ருஷ்யாவின் வரலாறு
வெ. சாமிநாத சர்மா

ருஷ்யாவின் வரலாறு


1.  ருஷ்யாவின் வரலாறு
    1.  மின்னூல் உரிமம்
    2.  மூலநூற்குறிப்பு
    3.  சர்மாவின் பொன்னுரைகள்…….
    4.  நுழையுமுன்…
    5.  பதிப்புரை
    6.  பிரசுராலயத்தின் வார்த்தை
    7.  வாசகர்களுக்கு
    8.  I. ஆரம்ப காலத்தில்
    9.  II. மாக்கோ ராஜ்யம்
    10. III. ரோமனாவ் பரம்பரை
    11. IV. ரோமனாவ் பரம்பரை
    12. V. ரோமனாவ் பரம்பரை
    13. VI. முடியரசின் மறைவு
    14. VII. மகா புருஷன் லெனின்
    15. VIII. குடியரசின் தோற்றம்
    16. IX . சமதர்மம் என்றால் என்ன?
    17. X. சமதர்மக் கட்சி
    18. XI. சோவியத் அரசியல் அமைப்பு
    19. XII. புதிய நாகரிகம்
    20. அனுபந்தம் - 1
    21. அனுபந்தம் - 2
    22. கணியம் அறக்கட்டளை

 


மூலநூற்குறிப்பு

  நூற்பெயர் : ருஷ்யாவின் வரலாறு

  தொகுப்பு : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு -18

  ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா

  பதிப்பாளர் : இ. இனியன்

  முதல் பதிப்பு : 2006

  தாள் : 16 கி வெள்ளைத் தாள்

  அளவு : 1/8 தெம்மி

  எழுத்து : 10.5 புள்ளி

  பக்கம் : 40+ 224= 264

  நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)

  விலை : உருபா. 170/-

  படிகள் : 1000

  நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.

  அட்டை வடிவமைப்பு : இ. இனியன்

  அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர், இராயப்பேட்டை, சென்னை - 6.

  வெளியீடு : வளவன் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017., தொ.பே. 2433 9030


சர்மாவின் பொன்னுரைகள்…….

-   மாந்தப்பண்பின் குன்றில் உயர்ந்து நில். ஒழுக்கத்தையும் தன்னம்பிக்கையையும் கைவிடாதே.

-   பிறரிடம் நம்பிக்கையுடனும்; நாணயத்துடனும் நடந்து கொள். அது உன்னை உயர்த்தும்.

-   உழைத்துக் கொண்டேயிரு; ஓய்வு கொள்ளாதே;உயர்வு உன்னைத் தேடி வரும்.

-   பொய் தவிர்; மெய் உன்னைத் தழுவட்டும்; பெண்மையைப் போற்றி வாழ்.

-   மொழியின்றி நாடில்லை; மொழிப் பற்றில்லாதவன்,நாட்டுப்பற்றில்லாதவன். தாய்மொழியைப் புறந்தள்ளி அயல்மொழியைப் போற்றுவதைத் தவிர்.

-   தாய்மொழியின் சொல்லழகிலும் பொருளழகிலும் ஈடுபட்டு உன் அறிவை விரிவு செய். பெற்ற தாய்மொழியறிவின் விரிவைக் கொண்டு உன் தாய் மண்ணின் உயர்வுக்குச் செயல்படு.

-   உயர் எண்ணங்கள் உயர்ந்த வாழ்க்கைக்கு அடித்தளம் முயற்சி- ஊக்கம் - ஒழுக்கம் - கல்வி இவை உன் வாழ்வை உலகில் உயர்த்தும் என்பதை உணர்ந்து நட.

-   ஈட்டிய பொருளை அனைவருக்கும் பகிர்ந்தளித்து வாழக் கற்றுக்கொள். உதவா வாழ்க்கை உயிரற்ற வாழ்க்கை.

-   கடமையைச் செய்; தடைகளைத் தகர்த்தெறி; விருப்பு-வெறுப்புகளை வென்று வாழ முற்படு.

-   ஒழுக்கமும் கல்வியும் இணைந்து வாழ முற்படு; ஒழுக்கத்திற்கு உயர்வு கொடு.

-   எந்தச் செயலைச் செய்தாலும் முடிக்கும் வரை உறுதி கொள். தோல்வியைக் கண்டு துவளாதே;

-   உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் ஒரே நிலையில் வாழக் கற்றுக்கொள்.

-   நாட்டுக்குத் தொண்டு செய்வது தரிசுநிலத்தில் சாகுபடி செய்வது; கண்ணிழந்தவர்களுக்குக் கண் கொடுப்பது.

-   விழித்துக் கொண்டிருக்கும் இனத்திற்குத்தான் விடுதலை வாழ்வு நெருங்கிவரும். விடுதலை என்பது கோழைகளுக்கல்ல; அஞ்சா நெஞ்சினருக்குத்தான்.

உருசியா

சில செய்திகள்……

-   உருசியாவின் வரலாற்றுக் காலந் தொட்டு மாவீரன் லெனின் நடத்தியப் புரட்சிக்காலம் வரை அறிய வேண்டிய வரலாற்று நிகழ்வுகளை இந்நூலில் படித்தறியலாம்.

-   உருசியாவின் தொடக்கக் காலமும், உருசிய மக்கள் பிரிவும், ரூ என்ற இனத்தின் பெயர் ரூ எனும் நாட்டுப் பெயராக மாறிய வரலாறும் , சமதருமக் கட்சியைப் பற்றியும், சோவியத் அரசியல் அமைப்புப் பற்றியும் விரிவாகக் கூறும் நூல்.

-   உருசியப் புரட்சி மாந்த இன வரலாற்றில் அழியாத முத்திரையைப் பதித்து, உலகப்புரட்சிகளுக்கு வழி யமைத்தது. மக்களே மக்களுக்காகப் புரட்சி செய்து வெற்றி கண்டு உலக நாடுகளுக்கு வழிகாட்டியது.

-   உலக நாடுகளில் நடைபெற்ற புரட்சிகள் சமுதாயத்தின் மீது படிந்திருந்த அழுக்குகளை அகற்றியதாக அறிகிறோம். ஆனால், உருசியப் புரட்சியோ புதிய சமுதாயம் அமைப்பதற்கும், நல்ல மனிதர்கள் உருவாவதற்கும் விதையூன்றியது.

-   அரசியல், பொருளாதாரம், சமுதாயம், மதம் முதலிய எல்லாத் துறைகளிலும் அழிவு வேலைகளையும், ஆக்க வேலைகளையும் ஒரே சமயத்தில் செய்து உலக நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த வரலாறு.

காரல் மார்க்சு

-   பொதுவுடமைத் தத்துவத்தின் சிற்பி காரல் மார்க்சின். வாழ்க்கை ஒரு துன்பக்கடல். அந்த தத்துவத்திலிருந்து மாந்த இனத்தின் உயிர் மூச்சு பிறந்தது. மார்க்சின் சிந்தனை அரும்பு, உருசிய மக்களின் வாழ்க்கை மலராக மலர்ந்த வரலாற்றை இந்நூலில் காணலாம்.

லெனின்

-   உருசியாவை வல்லரசாக மதிக்கத் தொடங்கிய காலம் மாவீரன் லெனின் காலம் ஆகும். முடியரசு மறைவும், லெனின் நுழைவும், குடியரசுத் தோற்றமும், மார்க்சின் தத்துவமும் , சமதர்மக் கட்சியின் தொடக்கமும், சோவியத் அரசியல் அமைப்பும், ஒரு தலைமுறை காலத்திற்குள் உருசியாவில் ஒரு புதிய சமுதாயத்தை அமைத்து செயல்படுத்தி வெற்றி கண்ட வரலாற்றை இந்நூலில் காண்க.

-   மார்க்சின் சிந்தனைகள் லெனின் உள்ளத்தை அசைத்ததும், அதன் விளைவாக புதியதொரு சமுதாயம் இவன் அகக்கண் முன் தோன்றியதும், அச்சமுதாயத்தைக் கட்டியமைக்க அவன் பட்ட பாடுகளும், உருசிய மண்ணை உயிரினும் மேலாகக் கருதி ஓயாது உழைத்ததும், புரட்சிச் சிந்தனையைச் சுமந்துகொண்டு நாடு முழுதும் சுற்றி அலைந்ததும், நாட்டின் நலனுக்காக நட்பையும் இழக்கத் துணிந்ததும், பகையை மறந்து நாட்டு நலனுக்காக நட்புரிமை கொண்டாடியதும், சொந்த வாழ்க்கையில் நேர்மையின் சின்ன மாகவும் பிறவித் தலைவனாகவும் வாழ்ந்த உன்னத மனிதனின் வரலாறும், இன்ப துன்பங்களில் இணைபிரியாது இருந்த அவருடைய அரும்பெரும் துணைவியின் பெருமைகளும் பேசப் படும் நூல்.


நுழையுமுன்…

உருசியா வரலாறு

இன்றைய வல்லரசுகளில் இரண்டாவது ஆக உள்ள உருசியா பற்றிய விவரங்கள் சில :

1.  உலக நாடுகளில் மிகப் பெரியது உருசியா. (இந்தியாவைப் போல ஆறுமடங்கு). பரப்பளவு 83000 சதுரமைல். அதில்60 விழுக்காடு கடுங்குளிர்ப் பகுதி. உருசியாவின் மக்ள் தொகை 14 கோடி. (இந்திய மக்கள் தொகையில் எட்டில் ஒரு பங்கு). கடந்த 15 ஆண்டுகளில் ருசிய மக்கள் தொகை 70 லட்சம் குறைந்துள்ளது. ஒரு உருசியனுக்கும் ஆண்டு வருமாணம் (GNI) 2006ல் 5780 டாலர் (இந்தியாவில் தலைக்கு 820 டாலர்) உலக இயற்கை வளங்களில் 38 விழுக்காடு உருசியாவில் உள்ளது. (பெட்ரோல்வாயு 42%; நிலக்கரி 43%; வானாடியம் 50%; இரிடியம் 100%) 2007 ல் பெட்ரோலிய வாயு, பெட்ரோலியம் ஏற்றுமதி மூலம் உருசியா பெற்றவருமானம் ஒரு நாளைக்கு 60 கோடி டாலர். உருசியர்கள் அருந்தும் மதுபானம் ஆண்டுக்கு 200 கோடி லிட்டர் வோட்கா முதலிய பானங்கள்( ரசியர்கள் தலைக்கு ஒரு ஆண்டுக்கு அருந்தும் மதுவானது 17 லிட்டர்) நூற்றுக்குநூறு ஆல்கஹாலுக்கு சமம்!) இவ்விவரங்கள் 31.3.08 இந்து நாளிதழில் விளாதிமீர் ராத்யுஹின் கட்டுரையில் கண்டவை.

2.  1991 முதல் தனி நாடாக உள்ள உக்ரைன் (இன்றைய மக்கள் தொகை 5 கோடி) 1650 - 1991 காலஅளவில் உருசியாவுடன் இணைந்து ஒரே நாடாக இருந்ததுதான். 1991 முதல் தனி நாடாக உள்ள பெலார (Belarus) (இன்றைய மக்கள் தொகை 1 கோடி) இரண்டும் 1795 - 1991 கால அளவில் உருசியாவுடன் இணைந்து ஒரே நாடாக இருந்தவைதான்.

3.  உருசிய வரலாற்றில் முக்கிய மைல்கல்கள் வருமாறு.

கி.பி. 862 நவ்கோராத் நகரில் முதல் உருசிய அரச பரம்பரையை வைகிங் (VLKING) இன ரூரிக் நிறுவினார்.

கி.பி. 10 - 11 நூற்றாண்டுகள் தமிழ்நாட்டில் பிற்காலச் சோழர் கிறித்தவமதம் உருசிய லாவ் இனமக்களிடம் பரவியது.

1240 - 1480 மங்கோலியர் படையெடுப்பும் உருசியா மீது மங்கோலியர் மேலாண்மையும்.

1533 - 1584 உருசிய அரசை நிலை நிறுத்தியதாகக் கருதப்படும் (பயங்கர) ஐவான் IV Ivan the terrible ஆட்சிக்காலம்

1613 - 1917 ரோமனாவ் பரம்பரை உருசியாவில் ஆண்ட காலம்.

1689 - 1725 பீட்டர் பேரரசர் ஆட்சி. உருசியா பிற ஐரோப்பிய நாடுகளின் நவீனத்தன்மையை அடைந்தது.

1762 - 1796 காதரைன் பேரரசி ஆட்சி; உக்ரைன் உருசியாவின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.

1812 - 1813 நெப்போலியன் உருசியாவின் மீது மூடத்தனமாகப் படையெடுத்துத் தோற்றதுடன் தன் அழிவுக்கும் வழி வகுத்துக் கொண்டான். இது நடந்தது ஐர். அலெக்சாண்டர் I (1801- 1825) காலம். நெப்போலியன் கதி 1943 - 45ல் பின்னர் மீது படையெடுத்த இட்லருக்கும் வந்தது.

1855 - 1861 ஜார் அலெக்சாண்டர் II ; ஆசிய சைபீரியா முழுவதும் படிப்படியாக உருசியாவின் வேளாண் அடிமை SERF முறை சட்டபூர்வமாக நீக்கப்பட்டது. ஆயினும் அதன் பின்னர் அவர்கள் பல காலம் ஒடுக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்தனர்.

1894-1917 ஜார் நிகல II ஆட்சி

1904 - 1905 உருசியா - சப்பான் போரில் உருசியா தோல்வி

15-3- 1917 ஜார் ஆட்சி நீங்கி கெரன்கியின் ஜனநாயக ஆட்சி நிறுவப்பட்டது.

7-11-1917 கெரன்கி ஆட்சியை நீக்கி லெனின் தலைமையில் பொதுவுடைமை (கம்யூனிடு) கட்சி ஆட்சி தொடங்கியது.

21-1-1924 லெனின் மறைவு

சனவரி 1924 - 6.3.1953 உருசியாவில் கம்யூனிச ஆட்சி - டாலின் தலைமையில்

1943 - 1945 இரண்டாம் உலகப்போரில் உருசியா பங்கேற்ற ஆண்டுகள். இப்போரில் உயிரிழந்த மொத்தம் 5 கோடி பேரில் உருசியர் 2 கோடி ஆவர்.

1953 - 1991 டிசம்பர் உருசியாவில் கம்யூனிச ஆட்சி - குருசேவ் முதல் கோர்பசேவ் முடிய

1991 டிசம்பர் 31.12.1999 உருசியா பிரெசிடெண்ட் யெல்ட்சின்

1.12.2000 முதல் 2008 வரை உருசிய பிரெசிடெண்ட் புதின்.

அமெரிக்க வல்லாதிக்க கம்பெனி பணமுதலைகள் உருசியாவைத் தமக்கு அடிமைப்படுத்த 1990 - 2000 கால அளவில் மேற்கொண்ட முயற்சிகளை உருசியா 2000க்குப் பின் வென்று புதினுடைய தலைமையின் தனது முந்தைய மேன்மையை படிப்படியாக எய்தி வருகிறது. 1917 முதல் இன்று வரை உள்ள உருசிய வரலாற்றுச் செய்தி விரிவை சோவியத் ருஷ்யா (நூல் திரட்டு- 15) எனும் நூலில் காண்க.

பி. இராமநாதன்


பதிப்புரை

‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்! என்ற இந்திய தேசியப் பெருங் கவிஞன் பாரதியின் உணர்வுகளை நெஞ்சில் தாங்கி உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங் களைத் தாய்மொழியாம் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலகச் சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர்.

அவர் காலத்தில் நிகழ்ந்த உலக நிகழ்வுகளை தமிழர்களுக்குப் படம் பிடித்துக் காட்டியவர். அரசியல் கருத்துகளின் மூலம் புத்துணர்ச்சியும் விடுதலை உணர்ச்சியும் ஊட்டி வீறு கொள்ளச் செய்தவர். உலக அரசியல் சிந்தனைகளைத் தமிழில் தந்து தமிழிலேயே சிந்திக்கும் ஆற்றலுக்கு வழிகாட்டியவர். தாம் வாழ்ந்த காலத்து மக்களின் பேச்சு வழக்கையே மொழிநடையாகவும், உத்தியாகவும்கொண்டு நல்ல கருத்தோட்டங் களுக்கு இனிய தமிழில் புதிய பொலிவை ஏற்படுத்தியவர்.

தமிழ் மக்களுக்கு விடுதலை உணர்வையும்; தேசிய உணர்வையும்; சமுதாய உணர்வையும் ஊட்டும் வகையில் அரும்பணி ஆற்றியவர். தமிழ்ப்பண்பாட்டின் சிறப்புக்களை போற்றியவர்; பொருளற்ற பழக்க வழக்கங்களைச் சாடியவர். தமிழ் மட்டுமே தெரிந்த தமிழர்களும் உலகளாவிய அரசியல் பார்வையைப் பெறுவதற்கு வழி அமைத்தவர். மேலை நாட்டுஅறிஞர்களின் தத்துவச் சிந்தனைகளை எளிய இனிய தமிழில் தந்தவர். வரலாற்று அறிவோடு தமிழ்மொழி உணர்வை வளர்த்தவர். அரசியல் தத்துவத்தை அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ் நாட்டுத் தலைவர்களுக்குக் கற்றுத் தந்தவர். தமிழகத்தின் விழிப்பிற்கு உழைத்த முன்னோடிகளில் ஒருவர்.

கல்வியில் வளர்ந்தால்தான் தமிழர்கள் உலகில் உயர்ந்து நிற்க முடியும் என்பதை தம் நூல்களில் வாயிலாக உணர்த்தியவர். நன்மையும் தீமையும் இருவேறுநிலைகள்; தீமையை ஓங்கவிடாமல் நன்மையை ஒங்கச் செய்வதே மக்களின் கடமையென்று கூறியவர்.

சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகின்றன. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல்களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்பதற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல் திறமையைக் குறிக் கோளாகக் கொண்ட - பகுத்தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தந்துள்ளோம்.

தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும், வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடா முயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்பவர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரைகளை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன.

சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். இவர் நூல்களைப் படிப்பவர்களுக்கு அந்தந்த நூல்களின் விழுமங்களோடு நெருக்கம் ஏற்படுவது உறுதி. இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை சர்க்கரைப் பொங்கலாக தமிழ்க் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம்.

முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடித் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் நாட்டு வரலாற்று நூல்கள் 12 இப்பன்னிரண்டையும் 8 நூல் திரட்டுகளில் அடக்கி வெளியிடு கிறோம். ஏனைய நூல்களையும் மிக விரைவில் தமிழ் கூறும் உலகுக்கு வழங்க உள்ளோம்.

இவரின் தமிழ் நூல்கள் வெளிவந்த காலம் வடமொழி ஆளுமை ஒங்கியிருந்த காலமாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழி நடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கி
யுள்ளார். மரபு கருதி உரை நடையிலும், மொழி நடையிலும், நூல் தலைப்பிலும் எந்த மாற்றமும் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம்.

தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக சர்மாவின் நூல்களைப் படைக்கருவிகளாகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுப்புகளை உங்கள் கைகளில் தவழவிடுகிறோம்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற இந்தியத் தேசியப் பெருங்கவிஞன் பாரதியின் குரலும், ஒற்றுமையுடன் தமிழர் எல்லாம் ஒன்று பட்டால் எவ்வெதிர்ப்பும் ஒழிந்து போகும், என்ற தமிழ்த்தேசிய பெருங்கவிஞன் பாரதிதாசனில் குரலும் தமிழர்களின் காதுகளில் ஓங்கி ஒலிக்கட்டும். உணர்வுகள் ஊற்றாகப் பெருகி நல்ல செயல்களுக்கு வழிகோலட்டும்.

நாட்டு வரலாற்றுத் தொகுதிகளுக்கு தக்க நுழைவுரை வழங்கி பெருமைப்படுத்தியவர் ஐயா. பி. இராமநாதன் அவர்கள். இப்பெருந்தகை எம் தமிழ்ப்பணிக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறார். அவருக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் உரித்தாக்கக் கடமைப்பட்டுயுள்ளேன்.

பதிப்பாளர்

நூலாக்கத்திற்குத் துணை நின்றோர்

  _நூல் கொடுத்து உதவியோர்_ _ஞானாலயா_ கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், பெ.சு. மணி,

  _புலவர்_ கோ. தேவராசன், முனைவர் இராகுலதாசன், முனைவர் இராம குருநாதன், முத்தமிழ்ச் செல்வன் க.மு., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

  _நூல் உருவாக்கம்_ _நூல் வடிவமைப்பு_ செ. சரவணன்

  _மேலட்டை வடிவமைப்பு_ இ. இனியன்

  _அச்சுக்கோப்பு_ _முனைவர்_ செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோபாய்

  _மெய்ப்பு_ _முனைவர்_ செயக்குமார், வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மப்பிரியா, நா. இந்திராதேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன்

  _உதவி_ அரங்க. குமரேசன், வே. தனசேகரன், நா. வெங்கடேசன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா

  _எதிர்மம் (Negative)_ பிராசசு இந்தியா (Process India)

  _அச்சு மற்றும் கட்டமைப்பு_ வெங்கடேசுவரா மறுதோன்றி அச்சகம் (Venkateswara Offset Printers)

இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . .


பிரசுராலயத்தின் வார்த்தை

எமது பிரபஞ்சஜோதி பிரசுராலயத்தின் ஆரம்ப கால வெளியீடுகளைக் கவனித்தால், உலகத்தை உலுக்கிய அரசியல் சம்பவங் களை, அவ்வப்போது தொகுத்துக் கொடுத்து வந்திருப்பது தெரியும். அப்படி ஏழு வெளியீடுகள் அடுத்தடுத்து வெளி வந்தன. பிறகு, நிரந்தரமானதும், அடுத்தடுத்து வரும் தலைமுறையினருக்கும் பயன்படக்கூடிய விஷயங் களடங்கியதுமான நூல்களை வெளி யிடுவதே சாலச்சிறந்ததென்று எங்கள் ஆசிரியர் கருதியதற்கிணங்க, எங்கள் வெளியீட்டுத் திட்டத்தைச் சிறிது மாற்றியமைத்துக் கொண்டோம். அந்த வரிசையில் ருஷ்யாவின் வரலாறு என்ற இந்த நூலும் சேரும்.

அடிக்கடி மாறும் அரசியல் நிகழ்ச்சிகளால் உருமாறா திருக்கும் தன்மையில், ருஷ்யாவின் வரலாறு என்ற .இந்த நூலும் இருக்க வேண்டு மென்று நினைத்தோம். அதன்படி, எங்கள் ஆசிரியர் எழுதி வெளி வந்த சோவியத் ருஷ்யா என்ற நூலின் சில பகுதிகளும், ருஷ்யா - சரித்திர வரலாறு என்ற நூலின்பெரும் பகுதியும், புதிதாக இந்தப் பதிப்புக்கென்று எழுதப்பட்ட சில பகுதிகளும், சந்தர்ப் பத்திற் கேற்றவாறு இணைத்து, ருஷ்யாவின் சரித்திர காலந்தொட்டு லெனின் புரட்சி காலம் வரை முக்கியமாக அறிய வேண்டிய சரித்திர நிகழ்ச்சிகளைத் தாங்கிக்கொண்டு இந்தப் பதிப்பு வெளியாகிறது. பி.ஜோ.பி. வெளியீட்டு வரிசைப்படி பார்த்தால், இது மூன்றாம் பதிப்பாகும். இன்னும் எத்தனையோ பதிப்புக் களாக வெளிவரக் கூடிய இந்த நூலை பி.ஜோ.பி. வாசகர்களுக்கு மூன்றாவது முறையாக அளிப்பது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது.

இந்தப் பதிப்பில் புதிதாக அநேக படங்கள் சேர்க்கப்பட்டிருக் கின்றன வென்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம்.


வாசகர்களுக்கு

ருஷ்யாவைப் பற்றி ஏற்கனவே நான் இரண்டு நூல்கள் எழுதி யிருக்கிறேன். அவை இரண்டையும் இணைத்து, நிரந்தரமாயிருக்கக் கூடிய பல அமிசங்களைச் சேர்த்தும், தற்காலிகமாகத் தோன்றி மறையக் கூடிய சில அமிசங்களை நீக்கியும், ஒரு தொடர்புக் குட்படுத்தி இந்த நூலை அன்பர்கள் முன்னிலையில் வைக்கிறேன்.

ருஷ்யாவின் வரலாற்றுப் போக்கு, 1917-ஆம் ஆண்டுக் கடைசியில் ஒரு பெரிய திருப்பத்தை அடைந்ததென்பதை யாவரும் அறிவர். அந்தத் திருப்பமும், அதன் சுற்றுச் சார்புகளாயமைந்தவை களும் ருஷ்யாவைப் பற்றின வரலாற்று நூலில் இடம் பெறுவது அவசியமல்லவோ? ஆகவே அவைகளும் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. அதாவது ருஷ்யாவின் ஆதிகால வரலாறு முதல் 1917-ஆம் வருஷக் கடைசியில் லெனின் தலைமையில் சோவியத் அரசாங்கம் அமைந்து குடியரசு முறை நடை முறைக்கு வந்ததுவரை, தொடர்ச்சியாகக் கூறுவது இந்த நூல். தவிர, இந்த நூலில் லெனினின் வாழ்க்கை வரலாறும் தனி அத்தியாயமாக இடம் பெற்றிருக்கிறது. எனவே, இதனை ஒரு புதிய நூலாகக் கொள்ள வேண்டு மென்று, என் எழுத்துக்களில் விருப்பம் காட்டும் அன்பர் களைக் கேட்டுக் கொள்கிறேன்.

