Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

ரோஜா இதழ்கள்

ராஜம் கிருஷ்ணன்


ரோஜா இதழ்கள் (சமூக நாவல்)

முதற் பதிப்பு : ஜூலை 1973

இரண்டாம் பதிப்பு : மார்ச் 1976

மூன்றாம் பதிப்பு : ஆகஸ்ட் 2001

முதற்பதிப்பின் முன்னுரை

புதிய கதை எழுதவேண்டும் என்று, நான் ஓர் குறிப்பிட்ட பொருளைச் சார்ந்த செய்திகளை அறிவதற்காக வெவ்வேறு இடங்களுக்குப் பிரயாணம் செய்திருக்கிறேன். வெவ்வேறு நிலைகளில் அதற்காகப் பல மனிதர்களைப் பரிச்சயம் செய்து கொண்டு செய்திகள் திரட்டி இருக்கிறேன். ஆதார பூர்வமான தகவல்களைப் பெற அந்தந்தப் பிராந்திய நூல் நிலையங்களுக்குச் சென்று கெஜட்டியர்களையும் பதிவேடுகளையும் மணிக்கணக்காகப் புரட்டிப் பார்த்திருக்கிறேன். இந்தப் புத்தகத்துக்காக நான் அத்தகைய முயற்சி எதையுமே மேற்கொள்ளத் தேவையிருக்கவில்லை. ஏனெனில் தமிழ்நாட்டின் அரசியல் சமுதாய வரலாற்றில் குறிப்பிடத்தக்கதோர் மாற்றம் நிகழ்ந்து வந்த ஏழெட்டு ஆண்டுக் காலப் பின்னணியில் இந்த நவீனம் உருவாயிருக்கிறது. புதிய அரசியல் சுதந்தரமும் மக்களாட்சி உரிமையும் பெற்ற நாட்டில் சுதந்தரத்துக்கு முன்பு நிலவிய ஒன்றுபட்ட சமுதாய ஒற்றுமையின் கண் இழைகளாகக் கருதப்பட்ட வேற்றுமைகளும் பூசல்களும் ஆழமான பிளவுகளாக வலுப்பெற்றதை யாரும் மறுக்க இயலாது.

பொதுவாக, பாரத நாட்டில் வருண பேதமும், மேற்குடிப் பிறப்பினன் தாழ்குடிப் பிறப்பினன் என்ற வேற்றுமையும் இருக்கும் வரையிலும் நாடு சிறந்த நாடாவதற்கு வழியில்லை என்பது நிலவி வரும் கருத்து. இந்து மதத்தைப் பொருத்தவரையிலும், ‘சிருஷ்டி’ அல்லது ‘ஆக்கல்’ என்ற நிலையே, பேதத்தைத் தோற்றுவிப்பது என்று கொள்ளற்பாலது. எல்லாம் ஒரே பாங்கை அடைவதும் அழித்தல் என்ற நிலையும் ஒன்று. எனவே, வேற்றுமை இயற்கை. வயதில் குழந்தை, இளைஞன், முதியவன் என்ற வேற்றுமையைப் போல், பாலில் ஆண்பால் பெண்பால் என்ற வேற்றுமையைப் போல், மனப் பக்குவத்திலும், அதற்கிணைய புரிகின்ற செயலிலும் உள்ள வேற்றுமையே வருண பேதமாகிறது.

எக்குடியிற் பிறந்தவன் என்பதை முன்னிட்டு ஒருவன் அந்தணன் என்பது உலக வழக்கு. ஆனால், மனப்பக்குவமும் வாழ்க்கை முறையுமே ஒருவனை அந்தணனென்று வேதாந்தம் வரையறுக்கிறது. எந்தச் சமுதாயத்திலும் எக்குடியிலும், எக்காலத்திலும் அந்தணன் தோன்றலாம். ஏனெனில் பிறப்பு உரிமையில் பொருள் எதுவுமில்லை. மனப்பக்குவமே முக்கிய மானது. வேதாந்தம் விளக்கும் அளவில் அந்தணனுக்குரிய செந்தண்மை பூண்டொழுகும் இயல்பைப் பெற்றவர்களை உலகில் காண்பது அரிது. ஆயினும், அத்தகைய நிலையை அடைய மனிதன் முயற்சி செய்யலாம்.

அந்தணன் அருளை மறந்து, பொருளைத் தேடித் தன் உலக இன்பங்களையே பெரிதென்று கருதி, மேலாம் ஞானம் பெறு வதற்கான அறிவையே வணிகச் சரக்காக்கத் தொடங்கும்போதே வீழ்ச்சியுறுகிறான். பாரதம் முழுவதிலும் இந்த நிலை இருக்கலாம். ஆனால் தமிழ் நாட்டில் இந்நிலை ஓர் வலுவான அரசியல் மாற்றத்துக்குக் காரணமாக மக்களிடையே வாழ்வில் விளைவித்த பூசல்களையும் சிக்கல்களையும் நான் என்னைச் சுற்றிய வாழ் விலேயே காண நேர்ந்திருக்கிறது. எனவே, செய்தி தேடிக் கொண்டு செல்லவேண்டிய தேவை இல்லாமலேயே இக்கதையை எழுதியுள்ளேன்.

தமிழ் இலக்கியத்தில், வாழ்க்கையின் எல்லாத் துறைகளை யும் பாதிக்கும் இந்த வேற்றுமையைக் குறிப்பிடவே ஓர் நொய்ம் மையான நிலை என் போன்ற படைப்பாளிகளுக்கு இருந்து வந்திருக்கிறது. சாதிகளும், பிரிவுகளும் நம்மிடையே முன்னெப் போதையும்விட வலுவாக நச்சுப் பொருள் வளர்க்கும் ஊனைத் தின்னும் விலங்குகளாக வளர ஊட்டம் பெற்று வருவதே இன்றைய நிலை. இதை எந்தச் சாராரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் நான் குறிப்பிடவில்லை. எனினும் இலக்கியம் வாழ்க்கையின் உண்மைகள் என்ற மூலப் பொருளினின்றும் வார்க்கப்பெறும் வார்ப்புகளாகும். குறைகளைச் சுட்டும் எண்ணத் துடன்கூட இந்நவீனத்தை நான் உருவாக்கவில்லை. சிந்திக்கச் செய்யவேண்டும் என்பதே என் நோக்கம். இச்சமுதாயத்தில் நானும் ஓர் பொறுப்பான இடம் பெற்றிருப்பதால் இதைச் சார்ந்த குற்றமும் குறையும் எனக்கும் உரியதேயாகும். தமிழ் வாசகர்கள் இந்நவீனத்தை வரவேற்பார்கள் என்றே எண்ணுகிறேன். இந்தப் படைப்பை, நல்ல முறையில் அச்சிட்டு வெளியிடும் ‘தாகம்’ பதிப்பாளருக்கு என் உளம் கனிந்த நன்றி உரித்தாகிறது.

- ராஜம் கிருஷ்ணன்

உள்ளடக்கம்

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

பகுதி 6

பகுதி 7

பகுதி 8

பகுதி 9

பகுதி 10

பகுதி 11

பகுதி 12

பகுதி 13

பகுதி 14

பகுதி 15

பகுதி 16

பகுதி 17

பகுதி 18

பகுதி 19

பகுதி 20

பகுதி 21

பகுதி 22

பகுதி 23

ஆசிரியர் குறிப்பு

ரோஜா இதழ்கள்

1

தட்டில் இன்னும் நாலைந்து கவளம் இருக்கையில் வாயிற் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்கிறது. மைத்ரேயி முற்றத்துக் குறட்டில்தானே சாப்பிட உட்கார்ந்திருக்கிறாள்? வெயில் இன்னமும் சுவரேறிப் போகவில்லை. மணி இரண்டடித்திருக்காது. அவளை அந்நேரத்தில் தேடிவந்து கதவை இடிப்பவர் யாராக இருக்குமோ?

அவசரமாக அள்ளிப்போட்டுக் கொண்டாலும் விழுங்க முடியவில்லை. அடிவயிற்றில் ஒரு உள்நாக்கு ஒட்டி, அது பழுப்பிலையாய்த் துடிப்பதுபோல் ஒரு அச்சம்.

ஒருகால் தபால்காரனோ? இந்த முகவரி யாருக்குமே தெரியாதே? கதவு தட் தட்டென்று பொறுமை குலைய ஒசைப்படுகிறது. மீதியுள்ள சோற்றோடு தட்டைச் சுவர் மறைவில் வைத்துவிட்டு பரபரப்புடன் வாளி நீரை எடுத்துக் கையைக் கழுவிக்கொள்கிறாள். பிறகு கையைத் துடைத்துக் கொண்டு கதவுத்தாழை மெள்ள நீக்குகிறாள்.

சினிமாக் காட்சிகளில் அதிர்ச்சியைக் குறிக்க ‘பாங்!’ என்று பேரோசைப் பின்னணியைத் தோற்றுவிப்பார்கள். அத்தகைய பேரோசையில் செவிகள் மூழ்கி ஊமையாகின்றன. கண்கள் நிலைக்கின்றன.

மறுகணம் மைத்ரேயி தலைகுனிய, பின்னே நகர்ந்து கொள்கிறாள். மாமா அந்த வாயிலையே அடைத்துக் கொண்டாற்போல் நிற்கிறார்.

வாரி முடித்த குடுமி, பஸ்ஸில் வந்ததனால் பிரிந்து பள பளப்பை இழந்திருக்கிறது. செவியில் பழைய நாளைய சிவப்புக் கடுக்கன் தொங்குகிறது. உளி பிடித்துச் செதுக்கினாற் போன்ற மூக்கு. தட்டுச் சுற்று வேட்டிக்குமேல் அந்தப் பருத்த உடலுக்கும் தொள தொளப்பாகத் தொய்யும் ஒரு வெள்ளைச் சட்டை. அவளுடைய பார்வை சட்டென்று மறுபடியும் நிலத்துக்கு இறங்குகிறது. அவரும் அவளை அப்படித் தலையோடு கால் பார்த்திருப்பார்.

“வாங்கோ மாமா” என்று சொல்லக்கூட நாவெழாமல் நகர்ந்து வழிகாட்டும் அவளை மறுபேச்சே எழாமல் பார்ப்பதை அவள் அறியாதவள்போல் தலைகுனிய நிற்கிறாள். எங்கோ பனங்காட்டின் நடுவே, ஊரோடு ஒட்டாமல், இப்படிக் குடும்பத்தைவிட்டு ஓடி வந்தவளுக்கென்று முளைத்தாற்போல் இருக்கும் ஓர் பாழடைந்த ஓட்டுக் குடிசை. செங்கற்தளம் மண்பறியக் கால்களில் ஒட்டுகிறது. ஆறடி ஐந்தடி ரேழியைக் கடந்தால் ஒட்டுத் தாழ்வரை முற்றம். தாழ் வரையில் குறுஞ்சுவர். பகுதி சமையலறை. பின்புறம் விரிசல் விழுந்த கிழவியின் முகத்தைப் போன்று வெயிலுக்கும் மழைக்கும் ஈடுகொடுத்துக் கீறல் விழுந்து சிதிலமான கதவு. தாழ்வரையின் ஓரத்தில் இரண்டு பாய்ச் சுருட்டுக்கள் இருக்கின்றன. ஒரு தகரப்பெட்டி. கொடியில் ஒரு வாயில் புடவை, பாவாடை, ரவிக்கை உட்கச்சு எல்லாம் காய்ந்து கொண்டிருக்கின்றன. நரிக்குறத்தியின் தலையைப்போல் பிறந்ததற்குப் பிறகு வெள்ளைக் குளி காணாத சுவரில் ஒரு எட்டணாக் கண்ணாடி தொங்குகிறது. முக்கோணப் புரையில் ஒரு குடிகூராப் பவுடர். ஹாஸ்லைன் ஸ்னோ சீப்பு வகையறா தெரிகின்றன. அட்டையில்லாத தொடர்கதைப் பகுதிகள் போல் ஐந்தாறு புத்தக அடுக்கு பெட்டிக்குப் பக்கத்தில் அவளுடைய பொழுதுபோக்கை விளக்குகின்றன. முற்றத்து வாளி புதியது. தகரடப்பாக் குவளை.

முற்றத்துத் துணோடு சாய்ந்தாற்போல் அவள் நிற்கிறாள்.

“... ம் ... இப்படியாய்ப் போச்சா?” அவரை உட்காருங்கள் என்று சொல்ல அவளுக்கு நா எழவில்லை.

இவர் எப்படி இங்கே தேடிக்கொண்டு வந்தார்? எதற்கு வந்தார்? ஒரு பூ அடுக்கிலிருந்து ஓர் இதழ் விடுபட்டு வந்தபின் அங்கே போய் மறுபடி உறவு கொண்டாடிக்கொள்ள என்ன இருக்கிறது?

“அவன் எப்ப வருவான் ?”

இந்தக் கேள்வியில் அவளுக்குத் துயரம் துருத்திக் கொண்டு எழும்புகிறது. தலை நிமிராமலே நிலத்தில் கோலமிடுகிறாள்.

“ஏம்மா, என்ன வெட்கம் இப்ப? நடந்தது நடந்தாச்சு. எப்படியோ நீ சந்தோஷமா இருக்கேன்னா சரிதான்.”

தரையில் இரண்டு முத்துக்கள் சிந்திவிடுகின்றன. “ஏம்மா?

“அடாடா எதுக்கு அழறே?”

நன்றாகப் பார்க்க முடியாதபடி, ஆனால் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லாதபடி அவ்வளவு அருகாமையில் அவர் வந்து நிற்கிறார். வைகாசி மாசத்து வெயில் திடீரென்று இருள, ஊமைப் புழுக்கமாய் உருக்குகிறது.

“நான் அழலியே ?”

“கோர்ட்டு காரியமா வந்தேன். இப்படீன்னு தஞ்சவூர்ல சுமதி கதை கதையாச் சொன்னாள். நான் மாம்பாக்கம் போகலே. நேரே இங்கேதான் வந்தேன். இப்ப என்ன குடி முழுகிப் போச்சு? என்ன குடி முழுகிப் போச்சுன்னு கேட்டேன். ஏம்மா, நான் கேட்டது சரிதானே ?”

அழுகைதான் அடக்கமுடியாமல் வருகிறது. என்ன சொல்வது?

“எனக்கு இதில் சந்தோஷம்தான். அவ உங்களுக்கெல்லாம் துரோகம் பண்ணிருக்கா. நீயே நினைச்சுப்பாரு? அந்த வீடு உங்கப்பா வெள்ளைக்காரன் கம்பெனியில் இருந்த நாளில் அந்தப்பாணியில் கட்டினது. தோப்பு, வயல், மிஷின் வச்ச துறவுக் கிணறு, எல்லாமா, எங்கக்காக்கு வாழக் குடுத்து வைக்கலே. ஆனால் அவள் வயித்துப் பெண்ணே மத்ததுகளுக்கு வஞ்சகம் பண்ணும்னு நான் நினைக்கலே, சுமதிய முந்தா நாள் கூடத் தஞ்சாவூரில் பாக்கறச்சே நினைச் சிண்டேன். கழுத்து மட்டு சம்சாரம். பிடுங்கல். முக்கிமுக்கி நாத்தம்பது ரூபாய் வராத ஒரு வாத்தியார் வேலை அவனுக்கு. அஞ்சு குழந்தைகள். சாப்பாட்டுக்கே வராத தரித்திரம். ரஞ்சிக்கு மட்டும் என்ன? இளையாளைப் போல வயசு வித்தியாசத்தில் கொண்டுக் கட்டியிருக்கா. மூணு குழந்தையாச்சு, அவனுக்கும் மட்டுச் சம்பளம். பெங்களூரில் ரேஸ், தண்ணி எல்லாம் இருக்கு. நீங்களெல்லாரும் அழகில் குறைச்சலா, புத்திசாலித்தனம்தான் குறைச்சலா?... எச்சுமு கூடச் சொல்லுவா. சிவப்புன்னா சிலது சந்தனக் குழம்பா இருக்கும். சிலது எலுமிச்சை மஞ்சளா இருக்கும். ரோஜா, சந்தனம், எலுமிச்சை எல்லாம் கலந்த ஒண்ணும் தூக்காத கலர் மைத்ரேயிக்குன்னு. உங்கப்பாவின் நிமிர்ந்த களை உனக்குத்தான் அப்படியே வந்திருக்கு. இப்ப என்ன குறைஞ்சு போச்சு?...” மாமா ஒரு மூச்சு பேசி முடித்து விட்டு ஒரு நிதானத்துக்கு வருகிறார்.

மெல்லிய புன்னகை இதழ்களில் விளையாடுகிறது.

“இப்ப எங்கே, எந்தப் படத்துக்குப் பாட்டெழுதறார்மா ?”

“இப்ப ஒண்ணும் எழுதலே. ஆனா சான்ஸ் உடனேயே வரும்னார்...” இப்போதும் அவளுக்குத் தலைநிமிர்ந்து சொல்லக் கூச்சம் தெளியவில்லை.

“இந்தக் காலத்தில் சினிமால லைட்பாய்னாக்கூட மதிப்பாத்தான் இருக்கு. கவிஞன். யாரு கண்டா? உன்னை அடுத்த தடவை பங்களா கார்னு பார்ப்பேனாக இருக்கும்.”

அவளுக்கு முகம் சிவக்கிறது. “நின்னுண்டே பேசறேளே மாமா, உக்காருங்கோ...”

சருகுகளெல்லாம் பஞ்சுப் பிசிறுகளாக எழும்பிச் செல்கின்றன. உணர்ச்சிகள் இலேசாகின்றன.

“நீங்க எப்ப புறப்பட்டு எப்படி இங்கே கண்டு பிடிச்சிண்டு வந்தேள் மாமா ?”

“சைதாப்பேட்டையில் போயி வக்கீலைப் பார்த்தேன். நேசமுடையாரை நெஞ்சில் நினைச்சாலே நேரில் பார்க்கலாம்னு சொல்லுவா. அப்படித்தான் ஆச்சு. வக்கீல் வீட்டில சோஷியல் வொர்க்கர் லோகநாயகி அம்மா வந்திருந்தா. அவ ஏதோ அநாதாசிரமத்துக் கேசு விஷயமாகத்தான் பேசினா. சினிமான்னு ஆசைப்பட்டு வெளியூர்லேந்து கபடு தெரியாத பெண்கள் ஓடிவந்து ஏமாந்து போறதுன்னெல்லாம் சொல்லிண்டிருக்கச்சே, வக்கீல் சொன்னார். இப்படி இந்தப் பக்கம் கூட சினிமாக்குப் பாட்டெழுதும் ஒருத்தன் ஒரு பிராமணப் பெண்ணைக் கலியாணம் பண்ணிண்டிருக்கிறான்னு. எனக்கு சுருக்குனு தச்சுது. விசாரிச்சுண்டு பஸ்ஸைப் பிடிச்சு வந்தேன். அவன் காலம்பரவே போயிடுவனா?”

“இல்லே, இன்னிக்கு புதுப்படம் விஷயமா யாரோ வரச்சொல்லியிருக்கார்னு காலமே போயிட்டார்.”

“கவியெல்லாம் ஒரு கிஃப்ட், நீ இப்படித் துணிஞ்சு கல்யாணம் செஞ்சிண்டிருக்காத போனா, அவ இன்னும் எங்கியானும் லேவடியாக் கொண்டு தள்ளிருப்ப. சாதி சனம் என்ன வேண்டியிருக்கு, ஒண்ணு வாழ்ந்தா ஒண்ணு பொறுக்கல. இவன், ஏம்மா முதலியாரோ, பிள்ளையோ?”

“அதெல்லாம் சொல்லிக்கிறதில்லே. இருங்கோ மாமா, இத வந்துட்டேன்....” என்று சமையலறை மறைவுக்கு வருகிறாள். மாமாவுக்குக் காபி போட்டுக் கொடுத்து உபசரிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. பண்ணை வீட்டில் ‘காரியம்’ பார்க்கும் மாமாவின் வீட்டில் பசுவும் எருமையும் கலந்து புதிய பாலில் காபி போடுவார்கள். இந்தப் புதிய மணவாழ்வில் வெறும் அன்பையே காபி, டிபன் உல்லாசங்கள் என்று எண்ணி இருக்கவேண்டிய நிலையில் உபசரிப்பு ஆசையை எப்படி நிறைவேற்றப் போகிறாள்? பிறந்து வளர்ந்த குடும்பத்திலிருந்து கத்திரிக்கோலினால் வெட்டி எறிந்தாற் போன்று துண்டாடப்பட்டு அவள் வந்த பிறகு, சிறகெல்லாம் ஒடிந்த நிலையில் உறவின் இன்ப ஈரங்களெல்லாம் வற்றிக் கிடக்கும் நிலையில் அபூர்வமாக ஒரு ஈரம் பொசியும் ஊற்றுக் கண்ணாய், உறவுக்கு உயிர் கொடுக்க வந்திருக்கும் தாய் மாமன். அவருக்கு இனிப்பும் காரமும் காபியும் கொடுத்து

“சித்த இருங்கோ மாமா, பால் கறந்திருப்பா தோட்டத்தில், வாங்கிண்டு வந்துடறேன்.”

அவர் முகத்தையே பார்க்காமல் கூறிவிட்டு அவள் பின் கதவைத் திறந்துகொண்டு வெளியே வருகிறாள்.

பசுமையே அற்றுப் போனாற்போன்ற நெட்டைப் பனை மரங்கள்; குட்டிச்சுவர்கள்; குற்றிச் செடிகளுக்கு இடையே பாம்பு இருக்குமோ, கரையான்கள்தாமோ என்று விளங்காத புற்றுகள்.

‘ஓ’வென்று நெஞ்சு துயரத்தைப் பிழிகிறது.

உடனே “சீ என்ன அசட்டுத்தனம்?” என்று கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.

கிந்த வீட்டைவிட்டு மாலை நேரங்களில் சினிமாவுக்கோ, கடைவீதிக்கோ என்றேனும் சென்றபோதும்கூட அவனுடன் தான் சென்றிருக்கிறாள். மாம்பாக்கத்தையும், இந்தச் சாவடிக்குப்பத்தையும் பட்டணத்திலிருந்துவரும் நேர்ச் சாலை இணைக்காது போனாலும், இரண்டும் கண்டம்விட்டு கண்டம் அல்லவே? அவளுக்கு வெளியே இறங்கவே கூச்சம் போகவில்லை. அருகில் உள்ள மொட்டைக் கிணற்றிலிருந்து அதிகாலையிலே நீர் கொண்டு வந்துவிடுவாள். எத்தனையோ நாட்களில் அவன் காலையில் வெளியே சென்று, இரவு எட்டுக்கும் எட்டரைக்கும் வந்திருக்கிறான். பகல் முழுவதும் சடேரென்று ஒரு தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டுத் திருப்பம் கண்ட வாழ்வின் புரியாத எதிர்காலத்தை எண்ணிக் கோலங்களை இட்டு இட்டுக் கலைப்பதும், படித்த குப்பைகளையே படிப்பதுமாக ஓர் இருண்ட சிறைக்குள் காலம் கழித்திருக்கிறாளே ஒழிய, கதவைத் திறந்து பார்த்ததில்லை. சற்று அப்பாலுள்ள பள்ளிக்கூடத்துப் பையன்களின் கலகலப்புக் கேட்கும். சில போக்கிரிப் பையன்கள் முற்றத்தில் ஓட்டில் வந்து விழக் கல்லெறிந்ததுகூட உண்டு.

வெளியே நின்று சுற்றுமுற்றும் பார்த்து விழிக்கிறாள் மைத்ரேயி, மாமா உள்ளே உட்கார்ந்திருக்கிறாரே? ஐயோ!

கையிலே நாலணாக்காசு கிடையாது, ரவை இல்லை. சர்க்கரை இல்லை. நெய், முந்திரிப்பருப்பு ஒன்றுமில்லை; சொஜ்ஜி கிளறும் ஆசைதான் அவலமாய் நிற்கிறது.

இந்திரா கபேயில் ஒரு ஸ்வீட், காரம் காப்பி கிடைக்கும். வாங்கிவந்து மாமாவை உபசரிக்கலாம்.

ஆனால் அந்தக் கடையில் ஏற்கெனவே அவர்கள் கணக்கில் பதிநான்கு ரூபாய் கடன் நிற்கிறது. வீட்டில் இருப்பதைக் கொண்டு என்ன செய்யலாம்? அரைப்படி அரிசி, கடுகு, வெந்தயம், ஒரு புளிக்குழம்பு செய்யும் அற்பப் பொருள்கள். காயும் பருப்பும் சேர்ந்து நல்ல சமையல் செய்து நான்கு நாட்களாகின்றன.

இடை இடையே மாமா உள்ளே உட்கார்ந்திருக்கும் உணர்வு பளீர்பளீரென்று மின் அதிர்ச்சி கொடுப்பதுபோல் உறைக்க, அவள் பெரியசாலையை நோக்கி நடக்கிறாள்.

பெரிய சாலையில் பச்சைக்கண்ணாடிகளும் படாடோபமான திரைகளுமாக விளங்கும் ஓட்டல் இந்திராகபே தான், ஒரு பெரிய நகரை அடுத்த இரண்டுங்கெட்டான் ஊர்க் கடைவீதிக்கே உரித்தான மூன்றாந்தர ஓட்டல். அந்தப் பச்சையும் நீலமுமான திரைகள் தொங்கும் மாடியறையில் தான் அவர்கள் முதலிரவையும் பின்னும் சில இரவுகளையும் அனுபவித்தார்கள். பொழுது விடியாத, உறக்கம் தெளியாத, கனவு கலையாத மயக்கத்துக்கு அது சுவர்க்கத்து அனுபவமாக இருந்தது; பெரிய சாதனையைச் சாதித்த பெருமிதமாக இருந்தது; குன்றேறி நின்ற கர்வத்தை முகத்திலும் உடலிலும் பூசியது. இப்போது.

பிற்பகல், கெடுபிடியில்லாத நேரம். சருகு இலைகளில் சாப்பிடும் இரண்டு கிராமத்தார்களைத் தவிரக் கூட்டம் இல்லை. முன்சீப் கோர்ட்டுக்கு வந்த கும்பல் ஒன்று உரத்துப் பேசிக்கொண்டு தோசைக்காகக் காத்திருக்கிறது.

முதலாளி சிவந்த நிறமுடைய இளைஞன்தான். ஆனாலும் உட்கார்ந்து ஊட்டம் பெற்ற தொந்தியும் சிலும்பிக் கொண்டு நிற்கும் கிராப்பும், வெண்பட்டையில் பளிச்சிடும் குங்குமமும் பட்டாகச் சிவந்த வெற்றிலை உதடுகளும் வயசை நடுத்தரத்துக்குக் கொண்டு போயிருக்கின்றன. அவளும் அவனுமாக எதிர்ப்பட்டால் சிரித்து உபசாரம் செய்வான். இந்த ஓட்டல்காரன், தான் பிறந்த குலத்தில் பிறந்திருக்கிறான் என்ற உணர்வு அவளுள் உறுத்த, நாணமும் குற்ற உணர்வும் அவனை நிமிர்ந்து பார்க்க இயலாமல் தடுத்திருக்கின்றன.

முதன்முதலாக அந்த ஓட்டல் படியேறி வந்தது அவளுக்கு நன்றாக நினைவிருக்கிறது. எதிரே இருந்த கண்ணாடியில் இருவர் உருவங்களும் தெரிந்தன. அவன் கறுப்பு. ஆனால் முடி அழகாகச் சுருண்டு சுருண்டு முன் நெற்றியில் விழும். ராட்சஸ வாளிப்பு இல்லை. அவளுடைய உயரம் தான். ஆனால் அவன் சிரித்தபோது, முதன் முதலாக அவளை விழுங்கிவிடும் நோக்கில் பார்த்தபோது.

“அடாடா... என்னம்மா, தனியா...? யாரிட்டானும் சொல்லி அனுப்பினால் பையங்கிட்டக் குடுத்து அனுப்ப மாட்டேனா ?”

“இல்லீங்க. (அவள் இப்போதெல்லாம் பேச்சுப் பழக்கத்தில்கூட சாதி தெரியக்கூடாது என்று மறைக்கிறாள்) யாருமில்ல. திடீர்னு ஒரு சிநேகிதி பார்க்க வந்திருக்கா. ரெண்டு ஸ்வீட், மிக்ஸ்சர் பொட்டலம், காப்பி...”

“ஓ, அதுக்கென்ன, நான் பையன்கிட்ட அனுப்பி வைக்கிறேன். பையா...?” என்று மணியை அடிக்கிறான்.

ஓர் அழுக்குச் சராய்ப்பையன் வந்து நிற்கிறான்.

“ஸ்வீட் என்ன வேணும்? ஜாங்கிரி இருக்கு; ரவா லாடு இருக்கு...”

“ஜாங்கிரியே இருக்கட்டுமே? கணக்கில் எழுதிக்குங்க..”

மென்மையான உணர்வில் ஆயிரம் ஊசிகள் தைக்கின்றன.

“ரெண்டு ஜாங்கிரி, மிக்ஸ்சர் பொட்டலம், ரெண்டு ஸ்பெஷல் காப்பி எடுத்திட்டுபோ...”

அவனை ஏறிட்டுப் பார்க்க இயலாமல், நன்றி என்றுகூடச் சொல்லக் கூனிக் குறுகி, அவள் திரும்புகிறாள். “இந்த பொண்ணு, பிராமணப் பொண்ணு. இப்படி ஒரு சேர்க்கையுடன் வந்து...” என்று நினைப்பானோ என்று இன்று தான் தோன்றுகிறது. பின்னே நெடுஞ்சாலையில் ஒட்டல் பையன் காப்பித் தம்ளர் பொட்டலங்களுடன் புள்ளி போல் தொடருகிறான். வீடு திரும்புமுன் பொட்டலங்களையும் காப்பிக் கிளாசுகளையும் தன் கையில் வாங்கிக் கொண்டு பின் புறமாகவே கதவைத் தள்ளிக்கொண்டு நுழைகிறாள். மாமா அடுக்குத் தொடர் கதையில் ஒன்றைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவள் விருவிரென்று குறுஞ் சுவருக்குப் பின் புகுந்து காப்பியைத் தன் டம்ளர்களில் கொட்டிக் கொண்டு, ஒட்டல் பையனிடம் அந்த டம்ளர் களைக் கொடுத்து அனுப்புகிறாள். ஜாங்கிரி புதிதல்ல. ஒன்றில் கொஞ்சம் கிள்ளி வாயில் போட்டுக்கொள்கிறாள். மிக்ஸ்சருக்குப் பதிலாகப் பகோடா வாங்கியிருக்கலாமோ? ஆனால் ஏகாதசி அமாவாசை ஏதேனுமாக இருந்தால் மாமா வெங்காயம் சாப்பிடமாட்டார். கொண்டு வைக்கத் தட்டு இல்லை. சோற்று வட்டையில் மூடும் அலுமினியத் தட்டில் அவற்றை வைத்துக் கொண்டு வருகிறாள்.

“அடேடே, என்னத்துக்கம்மா இதெல்லாம், நீயே ஓட்டல்ல வாங்கிண்டு.”

“பரவாயில்ல மாமா, பாலுக்குப் போனேன். கறக்கிறவ னில்லையாம். அப்படியே நாலெட்டு போய் வாங்கி வந்திட்டேன். முத முதல்ல நீங்க வந்திருக்கேள் மாமா.”

“அசடு, இப்ப எதுக்கு, கண்கலங்கறே? முதல்ல அப்படித் தான் இருக்கும். பின்னே தானே வந்து சொந்தம் கொண்டாடறாளா இல்லையா, பாரு! இவாளைவிட, அக்னி ஹோத்ரம் பண்ணினவா குடும்பங்களிலெல்லாம் பிள்ளைகள் சீமையில் போய் எந்தக் கழிசடையையேனும் சம்பந்தம் பண்ணிண்டு வந்து, சொத்துக் கிடையாது, பத்துக் கிடையா துன்னு குதிச்சவாள்ளாம் இப்ப கொஞ்சிக் குலாவறா. அந்தக் கருமம், பொண்ணாப் பிறந்தது, சமையலுள்ள வந்து சிகரெட்டை ஊதறது. இவா விழுந்து விழுந்து உபசாரம் பண்றா...!”

“உங்க பண்ணை வீட்டிலா, மாமா ?”

“எல்லாம் இந்தக் கண்ணால எத்தனையோ பார்த்தாச்சு. பிராமண ஜாதியிலே பிராமணத்துவம் எங்கே இருக்கு? பணத்துக்காக எல்லா ஆசாரத்தையும் விட்டவாதான் அதிகம். நீ எதுக்கு அழறே, அசடு?”

“அழலே மாமா, நீங்க வந்தது எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு. நெஞ்சம் தழுதழுத்துக் குழம்புகிறாள். “மாமா, உங்களை நமஸ்காரம் பண்ண மறந்துட்டேனே ? அப்படியே நில்லுங்கோ...” என்று விழுந்து பணிகிறாள்.

“தீர்க்க சுமங்கலியா, அமோகமா வாழ்ந்திண்டிரம்மா. ரெண்டு பேரான்னா பண்ணனும் ?”

தடைபட்ட நீர் கரகரவென்று கன்னங்களை நனைக்கிறது.

“காப்பி ஆறிப்போறது. சாப்பிடுங்கோ மாமா.”

“இந்தா, நீ சாப்பிடு.”

“எனக்கு இருக்கு மாமா, இப்பத்தான் நான் சாதமே சாப்பிட்டேன். இங்கே இருப்பு நிலையில்லே. கோயமுத்துரர் ஸ்டுடியோவில் புதுப் படத்துக்குப் பாட்டு எழுதப் போறதா இருக்கார். அதனால, இப்படி சாமான் சட்டெல்லாம் இல்லாம இருக்கோம்.”

“அதுக்கென்னம்மா? ஓட்டல்ல வாங்கிச் சாப்பிட்டுட்டு ஹாயா இருக்கற காலம்தானே இப்ப?...” என்று சிரிக்கிறார். ஜாங்கிரியையும் மிக்ஸ்சரையும் மாறி மாறி ரசித்துச் சாப்பிடுகிறார்.

“மாமி செளக்கியமா, மாமா ? சுந்து எப்படி இருக்கிறான்? பிரேமா இந்த வருஷம் எஸ்.எஸ்.எல்.ஸியா?”

“எங்கே? போன வருஷம் பரிட்சை சமயத்திலே டைபாயிடாப் படுத்துண்டு தங்கிட்டாளே? உன் மாமிக்குத் தான் ப்ளட்பிரஷர். மட்றாஸ்-க்கு வந்து வைத்தியம் பண்ணிக்கணும்னு சொல்லிண்டிருக்கா. அடுத்த மாசம் மறுபடியும் கோர்ட்டுக் காரியமா வரச்சே அவளையும் கூட்டிண்டு வந்து ஸ்பெஷலிஸ்ட் கிட்ட காட்டணும்.”

அந்தக் கணத்தில் மாமியை அழைத்துவந்து விடுவாரோ என்ற திகில் கவ்வுகிறது. “அதான். இன்னிக்கே ஒரு கால் கிளம்பவேண்டி இருந்தாலும் இருக்கும்னு சொல்லிட்டுத்தான் போனார்..” என்று முன்னணை போட்டு வைக்கிறாள்.

“ஏதோ இருக்கட்டும். நீதான் அமோகமாக இருக்கப் போறே...” என்று சொல்லிக் கொண்டே மாமா எழுந்து சென்று வாளி நீரில் கை கழுவிக்கொண்டு காப்பி குடிக்கிறார். பிறகு மடியிலிருந்து வெற்றிலை பாக்கு சீவல் டப்பாவை எடுத்து வெற்றிலை போட்டுக் கொள்கிறார்.

அவளுக்கு, அவர் எழுந்து போகவேண்டுமே என்று இருக்கிறது. தான் உட்காராமலேயே நிற்கிறாள்.

“அப்ப உங்கக்கா, உனக்கு ஒண்ணுமே கொடுக்கலியா?”

கொடுப்பதா? அக்கா என்ன கொடுத்தாள் அவளுக்கு? புடவைத் தலைப்பைக் கைவிரலில் முறுக்கிக்கொண்டு குற்றவாளியாக நின்ற அவளுக்கு என்ன கொடுத்தாள் அக்கா? அவள் காலடியில் அவளுடைய இரண்டு பாவாடை தாவணி, புடவை ஒன்றும் கொண்ட துணி மூட்டை வந்து விழுந்தது.

வாயிற்படியில் கனலை உமிழும் துர்க்கையாக அக்கா கனகம் நின்றாள்.

“எங்கே வேணாப் போய்ச் சந்தி சிரி. வீட்டுப்படி ஏறக் கூடாது இனிமே!”

துணிமூட்டையை எடுத்துச் சென்று மரத்தடியில் நின்று பிரித்துப் பார்த்தாள். அவளுடைய பழைய பாவாடைகள். புதிய ‘பிங்க்’சோலியும் ஜார்ஜெட் புடவையும் எங்கே?

திரும்பி வந்து அவள் அதைக் கேட்டாள்.

“ஜார்ஜெட் புடவையா? போய்க் கட்டிக்கப் போறியே, அந்த நல்லாம்டயானை வாங்கித்தரச் சொல்லு!” என்று சீறினாள். அந்த மூட்டையை அப்படியே கொண்டு நடக்க அவளுக்கு வெட்கமாக இருந்தது. மிகப் பழைய பாவாடை தாவணியைப் போட்டுவிட்டு சேலையையும் உள்பாவாடை ரவிக்கைகளையும் மட்டும் மடித்துச் சுருட்டிக்கொண்டு அந்த வாயிலைக் கடந்து வந்தாள்.

“ஒண்ணுமே தரலே? உங்கம்மாவின் சங்கிலியில் உனக்கு ஒத்தவரியும் ஒரு ஜோடி வளையலும் இருக்குமே? பட்டுப் புடவையில் இரண்டுகூட உன் பங்குக்கு வரணுமேடி? அப்புறம் வயிரத்தோட்டில் பிரிச்ச கல்லு? காது மூக்கு மூளியா, கையில் கழுத்தில், ஒண்ணுமில்லாம, வெறும் கருமணி மாலையும் கண்ணாடி வளையலுமா நிக்கிறியே?”

“அதெல்லாம் எதுக்கு மாமா இப்ப? நீங்க சித்தமுன்ன சொன்னாப்போல, எனக்கு நல்ல காலம் வரச்சே, நானே எல்லாம் வாங்கிப் போட்டுக்கறேன்.”

“அதுக்காக? கல்யாணம்னு பண்ணிக் குடுத்தா உன் பங்குக்குப் பத்தாயிரம் செலவழிக்க வேண்டாமா?”

“...”

“அதை நீ கேக்கலியா?”

“அதைக் கேட்க எனக்கு வாயில்லையே மாமா ?”

“அடி அசடு ? உங்கப்பா, கட்டின பெண்டாட்டியையும் பெண் குழந்தைகளையும் விட்டுட்டுக் கடைசி காலத்திலே எவளையோ புடிச்சிண்டு ரெண்டு லட்சம் ஆஸ்தியையும் அவளுக்குத் தாரை வார்த்துட்டுப் போனப்ப, கம்பெனி டைரக்டரெல்லாம் சேர்ந்து இரக்கப்பட்டு அஞ்சும் பத்துமா அறியாமல் நின்ன உங்க மூணுபேருக்கு மட்டும் ஆளுக்குப் பத்தாயிரம் ரூபாய் கல்யாணத்துக்குன்னு கொடுத்தாளே, அதை நீ கேட்க வேண்டாமா?”

மைத்ரேயிக்கு இது கேட்காத புதுமையாக இருக்கிறது. அவளுக்குத் தாயாகும் வயசுக்கு மூத்த அக்கா, அம்மையையும் அப்பனையும் துடைத்து வாயில் போட்டுக் கொண்டதற்காக அவளைத் திட்டிக் கொட்டித்தான் அறிந்திருக்கிறாள்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது, மாமா...”

“தெரியாதா? அவா ரெண்டுபேருக்கும்தான் அந்தப் பணத்தைச் செலவழிச்சு நல்ல இடமாகப் பார்க்காமல் வஞ்சகம் செய்தாள். உன்பங்கு முழுசுமே விட்டுவிடுவதா? அடி அசடு! உன்னோட அவன் கிட்டச்சொல்லி கேஸ் போடச் சொல்லு!...”

“சரி, மாமா...”

“கூடப் பிறந்த பிறப்புக்கே துரோகம் செய்யத் தோணுமா? நான் அன்னிக்கே உங்களை எல்லாம் இவகிட்ட காட்டிக் குடுக்காம கூட்டிண்டு போயிருப்பேன். எங்கிட்ட வந்திருந்தா இப்படி எல்லாமா நேரும்? ஒருத்தொருத்தியையும் டாக்டர்னும் இன்ஜினியர்னும் கட்டிக் குடுத்திருக்க மாட்டேனா அம்மாவும் அப்பாவும் போனாலும், இப்படி ஒரு துரதிர்ஷ்டம் அக்கா ரூபத்திலே வருமா? அந்தக் காலத்தில் முதல்ல இவளை அத்தை பிள்ளைக்கே குடுத்து, கொஞ்சச் சீராகவா செஞ்சா? உன் அத்தை பெரிய லங்கிணி. உன் அப்பா கைநிறைய தங்கமாச் சம்பாதிச்ச காலம் எனக்குத் தெரியும். அத்தனையும் அவதான் அமுக்கிண்டா...” இதெல்லாம் மைத்ரேயிக்கு இப்போது கேட்கப் பிடிக்கவில்லை.

“போனால் போகட்டுமே, மாமா. அக்காதானே ? அவளுக்கு எங்களை விட்டால் வேறு யாரிருக்கா? குழந்தை கூட இல்லையே?”

“இவளுக்கு இல்லாட்டா என்ன? அந்த டில்லிக்காரன் வாரிசெல்லாம் கொண்டுபோகும். அவா வந்து குலாவலியா ?”

“போயிட்டுப் போறா மாமா, எனக்கு அவாளாக் கொடுக்காதது வேண்டாமே?”

அவர் அங்கிருந்து எழுந்துபோனால் போதும் என்றிருக்கிறது.

“இப்படி எதுக்கு விடணும்? நீ கடைசி. எதோ வயதுக் கோளாறு. நடந்திடுத்துன்னு பார்க்காமல் அடிச்சு விரட்டியிருக்கா. உன் பங்கை ஏன் விடணும்? கேஸ் போடச் சொல்லு!”

“சரி, சொல்றேன் மாமா...”

“நானே, வந்தான்னா இருந்து சொல்லிட்டுப் போவேன்.”

“நானே சொல்லிடறேன் மாமா...”

காற்றுக்குச் சறுகிலைகள் விர்ரென்று சுழலுவதுபோல் மனசுக்குள் தோன்றுகிறது. பொடிப்பொடியாக நொறுங்க, தென்னந் துடைப்பத்தின் சந்துகளிடையே சேர்ந்து குப்பை ஷயாய் குவிந்து ஒதுங்கும் தோற்றம்.

ஏணிப்படிச் சருகிலேயே காட்சிகளில் தெரிகின்றன?

அவன் புதிய படக் கம்பெனியில் பாட்டெழுதி, நூறும் ஆயிரமுமாகச் செக்குகளாகவே கொண்டுவர, காரில் ஊட்டிக்கும் கொடைக்கானலுக்கும் பறக்க, பட்டும் வயிரமும் பச்சையும் மேனியில் மினுமினுக்க, அறுசுவை உண்டியுடன் பாலும் பழமும் உண்டு குளுமையாகச் சிரிக்க... ஏன் அத்தகைய கற்பனைகள் தோன்றவில்லை?

“அப்ப. நான் வரட்டுமாம்மா ? நாலு மணிக்குப் பஸ்ன்னான்...” எங்கே என்றுகூட அவள் கேட்காமல் “சரி மாமா..” என்று விடை கொடுக்கிறாள்.

“மாம்பாக்கம் போகலாமா, நேரே ராத்திரி போட்மெயிலுக்குப் போயிடலாமான்னு பார்க்கறேன். அப்ப, கோயமுத்துார் போனதும் கடிதாசி போடறியா?”

“சரி, மாமா..”

“அட்ரஸ் தெரியுமோல்லியோ?”

மாமா சிரித்துக்கொண்டு கேட்கிறார். “தெரியும் தெரியும்..” என்று தலையை ஆட்டிவிட்டு அவருக்கு விடை கொடுக்கிறாள்.

2

அவள் கதவைச் சாத்துமுன் குறுகுறுத்த விழிகளுடன் லட்சுமி சிரித்துக்கொண்டு வருகிறாள். கையில் ஒரு பூவரசங் குச்சி. உருவோ வண்ணமோ தெரியாததொரு பாவாடை. வெற்று மேனி. எண்ணெய் காணாத முடியில் எப்போதோ போட்ட பின்னல். மூக்கிலே பொட்டுப்போல் ஒரு சிவப்பு மூக்குத்தி. பத்து வயசுக்கு மேலிருக்காது. பகல் நேரத்தில் அந்த இடத்தில் இரண்டாடுகளை மேய்த்துக் கொண்டு வரும் அச்சிறுமிதான் மைத்ரேயியின் தனிமையைப் போக்கும் சிநேகிதை. அவள் மைத்ரேயியை நட்புக் கொள்ள வந்தது இப்படித்தான். கொல்லை வாயிற்படியைப் பூவரசங் குச்சியினால் தட்டிக்கொண்டு நின்றாள்

“கொஞ்சம் தண்ணி வுடுறீம்களா? தாகமாயிருக்கு” தனிமையோடு புழுங்கிக்கொண்டிருந்த மைத்ரேயிக்கு அந்தக் குழந்தை முகத்தைக் கண்டதுமே மகிழ்ச்சியாக இருந்தது. கண்ணாடித் தம்ளரில் தண்ணீரை முகர்ந்துகொண்டு வந்தாள்.

“இந்தா...”

வாயருகில் கைகளை வைத்துக்கொண்டு குனிந்தாள் சிறுமி.

“எனக்கு விடத்தெரியாது. நீ வாங்கிக் குடியேன்”

“நான் தொடலாங்களா?”

“தொடலாம்...”

தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டு அவள் தம்ளரைக் கல்லில் கவிழ்த்து வைத்தாள்.

“உன் பேரென்ன?”

“லட்சுமி...”

பிறகு அவள் கரண்டாபீசுக்குப் பின்னிருக்கும் சேரிக் குப்பத்திலிருந்து ஆடு மேய்க்க வருவதாகவும், அவளுடைய அண்ணன் தோல் கிடங்கில் வேலை செய்வதாகவும் குடும்ப விவாங்களைக் கூறினாள். லட்சுமி இரண்டாம் வகுப்புக்குப் போகுமுன்னே படிப்பை நிறுத்திவிட்டாள். அவளுக்கு இரண்டு அக்காள்மாரும் ஒரு தம்பியும் இருக்கின்றனர். ஒரு அக்கா மட்டும் எப்போதேனும் வயல் வேலைக்குப் போகிறாள். காலையில் நீராகாரம் குடித்துவிட்டு அவள் ஆடு மேய்க்க வருகிறாள். மாலையில் பெரியக்காள்தான் சோறாக்குவாள். கடலை உருண்டை வாங்கித் தின்ன அண்ணன் சம்பளம் வரும் நாளில் காசு கொடுப்பான். அம்மாவுக்குச் சீக்கு.

லட்சுமி இப்போது சிரித்துக்கொண்டு, “உங்க மாமனா அவுரு?” என்று கேட்கிறாள்.

“ஆமாம்... எப்படிக் கண்டுபிடிச்சே?”

“எனக்குத் தெரியும், தெரியும்...” என்று முகத்தில் குறும்பு மின்னத் தலையாட்டும் லட்சுமி, “உன்னைப் போலவே செழுப்பா இருக்கிறாரக்கா...” என்று கருத்துத் தெரிவிக்கிறாள்.

மைத்ரேயி சிரிக்கிறாள்.

“அக்கா, நீங்க ரொம்ப அதர்ஷ்டக்காரங்க, கன்னம் குழியிது.”

மைத்ரேயி பேசவில்லை.

“ஏனக்கா, நீங்க ஐயமாருங்கதானே?”

“இல்லியே?”

“போக்கா, நீ வெளயாடுறே, உன்னப் பாத்தாத்தான் தெரியிதே? ஐயமாருங்கன்னா செழுப்பா இருப்பாங்க, உன்னப்போல...”

“இல்லவே இல்லே. நீ பொய் சொல்லுறே. செவப்பும் கறுப்பும் எல்லாச் சாதியிலும் இருக்காங்க...”

“ஏங்க்கா? நீ முடிவச்சுருக்கிறார்னுதான் மாமனக் கட்டலியா?”

மைத்ரேயிக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டு வருகிறது.

“போடி வாயாடி, எங்கள்ள மாமனைக் கட்ட மாட்டாங்க!”

“கட்டமாட்டாங்க? மொறை மாமனிருந்தா வந்து கேட்டா கட்டியே ஆகணும். எங்காயா மொறை மாமனைக் கட்டல. அவரு வந்து இம்சை பண்ணாரு. அப்ப எங்கையா தோட்டத்திலே எளணி சீவிட்ருந்தாராம். அப்படியே அவரு தலையைச் சீவிட்டாராம். தம்பி பொறக்கலியாம் அப்ப. ஐயாவைப் போலீசு இட்டுகினு போயி செயில்ல போட்டுட்டு தாம். இன்னும் எட்டு வருஷம் இருக்கணுமாம்.”

“ஐயையோ?”

மைத்ரேயிக்கு எதிர்பாராமல் மிளகாயைக் கடித்து விட்டாற்போல் கண் பசைக்கிறது. மனிதனின் ஆசையும் மோகமும் குரூரங்களாக ஏறும்போது அவை நாசம் விளைவிக்கத் தயங்குவதில்லை என்ற உண்மையை நேரடியாகச் சந்தித்து விட்டாற் போலிருக்கிறது.

“எங்கையாவை அங்கே போய் அண்ணன்தான் பாத்திட்டு வரும்”.

“நீ போனதில்லையா?”

“போயிருக்கேன். முன்ன ஒருக்க அண்ணன் ரேக்ளா பந்தியத்துக்கு இட்டுப் போச்சி. நாங்கல்லாம் பஸ்ஸில் ஏறி ரயில் வண்டி எல்லாம் பார்த்தோம். அண்ணன் ரேக்ளா பந்தியத்தில் பஷ்டா வந்தது. அப்ப மாலை போட்டாங்க. மிட்டாயி, கடலை உருண்டை, ஐஸ்கிரீம்... இன்னும் என்னெல்லாமோ வாங்கித் துண்ணோம். அண்ணன் பத்து ரூபா செலவு பண்ணிச்சி.”

வாழ்க்கையின் இனிமைகள் வெட்டவெளியின் மொட்டைப் பனைகளினிடையே பசைத்துள்ள திட்டுக்களைப் போன்றவை. மைத்ரேயியும் அவள் பங்கில் இம்மாதிரி இனிய ஆசைகளைச் சிறுமிப் பருவத்தில் அனுபவித்தவள்தானே? திடீரென்று உள்ளே ஜிலேபியும் மிக்ஸ்சர் பொட்டலங்களும் நினைவுக்கு வருகின்றன.

“லட்சுமி, இரு, இத வர்றேன்.”

குறுஞ் சுவருக்கப்பால் தட்டில் சோறு நீத்து ஈக்கள் மொய்க்கின்றன. நாலைந்து சுண்டெலிகள் ஜாங்கிரியை முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஓடுகின்றன.

காப்பித் தம்ளரின் மீது ஒரு காகிதத் துண்டை வைத்து முடியிருந்தாள்.

காகிதம் பறந்து ஆடை படர்ந்த திரவம் தெரிகிறது.

அதையும் எலி முகர்ந்திருக்குமோ?

சே! எத்தனை ஆசையுடன் ஜாங்கிரியை தின்ன வைத்திருந்தாள்?

இந்தப் பழைய பாழ்மனையில் அயர்ந்து மறந்தால் எலியும் ஈயும் கரையானும் ஆளையே தின்றுவிடும் போலிருக்கின்றன“

ஏமாற்றத்தில் கிளர்ந்த கோபத்தில் எலிகளையும் ஈக்களையும் திட்டிக் கொண்டு ஜாங்கிரியைத் தூக்கி வந்து கொள்ளையில் வீசுகிறாள்

“ஐயையோ? ஏனக்கா?”

கூரை இடிந்து உச்சிமீது விழுந்து விட்டாற்போன்ற அதிர்ச்சியில் பிதுங்கிய விழிகளுடன் லட்சுமி ஓடிச்சென்று அதைப் பொறுக்கி மண்ணைத் தட்டுகிறாள்.

“சீ, போட்டுடு, விஷம். எலி அஞ்சாறா முகர்ந்து பார்த்தது-”

சாணி வாரிவிட்டு கையைப் பாவாடையில் துடைத்துக் கொள்வதுபோல் ஜிலேபியைத் துடைக்கிறாள்.

“ஐயோ, அது வாணாம் லட்சுமி. விஷமாயிப் போனா.” அவள் கைப்பிடிக்கு எட்டாமல் ஓடிப்போய் அந்த இனிய பண்டத்தை வாயில் வைத்துச் சுவைக்கிறாள்.

“நல்லாயிருக்கு...!” இனிப்பைச் சுவைத்து மகிழ்ந்து தலையாட்டும்போது, ‘இத்தனை அருமையான பொருளை இந்த ஐயமாருங்கெல்லாம் வீசித்தான் எறிவாங்களா?’ என்றும் வியக்கிறாள்.

மைத்ரேயி கண்கொட்டவில்லை. எலி விஷம் லட்சுமியை ஒன்றும் செய்யாதா? ஆனால் அவர்களுடைய குடிசைகள் இந்த மனையைவிட மோசமாக இருக்குமாக இருக்கும். இனிமைகளைச் சுவைக்க ஆசைப்பட்டு ஆசைப்பட்டு, ஏமாந்த நினைவுகளெல்லாம் முட்டி மோதிக் கொண்டு வருகின்றன.

“மைத்ரேயி!” என்று அக்கா கொடுக்கும் குரலுக்கே நடுங்கிப் போகப் பழகியிருந்தாள். கரிக் கற்சட்டிகள் தேய்த்து அடுப்பு மெழுகி, சமையலுக்குக் கிணற்றுத் தண்ணீர் இழுத்து அக்காவுக்குப் புடவை பிழிந்து உலர்த்தி, சுமதியோ ரஞ்சிதமோ பிள்ளைப்பேற்றுக்கு வந்தால் முன் குழந்தையை சுமந்து, பழைய சோற்றையே இரண்டு நேரமும் சாப்பிட்டுப் பள்ளிக்கூடம் போனாலும் மைத்திரேயியின் வாழ்வில் வசந்தம் வந்ததும் எத்தனை எத்தனை ஆசைகள் இதயப் பூங்காவில் மலர்ந்தன?

“என்னடி, மூணு வேளையும் பவுடர்? போதும்!“ என்று அக்கா அதட்டினாலும் கண்ணாடியைக் கண்டால் அழகு பார்த்துக் கொள்ளத் தோன்றியது.

“இரட்டைப் பின்னல் கோரமெல்லாம் வேண்டாம்!” என்று இறுக வாரி அக்கா பின்னும்போது அவளுக்குப் பிடிக்கவேயில்லை. அவள் கண்காணாமல் பின்னலை அவிழ்த்துத் தளர்த்தியாகப் பின்னிக் கொள்வாள். கோணல் வகிடு வலப்புறம் இடப்புறம், இரட்டைப்பின்னல், அரைப் பின்னல் கொண்டை எல்லாம் போட்டுப் பார்த்துக் கொள்வாள். தன்னுடைய அடர்ந்த நீண்ட முடியைக் குறித்துத் தனியாகப் பெருமிதம் கொள்வாள். முழங்கைவரை ரவிக்கை, கண்களில் மை, நெற்றியில் பலவகைப் பொட்டுக்கள், செவிகளில் விதவிதமான அணிகள் என்று பள்ளிக்கு வரும் நளினியைக் கண்டு அவளைப் போன்ற பேறு தனக்கில்லையே என்று நெடுமூச்செறிந்திருக்கிறாள். ஒரு தடவை சுமதி தான் வாங்கிக் கொண்ட வாயில் சேலையை “மைத்தி, நீ உடுத்திக் கொள். நாளைக்கு நான் கட்டிக் கொள்கிறேன்” என்று சொல்லிக் கொடுத்தபோது பெரியக்காவுக்கு என்ன கோபம் வந்தது! பெரியக்காவைச் சொல்லப் போனால் அவளுடைய சகோதரி என்றுகூட சொல்ல மாட்டார்கள். குட்டை, நல்ல கறுப்பு. அவள் தாயைக் கொண்டு தனியாக இருந்தாள். மாமா சொன்னாற்போல் அவர்கள் நால்வரிலும் கடைக் குட்டியான அவளே பேரழகி. பெரியக்காவுக்குத் தன் அழகில் பொறாமை என்று உள்ளூரக் கொதித்துக் கொதித்து அடங்கிய அவள், பள்ளி இறுதிப் படியில் நிற்கும்போதுதான் படி இடறி...

சே--! அப்போது எப்படி இருந்தது?

வகுப்பில் அவன் முகமும் சிரிப்பும்தான் கண்முன் நிற்கும்.

அரையாண்டுத் தேர்வின் கணக்குத்தாளைப் பார்த்துக் சிந்தையில் அந்தச் சொற்களைச் சுழலவிட்டுக் கொண்டிருந்தாள். “அன்பே மகாபலிபுரம் சாலையில் வலப்புற சாமியார் குன்றுக்குப் பின் காத்திருக்கிறேன்: தனராஜ்!”

வீட்டு எல்லையைவிட்டுப் பள்ளிக்கூடத்தைத் தவிர எங்கும் சென்றறிந்திராத அவள் அந்தக் குன்றின் பின் அவனைத் தனியே ஏழெட்டு நாட்கள் சந்திக்கச் சென்றாள். அது ஒரு காய்ச்சல் வேகம் போல். எப்படி இருந்தது? காதல் என்று யாருக்குமே கிடைக்காத பேறு தனக்குக் கிடைத்து விட்ட இறுமாப்பில் குன்றேறி நின்றதாக எண்ணினாள். வேலியை மீறுவது ஒரு வீரமிக்க விளையாட்டு என்று அவன் சொல்லிக் கொடுத்த துணிவின் தெம்பில் மிதந்தாள். பள்ளிக்குச் செல்லாமல் மாலைப்பொழுதுகளை அவனுடன் கழித்து விட்டு வீடு திரும்பும்போது அச்சமும் திகிலும் அடி மனசில் ஒளிந்திருந்தாலும் புதிய இன்பம் கண்ட அனுபவத்தில் அந்த அச்சமும் திகிலும்கூட ஒரு இனிமையோடு கூடிய உணர்வுகளாகவே தோன்றின. அடுக்கடுக்காக அவன் காதல் வசனங்களைப் பொழிவான். செவியருகில் வந்து அவள் நெஞ்சம் கிளரும் பாடல்களைப் பாடுவான். அவள் அழகைப் புகழ்ந்து புகழ்ந்து போற்றுவான். ஒரு பேதைப் பெண் வசமாக வேறென்ன வேண்டும்?

“நாம இப்படியே ஓடிப்போய்க் கல்யாணம் செய்து கொள்வோம்...”

“நான் இப்பவே உன்னை...” அவளுக்குப் பேச இடைவெளி அற்றுப் போகும்.

பெரிய நகரமாக இருந்தால் ஒரு மூலையில் நடக்கும் செய்தி இன்னொரு மூலைக்குத் தெரியாது.

தோப்பு பங்களாப் பெண் நாலைந்து நாட்களாகப் பரிட்சையும் எழுதவில்லை. பிறகு பள்ளிக்கும் வரவில்லை என்ற செய்தி அக்காவுக்கும் அத்திம்பேருக்கும் எத்தனை நாட்கள் தெரியாமலிருக்க முடியும்?

அவள் காதலனோடு மகாபலிபுரம் பஸ்ஸில் ஏறிச் சென்றிருந்த அன்றுதான் உமா, அந்த ஒதுக்குப்புறத் தோப்பு வீட்டைத் தேடி வந்து குட்டை உடைத்திருக்கிறாள்.

“மாமி மைத்திரேயிக்கு உடம்பு சுகமில்லையா? அவள் ஸ்கூலுக்கே ஏன் வரலே?” என்று கேட்டாளாம்.

“வரலியா? வழக்கம்போல் தினம்தானே போயிட்டு வரா? இன்னிக்குக்கூடக் காலமேயே போயிட்டாளே?” என்று அக்கா கூறியிருக்கிறாள்.

“ஐயோ, அவ நிஜமா ஸ்கூலுக்கே வரதில்லே. வந்தாலும் மூணுமணிக்கே போயிடறா. சினிமாக் கொட்டாயில் மத்தியானம் ஒத்தன்கூட இருந்தாளாம்.”

அக்கா பொறுக்காமல், “சீ! வாயை மூடு! யாரைப் பார்த்துப் பேசறே நீ?” என்று கத்தினாளாம்.

“மாமி, நீங்க விசாரிச்சுப் பாருங்கோ, அவன் எப்பவும் நயினார்சந்து டீக்கடையில் உக்காந்திருப்பான். சுருட்டை சுருட்டையா கிராப்பு வாரிண்டு, சில்க் சட்டை, மைனர் செயின் போட்டுண்டு அங்கேயே நின்று அவ வரப்பல்லாம் சிரிச்சு நானே பார்த்திருக்கிறேன். ஆலமரத்துக்கிளின்னு வந்த சினிமாவில் அப்படியே ஒரு பாட்டு வரதே, அதை அவன் தான் எழுதினானாம். கவிஞன் தனராஜ். இங்கே வந்து ஏதோ படத்துக்குப் பாட்டெழுத டீக்கடைக்குப் பின்னால ரூம் வச்சிண்டிருக்கானாம்...”

இதெல்லாம் அவளுக்கு அன்று வரும்போதே தெரிந்து விட்டது. கடைவீதியில் மதுரம் மாமி பார்த்துவிட்டுச் சொன்னாள். “ஏண்டி பெண்ணே, அசட்டுத்தனமாக நடந்துக்கறே, உங்கக்கா கொன்னுடப் போறாளே?” என்று மனமிரங்கினாள்.

அவளுக்கு அப்போது ஒன்றுமே புரியவில்லை. அவள் பெரிய வாயிலைக் கடந்து தோப்புக்குள் நடந்து வரும்போதே அக்கா கிணற்றடியில் அவளைக் கண்டு விட்டாள்.

“ஏண்டி, மானங்கெட்டவளே! எங்கேடி போயிட்டு வரே?” என்று கையிலிருந்த விறகுக் குச்சியினால் அடிக்க வந்தாள்.

மைத்ரேயி ஓடிச் சென்று மாமரத்தின் கீழ் நின்றாள்.

“என்னை எதுக்கு அடிக்கவறே? நான் ஒண்ணும் இந்த விட்டில் இருக்கப் போறதில்லே” என்றாள் அசையாமல்.

“ஐயையோ! குடிமுழுகிப் போயிடுத்தே? இங்கே சித்த வந்து இந்தச் சிறுக்கி சொல்றதைக் கேளுங்கோ...!” என்று கூக்குரலிட்டாள் அக்கா. பிறகு கணவனும் மனைவியுமாக அவளுக்கு வசை மாரி பொழிந்தார்கள்; காரித் துப்பினார்கள் காலடியில் மூட்டையை விட்டெறிந்து வெளியே துரத்து முன், “காதுத் திருகாணியைக் கழட்டி வச்சுட்டுப் போடி, கடன்காரி, உனக்கு ஒரு ஸ்நானம் பண்ணிடறேன் இப்பவே!” என்று கத்தினாள். ஆத்திரத்தோடு அவள் கால்சவரன் பெறாத அந்த மகிழம்பூத் திருகைக் கழற்றி மண்ணில் வீசி, காதலின் புனிதத்தை நிலைநாட்டுவதாகப் பெருமிதம் கொண்டாள்.

அவள் படித்த கதைகளில், காதலையும் தியாகத்தையும் வீரத்தையும் விளக்கும் சினிமாக்களில் வரும் கதாநாயகியாகத் தன்னை நினைத்துக் கொண்டாள். அந்த வாயிலை விட்டு வெளியேறி அவள் வந்தபோது, அவன் டீக்கடை வாயிலில்தான் நின்றான். அவளை உடனே தன் அறைக்குள் அழைத்துச் சென்று நெஞ்சு கூழாக அணைத்துக் கொண்டான். பதினாறு வருஷம் பழகிய வீட்டை ஒரு நொடியில் உதறுவதும், கையில் ஒரு காசு இன்றி வெளியிறங்குவதும் அந்த அரிய நேரத்துக்காகச் செய்த அற்பங்கள் என்று தோன்றியது.

“எல்லாத்தையும் பிடுங்கிக்கிட்டு விரட்டியடிச் சிட்டாங்க... ?”

“போனாப் போறாங்க, உன்னை விட்டாங்களே. அன்பே, இந்த உலகு நமக்குச் சொந்தம்; நீயே விலை மதிப்பில்லாத சொத்து எனக்கு...” என்று அவளை இன்ப உலகுக்கு இட்டுச் சென்றான்.

நீக்குப் போக்கற்ற பெருவெளியில் இருவரும் அலைமேல் அலையாய் ஒன்றி அந்த விடுதலை நேரத்தைக் கொண்டாடினார்கள். பிறகு தெற்கிருந்து வந்த பஸ்ஸைப் பிடித்துக் கொண்டு தேன்நிலவுக்கு வரும் தம்பதியைப்போல் ஏறி வந்தார்கள். இரவு இந்திரா கபே வாயிலில் இறங்குகையில் மணி எட்டேமுக்கால்.

நல்ல குளிர்காலம். அவர்கள் அறையிலேயே ரவா லட்டும் வெங்காய பகோடாவும், மலைப்பழமும் பாலும் உண்டார்கள். இப்போது நினைக்க அதெல்லாம் கற்கண்டு கட்டியைச் சுவைத்தாற் போலில்லை. கொடங்குப் பள்ளத்தின் மேல் பரப்பி வைத்த வாழையும் கரும்புமாக இருக்கின்றன.

ஒரு வாரம் அவன் கைவிரல் மோதிரத்தை விற்று இன்பம் கொண்டாடியபின், இந்த மூலை வீட்டை யார் வகையிலோ தேடிப் பிடித்தான்.

“கஞ்சியும் கூழும்கூட நீங்க இருக்கிற இடத்தில எனக்கு சொர்க்கம்” என்றாள், அவள் அவன் தலையை மடியில் வைத்துக்கொண்டு. அவனும் பிளேயர்ஸ் ஸிகரெட்டிலிருந்து பீடிக்கும் டீக்கடைப் புரைக்கும் சரிந்தான். பிறகு நாள் தோறும் சென்னைப் படவுலகை நாடிப் போவதாகச் சொல்லிப் பஸ் ஏறிச் சென்றான்.

அவள் காத்துக் காத்து கண் பூத்தபின், சோர்ந்த முகத்தோடு வந்தான். மூன்று மாச கால வாழ்வில் ஒரு வாரம் தேனிலவு. பிறகு அடித்தளத்திலும் அடித்தளம். யார் யாரோ சிநேகிதர்கள் கடன் கொடுத்ததாகச் சொல்லித்தான் நாட்கள் கழிகின்றன. வறுமையும் பசியும் வயிற்றைக் கிண்ட மனித உறவின் ஈரங்களெல்லாம் வற்றிக் குழி பறிக்கையில் தனிமையில் அழுகையும் வருவதில்லை.

ஒருநாள் அவன், “எனக்குண்ணு சோறு வச்சிருக்கியா? வாணாங்கண்ணு, நீ துண்ணுக்க, ஒசந்தகொலத்துப் பொண்ணு, பட்னி கிடக்கிறியே?” என்று கொஞ்சிக் கொண்டு அருகில் வந்தபோது அவளுக்குப் பகீரென்றது.

ஏன் கண்கள் சிவந்திருக்கின்றன? குழற்கற்றை நெற்றியில் ஆட அவன் அருகே பேச வருகையில் நாக்கு ஏன் குழறுகிறது? வேர்த்துக் கொட்டுகிறது?

உண்ட சோறு செரிக்காமல் குடலை விட்டு வெளி வருகையில் நாம் ருசித்துத் தின்ற பொருள்களா இவை? என்ற அருவருப்பு உண்டானாற் போலிருக்கிறது.

“ஐயோ ஏங்க, குடிச்சுட்டா வந்திருக்கீங்க...!” என்று அடி வயிற்று நா எக்கிக்கொண்டு மேலண்ணத்தில் ஒட்ட, கதறவும் முடியாமல் கண்ணீர் விட்டாள்.

“ஆமாம் கண்ணு, நல்ல சரக்கா நம்ம தோஸ்த் வாங்கிக் குடுத்தாரு...”

“ஐயோ, மோசம் போனேனே நான்...” என்று விம்மினாள் மைத்ரேயி,

“அழுவாதே கண்ணு, அழுவாதே. உனக்கு சேலை ஜாக்கெட்டு, ரிப்பன் எல்லாம் வாங்கித் தருவேன். நீ ஒசந்த குலத்துப் பொண்ணாச்சே, எனக்குத் தெரியாதா?”

“போதும் வாயை மூடிக்கிங்க!”

“என் ராசாத்திக்குக் கோபம் வருது. கோச்சுக்காதேடி கண்ணாட்டி- பிதற்றிக் கொண்டே தூங்கிப் போனான்.

பொழுது விடியாமலிருந்து விடிந்தது. அவள் தேநீரை வைக்க எழுந்திருக்கவில்லை. சர்க்கரையில்லை; காசில்லை பாலுமில்லை.

கூரை முகட்டைப் பார்த்துக் கொண்டு கிடந்தாள். பசி. பசி வந்தால் பத்தும் பறந்து போகுமாம். காதல் மட்டும் இருக்குமா? சே! இந்த உடம்புச் சுகம் இவ்வளவு பெரிய வழுக்குப் பாறையா?

இவனைப் பார்க்கவும் இப்போது பிடிக்கவில்லையே? ஆனால் அவள் இங்கிருந்து தப்பி எங்கே, எப்படிப் போவாள்? தோற்றுப் போய் மீண்டும் அக்காவின் புகலிடத் துக்குப் போவதா?

சே! சுருக்கிட்டுச் கொண்டு மடியலாம். உத்தரத்தில் புடவையைக் கட்டி...

அவன் விழித்துக் கொண்டு அவள் முகத்தைத் திருப்புகிறான். அவள் தள்ளினாள்.

“கோச்சிட்டியா மைத்தி...?”

சட்டென்று நினைவு வந்தாற்போல் சட்டையின் உட் பையில் கைவிட்டான். இரண்டு பத்து ரூபாய் நோட்டுக்கள் வந்தன.

“இந்தா...”

“நீங்க இவ்வளவு மோசமாயிருப்பீங்கன்னு நான் நினைக்கலே” என்றாள் கண்ணீர் நிரம்பித் தளும்ப.

“என்னை மன்னிச்சிடு மைத்தி. என் உயிரே, என் ஒளியே என் வழிகாட்டியே, என்னை மன்னிச்சுடு. அந்தப் பனாதைப் பயல்கள் காசு தென்பட்டிச்சின்னா இப்படித் தான். சில சமயம் இந்தச் சினிமா உலகமே வேணாம். எங்கேனாலும் போயிடாலான்னுத் தோணும்...” உலகில் ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கேற்ற பிணிப்புக்கள் இருக்குமோ என்று மலைத்தாள்.

“எனக்கு வழியே இல்லீங்க வேறு...”

அவன், அவள் வாயைப் பொத்தினான்.

“அப்படிச் சொல்லக் கூடாது, நமக்கு நல்லகாலம் நிச்சயம் வரப்போகுது. இன்னிக்குப் பாரு, நான் வெளியே போகப் போறதில்லே. இந்திரா கபேயில் எடுப்புச் சாப்பாடு, ஸ்வீட், காரம், கூல்ட்ரிங், கதம்பம், ரோஜா, சினிமா...”

இவைதாம் வாழ்வு என்று அவன் சொன்னாற் போலிருந்தது.

இவையே வாழ்வென்று ஏறி ஒரு விநாடியில் வழுக்குப் பாறையில் சறுக்கி விழுவதும், திரும்பி அண்ணாந்து பார்த்து பசித்த வயிற்றை அமுக்கிக்கொள்வதுமான ஒரு...

“ஏங்க்கா, யோசனை பண்ணிட்டிருக்கீங்க?”

“ஹ்ம்... இல்லே லட்சுமி. இந்தா, காரப் பொட்டலம், நீ சாப்பிடு.”

“நீங்க ஒண்ணுமே சாப்பிடாம எனக்குக் குடுக்கிறீங்களே அக்கா?”

“எனக்குப் பசியே இல்லே லட்சுமி!”

“ஏங்க்கா?”

பசியே இல்லை என்றால் என்ன பொருள் என்று அவளுக்கு விளங்கவில்லை.

“நீ கொஞ்சம்னாலும் எடுத்திட்டு குடக்கா...”

இரத்த உறவின் பிணைப்புக்களை எல்லாம் விட்டுத் திசை புரியாத சந்தியில் நிற்கும் அவளுக்கு லட்சுமியை அணைத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. சுமதியின் பெரிய பெண் சுதாவுக்கு உடல் முழுவதும் சிரங்காக இருக்கும். அவற்றுக்கு மருந்து போட்டுக் குளிப்பாட்டி, அலுக்காமல் பவுடர் போட்டு தூக்கிச் சுமப்பாள். எந்தக் குழந்தையும் அவளிடம் ஒட்டிக் கொள்ளும். முன்பு ஆறாவது படித்துக் கொண்டிருக்கையில் பெரிய விடுமுறைக்கு அவள் மாமாவின் ஊருக்குச் சென்றிருக்கிறாள். அங்கும் அந்த நட்டுவை அவள் எப்படித் தூக்கிச் சுமந்தாள்? “நீ ஊருக்குப் போயிட்டால் இந்தப் பிள்ளை ஏங்கிப் போயிடும் போலிருக்கே?” என்று மாமிகூடச் சொல்லி இருக்கிறாள்...

குழந்தைகளைப் பற்றிய சிந்தனை படர்கையில் இன்னொரு இனம் புரியும் திகில் அவளைக் கவ்விக் கொள்கிறது. அவள் தன்னுடைய கொஞ்ச நஞ்சம் ஒட்டியிருக்கும் சுதந்திர இறக்கைகளைப் பறிகொடுத்து விடுவாளோ?

அவன் எப்போதேனும் பத்து இருபது பணம் கொடுக்கும்போது எடுத்துக்கொண்டு இந்த பந்தத்திலிருந்து விடுபட்டு ஓடிவிடலாம்.

ஆனால். ஒரு எஸ்.எஸ்.எல்.ஸி பரிட்சைகூடத் தேர்ந்திராத அவளுக்கு யார் வேலை கொடுப்பார்கள்?

ஏதேனும் ஹோமில்...

மாமா சொன்ன லோகநாயகியின் நினைவு வருகிறது. அப்படி ‘சோஷியல் வொர்க்’ செய்யும் அம்மாளிடம் சென்று தன் கதையைச் சொல்லலாம். ஒரு டாக்டரிடம் எடுபிடியாக, ஒரு பணக்காரப் பெண்ணுக்குத் தோழியாக...

லோகநாயகியின் வீடு அவளுக்குத் தெரியாது. பட்டணத்துக்கு எப்போதோ கிறிஸ்துமஸ் சமயத்தில் அக்காவும் அத்திம்பேரும் அவளை வேடிக்கை பார்க்க அழைத்துச் சென்றதுதான்.

“அப்ப... நான் வாரேன் அக்கா! பொழுது சாஞ்சி போச்சி!”

“போறியா?”

லட்சுமி தலையை ஆட்டிவிட்டுக் கைப் பொட்டலத்துடன் போகிறாள். வீட்டுக்குச் சென்று அந்தக்கா குடுத்திச்சி என்று சொல்லித் தின்பாள்.

இரவு பரவும்போது விளக்கேற்றத் தோன்றவில்லை.

வாய் கசந்து வழிவது போலவும், அடிவயிற்றில் குமட்டு வது போலவும் பிரமை தோன்றுகிறது.

முடிவில்லாத இருள் குகைபோல் திகில்.

பாயை விரித்துக் கொண்டு படுக்கிறாள். கொசுக்கள் பாடுகின்றன. அண்மையில் கார் வரும் ஒலி கேட்கிறது.

சாலையிலிருந்து உள்ளே தள்ளியுள்ள அந்த வீட்டுப் பக்கம் காரா வருகிறது? கனவா? கதவைப் படாலென்று சாத்தும் ஓசை. கூசும் விளக்கொளி சுவரில் படிவதுபோல் பிரமை.

கதவைத் தட்டுகிறார்கள்.

யார்? ஒருவேளை அத்திம்பேர் காரில் வக்கீல் யாரயேனும் கூட்டிக்கொண்டு வந்திருப்பாரோ? அல்லது மாமாவோ ?

“மைத்தி ! மைத்தி!...”

அவன் குரல்தான். ஆவல்கள் பாம்பு வாணங்கள்போல் எழும்புகின்றன. சற்றுமுன் இருட்குகையில் செய்து கொண்ட தீர்மானங்களெல்லாம் அந்தக் குரலில் கரைந்து போகக் கதவைத் திறக்கிறாள்.

“விளக்கேத்தலே?”

“இதோ!”

அரிக்கேன் விளக்கு. அவன் இரவல் வாங்கி வந்தது தான். ஏற்றி வைக்கிறாள். அது மஞ்சளாக அழுது வடிஞ்சாலும், பருமனாக, குட்டையாக, பட்டைக் கடியாரச் சங்கிலி மோதிரங்கள், சில்க் சட்டை சென்ட் நெடியுடன் ஒருவர் நடையில் நிற்பதைக் காட்டிக் கொடுக்கிறது.

“கிளம்பு மைத்தி, இப்ப நீ வீட்டைக் காலி செய்யனும், நாம் இங்கேருந்து போறோம்” என்று அவன் பரபரக்கிறான்.

“எங்கேங்க? உங்களுக்கு சான்ஸ் கிடைச்சிருக்கா?” என்று காதோடு அவள் கேட்கிறாள்.

“பின்னே? ‘ஊட்டிக்குப் போகிறோம்’ படத்தில் நாலு பாட்டு. ஆயிரத்துக்கு, நானூறு அட்வான்ஸ் கையிலே” என்று உரக்கச் சொல்லிவிட்டு, “அண்ணாச்சி, இப்படி வாங்க” என்று அவரை உள்ளே அழைக்கிறான்.

“இவருதான் கண்ணபிரான்னு சொல்லுவேனே, அவர். என் குரு, அண்ணன், மாமன், எல்லாம் இவருதான். இதாங்க மைத்தி...” என்று சொல்லிவிட்டு “விழுந்து கும்பிடு” என்று ஜாடை செய்கிறான். முற்றத்தில் வந்து நிற்கும் அவர், “என்னப்பா இதெல்லாம், அது ஒசந்த குலத்துப் பொண்ணு... இங்கிதம் புரியாமல் விழுந்து கும்பிடுங்கிறியே?” என்று சிரிக்கிறார்.

சுருக்கென்று ஊசி தைத்தாலும் விழுந்து பணிகிறாள். பரபரவென்று துணிகளை மடித்து, ஒன்றிரண்டு தட்டு முட்டுக்களைக் கோணியில் போட்டுக் கட்டும்போது, அள்ளிச் சாப்பிட்டு மூச்சுத் திணறுவது போலிருக்கிறது.

சிந்தனைக்கு நேரமில்லை. பாய்களைக் கட்டி வண்டியில் போடுகிறான். பெட்டியைப் பூட்டி டிக்கியில் வைக்கிறான். அந்தக் கோணிச் சாமான்களை இந்திரா கபேக்காரரிடம் இறக்கிவிட வேண்டும்.

கண்ணபிரான் வண்டியோட்டிக்கு அருகில் அமர்ந்து கொள்கிறார். அவர்கள் இருவரும் பின்னே அமருகின்றனர். வண்டி ஒலியைப் பாய்ச்சிக் கொண்டு நகருகிறது.

3

வழியில் எந்த ஊரென்று அவளுக்குத் தெரியவில்லை. இரவு ஒன்பது மணிதான். ஓட்டல் வாயிலில் வண்டி நின்றிருக்கின்றது. கண்ணபிரானைப் பார்ப்பதற்கு அவ்வளவாக அவளுக்குப் பிடிக்கவில்லை. எனினும் கார் கதவின் வாயிலில் நின்று, “வாம்மா, போய்ச் சாப்பிடலாம்..” என்று அழைக்கிறார். ஃபாமிலி அறை.

காய்ந்த வயிறு ஆரவாரம் செய்கிறது.

வாழை இலையில் நீர் தெளித்து, மல்லிகைப்பூப் போல் சாதம்.

அரிசிக்கு யார் யாரோ எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டாலும், சோறு, வெள்ளை வெளேரென்று. கூட்டு, கறி, பச்சடி, அப்பளம், பருப்புப் பொடி, பூண்டுப் பொடி வேறு.

அவர்கள் இருவரும் பேசுவதையோ, கண்ணபிரான் இடை இடையே கடைக்கண்ணால் அவளைப் பார்ப்பதையோ உணராமல் அவள் தன் வயிற்றுப் பசியை ஒழித்துக் கொண்டிருக்கிறாள்.

அவர்கள் கட்சி மாநாட்டைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பது அவ்வப்போது செவியில் விழும் சொற்களிலிருந்து புரிகிறது. கட்சித் தளபதிகளைப் பற்றிப் பேசுகிறார்கள். கட்சியைப் பற்றிய அறிவு அவளுக்கு இல்லாமலில்லை. முன்பு அவள் சிறு வயசில் மாமாவின் ஊருக்குச் சென்றிருந்த போது, அங்கே கோயிலுக்கு முன் கடைத்தெரு சந்தியில் அடிக்கடி பொதுக்கூட்டம் நடப்பதுண்டு. பொதுக்கூட்டம் துவங்குவதற்கு முன்பாக ஒலிபெருக்கியில் பாட்டுப் போடுவார்கள். நேரடியாக எவரேனும் பாடுவதும் வழக்கம்தான். மாமாவின் பிள்ளை நட்டுவுக்கு அப்போது இரண்டு வயசு தானிருக்கும். மாமிக்கு அவனுக்குக் கீழ் இன்னொரு குழந்தை இருந்ததால், நட்டு நோஞ்சானாக எப்போதும் அழுது கொண்டிருப்பான். அவள் நட்டுவையும் தூக்கிக் கொண்டு கோயிலுக்குப் போவதுண்டு. அவன் ஒலிபெருக்கி பாட்டைக் கேட்டால் அழமாட்டான். அந்தப் பாட்டுக்களின் பொருள் அவளை அப்போதெல்லாம் கவர்ந்ததில்லை. ஆனால், மெட்டுக்கள் திரும்பத் திரும்பப் பாடும்படி நன்றாக இருக்கும். பாட்டுக்களைக் கூட்டத்துக்கு முன்னும் பின்னும் கேட்கலாம். அப்படிப் பாட்டுக் கேட்கும் சாக்கில் அவள் பேச்சையும் கேட்க நேர்ந்ததுண்டு.

“கோயிலில் கல் சாமிக்கு மனிதனைப் போல் சோறு போடுகிறார்கள்; பள்ளியறைச் சிங்காரம் செய்கிறார்கள். வைப்பாட்டி வீட்டுக்குக்கூடக் கூட்டிப் போகிறார்கள். ஏன் கக்கூசுகள் கட்டி வைக்கவில்லை?” என்று ஒரு பேச்சாளர் கேட்க பலமாகக் கூட்டம் கை தட்டியதும் அவளுக்கு இன்னும் நினைவிருக்கிறது.

வைப்பாட்டி வீட்டுக்குக் கூட்டிப் போவதென்றால் என்ன என்று புரியாமலும், வேறு யாரையேனும் கேட்டுத் தெரிந்துகொள்ள அஞ்சியும் குழம்பி இருக்கிறாள். ஒருநாள் அந்தக் கூட்டத்தில் யாரோ பன்றியைத் துரத்திவிட்டுச் சாணி உருண்டைகளையும் வீசினார்கள். அவள் அதில் காலை வைத்து விழுந்தும் எழுந்தும் குழந்தையுடன் அலங்கோலமாக மீண்டு வந்தாள்.

மாமா, கொடிக்கம்பை எடுத்து அவளை அடித்தார். “ஏண்டி, அம்மை அப்பனைத்தான் துடைச்சிண்டு வந்தேன்னா, புத்தி கூடவா கழுதை மேய்க்கப் போச்சு? பிராமணனைப் போட்டுத் திட்டறான், கோயில்ல சாமி இல்லேங்கறான், அசத்து அங்கே என்னடி வேலை உனக்கு?”

சுமதியக்காவின் கணவன் கம்யூனல் ஜி.ஒ. என்ற ஒன்றைப் பற்றிச் சமயம் வாய்க்கும் போதெல்லாம் பேசு வான். “பூணூல் இல்லாதவனுக்குத்தான் காலம் இது” என்று முத்தாய்ப்பு வைப்பான். அந்தக் கட்சியில் பொறுப்பாக அங்கம் வகிக்கும் ஒருவனோடு அவள் இணைந்து வந்திருப்பது இப்போது கட்டெறும்புக் கடியுண்டாற்போன்று உணர்வில் உறைக்கிறது.

“நான் சொல்றேன் கேள் தம்பி, தங்கச்சியை நம்ம வீட்ல கொஞ்ச நாளைக்கு விட்டிடலாம். பிரசார வேலைக்குக் குந்தகமில்லாம இருக்கும். வீட்டிலதான் பார்த்துக்க ஆளு இருக்கு. இப்ப நீ கூட்டிட்டுப் போயிக் குடும்பம் வைக்கிறது நம்ம வேலைக்கு ஒத்து வராது.”

அவள், ரசம் சாதம் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் கண்ணபிரான் பேசுவது கேட்டுச் சட்டென்று நிமிர்ந்து பார்க்கிறாள்.

“என்ன, மைத்தி? அண்ணாச்சி சொல்றாப்பல...”

“என்னங்க?” என்று ஒன்றும் புரியாதவளைப்போல் கேட்கிறாள் மைத்ரேயி.

“இத பாரம்மா, தம்பி கட்சிப் பிரசார விசயமா சுற்றுப் பிரயாணம் போகவேண்டியிருக்கு. நாளைக்கு நம்ம வீட்ல தான் கூட்டிட்டுப்போயி விடப்போறோம். உனக்கு எல்லாம் வசதியா இருக்கும். நம்ம மனுஷாளுங்க இருக்கிறாங்க. நீ வித்தியாசமா நினைக்க வேணாம். அப்பப்ப தம்பி பேசிக் களைச்சு, வருவான். டானிக் வாங்கிக்கிட!” என்று ஒரு கண் சிமிட்டலுடன் பேசி நிறுத்தும் கண்ணபிரானை அவளுக்குக் கட்டோடு பிடிக்கவில்லை.

ஆழந்தெரியாத தெப்பக் குளப்படிகளில் இறங்குகிறாள். முதற்படியில் காலை வைத்துவிட்டாள். இது அடுத்தபடி, எங்கேனும் வழுக்கிக்கொண்டு போய்விடுமோ?

வயிறு நிறைய உண்டபின் மலைவாழைப் பழங்களும் பீடாவுமாகக் காருக்குள் அவர்கள் வருகின்றனர். உட்கார்ந்தபடியே அவள் உறங்கிப் போகிறாள்.

பளிச்சென்று புலனாகாத பாதையைப் பற்றி கவலையும் பசியும் மறந்த உறக்கம்.

அவள் கண்விழிக்கும்போது நன்றாக விடிந்திருக்கிறது. வீடுகள்தோறும் தென்னை மரங்களும், பூஞ்செடிகளும் குலுங்கும் தெருவினுரடே வண்டி செல்கிறது. பெரிய சாலை, வயல்கள், தென்னை, மா மரங்களின் பசுமை, அதனிடையே கோபி நிறப் பூச்சுடன் நிமிர்ந்து நிற்கும் ஒரு வீட்டுக்குச் செல்லும் பாதையில் வண்டி செல்கிறது.

வாயிலில் குண்டு குண்டாகத் காய்த்துத் தொங்கும் குட்டை மாமரம் மிக அழகாக இருக்கிறது. கார் வரும் ஓசை கேட்டு ஒரு அல்சேஷன் நாய் ஓடிவந்து குரைக்கிறது. பணியாளன் ஒருவன் வந்து கதவைத் திறக்கிறான்.

கதவைத் திறந்துகொண்டு முதலில் கண்ணபிரான் இறங்குகிறார். பிறகு தனராஜூம் அவளும் இறங்குகின்றனர்.

படியேறியதும் வாசல் நிலை. பழைய காலப் பாணியில் தேக்கில் இழைத்த தாமரைப்பூவும் கிளிகளுமாக விளங்கு கிறது. கறுப்பாக மின்னும் தளவரிசைக் கூடம். அந்தக் கூடத்தின் வலப்புற வாயிலிலிருந்து ஒரு பெண்மணி வந்து அவளை வரவேற்கிறாள். அவளுக்கு முப்பத்தைந்திலிருந்து நாற்பது வயசுக்குள் இருக்கலாம். நல்ல உயரமும் பருமனுமான உடல்வாகு. சேலையைப் பின் காலின் கொசுவம் தெரியாமல் தழையத் தழைய உடுத்தியிருக்கிறாள். கையகலம் பச்சைக் கரையில் கீற்றுசரிகை போட்ட யானைக் கருமை வண்ணப் பட்டுச் சேலை. வெள்ளை ரவிக்கை இறுகப் பிடித்தாற்போல் உடலோடு ஓட்டப் பதிந்திருக்கிறது. கழுத்தில் கெட்டியான திருநீற்றுப் பட்டைச் சங்கிலியும் பவளமாலையும் அணிந்தி ருக்கிறாள். வெற்றிலைச் சிவப்பு மறாத வாய். நெற்றி கொள்ளாத திருநீறு, அவள் கட்டுக் கழுத்தி அல்ல என்று விள்ளுகிறது. கூந்தலை இருபக்கங்களிலிருந்தும் சீராகப் பகிர்ந்து செருகிக் கொண்டிருக்கிறாள். ஒரு இழை நரைக்கவில்லை.

“வா தம்பி, நேத்துத்தான் சொல்லிட்டிருந்தேன். நாளைக்குக் கூட்டம்னு சொல்லிட்டுவந்து கோயமுத்தூர் பையன் விசாரிச்சிட்டுப் போச்சி. காலையிலே வரும்னு சொன்னேன். வா, தம்பி தனராசு...” என்று வரவேற்றவள் மைத்ரேயியைப் பார்த்துச் சிரிக்கிறாள்.

“தெரியுமில்ல? தம்பி...” என்று கண்ணபிரான் குறிப்பாகக் கூறிப் புன்னகை செய்ய, தனராஜ் உடனே, “கும்பிடறேன் அத்தை...” என்று அவள் கால்கள் தொட்டுப் பணிகிறான். மைத்ரேயி சில விநாடிகள் நின்றாலும் தானும் விழுந்து பணிகிறாள்.

