக்கிறாள். அங்கே ஒரு இளைஞனைச் சந்தித்திருக்கிறாள். அவனும் யாழ் மண்ணைச் சேர்ந்தவன். கண்டதும் காதல் அவனுக்குள்தான் அரும்பியிருக்கிறது. எண்ணத்துக்குச் செயல் வடிவம் கொடுப்பதில் முனைந்து பல வழிகளைத் தேடியிருக்கிறான். ரேவதி அவற்றுக்கு வசப்படவில்லை. அவன் வேறு வழிகளைக் கைக்கொள்ள முற்பட்ட போது ரேவதியின் அண்ணனுக்கு விஷயம் எட்டியிருக்கிறது. அவன் அந்த இளைஞனை அழைத்து காரசாரமாகப் பேசவே இளைஞன் பின் வாங்கியிருக்கிறான். ஆனால் இரு பக்கத்திலும் வடுக்கள் ஏற்படத்தான் செய்தன.
இறுகி, இறுக்கப்பட்டுக் கிடந்த சமுதாயக் கதவுகள் திறக்கப்பட்டு இதயங்கள் விடுவிக்கப்பட்ட பனிபடர் தேசம். புதிய மனிதர்கள், புதிய சூழல்கள் யாவற்றையும் எளிதில் அடைந்துவிட முடிவெடுக்கும் ஆன்மாக்கள் கட்டுப்பாடுகள் அற்ற வன்முறையை வழியாகக் கொள்ளும் நெஞ்சங்கள் முடிவில் சுயத்தை விற்றுவிட்டு நிற்கும் நிழல்கள்.

ரேவதி தன்னால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு ஓய்வு காண அமைதி தேடினாள். அதற்காகவே அவள் மீண்டும் கொழும்பு வந்தாள்.

விஷயம் தெரிந்ததும் சுரேன் அமைதியானான். மாமாவுக்கு ஆறுதலாக இருந்தாலும் நடுக்கம் விடவில்லை.

உண்மைகள் அடிமனதிலிருந்து வெளிப்பட்ட பின்புதான் சிவஞானம் மாமாவும் சிந்தனை என்ற ஒன்றை தான் சரியாகப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டதை உணர்ந்தார்.

தன் அனுபவம், தெளிவு, எல்லாமே மனைவியின் இரு நிமிட தொலைபேசியில் மழுங்கடிக்கப்பட்டு விட்டதை உணர்ந்தார்.

தான் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்ந்த சிவஞானம் மாமா கனடாவுக்குக் கோல் போட்டார். லைனில் மனைவி வரவும் பொரிந்து தள்ளினார்.
"அந்தப் பொம்பிளையின்ர நடத்தை சரியில்லை எண்டு ஆர் உனக்கு விபரம் தந்தது?"

"உதெல்லாம் சொல்லிக் கொண்டே அப்பா.... எனக்குத்தான் ஒருத்தன் டொரொன்டோவில இருந்து போன் பண்ணிச் சொன்னவன்" மனைவி நிதானம் காட்டினாள்.

"தன்னை ஆர் எண்டு அவன் சொன்னவனோ? இல்லாட்டி தன்ர பெயர் எண்டாலும் சொன்னவனோ?"

"இல்லை"

"அப்ப என்ன துணிவில ஆரோ விடுகாலி சொன்னதை நம்பிக் கொண்டு என்னட்டச் சொன்னனீ?"

"உங்களுக்குத் தெரியாதாப்பா! இஞ்ச இப்பிடிக் கண்றாவியள் கனக்க இருக்குது. நம்பாமலும் இருக்கேலாது."

"அப்ப ஏன் முதல் விசாரிக்கக்குள்ள இப்படி ஒண்டும் வெளி வரேல?"

"அது என்னெண்டு தெரியாது, பிறகு விசாரிக்கக்குள்ள பிறகுதானே ஒவ்வொண்டும் வெளிக்கும்..."

மாமி தன் வாதத்தை உறுதிப்படுத்துவதில் முனைந்தார்.
"இப்ப நீ உன்ர விளக்கமில்லாத்தனத்தால என்னையும் முட்டாளாக்கிப் போட்டாய்! போன் பண்ணிச் சொன்னவனிட்ட ஊர், பெயர், விலாசம் கேட்காமல் அவன் சொன்னதை மட்டும் வைச்சுக் கொண்டு... ஒண்டுமில்லை இப்ப நீ என்னை தலை குனிய வைச்சிட்டாய்"

ஆத்திரம் தீர மனைவியைத் திட்டித்தீர்த்து ரிசீவரை வைத்துவிட்டு வந்து நின்றார் சிவஞானம்.

நேரே சுரேனிடம் வந்து சுரேனின் முடிவைக் கேட்டார்.

"இந்தப் பிள்ளையில எனக்கெண்டால் சந்தேகமில்லை.... நல்ல பண்பான பிள்ளையாய்ப் படுகிது. அதோட நேர கதைச்சதால அவளுக்கும் என்னப் பிடிச்சிருக்கு எண்டு விளங்குது..."

"அப்ப நீ அந்தப் பிள்ளையத்தான் கட்டப் போறீயோ?"

"ஓம் அப்படித்தான் இப்ப முடிவெடுத்திருக்கிறன். அதோட உறுதியில்லாத முடிவுகளால ஒரு பெண்ணின்ற வாழ்வும் பாழாகக் கூடாது"

"இப்ப சரி; பின்னுக்கு ஏதும் பிரச்சினையள் வந்தால்"

சிவஞானம் மாமா இன்னும் சுரேனின் தளத்துக்கு வரச் சங்கடப்பட்டார்.
"அது என்னுடைய பிரச்சினை. அதில இனி தவறுக்கு இடம் இல்லை எண்டு எனக்குப் படுகுது..." சுரேன் எதற்கும் தயார் என்பதே இதன் பொருள் என்பதை மாமா உணர்ந்து கொண்டார்.

'இருவருக்கும் சம்மதம் என்றால் கிழக்கட்டையான நான் என்னத்துக்கு இடைநடுவே கிடந்து அந்தரப் படுவானேன்' என எண்ணியவராக மாமா திருப்தியுடன் சேர்ட்டையும் டவுசரையும் மாட்டிக் கொண்டு புறப்பட்டார்.

அவர் கையில் ஒரு கட்டு அழைப்பிதழ்கள். இடை நிறுத்தப்பட்ட அத்தனை ஏற்பாடுகளையும் முடுக்கிவிட்டு அழைப்பிதழ்களை உரியவர்களிடம் சேர்க்க வேண்டாமா!

விஸா முடிவதற்கு இன்னும் கன நாட்கள் இல்லையே!

[03-11-1996 தினகரன் வாரமஞ்சரி]

--------------------------------------------

6 வேப்பமரம்

'சரஸ்வதி' மகாவித்தியாலயம், வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பு விழாவும்' விளையாட்டுப் போட்டி முடிந்து இப்போது பரிசளிப்பு வைபவம் நடைபெற்றுக் கொண் டிருக்கிறது.
'பாடசாலை மைதானம்' என்று கூறமுடியாது. அது செல்லையா உடையாரின் வீட்டுடன் இணைந்த தரிசு நிலம். பரிசளிப்பு விழா மண்டபம் என்பது உடையார் வீட்டுத் தாவாரம், புனரமைக்கப்பட்டு பாவிக்கப்படுகின்றது.

கூட்டைத் திறந்துவிட குதூகலிக்கும் மாடப் புறாக்களைப் போல மாணவர் கூட்டம். அத்தனையும் வெண்புறாக்களாக பாடசாலைச் சீருடையில் வந்திருக்கிறார்கள். பகல் முழுதும் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின் களை முகங்களில் தெரிந்திருந்தாலும் அதன் பெபேறுகளைப் பெற்றுக் கொள்ளும் சந்தோசத்தில் துள்ளித்திரிகிறார்கள். பரிசுகள் பெற இருப்பவர்கள் ஓர் குழு, பாராட்டுபவர்கள், உற்சாகம் ஊட்டுபவர்கள் வேறு குழு. பெற்றோர்களுடன் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள் பார்வையாளர்களாக இருக்க ஆசிரியர்களோடு இணைந்து விழாவின் நடவடிக்கையைக் கவனிப்பவர்களாக இன்னொரு குழு, மொத்தத்தில் மாணவ குழாமே மகிழ்ந்திருந்தது.

பிரதம் அதிதியாக வந்திருந்தவர் அப்பிரதேசத்தின் உதவி அரச அதிபர் திருச்செல்வம் அவர்கள். அவர்தான் இப்போது உரையாற்றிக் கொண்டிருக்கிறார். "கல்வி என்பது மாணவர்களுக்குக் கற்கும் காலத்தில் வேப்பம் காயாகத் தானிருக்கும். ஆனால் கல்வியால் கிடைக்கும் பிரயோசனமோ வேப்பம் பழம் போல் இனிமையானதும் பயனுள்ளதாகவும் இருக்கும்" வேப்பமரத்தில் இருந்து ஒவ்வொரு அங்கமாக அவர் உவமித்துச் செல்கிறார். அருமையான உரை.

பெயர்வுகள்
பாடசாலை ஒரு வேப்பமரமென்றால் எங்கள் பகுதியில் எத்தனை பென்னம் பெரிய வேப்பமரங்கள் வேரூன்றி நின்றன. மகா விருட்சங்களாக விளங்கின. நடேஸ்வரா, மகாஜனா, யூனியன், நகுலேஸ்வரா, மெய்கண்டான்..... பெரிய பட்டியலே போடலாம். வருடா வருடம் அறுவடைக்குக் குறையிருப்பதி;ல்லை. பூக்களாகவும், பழங்களாகவும், விதைகளாகவும் அறுவடைகள் நடக்கும்.

சட்டம், வைத்தியம், பொறியியல், கலை, அறிவியல், ஆன்மீகம், ஆராய்ச்சி என்று சமுதாயச் செல்வங்களை உற்பவித்துக் கொண்டே இருந்தன. உரிமைப் போராட்டம் என்று இளைஞர்கள் புற்றீசல்களாக புறப்பட்ட போதும் கூட இந்த வேப்பமரங்கள் சலித்துவிடவில்லை. பட்டைகள் உரிக்கப்பட்டும், கிளைகள் வெட்டப்பட்டும், இலைகள் ஒடிக்கப்பட்டும் கூட அவை சமுதாய நலன் நினைந்து நிமிர்ந்து நின்றன. அவ்வப்போது தெற்கில் வெடிக்கும் இனக்கலவரங்களின் விளைவுகள் அகதிக் கப்பல்களாக இந்த வேப்பமர நிழல்களுக்குத்தான் அனுப்பப்படும்.

உள்நாட்டு யுத்தமொன்று பிரகடனப்படுத்தப்பட்டு, சிவந்த மண்ணினை மீண்டும் தமது காலடிக்குள் இழுத்துவிட வேண்டும் என்று படைகள் குவிக்கப்பட்டு கரையோரப் படையெடுப்புகள் முன்னெடுக்கப்பட்ட போதுதான் இந்த வேப்ப மரங்கள் வேருடன் புறப்பட்டன. இந்த வேப்பமரங்கள் தான் இவர்களின் அசாத்திய பலம் என்பதும் படை கொண்டு வந்தவர்களுக்கும் தெரியும். கனரக வாகனங்களினது எறிகுண்டு வீச்சுகளும், வான் தாக்குதல்களும், ஊரவரையும் சொந்த மண்ணில் அகதிகளாக்கி விரட்டியது.

உடுத்த உடுப்புடன் அனாதரவாக வீடு, வாசல்களை விட்டுப் புறப்பட்டவர்கள் அயல் கிராமங்களில் தஞ்சம் தேடினர். இந்த வேப்பமரங்களும் அப்படித்தான். ஐ.பி.கே.எப் இருந்த கொட்டகைகளும், ஏனைய பாடசாலைகளின் தாவாரங்களும், கல்விக்கந்தோர்களின் பகுதிகளும், வீடுகளும்தான் தஞ்சமாகின. கரும் பலகையே பாடசாலையின் பெயர்ப்பலகையாக முகப்புப் போட்டுக்கொண்டு குடியிருக்க நேர்ந்தது.

அப்படி வேருடன் பிடுங்கி எறியப்பட்ட சின்ன வேப்பமரந்தான் சரஸ்வதி மகா வித்தியாலயம். தேட யாரும் இல்லாமல், இன்னொரு மகாவித்தியாலயத்தின் உடைந்த தளபாடங்கள் போடப்படும் அறையில் யாஃதெஃ சரஸ்வதி மகா வித்தியாலயம் என்று சிறு அறிவித்தல் பலகையோடு தஞ்சம் பெற்றிருந்தது.

அதன் மாணவர்கள் ஏனோ தானோவென்று வந்து அந்த தாவாரத்தின் கீழ் நின்றுவிட்டுப் போவார்கள்.

சிவசக்தி
சரஸ்வதி மகாவித்தியாலயத்திற்கு இவர்தான் புதிய அதிபர். செல்வி. சிவசக்தி சோமசுந்தரம். பெரிய வேப்பமரம் ஒன்றின் வேராக இருந்தவர். திறமைக்குத்தான் பதவி கிடைத்தது; இந்த சிறிய வேப்பமரத்தின் அடிமரம் ஆவதற்கு. பாடசாலையின் இடப் பெயர்வுடன் முன்னம் இருந்த அதிபர் அகதி அந்தஸ்த்துடன் ஐரோப்பிய நாடொன்றில் அடைக்கலம் தேடிக் கொண்டார். சிவ சக்தியை கடமை தேடி வந்தது.
புதிய அதிபர் செல்வி. சிவசக்தி நியமனக் கடிதத்துடன் தனக்குத் தரப்பட்ட பாடசாலையின் அதிபர் பதவியை பொறுப்பேற்கச் சென்றார். அங்கு அவருக்குத் தரப்பட்ட மரியாதையே அருவருப்பைத் தந்தது.

நிரந்தரமான அந்த மத்திய மகா வித்தியாலயத்தில் பொருத்தப்பட முடியாத தளபாடங்கள் குவிக்கப்பட்டுக் கிடந்த அறை. சிலந்திகளின் சுதந்திரமான கூரை வாசம். அதற்குள் ஓர் மேசை, கதிரை பழைய அலுமாரி ஒன்று. அதற்கும் பூட்டோ திறப்போ இல்லை. அதுதான் சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் அதன் அதிபருக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகம்.

மாணவர்கள் ஆங்காங்கே நிரந்தரமான அந்த பாடசாலையில் நடக்கும் வகுப்புகளின் கடைசி வாங்குகளில், வரவு இடாப்புகள் வேறுவேறாக பதியப்படும். ஆசியர்களும் அப்படித்தான். நிரந்தர பாடசாலைக்குரிய ஆசிரியர்கள் யாரும் வராதவிடத்து இவர்கள் பாடம் நடத்தலாம்.

மரத்தால் விழுந்தவனை மனிதர்கள் ஏறி மிதிக்கும் கொடூரம் அதிபரின் அடிமனதில் தீயால் சுட்டது. கதைத்துப் பெறமுடியாததை போராடிப் பெற வேண்டிய நிர்பந்தம் போல் அதிபரின் உணர்வும் தலைப்பட்டது.

அதிபர் சிவசக்தி மறுநாளே கல்வி காரியாலயத்திற்குள் படியேறி விட்டார். பாடசாலைக்குச் சரியான இடம் ஒதுக்கித் தரப்படாவிடில் பதவியை ஏற்க முடியாது என்று சற்று முரண்டு பார்த்தார். அவரது கோரிக்கைக்கு செவிசாய்க்க அங்கு பிரதம கல்வி அதிகாரியும் தயாராக இருக்கவில்லை.

"ரீச்சர்! எங்கட நிலைமையள் தெரியும் தானே! யாழ்ப்பாண நிலைமையில உடனடியாக இப்ப ஒன்றும் செய்யமுடியாது. போகப் போக முடிந்த வரையில் தேவையான வசதிகளைச் செய்து தருவம், இப்ப ஒருமாதிரி சமாளிச்சுக் கொண்டு இருங்கோ. சம்பளத்துக்கு பிரச்சினையில்லத் தானே!..." அட்வைஸ்தான் கிடைத்தது.

இடம்பெயர்ந்த பாடசாலைக்கு அயலூரில் எங்கு இருப்பிடம் தேடுவது? யாருக்கும் நகைப்பிற்குரிய விடயம்தான். சிவசக்தி ஓய்ந்துவிடவில்லை. உள்ளூர் நடவடிக்கைக் குழுக்களின் பிரமுகர்களுடன் விடயத்தை உரைத்துப் பார்த்தார்.

பத்து வருடங்களுக்கு முன் சொத்துப் பத்துகளை கைவிட்டு விட்டு குடும்பத்துடன் லண்டன் போய்ச் சேர்ந்துவிட்டார் செல்லையா உடையார். அவரது வீடும் வளவும் கிடைத்து விட்டது.

இந்த வேப்பமரம் மீள நடத்தப்பட்டது. சரஸ்வதி வித்தியாலயம் தன் மாணவச் செல்வங்களை, ஆசிரிய வேர்களை அடைக்கோழியைப் போல் கூட்டிச் சேர்த்துக் கொண்டது.

அதிபர் சிவசக்தி சோமசுந்தரம் வயது நாற்பதை அண்மித்த சொரூபம். முன் நெற்றியில் இளநரை படர்ந்த கேசம் முதிர்வின் அடையாளம். சீதனம், அந்தஸ்த்து என்று இழுபட்ட திருமணங்களுக்கு இவரும் ஒரு உதாரணம். பட்டதாரியாகி, ஆசிரியராகி அதிபர் சேவையிலும் தேர்வு செய்யப்பட்டவர். அனுபவம் தந்த ஆளுமை முகத்திலேயே பட்டொளி பகரும்.

நீதிக்காக வாதாடும் ஓர் நக்கீரத்தனம் இவருக்குண்டு. தன்மொழி, சமூகம், சமுதாயம், நாடு என்ற அசையாத பிடிப்புகள். தன்னலம் அற்ற சேவை மனப்பான்மை. சமூக சேவையை கட்டாய கடமை என நினைக்கும் உறுதி, கண்டிப்பு சிவசக்தியின் இயல்பான குணங்கள். பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதில் தவறில்லையே!

சேவை தேவை
அன்றும் இப்படித்தான். நான்கு ஐந்து மாதங்களுக்குமுன் பாடசாலையின் புதிய கல்வியாண்டு ஆரம்பித்து ஒரு வாரம் கடந்திருக்கும்.

செல்லையா உடையார் தனது வீட்டில் வைத்து ஒரு ஏழைப் பிள்ளைகளுக்குத்தானும் அ, ஆ...., சொல்லிக் கொடுத்திருக்கமாட்டார். 'பள்ளிக் கூடத்துக்குப் புத்தகம் வாங்கு' என்று தன் வேலையாட்களின் பிள்ளைகளுக்கென ஒரு அரைச்சதம் கூடக் கொடுத்திருக்க மாட்டார். அப்படிப் பட்டவர் பாழடைய விட்டுச் சென்ற அவரது அரண்மனை வீட்டில் சரஸ்வதி வித்தியாலயம் கல்வி நிழல் தரும் வித்தியாலயமாக மகா விருட்சமாகிக் கொண்டிருக்கிறது.
அதிபர் சிவசக்தியைக் கண்டு குசலம் விசாரித்து விட்டு வரவேண்டும் என்ற உந்தலில் அவரது பாடசாலைக்குச் செல்கிறேன். சைக்கிளை வேலியோரமாகச் சாத்திப் பூட்டி விட்டு பாடசாலையின் உள்ளே செல்கிறேன். செல்லையா உடையாரின் முன் அறைதான் அதிபரின் அலுவலகம். பெரிய நாற்சார வீடு. ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு வகுப்பறை. அருகில் கிடுகினால் வேயப்பட்ட மற்றுமொரு கொட்டிலில் மீதி வகுப்பறைகள்.

'வாங்கோ மாஸ்ரர்' அதிபர் என்னை வரவேற்று முன்னால் இருக்கையில் அமரச் சொல்கிறார். உடனடியாகவே என்னை அடையாளம் கண்டு விடுகின்றார்.

நானும் அதிபர் சிவசக்தியும் முன்பு பெரிய வேப்பமரமொன்றின் வேர்கள். உதவி ஆசிரியர்கள். நாட்டுப் பிரச்சினைகள் வலுத்ததோடு நான் மெல்ல 'வெளிநாடு' என்று புறப்பட்டு கனடாவின் 'சிற்றிசன்' ஆகும் வரை இருந்து விட்டு இப்போதுதான் ஊர் வந்திருக்கிறேன்.

அதிபரோடு பழைய கதைகளையும், இந்த எட்டு வருடங்களுக்குள் இடம் பெற்ற பாடசாலை நிலபரங்களையும் ஏனைய ஆசிரிய நண்பர்களைப் பற்றியும் அறிந்து உரையாடி மகிழலாம் என்று உள்ளூர ஆவல். "மாஸ்ரர் சொல்லுங்கோ, உங்கட கனடாப் புதினங்களை!" சிவசக்தியே கதையைத் தொடங்கினார். அதற்குள் வேறு யாரோ வந்துவிட்டார்கள்.
வந்தவர் இன்னொரு புதிய ஆசிரியர். மாற்றலாகி வந்திருக்கிறார். கையில் கொணர்ந்த இட மாற்றலுக்கான கடிதத்தோடு தன்னை அறிமுகப்படுத்துகிறார். அதிபர் சிவசக்தி வந்திருந்த ஆசிரியையின் விபரங்களைக் கேட்டறிகிறார். "உங்கட பெயர் என்ன சொன்னனீங்கள்?" "சரோஜினி சதாசிவம், என்னுடைய பாடம் சங்கீதம்" "எங்க இருந்து வாறீங்கள்?" "மாங்குளம்" "இஞ்ச சொந்த இடம்?" "அளவெட்டி!".

"நல்லது! இது நடுத்தர வர்க்கத்துப் பிள்ளைகள் படிக்கிற பாடசாலை இல்லை. வறுமைக் கோட்டுக்கீழ இருக்கிற குடும்பத்துப் பிள்ளைகள்தான் இங்க படிக்கிறார்கள். நீங்கள் இஞ்ச விரும்பி வந்ததையிட்டு சந்தோஷம். இஞ்ச சேவையைச் செய்யிறம் என்பதை விட தியாக உள்ளத்தோட அர்ப்பணிப்பு மனப்பான்மையோட எங்கட கடமையைச் செய்தால்தான் நாங்கள் குறைஞ்ச வீதத்தில என்றாலும் பிரதிபலனை, பிள்ளைகளின்ற முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்."

வந்திருந்த ஆசிரியைக்கு வரவேற்புக் கூறி அவரது பதவியேற்பு சம்பந்தமான பத்திரங்களைப் பூரணப் படுத்தும்படி கொடுத்து விட்டு அதிபர் என் பக்கம் திரும்புகிறார்.

"சரி மாஸ்ரர் நீங்கள் சொல்லுங்கோ.... எப்ப கனடாவால வந்தனீங்கள்?... அப்ப போனதுக்கு இப்பதான் ஊருக்கு வாறீங்கள் என்ன?..."
அதற்குள் ஒருவர் கூனிக் குறுகி வந்து நிற்கிறார். அதிபரின் அலுவலக வாசலில் வந்து நின்றவர் ஒரு பெற்றாராக இருக்க வேண்டும். கொட்டப் பெட்டிக்குள் வைத்து எடுத்து உடுத்தது போல் கசங்கிய வெள்ளை வேட்டி, ஆங்காங்கே வாழைக் கயர், செம்பாட்டு மண் படிந்த வெள்ளை சேட்டு. சந்தையால் வருகிறார் போல. வாயில் வெற்றிலைக் காவி வேறு.