சமதர்மக் கட்சி, சோவியத் அரசியல் அமைப்பு முதலியவை களைப்பற்றி இந்நூலில் கூறியிருப்பதனால், அவற்றிற்கு உடன் படுத்தியோ, அவற்றில் ஈடுபடுத்தியோ என்னைப் பார்க்க வேண்டா மென்று அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். சமயம், அரசியல் இப்படி ஏதோ ஒன்றை அடிப்படையாகக் கொண்டு எழுந்துள்ள எந்த ஒரு கட்சியிலும் அல்லது அமைப்பிலும் நான் சேர்ந்தவனில்லை. எங்கே நல்லது இருக்கிறதோ அதைத் தேடிச் செல்கிறவன் நான். எங்கே நல்லவர்கள் இருக்கிறார்களோ அவர்களை நாடிச் செல் கிறவன் நான். நல்லதைச் சொல்லவேண்டுமென்பதும், நல்லவர் களை அறிமுகப்படுத்தி வைக்கவேண்டுமென்பதும் என் ஆவல். தவிர, பொதுவாக ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டால், அதனைக் கூடியமட்டில் தெளிவு படுத்திக் காட்டிவிட வேண்டு மென்பதில் என் ஆவல் செல்கிறதே தவிர, அதனைப் பற்றித் தீர்ப்புக் கூறுவதில் செல்வதில்லை. என்னை இந்த நிலையில் வைத்து என் எழுத்துக் களைப் படிக்குமாறு அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தச் சந்தர்ப்பத்தில், அதாவது இந்த நூலைப் பொறுத்த மட்டில், சமதர்ம சித்தாந்தமானது, உலகத்திற்குப் புதிதன்று என்று மட்டும் தெரிவித்துக் கொள்வது என் கடமையென்று கருதுகிறேன். நமது தாய் நாட்டிலாகட்டும், பிறநாடுகளிலா கட்டும், முற்காலத்தில் அறிஞர்கள் பலர், இதைப்பற்றி வெகுசூட்சுமமாக ஆனால் வெகு அழகாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். உதாரணமாக, கிரேக்க அறிஞனாகிய பிளேட்டோ, ஸாக்ரட்டீ வாயிலாக, ஒரு சமதர்ம ராஜ்யத்தை தாபித்திருக்கிறான். அவனுடைய அரசியல் அல்லது நீதியைப் பற்றிய ஆராய்ச்சி என்ற நூலை நாம் வாசித்துப் பார்த்தோ மானால், கார்ல் மார்க்,. லெனின் முதலியோரை விட அவன் தீவிரமாகச் சென்றிருக்கிறான் என்பது தெரியும். ஆக்கார் ஜாசி (Oscar Jaszi) என்னும் அறிஞன் ஓரிடத்தில் கூறுகிறான்:-

பிளேட்டோ, தன் கற்பனையைக் கொண்டு சிருஷ்டி செய்திருக்கிற ராஜ்யத்திற்கும், ருஷ்ய சம தர்ம வாதிகளின் ராஜ்யத் திற்கும் பொதுவான அமிசங்கள் பல இருக்கின்றன. இரண்டும், லாபத்தை அடிப்படையாகக் கொண்ட வியாபாரத்தை வெறுக் கின்றன; தீமைகளுக்கெல்லாம் மூல காரணம் தனிச் சொத்துரிமை என்பதை அங்கீகரிக்கின்றன; அதிக செல்வம், அதிக வறுமை இரண்டும் கூடாவென்று கண்டிக்கின்றன; எல்லாப் பிள்ளை களுக்கும் ஒரே மாதிரியான கல்வி போதிக்கப்பட வேண்டு மென்பதை வலியுறுத்துகின்றன; ராஜாங்கக் கல்வி முறைக்கான ஒரு சாதனமாகவே கலையும் இலக்கியத்தையும் கருதுகின்றன; ராஜ்யத் தின் க்ஷேமத்திற்காகவே விஞ்ஞான சாதிரம், உயர்ந்த மனோபாவங் கள் முதலியன இருக்க வேண்டுமென்று கூறுகின்றன; சமுதாய க்ஷேமத்திற்கு, தனிப் பட்டவர்களுடைய நலன்கள் கீழ்ப்பட்டிருக்க வேண்டு மென்ற கொள்கையுடையனவாயிருக்கின்றன.

இந்த மேற்கோள் எதை நிரூபிக்கின்றது? சமதர்மத்தைப் பற்றிப் பொதுவாக ஏற்பட்டிருக்கிற அச்சத்திற்கு அதிவார மில்லையென்பதையும், ஆனால் அதற்கு - அந்தச் சமதர்மத்திற்கு - ஆழ்ந்த அதிவாரம் உண்டென்பதையும் நிரூபிக்கின்றது. இந்த அளவுக்கு நாம் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

தமிழில், வரலாற்று நூல்கள் பலபல தேவை. இந்தத் தேவை யைப் பூர்த்தி செய்ய எனது சகோதர எழுத்தாளர்கள் முன் வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

  தியாகராயநகர், சென்னை - 600 017
  1-10-1959

  வெ. சாமிநாதன்

ருஷ்ய அறிஞர் சிலர் வழங்கிய நல்லுரைகள்

ஒருவனுக்கு அதிக வயதாகி விட்டதனாலேயே அவனை ஞானி யென்றும் சொல்ல முடியுமா என்ன? கிழவன் என்று தான் சொல்ல முடியும்.

ஒருவன் எவ்வளவுக் கெவ்வளவு கொடுக்கிறானோ அவ்வளவுக் கவ்வளவு அவன் பணக்காரன்; எவ்வளவுக் கெவ்வளவு யாருக்கும் கொடாமல் இறுக்கிப்பிடித்து வைத்து கொள்கிறானோ அவ்வளவுக் கவ்வளவு அவன் ஏழை.

நம்மிடம் நேர்மையான நடத்தை இருக்குமானால், நம்மை யறியாமலே மற்றவர்களை நாம் சீர்திருத்தம் செய்வதற் களாவோம்.

வாழ்க்கை, கண்ணீர் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கு என்று நினைப்பதும் தவறு: அப்படியே களி நடனம் புரிவதற்கான ஒரு மேடை என்று நினைப்பதும் தவறு.

பிறருடைய குற்றத்தை மன்னிக்கிற விஷயத்தில் நாம் சிறியவர்களா யிருக்கிறோம். பிறர் செய்த நன்மையை மறக்கிற விஷயத்தில் நாம் பெரியவர் களாயிருக்கிறோம்.

நாளை நாளை என்று எந்தக் காரியத்தையும் தள்ளிக் கொண்டு போகாதே. நாளைக்கும் நாளை மறுதினத்திற்கும் நடுவிலுள்ள இடை வெளி மிக அதிகம் என்பது உன் நினைவிலிருக்கட்டும்.

நீ செய்ய வேண்டியதைச் செய்யாவிட்டால் அதற்காக உலகம் உன்னிடத்தில் அநுதாபம் காட்டாது. நீ செய்யமுயன்று தோல்வியுற்றால், அதற்காக நீ வருத்தப்படுவாயானால் அப்பொழுது உலகம் உன்னிடத்தில் அநுதாபம் செலுத்தும்.

மிகுதியான பணமுடைமையை ஆழங்காண முடியாத ஒரு சமுத்திரத் திற்கு ஒப்பிடலாம். அந்தச் சமுத்திரத்தில், ஒழுக்கம், மனச்சாட்சி, சத்தியம் ஆகிய எல்லாம் முழுகிப் போகின்றன.

நல்ல குடும்பத்திலே பிறந்தவன் என்பதற்காகமட்டும் ஒருவன் பெரிய மனிதனாகி விடுவதில்லை. அவனுடைய நல்லெண்ணங்களும் நற்செயல் களுமே அவனைப் பெரிய மனிதனாக்கி, அழியாப் புகழைத் தருகின்றன.

வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்தவர்கள், பல மொழி களைக் கற்றவர்கள் மாதிரி. அவர்கள், மற்றவர்களைச் சுலபமாக அறிந்து கொண்டு விடுகிறார்கள்; மற்றவர்களாலும் சுலபமாக அறிந்து கொள்ளப் படுகிறார்கள்.

ஆண்டவனுக்கு மகிழ்ச்சி தரக்கூடியவர்கள் இருவகையினர். ஒரு வகையினர், அவனை அறிந்தவர்கள். அதனால் அவனுக்கு, மனப் பூர்வமாகத் தொண்டு செய்த வண்ணமிருக்கிறார்கள். மற்றொரு வகையினர், அவனை அறியாதவர்கள். அதனால், உள்ளன்புடன் அவனைத் தேடிய வண்ண மிருக்கிறார்கள்.

நாம் வசிக்கின்ற இந்த உலகத்திற்கு ஓர் ஆரம்பம் இருக்க வேண்டும்; அந்த ஆரம்பத்திற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும்; அந்தக் காரணம், மிகுந்த அறிவுடையதாயிருக்க வேண்டும்; அந்த அறிவு எல்லாவற்றிற்கும் மேலானதாயிருக்க வேண்டும். அந்த மேலானது எதுவோ அதையே கடவுள் என்று அழைக்கிறோம்.

நமது மனச்சாட்சி தூய்மையுடையதாயிருக்கும் பட்சத்தில், அதைக் கொண்டு, கடுமையான பகைமைகளையும், நீசத்தனமான அவதூறு களையும் வென்றுவிட முடியும். அந்த மனச்சாட்சியில், ஒரு சிறு கறை இருக்கும் பட்சத்தில், பழி பாவங்களெல்லாம் சேர்ந்து, நம் செவிகளில் சம்மட்டி அடிப்பது போல் அடித்துக் கொண்டிருக்கும்.


I. ஆரம்ப காலத்தில்

1. நாடும் மக்களும்
உலகத்தை ஆறு பகுதிகளாகப் பிரித்தால் அதில் ஒரு பகுதி ருஷ்யா. உலகத்து ஜனங்களைப் பதின் மூன்று பிரிவனராகப் பிரித்தால் அதில் ஒரு பிரிவினர் ருஷ்ய நாட்டார். ருஷ்யாவின் விதீரணம் 88, 19, 500 சதுர மைல்; ஜனத்தொகை சுமார் 20 1/2 கோடி. இங்கே 180 ஜாதியினர் வசிக்கின்றனர்; 90 பாஷைகள் பேசப்படு கின்றன. நாகரிகத்தின் உச்சாணிக் கிளையில் ஏறிக் கொண்டிருக்கிற ஜனங்கள் முதல், கிழங்குகளைத் தின்று கொண்டிருக்கும் காட்டு மிராண்டிகள் வரை, எல்லோரையும் இந்த நாட்டிலே காணலாம்.

வடக்கே வட மகா சமுத்திரம்; கிழக்கே பசிபிக் மகா சமுத்திரம்; தெற்கே சீனா, இந்தியா, ஈரான் முதலிய நாடுகள்; மேற்கே ஜெர்மனி. இவைகளின் மத்தியில் இருப்பது ருஷ்யா. இதன் எல்லைக்குள் பதினான்கு கடல்கள் அலைமோதுகின்றன; மூன்று மலைகள் உயர்ந்து நிற்கின்றன; மூன்று ஆறுகள் நீண்டு ஓடுகின்றன. ருஷ்யாவின் வியாபாரப் போக்கு வரத்தில் மூன்றில் ஒரு பாகம் ஆற்று மார்க்கத் திலேயே நடைபெறுகிறது.

1918 - ஆம் வருஷத்தோடு ருஷ்யாவில் முடியாட்சி முடிந்தது. அதனோடு ருஷ்யா என்ற பெயரும் மறைந்தது. பின்னர், குடியரசு ஏற்பட்டது. ருஷ்யாவின் பெயரும் சோவியத் சமதர்மக் குடியரசு நாடுகளின் ஐக்கிய ராஜ்யம் என்று (1923 ஆம் ஸ்ரீ) மாறியது. நியாய மாக இப்பொழுது நாம் அழைக்க வேண்டிய பெயர் இதுதான். ஆனால், சுருக்கத்திற் காகவும் சௌகரியத்திற்காகவும் ருஷ்யா என்று அழைக்கிறோம்: வடஅமெரிக்காவிலுள்ள ஐக்கிய மாகாணங் களைச் சேர்த்துப் பொதுவாக அமெரிக்கா என்று அழைப்பதுபோல.

இந்த ஐக்கிய ராஜ்யத்தில் வசிக்கிற ஜனங்களில் பாதி பேர் ருஷ்யர்கள். மானிட சமுதாயத்தைப் பல பிரிவினராகப் பிரித் திருக்கிறார் களல்லவா அறிஞர்கள்? அவர்களில் லாவியர் என்ற ஒரு பிரிவினர் உண்டு. இந்த லாவியப் பிரிவைச் சேர்ந்தவர்களே ருஷ்யர்கள். இவர்கள் பேசுகிற பாஷைக்கு ருஷ்ய பாஷை என்றே பெயர். இந்தப் பாஷையில் அநேகம் பிரிவுகள் இருந்தாலும், பொதுவாக ருஷ்ய பாஷை என்று சொல்வது தான் வழக்கம். இதுதான் அரசாங்கப் பாஷையாகவும் இருக்கிறது.

பொதுவாக ருஷ்யர்கள், கட்டுமதான தேகமுடையவர்கள்; அதே பிரகாரம் உறுதியான மனப்பான்மை கொண்டவர்கள். எந்த விதமான கஷ்டத்தையும் சந்தோஷமாகச் சகித்துக் கொள்வார்கள். ஊண் உறக்கமில்லாமல் நான்கு நாட்கள் வழி நடக்க வேண்டுமா, மயக்க மருந்தில்லாமல் பெரிய ஆபரேஷன் செய்துகொள்ள வேண்டுமா, இவை எல்லாம் ருஷ்யர்களுக்குச் சுலபமான விஷயங்கள். தவிர, இவர்கள் எல்லோருடனும் கலந்து வாழ்வதிலே பிரியமுடை யவர்கள். புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டு மென்பதிலும், புதிய நண்பர் களோடு பழக வேண்டு மென்பதிலும் அதிக ஆசையுடையவர்கள்.1 தாங்களே வலிய வந்து யாருடனும் பழகுவார்கள். ஒருவரையொருவர் அறிமுகப்படுத்தி வைத்த பிறகு தான் பேசவேண்டுமென்ற சம்பிரதாய மெல்லாம் இவர்களுக்கு அவ்வள வாகத் தெரியாது. யாரைப் பற்றியும் குறைவாகப் பேசமாட்டார்கள். யாரையும் தாழ்வாகக் கருதமாட்டார்கள். தங்கள் மனத்தில் தோன்றிய அபிப்பிராயத்தை ஒளிமறைவின்றி, ஆனால் மரியாதை யான பாஷையில் சொல்வார்கள். நன்றாக உழைப்பார்கள். அப்படியே நன்றாக ஓய்வும் எடுத்துக் கொள்வார்கள். கற்பனை உலகத்திலா கட்டும், காரிய உலகத்திலாகட்டும், தாராளமாகச் சஞ்சரிப் பார்கள். ஆனால் புராதனப் பெருமையிலே தங்கள் நிகழ்கால வாழ்வைத் துறந்துவிடமாட்டார்கள். ஏனென்றால் இவர்களுடைய சரித்திரம் புராதனப் பெருமை கொண்டதல்ல.

2. ருஷ்யாவும் ஐரோப்பாவும்
ஐரோப்பா என்று சொன்னால் அதில் ருஷ்யாவும் சேர்ந்தது என்ற அர்த்தத்திலேயே இப்பொழுது நாம் பேசுகிறோம். ருஷ்யா இல்லாத ஐரோப்பாவைக் கற்பனை செய்து பார்ப்பதுகூட இப் பொழுது நமக்குச் சாத்தியமில்லை. ஆனால், பதினைந்தாவது நூற்றாண்டின் இடைக்காலம் வரையில், ஐரோப்பா வேறு, ருஷ்யா வேறாக இருந்தது. இரண்டுக்கும் எவ்வித நேரான தொடர்பும் இல்லாமலிருந்தது என்று சரித்திரம் கூறுமானால், நாம் ஆச்சரியப் பட வேண்டியிருக்கிறதில்லையா?

இப்படி நேரான தொடர்பு ஏற்படாததற்குக் காரணம், ருஷ்யா வின் மேற்குப் பக்கம் பூராவும் காடடர்ந்த பிரதேசமாகவும் சதுப்பு நிலமாகவும் இருந்தது தான். இது, ருஷ்யாவுக்கும் ஐரோப்பாவுக் கும் மத்தியில் இயற்கையினால் போடப்பட்ட ஒரு குறுக்குச் சுவர் மாதிரியாகிவிட்டது.

நேரான தொடர்பு இல்லாத காரணத்தினால், ருஷ்யாவும் ஐரோப்பாவும் பரபரம் ஒன்றையொன்று அறிந்துகொள்ள முடிய வில்லை. ஒன்றையொன்று சந்தேகித்தது; அலட்சியமும் செய்தது. ஐரோப்பா துருக்கியைத் தெரிந்துகொண்டிருந்த அளவுக்கு ருஷ்யா வைத் தெரிந்து கொண்டிருக்கவில்லை. தெரிந்து கொள்ள வேண்டு மென்ற ஆவலிருந்தால்தானே? இதற்கு எதிராக, ருஷ்யா, தனக்குத் தென் கிழக்காக உள்ள ராஜ்யங்களை, பயபக்தியோடு பார்த்தது; அவைகளோடு உறவு கொண்டாடுவதிலே பெருமை கொண்டது.

ருஷ்யாவைப்பற்றி ஐரோப்பாவுக்கிருந்த அறியாமையையும் அலட்சியத்தையும் என்னவென்று சொல்வது? பிரிட்டிஷாருக்கு ருஷ்யாவைப் பற்றித் தெரிய ஆரம்பித்ததெல்லாம் 1553-ஆம் வருஷத் திற்குப் பிறகுதான்! இந்த வருஷத்தில், சீனாவுக்கும் இந்தியா வுக்கும் சுலபமாகச் செல்ல, வடகிழக்குப் பக்கத்தில் ஏதேனும் புதிய வழி இருக்கிறதா என்று பார்ப்பதற்காக, இங்கிலாந்திலிருந்து மூன்று கப்பல்கள் புறப்பட்டன. இவற்றில் இரண்டு கப்பல்கள், வட துருவத்துப் பனியையும் குளிரையும் தாங்கமுடியாமல் வழியில் நாச மாகிவிட்டன. மூன்றாவது கப்பல் மட்டும் தரை தட்டியது. அதிலிருந்த மாலுமிகள் கீழே இறங்கி இஃதென்ன பிரதேசம் என்று சுற்று முற்றும் பார்த்தார்கள். அங்கிருந்தவர்கள், இது தான் ருஷ்யா; மக்கோவி மகாப்பிரபுவினுடைய ஆளுகை இங்கே நடைபெறு கிறது என்று சொன்னார்கள். இதற்குப் பிறகுதான் இங்கிலாந்தி லுள்ளவர்களுக்கு ருஷ்யாவைப்பற்றித் தெரிய ஆரம்பித்தது.

பதினாறாவது நூற்றாண்டென்ன, பதினேழாவது நூற்றாண் டிலே கூட, பிரெஞ்சுக்காரர்கள், உலகத்தின் மற்றொரு கோடியில் ருஷ்யா இருக்கிறதென்றும், அதற்கடுத்தாற்போல் இந்தியா இருக்கிறதென்றும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்!

பொதுவாக, ஐரோப்பாவின் மேற்குப் பக்கத்திலிருந்தவர்கள், ருஷ்யாவை அந்நிய நாடகவே கருதி வந்தார்கள்; தங்களுடைய நலன்கள் வேறே, அதனுடைய நலன்கள் வேறே யென்று எண்ணி னார்கள். அரசியல் விவகாரங்களில், அதனைத் தங்களுக்குச் சமதை யாக வைத்துப் பேசுவது, தங்களுடைய கௌரவத்திற்குக் குறை வென்று அபிப்பிராயப்பட்டார்கள். அந்த நாட்டிலிருந்து சில உணவுப்பொருள்களைப் பெற்றுக் கொள்கிற அளவுக்கு அதனை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, வேறுவித அந்ததோ, மதிப்போ அதற்குக் கொடுக்கக் கூடாது, அதற்கு இல்லவும் இல்லை யென்ற மனப்பான்மைமையே பெரும்பாலும் இருந்தது.

பதினேழாவது நூற்றாண்டிலிருந்துதான், ருஷ்யாவைப் பற்றி ஒருவித அச்சம், அசூயை எல்லாம் ஐரோப்பிய ராஜதந்திரிகளிடையே ஏற்படத் தொடங்கின. ருஷ்யா, ஒதுங்கியிருக்கிறவரையில், தூங்கிக் கொண்டிருக்கிற வரையில் சரி, ஐரோப்பிய விவகாரங்களில் அது கலந்து கொள்ளத் தொடங்கினால், சுயமாகவோ அல்லது பிறர் செய்யும் ஆரவாரத் தினாலோ விழித்துக் கொண்டால், என்ன நிகழுமோ என்ற ஒருவித திகில் உண்டாக ஆரம்பித்தது. இந்தத் திகில், அசூயை எல்லாம், ருஷ்யாவைப் பொறுத்த மட்டில் இன்னமும்விட்ட பாடாகக் காணோமே!

ருஷ்யாவைப் பற்றி ஐரோப்பாவுக்கு எவ்வளவு அறியாமையும் அலட்சியமும் இருந்தனவோ அந்த விகிதத்திற்கு ஐரோப்பாவைப் பற்றி ருஷ்யாவுக்கும் இருந்தன. ஐரோப்பாவை அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலும் ருஷ்யாவுக்கு இல்லை. ஐரோப்பாவில் அவ்வப் பொழுது ஏற்பட்ட அரசியல் புரட்சிகள், தொழிற் புரட்சிகள் ஆகியவை ருஷ்யாவைச் சிறிது கூட அசைத்துக் கொடுக்கவில்லை.

1663 - ஆம் வருஷம், ருஷ்யாவின் அரச சபையிலிருந்து, சுமார் இரண்டு லட்சம் ரூபிள்கள் பெறுமானசன்மானப் பொருள்கள், பாரசீக சக்ரவர்த்திக்கு அனுப்பப் பெற்றன. அப்படி அனுப்பி, பாரசீகத்தின் நல்லெண்ணத்தையும் நன்மதிப்பையும் பெற முயன்றது ருஷ்யா. ஆனால் அதே காலத்தில் ஆதிரிய சக்ரவர்த்தி யின் நல்லெண்ணத்தைச் சம்பாதித்துக் கொள்ள ஆயிரம் ரூபிள்கள் பெறுமான பொருள்களை அனுப்பினால் போதுமென்று கருதியது! துருக்கியின் சுல்தானையும் பாரசீகத்தின் ஷாவையும் நிமிர்ந்து பார்த்த ருஷ்யா, ஐரோப்பிய அரசர் களைக் குனிந்து பார்த்தது. ஐவன் என்ற ஜார் சக்கரவர்த்தி,1 இங்கிலாந்தின் எலிஜபெத் மகாராணிக்கு2 எழுதுகிறான் ஒரு கடிதத்தில்: - நீங்கள் ஓர் அரசி. அதிக அதிகாரம் படைத்தவர் என்று நாம் எண்ணியிருந்தோம் ; உங்கள் பதவியின் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறீர்களென்று கருதி யிருந்தோம்; ஆனால் இப்பொழுது உங்களுடைய ராஜ்யத்தில், உங் களைத் தவிர்த்து வேறு பலர் சுயமாக ஆட்சி நடத்துகிறார்களென்று அறிகிறோம். அப்படி ஆட்சி நடத்துகிறவர்கள் யார்? சாதாரண வியாபாரிகள்!

இதே ஐவன், வீடன் தேசத்து கட்டேவ அரசனுக்கு3 எழுதுகிறான்: - பூலோகத்துக்கு மேற்பட்டது எப்படி மோட்ச லோகமோ அப்படியே உங்களுக்கு மேற்பட்டவன் நான்.

ஐரோப்பாவிலிருந்து வந்த எதனையும் ருஷ்யா எப்படிச் சந் தேகக் கண்கொண்டு பார்த்தது, வெறுப்புடன் நோக்கியது என்பதற்கு ஒரு சிறிய உதாராணம். ஹாலந்துகாரர் சிலருடைய தூண்டுதலின் பேரில் ருஷ்யாவின் சில பாகங்களில் 1663 - ஆம் வருஷம் தபால் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இதைக் கண்டு ஒரு ருஷ்யன் எழுதுகிறான்:- அந்நியர்கள் நமது நாட்டில் அங்கங்கே பொத்தல் பண்ணிவிட்டார்கள். இவற்றின் வழியாக அவர்கள் நமது விவகாரங்களையெல்லாம் கவனிக் கிறார்கள். தபால் வசதிகள் ஏற்படுத்துவதனால் ஜார் அரசருக்கு அதிக பணம் கிடைக்கலாம். ஆனால் தேசத்திற்கு அதனால் தீமையே உண்டாகும். நம்மிடையே நடைபெறும் எல்லா விஷயங்களும் உடனுக்குடன் அந்நியர் களுக்குத் தெரிந்துவிடும். ஆதலின் இந்தப் பொத்தல்களைச் சீக்கிரத்தில் கெட்டியாக அடைத்துவிட வேண்டுமென்று கோருகிறேன். தவிர, ருஷ்யாவிலிருந்து வெளியேறும் எல்லா அந்நியர்களையும் பரிசோதனை செய்து அனுப்ப வேண்டுமென்று விரும்புகிறேன். நமது நாட்டு முக்கியமான செய்திகளையெல்லாம் வெளிநாடுகளுக்கு அவர்கள் எடுத்துச் சென்றுவிட்டால் என்ன செய்வது?

3. அந்நியர் வருகை
இஃது இப்படியிருக்கட்டும். ருஷ்யாவின் பூர்விக சரித்திரத் திற்குள் சிறிது பிரவேசித்துப் பார்ப்போம். ருஷ்யாவின் மேற்கில் நீப்பர்1 நதி ஓடிக்கொண்டிருக்கிறதல்லவா, இதன் வடமேற்குப் பகுதி நெடுகிலும், ஏறக்குறைய கீவ்2 நகரத்திலிருந்து லடோகா3 ஏரிவரையில், ஆதி லாவியர்கள் சிறு சிறு கூட்டத்தினராக, தனித்தனியே வசித்து வந்தார்கள். இவர்களுக்குள் எவ்வித கட்டுதிட்டமும் இல்லாம லிருந்தது; அனைவரையும் ஐக்கியப்படுத்தி வைக்கக் கூடிய ஆட்சி முறை யும் இல்லை. நாளாவட்டத்தில் வேற்றுமைகள் வளர்ந்தன; பிணக்கு களும் பூசல்களும் மலிந்தன. அந்நியர் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு விட்டார்கள். இங்ஙனம் ஆட்பட்டது கி. பி. ஒன்பதாவது நூற்றாண்டின் இடைக் காலத்தில். இதற்கு முந்திய இரண்டு மூன்று நூற்றாண்டு களில்தான் இவர்கள் மேற்கண்ட விதம் தனித்தனியே வாழ்ந்து வந்தார் களென்று அறிகிறோம். இந்தக் காலத்திலும், இதற்கு முந்தியும் லா வியர்கள் எப்படி வாழ்க்கையை நடத்தி வந்தார்கள், இவர்களுடைய மூதாதையர்கள் யார், கிறிது சக ஆரம்பத்தில் ருஷ்யா எவ்வாறிருந்தது என்பன போன்ற விவரங் களெல்லாம், சரித்திர ஆராய்ச்சியாளருடைய ஊகத்திலும், கட்டுக் கதைகளோ வென்று கருதப்பட வேண்டிருக்கிற புராதன நூல்கள் சில வற்றிலும் அடங்கி யிருக்கின்றன. இவற்றின் மீது இப்பொழுது நமது திருஷ்டியைச் செலுத்திக் கொண் டிருப்பானேன்? உண்மையில், ருஷ்யாவின் சரித்திரம் கி.பி. ஒன்பதாவது நூற்றாண்டின் இடைக் காலத்திலிருந்தே, அதாவது அந்நியர் ஆதிக்கம் ஏற்பட்ட காலத்திலிருந்தே துவங்குகிறது. இந்த அந்நிய ஆதிக்கம் எப்படி ஏற்பட்ட தென்பதைச் சிறிது கவனிப்போம்.