“நல்லா இருக்கணும். ஏந்தம்பி? சொல்லாம கொள்ளாமயா கலியாணம் முடிக்கிறது? வாம்மா உள்ளே, உம் பேரென்ன?” என்று மைத்ரேயியை அவள் அழைக்கிறாள்.

“இவங்க அண்ணாச்சிக்குச் சின்னம்மா, எனக்குப் பெரியம்மா...” என்று தனராஜ் அறிமுகம் செய்து வைக்கிறான்.

“அது பேரென்னன்னு சொல்லவேண்டாமா?”

“மைத்ரேயி” என்று மைத்ரேயியே மொழிகிறாள்.

"எனக்கு வாயிலியே நுழையாது போலிருக்குதே? வாங்க வாங்க இட்டிலி காப்பி எல்லாம் ரெடியாயிருக்கும்...” என்று கூப்பிட்டு விட்டு உள்ளே நடக்கிறாள். அந்த அறையைக் கடந்து இன்னொரு பெரியகூடம். கூடத்தின் நடுவே கொத்து விளக்கு. பெரிய புகைப்படங்கள் சுவர்களை அலங்கரிக்கின்றன.

எங்கும் சாதாரணமாகக் காணக்கூடிய காந்தி, நேரு, சுபாஷ், விஜயலட்சுமி படங்கள் அல்ல.

அண்ணாதுரை படத்தை மட்டுமே அவளால் புரிந்து கொள்ள முடிகிறது. கண்ணபிரானின் தகப்பன், மாமன் என்று உறவு வட்டத்தில் உள்ளவர்களாகவும் இருக்கலாம்.

பெரிய கூடத்தையும் கடந்து குளியலறைப் பக்கம் செல்கையில் அந்தப் பெரிய வீட்டின் பரப்பையும் நவீன வசதிகளையும் கண்டு வியக்கிறாள். “பல் துலக்கப் பல்பொடி இருக்குது. இந்தா முகம் துடைச்சிக்கத் துண்டு-” என்று அந்தம்மாள் உபசரிக்கும்போது அவள் மனம் நெகிழ்கிறாள். இது யார் வீடோ? அவள் இதுவரையிலும் இப்படி ஒரு கனிவையும் ஆதரவையும் நுகர்ந்ததில்லையே?

“உட்காரம்மா?” என்று அந்தம்மா இன்னோர் அறைக்கு அவளை அழைத்துச் சென்று உபசரிக்கிறாள். அங்கு ஒரு குடும்பத்தினர் கூடி உணவு கொள்ளும் மேசையும் நாற்காலிகளும் இருக்கின்றன.

கண்ணபிரானும் தனராஜும் அங்கு வரவில்லை. அவர்கள் மாடிக்குப் போயிருக்கிறார்கள் போலிருக்கிறது.

மேசையில் ஒரு வாழையிலைத் துண்டைப் போட்டு அதில் ஆவி பரக்கும் இட்டிலிகளையும் சட்டினியையும் அவளே வைக்கிறாள்.

மைத்ரேயிக்கு மிகவும் கூச்சமாக இருக்கிறது.

“நீ சாப்பிடலிங்களா?”

“நாமான் காலையிலே பலகாரம் சாப்பிடறது வழக்கமில்ல. நீ சாப்பிடு. செத்தப்போனா வடிவு வரும்.

"ராவெல்லாம் பிரயாணம் பண்ணிக் களைச்சிரிப்பே. எண்ணெய் மிளகாப்பொடி போடட்டுமா?”

“வாண்டாங்க, இது போதும்-”

“நேத்து எப்ப பொறப்பட்டீங்க. பட்டணத்திலேந்து?”

“எனக்கே முன்னப் பின்ன தெரியாது. திடீர்னு வந்து கிளம்புன்னாங்க-”

“அவங்க எப்பவும் இப்படித்தான். உனக்கு எந்த ஊர்ம்மா?”

“மாம்பாக்கம்-”அவள் தலை நிமிரவில்லை.

“தாய் தகப்பனெல்லாம் இருக்கிறார்களா?”

மைத்ரேயி குனிந்த தலை நிமிராமல் இல்லை என்று விள்ளுகிறாள்.

ஒரு பொட்டுக் கண்ணீர் இலையில் விழுகிறது.

“த்ஸ-த்ஸ-இலையிலே. பலகாரத்தை வச்சிட்டு வருத்தமான சங்கதியைக் கேக்குறேன். நானொரு மட்டி-”

“இல்லீங்க-” என்று மைத்ரேயி கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். “நான் பிறந்து நினைவு தெரிஞ்சதிலேந்து சாப்பிடுறியாம்மான்னு பரிவு காட்டுறவங்க நீங்கதான்னு நினச்சேன். கண்ணில் தண்ணி வந்திட்டது-”

“அடாடா- பாவம். ஏம்மா, சின்னப்பவே அவங்க இறந்திட்டாங்களா?” அனுதாபமும் பரிவும் ஒருவகையில் அவற்றுக்கு மூலமான உண்மையை மறைத்து, எதிராளியின் கவடற்ற உள்ளத்தைக் கொள்ளையடிக்கக் கூடியவை. மைத்ரேயி உடனே தன் துயர வரலாற்றைக் கொட்டத் தொடங்கிவிடுகிறாள்.

“நான் பிறந்தபோதே எங்கம்மா போயிட்டாங்க. எங்கையா ஒரு பெரிய வெள்ளைக்காரக் கம்பெனியில் மூவாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற பதவியில் இருந்தாராம். எங்கப்பா நான் பிறக்குமுன்னமே இன்னொரு பெண்ணைக் கட்டி எல்லாம் அவளுக்கேன்னு வச்சிட்டு நாலைஞ்சு வருஷத்திலே செத்தும் போனார். எங்கக்கா தான் என்னை வளர்த்தது-"

“என்ன கஷ்டம்! இப்படித்தான் சில பொம்பிளைங்க, இரண்டாம்தாரம்னு வந்ததும் பேயாப் போயிடுதுங்க ஏம்மா! இப்ப, உங்க அக்கா, மாமன் சம்மதிச்சித்தான் தம்பியைக் கட்டிட்டியா?”

மைத்ரேயி தலையைக் குனிந்துகொண்டு விரலால் கோலமிடுகிறாள்

“எனக்கு இருந்த ஒரே உறவை அத்திட்டுத்தான் வந்திருக்கிறேன்-”

மளமளவென்று பல துளிகள் வீழ்கின்றன.

“அவங்க சம்மதிக்கலே. பின்ன கலியாணத்தை ஆருதான் நடத்தி வச்சாங்க?”

“யாருமே நடத்தலே. இந்த மணிமாலை மகாபலிபுரத்தில் வாங்கினது.”

“தேவலாமே? கோயிலில்லாத மகாபலிபுரத்துக் கல்லுங்களுக்கு முன்ன மணிமாலையைப் போட்டுக் கல்யாணம் நீங்களே நடத்திட்டீங்களாக்கும்” என்று அவள் சிரிக்கிறாள்.

காப்பி குடித்த பிறகு அவள் அடுத்தாற் போல் ஒட்டி இருக்கும் இன்னொரு அறைக்கு அழைத்துச் செல்கிறாள். அந்த அறையின் ஓர் புறம் மாடிக்குச் செல்லப் படி இருக்கிறது. அங்கும் சுவரில் படங்கள் இருக்கின்றன. கண்ண பிரானின் இளம் பருவத் தோற்றங்கள். மனைவி, குழந்தை களுடன் ஒரு படம். அதே குழந்தை, சிறுவனாக பத்து, பதினைந்து வயசுத் தோற்றங்களில் சில படங்கள், உருத்திராட்சமும் திருநீருமணிந்த சுவாமிகள் ஒரு படத்தில் வீற்றிருக்கிறார். அலமாரியில் அந்தப் படத்தினடியில் சாம்பிராணி வத்தி வைக்கும் இரண்டு யானைப் பொம்மைகளும் ஒரு ஜோதி விளக்கும் இருக்கின்றன. இன்னொரு திறந்த ஷெல்ஃப் முழுவதும் கத்தையாகப் பழுப்பேறிய பத்திரிகைத்தாள் அடுக்குகள். மலிவுப் பிரசுரங்களாகத் தோன்றும் சிறு புத்தகங்கள்.

“அவங்க, உங்க தம்பிங்களா?”

“யாரு, இந்த ஆட்டுக்காரனைக் கேக்குறியா? எனக்கு மகன். அவனுக்குக் கலியாணம் கட்டிட்டு, அவங்கையா என்னையும் விட்டிட்டாரு...”

அவள் இயல்பாகப் பேசினாலும், அவளுக்கு சுருக் கென்று உதைக்கிறது. தன் தந்தையைப் பற்றிப் பேசி, இளைய தாரங்கள் கொடுமைப் படுத்துவார்கள் என்ற கருத்தைத் தெரிவித்து விட்டாளல்லவா!

“இதான் இவன் பெண்சாதி, பெங்களுரில் பெரிய வியாபாரம். ரெண்டு மக்க அங்கேயே படிக்கிதுங்க. ரெண்டு ஆணு, ஒரு பொண்ணு. அதான் அங்கேயே பாதி நா போயிடுவா. தங்கச்சி வடிவு பக்கத்திலேதான் இருக்கு. இப்ப வரும். எண்ணெய் மண்டியாபாரம் அந்தாளுக்கு...” என்று படத்தைக் காட்டி விவரம் கூறுகிறாள்.

“இதோ புஸ்தகம் பேப்பரெல்லாம் இருக்கு. நீ படிச்சிட்டிரு. உங்க வீடுமாதிரி நினைச்சுக்க. நான் போயி சமயக் கட்டில் அவன் என்ன செஞ்சிட்டிருக்கிறான்னு பார்க்கிறேன்...” என்று சொல்லிவிட்டு அவள் போகிறாள்.

மைத்திரேயி அந்த மலிவு விலைப் புத்தகக் கட்டைப் பார்க்கிறாள். அவை அனைத்தும் காதல் நவீனங்கள் என்பது தலைப்பைப் பார்க்கும்போதே தெரிகிறது. அதன் ஆசிரியர்களின் பெயர்கள் புதிய புதிய பெயர்களாக இருக்கின்றன.

இந்தப் புத்தகங்கள் அவள் அந்தத் தனி வீட்டில் புழுங்குகையில் கிடைத்திருந்தால் பிரித்துப் பார்த்துக் கொண்டு பொழுது போக்கி இருப்பாளாக இருக்கும். இப்போது, காய்ச்சல் அடிக்கும் ஒருவனிடம் வெங்காயப் பகோடாவை வைத்தாற் போலிருக்கிறது. பிரித்துப் படிக்கவில்லை.

எனினும் என்ன செய்வதென்று புரியாமல் பத்திரிகை தாள் அடுக்கைப் பிரிக்கிறாள்.

அது கட்சிப் பிரச்சார இதழ் என்பது பார்க்கும்பேதே அவளுக்குப் புரிகிறது. அவற்றில் வந்திருக்கும் தலைப்புகளை, செய்திகளை கட்டுரைகளைப் படிக்கப் படிக்க அவள் செவிமடல்கள் சிவக்கின்றன.

பார்ப்பணீயம் பறந்து போக விரட்டியடிப்போம் வாரீர்!

‘ஏழைக் குடி மக்களே, ஒன்று படுங்கள்!’ என்றெல்லாம் தலைப்புகளிட்டு உணர்வைக் கிளறும் வகையில் வெறுப்பூட்டும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன

அந்த இதழ்களில் வெளியான புரட்சிக் கவிதைகளில் அவளுடைய நாயகனின் பெயர்தான் இருக்கிறது.

குடிப் பெருமை, குலப் பெருமை என்று எந்த மேன்மையையும் மைத்ரேயி அனுபவித்திருக்கவில்லை. எனினும், தான் பிறந்து வளர்ந்த சமுதாயத்தின் பெண்களைக் கற்பிழந்தவர் களென்றும் ஆண்களைக் காமுகர்களென்றும் திருப்பித் திருப்பிக் கூறுவதை அவளால் எற்க இயலவில்லை.

தன்னை இனிமையான சொற்களால் உபசரித்து, இதெல்லாம் படி என்று எதற்காகச் சொல்லிவிட்டுப் போகிறாள்? உன் குலத்தினர் மற்றவரைச் சுரண்டிக் கொண்டு தரையில் வைத்து நசுக்கிக் கொண்டு ஏகபோகமாக உல்லாச வாழ்வில் ஊறிக் கொம்மாளமிடும் அநியாயம் இனி நடக்காது என்று தெரிந்து கொள் என்று சொல்வதாகக் கொள்ளலாமா?

அந்த நேரத்தில் மைத்ரேயிக்குத் தன் மணவாளனைக் கூட்டிக்கொண்டு எப்படியேனும் இந்த இடத்தை விட்டு ஒடிவிடவேண்டும் என்று தோன்றுகிறது. “நீங்கள் இம்மாதிரி எல்லாம் எண்ணுவது சரியல்ல, கெட்டவர்களும் நல்லவர்களும் எல்லாச்சாதிகளிலும் இருக்கிறார்கள்” என்று அவனுக்கு உண்மையை அறிவுறுத்தத் துடிக்கிறாள். அதற்கு விளக்கம் கொடுக்க, ஆதாரபூர்வமான அறிவு அவளுக்கு இல்லை. எனினும், அவளுடைய உணர்வுக்கு அவர்கள் மிகையாக எழுதியிருப்பதாகவே தோன்றுகிறது.

எத்தனை நேரம் அந்த காகிதங்கள் விரித்துப் போட்டுக் கொண்டு புழுங்கிக் கொண்டிருந்தாளோ?

அந்தம்மை உள்ளே வருகிறாள், அவளுடைய கையில் ஒரு புதிய பட்டுச் சேலையும் இணைந்த வண்ணத்தில் வெல்வெட் சோளியும் இருக்கின்றன.

“உன் பேரு எனக்கு வாயில வரதில்ல, ராணின்னு கூப்பிடுகிறேன். ராணி, குளிச்சிட்டு நல்லா டிரஸ் பண்ணிக்கச் சொல்லுன்னுது தம்பி. இன்னிக்கு, இங்கே உங்களுக்கு விருந்து...”

புத்தம் புதிய பட்டுச்சேலை, கத்திரிப்பூ வண்ணத்தில் ஒரு பக்கம் சரிகைப்பூ வேலை செய்த கரை. வெல்வெட் சோளியை அந்த அம்மை பிரித்துக் காட்டுகிறாள். “புதிசு. வடிவுதான் தச்சுக்கிட்டது. பிறகு அளவு சரியில்லைன்னு போட்டுட்டுப் போயிட்டுது. உனக்குச் சரியாயிருக்கும்...”

எடுப்பாகக் கொங்கைகள் தெரிய வெட்டித் தைத்திருக்கிறார்கள். சேலையும் இரவிக்கையும் ஆசைப்பட்டு மாயும் உள்ளத்தைச் சுண்டி இழுத்தாலும் அவளால் கைநீட்டி வாங்க முடியவில்லை. நூறு ரூபாய்க்கு மேல் பெறும் சேலையும் சோளியும், அவளுக்கு எதற்காக எடுத்துக் கொடுக்கிறார்கள்?

அவள் தயங்கும் போது ஆவலில் துள்ளும் உள்ளம் ஓர் புறம் போலிக் கவுரம் பாராட்டிக் கொண்டு நிராகரித்து விடாதே என்று கையை நீட்டச் சொல்கிறது.

தன் காதலன் சம்பாதித்து ஒரு போலிப் பட்டுத் துணி வாங்கிக் கொடுத்திருந்தால்கூட இதைவிடப் பெருமையாக இருக்கும். அந்த மாதிரி வெட்டுச் சோளி அணிந்துகொள்ள வேண்டும் என்று அவளுக்கு ஆசை உண்டு. ஆனால் அக்கா எவ்வளவுக்கு அவளை அடக்கி ஒடுக்கி வைத்திருந்தாள்! இறுகப் பிடித்த ரவிக்கை போட்டுக்கொள்ளக்கூடாது. சேலைத் தலைப்பை நீளமாக விட்டுப் போர்த்துக் கொள்ள வேண்டும்.

சிறுசிறு ஆசைகளுக்கெல்லாம் அணை போட்டுத் தடுத்ததினால் தான் அவள் இப்படி ஒரேயடியாகக் கட்டுப் பாட்டை மீறியிருக்கிறாளோ?

சேலையும் சோளியும் அவளைச் சீண்டிச் சீண்டி சிரிக்கின்றன. குளித்துவிட்டு அவற்றை அணிந்துகொள்கிறாள்.

தலையை வாரிக்கொண்டு அவள் வருகையில் முன் கூடத்தில் யார் யாரோ ஆண்கள் வந்துகொண்டிருப்பதும் பேசுவதும் கலகலப்பைக் கூட்டுகின்றன.

முழங்கைக்கு மேல் சிவப்புக் கயிற்றுத்தாயத்துக் கட்டிக் கொண்டு கருங்காலி உடலைக் காட்டிக் கொண்டிருக்கும் ஆள் ஒருவன் வாழையிலை நறுக்குகிறான். அவன் திரும்பிப் பார்க்கும்போது அந்த முகத்தைக் காண அச்சம் மேலிடுகிறது மைத்ரேயிக்கு. கண்கள் சிவந்து, பெரிய பயில்வான் மீசையுடன் தோன்றும் அவன் சாத்துவீகமான சமையலை வாழை இலையில் வட்டிப்பவனாகத் தோன்றவில்லை. கோழியை வெட்டிக் குருதிக்களரியில் அதன் குடலை வேறாக்குபவனைப் போல் அவளுக்குத் தோன்றுகிறது. பிறந்த நாளிலிருந்து பழகிய பழக்கமோ, உடலில் ஒடும் இரத்தத்தின் இயல்போ, அவளுக்கு அன்று அங்கே உணவு கொள்ளக் கூடப் பிடிக்காது போலிருக்கிறது.

“வா, வாம்மா, வடிவு... ஏன் இவ்வளவு நேரம்” என்ற குரல் கேட்கிறது.

“இங்கன்ன, கலியாண விருந்தா, மாநாட்டுக் கூட்டத்துக்கு விருந்தா?” என்று சிரித்துக் கொண்டு வரும் வடிவை மைத்ரேயி பார்க்கிறாள். கல்லிழைத்த தோடும் லோலாக்கும் டாலடிக்கின்றன. குறுகிய நெற்றி; அகன்ற கண்கள். கறுப்பாக இருந்தாலும் அவள் சிரிக்கும்போது பற்கள் பளீரேன்று தெரிகின்றன. நீண்ட பின்னலை கிரேப் சேலையின் நிறத்துக்கேற்ப, ரோஸ் வண்ண நாடாவினால் முடிந்திருக்கிறாள்.

“இதாம்மா...” என்று அவள் மைத்ரேயியைக் காட்டும் போது வடிவு சிரிக்கிறாள்.

“அண்ணன் நல்லாத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாரே... வச்சகண் வாங்க மனசில்லா. அம்மணியம்ம...” என்று வடிவு கூறிக் கொண்டிருக்கையிலேயே ஒரு நாலு வயசுச் சிறுமியைத் தாக்கிக் கொண்டு அவனும் கண்ணபிரானும் அங்கு வருகின்றனர்.

“பாத்தியா வடிவு, தம்பி செலக்ஸனை ?...” என்று கண் சிமிட்டும் கண்ணபிரான், “மகாபலிபுரத்திலே சாமியில்லாத கல்லுக்கு முன்னே கருமணி கட்டி, கல்யாணம் முடிச்சானாம்” என்று தெரிவிக்கிறான்.

“அண்ணே, நான் ஒத்துக்க மாட்டேன். இது சீர்திருத்தக் கல்யாணமில்லே” என்று வம்பு செய்கிறாள் வடிவு.

“ஒத்துக்காட்டா வேண்டாம்...?” என்று புன்னகைக்கிறான் தனராஜ். பேபி அவனிடம் இருந்து இறங்கி தாயிடம் வருகிறாள்.

“நீ மாமனுக்குப் பேசிக் காட்டினியா...?” என்று கேட்கிறாள் வடிவு.

“பேசத் தெரியுமா?, ஐய, ஊமைன்னு நினைச்சேன் ?”

“நிசமா அண்ணே? மேடைப் பேச்சு வருது. உம்பொண்ணு இப்பவே பெரிய பேச்சாளியாயிட்டாளேன்னு அவரு சிரிக்கிறாரு. ஈரோட்டார் வீட்டு விசேஷத்துக்குப் போயிருந்தமா? அப்ப பெரியவங்கல்லாம் வந்து மண மக்களை வாழ்த்திப் பேசினாங்களா? அப்படியே வீட்டுக்கு வந்து பொடி பொடிக்கிது.”

“எங்கே, சொல்லும்மா !”

பேபி பதுங்கிக் கொள்கிறாள்.

“சொன்னியானா மாமன் இப்ப ஐஸ்கிரீம் வாங்கிவரும்” குழந்தை மழலை மாறாக் குரலில் பேசுகிறாள். மெதுவாக, தெளிவில்லாமலிருந்தாலும் புரிகிறது.

“தகைமை சார்ந்த தலைவர் அவர்களே, கண்ணினுமினிய நண்பர்களே, தோளோடிணைந்த தோழர்களே, அன்பு வணக்கம்...”

“ம், அப்புறம் ?”

...கோயிலில் இருக்கும் கல்லைக் காட்டி, உயிரில்லாத சடங்கு செய்து ஊரை ஏமாத்துபவன் யார்? தன்மானமுள்ள தமிழனை ஆதிக்கஞ் செலுத்தி அடக்கி ஒடுக்குபவன் யார்? ஒண்ட வந்தது பிடாரியாகி ஊர் மக்களைத் துரத்தியது எது?” ‘ஹ’ என்று அவர்கள் கைகொட்டி சிரிக்கின்றனர். பேபியை எடுத்துக்கொண்டு தனராஜ் முத்த மழை பொழிகிறான். இரத்தம் கன்றி அடித்துவிட்டாற் போல் குன்றிக் குறுகி நிற்கிறாள் மைத்ரேயி, அந்தப் பட்டுச் சேலையும் ரவிக்கையும் முட்களாய் மாறி உறுத்துகின்றன. பூத்திரி மத்தாப்பூவைக் கொளுத்தி வைக்கோற் போரில் போட்டாற்போல் அறியாக் குழந்தையின் மழலையில் நஞ்சு கலக்கிறார்களே என்று வெதும்புகையில் விருந்துக்கு ஒவ்வொருவராகக் கூடத்தில் வந்து அமருகின்றனர்.

“போம்மா, போய் உட்காரு..."என்று அவளிடம் அம்மணியம்மா கூறுகிறாள்.

“எனக்குப் பசி இல்லே. நான் அப்புறமாச் சாப்பிடறேங்க...” என்று மெதுவான குரலில் கூறிச் கூசி நிற்கிறாள்.

“அட நல்லாத்தானிருக்கு! மணி ஒண்ணரை, இன்னுமா பசியில்லே? வடிவு! தம்பியைக் கூப்பிட்டுச் சொல்லு!”

கொத்துக் கொத்தாக வெள்ளையும் கருப்பும் சிவப்புமான துண்டுகளுமாகக் கூடம் கலகலக்கும் கூட்டத்தில் வடிவு லோலாக்குகள் மின்னச் சிரித்துச் சிரித்துப் பேசு கையில் இந்தச் செய்தி போகிறது.

“ஒ..! அண்ணே ! புதுமாப்பிளை அண்ணே ! அண்ணி யார் நீங்க வந்து கரந்தொட்டு அழைச்சாத்தான் விருந்துண்ண வருவாங்களாம் !...”

அவள் கத்துவதைச் செவியுறும் மைத்ரேயி விடுவிடென்று பின்னும் கேலிக்கூத்துக்காளாகாமல் கூடத்துக்கு வந்துவிடுகிறாள்.

கொல்லென்று படிகிறது அமைதி. சுவரோடு சாய்ந்த மின்னல் கொடி போல் நிற்கும் அவளையே எல்லாரும் பார்க்கின்றனர்.

கருந்திரிகள் போல் என்ணெய்ப் பளபளப்புடன் விளங்கும் முடிகள். நாசூக்கான பூச்சி மீசைகள், முரட்டுத்தனத்தின் வெளியீடுகளாகத் தெரியும் கண்கள். இப்படிச் சம்பந்தா சம்பந்தமில்லாமல் அவளுடைய கண்களில் பட்டுக் கருத்தில் படிந்து பீதியைத் தோற்றுவிக்கின்றன.

“தலைப் பக்கத்து இலையில் தம்பி உட்காரட்டும்” என்று கண்ணபிரான் அழைக்கிறான்.

“அண்ணியார் பக்கத்தில்...வாங்க...நான் தோழி இந்தப் பக்கம்..” என்று மறுபக்கம் வடிவு அமர்ந்து கொள்கிறாள்.

எல்லோரும் அமர்ந்து கொண்டான பிறகு, ஒரு அண்ணன் எழுந்து திருமண வாழ்த்துக் கூறுகிறார்.

“தமிழ் குலத்தைத் தரணியில் நிலைநிறுத்த தந்த வரிசையில் புகழார்ந்த பெயரைத் தேடிக்கொண்ட செம்மலே! மொழிக்கும் இனத்துக்கும் மூச்சுள்ளவரைத் தொண்டாற்றும் உறுதி கொண்ட ஊழியனாய் உழைக்கும் உத்தமா! அன்று வள்ளுவரும் வான் புகழ் இளங்கோவும் வள்ளல் சாத்தானும் வந்த பரம்பரையில் எம் உள்ளங்கள் இனிக்க இனிக்க கவிமழை பொழிவிக்கும் தீதறு இளங்கவியே! ஆரியம் என்றொரு மாயையில் மூழ்கி அடிமைகளாய், அபலைகளாய், அல்லலுறு கையில் நேரிய செஞ்சுடராய் ஒளிகாட்டும் எம்முன் ஒளி வீசும் ஏற்ற மிகு நல் விளக்கே! ஈண்டு, எம் தமிழ் இனம் தரணியில் தலை நிமிர்ந்து நிற்க, ஈடெமக்கில்லை என்று பீடு நடை போட, அன்று தமிழன் கண்ட வாழ்வே வாழ்வு என்று மேலோர் இயம்பும் மொழி வழி நின்று, களவு முன்னும் கற்பு பின்னுமென்று கன்னியொருத்தியின் கருத்தைக் கவர்ந்து...” இங்கே சற்றே நிறுத்திஅவர்களைப் பார்க்கையில் ஆரவாரம் மேலிடுகிறது. ஆகா ஆகா என்றும் அற்புதம் அற்புதம் என்றும் புகழ்மொழிகள். அதுவரையிலும் பேதையாய் மூச்சுத்திணர அமர்ந்திருக்கும் மைத்ரேயிக்கு, தன்னைச் சுற்றி இறுக்கியிருந்த பட்டிழைகள் வெடித்து விட்டாற் போலிருக்கிறது. உள்ளெழுச்சி கண்களில் நீரை நிறைக்கிறது. எனினும் தலைகுனிந்து விழுங்கிக் கொள்கிறாள்.

பின்னும் அந்த வாழ்த்துரை தொடர்கிறது. அழகுப் பந்தலுள் ஆங்காங்கே நச்சுமுனை ஊசிகள் அவளுக்கு மட்டும் உறுத்தப் புகுத்தியிருக்கின்றனர். அவனை, அவளுடைய காதலனை, பகை வீட்டிலிருந்து வெற்றி மாலையுடன் பெண்ணணங்கைச் சிறைகொண்டு வந்த வீரன் எனப் பாராட்டிப் புகழ்கின்றனர்.

“எல்லோரும் ஒர் குலம்; எல்லோரும் ஓரினம்; அதுவே தமிழ்க்குலம், தமிழினம்” என்று முழக்குகிறார்கள்.

ஒருவழியாகக் கையொலிகள் நீண்டொலிக்க வாழ்த்துரைகள் முடிகின்றன. தனராஜ் எழுந்து நன்றி நவில்கிறான்.

“அண்ணன்மாரே, இளவல்களே, என்னுள்ளம் தழுதழுக்கிறது. உணர்ச்சி மிகுதியினால், என் நா குழைகிறது நன்றி மிகுதியினால், நமது இனம், நமது பண்பாடு, நமது மொழி என்று ஒன்று சேர்ந்து இருக்கும் இக்காலை, இத்திருமண வாழ்த்தையும் விருந்தையும் என் கண்ணினுமினிய அண்ணன் கண்ணபிரான் ஏற்பாடு செய்தது; நான் எதிர்பாராதது. நாம் ஆண்டாண்டுக் காலமாய் ஒரு அந்நியனுக்கு மட்டுமில்லை நம் நாட்டிலேயே நம்மை அடிமைகொண்டு நம்மீது ஆதிக்கம் செலுத்திய ஒரு மாயைக்குக் கட்டுப்பட்டிருந்தோம். நமக்குள்ள ஆற்றலெல்லாம் எளிய கிராமங்களிலும், மூலை முடுக்குகளிலும், முடிவெட்டும் குடில்களிலும் உடை தைக்கும் ஒத்தைக் கடைகளிலும் சிதறிக் கிடக்கின்றன.

துளிகளெல்லாம் ஒன்று சேர்வோம். நம் தளபதிகள் ஜனநாயக முறையிலே எதிர்த்துப் போராடுவோம் என்று முழக்கி இருக்கின்றனர். அதை இந்தத் தமிழகமெங்கும் பரவச் செய்யும் ஆற்றல் உங்கள் ஒவ்வொருவரிடமும் என்னிடமும் இருக்கிறது, என்று நான் உணருகிறேன். சாதியுடன் நாம் தொடுக்கும் போரில் அடையும் வெற்றியாக இந்தக் கலப்பு மணத்தைக் கொள்வதாகச் சற்றுமுன் கூறிய அண்ணன் பெருமிதம் கொள்ளச் செய்தார் என்னை. இங்குள்ள இளவல்கள் இதை இதயத்தில் வைத்துக்கொள்ளட்டும்..”

மைத்ரேயி செவிகளைப் பொத்திக் கொள்கிறாள்.

பாயசமும் வடையும் கறிகட்டுப் பச்சடியும் அவளுக்கு விருந்தாக இல்லை.

4

"அண்ணி ஏன் சுணக்கமாவே இருக்கு ?”

வெற்றிலை வாயுடன் வடிவு, பிரமை பிடித்தாற்போல் உட்கார்ந்திருக்கும் மைத்ரேயியிடம் வருகிறாள்.

அந்தக் கூட்டத்தின் வேடிக்கை விளையாட்டுப் பேச்சுக்களை அவளைப்போல் மைத்ரேயியால் எப்படி ரசிக்க முடியும் ?

அம்மணியம்மாள் பின்கட்டு வேலையெல்லாம் முடிந்து அங்கே வரும்போது மணி மூன்றடித்து விடுகிறது. கூந்தலை அவிழ்த்து உதறிக் கொண்டு வெற்றிலை போட்டுக் கொள்கிறாள்.

“ஏம்மா ராணி, நீ வெத்திலே போடலே?”

“எனக்குப் பழக்கமில்லே. பின்ன சோறு வேண்டியிருக்காது.”

“எங்களுக்கெல்லாம் வெத்திலே போடாட்டி சோறுண் டாப் போலவே இருக்காது.” என்று துளிர் வெற்றிலையைச் சுண்ணாம்பு தடவித் தடவி மடித்துப் போட்டுக்கொண்டு நாவை நீட்டிவேறு பார்த்துக் கொள்கிறாள்.

முப்பத்தைந்து வயசுக் கைம்பெண் வெற்றிலை போட்டுக் கொண்டு நாவைச் சிவந்திருக்கிறதா என்று பார்த்துக் கொள்வது,

இவர்களின் குற்றமில்லை என்று மைத்ரேயி நினைத்துக் கொள்கிறாள்.

“அண்ணனுக்கு நாலு படத்துக்குப் பாட்டெழுதச் சான்ஸ் வருதாம். அடுத்தபடி அண்ணி கழுத்துக்கு நட்சத்திர நெக்லெஸ் வாங்கிப் போடச் சொல்லி இருக்கிறேன்” என்று தெரிவிக்கிறாள் வடிவு.

சாப்பிட்டு வெற்றிலை போட்டுக்கொண்ட அலுப்புத்தீர அம்மணியம்மா அப்படியே சிமிட்டித்தரையில் படுத்துக் கொள்கிறாள். மேலே விசிறி சுழல்கிறது.

“நீயும் படுத்துக்கம்மா, இப்ப இங்க யாரும் வரமாட்டாங்க...” என்று மைத்ரேயியை அவள் உபசரிக்கிறாள்.

“எனக்குப் பகலில் படுத்துறங்கி வழக்கமில்ல” என்று உரைக்கிறாள் மைத்ரேயி,

“எல்லாம் பழக்கமில்ல . பின்ன என்ன செய்யிறது?”

"அம்மணியம்மா, நான் பின்ன போயிட்டுவாரேன். காரு அந்தப் பக்கம் போகுதாம். அதைச் சொல்லத்தான் வந்தேன்” என்று நிற்கிறாள் வடிவு.

“என்னா அவ்வளவு பறப்பு?”

“இல்லே அம்மணிம்மா, வீட்ல ஏகப்பட்ட வேலை கெடக்குது, அண்ணன் வண்டியனுப்பிச்சது வந்தேன். நாம இல்லேன்னா மடிமடியா அல்லாம் கொள்ளை போயிடும்.”

“சரி, பின்னென்ன, நாஞ்சொல்றது? போயிட்டுவா...”

“அதான் அண்ணியக் கூட்டிட்டுப் போலான்னு கேக்க வந்தேன்...”

மைத்ரேயி அவசரமாக, “நான்...இங்கேயே இருக்கிறேனே....?” என்று அம்மணியைப் பார்க்கிறாள்.

“ஆமா, அதென்னமோ மெரண்டுவந்தாப்போல இருக்கு. நாலு நாள் போகட்டுமே ? கூட்டிட்டுப்போயி வச்சுக்க...”

அம்மணியம்மாளை நன்றி ததும்ப நோக்குகிறாள் மைத்ரேயி.

மாலை நாலடிக்கும்முன் அந்தப் பெரிய வீடு வந்தவர் களெல்லாம் போய் வெறிச்சென்றாகிறது. அம்மணியம்மா கால்களையும் கைகளையும் பரப்பிக் கொண்டு துரங்குகிறாள்.

பகல்பொழுது நழுவி இருளென்னும் குகையில் தஞ்சமடைகிறது. வீட்டில் பணியாளரின் அரவம் கூடத் தெரியவில்லை. மைத்ரேயி கொல்லைக்கும் வாயிலுக்குமிடையே உள்ள நடைகளில் புகுந்து புறப்பட்டு, உட்கார்ந்தும் எழுந்தும் பொழுதைத் தள்ளுகிறாள். அம்மணியம்மா கவலையின்றி இன்னமும் உறங்குகிறாள். இரவுக்கு யாரும் வரமாட்டார்களா ? சமையல் சாப்பாடென்று ஒன்றும் கிடையாதா? மாலைநேரக் காப்பியைக்கூட மறந்துபோய் விட்டாளா ?

மாடிக்கு ஏறிப்போகலாமா என்று ஒரு ஆவல் அவளை முன்னே தள்ளுகிறது. ஊடே ஒரு இனமறியாத அச்சம். பாதிப்படிகள் ஏறும்போது கீழே அம்மணியம்மாளின் குரல் பெரிதாகக் கடுமையாகக் கேட்கிறது.

“வந்திட்டானா அவன் ?”

சரேலென்ற இறக்கம்

“மாடியில் என்ன இருக்குண்ணு பாக்கப்போற?”

மின்னல்போல் இங்கிதமாக ஒருசிரிப்பு உடனே தோன்றி மறைகிறது. இது வாழ்க்கையில் மலர்ந்திருக்கும் உண்மையோ மருமக் கதைகளில் வரும் காட்சியோ என்று திகைக்கிறாள் மைத்ரேயி.

“ஒரு கூடமும் ரூம்பும்தான். பீடித்துண்டு, காலிப்புட்டி, சீட்டுக்கட்டு, காயிதக்குப்பை எல்லாம் இருக்கும், முனிசாமி போயிச் சுத்தம் பண்ணுவான். நீ இங்கே வா!”

கட்டளைக்குரல் ஓங்கி நிற்கிறது. “மணி ஏழுரையாவுது, பொரியல் கூட்டு எல்லாம் அப்படியே இருக்குது. நேரம்போனா வாசனை வந்திடும். வா...” என்று கூப்பிடுகிறாள்.

“அவங்கல்லாம் வரட்டுமே.”

“அவுங்கல்லாம் இப்ப எங்கே வரப்போறாங்க? நீ வான்னா வா!”

“எனக்குச் சாப்பாடு வேணாம், பசி எடுக்கல.”

அம்மணி அம்மாள் அவளை உறுத்துப் பார்க்கிறாள்.

“ஏன் பசி எடுக்கல? மத்தியானமே நீ சரியாச் சோறு தின்னல. எனக்குத் தெரியும் பசி எல்லாம் எடுக்கும்” சரேலென்று மேற்படி ஏறி அதட்டும் அதட்டலுக்கு அஞ்சிய வளாக அவள் பின்னே செல்கிறாள்.

இடுப்பில் சாவிக்கொத்து குலுங்குகிறது. போலிப்பட்டு விளக்கொளியில் மின்னுகிறது. வாட்டசாட்டமான பிறரை அடக்கியாளக்கூடிய உருவம்; பேச்சு; பார்வை.

பின்கட்டுக்குச் சென்று சமையலறையில் கீழே ஒரு இலையைப் போடுகிறாள். பிறகு தவலைச் சோற்றை ஒரு அலுமினியக்கிண்ணத்தில் போட்டு, மிஞ்சிய காய்குழம்பு எல்லாவற்றையும் போட்டுக் கலக்குகிறாள். ஒரு மொத்தை, உருண்டையாக இவள் இலையில் வைக்கிறாள்.

“மொடாவிலேந்து நீரெடுத்து வச்சிட்டு உக்காருவே. விக்கலெடுக்கப் போவுது!”

பகலில் விருந்து நேரத்தில் இரைபட்டுக் கருக்காத உருக்குத் தம்ளர்களில் ஒன்றைக்கூட அங்கு காணவில்லை. மொட்டையான பித்தளை டம்ளர் ஒன்றை எடுத்து நீர் முகர்ந்து வைத்துக் கொள்கிறாள்.

உண்மையில் மைத்ரேயிக்குக் குடல் காய்கிறது. அந்த கதம்ப உருண்டையைப் பிட்டு மெல்ல உண்ணத் தொடங்குகிறாள்.

அப்போது அம்மணியம்மாளே, கிண்ணத்திலிருந்து உருண்டை உருண்டையாக எடுத்துத் தானும் உண்கிறாள்.

அப்படிக் கிண்ணத்திலிருந்தும், தவலையிலிருந்தும் நேரடியாக எடுத்து உண்பது அவர்களுடைய ஆசாரத்தில் கண்டனத்திற்குரியது. சாப்பிடும் எச்சில் தட்டை, கொல்லைச் சுவர் ஆணையில்தான் மாட்டி வைக்கவேண்டும். அதைச் சாப்பிட வைத்துக் கொண்டால் கையைக் கழுவி விட்டுத்தான் சோற்றையோ குழம்பையோ தொடவேண்டும். அன்றன்று உண்ட கலங்களை வெறுமே கழுவினாலே எச்சில் போகாது என்று ஒரு ஆசாரமா என்று அக்காவின் கட்டுப் பாட்டுக்கு மைத்ரேயிக்கு கோபம் வரும். “நம் சாஸ்திரங்கள் எல்லாம் அப்படியே ஸயின்ஸ். ஒருத்தர் எச்சில் இன்னொருத் தருக்கு ஒட்டக் கூடாது. சாணி ஆண்டி செப்டிக். சாணி போட்டு சிமிட்டித்தரையில் எச்சில் துடைத்துவிட்டுப் பிறகு மறுசுருணை போட்டு சாணி அழுக்கு மாறத் துடைக்க வேண்டும்...” என்று விளக்கம் வேறு கொடுப்பாள். ஒவ்வொரு நோமும் எச்சிற் கலங்களெடுத்துச் சுத்தம் செய்வதற்குள் அவளுடைய பொறுமை கழன்று கழன்று நழுவத் துடிக்கும். இங்கு அம்மணியம்மாவுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.

கட்டுப்பாட்டுக்கு அடங்கி அடங்கி அலுத்து ஒருநாள் மீறினால் என்ன என்று மீறி அந்தக் கட்டுப்பாடுகளைப் பொருளற்றுப் போகச் செய்யவேண்டிய அவசியமுமில்லை.

“என்ன பாக்குறே? இன்னும் கொஞ்சம் வய்க்கிட்டுமா? ரசம்... ரசம்கூட நல்லாயிருக்கும்” என்று ரசத்தை முகர்ந்து பார்த்து விட்டுக் கூறுகிறாள் அம்மணியம்மாள்.

“ரசம் வேணாம். எனக்கு மோரு போதும்.”

“ஓ மோரா? எனக்கு நெனப்பே இல்ல. எந்திரிச்சி, அங்கே எலபோட்டு மூடியிருக்கிறானே, அந்தப் பானையில தயிரு இருக்கும் பாரு. அலுமினியக் குவளையில மோந்து விட்டுவா...’

“மோரு எனக்கு வேணாம்...”

“ஏன் வாணாம்? தொட்டாச்சுருங்கியா இருப்பே போலிருக்குதே! டே, மாணிக்கம், மாணிக்கம்” என்று குரல் கொடுக்கிறாள். அந்த மீசைக்காரனின் எதிரொலியே கேட்கவில்லை-- இதற்குள் மைத்ரேயியே எழுந்து, ஒரு கையால் பானையில் மூடியிருந்த இலையைத் தள்ளிவிட்டு அடியில் இருக்கும் தயிரை வழித்தெடுக்கிறாள். கொசுக்கள் மொய்க்கின்றன. ஒரே புளிப்பு. நீரை ஊற்றிப் பிசைந்து விழுங்குகிறாள். அம்மணியம்மா ரசம் கலந்து நாலைந்து கவளம் உண்கிறாள். சாப்பாடு முடிகிறது.

மைத்ரேயி கையில் இலையைச் சுருட்டிக் கொள்கிறாள். பின் தோட்டத்துக் குழாயடியில்கைகழுவிக்கொள்கையில் முண்டாசுக் கட்டுடன் மாணிக்கம் அங்கே வருகிறான்.

“எங்கே போயிட்டே? போயி, சோறு குளம்பு எல்லாம் இருக்கு எல்லாம் உண்ணிட்டு, அடுப்பாங்கரையைச் சுத்தமா வையி. அங்கேயே பீடியைக் குடிச்சிட்டுப் போட்டு வைக்காதே. ரூம்பைக் கழுவிவிட்டு காலை நேரத்துக்குச் சுத்தமா வையி....!”

“சரிம்மா!” என்று அவன் உள்ளே செல்கிறான்.

குழாயடியில் வாய்கொப்புளித்துக் கால் கழுவிச் சுத்தம் செய்துகொண்டு உள்ளேவந்து விசிறியடியில் உட்காருகிறாள் அம்மணியம்மாள். வெற்றிலை பாக்குத்தட்டை மைத்ரேயியிடம் நகர்த்தி உடனே, “ஒ, நீ தான் வெத்திலே போட மாட்டியே?” என்று பின்னுக்கு இழுத்துக் கொள்கிறாள்.

வெற்றிலையில் சுண்ணாம்பைத் தடவித் தடவி வாயில் போட்டு மெல்லுகிறாள். பெரிய தாடைகள் அசைகின்றன.

“என்ன பாக்கிறே? நான் பொகையிலே போடுறது வழக்கமில்ல...”

“இல்லீங்க. அவங்கல்லாம் சாப்பிட்டுட்டே வந்திடுவாங் களோன்னு நினைச்சேன்...”

அம்மணியம்மாள் வாயைத் திறக்கவில்லை.

வெற்றிலை நரம்பைக் கிழிப்பதிலும் சுண்ணாம்பைத் தடவுவதிலுமே கவனமாக இருப்பதுபோல் பாவனை செய்கிறாள். ஏதோ யோசனை செய்கிறாள் போலிருக்கிறது.

“இரு, இந்தப் பய ரூம்பைக் கழுவிவிட்டுக் கதவைப் பூட்டுறானான்னு பாத்துவர்றேன்...” என்று எழுந்து செல்கிறாள்.

ஏதோ ஒரு மரும வலையைப் பின்னி விரித்திருப்பது போலிருக்கிறது. இடுப்புச்சாவி குலுங்க, சற்றைக்கெல்லாம் செம்பில் குடிநீருடன் அவள் வருகிறாள்.

தனக்கும் படுக்கையைப் போட்டுக்கொண்டு, அவளுக் கும் ஒரு பாயும் தலையணையும் கொடுக்கிறாள். “இங்கியே படுத்துக்க” மறுபடியும் அவங்க வரமாட்டாங்களா என்று கேட்க நா எழும்பினாலும் சொற்கள் எழவில்லை. ஆனால் கண்கள் கேட்கின்றன.

“ஏன், சும்மா, அப்டிப் பாக்கிறே?”

“ஒண்ணுமில்ல--”

“ஒண்ணுமில்லேன்னா? ஏம்மா? நல்ல உசந்த குலத்தில் பிறந்து கண்ணுக்கு லட்சணமா இருக்கிறே. ஒரு பெரியவங்க, பெருந்தலைங்கன்னு அடங்காம என்ன இதெல்லாம்?”

வெட்டவெளித்தனிமை என்றஞ்சிய பேதைக்குப் பாம்புக் குட்டி நெளிவதுபோல் நடுக்கம் மேலிடுகிறது.

என்னமோ படிச்சேன்னுறே. இப்படிவந்து கெடுத்துக் கிட்டியே! இவனுங்க வாயில பேசுவானுக, ஒழுக்கம்னும், கற்புன்னும் அதுண்ணும் இதுண்ணும். நான் உனக்கு இதுக்கு மேல விளக்கத் தேவையில்ல. நீ இங்கே இருந்து குடித்தனம் பண்ணிக் குப்பை கொட்டமுடியாது. வெத்து வேட்டு அளப்பானுக. எந்தச் சாக்கடையிலும் போய் விழுவானுக. இருளோடு ஆறுமணிக்குப் பெரிய வீதியிலே பஸ் போகும். ஈரோடு போயி வண்டியேறிக் குடும்பத்திலே போயி ஒட்டிக்க.

ரயில் சார்சு பஸ்சார்செல்லாம் நான் தரேன். குழியிலே இடறி விழுந்திட்டேன்னாலும் இத்தோட எந்திரிச்சு ஒழுங் காப் போய் சேந்துக்க.”

படுகுழியில் விழுந்துவிட்ட திகில் இப்போதுதான் அவளைக் கவ்விக்கொள்கிறது. கண்களில் கரகரவென்று நீர் மல்கி வழிகிறது.

“...எங்க வீட்ல அக்கா சேத்துக்க மாட்டாங்களே—நீங்க அவுங்களைப் பத்திச் சொல்றது நிசந்தாங்களா?”

“நெசமாவா? சரிதாம் போ. நீங்க நல்லபடியாருக்கிறதில் எனக்கு என்னம்மா? இப்ப நீ ஒரு பொண்ணு. நானொரு பொண்ணு. அதனால சொல்கிறேன். ஒரு பொண்ணாப் பிறந்து இப்படிச் சொல்லுறவங்க, வழி காட்டுறவங்க இல்லாம ஆயிட்டமே நாம, அதுபோல யாரும் ஆகக்கூடா துண்ண—”

அம்மணியம்மா முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொள்கிறாள். “என்னைப்பத்தி நான் நினைக்கவே கேவலமாப் போயிட்டது. அப்படியாக்கிட்டானுவ. உன்னை இந்தக் கும்பல்ல கலியாணம்னு அவங்க சொல்றாப்பல, அதாவது அப்பன் தாயி பார்த்துக் கட்டியிருந்தா, நீ தாய்வீட்டிலோ, எங்கியோ பொழச்சிட்டு, இவனால வர்றபிள்ளை குட்டிங் களைப் பார்த்திட்டு, சமயத்தில மூக்குத் திருகாணியக் கேட் டாலும் குடுத்துத் தலைவருக்கு அவுங்க பிரியாணி வாங்க ஒபசாரம் செய்யற அளவுக்கு உரிமையும் கொண்டாடுவாங்க. இப்ப அப்படில்ல; ஒசந்த சாதின்னு ஒண்ணு இல்லாம இல்ல. அது ஈனத்துக்கு ஆசைப்பட்டுச் சந்தோசம் கொண்டாடாது. நீ உசந்த சாதியிலே பிறந்து இருக்கியேன்னு சொல்றேன், போயிடு”—

மைத்ரேயி தேம்பித் தேம்பி அழுகிறாள். அவளுடைய மனக் கோட்டைகள் ஒருபோதும் உறுதியாக நிலைத்திருக்க வில்லை. எனினும் இப்போது தரைமட்டமாகிவிட்டது. பழுத்துக் காய்ந்த சருகுகளை, ஓவென்றடிக்கும் காற்று நான்கு திசைகளிலும் வாரிச் சிதறுகின்றது. அவள் களங்கத்தைச்

சுமந்து கொண்டு, இடிபாடுகளிடையே, மொட்டை மரங்களி டையே நிற்கிறாள்.

“எங்க வீட்ல என்னைச் சேத்துக்கவே மாட்டாங்களே?” என்றழுகிறாள்.

ஏன் மாட்டாங்க? அவங்க உனக்கு உடம்புறப்புத் தானே? ஒருநா, ரெண்டுநா, மூணுநா, வாசல்ல பட்டினி கிடக்கலாம். குடி முழுகிப் போயிடாது. ஒட்டிக்கிடலாம். திரும்பிப் போயிடு—”

“அவ்வளவு மோசமா அவரு? என்னால அவரைத் திருத்த முடியாதுங்களா?”

அம்மணியம்மாளுக்கு எரிச்சல் வருகிறது.

“நீ இன்னும் புரிஞ்சுக்கல்ல? அவனையும் இன்னெருத் தனையும் நீ திருத்து முன்ன அவங்க உன்னைத் திருத்திடு வாங்க. ஈனக் கும்பல், இங்க ஒரு ராத்திரி நீ தங்கறதைக்கூட நான் ஒப்பமாட்டேன். நாதியில்ல, காப்பு இல்ல. இது இளகும் பிராயம், நெறிகெட்ட பதர்களாயிடுவாங்க. இவனுகளுக்கு அதே கண்ணு, தொழிலு—”

“ஐயோ—”

“அதான் சொல்றேன். மரியாதையாய் போயிடு. சட்டி பானை கழுவிச் சோறு தின்னலாம். பட்டுபவிசெல்லாம் வேணாம். அவன் உண்மையில் ஒழுக்கமா உன்னை வச்சிக் காப்பாத்தறது முக்கியம்னா, உன்னை இங்கே கொண்டாந்து வுடமாட்டான். நேரே, சேலத்தில் அப்பன் ஆயிகிட்டக் கூட்டிப் போயிவிட்டிருப்பான். பட்டினி பரதேசியானாலும் மானத்துக்குக் காப்பிருக்கிற இடத்திலே பொண் சாதிங்கறவ இருக்கணும்னு நினைச்சிருப்பான். நான் சொல்லுவது உனக்கு இப்ப புரியாம இருக்கலாம். பின்ன நீயே ஒரு நாள் நினைச்சிப்பே. பெரியவங்க பாத்து முடிக்காட்டியும், மண வடையில் மஞ்சப் புள்ளையாரைப் பூசை பண்ணி, ஆதியாத் தாய் தகப்பனைக் கும்பிட்டு, நல்லபடியா ஒருத்தனும் ஒருத்தியும் கூடி வாழணும்னிருக்கிற சடங்கெல்லாம் துண் அனுட்டு ஒட்டல் ரூம்பிலோ, எங்கியோ வச்சி ஒரு பொண்

ணைக் குலைக்கிறது. அந்தச் சடங்கு கொடுக்கிற கவுரவத் தைக் கொடுக்குமா?...

இவங்களை எனக்கு நல்லாத் தெரியும். நீ போயிடு.”

மைத்ரேயி தலையை ஆட்டிச் சம்மதம் தெரிவிக்கிறாள். எனினும் வாலறு பட்டமாய் மரத்தில் சிக்கிச் சூறாவளிக் காற்றில் விடுபடாமல் தவித்துத் துடித்துக் கொண்டிருக்கிறாள்.

இரவெல்லாம் மைத்ரேயி உறங்கவில்லை. விடியற்காலையில் தான் அவள் சற்றே அயர்ந்திருக்கவேண்டும். ஏனெனில் அம்மணியம்மா அவளைத் தொட்டு எழுப்புகிறாள். “பல் விளக்கி முகம் கழுவிக் குளிச்சிக்க, மாணிக்கத் திடம் காப்பி வாங்கித் தரச் சொல்கிறேன்!” கனவில் நடப்பது போலிருக்கிறது.

ஒரு பர்சில் பத்துப் பத்து ரூபாயாக ஐந்து நோட்டுக் களை வைத்துக்கொடுக்கிறாள். “வச்சுக்க, மாணிக்கம் குதிரை வண்டி கொண்டாரப் போயிருக்கிறான். பாலத்தடியிலே போயி நில்லு வந்த உடனே ஏறிட்டுப் போயிரு, எப்பன்னா லும் என்னை நினைப்பு வரும். அப்ப உடனே ஆண்டவனை நினைச்சு மன்னிப்புக் கேளு...”

அம்மணியம்மா முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள்.

மைத்ரேயி அவள் கால்களைத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொள்ளக் குனிகிறாள். அவள் சரேலென்று தடுத்து நிறுத்தி விடுகிறாள்.

“போ...போ... !”

மைத்ரேயி தன் துணிப்பையுடன் அந்த வீட்டைவிட்டு வெளியே வருகிறாள்.

மொட்டை மொட்டையாக ஆங்காங்கு கற்குன்றுகளும், இடையே கோபுரமுமாகத் தெரியும் மாம்பாக்கம் கிராமத்தை மைத்ரேயி தன் நினைவு தெரிந்த நாளாகப் பார்த்திருக்கிறாள். இவ்வளவு அழகாக அந்த ஊர் இதுவரையிலும் தென்பட்டதில்லை. கொத்துக் கொத்தாகத் தென்னந் தோகைப் பசுமைகள், மாமரங்கள், கடைத்தெருவைப்

பகிர்ந்துகொண்டு செல்லும் சென்னை— விழுப்புரம் சாலையும்கூட. அந்த ஊருக்குள் புழுதி படிந்திருக்காது. தன்னந்தனியாக வீட்டைவிட்டு இறங்கிக் கூடப் பழகியிராத அவள் எந்தெந்த வண்டிகளோ ஏறி, இறங்கி, முன்பின் தெரியாத புதுமைகளை, அச்சங்களை, அவமானங்களைப் பரிச்சய மாக்கிக் கொள்ளத் துணிந்திருக்கிறாள். முதல் நாள் இரவே செங்கற்பட்டை அடைந்த அவள், இரவு ரயில் நிலையத் திலேயே உட்கார்ந்திருந்தாள். காலையில் முதல் பஸ் அவளை ஊர் எல்லையில் இறக்கிவிட்டிருக்கிறது. தலையில் முக்காடு போட்டுக் கொண்டு கையில் பையுடன் விரைந்து நடக்கை யில் அவளை யாருமே கவனிக்கமாட்டார்கள் என்பதில்லை. கிராமங்களில் பரிச்சயமான முகங்கள் இனம்புரியாக் கும்பலின் புள்ளிகளாக மறைந்துவிட முடியாது. ஆனால் அவள் யாரையும் பார்க்க விரும்பவில்லை.

அவர்களுடைய வீடு ஊரோடு ஒட்டிய சந்நிதித் தெருவிலோ குளக்கரையைச் சுற்றிய தெருக்களிலோ இல்லாதது எவ்வளவு நன்றாக இருக்கிறது. அந்தக் காலத்தில் வெள்ளைத் துரைபோல் வாழ்க்கை நடத்திய அவள் தந்தை, தன் பழக்க வழக்கங்களால் உறவினர், தெரிந்தவர் வாயில் விழுந்து புறப் படக் கூடாதென்று, ஊரைவிட்டுத் தன் ஒய்வு மாளிகையைச் சமைத்துக்கொண்டார். நெல்வயல், தென்னை, மா, பலா மரங்கள் பூஞ்செடிகள் சூழ்ந்திருக்க, அவ்வீடு, கிழக்கிந்தியக் கம்பெனிக் காலத்தில் யாரோ துரைமகன் கட்டிக் கொண்டதுதான். அவளுடைய அப்பா அதை வாங்கிப் புதுப்பித்து வசதிகள் செய்து கொண்டாராம். அந்த நாட்களில் அவளுடைய தாய் அங்கு வந்ததே கிடையாதாம். அவர் காலம் கடந்து ஒரு அழகியைத் தாரமாக்கிக் கொண்டதும் அவளை அந்த வீட்டில் வைக்கக் கருதியிருந்தாராம். ஆனால் அந்த நாகரிக நங்கை அந்தக் கிராமம் பிடிக்கவில்லை என்று மறுத்துவிட்டதால் கீழ்ப்பாக்கத்திலிருந்த பெரிய பங்களாவை விட்டுத் தாயையும் குழந்தைகளையும் கிராம வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அவர் அந்தப் பங்களாவிலேயே அவளுடன் வாழ்ந்தாராம். மைத்ரேயி அந்த பங்களாவைக் கண்ணாலும் கண்டதில்லை. ஏனெனில் இந்த மாம்பாக்கம் வீட்டில்தான் அவள் மண்ணிலே விழுந்தாள். அவளுடைய பெரியக்காவுக்கு அப்போது திருமணமாகி ஆறேழு ஆண்டுகளாகியிருந்தன. அத்தை மகனையே கட்டியிருந்ததாலும் அந்த அத்தையே தாய்க்குப் பேறு பார்க்க வந்திருந்ததாலும், அவளும் அந்த வீட்டில்தான் அந்த நாளில் இருந்து உரிமை கொண்டாடியிருக்கிறாள். மைத்ரேயிக்குப் பிறப்பை அளித்த தாய், அவளுடைய அழுகைக் குரலைக் கேட்கக்கூட உயிர் தரித்தி ருக்கவில்லை. முதல் மனைவி, குடும்பத்தையே மறந்துவிட்டாராம் தந்தை. அந்நாளில் அந்த வீடு, இரண்டரை ஏகராபூமி, தோட்டம் இவற்றைப் பாதுகாத்து இக்குழந்தைகளைக் காப்பாற்றும் எண்ணத்துடன் அத்தையும் அவள் கணவரும், தங்கள் சொந்த ஊரான தஞ்சைப் பக்கத்தை விட்டு வந்தார்களாம். அவளுக்கு நினைவு தெரிந்து அக்காளின் கணவர் வேலைக்குப் போயிருக்கவில்லை. வயல், தேங்காய், மாங்காய் என்று அந்தச் சிறு பண்ணையை நிர்வகித்து வந்திருக்கிறார். அத்தானுக்கு உடன்பிறந்தவர்கள் என்று ஒரே ஒரு சோதரி தான் இருக்கிறாள். ஆனால், அத்தானின் தந்தை வழி பெரியப்பா பிள்ளைகள் டில்லியிலிருந்து இங்குவந்து போய் உறவு கொண்டாடுவார்கள். அதைத்தான் அன்று மாமா குறிப்பிட்டார்.

பழைய காலத்துச் சுற்றுப்புறச் சுவர் முன்பக்கம் மட்டும் பெரிய வாயிற்கதவைத் தாங்கி நிற்கிறது. அந்த வாயிற் கதவு வெயிலுக்கும் மழைக்கும் ஈடு கொடுத்துக் கொடுத்து, இனி இயலாதென்று ஒற்றைக் கீலுடன் உயிரைவிடத் தயாராக நிற்கிறது. அங்கிருந்து தோட்டப் பாதையாக, வீட்டு வாயில் வரையிலும் செல்ல இருநூறு கஜங்கள் தொலைவிருக்கும். மாவும் பலாவும் விரிக்கும் நிழலின் குளிர்ச்சி. அக்கா அந்நேரத்தில் வாசலில் கோலம் போட வந்திருக்கலாம். காப்பியை அத்திம்பேர்தான் போடுவார். மாடு கறந்து கொடுக்கும் சின்னு வந்திருப்பான்....

காதல் போதையில் மூழ்கியவளாய் அவள் அந்த வீட்டில் அடி வைத்தபோது விரட்டி அடித்தார்கள். அவள் உதறி விட்டு வாயிலைக் கடந்தாள். இப்போது அடிபட்டுச் சிறகொடிந்த பறவையாய்த் தரையில் விழுந்திருக்கிறாள். அவர்கள் கையிலெடுத்துப் புண்ணுக்கு இதமாக எண்ணெய் தடவுவார்களோ?

அறியாத குழந்தை தவறு செய்வது இயல்பு.

அம்மணியம்மா...அம்மணியம்மா அவளுக்கு யார்?

அவளை நினைக்குமுன் கண்களில் நீர்த்திரை படிகிறது.

அந்த, கசிவுடன் மனிதத்துவத்தில் நம்பிக்கை வைத்து அவள் வாயிலைக் கடந்து உள்ளே செல்கிறாள்.

சருகைக் குவித்து அள்ளிக் கொண்டிருக்கிறாள் மதுரம் மாமி. எதிர்பாராத ஆள்.

இந்தக் காலை நேரத்தில் எப்படி இங்கே வந்தாள் மதுரம் மாமி?

அவளருகில் மண்டி போட்டுக்கொண்டு சூணாவயிறு தரையில் இடிக்க, குடுக்கை முகம் முழுவதும் வேர்க்குரு அப்ப, அவளுடைய கைக்குழந்தை.

“மாமி?”

மதுரம் சட்டென்று திரும்பிப் பார்க்கிறாள்.

“அட...! மைத்தியா?.....”

மைத்ரேயி பரிதாபத்தைக் கண்களில் தேக்கிக்கொண்டு அவளைப்பார்க்கிறாள்.

மதுரம் ஓட்டைப்பானையின் தக்கை அடைப்பானை இழுத்து விட்டாற்போன்று பேசத் தொடங்குகிறாள்.

“நீ வந்துட்டியா? நல்லவேளை, போ! அக்காவுக்கு திடீர்னு நேத்து மயக்கம் போட்டு கட்டையோடு கட்டையாப் பேச்சு மூச்சில்ல. நீ போனதுக்கப்புறமே உடம்பும் மனசும் சரியாத்தானில்ல உங்கக்காவுக்கு. கலகலன்னே பேசறதில்ல. தூண் பக்கம் பின்புறம் உக்காந்திண்டிருப்ப, சுமதிகூட பெரிய லீவுன்னு குழந்தைகளை அழைச்சிண்டு வந்து பத்து நாள் இருந்துட்டுப் போனா. அக்கா சாப்பிடறது கூட குறைஞ்சு போச்சு. டாக்டர்ட்ட யானும் காட்டிக்கோன்னு சொல்லிட்டு போனா. நாங்கூட புதிசா ஹெல்த் சென்டர்ல ஒரு லேடி டாக்டர் வந்திருக்கா, உடம்பைக் காட்டிண்டு வாங்கோ மாமி, கண்ணும் முகமும் ரொம்ப பலகீனமாக் காட்டறதுன்னேன். அப்புறந்தான் மாமி எங்கிட்ட காதோடு சொன்னா, இத்தனை வயசுக்கப்புறம் மூணுமாசமாச்சுன்னு..... அதுக்கப்புறம் நான் தினம் வருவேன். ஏதோ வாய்க்கு வேணுங்கறதைப் பண்ணிக் கொடுப்போம், பாவம்னு. நேத்திக்கு எனக்கு வரமுடியலே. பொம்மிய அனுப்பிச்சு மாமி புடவையைத் தோச்சு உணர்த்திட்டு, காப்பிக் கொட்டை அரைச்சு, தோசைமாவுகரைச்சு வச்சிட்டு வாடின்னு. ‘அம்மா, பங்களாவாத்து மாமி மயக்கம் போட்டுக் கிடக்கான்னு’ ஓடி வந்து சொல்லித்து; அவர் இந்தண்டை அந்தண்டை நகர மாட்டார், பாரு. நேத்திக்கு என்னமோ தென்ன மரத்திலே பூச்சி இறங்கியிருக்குன்னு மருந்து வாங்கப் போனாராம். முனியம்மா கீத்துப்பின்னிண்டு உக்காந்திருந்திருக்கா. பேசிண்டே இருக்கறச்சே, அப்படியே சாஞ்சிட்டாளாம். அத்திம்பேருக்குச் சொல்லியனுப்பிச்சு வந்து, கார் வச்சிண்டு செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கா. வீட்டை அப்படியப்படியே போட்டுட்டுப் போயிருக்காளேன்னு வந்தேன்....”

மைத்ரேயி கண்கள் அகல ஊமையாய் நிற்கிறாள்.

இதுதான் இறைவன் கருணையோ? மரத்திலிருந்து ஒடிந்து விழுந்த சிறுகிளை மரத்தில் மீண்டும் ஒட்டிக் கொள்ளுமோ அந்தக் கருணையில்?

“சுமதிக்கு, ரஞ்சிக்கெல்லாம் தந்தி கொடுத்திருக்காளா மாமி”

“நினைக்க எங்கே நாழி?...”

மதுரம் சரசரவென்று சருகுகளை சாக்கில் அள்ளிப் போட்டுத் திணிக்கிறாள்.

ஒரு நெடுமூச்சுடன் வாயிற்படிகளைக் கடக்கிறாள். ஏணிப்படிகள் போல் எட்டுப் படிகள். அவற்றுக்குமேல் உயர்வாக அமைந்த அழிபோட்ட முன் வாயில் ஐயத்துக்கிடமின்றி, பூட்டப் பெற்றிருக்கிறது. அந்த முன் கூடத்தில் பித்தளைக் குழாய்ப் பளபளக்க ஊஞ்சற்பலகை தொங்குகிறது. அவளுடைய தந்தையின் உல்லாச வாழ்வை நினைப்பூட்ட அவர்களுக்கென்று தங்கிய பொருள் அது ஒன்றுதான். தொங்கும் சங்கிலி தெரியாமல் மூடிக்கொண்டிருக்கும், பித்தளைக் குழாய் பளபளவென்று மின்னிக் கொண்டிருக்கும். அதற்கு அத்திம்பேரே மெருகு போடுவது வழக்கம். அதில் அக்காவும் அவரும் உட்கார்ந்திருப்பார்கள். மைத்ரேயி அவர்கள் இல்லாத சமயங்களில்தான் அதில் உட்கார்ந்து ஆடியிருக்கிறாள். சுமதியின் குழந்தைகளும், ரஞ்சனியின் குழந்தைகளும் விடுமுறைக்கு வந்தால் அவள் அவர்களை உட்கார்த்தி வைத்து வேகமாக ஆட்டுவாள். அவளுக்கு அதில் உட்கார்ந்தால் சிறிது நேரத்தில் வயிற்றைப் புரட்டும். அந்த வயிற்றுப்புரட்டல் பழகி, ஊஞ்சற்பலகை ஒத்துப்போக அவளுக்குச் சந்தர்ப்பமே வாய்க்கவில்லை.

அவள் கண்மூடித்தனமாகப் படி இடறி விழ ஒரு வாழ்க்கைக்குப் போனாளே, அதுவும் சந்தர்ப்பம் இல்லாமலே போக முடிந்து விட்டது.

அக்காவுக்கு இப்போது முப்பத்தாறு முப்பத்தேழு வயசிருக்கக்கூடும்... அபூர்வமாக மகப்பேறா? அல்லது.....

‘டில்லிக்காரன்’ கொண்டுபோவான் என்று மாமா கூறியது நினைவுக்கு வருகிறது.

ஆண்டவனே, நல்லபடியா அக்கா பிழைத்து எழுந்து...

“ஏம்மா, மலைச்சு நிக்கறியே? அக்காவுக்கு ஒண்ணும் ஆகாது. எதானும் தெய்வதோஷம் தானிருக்கும். இந்தத் தடவை அம்மா தெவசத்துக்கு மங்கிலிப் பொண்டுகள் பண்ணலே, மனசே பிடிக்கலேன்னு சொல்லிண்டிருந்தா. நான் வேண்டிண்டிருக்கேன். பிழைச்சு நல்லபடியா வரட்டும் அப்படீன்னு.... இந்தக் கதவை நாந்தான் பூட்டிண்டு போயிடுங்கோன்னேன். பின்பக்கம் சமையல்கட்டு திறந்திருக்கு ...வா.”

பின்பகுதி, ஓடு வேயப்பட்ட தாழ்வரை. அதை ஒட்டி கிடங்கு போன்ற இரு அறைகள். மேல் தளத்தில் ஊஞ்சல் தொங்கும் முகப்பறை. படுக்கையறைகள். மரத்தள வரிசையாகிய நடன கூடமாக உபயோகிக்கப் பெற்ற பெரிய அறையில்தான் இப்போது சுமதி, ரஞ்சனி எல்லாரும் வந்தால் புழங்கிப் படுப்பார்கள்; ஏதேனும் விசேஷம் என்றால் பத்துப் பேர் சேர்ந்தாற்போல் சாப்பிட உட்காரக் கூடிய கூடம் அது. உயர்ந்த, உயர்ந்த ஜன்னல்களின் கதவுகள் வெனிஷியன் திரை முறைப்படி அமைந்திருப்பவை. இந்தத் தளவரிசையிலிருந்து பின்புறம் ஏழு படி இறங்கினால் அடித்தளத்தில் அமைந்த கிடங்கறையில் வந்து சேரலாம். அந்தக் காலத்தில் அதில் மதுபானங்களை வைத்திருந்த அலமாரியும் கூட இருக்கிறது. இப்போது அங்கு நெல் மூட்டைகளும் தேங்காயும் வைத்திருக்கிறார்கள். அந்த அறை எப்போதும் பூட்டியிருக்கும். சமையல் கட்டிடம் என்பது தனியாக அமைந்திருந்தது அந்நாளில். இப்போது அதில் விறகு, எரிமூட்டை, உரி மட்டை அடுக்கியிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் வைக்கோல் சேமித்திருக்கிறார்கள்.

தாழ்வரையை ஒட்டி அறை திறந்திருக்கிறது. அங்கு மதுரத்தின் பெரிய பிள்ளை சீனு அடுப்படியில் காப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். பெரிய மண்ணடுப்பில் கரிப்பாத்திரம் ஒன்றில் பால் காய்கிறது.

சீனுவின் அப்பா, அந்தக் குடும்பத்துக்கே உரித்தான மரத்தட்டு முகத்துடன், நரைத்துப் பிடரியில் தொங்கும் பாகவதர் கிராப்பு முடியுடன் சம்மணம் போட்டுக்கொண்டு அடுப்படியில் காப்பிக்கு உட்கார்ந்திருக்கிறார். அழுக்கு அரைக்கச்சை, வேர்க்குரு அப்பிய மேனியினராய்ப்பத்து வயசும் ஏழு வயசுமாய்ப் பையன்கள். ஐந்து வயசிலும் கையிலும் பெண்கள். மதுரம் கைக்குழந்தையுடன் அங்கே வரும்போது, பெரிய ஃபில்டரைத் தட்டி டிகாஷனை எடுத்துக் காபியைக் கலக்கிறான் சீனு.

மைத்ரேயி அங்கு நிற்பதை அவன் பார்க்கவில்லை.

“எழுந்திருங்கோ வீட்டுக்கு உடைமைக்காரி வந்துட்டா. காப்பியக் கலந்து இப்பிடி ரெண்டு டம்ளர் வைடா சீனு!” என்றுமதுரம் அறிவிக்கிறாள்.

“ஓ, பேஷா! அவாளுக்கில்லாததா?” என்ற சீனு நிமிர்ந்து பார்த்துவிட்டு, பாலைக் கிளறி ஐஸ் டம்ளரில் ஊற்றி, டிகாஷனை விட்டுக் கலந்து சர்க்கரையைப் போட்டு ஓட்டல் பாணியில் ஆற்றி வைக்கிறான்.

அடுக்கடுக்காய் அவள் சொப்பனம் காண்கிறாளா? இவர்கள் யார்? இந்தக் குடும்பத்துக்கு என்ன ஒட்டு?

இந்த மனிதன் எங்கோ ஓட்டல் வைத்து ஓட்டாண்டியாகப் போனபின் குடும்பமும் குட்டிகளுமாக இங்கே பிழைக்க வழி தேடி வந்திருப்பதாகத்தான் மைத்ரேயி அறிந்திருக்கிறாள்.

குடும்பம் நிலைக்கக்கூடிய வேர்களுக்குப் பொருளாதார பசை இல்லாமல், அவ்வப்போது மதுரம் பின்கட்டில் அக்காவைத் தேடி வந்ததுண்டு. சூணா வயிற்றுக் குழந்தைக்கு அக்கா தினமும் அரை டம்ளர் பால் கொடுப்பாள். “அதை இங்கேயே குடுத்துடேன்? ஏன் ஆத்துக்குத் தூக்கிண்டு போறே?” என்று அதட்டுவாள்.

மடியாக, மாவிடிக்கவும், தோசைக்கு அரைக்கவும் வரும் போதெல்லாம் அவளைத் தொடர்ந்து அந்தப் பையன்களும் வந்து தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

“உங்க மனசுக்கு இப்படிக் கடவுள் வைக்கலாமா? வேண்டாம் வேண்டாம்ங்கறவாளுக்கெல்லாம் சோதனையாக் குடுக்கறார்... நான் முகஸ்துதிக்காகச் சொல்லல. உங்களைப்போல உலகத்திலே யாரிருக்கா? என்னை எல்லாரும் வாயிக்கில்ல, வயத்துக்கில்ல வருஷத்துக்கொன்னாப் பெத்துக்கிறதில குறைச்சலில்லன்னு மூஞ்சிக்கெதுக்கவே கேக்கறா. ஏண்டி எங்கயானும் ஆஸ்பத்திரி போயி இல்லேன்னு பண்ணிண்டு வந்து தொலையறதானேன்னு கேக்கறா.” என்று உரலில் மிளகாய்ப் பொடியை மசித்துக்கொண்டு ஒருநாள் அக்காவிடம் கண்ணீர் வடித்ததை பார்த்திருக்கிறாள்.

அதெல்லாம் அக்காவின் நெஞ்சத்தைத் தொட்டுக் கரைக்கச் செய்யும் சொற்கள் தாமோ?

வீட்டை அவளிடம் விட்டுப் போனாள் என்றால் இப்படி உக்கிராண அறையைக் கைப்பற்றுவதும் குடும்பத்தோடு புகுந்து காப்பி குடிப்பதும் நேர்மையான செயல்களா?

மைத்ரேயி பற்களைத் துலக்கப் போகிறாள். நித்யமல்லிகைப் பந்தலில் வெண்மையான மொட்டுக்கள் அவளைப் பார்த்துச் சிரிக்கின்றன. திரும்பிவந்துவிட்டாயா? திரும்பி வந்துவிட்டாயா? என்று கேட்பதைப் போல் கொட்டிலிலுள்ள கபிலாவும் நந்தினியும் பார்க்கின்றன. கொட்டிலைச் சுத்தம் செய்ய இன்னும் முனியம்மா வரவில்லை போலிருக்கிறது.

மைத்ரேயி தாழ்வரையில் கால்வைக்கு முன்பே மதுரம் சிரித்துக்கொண்டு காப்பியை அவளிடம் கொடுக்கிறாள்.

சிரிப்பு மனசுக்கு இதமாக இருக்கிறது. சிறு வாகான உடல்தான். ஆனாலும் வறுமை, சிறுமைகளை உள்ளடக்கிக் கொண்டு எழும்பும் சிரிப்பு. மதுரம் மாமியின் அடர்ந்த கைகொள்ளாத முடி எண்ணெய்ப் பசையின்றி ஊட்டமும் பொலிவும் இன்றி அலட்சியமாக முடியப் பெற்றிருந்தாலும் அதன் செறிவே ஒரு அழகாக இருக்கிறது. வீட்டுப்படி ஏறியதும் இப்படிச் சிரித்துக் கொண்டு யாரோ காபி கொடுக்கப் போகிறார்கள் என்பதை அவள் கற்பனைகூடச் செய்து பார்க்கவில்லையே?

“அப்ப, நான் பட்டணம் வரை போறேன். நீ இதுகெளெல்லாம் கூட்டிண்டு ஆத்துக்குப்போ. நீ என்னடா பண்ணப்போறே சீனு?”

அன்றைய ‘நிகழ்ச்சி நிரலை’ப் பற்றி அப்போதுதான் திட்டமிடுவது போல் கேட்கிறான் மதுரத்தின் கணவன்.

சீனுவுக்கு இன்னமும் மீசை முளைக்கவில்லை. ஆனாலும் வெற்றுக் கச்சையுடன் உடம்பைக் காட்டிக்கொண்டு நிமிர்ந்து நிற்கும் அவனை அப்படிப் பார்க்க மைத்ரேயிக்குக் கூச்சமாக இருக்கிறது.

“என்ன பண்ணச் சொல்றேளோ, பண்றேன்!”

உடனே மதுரம், “நீ ஒண்ணும்பண்ணவேண்டாம்! அந்த அய்யாசாமியை கடைத்தெருபக்கம் பார்த்தியானா வர வேண்டிய காசை வாங்க வழிபாரு. டீ பொம்மி, இத்தைத் தூக்கிண்டு போ, நீ ஆத்துக்கு. நான் பின்னாலியே வரேன்...”

வெற்றிலை புகையிலை அடங்கிய பெருங்காயப் பெட்டியுடன் தொப்பை தெரியக் குட்டையாக எழுந்து நிற்கிறான் அந்தக் குடும்பத் தலைவன். தலையில் அழுக்குத்துண்டைப் போட்டுக் கொண்டு அவன் நடக்க முயலும் போதுதான் கால் சரியில்லை என்று புரிகிறது. குட்டையும் நெட்டையுமான கால்கள். உடல் சரிந்து சரிந்து அசைகிறது.

மைத்ரேயி அந்தக் குழந்தைச் செல்வங்களைப் பார்த்துக் கொண்டு நாவெழாமல் நிற்கிறாள்.

சில மாசங்கள் குடித்தனம் செய்த அநுபவம் அவளுக்கு இல்லாமல் இருந்த நாட்களில் தன் சிறுமைகளைத் தவிர வேறு நினைக்கத் தெரிந்திருக்கவில்லை அவளுக்கு. இப்போது அவள் புதிய மலர்ச்சி பெற்றாற்போல் சிந்திக்கிறாள்.

இந்த மதுரமும், சாய்கால் கணவனும் குழந்தைகளும் எப்படி நிரந்தர வருமானமில்லாமல் குடும்ப வண்டியை ஓட்டுவார்கள்? அன்றன்று ஆண்டவன் எங்கேனும் கைகாட்டுவான் என்ற நம்பிக்கையோ?

சீனுவின் தலைமேல் ஒரு சாக்கு மூட்டையை எடுத்து பைக்கிறாள் மதுரம். சாக்கு பளுவாக இருக்கும் போல் தோன்றுகிறது.

மதுரம், மைத்ரேயியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு “சருகெல்லாம் கூட்டினேனில்லையா? அதோடு கொஞ்சம் எரி மூட்டை கொண்டுவந்து இங்கே உணத்தியிருந்தேன். அங்கே வச்சா திருட்டுப் போயிடும். அத்தனையும் பரதைக் கும்பல்...” என்று அறிவித்துவிட்டு, “போங்க, போங்க...” என்று எல்லாரையும் விரட்டுகிறாள்.

சூணாவயிற்றுக் குழந்தை அவள் இடுப்பைவிட்டு இறங்க மாட்டேன் என்று முரண்டுகிறது.

“போம்மா, அக்கா மிட்டாய் வாங்கித்தராடீ! ஆறு பை சாக்குத் தேங்காய்மிட்டாய் வாங்கிக்குடு..”

தேங்காய் மிட்டாய் காசிருந்தால்தான் கிடைக்கும் என்று அந்தப் பிஞ்சுக்கு அறிவு முற்றியிருக்கிறது. மதுரம் இடுப்பிலிருந்து ஓரணாச் சில்லறையை எடுத்துக் கொடுத்த பின்னரே அது அவள் இடுப்பைவிட்டு மாறுகிறது. அவர்கள் எல்லோரும் செல்கின்றனர்.

“மைத்தி உள்ளே வா, ஏன் அப்படியே நிக்கறே? உள்ளே வந்து சாமான் எதானும் எடுத்துக்கொடு. உப்புமா வேணாக் கிளருறேன். உன் கண்ணும் மூஞ்சியும் கெஞ்சறது. ரொம்ப தூரமோ பிரயாணம்?”

“இல்லே...”

“உக்காரேன்? நல்லவேளை, நீ வந்தே. என்னதான் ஆயிரம் மாமி நல்லவளாயிருந்தாலும், நான் பஞ்சம் பனாதை. இன்னிக்குப் பாலும் காப்பித்தூளும் வாங்கிண்டு இங்கேயே வந்துடுங்கோ. சமையல் ரூமைத் திறந்துதான் வச்சிட்டு மாமா சொல்லிட்டுப் போயிருக்கார்.... காப்பியை இங்கியே போட்டு அனுப்பறேன்னு சொல்லிருந்தேன், எல்லாம் ஓடி வந்துடுத்து.....” என்று எதற்கோ அஞ்சினாற்போல் நியாயம் பேசிக் கொள்கிறாள் மதுரம்.

“அதனாலென்ன மாமி, குழந்தைகள் அப்படித்தான் வரும்- அக்கா... உங்ககிட்ட... வேறொண்ணும், என்னைப் பத்திப் பேசினதில்லையா?”

மதுரம் மாமி சிரிக்கிறாள்.

“அப்படித்தானிருக்கும். இப்ப இது மாதிரி எங்கும் நடக்கிறதுதான். அவரும் இப்ப ஊருக்கு வந்திருக்காரா மைத்தி?”

மைத்ரேயியின் கண்கள் நிரம்புகின்றன.

“நான் விவரம் புரியாம குழியிலே விழப் போயிட்டேன் மாமி. நல்லவேளையாப் புரிஞ்சிண்டு ஓடிவந்துட்டேன் -- அக்காவும் அத்திம்பேரும் என்னைத் திரும்ப வீட்ல சேர்ப்பாளா மாமி?...”

மதுரம் மாமி ஒரு நிமிடம் பேசவில்லை.

“சேர்க்காம இருக்க நீ என்ன அவ்வளவு பெரிய தப்புபண்ணிட்டே? நீரடிச்சு நீர்விலகுமா? நீ குழந்தை மாதிரி அவாளுக்கு-மல்லாக்கப் படுத்துண்டு ஆகாசத்திலே துப்புவாளா?”

மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது. “நிசமா எம்மேல கோபப்பட மாட்டாளா, மாமி?”

“கோபம் வரத்தான் வரும். ஆனா பாசம் இருக்காதா? என்னடாது இந்தப் பெண் ஜாதிவிட்டு ஜாதின்னு தவறிப் போய் சம்பந்தம் பண்ணிண்டுடுத்தேன்னு இருக்கத்தான் இருக்கும். அது எப்பவும் இருக்குமா?”

“மறுபடியும் என்னை அக்கா- அத்திம்பேர் கோபிச்சு விரட்டினால் வேறு வழியே இல்லே. இப்படியே எங்கயானும் ரயில் தண்டவாளம், குளம் குட்டைன்னு போக வேண்டியது தான்...”

“அசடு இப்படி எல்லாம் பேசாதே. உங்கக்காவுக்கும் அத்திம்பேருக்கும் பொன்னான மனசு. எத்தனை வருஷமாகவோ கூடாத பாக்கியம் கூடி இருக்கு. நல்லபடியாத் திரும்பி வரணும்...”

நல்லபடியாகத் திரும்பி வரவேண்டும். அக்காவை உடலசைக்கவிடாமல் தன் உடலைச் செருப்பாய் தைத்துச் சேவை செய்ய வேண்டும். அக்காவுக்கு இவ்வளவு நாட்கள் கழித்துப் பிறக்கப் போகும் குழந்தையைப் பொன்னின் மலரெனத் தூக்கிச் சீராட்டவேண்டும்...

தோட்டத்துக் கிணற்றில் ‘பம்ப்’ போடும்போது, தண்ணீர், யானை துதிக்கையால் பொழியுமளவுக்கு நீர் கொட்டி மடைவழி ஓடும். அங்கே கல்லில் அவள் துணி துவைத்துக் குளிப்பாள். மைத்ரேயிக்கு இப்போது அப்படிக் குளிக்க வேண்டும் போலிருக்கிறது. எல்லாவற்றுக்கும் ஒரு முழுக்கு: அவனுக்கு; அவனோடு வாழ்ந்த வாழ்வுக்கு; அந்த நினைவுகளுக்கு.

மதுரம் மாமியை உப்புமா கிளறச் சொல்லிவிட்டு அவள் தோட்டக் கிணற்றை வந்து எட்டிப் பார்க்கிறாள்.

தண்ணீர் மிகவும் அடியில் இறங்கியிருக்கிறது. இன்னமும் காற்றுக் காலம்வந்தால் வற்றும்.

பம்ப்பை இயக்கும் மின்விசைக்கான பித்தானை அவளால் தட்டிவிடமுடியாது. அறைக்கதவு பூட்டியிருக்கிறது. எனவே குளியலறைக்கருகில் உள்ள சிறிய கிணற்றில் தான் அவள் நீரிழுத்து முழுகவேண்டும்.

துறவுக் கிணற்றில் முன்பு ஏற்றம் இறைக்கும் வசதிதான் இருந்ததாம். அத்திம்பேர்தான் மின்னாற்றலால் இயங்கும் பம்பு வைத்தார். அதை வேறு யார் தொட்டமுக்கினாலும் அவருக்குப் பிடிக்காது.

...ஒரு சிறிய ஒழுங்கீனத்துக்கே பொறுமை இழப்பவர் அவர்.

அவளை, அவளை மன்னிப்பார்களோ?

அவளால் மீண்டும் விட்டபடிப்பைத் தொடர முடியுமோ?

பெண்களெல்லாம் ஓடிப் போனவள், வழுக்கி விழுந்தவள் என்று அவளைக் குத்தி இழுப்பார்களோ?

தலைமையாசிரியர் அத்திம்பேரைப் போலவே சிறிய ஒழுங்கீனத்துக்கும் பொறுமை இழப்பவர்.

அவர் மறுபடியும் அவளுடைய நிழலைக்கூடப் பள்ளிக் கூடத்தில் அநுமதிக்கமாட்டார்.

இந்த உண்மைகளெல்லாம் அவளுக்கு முன்பே நெஞ்சில் பதிந்து இருந்தும், எப்படிச் சென்ற நாலைந்து மாதங்களில் அவற்றை அவள் மறந்து போனாள்?

இப்போது இந்த இடை நாளைய வாழ்வின் சுவடுகளைக்கூட அடியோடு நினைவிலிருந்து கெல்லி எறிந்துவிட முடியுமாயின் எவ்வளவு நன்றாக இருக்கும்!

சை! என்ன இழிவு? ஒருவனுடைய உடலுக்கு ஆசைப்பட்டுத் தன்னைக் குலைத்துக் கொண்டதாகத்தானே ஆயிற்று?

தன்னைக் குதறிக் குதறிப் போட்டுக்கொண்டாலும் மைத்ரேயிக்கு அந்த அருவருப்புத் தொலையாது போலிருக்கிறது.

கிணற்றின் கரையில் நின்று அவள் தண்ணீரை இழுத்து இழுத்துக் கொட்டிக் கொள்கிறாள். துணிகளை அறைந்து அறைந்து துவைக்கிறாள். தன் ஏமாற்றம், தோல்வி, அச்சம், அருவருப்பு எல்லாவற்றையும் அத்தகைய புறச்செயல்களால் துடைத்துக் கொள்ள முயலுகிறாள்.

பையிலிருந்து வேறொரு பழைய செட் உடைகளை எடுத்து அணிந்து கொள்கிறாள்.

ஈர உடைகளை உலர்த்தலாம் என்று வாயிலுக்கு வருகையில் அங்கே அத்தான், அவளுக்கு அத்திம்பேராகவே உரிமையும் பாசமும் எட்டாத தொலைவிலேயே நின்றுவிடும் அக்காளின் கணவர் வந்து கொண்டிருக்கிறார்.

அவளைக் கண்டதும் விழிகள் கூர்மையாகின்றன.

“நீ.எதுக்காக இங்கே வந்தே?” அவள் கை ஈரத்துணிகளைக் கெட்டியாகப் பற்றிக் கொள்கிறது.

“எதுக்காக நீ இங்கே வந்தேன்னு கேட்டேன்!”

குரல் உச்சத்துக்கு ஏறுகிறது; கனற்பொறிகள் பறக்கின்றன.

துடிக்கும் இதழைப் பல்லால் கடித்துக்கொண்டு காற்பெருவிரலால் நிலத்தில் கோலமிடுகிறாள்.

‘உனக்கு அன்னிக்கே உங்கக்கா ஸ்நானம் பண்ணியாச்சே. இங்கே யார் உறவு உனக்கு ?”

“என்னை மன்னிச்சுக்குங்க. நான் தப்பா நடந்துட்டேன். உங்க குழந்தை மாதிரி நினைச்சு நீங்க மன்னிக்கணும். நான் சத்தியமாச் சொல்றேன். அப்ப எனக்கு மூளை குழம்பி இருந்தது; பைத்தியம் பிடிச்சிருந்தது. நான் மீண்டு வந்துட்டேன் என்னைப் போன்னு சொல்லிடாதேங்கோ அத்திம்பேர்...? அக்காவுக்கும் உங்களுக்கும் என்னைச் செருப்பாத் தச்சாப்பல நான் எண்ணிப்பேன்...”

அது நாடகக் காட்சியல்ல. அவளுக்குத் கீழே விழுந்து காலைத் தொடவேண்டும் என்று தெரியவில்லை. ஆனால் எண்சாண் உடலோடு உள்ளத்தையும் குழைத்துக்கொண்டு கெஞ்சுகிறாள்.

அவர் அவளைத்தொட்டு எழுப்பவேண்டாம்; குழந்தே. என்று குரல் கனியக் கூப்பிட்டுத் தேற்றவேண்டாம்.

“உன் அக்கா பிளட்பிரஷர் அதிகமாய் நர்சிங்ஹோமில் படுத்திருக்கா. நீ ஏற்கெனவே இந்த வீட்டுக்கும் அவளுக்கும் தேடிக்கொடுத்ததெல்லாம் போறும். மரியாதையா இப்பவே போயிடு. ஆமாம், போயிடு!”

குரல் இடிபோல் முழங்குகிறது. வாயிலைக் காட்டி அவர் வெருட்டுகிறார்.

“நீங்களே இப்படிச் சொல்லிட்டா நான் எங்கே போவேன்? எனக்குவேற யாரிருக்கா? நான் பழைய மைத்ரேயி இல்லே, அவ செத்துப்போயிட்டா...”

“சினிமாப் பேச்செல்லாம் இங்கே நம்பறதுக்கு யாருமில்ல. நான் இப்ப குளிச்சு சாப்பிட்டுட்டுத் துணிமணி எடுத்துண்டு கதவைப் பூட்டிக்காவலும் வச்சிட்டுப் போகப் போறேன். உன் அக்கா வந்தா வீண் கலவரங்களாகும். நீ இங்கே ஒரு நிமிஷம் கூட இருக்கக்கூடாது, போ...!”

