சேக்சுபியர் கதைகள் - 3
கா. அப்பாத்துரையார் 

மூலநூற்குறிப்பு

  நுற்பெயர் : சேக்சுபியர் கதைகள் - 3 (அப்பாத்துரையம் - 38)

  ஆசிரியர் : கா.அப்பாதுரையார்

  தொகுப்பாசிரியர் : முனைவர் கல்பனா சேக்கிழார்

  பதிப்பாளர் : கோ. இளவழகன்

  முதல்பதிப்பு : 2017

  பக்கம் : 24+344= 368

  விலை : 460/-

  பதிப்பு : தமிழ்மண் பதிப்பகம், எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை 600 017, தொ.பே.: 24339030, செல்: 9444410654

  மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in

  தாள் : 16.0 கி. மேப்லித்தோ, அளவு : 1/8 தெம்மி

  எழுத்து : 11.5 புள்ளி, பக்கம் : 312

  கட்டமைப்பு : இயல்பு படிகள் : 500

  நூலாக்கம் : கோ. சித்திரா

  அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)

  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.

நுழைவுரை

தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர்.

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம்.

தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும்.

தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம்.

தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.

அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன.

இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும்.

தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள்

கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை

யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர்

திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன்,

திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர்.

இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி.

நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

“ஆக்கத்தை எனக்கிந் நாட்டார்
அளித்திட்ட அறிவை யெல்லாம்
தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே
செலவிடக் கடமைப் பட்டேன்.”

-   பாவேந்தர்

கோ. இளவழகன்

தொகுப்புரை

மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்!
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின.

“அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார்.

சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன.

-   தனித்தமிழ் இயக்கத் தோற்றம்

-   நீதிக் கட்சி தொடக்கம்

-   நாட்டு விடுதலை உணர்ச்சி

-   தமிழின உரிமை எழுச்சி

-   பகுத்தறிவு விழிப்புணர்ச்சி

-   இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர்

-   புதிய கல்வி முறைப் பயிற்சி

-   புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம்

இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன.

“தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது!

அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்!

பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக,

-   உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல்.

-   தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல்.

-   தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல்.

-   தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல்.

-   திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல்.

-   நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல்.

இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது.

பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது.

உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன.

1.  தமிழ் - தமிழர் - தமிழ்நாடு

2.  வரலாறு

3.  ஆய்வுகள்

4.  மொழிபெயர்ப்பு

5.  இளையோர் கதைகள்

6.  பொது நிலை

பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும்.

இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின்

உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன.

கல்பனா சேக்கிழார்

நூலாசிரியர் விவரம்

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்
  இயற்பெயர் : நல்ல சிவம்

  பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989

  பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி

  பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி)

  உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர்

  மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு

  வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா

  தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி

  பள்ளிக் கல்வி : நாகர்கோவில்

  கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம், இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி விசாரத்’, எல்.டி.

  கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி)

  நூல்கள் : 120 (ஆங்கிலம், 5)

  இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை.

  பணி :

-   1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர்.

-   1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர்.

-   பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு.

-   1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி

-   1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர்.

-   1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர்

அறிஞர் தொடர்பு:

-   தொடக்கத்தில் காந்திய சிந்தனை.

-   1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு

விருதுகள்:

-   மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது,

-   1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் சான்றோர் பட்டம்’, தமிழன்பர்’ பட்டம்.

-   1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைமாமணி’.

-   1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம்.

-   மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய பேரவைச் செம்மல்’ விருது.

-   1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.

-   1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார்.

-   இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது.

பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்:

-   அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005.

-   பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007.

பதிப்பாளர் விவரம்

கோ. இளவழகன்
  பிறந்த நாள் : 3.7.1948

  பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625,தஞ்சாவூர் மாவட்டம்.

  கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு

  இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல்

ஆற்றியுள்ள பொதுப்பணிகள்

1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர்.

பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர்.

உரத்தநாட்டில் தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர்.

பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர்.

தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும்,

19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர்.

பொதுநிலை

தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர்.

தொகுப்பாசிரியர் விவரம்

முனைவர் கல்பனா சேக்கிழார்
  பிறந்த நாள் : 5.6.1972

  பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம்.

  கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர்

  இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

ஆற்றியுள்ள கல்விப்பணிகள்

-   அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி.

-   திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு.

-   புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.

-   பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.

-   பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார்.

-   50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

-   மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.

-   இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார்.

-   செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார்.

நூலாக்கத்திற்கு உதவியோர்

தொகுப்பாசிரியர்:

-   முனைவர் கல்பனா சேக்கிழார்

கணினி செய்தோர்:

-   திருமதி கோ. சித்திரா

-   திரு ஆனந்தன்

-   திருமதி செல்வி

-   திருமதி வ. மலர்

-   திருமதி சு. கீதா

-   திருமிகு ஜா. செயசீலி

நூல் வடிவமைப்பு:

-   திருமதி கோ. சித்திரா

மேலட்டை வடிவமைப்பு:

-   செல்வன் பா. அரி (ஹரிஷ்)

திருத்தத்திற்கு உதவியோர்:

-   பெரும்புலவர் பனசை அருணா,

-   திரு. க. கருப்பையா,

-   புலவர் மு. இராசவேலு

-   திரு. நாக. சொக்கலிங்கம்

-   செல்வி பு. கலைச்செல்வி

-   முனைவர் அரு. அபிராமி

-   முனைவர் அ. கோகிலா

-   முனைவர் மா. வசந்தகுமாரி

-   முனைவர் ஜா. கிரிசா

-   திருமதி சுபா இராணி

-   திரு. இளங்கோவன்

நூலாக்கத்திற்கு உதவியோர்:

-   திரு இரா. பரமேசுவரன்,

-   திரு தனசேகரன்,

-   திரு கு. மருது

-   திரு வி. மதிமாறன்

அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு:

-   வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14.

சேக்சுபியர் கதைகள் - 3

முதற் பதிப்பு - 1945

இந்நூல் 2002 இல் ஏழுமலை பதிப்பகம், சென்னை - 88. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது.

சேக்சுபியர் வாழ்க்கைக் குறிப்புகள்

உலகப் புகழ்பெற்ற ஆங்கில நாடக ஆசிரியராகவும் உலகம் போற்றும் மாபெரும் கவிஞராகவும் விளங்கியவர் வில்லியம் ஷேக்ஸ்பியர்.

வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்தது 1564 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 26ஆம் நாள். இவருடைய தந்தையார் ஜான் ஷேக்ஸ்பியர் என்பவர் தையல், ஆடை வணிகர், ஊன் விற்பனை, ஆகிய பல தொழில்களைச் செய்தவர். தனது பேருழைப்பினால் நகரத் தலைவராகவும் உயர்ந்தவர். வில்லியம் ஷேக்ஸ்பியரின் தாயார் பெயர் மேரி ஆர்டன் என்பதாகும்.

வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறப்பிடம் தென்மேற்கு இங்கிலாந்தில் ஆவோன் ஆற்றங்கரையில் உள்ள ஸ்ட்ராப்போர்டு என்ற நகரம். இந்நகரம் பல சிற்றாறுகளையும், ஏரிகளையும் கொண்டு எழில்மிகு நகரமாக விளங்கியது. இந்நகரம் இலக்கியப் புகழ் வாய்ந்தது.

ஷேக்ஸ்பியர் காலத்திற்கு 200 ஆண்டுகளுக்குப் பின், இந்நகரில் வேர்ட்ஸ் வொர்த், ஷெல்லி, கீட்ஸ் முதலிய கவிஞரும், ஹாஸ்லிட், லாம் ஸதே முதலிய பாவலரும் வாழ்ந்த பெருமையை பெற்றது இந்நகரம். இதனால் இந்நகரைக் “கவிதை வட்டம்” எனப் புகழ்வர். இந்நகர், கவிஞர்களும், கலைஞர்களும், அறிஞர்களும் வந்து பார்வையிடும் புண்ணிய பூமியாக விளங்குகிறது.

ஷேக்ஸ்பியர் பன்னிரண்டு வயது வரை தம் ஊரிலிருந்து இலக்கணப் பள்ளியில் இலத்தீன் மொழியில் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். வரலாற்று நூல்களைத் தாமே முயன்று கற்றார். இவருடைய தந்தை வாணிகத்தில் பெரும் அளவில் நட்ட மடைந்ததால் இவரால் தொடர்ந்து கல்வி கற்க இயலவில்லை. அதன்பின் தம் தந்தைக்கு உதவியாக வேலை பார்த்தார். சிறிது காலம் பள்ளி ஆசிரியராகவும் பணி புரிந்தார்.

ஷேக்ஸ்பியர் தமது பத்தொன்பதாம் வயதில் இருபத்தேழு வயதுடைய ஒரு பெண்ணை மணந்து கொண்டார். இவர்களுக்கு 1583இல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆணும் பெண்ணுமாக இரட்டைப் பிள்ளைகள் பிறந்தனர். இவர் மகன் “ஹாம் னெட்” தனது பதினோராவது வயதிலேயே இறந்துவிட்டான். இவர் மகள்கள் இருவரும் மணம் புரிந்து கொண்டு, இவர் காலத்திற்குப் பின்னரும் வாழ்ந்தனர்.

1587இல் ஒரு நாடகக் கம்பெனியார் ஸ்ட்ராப் போர்டு நகரில் தங்கிச் சில நாடகங்களை நடத்தினர். அந்நாடகங்கள் ஷேக்ஸ்பியர் மனதைக் கவர்ந்தன. நாடகக் கலையின் மீது அவருக்குப் பற்றுதல் ஏற்பட்டது. அதன் பின்னர் ஷேக்ஸ்பியர் இலண்டனுக்குச் சென்றார். அங்கே நாடகக் கலையை நன்கு பயின்றார். முதலில் நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் நாடக ஆசிரியரானார். நாடகக் கம்பெனியில் பங்கு தாரராகவும் விளங்கினார். விரைவில் முன்னேறி நாடகக் குழுவின் முழு உரிமையாளர் ஆனார். அரண்மனையில் அரச குடும்பத்தினருக்காக அடிக்கடி நாடகங்களை நடத்தினார். பெரும் பொருள் ஈட்டினார். அவரது புகழ் உலகெங்கும் பரவியது.

ஷேக்ஸ்பியர் நாடக ஆசிரியராக மட்டுமின்றி புகழ்பெற்ற பெருங் கவிஞராகவும் விளங்கினார். ஷேக்ஸ்பியர் நாடகங்கள் எழுதுவதற்கு முன்னும் பின்னும் இயற்றிய பாடல் தொகுதிகளுள் சில பின்வருமாறு:

1.  "வீனஸும் ஆமூடானிஸும் எனும் தொகுதி 1593 இல் வெளிவந்தது. இதன் கண் இலங்கிய இன்னோசை அனைவரையும் ஈர்த்தது. சொல்வளமும், சொல்லணிகளும் நிறைந்த அழகிய கவிதைக் களஞ்சியமாய்த் திகழ்ந்தது இந்நூல்.

2.  “லுக்ரீஸின் மான அழிவு” என்பது இரண்டாம் தொகுதி மக்களின் அவலச் சுவையை எடுத்துக்காட்டும் அற்புதமான கவிதைத் தொகுதி.

3.  ஷேக்ஸ்பியரின் மூன்றாவது தொகுதி ‘சானட்’ எனப்படுவது. ஒரு குறிப்பிட்ட அளவு ஒழுங்கும் ஒலிநயமும் அமைந்து பதினான்கடி கொண்ட பாவகையால் ஆனது. நூற்றுக்கும் மேற்பட்ட “சானட்” வகைப்பாடல்களை எழுதினார். ஷேக்ஸ்பியருக்குப் பெரும் புகழ் ஈட்டித் தந்தது. ‘சானட்’ வகைப் பாடல்களேயாகும்.

ஷேக்ஸ்பியர் தம் நாற்பத்தி ஆறாம் வயதில் நாடகம் எழுதுவதைத் துறந்து ஓய்வெடுத்துக் கொண்டார். ஐந்தாண்டுகள் சுகபோக வாழ்க்கை நடத்தினார். 1616இல் 52ஆம் வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

ஷேக்ஸ்பியர் மொத்தம் முப்பத்தேழு நாடகங்களை எழுதியுள்ளார். அவற்றை இன்பியல் நாடகங்கள், துன்பியல் நாடகங்கள், வரலாற்று நாடகங்கள் என மூவகையாகப் பிரிப்பர்.

இன்பியல் நாடகங்களில் “நடுவேனில் கனவு,” “வெனிஸ் வணிகன்,” “அடங்காப் பிடாரியை அடக்குதல்” முதலியவை புகழ் பெற்றவை.

துன்பியல் நாடகங்களில் “ரோமியோவும் ஜுலியட்டும்”, புகழ் பெற்றதாகும். மற்றும் “ஜுலியஸ் சீசர்”, “ஒத்தெல்லோ” மாக்பெத், லியர் அரசன் என்பனவும் சிறப்பு வாய்ந்தவை.

வரலாற்று நாடகங்கள் வரலாற்று நிகழ்ச்சிகளை அடிப் படையாகக் கொண்டவை. இவற்றுள் ஆங்கில மன்னர்களைப் பற்றிய நான்காம் ஹென்ரி, ஐந்தாம் ஹென்ரி, மூன்றாம் ரிச்சர்டு என்ற நாடகங்கள் பெரும்புகழ் பெற்றவை.

அறிஞர்கள், இவருடைய நாடகங்களில் எல்லாம் தலை சிறந்தது “ஹாம்லெட்” என்பர்.

உலகியலில் நாம் காணும் பல்வகை மக்களையும், அவர்களிடம் தோன்றும் பல்வகை உணர்ச்சிகளையும் ஷேக்ஸ்பியர் தம் நாடகங்களில் இயற்கையாகச் சித்தரித்துள்ளார். மனித மனத்தின் ஆழத்தை ஊடுருவிப் பார்த்தவர்களில் இவரே தலை சிறந்தவர் எனலாம்.

வரலாறு, கலை, இசை, உளவியல், அரசியல், போரியல், சட்டம் ஆகிய பல் துறைகளிலும் இவரது பரந்துபட்ட பேரறி வினை இவரது நாடகங்களில் கண்டு களிக்கலாம். புதிய புதிய சொற்களையும், சொற்றொடர்களையும் உருவாக்கி ஆங்கில மொழியை வளப்படுத்தியவர்.

ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் காலத்தால் அழியாதவை. இன்றுங்கூட உலகின் பலபாகங்களில் அவரது நாடகங்கள் நடிக்கப் பட்டு வருகின்றன. உலகின் பெரும்பான்மையான மொழிகளில் அவரது நாடகங்கள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. மனிதகுல வரலாற்றில் ஷேக்ஸ்பியர் என்ற மாமேதையின் புகழ் என்றென்றும் ஒளிவீசிய வண்ணமே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

புலவர் கோ. தேவராசன், எம்.ஏ., பி.எட்.,

ஜூலியஸ் ஸீஸர்

** கதை உறுப்பினர்**
ஆடவர்:

1.  ஜூலியஸ் ஸீஸர்: ரோமின் ஒப்பற்ற வெற்றி வீரன்; படைத் தலைவன் - பொது மக்கள் மனங்கவர்ந்த முடிசூடா மன்னன்-கிளர்ச்சிக் காரரால் கொலையுண்டவன்.

2.  அந்தோணி: வீரன், ஆனால் இன்ப வாழ்வினன், கேளிக்கை விருப்பினன்-ஸீஸர் நண்பன்-நாத்திறமிக்க பேச்சாளி-கிளர்ச்சிக்காரரை எதிர்த்தவன்.

3.  காஸியஸ்: ஸீஸரைக் கொல்ல முயன்ற கிளர்ச்சிக் காரருள் முதல்வன்-அரசியல் சூழ்ச்சி அறிந்தவன்.

4.  புரூட்டஸ்: ஸீஸர் நண்பன்-உயர் குடியாளன்-தன்னலமற்ற உயர் நெறியாளன்-காஸியஸின் தூண்டுதலால் கிளர்ச்சிக்காரர் தலைவனானவன் -அரசியல் சூழ்ச்சியறியாதவன்.

5.  அக்டேவியஸ் ஸீஸர்: ஜூலியஸ் ஸீஸர் மகன்-சூழ்ச்சித் திறத்தால் அந்தோணியையும் பிறரையும் இயக்கிக் கிளர்ச்சிக் காரரை ஒடுக்கியவன்.

6.  லெப்பிடஸ்: அந்தோணிக்கும் அக்டேவியஸுக்கும் துணைதந்து கிளர்ச்சிக்காரரை எதிர்த்தவன்.

பிற கிளர்ச்சிக்காரர்கள்

7.  காஸ்கா

8.  ஸின்னா

9.  திரேபோனியஸ்

10. மெதல்லஸ் ஸிம்பர்

11. தெஸிமஸ் புரூட்டஸ்

12. ஸிஸரே: ரோம அரசியல் மன்றத்துப் பெருஞ் சொல்லாளர்.

பெண்டிர்:

1.  கல்பூர்ணியா, ஜூலியஸ் ஸீஸரின் மனைவி.

2.  போர்ஷியா: புரூட்டஸின் மனைவி; கதோ என்ற உரோம அறிஞரின் மகள்.

** கதைச் சுருக்கம்**
ரோமின் ஒப்பற்ற வெற்றிவீரனும் படைத்தலைவனுமான ஜூலியஸ்ஸீஸர் பொதுமக்கள் உள்ளங் கவர்ந்த முடிசூடா மன்னனாய் விளங்கினான். அவன் நண்பன் அந்தோணியோ நகர் விழாவின்போது மும்முறை முடியை அவனுக்குப் பொதுமக்கள் சார்பாக அளிக்கவே, பெருமக்கள் பொறாமை கொண்டனர். அவனைக் கொலை செய்யச் சூழ்ச்சி செய்தனர்; அதில் தலைவன் காஸியஸ். நாட்டுப் பற்றும் விடுதலைப் பற்றும் மிக்க புரூட்டஸ் காஸியஸின் தூண்டுதலால் அதன் தலைமைப் பெயர் ஏற்றுக் காஸியஸின் அரசியல் சூழ்ச்சிகளுக்கு முட்டுக்கட்டையானான்.

நகர் விழாவின்போது ஆண்டியொருவன் ஸீஸரிடம், “உன் பெருமை யெல்லாம் மார்ச் நடுநாள் என்னாகிறது பார்,” என்றான். மார்ச் நடுநாள் அரசியல் மன்றக் கூட்டம், கிளர்ச்சிக்காரர் அவனைக் கொல்லத்திட்டப் படுத்திய நாள் அது. ஸீஸர் தன் மனைவி கல்பூர்ணியா, கனாவையும் பொருட்படுத்தாது சபையில் தன்னை எச்சரிக்க வந்த நண்பர் அர்த்தெமி தோரஸையும் புறக்கணித்துக் கொலையுண்டான். அதன்பின் ஸீஸர் பிணத்தின் முன்னிலையில் பேச அந்தோணியோ இணக்கங்கேட்டான். காஸியஸிற் கெதிராக அதற்குப் புரூட்டஸ் இடங்கொடுக்க, அந்தோணியோ நாத்திறத்தால் மக்களைக் கிளப்பிக் கிளர்ச்சிக் காரரை வெளியே துரத்தினான். இத்துன்பச் செய்தி கேட்டு புரூட்டஸ் மனைவி போர்ஷியா இறந்தாள்.

புரூட்டஸின் நேர்மையால் பணவருவாய் வகையில் அவனுக்கும் புரூட்டஸுக்கும் பூசல் நிகழ்வும், அந்தோணியுடன் சேர்ந்து லெப்பிடஸ் என்பவனும் ஸீஸர்மகன் அக்டேவியஸ் ஸீஸரும் சேர்ந்து அவர்களை எதிர்த்தனர். இதனாலும் போர்ஷியா பிரிந்த செய்தி கேட்டும், புரூட்டஸ் உயர்வைக் கண்டும் காஸியஸ் தன் வாழ்வை அவனிடமே ஒப்படைத்துப் பிலிப்பிப் போரில் மாண்டான். முன்னிரவில் ஸீஸர் ஆவி கண்டு முடிவறிந்த புரூட்டஸும் தன் வாளில் வீழ்ந்திறந்தான். அக்டேவியஸ் கூட அவன் உயர்வறிந்து பெருமைப்படுத்தினான்.

1.குடியரசும் முடியரசும்

²ரோம் ³இத்தாலியின் தலைநகரமாகும். இத்தாலி பண்டைக் காலத்தில் ஒரு குடியரசு நாடாக இருந்தது. ஆனால் பெயரளவில் அதன் ஆட்சி பொதுமக்கள் சார்பாயிருந்த போதிலும், உண்மையில் ⁴பத்சிரீயர் என்று வழங்கப்பட்ட பெருமக்களே அங்கே எல்லா வகையான உரிமைகளையும் கையாண்டு வந்தனர். ⁵பொதுமக்கள் வரவர விழிப்படைந்து தொகையிலும் ஆற்றலிலும் மிகுந்து வந்தபோதெல்லாம் பெருமக்கள், பொதுமக்கள் இவ்விருதிறத் தினரிடையே அடிக்கடி பூசலும் போட்டியும் நிகழ்ந்துவந்தன.

ரோம்நகர் நாளடைவில் இத்தாலியையும் அந்நாளைய நாகரிக உலகின் பெரும் பகுதியையும் வென்றடக்கி உலகப் பேரரசாக விளங்கிற்று. அப் பேரரசை நிலைநாட்ட உதவிய பெரிய வீரர்களுள் ஜூலியஸ் ஸீஸரே முதன்மையானவன். அவன் ⁶கல்லியா ⁷பிரித்தானியா முதலிய பல நாடுகளை வென்றடக்கி அவற்றின் குறுநில மன்னர்களைச் சிறை பிடித்ததோடு அவர் களிடமிருந்து கணக்கற்ற பொருளைத் திறையாகவும் பெற்றான்.

அவன், தன் வெற்றிகளைப் பகட்டாகக் கொண்டாடியும், பொது மக்களுக்கும் அவர்கள் தலைவர்களுக்கும் தான் திறையாகப் பெற்ற பொருளை வாரி இறைத்தும் அவர்கள் மனத்தைக் கவர்ந்தான். இவ்வகையில் அவனுக்கு உடனிருந்து வலக்கை என உதவியவன் ⁸மார்க்கஸ் அந்தோணி என்பவன். இவ்வந்தோணியும் நண்பர்களும் இன்னும் சிலரும் பொது மக்களின் துணைகொண்டு ஸீஸரைப் பேரரசராக்கி முடிசூட்ட வேண்டுமென்று முயற்சியில் முனைந்தனர்.

இங்ஙனம் பொதுமக்கள் துணை ஸீஸருக்கு மிகுந்து வரவர, அவன், பெருமக்கள்பால் அசட்டையாயிருக்கத் தொடங்கினான். முன் இருந்த தலைவர்களைப் போல் அவன் அவர்களுக்குத் தனி உயர்வும் தனி உரிமைகளும் கொடுப்பதில்லை. இதைக் கண்டு அப்பெரு மக்களுட் பலர் அவனை வெறுத்தனர். சிலர் அவனுடைய வெற்றிகளையும் புகழையும் கண்டு அவன் மீது பொறாமை கொண்டனர். அத்தகைய பகைவருள் ⁹காஸியஸ் என்பவன் ஒருவன். அவன் மக்களின் நடையையும் உள்ளப் போக்கையும் அறிவதிலும் அவர்களை இயக்கி நடத்துவதிலும் அருந்திறனுடையவன். ஆகவே ஸீஸரை யார் யார் வெறுப்பவர்கள் என்று கண்டு, அவர்களை அவன் ஒரு கட்சியாகத் திரட்ட முயற்சி செய்துவந்தான். ஆண்டுதோறும் அந்நகரில் நிகழ்ந்து வந்து நகரக் கால்கோள்விழா இவ்வகையில் அவனுக்கு மிகவும் உதவியா யிருந்தது.

அவ்வாண்டு விழாவின்போது ஸீஸர் அந்தோணியுடன் கவலையற்று அவ்விழாக் கூட்டத்தைச் சுற்றிப் பார்வையிட்டு வந்தான். அந்தோணி ஒருவனே அன்று அவனுடன் நெருங்கி உறவாட முடிந்தது. பிறரையெல்லாம் ¹⁰‘காஸ்கா’ என்ற ஒருவன் அவர் பக்கம் வராதபடி அடித்துத் துரத்தினான். அது கண்டு பலருக்கும் முகம் சிவந்ததைக் காஸியஸ் கவனித்தான்.

அவன் பார்வை சிறப்பாக ¹¹மார்க்கஸ் புரூட்டஸ் என்பவன் மீதே சென்றது.

மார்க்கஸ் புரூட்டஸ், ரோமின் மிகப் பழைய பெருங்குடி ஒன்றைச் சேர்ந்தவன். ரோமில் முடியாட்சியை வீழ்த்திக் குடியாட்சியை நிறுவிய பெருந்தலைவனாகிய ஜூனியஸ் லூசியஸ் புரூட்டஸின் வழிவந்தவன். ஸீஸரும் அவனும் தமக்குள் அன்பும் மதிப்பும் வைத்திருந்தனர். அப்படியிருந்தும் ஸீஸருடைய அரசியலின் போக்கில் அவனுக்கு விருப்பமில்லை. ஏழு நூற்றாண்டுகளாக நிலைபெற்றிருந்த குடியாட்சியை அழித்து ஸீஸர் முடியரசை நிறுவ முயல்வது அவனுக்குத் தாங்கமுடியாத துயரைத் தந்தது. எனவே நட்பு ஒருபுறமும் கொள்கை ஒரு புறமாக அவன் மனத்தகத்தே போராடின.

விழாநாளன்று அவன் ஸீஸரது தற்பெருமையையும், ஸீஸருடைய நண்பர்களது சிறுமையையுங் கண்டு தனது களங்கமற்ற முகத்தில் வெறுப்பும் ஏளனமுந் தோன்றப் புன்முறுவல்கொண்டு நின்றான்.

இதனைக்கூர்ந்து கண்டுகொண்ட காஸியஸ் அவன் பக்கம் வந்து நின்று பேச்சுக்கொடுத்து, ஸீஸரைப் பற்றியும், நகராட்சி முறையைப் பற்றியும் அவன் கொண்டிருந்த கருத்துக்களை நயமாக உசாவி அறிந்து கொண்டான். அதன்பின் அவன், “என் அரிய நண்ப! நானும் அன்பர்கள் பலரும் இதுபற்றியே உன்னுடன் கலந் தாராய வேண்டுமென்று நெடுநாளாகக் காத்துக் கொண்டிருக் கிறோம். ஆனால் நீயோ சாம்பவான் மாதிரி உன் உயர்வையோ, பிறர் உன்னைப்பற்றி எண்ணிக் கொண்டிருக்கும் எண்ணங்களையோ அறியமாட்டாதவனாய் இருக்கிறாய்! ரோம்நகர மக்கள் ஸீஸரின் கொடுங் கோன்மையைத் தாங்கமுடியாது வருந்துகிறார்கள். குடியாட்சிக்கொரு குலதெய்வமாகிய புரூட்டஸின் குடும்பத்தில் பிறந்த நீதான் இதில் அவர்களுக்கு வழி காட்டியாய் நிற்கவேண்டுமென்று அவர்கள் எதிர் பார்க்கிறார்கள்,” என்றான்.

புரூட்டஸ்: நான் எங்ஙனம் வழிகாட்டுவது? ஸீஸரோ என் அன்பார்ந்த நண்பனாவான். அவன் ஒப்பற்ற வீரமும் பெருந்தன்மையும் வாய்ந்தவன். ரோம் நகருக்கே ஏன், உலகிற்கே பேரொளி போன்றவன். அப் பேரொளியே புகையடைந்து விட்டால் அதனை எதைக்கொண்டு விளக்குவது?

காஸியஸ்: என்ன புரூட்டஸ்! நீயே இப்படிக் கூறினால் பின் அறியாதவர்கள் என்ன சொல்லமாட்டார்கள்? அவன் நண்பனானால் என்ன, வீரன் ஆனால் என்ன? அதற்காக நாம் நம் ஆண்மையையும் நாட்டின் நலனையும் அவனுக்குப் பலி கொடுக்க வேண்டுமா?

புரூட்டஸ்: உண்மை. நீ சொல்வது உண்மை, அவனிடம் நான் மிகுந்த பற்றுடையவனேயாயினும் தாய் நாட்டினிடம் அதனினும் மிகுந்த பற்றுடையேன். அவனிடம் எவ்வளவு அன்புடையே னாயினும் அதற்காகத் தன் மதிப்பை விட்டுக்கொடுக்கமாட்டேன். ஆனால், இவ்வகையில் நாம் என்னதான் செய்யக்கூடும்?

காஸியஸ் விடைபகருமுன், விழாக்கூட்டத்தின் பக்கமிருந்து ‘கொல் கொலோ கொல்’ என்ற பேராரவாரம் கேட்டது. அது கேட்டுப் புரூட்டஸ், “நான் கேள்விப்பட்டபடி ஸீஸருக்கு அவ்வந்தோணியின் முயற்சியால் முடி அளிக்கப்பட்ட தென்றே அஞ்சுகின்றேன்” என்றான்.

காஸியஸ்: இப்படி நாம் செயலற்று அஞ்சிக் கொண்டிருப்பதனாலே தான் ஸீஸர் நமது பொது வாழ்வை அவமதித்து மிதிக்க முடிகிறது. அதனால் இன்று அவர் உலகளந்த பெருமாளாக மண்ணும் விண்ணும் தொட்டு நிற்கிறார். நாமும் அவர் காலடியில் நின்றுகொண்டு அவர் முழந்தாள்களை அண்ணாந்து பார்க்கும் நிலையில் இருக்கிறோம். இது யார் குற்றம்? அவரவர் விதிக்கு அவரவர் மதிதான் காரணமேயன்றிப் பிறர் காரணமாவாரோ? அவனும் நாமும் பிறந்தபோது ஒன்றுபோல் மனிதராகத்தாமே பிறந்தோம்? பின் அவனை மனிதனாக நடக்கச் சொன்னவர்களும் இல்லை; நம்மைப் புழுக்களாய் அவன் காலடியிற்கிடந்து நெளியச் சொன்னவர் களும் இல்லை. இதோ பார்! நீதான் இருக்கிறாய்! நீ புரூட்டஸ், அவன் ஸீஸர்! புரூட்டஸுக்கும் ஸீஸருக்கும் என்ன வேற்றுமை? ஆனால் நீ புரூட்டஸாக நடந்துகொண்டால் தானே!

புரூட்டஸ் மனத்தில் இச்சொற்கள் பசுமரத்தில் கூரம்புகள் பாய்வது போற் பாய்ந்து பதிந்தன. அவன் ஒன்றிரண்டு வினாடிகள் செயலற்று நின்று, பின் “சரி காஸியஸ் நீ கூறியதை மறவேன். அதைக் குறித்து மீண்டும் கலந்து ஆராய்வோம். இதோ ஸீஸரும் அவர் கூட்டத்தாரும் வருகிறார்கள்,” என்று கூறினான்.

##2. கிளர்ச்சித் திட்டம்

ஸீஸர் திரும்பி வந்தபோது காஸ்கா முன்போல் கூட்டத்தை அடித்துத் துரத்திக் கொண்டு முன்னால் வந்தான். ஸீஸர் அப்போது அந்தோணியின் தோள்கள் மேல் ஓட்டப் பந்தயத் திற்கென ஆடையின்றி அரைக்கச்சையுடன் வரும் இளைஞனாகிய அந்தோணியின் தோள்கள் மேல் கை போட்டுப் பேசிக் கொண்டே வந்தான்.

அச்சமயம் அவனது உடை பேரரசர்க்குரிய கருஞ்சிவப்பு உடை; அவன் கண்பார்வை உலகமெல்லாம் தனதெனப் பார்க்கும் பார்வை.

அவன் வாழ்க்கையின் கோள் உச்சநிலையை அடைந்த நேரம் அது. உலகத்தை ஆளும் ரோம் நகர் அவன் காலடியிற் கிடந்து அவன் ஆணைக்குக் காத்து நின்றது. அந்தோணி அவனுக்குப் பொதுமக்கள் சார்பாக உலகின் மணிமுடியை அளித்தது சற்றுமுன்தான். அதனை அவன் மேற்போக்காக மறுத்தும் அது பேராரவாரத்தினிடையே மீண்டும் மீண்டும் வற்புறுத்தி அவனுக்கு அளிக்கப்பட்டது. அவன் இனி அதை அடைவது உறுதி. அடைவது என்று என்பது தெளிவாக வேண்டியது ஒன்றுதான் குறை. அதுவும் பெரும்பாலும் அவ்வாண்டின் மார்ச்சுத் திங்கள் நடுநாள் (மார்ச்சு ஐந்தாம் நாள்) கூடவிருக்கும் அரசியல் மன்ற¹²க் கூட்டத்தில் வைத்து நிறைவேறக்கூடுமென்று அவன் நண்பர்கள் கூறிக்கொண்டார்கள்.

ஆனால் ஊழின் போக்கை யாரே மதிப்பிட்டறியக் கூடும்? அவன் வாழ்க்கையின் வெள்ளி உச்சநிலையை அடைந்த அதே நேரத்திலேதான் அதன் தூமகேதுவும் வானில் எழுந்தது என்னல்வேண்டும்!

பெருமக்களும் மன்னரும் அவனை அணுக அஞ்சிய அந்த நேரத்தில், ஆண்டி ஒருவன் எப்படியோ எல்லோரையுங் கடந்துவந்து அவன் முன் நின்றான். முதற் பெரும் பூதங்கள்கூடக் கேட்க அஞ்சிய அவனது பெயரை அவ்வாண்டி கூசாது உரக்கக் கூறுகிறான்! ‘ஸீஸர், ஏ ஜூலியஸ் ஸீஸர்’ என்ன அடம்!!

அவன் உடல் ஒடுங்கியிருப்பினும் இருப்புலக்கை போல் உறுதியுடையதாய் இருந்தது. அவன் உடுத்தியிருந்த உடை தாறுமாறாகக் கிழிந்த அழுக்குக் கந்தைகளேயாயினும் அவை காற்றிலசைந்து அவன் உரமிக்க உடலை வெளிப்படுத்தும் போது, அவை அவன் உடல் வலியை எடுத்துக் காட்டும் வீரக் கச்சையோ என்னும் படி விளங்கியிருந்தன.

அவன் அச்சமற்றுத் துணிகரமான குரலில், “ஸீஸர், ஏ ஜூலியஸ், ஸீஸர்! உன் பெருமையெல்லாம் ¹³மார்ச்சு நடுநாள் என்னாகிறது பார்” என்று அதட்டிக் கூறி மறைந்தான். அவன் போய்ச் சிறிது நேரம் வரையில் ஒருவருக்கும் தன் உணர்வு வரவில்லை. ஸீஸரது பெருமிதமும் அவனைச் சுற்றி வந்தவரது களிப்பும் மீளுதற்கின்றி மறைந்தோடின. அவர்களனைவரும் சூனியக்காரியின் பின் செல்லும் பேயுருக்கள் போல ஸீஸரைப் பின்பற்றிச் சென்றனர்.

ஸீஸருடன் வந்த அவன் மனைவி கல்பூர்ணியாவோ ஒந்தியைக் கண்ட மயிலென நடுங்கிக் கணவன் தோள்களைப் பற்றி அவன்மேற் சாய்ந்தாள். அவளது இதயத்துடிப்பு அவன் தோள்களிலும் துடித்தது. அவனும் உள்ளூரச் சற்றே துணுக்குறினும், தன் மனைவிக்கும் பிறர்க்கும் ஊக்கமளிக்கும் வண்ணம் வலியப் புன்முறுவலை வருவித்துக்கொண்டு, “அவன் ஒரு பித்தன் போலும்! அவன் சொற்களை ஒரு பொருட்டாக எண்ணுவார்களா?” என்றான்.

காஸியஸ் அக்கூட்டம் தன்னைக்கடந்து செல்லும் அந்நேரத்திலேயே, அதனிடையே முன்னைய எழுச்சியின்றி ஒதுங்கி நடந்துவரும் காஸ்காவைத் தன் பக்கமாகச் சட்டையைப் பிடித்திழுத்து நிறுத்திக் கொண்டான். அவன் மூலமாகக் காஸியஸ் அன்று கூட்டத்தில் நடந்தவையனைத்தையும் அறிந்து கொண்டதன்றி, அவன் ஒரு நல்ல சமயசஞ்சீவி என்பதை உணர்ந்து அவனிடம் பக்குவமாகத் தன் எண்ணங்களைத் தெரிவித்துத் தனது கிளர்ச்சித் திட்டத்துக்கு அவனை உடந்தையாக்கிக் கொண்டான்.

விழாக்கழிந்த சில நாட்களுக்குள்ளாக அவ்விருவர் முயற்சியாலும் ¹⁴திரெபோனியஸ், ¹⁵தெஸிமஸ் புரூட்டஸ், ¹⁶ஸின்னா, ¹⁷மெதெல்லஸ் ஸிம்பர் முதலிய இளைஞர் பலர் அவர் களுடன் சேர்ந்தனர். இவர்கள் அனைவரும் காஸியஸ் குறிப்பறிந்து துணிகரமாக எச்செயலையும் செய்ய இறங்குபவர்களே ஆயினும் பொதுமக்கள் மதிப்பையும் அன்பையும் பெறும் வகையில் காஸியஸாயினும் சரி, அவனைச் சேர்ந்தவர்களாயினும் சரி, மிகவும் குறைபாடுடையவர்களாகவேயிருந்தனர். ஆகவே எப்பாடு பட்டாயினும் புரூட்டஸின் தலைமைக்காக உழைக்க வேண்டுமென அனைவரும் முடிவு கட்டினர்.

ஆனால் தன்னலமும் வகுப்பு வேற்றுமை உணர்ச்சியும் அழுக்காறும் நிறைந்த அக்கிளர்ச்சிக்காரரது திட்டத்தில் ஒழுக்க நெறியாளனாகிய புரூட்டஸைச் சேர்ப்பது எப்படி? நாட்டுப்பற்று, விடுதலைப்பற்று ஆகிய இரு பேருணர்ச்சிகளின் உதவியாலேயே அவனை இயக்க முடியும் என்று அவர்கள் அறிந்துகொண்டனர். அதன்படியே அவர்கள் அவனது தலைமையை நாடிப் பொதுமக்கள் எழுதியதுபோல் பலகையெழுத்துக்களில் பல மொட்டைக் கடிதங்கள் வரைந்து அவன் வீட்டிலும் தோட்டத்திலும் அவன் நடமாடும் இடங்களிலுமாக அவன் கண்களில் படும்வண்ணம் போட்டு வைத்தனர். நேரிலும் அவர்கள் தொடர்பற்றவர்கள் போலத் தனித்தனி வந்து அவன் மனத்தைக் கரைத்தனர். இறுதியில் புரூட்டஸ் அவர்கள் கட்சிக்குத் தலைவனாக நின்றுழைக்க ஒப்புக்கொண்டான்.

