அறிவுக்கு உணவு

கி. ஆ. பெ. விசுவநாதம்அறிவுக்கு உணவு“சித்த மருத்துவச் சிகாமணி”

முத்தமிழ்க் காவலர்டாக்டர் கி.ஆ.பெ. விசுவநாதம், டி.லிட்.பாரி நிலையம்

90, பிராட்வே-சென்னை-600108

முதற் பதிப்பு: ஏப்ரல், 53

இருபத்தொன்றாம் பதிப்பு: டிசம்பர் 2001

வெளியிடு

பாரி நிலையம்

புதிய எண் :90,

பிராட்வே சென்னை -108

தொலைபேசி : 527 07 95

விலை: ரூ. 10.00

கணினி அச்சு:

சிவா கிராபிக்ஸ்,

சென்னை-26, Ph;

47.3 03 10

அச்சிட்டோர்:

பாரி ஆப்செட் பிரிண்டர்ஸ்,

1B, கொடிமரத் தெரு,

சென்னை - 13.

முன்னுரை

டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் M.A., M.O.L., Ph.D.

(தமிழ்த்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம்)சிறு வடிவம்; சிறந்த கருத்துக்கள்; நூலின் தன்மை அத்தகையது.

தெறிக்கும் சொற்கள், தெளிவான நல்லுரைகள்; ஆசிரியரின் நடை இத்தகையது.

தமிழகம் உயர வேண்டும்! தமிழர் உயர்ந்தால்தான் அது முடியும்; கருத்துக்களின் குறிக்கோள் இது.

கற்பனையுலகத்தை நடைமுறைக்கு ஈர்த்து அலைவதும் இங்கு இல்லை. பழைய வரலாற்றை இன்றைய வாழ்வுக்குப் பாய்ச்சி இணைப்பதும் இங்கு இல்லை. நடைமுறையை மறவாமல் வாழ்வைக் காக்கும் அனுபவ அறிவுரையே இங்கு உள்ளது.

வினாவும் விடையுமாக உள்ள பகுதிகள் பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிவுரைகளாக உள்ளன. விடைகூறும் முறை சுவை மிகுந்ததாகவும், நேரே உள்ளத்தில் பதிய வல்லதாகவும், உள்ளது. ஏட்டுச் சுரைக்காயாக வரும் அறிவுரையை விட, அனுபவத் தெளிவாக வரும் அறிவுரை ஆற்றல் மிகுந்தது என்பதை இந்தப் பகுதியால் நன்கு தெளியலாம். இவை இளைஞர் உள்ளங்களுக்கு நல்ல மருந்தும் ஆவன: சிறந்த விருந்தும் ஆவன.

‘அறிவுக்கு உணவு’ நலம் பயப்பதாக!

அன்புள்ள,

மு.வரதாரசன்சென்னை

12-9-56

எனது எண்ணம்

“எனது நாடு தமிழ் நாடு; எனது மொழி தமிழ் மொழி; ஆகவே, நான் தமிழன்” என்று நெஞ்சு நிமிர்ந்து கூறும் தகுதியும் வாய்ப்பும் உள்ள மக்களுள் ஒவ்வொரு வரும், “எண்ணத்தாலும், துணிவாலும், செயலாலும், சொல்லாலும், பொருளாலும் உலகுக்குயிர் வழங்கிய நம் அருந்தமிழைப் போற்றி வளர்த்து, நாமும் பிறரும் நல்வாழ்வு வாழ வேண்டும்!” என எண்ண வேண்டும் என்பது எனது எண்ணம்.

-கி.ஆ.பெ.விசுவநாதம்

பொருள் அடக்கம்

1. சிந்தனைச் செல்வம்

2. ஏமாற்றம்

3. துன்பம்

4. போற்றலும் தூற்றலும்

5. மூன்றும் அற்றவர்கள்

6. வஞ்சகர் உள்ளம்

7. எது இழிவு?

8. ஜோசியம்

9. நகைச்சுவை

10. உணர்ச்சி

11. புலவர் பெருமக்களுக்கு

12. குழந்தை அறிவு

13. ஒன்றுபட்டால்

14. அறிவின் பயன்

15. மனிதன்

16. பகைக்கு விதை

17. பழகுதல்

18. செல்வமும் வறுமையும்

19. எப்போது?

20. பகுத்தறிவுள்ள மக்களுக்கு

21. தம்பி! கவனி

22. தொண்டர் நிலை

23. மணவாழ்க்கை

24. வாழ்க்கை

25. நீ யார்?

26. இன்பமும் துன்பமும்

27. திருந்துங்கள்

28. புரட்சி ஓங்குக!

29. வாங்க மனமானால்

30. தமிழ் மகனே!

31. நாவைக் காப்பாற்று

32. அரசியல் இயக்கம்

33. வெற்றி

34. அன்பும் ஆசையும்

35. செயல்

36. சட்டம்

37. இரவல் வாங்காதே

38. ஒன்றும் தெரியாது

39. இளமையில் அழகு

40. வியப்பு

41. உண்மை

42. பழத்தை உரிக்கும் முறை

43. பொதுநலம்

44. அறிவுடைமை

45. வாழ்வு சிறக்க!

46. வெட்கம்

47. அனுபவ அறிவு

48. அறிவும் செயலும்

49. அறிவில்லை

50. பொன்மொழி

51. உலகம்

52. எது?

53. மறதி

54. எவன் பைத்தியக்காரன்?

55. விருப்பும் வெறுப்பும்

56. நாட்டை அழிக்கும் அறுவர்

57. நீ எப்படி?

58. உயிர்ப்பலி

59. உயர்வு

60. தமிழரின் பண்பு

61. நாட்டிற்கு ஆபத்து

62. பெருந்தன்மை

63. அமைதி

64. உயர்ந்த கருத்து

65. இளைஞர்கள்

66. குறை கூறுதல்

67. வலிமை

68. ஒற்றுமை

69. என்ன பெயர்?

70. மகிழ்ச்சி

71. நல்ல வழி

72. எப்படி மக்கள்?

73. தேவை

74. அபாயம்

75. ஏமாற்றம்

76. கேள்வி

77. அடைசல்

78. பொது வாழ்வு

79. எச்சரிக்கை

80. பழியும் புகழும்

81. விழிப்பாயிரு

82. வஞ்சகனது உள்ளம்

83. உதவி

84. வாழ்வும் அழிவும்

85. இழந்தவனை இழக்கும்

86. நன்றி செலுத்து

87. வாழ்வில் வளம்

88. சிறப்பு அழியாது

89. உயர்வு பெறாது

90. எழுத்தாளன்

91. பழகத் தகாதவன்

92. போரை விளைவிக்கும்

93. மக்கள் குணம்

94. பெருவியப்பு

95. உணர்வு

96. சாகும்

97. குறிக்கோள்

98. வெல்ல இயலாது

99. எளிது

100. வளைந்து கொடு

101. வைக்குமிடம்

102. அமைதி

103. மகிழ்ச்சியடை

104. வருத்துவது

105. மாறுதல்

106. அரைநாள்

107. கடிதம்

108. இறந்தகாலம்

109. வேறு

110. நோயைத் தடுத்தல்

111. அணிகலன்

112. மதிப்பிடுதல்

113. வலுவற்றவை

114. யோசியாமற் செய்

115. நட்பு

116. வள்ளுவர்

117. உலகம் உருண்டை

118. 'ஏரி நீர்'

119. கண்டுபிடி

120. துன்பங்கள்

121. நேரம் இராது

122. அன்பு கெடும்

123. அதிசயம்

124. முயன்று பெறு

125. பார்த்து நட

126. வாழ்வும் பாழ்

127. கலைச் சிறப்பு

128. நினைத்துப் பார்

129. குறைத்துக்கொள்

130. நலமும் திதும்

131. அழிவை நெருங்கும்

132. உயர்வும் தாழ்வும்

133. ஊர் கெடும்

134. கூட்டுக் கையெழுத்து

135. அரிதும் எளிதும்

136. நல்லது

137. இரண்டை ஒன்றாக்கு

138. செல்வங்கள்

139. அடைசல்

140. கேள்விச் செல்வம்

141. விருந்து

142. எதைக்காப்பது?

143. எது நல்லது?

144. வளரும் செல்வம்

145. எதனால் வந்த வினை?

146. இழிவைத் தருவன

147. அறிய முடியாதது

148. வளராது, வாழாது

149. திருத்து

150. பின்பு வாழ்!

151. கேள்வியும் விடையும்அறிவுக்கு உணவுசிந்தனைச் செல்வம்ஓயாது பேசிக்கொண்டிருப்பவன் தன் உள்ளத்தில் ஒன்றும் இல்லையென்பதைக் காட்டிக் கொள்ளுகிறான்.

ஒன்றுமே பேசாதிருப்பவன் தன்னுள்ளத்தில் எதையோ மறைத்துக் கொண்டிருக்கிறான் என்பதைக் காட்டி விடுகின்றான்.

முன்னவனை ஒட்டைவாயன் என்றும் பின்னவனை அறிஞன் என்றும் கூறுகிறவன், தன் அவசர புத்தியைக் காட்டிக் கொள்ளுகிறான்.

முன்னவனை நல்லவன் என்றும், பின்னவனை வஞ்சகன் என்றும் கூறுகிறவன், தான் அவனைவிட அவசரக்காரன் என்பதைக் காட்டிக்கொள்ளுகிறான்.

இந்நால்வரும் சிந்தனைச் செல்வத்தை இழந்துவிட்டவர் என்பது அறிஞரின் முடிவு.ஏமாற்றம்

யோக்கியன் தன்னைப் போலவே பிறரும் யோக்கியராய் இருப்பார் என எண்ணி ஏமாறிக் கெட்டுப் போகிறான்.