ஒன்பதாவது நூற்றாண்டின் தொடக்கத்தில், வைக்கிங்குகள்1 என்றால் ஐரோப்பா முழுவதும் ஒருவித நடுக்கம் இருந்தது. வைக் கிங்குகள் என்றால் கடற்கொள்ளைக்காரர்கள் என்று அர்த்தம். இவர்கள், வீடன், நார்வே, டென்மார்க் தேசத்தைச் சேர்ந்தவர்கள். மகா முரடர்கள்; துணிச்சல் நிறைந்தவர்கள்; யாருக்கும் அடங்க மாட்டார்கள்; ஆனால், யாரையும் அடக்கிக் கொண்டு போவதில் வல்லவர்கள். இவர்கள் ஐரோப்பாவின் பல பாகங்களுக்கும் சென்று பரவினார்கள். முதலில் கொள்ளைக் கூட்டத்தினராகச் சென்ற இவர்கள், நாளா வட்டத்தில், எந்தப் பிரதேசத்தில் கொள்ளை யடிக்கச் சென்றார்களோ அந்தப் பிரதேசத்துக் குடி மக்களாகவும் ஆகிவிட்டார்கள். இந்தக் கலப்பினால் ஒரு புதிய பரம்பரை ஏற் பட்டதென்று சொல்லவேண்டும். ஆனால், அது வேறுகதை.

இந்த வைக்கிங்குகளில் வீடன் தேசத்தைச் சேர்ந்தவர்கள், சிறந்த வியாபாரிகளாகவும் இருந்தார்கள். இவர்கள், தென்கிழக்குப் பகுதியில் அப்பொழுது பிரசித்த சாம்ராஜ்யங்களாயிருந்த கிரீ, பாரசீகம் முதலிய தேசங்களுக்குச் சென்று மீன், தோல், தேன், அரக்கு முதலிய பொருள்களை விற்றும் , ஆயுதங்கள், துணிமணிகள் முதலிய பொருள்களை வாங்கியும் இப்படியாக வியாபாரம் செய்து வந்தார்கள். இவர்களிலே சிலர், மேற்படி நாட்டு மன்னர்களுக்கு மெய்க்காப் பாளர்களாகவும் அமர்ந்தார்கள். இவர் களுடைய இந்தப் போக்கு வரத் தெல்லாம், பெரும்பாலும் நீப்பர் நதி மூலமாகவே நடைபெற்றன. இந்தப் போக்குவரத்தின்போதுதான் இவர் களுக்கும் லாவியர் களுக்கும் தொடர்பு ஏற்பட்டது. லாவியர்கள் இவர் களை வாரஞ் சியர்கள்2 என்று அழைத்தார்கள். அதாவது வியாபாரிகள் என்று அர்த்தம். இந்த வியாபாரிகள் தான் பின்னர் அரசியல் ஆதிக்கம் பெற்று விட்டார்கள்.

லாவியர்கள், ஒற்றுமையில்லாமல் ஒருவருக்கொருவர் பூசலிட்டுக் கொண்டிருந்தார்களல்லவா, எவ்வளவு காலந்தான் இப்படியிருப்பது? பார்த்தான் இவர்களிலே மூத்தவனான ஒருவன்; கோட்டோமில்3 என்னும் பெயரான். நமக்குள்ளே தானே பகைமையும் பூசலும், அந்நியர் யாரை யாவது ஒருவரை வரவழைத்து அவரைத் தலைவராக ஏற்றுக் கொள்வோம். அவரிடத்தில் நமக்குப் பொறாமையோ பகைமையோ இராதல்லவா? அவர்கீழ் நாம் அடங்கி ஒற்றுமையாக இருப்போம் என்று யோசனை கூறினான். எல்லா லாவியர்களும் இந்த யோசனையை ஏற்றுக் கொண்டார்கள். ஒரு பிரதிநிதிக்கூட்டம், சகோதரர்களான மூன்று வாரஞ்சியர்களை அணுகி, தங்களை ஆளுமாறு கேட்டுக்கொண்டது. ரூரிக், சினேய, ட்ரூவோர்1 என்ற அந்த மூன்று சகோதரர்களும், இந்த வேண்டு கோளுக் கிணங்கி ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். இப்படி ஒரு வரலாறு கூறுகிறது.

இன்னொரு வரலாற்றின்படி, வியாபாரிகளாக வந்த வாரஞ் சியர்களிற் சிலர், சந்தர்ப்பத்திற்கேற்றவாறு கொள்ளைக்காரர் களாகவும் மாறிவிட்டார்கள். இவர்களால் லாவியர்களுக்கு அதிக கஷ்டங்கள் உண்டாகி வந்தன. இவர்களினின்று தங்களைப் பாது காத்துக் கொள்ளும் பொருட்டு, வேறு சில வாரஞ்சியர்களைத் தங் களுக்குப் பாதுகாவலர்களாக அமர்த்திக் கொண்டார்கள் லாவி யர்கள். வாரஞ்சியர்களை எதிர்த்து நிற்கக் கூடியவர்கள் வாரஞ் சியர்கள் தானே என்பது இவர்கள் கருத்து. இங்ஙனம் கூலிக்குப் பாதுகாவலர்களாக அமர்ந்துக் கொண்டவர்கள், நாளா வட்டத்தில் ஆள்கின்றவர்களானார்கள். யாருடைய சுதந்திரத்தைக் காப்பாற்று வதற்காக அமர்த்தப்பட்டார்களோ அவர்களுடைய சுதந்திரத்தைப் பறிமுதல் செய்து அவர்களை ஆட்கொண்டுவிட்டார்கள் இந்த வாரஞ்சியர்கள். இந்த மாதிரியாகத் தான் நடந்திருக்க வேண்டு மென்று ருஷ்யாவின் தற்கால சரித்திர அறிஞர்கள் கருதுகிறார்கள். எப்படியோ வீடன் தேசத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள், ஒன்பதாவது நூற்றாண்டின் இடைக்காலத்தில், லாவியர்கள் மீது ஆட்சி செலுத்தத் தொடங்கினார்களென்று நிச்சயமாகத் தெரிகிறது.

4. ருஷ்யா - பெயருக்குக் காரணம்
இங்ஙனம் ஆளும் பொறுப்பை மேற்கொண்ட வாரஞ்சியர் களையும், இவர்களுக்கு ஆட்பட்ட லாவியர்களையும் வேறு படுத்திச் சொல்ல வேண்டுமென்பதற்காக, முன்னவர்களை ரூ2 என்று அழைக்கத் தொடங்கினார்கள் கிரேக்கர்கள், பத்தாவது நூற்றாண்டிலிருந்து. நாளாவட்டத்தில் வாரஞ்சியர்களும் லாவி யர்களும் ஓரினத்தினராகி விட்டார்கள். இதனால் ரூ என்ற பெயர் எல்லோரையும் குறிப்பதாக வழங்கப்பட்டது. பின்னர் ரூ என்ற இந்தப் பெயர், தேசத்தை மட்டும் குறிப்பாக ருஷ்யா என்று மாறியது; ருஷ்யாவில் வசித்தவர் அனைவரும் ருஷ்யர்கள் என்று அழைக்கப் பட்டார்கள். ருஷ்யா என்ற பெயர் வந்ததற்கு இது தவிர, வேறு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன. ஆனால் அவைகளைப் பற்றிய ஆராய்ச்சி இங்கு எதற்கு? ரூரிக் சகோதரர்களிடம் செல்வோம்.

ரூரிக் சகோதரர்கள், லாவியர்கள் வசித்துவந்த பிரதேசத்தைத் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்டார்கள். ரூரிக், லடோகா ஏரியைச் சுற்றியுள்ள பிரதேசத்தின்மீது ஆட்சி செலுத்தத் தொடங் கினான். இப்படி தொடங்கியது 850-ஆம் வருஷமென்பர். இவன் தான் சகோதரர்களில் மூத்தவன்.

சிறிது காலத்திற்குப் பிறகு இவனுடைய இரண்டு சகோதரர் களும் இறந்து போனார்கள். இவர்கள் ஆண்ட பிரதேசங்களை ரூரிக், தன் சுவாதீனப்படுத்திக் கொண்டு அகில ருஷ்யாவுக்கும் அரசனா னான்; நோவ்கோராட்1 என்னும் ஊரைத் தலைநகரமாக்கிக் கொண்டான். ருஷ்யாவின் முதல் அரசன் ரூரிக்; முதல் தலைநகரம் நோவ்கோராட்.

ரூரிக்கைப் பின்பற்றி வேறுசில வாரஞ்சியர்கள் ருஷ்யாவுக்குள் பிரவேசித்தார்கள். இவர்களில் முக்கியமானவர் இருவர். ஆக்கால்ட், டீர்2 என்ற இவ்விருவரும், நீப்பர் நதிக்கரையிலுள்ள கீவ் நகரத்தைக் கைப்பற்றிக்கொண்டு அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களுக்கு எஜ மானர்களானார்கள். இவர்கள் கீவ் நகரத்தைத் தலைமை தான மாக வைத்துக்கொண்டு, தெற்கேயிருந்த கிரீ தேசத்து முக்கிய நகரங்களைக் கொள்ளையிட்டு வந்தார்கள்.

5. கீவ் - நகரங்களுக்குத்தாய்
இஃது இப்படியிருக்க, ரூரிக் 879ஆம் வருஷம் இறந்து விட்டான். இவன் இறக்கும்பொழுது இவனுடைய மகன் இகோர்3 என்பவன் சிறு குழந்தை. எனவே, ஒலேக்4 என்பவன் இவன் பிரதிநிதியா யிருந்து ஆட்சி நடத்தினான். இவனுடைய துணிகரமான செயல் களைப் போற்றி ருஷ்யப் புலவர்கள் பலர் பாட்டிசைத்திருக் கிறார்கள். இவன் ஒரு பெரிய படையைத் திரட்டிக் கொண்டு தெற்கு நோக்கிச் சென்று கீவ் நகரத்தைக் கைப்பற்றிக் கொண்டான்; ஆக்கால்ட், டீர் ஆகிய இருவரையும் தன் வாளுக்கிரையாக்கினான்; இவர்களுடைய ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த பிரதேசங்களைத் தன் வசப்படுத்திக் கொண்டான்; நோவ்கோராட்டிலிருந்து கீவ் நகரத்திற்குத் தன் தலைமை தானத்தை மாற்றினான். இது முதற் கொண்டு, கீவ்தான் ருஷ்யாவின் பிரதான நகரமாக விளங்கத் தொடங்கியது; இதனை மையமாகக் கொண்டு ருஷ்ய ராஜ்யம் விதீரண மடைந்து வந்தது. இன்றைக்கும் ருஷ்யர்கள், கீவ் நகரத்திற்கு முக்கிய தானம் கொடுத்துப் பேசுவார்கள்; ருஷ்யாவிலுள்ள நகரங்களனைத்திற்கும் தாய் என்று சொல்லிப் போற்றுவார்கள்.

ஒலேக்குக்கு, கிரீ தேசத்தின்மீது அடிக்கடி படையெடுத்துச் செல்வதில் ஓர் அலாதியான பிரியம். இதிலேயே தன் வீரமனைத் தையும் செலவழித்தான். ஏனென்றால், கிரீஸூம், சின்ன ஆசியா,1 சிரியா, எகிப்து ஆகிய இந்தப் பிரதேசங்களும் சேர்ந்து புகழ்பெற்ற ஓர் ஏகாதிபத்தியமாக விளங்கியது. இதற்கு கான்ட்டாண்டி நோபிள்2 தலைநகரமாயிருந்தது இதற்கு பிஸண்ட்டியம்3 என்று அப்பொழுது பெயர். இதைக் கொண்டு மேற்படி ஏகாதிபத்தியமும் பிஸண்ட்டைன் ஏகாதிபத்தியம்4 என்று அழைக்கப்பட்டது. இத் தகைய பெரிய ஏகாதிபத்தியத்தின் மீது வெற்றி காண்பது பெருமை யல்லவா? இதற்குத் தகுந்தாற்போல் இவனுக்கு அவ்வப் பொழுது சில காரணங்களும் கிடைத்து வந்தன.

பிஸாண்ட்டியம் வாசிகள், அதாவது கான்ட்டாண்ட்டி நோபிள் வாசிகளான கிரேக்கர்கள், இவன் படையெடுத்து வந்த பொழுதெல்லாம் இவனுக்கு ஏதேனும் காணிக்கை செலுத்தித் திருப்பி அனுப்பி வந்தார்கள்; சில சமயங்களில் இவனோடு சமரஸ உடன்படிக்கையும் செய்து கொண்டார்கள். இவன் ஒரு சமயம் தன் வெற்றிக் கறிகுறியாக, பிஸண்ட்டியம் நகரத்தின் நுழைவாயிலில், தான் உபயோகித்து வந்த கேடயத்தைத் பதிய வைத்து விட்டு வந்தா னென்பர். இவன் இகோரின் பிரதி நிதியாயிருந்து நிருவாகத்தை நடத்தியது மொத்தம் முப்பத்து மூன்று வருஷம். இவன் இறந்து போனது ஓர் ஆச்சரியம்.

6. சோதிடம் பார்த்த அரசன்
ஒரு சமயம் இவன், கீவ் நகரத்துத் தன் அரண்மனையில் ஆ தானிகர் சிலருடன் அளவளாவிப் பேசிக் கொண்டிருந்த போது, அவருள் சோதிடம் தெரிந்த சிலரைப் பார்த்து எனக்கு எதனால் மரணம் சம்பவிக்கும் என்று கேட்டான். அரசே, எந்தக் குதிரையின் மீது தாங்கள் அதிகமான பிரியம் வைத்து அதன்மீது சவாரி செய்து வருகிறீர்களோ அந்தக்குதிரை யினாலேயே தங்களுக்கு மரணம் சம்பவிக்கப் போகிறது என்று அவர்கள் பதில் கூறினார்கள். இதைக் கேட்டதும், ஒலேக் அப்படியானால் அந்தக் குதிரையின்மீது இனி நான் சவாரி செய்யப் போவது மில்லை; அதைக் கண்ணால் பார்க்கப் போவதுமில்லை என்று சங்கற்பித்துக் கொண்டான். அந்தக் குதிரையைத் தன் கண்ணுக்குத் தென்படாமல் வைத்திருக்கும் படிக்கும், ஆனால் அதனை நன்கு போஷித்து வருமாறும் தன் பணி யாளர்களுக்கு உத்தரவிட்டான். தன் சவாரிக்கு வேறு குதிரையை அமர்த்திக்கொண்டான். வருஷங்ள் பல கழிந்தன. பின்னர் ஒருநாள் பழைய குதிரையின் ஞாபகம் வந்தது இவனுக்கு. வயதிலே முதிர்ந்த ஒரு பணியாளனை வரவழைத்து நான் சவாரி செய்து வந்த பழைய குதிரை எப்படி இருக்கிறது? அதனை நன்றாகப் போஷித்து வருகிறீர்களா?’ என்று கேட்டான். அரசே, அந்தக் குதிரை எப்பொழுதோ இறந்து போய்விட்டதே என்றான் அவன். இதைக் கேட்டு ஒலேக் சிரித்தான். ஏன்? சோதிடம் பொய்யாகி விட்டதே யென்று. எந்தக் குதிரையின் மூலமாக எனக்கு மரணம் நேரிடும் என்று சொன்னார் களோ அந்தக் குதிரை இறந்து விட்டது; ஆனால் நான் உயிரோடிருக் கிறேன் என்று தனக்குள்ளே சந்தோஷப் பட்டுக் கொண்டான். இந்த சந்தோஷ மேலீட்டால், இறந்து போன அந்தக் குதிரையின் எலும்பு களை யாவது பார்த்து வரவேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று. தன் சவாரிக் குதிரையைக் கொண்டு வரச்செய்தான். அதன் மீது ஆரோகணித்துக் கொண்டு, நண்பர் சிலர் பின்தொடர, பழைய குதிரை புதைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்றான். மேற்படி குதிரையின் மண்டையோடும் சில எலும்புகளும் கண்ணுக்குத் தெரியும்படியாகக் கிடந்தன. ஒலேக், தன் சவாரியினின்றும் இறங்கி குதிரையே இறந்து விட்டதாம்; அதனுடைய மண்டையோடு என்னை என்ன செய்யப் போகிறது என்று சொல்லிக் கொண்டே மேற்படி மண்டையோட்டின் மீது காலை வைத்தான். அதில் பதுங்கி யிருந்த ஒரு பாம்பு இவன் காலைக் கடித்துவிட்டது. உடனே விஷ மேறி இறந்துவிட்டான்.

7. ஆல்கா அரசி
இவனுக்குப் பிறகு ரூரிக்கின் மகனான இகோர் தானே நிருவாகத்தை ஏற்றுக்கொண்டான். (912-ஆம் வருஷம்) இவனும் முப் பத்து மூன்று வருடங்கள் ஆண்டான். இரண்டு தடவை கான்ட் டாண்டி நோபிள் மீது படையெடுத்தான். கடைசியில் 945-ஆம் வருஷம், லாவியர்களில் ஒரு பகுதியினரால் கொலையுண்டான். இவனுக்கு ஒரு மகன். வியாட்டலாவ்1 என்று பெயர். சிறு குழந்தையாய் இருந்தபடியால், இவனுடைய தாயார் ஆல்கா2 என்பவள் ரீஜெண்ட்டாயிருந்து ராஜ்ய நிருவாகத்தை நடத்தி வந்தாள். இவள், தன் கணவனைக் கொலை செய்த ஜாதியார்மீது பழி தீர்த்துக் கொள்ள விரும்பி, அவர்களிற் பலரைச் சிறைப்படுத்தி, விஷக் காற்று நிறைந்த ஓர் இடத்தில் அடைத்துக் கொன்று விட்டாள். சில ஊர்க்குருவி களைப் பிடித்து அவற்றின் வால் பக்கம் நெருப்பைப் பற்ற வைத்து அவைகளை மேற்படி ஜாதியார் வசித்து வந்த ஊர்களின் மீது பறக்கவிட்டாள். அவை, இந்த ஊர்களிலுள்ள வீடுகளின் கூரைமீது அமர்ந்து, அமர்ந்து, தாங்களும் பொசுங்கி ஊர்களையும் சாம்பலாக்கி விட்டன. பெண்ணுருவம் படைத்தா ளெனினும் பெண் மனம் படைத்திலள் போலும் இந்த ஆல்கா!

ருஷ்ய சரித்திரத்தில் இந்த ஆல்காவின் பெயர் ஒரு முக்கிய இடம் பெற்றிருக்கிறது. ஆனால் அது வேறு காரணத்திற்காக. ருஷ்யாவின் அரச பரம்பரையில் இவள்தான் முதன் முதலாகக் கிறி தவ மதத்தைத் தழுவியவள். இவள் காலத்தில் லாவியர்கள், வருண னென்றும், வாயு வென்றும், சூரியனென்றும் இப்படி இயற்கைச் சக்திகளைத் தெய்வங் களாக வழிபட்டு வந்தார்கள். இவள் - இந்த ஆல்கா - அடிக்கடி கான்ட்டாண்டி நோபிளுக்குப் போய் வரும்படி யான சந்தர்பங்கள் ஏற்பட்டன. அப்பொழுது, கிரேக்கர்கள் அனுஷ் டித்து வந்த கிறிதுவ மதச் சடங்குகள் பலவற்றிலும் இவள் மனம் ஈடுபட்டது: கிரேக்கப் பாதிரிமார்கள் பலருடைய தொடர்பும் பெற்றாள். இவற்றின் விளைவாக 957-ஆம் வருஷம் கிறிதுவ மதத்தைத் தழுவிக் கொண்டாள். இதனால் கிறிதுவ முனிவர் கூட்டத்திலே ஒருத்தியென்று இன்றளவும் போற்றப்பட்டு வருகிறாள். இவள் 968 -ஆம் ஆண்டு கண்மூடிக் கொண்டுவிட்டாள்.

ஆல்கா, கிறிதுவ மதத்தைத் தழுவிக்கொண்டா ளெனினும், தன் மகன் வியாட்டலாவை கிறிதுவனாக்க இவளால் முடிய வில்லை. இந்த வியாட்டலாவ், தன் தாயருக்குப் பிறகு சுமார் நான்கு வருஷகாலம் (968 - 972) அதிகாரபதவியில் அமர்ந்துவிட்டு மறைந்துபோனான். இவன், தன் ராஜ்யத்தை விதரிக்க எண்ணி, சில ஜாதியார் மீது படையெடுத்தான். தோல்வியும் வெற்றியும் மாறி மாறிக் கண்டான். கடைசியில் இந்தப் படையெடுப்புகள் ஒன்றி லிருந்து திரும்பி வருகிறபொழுது, இவனிடம் விரோதப்பட்டிருந்த ஒரு ஜாதியார், மறைவாகப் பதுங்கியிருந்து இவனைத் தாக்கிக் கொன்றுவிட்டனர். கொன்றதோடல்லாமல் இவன் மண்டை யோட்டைத் தனியாக எடுத்து அதைக் குடிக்கிற பாத்திரமாக உபயோகித்து அதன் மூலம் இவன் மீது பழி தீர்த்துக் கொண்டனர்.

8. முதல் கிறிதுவ அரசன்
வியாட்டலாவ், உயிரோடிருந்த காலத்திலேயே, தனக்குப் பிறகு, ராஜ்யத்தைத் தனது முன்று பிள்ளைகளும் பங்கு போட்டுக் கொண்டு ஆள்வதென்று ஏற்பாடு செய்து விட்டுப் போயிருந்தான் அப்படியே மூன்று பிள்ளைகளும் பங்கு போட்டுக் கொண்டார்கள். ஆனால் இவர்களுக்குள் சண்டை வந்துவிட்டது. சுமார் ஆறு வருஷ காலம் சண்டை போட்டார்கள். கடைசியில் இவர்களிலே ஒருவனான வ்ளாடிமீர் என்பவன் வெற்றி பெற்றான். இவன், தன் பாட்டியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, 988-ஆம் வருஷம் கிறிதுவமதத்தைத் தழுவிக் கொண்டான்; அதனோடு ருஷ்ய மகா ஜனங் களையும் கிறிதுவர்களாகும்படி செய்தான். ஒருநாளைக் குறிப் பிட்டு, அந்த நாளில் தனது பிரஜைகள் அனைவரும் நீப்பர் நதிக் கரைக்கு வரவேண்டுமென்று உத்திரவிட்டான். வந்த அனைவரை யும் நதியில் கழுத்தளவு ஜலத்திலே வரிசை வரிசையாக நிற்குமாறு செய்து எல்லோருக்கும் ஞான நானம் செய்வித்தான். இவன் காலத்திலிருந்து ருஷ்யாவில் கிறிஸ்துவமதம், கிரேக்க சம்பிரதாயப் படி அனுஷ்டானத்திற்கு வந்தது; கிறிஸ்துவப் பாதிரிமார்களின் செல்வாக்கும் வலுக்கத் தொடங்கியது.; கீவும் கான்ட்டாண்டி நோபிளும் நெருங்கிய தொடர்பு கொண்டன. வ்ளாடிமீர்தான் ருஷ்யாவின் முதல் கிறிதுவ அரசன். இவன் கிறிதுவனானதைப் பற்றி அறிஞர் பலர் காவியங்களியற்றி, அவற்றில் இவன் பெயரை நிலைபெறச் செய்திருக் கிறார்கள். கிறிதுவ முனிவர்களிலே ஒருவனாக இவனைப்போற்றி வரலானார்கள் பிற்காலத்தவர். இவன் ஆட்சிக்காலம் 980-1015. வ்ளாடி மீருக்குப் பன்னிரண்டு பிள்ளை களும் ஒரு மருமகனும். இந்த பதின்மூன்று பேருக்கும் ராஜ்யத்தைப் பகிர்ந்து கொடுத்தான் இறக்குந் தறுவாயில். கேட்க வேண்டுமா சண்டைக்கு இவன் இறந்த பிறகு? சுமார் நான்கு வருஷம் இவர் களுடைய சண்டையில் ராஜ்யம் சீரழிந்தது. கடைசியில் யாரலாவ்1 எனபவன் அனைவரையும் வெற்றிகொண்டு பட்டத்திற்கு வந்தான். முப்பத்தைந்து வருஷகாலம் (1019 - 1054) ஆண்டான். இவன் ஓர் அறிஞன். அறிஞன் யாரலாவ் என்றே இவன் அழைக்கப் படுகிறான். இவன் கிரேக்க பாஷையிலிருந்து அநேக நூல்களை மொழி பெயர்த்தான். இவனுடைய பிள்ளைகளில் ஒருவன், ஐந்து பாஷைகள் பேசத் தெரிந்தவன் என்பர். இவன் காலத்தில் ருஷ்ய பாஷையில் பல புதிய நூல்கள் இயற்றப்பட்டன; அறிஞர்களுக்கு ஆதரவு கிடைத்தது; கிரேக்கப் பாதிரிமார்கள், ஜனங்களிடையே கல்வியைப் பரப்பினார்கள்; பெரும் பாலான பாதிரிமடங்கள், சிறந்த கல்விச் சாலைகளாகத் திகழ்ந்தன; பொது ஜனங்களின் உபயோகத் திற் கென்று கீவ் நகரத்தில் ஒரு புத்தகசாலையும் தாபிக்கப் பட்டது. மற்றும் யாரலாவ், ருஷ்யாவுக்கு ஒழுங்கான ஒரு சட்டத்தை இயற்றிக்கொடுத்தான். வ்ளாடிமீர். ருஷ்யாவின் முதல் கிறிதுவ மன்னன் என்றால், இவன் - இந்த யாரலாவ் - ருஷ்யா வின் முதல் சட்ட நிர்மாண கர்த்தன். மற்றும் இவன், ஐரோப்பிய அரச குடும்பத் தினர் பலருடன் நெருங்கிய சம்பந்தம் வைத்துக் கொண்டான். தன்னுடைய நான்கு பெண்களையும், போலந்து, ஹங்கேரி, நார்வே, பிரான் ஆகிய நான்கு நாடுகளின் அரசிளங்கு மரர்களுக்கு விவாகம் செய்து கொடுத்தான்; தனது பேரனுக்கு, இங்கிலாந்தின் அரச குமாரியை2 மணஞ் செய்து கொண்டான்.