அவர்களது முதல் நடைமுறைக் கூட்டம், புரூட்டஸின் வீட்டுக்குப் பின்புறமுள்ள தோட்டத்தில் இரவில் கடையாமத்தில் நடைபெற்றது. அச்சமயம் உலகியல் அறிவு நிரம்பப் பெற்ற காஸியஸ் தனது வெற்றிக்கான பல கோரிக்கைகள் கொண்டு வந்தான். அவற்றுள், கட்சித் திட்டப்படி நடப்பதாக ஆணையிடல், ஸீஸரோடு அவனது கட்சிக்கு ஆணிவேரான அந்தோணியையும் அகற்ற வேண்டுவது, அன்றைய நேரம் உலகின் தனிப்பெருஞ் சொற்பொழிவாளரான ஸீஸரோவையும் கிளர்ச்சிக்காரர் குழுவில் சேர்த்துக் கொள்ளுதல் ஆகிய இவை தலைமை யானவை.

உலகியல் அறிவைவிட நேர்மையும் கலப்பற்ற தூய உண்மையையுமே உயர்வாக மதித்த புரூட்டஸ், அவற்றுள் ஒவ்வொரு கோரிக்கையையும் தக்கதன்றென மறுத்துவிட்டான். ஆணையிடல் ரோமனது வாய்மொழியின் மதிப்பை அவமதிப்ப தென்றும் அந்தோணி கேளிக்கைகளை மட்டுமே பெரிதாக நாடித்திரியும் பட்டுப் புழுவேயென்றும், ஸீஸருக்குக் கைக்கருவி அல்லது வாலேயாவான் என்றும், ஸீஸரோ வெறும் பகட்டுக்காரன் என்றும் அவன் கொண்டான். இம்மூன்று இடங்களிலும் காஸியஸின் பக்கமே முன்னறிவும் தொலை நோக்கமும் இருந்தன என்பதில் ஐயமில்லை. புரூட்டஸ் அரசியல் வாழ்வு சூழ்ச்சி வாழ்வு என்பதனை அறியாது. அதனினும் ஒழுக்கமுறைமையே வெற்றி பெறும் என்று நம்பினான்.

3. சீசர் வீழ்ச்சி

கிளர்ச்சிக்காரரது திட்டம் எவ்வளவு மறைவாய் இருந்தபோதிலும், அதனால் ஏற்பட்ட பரபரப்பு அந்நகரெங்குந் தாக்கியது. எங்கும் மக்கள் மனத்திற் குழப்பமும் கலவரமும் நிறைந்திருந்தன. பலர் தாம் கொண்ட திகிலை உறுதிப்படுத்தும் தீக்குறிகளையும் தீக்கனாக்களையும் கண்டு மனம் பதைத்தனர். அன்று நகர மண்டபத்தின்மீது பட்டப்பகலில் ஆந்தைகூட வந்திருந்து கூவிற்றாம். இன்னோரிடத்தில் ஓர் அடிமையின் உடலைச் சுற்றி அவனையும் அறியாமல் தீ எரிந்ததாம். போதாக்குறைக்கு அன்றிரவு புயலும் மழையும் மின்னலும் இடியும் அதுவரை எவரும் கண்டுங் கேட்டும் அறியாத வகையில் கலந்துகொண்டு கலங்காத நெஞ்சினரையுங் கலங்கவைத்தன. அவற்றிடையே நாய் போன்றும் நரிபோன்றும் கூகைகள் போன்றும் காளிகளும் கூளிகளும் குறளிகளும் மயிர்க்கூச்செறியும் வண்ணம் ஊளையிட்டுக் கத்தினவாம். அறிவிலும் ஆராய்ச்சி யிலும் சிறந்த அறிஞர்கள் கூட இவற்றைப் பார்த்துவிட்டு, “இவை ஏதோ பெரிய உலக மாறுதல்களுக்கு அறிகுறியாகத் தான் இருக்க வேண்டும்,” என்று கருதினார்கள்.

மிக நுண்ணிய இயக்கங்களும் கற்புடைய மாதரின் மனத்தில் அதிர்ச்சியை உண்டாக்கும் என்பர். அதன்படி புரூட்டஸின் மனைவியாகிய போர்ஷியாவும் ஸீஸரின் மனைவியாகிய கல்பூர்ணியாவும் அன்றிரவு தீக்கனாக்களால் துயிலின்றி வருந்தினர். போர்ஷியா புரூட்டஸைப் போன்றே ஒப்பற்ற நாட்டுப் பணியாளராகிய ¹⁸கதோவின் புதல்வியாவள். ஆகவே அவள் தான் பெண்ணாயினும், வீரர் புதல்வி என்ற முறையிலும் வீரர் துணைவி என்ற முறையிலும் புரூட்டஸின் மனத்தை அரிக்கும் உண்மைகளை அறிந்து அவன் கவலைகளில் பங்ககொள்ள வேண்டுமென்று வாதாடினாள். புரூட்டஸ் அவளுக்கு இணங்கி, அன்று நிறைவேற்ற இருக்கும் தன் திட்டத்தை அவளுக்குக் கூறினான்.

ஆனால் கல்பூர்ணியாவுக்கு அதுபோலத் தன் கணவனைத் தன் மனப்படி திருப்ப முடியவில்லை. அவள் தன் கணவன் உருவத்தின்மீது பல ரோமப் பெருமக்கள் உடைவாளாற்குத்தி அவன் குருதியிற் கைதோய்த்தனர் எனக் கண்டு அலறி எழுந்து அரசியல் மன்றத்திற்குப் போகப் புறப்பட்டு நிற்கும்-அவனை அன்று எங்கும் வெளியே போகவேண்டாமென்று தடுத்தாள்; விதி வழியே செல்லும்அவன் மனம், அவள் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆயினும் அவளுக்கு அமைதி கொடுக்கும் வண்ணம், நகர்க்கோவிலுக்கு ஆடு ஒன்று பலியிட்டு நற்குறியறிந்துவரும்படி ஓர் ஆளை அனுப்பினான். இதுவும் அவனுக்கு நற்குறி தரவில்லை. பலியிட்ட ஆட்டில் இதயம் காணப்படவில்லை என்று கூறப்பட்டது. தனது காரியத்திற்கேற்ப அவன் அதற்குப் பொருள்கொண்டு, “வானவர் இன்று நான் இதயமற்ற கோழையாய் விட்டேன் எனக்கேலி செய்கின்றனர் போலும்” என்றான்.

சற்று நேரத்திற்குள் கிளர்ச்சிக்காரருள் ஒருவனாகிய தெஸிமஸ் புரூட்டஸ் அங்கே வந்து, அவன், அன்று வெளியே போவதைக் கல்பூர்ணியா தடுப்பதையும் அவன் தயங்குவதையும் கண்டதே அவன் மனம் சுறுக்கென்னும் படி, “பாராளும் ஸீஸர் ஒரு பாவை சொல்லுக்கிணங்கி அரசியல் மன்றத்தில் தன்கடனாற்ற மறுத்தால் உலகம் சிரிக்கும்,” என்றான். அதுகேட்டு ஸீஸர் கல்பூர்ணியா பக்கம் பாராமலே அவள் பிடியை உதறிக்கொண்டு புறப்பட்டான்.

அன்று பின்னும் இரண்டு தடவை அவனது பழைய நல்வினை அவனுக்கு எச்சரிக்கையாக வந்தது. ஆனால் அவனது தீவினையே அதனினும் மேம்பட்டு நின்று அவனுக்குத் துணிவைத் தந்தது என்னல் வேண்டும். முதலாவது, வழியில், விழாவன்று வந்த ஆண்டி மீண்டும் வந்து நின்றான். ஸீஸர் அவனைப் பார்த்து, “உன் நடுநாள் வந்துவிட்டதே, உன் முன்னறிவு இப்போது என்னாவது?” என்று கேட்டான். அவன் அமைதியுடன், “ஆம்; நடுநாள் வந்துவிட்டதுதான்; ஆனால் அது போய்விட வில்லையே.” என்றான்.

ஸீஸரின் நண்பன் அவனை முடிமன்னராக்கக் குறித்து வைத்திருந்த கூட்டமே அவன் எதிரிகளால் அவனைக் கொலை செய்து ரோமக் குடியரசைக்காக்கவுங் குறித்து வைக்கப் பட்டிருந்தது. இதனை எப்படியோ அறிந்தனன் ஸீஸர் நண்பர்களுள் ஒருவனான அர்த்தெமிதோரஸ் என்ற வழக்கறிஞன். ஸீஸருக்கு அதைக்சொல்ல நேரமும் இடமும் வாய்க்காமல், இக்கூட்டத்திலேயே அவனிடம் அதனைக் கடித வாயிலாகத் தெரிவித்து விட வேண்டுமென்று கருதிக்கொண்டு வந்திருந்தான்.

ஸீஸரை அண்டிக் குறையிரப்போர் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர். அவருள் கிளர்ச்சிக்காரருள் ஒருவனான மெதெல்லஸ் ஸிம்பரும் இருப்பதை அவன் கண்ணுற்றான். இவன் நாடுவிட்டுத் துரத்தப்பட்ட தன் உடன்பிறந்தநாளை மீண்டும் அழைத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டப்போனான். அப்படி வேண்டும் சமயத்தையே கிளர்ச்சிக்காரர் தம் கருத்தை நிறைவேற்றும் நேரமாக முன்னேற்பாடு செய்திருந்தது. அர்த்தெமிதோரஸுக்குத் தெரியும். ஆகவே, மெதெல்லஸ் ஸிம்பருக்கு முந்தவேண்டும் என்ற பரபரப்பில் அர்த்தெமிதோரஸ் முன்கூட்டியே ஸீஸரை நோக்கி, “ஆண்டகையீர்! என் கடிதம் தம்மையே குறிப்பது; மிகவும் விரைவில் அறியவேண்டுவது; அதனை முந்திப் பெற்றருள்க,” என்றான்.

ஊழ்வினை முந்துறுத்தலின் ஸீஸர் இதனையும் தன் பெருந் தன்மையைக் காட்டுமிடமெனக் கருதி, “எம்மைக் குறிப்பதை யாம் இறுதியிற் பார்ப்போம்” என்று கூறி அவனைக் கடைசியிற் போகும்படி கூறிவிட்டான். அவன் விதிக்கேற்ப அன்று அவனது நன்மதியே அவனுக்குத் தீமதியாமைந்தது.

இதற்குள் அந்தோணி, ஸீஸருடைய இணைபிரியா நண்பனாதலால், திரெபோனியஸ் முன் கருத்துடனே அவனைத் தக்க சாக்குக்கூறி அவ்விடம் விட்டு அகற்றிக் கொண்டு போய் விட்டான்.

கிளர்ச்சிக்காரரனைவரும் முன்னமே வந்து ஸீஸரைச் சுற்றி நாற்புறமும் கூடியிருந்தனர்.

மெதெல்லஸ் ஸிம்பர் தன் குறையைக் கூறத் தொடங்கியதே அவன் வழக்கின்னதென அறிந்த ஸீஸர் அவனை நோக்கி, “வேண்டா, வேண்டா; நீ கேட்க வேண்டுவதில்லை உன் வேண்டுகோள் செல்லாது,” என்றான்.

“கெஞ்சுதலாலும் பல்லிளித்தலாலும் ஸீஸர் போன்றவர் களை அசைத்துவிட முடியாது. பிற விண்மீன்கள் தன்னைச் சுற்றினும் தான் சுழலாது நிற்கும் வட (துருவ) மீனை ஒத்த உறுதியுடையவன் அவன்,” என்ற இறுமாப்பு மொழிகள் ஸீஸர் நாவினின்று அப்போது எழுந்தன.

அவ்வேண்டுகோளுக்குத் தாமும் வந்து துணைதருபவர் போலக் காஸியஸும், புரூட்டஸும் சற்று நெருங்கி முன்வந்தனர். அப்போது எவ்வகை ஐயமும் இன்றி அவன், “புரூட்டஸ்கூட இச்சிறு செய்திக்குத் துணையா? ஆயினும் என்ன? நடுநெறி பிறழாத ஸீஸர் தீமையைச் செய்வதுமில்லை; செய்தபின், பின்வாங்குவதும் இல்லை. அவன் செய்தது செய்ததுதான். ஆளுக்காக அது மாறுவதில்லை; உயர்குணமுடைய புரூட்டஸ் சொல்கூட அவன்முன் வந்து பயனற்றுப்போவது பற்றி வருந்துகிறேன்,” என்றான்.

அதன்பின் ஸின்னாவும் தெஸிமஸ் புரூட்டஸும் வந்து பணிந்தனர். ஸீஸர் சற்றுப் பொறுமையிழந்து சினங்கொண்ட பார்வையுடன், “மேருவை அசைத்தாலும் ஸீஸரை அசைக்க முடியாது; அப்பாற் செல்க. மார்க்கஸ் புரூட்டஸ் சொல்லுக்குங்கூட இங்கு விலையில்லை என்பது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?” என்றான்.

இதுவே தக்க சமயம் எனக்கண்டு பின் நின்ற காஸ்கா, “ஆயின் விலையுடையது இதுவே,”என்று கூறிக்கொண்டு, தன் உடைவாளால் அவன் முதுகிற் குத்தினான். அவனையே முதற் குறியாகக் கொண்டு காத்திருந்த கிளாச்சிக்காரர் அனைவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக அவன்மீது பாய்ந்து குத்தினர்.

காஸ்கா குத்தினபோது ஸீஸர் திடுக்கிட்டுப் பின்னால் திரும்புமுன் மற்றக் குத்துக்கள் விழவே, அவன் உடல் பதைபதைத் தெழுந்தது.

ஆனால் அதற்குள் மார்க்கஸ் புரூட்டஸ் அமைதியுடன் அவன்முன் வந்து நின்று, உடைவாளை ஓங்கிக்கொண்டு, “ரோமின் பகைவன் வீழ்க; விடுதலையின் பகைவன் வீழ்க,” என்ற மொழிகளுடன் அவன் நெஞ்சில் குத்தினான்.

ஸீஸர் அவனைக் கண்டதுமே திகைத்து, “என்ன, நீ கூடவா, புரூட்டஸ்,” என்றான்.

அவன் நெஞ்சிற் குத்திய குத்தினால், அவன் இதயம் வெடித்துக் குருதி புரூட்டஸ் மீதே பீறிட்டுப் பாய்ந்தது. சில நொடிக்குள் அவன்கீழே சாய்ந்து உயிர் நீத்தன்.

4.ஒட்டகத்துக்குக் கிடைத்த இடம்

இதுவரை கிளாச்சிக்காரர் திட்டத்திற்குக் கலப்பற்ற வெற்றியே கிடைத்து வந்தது. ஆனால் ஸீஸர் இறந்து பின்புதான், ரோம் நகரத்திற்கு அவனது ஆட்சி முறை எவ்வளவு இன்றியமையா ஏற்புடையது என்பது விளங்கலாயிற்று. தமது திட்டம் நிறைவேறியதும் அவ்வரசியல் மன்றத்தார்க்குத் தன் கட்சியின் கொள்கைகளை விளக்கி அவர்கள் உதவியால் குடியரசை நடத்தவேண்டும் என்பது புரூட்டஸின் ஏற்பாடு. ஆனால் ஸீஸர் கொலையுண்டது கண்டு திடுக்கிட்ட அரசியல் மன்ற உறுப்பினர், அவனது குருதியில் தோய்ந்த உடைவாள்கள் பின்னுஞ் சுழல்வது கண்டு இன்னும் யார் யார் உயிர்க்கு இடையூறு வருமோ என்று அஞ்சி மூலைக்கொருவராக ஓடிவிட்டனர்.

அதுகண்டு புரூட்டஸ், தம் நண்பர்களை நகரெங்கும் அவ்வுடை வாள்களைச் சுழற்றிக்கொண்டு, “ஸீஸர் வீழ்க. கொடுங்கோலன் வீழ்க, வீழ்க. ரோம் வாழ்க!” என்று கூவி மக்களை ஊக்கும்படி அனுப்பினான்.

அவர்களும் அவ்வாறே செய்தனர். “ரோம் வாழ்க; புரூட்டஸ் வாழ்க; விடுதலை வாழ்க!” என்று அவர்கள் எங்கும் தொண்டைக் கிழியக் கூவிக்கொண்டு திரிந்தனர்.

ஆனால், நகரின் பரபரப்பு இதனால் இன்னும் மிகுந்ததே தவிரவேறன்று. உருவிய உடைவாள்களைக் கண்டஞ்சி ஓடி ஒளிந்தபேர் பலர் கலவரத்தை மிகுதிப்படுத்தினர். முந்தின நாளே தீக்குறிகளைக் கண்டு அஞ்சிய நகரம். இன்று நிலை கொள்ளாது அல்லோல கல்லோலப்பட்டுக் குழப்பமுற்றது.

திரெபோனியஸுடன் வெளியே சென்றிருந்த மார்க்ஸ் அந்தோணி நகரின் குழப்பத்தைக் கண்டு நடந்த செய்தியைக் கேள்விப்பட்டதும், உடனே தன்னையுங் கட்டாயங் கொல்வர்; அதற்குள் தானே நகரைவிட்டு ஓடிவிட வேண்டும் என்று விரைந்தான்.

ஆனால், இம்முயற்சியிலீடுபட்டுத் தலைமைதாங்கியிருப்பவன் புரூட்டஸ் என்பதைக் கேள்வியுற்றதும், கணவன் இறந்தது கேட்டு உயிர்த்துறக்க எண்ணிய கற்புடை மனைவி, அவள் கைக் குழவியைக் கண்டு எண்ணம் மாறுவதுபோல, “ஆ, அப்படி யானால் இனிப்பழி வாங்கும் வாய்ப்பு உள்ளது,” என்று கருதித் தன் வீட்டுக்குச் சென்று ஒளிந்துகொண்டு, நம்பகமான ஒரு பணியாளின் வாயிலாக, “ஸீஸர் கொலையுண்டதன் காரணம் அந்தோணிக்குத் தெரியும். நண்பன் என்ற முறையில் ஸீஸர் உடம்பை அடக்கஞ்செய்ய மட்டும் அவன் விரும்புகிறான். புரூட்டஸின் திருவுளமறியக் காத்திருக்கிறான்,” என்று எழுதிய ஒரு கடிதத்தை புரூட்டஸுக்கு அனுப்பினான்.

காஸியஸ், புரூட்டஸினிடம், “அந்தோணி பசுப்போலிருந்து புலிபோற் பாயும் இயல்பினன். அவனுக்கு இடந்தரவேண்டா,” என்று வற்புறுத்தினான். புரூட்டஸ், “காஸியஸ்! நீ ஏன் இங்ஙனம் எதைக் கண்டாலும் அஞ்சுகிறாய். அவன் நம்மிடம் வேறெதுவுங் கேட்கவில்லையே! ஸீஸர் உடலை அடக்கம் செய்யத்தானே உரிமை கேட்கறான். ஸீஸரது செத்த உடலுமா நமக்குப் பகை?” என்று கூறிவிட்டு, “அந்தோணி உடலை அடக்கஞ் செய்ய வரலாம்,” என்று பணியாளனிடம் சொல்லியனுப்பினான்.

புரூட்டஸின் இணக்கத்தை அறிந்ததே திகிலும் இருளுஞ் சூழ்ந்து வாடிய அந்தோணியின் முகம், கதிரவனைக் கண்ட தாமரை என அலர்ந்தது. அதுமுதல் அவன் உடலில் ஸீஸரின் உயிரே புகுந்த தென்னலாம்.

ஸீஸரின் பக்கத்தில் ஒரு விளையாட்டுக் கருவிபோன்று ஓடியாடிய அவ்விளைஞன், அதுமுதல் மக்களுடைய மனத்தையும் அறிவையும் கொள்ளை கொண்டு அவர்களைத் தான் நினைத்தபடி ஆட்டும் மந்திரவாதியானான்.

அவன் வந்ததும் என்ன செய்வானோ என்ற கவலையுடன் அவனை எதிர்பார்த்து நின்றனர் கிளர்ச்சிக்காரர். ஆனால் அவன் அவர்களையோ, புரூட்டஸையோ கூட எதிர்பார்த்ததாகக் காணவில்லை. தாயை இழந்த கன்றே போல் அவன் நேராக ஸீஸர் உடல்கிடந்த இடஞ்சென்று அவ்வுடலை மூடிய திரையை நீக்கிவிட்டுக் கோவெனக்கதறி அழுதான். இங்ஙனங் கால்நாழிகை சென்றபின் கண்களைத் துடைத்துக்கொண்டு, சரேலென்று கிளர்ச்சிக்காரர் முன் வந்துநின்று, தனது மேலுடையை அகற்றி உச்சட்டையையும் திறந்து நெஞ்சைக் காட்டிக்கொண்டு, “ஐயன்மீர்! ஸீஸரின் குருதியால் உங்கள் உடைவாளின் விடாய் தீரவில்லையாயின், என் நெஞ்சையும் பிளந்து கொள்க. அவனிடம் நட்புக்கொண்ட பழி எனக்கும் உண்டு. அவனுடன் சாவதைவிட உயர்ந்த பேறு எனக்கு வேறில்லை,” என்றான்.

அவனுடைய கண்கள் அப்போது கலங்கிக் கொவ்வைப் பழங்கள் போற் சிவந்திருந்தன. அவன் உதடுகள் துடித்தன.

அவனது நடிப்பை மிகவும் வெறுத்த காஸியஸும் கிளர்ச்சிக்காரர் பிறருங்கூட அப்போது அவனிடம் கனிவு கொண்டனர். உண்மையும் அன்புமே உருவெடுத்து வந்த புரூட்டஸைப் பற்றியோ கேட்க வேண்டுவதில்லை. அவன் நீர் ததும்பிய கண்களுடன், “என் அரிய உடன் பிறப்பாள! ஸீஸரை நேசிப்பது ஒரு பழியாயின், அதில் உன்னைப்போல் எனக்கும் ஒரு பங்கு உண்டு. நாங்கள் ஸீஸரைப் பகைக்கவில்லை. அவன் ஆட்சி முறையையே பகைத்து, அதனுடன் இரண்டற்று நின்ற அவனையும் கொல்ல நேர்ந்தது. உன்னிடம் எங்களுக்கு எவ்வகைப் பகையும் இல்லை,” என்றான்.

காஸியஸ் இப்போது இடையில் வந்து, “அது மட்டுமன்று அந்தோணி, உனது நட்பையும் நாங்கள் முழுமனதுடன் வரவேற்கிறோம். நீ எங்களுடன் சேரின் உன் விருப்பங்களுக்கு முழு மதிப்புத் தருவோம் என்பதை நீ உறுதியாக நம்பலாம்,” என்றான். அந்தோணி காஸியஸ் பேச்சை முறித்து, “ஐய, ஸீஸரது அடிச்சுவட்டில் மிதித்து நிற்குந். தகுதியுடையர் குழுவிற் சேரும் பெருமை எனக்கு வேண்டா. அவன் நண்பன், அவனுக்காக அழுகின்ற உரிமை கொண்ட நண்பன் என்பதே என் நிலை. ஆனால் நான் உங்களுக்கும் நண்பனே,” என்று கூறி அவர்கள் ஒவ்வொருவருடனும் கை குலுக்கிக் கொண்டான்.

அந்தோணி பின்னும் ஸீஸர் பக்கம் சென்று உரக்க, “ஆ புல்வாய்களுக்கு இரையாகிய கலையரசே போல் விழுந்து கிடக்கும் என் தலைவனே! நீ கிடக்கும் நிலை காணப்பொறுக்க முடிய வில்லையே! ஆ! நின் குருதியில் தோய்ந்து நின்னை வேட்டையாடிக் கொன்ற ’மன்ன’ரிடையே நீ கிடக்குங் கிடை,” என்று கண்ணீர் வடித்தான்.

அந்தோணி தம்மை மறைமுகமாகக் குறை கூறுகின்றான் என்பதைக் கண்டுகாண்ட காஸியஸ் அவனைத் தடுத்து, “நாங்கள் இடந்தருமுன் உன் நிலையை அறிய விரும்புகிறோம். நீ எங்களுடன் சேர்கிறாயா? அல்லது தனித்து நிற்கிறாயா?” என்று கேட்டான்.

அந்தோணி புரூட்டஸ் பக்கமாகப் பார்த்து, “நண்பர் என்றுதான் உங்களை அண்டினேன். நண்பர் என்றுதான் உங்களுடன் கைகுலுக்கினேன். ஆனால் உங்களுடன் ஒருவனாக நான் இருப்பதெப்படி? ஸீஸரின் உடலை அடக்கஞ்செய்து என் நட்புக்கடனாற்றுவதைத் தவிர வேறெவ்வகையிலும் நான் உங்கள் வழிக்கு வாரேன்,” என்றான்.

வழக்கம்போலவே காஸியஸின் தடங்கலைப் பொருட் படுத்தாமல் புரூட்டஸ் அவனுக்கு அக்கடனாற்ற இணக்கந் தந்தான். அதன்பின் அந்தோணி, “உங்களைத் தாக்காமல் ஸீஸரை நண்பர் என்ற முறையில் மட்டும் புகழ்ந்து என் நட்பை-நட்பின் கடனை-ஆற்றலாமன்றோ,” என்று கேட்டான்.

புரூட்டஸ் அதற்கும் இணங்கி, “முதன் முதலில் என் கட்சியின் நிலையை நானே யாவரும் அறிய விளக்கிவிடுவேன்; அதன்பின் நீ போகலாம்,” என்று கூறினான்.

காஸியஸ், அப்போதே தன் திட்டம் உலைந்து விட்டதென முணகினான். ஆனால் புரூட்டஸை எதிர்ப்பது எப்படி? அதுவும் அந்த நேரத்தில்!

5.சொல்லாண்மையா வில்லாண்மையா?

புரூட்டஸ் மேடையிற் சென்று, அங்குக் கூடியிருந்த பொதுமக்கள் முன்நின்று, பேசினான்:

"பகுத்தறிவுடைய என் நாட்டு மக்களே! எங்கள் செய்கை உங்கள் அறிவிக்குச் சரி எனப்பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லாவிட்டால் நீங்கள் தரும் தண்டனையை ஏற்க நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்குப் பகையாரும் இல்லை. ஜூலியஸ் ஸீஸரைப் பற்றிய மட்டில், அவன் என் ஆருயிர் நண்பன். அவன் இறந்ததற்காகக் கண்ணீர் விடுபவருள் நானும ஒருவன். அப்படியாயின் அவனை நான் என் கொன்றேன் என்ற கேள்வி எழலாம். அதற்கு விடையாவது, அவனிடம் என் அன்பு குறைவுடையது. என்பதனாலன்று, நாட்டினிடம் என் அன்பு மிகுதியானது என்பதனாலேயாம்.

நாட்டுக்குப் பகைவர் யாராவது உளரென்றால் அவர் மட்டுமே எங்களுக்குப் பகைவர்! அப்பேர்ப்பட்டவர் யாராவது இருந்தால் கூறுக! உங்கள் விடைக்கு நான் காத்திருக்கிறேன். (கூட்டம்:யாருமில்லை) விடுதலை வேண்டா; அடிமை வேண்டும் என்று கூறுபவர் யாரேனும் இருந்தால அவர்களுக்கு மட்டுமே நாங்கள் பகைவர். அப்பேர்ப்பட்டவர் யாராவது இருந்தால் முன்வருக? (கூட்டம்: யாருமில்லை). அப்படியாயின், எங்கள் செய்கை உங்கள் நண்பர் செய்கை; அதன் தீமை நன்மை உங்களுடையது. உங்கள் பேரால், உங்கள் விடுதலைக்குத் தடையாயிருந்த பெரியார் ஒருவரது உயிரை நாங்கள் அகற்றினோம். இனி நீங்களே ஆட்சி புரிக.

கூட்டம்: ஆம்; ஆம்.

சிலர்: இனி நீரே தலைவர். நீரே ஸீஸர்.

இன்னும் சிலர்: உம்மையே இனி அரசராக முடிசூட்டுவோம்.

புரூட்டஸ் கூட்டத்தின் பொருந்தா உரைகளைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் அவர்களை விட்டு அகன்றான்.

நூலறிவும் ஆராய்ச்சியும் நிரம்பி உலக அறிவுக் கிடமில்லாத அவன் மனத்தில் ரோமப் பொதுமக்களின் அறியாமையோ, பெருமக்களின் தன்னலமோ தென்படவில்லை. அவற்றை அறிந்து நடத்தும் ஆற்றல் வாய்ந்த காஸியஸுக்குத் தான் செய்யுங் தீங்கையும் அவன் உணரவில்லை.

புரூட்டஸ் பேசிக் கொண்டிருக்கையிலேயே அந்தோணி ஸீஸருடன் பக்கம்சென்று அதனை வணங்கி, “எம் அரசே! உமது உடலின் நிலை கண்டும் உம்மைக் கொன்ற கொலைகாரப் பாதகர்கள் நின்ற நிலை கண்டும், சீற்றத்தை உள்ளடக்க அவர்களுடன் நகைத்துக் கை குலுக்கும் எனது சிறுமையை மன்னித்தருள்க” என்று கூறிக்கொண்டே அவ்வுடம்பின் இறுதிப் பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தான்.

பின், சில பணியாள ருதவியுடன் அவ்வுடம்பைத் தானும் தாங்கிக் எடுத்துக்கொண்டு புரூட்டஸ் பேசிக் கொண்டிருந்த இடத்தினருகில் வைத்துவிட்டு, மேடையினின்று இறங்கிவரும் புரூட்டஸை வணங்கித் தழுவிக்கொண்டு அந்தோணி மேடையேறினான்.

சிறந்த நாடகக்காரன் போலத் தன் நிலை, தன் மாற்றார் நிலை, தன்முன் நிற்கும் மக்கள் நிலை என்னும் மூன்றையும் நன்றிந்து அவற்றிற் கேற்பப் பேசி, அவன் மக்கள் மனத்தைப் படிப்படியாகத் தன் பக்கம் திருப்பத் தொடங்கினான்.

முதலில் அவன்தான் புரூட்டஸின் நண்பன்! காஸியஸின் நண்பன்; அவர்கள் கூட்டத்தாரின் நண்பன் என்பதனை வற்புறுத்தி அவர்கள் உயர்வையும், ஸீஸர் இறுதிக்கடனை ஆற்றத் தனக்கு உரிமை கொடுத்த அவர்கள் பெருந்தன்மையினையும் புகழ்ந்து, அதன்பின் இவர்கள் இணக்கத்- தால் தான் எடுத்துக் கொண்ட கடமை ஸீஸரைப் புகழ்வதன்று; ஸீஸரின் இறுதிக் கடனாற்றுவதே என்றும் முன்னுரையாகக் கூறிவிட்டு, நேரடியாக ஸீஸரைப் பற்றிப் பேசத் தொடங்கினான்.

அந்தோணி: "ஒருவர் செய்த நன்மையை மறைப்பது எளிது; அவர் செய்த தீமையை மறப்பது எளிதன்று.

"ஸீஸர் தான் செய்த தீமையினாலேயே இறந்திருக்க வேண்டும்.

"அவன் செய்த தீமை என்ன?

"புரூட்டஸ் கருத்துப்படி அவன் பேராவல் உடையவன் என்று சொல்லப்படுகிறது. (புரூட்டஸ் சொல்வது சரியே. அது தப்பாயிருக்க முடியாது. புரூட்டஸ் போன்ற அறிவாளிகள், காஸியஸ், காஸ்கா போன்ற அறிவாளிகள் சொல்வது தப்பாயிருக்கமுடியாது.) ஸீஸர் என் நண்பன்; என்னிடம் மாறா உறுதியுடையவன்; ஆனாலும் அவன் பேராவலுடையான் என்பதில் ஐயமில்லை.

“அவன் பேராவல் கொண்டது எதில்?”அவன் பெரிய போர்வீரன். அவன் வென்ற அரசர்கள் உங்கள்முன் ஊர்வலமாகச் சென்றதை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். அவன் கொண்டுவந்த திறைகளால் உங்கள் கருவூலம் நிறைந்தது. உங்கள் கைகளும் நிறைந்துள்ளன. ஆயினும் அவன் பேராவலுடையவனே. இவ்வெற்றிகளால், இம்மன்னர் திறைகளால் அவன் மனம் நிறைவடைய வில்லையன்றோ?

“அவன் பேராவல் இதனுடன் நின்றதா? நாள் விழாவன்று அவனுக்கு மணிமுடியும், அரசிருக்கையும் வழங்கினேனே! அவன் அதனை ஏற்றானா? இல்லை. மும்முறை மறுத்தான் என்பதை நீங்களே அறிவீர்கள். ஏன்? அவனுக்கு அந்த மணிமுடியை நான் கொடுத்தது போதவில்லை. உங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் உங்கள் அன்பாகிய ஒரு மணிமுடியையும் பெற எண்ணினான். இது பேராவலன்றோ?”

இங்ஙனம் ஸீஸரைப் பழிப்பதுபோல அவனது பெருமையையே கூறிப் பின்னும், ஏழைகளிடம் அவன் கொண்ட கருணையையும், பொதுமக்கள் அவன் வெற்றிகள் அடைந்த போதும் கொடைகள் அளித்த போதும் அவனை ஆரவாரத் துடன் புகழ்ந்த புகழையும் எடுத்துக் காட்டினான்.

"நீங்கள் அனைவரும் அவன் காலடிகளைக் கண்களில் ஒற்றிக் கொள்ளும் ஒருநாள் இருந்ததன்றோ?

"அவன்மீது எறிந்த செண்டுகூட உங்கள்மீது முள்ளாகத் தைத்த காலம் ஒன்றிருந்ததன்றோ? அன்று அவன்மீது உங்களுக்கு அன்பு இருந்தது. இன்று அவன் இறந்தவுடன் உங்கள் அன்பு எங்கே போயிற்று? உங்கள் அன்பும் அவனுடன் போய்விடவா செய்தது? நம் நண்பர் இறந்தால், நம் வீட்டில் ஓர் அடிமை இறந்தால்-ஒரு மாடு இறந்தால்ட நம் கண்ணில் நீர் வருகின்றதே! நம்மைப்போன்ற ஒரு மனிதன் அதுவும் அரசனுக்கு ஒப்பானவன்; ஒப்பற்ற வீரன்; பெருந்தன்மையானவன்; உங்களுக்காகவே வாழ்ந்தவன்; உங்களை- யன்றித் தனக்கெனப் பொருள் தேடாதவன். அப்பேர்ப்பட்ட ஸீஸர் இறந்து போதுமட்டும் உங்கள் கண்ணில் நீர் வராததேன்?

"நீங்கள் அறிவற்றவர்களா? இல்லை; பின் ஏன் ஸீஸரின் பெருமையை எண்ணிப் பார்ப்பதில்லை?

"நீங்கள் அன்பற்றவர்களா? இல்லை; பின் ஏன் உங்கள் தாய்போன்ற, உங்கள் உயிர்போன்ற ஸீஸர் இறந்தபோது உங்கள் கண்கள் கனியவில்லை.

“உங்கள் கண்களை, உங்கள் உள்ளங்களை மறைப்பது எது? அடக் கடவுளே! நீ கொடுத்த அறிவை, நீ கொடுத்த அன்பை இந்த மக்கள் ஏன் பயன்படுத்தமாட்டேன் என்கிறார்கள்?”

என்று கூறி மீண்டும் ஸீஸரின் உடலின் மீது விழுந்து அழுதான்.

“ஏட்டுச் சுரைக்காய் போன்ற புரூட்டஸின் மொழிகள் எங்கே? பொறி புலன்கள் அத்தனையும் வசப்படுத்தி உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் இம்மாயாவி எங்கே? புரூட்டஸின் சொற்கேட்டு நாவைப் பறிகொடுத்து நின்றவர்கூட இப்போது உள்ளத்தையும் உணர்வையும் பறிகொடுத்து உயிரையும் ஸீஸரின் புதிய புகழுடம்பிற்காகப் பறிகொடுக்க முன்வந்தனர்.”

இவ்வளவும் போதாதென்று அவன் இதுவரையிற் காட்டாது வைத்திருந்த கடைசித் துருப்பு ஒன்றை - கிளர்ச்சிக்காரர் காட்டிய இராவணக் கோட்டையை அழிக்கத் தகுந்த இறுதி “இராமபாணத்தை” எடுத்து வீசினான்.

’இதுவரையிலும் நான் கூறிது கேட்டே நீங்கள் கண்கலங்கு கிறீர்கள்; உங்களை அறியாமல் உங்கள் கண்கள் அழுகின்றன; ஆனால் அவற்றின் காரணத்தை நீங்கள் அறியமாட்டீர்கள்?

"நீங்கள் அவனுக்காக இப்போதுகூடப் பதைபதைக்கிறீர்கள். அவனுக்கு நேர்ந்த தீங்குக்காக அதற்கு விடை தருவதற்காக உங்கள் உள்ளம் துடிக்கிறது. ஆனால் அவ்வளவு அன்பு உங்கள் உள்ளத்தில் எழுவானேன்?

"உண்மையில் உங்கள் அன்பு காரணமற்றதன்று. அவன் உங்களுக்காகவே பொருள் தேடினான் என்பதையே ‘சேய் - நலனை நாடி உயிர் விடுந் தாய்போல் உயிர்விட்டான்’ என்பதை நான் உங்களுக்குக் காட்ட முடியும்.

“ஆனால் ஏற்கனவே நீங்கள் அழுகிறீர்கள். ஏற்கெனவே நீங்கள் அவனைக் கொன்ற கொலைஞர்மீது, பகைவர்மீது சீற்றமடைந்திருக்கிறீர்கள். அவன் கடைசியாக உங்களுக்கும் அவர்கள் பேச்சைக் கேட்டுக் கைகொட்டும் உங்களுக்கும், உங்கள் ஒவ்வொருவருக்கும் தன்னை வென்றவருடன் கைகுலுக்கும் எனக்கும் வைத்துவிட்டுப் போன உடைமையை நீங்கள் அறிந்துவிட்டால், தலைகால் தெரியாது சாடிவிடுவீர்கள்! பெரியோர்களான எனக்குப் பேச இணக்கம் தந்தவர்களான புரூட்டஸ் முதலியோர்களுக்கு நான் கொடுத்த உறுதியை நீங்கள் குலைத்துவிடுவீர்கள்,” என்று துணிகரமாய்க் கூறினான்.