“போ..!”

“போடின்னா, ஏன் அழுதுண்டுநிக்கறே? அன்னிக்கு எந்தத் தைரியத்திலே போனே ?”

“உங்கள் சொந்தப் பெண்ணே இப்படித் தப்புச் செய்தாள்னு பெரிய மனசு பண்ணி நினைச்சுக்குங்கோ அத்திம்பேர், எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கோ...” கல்லும் கரையும் வண்ணம் கதறி அழுகிறாள்.

“என் சொந்தப் பொண்ணானா அன்னிக்கே கிணத்திலே குளத்திலே பிடிச்சுத் தள்ளிட்டு நிம்மதியாயிருப்பேன்! சீ மூஞ்சில முழிக்க வெக்கமாயில்லே உனக்கு?”...

மின் ஊசிகள் பாய்ந்தாற்போல் இருக்கின்றன.

தரையைத் தொட்டுக் குழிபறித்துத் தலையைத் தாழ்த்த இயலாமல் தன்மானம் என்ற ஒன்று தடுக்கிறது.

ஈரத்துணிகளுடன் அவள் நடக்கிறாள். அந்தச் சூழலில் மரங்களும் மண்தறிகளும்கூட அவளை வாஞ்சையோடு பார்ப்பதாகத் தோன்றுகின்றன. ஒற்றைக் கீலில் நிற்கும் வாயிற் கதவு, ‘போய் வருகிறாயாம்மா’ என்று கேட்பதாக நினைத்துக் கொள்கிறாள். நான் எங்கே வரப் போகிறேன்? கோயில் குளத்தில் விழுந்து பிராணனைவிட்டால் ஊரும் உலகமும் இன்னார் வீட்டுப் பெண் என்று சொல்லும். அப்போதுகூட இந்த வாயிற்படி வழியாகக்கொண்டு வரமாட்டார்கள்...’

“நான் போகிறேன்!”

அவள் வாயிலைத் தாண்டிப் பத்தெட்டுக்கூட நடந்திருக்க மாட்டாள்.

மதுரம் அவளுடைய பையையும் துக்கிக்கொண்டு விடு விடென்று வருகிறாள். அவள் தோளைப் பிடித்து நிறுத்து கிறாள்.

“இந்தா பை...”

“பை என்னத்துக்கு மாமி எனக்கு? இந்தாங்கோ இந்த ஈரமும் அதில் இருக்கட்டும்.”

அழுகை வெடித்து வருகிறது. மதுரம் அந்த ஈரத்துணிகளை வாங்கிக் கொள்கிறாள். “எங்கே போறே இப்ப?”

“எனக்கு.போக்கிடம் எங்கே இருக்கு ?...வரமுடியாத இடத்துக்குத்தான் போகணும்.”

“அசடு, என்ன ஆயிட்டுது இப்ப? நம்மாத்துக்கு நட, சொல்றேன்!”

மைத்ரேயி அதிசயமாய் அவளை நோக்குகிறாள்.

‘நம்மாம்’ அப்படி அவளை வரவேற்கும் இடம் ஒன்று இருக்கிறதா? வழி பிறழ்ந்து சென்ற அவளுக்கு அப்படியும் ஒரு இடம் இருக்கிறதா?

“வேண்டாம் மாமி, உங்களுக்கு இருக்கும் கஷ்டம் போதாதா? நானுமாகூட?”

“பரவாயில்லே. கூடம் பெரிசாயிருந்து ஒண்ணே ஒண்ணாய் பழகினாத்தான் இன்னொண்ணு வந்தால் தாள முடியாது. ஆறோடு ஏழாக நெருங்க இடமுண்டு, வா, வா...”

ஊட்டமும் வளமும் காணாத முகத்திலே கண்கள் மட்டும் கனிந்து ஒளிருகின்றன. எண்ணெயில்லாத முடிகூட அழகாக இருக்கிறது. இரந்தும், இச்சகம் பேசியும் தானும் வயிறு வளர்த்துக் குடும்பமும் பெருக்கும் மதுரம் மாமி அவளைக் கூப்பிடுகிறாள்.

இவளுக்கு அவளைக் கூப்பிடுவதனால் மதிப்புக் குறைவு கிடையாதோ?

இவள் உடன் பிறவாததாலோ?

தந்தையின் நிலத்தில் விளைந்துவரும் நெல் மூட்டைகள் அடுக்கியிராததால் அழைக்கிறாளோ?

மைத்ரேயியைவிட மதுரம் மாமி எந்தவிதத்தில் தாழ்ந்தவள் ?

அதே உயர்ந்த குலம். மைத்ரேயியைப் போன்ற நிறமில்லை. தோற்றத்தில் அரசகுமாரியில்லை. எஞ்சியிருப்பது மைத்ரேயியிடம் அந்தக் தோற்றம்தான். இருவரும் நடக்கிறார்கள். மதுரம் மாமி முன்னே வழிகாட்ட, பையுடன் நடக்கிறாள். வெயில் சுட்டெரிக்கிறது.

மதுரம்மாமியின் வீடு எங்கே இருக்கிறது?

அது கோயிலுக்கு நேராக உள்ள தெருவில் இருக்கிறதோ? குளத்தைச் சுற்றியுள்ள தெருக்களில் இருக்கிறதோ? தெரு வாயிற்படியில் நின்று மேற்குலத்துச் செருக்கெரியும் கண்களுடன் ஆணும் பெண்ணுமாக அவளை விழித்துப் பார்த்துச் சொற்களால் குதறி எறிவார்களோ?

அம்மாடி... சந்நிதித் தெருவுக்குத் திரும்பவில்லை.

நெடுஞ்சாலையுடன் நடக்கிறார்கள். தார்போட்ட சாலையில் திரும்பிக் கிளை பிரியும் கடைத் தெருச் சந்நிதியில் பஸ் ஒன்று நிற்கிறது.

பஸ் நிற்குமிடத்துக்கே உரிய கலவைகள்; ‘பிறாமணாள் காபி ஓட்டல்’ என்று அறிவிக்கும் ஒரு ஓட்டுக்கூரைவிடுதி. அதன் எதிரில் ஒரு முடிதிருத்தகம். அதன் அருகில் நாலைந்து கடைகள்.

உருளைக்கிழங்கு, காய்ந்த பச்சைமிளகாய், வெங்காயம் போன்ற சாதனங்களைத் தட்டில் பரப்பிய ஒரு கறிகாய்ச் கடையை அடுத்து மாமிசக்கறிக் கடை. அவர்கள் கிளைச் சந்தைத் திரும்புகின்றனர். முனையில் ஒரு தேநீர்க்கடை இருக்கிறது. தேநீர்க்கடையை அடுத்து ஒரு தட்டிச் சார்ப்புக் கூரைக் கட்டிடத்தில் அண்ணா படம் போட்ட முகப்புடன் ‘அண்ணா படிப்பகம் விளங்குகிறது. அதை அடுத்து ஒரு சலவைச்சாலை. வாசலெல்லாம் அழுக்குத் துணிமூட்டைகளிலிருந்து பிரித்தெடுத்த குவியல்கள்.

அதை அடுத்து ஒரு பூவரச மரத்தடியில் இளைப்பாறும் நோஞ்சான் குதிரை அருகே குடை சாய்ந்தாற்போல் நிற்கும் வண்டியை இழுக்கக் கூடியதென்று விளங்குகிறது.

அதற்குப் பின்னே உள்ளடங்கினாற்போல் சில குடிசைகள் இருக்கின்றன. ஒன்றின் வாயிலில் இருந்து, பொம்மி சூணா வயிற்றுக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்து வரவேற்கிறாள். வாசலில் கோலி விளையாடும் சிறுவர்கள், “அம்மா வந்துட்டா, அம்மா வந்துட்டா!” என்று ஆர்ப்பரிக்கின்றனர்.

அந்தச் சூழல் அவர்களுடைய குலத்தோர்வதியும் இடங்களல்ல. அந்த உயர்குலத்தோர் வேருக்கு நீரின்றி மாய்ந்து சருகுகளாகப் பிழைப்புக்குப் பக்கம் பக்கமாகப் பறக்கத் தொடங்கியபின் தரம் பிரிக்க இயலாமல் வந்து ஒதுங்கிய இடமாகத்தான் கொள்ளலாம். வாயிலில் ஆரவாரம் கேட்டு உள்ளிருந்து முள் பூத்த வாயில் சேலையுடன் பதினெட்டு இருபது வயசு மதிக்கக்கூடிய மங்கையொருத்தி எட்டிப் பார்க்கிறாள். கழுத்தெலும்பு முட்டியிருந்தாலும், ஊட்டமின்றி முடி நுனியில் தேய்ந்து கூழை பாய்ந்திருந்தாலும், கண்களிலும் சிரிப்பிலும் இளமையின் கவர்ச்சி கட்டவிழ்த்துக் கொண்டு பெருமை பாடுகிறது. மூக்குப் பெரிசு; கன்னம் தேய்வு; உடம்பும் தேய்வு. ரிப்பனை நாகரிகமாக அடி மண்டையை வழித்துக் குதிரைவால் நாகரிகமாகக் கட்டி இருக்கிறாள்.

“யாரக்கா இது?...” அவள் மைத்ரேயியைச் சுட்டிக் காட்டிக் கேட்கிறாள்.

“மைத்ரேயி, உள்ளே வாம்மா, உங்காமா நினைச்சுக்கோ ....”

குஞ்சு குழந்தைகளெல்லாம் அவளை ஏதோ அதிசயத்தைப் பார்ப்பதுபோல் பார்க்கின்றன.

அவளுடைய கையிலுள்ள பையை அப்போதே பிடுங்கிச் சோதனை போடத் துடிக்கிறான் எட்டு வயசுப் பையன்.

இந்தக் குழந்தைக்குத் தேங்காமிட்டாய் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறாள், மைத்ரேயி.

“ஏண்டி, சீனு எங்கே?”

“அவன் வந்து அப்பவே சட்டை போட்டுண்டு வெளியே போயிட்டான் அக்கா!”

“நீ என்ன பண்ணினே? உலையைப் போட்டு ஒரு சாதத்தைக் கொதிக்கவச்சு ஒரு குழம்பு பண்ணறதுக்கென்ன?”

“என்னமோ அஞ்சும் பத்தும் அடுக்கா வச்சிருக்கறாப் பல பேசறியே?” மதுரம் அவளை உறுத்துப் பார்த்துக் கொண்டு குரலை இறக்கி, “அவங்கிட்ட அரிசி வாங்கிண்டு போன்னு சொல்லி அனுப்பிச்சேனே? மூட்டை கொண்டு வரல?”

“மூட்டையில் என்ன இருந்தது. நாலஞ்சு எரி மூட்டையும் இலைச் சருகும்தான்”

“அடப்பாவி! நாலுபடி அரிசியையும் அஞ்சு தேங்காயையும் என்னடி பண்ணினான்?”

“என்ன பண்ணியிருப்பான்? நாலுபடி அரிசிக்கு அஞ்சோ ஆறோ கிடைச்சிருக்கும். தேங்காய்க்கு ரெண்டு ரூபா கிடைச்சிருக்கும்...”

“கத்தாதேடி, குரங்கு!” என்று வெறுப்பை உமிழ்ந்து விட்டு மதுரம் சட்டென்று திரும்பிப் பார்க்கிறாள். மைத்ரேயியை கண்கள் சந்திக்கையில் மின்விளக்கைப் பொருத்தினார் போல் பளிச்சென்று புன்னகை விளங்குகிறது இதழ்களில்.

“வாம்மா, ஏன் வெளியிலேயே நிக்கறே? உள்ளே வா. இவ என் தங்கை சொர்ணந்தான், யாருமில்லை.”

பந்தலாகத் தெரியும் கூரையின் கீழ் ஒரு அறை, பின் தாழ்வரைக்குச் செல்ல ஒரு வாயில். புழுதியைத் தள்ளித் துடைத்த தரை. சிக்குப் பிடித்த தகரங்கள், அலுமினிய வட்டைகள் போன்ற தட்டுமுட்டுக்கள். மூலையில் நாலைந்து கந்தற்பாய்கள். சிக்குப் பிடித்த இரண்டு தலையணைகள். மேலே ஒரு கொடியில் மதுரம் மாமியின் ஒன்பது கஜம் மாற்றுச் சேலையும், அழுக்குப் பற்றிய மக்கள் உடுப்புகளும் தொங்குகின்றன. ஒரு மூலை ஸ்டாண்டில் ஒரு சுவரொட்டி சிம்னி விளக்கு வீற்றிருக்கிறது. மருண்டாற் போல் மைத்ரேயி நிற்கையில் ஈரப்புடவை, பாவாடையை எடுத்து உதறி மதுரம் அந்தக் கொடியில் உள்ள துணிகளை ஒதுக்கி விட்டுப் போடுகிறாள்.

இதற்குள் ஒரு பையன் அவள் கையைப் பற்றிக் கொண்டு உரிமை கொண்டாடுகிறான்.

“நீ அக்காதானே?” என்று உறவு முறை கேட்கிறான்.

மதுரம் பார்த்துவிட்டுச் சிரிக்கிறாள். “அக்காதான். விளையாடிண்டிருங்கோ, இதோ வரேன்...” என்று சொல்லிவிட்டு வெளியே செல்கிறாள்.

சிறிது நேரம் அவள் அந்தச் சிறு பையனிடம் பேச்சுக் கொடுத்து, அக்காவாக நடிக்க முயலுகிறாள்.

‘ஸ்கூல் போறியா, நீ?”

“ஹூம், ஸ்கூலுக்கு அப்ப போனேன், கப்பலூர்ல இருக்கறச்சே. நீ அந்தப் பங்களாவாத்துப் பொண்ணு தானே?”

மைத்ரேயி பேச்சை மாற்ற முயல்கிறாள்.

அதற்குள் பொம்மி அவளுடைய பர்சை எடுத்துக் கொண்டு ஓடி வருகிறாள். கைக்குழந்தை பெருங்குரலெடுத்து அழுகிறது.

“இது உங்களுடையதா அக்கா? சோக்கு வாசலில் கொண்டு வச்சிண்டு விளையாடிண்டிருக்கு?’

பர்சைச் சட்டென்று வாங்கிக்கொள்கிறாள். பரபரக்கும் விரல்களைப் பர்சுக்குள் விட்டுத் துழாவுகிறாள். அடிவயிற்றி லிருந்து கத்தி எழும்பிப் பாய்ந்தாற் போலிருக்கிறது. ஒரே ஒற்றை ரூபாய் நோட்டு மட்டும் இருக்கிறது. ஐம்பது ரூபாயில் அவள் செலவு செய்தது பதினோரு ரூபாய்தான். மீதி ஒரு ரூபாய் தானா? மூன்று பத்து ரூபாய் நோட்டுக்களும் ஒரு ஐந்து ரூபாய் நோட்டும் வைத்திருந்தாளே? சட்டென்று மூலையிலிருந்த பையை எடுத்து, உள்ளிருக்கும் துணிகளை எடுத்துப் போடுகிறாள். வாயிலில் வந்து நெடுகத் தேடுகிறாள். பணம் இல்லை.

பையில் இருந்த துணிகள், சாந்து, பவுடர் முதலிய பொருள்கள் எல்லாம் வெளியே கிடப்பதை அப்போதுதான் பார்க்கிறாள். பரபரப்பாக எல்லாவற்றையும் பைக்குள் போட்டு வாய் தெரியாமல் இழுத்துக் கட்டுகிறாள். அவன் வாங்கிக் கொடுத்த பை அது. பையின் புதுமை மாறுமுன் வாழ்க்கை வாடிவிட்டது. ‘நம்மாம்’ என்று மதுரம் இணைத்துப் போட்டுக் கொண்டதன் பொருள் மைத்ரேயியின் மூளையில் மின்னலாய் பளிச்சிடுகிறது. அவள் தோப்பு பங்களாவி லிருந்து பையனிடம் மூட்டையில் கட்டி அனுப்பிய அரிசியையும் தேங்காயையும் பையன் கடையில் போட்டுவிட்டான். அவள் பையை மதுரம் மாமிதானே எடுத்து வந்தாள்? ஈரத்தை வேறு உலர்த்தினாள். பணத்தை எப்போது அப்புறப் படுத்தினாளோ? அந்தப் பணம் அவள் சம்பாதித்த தொன்றுமில்லை அம்மணி அம்மா கொடுத்ததுதான். மதுரம் மாமி வா, என்று அழைத்து அன்பு மொழியால் குளிர வைக்கிறாள். அவள் வாயிற்படியில் நிற்கையிலேயே வாயெல்லாம் பல்லாக விரைவு நடையிலேயே திரும்பி வருகிறாள். ஒரு கூடையில் அரிசி, பருப்பு, ஒரு குப்பியில் எண்ணெய், புளி, மிளகாய், மல்லி, ஒரு சிறு கட்டுப்பப்படம், வெங்காயம் எல்லாம் இருக்கின்றன.

சாமான்களைக் கொட்டிவிட்டுக் கூடையைப் பையனிடம் கொடுத்து அனுப்புகிறாள் மதுரம்.

“சோப்பு வாங்கிண்டு வந்தியாக்கா?” என்று கேட்கிறாள் சொர்ணம்.

“சோப்பா? போன வாரம்தானே வாங்கினேன்?” என்று திருப்பிக் கேட்கிறாள் மதுரம்.

“உன் பிள்ளை உடம்பிலே போட்டு அழுத்தி அழுத்தித் தேய்க்கறதிலே சோப்பு ஒரு மாசம் இருக்காதோ, பின்ன?”

“அடி கடங்காரி! உன் பிள்ளை உன் பிள்ளைன்னு ஏண்டி கரிக்கறே? அவன் உடம்புழச்சுக் கொண்டு வந்து கொட்டறான் இந்தக் குடும்பத்துக்கு, எல்லாரும் தின்னு உருட்ட நீ இங்கு காலமில்லாம காரணமில்லாம மூஞ்சி தேச்சிக்கறதும் பவுடர் போட்டுக்கறதும் பொட்டிட்டுக் கறதுமா மினுக்கறது தெரியாதாக்கும்!”

“அதெல்லாம் எங்காசு!” என்று கத்துகிறாள் சொர்ணம்.

“என்னடி எங்காசு... உங்காசு? எனக்குத் தெரியாம எங்காசுன்னு எங்கேருந்து வந்திருக்கும்னு கேட்டேன்! இத்தனை நேரத்துக்கு ஒரு உலையப்போட்டுச் சோத்தை வடிக்கத் துப்பில்ல!”

“இங்கே சாமான் உக்கிராணம் கொள்ளாம தட்டுக் கெடறது, நான் வடிச்சு நிமித்த காலமேலேந்து ஒரு டீத் தண்ணிக்கு வழியில்லாம தலைவலி மண்டையை உடைக்கிறது!”

“சரி, சரி, இப்ப ஒப்பாரி வைக்க வேண்டாம். அந்தச்

சருகைப் போட்டு தாழ்வாரத்து அடுப்பை மூட்டு. இப்ப உலையைப் போடறேன்...”

பின்புறச் சார்ப்பில் அடுப்பு எரிகிறது. ஓட்டை உடைசல் கள்ளிப் பெட்டித் துண்டுகளைத்தான் விறகாக மாட்டுகிறாள். ஒரு மண்பானையில்தான் உலை வைக்கிறாள்.

பிறகு மூலையிலிருந்த டின்னிலிருந்து நீரை முகர்ந்து புழுங்கலரிசியைக் கழுவி உலையில் போடுகிறாள்.

மைத்ரேயிக்கு இதே போல் டப்பாவில் நீர் வைத்துக் குடித்தனம் செய்ததும் சட்டியில் குழம்பு வைத்ததும் நினைவுக்கு வருகிறது. அவள் நகரத்தை ஒட்டியிருந்தாலும் கிராமத்து வாழ்க்கையிலேதான் பழகியிருக்கிறாள். எனினும் கூரைக் குடில்களில் உள்ளே காட்சிதரும் வாழ்க்கை வறுமையை அவள் அவனோடு செல்லும் வரையிலும் உணர்ந்ததில்லை. தங்கள் வீட்டோடு தொடர்பு கொண்ட எளியவர்களை, தங்கள் கூலியாட்களை அவள் கண்டிருக்கிறாள். வயலில் நடவு நாட்களில், அறுவடை நாட்களில் அந்த வீட்டுத் தோட்டத்தில் ஆண்களும் பெண்களுமாகக் கூடுவார்கள். கன்னங்கரேலென்ற குழந்தைகள், அவிழ்ந்து பிரியும் நூல் முடிச்சுக் கொத்தவரங்காய் பின்னலும், இடுப்பில் சுற்றிய வெற்றுக் கயிறுமாக புழுதியில் குழந்தைகள் விளையாடுவார்கள். கரியேறிய பானையில் புளிச் சோற்றையோ, நீர்ச் சோற்றையோ கொண்டு வந்து மரத் தடியில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றவர்களும் உண்டு. அவளுடைய அக்காள் கணவனும் களத்திலிறங்கி வயற் சேற்றில் கால்கள் பதிய வேலை செய்வதுண்டு. அவளுக்குத் தெரிந்து அவர் என்றோ செங்கற்பட்டு பட்டணம் போகும் போதுதான் வண்ணான் மடிப்பு வேட்டி உடுத்தியிருக்கிறார். என்றாலும், வறுமை மலிந்த வாழ்க்கையை அவள் இப்போதே தரிசிப்பதுபோல் தோன்றுகிறது. அன்று லட்சுமி, அவள் விட்டெறிந்த ஜிலேபியை எப்படி எடுத்துத் தின்றாள்.

அற்பமான தேவைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ள இயலாத பொருள் வறுமை நிலவும்போது, தேவைகள், தேவைகள் என்ற நிலையிலிருந்து வழுவி, ஆசைகளாக வீறு கொண்டு எழுகின்றன. அப்போது பொறுக்கும் திறனும், பண்பாடும் உடைந்து சிதைய, அந்தச் சிதிலங்களிடையே எப்படியேனும் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற களைகளும் வளருகின்றன. அவர்களுடைய வயலில் உழவோட்ட வரும் மாரி, அவன் மனைவி குழந்தைகளையும், இந்த மதுரத்தின் குடும்பத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கிறாள். காலைப் பனியின் மூட்டத்திலே காட்சிகள் மங்கலாகப் புரிந்தும் புரியாமலும் தோன்றுவது போல் தோன்றுகின்றன.

மாரியின் மகள் மண்ணில் விளையாடுவதிலேயே நிறைவு கண்டு விடும். படியேறி உள்ளே வந்து, எதையும் தொடவேண்டும் என்ற ஆசை அவளை வருத்தியதாகத் தெரியவில்லை.

முகத்தில் ஒரு கை வைத்துக் கொண்டு ஏதேதோ எண்ணங்களிடையே மூழ்கிக் கிடக்கும் அவளை மதுரம் வந்து தொட்டெழுப்புகிறாள்.

“எழுந்திரு, மூஞ்சியெல்லாம் வாடிப் போயிடுத்து, சாம்பாருக்கு அறைக்கிறது பொம்மி. இப்ப சாதத்தை வடிச்சிட்டு, சாம்பாருக்கு வச்சிடுவேன். உப்புமா கிளறி வச்சேன். அத்தைக் கூடத் தின்னல...” என்று பரிவு மேலிடக் கூறுகிறாள் மதுரம்.

“எனக்குப் பசியே இல்ல மாமி...”

“நல்ல குடும்பம் குலம்னு பிறந்ததைத்தான் தெரிஞ்சிண்டு விழாம திரும்பி வந்துட்டியே? இவ்வளவு கண்டிக்கணுமா...?”

“மாமி, மட்றாசில என்னைப்போல அநாதையா இருக்கறவாளுக்கு, ஹோமெல்லாம் இருக்கும்ங்கறாளே, அங்கேபோய் நாஞ்சேந்துட முடியாதா? நான் புத்திக் கெட்டுப் படிப்பையும் விட்டுப் போயிட்டேன்...”

“சே, அழாதே. நீ வந்துட்டியே? அசடுபோல் ஏன் அழறே. இப்ப இப்படித்தான் காலம் கெட்டுக்கிடக்கு. இந்த சொர்ணம் என் தங்கைதான். நான் அவளை வீட்டை விட்டு வெளிவாசலுக்கு ஏன் அனுப்பாம வச்சிருக்கேன்? இந்தப் பயம்தான். அதுவும் நம்ம சாதிக்கு இப்ப ஒரு மதிப்போ கட்டு காப்போ ஒண்ணும் கிடையாது. எனக்கு எல்லாம் தெரியும், துணி கிழிஞ்சு போச்சுன்னா கிழிஞ்சது தெரியாம தைக்கமாட்டா. தைச்சு வச்சா கிழிஞ்சது கிழிஞ்சதுன்னு குத்தி உருப்படியில்லாம ஆக்கிடுவா. அந்தக் குளத்தங்கரைத் தெருவில் நம்ம சாதி சனம் தான். ஒரு கையகல இடம் கொடுத்துட்டு என்ன பேச்சுப் பேசினா? இப்ப எதிர கசாப்புக் கடைதான். சுத்தி எப்படி எப்படியோ கும்பல்தான். ஆனா எங்களைப் பத்தி வம்பு பேசறவா இங்கே இல்லே. அதனால்தான் தைரியமா கூட்டிண்டு வந்தேன்.”

மதுரம் எழுந்து குழம்பைக் கிளறி மசாலைக் கூட்டி கொதிக்க வைக்கிறாள்.

மைத்ரேயி அந்தத் தாழ்வரையில் வந்து நிற்கிறாள். ஒரு சிறு தட்டி மறைப்பு. சொர்ணம் குளிக்கிறாள். மறைப்புக்கப் பால் பெட்டிக்கடைகள், சாலை.

பொம்மி கையைக் கழுவிவிட்டு கவுனில் துடைத்துக் கொள்கிறாள்.

“ரெண்டு வாளி தண்ணி கொண்டு வந்துடு... என்று மகளை ஏவுகின்றாள் மதுரம்.

“கிணறு எங்கே இருக்கு மாமி? நான் கொண்டு வரனே?” என்று கேட்கும் மைத்ரேயி வாளியை எடுக்கப் போகிறாள்.

“ஐயோ, நீ அங்கே எல்லாம் போக வேண்டாம், நான் சொர்ணத்தையே அனுப்பமாட்டேன், பொம்மி போகும். டேய் ஜிட்டு, சொக்கு? ரெண்டும் எங்கே தொலைஞ்சு போச்சுங்க?”

கோலியும் கையுமாக இரண்டு பையன்களும் ஓடிவருகின்றனர்.

“டப்பாவை எடுத்திண்டு போங்க, அவளுக்குத் தண்ணி இறைச்சுக் குடுங்கோ ... இப்ப தட்டுப் போட்டுடலாம்...” என்று சொல்லிவிட்டு, ஒரு சிறு அலுமினியக் குவளையை எடுத்துக் கொண்டு மதுரம் மாமி வெளியே செல்கிறாள். சொர்ணம் தலைசீவிப் பொட்டுவைத்துக் கொண்டு தாழ்வறையைப் பெருக்குகிறாள். பிறகு எல்லோருடைய பீங்கான், அலுமினிய உண்கலங்களையும் தேய்த்து அலம்புகிறாள்.

டப்பா நீரை இரண்டு பையன்களும் சேர்த்துத் தூக்கி வருகின்றனர். வாளியில் பொம்மி நீர் கொண்டு வருகிறாள். மதுரம் மாமி குவளையில் கறிவேப்பிலை மிதக்கும் மோரும், ஒரு தையல் இலையுமாகத் திரும்பி வருகிறாள். தணல் கருகிச் சாம்பல் பூத்த அடுப்பில் இரண்டு சுள்ளியைச் செருகி விட்டு இரும்புச் சட்டியைப் போட்டுக் குப்பியில் வாங்கிவந்த கடலெண்ணெயை ஊற்றுகிறாள். பப்படங்களைப் பொரிக் கையில் குழந்தைகள் சந்தோஷமாய்க் குதிக்கின்றனர்.

“உக்காரு மைத்தி...” என்று தையல் இலையைத் துடைத்து அவளுக்குப் போடுகிறாள்.

புழுங்கலரிசிச் சோறு. வெங்காய சாம்பாரின் மணம் ஊரைத் தூக்குகிறது. குழந்தைகளுக்கெல்லாம் இரண்டிரண்டகப்பை என்று அளந்தாற்போல்தான் அவள் அன்னமிடுகிறாள். சொக்குவும், ஜிட்டுவும் ஒருவர் கலத்தை மற்றவர் பார்த்துக்கொண்டு சமம்தான் என்று அமைதியடைகின்றனர். சூணாவயிற்றுக் குழந்தை தனக்கு இரண்டுகரண்டி வேண்டும் என்று கேட்கும் போலிருக்கிறது. மதுரம் கால் கால் கரண்டியாக இரண்டு தடவை படைக்கிறாள். பிறகு இரண்டு இரண்டு கரண்டி சாம்பாரைச் சோற்றின்மேல் ஊற்றிவிட்டு அடுப்பில் காயும் எண்ணெயில் பொரித்த பப்படங்களை, ஒவ்வொன்றாக எடுத்துப் போடுகிறாள்.

சொக்கு ஆவிபரக்கும் குழம்பைப் பார்த்துக்கொண்டே துளித்துளி விரலில் தொட்டு நாவில் வைத்துக் கொள்கிறான். இன்பத்தை எவ்வளவு நேரம் நீட்டிக்கொண்டு போகமுடியும் என்று பார்க்கிறான். சொர்ணம் தட்டை ஆட்டி ஆட்டி, சோற்றைக் கிளறி விரைவில் பிசையப் பார்க்கிறாள். அதற்கு மூன், “துளி எண்ணெய்விடேண்டி, அக்கா?” என்று கேட்கிறாள்.

அடுப்பில் காயும் எண்ணெயிலிருந்து ஒரு துளி சோற்றில் தெளிக்கும் மதுரம், “நீதான் இந்தக் கலகமெல்லாம் ஆரம்பிப்பே. நீ கேட்டால் இப்ப எல்லாம் கேக்காதா?...” என்று கூறிக் கொண்டு எல்லோர் இலையிலும் இரண்டு சொட்டுக்கள் எண்ணெய் தெளிக்கிறாள். மைத்ரேயியின் கலத்துக்கு முன் வரும்போது அவள் முகத்தில் ஓர் நாணப் புன்னகை விளங்குகிறது. “உனக்கு நெய் சாப்பிட்டுப் பழக்கமாயிருக்கும், பாவம்...விடட்டுமா?” என்று கேட்கையில் மைத்ரேயிக்கு என்ன மறுமொழி சொல்வதென்று புரியவில்லை.

இதற்குள் வாயிற்கதவு இடிபடுகிறது.

“இந்தச் சோறு தின்னும் நேரத்தில்தான் இந்த வீட்டுக்கு யாரேனும் வருவா...” என்று முணுமுணுத்துக் கொண்டே போகிறாள். சொர்ணம் ஆவலே உருவாக, “யாரு? தபாற்காரரா அக்கா?” என்று கத்துகிறாள். பிறகு கையை நக்கிக் கொண்டே வாயிற்படிவரை செல்கிறாள்.

மதுரம் திரும்பி வருகையில், “என்னக்கா? ஏதானும் கிடைச்சுதா?” என்று சொர்ணம் கேட்கையில், மைத்ரேயிக்கு அவள் எங்கிருந்தோ தபாலில் ஏதோ நன்மையை எதிர் பார்த்திருப்பதாகத்தான் தோன்றுகிறது. “ஒண்ணுமில்ல, இன்னிக்கு நம்பரைச் சொல்லுன்னான். எழுதிக்க... ஏண்டா, ஜிட்டு? சாப்பிட்டாச்சுன்னா எழுந்து போறதுதானே? எதுக்கு தட்டைப் போட்டு நக்கிண்டிருக்கே? இனிமே அப்பாக்கு அண்ணாக்கு தானிருக்கு, எழுந்திரு!”

அவன்மட்டுமில்லை. பொம்மியும் எழுந்திருக்கவில்லை. எல்லாருடைய கண்களும் அலுமினியக் குவளையில் நிலைக்கின்றன.

பொம்மி நாவால் கேட்கத் துணிவின்றிக் கையைக் காட்டுகிறாள். “இது ஒண்ணும் உனக்கில்ல. எழுந்துபோ, சொல்றேன்!”

மைத்ரேயியின் மென்மையான உணர்வுகளை யாரோ அழுத்திக் கூழாக்குவதுபோல் தோன்றுகிறது.

“எனக்கு மட்டுமா மோர்வாங்கி வச்சிருக்கேள், மாமி? எனக்கு மட்டுமா? எனக்கு மோர் பிடிக்காதே?-”

அன்று அம்மணி அம்மாவிடம் மோர் கேட்டுச் சாப்பிட்ட நினைவும் வர, இந்தப் பொய்யைப் புகல்பவளுக்குக் கண்கள் சுரக்கின்றன. மதுரம் வாளியிலிருந்து ஒருவட்டை நீரை முகர்ந்து ஊற்றி, உப்பையும் அள்ளிப் போட்டு, அந்தச் சம்பாரத்தை எல்லோருக்கும் இன்னொரு காண்டி சோறுபோட்டு வார்க்கிறாள்.

மைத்ரேயிக்கு வறுமையில் இவ்வளவு புனிதமும் நெகிழ்ச்சியும் குலவும் என்று அன்றுவரை தெரிந்திருக்கவில்லை.

வயிறு நிரம்பியதும் குழந்தைகள் பூவரசமரத்தடியில் விளையாடப் போகிறார்கள். மதுரம் எங்கோ வெளியே செல்கிறாள். சொர்ணம் கலங்களைத் தேய்த்துக் கழுவிவிட்டு, சினிமாப் பாட்டுப் புத்தகமொன்றைக் கையில் வைத்துக் கொண்டு, வாயிற்படியில் தலைவைத்துப் படுக்கிறாள்.

மைத்ரேயிக்கு இது புதிய சிறையாக இருக்கிறது. ஒரு நாளை ஓட்டுவதற்கு முக்கி முனகும் பொருளாதார நெருக்கமடைய இந்தக் குடும்பத்தில் அவள் எப்படி ஒட்டிக் கொள்வாள்?

கையில் இருக்கும் சில்லறையுடன் இப்படியே பஸ்ஸில் ஏறலாம். ஏறி எங்கே செல்லலாம்? அவளைப் போன்ற ஒரு இளம் பெண், முள்ளில் சிக்கி ஒரு முறை குத்திக் கிழித்துக் கொண்ட காயத்தோடு எங்கே, எப்படிச் செல்வாள்?

மாமா, அன்று லோகநாயகி சோஷியல் வொர்க்கர் என்று சொன்னது மனசில் நிழலாடிக்கொண்டே இருக்கிறது. அத்திம்பேர் அக்காவுடன் முன்பொருமுறை எப்போதோ சென்னைக் கடற்கரைக்குச் சென்றபோது, அங்கே கைம்பெண்கள் விடுதி ஒன்று இருப்பதாகச் சொன்ன நினைவு குப்பத்தில் ‘லோக நாயகி அவர்கள் இந்தி வகுப்புகளைத் துவங்கி வைப்பார்கள்” என்று கொட்டை எழுத்துச் சுவரொட்டி பார்த்திருக்கிறாள். சென்னை செல்லும் பஸ்ஸில் ஏறிச் சென்று, தபால் நிலையம் ஏதேனும் ஒன்றில் ‘லோக நாயகி சோஷியல் வொர்க்கர்’ வீடு எது என்று கேட்டால் சொல்லமாட்டார்களா? அங்கே அவள் முன் சென்று காலடியில் விழுவது போலும், அவள் உடனே தட்டிக் கொடுத்து ஆறுதலும் தேறுதலும் கூறி விடுதியில் சேர்த்துக் கொள்வது போலும், தான் கல்லூரி மாணவியாய்ப் புகழுடன் முன்னேறி...

“என்ன ஐயரம்மா, நீ. உங்கிட்டப்போயி பொய் சொல்லி எனக்கு இன்னா லாபம்!” என்ற குரல் அவளுடைய பகற்கனவைக் கலைக்கிறது. மதுரம் மாமி ஒரு பையும் கையுமாக உள்ளே வருகிறாள்.

வெய்யிலில் வந்திருக்கிறாள் என்று நோக்கும்போதே புலனாகிறது. கைப்பையை மூலையில் சாத்திவிட்டுத் தாழ் வாரத்துப் பக்கம் செல்கிறாள். கதவடியில் வந்து, “அப்பாவு, டீக்கடைக்காரரிடம் கேட்டு ஒரு கிளாசு வாங்கிட்டுவாயேன்? நீ சூப்பிக்குடிப்பியேன்னு ஒரு கிளாசு வாங்கிவச்சால் அதை இந்த வானரப்படைகள் போட்டு உடச்சிடறது. டீ சொர்ணம், கடாமாடு போல என்னடீ படுக்கை? பீடை! எழுந்திரு! வழில படுத்துண்டுட்டா!” என்று கத்துகிறாள்.

அப்பாவு என்று அவள் கூப்பிட்ட ஆள், இளைஞன்தான், உள்ளே வந்து தாழ்வாரத்துக்குப் போகிறான்.

“அது யாரு ஐயிரம்மா?” என்று அவன் கேட்கும் குரல் அவள் செவிகளில் விழுகிறது.

“சொந்தக்காரப் பொண்ணு. டீச்சர் வேலைக்குச் சேர்ந்து படிக்கணும்னு பட்டணம் போக வந்திருக்கு.”

“இன்னிக்கு சாம்பாரு ரொம்ப நெல்லா இருக்கு ஐயிரம்மா, இன்னும் கொஞ்சம் போடு...”

மைத்ரேயி, மதுரம் சோற்று விடுதியும் நடத்துகிறாளோ என்று மலைக்கிறாள்.

“திரும்ப என்னிக்கு வருவே?”

“அடுத்த ட்ரிப் கள்ளிக்கோட்டை போகுது ஐயிரம்மா லாரி. ரெண்டுவாரம் கழிச்சுத்தான் இந்தப் பக்கம் வருவேன். ராதா அண்ணன் டிராமா இருக்குது, நம்ம குப்பத்துக் "போலீசா நின்னுது. அன்னிக்குத்தானே?”

“அப்ப ரத்தக்கண்ணீர் போட்டாரு. அது நல்லாயிருக்கும் ஐயிரம்மா. இப்ப அதில்ல. இது வேற டிராமா. முந்தா நா அண்ணா வேசம் கட்டின சந்திரமோகன் பார்த்தேன் ராமாவரத்திலே. அதும் ரொம்ப நெல்லாயிருந்தது ஐயிரம்மா .”

அப்பாவு கையைக் கழுவிக் கொண்டு வாயிலுக்குச் செல்கிறான். அவன் செல்லும்போது சொர்ணத்தின்மீது ஒரு கபடப் பார்வையை வீசிட்டுப் போகத் தவறவில்லை.

வாட்டசாட்டமாக இருக்கிறான்-அரைகால் சராய்க்கு மேல் நீலக்கோடு போட்ட சட்டை; தலையில் முண்டாசு கட்டிக் கொண்டிருந்தான் உள்ளே செல்லும்போது; வரும் போது இல்லை.

இவன் லாரியில் வரும் கிளீனரோ, டிரைவரோ? அல்லது வேறு சிறு தொழில் செய்பவனோ? கிட்டத்தட்ட இவனைப் போன்ற ஒருவனுடன்தான் அவள் உறவு கொண்டாள். தனராஜ் கவிஞன் என்று வைத்துக் கொண்டாலும் நெருங்கலான ஆள். மதுரம் மாமி இவனுக்குச் சோறிடுகிறாள். சொந்தக் குழந்தைகளிடம் இருந்த கண்டிப்புக் கறார் தன்மையை இவனிடம் காட்டவில்லை. வாலிபத்தின் கிளர்ச்சியில் மட்டும் சாதித் தடைகள் அகன்றுவிடுகின்றன என்பதில்லை; வறுமையிலும்கூட வேற்றுமைகள் கரைகின்றன. சட்டியில் பொங்கிய இவளுடைய புழுங்கலரிசிச் சொற்றையும் குழம்பையும் மேற்குலத்தான் உண்ண வரமாட்டான்; இவளைப் போன்று வறுமையில் உழன்றாலும் வரமாட்டான்.

அம்மணியம்மாளின் வீட்டில் நிகழ்ந்த கூட்டத்தில், அவளுடைய மனசில் சுருக்கென்றுதைக்க நிகழ்ந்த பேச்சுக்களும், நடவடிக்கைகளும் அவற்றில் நியாயம் காணக்கூடிய ஆர்வத்தை அவளிடம் தோற்றுவித்திருக்கின்றன.

அப்பாவு சென்றபின் மதுரம் கொஞ்சம் சோற்றை வைத்துக் கொண்டு உண்ணுகிறாள். பிறகு சற்றே தலையைச் சாய்க்கப்படுக்கிறாள். “அக்கா, அந்த டிராமா ரொம்ப நன்னாயிருக்காம். கூட்டம் இத்தனை போலீசையும் மீறிண்டு இருக்கணும்னா விசேஷமாத்தானே இருக்கும்? ஏன் போகக் கூடாதுங்கறே? இரத்தக் கண்ணீர் சினிமா கூட வந்திருக்கு, அப்பாவு அன்னிக்கே டிக்கெட் கூட வாங்கித்தந்திருப்பான்...” என்று எந்த சினிமாவுக்கும் நாடகத்துக்கும் போகக்கூடாது என்று தடுக்கும் தமக்கையின் மீது வழக்கம்போல் குறைபாடிப் பொருமுகிறாள்.

“ஆமாண்டி! காங்கிரசையும் பிராமணனையும் சேத்து நாக்கில் நரம்பில்லாம அவன் பேசறானாம். போய் கேட்டு இளிச்சிண்டு நிப்பே!” என்று சாடுகிறாள் தமக்கை.

“அவன் நடக்கிறதைத்தானே சொல்றானாம்? பெரிய காங்கிரஸ். அதைச் சொன்னா உனக்குக் கோபம் வந்துடும்!”

“ஆமாம், எனக்குக் கோபம்தான் வரும். அப்படித்தான் வச்சுக்கோயேன்? காங்கிரஸ் எனக்குப் பெரிசுதான். எனக்கு ஏதானும் ஆபத்து சம்பத்துன்னா லோகநாயகிதான் உதவப் போறாளே ஒழிய, இப்படித் திட்டிக்கொட்டறவா இல்லே!”

“ஆமாம், பெரிய உதவி பண்ணிக் கிழிச்சுட்டா! இப்படி அடிச்சு விரட்டறதுக்கே நாத்தினார் உறவுகொண்டாடு!”

“என்னை ஒருநாளும் லோகா அடிச்சு விரட்ட மாட்டாளாக்கும். இன்னிக்குத் தேதில நான் ராஜாத்திபோல இருந்துப்பேன். எல்லாம் உங்க பந்தங்களாலதான் ஒரு வழியுமில்லாம இருக்கு. அவா பெரிய மனுஷா. வரவா, போறவா நேரு முதல் கொண்டு வந்து போற இடம். இவர் வேணுன்னு அழுக்கு வேஷ்டியைக் கட்டிண்டு வாசல்ல நின்னு வாயில வந்ததைப் பேசலாமா? ஒத்தொத்தன் சொந்தத் தாயாரையே அப்படி இருக்கணும் இப்படி இருக்கணும்னு கட்டுப்பாடு பண்றான். அவளுக்கு மதிப்புக் குறைவாக யார் பேசினாலும் தப்புத்தான். அப்படியும் அவ, எப்பவோ தலைமுறை விட்ட! உறவுன்னு இருக்கா? என்னத்துக்குண்ணா இப்படி? ஏன் நீங்க கண்ட கண்ட இடத்திலேயும் வேலை செய்யப் போகணும். வீட்டோடு ரெண்டு பேருமா வந்து இருங்கோன்னு ஜிட்டு பொறக்கறதுக்கு முன்னியே சொன்னா. இப்ப ஒரொரு சமயம் கேட்காத போயிட்டமேன்னுதான் தோண்றது. அப்பவே ‘சேவா ஹோம்’ ஆரம்பிச்சாச்சு. அங்கியே கூட எனக்கு வேலை கிடைச்சிருக்கும். இப்பக்கூடத்தான் ஒவ்வொரு சமயம் இல்லாம திண்டாடறப்ப, கடைசித்தையானும் கொண்டுச் சேர்க்கலாமான்னு தோணறது. அப்புறம் அப்பனும் அம்மையும் கல்லுப்போல இருக்கச்சே, அவா எடுக்கறேன் னாலும் விட மனசு வரல. இருந்தாலும், இவருக்கும் வாய் அதிகம். இன்ன பேசலாம் கூடாதுன்னு கிடையாது...”

“நீ இப்ப சப்பைக்கட்டுக்கட்டி என்ன ஆகப்போறது? நீ வானா லோகநாயகி நாத்தனார் முறைன்னு சொல்லிண்டு திரியறே. அவ ஒண்ணும் சொல்லிக்கமாட்டா...”

“அவ இன்னி வரைக்கும் என்னை வாய் நிறைய மன்னின்னு தான் கூப்பிடுவாளாக்கும். அவ என்ன செய்யலே? மூணுதரம் ஓட்டல் வைக்க முதல் கொடுத்தா. நஷ்டம் வராம என்ன செய்யும்? ஊரில் இருக்கிறவனுக்கெல்லாம் கடனுக்குச் சோறு போட்டுச் சத்திரம் நடத்தினா ஓட்டலாவா இருக்கும்? ஓட்டல் போச்சு, கடை வச்சுப்பிழைன்னா, அதுவும் உருப்படல. தின்னு உருட்டினது போறாம கஞ்சாவும் சேர்ந்ததுதான் மிச்சம். என் தலையெழுத்து. இந்தப் பிள்ளையானும் படிச்சு முன்னுக்கு வருமாக்கும்னு ஆசைப்பட்டேன். அப்பனுக்குப் பிள்ளை தப்பாமன்னு ஆயிருக்கு. ஓட்டல்ல காபி ஆத்தினாலும் ஒழுங்கா வேண்டாமா? நம்ம கடமை, பிராமணனாப் பொறந்ததால ஒரு நூல் மாட்டணும். எங்கெங்கெல்லாமோ தர்மப் பூணூல் (போடறா. நமக்கென்னதெரிகிறது? அவ காதிலதான் எல்லாம் போட்டு வைக்கணும். சின்னதை அழைச்சிண்டு ரெண்டு நான் போய் இருந்துட்டு வரலாம்னா, பட்டணம் போயிட்டு வர ரெண்டு மூணு ரூபாயாகும்....” என்று நிறுத்தும் மதுரம் மத்ரேயியைப் பார்க்கிறாள்.

மைத்ரேயிக்குச் செவிகள் தேன் கிண்ணங்களாக மாறினாற் போலிருக்கிறது. “ஆமாம், நீயுந்தான் இந்தக் ‘காட்டன் ஆட்டத்தில்’ ஒருநாள் கூரையப் பொத்துண்டு விழப் போறதுன்னு நம்பர் எழுதி எழுதி எரவாணத்தில் சொருகி வைக்கிறே. போஸ்ட் மாஸ்டர் பெண்டாட்டிக்கு அம்பதும் நூறும் விழறதாம். உனக்கும் விழல, எனக்கும் விழல” என்று குறைபடுகிறாள் சொர்ணம்.

“அவா, அம்பதும் நூறும் கட்டி ஆடறா. நீயும் நானும் ஒண்ணும் ரெண்டும் கட்டினா எப்படி விழும்? எனக்கு ஒரு அம்பது ரூபா விழுந்தா இங்கியே, இட்டிலிக்கடை போட்டுடுவேன். எனக்கு பிழைச்சுக்க முடியும்...” என்று தன் ஆசையை வெளியிடுகிறாள் மதுரம்.

“மஞ்சக்குடியில் சுண்டலும் கைமுறுக்கும் பண்ணிக் குடிக்கும் லோட்டா முதல் தோத்தாச்சு. நீ என் புடவையைக் கொண்டு தொலைச்சதுக்கு இன்னும் பதில் வாங்கித்தரல. அம்மா நினப்பா எனக்குக் குடுத்தது. அது பொறுக்கல உனக்கு. இப்ப இங்கே வந்து மறுபடியும் தொழிலா....?”

“பேசாம இரு. எப்படியும் மைத்ரேயியை அழைச்சிண்டு பட்டணம் போகப் போறேன். பாலாகிட்டக் கேட்டா புடவை எதானும் தருவா” என்று மீண்டும் மைத்ரேயியைப் பார்க்கிறாள் மதுரம்.

“மாமி, லோகநாயகியை உங்களுக்கு நன்னாத் தெரியுமா? என்னை எப்படியேனும் கொண்டு விட்டுடுங்கோ மாமி...”

இப்பவே போகலாம் என்று சொல்லத் துடிக்கிறாள்.

“நான் அப்படி நினைச்சுத்தான் உன்னைக் கூட்டிண்டு வந்திருக்கேன். எங்கியானும் வேலை போட்டுக் குடுப்ப, இந்த சொர்ணத்துக்குப் படிப்பு ஏதானும் இருந்தா எப்பவே போட்டிருப்பேனே? இங்கே ஒண்ணுக்கும் வழியில்ல...”

“உங்களுக்கு நான் ரொம்பக் கடமைப்பட்டிருப்பேன் மாமி, தயவுபண்ணி எனக்கு ஒரு வழி காட்டிடுங்கோ ...”

“கட்டாயம். சீனு வரட்டும்..” என்று மதுரம் உறுதி கூறினாள்.

5

இருள் பிரியும் நேரத்திலே மதுரம் மைத்ரேயியுடன் பஸ் ஏறிவிடுகிறாள். புதிய நாள்; புதிய ஞாயிறின் உதயம். சென்னை யில் அது எந்தப் பகுதி.என்று மைத்ரேயிக்குப் புரியவில்லை. ஆனால் தெரு முழுவதும் அகன்ற தோட்டங்களிடையே வண்ணக் கனவுகள்போல் இல்லங்கள் எழும்பியிருக்கின்றன. சாலையில் நடந்து, ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்ற அறிவிப்புப் பலகை பொருந்திய ஒரு வாயிலின் பக்கம் வந்து நிற்கிறாள். அங்கு ஒரு பக்கம் ‘லோகநாயகி’ என்று சலவைக் கல்லில் பொறித்த பெயர்ப் பலகை சுற்றுச்சுவர் தூணில் பதிந்திருக்கிறது.

அவர்கள் கதவைத் திறக்கலாமா வேண்டாமா என்று யோசனை செய்வதற்குமுன், நாய் குலைக்கும் ஒலி கேட்கிறது. ஆளுயுரம் எழும்பிக் குதிக்கும் அல்சேஷியன் நாய்; அடித் தொண்டையிலிருந்து உறுமிக்கொண்டு, ‘உள்ளே அடிவைத் தால் ஒரு பவுண்டு சதைக்குக் குறையாமல் கவ்வக்கூடிய நான் குதறிவிடுவேன்!’ என்று அறிவித்து வரவேற்பளிக்கிறது.

‘இதென்ன கன்றாவி? நாயெப்ப வந்தது? இதைக் கட்டி விரட்டியடிக்கிறாளே? என்று மனசுக்குள் கடிந்து கொண்டாலும், மதுரம் நாசுக்காக.

“ஸார், ஸார்!” என்று குரல் கொடுக்கிறாள். அப்போது ஐந்தரையடி உயரத்தில் ரோமக் காடான சிவந்த திறந்த மார்பைக் காட்டிக்கொண்டு இடுப்பில் மட்டும் பைஜாமா அணிந்து கொண்டிருக்கும் ஒரு இளைஞன் “ஹே ஸீஸர்...! ஸீஸர்!” என்று குரல் கொடுத்துக் கொண்டு வருகிறான். நாயின் கழுத்துச் சங்கிலியைப் பற்றிக் கொள்கிறான்.

“நான் தாண்டா சேது. பயந்துபோனேன். நல்லவேளை, புடிச்சிண்டிருக்கயா?”

“ஒண்ணும் பண்ணாது மாமி. நீங்க பாட்டுக்குப் போங்கோ!” என்று மதுரத்தின் குரலுக்கு அவன் மறுமொழியளித்தாலும், அவனுடைய நோக்கு பின்தொடரும் மைத்ரேயியைச் சந்தித்து, ‘யாரோ இவள்’ என்று வியந்து நிற்கிறது.

தனராஜுவிடம் ஆசைக் குடத்தை உடைத்தெறிந்த பிறகு இப்படி யாரேனும் இளைஞன் தன்னைப் பார்ப்பதே அவளுக்கு எண்சாணையும் ஒரு சாணாகக் குறுகச் செய்வதாக இருக்கிறது.

கார் நிற்பதற்காக எழுப்பிய முகப்பில் மேகவண்ணக் காரொன்று நிற்கிறது. அது முன்னும் பின்னும் ஒரே அமைப்பாக நீண்டவடிவு பெற்றிருக்கிறது. தோட்டம் மிக அழகாயமைந்திருக்கிறது. வட்ட வட்டமான புற்றரைகளைச் சுற்றிச் செம்மண் பாதை. பாதைக்கு வரம்பு கட்டினாற்போல் பூச்செடிகள். அடுக்குக் காசித்தும்பை ஜினியாப் பூஞ்செடிகள் மலர்ந்த இதழ்களுடன் காலைப் பொற்குழம்பில் குளித்தெழுந்த பெருமையுடன் சிரிக்கின்றன. ஒரு மூலையில் குடைராட்டினத்துக் குடை வடிவில் மேலேயிருந்து அளவான கூரை வேயப்பெற்ற பர்ணசாலை போன்ற கட்டிடம் கருத்தைக் கவருகிறது.

“அந்த இடத்தில் முன்ன லோகாவின் அப்பா இருந்தார். இப்ப அங்கே லோகாவின் ஆத்துக்காரர் இருக்கார். அவர் ரொம்ப நாள் கிராமத்தில் இருந்தவர். லோகாவுக்கு அப்பா செத்துப்போனப்புறம், இப்பத்தான் கொஞ்ச நாளாக இங்கு வந்திருக்கார்...” என்று மெதுவாகக் கூறுகிறாள் மதுரம்.

மைத்ரேயிக்கு ஒன்றுமே இப்போது கருத்தில் பதியவில்லை.

முன் வாயில் முகப்பைக் கடந்து மதுரம் அவளை வரவேற்பறைக்குக் கூட்டிச் செல்லவில்லை. வீட்டைச் சுற்றிப் பின்புறம் நடக்கிறாள். பெரிய தண்ணீர்த் தொட்டியின் அருகே, வேலைக்காரி பாத்திரங்களைத் துலக்க உட்கார்ந்திருக்கின்றாள். முன்புறத்தளவுக்கு விரிந்த பரப்பில் வாழைத் தோட்டம் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது. பாத்திரம் துலக்குபவளைப் பார்த்தால் வேலைக்காரியாகத் தோன்றவில்லை. அவளுடைய இடையிலிருக்கும் விலை உயர்ந்த ரக யில் சோளி அணிந்திருக்கிறாள். கூந்தலை இழை பிரியாமல் வாரி, பின்புறம் வடைபோல் கொண்டை போட்டு வளைவாக மல்லிகைச்சரம் சுற்றி இருக்கிறாள். அவளுடைய பாசமணிச் சரத்தின் பட்டுநூல்குஞ்சம், சோளிக்குக் கீழ் வெற்று முதுகில் வந்து வடிந்திருக்கிறது.

“ஏண்டி கோகிலா எப்படி இருக்கே, சௌக்கியமா?” என்று மதுரம் மாமி விசாரிக்கையில் அவள் திரும்பிப் பார்த்துப் பற்கள் தெரியச் சிரிக்கிறாள். பற்களின் வெண்மை அவளுடைய கறுத்தமேனிக்கு மிக எடுப்பாகப் பளீரென்று தெரிகிறது.

“அட, மதுரத்தம்மாளா? ஊருக்குப் போனது போக நூறு வயிசு போ. இப்பத்தான் அம்மா சொல்லிட்டு உள்ளாற போச்சு. இந்த மதுரம் எங்க இருக்காளோ தெரியலன்னு...”

“அடிப்பாவி இன்னும் நூறுவயசு எனக்கு ஏண்டி நீ ஆசீர்வாதம் பண்றே? அம்மாவுக்கு உடம்பொண்ணும் இல்லியே? வெங்கிட்டு ஐயர் சமையலுக்கு இருக்கிறாரா?”

“அவருதான் இல்லியே? கண்நோவு வந்து அவரைப் புள்ளியாண்டான் வந்து டில்லிக்கு இட்டுப் போயிட்டாரே? அப்புறம் யாரும் சரியில்ல. நேத்துக்குத்தான் ஒரு மீசைக்கார ஆளு வந்து, பீடியக் குடிச்சிக் குடிச்சி சமையல் ரூம்பெல்லாம் போட்டுட்டுப் போய்ச் சேர்ந்தாரு. ஒரு அம்மா வந்து நாலுநாள் இருந்திச்சி. நானூறு ரூவா ஜாமான் காணாமப் படுத்து ...”

“ஐயோ?”

“அத்தையேன் கேக்குறே போ, பாலாம்மா சமையல் பண்றேன்னு, கையிலே ஆவியடிச்சிக்கிட்டுக் கட்டுப் போட்டிருக்குது. ஓட்டல்லந்து எடுத்து வந்தா ஐயிரு சோறு துண்ண மாட்டாரு, பாவம். போ, போ... உள்ளாற...”

மதுரம் திரும்புமுன் வேலைக்காரி கோகிலம் மைத்ரேயியைப் பற்றிக் கேட்க மறந்ததை நினைத்துக் கொண்டாற் போல பார்க்கிறாள். இதற்குள் லோகாவே பின்புறம் வந்து கோகிலாவை அழைக்கிறாள்.

“மாடிலேந்து காபிக் கப், ட்ரேயெல்லாம் எடுத்துவரலே! போயிக் கொண்டுவந்து கழுவி வை!”

“அட, மன்னியா? எப்ப வந்தே நீ? அந்தப் பொண்ணு யாரு?...” என்று கேட்கும் லோகநாயகியை நிமிர்ந்து நோக்கக் கூசுபவள்போல் நிற்கிறாள் மைத்ரேயி. வாட்டசாட்டமான உருவம். புசுபுசுவென்று தொங்கும் கன்னம். குரலில் ஒரு குளுமை இருக்கிறது.

“நான்தான் பாத்துட்டு ரொம்ப நாளாச்சேன்னு கிளம்பி வந்தேன்...” படி ஏறி நடந்து கொண்டே மதுரம் விவரம் கூறுகிறாள்.

“நான் உனக்குச் சொல்லி அனுப்பணும்னா, அட்ரஸா கிட்ரஸா ஒண்ணுந்தெரியாது. அன்னிக்கு ஒருநா உன்பெரிய பிள்ளை வந்தான். அவங்கிட்ட அப்பவே இங்கே ஆளில்ல. உங்கம்மாக்கு வரமுடியாட்ட யாரையானும் அனுப்பிவையின்னுகூடச் சொல்லி அனுப்பிச்சேன். வந்து சொல்லலியா அவன்?”

“யாரு, சீனுவா? சொல்லலியே தடியன்? சொன்னா வராம இருப்பேனா?”

“திண்டாடிப் போச்சு, போ. நான் வேற புனாவுக்குப் போயிட்டேன். சேதுவுக்கு வயிற்றுக் கடுப்பு, நீ வருவே வருவேன்னு பார்த்துக் கடைசில ஒரு அம்மாளைக் கொண்டுவந்து வச்சோம். எவர்சில்வர் பாத்திரம் ஒரு நானூறு ரூபாய் பாத்திரம் காணலே. எங்கியோ மாம்பலத்திலே இருக்கேன்னு சொன்னான். எங்கேயானும் வேலை செய்யறியா என்ன?”

“மாம்பலமா? பட்ணம் வந்தா எனக்கு எப்படி கட்டுப் படியாகும் லோகாம்மா? ரோக்கு ரோக்கு வீட்டு வாடகை கொடுத்துச்சாப்பிடணுமே? மாம்பாக்கம்னு திருக்கழுக்குன்றம் பக்கத்திலே கிராமம். ஓட்டலை மூடிட்டு அவர் அங்க வந்திருக்கார்னு தெரிஞ்சு நான் எல்லாத்தையும் இழுத்துண்டு வந்தேன். ஒண்ணும் சுகமில்ல. உங்ககிட்டச் சொல்லிக்கறதுக்கென்ன? நாமட்டுமானா பேசாம இங்கே இருந்துடுவேன்...”

“இந்தப் பொண்ணு யாரு?”

மைத்ரேயி தலைகுனிய நிற்கிறாள்; இதழ்கள் துடிக்கின்றன.

“இவ...இவ தாயார் தகப்பனார் யாருமில்ல, பாவம். தற்கொலை பண்ணிக்கிறேன்னு கிணத்தண்ட வந்து நின்னா. நான் நல்லவேளையாப் பாத்துக் கூட்டிண்டு வந்தேன். நீங்க பாத்து ஏதானும் செய்யணும் லோகாம்மா...”

லோகநாயகி ஒரு நிலைத்த பார்வையுடன் அவளை ஆராய்கிறாள்.

“ஏம்மா, கிணற்றில் நிறையத் தண்ணீர் இருந்ததா?”

மைத்ரேயியின் விழிகளிலிருந்து நீர் முத்துக்கள் சிந்துகின்றன.

“படிச்சிருக்கியா?”

‘ஆம்’ என்பதற்கறிகுறியாக மைத்ரேயி தலையை ஆட்டுகிறாள்.

“எத்தனை கிளாஸ்?”

“எஸ்.எஸ்.எல்.ஸி படிச்சி பரிட்சை எழுதாம நின்னுட்டேன்.”

அவள் அடுத்த கேள்வியைக் கேட்கவொட்டாமல் மதுரம் குறுக்கிடுகிறாள்.

“உங்ககிட்ட ஒப்படச்சிடறேன்னு கூட்டிண்டு வந்தேன். நல்ல குடும்பத்துப் பொண்ணு. நீங்க எங்கியானம் வேலை ஏதானும் போட்டுக்குடுத்தா உபகாரமாக இருக்கும்...”

லோகநாயகி சிரிக்கிறாள்.

“வேலை போட்டுக் கொடுக்கத்தான் கூட்டிண்டு வந்தாயா? அப்ப இங்கே இருக்கட்டும்...” என்று அவள் ஏதோ சொல்ல நாவெடுக்குமுன் தொலைபேசி மணி ஒலிக்கிறது.

உள்ளிருந்து மாநிறமாக ஊட்டமுள்ள உடல்வாகைக் குட்டைக்கை ரவிக்கையில் காட்டிக்கொண்டு இளநங்கை ஒருத்தி வருகிறாள்.

புறங்கையில் கட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறாள்.

“உனக்குத்தாம்மா ஃபோன்!”

“பாலா, சௌக்யமா! டாக்டருக்கா படிக்கிறே?” என்று கேட்கிறாள். மதுரம்.

அவள் படிப்பைப் பற்றிய மதுரத்தின் அக்கறையைவிட அந்தப் பொழுதில் கேட்கும் கேள்வியின் முக்கியத்துவம்தான் பெரிதென்று மைத்ரேயி உணர்ந்து கொள்கிறாள்.

“இந்த மாமி எப்ப வந்தாலும் நான் டாக்டருக்குப் படிக்கிறேனான்னு கேட்கிறாள். எனக்கு டாக்டர்னாலேயே வெறுப்புன்னு, நானும் எத்தனை தடவையோ சொல்லிட்டேன் நினைப்பில்லையா மாமி?”

மதுரம் சிரிக்கிறாள். “நினைப்பே இருக்கறதில்லேடி பாலா. நீ அப்ப எம்.எஸ்.ஸியோ பி.யூ.ஸியோன்னா படிக்கிறேன்னே? ஜடம் ஏது நினைப்பு?” பாலா இன்னும் பெரிதாகச் சிரிக்கிறாள்.

“நான் இரண்டும் படிக்கலே. காலேஜில்தான் படிக்கிறேன்” என்று நகைச்சுவையுடன் பேசுவதுபோல் சிரித்துக் கொள்கிறாள் பாலா.

“கையிலேன்னா காயம்?”

“பிரஷர் குக்கர், புதுசா வாங்கிண்டு வந்து பூசை பண்றாளேன்னு சமைச்சேன். வெயிட்டைத் திறக்காமல் மூடியைத் திறந்தேன். அடிச்சுது ஆவி.... நல்லவேளையாக முகம் தப்பிச்சது”

“அடாடா...பார்த்துச் செய்யக் கூடாதா?”

லோகநாயகி பரபரப்பாக வருகிறாள், “மன்னி, அடுப்பை கொஞ்சம் கவனிச்சுக்கோ. நான் இப்ப அவசரமா வெளியில் போக வேண்டியிருக்கு. சேதுவுக்கு சாம்பார் ரசம் வேண்டாம். எதானும் பொரிச்ச குழம்பு பண்ணிச் சாதம் போடு. இந்தப் பொண்ணு இங்கேயே இருக்கட்டும்!” என்று சொல்லிவிட்டுப் போகிறாள்.

மதுரம் மிகவும் உரிமையுடன் உள்ளே செல்கிறாள்.

குளியலறையில் சென்று குளித்துவிட்டுப் பாலாவிடம் கேட்டு ஒரு ஆறு கஜம் சேலையை வாங்கிச் சுற்றிக் கொண்டு இடுப்புச்சேலையை உலத்துகிறாள் தோட்டத்தில். மைத்ரேயி அவள் சொல்லும் சுற்று வேலைகளைச் செய்கிறாள்; காய் நறுக்கி, தேங்காயரைத்து, காபி கலந்து கொடுத்து, கோகிலம் (தேய்த்து வைத்த பாத்திரங்களை எடுத்து அடுக்கி, வேலை சரியாக இருக்கிறது.

லோகநாயகி மேலிருந்து நன்றாக உடுத்து இறங்கி வருகிறாள். குளிரலமாரியைத் திறந்து மோர் எடுத்துக் குடிக்கிறாள்.

கடுகு மஞ்சள் வண்ணத்தில் பூக்கள் அச்சிட்டு கதர் பட்டு சேலை உடுத்தியிருக்கிறாள். முகத்தில் மூக்கும் கண்களும் தீர்க்கமாக இருந்தாலும் சதை தொங்கி தளர்ந்திருப்பதால் கண்களையும் கருத்தையும் கவரும் சுறுசுறுப்பும் குறுகுறுப்பும் தெரியவில்லை.

“சேதுவுக்குச் சும்மா காப்பி குடுக்காதே மன்னி! என்ன காப்பி குடிக்கிறான்! டாக்டர் நல்ல மோரோ கஞ்சியோ குடுங்கறார்.” | “மோர் கடைஞ்சு குடு!...” என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறாள். கார் அவளைச் சுமந்து செல்கிறது.

பாலா சாப்பிட வந்து உட்காருகிறாள். சாப்பாடு அறை மேசையில் மைத்ரேயிதான் பரிமாறுகிறாள்.

“அப்பாவுக்கு நீங்களே சாப்பாடு கொண்டு போட்டுடறேளா மாமி” என்று கேட்கிறாள் பாலா.

“அப்பா இங்கே வரதில்லையா?” என்று கேட்பது போல் சட்டென்று வெளியே வந்து பார்க்கிறாள் மதுரம்.

“ரெண்டு நாளா அநுசுயாதான் வந்து சமையல் பண்ண வேண்டியிருந்தது. அப்பா இங்கே வந்தா தினம் ஏதானும் குத்தம் சொல்றார். அம்மாவே அவரை அங்கேயே இருக்கச் சொல்லிட்டா.”

“அப்படியா?”

“ஆமாம் மாமி. இந்த அப்பா ஒரே ‘போர்’! இன்ன விஷயத்தில்தான் தலையிடறதுன்னில்ல. சேதுட்ட போயி “உங்கம்மா ஏன் மூக்குத்தியக் கழட்டிப் போட்டுட்டா”ன்னு கேக்கறார். சீ!"

“நீ என்ன துளியுண்டு சாதம் போட்டுண்டிருக்கே? சாம்பார் சரியாயிருக்கோ ? ஒரே அவசரம்....”

“ஃபர்ஸ்ட் கிளாஸ் மாமி. நல்ல சாப்பாட்டுக்கு நாக்குச் செத்துப் போச்சு. உண்மையாச் சொல்றேனே! அம்மாக்கு சாம்பார் வைக்கவே தெரியலே. புளிப்பு காரம் எல்லாம் ஒண்ணாவே சேராம தனித்தனியாகத் தூக்கிண்டிருக்கும்.”

இந்தப் பெண் உள்ளே ஒன்றும் வைக்கத் தெரியாதவள் என்று மைத்ரேயி அறிந்து கொள்கிறாள்.

பாலா சாப்பிட்டு முடிக்குமுன் கலகலவென்று நாலைந்து பெண்கள் உள்ளே வருவது தெரிகிறது. லோகாவும் வருகிறாள்.

“சமையலாயிடுத்தா மன்னி? நாங்க சாப்பிட உட்காரலாமா?”

‘ஓ! பேஷா!’ என்று சிரிக்கும் மதுரம் உள்ளே வரும் பெண்களைப் பார்த்துக் கும்பிடு போடுகிறாள்.

அவர்கள் எல்லோரும் பெரிய இடத்துப் பெண்கள். பெரிய பெரிய தொழில் அதிபர் குடும்பப் பெண்கள்; அதிகாரிகளின் மனைவியர்; அமைச்சருக்கு மருமகள்.... மெல்லிய துகிலணிந்து புஸுபுஸுவென்று ரொட்டிமா போன்ற உடலுடன் விளங்கும் வனிதை வடநாட்டுக்காரி என்று விளங்குகிறது. இன்னொருத்தி நீளத்திலகம் இட்டுக் கொண்டு, வெட்டிக் கொண்ட முடியும் கையில்லா இரவிக் கையுமாக இருக்கிறாள். முடியை உயர்த்தி உச்சியில் கொண்டை போட்டுக் கொண்டு பருமனாக ஒரு அம்மாள்; மைத்ரேயிதான் மேசையில் தட்டு வைக்கிறாள்.

“இவள்தான் புதுசு..” என்று லோகநாயகி அந்த வட நாட்டு வனிதைக்குச் சொல்கிறாள் ஆங்கிலத்தில்.

“இங்கே வா, உன் பேரென்ன?” என்று கேட்கிறாள் லோகா.

“மைத்ரேயி” என்று சொல்லிக் கொண்டு நிற்கிறாள்.

“பிராமணப் பெண் போலிருக்கு, ஐயங்காரா?” என்று கேட்கிறாள் நாமத் திலகக்காரி.

மைத்ரேயி தலையை ஆட்டுகிறாள், இல்லை என்று சொல்வதுபோல்.

“ஏன் தற்கொலை செய்து கொள்ள முயன்றாளாம்?”

“அதை நான் இன்னும் கேட்கவில்லை.”

“என்ன பிரமாத காரணம் இருக்கப் போறது? எவனேனும் சினிமாவில் நடிக்கலான்னு ஆசை காட்டி இழுத்திருப்பான். இல்லாட்டி யாரேனும் காதல் மூக்கல்னு கெடுத்து வயிற்றை நிரப்பி இருப்பான்...” என்று முணுமுணுக்கிறாள், அவள் தொடர்ந்து.

மைத்ரேயி இப்போது கண்ணீர் விடவில்லை. வெடுக் கென்று, “அப்படியொன்றுவில்லை!” என்று தெறிக்கிறாள்.

“ஓ, ஸ்மார்டா இருக்கிறாளே?” என்று கருத்தைத் தெரிவிக்கிறாள் வடநாட்டுக்காரி.

“பின்ன கிணற்றடியில் குளிக்கறத்துக்குத்தான் நின்னயாக்கும்” என்று லோகா மெல்ல நகைக்காமல் கூறுகிறாள்.

“அதுவுமில்லை. நான் நீங்க முன்ன சொன்னாப்பல, புத்திக்கெட்டுப் பாதிப் படிப்பை விட்டுட்டுப் போனேன். அப்பா அம்மா இல்லை. படிப்புத்தான் பெரிசுன்னு முதலில் தெரியலே. இப்ப இத்தனை நாள் என்னை ஆதரிச்ச குடும்பம் சேர்த்துக் கொள்ளவில்லை. வெளியே தள்ளிவிட்டார்கள். உங்களை எல்லாம் நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நான் எந்த வேலைவேணுன்னாலும் செய்வேன். எனக்குப் படிக்க வசதி கொடுத்தா நான் மறக்கவே மாட்டேன்.”

அவர்கள் ஒருவரை ஒருவர் மெளனமாகப் பார்த்துக் கொள்கின்றனர். பிறகு லோகா, “உனக்குச் சமையல் செய்யத் தெரியுமா?” என்று கேட்கிறாள்.

“சுமாராகத் தெரியும்; தெரியாததையும் கற்றுக் கொள்வேன்.”

“நாட் பேட்...” என்று நாமக்காரி பகருகிறாள்.

இதற்குள் மதுரம் சாப்பாடு பரிமாற அவளை அழைக்கிறாள். “ஹோம்ல சேர்க்கணும்னா சொன்னா?...” என்று இன்னொரு அம்மாள் கேட்கிறாள்.

"அப்படித்தானிருக்கும், எதுவும் இதுகள் சொல்வதெல்லாம் நம்பிவிடக் கூடாது....”

“அதான் நல்ல கவுரவமான குடும்பங்களில் வீட்டோடு குழந்தை பார்த்துக் கொள்ள, வயதானவருக்குப் பணி செய்ய, வீட்டுப் பணிகளைச் சற்றே மேற்பார்வை பார்க்க... என்ற மாதிரியில் கெளரவமான ஒரு வேலை கிடைக்காதான்னு தான் மதுரம் கூட்டிண்டு வந்திருக்காப்பல இருக்கு...”

“அந்த மாதிரி வேலைக்கெல்லாம் இவ தோதுப்படாது” என்று அறுதியிடுகிறாள் நாமக்காரி.

வடக்கத்திக்காரி மென்னகை செய்து கண் சிமிட்டுகிறாள். பிறகு எல்லோருமே சிரிக்கின்றனர்.

“சரி, மன்னி, அநுசுயா வருவா சாயங்காலமா. ஃபாரம் கொண்டு வரச் சொல்றேன். இங்கே இருக்கட்டும் அதுவரை” என்று முடிக்கிறாள் லோகா.

லோகா உண்டு முடித்து, வெற்றிலை போட்டுக் கொள்கிறாள். பிறகு எல்லோருமாக வெளியே செல்கின்றனர். சேதுவுக்குப் பத்தியச் சாப்பாடு. அவன் தனியாக வந்து உட்கார்ந்து தயிர் கலந்த சோற்றையும் பொரித்த குழம்பையும் உண்டு மாடிக்குப் போகிறான். கோகிலாவின் கணவன் நாய்க்குப் பின்பக்கம் சோறு பொங்கி இறைச்சியுடன் போடுவதை மேற்பார்வை பார்க்க மீண்டும் இறங்கி வருகிறான். மைத்ரேயிக்கு செவ்வையாய்க் கவனிக்காமல் புழுத்துப்போன சாமான்களைப் பார்த்துச் சீராக்கும் வேலை சரியாக இருக்கிறது. பைபையாய் அரிசி, வண்டு ஓடும் சாம்பார் பொடி, கரப்பான் பூச்சி செத்துக் கிடக்கும் எண்ணெய்....

மதுரம், ஒவ்வொன்றாய் எடுத்து வைத்துவிட்டு, பர்ண சாலைக்குச் சாப்பாடு கொண்டு செல்கிறாள்.

சற்றைக்கெல்லாம் நெற்றியில் பச்சைக் குத்தும், வெள்ளைச் சேலையுமாக ஒரு பெண் வருகிறாள். இருபத்தைந்து வயசிருக்கும்.

“வா வா, அநுசுயாவா?” என்று மதுரம் சிரித்து வரவேற்கிறாள்.

"அம்மா இப்பதான் வந்து சொன்னாங்க. துணியெல்லாம் கொஞ்சம் தைக்கணும், மாடி ஜன்னல் ஸ்கிரீனெல்லாம் ரொம்பப் பழசாப் போச்சு. புதுத் துணி வாங்கிவச்சிருக்கேன், போய்தச்சுப் போடுன்னாங்க.”

“ஹோம்லதானே இருக்கே?”

“பின்ன எங்க போறது?..... இது யாருங்க மதுரம்மா?”

“எனக்குச் சொந்தம்...” என்று மதுரம் சிரிக்கிறாள்.

மைத்ரேயிக்கு அவள் ஹோமிலிருந்து வந்தவள் என்று புரிந்து கொண்டதுமே பரபரப்பாக இருக்கிறது.

“ஹோம்ல வேலையாயிருக்கிறீங்களா?” என்று கேட்கிறாள்.

“வேலை, இருப்பு, எல்லாந்தான்...” என்று சிரிக்கிறாள் அநுசுயா. ஹோமில் வேலை கிடைக்க என்ன படித்திருக்க வெண்டும் என்றெல்லாம் கேட்க ஆசையாக இருக்கிறது, நாசமாகவும் இருக்கிறது.

அநுசுயா கையிலிருக்கும் பையைத் திறந்து, மடித்த தாளொன்றை மதுரத்தினிடம் கொடுக்கிறாள்.

“அம்மா உங்கிட்ட ஒரு ஃபாரம் கொண்டு கொடுக்கச் சொன்னாங்க...”

“இப்படிக் கொடு” என்று வாங்கிக் கொள்ளும் மதுரம் அதை மைத்ரேயியிடம் கொடுக்காமல் சமையலறைத் தட்டின் மீது ஓரத்தில் வைக்கிறாள்.

அநுசுயா மாடிக்குப் போகிறாள்.

“வா, வா...பசிக்கும் உனக்கு, நாம் சாப்பிடலாம். நான் தோட்டத்திலிருந்து இரண்டிலை பறிச்சிண்டுவரேன்...” என்று கத்தியுடன் கொல்லைப்புறம் செல்கிறாள்.

“இந்தம்மா வந்திடுச்சில்ல? வாழ மரம் மொட்டை. இரம்மா, சருகு தரேன்...” என்று கோகிலாவின் புருஷனான தோட்டக்காரக் குப்புசாமி சண்டைக்கு வருகிறான்.

ஒரு இலை பறிச்சா இவனுக்குக் கொள்ளை போயிடும்!

சமையலறையில் இரண்டு இலைகளையும் போட்டு நீர் தெளித்து, கறி, கூட்டு, ஊறுகாய், மோர், குழம்பு, ரசம் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டு, நல்ல மல்லிகைப் பூப் போன்ற சாதத்தைப் பரிமாறுகிறாள். நெய்யைத் தாராளமாக ஊற்றுகிறாள்.

மைத்ரேயிக்குக் கூச்சமாக இருக்கிறது.

“சங்கோசமில்லாம சாப்பிடு. எதுக்கு சங்கோசம்? வேலை செய்றோம் சாப்பிடறோம். வீடு கிடக்கும் கிடையப் பாரேன். ஆனா அவ என்ன பண்ணுவா? வெளிலே வேலைக்குப் போறவ வீட்டை எப்படிப் பாத்துப்பா? அந்தக் காலத்திலே லோகா துரைசானிபோல வளர்ந்தவ. அவப்பாவுக்கு ஒரே பொண்ணு, வீட்டோடு லேடி இருந்து பாடம் சொல்லிக் குடுத்து, பழகச் சொல்லிக் கொடுத்து செல்லமா வளர்ந்த பொண்ணு...” என்று சொல்லிக் கொண்டே அவள் இலையைப் பார்த்துக் குழம்பை ஊற்றுகிறாள்.

“அவர்... ஏன் அப்படித்தனியே இருக்கார் மாமி? உடம்பு சரியில்லையா?”

“ஒரு உடம்பையும் காணோம். அது ஒரு மாதிரி. அந்தக் காலத்திலே அத்தை பிள்ளை, அஞ்சு குடும்பத்துச் சொத்து வெளியில் போகக் கூடாதுன்னு குடுத்துட்டா. அவன் இங்கே வந்து இருக்க மாட்டேன்னுட்டான். இவளால் கிராமத்துக்குப் போக முடியுமா? போனால் ஒரே முசுடு. கையில் கரி படாம வளர்ந்த பொண்ணு. கற்சட்டி தேச்சு அடுப்பு மெழுகணும்பானாம். அப்புறம் அவப்பாவே அனுப்பல. அவப்பா செத்துப் போனப்புறம் கூட வரல. கொஞ்ச நாளைக்கு முன்னதான் ஊரில ஏதோ தகராறு, குடியானவங்களோட சண்டை. என்ன விவகாரமோ, போட்டு அடிச்சுட்டாங்கன்னு கேள்வி. லோகாதான் போயி அழைச்சிண்டு வந்தா ராவோடு ராவா. நான்போனதடவை வந்தபோது பர்ண சாலை பூட்டிக் கிடந்தது. இவன் மாடிலதானிருந்தான். இப்பதான் பாலா சொன்னாளே? அவள் புத்திக்கும் அறிவுக்கும், இப்படிக் கொண்டவன் அதிர்ஷ்டமில்லாம முசுடாப் போச்சு. இவனாலேயே இந்த வீட்டில ஒரு சமையல் ஆள் நிலைக்கிறதில்லே...”

இந்தக் கதையெல்லாம் மைத்ரேயிக்கு ஆர்வமாகக் கேட்கச் சுவைக்கவில்லை. அவளுடைய எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்கள் இன்னும் உருப்பெறவில்லையே?

“மாமி, அநுசுயா என்னமோ ஃபாரம்னு கொண்டுவந்து கொடுத்தாளே அது எனக்கா?”

“உன்னை ஹோம்ல சேக்க வந்திருப்பதாகத்தான் அவ நினைச்சிண்டிருப்பா. ஹோம் வேண்டாம். நீ நல்ல குலத்தில் பிறந்திருக்கே. அதை எதுக்கு அழிச்சுக்கணும்?”

மைத்ரேயிக்குப் புரியவில்லை.

“இந்தப் பிராமணசாதிதான் கட்டுப்பாடு இல்லாம சீரழிகிறது. முதலியார், பிள்ளை எல்லாம் விட்டுக்கொடுக்கறாளா? அந்த ஹோமுக்குப் போனா, உன் குலம் கோத்திரம் எல்லாம் அழிஞ்சு போகும். அம்மா தெரியாதது, அப்பா தெரியாதது, ஒன்றரைக் கண், மாறுகண், இப்படி ஒரு மந்தைக் குழந்தைகள் இருக்கும். கதியத்து வயிற்றில் வாங்கிண்டு கழுத்தைத் திருகிப்போட மனசில்லாம வந்து சேர்த்துட்டுப் போற கழிசடைகள் அங்கே சேரலாம். உன்னைப் பார்த்தால் ராஜாத்தி மாதிரி இருக்கு. நீ எதுக்கு அங்கே போகணும்?....”

மைத்ரேயி, குட்டை குழம்பிவிட்டாற்போல் விழிக்கிறாள்.

“நான் பின்னே என்ன செய்வது? என்னை இங்கேயே சமையல் வேலை செய்யச் சொல்றேளா? எனக்குப் படிக்க ஆசையாயிருக்கிறது மாமி.”

“படியேன்? யார் வேண்டாங்கறா? அதுக்காக அந்தக் கலப்படச் சந்தையிலே போய் பரம்பரையையே அழிச்சுக்கணுமா? நான் எங்க சொர்ணத்தையே அங்கே விடச் சம்மதிக்கலியே? இந்தக் கோகிலா, அநுசுயா தொட்டுச் சாப்பிட மாட்டாள். அவ சேரிலேந்து வந்த பொண்ணு. அழுக்குத் தேச்சுக் குளிச்சிட்டா சாதிக்கறை போகுமாம்பா அவ. அநுசுயா போல இருக்கிறவாளுக்கு அது சரி. நீ போறது எனக்குச் சரியாப்படல. இந்தாத்திலே சமையல் வேலை செய்யறது என்ன தப்பு? லோகா ரொம்ப நல்லவ. நீ சமர்த்தாக இருந்தால் கூடவே படிச்சிக்கலாம். முதல்ல அவா பிரியத்தைச் சம்பாதிச்சுக்கணும், நீ. அப்புறம் அவளே வேற ஆளா இங்கே போட்டுட்டு உன்னைச்சித்து வேலைக்குன்னு வச்சிண்டு படிக்கவும் வசதி பண்ணுவா. நீ அவசரப்பட்டு ஹோமுக்குப் போயிடாதே. அதனாலதான் ஃபாரத்தை வாங்கி அப்படியே வச்சிட்டேன்...”

சாதியையும் கோத்திரத்தையும் அழிப்பதென்றால் எதைக் குறிப்பிடுகிறாள் என்று மைத்ரேயிக்குப் புரியவில்லை.

இந்தச் சாதியில் பிறந்ததற்காக, அவள் என்ன நன்மை கண்டு விட்டாள்? அவள் எதற்காக, எந்த மேன்மையை எண்ணி அதைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்? மாற்றான் பாசறையில் தலைநீட்டிவிட்டு வந்தாற்போல் அவள் வந்திருக்கிறாள். அவள் பிறந்த சாதியின் பெயரைச் சொல்லிக் கொள்ளவே இப்போது அவள் கூசிக் கொள்கிறாள்.

மதுரம் தொடர்ந்து பேசுகிறாள்:

“பிழைக்க வழி இல்லாமல் ஒரு அவலத்தைக் கட்டி அழகு, அந்தஸ்து, படிப்பு ஒண்ணும் இல்லாம இருந்தும் நான் இந்தச் சாதிப் பிறப்பினால்தான் பிழைக்கிறேன். தெரிஞ்சுக்கோ? இன்னிக்கு இந்தச் சமையல் ரூமில் வந்து சுவாதீனமாகப் புழங்கவும் இலைபோட்டுச் சாப்பிடவும் முடியிதுன்னா , அதுக்குக் காரணம் இந்த சாதிப் பிறப்புதான். எந்தத் தொழிலுக்கு விலை இல்லாமப் போனாலும் இதுக்குக் கிராக்கி போகாது. நான் சிவனேன்னு இங்கே ருசி ருசியா சமச்சுப் போட்டுண்டு நானும் வயிறு வாடாமல் சாப்பிட்டுக் காலம் தள்ளுவேன். யாரை என்ன சொன்னாலும் லோகா என்னைத் தள்ளி நில்லுனு சொல்ல மாட்டாள். ஆனா, குடும்பம்னு பின்னோட ஒண்ணு ஒட்டிண்டிருக்கே. நீ வாணாபாத்திண்டிரு. இன்னிக்குச் சாயங்காலம் நான் போகாட்ட காலமே ஜிட்டுவோ பொம்மியோ வந்துடும். அப்புறம் பெரியவன்; பின்னே அப்பனும் வந்துடுவான். வந்தா சும்மா இருப்பாளா? உக்கிராணத்தில் சாமான் இருக்காது; மேசையில் வச்ச பண்டம் போயிடும். என் குடும்பத்தைப்பத்தி நானே குறை சொல்லிக்கிறதிலே என்ன தப்பு இருக்கு? என் தலை எழுத்து...”

மைத்ரேயி வாயடைத்துப் போகிறாள்.

“அவாள்ளாம் இங்கே வரக்கூடாதுங்கறதுக்காகத்தான் என்னையே இங்கே கூப்பிட முடியறதில்ல அவளால், ஒரு தெவசம் திங்கள்னாக்கூட நான் வருவேன். உடனே போயிடுவேன். ஏதோ தட்டி முட்டிக் கேட்டால் பத்து அஞ்சு தருவாள். ஒரு பழசு, சாயம் போனதுன்னு கொடுப்பாள்... சாதத்தை இலையில் போட்டுட்டு இப்படிப் பேசறேனேன்னு பார்க்காதே. உங்கக்காவும் அத்திம்பேரும் பண்ணினது ரொம்பத் தப்பு. நம்ம ஜாதிய விட்டு, குடும்பத்தை விட்டு ஒரு பொண்ணு போனா, அது எவ்வளவு நஷ்டம்னு அவாளுக்குத் தெரியல. கிறிஸ்துவா விட்டுக் கொடுக்கிறாளா? வேற எந்த சாதியாளும் விட்டுக் கொடுக்கிறாளா, இப்படி?”

அவளுடைய சொற்கள் நறுக்கு நறுக்காகத் தெறித்து விழுந்தாற் போல் இருக்கின்றன. வயிற்றுக்கில்லாமல் புரண்டு புரண்டு சமுதாயத்தில் பல படிகளிலும் சிதறிய நெல்மணிகளுக்காகத் தேடும் அனுபவத்தில் அவள் சேகரித்த முத்துக்கள் தாம் இப்படிச் சிதறுகின்றனவோ? வெளுத்ததெல்லாம் பாலென்று நம்பிவிட்ட அவளுக்கு ஒரு கண்ணைத் துடைத்து அம்மணி உலகம் காட்டினாள். இவள் இன்னொரு கண்ணைத் துடைக்கிறாளோ?

பள்ளிக்கூடத்துக்குச் சென்று ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிகளைப் பற்றியும், பிரிட்டிஷ் அரச குடும்ப வம்சாவளியைப் பற்றியும் படிப்பாளாக இருக்கும். தீரங்களை உருப்போடுபவளாக இருக்கும்.

ஆனால் ஒரு இளம் பெண் இயற்கையின் பருவக்காற்றை எதிர்க்காமலும் சாதகமாகச் சென்று படுகுழியில் விழாமலும் சாமர்த்தியமாக வாழ்க்கைப் படகை வலித்துச் செல்லக் கற்பிப்பார்களா?

தாயும் தகப்பனும் இருந்திருந்தால் தனக்கு நேரிட்டாற் போன்றதொரு விபத்து வாழ்க்கையில் ஏற்பட்டிராதென்றே மைத்ரேயி நம்புகிறாள். அவளுடைய வகுப்பில் எத்தனையோ பெண்கள் படித்தார்கள். ஆனால் அவளைப் போல் மனமழிந்து ஒரு போலியைத் தெய்வீகக் காதலென்று நம்பும் நிலைக்கு யாரும் வரவில்லை என்பதை நினைத்துப் பார்க்கையில் மனம் குன்றிப் போகிறது. புவியில் பிறந்ததன் காரணமாக, ஒரு பெண்ணாய்ப் பிறந்ததன் காரணமாக, குறிப்பிட்டதொரு உயர்ந்த சாதியிற் பிறந்ததன் காரணமாக, ஒரு சமுதாயத்தின் அங்கமாக இருப்பதன் காரணமாக அவளுக்குப் புரியாமலேயே கண்ணுக்குத் தெரியாத பொறுப்புகளும், பிணிப்புகளும் அவளுடைய அறியாமையில் விளையும் சுதந்திரமான போக்கைத் தடை செய்கின்றன. அவள் அங்கம் வகிக்கும் சமுதாயப் பெண்டிர் கற்பு நெறியுள்ளவரல்ல என்ற கூற்றுக்கு விளக்கம் காணவே தங்களை இந்த இழிநிலைக்குத் தூண்ட வலை வீசி இருக்கலாம். உண்மையில் காதல் என்ற ஒன்று கிடையாது. தனராஜுவின் மீது அவள் கொண்ட நட்பு காதலாக, எழுத்தில் ஏற்றி வைத்தும் அரிய பண்பாக இருந்திருந்தால் அம்மணியம்மாளின் எச்சரிக்கை மிகப் பெரிய கருநாகமாக அவளைத் துரத்திக் கொண்டு ஓடி வருவது போல் அச்சுறுத்தியிருக்குமோ?