ஒரு தரம் வெற்றிலையை வெளியே உமிழ்ந்து துப்பிவிட்டு கைகளைக் கட்டிக் கொண்டு வந்து நிற்கிறார். திடகாத்திரமான உயரமான ஆள். வேகும் வெய்யிலிலும் செம்பாட்டுப் புழுதியிலும் உழைத்துக் கறுத்த தேகம். இருந்தும் வறுமையின் சாயல் தெரியும் கபடம் இல்லாத முகம். அதிபர் சிவசக்திக்குப் புரிந்து விட்டது.

"வாங்கோ பெரியவர்! என்ன விசயம் சொல்லுங்கோ!" ஆதரவுடன் கேட்கிறார்.

"அம்மா என்னுடைய பிள்ளை கஜேந்திரன். போன வருடம் எட்டாம் ஆண்டு படித்தவர். சோதனையில பாஸ் பண்ணேல. இந்த வருசம் படிக்க மாட்டன் என்று ஒரேயடியாக வீட்டில நிற்கப் பார்க்கிறான். பிள்ளைக்கு தொடர்ந்து மேல படிக்க விருப்பம். பெயில் என்ட படியால வெக்கறைப் படுகிறான்... அதுதான் உங்களோட கதைச்சுப் பார்ப்பமென்டு வந்தனான்."

"ஆர் பிள்ளை? எங்க றிப்போட்டைத் தாங்கோ பார்ப்பம்!...."
சில வினாடிகள் அந்த மாணவர் முன்னேற்ற அறிக்கையைப் பார்த்ததுமே அதிபர் சிவசக்திக்கு மாணவனின் முகம் புரிந்து விடுகிறது.

"அட ட இந்தப் பிள்ளையே! பெயரென்ன நடராஜா கஜேந்திரன். ஓமோம் நானும் பார்த்தனான். இந்தப் பிள்ளை ஏன் பெயில் பண்ணினது என்றும் யோசிச்சனான். முக்கியமான கணிதம், விஞ்ஞானம் எல்லாம் நல்ல மார்க்ஸ் எடுத்த பிள்ளை. தமிழ், சமயப் பாடங்களில எடுத்த மார்க்ஸ் காணாது. அதாலதான் வகுப்பேற்ற முடியாமல் போயிருக்குது."

"மகன் ரியூசன் வகுப்புகளுக்கு எங்கேயும் போறவரோ?"

"இல்லையம்மா, எங்களுக்கு அந்த மாதிரி வசதி போதாது. பக்கத்தில தங்கராஜா மாஸ்ரரின்ர மகளிட்டத்தான் போய் ஏதும் கேட்டுப் படிப்பான். மற்றும்படி அவன்தான் எனக்கு தோட்ட வேலையளுக்கும் உதவி."

அதிபர் நிலைமையை தீர்மானித்து விடுகிறார்.

"ஹ{ம்... சரி... நீங்கள் உங்கட மகனை நாளைக்கு பாடசாலைக்கு அனுப்புங்கோ. நான் அவர என்ர பொறுப்பில வகுப்பேற்றி விடுகிறன். நான் ஆளக் கொஞ்சம் கவனிச்சுப் பார்க்கிறன். பிள்ளைக்குக் கண்டபடி வேலைப் பழுவைக் குடுக்காதையுங்கோ! கொஞ்சம் வீட்டில படிக்கவும் சந்தர்ப்பம் குடுங்கோ!"
"சரியம்மா மெத்தப் பெரிய உபகாரம் நான் வாறன்".

வந்தவர் எனக்கும் சேர்த்துக் கும்பிடு போட்டுவிட்டு உற்சாகமாக விடைபெறுகிறார்.

மின்சாரத்தையே மறந்து போன பெற்றோரும் பிள்ளைகளும் இரவில் படிக்க முடியாது. போதிய மண்ணெண்ணெய் கிடைக்காது. மாலை சூரிய ஒளியிலும், அடையாளமாக வீட்டுக்கொன்றாக ஏற்றும் ஜாம் போத்தல் மங்கல் விளக்குகளில்தான் பிள்ளைகள் வீட்டுப்பாடம் படிக்க முடியும்.

சும்மா இருந்தே என் நேரம் போய்விட்டது. சென்றதற்காக அதிபருடன் சம்பிரதாயமாக நாட்டு நிலைமைகளைக் கதைத்து விட்டு விடை பெற்றுக் கொள்கிறேன்.

இன்று இரண்டாம் தவணை முடிவில் தான் சரஸ்வதி வித்தியாலயத்தின் விளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் நடைபெறுகின்றது.

வியர்வை - விசிறி
பரிசளிப்பு முடிந்து விழாவின் தொடர்ச்சியில் சிறப்பு அதிதியாக வந்திருந்த கல்வியதிகாரி கந்தவனம் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

"மணவர்கள் தனியே புத்தகக் கல்வியுடன் மட்டும் நின்று விடாது விளையாட்டு, கலை, கலாச்சாரப் போட்டிகள் இதுபோன்ற புறவிருத்தி விடயதானங்களில் ஈடுபட வேண்டும். பாடசாலைப் பருவத்தில் தான் இச் செயற்பாடுகளுக்கு போதிய களம் கிடைக்கின்றது. இவற்றின் மூலமே மாணவர்கள் தமது ஆளுமையை வளர்த்துக் கொள்ள முடியும். சிறந்த சமுதாய சிற்பிகளாகவும் உருவாக முடியும்......"

இன்னும் சிலாகிப்புகளோடு தன் உரையை முடித்து அமர்கிறார் கல்வி அதிகாரி.

அதிபர் சிவசக்தி தன் விழாத்தலைமையின் பகுதியாக அடுத்த நிகழ்ச்சிக்கான அறிவிப்பைத் தர ஒலிவாங்கிக்கு வருகிறார். விழாவிற்கான ஏற்பாடு தொடங்கியதில் இருந்து இன்றுவரை இன்னும் ஓய்வு ஒழிச்சல் இன்றி இயங்கிக் கொண்டிருக்கும் தனிமனித நிறுவனம் அல்லவா அவர்.

முகத்தின் வியர்வையை சேலைத் தலைப்பில் துடைத்து சரிசெய்து நெற்றியில் வீழும் கேசத்தை கைகளால் வருடி உச்சிக்கு சீர்படுத்திக் கொள்கிறார். இருந்தும் ஒலிபெருக்கியில் குரல் கம்பீரமாக ஒலிக்கிறது.

"இப்போது நாம் இன்றைய விழாவின் நிறைவு அம்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். அடுத்தாக எமது கணித பாட ஆசிரியர் திரு. திருச்சந்திரன் அவர்களை நன்றியுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்".
பகல் வெய்யிலின் தகிப்பு பொழுதுசாயும் வெக்கையும் வியர்வையுமாக பதனத்தை வேதனைப் படுத்திக் கொண்டிருந்தது. இரவு பட்டால் நிலவு ஒளியை மட்டும் நம்பி வீடு சென்றடைய வேண்டிய நிர்பந்தம் மக்களுக்கு. வீதிகளுக்கும் மின்சார விளக்குகள் இல்லை. வீதியில் வரும் வாகனங்களுக்கும் லைற் இருக்காது. விழாவுக்கு வந்தவர்களுக்கு வீடு செல்லும் அவசரம். அவையை அடக்கி உரையை வழங்க வேண்டிய நிலைமை ஆசிரியர் திருச்சந்திரனுக்கு. அதில் அவர் சாமர்த்தியசாலி.

திருச்சந்திரனின் நன்றியுரை. உள்ளத்தில் பட்டதை அப்படியே சொல்லிவிடவேண்டும் என்ற துடிப்பு. இளமையின் வேகம். அறுத்து, உறுத்து தெளிவுடன் உரைக்கும் அருமையான சொல்வீச்சு. வழமையான அதிதிகளுக்குத் தரும் நன்றியறிதலுடன் "இந்தப் பாடசாலையின் குறுகிய கால உச்ச வேக முன்னேற்றத்துக்குக் காரணமான அதிபர் சிவசக்தி சோமசுந்தரம் அவர்களைத்தான் பாராட்டவேண்டும். அவரது விடாமுயற்சியும், மாணவர்கள் மேல் உள்ள குறையாத பற்றும் பாசமுமே காரணம். அவருக்குத்தான் மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் என்றும் நன்றி சொல்லக் கடமைப் பட்டவர்கள்...."

[23-02-1997 வீரகேசரி வெளியீடு]

---------------------------------------------------

7 ஒற்றைத் திருக்கல்

காலிமுகத்திடலை சூரியன் மஞ்சள் மயப்படுத்திக் கொண்டிருக்கிறான். செக்கச் செவேல் என தனியொரு சென்னிறப் பறவைப் பந்துபோல், சிறுவர்கள் விளையாட்டாக அடித்துவிட்ட பந்து வானத்தில் தொங்கிக் கொண்டு விட்டது. குளிக்கத் தயங்கும் ஒரு சிறுவனைப் போல் கடலுக்குள் இறங்கவா விடவா என்றுத் தயங்கி மெல்ல ஒவ்வொரு மில்லி மீற்றராக இறங்கிக் கொண்டிருக்கிறான்.
மறையத் துணியும் சூரியனின் ஒளிக் கிரகணங்களை ரசிக்கவும், மாலைப் பொழுதை அனுபவிக்கவுமென சிறுவர் முதல் பெரியோர் வரை புள்ளி புள்ளியாக சனக்கூட்டம் காலிமுகத் திடலுக்குள் இறங்கிக் கொண்டிருக்கிறது.

மறுபுறத்தில் பகல் முழுதும் உழைத்துக் களைத்தவர்கள் தத்தம் வீடுகளை நோக்கி அவசர அவசரமாக தம் அலுவலகங்களை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

மினிபஸ்கள், கார்கள், வான்கள் எல்லாம் ஒரு சேர, வீதிக்கு இறங்கி நகரமுடியாத வேதனையில் குரவையிட்டுக் கொண்டு ஒன்றை ஒன்று முந்திவிட முயற்சிக்கின்றன. ஏற்ற முடியாமல் நிரம்பி வழியும் சனக்கூட்டத்தோடு மினிபஸ்கள் சங்கிலிக் கோர்வையாக விரைகின்றன.

நேரம் ஆறு இருபது ஆகிவிட்டது. இருட்டியும் இருட்டாத செக்கல் பொழுது. அப்பா கையில் இருந்த 'பிறீப் கேஸை' நிலத்தில் வைத்துவிட்டு வலது கையில் மணிக்கூட்டைப் பார்க்கிறார். 'இனி நான் ஏறக்கூடியமாதிரி பஸ் வருமோ என்னவோ...' 'மனதில் ஊறும் கலக்கத்துடன் சத்தாம் வீதி பஸ் நிலையத்தில் காத்து நிற்கிறார் அப்பா.'

அப்பா வழமையாக கந்தோரை விட்டு ஆறு மணிக்கெல்லாம் வெளியே வந்துவிடுவார். கொட்டாஞ்சேனையில் இருந்து நுகேகொட செல்லும் பஸ் ஒன்றில் எப்படியாவது ஏறிக்கொள்வார். இருக்க இடம் கிடைக்காவிட்டாலும் ஆட்களுக்குள் விழாமல் நின்றுவிடலாம். இல்லையேல் யாராவது அப்பாவுக்கு இரங்கி இருக்க இடம் கொடுப்பார்கள்.

காரணம் அப்பாவின் உடல் நிலை அப்படி. அப்பாவின் இடதுகையையும் இடதுகாலையும் பாரிசவாதம் இயங்கமுடியாமல் இடர்படுத்திவிட்டது. கைமுறிந்தவர்களுக்கு கட்டுவதுபோல் இடது கை மணிக்கட்டில் கொழுவிய பட்டி கழுத்தில் போடப்பட்டு கை அதில் தொங்கும். காலில் எப்போதும் றப்பர் சிலிப்பர் தான். இடது காலில் சிலிப்பர் கணுக்காலுடன் ஒரு தோல் பட்டியால் இணைக்கப்பட்டிருக்கும்.

அப்பா நடக்க நடக்க இடதுகால் செருப்பும் தேய்ந்து தேய்ந்து சத்தமிடும், அவருக்கு எல்லாம் வலதுகையும் வலது காலும்தான்.

இன்று அப்பா தன் முதலாளி (பொஸ்)யோடு கதைக்க வேண்டியிருந்ததால் சற்று தாமதிக்க வேண்டியதாயிற்று. அதைவிட இன்று நேரே வீடு செல்லவும் முடியாது. மூளை கனத்துப் போய் ஆழ்ந்த சிந்தனையின் ரேகைகள் முகத்தில் படர அப்பா இன்னும் பஸ் நிலையத்தில் நிற்கிறார்.

நாளை காலை எப்படியும் அக்காவிற்கு மூவாயிரம் ரூபாய் கொடுத்தாக வேண்டும். இதுதான் இப்போது அப்பாவின் முதற்பிரச்சினை. அக்கா பி.கொம். பட்டதாரி. பட்டம் பெற்று கொழும்புக்கு வந்தபோது எதிர்பார்த்த அளவு தோதாக வேலை எதுவும் கிடைக்கவில்லை.
அக்கா எப்போதும் படித்துக் கொண்டிருப்பதையே விரும்புபவள். அப்பாவும் அதற்கு உடன்பாடுதான். அக்கா 'சாட்டற் அக்கவுண்டன்சி' படிக்கத் தொடங்கி விட்டாள். நாளை தான் அதற்கான பரீட்சைக்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள். அப்பா எப்படியும் காசு தருவார் என்ற நம்பிக்கை அக்காவிற்கு. எப்படியும் மகளின் படிப்பிற்கு தடங்கல் வராது கொடுத்துவிட வேண்டும் என்பது அப்பாவின் துணிவு.

அதுதான் இன்று தன் 'பொஸ்'ஸ{டன் தனிமையில் கதைப்பதற்காக காத்து, சற்று தாமதித்தார். அப்பா பொஸ்ஸ{க்கும் பணம் தேவைப்படும் விடயத்தை சொல்லி சம்பள முற்பணமாகக் கேட்டுப் பார்த்தார். பொஸ்ஸின் நிலைமை வேறு. பொஸ் மறுத்துவிட்டார்.

"என்ன மிஸ்ரர் சிவராஜா! உங்களுக்குத் தெரியும் தானே! இண்டைக்கு பாங்க் இற்கு காசுபோட நான் எவ்வளவு கஷ்டப்பட்டனான் எண்டு! இண்டையான் கலக்சன் எப்பிடியும் நாளைக்கு பாங்க் பண்ணியாக வேணும். இல்லாட்டி வாற செக்ஸ்'ஐ ஃபேஸ் பண்ண முடியாது. அதோட நீங்கள் முதலே அட்வான்ஸ் எண்டு இரண்டாயிரம் ரூபாவுக்குக் கிட்ட எடுத்திட்டீங்கள். பிறகு இப்ப மூவாயிரம் கேட்டால் எப்பிடி நான் தாறது சொல்லுங்கோ பார்ப்பம்?"

அப்பா மறுபேச்சு பேசவில்லை. கேட்டதற்காக மன்னிப்புக் கோரிவிட்டு 'ப்ரீப் கேஸை'யும் எடுத்துக் கொண்டு வெளியே வந்துவிட்டார். லேஞ்சியை எடுத்து முகத்தில் படர்ந்திருந்த வியர்வையைத் துடைத்து கழுத்துப் பகுதியையும் ஒற்றிக் கொண்டு லேஞ்சியை பொக்கற்றுக்குள் வைத்து விட்டு மீண்டும் நேரத்தைப் பார்க்கிறார். அப்பாவுக்கு இப்போ சட்டென பொறி தட்டியது.

செல்வநாயகம் மாமா பம்பலப்பிட்டியில் இருக்கிறார். வசதியாக சொந்த வீட்டில் வசிப்பவர். அப்பாவுக்குக் கீழே வேலை செய்தவர். அப்பாவின் நல்ல நண்பரும் கூட. செல்வநாயகம் மாமாவிடம் அப்பா ஒரு போதும் உதவி கேட்டதில்லை. இம்முறை கேட்டால் மறுக்கமாட்டார் என்பது அப்பாவின் அசையாத நம்பிக்கை.

நல்ல வேளை பாணந்துறை செல்லும் இ.போ.ச. ஒன்று வந்து எங்களை ஏற்றிக் கொண்டு வந்து பம்பலப்பிட்டி சந்தி பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டது. அருகில் ஜோசப் லேனில் தான் செல்வநாயகம் மாமாவின் வீடு. கொஞ்ச தூரம் நடந்து செல்ல வேண்டும். அப்பா எதிர்பார்த்த படி செல்வநாயகம் மாமா வீட்டில் நின்றார்.

நண்பர்கள் இருவரும் நீண்ட நாள்களின் பின் சந்தித்திருக்கின்றனர். பழைய நினைவுகள், சுக சேதிகள்... எல்லாம் கதைத்து முடிய அரை மணி நேரம் போய் விட்டது. இறுதியாகத்தான் அப்பா வந்த விடயத்தை மாமாவிடம் கூறினார்.

"சிவராஜா அண்ணன் இப்ப நீங்கள் திடீரென்று கேட்டதில என்னால ஒண்டும் செய்ய முடியாமல் இருக்கு. நாட்டு நிலைமையள் தெரியும் தானே! அதால நான் வீட்டில் ஒண்டும் வைச்சிருக்கிறதில்லை."
"பாங்கிலையும் எடுக்கேலாது. இந்தக் காரை மாத்துவம் எண்டு வெளிக்கிட்டு ஓடி ஒண்டுபோட்டு கொஞ்சம் காசு எடுத்துப் போட்டன். 'உங்கட பிள்ளையின்ர படிப்புத்தேவை' எண்டு யோசிக்கேக்க எனக்கும் உதவ முடியலையே எண்டு கவலை யாகத்தான் இருக்கு."

"இப்ப கைச்செலவுக்கு வேணுமெண்டால் இருநூறு, முன்னூறு தாறன்..." செல்வநாயகம் மாமா முடிக்கு முன் அப்பா எழுந்துவிட்டார். செல்வநாயகம் மாமாவின் மனதில் நம்பிக்கையீனம் உறைந்திருக்க வேண்டும். 'இவரோ நோயாளி. இவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு யாரிடம் வாங்க முடியும்' என்று தான் நினைத்திருப்பார். மெல்லத்தட்டி கழித்துவிட்டார். நட்பு என்பது நம்பிக்கையீனத்தின் எதிர் மறைவில் அல்லவா உருவாக்கப்பட வேண்டியது. அதற்கிடையில் பணம் என்ற ஒன்று ரசம் பூசிய நிலைக் கண்ணாடியாக குறுக்கே நின்று விடுகிறது. அது தன்னைத்தான் காட்டும். அடுத்தவனை மறைத்துவிடும். மறக்கவும், மறுக்கவும் வைத்துவிடும்.

"குறை நினைக்க வேண்டாம். நான் வேற அரேஞ்ச்மென்ற் ஒண்டு செய்யிறன், நான் போயிற்று வாறன்..." அப்பா கூறிவிட்டு புறப்பட்டு வந்துவிட்டார். நேரம் இரவு எட்டு மணியாகிவிட்டது. பம்பலப்பிட்டி பஸ் நிலையத்தில் ஏகப்பட்ட சனக்கூட்டம். வருகின்ற எல்லா பஸ்களும் நிரம்பி வழிந்தே வருகின்றன. கிருலப்பனை செல்வதானால் ஒரே ஒரு சேவைதான் இருக்கிறது. அதுவும் இருபது நிமிட இடைவெளிக்குப் பின்னால் தான் வருகின்றது. அதுவும் சுமக்க முடியாத பாரங்களுடன் அப்பாவின் மனதைப் போல அப்பாவை மட்டும் ஏற்ற முடியாமல் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

அப்பாவிற்கு மனச்சோர்வு ஒரு புறம், உடல் களைப்பு மறுபுறம். முகத்தில் படர்ந்த வியர்வையில் வீதிப்புழுதியின் துணிக்கைகள் படிய புழுக்கத்தின் தாக்கத்தால் முகம் எரிவைத் தூண்டுகிறது. மீண்டும் மீண்டும் லேஞ்சியால் முகத்தைத் துடைத்து ஆசுவாசப்பட்டு அடிக்கடி நேரத்தையும் பார்த்துக் கொள்கிறார்.

வருகின்ற பஸ்களில் இயலுமானவர்கள் முண்டியடித்து ஓடிச் சென்று ஏறிக்கொள்கிறார்கள். அப்பா மட்டும் ஒதுங்கி சற்று பின்னால் நின்று கொள்கிறார். அவரைப்பற்றி யாரும் எண்ணிப்பார்க்கவில்லை. இந்த அவசரமான உலகில் யாருக்கும் அப்பாவைக் கவனிக்க வேண்டிய தேவையும் இல்லை தானே!.

டொக்டர் கூட அப்பாவை பலமுறை கண்டித்திருக்கிறார். 'மனதை உலைக்க வேண்டாம், உடம்பை நோகடிக்க வேண்டாம், நன்றாக றெஸ்ட் எடுக்க வேணும். நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டும்...' என்று. 'இப்ப கூட டொக்டர் இந்த வழி வந்தால் அவரிடம் வேறு ஏச்சு வாங்கியாக வேண்டும்.' இதற்குள் அப்பாவின் மனதில் டொக்டரும் வந்து பயம் காட்டுகிறார். பின்னால் வந்த பஸ் ஒன்றில் அப்பா ஏறிக் கொள்கிறார்.

அப்பா, மானிப்பாய் தபால் அலுவலகத்தில் தபால் அதிபராக இருந்தவர். எங்கள் சொந்த ஊரும் மானிப்பாய் தான். அம்மா, அப்பாவே உலகம் என்று வாழ்பவர். எனக்கு ஒரு அண்ணா இருந்தார். அடுத்தது அக்கா, மற்றது நான் கடைக்குட்டி.

கல்விதான் எமது அசையாத சொத்து. அதைத் தான் முதலில் தேடிச் சேர்க்க வேண்டும் என்பதில் பிடியாக இருப்பவர் அப்பா. அதனால்தான் அண்ணாவையும் ஊக்கமாகப் படிப்பித்தார். அண்ணாவும் படிப்பில் கெட்டிக்காரன்தான். அண்ணா படித்து ஒரு என்ஜினியர் ஆக வரவேண்டும் என்பது அப்பாவின் ஆசை. ஏன் எங்களுக்குந்தான்.

அண்ணா ஏ.எல்.பரீட்சை எழுதிவிட்டு இருந்த காலம், திடீரென ஒரு நாள் காணாமல் போய்விட்டார். அப்பா ஆடிப் போனார். அம்மா, அக்கா, நானும்தான். சாப்பிடக்கூட மனமில்லாமல் அண்ணாவின் நினைவாக, அண்ணாவின் வரவுக்காகக் காத்திருந்தோம்.

அண்ணா குடும்பத்தில் மூத்த பிள்ளை என்ற காரணத்தைவிட ஒரே ஒரு ஆண்பிள்ளை என்பதால் தான் அப்பா அதிகம் வேதனைப்பட்டார். ஆனாலும் அண்ணாவின் அறிவுக்கூர்மையில் அப்பா அதீத நம்பிக்கை வைத்திருந்தார். அண்ணா வந்து மீண்டும் அப்பாவின் அபிலாஷைகளை நிறைவேற்றுவான் என்று.