பொதுமக்கள் இது கேட்டு வியப்பும் எழுச்சியுங்கொண்டு, ‘அதைக் கூறுக, கூறுக’ என்று துடித்த உள்ளத்துடன் கூவிக் கேட்டனர். அந்தோணி வேண்டா வெறுப்பாகக் கூறுபவன்போல் ஸீஸர் தான் இறந்தபின் குடிகள் தனது பொருட்குவை முற்றும் அடையவேண்டுமென்றும், தன் வீடு தோட்ட முதலியவற்றைப் பொதுவிடமாகக் கொள்ளவேண்டுமென்றும் எழுதியிருப்பதை அறிவித்ததோடு அவ்வப்போது ஸீஸரது உடலிற்பட்ட படுகாயங்களையும், அவன் கொலையுண்ட வகையையும், கொலை செய்தோரையும் உருக்கிவிட்ட இருப்புப் பிழம்புப் போன்ற அனல் மொழிகளால் இயைபுடுத்தி அவர்கள் மனக்கண்முன் உயிர் ஓவியமென ஸீஸர் கொலையின் கொடுமையினை வரைந்து காட்டினான். இறுதியில் எல்லா நடிப்பையுந் துறந்து, அவர்கள் கிளர்ச்சிக்காரருடைய வீடுகளை எரித்து அவர்களையும் அவர்கள் நண்பர்களையும் உயிருடன் பொசுக்கி, ஸீஸர் கொலைக்குப் பழி வாங்குமாறு உறுதியாய்த் தூண்டினான்.

6.மறைந்து நின்றழிக்கும் பழி

“பாம்பறியும் பாம்பின் கால்,” என்றபடி அந்தோணியின் உட்கருத்தையும் ரோமின் பொதுமக்கள் நிலையையும் அறிந்து, வரப்போகும் புயலை முன்கூட்டி உணர்ந்த காஸியஸ், புரூட்டஸை எதிர்பாராமலே அவனையுங்கூட அவன் விருப்பத்திற் கெதிராகச் சேர்த்துக்கொண்டு நகரைவிட்டு வெளியேற வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தான். அதனால் அந்தோணியின் தலைமையிற் பொதுமக்கள் புயல்காற்றுப் பட்ட காட்டுத் தீயெனச் சீறிக் கொண்டும் தன்னகத்துள்ள எரிமலையின் எழுச்சியால் கொந்தளிக்குங் கடல் போலக் கொந்தளித்துக் கொண்டும் வருவதை அறிந்ததுமே, அவர்கள் ஓடி நெடுந்தொலைவு சென்று, ‘ஆந்தியம்’ என்னுமிடத்தில் தங்கித் தம்மைப் போருக்குச் சித்தமாக்கிக் கொண்டனர்.

அதுமுதல் ரோம் நகர் மீகாமன் இல்லா மரக்கலம் போல் ஒழுங்கான அரசியலின்றிக் குழப்பத்துள்ளும் உள்நாட்டு சண்டையுள்ளும் ஆழ்ந்தது. பொதுமக்கள் அனைவரும் அந்தோணி பக்கமே நின்றனர் ஆயினும் பொதுமக்களும் அவர்கள் கைப்பட்ட படையும் கிளர்ச்சிக்காரர் பக்கம் நின்று அவர்கள் கட்சியை வலுப்படுத்தினர். பொதுமக்கள் ஆற்றலாற் கிளர்ச்சிக்காரர் நகரத்துட்புக முடியவில்லையாயினும், படையில்லாமல் அந்தோணிக்குப் பேரரசைக் கைக்கொள்ளவும் முடியவில்லை.

இந்நிலையிற் கள்ளன் வீட்டிற் குள்ளன் புகுந்ததுபோல், அந்தோணிக்குப் போட்டியாக ஸீஸரின் மகனாகிய அக்டேவியஸ் என்னும் இளைஞன் தோன்றினான். இவன் ஸீஸரை ஒத்த வீரனல்லனெனினும், ஒப்பற்ற சூழ்ச்சித் திறனும் அமைந்த தோற்றமும் உடையவன். அந்தோணியின் துணையின்றிக் கிளர்ச்சிக் காரரை வெல்ல முடியாதாதலால் அவன் அந்தோணியினிடம் மிகுந்த பற்றுடையவன்போல் நடித்து அவனை வசப்படுத்திக்கொண்டான். ஆனால அந்தோணி படையில்லாமற் பொது மக்களையே நம்பியது சரியன்றெனக் கருதிக் கொஞ்சங் கொஞ்சமாக ஒரு சிறிய படையைத் திரட்டினான்.

மேலும் கிளர்ச்சிக்காரரிடமிருந்து பெருமக்கள் துணையைப் பிரிக்கவும் படைப் பயிற்சிக்கான பணம் பெறவும் அவன் இன்னொரு சூழ்ச்சியுஞ் செய்தான். கிளர்ச்சிக்காரருடன் சேராமல் நின்ற பெருமகனும், பெருஞ் செல்வனுமான ¹⁹லெப்பிதஸ் என்பவனை அந்தோணிக்குப் போட்டியாகக் கிளறிவிட்டு அவனிடமிருந்து பணமும், பெருமக்கள் துணையும் பெற்றதன்றி அவன் வாயிலாக அந்தோணியின் செல்வாக்கையும் மட்டுப்படுத்தினான். மேலும் அவ்அக்டேவியஸ் நாளடைவில் அவர்கள் ஒருவரை ஒருவர் பகைக்கும்படி தூண்டி அவர்களை அழிக்கும் எண்ணமுடையவனாயினும், கிளர்ச்சிக்காரர் அழியும்வரை அவர்கள் துணையைப் பெற எண்ணி அவர்களுடன் பேரரசை ஆளும் உரிமையைப் பங்கு கொள்வதாகப் பேசி ‘மூவர் உடன்படிக்கை’, ஒன்றை ஏற்படுத்திக் கொண்டான்.

மூவர்படை ஒருபுறமும் கிளர்ச்சிக்காரர் படை ஒருபுறமுமாக இரண்டும் ஓயாத சண்டைகளில் ஈடுபட்டன. ஆனால் உண்மையில் மூவரிடையே ஒற்றுமையில்லை; அதுபோலவே கிளர்ச்சிக்காரரிடையிலும் ஒற்றுமையில்லை. காஸியஸின் சூழ்ச்சிகளும், வருவாய்க்காக ஏழை மக்களை அவன் கசக்குவதும் புரூட்டஸுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் இதற்கு மாறாகப் புரூட்டஸுக்குச் செலவு செய்யும் வழியின்றிப் பொருள் வருவாய்க்கான வழி தெரியாதாகையால் அவன் காஸியஸினிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்தான். இப்படி ஒழுங்கு முறைகள் பேசித் தன் வருவாயை ஒரு பக்கம் கெடுப்பதன்றி அடிக்கடி செலவையும் உண்டு பண்ணும் புரூட்டஸின்மீது காஸியஸ் சீறி விழுந்தான். நாளடைவில் இருவரும் கீரியும் பாம்பும் போலாயினர்.

இவ்வொற்றுமைக் கேட்டால் அக்டேவியஸ் படிப்படி யாகத் தன் கட்சியையும் தன்னையும் வலுப்படுத்துவது கண்டு, காஸியஸ் புரூட்டஸுடன ஒத்துப் போக எண்ணி, அவனை நட்பு முறையிற் காணவிரும்பினான். இருவரும் தம் படைகளுக்கு அமைதியாயிருக்க ஆணை கொடுத்துவிட்டுத் தம் படைவீட்டிற் கலந்து நட்பாடலாயினர். அப்போது அவர்கள் ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டுத் தம் குறைகளைக் கூறிக்கொண்டனர்.

காஸியஸின் இடர்களையும், அவனுக்குத் தான் அறியாது கொடுத்த துயரையும் எண்ணிப் புரூட்டஸ் வருந்தியதோடு தான் அவனுடன் பொறுமையிழந்து சீறியதற்காக மன்னிப்புங் கேட்டுக்கொண்டான். மேலும், தான் பொறுமை யிழந்ததற்கு ஒரு காரணமும் உண்டெனக் கூறித் தன் மனைவி போர்ஷியா தன் கட்சியின் தோல்வியையும், தன் துன்பங்களையும் கேட்டுத் தாங்க முடியாது இறந்ததையும், அதுமுதல் தான் தோற்றத்தில் மனிதனா யிருந்தும் உண்மையிற் பேயாகவே நடந்து வருவதையுங் கூறினான்.

அது கேட்டுக் காஸியஸும் கண் கலங்கினான். புரூட்டஸ் தன்னை அறியாவிடினும் தான் புரூட்டஸையும் அவன் உயர்வையும் அறிந்திருந்ததனால் அவனிடம் நாம் பொறுமை காட்டினோ மில்லையே என்று எண்ணிக் காஸியஸ் மனமுருகினான்.

இப்போது காஸியஸ் மனத்தில் தன் கட்சி தோற்றத்தைப் பற்றிய எண்ணமேயில்லை. விரைவில் அவன் இறக்கப் போவதும் அவனுக்குத் தெரியும். ஆயினும் அதைப்பற்றியும் அவனுக்குக் கவலையில்லை. புரூட்டஸின் உயர்வு ஒன்றே அவன் கண்முன் நின்றது. அவன் குற்றங்கள் மனிதன் குற்றம் உலகையறியா மனிதன் குற்றம்; அவன் பெருமையோ கடவுள் பெருமை கடவுட் தன்மை மிக்க பெருமை. அதனைக் கண்டறிந்தபின் தன் வாழ்வின் பயன் நிறைவேறியதாகவே காஸியஸ் கருதினான். இனி அவன் இறக்க அஞ்சவில்லை. பழைய தன்னலத்தின் நிழல். அழுக்காற்றின் நிழல் இன்று பொசுக்கப்பட்டு விட்டது. அவனது உலகியல் அறிவோ புரூட்டஸின் புகழொளிக்கு நெய்யாகப் பயன்பட்டது.

மறுநாள், மூவருள் முதல்வனான-நாளடைவில் மற்ற இருவரையும் விழுங்கிப் பேரரசின் முழு முதல்வனாய் விளங்கிய-அக்டேவியல் ஸீஸரது படை ஒருபுறமும், காஸியஸ், புரூட்டஸ் என்னும் இருவர் படைகளும் மறுபுறமுமாகக் கைகலக்கும் நாள், காஸியஸ் அன்று அவன் படைவீட்டுக்குச் சென்றுவிட்டான்.

புரூட்டஸுக்குக் கண்கள் ஒரு நொடிகூடத் துயிலில் நிலைக்கவில்லை. போர்ஷியாவின் எண்ணங்களைத் துரத்திக் கொண்டு அன்றிரவு ஸீஸர் நினைவும்-அவன் இறந்தபோது அவன் தோன்றிய தோற்றமும், அவன் கூறிய பொன் மொழிகளும் - ‘புரூட்டஸ், நீயுமா’ என்ற வன்மொழியும் அப்படியே அவனுக்கு மீண்டும் மீண்டும் நிகழ்வனவாகத் தோன்றின.

ஸீஸரின் உயர்வு அன்றுதான் அவனுக்கு நன்கு தென்பட்டது. அவன் குற்றம் உண்மையில் அவன் குற்றமன்று; பொதுமக்கள் குற்றம்தான். அவனைக் கொன்றது ஏன்? இப்போது விளங்குகின்றது. கிளர்ச்சிக்காரர் அவனைக் கொன்றது விடுதலை வேட்டைக்காக அன்று. காஸியஸ்கூட, ஆம், காஸியஸ் கூடத் தன்னலத்தைச் சாராதவன் அல்லன். ஆனால் புரூட்டஸ் மனத்தல், அவன்மேற் சீற்றமில்லை. அவன் சிறு பிழைக்கு அவன்தன் அறியாமையாற் பட்ட தீமை போதும் என்று எண்ணினான்.

ஆனால் மன்னிக்க முடியாத குற்றம் தன்னுடையதே. ரோமின் பேரொளியை - ஆம், தன் மொழிப்படியேகூட, உலகின் பேரொளியை - தன் அறியாமையால் அழித்துத் தன்னையுங் கெடுத்துத், தன் மனைவியையுங் கொன்று, தன் நண்பர்களையுந் தன் நாட்டு மக்களையுங் கெடுத்த பழி தன்னதே என்று அவன் கருதினான். அவன் மனம் கழிவிரக்கத்தாற் கலங்கிக் கண்ணீர் சிந்தியது.

அவன் அழுததால் துயின்றானோ, துயிலினால் அழுகை நின்றதோ கூறவியலாது. ஆனால் அவ்வரைத் துயிலில், காய்ந்ததும் முற்றிலுங் காயாத அக்கண்ணீர் வழியாக ஸீஸரின் உருவம் அவன் முன்வந்து நின்றது. அவன் உடல் மயிர்க்கூச் செறிந்தது. அவன் கை கால்கள் நடுங்கின. ஆனால் அவன் உள்ளம் நடுங்கவில்லை. ‘எல்லாம் என் குற்றம், என் குற்றம்’ என்றான் அவன்.

ஸீஸர் உரு ‘ஆம். நாளை உனக்கும் உன் நண்பர்களுக்கும் இறுதிநாள். என் பழியை நீங்கள் அடைவீர்கள்,’ என்றறிவித்தது.

மறுநாள் ‘²⁰பிலிப்பி’ என்ற இடத்தில் நடந்த போரிற் கிளர்ச்சிக்காரர் படை நிலைகுலைந்தழிந்தது. கிளர்ச்சிக்காரர் ஒவ்வொருவராக ஓடிவிட்டனர். காஸியஸ் இனித் தனக்கும் புரூட்டஸுக்கும் இவ்வுலகம் இல்லை எனக் கண்டு, தன் புரூட்டஸ் இறக்குமுன் - தன் புரூட்டஸ் தோல்வி என்ற சொல்லைக் கேட்குமுன் - தான் இறக்கவேண்டுமென நினைத்துப் பணியாள் பிடித்துக் கொண்ட வாள்மீது வீழ்ந்து இறந்தான்.

அவ்வீர முடிவைக்கேட்ட புரூட்டஸ் தனக்கும் முடிவு வந்ததை உணர்ந்தான். போரில் ஸீஸர் உருவமே எதிரியுடன் எதிரியாய் நின்று தன் கட்சியாரைக் கொன்று வென்றதை அவன் கண்டான். இறுதியில் தன்னை நாடி அக்டேவியஸ் படைவீரர் வருவதையுங் கேள்வியுற்றான். ‘ஸீஸர்! உன் பழி தீர்க,’ என்று கூறி அவனும் தன் வாளை நட்டு அதன்மீது வீழ்ந்திறந்தான்.

ஸீஸரோடு ரோமின் அரசியற் பெருமை போயிற்றெனில், புரூட்டஸோடு அதன் அறிவியல் ஒழுக்க இயல் பெருமையும் போயிற்று என்னல் வேண்டும். அவன் வாழ்வையும் மாண்பையும் வாயாரப் போற்றாதார் இல்லை. உணர்ச்சி வசப்படும் இயல்பற்ற அக்டேவியல் ஸீஸர்கூட ’ரோமின் பெருமையனைத்தும் திரண்டெழுந்த பெரியோய்! இழந்த ஸீஸரையும் மறந்து நின்னை இழந்த இழப்பே இழப்பாக நின்று எம்நாட்டுத் தாய்க்கு இனி யார்தாம் ஆறுதல் அளிப்பர்! ஸீஸரும் நீயும் வாழ்ந்த நாட்டில் தகுதியுடையவர் யாரோ?" எனக் கையறு நிலைசெய்தி அவலமுற்றனன்.

பெரியவரான ஸீஸரின் பழியே பெரியோராகிய புரூட்டஸையுங் கொண்டுபோக, ரோம்பேரரசி கணவனையும் அவன் தந்த தனிமகனையும் இழந்த இழந்தாயெனக் கைம்மை நோன்பு நோற்பாளாயினள்.

** அடிக்குறிப்புகள்**
1.  Julius Caesar

2.  Rome

3.  Italy

4.  Partrician

5.  Plebians

6.  Gallia i.e. France

7.  Brittannia i.e. England

8.  Marcus Antonius

9.  Casius.

10. Casca

11. Marcus Brutus.

12. Senate.

13. Idles of March

14. Trebonuis

15. Decimus Bruthus

16. Cinna

17. Metellus Climbe

18. Cato

19. Lepidus.

20. Philippi

கோரியோலானஸ்

****(Coriolonus)****
** கதை உறுப்பினர்**
** ஆடவர்:**
1.  கயஸ்மார்க்கியஸ்: கோரியோலியை வென்றதனால் கோரியோலானஸ் என்றழைக்கப்பட்டவன். ரோமின் ஒப்பற்ற வீரன் வலம்னியா மகன், வர்ஜிலியா கணவன்-கயஸ் தந்தை-ரோமின் பகைவனான தாக்குவினை முறியடித்தவன்.

2.  துள்ளஸ் ஆஃபீதியஸ்: ரோமர் பகைவரான வால்ஷியரின் தலைவன்-கோரியோலானஸால் முறியடிக்கப் பட்டவன் - கோரியோலானஸ் ரோமின் பகைவனான போது நண்பனானவன்.

3.  காமினியஸ்: கோரியோலி முற்றுகையின் போது கோரியோலானஸையும் நடத்திச் சென்ற ரோமப் படைத் தலைவன்.

4.  தீதஸ் லார்ஷியஸ்: கோரியோலி முற்றுகையில் கோரியோலானஸுடன் சென்ற துணைத்தலைவன்.

5.  மெனெனியஸ் அக்ரிப்பா: கோரியோலானஸ் நண்பன்-நாத்திறமும் நயமுமுடையவன்-பொதுமக்களை உயர்த்தும் சீர்திருத்த நோக்கமுடைய பெருமகன்.

6.  தார்க்குவின்: ரோமக்குடியரசின் பகைவனான பழைய ரோமக் கொடுங்கோலரசன்.

7.  கயஸ்: கோரியோலானஸ் புதல்வன்-சிறுவன்

பெண்டிர்:

1.  வலம்னியா: கோரியோலானஸின் தாய்-அறிவும் அடக்கமும் உடையவள்.

2.  வர்ஜிலியா: கோரியோலானஸின் மனiவி-அறிவும் அடக்கமும் உடையவள்.

3.  (பிற மாதர்)

** கதைச் சுருக்கம்**
கயஸ்மார்க்கியஸ் என்ற வீரன் ரோமப் பெருமக்கள் குடியிற் பிறந்தவன்; குடித்தருக்கு உடையவன். அவன் ரோமின் பகைவனான பழைய ரோமக் கொடுங்கோலரசனை வென்றும், வால்ஷியர் நகராகிய கோரியோலியை வென்று அவர்கள் தலைவனான துள்ளஸ் ஆஃபீதியஸை முறியடித்தும் புகழ்பெற்று ரோமின் முடிசூடா மன்னனாய் விளங்கினான். கோரியோலியை வென்றதனால் கோரியோலானஸ் என்ற அவன் பெருமக்கள் விருப்பப்படி நகர்த் தலைவனாகத் தேர்வுக்கு அழைக்கப் பட்டான். நின்றபோது வழக்கப்படி வாக்காளர்களான பொதுமக்களை வணங்க மறுத்ததனால் பொதுமக்களும் அவர்கள் தலைவர்களான திரிபூணர்களும் அவனை வெறுத்து நகரினின்றும் துரத்தினர். அதனால் சினங்கொண்டு அவன் ஆஃபீதியஸுடன் சேர்ந்து ரோமை அழிக்க வஞ்சினங் கூறினான்.

ரோமர் கோரியோலானஸின் தாயையும் மனைவியையும் அவன் குழந்தையுடன், ரோம மாதர் தலைமையில் சென்று அவள் வஞ்சினத்தினின்றும் தம்மைக் காக்கும்படி வேண்டினர். அவர்களும் அங்ஙனம் என்று அவன் மனமுருகப் பேசித் தம் திறமனைத்தும் காட்ட, கோரியோலானஸ் தன் கடமையையும், சினத்தையும் அவர்களுக்காக விட்டுக்கொடுத்தான். ஆனால் வால்ஷியர் அவன் தம்மைக் காட்டிக் கொடுத்ததாகக் கொண்டு அவனைக் கொன்று சின்னாபின்னப்படுத்தினர். ரோமர் அதன்பின் கழிவிரக்கம் கொண்டனர்.

1. வெற்றியும் செருக்கும்

¹கயஸ்மார்க்கியஸ் என்பவன் ரோம் நகரத்தின் பழைய அரசர் குடியிற் பிறந்தவன். இளமையிலேயே அவன் தந்தை இறந்து போனமையால், அவன் தாயாகிய ²வலம்னியாவே அவனை வளர்ந்து வந்தாள்.

வலம்னியா ரோம்நாட்டு வீரத்தாய்களுக்கு ஓர் இலக்கிய மானவள். ஆகவே, அவள் தன் மகனுக்கு உடற்பயிற்சி, வில்லாண்மை, வாள்வீச்சு முதலிய வீரருக்கான கல்விகளை முற்றிலும் பயிற்றுவித்ததுடன் அவன் பதினாறு ஆண்டு எய்தியதும் அவனைப் போருக்கும் அனுப்பினாள். அவனும் ரோமின் பழைய கொடுங்கோலரசனும் ரோமக் குடியரசின் முதற்பெரும் பகைவனுமான ³தார்க்குவினை எதிர்த்து முறியடித்து, அவனைச் சார்ந்த வீரரிடம் அகப்பட்டுத் துன்புறவிருந்த ரோமனொருவனையும் காப்பாற்ற மீட்டு வந்தான். இவ்வீரச் செயலை அந்நகரத்தார் அனைவரும் வியந்து பாராட்டி அவனுக்கு அந்நாட்டு வழக்கப்படி வாகை முடி சூட்டி மகிழ்ந்தனர்.

வீரமில்லா மகன் ஒருவன் வாழ்தலினும் வீரமிக்க மக்கள் பதின்மர் மாள்தலையே சிறப்பாகக் கருதி மகிழும் பெருந்தகைமையுடைய வலம்னியா.

“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும், தன் மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்”

-திருக்குறள்

என்பதற் கிணங்கத் தன் மகன் புகழ் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தாள்.

கயஸ்மார்க்கியஸ் அவள் வளர்ப்புத் திறனுக்கோர் அரிய நற்சான்றாக விளங்கினான் என்பதில் ஐயமில்லை. அவனை ஒத்த வீரம், பெருந்தன்மை, நேர்மை, கலங்கா மன உறுதி முதலிய உயர்குணங்கள் படைத்தோர், வீரத்துக்குப் பேர்போன ரோம் நரகத்திற்கூட வேறெவரும் இல்லை எனலாம். வலம்னியா ரோம் மாதருக்கோர் இலக்கியமாக விளங்கியது போலவே, அவனும் ரோம் வீரர்களுக்கோர் இலக்கியமாக விளங்கினான்.

ஆனால், குளிர்ச்சியும் ஒளியும் நிறைந்து விளங்குந்திங்களிற் கறை என்பதொன்று காண்பதுபோல, அவ்வளவு குணங்களுக்கும் ஒவ்வாத ஒருகுறை கயஸ்மார்க்கியஸிடம் அதே தாயின் வளர்ப்பின் பயனாகக் காணப்பட்டது. அதுவே அவள் வாயிலாக அவன் அடைந்த குடும்பச் செருக்கும் உயர்குடிச்செருக்கும். இக்குற்றம் உண்மையில் ரோமப் பெருமக்கள் அனைவரிடமுமே இருந்தது என்பது உண்மையே. ஆனால், கயஸ்மார்க்கியஸ் களங்கமற்றவன்; உலகின் சூதுவாது அறியாதவன். எனவே அக்குற்றம் அவன் பேச்சாலும் செயலாலும் பிறருக்குத் தெரியும்படி வெளிப்படையாயிருந்தது.

ரோம் அரசு, பெயருக்குக் குடியரசேயாயினும், அதனை உண்மையில் ஆண்டவர்கள் உயர் குடியிற் பிறந்த செல்வர் களாகிய பெருமக்களே. உண்மையில் ரோம் வெற்றிகளிற் கிடைத்த பொருள் நகருக்குப் பொது உடைமையேயாயினும், நடைமுறையில் அந்நகரின் அரசியல் ஏற்பாட்டின்படி அது பெருமக்களுக்கு மட்டும் உரியதாயிருந்தது. ஏழைப் பொது மக்களுக்கு அதிற் பங்கில்லை என்று மட்டுமில்லை; அவர்கள் கடன் சுமையால் வேறு துயருற்றனர். செல்வர்களான உயர்குடி மக்களின் பக்கமே வழக்கு மன்றங்களும் சட்டமும் நின்று ஏழை மக்களைக் குற்றுயிராக்கி வதைத்தன.

இந்த நிலையில், ’இனி அரசியலிற் பங்கின்றி ரோமின் சண்டைகளில் கலப்பதில்லை,’என்று அவ்வேழை மக்களின் தலைவர்கள் தீர்மானித்தனர். இக்குழப்பத்தை ரோமின் பகைவர்கள் அறிந்து படையெடுத்துவரத் தொடங்கினர். இங்ஙனம் பெருமக்களுக்கு எதிராக வெளியிற் பகைவர் படையெடுப்பும், உள்ளே பொதுமக்கள் கிளர்ச்சியும் ஒருங்கே ஏற்பட்டன. தமது இக்கட்டான நிலைமையை உணர்ந்து பெருமக்களிற் பலர் வட்டிச் சட்டத்தையும் அரசியல் உரிமை களையும் சற்றுச் சீர்திருத்த உடன்பட்டனர்.

கயஸ்மார்க்கியஸ் பெருமக்களை மட்டுமே மக்களாக மதித்தான். அப்பெருமக்கள் செய்யும் வழிவழிக் கொடுமை களையோ ஏழைப் பொது மக்களின் நிலைமைகளையோ அவன் எண்ணிப் பார்ப்பதில்லை. ஆயினும், பொதுமக்கள் நாட்டின் இடுக்கனைத் தமக்குப் பயன்படுத்திக் கொள்ளுவதைக் கண்டு சீற்றங்கொண்டு அவன் அவர்களுக்கு ஓர் இம்மியளவுகூட விட்டுக் கொடுக்கக் கூடாது என்று முழங்கினான். கயஸ்மார்க் கியஸைப் போலவே பெருங்குடி மக்களிற் பலரும் ஏழைப் பொது மக்களை எதிர்த்தபடியால் அரசியல் மன்றத்தில் சீர்த்திருத்தக் கட்சியின் திட்டம் தோற்றது. இதனைக் கேள்வியுற்றதும் பொது மக்கள், ‘இனி இந்நகரில் இருத்த லாகாது,’ என வெளியேறினர். அப்போது பெருமக்கள் பாடு திண்டாட்டமாயிற்று. ஆடல் பாடலிலே வளர்ந்த அப்பெருமக்கள், நாட்டு மக்கள் அனைவரும் போனபின் தனியே நின்று என்ன செய்வது? அவர்கள் கயஸ்மார்க்கியஸின் நண்பனும் சீர்திருத்த விருப்புடையவர் களுள் ஒருவனுமான ⁴மெனெனியஸ் அக்ரிப்பா என்பவனை அப்பொதுமக்களுக்கு நன்மொழிகள் கூறி அவர்களை அழைத்து வரும்படி அனுப்பினர்.

மெனெனியஸ் ஆண்டு முதிர்ந்தவன்; சொல்நய முடையவன். அவன் பொதுமக்களைப் பலவாறாகப் புகழ்ந்து பேசினான். "ரோமப் பொதுமக்களே! நீங்கள் உடலைவிட்டுச் செல்லும் உயிர்போலும் ஒள்ளிய விளக்கைவிட்டுச் செல்லும் ஒளிபோலும் ரோமைவிட்டுப் போய்விட நினைத்தல் ஆகுமா? அங்ஙனம் போனால் தான் என்ன, உண்மையில் நீங்கள் சென்றுறையும் இடமெல்லாம், ரோமேயாதலின், ரோமைவிட்டு நீங்கள் செல்வது ஒருவன் தன் நிழலைவிட்டுச் செல்ல முயல்வது போலுமன்றோ?

மேலும் நீங்கள் யாரிடம் சினங்கொண்டு போவது? பணம் பெரு மக்களிடம் இருந்தால் என்னன? உங்களிடம் இருந்தால் என்ன? அவர்கள் உங்கள் பணப்பைகள், உங்கள் உணவுப் பொருட் களஞ்சியங்களே, நீங்கயெல்லோரும் ரோம் நகரத்தின் உறுப்புக்கள்! ரோம் நகரத்தின் கைகால்கள் அல்லிரோ! ரோமின் வெற்றி, ரோமின் செல்வம் எல்லாம் கைகால்களாகிய உங்கள் உழைப்பால் வருவதுதாமே? அவ்வுழைப்பால் வரும் உணவை வைத்திருந்து, வேண்டும்போது உயிர் தருங்குருதியாக உறுப்புக்களுக்குக் கொடுக்கும் வயிறன்றோ பெருமக்கள்? அவ்வயிற்றுடன் ஒத்துழைக்காவிட்டால் வருந்தீங்கு வயிற்றுக்கு மட்டுமா? உங்களுக்கு மன்றோ?" என்றிவ்வாறாக அவன்தேன் சொட்டப் பேசினான்.

அஃதொடு அவன் பின்னும், “அவ்வயிறு, இது வரையில் தான் செய்த பிழையை உணர்ந்து வருந்துகின்றது. இன்றுமுதல் பெருமக்கள் உங்கள் வயிறார உணவும் பிறபொருள்களுந் தாமாகவே தந்துதவுவர் என்பதை உறுதியாகக் கொள்க,” என்றான்.

அவன் பேச்சினாலும் அவன் காட்டிய குறிப்பினாலும் மக்கள் பெரிதும் மனமாறினர். ஆயினும், அவர்கள் தலைவர்களுள் ஐவர் முன் வந்து, “இஃது இடுக்கண் வேளைக்கான கைத்திறனல்லது மனமார்ந்த அருள் மொழி அன்று,” எனக் கூறி அதனை ஏற்க வேண்டாமென மக்களைத் தடைசெய்யலாயினர். இது கண்ட மெனெனியஸ் அவர்களை நோக்கிப், பொது மக்கள் ரோமின் கைகள். ஆனால், நீங்கள் கையின் ஐந்து விரல்கள் போல்வீர்கள். கைக்கு நேர்வழி காட்டி எங்களுடன் ஒத்துழைப்பது உங்கள் கடன்," என்றான்.

அப்பொழுதும் அவர்களுள் ஒருவன் சீறி எழுந்து, “ஆனால், உங்களுடன் ஒத்துழைப்பதுதான் நேர்வழியோ,” என்றான். அவன் குள்ளமான உருவும் தடித்த உடலும் உடையவன். மெனெனியஸ் சட்டென அவன் பக்கம் திரும்பி, “ஆம், அதுவே நேர்வழி; ஆனால் ரோமின் பெருவிரலாகிய நீ இதனை உணர்ந்து பிறர்க்கு உரைக்காததனாலேதான் அவர்கள் உணரவில்லை,” என்றான். அவனைப் பெருவிரலென்று அவனுருவுடன் ஒப்புமை தோன்றக் கூறியதும் யாவரும் தம் நிலை மறந்து கொல்லென நகைத்தனர். நகைப்பில் பகை பறந்து போயிற்று.

எல்லோரும் ரோமுக்குத் திரும்பினர். நன்மை தீமைகளிற் கருத்தூன்றி அவ்வப்போது வேண்டுவனவற்றைச் செய்ய அவர்களே திரிபூணர்கள் அல்லது தலைவர்கள் ஐவரைத் தேர்ந்தெடுப்பதெனத் தீர்மானித்தனர்.

கயஸ்மாக்கியஸ் இச்சிறு சீர்த்திருத்தங்களைக் கூட வெறுத்தான். ஆனால் விருப்பு வெறுப்பைக் காட்ட அங்கே நேரமில்ல. பகைவர்களாகிய ‘⁵வால்ஷியாகள்’ நகர வாயில்வரை வந்துவிட்டனர். அவர்கள் தலைவனோ அந்நாளில் ஒப்புயர்வற்ற போர்வீரனான ⁶துள்ளஸ் ஆஃபீதியஸ் ஆவான். அவ்வால்ஷியர் களை எதிர்க்கும்படி ரோம் அரசியல் மன்றத்தார். நகரத் தலைவர்களுள்⁷ ஒருவனான ⁸காமினியஸ் என்பவனை ஒரு பெரும்படையுடன் அனுப்பினர். கயஸ்மார்க்கியஸும் அவனுடன் சென்றான்.

வால்ஷியரை முறியடிப்பதற்குச் சரியான வழி அவர்கள் தலைநகரான கோரியோலியை முற்றுகையிட்டழிப்பதே எனக் காமினியஸ் நினைத்துத் ⁹திதஸ்லார்ஷியஸ் என்பவனையும் கயஸ்மார்க்கிஸையும் துள்ளஸ் ஆஃபீதியஸை எதிர்க்கச் சென்றான்.

ரோமப் படையின் ஒரு சிறு பகுதி மட்டுமே தம்மை எதிர்க்க வருகின்றதென்று கண்ட கோரியோலி நகர மக்கள் துணிவு கொண்டு, நகர்வாயில் கடந்து வெளிவந்து ரோமப் படையைப் பின்னிட்டோடும்படி துரத்தினர்.

கயஸ்மார்க்கியஸ் பின்னிடைந்த அவ்வுரோமர்களை நோக்கி ஏளனச் சிரிப்பும் வெகுளியுங் கொண்டு வீர முழக்கத்துடன், தானே தனியாக முன்னேறிச் சென்று நகர்வாயிலிற் புகுந்தான். வாயில் காவலர் உடனே வாயிலை மூடிவிடவே கயஸ்மார்க்கியஸ் உள் அகப்பட்டுப் பகைவர் வாளுக்கும் அம்பு மாரிக்கும் இடையே தனியே நின்று போராட நேர்ந்தது. அவன் துணிவைக் கண்டு பின் தொடர்ந்த ரோம வீரர் ஒருவரிருவரும் வெளியே நின்று, அவன் பகைவர்கள் கையிலகப்பட்டு இறந்தான் என்றே கருதிக்கொண்டு வருந்தினர்.

ஆனால் யானைக் கூட்டத்தில் அகப்பட்ட சிங்கவேற்றைப் போல அவன் உடலெல்லாம் குருதி; பொங்கி வழிந்தும், விடாது போர்செய்து நாற்புறமும் இடம் உண்டுபண்ணி வாயிலை வந்து திறந்தான்.

அவனது செயற்கருஞ் செயல் கண்டு வியந்து ரோமர் அவ்வாயில் வழியே உட்புகுந்து நொடிப் பொழுதில் அந்நகரைக் கைப்பற்றினர்.

காமினியஸ் தலைமையில் ஆஃபீதியஸை எதிர்க்கச் சென்ற ரோமப் படை அப் பெருந்தலைவனது தாக்குதலைப் பொறுக்க மாட்டால் திணறி, நாற்புறமுஞ் சிதறியோடத் தொடங்கிற்று. காமினியஸும் ரோம வீரர் சிலரும் பகைவரிடையில் அகப்பட்டுத் திண்டாடினர். அப்போது அவர்கள் ஒரு தூதனை அனுப்பிக் கயஸ்மாக்கியஸினிடம் தமது நிலைமையைத் தெரிவித்தனர்.

கோட்டையைத் தீதஸ்லார்ஷியஸினிடம் ஒப்படைத்து விட்டு கயஸ், காமினியஸுடன் வந்து சேர்ந்து போர் புரிந்தான். அவனது ஒப்பற்ற திறமையால் இங்கும் வால்ஷியர் படை சிதறியோடிற்று. இதனிடையே கயஸ்மார்க்கியஸ் ஆஃபீதியஸை நேரில் எதிர்த்து வளைக்கலானான்.

தம் தலைவன் எங்கே சிறைப்பட்டு விடுவானோ என்றஞ்சிய வால்ஷிய வீரர், இவனை வலுவில் இழுத்துக் கொண்டோடினர்.

இதுவரையிற் போரிற் புறங்காட்டா வீரனாகிய ஆஃபீதியஸ் இவ்வமதிப்புக்குக் காரணமாகிய கயஸ்மார்க்கியஸ் மீது பழிவாங்குவ தென்று வஞ்சினங் கூறி அகன்றான்.

கயஸ்மார்க்கியஸ் கேரியோலியை வென்ற அருந்திறல் வீரன் என்ற காரணத்தால் அன்றுமுதல் அவன் கோரியோலானஸ் என்று அழைக்கப் பட்டதோடு, ரோமின் முடிசூடா மன்னனாகவும் விளங்கினான். போருக்குப் போகுமுன் அவன் தம்மை எதிர்த்ததைக் கூட மறந்து பொதுமக்கள் அவனைத் தெய்வமாகக் கொண்டாட லாயினர்.

ரோம் நகரம் அன்று அவன் காலடியிற் கிடந்தது. அதன் தலைமையோ அதன் பொருட்குவையோ எல்லாம் அன்று அவன் நாவசைவிற்கே காத்திருந்தன.

ஏழைகளும், செல்வர்களும், பெண்டிரும், பிள்ளைகளும், சமயத் தலைவரும், அடிமைகளும், யாவரும் வீரர் பெருந்தகையான அவனை அன்று காணக்கிடைக்காமல் கூட்டத்தை நெருக்கிப் பிசைந்து கொண்டு வந்தனர்.

தென்றற் காற்றுக்கூட நேரிடையாக முகத்தில் வீசியறியாத உயர்குல மாதர்கள், முக்காடின்றி வெயிலையும் பிறர் பார்வையையுங் கூடப் பொருட்படுத்தாமல் மாடியில் வந்து நின்று அவனைக் கண்டு மகிழ்ந்தனர்.

அன்று அவன் வெறும் ரோமன் அல்லன். ரோமர் வணங்கும் தெய்வமேயாயினன் என்னல் வேண்டும்.

2. வணங்காமுடி மன்னன்

ஆனால், பொதுமக்கள் கோரியோலானஸின் எதிர்ப்பை மறந்துவிடினும் அவர்கள் தலைவர்களான ¹⁰ஜூலியஸ் புரூட்டஸும் ¹¹ஸிஸினியஸ் வெலுதஸும் அதை மறக்கவில்லை. அவர்கள் அவன் புகழை அழித்துப் பழிவாங்கக் காத்திருந்தனர்.

அவ்வாண்டு, பெருமக்கள் அனைவரும் கோரியோ லானஸையோ தம் தலைவனாக்க வேண்டுமென்று முடிவு செய்தனர். தலைவர் தேர்வு எப்போதும் பெருமக்கள் மனப்படியே நடப்பினும், தலைவராக விரும்புவோர் அவ்வொருநாள் பெருமக்கள் உடையையும் பெருங்கடிச் செருக்கையும் விட்டு விட்டு எளிய உடையில் இரவலர் போல் நின்று பொதுமனிதன் ஒவ்வொருவனிடமும் அவன் தருகின்ற இணக்கச் சீட்டுக்காக மன்றாட வேண்டுமென்பது அந்நகரத்தின் மரபு. போரிற் காயமடைந்தவர்கள் இத்தறுவாயில் அக்காயங்களைக் காட்டியுஞ் சீட்டிரப்பதுண்டு.