அயோக்கியனும் தன்னைப் போலவே மற்றவர்கள் அயோக்கியர்களாய் இருப்பார்களென எண்ணி ஏமாற்றிக் கெட்டுப்போகிறான்.துன்பம்

சோம்பேறிகளுக்கு இடையில் சுறுசுறுப்பாய் இருப்பவரும், பொய்யர்களுக்கு இடையில் உண்மை பேசி வருபவரும், அயோக்கியர்களுக்கு இடையில் வாழ்கின்ற அறிஞர்களைவிட மிகுந்த துன்பத்தை அனுபவிப்பர்.போற்றலும் தூற்றலும்

உயிரோடிருக்கும் பொழுது துாற்றிக்கொண்டிருந்து, இறந்த பிறகு போற்றிப் புகழ்கின்ற கொடுஞ்செயலை இந்தியாவிலேதான் அதிகமாகக் காணலாம்.மூன்றும் அற்றவர்கள்

அறிவும், நேர்மையும், ஒழுக்கமும் உள்ள அறிஞர்கள் அனை வராலும் பாராட்டப்படுவார்கள் அவர்களைத் தூற்றுபவர்களோ, அம் மூன்றும் அற்றவர்களாய்க் காணப்படுவார்கள்.வஞ்சகர் உள்ளம்

பாலைவனத்தில் பசும்புல்லைக் காணலாம்:

எங்கு? -சுனையருகில்! -

கோழைகளிடத்தில் வீரத்தைக்கூடக் காணலாம்.

எப்போது? -உரிமை பறிபோகும் போது

கார்காலத்து இருளில் வெளிச்சத்தைக் கூடக் காணலாம்.

எப்போது? -மின்னும் போது!

வஞ்சக மக்களின் உள்ளத்திலுள்ளதை மட்டும் எங்கும், எப்போதும், எவராலும் காண இயலாது.எது இழிவு?

உழைக்காமல் உயிர் வாழ எண்ணித் தன்னைப் போன்ற மனிதன் ஒருவனிடம் மானமிழந்து கைநீட்டிப் பிச்சை கேட்பதுதான் இழிவு. இதைவிட இழிவு வேறு எதுவும் இல்லை என்பது ஒரு முடிவு.

இத்தகைய இழிவுக்கும் துணிந்து மானங்கெட்டுப் பிச்சை கேட்கின்ற ஒருவனிடம், “இல்லை” என்று கையை விரிப்பது அதைவிட இழிவு என்பது மற்றொரு முடிவு. உங்கள் முடிவு எது?ஜோசியம்

ஜோசியர் : (தம் மாணவனைப் பார்த்து) தம்பி! நீ ஜாதகம் பார்க்கக் கற்றுக்கொண்டுவிட்டாயா?மாணவன்: யாவும் கற்றுவிட்டேன்; இனி உங்கள் உதவியின்றி நானே ஜாதகம் பார்த்துச் சொல்லுவேன்.

ஜோசியர்: முக்கியமான ஒன்றை இன்னும் நான் சொல்லிக் கொடுக்கவில்லையே!

மாணவன்: அது என்ன ஐயா?

ஜோசியர்: “எவன் ஜாதகத்தைத் துரக்கிக்கொண்டு வருகிறானோ, அவனுக்குக் கெட்ட காலம் நேர்ந்திருக்கிறது என்பதை முதலில் நினைத்துக் கொள்; பிறகு ஜோசியம் சொல்” என்பதே.நகைச்சுவை

சிரிப்பது உடல் நலத்துக்கு ஏற்றது என்பது மருத்துவ அறிஞர்களின் கருத்து. மக்களைச் சிரிக்கவைக்க நகைச்சுவை ஒரு சிறந்த கருவி. இக் கருவியை விழிப்பாகக் கையாள வேண்டும். இன்றேல், இது தீமையே தரும்.

நகைச்சுவை வேறு, நையாண்டி வேறு, நகைச்சுவை செல்லுகின்ற பாதையில் ஒரு மயிரிழை தவறினாலும் நையாண் டியாகக் காட்சியளித்து விடும். நகைச்சுவை அறிஞர்களை மகிழ்விக்கும்; நையாண்டி மற்றவர்களை மகிழ்விக்கும்.

ஒருவன் கூறியது நகைச்சுவையா? நையாண்டியா என்பதை அறிய விரும்பினால், அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தவர்கள் அறிஞர்களா, மற்றவர்களா? என்பதைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.உணர்ச்சி

அம்பு இன்றி வேட்டைக்குச் சென்ற வேடர்களையும் கத்தியின்றிப் போராடிய வீரர்களையும் எவரும் எங்கும் பார்த்திருக்கலாம். ஆனால் உணர்ச்சியின்றி வெற்றி பெற்ற மக்களை எங்கும் எவரும் காண இயலாது.புலவர் பெருமக்களுக்கு

‘கற்று, உணர்ந்து, அடங்கு’ என்பதையே தமிழ்ப் புலவர்கள் படித்தார்கள்; அதையே தாங்களும் கையாண்டார்கள்; அதையே மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுத்தார்கள். அதன் பலனாகத்தான் தமிழ்நாடு இன்று இவ்வாறு காட்சியளிக்கிறது.

இனிச் சிறிது காலத்திற்காவது புலவர் பெருமக்கள் அதை மாற்றி “கற்று, உணர்த்து, கிளம்பு” என்று சொல்லிக் கொடுப்பது நல்லது.குழந்தை அறிவு

குழந்தைகளை வளர்ப்பது பெரிதன்று; அவர்களது அறிவை வளர்ப்பதே அதைவிடப் பெரிது அல்லது தானே வளரும் அறிவையாவது தடைப்படுத்தாமலிருப்பது நல்லது.

“சோற்றை உருட்டாதே! உருட்டினால் தாய், தகப்பனை உருட்டிடுவாய்!” என்று சொல்லாதீர்கள்.

“சோற்றை உருட்டிக் கொண்டிராதே! விரைவில் சூட்டோடு சாப்பிடு! இன்றேல், செரிக்காது” எனச் சொல்லுங்கள்.

“சாப்பிடும் போது ஒரு விரலை நீட்டிக்கொண்டே சாப்பிடாதே. சாப்பிட்டால் குடும்பத்திற்கு ஆகாது.” எனச் சொல்லாதீர்கள்.

"சாப்பிடும்போது ஒரு விரலை நீட்டிக்கொண்டே சாப்பிட்டால், விரல் நகத்தால் கண்ணுக்கு ஆபத்து” என்று சொல்லுங்கள்.

“இரண்டு கழுதைகளுக்கு இடையில் போகாதே! போதல் சாஸ்திரத்துக்கு ஆகாது” எனச் சொல்லாதீர்கள்.

“இரண்டு கழுதைகளுக்கு இடையில் போகாதே! போனால் எந்தக் கழுதையாவது உதைக்கும்” எனச் சொல்லுங்கள்.ஒன்றுபட்டால்

மனிதன் எதை எதையோ கற்றுக்கொண்டிருக்கிறான். ஆனால் சேர்ந்து வாழக் கற்றுக்கொள்ளவில்லை. மனிதனால் மிக அற்பமானது என்று கருதப்படுகின்ற தேங்காய் நார்த் துசியானது சேர்ந்து வாழக் கற்றுக்கொண்டு, பலதுாசுகள் சேர்ந்து இழைகளாகி, மூன்று இழை சேர்ந்து சிறு கயிறாகி, அது மூன்று சேர்ந்து பந்தற் கயிறாகி, அது மூன்றும் சேர்ந்து நீர் இறைக்கும் வால் கயிறாகி, அது மூன்று சேர்ந்து தேர் இழுக்கும் வடக் கயிறாகித் தானே தேங்காயை உடைக்கும் அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது. மிக அற்பமான இத்தூசியினிடத்திலிருந்து சேர்ந்து வாழும் அறிவை மனிதன் பெறுவானா? -பெற்றால், அவன் வாழ்வு சிறக்காதா?அறிவின் பயன்

கடலின் ஆழமான இடத்து நீர் நீல நிறமாய்த் தோன்றும். ஆழம் குறைந்த இடத்து நீர் பச்சை நிறமாய்த் தோன்றும். அலைநீர் முத்தைப்போன்று வெள்ளை நிறமாய்த் தோன்றும். அள்ளிப் பார்த்தால், நிறமற்றுத் தோன்றும். உண்மை, என்னவெனில், நீருக்கு நிறமில்லை என்பதே. இதைக் கண்டுபிடித்து மகிழ்வதுதான் ஆராய்ச்சி அறிவின் செயலாகும். இதை அறிந்துதான் வள்ளுவர், “எந்தப் பொருள் எப்படித் தோன்றினாலும், நம்பாதே; அப்பொருளின் மெய்ப்பொருளைத் தேடிக் காண்பதுதான் அறிவு” எனக் கூறினார் போலும்!மனிதன்

மனிதன் மனிதனாய்ப் பிறந்தும், பாம்பைப்போல ஊர்ந்து செல்லக்கற்றுக்கொண்டிருக்கிறான். மீனைப் போல நீந்தக் கற்றுக்கொண்டிருக்கிறான். பறவையைப் போலப் பறக்கக் கற்றுக்கொண்டிருக்கிறான். ஆனால் மனிதன் மனிதனாய்ப் பிறந்தும், மனிதனைப்போல வாழக் கற்றுக்கொள்ளவில்லை. அதைக் கற்றுக்கொள்வது நல்லது.பகைக்கு விதை

பறங்கிக் கொடிக்குப் பறங்கி விதையும், பாகற்கொடிக்குப் பாகல் விதையும் வேண்டும் என்பது எல்லோரும் அறிந்ததே. மற்ற எல்லாச் செடிகளும் அதனதன் வித்தில் இருந்தே முளைக்கின்றன. “விரை ஒன்றுபோடச் சுரை ஒன்று முளைக்குமா?” என்ற பழமொழியும் இதை வற்புறுத்துகிறது.