அதன் பின்னர் அப்பாவுக்குத் தொட்ட இதய வலிதான். அவரை பாரிச வாதத்தில் வீழ்த்தி விட்டது. வாய் பேச முடியாமல் கைகால் வழங்க முடியாமல் படுக்கையில் வீழ்த்திவிட்டது. அப்பாவும் உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற வேண்டியவரானார்.
நோய்ப்படுக்கை என்று கூட அப்பா ஓய்வாக இருந்தவர் இல்லை. சதா அண்ணாவைப் பற்றியும் எங்களைப் பற்றியுமே கவலைப்பட்டபடியிருப்பார். அவர் மனதை அதிகம் அலட்டிக் கொண்டதனாலோ தேறிக் கொள்ள முடியவில்லை. ஆறு மாதங்கள் வரை அப்பா எழுந்திருப்பார் என்று கூட நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

நாட்டில் பிரச்சினைகள் வலுத்ததோடு நாங்கள் கொழும்புக்கு இடம் பெயர்ந்து வந்துவிட்டோம். அக்காவும் பட்டப்படிப்பை முடித்திருந்த வேளை அக்கா உத்தியோகம் ஆகிவிட்டால் எப்படியும் சமாளிக்கலாம் என்ற நம்பிக்கையில் கொழும்புக்கு வந்து விட்டோம்.

எதிர்பார்ப்புகளும், முயற்சிகளும் தானே மனிதனால் முடிந்தவை. விளைவுகளும் முடிவுகளும் காலத்தின் கைகளில் தானே! அக்கா எதிர்பார்த்து வந்தது போல் எந்த வேலையும் இலகுவில் கிடைத்து விடவில்லை. விண்ணப்பங்கள் அனுப்பி சலித்தும், நேர்முகப் பரீட்சைகளைக் கண்டு காத்திருந்து ஏமாந்ததுந்தான் மீதமாகின. தொடர்ந்து மேலே படித்தால் தான் உண்டு' என்ற முடிவுக்கு வந்தாள் அக்கா.

அப்பாவும் கொழும்பு கோட்டையில் ஓர் தனியார் ஏஜென்சி தபால் நிலையத்தில் மனேஜர் ஆக இணைந்து கொண்டார். உடல் ரீதியாக அவர் பலமிழந்து இருந்தாலும் தொழில் ரீதியாக அப்பா மிகுந்த அனுபவசாலிதானே!
கொழும்பு சூழல் நேரடியான ஒரு வைத்தியரின் கண்காணிப்பு, தொடரான வைத்தியம் அப்பாவை சற்று தேற்றம் காண வைத்தது. கதைக்கவோ, எழுதவோ, நடக்கவோ இப்போது முடியும். ஆனாலும் அப்பாவின் போதிய ஓய்வின்மை குணமாக்கலை தாமதப்படுத்திக் கொண்டே இருந்தது.

அப்பாவால் ஓரளவு தனித்தியங்க முடிந்ததே தவிர இடது கையும், இடது காலும் இன்னும் வழமையான உணர்வைப் பெறவில்லை. அதற்காகவேனும் அவர் ஓய்ந்திருக்க விரும்பவில்லை. அப்பாவால் ஓய்ந்திருக்கவும் முடியாதுதான்.

வீட்டு வாடகை, நாலுபேருக்கும் உணவு, உடை, இதர செலவுகள் என்று எட்டிப்பிடிக்க முடியாத தூரத்தில் செலவினம் ஏறி நிற்கையில் அப்பாவின் பென்சன் மட்டும் எந்த மூலைக்கும் போதாது.

அதற்குள் எமது படிப்பையும் தவறவிடாது அப்பா பார்த்துக் கொண்டார். அக்காவை மேலும் மேலும் ஊக்குவித்தார். படிப்பைத்தவிர வேறு வேலை செய்ய நாம் முனைந்த போதெல்லாம் அப்பாவின் கண்டிப்புத்தான் அனுமதி மறுப்பாக விழுந்தது.

அப்பாவின் கண்டிப்பை விட அன்பின் ஆக்கிரமிப்புத்தான் அபாரமானது. அப்பா மேல் இரக்கமும் பாதி எம்மை ஆட்கொண்டு நின்றது.

நாளை எப்படியும் அக்காவின் பரீட்சைக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும். இதுதான் அப்பாவின் இன்றைய முதல்தரப் பிரச்சினை.
கிருலப்பனை சந்திக்கு பஸ் வர ஒன்பது மணியாகிவிட்;டது. அப்பா பஸ்ஸை விட்டு இறங்கி கிருலப்பனை அவனியு வழியாக மெல்ல மெல்ல நடந்து வீட்டு வாசலை அடைந்து விடுகிறார்.

அப்பா வந்த சத்தம் கேட்டு அக்கா ஓடிப்போய் கதவைத் திறந்து விடுகிறாள்.

கறுப்பாக, மொத்தமாக, திடகாத்திரமாக இருந்த அப்பா; முன்பு அப்பாவை காண்பவர்கள் மேஜர் சுந்தரராஜன் என்றுதான் சொல்வார்கள். இன்று மெலிந்து, சற்று கூனி, நடைதளர்ந்து பார்ப்பவருக்கே அழுகைவரும் தளர்வு, அத்தளர்வினுக்குள்ளும் இன்று அதிகம் களைத்துப் போயிருந்தார்.

அப்பாவுக்கு அக்காதான் எல்லாம். செருப்புக் கழற்றி, உடுப்பு மாற்றி விட்டு, சுடுநீர் கலந்து அப்பாவுக்கு மேல் கழுவிவிட்டு, மேசையில் சாப்பாடு பரிமாறுவது வரை எல்லா வேலையும் அக்காவே செய்வாள். அப்பா சுவாமி கும்பிட்டுவிட்டு வர அக்கா சாப்பாடு பரிமாறுகிறாள்.

"பிள்ளை! அம்மா எங்கே?"

"அம்மாவுக்குச் சாடையான காய்ச்சல் அப்பா! அறையிக்க படுத்திருக்கிறா!"

"ஆ... ஆ... அப்பசரி குழப்பாதை! படுக்கட்டும்" அப்பா சாப்பிட்டுவிட்டு கை கழுவிக்கொண்டே அம்மாவை விசாரித்தார். அம்மாவும் இப்போதெல்லாம் சற்று தளர்ந்துதான் போனார். அடிக்கடி தலையிடி, காய்ச்சல் என்று அவதிப்படுவார்.

அப்பா அம்மாவுடன் ஏதும் கதைக்க நினைத்தாரோ என்னவோ பின் அம்மாவைக் குழப்ப விரும்பாது தனது படுக்கைக்குச் சென்றுவிடுகிறார்.

அக்கா இதுவரை தன்விடயம் பற்றி அப்பாவிடம் எதுவும் வாய்திறக்கவில்லை. அப்பாவும் எதுவும் சொல்லவில்லை. 'எப்படியும் அப்பா காசுடன்தான் வந்திருப்பார். நாளை காலை நினைவுபடுத்தினால் சரி. இப்போ காசை வாங்கி என்ன செய்ய முடியும். நாளைக்குத்தானே காசு தேவை.' அக்கா தனக்குள் உறுதியைத் திணித்துக் கொண்டு தன் படிப்பில் இறங்கி விடுகிறாள்.

அப்பா வழமையாக நித்திரைக்கு முன் படிக்கும் 'தமிழ் வேதப் பாமாலையை' எடுத்து வைத்துக் கொண்டு படுக்கையில் சரிகிறார். அவரது கண்கள் மட்டுமே புத்தகத்தில் இருந்தது. புலன் எல்லாம் 'அக்காவை நாளை எப்படி சமாளிப்பது' என்று தான் சுழன்று கொண்டிருந்தது. எப்படியும் நாளை அக்காவின் கையில் மூவாயிரம் ரூபாய் கொடுத்தே ஆகவேண்டும்.

வேறு எப்படி இந்தக் காசை சரிப்படுத்தலாம்! என்பதில் அப்பாவின் சிந்தனை ஓடியது. 'இவ்வளவு நாளும் ஏதோ குருட்டு நம்பிக்கையில் பொஸ் இடம் கடன் வாங்கலாம் என்றிருந்தது எவ்வளவு மடத்தனம்?' விற்பதற்கோ, அடகு வைப்பதற்கோ பெறுமதியான நகை ஒன்றும் கையில் இல்லை. அம்மாவின் தாலிக் கொடியை விற்றுத்தானே இந்த வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுத்தது. மற்ற நகைகள் சேமிப்புகள் எல்லாம் அப்பாவின் சுகவீனத்தோடும் மருந்துகளோடும் கரைந்துவிட்டன.

"என்ன செய்வது, நாளை காலையிலாவது யாரிடமாவது போய் கடனாக, கைமாற்றாகவாவது இந்தப் பணத்தைப் புரட்டிவிட்டால்... நல்லது. அக்காவை மனம் நோக விடக்கூடாது. அக்காவின் படிப்பிற்கு தடங்கல் வந்துவிடக்கூடாது...' என்பதற்காக அப்பா தனக்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார்.

'பென்சன் இன்னும் வரவில்லை, வந்தால் சில்லறைக் கடைக்குத் தான் கொடுக்கச் சரியாக இருக்கும். சம்பளமே நாலாயிரம் ரூபாய், அதில் அட்வான்ஸ் இரண்டாயிரம் பற்று நிற்கும் போது மேலதிக பற்று மூவாயிரம் ரூபாய் எந்த முதலாளி தருவான். அதுவும் என் நிலைமையில் இல்லை. இந்த நோயாளியை நம்பி எவன்தான் காசு கடன் தருவான்?

விடை காண முடியாத வினாக்கள், விடுதலை கிடைக்காத தேடல்கள், மனதிற்குள் ஒரு சூறாவளி திசை சொல்லிக்கொள்ள முடியாமல் அலை மோதி மோதி இயற்கையின் நிலைகளை விபரீதமாக்கி கொண்டிருந்தது. அப்பாவிற்கு ஏற்கனவே உடல் அசதி. மனதில் படர்ந்து துள்ளி எழுந்து சரியும் அலைகளாக யோசனைகளோடு அப்படியே உறங்கிவிட்டார்.

காலையிலும் அக்காதான் தேத்தண்ணியுடன் போய் அப்பாவை எழுப்புவாள். இன்றும் 'தேனீர் கொடுக்கும் போது அப்பாவிடம் ஞாபகப்படுத்தி காசை வாங்க வேண்டும்' வாங்கிவிட்டால் எப்படியும் பத்து மணிக்கு முதல் காசை கொண்டுபோய் சார்ட்டற் இன்ஸ்ரிரியூட்ல கட்டி பெற்றுவிட்டால் நிம்மதி.....'

அக்கா அடிமனதில் ஏற்பட்ட நம்பிக்கை ஒளியில், முகத்தில் மிளிரும் புன்னகையோடு ஆவல் நிறைந்தவளாக தேனீரோடு அப்பாவை எழுப்பிவிடச் செல்கிறாள்.

அப்பா அக்காவைச் சமாளிக்கத் தடுமாறுகிறார். கண்களில் நீர் அரும்பி கருமணிகள் அதில் மிதக்கின்றன. முன்பு பாரிசவாதம் அப்பாவைத் தாக்கியபோது வாய் பேச முடியாமல் தடுமாறியது போல் இப்போதும் பேசத் தடுமாறுகிறார்.

'பிள்ளை! என்னால ஏலக்கூடிய அளவும் முயற்சித்துப் பாத்திட்டன். காசு கிடைக்கயில்லை; இண்டைக்கு யாரிட்டையும் மாறலாமோ என்றுதான் யோசிக்கிறன். இந்த நிலைமையில ஆர்பிள்ளை என்னை நம்பி கடன் தருவான்...'

"அப்பா! இதுக்காக நீங்கள் கலலைப்பட வேண்டாம் அப்பா. பரவாயில்லை. இந்த வருசம் போகட்டும். அடுத்த வருசம் என்றாலும் இந்த சோதனை எடுக்கலாந்தானே! இல்லாட்டி..."

அக்கா அப்பாவைச் சமாதானப்படுத்த முனைகிறாள். அதற்குள் அம்மாவும் விழித்துக் கொண்டு விடுகிறாள். இவர்களது உரையாடல் அம்மாவுக்குக் கேட்டிருக்க வேண்டும், அம்மா கொஞ்ச நேரத்திற்குள் நிலைமையை தெரிந்து கொள்ளுகிறார்.

"ஏன் பிள்ளை உன்னட்டை அந்த பாஸ் புத்தகம் இருக்குதல்லோ. நீ கம்பஸ்ஸில இருக்கேக்க பாங்க்கில போட்டு வைச்ச காசென்று கொண்டந்தனியல்லோ! அதில் எவ்வளவு இருக்கு?"

அப்போதுதான் அக்காவுக்கும் அந்த ஞாபகம் வந்தது. "ஓமோம் அப்பா! அந்த பாங்க் புத்தகத்தில இருக்கிற காசு இப்ப இதுக்குக் காணும். அதை எடுப்பம், பிறகு பார்ப்பம்" அக்கா முடிவாக கூறினாள். அதற்கும் அப்பா உடன் உடன்படவில்லை.

"ஏன் பிள்ளை? அதை இப்ப எடுத்துப் போட்டு பிறகு ஏதும் அவசர தேவை எண்டு ஏதும் வந்தால் என்ன செய்யிறது"

"அதைப்பிறகு பார்ப்பம், இப்ப இதை எடுத்துக் கட்டுவம், இந்த சோதனையை நாள் பாஸ் பண்ணிட்டன் என்றால் சரிதானே! பிறகு உங்களை நாங்கள் உழைக்கவிடமாட்டம்..." அக்கா அதே உற்சாக உந்தலோடு பாஸ்புத்தகத்தை எடுத்துவர தன் அறைக்கு ஓடுகிறாள்.

அப்பா நீண்டதொரு பெருமூச்சொன்றை இறக்கிக்கொண்டு பார்த் ரூம் பக்கமாகப் போகிறார். இன்றும் வேலைக்குப் போகவேண்டும் என்ற நினைப்போடு.
இந்த குடும்ப வண்டிக்கு நானும் அக்காவும் சில்லுகளாக மாறும் வரைக்கும் அப்பாதானே ஒற்றைச் சில்லாக நின்று இந்த வண்டியை இழுத்தாக வேண்டும்.

[18-05-1997 வீரகேசரி வாரவெளியீடு]

----------------------------------------------

8 அடகு மோதிரம்

அலுவலக வேலை எதிலும் மனம் ஓட மாட்டேன் என்கிறது. இரண்டு மூன்று 'பைல்கள் மினிற்பண்ணி மேலதிகாரியின் கவனத்துக்குப் போட்டாயிற்று. அது போதும் அவருக்கு, நான் இன்று கடமையில் இருப்பதை உணர்த்த. என்னுடைய அவசரத்துக்கு நேரமும் ஓட மாட்டேன் என்கிறது. ஆனால் பப்ளிக் மட்டும் வருவதில் குறைவில்லை.

புதன்கிழமை மட்டும்தான் 'பப்ளிக் டே' என்று அறிவிப்புப் போட்டிருந்தாலும் தூர இருந்து வாறதுகள், கஸ்ரப்பட்ட சனங்கள் வந்தால் உள்ளுக்கு விடத்தானே வேணும். நான் கையாளும் விடயம் சம்பந்தப்பட்டு வந்தவர்களிடம் ஏதேதோ சாக்குப் போக்குச் சொல்லி எழுத்து மூலம் ஒரு முறையீடு வாங்கி அவர்களது நம்பிக்கையைப் பெற்று என்னை நான் தற்காலிகமாக விடுவித்துக் கொள்கிறேன்.

மாசக்கடைசி, ஷோட் லீவும் முடிஞ்சுது. தலை நகர அலுவலகங்களில் உள்ள சிக்கல் இது. காட் அடிக்க, கையெழுத்து வைக்க இயந்திரத்தை வைத்துள்ளார்கள். ஆனால் கொழும்புக்குள்ள வாற றோட்டுகளில் இருக்கிற வாகன நெருக்கடிக்கு ஒரு நாளும் தீர்வு காணமாட்டார்கள். மொத்தமாக இருக்கிற ஷோட் லீவு, கசுவல் லீவு எல்லாம் இழந்து நிற்க வேண்டியது நாங்கள்.

பொக்கற்றுக்கள் கையை விட்டு மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்கிறேன். பாங்க் கடிதம், இரண்டாயிரம் ரூபா காசு, அடகுத்துண்டு, இன்னும் சில சில்லறைத் தாள்க் காசுகள். பத்திரமாக இருக்கின்றன. நேரத்தைப் பார்க்கிறேன். பத்துமணி ஆகின்றது. இன்னும் ஒரு அரைமணித்தியாலம் பொறுப்பம்.

பத்தரை போல மெல்லமா சீப் கிளார்க்கிட்ட சொல்லிப் போட்டு பாங்கிற்கு போட்டு வருவம். அரச அலுவலகங்களில் உள்ள குறைந்த பட்ச வசதி இதொண்டுதான். ஷோட் லீவும் இல்லாத நேரம் தகுந்த காரணத்தைச் சொல்லி ஒரு மனிதாபிமான உதவி பெற்று வெளியில் போய் வரலாம். அதுகூட சில வேளைகளில் ஆபத்தாக முடிந்து விடும். வெளியே போன நாங்கள் திரும்பி வருமட்டும் கந்தோர் கலவரப்பட்டு நிற்கும். சிலவேளை குண்டு மீட்கும் படை வந்து (சல்லடை போட்டுத் தேடுதல்) நடத்தி முடித்து விட்டிருக்கும்.

ர ர ர

வங்கிக் கடிதம் வந்தது முதல் மனைவியிடம் வாங்கிக் கட்டிய விடயங்கள் மனதில் உறைக்கின்றன. என்னுடைய மனைவி ஒரு சென்றிமென்ரல் ரைப். வெளியே போகேக்க பூனை குறுக்க போகக் கூடாது. அடுத்த வீட்டுக்காரன் தும்புக்கட்டை, விளக்குமாறோட நிற்கக் கூடாது, என்பது போல தாலி, மெட்டி, மோதிரம், குங்குமம் என்று திருமண அடையாளங்கள் அத்தனையிலும் வலு அக்கறை.

என்னளவில் அவை வெறும் சமூக அடையாளங்கள்தான். அதனால்தான் துணிந்து ஒரு அவசரத்துக்கு என் மோதிரத்தை வங்கியில் அடகுவைத்து விட்டேன்.

நேரம் பார்க்கவென்று கையில் கட்டும் மணிக்கூட்டைத் தவிர வேறு ஆபரணம் ஏதும் எனக்குப் பழக்கம் இல்லை. அதற்கான தேவைகளோ வாய்ப்புகளோ இருந்ததில்லை. எமது திருமணத்தன்று தான் என் வலது கை விரல் ஒன்றுக்கு மோதிரம் கிடைத்தது. அதுகூட கீரைக்கு விலை கேட்க கைவிரலுக்குள் மாட்டிக் கொண்டது போல் ஒரு கூச்சம் எனக்கு.

ஒரு கிளார்க் உத்தியோகம், மாதம் நாலாயிரம் ரூபாவுக்குள்ள ஒரு சம்பளம். கொழும்பில வாடகை அனெக்ஸ் வாசம். கடன்பட்டு வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டு மாதாமாதம் சம்பளத்தில கழிபட தலையச் சொறியிற வாழ்க்கை. சோற்றுக்கு அரிசியில இருந்து கறிவேப்பிலை வரைக்கும் காசுக்குத்தான் வாங்கவேணும். பஸ் காசுகள், உடுப்பு, பிள்ளையின் பால்மாச் செலவென்று விழி பிதுங்கிற கொழும்பு சீவியம். இதுக்குள்ள பளபளக்கிற மோதிரம் ஒண்டு கையில இருந்தால் விரல் சுணைக்கிற மாதிரித்தானே இருக்கும்.

ஆறு மாதங்களுக்கு முன்தான் எங்கள் வீட்டில் ஒரு சங்கடமான நிகழ்ச்சி நடந்து முடிந்தது. யாழ்ப்பாணத்தில தானுண்டு தன் குடும்பம் உண்டென்று குடும்பமாக இருந்தவன் என்தம்பி. அவனுக்கும் தன் உத்தியோக நிமித்தம் கொழும்புக்கு வர வேண்டிய தேவை வந்துவிட்டது.

அலுவலக விடயமாக வந்தவன் தான் மட்டும் வந்திருக்கலாம். கூடவே தன் மனைவியையும் மகனையும் கூட்டிக்கொண்டு வந்து விட்டான். யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமான போக்குவரத்து எல்லாம் துண்டிக்கப்பட்டு உயிர் குடிக்கும் வழி இரண்டுதான் எஞ்சியிருந்தது. ஒன்று இரத்மலானை பலாலி விமானசேவை, மற்றது திருகோணமலை காங்கேசன்துறை கப்பல் சேவை.

போறகப்பலில் போவதுதானே என்று மூவரும் வந்து இறங்கிவிட்டார்கள். வீடுதேடி வந்தவர்களைத் தவிர்க்க முடியாது. கொழும்பு நிலைமையை விளங்கப்படுத்துவதானால் அவர்கள் தங்கிநிற்கும் காலம் காணாது.

பிள்ளையின் படிப்புக்கு, ஒப்படை வேலைகளுக்கு சுற்றுலா உதவும் என்பதால் குடும்பமாக வந்தார்கள்.

அவர்கள் மூன்று நாட்கள் தங்குவதற்கு வீட்டுக்காரியின் ஓம்படை பெறுவதற்கு நான் பல சொல்லாட்சிகளைக் கையாள வேண்டியிருந்தது. வந்தவர்கள் தங்கி இளைப்பாறவில்லை. பொலிஸ் கோஸ்ரி வந்து வீட்டைச் சுற்றி வளைத்து புலிதேடும் படலமும் நடந்து முடிந்து விட்டது.

நல்லவேளை அலுவலக விடயமாக தம்பி வந்திருந்ததாலும், அவன் கொணர்ந்த ஆவணங்கள் சிங்கள மொழியில் இருந்ததாலும் வந்தவர்கள் வெற்றிகரமாக பின் வாங்கினார்கள். ஆனாலும் அன்று இரவாகும் முன்னமே பொலிஸ் நிலையத்திற்குச் சென்று அடையாள அணிவகுப்புக்கு உட்பட்டு, நீளப் பத்திரம் இரண்டு பிரதிகள் நிரப்பி தமிழர்கள் தங்கி இருப்பதற்கு, அதுவும் மூன்று நாட்களுக்கு அவர்களால் அனுமதிக்கப்பட்டு மீள வேண்டியிருந்தது.

வந்த விருந்தினர்களை மூன்று நாளும் வீட்டுக்குள் பூட்டி வைத்து கொழும்பு காட்ட முடியாது. அலுவலக விடயம், பிள்ளையின் சுற்றுலா, சாப்பாடு, போக்குவரத்து எல்லாம் என்னோடுதான்.
மூன்றுநாள் சுற்றுப் பயணத்தில் கொழும்பு வந்த தம்பி குடும்பத்தைச் சமாளிக்க முனைந்து மோதிரம் வங்கி ஒன்றின் நகை அடகுப் பிரிவுக்கு அவசரமாகக் கைமாறிவிட்டது. தம்பி குடும்பம் ஊர் திரும்ப, மனைவி ஆறுதல்ப் பெருமூச்சு விட்டபின்தான் கண்டுபிடித்தாள்; என் கைவிரலில் மோதிரம் காணாமற் போனதை.