இத்தகைய வாழ்க்கைச் சடங்குகளிற் கோரியோலானஸுக்குப் பழக்கமுங்கிடையாது. அதில் அவன் மனம் செலுத்துவதில்லை. தன் உயர்வு தன் வீரத்தினாலேயன்றி இத்தகைய மன்றாடல் களாலன்று என்ற அவன் நினைத்தான். ஆதலால், இதனை ஒரு வெட்கக் கேடாகக் கருதி அவன் தன் நண்பர்களுடன் நகைத்தும் கேலிசெய்தும் அதனை வேண்டா வெறுப்புடன் நிறைவேற்ற எண்ணினான்

ஆனால் ரோமப் பொதுமக்களை ஒருவன், ஏமாற்றி அவமதிக்க முடியுமாயினும் எதிர்த்து அவமதிக்க முடியாது என்பதை அவன் அன்று கண்டான். என்றும் ரோம் அரசியல் வாழ்வில் தெரு தூசிக் கொப்பாகப் பெருமக்கள் தேர்க்காலடியிற் கிடந்து புரண்ட பொதுமக்களுக்கு அவ்வொரு நாள் தம் ஆற்றலையும் வெற்றியையும் அளந்தறியும் நாளாயிருந்தது.

எத்தகைய வீரனும் அன்று அவர்களுக்குப் பணிந்தே தீரவேண்டும். அன்று பணிந்து, வேண்டுமாயின் அடுத்தநாள் அவர்கள் தலையில் அச்சமும் இரக்கமுமின்றி மிதிக்கலாம் முழுப்பழியும் வாங்கலாம்; ஆனால் அன்று பணிந்தே தீரவேண்டும்.

ஒரு நாள் கழிந்த பின் அவர்களனைவரும் அஞ்சி வணங்குந் தெய்வமாயினும் என்ன? அன்ற அவர்கள் கையால் உருவாக்கப் படவேண்டியதே அன்றிவேறில்லை.

ஆனால் கோரியோலானஸ் இதை அறிந்து பொருட்படுத் தினால் தானே! வீரனாயி தான்-உலகினர் அஞ்சும் வால்ஷியரின் தலைமைப் பெருங்கோட்டையைப் பிறருதவியின்றித் தனியே நின்று வென்ற தான்- ஒப்பற்ற வீரனாகிய ஆஃபீதியஸையும் பதுங்கி ஓடும் இப்பதர்கள் முன் நின்றிரப்பதா என நினைத்தான் அவன். வணங்காமுடி மன்னனாகிய தான், வழி வழி அடிமைகளாகிய அவர்கள்முன் நின்று பசப்பு மொழி பேசவேண்டுமேயென்று நினைக்கும்போதே அவன் நாக்கு மேல்வாயிற் சென்று பதிவதாயிற்று.

போர் முழக்கத்தில் தேர்ந்த அவன் நாக்கு அன்று குழறிற்று. போரிற் கோட்டையினின்று பொழியும் அம்பு மாரிகளிடையே நின்று நிமிர்ந்து ஏறிட்டுப் பார்க்கும் அவன் முகம் அன்று வணங்க முடியாமற் குழம்பிற்று. முன்பின் அறியாதவர்களிடம் இன்றியமையா நிலையில் பேசும் மங்கையர் போன்று முகத்தைத் திருப்பிக்கொண்டு உணர்ச்சியற்ற குரலில், ‘உங்கள் சீட்டைக் கொடுங்கள், நான் தலைவனாக வேண்டும்,’ என்றான்.

உணர்ச்சியற்ற இம்மொழிகளைக் கேட்டு வெறுப்புற்றும், அவன் வீரத்தை எண்ணி அவர்கள் அவனுக்குச் சீட்டை யளித்தனர். ஆனால், சீட்டளித்த பின் கூட்டத்திற் சென்று அவர்கள் முணுமுணுத்துக் கொண்டனர். தமது மரபுரிமையான மதிப்பை இழக்க அவர்கள் மனங்கொள்ளவில்லை. இம் மனப்பான்மையைக் குறிப்பாய் அறிந்த ஜூலியஸ் புரூட்டஸும், ஸிஸினியஸ் வெலுதஸும் அவர்கள் முன்வந்து, ‘நீங்கள் கோரியோலானஸைத் தெரிந்- தெடுத்தது சரிதான். ஆனால் அவன், முன் உங்களை அவமதித்தவன், இனி அவமதிப்பதில்லை என்று மன்னிப்பாவது கேட்க வேண்டாமா?’ என்றனர்.

கூட்டம் தன் ஆற்றலை வலியுறுத்த வாய்ப்பு நேர்ந்தது கண்டு எழுச்சியுடன், ’ஆம், ஆம்: மன்னிப்புக் கேட்க வேண்டும்… பொதுமக்கள் விருப்பத்தை இனி மதிப்பதாக உறுதிமொழி கூறவேண்டும், என்றது.

அவர்கள் உடனே, ‘திரிபூணர்கள் என்ற முறையில், நாங்களே அவனுக்குத் தலைமை நிலைக்குரிய சின்னங்கள் அளிக்கவேண்டும்; அப்போது உங்கள் சார்பில் இம்மன்னிப்பைக் கேட்போம்; நீங்கள் துணை நிற்க,’ என்று கூறிவிட்டுப் பொது மன்றத்திற்குச் சென்றனர். கூட்டம் பின் தொடர்ந்தது.

கோரியோலானஸின் தேர்வு கிட்டத்தட்ட முடிந்ததெனவே நினைத்துப் பெருமக்களும் அவனும் அத்தேர்வை நிறைவேற்று வதற்கான விழாவிற்காக முன்னேற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர்.

அச்சமயத்தில் தலைவனாகவிருக்கும் கோரியோலானஸ் முன் திரிபூணர் வந்து நின்றனர். அப்போது ஜூனியஸ் புரூட்டஸ் “கோரியோலானஸ்! தலைமை நிலைமைக்குரிய பெருமை உனக்கு முற்றிலும் உண்டு; ஆயினும் நீ தலைவனாகுமுன், பொதுமக்களை அவமதிப்பதில்லை என்றும், அவர்கள் விருப்பத்திற்கு இணக்கமாக நடப்பேன் என்றும் உறுதி மொழி கூறவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்,” என்றனன்.

கோரியோலானஸ் சட்ட நுட்பங்களையும் மரபுரிமைச் சிக்கல்களையுங் கவனியாமல், அவர்களது சிறுமைத்தனமான இடையீட்டைக் கண்டு, வெகுண்டு, “என் தலைமை நிலை பொதுமக்கள் கொடையன்றே இத்தனை பணிந்து மன்றாட! வேறு தகுதியின்றி அவர்களைப் புகழ்ந்து திரியும் உங்களைப் போன்ற சொத்தைகள் அல்லவா அவர்களுக்குப் பணிய வேண்டும்? ரோமின் பகைவர்களை எதிர்த்து உயிர்கொடுக்கும் வீரர் மன்றாட வேண்டுவதேன்?” என்றான்.

பொதுமக்களும் அவர்கள் தலைவர்களும் பொதுப் படையாக மிகவும் சிறுமையுடையவரேயாயினும், இத்தறுவாயிற் பெருந்தீங்கு செய்யும் ஆற்றலுடையவர்கள் என்று கோரியோலானஸின் நண்பர்கள் கண்டு அவனைத் தடுத்துப் பணியவைக்க விரும்பினர்.

ஆனால் அவனது வீரநெஞ்சம், கொசுக்கடிகள் போன்ற திரிபூணர்களின் பொதுமக்களை மதியாமல் வெகுண்டெழுந்தது. அவனை அழிக்கக் காத்திருந்த அத்திரிபூணர்கள் பேரிரைச்சல் செய்து மக்களைத் தூண்டிவிட்டனர். கைக்கெட்டியது வாய்க்கெட்டாற் போனதுபோல் கோரியோலானஸின் தலைமை நிலைத் தேர்வு நிறைவேறாது போயிற்று.

கோரியோலானஸுக்கு மட்டும் இஃது ஒரு பெருங்குறை வாகத் தோன்றவில்லை. அவன் பெருமக்களைப் பார்த்து, “இவையனைத்தும் உங்கள் ஆண்மையற்ற நிலைமையினால் வந்தன. இச்சிறுமை மிக்க நாய்களையும் இந்நாய்களின் தலைக் கோளாறுடைய தலைவர்களையும் பெருமை செய்துகொண்டு நீங்கள் பசப்புவானேன்? அவர்கள் என்ன பெருவீரர்களா? போர் என்ற கேட்டவுடன் ஆட்டுக் கூட்டம் போற் கலைந்தோடும் பேடிகள் அல்லரோ அவர்கள்? அவர்களுக்கு நீங்கள் வீண் சோறிட்டுப் பெருமை படுத்துகின்றீர்கள்” என்றான்.

இதைக் கேட்டதும் திரிபூணர்கள் கையையும் கைக்குட்டை களையும் வீசிப், ‘பொதுமக்கள் பகைவன் கோரியோலானஸ் வீழ்க’ என்று கூக்குரலிட்டனர். மக்களை நோக்கி அவர்கள், ‘இவன் கையில் நீங்கள் அடைந்த அவமதிப்பு என்றென்றும் அடைந்த தாகும். அவன் உங்களை நாய்க்கூட்டம் என்கிறான்; ஆட்டு மந்தை என்கிறான்; நீங்கள் மனம் வைத்தால் நாங்கள் அவன் செருக்கை அடக்கி அவன்மீது பழி வாங்குவோம்’ என்று கூறி அவர்களைத் தூண்டினர்.

பெருமக்கள் இப்போது ஒன்றுஞ் செய்ய இயலாது திகைத்தனர். கடல்போல் ஆரவாரித்தெழுகின்ற பொதுமக்கள் திரள் ஒருபுறம்; தீயையும் பகையையுங் கக்கி வீறிட்டெழும் எரிமலைபோற் குமுறி முழங்கி நிற்கின்ற கோரியோலானஸ் ஒருபுறம். அவர்கள் பாவம் யாது செய்வீர்!

தலைவர் நிலையை மறத்ததுடன் அவர்கள் சீற்றந் தணிய வில்லை. கோரியோலானஸை குற்றவாளியைப் போல் ஊர் மன்றத்தில் ஆராய்ந்து தண்டிக்க விரும்பினர். கோரியோலானஸ் இதற்கு இடங்கொடாமல் மீறலானான். ஆனால், நண்பர்களும் பெருமக்களும் அவனை மிகுதியும் வேண்டிக்கொண்டு அப்பால் இழுத்துச் சென்றனர். ரோமரின் வழக்கு மன்றம் நகரின் புறத்துள்ள கொடும்பாறை ஒன்றின் பக்கம் இருந்தது. அதன் பக்கம் நோக்கிக் கோரியோலானஸைச் சூழ்ந்து கொந்தளித்துக் கொண்டு பொதுமக்கள் கூட்டம், ‘வெட்டுங்கள், குத்துங்கள், நகரத்தின் பகைவனை, நகரமக்கள் களையை அகற்றுங்கள்’ என்று கூறியவண்ணஞ் சென்றது.

மன்றத்திலும் கோரியோலானஸ் இவ் அவமதிப்பை ஏற்க மறத்துச் சீறினான். பெருமக்களும் நண்பர்களும் அவனைப் பணியும்படி வலிந்து மன்றாடி வேண்டினர். அப்படி வேண்டியும் அவன் மொழிகள் உருக்கிய இரும்புப் பிழம்புபோல் கனன்று பாய்ந்தன. பொதுமக்களது சீற்றத்தின் முழு வன்மையும் அவன் மீது மோதியது. ஆனால் அவன் பெருவீரன் என்பதையும் அவன் எதிர்த்துவிட்டால் அவனை அடக்குதல் அரிது என்பதையும் மட்டும் நன்குணர்ந்து, திரிபூணர் அவனுக்குக் கொலைத் தீர்ப்பு அளிக்காது நாடு கடத்தல் தண்டனையே அளித்தனர்.

கோரியோலானஸ் அப்போதும் நிமிர்ந்து நின்று கொதித்துக் கொதித்து எழுங் குழம்புபோல் இதைந்தெழுங் கூட்டத்தை அசட்டையாய்ப் பார்த்து, “வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ” என்று தெரியாத அறிவிலிகளே! யார் யாரை நாடுகடத்தும் வன்மை உடையவர்கள் என்பதை உங்களுக்கு நான் காட்டவேண்டுமா? சரி, எப்படியும் நான் இல்லாமல் ரோம் வாழ்வதையும், ரோம் இன்றி நான் வாழ்வதையும் பார்க்கிறேன்" என்று கூறிவிட்டுச் சரேலென்று நகரெல்லை கடந்து செல்வனாயினான்.

தன் மகன் குற்றமே தன் குற்றமாதலின் அதனை வலம்னியா அறியாது, அவனை அவமதித்த அந்நன்றி கொன்ற மக்களைப் பழித்தாள். ரோம் மக்கள் - அஃதாவது ரோம் பெருமக்கள் வீரமிக்க தன் மகனை இப்பதர்கள் கையில் விட்டு அவர்கள் அவனைத் துரத்த ஏன் பார்த்துக் கொண்டு வாளா நிற்கின்றனர் என்று அவள் புலம்பினாள். கோரியோலானஸின் மனைவி ¹²வர்ஜீலியாவோ யாரையுங் குறை சொல்லாமல் தன் ஊழ்வினையையே நொந்து கண்ணீர் ஆறாகப் பெருக்கி நின்றாள். கோரியோலானஸ் வெளியே செல்கிறான் என்று கேட்டதுமே அவ்விருவருந்தங் குலமதிப்பை மறந்து, தலைவிரி கோலமாய் அழுது கொண்டு அவனைப் பின்பற்றினர். அவன் உணர்ச்சியற்ற குரலில், ‘நீங்கள் ரோம் மாதர்களாதலின், ரோமுக்கு வெளியே என்பின் வரல் தகாது’ என்றான். அது கேட்டு அவர்கள் தம் விருப்பத்திற்கெதிராகப் பின்னடைந்து நிற்க வேண்டியதாயிற்று.

அவன் வெளியேறுவது கண்டு, அவனுடன் நின்று போர் செய்த காமினியஸ் கூட அழுது, ‘இஃதென்ன முறையோ, நாயும் பேயுங்கூடச் சட்டை பண்ணாத இத்துரும்புகள் பேரல் ரோமின் தனிப்பெரு வீரனை வெளியேற்றுவதா’ என்று நினைத்து மனம் பதைத்தவனாய்ப் பின் தொடர்ந்து வந்து கோரியோலானஸ் கண்மறையும் வரை வாயிலில் நின்றான்.

3. வெஞ்சினமும் பழியார்வமும்

கோரியோலானஸ் மனத்தில் இப்போது ஒரே ஓரெண்ணம் பழி! பழிக்குப் பழி! வீரத்திற்கு விலையின்றிக் கோழைத்தனத்துக்கு விலை தரும் ரோமிற்கு - உண்மைக்கு விலையின்றிப் பசப்பு மொழிகளுக்கும் பொய்ம்மைக்கும் விலை தரும் ரோமிற்கு-நகரைப் பாதுகாக்கும் ஆற்றலின்றி நகரத்தின் செல்வத்திற் பங்குகொள்ள மட்டும் வாய் பிளந்துகொண்டு நிற்கும் பேடிக்கூட்டத்தையுடைய இந்த ரோமிற்கு- ஒரு பாடம் படிப்பிக்க வேண்டுமென்று அவன் மனம் துடித்தது.

பேடிகளான இந்நண்பர்களைவிட, நாட்டு மக்களைவிட, வீரசூரர்களான வால்ஷியரும், அவர்கள் ஒப்பற்ற தலைவனும் போர்ச் சிங்கமுமான ஆஃபீதியஸும் எவ்வளவோ மேம்பட்டவர்கள் என்று அவன் எண்ணினான். எண்ணவே குறிப்பிட்ட நோக்கமின்றி நடந்த அவன் கால்கள் அவனை அறியாமலே அவர்கள் பக்கம் திரும்பின. ரோம் மறுத்த தன் வீரத்தின் மதிப்பை அவர்கள் பக்கம் போயிருந்து காட்டுவதே பழிக்குப் பழி வாங்க நல்ல வழி என்று அவனுக்கு அப்போது தோன்றியது.

பல ஆண்டுகளாக இத்தாலி முழுமையும் நடுங்கவைத்த புறங்கொடா வீரர்களாகிய வால்ஷியரும் அவர்கள் தலைவனும், தாம் தம் நாடிழந்து பட்ட அவமதிப்பை ஓரளவு போக்கி, ரோமரிடமிருந்து கோரியோலியை மீட்டு ரோமையும் எதிர்த்தழித்து விட வேண்டுமென்று சீறி நின்று ஏற்பாடு செய்யும் நேரம் அது. அவர்கள் அண்மைவரை ரோமை ஒரு பொருட்டாக எண்ணியதில்லை. தம் பெயர் கேட்டவுடனேயே அஞ்சும் கூட்டமென்றே இதுவரை அவர்கள் ரோமரை மதித்திருந்தனர். “ஆனால், இன்று எங்கிருந்தோ இக்கோரியோலானாஸ் வந்து தோன்றினான். நமது விடுதலைக்கு நமனாகவும் நம் வீரத்துக் கொரு களையாகவும்” என்று அவர்கள் நொந்துகொண்டனர்.

ஆஃபீதியஸோ, ஒன்று ரோமை அழித்து அக்கோரியோலானஸை வெல்வது, அது முடியாவிடின் அவன் கையாலேனும் மாள்வது எனத் தீர்மானித்து விட்டான். பகைவனாயினும் அவனை ஒத்த வீரர் இம்மனித உலகில் இல்லை என்று அவன் மனம் கூறிற்று. அவனை வெல்வது கூடாதாய் விடினும், அவன் கைப்பட்டு மாள்வதுகூடத் தனக்குப் பெருமையே என்று நினைத்தான் அவன். கோரியோலானஸ் மட்டும் ரோமனாயிராமல் வால்ஷியனாயிருந்தால்! ஆ! அப்போது தன் நாடு எத்தகைய இறும்பூது எய்தும் என்று எண்ணும்போதே அவனை அறியாமல் அவன் கண்களில் நீர் வடிந்தது. “ஆ! பிறந்தால் அந்தக் கோரியோலானஸாகப் பிறக்கவேண்டும்” என்று அவன் வாய்விட்டுக் கூறினான்.

அந்நேரத்தில் அவன் முன் காவற்காரன் ஒருவன் வந்து, “ஐயனே! யாரோ ஒருவன் முக்காடிட்டு மூடிக்கொண்டு நகர் வாயிலண்டை வந்து நின்று துள்ளஸ் ஆஃபீதியஸைப் பார்க்க வேண்டும் என்கின்றான்; ரோமன் குரல் மாதிரி இருக்கின்றது; ஆனால், நாங்கள் உறுக்கியும் போகமாட்டேன் என்கின்றான்; தள்ளியும் போகமாட்டேன் என்கிறான்” என்றான்.

அரை நினைவுடனேயே, ‘இவனை உள்ளே அழை’ என்று கூறிவிட்டு ஆஃபீதியஸ் பழையபடி முன்னும் பின்னும் நடந்து, “ஆ! கோரியோலானஸ்! நீ ஏன் ரோமனாகப் பிறந்தாய்? அதைச் சொல்வானேன்? ஏ! ஆஃபீதியஸ், நீ ஏன் கோரியோலானஸ் பிறந்த உலகில் பிறக்கவேண்டும்? உலகில் ஒரு கோரியோலானஸ் தானே இருக்கமுடியும் என்று உனக்கு ஏன் தெரியாமற் போயிற்று?” என்றான்.

அந்நேரம் காவற்காரனுடன் முக்காடிட்ட அவ்வீரன் வந்து நின்றான். அவனைக் கவனியாது ஆஃபீதியஸ் பின்னும் ‘ஆ! கோரியோலானஸ்! கோரியோலானஸ்! நீ ஏன் எனக்கெதிராய் நிற்கவேண்டும்? நீயும் நானும் மட்டும் சேர்ந்தால், ஆஃபீதியஸும் கோரியோலானஸும் மட்டும் சேர்ந்தால் இந்த ஓர் உலகமன்று, ஈரேழுலகமும் ஒரு கை பார்த்து விடுவோமே’ என்றான்.

அப்போது முன் நின்ற முக்காடிட்ட வீரன், “ஆம்; அப்படிப் பார்த்துவிடத் தான் நானும் வந்திருக்கின்றேன்” என்றான்.

‘தன் மனதில் வைத்து வாய்விட்டுக் கூறிய எண்ணங்களைக் கேட்டு விடைகூறத் துணிந்தவன் எவன்’ எனச் சினந்து அப்பக்கம் நோக்கினான் ஆஃபீதியஸ்.

உடன் தானே முக்காட்டை நீக்கி நின்றான் கோரியோலானஸ்.

‘இது கனவா, நனவா! கோரியோலானஸாவது! இங்கு வரவாவது? இது வெறும் உருவெளித் தோற்றமாகவேயிருக்க வேண்டும்!’ என்று நினைத்தான் ஆஃபீதியஸ்.

அவன் உடல் வெவெலத்துத் துடித்தது. அவன் நாக்குப் பேசமுடியாது மரத்தது. கோரியோலரானஸையே உறுத்து இமையாற் பார்த்துக்கொண்டு வியப்பே உருவெடுத்து வந்ததுபோல் நின்றான்.

அப்போது கோரியோலானஸ், ‘ஆஃபீதியஸ்! என்னை நீயும் வால்ஷியரும் எமனென வெறுப்பீர்கள் என்று அறிவேன். ஆனால், இன்று நான் நீங்கள் வெறுக்கும் ரோமனாகிய கோரியோலானஸாக வரவில்லை. ரோமர் வெறுத்துத் தள்ளிய, ரோமின் பகைவனாய கோரியோலானஸாகவே வந்துள்ளேன்’ என்றான்.

’கோரியோலானஸ்! ரோமின் பகைவன்! இன்னும் என்னென்ன வியத்தகு செய்திகளெல்லாம் உலகில் நிகழப் போகின்றனவோ!"

கோரியோலானஸ்; ‘தாய் நாடே என்னைக் கைவிட்டபின் எனக்கு வாழ்க்கையில் பற்றில்லையாயினும், நான் அப்பழிக்குப் பழி வாங்கும் எண்ணமுடையேன்; அதுவும் தாய்நாட்டின் மீது! அதன் பகைவர்களாகிய உங்களுக்கு, என்னுடன் பொருத இளஞ் சிங்கங்களாகிய உங்களுக்கு, அப்பழி உதவுமாயின், என்னையும் அப்பழியையுங் கருவியாகப் பயன் படுத்திக் கொள்க’.

முதலில் கோரியோலானஸைக் கண்டதும் ‘பகைவன் உள் வந்து விட்டானே! என்ன செய்ய வந்தானோ!’ என்று நினைத்துப் பரபரப்புடன் வந்து சூழ்ந்து வாள்களை உருவிக் கொண்டு தம் தலைவனைக் காத்து நின்றனர் வீரர். தலைவன் கையும் வாளை உருவவே முனைந்தது.

ஆனால், கோரியோலானஸ் முகத்தில் தென்பட்ட புயலொத்த சீற்றம், அவனது மழை முழக்கொத்த உருக்கமான வேண்டுகோள். அவனுடைய வெறுப்பும் துணிவும் கலந்த தோற்றம் ஆகிய இவற்றைக் கண்டதே, வீரப்பாலுடன் பெருந்தன்மையையுங் கலந்துண்டவனாகிய ஆஃபீதியஸ், தன் பகைமையனைத்தையும் மறந்து, மடைதிறந்த வெள்ளம்போல் தாவிச் சென்று கோரியோலானஸைத் தழுவிக்கொண்டு, ‘ஆ! என் ஒப்பற்ற வீரசிங்கம்! ஆ! என் கோரியோலானஸ்! உன்னை எதிரியாகப் பெற்றதையே ஒரு பெருமையாகக் கொண்டேன்; உன்னை இனி என் உடன்பிறப்பாகக் கொண்டு மகிழ்வேன்’ என்றான்.

பின் அவன் வால்ஷியர் பக்கந் திரும்பி, ‘கோரியோலானஸ் போன்ற வீரர் பிறந்ததாலன்றோ அந்த ரோம் இவ்வளவு மேன்மையுற்றது. அவன் நம்மை அடைந்தது, நம் நல்வினைப் பயன், எதிரியாய் நின்று வால்ஷியர் வீரத்தைக் கண்ட அவனுக்கு யாம் வீரர்கேயுரிய அரிய நட்புணர்ச்சியையும் உடையோம் என்பதை இனிக் காட்டுவோம்’ என்றான்.

அவர்களும் அதனை ஏற்று, “கோரியோலானஸ் வாழ்க; ஆஃபீதியஸ் வாழ்க!” என்ற முழங்கினர்.

ரோம் ஞாயிறும் வால்ஷிய ஞாயிறும் அன்று வால்ஷிய வானத்திலேயே ஒருங்கே எழுந்து ஒளி வீசின.

ரோம் மீது படையெடுக்கும் முயற்சி, முன்னிலும் விரைவாய், முன்னிலும் பன்மடங்கு துணிவுடனும் முன்னிலும் பன்மடங்கு முனைந்த எழுச்சியுடனும் நடைபெறலாயிற்று.

4.கும்பலைக் கெடுத்த கோவிந்தர்கள்

கோரியோலானஸ் போனபின் திரிபூணர்கள் தலைதெறிக்க வெற்றி முழக்கம் முழங்கினர். அன்றுதான் அவர்கள் தங்கள் முழு வலிமையையும் உணர்ந்தவர்களாகக் கொக்கரித்தனர். ‘பெருமக்கள் அன்று தமக்கு முன்தலை வணங்கினர். அவர்கள் ஒப்பற்ற தலைவன். அவர்கள் அனைவர் பெருமைகளும் ஒருங்கே திரண்டு வந்தவன் போன்ற கோரியோலானஸையே தாங்கள் துரத்தியோட்டி விட்டோம்’ என்ற நினைவில் அவர்கள் தலைகால் தெரியாமற் குதித்தனர்.

அப்போது வால்ஷியர் ரோம் மீது படையெடுக்க ஏற்பாடு செய்கின்றனர் என்று தூதன் ஒருவன் வந்து கூறினான்.

திரிபூணர்கள் அவன் தம்மைக் கேலி செய்கின்றான் என்று கருதிய தோடன்றி, அதற்காக அவனை நையப்புடைத்துச் சிறையிலும் இட்டனர்.

அதன்பின் தூதன் இன்னொருவன் வந்து, ‘வால்ஷியர் படை புறப்பட்டு விட்டது; கோரியோலியை அவர்கள் கைப்பற்றிவிட்டனர்’ என்றான்.

அப்போதும் அவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை. ‘என்ன கட்டுக்கதை! ரோமர்களிடமிருந்து கோரியோலியை மீட்க எவனால் முடியும்’ என்றார்கள். (கோரியோலியை வென்ற வீரனையே நாங்கள் வென்றவர்- களாயிற்றே என்ற அவர்கள் நினைத்தார்கள் போலும்)

அப்போது கோரியோலியில் தலைவனாயிருந்து தோற்றோடி வந்த தீதஸ் லார்ஷியஸ் நேராக அலங்கோல உருவுடன் வந்து, ‘அறிவிலிகளே! இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நகருக்கு இடையூறு வந்துவிட்டது! கோரியோலி வீழ்ந்துவிட்டது! இங்கும் படை வருகின்றது!’ என்றான்.

அவன் பின் காமினியஸ் வந்து, "வீரர்களே! நீங்கள் செய்த வீரச் செய்கையின் பயனை இன்று அடையுங்கள்; வால்ஷியர் முன் இனி என்ன செய்யப் போகிறீர்கள்? இளஞ்சிங்கத்தை வெறுத்தொதுக்கிய இளம் புலிகளே! இனி உங்கள் கெட்டிக் காரத்தனத்தைப் பார்ப்போம்’ என்று சினந்து கூறினான்.

பெருமக்களும் இப்போதும் துணிகரமாக அப்பொது மக்கள் தலைவர்களைக் கண்டிக்கலாயினா. ‘இப்பொறுப்பற்ற கும்பல்கள் சொற்கேட்டு, ரோமின் விலைமதிக்க முடியாத மாணிக்கத்தை இழந்து விட்டோமே’ என்று அவர்கள் வருந்தினர்.

அப்போது பின்னும் வேறு தூதன் ஒருவன் வந்து, ‘ஐயன்மீர் வால்ஷியரின் கிளர்ச்சிக்கும் முழக்கத்துக்கும் எல்லையில்லை. அவர்கள் முகத்தில் வெற்றி வெறியும் வீம்பு நடையும் தாண்டவமாடுகின்றன. அவர்களிடையே கோரியோலானஸே நேரில் சென்றிருந்து கொண்டு ரோமை எதிர்க்க உதவுவதாகக் கூடக் கேள்வி’ என்றான்.

கோரியோலானஸ் என்ற பெயரைக் கேட்டதே பெருமக்கள் இடியேறுண்ட நாகம் போற் செயலிழந்தனர்.

பொதுமக்களிடையே இச்செய்தி மின்பாய்வது போற் பாய்ந்து பரவிற்று. அவர்களுட் பலரும், ‘அந்தோ! நாம் செய்த பிழை’ என்றிரங்கினர். ‘வீரத்தைப் பழித்த நமக்கு இது வேண்டும்’ என்றனர் சிலர். ‘வாய்வீரர் சொற்கேட்டு வாள்வீரனை இழந்தோம்’ என்றனர் மற்றுஞ்சிலர்.

இன்னுஞ் சிலர், ‘எமக்குக் கெடுமதி கூறிய அத்திரி பூணர்கள் மீது பழி வாங்கவோம்’ என்று எழுந்தனர். ஆனால், அத்திரிபூணர்கள் இப்போது காற்று எதிர்த் தடிக்கிறதென்று கண்டு, மறைவிடஞ் சென்று பதுங்கிக் கொண்டார்கள்.

ஆயினும், வெள்ளம் அணை கடந்துவிட்டதே! இனி என் செய்வது? இனி, வந்த வினைக்கு இறை இறுத்துத்தானே ஆகவேண்டும்! பெருமக்கள் அங்குமிங்கும் ஓடி வீரர்களைத் திரட்டிக் கோட்டை மதிலைக்காக்கத் துரத்தியடித்தனர். படையின் தலைவர்களும் வாயிலில் வந்து கூடினர்.

கோரியோலானஸுடன் போர் செய்ய எவர் தாம் முன்வருவர்! ஆகவே, எப்படியும் கோரியோலானஸின் சீற்றத்தை நன்மொழிகளால் தணித்து அவனை அவனது சூளினின்றும் விலக்கவேண்டுமென்று யாவரும் ஒரே மனதாகத் தீர்மானித் தனர். இதற்காகத் திரிபூணர்கள் அவன அவமதித்துத் துரத்திய திரிபூணர்கள் - பெயராலேயே ஒருவனை அனுப்புவதென்று எண்ணினார். கோரியோலானஸுடன் முன் படைத் தலைமை தாங்கிப் போருக்குச் சென்ற காமினியஸே அதற்குத் தக்கவன் என்ற எல்லாருந் தேர்ந்தெடுத்தனர்.

காமினியஸ் கோரியோலானஸை ஒத்த வீரன் அல்லனாயினும் ரோமப் படையை அவனுக்கும் மேலாக நின்று தலைமை தாங்கி நடத்தியவன். ஆனால், படை உயர்வை ஒருபுறம் எறிந்துவிட்டுக் கால்நடையாய் நடந்து வந்து வால்ஷியரிடம் பணிந்து, ‘கோரியோலானஸைக் காணவேண்டும்’ என்றான்.

முதலில் வால்ஷியர், ‘அதற்கிணங்க மாட்டோம்’ என்றனர். ஆனால், ஆஃபீதியஸ் கோரியோலானஸுக்கு இடங்கொடுத்து விட்டது பற்றி உள்ளூரக் கழிவிரக்கங்கொள்ளத் தொடங்கி யிருந்தான். கோரியோலானஸ் வந்தது முதல் வால்ஷியர் அனைவருந் தன்னை விட்டுவிட்டு அவனையே தெய்வமாகக் கொண்டாடியதனால், தன் புகழ், ஞாயிறு தோன்றியபின் திங்களொளி மழுங்குவதுபோல் மழுங்கக் கண்டான். ஆகவே, ரோமருக்கு இடங்கொடுப்பதன் மூலம் கோரியோலானஸ் திரும்பிப் போகலாகும் என உய்த்துணர்ந்து அவன் அவர்களுக்கு உள்ளே செல்ல இணக்கமளித்தான்.

ஆனால், ‘பழி! ரோமின்மீது பழி!’ எனத் துடித்து நிற்கும் கோரியோலானஸ் காமினியஸ் வந்ததைக் கண்டானில்லை. அவன் காதுகள் காமினியஸ் மொழிகளை ஏற்க மறுத்தன. ஆயினும், தன்முன் மண்டியிட்டு அவன் பணிந்தபோது பழைய நட்பு நினைவு கனிந்தெழலாயிற்று. அவன் காமினியஸை கையாலெடுத்து நிறுத்தித் தழுவிக்கொண்டு, ‘நண்பா! மன்னிக்கவேண்டும்; பழி என் கண்களை மறைக்கின்றது; இப்போது செல்க! ரோம் அழிந்தபின்புதான் நட்பின் ஒளி என் கண்களில் வீசும்’ என்று கூறி அனுப்பினான்.

அதன்பின் ரோமர், முன் பொதுமக்களை வசப்படுத்திய சொல்லாளனாகிய மெனெனியஸை அவனிடம் அனுப்பிப் பார்த்தனர். அதனாலும் பயனில்லை. ரோம் மக்கள் மனமுடைந்தனர். வீரர்களோ, “கோரியோலானஸ் வருவதாயின் நாங்கள் சண்டை செய்யமாட்டோம்; அவனை எதிர்த்துத் துரத்திய திரிபூணர்ளும் அவர்கள் கும்பல்களுமே போய்ச் சண்டை செய்யட்டும்” என்று கூறிவிட்டு விலகி நின்றனர்.

திரிபூணர் பாவம்! இப்போது யாது செய்வீர்! மறைந்துகிடந்த இடம் வரை தம் வினையின் பயன் தம்மை வந்து தாக்குகின்றது; தமது பிழைய இனித் தாமேதான் சரிசெய்ய முயலவேண்டும் என்று அவர்கள் கண்டனர். கண்டு, தமது பகைமை, தமதுவெற்றிச் செருக்கு ஆகிய அனைத்தையுஞ் சுருட்டி ஒதுக்கி வைத்துவிட்டுக், குனிந்த தலையொடும் குழைந்த உருவொடும் கோரியோலானஸின் வீடு சென்று, அங்குத் திரிபுர எழுச்சிக் காலத்துக் கடவுளர் வரவுக்குக் காத்திருந்த மலைமகளும் திருமகளும் போன்று கவலையே வடிவாக வீற்றிருக்கும் வலம்னியாவையும் வர்ஜீலியாவையுங் கண்டு, அவர்கள் காலடியில் வீழ்ந்து, தமது பொறுக் கொணாப் பிழையைப் பொறுக்க வேண்டுமென்றும், தமக்காக அன்றேனும் ரோம் அன்னைக்காகவேனும் மனமிரங்கிக் கோரியோலானஸின் சீற்றத்தைத் தணித்து அவன் பகைமை- யினின்று தம்மையும் ரோமையும் பாதுகாத்தல் வேண்டும் என்றும் அழுது மன்றாடினர்.

வர்ஜீலியா தன் கணவனைத் துரத்திய காதகர்ளைக் கண்களால் பார்க்கக்கூடப் பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். ஆனால், நாட்டுப்பற்றும் வீரமுங் கொண்ட வலம்னியா, தன் மகன் மீதுள்ள பற்றையும் அவன் மீது பழி சுமத்திய அம்மக்களின் மீதுள்ள சீற்றத்தையும் ஒருவாறடக்கிக் கொண்டு அவர்களிடம், ‘என்னால் என்ன ஆகும்? கெடுதல் செய்யும் ஆற்றலுள்ள நீங்களே கையற்றபோது நான் செய்வதென்ன?’ என்றாள்.

திரிபூணர், ‘அன்னையே உங்களால் இப்போது ஆகாத காரியமன்று நாங்கள் கேட்பது; குற்றம் செய்த எங்கள் சொல் ஏறாவிடினும், நீங்கள் எங்களுக்காகப் பரிந்து கேட்டால் கோரியோலானஸ் கட்டாயம் மனமிரங்குவான்; பெண்கள் அழ, அதிலும் மனைவியும் தாயும் அழ அவன் பார்த்திருக்க மாட்டான்’ என்றனர்.

வலம்னியா சரி என ஏற்றுக்கொண்டு வர்ஜீலியாவின் கண்களைத் துடைத்து முடி திருத்தி அவளையும் உடன்கொண்டு புறப்பட்டாள். அவர்களைப் பின்பற்றி ரோம் நகரப் பெண்கள் அனைவரும் - அந்தணர் வீட்டுப் பெண்களும், வீரர் பெண்களும், வணிகர் பெண்களும், வேளாளர் பெண்களும், ஏழைப் பொதுமக்கள் பெண்டிருமாக எல்லாரும்-ஒருங்குகூட அணிவகுத்துச் சென்றனர். நகர மூதாட்டிகள் இருமருங்கிலும் வரிசையாக அவர்களைத் துணைதாங்கிச் சென்றனர்.

கரிய உடை உடுத்துத் கலங்க அழுத கண்களோடு தலைவிரி கோலமாய் வந்த அப்பெண்கள் ஊர்வலத்தை நோக்கி எதிரிகளாகிய வால்ஷியர் முதற்கொண்டு வீரமெல்லாம் இழந்து மனங் கனிவுற்று வழி விட்டனர். படை வீட்டைக் காத்து நின்ற காவலர்கூடக் கோரியோலானஸின் தாய் என்று கேட்டதுமே கைகூப்பி வணங்கி உட்செல்ல விடுத்தனர்.

5.வீரத்தாயும் வீரமகனும்

படை வீட்டினுள் தனதிருக்கை அறைக்கு வெளியே வந்து வாளூன்றிய நிலையில் கற்சிலை என நின்றான் கோரியோலானஸ்.

அவன் முகத்தில் தோன்றிய மாறுதல் ஒவ்வொன்றையும் தம் இரு கண்களும் இமையாடாமல் கவனித்து நின்றனர் வால்ஷிய மக்கள்.