தனராஜின் மீது காதல் கொண்டதாக நினைத்ததே பிரமை.

அந்த வீட்டுச் சமையலறை என்றால் மூச்சுவிடப் பொழுது இருக்காது என்று மைத்ரேயி புரிந்து கொள்கிறாள்.

பாலா மூன்று மணிக்கே கல்லூரியிலிருந்து வந்து விடுகிறாள்.

ரவாலட்டும் பஜ்ஜியும் செய்யச் சொல்கிறாள். பர்ண சாலைக்கு மதுரம் காபியும் சிற்றுண்டியும் கொண்டு கொடுக்கிறாள்.

சேதுவைப் பார்க்க ஐந்தாறு நண்பர்கள் வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் காப்பி, சிற்றுண்டி கொண்டு போகிறாள் பாலா.

லோகா மாலை ஆறேகால் மணிக்கு ஒரு கூடை எலுமிச்ச பழத்தைக் கொண்டு போட்டுவிட்டு வெறும் தேநீர் மட்டும் அருந்திவிட்டு மீண்டும் வெளியே செல்கிறாள். அநுசுயாவுக்கு முழு வேலையும் முடியவில்லை. எனினும் மாலை ஏழு மணிக்குள் அவள் விடுதிக்குப் போய்விடவேண்டும் என்ற விதியை மீறாமல் காபி சிற்றுண்டி சாப்பிட்டு விட்டுப் போகிறாள்.

இரவுக்குப் பருப்பு சாம்பார், ரசம், பீன்ஸ் பொரியல் அப்பளம், பெரியவருக்குக் கோதுமைத் தோசை, சட்னி.

லோகா, வீடு திரும்புவதற்கு இரவு மணி பத்தாகிறது. எட்டரை மணிக்கே மற்றவர் உண்டு முடித்துவிட்டாலும், எஜமானி அம்மாளின் வரவுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர். அப்போது பாதி எலுமிச்சம் பழங்களை நறுக்கி உப்பிட்டு வைக்கிறாள் மதுரம்.

லோகா வீடு திரும்பியதும் தொலைபேசியண்டை அமர்ந்து வெகுநேரம் யாருக்காகவோ காத்திருந்து பேசுகிறாள். பிறகு அவள் உண்ண வருகிறாள். சோறில்லாமல் வெறும் ரசம், பீன்ஸ் பொரியல், அப்பளம், மோரை மட்டும் கொள்கிறாள். பிறகு மாடிக்குச் செல்கிறாள். பருமன் குறைய ‘டயட்’ இருக்கிறாளாம்!

அவர்கள் இருவரும் உண்டுமுடித்து, கோகிலாவுக்கு மீதியைக் கொடுத்துவிட்டுச் சமையலறையைக் கழுவி விடு கின்றனர்.

மணி பதினொன்றாகிறது.

சாப்பிடும் கூடத்தை அடுத்து இடை அறையில் மதுரம் வினோலியம் சுருட்டொன்றைக் கொண்டுவந்து விரிக்கிறாள்.

ஆளுக்கொரு மனையும் தலைக்குக் கிடைக்கின்றன.

மைத்ரேயிக்கு நிம்மதியாக இல்லை.

“மாமி, என்னைப் பத்தி அவா ஒண்ணுமே கேக்கலியே? நீங்க நாளைக்குப் போயிட்டா நான் என்ன செய்வேன்?”

“கவலைப்படாதே, இந்த வேலை செஞ்சதால குறைச்சல் வந்து விடாது. லோகாவிடம் நான் சொல்லாமல் போக மாட்டேன்...”

“நீங்க இன்னும் நாலஞ்சு நாள் இருங்கோ மாமி...”

அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே பின்புறக் கதவை யாரோ விரல் முட்டியால் தட்டுவது போன்ற ஓசை கேட்கிறது.

மைத்ரேயிக்கு நடுக்கமாக இருக்கிறது.

ஆனால் மதுரம் எழுந்து போகிறாள். அடுத்தகணம் கதவு திறக்கும் ஓசையும் மெல்லிய குரலில் மதுரம் கடிந்து கொள்ளும் ஒலியும் கேட்கின்றன.

“நானெங்கே தொலைஞ்சு போயிடுவேன்னு வந்தியா? அப்படியே போனாலும் ஒழிஞ்சு நிம்மதியாப் போவேன். மனுஷனுக்கு ஒரு ரோசம் மானம் இருக்கணும்!”

அவள் சமையலறையில் விளக்குப் போடுகிறாள். சாப்பிடும் கூடத்துக்கு வந்து குளிரலமாரியைத் திறந்து ஏதோ எடுத்துச் செல்கையில் மைத்ரேயி படுத்திருக்கிறாள். குளியலறையில் வெளிச்சம் பரவுகிறது. காலைத் தேய்த்துத் தேய்த்துக் கழுவும் ஓசை. காறி உமிழ்ந்துத் தொண்டையை சுத்த மாக்கிக் கொள்ளும் குரல் ஒலிகள். சமையலறையில் பப்படம் நொறுங்க, சாப்பிடும் அரவங்கள்.

“இங்கே இப்ப ஆளில்ல. நீங்க அழகாப் பகல் நேரத்தில வாசல் வழியா வந்துட்டுப் போகக் கூடாதா? எனக்கு கொல்றாப்பல இருக்கு...” மோரை உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கும் ஒலிகளைத் தவிர வேறு மறுமொழி இல்லை.

“காலமே நேத்து அஞ்சுபடி அரிசியையும் கடையில் கொடுத்துட்டு அந்தத் தடியன் பணம் வாங்கிண்டு போயிருக்கான். வடிக்க மணி அரிசி இல்லை. அப்புறம் எப்படியோ சமாளிச்சு மணி செட்டிகிட்டக் கடன் சொல்லிட்டு ஒரு படி புழுங்கலரிசியும் சாமானும் வாங்கிண்டு வந்து ஆக்கி பொழுதை ஓட்டினேன். இப்படி எத்தனை நாளைக்கு என்பாடு அல்லாடணுமோ?”

“அதான் உன் தங்கை சம்பாதிச்சுப் போடறாளே?”

“நாக்கை அலம்புங்கோ! ஏனிப்படிப் பராதி சொல்றேள்? அநாதைன்னா என்னவேணா சொல்றதா?..."

“நானா சொல்றேன்? சைகிள்கடை ஏழுமலைதான் ரிப்பன் வாங்கிக் கொடுக்கிறான்; சினிமாவுக்குக் கூட்டிப் போகிறான்!”

“உங்க நாக்கு அழுகணும்னு நான் சொல்லமாட்டேன். ஒரு பொண்ணு கெட்டுப்போகறது அவ்வளவு சுளுவில்லை. பிஞ்சானாக் கூட வெம்பும்; அழுகாது. வெட்டுக்காயம் பண்ணி மூடிவச்சாத் தான் அழுகும். அப்படி உங்க வர்க்கம் வெட்டுக் காயம் பண்ணிட்டு கெட்டுப் போச்சின்னு எரியறாப்பல நீங்கபேசறேள். அவளுக்கு நாதியில்லே; படிப்பும் வரல. அதுக்காகக்கூடப் பிறந்த பிறப்பை அடிச்சு விரட்ட முடியுமா நான்? இந்த மோழைச் சாம்பு, அசடு, ஒரு கரண்டி எடுக்க வக்கில்லாதவன், உழைக்காட்டாலும் வயசுப் பிள்ளை, இவ நாலு ஆளுக்கு உழைச்சுக் கொட்டுவா. ஏதோ இங்கே அங்கேன்னு பிச்சைகேட்டு ஒரு கலியாணம் பண்ணி வைக்கலான்னு பார்த்தால், ஆயிரம் ரூபாய் கையில் வேணும்னு அவம்மா கோணவாயை ஒரு முழம் நீட்டிண்டு கேக்றா. நேத்து அப்பாவுன்னு லாரிக்காரப் பையன் வந்தான். நல்ல உழைப்பாளி. வம்பு தும்புக்குப் போக மாட்டான். இவனுக்குச் சொர்ணத்தை ஏன் கட்டி வைக்கக்கூடாதுன்னு நினைச்சேன். சாதியாவது இன்னொண்ணாவது? எல்லாம் நஞ்சு கந்தலாப் போனப்புறம் அதுக்குப் புடவைன்னு பேரு எதுக்கு?”

“குடு குடு...மீன் குழம்பு வச்சுக் கல்யாண விருந்து பண்ணு . உனக்கு வாய் அதிகமாயிடுத்து!”

“ஆமாம். மானம் மரியாதை இல்லாதவாளுக்கு வேறே என்ன பேசத் தெரியும்?”

சாப்பிட்டுக் கையலம்பும் ஓசை.

மதுரம் ஈயக் கற்சட்டியையும் குழம்புப் பாத்திரத்தையும் குழாயடியில் போடுகிறாள்.

அவள் கதவைச் சாத்தும் ஒலி கேட்கிறது.

ஆனால் மதுரம் பாயில் வந்து படுக்கவில்லை.

மைத்ரேயி ஏதேதோ நினைவலைகளின் மீது அலைந்தபடியே கண்ணயர்ந்திருக்கிறாள்.

யாரோ விசும்பி அழும் ஒலி கேட்டுச் சரேலென்று விழித்துக் கொள்கிறாள். மதுரம்தான். இருளில் அவள் குப்புறப்படுத்துக் கொண்டிருப்பது தெளிவாகிறது. தோள்கள் எழும்பித் தணிகின்றன.,

“மாமி...? மதுரம் மாமி? மதுரம் மாமி...”

மதுரம் விம்மலடங்கிக் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளச் சில விநாடிகள் செல்கின்றன.

“செ! என் தலைவிதியை நினைச்சுண்டா சிலசமயம் இப்படித்தான் பொறுக்காம வந்துடும். சனியன் இப்படிப் பொண்ணாப் பிறந்திருக்கவே வேண்டாம்... கட்டின புருஷன் சரியில்லை. வாய்த்த பிள்ளை அதைவிட மோசம். விடுதலையுமில்லை; விமோசனமுமில்லை.”

“அழாதேங்கோ மாமி...”

“இதுகளை எல்லாம் விட்டுத் தொலைச்சிட்டு எங்கேனும் கண் காணாமல் போயிடலான்னு தோணும். பின்னும் துணிச்சல் வராம இந்தப் பாசபந்தத்தில் அடிபட்டுச் சிக்கிச் சுழல்றேன்...”

அந்தக் கணத்தில் மைத்ரேயிக்குதான் குன்றின்மேல் நிற்பதுபோல் தோன்றுகிறது.

6

தனராஜுடன் கூடிவாழ்ந்து ஒரு மகவுக்குத் தாயாகி யிருந்தால் மதுரத்தைப்போல் அவளும் ஒரு விதியில் சிக்கி நிலைகுலையத் தடுமாறிக் கொண்டிருப்பாளோ? தன் மானத்தை, புருஷனின் மானத்தை, உடன்பிறப்பின் மானத்தை, தான் பிறந்த குலத்தின் மானத்தை, அவள் விட்டுக் கொடுக்காமலிருப்பதற்காகச் சிரிக்கிறாள்; குழைகிறாள்; வேதனைகளைப் போர்த்துக்கொண்டு குனியவேண்டிய இடத்தில் குனிந்து நிமிர வேண்டிய இடத்தில் நிமிர்ந்து நடமாடுகிறாள். இருளின் தனிமையில் அந்தப் போர்வைகள் ஊசிக்குத்தல்களாகப் பிடுங்குகின்றன; கண்ணீர் வடிக்கிறாள்.

மைத்ரேயி அதுவரையிலும் தனக்கு அறிமுகமான, பார்த்த, உறவாடிய, இரத்தக் கலப்புடைய பெண்களை எல்லாம் நினைத்துப் பார்க்கிறாள்.

அவளுடைய அம்மா...அம்மா யார்?

அகங்காரமும் ஆணவமுமே உருவான புருஷனின் அடிமை; கைப்பொம்மை.

அடுத்தடுத்துப் பிள்ளை பெறும் கருவி.

அந்தத் தாயைத் தந்தை ஒரு நாளும் மனைவி என்ற மதிப்புக் கொடுத்தே நடத்தியவரல்ல என்பதையே அவள் தன் நினைவு தெரிந்தபின் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறாள். அவள் உடல் நலிந்து சக்கையானதும் தன் போகக் கருவியாக அவர் இன்னொருத்தியைத் தேடிக் கொண்டார். அந்த இன்னொருத்தி மட்டும் குன்றேறி நின்றாளா? ஐந்து ஆண்டுகளுக்கு விளையாட்டுப் பொம்மை. பிறகு அவளை வைத்துக்கொண்டு பணத்தைப் பெற யாரோ சகோதரன் உறவில் முளைத்தானாம். கட்டியவளையும் குழந்தைகளையும் வஞ்சித்து, இளையவளுக்கே அவர் எழுதிக் கொடுத்த பொருளை அந்தச் சோதரன் பெற்றுக் கொண்டு அவளையும் ஏமாற்றி நடுத்தெருவில் விட்டான். கோடம்பாக்கம் பிராந்தியத்தில் அவள் அம்மா, பாட்டி தோழி என்ற சில்லறை வேடங்களுக்குத் தவம் கிடந்து எப்படியோ வயிறு நிரப்புவதைப் பற்றி அற்பத் திருப்தியுடன் அக்கா சொல்வது வழக்கம்.

அக்கா... அந்த அக்கா மட்டும் எப்படியாம்?

சொந்தத் தாயின் வயிற்றில் தன்னோடு பிறந்த தங்கைகளைச் சிறுமைப்படுத்தி, கட்டியவனின் மனிதர்களுக்குமுன் குழைகிறாள். என் தங்கைகள், என்னுடன் பிறந்தவர்கள், என் தந்தை வாங்கிக் கட்டிய வீடு, எனக்கு அவர்களைக் காப்பாற்ற, இரக்கம் காட்ட, ஈரம்கொண்டு கசிய உரிமை இருக்கிறது என்று ஏன் சொல்லக் கூடாது?

திருவள்ளூரிலிருந்து முன்பு ஒரு முறை அவளுடைய தாய்க்கு எட்டிய உறவில் சின்னம்மாவாகக் கூடியவள் வந்தாள். மைத்ரேயியைப் பார்த்து திருஷ்டி வழித்துச் சொடுக்கிக் கொண்டு கண்ணீர் உகுத்தாள். பிறகு அக்காவைப் பார்த்து, “இப்ப நன்னாயிருக்கிறயாடி குழந்தே? மாமியார்க்காரி போய்ச் சேந்தாளா? எமகாதகி, உடன் பிறந்தவன் சொத்லெல்லாம் வாங்கிண்டு, அவன் பெண்ணையே படுத்தி எடுத்தாளே!” என்று பிரலாபித்தது அக்காவுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், மூடிய பெட்டிக்குள்ளிருந்து பாம்பின் வால் வெளியே தெரிந்தாற் போலிருந்தது.

அத்திம்பேரை அவள் முன்பெல்லாம் உறவு முறை குறிப்பிட்டு அத்தான் என்றுதான் கூப்பிடுவது வழக்கமாயிருந்தது.

அவளுக்குப் பன்னிரண்டு வயசுகூட நிரம்பியிருக்கவில்லை. அத்தான் ஊஞ்சலில் உட்கார்ந்திருக்கையில் அவள் தோட்டக் கிணற்றில் குளித்துவிட்டு ஈரப் பாவாடையும் சோப்புப் பெட்டியுமாக வந்தாள்.

சோப்புப் பெட்டியை வைத்துவிட்டு, உயரக் கொடியில் இருந்த பாவாடையைக் கோல்கொண்டு தள்ளினாள். கோல் அவளுக்குச் சிறியதாக இருந்ததால் பாவாடையைத் தள்ளுவது கடினமாக இருந்தது.

“அத்தான், இந்தப் பாவாடையைத் தள்ளிக் கொடுங்களேன்?” என்று அவரிடம் வந்து அவள் கேட்டாள்.

அன்று அவளுடைய அக்கா, சமையலறையில் கூப்பிட்டு வைத்து அவளை அதட்டினாள். அந்தச் சொற்கள் அவளுடைய மலர் நெஞ்சில் தீக்கோடுகள் போல் பதிந்தன.

“ஏண்டி வயசாச்சு, கடாமாடுபோல வளர்ந்தாச்சு, அத்திம்பேர் உக்காந்திருக்கச்சே ஈரத்தோடு அங்கே என்ன வேலை? அத்தானாம் அத்தான்! நீ ஒண்ணும் உறவு சொல்லிக் கூப்பிட வேண்டாம்! அத்திம்பேர் உனக்கு அவர்.

வெக்கம், நாணம் ஒண்ணு கிடையாது. நீ இனிமே கூடத்திலே புருஷா உட்கார்ந்திருக்கறச்சே அரைகுறைத் துணியோடு வரக்கூடாது. கொல்லைப் புறமா வரதுக்கென்ன கேடு?”

ஒரு பெண் வளர்வது குற்றத்துக்குரிய செயல் என்று அவள் அன்று அறிவுறுத்தினாற் போலிருந்தது. அன்று மைத்ரேயி தனிமையில் அதை நினைத்து நினைத்து அழுதாள். அவளுக்கு வயசுக்கு ஒத்த தோழியரோ சகோதரிகளோ கூடக் கிடையாது. ரஞ்சனியோ அவளைவிட எட்டு வயசு மூத்தவள். அவளுக்கும் ரஞ்சனிக்கும் இடையில் அடுத்தடுத்து கருச்சிதைவுக்காளானாளாம் அவள் தாய். ஒரு குழந்தை பிறந்து இறந்து போயிற்றாம். அத்திம்பேரின் சகோதரி மக்கள் நீலாவும் மாதவியும் மைத்ரேயியைவிடப் பெரியவர்கள். அவர்கள் கொழு கொழுவென்றிருப்பார்கள். ஒவ்வொரு ஆண்டிலும் விடுமுறைக்கு அவர்கள் வடக்கிருந்து வருவார்கள். நீலா கையில்லாத ரவிக்கையும் சேலையுமாக அத்திம்பேருடன் குதித்துக் குதித்துத் தோட்டத்தில் பந்தாடுவாள். மாதவி முழங்கால் மேலோடு ‘ஸ்கர்ட் ப்ளவுஸ்’ ஃபிராக் போன்ற உடைகளே அணிவாள். அவர்களுடன் அத்திம்பேரின் தந்தை வழியில் ஒன்றுவிட்ட சகோதரர் மக்களும் விடுமுறைக்கு வருவார்கள். கல்லூரியில் படிக்கும் பையன்கள் பெண்கள் எல்லோரும் சேர்ந்து ‘காரம்’ ஆடுவார்கள். ஒருவர்மீது ஒருவர் விழாத குறையாகச் சண்டை போடுவார்கள்; தொட்டுப் பேசுவார்கள். வீடே அதிரும் படியாகச் சிரிப்பார்கள். ஆண்வர்க்கம் என்ற கூச்சம் இயல்பாகவோ, செயற்கையாகவோ, நீலாவுக்கும், மாதவிக்கும் இருந்ததாகத் தெரியவில்லை.

மைத்ரேயி எந்த ஆணோடு அப்படிப் பழகியிருக்கிறாள்? தனக்கு முன் அம்மாவுக்குப் பிறந்த ஆண் குழந்தை உயிரோடிருந்திருந்தால் என்று எத்தனையோ நாட்கள் அவள் எண்ணிப் பார்த்து ஏங்கியிருக்கிறாள். அவளுடைய மாமா, எப்போதோ அவளை அழைத்து உறவு கொண்டாடியதுடன் சரி; அக்கா குடும்பத்தினருக்கும் அவருக்கும் விரோதம் இருந்ததால் ரஞ்சனி, சுமதி கல்யாணங்களுக்கு மட்டும் வந்து உடனே திரும்பிவிட்டார். ஒன்றுவிட்ட, இரண்டு விட்ட சகோதரர்கள், மாமன் மகன் என்று சகஜமாக உறவும் நட்பும் கொண்டு பழகவும் அவளுக்கு யாருமே இல்லை. வயசுக்கு வருமுன்பே, ஆடவரின் முன் கூச்சப் போர்வையின்றி வந்து பழகக்கூடாது என்ற கண்டிப்பு வலைகளை நெருக்கமாக அக்கா பின்னியிருந்ததால் தான் அவள் அவற்றை அறுத்துக் கொண்டு தனராஜின் கவர்ச்சிச் சிரிப்புக்கு அடிமையாய், அவனைத் தொட்டுத் தன்னை இழக்கும் அளவுக்குப்போக நேர்ந்ததாக இப்போது மைத்ரேயி நினைக்கிறாள்.

அக்கா, தன்னுடன் பிறந்த சகோதரியையே ஏன் மாற்றந்தாய் மகளைப்போல் நடத்தினாள்?

அந்தத் திருவள்ளூர்க் கிழவி சொன்னாற்போல், அடி நாட்களில் அவளுக்கு அத்தையே மாமியாராகிக் கொடுமை காட்டியிருக்கிறாள். பெற்ற தகப்பன் குடும்பத்தை மறந்து வஞ்சகம் செய்தது அவளுக்குச் சிறுமைதானே? அந்தச் சிறுமையே அவளுக்கு வெறுப்பை வளர்த்திருக்கக்கூடும்; மணவாழ்வில் அவளுக்கென்று குழந்தை பிறந்து பாசத்தையும் அன்பையும் பெருக்கக்கூடிய பேறு கிட்டியிருக்கவில்லை. தன் ஏமாற்றங்களை அவள் விழுங்கிக்கொள்ள நேர்ந்ததால் இரக்கமும் பரிவும் வற்றிப்போயிருக்கலாம். அவளுக்கு இத்தனை நாட்கள் சென்ற பின் மகப்பேறு வாய்த்திருக்கிறது என்று மதுரம் மாமி கூறியதை அவளால் நம்ப இயலவில்லை.

பல மருத்துவர்களிடம் அக்கா மகப்பேற்றுக் குறைக்காக போய் வந்திருக்கிறாள். மதுரம் மாமி கூறியது உண்மையாக இருந்திருந்தால், அத்திம்பேர் அவ்வளவு கடுமையாக நிச்சயம் அவளை விரட்டியிருக்க மாட்டார். எனவே அக்காவின் உடல் நிலையில் ஏதேனும் கோளாறாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

சிந்தனைக் கொடி இவ்வண்ணம் நீண்டுகொண்டு செல்லுகையில், மைத்ரேயிக்கு ஓர் உண்மை பளிச்சென்று விளங்குகிறது.

பெண்ணுக்குச் சுயமாக எழுந்து நின்று உலகை வளைத்துக் கொண்டோ, எதிர்த்துக் கொண்டோ வாழத் தெரியவில்லை. மதுரத்தைப்போல், அக்காவைப்போல், அவளுடைய அம்மாவைப்போல், ஒரு கணவனுக்கு வாழ்க்கைப்பட்டவர்கள் எல்லாருமே வெவ்வேறு அச்சில் பட்ட ஒரே களிமண்ணாகத்தான் இருக்கிறார்கள். அவளே, அவள் மட்டும் என்ன? ஒரு குறிப்பிட்ட வடிவத்துள் பத்திரமாக, வெளிநோக்கும் அழகு வாய்ந்ததாக இருக்கலாம் என்று பெரியோர் வகுக்கக் கூடிய நியதிக்கப்பால் சென்று எந்த வடிவத்தையும் சார்ந்து பெற இயலாதவளாகியிருக்கிறாள். தனித்து நின்று வடிவமாக இயங்கவும் துணிவும் உறுதியும் இல்லை.

அவளுக்கு என்ன வடிவம்? திருமணமாகி ஒருவனுடைய விருப்பு வெறுப்புக்களுக்கு வளைந்து கொடுத்துப் பெறுகின்ற குடும்ப நெருக்கத்துக்கோ, வாழ்வின் வளமைக்கோ ஏற்ற வகையில் உருவாகும் வடிவம்; ஒரு நல்ல குடும்பப்பெண் என்ற பெயரில் அடிபணிந்து தரையோடு தாழ்தல்; கணவனைக் கண்களுக்குத் தெரியாமல் சூத்ரக் கயிறுகளால் ஆட்டுபவள்; அல்லது தன் ஏமாற்றங்களுக்கும் தோல்விகளுக்கும் கிளர்ந்து கொதித்து, அதை வேறொரு முனையில் கொட்டிக்கொண்டு தன்னைத்தானே மறந்து வாழும் வடிவம்.....

மதுரம் மாமி ஏன் கட்டுக்களை அறுத்துக்கொண்டு வெளியேறி விடக்கூடாது? கணவனிடம் காதலா, மகனிடம் பாசமா?

வெளிப்பார்வைக்கு வெறுப்பூட்டக்கூடியதாக அழகற்று இருந்தாலும் அந்தப் பிணைப்புகள் உறுதியாக இருக்கின்றன. தன் தாயானாலும் பெற்றுப் பெற்றுப் பலவீனமாய் நைந்தவள். உடலுழைத்துப் பிழைக்கவும் இயலாமல் கல்வித்தரம் கொண்டு காலூன்றி நிற்கவும் இயலாமல் கட்டுண்டிருந்ததாகச் சொல்லலாம்.

மதுரம் மாமியோ உடலுழைப்பினால் தனித்துப் பிழைக்கக் கூடியவள். அப்படியும் இந்தப் பிணைப்பை அவள் அறுத்துக் கொண்டு செல்லவில்லை. வறுமையிலும் பாரம்பரியத் தொடர்பாக வந்திருக்கும் நம்பிக்கைகளும், கோட்பாடுகளும், அவளையும் கணவனையும் பிணைத்து வைத்தபோது உள்ளுணர்வோடு செய்த சடங்குகளும், அந்தப் பிணைப்பை வலிமை வாய்ந்ததாகச் செய்திருக்குமோ?

அதிகாலையில் மதுரம் எப்போது எழுந்தாள் என்பதை மைத்ரேயி அறியவில்லை. லோகாவின் குரல் கேட்டுத்தான் அவள் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருக்கிறாள்.

“அவ ஹோம்ல சேர்ந்துடுவேன்னுதான் சொல்றா. ஆனா எனக்கு மனசுவரல லோகாம்மா. கண்முன் தெரிஞ்சு நல்லகுலம். ஏதோ தெரியாம கண்ணை மூடிண்டு குழியில் விழப்போயிட்டுத்து. அவளே திரும்பி வந்திருக்கறதால தப்பை உணர்ந்து திருந்திடுவ. இப்போதைக்கு இருக்கட்டும். நான் இங்கே இருக்கறதைப்பத்தி இல்லே. எனக்கு என்னிக்கும் இந்த உறவு நிலைக்கணும் லோகாம்மா, நீங்க தப்பா நினைச்சுக்கக்கூடாது, அதுக்காகவே போறேன்...”

மைத்ரேயி படுக்கையிலிருந்து விழித்துக்கொண்டு எழுந்தமர்ந்ததை மதுரம் மாமி கவனித்திருக்க வேண்டும். பின்னால் பேச்சை மாற்றியிருக்கிறாள்.

“அது சரி. எனக்குப் புரியறது. அங்கே போனால் எல்லாம் ஒண்ணுதான். எனக்கு வீட்டிலே ஆள் சரியாக இல்லாம வெளியே போகவே அச்சமா இருக்கு” குரல் தாழ்ந்து போகிறது லோகாவுக்கு.

“அதுவும், சேதுவுக்கும் அப்பாவுக்கும் நான் பயப்படறேன். சேது எல்லாத்திலும் எதிர்த்து எதிர்த்துப் பேசறான். பாலாவுக்கோ எதை வெளியில் சொல்லலாம் சொல்லக் கூடாதுன்னே தெரியல. வரமாசம் யோகத்துக்கு வளைகாப்பு அடுக்கணும். அவள் பிரசவத்துக்கும் லண்டன்லேயே இருக்கப் போறேன்னு எழுதியிருக்கா, அப்படீன்னா நான் அங்கே போகணும்னு தோணறது. ராஜா கூட, ‘சோஷியல் வொர்க்கர்’ மகாநாடு வரது, நீதான் டெலிகேட்டாப் போக வேண்டியிருக்கும்னார். இங்கே மனிதர் யாருமில்லாம நான் எப்படிப் போறது? அவப்பாவைக் கிராமத்துக்கே போகச் சொல்லலாம்னா, அங்கே வெட்டுப்பழி குத்துப்பழி சம்பாதிச்விண்டிருக்கார். நீ வந்து இருந்தா நான் கவலையில்லாம இருப்பேன்..

“பாத்துண்டே இருங்கோ லோகாம்மா, இந்த சொர்ணத்தை ஒத்தன் கையில் புடிச்சிக் குடுத்து, பெரிய பையனுக்கும் ஒரு தொழில்னு ஊணிட்டா, சிவனேன்னு வந்திருப்பேன்...” என்று கூறுகிறாள் மதுரம்.

“அது சரி, அப்ப கீழ்களை எல்லாம் என்ன பண்ணுவே? நான் அப்பவே ஆபரேஷன் பண்ணிக் கோடின்னேன், நீ இன்னும் பண்ணிக்கலே....”

“இப்ப அதெல்லாம் ஒண்ணும் கிடையாதக்கா....”

“ஆமா, நீ சொல்லி நான் கேக்கறேன்...”

“அது பண்ணிண்டா காது செவிடாப்பூடுதாம்; பைத்தியம் பிடிக்கறதாம்....”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. சும்மாப் புரளி. உன்னைப் போல இருக்கிறவா இப்படிப் பேசிப் பேசித்தான் குட்டிச் வராப் போகிறது.”

“அப்ப நான் இப்ப போயிட்டு வரட்டுமா?..”

“சரி, பின்ன என்ன பண்றது?”

“....எனக்கு ஒரு அம்பது ரூபாய் குடுக்கணும் நீங்க...”

“அம்மாடீ...? அஞ்சு ரூபாய்கூட எங்கிட்ட இப்ப இல்லே மன்னி ...”

“அரிசி வாங்கியே கடனாயிடறது அக்கா. என்ன வயத்தை வாயைக்கட்டினாலும் முடியல இப்பல்லாம். ஒரு இடலினாலும் போடலாமான்னு பாக்கறேன்.”

“அஞ்சுபடி அரிசி எடுத்துண்டுபோ. புடவை ரவிக்கை படுத்து வச்சிருக்கேன். சேதுவோட டிரௌசர் ஷர்ட்கூட இருக்கு, பாலாட்ட சொன்னா எடுத்துக்குடுப்ப. நீ இந்தப் பொண்ணுக்கு எல்லாம் சொல்லிட்டுபோ...”

மைத்ரேயி குளியலறையிலிருந்து சமையலறைக்கு வந்து விட்டதை மதுரம் அப்போதுதான் கவனிக்கிறாள்.

“கேட்டியா? லோகாம்மாவே, உன்னை ஹோம்ல சேர வேண்டாம்னுட்டா...” என்று மென்னகையுடன் மதுரம் அவளிடம் தெரிவிக்கிறாள்.

லோகா திரும்பியவள் சமையலறை வாயிற்படியில் வந்து நிற்கிறாள். மைத்ரேயியை நோக்கி, “உனக்கு ஒரு பண்டிகை பருவம் வந்தால் சமாளிக்க முடியுமா? கணேச சதுர்த்தி வரும்; ஆவணி அவிட்டம் வரும். கொழுக்கட்டை, பாயசம், வடை என்று பண்ணவேண்டிவருமே? தெரியுமா?”

“நானாக முழுசும் பண்ணினதில்லே. சொல்லிக் குடுத்தால் செய்வேன்....”

“சரி, நீ காப்பி குடிச்சிட்டு குளி. குளிச்ச பின்னதான் சமைக்கணும். நான் உனக்குப் புது ஸ்டவ், பிரஷர்குக்கர் இரண்டையும் வைச்சுச் சமைக்கச் சொல்லித்தரேன்..” என்று கூறுகிறாள் லோகா.

நின்றுகொண்டே சமையல் செய்யத் தோதாக உயரமாக இருக்கிறது அந்த அடுப்பு. அந்த மாதிரி எண்ணெய் அடுப்பை மைத்ரேயி அதற்குமுன் பார்த்ததில்லை.

லோகா பர்னரை எடுத்து வெளியில் வைத்துவிட்டு வட்ட வடிவமான திரியைக் கெளுத்துகிறாள். அது பற்றிக் கொண்டதும் பர்னரை வைக்கிறாள். அடர்த்தியாக நீலச் சுடர் வருகிறது. லோகா அழுத்தக்கலனில் நீரைப் பிடித்து வைக்கிறாள்.

“நானும் எல்லாம் பார்த்துக்கறேன். இதெல்லாம் புதிசா லோகாம்மா?”

“ஆமாம். ராஜா போன மாசம் ஜப்பான் போயிட்டு வந்தாரில்லையா? ஸ்டவ் அங்கேந்து வாங்கிண்டு வந்தார். பிரஷர் குக்கர் முன்னமே வாங்கினதுதான். ரொம்ப செளகரியம் நம்மூர் ஸ்டவ்களைப்போல் கரியே பிடிக்கிறதில்லை.”

“அதுவும் பிரஷர் ஸ்டவ்வை வச்சிண்டு அடிச்சு அடிச்சு தோள்பட்டை கழண்டு போயிடும். இதில் பாரு பருப்பும் சாதமும் ஏழு நிமிஷத்தில் ஆயிடும்.”

“அப்படியா? என்ன அதிசயம்! வெள்ளைக்காரன் நாள்ள கூட இதெல்லாம் வந்திருக்கலே. காங்கிரஸ்காரா காலத்தில் என்னெல்லாம் வந்திருக்கு!”

மைத்ரேயி அரிசி கழுவிக் கொடுக்கிறாள்; பருப்பு சுத்தமாக்கிக் கொடுக்கிறாள். “கவனமாகப் பார்த்துக்கோ, ஸ்...னு ஓசைவந்த உடனே வெயிட்டைப் போட்டு மூடிடனும். பின்னால வெயிட்டை ஆறவச்சுத் திறந்த பிறகுதான் மூடியைத் திறக்கணும். அதைத் திறக்காமல் மூடியைத் திறந்து தான் பாலா கையில் கட்டுப்போட்டுண்டு துன்பப்படறா. நான்தான் ரெண்டு நாள் சமைச்சேன் இதுலே...”

மைத்ரேயி பார்த்துக்கொண்டே நிற்கிறாள். அவளுக்கு எல்லாம் கனவில் நடப்பதைப்போல இருக்கிறது.

பெரிய ஸ்டவ்விலும் அழுத்தக்கலனிலும் சமைக்கும் நவீன சமையற்காரி! பொட்டின்றி, ரவிக்கையின்றி, கட்டுடலின் தோளைக் காட்டிக்கொண்டு அழுக்கு நூல் சேலையைக் கொசுவம் வைத்த முறையில் உடுத்திக் கொண்டு, கரண்டியும் சிப்பலுமாக நிற்கும் ஒரு உருவத்தைத்தான் சமையற்காரி என்ற நிலையில் அவள் சித்திரித்திருக்கிறாள். அது மதுரத்துக்கு முக்காலும் பொருந்தும்.

கோகிலாவைப் பத்துப் பாத்திரம் துலக்கும் வேலைக்காரி என்று கூற இயலுமா? அப்படி அவளும் நவீனமான சமையற்காரி.

லோகா சோறும் பருப்பும் பதமாகும் நேரத்தைக் கணக்கிட்டுக் காட்டிவிட்டுக் குளிக்கச் செல்கிறாள்.

காலை நேரத்து அலுவல்கள் பரபரப்பாகப் பொழுதைத் துரத்துகிறது.

எட்டேமுக்கால் மணிக்கு லோகா வெளியே செல்லத் தயாராக வரும்போது, சேது இரண்டாந்தடவையாகக் காபி பருந்திக் கொண்டிருக்கிறான்.

“இப்ப காபி குடிச்சா எப்படிச் சாப்பிடுவது ஒன்பது மணிக்கு?” என்று கடிந்து கொள்கிறாள். “நீயே வீணாக உடம்பை கெடுத்துக்கறே. சாப்பிடாமல் காலேஜுக்குப் போறது; கான்டீனில் கண்டதைத் தின்பது, வயிறு வலிக்காமல் என்ன செய்யும்?”

“நான் காண்டீனுக்குப் போறேனா? நீ பாத்தியா? நீ சுத்த தொண தொணப்பாயிட்டேம்மா! என் ஹெல்த்தைப் பாத்துக்க எனக்குத் தெரியும். நீ சொல்ல வேண்டாம்!” என்று கத்துகிறான்.

லோகா முறைத்துப் பாத்துவிட்டுச் சமையலறைக்குள் வருகிறாள். மெல்லிய பூக்கள் அச்சிட்ட கதர்பட்டுச் சேலையில் அவள் வயசு குறைந்து போயிருக்கிறது. கூந்தலில் ஓர் நரை இழை கூடத் தெரியவில்லை. அரைக்காது மூடத் தளர்த்தியாக, வடைக் கொண்டை போட்டுக் கொண்டு, சாய்வாக ஒரு மலர்ந்தும் மலராததுமான பட்டு ரோஜாவை செருகியிருக்கிறாள். முகத்தில் மெல்லிய பவுடர் பூச்சு. கழுத்தில் மெல்லிய சங்கிலி. செவிகளில் நான்கு வயிரப் பொடிக் கற்களும் நடுவில் சிவப்பும் வைத்த தோடு. கையில் மெருகு மின்னும் கைப்பை.

“ராஜா வராராம். சாப்பாட்டுக்கு வந்திடுவார். அவருக்குச் சப்பாத்தி பண்ணனும். மாவு ரொம்ப பழசாயிருந்தது. உள்ளே கோதுமை இருக்கு. குப்புசாமியிடம் எடுத்துக் கொடுத்து அரச்சிண்டு வரச்சொல்லி ரொட்டியோ, பூரியோ பண்ணிவை. பூரியாகவே இருக்கட்டும். இங்கிலீஷ் காயாப் பார்த்து வாங்கிண்டு வரச்சொல்றேன். மசாலா போட்டு ஒரு கூட்டு பண்ணணும். மன்னி, நீ கொஞ்சம் கூட இருந்து சொல்லிக் கொடுத்துட்டுப் போ.”

“ஆகா. நான் பன்னண்டு ஒரு மணிக்குத்தான் கிளம்பலான்னு இருக்கேன்...” என்று கூறுகிறாள் மதுரம்.

“ஒண்ணு ஒண்ணரை மணியாகும் நாங்கள் வர. குக்கரைத் திறக்காமல் சாதத்தை சூடாக வச்சிரு..” என்று சொல்லி விட்டுக் குளிரலமாரியைத் திறந்து மோர் எடுத்துக் குடிக்கிறாள் லோகா. அவள் வெளியே செல்வதை மைத்ரேயி படியில் நின்றபடியே பார்க்கிறாள்.

“ந்தா மைத்தி, வேடிக்கை பார்க்காதே. கோதுமையை கல்லிருக்கான்னு பாரு, மடமடன்னு...”

“ராஜா யாரு மாமி?”

“குமாரபுரம் ஜமீன்தார். இவர் பிள்ளை, பெரிய ஜமீன்தாரும் லோகாவின் அப்பாவும் ரொம்ப சிநேகம். அவர் காலம் ஆயிட்டது. இவர் வந்தா இங்கேதான் தங்குவார்; எம் பி. யோ என்னமோ சொல்றாளே, அது. இங்கேயே மந்திரியா வர்ப்போறார்னுகூட முன்ன சொல்லிண்டா.”

“பெரிய இடத்திலே யார் யாரோ வருவா, போவா, என்னென்னமோ நடக்கும். அதெல்லாம் கண்டும் காணாமலும் நம் காரியத்தைக் குறியாப் பாத்துண்டு போகணும். இத நீ முக்கியமாகத் தெரிஞ்சிக்கணும்.”

“சரி மாமி...”

பாலா சாப்பிட்டு விட்டுக் கல்லூரிக்குச் செல்கிறாள். அநுசுயா முந்தைய நாளைய வேலைகளை முடிக்க வருகிறாள்.

மணி பத்தரை.

“தட்டில் சாப்பாடெல்லாம் எடுத்துவை. உப்பு, ஊறுகாய், மோரெல்லாம் நான் கொண்டுவரேன். அவருக்குச் சாதம் போட்டுடலாம்....” என்று பணிக்கிறாள் மதுரம்.

மைத்ரேயி தட்டில் சாப்பாட்டை வைக்கவில்லை. சிறு அடுக்குகளில் சோற்றையும் காய் குழம்பையும் எடுத்துக் கொண்டிருக்கிறாள். வளைவான வராந்தாவில் நுழைந்ததும் மொஸைக்தளம் வியப்பூட்டுகிறது. வராந்தாவில் சாய்ந்து உட்கார வசதியாகப் பிரம்பு நாற்காலிகள் இருக்கின்றன. உள்ளே புத்தக அலமாரி தெரிகிறது. சுவரில் காந்தியடிகள், நேரு, விஜயலட்சுமி, வல்லபாய்படேல் ஆகியோருடன் விவேகானந்தரும் வளைவாக அமைந்த சுவரின் படங்களில் விளங்குகின்றனர். உள் வட்டத்தை ஓர் திரை இரு பகுதிகளாக்குகிறது. ஒரு பாதியில் புத்தக அலமாரி, ஓர் மேசை, இரண்டு நாற்காலிகள் இருக்கின்றன. இன்னொரு பாதி படுக்கையறை என்று நினைக்கிறாள். பின்புறத்து வராந்தா இரு கூறுகளாகப் பிரிந்து, ஒருபுறம் குளியலறையாயும், மறுபுறம் கழிவிடமாகவும் உதவுகின்றன.

நாற்காலியிலமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பவர், அவர்களைக் கண்டதும் திரும்பி உட்காருகிறார்.

ஐம்பது வயசுக்குத்தான் மதிக்கலாம். வழுக்கை மொட்டை உடல் உழைப்பின்றிப் பருத்துக் கிடக்கிறது. பருமனிலும் ஓர் ஒழுங்கு இல்லை. சதை இழிந்து வழிகிறது என்றால் பொருந்தும். வெற்றிலை புகையிலை மெல்லும் வாய். வெளுத்த வேட்டியும் ஒரு மல்ஜுப்பாவும் அணிந்திருக்கிறார். இடக் கையில் பச்சைக்கல் மோதிரம் மின்னுகிறது. கண்கள் கூரிய கழுகின் பார்வையை நினைப்பூட்டுகின்றன.

“அடடே.... இவதான் புதிசா? சமையக்காரியாட்டமே இல்லையே? உம்பேரென்ன?”

கண்ணபிரானின் நினைவு வருகிறது; அம்மணியம்மாளுக்கும் லோகாவுக்கும்.... ஒற்றுமை...? சீ....

‘மைத்ரேயி’ என்று மெல்லிய குரலில் கூறிக்கொண்டே, மேசையை நகர்த்திப் போட்டுத் தட்டை வைக்கிறாள்.

“என்னது? மைதிலியா? ஐயங்காரா?”

“இல்லே ....”

“கல்யாணம்...”

மதுரம் பதில் கூறுகிறாள். “ஆகலே மாமா. கல்யாணமானா எதுக்கு இப்படி வரா? ஒண்ணுமில்லாதவனெல்லாம் நாலைக்கொடு அஞ்சைக் கொடுன்னுனா எங்கே போறது, சொல்லுங்கோ?”

அவர் கை கழுவிக்கொண்டு உண்ண அமருகிறார். மைத்ரேயியே பரிமாறுகிறாள்.

“எல்லாம் இவள்தான் சமைத்தாள். எப்படி இருக்கு?...”

“நீ போகப்போறியா என்ன?”

“பின்ன என்னால இருக்க முடியுமா?”

“கேட்டுக்கோ வீடுகிடந்து நாறுது- இவ சோஷியல் வொர்க் பண்ணப் போறா. இவ பசங்களே இவளை மதிக்கல. இந்த பாலா, ராத்திரி பத்துமணிக்கு சினிமாக்குப் போயிட்டு வருது, கண்டிக்கிறதில்ல. நாளைக்கு அவ எவனையானும் காதலிச்சிண்டுதான் போவ. இல்லையா, சொல்லு?”

அவர் மதுரத்தை மட்டும் பார்க்கவில்லை. மைத்ரேயியையும் பார்க்கிறார்.

“சமையல் எப்படி இருக்குன்னு நீங்க சொல்லலியே?” என்று நினைவூட்டுகிறாள் மதுரம்.

“சமையல் பகு நன்னாத்தான் இருக்கு. ஆனா, இவளை எல்லாம் நாலுநாள் இங்கே தங்கவிடமாட்டா. தாம்தூம்னு பீடியைக் குடிச்சிப் போட்டுண்டு அட்டகாசம் பண்ணிட்டு வர தடிப்பசங்கதான் இங்கே தங்குவாங்க. நம்ம தலைவிதி, ருசிருசியா சாம்பார், கூட்டு, ரசம்ங்கற சாப்பாடுக்கு லாட்ரி. சோம்பு பூண்டு மசாலா எல்லா இழவையும் போட்டுத் தொலைப்பான். அதுவும் அந்த ராஜா வந்துட்டான்னா வீடு திமிலோகப்படும்... நான் கிடக்கிறேன் இங்கே, என்னை யாரு லட்சியம் பண்றா?”

மைத்ரேயியினால் ஒன்றையும் கேட்டுக்கொள்ள இயலவில்லை.

“இவளை வச்சுப்பா பாருங்கோ. அப்படியெல்லாம் போக மாட்டாள்” என்று மதுரம் ஆறுதலளிக்கிறாள்.

“அதென்னாமோ, அன்ன மயம் பிராணமயம். ஒருத்தருடைய சாப்பாடு புலனைத் திருப்திப்படுத்தறதுக்காக இல்லே. இந்த உடம்பை, உடம்பெடுத்த உன்னதமான நோக்கத்துக்குக் காப்பாற்ற வேண்டித்தான் சாப்பாடு. என்ன செய்யட்டும்? ஊருக்குப் பெரியவன்னு இவளுக்காக என்னை மத்தவா மதிக்கக் கூடாதுன்னே அந்த நாளிலேயே ஒதுங்கிட்டேன். அப்புறம்கூட என்ன? அப்பாவும் போயிட்டார், ஊரிலே நாலுபேர் நாலு தினுசாப் பேசறாளேன்னு காலில் விழுந்து அழுதாள். நமக்கும் இளகிப் போச்சு. ஊரைவிட்டு வாசலைவிட்டு இந்த மூலையில் வந்து முடங்கியிருக்கேன்.”

மைத்ரேயி இலையைப் பார்த்துப்பரிமாறுவதைத் தவிர வாயே திறக்காமல் நிற்கிறாள்.

“நான் கொஞ்சம் சாஸ்திரம் தர்மம் ஆசாரமெல்லாம் வச்சிண்டிருக்கிறவன். இங்கே வந்து அநாசாரச் சூழலைப் பார்த்தால் பித்தர்ப்பணமே பண்ண முடியாம இருக்கு. இந்தத் தோட்டத்திலே மாட்டுக்கறி சமைக்கிறான், நாய்க்குப் போட. தெவசம் எப்படிப் பண்றது?”

“ஏம்மா? நீ ஸ்நானம் பண்ணாம சமைக்கப் போயிடாதே!”

“இல்லை” என்று அவள் தலையை ஆட்டுகிறாள்.

“கிரஸின் ஸ்டவ்வில் சமைச்சியோ?”

“ஆமாம்...”

“கர்மம். வாசனை சொல்றதே? எல்லாத்தையும் சாணி ஜலம் போட்டுத் துடச்சிட்டு மறுநாள் உபயோகிக்கணும். முள்ளங்கி வெங்காயம் ரெண்டும் ஏகாதசி அமாவாசையில் தள்ளுபடி. நாலுநா முன்ன இருந்துட்டுப் போனானே ஒரு பீடித்தடியன், அவன் அமாவாசையன்னிக்கு முள்ளங்கி சாம்பார் பண்ணிட்டு, முள்ளங்கியைப் பொறுக்கிவச்சிட்டுக் கொண்டு வந்தான். நான் என்ன செய்யட்டும்? ராத்திரிப் பலகாரத்துக்குப் பூரி போடறேன்னான். பாலில் நனைச்சுக் கொண்டாடான்னிருக்கேன்; மசாலா வச்சு சோமாசு மாதிரி பொறிச்சிண்டு வந்துட்டான். நான் என்ன செய்யறது? கர்மமேன்னு தின்னு தொலைச்சேன். சாப்பிடாட்டி காலையிலே மயக்கம் வந்துடும். இதெல்லாம் வீட்டுப் பெண் பிள்ளை கவனிக்கிறாளா?”

“அப்படித்தான் மாமா இருக்கும். எல்லாத்துக்குமா காசில போயி ஒரு முழுக்குப் போட்டுட்டு வந்துடுங்கோ” என்று ஆறுதல் கூறுகிறாள் மதுரம்.

“வைத்தி நேத்து வந்தானா? வரேன்னு அன்னிக்குச் சொல்லிட்டுப் போனான்.”

“அப்படியா? தெரியாதே?”

“சொல்லு. நான் பார்க்கணும்னு சொன்னேன்னு.”

“அது சரி, அவர்ட்ட உங்களுக்கு என்ன காரியமோ?”

“ஒண்ணுமில்ல. நீ லோகாட்டச் சொல்லிடாதே, அவ டாக்டர் மருந்து வயிறெல்லாம் புண்ணாயிடுத்து. வைத்தி அன்னிக்கு யதேச்சையாக வந்தப்ப அதுக்குன்னு ஒரு மருந்து குடுத்தான். ரொம்பக் குணம். அதைத் திரும்பக் கேக்கத்தான்...”

மதுரம் தலையை ஆட்டுகிறாள்.

சாப்பிட்டுக் கைகழுவும்வரை மைத்ரேயி நிற்கிறாள். எல்லாவற்றையும் எடுத்துத் துடைத்துவிட்டு வருகிறாள்.

மதுரம் திடுமென்று மௌனமாகிவிட்டாற் போலிருக்கிறது.

“நீங்க போயிட்டா எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாது போலிருக்கிறது மாமி!”

“பயப்படாதே. தைரியமாயிரு. இது இப்படித்தான் தொணதொணக்கும். நீ ஒண்ணும் இது சொல்றதுன்னு தலை குளிக்க வேண்டாம் நிதம். ஈரத்துணிய நனைச்சுத் தலையில் வேடு கட்டிண்டு வெறும் புடவை மாத்திண்டு சமைப்பேன். எல்லாம் முடிஞ்சப்புறம் கடைசியிலே வெந்நீர் நிறைய வச்சிண்டு குளிச்சிட்டு வருவேன். பின்ன மார்கழி மாசத்திலே நாலு மணிக்குப் பச்சைத் தண்ணியில் குளிச்சிட்டுச் சமைக்க முடியுமா? போன வருஷம் நான் ராதா கல்யாணம் கழிந்து வந்தப்ப தைமாசத்துக் குளிர்வேற. இப்படி எலக்ட்ரி பாயிலர் வேற இல்ல. என்ன பண்ணுவதாம்?”

அன்றாடப் பழக்கவழக்கத்தில் கூடப் பாசாங்கா? கடவுளே!

“ராதா யாரு?”

“மூத்த பொண்னு. போன வருஷம் கல்யாணமாயி லண்டன்ல குடித்தனம் பண்றா. பெரிய வீட்டிலே எத்தனையோ நடக்கும். நான் முன்ன சொன்னாப்பல இருந்துக்கோ. லோகாவுக்கு நல்ல மனசு. உனக்குச் சம்பந்தமில்லாதது எதிலும் தலையிடாதே. நான் வரட்டுமா?”

மதுரம் உள்ளே வந்ததும் தயாராக வைத்திருந்த அரிசிப் பையையும் துணி மூட்டையையும் சுமந்து கொண்டு செல்கிறாள்.

மைத்ரேயி அவள் செல்வதையே பார்த்துக்கொண்டு நிற்கிறாள். நெஞ்சு கனக்கிறது.

7

மேசை மீது அழகாகப் பூக்கள் அச்சிட்ட வெள்ளை விரிப்பு கஞ்சி முரமுரப்புடன் தொங்குகிறது. பெரிய பெரிய சம்பங்கிப் பூக்களைப் போன்ற வெண்மையான மலர்களை அழகிய தேன் வண்ணப் பட்டைக் கண்ணாடிக் குடுவையில் அநுசுயா செருகி வைத்திருக்கிறாள். அவள்தான் மைத்ரேயிக்கு உதவியாகச் சமையலறையில் பூரி இட்டுத்தந்து கறிக்குப் பக்குவம் பார்த்து, உணவைத் தயார் செய்திருக்கிறாள். பூக்கள் அச்சிட்ட நாப்கின் காகிதங்களை பெரிய மலர்களைப் போல் சிங்காரமாக மடித்து அலத்திச் செருகியிருக்கிறாள். பளபளக்கும் பீங்கான் தட்டுக்களையும் கரண்டிகளையும், அவள் அலங்காரமாக எடுத்து வைக்கிறாள். அநுசுயாவுக்கு அந்த வீட்டில் வெகுநாளையப் பழக்கம் இருக்கிறதென்று மைத்ரேயி ஊகித்துக் கொள்கிறாள்.

ராஜாவும் லோகாவும் உணவு கொள்ள வந்தமருமுன்பே பரபரப்பு மைத்ரேயியை ஆட்கொள்ளுகிறது. சேதுவும் அந்நேரத்துக்குக் கல்லூரியிலிருந்து வந்திருக்கிறான். அவனும் உணவு கொள்ள வருகிறான். குதிரை போல் ஸீஸரும் வருகிறது. ராஜாவை அது அருகில் வந்து மோந்து பார்க்கிறது.

“டோன் பீ நாட்டி, கம்ஹியர், ஸீஸர்....கோ! கோ டூ யுவர் ப்ளேஸ்!” என்று அதட்டுகிறான் சேது.

அது. வெளியே ஓடுகிறது.

“எட்டு மாசத்துக்குள் நல்லா வளர்ந்திருக்கே?....” என்று கூறுகிறான் ராஜா.

“ஹூம், கரம் மசாலா மணம் வரதே? அநுசுயாதான் சமையல் பண்ணாளா?”

அநுசுயா தலைகுனியப் புன்னகை செய்துகொண்டு ‘ஜக்’கில் குடிநீர் கொணர்ந்து வைக்கிறாள்.

லோகா மகனை சற்றே கடுமை தெரிய நோக்குகிறாள்.

“என்னை ஏம்மா முறைச்சுப் பாக்கறே? நானொண்ணும் அப்பாக்குச் சொல்லிடமாட்டேன். இந்த வாசனை வெளி வாசலெல்லாம் ஜம்முனு பிரயாணம் பண்ணப் போறதேன்னு நினைச்சேன். தந்தூரி கோழி பண்ணியிருக்காளோன்னு ஸார் நினைச்சுக்கப் போறார்......”

நல்ல உயரமும் தாட்டியும் சிவந்த மேனியுமாக விளங்கும் ராஜா, அரும்புமீசையும் கொழுக்கட்டை மூக்கும் மலரச் சிரிக்கிறார்.

தங்கப்பற்கள் இரண்டு தெரிகின்றன. தங்க பிரேம் மூக்குக் கண்ணாடி. மினுமினுப்பாகத் தெரியும் மெல்லிய பட்டு ஜிப்பா தரித்திருக்கிறார். அது கதர்ப்பட்டாக இருக்கலாம். முடி நல்ல கறுப்பாக இருக்கிறது.

“சேதுவும் நான் மூணு மாசத்துக்கு முன்ன பார்த்ததுக் கிப்ப வளர்ந்திருக்கிறான். பி.எ. எகனாமிக்ஸ் பண்ணிட்டு என்ன பண்ணப் போறே?”

“முதலில் அதை முடிக்கட்டும் கழுதை, படிக்கிறதே இல்லை ...” என்று குற்றம் சாட்டுகிறாள் லோகா.

“அம்மா, நான் படிக்கும் நேரத்தில் தூங்கிட்டிருக்கிறதால நான் படிக்கிறதே இல்லேன்னு முடிவு கட்டிடறா ஸார். அதற்கு நான் என்ன பண்ணட்டும்?”

“சயன்ஸ்ணு சப்ஜெக்ட் எடுத்திருக்கணும் நீ. இனிமே லெல்லாம் சயன்ஸும் டெக்னாலஜியும்தான். அமெரிக்காவுக்கோ ஜர்மனிக்கோ போகலாம்...”

“கிரிதர் கனடாவுக்குப் போய் மூணு வருஷமாகிறதில்லே? எப்ப வரப்போறான் ?...” என்று கேட்கிறாள் லோகா.

“அவன் அங்கேயே ரொம்ப கெட்டிக்காரன்னு பேர் வாங்கிட்டான். இனிமே அந்தமாதிரி விஞ்ஞானப் படிப்புதான் நமக்கு வேணும்.”

“இவனை ஆனமட்டும் இன்ஜினீயரிங் காலேஜில் இடம் வாங்கித் தரேண்டான்னு முட்டிக்கிட்டேன். கேக்கலே...” என்ற லோகா, தட்டுக் காலியாக இருப்பது கண்டு... “மைத்ரேயி!” என்று குரல் கொடுக்கிறாள்.

மைத்ரேயி முகத்தைக் கழுவிப் பவுடர் போட்டுக் கொண்டு சேலையைப் பாங்காக உடுத்தியிருக்கிறாள்.

பட்டாணியும் கோசும் கலந்த கறியை எடுத்துக்கொண்டு அவள் வரும்போது, ஏதோ பேசிக் கொண்டிருந்த ராஜா, திடுக்குற்றாற்போல் பார்க்கிறார்.

“இது யாரு லோகா?” மைத்ரேயிக்குக் கை நடுங்குகிறது. ராஜாவின் தட்டில் பெரிய கரண்டியால் கறியை எடுத்து வைக்கிறாள்; மேசை விரிப்பில் பட்டாணி சிந்தி விழுகிறது.

“புது குக் ஸார்!” என்று தெரிவிக்கிறான் சேது.

“குக்கா?” என்று கேட்டவர் மீண்டும் வாயடைத்தாற் போல் அவளைப் பார்க்கிறார்.

“இந்த வீட்டில் இதோடு இந்த வருஷத்துக்கு எழுபத்தெட்டு குக் வந்தாச்சு ஸார். இவா டெம்ப்ரரி அபாயின்ட்மென்ட்கூட இல்ல. ஹோமுக்காக மதுரம் மாமி கூட்டி வந்திருக்கா...” என்று விவரம் அறிவிக்கிறான் சேது.

ராஜாவுக்கு இது அதற்கும் மேலான அதிர்ச்சியூட்டுவது போலிருக்கிறது. “அப்படியா? ஹோம்ல...சேரவா?”

“அம்மாக்கு லக் இருக்கு. ஒரு நாள்கூட அம்மாவுக்குக் கரண்டி பிடிக்கச் சந்தர்ப்பம் வரதில்ல. என் ஃபிரன்ட்ஸ் வீட்டுக்குப் போனா அங்கெல்லாம் அம்மாக்களே எல்லாம் கொடுத்து உபசாரம் செய்யறதைப் பார்க்கிறேன். எனக்கு அம்மா அது மாதிரி ஒரு நாள் கரண்டியும் கையுமா சமையல் ரூமுலேந்து வரணும்னு ஆசை!”

“உனக்கு வரவ கரண்டி எடுத்துப் பரிமாறுபவளான்னு பார்த்துக்கோ! வாயரட்டைக் கழுதை! இலையப் பார்த்துப் போதுமா, வேணுமான்னு சொல்லு!”

“நான் அப்பவே போதும்னு கைகாட்டியாச்சு” என்று சேது மைத்ரேயியைப் பார்க்கிறான். உருளைக்கிழங்கை நாவில் வைத்துக்கொண்டு, “இவ்வளவு மசாலா அநுசுயா தான் போட்டிருப்பா. கொஞ்சம் எங்களுக்குத் தனியா வச்சி ருக்கணும்னு அவளுக்குத் தெரியுமே? வைக்கல?” என்று கேட்கிறான்.

ராஜா இன்னும் அவளைத்தான் கவனிக்கிறார். நேரடியாகவே அவளிடம், “உன்பேரென்னம்மா?” என்று விசாரிக்கிறார்.

“மைத்ரேயி” என்று சட்டென்று லோகாவே கூறுகிறாள்.

“நான் நினைச்சேன் லோகா, ராதா வீட்டுச் சொந்தக்காரப் பெண் யாரோ வந்திருக்காப் போல இருக்குன்னு. ஹோம்ல சேர வந்திருப்பதாக இன்னமும் நம்ப முடியலே...”

மதுரம்தான் சொல்லிக் கூட்டிவந்திருக்கா-தாய் தகப்பன் இல்லே. அக்கா யாரோ கிழவனுக்கு மூணாந்தாரமாய்க் கட்டிக் கொடுக்க நினைச்சாப் போல. கிணற்றில் விழ வந்திருக்கிறாள்....”

அவர்கள் தன்னைப் பற்றித்தான் பேசிக் கொள்கிறார்கள் என்று அறிந்து கொள்கிறாள் மைத்ரேயி. ஆனால் விவரத்தை முழுதும் புரிந்து கொள்ள முடியாமல் இடை இடையே உள்ளே வரவேண்டியிருக்கிறது.

“இதுபோல் கீழ்தளத்தில் நடக்கலாம். உயர்வகுப்பில், இவ்வளவு மறுமலர்ச்சியும் முற்போக்கும் வந்த பின்னரும் நடக்கிறதென்பதை நம்ப முடியவில்லை...” என்று கூறுகிறான் ராஜா.

சாம்பார் சாதத்தைப் பிசைந்துகொண்டு லோகா, “எல்லா வகுப்பிலும் எல்லாம் இருக்கிறது. வறுமைதான் காரணம்” என்று மொழிகிறாள்.

“படிச்சிருக்கியாம்மா?”

அவர் கடைசியில் கூறியதற்கு லோகா மறுமொழி கொடுத்ததிலிருந்து, தன்னுடைய தவறுக்கு வறுமையைக் காரணமாக்குகிறார்கள் என்று மைத்ரேயி புரிந்து கொள்கிறாள். ஆனால் உண்மை அதில்லையே? பாலும் தயிருமாக சாப்பிடக் கூடிய வீடு அல்லவா? அவள் வீடு. ஆனால் அவர்கள் அவளை எதுவும் கேட்காதபோது அவளாகத் தலையிட்டுச் சொல்வது அவர்கள் கோபத்தைக் கிளப்பிவிடக் கூடுமே?

“எஸ்.எஸ்.எல்.சி. பாதி வரை படிச்சேன். அதை முடிச்சிடணும்னுதான் ஒரே ஆசையாக இருக்கு...” என்று அவளே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தன் உள்ளத்தை வெளியிடுகிறாள். ராஜா லோகாவைப் பார்க்கிறார்.

“எனக்கு ஒரு யோசனை, சீரியஸாகக் கொஞ்ச நாளாக நினைக்கிறேன்..”

“சொல்லுங்க ப்ளீஸ்...” என்று சேது சொல்கிறான்.

லோகாவோ, மௌனமாக அவரைப் பார்க்கிறாள்.

“வரவர நம்ம பார்ட்டிக்கு மாஸ் காண்டாக்டே குறைஞ்சு போயிட்டிருக்கு. முழுநேர பிரசாரகர்கள் நமக்கு வேணும். இது போல இளைஞர்களைச் சேர்த்துப் பயிற்சி கொடுத்து, கட்சிப் பிரசாரத்துக்கே கிராமம் கிராமமா அனுப்பனும். அந்த மாதிரி ஒரு ஏற்பாட்டுக்கு இப்படிப் பெண்கள் நமக்குத் தேவை...”

லோகா விடுவிடென்று பேசுகிறாள். “ஏன்? கிராம சேவிகா அது இதெல்லாம் என்ன பின்ன? என்னைக் கேட்டா இது மாதிரி பிரசாரத்துக்கு இளைஞர்களை நம்பிப் பிரயோசனமில்லை. ஒரு கிராம சேவிகையின் பிரச்னையை நான் நேரில் பார்த்தேன். ஒரு விவரம் தெரியாத பெண் வந்து நமக்கு யோசனை சொல்றதான்னு கிராம மக்கள் நினைக்கிறாங்க. அவளைக் கேலியும் கிண்டலும் செய்து அவளுக்குப் போதும் போதும்னு பண்ணிடறாங்க. ஒரு பொண்ணு எங்கிட்டச் சொல்லி அழுதா. சிவனேன்னு டீச்சர் டிரெயினிங்னாலும் போயிருப்பேன், இப்படி வந்து மாட்டின்டேன்னா ...”

“நோ நோ-நான் சொல்றது அந்த மாதிரியே இல்லே லோகா. அது அரசுச் சார்புடையது, இது முழுக்க முழுக்க பார்ட்டி. இவர்கள் பொதுமேடையில் கிராம மக்களைக் கவரும் விதமாகப் பேசுவார்கள்; நாடகங்கள் நடித்துக் காட்டுவார்கள்; பாட்டுக்கள் பாடுவார்கள்; கதைகள் சொல்லுவார்கள். இதற்கு முதலில் ஒரு நல்ல ஆளுமை, பர்சனாலிடி, கம்பீரம் வேணும், தோற்றத்தைப் பார்த்தே. வந்து மேடையில் நின்றாலே கவர்ச்சிகரமாக இருக்கணும், பிறகு பேச்சில அந்தக் கவர்ச்சியைக் கொண்டுவரப் பயிற்சி கொடுக்கணும்”

லோகா ஒன்றும் பேசவில்லை.

“ஸாரோட திட்டம் புரிஞ்சு போச்சு. இப்ப வந்திருக்கும் குக்குக்கு இந்தத் தகுதி எல்லாம் இருக்குன்னு சொல்றார். அம்மா! இந்த நிம்மதிக்கும் ஆபத்து!” என்று கிண்டுகிறான் சேது.

“நீ எதானும் உளறாதே சேது! சாப்பிட்டாச்சுன்னா உன் வேலையைப் பார்த்துட்டு எழுந்துபோ!” என்று எரிச்சலுடன் பேசுகிறாள் லோகா. அதே வேகத்துடன் மடமடவென்று தண்ணீரைக் குடித்துவிட்டு, வாஷ்பேசினில் கையைக் கழுவிக் கொண்டு துடைத்துக் கொள்கிறாள். அநுசுயா அங்கேயே இன்னொரு சிறு மேசையின் மேல் வெற்றிலை பாக்குத் தட்டைக் கொண்டு வைத்திருக்கிறாள்.

“லோகா, என்ன அதுக்குள்ள எழுந்து போயிட்டே? மாம்பழம் சாப்பிடல?”

அப்போதுதான் மைத்ரேயி, அநுசுயா அழகாகக் கூறுகள் போட்டுவைத்த மாம்பழத் தட்டைத் தூக்கி வருகிறாள். மாம்பழக்கூடை ராஜா வரும்போது காரில் வந்தது.

“பாக்குப் போட்டுண்டேன். வேண்டாம்-”

“பாக்குத்தானே? துப்பிட்டுச் சாப்பிட்டுப்பாரு. நான் ஸ்பெஷலாச் சொல்லி பங்கனபள்ளிலேந்து தருவிச்சேன். இங்கே உங்களுக்குத்தான் கொண்டு வந்தேன். ஒண்ணு சாப்பிட்டு மாதிரி பாரு-”

“வேண்டாம் ராஜா... நான் அப்புறம் சாப்பிடுறேனே? பாக்குப்போட்டுண்டா அப்புறம் எதையும் நாக்கு ஏத்துக்கிறதல்ல” என்று மறுக்கிறாள் லோகா.

சேது ஒவ்வொன்றாகத் துண்டங்களை எடுத்து வாயில் போட்டுக் கொள்கிறான். சாவதானமாக, “ஸார் மேலே உள்ள கோபத்தை என் மேல காட்டிப் பாத்தா, இப்ப மாம்பழத்தின் மேல் காட்டறா...” என்று கிண்டுகிறான்.

“சேது! யூ ஹேவ்பிகம் இன்டாலரபிள் (you have become Intolarable)” என்று கத்துகிறாள் லோகா.

அந்தக் குரலைக் கேட்டு மைத்ரேயி அதிர்ந்தாற்போல் பார்க்கிறாள். அநுசுயா அவரைப் பார்த்துத் தலைகுனிந்து நிற்கிறாள்.

சேது சிரித்துக்கொண்டே கையலம்பிக் கொண்டு போகிறான். ராஜா இப்போதுதான் தயிருக்கு வந்திருக்கிறார்.

மைத்ரேயி மௌனமாக ஊறுகாய் போடுகிறாள். ராஜா உண்டு முடிந்து அறைக்குச் செல்கிறார்.

மேசையைச் சுத்தம் செய்யும் அநுசுயா மாம்பழத் தட்டைக் கொண்டுவந்து சமையலறையில் வைக்கிறாள்.

முதல் நாள் மதுரமும் அவளும் சாப்பிட உட்கார்ந்தாற் போல் இன்று அநுசுயாவும் அவளும் சமையலறைத் தரையிலேயே இருவரும் ஆளுக்கொரு இலையில் அமருகின்றனர்.

மாம்பழத் துண்டங்களை அநு இலையில் வைக்கிறாள்.

“அது இருக்கட்டுமே? பாலா வந்தால் சாப்பிட மாட்டா ?”

“ஏன்? பாலாதான் சாப்பிடணுமா? நாமும் சாப்பிடலாம். பாலா வந்தால் முழுப்பழம் இருக்கு... நானும் இப்ப ஃபிரிட்ஜைத் திறந்து இன்னொறு பழம் எடுத்திட்டு வந்து முழுசாச் சாப்பிடப் போறேன்...”

“எனக்கு எப்படியோ இருக்கு அநு. இவர்தான் எம்.பி.யா?”

“ஆமாம். இவருதான் ஹோம் கமிட்டில பிரஸிடன்ட். அம்மா வைஸ் பிரஸிடன்ட்.”

“எனக்கு ஹோமில் சேர்ந்துடணும்னு இருக்கு. இந்த வீட்டு விவகாரம் எனக்கு எப்படியோ இருக்கு. பர்ண சாலையிலே அவரு. அவர் ஏன் இங்கே வந்து சகஜமா இருக்கிறதில்ல?”

அநுசுயா முழு மாம்பழச்சாறு ஒழுக நடுவில் நின்று சிரிக்கிறாள்.

“அது அப்படித்தான். அதைக் கண்டால் எனக்கே பிடிக்காது. அம்மா ரொம்பப் பெருந்தன்மை. அது என்னை உள்ளே நுழையவிடாது, முதமுதல்ல நான் ஒரு நாள் அதுக்குக் காப்பி கொண்டுவச்சேன். அப்ப ஊரிலேந்து வந்த புதிசு. ஏதோ பொம்பளை விவகாரத்தில் மாட்டிட்டுத்தானே அடி வாங்கிட்டாரு? அதனால தள்ளி மேசை மேல வச்சிட்டு எத்திட்டேன்.

“யே யாருடி நீ புதுசா இருக்கியே? அங்கியே வச்சிட்டு பொனா என்ன அர்த்தம்!”ன்னாரு.

நான் மேசையை நகர்த்திப் போட்டேன். “துண்டு கொண்டா”ன்னாரு, கொண்டாந்தேன்.

“அப்படி வச்சிட்டு நில்லு. நான் சாப்பிட்டாப்புறம் கை கழுவித் துடைச்சப்பறம் சுத்தம் பண்ணி எடுத்திட்டுப்போ!”ன்னாரு.

“ந்தாய்யா? அந்த வேலையெல்லாம் ஏங்கிட்ட வச்சுக்காதே உக்கும்”ன்னு முறைச்சேன்.

அந்த ஆளு அப்ப தரக்குறைவாகப் பேசத் தொடங்கிட்டாரு. நான் அதுக்கப்புறம் போறதில்ல. கோகிலாங்கிட்ட போயி, பறச்சாதியெல்லாம் உள்ளே வந்து தொடச் சொல்றா. நீ அம்மாட்டச் சொல்லிடு. நான் இனிமே அவ தொட்டா சாப்பிடமாட்டேன்னு..... கோகிலா அம்மாகிட்டச் சொல்லாம ஏங்கிட்டச் சொன்னா.

நான் அப்புறம் அந்தப் பக்கம் போறதில்லை. பாலா போய்க் காப்பி குடுக்கும், சோறு கொண்டுவைக்கும். வைக்கலேன்னா இங்கே வந்து கன்னா பின்னான்னு அம்மாளைத் திட்டுவொரு. அம்மா அதுக்கு அஞ்சி நம்மையே கொண்டு வைக்க செல்லி விரட்டுவாங்க.”

“தமாஷ்தான்-”

“அந்தாளு மகாமட்டமான ஆளு, அந்தக் காலத்தில் சொத்து வெளியே போகக்கூடாதுன்னு கட்டி வச்சிட்டாங்க.”

ஒரே மகளாக, எல்லா வசதிகளும் இருந்தும் இப்படிக் கூடச் செய்வார்களா என்று மைத்ரேயி எண்ணிப் பார்க்கிறாள்.

பூசை, புனஸ்காரம், ஆசாரம் என்று அவர் பேசியதே அதிகப்படியாக அவளுக்குத் தோன்றியது. “பட்டுத்திரைக்குப் பின்னால் கைகளில்லாத பெண் ஒருத்தி கால்களால் வேலை செய்யக் காண நேர்ந்தாற் போலிருக்கிறது. களிப்பூட்டும் அற்புதக் காட்சி!” என்று மாம்பாக்கத்தில் வந்த சர்க்கஸ் கொட்டகையில் விளம்பரம் செய்திருந்தனர். பட்டுத்திரை தொங்கியது. அது விலகியதும், கைகளில்லாத ஒரு பெண் - அவள் முகத்தில்பால்வடியும் இளமை, கைகளில்லாத கோலம் அவள் நெஞ்சை அமுக்கிப் பிசைந்தது. அவளால் அந்தப் பெண் கால்களால் தேநீர் தயாரித்ததை அற்புதமாக நினைக்க முடியவில்லை. பல இரவுகளில் அந்த அற்புதம், பயங்கரமாக மாறி அவளுடைய கனவுகளில் தோன்றியிருக்கிறது.

“இந்த மதுரத்தம்மா புருசன் இருக்கே, அது ஒரு மோசமான ஆள். அது போய்க் குடிசையில் அந்தாளுக்கு கஞ்சா வாங்கிக் கொடுக்குது. பாவம் அம்மா, வீட்டுக்குள்ளே ஒண்ணும் செய்ய முடியாம பாதிப் பொழுதும் வெளியே போயிடறாங்க...” என்று மேலும் விள்ளுகிறாள் அநுசுயா.

“உனக்கெப்படி இதெல்லாம் தெரியும்?”

“எனக்கு கோகிலா சொல்லுவாள். நான்தான் இங்கே அடிக்கடி வருவேன். வேறு யாரையும் அம்மாளுக்குப் பிடிக்காது.”

“உனக்கு ஹோம்ல சம்பளமா?..”

“எனக்கு முன்னெல்லாம் ஒண்ணும் கிடையாது. இப்பத் தான் நாலுமாசமா ‘சில்ட்ரன் செக்ஷன்ல’ வேலை செய்யிறேன். மாசம் அறுபது ரூபாய் சம்பளம். நாற்பது ரூபாய் அங்கேயே சாப்பாட்டுக்குக் கொடுத்துடுவேன்.”

“ஓ, என்னைப்போல இருக்கிறவங்க வந்தாவேலை கிடைக்குமா? வேலை செய்து கொண்டு படிக்கலாம்னு ஆசை இருக்கு. அம்மா கிட்டக் கேட்கணும்னு இருக்கேன்...”

“ஐயோ, வேணாம். நீ ஏன் அங்கே போகணும்? இப்பக்கூட எனக்கு வேற வழியில்லாததால அங்கே இருக்கிறேன். காலையிலே கேழ்வரகுக் கஞ்சி ஊத்துவாங்க. பகல் நேரத்தில் பாதி நாளும் சோறு பத்தாம போயிடும். பாச்சை விழுந்த ரசத்தை அப்படியே பாச்சையைத் தூக்கி எறிஞ்சிட்டு முத்தம்மா ஊத்துவா. தலைநிறைய ஈறும் பேனுமாப்பிடுங்கும். ஜெயில் புள்ளிகளைப் போல வெளியே போகணும்; வரணும். யாரேனும் பெரிய மனுஷங்க வந்தா வெள்ளையா நல்ல சேலை உடுத்தி எக்சிபிஷன்போல நிக்கணும். ஒரு மெம்பருக்குப் புடிச்சது இன்னொரு மெம்பருக்குப் புடிக்காது. சாந்தா சுந்தரம்னு ஒரு மெம்பர். டீன்னுதான் கூப்பிடுவா. அவ வீட்டில் யாருக்கோ குழந்தை பிறந்ததுன்னு என்னை உதவிக்குக் கூட்டிப் போனா. நான் இங்கே குழந்தைகளைப் பார்க்கிறேனேன்னு குழந்தைக்கு நர்சாயிருக்கத்தான் கூட்டிருக்காங்கன்னு நினைச்சேன். பெட்பான் வச்செடு, துணி துவைச்சுப் போடுன்னு ஏவினாங்க. அதான் போகட்டும்னா சோறு பின்கட்டிலே வச்சுப் போட்டாங்க. நான் மூணுநாளு இருந்ததும் ஓடிவந்து நம்பம்மாகிட்ட அழுதேன். புடிக்கலேன்னா திருட்டுக்குத்தம் சுமத்தக்கூடத் தயங்கமாட்டாங்க. எங்களுக்கு வீடு வாசல் நாதியில்லே. வந்திட்டோம். நீ போய் அங்கே ஏன் விழறே?” என்றெல்லாம் அநுசுயா அவளுக்கு அறிவுறுத்துகிறாள்.

“எனக்குந்தான் வீடு வாசலில்லையே?”

“இருக்குன்னியே? அக்கா, அத்தான் வீட்டில இருந்து நானே படிச்சிருக்கே?”

“அதான் புத்திகெட்டு வீட்டை விட்டு ஓடிப்போயிட்டேனே? அதை எல்லாரிடமும் சொல்லவே எனக்குக் கூச்சமாயிருக்கு. திரும்பி வந்து அவங்க காலில் விழுந்தேன். என்னைச் சேர்த்துக்கல்ல.”

“த்ஸ...த்ஸ... அப்ப பருவதத்தைப் போலா நீ...”

“யாரு பருவதம்?”

“அப்படி ஒரு பொண்ணு ‘ஹோமில்’ இருக்கு. உங்களவங்கதான். ஏழுமாசம் கர்ப்பத்தோட வந்திருக்கு.”

மைத்ரேயிக்கு முகம் சிவக்கிறது. “அப்படியெல்லாம் நான் எந்த மாதிரியான நிலைக்கும் வருமுன், ஒரு அம்மா எச்சரிக்கை பண்ணி கையில் பணமும் கொடுத்து அனுப்பினாங்க. அக்கா வீட்ல வெளிலே துரத்தினதும் மதுரத்தம்மா தான் சோறுபோட்டு இங்கே கூட்டி வந்தது.”

மனநெகிழ்ச்சி, அநுசுயாவை ஒத்தவளாகக் கொண்டு விடுகிறது. அவளிடம் உள்ளத்தைக் கூறியதும் ஓர் ஆறுதல் தோன்றுகிறது.

“ஆனா, அம்மா உன்னை இங்கே வச்சிக்கிறது சந்தேகம். ராஜா என்ன பேசினார் தெரியுமில்லே?...”

“தெரியாதே! நான் கவனிக்கலியே ?”

“உன்னை ஹோமிலே சேர்க்க அவர் இஷ்டப் படலேன்னு நினைச்சேன்”.

“அம்மா இப்ப அவங்க ரூமில்தானே இருப்பாங்க? நான் போயி கேட்கட்டுமா? எனக்குச் சமயம் எதுன்னே புரியல”

“நீயாப்போயி அவங்களிடம் கேட்காதே. அவங்களுக்குத்தான் தெரியுமே? சொல்லுவாங்க. ஏன், ராஜாபார்ட்டி வேலைக்கு உன்னை எடுத்திட்டா உனக்கு நல்லதுதானே ? நீ பெரிய ஆளாப்போறா!”

“அப்படி யார் சொன்னது?”

“அட மக்கு அவங்க பேசிட்டாங்களே, கேக்கல? அம்மாளுக்கு அது புடிக்காமதான் உர்ருனு எழுந்து ரூமுக்குப் போயிட்டாங்க, மாடிக்கு!”

மைத்ரேயியின் முகம் விரிகிறது. “அப்படியா ? நான்தானே பரிமாறினேன்? நீ உள்ளே இருந்தாயே ? எப்படிக் கேட்டே?”

“காதால் கேட்டேன். அவங்க பேச்சை நீ கேட்காம என்ன பரிமாறினே ?”

“சிலது காதில் விழுந்தது. என்னமோ பார்ட்டி வொர்க் டிரெயினிங்குன்னு சொன்னார். பிரசாரம்னு சொன்னது தெரிஞ்சுது. எனக்கா அது?”

“உன்னைப் பார்த்ததும் சொன்னால், உனக்குத்தான். நீ என்ன இருந்தாலும் உசந்த சாதி; அழகு. ஆனா, உங்களை ஒத்தவங்க எங்கேனாலும் வீட்ல வேலைக்குப் போனாலும் கஷ்டம். பர்வதம் பாரு, ஒரு பெரிய கிரிமினல் லாயர் வீட்ல வேலைக்கிருந்த பொண்ணுதான். லாயரே அந்தக் குழந்தைக்கு அப்பாவோ, அவருடைய மகனோ. இரண்டாம் பேரறியாம ஹோமுக்கு வந்துட்டது. பிரசவம்னா ஆசுபத்திரிக்குப் போகும். இங்கே குழந்தை அம்மா ரெண்டு பேரும் இருப்பாங்க. தாமரை குளத்து மீன் ருசியாத்தானிருக்கும். ஆனா தாமரைக் கொடி, சேறு இதை எல்லாம் சமாளிச்சாத்தான் மீன் பிடிக்கலாம்...” என்று அவளுக்குத் தெரியாத விவரங்களைக் கூறுகிறாள் அநுசுயா.

“தாமரைக் குளத்து மீன் ருசியாயிருக்குமா? தெரியாது எனக்கு!” என்று சிரிக்கிறாள் மைத்ரேயி.

“அப்டீன்னு எங்க தாத்தா சொல்லுவாரு. எனக்குக் கனாப்போல இருக்கு. தாமரைக் குளத்திலே வருசத்துக் கொருக்கா மீன் ஏலம் விடுவாங்க. எங்க தாத்தா வாங்கி யாருவார். அவரே குழம்பும் வைப்பார்...”

“உனக்கு வைக்கத் தெரியுமா?”

“மசாலை அரைச்சுக் குடுப்பேன். அப்பனை எனக்கு நினைவு தெரியுமுன்னே யாரோ கொலை செஞ்சிட்டாங்க. விவரமெல்லாம் நல்லாத் தெரியாது. நானா யூகிக்கிறேன் எங்கம்மா விவகாரமா இருக்கும்னு. அந்தாளு ஆறுவருசமோ என்னமோ ஜெயில்ல இருந்திட்டு வந்தப்ப, எங்கம்மா கடைக்குப் போயிட்டு வாரேன்னு கேவுரு முட்டையைத் தலையில் வச்சிட்டுக் கிழக்கால போனா வரவேயில்ல. நான் அழுதிட்டே இருந்ததும், தாத்தா என்னைக் கையிலே புடிச்சிட்டு ஊர் ஊராத் தேடிட்டு வந்ததும் நினைப்பிருக்கு. தாத்தாதான் என்னைப் பேட்டை அரிஜன இல்லத்தில் கொண்டாந்து சேர்த்தார். “கேடு கெட்டவன் கொலைகாரப் பயல், அவளை புடிச்சிட்டுப் போயிட்டான்னு திட்டினாரு. அப்ப எனக்குப் புரியல. பின்னால நானா நினைச்சுப் பாத்துப்பேன். தாத்தாவை நான் பிறகு பார்க்கலே. அவரும் உடனே இறந்து போயிட்டாரு. அங்கேந்து இங்கே மூணு வருஷத்துக்கு முன்னதான் வந்தேன்..” என்று தன் கதையைக் கூறி முடிக்கிறாள் அநுசுயா.

பெற்ற குழந்தையைக் கூடப் புறக்கணித்துவிட்டுப் போகும் அளவுக்கு ஒரு உடல் வேட்கையா?

கல்வியறிவும் மறுமலர்ச்சியும் இல்லாதவளின் வேட்கை அத்தகையதோ என்னமோ? சாதி, குடும்பமேன்மை, தார்மிக நெறிகள் எல்லாவற்றையுமே அந்த வேட்கை பலவீனமாக்கி விடும்போது எந்த மேன்மையும் இல்லாதவர்களிடத்தில் அது ஆட்சி செலுத்துவதில் என்ன வியப்பு?

“பிறகு நீ உங்க அம்மாளைப் பார்க்கவே இல்லையா அநுசுயா ?”

“ஊஹும். காந்தி இல்லத்து சாரதாம்மாதான் எனக்கு அநுசுயான்னு பேர் வச்சாங்க. அவங்க ரொம்ப நல்லவங்க. இப்ப கல்யாணம் கட்டிட்டு வடக்க எங்கியோ இருக்காங்க...”

“ஏன் அது, உசந்த சாதி, தாழ்ந்த சாதின்னு இருக்கறதைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?” என்று மைத்ரேயி தீவிரமாக ஒரு கேள்வியைக் கேட்கிறாள்.

“என்ன நினைக்கிறது? உசந்த சாதி உசந்த சாதிதான். அதனாலதான் நீ பூரிசுட இடத் தெரியாமலிருந்தும் சமையல் ரூமுக்குள்ள இருக்கே. நான் எல்லாம் தெரிஞ்சும் வெளிலே தான் நிக்க வேண்டி இருக்கு. இந்த அம்மா வீட்டிலதான் நான் உள்ளே வர்றேன். ஏன், நான் உள்ளே வந்து தொடுறது வெளியே இருக்கும் ஐயாவுக்குத் தெரியாது. கோகிலம்கூட ஒரு மாதிரிப் பேசுவா. எனக்கு ஒரு சந்தேகம், ராஜாவுக்குக் கூடக் பிடிக்காதுன்னு.”

கறுப்பாக, குட்டையாக, சற்றே மாறு கண்ணுடன், நெற்றியில் பச்சைக்குத்துப் பொட்டுடன் விளங்கும் அதுசுயா தான் தீண்டாத வகுப்பிற்பட்டவள் என்பதைக் கூறாமல் விளக்குகிறாள்.

லோகாவின் மீது மைத்ரேயிக்குப் பெருமதிப்பு உண்டாகிறது.

“உங்க சாதியில் எல்லாரும் நல்லாயிருக்கிறீங்க, உங்களுக்குப் படிப்பு வருது. நான் காந்தி இல்லத்து ஹைஸ்கூலில்தான் படிச்சேன். முதல் மார்க் வாங்குகிறது அநேகமா உங்களவங்க பிள்ளைங்கதான். எனக்கு எட்டாவதிலியே மூணுதரம் தவறிப் போச்சு. படிப்பை நிறுத்திட்டு கைவேலையிலே போட்டாங்க. பிறகு இங்கே வந்து சேர்ந்தேன்...”

“படிச்சிட்டாப் போதுமா அநு?”

“ஏன், எல்லாம் அநேகமாப் படிச்சி எப்படியோ பெரிய வேலைக்குத்தான் போறாங்க. எந்த ஐயரானும் மூட்டை தூக்கறாரா? எந்த ஐயரேனும் டவாலி போட்டுட்டுப் பியூன், இதுபோல வேலைக்குப் போறாங்களா. மதுரத்தம்மா புருஷனுக்கு அம்மா எதோ வேலை போட்டு வைக்கலான்னு சொன்னாங்க போலிருக்கு. ஒருநா நானிங்க இருக்கையிலே, நான் மேசைக்கு மேசை எச்சித்தட்டு தூக்கற பயல்னு நினைச்சியோ ஓட்டல்ல வேலைன்னா அப்பிடி இல்லே! சரக்கு மாஸ்டர்னா எச்சி கழுவும் வேலையில்லன்னு கத்தினாரு. அது உசந்த சாதின்னுவர பேச்சுத் தானே ?” என்று கேட்கிறாள் அது.

“சேச்சே, அவங்கல்லாம், உண்மையில் உசந்த சாதி இல்லே...”

“அப்படி நீ சொல்லலாம். எல்லாரும் சொல்லுறதில்லையே ?”

“படிப்பு வர்றதனால உசந்த சாதி இல்லே, படிப்பு வராததுனால தாழ்ந்த சாதியுமில்ல. இது விஷயமா ஆராய்ச்சி பண்ணணும்னு எனக்கு ஆசை. யார் யாருக்கு அநீதி பண்ணினாங்க, எப்ப, எதுக்கு எல்லாம் தெரிஞ்சுக்கணும்னு ஆசை.”

“தெரிஞ்சிட்டு என்ன செய்யப் போறே?”

அவள் கேலியாகச் சிரிக்கிறாள். அந்தக் கேலி இமயமலை கல்லா மண்ணா என்று ஆராய்ச்சி செய்து எலிக்கு என்ன ஆக வேண்டும் என்று கேட்பதுபோல் இருக்கிறது.

உண்மையில் அந்தச் சாதியில் பிறந்திருப்பதனால் அதற்கு நேரும் அவமானம் முழுவதையும் தானே தாங்கிக் கொள்பவள்போல் ஏன் தோன்றுகிறது? சமுதாயத்தில் வழி வழியாக உயர் மதிப்பையே பெற்றிருக்கும் உரிமையைக் கொண்டு, அந்த உரிமைக்கான பொறுப்பை நழுவவிட்டதை மறந்த மாறுபட்ட வாழ்வில் எதிர்ப்புக்களையும் சுடு சொற்களையும் ஏற்க வேண்டியிருப்பதைப் பொறுக்க இயலாமல் அவள் துடிப்பானேன்? உண்மையில் சாதி என்பது எப்படி வந்தது? மேல் நாடுகளில் எல்லாம் கிறிஸ்தவர்களாகவே இருப்பதால் சாதிகள் கிடையாதாம். அப்படி சாதிப் பிரிவு என்ற ஒன்றில்லாமலிருந்தால் அக்காவும் மற்றவரும் அவள் தனராஜிடம் தன்னை இழக்கத் துணியும் வரை நிகழ்ந்திருக்குமோ? அப்படியே இருந்தாலும், அவர்கள் அவளை முதலிலேயே வீட்டைவிட்டுத் துரத்தும் அளவுக்கு வெகுண்டிருக்கமாட்டார்கள். அதற்குக் காரணம் அவன் வேறு சாதிக்காரன். அவள் தாழ்ந்த சாதியாக இருந்து அவன் உயர்ந்த சாதிக்காரனாக இருந்தால் நிராகரிப்பு அவனுடைய பக்கத்திலிருந்து வந்திருக்கும். ஜாதகப் பொருத்தம் குலம் கோத்திரம் எல்லாம் பார்த்துத்தான் இந்த லோகாவுக்கும் திருமணம் செய்து வைத்திருப்பார்கள். உண்மையில் மதுரத்தின் குடும்ப வாழ்வைவிட லோகாவின் வாழ்வு எந்த அளவில் மேம்பட்டது?