அதற்காகவே அன்று இரவு முழுவதும் அழுது தொலைத்தாள். அடகு வைத்ததில் பிழையில்லை. திருமண மோதிரம் கைமாறியதில்தான் அவளுக்குக் கவலை அதிகம்.

'அடுத்த மாத ஓவர் டைம், அதற்கு அடுத்தமாதம் சம்பள அரியஸ் வரும் உடன மோதிரத்தை மீண்டு விடலாம்' என்று ஆறுதல் கூறிக் கூறி இப்போது ஆறாம் மாதமும் முடிந்து விட்டது.

ஒவ்வொரு மாதச் சம்பளத் திகதியிலும் மனைவி அடகு மோதிரத்தை அடிக்கடி நினைவு படுத்துவாள். ஆனால் ஒற்றைச் சம்பளத்தில் என்ன செய்வது... மனைவி உத்தியோகம் பார்ப்பவளாக இருந்திருந்தால்க் கூட ஓரளவு சமாளிக்கலாம். திருமணத்துக்கு முன்னும் பின்னும் பிள்ளை பிறக்க முன்னும் அவள் உத்தியோகம் பார்த்தவள்தான். கொழும்பில் பிள்ளை பராமரிக்க ஆள் தேடுவதை விட தாயே பராமரிப்பது நல்லதென்று நின்றுவிட்டாள். இந்த இரண்டு வருட திருமண வாழ்க்கையில் எஞ்சியது ஒன்றரை வயது மகள் மட்டும் தான்.
போன மாதச் சம்பளம் முடிந்த கையோடுதான் வங்கியில் இருந்து பதிவுத் தபால் வந்தது. அப்போதுதான் நினைத்தேன்; பலருக்கும் வங்கிக் கடிதம் வருவதுண்டு, அவர்களுக்கெல்லாம் பணம் புரள்வதாக நான் பொறாமைப்பட்டதுண்டு. அந்தத் தாற்பரியமும் இப்போது காலம் தாழ்ந்து எனக்குப் புரிந்தது.

அடகு மோதிரத்தை மீட்க வேண்டிய இறுதித்திகதி இன்று. இதற்கு முன்னும் இரண்டு கடிதங்கள் வந்திருந்தும் என் கையாலாகாத் தனத்தால் நான் வாளாதிருந்தேன். ஆனால் இறுதி எச்சரிக்கை, அறிவித்தல் வந்ததும் ஆடிவிட்டேன்.

எனக்கு மட்டுமல்ல சுற்றுலா வந்து சென்ற தம்பி குடும்பம் மீதும் விழுந்தது. யாரிடமாவது கைமாற்று வாங்கலாம் என்று மூளையைக் குழப்பி பயன் கிட்டாத நிலையில் நான் தவித்துப் போயிருந்தேன். ஏதோ மணமுறிவு நிகழ்ந்தது போலவும், நான் காணாமற் போய்விட்டது போலவும், குடும்பமே போன வள்ளம் நடுக்கடலில் மூழ்கியது போலவும் என் மனைவி ஆரவாரப்பட்டாள்.

நம்மவர் ஊர் இழந்தது, உறவிழந்தது, உடல் பாகம் இழந்தது, உயிர் இழந்தது, உடமை இழந்தது, காணாமல் போனது எல்லாம் உவமையாக்கிக் காட்டினேன். மனைவி அடங்கியபாடில்லை. அவளுக்கு இருந்ததெல்லாம் சாகுந்தலமும்-கணையாழியும் பற்றிய உளப்பதிவே.
ர ர ர

என்ன செய்தாளோ எப்படிச் செய்தாளோ அயலில் யாரிமடாவது கடன் வாங்கியிருப்பாளோ தெரியாது. நேற்று மாலை என்னிடம் இரண்டு ஆயிரம் ரூபா தாள்களைக் கொணர்ந்து நீட்டினாள். மீதி ஆறு மாதத்துக்கும் வட்டிக் கணக்குப் பார்த்து இருந்த சில்லறைகளை நான் சேர்த்தேன். இன்று அடகு மோதிரத்தை மீட்டுவிட்டால் இதைவிட வேறு சந்தோஷம் என் மனைவிக்கு என்னால் கொடுக்க முடியாது.

ஏதோ ஒரு மகிழ்ச்சி மனத்துள் எழ, எழுந்து சென்று பெரியவரிடம் விடயத்தை இரகசியமாகச் சொல்கிறேன். மனிசனின் தலையாட்டுதல் மட்டும் சாதகமாகக் கிடைத்தது. கந்தோரை விட்டு வெளியே வருகையில் பியோன் கைதட்டிக் கூப்பிட்டான். "மஹாத்தயா கோள் எகக்"!

'சனியன், போற நேரம் பின்னால கூப்பிடுறான், ஆரும் பப்ளிக்காய் இருக்கும், வேலை இல்லாததுகள்' திட்டிக்கொண்டு சென்று ரிஸீவரைக் காதுக்குள் வைக்கிறேன்.

மறுபுறத்தில் மனைவி, பதட்டமாக குரல் வருகின்றது. "பிள்ளைக்குத் திடீரென்று வலிப்பு வந்து,.... இப்ப றோயல் ஹொஸ்பிரல்ல நிப்பாட்டியிருக்கு, உடன வாங்கோ....."

[1998]

-----------------------------------

9 விலகல்

"படீர்" என்றொரு வெடிச்சத்தம் அயலில் இருந்த ஐந்து மாடிக் கட்டிடமே இடிந்து விழும்போல் இருந்தது. திரள் திரளாக படர்ந்த கருமுகில் கூட்டம் சூரியனை மறைக்க, அதைக் கிழித்துவிட ஒரு மின்னல். பின்னால் இடி முழக்கம்.

இடி முழக்கத்தின் அதிர்வில் சின்னவள் விதூசி விழித்துக் கொண்டு வீறிட்டு அழத் தொடங்கி விட்டாள். ஆடை மாற்றிக் கொள்ள அறைக்குள் சென்று மாற்றுடைகளை ஆயத்தம் செய்து கொண்டிருந்த சாந்தி அவசரமாக ஓடி வந்து விதூஷினியை தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டாள். அன்னையின் அரவணைப்பில் ஒன்றரை வயதுப் பாலகி விதூஷினி மீண்டும் நித்திரை செய்யத் தொடங்கினாள்.

மூத்தவன் ரஜீவனை சாந்தி ஏற்கனவே புதுச்சட்டை போட்டு வெளிக்கிடுத்தி விட்டாள். அவனுக்கு இப்போது மூன்று வயதுதான். அவன் கதிரையில் ஏறுவதும் குதிப்பதுமாக விளையாடிக் கொண்டிருந்தான். நேரமும் பத்தரையாச்சு இன்னும் வேந்தனைக் காணேல... மழையும் வரும்போல கிடக்குது. பாவம் வேந்தனுக்கும் என்னால எத்தனை சிரமங்கள்...!, தனக்குள் எண்ணிக் கொண்டவளாய் சாந்தி மீண்டும் விதூஷியை பாயில் வளர்த்திவிட்டு ஆடை மாற்றிக் கொள்ள அறைக்குள் செல்கிறாள்.

இன்றும் ஏஜென்சியிடம் போகத்தான் புறப்பட்டுக் கொண்டிருக்கிறாள். பயண ஏற்பாடுகள் யாவும் சரி என்றும், இன்று காலை பத்தரை மணிக்கு தனது அலுவலகம் வரும்படி ஏஜன்சி இந்திரன் சாந்தியை அழைத்திருந்தான். ஏஜன்சி இந்திரனின் தொலைபேசி அழைப்பு நேற்று மாலை வந்ததில் இருந்து சாந்தியின் மனம் படபடத்துக் கொண்டிருந்தது.

இதற்கு முன்னம் மூன்று முறை இப்படித்தான் இந்திரன் வரும்படி கூப்பிட்டான். ரிக்கற், ரி.சி. என்று எல்லாம் கையில் கொடுத்து விமானப் பயணம் பற்றி விளங்கப்படுத்துவான்.
ஒரு நாள் விமான நிலையத்தோடு திருப்பிக் கூட்டிக் கொண்டு வந்தான். இன்னொரு முறை சிங்கப்பூர் வரை கூட்டிச் சென்று திரும்பிவர வைத்தான். இம்முறை நேரடியாக சுவிஸ் போவதற்கு ஒழுங்கு செய்வானோ, என்னவோ...!

சாந்தியின் மனதில் ஒரு புறம் எப்படியும் சுவிஸ் போய்ச் சேர வேண்டும் என்ற எண்ணம், மறுபுறம் முன்னர் ஏற்பட்ட அனுபவங்களின், கெடுபிடிகளின் அச்சம், விரக்தி, வெறுப்பு எல்லாமே; ஆனாலும் என்னவோ விதியின் வழியே என்று அவள் இன்றும் ஏஜன்சி இந்திரனிடம் செல்கிறாள்.

இடையே, "வேந்தன் நேற்று ஏதோ என்னோட கதைக்க வேணும் என்று சொன்னவர். பிறகு பேசாமலே போய்விட்டார்....! என்னவாக இருக்கும்...?" சிந்தனைகளோடு அவள் தன் புறப்பாடுகளில் ஈடுபட்டிருந்தாள்.

வாசலில் ஓட்டோ சத்தம் கேட்டு ரஜீவன் எட்டிப் பார்த்துவிட்டு உள்ளே ஓடி வந்தான். "அம்மா" அங்கிள் வந்திட்டார்!"

வேந்தன் வந்து கதிரைக்குள் இருந்ததுந்தான் ரஜீவன் நல்ல பிள்ளையாக அமைதியாக இருந்தான். ரஜீவன் அவ்வளவு குழப்படி. வேந்தனுக்;கு மட்டுந்தான் அவன் பயம். சாந்தி உள்ளே இருந்து குரல் கொடுத்தாள். "இருங்கோ வேந்தன் இந்தா வந்திட்டன்."
சாந்தி தானும் புறப்பட்டு சின்னவள் விதூஷியையும் தூக்கிக் கொண்டு "சரி போவம்" என்றாள். வேந்தனும் குழந்தைக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பையையும் எடுத்துக் கொண்டு ரஜீவனையும் கூட்டிக் கொண்டு வெளியில் வந்தான்.

கொட்டாஞ்சேனையில் இருந்து புறப்பட்ட ஓட்டோ வெள்ளவத்தை நோக்கிப் போகிறது. மழைத்தூறல் இன்னமும் இருப்பதால் இருபக்கத் திரைகளாலும் ஆட்டோவின் வாசல்கள் மூடப்பட்டிருக்கின்றன. ரஜீவன் வெளியே தலையை நீட்டி வெளியுலகை ரசிக்க வேண்டும் என்று அவதிப்பட்டான். பின்னர் ஓட்டோவின் பின்புற யன்னல் வழியே அவனது ஆவலில் தரிசனங்கள் கிடைத்ததால் அவன் அதில் ஐக்கியமாகி விட்டான். சின்னவள் விதூஷா அன்னையின் மடியில் ஆயாசமாயத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

வேந்தன் தன் வரவின் தாமதத்திற்கு சாந்தியிடம் விளக்கம் கூறினான். "காலமை ஒவ்வீசுக்குப் போய் வர வேண்டியிருந்தது. வாற வழியில சரியான மழையும் ட்ரபிக் நெரிசலும், அதால லேற்றாப் போச்சுது"

'பரவாயில்லை வேந்தன்! நானும் சமைச்சு வைச்சு இவையையும் வெளிக்கிடுத்தி நானும் வெளிக்கிட லேற்றாப் போச்சுது தானே!" இனி அங்க போக இந்திரன் என்ன சொல்லுறானோ தெரியாது..."

வேந்தன் திரை நீக்கலால் வெளியே வெறும் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தான்.
வேந்தனின் மௌனத்தை சாந்தியே கலைத்தாள். பொறுமை இழப்பு என்பதைவிட எதையும் நேரடியாக கதைத்துப் பேசி முடிவெடுத்துவிட வேண்டும் என்பதில் தீர்க்கமானவள் அவள். அதைவிட, என்ன, என்ன என்று அலைந்து கொண்டிருப்பதைவிட இதுதான். இப்படித்தான் என்று அமைதியாக இருப்பதில் தானே நிம்மதி இருக்கிறது.

"வேந்தன்! ஏதோ நீங்கள் என்னோட கதைக்க வேணும்! எண்டீங்கள். பிறகு பேசாமல் போட்டீங்களே! என்ன விசயம்?"

"நேரம் வரயிக்க கதைக்கலாம் எண்டிருக்கிறன்".
"நேரமெண்டால்..." சாந்தி குறுக்கிட்டாள்.

"இல்ல... எப்பிடிக் கதைக்கிறது எண்ணிறதும் பிரச்சினை"
"அப்படி என்ன பிரச்சினை?"

"சிக்கலான பிரச்சினை எண்டு ஒண்டும் இல்லை. ஆனால் நீங்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பீங்களோ எண்டு தான் யோசிக்கிறன்."

"என்ன வேந்தன்! பிழையா யோசிக்கிற தெண்டால், நான் என்ன சின்னப் பெட்டையோ? "நீங்கள் இனி எண்டாலும் மனம் திறந்து கதைக்க வேணும் வேந்தன்!'

"சாந்தி அது தான் உம்மட மனநிலையை அளந்து கதைக்கலாம் எண்டிருக்கிறன்"
"இப்ப ஒண்டும் பிரச்சினை இல்லை! நீங்கள் என்ன விசயமெண்டு சொன்னால் அதைப்பற்றி மேல யோசிக்கலாம்."

சாந்தி துணிவை ஊட்டினாள். உண்மைதான். அவள் வெளுத்ததை எல்லாம் பால் என்று நம்பும் பச்சைப்பிள்ளையில்லை. வாழ்வின் வேதனைகளை சகித்துக் கொள்ளப் பழகிக் கொண்டவள். சமுதாயத்தின் மன நுழம்புகளால் விரட்டப்பட்டு ஆதாரம் தேடி ஓடிக்கொண்டிருப்பவள்.

வேந்தனும் இதற்கு மேல் மௌனமாக இருக்க விரும்பவில்லை. நேரடியாகவே கேட்டான். "சாந்தி நீர் ஏன் சுவிஸ{குப் போக வேணும்?"

"இன்றைய நிலைமையில் அதைவிட வேற வழி எனக்கு தெரியேல. பிள்ளையளின்ற எதிர்காலம் தான் எனக்கு முக்கியம். அதுகளை ஒரு ஆதாரத்தோட சேர்த்துவிட்டனென்டால் போதும். என்னைப் பற்றி கவலைப்பட மாட்டன்..."

"அந்த ஆதாரத்தை இங்கேயே அமைத்துக் கொண்டிருந்தால் பிள்ளையளின்ர எதிர்காலம் நல்லா இருக்குமல்லே!"

"நீங்கள் எதைச் சொல்லுறீங்கள் வேந்தன்?"

"இல்லை; ஒரு அந்நிய சமுதாயத்தில எங்கட தமிழ் பிள்ளையள் வளருறதவிட எங்கட சமுதாயத்தில ஒழு நிழலில் வளருறது நல்லதுதானே!
"நல்லம்தான்; ஆனால் நிழல் அந்நிய சமுதாயத்தில தானே எனக்கு கிடைக்குது!

"அதில உங்களுக்கு நூறுவீதம் நம்பிக்கை இருக்கிறதா சாந்தி!"

"இல்லை; அவன் தம்பிதான். ஆனால் அவன் என்னை பார்க்காவிட்டாலும் என்ற பிள்ளையள எண்டாலும் பார்ப்பான் என்ற ஒரு அற்ப நம்பிக்கைதான் வேந்தன்."

"சாந்தி! அதைவிட நூறு விதமான நிழல் நான் தருவேனெண்டால்..."

வேந்தன் இப்போது தான் உள்ளத்தை உடைத்தான். அமைதியாக பதிலளித்துக் கொண்டிருந்த சாந்தி மின்சாரத்தால் தாக்குண்டவள் போல ஒருகணம் தடுமாறினாள். பின் உரக்கப் பேசினாள்.

"என்ன வேந்தன்! உங்களுக்கென்ன பைத்தியமா? நான் ஒரு விதவை. இரண்டு குழந்தைகளுக்குத் தாய்! சமூகம் உங்களை என்ன சொல்லும்! என்னை என்ன சொல்லும்?..."

"இல்லை சாந்தி! நான் நல்லா யோசிச்சு எடுத்த முடிவத்தான் சொல்லுறன்"

"நீங்கள் சொல்லலாம், செய்யலாம்! ஆனால் உங்கட பெற்றோர் என்ன சொல்லுவினம்? அவையள் உங்கள்ள எவ்வளவு எதிர்பார்ப்புகள் வைச்சிருப்பினம்? நான்தான் உங்களை மயக்கிப் போட்டன் எண்டுதான் ஊர் சொல்லும்."
"பின்னால உங்களுக்கும் சபலங்கள் வரலாம். இதால பாதிக்கப்படப் போறது நீங்கள் மட்டுமல்ல; நானும் என்ற பிள்ளையளும்தான்..."

வார்த்தைகளாகக் கொட்டத் தொடங்கியவள் பேசமுடியாது அழத் தொடங்கி விட்டாள். லேஞ்சியால் கண்களைப் பொத்திக் கொண்டு மௌனமாகினாள்.

வேந்தனாலும் எதுவும் மேற்கொண்டு கதைக்க முடியவில்லை. எந்தளவு உறுதியாக அவள் வேந்தனை கூறும்படி கூறினாளோ அந்தளவுக்கு எதிராக சாந்தி தனக்குள் அழுதாள். வேந்தனால் இப்போது தன் சார்பில் பேசமுடியும். ஆனால் சாந்தி பேசவில்லையே!

வேந்தன் கண்களை வெளியே விட்டு வீதியை வெறித்தான். அமைதியாக இருந்த குளத்தில் தானாக கல்லைப் போட்டு விட்டேனோ என்றும் சங்கடப்பட்டுக் கொண்டாள்.

"மாத்தயா! நவத்தன்னே கொஹெத?" ஆட்டோக்காரன் வேந்தனின் மௌனத்தைக் கலைத்தான். வெள்ளவத்தைக்குள் தாம் வந்து விட்டதை உணர்ந்த வேந்தன் ஏஜன்சி இந்திரனின் அலுவலகத்தின் குறிப்பைச் சொல்லி ஓட்டோவுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை எண்ணிச் சரிப்படுத்திக் கொண்டான்.

இப்போது மழை சற்று ஓய்ந்து விட்டது. ஆனாலும் தூறல் மேனியை நனைக்கும் அளவிற்கு பரவலாக இருந்தது.

"ஓட்டோவால் இறங்கி நேரத்தைப் பார்த்தான் வேந்தன். பதினொரு மணியாகிவிட்டிருந்தது. இந்திரன் பத்தரை மணிக்கு வரச் சொன்னவன், நாங்கள் வர லேற் எண்டு எங்கேயும் போனானோ தெரியேல..." சாந்தியிடம் கூறியபடி வேந்தன் முதலில் அலுவலகத்தின் உள்ளே நுழைந்தான். சாந்தியும் பிள்ளைகளும் பின்னால் தொடர்ந்தனர்.

இந்திரன் அலுவலகத்தில் இருக்கவில்லை. அவனது உதவியாளன்தான் இருந்தான். "பொஸ் காலமை போனவர் இன்னும் வரேல்லை. இப்ப வந்துவிடுவார் நீங்கள் வந்தால் இருக்கச் சொன்னவர்" உதவியாளன் வந்தவர்களை இருக்கச் சொல்லிவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தான்.

சாந்தி அழகானவள். இளமைக்கேற்ற துடிதுடிப்பும், குடும்பப்பாங்கான இலட்சணமும் உடையவள். நடுத்தர குடும்பத்தில் பிறந்த பாவம். அவளால் நினைத்ததை எல்லாம் எளிதில் அடைந்துவிட முடியவில்லை. யாழ்ப்பாணத்தில் அமைதியாக வாழ்ந்த குடும்பம். அன்பான கணவன். ஒரு மகன், ஒரு மகள். இளைய மகள் விதூஷி பிறந்திருந்த வேளை சாந்தி அடைந்த ஆனந்தத்தின் அளவுகோல் அது.

காலன் நெடுந்தூரம் அவர்களை நிம்மதியாக இருக்கவிடவில்லை. மூண்டு புகைந்து தீப்பிளம்புகளாக சிதறி இரத்தக் கறைகளை பூமியில் பிரட்டிக் கொண்டிருந்த யுத்தத்தின் கோரங்கள் விரைவில் தம் வேலையைக் காட்டின.
சாந்தியின் கணவன் இரகுபரன், தன் அலுவலகம் நோக்கி போய்க் கொண்டிருந்த வேளையில் எங்கிருந்தோ வந்த ஷெல் வீச்சில் அடிபட்டு அநாதையாய் இறந்து கிடந்தான்.

சாந்தியின் ஒரே ஆதாரம் கணவன் இரகுபரன் தான். அவன் இறந்த பின் அந்தியேட்டி முடியும்வரை இருபகுதி உறவுகளும் சாந்தியோடு நின்றன.

பேசிச் செய்த திருமணம்தான். ஆனால் உறவுகள் எல்லாம் அந்தந்த உயிர்கள் உள்ளவரை தானே! ரகுபரனின் இறப்போடு அவனது உறவினர்களின் உதவிகள் சாந்திக்கு தூரமாகிக் கொண்டிருந்தன.

கணவன் வேலை பார்த்த இடத்தில் கிடைத்த நட்டஈடும், இருந்த சொத்துபத்துகளும் நெடுநாட்களுக்கு சாந்தியை, பிள்ளைகளை தாங்கிக் கொள்ள போதுமானவையாக இருக்கவில்லை.

பொருளாதாரத் தடை ஒருபுறம். இதில் ஏறி நிற்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொலைத் தொடர்புக் கோபுரங்கள் போல உயர்ந்து கொண்டிருந்தன.

சவர்க்காரம் இல்லாத சாம்பல் துவையல். லாம்பெண்ணையும் இல்லாமல் சுட்டி விளக்குகள் அழுவதும், பச்சை அரிசிக் குறுநெல்லின் சோறு. வேலிச் செடிகளின் இலை குழைகளில் மரக்கறிகள். ஈரவிறகும், வேலிச் சுள்ளியும் சேர்ந்து ஊதி ஊதி மூட்டி அடுப்பெரித்து சமைத்து சாப்பிட்டுப் பலிக்காத கனவுகளோடு வாழ்ந்து... தம்மைத் தாமே பார்த்துக் கொள்ள முடியாமல் ஒவ்வொருவரும் தத்தளிக்கும் போது ஒரு விதவையை, இரு குழந்தைப் பிள்ளைகளின் பாரத்தை எப்படி கைகொடுத்துத் தூக்குவது?

இளமையின் இன்பங்களை, குடும்ப சாம்ராஜ்யத்தின் அரசியாக, வாழ்க்கையை அனுபவித்து வாழ நினைத்தவளுக்கு கிடைத்தவை இழப்புகளும் அவலங்களும்தான். துன்பங்கள் தொடர்கதையாக சாந்தி தன் வாழ்வின் பாதையை நினைத்து நொந்தாள், வெந்தாள், வெதும்பினாள்.