இவன் காலத்தில் கீவ் நகரத்திற்கு ஒரு தனிச்சிறப்பு ஏற்பட்டி ருந்தது. கிரேக்கர்களென்ன, ஜெர்மானியர்களென்ன, அராபியர் களென்ன, இப்படி பல நாட்டு வியாபாரிகளும் இங்கே சந்தித்துத் தங்கள் சரக்குகளைப் பரிவர்த்தனை செய்து கொண்டார்கள். வருஷத் தில் இங்கு எட்டு தடவை சந்தைகள் கூடின. நகர எல்லைக்குள் மொத்தம் பன்னிரண்டு மார்க் கெட்டுகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

தவிர யாரலாவ், அழகிய கட்டடங்கள் கட்டி நகரத்தை அழகு படுத்துவதில் அதிக சிரத்தை காட்டினான். நூற்றுக்கணக் கான கட்டடங்கள் இவன் காலத்தில் எழும்பின என்று கூறுவர்.

யாரலாவுக்கு ஆறு பிள்ளைகள்; ஒரு பேரன். இந்த ஏழு பேருக்கும் ராஜ்யத்தைப் பங்கு போட்டுக் கொடுத்துவிட்டு 1054 ஆம் வருஷம் இறந்துபோனான். இங்ஙனம் ஒவ்வோர் அரசனும் ராஜ்யத்தைத் துண்டு போட்டுக் கொடுப்பது என்ற முறையை அனுஷ்டித்து வந்ததனால், ஒன்றா யிருந்து வளரவேண்டிய ருஷ்யா, பல பிரிவுகளாவதற்கு ஏதுவுண்டா யிற்று. இப்படிப் பிரிந்து போன வர்களுக்குள் ஓயாத சண்டை. தவிர, கீவ் நகரம் யாருடைய சுவா தீனத்தில் இருக்கிறதோ அவன், மற்ற அரசர்களைக் காட்டிலும் மேலானவன் என்று கருதப்பட்டு வந்தான். இதனால் இந்த கீவ் நகரத்தைக் கைப்பற்றிக் கொள்ள எல்லோரும் போட்டியிட்டனர். போட்டி காரணமாக, கீவ் நகரத்தின் செல்வாக்கு குறைய ஆரம்பித்தது.

9. நூல் எழுதிய மன்னன்
இந்தப் போட்டியிலே கலந்து கொண்டு ஓரளவு வெற்றி பெற்ற ஒருவனைப்பற்றி மட்டும் இங்குக் குறிப்பிடுதல் அவசிய மாகும். இவன் தான் வ்ளாடிமீர் மோனாமாக்1 என்பவன்; யாரலா வின் பேரன்; இங்கிலாந்தின் அரச குமாரியை மணந்து கொண்டவன். இவன் 1113-ஆம் ஆண்டிலிருந்து 1125-ஆம் ஆண்டு வரை கீவ் நகரத்தில், அதன் புகழுக்குக் கூடியவரை பங்கம் வராமல் பாதுகாக் கின்ற முறையில் ஆண்டு வந்தான். இவன் ஒரு சுத்த வீரன்; உயர்ந்த லட்சியங்களுடையவன். இவன் போதனைகள்2 என்ற ஒரு நூல் எழுதியிருக்கிறான். அதில் இவன் மனப்பாங்கு நன்கு வெளிப் படுகிறது. ஓரிடத்தில் கூறுகிறான்:- நீ குதிரை சவாரி செய்து கொண்டு போகிறபோதோ, அல்லது யாருடனும் சம்பாஷணை செய்யாமல் சும்மாயிருக்கிற போதோ, வேறு பிரார்த்தனை செய்ய உனக்குத் தெரியாவிட்டால் கடவுளே! என் மீது கருணை காட்டு என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிரு. வீணான எண்ண மெல்லாம் எண்ணிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் இந்தப் பிரார்த்தனையைச் செய்து கொண்டிருப்பது நல்லது. எல்லா வற்றையும் விட ஏழை எளியவர்களை மறவாதே; உன் சக்திக்குத் தகுந்தபடி அவர்களைப் போஷித்துக் காப்பாற்று. அநாதைகளுக்கு உதவிசெய்; கைம் பெண்களைக் காப்பாற்று; வலியார், மெலியாரை அடக்கி ஒடுக்குவதற்கு இடங்கொடாதே.

இந்தப் போதனைகளை, தன் பிள்ளைகளுக்கு இவன் எழுதி வைத்துப் போனதாகச் சொல்லப்படுகிறது. இதில் இவனுடைய சுய சரித்திரமும், மிகுந்த இலக்கியச் சுவையோடு இடம் பெற்றிருக்கிறது. தான் ஓயாது உழைப்பவனென்றும். தன்னை எதிர்த்த சத்துருக்களின் மீது எண்பத்து மூன்று தடவை படையெடுத்ததாகவும் அநேக காட்டு மிருகங்களை எதிர்த்துப் போராடியதாகவும் இவன் இதில் கூறிக்கொள்கிறான்.

இந்தச் சுய திருப்தியோடு இவன் கண் மூடிக்கொண்டிருக்க லாகாதா? தன் மூதாதையர்களைப் போலவே, ராஜ்யத்தைத் தன் ஏழு பிள்ளை களுக்கும் பிரித்துக் கொடுத்து விட்டுப் போனான். கேட்க வேண்டுமா ராஜ்யத்தின் சீரழிவுக்கு? கீவ் நகரத்தின் முக்கியத்துவமே போய்விட்டது. ஆனால் இதனை ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டு மென்ற போட்டியோ குறையவில்லை. போட்டியிலே வெற்றி பெற முடியாதவர், இதனைப் போலவே வேறு நகரங்களை நிர்மாணம் செய்தனர்; இதன் மூலம் கீவ் நகரத்தின் செல்வாக்கைக் குறைக்க முயன்றனர்; மற்றும் இந்த நகரத்தை அடியோடு அழித்துவிடவும் முற்பட்டனர். மேலே சொல்லப் பெற்ற வ்ளாடிமீர் மோனோ மாக்கின் பேரனே 1169-ஆம் வருஷம் இந்த நகரத்தை நிர்மூலமாக்கி விட்டான். இதைப் பின்னர் கவனிப்போம்.


II. மாக்கோ ராஜ்யம்

1. கிழக்கிலும் மேற்கிலும்
கீவ் ராஜ்யத்தின் புகழ் மங்க மங்க, அங்கு வாழ்க்கை நடத்துவது மிகவும் கடினமாகிவிட்டது. அங்கே வசித்த ஜனங்களும், அந்த ராஜ்யத் திற்காகப் போட்டிபோட்ட அரச பரம்பரையினரும், கிழக்குப் பக்கமாகவும் மேற்குப் பக்கமாகவும் சென்று குடியேறத் தொடங்கினர். கிழக்குப் பக்கமாகச் சென்று குடியேறியவர்கள், நாளாவட்டத்தில் முக்கியத்துவம் பெற்றார்கள். இவர்களைத்தான், இன்றைய ருஷ்யா வின் ஆதி நிர்மாண கர்த்தர்கள் என்று சொல்லவேண்டும். ருஷ்ய சரித்திரம் இவர்களைப் பெரிய ருஷ்யர்கள்1 என்று அழைக்கிறது. ருஷ்யாவின் இன்றைய ஜனத்தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்கள் இவர்களே. இவர்கள் பேசுகிற பாஷைதான் இப்பொழுது அரசாங்க பாஷையாக இருக்கிறது.

கிழக்குப் பக்கமாகச் சென்றவர்கள், வால்கா2 நதி ஓடுகின்ற பிரதேசங்களில் குடியேறினார்கள். ருஷ்ய சரித்திரத்தின் பிறப்பிடம் நீப்பர் நதிக்கரையென்றால், அது வளர்ந்த இடம் வால்கா நதிக்கரை யென்று சொல்ல வேண்டும். இங்குக் குடியேறியவர்கள், பழமையிலே வெறுப் படைந்து புதுமையிலே மோகங்கொண்டவர்கள்; அதாவது தலைமுறை தலைமுறையாக ஒரே இடத்தில் வசித்து வந்த காரணத் தினால் அந்த இடத்தின்மீது ஒருவித வெறுப்பு ஏற்பட்டு, எங்கேனும் ஒரு புதிய இடத்திற்குச் செல்லமாட்டோமா என்ற ஆவல் கொண்டவர்கள். அந்த ஆவல் மிகுதியினால்தான் வால்கா நதிப் பிரதேசத்தில் குடியேறினர்கள் என்று சொல்ல முடியாது; சுயேச்சை யாக வாழ்வதிலே விருப்பங் கொண்டவர்கள். அந்த விருப்பங் காரணமாகவே இவர்கள் கீவ் ராஜ்யத்தைவிட்டு வெளியேறினார்கள் என்று சொல்ல வேண்டும்.

ஏனென்றால் கீவ் ராஜ்யத்தில் ஜனவிருப்பத்தைத் தழுவிய ஆட்சி நடைபெற்று வந்தது; அரசபதவியிலே வீற்றிருக்கிறவர்கள் சுயேச்சையாக ஒன்றுஞ் செய்ய முடியாது. ஜனங்கள், தேவையான போது ஒரு பொதுச் சபையாகக்கூடி, அரச பீடத்திலே அமர்ந்திருக் கிறவன், தங்களுக்குப் பிடித்தமில்லாதவனாகிவிட்டால் அவனை அந்தப் பீடத்திலிருந்து கீழே இறங்கும்படி செய்துவிடுவார்கள்; பிடித்தமானவனை அந்த ஆசனத்தில் ஏற்றிவிடுவார்கள். இப்படிப் பல சந்தர்ப்பங்களில் நடைபெற்றிருக்கிறது. வெளிச் சத்துருக்களிட மிருந்து ஜனங்களைக் காப்பாற்றுவதற்காக அரசன் இருக்கிறானே தவிர, அவர்களை ஆள்வதற்காக அல்ல என்ற எண்ணமே கீவ் ராஜ்ய வாசிகளிடம் குடி கொண்டிருந்தது. அரசபதவியின் திரத் தன்மை யிலும், அதன் தெய்வீக அமிசத்திலும் நம்பிக்கை கொண்டவர் களுக்கு, ஜனங்களின் இந்த மனப்போக்கு பிடிக்குமா?

இப்படிப்பட்டவர்களே, அதாவது சுயேச்சை மனப்பான்மை யுடைய அரச பரம்பரையினரே, வால்கா நதிப் பிரதேசத்திற்குச் சென்றார்கள்; இவர்களை அண்டி வாழ்ந்திருந்த பணக்காரர் அல்லது பிரபுக்கள் சிலரும் கூடச் சென்றனர்; சாதாரண ஜனங்களும் கூட்டங் கூட்டமாகப் பின் தொடர்ந்தார்கள். இந்தச் சாதாரண ஜனங்கள் பின் தொடர்ந்ததற்குக் காரணமென்னவென்றால், கீவ் ராஜ்யத்தின் பலவீனத்தை அறிந்த கொள்ளைக் கூட்டத்தினர் பலர் அடிக்கடி அதனைத் தாக்கி வந்தனர். உயிருக்கும் உடைமைக்கும் மதிப்பில்லாமற் போய்விட்டது. நிம்மதியான வாழ்க்கையை நடத்த முடியாதவர்களானார்கள் குடிமக்கள். நிம்மதியான வாழ்க்கையை எதிர்பார்த்தே இவர்கள் மேற்படி அரச பரம்பரையினரைப் பின் தொடர்ந்தார்கள். ஆனால், அடிமை வாழ்க்கையிலே தான் இவர்கள் நிம்மதி காண வேண்டியதாகிவிட்டது.

வால்கா பிரதேசம், வாசத்திற்கும் விவசாயத்திற்கும் தகுதியுடை யதாயிருந்தது. விதீரணமான பூமிகளை, அரச பரம்பரையினர், தங்கள் தங்களுக்கென்று சொந்தமாக்கிக் கொண்டனர்; இவற்றின் சர்வ சுவாதீனமும் தங்களுடையதே என்று பலவகையாலும் ஊர்ஜிதம் செய்து கொண்டனர். விவசாயத்திற்கென்று சில நிலங்களைத் தங்களைப் பின் தொடர்ந்த சாதாரண ஜனங்களுக்கு விட்டுக் கொடுத்தனர். இங்ஙனம் சிறு சிறு ராஜ்யங்கள் பல தோன்றின.

அரச பரம்பரையினரை அண்டி வாழ்ந்திருந்தவர் பலர், அவர் களைப் பின் தொடர்ந்தார்கள் என்று மேலே சொன்னோமே இவர்கள் யாரென்றால், ஆதியில் லாவியர்கள், தங்கள் பாதுகாப்புக்கென்று வாரஞ்சியர்கள் சிலரை நியமித்துக் கொண்டார்களல்லவா, அவர் களிடம் சேவை புரிந்த போர் வீரர்களின் பரம்பரையினர்; கீவ் ராஜ்யத்திலேயே திரமாகத் தங்கிவிட்ட வர்கள். இவர்கள், அரச பரம்பரையினருக்குள் நடைபெற்ற பூசல்களில் பங்கு கொண்டும், வியாபாரஞ் செய்தும் நாளா வட்டத்தில் பணக்காரர் களானார்கள். பணமிருக்கிறவர்கள் பிரபுக்கள் தானே? இவர்கள் போயார்கள்1 என்று அழைக்கப்பட்டார்கள். அதாவது பிரபுக்கள் என்று பொருள். இவர்கள் அரசர்களிடத்திலிருந்து சர்வ மானியம் பெற்று, அதற்குப் பிரதி நிதியாக, அவர்களுக்குத் தேவையான போது யுத்த சேவை செய்யக் கடமைப்பட்டவர்கள். ஆனால் இவர்கள் அப்படி நிரந்தர மாக ஓர் அரசனுக்கும் கடமைப்பட்டிருக்கவில்லை. இஷ்டப்பட்ட வருக்குத் தங்கள் சேவையை அளித்து வந்தார்கள். பதினைந்தாவது நூற்றாண்டுக்குப் பிறகுதான், இவர்கள், யாரிடமிருந்து சர்வ மானியம் பெற்றார்களோ அவர் களுக்கு மட்டும் உடன்பட்டிருக்க வேண்டு மென்ற கட்டாயம் ஏற்பட்டது.

2. முடியாட்சியின் தொடக்கம்
சிறு சிறு ராஜ்யங்கள் தோன்றின என்று மேலே சொன் னோமல்லவா, இவையுள் முக்கியமானது சூடால்2 என்னும் ராஜ்யம். இதனை முன்னுக்குக் கொண்டு வந்தவன் ஆண்ட்ரூ போகோலியுபிக்கி3. இவன், ரூரிக் அரச பரம்பரையினருள் மூத்தவன் என்ற முறையில் கீவ் ராஜ்யத்திற்குரியவனாயிருந்த போதிலும், - அதாவது வ்ளாடிமீர் மோனோமாக்கின் பேரன் - அந்த கீவ் ராஜ்யத்தை ஓங்கவிடாமல் செய் வதிலும், தான் புதிதாக தாபித்த ராஜ்யத்தை அபிவிருத்தி செய்வதிலும் அதிக சிரத்தை கொண்டான். தன் ராஜ்யத்தின் தலைநகருக்குத் தன் முன்னோர்களின் பெயரையே வைத்தான். அதாவது வ்ளாடிமீர் என்பது சூடால் ராஜ்யத்தின் தலைநகரமாயிற்று. கீவ் நகரத்திற்கு ஏற்பட்டிருந்த பெருமை யாவும் இந்த வ்ளாடிமீர் நகரத்திற்கு ஏற்படவேண்டுமென்று இவன் பல வகையிலும் முயன்றான். இந்த முயற்சியில் ஒன்றாகவே கீவ் நகரத்தை 1169-ஆம் வருஷம் நிர்மூலப்படுத்தினான். அந்த நகரத்திலிருந்த புராதனச் சின்னங்கள் பலவற்றை வ்ளாடிமீர் நகரத்திற்கு மாற்றிக் கொண்டான். கிறிதுவ தேவாலயங்கள் பலவற்றை இங்குக் கட்டினான். இங்ஙனமே தன் ராஜ்ய எல்லைக்குள் வேறு பல புதிய நகரங்களையும் நிர்மாணஞ் செய்தான். ருஷ்யாவுக்குள் தானே முதன்மையான அரசனாகவும், தன்னுடைய சூடால் ராஜ்யமே முதன்மையான ராஜ்யமாகவும் இருக்கவேண்டுமென்பது இவன் ஆசை. இந்த ஆசையை இவன், தன் ஆயுட் காலத்திலேயே ஒருவாறு நிறைவேற்றிக் கொண்டான் என்று சொல்ல வேண்டும்.

ஆண்ட்ரூ, சர்வாதிகார மனப்பான்மை கொண்டவன். இதனால் அரசுரிமை சம்பந்தமாக கீவ் ராஜ்யத்தில் அனுசரிக்கப்பட்டு வந்த முறை களனைத்தையும் அடியோடு மாற்றியமைத்தான். ஜன விருப்பத்தைத் தழுவிய ஆட்சியை இவன் விரும்பவில்லை. ராஜ் யத்தின் சகல அதிகாரங்களும் அரசனைச் சேர்ந்தவையே, அவற்றில் ஜனங்களுக்கு எந்த விதமான பாத்தியமுமில்லை என்ற கொள்கை யையும், ராஜ்யம் முழுவதும், அதிலுள்ள நிலபுலங்கள் உள்பட யாவும், அரசனைச் சேர்ந்ததே, அதனைப்பற்றிய உரிமை அரசனு டைய பரம்பரை உரிமையாகும் என்ற கொள்கையையும் அனுஷ் டானத்திற்குக் கொண்டு வந்தான். தவிர, தன் முன்னோர்கள் செய்து வந்ததைப்போல், ராஜ்யத்தைத் தன் சந்ததியினருக்குப் பங்கு போட்டுக் கொடுக்க இவன் மறுத்துவிட்டான். மூத்த மகனே பட்டத்திற்கு வரவேண்டுமென்று ஏற்பாடு செய்தான். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஆண்ட்ரூதான் ருஷ்யாவில் முதன் முதலாக முடியாட்சிக் கொள்கையை தாபித்தவன்.

ஆனால் இவனிடத்தில் ஒரு பெருங்குறை இருந்தது. எல்லோ ரையும் அடக்கியாளப் பார்த்தான். தன்னுடைய மேலான அந்ததை எல்லோரும், அதாவது புதிதாக ராஜ்யங்கள் கோலிக்கொண்ட மற்ற அரசர் களும் அங்கீகரிக்க வேண்டுமென்று விரும்பினான். அங்கீ கரிக்க மறுத்தவர்கள் மீது போர் தொடுத்தான். மற்றும் போயார்கள் விஷயத்தில் இவன் மிகவும் கடுமையாக நடந்துகொண்டான். அவர்களில் பலரைத் தேசப்பிரஷ்டம் செய்தான்; ஒருவனைக் கொலையும் செய்துவிட்டான். கொலை செய்யப்பட்டவனுடைய உறவினர் ஆத்திரமடைந்து ஆண்ட்ரூவைக் கொன்றுவிட்டார்கள். 1157 - ஆம் ஆண்டு மிகுந்த பிரதாபத்தோடு ஆரம்பித்த இவனுடைய ஆட்சியானது 1174 - ஆம் வருஷம் மிகுந்த பரிதாபகரமாக முடிந்தது.

3. பூசல்களும் பிரிவினைகளும்
இவனுக்குனுப் பின் வந்தர்வர்கள் இவன் வழியைப் பின்பற்ற வில்லை. தகப்பனுக்குப் பின் மூத்த மகனுக்குத்தான் அரசுரிமை யுண்டு என்ற முறையைக் கைவிட்டுவிட்டு, பழைய சம்பிரதாயப் பிரகாரம், எல்லாப் பிள்ளைகளுக்கும் ராஜ்யத்தில் பங்குண்டு என்ற முறையைக் கடைப்பிடிக்க லானார்கள். இதே பிரகாரம் வேறு பல ராஜ்யங்கள் தோன்றின வென்று சொன்னோமல்லவா, அந்த ராஜ்யங் களைச் சேர்ந்தவர்களும் செய்யலானார்கள். ஒன்றாக உருக்கொள்ள வேண்டிய ருஷ்யா, பலவாக உடைந்தது. ஒவ்வொரு பிரதேசத் திற்கும் ஒவ்வோர் அரசன். இவர்களுக்குள்ளே இடைவிடாத போராட்டம். யாரலாவ் மன்னன் காலத்திற்குப் பிறகு தொடங்கிய இந்தப் போராட்டம், சுமார் இருநூறு வருஷ காலம் நடைபெற்று வந்தது. இந்த இரண்டு நூற்ண்டுகளும் ருஷ்ய சரித்திரித்தில் மிகவும் இருளடர்ந்த பாகம். உருப் படியான காரியம் ஒன்றும் நிகழவில்லை. இந்தக் காலத்தில் ருஷ்யாவில் மொத்தம் அறுபத்து நான்கு தனித் தனி ராஜ்யங்கள் இருந்தன. இவற்றை இருநூற்று தொண்ணூற்று மூன்று பேர் ஆண்டார்கள். இவர்களுக்குள் நிகழ்ந்த பூசல்களை எண்ணி முடியாது.

இந்தப் பூசல்களினால் ஏற்பட்ட உயிர்ச்சேதமும் பொருட் சேதமும் ஒருபுற மிருக்கட்டும். நிரபராதிகளான எத்தனைபேர் அடிமைகளானார்கள்? வெற்றி கொண்டவர்கள், தோல்வியடைந் தவர்களை அடிமை கொண்டார்கள். இந்த அடிமைகளை விவ சாயத்திற்கும் மற்றச் சில்லரைத் தொழில்களுக்கும் உபயோகப் படுத்திக் கொண்டார்கள். மிகுதிப்பட்டவர் களை அந்நிய நாடு களுக்கு அடிமைகளாக ஏற்றுமதி செய்து அதன் மூலம் நல்ல பணஞ் சம்பாதித்தார்கள்.

தவிர, ராஜ்யம் பல பிரிவுகளாக்கப்பட்டதன் விளைவாக, அரச பரம்பரையினரிற் பலர், செலவுக்குத் தக்க வருமானமில்லாதவர்களா னார்கள். அவர்களுக்குச் சொந்தமாயிருந்த நிலங்களும் பல துண்டு களாக் கப்பட்டன. இங்ஙனமே, விவசாயம் செய்துவந்தவர்களுடைய நிலங்களும் துண்டாடப்பட்டன. வருமானமில்லாதவர்கள் வரு மானமுள்ளவர் களிடமும், குறைவான நிலமுடையவர்கள் அதிக மான நிலமுடையவர் களிடமும் தஞ்சம் புகவேண்டியதாயிற்று. பொருளாதாரத் துறையில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டன. நிலச் சுவான்தார்களென்றும், அந்த நிலச் சுவான்தார்களுக்காக உழைக்க வேண்டியவர்களென்றும் முக்கியமான இரு பிரிவினர் தோன்றி னார்கள். நிலச் சுவான்தார்களுக்குத் துணையா யிருந்தார்கள் பாதிரிமார்கள். இதன் பலனாக இவர்களும் ஏராளமான சொத்துக் களுக்கு அதிபதிகளானார்கள்.

4. மங்கோலியர் படையெடுப்பு
பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ருஷ்யா, சிதில மடைந்துபோன வீடாகக் காட்சியளித்தது. ஜனங்கள் சுயநலம் மிகுந்தவர் களாய், பொதுமை உணர்ச்சியற்றவர்களாய் இருந்தார்கள் நாட்டுப் பற்று என்பது இம்மியும் காணப்படவில்லை. கேட்க வேண்டுமா அந்நியர்களின் படையெடுப்புக்கு? இந்தக் காலத்தில் தான் மங்கோலியர்கள் படையெடுத்து வந்தார்கள்.

இந்த மங்கோலியர்கள் ஒரு முரட்டு ஜாதியினர். கொள்ளை யடிப்பதும் கொலை செய்வதும் இவர்களுக்குச் சர்வ சாதாரணம்; நாடோடி வாழ்க்கையில் அதிக விருப்பம். இப்படிபட்டவர்களை டெமுஜின்1 என்பவன் ஒன்று படுத்தினான்; சில கட்டுப்பாடுகளுக் குட்படும்படி செய்தான். அவர்களும் இவனைத் தலைவனாக ஏற்றுக் கொண்டு ஜெங்கிகான்2 என்று போற்றி, பயபக்தியுடன் பின்பற்றி வந்தார்கள். ஜெங்கிகான் என்பது ராஜாதி ராஜன் என்பது போல.

இந்த ஜெங்கிகானுடைய தலைமையில் மங்கோலியர்கள், ஆசியாவின் ஏறக்குறைய பாதி பாகத்தை ஆக்கிரமித்துக் கொண் டார்கள். அந்த ஆக்கிரமிப்பில் சுமார் ஐம்பது லட்சம் பேர் மடிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

இவர்கள் 1223-ஆம் வருஷம் ருஷ்யாவின் தெற்குப் பகுதியின் மீது படையெடுத்து வந்தார்கள். ருஷ்யர்கள் அனைவரும் ஒன்று பட்டு இவர்களை எதிர்த்து நின்றார்கள். பயனில்லை. தோல்வியடைந்தார்கள். ஆனால் மங் கோலியர்கள், தங்கள் வெற்றியை திரப் படுத்திக் கொள்ளாமல் திரும்பிப் போய் விட்டார்கள்.

இவர்கள் இப்படித் திரும்பிப் போனதை ருஷ்யர்கள், தங்களுக்குச் சாத கமாக உபயோகித்துக் கொண்டு ஒற்று மைப்பட்டிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. அதற்குப் பதிலாக அந்நிய ஆதிக்கத்துக்கு அடிமைப்பட்டிருக்க, தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அப்படித்தான் இருந்தன இவர்களுடைய இந்தக் காலத்து நடவடிக்கைகள். பொதுச் சத்துரு ஒருவன் தோன்றியிருக் கிறான் என்று தெரிந்ததும், இவர்கள், தங்கள் பழைய பகைமை களையெல்லாம் மறந்து ஒன்று பட்டிருக்க வேண்டாமா? அதை இவர்கள் செய்யவில்லை. அதற்குப் பதிலாக இவர்களிடையே வேற்றுமைகள் அதிகரித்து வந்தன. பரபர உதவி யென்பது சிறிதும் இல்லாமற் போய்விட்டது.