‘அந்தணன்’ என்று அவளால் அநுமானிக்க இயலாத ஒரு செல்வாக்குக்காரன் சொந்தமாக உள்ளே வந்து உணவு கொண்டு வீட்டின் முன்னறையில் தங்குகிறான். கட்டிய கணவன் உள்ளே வராமல் ஒரு போலி வாழ்வு நடத்துகிறான். இவளே தள்ளிவைத்தாலும் அவனுக்கு எதிர்க்கத் துணிவில்லை. ஏன்? இவ்விதம் பணியாட்களுக்கெல்லாம் தெரியத் தன்மானமின்றி வாழ்வதைக் காட்டிலும் வேறெந்த ஊரிலேனும் இருக்கலாமே?...

சாப்பாடு முடித்துப் பாத்திரங்களைக் கோகிலத்துக்குக் கொண்டு போடுகிறாள் மைத்ரேயி, பேச்சு சுவாரசியத்தில், லோகா மாடியிலிருந்து கீழிறங்கி வந்ததைக்கூட கவனித்திருக்கவில்லை அவள்.

திடுமென்று உள்ளே வரும் லோகா, “ரெண்டுபேரும் சுவாரசியமா அரட்டையடிக்கிறீங்க, டெலிபோன் மணி அடிச்சது கூடத் தெரியல. மைத்ரேயி, இன்னிக்குச் சாயங் காலம் உன்னை ஹோமில் கொண்டுவிடப் போறேன். தயாராக இரு!” என்று கூறிவிட்டுப் போகிறாள். மைத்ரேயி துணுக்குற்றாப்போல் நிற்கிறாள்.

8

“சாயங்காலம் என்று சொல்லிவிட்டு வெளியே சென்ற லோகா எப்போது திரும்பி வரப் போகிறாளோ என்ற துடிப்புடன் காத்திருக்கிறாள். மதுரமும், அநுசுயாவும் அந்த விடுதிக்கு அவள் செல்வதை ஆதரிக்கவில்லை. விடுதியில் அவளுக்குப் பாதுகாப்பாகத் தங்க இடமும், கஞ்சியோ, கூழோவானாலும் பசி தீர்க்க உணவும் கிடைக்கும்; கல்விக்கும் வழியுண்டு. கிடைத்த பிடியை விட்டுவிடாமல் மேலேறிச் செல்லும் உறுதி அவளுக்கு இருக்கிறது. வேலை செய்து கொண்டு கூலி பெறாமல் படிக்க வேண்டும் என்றாலும் அவளால் இயலும். இதே சமையல் வேலையானாலும் சரி; கழுவிப் பெருக்கி, துடைத்து, நீர் சுமந்து உடல் வருந்த வேலை செய்வதானாலும் சரி; அவளுக்குப் படிப்பு ஒன்று தான் குறி. நல்ல பரம்பரை அழிந்து விடுமென்று அவள் எதற்காகக் கவலைப்பட வேண்டும்? அந்த சாதியிற்பட்ட அவளுக்கு தொழிற் கல்லூரியில் படிக்க வேண்டுமென்றாலும் இடம் கிடைக்காது. விடுதிப்பெண்ணாக, அநாதையாக முத்திரை பெறுவதில் இலாபமே ஒழிய நஷ்டம் இல்லை.

உள்ளம், வெளிச்சமில்லாத வெண்மையில்லாத திரையிலே பொன்மயமான கற்பனைகளையே தீட்டி அழிக்கிறது.

அநுசுயா வழக்கம்போல் ஆறுமணிக்கே விடுதிக்குப்போய் விடுகிறாள். இரவு சமையலை முடித்து பாலாவுக்குச் சாப்பாடு போடுகிறாள்.

சேது படம் பார்க்கப் போயிருக்கிறான். ‘குடிசை’க்காரருக்கு அவள் தோசை வார்த்துக் கொண்டிருக்கையில் லோகா பரபரப்பாக வருகிறாள்.

மணி ஏழேமுக்கால்.

“என்ன பண்ணிண்டிருக்கே?...” என்று கேட்கிறாள்.

“பாலா அப்பா தோசை..” என்று மைத்ரேயி தடுமாறுகிறாள்.

“பாலாவையே கொண்டுபோகச் சொல்றேன். இல்லாட்ட இங்கே வந்து சாப்பிடுவார். நீ சாப்பிட்டுட்டு ரெடியாயிரு. உன்னைக் கூட்டிப் போகிறேன். காலையிலே இங்கே ஆள் வருவார்.”

மைத்ரேயிக்கு உணவு இறங்கவில்லை.

லோகா ஃபோனில் பேசும் குரல் கேட்கிறது. எங்கோ காரில் மறுபடியும் வெளியில் செல்கிறாள்.

பாலா தோசையைக் கொண்டு வைத்துவிட்டு வருகிறாள். சேது வந்து சாப்பிட்டுவிட்டு மாடிக்குச் செல்கிறான்.

இரவு பத்துமணி வரையிலும் தன் பையை வைத்துக் கொண்டு அந்தப் பெரிய வீட்டில், கீழ்த்தளத்தில் தனியாகக் காத்திருக்கிறாள்.

பத்துமணியடித்த பின்னரே காரின் குரலொலி கேட்கிறது.

“பாலா!..”

“இதோ வரேன்மா.”

பாலா இறங்கி வந்ததும், “வீட்டைப் பார்த்துக்கொள், இவளைக் கொண்டு விட்டுட்டு வரேன்...”

மைத்ரேயி பாலாவைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே தன் பையுடன் வண்டியின் பின்புறத்தில் அமர்ந்து கொள்கிறாள்.

வெள்ளைக் கட்டிடம்; வாயில்முட்கம்பி வேலி உயரமாக இருக்கிறது. பெரிய கதவு. முன் வாயிலில் நீலக்கரை போட்ட வெள்ளைச் சேலை உடுத்தி நாற்பத்தைந்து வயசு மதிக்கக் கூடிய பெண்ணொருத்தி லோகாவுக்குக் கை குவிக்கிறாள். “வணக்கம்மா....”

“ராசம்மாவா ?”

“ஆமாம்மா. சாயங்காலமே அது சொல்லிச்சி...”

“இவதான் மைத்ரேயி, புதிசு ரொம்ப கொஞ்சம் கவனிச்சிக்க. நல்ல படிச்ச பொண்ணு.”

“வாம்மா...” என்று ராசம்மா சிரிக்கிறாள்.

எள்ளும் அரிசியுமாக நரைத்த கூந்தலைக் கொண்டை போட்டுக் கொண்டிருக்கிறாள். அநுசுயாவைவிடக் குட்டை, பருமன். நல்லகறுப்பு. வெள்ளைச் சேலை பளிச்சென்றிருக்கிறது.

“இவளுக்கு ஹாலில் இடம் கொடுக்க வேண்டாம். படிப்பறையில் யாரிருக்கிறாங்க?”

“ரோஸ் லீனும் மீனாட்சியும் இருக்கு. இன்னைக்குப் பர்வதம்கூட அங்கேதான் படுத்திருக்கு...”

“இவள் அவங்ககூட இருக்கட்டும், நாளைக்கு மல்லிகா வந்ததும் நான் சொன்னேன்னு சொல்லு, நான் பின்ன வரேன்!”

“சரிம்மா..!”

“வரட்டுமா?...குட்நைட்!” என்று மைத்ரேயியிடம் திரும்பி விடைபெற்றுக்கொண்டு உள்ளே நுழையாமலே வண்டியிலேறிப் போகிறாள் லோகா.

அப்போது, அருகில் தெரிந்த புதிய வெள்ளைக் கட்டடம் ஒன்றிலிருந்து அநுசுயா இறங்கி வருவது தெரிகிறது.

“வந்திட்டியா?...” என்று மைத்ரேயியைப் பார்த்துச் சிரிக்கிறாள்.

மைத்ரேயிக்கு குழப்பமாக இருந்தாலும் புன்னகை செய்கிறாள்! “சத்தமே இல்லாமல் அமைதியாக இருக்கிறது இங்கே...”

“அட, நீ கண்ணு வச்சிடாதே! பாலபவனம் இது. சில பிடாரிங்க அழ ஆரம்பிச்சா, ராத்திரி முழுசும் ஓயாது...” என்று மறுமொழி கொடுக்கிறாள் அநுசுயா...

“நீ அங்கேதானிருப்பாயா?”

“ஆமாம், காலையிலே பார்க்கலாம். நீ ராசம்மாளோட போ, இப்ப..” என்று கூறிவிட்டு அவள் போகிறாள்.

படியேறியதும் முன்னறை. அங்கே கண்ணாடி அலமாரிகளில் அந்த இல்லத்தில் தயாராகும் சில கைவினைப் பொருள்கள் காட்சிக்காக வைக்கப் பெற்றிருக்கின்றன. வலது கைப்புறம், ‘ஆஃபீஸ்’ என்ற அறிவிப்பைக் காண்கிறாள். முன் பகுதியைக் கடந்தால் வாயிலில் திரை தொங்கும் பெரிய கூடம். கூடத்தில் மங்கலாக ஒரு அரிக்கேன் விளக்கு ஒளிபரப்புகிறது. அந்த ஒளியில் தாறுமாறாகப் பாய்களில் பெண்கள் படுத்திருக்கின்றனர். அலங்கோலமாக வெறும் மார்புக் கச்சும் பாவாடையுமாக ஒருத்தி கண்மண் தெரியாமல் தூங்குகிறாள். இரண்டு பேர் படுக்கையில் உட்கார்ந்திருக்கின்றனர். அவள் உள்ளே நுழைந்ததும் சட்டென்று எழுந்து அவளையே பார்க்கின்றனர் சிலர். ராசம்மா அந்தக் கூடத்தைத்தாண்டி அந்த அகலத்தில் ஒரு நடைபாதைவிட்ட பின் மிகுந்த அகலத்தில் நீளம் சரிபாதியாகக் குறைந்ததோர் அறைக்கு அரிக்கேன் விளக்குடன் வருகிறாள். அந்த அறையில் ஒரு மூலையில் சுவரில் இரண்டு கள்ளிப் பெட்டி ஷெல்ஃப்கள் இருக்கின்றன. அவற்றில் புத்தகங்கள் நோட்டுக்கள் நிறைந்திருக்கின்றன. மூலையில் ஒரு தையல் இயந்திரம் இருக்கிறது. துருப்பிடித்த தகரப் பெட்டிகள் இரண்டு, ஒன்றின் மேலொன்றாக இடம் பெற்றிருக்கின்றன. கீழே பாயில் முழங்கால் கவுனும் சட்டையுமாக ஒரு பெண் தூங்குகிறாள். கர்ப்பிணியாகத் தோன்றும் ஒரு பெண் விளக்கொளியைக் கண்டதும் எழுந்து உட்காருகிறாள்.

மாநிறமாக, நெற்றியில் செஞ்சாந்துத் திலகத்துடன் விளங்கும் அவளுக்குப் பின்னல் கருநாகம்போல் பாயில் புரளுகிறது. பரிதாபத்தை விழிகளில் தேக்கிக் கொண்டு காட்சியளிக்கிறாள்.

“மீனாட்சி இங்கே படுக்கலியா இன்னைக்கு ?”

“இல்லே ஆயா, கூடத்திலேதான் படுத்திருக்கா...”

“அப்ப இந்தப் புதுப்பொண்ணு இங்கே படுக்கட்டும்..” என்று கூறிக் கொண்டு சென்ற ராசம்மா சற்றைக் கெல்லாம் ஒரு பாயும் போர்வையும் கொண்டு வருகிறாள்.

“இப்பத்தான் போர்வை வேணாமே, வேத்துப் புழுங்குதே, இத்தை மடிச்சித் தலையில் வச்சிட்டுப் படுத்துக்க. காலையிலே பார்த்துக்கலாம்...”

மைத்ரேயி ஒரு மூலையில் பையை வைக்கிறாள்.

பர்வதத்தின் அருகிலேயே பாயை விரிக்கிறாள். அவள் படுத்துக் கொள்வதைப் பார்த்துவிட்டு, ராசம்மா விளக்குடன் வெளியே செல்கிறாள்.

“இங்கே எலக்ட்ரிக் லைட் கிடையாதா?” என்று மைத்ரேயி கேட்கிறாள்.

“இருக்கு. பத்துமணிக்குமேலே மெயினை அணைச்சுடுவா...”

“யாரு?”

“யாரு, எல்லாம் இந்த ராசம்மாதான், உன்பேரென்ன?” என்று கேட்கிறாள் பர்வதம்.

“மைத்ரேயி...”

“பிராமினா ?”

“ஆமாம்...”

“பாவம்... நானும் பிராமின்தான், இந்தமாதிரி வந்து தொலைஞ்சிட்டது. மூதேவிகள். தலையெழுத்து. அநுபவிக்கிறோம். கடவுள் நமக்குத்தான் தண்டனை கொடுக்கிறார். குத்தம் பண்ணினவங்களும் நம்ம சாதிதான். ஆனா அவாள்ளாம் பெரியவாளாவே இருக்கா பாவிகள். இனிமே வயித்திலிருக்கிறது வெளியில் வந்தப்புறம் என்னென்ன ஆகுமோ... உனக்கு எத்தனை மாசம் இது?”

அந்தக் கேள்வியில் ஒருகணம் அவள் கடுகிலும் கடுகாகிப் போகிறாள். அடுத்தகணம் அவளுடைய தன்மானம் கட்டுக்கடங்காத ரோசமாகப் பொங்குகிறது.

“சீ! வாயை அலம்பு! அந்த மாதிரிக் கும்பலில் ஒருத்தி இல்லே நான். நான் உங்களை எல்லாம்விட உயர்ந்தவள், தெரிஞ்சுக்க!” என்று சீறுகிறாள். ஆனால் அத்துடன் அந்தக் கிளர்ச்சி அடங்கவில்லை. குலுங்கக் குலுங்க அழுகை வெடித்து வருகிறது.

அம்மணி அம்மா அவள் கையில் பணத்தைக் கொடுத்து, அவளைக் குடும்பத்தோடு ஒன்றிக்கொள்ள அனுப்பி வைத்த போது, அவளுக்கு இவ்வளவு பெரிய இழப்பாகத் துயரம் பொங்கி வரவில்லை. வீடு திரும்பி வந்த அவளை அத்திம் பேர் நெஞ்சில் ஈரமின்றி வெருட்டியபோது கலங்கினாள்; தற்கொலை செய்து கொள்ளலாம் என்றுகூட நினைத்தாள். ஆனால், அதெல்லாம் இப்போது அவளுக்குச் சிறு பிள்ளைத் தனமாகத் தோன்றுகிறது. வீட்டைவிட்டுத் துரத்தப்பட்ட, அபலைப் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுக்க, அநாதை இல்லங்கள் நகரங்களில் இருப்பதைப்பற்றி எத்தனையோ சினிமாக்கதை, பத்திரிக்கைக் கதைகளில் படித்திருக்கிறாள். ஆனால் அப்படி ஓர் இல்லத்தைப்பற்றி, அதில் நுழைந்ததும் தன்னை இன்ன விதமாகத்தான் பாவித்து நடத்துவார்கள் என்பதைப்பற்றி அவளால் கற்பனை சுடச் செய்திருக்க முடியவில்லை.

அவள்மீது தெறித்துவிட்ட துளியை, அவளுடைய பளிங்கான நடத்தையில் சுட்டுக் கறையாக்கிய சம்பவங்களை அவளால் எப்படி அழித்துவிட முடியும்? அந்தத் துளியைத் துடைத்தெறிய முடியாது; கிள்ளி எறிய இயலாது. மதுரம் மாமி எச்சரித்தாள். லோகாவிடம் எனக்கு இந்த விடுதி வேண்டாம் என்று அன்றே சொல்லியிருக்கலாகாதா? அநுசுயாவிடம் அவள் அந்த வீட்டுச் செய்திகளைக் கேட்டறிந்ததால்தான் லோகா உடனடியாக அவளை அங்கே கொண்டு வந்து விட்டுவிட்டாளோ?

துன்பம் என்ற சொல்லைக் கேட்டு, காட்சியையும் பார்த்து, படித்து உணர்ந்து அநுபவிப்பதெல்லாம் வெறும் நிழல்கள். துன்பத்தையே நுகர்வது தனியான துன்பம். அவள் கெட்டுப் போனவர்களின் கும்பலில் ஓர் துளி.

இரவு முழுவதும் பயங்கரக் கனவுகளிடையே திடுக்கிட்டுத் திடுக்கிட்டு விழிக்கும் அவள் அரைமணிகூட முழுதாக உறங்கியிருக்கவில்லை. அதற்குள் மணி ஐந்தடித்து விடுகிறது. அவளை ராசம்மாதான் வந்து எழுப்புகிறாள்.

“எந்திரு, மணி அஞ்சடிச்சாச்சு. கைகால் முகம் கழுவிட்டு, பிரேயருக்குப் போகோணும்.” ராசம்மாள் கோயமுத்துரைச் சேர்ந்தவள் என்பதை அந்தப் பேச்சு காட்டிக் கொடுக்கிறது.

“பிரேயரை மிஸ் பண்ணினா, பிரேக்ஃபாஸ்ட் மிஸ்ஸாகும்..” என்று அந்த அறை வழியே போகும் பெண்களில் ஒருத்தி அவளை விசித்திரமாக உற்றுப் பார்த்துக் கூறிக் கொண்டு போகிறாள்.

நான்கு குளியலறைகளும் மூடியிருக்கின்றன.

இருபத்திரண்டு பெண்கள் காச்சுமூச்சென்று கத்திக் கொண்டு அங்கே கூடியிருக்கின்றனர்.

“வாஷ்பேசினில் காறிக் காறித் துப்பிட்டு ஒரு மூதேவி அலம்புறதில்லே. இங்கே வேலைசெய்ய நம்மால முடியாது ராமசாமி!” என்று திட்டிக் கொண்டே ஒருத்தி எம்பி எம்பிப் பம்படிக்கிறாள். அவள் குட்டையாக பருமனாக இருக்கிறாள்.

“சாம்பலைத் தொட்டுப் பல்லு விளக்கறதுக்கு வாஷ் பேசின் என்னா கேடு? பின்னாடி சாக்கடையில் உமுஞ்சா என்ன ?”

“பெரிய மகாராணி ரூல் போடுறா” என்று நிதானமாகக் கூறிக்கொண்டு ஒருத்தி ‘வாஷ்பேஸினி’ல் வேண்டுமென்றே காறி உமிழ்கிறாள்.

“ஏ பொறம்போக்கு! உங்கப்பன் முப்பாட்டன் கட்டி வச்சதுன்னு நினைப்போ? அது சொல்லுதே காதிலே வுழலே?” என்று இன்னொருத்தி துப்பியவளின் காதைப் பிடிக்கிறாள்.

“ஐயோ ஐயோ” என்று அலறும் அவள் கோபம் கொண்டு, “எங்கப்பன் முப்பாட்டன் கட்டி வய்க்கில, உங்க முப்பாட்டன் வைப்பாட்டன் கட்டிவச்சான்...” என்று நாக்கூசும் சொற்களை அவிழ்த்து விடுகிறாள் அவள்.

“இரு, இரு, ஸிஸ்டர் வரட்டும், சொல்லிஇந்தக் கழுதைக்கு மூணு பகல் சோறில்லாம அடிக்கிறேன்...” என்று அவள் கறுவுகிறாள்.

மைத்ரேயி இந்தக் கூட்டத்தில் ஒருத்தியாக வாயடைத்துப் போய் நிற்கிறாள். முதல் நாளிரவு அவள் வரும்போது உறங்கிக் கொண்டிருந்தவளில் ஒருத்தி பல்லைத் துலக்கிக் கொண்டே அவளிடம் வருகிறாள். அவளை ஏற இறங்கப் பார்க்கிறாள், அதிசயத்துடன். பிறகு “ஒ...!” என்று குரலை ஏற்றியும் இறக்கியும் வளைத்தும் நெளித்தும் கண்களைச் சிமிட்டுகிறாள். அருகில் வந்து இடது கையை அவளுடைய வயிற்றில் வைத்து ஏதோ கேலி பேச முற்படுகிறாள்.

“...தொடாதே, என்னை! சீ!” என்று வெருட்டுகிறாள் மைத்ரேயி,

“ஐயே, செழுப்பா இருந்தா இத்தினிகெருவமா அதுக்கு? வயித்திலே இருக்கிறது கறுப்பா இருக்கப்போவுது!” என்று சிரிக்கிறாள் அவள்.

அந்தச் சொற்கள் முன்பே குருதிவடியும் புண்ணைக் குத்திக் கிழிக்கின்றன. ஒரு பெண்ணின் தாய்மை, இவ்வளவு கேலிக்குரியதாக, இவ்வளவு எளிதாக இங்கே குதறி எறியப்படுமா?

மைத்ரேயி இப்போது அழவில்லை. அழுவதற்குப் பதிலாக அவர்களைப் பற்றிச் சிந்திக்கிறாள்.

அவர்கள் எல்லோருமே ஏமாற்றப்பட்டவர்களாகவோ, குதறி எறியப்பட்டவர்களாகவோ இருக்கலாம். உடைந்து போன கண்ணாடியில் முழு பிம்பம் எப்படி விழும், இவர்களுக்கு வாழ்க்கையின் அழகு, அவர்களுக்குத் தெரிந்த அளவில் கூடத் தெரிந்திராமலிருக்கும். வாழ்க்கையின் குரூரங்களிலேயே கண்விழித்து, அதிலேயே பழகி, ஊறிப் போனவர்கள். மீன் வாடையில், சேற்றுக் குட்டைக் கொசுக்கடியில் வளரும் குழந்தை பூங்காவனத்தை ரசிக்கமாட்டானாம். அங்கும் ஒரு குட்டையிருந்தால் அதனருகில்தான் உட்காருபவனாக இருக்கும்.

அப்போது ஒரு குளியலறைக் கதவு திறக்க, பர்வதம் வருகிறாள்.

“குட்மார்னிங் மிஸ் பர்வதம் சோம சேகர்!” என்று குறும்பு காட்டுகிறாள் ஒருத்தி.

“உன் சோற்றில் மண்விழும். பெரிய இடத்து சம்பந்தக்காரங்களை நீ கேலியா பண்றே? கசுமாலம்!” என்று இன்னொருத்தி குத்துகிறாள்.

“சே, சே, பர்வதம் பிரசவத்துக்கு ஆஸ்பர்ன் நர்ஸிங் ஹோமுக்குப் போகப் போகுதாம். ஒருநாள் ரூம் நாற்பதஞ்சு ரூபாய், குளுகுளு ரூம்..... இல்லையா பர்வதம்” என்று கிண்டுகிறாள் முழங்கால் கவுன்காரி ரோஸி.

“யாருக்குக் கட்டியிருக்கிறாரோ, அந்தப் பெரிய மனுசன் இவ ஒருத்திக்குத்தான் இப்ப மாசமா?”... என்று கிளுக்குகிறாள் மற்றொருத்தி.

“சீ, ஏண்டி கையாலாகாத பேச்சுப் பேசறீங்க ? பர்வதம், நான் உனக்கு ஒரு யோசனை சொல்றேன். அந்தப்படி நீ செஞ்சா, பொம்பிள.”

“பொம்பிளைங்கறதை வெளக்கத்தான் சுமந்துகிட்டுக் காட்டுறாளே! நீ வேறே நிரூபிக்கச் சொல்லணுமாக்கும்! சீ! இது பொம்பிளத்தனமா? ஆம்பிளத்தனம். இந்த ஆம்பிளை எல்லாம் தயிரியம்னு உனக்கு நினைப்போ ?”

“பர்வதம், நான் ரொம்ப நாளைக்கு முன்ன பாத்தேன் சினிமாவில. அப்ப எனக்குப் பன்னண்டு வயசிருக்காது. ஒரு ராஜகுமாரன் ஒரு பொண்ணுட்ட அடாவடியாப் பேசுகிறான். அவ மொறச்சுக்கிறா. அவளை இட்டாந்து கலியாணம் கட்டிக்கிட்டு உள்ளாறபோட்டு, உனக்குப் பிள்ளை வேணுமான்னு ஒருமரப்பாச்சிப் பொம்மையக் குடுத்துட்டு வெளியேவந்து...” என்று முடிக்குமுன் ராசம்மா, குறுக்கிட்டு, “மங்கம்மா சபதம்... நல்லாருக்கும் முத்தம்மா, அந்தச் சினிமா. நானு எட்டுவாட்டி பார்த்தேன், எங்கூட்டுக்காரரோடு, அத்தெ” என்று பெருமையாகக் கூறுகிறாள்.

தொடர்ந்து, “இதுபோல இப்ப எங்க சினிமா வருது ஆயா, அதுல வசுந்தரா வந்து இன்னனா ஆடுவா, பாடுவா, என்னெஸ் கிருஷ்ணன் மதுரம்...” என்று பிரலாபிக்கிறாள்.

“இப்ப ஆடல் பாடல்லாம் வேணாம் ராசம்மா, நீ ஒண்ணு...” என்று முத்தம்மா நெற்றியைச் சுளிக்கிறாள். “ஆனா, அந்தப் பொம்பிள மாதிரி அவ பையன் கையிலியே ஒரு சவுக்கைக் கொடுத்து அந்தப் பங்களா அப்பனைச் சபையில் வச்சுவளாசச் சொல்லணும். யாருனாச்சும் இத்தைச் செய்வாங்களா?” என்று சவால் விடுவதுபோல் கேட்கிறாள்.

“எங்கே? பொறக்கிறது பொண்ணா இருந்து தொலைஞ்சிச்சின்னா?” முத்தம்மாள் இப்போது கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறாள்.

“அது பொம்பிளையாத்தான் இருக்கணும். அவ கையில தான் சாட்டையைக் குடுக்கணும். பருவதம், நீ ஒரு அழகான பொண்ணப் பெத்து எங்கிட்டுக் கொடு. நாவளக்கிறேன். நீங்கல்லாம் சொம்மா, அரிசியும், கீரையும் தின்னுட்டு ஆம்பிளையக் கண்டா கரைஞ்சு போவீங்க. பளார் பளார்னு ஆளுக்குப் பத்து சவுக்கடி வாங்கினால் தான் என்னாண்ட வரலாம்னு சொல்லி அந்தப் பொண்ணைவுட்டே வஞ்சம் தீத்துக்கச் சொல்லிக் கொடுப்பேன். அதான் வழி!” என்று முழக்குகிறாள். ‘ஹோ’ என்ற சிரிப்பொலி தொடர்கிறது.

மைத்ரேயி ஊமையாய் நிற்கிறாள். குருதி வழிந்த நெஞ்சம் கெட்டியாகிக் கனக்கிறது.

முதல் நாளிரவிலிருந்து இவர்களை எல்லாம் வெறுத்தாளே? இங்கே அடைந்து கிடக்கும் இந்தப் பெண்கள் வெவ்வேறு விதங்களான கதைகளுக்கு நாயகிகளாக இருப்பார்கள். ஆனால் இந்தக் கதைகளின் மூலக் கருத்து ஒன்றே. காலம் காலமாகப் பெண் ஆணின் கொடுமைகளுக்கும் நயவஞ்சகப் போர்வைக்கும் தலை குனிந்தே வருகிறாள். அவள் எதிர்த்து நின்று சுயமாகத் தன்னைக் காட்டிக் கொள்ளத் திறமின்றியே மழுங்கிக் கிடக்கிறாள். முத்தம்மா அந்தப் பையனைக் கொண்டு சாட்டையடி கொடுக்கச் சொல்வேன் என்று முழக்கிய சொல் நன்றாகத் தானிருந்தது. ஆனால் அதுவே பெண்ணாகப் பிறந்தால் அவளையும் உடலைக் கொண்டே ஆணினத்தைக் கவரச் செய்து விலையாகச் சாட்டை அடிகளைப் பெற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும் என்று கூறியது, மைத்ரேயிக்கு அழுகிய கனியை நுகருவதுபோல் இருந்தது. ஒரு பெண்ணின் பிறப்பின் நோக்கமே, உடலும் போகமும்தானா? இறுக்கி இறுக்கிக் கால்போட்டுப் பின்னிய பின்னல் எவ்வளவு நீட்டி விட்டாலும் குறுகியே நிற்கும். மனசே வளைந்து குறுகிப் போயிருக்கிறது. அவள் பிரமை பிடித்தாற்போல் குளியலறை மூலையில் நிற்கையில் கூட்டம் பரபரவென்று கரைகிறது. அநுசுயா வந்து அவளைத் தொடுகிறாள்.

“ஏன், பிரேயருக்கு வரதில்லே, இங்கே நிற்கறே?”

“வரேன் ஒண்ணுமில்லே...”

முகத்தைக் கழுவிப் பொட்டு வைத்துக் கொண்டு அவள் அநுசுயாவுடன் பிரார்த்தனைக் கூடத்துக்கு வருகிறாள். பிரார்த்தனைக் கூடம் புதிய கட்டிடம்.

உள் முற்றம், கூடம் தாழ்வறையைக் கடந்து சமையலறையைப் பார்த்துக்கொண்டே மைத்ரேயி பக்கத்தில் உள்ள வாயிலில் இறங்குகிறாள். அந்த வாயிலுக்கு நேராக பிரார்த்தனைக்கூடம் தெரிகிறது. மேலே ஒளிரும் கொத்து விளக்கில் கண்கூசும் ஒளி இல்லை. எல்லோரும் இரு வரிசைகளாக எதிர் எதிரே அமர்ந்திருக்கின்றனர். முத்தம்மா ஆர்மோனியம் வைத்துக் கொண்டிருக்கிறாள். இரு பக்கங்களிலும் உள்ள குத்து விளக்குகளை ஒருத்தி ஏற்றுகிறாள். சுவரில் பெரிய இராமபட்டாபிஷேகப் படம் விளங்குகிறது. அதைவிடச் சிறிய அளவில் தஞ்சாவூர்பாணிப் படத்தில் கண்ணன் இரு தேவியருடன் காட்சி தருகிறான். கண்ணாடியின் நடுவே சரிகைச் சேலையில் முத்துச் சொருக்குடன் கோலம் கொண்டிருக்கும் மரகத வண்ண மதுரை மீனாட்சி; முருகப் பெருமான்; கணநாயகர்; இராமகிருஷ்ணர்; சாரதாமணி; விவேகானந்தர் ஒரு வரிசை. காந்தியடிகளும் கஸ்தூரிபாவும்...

தாமரைப்பூக்கோலம் என்றோ போட்ட மாக்கோல மாகத் தோன்றாமல் சிவப்புத் தரையில் புத்தம் புதியது போல் பளிச்சிடுகிறது.

கையில் நோட்டுப் புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு வள்ளி பாடுகிறாள்.

குரல் மிக இனிமையாக இருக்கிறது.

முதலில் கஜவதனா என்ற பாடலைப் பாடுகிறாள். தொடர்ந்து நாமாவளி சொல்கிறாள். எல்லோரும் சேர்ந்து இசைக்கின்றனர்.

கட்டைக்குரல், கீச்சுக்குரல், மென்குரல் எல்லாமாக இணைந்து ஒலிக்கையில் மனசுக்கு இதமாக இருக்கிறது. அடுத்து புத்தகத்தைப் பார்த்து, கீதையின் சாங்கிய யோகத் தமிழாக்கத்தைப் பங்கஜம் முறை வைக்கிறாள். மற்றவர்களுக்கு அது நன்றாகப் பாடமாயிருக்கிறது, மைத்ரேயிக்குத் தெரியாததால் எல்லோருடைய வாயசைவுகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறாள். முழங்கால் பாவாடைக்காரியும் இந்த பஜனையில் கலந்து கொள்ளாமல் தனியே அமர்ந்திருப்பதை அப்போது தான் மைத்ரேயி கவனிக்கிறாள். ஒருகால் அவளும் புதுசோ? கீதை முடிந்ததும் முழங்கால் பாவாடைரோஸி, நெஞ்சைத் தொட்டு, தோள்களைத் தொட்டு, நெற்றியைத் தொட்டு சிலுவைக் குறி செய்து கொள்கிறாள்; “lead kindly light” என்ற ஆங்கிலப் பாடலை அவள் ஒருத்தி மட்டும் பாடுகிறாள். கட்டுப்பாடுகள் உடனே தகர்ந்து போகின்றன. எல்லோரும் எழுந்திருப்பதைப் பார்த்த அநுசுயா, “ஏன் மெடிடேஷன் இல்லையா இன்னிக்கு?” என்று கேட்கிறாள்.

அதற்கு முத்தம்மா அவளை முறைத்துப் பார்த்து, “ஏன் காதலர்களை எல்லாம் தனிச்சு நினைக்கனுமோ? போடி பாசாங்கு” என்று ஏசுகிறாள்.

யாருமே தியானம் என்று அமரவில்லை. நினைவாக விளக்கை அணைத்துவிட்டு கூடத்து வாயில் இழுக்கும் கதவை சாத்தி விட்டு விரைகின்றனர்.

“ஆமா, காப்பிக்கு கொள்ளைபோகும் அவசரம்! அந்தக் கழுநீருக்கு!” என்று இகழ்கிறாள் பர்வதம்.

முற்றத்துச் சார்புக் கூடத்தில் ஒரு வயசிலிருந்து நான்கு வயசு வரை மதிக்கக்கூடிய ஏழெட்டுக் குழந்தைகள் பிரளயமாய் அழுது கொண்டிருக்கின்றன. ராசம்மா கொதிக்கும் பாலை வட்டையில் கரண்டியால் கிளறி ஆற்றிக் கொண்டிருக்கிறாள்.

“சனியனுக, எந்தக் கருமாதிகளோ பெத்துப்போட்டுட்டு இப்படிக் காதைப் பிடுங்குதுங்க. பால் பொங்க வேணாம்? டீ அநுசுயா? எங்கே போய்த் தொலைஞ்சா?” என்று கத்திக் கொண்டு சப்பை மூக்கும் பெரிய வாயுமாக அழுக்குச் சேலை அணிந்த ஒரு நடுத்தர வயசுக்காரி சமையல் கட்டிலிருந்து வெளிப்பட்டு வருகிறாள்.

“புது அட்மிஷன். பிரேயர் ஹாலைக் காட்டிட்டுவரப் போனேன். இத ஆச்சு. இத பாலு வந்திட்டதே, என் செல்லக் கண்ணுக...” என்று அவசரமாகப் பாலை ஆற்றி இரு உறிஞ்சு புட்டிகளில் இட்டு, ரப்பர் அடைப்பானைப் போட்டு, அதிகமாக அழும் இரண்டு குழந்தைகளுக்கு இரண்டு கைகளினாலும் கொடுக்கிறாள் அநுசுயா.

“ஏ, நாப்கின் குடுடி. என் டார்லிங் இவன்” என்று ரோஸி செம்பட்டை முடியும் பூனைக் கண்களுமாக விளங்கும் ஒரு மூன்று வயசுச் சிறுவனுக்கு கிண்ணத்தில் பாலை ஊற்றிக் கொடுக்கிறாள்.

“இந்த அநுசுயாவினால் ராத்திரியும் பகலும் இதுங்களோட அல்லாடி எனக்குத் தலைநோவு விட்டபாடில்ல. நான் அப்பாடான்னு வீட்ல போயி காலை நீட்டணும்!” என்று அலுத்துக்கொள்கிறாள் இன்னொரு ஆயாவான ரஞ்சிதம்.

சமையல்காரி அப்போதுதான் மைத்ரேயியை உற்றுப் பார்க்கிறாள்.

“பாப்பாரப் பொண்ணு போலிருக்கே, அடிப்பாவி!” என்று கன்னத்தில் கைவைத்துக் கொள்கிறாள்.

“அநுசுயாவுக்கு ரெட்டைப்பிள்ளை. ஒண்ணு கருப்பு; ஒண்ணு சேப்பு, ஒண்ணு நெட்டை, ஒண்ணு குட்டை, ஒண்னு பொண்ணு-ஒண்ணு ஆணு, வேற வேற அப்பா...” என்று மீனாட்சி களுக்கென்று சிரித்துக் கொள்கிறாள்.

“இந்தக் கழுதைகளுக்குப் போது விடிஞ்சா போது போனா இதான் பேச்சு!” என்று அதட்டுகிறாள் முத்தம்மா.

ராசம்மா மைத்ரேயியிடம், “நீ ஆபீஸ் ரூமிலே போயிரு; காப்பி குடிச்சிட்டு. சூபரன்ட் அம்மா வரும்...” என்று கூறுகிறாள்.

“சரி...” என்று தலையாட்டிவிட்டு அவள் நிற்கிறாள்.

“இன்னிக்கு பிரக்ஃபாஸ்ட் என்ன? கேப்பை கஞ்சியா புழுத்தமாக் கூழா?” இது ஒருத்தியின் விசாரணை.

“கூழுதான், இந்தப் புழுத்தமாவு ஸ்டோரில் இன்னமும் மூணு பீப்பாய் இருக்குதாம்...” என்று விவரம் தெரிவிக்கிறாள் முத்தம்மா.

“உவே,” என்று குமட்டலை வெளியிடுகிறாள் பர்வதம்.

அநுசுயாவும் ரஞ்சிதமும் புவனாவும் காபி குடித்த பிறகு குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவர்கள் பகுதிக்குச் செல்கின்றனர்.

ரோஸியும் மீனாட்சியும் மைத்ரேயி முதல் நாள் படுத்துக் கொண்டிருந்த அறையில் புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க உட்காருகின்றனர்.

அப்போது வாளி நீரும் துடைப்பமுமாக இருவர் வருகின்றனர்.

“எந்திரிங்கடீ! பெரிய படிப்பு படிக்கிறீங்க. தண்ணியடிச்சிட்டு வந்து குடுங்க...” என்று ஒருத்தி மற்றவளின் புத்தகத்தைப் பிடுங்குகிறாள்.

உடனே மோதல் உண்டாகிறது.

சமையற்கட்டில் பர்வதம் அமர்ந்து ஒரு கூடை காய்ந்த கொத்தவரைக்காயை ஆய்ந்து நறுக்குகிறாள். அடுப்படியில் அமெரிக்க தருமமான மாவைக் கரைத்து, இரண்டு வட்டைகளில் கூழ்காய்ச்சிக் கொண்டிருக்கின்றனர் தெய்வநாயகியும் பங்கஜமும். பச்சை மிளகாயும் உப்பும் புளியும் வைத்து அந்த கூழுக்கு கொறடாவாக வள்ளி உரலில் சட்னி அரைக்கிறாள். எல்லோரும் அழுக்குப்படிந்த நீலக்கரை வெள்ளைச் சேலையைத்தான் உடுத்தியிருக்கின்றனர்.

அவளும் சற்றுப் போனால் அந்தச் சேலையைத்தான் உடுத்த வேண்டியிருக்கும்.

சிமிட்டித் தரையில் குழந்தைகள் பாலைச் சிந்தியுள்ள இடங்களிலெல்லாம் ஈக்கள் மொய்க்கின்றன. அங்கும் தண்ணீரைக் கொண்டு கொட்டுகிறாள் ஒருத்தி. இன்னொருத்தி துடைப்பத்தால் தேய்க்கிறாள்.

இந்த அழுக்குகளைக் கழுவ முடிகிறது. இப்படியே வாழ்க்கையில் படிந்துவிடும் அழுக்குகளைக் கழுவ இயலுமோ?

“நீ ஏன் இங்கே நிக்கிறே? ஆபீஸ் ரூம்ல உன்னைக் கூப்பிடுறாங்க!” என்று முத்தம்மா அவளுக்கு நினைவூட்டுகிறாள்.

முதல் நாளிரவு அவள் பார்த்த அறை திறந்திருக்கிறது. ராசம்மா உள்ளே நாற்காலி மேசையைத் துடைக்கிறாள். ஏதோ காகிதங்களை மேசைமீது ஒழுங்காக வைக்கிறாள். அந்த மேசை மீதிருக்கும் தொலைபேசி அப்போது ஒலிக்கிறது. ராசம்மா எடுத்துக் கேட்கும்போதே கொடிபோன்ற உடலுக்குடைய இளநங்கை ஒருத்தி அந்த அறைக்குள் நுழைகிறாள். பெரிய பெரிய மாங்காய் அச்சிட்ட காச்மீரப் பட்டுச்சேலை அணிந்திருக்கிறாள். சிற்பத்தில் கடைந்தெடுத்தாற் போன்ற கைகள். இளநீலவண்ணத்தில் சேலைக் கேற்ற குட்டைக் கைச் சோளி. ஒரு கையில் மெல்லிய கண்ணாடி வளையல்கள், பொருந்தும் வண்ணத்தில் அழகு செய்கின்றன; இன்னொரு கையில் தங்கக் காப்பில் பொருந்திய சிறுகடிகாரம் அணிந்திருக்கிறாள். விரலில் பெரிய நீலக்கல் பதித்த மோதிரம். மார்புப் பள்ளத்தில் வட்டவடிவமான தங்க முகப்பு விழும்படியான மெல்லிய சங்கிலி அவளுடைய தந்தக் கழுத்தை அலங்கரிக்கிறது. இயற்கையாகவே சிவந்த மேனி, இதழ்களில் மெல்லிய பூச்சுப் பூசியிருக்கிறாள். முன்புறம் அலை அலையாகத் தெரியும் கூந்தல், பின்புறம் கருநாகம் சுருண்டு கிடப்பது போன்று ஒரு மெல்லிய வலைக்குள் சுருண்டிருக்கிறது. அவளுடைய அழகைவிட அலங்காரமே அவளை வைத்த கண் இமையாமல் பார்க்கத் தூண்டுகிறது. ஆனால் அவளுடைய முகத்தில் இயல்பான மலர்ச்சி தோன்றவில்லை. தொலைபேசியை ராசம்மாளிடம் வாங்கிக்கொண்டு செய்தியைக் கேட்கிறாள்.

ஆங்கிலத்தில்தான் பேசுகிறாள். மைத்ரேயிக்காக லோகாதான் பேசுகிறாள் என்று புரிகிறது.

பிறகு அவள் நாற்காலியில் அமர்ந்து கொத்துச் சாவியை எடுத்து இழுப்பறையைத் திறக்கிறாள். ஏதோ காகிதங்களைப் பார்த்து மூடுகிறாள். பிறகு அலமாரியைத் திறந்து ஒரு தடிப்புத்தகத்தை எடுத்துப் புரட்டுகிறாள். முகத்தில் சிரிப்பே இல்லாத கண்டிப்பு நிலவுகிறது. ராசம்மா மைத்ரேயியைக் காட்டி “நேத்து லோகாம்மா ராத்திரி கொண்டாந்து விட்டாங்க...” என்று அறிவிக்கும்போதே, “தெரியும் சொன்னாங்க, நான் விசாரிக்கிறேன்” என்று அவள் நிமிர்ந்து பார்க்காமலே அலட்சியமாக நோட்டைப் பார்த்துக் கொண்டு கூறுகிறாள்.

“அப்ப... நான் வரட்டுமா, ஸிஸ்டர்?”

“இரு... போகலாம்...” என்று அவளை நிறுத்திவிட்டு அரசினர் மருத்துவமனை டாக்டர் கேட்பது போன்ற தோரணையில் அவள், ‘பேரென்ன?” என்று கேட்கிறாள்.

தன்னைத்தான் அவள் வினவுகிறாள் என்று புரிந்து கொண்டு பதிலளிக்கச் சில விநாடிகளாகின்றன மைத்ரேயிக்கு.

“மைத்ரேயி...”

“கல்யாணமாயிருக்குதா ?”

‘உம்...?”

“புருஷன் செத்துவிட்டானா?”

மைத்ரேயியை அந்தக் கேள்வியிலுள்ள வறட்சி தூக்கிவாரிப் போடச் செய்கிறது.

அவளையுமறியாமல் இல்லை என்று தலையாட்டு கிறாள். g

“பின்னே ? அடிச்சி நடுத்தெருவில் துரத்திட்டானா?”

“அதுவுமில்லே...”

“பின்னே...?”

அவள் கதையை அறிவதில் அவளுக்கொன்றும் சுவாரசியமோ இளக்கமோ இல்லை. பொறுமையைச் சோதிக்கக் கூடாது.

“நான் ஏமாந்து போய்விட்டேன்.”

மைத்ரேயிக்கு மடைதிறந்தாற்போல் கண்ணிர் பெருகு கிறது.

“நான்சென்ஸ். இப்ப ஏன் அழறே பின்ன கல்யாணமாச்சுன்னே ?”

“கல்யாணம்னுதான் பண்ணிட்டோம்.”

“பின்ன ஏன் இங்கே வந்து கழுத்தறுக்கிறே? கல்யாணம் பண்ணிட்டான்னா ஏன் ஏமாத்திட்டான்னு பழி போடு கிறே?” என்று அதட்டிவிட்டு, கல்யாணமானவள் என்று எழுதியதை பட்டென்று அடிக்கிறாள். வேறு எப்படியோ எழுதுகிறாள். மைத்ரேயிக்கு அவள் தன் உச்சந்தலையில் எழுதியதையே அடித்துவிட்டு அலட்சியமாகக் கிறுக்குவது போல் தோன்றுகிறது.

“சரி, போ! உனக்குப் புடவை, பாய், தலையணை, சாப்பாட்டுத் தட்டு, குவளை எல்லாம் கொடுக்கச் சொல்றேன்.

இந்தச் சேலை எல்லாம் உடுத்தக்கூடாது...” என்று கரும்பல கையில் ஆணிக்கோடு கிழிப்பது போல் விதிக்கிறாள்.

“எஸ் ஸிஸ்டர்...” என்று அவள் காட்டும் இடத்தில் கையெழுத்துச் செய்கிறாள்.

ராசம்மாதான் இவளுக்கு இரண்டு சேலைகள், குவளை, தட்டு, பாய், எல்லாம் எடுத்துக் கொடுக்கிறாள்.

அவற்றைப் பார்க்கையில் மதுரத்தின் சொற்கள் செவி களில் ஒலிக்கின்றன. அந்தப் புடைவையை உடுத்தும்போது, தன் பாரம்பரியத் தொடர்பு, குடிப்பிறப்பின் மேன்மை அவற்றில் படிந்த கறைகள் எல்லாவற்றையுமே களைந்து விட்டு அழுக்கிலும் சகதியிலும் புரண்டவர்கள் பூண்ட உடுப்புக்களை எடுத்துத் தான் அணிந்து கொள்வதாகத் தோன்றுகிறது. இதுவரையிலும் அவளுக்கோர் தனித்தன்மை இருந்தது. அது அழிக்கப் பெறுகிறது. தாமரைக்குளத்து மீனின் ருசியறிந்து சப்புக் கொட்டுபவள், பெரிய மனிதர் வீட்டில் வேலை செய்கையில் தவறிப்போய் தாயாகும் நிலைக்கு வந்தவள், கன்னிமார் மடத்திலிருந்து ஓடிவந்து தொழில் நடத்துபவனின் வலையில் விழுந்த பின் மீட்கப்பெற்றவள், போலீஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பெற்று சிறை வாசம் அனுபவித்து வந்து சேர்ந்தவள், எல்லாருடைய வரிசையிலும், அவள் ஒருத்தி. அன்றாடம் காலையில் அவள் வரிசையில் நின்று, ஆபீஸ்காரி மல்லிகா பி.ஏ. (சோஷியல் சயன்ஸ்) முன்பு பெயர் கூறும் போது அவள் தன் தனித்தன்மையைத் தானே புதைத்து விட்டதற்காக உள்ளுற அழுகிறாள். அந்தக் கட்டுக்களை அறுத்துக்கொண்டு ஓடிவிடலாம் என்றுகூட மனசு கொந்தளிக்கிறது. ஆனால் கட்டுக்களை அறுத்துக் கொண்டு வெளியே நடுவீதியில் நின்றவர்களுடைய கதைகளல்லவோ இந்தச் சுவர்களுக்குள் மூடிய இரணங்களாக இங்கே தஞ்சமடைந்திருக்கின்றன! இந்த புரையோடும் புண்கள் காய்ந்து ஆறுவதெப்போ?

9

பாலும் தெளிதேனும் பாகும்பருப்பு மிவை நாலும்

கலந்துனக்கு நான் தருவேன்; கோலம் செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே, நீ எனக்குச்

சங்கத் தமிழ் மூன்றும் தா...

பங்கஜம் இனிய குரலில் பாடி முடிக்கையில் ராசம்மா சூடத்தைக் கொளுத்திவைத்து ஆரத்தி எடுக்கிறாள். எல்லாப் பெண்களும் பிள்ளையார்த் தெய்வத்தின் முன் கன்னத்திலடித்துக் கொண்டு கை குவித்துத் தோப்புக்கரணம் போடுகின்றனர்; விழுந்து பணிகின்றனர். ஒவ்வொருத்தியும், நீராடி திருநீறும் குங்குமமும் அணிந்திருக்கின்றனர். வள்ளி பிரார்த்தனைக்கூடம் முழுதுமாகக் கோலமிட்டிருக்கிறாள். பரிமளா மாலை தொடுத்திருக்கிறாள். ராசம்மா இளமையிலேயே கணவனை இழந்தவள். பூசை செய்யும் பொறுப்பு எப்போதும் அவளுக்குத்தான். வாயால் எந்நேரமும் பொல பொலத்துக் கொட்டும் சமையற்காரி முத்தம்மாகூட பூசை முடியும் வரையிலும் வாய் திறக்காமல் கரங்குவித்து நிற்கிறாள். பிள்ளையாரப்பனுக்கு முன் ஒரு தவலை நிறைய அரிசியும் பருப்பும் போட்டுப் பொங்கி வைத்திருக்கின்றனர். கடலைச் சுண்டல், வடை, உடைத்த தேங்காய், வாழைப் பழம், பேரிக் காய், நாவற்பழம்; பொரி, வெல்லம் எல்லாம் படைத்திருக்கின்றனர்.

பூசைக்கென்று கிடைக்கும் தொகையில் கச்சிதமாகத் திட்டமிட்டுப் பொருள் வாங்கிய ஏற்பாடுகளும் ராசம்மா தான் செய்திருக்கிறாள். அவள் கீழ்த்தரமாகப் பேசுவதில்லை; தன் பொறுப்பைத் தவிர வேறு எந்தப் பிரச்னையிலும் தலையிடுவதில்லை. அன்றாடம் பொருள் எடுத்துக் கொடுத்து. மல்லிகாவிடம் கணக்குச் சொல்லி, இல்லத்தை நேரடியாக நிர்வாகம் செய்யும் ராசம்மாளிடம்தான் மைத்ரேயி பேசுகிறாள். வேறு எவரையும் அவள் பொருட்டாக்குவதில்லை

பூசை முடிந்ததும் அவர்கள் அந்தக் கூட்டத்திலேயே நெருக்கிக்கொண்டு உட்காருகின்றனர். ராசம்மாளும் முத்தம்மாளும் வாழையிலைத் துண்டுகளை அவர்களுக்கு முன் போட்டு பிரசாதத்தைப் பங்கிட்டு வைக்கின்றனர்.

பழத்துண்டுகள், தேங்காய்க் கீற்று, பொங்கல், வடை, என்று எல்லோருக்கும் பரிமாறும்போது, பங்கஜம் ஒளவையார் சினிமாப் பாட்டுக்களை ஒவ்வொன்றாகப் பாடிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு நல்ல இனிமையான குரல். கேட்டுக் கேட்டே எல்லா சினிமாப் பாடல்களையும் அப்படியே பாடுகிறாள். கண்ணுக்கு அழகில்லாத தோற்றமுடையவளாக இருந்தாலும் வாட்டசாட்டமான உடலமைப்புக் கொண்டவள். மதுரைக்குப் பக்கத்துக் கிராமத்திலிருந்து, பட்டணத்துச் சினிமாவில் பாட்டுப்பாட சான்ஸ் வாங்கித் தருவதாகச் சொன்ன நண்பனை நம்பி வந்து, நடுத்தெருவில் நின்றபின் பிழைக்க வழிதெரியாமல் அவலமானவள். ஒரு பொது விடுதியிலிருந்து ‘மீட்க’ப்பெற்று வந்தவள். முறையான பயிற்சி ஏதுமின்றிக் கேள்வி ஞானத்திலேயே அவள் கேட்க மிக இனிமையாகப் பாடுகிறாள். அந்தத் திறமைகொண்டு உலகில் பிழைக்க இயலாதவளாக, சேற்றுக் குட்டையில் விழுந்தபின் இந்த முகம் தெரியாத முச்சந்திக்கு வந்திருக்கிறாள்.

மைத்ரேயி தன் இலையின்முன் வைத்த பண்டங்களைகூடக் கவனிக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்கையில் ராசம்மா கத்துகிறாள்.

“ரோசலின் ! ரோஸி ஏ ரோஸி!”

“எங்கே போயிட்டுது அந்தப் புள்ளே போய்க் கூட்டிட்டுவா, வள்ளி...”

“இந்நேரத்தில் அங்கேதானே நின்னிட்டிருந்தா?” மீனாட்சி எழுந்து சென்று அவளைக் கையைப் பிடித்து அழைத்து வருகிறாள்.

“எனக்கு இதெல்லா வேணான்னா ஏன் கம்பெல் பண்ணுறிங்க? உங்க சாமிக்குப் படைச்சதை நான் சாப்பிட்டாப் பாவம்...” என்று மறுக்கிறாள் அவள்.

மைத்ரேயிக்கு இது மிகவும் புதுமையாக இருக்கிறது.

“சாமிதானே ரோசி? சாமி எல்லாருக்கும் பொது. உங்க சாமின்னா என்ன, எங்க சாமின்னா என்ன ? சாப்பிடு ரோசி.” என்று இதமாக வற்புறுத்துகிறாள் ராசம்மா.

“அதெப்படி எல்லா சாமியும் ஒண்ணாகும்? எங்க சாமி பாவமே பண்ணாதவர். உங்க சாமி எல்லாம் கல்யாணம் கட்டியும் பாவம் செய்தவங்க...”

“ஆண்டவனே, ஏம்மா இப்படி எல்லாம் பேசுறே? சாமி எங்கானாலும் பாவம் செய்யுமா? இப்படில்லாம் பேசாதே ரோசி. ஆண்டவன் எல்லாருக்கும் பொது. காந்தி சொல்லலியா. ஞானம்மா நேத்து ஞாயித்துக் கிழமைப் பேச்சில்கூட இதெல்லாம் சொல்லலியா? உங்க சாமியையும்தான் கும்பிடறோம். இலையில் வந்து உக்காந்து பிரசாதம் வாங்கிக்க ரோசி.”

“என்னை ஏன் கம்பெல் பண்ணுறீங்க? எனக்கு இதெல்லாம் வேண்டாம்.”

“அப்ப இன்னிக்குச் சாப்பிடாம இருக்கப் போறியா நீ?”

“வேணாமே !”

மைத்ரேயி வியந்து நிற்கிறாள். எல்லாத் தனித்தன்மைகளையும் இந்தச் சேலை, அழித்துவிட்ட பிறகு, மதம் என்ற ஒன்றைப் பற்றிக் கொள்கிறாளே, எதனால்? இவளை ரோஸ்லீன் கிறிஸ்தவ மதப் பெண் என்று இனம் கண்டு கொள்ளுமுன், மீட்பு இல்லத்துப் பெண் என்றல்லவா குறிப்பிடுவார்கள்!

அழிக்கக்கூடாதது அழிந்துபோன பிறகு, அழிக்க வேண்டியதை இன்னம் பற்றிக் கொண்டிருக்கிறாளே!

ராசம்மா தருமசங்கட நிலையில் தவிக்கும்போது, சமையற்காரி முத்தம்மாள் “இன்னா தகராறு இங்கே?” என்று கேட்டுக் கொண்டு வருகிறாள்.

அவளுக்கு அப்போதுதான் விவரம் புரிகிறது.,

“நெல்ல நாயண்டி இது. நாந்தான் அப்பவே இவ இப்படிப் பேசுவான்னு தனியே கொஞ்சம் பொங்கலும் சுண்டலும் எடுத்து வச்சிருக்கேனே? ஏண்டி பின்னியும் அத்தெப்புடிச்சி கலாட்டா பண்ணுறிங்க? அதது மதம் சாதி. இன்னாமோ வச்சிருக்கு. அதென்ன மீனு கேக்குதா, கோழிக்கறி கேக்குதா? உங்க சாமிக்குப் படச்சது வாணாங்குது. இன்னாத்துக்கு? அது முன்னொருக்க பூசை பண்ணினப்பவே சொல்லிச்சி. அத்தெ மனசில வச்சுக்கிட்டே எடுத்து வச்சேன், சாமிக்குப் படைக்காம.” உண்மையில் முத்தம்மாள் வைத்திருந்ததாக மறைவிடத்திலிருந்து கூறிக் கொண்டு வந்ததை மைத்ரேயி நம்பவில்லை. ரோஸி மண்டபத்திலிருந்து நழுவியதைப் பார்த்த பிறகே எடுத்து வைத்திருக்க வேண்டும். முத்தம்மா ஆத்திரத்துடன் அதில் எச்சிலைத் துப்பியிருந்தாலும் வியப்பில்லை.

“ஆ..இந்தா, எலையில்லாட்டி தட்டைக் கொண்டு வச்சிக்க. எலையும் சாமி முன்னால வச்சிருந்தாங்க. உனக்கென்னாத்துக்கு...” என்று முத்தம்மா அவளைத் தட்டுக் கொண்டுவரச் சொல்கிறாள்.

“இலையைச் சாப்பிடப் போறாளா? தூக்கி எறியத் தானே போறோம்? இலைபோட்டுக்கிட்டா என்ன ?” என்று கேட்கிறாள் பர்வதம்.

“ஆமாம். இலையே போடு,” என்று ராசம்மா கூறினாலும் முத்தம்மா விடுவதாக இல்லை.

“அது வேணான்னா நாம ஏன் வற்புறுத்தணும்? ஏம்மா? எலை போட்டுக்கறியா?”

அப்பாடி, ‘உம்’ என்று தலையை ஆட்டுகிறாள் ரோஸலின்.

நெஞ்சில், தோள்களில் நெற்றியில் கைவைத்து சிலுவைக் குறி செய்து கொள்கிறாள். பிறகு அவள் இலையில் வைத்ததை உண்ணத் தொடங்குகிறாள்.

மற்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்ப்பதும் சங்கேதங்கள் செய்துகொண்டு சிரிப்பதுமாகத் தொடங்கி குரல்கள் விழ்ந்து விழந்து கொண்டு மோதிக் கொள்கின்றன, சொல்லாயுதங்களால்.

மைத்ரேயிக்கு எல்லாம் பழகிப் போகின்றன. ராஜாவின் நன்கொடையால் எழும்பிய பள்ளியில் மீனாட்சியும் ரோஸலீனும் பத்தாம் வகுப்பில் படிக்கின்றனர். அங்கே அவளும் பள்ளி இறுதி வகுப்பில் இடம் பெறுகிறாள். லோகாவே அவளை வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்று பள்ளியில் சேர்த்துவிட்டுப் பரிவுடன் புத்திமதிகள் கூறியபோது அவள் நெஞ்சு நெகிழ நன்றி கூறத் தெரியாமல் நின்றாள்.

படகு கவிழ அலைகடலில் தூக்கி எறியப்பட்டவளுக்கு ஒரு மரத்துண்டு கிடைத்தாற்போல் அவளுக்கு அந்த வசதி கிடைத்திருக்கிறது. அவள் அலைகடலில் நீந்திக் கரையேற வேண்டும்.

பள்ளிக்கும் இல்லத்துக்கும் இடையே நிறையத் தொலைவு இருக்கிறது. அந்தப் பள்ளியின் வண்டி, இல்லத்தின் பக்கம் வரும்போது அவர்கள் மூவரும் ஏறிக் கொள்கின்றனர். பகலுணவு அங்கு கொடுக்கும் அறக்கட்டளை மதியச்சோறுதான். அது பல நாட்களில் வாயில் வைக்க முடியாததாக இருக்கும். படிப்பு ஏறாதவர்களுக்கு, படிக்க விரும்பாதவர்களுக்கு, அங்கே தையல், பூவேலை செய்தல் ஆகிய கலைகளைக் கற்றுக் கொள்ள வசதி செய்திருக்கின்றனர். இரவு படுத்துக் கொள்ளும் கூடமே பகலில் தொழிற்கூடமாயிற்று. எனவே மாலையில் அவர்கள் பள்ளி முடிந்து திரும்பும்போது, அந்தக் கூடம் அலங்கோலமாக இருக்கும். கூளமாய்க் கிடக்கும். வெட்டுத்துண்டுகள்; நூல் சிக்கல்களுக்குப் பொருத்தமாக தங்கள் அடக்கமற்ற உணர்வுகளை ஒலிகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டும் ஏசிக் கொண்டும் வெளியிட்டுக் கொண்டுமிருக்கிறார்கள். சில நாட்களில் நோயாளிக் குழந்தைகளின் அழுகுரலும் சேர்ந்து ஒலிக்கும். சில நாட்களில் மல்லிகா அலுவலக அறையில் உட்கார்ந்திருக்கிறாள் என்பது புலனாகும். அன்று செயற்குழு உறுப்பினர்களைப் பற்றியோ, மல்லிகாவின் ஆடை அலங்காரங்களைப் பற்றியோ ஒருவரும் பேசமாட்டார்கள். ராசம்மாவிடம் அவர்களுக்கு அச்சமே கிடையாது. அந்தப் பெண்களுக்கெல்லாம் முத்தம்மாவுக்கு உதவியாகச் சமையலறைவேலை வாரத்தில் இரண்டு நாட்களாக மாறி மாறி முறையாக வரும். படிக்கும் பெண்களுக்கு ஞாயிற்றுக் கிழமை மட்டுமே ஒருநாள் முறைவரும். அன்று மைத்ரேயியும் மீனாட்சியும் பரிமாறி, பெருக்கி, துடைத்து, பாத்திரங்கள் துலக்கி மற்றவர்களைப் போல் உதவி செய்கிறார்கள். ரோஸ்லீன் சமையலறை வேலைக்கு வராமல் குழந்தைகள் பகுதிக்கு நழுவிவிடுகிறாள். அவளை யாரும் ஒன்றும் சொல்வதில்லை. ரோஸ்லீனும் மீனாட்சியும் அவளுடன் பள்ளிக்கு வந்தாலும், அவளுடன் பேசிப் பழகுவதில்லை. மைத்ரேயியும் அவர்களுடைய அருகாமையை நாடுவதில்லை. பள்ளி வகுப்பிலும்கூட அவள் தனியாகவே இருக்கிறாள். படிப்பு, படிப்பு, அது ஒன்றே குறி.

அந்தப் பள்ளியும் கைம்பெண்களின் மறுவாழ்வுக்கான இயக்கத்தினரின் முயற்சியில் நடைபெறும் பள்ளியாதலால் அவளைக் காட்டிலும் வயது அதிகமான பெண்கள் அங்கே கல்வி பயில்கின்றனர். என்றாலும் மீட்பு விடுதியிலிருந்து அவள் வருவதால் பலரும் அவளை இயல்பாக நெருங்குவதில்லை. மேலும் அமைதி, ஒழுங்கு, பாடங்களைக் கற்பதிலும் எழுதுவதிலும் அவள் காட்டும் ஆர்வம் எல்லாம் ஆசிரியர்களைக் கவர்ந்ததனால், அவர்கள் அவளிடம் அதிகமான பற்றுவைப்பதாக மற்றவர்களுக்குத் தோன்றியது. அதனாலும் மற்ற மாணவிகளுக்கு அவளை நெருங்கித் தோழமை கொள்ளப் பிடிக்கவில்லை. அநுசுயாவை அவள் பல நாட்களில் பார்த்துச் சிரிப்பதோடு சரி, பேசுவதற்கு நிற்பதில்லை.

இந்த மீட்பு இல்ல வாழ்க்கையில் அவள் மிகவும் ஆவலுடன் வரவேற்கும் நாள் சனிக்கிழமைதான்.

சனிக்கிழமைகளில் பிற்பகல் நான்குமணிக்கு அவர்களுக்கு நல்லுணர்வைப் போதிக்கும் வகையில் பேசுவதற்கு ஒரு பெண்மணி வருகிறாள். அந்த வகுப்புக்குப் புத்தகம் நோட்டு ஒன்றும் கிடையாது. அதில் பரீட்சையும் இல்லை. அலங்கோலமாகி விட்ட புறவாழ்க்கையில் உழன்றபின், கட்டுப்பாடுகளுக்குட்பட்டு ஒழுங்கான வாழ்க்கைக்குத் திரும்பும் அவர்களுக்கு அக உணர்வுகளும் சீராகி நன்னெறி காண அவள் உதவுகிறாள். சென்ற ஒராண்டுக் காலமாகத் தான் ஞானம்மா அங்கு வருவதாகச் சொன்னார்கள்.

அவளைப் பார்க்கையில் தன் உணர்வுகளெல்லாம் குவிந்து ஒருமுகமாவதாக மைத்ரேயிக்குத் தோன்றுகிறது. பளிங்குக் கண்ணாடியை நினைப்பூட்டும் பொன்முகம். ஆழ்ந்த தடாகம் போன்ற கண்கள். அவளுடைய வயசின் முதிர்ச்சியை நரைத்துப் போன பசையற்ற கூந்தல்தான் வெளியிடுகிறது. சதைப்பற்று இல்லாத உயர்ந்த உடல்வாகு. எதேனும் படிக்கும்போது மட்டும் அவள் கைப்பையைத் திறந்து கண்ணாடி எடுத்து அணிவதனால் அவளுக்கு நாற்பது வயசிருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது. செவிகளில், கைகளில், கழுத்தில் கடிகாரம் தவிர ஒரு அணி கிடையாது. மெல்லிய கோடுகளிட்டோ, வெறுமையாகவோ, கடுகு மஞ்சள், அல்லது பாலேடு நிறங்களில் சேலை உடுக்கிறாள். வெள்ளைச் சேலையும் விலக்கில்லை. நெற்றியில் பளிச்சென்ற குங்குமம். அவள் கைம்பெண்ணல்ல என்று காட்டிக் கொடுத்து விட்டு மெள்ளச் சிரிக்கிறது

மைத்ரேயிக்குச் சனிக்கிழமைகளில் அநேகமாகப் பள்ளியில் தனி வகுப்பு இருக்கும். பள்ளி இறுதியாண்டானதால் சனிக்கிழமையை, ரோஸ்லீனையும் மீனாட்சியையும் போல் அவளால் விடுமுறையாக அனுபவிப்பதற்கில்லை. அன்று பள்ளி பஸ்ஸும் வராது. எனவே அவள் நகர பஸ்ஸைப் பிடித்து, ஓரிடத்தில் இறங்கியபின் சிறிது தொலைவு நடக்கவேண்டும். அதற்குச் சில்லறை ராசம்மாள் கொடுக்கிறாள். எது எப்படியானாலும் அவள் ஞானம்மாவின் வகுப்புக்கு வந்துவிடத் துடித்துக் கொண்டிருக்கிறால் பிரார்த்தனைக் கூடத்தை அவளே பெருக்கி, ஓரத்தில் சிறு மேசையும் நாற்காலியும் அவளே போடுகிறாள். குடுவையில் நல்ல மலர்களைப் பறித்து வைக்கிறாள்; நல்ல மேசை விரிப்பை விரித்து வைக்கிறாள்.

ஒரு குறிப்பிட்ட பொருள் எல்லைக்குள் ஞானம்மாளின் பேச்சுக்களை வரம்பு கட்டுவதற்கில்லை. மனித வாழ்க்கையின் இன்றியமையாத தேவைகளில் உடலைச் சார்ந்தவைகளாக உணவு, உறையுள், குடிநீர், காற்று, உடை என்று கொண்டால், உள்ளத்தைச் சார்ந்து, செம்மையான வாழ்வுக்கு தேவையாக இருப்பது நல்லொழுக்கமே. இந்த நல்லொழுக்கப் பயிற்சிக்கு வேண்டிய நெறிகளைப் பற்றியே அவள் அழகாகப் பேசுகிறாள். அன்பு, அஹிம்சை, உண்மை, எளிமை, அஞ்சாமை, உடல் உழைப்பின் பெருமை, அழுக்காறாமை, கடமை உணர்ந்து சுயநல மறுத்தல் என்றெல்லாம் தொடர்ந்து கூறலாம். இந்த வகுப்புக்கு இல்லத்துப் பெண்கள் அனைவரும் கட்டாயமாக இருக்கவேண்டும் என்பது விதி. சிலசமயங்களில் அநுசுயாவும் சமையல்கார முத்தம்மாவும் கூட வருகிறார்கள். மைத்ரேயிக்குத் தெரிந்த ஒரு சனிக்கிழமை செயற்குழுவினர் கூடும் நாளாக இருந்தது. உறுப்பினர் கூடும் இடம் பிரார்த்தனைக் கூடமல்ல. மாடியில் அதற்கென்று தனியாக ஒரு கூடம் இருக்கிறது. விதவிதமான கொண்டைகளும் பட்டுச் சேலைகளும், பறவையொலிகளைப் போன்ற ஆங்கிலச் சொற்களுமாக உறுப்பினர்கள் வந்து மாடியேறிப் போவார்கள். அந்தச் சனிக்கிழமையன்று அவர்களில் சிலர் கூட்டம் முடிந்த பின் ஞானம்மாளின் வகுப்பில் வந்து அமர்ந்தார்கள். அவர்கள் அங்கே வந்தமர்ந்ததும், அத்தனைப் பெண்களின் கண்களும் அவர்கள் மீதே பதிந்தன. ஏனெனில் கொண்டை மாதிரிகள், சேலைகளின் கவர்ச்சி, ஒப்பனையழகுகள் எல்லாம் வெள்ளைப் புடவைகளையும் அன்றாடம் சிறிது தேங்காயெண்ணெயும் ஒரு மரச் சீப்பையும் தவிர வேறெதற்கும் ஆசைப்பட இயலாத அந்த ஏழைப் பெண்களின் மனங்களைச் சுண்டி இழுக்கக் கூடியவையாக இருந்தன. அத்துடன் அவர்கள் தங்களுக்குள் இடையே கசமுசவென்று பேசவும், சிணுங்கிச் சிரிக்கவும் தொடங்கியவுடன் ஞானம் சரேலென்று வகுப்பை முடித்து விட்டுப் போய்விட்டாள்.

அதற்குப் பிறகு அவள் இடையில் எவரும் வந்து போகக் கூடாது. வகுப்புக்கள் இல்லத்துப் பெண்களுக்கு மட்டுமே என்று ஓர் அறிவிப்பை வாயிலில் எழுதி வைத்தாள்.

இந்த அறிவிப்பு செயற்குழுவினருக்கு எட்டி, அவர்கள் அடுத்த கூட்டத்தில் ஞானம்மாளின்மீது நடவடிக்கை எடுக்க முயற்சி செய்ததாகவும், ராஜாவும் லோகாவும் அதற்கு உடன்படவில்லை என்றும் இல்லத்துப் பெண்கள் பேசிக் கொண்டார்கள்.

லோகா ஞானம்மாளிடம் பெருமதிப்பு வைத்திருக்கிறாள்.

அவள் சில சனிக்கிழமைகளில் மாலை ஆறு மணியளவில் அலுவலகத்துக்கு வந்து போவதுண்டு.

மைத்ரேயியிடம், “ஞானம்மா இன்று என்ன பேசினார்?” என்று விசாரிக்கிறாள்.

அவளுக்குப் பாலோ, பழச்சாறோ கொண்டு வந்து கொடுக்கச் சொல்கிறாள்.

ஒரு நாள் மண்டபப் படியில் லோகா அவளைச் சந்திக்கிறாள். “இந்தப் பெண்களெல்லாரும் கொடுத்து வைத்தவர்கள் எங்களைக் காட்டிலும்” என்று புன்னகை செய்கிறாள். “நீங்கள் செயல்புரிபவர்; நான் வெறும் ப்ளூ பிரின்ட்!” என்று நகைக்கிறாள் ஞானம். “ஒவ்வொருத்தியின் மனமும் கல்லில் அறைபட்டுக் கிழிந்த துணியைப் போல் இருக்குமென்று எனக்குத் தெரியும். அதை முண்டும் முரடுமாகவேனும் ஓட்டுப்போட முடியுமோவென்று ஏதேதோ உளறி விட்டுப்போகிறேன். நீங்கள் விரும்பி ஆசைப்பட்டு இங்கே வந்து உட்காருவதை நான் மறுப்பேனா?”

“இல்லை, நீங்கள் கோடு கிழித்தது ரொம்ப சரி. ஞானம்மா, நாங்கள் எல்லாரும் வேறு உலகில் புரளுபவர்கள். பேச்சுத் திறனும், அறிவுத் திறனும் எதற்கெல்லாமோ பலியாகிக் கொண்டிருப்பதைத் தவிர்க்க முடியாமல் உடன் செல்பவர்கள்; இந்த உங்கள் உலகம் தூய்மையாகவே இருக்கட்டும். எங்கள் பிரச்சனைகளையும் கல்மிஷங்களையும் சுமந்து கொண்டு இங்கே வந்து பொழுது போக்கும் நோக்கத்துடன் உட்காருவதை நீங்கள் அநுமதிக்காதது ரொம்ப சரி; ராஜா மிகவும் சந்தோஷப்பட்டார்.”

இந்த உள்ளங்கரைந்த வார்த்தைகளைக் கேட்டு மைத்ரேயி மெய்சிலிர்க்க நின்றாள்.

ஞானம் வந்து போகும் வரையிலும் மைத்ரேயியை ஓர் பரபரப்பு ஆட்கொள்கிறது. சென்ற பிறகோ, அன்றைய வகுப்பில் அவள் பேசிய கருத்துக்களே சிந்தையைக் கிளர்த்துகின்றன. அநேகமாக அவள் பேசி முடித்த பின்னரோ, இடையிலோ, மைத்ரேயி ஏதேனும் ஐயப்பாட்டுக்கு விளக்கம் கேட்கும் வகையில் எழுந்து நிற்கிறாள். அது உண்மையான சந்தேகமே இல்லை. அவளுடன் பேச வேண்டும், தனிப்பட்ட முறையில் அவளை அணுக வேண்டும், அவளைப்பற்றி அறியு முன்தன் வரலாற்றையும் குறைகளையும் அவளிடம் கொட்டி விட வேண்டும் என்ற உந்துதலில் விளையும் செயலே அது.

ஒரு சனிக்கிழமை அவளுக்குப் பகல் பதினோரு மணிக்குத் தான் கணக்கு ஆசிரியை பள்ளியில் வகுப்பு வைத்திருக்கிறாள். வகுப்பு முடிய மூன்று மணியாகி விடுகிறது. அதற்குப் பிறகு வெகுநேரம் பஸ் கிடைக்காமல் காத்திருந்த மைத்ரேயி, ஞானம்மாளின் ஒரு மணி நேரத்தைத் தவறவிடக் கூடாதென்ற பரபரப்புடன் நடந்தே வருகிறாள். மணி மூன்றேமுக்கால்.

பகலுணவு கொள்ளவில்லை என்ற நினைவில்லை. நேராக அவள் புத்தகங்களுடன் பிரார்த்தனை மண்டபத்துக்கு வருகிறாள்.

ஞானம் பேச்சைத் தொடங்கியிருக்கவில்லை. மற்ற பெண்களுடன் ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டிருக்கிறாள். எல்லோரும் ஒருமித்துச் சிரிக்கும் ஒலி படியேறும்போதே புலனாகிறது. விரைந்து படியேறி அவள் கடைசி வரிசையில் அமரும்போது எல்லோருடைய கவனமும் அவள்மீது படிகிறது.

“இங்கே வாம்மா, மைத்ரேயி!”

“மன்னிக்கணும் மேடம், நேரமாயிட்டது...” என்று தலைகுனிந்து நிற்கிறாள் மைத்ரேயி.

ஞானம் புன்னகை செய்கிறாள்.

“நேரமானதுக்கு நான் எப்படி மன்னிப்பது ? சாப்பிட்டாயா?” மைத்ரேயிக்கு சட்டென்று மறுமொழி கூறத் தெரியவில்லை. உண்மையில் பசி எங்கோ சாம்பற் குவியலுள் நெருப்பாக இருக்கிறது. காலையில் எட்டரை மணிக்குக் குடித்த கஞ்சிக்குப் பிறகு குடலில் ஒன்றும் விழவில்லை. அந்த சாம்பற் குவியலை ஞானம் ஊதிவிடுகிறாள்.

“போ, சாப்பிட்டு விட்டுவா. இன்னும் கொஞ்ச நேரம் வள்ளியையும் முத்தம்மாளையும் பாடச் சொல்கிறேன்...” என்று ஞானம் கூறுகிறாள்.

முத்தம்மாளும் வள்ளியும் பாடுகிறார்களா? அவர்கள் பொல பொலவென்று வசை பாடுவதில்தான் வல்லவர்கள் என்றல்லவா மைத்ரேயி நினைத்திருக்கிறாள்?

மைத்ரேயி சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் சமையற் கட்டுக்கு ஓடுகிறாள்.

அவளுடைய சாப்பாடு. புழுங்கலரிசிச் சோற்றில் ஊற்றிப் பிசைய ஒரு காரக்குழம்பு, காய்க் கூட்டென்று ஒரு உருப்புரியா மொத்தை, மோரென்று பேர் படைத்த ஒரு திரவம்.

சமையற்கட்டு துப்புரவாக இருக்கிறது. படிப்பறையில் தட்டோடு வைத்திருக்கிறாளோ சமையற்காரி முத்தம்மா?

ஓடிவந்து படிப்பறையில் சுற்றுமுற்றும் பார்க்கிறாள். இல்லை. சாப்பிடும் கூடத்துக்கே மீண்டும் வருகிறாள். மரத்தட்டு வரிசையில் அவளுடைய இருபத்து மூன்றாம் எண் தடுப்பில் அவளுடைய தட்டும் குவளையும் அவளைப் பரிதாபமாக நோக்குகின்றன.

இன்று அவள் பகல் பட்டினி. இது மைத்ரேயிக்கு முதல் தடவையல்ல. மூன்றாந் தடவை. யாரேனும் அவள் உணவை உண்டுவிடுவார்கள். சமையற்கார முத்தம்மாவே பெருந்தீனிக்காரி. அருகிலே அவளுக்குப் பெண்பிள்ளை என்று குடும்பம் இருக்கிறது. நஞ்சானும் குஞ்சானுமாகச் சமையற்கட்டில் அவ்வப்போது வந்து உறவாடுவதை அவள் பார்த்திருக்கிறாள். இன்று ராசம்மா உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சலாகப் படுத்திருக்கிறாள். இனி ஐந்து மணிக்குத் தேநீர் கொடுப்பார்கள் என்ற நினைவு வருகிறது. சில விடுமுறை நாட்களில் புரை பிஸ்கோத்தும் கொடுப்பார்கள்.

பானையிலிருந்து வெறும் நீரை எடுத்துக் குடித்துவிட்டு அவள் மண்டபத்துக்கு விரைந்து வருகிறாள்.

முத்தம்மா அழகாகப் பிரலாபித்து அழுது கொண்டிருக்கிறாள். “உன்ற பூவான மொகத்திலே பொட்டிட்டு பார்க்கலியே, பொட்டிட்டு பார்க்கலியே, மையிட்டுப் பார்க்கலியே, மையிட்டுப் பார்க்கு முன்னே, மருக்கொழுந்து சூடுமுன்னே, மருக்கொழுந்து சூடுமுன்னே மன்னவனார் பார்க்கு முன்னே, மாபாவியாக்கிவிட்டு மண்ணுக்குப் போனாளே.”

‘ஏ ஏ ஏ’ என்ற ஒலக்குரல் அந்தப் பிரார்த்தனை மண்டபம் முழுவதும் சென்று முட்டுவது போலிருக்கிறது. ஒருவரும் சிரிக்கவில்லை. முத்தம்மா வெறும் பொழுது போக்குக்காக நாட்டுப்பாடல் என்ற பெயரில் பிரலாபித்து அழவில்லை. உண்மையில் மாண்டுபோன தன் செல்வச் சிறுமகளின் சடலத்தை மடியில் போட்டுக்கொண்டு தாயொருத்தி கரையும் துயரப் புலம்பலே அது. ஞானம்மாளின் கண் களும் கசிகின்றன. சூழலே கனக்கிறது.

முத்தம்மா சொற்களை மறந்து உண்மையில் தேம்பித் தேம்பி அழுகிறாள். அந்தத் துயர அலைகள் அங்கு அமர்ந்திருந்தவர் உள்ளங்களிலெல்லாம் சோக இழைகளை மீட்டி விட்டாற் போல் எல்லோரும் அந்தக் கனத்த சூழலைக் கலைக்க மனமில்லாதவர்களாய் ஒன்றியிருக்கின்றனர். அப்போது ஞானம் எழுந்து முத்தம்மாவிடம் வருகிறாள்.

“அழாதே முத்தம்மா. அழாதே..” என்று மெதுவாக முதுகைத் தொடுகிறாள்.

“நினைப்பு வந்திட்டது. சே...!” என்று கண்களைத் துடைத்துக் கொள்கிறாள் அவள்.

“உன் குழந்தையா முத்தம்மா... அழாதே... என்ன வயசு?”

“ரெண்டு வயசு அம்மா. ஆப்பூ வாங்கித் தரியான்னு கேட்டுக்கிட்டே கண்ணை மூடிச்சி.”

“சீக்கு வந்ததா?”

“பாவி பாலு வாங்கக் காசில்லாம பரதேசியாயிருந்தேன். வயித்துக் கடுப்பு வந்து செத்துப் போச்சி. பித்துப்பிடிச்ச மாதிரிப் போயி மறுக்கவிட்ட எடத்துக்கே போயிக் குழில விழுந்தேன்.”

ஒரு குழந்தை, பெண்மையின் உடல் வேட்கையைத் தூய அன்பாக மாற்றிச் சமுதாயத்தில் அவளை நோக்கும் இன்னல் களை எதிர்த்து வாழத் துணிவு கொடுக்கிறதென்ற உண்மையை அவள் விண்டுவைத்தாற் போலிருக்கிறது.

“குழந்தை...மனித குலத்துக்கு இறைவன் தந்திருக்கும் பாலுணர்வின் புனித நோக்கமே அதுதான். கணநேர நுகர்ச்சியின் விளைவைப் பெண் கட்டாயமாக ஏற்றுத்தான் சுமக்கிறாள். அந்தச் சுமையே ஒரு வகையில் அலைகடலின் கரையோரமாக அவள் அசையாது நிற்கும் நங்கூரமாக அமைகிறது. குழந்தை என்ற அந்தச் சுமை வேண்டாத பொறுப்பாக வந்து ஒட்டிக் கொண்டாலும், தாய்மை என்ற இயல்பான இனிய பாச உணர்வுகளை அது எந்த நிலையிலும் கிளர்த்தக் கூடியதாகவும் இருக்கிறது. அந்த ஈரத்தில் அவள் புனிதம் கெடாமலும் வாழ முடிகிறது. அதை இழந்ததும் அலைகடலின் கரையோரம் நிற்க நங்கூரத்தை அவள் இழந்துவிடுகிறாள்.”

ஞானம் தனக்குத் தோன்றியதைத்தான் கூறுகிறாள். பெண்கள் எல்லோரும் ‘ஆமாம், ஆமாம்’ என்று கூறுவது போல் அவளையே நோக்கியிருக்கின்றனர்.

மைத்ரேயியின் உள்ளத்திற்கு அவளுடைய கருத்து முரணாகப்படுகிறது. அப்படியானால் சந்தர்ப்ப வசத்தால் தன்னை இழந்தவள், கட்டாயமாகவேனும் வேண்டாத சுமையினால் தான் இழிவான நிலைக்குத் தன்னை ஆளாக்கிக் கொள்ளாமல் மீள்கிறாளா? இல்லாவிட்டால் தன்னைத் தானே அவள் காப்பாற்றிக் கொள்ள மாட்டாளா?

“எனக்கு நீங்கள் சொல்வது சரியாகப் படவில்லை, மேடம்!” என்று எழுந்து நிற்கிறாள் மைத்ரேயி,

“ஓ...நீ வந்துவிட்டாயா? சாப்பிட்டாச்சா, அதற்குள்?”

“உம்...”

“என்ன சாப்பிட்டாய், சொல்!”

மைத்ரேயி சிறிது நேரம் விழிக்கிறாள். காலையில் அன்றையச் சமையல் என்னவென்ற திட்டத்தை அவள் கேட்கவில்லை.

எனினும், “பாகற்காய் சாம்பார்; கருணைக்கிழங்குக் கூட்டு” என்று ஏதோ நினைவில் கூறி வைக்கிறாள்.

யாரோ ஒருத்திகளுக்கென்று சிரிக்கிறாள். மீனாட்சி, “இன்னிக்கு பீர்க்கங்காய்கூட்டு, வெண்டைக் காய் சாம்பார்!” என்று அறிவிக்கிறாள்.

“ஒரே வழவழ... அதான் நெஞ்சில் நிக்காமல் முழுங்கியிருக்கிறாய். ஆனா, பாகற்காய்க்கும் வெண்டைக்காய்க்கும் வித்தியாசம் தெரியலே , உனக்கு ?”

மைத்ரேயி மறுமொழியின்றி நிற்கிறாள்.

“பசிக்கு பாகற்காயும் கசப்பல்ல; வெண்டைக்காயும் வழவழப்பல்ல” என்று தொடங்கி ஞானம் காந்தியடிகளின் உணவுக் கொள்கையைப் பற்றி விவரிக்கிறாள். “அவர் ஒரு முறை பாகற்காயையும் வெண்டைக்காயையும் கீரையையும் வேகவைத்து அதை ஆட்டுப்பாலில் கலந்து புசித்தாராம். அருகில் இருந்த நண்பரையும் அந்த உணவை ருசிக்கச் செய்தாராம். உணவு உடலுக்கு ஊட்டம் அளிக்கிறது; ஆனால் அந்த ஊட்டம் ஆன்மாவைத் துலங்கச் செய்யும் நோக்குடையதாக இருக்க வேண்டும். உடலின் தேவைகளை மிகுதியாக்கக் கூடிய சுவைகளை வளர்ப்பது மனிதனின் நல்வாழ்வுக்கு இடையூறு செய்வதாகும். நாவுசுவைக்க, மக்களுக்கு மசாலைப்பொருள் சேர்த்தும் எண்ணெயில் பொரித்தும் வறுத்தும் உணவு சமைக்கும் தாய், தன்மக்களின் நல்வாழ்வுக்கு உண்மையில் நலம் செய்யாதவள். ஆனால், அதே தாய், குழந்தைக்குப் பாலூட்டும் போது, தனக்குப் பிடித்த உணவுகளை எல்லாம் ஒதுக்கி, குழந்தையின் உடல் நலனுக்குகந்த எளிய உணவுகளை உண்ணும்போது, இயல் பான தியாகம் செய்கிறாள்...”

தியாகத்தைப் பற்றி ஞானம் மீண்டும் பேச வருவதை மைத்ரேயி ஆதரிக்கவில்லை.

“மன்னிக்கணும் மேடம். பெண்தான் தியாகம் செய் கறாள், செய்ய வேண்டும் என்று நீங்களும் கூட ஒத்துக் கொள்கிறீர்களா? காலம் காலமாகப் பெண் குலத்தைத் தியாகம் தியாகம் என்று சொல்லி அடிமை நிலையிலேயே வைத்திருக்கிறார்கள்...”

மைத்ரேயிக்கு தன் மனதிலுள்ள உணர்வுகளை அழகிய சொற்களாக்கும் பொறுமைகூடயில்லை. குமுறும் உணர்வுகள் இனம் புரியாமல் மோதிக் கொண்டு வருகின்றன. அவளு டைய தாய், அக்கா, மதுரம், அம்மணியம்மாள்.... எல்லோருமே சுயமாக நிமிர்ந்து நிற்க எந்தச் சந்தர்ப்பமுமே கிட்டாமல், தங்கள் சுதந்திரங்களை எந்தவகையான நன்மையுமின்றித் துன்பங்களுக்காகவே பிணித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஞானம் புன்னகை செய்கிறாள்; “உண்மைதான். நான் ஒப்புகிறேன் மைத்ரேயி, ஆனால் பெண்களின் இயல்பான பலவீனங்களே அவர்களுடைய சுதந்திரங்களைப் பிணிக் கின்றன. நகை, நல்லதுணி, வாசனைப் பொருள் என்றால் எத்தகைய அறிவாளியான பெண்ணும் மனமழிந்து போகிறாள். பெண்களை மெல்லியலார் என்று குறிப்பதே இத்தகைய பலவீனங்களை முன்னிட்டுத்தான் என்றுநான் நினைக்கிறேன். இந்த ஆசைகளே அவர்களைக் கண்களை மூடிக் கொண்டு இழிந்து செல்ல வழிகாட்டுகின்றன. இந்த மோகங்களை வெல்லாத வரையில் பெண்ணுக்கு விடுதலை உண்மை யாக இல்லை.”

“அதெப்படி மேடம் ? ஒரு பெண் கண்ணுக்கு அழகாக இல்லைன்னா கல்யாணமாகிறதில்லே, பணம் காசு இருப் பவர்கள் கட்டிக் கொடுத்து வாழ்வை விலைக்கு வாங்க முடியுது. நல்ல நகை, சேலை இல்லாம எப்படி..?” என்று கேட்கிறாள் பங்கஜம்.

“பணத்துக்காகவும் நகைக்காகவும் மணம் செய்து கொள்பவர்களின் வாழ்வு உண்மையில் எப்படி அமைதியும் ஆனந்தமும் கூடியதாக இருக்க முடியும்? முதலில் பெண் இம்மாதிரி ஆசைகளை விட்டொழித்தால் வரதட்சிணை போன்ற கொடிய வழக்கங்கள் கூடக் குறையும். அற்ப ஆசைகளினால் எத்தனை சிதைவுகள் ஏற்படுகன்றன? சிறு வயசில், கவடு புரியாத பருவத்தில் பூவும் பொலிவும் மகிழ்ச்சி யைக் கொடுக்கின்றன. அதை அனுமதிக்கலாம். அதுவே வயசாகும் போது பேராசையும் சுயநலமும் பெறாமையுமாக உருவெடுக்க விடக்கூடாது. எனக்குத் தெரிந்த ஓரிடத்தில் ஒரு குடும்பத் தலைவன் பெண்சாதியின் நகை, சேலை, ஆடம்பர ஆசையினாற் இலஞ்சம் வாங்கிப்பழகி, உண்மை வெளிவரும் நேரத்தில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறான். பெண்ணே, உன்னுடைய வாசனைகளும், வண்ணங்களும் மனசிலிருக்கும் நேர்மையான அன்பிலிருந்து பிறக்கவேண்டும். ஒரு ஆட வனைக் கவருவதற்காக நீ உன்னை அலங்கரித்துக் கொள்ளாதே” என்று காந்தியடிகள் கூறுகிறார்.

“அது எப்படீம்மா? ஒருநாள் வெளியே போனாக்கூட வெளியே கடைவாசலில் தென்படும் துணியிலெல்லாம் ஆசை வரத்தான் வருது. அது எப்படி வராமலிருக்கும் ?” என்று கேட்கிறாள் புவனா.

“அப்ப பூ வைக்கக்கூடாது; பொட்டு வைக்கக்கூடாது. நல்ல சேலை உடுத்தக் கூடாதா?” என்று கேட்கிறாள் பங்கஜம்.