வாழ்வை மாய்த்துக் கொள்ளவும் எத்தனை தரம் எண்ணித் துணிந்திருப்பாள். மழலைகள் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு கண்களுக்குள்ளும் புகுந்து கொள்வார்கள். முடிவு, அவர்களுக்காகவாவது வாழ வேண்டும் என்ற எண்ண ஊற்றைத் திறந்து விடும்.

சரி வாழ்வோம்; என்றால் வழி! தெரிவுகளைப் பற்றித் தடுமாறிக் கொண்டிருந்தவளுக்கு தம்பியின் ஆறுதல் கடிதம் தெம்பைக் கொடுத்தது. "அக்கா! நீ பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு கொழும்புக்கு வா! நான் உங்களை சுவிஸ{க்கு எடுப்பிக்கப் போறன்..."

சாந்தி உண்மையில் இமயம் என்ற எதிர்பார்ப்புடன் தான் இரு குழந்தைகளையும் இழுத்துக் கொண்டு கொழும்புக்கு வந்தாள். எதிர்பார்ப்பில், எண்ணங்களில், கற்பனைகளில் கொழும்பு சொர்க்க வாசல்தான். ஆனால் நிஜத்தில்....
நாள் செல்லச் செல்லத்தான் அவள் உலகின் அடித்தளங்களை அடையாளம் கண்டு கொண்டாள். ஆரம்பத்தில் அடிக்கடி தொலைபேசியில் கதைக்கும் தம்பி பின் அதைக் குறைத்துக் கொண்டான். அக்காவின் பாரம் நனைத்த பஞ்சை தலையில் தானே தூக்கி வைத்ததுபோல் அவனது கருத்துக்கள் வளரத் தொடங்கின.

முதலில் சாந்தி கொழும்பில் லொட்ஜ் ஒன்றில்தான் தங்கியிருந்தாள். தம்பி ரவியும் ஆரம்பத்தில் அவ்வப்போது பணம் அனுப்பி வந்ததால் அவ்வளவு பிரச்சினை இருக்கவில்லை.

அந்த விடுதியில் தங்கியிருந்தவர்களையே சாந்தி எதற்கும் உதவி கேட்க வேண்டியிருந்தது. இவள் கொடுக்கும் கொமிஷனில் அவை சரிக்கட்டப்பட்டாலும் நாள் செல்லச் செல்ல சிலரது நடத்தைகள், போக்குகள் வெறுப்புக்குள்ளாக்கின.

ஊரில் அண்ணன் தங்கை என்று அவளோடு பழகுபவர்கள் எத்தனை பேர். இங்கு வந்து பணத்துக்கு முன்னால் மானத்தையும் மதிப்பிழக்க வைக்கும் அதே மனிதர்கள். அவர்கள் சாந்தியைக் கூட அந்த தரத்துக்கு இறக்கிவிட முற்படும்போது சாந்தி தனித்தியங்க முற்பட்டாள்.

அயலவரின் உதவியோடு ஊரில் இருந்து சில மாதங்களுக்கு முன் புறப்பட்டவள். கிளாலி கடலேரி தாண்டி, தாண்டிக்குளம் தாண்டி கற்காலத்தின் பயண சிரமங்களோடுதான் சாந்தி கொழும்புக்கு வந்து சேர்ந்தாள்.
இன்று வெளிநாடு போகவே புறப்பட்ட பின்பு கொழும்பில் மட்டுமென்ன உதவியும் ஊன்றுகோலும் என்று எண்ணிக் கொண்டவள். ஆனால் அவளது தனிமைக்கு சோதனைகள் தொடர்ந்த வண்ணந்தான் இருந்தன.

சாந்தியின் தம்பி ரவி சுவிஸில இருந்து ஏற்பாடு செய்த ஏஜன்சிதான் இந்த இந்திரன். அவனது பார்வைகளும் நடத்தைகளும் சாந்தியை எத்தனையோ தடவைகள் வெகுண்டெழ வைத்திருக்கின்றன. ஆனாலும் தம்பியிடம் போய் சேரும் வரை என்று பொறுத்திருக்கிறாள். சில சமயங்களில் இவள் நெருப்பு என்று உணர்ந்து இந்திரனும் மரியாதையுடன் நடந்து கொண்டிருக்கின்றான்.

சாந்தி நெருப்பாக எரிந்தும், நீராக அணைந்தும் பாதி இதயம் படைத்தவர்களோடு கொழும்பில் கடந்துபோன நாட்கள் அநேகம். தம்பி அனுப்பும் காசும் வர வரக் குறைந்து அவளது அன்றாட செலவுக்கே கஷ்டமான நிலமையும் வந்தது.

சாந்தியின் திருமணத்திற்கென்று ரவி அன்று செலவழித்த தொகையை விட அவளை வெளிநாட்டிற்கு அனுப்ப என்று செலவழித்த தொகை ஐந்தாறு இலட்சங்களைத் தாண்டி விட்டிருந்தது. சாந்தி பெண்ணாகப் பிறந்தவள். அவளால் தம்பி ரவியைத் தவிர வேறு யாரையும் நம்ப முடியாத நிலைமை.

அன்றும் ஒருநாள் ஏஜென்சியிடம் சென்றுவிட்டு திரும்பி லொஜ்ஜிற்குச் செல்ல பஸ் நிலையத்தில் வந்து நின்றாள். அவ்வழியே நடந்து சென்ற இளைஞன் ஒருவன் இவளைக் கண்டு தடுமாறிவிட்டு திரும்ப வந்தான்.

"எக்ஸ்கியுஸ் மீ" பாணியில் கதையை ஆரம்பித்தான். முதற் கணத்தில் சாந்தி துணுக்குற்றாள். பின்புதான் ஒருவாறு அடையாளம் கண்டுகொண்டாள்.

வேந்தனுக்கும் சாந்தியை அடையாளம் காண்பதற்கு சற்று நேரம் தேவைப்பட்டது. வேந்தனும் சாந்தியின் கணவன் இரகுபரனும் பால்ய கால சினேகிதர்கள். இரகுபரன் திருமண பந்தத்தில் இணைந்த காலத்தில் வேந்தனும் வேலை விடயமாகக் கொழும்புக்கு வந்துவிட்டான். பின்னர் வேந்தன் இரகுபரன் நட்பின் தொடர்புகள் குறைய தூரங்கள் நீளமாகின. நெடுநாட்களாக சந்திப்பும் அற்றுவிட்டன.

இரகுபரனின் இழப்பைக்கூட வேந்தன் அன்றுதான் அறிந்து கொண்டான். தொடர்ந்து சந்திப்புகளில் சாந்தி தன் அவலக்கதைகளை அவ்வப்போது வேந்தனிடம் கூறி வந்தாள். வேந்தன் நிலைமையை உணர்ந்தவன் என்பதால் தனக்கு அறிமுகமான வீடொன்றில் சாந்திக்கு அறை எடுத்துக் கொடுத்து தங்க வைத்தான். அதன் பின்னர் சாந்தியின் பிள்ளைகளுக்கு வேந்தன்தான் பாதுகாவலன்.

வேந்தன் இன்றுவரை சாந்தியின் நோக்கத்தில் வாழ்வின் பாதையில் குறுக்கிட விரும்பியதில்லை. ஆனாலும் ஏதோ ஒன்று அர்த்தம் புரியாத ஓர் பாசத்துளிர் அவனது அடிமனதில் உறுத்தியிருக்க வேண்டும்.
நாளை நடக்கப் போவதற்கு இன்றே சில அறிகுறிகள் தென்படுவதுண்டு. மழைக்கு முன்னால் கருமேகங்கள் சூழ்ந்து கொள்வது போல், இடையே இடிமுழக்க மின்னல் வரும். அந்த மின்னல் வெளிச்சத்தில் சில உண்மைகள் தெளிவு பெறும்.

நேரம் போனதே தெரியவில்லை. வாசலில் காலரவம் கேட்டு திரும்பிப் பார்த்தாள் சாந்தி.

ஏஜென்சி இந்திரன்தான் உள்ளே வந்தான். சுவர் மணிக்கூடு நேம் பன்னிரெண்டு மணியைக் காட்டி நின்றது. "வெரி சொறி அக்கா! உங்களை கன நேரம் காக்க வைச்சிட்டன் போல இருங்கோ டப் எண்டு கூப்பிடுறன்."

அந்த அறையே அதிரும்படி நடந்து உள்ளே சென்று தன் அறைக்குள் நுழைந்து கொண்டான் இந்திரன். தன் உதவியாளனை அழைத்து ஏதோ கதைத்துவிட்டு பின்புதான் சாந்தியை அழைத்தான்.

ஒரு தரம் முகத்தைத் துடைத்து தலையை கையால் கோதி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவனாய் சாந்தியிடம் பேச்சைத் தொடங்கினான் இந்திரன்.

"அக்கா இந்த முறை மட்டும் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கோ, இந்தா பாருங்கோ உங்கட பாஸ்போர்ட், ரிக்கற் எல்லாம்...! ரிக்கற்றில பாருங்கோ இண்டைக்கு இரவு ப்ளைட். "எனக்கு எயர்போர்ட் செற்றிங் செய்யிறவனை டப்பெண்டு இண்டைக்கு வேற ரேணுக்கு மாத்திப் போட்டாங்கள். அதால ஒண்டும் செய்ய ஏலாம இருக்குது. நான் இவ்வளவு நேரமும் அதில தான் அலைஞ்சு போட்டு வாறன். சரியா இன்னும் ஒரு கிழமைக்குள்ள உங்கள நேர சுவிஸ{க்கு அனுப்பிவிடுவன். இனி அனுப்புறதெண்டால் ஒரிஜினல் விசாவிலதான் அனுப்புவன்."

இந்திரன் தன் நழுவல்களை அடுக்கும் மட்டும் அமைதியாக இருந்த சாந்தி, உச்சி வெயில் நேரத்து எரிமலையாய்க் கொதித்தாள். அவளது கோபத்தின் வேகத்தில் மேசை மேலிருந்த சில உபகரணங்களும் சுவர் ஓரமாய் பறந்துபோய் விழுந்தன.

"இப்படி எத்தின நாள் ஏமாத்திப் போட்டாய்? ஏலாது எண்டால் ஏலாது என்று சொல்ல வேண்டியதுதானே! நான் நிம்மதியாய் ஊருக்கெண்டாலும் போய்ச் செத்திருப்பன்... இப்ப எத்தனை இலட்சம் செலவழிச்சுப் போட்டன்? நீ சின்னப் பிள்ளையைப் போல விளையாட்டுக் காட்டி கொண்டிருக்கின்றாய்!"

"நீ சுவிசுக்கு எங்கள அனுப்பவும் வேண்டாம் நாங்கள் எங்கேயும் போய் விழுந்து செத்திட்டால் ஒருவருக்கும் கஷ்ரம் இல்லை."

மடியில் கிடந்த விதூசியையும் தோளில் தூக்கி அணைத்துக் கொண்டு வெளியேறினாள் சாந்தி. வேந்தன் உள்ளூற தலையிடாவிடினும் நடந்தவற்றில் இருந்து உண்மைகளை அவன் ஊகித்துக் கொண்டான்.

வேந்தன் எதுவும் பேசவில்லை. மீண்டும் ஒரு ஓட்டோவைப் பிடித்துக் கொண்டு கொட்டாஞ்சேனைக்கு வந்தார்கள். வரும் பொழுதும் சாந்தி வேந்தனுடன் எதுவும் பேசவில்லை. கைலேஞ்சியால் கண்களைப் பொத்தியபடி மௌனமாக தனக்குள் அழுதபடியே வந்தாள்.

வேந்தனின் மனத்துள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக கேள்விக்குறிகள்! 'ஏன் அழுகிறாள்?, எதற்காக அழுகிறாள்?' என்ற புதிர்கள் மனதில். "நான் கேட்ட விடயத்திற்காகத்தான் இன்னும் அழுகிறாளா? அப்படியெனில் அவளை சமாதானப்படுத்துவது எப்படி?" வேந்தன் தனக்குள் அலைமோதிக் கொண்டிருந்தான்.

சாந்தியின் அறைவாசலுக்கு ஆட்டோ வந்ததும் சாந்தியின் வீட்டுக்கார அன்ரி அவசரமாக ஓடிவந்தாள். "சாந்தி உமக்கு ரெலிபோன் கோல். உம்மட தம்பி ரவி கதைக்கிறார்..." சாந்தி ஓட்டோவை விட்டிறங்கி நேரே வீட்டினுள் நுழைகிறாள். வேந்தன் பணம் கொடுத்து ஆட்டோவை அனுப்பிவிட்டு, பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு சாந்தியின் அறைக்குள் வந்தான்.

இதற்குள் சாந்தி ஏஜென்சி இந்திரன் இன்னும் ஏமாற்றிய விடயத்தைச் சொல்லியிருப்பாள். ஆனாலும் அவள் இன்னும் அழுதழுது தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பது வேந்தனின் காதுகளில் விழுந்து கொண்டுதானிருந்தது.

"தம்பி ரவி! இனியும் என்னால இஞ்ச இருந்து அவலப்பட ஏலாது. நீ ஏஜென்சிக்கு செலவழிச்ச காசை அவனிட்டையே வாங்கு. நான் உங்க வந்தாலும் நானோ பிள்ளையளோ காலம் காலமாக உனக்கு பாரமாக இருக்க வேணும். அதை நான் இப்ப விரும்பவில்லை. நான் என்ற வழியைப் பார்த்துக் கொள்ளுறன்."

தொலைபேசியை வைத்துவிட்டு விம்மலோடு முனகிக்கொண்டு அறைக்குள் ஓடி வந்தாள் சாந்தி.

சாந்தி புலம்பினாள். "வேந்தன் என்னால ஏலாது இந்த உலகத்தில வாழ இனியும் ஏலாது. என் பிள்ளையள எங்காவது அனாதை இல்லத்தில சேர்த்து விடுங்கோ! நான் செத்துப் பேறன்...."

சாந்தியின் வாய்வழி உதிர்ந்த வார்த்தைகள் வேந்தனை ஒருகணம் சித்திரவதைக்குட் படுத்தியிருக்க வேண்டும். "என்ன சாந்தி இது பைத்தியக்காரத்தனமா? நான்தானே சொல்லுறன் நான் ஏற்றுக்கொள்ளுறன் எண்டு..."

"அதெப்பிடி வேந்தன்?" சாந்தி அழுகையை நிறுத்தி ஆதங்கத்துடன் கேட்டாள்.

அதாவது இந்தப் பிள்ளைகளுக்கு உயிரோட இருக்கிற அப்பா. உனக்கு நான் கணவன், என்னுடைய நண்பன் இரகுபரனுக்கு நான் மாற்றீடு. அவ்வளவுதான்."

"இது சாத்தியமா"சாந்தி குழந்தையாகிக் கேட்டாள்.

"ஏனில்லை? என்னைப் பொறுத்தளவிலை இது எப்பவோ நிச்சயிக்கப்பட்ட முடிவு" என்றான் வேந்தன்.

வேந்தனின் மடியிலே சாந்தி நம்பிக்கையோடு சாய்ந்தாள்.

[15-03-1998 தினகரன் வாரமஞ்சரி]

--------------------------------------------------

10 உள்ள வயல்

அம்மா தேனீருடன் வந்து என் சுவரில் மணிக்கூட்டைப் பார்க்கிறேன். நேரம் எட்டு மணியைக் காட்டி நிற்கிறது. இது கதிரவனின் உதயத்தை வைத்து கணித்த யாழ்ப்பாண நேரமா, அல்லது மின்சார சேமிப்புக்கென்று கம்பிகளை முன்னுக்கு பின் இழுத்து வந்து விட்ட கொழும்பு நேரமா? அல்லது நாள் இவ்வளவு நாளும் அனுபவித்த ஜேர்மன் நேரமா? என் மனதைப் போல மணிக்கூட்டுக் குள்ளும் குழப்பம்.
தலையைச் சொறிந்தபடி அம்மாவின் கையில் இருந்த தேநீர்க் கோப்பையை வாங்கி உதடுகளை நனைத்துக் கொள்கிறேன். அம்மா எப்போதும் சுடச்சுடத்தான் தேனீர் போடுவா. அவவுக்கு இந்த வயதிலும் சுடச்சுடத்தான் தேனீர் ஆற்றி மூக்குப்பேணியால் அதே சூட்டுடன் அண்ணாந்து வாய்க்குள் விட்டுக் கொள்வதில்தான் விருப்பம். அதிலும் அம்மா தன் கைபடத் தேனீர் தயாரிப்பதனால் வேறு எந்த 'வெஸ்ரேண்' ஃபுட்டும் இதற்கு இணையாக மாட்டாது. அந்த சுகத்தையும் அனுபவிக்க முடியாது.

செம்மண்ணில் சுவர்கட்டி, கூரையை பனை ஓலையால் வேய்ந்த வீடு, முன்னால் தலை வாசல், தலைவாசலில் மண்திண்ணை. திண்ணையில் இருந்து தூணோடு சாய்ந்திருந்து மாசி மாதக் காலைக் குளிரில் இந்த தேனீரைக் குடிக்க வேண்டும்.

திடீரென இருபது வருடங்களுக்குப் பின்னால் போன நினைவுகள் மீண்டும் திரும்பாமல் திரும்பின. அதிகம் என்னுடன் மினைக்கெட அம்மாவுக்கு நேரம் இல்லை. அவ்வளவு வேலைப்பழு. எனது காலை ஆகாரத்திற்கான கே.ஓ.ரி.யை எடுத்துக் கொண்டு குசினிக்குள் விரைகின்றா. இனி என்ன; சும்மா சுருண்டு கிடந்த பாம்பு சரசரப்பில் விழித்துக் கொண்டு விட்டது. இனிப் படம் எடுப்பது தான் வேலை.

அதுவும் யார் யாரோ எடுத்து அனுப்பி வைத்திருக்கும் படங்களை ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து ஏதோ ஒன்றைத் தேடுவதுதான் வேலை. ஒவ்வொரு படமாகப் பார்க்கிறேன். நடிகைகள் தேர்வுக்குக் கூட ஒரு திரைப்படத தயாரிப்பாளன் இப்படி ஆழமாய்ப் பார்க்க மாட்டான். எனக்குத் தேவை இருக்கிறது; மணமகள் தேர்வுக்கான தேவை.

சிலரது தெரிந்த முகங்கள் போலவும் படுகின்றன. சில வேளைகளில், பத்து வருடங்களுக்கு முன் நான் ஏ.எல். படித்த காலத்தில் ஹிண்டு கொலிச்சுக்கு போய்வரும் போது கண்டிருக்கலாம். சிலர் கைவிரலைச் சூப்பிக் கொண்டு டிரிங் பொட்டிலும் புத்தகப் பையுமாக பிறைமறி ஸ்கூலுக்குப் போயிருப்பர், அல்லது ஐந்தாம் வகுப்பு ஸ்கொலஸிப் சோதனைக்காக ரியூசனுக்குப் போயிருப்பார்கள். இப்போது வண்ண வண்ணப் படங்களில் போஸ் கொடுத்தபடி கல்யாணச்சந்தையில் காட்சிப் பொருளாகி நிற்கின்றார்கள். இவர்களை சீதன ஆதனங்களோடு கொள்வனவு செய்யும் மாப்பிள்ளைகளுக்காக ஏற்றுமதி செய்துவைக்கவும் சில பெற்றார்கள் முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள்.

நானும் கூட இப்போது அம்மாவைப் பார்க்க என்று வந்துவிட்டு மணமகள் கொள்வனவில் தானே ஈடுபட்டு நிற்கிறேன்.

ஜேர்மனியில் இருந்து அவசர அவசரமாக கொழும்பு வந்து, அதே வேகத்தில் யார் யாருடைய கால்களை எல்லாம் பிடித்து, டொச் மார்க்குகளை விசுக்கி பிளேன் எடுத்து யாழ்ப்பாணம் வந்து இன்றுடன் பதினைந்து நாட்கள் ஓடி நகர்ந்து விட்டன. இதில் பிந்திய பதின்மூன்று நாட்களும் எனக்கு இந்தப் படங்களுள் மூழ்கி தேர்வு வைப்பது தான் தொழிலும் பொழுது போக்காகவும் மாறி விட்டது.

ஒரு பத்து வருட காலத்துள் இந்த யாழ் மண் எப்படி எல்லாம் மாறி விட்டது. சமுதாய மாற்றங்களுடன் தனிமனித வாழ்வியல் மாற்றங்கள் எல்லாம் ஒரு நெடுங்கனவைப் போல நீள்கின்றன. நாளுக்கு நாள் புதுவடிவம் கொண்டு, வேறுவேறு உற்சாகங்களுடன் காலத்தைக் கடத்தி வரும் உள்நாட்டு யுத்தமும் கொடூரமானதுதான்.

அம்மாவிடம் இருந்து அவ்வப்போது வந்த கடிதங்கள் சுமந்து வந்த சேதிகளோ, தங்கச்சி ஜேர்மனிக்கு வந்தபோது நேரில் சொன்ன சேதிகளோ பலப்பல.

இன்னும் சுற்றிச் சுற்றி மனிதனை விரட்டிக் கொண்டிருக்கும் இலத்திரனியல் சாதனங்கள் உலகச் செய்திகள் என்று சொன்னவையோ.... அவை மூலம் நான் அறிந்து கொண்டதெல்லாம் சொற்பமே! அங்கு நேரில் வந்த பின்புதான் உண்மைகள் என்னை கொடூரமாக வாட்டி நிற்கின்றன.

இந்த பதினைந்து நாட்களிலும் அம்மா எத்தனை கதைகள் சொல்லியிருப்பா! நிலாக்காட்டிச் சோறூட்டப்படும் சின்னக் குழந்தையைப் போல் வாசற் படியில் குந்தியிருந்து இரவிரவாக எத்தனை கதைகள் அம்மாவிடம் கேட்டறிந்திருப்பேன். பக்கத்து வீட்டுச் செந்தில் எவ்வளவு விசயங்கள் சொல்லியிருப்பான்.
நான் ஜேர்மனுக்குப் போகும் போது செந்தில் தத்தித் தவழும் குழந்தை. இன்று எத்தனை விடயங்களைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறான்? யுத்த காலத்தின் சோக வடுக்கள் எத்தனை தூரம் அவனது பிஞ்சு இதயத்தைக் குத்தி குதறி காயப்படுத்தி வைத்திருக்கின்றன.

இன்றும் எனக்குத் தெரியாத சில உலக அரசியல் அறிவின் நுணுக்கங்களை, யுத்த தந்திர வியூகங்களை, யுத்த தளபாடங்களை எவ்வளவு தெளிவாக அறிந்து வைத்திருக்கிறான். இருட்டும், மின்சாரம் இல்லாத இரவுகளும் இந்த மனிதர்களை எவ்வளவு தூரம் திசை திருப்பி விட்டிருக்கின்றன!?

காலத்துக்குக் காலம் நடந்தேறி முடிந்த கோரங்களின் வரலாற்று அடையாளங்கள் இன்னும் ஆங்காங்கு தொங்கித் தெரிகின்றன. சந்தியில் இன்னும் இருக்கும் உடையார் வீட்டு மதிற் சுவரை வெட்டிப் பார்த்தால் சரித்திர ஏடுகளாய் புரட்டிப் புரட்டிப் படிக்கலாம்.

இத்தனைக்கும் மத்தியில் இந்த மண்ணை, அதன் வளத்தையே நம்பி மனிதர்கள் சோமாலியாவின் சோகத்தை அண்மித்தவர்கள் போல ஒரு வியட்நாமிய மறுபதிப்பு படைக்கப்பட்டதைப் போல உணர்வுகளும் உடல்களும் உருமாறிப் போய் இருக்கின்றனர்.