ஆனால், ‘பகை’ என்னும் செடி ‘நட்பு’ என்னும் விதையிலிருந்துதான் முளைக்கிறது. ‘நட்பு’ என்னும் விதையின்றிப் ‘பகை’ என்னும் செடி முளைப்பதே இல்லை, என்று துணிந்து கூறலாம்.பழகுதல்

ஒருவர் உடல்போல மற்றவர் உடல் இல்லை. ஒருவர் முகம்போல மற்றவர் முகம் அமைவதில்லை. அப்படியே ஒருவர் அறிவும் குணமும் மற்றவர் அறிவிற்கும் குணத்திற்கும். மாறுபட்டேயிருக்கும். இவ்வுண்மையைப் பிறரோடு பழகத் தொடங்குமுன்னே ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளவேண்டும். இன்றேல், பழகும் பழக்கம் வெற்றி பெறாது.செல்வமும் வறுமையும்

மகிழ்ச்சியால் வந்த சிரிப்பு மணிக்கணக்கில் நிலைக்குமா? நிலைத்தாலும், ஆத்திரத்தால் வந்த துடிப்பு ஐந்து நிமிடமாவது நிலைக்குமா? இவ்விரண்டும் நிலைத்து நின்றாலும் தீயோர்க்குச் செல்வத்தால் வந்த வாழ்வும், நல்லோர்க்கு வறுமையால் வந்த தாழ்வும் நிலைத்து நில்லா.எப்போது?

கல்வி கல்லாதிருப்பது நல்லது! எப்போது? -கற்றும் அறிவில்லாதபோது.

எதுவும் எழுதாதிருப்பது நல்லது! எப்போது? -எழுதியும் எழுதியபடி ஒழுக இயலாதபோது,

ஒன்றும் பேசாமலிருப்பது நல்லது! எப்போது? -பேசியும் நடக்க இயலாதபோது.

சுதந்திரம் பெறாதிருப்பது நல்லது! எப்போது? -பெற்றும் வாழ முயலாதபோது.பகுத்தறிவுள்ள மக்களுக்கு

எறும்பின் சுறுசுறுப்பும், எருதின் உழைப்பும்,

நரியின் தந்திரமும், நாயின் விசுவாசமும்,

கழுதையின் பொறுமையும், காகத்தின் கூட்டுறவும்

புலியின் வீரமும், புறாவின் ஒழுக்கமும்,

சிங்கத்தின் நடையும், யானையின் அறிவும்,

மானின் வாழ்வும், மக்களுக்குத் தேவை.தம்பி! கவனி!

சுறுசுறுப்பாயிரு! ஆனால், படபடப்பாயிராதே!

பொறுமையாயிரு! ஆனால், சோம்பேறியாயிராதே!

பற்றற்று இரு! ஆனால், காட்டுக்குப் போய்விடாதே!

இல்லறத்தை நடத்து! ஆனால், காமவெறியனாயிராதே!வீரனாயிரு! ஆனால், போக்கிரியாயிராதே!

அன்பாயிரு! ஆனால், அடிமையாயிராதே!

கொடையாளியாயிரு! ஆனால், ஒட்டாண்டியாய் விடாதே!சிக்கனமாயிரு! ஆனால், கருமியாயிராதே;

இரக்கம் காட்டு! ஆனால், ஏமாறிப் போகாதே!தொண்டர் நிலை

பிறர் தூற்றுவதைக் கண்டு நடுங்குகின்ற பொதுத் தொண்டனால் நாட்டுக்குத் தீமை விளையும்.

அதைவிட அதிகத் தீமை, பிறர் வாழ்த்துவதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்ற பொதுத்தொண்டனால் நாட்டுக்கு ஏற்பட்டுவிடும்.மணவாழ்க்கை

உப்பில்லாப் பத்தியம் இருப்பவன் உப்பை எவ்வளவு பெரிதாகக் கருதுகிறானோ, அப்படியே திருமணமாகாத இளைஞன் திருமணவாழ்வைக் கருதுகிறான்.

உப்பைக் கலந்துண்பவன் உப்பை எவ்வளவு சிறிதாகக் கருதுகிறானோ, அப்படியே மணமுடித்த பிறகு அவன் மன வாழ்க்கையைக் கருதுகிறான்.வாழ்க்கை

பிறர் அடைகின்ற மகிழ்ச்சியைப் பார்த்து மகிழ்ச்சி அடையப் பழகு. அதுதான் உண்மையான மகிழ்ச்சியாகும். அதுமட்டு மன்று; அத்தகைய மகிழ்ச்சி ஒன்றுதான் உனது வாழ்க்கையை அழகு செய்யும்.நீ யார்?

நீ யார் என்பதைப் பிறருக்குஅறிவிப்பது உனது பேச்சே! ஆகவே, நீ பேசும்போது விழிப்பாயிருந்து பேசிப் பிறரை ஏமாற்றிவிடலாம் என ஒருபோதும் எண்ணிவிடாதே. அதனால் நீயே ஏமாறுவாய்!

உள்ளம் தூய்மையாய் இருந்தால்தான் பேச்சுத் தெளிவாய் இருக்கும். பேச்சுத் தெளிவாய் இருந்தால்தான் நீ நேர்மையானவனாய் இருப்பாய்.இன்பமும் துன்பமும்

வாழ்வைப்பற்றி எண்ணும்போது இன்பமும், சாவைப்பற்றி எண்ணும்போது துன்பமும் உண்டாகின்றன. ஆனால், மனிதன் சாவைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. பாவம்! அவனது கவலையெல்லாம் வாழ்வைப் பற்றியதாகவே இருந்து வருகிறது.திருந்துங்கள்

பஞ்சு மெத்தைகளில் நடைபெறும் கொடுமைகளைப் போலத் தாழம் பாய்களில் நடப்பதாக அறிய இயலவில்லை. சிறு குடிசைகளில் கேட்கப்படுகின்ற அன்புச்சொற்களைப் போலச் சிங்கார மாளிகைகளில் கேட்க இயலுவதில்லை.‘குணம் பெற்றால், பணம் விலகும்’ என்பதும், ‘பணம் பெற்றால், குணம் விலகும்’ என்பதும், பத்தில் ஒன்பது பங்கு உண்மை போலும்!புரட்சி ஒங்குக!

‘புரட்சி, புரட்சி’ என்று படிக்கிறோம். கேட்கிறோம், பார்க்கிறோம். அது வேறு எங்கும் உண்டாவதைவிட, நம்நாட்டு மக்களுடைய உள்ளத்திலேயே உண்டாக வேண்டும்.

மனப்புரட்சி ஏற்பட்டுத் திருந்தினாலன்றி, வாழ வழியில்லை. ஆகவே, எங்கும் புரட்சி ஒங்குக! என்பதைவிட முதலில், ‘மனப்புரட்சி ஒங்குக’ என்ற கூறுவது பெருநலம் பயக்கும்.வாங்க மனமானால் கொடு!

பிறரிடத்தில் நீ என்ன எதிர்பார்க்கிறாயோ அதையே நீ பிறருக்குக் கொடு!பிறர் உன்னிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று நீ ஆசைப்படுகிறாயோ, அப்படியே நீ பிறரிடம் நடந்துகொள்!

நீ போற்றப்பட வேண்டுமானால், போற்று! தூற்றப்பட வேண்டுமானால், தூற்று ! பிறர் உன்னை வாழ்த்த வேண்டுமானால் நீ பிறரை வாழ்த்து! உன்னைப் பிறர் வைய வேண்டுமானால், நீ பிறரை வைதுகொண்டிரு!தமிழ் மகனே!

உனது மொழியைத் ‘தமிழ்’ என்று கூறு!

உனது கலையைத் ‘தமிழ்க்கலை’ என்று சொல்!

உனது பண்பைத் ‘தமிழ்ப்பண்பு’ என்று கருது!

நீ ‘தமிழன்’ என நினை! மறவாதே!

மறந்தால், உனக்கு வாழ்வில்லை.‘நா’வைக் காப்பாற்று

கோபம் வந்தபோது மட்டுமின்றி, மகிழ்ச்சி வந்தபோதும் மக்கள் அறிவிழந்து பல சொற்களைச் சொல்லி விடுகின்றார்கள். கோபம் வந்தபோது கொட்டுகிற சொற்களைவிட மகிழ்ச்சி வந்தபோது கொட்டுகிற சொற்களினாலேதான் அதிகத் தீமைகள் விளைகின்றன.

‘நாவைக் காப்பாற்றாதவன் வாழ்வை இழந்துவிடுவான்’ என்னும் உண்மையைச் சினம் வந்தபோதும் மகிழ்ச்சி வந்தபோதும் மட்டுமல்லாது, சும்மா இருக்கும்போதும் மறந்துவிடாதே!அரசியல் இயக்கம்

அரசியல் இயக்கத்திற்கு யோக்கியமும், நாணயமும் உள்ள மக்கள் தேவை.

ஆனால், யோக்கியமும் நாணயமும் உள்ள மக்களுக்கு அரசியல் இயக்கம் தேவை இல்லை.வெற்றி

நியாயமான காரணங்களை முன்வைத்து நேரான வழியில் சரியாகப் போராடத் தொடங்கிய எவனையும்- அவன் எத்தகைய பலவீனனாய் இருந்தாலும்- வெற்றி விரைந்து தழுவும்.

பொய்யான காரணங்களை முன் வைத்து மறைவான வழியில் தவறாகத் தலையிடும் எவனையும்- அவன் எத்தகைய பலசாலியாய் இருந்தாலும் அது வீழ்த்திவிடும்!அன்பும் ஆசையும்

நான் தந்தையானேன்; பிறகுதான் பிள்ளைகள்மீது வைக்கும் அன்பு இத்தகைய என்று தெரிந்தது. பாட்டனும் ஆனேன்; இப்பொழுதுதான் பேரப்பிள்ளைகள்மீது வைக்கும் ஆசை இப்படிப்பட்டது என்பது தெரிகிறது. தெரிந்தும், என் அன்பையும் ஆசையையும் அறியாமலும் என்னை ஒரு பொருட்டாகக்கூட கருதாமலும் அப்பிள்ளைகள் நடந்து கொள்வதைப் பார்க்கும் என் உள்ளம் பெரிதும் வருந்துகிறது! “என் தந்தை, பாட்டன் இவர்கள் மனம் இப்படித்தான் புண்பட்டிருக்கும்!” என்று எண்ணும்பொழுது என் கண்களிலிருந்து இரத்தம் சொட்டுகிறது. என் செய்வேன்.செயல்

நாம் எண்ணங்களைக் கோடிக்கணக்கில் எண்ணுகிறோம். எழுத்துக்களை இலட்சக்கணக்கில் எழுதுகிறோம். பேச்சுக்களை ஆயிரக்கணக்கில் பேசுகிறோம்; குறிக்கோளை நூற்றுக்கணக்கில் குறிக்கிறோம்.துணிச்சலில் பத்துக் கணக்கில் துணிகிறோம்.