அவன் முன் அவன் மனைவி முதலில் வந்து தலைகுனிந்து வேனிலில் தளர்ந்து வாடிய கொடியென நின்றான். அவள் கண்ணீர் அவள் கன்னங்களின் ஒளியையே கரைத்து மார்பகத்தை முற்றிலும் நனைத்துப் பின்னும் வழிகின்றது. அவனது கனிந்த பார்வை ஒன்றிற்கு நெடுநேரம் காத்து நின்றும் பயனில்லாதது கண்டு அவள் மனமழுங்கி விம்மி விம்மி அழுதாள்.

தானாடாவிட்டாலும் தன் சதையாடும் என்பதற்கிணங்க அவ்வழுகை அவன் உள்ளத்தை ஈர்த்து ஏர்க்காலுழுதது போல உழுதது. ஆனால் அவன் தன்னை அடக்கி அவள் பக்கமிருந்து தன் கண்களைத் திருப்பிக்கொண்டு, “உன் கணவன் ரோமர் தலைவனான கோரியோலானஸ், அவன் இறந்து விட்டான். நான் வேறு கோரியோலானஸ்-நான் வால்ஷியர் நண்பனான கோரியோலானஸ்-நான் ரோமின் பகைவன்-உங்கள் பகைவன்-ஆதலால் என்னைவிட்டுச் செல்க” என்றான்.

வர்ஜீலியா இச்சுடுசொற்கள் கேட்டுத் துடிதுடித்தது அவன் கால்களில் விழுந்தழுதாள். அவர்கள் பிள்ளை ஐந்து ஆண்டுகூட நிரம்பாத சிறுவன் கயஸ் அவள் முன்தானையைப் பற்றி நின்று தந்தையின் கடுகடுத்த முகத்தைப் பார்க்கவும் அஞ்சி ‘அம்மா, அம்மா’ என்றழுதான்.

அக்காட்சி கண்டு கல்லும் கரையும். ஆனால் கல்லினும் கடுமையான வஞ்சினம் கோரியோலானஸின் மனத்திற் குடிகொண்டிருந்தது.

அவன் அவளையும் குழந்தையையும் எடுத்து அப்பால் நிறுத்தி, ‘நீங்கள் போங்கள்’ என்றான்.

பெற்ற பிள்ளையையும் கண்டு கரையாத அவன் சீற்றத்தைக் கண்டு அவனைப் பெற்ற வீரத்தாயாகிய வலம்னியாகூட அஞ்சினான். ஆயினும் தன் கடமையை எண்ணி முன்வந்து அவனை நோக்கிக் ‘கோரியோலானஸ், பெண்டாட்டியையும் பிள்ளையையும் கண்டிரங்காத உன் முன் உன்னைப் பெற்ற தாயாகிய நானே வந்து நின்று மன்றாடுகிறேன்’ என்று கூறி மகனென்றும் பாராமல், அவனை வணங்கப் போனாள்.

தாய், தன்னை ஈன்றெடுத்த தாயா தன்னை வணங்குவது என்று துடிதுடித்த உள்ளத்தினனாய்க் கோரியோலானஸ் அணை மீறிய வெள்ளம் போல் முன் சென்று அவள் கால்களில் வீழ்ந்து, ‘அன்னையே! எல்லாம் அறிந்த தாங்களும் இப்பணியில் இறங்கி என்னை இருதலைப் பொறியிலிடுவானேன்! எனது தன் மதிப்பு என் பழியில் அடங்கிக்கிடக்கிறது. அதிலிருந்து என்னை விலக்க நீங்கள் முயல்வானேன்! இதற்காகப் பகைவர் இடம் என்றும் பாராமல் இவ்வளவு தொலை தாங்களும் இத்தனை மெல்லியலாரும் கால்நோக நடந்து வந்து மன்றாடும்படி நோந்தது என் நெஞ்சைப் பிளக்கின்றது’ என்று கூறி அவள் கால்களைப் பற்றித் தழுவினான்.

அவள் அவன் தலைமீது கைவைத்து வாழ்த்தி, "நீ ஒரு போர்வீரன், உன்னைப் போர்வீரனாக்கியதும், தன் மதிப்புடைய வனாக்கியதும் நான். என்முன் உன் தன்மதிப்பு ஒரு தடையாகாது. மேலும் நான் உனக்கெப்படி அன்னையோ அப்படியே ரோமும் உனக்கு அன்னையாவாள். அவள் மீது போர் தொடுப்பது என்மீது போர் தொடுப்பது போலவேயாம். ஆதலால் அவ்வெண்ணத்தைவிடு’ என்றாள்.

கோரியோலானஸ், ‘தாயே! தாங்கள் கேட்பது இன்னது என்று தாங்கள் அறியீர்கள். தாங்கள் கேட்டபின் நான் மறுக்கும் பொருள் யாதுமில்லை. உயிரையே கேட்பினும் நான் மறுக்கமாட்டேன். இந்தக் கணத்திலேயே கொடுப்பேன். ஆனால் இதில் என் தன் மதிப்பு, நட்பு, வாக்குறுதி ஆகிய யாவும் அடங்கிக் கிடக்கின்றன. இவ்வொரு வகையில் தங்கள் ஆணையை மறுக்க நேர்தமைக்கும் தாங்கள் வந்த காரியம் நிறைவேறாமல் மீண்டேக நேர்ந்தமைக்கும் வருந்துகிறேன்’.

வலம்னியா, ‘சரி, உன் தன்மதிப்பையும் வாக்குறுதியையும் நீயே வைத்துக்கொள்’ என்று சினந்து கூறிவிட்டுச் சரேலென்று திரும்பி வர்ஜீலியாவைப் பார்த்து, ‘வர்ஜீலியா, இனி அவன் என் பிள்ளையுமல்லன் உன் கணவனுமல்லன்; கயஸ்! நீயும் இனி அவனைத் தந்தை என அழைக்க வேண்டாம். அவனுக்கு ரோம் அன்னையின் மதிப்பைவிட ஒரு மதிப்பு இப்போது ஏற்பட்டு விட்டது. ரோம் அன்னையின் பாலுடன் கலந்துண்ட வீரத்திலும் மேலான வீரமொன்று அவனுக்கு இப்போது வந்திருக்கிறது. நாம் இனி அவன் பகைவர்களானதனால் பகைவர்களாகவே போவோம்’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டாள்.

கோரியோலானஸ் மனத்தில் இம்மொழிகள் சுறுக்கெனத் தைத்தன. அவன் சட்டென அவள் முன்சென்று நின்று அவளைத் தடுத்தான். வர்ஜீலியாவும் கயஸும் விம்மி விம்மி அழுதனர். ஆனால் அவள், ‘நீ ஏன் அழவேண்டும் வர்ஜீ? இனி உன் கண்ணீரை அவன் கவனியான்; தாய் தந்தையார் இருந்தும், தாய் தந்தையற்றவன் போலக் கரைந்தழும் இக்கைதையேந்தலைக் கூடக் கவனியாத இக் கல்நெஞ்சனை நினைந்தழுவதை விடு; நாம் செல்வோம்’ என்றாள்.

அவள் சொல் ஒவ்வொன்றும் பழுக்கக் காய்ந்த வேல்கள்போல் அவன் நெஞ்சில் பாய்ந்தன. அவன் “அம்மா! என்மீது ஏன் இத்தனை பழிகளைச் சுமத்த வேண்டும்? நான் வேறென்ன செய்யமுடியும்? ஒரு கெடுதலும் செய்யாத என்னிடம் இப்படியெல்லாம் முகம் திருப்பிக்கொண்டு போவானேன்?” என்றான்.

அவன் மனம் திரும்புவது கண்டு வலம்னியா, “எங்கள் நிலைமையை நீ நினைத்துப் பார்த்தாயா? நீ எனக்குப் பிள்ளை! இதோ இக்கற்பரசிக்கு நீ கணவன்! எல்லா மாதர்களும் ரோமின் வெற்றிக்கும் உறவினர் வெற்றிக்கும் வணக்கம் செய்யும்போது நாங்கள் இருவர் மட்டும் ரோமின் வெற்றிக்கும் வணக்கம் செய்யமுடியாமல், உனது வெற்றிக்கும் வணக்கம் செய்ய முடியாமல் தவிப்பதா? நீ ஒரு வீரனாயிருந்து தாயையும் மனைவியையும் தவிக்கவிடலாமா? இதுவரை ரோமுக்காக உயிர் துறந்தவர் குலத்திற் பிறந்த நீ, ரோமர் உயிர் கொன்ற பழியையா இத்தீங்கறியா இளம் பாலன் தலையிலும் அவன் வழிவழிக் குடும்பத்தின் மீதும் சுமத்துவது?” என்றாள்.

கோரியோலானஸின் வீர உள்ளம் வெந்தீயிற் பட்ட மெழுகென உருகி வழிந்தது. அவன், ‘நீங்கள் கூறும் உண்மைகளை நான் அறியாதவன் அல்லன். ஆனால், என்று உங்கள் ரோம் என்னைத் துரத்தியதோ அன்றே நான் ரோமுக்கு உரியவன் அல்லனாயினேன். என் கடமையும் ரோமுக்கு அன்று; இவ் வால்ஷியருக்கே, இவர்கள் என் நண்பர்கள்; அதோடு ஒப்பற்ற வீரர்கள். தமக்கு உழைத்த நண்பர்களைப் பழித்து நாட்டை விட்டுத் துரத்தும் கோழைகள் அல்லர்’ என்றான்.

அவன் கூறியது உண்மையாயினும், தன் நாட்டின் குறைகளை எதிரிகள்முன் சொல்கிறான் என்று சீறிக் கண்டிக்க எழுந்த நாவைத் தான் வந்த நோக்கத்தை எண்ணித் தடுத்தடக்கிக் கொண்டு அவள் கூறுவாள்.

எந்த வீரருக்காவது எந்தக் கோழையருக்காவது அன்று, இன்று நான் உன் மனம் கரையும்படி வந்து நின்று மன்றாடுவது. அவர்கள் உன் பகைவர்கள் என்பது உண்மையே. ஆனால், உனக்காக அழுவது அவர்கள் அல்லர் உன் தாய். உன் மனைவி, உன் பிள்ளையாகிய நாங்கள் அழுகிறோம். நாங்களல்லவோ உன்னால் பிள்ளையற்றும், துணையற்றும், தந்தையற்றும் தவிப்பதுடன், தாய்நாட்டின் பழியையும் சுமக்க இருக்கிறோம்.

கோரியோலானஸுக்கு, "ஏன் இப்பெண்கள் முகத்தில் விழித்தோம். ஏன் இவர்கள் மொழிக்குச் செவிக் கொடுத்தோம் என்றாயிற்று.

ஆனால், அத்தாயின் துயர்கண்டும்-அவள் பின் நின்று கண் கலங்கியழும் தன் துணைவியின் அழுகை கேட்டும்-அவ்விருவரையும் மாறி மாறிப் பார்த்துப்பின் தன்னையும் பார்த்து மருளும் தன் இளஞ்சிங்கத்தையும் அதன் எதிர்காலத்தையும் உன்னியும், அவன் தன் உயிரினும் இனிய பழியையும் அதனுடன் தன் உயிரையும் துறப்பதென்னம் பேருறுதியைக் கொண்டான்.

"அன்னையே! நீ ரோமின் ஒப்பற்ற புதல்வி என்பதைக் காட்டினாய்! என் தாய் என்பதை மட்டும் காட்டத் தவறுகிறாய்! அதனால் என்ன? நான் மகன்தான் என்பதைக் காட்டுகிறேன்.

அன்னையே! என் மனித உணர்ச்சியை, ஏன் பெருமையைக் குலைத்த ரோம், உங்களை அனுப்பியது ஏன் என்று இப்போது தெரிந்தது. நீங்கள் ரோமின் உயிருக்கு மன்றாட வரவில்லை. ஒரு ரோமன் உயிருக்கு-என் உயிருக்கு-மன்றாட வந்தீர்கள். அவ்வுயிர்க்கு இனி விலையில்லை. ஏனெனில் அதனினும் மிக்க மானத்தையே நீங்கள் விலைகொண்டு செல்கிறீர்கள். உயிரையும், உயிரினும் இனிய பழியையும் அப்பழியினும் மிக்கதான என் நண்பர் வால்ஷியருக்களித்த வாக்குறுதியின் நிலையையும் நீங்கள் கொண்டு செல்கிறீர்கள். நீங்கள் செல்க!

“உங்கள் பெருமைக்கும், உங்கள் குடிப்பெருமைக்கும், உங்கள் நாட்டுப் பெருமைக்கும் என் உயிர் இரையாவதாக” என்றான்.

அவன் சொற்களின் பொருள் அவளுக்கோ ஏழை வர்ஜீலியாவிற்கோ விளங்கவில்லை. ஆனால், தம் வேண்டு கோளை அவன் ஏற்றான் என்று மட்டும் அவர்கள் கண்டனர்.

ரோமின் பக்கம் நோக்கி அவர்கள் கையெடுத்துக் கும்பிட்டு, ‘கோரியோலனஸ்! உன் பெருந்தன்மை கண்டு ரோமின் மனம் குளிர்க’ என்று கூறி அந்நற்செய்தியை ரோம் மக்களுக்கு அறிவிக்க மீண்டேகினர்.

6.முடிவு

அவர்கள் செல்வத்தைத் தன் உயிர் செல்வதாக எண்ணிப் பார்த்து நின்றான் கோரியோலானஸ். வால்ஷியாரும் செய்வ தின்னதெனத் தெரியாது திகைத்து நின்றனர். அவன் சொற்களை ஒருவராயினும் முழுமையாக உணரவில்லையாயினும், தாய் வந்த காரியம் வெற்றியாயிற்று என்று மட்டும் கண்டனர்.

உயிரைப் பறிகொடுத்து அதனை மீட்டுக்கொண்டு வரப் போனவர்களுக்காகக் காத்திருந்தவர்கள் போல் கவலையுற்றேங்கிய ரோம் மக்கள், தம் மாதர் அனைவரும் வலம்னியாவின் தலைமையில் மிள்வதைக் கண்டனர். அவள் முகத்தில் வீரர் களை மிளிர்ந்தது. வர்ஜீலியாவிடம் அக்களையில்லையாயினும் அவள் அழுகை ஓய்ந்து அமைந்த தோற்றத் துடனிருந்தாள். சிறுவன் கயஸை அவள் கையிலெடுத்த அணைத்து முத்தமிட்டுக் கொண்டே வருகிறாள். அவர்கள் நடையிலிருந்தே மக்கள், வெற்றி தமதென உணர்ந்தனர். கிட்ட வந்ததும் வலம்னியா, ‘ரோம் வாழ்க! கோரியோலானஸ் வாழ்க!’ என்றாள். பெண்கள் அனைவரும் தொடர்ந்து, ‘ரோம் வாழ்க! ரோம் வாழ்க! கோரியோலானஸ் வாழ்க!’ என்று ஆரவாரித்தனர்.

இதன் எதிரொலி போலக் கோட்டை முழுமையுமே, உயிர் வந்தது போல், ‘ரோம் வாழ்க! கோரியோலானஸ் வாழ்க!’ என்று ஆரவாரித்திரைந்தது.

வால்ஷியர் படைவீடு மட்டும் ஒளியிழந்தது.

கோரியோலானஸ் வீரமும் அவன் உயிரும் அவன் உடலை விட்டு விடை கொண்டு சென்றுவிட்டன என்று தோன்றிற்று.

சிங்கம் போன்ற இறுமாப்புடைய அவன் உருவம் சிறியதொரு முயலென ஒடுங்கி நடுங்கிற்று.

அவன் தன் வாளை உறையிலிட்டு விட்டு நேராக ஆஃபீதியஸ் இருக்கையை அணுகி, அவனிடம் அவ்வாளை உறையுடன் கொடுத்துத் ‘தாய் நாட்டின் பகைவன், தன் உறவினர் நாட்டின் துணைவன் ஆவனோ? நான் உங்களுக்கும் பகைவனே! என் உயிரைக் கொள்க’ என்றான்.

அவன் வீரனென்று தெரிந்ததும் அவன் மீதுள்ள பொறாமை ஒரு புறம்; அவனால் அடைந்த ஏமாற்றம் ஒருபுறம் ஆக நின்று ஆஃபீதியஸையும் அவன் வீரராகிய வால்ஷியரையும் மனித உணர்ச்சியற்றவராகச் செய்து விட்டது.

படையிழந்து பகையுணர்ச்சியும் இழந்த அவனை அவர்கள் அவன் வாய்மொழிக்கிணங்கவே, ‘தாய்நாட்டுக்குப் பகைவன், அண்டியவர்க்கும் பகைவன், மனித வகுப்புக்கே ஒரு கோடாரிக் காம்பு’ எனக் கூவிக்கொண்டு அவனைச் சூழ்ந்து வாளாலும் ஈட்டியாலும் கட்டையாலும் தாக்கி வெட்டியும் குத்தியும் எறிந்தும் அடித்தும் அவனைக் கொன்று அவனுடலைச் சிதைத்தனர்.

பின் அவர்கள் அவன் குடலை ஈட்டியில் குத்திக் கொடியாகப் பிடித்துக்கொண்டு, ரோம் மீது தங்களுக்குள்ள சீற்றமனைத்தையும் அவன் மீதே காட்டி, ரோம் மக்கள் கண்காண ரோம் நகர்க் கோட்டையைச் சுற்றிச் சென்று, ‘கோரியோலானஸ் வீழ்க! வால்ஷியர் பகைவன் வீழ்க; வஞ்சக ரோமன் வீழ்க!’ என்று கதறினர்.

அவன் முடிவறிந்த ரோமர், தீ மிதித்தவர் போலத் துடித்தார். வர்ஜீலியா அத்துணுக்குறு செய்தி காதில் விழாமுன் ஒரே அலறாய் அலறி வீழ்ந்து மாண்டாள்.

வலம்னியாவும், தன் மகனை - தன் வீர மகனை - நன்றிகெட்ட அந்நகருக்கே பலிகொடுத்த துயர் தாளாது வாளால் தன்னை மாய்த்துக் கொண்டாள்.

வாழ்வு நாளில் பகைத்துக் கொண்டே கோரியோலானஸை இழந்து தாழ்வடைந்து, நாணிழந்த நங்கைபோல் நலனிழந்து மாழ்கியது ரோம் நகரம்.

** அடிக்குறிப்புகள்**
1.  Caiws Marciws

2.  Vulumnia

3.  Tarquin

4.  Menenius Agrippa

5.  Volsciaus

6.  Tullus Aufidus

7.  Consuls

8.  Cominus

9.  Titus Lartius

10. Junius Brutus

11. Sicinius Velutus

12. Virgilia

அந்தோணியும் கிளயோப்பாத்ராவும்

** Antonio and Cleopatra**
** கதை உறுப்பினர்**
ஆடவர்:
1.  அந்தோணியோ: ரோம வீரன், ஒப்பற்ற படைத்தலைவன். ஆசிய நாடுகளையும் எகிப்தையும் வென்றடக்கியவன் - கிளியோப்பாத்ராவின் ஆரூயிர்க் காதலன். அவள் காதலால் வீர வாழ்வும், அரசியல் வாழ்வும் இழந்தவன். மூவருள் முதல்வன்.

2.  அக்டேவியஸ் ஸீஸர்: மூவருள் ஒருவன்-ஜூலியஸ் ஸீஸரின் புதல்வன்-அரசியல் சூழ்ச்சியில் வல்லவன். மற்ற இருவரையும் எதிரிகளையும் வைத்துச் சொக்கட்டானடிய தலைவன்.

3.  லெப்பிடஸ்: மூவருள் கடையானவன்-அக்டேவியஸால் அந்தோணியின் ஆற்றலைக் குறைக்க உயர்த்தப்பட்ட பெருங்குடி மகன். செல்வன், வெள்ளையுள்ளமும், பெருந்தன்மையு முடையவன்.

4.  பாம்பி: மூவரின் பொது எதிரி. கடற்படை வலிமை யுடையவன். பெருந்தன்மையும், நம்பிக்கையும் உடையவன்.

5.  எனோபார்பஸ்: கிளியோப்பாத்ராவின் அமைச்சன்; படைத் தலைவன்; அரண்மனைப் பணியாளர் தலைவன். நண்பன். காதல் தோழன்.

6.  அந்தோணியின் துணைத்தலைவன்: அந்தோணியிடம் பற்றுடையவனாயினும் தவறுகளைக் கண்டிக்க எதிரியிடம் சென்று அவன் பெருந் தன்மையினால் பின்னும் கழிவிரக்கங் கொண்டவன்.

7.  தூதர்:

பெண்டிர்:

1.  கிளியோப்பாத்ரா: எகிப்து அரசி. டாலமிகளின் வழி வந்தவள். அழகி, ஒப்பற்ற சொல் திறமுடையவள். ஸீஸர், பாம்பி முதலியவரைக் காதல் திறமையாகக் கொண்டு அந்தோணியின் காதலிற்குத் தன்னைத் திறையாக்கிக் கொடுத்தவள்.

2.  பல்வியா: அந்தோணியின் முதல் மனைவி.

3.  அக்டேவியா: அந்தோணியின் இரண்டாம் மனைவி.

** கதைச் சுருக்கம்**
ஜூலியஸ் ஸீஸருக்குப் பின் ரோம் அரசியல் மூவர் கையில் சிக்கியது. பொதுமக்கள் உள்ளங் கவர்ந்த வீரன் அந்தோணி, ஜூலியஸ் ஸீஸர் மகன் அக்டேவியல் ஸீஸர், லெப்பிடஸ் என்ற செல்வப் பெருங்குடி மகன் ஆகியவரே இம்மூவர், அவருள் அந்தோணியே ஒப்பற்ற வீரனாதலின் கீழ் நாடுகளனைத்தையும் எகிப்தையும் வென்றடக்கினான். ஆனால் முன் ஸீஸரையும் பாம்பியையுங் காதல் சூழலில் திறைகொண்ட அரசி கிளியோப்பாத்ரா அவனையும் கவர்ந்தாள்.

அரசியல் சூழ்ச்சி வல்ல அக்டேவியஸினைச் சிலநாள் அந்தோணியின் முதல் மனைவி பல்வியா எதிர்த்து நின்றாள். அவள் இறந்தபின் அக்டேவியஸ் அந்தோணியை வருவித்துத் தன் ஒன்றுவிட்ட தங்கை அக்டோவியாவை அவனுக்கு மணந்து அவனைப் பிணைத்தான். பின் அவனுதவியால் பாம்பி என்பவனைத் தம்முடன் நட்பாய்ச் செய்தான்.

ஆனால் விரைவில் பாம்பி இறந்தான். லெப்பிடஸை நயமாகக் குற்றஞ்சாட்டி அக்டேவியஸ் கொன்றான். பின் அந்தோணியும் பகை தொடுக்க முயன்றான். கிளியோப்பாத்ரா காதல் வாழ்வால், அவன் எல்லா நாடும் பிடிக்குமளவும் அந்தோணி அசையவில்லை. எகிப்தை எதிர்த்த பின்னும் அவள் பிணக்கு வழி நின்று போரில் தோல்விகள் பெற்றான். இறுதியில் தம் காதல் வாழ்விலேயே அழுந்தி இருவரும் தற்கொலை செய்து எகிப்தை அக்டேவியஸுக்கு விடுத்தனர். உலகியல் சூழ்ச்சியில் வல்ல அக்டேவியஸ்கூட அந்தோணியின் வீரத்தின் அருமையையும் அதனை விழுங்கிய காதலின் பெருமையையும் பாராட்டினான்.

1.வென்றி வீரனையும் வென்ற மெல்லியலாள்

கிளியோப்பாத்ரா எகிப்தின் ஒப்பற்ற அரசி. அவள் கரிய நிறமுடைய வளாயினும் மாசு மறுவற்ற வடிவழகி. அவள் தன் ஒரு பார்வையால் உலகையே ஆட்டி வைக்கும் திறமுடையவள்.

மக்களை அறியும் நுண்திறத்திலும், அவர்களை மகிழ்ச்சியுள் ஆழ்த்தும் நயத்திலும் அவளுக்கு யாரும் ஈடு அற்றவர். அவள் நாத்திறனோ சொல்லுந் தரமுடையதன்று. உலகின் கவிஞர்களும் நாடக ஆசிரியர்களும் அவளிடமிருந்தே தம் கலைத்திறனைக் கடன் வாங்கவேண்டும்.

எகிப்து நாட்டு மக்கள் மாயத்திற்கும் மந்திரத்திற்கும் பேர் போனவர்கள். அவர்கள்கூட, அவள் நாவசைத்தால் உலகசையும் என்றும், அவள் முக அழகு சற்றுக் குறைந்திருந்தால் உலகின் வரலாறே முற்றிலும் மாறியிருக்கு மென்றும் கூறுவாராம்.

இங்ஙனம் கூறியதில் வியப்பு எதுவும் இல்லை. அவள் முதலில் மணந்த எகிப்து அரசன் டால்மிக்குப் பின், உலகை வென்ற வீரர்களும் ரோமப் பெருந்தலைவர்களுமான பாம்பியும் ஸீஸரும், ஒருவர் பின் ஒருவராக அவள் கவர்ச்சியுட்பட்டு அவள் காலடியில் துவண்டுகிடந்தனர். அவர்கள் உலகினர் அஞ்சும் வீரமும் வரலாற்றில் நின்று நிலவும் புகழும் உடையவராயினும், அவள் அழகின் முன், அவள் மாய மிரட்டல்களின் முன், தலைவணங்கி நின்றனரேயன்றி வேறானாரல்லர்.

ஸீஸருக்குப் பின் ரோமப் பேரரசைத் தன் வீரத்தாலும் தோள் வலியாலும் ஆளுந் திறமுடையவன் அந்தோணி என்ற வீரனே. ஆயினும் அவன் பெருந்தன்மையுடையவன்; இன்ப வாழ்விலும், நண்பருடன் கூடிக் குலாவுவதிலும் விருப்புடையவன்; அரசியல் பெருமையை நாடியவன் அல்லன். ஆகவே ரோமின் அரசியல் அவன் காலடியில் கிடப்பினும் அவன் அதனை ஏற்றுப் பேரரசன் ஆகாமல் அதனைக் கைப்பந்து போல் வைத்து விளையாடினான்.

ஸீஸரின் மகனாகிய அக்டேவியல் ஸீஸர் அந்தோணியின் மனப் போக்கையும் நாட்டின் நிலையையும் கண்டு, அவற்றைத் தனது முற்போக்கிற்குக் கருவியாகப் பயன்படுத்த எண்ணினான். ரோமப் பெருமக்களுள் செல்வாக்குடைய லெப்பிடஸ் பெருமகனையும் இவ்வெண்ணத்திற்கேற்ப, அவன் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். இம்மூவரும் ரோமப் பேரரசின் மீது ஒருங்கு ஆட்சி செலுத்துவதாக உடன்படிக்கை செய்துகொண்டனர். ரோமப் பேரரசின் பெயரால் கீழ்நாடுகளை வென்றடக்குவதாக அந்தோணி ஏற்றுக் கொண்டான். அதன்படி அவன் சென்று பார்த்தியரும், பாக்தியரும், பாரஸீகரும், அயோனியரும் வெருண்டோடும்படி போர் புரிந்து பின் எகிப்தையும் வென்று கீழ் அடக்கினான். ஆயின், அந்தோ! நஞ்சூட்டிய அமிழ்தாகிய கிளியோப்பாத்ராவின் வனப்பில் ஈடுபட்டு அவன் தன் வீரமும் உயர்வும் இழந்ததோடு, தன் வெற்றி விழாவை அறவே மறந்து காதல் விழா அயர்வானாயினன்.

அந்தோணிக்குப் பல்வியா என்ற ஒரு மனைவியுண்டு. அவள் மிகுந்த அறிவும் திறமையும் உடையவள் ஆயினும், உணர்ச்சி வசப்பட்ட அந்தோணி போன்ற ஆடவனைக் கட்டுப்படுத்தப் போதிய கவர்ச்சியற்றவள். அவன் உயர்வையும் வீரத்தையும் அவள் நன்கறிவாள். அவனையொத்த வீரனைக் கணவனாகப் பெற்றதற்காக அவள் இறம்பூது எய்தினாள் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவன் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள அவளால் முடியவில்லை. உயர்குடியிற் பிறந்த அவளுக்கு அரசியல் சூழ்ச்சிகள் நல்ல பாடமாயிருந்தன. அவற்றை எதிர்க்கும் எண்ணம் கணவனிடம் இல்லை என்பதை அவள் கண்டு அவன் மீது சீற்றம் கொண்டாள். இதனால் காதலுறவு பறந்தது. அவன் செய்ய வேண்டும் அரசியல் நடவடிக்கைகளை எடுத்து அவள் அவன் அரசியல் அமைச்சனாகச் செயலாற்ற மட்டுமே அவளால் முடிந்தது.

இந்நிலையில் அவள் அந்தோணியின் உடன்பிறந்தான் உதவியால் ஒரு சிறு படை சேர்த்து ஸீஸரை எதிர்த்துப் போரிட்டாள். இங்ஙனம் செய்தது உண்மையில் ஸீஸரின் வன்மையைக் குறைப்பதற்காக மட்டுமன்று; அந்தோணியை ரோமிற்குக் கொண்டு வருவதற்காகவுமேயாம்.

கேவலம், பெண்ணாகிய பல்வியா இங்ஙனம் ஆடவர்களை வீரத்திலும் திறனிலும் மடக்குவது தெய்வத்திற்குப் பொறுக்க வில்லை போலும்! அஃது இந்த இக்கட்டான நிலையில் அவளைத் தன் பக்கம் அழைத்துக் கொண்டது.

கிளியோப்பாத்ராவின் கண்பார்வை என்னும் நிலவொளியில் அவளது கருங்குழலென்னும் முகிலினிடையே விளையாடி, உலக ஆட்சியையும் ரோம் அரசியலையும் மறந்திருந்த அந்தோணி, பல்வியா இறந்தது கேட்டு வருந்துவதற்கு மாறாகத் தன் இன்ப வாழ்வின் இடையூறு ஒன்று அகன்றதென்று கருதி மகிழ்ந்தான்.

கிளியோப்பாத்ரா இதுவரை வீரர், அரசர்-பேரரசர் முதலிய பலர் நெஞ்சம் திறைகொண்டு அவர்கட்கு ஆட்படாது நின்றவள் எனினும், அந்தோணியைக் கண்டதுமே அவன்பால் தன் நெஞ்சம் தன்னையும் மீறிச் செல்வதை உணர்ந்தாள். இதுவரையிற் பிறர் நெஞ்சில் வீறுற இருக்கை கொண்டதன்றித் தன் நெஞ்சில் பிறர்க்கிடந்தராத அத் தையலர் மாணிக்கம் இன்று அதே நெஞ்சில் வேறெதற்குமிடமின்றி அவன் வடிவழகும் பண்பழகும் வந்து நிறைந்ததை உணர்ந்தாள்.

எகிப்தில் அந்தோணி வாழும் வாழ்க்கையைப் பற்றி ரோமிற் பலரும் பலவாறு தத்தம் மனம் போனபடி பிதற்றுவாராயினர், அவற்றைக் கேட்டு மூவர் ஒப்பந்தத்திற் கையெழுத்திட்ட மற்ற இருவரும் மனங் கவன்றனர். அவர்களுக்குப் பொது எதிரியாகிய பாம்பியிடம் அரிய கடற்படை மூன்று இருந்தது. அதனால் அவர்கள் எளிதிற் பேரரசு முற்றும் சென்று அடக்கியாள முடியாதபடி அவன் அவர்களைத் தடைசெய்து கொண்டிருந்தான். அந்தோணியின் முழு ஒத்துழைப்பின்றி அவர்களால் அவனை எதிர்த்தடக்க முடியாதென்று அறிந்து, அவர்கள் அந்தோணிக்கு மேன்மேலும் தூதரை அனுப்பி அரசியல் வாழ்விலீடுபடுமாறும், ரோம் நகர் வந்து தம்முடன் கலக்குமாறும் வேண்டினர்.

ஆனால், இவ்வரசியல் தூதர்கள் வரவு அந்தோணியின் காதல் வாழ்வாகிய நறுந்தேனிடையே அத்தேனைக் குடிக்க வொட்டாமல் கெடுக்க வரும் ஈக்களின் வரவு போன்றிருந்தது. அரிய துயிலிளாழ்ந்தவன் உடலிற் கொசுக்கடித்தால், அவன் தூக்கத்தோடு தூக்கமாக அதனை அறைந்து கொண்று மீண்டுந் தூங்குவதுபோல, அவன் முதன்முதல் வந்த தூதனை வரவேற்கவோ, அவன் யாரிடமிருந்து வந்தானென்று கேட்கவோ கூடச் செய்யாமல், பணியாட்கள் மூலமே அவனைத் துரத்திவிட்டான். இது கேட்டு ஸீஸர் மிகவும் வெகுண்டா னெனினும் இடமும் வேளையுமறிந்து அதனை அடக்கிக் கொண்டு பொறுமையுடன் மீண்டும் மீண்டும் ஆளனுப்பிக் கொண்டேயிருந்தான்.

2.மணமும் அரசியலுறவுகளும்

‘அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்’ என்ற உண்மைப்படியே, பல்வியாவின் பிரிவுச் செய்தியால் ஏற்பட்ட நல்லுணர்ச்சியாலோ, அந்தோணியின் மனத்திலுங் கூடச் சில நாளில் ஒருவகையான ஆண்மையுணர்ச்சியும் மனச்சான்றும் எழுந்து அவனது வாழ்க்கைப் போக்கை-சோம்பல் வாழ்வைக்-குறைகூறத் தொடங்கின. பகைச் சிங்கத்தின் உறுமல் கேட்டுப் பெண் சிங்கத்தின் குழைவையும் குட்டிகளின் நடுக்கத்தையும் பாராமல் வீறிட்டெழும் சிங்கவேற்றைப் போல அவன் கிளியோப்பாத்ராவின் காதலாகிய பட்டுநூல் வலையை அறுத்தெறிந்து ரோமிற்குப் புறப்பட்டான்.

அந்தோணிமீது, அவன் காதல் நெஞ்சின்மீது தான் ஆட்சி செலுத்தினும், அதே நெஞ்சிற்கு இன்னொரு பகுதி வீரப்பகுதி உண்டென்றும், அதைத் தான் உறங்க வைக்க முடியுமேயன்றி ஒழிக்க முடியாதென்றும், அது விழித்து விட்டால் அவனைத் தான் அடக்கியாள முடியாதென்றும் கிளியோப்பாத்ரா நன்கு அறிவாள். இப்போது அவன் வீர உரு எடுத்து விட்டபடியால் அவள் அவன் முன் காற்றிலாடும் மாந்தளிரென நடுங்கினாள். அவள் ஆணைப்படி, அவள் சேடியர் அவளுக்கு உடல் நலமில்லையென்றும், அவள் சினங்கொண்டுள்ளாள் என்றும், பலவாறு பேசிப் பார்த்தும் அவன் போவதிலேயே முனைந்து நின்றமை கண்டு அவனிடமிருந்து ஊடித் தன் அறை சென்று, அவனைப் பிரிந்த துயர் பொறாது பிதற்றி அப்பிரிவு நாட்களின் ஒவ்வொரு நொடியையும் ஒவ்வொரு சிறிய ஊழியாக எண்ணிக் கழித்தாள்.

பாம்பியால் அலைக்கழிக்கப்பட்டு நின்ற ஸீஸரும் லெப்பிடஸும் அந்தோணியை ரோமில் கண்டதே, காட்டில் அலைந்து பசியாலும் விடாயாலும் வருந்திய மக்கள் முன் வேடச்சிறாரும் சிறுமியரும் இன்முகத்துடன் தேனும் தினைமாவும் ஊனும் கொண்டு வந்தாலெப்படியோ அப்படிக் களிப்புற்றனர். இதுவரை ஒருவருக்கொருவர் செய்த தீமைகளைப் பற்றிக்கூட வற்புறுத்திப் பேசாது தோழர்களுடன் குத்தலாகப் பேசுமுறையில் எடுத்துக் காட்டிவிட்டுப் பின் இணக்கமாக ஒருவருடன் ஒருவர் கூடிக் குலாவலாயினர். இவ்வொற்றுமை நெடுநாள் நிலைத்திருந்தாலன்றித் தன் காரியங்கள் நடைபெற என்றறிந்த அக்டேவியஸ் ஸீஸர், தன் நண்பர்களை அந்தோணியின் மனப்பாங்கறிந்து தன் ஒன்றுவிட்ட உடன்பிறந்தாளாகிய அக்டேவியாவை அவன் மணக்கும்படி தூண்டச் செய்தான்.

அந்தோணியின் தெளிந்த மனச்சான்று இப்போது கிளியோப்பாத்ராவுடன் தான் நடத்திய சோம்பல் வாழ்வை வெறுத்ததாகலின், இனித் தான் நல் உணர்வுடையவனாய் ஆண்மை வாழ்வு வாழ இத்தகைய மணம் உதவும் என்று நினைத்தான். இதற்கேற்ப அக்டேவியா எளிய குணமும் உயர்ந்த கடமையுணர்வும் உடையவளாய்ச் சூதுவாதற்றிருந்தமையால், அவள் அன்று அவனது இப்பிரிவு மனப்பான்மையில் மிகவும் உயர்ந்தவளாய்க் காணப்பட்டாள். ஆகவே விரைவில் அவ் விருவரையும் ஸீஸர் மணமுடித்து வைத்துவிட்டான்.

அவர்களும் சிலநாட்கள் கிளியோப்பாத்ராவின் மாயவலை யினின்றும், ரோமின் அரசியல் சிக்கல்களினின்றும் விலகி நின்று தூய மணவாழ்க்கை யிலீடுபட்டனர்.

ரோமில் மூவரும் மீண்டும் ஒருங்கு சேர்ந்ததும் இணக்கமடைந்ததும் பாம்பியின் வலிமையைக் குறைத்தன. அவர்களை இனி எதிர்ப்பது அரிது என்று கண்டு அவன் அவர்களுடன் உறவு கொண்டுவிட எண்ணினான். அதற்கு அவர்களும் உடன்பட்டனர். உடன்படவே பாம்பி தன்னுடன் கப்பலில் வைத்து விருந்துண்ண மூவரையும் வருமாறு அழைத்தான். முக்கனிகளும் தேனும் பாலும் சிற்றுண்டிகளும் அவர்கள் நட்பிற்கறிகுறிகளாக வழங்கப் பட்டன. இனிப் போராட்டமின்றி நால்வரும் தம்முள் ஒருவரையொருவர் சரிசமமாகக் கொண்டு வாழ்வதென்றும், ஒருவர் பங்கில் ஒருவர் புகுவதில்லை என்றும் உறுதி கூறியபின் அவர்கள் பிரிந்தனர்.