“கூடாதென்று சொல்லவில்லையம்மா. எளிமையான இயல்பு ஒரு அழகு; இனிமையான பேச்சும், கவடற்ற மனசும், அன்பும் தியாகமும் பிறக்கும் உள்ளம் கொடுக்கக்கூடிய அழகை, செயற்கையாக ஆடம்பரப் பொருள்களைக் கொண்டு செய்துகொள்ளும் ஒப்பனையினால் கொடுக்க முடியாது. அது வேறு.”

ஒரு மெல்லிய குரல்: “மிஸஸ் சிவநேசன் நர்மதாதேவி... இவங்களைப்போல...” என்று விள்ளுகிறது.

உடனே வாயை மூடிக்கொண்டு பலர் சிரிக்கின்றனர்.

“ராத்திரி எல்லாம் முடியில் கிளிப்புப் போட்டு சுருட்டிக்கு வாளாண்டி, சிவநேசன்” என்று ஒருத்தி கிசுகிசுக்கிறாள்.

“நம்ம விநோத் பையன் முடி எப்படி அழகாய்ச் சுருட்டியிருக்கு...? அது இயற்கை... என்று” குழந்தைப் பிரிவிலுள்ள நான்கு வயசுச் சிறுவன் ஒருவனைக் குறிப்பிடுகிறாள் அதுசுயா.

மைத்ரேயி எழுந்து நின்று, “அப்படி நகை, சேலை மோகத்தை விட்டொழித்துவிட்டால்மட்டும் பெண் உடனே சுதந்தரமாகிவிடுகிறாளா ? இல்லையே? என்னிடம் நகையில்லை; உயர்ந்த ஆடம்பரங்களில்லை; எனினும் என்னால் நகரின் பகுதிகளில் எந்த நேரத்திலும் தனியாகப் போய்வர முடியுமா?” என்று கேட்கிறாள்.

“முடியாதுதான். துரதிர்ஷ்டவசமாக அப்படித்தான் கூற வேண்டியிருக்கிறது மைத்ரேயி. அதற்குப் பெண்கள் அஞ்சாமை என்னும் ஆபரணத்தைப் பூண்டிருக்க வேண்டும். நேருக்குநேர் சந்தர்ப்பங்களை நோக்கும் துணிவுடையவர்களாக மாறவேண்டும்; அதற்கு முதற்படியாகத்தான் பலவீனங்களாகிய கனத்தை மடியில் சுமக்கக்கூடாது என்றேன். ஒரு ஆடவன் தவறான எண்ணத்துடன் ஒரு பெண்ணை அணுகுகிறான் என்றால், ஒரு வகையில் அந்தப் பெண்ணும் அதற்குக் காரணமாகிறாள். அப்படி அணுக இயலாதவளாய் ஒரு பெண் மாறமுடியும். அந்த நிலையைப் பெண்கள் மனசு வைத்தாலே கொண்டுவரலாம்.” மைத்ரேயி முன்னைக் காட்டிலும் அதிகமான வேகத்துடன், “இதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. பெண்ணுக்குத் தெய்வம் தண்டனை கொடுக்கிறது; சமுதாயமும் சட்டமும்கூட அவளையே குற்றவாளியாக்குகின்றன. இதெல்லாம் எந்த வகையில் நியாயமாகும்? மீண்டும் மீண்டும் நீங்களும் பெண்ணின் மீது பழி சுமத்துகிறீர்கள்! பெண், பெண்ணாய்ப் பிறந்து தொலைந்தது என்று கல்வி மலர்ச்சியும் சமுதாய அறிவும் இல்லாத கிணற்றுத் தவளைகள் பிரலாபிக்கட்டும். நீங்களுமா பெண்ணைக் குறை சொல்கிறீர்கள்? பெண் மட்டும் அவள் விரும்பிய உணவை உண்ண, விரும்பிய பொருள்களை அநுபவிக்க, அன்புகொண்டு வாழ, இயல்பாகத் தோன்றும் ஆசைகளை அடக்கிக்கொள்ள வேண்டுமா? ஏன்? கண்விழிக்காத குஞ்சும், இயற்கையின் நியதிக்கொப்ப அதன் இனத்துக்கேற்ற ஆசையினால் உந்தப்படுகிறது. அந்த ஆசையே தவறு என்று பெண்ணின் விஷயத்தில் மட்டும் ஏன் கொட்டுகிறீர்கள்? காந்தியடிகள் சொன்னார் என்று சொல்லாதீர்கள்! அவரும் ஒரு ஆண். அவரும் தம் மனைவியை அடிமைபோல் நடத்தியிருக்கிறார், ஆமாம்!” என்று சாடுகிறாள். காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை அவள் அண்மையில்தான் படித்திருக்கிறாள்.

முகம் சிவக்க அவள் ஆத்திரத்துடன் கூறிய சொற்கள் சில பெண்களைக் கைகொட்டி உற்சாகமளிக்கத் தூண்டுகின்றன. ரோஸலினுக்கும் மீனாட்சிக்கும் இந்த இல்லத்திலே தாங்களே படிப்பறிவு பெறுபவர்கள் என்றிருந்த மதிப்பை அவள் கரைத்துவிட்டதால் அவளுடைய அதிகப்பிரசிங்கித் தனமான கேள்விகள் ரசிக்கக்கூடியதாக இல்லை. என்றாலும் ஞானம் மைத்ரேயியின்மீது எரிந்து விழவில்லை; சிடுசிடுக்கவில்லை. மாறாகப் புன்னகைதான் செய்கிறாள்.

“உள்ளத்தில் வைத்துக்கொள்ளாமல் துணிவுடன் நீ பேசுவதற்கு உன்னைப் பாராட்டுகிறேன், மைத்ரேயி, உன் கேள்வியிலேயே அதற்கு விடையும் இருக்கிறது. பெண்ணிடம் இயற்கை கூடுதலான பொறுப்பைச் சுமத்தி இருப்பதால் அந்தப் பொறுப்பை மீறும்போது துன்பமும் கூடுகிறது. இயல்பான ஆசைகள் நியாயமாக இருந்தாலும் சமுதாயப் பொறுப்பு பெண்ணுக்குத்தான் அதிகம். தீமைகளும் அநீதியும் இல்லை என்று நான் சொல்லவில்லை. எனினும் தீமைகளை எதிர்த்துப் போராட முதலில் நாம் தயாராக வேண்டாமா? இன்று கல்வி கற்றுப் பலதுறைகளிலும் பணியாற்றும் பல பெண்களுடன் நான் பழகுகிறேன். நூற்றுக்கு அறுபதுபேரும், தங்கள் சொந்த விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளப் பொருள் வேண்டியே பணி செய்கிறார்கள் என்பதை அறிய மனம் குன்றுகிறது. படித்த பல பெண்டிரிடையே படிக்காத எளிய கிராமத்துப் பெண்களிடம் உள்ள பண்பாடுகூட இருப்பதில்லை என்பது வருந்தத்தக்கது. காந்தியடிகள் தாமே தம் மனைவியை அடிமைபோல் நடத்தியதை எண்ணி வருந்தி இருக்கிறார். பெண் விடுதலையை உண்மையிலேயே அநுபவப்பூர்வமாக உணர்ந்து அவளுக்குப் பெருமதிப்புக் கொடுக்க முன்வந்தவர் அடிகள். நீயே இதைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்...”

முத்தம்மாளும் பங்கஜமும் புவனாவும் படபடவென்று கைதட்டத் தொடங்கித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கின்றனர். அவர்கள் இதற்குமுன் கைதட்டி ஆரவாரம் செய்ததில்லை; கேள்விகளும் கேட்டதில்லை. மைத்ரேயி வந்த பிறகு இந்த வகுப்புக்களே ஆர்வம் மிகுந்ததாக மாறியிருக்கின்றன. ஆனால் ரோஸியும் மீனாட்சியும் மட்டும், “அவ ஒரு ‘பிராமின்', அந்தம்மாவும் பிராமின் அதனால்தான் தூக்கிவைக்கிறாள்...” என்று பொருமுகின்றனர்.

10

நகரில் காங்கிரஸ் கண்காட்சியும் கலை விழாக்களுமாக மக்களை விடுமுறைக் காட்சிகளுக்குக் கவர்ந்திழுக்கும் டிசம்பர் மாசம். அந்த இல்லத்தின் ஆண்டுவிழா. அதோடு, அந்த இல்லத்தில் செய்த கைவினைப் பொருள்களை எல்லாம் கொண்டு வைத்து, சமுதாயத்தின் ஒரு பெரிய சாபக்கேடு போன்ற பிரச்னையை அவர்கள் மாற்றிவைக்கச் செயல்படும் இல்ல நடவடிக்கைகளை எடுத்தியம்பும் சித்திர விளக்கங் களையும் கொண்டு அலங்கரிக்க, அவர்களுக்கென்று கண் மைதானத்தில் ஒரு சிறு பகுதி தந்திருக்கின்றனர். ஆண்டுவிழா அவ்வாண்டு பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. மாறாக, வடநாட்டிலிருந்து வெற்றிக் கொடி பிடிக்கும் ஒரு இந்தி சினிமா நடிகர், இல்லத்துக்கு வரப் போவதாக செயற்குழுவிலுள்ள ஒரு உறுப்பினர் நர்மதா தெரிவிக்கிறாள். நர்மதா ஐக்கியநாடுகளின் அவையில் பொறுப்பான பணியிலிருக்கும் ஒரு ஐ.எலி. எஸ்.காரரின் புதல்வி. அவள் நகரின் பெருஞ்செல்வர்கள், சினிமா நடிக நடிகையர் எல்லாருடனும் தொடர்புகொண்டு, நன்கொடை வேண்டி அழைத்து வருவாள். அதற்காகக் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்வதற்கு முன் நிற்பாள்.

காலை பத்துமணியளவில்தான் அவருக்கு வருவதற்கு நேரம் இருக்கிறதென்றும், அவர் வந்து இல்லத்தைப் பார்வையிட்டு, சிற்றுண்டியருந்திச் செல்வாரென்றும், அப்படிச் செல்கையில் ஒரு பெரிய தொகையை நன்கொடையாக அறிவிப்பார் என்றும் பெண்கள் பேசிக் கொண்டிருக்கையில் மைத்ரேயி கண்காட்சிக்கான அட்டைச் சித்திரங்களைத் தயாரிப்பதிலும் எழுதுவதிலும் இரவு பகலாக ஒன்றியிருக்கிறாள். அதனால் சினிமா நடிகரைப் பற்றி அவள் சிந்திக்கவில்லை.

பிரார்த்தனைக் கூடத்தில் பங்கஜமும் புவனாவும் பெரியநாயகியும் அழகாக கோலங்களிடுகின்றனர். இல்லத்து வாயிலில் காகிதத் தோரணங்களும் தென்னங்குறுத்துத் தோரணங்களும் கட்டித் தொங்கவிடுகின்றனர். சித்திரக் கோலங்களில், நடிக வள்ளலே வருக! வருக! என்று பங்கஜம் எழுதியிருப்பதைக் கண்ட மிஸஸ் சிவநேசன் மகிழ்ந்து, இந்தியிலும் ஸ-ஸ்வாகதம்’ என்று எழுதச் சொல்லிக் கொடுக்கிறாள்.

பங்கஜத்துக்கு அவர் தன் பாட்டைக் கேட்க ஒரு சந்தர்ப்பம் அளிக்கமாட்டார்களா என்ற ஆவல். தன் குரலைக் கேட்டு அந்த நடிகர் பரவசமடைவதுபோலும், அப்படியே அவள் அந்த இல்லத்து வாழ்வுக்கு முழுக்குப் போட்டுவிட்டு பம்பாய் செல்வதுபோலும் பின்னணி உலகத் தாரகையாய், லதா மங்கேஷ்கருக்கு வாரிசாக உலகெங்கும் தன் குரல் ஒலிப்பதுபோலும் அவள் பொற்கனவுகளில் மிதக்கிறாள்.

இல்லத்திலிருந்து பிரார்த்தனைக் கூடத்துக்கு வரும் வெட்ட வெளியில் ஒரு சிறுமேடை அமைத்து, அதில் அவனை வரவேற்க ஏற்பாடு செய்கின்றனர். அந்த வெளி முழுவதும் துப்புரவாகப் பெருக்கிச் சுத்தம் செய்கின்றனர். வரும் நடையெல்லாம் தோரணங்கள். மாடியிலுள்ள அறையில் பெரிய மேசையிலமர்ந்து குழுவினருடன் தேநீர அருந்துவான். பிஸ்கோத்து, வறுத்த முந்திரிப் பருப்பு, தோல் ஒட்டி நிற்காத குடகாரஞ்சு, ஆப்பிள் முதலிய பண்டங்களை வாங்கி அங்கேயே அலமாரியில் வைத்திருக்கிறார்கள்.

ரூப்குமாரைப் பார்க்கப்போகும் கிளர்ச்சியில் ஒவ்வொருத்தியும் அதையே பற்றிப் பேசுவதை மைத்ரேயி செவியில் போட்டுக் கொள்ளவில்லை.

கண்காட்சி வேலைகளை முடித்துவிட்டு, அவள் பள்ளிப் பரீட்சைக்காக மும்முரமாகப் படிக்கிறாள்.

முதல் நாள் மாலை, அவள் கூடத்து மூலையில் அமர்ந்து ஒரு கணக்கைப் போட்டுப் போட்டு அடித்துக் கொண்டிருக்கிறாள். கூடம் முழுவதும் துணி, நூல் துண்டு களும் சாயங்களும் பசையும், பெண்களின் அரட்டையுமாக இரைபடுகிறது. மறுநாள் அந்த நடிகருக்குப் போடப் பெரிய மாலை ஒன்று தயாரிக்கின்றனர். அது பூமாலையுமல்ல; காகித மாலையுமல்ல, நூல்களைப் பூக்கள் போல் கத்திரித் தும் சாயமேற்றியும் மிக நேர்த்தியாக உருவாக்கிய மாலை. அத்தகைய மாலை அந்த இல்லத்தின் சிறப்பான கைவினைப் பொருள். அந்த மாலையை அந்நிய நாட்டுச் செலாவணிப் பொருளாக்கலாம் என்று நர்மதா சொல்வது வழக்கம். அப்போது அந்த இல்லமே பெரிய கைத்தொழிற் கூடமாக மாறிவிடுமாம். அந்த மாலையை முடித்து, அவர்கள் அழகு பார்க்கின்றனர்.

யாரும் எதிர்பாராவிதமாக, பங்கஜம் அதைத் தன் கழுத் தில் போட்டுக் கொண்டு ஆடுகிறாள்; பாடுகிறாள். வாட்ட

ரோஇ - 12 சாட்டமான அவள் வடிவுக்கு மாலை சரியாக இருக்கிறது. சரேலென்று ரூப்குமார்போல் நடிப்பதாக ஒரு கேலி இந்தியில் பேசிக்கொண்டு, புவனாவைக் கொஞ்சி அணைத்துக் காதல் புரிகிறாள். இல்லமே கிடுகிடுக்கும்படி குபிர்ச் சிரிப்பு ஒலிக்கிறது. ராசம்மாளும்கூட நின்றுபார்த்துச் சிரிக்கிறாள். தன் நடிப்பை ரசிக்கிறார்கள் என்று அவள் புரிந்து கொள்ளும்படி சிரிப்பும் கையொலிகளும் அதிகமாகவே, அவளுக்கும் வெறி தலைக்கேறுவதுபோல் ஆட்டவேகம் அதிகரிக்கிறது. கேலியிலிருந்து மீறி விரசத்தின் எல்லைக்குள் அவள் பேச்சும், அபிநயங்களும் வருகின்றன. சரேலென்று புவனாவை விட்டுவிட்டு, மூலையில் கணக்குப் போட்டுக் கொண்டு இருக்கும் மைத்ரேயியிடம் வந்து குனிந்து அவளை வேகமாக எழுப்பித் தழுவி ஒரு முத்தம் வைக்கிறாள். சொல்லொணாச் சீற்றம் கொள்ளும் மைத்ரேயி, “சீ! என்ன இது? மிருகமே!” என்று தன் கழுத்தைப் பற்றிய கையைப் பிய்த்தெறிந்து தள்ளுகிறாள். மாலை எகிற, அவள் சுவரில் மோதிக்கொள்ள விழுகிறாள்.

உடனே, சொல்லக்கூடாதென்ற வரம்புக்குள் அடைபட்டுக்கிடக்கும் கீழ்த்தரமான வசைச் சொற்கள் அனைத்தும் பொல பொலக்கின்றன.

“யேய் ! யாருடி மிருகம் ? நீயா, நானா?”

“இரு, இரு, எல்லாரிடமும் சொல்லி நான் என்ன பண்றேன் பாரு ? என்னைச் சுவரில் வச்சு மோதிறியா? உன் யோக்கியதையை நாற அடிக்கிறேன் ? அப்படிச் செய்யாட்டி நான் பங்கசு இல்ல! எலிஸ்டர் வரட்டும்! எனக்குத் தெரியும் நீ யாரைக் கைக்குள்ளாற போட்டுட்டு இவ்வளவு திமிரோட நடக்கிறேன்னு...”

மைத்ரேயி அவளுடைய பேச்சைப் பொருட்படுத்தவில்லை. அவளுக்கு வெறுப்பு கிளர்ந்து குமட்டிக்கொண்டு வருகிறது. அவர்களுக்கு எதிராக அவள் கொடி பிடிப்பாளா?... அவர்கள் சேற்றுக்குட்டையில் அழுந்தி நல்ல காற்றையும் வெளிச்சத்தையும் நுகர்ந்து அறியாதவர்கள். எனவே அந்தக் கூடத்திலிருந்தே அகன்று, உணவுகொள்ளும் தாழ்வரையில் சென்று தன் கணக்கைப்போடுகிறாள்.

அவாகளே கத்தியும் பேசியும் ஒய்ந்து போகிறார்கள். பா_காலையில் எதை நினைக்கவும் நேரமில்லாத பரபரப்பு.

காலை எட்டுமணிக்குள் எல்லோரும் நீராடித் துய்மை பெறு, கஞ்சி மடிப்புச் சீருடைச் சேலையில் வரிசையாக நிற்கிறார்கள். கைகளில் தட்டு விளக்கேந்தி அவர்கள் ரூப்குமாருக்கு வரவேற்புக் கொடுப்பதை செயற்குழுவின் உறுப்பினர்களான நர்மதா, மிஸஸ் சிவநேசன், ஆயிஷாபேகம், இந்திராகுமார் ஆகியோர் வந்து ஒத்திகை பார்த்துவிட்டுப் பாகிறார்கள். காத்துக் காத்து அலுத்த பின் பதினோரு மணியளவில் படகுக் கார் வருகிறது. ரூப்குமாரின் இருமருங்கிலும் மிஸஸ் சிவநேசனும் நர்மதாவும் அணைந்தாற் போன்ற நெருக்கத்துடன் காரைவிட்டிறங்கி புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுக்கின்றனர். அவர்களுடைய ஒப்பனை மைத்ரேயிக்குக் கண்களைக் குத்துகின்றன. மிஸஸ் சிவநேசன் தான் ஒல்லியாக வேண்டும் என்ற முயற்சியைக் கைவிட்டாலும், முன் புறத்தையும் பின்புறத்தையும் நான்கு விரல் அளவே வரும் அகலத்துக்கு மறைக்கக் கச்சை அணிந்தாற் போல் கையில்லாத சோளி அணிந்திருக்கிறாள். நர்மதாவோ, பூரண கும்பங்கள் மேனியிலேயே தெரியும்படியான மெல்லிய துகிலணிந்திருக்கிறாள். அவள் சட்டென்று ஒரு பெண்ணிடமிருந்து தீப ஆராதியை வாங்கி அவன் முன் சுழற்றி நெற்றியில் பொட்டு வைக்கிறாள். பிறகு அநுசுயா சுருட்டை முடிப் பையன் விநோத்தைக் கூட்டிவர அவன் கைகளால் மாலை அணிவிக்க பையனை அவளே உயரத்துக்கிக் கொள்கிறாள். புகைப்படக் கருவிகள் பளிச்சிடுகின்றன.

ராஜாவும் லோகாவும் ஒட்டாமல் நின்று கைத்தட்ட ரூப்குமாரை உள்ளே அழைத்து வருகின்றனர். மாடியில் காப்பியருந்த பங்கஜம், தெய்வநாயகி ஆகியோர் தட்டுக்களைச் சுமந்து படிகளில் விரைகின்றனர். பிறகு பிரார்த் தனை மண்டபத்தின் முன் மேடையில் வரவேற்பு உரை நிகழ்த்துகின்றனர். பங்கஜா பாட்டுப் பாட நிற்கிறாள். அவனுக்கு நேரமில்லை. இரண்டு சொற்கள் இந்தியில் நன்றியாகக் கூறிவிட்டு, இரண்டொரு குழந்தைகளின் கன்னங்களைக் கிள்ளிவிட்டு, பெரிய கும்பிடாகப் போட்டு விடைபெற்றுக் கொண்டு காரில் ஏறுகையில் மீனாட்சியும் ரோஸலினும் ‘ஸ்டைலாக’ நடந்து சென்று ‘ஆட்டோகிராஃப்’ வாங்குகின்றனர்.

அத்துடன் அமர்க்களம் முடிகிறது.

மைத்ரேயி இப்போது யாருடனும் பேசுவதில்லை.

அந்த ஞாயிற்றுக்கிழமை அவளுக்குப் பகல் நேரத்துக் கண்காட்சியில் உள்ள ஸ்டாலில் பணி இருக்கிறது.

அந்த மீட்பு இல்லத்துக் கைவினைப் பொருள்களைப் பார்க்கவோ, விவரம் அறிந்துகொள்ளவோ மக்கள் வரிசை நின்று வருவதில்லை. எவரேனும் உதிரிகளாக வருகிறார்கள். “இங்கே ஒண்ணும் இல்லே...” என்று மற்றவர்களுக்கும் சொல்லி விட்டுப் போகிறார்கள், சுவாரசியமில்லாமல். லோகாவோ மற்ற உறுப்பினர்களோ, யாரையேனும் கூட்டிக் கொண்டு வந்தால்தான் கலகலப்பு. நர்மதா யாரோ சிநேகிதிகளுடன் வந்து அமர்ந்து குளிர்பானம் அருந்திவிட்டுப் போனாள். மைத்ரேயி புத்தகமும் கையுமாக ஒரு மூலையில் அமர்ந்திருக்கையில் வாயிலில் பெரிய வரிசை நீண்டு செல்கிறது. வரிசை, பெருவழித்துறைப் பகுதிக்கோ, அல்லது மின்துறைப் பகுதிக்கோ, அல்லது நெய்வேலிப் பகுதிக்கோ தான் இருக்கும். அந்தப் பகுதிகள் வெகு தொலைவாயிற்றே? அவள் வாயிலில் நின்று வேடிக்கை பார்க்கையில் நெஞ்சு நின்றுவிடும் போன்று துடிக்கிறது. விழிகள் நிலைக்கின்றன.

சுமதி அக்கா, விச்சு, ஜக்கு; அத்திம்பேர்.

விச்சு, அவளை, அவளைப் பார்த்துவிடுகிறான்.

“அம்மா! மைத்தி சித்தி. சித்திம்மா ?...”

மைத்ரேயி விதிர்விதிர்ப்புடன் நகர்ந்து தலைகுனிந்து கொள்கையில், விச்சு ஓடிவந்து அவள் கையையே பற்றிக் கொண்டு குதிக்கிறான். அவள் சட்டென்று அவனை அணைத்துக் கொள்கையில் கண்ணtர் மல்குகிறது. “விடுரா, அசத்து சித்தியுமில்ல ஒண்ணுமில்ல. அவ எங்கே இருக்கா?” என்று கேட்டுவிட்டுச் சுமதி அவளைப் பாராமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு அவன் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு போகிறாள்.

அத்திம்பேர் உடனே வரிசையைவிட்டு விலகி, “நாளைக்கு வந்து அதைப் பாத்தாப் போச்சு. எத்தனை நாழி ‘கய நிற்பது? வாங்க, வேற இடத்துக்குப் போகலாம்!” என்று அவர்களையும் இழுத்துக்கொண்டு செல்கிறார்.

அவளைப் பளாரென்று மேனி வருந்த அடித்து, “ஏண்டி கழுதை, ஒடிப் போனாய்?” என்று கேட்டிருந்தால் அவளுக்கு இவ்வளவு மனம் நொந்திருக்காது. அக்கா! சுமதி அக்கா? சுமதி அக்கா! உனக்குக்கூட அவள்மீது இரக்கம் இல்லையா? குழந்தை பிறந்திருந்தபோது, உன்னை உட்காரவைத்து அவள் தலையில் எண்ணெய் தேய்த்து, சிகைக்காய் தேய்த்து நீர் ஊற்றிப் பணிவிடை செய்திருக்கிறாளே! சேலை துவைத்துப் போட்டிருக்கிறாள். விச்சுவை தலைச் சிரங்கோடு எத்தனை நாட்கள் ஆஸ்பத்திரிக்குச் சுமந்து சென்றிருக்கிறாள்! குழந்தை காட்டிய அன்பைக்கூட மறுத்து இழுத்துப்போக அவ்வளவு பெரிய குற்றமா செய்திருக்கிறாள்? பதினாறு வருஷங்கள் உங்களோடு தொடர்பு கொண்டிருந்த பாசம் இப்படித் துண்டிக் கப்படுமா? நெஞ்சம் உள்ளுற நெக்குவிட்டுக் கதறுகிறது.

மனிதன் தன் இயல்பான உறவு வட்டத்தைவிட்டு அகன்று அகன்று வந்தாலும் அந்த உறவு நெருக்கத்துக்குக் கவர்ச்சி அதிகம்; அதில் இரத்தக் கலப்பு இருக்கிறது. தாய், தந்தை, உடன்பிறந்தவர், பிறகு அண்டை அயலார், உடன் படித்து விளையாடியவர், ஒரு ஊர்க்காரர், ஒரு மொழி பேசுபவர் என்று வட்டங்கள் அகன்று சென்றாலும், மனிதன் ஏதேனும் ஒரு தொடர்பு வட்டத்து உறவு கண்டாலும் ஒட்டிக் கொள் ளும் இயல்பு கொண்டவன். அவள் இப்போது எந்த உறவு வட்டத்துக்கும் வராமல் தனித்து நிற்கிறாள், அன்பும் இரக்கமும் அதுதாபமும் வண்மையும் கூடிய இடத்தில் அவள் அடிவைத்திருக்கவில்லை. அறியாமை, வறுமையின் துயரப் பண்புகள், அதிகமான செல்வத்தில் வளரும் சுயநல ஆசைகள் இவற்றையே அவள் பார்க்கிறாள். மனித உறவுகள் இத் தகைய பண்புகளிடையே நிலைப்பதில்லை.

அவள் அண்டி இருக்கும் விடுதி, சமுதாய வாழ்வின் ஒழுங்கை மீறிச் சந்தர்ப்ப வசத்தாலோ, வேறு வகையாலோ இழிந்த பெண்களின் மறுவாழ்வுக்கு மருந்திட்டு நலஞ்செய்யும் அடைக்கல விடுதிதான்.

ஆனால், மேலே பார்க்கக் கவர்ச்சியாக இருக்கும் கனி, தோல் நீக்கியதும் அழுகல் வாசனையை வெளியாக்குவது போன்ற அநுபவத்தையே அவள் நுகர்ந்திருக்கிறாள். அந்த விடுதியின் உதவி நிதிக்காக ‘பால் ரூம் டான்ஸ்’ ஏற்பாடு செய்கிறார்கள். ஆயிஷா, நர்மதா, மிஸஸ் சிவநேசன் எல்லோரும் அந்த நடனம் ஆடுபவர்கள் என்று அவள் அறிந்திருக்கிறாள். அதில் கலை இருக்குமோ, என்னவோ. ஆண் பெண் இருபாலரும் மகிழ்ந்து கேளிக்கை அநுபவிக்க வகை செய்யும் அந்த மேநாட்டு முறை நடனம், இந்த விடுதியின் நன்னோக்கத்துக்கு ஒத்ததாக இருக்கமுடியுமா என்று மைத்ரேயி நினைத்துப் பார்த்திருக்கிறாள். ஒழுக்கம் என்பது என்ன? அது எந்த எல்லை வரையிலும் இருபாலருக்கும் சில சுதந்திரங்களை அநுமதிக்கிறது என்பதை அவள் சிந்தனை செய்து பார்க்கிறாள். செயற்குழுவினர் இல்லத்தில் கூடும் நாட்களில் புகழ்பெற்ற ஒட்டலில் இருந்து காப்பி, சிற்றுண்டி வருவதை அவள் அறிந்திருக்கிறாள். அவர்கள் சமுதாயத் துக்குச் சேவை செய்கிறார்கள். ஆடம்பரமாக உடுத்தி, அழகாகச் சிரித்து, ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டு உண்ணுகின்றனர்; அங்குமிங்கும் காரில் செல்கின்றனர். அவர்களுடைய நோக்கங்கள், கவலைகளெல்லாம் செல்வாக்கு மிகுந்தவர்கள், சினிமா நடிகர்கள், அரசியலில் முன் நிற்பவர்கள் ஆகியோரிடம் நெருங்கி உறவாடுவதைப் பற்றியே இருக்கின்றன.

அந்த இல்லத்தில் உண்மையில் அநாதைக் குழந்தை களை அதுசுயா, புவனா போன்ற ஏழைப் பெண்கள்தாம் வளர்க்கின்றனர். கூலிக்காகவும் வாழ்வுக்காகவும் தங்கள் சொந்தவிருப்பு வெறுப்புக்களை ஒதுக்கிவைக்கும் கட்டாயத்துடன் யாரோ பெற்று, வேண்டாம் என்று போட்டுவிட்டுப் போன குழந்தைகளை உருவாக்குகின்றனர். இந்தக் குழந்தைகளில் எவரேனும் சிக்கலில்லா மனப்பாங்குடன், தாய் தந்தை அரவனைப்பைப் பெற்றுப் புகழ் பெறும் சிறப்போடு வளருவார்களா ?

ஏழைகளும் அபலைகளுமான பெண்களை வைத்துக் கொண்டு, ஒழுங்கீனமாக வாழ விரும்பும் ஆண்களுடைய ஒத்துழைப்புடன் யாரோ வியாபாரம் செய்தால் அதற்கு அந்த அபலைப் பெண்கள் மட்டுமா குற்றவாளிகள்? வாடிக்கையாளரும் வாடிக்கை இல்லாதவரும் உற்சாகம் நல்கித் தானே பெண்கள் சீரழிந்திருக்கிறார்கள்? அந்தக் குட்டையிலிருந்து மீட்டுவந்து, இங்கே எந்த எதிர்கால வண்மையைக் காட்டி இந்தக் குட்டைக்குள் இவர்களை வைத்திருக்கிறார்கள்? நல்ல வளமும் அழகுமுடைய பெண் ஒருத்தி மனம் விரும்பிக் காதல் கொண்டு ஒருவனைக் கைப்பிடித் திருந்தும் யானை விழுவதற்காகக் கருப்பங் கழிகளை நட்டு வைத்த பள்ளத்தைப்போல் அந்தத் திருமண உறவு முறிந்து போவது நிகழ்கிறது. ஏற்கெனவே தூய்மையில்லாத ஒருத்தியை எவன் வந்து கைபிடித்து, உயரத்துக்கி நல்வாழ்வு கொடுக்கப் போகிறான். அன்றி, இவர்கள் தராசுத்தட்டை ஈடு செய்யத் தங்கள் தங்கள் பங்குக்குப் பத்தாயிரம் பதினைந் தாயிரம் கட்டிக் கொடுத்து இந்த அபலைப் பெண்களுக்கு வாழ்வை வாங்கிக் கொடுக்கப் போகிறார்களா?

அக்காவின் சுடு சொற்கள், இப்போது நிலாவில் ஒளிர்ந்த சொற்களாகத் தோன்றுகின்றன. அம்மா என்ற ஒருத்தியின் நிலையில் அவள்தான் பால் புகட்டிப் பாராட்டிச் சீராட்டி வளர்த்திருக்கிறாள். அந்த அக்கா அன்று வந்திருக்கவில்லை. அத்தனை நாட்கள் சென்றபின் கருவுற்றிருந்தது உண்மை யானால் அக்காவுக்கு ஒரு குழந்தை பிறந்திருக்குமே?.

குழந்தை... விடுதியில் தொட்டில் தொட்டிலாக இருக்கும் குழந்தைகளைக் கண்டாலே அவளுக்கு வெறுப்பு. என்றேனும் அவளுக்குச் சில மணி நேரங்களுக்குக் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பணியை அநுசுயா கொடுப்பதுண்டு. அப் போது அந்தக் குழந்தைகளைத் தொட்டுத் துணி மாற்றக்கூட அவள் கூசியிருக்கிறாள். ஆனால் அக்காவுக்குப் பிறந்திருக்கும் குழந்தையை நினைத்தால் அவளுக்குத் தாபம் மேலிடுகிறது.

அன்றிரவு அவளுக்கு இரவில் படுக்கை கொள்ளவில்லை, உறக்கம் என்ன முயன்றும் வரவில்லை. ஒரு அறியாத பெண், சொல்லப் போனால் இயல்பூக்கக் கிளர்ச்சியில்தான் தன்னை இழந்தாள். அதற்கு இத்தகைய தண்டனை மிகமிகக் கொடிதென்று தன்மீதே கழுவிரக்கம் கொண்டு கண்ணீர் வடிக்கிறாள். சிறிது நேரம் அழுதபிறகு தன் மீதே அவளுக்கு வெறுப்பு மேலிடுகிறது. இல்லத்துக்கு அவள் எதற்காக வந்தாள்? படிப்புக்கு ஓர் சந்தர்ப்பத்தை நாடி. அந்த சந்தர்ப்பம் அவளுக்குக் கிடைத்திருக்கிறது. அவளுடைய இலட்சியம் தொலைவில் தெரியும் விளக்காக இருக்கிறது. அந்த விளக்கை அவள் பெற்றுக் கையிலேந்தும் வரையிலும் இருட்டில் இடறி விழாமலும் குண்டு குழிகளைக்கண்டு சோரா மலும் நிதானமாக ஒரே குறியாக அவள் நடக்கத்தான் வேண்டும். கல்வி கற்க வேண்டும், கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற தன்னுடைய இலட்சியம் எங்கிருந்து பிறந்தது என்று தன்னையே ஆராய்ந்து கொள்கையில் சுயநம்பிக்கையுடன் தன் கால்களை ஊன்றியே எழும்பிப் பிழைக்க வேண்டும் என்ற ஆதாரத்திலிருந்து மட்டும் அது பிறக்கவில்லை என்று தெளிகிறாள். கண்ணபிரானின் வீட்டில் அடிவைத்து, அந்தப் பத்திரிகைக் குவியல்களையும், அவர்கள் பேச்சையும், குழந்தையின் மழலைஈறாக அவர்கள் தெளித்த கருத்துக் களையும் அவள் கண்டு கேட்டு உணர்ந்த பிறகுதான் அவளுக்கு உண்மை தெளியும் ஆர்வம் வளர்ந்தது.

பர்வதம் பிரசவித்துக் குழந்தை இறந்துவிட்டது. அவள் அதற்குப் பிறகு ஒரு மாசமே அங்கிருந்தாள். அவளுடைய ஒன்றுவிட்ட அத்தை என்று ஒரு அம்மாள் அவளை அழைத்து சென்று விட்டாள். அவள் சென்ற பிறகு அந்த அறையில் அவள் தனியாகவே படுத்திருக்கிறாள். முகம் எரியக் கண்ணீர் விட்டவள் குளியலறைப் பக்கம் இருட்டிலே சென்று முகததைக் கழுவிக்கொண்டு படுக்கவரும்போது, தன் தலையனையில் யாரோ படுத்திருப்பது கண்டு திடுக்கிட்டாற் போல் விழிக்கிறாள்.

படுத்திருப்பவள் யாரோ? “யாரடி என் படுக்கையில் படுத்திருக்கிறாய்?” என்று அதட்ட அஞ்சி நிற்கிறாள். எவளோ வேண்டுமென்று செய்த செயல் இது. எனவே, தனக்கு ஒரு போர்வையும் தலையணையும் வேறு எடுத்துக்கொண்டு வந்து படுக்கலாம் என்றெண்ணி மைத்ரேயி கூடத்துக்கு வருகிறாள். யார் அங்கே வந்து படுத்திருக்கிறாளோ, அவளுடைய போர்வை தலையணை இருக்குமே?

அவள் அரிக்கேன் விளக்கை எடுத்துக்கொண்டு பார்க்கையில் யார் கையிலோ கால்பட்டுவிடுகிறது.

மீனாட்சி; “பாதி ராத்திரிலே என்னடி தேடுறே?...”

“ஒண்னுமில்லே. ஒரு தலையணை போர்வை....என் படுக்கையிலே யாரோ வந்து படுத்திருக்கிறா...”

அவள் மறுமொழியேதும் கூறவில்லை. திரும்பிப் படுக்கிறாள். தலையணை போர்வை எதுவும் கிடைக்கவில்லை. மார்கழி மாதமாதலால் சில்லென்று இருக்கிறது. ராசம்மா சமையற்கட்டு வாயிற்படிக்கு நேராகக் குறட்டை விட்டுத் துரங்குகிறாள்.

மைத்ரேயி அறைக்கு வந்து மெள்ள அந்தத் தலையணையை ஒருபுறம் இழுத்துக்கொண்டு நெருங்கிப் படுக்க முயலுகிறாள். அவள் அப்படி இழுக்குமுன் விருட்டென்று எழுந்து உட்காரும் பங்கஜம் நாவில் நரம்பின்றி வசை பாடுகிறாள்.

மைத்ரேயி வாயடைத்துப் போகிறாள்.

“என்ன பங்கஜா, தூக்கக் கலக்கமா? ரொம்பப் பேசாதே. என் படுக்கையில் வந்து படுத்திட்டுப் பேசறே?”

“மூடுடி வாயை, கேடு கெட்டவளே ! உன் யோக்கியதை தெரியாதா எங்களுக்கு ? யாருடீ தூக்கத்தில் பேசுறவ, துாக்கமாம்!” என்று கீழ்த்தரமான சொற்களைக் கொட்டு கிறாள் பங்கஜம்.

மைத்ரேயி அத்தகைய சொற்களை அதற்குமுன் கேட்டதில்லை. இனிமையாகக் குரலெடுத்துப் பாடும் பங்கஜமா இப்படி வெறி கொண்டு வசைபாடுகிறாள்: ராசம்மா எழுந்து வருகிறாள் இந்த ரகளையில்,

“என்ன ஆச்சு இப்ப?..”

மைத்ரேயி வாய் திறக்குமுன் பங்கஜம் அழுகுரலில் மைத்ரேயி அவளை அவள் படுக்கையிலிருந்து இங்கே இழுத்து வந்ததாகக் கூறும்போது அவள் அதிர்ந்து நிற்கிறாள்.

“இல்லே ராசம்மா, நான் எதற்காக அப்படிச் செய்யப் போகிறேன்?...” என்று உண்மையைக் கூறினாலும் அதை மறுத்துப் பொய்யை மெய்போல் சாதித்துக்கொண்டு அழுகுரலில் ஊளையிடுகிறாள் பங்கஜம்.

“பாதி ராவிலே சத்தம் போடாதே. இப்ப உன் இடத்தில் போய்ப்படு....” என்று சமாதானம் கூறி அவளை அனுப்பி விட்டு ராசம்மா தன் படுக்கையை மைத்ரேயியிடம் கொண்டு வந்து போட்டுக் கொள்கிறாள். அன்றிரவு முழுவதும் மைத்ரேயி உறங்காமல் தன் தலைவிதியை நொந்து கண்ணீர் வடிக்கிறாள்.

11

விடுமுறை முழுவதும் பகலில் கண்காட்சி ‘ஸ்டாலும்’ இரவில் மட்டுமே விடுதியுமாகப் பொழுது செல்கிறது. அவள் யாருடனும் பேசுவதில்லை. கண்காட்சியில் அநுசுயாவோ, புவனாவோ பொறுப்பைப் பகிர்ந்துகொள்ள வரும்போதுகூட தேவைக்கு அதிகமாக அவள் பேசுவதில்லை. இரவில் ராசம் மாளே அவளருகில் படுத்துக் கொள்கிறாள். இறுதியாண்டுத் தேர்வை எண்ணி அவள் அநேகமாக எப்போதும் படித்துக் கொண்டே இருக்கிறாள். வேறு எந்த நடவடிக்கையைக் குறித்தும் அவளுடைய பிரக்ஞை கூர்மையாகச் செயல்படவில்லை.

எனவே, பெண்கள் தன்னைப்பற்றி என்ன பேசினார்கள், என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதையே அவள் அறிய வில்லை.

அடுத்து செயற்குழு மாடியில் கூடுமுன் சில உறுப்பினர் களிடம் அந்தப் பெண்கள் கூட்டமாகச் சென்று பேச்செழாமல் ஒதுங்கி நாணி நின்று சாகசம் செய்ததையும், பிறகு எழுத்து மூலமாக தங்கள் குறைகளைத் தெரிவித்ததையும் அவள் அறியாள்.

அன்று மாலை அவள் பள்ளியிலிருந்து திரும்பும் நேரத்தில் அலுவலக அறையில் லோகாவும் டாக்டர் மித்ராவும் இருக்கக் காண்கிறாள்.

டாக்டர் மித்ரா இந்த இல்லத்தின் மருத்துவர். குழந்தை களைப் பார்க்க நாள்தோறும் வருவதுண்டு. வயது முதிர்ந்த அந்த அம்மாள் மிக அன்பாகப் பேசுவார். அவருடைய சிரிப்பே அமுதம் தோய்ந்தாற்போல் இருக்கும்.

லோகா அவளைக் கண்டதும் அழைக்கிறாள். “ஸ்கூல் பஸ் இவ்வளவு சுருக்காக வருகிறதா என்ன ?”

“இல்லை மேடம், எனக்கு கிளாஸ் இல்லை. ஸ்டடி லீவுதான் இப்ப.”

“நான் அங்கேயுள்ள ஹாஸ்டல் பெண்ணுடன் சேர்ந்து படிக்கப் போனேன். அதனால் வந்துவிட்டேன். இன்னிக்கு எனக்கு ராத்திரி கிச்சன் ட்யூட்டி...”

“தனியாகவா வருகிறாய்?”

“நான் நடந்ததுதான் வரேன் மேடம்.”

லோகா அவளை ஏற இறங்கப் பார்க்கிறாள். “நீ தனியாக வருவதும் போவதும் சரியில்லை. காத்திருந்து பஸ் வரும் போது தான் திரும்பவேணும். சரி, போய் டாக்டருக்கு லைம் ஜூஸ் கொண்டு வா!’ என்று அனுப்புகிறாள்.

லோகாவிடம் இந்தக் கடுமையை அவள் எதிர்பார்க்கவில்லை. அநுசுயாவும் புவனாவும். சுதந்திரமாக வெளியே பஸ்ஸில் செல்கின்றனரே ஒழிய, உண்மையில் அவள்தான் விடுதியின் மற்ற பெண்களைத் தவிர சுதந்திரமாகப் பள்ளிக்கு சென்று வருகிறாள். ரோஸியும் மீனாட்சியும் பஸ் வரவில்லை என்றால் பள்ளிக்கே செல்வதில்லை. “ஜெயில் புள்ளிகளைப் போல் போகணும் வரணும்..” என்று அநுசுயா கூறியது செவிகளில் ஒலிக்கிறது.

சமையற் பகுதிக்குச் சென்று முத்தம்மாளிடம் எலுமிச்சம் பழமும் சர்க்கரையும் கேட்டு வாங்கிப் பிழிந்து கரைத்துக் கொண்டு மைத்ரேயி அலுவலக அறைக்குத் திரும்பி வருகிறாள்.

அங்கு டாக்டரையும் காணவில்லை; லோகாவும் இல்லை.

மல்லிகா மட்டுமே அவளை நோக்காமலே அலட்சி யமாக “மேலே இருக்காங்க போலிருக்கு அங்கே கொண்டு போ” என்று பணிக்கிறாள்.

மைத்ரேயிக்குப் படியேறும்போதுகூட அவர்கள் ஏன் மாடிக்குப் போனார்கள் என்று புரியவில்லை. அந்த முழு வட்டத்திலும் லோகா ஒருத்தியே சிறிதேனும் உண்மையான ஆர்வத்துடன் பொறுப்பை நிர்வகிப்பதாக அவள் கருதுகிறாள். அந்த வேஷக் கலப்பற்ற உண்மையினாலேயே லோகாவின் செயல் முறைகளும் நடப்பும் மற்றவர்களுக்குப் பிடிப்பதில்லை என்று மைத்ரேயி புரிந்துகொண்டிருக்கிறாள். லோகா இயல்பை மீறி யாரிடமும் குழைந்து பேசுவதில்லை. முறைகேடென்று தெரியவந்தால் அதை ஒளித்து வைக்காமல் அங்கேயே உடைத்துப் பரிகாரம் தேடுவது அவள் வழக்கம். அவள் தன் அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்கு வருந்துகிறாள். அவள் மீது ஏற்கனவே மற்ற பெண்கள் பொறாமை கொண்டு நடக்கின்றனர். எனவே அவளிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றெண்ணியவளாக மாடிக்கு வருகிறாள். மாடி அறைக்கதவு சாத்தினாற் போலிருக்கிறது. அவள் மெதுவாகத் தட்டுகிறாள்.

“எஸ்...” என்று டாக்டர் குரல் கொடுக்கிறாள். உள்ளே அவள் மட்டும்தான் நீண்ட மேசைக்கருகில் அமர்ந்து இருக்கிறாள்.

அந்தப் பெரிய அறைக்கு மைத்ரேயி எப்போதோ சுத்தம் செய்வதற்காகத்தான் வந்திருக்கிறாள். பளிச்சென்ற வினோலி யம் விரிப்பினால் புதுமை பெற்ற தரையில் கால் வைக்கவே கூசுகிறது. பக்கத்துக்கு எட்டாகப் பதினாறு நாற்காலிகளும் மெத்தை தைத்த வசதியான இருக்கைகள். அவ்வளவு நீளம் இல்லாது போனாலும் எட்டு பேர் அமர்ந்து உண்ணக்கூடிய மேசை, மெருகு குலையாமல் மின்னுகிறது. ஓரத்தில் ஒரு அலமாரி, சுவரில் வரிசையாகப் படங்கள் இருக்கின்றன.

காந்தியடிகளின் படம் பெரியது. அடுத்து நேருவின் படம், அதை அடுத்து முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த பெண்மணியின் படம்.

அவள் உள்ளே வந்ததும் டாக்டர் எழுந்து கதவைச் சாத்துகிறாள். பழச்சாற்றைக் கையில் வாங்கிக் கொண்டு டாக்டர் மித்ரா கனிவாகப் புன்னகை செய்து அவளுடைய கையை ஆதரவாகப் பற்றும் போது, மைத்ரேயிக்கு இனம் புரியாத அச்சமும் திகைப்பும் மேலிடுகின்றன. அவளுடைய மண்டையில் ஆயிரம் கேள்விகள் விஸ்வரூபம் எடுக்கின்றன. அந்த இல்லத்தில் நுழைந்தபோது, அவள் முறைப்படி ஒரு முறை மருத்துவ பரிசோதனைக்குள்ளானதுண்டு. டாக்டர் மித்ராதான் செய்தாள்.

இப்போது...

“என்ன டாக்டர்?...இப்ப மெடிக்கல் டெஸ்டா?”

“இல்ல இல்ல, நீ உக்காரு, உன்னை ஒண்ணும் செய்யப் போறதில்ல. கொஞ்சம் பேசலாம்னு...”

மறுபடியும் கனிவான நோக்கு; சிரிப்பு.

‘பேசுவதற்குக் கதவைச் சாத்துவானேன்?’ அவளுக்கு கேட்க நாவெழவில்லை. ஆனால்...

“உனக்குக் கல்யாணம் ஆயிருக்குல்ல ?”

“அந்தத் துயரக் கதையை இப்போது எதற்குக் கேட்கிறீர்கள்” என்று வினவுகின்றன. அவள் விழிகள். குனிந்த படியே “ஆமாம்” என்று தலையாட்டுகிறாள்.

“எத்தனை மாசம் இருந்தாய் அவனுடன் ?”

“நாலு மாசம்....”

“சந்தோஷமாக இருந்திருப்பாய் இல்ல?”

“சந்தோஷமாக இருந்திருந்தால் இங்கே வந்து அல்லல்படுவேனா...”

“பாவம் நீ இரவெல்லாம் நினைச்சு நினைச்சு அழுகிறா யாமே ? நீ சரியாக இரவு தூங்குகிறதில்லையாமே?”

“என்னது? நீங்க என்ன கேட்கறீங்க டாக்டர் ? நான் மடத்தனமாக ஆளைப் புரிஞ்சுக்காமப் போய் பாதாளத்தில் விழுவது போல் விழுந்தேன். நல்ல வேளையாக அங்கே ஒரு அம்மாள், “உன் போன்ற நல்ல குலப் பெண்கள் வந்து நல்ல படியாக வாழ முடியாது. போய் எங்கேயானும் பிழைத்துக் கொள்ளுன்னுச் சொன்னபோது பயந்து ஓடிவந்தேன். வீட்டில் அக்காவின் கணவர் என்னை அடித்து விரட்டினார். பிறகு லோகாம்மாவிடம் வந்து அண்டினேன்...”

அவள் முகம் சிவக்க, கண்கள் தளும்ப, மென்மையான உணர்வுகள் சிதையும் வேதனையில் விடுவிடென்று பேசும் போது டாக்டரின் முகம் மேலும் கணிகிறது.

“தப்பாக எடுத்துக் கொள்ளாதே. இங்குள்ள பெண்கள் உன்மீது மிகவும் இழிவான வகையில் குற்றம் சாட்டி யிருக்கிறார்கள்...”

“என்ன குற்றம் சாற்றினார்கள் டாக்டர்? நான் வெளியே பள்ளிக்கூடம் போய் வரும் நேரத்தில் யாரையேனும் சந்திக் கிறேன்னு என்மீது அடாப்பழி சுமத்துகிறார்களா? கடவுளே, நான் ஏன் இங்கே வந்தேன் ? நான் இங்கு உள்ளவர்களை அடிமனசிலிருந்து வெறுக்கிறேன். இவர்கள் விரசமாகப் பேகம் போதெல்லாம் கூசிப் போகிறேன். இவர்களுடைய போகம் செய்கைகளும் கேலிகளும் சாடைகளும். நான் அடியோடு வெறுக்கிறேன். உங்களிடம் என்ன பழி சுமத் தினார்கள், டாக்டர் ? நான் கருவுற்றிருக்கிறேன் என்று கூறினார்களா? எனக்கு நோயிருக்கிறதென்று சொன்னார் களா? அவர்கள் உங்களிடம் என்ன பழி சுமத்தி என் மீது உங்களைச் சந்தேகப் படச் செய்திருக்கிறார்கள்...”

நெஞ்சத்துக் குருதிக்களத்திலிருந்து செந்தீமலர்கள்போல் அவளுடைய கேள்விகள் டாக்டரின் செவிகளில் வந்து படிகின்றன.

அவள் தன் அன்பான கைகொண்டு மேனி துடிக்க நிற்கும் அவள் கையை அழுந்தப் பிடிக்கிறாள். “ஷ்...ஒண்ணு மில்ல, ஒண்னுமில்ல. நான் நம்பல. லோகாவும் நம்பலே I am Sorry my dear -இதை மறந்துவிடு...நீ இங்கே இருக்க வேண்டியவள் அல்ல. உன்னை வேறு தகுதியான இடத்துக்கு நான் அனுப்பச் சொல்றேன்...”

“ஒரு அப்பாவின்னா யார் வேணுமானாலும் என்ன வேணுமானாலும் சொல்லலாம் கேட்கலாம்னு நினைக்கிறாங்க...”

தன் நடத்தைமீது அவர்கள் சந்தேகம் கொண்டார்கள் என்ற செய்தி உறுதியான பிறகு அவளுக்கு அடக்க இயலா மல் கண்ணிர் பெருகுகிறது.

“ஷ...நோ...நோ...மை சைல்ட். அழக்கூடாது. கம் ஆன் (come on) லெட் அஸ் ஷேர்(let us share)” என்று நீர்ப்பானையின் மீது கவிழ்த்திருந்த டம்ளரை எடுத்து பாதிப் பழச்சாறை அதில் ஊற்றுகிறாள்.

“இந்தா நீ பாதி, நான் பாதி அருந்துவோம்.”

“எனக்கு வேண்டாம், டாக்டர்...”

“நான் சொன்னால் கேட்கவேணும். இவ்வளவு மென்மையான தோலை வச்சிட்டு இந்த உலகில் எப்படிப் பிழைக்கிறது.”

அப்போது வெளிக்கதவு மெல்ல ஓசைப்படுகிறது.

“எஸ். எஸ். வா, லோகா.......”

லோகாதான். அவள் எதுவுமே கேட்குமுன் டாக்டர் மித்ரா ஆங்கிலத்தில் சரமாரியாகப் பேசுகிறாள். கடுமையாக கோபிக்கிறாள்.

“நான் ஒண்னு சொல்றேன் லோகா, இங்கே இருக்கும் சில கேர்ள்ஸ் ஆர் ராட்டன். நீ அதுங்களைத் தனியே பிரிச்சு வச்சாலும் கஷ்டம், சேர்த்தாலும் இப்படித்தான். தானே விழுந்து அடிபட்டுக்கிட்டா குழந்தைக்கு ரொம்ப நோவில்ல. ஆனா அரிவாளை எடுத்து வெட்டிட்டு நீ என்ன வைத்தியம் பண்ணாலும் மனசில் அந்த வடு பயங்கரமாய் விழுந்துடும். யாரானும் என் கம்ப்ரன்ஸ் இல்லாதவங்க அடாப்ட் பண்ணிக்கறப்பல இருந்தா இவளைப் பிரிச்சுவிடு.” என்று கூறிவிட்டு விடைபெற்றுக் கொள்ளாமலே படி இறங்கிப் போகிறாள்.

சில விநாடிகள், கொல்லென்று அமைதித்திரை தொங்குகிறது. கண்ணிர்க் கறைபடிந்த முகத்தை நிமிர்த்தி மைத்ரேயி லோகாவை நேருக்கு நேராகப் பார்க்கிறாள். அடிபட்ட புலியின் சீற்றம் அவளுடைய விழிகளில் ஒளிர்கிறது.

“நடந்ததை மறந்துவிடு. முகத்தைப் போய்க் கழுவிக் கொள். இம்மாதிரி இடத்தில் இதெல்லாம் தவிர்க்க முடியாது. நீ போகலாம்...”

லோகா ஒரு கண நெகிழ்ச்சியை உலுக்கி உதறித் தள்ளிவிடுகிறாள். படியிறங்கி வரும்போது மைத்ரேயிக்குத் தலைசுற்றுவது போலிருக்கிறது. என்ன பழியைச் சுமத்த, டாக்டர் மித்ராவை அழைத்துப் பரிசீலனை செய்ய முயன்றார்கள்? அவள் கள்ளத் தொடர்புகொண்டு சூலுற்றிருக்கிறாள் என்று கூறியிருப்பார்களோ? அதற்கான என்ன அறிகுறிகளை அவர்கள் அவளிடம் கண்டார்கள்? அவள் சில நாட்களில் பகாசுரப் பசியோடு புழுக்கட்டிய மாவின் கூழைக்கூட விழுங்குகிறாளே ? சொல்லப் போனால் அந்தக் கூழைத்தான் அவர்கள் மிகுதியாக அவள் பங்குக்கு வைக்கிறார் கள்? அவள் ஒரு நாள் கூட வாந்தி எடுக்கவில்லை; தூங்கி வழியவில்லை.

உலகத்துக் கவடுகள் ஒட்டியிராத மனசு பேதமை மிகுந்த தாய், எதையெல்லாமோ நினைத்து வேதனைப்படுகிறது. டாக்டர் மித்ரா கடுமையாக ஆங்கிலத்தில் பேசியபோது, ஒரு சொல் அவளுக்குப் புரியாததாக ஒலித்தது. அதன் பொருள் நன்றாக அவளுக்குப் புரியவில்லை எனினும், பாலுணர்வு சம்பந்தப்பட்ட சொல் அது என்று மட்டும் புரிந்து கொள்கிறாள். பாலுணர்வின் விகாரங்களில் சிக்கி, வெளியே கள்ளக் காதலனைத் தேடிச் செல்கிறாள் என்று கூறியிருப்பார்களோ? அதை டாக்டரைப் பக்குவமாக விசாரிக்கச் செய்த பின் தண்டனை கொடுக்கலாம், என்று லோகா நினைத்திருப்பாளோ?

அவளைப் பார்த்தால் பிறர் அப்படி நினைக்கும் படியாகவா இருக்கிறாள்?

எனினும் அவள் கேள்விப்பட்ட அந்தச் சொல்லுக்குப் பொருளைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவளைக் குடைகிறது. அகராதியைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். அகராதி அவளிடம் இல்லை. சேவா நிலையப் பள்ளியின் மாணவர் விடுதியில் இருக்கும் அவளுடைய வகுப்புத்தோழி வத்சலாவிடம் கேட்க வேண்டும்.

வத்சலாவுக்கு உடல்நிலை சரியாக இல்லாததால் அன்று வகுப்புக்கு வந்திருக்கவில்லை. அதுவும் நன்மையாகப் போகிறது. பகலுணவு முடித்ததும் மைத்ரேயி விடுதியறைக்குச் சென்று வயிற்றுக் கடுப்பினால் படுத்திருக்கும் வத்சலாவை நலம் விசாரிக்கிறாள். பிறகு புத்தக அலமாரியிலிருந்து அகராதியை எடுத்துப் பரபரப்பாகப் புரட்டுகிறாள்.

“ஈ..ஜி...எச்...ஹோமோ செக் ஷூவல்...”

பார்த்த கண்கள் பார்த்தபடியே நிலைக்க, தலைக்குமேல் கூரை விழுந்து நொறுங்கி விட்டாற்போல் தோன்றுகிறது. கன்னங்களில் முழுபலத்துடன் அறைவிழுந்தாற்போல் செவிகளில் ஹொய்யென்ற ரீங்காரம் கேட்கிறது. இப்படியும் ஒரு. ஒரு கோளாறு... ஒரு பதம் இருக்கிறதென்றே அறிந்திராத அவளுக்கு நெஞ்சத்து ஈரம் திடீரென்று உலர்ந்து, அனற்புகை நிறைகிறது.

“என்னப்பா? என்ன வார்த்தை பார்க்கிறே? ஏம்மா ? என்னமோ மாதிரி ஏம்பா, கண்ணில தண்ணி வருது...”

தரையில் அப்படியே உட்கார்ந்து மைத்ரேயி கண்ணீரை விழுங்கிக் கொள்ள முயலுகிறாள்.

“எனக்கு...தண்ணி இருக்கா வத்சலா?...”

வத்சலா உடனே பானையிலிருந்து நீர்மொண்டு வருகிறாள். மடக் மடக்கென்று அந்த நீர் முழுவதையும் குடித்த பின்னரும் அந்த வேதனைத் தீ குளிரவில்லை.

மற்றவர்கள் எல்லாரும் கூடிக்கூடி அவளைப் பற்றிப் பூடகமாகப் பேசினாலோ, சிரித்தாலோ அவள் இத்தனை நாட்களாக பொருட்படுத்தியதில்லை.

அவர்களைத் தன்னால் வெறுத்து ஒதுக்க முடியும் என்று அலட்சியமாக இருந்திருக்கிறாள். ஆனால் அவளுக்கு உரியதாக இந்த இழிவான பதத்தை அவர்கள் சூட்டியிருப்பதை நினைத்த மாத்திரத்தில் தானே ஆவியாகிப் போய் விடக் கூடாதா என்று ஏங்குகிறாள். பள்ளியிலிருந்து திரும்பி வழக்கம்போல் இயங்கினாலும் மனசு அந்த ஒரே சொல்லின் ஆணிமுனையில் தைத்துக்கொண்டு குருதி வழியத் துன்புறுகிறது. விடுபட இயலாமல் வேதனையுறுகிறது. படிக்க அமர்ந்தால் பொருந்தவில்லை. இரவு சிறிது கண்ணயரு முன்பே இடையே தன்னை யாரோ நெருக்கிப் பிடித்து முத்தமிட வருவதுபோலும், கழுத்தை நெரிப்பது போலும் பயங்கரக் கனவு கண்டு திடுக்கிட்டு விழிக்கிறாள்.

‘செக்ஸ்’ என்றாலே என்னவென்று தெரியாத அவளுக்கா... அவளுக்கா!

இரண்டு சனிக்கிழமைகளாக ஞானம்மா இல்லத்துக்கு வரவில்லை. அன்று அவள் வருவாள் என்பதை கூறும்போது, மைத்ரேயி குன்றிப் போகிறாள். ஒருகால் அவளுக்கும் அவளைப் பற்றிய விவரங்களை அறிவித்திருப்பார்களோ? ஞானம்மா அவளிடம் அன்புகொண்டு பழகுவதனாலும் அந்தப் பெண்கள் பொறாமையினால் புழுங்கவில்லையா? ஒருகால் ஞானம்மா அவளிடம் அநுதாபம் கொள்வதன் காரணமே அந்த விடுதிக்கு அவள் பொருந்தாதவள் என்பதனால்தானோ? ஒரு தொழுநோய் விடுதியிலோ, காசநோய் விடுதியிலோ அவள் இணைந்திருந்தால் கூட நோய்க் கிருமிகள் உடலை மட்டுமே உண்ணக்கூடும். இந்தப் பெண்களெல்லாரும் அதைவிடக் கடுமையான மனநோய்க்கு ஆளானவர்கள். அவர்கள் அவளுடைய படிப்பார்வத்தையும் வாழ்வில் அவள் வைத்த நம்பிக்கையையும் கூடத் தகர்க்கக் கூடிய குழப்பத்தைத் தோற்றுவித்திருக்கிறார்கள். டாக்டர் மித்ரா கூறியதுபோல் நடக்குமா? கடவுளருளில் இரண்டு சிறகுகள் முளைத்துப் பறந்துபோனாள் என்று தேவதைக் கதைகளில் வருவது எங்கேனும் நிகழுமா?

அன்று மாலையில் பிரார்த்தனைக் கூடத்தில் அவள் சிறு மேசையும் விரிப்பும் போட்டுப் பூங்கொத்தும் ஊதுவத்திகளும் வைத்து ஞானத்தை வரவேற்க நிற்கவில்லை. புத்தகத்தின் மேல் தலையைக் கவிந்துகொண்டு பிரமை பிடித்தாற் போல் தோன்றும் அவளை அதுசுயா வந்தழைக்கிறாள்.

“என்ன மைத்தி? உடம்பு நலமில்லியா?”

உடம்பு என்ற சொல் செவிகளில் விழும்போதே டாக்டர் மித்ராவின் நினைவு வருகிறது. அநுசுயாவை அவள் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.

“நான் வந்தா வரேன், வராட்டி போறேன். இவங்களோட உதவாத நீதிப் பேச்சைக் கேட்டவுடன் எனக்கு மோட்ச சாம்ராஜ்யம் கிடைக்கப் போகிறதா?...” என்று கேட்கிறாள்.

“என்ன கோபம் மைத்தி? விளங்கும்படி சொல்லேன்?”

“எனக்கு ஒருத்தரிடமும் கோபமில்லை. என்னைத் தொந்தரவு செய்யவேண்டான்னா போயேன் ?”

“என்னிடம் சொல்லேன் ? என்ன விசேஷம் மைத்தி ? பங்கஜா மறுபடி ஏதேனும் அசிங்கமா சண்டை போட்டளா?”

“ஏதானும் என்ன சொல்வது? காக்கைக் கூட்டில் குயில்வளர்ந்தாலும், அத்தனை காக்கைகளுமாகச் சேர்ந்து சிறகு வளர்ந்திராத அதன் சிறு உடலைக் கொத்திக் கூடாக்கி விடும். இது அவர்களுக்குரிய இடம். நீ அன்னிக்கே சொன் னாய். ஆனால் எனக்கு வேறென்ன வழி இருந்தது? எனக்கு ஏதானும் நோவு வந்து சீக்கிரமாகச் செத்தொழிஞ்சால் நல்லாயிருக்கும்!”

குரல் கரைந்து கண்ணீரில் சங்கமமாகிறது.

“சே, என்ன பேச்சிது? லோகாம்மாவிடம் எதானும் புகார் இருந்தால் தைரியமாகச் சொல்லேன்?...”

அப்போது சரசரவென்று செருப்பொலி கேட்கிறது. மைத்ரேயி துணுக்குற்றாற்போல் எழுந்து நிற்கிறாள்.

ஞானம்...ஞானம்மா... மெல்லிய கீற்றிட்ட காவி வண்ணச் சேலை. ஆங்காங்கே வெண்மை இழைதெரியும் பசையற்ற கூந்தல்...

“என்னம்மா மைத்ரேயி? காய்ச்சலா?...”

விழிகள் அவளை ஆதுரத்துடன் ஊடுருவ நோக்குகின்றன.

“இல்லை...மேடம்...த...தலைநோவு...வந்து”

“அப்படியானால் ஏன் படிக்கிறே? ஏதானும் மாத்திரை சாப்பிட்டுவிட்டுப் படுக்கக் கூடாது?”

“ஓ...இல்ல...இத வந்திடறேன்...” என்று மைத்ரேயி தடுமாறுகிறாள்.

“நான் உன்னை வரச்சொல்லிக் கட்டாயப்படுத்தவா வந்தேன்? அசடு இந்தா...”

கைப் பையைத் திறந்து ஒரு மாத்திரை எடுத்துக் கொடுக்கிறாள் ஞானம்.

“ராசம்மா, கொஞ்சம் சுடுதண்ணி கொண்டுவந்து குடு...”

அவளை அங்கேயே மாத்திரையை விழுங்கச் செய்கிறாள் ஞானம்.

மைத்ரேயிக்குத் தருமசங்கடமாக இருக்கிறது.

“எனக்கு ஒண்ணுமில்லே மேடம், நான் வரேன்.”

“அவசரமில்லை. நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு முகம் அலம்பித் தலைவாரிக் கொண்டுவா! நான் பிறகுதான் தொடங்கப் போகிறேன்” என்று மொழிகிறாள் ஞானம்.

மைத்ரேயியின் உள்ளம் விம்முகிறது.

“நாங்க இத்தின பேர் இருக்கறோம், அவ ஒருத்தி வரலேன்னா கிளாஸ் எடுக்கறதில்ல நீங்க!” என்று மனத்தாங்கலுடன் கூறுகிறாள் மீனாட்சி.

“ஆமாம். இவ்வளவு கஞ்சியில் ஒரு உப்பு இல்லையானால் உள்ளே இறங்குகிறதா? அப்படித்தான் அவள் எனக்கு!” என்று புன்னகை செய்கிறாள் ஞானம்.

வள்ளி உடனே துடுக்காக, “அப்படீன்னா உப்பையே வச்சிட்டுத் திம்பீங்க போலிருக்கு!” என்று கூறுகிறாள்.

“அதுவும் சரிதான். உண்ணாவிரதம் இருக்கிறவங்க உப்பை மட்டுமே தண்ணீரில் கரைத்துக் குடிப்பார்கள். நான் மைத்ரேயியை தத்து எடுத்துக் கொள்ளலான்னு இருக்கிறேன்.” என்று ஞானம் மெல்லச் சிரிக்கிறாள்.

நெஞ்சு துடிக்கத் தவறி, பிறகு இன்னொருதரம் அச்சொல்லைக் கேட்க வேகமாகத் துடிக்கிறது.

“ஆமாம். நான் மைத்ரேயியை தத்து எடுத்துக் கொள்வதாக முடிவு செய்திருக்கிறேன் ராசம்மா, பொய்யில்லை!”

செவிகளில் அமுதம் பட்டு இதயம் நனைந்து குளிர, உடல் சிலிர்க்க மைத்ரேயி நிற்கிறாள்.

12

நகர எல்லையைக் கடந்து, சாலையின் இரு புறங்களிலும் பசுமை பாய்விரிக்கும் வயல்களை எல்லாம் காட்டிக் கொண்டு பஸ் ஓடுகிறது. மைத்ரேயி ஞானத்தின் அருகாமையில் தான் உட்கார்ந்திருக்கிறாள். அவளிடம் எத்தனையோ கேள்விகள் கேட்க உள்ளம் துடித்தாலும் கேட்க நா எழாமல் அமர்ந்திருக்கிறாள். ஒவ்வோர் கணத்தில் தான் காண்பது கனவல்லவே, நனவுதானே என்ற ஐயத்தைப் போக்கிக் கொள்பவளாகத் தன்னைத்தானே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறாள். நனவுதான். அந்த மாலை மிக இனிமையாக இருக்கிறது. ஞானம்மா, அவளுக்கு ஞானத்தாய் போல் திகழும் ஒரு அம்மையுடன் அவள் புதிய வாழ்வுக்குப் போகிறாள். அவள் பிறந்ததிலிருந்து அறிந்திராத ஒர் ஒட்டுறவுடன், ஆவுள் வாழப் போகிறாள். மதுரத்துடன் அவள் வாழ்வின் திருப்பம் ஒன்றில் திரும்பியபோது வறுமையும் சிறுமையும் உடன் வந்தன. இந்தத் துணையில் அன்புடன் வறுமையும் சிறுமையுமில்லாத நம்பிக்கையே ஒளியாக இருக்கிறது. அவள் முழுசாக மீண்டு வருகிறாள். அவளுக்கே வியப்பாக இருக்கிறது. டாக்டர் மித்ரா, லோகா, ராஜா, எல்லோரும் ஞானம் அவளைத் தன்னுடன் இணைத்துக் கொள்வதற்கு உதவியிருக்கின்றனர். ஞானத்துடன் அவள் இன்னும் நெருங்கிப் பழகவில்லை. பள்ளி இறுதிப் பரீட்சையை முடிக்கும்வரை அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மூன்று மாசங்கள் இந்த நன்னாளுக்காகக் காத்திருந்தாலும் ஒரு நாள்கூட அவளுடைய இருப்பிடத்தை மைத்ரேயி சென்று பார்த்திருக்கவில்லை. ஞானத்துடன் முழுசாக ஒரு நாள்கூட அவள் தனியாக இருந்து பழகியிருக்கவில்லை. அருகாமைக்கு நெருங்குமுன்னரே அவள்மீது இவ்வளவு பற்றுதல் எப்படித் தோன்றியது? ஒரு கால் இதுதான் ஒரு இன.... முள் குத்தினாற் போலிருக்கிறது. சட்டென்று ஞானம்மா அவளைத் திரும்பிப் பார்த்துப் புன்னகை செய்கிறாள். அந்தச் சரிப்பில் ஒரு கவடும் இல்லை.

“இன்னும் கொஞ்ச தூரம்தான்.”

“நீங்கள் இப்படித் தினமும் பஸ்ஸில் வருவீர்களா?”

“எதற்கு ? காலனியில் எல்லாம் கிடைக்குமே : சனிக் கிழமை மட்டுமே வருவேன்.”

“என்ன ப்ராஜக்ட் அது? என்னமோ ‘ஹெல்த்’னு சொன்னார்களே ?”

“அதாவது, கிராமங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, சுகாதாரம், சுத்தம் இவற்றுடன் நோய்வராமல் தடுத்துக் கொள்ள நம் கிராமங்களுக்கேற்ற எளிய முறைகளில் பயிற்சியும் அளித்து, அதே முறைகளில் ஆராய்ச்சியும் செய்வதான திட்டம். இந்தத் திட்டத்துக்கு ஒரு அமெரிக்கக் கருணை வள்ளலின் நிதி இருக்கிறது.”

பஸ் ஒரு குன்றைச் சுற்றினாற்போல் கொலுவைத்தாற் போல் காணப்பெறும் சிமிட்டித் தகட்டுக் கூரை இல்லங்களும் பூஞ்செடிகளும் குட்டை மரங்களுமாயமைந்த குடியிருப்பின் முன் சாலையில் நிற்கிறது. “ஓரியன்டேஷன் சென்டர்...!”

மைத்ரேயி ஞானம்மாவுடன் இறங்குகிறாள். கையில் அவளுக்கென்று புதிதாக ஞானம்மா வாங்கிக் கொடுத்த சிறு பெட்டியில் அவளுடைய புதிய துணிகள் இருக்கின்றன. இரண்டொரு புத்தகங்களைக் காகிதத்தில் சுற்றிக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறாள். புத்தகங்கள் பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் அவள் பரிசாகப் பெற்றவை. ஒன்று தாகூரின் கீதாஞ்சலித் தொகுப்பு, இரண்டு நேருவின் கடிதங்கள். உலக வரலாற்றின் பகுதிகள் அவளுடைய உடமைகள்.

ஒரு சிறு பூஞ்சாரல் அடித்து மண்ணைக் குளிரச் செய்திருக்கிறது. வரிசை வரிசையாக விளக்குகள் பூக்கின்றன. எல்லாம் மிக மிக இனிமையாக இருக்கிறது. வரிசையை விட்டுச் சற்று ஒதுங்கினாற்போல் முல்லை படர்ந்த பந்தல் முகப்புடன் கூடிய ஓர் சிறு வீட்டின் சுற்று வேலிக்கதவைத் திறந்து கொண்டு ஞானம் மைத்ரேயியை, ‘வா’ என்று அழைக்கிறாள். வராந்தாவின் கீழே வரிசை கட்டினாற்போல் ஜுனியாப் பூக்கள் வண்ணங்களைக் கொட்டிச் சிரிக்கின்றன. நடுவில் ஒரு ரோஜாப் புதர். தெருவிளக்கின் வெளிச்சத்தில் வாயிலில் பதிக்கப்பெற்ற பெயர்ப் பலகை பளிச்சென்று தெரிகிறது. “மிஸ் ஆர்.எச்.ஞானம், எம். ஏ. எம். லிட், பிஎச்.டி. ஆக்ஷன் கம் ரிஸர்ச் ஸ்கீம்..” என்று அதைப் படித்துப் பார்த்தறிகிறாள் மைத்ரேயி,

முன்னறையில் நாற்காலிகளும், நடு மேசையும் பிரம்பு உருப்படிகள் தாம். ஒரு கண்ணாடி அலமாரியில் புத்தகங்கள் நிறைந்திருக்கின்றன. தென்னை மரமும், உப்பங்கழியும் படகுமாக ஒரு நீர் வண்ண ஒவியம் சுவரில் இருக்கிறது. முன்னறையின் இருபக்கங்களிலும் இரண்டு அறைகள் இருக்கின்றன. முன்னறையை அடுத்து நடுவில் சாப்பிடும் கூடம். ஒருபுறம் சமையலறை, இன்னொருபுறம் குளியலறைப் பகுதி இருக்கிறது. சாப்பிடும் அறையில் ஒரு சிறிய மடக்கு மேசை நாற்காலியும் சமையலறையில் இரண்டொரு தட்டு முட்டுச் சாமான்களும் ஒரு காற்றழுத்த ஸ்டவ்வும் இருக்கின்றன.

“எவ்வளவு அழகான வீடு, ஸிஸ்டர்! சமையல் யார் செய்வாங்க ஸிஸ்டர்?” என்று கேட்கிறாள் மைத்ரேயி கண்கள் ஒளிர.

“யார் சாப்பிடுகிறார்களோ, அவர்களே சமைப்பார்கள்!” என்று சிரிக்கிறாள் ஞானம்.

“நீங்களேவா, சமைப்பீர்கள் ?”

"ஏன், அது அவ்வளவு ஆச்சரியமானதா?"என்று கேட்டு விட்டு ஞானம் குளியலறைக்குச் சென்று கை கால் முகம் கழுவிக் கொண்டு, அடுப்பைப் பற்றவைக்கத் தொடங்குகிறாள். “நீங்க இனிமே இதெல்லாம் செய்யக்கூடாது. நான்தான் செய்வேன்.” என்று மைத்ரேயி அவளை அச்செயலிலிருந்து விடுவிக்க முயல்கிறாள்.

ஞானம் மறுப்பதற்கில்லை. வாயிலில் மணி ஒலிக்கிறது. ஞானம் வெளியே வருகிறாள்.

“வாருங்கள், வாருங்கள் உட்காருங்கள், ஒரு நிமிஷம், இதோ வருகிறேன்” என்று அவர்களை வரவேற்கையில் மைத்ரேயி கதவின்பின் நின்று வந்தவர்களைப் பார்க்கிறாள். வடக்கு மாநிலத்துக்குரியவர்களாகத் தோன்றும் தம்பதி. உள்ளே திரும்பி ஞானம், பால், சர்க்கரை, தேயிலையைக் காட்டுகிறாள். “நாலு கப் டீ போடணும். போடுறியா...”

“ஆகட்டும், ஆகட்டும் நீங்கள் போங்கள்!”

ஞானம் திரும்பி வந்த பின்னரும், அந்தத் தம்பதி உட்காரவில்லை.

“உட்காருங்கள், உட்காரம்மா சுமித்ரா...?”

“இல்லே பஹன்ஜி, நீங்கள் வந்து சொல்லிக்கொண்டு போகவே காத்திருந்தோம்.சாமானெல்லாம் ஸ்டேஷனுக்குப் போயாச்சு...”

“நீங்கள் காலையிலேயே சொல்லிக்கொண்டு சாமான் எடுத்துக் கொண்டு போனதால் அப்படியே போயிருப்பீர்களென்று நினைத்தேன்.”

“அதெப்படிப் போவோம்? உங்களிடம் கடைசியாக வந்து சொல்லிக் கொள்ளாமல்? உங்களை மறக்கவே மாட்டோம் பஹன்ஜி? நீங்கள் ஒரு மாசம் லீவெடுத்துக்கொண்டு வந்து எங்கள் வீட்டில் தங்கவேணும்.”

ஞானம் சிரிக்கிறாள். “கண்டிப்பாக. இவர் இங்கே படித்ததை எல்லாம் சரியாகச் செய்கிறரா, கிராம சேவையில் எவ்வளவு பெரிய வெற்றியடைகிறார் என்று பார்க்க வருவேன்...”

“ஐயையோ?” அந்த இளைஞன் பலமாகச் சிரிக்கிறான்.

“ஏதோ நாற்பதுநாள் வேலைப்பளு இல்லாமல் சந்தோஷமாக வயல்கள் சூழ்ந்த கிராமங்களுக்கு ஜீப்பில் சென்று சுற்றினோம். சொற்பொழிவுகளைக் கேட்டதற்குப் பிறகு இளநீர் அருந்தினோம். பிறகு மாலையிலும் பேசினோம். ஆடிப்பாடிக் களித்து விருந்துகள் உண்டோம். இதற்கெல்லாம் பிரயாணப்படி தவிர, பயிற்சிக்கான படியும் கிடைத்தது. எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் உதவி மறக்கவே முடியாது. உங்களிடம் சொல்வதற்கென்ன? எங்களுக்குத் திருமணமாகி இரண்டு வருஷங்களானபின் இப்போதுதான் முதலாக இவளை அழைத்துக்கொண்டு இங்கு வந்திருக்கிறேன். இடம் கிடைக்கும், ஹாஸ்டலுக்கு வெளியே இருக்கலாம் என்று யாரோ சொன்னதை நம்பி இவளையும் கூட்டி வந்துவிட்டு, நான் திண்டாடியபோது, நீங்கள் எங்கள் வீட்டிலேயே இருக்கலாம் என்று கூப்பிட்டு, எங்கள் சொந்த வீடாக நினைக்கச் சொன்னதை எப்படி மறப்பது?...”

மைத்ரேயி தேநீர்க் கிண்ணங்களைப் பூத்தட்டில் வைத்துக் கொண்டு வருகிறாள். ஞானம் நடுமேசையில் அதை வாங்கி வைக்கிறாள்.

“இவர் டாக்டர் ஜோஷி, இது சுமித்ரா ஜோஷி. இது மைத்ரேயி... என்னுடைய குட்டி சோதரி!” என்று ஆங்கிலத் தில் அறிமுகம் செய்து வைக்கிறாள்.

‘நமஸ்தே!” என்று மைத்ரேயிக்குக் கைகுவிக்கும் சுமித்ரா, “படிக்கிறாளா?” என்று வினவுகிறாள்.

“ஆமாம். ஹாஸ்டலில் இருந்தாள். பரீட்சை எழுதியான பின் இப்போதுதான் கூட்டி வந்தேன்.”

“நான் பார்த்தேன். ரூம் காலியானதும் இன்னும் நம்மைப் போல் யாரேனும் இடம் பிடிக்க வந்துவிட்டார் களென்று நினைத்தேன், பஹன்ஜி!” என்று ஜோஷி சிரிக்கிறார்.

“உட்கார் மைத்ரேயி...” என்று கூறிவிட்டு ஞானம் இரண்டு கிண்ணங்களை ஜோஷி தம்பதியிடம் கொடுத்து விட்டு, அவளிடம் ஒரு கிண்ணத்தைக் கொடுக்கிறாள். தேநீரருந்திவிட்டு அவர்கள் விடைபெற்றுச் செல்வதைப் பார்த்துக் கொண்டே மைத்ரேயி நிற்கிறாள். சரளமாகப் பழகுபவளாக இருந்தாலும், ஞானம் எங்கோ கோபுரத்திலும் தான் மூன்றாம்படியிலும் நிற்பதாகத் தோன்றுகிறது. டாக்டர். இங்கே டாக்டர்கள். இவளும் டாக்டர் மி த்ராவைப்போல் ஏதேனும் அறியத்தான் கூட்டி வந்திருப்பாளோ என்று அச்சம் அறியாமையின் கிளர்ச்சியாய்ப் படருகிறது. அவளுடைய சரளபாவம் மடிந்து, அவளை ஒதுங்கி நிற்கச் செய்கிறது. அவள் தேநீரைத் தொடவில்லை. ஞானம் அவ்வளவு படிப்புப் படித்தவள். அவளை எத்தனை பத்திரங்களிலோ கையெழுத்துப் போட்டு எதற்காகச் சுவீகரித்துக் கொள்ளவேண்டும்? அறியாமையின் விளைவுகளாகவே அவளுடைய ஒவ்வொரு திருப்பமும் பலன் கொடுத்திருக்கின்றன. அப்படி இதுவும் என்ன மர்மமோ? அவர்களை வாயில் வரையிலும் சென்று வழியனுப்பிவிட்டு வரும் ஞானம், தேநீரைப் பருகாமல் இருண்ட முகத்துடன் மைத்ரேயி நிற்பதைக் கூர்ந்து கவனிக்கிறாள்.

“ஏன், என்ன விஷயம் மைத்ரேயி? ஏன் வருத்தமாய் இருக்கே?”

“இல்லே...நீங்கள், இவ்வளவு பெரியவர், என்னை எதற்காக சகோதரின்னு சொல்லி ஒட்டிக் கொள்ள வேணும்னு நினைச்சேன்.”

“ஒ...? அது அவ்வளவு பெரிய வருத்தமான விஷயமா? நான் ஏன் கூட்டிக்கொண்டு வந்தேன்?...” என்று அவள் கையைப் பற்றித் தன் நெஞ்சில் வைத்துக்கொள்கிறாள் ஞானம்.

“என்னைப் போல் நீ, உன்னைப் போல் நான நீ ஒரு அநாதை, நான் ஒரு அநாதை. போதாதா? எனக்கு உன்னை அந்த ஹோமில் வந்து பார்த்துத்தான் தெரியும் என்று நீ நினைத்திருப்பாய், இல்லே?”

மைத்ரேயியின் விழிகள் அகலுகின்றன.

“பின்னே ?” “சாவடிக்குப்பத்தின் ஹைஸ்கூலுக்குப்பின் உள்ள பனங்காட்டின் நடுவே ஒரு வீட்டில் நீ குடித்தனம் செய்ய வந்த நாளிலிருந்தே உன்னைக் கவனித்திருக்கிறேன். அந்த வழியாகக் கீழங்குப்பம், மேலச்சேரி கிராமங்களுக்கு நான் இந்த டாக்டர்களுடன் போயிருக்கிறேன்; அதெல்லாம் ரிஸர்ச் ஸ்கீமில் வருகிறது.”

“அங்கெல்லாம் நீங்கள் போவீர்களா? மேலச்சேரி பக்கத்தில் தானே ? அங்கேயிருந்து லட்சுமி வருவாள். அந்த கிராமங்களுக்கு நீங்க போயிருக்கிறீர்களா? அங்கே போய் என்ன செய்வீர்கள் ?”

“என்ன செய்வோம், செய்தோம் எல்லாம் ஒண்ணுமே யாருக்கும் இன்னமும் புரியவில்லை. எனக்கு அவர்களுடைய அறியாமையைப் போக்கி மனத்தளவில் மேல்மட்டத்துக்குக் கொண்டு வருவதற்கான பொறுப்பு. காந்திய இந்திய தத்துவ இயல், உளவியல் கிராம மறுமலர்ச்சித் திட்டங்களைப் பற்றிய அறிவு எல்லாம் படித்துப் படித்து வறண்டுபோனபின் இதற்குத் தான் லாயக்கென்று நானும் வந்தேன். அவர்களும் சுளையாய் எட்டு நூறு சம்பளம் கொடுக்கிறார்கள். ஆனால் நீ கேட்டாற்போல என்ன பண்ணினர்களென்று கேட்டால் ஒரு பலனும் தெரியவில்லை.”

“ஏன் ?”

‘ஏன் என்றால்? சற்றுமுன் ஜோஷி சொல்லிவிட்டுப் போனான். அந்தக் காலத்தில் நம் கிராமப்புறங்களில் எங்கோ வயல் வெளிகளுக்குச் சென்று காலைக் கடன்களை முடித்தார்கள். காந்திஜியின் முறை அப்படி நாட்டுப்புறங்கள் விரிந்து கிடந்த காலத்துக்குப் பொருந்தும். இன்று நேருஜியின் புண்ணியத்தில் கிராமங்கள் நகரத்துப் பெருக்கத்துக்கு இரைபோட தன் சொத்து சுகங்களை எல்லாம் வழங்கிவிட்டு, கூன், குருடு, கிழம், பழம், ஏழை எளியதென்று மிஞ்சியிருக்கின்றன. அவர்களுக்கும் நகரத்துச் சுகங்களைக் கொடுக்க, திட்டங்களைப் போட்டு பட்டி தொட்டிகளிலெல்லாம் சாலைகளும் அலுமினியப் பூச்சுக் கம்பங்களும் கம்பிகளும் கொண்டு வந்துவிட்டார்கள். பிறகு என்ன இருக்கிறது ? வீட்டுக்கு வீடு ஏக்கர் ஏக்கராவா நிலம் இருக்கிறது? அப்படி இருந்தாலும் அப்படி நடந்துபோக யாருக்குப் பொறுமை இருக்கிறது? ஏக்கர் ஏக்ராவா நிலம் வைத்துக் கொண்டிருப்பவன் பணத்தைப் பெருக்கித் தன் சுகத்தைப் பெருக்கிக் கொள்கிறானே ஒழிய, கிராம நலத்தைப் பற்றியோ கிராம மக்களைப் பற்றியோ கவலைப்படுகிறானா? எனவே ஜனப் பெருக்கமும் இட நெருக்கமும் தாவித் தாவி நகரத்தைப் பெருக்கிக்கொண்டு செல்லும் இந்த நாட்களில் இந்த முறையில் கிராமத்துக்கு வெளிச்சம் போடுவதில் ஒரு பயனும் இல்லை. தேவைகளை அதிகரித்துக் கொள்ளாதே. கதர் உடுத்துங்கள், சர்க்கா சுற்றுங்கள்; கிராம மக்கள் நகரை நம்பியிருக்கக் கூடாது’ என்று நான் போய் எந்த கிராமத்தி லேனும் சொல்லிப் பிழைக்க முடியுமா ?”

“அப்படிச் சரிவராமல் போய் திட்டம் தோல்வி என்று ஏன் மூடவில்லை ?”

ஞானம் கலகலவென்று சிரிக்கிறாள். “மிகச் சரியான கேள்வி, நீ அடி மடியிலேயே கை போடுவாய்போல இருக்கு...!”

“ஏன் ஸிஸ்டர் ? தோல்வின்னு தெரிஞ்ச பின்னும் ஏன் மூடக்கூடாது ?”

“அசடு இழுத்து மூடிவிட்டால் இந்த வீடுகளைக் கட்டுவதற்காக வரும் கான்ட்ராக்ட்காரன் போன்றவர்கள் பிழைப்பது எப்படி ? ஒட்டல்காரன், பால்காரன், முட்டைக் காரன் இவர்கள் எல்லாரும் பணக்காரர்களாவது எப்படி? யார்யாரெல்லாமோ சம்பந்தம் இல்லாதவர்கள் பிழைக்கும் போது, இந்தியா முழுதுமுள்ள பகுதிகளிலுள்ள டாக்டர்கள், மற்றும் சுகாதாரப் பணிசெய்பவர்கள் என்ற பெயர்களில் இந்த ஊரை வந்து பார்த்துவிட்டுப் படியும் சம்பளமும் வாங்கிக் கொண்டு போகக் கூடாதா? இந்தத் திட்டத்தின் பெயரில் பிழைக்கும் அதிகாரிகள் வெளிநாட்டுக்குப் போகும் சந்தர்ப்பங்களை வேறு இழக்க வேண்டிவரும். நானும் கூடத்தான் அலுவலகத்திற்குச் சென்று ஏதோ நான்கு தாளில் கையெrமக்கப் போட்டு அரட்டை பேசிவிட்டு, இரண்டு தலைவேதனைப் பிரசங்கங்களை ஒவ்வொரு குழுவுக்கும் கொடுக்கிறேன்; சம்பளம் வாங்குகிறேன். இப்போது, ஒவ்வொரு சமயம், இந்தியாவே யாரோ சிருஷ்டித்து கனவுலகில் மிதப்பது போல் எனக்குப்படுகிறது.”

பள்ளியில் ஐந்தாண்டுத் திட்டங்களைப் பற்றிய கட்டுரை எழுதி அதன் பயன்களை வானளாவ விவரித்த மைத்ரேயிக்கு இந்த நேர்மாறான கருத்தை ஒப்புக்கொள்வதற்குத் துணிவில்லை. “அப்படியானால் கிராமங்களுக்குச் சாலை வேண்டாமா? மின்சாரம் வேண்டாமா ? ஐந்தாண்டுத் திட்டங்கள் நல்ல திட்டங்களல்லவா ?”