ஆனால் நாம் செயலில் ஒன்றையாவது உருவாகச் செய்கிறோமோ? கோடை இடி இருப்பதாலேயே குளம் நிரம்பிவிடுமா?சட்டம்

‘நல்ல சட்டம் செட்ட சட்டம்’ எனச் சட்டத்தில் இருவகை உண்டு. நல்ல அதிகாரி, கெட்ட அதிகாரி என அதிகாரிகளுள் இரு வகையர் உண்டு.கெட்ட சட்டத்தை நல்ல அதிகாரிகள் நடத்துவதைவிட நல்ல சட்டத்தைக் கெட்ட அதிகாரிகள் நடத்துவதில்தான் அதிக ஆபத்து இருக்கிறது.இரவல் வாங்காதே

எதை இரவல் வாங்கினாலும், சைக்கிளையும் குடையையும் மட்டும் இரவல் வாங்காதே. ஏனெனில் அவற்றைக் கொண்டுபோய்க் கும்பலில் வைத்து விட்டுப் பின் அடையாளம் தெரியாமல் விழிக்க நேரிடும்.ஒன்றும் தெரியாது

‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்று கூறுகிறவன் தனக்கு ஒன்றும் தெரியாது என்பதைக் காட்டிக்கொள்ளுகிறான்.

‘எனக்கு ஒன்றும் தெரியாது’ என்ற கூறுகிறவன் எதையோ தெரிந்து கொண்டுதான் கூறுகிறான்.இளமையில் அழகு

நீங்கள் தேள் குஞ்சு, பூனைக்குட்டி, பன்றிக்குட்டி, யானைக்குட்டி, எலிக்குஞ்சு பாம்புக்குட்டி என்பவைகளைக் கண்டால், எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறீர்கள்! அவை முதுமையடைந்து விட்டால் ஏன் வெறுக்கிறீர்கள்! இளமையில் ஒர் அழகு உண்டு!வியப்பு

பாதையில் செல்லுபவர்கள் மோட்டார் ஒட்டிகளைத் திட்டுவதும் மோட்டார் ஒட்டிகள் நடந்து செல்லுபவர்களைத் திட்டுவதும் வியப்பில்லை.

ஒரே ஆள், நடந்து செல்லும் போது மோட்டார் ஒட்டிகளைத் திட்டுவதும், மோட்டாரில் போகும்போது நடந்து செல்லுபவர்களைத் திட்டுவதும் தான் வியப்பு.உண்மை

ஒயாது பேசிக்கொண்டிருப்பவன் உள்ளத்தில் ஒன்றும் தங்காது! ஒன்றுமே பேசாதிருப்பவன் உள்ளத்தில் உண்மை தங்காது!பழத்தை உரிக்கும் முறை

ஆரஞ்சுப் பழத்தை உரிக்க, கரும்பைச் சீவ, வாழை இலையைக் கிழிக்க, மூங்கிலைப் பிளக்க வேண்டுமானால், நுனியிலிருந்து தொடங்கி அடி நோக்கிச் செல், அது எளிதாக இருக்கும்.பொதுநலம்

பொதுநலத்திற்கு உழைக்கும் அறிஞர்களை தந்நலத்திற்கு உழைக்கும் மக்கள் விரைவாக வென்றுவிடுவார்கள்.

முன்னது ஆற்றின் ஊற்று நீர் போன்றது. பின்னது காட்டாற்று வெள்ளத்தைப் போன்றது.அறிவுடைமை

உணர்ச்சி ஒரு செல்வம்! அதனைப் பெற்றதும் துள்ளிக் குதித்து, ஆடி, ஒடி, அதனைப் பாழாக்கிவிடுவது அறிவுடைமை ஆகாது!

அதனை அடக்கி ஆண்டு, ஒருமுறைப்படுத்தி, நேரான வழியில் பயன்படுத்திப் பலனடைவதே அறிவுடைமையாகும்!வாழ்வு சிறக்க!

பிறருக்கு நீ செய்துள்ள உதவிகள் என்னென்ன என்று எண்ணு! பிறகு எழுது! மேலும் செய் ! உன் வாழ்வு சிறப்படையும்.வெட்கம்

அயோக்கியன் முகத்தைக் கான யோக்கியன் வெட்கப்படு வதைவிட, யோக்கியன் முகத்தைக் காண அயோக்கியன் வெட்கப்படுவதே அதிகமாய் இருக்கிறது.

இவ்வுண்மையை முன்னவன் முகத்திற்கானும் வெறுப்பும் பின்னவன் முகத்திற் காணும் சிரிப்பும் மெய்ப்பிக்கும்.அனுபவ அறிவு

பாட்டன் அறிவு, தந்தைக்கும், தந்தை அறிவு மகனுக்கும், மகன் அறிவு பேரனுக்கும் பெரிதும் பயன்படுவதில்லை. அவரவர் பட்டு அனுபவித்தே அறிவு பெறுகின்றனர்.

கல்வி அறிவையும், கேள்வி அறிவையும் அனுபவ அறிவாக ஏற்றுக்கொள்கிறவனே விரைவில் அறிஞன் ஆகிறான்.அறிவும் செயலும்

பெரியோர் சொல்லும் நீதிகள்னைத்தும் நான் அறிந்தவை களாகவே இருக்கின்றன. ஆனால், அவற்றைப் பின்பற்றி நடப்பதோ என்னால் இயலாதததாகவே இருக்கிறது.

அறிவில்லை - பலருக்கு அறிவில்லை என்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது. இதனால் எனக்கு அறிவில்லை என்பது பிறருக்குத்தான் தெரியும் போலும்!பொன்மொழி

ஏமாறுபவர் இல்லாவிடில், ஏமாற்றுபவர் இல்லை

கோள் கேட்பவர் இல்லாவிடில், கோள் சொல்லுபவர் இல்லை.

ஊன் தின்பவர் இல்லாவிடில், உயிர் கொல்வோர் இல்லை.

அறிவற்றோர் இல்லாவிடில், அறிவுடையோர் இல்லை.உலகம்

தன்னலம் ஒன்றையே கருதிப் பிடிவாதத்தோடும் கருமித்தனத்தோடு வாழ்பவனைக்கூட இவ்வுலகம் கெட்டிக் காரன், திறமைசாலி என்று கூறிவருகிறது.

இரக்கக் குணம் படைத்து, விட்டுக் கொடுத்து, பிறருக்கு உதவிசெய்து வாழ்டவனைக்கூட இவ்வுலகம் ‘ஏமாளி!’ என்று கூறி நகைக்கிறது.“இவற்றை எண்ணிப் பார்க்கும்பொழுது என் தலை சுழல்கிறது. நான் எப்படி வாழ்வது?” என்று வினவினார் ஒருவர்.

“தம்பி! அதுதான் உலகம் என்பது. அது அப்படித்தான் சுழலும்! அதற்குள்ளேதான் நீ வாழ்ந்ததாக வேண்டும்” என்பதே அதற்கு விடை.எது?

துன்பத்திற்குப் பிறப்பிடம் எது?

இன்பத்திற்கு அழிவிடம் எது?

தோல்விக்குப் பிறப்பிடம் எது?

வெற்றிக்கு அழிவிடம் எது?

தீமைக்குப் பிறப்பிடம் எது?

நன்மைக்கு அழிவிடம் எது?

வறுமைக்குப் பிறப்பிடம் எது?

வாழ்வுக்கு அழிவிடம் எது?-சோம்பல்.மறதி

‘வைகிறார்களே!’ என்று வருந்துகிறவன், தன கடமையை மறந்துவிடுகிறான்.

‘வாழ்த்துகிறார்களே!’ என்று மகிழ்பவனும், தன் கடமையை மறந்துவிடுகிறான்.

வைதுகொண்டும் வாழ்த்திக்கொண்டும் இருப்பவனைப் பார்த்துக் கொண்டிருப்பவனும், தன் கடமையை மறந்து விடுகிறான்.எவன் பைத்தியக்காரன்?

கடையில் முதலாளி ஒருவன் அதிகமான பணத்தை எண்ணிக் கொண்டிருந்தான்.

பிச்சைக்காரன் ஒருவன் வந்து காசு கேட்டான்.அவனை கணக்குப் பிள்ளை விரட்டினான். பிச்சைக்காரன் எதிர்த்தான் முதலாளி, “அவனை விரட்டவேண்டாம்; அவன் பைத்தியக் காரன்,” எனக்கூறி, ஒரு காசு கொடுத்தனுப்பினான்.

பிச்சைக்காரன் கனிந்த வாழைப்பழம் விற்கும் கடைக்காரி யிடம் சென்று காசைக் கொடுத்துப் பழம் கேட்டான் கடைக்காரி, ஏது “சாமியாரே இன்றைக்குக் காசு!" என வியந்து கேட்டாள். “அதோ அந்தக் கடையில் பணத்தை எண்ணி எண்ணி அடுக்கிக்கொண்டிருக்கிற ஒரு பைத்தியக்காரன் கொடுத்தான்.” எனக் கூறினான் அவன்.விருப்பும் வெறுப்பும்

காணப்படுகின்ற பொருள்களிலே இல்லை. காண்கின்ற மக்களுடைய உள்ளத்திலேயே இருக்கின்றன. வேப்பங்கனியைப் பறவைகளெல்லாம் வெறுக்கின்றன. காகம் விரும்புகிறது. எல்லோரும் விரும்பும் இனிப்பையும் சிலர்வெறுக்கின்றனர்.