இதற்குள் எத்தனை பேர் இடம்மாறிப் போயிருக்கின்றனர். எத்தனை பேர் இல்லாமற் போயிருக்கின்றனர். என் தலையே வெடித்து விடும் போல ஊர் சிதறிப் போய்க் கிடக்கிறது.

அன்று நான் உல்லாசமாக சைக்கிளில் பறந்து திரிந்த பலாலி றோட், ஆடியபாதம் றோட், பொற்பதி றோட், தின்னவேலி ஒழுங்கைகள் எல்லாம் அநாதரவாகக் கிடக்கின்றன. பனங் குற்றிகளும் சீமேந்துப் பாளங்களும் குறுக்கே விழுந்து 'தடை செய்யப்பட்ட பகுதி' என்ற அரை குறை அறிவிப்புகளோடு என்னைப் பார்த்து ஊமையாய் அழுகின்றன.

தெருவோர மதில்களில் வீர மரணங்களின் நினைவுப் பொறிப்புகள் பலவும் சிதைக்கப்பட்டு இடறிப் போய்க் கிடக்கின்றன. வேலிகள் வெட்டப்பட்டு ஒழுங்கைகள் அணை உடைத்த நதியாகி யாழ்ப்பாணம் தடுமாறி, தடம்மாறி கிடக்கிறது. தற்போது தற்பாதுகாப்பென்று தலை நிமிர்ந்து நின்ற பனைகள் கூட அநேகம் காணாமற் போய்விட்டன.

வீட்டுப் படலைக்குக் கூட தனியாகப் போகப் பயப்படுகிற யாழ்ப்பாணம் பொழுதுபட்டால் தென்னோலை அசையும் நிழல் கூட நெஞ்சைக் குறி வைத்து மிரட்டும் பிரமை. 'திறந்த வெளிச்சிறை' என்று யாரோ எங்கோ சொன்னது இங்குதான் பொருந்துகிறது.

நான் எண்பத்தாறில் ஜேர்மனுக்குப் போகும்போது அப்பா சாதாரண தமிழ் வாத்தியார் தான். நான் மூன்று முறை ஏ.எல். எடுத்தும் பல்கலைக்கழகம் போக முடியாமற் போன ஜீவன். வேறு ஏதாவது படிக்கலாம் என்றால் அம்மாவுக்கு விருப்பம் இல்லை. 'இவன் இஞ்ச நிண்டான் எண்டால் இயக்கம் எண்டு எதிலையாவது போய் இல்லாமற் போய்விடுவான்' என்று காணியையும் ஈடுவைத்து ஏஜன்சி ஒன்றைப் பிடித்து என்னை ஜேர்மனிக்கு அனுப்பி வைத்தார்.

பிறகென்ன அம்மாவின் ஒவ்வொரு கடிதமும் ஒவ்வொரு 'பில்'லுடன் வரும். ஈடுவைச்ச காணி மீண்டு, அக்காவின் கல்யாண வீடு முடிச்சு, பின் தங்கை கவிதாவை ஜேர்மனிக்கு கூப்பிட்டு அங்கேயே அவளுக்கு கலியாணமும் செய்து வைச்சன். அவர்களுக்குப் பின்னால் ஒரே ஒரு தம்பி அவனையும் படிக்க எண்டு இந்தியாவுக்கு அனுப்பி வைச்சன்.

இவ்வளவையும் நான் சாதிக்க எத்தனை விதமான தொழில்களைச் செய்து;.... நினைத்தால் எல்லாவற்றையும் தொகுத்து இன்னொரு வனவாசம் எழுதலாம்.

இதற்கிடையில் அப்பா நோய்வாய்ப்பட்டு இறக்க, அப்பாவின் அந்திரட்டிக்குக் கூட யாழ்ப்பாணம் வந்து கொள்ள முடியாமல் தவிச்சுக் கிடந்ததெல்லாம் அடிமனதில் இன்னமும் கறள் இரும்பு கிழித்த காயங்களாக உறுத்திக் கொண்டிருக்கின்றன. ஜேர்மனியில் எனக்கு நிரந்தர விசா கிடைச்ச பிறகும் கூட அம்மாவைப் பார்க்க ஊருக்கு வர முடியாத நிலையில் எத்தனை நாள் தனிமையில் கிடந்து அழுதிருப்பன்.

சூரியக்கதிர் சூறாவளியாகி சுழன்றடித்த போது முழு யாழ்ப்பாணத்தையுமே விரட்டி விட்டது. காலாதி காலமாக சேர்த்து வைத்த தாயாதி சொத்துக்களை எல்லாம் விட்டுவிட்டு இந்த மக்கள் உடுத்த உடுப்புடன் ஊரைவிட்டு ஓடியிருக்கிறார்கள்.

அம்மாவும் அந்த அலையுள்தான் அகப்பட்டுப் போயிருக்கிறார். அப்பாவின் துணையும் இல்லை. பெற்ற பிள்ளைகளின் உதவியும் இல்லை. அயலவர் துணையுடன் புறப்பட்டிருக்கிறார். இந்த வேளையில் அக்காவாவது அருகில் இருந்திருந்தால் கூட அம்மாவுக்கு ஆறுதலாய் இருந்திருக்கும். அவவும் கலியாணம் முடிச்ச கையோட கனடாவில் போய் அத்தானோட செற்றில் ஆகிட்டா.

சே! அவ அக்கா இஞ்ச இருந்திருந்தால் கூட சின்னப் பிள்ளையளோட எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பா? அம்மாவும் இடம்பெயர்ந்து சாவகச்சேரிக்குப் போய் எங்கெல்லாமோ இடம் மாறி மாறி இருந்து அவலப்பட்டிருக்கிறா.

நாட்களின் நகர்வில் யாழ்ப்பாணத்தின் ஒற்றைக் கதவொன்று ஓரமாய்த் திறக்கப்பட, அப்பாவின் நினைவுகளும் அம்மாவை விரட்ட ஊருக்குள் வந்தவர்களோடு அம்மாவும் திருநெல்வேலிக்கே வந்து விட்டார்.

யாழ்ப்பாணத்துக்கு கொழும்பில் இருந்து விமான சேவை நடக்குது என்று அறிஞ்ச கையோட ஒரு மாத கால லீவையும் எடுத்துக் கொண்டு நானும் வந்து இறங்கிவிட்டன். வந்து சேர்வதற்குள்ளேயே போதும் போதும் என்றாகி விட்டது.
வந்ததும் வராததுமாக அம்மா சாதகக் குறிப்புகளுடனும் பெண் குமர்களின் வண்ணப் படங்களுடனும் நிற்கிறார். இடையிடையே புறோக்கர் என்றும் இருவர் மாறி மாறி வீட்டிற்கு வந்து போய்க் கொண்டிருக்கின்றனர்.

எனக்கு கல்யாணம் செய்து வைக்க வேணுமாம். அம்மாவின் ஆசைக்கு அவ்வளவு அவசரம். எனக்கோ ஊருக்கு ஓடோடி வந்து கண்ட அவலங்களின் தெறிப்பால் மனம் கொண்ட தடுமாற்றம் இன்னமும் தளரவில்லை.

நண்பர்கள் சேந்தன், ரமணன் கூட இந்த நேரத்தில் உயிரோடு இல்லை. இருந்தால் எவ்வளவு நல்லாய் இருக்கும். உறவினர்களில் கூட அன்போடு பழகிய ஒரு சிலர் இன்று உயிரோடு இல்லை, சிலர் ஊரிலேயே இல்லை. ஊரே கிழித்துப் போட்டுவிட்ட ஒரு ஓவியத்தைப் போல.... வீடுகள் எல்லாம் சோபை இழந்து இடுகாட்டு சிலுவைகளைப் போல.... கல்லறைகளாகி, கூரையிழந்து சில சுவர்கள் சாய்ந்து சில.... பற்றைகள் சூழ்ந்து கொடிகள் படர்ந்து எங்கும் சுடுகாட்டின் விதவைக் கோலம் மனங்களும், முகங்களும் கூட அச்சத்தால் சுருங்கி மௌனமாகவே பேசுகின்றன.

"இந்திய இராணுவம் வந்து இருக்கேக்கயும் இப்படித்தான்ரா தம்பி இருந்தது. கொஞ்சக் காலம் போக எல்லாம் தானாய்ச் சரிவரும்" அம்மா மட்டும் இப்படி அடிக்கடி ஆறுதல் கூறிக்கொள்ளுவா. ஆனாலும் என்ன எத்தனையோ இழக்க முடியாதவற்றை இன்று இழந்து விட்டோமே!

சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்கையில் ஒரு முகம் கண்களைத் தரித்து நிற்க வைத்து விடுகிறது. திரும்பிப் பார்க்கிறேன். வெள்ளை அட்டையில் சில சங்கேதக் குறிகள் மட்டும் உண்டு. மீண்டும் பார்வையில் லயித்து தேடலை விரட்டி விடுகிறேன். ஒரு வித லயிப்பு மட்டும் மீதமாகிறது. இதர விபரங்களை அம்மாவின் சாதகக் கட்டில் தான் தேட வேண்டும்.

குசினிக்குள் மும்முரமாய் சமையலில் இருந்த அம்மாவிடம் என் மையலைக் காட்டுகிறேன். அம்மா எழுந்து மீதி விபரத்தைத் தேட அறைக்குள் ஓடுகின்றா. அம்மாவின் கை துடைப்பட்ட கதவுத் திரைச்சீலையும் வெட்கித்து நின்றது. அம்மா விபரத் தாளோடு வர ராகுகாலம் ஆகிவிட்டது. பக்கத்து வீட்டுப் பவளம் மாமி வீட்டிற்குள் வந்து விட்டா.

அம்மாவிடம் அடிக்கடி வந்து அரிசி, சீனியில் இருந்து தேங்காய், செத்தல் மிளகாய் வரை இரவல் வாங்கிச் சீவிக்கும் இந்தச் சீவன் பவளம் மாமி. இனி ஊருக்குள்ள உறவு எண்டு எதையும் நாங்கள் பெரிசு படுத்திறதில்லை. காரணம் அவர்கள் தள்ளி விழுத்தப்பட்டிருக்கும் குடும்ப பொருளாதார நிலைமை அப்படி.

பவளம் மாமியின் கண்ணில் அந்தப் படமும் சாதகக் குறிப்பும் அப்பட்டமாக மாட்டிக் கொண்டு விட்டன. படையினரின் சோதனைச் சாவடியில் அடையாள அட்டை இல்லாமல் அகப்பட்ட ஒரு அப்பாவியின் நிலை எனக்கு. இரண்டு விபரங்களும் மாமியின் கைகளுக்கு மாற்றப்பட்டன. மாமியின் கண்கள் துரிதமான புலன்விசாரணையில் இறங்கின, கணநேர மௌனத்தின் பின் பரிசீலனையில் ஏதோ இடறியிருக்க வேண்டும். மாமி துடித்தெழுந்தார்.

"எட பெடியா! உனக்கேன்ரா இந்தப் பெட்டைய! இது கந்தர் மடப்பகுதியல்லோ! இடம் நல்ல இடம்தான்! ஆனால்... நீ இதுக்குள்ள போறது அவ்வளவு நல்லாய் இல்ல! மாமி வார்த்தைகளை வெட்டி நிறுத்த நானும் அம்மாவும் தடுமாறிப் போனோம். ஓடிக் கொண்டிருந்த மினி பஸ்ஸில் 'சடின் பிறேக்' போட்டதாய் ஆடிப் போனோம்.

எம் இருவரையும் இரண்டு சுற்றில் நோட்டம் விட்டுவிட்டு மாமி தொடர்ந்து பந்து வீச்சை ஆரம்பித்தார். "ரிவிரெச"வுக்குப் பிறகு நாங்கள் எல்லோரும் ஊருக்குள்ள திரும்பி வந்தனாங்களல்லோ! வந்த கையோட உங்க கந்தர் மடத்தில அரசடியில ஒரு பிரச்சினை நடந்ததல்லோ! அதில... இந்தப் பெட்டையையும் போக்கறுவான்கள் கெடுத்துப் போட்டுப் போட்டான்கள். பிறகு இந்தப் பெட்டை சைக்கிளில போக்கேக்க அக்சிடென்ற் பட்டதெண்டு சொல்லி மூண்டு நாள் ஆஸ்பத்திரியில் வைச்சிருந்து போட்டுத்தான் வீட்ட கொண்டந்தவை.

வடிவான குணமான பெட்டைதான் எண்டாலும்.... ஏன்ரா ராசா எங்களுக்கு இந்த இடம்?"

அக்கம் பக்கம் பார்த்து வார்த்தைகளின் வேகத்தை ஏற்றி இறக்கி பவளம் மாமி விட்டெறிந்த சுழற்பந்து வீச்சு எனது விக்கற்றுக்குத்தான் குறி பார்க்கப்பட்டது. ஆனால் முதலில் விழுந்தது அம்மாதான்.

மாமியின் அறிமுகக் குறிப்புகள் அம்மாவுக்கு மிதிவெடியாக, அம்மா ஒற்றைக் காலை இழந்து நின்றா. என்னையும் மாமியையும் மாறி மாறிப் பார்த்தார். மாமியோ விட்டபாடாக இல்லை. அம்மா எதையும் முற்று முழுதாக நம்ப மாட்டார். இது பவளம் மாமிக்கு நல்லாய்த் தெரியும். இன்னும் புள்ளி விபரங்களை ஆதாரமாகத் தூக்கினாள்.

"இன்ன ஒழுங்கையில் இன்னாற்ற இளைய மகன் சுந்தரமூர்த்தி காட்டற்ற இளைய மகள் சுரேசினி தான் இவள். இவளின்ர ஒரு தமையனும் தமக்கையும் வெளிநாட்டில.

'இவள் மட்டுந்தான் இஞ்ச தாய் தகப்பனோட இருந்தவள். இவளும் உங்க ஹின்டு லேடீஸ் இலதான் படிச்சவள்" அம்மாவுக்கு இப்போது மாமியின் சமர்ப்பணம் துலாம்பரம் ஆகிவிட்டது.

அம்மாவின் கண்களில் கலக்கம் அரும்பி இறங்கத் தயாராயிருந்தது. அம்மா என்னைப் பார்த்தார். நான் மாமியைப் பார்த்தேன். மாமி கண்களால் மிரட்டினார்.

அது மிரட்டலா அல்லது என்மேல் காட்டும் அனுதாபமா, இல்லை தப்பினாய் போ என்ற எச்சரிக்கையா? இல்லை சிவப்புக் கொடியா? நான் சிந்தித்துத் தீர்ப்பதற்குள் மாமி தான் வந்த விடயத்தைக் கூறி அம்மாவுடன் அடுக்களைக்குள் புகுந்து கொண்டாள். என்னில் மட்டும் ஏதோ ஓர் இடைவெளி தெரிந்தது. சலனமாக அந்த சுரேசினி என் உள்ளே இருந்தாள்.

அம்மா மாமியோடு கனநேரம் குசுகுசுத்து கதைத்த பின்னும் முடிவுறாமல் ஹோலுக்குள் இருந்த என்னிடம் வந்தார்கள். "என்ன தம்பி, என்ன செய்யிறது! அது பிரச்சினை எண்டால் விட்டுவிட்டு வேற நல்ல இடமாய்ப் பார்ப்பம். நீ ஒண்டுக்கும் யோசியாதை!.." அம்மா என்னிடம் யாசகத்தோடு ஆறுதல் கூற வந்தாள்.

தவம் கலைந்த முனிவனின் நிலை எனக்குள். கண நேர ஓட்டத்துள் யுகாந்தர குமுறல்கள் உள்ளே. அதிகம் பேச முடியவில்லை; அம்மாவிடம் என் பக்க வாதத்தை வார்த்தைகளாக்கினேன்.

"எனக்கு என்னவோ இந்தப் பிள்ளையப் பிடிச்சிருக்கு. செய்து வைக்கிறதெண்டால் இதைப் பேசுங்கோ. இல்லாட்டில் லீவு முடிய நான் திரும்ப ஜேர்மனிக்குப் போறன்" எனது வாதங்கள் அம்மாவிற்குப் பொருந்தவில்லை. இன்னும் சில நியாயங்களுடன் என்னை வசப்படுத்தப் பார்த்தாள். முடியாத நிலையில் என்மேல் நாகாசுரத்தையே ஏவினாள்.

"இவ்வளவும் தெரிஞ்ச பிறகும் நீ இதைச் செய்தால் உனக்கு மட்டுமல்ல, உன்ர சகோதரங்களு க்குந்தானே அவமானம்!..." அம்மாவுக்குத் தெரியும் நான் சகோதரங்களுக்காக சரணடைவேன் என்று. ஆனாலும் எனக்குள் ஒருவன் உள்ளிருந்து எழுந்து வந்து அம்மாவுடன் பேசினான்.

"எனது தங்கை ஏஜென்சிக்குள்ளால் தான் ஜேர்மனிக்கு வந்தவள். அந்த இடைவெளியில் என்னவெல்லாமோ நடந்திருக்க சாத்தியம் இருக்குது. ஜேர்மனியில் நான் அறிந்தவரையில் நடந்த நிகழ்வுகள், பிறழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக சான்றுக்கு வந்தன. அவ்வளவும் அறிந்து இருக்க ஒருவன் என் தங்கைக்கு தாலி கட்டினவன்தானே! ஏன் நான் மட்டும் விதிவிலக்காக நடக்க வேண்டும்!"

இதற்கு மேல் அம்மா எதுவும் பேசவில்லை. எனது மனைவி தேடும் வேலை விரைவாக முடிந்ததில் எனக்கு நிம்மதி.

[02-05-1999 ஞாயிறு தினக்குரல்]

--------------------------------------------

11 அந்தகம்

'அய்யா இப்ப நாங்கள் எங்க போறம்?' ஏறத்தாழ பத்து நிமிட நேரத்துள் இந்தக் கேள்வியை நான் மூன்றாம் முறையாகக் கேட்டிருக்கிறேன். 'முல்லைத்தீவுக்கு, மல்லாவிக்கு' என்றுதான் முன்பு பதில்கள் வந்தன. அதை உறுதிப் படுத்துவதற்காக மீண்டும் கேட்டுப் பார்த்தேன். "சோதி அண்ணை! பயப்பிடாதையுங்கோ! மல்லாவிக்கு உங்கட வீட்ட உங்களக் கொண்டுபோய் விடப்போறம்!' நீண்டதொரு நிம்மதிப் பெருமூச்சி சுவாசப்பையின் அடி மூலையில் இருந்து எழுந்து வந்து சந்தோஷித்தது.

"அய்யா! இது அம்புலன்ஸோ இல்லாட்டி சும்மா 'வானோ'?" எனது தர்க்க ரீதியான குறுக்குக் கேள்வி, உள்ளே ஒரு கெட்டிக்காரப் பூரிப்பு. ஆனால் பதில் சற்றுக் கனமாக வந்தது. "சோதி அண்ணைக்குச் சந்தேகம் தீரேல, இது அம்புலன்ஸ் தான், றெட்குறொஸ் அம்புலன்ஸ், முல்லைத்தீவு ஒப்பிஸ்ஸான்.... வவுனியாவுக்கு வந்து திரும்பிப் போறம்...."

வீல் செயாரில் என்னைக் கொண்டு வந்து அம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி, இருக்கையை சரி செய்தபடி அற்றென்டன்ற் எனது கேள்விகளுக்குப் பதிலிறுத்துக் கொண்டிருந்தான். அதற்குள் ஆங்கிலம், சிங்களம், தமிழ் கலந்து ஒரு சில குரல்கள் கேட்டன! ஒரு குரல் சற்று அதிகாரமாக "சந்திரன்' எங்க யார் பேசன்ற்? சோதிலிங்கம் சரியா? வேற ஆர் வாறது? எங்க ட்றைவர்?"

தொன்னூற்றைஞ்சு ஒக்ரோபர் இடப்பெயர்வு வந்திருக்காவிட்டால் எனக்கு இந்த கேவலம் வந்திருக்குமோ? காற்று முட்கள் வேதனைகளாகி தோலில் குற்ற, மனம் நடந்தவைகளை நினைத்து அந்த வலிகளுக்கு ஒத்தடம் போடுகிறது.

உடுத்த உடுப்புகளோட எடுத்த சில உடு புடவைகள், பிள்ளைகளுக்கு பால் மா, சீனி, கிடந்த கொஞ்ச அரிசி, கையில கிடந்த சில நகை நட்டுகள். இதுகளத்தான் கையில அப்ப எடுத்து வர முடிஞ்சுது. கோண்டாவில்ல இருந்து கல்வியங்காட்டுக்குப் போய், நாவக்குழி போய், உள் றோட்டுகளால கிளாலிக்கு வந்து, போட் ஏறி நல்லூர் வந்து கிளிநொச்சி வந்துதான் பெருமூச்சு விட்டம்.

அப்ப மூத்த மகளுக்குப் பத்து வயது, ஸ்கொலசிப் எழுதிப் போட்டு இருந்தவள். இளைய பெடியள் இரண்டும் ஆறு வயதும், நாலு வயதும், கடைக்குட்டி பெட்டை, கைக்குழந்தை.

இருந்த இரையில இரண்டாயிரம் சுருட்டு அரை நாளில் சுத்துவன். சா! அந்தச் செல்வாக்கு அண்டையோட போச்சுது. வீடுவாசல், சொந்த பந்தம் எல்லாம் விட்டு, பிரிஞ்சு தெல்லிக்குத் தெல்லி போய்,.... சே!.... கையில கிடந்த காசும் போய், நகை நட்டு எல்லாம் அறா விலைக்குத் துலைச்சு, தொழில் துறை இல்லாம அலைஞ்சு, பெண்சாதி பிள்ளையள் பட்டினியாய்க் கிடந்து, மூத்தவளுக்கும் எனக்கும் மலேரியா வந்து, ஆஸ்பத்திரியோட அலைஞ்சு - மல்லாவிக்கு வந்த பிறகுதான் கொஞ்சம் தலை நிமிந்தம்.

மல்லாவியில ஒரு முதலாளிக்கு நான் சுருட்டுச் சுத்திக் குடுத்தன். மூத்தவள் படிப்பில வலு ஈடுபாடு. அங்க அயல் பள்ளிக்கூடத்தில சேர்த்தன், மற்றவனும் கூடப் போய்ப் படிக்கத் தொடங்கினான். கொஞ்சம் நிம்மதியாய் வாழ்ந்தம். ரெண்டு நேரம் எண்டாலும் கஞ்சியோ, கூழோ காய்ச்சிக் குடிச்சம்.

ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை, அரைநாள் வேலை, சுத்திப் போட்டு வந்தனான். வந்த களையில சாப்பிடவும் இல்ல அந்த வீட்டுத் திண்ணையில மல்லாந்து கிடந்திட்டன். இடது கண்ணில ஏதோ புழுவோ பூச்சியோ. கடிச்சது போல இருந்தது. பிள்ளையக் கூப்பிட்டு ஊதிப் பாத்து தண்ணியில கழுவிப் போட்டு விட்டுட்டன்.