“அப்படிச் சொல்லவில்லை. ஆனால் நகரத்தைப்போல் கிராமத்தை ஆக்குவது சரியாக இல்லை. கிராமங்கள் இந் நாட்டின் உயிர் நாடிகள்; இந்நாட்டின் தனித்தன்மையை அங்கேதான் காணமுடியும். கிராமத்தில் குளத்தைக் குப்பையைக் கொட்டித் தூர்த்து, அங்கு ஒரு வானொலிக் கம்பத்தை நட்டு, இரண்டு துருக்க சாமந்திச் செடியைப் பயிராக்கிவிட்டு, நேரு பூங்கா, காந்திபூங்கா, அல்லது அந்த ஊர்ப் பெரிய மனிதன் பேரில் பூங்கா என்றால் நன்றாக இருக்கிறதா? பக்கத்துக்குப் பக்கம் டீக்கடை, சினிமா, சற்றும் நான மில்லாமல் பொது இடங்களை அசுத்தமாக்குதல் எல்லாம் நகர நாகரிகத்தின் சின்னங்கள். யாரோ ஒரு தமிழ் எழுத் தாளர் இந்த முன்னேற்றத்தைப்பற்றி இப்படி ஒப்பிட்டிருந்தார். கைம்பெண்ணொருத்தி, தலைசீவி, மெல்லிய ரவிக்கை உட்கச்சுத் தெரிய அணிந்து, பாவாடை புடவை உடுத்தி, கொண்டையிட்டுக்கொண்டு வாத்தியாரம்மா வேலைக்குப் போனாற்போல் என்று எழுதியிருந்தார். நான் வெகுநேரம் ரசித்துச் சிரித்தேன்...”

மைத்ரேயி பேச்சற்று நிற்கிறாள்.

“இந்தத் திட்டம் செயல்முறைக்குச் சரியில்லை; ஒத்து வராது என்று எழுதிவிடலாம். ஆனால் பொறுப்பேற்றிருப்பவர்கள், தனி பங்களா, கார், கொழுத்த சம்பளம் இதெல்லாம் அநுபவிக்க இன்னொரு திட்டத்தை உருவாக்க வேண்டும். எனக்கு மென்மையான தோல். இப்போது உணர்ச்சி மரத்து விட்டது. இது உலகம்...”

மைத்ரேயி அவளையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்; ஒரு பள்ளி இறுதிப் பரீட்சை அவள் கொடுத்திருக்கிறாள். இவள் படித்த படிப்பு எத்தனை? எவ்வளவு புத்தகங்கள் படித்து நோட்ஸ் எழுதியிருப்பாள்? நீயும் நானும் ஒன்று என்று சொன்னாளே?

“உங்களுக்கு அக்கா தங்கை அண்ணன் தம்பி என்று ஒரு வருமே இல்லையா ஸிஸ்டர்?”

“ஏன் இல்லாமல்? ஒரு தம்பி சிகாகோ யுனிவர் சிட்டியில் இருக்கிறான். பெரிய அக்கா டில்லியில் இருக்கிறாள். அம்மா வெகுநாட்களுக்கு முன்பே போய்விட்டாள். அப்பா போய் இரண்டு வருஷங்களே ஆகின்றன. எங்களு டைய வீடு மயிலாப்பூரில் இருந்தது.”

“இப்போது அதை வாடகைக்கு விட்டிருக்கிறீர்களா எலிஸ்டர் ?”

“வாடகையா? அப்போதே விற்றுவிட்டோம். ஓர் அலை போல் கஷ்ட நஷ்டங்கள். நான் கல்யாணம் செய்துகொண்டு குடும்பத்தில் இருக்கவேண்டும் என்பது அப்பாவுக்கு ஆசை. ஏன் ? என் தாயார் நான் அந்தக் காலத்தில் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அரசியல் கட்சியில் சேர்ந்ததனாலேயே உயிரைவிட்டாள். அவளால் அந்த அதிர்ச்சியையே தாங்கமுடியவில்லை.”

ஞானத்தின் தொண்டை கரகரக்கிறது.

“நீங்கள்.அரசியலில் இருந்தீர்களா..?”

“வெறுமே இருந்தேன் மட்டுமில்லை. அரசியலுக்காகவே வாழ்க்கை என்று சோஷியலிஸ்ட் கட்சியில் முழுநேரத் தொண்டு வேலை செய்தேன். என்னுடைய கல்லூரி நாட்களில் நான் ஆவேசம் வாய்ந்த பேச்சாளி என்று சொல்வார்கள். அதனால் தான் நான் அந்தக் காலத்திலும் நேரு, காந்தி காங்கிரஸில் மனசில்லாமல் புரட்சிக்கட்சியிலேயே இருந்தேன். தற்காலம் நகரில் இருக்கும் மிகப் பெரிய {hwe|களும்,|தொழிலதிபர்}} அரசியல் பதவிகளில் வீற்றிருப்பவர்களில் பலரும் அந்த நாட்களில் என்னுடைய வகுப்புத் தோழர்களாக, கட்சிக் கூட்டாளிகளாக இருந்திருக்கின்றனர். பாரத நாடு சுதந்திரம் பெற்றதும் பதவி லாபங்களைக் கருதி கதர்ச்சட்டை போட்ட பலரை நான் அறிவேன். சுதந்திரம் பெற்றபின், அதற்கு முன் பேசிய நியாயம், நேர்மை, துணிவு என்ற கோட்பாடுகளை மட்டும் தங்களிடம் வைத்துக் கொண்டவர் யாரும் இன்று வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கவில்லை. இன்றைய அரசியலில் அத்தகையோருக்கு இடமே இல்லை.”

“நீங்கள் ஏன் அரசியலில் இருந்து விலகி விட்டீர்கள், எலிஸ்டர் ?”

“விலகினேனா நான் ? என்னைப் போன்றவர்களுக்கு அங்கே இடமில்லை என்று விலக்கிவிட்டது. நம்முடைய பொருள் நமக்குக் கிடைக்குமுன் நம் எண்ணங்கள் நியாயமாக, உண்மையாக இருந்தன. அது நம்மிடையே வந்த பிறகு ஒற்றுமை நல்லெண்ணம் முதலியவற்றை உறிஞ்சிக்கொண்டு, வேறு எதையோ நம் ஆவல்கள் பற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த விளைவுகளைப் பார்க்கும்போது, நம் மக்கள் மட்டும் இந்த ஆட்சிமுறைக்குத் தகுதி பெறவில்லை என்பதில்லை. தலைவர்கள் என்று கருதப்படுகிறவர்களும் தகுதி பெறவில்லை. எல்லோரும் பதவியும் செல்வாக்கும் வேண்டிக் கட்சி மாறிய பின்னரும், அதே காரணங்களுக்காகக் கட்சி பிளவு பெற்றுப் பிரிந்த பின்னரும் நான் தனியாக நின்றேன். அரசியல் பதவி இல்லையேல், கட்சியமைப்பில் மட்டும் நின்று மக்கள் சமுதாயத்துக்கு ஒரு சிறப்பையும் செய்து விட முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. அதனால் நான் ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சி வேட்பாளரை எதிர்த்துச் சென்ற தேர்தலில் போட்டி இட்டேன்; என் எதிரி யார் தெரியுமா ?”

“யாரோ ?”

“ராஜா...முன்னாள் ஜமீன். பணபலம், ஆள்பலம், அதிகார தோரணை எல்லாமே எனக்கு எதிரியாகக் கச்சை கட்டிக் கொண்டிருந்தன. மின்மினி உயிர்ப் பூச்சிதான். ஆனால் குழல் விளக்கினொளியில் அது எம்மாத்திரம்? நான் தோற்றுப்போனேன். அந்தத் தோல்வி என்னை நேரடியாகப் பாதித்தாகச் சொல்ல முடியாது. ஆனால் அப்பாவுக்கு அதுவே யமனாயிற்று. என்னுடன் பிறந்த தமக்கை நான் வெற்றி பெற்றிருந்தால் ஓடி வந்திருப்பார். தோல்வியடைந்ததும், ஆளுங்கட்சியை எதிர்த்து நின்ற முட்டாள்தனத்தைச் சொல்லிச் சிரித்தாளாம். நான் ஏதோ தீண்டத்தகாத பாவத்தைச் செய்துவிட்டாற் போல் ஒதுங்கியிருக்கிறார்கள். அப்பாவின் மறைவுக்கு வந்து பார்த்து விட்டு அடுத்த விமானத்தில் கிளம்பிவிட்டாள். செகரட்டேரியட்டில் பெரிய பதவி வகிக்கும் ஐ.ஸி.எஸ். வர்க்கமான அவள் கணவர் வரவேயில்லை. தம்பி அப்போது வெளிநாட்டில் இருந்தான். வீட்டின் மீது கடன் வாங்கி அப்பா என் தேர்தலுக்குச் செலவழிக்கக் கொடுத்தார். கடன்காரர்கள் நெருக்கினார்கள். இறுதி நாட்களில் தான் வாழ்ந்த இடத்தைவிட்டு வெளியேறி உயிரை விடும் கொடுமையை என்னாலேயே அப்போது தாங்கி இருக்க முடியாது, நல்ல காலமாக இறைவன் அந்த நிழலிலேயே அவர் உயிரைப் பறித்துக் கொண்டான். வீட்டை விற்கத் தம்பி உடன்பட்டான். விற்றுவிட்டு அவனோடு ஆறேழு மாசங்கள் ஊர் ஊராகச் சுற்றினேன். பிறகு இந்த வேலை கிடைத்தது. அவன் மறுபடியும் சிகாகோ போனான். நான் இங்கே வந்து ஒன்றரை வருஷமாகிறது.”

வெறும் கல்வி மட்டும் இருந்தால் போதும் என்று மைத்ரேயி நினைத்தாள்!

“நீங்கள் தவறாக நினைக்காமலிருந்தால்...நான் ஒண்ணு கேட்கட்டுமா, ஸிஸ்டர் ?”

“என்ன வேணும்? கேள்.”

“நீயும் நானும் ஒண்ணுன்னு சொன்னீர்கள். நான் எங்கே, நீங்கள் எங்கே! உங்களை அரசியல் ஒதுக்கிவிட்ட தாகச் சொன்னீர்கள். என்னை வாழ்க்கையே ஒதுக்கிவிட்டது. சூடு தெரியாமல் அவசரத்தோடு ருசிக்கப் போய் நாவையே சுவை தெரியாதவண்ணம் கெடுத்துக்கொண்ட கதை என்னுடையது. பெண் தனித்து நின்று நல்மதிப்பைப் பெற்று வாழ முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் நீங்கள் எப்படி என்னைப் போலாவீர்கள்!”

ஞானம் சற்றே திடுக்கிட்டாற்போல் மைத்ரேயியின் கையைப்பற்றி மெல்ல அழுத்துகிறாள். சில விநாடிகள் அவளுக்குப் பேச்சே எழவில்லை.

‘நீ என்ன கேட்கிறாயென்று எனக்குப் புரிகிறது. பெண்ணே நான் தனித்து நிற்கிறேன் என்றால் அப்படி இயற்கையாகவே நின்றுவிடவில்லை. நான் ஒன்று சொல்லுகிறேன், கேட்டுக்கொள், இந்த உலகில் எனக்குத் தெரிந்தவரை எந்த நாட்டிலும் ஒரு பெண்ணை போகத்துக்குரியவள் என்ற வரையை மறந்து அவளுடைய அறிவுக்காக, குணநலன்களுக்காக, திறமைக்காகச் சந்தர்ப்பங்களை கொடுத்து மதிப்பதாகத் தெரியவில்லை. அவளும் முன்னுக்கு வரட்டும் என்று பெண்ணின் பெருமையைப் பற்றிப் பேசுபவர்கள்கூட, ‘ஏதோ, பாவம் அவளும் வந்துவிட்டுப் போகட்டும்’ என்று தரும இரக்கப்பரிவோடு சொன்னாலும் தங்களுக்குப் போட்டியாக வந்துவிடக்கூடாது என்று முன்னெச்சரிக்கை செய்து கொள்கிறார்கள். நான் கல்லூரியில் படித்த காலத்திலும் அரசியலில் புகுந்த காலத்திலும் என்னை விரும்பி அதாவது மணம் புரிந்துகொள்வதாகச் சொல்லிக் கொண்டு வந்தவர்கள் சிலர் இருந்தார்கள். ஒரு இளைஞனை நானும் அந்த நாட்களில் விரும்பியிருந்தேன். ஆனால் என் மனசு தன் கருத்தை அவன் பால் சொல்லவிடுமுன் அவனுக்குத் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றன என்றறிந்தேன். என் பேச்சையும் அறிவுத் திறனையும் அவன் புகழ்ந்து போற்றியதெல்லாம் இந்த உடலுக்காகத்தான் என்ற உண்மை எனக்கு மிகவும் பயங்கரமானதாக, வெறுக்கத்தக்கதாகத் தோன்றியது. பெயர் கூற விரும்பவில்லை. இப்போது அவன் ஒரு கண்ணியமான பதவியில் இருக்கிறான். அவன் அற நெறிச் சொற்பொழிவுகளாற்றுவதாகக் கொட்டை எழுத்துப் போஸ்டர் ஒன்று அன்று தெரிவித்தது. இந்தச் சமுதாயத்தை எவ்வளாவு எளிதாக வேஷம் போட்டு ஏமாற்றிப் பெரிய ஆளாக வளர முடிகிறது என்று பார்த்தாயா?”

பெண்ணுக்குப் பொறுப்பு அதிகம்; கட்டுப்பாடுகளும் அதிகம் என்றால், ஆணுக்கு மட்டும் பொறுப்பு கொஞ்சமா? தன்னுள் எழும் விலங்கியல் உணர்வுகளுக்காகத்தான் ஒரு ஒரு ஆண் பெண்ணை மதிக்கிறான். அந்த உணர்வு தனக்கு ஒரு பொறுப்பு கடனைச் சுமத்தும் வகையில் விளைவு தரும் பாது, எத்தகைய அறிவாளியும் முதிர்ந்த பண்பாடு உடையவனும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். இது இன்றைய நிகழ்ச்சி மட்டுமில்லை. பண்டைய காலப் புராண முனிவர்களிலிருந்து தொடர்ந்து வரும் வரலாறுதான் இல்லையா?

“எனக்கு அந்த இல்லத்துப் பெண்களிடத்தில் இந்தக் காணத்தினாலேயே அநுதாபமும் பரிவும்பெருகுகின்றன. மீது அநுதாபமும் அன்பும் பிறந்ததற்கும் அதுதான் காணம். அந்தத் தனி ஒட்டுக் குடிசையில், வெறும் துணி யால் மறைக்கப்பட்ட ஜன்னலுக்குப் பின் நின்றோ, நன்றாகச் சாத்தியிராத கதவிடுக்கு வழியாகவோ பார்த்துக்கொண்டு நீ நிற்பாய் . விரல் வழியே ஒளிரும் விளக்கின் பிழம்புபோல் உன் முகம் என் நினைவை விட்டகலவில்லை. நீ மாடு மேய்க்கும் சிறுமியுடன் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தாய்; எங்களைக் கண்டதும் உள்ளே சரக்கென்று தலையை இழுத்துக் கொண்டாய். உன் தோற்றமே நீ இயல்பாக இல்லை என்று காட்டிக் கொடுத்தது. அன்று அந்த ஒட்டல்காரரிடம் நான் எதோ சாதாரணமாக விசாரிப்பதுபோல் கேட்டேன்...”

மைத்ரேயிக்கு இதழ்கள் துடிக்கின்றன. “சினிமாவில் பாட்டெழுதறேன்னு சொல்லும் ஒரு தி.மு.க. பையனை நம்பி வீட்டைவிட்டு ஓடி வந்திருக்கு போலிருக்கு. பார்த்தால் நல்ல இடத்துப் பொண்ணுபோல இருக்கு...”

“அவ்வளவுதான் சொன்னாரா, ஸிஸ்டர் ?” “அவர் வேறென்ன பேசினாரென்பதை எல்லாம் அப்ப நான் குறிப்பாகக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. ராத்திரி இங்கே தனியாக நான் படுக்கையில் தூக்கம் பிடிக்காமல் விழிக்கும் போது, கதவை ஒருக்களித்துக் கொண்டு, குத்து விளக்குச் சுடர் போல நீ நின்றது மனசில் தோன்றும். அடுத்த வாரம் அங்கே சென்றபோது வீடு பூட்டிக்கிடந்தது. முன்பு நான் பார்த்திருந்த ஆடு மேய்க்கும் சிறுமி அங்கே நின்றாள். உன்னைப் பற்றி விசாரித்தேன், “அந்த அக்காவா? காரில் ஊருக்குப் போயிட்டாங்க..” என்று சொன்னா. உடனே ஒரு மாசத்துக்குள் உன்னை அந்த விடுதியில் பார்க்கத் தூக்கி வாரிப் போட்டது.”

மைத்ரேயி நெஞ்சத்து நெகிழ்வுக்குத் தடைபோட இயலாமல் கீழே கோலமிடுகிறாள். நீர் முத்துக்கள் சிந்துகின்றன.

“எனக்குக் கண்ணீர் விடுபவர்களைக் கண்டால் பிடிக்காது. கண்ணிர் விடுவதனால் பெண் கையாலாகாதவள் என்ற தகுதியை உறுதியாக்கிக் கொள்கிறாள். கண்ணீரை வைத்து ‘ஜோக்'குகள் வெளியிடும் பத்திரிகையை நான் கிழித்துக்கூட எறிந்திருக்கிறேன்.”

மைத்ரேயி பரபரப்பாக கண்களை ஒத்திக் கொள்கிறாள். சிவந்த முகம் மழையில் நனைந்த மலர்போல் ஒளிர, புன்னகை செய்கிறாள்.

“என்னிடம் வந்த பிறகு நீ கண்ணீர் விடுவதை நிறுத்தி, மறந்து போய்விட வேண்டும். உன்னைப்போல் எத்தனையோ பெண்கள் அழுபவர்களாக இருக்கும். என் தம்பி, கல்கத்தாவில் ஒரு காபரே ஓட்டலுக்குப் போய்விட்டு வந்து சொன்னான். அந்தப் பெண் விழித்துப் பார்த்துக்கொண்டு ஒவ்வொரு துணியாக உரிந்து வீசும்போது கூட்டத்திலிருக்கும் பேய்களைப் பார்த்து ஒரு பெண்ணுடம்புக்குக் கழுகுகள் போல் வந்து உட்கார்ந்திருக்கும் பதர்களே, பாருங்கள்! பாருங்கள்! என்று வெறுப்புடனும் ஆக்ரோஷத்துடனும் கூறினாற் போலிருந்ததாம். அவள் ஆடிய ஆட்டம், கூட்டுக் குள்ளே சிக்கிய பாம்பு, கூண்டை ஓங்கி ஓங்கி அறைந்து கொத்துவதைப் போலிருந்ததாம். அங்கே உட்கார்ந்தி கனமுதனவான்கள். கலை இலக்கிய உலகின் பிரமுகர்கள் அக்கா!’ என்றான். எனக்கு அந்தக் காட்சியைக் கண்முன் கண்டாற்போல் நெஞ்சு கொதித்தது. இந்த ஊரிலும் கூட அத்தகைய இரவுக் காட்சிப் படங்களைக் கொட்ட கைக்கு வரவழைத்து வெளியில் பெரிய பெரிய விளம்பரங்கள் வைத்திருந்தார்கள். நான் பத்துப் பெண்களைக் கூட்டிச் சென்று மறியல் செய்தேன். பெண்ணின் தன்மானத்தைக் காலடியில் வைத்துத் தேய்க்கும் அந்தப் பெரிய விளம்பரங்களில் ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்று எழுதி ஒட்டினோம். எங்களைப் போலீஸ் வந்து அப்புறப்படுத்திவிட்டு கனதனவான்களை, பெரிய மனிதர்களை, பிஞ்சுகுஞ்சுகளை, பெண்டிரை, எல்லாரையும் உள்ளே படம் பார்க்க அனுமதித்தது. ‘அடல்ட்ஸ் ஒன்லி’ கதைகளாக வெளியிடும் குடும்ப, வாஸ்ய, இலக்கியப் பத்திரிகை ஆசிரியர் அடல்ட்ஸ் ஒன்லி’ எழுத்தாளரைவிட்டு நாட்டுப்புறத்துப் பெண்கள் ரவிக்கை போடுகிறார்களா, கோயில் சிலைகளை அச்சடித்த காகிதத் தால் மூடப்போகட்டுமே சகோதரியார் ! ஆபாசம் அவர் கண்களில் இருக்கிறது. இரகசியங்களை மூடி மறைக்காமல் வெளியிடுவது உண்மையான கலை என்று நீண்ட கட்டுரைத் தொடர் எழுதச் சொன்னார். இங்கே என்னைப் பிராஜக்ட் ஆபீசர் கூப்பிட்டு விசாரணை செய்வது போல் விவரம் கேட்டார். எனக்கு ஒவ்வொரு சமயமும் கண்ணீர் வருவது போல் இருக்கும்; விழுங்கிக்கொண்டு சிரிப்பேன். அந்தச் சிரிப்பும் காபரே ஆட்டக்காரியின் சிரிப்பைப் போன்றது தான்...”

“அக்கா, சமூக சேவை செய்யும் நர்மதா, மிஸஸ் சிவநேசன் இவர்களை எல்லாம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?”

“அவர்களுக்காக வருத்தப்படுகிறேன். பணம். பணத்துக்காக இன்று எதையும் யாரும் கறைபடுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை. அவர்களுக்கு சமூக சேவை என்ற பெயரில் இப்படி எல்லாம் வருவதும் போவதும் உல்லாசம் கொண்டாடுவதும் தான் வாழ்க்கை. மிஸஸ் சிவநேசன், நர்மதா இருவருமே நன்றாகக் குடிப்பார்கள். மேல்நாட்டு நாகரிகப் பொழுதுபோக்கு விடுதிகளில் அவர்கள் உறுப்பினர்கள். நாட்டுத் தலைவர்கள், அயல் நாட்டுப் பிரமுகர்கள் போன்ற வர்கள் வரும்போது இவர்கள் முன்னே நின்று சாய இதழ்களை குவித்தும் விரித்தும் ஆங்கிலத்தில் அப்போதைய ஃபாஷனில் பேசி மிழற்றி இந்தியக் கலாசாரம் பண்பாடு என்று நெற்றியில் குங்குமம் தீற்றுவார்கள். துரைசானிக்குப் புடைவை சுற்றிவிட்டுப் படம் எடுத்துக் கொள்வார்கள். கைகுவிப்பதும் திலகமிடுவதும் போலி மரியாதைப் பண்புக்குச் சிகரங்கள்...”

‘லோகாவைத்தான் அந்தக் குழுவில் பொறுத்துக் கொள்ளலாம். தான் எங்கே நிற்கிறோம் என்ற அறிவும் உணர்வும் அவளுக்கு உண்டு. அதனால் பிறர் தகுதியை அறிந்து அடக்கமாகச் செயல்படுவாள். உன்னை நான் இங்கே விடுவித்து அழைத்து வருவதற்கு அவள்தான் காரணம். அவளாக அந்த எண்ணத்தை வெளியிட்டிராதுபோனால் எனக்குக் கேட்கத் தெரிந்திருக்காது. அவள் அங்கே இருக்க வேண்டியவளல்ல. ராஜா அவளை முழு நேரக் கட்சிப் பிரசார வேலைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னார். அவளுக்குப் படிக்க ஆர்வம் இருக்கிறது. உங்களைப் போல் உள்ளவர்கள் அவளை ‘அடாப்ட்’ செய்து கொண்டால் நன்றாக இருக்கும்...ஒரு நல்ல பெண்ணை நல்லபடியாக உருவாக்கியதாக ஆத்மதிருப்தி உண்டாகும் என்றாள். நான் லபக்கென்று கொண்டா பத்திரத்தை என்று பிடித்துக் கொண்டேன். எனக்கே நினைத்துப் பார்த்தால் விசித்திரமாயிருக்கிறது. நீ யாரோ, நான் யாரோ, ஏதோ காற்றில் சிதறிவந்த நீர்த்துளிகள் ஒன்றுபட்டாற்போல்...”

“நான்தான் நீர்த்துளி. நீங்கள் ஆழ்ந்த தடாகம். நான் தடாகத்தில் ஒன்றுபட வந்தேன்...” என்று உளம் விம்ம மொழிகிறாள் மைத்ரேயி.

13

மழை பெய்து ஒய்ந்துவிட்டதை நினைப்பூட்டுவதுபோல் ஈசலாக மொய்க்கின்றன. குழல்விளக்கின் அடியில் குடி யிருக்கும் இரு பல்லிகள் ஓடி ஓடி வேட்டையாடுகின்றன. எத்தனை பெரிய பல்லிகள் ! கள்ளச் சந்தைக்காரனை நினைப்பூட்டும் பல்லிகள். மக்களும் ஒருவகையில் ஈசல்களைப் போலவே குழல் விளக்குக் கவர்ச்சிகளில் வீழ்கிறார்கள் என்றால் பொருந்தும்.

விளக்கடியில் அவள் விரித்துவைத்திருக்கும் காகிதங்களில் ஈசல்கள். தட்டெழுத்துப் பொறியிலும் கைகளிலும் கூடச் சிறகுகளை இழந்த ஈசல் பூச்சிகள் ஊர்கின்றன.

பட்டென்று விளக்கை அணைத்து விடுகிறாள் ஞானம். ரேடியம் பூச்சு கடியாரம் மணி எட்டரை என்று காட்டுகிறது.

மைத்ரேயி கல்லூரியில் ஏதோ கூட்டம் என்று காலையில் மொழிந்தது, நினைவுக்கு வருகிறது. ரூபாய் மதிப்புக் குறைவைப் பற்றிக் கருத்தரங்கு என்று கூறினாள்.

வாயிலில் வந்து வராந்தா விளக்கையும் அணைத்து விட்டு ஞானம் தோட்டத்தில் நிற்கிறாள். தெருவிளக்கின் பிழம்பை சுற்றி ஈசல்கள் பறக்கின்றன. ஈரமண்ணில் படிந்து வரும் காற்று தலைப்பை இழுத்து மூடிக்கொள்ளச் செய்கிறது. கார்த்திகை மாசத்துப் பொறிகளைப்போல் நெடுகத் தெரியும் சாலை விளக்குகளும் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கின்றன. எதிர்ச்சாரியில் டாக்டர் ராமசேஷனின் மனைவி வராந்தாவில் உள்ளே தள்ளி வைத்திருக்கும் அகல் ஒளி முத்துச்சுடராய் விளங்குகிறது. ராமசேஷனும் அவர் மனைவியும் அவளோடு நெருங்கிப்பழகும் தம்பதி. ஒராண்டுக்காலம் அமெரிக்காவில் இருந்து வந்ததை அடிக்கொரு முறை நினைப்பூட்டும் வண்ணம் செயற்கையாகத்தோளைக் குலுக்கிக் கொள்வதும், சில சொற்களை நாவைச் சுழற்றிக் கொண்டு உச்சரிப்பதும் தன் தனித் தன்மையைப் பறை சாற்றக் கூடியவை என்று எண்ணும் மனிதர். ராமசேஷன் மட்டுமல்ல. அங்கு அவள் பழகும் முக்கால்வாசி ‘ஃபாரின் ரிடர்ன்டு'களும் அப்படித்தான் எண்ணிக் கொள்கிறார்கள். வெளி நாட்டு விருந்தினர் கலந்து கொள்ளும் விருந்துகள் என்றால் அவர்களுக்குத் தலைகால் புரியாது. விடாமல் புகை குடிப்பதைச் சிலர் பெருமைக்குரிய பழக்கமாகக் கருதுகிறார்கள். ஆனால் அவர்களுடைய மனைவியரோ, வெளிக்கு ஆங்கிலம் பேசி, விருந்து நாகரிகங்களில் கலந்து கொண்டாலும் அடிப்படையிலிருந்து முற்றிலும் மாறாதவர்கள் என்று பல சமயங்களிலும் உறுதிப்படுத்துகிறார்கள்.

ராமசேஷனின் மனைவி ஜானகி, மெட்டியும் உச்சிப் பொட்டுமாக விளங்குகிறாள். தாய்மொழியில்தான் பேசுகிறாள். அவள் கல்லூரியில் பட்டம் பெற்று, சில மாதங்கள் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகவும் வேலை செய்தவள் தான். ‘கல்யாணமாகாம இருக்கும்போது ஒரு வேலை வேண்டுமே என்றுதான் படித்தேன். டாக்டர் சைனிஸ் அக்ரேஷன்போது எமர்ஜன்ஸி கமிஷனில் சேர்ந்துவிட்டு, பிறகு தானே இங்கு வந்தார்! வரதட்சிணை ரொம்பக் கேட்கல. அதனால் எங்கம்மாவால் சமாளிக்க முடிந்தது. எனக்கும் அவருக்கும் பன்னிரண்டு வயசு வித்யாசம். அதனால் என்ன? நாங்கள் சந்தோஷமாகத்தானிருக்கிறோம்.” என்று சொல்கிறாள். “லிஸ்டர்! எங்க சிவு பூணுரல் போட்டிருக்கிறான் பாருங்கோ?” என்று வடை பாயசத்தோடு மூன்று வயசுப்பையனையும் கையில் பிடித்துக் கொண்டுவந்து வியப்பில் ஆழ்த்துகிறாள். மைத்ரேயி அந்தக் குழந்தையைக் கண்டால் விடமாட்டாள். “அக்கா, ஜானகி ஆவணி அவிட்டம் கொண்டாடியிருக்கிறாள் பார்த்தீர்களா? அந்த மனிதர் புகைபிடித்துக் கொண்டு சாலையில் ஜீப்பில் போகிறார்” என்று சிரித்தாள். “ஏன், எதற்கு’ என்று கேட்கக் கூடிய அறிவு மலர்ச்சி இருந்தும், அப்படிக் கேட்காமல் கண்களை மூடிக்கொண்டு சில வழக்கங்களைப் பின்பற்றுவதில் அவர்கள் அமைதி காண்கிறார்கள். தென்னிந்திய அந்தணர் மரபில் வந்த ஜானகி மட்டும் தான் இத்தகையவள் என்பதில்லை. ஞானம், காமத்கள், ஹெக்டெக்கள் என்று பல கலவை மொழி மக்களையும் பார்க்கிறாள். சங்கர்காமத், ராமசேஷனைப் போன்றவன் தான். ஆனால் அவன் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட மனைவி குஸ்-மாவோ, அவனுடைய தந்தையின் சிரார்த்தத்துக்கு எங்கெல்லாமோ அலைந்து புரோகிதரையும் பிராமணரையும் தருவித்துச் சாமான்கள் சேகரித்து, ஏற்பாடு செய்தாள். புரோகிதரே. எல்லாவற்றையும் அவனுக்காகச் செய்தாலும், பித்ருக்களுக்கு வழிபாடு செய்யும் நேரத்துக்கு அந்த (ப்பிரமாத) அலுவலகத்திலிருந்து அவன் சுங்கானும் வாயுமாக வந்தான். பிறகு நீராடி வேட்டியைக் கச்சமிட்டு அணிந்து கொண்டு அங்கே சாட்சிக்கு நின்றான். ஞானம் இது குறித்து அவனிடம் விசாரிக்காமலில்லை. “நம்பிக்கை இல்லை, இருக்கு அதெல்லாம் இல்லை பஹன்ஜி, இப்போது எங்களுக்குத் தனித்தன்மையே கிடையாது. அவள் சொல்கிறாள். நடக்கறேன்” என்று சிரித்தான். குஸ-மாவோ சிரித்துக்கொண்டு, “நாங்கள் க்ருஷணிகள் பஹான்ஜி. அவர்களுக்கு என்று இல்லற தர்மத்தின் பொறுப்பு தனியாகக் கிடையாது. நாங்கள் புண்ணியம் செய்தால் அவர்களுக்குப் போதும். நாம்தான் தர்மத்தை விடக்கூடாது” என்று கூறுகிறாள்.

திருமதி கோகலே, இவர்களெல்லாரையும்விட ஒருபடி மேலானவள். கணவனுக்கு மாமிசம் உண்டு பழக்கமாகி விட்டது. அவளே நல்ல மாமிசமாக வாங்கி வந்து சமைத்துப் போடுகிறாள். ஆனால் அவளோ, கடும் நியமக்காரி. ஆவணி சோமவாரம் என்றால் எந்தத் தானிய உணவும் அருந்தாமல் விரதம் இருக்கிறாள். அவளுடைய தோட்டத்திற்கு வந்து அருகம்புல்லும் மந்தார இலையும் கொண்டுபோய் கண நாதனை வழிபடுகிறாள். பெண்கள் வேரைக் கெல்லி ஏறிவது சமுதாயத்தின் ஆணிவேரையே கெல்லி எறிவதற்கொப்பாகும் என்று இந்தப் பெண்கள் கருதிச் செயல்படுகிறார்கள் என்பது கூடச் சரியில்லை. அது இயற்கையாகவே இருக்கிறது. “என்ன ஸிஸ்டர், இருட்டில் உட்கார்ந்திருக்கிறீர்களே?” ஜானகிதான் வாசலில் வந்து நிற்கிறாள். “ஜானகியா? வாம்மா, ரிபோர்ட் தயாரிக்கலாம்னு உட்கார்ந்தேன். ஒரே ஈசல், விளக்கை அணைச்சிட்டு வெளியே வந்தேன். ராமசேஷன் இல்லை ?”

“அவருக்கு ஒரு ஃபரண்டு, வந்திருக்கிறார். சர்வீஸ் டாக்டர். பாகிஸ்தான் வார் முடிஞ்சப்புறம் இப்பத்தான் இங்கே பெங்களூருக்கு மாற்றல்னு வந்திருக்கிறாராம். இரண்டு பேருமாக ஸிடிக்குப் போயிருக்கிறார்கள். சிவு தூங்கிப் போயிட்டான். மைத்ரேயி இல்லே? இன்னும் காலேஜ்லேந்து வரலே ?”

“இன்னிக்கு ஏதோ மீட்டிங்னு சொன்னா. வரத்துக்கு நேரமாயிடுத்து...”

“எம்.ஏ. முடிச்சிட்டு என்ன பண்ணப்போறா ஸிஸ்டர், அவ ?”

“கிளாஸெடுக்கணும்னு விழுந்து விழுந்து படிக்கிறாள். ரிஸர்ச் பண்ணப் போறேன்னு சொல்லிண்டிருக்கா. இப்ப எதுவும் சொல்வதற்கில்லை. ரிஸர்ச் அது இதுன்னு பண்ணி என்ன பலன் குதிக்கப் போகிறது? இப்போது நான் என்ன பண்ணிண்டிருக்கிறேன் ? ஈசல் வந்து ரிபோர்ட்டில் அப்புகிறதுனு வெளியே வந்து உட்கார்ந்திருக்கிறேன். பெண், படித்துவிட்டால் எல்லாச் சிறுமைகளும் போய்விடும், பொருளாதார சமத்துவம் வந்துவிடும் என்று நினைத்தோம். ஆனால் எவ்வளவு படித்தும் அந்தப் படிப்பெல்லாம் கொஞ்சமும் தேவைப்படாத இன்னொரு புறம்தான் நாம் வாழ வேண்டியிருக்கிறது. அந்த வாழ்க்கையையும் பணம் கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது...”

“உண்மைதான் ஸிஸ்டர், என் தங்கைக்குப் போன வருஷம் கல்யாணமாச்சு. என்னைவிட அவள் ஒன்னரை வயசுதான் சிறியவள். அவள் எம்.எஸ்ஸி(ஹோம்சயன்ஸ்). அவன் இன்ஜினியரிங் டிப்ளமா வாங்கி ஜூனியர் இன்ஜினியராகத்தானிருக்கிறான். வரதட்சிணை அஞ்சாயிரம். கல்யாணம் இருபதாயிரத்துக்கு மேலே ஒடிவிட்டது. இப்போது போன மாசம் இவர் டில்லிக்குப் போயிருந்தப்ப, எங்கம்மா வளையல் அடுக்கக் கூட்டிவரச் சொல்லி அனுப்பியிருந்தாள். இவரைக் கண்டதும் அந்தம்மா, அந்தச் சீர்செய்யலே, இந்தச் சீர் செய்யலே, வருஷாந்தரச் சீருக்கு காட்ரெஜ் பீரோ வாங்கி அனுப்பறேன்னு சொல்லி ஏமாத்திட்டா. வளைகாப்புன்னு இப்படி அனுப்ப முடியுமா, வந்து எல்லாம் செய்து வகையாகக் கூப்பிடவந்தால்தான் அனுப்புவோம் என்றெல்லாம் சொன்னாளாம். தீபாவளிக்கு மாப்பிள்ளைக்கு வயிர மாதிரம் போடவேண்டும் என்றாளாம். இதற்கெல்லாம் எங்க வீட்டில் இவரைக் கோயிலில் வச்சுக் கும்பிடணும், இந்த பிராமண சாதியே இப்ப ரொம்ப மோசமாயிட்டது, விஸ்டர் !”

ஞானம் உள்ளுறச் சிரித்துக் கொள்கிறாள் . பிராமண சாதி இப்படி இழிந்து போனதால்தான் இந்த ஸிஸ்டர் முடி நரைத்துப் போய்க் கல்யாணமாகாமல் வறட்டுக் காலட் சேபம் செய்து கொண்டிருப்பதாக நினைக்கிறாள்.

“இந்த மாதிரியெல்லாம் கேட்பதனால்தான் நம் பெண்கள் தங்கள் மேன்மையை எல்லாம் மறந்து, வேற்று சாதியில் சம்பந்தம் செய்துகொள்ளத் தயங்குவதில்லை. இப்போது ரொம்ப நடக்கிறது. ஸிஸ்டர்! கொஞ்ச நாளைக்கு பெரியவர்கள் முறுக்கிக் கொள்வார்கள். பிறகு, சகஜமாகப் போகிறது.” என்று விவரிக்கிறாள் ஜானகி.

“ஒரளவு படித்து மறுமலர்ச்சி பெற்று, நன்றாக வாழ வேண்டும் என்று முன்னுக்கு வந்தவர்கள் வெறும் உயர்குலப் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு கீழ்முகமாகப் போகிறவர்களைவிட மேல்தான்.”

“நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் ஸிஸ்டர்? கீழ்முகமாகப் போகிறதென்றால் எதைச் சொல்கிறீர்கள் ?”

ஞானம் புன்னகை செய்கிறாள். “இதெல்லாந்தான். ஒரு பெண்ணின் வாழ்க்கைக்கு அகாத விலை கேட்பது. அவளுடைய கல்வியையோ திறமையையோ மதிக்காமல் வெறும் சீர் செய் நேர்த்திகளில் எடைபோடுவது, எல்லாந்தான். நான் மது மாமிசம் கொள்பவர்களைப் பற்றிப் பேசவில்லை. உண்மைக்குப் புறம்பாகத் துரோகம் செய்து கொண்டே பாசாங்கு செய்தல், சுயநலத்துக்காக எதை வேண்டுமானாலும் இழத்தல், எல்லாம் தான்.”

ஜானகி ஞானத்தின் பெருந்தன்மையைப் புரிந்து கொண்டு முகமலருகிறாள்.

“நாலு வர்ணம் என்பது தோற்றத்தையோ, வாழ்க்கை முறையையோ குறிப்பதல்ல. அது அக இயல்பையும் சார்ந்து தானிருக்கிறது. அதன்படி பிரும்ம குலத்தில் பிறந்தும் தன் சிறுசிறு ஆதாயங்களுக்காக ஒரு மேலதிகாரியின் எந்த ஈனமான தேவையையும் நிறைவேற்ற முயன்றால் அவன் கடையவன்தான். தாழ்ந்த படியில் தோன்றியும் பெருந் தன்மையுடன் நடந்து கொண்டால் அவன் அந்தணனுக்குரிய படிக்கு உரியவனாகிறான் இல்லையா?” என்று கேட்கிறாள் அவள.

ஒரு சராசரி அறிவு வாய்ந்த குடும்பப் பெண் என்று நினைத்துப் பார்க்கையில் அவளுடைய அறிவு முதிர்ச்சி பெருமைக்குரியதாகவே இருப்பதாக ஞானம் வியந்து கொள்கிறாள். அப்போது ஒசைப்படாமல் ஒரு பெரிய கார் ஞானத்தின் வீட்டுக்கு முன்பாக வந்து நிற்கிறது. ஜானகி மெள்ள நழுவிச் செல்கிறாள்.

கார்க் கதவை ஒட்டி திறந்து ராஜா இறங்கு முன் மைத்ரேயி மறு பக்கமாக இறங்கிவிடுகிறாள்.

ஞானம் சட்டென்று விளக்குகளைப் போட்டுவிட்டு, “வாருங்கள், வாருங்கள்!” என்று வரவேற்கிறாள்.

மேசையின்மீது இரண்டொரு இறக்கையற்ற ஈசல்கள் ஊர்ந்துகொண்டு இருக்கின்றன. ஞானம் காகிதங்களைத் தட்டி வைத்து, தட்டெழுத்துப் பொறியை ஒரமாக வைத்து மூடுகிறாள்.

“உட்காருங்கள்!” என்று பிரம்பு நாற்காலியைக் காட்டி உபசரிக்கிறாள். ராஜாவின் முகத்தில் முதுமையைக் காட்டும் சுருக்கங்கள் தெரிகின்றன. பாதித்தலை வழுக்கை. இரு காதோரங்களில் மட்டும் நரைத்து மேலே செல்லச் செல்ல அடர்த்தியில்லாத கருமை எஞ்சியிருக்கிறது. கூர்ந்து நோக்கினால் ஓர் அயர்வு தெரியும் முகம்; தங்கப் பிரேம் மூக்குக்கண்ணாடி, தடித்த ‘ஷெல்பிரேம்’ கண்ணாடியாக மாறியிருக்கிறது.

“ரொம்ப நாளாச்சு பார்த்து, எப்படி இருக்கு பிராஜக் டெல்லாம் ?”

ஞானம் அலட்சியமாகச் சிரித்தவண்ணம் கூறுகிறாள். “எப்படி இருக்கும்? எத்தனையோ பொதுத் திட்டங்கள் எப்படி இருக்கின்றனவோ அப்படி...”

“பொடி வைக்கிறீர்கள். எத்தனையோ பொதுத் திட்டங்களென்றால், எதைக் குறிப்பிடுகிறீர்கள்னு தெரியலியே ?”

“எதைக் குறிப்பிடுவேனென்று எதிர்பார்க்கிறீர்கள்? சுய நலம் என்ற ஒன்றை வெல்லும் அளவுக்கு நம் மக்களுக்கு இன்னமும் நாட்டுப்பற்று என்பது இருக்கிறதா என்பதைத் தான் அப்படிக் குறிப்பிடுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!...”

“நாம் நூற்றைம்பது ஆண்டு காலம் அடிமையாகக் கிடந்தவர்கள், மிஸ் ஞானம். அந்தவடு ஆண்டாண்டாக மனப்பாங்கில் பதிந்திருக்கிறது. ரயில் வண்டியிலிருந்து விசிறியையும் விசையையும் திருடுபவனுக்கு இன்னமும் நம் சொத்தைக் கொள்ளையிடுகிறோம் என்று தெரியவில்லை. ஆத்திரப்பட்டுப் பஸ்ஸைக் கொளுத்தும் இளைஞரும் அதை உணருவதில்லை.” என்று நியாயம் பேசுகிறார் ராஜா.

“அதுசரி; இந்தப் பத்துப் பதினைந்து வருஷத்தில் கண் விழித்தவர்களுக்கும் அது ஏன் வரவில்லை ? அவர்கள் சுதந்திர நாட்டில் இருப்பவர்களாயிற்றே? ஏனெனில் தங்கள் தலைவர்களின் சொற்களுக்கும் உண்மைக்கும் வேற்றுமை இருப்பதை இளம் தலைமுறையினர் உணர்ந்து விட்டார்கள். காந்தி ஜயந்தியன்று கைராட்டையுடன் பத்திரிகைக்குப் படம் எடுக்கப் போஸ் கொடுத்துவிட்டு, மாலையில் பார்ட்டியில் பங்கெடுத்துக் கொண்டு நேர்மாறாக நடக்கும் ஒரு தலைவனால் எந்த நல்ல சமுதாயத்துக்கும் வழிகாட்ட முடியாது. ஒவ்வொரு வியாபாரியும் அரசியல்வாதியும் அறிவாளியும், தொழில்காரனும் பணத்தினாலேயே உருவாகின்றனர்; பிழைக்கின்றனர். இதை அதிகம் விரிப்பதற்கில்லை. ஏனெனில் பேசும் நானும் மனசாட்சிக்குப் புறம்பாகச் சம்பளம் வாங்கிக் கொண்டு இங்கே உட்கார்ந்திருக்கிறேன். அது கிடக்கட்டும், வெகுநாட்கள் கழித்துச் சந்திக்கிறோம். உங்களுக்கு. என்ன சாப்பிடுகிறீர்கள்?” என்று கனிவாகவும் மரியாதையாகவும் வினவுகிறாள் ஞானம்.

“எனக்கு ஒன்றும் வேண்டாம்...தாங்க்ஸ்... இப்போது எதுவும் சாப்பிடுவதற்கில்லை.”

“அது தெரியும். என்றாலும் இந்த குளிருக்கு பழ ஜூஸ் ஒன்றும் சரியாக இருக்காது. மைத்ரேயி நன்றாகக் காப்பி போடுவாள்...” என்று மைத்ரேயியைப் பார்க்கிறாள் அவள். மைத்ரேயி நாற்காலியைப் பிடித்துக்கொண்டு உத்தரவுக்காகக் காத்து நிற்பவளைப்போல் நிற்கிறாள். “சரி, உங்கள் விருப்பம். இரவு எனக்குச் சாப்பாடு கிடையாது. காப்பிக்கு மட்டும் எந்த நேரத்திலும் தடையில்லை...”

ராஜாவின் அரும்பான பல் வரிசை தெரிகிறது, தங்கப்பல் பளிச்சிட மைத்ரேயி உள்ளே செல்கிறாள்.

“நான் மைத்ரேயியை முதன் முதலாக லோகாவின் வீட்டில் பார்த்ததும் அவளை அந்த ஹோமில் விடக்கூடாது என்று சொன்னேன். என் கருத்து அன்றே அவளுடைய எதிர்காலத்தை உருவாக்கிவிட்டது. என் புள்ளி தவறவில்லை. இன்று மாணவர் பங்கெடுக்கும் கருத்தரங்காகவே அது இல்லை. மைத்ரேயியின் பேப்பர் பொருளாதார நிபுணர்களையே கவருவதாக அமைந்திருந்தது. இளைஞர்மன்ற காந்தி ஜயந்தியின் போதும் நன்றாகப் பேசினாள். ஒரு நல்ல பேச்சாளி நமக்குக் கிடைக்கிறாள் என்று லோகா சொன்னாள். நான் அன்று சொல்லவில்லை. இந்தக் கருத்தரங்குக்குத் தலைமை தாங்க அவள் கூப்பிட்டதும் உடனே ஒப்புக்கொண்டேன். நம் நாட்டில் இப்போது ஒரு சாபக்கேடு என்னவென்றால் அறிவாளிகள் அரசியலை விட்டு ஒதுங்கிப் போக, அரசியலில் மூன்றாந்தரங்கள் வந்து தலையெடுத்துக் குழப்புகிறார்கள்:”

ஞானம் விடுவிடென்று, “இன்னொருமுறை சொல்லுங்கள் நான் திருத்துகிறேன். அறிவாளிகளுக்கு அது மேசை கழுவிய அழுக்கு நீராக இருக்கிறது. எத்தனை தடவை வடிகட்டினாலும் அது தெளிந்த நீராக மாறுவதில்லை. மாறாக, அந்த அழுக்கில் அவர்களும் முழுக்காடுவதுதான் நடக்கிறது.”

‘அழுக்கு நீர் அழுக்கு நீரென்று ஒதுக்கிவிட்டால் அழுக்கு நீரை மேலும் அழுக்காக்கும் மனிதர்கள் அல்லவோ வந்து பற்றிக் கொள்கிறார்கள்? அழுக்கு மேலே ஒட்டிக் கொள்ளுமே என்று அஞ்சி ஒதுங்குவது சமுதாயத்துக்கு அவர்கள் நல்லது செய்வதாகாது. இப்போது காங்கிரஸ் பழைய மாதிரி இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.”

ஞானம் பேசவில்லை. தரையைப் பார்த்துக்கொண்டு கைக்குள் எதையோ நெருடிக்கொண்டிருக்கிறாள்.

“இப்போது காங்கிரஸ் உங்களுடைய சோஷியலிசக் கொள்கைகளுக்கு விரோதமல்ல. சற்றுமுன் மனசாட்சிக்கு உறுத்தும்படிச் சம்பளம் வாங்குவதாகச் சொன்னிர்கள். உதறி எறிந்து விட்டு வாருங்கள். நீங்கள் பொருட் செலவு குறித்து யோசனை செய்யவேண்டாம். உங்கள் தேச பக்தியை நானறிந்தவன். கட்சிக்கு உங்களைப் போன்றவர்களை ஒதுக்கி வைப்பது பெரிய இழப்பு. நீங்கள் வந்து ஒத்துழையுங்கள்...” என்று வலையை வீசுகிறார் ராஜா.

ஞானம் அமைதியாக நிமிர்ந்து பார்க்கிறாள்.

“நீங்கள் வரும்போதே தேர்தல் விரைவில்வருவதைப் பற்றித்தானே நினைத்தேன்!” என்று அறிவிக்கும் பார்வை அது.

“உங்களுடைய கொள்கை மாற்றத்துக்கு நான் நிச்சயமாக ஆதரவு கொடுக்கிறேன். என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனால் அகற்காக கான் மீண்டும் அரசியல் மேடைக்கு வரப்போவதில்லை. ஆம், நிச்சயமாக நான் வரப் போவதில்லை.”

“நீங்கள் ஒரு முறை ஏற்பட்ட கசப்பான அநுபவத்தில் பேசுகிறீர்கள். இம்முறை உங்கள் வெற்றி நிச்சயம். நீங்கள் பார்லிமெண்டுக்கு நிற்கவேண்டும் என்பது என் கோரிக்கை. உங்கள் விருப்பம் மாநிலமானால் மந்திரிப் பதவி நிச்சயம்...”

“எனக்கு அப்பத்துண்டு காட்டி வலையில் இழுக்கலாம் என்று பார்க்கிறீர்களா..?” என்று ஞானம் கேலியாகச் சிரிக்கையில் மைத்ரேயி காப்பியைக்கொண்டு வருகிறாள்.

ராஜா பச்சைக்கல் மோதிரம் மின்னும் விரல்களை நீட்டிக் காப்பிக் கிண்ணத்தை எடுத்துக் கொள்கிறார்.

“மைத்ரேயி எம்.ஏ.முடிச்சிட்டு என்ன செய்யப் போகுது?”

மைத்ரேயி நாணம் கவிய ஒதுங்கி நிற்கிறாள்.

ஒர்கணம் சென்றதும், “ரிஸர்ச் பண்ணுவதாக இருக்கிறேன். ஸார்” என்று கூறுகிறாள்.

“என்ன ரிஸர்ச் ?”

ஞானம் உடனே, “அதைக் கேளுங்கள், பைத்தியக்காரி. ஆரியர்- திராவிடர் வரலாறு பற்றிய ரிஸர்ச்சாம். திராவிடர்களை ஒரு காலத்து ஆரியர்கள் துரத்தியதால்தான் இன்று திராவிடர் ஆரியர்களைத் துரத்துகிறார்களாம். இவள் ரிஸர்ச் செய்து ஆரியர்கள் மேலுள்ள கறையை நீக்கப் போகிறாளாம். இதைச் சொன்னாலே உன்னை யுனிவர்ஸிடியில் நுழைய முடியாமல் துரத்திவிடுவார்கள். இந்த அசட்டு ஆராய்ச்சிகளினால் கூனலை நிமிர்த்த முடியுமா? யாருக்கு என்ன இலாபம்? நான் பொறுப்பில் இருந்தால் இந்த மாதிரியான கவைக்குதவாத ஆராய்ச்சிகளில் பொருளே செலவிட வேண்டாம் என்று மூடிவிடச் சொல்வேன்” என்று காரமாக முடிக்கிறாள்.

“நீங்கள் சொல்வது ஒரு வகையில் உண்மைதான். ஆராய்ச்சி உண்மை எல்லாம் செயல்முறைக்கு உதவும் இருக்க வேண்டும்..” என்று ஒப்புக்கொள்கிறார் .

“வறட்டுத் தத்துவங்களால் என்ன பயன்? ஏழு வருஷங்களாக இங்கே இந்த'ஓரியன்டேஷன் சென்டர்’ நடக்கிறது. முப்பத்தெட்டு கிராமங்களுக்குக் கோடி கோடியாகத் திட்டச் செலவு ஏறியிருக்கிறது. என்ன வகையில் முன்னேற்றம் கண்டிருக்கிறது? அதனால் என்ன தீமை குறைந்திருக்கிறது? அதுவும் குடும்ப நலத்திட்டம் கீழ்ப்படிகளில் படுதோல்வி. சில வருஷங்களுக்கப்பால் கீழ்ப்படி வர்க்கம் பெருகும்; மேற்படி அருகும். அறிவு மட்டத்தில் வேனுமானால் சோஷியலிசம் சாத்தியமாகும். எல்லாரும் மந்தைமாடாகலாம். பொருளாதார மட்டத்தில் அல்ல.

ராஜா திட்டப் பிரச்னையை ரசிக்கவில்லை.

“மைத்ரேயிக்கு அப்படி என்ன அந்த ஆரியர்திராவிட வரலாற்றில் ஈடுபாடு ?”

மைத்ரேயிக்கு ஞானம், காரணத்தைக் கூறிய பின்னரும் அவர் ஏன் திரும்பக் கேட்கிறார் என்று புரியவில்லை. அவள் மெளனமாகவே நிற்கிறாள்.

“அது இருக்கட்டும். இப்போது அந்த ஆராய்ச்சிக்கு அவசியமில்லை. அவங்கதான் அரசியலுக்கு நோன்னு சொல்லிட்டாங்க. நீ அரசியலுக்கு வரணும். இந்தத் தடவை தேர்தல் காங்கிரஸின் பலத்துக்கு ஒரு சோதனையாக இருக்கு மென்று நினைக்கிறோம். எதிர்ப்பு பல முனையாக இருக்கிறது. இந்தியைத் துருப்புச் சீட்டாக வச்சிட்டு ஆடுறாங்க. இந்த ஆட்டத்தில் நாமும் முழு மூச்சாக வச்சிட்டுத்தான் ஜெயிக்கப் பார்க்கவேணும். இது அறுபத்தாறு நவம்பர்; அறுபத்தேழு பிப்ரவரிக்கு அதிக நாளில்லை. உன் குரல், பேச்சுத்திறன் எடுப்பான தோற்றம் எல்லாமே இந்தக் கட்சிக்குப் பயன்பட வேண்டும். என்னைக் கேட்டால் நீ கல்லூரியைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அந்தக் காலத்தில் விடுதலைப் போராட்டத்துக்கு மாணவர் அரசியலில் குதிக்கவில்லையா? இது அதைவிட முக்கியமான கட்டம். அவர்களும் மாணவர்களைக் கொண்டே

ரோஇ - 15 போராட்நடத்தச் செய்கிறார்கள். அவர்கள் கட்சியில் அடுக்கு மொழிப் பந்தலைத் தவிர வேறொன்றும் உருப்படியான கொள்கை கிடையாது. அறிவாளிகளை மூலையில் முடக்கும் அந்தக் கட்சி இந்தக் கோட்டைக்கு ஊறுசெய்ய விடக் கூடாது...”

வேகமாகப் பேசுவதால் ராஜாவுக்கு முகம் சிவக்கிறது. மைத்ரேயி தருமசங்கடமடைந்தாற்போல அவரைப் பார்க்கிறாள். ஞானம் எந்த வகையான இறுக்கத்தையும் உணரவில்லை. அவளுடைய புன்னகையே அதை வெளியிடுகிறது.

ராஜா மீண்டும் ஞானத்தை நோக்கிப் பேசுகிறார். “நான் மைத்ரேயியைக் காங்கிரஸ் கட்சியின் புதிய துளிராக முதலிலேயே நினைத்துவிட்டேன். இம்மாதிரிப் புதிய இரத்தம் பாய இடம் கொடுக்காததனால்தான் இன்று இவ் வளவு பெரிய எதிர்ப்பை எதிர்நோக்க வேண்டி இருக்கிறது.” “மிகப் பெரிய எதிர்ப்பா? உண்மையிலேயே கவலை கொடுக்கக் கூடியதுதானா?”

ராஜா ஒரு பக்கமாக முகத்தைச் சுளித்துக்கொண்டு, “சந்தேகமில்லாமல், ஆளும் கட்சி என்ற துணிவு நம்மிடம் இருக்கிறது. ஆனால் சென்னை, சுற்றுப்புறத்தை விட்டால் உள்ளே பட்டி தொட்டிகள் கிராமங்களெல்லாம் அவர்கள் பவர்ஃபுல் மீடியத்தினால் மக்களைக் கவர்ந்து இழுக்கிறார் கள். சிறுசிறு ஊர்களெல்லாம் நரம்பு இழைகள் போல் அவர் களுடைய அமைப்பு பரவி இருக்கிறது. எல்லாவற்றையும் விடக் கவலைக்கு இடம் தருவது இந்த மேற்குலத்தார் சாய்புதான். அந்தக் கிழவர் இவ்வளவுக்குப் போய் நச்சுப் பாம்புகளைத் தோளில் போட்டுக் கொண்டு தடவிப் பால் வார்க்கலாமா?” என்று கேட்கிறார்.

“உங்களைத்தான் அதற்காக இந்தக் கிழவர் தட்டிக் கொடுக்கிறாரே! இந்த ஆட்சியின் சாதனையில் நிர்வாகத் துறையிலும் வேறு பல பிரிவுகளிலும் தலைமைப் பொறுப்பைப் பூணுால் இல்லாதவரே அலங்கரிக்கின்றனர்; குலக் கல்வித் திட்டத்தை முறியடித்து எல்லோருக்கும் ஒரு கல்வி கொண்டு வந்தீர்கள். கலைக் கல்லூரிகளில், தொழிற் கல்லூரிகளில் அந்த மேற்குலத்தார்வருவதற்கு என்னென்ன முட்டுக்கட்டைகள் உண்டோ அத்தனையும் போட்டீர்கள் என்றெல்லாம் மகிழ்ந்து ஆதரவு தேடிக் கொடுக்கிறாரே? அவருடைய ஆதரவு உங்களுக்கு இருக்கும் வரையிலும் ஓட்டுக்குப் பஞ்சமில்லை; இந்த நீங்கள் அஞ்சும் மேற்குலம் என்ன சதவிகிதம் இருப்பார்கள்? மிகக் குறைவு. உங்கள் கோடடைக்கு ஒரு நாளும் ஆபத்து வர முடியாது. பெரும்பான்மை கொஞ்சம் குறையக்கூடும் வேண்டுமானால்....”

“நீங்கள் சொல்கிறீர்கள் அம்மா. எனக்கு வெளியே பாக்கும் போது, இம்முறை சென்னை எதிர்ப்புக்களைச் சமாளிப்பது சிரமம் என்றே தோன்றுகிறது. பருவமழை வறுவதும் பஞ்சம் வருவதும் ஆட்சியில் எல்லா இடங்களிலும் நடப்பதுதான். ஆனால் இங்கே அரசின் முயற்சிளை விட மக்கள் எதிர்க்கட்சியின் கூச்சலையே பெரிது படுத்துவதாகத் தோன்றுகிறது. காங்கிரஸ் ஆட்சி சென்னையில் மிகப் பெரிய சாதனைகளைச் செய்திருப்பதை யாருமே மறுக்க முடியாது. நீங்கள் வேறு எந்த ராஜ்யத்துக்குச் சென்றாலும் இது கண்களில்படும். போக்குவரத்து, சாலை, மின்சாரம். கல்வி, நிர்வாகம் என்று முன்னணியில் நிற்கும் ராஜ்யம் சென்னை. வெளியே நின்று அடுக்கு மொழியில் குறை கூறுவது எளிது. கையில் பொறுப்பை வைத்திருப்பவர்கள் அடுக்கு மொழியை வைத்துக் கொண்டு மட்டும் ஒன்றும் செய்து விட முடியாது. மக்களை ஏமாற்றலாம். நான் பெரிதும் மதிப்பு வைத்திருந்தேன் அந்தப் பெரியவரிடத்தில். அத்தகைய ‘ஸ்டேட்ஸ்மன்’ இவ்வளவு கீழ்த்தரமாகக் காங்கிரஸைப் பலவீனப்படுத்த அவர்களுடன் சேர்ந்து ‘இன்டலக்சுவல்’ என்ற பிரிவைக் காங்கிரசிலிருந்து இழுக்கிறாரே? அது சரியில்லை. நேருஜி கூறினாற் போல் வயசான பிறகு ஏற்பட்ட கோளாறு இது...நான் இன்று கூறுகிறேன், பிராமண சாதி, தற்கொலைக்கொப்பான செயலைச் செய்வதாக ஆகும். இன்று அவர் பேச்சைச் செவிமடுத்து அவர்களுடன் சேருவது... "காங்கிரஸ் கட்சி தோல்வியடையுமாயின் அதற்காக நான் மிகவும் வருந்துவேன். ஆனால் அவர்கள் பதினைந்து வருட ஆட்சிக் காலத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறை வேற்றுவதற்கில்லாமல் தவறிவிட்டார்கள். திட்டங்கள் வெற்றி என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் எந்த அளவில் பணக்காரன் பணத்தைக் குவித்துக் கொண்டே போகிறான்; விலைவாசிகள் எட்டிப் பிடிக்க இயலாமல் ஏறுகின்றன. ஏழைகள் இன்னும் பெருகிக் கொண்டிருக்கின்றனர்” என்று கூறுகிறாள் ஞானம்.

“ஒப்புக்கொள்கிறேன். என்றாலும் காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு நன்மை நினைக்கும் ஒரே கட்சி. அது தியாகத்திலும் கண்ணிரிலும் உருவானது. துவேஷப் பிரசாரத்தில் உருவானதல்ல. இதற்கு ஒரு நல்ல வரலாறு உண்டு. நீங்கள் என்ன அடுக்குமொழிப் பந்தல் போட்டாலும் சுதந்திரம், நேரு, காந்தி, காங்கிரஸ் என்ற தொடர்தான் எழுமே ஒழிய சுதந்திரம் அண்ணா என்று எழுத முடியுமா ?”

“சுதந்திரத்தைப்பற்றி இப்போது யார் நினைக்கிறார்கள்? அரிசி விலை என்னாச்சி? பருப்பு விலைஎன்னாச்சி? கட்டை விலை என்னாச்சி ? என்று மந்திரி அண்ணாச்சிகளைக் கூப்பிட்டுக் கேட்டுக் கோஷம் போட்டால் மக்கள் மனமிரங்கி நிற்கின்றனர். அரசியல் அந்த லெவலில்தான் இருக்கிறது.”

“சுலோகம், சினிமா, பாட்டு இது தொற்றுநோய் போலப் பிடித்திருக்கிறது.”

மைத்ரேயி இந்நேரம்வரை வாய் திறக்கவில்லை. பளீரென்று அவளுடைய குரல் எழும்புகிறது. “அப்படி ஒன்றும் நீங்கள் எளிதாக நினைத்துவிட வேண்டாம். ஆணிவேரிலிருந்து திட்டமிட்டு அவர்கள் தங்கள் கருத்துக்களை ஏற்கச் செய்கின்றனர். எனக்குத் தெரிந்து, தமிழ் படித்த வித்வான்களெல்லாரும் அவர்களுடைய ஆதரவாளர்தாம். நான் ஆறாவது படிக்கும் நாளில் கட்டுரை நோட்டில் உபாத்தியாயர் என்று எழுதினால் அந்தப் பதத்தை அடித்துத் தப்பாகக் கணக்கிட்டு மார்க்கைக் குறைப்பார்கள். ஏன்? அது சமஸ்கிருதம், ஆரியர்களின் மொழி. ஆசிரியர் என்று திருத்தி எழுதுவார்கள். இப்போது எனக்கு இதற்கும் கிண்டலாக கொடுக்கத் தெரியும். ஆசிரியரும் தனித்தமிழல்ல; ‘ஆசார்ய’ என்ற வட மொழிப்பதம் என்று சொல்வேன். வாழ்க்கை முறையிலிருந்து அடியோடு கலாசாரங்களிலேயே பிளவு காணும் வகையில் அவர்கள் செயல்பட்டிருக்கின்றனர். ஸ்லோரும் ஓர் குலம் என்று முழக்கிய காங்கிரஸ் இதைக் கவனிக்கவில்லை. எப்போதோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் ஆரியர்கள் அநீதி இழைத்தார்கள் என்று சொல்லிக் கொண்டு, இப்போது ஒரு சாராருக்கு இந்தத் தமிழ் நாட்டில் பிறந்திருப்பதன் உரிமையையே மறுக்கும் வகையில் விரும்பிய கல்வி கற்பதற்கும் தொழில் புரிவதற்கும் நியாயமான வகையில் பதவிகளைப் பெறுவதற்கும் இடமில்லாமல் போயிருக்கிறது. அதனால் வேற்று நாடுகளிலே, எங்கோ, எப்படியோ தங்கள் ஆற்றலைக் கொண்டு இந்த வகுப்பார் பிழைக்கப் போகவேண்டியிருக்கிறது. வட இந்தியாவில் பல ஆண்டுகளாக இந்த வகுப்பினர் வயிறு பிழைக்கச் சென்று அலுவலகங்களில் பணி புரிந்திருக்கின்றனர். எந்த வகையான மோதலும் கிடையாது. ஆனால் இந்நாட்களில் அதற்கும் ஆபத்து வந்திருக்கிறது. என்னுடன் சுதாராணி என்று ஒரு மராட்டிப் பெண் சோஷியல் சயன்ஸ் படிக்கிறாள். பம்பாயிலும் டில்லியிலும் இன்னும் எல்லா வட இந்திய நகரங்களிலும் தென்னிந்தியாவிலிருந்து சென்ற அடிநிலை மக்களின் சேரிகளைப் பற்றிக் கூறுவாள். பம்பாயிலுள்ள சேரிகளில் முழுசுமாகக் கள்ளக் கடத்தல், திருடு, சோரம் என்ற தொழில்களில் ஈடுபட்டவரே தென்னிந்திய மக்கள் என்பாள். சிவசேனை போன்ற கட்சிகள் இத்தகைய இழிவான நிலையினால் இன்னமும் வலுவடைகின்றன என்பாள்.

“டில்லி போன்ற நகரங்களில் பெரிய மனிதர்வீடுகளில் திருட்டுப் போனால் வேலைசெய்து அண்டிப் பிழைக்கும் இந்த மக்கள் சேரியில்தான் போலீசு சோதனை போடுமாம். கடத்தல் தொழிலில் ஈடுபட்ட தமிழர் தொகை மிக அதிகம் என்று அவள் வாதாடுவாள். இதன் விளைவு, அமைதியுடன் வாழும் மேற்படி மக்களையும் பாதிக்கிறது. ராமன், கிருஷ்ணன் என்று பெயர் முடிந்தாலே தமிழன் என்று மற்றவர் கேலிக்குரிய வகையில் பார்க்குமளவுக்குப் பாதித்திருக்கிறது. இங்கே ‘ஐயர்’ என்று போட்டுக் கொள்ளவும் கூசவேண்டியிருக்கிறது. “அர் யூ எ பிராமின் ?” என்ற கேள்வியும் “ஆம்” என்று சொல்லிக் கொள்ளவே கூசும் நிலையும் இன்று தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த அளவுக்குச் சராசரி அறிவுக் கூர்மை உள்ள ஓர் வகுப்பு அழுத்துவதைத் தவிர்க்க, அரசு இந்நாள் என்ன செய்திருக்கிறது ?”

மைத்ரேயி இவ்வளவு ஆவேசத்துடன் பேசி ஞானம் கேட்டதில்லை. மூலையிலிருந்த வெறும் காகிதத்துண்டு திடீரென்று வெடி மருந்து சுற்றிய காகிதத்துண்டு என்று தன்னை வெளியிட்டுக் கொள்ளப் பொறிகள் பறக்க வெடித் தாற்போலிருக்கிறது. ராஜா அவளைப் பாராட்டும் வகையில் புன்னகை செய்கிறார். “சபாஷ் மைத்ரேயி, நீ இந்த உணர்வுடன் பேசுவதிலிருந்தே வெற்றியைத் தேடிக் கொடுப்பாய் என்று நிரூபிக்கிறாய். நீ கேட்டதெல்லாம் நியாயம். ஆனால் இன்று அந்த வகுப்பார் எரிகிற சட்டியிலிருந்து அடுப்புக்குள் குதிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கும் உன்பேச்சும் திறமையும் செயல்பட வேண்டும்...”

“மன்னிக்கவேண்டும், ஸார். நீங்கள் அவர்களைவிட என்ன நலம் செய்திருக்கிறீர்கள் என்பது கேள்வி. இப்போது அந்த உயர் வகுப்புக்காரர் ஒருவர் ஒரு தலைவர், அவர்களுடைய வெறுப்பை மாற்றுவதாகத் தெரிகிறது. அவர்களும் துவேஷத்தை மறந்து ஒற்றுமைக்கு அடிகோலிவிட்டதாகச் சொல்கிறார்கள். இங்கோ வெளிப்படையாகப் பேசுபவர்களை, அந்தப் பாரபட்சச் செயல்களை ஆதரித்து உங்களைப் பாராட்டுபவர்களை, நீங்கள் மறுத்துக்கூட ஒரு அறிக்கை விடவில்லை. ஒரு கட்சிக்கு ஆதரவைத் தருவதால், ஒரு சாராரைப்பற்றி அவதூறாகப் பேசுவதையும் பொருட் படுத்தாமலிருக்கலாம் என்பது உங்கள் கொள்கையாக இருக்கும் பட்சத்தில் அந்த பாதிக்கபட்ட வகுப்பாரின் ஆதரவை நீங்கள் இழக்கவேண்டித்தான் வரும்.”

“மைத்ரேயி, யானை தன்மேல் எறும்பு ஊர்வதைப் பொருட்படுத்தாது. இந்தப் பெரிய கட்சி என்றுமே அப்படி யாரோ சிலர் பேசுவதைப் பொருட்படுத்தப் போவதில்லை. இது மக்களாட்சி. அவரவருக்குக் கருத்தைச் சொல்ல, கண்டிக்க உரிமை உண்டு. அப்படிப் பெரியார் சொல்கிறார். அதனால் அவர் உங்களுக்கு இன்று ஆகாதவராகவும் அவர் கட்டிக் கொடுத்துக் கருத்ததூட்டி வளர்த்த தம்பிகள் நல்லவர்களாகியும் விடுவார்களா? இது அபத்தம். அப்படி ஆதரவை அவர்கள் மாற்றுக் கட்சிக்கு அளிக்கும் பட்சத்தில் எந்த நன்மையையும் பெறப்போவதில்லை. இருந்தாலும் நீ துணிந்து என்னிடம் கருத்தைக் கூறியதற்குப் பாராட்டுகிறேன். நீ நன்றாக யோசனை செய்துபார். மிஸ் ஞானம்...எனக்கு நேரமாகிறது. வரட்டுமா!...”

அவர் எழுந்து விடை பெறுகிறார். ஞானம் வாயில்வரை சென்று வழியனுப்புகிறாள்.

14

ராஜா சென்றபின் மைத்ரேயி அன்றிரவெல்லாம் அவரிடம் தான் பேசியதை நினைத்து நினைத்துப் பின்னும் கிளர்ச்சியுறுகிறாள். “என்றோ திராவிடர்களை ஆரியர்கள் விரட்டியடித்தார்கள் என்பதற்காக இந்தத் தமிழ் நாட்டில் அந்த வகுப்பார் பிறந்திருப்பதன் உரிமையையே மறுக் கலாமா?” என்று நேருக்கு நேராக மக்களவையின் பிரதி நிதியான ஒருவரிடம் அவள் கேட்டிருக்கிறாள். தனராஜிடம் தன்னை இழக்காமல் அவள் சீராகப் படித்துத் தேர்ந்திருந்தால் அந்த வருஷம் அக்கா அவளை யாரேனும் ஒரு இடைநிலை வெள்ளைக் காலர் ஆசாமிக்குக் கட்டி வைத்திருப்பாள். இரண்டு மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு பற்றாக்குறையோடு போராடும் ஒருத்தியாக, கன்னச் செழிப்பு வற்ற, முடிகுச்சியாக ஒடிந்து கூழையாக, கவரிங் நகையிலும் போலிப்பட்டிலும் தன் மதிப்பை உயர்த்திக் கொள்ளும் இலட்சோப லட்சம் இடைநிலை அந்தணர் குலமகளிரைப்போல் அவளும் குட்டைக்குள் அழுந்திப் போயிருப்பாள். இப்போது, தான் பிறந்து வளர்ந்த சமுதாயம் கேள்விக் குறியாக நிற்பது போலும், அந்தக் கூனலை நிமிர்த்த முயற்சி செய்வதற்கான வழியில் தான் நிற்பதுபோலும் அவள் கிளர்ச்சியுற்றிருக்கிறாள். ராஜா அவளைக் காங்கிரஸ் மேடைக்குத்தான் அழைக்கிறார். ஆனால் அவளோ பெரும் பான்மையான அவளுடைய வகுப்பார் அமைக்கும் மேடையில் நின்று பேசத்தான் கனவு காண்கிறாள். வெளிப்படையாக அந்தணகுலத்தோரை உயர் பதவிகளிலிருந்து இறக்கியதற்காகப் பாராட்டுப் பெறும்போது அதை மறுக்கத் துணிவில்லாமலே மக்கள் ஆதரவைப் பெற விழையும் கட்சி அமைக்கும் மேடையைவிட எங்களிடம் வகுப்புத் துவேஷம் கிடையாது’ என்று சொல்லிக் கொண்டு இணைந்து செல்வ தில் ஆர்வம் காட்டும் கட்சியுடன் இணைந்து அமைக்கும் மேடையை அவள் பயனுள்ளதாக நினைக்கிறாள்.

காலையில் எழுந்திருக்கும்போது மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறது. அவள் காப்பி போட்டுக் கொண்டு வருமுன் ஞானம் நீராடித் துணி அலசிப் பிழிந்துவிடுவது வழக்கம். இன்று ஞானம் நாட்தாளைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள்.

“லிஸ்டர் உடம்பு சரியில்லையா உங்களுக்கு ?” ‘இல்லையே, நீதான் ராத்திரி அமைதியாகத் தூங்கியிருக்க மாட்டாய் என்று தோன்றுகிறது...” என்று நகைக்கிறாள் ஞானம்.

“நீங்கள் தேர்தலுக்கு நில்லுங்கள் அக்கா. உங்களுக்கு நான்பேசுகிறேன். ராஜா கூறினாற்போல் உங்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும். முதல்தரமான அறிவாளிகள் முடங்கி விடுவதுதான் கோழைத்தனம்...”

“இந்த அரசியலுக்கு அறிவு வேண்டியதில்லை என்ற பாடத்தை நான் எப்போதோ படிச்சாச்சு, மைத்ரேயி, இன்றைய அரசியலுக்கு வேண்டிய தகுதி ஒன்றுகூட எனக்குக் கிடையாது.” “நீங்கள் இப்படிச் சொல்லி விட்டால் நம் சாதிக்கு விமோசனமே இல்லை. போட்டிபோட்டு நாம் போராடித் தான் நம் உரிமைகளைக் கேட்கவேண்டும்...”

“அசடு, நீ உலகம் அறியாமல் பேசறியேன்னு சிரிப்பு வருகிறது. ராஜா இங்கே வந்தது என்னை அரசியல் களத்துக்கு இழுப்பதற்கு அல்ல. அத்தகைய மேம்பட்டோரை மெள்ள விலக்கி, பணத்தின் செல்வாக்கால், வன்முறையால் தங்கள் கட்சிக்கு பலம் சேர்க்கக் கூடியவர்களை இணைத்துக் கொண்டதனாலேயே இன்றைய கட்சி அரசியல் இந்த நிலையில் இருக்கிறது. என்னை அரசியலுக்கு இழுப்பதனால் அவர்களுக்கு ஒரு லாபமும் இல்லை என்பதை அவரே அறி வார். அவர் இங்கே வந்தது உன்னைத் துண்டில் போட்டு இழுக்க..”

மைத்ரேயி முகம் அருணோதயமாகிறது. மெளனமாகக் காபிக் கிண்ணத்தை மேசைமீது வைத்துவிட்டு தினத்தாளைப் பிரித்துப் பார்க்கிறாள்.

“அரசியலில் என்னைப்போல் நீ தோல்வியடைய மாட்டாய்” என்று கிண்டுகிறாள் ஞானம்.

“அப்படி எப்படிச் சொல்ல முடியும் ? என்னைவிட நீங்கள் முதிர்ந்தவர்கள். நிதானமாகப் பேசுவீர்கள். நான் மேடையேறிப் பேசுவதைத்தான் விரும்புகிறேனே ஒழிய, அரசியல் பதவிக்குப் போட்டிபோட எனக்குத் தகுதி கிடையாது. நீங்கள் அவர்களுடைய காங்கிரசில் இணைய மாட்டீர்கள். எனக்கும் நீங்கள் எதிர்க்கட்சியில் இருந்தால் தான் குமுறும் கருத்துக்களை கொட்ட முடியும்.”

“ஓ..ஐஸீ மைத்ரேயி! நான் எந்தக் கட்சியில் சேர வேணும் என்பதையும் நீ தீர்மானித்து விட்டாயா?” என்று ஞானம் விழுந்து விழுந்து சிரிக்கிறாள். அவள் விளையாட்டாகச் சிரிக்கிறாளா, தீவிரமாகவா என்பதை மைத்ரேயியினால் புரிந்துகொள்ள முடியவில்லை.

“ஏன் சிரிக்கிறீர்கள், ஸிஸ்டர் ? இதே காங்கிரஸில் இன்றைக்குப் பழைய பெருமைகள் எதுவுமில்லை. பதவி மோகம், பண மூட்டை, சாதிச் சச்சரவு, நம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற இறுமாப்பு இதெல்லாம் தானிருக்கின்றன. துவேஷத்தில் கிளர்ந்து வசைமொழி யாலோ, இசை மொழியாலோ வளர்ந்தாலும் இன்று பாமர மக்களிடையே அசைக்க முடியாத செல்வாக்குப் பெற்றிருக்கிறது எதிர்க்கட்சி. மிகவும் கண்ணியமாகவும் மரியாதையுடனும் பேசும் இளைஞர்களெல்லாரும் அந்தக் கட்சியில் இருக்கிறார்கள். அவர்கள் உயர் சாதிக்காரரின் மீது கொண்டிருந்த வெறுப்பை மறந்து இணைய வருவதை நான் ஒரு நல்ல எதிர்காலத்தின் துவக்கமாக எண்ணுகிறேன். இந்த நல்ல முயற்சியைச் செய்த பெரியவரை, தலைவரை நான் போற்றுகிறேன். அவருடைய பிரபுத்துவத்தை ஆதரிக்கும் கொள்கை எனக்குப் பிடிக்கவில்லைதான். எனினும் தென்னாட்டில் அரசியல் மட்டத்தில் சாதிப் பிளவை முக்கியமான சக்திப் பிளவை இணைத்து வைப்பது நல்ல முயற்சி என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.”

‘பக்குவம் வராத அரசியல் அறிவு இப்படித்தான் எண்ண முடியும். இந்த ஒட்டுதல் சந்தர்ப்ப லாபத்துக்காக. இதனால் பிராமண வகுப்பு நன்மையடையப் போவதாக நீ நினைத்தால் அதைப் போன்ற முட்டாள்தனம் வேறு கிடை யாது. என்னைக் கேட்டால் நீ போற்றும் பெரியவர் பிராமண வகுப்புக்குக் குழி தோண்டும் செயலைச் செய்கிறார் என்று சொல்வேன். வெறுப்பில் கிளர்ந்து வெறும் பகட்டு மொழியாலும் ஒழிக, அழிக கோஷங்களாலும் மக்கள் ஆதரவைத் தேடிக்கொண்டு வளர்ந்த கட்சி எந்த அளவுக்கு மக்களுக்கு நன்மை செய்யப் போகிறது என்பதைப் பற்றி எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் எனக்கு அந்த உயர் வகுப்பாரிடமும் அநுதாபம் கிடையாது. அந்தச் சமுதாயம் பெயரளவில் உயர்குலம் என்று சொல்லிக் கொண்டு அதற்குரிய செருக்குடன் மரியாதையை எதிர்பார்த்திருக்கிறதே ஒழிய, உண்மையில் அந்தச் சமுதாயத்துக்குத் தன்மானமும் சுய கெளரவமும் இல்லை. நீயே நினைத்துப்பார். எந்தப் பிராமணனேனும் தன் குல உயர்வை நிலைநாட்டிக் கொள்ளும் எந்தப் பிரச்னைக்கும் முடிவு கண்டிருக்கிறானா? ஒரு சராசரி பிராமணன் கோழை; துணிவில்லாதவன். அறிவு மட்டத்தில் அவன் உயர்ந்து என்ன பயன்? சாஸ்திரங்களையும் காவியங்களையும் கற்றறிந்து என்ன பயன்? நீ விரலைவிட்டுச் சொல். நாட்டில் புதிய மொழியும் புதிய அறிவும் வந்து கலந்த போதெல்லாம் பெரும்பான்மை பிராமண வகுப்பரே பற்றிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் எதற்காக? அதனால் அறிவைத் துலக்கிக் கொண்டு எந்தச் சமுதாயப் பிரச்னைக்கு அவன் விடை கண்டு குல மேன்மையை நிரூபித்திருக்கிறான்? மிகவும் தேர்ந்த படிப்புப் படித்து ஐ.ஸி. எஸ்.ஸ்-க்கு போனான்; வெள்ளைக்காரனைப் போல் வாழ்ந்தான்; ஒருத்தியைக் கல்யணாம் செய்து கொள்ளக் கிறிஸ்துவனாக மாறினான். பிராமணன் என்றால் அவன்பிரும்மத்தை உபாசிப்பவன். பிராமணத்துவம் என்பது மனிதன் ஆன்மீக நெறி நின்றடையக்கூடிய மிக உயர்ந்த நிலை. அவன் வாழ்வது மற்ற வருணத்தாரையும் அந்த அளவில் உயர் பண்புகளோடு மேம்பட்டு வாழச் செய்வதற்காகத்தான். அவனுக்கு வறுமை அணிகலன். ஆனால் இன்று நிலை என்ன? விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் ஒரு சிலர்கூட இந்நெறியைக் காப்பாற்றிக் கொள்ளவில்லை. அவன் அறிவு பயின்றதெல்லாம் பொருளாதார மேம்பாட்டுக்காக, புலன்களில் அழுந்தி இன்பம் துய்ப்பதற்காக. இந்தக் குறிக்கோளை வைத்துக் கொண்டு சாதி உயர்வைப் போர்வையாகப் போர்த்திக் கொண்டு தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறான். படிப்பறிவும் அச்சுப் பொறியும் இல்லாத காலத்தில் மரத்தடிகளில், கோயில் முன் கூடும் மக்களுக்கு ஆன்மீக உணர்வை ஊட்ட, சாஸ்திரங்களிலிருந்தும் புராணங்களிலிருந்தும் நற்பண்புகள் பெருகக் கூடிய வகையில் கதைகளும் காவியங்களும் விளக்கமாகச் சொன்னார்கள். இன்று அது ஒரு பணப் புதையலாகக் கிடைக்கக்கூடிய தொழிலாக, என்டர்டெய்ன்மென்ட் வால்யூ உடையதாக மாறிவிட்டது. உடலை விற்று ஆடிப்பிழைக்கும் சினிமா நடிகைக்கும், இவர்களுக்கும் இன்று ஒரு வித்தி இல்லை. இம்மாதிரியான போலிப் பிராமணருக்கு போலித் தொழில் புதிய பாடசாலை என்று சொல்லப்படும் கல்விக்கூடங்களில் அறிவு மங்கிய குழந்தைகளோ, வயிற்றுக்கு வழியில்லாத கீழ்மட்டக் குழந்தைகளோ, பொருள் புரியாமல், மொழி புரியாமல் தப்பும் தவறுமாக வேதங்களை உச்சரிக்க, அத்யயனம் செய்ய வருகிறார்கள். இந்தத் தொழில் இன்று சமுதாயத்தில் எந்த அளவுக்கு இழிந்து போயிருக்கிறதென்பதை நினைத்தால் கண்ணீர் வருகிறது. இந்தச் சாதி பிழைத்துத் தளிர்த்துப் புது வாழ்வு காணவேண்டும்என்று நான் கொஞ்சமும் எண்ணவில்லை. இன்றைய யுகத்தில் ஒரு சிலராலும்கூட நேர்மையாகப் பிழைக்க இயலாத ஓர் வாழ்க்கை முறையை எதற்காக வளர்க்கவேண்டும்? இந்தச் சாதி முகமில்லாமல் அழிந்து வேறு வண்ணங்களில் கலக்க வேண்டும்...”

“அது அவ்வளவு எளிதாக எனக்குத் தோன்றவில்லை. மற்ற நாடுகளில் ஒருகால் இம்மாதிரியான சமுதாய மாற்றங் கள் எளிதாக இருக்கலாம். வயிற்றுக்கில்லாது வறுமையிலும் உயிரோடிருந்த காலமெல்லாம் வெறுத்த முதியோருக்குச் சிரார்த்தம் செய்யவேண்டும் என்பதை மறுக்காத சமுதாயம் இது. கல்வியறிவும் மறுமலர்ச்சியும் பெற்றும், ஜானகி போன்ற பெண்கள் கண்மூடித்தனமாகச் சம்பிரதாயங்களை மட்டும் காப்பாற்றுகிறார்கள். பொருள் நிலை குறைந்த மட்டத்தில் தான் மூடநம்பிக்கை என்பதில்லை. உயர்மட்டத்தில் சாஸ்திரிகளை மாசச் சம்பளத்துக்கு அமர்த்திக் கொண்டோ, அள்ளிக் கொடுத்தோ, ஒட்டிய பாவத்தைக் கரைத்து விடலாம் என்று பொருளற்று உளுத்துப் போன சம்பிரதாயங்களைப் பற்றிக் கொண்டிருக்கின்றனர். உள்ளுற வேரோடியிருக்கும் நம்பிக்கையைக் களைந்தெறிய முடியாததாலேயே அந்த வாழ்க்கை முறையிலிருந்து நழுவினாலும் சம்பிரதாயங்களைப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஏன்? வெளிப்படையாகத் துாற்றினாலும் உள்ளுற அஞ்சி, முதல் நாளே ஐயரை வரவழைத்து, மஞ்சட் பிள்ளையாரைப் பிடித்து வைத்துப் பூசை செய்து தாலிகட்டி மெட்டி போட்டு முறையான திருமணத்தை முடித்து பின்னர் கட்சிப் பிரமுகர்களின் முன்னிலையில் வாழ்த்துத் திருமணத்தை பிரபலமாக நடத்துகின்றனர் அந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள். போன வருஷம் என்னோடு படித்த கலையரசியின் திருமணத்தின்போது நானே இந்த வேடிக்கையைப் பார்த்தேன். பாசிக் குளத்தில் இறங்கித்தான் சுத்தம் செய்ய வேண்டுமே ஒழிய, பாசி பிடித்த நீரைத் தலையில் தெளித்துக் கொண்டு போகும் நம்பிக்கையைப் பழிப்பதால் பயனில்லை, எலிஸ்டர்!”

ஞானம் மறுமொழி கூறாமல் புன்னகை செய்கிறாள். மைத்ரேயியின் முகத்தில் வெற்றி கொண்டாற்போன்ற பெருமிதம் பொலிகிறது. ராஜாவின் புகழ்ச் சொற்கள் செவியருகே வந்து வந்து அவளுடைய தன்னம்பிக்கைக்கு மெருகு கொடுக்கின்றன. வழி நெடுக, வெளியில் இறங்கியதும் அவள் கண்களில் படும் அரசியல் சூழலில் அவள் தன்னையறியாமல் பங்கு கொண்டிருப்பதாக நினைக்கிறாள். பல்கலைக் கழக நூல் நிலையத்துக்குச் சென்றவள் அன்று கல்லூரியிலிருந்து மூன்றரை மணிக்கே வீடு திரும்ப பஸ் நிற்குமி டத்துக்கு வந்து நின்று கொண்டிருக்கிறாள்.

மைத்ரேயி, சுதந்தரப் போராட்ட நாட்களைப் பார்த்ததில்லை. படித்திருக்கிறாள்; கேள்விப்பட்டிருக்கிறாள். கல்வி கற்கும் இளைஞர்களை எல்லாம் போராட்டக்காரர்களாக மாற்றிய அந்த நாட்கள், இந்த நாட்களைப்போல்தான் இருக்குமோ என்று நினைத்துக்கொண்டு நிற்கிறாள். எதிரே தேநீர்க்கடையில் எழுத்துக்கள் கறுப்பு-சிவப்பு வண்ணங்களில் பளிச்சிடுகின்றன. தேநீர்க் கடையைச் சுற்றிக் கறுப்பு சிவப்புத் தோரணம். தேநீர்க்கடைப் பையனுடைய மார்பில் கறுப்பு சிவப்பு வண்ணங்களில் உதய சூரியன் இடம் பெற்றி ருக்கிறான். தேநீர்க்கடைகள், சோடாக் கடைகள், முடிதிருத்தும் கூடங்கள், தையற்கடைகள் என்று நகரின் வாலாய் நீண்டு செல்லும் புறநகர்ப் பகுதிகள் நெடுகிலும் கறுப்புசிவப்பின் ஆதிக்கம் கண்களை மட்டும் கவர்ந்து நின்று விடவில்லை. சினிமாக் கொட்டகைகள், அண்ணா அறிவகங்கள், படிப்பகங்கள் எங்கும் புதிய தலைவர்களின் புகழே மணக்கிறது. சினிமா நடிகர்களின் முகங்களே காட்சி தந்து கொண்டிருந்த சுவரொட்டிகளில் அண்ணாவும் மூதறிஞரும் போட்டி போட்டுக் கொண்டு முகமலர்ச்சியைக் காட்டுகின்றனர். தேர்தல் நெருங்கி வருகிறது; இந்தத் தேர்தல் முந்தைய தேர்தல்களைப் போன்றதன்று என்ற பரபரப்பு, காணும் இடங்களிலெல்லாம் உள்ளோட்டமாய்த் துடிப்பது போல் மைத்ரேயிக்குத் தோன்றுகிறது.

பொதுக்கூட்டத்தின் அடுக்குமொழிப் பேச்சுக்களில், ஒலி பெருக்கி ஒலி பரப்பும் சினிமாப் பாட்டுக்களில், மக்கள் முக மலர்ந்து பேசும் பேச்சுக்களில், ஆழத்தில் வேரோடி, நீண்டு நிமிர்ந்த கிளைகளும் விழுதுகளுமாக அசைக்க முடியாதென்ற உறுதியுடன் நிற்கும் ஆலமரம் போன்ற ஆளும் கட்சியின் சாதனைப் புகழ்களெல்லாம் பகல் நேரத்துச் சந்திரனாய் ஒளியிழந்து போகும் விந்தையை அவள் காண்கிறாள்.

பஸ் ஏன் இன்னும் வரவில்லை? “தமிழ் வாழ்க!” என்ற கோஷத்தை கவசமாய் தன் மேனியில் சுமந்துகொண்டு வரும் அரசினர் பேருந்து ஊர்தி, ஏன் இன்னமும் வரவில்லை ?

மூட்டை முடிச்சு, பைகள் அந்த ஆலமரத்தடியில் குவிகின்றன; மக்களும் கூடுகின்றனர். அப்போது அவளருகில் முடி நீக்கிய தலையை இறுகக்காது மறையத் தலைப்பால் முக்காடிட்டுக் கொண்டு கச்சலாக ஒரு பார்ப்பனக் கைம்பெண் இடுப்பில் ஒரு துருப்பிடித்த டப்பாவுடனும் கையில் ஒரு பையுடனும் வந்து நிற்கிறாள்.