ஒரே பெண் தன் தந்தையின் உள்ளத்திற்கொரு விதமாகவும், தமையனின் உள்ளத்திற்கொரு விதமாகவும் காதலன் உள்ளத்திற் கொரு விதமாகவும் காட்சியளிக்கிறாள். இவ் வேறுபாடு பெண்ணிடத்தில் தோன்றாமல், காண்கின்றவன் கண்ணிடத்தே தோன்றுகிறது.

இதிலிருந்து விருப்பும் வெறுப்பும் பொருள்களில் இல்லையென்றும், மக்கள் உள்ளத்தே உள்ளதென்றும் எளிதாக உணரலாம். துன்பத்தை இன்பமாகக் கண்டு மகிழ்வதும் இன்பத்தைத் துன்பமாகக் கண்டு வருந்துவதும் உனது உள்ளமேயாகும். சிறுபொருளை இழந்து வருந்தி அழுவாரும், பெரும் பொருளை இழந்து மகிழ்ந்து வாழ்வோரும் மக்களுள் உண்டு. நீ உனது உள்ளத்தை வலுப்படுத்து; துன்பத்தையே அறியாது வாழலாம்.நாட்டை அழிக்கும் அறுவர்

நாணயமில்லாத வியாபாரி

நேர்மையில்லாத அரசியல்வாதி

ஒழுக்கமில்லாத சீர்திருத்தவாதி

உண்மையில்லாத எழுத்தாளி கொள்கையில்லாத பேச்சாளிஅறிவில்லாத படிப்பாளி

ஆகிய அறுவரும் நாட்டை அரித்துத் துன்புறுத்தும் நல்ல செல்லுப் பூச்சிகளாம்.நீ எப்படி?

கடந்துபோன காரியங்களை எண்ணி எண்ணி வருந்திக் கொண்டிருப்பவன், எதிர்காலத்திலே அடையவேண்டிய பலன்களையும் இழந்துவிடுகிறான். இழந்து போனவைகள் எண்ணி வருந்தாமல், ஊக்கங்கொண்டு உழைப்பவன், எதிர்காலப் பலன்களையும் பெற்று, இழந்தவைகளையும் திரும்பப் பெற்றுவிடுகிறான். நீ எப்படி?

நல்ல குழந்தைகள், பெரியோர்களின் புத்திமதியைக் கேட்ட உடனே அறிவைப் பெற்றுவிடுகிறார்கள். கெட்ட குழந்தைகள், தாங்களாகத் துன்பப்பட்டு அனுபவித்த பிறகே, நல்லறிவைப் பெறுகிறார்கள். நீ எப்படி?உயிர்ப்பலி

தங்களைத் தாங்களே காப்பாறறிக் கொள்ளத்தெரியாத மனிதர்கள், தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத உருவங்களுக்கு, தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள இயலாத விலங்குகளை உயிர்ப்பலி கொடுக்கிறார்கள். இது ஏன்? -உயர்வு

உண்மை உயர்வை அளிக்கும்.

பொய்ம்மை உயர்வை அழிக்கும்.தமிழரின் பண்பு

அறத்தின் வழி நிற்றல்

ஆண்மையில் உயர்தல்

இன்பத்தில் திளைத்தல்

ஈதலிற் சிறத்தல்

உள்ளத்தில் தெள்ளியராதல்

ஊக்கத்தில தளராதிருத்தல்

எவரையும் தமராய்க் கொள்ளல்

ஏற்றத் தாழ்வின்றி வாழ்தல்

ஐயந்திரிபறப் பேசுதல்

ஒழுக்கத்தைக் காத்தல்

ஒரஞ்சாராது நிற்றல்

ஒளவியந்தன்னை அகற்றல்

செவ்விய தமிழரின் பண்பு.நாட்டிற்கு ஆபத்து

ஒரு நாட்டிலுள்ள மக்களுள் சிலர் மூடராயிருப்பதால் ஒன்றும் துன்பம் வந்துவிடுவதில்லை. அவர்கள் தங்களை அறிஞர்கள் எனக் கருதிக்கொண்டு செயலாற்றத் தொடங்கும் பொழுதுதான் துன்பமும் விளையத் தொடங்குகின்றன.

ஒரு நாட்டிலுள்ள மக்களுள் சிலர் அறிஞராய் இருப்பதால் ஒரு பயனும் உண்டாவதில்லை. ஆனால் அவர்கள் “நம்மால் எதுவும் செய்ய இயலாது.” என்று நினைக்கும்பொழுதுதான், அந்நாட்டிற்கு ஆபத்து விளையத் தொடங்குகிறது.பெருந்தன்மை

பொறாமையிலிருந்து அற்பத்தனம் தோன்றுகிறது. சகிப்புத் தன்மையிலிருந்து பெருந்தன்மை தோன்றுகிறது.அமைதி

ஒரு செயல் படாடோபத்திலிருந்து விளைகிறது. பெருஞ் செயல் அமைதியிலிருந்து விளைகிறது.அமைதி

ஒவ்வொருவனும் இன்பமயமான அமைதியைப் பெறவே ஆசைப்படுகிறான்; உழைக்கிறான். ஆனால், வெற்றி பெறுவதோ வாழ்நாளில் அன்று, சாவுநாளில்!உயர்ந்த கருத்து

சிறந்த ஓர் ஒழுக்கத்தை ஒரு வரலாற்றிக் கண்டால், அது அந்த நாட்டின் பண்பு எனக் கொள். அதையே கற்பனையில், கட்டுரையில் சொற்பொழிவிற் கண்டால், அந்த நாட்டில் இல்லை எனக் கருது.இளைஞர்கள்

சின்னஞ் சிறு குழந்தைகளையும், வயதுசென்ற பெரியவர் களையும் காளைகளாகிய இளைஞர்கள் சிறிதும் பொருட்படுத்து வதில்லை. இது இளந்தளிர்களையும், உதிர்ந்த சருகுகளையும் கண்டு மரத்திலுள்ள பச்சை இலைகள் தம் நிலை குறித்துப் பெருமைப்பட்டுக் கொள்வதைப் போன்றது.குறை கூறுதல்

ஒருவன் எவ்வளவு உயர்ந்த குணம் உடையவனாய் இருந் தாலும், பிறரைக் குறைகூறும் குணம் ஒன்று இருக்குமானால், அவன் உயிரோடு இருக்கும் பொழுதே இறந்தவனாய் விடுவான்.வலிமை

வாலிபன் கை வாளைவிட, வயது சென்ற மக்களின் எண்ணத்திற்கு அகிகவலிமையுண்டு. அது ஆக்கவும் அழிக்கவும் வல்லது.ஒற்றுமை

மண்ணிற் பிறந்த பொன்னும், மலையிற் பிறந்த மணியும், கடலிற் பிறந்த முத்தும் ஒன்றுசேர்ந்து மாலையாய்த் திகழ்ந்து ஒளிவீசுகின்றன. இம் மாலையைத் தங்கள் கழுத்தில் அணிந்து வாழும் மக்கள், ஒரு குடியிற் பிறந்தும் ஒன்றுசேர்ந்து வாழ மறுப்பது எதன் பொருட்டோ?என்ன பெயர்?

தண்ணிர் ஊற்றி வளர்த்தவனுக்குப் பின் பலன் தராமல் வளைந்து சென்று, வேலிக்கு வெளியே தலையை நீட்டித் தேங்காயையும் மட்டையையும் வருவார்க்கும் போவார்க்கும் கொட்டி உதவுகிற தென்னை மரத்தை, அறிஞர் ‘முடத்தெங்கு’ என்பர். ஆனால், பெற்ற நாட்டையும் வளர்த்த மொழியையும் மறந்து, பிற நாட்டிற்கும் பிறமொழிக்கும் தொண்டு செய்கிற மக்களுக்கு என்ன பெயர் இடுவது?மகிழ்ச்சி

வெற்றியும் தோல்வியும் பாராமல், புகழும் வசையும் எண்ணாமல், கடமையைச் செய்து மகிழ்வதுதான் இவ்வுலகின் உண்மையான மகிழ்ச்சியாகும்.

விதி என்பது ஒன்று உண்டு. அது நன்றாய் விளையாடும் ஒரு விளையாட்டுப் பிள்ளை. முயற்சி என்ற வலிமை பெற்றுள்ள மனிதன், ஆயுதம் எடுத்து அதனுடன் சண்டைக்குப் போக வேண்டிய அவசியமும் இல்லை. கையையே ஆயுதமாக உப யோகிக்க வேண்டிய தேவையும் இல்லை. முயற்சியுடையாரின் ஆண்மை நிறைந்த ஏளனச் சிரிப்பு ஒன்றே அதை வெல்வதற்குப் போதுமானது.நல்ல வழி

உண்மையை மறவாதே! நேர்மையில் தவறாதே! ஒழுக்கத்தை ஒருபோதும் கைவிடாதே! நல்ல வாழ்வு வாழ இதைவிட நல்ல வழியில்லை!எப்படி மக்கள்?