அண்டைக்குப் பிடிச்சதுதான் தரித்திரம். கண் வீங்கினது மட்டுமில்ல, ஒழியாத தலையிடியும் ஒண்டு தொடங்கிவிட்டது. ரெண்டு மூண்டு நாள் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தன். சுத்தலும் ஓடேல. பக்கத்து ஆஸ்பத்திரி டாக்குத்தரிட்டக் காட்டினன். அவர் மல்லாவி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டார். அங்க மறிச்சுப் போட்டினை. அங்க ஏலாதெண்டு றெட் குறொஸ் அம்புலன்ஸ் இல ஏத்தி வவுனியாவுக்கு அனுப்பி விட்டின. வவுனியாவிலயும் வைச்சுப் பாத்து ஏலாதெண்டு கொழும்புக்கு அனுப்பிச்சின.

கொழும்பு போன கையோட ஒப்பறேசன் எண்;டு ஒண்டு மண்டையில செய்திச்சின. சுகம் வந்திடும் எண்டு பாத்தா! தலை இடி போனதோட என்ர ரெண்டு கண் பார்வையையும் கொண்டு போட்டுது.

இனி என்ன செய்யிறது. என்ர மனிசியும் பிள்ளையள அயல் அண்டை ஆக்களிட்ட விட்டுப்போட்டு என்னத் தேடி கொழும்பு ஆஸ்பத்திரிக்கு வந்தாள். நான் இன்னும்தான் அவளப் பார்க்கேல. குரல் மட்டுந்தான் கேட்டது.

இப்பிடித்தான் அண்டைக்கும் வவுனியாவில இருந்து கண் தெரியாத என்ன ஓமந்தைப் பாதையால மல்லாவிக்குக் கொண்டு போனவை. அப்ப இவ்வளவு கெடுபிடி இருக்கேல. மனிசியும் என்னோடதான் அம்புலன்ஸில வீட்ட வந்தவள். இந்தமுறை பேச்சுத் துணைக்கும் ஆளில்ல. அற்றன்டன்ற் சந்திரன் தான் கடவுள் மாதிரி கூட வாறான்.

கண் தெரியாமல், நோயாளியாய் வீட்ட வந்த நான் என்ன தொழில் செய்யிறது. முந்திய மாதிரி சுத்தவும் போக ஏலாது. ஆன சாப்பாடு தண்ணியும் இல்ல. மனிசி, பிள்ளையள் அரை வயிறு கால் வயித்தோட எத்தின நாள் பட்டினி கிடக்கிறது.

மனுசி பாவம், வயல் வேலை, வீட்டு வேலை எண்டு ஓடி ஓடிப் போய் அஞ்சு, பத்து உழைச்சுக் கொண்டு வரும். அதிலதான் சீவியம். மூத்தவள் படிப்பில வலு ஆர்வம், பெடியளுக்கும் புத்தகம், பென்சில், கொப்பி எண்டு வாங்க என்ன செய்யிறது?

மரமாய்ப் படுத்திருக்க எனக்குப் பிடிக்கேல, மெல்ல மெல்ல பொச்;சு மட்டை அடிக்கத் தொடங்கிவிட்டன். ஊறப்போட்ட தென்னம் பொச்சு மட்டையள பிள்ளை எடுத்து வைப்பாள்.

அவள் பள்ளிக்கூடத்தால வாறதுக்கு இடையில நான் அதுகள அடிச்சு வைச்சால் அவள் அதுகளக் கொண்டுபோய் கயித்துக் கொம்பனியில குடுத்துப் போட்டு ஏதோ கொஞ்சம் காசு கொண்டருவாள். நான் அதுகளச் சேத்துச் சேத்து பிள்ளையளின்ரை படிப்புச் செலவுக்குக் குடுப்பன்.

அதுக்குக் கூட தெய்வம் விட்டு வைக்கயில்லை. ஒரு இருமல் சளி பிடிச்சுது. பிறகும் என்னைப் படுக்கை ஆக்கிப் போட்டுது. பேந்தும் மல்லாவி, முல்லைத்தீவு, வவுனியா, அனுராதபுரம், கண்டி, கொழும்பு எண்டு ஒவ்வொரு அம்புலன்ஸா ஏத்தி அனுப்பினாங்கள்.

முந்தி எண்டாலும் கண் தெரிஞ்சுது. பாசை விளங்காட்டிலும் ஆற்றையன் கையக் காலைப் பிடிச்செண்டாலும் வல்லமையாய்ப் போனன். இந்த முறை சீவன் உள்ள பிணமாய்த்தான் என்னக் கொண்டு போனன்.

கொழும்பிலையும் ஏலாது. இது கசரோகம் எண்டு வெலிசறைக்கு அனுப்பி விட்டாங்கள். கடவுளே அங்க மருந்துக்கும் தமிழ் கதைக்க ஆக்கள் இல்ல. ஊமை வாழ்க்கைதான். எண்டாலும் நேர்ஸ் மார், வேலை செய்யிற ஆக்கள் டாக்குதர்மார் நல்ல ஆக்கள். எல்லா உதவியும் செய்து சாகக் கிடந்த என்னை ஒரு மாதிரி எழுப்பி விட்டிட்டினை.

பேந்தும் சண்டையள் நடந்து பாதையள் மூடப்பட்டு, வன்னியில் ஆக்கள கொழும்புக்கு வர விடமாட்டன் எண்டுட்டாங்களாம். வெலிசறை ஆஸ்பத்திரியில வேலை செய்யிற ஒரு தமிழ் ஐயா தான் இந்தப் புதினங்கள எண்டாலும் வந்து சொல்லுவார். அவர் தான் எனக்காகக் கடிதங்கள் எழுதி மனுசிக்கு அனுப்பி விடுறவர்.

சளி இருமலோட படுக்கையாகி ஆறு மாதத்துக்குப் பிறகு வீட்ட போறன். அப்ப அப்ப போட்ட கடிதம் மனுசிக்குக் கிடைச்சு இருக்கும். வெலிசறையில இருந்தும் வாறன் எண்டு ஒரு கடிதம் போட்டனான் தானே! கிடைச்சிருக்கும். இனியும் நான் வருத்தக்காரனாய்ப் போய் அதுகளுக்குப் பாரம்தானே!

நான் என்ர கதையில இருந்ததில வெளியால நடந்ததுகளைக் கவனிக்க மறந்தி;ட்டன். அம்புலன்ஸ் கன நேரமாய் நிண்டிருக்க வேணும். பரிசோதனைகளும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நடந்திருக்குது. முன்னால இருக்கிற றெட்குறொஸ் பெரியவர் ட்றைவர் அண்ணையோட கதைக்கிற விசயம் அதுதான்.

உலகத்தில கொஞ்ச மெண்டாலும் புண்ணியம் செய்த ஆக்கள் இந்த றெட்குறொஸ் ஆக்களும் ஐ.சி.ஆர்.சி ஆக்களும்தான். இல்லாட்டி எங்கட சனம், கட்டுப்பாட்டுப் பகுதி எல்லையில ஒரு கூட்டமாய், அங்கால ஒரு கூட்டமாய் நிண்டு கொண்டு அங்கால இஞ்சால போறதுக்கு கிழமைக் கணக்கா, மாதக்கணக்காய் காவல் நிண்டு, தண்ணி வன்னி இல்லாமல் காய்ஞ்சு எத்தின கரைச்சல்ப் படுகுதுகள்.

இவை மட்டும் தான் வாகனத்தோட அங்கால இஞ்சால போய் வரலாம். அதுகளும் இல்லாட்டி எங்கட சனம் கனக்க இன்னும் வேளைக்குச் செத்துப் போயிருக்குங்கள்.

எனக்கும் இது மறுபிறப்புத்தான். நான் நம்பி இருக்கேல. இப்பிடி எண்டாலும் திரும்பி வருவன் எண்டு. ஆஸ்பத்திரியில எனக்குப் பக்கத்துக் கட்டில்ல இருந்தவை ரெண்டு பேர் பிணமாய்த்தானே வீட்ட போனவை. நானும் தாங்கேலாம டாக்குத்தரிட்டக் கேட்டனான். 'ஐயா, நான் இனி இருந்தும் பிரயோசனம் இல்லை, ஏதும் மருந்தத் தந்து என்னைச் சாக்கொல்லி விடுங்கோ!" எண்டு. ஆத்தே, அண்டைக்கு அந்த டொக்டரிட்ட நான் வாங்கின பேச்சு, நல்ல காலம் அவர் இங்கிலிசில பேசினபடியா நான் சிரிச்சுக் கொண்டிருந்தன்.

அம்புலன்ஸ் கிடங்கு முடங்கான பாதையில் நகர்கிறது. இதுதான் இரு துருவங்களின் எல்லை. சூனியப் பிரதேசம் எண்டும் ஒரு பேர் இருக்குது. எங்கட ஊர்கள் எல்லாம் இப்ப அப்பிடித் தானே ஆயிட்டுது.

ஊகித்து உணர்ந்து கொண்டாலும் ஒரு வகை ஆதங்கத்துடன் சந்திரனிடம் கேட்டு உறுதிப் படுத்திக் கொள்கிறேன். "ஐயா! இப்ப எங்கினேக்க போறம்?"

"சோதி அண்ணை! நாங்கள் சோதினை, சம்பிரதாயம் எல்லாம் முடிச்சு இப்ப கட்டுப்பாடு இல்லாத பகுதிக்க வந்திட்டம். நான் நினைச்சன் நீங்கள் நித்திரையாக்கும் எண்டு. இந்தாங்கோ இதில ரெண்டு பணிஸ் இருக்கு சாப்பிடுங்கோ!"

"வேண்டாம் அய்யா! எனக்கு இப்ப பசிக்கேல."

"இதப் பக்கத்தில வையுங்கோ! பசிக்கேக்க சாப்பிடுங்கோ!

'சூரியக்கதிர்' இடப்பெயர்வுக்குப் பிறகு எத்தின பசிக் களையளத் தாங்கிட்டம். அப்ப எல்லாம் போகாத சீவனா... மனம் கூற வாய் நகைத்துக் கொள்கிறது.

"இப்ப என்ன நேரம் ஐயா!" நான் கேட்க, சந்திரன் சொல்கிறான் "மத்தியானம் பன்ரண்டரை" இனிப் பள்ளிக்கூடம் விட்டு விடும். நான் வீட்ட போகேக்க பிள்ளையள் எண்டாலும் வீட்டில் நிக்குங்கள்.

மகள் இப்ப வளர்ந்திருப்பாள். இத்தறுதிக்கு சாமத்தியப் பட்டிட்டாளோவுந் தெரியேல. பெடியளும் வளர்ந்திருப்பாங்கள். கடைக்குட்டிக்கு இப்ப நாலு வயதாகியிருக்கும். நல்லாய்க் கதைக்கப் பழகியிருப்பாள்.

"முந்தி கோண்டாவிலில இருக்கேக்க, என்ன செல்வாக்கு. கலியாணம் கட்டின புதுசு. பிறகு பிள்ளையள் பிறந்த பிறகும் எவ்வளவு கலகலப்பு. நான் கொழும்புக்கு புகையில, சுருட்டுக் கொண்டு போனால் - திரும்பி வரயிக்க எத்தின சாமான் சக்கட்டோட போவன்...."

"சா! இப்ப விசுக்கோத்துத் துண்டுக்கும் வழியில்லாத சடமாக வீட்ட போறன். நானும் என்ன செய்யிறது. கண் தெரியாத நான் காச என்னெண்டு மடியிக்க வச்சிருக்கிறது. அல்லது ஆரிட்டக் கேட்டு கடன, உடன வாங்கிறது. இல்லாதவன் இல்லாமலே இருந்திட்டாப் பிரச்சினை இல்லை".

றெட்குறொஸ் பெரியவர் ஏதோ கேட்கிறார். "மிஸ்ரர் சோதிலிங்கம், ரிக்கற்றில இருக்கிற வீட்டு அட்றஸ் சரிதானே!" "ஓமோம் ஐயா ஓம் இலக்கம் பதினெட்டு மாலி நகர்."

'மல்லாவிக்கு கிட்ட வந்திட்டம் போல,' சாரத்தை இறுகக் கட்டி சேட்டையும் ஒரு தரம் நிமிர்ந்து சரிப்படுத்திக் கொள்கிறேன். வெலிசறை ஆஸ்பத்திரி அற்றன்டன்ற் சுமதிபாலாவை மறக்கேலாது. அந்த மனுசன் ஒரு தாய்மாதிரி. நோயாளி எண்டும் பார்க்காமல் என்ன எத்தின தரம் குளிப்பாட்டிச் சாப்பாடு தந்திருப்பார். எத்தின உடு;ப்புகள் தந்து உடுத்தி விட்டிருப்பார். இந்த புது சாரம் சேட்டும் அந்தாள் தந்ததுதான். அந்த மாதிரி மனுசங்களுந்தான் கடவுள் அவதாரம். காலக் கழுவி பூப்போட்டுக் கும்பிடலாம்.

சுமதிபால மாதிரி மனுசர் அரசியலில இருந்தால் இந்த நாட்டில இப்ப இரத்த ஆறு ஓடாது. நாங்கள் இப்படி செத்துச் செத்துப் பிழைக்கத் தேவையில்ல. கோண்டாவில்ல ஒரு மூலையில நாலுபேரைப் போல நானும் மனுசனா வாழ்ந்திருப்பன்.

இப்ப ரெண்டு கண்ணும் இழந்து, கட்டின பெஞ்சாதி, பிள்ளையளின்ர முகத்தக்கூடப் பார்க்க முடியாத பாவியாகி, நடக்கக் கிடக்க உடம்பில பெலம் இல்லாமல், உழைக்க வழி இல்லாமல்,.... அதுகளுக்குப் பாரமாகி......

எண்டாலும் நான் விடமாட்டன். கசரோகம் இல்ல, மலேரியா மண்ணாங்கட்டி வந்தாலும் நான் ஓயமாட்டன். இரவு பகலாய் பொச்சு மட்டை அடிச்செண்டாலும் என்ர பிள்ளையளப் படிப்பிப்பன்......"

அம்புலன்ஸ் திடீர் பிறேக் போட்டு நின்றது. றெட்குறொஸ் பெரியவர் ஆரிட்டையோ விசாரிக்கிறார். எங்கட விலாசத்தத்தான் கேட்கிறார். 'என்னட்டக் கேட்கலாம் தானே! ஏன் றோட்டில போறாக்களிட்ட.... "ஐயா மாலிநகர் சந்தியில லிங்கம் தேத்தண்ணிக் கடை. அந்த இடது கை ஒழுங்கையில உள்ளுக்க போக வலது பக்கமாய் ஒரு பேக்கறி வரும். பேக்கறி கழிய மூன்றாவது வீடு, ஓலையால வேஞ்சிருக்கும். முன்னால பெரிய பிலாமரம் ஒண்டு நிக்குது!"

நான் சொன்ன குறிப்பில ட்ரைவர் அண்ணைக்குப் பாதை பிடிபட்டுது. என்ர மனம் போல அவர் வேகமாய்ப் போறார். காலம வவுனியா ஆஸ்பத்திரியில 'அம்புலன்ஸ் வந்திருக்கு. சோதிலிங்கம் ஊருக்குப் போக வெளிக்கிடும்' எண்டு வாட் நேர்ஸ் சொன்னதுக்குப் பிறகு இன்னும் ஒரு துளி தண்ணீர் வாயில வைக்கேல. எல்லாம் வீட்ட போய்தான்.

ஒரு குறிப்பில் அம்புலன்ஸ் நிக்குது. அக்கம் பக்கத்து ஆட்கள் ஓடி வந்து குவியினம். எங்கட சனம் காணாததக் கண்டதுகள். றெட்குறொஸ்ஸக் கண்டதும் நிவாரணம் தர வந்திருக்கினம் எண்டு கூடுதுகளாக்கும்.

பெரியவர் வாகனத்தை விட்டு இறங்கிக் கதைக்கிறார். இன்னும் சரியான குறிப்புக்கு வரேலப் போல. ஆரோ என்ர பெயரச் சொல்லியும் கதைக்கினம். "அய்யா இறங்கட்டே!" "இல்ல சோதி அண்ணை கொஞ்சம் பொறுங்கோ" இப்ப பின் கதவு திறந்து சந்திரன் இறங்கி நிற்கிறார். சூழ நின்றவர்களின் கதை பேச்சுக்கள் காதில் விழ துண்டு துண்டாக விபரங்கள் எனக்குள் நுழைகின்றன.

'முந்தநாள் கிபிர் அடிச்சு,.... ஆக்களுக்குக் காயம், வீடு சேதம், முடிஞ்ச விசயத்தைச் சொல்லாதையுங்கோ, ஆஸ்பத்திரியில இருக்கினம் எண்டு சொல்லுங்கோ!.... பாரம் எடுக்கிறதும் பிரச்சினை, வருத்தக்காறன்.

இந்த சலசலப்பை ஒரு இரைச்சல்ச் சத்தம் அமைதி ஆக்குகிறது. "கிபிர் கிபிர்தான். ஒருதரும் கூடி நிக்க வேண்டாம் அங்க அங்க பங்கர்களுக்க போங்கோ! யாரோ சத்தம் போடுகிறார்கள்.

பெரியவர் சந்திரனைப் பணிக்கிறார். "பயப்பிட ஒண்டும் இல்ல, சந்திரன் எங்கட பெரிய கொடிய எடுத்து விரிச்சு விடு!" கண நேர இடை வெளிக்குள் கிபிர் இரைச்சல் என் காதுவரை அதிர்ந்து வந்து ஒரு பிரளயமாக வெடித்தது. அவ்வளவுதான்.

[2000]

-------------------------------------------

12 குருக்கன்

அலுவலக நிமித்தமாக கொழும்பு வந்து இம்முறை நான் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் அனேகம். கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப்பின் புறப்பட்டு வந்திருக்கிறேன். இதற்குள்ளும் எத்தனை மாற்றங்கள்.!

ஏதோ ஓர் அந்நிய நாட்டிற்குச் செல்வது போல் உள் நாட்டுக் குள்ளேயே ஓர் விமானப்பயணம். விசாவிற்கு விண்ணப்பித்து, நேர்முகப் பரீட்சை முடித்து, தேவையான தஸ்த்தாவேஜுகள் சமர்ப்பித்து பொலிஸ் கிளியறன்ஸ் எடுக்க வேண்டும். அதன்பின் ரிக்கற் புக்கிங். அதற்குள்ளும் பல முண்டியடிப்புக்களைக் கைக்கொள்ள வேண்டும்.

பயண திகதியில் நேரத்துடன் புறப்பட்டு பல்வேறு பரிசோதனைகளை முடித்து, லக்கேஜ்க்கு வரி கட்டி, விமானம் ஏற வேண்டும். யாழ்ப்பாணத்தவர்களுக்கு பலாலியில்தான் விமான நிலையம். பலாலியில் இருந்து ரத்மலானை நோக்கி விமானம் பறக்க ஒருமணி நேரம் போதும். பின் ரத்மலானையில் இருந்து கொழும்பு செல்வதற்கு வேறு ஏற்பாடுகள்.

கொழும்பு வந்தால் கால்முகம் கழுவி ஓய்வு எடுக்குமுன் தங்கி இருக்கும் பிரிவின் பொலிஸில் பதிந்தாக வேண்டும். சில மணிகள் தானும் பிந்தினால் சிறைக்கூடம் வரையும் செல்ல நேரிடும்.

மனிதனை மனிதனாக மதிக்க முடியாத மனிதர்கள் தான் இன்று பெருகியுள்ளனர். அதுவும் கொழும்பு போல் ஒரு நகரத்தில் ஆடு, மாட்டிடம் கூட அன்பை எதிர்பார்க்க முடியாது. சிந்தனைகளோடு நேரத்தின் தேவை வந்து கைமணிக் கூட்டைப் பார்க்கிறேன். மாலை ஐந்தரை மணியாகிவிட்டது. ஒரு பஸ் கூட மனிசன் ஏறக் கூடிய மாதிரி வரவில்லையே! இருட்டுப்பட முதல் வெள்ளவத்தைக்குப் போயாக வேண்டும்.

'இந்த கொள்ளுப்பிட்டி பஸ் நிலையத்தில் இன்னும் எவ்வளவு நேரம் நிற்க வேண்டுமோ தெரியவில்லை.' எனக்குள் சலிப்பே மீதமாகின்றது. மாலை நேரத்து வெய்யிலின் நேரடி எரிச்சல் ஒருபுறம். வாகனங்களின் கரும்புழுதி மறுபுறம், இன்னும் ஒரு வாரம் நான் கொழும்பில் இருந்தால் கான்சர் நோயுடன்தான் யாழ்ப்பாணம் போக நேரிடும்.

பஸ் வருகிறதா, வருகிறதா என்று காலி முகத்திடல் பக்கமாகப் பார்த்துப் பார்த்து கழுத்து வாங்கி விடுகிறது. எதிர்பக்கம் கழுத்தைத் திருப்பி திருப்பி எனது நிலையை சரிப்படுத்திக் கொள்கிறேன்.

யாரது! ஒரு பிச்சைக்காரன். எங்கோ பழகிய முகம். சட்டென மின்னல் வெட்டி முறிக்க மீண்டும் அவனைப் பார்க்கிறேன். பார்த்ததும் 'பார்க்கக் கூடாது" என்ற தீர்மானத்துடன் பஸ் ஒன்றாவது வசதியாக வருகிறதா என அவசரமாகப் பார்க்கிறேன். இதயம் தன் உணர்ச்சி வேகத்தைக் கூட்டி வேகமாக அடிக்கிறது. நெஞ்சில் எளிதில் அளக்க முடியாத படபடப்பு. ஆனாலும் சமாளித்துக் கொண்டு பிடிவாதமாக நிற்கிறேன்.

பிச்சைக்காரன் இப்போது என்னருகில் வந்து விட்டான். கையில் ஒரு பெண்குழந்தை அழகான பிள்ளை, ஒரு பாவைப் பிள்ளையைப் போல, இரண்டு வருடங்களுக்கு மேல் அதற்கு வயது இருக்க மாட்டாது.

அவன் என்னருகில் வந்து இரக்கிறான். நான் இப்போது இன்னமும் தடுமாறிவிட்டேன். நான் எதிர்பார்க்கவில்லை; அவனால் சிங்கள மொழியில் பிச்சை கேட்க முடியுமென்று!

மனைவி, இந்தப்பிள்ளை பிறந்த வேளையில் இறந்து விட்டாளாம். தான் நோயாளியாம். பிள்ளையைப் பார்க்க உறவினர் யாரும் இல்லையாம். பிள்ளையை வளர்க்க, பால் மாவுக்காக பிச்சை எடுக்கிறானாம். புண்ணியம் கிடைக்குமாம்.

முதலில் எனக்குள் எழுந்த அச்சமும், அவனது இரத்தலில் எழுந்த சந்தேகமும் என்னைக் குழப்பியது. குழப்பத்தை நிவர்த்திக்க அவனது முகத்தையே பார்த்து விடுகிறேன். என்னைக் கண்டதும் அவனில் சலனம். அவனது சலனத்தை உணர்ந்த நான் அந்தக் குழந்தையைப் பார்க்கிறேன். இன்னும் என் அகக்கேள்விகள் நீளமாகின்றன.

கணநேரப் பார்வையில் அவன் என்னை அடையாளம் கண்டு கொண்டான் போலும். நான் அவனிடம் இருந்து என்னை மறைக்க முயல்கிறேன். எனது நடிப்பை விட அவனது கண்டுபிடிப்பு தீர்க்கமானது. அக்கம் பக்கம் பார்த்து அவன் என்னிடம் தமிழிலேயே கேட்கிறான். "நீர்.... நீர்.... நேசன் இல்லோ!, தனேஸ்வராக் கொலிஜ்ஜில இல்லோ படிச்சனீர்?!"