“இங்கே அம்பத்திரண்டு பஸ் நிற்குமில்லையா?” “சர்க்கார் பஸ் இங்கே நிற்காது. பிரைவேட் பஸ் நிற்கும். நீங்கள் எங்கே போகனும்?”

“ஆலந்துார் கிட்டப் ஃபாக்டரி குவார்ட்டர்ஸ் இருக்கே, அங்கே...”

“சர்ஜிகல் இன்ஸ்ருமென்ட்ஸ் ஃபாக்டரி குவார்ட் டர்ஸா...?” என்று கேட்கும் மைத்ரேயி சட்டென்று அந்த முகத்தைக் கூர்ந்து நோக்குகிறாள். ‘நீங்க...நீங்க’ சொற்கள் தொண்டையில் முள்ளாய்ச் சிக்கிக் கொண்டாற்போல் கண்களில் கசிவு உண்டாகிறது.

“ஆமாம், மதுரந்தான். நீ மைத்ரேயி இல்லே? நீ ஹோமை விட்டுப் போய் மேலே காலேஜில் படிக்கிறேன்னு லோகா சொன்னாள் ஒரு நாள். எனக்கு உன்னைப் பார்த்த உடனே தெரிஞ்சுடுத்து...” என்று தலையை அசைத்துப் புடவையை நீக்கிச் செவியை விடுதலை செய்து கொள்கிறாள்.

“இது என்ன மாமி கோலம்: இப்படி...” மதுரம் வெளிறிய புன்னகையைச் சிந்துகிறாள். கண்களும் நிறைகின்றன.

“அவர் போய் ஒண்ணரை வருஷமாச்சே! மயக்க மருந்தைத் தின்னுட்டு, லாரியில் அறைபட்டு. கண் கொண்டவா பார்க்க மாட்டா..”

மதுரம் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறாள். “இந்தக் காலத்தில், நீங்கள் எதுக்கு மாமி இந்தக் கோலம் பண்ணிக்கணும்? எனக்கு சகிக்கலியே ?”

“என்னம்மா பண்றது? அஞ்சு குழந்தைகளை வச்சிண்டு அல்லாடிப் போனேன். பெரியவன் அப்பவே சொல்லாம கொள்ளாம எங்கோ ஒடிப் போயிட்டான். பம்பாயோ கல்கத்தாவோ, எல்லாம் சிறிசுகள். ஒரு வருஷம் ஆகாம யார் வீட்டில் என்னைச் சேத்துப்பா ?”

“அப்புறம் சொன்னா, சுவாமிகள் மடத்திலே பிராமணப் பையன்கள்னா எதானும் ஒத்தாசை பண்ணுவா, போய்க் கேளுன்னா. அதுக்குத் தலைவச்சுக்கக் கூடாது. சரின்னு திருவையாத்துக்குப்போயி இப்படிப் பண்ணிண்டு வந்தேன். ரெண்டும் பாடசாலையில் இருக்கு. ஒரு வருஷம்போல நானும் அங்கதான் மடத்திலேயே இருந்தேன். சொர்ணத்தைக் கோவில் மடப்பள்ளியில் வேலை செய்யற பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணிக்குடுத்தேன். கீழ்க்களை ரெண்டையும் லோகா ஒரு வருஷத்துக்கு பாலாலயத்துக்குச் சிபாரிசு பண்ணி வச்சுக்கச் சொல்லியிருந்தா. இப்பக் கூட்டிண்டு வந்துட்டேன். படிக்கிறது ஸ்கூலில், தெவசம் திங்கள்னு சமைக்கப்போக முடியறது. கையில் காசு கிடைக்கறப்ப, எதோ முறுக்கு சீடைன்னு போட்டு விக்கறேன்...”

“உங்களைப் பார்க்கவே சகிக்கலியே மாமி ? உங்க முடி என்ன பாவம் பண்ணித்து ?”

“பெரியவாளைப் பாத்தா பாவம். மூணு நாள் பிட்சை எடுக்கமாட்டா. நம்ம மதம், தருமம்னு இருக்கேம்மா? நீ எங்கே இருக்கே? இன்னும் படிக்கறியா? வேலை பார்க்கறியா ?”

மைத்ரேயிக்குக் குற்ற உணர்வு குத்துகிறது. தனக்கு அவள் மோர் ஊற்றிச் சோறிட்ட காட்சி எப்போது நினைத் தாலும் நெஞ்சு நெகிழ முன் தோன்றுமே ?

“எப்படி மாமி நீங்க இதுக்கு ஒப்பினேன்? லோகாவெல்லாம் ஒரு ஒத்தாசையும் செய்யலியா உங்களுக்கு ?”

“இதுக்கு ஏம்மா நீ இப்படிப் பரிதவிக்கிறே? லோகாதான் எனக்கே இந்த யோசனையைச் சொன்னாள். கீழ்க்கடைக்கும் ஒரு வழி பண்ணினாள். தலைமுடி இருந்து என்ன கண்டேன் ? எண்ணெய் கிடையாது, பிண்ணாக்குக் கிடையாது. அது குச்சி குச்சியா நரைக்க ஆரம்பிச்சுடுத்து. இப்ப முற முறக்க இருக்கு. உன் மனசில வச்சுக்கோ. லோகாவே ஒரு வருஷத்துக்குள்ள அவாத்துக்கு நான் போறதுக்கு இஷ்டப் படல. வாஸ்தவந்தானேம்மா ? இப்பத்தான் அவளும் அவாத்துக்காரரும் சண்டை சச்சரவு இல்லாம ஒண்ணா யிருக்கா, ராஜா வரதில்ல. காங்கிரசை விட்டுப் பிரிஞ்சுட்டா. உனக்குத் தெரியாம இருக்குமா? நான் சொல்லப் போறேனே..”

மைத்ரேயிக்கு நினைக்க நினைக்க ஆறவில்லை. அந்தப் பையன்கள் இருவரும் கண்முன் பார்க்கும்போதே பைக்குள்ளிருந்து பணத்தை எடுத்த குழந்தைகள். வயிற்றுக்கில்லாமல் திருடக் கற்றாற்போல் வயிற்றுக்கில்லாமல் வேதம் ஓதப் போயிருக்கின்றனர். வயிற்றுப்பசி தீர்க்கப் படிப்பு. பொருள் தெரியாமல் மொழி தெரியாமல் மந்திரங்களைக் கிளிப்பிள்ளை போல் சொல்லிக் கொண்டு வந்து வயிறு வளர்க்கத் தொழில் செய்வார்கள். இந்த ‘பிராமணத்துவம்’ சாக வேண்டும் என்று ஞானம்மா சொன்னதில் என்ன தப்பு ?

கருஞ் சந்தைக்காரனும் சூதாடியும் உடலை விற்றுப் பிழைப்போரும் இன்னும் இழி செயல் செய்பவரும் மலிந்த இவ்வுலகில், அவர்களெல்லாரும் கடைத்தேறப் பாதபூஜைகள் செய்யும்போது, மதுரத்தைப் போன்ற பெண்கள் முடி வைத்துக் கொள்வதனால் தானா இந்து மதம் சீரழிந்து குலைந்து நசித்துப் போய்விடப் போகிறது?

அவள் எம்.ஏ. படித்து வரலாற்று ஆராய்ச்சி பண்ணி யாருக்கு என்ன செய்யப்போகிறாள்? சருகுகளாய் உலர்ந்து விழும் கூளத்துக்கு நீர்வார்த்து அழுகச் செய்வதைவிட ஒதுக்கித் தள்ளிவிட்டுப் புதிய வித்துக்களை ஊன்றுவதுதான் உகந்தசெயல். வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் மதத்துக்கு இழுக்கிறார்கள் என்று வேறு மதப் பிரசாரகர்களைக் குறை சொல்வதுண்டு. மானபங்கம் செய்வது போன்று ஒரு பெண்ணின் முடியைப் பறித்து சமுதாயத்தின் கண்களுக்கு அவளை ஒரு குற்றவாளியைப்போல் நிறுத்து வதற்கும் வறுமையே காரணமாக இருக்கிறது. இந்த வறுமையை நிபந்தனையில்லாமல் ஒழிக்க வேண்டும். புத்தகங் களை உதறி எறிந்துவிட்டு எங்கேனும் சமையல் வேலை யேனும் செய்து மதுரத்தின் குடும்பத்தைக் காப்பாற்றுவது தன் கடமை என்று அவளுக்கு அப்போதே தோன்றுகிறது. தப்பும் தவறுமாய் உளம் ஒன்றாமல் வேதம் ஓதியது போதும் என்று அந்தப் பிள்ளைகளை அழைத்து வந்து ஏதேனும் தொழிற் கல்வி கற்பித்து வாழும் வகை செய்து கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறாள். சேரிகளுக்குள் அழுத்தக் கூடிய வறுமைக்கும் உயர் சாதியினர் நடத்தும் வாழ்வு முறைக்கும் இடையே போராட முடியாமல் போலியாகவும் சருகாகவும் உலர்ந்து மாறும் மக்களை எல்லாம் கூனலில் இருந்து மீட்டு உண்மையான வாழ்வு வாழ வகை செய்வதை அவளுடைய இலட்சியமாகக் கொள்ளவேண்டும்....

"மாமி உங்க விலாசம் சொல்லுங்கோ, நான் வரேன்?”

“வாம்மா, விலாசமென்ன, பெரிய விலாசம்? எனக்குக் கடிதாசு போடறவா தட்டுக்கெட்டுப் போறதா? பழைய மாம்பலம் குளம் இருக்கோல்லியோ? அதோட வடக்கால நேராப் போனா சுப்பராயன் சந்துன்னு ஒண்னு வரும். அங்கே ஒரு தாவரத்தில குடியிருக்கேன். அதுக்கே பதினைஞ்சு ரூபாய் வாடகை எதிர்க்க ஒரு தகரக்காரன் கடை. மதுரம் மாமின்னு கேட்டாச் சொல்லுவா. பஸ் வராப்பல இருக்கே...”

“...ஆமாம் மாமி, இது ஃபாக்டரி குவார்ட்டர்ஸ் போகும் ஏறிக்குங்கோ...”

கைப்பையை வாங்கி கொண்டு அவளைப் பஸ்ஸில் ஏறச் சொல்லிவிட்டு மைத்ரேயி பிறகு பையை அவள் கையில் கொடுக்கிறாள்.

இனி அந்த ஞானம்மாவின் சொகுசான நிழலும் ஊட்டமான உணவும் வெய்யில் படாத வாழ்க்கையையும் அவள் அநுபவிப்பது பெருந்துரோகமாகும் என்று மைத்ரேயி கருதுகிறாள்.

எப்படியேனும் ஒரு வேலை தேடிக்கொள்ள வேண்டும். இந்தச் சாதியின் சீரழிவை அடித்தளத்திலே தடுக்க வேண்டும்...

அன்று அவள் வீடு திரும்பும்போது, எம்.ஏ. பரீட்சை எழுதும் உறுதிகூட ஆடிப்போகிறது.

15

அவள் வீடு திரும்பும்போது ஞானம்மா வீட்டிலிருப்பாள் என்று மைத்ரேயி கருதியிருக்கவில்லை. ஐந்தரை மணிக்கு மேல் தான் ஞானம் அலுவலகத்திலிருந்து திரும்புவது வழக்கம். ஜானகியின் வீட்டில் சாவி கொடுத்திருப்பாள். மணி ஐந்தடிக்கிறது. கதவும் திறந்திருக்கிறது. முன்னதாக வந்துவிட்டாளா? அவளுக்கு உடல்நலக் குறைவென்று வந்து ப, சந்தர்ப்பங்கள் கூட மிக மிகக் குறைவு. ஒரு முறை ஃப்ளூகாய்ச்சல் வந்தது. அவளுக்கு தெரிந்து ஞானம் வந்தாற்போல் மூன்று நாட்கள் அப்போதுதான் படுத்திருந்தாள்.

மைத்ரேயி வீட்டுக்குள் நுழைந்தபோது ஞானம் உடல்நலமின்றிப் படுக்கையை விரித்துப் படுத்திருக்கவில்லை. மாறாக உள்ளே சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருக்கிறாள். ஏலக்காயும் நெய்யும் மணக்கின்றன.

சாப்பிடும் கூடத்து மேசைமீது புதிய ஜினியாப் பூங் கொத்து ஒன்று பறித்துச் செருகி வைத்திருக்கும் மலர்க் குடுவை.

“என்னக்கா?” என்று அவள் சமையலறையை எட்டிப் பார்க்கிறாள்.

ஸ்டவ்வில் அல்வா கிளறும் ஞானம் அருகில் வடைக்கு வேறு அரைத்து வைத்திருக்கிறாள்.

“என்னக்கா? யாருக்கு பார்ட்டி, இன்னிக்கு ? என்னிடம் முன்பே சொல்லி இருந்தால் இன்னும் ஒரு மணி முன்னதாக வந்திருப்பேனே.”

‘உன்னிடம் அப்போதே சொல்ல எனக்கே தெரியாதே?”

“விடுங்கள், நான் கிளறுகிறேன். நீங்கள் முகத்தைத் துடைத்துக் கொண்டு போங்கள். எத்தனை பேர் அக்கா?” “யாருமில்லே, எதிர்வீட்டு ராமசேஷனும் ஜானகியும் வருகிறார்கள்.”

“இன்னிக்கு அவங்களுக்கு வெட்டிங் டேயா? நீங்க பார்ட்டி குடுக்கிறீங்களா அக்கா?”

ஞானம் மைத்ரேயியைக் குறும்புச் சிரிப்புடன் திரும்பிப் பார்க்கிறாள்.

“அவளோட அவர் ஃபிரன்ட், ஒரு I.M.S. டாக்டர் பையன் வந்திருக்கிறான். இங்கே அழைத்து வரேன்னா. சரி, ஒரு ஸ்வீட் பண்ண்லான்னு நினைச்சேன். பிறகு ஒரு காரமும் இருந்தால்தான் சரியாக இருக்கும்னு தோணித்து...”

மைத்ரேயி ஒருகணம் சலனமற்று நிற்கிறாள். யாரையோ அழைத்து வருகிறேன் என்றால் அதற்கு ஸ்வீட் காரமா? அழைத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஒரு டாக்டர் பையனை எதற்கு அழைத்து வருகிறார்களாம் ? எதற்கு ஸ்வீட் காரம் பண்ணுவானேன்?

“இனிப்புப் போறுமா என்று பார்!"என்று அவளிடம் ஒரு தேக்கரண்டியில் கொஞ்சம் எடுத்துக் கொடுக்கிறாள்.

“வாசனையே சொல்கிறதே? போறும்.” மைத்ரேயியினால் ஒன்றும் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஒரு கால் ராஜா வருவதாகச் செய்தி அனுப்பி இருப்பாரோ? -

ஞானம் பொய் சொல்லமாட்டாள்.

ஐ.எம்.எஸ். என்றால், போருக்குப் போயிருப்பவனாக இருக்கும். அதற்காக உபசாரமா ?

மைத்ரேயி முகம் கழுவிப் பொட்டு வைத்துக்கொண்டு உள்ளே மீண்டும் நுழைகிறாள். ஞானம் அல்வாவை இறக்கி வைத்துவிட்டு போண்டாவை உருட்டிக் காயும் எண்ணெயில் போடுகிறாள்.

“நீங்கள் ஃபர்ஸ்ட் கிளாஸ் ஹவுஸ் வைஃப் ஆக இருப்பீர்கள் அக்கா !”

ஞானம் திரும்பிப் பார்க்கவில்லை. “மிக்க நன்றி. நீ போய்த் தலை வாரிக் கொண்டு கொஞ்சம் ஃபிரஷ்ஷாக இரு !”

“எனக்கென்ன இப்ப; நான் எப்போதும் ஃபிரஷ்ஷாகத் தானிருக்கிறேன்.”

“நான் சொல்வதைக் கேளேன் ?”

மைத்ரேயி பூடகத்தை உடைக்கத் தயாராக, “நான் கேட்க மாட்டேன்” என்று சிரிக்கிறாள். "இப்போதெல்லாம் நன்றாகப் பேசத் தெரிந்து கொண்டு விட்டாய். கேட்காவிட்டால் போ.”

மைத்ரேயி சாப்பிடும் கூடத்து மலர்க் குடுவையைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். ஜப்பானிலிருந்து அக்காவுக்கு யாரோ நண்பர் வாங்கிக் கொடுத்த பீங்கான் குடுவை அதைப் படுக்கையறை அலமாரியில்தான் வைத்திருந்தாள். இன்று அதை எடுத்து ஜினியாப் பூங்கொத்தை வைத்திருக்கிறாள். பொருத்தமாக இல்லை . ஞானம்மாவுக்கு இந்த அலங்காரக் கலைகளில் ஆர்வம் உண்டு.

பால்காரன் வருகிறான் வாயிலில். அதிகமாகப் பால் பாகுவதற்காகப் பெரிய பாத்திரத்தை ஞானம்மா எடுத்து வருகிறாள்.

இதுவரையில் அவளுக்குத் தெரிந்து எத்தனையோ விருந்தினர் வந்திருக்கின்றனர். ஆனால் ஞானம், அவளை “முகம் திருத்திக் கொள்” என்று சொன்னதில்லை. என்ன விசேஷம்?

பளீரென்று மின்னல் பொறி போல் ஒரு நினைவு தோன்றுகிறது.

அந்தப் பக்கம் எங்கேனும் தனராஜ் பொதுக்கூட்டத்தில் பேச வருகிறானா?

அக்கா இவளை அவனுடன் சேர்த்துவைக்கப் போகிறாளா?

சுவரெட்டிகளை அவள் நன்றாகப் பார்த்தாளே?

இந்த எதிர்பாரா ஊகம் தோன்றியதும் மைத்ரேயிக்கு ஒரு பொருந்தாமை உண்டாகிறது.

தனராஜ் தன்னை வந்து சந்திக்க நேரும் என்ற எண்ணமே .அவளுக்குத் தோன்றியதில்லை. அப்படி ஒரு சந்தர்ப்பம் நேரும் என்று அவள் அதுகாறும் நினைத்திருக்கவில்லை. ஆனால் நிகழ்கால அரசியல் விநோதங்களை நினைக்கையில் எதுவும் நடக்கும் என்றே தோன்றுகிறது.

லோகாகா, அறிவு மறுமலர்ச்சி பெற்றவள். விரிந்த மனம் உடையவள் என்று அவள் கருதிய லோகா, மதுரத்தைக் கணவன் இறந்து ஒராண்டுக்குள் அவளுடைய வீட்டுக்குள் வரலாகாது என்று தடுத்து முடி நீக்கக் காரணமாக இருந்தாள் என்றால், வேறெந்த சம்பவம்தான் நிகழாது ? போலியாக வாழ்ந்த கணவனுக்காக அப்படி மாறிவிட்டாளா? ஆச்சாரியார் என்று இகழ்ந்து தூற்றியவரை இன்று துாற்றியவர்களே ‘மூதறிஞர்’ என்று போற்றுகிறார்கள். தனராஜ் மைத்ரேயியைக் கட்சிக் கூட்டாக அழைக்க வரலாம்.

அவன் வரும்போது அவள் என்ன செய்வாள்?

பெரும் கேள்வியாக அவள் மனக் கண்ணில் அது விஸ்வருபம் எடுக்கிறது.

அக்கா அவள் அந்தக் கட்சியில் இணைவதை ஆதரிக்க மாட்டான்.

ஆனால், தனராஜின் மனைவி என்று வரும்போது ? அவள் பழைய மைத்ரேயி இல்லை; ஆனால் அவனும் பழைய தனராஜாக இல்லாமல் இருக்கலாமே ?

“என்ன இப்படியே உட்கார்ந்திருக்கிறாய்? என்ன யோசனை ?”

“நீங்கள் உள்ளத்தை ஒளியாமல் கூறுங்கள்; தனராஜ் வருகிறானா?” ஞானம் விழிக்கிறாள். “யார் தனராஜ் ?”

மைத்ரேயி கோபத்துடன்,” தெரியாதது போல் பாசாங்கு செய்ய வேண்டாம். ஆலமரத்துக் கிளிப்பாட்டுப் போட்ட திரைப்படக் கவிஞர், கட்சியின் தூண் போன்ற உறுப்பினர். அரசியல் என்றால் வெட்கம் மானம் ஒன்றுமே இருக்காது போலிருக்கிறது” என்று வெடுவெடுத்துவிட்டுச் சிவக்குட் முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள்.

“அட ராமா” என்று ஞானம் கேட்டுவிட்டுச் சிரிக்கிறாள்.

“எனக்கு அவனைப் பற்றி நினைப்பேயில்லை. அப்படி யாரும் வரப்போறதில்லை.”

“பின் என் அலங்காரத்தில் உங்களுக்கென்ன ஆவல்? ஏதோ சொஜ்ஜி பஜ்ஜியைப் பண்ணி வைத்துக் கொண்டு பண்ணை ரெடியாக இரு என்று சொல்பவர்கள் போல் இருக்கிறதே உங்கள் நடப்பு ?”

ஞானம் அவளை நேராகக் கனிவுடன் நோக்குகிறாள். மைத்ரேயின் முகம் குழம்பியிருக்கிறது.

“கோபிச்சுக்காதே, மைத்தி. எண்ணம் அப்படியில்லைன்னு நான் சொல்லலே. நேற்றே இதைச் சொல்லத்தான் ஜானகி வந்தாளாம். காலையில் பத்து மணிக்கு ஆபீஸிலேயே ராமசேஷன் கேட்டார். ‘மிக நல்ல பையன். வயசு முப்பது ஆகிறது. ஜாதகம் வரதட்சிணை எல்லாம் கிடையாது. உங்கள் தங்கையைப் பற்றி நாங்கள் சொன்னோம். அவனே இன்று காலையில் அவள் காலேஜூக்குப் போவதைப் பார்த்துவிட்டு இவள்தானா’ என்று கேட்டான். அவனை சாயங்காலம் கூட்டி வரட்டுமா என்று கேட்டார். நான் என்ன பதில் சொல்ல ? வரச் சொன்னேன்!”

புளிக் குழம்பையும் பாயசத்தையும் மோரையும் ஊற்றிக் கலந்து ருசிப்பது போல் இருக்கிறது.

“நீங்கள் என்ன நினைத்துக்கொண்டு வரச்சொன்னீர்களக்கா ? நான் என்ன கன்னிப்பெண்ணா ?”

“மெதுவாகப் பேசு மைத்ரேயி, எனக்குத் தெரியும். ஆனாலும் உன் எதிர்காலத்தைக் குறித்து எனக்குக் கவலை இருக்கிறது...”

“நான்சென்ஸ்” என்று முணுமுணுக்கிறாள் மைத்ரேயி, “யாரு, நானா?” “இல்லே. மன்னியுங்கள் அக்கா. என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லையே? நீங்கள் என்ன முடிவோடு, துணிவோடு அவர்களுடைய அந்த எண்ணத்துக்கு இடம் கொடுத்து வளர விடுகிறீர்கள் என்று நான் நினைக்கட்டும்?”

“பொறு, ஆத்திரப்படாதே மைத்ரேயி, நீ உன்னுடைய அந்தக் கல்யாணமோ, எதுவோ, அதை இன்னும் உயிருள்ள தாகத்தான் நினைத்திருக்கிறாயானால் சொல். நான் உன்னை வற்புறுத்தவில்லை.” “அந்தக் கல்யாணம் உயிரில்லாததுதான். சட்டப்படி செல்லாதுதான். ஆனால் நான் கன்னிமை காத்து வந்தவள் என்று பொய்யாக நம்பும்படி செய்து என்னை ஒருவருக்குக் கல்யாணம் செய்து கொடுக்க நீங்களா விரும்புகிறீர்கள் ? அக்கா, நான் இங்கிருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதை நேராகச் சொல்லிவிடக்கூடாதா?”

“அசடு, ஏன் இப்படி எல்லாம் நினைக்கிறாய்? அந்தத் தனராஜை இன்னும் நீ மனசில் வைத்துக் கொண்டிருப்பாய் என்பதை நான் எண்ணிப் பார்த்திருக்கவில்லை. நான் ஒரு மாதிரி ஜானகியிடம் நீ வீட்டைத் துறந்து வந்திருப்பதைப் பற்றிக் கூறியிருக்கிறேன். நீ என் இரத்தக் கலப்புச் சோதரியல்ல என்பது அவர்களுக்குத் தெரியும். உனக்குத் தனி வாழ்வு இம் மாதிரியான நிலையில் பத்திரமல்ல என்று நான் கருதுகிறேன். அவர்கள் உடன்படுவதைக் கவனித்தால் பையன் பெருந்தன்மையுடையவனாக இருப்பான் என்று தோன்றுகிறது.”

“தனிவாழ்வு எனக்கு மட்டும் பத்திரமில்லை என்பதை எப்படி நீங்கள் முடிவு செய்தீர்கள்? நான் என்ன..”

படபடப்பாக வரும் சொற்களை உதட்டைக் கடித்து விழுங்கிக் கொள்கிறாள்.

கண்களில் நீர் தளும்புகிறது.

ஏன்? ஏன் அவளுக்கு மட்டும்? அவளை மட்டும் ஏன் பத்திரமில்லாதவள் என்று நினைக்கவேண்டும்? ஒரு ஆணின் கண்களில் அவள் பாலுணர்வைத் தூண்டிவிடும்படியான பிம்பமாகவா விழுகிறாள்?

சீ? !

ஞானம்மா மெள்ள அவளுடைய கையைப் பற்றுகிறாள்.

“நீ நினைப்பதெல்லாம் எனக்குப் புரிகிறது, மைத்ரேயி. பொது வாழ்வும் ஒரு பெண்ணின் இளமையும் எப்போதும் கத்திமுனையில் நடப்பது போன்ற அநுபவமாக இருக்கும் என்பதை நான் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறேன். இதற்குமேல் நான் சொல்லவேண்டாம் உனக்கு. குடும்ப அமைப்பில் இருந்து கொண்டு உன் அறிவையும் ஆற்றலையும் சமுதாய நலனுக்குப் பயன்படுத்தலாம் என்று நான் எண்ணினேன்...”

வியப்பும் கண்ணிரும் அலைமோத அவள் ஞானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

“வாருங்கள், வாருங்கள்...”

“நமஸ்காரம்...”

ராமசேஷன் “டாக்டர் முரளி...” என்று அறிமுகம் வசயது வைக்கும் குரல் மைத்ரேயிக்குக் கேட்கிறது.

“உட்காருங்கள், உட்கார் ஜானகி...சிவு எங்கே?...”

“சிவு. பார்ட்டிக்குப் போயிருக்கிறான்.” ஜானகி சிரிக்கிறாள்.

“பார்ட்டியா ?”

“ஆமாம். மிஸஸ்கோகலே வந்து அழைச்சிட்டு போனாள். ஸிமிக்கு இன்னிக்கு பர்த் டே.”

“ஓ! பெரியவங்க பேசும் இடத்தில் வேண்டாமென்று அனுப்பிவிட்டாயாக்கும் !”

சிரிக்கிறார்கள்.

“நீங்கள் இப்ப லீவில் வந்திருக்கிறீர்கள், இல்லையா?”

“ஆமாம்.”

“உங்களுக்கு டில்லியில்தான் படித்ததெல்லாமா ?” “நான் இங்கே மெட்றாஸ் மெடிகலில்தான் படிச்ச தெல்லாம். அப்பா அம்மா இப்ப இந்துாரில் இருக்கிறார்கள்.”

‘மெட்ராஸ் மெடிகலிலா? எந்த வருஷத்தில்?”

” அறுபதில் பாஸ் பண்ணினேன், அறுபத்திரண்டில் ஸர்விஸ்-க்குப் போனேன்.”

ஞானம்மா, இண்டர்வியூக்கு வந்த இளைஞனைக் கேள்வி கேட்பது போல் பேசுவதாக மைத்ரேயி நினைத்துக் கொள்கிறாள். டிராயிங் ரூம் பேச்சு என்ற நாகரிகமே ஞானத்துக்குப் பழக்கமில்லை. பெண் எத்தனைதான் படித்து முன்னேறி மறுமலர்ச்சி வேடம் பூண்டாலும் அடித்தளத்திலுள்ள பச்சையான இயல்புகள் சமயங்களில் மீறி வரு வதாக மைத்ரேயி நினைக்கிறாள். ஞானம்மா, அவள் பெரிதும் மதித்து வியந்து அன்பு கொண்டு ஆராதித்த ஞானம்மா, அவளுக்கு ஒரு சோதரியாக, ஆசிரியையாக, தோழியாக நின்றிருப்பவள் இப்போது மூடத்தாயாக உருக் கொண்டிருக்கிறாள். அவளால் இப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது.

அப்போது ஞானம் உள்ளே வருகிறாள்.

“காபிக்குப் பால் காய்ந்து விட்டதா? நீயும் வா...” என்று கூறிவிட்டு, தட்டுக்களில் இனிப்பையும் காரத்தையும் வைக்கையில் ஜானகியும் உள்ளே வருகிறாள்.

“மைத்ரேயி காலேஜிலிருந்து வரவில்லையாக்குமென்று நினைச்சேனே? ஓ ! இதெல்லாம் என்ன ஸிஸ்டர்? பெரிய அமர்க்களம் பண்ணி இருக்கிறீர்கள்?”

“ஒண்ணுமில்லே. உங்க வீட்டிலிருந்து மாசம் அஞ்சு நாள் பாயசமும் பட்சணமும் கொண்டு வந்து தருகிறாய். இதையும் ருசித்துப் பாருங்கள்.”

“ஆமாம். அக்காவே செய்தது.”

தட்டுக்களையும் தண்ணிர்க் கூஜாவையும் அவளும் மைத்ரேயியும் கொண்டு வருகிறார்கள்.

நல்ல உயரமும் பருமனுமாக கம்பீரமான தோற்றத்துடன் விளங்கும் முரளி பெண்களிடையே கூசினாற்போல் தோன்றுகிறான். பெண்களின் சங்கத்தில் இயல்பாகப் பழகக் கூடியவனல்ல என்று புரிகிறது.

“மைத்ரேயி...” என்று ஜானகி கூறுகிறாள்.

“டாக்டர் முரளி...”

புன்னகை, கைகுவிப்பு. அவனுடைய முகத்தில் வியப்பு.

“...நான்...நீங்கள் பாபுச் சித்திக்கு உறவு இல்லையா?” என்று நேராகக் கேட்கிறான். மைத்ரேயிக்குத் தன் உடல் குளிர்ந்து கரைவதுபோல் தோன்றுகிறது.

பாபுச் சித்தி....அத்திம்பேரின் பெரியப்பா பெண் பாபு... அவளுக்கு...

“சரிதானா? நான் உங்கள் வீட்டுக்கு ஒருநாளைக்கு வந்தேன் நினைவிருக்கா ?”

“நினைவிருக்கிறது” என்று தலையை ஆட்டுகிறாள் மைத்ரேயி. பாபுவின் கணவருக்கு டில்லியில்தான் வேலை. பாபுவின் பெரிய மகள் மைத்ரேயியைவிடப் பெரியவள். அந்த லோச்சுவும் மீனாவும் மாம்பாக்கம் வந்தால் அவளை வேலைக்காரிபோல் நினைப்பார்கள். அவர்களுக்கு அவள் தட்டலம்பி வைத்து, மருதோன்றி அரைத்துக்கொடுக்கும் போது மட்டும்தான் சிநேகம். ஊருக்குப் போகும்போது, அந்த பாபு, அவள் கையில் நாலணாவோ, எட்டனாவோ கொடுப்பாள். அதை அவள் முகத்திலேயே விட்டெறியத் தோன்றும். அக்காவுக்கு அஞ்சி அதை வாங்கிக் கொண்டி ருக்கிறாள். அவளுடைய மைத்துனர் பிள்ளையான இந்த முரளி மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். ஒரு முறை அவன் தீபாவளி சமயம் அங்கு வரப் போகிறான் என்று அக்காவே தடபுடலாக ஏற்பாடுகள் செய்து எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் தீபாவளியன்று வர வில்லை. அடுத்த நாள் பிற்பகல் எல்லாரும் பகற்காட்சிக்குச் சென்றிருந்த நேரத்தில் வந்தான். அவள் தீபாவளி பட்சணத்தை ஒரு தட்டில் வைத்துக் கொடுத்து விட்டு, வீட்டுக் கப்பால் வயலில் நின்றிருந்த அத்திம்பேரை அழைத்து வந் தாள். ஒலையை எரியவிட்டு அத்திம்பேருக்கும் அவனுக்கும் காபி தயாரித்துக் கொடுத்தாள்.

அவன் அவளை இனம் புரிந்துகொண்டது அவளுக்கு நன்மையாகவே இருக்கிறது. மனம் இறுக்கம் விடுபட்டு இலேசாகிறது.

“முன்பே தெரியுமா என்ன ?’"என்று வினவுகிறார் ராமசேஷன். “உலகம் மிகவும் சிறிது” என்று நகைக்கிறாள் ஜானகி. “அந்தத் தோட்ட வீடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்போதுகூட அங்கே போக வேண்டும் என்று ஆசை.”

முரளி மிகவும் பண்புடையவனாக இருக்கிறான். ஞானம் எப்படி உறவு என்று கேட்கவில்லை. அவனுக்கு அவளைப் பற்றிய செய்தி நிச்சயமாக எட்டி இருக்கும் என்று மைத்ரேயி நினைக்கிறாள். ஏனெனில் இத்தகைய செய்திகள் காட்டுத்தீ போல் பரவுவது சகஜம்.

‘இது என்ன அல்வா?” என்று நல்லவேளையாக ராமசேஷன் பேச்சுப் போக்கை மாற்றுகிறார்.

“கண்டுபிடித்துச் சொல்லுங்கள்!” என்று ஜானகி சிரிக்கிறாள்.

“கோதுமையா?”

முரளி புன்னகையுடன் அல்வாவைத் தொடாமலே பரிசீலனை செய்கிறான். மைத்ரேயி கோதுமை அல்வா என்று தான் நினைக்கிறாள். என்றாலும் கூர்ந்து நோக்குகையில், ஜானகி, “மைதாமா, உருளைக்கிழங்கு ஏதானும் இருக்கலாம். ஏன் ஸிஸ்டர்?’ என்று கேட்கிறாள்.

“அந்த மூன்றும் இல்லை.”

“பரவாயில்லையே? இது ஏதோ, நம் பெண் எதைச் சமைத்துப் போட்டாலும் சாப்பிடுவானா ருசி தெரியாமல் என்று பார்க்கவரும் மாப்பிள்ளைக்கு மாமியார் பரீட்சை வைப்பது போலிருக்கே?” என்று ஜானகி கேலியாகச் சிரிக்கிறாள்.

“உங்கம்மா அப்படிப் பரீட்சை வைக்கிறாளென்று தெரியாமல் தான் நான் மாட்டிக் கொண்டேன்” என்று ராமசேஷனும் அவள் நகைப்பில் இணைந்து கொள்கிறார். ‘

“இதுபறங்கிக்காய். சரிதானா?” என்று கேட்கிறான் முரளி.

ஞானம் ‘சரி என்று ஒப்புக்கொள்கிறாள்.

“சாப்பிடாமலே எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?...” “வேலைக்காரி பறங்கிக்காய் வாங்கிப் போனது கண்ணில் பட்டதோ ?”

‘இது வீட்டுக் கொல்லைக் காயாக்கும்!”

"அதெல்லாமில்லை. எதிலெல்லாம் அல்வா பண்ணுவார்களென்று நினைத்தேன். எங்கள் மெஸ்ஸில் இந்தப் பறங்கிக் காயைத்தான் ஒரு சீஸனில் எல்லா உருவங்களிலும் வைப்பார்கள்” என்றான் முரளி, உடனே பேச்சு மெஸ்ஸிலிருந்து ஸர்வீஸுக்குத் திரும்புகிறது.

“நீங்கள் ஏன் ஸர்வீஸ் டாக்டராகப் போனிர்கள்?” என்று கேட்கிறாள் மைத்ரேயி. அவளுக்கு இப்போது கொஞ்சமும் அவனிடம் பேசுவதில் நெருடல் இல்லை.

‘அறுபத்திரண்டில் சீனாக்காரன் படை எடுத்தான். நான் ஏதோ ஒரு ப்ரைமரி ஹெல்த் சென்டரில் ஈ ஒட்டும் நிலையில் தானிருந்தேன். அங்கே மருந்தும் கிடையாது; நோயாளிகளும் வரவில்லை. பேசாமல் காக்கி உடுப்பை மாட்டிக் கொண்டேன். எனக்கு இப்போது இதுஒத்துப் போய்விட்டது. அதுவும் போர்முனையில் புதிய புதிய அநுபவங்கள். மரணப் போராட்டத்தில், மரணத்தின் சந்நிதியில் நாம் உதவுகிறோம் என்ற உணர்வு பிறவி எடுத்ததன் பயனையே முழுசாக உணர்வதுபோல் ஒரு நிறைவு தருகிறது.”

“வாழ்க்கையில் அத்தகைய உணர்வைப் பெற ஸ்ர்வீஸ் டாக்டராகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை. எந்தக் கர்மத்தைச் செய்தாலும் தன்னலத்தைக் களைந்து, பொது நலம் என்ற குறியிலே இயங்கும்போது அத்தகைய நிறைவு வரும். அப்படி அவரவர் தம் கருத்தைச் செய்வதையே கர்ம வேள்வி என்கிறது கீதை...” என்று மொழிகிறாள் ஞானம்.

“அது சரிதான் அக்கா. அப்படித் தன்னலமற்றதோர் சேவையைச் செய்ய மனம் விரும்பினாலும் கிடைத்திருக்கும் சந்தர்ப்பமும் சூழலும் ஒருவரைச் சுதந்திரமாக இயங்க அநுமதிக்க வேண்டும். இவரே முதலில் பிரைமரி ஹெல்த் சென்டரில் ஏன் கிராமசேவை செய்ய முடியவில்லை? ஈ ஓட்டுவானேன்? அங்கு மருந்து இல்லை; இவர் தொழிலுக்கு வேண்டிய உபகரணங்கள் இல்லை. ஏற்கெனவே இரண்டாந் தர, மூன்றாந்தர ஆட்கள் மருந்து வியாபாரம் செய்து கிராம மக்களை இவர் பக்கம் செல்லவிடாமல் தடுத்தார்கள். இவரால் எதிர்த்துப் போர் புரிய முடியவில்லை. சரிதானே?” என்று மைத்ரேயி முரளியின் பக்கம் பார்க்கிறாள்.

அவன் தலையசைத்துப் புன்னகை தெரிவிக்கிறான்.

“ஒத்துக் கொள்கிறேன். மிஸ்டர் ராமசேஷன் தப்பாக நினைக்கமாட்டார். நாமும் அப்படித்தான் எதையோ நினைத்து இங்கு எதையோ செய்து கொண்டிருக்கிறோம்.” என்று மொழிகிறாள் ஞானம்.

“இப்ப நீங்க பேசுவதைப் பார்த்தால் யுத்தம் என்று வந்து எமர்ஜன்ஸி என்று ஒன்று எப்போதும் இவர்களெல்லாம் ஆக்டிவாக இருக்கும்படியாக நீடிக்கணும்னு சொல்கிறீர்கள் போல இருக்கு...” என்று சாடுகிறாள் ஜானகி.

“டாக்டர்களுக்கு சமாதான நாட்கள் என்று அவ்வளவு அர்த்தமில்லாத கெடுபிடிகளைச் செய்து கொள்ள வேண்டிய தில்லை” என்று கூறுகிறான் முரளி.

“நாட்டிலுள்ள வறுமையைத் தொலைக்காமல், வயிற்றுச் சோற்றுக்கு வழி செய்யாமல், நோயைத் தடுக்க வழியையும் ஏட்டுக் கல்வியையும் கற்பிக்க முயல்வது தும்பைவிட்டு வாலைப் பிடிப்பது போன்றது. இந்தக் கோடிக் கணக்குச் செலவில் இத்தனை டாக்டர்களை வரவழைத்து உருப்படியில்லாமல் ஒரு திட்டத்தை உயிருடன் வைத்திருப்பதைவிட, இத்தனை கிராமங்களில் குழந்தைகளுக்கு, பெண்களுக்கு ஊட்டமான சத்துணவும் ஆடம்பரமின்றி வாழத் தேவை யான வசதிகளும் செய்து கொடுக்கலாம். சினிமாக் கொட்கைகள், தேவையற்ற ஆடம்பரப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் பெருகக் கூடாது. இந்தச் சுற்றுப்புறக் கிராமத்தின் வளர்ச்சியை நான் இங்கு வந்து இத்தனை நாட்களில் கணக்கிடும்போது, ஆறு மடங்கு வட்டிக் கடைகள் அதிகரித்திருப்பதையே குறிப்பாகக் கவனிக்கிறேன். என்ன பயன் ?” “சினிமாக் கொட்டகைகளா? நீங்கள் என்ன அடிமடியில் கைவைக்கிறீர்கள்!” என்று சிரிக்கிறாள் ஜானகி.

“சினிமா என்றால் அக்காவுக்குக் கோபம் வரும். அதுவும் தமிழ்ப்படம் என்றால் அதிகமாக வரும்” என்று மைத்ரேயி விளக்குகிறாள்.

“அதெல்லாமில்லை. நான் இரண்டு வருஷம் சென்ஸார் போர்டில் இருந்தேன். ஆட்சேபிக்கும் பகுதிகளை அப்போது ஒப்புக்கொண்டு வெட்டியெறிவதாகச் சொல்லிவிட்டு, திரையிடும்போது சேர்த்துக் கொள்வதாக அறிந்தேன். நான் ஒருத்தி மட்டும் தூய்மை என்றால் போதுமா? தூய்மையினால் அழுக்கை வெல்ல முடியாது; அழுக்கு வேண்டு மானால் துய்மையை அழிக்கும் என்று விலகிவிட்டேன்.”

‘அதனால் தூய்மை காப்பாற்றப்பட்டதாக நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று முரளி கேட்கிறான்.

மெல்ல வாழைப்பழத்தில் ஊசி செருகுவதுபோன்று அவன் ஞானம்மாவைக் கோழை என்று சொல்வதாக மைத்ரேயி நினைக்கிறாள்.

“நீங்கள் தவறாக நினைக்காதீர்கள். நம் ‘இண்டெலக்சுவல் ‘ வகுப்பிற்குட்பட்டவர்களெல்லாரும் இப்படித்தான் சந்தர்ப்பம் வரும்போது கோழையாகச் செயலாற்றாதவர்களாக ஒதுங்கி விடுகிறார்கள். எது எப்படி வேண்டுமானாலும் போகட்டும். நம்மிடம் அழுக்குப் படக்கூடாது. மற்றவர்கள் இலஞ்சம் பெற்றுக் கொண்டிருப்பார்கள். ‘நானும் வாங்கியதாக அவர்கள் நினைத்து விடக் கூடாது’ என்று உங்கள் அழுக்குப்படாத தன்மையை விளக்கிக் காட்டுவதில்தான் உங்களுக்கு அதிகமான கவலை இருக்கிறது. இதனால் என்ன பயன்? நீங்கள் ஒதுங்குகிறீர்கள்; சினிமா பழையபடியே தீமைகளை வளர்க்கிறது...” என்று முரளி தொடர்ந்து பேசுவதற்கு மைத்ரேயி உள்ளூரப் பாராட்டு கிறாள். ஞானத்தைப் பற்றிய அவள் கருத்தும் அதுவே.

“நீங்கள் கோழை என்று சொல்லலாம். இப்போது இங்கே நடப்பது அறிவு நாயகமோ, நீதி நாயகமோ, உண்மை நாயகமோ அல்ல. இது ஜனநாயகமும்கூட அல்ல. பண நாயகம். இதை இப்படி எல்லாம் வெல்ல முடியாது. நான் ஒருத்தி கத்துவேன். எதிர்ப்பேன். வழி அதனால் பிறந்து விடாது. என்னிடம் தனிமையில் கருத்தை ஒப்புக்கொள்பவர் கூட, சமயம் வரும்போது என்னைத் தனியே நிறுத்திவிட்டுப் பெரும்பான்மையோடு சேர்ந்து விடுவார்!” என்று ஞானம் விளக்குகையில் மைத்ரேயி காபி கொண்டு வரச் செல்கிறாள். அவர்கள் சிறிது நேரம் தமிழ்நாட்டு அரசியலைப் பற்றிப் பேசுகின்றனர். பிறகு விடைபெற்றுச் செல்கின்றனர்.

16

அவன் முரளி என்று தெரிந்தபின் மைத்ரேயிக்கு நிம்மதியாக இருக்கிறது. அவனுக்குப் பெற்றோர் உற்றார் இருக்கின்றனர். அவர்கள் எட்டு பத்து வரதட்சினை ஐம்பதாயிரம் சீர் என்று கல்யாணம் எதிர்பார்க்கிறவர்கள்.

நினைக்கையில் அவளுக்குச் சிரிப்பு வருகிறது. “எதற்கு இப்ப சிரிக்கறே?” என்று கேட்கிறாள் ஞானம். “ஒன்றுமில்லை. உங்களுடைய எண்ணம், எனக்குச் சிரிப்பை மூட்டுகிறது. இவனுக்குப் பெண் கொடுப்பவர்கள் ஐம்பதாயிரம் செலவழிக்கத் தயாராக இருக்க வேண்டும்.”

“அப்படி உன்னிடம் யார் சொன்னார்கள்? ஜானகி சொன்னாளா ?”

“யார் சொல்லவேணும்? எனக்கு இவனுடைய மனிதர்களை எல்லாம் தெரியும் அக்கா. இந்த உலகில் எனக்கும் ஒரு மதிப்பு என்று என்னை ஏற்றி வைத்தவர் நீங்கள். நேற்று ராஜா வந்தது என்னுடன் பேசியது, என்னைக் கட்சியில் சேரவேண்டும் என்று அழைத்தது அதையெல்லாம் நினைக்க நினைக்க, இரவு முழுவதும் உறக்கம் வராத நெகிழ்ச்சியிலும் பரவசத்திலும் சங்கடப்பட்டேன். எனக்கு இவ்வளவு பெருமையைக் கொடுத்த நீங்கள் இப்போது உலகத்து மூடத் தாய்யமாரைப்போல் நினைப்பது கொஞ்சம்கூடப் பொருத்த மில்லாதது. அதனால்தான் தோல்வியடைந்தீர்கள்.”

ஞானம் தோல்வியடைந்ததாகக் கருதவில்லை. அவளுடைய தீவிரமான சிந்தனையும் மாறவில்லை.

“உன் எதிர்காலத்தைக் குறித்து நீ ஒரு தீர்மானமும் இல்லாமலிருக்கிறாய் என்று எனக்குப் புரிகிறது. உன்னால் ஒருவிதமான முடிவுக்கும் வரமுடியாது என்று எனக்குத் தெரியும்.”

“அப்படி ஒன்றுமில்லை. என்னுடைய வாழ்க்கை எந்த வகையிலேனும் இந்த சமுதாயத்தின் கூனலை நிமிர்த்தவோ, வறுமையைத் தொலைக்கவோ பயன்படவேண்டும்,” என்று கூறும்போது அவளுக்கு மதுரத்தின் நினைவு பொங்கி வருகிறது. “இந்த நவீனயுகத்தில் பெண்கள் முன்னேற்றம், சமுதாய நலன் என்று பொது வாழ்வில் ஈடுபட்ட ஒருத்தி, ஒரு அபலைப் பெண், தன் கணவனை இழந்து நான்கு குழந்தைகளுடன் நடுத்தெருவில் நிற்கையில் ஒரு வருஷம் வீட்டுக்குள் சமையல் வேலை செய்யக்கூட வரக்கூடாது, முடியை எடுத்துவிட்டு வா என்று சொல்லும் இடத்துக்குப் பிழைக்கப் போ...என்று சொன்னால் எப்படி இருக்கும்?. மதுரத்தை நான் பார்த்தேன் அக்கா. எனக்கு நெஞ்சு கொதிக்கிறது. இப்போதே படிப்பை விட்டுவிட்டு ஏதேனும் வேலை தேடிக்கொள்ளலாம் என்று நினைத்தேன்.”

“உன்னால் தனிப்பட்ட முறையில் ஒன்றுமே செய்ய முடியாது. மேல்நாட்டில் எல்லாம் பெண்கள் எப்படித் தனித்துச் சுதந்திரமாக எல்லாத் துறைகளிலும் வருகிறார்கள் என்று நான் எண்ணிப் பார்க்கிறேன். நேற்றுக்கூட ‘மார்க்ரட் போர்க் வொயிட்'டின் வாழ்க்கையைப் படித்துக் கொண்டிருந்தேன். அவள் இரண்டு முறைகள் கல்யாணம் செய்து கொண்டு விலக்குப் பெறுகிறாள் . ஆனால் என்ன? உலகப் போர்களை எல்லாம் பார்த்தவள். உலகத் தலைவர்களை எல்லாம் தன் புகைப்படத் தொழிலில் சந்தித்துப் பேசுகிறாள். சாகசமான வாழ்க்கை. அப்படி நம்மிடையே, மிகச்

சாதாரணப் பின்னணியிலிருந்து எழும்பும் பெண்மணி, பொது வாழ்வில் வெற்றிபெற முடிவதில்லை. இங்கே ஒரு பெண்ணின் திறமை, அறிவு, செயல்திறன் எல்லாவற்றையும் பாழாக்க ஒரு சிறு அவதூறு போதும். ஒன்றுமில்லை. உன் கடந்த காலக் கரும்புள்ளி, எந்த சமயத்திலும் விசுவரூபம் எடுத்து உன் பொது வாழ்வைப் பாழாக்க முடியும். அவதூறு, எதிர்ப்புக்களை எதிர்த்து எழும்ப முடியாத நொய்ம்மை உன்னை விட்டுப் போய்விட்டதாக நான் கருதவில்லை. அதுசரி, தனராஜை விட்டு நீ ஏன் வந்தாய் ?”

ஆழ்குளத்தில் கைவிட்டு அடியில் கிடக்கும் வேரை எடுத்துப் போடுகிறாள் ஞானம்.

“ஏன் வந்தேன்? ஏன் ? .... அம்மணியம்மாதான் குடும் பத்தில் போய்ச் சேர்ந்துகொள். இது வேண்டாம் என்றாள்.” எத்தனை ஆண்டுகளாகவோ வளர்த்த பந்தங்களை உதறிக் கொண்டு பத்து நாட்கள் ஆசைகாட்டியவனுடன் சென்றவள், ஒரே வார்த்தையில் எப்படி வந்தாள்?

ஏதோ பூனை துரத்திக் கொண்டு வந்தாற்போல் ஓடி வந்தாள். பிறகு எத்தனையோ துன்பங்கள் நேர்ந்தபோ தெல்லாம்கூட, அங்கிருந்து ஓடி வந்தது தவறு என்றோ, திரும்ப ஓடிவிடலாம் என்றோ தோன்றவில்லை. அம்மணி அப்படி என்ன பயங்கர உண்மையைச் சொல்லி வைத்தாள்? அவர்களெல்லாரும் கீழ்த்தரமான ஒழுக்கம் உடைய வர்கள் என்றாள். ஒழுங்கங்கெட்டு வாழவேண்டிவரும் என்ற ஊகத்தையே (உண்மை என்று நம்பி) கேட்டு அஞ்சி ஓடி வந்தாள்.

தன்னுடைய கற்பு என்ற ஒன்றுக்கு ஆபத்து நேராது என்ற பத்திரமான இடத்தை நாடி அவள் வந்திருக்கிறாள். “அப்போதைய நிலை வேறு அக்கா. இப்போது எனக்குத் தன்னம்பிக்கை இருக்கிறது.”

“என்ன தன்னம்பிக்கை? உன் கல்வி, தானாக நின்று சம்பாதிக்க முடியும் என்ற பிறரை எதிர்பாராத தன்மை இதெல்லாம் வேறு. எதையேனும் ஒன்றைப் பற்றிக் கொள்ளாமல் சில சந்தர்ப்பங்களை வெல்லமுடியாது. இந்த தசை உடலின் இயல்பு வேட்கை. அது எனக்குக் கிடையவே கிடையாது என்று சொல்லிவிட்டுத் திரை மறைவில் அதற்கு இனாயாகும் சந்தர்ப்பங்களை வெல்ல முடியாமல் தோற்றுப் போவது சரியல்ல. கானகத்திலிருந்த முனிவர்களே இதற்குத் தப்பிவிடவில்லை. எனவே, நீ உன் கடந்தகாலப் புள்ளியை அழித்துவிட்டதாகக் கருதும் பட்சத்தில் ஏன் மணவாழ்வில் ஈடுபடக்கூடாது? இந்த நாளில் நீ சங்கம் சேர்த்துக் கொண்டு சேரிக் குழந்தைகளை ஒருநாள் குளிப்பாட்டி, பால் வழங்கிச் செய்யும் சேவையைவிட, ஒரு குடும்பத்தில் ஒத்து வாழ்ந்து உன் அறிவையும் திறனையும் ஒரு நல்ல இல்லத்துக்குப் பயன்படுத்தி அதனால் சமுதாய நல மேம்பாடு காண்பது மேல் என்பது என் கருத்து. இந்த நிலையில் நீ கிராமத்துக்குச் சென்று மாமியார் மருமகள் சண்டையைத் தீர்க்கவோ, குடும்பக்கட்டுப்பாட்டு யோசனை சொல்லவோ போனால் ஒருத்தி மதிக்கமாட்டாள். கிராமசேவிகாக்களைப் பற்றிக் கத்தை கத்தையாக எழுதலாம். நீ இருந்த இல்லத்தில் வந்து அறவழியைப் பற்றிப் பேச எனக்குக் கூந்தல் நரைக்க வேண்டியிருந்தது. இவ, மிஸ்ஸா, மிஸஸ்ஸா ? என்றுதான் முதலில் தெரிந்துகொள்ள விரும்புவார்கள். மிஸ் என்றால் அவள்மீது எப்போது அவதூறை வீசி எறியலாம் என்று காத்திருக்கிறது நம் சமுதாயம். காரணம் என்னவெனில் ஒழுக்க அளவு கோலை அவ்வளவு கூர்மையாக, துல்லியமாக வைத்திருக்கிறது. மிஸ் என்பதே ஒரு கிளாமர். (கிளாமர் என்றால் யார் வேண்டுமானாலும் எந்த எண்ணத்தோடு வேண்டு மானாலும் உன்னை அணுகி என்ன வேண்டுமானாலும் பேசச் சுதந்திரம் நீ கொடுப்பதாகப் பொருள்) நீ அழகாக இருக்கிறாய். மேடையேறிப் பேசினால் நிறையக் கூட்டம் வரும் என்ற நோக்கு உனக்கு இசைவாகப்படுகிறதா?” என்று கேட்கிறாள் ஞானம்.

மைத்ரேயிக்கு அவள் எண்ணங்கள் ஒத்துப் போகக் கூடியவையாக இல்லை. மாம்பிஞ்சின் துவர்ப்பைப்போல் அவள் கருத்துக்கு ஒவ்வாததாகப் படுகிறது. ஞானம் ஏன் இப்படி எண்ணுகிறாள்?

ஞானத்தின் அந்தரங்க வாழ்விலும் பலவீனம் ஏற்பட்டு மேடிட்டிருக்க வேண்டும். அதனாலேயே அவளுடைய கம்பீரம் உள்ளுரச் சிதைந்து போயிருக்கிறது; அதனாலேயே நேருக்கு நேர் என்ற எதிர்ப்புக் களத்தை நோக்கத் துணிவின்றி விலகிக் கொள்கிறாள்.

முரளியைப் போன்ற ஒருவனை மணந்துகொண்டு ஒரு வீட்டை நிர்வாகம் செய்வது குறித்து மைத்ரேயி கற்பனை செய்து பார்க்கிறாள்.

அந்தக் கணவனுடன் அந்தரங்கமாக இருக்கும் நேரங்களிலெல்லாம் அவளுக்கு அதுபோல் இன்னொருவனுடன் இருந்த நினைவு வரும் என்ற எண்ணமே அருவருப்பாக இருக்கிறது.

“நீயே யோசித்துப்பார் மைத்ரேயி, உன்னால் நர்மதா, ஆயிஷா போல் தொண்டு செய்யமுடியுமா என்று. அவர் களெல்லாம் அவர்களுடைய தனிவாழ்க்கையைப் பற்றிப் பிறர் என்ன நினைப்பார்கள் என்று கூசமாட்டார்கள். அவர்கள் உண்மையிலேயே சமுதாயத்தின் அதிர்ஷ்டமற்ற அங்கங்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று பொதுத் தொண்டில் ஈடுபடவில்லை. பொதுத்தொண்டிலோ அரசியலிலோ ஈடுபடுபவர்கள் அப்பழுக்கில்லாத அந்தரங்க சுத்தம் உடையவர்களாய், இரட்டை வாழ்க்கை நடத்த இயலா தவர்களாய் இருக்கவேண்டும். அப்படி இல்லாததாலேயே இன்று பொது வாழ்வும் அரசியலும் கறை பிடித்துக் கிடக்கிறது...”

ஞானம் பேசுவது மைத்ரேயிக்கு விசித்திரமாகவே இருக்கிறது.

இரட்டை வாழ்க்கை நடத்த இயலாதவள் பொது வாழ்வுக்கே போகக் கூடாது என்று ஞானம் கருதுகிறாளா?

ஆனால் ஞானத்தை, பெரிதும் அவள் மதிக்கும் அந்தத் தாயை அவளால் கருத்துவேற்றுமை கொண்டு எதிராளியாக்கிக் கொள்ள முடியாது.

“உங்கள் யோசனையை நான் மறுக்கவில்லை அக்கா. ஆனால் கல்யாணமென்று வேறு யாரையும் ஒப்புக்கொள்ளுவது எனக்கு ஒப்புக்கொள்ளக் கூடியதாக இப்போதைக்குப் படவில்லை..”

“உன் மனசுக்குக் கஷ்டம் கொடுக்கக்கூடிய தொன்றையும் நான் ஒரு நாளும் வற்புறுத்தமாட்டேன். நீ சுதந்திரமாகச் சிந்தனை செய்து முடிவுக்கு வரவேண்டும். உனக்கு யோசனைதான் நான் சொல்கிறேன்...”

மறுநாள் காலையில் ஞானம் அலுவலகத்துக்குச் சென்ற பின்னரே மைத்ரேயி மெதுவாக வெளிக்கிளம்புகிறாள். ராம சேஷன் வீட்டில்தான் சாவி கொடுப்பது வழக்கம். வாயிலில் கால்வைக்கும்போதே தயக்கமாக இருக்கிறது. முன்னறைச் சாய்வு நாற்காலியில் இருந்த முரளி அவளைக் கண்டதும் எழுந்திருக்கிறான்.

“...ஒன்றுமில்லை, சாவி...”

அவள் வாயிலிலேயே நிற்கிறாள். அவன் வெளியே வந்து சாவியை வாங்கிக்கொள்ளுமுன் மிக மெதுவான குரலில், “...உங்களோடு கொஞ்சம் பேச விரும்புகிறேன். எப்போது செளகரியப்படும்?” என்று கேட்கிறான்.

ஓர் கணம் வெளிக்குப் புலப்படாத பரபரப்பு அவளை ஆட்கொள்கிறது.

“என்னோடா?”

“ஆமாம். உங்களுக்கு இன்று மாலையில் வசதி இருக்குமானால் சொல்லுங்கள்...”

எங்கேனும் மாலையில் சந்தித்துவிட்டு இருட்டிய பிறகு திரும்புவது அவளுக்குப் பிடிக்கவில்லை.

“நீங்கள், இப்போதே என்னுடன் வந்து பேசலாமே? நான் லைப்ரரிக்குத்தான் போகிறேன்...”

மூடி மறைத்த சல்லாத் துணிக்கப்பாலுள்ள வெளிச்சம் புலப்படுவதுபோல் அவளுக்கு அவன் எதைப்பற்றிப் பேசுவான் என்று புரிந்துகொள்ள

“ஒரு நிமிஷம். நீங்கள் மெள்ள நடந்துகொண்டிருங்கள். நான் பஸ் ஸ்டாப்புக்கு வந்துவிடுகிறேன்” என்று கூறிவிட்டு உள்ளே செல்கிறான்.

மைத்ரேயியின் நடை மிக மெதுவாக நீண்டு செல்கிறது. பெரிய சாலையில் பஸ் நிறுத்தத்துக்குச் செல்லும் வழியில் மைதானத்தைக் கடந்து அவள் சாலையை எட்டுமுன் முரளி அவளை நெருங்கி வருகிறான்.

அவன் புன்னகை செய்கிறான். அவளும் சிரிக்கிறாள். அவன் சிரிப்பு மிக இயல்பாக இருக்கிறது. செயற்கையில்லை.

அவளுடன் கல்லூரியில் படித்த ருக்மணியின் தந்தை ஒரு இராணுவ டாக்டர். அவர்கள் எழும்பூரில் ஓர் அழகிய வீட்டில் இருந்தார்கள். ருக்மணி பார்வையை இழந்த பெண். பிரெய்ல் எழுத்துக்களின் உதவியாலேயே அவள் படித்தாள். அவள் கல்லூரிக்கு வராத நாட்களில் மைத்ரேயி தவறாமல் சென்று பாடங்களைக் கூறி விளக்குவாள்.

“நீ ஏனம்மா இன்னிக்குக் காலேஜுக்கு வரலே ?” என்றால், “எங்கள் வீட்டில் இன்னிக்குத் தகராறுடி. எனக்கு மனசு சரியில்ல...’ என்று கூறுவாள்.

அவள்தான் முதல் குழந்தை. ஒரு கண் மட்டுமே சுமாராகத்தெரிவதுபோலிருக்கும். அவளுக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் இருந்தனர். அவளுடைய தாய் மிக அழகாக இருப்பாள். உதட்டுச்சாயம், கையில்லா ரவிக்கை நாகரிகங்களுடன் அவள் தான் காரில் ருக்மணியைக் கல்லூரியில் கொண்டு வந்து விடுவாள். ருக்மணிக்கு அரசு தரும் சலுகைகள் அவள் முயற்சி செய்தே கிடைத்திருந்தது. ஒரு நாள் அவள் ருக்மணியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அவளுடைய தந்தையைப் பார்க்க நேர்ந்தது. அவள் திடுக்கிட்டாற்போல் நின்றாள். கோடுகள் போட்டதோர் இரவு உடையில் வழுக்கைத் தலையும் பிதுங்கிவிடும் போன்ற கண்களும் தொங்கும் மீசையுமாகக் காட்சியளித்த அவருடைய அந்தத் தோற்றத்தை அவளாலேயே இன்னமும் மறக்க இயலவில்லை. அப்போதும் அவர் கையில் மதுப்புட்டியை வைத்திருந்தார். அவரை ருக்மணியின் தந்தையாக, அந்த அழகிய தாயின் கணவனாக அவளால் ஒப்ப முடியவில்லை. அவர் ஒரு டாக்டராகச் சேவை செய்தவராகக் கற்பனை செயதுகூடப் பார்க்க இயலவில்லை. அந்த ஆண்டு இறுதியிலே அவர் இறந்துவிட்டார். மைத்ரேயி அப்போது அவர்களுடைய வீட்டுக்குச் சென்றாள்.

“மதுவின் கொடுமைக்கு எங்கள் வாழ்வே ஒரு மாதிரி மைத்ரேயி, கண் பார்வையற்ற நான் ஒருவனைக் கல்யாணம் செய்து கொள்வதைப்பற்றிநினைக்கவே இயலாது. நீ மணம் செய்து கொள்ளுமுன் குடிப்பழக்கம் இல்லாதவனா என்று பார்...” என்றாள் ருக்மணி கண்ணீர் வழிய. அப்போது மைத்ரேயிக்குக் கள்ளின் புளித்த நெடியோடு ஒருநாள் தன்னைத் தழுவ வந்த தனராஜின் நினைவு வந்தது. அவன் போதை நெடியோடு வந்ததைக் கண்டபோது, விவரம் புரியாத பேதையாகவே இருந்த மைத்ரேயிக்கு அருவருப்பாக அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் இந்த டாக்டர் உயர்குலத்தில் பிறந்து பிணியகற்றும் தொழிலுக்குப் பயின்று பணியாற்றச் சென்றவர். எத்தனை ஆழமான அடிநிலை! அப்படி யும் அந்த மாளிகை எப்படிச் சரிந்தது?

அவர் இறந்த பிறகு ருக்மணியின் குடும்பம் மதுரைக்குப் பெயர்ந்துவிட்டது.

அருகே முரளி வந்ததை அவன் குரல் கேட்ட பின்னரே அவள் உணருகிறாள்.

“நீங்கள் தினம் இங்கிருந்து காலேஜுக்குப் போவது கஷ்டமாக இல்லை?”

“கஷ்டம் என்ன? எட்டேமுக்கால் பஸ்ஸைப் பிடித்தால் சரியான நேரத்துக்குப் போய்விடுவேன்!”

பஸ் வருகிறது. அவன் ஏறி முன்னே நடக்கிறான். அவள் கூடைக்காரப் பெண்களின் அருகே உட்காருகிறாள். பூக்கடைக்குச் சென்று பூ வாங்கித் தொடுத்து விற்றுத் தொழில் செய்பவர்கள் அந்தப் பெண்கள். உயர்ந்த சாதியில் பிறந்திராத அந்தப் பெண்கள், எந்தப் போலி கெளரவமும் பாராட்டிக்கொண்டு வீட்டினுள் பதுங்கியிருப்பதில்லை. சோறு தூக்குவதும் வீட்டு வேலை செய்வதும் முச்சந்தியில் ஆப்பம் போட்டு விற்பதும் அவர்களுக்குக் கெளரவக் குறை வல்ல. இம்மாதிரியான கூட்டத்தில் மதுரத்தைப் போன்ற பெண் ஒருத்திசுட இல்லை. மதுரம்மாமி வயிறு பிழைக்க, முடியை எடுக்கவேண்டி இருந்தது. வறுமையின் அடித் தளத்தில் உழன்றாலும் வாழ்வு முறையில் ஒரு போலியான கெளரவம் பாராட்டுவதைப் பெரிதாக நினைக்கின்றனர். ஆனால், அதே பொருள் தேவைக்குமேல் வரும்போது தேவைகளை மிகுதியாக்கிக் கொள்ள வாழ்வு முறையையே மாற்றிக் கொள்ள இந்த உயர்குடி மக்கள் தயங்கவில்லை.

பஸ் கண்டக்டர் அவளருகில் வந்து அந்தப் பூக்காரப் பெண்களிடம் சில்லறை வாங்குகிறான். ஆனால் அவள் சில்லறையுடன் காத்திருந்தும் அவன் சீட்டுக் கொடுக்க வில்லை. அவளாகவே ‘டிக்கெட்’என்று கேட்கும்போது, அவன் அலட்சியமாக மேலே செல்கிறான். அப்போதுதான் முரளி அவளுக்கும் சேர்த்து வாங்கியது புரிகிறது.

அவளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் எதற்காக அவளுக்குச் சீட்டு வாங்கவேண்டும்? ஒரு பெண்ணை விடத்தான் உயர்ந்தவன் என்ற உணர்வு எல்லா ஆண்களுக்கும் எப்போதும் இருக்கும் போலும்! இந்தக் கண்டக்டர் அவளை நன்றாக அறிந்தவன், ஒரு மாதிரிச் சிரித்துக்கொண்டு அவளுக்குப் பதில் சொல்லாமலே செல் கிறான். அதிகப் பிரசங்கித்தனம் என்று மைத்ரேயிக்குக் கோபம் வருகிறது. பஸ்ஸிலிருந்து அவள் இறங்குவதைப் பார்த்துவிட்டு அவனும் இறங்குகிறான். நடைபாதையில் நடக்கும்போது அவள் முன்னதாக விடுவிடென்று நடக்கிறாள். அவன் நிதானமாகவே பின் தொடர்கிறான். ‘ஆர்ட்காலரி’ வாயிலில் அவள் நுழையும்போது அவனும் வருகிறான். இதமான வெய் யிலும் அமைதியான சூழலும் பசுமை விரிக்கும் புற்றரையும் அவளுடைய அமைதியின்மைக்கு ஆறுதலளிக்கின்றன.

“இந்த இடம் உண்மையாக வெளியிலுள்ள பரபரப்புக்கு மாற்றாக இருக்கிறது. புற்றரையில் இப்படி உட்காரலாமா?...” என்று கேட்கிறான் அவன்.

அவள் நெற்றி வியர்வையைத் துடைத்து இறுக்கத்தைச் சமாளித்துக் கொண்டு மெள்ளச் சிரிக்கிறாள்.

இருவரும் அமருகின்றனர். பேச்சை எப்படித் தொடங்குவது என்று புரியாதுபோல் மெளனமாக இருக்கின்றனர்.

“...நேற்று நான் அங்கே வந்தது. நீங்கள் ஊகித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.”

“ராமசேஷன் சொன்னாராம். நல்ல பையன், நல்ல பெண்ணாகப் பார்த்துக் கல்யாணம் செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டு அழைத்து வருகிறேன் என்றாராம். அந்த நல்ல பையனுக்குப் பெற்றவர் இருக்கையில்இவர் எதற்கு முந்திரிக்கொட்டையாக வருகிறார் என்று நினைத்தேன்.” அவன் சிரிக்கவில்லை. “பெற்றவர்கள் இனிமேல் அவன் வாழ்க்கையில் தலையிடமாட்டார்கள் என்று அவருக்குத் தெரியும். ஏனென்றால், அவன் அவர்கள் பார்த்து, சீர், வரதட்சிணை வகையறாவெல்லாம் வாங்கிக் கொண்டு கலியாணம் செய்துவைத்த பணக்காரப் பெண், அவனுடன் நான்கு நாள் கூட வாழவில்லை. அவனை நிராகரித்து, மணவிலக்கே வாங்கிக்கொண்டு அமெரிக்காவுக்குப் படிக்கப் போய்விட்டாள் என்று தெரியும்...”

“ஓ..? அதானே பார்த்தேன்...?” என்று மைத்ரேயி கலகல வென்று சிரிக்கிறாள். சிரிப்பு பெரிதாக வலுக்கிறது.

“அதனால்தானா? அதே மட்டத்தில் இருப்பவள் தேவலை என்று நினைத்திருப்பீர்கள்...”

கேலியும் கிண்டலும் சிரிப்புமாக அவள் மொழிந்தது அவனுடைய மனசை நோகச் செய்கிறது என்பதை மைத்ரேயி அவன் முகத்தைப் பார்த்து உடனே புரிந்துகொள்கிறாள்.

“அதில் என்ன தவறு, மைத்ரேயி? ஒரு பிரும்மசாரி வாழ்வைத் துய்மையாக வாழ்வேன் என்று சொல்லமுடியாத உண்மையை ஒப்புக்கொள்வது தவறா? எனக்கிசைந்த பெண்ணை மணக்க விரும்பக் கூடாதா? உங்களை நான் கட்டுப்படுத்தவில்லை; வற்புறுத்தவில்லை. உங்கள் முன் ஒரு ஆலோசனையை வைக்கிறேன். நீங்கள் அதைப் பரிசீலனை செய்யுங்கள். ஒப்பினால் மேற்கொண்டு தீர்மானம் செய்யலாம் இல்லையேல் விட்டுவிடலாம்.”

மைத்ரேயி சிறிதுநேரம் பேசவில்லை.

ஒரு பிரம்மசாரி வாழ்வைத் துய்மையாக வாழ்வேன் என்று சொல்லமுடியாத உண்மையை அவன் ஒப்புக் கொள்கிறான். அப்படி, ஒரு தூய வாழ்வை வாழமுடியாத நான் என்று அவளும் ஒப்புக்கொள்வாளா?

நினைக்கவே கூச்சமாக இருக்கிறது.

ஞானம்மா ஒப்புக்கொள்ள வேண்டும் என்று விரும்பு கிறாள். அவளுக்கு சீரான பாதையில் ஏதோ இடையூறு நேர்ந்தாற்போல் கோபம் வருகிறது. ஒருமுறை தன்னை இழந்து தன் வாழ்வைக் கறையாக்கிக் கொண்ட அவள் மீண்டும் ஒரு ஆணை நெருங்கித் தன்னை இழப்பதா?

பல சமயங்களில் அவளுக்குத் தன் தனிமையில் அச்சம் தோன்றியதுண்டு. அன்று ராஜா முன் பகுதியில் வண்டி யோட்டியின் முன் அமராமல் பக்கத்தில் அமர்ந்தபோது அவளுக்கு அச்சம் தோன்றியது. சரேலென்று தன்கை மீது அவன் கை பட்டுவிடுமோ என்ற கற்பனை தோன்றித் தோன்றி அவளை அச்சுறுத்தியது.

“யோசனை செய்ய நீங்கள் நிறைய அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். என் உள் மனசுக்கு, உங்களை என்னால் மகிழ்விக்க முடியும், நீங்கள் எனக்கு இன்றியமையாதவராக இருப்பீர்கள் என்று தோன்றுகிறது. இன்னொன்று சொல்ல விரும்புகிறேன். ஒரு ராணுவக் கட்டுப்பாட்டு வாழ்க்கையில், மற்றவர் வாழ்க்கையில் நேரமுடியாத பல நிகழ்ச்சிகள் நேர வாய்ப்பு உண்டு. மிதமிஞ்சும் குடிப்பழக்கத்தினின்று என்னைக் காப்பாற்ற, கடமையிலிருந்து வழுவாத, நாணயமுள்ள ஒரு நல்ல சேவையாளனாக என்னை நிலைநிறுத்த உறுதுணையாக எனக்கு ஒரு மனைவி வேண்டும். அந்தப் பொறுப்பை உங்களால் ஏற்க முடியும் என்று நான் நம்புகிறேன்.”

இந்தத் திறந்த மொழிகள் அவளைப் பிணிக்கின்றன. ஒரு ஆணும் பெண்ணும் புற அளவில் ஒருவரையொருவர் நிர்வாணமாகத் தெரிந்துகொள்ளு முன்பு, அக அளவில் வேடங்களைக் களைந்துவிடும்போது அந்தப் பிணைப்பு பரிசுத்தமாகத்தான் இருக்க முடியும் என்பதை மைத்ரேயி புதிய அனுபவமாக உணருகிறாள். முரளியிடமிருந்து இத்தகைய வெட்ட வெளிச்சமான பேச்சை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. ‘முன்பே எனக்கு உன் வடிவம் உள்ளத்தில் பதிந்துவிட்டது, காதல், ஊதல்’ என்று ஏதேனும் பிதற்றுவான் என்றே அவள் எதிர்பார்த்திருந்தாள்.

இப்போது தன்னைப்பற்றி, ஞானம்மாளிடம் ஒருநாள் கூறியதுபோல், தன் வாழ்க்கை அத்தியாயங்களை ஒளியாமலே அவனிடம் கூறவேண்டியது அவசியமாகத் தோன்றுகிறது.

தான் தன் பிறந்த வீட்டில் வயசு வருவதற்கு முன்னே வயது வந்த பெண்ணாக ஒரு ஆணின் கண்களில் பட்டாலே குடிமுழுகிப் போகும் என்ற அச்சத்தில் வளர்ந்து துணிந்து காதல் கொண்டு தனராஜின் ஆசை வலையில் வீழ்ந்து நாலு மாசம் வாழ்க்கை நடத்தியதையும், கட்சிப் பாசறையில் தங்கிய போது அம்மணி அம்மாள், அவர்களுடைய ஒழுக்க சீலையைக் கிழித்து உள் நடப்பைக் காட்டியதும் அஞ்சி ஓடி வந்து விடுதியில் அடைக்கலம் புகுந்து, பின்னர் ஞானம்மாவின் சோதரியாக மறுமலர்ச்சி பெற்ற விவரங்கள் அனைத்தையும் தெரிவிக்கிறாள். பதினொன்றரை மணியளவில் சந்திக்க வந்த அவர்களுக்குப் பிற்பகல் மணி இரண்டடித்ததுகூடத் தெரியவில்லை.

“காதல் ஊதல் என்பதிலெல்லாம் எனக்குக் கொஞ்சமும் நம்பிக்கை கிடையாது. உடலளவில் உள்ள ஓர் வேட்கைக்குப் பூப்போட்ட போர்வை போடும் சொல் அது என்பது என் கருத்து. ஆனாலும் இன்னொருவரை மணந்து கொண்டு வாழ்க்கை நடத்துவதைப்பற்றி என்னால் எண்ணிப் பார்க்கக் கூட இயலவில்லை. ஏற்கனவே கறைபட்டுவிட்ட என் வாழ்வில் திருமணம் என்று ஒரு சந்தர்ப்பம் வரும் என்பதை நான் கனவில் கூட நினைத்ததில்லை. அதனாலேயே ‘சமுதாய சீர்திருத்தம், அடிநிலை மக்களின் பிரச்சனைகள் என்று என் வாழ்க்கையை ஒரு துறையில் ஒதுக்கிப் பயனுள்ளதாக்கிக் கொள்வதைப் பற்றியே சிந்தித்திருக்கிறேன். இது நான் சற்றும் எதிர்பார்த்திராத திருப்புமுனை...”

மைத்ரேயி முதலில் அவனை மற்ற ஆடவரை நோக்கிப் பேசுவது போலவே பேசினாள். ஆனால் கண்ணுக்குப் புலப்படாத போர்வைகளைக் களைந்தபின், அவனை நிமிர்ந்து நோக்கக் கூடக் கூச்சமாக இருக்கிறது.

“அப்படியானால் உங்கள் பிராமணத்துவம் உங்களைத் தடுக்கிறது...”

மைத்ரேயி துணுக்குற்று நிமிர்ந்து நோக்குகிறாள். “அந்தச் சொல்லையே நான் வெறுக்கிறேன். என்னிடம் பொய்யாக ஆசாரம் பார்ப்பதும் கோயிலுக்குப் போவதும் போன்ற வழக்கங்கள் ஒன்றுகூடக் கிடையாது. யாரேனும் என்னை ‘ஆர் யூ எ பிராமின் என்று கேட்டாலே கூசிப் போகிறேன்...”

“ஓ..நான்...ஐ டோன்ட் மீன் தட். பிராமணத்துவம் என்பது என்ன? மனிதத்துவத்தின் ஒர் உயர்ந்ததன்மை. உயர் ஒழுக்கத்தினால்தான் அதைப் பெற இயலும் என்று நான் நினைக்கிறேன். பிறப்பினால் மட்டுமல்ல; அந்தப் பொருளில் நான் சொன்னேன். நீங்கள் ஒருமுறை கன்னிமையை இழந்ததை அதனால்தான் ஒரு பெரிய தவறாகக் கருதுகிறீர்கள்.”

அது உண்மைதான் என்று அவளுடைய உள்ளம் ஆமோதிக்கிறது. தான் ஒரு கன்னியாக இருந்திருந்தால் இந்த முரளியின் எண்ணத்துக்கு அவள் தலை தாழ்த்தியிருப்பாளாக இருக்கும். ஆனால் அவனும் ஒரு பெண்ணை மணந்து கசப்பான அநுபவங்களுக்குட் படாமலிருந்திருந்தால் இத்தகைய சந்தர்ப்பத்தை இவனே விரும்பியிருப்பானா..?

“நீங்கள் அந்தப் பழைய கணவர் உங்களுக்கு முறையாக விலக்குக் கொடுக்காததனால் இப்படிச் செயவது முறையல்ல என்றோ, பாவம் என்றோ கருதுகிறீர்களானால் சொல்லுங்கள். என்றேனும் நீங்கள் இணைந்து வாழக்கூடும் என்ற சந்தர்ப்பத்துக்குக் காத்திருப்பதானால் நான் என் எண்ணத்தைக் கூறியதையே தவறாக நினைக்கிறேன்...”

“அந்த நிலை இங்கு இல்லை. அவருடன் நான் மறுபடி இணைந்து வாழ்வேன் என்பதை எப்படி என்னால் கற்பனை செய்துபார்க்க இயலவில்லையோ, அப்படி நான் மறுமணம் செய்துகொண்டு வாழ்வதைப் பற்றியும் கற்பனை செய்யக் கூட மனம் துணியவில்லை. ஒருபுறம் பாசி மூடிக் கிடந்த குட்டையை நீங்கள் கிளறிவிட்டிருக்கிறீர்கள். குழப்பமாக இருக்கிறது.”

‘நீங்கள் யோசனை செய்யுங்கள். பெண்மையைத் தாழ்வாகக் கருதுவதை நான் வெறுப்பவன். ஒருத்தி என்னை அவமதித்துவிட்டுப் போன பிறகுகுட பெண்மையை நான் மதித்துப் போற்றவே விரும்புகிறேன். ஒழுங்கற்ற ஓர் வாழ்வு எனக்குக் கட்டாயமாக வருமானாலும் கூட, பெண்மை காலடியில் மிதிபடுவதை நான் ஒப்பமாட்டேன். உங்கள் இசைவுக்கு அல்லது மறுப்புக்கு நான் காத்திருப்பேன்.”

அவள் முகம் சிவந்து போகிறது.

வெகுநேரம் அவர்கள் பேசவில்லை.

சரேலென்று சேலையைத் தட்டிக்கொண்டு அவள் எழுந்திருக்கிறாள்.

“ரொம்ப நேரமாகிவிட்டது.”

கைக் கடியாரத்தில் கண்கள் பதிகின்றன.

இருவரும் மெளனமாக நடந்து வருகின்றனர்.

“நல்லது, பிறகு பார்க்கலாம்..” என்று புன்னகையுடன் கூறிவிட்டு அவள் விரைந்து திரும்பி நடக்கிறாள்.

மைத்ரேயிக்கு நூலகத்துள் நுழையும்போது மனத் தெளிவு இல்லை. புத்தகங்களைப் பிரித்துப் பார்க்கக்கூடப் பொருந்தவில்லை. கையில் அகப்பட்ட புத்தகங்களை எடுத்துக் கொண்டு அவள் வீடு திரும்பப் பஸ்ஸைப் பிடிக்கிறாள். மனசுக்கு உவப்பான நிகழ்ச்சிகளை நினைத்தாலும் மனம் மகிழ்ச்சியிலும் திளைக்க முடியாததொரு பளுவைச் சுமந்து கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது.

கல்யாணமா? அவளுக்கா? சீ!

ஏன்? உயர்ந்த லட்சியம் என்று சொல்லிக்கொண்டு சந்தர்ப்பங்களுக்கு இரையாகாமல் நிற்பதைத்தானே நீ மதிக்கிறாய்? உண்மையில் தனராஜை மணந்தபின் அவன் உயர்ந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்காதவன் என்ற காரணமே உன்னை வெறுக்கச் செய்தது. இப்போது உயர்ந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கவே உன்னை மணக்க விரும்புகிறேன் என்று முரளி கூறுகிறான். இவனை உன் உள்ளம் மதிக்கிறது. ஆனால் ஏன் சீ! கல்யாணமா என்று ஏன் மறுக்கிறாய்,

‘ஏற்கெனவே ஒருவனுடன் ஒடிப்போய் அவனுடனும் ஒத்துவாழத் துணிவில்லாதவளாக ஓடிவந்தாள். இப்போது இன்னொருவனைப் பிடித்துக் கொண்டாள் என்று மேல் நோக்காகப் பார்க்கும் உலகம் பழிக்கும்? தனராஜே அறிந்தால் என்ன நினைப்பான் ?

வீட்டுக்கு அவள் திரும்பும் நேரத்தில் ஞானம் வீட்டிலிருக்க மாட்டாள் என்று எண்ணியிருப்பது பொய்யாகிறது.

வாயிலில் ஒரு கறுப்புக்கார் நிற்கிறது.

யாரோ வந்திருக்கிறார்கள். ஞானம் பேசும் குரல் ஓங்கி ஒலிக்கிறது. அவள் நேர்வாயிலில் நுழையாமல் தோட்டத்து வழியே சென்று பின்புறமாக நுழைகிறாள்.

17

ஞானம் அரசினரின் கருத்தடைப் பிரசாரத்தைக் குறித்துக் காரசாரமாகப் பேசிக்கொண்டிருக்கிறாள். “பெண் குலம்தான் எப்போதும் சுமை சுமக்கவேண்டுமா? துன்பம் அநுபவிக்க வேண்டுமா? வாய்விட்டுச் சொல்லத் தெரியாமல் கிராமங்களில் பெண்கள் இந்த ஐயுஸிடி(IUCD) திட்டத்தில் துன்பம் அநுபவிக்கிறார்கள். அறிந்தவர்கள் எல்லாருமே ஃபிரிக்‌ஷன் காஸஸ் கான்சர் (Friction Causes Cancer)என்று ஒப்புக் கொள்கிறார்கள். தெரிந்து ஏன் தண்டனை கொடுக்க வேண்டும்? செயற்கைத் தடுப்பு முறைகளெல்லாம் தாகத்துக்கு உப்பு நீரைக் குடிப்பதுபோல் என்று காந்திஜியே கருத்துத் தெரிவித்திருக்கிறார். காந்தீயக் கொள்கைகளில் ஊறியவர் என்று நினைக்கும் ஆட்சிபீடத்தார், எவனோ வெளி நாட்டான் இந்த எல்லாம் கொள்ளும் ஏழை நாட்டை நம்பி உருவாக்கிய சரக்கை எல்லாம் நம் தலையில் கட்டுவதற்கு எப்படி இடம் கொடுக்கின்றனர்? அதற்கு இப்படி ஓர் திட்டம்...?”

ஞானத்துக்கு இவ்வளவு ஆத்திரம் இருக்கிறதென்பதை மைத்ரேயி அறியாள். எனவே அவள் யாரிடம் இப்படிப் பேசுகிறாள் என்பதை அறிய ஆவல் கொள்கிறாள். அந்த திட்டத்தைப் பார்க்க யாரேனும் விருந்தினர் வருவதுண்டு.

அப்படி யாரேனும் வந்திருந்து, அலுவலகத்தில் ஒன்றும் பேசாமல் இங்கே வந்து குமுறலைக் கொட்டுகிறார்களா? தம் தம் பொருள் வசதி ஆதாயங்களுக்காக உண்மையை நேரடியாக ஒப்புக் கொள்ளாமல் திரை மறைவில் வந்து குமுறல் களைக் கொட்டி ஆறுவது இந்நாட்டின் சாபக்கேடா?

மைத்ரேயி எட்டிப் பார்க்கிறாள். மொட்டையாக வழுக்கைத் தலை, மொழு மொழுவென்ற முகத்தில் பட்டை பட்டையாக விபூதி, செவிகளில் வயிரக் கடுக்கன், இழிந்து வழியும் சதை .....

எங்கோ பார்த்தாற் போலிருக்கிறது. அருகில் புடவை தெரிகிறது. பச்சையில் ஒற்றை விளிம்பு சரிகை போட்ட பட்டுச்சேலை. இன்னும் யாரோ ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். ஞானம் பேச்சை முடிக்குமுன் ஜன்னலில் மைத்ரேயியின் உருவம் தெரிந்துவிடுகிறது.

“என்ன ஒளிஞ்சிண்டு பார்க்கறே? வா, மைத்ரேயி! உனக்காகத்தான் இங்கே இவர்கள் எல்லாரும் வந்திருக்கிறார்கள்.”

முன்னறையில் அடிவைத்ததும் மைத்ரேயி கண்களை அகல விழிக்கிறாள்.

லோகா... அந்த குண்டு மனிதர் அவளுடைய கணவர்.

ரோஜா இதழ்கள் லோகாவை இளைஞர் மன்ற காந்தி ஜெயந்தி விழாவில் கூடப் பார்த்தாள்.

அருகில் பார்க்கும்போது, மிகவும் தளர்ந்திருப்பது தெரிகிறது.

அம்மை வடுவுடன் ஒரு இளைஞன் உட்கார்ந்திருக்கிறான். விரல்களில்வயிரமும் பச்சையுமாக மோதிரங்கள் ஒளி வீசுகின்றன. மடிப்புக் கலையாத சட்டையும் அங்கவஸ்திரமும் தரித்திருக்கிறான். அவள் அறையில் நுழையும்போதே அவன் கைகுவித்து “நமஸ்காரம்மா!” என்று கூறுவதை அவள் கவனிக்காமலில்லை.

“என்னம்மா மைத்ரேயி?” என்று மொட்டைத் தலையர் தன் பொய்ப் பற்களை காட்டுகிறார்.

இவர்களெல்லாரும் எதற்கு இங்கு வந்திருக்கிறார்கள் என்று மலைத்தாற்போல் நிற்கிறாள் மைத்ரேயி.

லோகா அவளை, “உட்கார்... ஏன் நிற்கறே?” என்று கூறும்போதும் அந்த மலைப்பு நீங்கவில்லை.

“இப்ப உன்னைப் பார்க்கணும்னுதான் வந்திருக்கோம். நாளைமூணாம் நாள் இவா ஊரில் ராஜாஜி பர்த் டே செலிப்ரேட் பண்றா. அதில் நீ வந்து பேசணும்; பங்கெடுக்கணும்... என்று லோகா மர்மத்தை உடைக்கிறாள். அவளுடைய பேச்சின் ஒலி ‘நான் வாழ்வு கொடுத்து நீ வந்தவள்’ என்று கட்டளை இடுவது போலிருக்கிறது.

மைத்ரேயியின் குரல் தெளிவில்லாமல் ஒலிக்கிறது. “பொலிடிகல் மீடிங் மாதிரியா ஸிஸ்டர்?”

“ஏன்? பொலிடிகல்னா வரமாட்டியா?” என்று மெள்ளச் சிரிக்கிறாள் லோகா.

“நீ சின்ன வயசு. உன்னைப் போல இருக்கிறவாள்ளாம் இப்ப பாலிடிக்ஸில் புகுந்து வரத்தான் வேணும்” என்று உறுதியாகக் கூறுகிறார் மொட்டைத்தலை.

“ஆமாம்மா, எங்க திருச்சின்னபுரம் தொகுதி சுதந்திரக் கட்சி பிரஸிடென்ட் என்ற முறையில் உங்களைக் கூப்பிட வந்திருக்கேன். இன்னிக்கு நாட்டில் நடக்கும் அராஜகத்தைத் தொலைக்க உங்களைப்போல் யங்ஸ்டர்ஸ் வந்துதானாகணும்” என்று அம்மை வடு இளைஞன் தானே அவளை வரவேற்க வந்ததை வெளியிட்டு விடுகிறான்.

மைத்ரேயி குரோதமாக ஞானத்தை விழித்துப் பார்க்கிறாள்.

“இப்ப விருதுநகரில் ஒரு சின்னப்பயல்தான் போட்டி போடறான். அவா நிறையச் சிறு பையன்கள் தான் பார்ட்டி முழுசும். நம்ம பக்கமும் அதுபோல் வரணும். அதனால்தான் உன்னைத் தேடிண்டு வந்திருக்கோம்” என்று மொட்டைத் தலை வற்புறுத்துவதுபோல் கூறுகிறார்.

“நான் சொன்னா நீ தப்பமாட்டேன்னா நம்பி வந்திருக்கோம்” லோகா மெதுவாக ஊசிக் குத்தாய் தைக்கிறாள்.

“அடாடா...நீங்கள் இப்படி எல்லாம் ஏன் நினைக்கணும் ஸிஸ்டர்! பர்த் டே ஸெலிப்ரேஷனில் பேசறது பத