ஒருவன் பாதையில் சென்று கொண்டிருந்தான். அவன் துணியில் ஒரு ரூபாயை முடிந்திருந்தான். அவனை அடுத்துச் சென்ற ஒருவன் அதை அவிழ்த்தான் ரூபாய் மண்ணில் விழுந்தது. அவிழ்த்தவன் அதைக் கையால் எடுக்க முயன்றான். அதைப் பார்த்த வேறொருவன், அவன் கைம்மேல் தன்கையை வைத்து அழுத்தி, “ரூபாய் என்னுடையது” என்று வாதாடினான். எட்டியிருந்த ஒருவன் வந்து இருவருக்கும் இரண்டு அடிகள் கொடுத்துவிட்டு, ரூபாயை எடுத்துக்கொண்டு போனான். எல்லாவற்றையும் பார்த்திருந்த ஒருவன் ரூபாயைப் பறி கொடுத்த ஆளைக் கூப்பிட்டு உன் ரூபாய் எங்கே? எனக் கேட்டான். “ஆம் ஐயா! கீழே விழுந்து விட்டது கொடுத்து விடுங்கள்” என அவனையே கேட்டான் அவன் என்ன சொல்லியும் நம்பவில்லை. எப்படி மக்கள்? .தேவை

உன் தேவையைக் குறைத்துக் கொள். இயலாவிட்டால் சரிசெய்து கொள். தேவையில்லாததைத் தேடித் திரியாதே.அபாயம்

அபாயம் வரும் என்று அஞ்சிச் சிலர் உபாயம் தேடுவது உண்டு. உபாயம் தேடும் வழியிலேயே அபாயம் வருவதும் உண்டு.ஏமாற்றம்

பிறரை ஏமாற்றுகிற ஒவ்வொருவனும் தன்னை நல்ல வழியி லிருந்தே மாற்றிக்கொள்ளுகிறான்; பிறகு மாற்றிக்கொண்டதிலிருந்து மாறமுடியாமல், தானே ஏமாற்றமடைகிறான்.கேள்வி

கேள்வி வேறு, ஐயப்பாடு வேறு. முன்னது தெரிந்து கொண்டு கேட்பது; பின்னது தெரிந்து கொள்ளக் கேட்டது.அடைசல்

நீ, மலிவாயிருக்கிறது என்பதற்காக எதையும் வாங்கி வீட்டில் அடைக்காதே. இதனால் வீட்டில் அடைசல், ஏற்படும் என்பது கருத்தன்று. அதற்கு முன்னே உன் மூளையிலும் ஒரு அடைசல்' ஏற்பட்டுவிடும்.பொது வாழ்வு

நீ குறித்த காலத்தில் செய்யப் பழகு; அல்லது செய்யும் காலத்தையாவது குறிக்கப் பழகு; இரண்டும் முடியாவிட்டால் பொதுவாழ்விலிருந்து விலகு.எச்சரிக்கை!

எச்சரிக்கையாய் இருப்பவர்களும் வாழ்வில் ஏமாற்றத்தைக் காண்கிறார்கள்! எச்சரிக்கையற்று இருப்பவர்கள் வாழ்வில் என்னென்ன காண்பார்கள்?பழியும் புகழும்

நீ பழியை விரும்பினால் திருமணத்தை முடித்துவைக்கும் பேச்சுகளில் கலந்துகொள்; புகழை விரும்பினால் திருமண வீட்டு வேலைகளுள் கலந்துகொள்.விழிப்பாயிரு!

சாம்பிராணி போட்டுக் கடை பூட்டுகிறவர்களும் விளக் கேற்றி வைத்து விட்டு வீடு பூட்டுகிறவர்களும் சிறிது விழிப்பா யிருக்க வேண்டும; அகல் விளக்கில் எரியும் திரியை ஒர் எலி இழுத்துப் போகுமானால், வீடு பற்றி எரிய அது ஏதுவாகிவிடும்.வஞ்சகனது உள்ளம்

நேரான பாதையில் நெஞ்சு நிமிர்ந்து நடக்கும் நேர்மை யானவனுடைய நடையைக் கண்டு, தவறான பாதையில் அஞ்சி அஞ்சி நடக்கும் வஞ்சகனது உள்ளம் படும் துன்பம், கொலை யுண்ணும் துன்பத்திலும் கொடிதானதாயிருக்கும்.உதவி

உதவி செய்யுங்கள் என்று கேட்பவர்களுள், பத்து பேரில் ஒன்பது பேர் ஏமாற்றுக்காரர்களாய் இருக்கிறார்கள். உதவி செய்பவர்களுள் பத்தில் ஐந்து பேர் ஏமாறிப் போய்விடுகிறார்வாழ்வும் அழிவும்

சகிப்புத் தன்மையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் எல்லோருக்கும் வேண்டுபவை. ஆனால், அது வாழ்ந்து கொண்டிருப்பவனிடத்தில் பெருந்தன்மையாகவும், அழிந்து கொண்டிருப்பவனிடத்தில் ஏமாளித்தனமாகவும் காட்சி அளிக்கும்.இழந்தவனை இழக்கும்

அனுபவம் என்பது தொட்டு, கெட்டு, பட்டு அறிந்து பெறுகிற உயர்ந்த செல்வம். இதை இழந்தவனைச் செல்வம் இழந்து விடும்.நன்றி செலுத்து

துன்பத்தை நீயே தேடிக்கொள்; அல்லது பிறர் உண்டாக் கினால் அதற்காக நன்றி செலுத்து. ஏனெனில், மனவலிமை என்பது துன்பத்திலிருந்துதான் பிறக்கிறது.வாழ்வில் வளம்

உழைப்பில் ஊக்கமும், உண்மையில் உறுதியும், தொழிலில் திறமையும், தொண்டில் நேர்மையும், சொல்லில் இனிமையும், துன்பத்தில் சகிப்பும் காணப்படுமானால், வாழ்வில் வளம் காணப்படும்.சிறப்பு அழியாது

செல்வம் நிறைந்தபோது பெருமையும், குறைந்தபோது சோர்வும் கொள்ளாதவனிடத்தில், செல்வம் அழிந்தாலும் சிறப்பு அழியாது.உயர்வு பெறாது

வாள் முனையே வலிமையுடையது என்றான் நெப்போலியன். நா. முனையே வலிமையுடையது என்றான் நாவலன். பேனா முனையே வலிமையுடையது என்றார் வால்டேர். அறிவு முனையே வலிமையுடையது என்றார் ஷா. இவை அனைத்தையும் மறுத்து ஒழுக்க முனையே வலிமையுடையது என்றார் வள்ளுவர். ஒழுக்கமற்றவனுடைய வாளோ, நாவோ, பேனாவோ, அறிவோ வலிமை பெறாது; பெற்றாலும் வெற்றி பெறாது பெற்றாலும் நிலைத்து நில்லாது.எழுத்தாளன்

பேசுவது போல எழுதுபவன் எழுத்தாளனாகான்.

பிழைபட எழுதுபவன் படிப்பாளியாகான்

வைது எழுதுபவன் அறிவாளியாகான்.

வாழ்த்தி எழுதி வாழ்பவன் வாழத் தெரியாதவன்.பழகத் தகாதவன்

காதற்கதைகளை எழுதுபவன் சோம்பேறிகளை வளர்ப்பவன். காமக் கதைகளை எழுதுபவன் தீயொழுக்கத்தை வளர்ப்பவன். பலமொழிச் சொற்களைக் கலந்து எழுதுபவன் ஒரு மொழியிலும் பற்றுக் கொள்ளாதவன்; பெருந்தன்மையோடு பழகி அறியாதவன் பேனாவோடு பழகத் தகாதவன்.போரை விளைவிக்கும்

பிறருடைய கருத்தை உணர மறுப்பதும், பிறருடைய ஆசையை அறிய மறுப்பதும் பிறருடைய உரிமையை ஒப்ப மறுப்பதும் ஆகிய தீக்குணங்களே, மக்களிடையில் போரை விளைவிக்கின்றன.மக்கள் குணம்

ஒருவனை ஒருவன் அழித்து வாழ்வது விலங்கு குணம். தன்னலங்கருதி உயரப்பறப்பது பறவைக்குணம். தீமைக்குத் தீமை செய்து வாழ்வது தேள், பாம்பு குணம், தீமை செய்யாதவர்களுக்கும் தீமை செய்து வாழ்வது பேய்க்குணம். அவை அனைத்தும் இல்லாதது மக்கட் குணம். தீமை செய்தவர்க்கும் நன்மை செய்து வாழ்வதோ தேவகுணம்.பெருவியப்பு

வாழப் பிறந்த மக்கள் மாளப்போவது ஒரு வியப்பு. மாள்வதுதான் வாழ்வதற்கு வழி என்ற கூறுவது அதை விட வியப்பு. எல்லாவற்றையும் விடப் பெருவியப்பு மனிதனது அறிவு வளர்ச்சியைக் கொண்டு மனிதனையே அழிக்க முயல்வது.உணர்வு

அடக்க அடக்க ஒடுங்குவதும் தவறு என்பதை மக்கள் உணர்ந்தால்தான, ஒடுங்க ஒடுங்க அடக்குவதும் தவறு என்பதை ஆள்பவர் உணர்வர்.சாகும்

சாதியை முன் நிறுத்தினால் சண்டைகள் கிளம்பும். சமயத்தை முன்நிறுத்தினால் பிணக்குகள் ஏற்படும். கட்சிகளை முன் நிறுத்தினால் போராட்டங்கள் உண்டாகும். மொழியை முன் நிறுத்தி அனைவரும் தமிழராய் ஒன்றுபட்டால் முன்னவை அனைத்தும் சாகும்.குறிக்கோள்

விழிப்பு நிலையில் மட்டுமின்றி, உறக்க நிலையிலுங்கூட உன் குறிக்கோளை நீ மறந்துவிடாதே. மலைகளில் மேய்கின்ற ஆடுகளின் மணி ஓசையைக் கேட்டுக்கொண்டே தான் இடையர்கள் உறங்கிக் கொண்டிருப்பார்கள்.வெல்ல இயலாது

பொறுமையுள்ள மக்களைப் படபடப்புக்காரர்களால் ஒருபோதும் வெல்ல இயலாது. காரணம், படபடப்பு வலியற்றது என்பதே.எளிது

சொல்லியபடி செய்வது கடினமன்று; மிக எளிது! ஆனால், சொல்லும்போது யோசித்துச் சொல்லப் பழகிக் கொள்ள வேண்டும்.வளைந்து கொடு

முரடர்களின் தாக்குதலை அழித்து ஒழிக்க எதிர்த்து நிற்பதைவிட, ஒதுங்கி நிற்பது நல்லது. வெள்ளப்பெருக்கின் தாக்குதலிலிருந்து எப்படி உயிர் தப்பினர்கள் என்று, ஆற்றங்கரையில் நிலைத்து நிற்கும் நாணற்செடிகளை நோக்கி வேரொடு வீழ்ந்துவிட்ட புளிய மரங்கள் கேட்டுக் கொண்டுவைக்குமிடம்

வைரத்தை இரும்புப் பெட்டியில் வை. நம்பிக்கையை யோக்கியனிடத்தில் வை. இன்றேல், ஏமாற நேரிடும்!அமைதி

ஒவ்வொருவனும் இன்பமயமான அமைதியைப் பெறவே ஆசைப்படுகிறான்; உழைக்கிறான். ஆனால், வெற்றி பெறுவதோ வாழ்நாளில் அன்று, சாவுநாளில்!மகிழ்ச்சியடை!