கேள்வி என்னில் தூண்டிலைப் போட்டு எக்கச்சக்கமாகக் கொழுவிக் கொள்கிறது. எந்த விதத்திலும் தப்பிக்க முடியாது. "ஓம் ஓம்" என்று சொல்வதைத் தவிர; அவன் தன்னை யாரென்று கூறினான். எனக்குள் இப்போது உறுதியாகிவிட்டது; அவன் யார் என்று. ஆனாலும் நான் உடனடியாக ஒப்புக் கொள்ள விரும்பவில்லை. அவனாக தன்னைச் சொல்லிக் கொள்கிறான். "ரவி, கட்டை ரவி,.... ஊரில,.... அப்ப,.... மற்றதில இருந்தனான்...."

நான் நானாக என்னை ஒப்புக்கொள்கிறேன். இப்போது அவன் என்னிடம் பிச்சை கேட்கவில்லை. எனது நிலை, குடும்ப நிலை, ஊர் நிலை..... என்று புதினம் கேட்கிறான்.

அவனைப்பற்றி அதிகம் அறிந்துகொள்ள நான் அவசரப்படவில்லை. காரணம் தொன்னூறாம் ஆண்டு வரை அவனது சரித்திரம் எனக்குத் தெரியும். பிந்தியதில்தானே பிரச்சினை. சிலவேளை அவனை அறிந்து கொள்வதுதான் எனக்குப் பிரச்சினையோ.... என்பது எனது உடனடிப் பிரச்சினை.

அவன் விட்டபாடில்லை. நான் ஓர் அரச உத்தியோகத்தன் என்று கண்ட பிறகும் விடுவானா. பசுமரத்தில் ஆணி ஏற்றத் தெரிந்தவன் அல்லவா அவன்! "மச்சான்! பசிக்குது! சாப்பிட வேண்டும். காசிருந்தால் ஒரு நூறு ரூபா தாவன்! ஒழுங்காய்ச் சாப்பிட்டுக் கன நாளாச்சு..." உள்ளங்கையில் இறுகிக்கிடந்த நாணயக் குற்றிகளை காற்சட்டைப் பையில் திணித்து விட்டு தன் முழங்கை மடிப்பில் ஏறியிருக்கும் அந்தக் குழந்தையைக் காட்டினான்.

அவன் நேரடியாகவே விடயத்துக்கு வந்துவிட்டதால் நான் தடுமாறி நின்றேன். 'இவன் எனக்கு யார்! இவனுக்கு ஏன் நான் காசு கொடுக்க வேணும்! இது யார் குழந்தை? இவன் (என்னை) ஏமாற்றுகிறானா! என்னுள் கேள்விகள் அடுக்குப்பட்டு அடுக்குப்பட்டு உள்ளம் கனத்தது. அவன் என் மன வினாக்களின் வரவைத் தடுக்க மீண்டும் என்னிடம் காசு கடனாகக் கேட்டான். அவனிடம் மறுக்கவும் முடியாது. இதற்கு மேல் என்னை மறைக்கவும் முடியாது. என் தயக்கத்தை நீடிக்கும் ஒவ்வொரு கணமும் எனக்கு தர்மசங்கடத்தை பரிசாக்கித் தந்துவிடும். 'நூறுரூபா தானே! காசைக் கொடுத்து விட்டுத் தப்புவோமா!' ஒரு திடீர் ஏற்பாடு. 'இல்லை, இல்லை, காசைக் கொடுத்தால் இவன் என்ன செய்வானோ! அவனது கையிலும், கழுத்து, முகத்திலும் கிடந்த பிளேட் தழும்புகள் என்னைக் கேட்டன.

'சாப்பாட்டை வாங்கிக் கொடுப்பதுதான் ஒரே வழி. முன்னால் இருக்கும் சாப்பாட்டுக் கடையொன்று தோதாகத் தென்பட்டது. 'சரி, எனக்கும் களையாய் இருக்குது! ஏதும் சாப்பிடுவம்' இருவரையும் கூட்டிக்கொண்டு அந்த தேநீர்க் கடைக்குள் புகுந்தேன்.

'ரவி' ரவியை எனக்குத் தெரியும். அவன் கெட்டிக்காரன்தான். தனேஸ்வராக் கல்லூரியில் நானும் அவனும் ஒரே தரத்தில் படித்தோம். அவன் 'சி' வகுப்பு. நான் 'ஏ' வகுப்பு. நாங்கள் 'நல்ல பிள்ளைகள்' என்ற பெயரைக் காக்கப் பாடுபடுவோம். அவன் 'குளப்படிகாரன்' என்றே முத்திரை குத்தப்பட்டிருந்தான்.

காலையில் பள்ளிக்கூடம் துவங்க முதல் மணி அடிக்கும். அடுத்த மணிக்கு 'பிறேயர்' - பிராத்தனை. அடுத்த மணிக்கு முதற்பாடம் ஆரம்பிக்கும். எனது வகுப்பிற்கு நான்தான் மொணிற்றர். சோக், றெஜிஸ்ரர், றெக்கோட்புக்,.. எடுக்க அதிபரின் அலுவலகத்துக்குத் தான் போகவேண்டும்.

முதலில் ரவிதான் கண்ணில் தெரிவான். கைகளைக் கட்டிக்கொண்டு தலையைக் குனிந்து கொண்டு நிற்பான். கண்ணில் புறப்பட்ட கண்ணீர் ஊர்வலம் கன்னம் தடவி அவன் கால் விரல்களில் வீழ்ந்து பரவும். கணுக்காலுக்கு மேல் தழும்புகள் தண்டனையின் தரத்தைக்கூறும்.

ஒன்றில் நேற்று கீரிமலைக்குப் போயிருப்பான். அல்லது கூவிலுக்குப் போயிருப்பான். வேறு எங்காவது இளநீர் பிடுங்கிக் குடித்திருப்பான். இல்லையேல் ஏதும் மாமரம், புளிய மரங்களுக்குக் கல்லெறிந்து பிடிபட்டிருப்பான். இவற்றை இவன் பாடசாலை நேரத்தில் மதில் ஏறிப் போய்ச் செய்வதுண்டு. நண்பர்களோடு சேர்ந்து செய்தாலும் தண்டனைக்கு ஆளாவது ரவிதான்.

மாதத்தில் இரண்டு நாட்களாவது அவன் தனது பள்ளி நாளின் அரைவாசியை இப்படி நின்றே கழிப்பான். பின்பு தந்தையார் வந்து பிணை எடுக்க வேண்டும். அன்று மாலையும் இதே விதமான தண்டனையை அவன் தன் தந்தையாரிடமும் பெற்றாக வேண்டும். இருந்தாலும் அவன் என்றும் திருந்திய பாடாக இல்லை.

அவனைப் பற்றி நானே அடிக்கடி கவலைப் பட்டிருக்கிறேன். 'ஏன் இவன் இப்படிக் குளப்படிகள் செய்கிறான்' என்று எண்ணிக் கொள்வேன். அவனது வகுப்பாசிரியை விசனப் பட்டுக் கொள்வாள் 'என்ன மாதிரி கெட்டிக்காரப் பெடியன், அநியாயமாக கெட்டுப் போகுது!' என்று. வகுப்புப் பாடத்தில் அவன் அத்தனை கவனம்.

ஓ.எல். றிசல்ட் வந்தது. ரவி ஓரளவு பாஸ் பண்ணினான்;. ஆனால் ஏ.எல். படிக்க போதுமானதாக இல்லை. அந்த இரண்டு நாட்களும் அவன் அழுது கொண்டு திரிந்தான். "நீ என்னெண்டடா பாஸ் பண்ணுவாய்?..." என்று யாரோ ஓர் ஆசிரியர் அவனை அன்று மட்டம் தட்டினார். ரவியின் தந்தைக்கு மட்டும் தலைகுனிவு.

அவனுக்குள் ஒருவித குறும்புத்தனம் இருந்தது. கெட்டித்தனம் இருந்தது. அவனது அகநிலையை அளந்து வழிப்படுத்த ஒரு ஆள் இல்லாமல் இருந்தது. வீட்டில் கண்டிப்பான தந்தை, மட்டுப் படுத்தப்பட்ட பொருளாதார நிலை. இவனுக்குப் பின்னால் ஐந்து சகோதரங்களோடு குடும்பம் நடத்தும் தாய். பாடசாலையில் கண்டிப்பு, பாதையில் கேலிகள், ரவி அச்சம் என்பதன் அர்த்தம் தெரியாமல் நடந்தான். நாங்கள் ஏ.எல். படிக்க வேறு பாடசாலைக்குப் போய் விட்டோம். ரவி மறுமுறை ஓ.எல் எடுக்க ரோசத்துடன் படிக்கிறான்.

அதன் பின் ரவியை நான் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் குறைவு. இரண்டாம் தடவை ஓ.எல். சோதனை முடிந்த கையோடு ரவியை ஊருக்குள் காணவில்லை. இயக்கத்துக்குப் போய் விட்டானாம். பள்ளிப்படிப்பு சரிவராததால் இப்போது நாடு மீட்கப் புறப்பட்டு விட்டானாம். ரவி இந்தியாவில் என்று ஊர் பேசிக்கொண்டது.

அது அரச படைகளுக்கு அஞ்சி யாழ் இளைஞர்கள் அஞ்ஞாதவாசம் புரிந்த காலம். ரவி இப்போது இடையிடையே ஊருக்குள் தலை காட்டுகிறான்.

இப்போது அவன் கட்டை ரவி. வேறு ரவிகளும் இருந்திருக்க வேண்டும். இவன் தன் உயரத்திலும் குள்ளன் என்பதால் 'கட்டை' அடை இவனுடன் சேர்ந்துவிட்டது. ஊருக்குள் அங்கங்கு பிரசாரக் கூட்டங்களை இளைஞர்கள் கூட்டுவார்கள், பேசுவார்கள், கலந்துரையாடுவார்கள், பிரிவார்கள். ஊர்ப் பெரியவர்கள் தலை போட்டால் ரியூசன், செல்ப் ஸ்ரடி, குறூப் ஸ்ரடி என்று பதில்கள் வரும்.

ரவி அத்தனை தெளிவாக மார்க்ஸிஸம் பேசினான். தொழிலாளர் புரட்சி, மாணவர் புரட்சி என்று அடக்குமுறைகளின் வெடிப்புகளை வியட்நாம் கியூபாக்களுக்கு ஊடாக இந்த செம்மண்ணில் வரைந்து காட்டுவான். ஊர் இப்போது கட்டை ரவியைப் பார்த்து வியந்தது. அவன் ஊருக்குள் ஒரு நேதாஜியாக வலம் வந்தான்.

இன்னும் சில நாட்களில் ரவியைக் காணவில்லை. ஊரவர்கள் விசாரித்தார்கள். இரகசியமாக ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள். ரவி லெபனான் போய்விட்டானாம்; பயிற்சிக்கு. ஊர் ரவியின் திறமையைப் பற்றி கற்பனைகளோடு சிலாகித்துக் கொண்டது.

சில மாதங்களின் பின் ரவி மீண்டும் ஊருக்குள் பிரசன்னமாகினான். இப்போது அவன் ஒரு நட்சத்திரத்தைப் போல. முன்பு அவன் தன் தந்தைக்குப் பயந்து வாழ்ந்தான். ஊர் பெரியவர்களுக்கும் பயந்து நடந்தான். அரச படைகளுக்குப் பயந்து நடந்தான். அரச படைகளுக்கும் பயந்து கரந்து வாழ்ந்தான். ஆனால் இப்போது நெஞ்சு நிமிர்த்தி நடக்கிறான்.

கையில் ஓர் நவீன சுடுகலன் - ஏந்தி ஊருக்குள் வலம் வருகிறான். அவனுடன் சில சகாக்கள், ஒரு வாகனம், அவன் சார்ந்த இயக்கத்தின் நியமனப்படி ரவிதான் எங்கள் கிராமத்தின் பொறுப்பதிகாரி.

அன்று ரவியின் திருகுதாளங்களுக்காக அவனைக் கண்டித்த சமூகம் இப்போது அவனது ஆயுதமுனைத் தலைமைக்கு தலை வணங்குகிறது. நாங்கள் இன்னும் ஏ.எல். பாஸ் பண்ணவில்லை. மூன்றுமுறை எடுத்தும் கம்பஸ் போக முடியாமல்போய் இப்போது 'ரெக்'ற்குப் போகிறோம். நாங்கள் எட்ட முடியாத உயரத்தை ரவி விரைவில் எட்டியதையிட்டு எங்களுக்குள்ளும் ஒரு பெருமிதம்; ஆயுத முனையில் சுபீட்சம் விரைவில் வந்துவிடப்போகிறதென்று.

திடீரென சகோதர குழுக்களுக்கிடையே மூண்ட துவந்த யுத்தம் இரத்த ஊற்றை ஊருக்குள் உடைத்து விட்டது. யார் யாரோ எல்லாம் கொல்லப்பட்டார்கள், பலர் காணாமற் போனார்கள். அதோடு கட்டை ரவியின் குழுவினரும் ஊருக்குள் இல்லாமற் போனார்கள். அதுவும் நல்லதுதான் என்று ஊர் இப்போது பேசிக் கொண்டது. இப்போது அவர்களின் மறைப் பெறுமானத்தை முன்னுக்கு வைத்து ஊர்மக்கள் அவல் இடித்துக் கொண்டனர்.

அது வித்தியாசமான தன்னாட்சியுகம். எல்லாப் பாவனைப் பொருட்களுக்கும் கட்டுப்பாடு, தட்டுப்பாடு. மண்ணெண்ணையில் பெற்றோல், டீசல் வாகனங்கள் ஓடும். பிறக்கும் குழந்தைகளுக்கு மின்சாரம், புகையிரதம் எதுவும் தெரியாது. இந்த இடைவெளியில் ஊரவர்கள் ரவியை மறந்துவிட்டனர். அவனின் தந்தை மட்டும் தலை குனிந்தே நடந்தார்; அவனுக்காக.

ரவி மீண்டும் வந்தான். அமைதிப்படை வந்து தன் அகலச் சிறகை விரித்து இந்த மண்ணில் அமர்ந்திருந்தது. அதன் உதடுகளில் சிக்குண்டு ஊரின் சமநிலை குழம்பியிருந்தது. ரவி அந்த வெளிக்குள் மீண்டும் ஊருக்குள் தலை நீட்டினான்.

இப்போது முன்னைய கட்டை ரவி இல்லை. உடல் பருத்து, முகம் சிவந்து, மீசை, தாடி, காதில் கடுக்கன், கையில், கழுத்தில் சங்கிலிகள் கூடவே ஆள், அம்பு, அணி என்று அவன் இப்போது ஊர் மக்களுக்கோர் அச்ச உறுத்தலாக உலா வந்தான். இடையில் அவனது குடும்பம் பழி வாங்கப்பட்டு விட்டதாம். அதனால் அவன் உருமாறி விட்டானாம். ஆனாலும் இப்போது அவனது கையில் பணம் உள்ளது. எங்கோ வெளிநாடு சென்று உழைத்து ஊதிப் போய் வந்திருக்கிறானாம்.

இப்போதும் ஊரவர்கள் இரகசியமாக பேசிக் கொள்கிறார்கள். 'அவன் நல்லவன், ஊருக்குள்ள பழிவாங்க மாட்டான்! விறுக்கன் செய்தாலும் செய்வான்' பலரும் பலவாறு அபிப்பிராயப் பட்டார்கள். இப்போது ரவி மீண்டும் பரவலாகப் பேசப்படும் ஆளாகி விட்டான்.

அமைதி காக்க வந்த படை தன் சிறகை மடித்து மேலெழுந்து பறந்து விட்டது. இப்போது ரவியும் இல்லை, ரவியின் ஆட்களும் இல்லை. மீண்டும் எங்கோ போய் விட்டார்கள்.

அந்த சோக நாடகங்கள் எல்லாம் மாறி மாறி நடந்தேறி எட்டு வருட காலத்தின் பின் இன்றுதான் நான் ரவியைக் காண்கிறேன். மெலிந்து எலும்புக் கூடாக, கண்ணிரண்டும் சிவந்து பிதுங்கி வெளியில் தெரிய, ஒரு விகாரமான ரவியைக் காண்கிறேன். போதாததற்கு கையில் ஒரு பெண் குழந்தை வேறு.

அரசியல் நிலைமைகள் மாறிய கையோடு அவன் தான் சார்ந்த குழுவோடு கொழும்புக்கு வந்து தங்கினான். தஞ்சமாகினான். கையில் காசை வைத்துக் கொண்டு கட்சிக் கோட்டுக்குள் கைகட்டி நிற்க மனம் ஒப்பவில்லை. தனியாக நடந்தான் துணை தேடி நடந்தான்.

மது, சூது, போதை எல்லாம் அவனுக்கு புதிய நண்பர்களைச் சேர்த்துக் கொடுத்தன. கையில் காசு முடிய செத்த மாட்டில் இருந்து உண்ணிகள் விலகிக் கொண்டன.

தன் போதையின் வழி நடத்துகை ரவியை ஒரு பெண்ணின் மடியில் சிக்கிக்கொள்ள மாட்டியது. அந்தர சொர்க்கத்தில் ஆடிக் கிடந்தவனுக்கு தான் இறங்கி நிற்க வேண்டிய பூமியின் வெந்தழல் புரியவில்லை.

கூட இருந்து குழந்தை பெற்றுக் கொடுத்தவளும் மேலாடையில் தூசைத்தட்டி மெதுவாக விலகிக் கொண்டாள். ரவி தன் குழந்தையோடு தெருவில் நிற்கிறான். உதவி கேட்க, உதவி செய்ய இவனுக்கு யாரும் இல்லை . தன் பிறந்த மண்ணை நாடிப்போக அங்கு அவனுக்கு உறவுகளும் இல்லை, ஊரும் தயாராக இல்லை. உழைக்கப் போகும் அளவுக்கு அவன் உள்ளத்தில் தென்பும் இல்லை.

கதைத்துக் கொண்டிருந்த போதே அவனுக்குள் இருந்து ஆயிரம் தத்துவங்கள் புறப்பட்டு வந்தன. முளையிலேயே நெறிப்படுத்தப்படாத ஒரு குளப்படித்தனமா இன்று இவனை இங்கு கொணர்ந்து விட்டிருக்கிறது!

அப்படியானால் நாங்கள்; 'நல்ல பிள்ளை' பெயருக்காக பதுமையாய் இருந்து இன்று எந்த எல்லைகளை எட்டியிருக்கிறோம்?

அவன் என்னிடம் மனம் திறந்து பேசினான். அப்படிப் பேசுவதற்கு இன்றுவரை அவனுக்கு கிடைத்திருக்கவில்லை. அவனை யார் மதித்தார்கள். யார் அவனுடன் அன்பைப் பகிர்ந்தார்கள்! ரவி தன் ஒவ்வொரு பருவப் படிகளிலும் வன்முறைகளூடுதானே உருவாக்கப்பட்டிருக்கிறான்.

"மச்சான்! இதுக்குமேல எனக்கு வாழ்க்கை இருக்கெண்டு நான் நம்பேல. இந்த முப்பத்தைஞ்சு வருசமும் போதும். ஆனால் இந்தப் பிள்ளைய அனாதையாய் விட்டுட்டுப் போக எனக்கு விருப்பம் இல்லை மச்சான். நான் உயிரோட இருக்குமட்டும் எண்டாலும் இவளுக்குச் சாப்பாடு தீத்த வேணும் எண்டுதான் மச்சான் பிச்சை எடுக்கிறன். பாவம் பெத்தவளும் விட்டுட்டுப் போயிட்டாள். நானும் நடு றோட்டில விட்டுட்டுப் போயிட்டால்....."

"அப்பிடி வரக்கூடாது மச்சான்! நான் ஒரு தொழிலைச் செய்து உழைக்கிறது எண்டாலும் இவளை விட்டுட்டுப் போக இடம் இல்லை. பார்க்கவும் ஆள் இல்லை. அதாலதான் மச்சான் பிச்சை எடுக்கிறன்."

இந்த நாட்டின் எங்கோ ஓர் மூலையில் பிறந்து வளர்ந்து எங்க எங்க எல்லாம் பரவி திரிந்து நடந்து பின் இந்த தலைநகரில் இந்த ரவி என்னிடம் வந்து பிச்சை கேட்கும் நிலைமை வந்ததை எண்ணிப் பார்க்கிறேன்.

நினைத்துப் பார்க்க நெஞ்சுக்குள் ஏதோ தணல் மூண்டு உள்ளே வெந்தது. 'இவனை நான் என்ன செய்வது! மீண்டும் பள்ளிக்கூட சிறுவன் ரவியும், போராளிக்குழுவின் கட்டை ரவியும், பின் மிடுக்காய்த் திரிந்த மொத்த ரவியும், இன்று என் முன் நிற்கும் எலும்புக்கூட்டு ரவியும் நிழல்ப்படக் கட்டுகளாக சுற்றிச் சுழன்று வந்து இன்னொரு சமநிலைக் கேள்விகளுக்கு தூண்டில் போட்டன. என்னால் இவனுக்கு என்ன செய்ய முடியும்?

இவனால் நான் என்றாவது நன்மையடைந்தேனா! அல்லது துன்பப்பட்டேனா? அல்லது என்னால் இவனுக்கு நன்மை இருந்ததா! இனிமேல் இருக்குமா! சமூகம் இவனை வழி நடத்தியதின் ஒவ்வொரு படியிலும் நானும் பங்கு கொண்டிருக்கிறேன். எனது நல்லபிள்ளைக் கோலங்கள் மறைமுகமாக இவனைப் பாதித்திருக்குந்தானே!

"மச்சான்! நீ வந்த படியால் இண்டைக்கு சாப்பிட்டன். பார்! எத்தின பேருக்கு பெரிய பெரிய ஹோட்டலிலை எல்லாம் என்ர காசில தின்னக் குடிக்க வாங்கிக் குடுத்தன்; இண்டைக்கு உன்ர பிச்சக் காசில சாப்பிட்டிட்டுப்போறன்! நான் வாறன் மச்சான்! உயிரோட இருந்தால் எங்கயாவது சந்திப்பம்!"

அவன் எனது தடுமாற்றங்களுக்கு எந்தவித விடையையும் தேடித்தரவில்லை. ரவி தன்பாட்டில் நடக்கத் தொடங்கினான். நான் ஒரு கணம் துடித்து - நிலைமைக்கு வந்து அவனது வேகத்தைத் தடுத்தேன். "நில்லு ரவி! உனக்கு ஆட்சேபனை இல்லை எண்டால்.... உன்ர பிள்ளைய எனக்குத்தா! நான் வளர்க்கிறன்!"

முதலில் மெல்லிய புன்னகையை உதிர்த்தான். இது அவனது பாடசாலைப் பருவத்துப் புன்சிரிப்பு. சற்றே தொடர்ந்து அட்டகாசமாகச் சிரித்தான். இது அவனது இயக்கத் தலைமையில் காட்டிய துணிச்சல் சிரிப்பு. பின் நிதானமாகச் சிரித்தான். இப்போது இரக்கப்பட்டுச் சிரிக்கிறான். தன் கையில் இருந்த குழந்தையை என்னிடம் நீட்டுகிறான்.

"மச்சான் உன்னை நம்புறன். பிள்ளை! இவர்தான் இனி உன்ர அப்பா! உன்ர அச்சா அப்பா!"

[18-06-2000 'தினகரன் வாரமஞ்சரி']

------