மங்கோலியர்கள் பதினைந்து வருஷங் கழித்து, 1238 - ஆம் வருஷம், பட்டுகான்1 என்பவன் தலைமையில் மறுபடியும் படை யெடுத்து வந்தார்கள். ருஷ்யாவின் மத்தியப் பகுதியிலிருந்த அநேக நகரங்கள் இவர்களால் அழிக்கப்பட்டன. இப்படி அழிபட்ட நகரங்களுள் கீவ் நகரமும் ஒன்று. ஆண்ட்ரு மன்னன் அழித்தது போக மிஞ்சியிருந்ததை இவர்கள் 1240-ஆம் வருஷம்அழித்து விட்டார்கள். இந்த அழிவுக்குப் பிறகு இந்நகரத்தில் சுமார் இருநூறு வீடுகளும் ஒரு சில மக்களுமே இருந்தனர் என்று நேரில் பார்வை யிட்ட ஒரு பாதிரி கூறுகிறான். சுமார் இரண்டு வருஷகாலம் மங் கோலியர்களின் படையெடுப்பினால் ருஷ்ய மக்கள் பல அவதி களுக்குள்ளானார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் யுத்த கைதி களாகப் பிடிக்கப்பட்டு வெளிநாடுகளில் அடிமைகளாக விற்கப் பட்டார்கள். ருஷ்யாவில் இனி ஜனங்களே இல்லையா என்று வெளிநாட்டார் ஆச்சரியத்துடன் கேட்கலானார்கள். மங்கோலி யர்கள், இந்தத் தடவை, பழைய மாதிரி திரும்பிப் போய் விட வில்லை. ருஷ்யாவிலேயே திரமாகத் தங்கி ஆதிக்கஞ் செலுத்தத் தீர்மானித்துவிட்டார்கள். 1242-ஆம் ஆண்டு வால்கா நதி, காப்பியன் கடலில்1 வந்து சேருகிற ஓரிடத்தில், தங்கள் தலை நகரத்தை தாபித்துக் கொண்டார்கள். இந்த நகரத்துக்கு ஸரை2 என்று பெயர். சுமார் இருநுறு வருஷத்திற்கதிகமாக இவர்களுடைய ஆதிக்கம் ருஷ்யாவில் நடைபெற்றது.

மங்கோலியர்கள் மிகக் கொடியவர்களாயிருந்தாலும், தங்கள் ஆதிக்கத்தை ஊர்ஜிதம் செய்து கொள்கிற வகையில் மிகவும் சாமர்த்தியமாக நடந்து கொண்டார்கள் ருஷ்யர்களுக்கு அடிமை விஷத்தை வெகு,லாகவமாதப் புகட்டினார்கள்; ஜனங்களுடைய மத விஷயங்களில் தலையிடவில்லை; மத ஸ்தாபனங்களுக்கு அநேக சலுகைகள் காட்டினார்கள்.; பாதிரி மார்களை கௌரவித்தார்கள். ஆனால் ஜனங்கள் மீது தலைவரி விதித்தார்கள்; இந்த ஜனங்கள் மீது ஆதிக்கஞ்செலுத்தி வந்த சிற்றரசர்கள் அத்தனை பேரையும், தங்கள் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளும்படி செய்து விட்டார்கள். அந்தச் சிற்றரசர்களும், மங்கோலியர் களுக்கு ஒழுங்காகக் கப்பஞ் செலுத்து வதிலும், அவர்கள் கேட்கிறபோது படைகள் அனுப்புவதிலும் பெருமையடைந்தார்கள். மங்கோலியர் களுடைய தயவைச் சம் பாதித்துக் கொள்ள ருஷ்யச் சிற்றரசர்களுக் குள்ளே எவ்வளவு போட்டி! இதற்காக இவர்களுக்குள்ளேயே எவ்வளவு பொறாமை! ஒருவரை யொருவர் காட்டிக்கொடுப்பதிலும் துரோகஞ் செய்வதிலும் இவர்கள் கைதேர்ந்தவர்களானார்கள். அடிமை வாழ்க்கை, மனிதர்களை எத்தனை இழி நிலைக்கு இழுத்துக் கொண்டு போய் விடுகிறது! சுருக்கமாகச் சொல்லுமிடத்து, மங்கோலியர்களின் இருநூறு வருஷத்திற்கு மேற் பட்ட ஆதிக்க காலத்தில், ருஷ்யர்கள், தன் மதிப்பு உணர்ச்சி என்பதை அடியோடு இழந்துவிட்டார்கள்; இவர்களுடைய தேசப்பற்று, இன உணர்ச்சி எல்லாம் எங்கோ போய் ஒளிந்து கொண்டன; அன்றாட வாழ்க்கையை அசிரத்தையுடன் நடத்தி வந்தார்கள்.

இந்த அசிரத்தையிலிருந்து இவர்களை விடுதலை செய்து, சுதந்திர வாழ்க்கையில் பற்றுண்டாகுமாறு செய்தவன் டிமிட்ரி3 என்பவன். இவன்தான் முதன் முதலில் மங்கோலியர்களைத் தைரிய மாக எதிர்த்தவன்; அவர்கள் மீது வெற்றியும் கண்டவன். மங்கோலியர் களைப் புறமுதுகிடச் செய்ய முடியாது என்ற ஒரு பிரமை ருஷ்யர் களுக்கு இருந்து வந்தது; அந்த பிரமையை அகற்றியவன் இவனே. இவனைப்பற்றிச் சிறிது தெரிந்து கொள்வது அவசியமாகும்.

5. மாக்கோ வளர்ந்த கதை
இந்த டிமிட்ரி காலத்தில்தான் மாக்கோ1 ராஜ்யம் பிரபல மடைந்தது. ருஷ்யாவில் எத்தனையோ சிறு சிறு ராஜ்யங்கள் இருந்ததைப் போல் இந்த மாக்கோ ராஜ்யமும் ஒன்றாயிருந்தது. இஃதெப்படி ஒரு பெரிய ராஜ்யமாக வளர்ந்தது என்பது ருசிகரமான கதை. ஏனென்றால் இன்று ருஷ்யாவின் தலைநகரமாயிருப்பது மாக்கோ அல்லவா?

ருஷ்ய சரித்திரத்தில் முதன் முதலாக மாக்கோ என்ற பெயரை 1147-ஆம் ஆண்டில் தான் கேள்விப்படுகிறோம். வ்ளாடிமீர் மோனோமாக் என்னும் அரசன், தன் ராஜ்யத்தை ஏழு பிள்ளை களுக்கும் பங்கு போட்டுக் கொடுத்தான் என்று முன்னே சொல்லி யிருக்கிறோமல்லவா, இவர்களுள் ஒருவனான ஜார்ஜ் என்பவனுக்கு சூடால் என்ற பிரதேசம் கிடைத்தது. இந்தப் பிரதேசத்தை, ஒரு ராஜ்யமாக முன்னுக்குக் கொண்டு வந்தவன் தான் ஆண்ட்ரூ போகோலியுபிக்கி என்பது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும். மேற்படி ஜார்ஜ் என்பவன், தனது சுகவாச நிமித்தம், மாக்வா2 நதிக் கரையின்மீது ஒரு வீடு நிர்மாணித்துக் கொண்டான். இப்பொழுது க்ரெம்லின்3 அரண்மனை எங்கு இருக்கிறதோ அந்த இடத்தில்தான் இந்த வீடு இருந்தது. இதுதான் பின்னர் ஒரு ராஜ்யமாக வளர்ந்தது.

இங்ஙனம் வளர்ந்ததற்குக் காரணமாயிருந்தவன் அலெக் ஸாந்தர் நெவ்க்கி4 என்பவன். இவன், சூஸ்டால் அரச வமிசத்தைச் சேர்ந்தவன்; நோவ்கோராட், கீவ், வ்ளாடிமீர் ஆகிய ராஜ்யங்களை ஒன்று கட்டி ஆண்டவன்.; ருஷ்யர்களுக்கு விரோதமாக வடக்கே வீடனிலிருந்தும், மேற்கே லிவோனியா5 என்ற பிரதேசத்திலி ருந்தும் வந்த படையெடுப்புகளை எதிர்த்து வெற்றி கொண்டவன். இவனுடைய வெற்றிப் பிரதாபங்கள் அநேக காவியங்களாகப் புனையப்பெற்றிருக்கின்றன. இவனை அமானுஷ்ய சக்தி வாய்ந்தவன் என்று ருஷ்யர்கள் போற்றி வந்தார்கள்.

இப்படிப்பட்ட திறமைசாலிகூட மங்கோலியர்களுக்குத் தலை வணங்கிக் கொடுக்கும்படியாயிற்று. அவர்களை எதிர்த்து நிற்பதிலே பயனில்லையென்பதை இவன் நன்கு தெரிந்து கொண்டான். ருஷ்யர்கள் அடியோடு அழிந்து போகாதிருக்க வேண்டுமானால், மங்கோலியர்களுக்கு அடங்கி வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை யென்பதை அறிந்து அப்படியே நடந்து கொண்டான்.

இந்த அலெக்ஸாந்தர், தன் கடைசி மகனான டேனியல்1 என்ப வனுக்கு, மாக்கோவையும், அதைச் சுற்றிச் சுமார் ஐந்நூறு சதுர மைல் விதீரணமுள்ள பிரதேசத்தையும் ஒரு தனி ராஜ்யமாக அமைத்துக் கொடுத்தான். இப்படி அமைத்துக் கொடுத்தது 1263 - ஆம் ஆண்டு இதற்குப் பிறகுதான் மாக்கோவின் வளர்பிறை வாழ்வு தொடங்கியது. இதன் சரித்திரந்தான் இனி ருஷ்யாவின் சரித்திரம்.

மாக்கோ அரச பரம்பரையினர், அலெக்ஸாந்தர் நெவ்க்கி காட்டிய வழியைத் திறம்பட பின் பற்றினர். மங்கோலியர்களைப் பலவிதத்திலும் திருப்தி செய்து அதன் மூலம் தங்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொண்டனர்; இவர்களுடைய செல்வமும் பெருகியது; ராஜ்யமும் விதீரண மடைந்தது.

மங்கோலியர்களும், இந்த மாக்கோ அரச பரம் பரையினருக்கு அதிகமான சலுகை காட்டி வந்தார்கள். அப்பொழுதுதானே மற்ற ருஷ்ய அரசர்களுக்கு மாக்கோவியர்களிடத்தில் பொறாமை உண்டாகும்? பகைமை வளரும்? இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தானே எந்த ஓர் அந்நிய ஆதிக்கமும் வலுவடைகிறது?

மங்கோலியர்களிடம் இச்சமாக நடந்துகொண்டதனால் மாக்கோவியர் களுக்கு ஓர் அனுகூலம் ஏற்பட்டது. அதாவது மங்கோலிய ஆதிக்கம் .இவர்களை அதிகமாகப் பாதிக்கவில்லை. ஆனால் இவர்கள் தான் சிறிது காலத்திற்குப் பிறகு டிமிட்ரியின் தலைமையின் கீழ் அந்த ஆதிக்கத்தை எதிர்த்து நின்றார்கள்.

இங்ஙனம் இவர்கள் எதிர்த்து நிற்பதற்கு அனுகூலமாகவே மங்கோலியர்களுடைய நிலைமையும் இருந்தது. அவர்களுக் குள்ளே பல பிரிவினைகள் ஏற்பட்டு விட்டன. தான்றோன்றித் தலைவர்கள் பலர் தோன்றி, வருஷக்கணக்கில் அவர்களுக்குள்ளிருந்த கட்டுப் பாட்டைக் குலைத்துவிட்டனர். இதனை டிமிட்ரி நன்கு அறிந்து கொண்டு விட்டான். இத்தருணம் தப்பினால் வேறு தருணம் வாய்க்காது என்று தீர்மானித்து அவர்களை எதிர்த்தான்.

இந்த டிமிட்ரி, ஒன்பதாவது வயதில் மாக்கோ அரச பீடத்தில் அமர்ந்தான். 1359-ஆம் ஆண்டிலிருந்து 1389-ஆம் ஆண்டு வரை, முப்பது வருஷகாலம் ஆட்சி புரிந்தான். தன் மீது பகைமை பாராட்டி வந்த சிற்றரசர் ஓரிருவரைத் தவிர்த்து மற்றவர் அனை வரையும் மங்கோலியர்களுக்கு விரோதமாக ஒன்று திரட்டினான். மங்கோலியர்கள், ருஷ்யாவில் கிறிதுவ மதத்தை அழித்துவிடத் தீர்மானித்திருக்கிறார்கள் என்ற ஒரு வதந்தி இந்தக் காலத்தில் இவன் காதில் விழுந்தது. ருஷ்ய மக்களை ஒன்றுபடுத்த இதனைச் சிறந்த கருவியாக உபயோகித்துக் கொண்டான். பாதிரிமார் களுடைய பூரண ஆதரவும் இவனுக்குக் கிடைத்தது.

6. தோல்வி கண்ட மங்கோலியர்
இந்தப் பக்க பலங்களுடன் டிமிட்ரி 1380-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எட்டாந்தேதி, டான்1 நதிக்கரையின்மீது குலிக் கோவா2 என்னுமிடத்தில் மங்கோலியர்களைச் சந்தித்தான். போர் முனை, பத்து மைல் நீளமுடையதாயிருந்ததென்றும், இரு பக்கத் திலும் ஒரே ஜன சமுத்திரமாயிருந்ததென்றும், இத்தகைய பெரும் போரில் ருஷ்யர்கள் இதற்கு முன்னர் ஈடுபட்டதில்லை யென்றும் ருஷ்ய சரித்திராசிரியர்கள் இந்த யுத்தத்தைப் பற்றி வருணித்துக் கொண்டு போகிறார்கள். கடைசியாக ருஷ்யர்களுக்கு வெற்றி கிடைத்தது. ஆனால் இந்த வெற்றியினால் மங்கோலியர்களின் ஆதிக்கம் ஓழிந்துவிடவில்லை; அடுத்த நூறு வருஷம் வரை இருந்து கொண்டு தானிருந்தது.

டான் நதிக்கரை யுத்தத்தில், மங்கோலியர்கள் தோல்வியுற்றுத் திரும்பிப்போய்விட்டார்களாயினும், இரண்டு வருஷங்கழித்து மீண்டும் மாக்கோவை நோக்கி வந்தார்கள். டிமிட்ரி அப்பொழுது அங்கு இல்லை. நகரத்தின் பாதுகாப்பைப் பிரதம பாதிரியிடம் ஒப்பு வித்துவிட்டு வேறு அலுவலாகச் சென்றிருந்தான். அந்தப் பாதிரியோ, மங்கோலியர்கள் வந்து கொண்டிருக்கிறார்களென்று கேள்விப் பட்டதும் ஊரை விட்டே ஓடிப்போய்விட்டான். மங்கோலியர்கள் வந்தார்கள்; சூறையாடினார்கள்; ஆயிரக்கணக்கில் மக்களைக் கொன்று குவித்தார்கள்; வீடு வாசல்களை எரிக்கவிட்டு வேடிக்கை பார்த்தார்கள்; வெற்றியடைந்ததாகத் திருப்தி கொண்டு திரும்பிப் போய்விட்டார்கள்.

டிமிட்ரி வந்து பார்த்தான். குவிந்து கிடக்கும் பிணங்களை அப்புறப்படுத்துவதற்குக்கூட ஆட்களில்லை. பிரதம பாதிரியைக் கடிந்து கொண்டான். அவனை விலக்கிவிட்டு, வேறோருவனை அவன் தானத்தில் நியமித்தான். மத விஷயங்களில் ஓர் அரசன் தலையிட்டது ருஷ்ய சரித்திரத்தில் இதுதான் முதல் தடவை. மாக் கோவைப் பழைய நிலைமைக்குக் கொண்டுவர அரும்பாடு பட்டான் டிமிட்ரி. ஆனால் இதற்காக இவன் ஒழுங்கற்ற முறை களைக் கையாண்டான். அக்கம் பக்கத்திலுள்ள ராஜ்யங்களைப் பய முறுத்தி அவைகளிடமிருந்து திறைப்பணம் வசூலித்து மாக்கோ பொக்கிஷத்தை நிரப்பினான். இங்ஙனம் இவன் நெறித் தவறிச் சில சமயங்களில் நடந்தானெனினும், இவனைச் சிறந்த ராஜதந்திரி யென்று இவனுடைய சமகாலத்தவர் கருதி இவனிடம் மரியாதை செலுத்தினார்கள். டான் நதிக்கரையின் மீது நடைபெற்ற போரில் இவன் வெற்றி கண்டதால், டிமிட்ரி டான்க்காய்1 என்று அழைத்து இவனைக் கௌரவப் படுத்தினர் இவனுடைய பிற்காலத்தவர்.

டிமிட்ரிக்குப் பின்னர் பட்டத்திற்கு வந்த முதலாவது பேசில்2 என்பவனும் இரண்டாவது பேசில்3 என்பனும் சாதாரணமானவர் களே. மாக்கோ ராஜ்யத்தைச் சிதற விடாமல் கட்டிக் காப்பாற்றி வந்தார்கள். அதுதான் இவர் களுடைய ஆட்சியின் விசேஷம்.

இவர்களுக்குப் பிறகு மூன்றாவது ஐவன்4 என்பவன் பட்டத் திற்கு வந்தான். இவன் இரண்டாவது பேசிலின் மகன். நாற்பத்து மூன்று வருஷகாலம் ஆண்டான். ருஷ்யாவின் எல்லையும் ருஷ்யா வின் கீர்த்தியும் இவன் காலத்தில் வளர்ந்தன. இவனை மகா ஐவன்5 என்று ருஷ்ய சரித்திரம் அழைக்கிறது. இந்த மகா அரசனைப்பற்றிச் சிறிதள வேனும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசிய மில்லையா?

ஐவனின் ஆட்சி ஆரம்பிக்கிற காலத்தில் மாக்கோ ராஜ்யம், ருஷ்யாவிலுள்ள மற்ற ராஜ்யங்களைப்போல் ஒன் றாயிருந்தது. மாக்கோ ராஜ்யத்தைக் காட்டிலும் வி தீரணத்திலும் செல் வாக்கிலும் மேலோங்கி நின்ற ராஜ்யங்கள் இருந்தன. உதாரணமாக, மாக்கோவுக்கு வடக்கிலும் வட மேற்கிலும் நோவ்கோராட் ராஜ்யம் இருந்தது. மங்கோலியர்களின் திருஷ்டி இதன்மீது அதிகமாக விழவில்லை. இதனால் கட்டுக் கோப்புள்ள ஒரு ராஜ்யமாக இது வளர்ந்தது. சாதாரணமாக ருஷ்யர்கள் பேசிக் கொள்வார்கள், கடவுளையும், மிகப் பெரிய நோவ்கோராட் ராஜ்யத்தையும் யார் எதிர்த்துக் போராட முடியும் என்று. நோவ் கோராட்டின் சக்தியைப்பற்றி அவ்வளவு பயம் இருந்தது ஜனங்களுக்கு.

மாக்கோவிற்குத் தெற்கிலும் தென்மேற்கிலும் லித்துனியா1 ராஜ்யம் இருந்தது. போலந்தும்2 இதனோடு சேர்ந்து கொண் டிருந்தது. இவையிரண்டும் சக்தி வாய்ந்த ராஜ்யங்களாக இருந்தன. சிறப்பாக போலந்து, தனக்கு மேற்கிலுள்ள ஜெர்மனி முதலிய நாடு களுடன் தொடர்பு கொண்டு அதன் மூலம் பெருமையடைந் திருந்தது.

இவை தவிர, ட்வேர் என்ன, ரியாஜான் என்ன, க்கோவ் என்ன,3 இப்படிச் சிறு சிறு ராஜ்யங்கள் சுயேச்சையுடன் இருந்தன. தென்கிழக்கில் மங்கோலியர்களுடைய ஆதிபத்தியத்திற்குட்பட்ட சிறு பிரதேசங்கள் வேறே இருந்தன.

இவைகளுக்கு மத்தியில் மாக்கோ ராஜ்யம் தலை தூக்கிக் கொண்டிருந்ததே ஆச்சரியம். டிமிட்ரி காலத்தி லிருந்துதான் இதற்கு ஒரு முக்கியத்துவமும் மகத்துவமும் ஏற்பட்டதென்று சொல்ல வேண்டும். மங்கோலியர்களை எதிர்த்து வெற்றியடைந்தவனல்லவா இந்த டிமிட்ரி?

7. ருஷ்யா ஏகாதிபத்தியமாக உருக்கொள்கிறது
ஐவன், அரசு கட்டில் ஏறிய சில ஆண்டுகளுக்குள் மேற் சொன்ன எல்லா ராஜ்யங்களையும் தன் ஆதிக்கத்திற்குக் கொண்டு வந்தான்; ஒரே ருஷ்ய ராஜ்யமாக்கினான். இதற்காக இவன் கையாண்ட முறைகள் சில நேர்மையற்றவனவாயிருக்கலாம். இருக் கலாமென்ன, நேர்மைக்கு முரணாகவே இவன் நடந்துக் கொண்டான் என்பது நிச்சயம். ஆனா லும் துண்டு துணுக்குகளாக இருந்த ருஷ்யாவை ஒன்றுபடுத்தின ஒரு மகத்தான காரியத்தை இவன் சாதித்தான் என்று சொல்லி ருஷ்யர்கள் இவனைப் பெருமைப்படுத்துகிறார்கள். ருஷ்யாவில் வசிக்கும் அனைவரும் ருஷ்யர்கள், ஒரே ஜாதியினர், ஒரே இனத்தினர் என்ற உணர்ச்சியை ஊட்டியவன் இவனே. ருஷ்யா, ஓர் ஏகாதி பத்தியமாக உருக்கொண்டது இவன் காலத்தலே தான். ஐரோப்பா வின் மேற்கித்திய நாடுகள், ருஷ்யாவை ஒரு வல்லரசாக மதிக்கத் தொடங்கியதற்கு இவனே முதற்காரணம். அகில ருஷ்யாவுக்கும் ஜார்4 என்று முதன் முதலாகத் தன்னை அழைத்துக் கொண்டவன் இவனே. அப்படி அழைத்துக் கொண்ட தற்குப் பொருத்தமாகவே இவன் நடந்தும் கொண்டான். ஒரு சமயம், ஜெர்மனியின் அரசன், இவனுக்கு அரசன் என்ற பட்டத்தை வழங்க விரும்புவதாகத் தெரி வித்தான். அதனை மறுத்துவிட்டான் இவன் பெருந் தன்மையோடு. தெரிவிக்கிறான் அவனுக்குப் பதில்: - கடவுளின் திருவருளால் நமது நாட்டின் சக்ரவர்த்தியாக ஆரம்பத்திலிருந்து நாம் இருந்து வருகிறோம். கடவுளிடத்தி லிருந்து இந்தப் பொறுப் பைப் பெற்று வகித்து வரு கிறோம்.

இங்ஙனம் அகில் ருஷ்யாவையும் ஒன்று படுத்தி மாக்கோவை அதன் தலைநகரமாக் கினான். இவன் காலத்தில், மற்ற இடங்களில் இருந்த போயார்கள் என்ற பெரிய தனக்காரர்கள் மாக் கோவில் வந்து குடியேறி னார்கள். மாக்கோவில் இப்பொழுது க்ரெம்லின் அரண்மனை இருக்கிற தல்லவா, அதன் பெரும் பாகம் இவன் காலத்தில் தான் கட்டப்பெற்றது; சில தொழிற் சாலைகளும் தோன்றின.

8. அரசனை ஆண்ட அரசி
ஐவன், கிரேக்க அரச பரம்பரையைச் சேர்ந்த ஸோபியா1 என்பவளை இரண்டாந்தாரமாக - முதல் மனைவி இறந்துவிட்ட பிறகுதான் - விவாகஞ் செய்து கொண்டான். இந்த ஸோபியா, மகா கெட்டிக்காரி; ஐவனை வெகு சீக்கிரத்தில் தன் வசப்படுத்திக் கொண்டு விட்டாள். இவள் வருகைக்குப் பிறகு மாக்கோ அரசவையில் கிரேக்க பழக்க வழக்கங்கள் புகுந்தன. ஆதானிகர்களில் பலர் கிரேக்கர் களாக இருந்தனர். இவர்களுடைய செல்வாக்கே மேலோங்கி நின்றது. இதை, பரம்பரை உரிமை கொண்டாடி வந்த போயார்கள் விரும்ப வில்லை; ஆனால் தங்கள் வெறுப்பை வெளியில் காட்டிக் கொள்ள வும் அஞ்சினார்கள்.

ஸோபியா, ஐவனிடம் தனக்கிருந்த செல்வாக்கை நல்ல விதமாகவே உபயோகப்படுத்தினாள் என்று சொல்ல வேண்டும். மங்கோலியர்களின் ஆதிக்கம் பெயரளவுக்கேனும் மாக்கோ ராஜ்யத்தின்மீது இருந்து வந்தது. அதை அடியோடு உதறித்தள்ளி விடும்படி ஐவனைத் தூண்டியவள் ஸோபியா தான். தன் கணவன், வேறோர் ஆதிக்கத்திற்குட்பட்டிருப்பதை இவள் சிறிதுகூட விரும்ப வில்லை. ஏனென்றால் கிரேக்க சாம்ராஜ்யத்தின் கடைசி சக்ர வர்த்தியினுடைய வாரிசு இவள்1. தன் கணவனை ஒரு சக்ரவர்த்தி யாகக் காண வேண்டுமென்ற ஆசை இருக்குமல்லவா இவளுக்கு? இவள் அளித்த உற்சாகத்தின் பேரில் ஐவன், மங்கோலியர் களை எதிர்க்கத் துணிந்தான். 1480-ஆம் ஆண்டும் மங்கோலியப் படை களும் ருஷ்யப்படைகளும் ஒரு நதியின் இரு கரைகளிலும் முகாம் போட்டன. மங்கோலியப் படைகள் முன்னாடி தாக்குமென்று ருஷ்யப் படைகளும், ருஷ்யப் படைகள் முன்னாடி தாக்குமென்று மங்கோலியப் படைகளும், இப்படி இருதரத்துப் படைகளும் வாரக் கணக்கில் காத்துக் கொண்டிருந்தன. திடீரென்று ஒருநாள், இரு தரத்துப் படைகளுக்கும் ஏதோ பீதி ஏற்பட்டு விட்டது வந்த வழியே திரும்பிப் போய் விட்டன. இரண்டும் கை கலக்கவேயில்லை. ருஷ்ய சரித்திரத்திலேயே ஓர் ஆச்சரியமான சம்பவம் இது. இது முதற் கொண்டு மங்கோலியர்களின் ஆதிக்கம் ருஷ்யாவினின்று அடியோடு அகன்றது. ஐவன் அதிருஷ்டசாலி. ஒரு பொட்டு ரத்தம் சிந்தாமலும் ஒரு குண்டு செலவழிக்காமலும் மங்கோலியர்களை விரட்டி விட்டா னல்லவா?