நீ உனக்கு உரியதைப் பிறருக்குக் கொடு! அவரடையும் மகிழ்ச்சியைப் பார்த்து நீ மகிழ்ச்சியடை! அது ஒன்றுதான் உனக்குப்புது இன்பத்தைத் தரக்கூடியது.வருத்துவது

சாவு ஒருபோதும் மக்களை வருத்துவதில்லை. சாவைப் பற்றிய பயமே வருத்தக்கூடியது!மாறுதல்

மனிதர் விலங்காக மாற ஆசைப்பட்டாலும் படலாம். ஆனால், அது நாயாக, நரியாக, கழுதையாக, குரங்காக மாறுவதாயிராமல், யானையாக மாறுவதாயிருக்க வேண்டும்.அரை நாள்

அனுபவித்து அனுபவித்துப் புத்தி பெற அறுபது ஆண்டுகள் வேண்டும் அனுபவித்தவர்களிடம் புத்தி பெற அரை நாள் போதுமானது!கடிதம்

நீ கோபம் வந்தபோது எழுதும் கடிதங்களை உடனே தபாலில் போட்டுவிடாதே! பெட்டியில் வை; மறுநாள் அதைப் படித்துப் பார். பிறகு அது தபாலுக்கு போயிற்றா, குப்பைத் தொட்டிக்குப் போயிற்றா என்பதை எனக்கு எழுது!இறந்த காலம்

இறந்தகால நிகழ்ச்சிகளைப்பற்றிப் பேசவேண்டுமானால் எப்போதாவது பேசு! அதுவும், நாட்டை, மொழியை, சமூகத்தை, குடிப்பெருமையை முன் நிறுத்தியதாக இருக்கவேண்டும். உன்னை முன்நிறுத்தியதாக இருக்குமானால், ஒன்றுக்கும் பயன்படாமற் போய்விடும்!வேறு

படிப்பு வேறு அறிவு வேறு என்பதை ஒப்புக்கொள்பவர்கள், படித்தவர்களின் அறிவு வேறு என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். அறிவு வேறு, ஒழுக்கம் வேறு என்பதை ஒப்புக்கொள்ளுகிறார்கள். அறிவுடையவர்களின் ஒழுக்கம் வேறு என்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.நோயைத் தடுத்தல்

நோய் வராமல் தடுப்பவன் அறிஞன்;

வந்து தடுப்பவன் மனிதன்;

வந்தும் தடுக்காதவன் பிணம்.அணிகலன்

மண்ணுக்கு அணிகலன் தென்னை; பெண்ணுக்கு அணிகலன் நாணம்; கண்ணுக்கு அணிகலன் இரக்கம்.மதிப்பிடுதல்

முளையிலிருந்து விளைவை மதிப்பிடுதல் போல, செயலிலிருந் தும் விளைவை மதிப்பிடலாம்.வலுவற்றவை

அடிப்படையின்மீது எழும்பாத சுவரும் அனுபவத்தின் மீது எழும்பாத ஆலோசனையும் வலுவற்றவை.யோசியாமற் செய்

வாங்கிக் கொள்ளலாமா, வேண்டாவா என்று எண்ணும் நிலை வந்தபோது வாங்காதே! கொடுத்து விடலாமா, வேண்டாவா என்று எண்ணும் நிலை வந்து விட்டால் கொடுத்து விடு: உண்ணலாமா, வேண்டாவா என்று எண்ணும் நிலை வந்துவிட்டால், உண்ணாதே! இம்மூன்றும் யோசியாமல் செய்ய வேண்டிய முடிவுகளாம்.நட்பு

மிக விரைவாக நண்பர்களைப் பெற்றுக் கொண்டே போகிறவன், அதிவிரைவாக நண்பர்களை இழந்து கொண்டே வருவான்.வள்ளுவர்

மடாதிபதிகளுள் பலர் துறவியர். இளங்கோவும், தொல்காப்பியரும் துறவியரும், புலவரும் ஆவர். பட்டினத்தார், தாயுமானவர், இராமலிங்கர் ஆகிய மூவரும் துறவியரும் புலவரும் ஞானியரும் ஆவர். திருப்பராய்த்துறை சித்பவனாந்த அடிகளைப் போன்றவர், துறவியரும். புலவரும் ஞானியரும் தொண்டரும் ஆவர். ஆனால், வள்ளுவரோ, துறவியர், புலவர் ஞானியர், தொண்டர் மட்டுமல்லர்; வாழ்ந்து, வாழ வழிவகுத்துத் தந்த இல்லறத்தாரும் ஆவர்.உலகம் உருண்டை

இன்பத்தின் முடிவு துன்பம். துன்பத்தின் முடிவு இன்பம். இரவின் முடிவு பகல், பகலின் முடிவு இரவு. இனிப்பின் முடிவு புளிப்பு: புளிப்பின் முடிவு இனிப்பு. அடிமையின் முடிவு விடுதலை; விடுதலையின் முடிவு அடிமை, இறுதியின் முடிவு தொடக்கம்; தொடக்கத்தின் முடிவு இறுதி, ஆம்; வாழ்வே ஒரு வட்டம்.ஏரி நீர்

அலையில்லாத ஏரி நீரைப்போன்ற உள்ளமுடைய நரைத்துப் பழுத்த பெரியவர்களின் மனத்தை நீ ஒரு போதும் புண்படுத்தாதே! அவர்களின் வசை மொழியானது கரை உடைத்த ஏரி நீர் ஊரைத் தாக்கி அழிப்பது போல, உன்னைத் தாக்கி அழிக்கும் வன்மையை உடையது.கண்டுபிடி

உன் நண்பர்களுள் நல்லவர் யார், கெட்டவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க முயல்வதைவிட நீ யார் என்பதைக் கண்டுபிடிக்க முயல்வது நல்லது.துன்பங்கள்

கடன் வாங்கிச் சொத்துக்களை வாங்குகிறவனைவிட கடன் இருக்கும்போது மேலும் சொத்துக்களை வாங்குகிறவன் பெருந்துன்பங்களை அடைகிறான்.நேரம் இராது

நல்லதை எண்ணத் தீயவனுக்கும், தீயதை எண்ண நல்லவனுக்கும் நேரமே இராது.அன்பு கெடும்

அளவுக்கு மீறி உணவுப்பொருள்களைத் தயாரித்து விருந்து செய்யும் அன்பர்களின் வீட்டிற்கு நீ அடிக்கடி போகாதே. போனால், அன்பு கெடும்.அதிசயம்

கட்சிப் பற்றுக் காரணமாக நல்லவன் வெறுக்கப்படுவதும், தீயவன் போற்றப்படுவதும், அரசியல் உலகின் அதிசயமாகும்!முயன்று பெறு

முயற்சியுள்ளவன் வெற்றி பெறுவான். உண்மையுள்ளவன் உயர்த்தப்பெறுவான். ஒழுக்கம் உள்ளவன் வாழ்த்தப்பெறுவான். ஆகவே, நீ இம்மூன்றையும் முயன்று பெறு.பார்த்து நட

“இந்நூலைப் படித்து நட” என்று காட்ட இப்போது அதிகமான நூல்கள் தோன்றிவருகின்றன. இது மகிழ்ச்சிக்குரியது. இதைவிட மகிழ்ச்சியானது. “இன்ன ஆசிரியரைப் பார்த்து நட.” என்று காட்ட நூலாசிரியர் தோன்றுவது தான்.வாழ்வும் பாழ்

தீச்செயலைச் செய்ய மனம் நினைக்கிறது; ஆசை தூண்டு கிறது; இருட்டுத் துணை செய்கிறது சூழ்நிலை வெற்றியைத் தருகிறது. ஆனால், வாழ்வோ, மிக விரைவிற் பாழாகிவிடுகிறது.கலைச் சிறப்பு

பரதநாட்டிய நடிகையின் உடல் நெளிவிலும், பாட்டாளி மக்களின் உடல் நெளிவிலும் கலையைக் காணலாம். செல்வர் விரும்புவது முன்னது. வறியவர் விரும்புவது பின்னது. முன்னதைக் காணப் பணமும், பின்னதைக் காண் குணமும்நினைத்துப் பார்

பொதுத்தொண்டு செய்ய எண்ணித் தேர்தலுக்கு நின்று பெரும் பொருளைச் செலவு செய்யும் ஒருவனுக்கு, “அப்பொருளில் ஏழில் ஒரு பங்கைக் கொண்டு எவ்வளவோ பொதுத்தொண்டு செய்யலாமே!” என்ற எண்ணம் ஏன் உண் டாவதில்லை என்பதை, அவன் நினைத்துப் பார்க்காவிட் டாலும், நீயாவது நினைத்துப் பார்,குறைத்துக் கொள்

செயலில் சிறிதளவாவது செய்ய முயற்சி செய். இயலாவிடில், பேச்சையாவது குறைத்துக் கொள். அதுவும் இயலாவிடில், உன்னால் எதுவுமே செய்ய இயலாது.நலமும் தீதும்