ஆனால், அந்நான்கு உள்ளங்களிலும் ஒன்று மட்டும் இந்நட்பை ஒரு மேலுறையாகக் கொண்டு உள்ளூர நஞ்சைக் கலந்து ஒளிந்து வைத்துக் கொண்டிருந்தது. அதுவே ஸீஸரது உள்ளமாகும். உலகை முற்றிலும் தானே ஆளவேண்டுமென்னும் ஓர் எண்ணத்தையும் அதற்கான சூழ்ச்சிகளையும் தந்திரங் களையும் அல்லாமல், நட்பு, காதல், நம்பிக்கை ஆகிய இத்தகைய எண்ணங்கள் எதற்கும் அவன் அதில் இடங்கொடுக்கவில்லை. ஆகவே பாம்பி, அவர்களைத் தம் விருந்தினர் என்றெண்ணிக் கப்பலில் அவர்கள் தன்னிடம் வந்து சிக்கியபோது அவர்களைச் சிறைபிடிக்க வேண்டுமென்று கூறிய தன் துணைத்தலைவன் மொழியைச் சினந்து கண்டிக்கவும், லெப்பிடஸும் அந்தோணியும் தம் நலனை மறந்து அக்டேவியஸ் ஸீஸருக்கு உயர்வும் ஒப்பரவும் நல்கவும், அக்டேவியஸ் ஒருவன் மட்டும் நெஞ்சில் வஞ்சங் கொண்டு அவர்களனைவரையும் பிரித்து அழிக்கும் எண்ணங் கொண்டவனாயிருந்தான்.

ஊழ் இவ்வகையில் அக்டேவியஸுக்குப் பேருதவி புரிந்தது. முதலாவதாகப் பாம்பி தற்செயலாகத் தன் பணியாள் ஒருவன் கையால் கொலையுண்டான். அதைக் கேட்டதும் இனி லெப்பிடஸ் உதவி வேண்டுவதில்லை என்று கண்டு அக்டேவியஸ், அவன் பாம்பியுடன் மறைவாக எழுத்துப் போக்குரவு வைத்திருந்தான் என்று பொய்க் குற்றஞ் சாட்டினான். அக்டேவியஸிடம் நம்பிக்கை வைத்து அவனை ரோமின் தலைவன் என்றே கொண்ட பெருந்தன்மையும் நாட்டுப் பற்றும் மிக்க லெப்பிடஸ், தான் தன் நாட்டுத் தலைவனது நம்பிக்கையையிழந்ததாகக் கண்டதே தானாகவே தன்நிலையை விட்டு அவனிடம் சிறையாளியாக வந்து நின்றான். அக்டேவியஸ் அப்பெருந்தகை லெப்பிடஸைப் பாராட்டுவதற்கு மாறாக அவன் குற்றத்தை வற்புறுத்தி அவனைக் கொலை செய்தான்.

ரோமப் பேரரசின் பங்காளிகளுள் இப்போது அக்டேவியஸுக்கு எதிரியாக மீந்திருந்தவன் அந்தோணி ஒருவனே. தனது மூன்று எதிரிகளிலும் வீரத்தாலும் திறனாலும் தனக்குப்பேரிடர் தரத்தக்க எதிரி அவனே என்பது அக்டேவியஸுக்குத் தெரியும். அதனால் அவன் தன் தங்கை மூலம் அவனைப் பிணித்து வைக்க எண்ணினான். ஆனால் இப்போது பாம்பியும் லெப்பிடஸும் போனபின், அதுவும் அவன் கிளியோப் பாத்ராவின் வலையில் பிணிப்புண்டிருக்கையில் அவனை எதிர்ப்பது அவ்வளவு கடுமையானதன்று என்றுங் கண்டான். அந்தோணியும் தனது மனச்சான்றுக்கு இடங்கொடுத்த அளவே அக்டேவியாவுக்கு இணக்க முடையவனாயிருந்தான். உள்ளுணர்ச்சியும் இன்ப விழைவும் ஏற்பட்டதே இல்லை; அவள் அவனுக்குக் கரும்பின் நறிய சாற்றினின்று பிரித்தெடுக்கப் பெற்ற வெள்ளிய சக்கைபோலத் தோன்றினாள். அக்டேவியா உலகமெச்சும் மனைவியாதற் குரியவளேயன்றித் தன் உள்ளங் கவர்ந்தவள் அல்லள் என்று அவன் கண்டு கிளியோப்பாத்ரா இருந்த இடம் நோக்கலானான்.

3.பிரிவும், பிரிந்தவர்கூடலும்

அந்தோணி தன்னுடன் இருந்தபொழுது அவன் தன் காதலுக்கு அடிமை என நினைத்திருந்த கிளியோப்பாத்ரா, இப்போது உண்மையில் தானே அவன் காதலுக்கு அடிமை என்பதை உணர்ந்தாள். அவள் உடலும் உயிரும் இப்போது இடைவிடாது அவனது தொடர்பு, அவன் தோற்றம், அவன் மொழிகள் இவற்றிலேயே நாட்டமாய் நின்றன. ஊணிலும் உடையிலும் ஆடல் பாடல்களிலும் அவள் கொண்ட விருப்பு அனைத்தும் அந்தோணி என்னும் ஒரு பொருளால் வரும் இன்பத்திற்குக் கருவிகளாக மட்டுமே இப்போது தோன்றின. அவள் சேடியார் எவ்வளவு வேண்டினும் அவள் அவற்றலோ பிற அரசே காரியங்களிலோ மனஞ் செலுத்தாமல், அந்தோணியையே நினைத்து நினைத்துப் பெருமூச்சு விட்ட வண்ணம் இருந்தாள்.

ரோமில் அந்தோணி எந்நிலையில் இருக்கிறான் என்னென்ன செய்கிறான் என்பதையறிய, கிளியோப்பாத்ரா மறைமுகமாக ஒற்றரை அனுப்பியிருந்தாள். அவர்கள் மூலமாக வந்த செய்திகள் அவள் மனத்தைப் பின்னும் மிகுதியாகக் குழப்பின. அந்தோணி தன் காதல் தளையினின்று விடுபட்ட தன்றி, அரசியலுள் முழு மனத்துடன் ஈடுபட்டு மூவருடன் ஒத்துழைத்தது அவள் மனத்தை வாள்போல் ஈர்த்தது, அதன்பின், அவன் அக்டேவியாவை மணந்தான் என்ற செய்தியைக் கேட்கவே, அவளடைந்த சினத்திற்கும் துயருக்கும் எல்லையில்லை.

அச்செய்தி கொண்டு வந்த ஒற்றனையே முதலில் அவள் சினந்து பாய்ந்து கொல்ல இருந்தாள். அவள் பணியாட்களுள் தலைவனான எனோபார்பஸ் அவளுக்குத் தேறுதல் கூறி அவளை அமைதிப்படுத்தினான். அந்தோணி அக்டேவியாவை மணந்தது உண்மையில் ஸீஸருடன் அவனைப் பிணைப்பதன்று, முரணச் செய்வதேயாம் என்று அவன் எடுத்துக்காட்டினான். அதோடு அக்டேவியா அழகற்றவள் என்றும், அந்தோணியின் உள்ளக் கிளர்ச்சிக்கு ஒரு நொடியும் ஈடு செலுத்தக்கூடாதவள் என்றும் அவன் கூறவே, அவள் தன் துயரை மறந்து அந்தோணியை மீண்டும் தன் பக்கம் இழுக்கும் வழி யாதென ஆராயலானாள்.

இச்சமயம் அக்டேவியா தன் கணவனை விட்டு அகன்று தன் தமையனைப் பார்க்கச் செல்கிறாள் என்று செய்தி வந்தது.

ஸீஸர் இப்போது நேரடியாக அந்தோணியைக் குறை கூறவும், அவன் நண்பர்களைச் சிறைபடுத்தி ஒறுக்கவும் தொடங்கினான். இவற்றைக் கேட்டும், லெப்பிடஸினிடம் ஸீஸர் நடந்துகொண்ட வகையை அறிந்தும் அந்தோணி அவன்மீது சீற்றங்கொண்டு அதனை அக்டேவியாவினிடமும் காட்டினான். கணவனையும் தமையனையும் ஒருங்கே பற்றிநின்ற அக்டேவியா தமையனை நேரே சென்று திருத்த எண்ணி ரோம் நகர் சென்றாள்.

லெப்பிடஸின் நட்பையும் பெருந்தன்மையையும் பாராத ஸீஸர் அந்தோணியின் உறவையும் தங்கையின் நல்வாழ்வையும்கூட எண்ணிப் பாரான் என்பது எதிர்ப்பார்க்கத் தக்கதேயன்றோ? அவன் தங்கை வாய் திறக்கும் முன்னாகவே, அவளை அந்தோணி ரோமப் பேரரசின் பங்காளியாகிய தன் மனைவியென்ற முறையின் விருதுகளுடனும் மேளதாளங்களுடனும் அனுப்பாமல் பணிப் பெண் போலத் தனியே அனுப்பினான் என்று அவன்மீது சீறினான். அந்தோணி மீது இந்த அவமதிப்பிற்காகப் பழிவாங்குவ தெனக்கூறி, அவன் தன் பகைமைக்குப் புதிய சாக்குக் கண்டான். இங்ஙனம் மைத்துனர் இருவரையும் ஒன்று சேர்க்கும் எண்ணத்துடன் வந்த அக்டேவியா அவர்களைப் பிரித்து வைக்கவே உதவியவள் போலானாள்.

அக்டேவியா போனதே, அந்தோணி தான் இதுவரை வலியுறுத்தி மேற்கொண்டிருந்த செயற்கையாண்மையாகிய போர்வையைக் கிழித்து எறிந்துவிட்டு, முன்னினும் பன்மடங்கு ஆர்வத்துடன் விரைந்து கிளியோப் பாத்ராவிடம் சென்று சேர்ந்தான்.

“பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?” நீரின்றி வெடித்த நிலத்தில் மழைத்துளி விழுந்தாலன்ன அவன் வரவு அவள் நெஞ்சின் துடிப்பையும் ஏக்கத்தையும் அகற்றி அவளை இன்ப உலகேழினும் மேலாம் துறக்க உலகு எய்துவித்தது.

தானின்றி அந்தோணி வாழினும்கூட இனித்தான் அந்தோணியின்றி வாழ முடியாதெனக் கிளியோப்பாத்ரா கண்டாள். ஆகவே அவள் அதுமுதல், எங்கே அந்தோணி இயற்கை வீர உரு எடுத்துத் தன்னைவிட்டு அகன்று விடுவானோ என்று அஞ்சலானாள். அதன் பயனாக அவனது வீர உணர்ச்சி எழாதபடி ஓயாது காதல் உணர்சசியைத் தூண்டி இடைவிடா வேலையாயிற்று. மறந்துங்கூட அவன் அக்கோட்டையை விட்டகல எண்ணாதபடி செய்வதில் அவள் தன் ஒப்பற்ற திறனையும் மாயவித்தை களையும் காட்டலானாள்.

பெண்மையே உருவெடுத்து வந்ததுபோன்ற அப் பெண்ணரசிக்கு இது மிகக் கடுமையான பணியுமன்று. கூடலின் உயர்நிலை ஊடலே என்பதையுணர்ந்து, அவள் அந்தோணியை ஒரு சமயம் தன் பக்கம் ஈர்ப்பதும் அடுத்த கணமே அவனை வெறுத்துத் தள்ளுவதும் போல் நடித்து, அவன் ஆர்வத்தைப் பன்மடங்கு மிகைப்படுத்தினாள். அவள் வரவும் செலவும், அவள் விருப்பும் வெறுப்பும், புகழ்ச்சியும் இகழ்ச்சியும், நகைப்பும் சினமும், மாறி மாறி ஒளியும் நிழலும் போலவும், உடலும் உயிரும் போலவும், பகலும் இரவும் போலவும் நின்று, அவன் வீரமும் அறிவும் அவனிடம் வருவதற்கு ஓய்வு தராதபடி அவன் மனத்தைத் தாக்கி உரிமைப்படுத்தின.

ஆயின், என்ன இருந்தாலும் அவளும் பெண்தானே! தனது இம்முயற்சியினால் தன் உயிருக்கும் தன் காதலன் வாழ்க்கைக்கும் உலை வைக்கிறோமென்று அவள் அறிந்திலள்! ஜூலியஸ் ஸீஸரது மதிப்பிற்கும் பாம்பியின் அச்சத்திற்கும் இடமான அந்தோணி, தன் காதல் வலைப்பட்டு அக்டேவியஸ் ஸீஸர் போன்ற மோழையும் பாயும் ஏழையாய் விட்டான் என்று அவள் அறிந்திலள்!

அந்தோணி எகிப்தில் கிளியோப்பாத்ராவுடனும், அவர் சேடியர் பேடியருடனும் சூதாடியும், அவளுடன் பொய்கை நீராடியும், பூம்பந்தாடியும், பொற்படகு ஊர்ந்தும், ஆடல் பாடல்கள் கேளிக்கைகள் முதலியவற்றில் கலந்தும் நாள் போக்கி வந்தான். அதேசமயம் அவன் நடைமுறைகள் முற்றிலும் ஒற்றர் மூலம் அறிந்து வந்த அக்டேவியஸ் இதுதான் சமயமென்று கண்டு அந்தோணியின் நண்பர்களை ஒவ்வொருவராக முறியடித்து அழித்தும், அவன் பங்கிலுள்ள நாடுகளை வென்று கைக்கொண்டும் வந்தான். அவற்றைக் காதாற் கேட்டும் மனத்தால் கொள்ளாத வனாய் அந்தோணி சிலநாள் கடத்தினான். பின் “வரட்டும், அவன் எங்கே போகிறான். ஒரு கை பார்க்கிறேன்” என்று உறுக்கி நாள் போக்கினான். தன் படைத்தலைவர்களிடம், “இன்று புறப்பட்டுச் சென்றெதிர்ப்போம்; நாளை புறப்பட்டுச் சென்றெதிர்ப்போம்” என்று கூறி முயற்சியேயின்றிப் பலநாள் கழித்தனன். இங்ஙனமாக எகிப்தும் கீழ் நாடுகளும் நீங்கலாக எல்லாம் ஸீஸர் வசமாயின.

4.காதலுக்கு வீரம் பலியாதல்

ரோமப் பேரரசின் குழப்பத்தை விட இப்போது அந்தோணியின் மனத்திலுள்ள குழப்பமே மிகப் பெரிதாயிருந்தது. ஸீஸரின சிறுமையை - அவனது நன்றிகொன்ற தனத்தை - அவன் தன்னை அவமதித்த அமதிப்பை - எண்ணும்போதெல்லாம் அவன் தோள்கள் துடித்தன; அவன் மீசைகள் படபடத்தன. அப்போது அவன் இந்தக் கிளியோப்பாத்ராவையும் அவளது எகிப்தையும் சின்னாபின்னப் படுத்திவிடுவோமா என்றெழுவான். அடுத்த நொடியே அக் கிளியோப்பாத்ராவின் உருவம் - நகையும் சீற்றமும் மாறி மாறி வந்து நடனமிடும். அவள் முகம் மயிலும் நாண அன்னமும் பின்னிட நடந்துவரும் அவளது ஒய்யார நடை - தேனினுமினிய தெவிட்டா அமிர்தான அவள் குயிலிசை மொழிகள் - ஆகிய இவை அவன் மனத்திரையில் வந்து தவழும். அப்போது அவன் தன் வீரத்தையும் தன் அறிவையும் இழந்து ’இவ்வுருவின் முன் ரோமப் பேரரசையும் என் வாழ்வையுங் கூடப் பலிகொடுத்த தயங்கேன்" என்பான்.

இறுதியில் ஸீஸர் மற்ற நாடுகள் அனைத்தையும் வென்று தன்னை எதிர்க்க எகிப்து நோக்கி வருகிறான் என்று கேள்விப் பட்டதும் அந்தோணி, மேற்பணியாளன் வரவு கேட்டு எழும் குடிவெறிப்பட்ட படைஞன் போல் எழுந்தான். தனது நாடாகிய எகிப்துக்கே இடையூறு வந்தது கண்டு கிளியோப்பாத்ராவும் அந்தோணியின் காதிற் புகைக்கு நறுந்தூளிடும் வேலையை விட்டு எழுந்தாள். விரைவில் அமைச்சர்களுக்கும் படைத் தலைவர் களுக்கும் உத்தரவுகள் பறந்தன. பேடியரும் சேடியரும் அஞ்சி அகல நிற்க வீரரது போர் அவை கூடிக் கலந்தது.

அந்தோணியை விட்டகல விரும்பாமல் கிளியோப்பாத்ரா தானும் போரில் தன் படைக்குத் தலைவியாய் வரவேண்டுமென்று விரும்பினாள். அந்தோணியின் அமைச்சனும் நண்பனுமான எனோபார்பஸ், பெண்டிர் போர்க்களம் செல்வது நன்றன்று என்றும், அதிலும் கிளியோப்பாத்ரா அந்தோணிக்குக் காற்கட்டாயிருப்பாள் என்றும் கூறினான். கிளியோப்பாத்ரா இதனை ஏற்காது அவனை வாயடக்கினாள்.

கிளியோப்பாத்ராவின் இப்பிழைகளால் வந்த தீங்கையன்றி வேறெவ்வகையிலும் வெற்றிக்குரிய முழுவன்மை அந்தோணி பக்கமே இருந்தது. அவனது படை அவ்வளவு வீரமும் நற்பயிற்சியுமுடையது; அஃது அவனிடம் நிறைந்த பற்றுடையது; அவனுக்காக உயிரை ஒரு பொருட்டாக மதியாது போரிடும் இயல்புடையது. அந்தோணியும் ஒப்பற்ற வீரன்; தன் படைகளை வெற்றிமேல் வெற்றியாக நின்று நடத்திய நேரிலாத் தலைவன்; ஸீஸரின் படை அந்தோணியின் படைக்கு ஈடுடையதும் வீரமுடையதுமன்று; ஸீஸரும் வீரத்திலும் தலைமைத் திறத்திலும் அந்தோணிக்கு ஈடுடையதும் வீரமுடையதுமன்று; ஸீஸரும் வீரத்திலும் தலைமைத் திறத்திலும் அந்தோணிக்கு ஈடு ஆகான்.

கடற்படை வகையில் நிலைமை இதற்கு நேர்மாறானது. ஸீஸர் படை பாமபியால் பயிற்சி தரப்பட்டது; அந்தோணியின் கப்பற்படையோ எகிப்து அரசி உலாப்போகும் சமயம் அழகிற்காக உடன்செல்ல ஏற்படுத்தப்பட்டது. ஆகவே, நிலத்தற் போர் புரிவது அந்தோணிக்கே நல்லது என்றும் கடலிற் போர் புரிவதே தனக்கு நல்லது என்றும் ஸீஸருக்கு நன்கு புலப்பட்டது. எங்கே அந்தோணி தன்னை நிலத்தில் தாக்கிவிடுவானோ என்று அவனுக்கு உள்ளூர அச்சமாயிருந்தது.

கிளியோப்பாத்ராவின் போக்கு இதிலும் ஸீஸருக்கு நன்மையாகவே முடிந்தது. எனோபார்பஸ் அந்தோணியின் கடற்படையை விட நிலப்படையே வெற்றியுடன் போர்புரியத் தக்கது என்றபோது, அவள் அவன் தன் நாட்டின் கடற்படையைக் குறை கூறினான் எனக்கொண்டு இதிலும் அவன் கூறியதற்கு நேர்மாறாக அந்தோணியைத் தூண்டினாள். ‘தையல் சொற் கேளேல்’ என்னும் மூதுரையை மீறி அவனும் அவள் சொல்வதையே மேற்கொண்டு கடலிலேயே சண்டை செய்யுமாறு எனோபார்பஸுக்குக் கட்டளையிட்டான்.

எனோபார்பஸ் கூறியபடியே எகிப்தியக் கடற்படை ஸீஸரது படையுடன் சில மணி நேரங்கூட நிற்க ஆற்றாமல் முறிந்து பின்னடைந்தோடியது. கிளியோப்பாத்ராவும் உடன் தானே நடுநடுங்கித் தன் கப்பலையும் அவற்றுடன் ஓடும்படி ஆணையிட்டாள்; பாவம்! தான் போவது அந்தோணிக்கு உயிர் போவது போல் இருக்கும் என்பதை அவள் மறந்தாள்.

இருபடையும் நெருங்கிப் போர்புரியும் வேளையில் அந்தோணியின் கண்கள் தற்செயலாகக் கிளியோப்பாத்ராவின் பக்கமாகச் சாய அப்போது அவன் அவள் படைகள் உடைந்தோடுவதையும் அவளும் உடனோடு வதையும் கண்டான். கண்டதே அவன் போரும் மறந்தான். புவியும் மறந்தான்; போர்வீரர் நிலையையும் மறந்து, ஓடுகின்ற தாய்ப்பசுவைப் பின்பற்றும் கன்றைப்போல அவளைப் பின்பற்றி ஓடினான்.

புறங்கொடா வீரனாகிய அவன் மனத்தில் காதற்பேயிருந்து உயிரினும் மிக்க மானத்தையும் உண்டதென்னல் வேண்டும்!

தலைவன் போனபின் படை என்ன செய்யும்? அது நாலாபக்கமும் சிதறி ஸீஸரது படையின் வாளுக்கும், அம்புமாரிக்கும் இரையாகிச் சீர்குலைவுற்றது. மனஞ் சென்ற வழியும் புலன் சென்ற வழியும் செல்லும் அந்தேணியைப் போலாது அம்மனப் போக்கையும் உலகப் போக்கையும் காற்றையும் பூதங்களையும் கூடத் தான் கருதிய அருங்காயத்திற்குத் துணையாகும் படி தன் கூர் அறிவால் இணைக்கம் ஒப்பற்ற சூழ்ச்சியாளனாகிய அக்டேவியஸ் ஸீஸர் அன்று ஊழ் எண்ணம் அலையின் உச்சியில் மிதந்து வெற்றி வீரனாய் விளங்கினான்.

5.இறுதிப் போர்

உணர்ச்சி வசப்பட்டுப் போரைவிட்டு ஓடிய அந்தோணி எகிப்து சென்றதும் தன் வீரர் அடைந்த படுதோல்வியையும் அழிவையும் கேட்டு மனமுருகினான். அப்போதுதான் அவனுக்குத் தான் அடைந்த தீங்கின் முழு வன்மையும் புலப்பட்டது. படவே இஃதனைத்திற்கும் ஏதுவான கிளியோப்பாத்ராவின் மீது அவன் சீறி விழுந்தான். அன்று அவன் கண்களுக்கு அவள் குற்றங்கள் தெரிந்தன என்று மட்டுமல்ல; அக்குற்றங்கள் பெரிதாக்கப்பட்டும், பல தப்பெண்ணங்கள் சேர்ந்தும், அவள் உடலேபோல் அவள் உள்ளமும் அவன் பார்வைக்குக் கருமையாகத் தோற்றின. ஆகவே, அவளும் தன்னைப் போலவே உணர்ச்சி வசப்பட்டுத்தான் இத்தனை அழிவுகளையும் உண்டு பண்ணினாள் என்று கொள்வதற்கு மாறாக, அவள் வேண்டுமென்றே தன்நலத்தினால் தூண்டப்பெற்ற ஸீஸருக்கு உடந்தையாய் நின்று தன்னைக் கவிழ்க்கத் தொடங்கினாள் என்று சீறினான்.

இன்மொழியால் முகமலரும் மென்மலர்களாகிய நங்கையர் செவிகளில் வன்மொழிகள் புகுந்தால் அவர்கள் துன்பத்தைக் கேட்பானேன்! அவனது சீற்றத்தால் அவன் காதலை இழந்து விட்டோமே என்ற அச்சம் ஒருபுறம்; அவன் தன்னைக் கொல்வதாகப் பாய்ந்தெழும்போது எங்கே தான் அவன் காதலையும் உயிரையும் ஒருங்கே இழக்க நேரிடுமோ என்ற அச்சம் ஒருபுறமாக நின்று அவளை வாட்டின.

எப்படியும் தன் உயிரைக் காத்துவிட்டால் அவன் சினந்தணித்தபின் அவன் தப்பெண்ணங்களை மாற்றி விடலாம் என்று நினைத்து அவள் ஓடித் தன் இருக்கையறையிற் சென்றொளிந்து கொண்டாள்.

அப்புடியும் அந்தோணி அமையாமல் தன்னைக் கொல்லத் தேடுகிறாப என்று கேட்ட கிளியோப்பாத்ரா தான் இறந்து விட்டதாகவே அவனிடம் கூறிவிடும்படி ஆணையிட்டாள். இத்தந்திரம் முற்றிலும் வெற்றி பெற்றது.

அவள் இறந்தாள் என்று கேட்டது அந்தோணியின் சீற்றமெல்லாம் படமெடுத்த பாம்பு மந்திரத்திலடங்குவது போல அடங்கி ஒடுங்கிற்று. அவள் எத்தகையவள் ஆயினும் அவளில்லா உலகில் தனக்கு எத்தகைய விருப்புக்கும் இடனில்லையென்று கண்டு அவனும் சாகத் துணிந்து விட்டான். இதனையறிந்தும் சேடியார் அவனைத் தேற்றி அவள் உண்மையில் இறக்கவில்லை என்று கூறினர்.

அவர்கள் கூறி வாய்மூடுமுன் கிளியோப்பாத்ராவே நேரில் வந்து அவன் காலில் வீழ்ந்து, “நான் தங்கள் வாழ்வைத் தொலைத்தவள்; தங்கள் பெருமைக்கும் தங்கள் காதலுக்கும் ஒவ்வாதவள்; என்னை அதற்காக எப்படித் தண்டித்தாலும் சரி; தாங்கள் காட்டும் வெறுப்பையும் சீற்றத்தையும் மட்டுமே கண்டு அஞ்சுகிறேன். தங்கள் காதலுக்காக உயிர் விடுவதாயின் மகிழ்ச்சியுடன் இறப்பேன்” என்றாள்.

அந்தோணி அவளைத் தன் நீண்ட கைகளால் வாரி எடுத்தணைத்து, ‘என் அரும்பொருளே! நின் அன்பை நோக்க இப்பேரரசும், இவ்வுலகுந்தான் என்ன விலையுடையது! நின் ஒரு புன்முறுவலுக்காக இன்னும் ஏழுமுறை இவ்வுலகத்தை வென்று வென்றிழக்க நேரினும் பொருட்படுத்தேன். நீ கவலை கொள்ள வேண்டா’’ என்றான்.

இப்போது கிளியோப்பாத்ராவுக்குத் தன் காதல் போயிற்றென சீற்றம் மறைந்துவிட்டது; அதோடு அந்தோணியோ விற்கும் தன் கிளியோப்பாத்ரா போயினள் என்ற வெந்துயர் அகன்றது. முன்போல் அவளது மதிமுகமும், துணைக்கரங்களும், இன்மொழிகளும் அவனுக்கு உயிரும் ஊக்கமும் அளித்தன. அவன் அவள் முகத்தை உற்றுநோக்கிய வண்ணம், “ஆம், இம்முகத்தில் காதல் ஒளியுள்ளவும் என் உள்ளத்தில் வீர ஒளிக்குக் குறைவில்லை. உன் பெயரால்-உன் காதலின் பெயரால்-இன்னும் ஒருமுறை இவ்வுலகை வெல்வேன்” என்றெழுந்தான்.

அந்தோணியை நிழல்போல் தொடர்ந்து உடலுறுப்புக் களோ என்னும்படி மாறுபாடின்றி அவன் கருத்தறிந்துவிய அவன் வீரரும், துணைத் தலைவரும் இதுகாறும் அவன் காதற் பெரும்புயலாலும் சீற்றத்தாலும் தன் நிலை இழந்து நிற்பதுகண்டு வருந்திச் செயலிழந்து நின்றனர். இப்போது அவன் முகத்தே வீரக்களையைக் கண்டதுமே, “இனித் தயக்கம் வேண்டா, எம் தலைவர் எழுந்தார்; இனியும் வெற்றி நமதே. உலகம் நமதே” என்று ஆரவாரித்து எழுந்தனர்.

மறுநாளே அக்டேவியஸ் படை எகிப்தில் வந்திறங்கியது. அந்தோணியும் அவன் வீரர்களும் அதனுடன் கைகலந்து தாக்கினர். அக்டேவியஸ் படை அந்தோணியின் படையைவிட எவ்வளவோ பெரியதாயிருந்தும், அந்தோணியின் ஆற்றலுக்கும் அவன் வீரரர்களின் துணிச்சலுக்கும் ஆற்றமாட்டாது பின்னிடைந்தோடிற்று, ஸீஸர் தன் முழுத்திறனையும் காட்டி அவர்களைத் தன் கையாட்கள் மூலம் சாட்டையால் அடித்து ஆட்டுக் கூட்டங்களைப் போல் எல்லைப்புறத்தில் திரட்டிச் சேர்க்கவில்லையானால், அவர்கள் மீட்க முடியாதபடி சிதறியே இருப்பர்.

ஆண்மைமிக்க அந்தோணியின் வீரர் இவ்வெற்றியால் பின்னும் ஊக்கம் அடைந்தனர். அவ்வெற்றியைத் தொடர்ந்து ஸீஸரின் படைகளை ரோம் வரைக்கும் துரத்தியோட்டி அவனை அழிக்க வேண்டுமென்று அந்தோணியின் துணைத் தலைவன் மன்றாடினான். ஆனால் அந்தோணியின் இயற்கைக் சோம்பலும் இன்பவிழைவும் இவ்வின்றியமையாக் கடமையைச் செய்யக் காலந்தாழ்த்தின. வெற்றியைக் கொண்டாடும் வகையில் தன் பொருட்குவை முற்றிலும் தன் வீரரர்களுக்கு வாரி இறைத்தும் அவர்களுடன் உண்டாட்டயர்ந்தும் அவன் பொழுது போக்கினான். இதனைக் கண்டும் தன் நன்மொழிகளை அவன் புறக்கணித்தால் சினங்கொண்டும் அத்துணைத் தலைவன் அன்றிரவே அவன் எதிரியின் பக்கம் சென்று சேர்ந்து கொண்டான்.

இச்செய்தியைக் கேட்ட அந்தோணி அவனிடம் எள்ளளவும் சீற்றங் கொள்ளாது மற்ற வீரர்களிடமும் “அவனைப் போலவே காலநிலைக் கொப்ப நீங்கள் நடந்து கொள்வதே எனக்கு விருப்பம்” என்று கூறினான். அதோடு ஸீஸர் பக்கம் சென்றவன் தனது ஆத்திரத்தில் விட்டுப்போன பொருள்களை அவனிடமே சேர்க்கும்படி கட்டளையிட்டான். உண்மையில் அந்தோணியிடம் நேசம் கொண்டு சீற்றத்தாலேயே எதிர்க் கட்சியில் சென்று சேர்ந்த அத்துணைத் தலைவன் இதுகேட்டுத் தன் நன்றியின்மையையும் தன் தலைவன் பெருந்தன்மையும் நினைத்துக் கண்ணீருகுத்தான்.

அந்தோணியும் அவன் வீரரும் இருந்த நிலைமையினை ஒற்றர் மூலம் அறிந்த ஸீஸர் தன் படையை இரவோடிரவாகத் திரட்டிக் குடி மயக்கத்திலும், துயில் மயக்கத்திலும், தம்மை மறந்திருந்த அந்தோணியின் படைவீரர் மீது பாய்ந்தான். கொஞ்ச நேரத்திற்குள் அந்தோணியின் படை இருந்த இடம் தெரியாது அழிந்தொழிந்தது. எஞ்சில சில வீரரும், அந்தோணியும், கிளியோப்பாத்ராவும் அரும்பாடுபட்டுத் தப்பியோடித் தம் அரண்மனை வந்து சேர்ந்தனர்.

6.முடிவு

வீரருள்ளும் துணைத்தலைவருள்ளும் பலர் இன்னும் அந்தோணியை நீங்காது பின்தொடர்ந்து வந்தனர். செத்தாலும் அவனுடன் சாவதைவிடத் தமக்கு உயர்ந்த பேறு வேறில்லை என்றே அவர்கள் நினைத்தனர். ஆனால் அந்தோணி தன்னால் இதுவரை அவர்கள் கெட்டது போதும் என்று நினைத்துத் தன் பொருட்குவையனைத்தும், துணிமணியனைத்தும் அவர்கட்கே கொடுத்து “இவையனைத்தும் உங்கள் வெற்றியால் வந்த பொருள்களே. என் அறியாமையால் இழந்தவை போக மீதத்தையேனும் உங்களிடம் சேர்க்கிறேன். எடுத்துக்கொண்டு நச்சுமரமாகிய என்னை விட்டகல்வீர்! எனக்கு நீங்கள் செய்யும் கடமையை எனது விருப்பத்தினும் எத்தனையோ மடங்கு நீங்கள் செய்து தீர்த்து விட்டபடியால் இனி உங்களிடம் எத்தகைய கடமையையும் நான் எதிர்பார்க்கவில்லை. என் பெயர் சொல்வதே இனித் தீங்கு விளைவிக்குமாதலால் அதனை மறந்து காலத்திற்கேற்ப நடந்து கொள்ளுங்கள். எனக்கு வேண்டிய தெல்லாம் என் நண்பர்களாகிய உங்கள் நல்வாழ்வே” என்றான்.

தன் வெற்றி நாள் முழுமையும் காதலுக்காக உயிரைப் பலியிட்ட இப்பெருந்த தகையாளன், தோல்வியிலும் நட்பிற் காகத் தன்னைப் பலியிடுவதைக் கண்டு வீரனைவரும் கண்ணீ ருகுத்தனர். அவனை விட்டுச்செல்ல அவர்கள் எவரும் விரும்ப வில்லையாயினும் அவன் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதன் பேரில் ஒவ்வொருவரும் பிரியா விடை பெற்றுக் கால் முன்னும் மனம் பின்னும் இழுக்க அவனை விட்டுச் சென்றனர்.

அக்டேவியஸ் ஸீஸர் இப்போது உலகப் பேரரசனாக விளங்கினான். எகிப்தும் அவன் காலடியில் பட்டுவிட்டது. ஆனால், அவன் அந்தோணியிருக்குமளவும் தன்நிலை உறுதியுடைத்தன்று என் அறிந்து அவனையும் அவனுக்கு உடந்தையாயிருந்த கிளியோப்பாத்ராவையும் உயிருடன் கைப்பற்றிச் சிறையுள் வைக்க எண்ணினான். ஆனால், இறக்கும் தறுவாயிலும் சிங்கவேற்றை மக்கள் அணுக அஞ்சுவதுபோல அவனையும் கிளியோப்பாத்ராவையும் நேரில் அணுக அஞ்சித் தூதர் மூலம் அக்டேவியஸ் அவர்கள் மனநிலையறிந்து வரும்படி ஏவினான்.

அந்தோணி தனக்குப் பரிவு வேண்டியதில்லை என்றும் தன் துணைவர்களையும் கிளியோப்பாத்ராவையும் மட்டும் மதிப்புடன் நடத்தினால் போதும் என்றும் கூறினான். பின் அவன் கிளியோப்பாத்ராவை நோக்கி இனித் தன்னை விட்டுவிட்டு ஸீஸரை நயந்து நல்வாழ்வு பெறவதே அவளுக்கு நல்லது; தனக்கும் அது மனத்திற்குகந்ததென வேண்டினான்.

இதுகாறும் பெண்மையின் மென்மையையே காட்டிய கிளியோப்பாத்ரா இச்சொற் கேட்டதே அரசியின் பெருமிதத் தோற்றங்கொண்டு தலை நிமிர்ந்து ஸீஸர் தூதனை நோக்கி, அரசி கிளியோப்பாத்ரா அந்தோணி ஒருவன் முன் மட்டுமே பெண் ஆவள்; பிறருக்கு அரசியேயாவாள், அரசி என்ற நிலையில் வாழ முடியவில்லையாயின் அரசியாகவே சாவ அறிவாள்" என்று கூறி அனுப்பிவிட்டுப் பின் அந்தோணி பக்கமாகத் திரும்பி, “என் அரசே! நீங்கள் கூட என் காதலை இங்ஙனம் பழிக்கப் பொறுக்கேன், அந்தோ! நான் கரிய எகிப்தியரிடைப் பிறந்து ஜூலியஸ் ஸீஸர் முதலிய பலருடன் உறவாடியதை நினைத்தா லன்றோ என் அந்தோணி! என்னை இவ்வளவு இழிவாக மதிக்க இடமேற்பட்டது! என் அந்தோணியைக் காணுமுன் நான் யாதாயினும் ஆகுக! அந்த அரும்பொருளைக் கண்டபின், அதன் காதலின் பெருக்கையும் ஆழத்தையும் உயர்வையும் அளவிட்டறிந்த பின், அஃதன்றி நான் வாழ்தல் கூடுமோ? அந்தோணியை ஒத்த மதயானையைப் பிணித்த இக்காதற் கரங்கள் இனி ஸீஸரையொத்த குள்ள நரியையும் பிணிக்க முற்படுமோ? என்ன என் அந்தோணி மனத்துட்கொண்ட கருத்தின் போக்கு!” என்றாள்.

அதுகேட்ட அந்தோணி சரி, அப்படியாயின் உன்முடிவு என்ன?’ என்றான்.

அவள், ‘’உங்கள் உடலுடன் என் உடலைச் சேர்த்து உங்கள் உயிருடன் என் உயிரும் உடன் வரச்செய்வதே’ என்றாள்..

அவள் காதலின் உயர்வையும், அதன் முழுவலியையும், அதன் வீற்றையும் அன்றுதான் அவள் கண்டான்.

அவன் முகம் எல்லையில்லாத பேரின்பக் கதிர் வீசி ஒளிர்ந்தது. அவ்வொளி கண்டு கிளியோப்பாத்ராவும் காதற் கடலின் கரை கண்டவளானாள். அவள் “இனிப் பிறப்பு இறப்பும் இன்பதுன்பமும் மாறி மாறி அலைபோல் வந்து வந்து மோதும் இவ்வாழ்க்கைக் கடலைக் கண்டு நான் மலைவடையேன். என் அந்தோணியே அரிய அந்தோணியாகக் கொண்டு அதனைக் கடப்பேன்” என்று கூறி அவனைத் தழுவி முத்தமிட்டாள்.

வாழ்க்கை முற்றிலும் பிறர் அடையும் இன்பத்தினும் அவ்வொரு நொடியில் அவர்கள் அடைந்த இன்பம் பெரிதென்னலாம்.

அந்தோணி கிளியோப்பாத்ராவை அன்று மணந்த மணமகளினும் உயர்வாக எடுத்துணைத்து முடிநீவி, “இறைவன் உன்னைக் காக்க! உன்னால் பிறவியின் பயன் பெற்றுவிட்ட எனக்கு இனி என்ன குறை? உன் காதல் நிறைவுடன் மாளக்கிட்டிய இம்மாள்வு வாழ்வினும் நிறைவுடையது! இன நான் ரோமனாக நின்று உயிர்விட வேண்டும். நீயும் டாலமிகளின் வழித்தோன்றல் என்ற தகுதிக்கும் ரோமன் காதலி என்ற தகுதிக்கும் இணங்க நிறைவாழ்வெய்துவாய்! காதற் கடவுளின் பாதுகாப்புக்கு உன்னை விடுத்துச் செல்கின்றேன்” என்று கூறி அவளை விட்டகன்று வெளியிடம் சென்று தன் வாளாலேயே தன்னை மாய்த்துக் கொண்டான்.