ஸோபியா, மங்கோலியர்களின் ஆதிக்கத்தைத் தொலைத்த தோடு திருப்தியடையவில்லை; தன் கணவன், தனக்குப் பிரதிநிதியாக கிரேக்க சாம்ராஜ்யத்திற்கும் அரசனாயிருக்க வேண்டுமென்று விரும்பினாள். ஆனால் கிரேக்க சாம்ராஜ்யம் என்பது இருந்தால் தானே? இருந்தாலும் ஐவன், கிரேக்க அரச பரம்பரையின் வாரிசு என்று தன்னைச் சொல்லிக் கொண்டான்; கிரேக்க அரச சின்னங் களை உபயோகப்படுத்திக் கொண்டான். இதனால் ருஷ்யா சில சாத கங்களையடைந்தது.

ஐவன், இவ்வளவெல்லாம் செய்து ருஷ்யாவை மேலான நிலைக்குக் கொண்டுவந்தா னெனினும், அதனைத் தன் சொந்த சொத் தாகவே கருதி விட்டான். தன் இஷ்டப்படி ராஜ்யத்தை யாருக்கு வேண்டு மானாலும் கொடுக்கலாம் என்பதே இவன் கருத்தாயிருந்தது. ஜன விருப்பத்தைத் தழுவிய ஆட்சி என்பது இவனுக்குப் புரியாத விஷயம். இவன் காலத்தில் ஜனங்களுக்கு, அரசாங்கத்தினிடம் ஒருவித அச்சமும், அதன் உத்தரவு களுக்கு மாறு சொல்லாமல் கீழ்ப்படிய வேண்டுமென்ற மனப்பான்மையும் உண்டாகிவிட்டன.

ஐவன், ருஷ்யாவில் அனுஷ்டானத்தில் இருந்து வந்த சட்டங் களை ஒன்று திரட்டி ஒழுங்கு படுத்தினான். அப்படியே வரி விகிதத்தையும் ஒழுங்குசெய்தான். விவசாயிகளின் நிலைமையைச் சீர்திருத்தினான். ஆனால் அவர்களுடைய உரிமைகளை மெது மெதுவாகக் குறைத்துக் கொண்டு வந்தான். இங்ஙனமே போயார் களுடைய அதிகாரத்தையும் செல்வாக்கையும் குறைத்துவிட்டான். எல்லோரும் தன் கீழ் அடங்கி இருக்க வேண்டுமென்ற நிலைமையை உண்டு பண்ணினான். 1462 -ஆம் ஆண்டு தொடங்கிய இவனுடைய ஆட்சி 1505-ஆம் ஆண்டோடு முடிவு பெற்றது.

ஐவனுடைய காலத்திலேயே அவனுடைய மூத்த மகன் இறந்து விட்டான். எனவே அவனுக்குப் பிறகு அவனுடைய இரண்டாவது மகன் மூன்றாவது பேசில்1 என்பவன் பட்டத்திற்கு வந்தான். இருபத் தெட்டு வருஷ காலம் ஆண்டான். இவனுடைய ஆட்சியில் விசேஷ சம்பவம் எதுவும் நடைபெறவில்லை; புயலுக்கு முன் அமைதி யென்கிற மாதிரி இருந்தது.

இவனுக்குப் பின் இவனுடைய மகன் நான்காவது ஐவன்2 என்பவன் அரசுகட்டில் ஏறினான். இவனது சுமார் ஐம்பது வருஷ ஆட்சியில் சுயேச்சாதிகார சக்தியானது உன்னத தானத்தை அடைந்தது என்று சுருக்கமாகச் சொல்லலாம்.

ஐவன்3 அரசுகட்டில் ஏறியபோது மூன்று வயது. அதாவது 1530 -ஆம் வருஷம் பிறந்த இவன் 1533 - ஆம் ஆண்டு அரசுரிமையைப் பெற்றான். இவன் தாயார் ஹெலென் க்ளின்க்கி4 என்வள் இவனுக்குப் பதில் ரீஜெண்ட்டாயிருந்து சுமார் ஐந்து வருஷ காலம் 1538-ஆம் ஆண்டுவரை ஆண்டாள். உண்மையில் ஆண்டது இவ ளில்லை; இவளுடன் கள்ள நட்புக் கொண்டிருந்த ஒருவன் என்று சரித்திரகாரர்கள் கூறுகிறார்கள். அஃதெப் படியானாலும் இவள் மிகக் கொடுமைக்காரி என்று பெயர் வாங்கிவிட்டாள். ஐயோ அவளா ரத்தத்தைக் குடிக்கிறவளல்லவோ என்று ஜனங்கள் பயந்த வண்ணம் சொல்வார்கள். இவளுக்குச் சில எதிரிகள் ஏற்பட்டு இவளை விஷம் வைத்துக் கொன்றுவிட்டார்கள்; இவளுடைய கள்ள புருஷனைச் சிறையிலே தள்ளி, பட்டினியால் சாகும்படி விட்டுவிட்டார்கள்.

ஹெலென் மரணத்திற்குப் பிறகு, சில போயார்கள் சேர்ந்து ராஜ்ய நிருவாகத்தை நடத்தினர். இவர்களுக்குள்ளே இரண்டு கட்சி. இந்த இரண்டு கட்சியினரின் போட்டா போட்டியில் ராஜ்யம் சீரழிந்து கொண்டு வந்தது; ஐவனும் புறக்கணிப்பட்டு வந்தான். இவனுடைய மனித உணர்ச்சி களுக்குக் கூட இந்த போயார்கள் மதிப்புக் கொடுக்கவில்லை. ஆனால் இவன் பெயராலேயே - ஜார் என்ற பெயராலேயே - எல்லா விவகாரங் களையும் நடத்தி வந்தார்கள். இவையெல்லாம் ஐவனுடைய பசுமனத்தை உறுத்தின. தவிர போயார்கள், இவனுடைய சூழ்நிலையைச் சரியாக அமைத்துக் கொடுக்கவில்லை. கீழ் மக்களோடு பழகும்படியான சந்தர்ப்பங்கள் பல .இவனுக்கு ஏற்பட்டன. அவர்களுடைய கீழான தன்மை களெல்லாம் இவனிடத்தில் வந்து குடி கொண்டன. அவர்களுடைய தொடர்பு இல்லாத சமயங்களில் கிறிதுவ மதபோதனைகளில் தன் மனத்தைச் செலுத்தினான்; கிறிதவ தேவாலயங்களுக்கும், மடங்களுக்கும் சென்று வந்தான். அப்பொழுதெல்லாம் பரமசாது வாக, உலக வாழ்க்கையில் தனக்குச் சிறிதுகூட பற்றில்லை என்கிற மாதிரி நடந்து கொண்டான். இங்ஙனம் இளமைப்பருவத்திலேயே முரண்பட்ட சுபாவங்கள் பலவற்றிற்கும் அடைக்கல தானமாகி விட்டான். பிற்காலத்தில் இவனுடைய ஆட்சி பயங்கர ஆட்சியாக அமைந்து விட்டதில் என்ன ஆச்சரியம்?

ஐவன் தன்னுடைய பதினேழாவது வயதில் அரசுரிமையை ஏற்றுக் கொண்டான். மாக்கோ என்ற சிறு ராஜ்யத்திற்கு மட்டு மல்ல, அகில ருஷ்யாவுக்கும் ஜார் என்று முதன் முதல் பகிரங்கமாக முடிசூட்டிக் கொண்டது இவன் தான்.

ஐவனுடைய ஆட்சியின் ஆரம்ப காலத்திலேயே, அபசகுனம் போல் மாக்கோ நகரத்தின் பெரும்பாகம் ஒரு பெருந்தீயினால் அழிந்துபோய் விட்டது. நூற்றுக்கணக்கில் உயிர்கள் மடிந்தன. ஜனங்கள் வீடுவாசல் களின்றித் தவித் தார்கள். கலகங்கள் கிளம்பின. இறந்துபோன ஹெலெனின் - ஐவனின் தாயார் - உறவினர்கள்தான் இந்த பெரு நெருப்புக்குக் காரணம் என்று ஜனங்கள் எப்படியோ நம்பிவிட்டார்கள். அந்த உறவினர் அத்தனை பேரையும் கொன்று விட்டார்கள். இதனோடு திருப்தியடையவில்லை. ஜார் ஆதீனத்தில் இருந்த உறவினர் இருவரையும் தங்கள் வசம் ஒப்புவித்துவிட வேண்டுமென்று சொல்லி, கூட்டமாக அரண்மனை நோக்கிச் சென்றார்கள்.

9. நல்லது செய்த இருவர்
பார்த்தான் ஐவன். இதுகாறும், தான் சர்வ சக்தி வாய்ந்தவன், தன்னை யாரும் எதிர்க்க முடியாது என்று எண்ணிக் கொண்டி ருந்தான். அந்த எண்ணம் இப்பொழுது மாயமாக மறைந்துவிட்டது. பயந்துபோய், அப்பொழுது திடீரென்று தன் முன்னர் வந்து நின்ற சில்வெட்டர்1 என்ற ஒரு பாதிரியின் யோசனையைக் கேட்டான். ஜனங்களைத் துன்பப்படுத்தியதன் விளைவாகவே இந்தத் தெய்வ சாபம் ஏற்பட்டதென்று அந்த பாதிரி கூறினான். அப்படியானால் நீங்கள் சொல்கிறபடியெல்லாம் இனி நான் கேட்கிறேன் என்று சொல்லி அந்தப் பாதிரியிடம் தன்னை ஒப்புக்கொடுத்து விட்டான். அரண்மனைக் காவலர்களைக் கொண்டு கூட்டம் கலைந்து போகுமாறு செய்வித்தான் சில்வெட்டர்.

ஐவனுன்னு அடாஷேவ்1 என்ற ஒரு நண்பன். இந்த அடாஷே வும் சில்வெட்டரும் சேர்ந்து சுமார் ஒன்பது வருஷகாலம் ராஜ்ய நிருவாகத்தை நடத்தி வந்தார்கள். நல்ல மனிதர்கள். தாங்கள் செய்துவந்த எல்லா நல்ல காரியங்களையும் ஐவன் பெயராலேயே, தன்னாலேயே எல்லா விவகாரங்களும் நடைபெறுகின்றன என்று ஐவன் கருதிக் கொள்ளும் படியாகச் செய்து வந்தார்கள். இவர்களால் ஐவனும் நல்லவனாகி வந்தான். இவர்கள் காலத்தில், ஜனங்களுடைய ஆதரவின்பேரில் அரசாங்கம் நடைபெற வேண்டுமென்பதற்காக, ஜனப் பிரதிநிதி சபையொன்று முதன் முதலில் கூட்டப்பெற்றது. இதுவே தேசீய சபையென்றும் அழைக்கப் பட்டது. ஆனால் பிற் காலத்தில் இந்தத் தேசீய சபையில் பெரியதனக்காரர்களின் ஆதிக்கம் மிகுந்துவிட்டது.

சில்வெட்டர் - அடாஷேவ் காலத்தில், ருஷ்யர்களுடைய குடும்ப வாழ்க்கை, சமுதாய வாழ்க்கை, இவைகளை ஒழுங்கு படுத்துகிற வகையில் அநேக சீர் திருத்தங்கள் அனுஷ்டானத் திற்குக் கொண்டு வரப்பட்டன. மங்கோலியர்களின் ஆதிக்கம், ருஷ்ய சமுதாயத்தைப் பலவகையிலும் கறைப்படுத்தி யிருந்தது. இந்தக் கறையைப் போக்குவதற்கு சில்வெட்டரும் அடாஷேவும் வெகு பிரயத்தனப் பட்டார்கள்.

மற்றும் இவர்கள், மங்கோலியர்களின் ஆதிக்கத்திலிருந்த காஜான் பிரதேசத்தையும் அட்ரக்கான் பிரதேசத்தையும்2 வெற்றி கொண்டு ருஷ்யாவோடு சேர்த்துக் கொடுத்தார்கள். வால்கா நதி ஓடுகிற பிரதேசம் பூராவும் இப்பொழுது ருஷ்யாவின் சுவாதீன மாயிற்று. மேற்படி, காஜான், அட்ரக்கான் பிர தேசங்களில், அநேக கிறிதுவ தேவாலயங்கள், மடங்கள் முதலியன நிர்மாணிக்கப் பட்டு, கிறிதுவ மத சம்பிரதாயங்கள் இவ்விடங்களில் பரவுமாறு செய்யப்பட்டன.

ருஷ்யா, மேற்கு ஐரோப்பாவோடு நெருங்கிய தொடர்பு கொள்ள வேண்டியதன் அவசியத்தை சில்வெட்டரும் அடாஷே வும் நன்கு உணர்ந்து, சில ஏற்பாடுகளைச் செய்தார்கள். இவர் களுடைய உத்தரவின் பேரில், ஐரோப்பாவின் பல பகுதிகளி லிருந்தும், வைத்தியர்கள், தொழில்நுட்பம் தெரிந்தவர்கள், இப்படி நூற்றிருபத்துமூன்று பேரை, ஷ்லிட்3 என்ற ஒருவன், ருஷ்யாவுக்கு அழைத்து வந்தான். ஆனால் சுயநல மிகுந்த சிலர் இதனை விரும்பவில்லை. ஷ்லிட்டைச் சிறையிலே அடைத்துவிட்டு, அவனோடுகூட வந்தவர்களைத் திருப்பியனுப்பி விட்டார்கள். இப்படி இவர்கள் தடுத்து விட்ட போதிலும், ஐரோப்பாவின் தொடர்பு ருஷ்யாவுக்கு ஏற்படவே செய்தது. இதற்குக் காரணமா யிருந்தவர் பிரிட்டிஷார். முதன் முதல் பிரிட்டிஷாருக்கும் ருஷ்யர் களுக்கும் தொடர்பு ஏற்பட்டது இந்தக் காலத்தில்தான். இதைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம்.. சில்வெட்டர் - அடாஷேவ் இவர்களின் செல்வாக்கு ஐவன் உட்பட்டிருப்பதை போயார்களிற் பலர் விரும்பவில்லை. தங்களு டைய செல்வாக்கு குறைந்து வருவதை நன்குணர்ந்த இவர்கள், இருவருக்கு மிடையே பகைமைத் தீயை மூட்டிவிட்டார்கள்; சில் வெட்டர்மீது இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளைச் சாட்டினார்கள். சில்வெட்டரின் கண்டிப்பான நிருவாகத்தைச் சிறிது காலமாக விரும்பாதிருந்த ஐவனும் இவைகளுக்குச் செவி கொடுத்தான். ருஷ்யாவுக்குச் சனியன் பிடித்தது. சில்வெட்டர் வடக்கே ஒரு மடத்தில் சென்று வசிக்கும்படி பிரஷ்டம் செய்யப் பட்டான். அடாஷேவ் சிறையிலிடப் பெற்று அங்கே ஜூரத்தினால் மாண்டான்.

ஐவன், இந்த உத்தம புருஷர்களின் மேற்பார்வையிலிருந்து விலகிக்கொண்டானே தவிர, இவர்கள் விலகுவதற்குக் காரணர்களா யிருந்த போயார்களுடன் ஒற்றுமைப்பட்டுப் போக முடியவில்லை. அவர்களுக்கும் இவனுக்கும் சதா பிணக்கு. ஐவன், தனது சுயேச் சாதிபத்தியத்தில் பரிபூரண நம்பிக்கைக் கொண்டிருந்தான். போயார்களோ, அரசாங்க நிருவாகத்தில் பங்கு கொள்ளத் தங் களுக்கு உரிமையுண் டென்று கருதினார்கள். போயார்கள், தன்னு டைய அடிமைகளென்றும், அவர்களுடைய ஒத்துழைப்பைப் பெறுவதும் பெறாததும் தன்னிஷ்டத்தைப் பொறுத்ததென்றும் ஐவன் கூறினான். அந்தப் போயார்களோ இவனுக்கு இணங்குகிறவர் களாயில்லை. பார்த்தான் ஐவன். போயார்களின் செல்வாக்கைக அடியோடு நாசஞ்செய்து விடுவ தென்று தீர்மானித்தான். இதற்காக ஒரு யுக்தி செய்தான். தான் முடிதுறந்து விட்டதாகப் பிரகடனஞ் செய்துவிட்டு, ஒரு சில பரிவாரத்தினருடன் மாக்கோவுக்குச் சமீபத்தில் அலெக்ஸாந்த்ரோவ்க்கோ1 என்னும் கிராமத்திற்குச் சென்று விட்டான். தலைநகரத்தில் ஒரே குழப்பம் ஏற்பட்டு விட்டது. தன்னுடைய இந்தச் செயலுக்குப் போயர்கள்தான் காரண மென்றும், அவர்களுக்குச் சில பாதிரிமார்கள் துணைசெய்வது தனக்கு வருத்தமாயிருக்கிறதென்றும், ஆனால் மற்ற எல்லா ஜனங்களிடத்திலும் எப்பொழுதும்போல் பரிபூரண விசுவாசம் தனக்கு இருக்கிறதென்றும், மேற்படி கிராமத்திலிருந்து இரண்டு அறிக்கைகள் வெளியிட்டான். இந்த அறிக்கைகள் ,கோரிய பலனை அளித்தன. ஜனங்கள் திரள் திரளாக இவன் இருப்பிடம் சென்று, ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு இவனை வேண்டிக் கொண்டார்கள். இவர்களுடன், சில போயார்களும், பாதிரிகளும் சேர்ந்து கொண்டு, தங்களுடைய ராஜ பக்தியை முன்னைக் காட்டிலும் அதிக ஆணித்தரமாகத் தெரிவிக்கலானார்கள். தன்னிஷ்டப் படிக்குத்தான் இனி ராஜ்ய நிருவாகம் நடைபெறு மென்றும், அதற்கு எல்லோரும் சம்மதித்தால், தான் மாக்கோ திரும்பி வந்து அரச பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகவும் கூறினான் ஐவன். யார் இதை மறுத்துச் சொல்வார்கள்? எல்லோரும் சம்மதித்தார்கள். பழைய மாதிரி மாக்கோ வந்து அரச பீடத்தில் அமர்ந்தான்.

10. பயங்கர ஐவன்
அமர்ந்ததுதான் தாமதம்; தன்னை எதிர்த்து நின்றவர்கள் மீது தன் முழு ஆத்திரத்தையும் காட்டிவிட்டான். இவனுடைய கீழான தன்மை களெல்லாம் கொக்கரித்துக் கொண்டு வெளியே கிளம்பின. எத்தனை பேர் கொலையுண்டார்கள்! எத்தனை பேருடைய ஆதி பாதிகள் பறிமுதல் செய்யப்பட்டன! எத்தனை பேர் தொலை தூரங்களுக்குப் பிரஷ்டம் செய்யப் பட்டனர்! சுருக்கமாக, பயங்கர ஆட்சி நடைபெற்றது. பயங்கர ஐவன் என்று சரித்திரக்காரர்கள் இவனுக்குப் பெயரிட்டதற்குப் பொருத்தமாகவே இவன் நடந்து கொண்டான்.

இந்தக் காலத்தில் ஐவன், ருஷ்யாவை இரண்டு பிரிவாகப் பிரித்தான். ஒன்றை, போயார்களின் நிருவாகத்திற்குட்படுத்தினான். இதன் தலைமை தானம் மாக்கோவிலுள்ள க்ரெம்லின். இன்னொன்றை, தனது சொந்த ராஜ்யமென்று சொல்லி தனது நேரான நிருவாகத்திற் குட்படுத்திக் கொண்டான். இதன் தலைமை தானம், முன்னே சொல்லப்பெற்ற அலெக்ஸாந்த்ரோவ்க்கோ. தன்னால் தெரிந்தெடுக்கப்பட்ட சில ஆதானிகர்களுடன் சுமார் ஆறாயிரம் மெய்க்காப்பாளர்களுடன் அங்குச் சென்று வசிக்கத் தொடங்கினான் ஐவன். ஏழு வருஷ காலம் இந்த இரட்டையாட்சி ருஷ்யாவில் நடைபெற்றது.

போலந்துக்கும் ருஷ்யாவுக்கும் எப்பொழுதுமே ஒருவித பகைமை இருந்துகொண்டு வந்தது. இந்தப் பகைமை இவன் காலத்தில் - 1581-ஆம் வருஷம் யுத்தமாக மூண்டது. ஐவனால் வெற்றிகாண முடியவில்லை. போலந்து மன்னனோடு சமரஸம் செய்து கொண்டான்; பிடித்து வைத்திருந்த சில பிரதேசங்களை போலந்துக்கே திருப்பிக் கொடுத்து விட்டான். ஆயினும் போலந் துக்கும் ருஷ்யாவுக்கும் மனதாபம் இருந்து கொண்டே இருந்தது.

இந்த போலந்து யுத்தத்திற்கு முந்தி, போலந்துக்கு யாரார் உடந்தையாயிருந்தார்களோ, யாரார் அநுதாபம் காட்டினார்களோ அவர்களெல்லோர் மீதும் யுத்தந் தொடுத்தான் ஐவன். 1570-ஆம் வருஷம் நோவ்கோராட்டின் மீது படையெடுத்து அதன் பெரும் பாலான பிரஜை களை மரணத்திற்குட்படுத்தியது இந்தக் காரணத்திற் காகத்தான்.

இங்ஙனம் சில்லரைப் போராட்டங்கள் பல நடத்தினான் ஐவன், தன் ஆட்சிக்காலத்தில் . இவற்றில், இவன் அடைந்த லாபம் ஒன்றுமில்லை; சில பிரதேசங்களை இழந்துகூட விட்டான்; கொன்ற உயிர்களும் அதிகம்.

ஐவன், தன் கடைசி காலத்தில் சித்த சுவாதீனமில்லாதவன் போலவே நடந்துக்கொண்டான். திடீர் திடீரென்று கோபம் வரும். இப்படிக் கோபம் வந்த ஒரு சமயத்தில் - 1581ஆம் வருஷம் - தன் மூத்த மகனை, தன் கையினாலேயே கொன்று விட்டான். பின்னாடி இதற்காகப் பெரிதும் வருத்தப்பட்டான் என்று கூறுவர். என்ன பிர யோஜனம்? இந்தக் கொலை யினால், தன் வமிசவிளக்கையே அணைத்துவிட்டான்.

இன்னுஞ் சில சமயங்களில் பரம பக்தனாய்க் காட்சியளிப் பான்; பாதிரிமார்களோடு மத விஷயங்களைக் குறித்துத் தர்க்கஞ் செய்வான்; மடாலயங்களுக்கு யாத்திரை செல்வான். பைபிள் பூராவும் இவனுக்கு மனப்பாடமாயிருந்ததென்பர். இவன் காலத்தில் தான் முதன்முதலாக மாக்கோவில் ஓர் அச்சுக்கூடம் நிறுவப்பட்டது. அதில் பைபிளின் ஒரு பகுதி அச்சாகியது. அது பூர்த்தியாவதற்குள் அச்சுக்கூடத்தின் பொறுப்பாளிகளை நாட்டினின்றும் விரட்டி விட்டான். இவன், போயார்களை வெறுத்து வந்தானெனினும், அவர் களுடைய செல்வாக்கைக் குலைக்க இவனால் முடியவில்லை. அதற்குப் பதிலாக இவன் காலத்தில் போயார்களைப் போல் வேறு பல பெரிய தனக் காரர்கள் தோன்றினர். ராணுவ உத்தியோகதர் களும், ஐவனால் சிருஷ்டிக் கப்பட்ட ஆதானிகர் களும், போயார்களைப் போல் தாங்களும் சமுதா யத்தில் மேலான அந்த துடையவர்களென்று சொல்லிக் கொண்டார்கள். சிறிய மனம் படைத்த பெரிய தனக்காரர்கள் சமுதாயத் தில் ஆக்கம் பெற்றார்கள். இந்தக் காலத்திலிருந்து இவர்களுடைய செல் வாக்கு வளர்ந்து வந்தது.

பொதுவாக ஐவன், சுயேச்சாதிகார சக்தியை உன்னத தானத் திலே ஏற்றி வைத்துவிட்டு, 1584-ஆம் வருஷம் இறந்து போனான். பயங்கர ஐவனாக இவன் ஆட்சி செய்தபோதிலும், பயந்த ஐவா னாகவே இவன் வாழ்க்கையை நடத்தினான் என்று சொல்ல வேண்டும். அச்சுறுத்து கிறவர்கள் அச்சத்துடன் தான் இருப்பார்கள் என்பது எக்காலத்திற்கும் பொருந்துகிற உண்மையல்லவா?

ஐவனின் மரணத்திற்குப் பிறகு, முதல் பதினான்கு வருஷகாலம் ஐவனின் மற்றொரு மகனாகிய தியாடோர்1 என்பவன் அரச பதவியில் அமர்ந்திருந்தான். ஆனால் இவன் திட சித்தமில்லாதவன். ஐவனுடைய முதல் மனைவியின் உறவினனான - ஐவனுக்கு மொத்தம் ஏழு மனைவிகள் - நிக்கிட்டா ரோமனாவ்2 என்பவனும் வேறு சில போயார் களும் சேர்ந்து ராஜ்யநிருவாகத்தை நடத்தினார்கள். தியாடோ ருக்குப் பிறகு, ஒருவருக்குப் பின் ஒருவராகப் பலர், அரசுரிமை கொண்டாடிக் கொண்டு முன்வந்தார்கள். கேட்க வேண்டுமா கலகத் திற்கும் குழப்பத் திற்கும்? ஜனங்கள் சொல்லொணாக் கஷ்டங்களுக் குட்பட்டனர். கொலை, கொள்ளை, வறுமை நோய் முதலியன மலி வான சரக்குகளாயிருந்தன. ஏழை ஜனங்கள் பலர், வயிற்றுப்பசியை ஆற்றிக்கொள்வதற்காக வெளி நாடுகளுக்கு ஓடிவிட்டார்கள். சுமார் இருபத்தைந்து வருஷ காலம் இந்த நிலைமை இருந்தது.

கடைசியில் பெரியதனக்காரர் சிலர் ஒன்றுகூடி, 1613-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் இருபத்தோராந்தேதி மைக்கேல் ரோமனாவ்3 என்ற பதினேழு வயதுச் சிறுவனை அரசபீடத்தில் அமர்த்தினர். ரூரிக் அரச பரம்பரை முற்றுப்பெற்று ரோமனாவ் அரசபரம்பரை ஆரம்பித்தது.