தாழ்ந்தவர்களை உணர்த்த எண்ணுவது உனக்கும் நல்லது. பிறர்க்கும் நல்லது. உயர்ந்தவர்களைத் தாழ்த்த எண்ணுவது உனக்கும் தீது, உலகுக்கும் தீது.அழிவை நெருங்கும்

பட்டத்தை நினைத்தோ, பதவியை எண்ணியோ, பொருளை விரும்பியோ, புகழைக் கருதியோ, பொதுத்தொண்டு செய்யப் புறப்படுகின்ற மக்களைப் பெருக்கி வரும் நாடு, அழிவை நெருங்கிக் கொண்டேயிருக்கும்.உயர்வும் தாழ்வும்

பிறரை உயர்வாகக் கருதிக் கொண்டிருப்பவன், தானும் உயர்ந்து கொண்டே இருக்கிறான். பிறரைத் தாழ்வாகக் கருதிக் கொண்டிருப்பவன், தானும் தாழ்ந்து கொண்டேயிருக்கிறான். நினைப்புத்தான் செயலில் காணப்படுகின்றது.ஊர் கெடும்

வயிற்றுப் பிழைப்பைக் கருதி எதுவும் செய்ய எண்ணும் தீயர் பலர் இருப்பினும் ஊர் கெட்டுவிடாது; நல்லறிஞர் அவ்வூரில் இரண்டொருவரேனும் இல்லாதிருந்தால்தான் கெட்டுவிடும்.கூட்டுக் கையெழுத்து

எவனொருவன் பிறருடைய கடனுக்காகக் கூட்டுக் கையெழுத்துப் போடத் தொடங்குகிறானோ, அவன் அன்றையிலிருந்தே தன்னையும் அழித்துக் கொள்ளத் தொடங்கிவிடுகிறான். கூட்டுக்கையெழுத்துப் போட்டுப் பிறருக்கு உதவி செய்ய விரும்புவதைவிட, தன் கையில் இருக்கும் பணத்தை அவருக்கு நன்கொடையாகக் கொடுத்து விடுவது எவ்வளவோ மேலானது.அரிதும் எளிதும்

பிறர் எண்ணங்களை அறிந்து, அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் அரிது. ஆனால், உன் எண்ணங்களை அறிந்து, நீ யார் என்பதைக் கண்டுபிடிப்பதோ, மிகவும் எளிது.நல்லது

ஒரு கழகத்திற்குப் பொருளைத் தேடிக்கொடுக்க இயலாதவர் கள், இருப்பதையேனும் அழிக்காதிருப்பது நல்லது. ஒரு நிலையத் திற்குச் சிறப்பைத் தேடித்தர இயலாதவர்கள். பழிப்பையேனும் தேடித் தராதிருப்பது நல்லது.இரண்டை ஒன்றாக்கு

நீயும் உன் மனைவியும் சேர்ந்து நான்கு கண்களால் உலகைப் பார்த்தும், நான்கு காதுகளால் செய்திகளைக் கேட்டும் இல்லறத்தை நடத்துங்கள்; சிறப்படைவீர்கள். ஆனால், காதுகளையும் கண்களையும் பெருக்கிக்கொள்வதனால் மட்டும் வெற்றி பெற்றுவிட இயலாது. வாய்கள் இரண்டையும் ஒன்றாகக் குறைத்துக் கொள்வதிலேதான் வெற்றி அடங்கியிருக்கிறது.செல்வங்கள்

மண்ணிலே மறைந்து கிடக்கின்ற பொன், மலையிலே சிதறிக் கிடக்கின்ற மணி, கடலிலே ஆழ்ந்து கிடக்கின்ற முத்து ஆகிய இவை மட்டுமல்ல செல்வங்கள். இலக்கியத்திலே புதைந்து கிடக்கும் கருத்துக்களும் செல்வங்களேயாம்.அடைசல்

ஒருவனுக்குமுன் உள்ள மேசைப் பலகையிலே, படிப்பறை யிலே, படுக்கை அறையிலே, சட்டைப் பையிலே அடைசல்கள் இருந்தால், அவனது மூளையிலும் ஓர் அடைசல் ஏற்பட்டுவிடும்.கேள்விச் செல்வம்

எதையும் எவரிடமும் கேட்டுவிடாதே. கேட்கும்போது யோசித்துக்கேள். அவரும் யோசித்துப் பதில் கூறுவதை மட்டுமே கேள். பிறர் எளிதாகப் பதில் கூறுகிற ஒன்றை நீ எவரிடமும் கேட்டுவிடாதே.

முட்டாளிடம் எதையும் கேட்டுவிடாதே. அதில் இரண்டுவித ஆபத்து உண்டு; ஒன்று, அவன் தவறாகப் பதில் கூறிவிடுவான். மற்றொன்று அவன் உன்னைத் தன்னைவிட மட்டமானவன் என்று கருதிவிடுவான்.

அறிஞனிடம் மட்டுமே கேள். அதில் இரண்டுவித இலாபமுண்டு; ஒன்று, அவன் சரியான விடையையே கூறுவான். மற்றொன்று, உன்னை மட்டமானவன் என்று கருதவும் மாட்டான்.

நீ பிறரிடம் கேட்கின்ற கேள்வி ஒவ்வொன்றையும் ஆர அமர யோசித்துக் கேள். கேள்வி ஒவ்வொன்றும் அவசியம் கேட்டுத் தீரவேண்டியதுதானா என்றும் யோசித்துக் கேள். அப்படிப் பட்டவற்றிலும் சிலவற்றை மட்டுமே கேள்.

பெரும்பான்மையான கேள்விகளைப் பிறரிடமும் கேட்டுத் தெரிந்து கொள்வதைவிட, நீயே பொறுமையாய் இருந்து அறிந்து கொள்வது நல்லது. .

இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு நீயே அறிந்து கொள்ளக் கூடிய எளிதான ஒன்றை, அவசரப்பட்டுப் பிறரிடம் கேட்டுக் கொண்டே இராதே.

நீ கேட்கிற கேள்வி ஒவ்வொன்றும் உன்னையும் உனது அறிவையும் பிறனுக்குக் காட்டிக்கொண்டே இருக்கும். ஆகையினால், பிறரிடம் கேள்விகளைக் கேட்கும் ப்ோது, இதை மனத்தில் வைத்துக் கொண்டு கேள்.விருந்து

பிறர் அன்பு காரணமாக உணவைத் தயாரித்து உனக்கு உண்ணக் கொடுப்பர். அது, உன்னை மகிழச் செய்து அவர் தான் மகிழ்ச்சி அடைவதற்காகவேயாம். ஆனால், உண்டு துன்பப்படுகிறவனோ நீதான். அதனால், அவர்களுக்கு நன்றி செலுத்தி, விருந்து உண்பதில் எச்சரிக்கையாயிரு.எதைக் காப்பது

வாழ்ந்து கெட்ட மனிதர் சிலர்; பேசிக் கெட்ட மனிதரோ பலர். ஆகவே, முதலில் காப்பாற்றப் பெற வேண்டுவது நாக்கு.எது நல்லது?

எதையும் வயதுசென்ற பெரியவர்களிடம் ஆலோசனை. கேட்டுச் செய்வதே நல்லது. அவர்களோடு வாது புரியும் அளவிற்கு நீ வந்துவிட்டால், அவர்களிடம் எதையும் கேளாதிருப்பது நல்லது.வளரும் செல்வம்

பொருட் செல்வம் பங்கு பிரித்துவிட்டால் குறையும். கல்விச் செல்வம் பங்கிட்டுக் கொடுத்தால் குறையாது. ஆனால், அருட்செல்வமோ பங்கிட்டுக் கொண்டால் வளரும்.எதனால் வந்த வினை?

ஒவ்வொருவரும் பிறரைப்பற்றித் தப்புக் கணக்குகளைப் போட்டே வாழ்கின்றனர். இது அவர்கள் முதலில் தங்களைப் பற்றியே தப்புக் கணக்குப் போட்டுப் பழகியதால்வந்த வினை.இழிவைத் தருவன!

அறிவாளிகளே வரிசையில் நின்று நூல்களை வாங்கும் காட்சியை அமெரிக்காவில் காணலாம். தமிழகத்தில் அறிவுடையவர்களுங்கூட நல்ல நூல்களை வாங்கிப் படிப்ப தில்லை இது மக்களின் தரத்தைக் காட்டினாலும் சரி.நூல்களின் தரத்தைக் காட்டினாலும் சரி- இரண்டுமே நமக்கு இழிவைத் தருவன.அறிய முடியாதது

தமிழ்ப் பண்பை அறிய வேண்டுமானால், தமிழை அறிய வேண்டும். தமிழ் மக்களை அறிய வேண்டுமானால் தமிழ்ப் பண்பை அறிய வேண்டும். தமிழகத்தை அறிய வேண்டுமா னால், தமிழ் மக்களை அறியவேண்டும். இம்மூன்றையும் அறியாதவர்கள் தமிழகத்துச் சான்றோர்களை அறிய முடியாது.வளராது வாழாது

தனக்கென்று ஒரு பல்கலைக் கழகத்தை நடத்தாத நாடு செழிக்காது. தனக்கென்று ஒரு பல்கலைக்கழகம் இல்லாத மொழி வளராது. தமக்கென்று ஒரு பல்கலைக்கழகத்தைத் தொடங்காத மக்கள் வாழார்.திருத்து

நாட்டைத் திருத்த வேண்டுபவர்கள் மக்களைத் திருத்த வேண்டும். மக்களைத் திருத்த எண்ணுபவர்கள் சமூகத்தைத் திருத்தவேண்டும். சமூகத்தைத் திருத்த விரும்புபவர் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும்.பின்பு வாழ்!

பழிச் செயல்களை விடு. பாவச் செயல்களை விலக்கு. பெரியோரைப் பேண். பொறுமையைக் கொள். பிறரை அறி. பின்பு உதவு. பிறகு வாழ்.பிழை: செல்லுபடியாகாத இடைவெளி