அவன் இறந்தது கேட்ட கிளியோப்பாத்ரா உயிரிழந்த உடல்போல் செயலற்று நின்றாள். பின் தேறித் தன் காதற் கடனாற்ற எண்ணுமளவில் ஸீஸரின் தூதன் வந்து பலவகை இனிய மொழிகளால் அவளை வயப்படுத்த முயன்றான். அவள் அவனை அசட்டையாகப் பார்த்துத் தன் இறுதி விருப்பங்களை ஸீஸருக்கு உணர்த்து முறையில் அவனிடம் கூறினாள்:

“எனக்கு ஸீஸர் ரிவாதாயின் அதனை என் புதல்வனிடமும், என் காதலன் நண்பரிடமும் காட்டுக!”

"நான் அந்தோணியின் உயிரே உயிராய் அவன் வாழ்வே வாழ்வாய் வாழ்ந்தவள்; அதுபோல் அவன் மாளவே மாள்வாய் மாளத் துணிந்து விட்டேன். ஸீஸர் நாடிய ரோமப் பேரரசையும், ஸீஸர் நாடிய எகிப்தையும் இழப்பதில் எனக்கு வருத்தமில்லை. அந்தோணி இல்லா உலகை ஸீஸர் ஆளட்டும். நான் அந்தோணி யையும் அவன் வாழும் உலகையுமே ஆளப் போகிறேன்.

“காதல் தளையால் கட்டுண்டிருந்த சிங்கத்தைப் பின்பற்றி நான் சொல்லுகிறேன். சிறுமைப்பட்ட சூழ்ச்சி வலையால் உலகைக் கவர்ந்த ஸீஸர் இவ்வெற்றுலகை ஆளட்டும்.”

இவ்வாறு பெருமிதத்துடன் கூறிவிட்டு அவள் தன்னிடமே ஒரு சிறு பெட்டியில் கரந்துவைத்திருந்த கொடிய நச்சுப்பம்பு ஒன்றையெடுத்து ’’ ‘இதுகாறும் பிள்ளைபோல் உன்னை வளர்த்தேன். இப்போது நன்றி மறவாது என் காதற்கனியுடன் என்னைச் சேர்ப்பிப்பாய்’ என்று கூறி, அதன் நஞ்சை உடலில் ஏற்றாள். அரை நொடியில் அந்தோணியின் உடலுடன் அவள் உடல் கிடப்ப உயிர் அந்தோணியை நாடிச் சென்றது.

இறுதியில் அக்டேவியஸ் ஸீஸர் வந்து காதலரசனும் காதலரசியுமாய் மாள்விலும் பணியாது வீறுடன் விளங்கிய அத்துணைவரைக் கண்டான். ஒரு நொடி அவன் உலகியல் அறிவுகூடக் கலங்கியது. தமது தந்நலத்தாலும் ரோமின் சீர்குலைவாலும் இதுகாறும் இறந்த ஒப்பற்ற ரோமத் தலைவர்களை எண்ணிப் பார்த்தான். “வீரத்துக்கு இரையாகிய ஜூலியஸ் ஸீஸரென்ன, ஒழுக்கத்தின் உயர்குன்றாகிய புரூட்ட ஸென்ன, நட்பின் அணிகலமாகிய காஸியென்ன, கடைசியில் காதலின் ஒப்பற்ற சிகரமாகிய இவ்வீர அந்தோணியென்ன, இப்பெருந்தகை ரோம வீரர் அனைவரும் மாண்டனரே! ரோமின் பெருவாழ்வின் ஊற்றுகளான இவர்கள் போனபின் பாலையாய் விட்ட இப்புன்மை உலகோ இப்பாவியேனுக்குக் கொடுத்து வைத்து!” என்று மனமாழ்கிக் கண்ணீருகுத்தான்.

உலகப் பேரரசை வென்ற வெற்றிவீரனது வெற்றியைச் சிறுமைப் படுத்தின காதற் பேரரசனும் பேரரசியும் ஆகிய அவ் இருவருடைய உயர்தனிக் குணங்களை எண்ணி எண்ணி எகிப்தியரும் ரோமரும் ஆற்றொணாத் துயரெய்தினர்.

நன்கு முடிவுறின் நலமேயனைத்தும்

** (All is well that ends well)**
கதை உறுப்பினர்
ஆடவர்:
1.  கொரார்டு: அரிய மருத்துவன்-ஹெலெனா தந்தை.

2.  பெர்ட்டிரம்: காலஞ் சென்ற ரூஸிலான் பெருமகன் புதல்வன்-ஹெலெனாவின் காதலுக் களாய் அவளை வெறுத்தும் இறுதியில் மணந்து ஏற்றுக்கொண்டான்.

3.  பிரான்சு அரசன்: காலஞ் சென்ற ரூஸிலான் பெருமகனிடம் பற்று கொண்டவன் -ஹெலெனாவையும் பெர்ட்டிரமையும் மணவினையால் இணைத்தவன்.

பெண்டிர்:

1.  ரூஸிலான் பெருமாட்டி: ரூஸிலான் பெருமகன் மனைவி-பெர்ட்டிராம் தாய்-ஹெலெனாவின் காதலுக்குத் துணை தந்தவள்.

2.  ஹெலெனா: மருத்துவன் கொரார்டு மகள்-தந்தை இறந்தபின், ரூஸிலான் பெருங்குடியில் பணியாளாய் பெர்ட்டிராமைக் காதலித்து அரசனுதவியால் மணந்தாள்.

3.  தயானா: பிளாரென்சு நகரிலுள்ள நங்கை-ஹெலெனாவின் ஆரூயிர்த் தோழியானவள்-பெர்ட்டிரம் தகாக் காதலுக்காளாய் அதனை மறுத்தவள்.

4.  மூதாட்டி: தயானாவின் தாய்.

கதைச் சுருக்கம்
கொரார்டு அரிய மருத்துவன். அவன் இறந்தபின் அவன் மகள் ஹெலெனா ரூஸிலான் பெருங்குடியில் பணியாளாய் அமர்ந்தாள். பிரான்சு அரசன் நண்பனாகிய ரூஸிலான் பெருமகன் இறந்தபின் அவன் மகன் பெர்ட்டிரமை அரசன் அமைச்சர் மூலம் அழைத்துத் தன்னிடம் வைத்துக் கொண்டான். அவனிடம் உள்ளூறக் காதல்கொண்ட ஹெலெனா, அப்பகையில் ரூஸிலான் பெருமாட்டியின் துணைபெற்று அரசனிடம் சென்று அவனது பாண்டு நோயைத் தந்தையின் அருமருந்தொன்றால் குணப் படுத்தினாள். அரசன் மகிழ்ச்சியுற்று அவளுக்குத் தன் கணையாழியைக் கொடுத்ததுடன் அவள் விரும்பிய ஆடவனை மண முடிப்பதாகச் சொல்ல, பெர்ட்டிரமையே விரும்பி மண முடித்தாள். பெர்ட்டிரமையே விரும்பி மண முடித்தாள். பொட்டிரம் அவளை வெறுத்து ரூஸிலான விட்டுவிட்டுப் பிளாரென்சு சென்று, அங்கே படைத் தலைவனாய்த் தயானா என்ற பெண்ணைக் காதலித்தான்.

சின்னாளில் மன வெறுப்புற்ற ஹெலெனாவும் வெளியேகித் திரிந்து, இறுதியில் தற்செயலாய் அதே பிளாரென்சில் வந்து தயானாவின் ஆரூயிர்த் தோழியாய் அவள் துணையால் அவளுடையில் பெர்ட்டிரமுடன் தனயிடமடைந்து, அவன் காதலைப் பெற்று, அவன் கணையாழியை வாங்கிக் கொண்டாள். இதற்கிடையில் ரூஸிலானுக்குச் சென்று மண மக்கள் பிரிவு கேட்டு வருந்திய அரசன், பெர்ட்டிரமையழைத்து ஹெலெனா பற்றி உசாவி, அவன் அவளை வெறுத்து வேறு பெண்ணைக் களவு முறையில் மணந்ததாகக் கூறினான். அதேசமயம் மறைவிலிருந்து ஹெலெனாவும் தயானாவும் வந்து கணையாழி காட்டிப் பெர்ட்டிரமின் மனத்தை மாற்றினர். பெர்ட்டிரம் ஹெலெனாவுடன் வாழ்ந்தாள். அரசன் உதவியால் தயானா இன்னொரு பெருமகனை மணந்தாள்.

1.கைக்கிளைக் காதல்

பிரான்சு நாட்டில் ¹கொரார்டு என்ற ஓர் அரிய மருத்துவன் இருந்தான். அவன் நோய் ஆராய்ச்சியிலும் மருந்தாராய்ச்சியிலும் ஒப்பற்றவன். அந்நாளைய மருத்துவரறிவுக்கு அப்பாற்பட்ட பல புதிய மருந்து வகைகள் அவனுக்குத் தெரிந்திருந்தன.

கொரார்டுக்கு ²ஹெலெனா என்னும் புதல்வி ஒருத்தி இருந்தாள். கொரார்டு அவளுக்கு எத்தகைய பொருட்குவையும் வைக்கவில்லை. ஆயினும் அவன் தன் மருந்து வகைகளையும் அவற்றை வழங்கும் முறைகளையு மட்டும் அவளுக்குக் கற்பித்திருந்தான்.

தந்தை இறந்தபின் ஹெலெனா தன் தந்தைக்கு அறிமுகமான ³ரூஸிலான் என்ற பெருங்குடியிற் சென்று, பணியாளய் அமர்ந்திருந்தாள். அப் பெருங்குடியின் பெருந்தலைவனாயிருந்த பழைய ரூஸிலான் பெருமகனார் இறந்துவிட்டமையால், இளைஞனாகிய அவர் மகன் ⁴பெர்ட்டிரம் புதிய ரூஸிலான் பெருமகன் ஆனான்.

பழைய ரூஸிலான் பெருமகனார் பிரான்சு அரசனுக்கு நெருங்கிய நண்பர். ஆகவே, அரசன் அவர் மகனாகிய பெர்ட்டிரமைக் காண விரும்பி அவனை அழைத்துவரும் பொருட்டுத் தன் அமைச்சனான ⁵லாபியூ என்பவனை, அவன்பால் அனுப்பினான். பெர்ட்டிரம் அவ்வமைச்சனுடன் புறப்பட்டு அரசனைக் காணச்சென்றான்.

ரூஸிலான் குடியில் காலவடி வைத்து முதல் ஹெலெனாதன் நெஞ்சை முற்றிலும் பெர்ட்டிரமுக்கு பறிகொடுத்தாள். ஆயினும், தன் எழைமையும் துணையற்ற தன்மையும் எங்கே, அவன் உயர்குடியும் புகழும் எங்கே, என்று அவள் மனம் சோம்பினாள்.

பெர்ட்டிராமின் தாயான ரூஸிலான் பெருமாட்டி ஹெலெனாவின் மனநிலையை உய்த்துணர்ந்து கொண்டாள். அவள் பார்வைக்கு ஹெலெனாவின் ஏழைமையை விட அவள் அழகும் குணமுமே விளக்கமாகத் தோன்றின. ஆகவே அவள் ஹெலெனாவின் காதலுக்கு இணக்க மளித்தாள். ஆயினும், பெர்ட்டிரம் அவளை மதியாமல் அசட்டையாயிருந்தான். அதனால் அவள் மிகவும் மனச்சோர்வு அடைய நேர்ந்தது.

பெர்ட்டிரம் போனபோது ஹெலெனா, அவன் போன பக்கமே நோக்கி நின்று, “அந்தோ நெஞ்சாரக் கலந்து உறவாடாவிடினும் இதுவரையிற் கண்ணாரவேணுங் காண முடிந்தது; இன்று அதற்கும் வழியில்லையே” என்று மன மாழ்கினாள்.

பெர்ட்டிரமை அழைத்துப் போக வந்த அமைச்சன் அரசவைக் காரியங்கள் பலவும் பேசிக்கொண்டிருந்தபோது, அரசன் பாண்டு நோயினால் வருந்துகின்றானென்றும், அதற்கு அரண்மனை மருத்துவர் அனைவரும் பற்பல மருந்துகள் கொடுத்தும் குணம் வந்தபாடில்லை என்றும் கூறியது அவள் நினைவிற்கு வந்தது. வரவே, அவள் மனத்தில் சில ஆழ்ந்த எண்ணங்கள் தோன்றின. “ஆ! என் தந்தை குறித்துத் தந்து போன புதுவகை மருந்துகளுள் பாண்டு நோய்க்கான மருந்தும் ஒன்றன்றோ? அதன் மூலம் ஒருவேளை என் எண்ணங்கள் ஈடேறுமாயின் எவ்வளவு சிறப்பாகும்” என்ற அவள் வாய்விட்டுக் கூறினாள்.

அவள் கூறிய மொழிகளை, அடுத்து நின்று கேட்டுக் கொண்டிருந்த ரூஸிலான் பெருமாட்டி, “அரசன் பிணியும், இம் மங்கை பிணியும் ஒருங்கே நீங்குதல் திருவுளமாயின், அஃது அங்ஙனமே நிறைவேறுக” என்று மனத்துட்கொண்டு, அவளை அரசன்பால் விடுத்தனள்.

ஹெலெனா, அரசனை அணுகுவதே முதலில் அருமையாக இருந்தது. அணுகியபோதும் அவள் மருந்தை அரசன் உட்கொள்ளுவதற்கு அவன் அவையோர் ஒருப்படவில்லை. இந்நிலையில், அரசன் காதலி இச்செய்தி விழுந்தது. தனது நல்வினைப் பயனால் தூண்டப்பட்டு அவன், “எப்படியும் நோய் குணமடைவதாகக் காணவில்லை. பிற மருத்துவர் அனைவரும் கைவிட்டனர். இப்புது மருந்தால்குணம் ஏற்படாவிட்டாலும் கேடென்ன? அஃது ஒரு வேளை என் உயிர் கொள்ளும் நஞ்சாய் இருந்தாலுங்கூட இவ்வேளைக்கு அஃது என்னை நோயினின்றும் தப்ப வைக்கும் கருவியாகவே அமையும்” என்று கூறி அவளை வரவிடுத்தான். பின்பு அவள் கொரார்டின் புதல்வி என்றும் மருந்து கொராட்டின் புது மருந்துகளுள் ஒன்று என்றும் கேட்டபோது அரசனுக்குப் பின்னும் நம்பிக்கை உண்டாயிற்று.

ரூஸிலான் பெருமாட்டியும் ஹெலெனாவும் கண்ட கனவு நனவாயிற்று. அம்மருந்து உட்கொண்ட இரண்டு மூன்று நாட்களில் அரசன் நோயின் அடையாளமே இல்லாதபடி முழுமையும் குணமடைந்தான். ஆகவே, அவன் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு அவளுக்கு விலை மதிப்பற்ற ஒரு கணையாழியைப் பரிசாக வழங்கினான். அதோடு அவ்அவையில் யாரை வேண்டுமானாலும் அவள் மணந்துகொள்ளலாம் என்றும், அவளுக்கு அவன் உறுதி கொடுத்தான். ஹெலெனா, அங்கே வேறு யார்மீதும் கண்ணெடுத்துப் பாராமல் ரூஸிலான் பெரு மகனாகிய பெர்ட்டிரமையே கணவனாகத் தெரிந்தெடுத்தாள்.

பெர்ட்டிரம், பழக்க மிகுதியினாலும் பணியாள் என்ற புறக்கணிப்பினாலும் ஹெலெனாவின் அழகையும், உயர் குணங்களையும் மதியாதவனாயிருந்தான். ஆகவே, தன் விருப்பத்திற்கு மாறாக அவள் தன் மீது சுமத்தப்பட்டதை அவன் வெறுத்தான். ஆயினும் என் செய்வது? அரசன் ஆணையை மறுக்க முடியாது; ஆதலால், பெர்ட்டிரம் அவளை வேண்டா வெறுப்பாக மணந்து கொண்டான்.

ஆயினும், மணத்தைத்தான் ஒருவர் வலிந்து சுமத்த முடியுமேயன்றிக் காதலைச் சுமத்த முடியாதன்றோ? ஹெலெனா, ‘காதலற்ற மணம்’ என்னும் கடு நரகிற்கு ஆளானாள். மண நாளிலேயே பெர்ட்டிரம், அவள் பக்கம் பாராமல் கடுகடுத்துப் பேசவும் சீறிவிழவுந் தொடங்கினான். அவற்றை யெல்லாம் அவள் பொறுமையே உருவாக நின்று தாங்கி வந்ததும், அவன் அவள் மேலுள்ள வெறுப்பைச் சற்றும் குறைக்காமல் அவளைத் திட்டி, “என் குடிப்பெருமையையும் பொருளையும் எண்ணித்தானே என் தலைக்குக் கண்ணிவைத்தாய். நீ அவற்றையே போய் மணந்து வாழ்” என்று அவளை ரூஸிலானுக்கே அனுப்பினான். அனுப்பி விட்டுப் பலநாடுகளிலும் திரிந்து இறுதியில் பிளாரென்சு என்னும் நகரம் வந்து, அந்நகர் அரசனது படையிற் சேர்ந்தான். வேண்டா மனைவியுடன் வாழ்வதை விடப் போரில் மாள்வதே நல்லது என்ற எண்ணத்துடன், அவன் வேண்டுமென்றே போர் முனைகளிற் சென்று நின்று காலனை விரும்பி வழிபாடு செய்தான். ஆனால், இவ்வகையினால் அவனுக்கு, அவன் விரும்பிய முடிவு சிறிதும் கிட்டவில்லை. நேர்மாறாக அவன் வெற்றியும் புகழும் மிகுந்து படைத் தலைவன் ஆவதற்கே அஃது உதவிற்று.

ரூஸிலான் பெருமாட்டி, முதலில், ஹெலெனாவுக்கு ஆறுதலாக, “பெர்ட்டிரம் சீற்றந் தணிந்து வருவான்; பொறுத்திரு,” என்று கூறிவந்தாள். ஆனால், திங்கள் ஒன்றிரண்டாயின. வரும் வகை எதுவுங் காணோம். ஹெலெனாவுக்கு, ரூஸிலான் பெருமாட்டிக்கோ, உலக வெறுப்புப் பின்னும் மிகுதியாயிற்று.

இந்நிலையில், பெர்ட்டிரமிடமிருந்து கடிதமொன்று வந்தது. வற்றற்பாலையில் நீர் வேட்கையாற் செயலிழந்தவன், நீரென்ற பெயரைக் கேட்டவுடனே உயிர்த்தெழுவது போல, ஹெலெனா உள்ளந்துடிக்க எழுந்து சென்றாள். ரூஸிலான் பெருமாட்டியும் எல்லாம் வல்ல இறைவனை வணங்கிக் கடிதத்தைப் பிரித்துப் பார்த்தாள். பார்த்தவுடனே அவள் கைகளும் உடலும் துடிக்க, “சீ சிறுமைப்பட்ட பதரே” என்றுகூறி நிலத்திற் சாய்ந்தாள்.

அக்கடிதத்தில், “பெர்ட்டிரம் மண நாளிற் கொண்ட வெறுப்புச் சற்றும் மாறாது. தாயே, ஹெலெனாவுக்கு உரியவன் நானல்லன்; அவள் உன்னையும் உன் குடியையும் பொருளையும் விரும்பினாளேயன்றி, என்னையோ என் காதலையோ விரும்பினவள் அல்லள்; அவற்றையே அவள் அடைக; நான் இனி அவளுக்கும் உனக்கும் உரிய அவ்வீட்டில் நுழையேன்,” என்று எழுதியிருந்தான்.

ஹெலெனாவின் உள்ளத்தில் பாலைப் புதர்போல் உலர்ந்து நின்ற கைக்கிளைக் காதலையும் இக் கடிதத்தன் தீமொழிகள் எரித்தன… “இத் தீயவனின் தீவினைக்காக, வீட்டுக்குரியவர் வீட்டைத் துறப்பதா? வேண்டாம்; நானே போய்விடுகிறேன்,” என்று மொழிந்து அவள் வெளி- யேறினாள். ரூஸிலான் பெருமாட்டி எவ்வளவோ தடுத்தும், அவள் புலி கண்டு மருண்டோடுபவள் போல் ஓடினாள்.

2.மாதர் நட்பு

அப்பொழுது அவள் உள்ளம் பட்ட பாட்டை யாரே கணித்துக் கூறவல்லார்? ஒரு நேரம், ‘காதலற்ற இவ்வுலகினின்று அகன்று விடுவோமா’ என்று எண்ணுவாள். ஆனால் அடுத்த நேரம், ‘காதலனற்ற மறு உலகில் எங்ஙனம் சென்று வாழ்வேன்’ என்று எண்ணி அலைக்கழிவாள்.

அவள் மனதில் ஒன்றன்பின் ஒன்றாகப் பெர்ட்டிரமின் வாழ்க்கைப் படங்கள் எழுந்தெழுந்து நடனமிட்டன. அதன் இறுதிக் காட்சியை நினைக்க நினைக்க அவள் அங்கங் குலைந்தது, பெர்ட்டிரம் அன்று வெறுப்பு நிறைந்த கண்களோடு அவளை ஏளன நகைகொண்டு நோக்கிப், “பேதாய், எனக்கும் உன் காதலுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. இதோ, என் கையிலிருக்கும் இக்கணையாழியை என்னிடமிருந்து, எத்தகைத் திறமிருந்தாலும் உன்னால் வாங்க முடியுமா? அதுபோலத்தான் என் காதலைப் பெறும் திறமும் இருக்கும். நீ இக்கணையாழியைப் பெறும் நாளே என் காதலைப் பெறும் நாள்” என்று சீறியுரைத்த கனல் மொழிகள் அவளது நெஞ்சத்திரையில் கொழுந்து விட்டெரிந்து துன்பமாகிய புகையை எழுப்பின.

என் செய்வாள் பாவம்! பஞ்சு படப்பதைக்கும் பாதத்தையுடைய அம் மெல்லியலாள், பருக்கைக் கற்களென்றும் படர்முள்ளென்றும் படுகரென்றும் பாராமல் அலைந்து திரிந்து, இறுதியில், வினைப் பயனின் வலியால், பெர்ட்டிரம் வாழ்ந்துவந்த அதே பிளாரென்ஸில் வந்து சேர்ந்தாள்.

ஆ, விதியின் இயைபுகிடந்தவாறு என்னே! ஹெலெனாவை விட்டொழிய வேண்டும் என்று வெளிவந்த பெர்ட்டிரமும், பெர்ட்டிரம் வீட்டிலிராது அகலவேண்டு மென்று புறப்பட்ட ஹெலெனாவும் இப்படி அயல் நாட்டில் வந்தொன்றுதல் வியப்புடையதன்றோ?

ஹெலெனா அவ்வூரில் ஒரு மூதாட்டியுடன் தங்கி அவள் ஆதரவில் இருந்து வந்தாள். அம்மூதாட்டியின் புதல்வி ⁶தயானா என்பவள் ஹெலெனாவின் மறுபதிப்போ என்று சொல்லம்படி ஒத்த பருவமும் ஒத்த உருவமும் சாயலும் உடையவளாயிருந்தாள். சின்னாட்களுக்குள் அவ்விருவரிடையே இணைபிரியா நட்பும் பற்றும் ஏற்பட்டன. அப்போது அவர்கள் ஒருவர்க்கொருவர் பொதுச் செய்திகளையும், பின்பு தத்தம் விருப்பு வெறுப்புகளையும் இறுதியில் தத்தம் வாழ்க்கைச் செய்திகளையும் கூறிக் கொண்டனர்.

அவர்கள் இருவரும், இரு வேறுடலிலும் மாறிப் புக்க ஒரே உள்ளத்தின் இரு பகுதிகளே என்னும்படி இங்ஙனங் கனிவுடன் கலந்து உறவாடி இருக்கும் நாளில், ஒரு நாள் ஹெலெனா கல்லுங் கரையும் வண்ணம் தன் காதற் கதையையும் காதலனது புறக்கணிப்பின் போக்கையுங் கூறினாள். கேட்ட தயானா அத்தனையும் தனக்கே நிகழ்ந்ததெனத் துடித்துத் தத்தளித்தாள்.

எல்லா வகைகளிலும் தயானா ஹெலெனாவை முற்றிலும் ஒத்து இருந்தாள். ஆனால், ஹெலனா, காதலொளியைக் கண்ணுற்றும் அதன் கொடிய வெம்மையுட் பட்டுக் கருகி வாடிய மலர் போன்றவள். தயானாவோ, காதலின் கடைக்கணிப்புக்கும் புறக்கணிப்புக்கும் ஒன்றுபோல் ஆளாகாத நறுமலர் போன்றவள். ஹெலெனாவின் கதையைக் கேட்கக் கேட்கத் தயானாவுக்குத் துயர் ஒருபுறம் நேரினும் அத்தகைய துயரினும், ஹெலெனாவைத் தன் வழிப்படுத்த அடிமையாக்கும் அக்காதல் எத்தகைய தென்றும் அத்தகைய காதலை அவளிடம் எழுப்பிய தலைமகன் யாவன் என்றும் அறியும் வேட்கை அதனினும் மிகுந்து நின்றது.

அவ்வேட்கை மிக்க தயானா, அதற்கேற்பத் தான் அவ்வகையிற் கண்ட ஒரே நிகழ்ச்சயை ஹெலெனாவுக்கு எடுத்துக் கூறினான். உயர் நிலையிலுள்ளவனும் அழகு மிக்கவனும் மங்யைர் கருத்தை ஈர்ப்பவனுமான ஓர் இளைஞன், தான் வெறுத்துத் தள்ளினும் போகாமல் தன்னைத் துன்புறுத்து வதையும் அவனிடமோ பிறரெவரிடமோ தனக்கு ஹெலெனாவின் காதலைப் போன்ற உணர்ச்சி எற்படாததையும் அவள் தெளிந்த உள்ளத்தோடு எடுத்துரைத்தான்.

பலநாள் இங்ஙனம் உரையாடி வருகையில் இருவரும், தம்மில் ஒருவரைப் புறக்கணிக்கும் காதலனையும், மற்றொருவர் புறக்கணிப்புக்கு ஆளாகுங் காதலனையும் பற்றிப் பலவும் பேசவர். அப்போது ஹெலெனா, அவ்விருவரைப் பற்றிய உரைகளும் பெரிதும் ஒத்திருக்க கண்டு வியந்து ஒருநாள் தயானாவிடம் அவளை நாடிய இளைஞனின் பெயர் என்ன என்று கேட்டாள். அவள் பெர்ட்டிரம் என்று கூறியதும், ஹெலெனா திடுக்கிட்டு, “என்ன, என்ன, பெர்ட்டிரமா? பெர்ட்டிரமா!” என்றாள்.

ஹெலெனாவின் நிலைகண்டு வியப்புற்ற தயானா, “என் ஆரூயிர்த் தோழீ, ஏன், அப்பெயரில் என்ன? அதனால் உனக்கு ஏன் இத்தனை பரபரப்பு?” என்றாள்.

“தயானா! இன்னும் அவரைப்பற்றி சற்றுக் கூறு. என் காதலன் பெயரும் அதுவேயாதலால் என் மனம் பதறுகின்றது.”

“அவர் ஏதோ ரூஸிலான் குடியைச் சேர்ந்தவர் என்று என்னிடம் கூறினார்.”

இவ்வுரை கேட்டதும் ஹெலெனா இடியேறுண்ட அரவமென அலறி வீழ்ந்து, “ஆ, கொடுமை கொடுமை; கடவுளே இதுவும் உன் திருவுள்ளமோ?” என்று புலம்பி மயங்கினாள்.

இப்போது, “அந் நங்கையர் இருவர் வாழ்க்கையையும் இருவேறு வகையிற் பாழ்படுத்தி வருபவர், இருவேறு மனிதரல்லர்; ஒருவரே,” என்பது அவர்களுக்கு விளங்கிற்று. அதுமுதல் அவர்கள் பெர்ட்டிரமைப்பற்றி முன்போல் கனிவுடன் உரையாடுவதில்லை. ஆனால், ஹெலெனாமட்டும் தன்னை வெறுத்த பெர்ட்டிரமை, அவன் விரும்பனும் தான் விரும்பாது ஆட்டி வைக்கும் இத்தோழி மூலமே தன் வயப்படுத்தலாம் என்று கருதி, அக்கருத்தைத் தயானாவிற்குத் தெரிவித்தாள். தயானாவின் தாய் பெர்ட்டிரமிடந் தன் மகளுக்குள்ள வெறுப்பையும், ஹெலெனாவின் துயரையும் கண்டு அவர்கள் ஏற்பாட்டிற்கு இணங்கினாள்.

3.பழம் நழுவிப் பாலில் விழுந்தது

தயானா என்றும் பெர்ட்டிரமை வெறுத்து அவன் காதலைப் புறக்கணித்தே வந்திருந்தாள். அவளும் அவள் தாயும் அவனிடம், “நீங்கள் பெரிய இடத்தைச் சேர்ந்தவர்கள். உங்களுடன் ஒத்த மண வாழ்க்கை கொள்ள எங்களுக்குத் தகுதியில்லை,” என்று தெளிவாகத் தங்கருத்தை அறிவித்து மிருந்தனர். அவ்வாறிருந்தும், காதலின் தூய்மையை முற்றும் அறியாத பெர்ட்டிரம், “மணவாழ்வு கிட்டாவிடினுங் கவலையில்லை; எவ்வகையிலும் அவளை அடைந்தே தீருவேன்,” என்று தனது சிற்றின்ப வேட்கை தோன்றக் கூறினான்.

கற்பிலும் தன் மதிப்பிலும் குறைவுறாச் செல்வர்களாகிய தயானாவும் அவள் தாயும் இத்தீமொழிகள் கேட்டு நெருப்பிற் பட்ட புழுவெனத் துடித்துப்பொங்கினும், ஹெலெனாவின் நன்மையை எண்ணித் தம்மை அடக்கிக்கொண்டு அவன் ஏற்பாட்டிற்கு இணங்கியவர்கள் போல நடித்து, அவனைத் தயானா தனியே வந்து காணுவதற்கான இடமும் நேரமும் குறித்தனர். குறித்த நேரப்படி குறித்த இடத்தில் பெர்ட்டிரம் வர, ஹெலெனா தயானாவின் தோற்றத்துடன் அங்க வந்து ஆராக் காதலோடு அவனுடன் அளவளாவி மகிழ்ந்தாள். அம்மகிழ்ச்சி நேரத்தில் ஹெலெனாவின் கணையாழியைப் பெர்ட்டிரம் வாங்கிக் கொண்டான். அதற்கு மாறாக, அவன் தன கணையாழியை ஹெலெனாவிடம் கொடுத்தான்.

அவ்வண்ணமே அரசன் ரூஸிலான் வந்து ரூஸிலான் பெருமாட்டியின் பெருந்துயர்கண்டு தன்னிலை மறந்து கண்ணீர் உகுத்துக் கதறினான். பின்பு திறனுடைய தூதரையும் ஒற்றரையும் ஏவி, ஹெலெனாவையும்,பெர்ட்டிரமையும் தேடிக் கொணருமாறு பணித்தான். அவன் தூதரும் ஒற்றரும் அவர்களைப் பல நாள் பல இடங்களினும் தேடினர். இறுதியில் அவர்கள், பெர்ட்டிரமைப் பிளாரென்சில் கண்டு அவ்வூர் அரசன் இணக்கம் பெற்று அனைக் கொண்டு வந்தனர். இச்செய்தி அறிந்த ஹெலெனா, தானும் தயானாவையும் அவள் தாயையும் உடன்கொண்டு நேரே ரூஸிலான் வந்தாள்.

அரசன் பெர்ட்டிரமிடம் ஹெலெனாவைப் பற்றி உசாவிய போது, அவள் உயிருடன் இருக்கிறாளோ மாண்டொழிந்தாளோ தனக்கொன்றுந் தெரியாதென்றும், அவள் இதுவரையில் மாண்டிராவிட்டால் விரைவில் மாளவேண்டுமென்றே தன் மனம் விரும்புகின்றதென்றும், அவள் மாண்டிருப்பின், அதனை அறிந்த மறுநொடியே தான் இன்னொரு மாதை மணஞ் செய்து கொள்ளும்டி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின் தென்றுங் கூறினான். அரசன், “இன்னொரு மாதென்றது யார்?” என்று கேட்கப் பெர்ட்டிரம், தயானாவைப் பற்றி மொழிந்து, அவளுடன் தான் ஏற்கெனவே உளமுவந்து களவியல் முறையில் மணஞ் செய்து கொண்டதாகவுந் தெரிவித்தான்.

அரசன் பெர்ட்டிரமிடம் எல்லையற்ற சினங் கொண்டா னாயினும், ஹெலொனவின் செய்தியறியாது எதுவுங் கூறமுடியாத நிலைமையிலிருந்தான்.

அப்போது, ஹெலெனாவே முன்வருவது கண்டு, அரசன் எல்லையற்ற மகிழ்ச்சியோடு அவளை எதிர்கொண்டு அழைத்தான். உடனே அவளைப் பெர்ட்டிரமிடம் அழைத்துச் சென்று அவளை ஏற்றுக் கொள்ளும்படி கூறப் பெர்ட்டிரம், தான் மனம் கலந்து நேசிக்கும் மங்கையையன்றி, வேறு யாரையும் ஏற்க முடியாதென்றும், வேண்டுமானால் தான விரும்பிய மாதை மணக்கும் உறுதியுடன் இவள் இறக்கும் வரைக்குங் காத்திருக்கத் துணிந்து விட்டதாகவும் கூறினான்.

அரசன் சினங்கொண்டு, ’இனி இவன் இறப்பதே நன்றென்று பெர்ட்டிரமை வீழ்த்தபுகும் எல்லையில் அவன் கையிற் சிடந்த கணையாழி அரசன் கண்களுக்குப் புலப்பட்டது. “இது நான் ஹெலெனாவுக்குக் கொடுத்த கணையாழி அன்றோ! இஃது உன் கையில் எப்படி வந்தது? கூறுக” என்று கேட்க, அவன் திகைத்து மிரள மிரள விழித்தான்.

அந்நேரத்தில் ஹெலெனா இடையிட்டுப் பெர்ட்டிரமிடம் தனக்கு ஒரு வழக்கிருக்கின்ற தென்று கூறினாள். ஹெலெனா என்ன சொல்லப் போகிறாள் என்று பெர்ட்டிரம் அவள் பக்கம் திரும்பியதும் அவள் தன்கையில் அணிந்திருந்த பெர்ட்டிரமின் கணையாழியை அவனிடம் காட்டி, “இதனை நான் பெறுகின்ற நாளே தம் காதலைப் பெறும்நாள் என்று முன்பு மொழிந் திருக்கின்றீர்; அவ்வாறே, கணையாழியைப் பெற்றேன்; தம் காதலையும் பெற்றவாளானேன்; இப்போதுயாது கூறுகின்றீர்” என்று தீர்ந்த குரலில் தனது வழக்கை எடுத்துரைத்தாள்.

பெர்ட்டிரம் அது கேட்டு, நிகழ்ந்தது இன்னதென்றறிய இயலாமல் திடுக்கிட்டு, “இது நான் என் காதலிக்கன்றோ கொடுத்தது! நீ திருடியோ, அல்லது கொலை செய்தோதான் இதனைக் கவர்ந்திருக்க வேண்டும்; அப்படியாயின், உன்னை எளிதில் விடேன்.” என்றான்.

ஹெலெனா, “அரசே, ஏழையாயினும் யான் திருட்டும், கொலையும், கொள்ளையும் அறியேன்; இச்செல்வர் என் உள்ளம் கொள்ளை கொண்டவர். போதாதென்று என் தோழி ஒருத்தியின் காதலைத் திருட்டாற் பெறவும், அவள் கற்பைக் கொள்ளை கொள்ளவும் முயன்றுள்ளார்,” என்று கூறி, மறைந்து நின்ற தயானாவையும் அவள் தாயையும் வெளியே வருவித்து அவர்கள் மூலம் கணவன் குறிப்பிட்ட களவியல் மணம் அவன் நினைத்தபடி வேறொரு மாதுடனன்று; தன்னுடனேயே நிகழ்ந்தது என்பதை விளக்கினாள்.

பெர்ட்டிரம், ஹெலெனாவின் திறனையும் வடமீன் போல் சற்றும் மாறாத நிலையான காதலையுங் கண்டு, தான் செய்த பிழைகளுக்கெல்லாம் அவள்பால் மன்னிப்புக் கேட்டு அவளை மனமார ஏற்றுக்கொண்டான். தயானாவினிடமும் தன் பிழை பொறுக்குமாறு வேண்டி, அவளைத் தன தங்கையாகக் கருதி நடத்தலானான்.

தயானாவின் ஒப்பற்ற கற்புறுதி கண்டு வியந்த மன்னன், ஹெலெனாவின் திறத்துக்குப் பரிசாக அவளுக்குப் பெர்ட்டிரமை அளித்தது போல், தயானாவுக்கு தன் பெருமக்களுள் ஒருவரைக் கணவனாகத் தேர்ந்தெடுத்து வழங்கினான்.

அடிக்குறிப்புகள்
1.  Goarard

2.  Helena

3.  Rousillon

4.  Bertram

5.  Lafew

6.  Diana

மாறாட்டத்தால் நேர்ந்த போராட்டம்

** Commedy of Errors**
கதை உறுப்பினர்
ஆடவர்:
1.ஈஜியன்: ஸைரக்கூஸ் நகர்ச் செல்வன்-இரட்டையரான இரு அந்திபோலஸ்களின் தந்தை.

2.  மூத்த அந்திபோலஸ்: ஈஜியன் மூத்த மகன்-எபீஸஸ் நகரப் படைத்தலைன்-அதிரியானா கணவன்.

3.  மூத்த துரோமியோ: மூத்த அந்திபோலஸின் பணியாள்-அதிரியானாவின் பணிப் பெண்ணின் கணவன்.

4.  இளைய அந்திபோலஸ்: ஈஜியன் இளைய மகன்-தாயையும் தமையனையும் தேட எபீஸஸ் ந்தவன்.

5.  இயை துரோமியோ: இளைய அந்திபோலஸின் பணியாள்-பின்னால் அதிரியானா பணிப் பெண்ணின் தங்கையை மணந்தவன்.

6.  எபீஸஸ் நகரத் தலைவன்:

7.  மெனபோன் கோமகன்: நகரத்தலைவன் உறவினன்-மூத்த அந்தி போலஸின் உயிர் நண்பன்-அதிரியானாவின் மாமன்.