இந்த ரோமானாவ் பரம்பரை, சுமார் முந்நூறு வருஷகாலம் ருஷ்ய சிங்காதனத்தை இடைவிடாமல் இறுகப்பிடித்துக் கொண்டி ருந்தது; கடைசியில் 1917-ஆம் வருஷம் ஏற்பட்ட புரட்சி வெள்ளத்தில் மூழ்கி விட்டது. அப்படி மூழ்குவதற்கு நான்கு வருஷங்கள் முந்தித்தான், இந்தப் பரம்பரையின் கடைசி மன்னனான இரண்டாவது நிக்கோலா1, ரோமனாவ் அரசர்கள் சிங்காதனம் ஏறிய முந்நூறாவது வருஷத்தை வெகு ஆடம்பரமாகக் கொண்டாடி னான். இந்தக் கொண்டாட்டம், விளக்கு அணைவதற்கு முன் தோன்றும் பிரகாசம் போலிருந்தது.


III. ரோமனாவ் பரம்பரை

(முதற் பகுதி)
1. இருவர் ஆட்சி
மைக்கேல், பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரக் கடைசியில் அரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்ட போதிலும், ஜூலை மாதம் பதி னோராந் தேதிதான் மகுடம் சூட்டப்பெற்றான். இவன், நான்காவது ஐவனுடைய முதல் மனைவியின் உறவினனான நிக்கிட்டா ரோமனாவ் என்பவனின் பேரன். திறமைசாலி என்பதற்காக இவன் அரசனாகத் தெரிந்தெடுக்கப் படவில்லை; பரம்பரைக் கௌரவம் வாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதற்காகத் தெரிந்தெடுக்கப் பட்டான். கட்சி வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டவனாய், எல் லோராலும் விரும்பப்படுகின்ற ஒருவன் அரச பீடத்தில் அமர வேண்டியது இந்தக் காலத்திற்கு மிகவும் அவசியமா யிருந்தது.

மைக்கேலின் தகப்பன் பிலாரெட்1 என்பவன் உத்தமமான தேச பக்தன்; ருஷ்யாவின் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்டான். ருஷ்யா வுக்கும் போலந்துக்கும் நடைபெற்ற போராட்டங்க ளொன்றில் போலிஷ் காரர்களின் வசம் சிக்கிக்கொண்டுவிட்டான். விடுவார் களா இவனை? சிறையிலே அடைத்துவிட்டார்கள். மைக்கேல், சிங்காதனத்தில் அமர்த்தப் பட்டபொழுது - அப்பொழுது மைக் கேலுக்கு வயது பதினேழு - பிலாரெட், போலந்தில் யுத்தக் கைதி யாகவே இருந்தான்.

மைக்கேலை அரசனாக்கிய பெரியதனக்காரர்கள், அவனை பெயரளவுக்கு அரசனாக இருக்கும்படிசெய்து, தாங்களே ராஜ்ய விவகாரங் களனைத்தையும் நடத்தி வந்தார்கள். மைக்கேல் வேறு வழியின்றி இவர்களுக்கு இணங்கியே போனான்.

மைக்கேலின் ஆட்சி தொடக்கத்தில், ருஷ்யா, வீடனுடனும் போலந்துடனும் யுத்தம் நடத்த வேண்டியதாகி விட்டது. ஆனால் நல்ல வேளையாக 1617-ஆம் வருஷம் ருஷ்யாவுக்கும் வீடனுக்கும் சமரஸ ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி, இரண்டு நாடுகளும், தாங்கள் பிடித்து வைத்துக் கொண்டிருந்த பிரதேசங்களை அந்தந்த நாடுகளுக்கே திருப்பிக் கொடுத்துவிட்டன.

ஆனால் போலந்து விஷயம் இவ்வளவு சுலபமாக முடிவதா யில்லை. போலந்து அரச வமிசத்தைச் சேர்ந்த வ்ளாடிலாவ்1 என்பவன், சிறிது காலமாகவே, ருஷ்யாவின் அரசபீடம் தனக்கே உரியதென்று கூறிக்கொண்டிருந்தான். இப்பொழுது மைக்கேல், ருஷ்ய அரச பீடத்தில் அமர்த்தப் பட்டதும், இதனை அங்கீகரிக்க போலந்து மறுத்துவிட்டது. எனவே இரு நாடுகளுக்கும் யுத்தம் மூண்டது. ஆனால் நீடித்து நடைபெற வில்லை. 1618-ஆம் வருஷம் இரண்டு நாடுகளுக்கு மிடையே பதினான்கு வருஷகால யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தப்படி, வ்ளாடிலாவ், ருஷ்ய அரசுரிமையை விட்டுக்கொடுத்துவிட்டான். ருஷ்யாவும், போலிஷ் பிரதேசங்கள் சிலவற்றை போலந்துக்கே திருப்பிக் கொடுக்கச் சம்மதித்தது. இரு நாட்டினரும் யுத்தக் கைதிகளைப் பரிவர்த்தனை செய்து கொண்டனர்.

இந்தப் பரிவர்தனையின் மூலம் விடுதலை பெற்று 1619-ஆம் வருஷம் மாக்கோ வந்து சேர்ந்தான் மைக்கேலின் தகப்பன் பிலாரெட். வந்ததும் இவன் ரீஜெண்ட்டாக நியமனம் பெற்றான். இது முதற்கொண்டு 1619-ஆம் வருஷத்திலிருந்து - தந்தையும் மகனும் சேர்ந்து ராஜ்ய நிருவாகத்தை நடத்தி வந்தார்கள். இரண்டு ஜார்கள் இப்பொழுது ருஷ்யாவை ஆள்கிறார்கள் என்று இவர்கள் காலத்து ஜனங்கள் , சிறிது பெருமையோடும் சந்தோஷத்துடனும் சொல்லிக் கொள்வதுண்டு. ஏனென்றால் இவர்கள் ஆட்சியின் போது நாட்டில் குழப்பம் சிறிது தணிந்தது; ஜனங்கள் ஓரளவு நிம்மதியாக வாழ்க்கை நடத்தி வந்தார்கள்.

பிலாரெட் சிறந்த ராஜதந்திரி; கல்விமான்; உலக விவகாரங்கள் நன்கு தெரிந்தவன். எனவே, தன் மகன் மைக்கேலினுடைய அரசுரி மைக்குப் பங்கம் நேரிடாமாலும், தன்னைச் சூழ்ந்திருந்த போயார் களை விரோதித்துக் கொள்ளாமலும் வெகு சாமர்த்தியமாக ராஜ்யரதத்தை ஓட்டிச் சென்றான்.

மைக்கேலின் ஆட்சிக் காலத்தில் ருஷ்யாவின் எல்லை, கிழக் குப்பக்கம் பசிபிக் மகாசமுத்திரம் வரை, அதாவது இந்தச் சமுத் திரத்தைச் சேர்ந்த ஓக்கோட்க் கடல்2 வரை விதீரணமடைந்தது ஸைபீரியா3 பிரதேசம் முழுவதும் ருஷ்ய ஆதீனத்திற்குட்பட்டது. இந்தப் பிரதேசத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம், இதற்கு முன் மனித சஞ்சாரமே இல்லாதிருந்த இடத்திலெல்லாம் ருஷ்யர்கள் சென்று குடியேறினார்கள். இந்த வகையில் இவர்கள் காட்டிய தீரமும் சுறுசுறுப்பும் பெரிதும் வியக்கத்தக்கன. பிந்திய ஜார்களின் ஆட்சிக் காலத்தில், ஸைபீரியா, ஒரு சிறைக்கூட மாக்கப்பட்டு விட்ட போதிலும், ஆரம்பத்தில், அது - ஸைபீரியா - ருஷ்யர்களைக் கைலாகு கொடுத்து வரவேற்கவே செய்தது; அங்கு சென்று குடி யேறியவர்கள் சுயேச்சையாகவே வாழ்ந்து வந்தார்கள்.

மைக்கேலின் ஆட்சியில் ஜனங்கள் ஓரளவு நிம்மதி பெற்ற போதிலும் அவர்களுடைய வாழ்க்கை நிலைமை மிகவும் மோச மாகிக் கொண்டு வந்தது. விவசாயிகளின் வாழ்க்கை, கேவலம் அடிமைகளின் வாழ்க்கை யாகிவிட்டது. நிலச்சுலான்தார்களின் ஆதிக்கம் வலுத்தது. அரசாங்கமோ, நிலச்சுவான்தார்களுக்கு ஆதரவு கொடுத்ததே தவிர, விவசாயிகளுக்கு விடுதலை அளிக்கவில்லை. இதனால், சமுதாயத்தின் கீழ் வரிசையி லிருந்து பெரும் பாலோர், அதிருப்தியுடையவர்களாக இருந்தார்கள்; தங்களுடைய குறை களைத் தைரியமாக அரசாங்கத்தினிடம் தெரிவித்தும் வந்தார்கள்.

இஃதொரு புறமிருக்க, மைக்கேல் காலத்தில், ருஷ்யா, மேற்கு ஐரோப்பாவுடன் அதிகமான தொடர்பு கொள்ள ஆரம்பித்தது. ருஷ்யாவின் முன்னேற்றத்திற்கு ஐரோப்பாவின் கூட்டுறவு அவசிய மென்பதை நன்குணர்ந்த பிலாரெட், அந்நியர்களை, சிறப்பாக ஆங்கிலேயர்களை, அரசாங்க சேவையில் அமர்த்திக்கொண்டான். அந்நியர்களின் தலைமையில் ருஷ்ய ராணுவத்தைச் சீர்திருத்தி யமைத்தான். இந்த அளவுக்குச் சரியே. ஆனால் அந்நியர்கள், ருஷ்யாவின் சேவையில் எப்பொழுதும் நிரந்தரமாக இருக்க வேண்டு மென்று கட்டாயப்படுத்தப் பட்டார்கள்; தங்கள் தங்கள் தாய் நாட்டுக்குத் திரும்பிச் செல்லக்கூடா தென்று சொல்லப் பட்டார்கள். இதனால் அந்நியர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இந்த நிலைமை யில் அவர்கள் ருஷ்யாவின் முன்னேற்றத் திற்கு எப்படிப் பாடுபடு வார்கள்?

மைக்கேலின் ஆட்சி 1645-ஆம் வருஷத்தோடு முடிவுற்றது. இவனுக்குப் பின் இவன் மகன், முதலாவது அலெக்ஸி1 என்பவன் பட்டத் திற்கு வந்தான். அப்பொழுது இவனுக்கு வயது பதினாறு தான். எனவே இவனுக்கும், மோரோஜாவ்2 என்ற ஒருவன் ரீஜெண்ட் டானான். இந்த மோரோஜாவ் சிறிதுகூட நேர்மையில்லாதவன். அரசாங்க நிருவாகத்தில் லஞ்சப்பேய் நடமாடியது; ஊழல்கள் மலிந்துவிட்டன. ஜனங்களின் கஷ்டம் அதிகமாகியது. தங்கள் கஷ்டத்தைப் பகிரங்கமாகத் தெரிவிக்கத் துணிந்துவிட்டார்கள்.

2. மூன்றுநாள் கலகம்
ஒருநாள் ஜார் அரசன், மாக்கோ வீதிகளின் வழியே குதிரைமீது சென்று கொண்டிருந்தான். ஒரு வீதியில், துணிச்சலுள்ள மாக்கோ வாசி ஒருவன், அரசனைத் தடுத்து நிறுத்தி, அரசாங்கத் தின்மீது ஜனங்களுக் கிருந்த குறைகளைத் தெரிவித்துக் கொண்டான். கும்பல்கூடிவிட்டது. அரசன் குறைகளை விசாரிப்பதாகக் கூறினான். ஆனால் ஜனங்கள் திருப்தி அடையவில்லை. ஆத்திரமடைந்தார்கள். பெரிய கலகம் உண்டாகி விட்டது. மூன்று நாள் வரை ஓயவில்லை. அரசன் தலையிட்டிராவிட்டால், மோரோஜாவ், கலகத்தில் கொலை யுண்டிருப்பான். அவ்வளவு ஆத்திரம் இருந்தது அவன்மீது ஜனங் களுக்கு. ஆனால் மோரோஜாவ் புத்திசாலி. உடனே தன் போக்கை மாற்றிக்கொண்டுவிட்டான். அரசாங்க நிருவாகத்தை ஒழுங்கு படுத்துகிற வகையில், ஒரு புதிய சீர்திருத்தச் சட்டம் (1649-ஆம் வருஷம்) அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. ஆனால் துரதிருஷ்ட வசமாக இந்தச்சட்டம், (1832 -ஆம் வருஷம் வரை அமுலில் இருந்த இந்தச் சட்டம்) அரசாங்கத்தின் வருமானத்தை அதிகப்படுத்து வதாகவும், நிலச்சுவான்தார்களின் நலன்களுக்குப் பாதுகாப்பளிப்ப தாகவும் இருந்ததே தவிர, நிலத்தோடு ஐக்கியப்பட்டிருக்கும் விவசாயி களுக்கு எவ்விதத்திலும் நன்மையளிப்பதாயில்லை. அதற்கு மாறாக, அவர்களுடைய அடிமைத்தனத்தை, நிலச் சுவான்தார் களுக்கு அவர்கள் பந்தப்பட்டவர்களென்பதை ஊர்ஜிதம் செய்வதா யிருந்தது.

3. மானமுள்ள காஸாக்குகள்
அலெக்ஸி ஆட்சியின்போதும், ருஷ்யா, போலந்துடன் சண்டை செய்யவேண்டி யிருந்தது. ருஷ்யாவின் மேற்கில் உக்ரேன் பிரதேசம் இருக்கிறதல்லவா, .இதன் ஒரு பகுதியில் காஸாக்குகள்1 என்ற ஒரு முரட்டு ஜாதியார் வசித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் நீப்பர் நதி ஓடும் பிரதேசத்தில் வசித்துக் கொண்டிருந்ததனால் இவர்களை நீப்பர் காஸாக்குகள்2 என்று அழைப்பர். இவர் களிலே ஒரு சாரார் பிரிந்து சென்று டான் நதி செல்லும் பிரதேசத் தில் குடியேறினார்கள். இவர்கள் டான் காஸாக்குகள்3 என்று அழைக்கப்பட்டனர். இந்த டான் காஸாக்குகள், பயங்கர ஐவன் காலத்தில் ருஷ்யாவின் ஆதீனத்திற்குட்பட்டனர். நீப்பர் காஸாக்குகள் போலந்தின் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்தனர். ஆனால் போலந்து, உயிரைக் காட்டிலும் மானத்தைப் பெரிதெனக் கருதும் இந்த ஜாதியாரைச் சரியாக நடத்தவில்லை. இவர்களைப் பலவித கொடுமை களுக்கு உட்படுத்தி வந்தது. இதனால் இவர்கள் வெகுண்டு, போலந்தை எதிர்த்தது மட்டுமல்லாமல், ருஷ்யாவுடன் சேர்ந்து கொண்டார்கள். ருஷ்ய ஜாருக்குத் தங்கள் விசுவாசத்தைத் தெரிவித்துக் கொண்டனர். இவர் களுக்குப் பாதுகாப்பு அளிக்கின்ற முறையில், ருஷ்யா, போலந்தின்மீது யுத்தந்தொடுத்தது. இந்த யுத்தத்தின் விளைவாக, நீப்பர் நதிக்குக் கிழக்குப் பக்கத்திலுள்ள பிரதேசம் முழுவதும் மோலென்க்1, கீவ் முதலிய முக்கிய நகரங்கள் உள்பட - ருஷ்யாவின் சுவாதீனமாயிற்று. போர்த்தன்மை வாய்ந்த காஸாக்குகளில் ஒரு பிரிவினருடைய சேவை, ருஷ்ய ராணுவத்திற்குக் கிடைத்தது. இங்ஙனம் போலந்தின்மீது தொடுத்த போர், ருஷ்யாவுக்குச் சாதகமாக முடிந்தது 1667-ஆம் வருஷத்தில்.

4. வீரன் ராஸீன்
இது முடிந்த மூன்றாவது வருஷத்தில் டான் காஸாக்குகள், ருஷ்ய அரசாங்கத்திற்கு விரோதமாகப் பெரிய புரட்சியைத் தொடங்கினார்கள். இந்தப் புரட்சிக்குத் தலைவனாயிருந்தவன் ட்டென்கா ராஸீன்2 என்பவன். அரசாங்க நிருவாகத்தில் போயார்கள் ஆதிக்கம் பெற்றிருப்பதை இவன் விரும்பவில்லை. அவர் களுடைய செல்வாக்கை அடியோடு அழித்து விடத் தீர்மானித்தான். இதற்காக 1670-ஆம் வருஷம் ஒரு புரட்சியைக் கிளப்பினான். ஏழைமக்கள் இவன் பக்கம் சேர்ந்து கொண்டார்கள். சில பிரதேசங் களும் இவன்வசமாயின. பணம் படைத்தவர்கள், நிலச்சுவான் தார்கள் முதலியோரை இவன் பலவித இம்சைகளுக்குட் படுத் தினான். இவன் பெயரைக் கேட்டாலே நடுங்கினார்கள் அவர்கள். 1671-ஆம் வருஷம் இவனுக்கு விரோதமாக அரசாங்கம் ஒரு படையை அனுப்பியது. இந்தப் படையை எதிர்த்துச் சிறிது காலம் போராடினான் ராஸீன். ஆனால் இவனுடைய இனத்தினரே - கா ஸாக்குகளே - இவனுக்குத் துரோகஞ் செய்து விட்டார்கள். அரசாங்கப் படையினிடம் இவனைப் பிடித்துக் கொடுத்து விட்டார்கள். கைதியாக மாகோவுக்கு அழைத்துவரப்பட்டான். சித்திரவதைக் குள்ளானான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? ஆனால் இவன், முகத்தைக்கூட சுளித்துக் கொள்ளவில்லை. இவனுடைய சகோதரன், இவனுடன் கூட இருந்தான். அவனைப் பார்த்துக் கூறினான் ராஸீன்:- நாம் ஆண்டுவிட்டோம்; வாழ்க்கையை அனுபவித்து விட்டோம்; இப்பொழுது துன்பத்தைச் சகித்துக் கொண்டிருப் போமாக! கடைசியில் தூக்கு மேடையில் ஏறினான்; இல்லை, இல்லை; ஏற்றப்பட்டான். ஏறி மிடுக்காக நின்றான். நான்கு திசைகளிலும் நோக்கினான். விடைபெற்றுக் கொள்கிறேன் என்று கூறினான். வேறொரு வார்த்தையும் இவன் வாயிலிருந்து வெளிவர வில்லை. உயிர், உடலிலிருந்து விடைபெற்றுக் கொண்டது. டான் காஸாக்குகளின் புரட்சியும் அடங்கிவிட்டது. ஆனால் ராஸீன் இன்றளவும், ருஷ்யப் பாடல்கள் பலவற்றிலே, ருஷ்யர் பலருடைய நம்பிக்கையிலே அமரனாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.1

அலெக்ஸிஸின் ஆட்சியில், பழமைக்கும் புதுமைக்கும் பலத்த போராட்டம் நடைபெற்றதென்று சொல்லவேண்டும். சிறிது காலமாகவே, ஐரோப்பாவின் தொடர்பு ருஷ்யாவுக்கு ஏற்பட்டிருந்த தல்லவா, இந்தத் தொடர்பை மேலும் மேலும் விருத்தி செய்து கொண்டு போக வேண்டு மென்கிறவர் களுக்கும், இந்தத் தொடர்பே கூடாதென்கிறவர்களுக்குமே இந்தப் போராட்டம். ஐரோப்பியத் தொடர்பினால், ருஷ்ய சமுதாயத்தில் நிலவியிருந்த அநேக பழக்க வழக்கங்கள் மாறின; புதிய எண்ணங்கள் உதயமாயின. எல்லா ஜனங்களுக்கும் கல்வியறிவு கொடுக்க வேண்டு மென்றே கூக்குரல் எழுந்தது. இந்தப் புதிய எழுச்சிக்குத் துணை செய்தனர் பாதிரிமார் சிலர். இவர்கள் முயற்சியால் ருஷ்ய இலக்கியத்தில் ஒரு புது மலர்ச்சி ஏற்பட்டது. ஐரோப்பிய காவியங்கள் பல, ருஷ்யபாஷையில் மொழி பெயர்க்கப்பட்டன. பள்ளிக்கூடங்கள் பல திறக்கப்பட்டன.

5. மேதை நீக்கான்
இங்ஙனம் சீர்திருத்த முயற்சியில் ஈடுபட்டவர்களில் முக்கிய மானவன் நீக்கான்2 என்ற ஒரு பாதிரி. இவன், தன் மேதையினாலும், திறமையினாலும் அலெக்ஸிஸை ஆட்கொண்டு விட்டான். அலெக் ஸிஸும் இவனைத் தனக்குச் சமதையான தானத்திலே வைத்துக் கௌரவப்படுத்தினான்; இவன் சொன்னபடி கேட்டுவந்தான்.

இந்த நீக்கான், கிறிதுவ தேவாலயங்களில் அனுசரிக்கப் பட்டு வந்த தொழுகை முறைகள் முதலியவற்றில் சில மாற்றங்கள் உண்டு பண்ணினான்; அனாவசியமான சடங்குகளை நீக்கினான். தவிர, பைபிளின் வாசகம் ஒரே மாதிரியாயில்லையென்றும், ஒன்றிலிருந்து மற்றொன்று பிரதி செய்கிறபோது, பிரதிசெய்கிறவர் கள் பல பிழைகளைப் புகுத்தி விட்டிருக்கிறார்களென்றும், ஆதலின் இவைகளைப் பரிசீலனை செய்து ஓர் ஒழுங்குபடுத்தி லாவிய பாஷையில் மொழி பெயர்க்கச் செய்ய வேண்டுமென்றும், அப் பொழுது தான் எல்லாத் தேவாலயங்களிலும் ஒரே மாதிரியாக ஓதுவ தற்குச் சௌகரியமாயிருக்குமென்றும் கூறி, இவை களைப் பற்றி ஆலோசிக்கப் பாதிரிமார்களின் கூட்டமொன்றை மாக்கோவில் கூட்டு வித்தான்.

இதற்குப் பலமான எதிர்ப்பு தோன்றியது. கிறிதுவ மதமே போய் விட்டதென்று கூக்குரல் போட்டார்கள் பலர். இங்ஙனம் இரண்டு கட்சிகள் ஏற்பட்டன. ஒருவரையொருவர் அடக்க முயன்றனர். இந்த முயற்சியில் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானவர் மாண்டனர்; பல கொடுமைகளுக்குக் குள்ளாயினர்.

கடைசியில் அலெக்ஸிக்கும் நீக்கானுக்குமே மன தாபம் ஏற்பட்டு விட்டது. அரசனின் உறவும் நல்ல பாம்பின் உறவும் ஒன்றே யன்றோ? நீக்கான் தேசப் பிரஷ்டம் செய்யப்பட்டான். ஆனால் அவன் கொண்டுவந்த சீர்திருத்தங் களெல்லாம் அனுஷ்டானத்திற்கு வந்தன. ஐரோப்பாவி லிருந்து வந்த எண்ணங்கள், பழக்க வழக்கங்கள் முதலியன, ருஷ்ய சமுதாயத்தில் மெதுமெதுவாக இடம் பெற லாயின. 1676-ஆம் வருஷத் தோடு, அலெக்ஸிஸின் ஆட்சி முடிந்தது.

இவனுக்குப் பிறகு இவனுடைய முதல் மனைவியின் மகன் - அலெக்ஸிஸீக்கு இரண்டு மனைவியர் - மூன்றாவது தியாடோர்1 என்பவன் ஆறு வருஷ காலம் ஆண்டான். இவன் காலத்தில் ருஷ்யா வுக்கும் துருக்கிக்கும் முதன் முதலாக யுத்தம் நடைபெற்றது. இதன் பயனாக, துருக்கியின் ஆதிக்கத்திலிருந்த உக்ரேன் பிரதேசம் ருஷ்யா வின் சுவாதீனமாயிற்று.

தியாடோருக்குப் பிறகு அரச பதவிக்குப் போட்டி ஏற்பட்டது. ஏனெனில் தியாடோருக்குச் சந்ததிகளில்லை. இவனுடைய சகோதரன் ஐந்தாவது ஐவன்2 என்பவன் பட்டமேற்கத் தகுதியற்ற வனாயி ருந்தான். இதனால், இவனுடைய சகோதரன், அதாவது இவனுடைய மாற்றாந் தாயின் மகன் - அலெக்ஸிஸின் இரண்டாவது மனைவியி னுடைய மகன் - பத்து வயதடைந்திருந்த பீட்டர்3 என்பவன் பட்ட மேற்றான்; இவன் தாயார் நட்டேலியா4 என்பவள் ரீஜெண்ட்டானாள். இந்த ஏற்பாடு அலெக்ஸிஸின் முதல் மனைவியினுடைய உறவின ருக்கு ஆத்திரத்தை உண்டுபண்ணி விட்டது. அவர்கள் ஐந்தாவது ஐவனுடைய உரிமையை வலியுறுத் தினார்கள். மாக்கோ நகரத்தில் கலகம் உண்டாயிற்று. அரண்மனைச் சூழ்ச்சிகளுக்குக் கேட்க வேண்டுமா? கடைசியில், அலெக்ஸிஸின் முதல் மனைவியி னுடைய மகள், அதாவது ஐவனுடைய சொந்த சகோதரி, ஸோபியா என்ப வள், ஐவன், பீட்டர் ஆகிய இருவர் சார்பாகவும் ரீஜெண்ட் டாக இருந்து ராஜ்ய நிருவாகத்தை நடத்துவதென்று ஏற்பாடு செய்யப் பட்டது. இங்ஙனமே ஏழு வருஷகாலம் (1682-1689) ரீஜெண்ட்டாக இருந்து ஆண்டாள் ஸோபியா. ஆனால் இவள் நடுநிலைமையுடன் நடந்து கொள்ளவில்லை. ரீஜெண்ட் பதவி யேற்றதும், பீட்டரையும் அவன் தாயாரையும், மாக்கோவிலிருந்து வெளியேற்றி வேறோர் ஊருக்கு அனுப்பிவிட்டாள். அவர்களுடைய செல்வாக்கு ஓங்கக் கூடாதென்பது இவள் எண்ணம். ஆனால் இவள் எண்ணம் பலிக்கவில்லை. இவளுக்கு விரோதிகள் பலர் கிளம்பி அதிகார பதவியிலிருந்து இவளை அப்புறப் படுத்திவிட்டார்கள். மிகுதி ஆயுள் பூராவும் ஒரு கிறிதுவ மடத்தில் அடைபட்டுக் கிடக்கவேண்டிய வளானாள் இவள்.