பெண்டிர்:

1.  ஈஜியன் மனைவி: (மாற்றுருவில்) எபிஸஸில் மடத் தலைவி-இரு அந்தி போலஸ்களின் தாய்.

2.  அதிரியானா: மூத்த அந்தி போலஸின் மனைவி-மெனபோன் கோமகன் மருகி.

3.  அதிரியானாவின் தங்கை: இறுதியில் இளைய அந்திபோலஸின் மனைவி.

4.  அதிரியானாவின் பணிப்பெண்: மூத்த துரோமியாவின் மனைவி.

5.  அதிரியானாவின் பணிப்பெண்ணின் தங்கை: இறுதியில் இளைய துரோமியோவின் மனiவி.

6.  நடிகை: மூத்த அந்திபோலஸின் காதலி.

கதைச் சுருக்கம்
கப்பலுடைந்ததனால் ஸைரக்கூஸ் நகரச் செல்வன் ஈஜியனுடைய மூத்த மகன் அந்திபோலஸும், அவன் வேலையாள் துரோமியோவும் எபீஸஸில் தங்கினர். அந்திபோலஸ் நகரத் தலைவன் உறவினன் மெனபோன் நட்பினால் அவன் மருகியாகிய அதிரியானாவை மணந்து படைத்தலைவனாய் வாழ்ந்தான். அவன் பணியாள் துரோமியோவும் அதிரியானாவின் பணிப் பெண்ணை மணந்தான். ஈஜியன் மனiவி அதே நகரில் ஒரு மடத்தில் சேர்ந்து மடத் தலைவியானாள். ஈஜியனும் மூத்த அந்தி போலஸுடன் பிறந்து அவனையே போன்ற உருவுடைய இளைய அந்திபோலஸும், துரோமியோவையே போன்ற உருவுடைய அவன் தம்பி இளைய துரோமியோவும் ஸைரக் கூஸில் வாழ்ந்தனர். தமையனையும் தாயையும் தேடி இளைய அந்தி போலஸும் துரோமியோவும் எபீஸஸ் செல்ல, அவர்களைப் பின்பற்றிச் சென்ற ஈஜின் ஸைரக்கூஸருக்கெதிரான எபீஸ! நகரத்துச் சட்டப் பொறியுட் பட்டுக் கோபத் தீர்ப்பளிக்கப் பட்டான். ஆயினும், அவன் மீதிரங்கித் தலைவன் மாலை வரை ஆயிரம் பொன் தண்டம் செலுத்தித் தண்டனையிலிருந்து தப்புமாறு கூறினான். இதற்கிடையில் இரு அந்திபோலஸ்களும், இரு துரோமியோக்களும் ஒரே உருவுடையவராயிருந்ததனால், அதிரியானா, அவள் பணிப்பெண் முதலியோரும், மூத்த அந்திபோலஸினிடம் காதல் கொண்ட நடிகையும் அவள் பொற் சங்கிலி செய்யக் கொடுத்திருந்த பொற்கொல்லன் ஒருவனும் பலவாறு குழப்பமடைந்தனர். இறுதியில் ஈஜியன் தூக்கிலிடப் போகும் தறுவாயில் அவன் மனைவியாகிய மடத் தலைவியும், பிள்ளைகளும் ஒருங்கே வந்த குழப்பமும் தற்செயலாய் நீங்க, அனைவரும் மகிழ்ந்தனர். இளைய அந்திபோலஸ் அதிரியானாவின் தங்கையையும், இளைய துரோமியோ அவள் பனிப்பெண்ணின் தங்கையையும் மணந்தனர்.

1.குடும்பப்பிரிவு

¹ஸைரக்கூஸ் என்ற நகரில் ²ஈஜியன் என்று ஒரு செல்வன் இருந்தான். தொழிலை ஒட்டி, அவன் சில காலம் அயல்நாடு சென்று வாழவேண்டியிருந்தது. அப்போது அவனுக்கு, ஒரே அச்சில் வார்த்தவர் போன்ற இரண்டு புதல்வர் பிறந்தனர். பெயரிலும் வேற்றுமை இல்லாதபடி ஈஜியன் அவ் விருவரையும் ³அந்திபோலஸ் என்றே அழைத்தான்.

அப்புதல்வர்கள் பிறந்த அரே நேரத்தில் அந்நகர் விடுதியில் ஓர் ஏழை மாதினுக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களும் ஒரே சாயலும் தோற்றமும் உடையவரா யிருந்தனர். அவர்கள் தாய் அவர்களுக்கும் ⁴துரோமியோ என்று ஒரே பெயரிட்டு அழைத்தாள். அவள் மிகவும் ஏழை யானதனால் அவர்களைத் தானே வளர்க்க முடியாமல் ஈஜியனிடம் ஒப்படைத்தாள். ஈஜியனும் அவ்விருவரையும் தன் பிள்ளைகளின் பணியாளாராக வைத்து வளர்த்து வந்தான்.

இரு அந்திபோலஸ்களும் இரு துரோமியோக்களும் சிறுவராயிருந்தபோது பெற்றோர், தம் தாய் நாட்டுக்குப் போகப் பயணமாயினர். ஆனால் காலக்கேட்டினால், வழியில் அவர்கள் ஏறிச்சென்ற கப்பல் புயலிற்பட்டு நொறுங்கி விட்டது. கப்பலில் இருந்தவருள் ஒரு சிலர் மட்டுமே படகுகளில் தப்பினர்.

ஈஜியனும் அவன் மனைவியும் தம் பிள்ளைகள் ஒவ்வொருவரையும் அவரவர் பணிப்பிள்ளைகளுடனே சேர்த்து இரண்டு மரத்துண்டுகளில் கட்டி மிதக்க விட்டார்கள். பின் தாங்களும் தனித்தனியாகப் பாய் மரத்தில் மிதந்து மிதந்து தப்ப முயன்றனர்.

காற்றும் அலையும் அடிக்கும் வழியிற் சென்று எல்லோருமே பிழைத்தனர். ஆயினும் ஒருவர் பிழைத்ததை இன்னொருவர் அறிய முடியவில்லை.

ஊழ்வலியால் இங்ஙனம் சிதறிய அக்குடும்பத்தினரைப் பல ஆண்டுகள் கழித்து அதே ஊழ்வலி ⁵எபீஸஸ் என்னும் நகரில் வேறு வேறாகக் கொண்டு வந்து சேர்த்தது. அனைவருக்கும் பிறர் உயிர் பிழைத்தது தெரியாதது போலவே, அனைவரும் ஓர் இடத்தில் வந்து சேர்ந்ததும் அவர்களுக்குத் தெரியாமலே இருந்தது. அதன் பயனாக அவர்கள் பலவகையான இக்கட்டுக் களுக்கும் குழப்பங்களுக்கும் ஆளாயினர்.

அவர்கள் அனைவரிலும், முதன் முதலாக எபீஸஸ் வந்தவர் ஈஜியன் மனைவியும், மூத்த அந்திபோலஸும் அவன் பணியாளான மூத்த துரோமியோவுமேயாவர். அவர்கள் அந்நகரத்துச் செம்படவர் சிலரால் கடலிலிருந்து காப்பாற்றப் பட்டனர். சிறுவர் இருவரையும் தாயினிடமிருந்து பிரித்து அச்செம்பவர் பிறர்க்கு அடிமைகளாக விற்றுவிட்டனர்.

மக்களை இழந்த தாய் மனமுடைந்து, நகரெங்கும் பித்துக் கொண்டவள் போல் அலைந்தாள். அப்போது துறவி ஒருவர் அவளுக்கு மெய்யறிவு புகட்ட, அவள் ஒருவாறு மனந்தெளிந்துனுரு மடத்தில் இறைவன் பணியில் ஈடுபட்டாள். அவள் மனத் தூய்மையைக் கண்ட மடத்துத் துறவிமாதர் அவளையே அம்மடத்தின் தலைவியாக்கினர்.

ஈஜியன் மக்களை விலைக்கு வாங்கியவன், நகர்த் தலைவனுக்கு உறவினனும் பெருவீரனுமாகிய ⁶மெனேபோன் கோமகனே. அவன் மூத்த அந்திபோலஸின் பெருமிதத் தோற்றத்தைக் கண்டு அவனைப் படையில் ஒரு பணியாளனாகச் சேர்க்கும்படி நகர்த் தலைவனைத் தூண்டினான்.

படை வீரரான அந்திபோலஸ், தனது வீரத்தாலும் நற்குணத்தாலும் மிகவும் மேம்பாடெய்தி இறுதியில், தனக்கு உதவி செய்த மெனெபோன் கோமகன் உயிரையும் காப்பாற்றினான். அதன் பயனாக நகர்த்தலைவன் அவனையே தன் படைத் தலைவனாக அமர்த்திக் கொணடான். அதுமுதல் மெனேபோன் கோமகன் அவனைப்பின்னும் அருமையாகப் பாராட்டித் தன் மருகியாகிய ⁷அதிரியானாவை அவனுக்கு மணஞ் செய்து கொடுத்தான்.

அந்திபோலஸின் பணியாளாகிய துரோமியோவும் அதிரியானாவின் பணிப்பெண் ஒருத்தியை விரும்பி மணஞ் செய்துகொண்டு, அவளுடனேயே வாழ்ந்து வந்தான்.

மூத்த அந்திபோலஸ் இங்ஙனம் எபீஸஸில் நல் வாழ்வுடையவனாயிருப்பது ஸைரக்கூஸ் நகரிலிருக்கும் அவன் தந்தையாகிய ஈஜியனுக்கும், இளைய அந்திபோலஸுக்கும் தெரியாது. ஆகவே அவர்கள் அவனைப் பற்றிக் கவலைகொண்டு அவனை என்ற காண்போமோ என்று தனித்தனியாக ஏங்கியிருந்தனர்.

பல ஆண்டுகள் இங்ஙனம் கழிந்தும் அண்ணனைப் பற்றிய செய்தி எதுவும் தெரியாதது கண்டு இளைய அந்திபோலஸ் தந்தையை அணுகி, “அப்பா, இன்னும் நாம் வாளா இருப்பது நன்றன்று; நானாவது போய் அம்மையையும் அண்ணனையும் தேடி வருகிறேன்” என்றான்.

ஈஜியனுக்கும் உண்மையில் மனைவியைப் பற்றியும் மகனைப் பற்றியும் கவலை உண்டு. ஆயினும், அவர்களைத் தேடத் தன் இளைய மகனை அனுப்பினால் எங்கே இவனையும் இழக்க வேண்டி வந்துவிடுமோ என்ற அஞ்சினான். எனினும், வேறு வழியின்றி அவன் அவர்களைத் தேடும்படி இளைஞனை அனுப்பத் துணிந்தான்.

இளைய அந்திபோலஸ் இளைய துரோமியோவையும், உடன்கொண்டு பல இடங்களுக்குச் சென்று தன் உடன் பிறந்தானையும் நாயையும் தேடியலைந்து கடைசியாக எபீஸஸ் நகரம் வந்து சேர்ந்தான். அந்நகருக்கும் ஸைரக்கூஸிற்கும் நெடுநாள் பகைமை உண்டு என்பதை அவன் அறிவானதலால். தானும் பணியாளும் வேற்று நகரத்தாராக உருமாறி உட்சென்றனர். சென்று எங்குஞ் சுற்றி ஓய்வுற்று, அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கி இளைப்பாறினர்.

முதலில் மனைவியையும் ஒரு பிள்ளையையும் இழந்ததனால் ஒரு கண்ணும் கையும் இழந்தவன் போன்றிருந்த ஈஜியன், எஞ்சிய கண்ணும் கையுமாய் அமைந்த இளைய மகனையும் பிரிய நேர்ந்ததினால் மிகவும் மனமுடைந்தான். ஆனால், எப்படியும் அவ்விளையோன் முன் இழந்த மனைவியையும் மகனையும் தேடி அழைத்துக் கொண்டு வருவான் என்ற நம்பிக்கையில் ஈஜியன் சிலகாலம் கழித்தான். நாளாக ஆக அந் நம்பிக்கையும் மறையலாயிற்று. இறுதியில் அவன் பொறுமை இழந்து, முதலிற் காணாமற் போனவரையும் பின்பு அவர்களைத் தேடிச் சென்றவரையும் சேர்த்துத் தானே சென்று கண்டுபிடிப்பதெனத் துணிந்து புறப்பட்டான்.

2.ஈஜியன் துயர்

இளைய அந்திபோலஸை எபீஸஸ் பக்கம் இழுத்துச் சென்ற அதே ஊழ், ஈஜியனையும் அந்நகரின் பக்கமே கொண்டு வந்து சேர்த்தது.

எபீஸஸுக்கும் ஸைரக்கூஸிற்கும் இடையில் பகைமை உண்டு என்பதை ஈஜியன் மறந்து ஸைரக்கூஸர் உடையிலேயே நகரில் புகுந்து விட்டான். ஆகவே நகர்க் காவலர் அவனைப் பிடித்துக்கொண்டு போய் நகர்த் தலைவன் முன் நிறுத்தினர்.

தலைவன் ஈரநெஞ்சினனாயினும் நடுநிலை பிறழாதவன். ஆதலால் ஈஜியினின் ஆண்டு முதிர்ச்சியைக் கண்டு பரிவுற்றானாயினும், நகர்ச் சட்டத்தைத் தவிர்க்கக் கூடாமல் ஆயிரம் வெள்ளி தண்ட வரி செலுத்த வேண்டும்; அன்றேல் அவன் தலையிழத்தல் வேண்டுமெனத் தீர்ப்பளித்தான்.

ஈஜியன் தன் துயரமிக்க வரலாறு முற்றும் நகர்த் தலைவனுக்கு எடுத்துரைத்தான். அதுகேட்டு மனமிரங்கிய அத்தலைவன், தண்டனையை நிறைவேற்ற மாலை வரையில் தவணை கொடுக்கக் கூடுமென்றும், அதற்குள் நகரில் நண்பர் எவரேனும் இருந்தாற் கண்டுபிடித்து ஆயிரம் வெள்ளியைக் கொடுத்து உயிர் பிழைக்கலாமென்றும் கூறினான்.

ஈஜியன் இத்தீர்ப்புக் கேட்டு, அன்றே தன் உயிர் அகன்றதென்று கருதினான். ஆயினும், மாலைவரையில் நேரமிருக்கின்றது. ஒருகால் அதற்குள் இறையருள் ஏதேனும் வழிகாட்டுதலுங் கூடும் என்ற நம்பிக்கையுடன் சுற்றிச் சுற்றி அலைந்தான். மாலை அணுக அணுக அச்சிறு நம்பிக்கையும் வறண்டு போயிற்று.

கறுத்திருண்ட முகிலினிடையிலும் வெள்ளிய மின்னற் கொடி தோன்றி ஒளிர்வதுபோல, நம்பிக்கையற்றுத் துயர் சூழ்ந்த இடத்திலும் மறைந்து நின்றளிக்கும் இறையருள் ஒளி வீசும் என்பதை யாரே அறிவர்! ஈஜியன் தான் ஆளற்றுத் துணையற்றுத் தவிப்பதாக நினைத்து மனமழுங்கிய அதே நாளில், அண்மையிலேயே அவன் மனைவியும் அவன் பிள்ளைகளும் இருந்தனர் என்பது அவனுக்குத் தெரியாதன்றோ? அதிலும், இறையருளால் ஒரு மகன் நிறைசெல்வமும் உயர்நிலையும் உடையவனாய் அருகிலுள்ள தொரு மாளிகையில் வீற்றிருந்தான் என்பதை எப்படி அவன் அறியக்கூடும்?

இதற்கிடையில் இங்ஙனம், ஒரே வடிவுடைய இரண்டு அந்திபோலஸ்களும் இரண்டு துரோமியோக்களும் அந்நகரில் இருந்தது அவர்களிடையே பலவகையான மருட்சிகளையும், குழப்பங்களையும் உண்டு பண்ணிற்று.

3.குழப்பங்கள்

இளைய அந்திபோலஸ் தன் பணியாளிடம் பணப்பையைக் கொடுத்துக், கடைக்குப் போய்ச் சமையலுக்கான பொருள்கள் வாங்கிவர அனுப்பிவிட்டுத் தான் நகர் பார்க்கும் எண்ணத்துடன் தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தான்.

மூத்த அந்திபோலஸ் அதே நேரத்தில் தனது படை நிலையத்தில் இருந்தான். உணவு நேரமாகியும் தொழில் மிகுதியால் அன்று அவன் வீடு செல்ல முடியாமல் காலந்தாழ்த்த நேர்ந்தது. அவன் மனைவியாகிய அதிரியான அக்காலத் தாழ்வுக்குக் காரணந் தெரியாமல் பலவகையில் தன்மனத்தை அரட்டலானாள்.

அவள் தன் கணவனிடம் மாறாப் பற்று வாய்ந்தவளாயினும், ஐய மனப்பான்மையால் அலைக்கழியும் நெஞ்சினளாயிருந்தாள். இதனால் அவள் அவனுக்கு நேரம் வேளை என்பதின்றி எப்போதும் தொந்தரவு கொடுத்து வந்தாள். அன்றைக்கு முந்தின நாளும் அவள் அங்ஙனம் தொந்தரவு செய்த போது அந்திபோலஸ், “இப்படி நீ என்னை என்றும் அரிப்பதாயின், நான் உன்னை விட்டுவிட்டு வேறு மனைவிதான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று சினந்து கூறினான்.

வெள்ளையறிவினளாகிய அதிரியானா, அவன் மேலீடாகக் கூறிய இச்சின மொழிகளை அப்படியே மெய்யெனக் கொண்டு மனமுளைந்தாள். இன்று, அதற்கேற்ப, அந்திபோலஸ் வேளையில் வீட்டுக்கு வரக் காலந் தாழ்த்தது கண்டு, அவள் தன் கணவன் தன்னிடம் சொன்னபடியேதான் தன்னை விட்டு விட்டானோ என்று மிக்க அச்சங்கொண்டாள். எனவே, அவள் தன் பணியாளாகிய மூத்த துரோமியோவை அழைத்துத் தன் கணவனைத் தேடிக்கொண்டு வரும்படி அனுப்பினாள்.

துரோமியோ தன் தலைவனைத் தேடிக்கொண்டு போகும்போது, வழியில் இளைய அந்திபாரஸைக் கண்டான். கண்டு அவன் தன் தலைவனே என்று எண்ணிய துரோமியோ, தலைவி அழைக்கின்றாள் என்று கூறி வீட்டுக்கு இழுத்தான். ஆனால், அவ்வந்தி பொலஸ், இத்துரோமியோவைத் தன் பணியாளாகிய துரோமியோவே எனக் கருதி வெகுளியுடன், “என்னிடம் ஏன் நகையாடுகிறாய்? எனக்குத் தலைவியுமில்லை, கொலைவியுமில்லை; ஏன் தொந்தரவு செய்கிறாய்?” என்று சீறினான். துரோமியோ போகாமல் பின்னும் பசுப்புவது கண்டு, அவனை அந்திபோலஸ் நையப்புடைத் தனுப்பினான்.

துரோமியோ அழுதுகொண்டு தலைவியினிடம் வந்து, “அம்மணி, தங்கள் கணவர், நான் போய் அழைத்ததும் கடுஞ்சினங் கொண்டு என்னை அடித்துத் துரத்திவிட்டார். மேலும், அவர் ‘எனக்குத் தலைவியுமில்லை, கொலையுமில்லை’ என்று வெறுத்துரைக்கிறார்” என்று கூறினான். அதைக் கேட்டதும், அதிரியானாவின் மனக்குழப்பம் முன்னையினும் பன்மடங்கு மிகுதியாயிற்று. உணர்ச்சிச் சுழலிற்பட்ட அவள், மனம் பதைத்துத் தன் கணவனைச் சீற்றந் தணித்து அழைத்து வரத் தானே புறப்பட்டாள்.

துரோமியோ கூறிய குறிப்பைப் பின்பற்றி அதிரியானா ஒரு பணிப் பெண்ணுடன் இளைய அந்திபோலஸ் இருக்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தாள். துரோமியோவைப் போலவே அவளும் அவனைத் தன் கணவன் அந்திபோலஸே என்ற நினைத்தாள். ஆகவே, அவள் அவனைத் தன்னுடன் வீட்டுக்கு வந்து உணவருந்தும்படி வேண்டினாள். அந்திபோலஸ் உண்மையில் அவள் யார் என்றே அறியாதவனாதலின், ஒன்றும் விளங்காது விழித்தான். சற்று முன்னதாகப் பணியாள் கூறிய மொழிகளைக் கூட, அவன், ‘வேண்டுமென்றே ஏளனமாகக் கூறிய புனைசுருட்டு’ என்று கருதினான். இப்போது அவன் கதைக்கு ஏற்றபடி தாளமிட, இப்பெண் எங்கிருந்து வந்தாள் என்று அவன் நினைத்து வியப்படைந்தான்.

ஆனால், அவன் எவ்வளவுக்கெவ்வளவு அதிரியானாவி னிடம் ஏதிலனாக ஒதுங்கி நடந்து கொண்டானோ, அவ்வளவுக் கவ்வளவு அவள் அவனிடம் கணவன் என்று உரிமை கொண்டாடிக் கெஞ்சி வற்புறுத்தி அழைக்கலானாள். அம் மொழிகளை மறுக்க முடியாமையினாலும், பசி வேளையா யிருந்ததனாலும், இப்பித்தலாட்டங்களின் முடிவுதான் என்ன என்று தெரிந்துகொள்ளும் விருப்பத்தினாலும் அவன் அவளைப் பின்பற்றி அவள் இல்லத்தை அடைந்தான்.

அதிரியானாவுக்குத் தங்கை ஒருத்தி இருந்தாள். அவளும் அதிரியானாiப் போலவே அழகுமிக்கவள். ஆனால் அவளிடம் அதிரியானாவின் படபடப்போ ஐயமனப்பான்மையோ சிறிதும் இல்லை. அதிரியானா அந்திபோலஸை வற்புறுத்தி உணவளிக்கும் போதெல்லாம், அவள் சற்றே அகல நின்றிருந்தாள். அதிரியானாவின் கடுமொழிகளைவிட, அவளுடைய கலங்கிய இரு விழிகளும், அவ்வப்போது கூறும் அன்பு நிறைந்த அருமொழிகளும் அந்திபோலஸின் மனத்தை மிகுதியாக இயக்கின. அவன் தன்வயமற்றவனாய் அவர்களுடன் இன்னுரையாடி அன்போடு உண்ணலானான்.

4.கணவன் ஏமாற்றம்

இதனிடையில் அதிரியானாவின் கணவனான மற்றைய அந்திபோலஸ், மற்ற நாளினும் மிகுதியாக நேரஞ்சென்று வீட்டிற்குத் திரும்பினான். வரும்வழியில் தன்னைத் தேடிவரும் பணியாள் துரோமியோவைக் கண்டு அவனையும் அழைத்துக் கொண்டு வந்தான். ஆனால் இருவரும் வீடு வந்து சேர்ந்தபொழுது வீட்டின் வாயில் அடைத்திருந்தது. வீட்டினுள்ளிருந்து, அதிரியானாவும் அவள் தங்கையும் யாருடனோ அளவளாவிப் பேசுங்குரல் கேட்டது. வெளியில் கதவைத் தட்டியது அவர்களுக்குக் கேட்கவில்லை.

ஆனால், கதவருகில் இருந்த பணிப்பெண்கள் சிலர், ‘யார் அங்கே’ என்று கேட்டார்கள் இருவரும் தாம் இன்னார் என்பதைத் தெரிவித்த அளவில் அவர்களுள் ஒருத்தி கொல்லென நகைத்து, "ஏனையா, இப்படி அடாப்பொய் அளக்கிறீர்! தலைவரும் என் கணவராகிய அவர் பணியாளும் உள்ளிருந்து உண்டு கொண்டிருக்க, அவர்கள் பெயரால் என்னை ஏமாற்றுகிறீரே’ என்று எடுத்தெறிந்து கூறி ஏளனஞ் செய்தாள். அதுகேட்டு மூத்த அந்திபோலஸ், கடுஞ் சினங்கொண்டு தன் நிலையத்தையே நோக்கி மீண்டான்.

அவன் போகும் வழியில் ஒரு நடிகையின் வீடு இருந்தது. அவன் சில நேரங்களில் பொழுது போக்கிற்காக அங்கே சென்று அவளுடன் பேசியிருப்பதுண்டு. இன்று தன் மனைவி தன்னை அவமதித்ததை எண்ணி மனம் வெறுப்புற்று, அவளிடம் சென்று சற்றுப் பேசிக் களித்திருக்கலாம் என்று கருதினான். அவளும் அவன் வரவின் அருமையறிந்து போற்றி, அவனிடம் பரிவாய் உரையாடினாள். அதுகண்டு களிப்புற்ற அந்திபோலஸ், தான் தன் மனைக்கென்று செய்துவரும் பொற்சங்கிலி ஒன்றை அவளுக்குத் தருவதாக வாக்களித்தான். அவளும் அவன் பரிவுக்கு மகிழ்ந்து, தன் கைக் கணையாழியை எடுத்து அவன் கையில் அணிவித்தாள்.

பொற்சங்கிலியைச் செய்ய ஏற்றுக்கொண்ட பொற் கொல்லன். அது முடிந்ததும் அந்திபோலஸைக் காண வந்து கொண்டிருந்தான். வழியில், அவன் இளைய அந்திபோலஸைக் கண்டு, அவனே மூத்த அந்திபோலஸ் என்று நினைத்து அவனிடம் சங்கிலியைக் கொடுத்தான் அந்திபோலஸ் அது தனதன்று என்ற போது, அவன் சினங்கொண்டு “இப்போது எனதன்று என்பதனால் என்ன பயன்? உமக்கெனச் செய்தாயிற்று; இனி நீர் அதை ஏற்றுக் கொள்ள வேண்டியதே” என்று அதை அவனிடம் எறிந்து விட்டுப் போனான்.

கொஞ்சநேரங் கழித்து அப்பொற்கொல்லன் ஒரு கடன் காரனால் சிறை பிடிக்கப்பட்டான். காவலுடன் சிறைக்கூடத்திற்குச் செல்லும் வழியில், அவன் மூத்த அந்திபோலஸைக் கண்டான். கண்டவுடன் சங்கிலிக்குப் பணம் கொடுக்கும்படி அவனைக் கேட்க, அந்திபோலஸ், “பணம் இருக்கட்டும், சங்கிலி எங்கே?” என்றான். பொற்கொல்லன், “உம்மிடந்தான் சற்றுமுன் கொடுத்தேனே” என்று துணிவாகக் கூறினான். இருவரும் வாதாடினார் காவலர், இருவரையும் சிறைப்பிடித்து நகர்த்தலைவனிடம் அழைத்தேகினர்.

இங்ஙனம் சிறை செல்லுதல், தன் உயர்நிலைக்குத் தகாதென அந்திபோலஸ் எண்ணினான். ஆகவே தான் வழியில் கண்ட இளைய துரோமியோவைத் தன் பணியாள் என்று நினைத்துத் தன் மனைவியிடம் சென்று தான் விடுதலை பெறுவதற்கான பொருளை உடனே வாங்கிவரப் பணித்தான்.

துரோமியோ அந்நேரத்தில் உண்மையில் தன் தலைவனாகிய இளைய அந்திபோலஸைத் தேடிக்கொண்டு வந்தான். ஏனென்றால், அவர்கள் இதற்குமுன், ‘பித்தர் போன்று நடக்கும் மக்களையுடைய இம்மாய நகரை விட்டு உடனே நீங்கவேண்டும்’ என்று உறுதி செய்திருந்தனர். ஆதலால், இளைய அந்திபோலஸ், கப்பல் புறப்படும் நேரத்தை அறிந்து வரும்படி தன் துரோமியோவை வெளியே அனுப்பியிருந்தான். கப்பல் ஒன்று அன்றே புறப்பட இருந்ததை அறிந்த துரோமியோ. அதை அறிவிக்கத்தான் தன் தலைவன் அந்திபோலஸை நாடி வந்தான். ஆனால் தன் ஏற்பாடுகளுக்கு ஒவ்வாத மொழிகளை அவன் இப்போது பகர்ந்தது கேட்டு துரோமியோ, பெரிதுங் குழப்பமுற்றான்.

ஆயினும், ‘பணியாளுக்குரிய கடன் காரிய காரண ஆராய்ச்சியன்று; கட்டளைப்படி நடப்பதேயாம்’ எனத் துணிந்து, அவ்வந்திபோலஸைக் கணவன் என்று உரிமை பாராட்டிய அதிரியானாவின் வீடு சென்று நிலைமையைத் தெரிவித்துப் பணம் கேட்டான். கணவனிடம் எல்லையற்ற பற்று வைத்திருந்த அதிரியானா, உடனே பதைத்துக் கொண்டு தானே பணத்தைக் கொடுத்தனுப்பினாள்.

துரோமியோ அப்பணத்தைக் கொண்டு செல்கையில் இளைய அந்திபோலஸைக் காணவே, அவன் ‘நம் தலைவன் இதற்குமுன் காவலிலிருந்தானே; எப்படி வெளிவந்தான்’ என்ற வியப்புடன் பணத்தை அவன்முன் வைத்தான். பணம் ஏது என்று அந்திபோலஸ் கேட்க, அவன், “நீங்கள் கேட்டுவிட்டபடியே உங்களைக் கணவர் என்றழைத்த அம்மாது தான் கொடுத்தாள்” என்றான்.

சற்றுமுன் ஒரு பொற்கொல்லன் ஒரு சங்கிலியைக் கொடுத்துச் சென்றதும், தன் பணியாளே முன்பின் முரணாக நடப்பதும் காண, இளைய அந்திபோலஸின் முகத்தில் ‘அந்நகர் ஏதோ சூனியக்காரியின் மந்திர வலையிற்பட்ட மாயநகர் போலும்’ என்ற ஐயம் வலுத்தது.

இந்நிலையில் மூத்த அந்திபோலஸுடன் நட்புப் பூண்ட நடிகை அங்கு வந்து, தனக்குச் செய்த உறுதிப்படி சங்கிலி வராததனால் தன்கணையாழியைத் திருப்பிக் கொடுத்துவிடும் படி அவனை வேண்டினாள்.

இளைய அந்திபோலஸ், “நீ யார் என்பதையே நான் அறியேன், ஆயினும், ஏதோ சங்கிலி என்று நீ கூறுவதற்கேற்ப ஒருவன் இச்சங்கிலியை என்னிடம் எறிந்து போனான்” என்று சொல்லி அதனை அவளிடம் கொடுத்தான்.

அவள் சங்கிலியை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போகும்வழியில் அதிரியானாவைக் கண்டு, தான் அறிந்த வரலாறுகளெல்லாம் சொல்லி, அந்திபோலஸுக்குக் கட்டாயம் பித்துத்தான் பிடித்திருக்க வேண்டும்’ என்று தன் கருத்தை வெளியிட்டாள்.

5.ஆடவர் நலிவு

அதிரியானாவும் தன்னிடம் அவன் நொடிக்கு ஒருவகையாக நடப்பதை ஓர்ந்து அவள் கூறுவது உண்மையாக இருக்கக்கூடும் என்று நம்பினாள். அப்போது இளைய அந்திபோலஸும் அவனுடன் பூசலிட்ட வண்ணமாக இளைய துரோமியோவும் வந்தனர். தம் கணவர் பித்துக் கொண்டனர் என்றெண்ணிய அதிரியானாவும் அவள் பணிப்பெண்ணும் அவர்களிடம் நடிகையின் செய்தியைக் கூறி, அவர்களை உண்மையிலேயே வெளிகொள்ளச் செய்தனர். எப்படியாவது தப்பினால் போதும் என்று அவர்கள் திமிறிக் கொண்டோடப் பார்க்கவே, பெண்டிர் அவர்கள் பித்தராதலால் அடைத்து வைப்பது நன்று என்று கூறிக்கொண்டு அவர்களைப் பிடிக்கச் சென்றனர். ஆடவர் இருவரும் சினந்து எழுந்தனராயினும் அத்தகைய நெருக்கடியில் வேறு வகையறியாமல் ஓடிச்சென்று பக்கத்திலிருந்த ஒரு பெரிய கட்டிடத்தினுள் நுழைந்தனர். அதிரியானாவும் பணிப்பெண்ணும் அங்கும் நுழைய முயன்றனர்.

அக்கட்டிடமே ஈஜியன் மனைவி மடத்தலைவியாக அமர்ந்து நடத்திய மடமேயாகும். இளைய அந்திபோலஸும் இளைய துரோமியோவும் அதிரியானாவில் துரத்தப்பட்டுத் தஞ்சம், தஞ்சம் எனத் தன் மடத்திற் புகுந்தபோது, அவள், அவர்கள் தன் பிள்ளையும் பணியாளுமேயாவர் என்பதை அறியாதவளாய்த் தன் இயற்கை இரக்க மனப்பான்மையினால் அவர்களுக்குத் துணை தர முன்வந்தாள்.

அதிரியானவும் அவள் பணிப்பெண்ணும் தம் கணவர் பித்துக் கொண்டவராதலால், அவரைத் தம்மிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டனர். ஆனால், மடத்தலைவியான ஈஜியன் மனைவி, “அவர்கள் அறிவிழிந்து பித்துக் கொண்டால், நீங்கள் அமைதி இழந்து பித்துக் கொண்டிருக்கிறீர்கள்; அவர்களை ஆதரிக்கும் நிலை உங்களுக்கில்லை. நானே அவர்களை ஆதரித்து உங்களிடம் ஒப்புவிக்கிறேன்” என்று கூறிவிட்டாள்.

மேலும், அதிரியானா தன் கணவனிடம் மட்டற்ற பற்றுக் கொண்டவளாயினும், அதன் காரணமாகப் பொறுமையும் நல்லுணர்வும் இழந்து, அவன் மீது ஐயங்கொண்டு அவனுக்கு ஓயாத தொந்தரவு கொடுத்து வருவதையும் மடத்தலைவி உய்த்துணர்ந்து கொண்டாள். ஆகவே, அவள் தனது இனிய நேரிய மொழிகளால் அதிரியானவுக்கு அவள் குற்றம் தென்படும் வண்ணம் அறிவுரை நல்கினாள். அதிரியானவும் தெருட்சியுற்றுப் பொறுமையுடன் கணவன் குறிப்பறிந்து நடப்பதாக ஒத்துக் கொண்டாள். ஆயினும், மடத்தலைவி அவளை முற்றும் நம்பி அந்திபோலஸையும் துரோமியோவையும் அவளிடம் ஒப்படைக்க மனமில்லாமல் அவர்கள் அனவைரையும் நகர்த்தலைவனிடம் கொண்டு போய் நிறுத்தி அவன் மூலம் ஆவன செய்ய வேண்டுமென்று கருதினாள்.

6.முடிவு

அந்திபோலஸின் தாய் மடத்தலைவியாய் இருந்த இம்மடத்தின் முன்புறமே அந்நகரின் தூக்குமேடை அமைந்திருந்தது. மாலை வரையில் நண்பர் எவரையுங் காணாமையால் தண்டவரி செலுத்த வகையில்லாத ஈஜியனைக் காவலர் கொலைத் தண்டனைக்காக அம்மேடைக்குள் கொண்டு வந்தனர். அவனுடன், அத்தண்டனையை வேண்டா வெறுப்பாக நிறைவேற்றும் பொறுப்பை ஏற்று நகரத் தலைவனும் வந்தான்.

இதே நேரத்தில், சிறையில் வைக்கப்பட்ட மூத்த அந்திபோலஸ் தன் உயர் நிலையின் உதவியால் சிறைக் காவலனை அச்சுறுத்தி விலக்கி விட்டுத் துரோமியோவுடன் அத்தலைவன் முன் வந்து, தமக்கு நகரில் நேர்ந்த பலவகை இன்னல்களையுங் கூறி, ‘இவையனைத்தும் யாரோ எதிரிகளின் மயாமாயிருக்க வேண்டும்’ என்று மன்றாடினான். தலைவன், அஃது இன்னதென்று அறியாது குழப்பமுற்றாள்.

ஊழ்வலியால் இத்தறுவாயில், மடத்தலைவியாக ஈஜியன் மனைவி, இளைய அந்திபோலஸையும் இளைய துரோமியோவையும் அதிரியானாவுடனும் பணிப்பெண்ணுடனும் கூட்டிக் கொண்டு வந்து தன் மடத்தின் முன் நடந்தவை அனைத்தும் புகன்றாள். இதற்குள், அதிரியானாவும் அவள் பணிப்பெண்ணும் தத்தம் கணவர் உருவுடன் ஒருவருக்கிருவர் நிற்பது கண்டு எல்லையில்லா வியப்பும் விழிப்பும் அடைந்தனர். நகர்த் தலைவனும் அவர்களைக் கண்டு, “இஃதென்ன, இவர்கள் வடிவும், அதன் நிழலும் போல ஒத்து நிற்கின்றனரே; இவர்கள் இருவரோ ஒருவரோ” என மலைவுற்றான்.

அப்போது திருமடத் தலைவியின் உள்ளத்தில் ஒரு பேரொளி உண்டாயிற்று. அவள் இரு அந்திபோலஸ்களையும் வாரி எடுத்து, “ஆ, நீங்கள் என் பிள்ளைகள் அல்லிரோ” என்று அழுதாள். ஈஜியனும் தன் துயரமெல்லாம் மறந்து தானே பிள்ளைகளின் தந்தை எனக் கூறிக் கொண்டு ஓடிவந்து, அருகிருந்து இன்பக் கண்ணீர் உகுத்தான்.

மடத்தலைவி, இரு அந்திபோலஸ்களும் ஒரே உருவுடைய தம் இரு பிள்ளைகள் என்றும். உடன் இருக்கும் ஒரு துரோமியோக்களும் அங்ஙனமே பணிமாது ஒருத்தி பெற்ற இரட்டைப் பிள்ளைகள் ஆவர் என்றும் கூறி, ஈஜியன் தன்னை விட்டு நெடுநாட் பிரிந்திருந்த தன் கணவனே என்றும், தாம் பிரிந்துகூடிய இவ்வியத்தகு வரலாறு முற்றும் எடுத்துரைத்தாள்.

அதுகேட்டு அனைவரும் எல்லையிலா வியப்பும் மகிழ்ச்சியும் எய்தினர்.

இளைய அந்திபோலஸ் அதிரியானாவின் தங்கையையும், இளைய துரோமியோ அவள் பணிப்பெண்ணின் தங்கையையும் விரும்பி மணந்தனர்.

நகர்த் தலைவன் இளைய அந்திபோலஸைத் தன் கருவூலத் தலைவன் ஆக்கினான். அனைவரும் இன்புற்று வாழ்ந்து வந்தனர்.

அடிக்குறிப்புகள்
1.  Syracuse

2.  Aegeon

3.  Antipolis

4.  Dromio

5.  Ephesus

6.  Duke of Menophon

7.  Adriana