6. மகா பீட்டர்
இவளுக்குப் பின்னர்? ஐந்தாவது ஐவனென்னவோ ராஜ்யப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்குச் சிறிதும் தகுதியற்றவனாயி ருந்தான். ஆதலின் பீட்டரே 1689-ஆம் வருஷம் அரசுரிமையை ஏற்றுக் கொண்டான். அப்பொழுது இவனுக்கு வயது பதினேழு1. இவனுடைய முப்பத்தாறு வருஷ ஆட்சி2, ருஷ்ய சரித்திரத்தில் மட்டுமல்ல, உலக சரித்திரத் திலேயே ஒரு முக்கியமான கட்டம் என்று கூறுவர் அறிஞர். இவன் உலகத்துப் பேரரசர்களிலே ஒருவன் மட்டுமல்ல, உலகத்துப் பெரிய மனிதர்களிலேயும் ஒருவன். இவன், ருஷ்யாவின் அரசியல், சமுதாய ஒழுங்கு, கலாசாரம் ஆகிய எல்லா வற்றையும் ஐரோப்பிய மயமாக்கினான். இதற்காக பலாத்கார முறை களையும் கையாண்டான். ஐரோப்பிய அரசியல் அரங்கத்தில் ருஷ்யா ஒரு முக்கியமான பாத்திரமாக இருந்து நடிக்கும்படி செய்தவன் இவனே. இதற்குச் சாட்சி போலவே, ருஷ்யாவின் மேற்கில் ஐரோப்பாவின் பக்கமாக, தன் பெயரால் ஓர் ஊரை சிருஷ்டி செய்து அதனையே ருஷ்யாவின் தலைநகரமாக்கினான். பீட்டர் பர்க் என்று அழைக்கப்பட்ட இந்த நகரம் இப்பொழுது லெனின் கிராட் என்று அழைக்கப்படுகிறது.3

பீட்டருக்குச் சிறு வயதில் போதிய கல்விப்பயிற்சி அளிக்கப் பெறவில்லை. ஆனால் இவனுக்கு எதையும், தானே, சுயமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் நிறைய இருந்தது. ஒரு கடிகாரம் இருந்தால், அஃது எப்படி வேலை செய்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள, அதனை அச்சு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் பார்த்துவிடுவான். இவனுடைய சுய முயற்சியே இவனுடைய பிற் காலப் பெருமைக்குக் காரணமா யிருந்தது. இதனால் ருஷ்யாவைப் பலவந்தமாக ஐரோப்பாவுக்குள் பிடித்துத் தள்ளினான் என்று இவனைப் பற்றிச் சொல்வார்கள்.

இவன் சிறு பிராயத்தில், ஐரோப்பியர் சிலருடைய நட்பைப் பெற்றான். இந்த நட்புதான், இவனுக்கு, ஐரோப்பாவை எல்லா வகையிலும் பின்பற்ற வேண்டுமென்ற ஆவலை உண்டு பண்ணியது. தன் ராஜ்யத்தையும் பின்பற்றச் செய்யவேண்டு மென்று தீர்மானித்து விட்டான்.

1697-ஆம் வருஷம், அதாவது ராஜ்யப்பொறுப்பை ஏற்றுக் கொண்ட எட்டாவது வருஷம், இவன் சில சகபாடிகளுடன் ஐரோப் பாவைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டான். அரசகோலத்துடன் புறப்படவில்லை. பீட்டர் மைக்கேலாவ்1 என்ற புனை பெயருடன் தனிமனிதனாகவே புறப்பட்டான். ஏனென்றால் அப்பொழுதுதான் எல்லாவற்றையும் நேரில் சென்று பார்க்க முடியும், தெரிந்து கொள்ள முடியும் என்பது இவன் கருத்து.

முதலில் ஜெர்மனி வழியாக ஹாலந்துக்குச் சென்றான். அங்குக் கப்பற்கட்டுந் தொழிற்சாலைகளில் தச்சனாக இருந்து வேலை செய்தான். இங்கிலாந்துக்குச் சென்றால், கப்பல் தொழில் நுணுக்கங் கள் யாவற்றையும் தெரிந்து கொள்ளலா மென்று சொல்லப் பட்டதும், ஹாலந்திலிருந்து இங்கிலாந்துக்குச் சென்றான். அங்கு ஒரு கப்பல் தொழிற்சாலையில் ஆறுவார காலம் சாதாரணத் தொழிலாளி போல் வேலை செய்து தொழில் நுட்பங்கள் யாவற்றை யும் கற்றுக் கொண்டான். பின்னர் இங்கிலாந்திலிருந்து ஆதிரியா, போலந்து, அங்கு ராணுவ சம்பந்தமான சகல விஷயங்களையும் தெரிந்து கொண்டான். இங்ஙனம் இவன் ஐரோப்பாவின் பல பாகங் களையும் சுற்றிப் பார்த்து வருகையில், மாக்கோவில் இவனுக்கு விரோதமாகப் பெருங்கலகம் கிளம்பிவிட்ட தென்று கேட்டுத் திரும்பி விட்டான்.

கலகக்காரர்கள் யாரென்றால், இவனுடைய முற்போக்கான முறைகளை விரும்பாதவர்கள்; பழமையிலே ஊறிப் போனவர்கள்; ராணுவ சேவையில் ஈடுபட்டவர்கள். ஏற்கனவே இவர்கள், ஸோபி யாவின் ரீஜெண்ட் ஆட்சியின்போது, பீட்டரையும் இவன் தாயாரை யும் பல அவமானங்களுக் குட்படுத்தியிருக்கிறார்கள். இதனால் இவர்கள் மீது ஆத்திரம் இருந்தது பீட்டருக்கு. கலகத்திற்குக் கிளம்பினார்களென்றதும், அந்த ஆத்திரத்தை யெல்லாம் தீர்த்துக் கொண்டான். தன் கையினாலேயே நூற்றுக் கணக்கான பேரை வாளுக் கிரையாக்கினான் என்பர்.

பீட்டரின் முற்போக்கான முறைகள் அல்லது சீர்திருத் தங்கள் யாவை? தனது பிரஜைகள், எல்லாவகையிலும், பார்வைக்குக்கூட, ஐரோப்பியர்களைப் போலிருக்க வேண்டுமென்பது இவன் விருப்பம். இதை முன்னிட்டு, எல்லோரும் ஐரோப்பியரைப் போலவே உடை யணிந்து கொள்ள வேண்டுமென்றும் ஓர் உத்தரவு பிறப்பித்தான். உடை மாதிரிகள், ஆங்காங்குக் காட்சிப் பொருள்களாக வைக்கப் பட்டன. பழைய சம்பிரதாயப்படி, அதாவது ருஷ்யர்கள் மங்கோலி யர்களின் ஆதிக்கத்தி லிருந்த காலத்தில் எந்தச் சம்பிரதாயப்படி உடையணிந்து வந்தார்களோ அந்தச் சம்பிரதாயப்படி உடை யணியக்கூடாதென்றும் உத்தரவு செய்தான். இன்னும், தாடியை எடுத்துவிட வேண்டுமென்று கூறினான். பார்ப்பதற்கு லட்சணமா யிருக்கவேண்டுமென்பதற்காக, சிலருடைய பற்களைக்கூட பிடுங்கச் செய்தான். பெண்கள், சிறப்பாக மேல்வகுப்பு பெண்கள், ஆண் களோடு சரிசமானமாகப் பழக வேண்டுமென்றான். தன் பெண் களையும் மற்ற உறவினர்களையும் ஐரோப்பிய அரசிளங் குமரர் களுக்கு மணஞ் செய்து கொடுத்தான். சிறுவர், சிறுமியரை, அவர்கள் இஷ்டத்திற்கு விரோதமாக விவாகஞ் செய்து வைக்கக்கூடா தென்று ஆணையிட்டான். ஜனங்கள் பக்குவப்படாதிருக்கின்ற நிலையில், இந்த மாதிரியான சீர்திருத்தங்கள், சில விபரீத பலன் களையே அளித்தன.

இன்னும் பீட்டர், ஆங்காங்குக் கல்விச் சாலைகளை நிறு வினான். தனது பிரஜைகள் அனைவரும் கல்வியறிவு பெற்றிருக்க வேண்டு மென்பது இவன் விருப்பம். இதற்காக, ருஷ்ய பாஷையின் எழுத்துக்களில் சில சீர்த்திருத்தங்கள் செய்தான். அநேக அச்சுக் கூடங்களை தாபித்தான். முதன் முதலாக ஒரு பத்திரிகையை ஆரம்பித்தான். அந்நிய நாடுகளி லிருந்து அநேக அறிஞர்களை வர வழைத்துத் தனது சேவையில் அமர்த்திக்கொண்டான். அவர்களைக் கொண்டு அநேக நூல்கள் எழுதச் செய்தான். இவனும் சில நூல்கள் எழுதினான். சிறுவர் சிறுமியர்களை முற்போக்கான கருத்துக்களில் ஈடுபடுத்த வேண்டுமென்பதற்காக, பள்ளிக்கூட பாட புத்தகங்கள் பலவற்றைத் தயாரிக்கச் செய்தான். இப்பொழுது பிரபலமாக இருக்கும் விஞ்ஞானக் கழகத்தை1 தாபித்தது இவன் தான். பணக் கார வீட்டுப் பிள்ளைகளை ஐரோப்பாவின் பல பாகங் களுக்கும் அனுப்பி அவர்களுடைய அறிவை விருத்தி செய்து கொள்ளும் படி செய்தான்.

இதுகாறும் மத தாபனங்கள், அரசாங்கத்திற்குப் புறம்பான வையா யிருந்தன. அதாவது அவற்றின் விவகாரங்களில் அரசாங்கம் தலையிடக் கூடாதென்றிருந்தது. பீட்டர் இதை மாற்றி மத தா பனங்களை அரசாங்க நிருவாகத்திற்குட்படுத்தினான்.

மற்றும் பீட்டர், ருஷ்யாவின் தரைப்படை, கடற்படை, ஆகிய வற்றை ஐரோப்பிய முறையில் சீர்திருத்தியமைத்தான். ருஷ்யாவை ராணுவ பலம் மிகுந்த நாடாகச் செய்தது இவன்தான். ருஷ்ய ராணுவம், இரண்டு லட்சம் பேர் கொண்டதாயிருந்தது இவன் காலத்தில். அந்த காலத்தில் இது பெரிய எண்ணிக்கையல்லவா?

அரசாங்க நிருவாக முறையையும் மாற்றியமைத்தான் பீட்டர். அரசாங்கத்தின் பல இலாகாக்களையும் பகுதி பகுதியாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு மந்திரியின் நிருவாகத்திற்குட் படுத்தினான். முக்கியமான நகரங்களில், நீதி தலங்களை நிறுவினான். ஜனங்களுக்கு ஒழுங்காக நீதி கிடைக்குமாறு சட்டங்களைச் சீர் திருத்தியமைத்தான்.

இங்ஙனம் பல துறைகளிலும் பீட்டர் சீர்திருத்தங்கள் செய்த போதிலும், தேசத்தின் நல்வாழ்வுக்கு அடிப்படையா யுள்ளவர்கள் யாரோ அவர்கள் விஷயத்தில், அதாவது குடியானவர்கள் விஷயத் தில் ஒன்றுமே செய்யாது விட்டுவிட்டான். ஒரு நிலச்சுவான்தார், தன் கீழ் வேலை செய்யும் விவசாய அடிமைகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவராயிருந்தால், அவர்களைத் தனித்தனியாகப் பிரித்து விற்கக் கூடாதென்பது போன்ற ஓரிரண்டு மாற்றங்களைச் செய்தான். இவை களைச் சீர்திருத்தங்கள் என்று சொல்ல முடியுமா? இந்த மாற்றங் களுக்கு ஈடுசெய்வதுபோல், நிலச்சுவான்தார்களுக்கு, அவர் களுடைய அடிமைகள் மீதிருந்த ஆதிக்கத்தை அநேக அமிசங்களில் அதிகப்படுத்தினான். அடிமைகள், தங்கள் எஜமானர்களுடைய பிடியினின்று எந்தவிதத்திலும் தப்பமுடியாத வர்களாகிவிட்டார்கள். இங்ஙனமே கிராமநிருவாக விஷயத்திலும் பீட்டர் தலையிடவே இல்லை. மோட்ச லோகம் வெகு உயரத்திலிருக்கிறது; ஜார் வெகு தொலைவில் இருக்கிறார்; எங்களுக்கு விமோசனம் ஏது என்று கிராமவாசிகள் - நிலத்திலே உழைக்கும் ஏழை மக்கள் - ஏங்கி நின்றார்கள். பீட்டர் செய்த சீர்திருத்தங்களைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், கட்டடத்தின் அதிவாரத்தைப் புறக் கணித்துவிட்டு, தூண்களைக் கட்டுவதிலே அதிக சிரத்தை காட்டி னான் என்றுதான் சொல்ல வேண்டும்.

பீட்டர், உற்சாகம் நிறைந்த சீர்திருத்தக்காரனாக மட்டு மில்லை; சிறந்த போர் வீரனாகவும் இருந்தான். இவன் சுமார் ஏழு அடி உயரம். அதற்குத் தகுந்த பருமன். ஓட்டமாகத்தான் நடப்பான்.

குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தமட்டில், பீட்டர் ஒழுங்கு தவறியே நடந்துகொண்டானென்று சொல்லவேண்டும். இவன் தனது பதினேழாவது வயதில்- 1689-ஆம் வருஷம் - அரண்மனை உத்தியோகதன் ஒருவனுடைய பெண்ணாகிய யூடோக்ஸி லோபுகின்1 என்பவளை விவாகம் செய்து கொண்டான். ஆனால் சிறிது காலத்திற்குப் பின்னர் அவளை நிராகரித்து விட்டான். பிறகு சிறிது காலம் விலை மாதர் வலையிலே சிக்கி உழன்றான். இவன் காட்டிய ஆதரவின் பேரில் துணிச்சல் நிறைந்த அந்நியர் சிலர் - அதிகமாக ஜெர்மனியர் - ருஷ்யாவின் நிரந்தரவாசி களாயினர்; இவனைச் சூழ்ந்தகொண்டு, தாங்கள் நெறியற்ற முறையில் நடந்து சென்றதோடு இவனையும் நடத்திச்சென்றனர். இவர்களுடைய பேச்சைக் கேட்டு, இளமையில், அரச அந்ததுக்கு ஒவ்வாத அநேக காரியங்களில் அதிக உற்சாகத்தோடு ஈடுபட்டான். இந்தக் காரியங் களில் குறிப்பிடப்பட வேண்டியவை ஒன்று மதுபானம்; மற்றொன்று பிற மாதர் முயக்கம். ஆனால் பின்னர் முதுமைப் பருவம் எய்திவரும் காலத்தில் இவைகளுக்காகச் சிறிது வருந்தினான் என்று சொல்லப் படுகிறது.

பீட்டர், தன்னுடைய நாற்பதாவது வயதில் - 1712-ஆம் வருஷம்- காதரைன்2 என்ற ஒருத்தியைப் பட்டத்தரசியாக்கிக் கொண்டான். ஏற்கனவே இவள், பலருடன் நட்புக்கொண்டு நல்ல அனுபவம் பெற்றவள். இரண்டு குழந்தைகளும் பிறந்திருந்தன. இவை தன்னுடைய குழந்தைகளேயென்று பீட்டர் கூசாமல் கூறிக் கொண்டான்.! இவளுக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. அழகும் இல்லை; ஆனால் நல்ல உடற்கட்டு இருந்தது. எப்படியோ பீட்டரை வசப்படுத்தி விட்டாள்; தன் செல்வாக்கைப் பீட்டர் மீது அதிகமாக உபயோகித்தாள். இதனால் நன்மையடைந்தவரும் உண்டு; தீமை அனுபவித்தவரும் உண்டு.

பீட்டர், தன் கடைசி காலத்தில், காதரைன், வில்லியம் மான்3 என்பவனோடு கள்ளக்காதல் கொண்டிருப்பதை அறிந்தான். தானே நேரில் விசாரணை நடத்தினான். மான்ஸீக்கு மரண தண்டனை கிடைத்தது. காதரைன் கதி யாதாகுமோ என்று எல்லோரும் எதிர் பார்த்துக் கொண்டிருந்த தருணத்தில், பீட்டர் நோய் வாய்ப்பட்டு விட்டான். இதிலிருந்து மீளவே இல்லை. காதரைனின் அதிருஷ்டம்!

பீட்டருக்கு, யூடோக்ஸி லோபுகின்னிடம் பிறந்த ஓர் ஆண் மகனுண்டு. அலெக்ஸி என்று பெயர்; பட்டத்திளவரசனாக்கப் பெற்றான். ஆனால் இவன் விஷயத்தில் பீட்டருக்கு ஒருவித வெறுப்பு ஏற்பட்டு விட்டது. தன்னால் வெறுக்கப்பட்ட மனைவியின் மகனல்லவா?

இந்த நிலையில் அலெக்ஸிஸின் துரதிருஷ்டவசமாக, காதரைனுக்கு ஒர் ஆண் மகவு பிறந்தது. இதற்கும் பீட்டர் என்றே பெயர் வைக்கப்பட்டது. இப்பொழுது பட்டத்திளவரசன் யார் என்ற கேள்வி பிறந்தது.

பீட்டரிடம் காதரைனுக்கு இருக்கும் செல்வாக்கை நன்கு உணர்ந்த அலெக்ஸி, பட்டத்துரிமையைத் துறந்து விடுவதாகப் பீட்டரிடம் தெரிவித் தான். பீட்டரும் இதற்கு முதலில் ஒப்புக் கொண்டான். பின்னர், இவனை - அலெக்ஸிஸை - உயிரோடு விட்டு வைத்திருத்தல் ஆபத்து என்று உணர்ந்தான் போலும். அலெக்ஸி மீது இல்லாத பொல்லாத குற்றங்களைச் சாட்டிக் கடைசியில் அவனை 1718-ஆம் வருஷம் மரண தண்டனைக்குட் படுத்திவிட்டான். அலெக்ஸி மரித்த மூன்றாவது நாள், மாக்கோவில் ஒரு பெரிய கோலாகல விழா நடைபெறச் செய்தான் பீட்டர்! ஆனால் முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையுமன்றோ? அடுத்த வருஷமே - 1719-ஆம் வருஷம்- பட்டத்துக்குரியவனாக்கப் பட்ட காதரைன் மகன் பீட்டர் இறந்து போனான்.

பீட்டர் காலத்தில், ருஷ்யாவுக்கும் சீனா, துருக்கி, வீடன் ஆகிய நாடு களுக்கும் அநேகந் தடவை போர்கள் நடைபெற்றன. இந்தப் போர்களின் விளைவாகச் சில பிரதேசங்கள் ருஷ்யாவின் ஆதிக்கத் திற்குட்பட்டன.

தனது ஜனங்களுக்காக ஓயாது உழைத்துக் கொண்டிருந்த பீட்டர், ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த ஜனங்களை குதிரை வேகத்தில் ஓடும்படி செய்த பீட்டர், உறக்கத்திலே இன்பங் கண்டிருந்தவர்களை உழைக்குமாறு விரட்டிய பீட்டர், 1725ஆம் வருஷம் ஜனவரி மாதம் இருபத்தெட்டாந் தேதி மரித்தான். மகா பீட்டர்1 என்று சரித்திரகாரர்கள் இவனை அழைக்கின்றனர். இதற்கு முற்றிலும் பொருத்தமானவன் இவன். மகா பீட்டரின் சலியாத உழைப்பு, இன்றும் ருஷ்ய மக்களிடம் பிரதிபலித்துக் கொண்டிருக் கிறதல்லவா?

பீட்டரின் மரணத்திற்குத் துக்கித்தவர்கள் ஒரு சிலரே. ஏனென்றால் அவனுடைய ஆட்சியில் ஜனங்கள், சிறப்பாக சமுதாயத் தின் மேல் தரத்தினர், மிகவும் சலிப்படைந்து போயிருந்தனர். அவ் வளவு தூரம் அவர்களை உழைக்குமாறு செய்துவிட்டான். அவன் இறந்ததும் அவர் களெல்லோருக்கும் விடுதலை கிடைத்தது போலி ருந்தது. பழைய மாதிரி தங்களிஷ்டப்படிக்கு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கலாமல்லவா?

இதற்குத் தகுந்தாற்போல் பீட்டருக்குப் பின் பட்டத்திற்கு வந்தவர்கள், மிகச் சாதாரணமானவர்களாக இருந்தனர். அரச பீடத்தைக் கைப்பற்ற போட்டா போட்டிகளென்ன, சூழ்ச்சிகளென்ன, எல்லாம் நடைபெற்றன. அரசிகளும் அரசர்களும் மாறி மாறிச் சில சில வருஷகாலம், ஆண்டோம் என்ற பெயருடன் ஆண்டுவிட்டு மறைந்தார்கள். பீட்டருக்குப் பிறகு சுமார் முப்பத்தைந்து வருஷ காலம் இந்த நிலைமை இருந்தது.

7. மகா காதரைன்
பீட்டருக்குப் பின்னர் 1762-ஆம் வருஷம் இரண்டாவது காதரைன்1 என்பவள் சிங்காதனத்தைக் கைப்பற்றிக் கொண்டாள். மகா துணிச்சல்காரி; கொடுமை நிறைந்தவள். தன் புருஷனைக் கொலை செய்துவிட்டுச் சிங்காதனத்தைக் கைப்பற்றிக்கொண்டாள். அதிகார பதவியிலே அவ்வளவு மோகம்! இவளை மகா காதரைன்2 என்று சரித்திரக்காரர்கள் அழைப்பார்கள். 1796-ஆம் வருஷம் வரை, முப்பத்து நான்கு வருஷ காலம் இவள் ஆட்சி நடைபெற்றது. இவள் ஆட்சியில், போலந்தின் பெரும் பகுதியும், துருக்கியின் ஆதீனத் திலிருந்த கிரிமியா3 தீபகற்பமும் ருஷ்யாவுக்குச் சேர்ந்தன. இன்னும் கருங்கடலின் வட கரையிலிருந்து காக்கஸ மலை4 வரையுள்ள பிரதேசமும் ருஷ்யாவின் சுவாதீனமாயிற்று. ருஷ்யாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றான ஓடெஸா5, இவள் ஆட்சியின்போதுதான் 1794-ஆம் வருஷம் காணப்பட்டது. சுருக்கமாக இவள், தனது உழைப் பினாலும் இடைவிடாத போராட்டத்தினாலும் சுமார் மூன்று லட்சம் சதுரமைல் விதீரணமுள்ள பிரதேசத்தை ருஷ்யாவின் ஆதிக்கத்திற் குட்படுத்தினாள்.

காதரைன், ருஷ்யாவை ஐரோப்பாவுடன் இணைத்து வைக் கிற விஷயத்தில், மகாபீட்டரைக் காட்டிலும் அதிக உற்சாகங் காட்டி னாள். மகா பீட்டர் ருஷ்யாவைப் பலவந்தமாக ஐரோப்பாவுக்குள் பிடித்துத் தள்ளினான் என்று சொன்னால், இவள் ஐரோப்பாவைப் பலவந்தமாக ருஷ்யாவுக்குள் திணித்தாள் என்று சொல்ல வேண்டும். கி.பி.பதினெட்டாவது நூற்றாண்டில் பிரெஞ்சு நாகரிகத்திற்கும் கலைகளுக்கும் மேனாடு முழுவதிலும் ஒருவித செல்வாக்கு இருந்தது. காதரைன் இந்தச் செல்வாக்குக்குட்பட்டாள். பிரெஞ்சு அறிஞர் களான வால்ட்டேர்1, டிடெரோ2, டிஅலெம்பர்ட்3 முதலியவர்களுடன் கடிதப்போக்குவரத்து வைத்துக்கொள்வதில் பெருமை கொண்டாள். இவள் காலத்தில் ருஷ்ய அரசவையிலுஞ் சரி, ருஷ்ய சமுதாயத்திலுஞ் சரி, பிரெஞ்சு சம்பிர தாயங்கள் பல புகுந்து ஆதிக்கங் கொண்டன.

தன்னை ஒரு மேதை என்று கருதி எல்லோரும் பாராட்ட வேண்டு மென்பது இவள் எண்ணம். இதற்காக, ருஷ்ய அறிஞர் பலரைத் தன்னுடைய சேவையில் அமர்த்திக்கொண்டு அவர்களுக்குப் பலவித கௌரவங்களை வழங்கினாள். இவள் காலத்தில் பெரிதும் புகழ் பெற்றிருந்த ஜெர்மன் அறிஞனான ஜிம்மர்மான்4 என்பவனுடன் கடிதத் தொடர்பு வைத்துக் கொண்டாள்.

நல்ல நூல்களைப் படித்துச் சுவைக்கும் ஆற்றலும் இவளுக்குச் சிறிது இருந்தது. கிரேக்க அறிஞனான பிளேட்டோ5, ரோம சரித்தி ராசிரியனான டாஸிட்ட1, பிரெஞ்சுப் புலவனான மாண்ட் டெக்கு2 - இப்படிச் சில அறிஞர்களுடைய நூல்களை விரும்பிப் படித்தாள்.

இவள் ஆட்சியில், அரசாங்க நிருவாகத்தில் அநேக மாற்றங் களும் சீர்திருத்தங்களும் செய்யப்பட்டன. புதிய பள்ளிக்கூடங்கள் பல திறக்கப்பட்டன. இலக்கியப் படைப்பிலே வல்லவர்களென்று தங்களைக் கருதிக்கொண்ட சிலர், சில நூல்கள் எழுதி வெளி யிட்டனர். இன்னுஞ் சிலர், கிரேக்க, லத்தீன், ஆங்கில மொழிகளி லிருந்து சில நல்ல நூல்களை ருஷ்ய பாஷையில் மொழி பெயர்த்து வெளியிட்டனர். இந்தக் காலத்தில் தான் ஆங்கில மேதைகளான மில்ட்டன்3, ஷேக்பியர்4 - இவர்களுடைய படைப்புக்கள் ருஷ்ய மொழியில் காட்சியளித்தன. சிற்பக்கலைக்கு ஆதரவு காட்டப்பட்டது. இதன் விளைவாக அநேக புதிய கட்டடங்கள் எழும்பின. இவற்றில் சில, வண்ண ஓவியங்கள் நிறைந்த காட்சிசாலைகளாக விளங்கின.

காதரைன், இப்படிச் சில காரியங்கள் செய்தாளெனினும், சமுதாயத்தின் கீழ்ப்படியிலிருந்தவர்களுக்கு எவ்வித விமோச னத்தையும் அளிக்க முன் வரவில்லை. அவர்களுக்கு வாய் நிறைய அநுதாபங் காட்டினாள். அவ்வளவுதான். நிலச்சுவான்தார்களையும் பணக்காரர் களையும் திருப்தி செய்வதில்தான் இவள் சிரத்தை யெல்லாம் சென்றது. யாருடைய கட்டுப்பாட்டுக்கும் உட்படாமல் சுயேச்சையாக விவசாய ஜீவனம் செய்து வந்த சுமார் எட்டு லட்சம் பேரை, கட்டாய ராணுவச் சேவகத்திற்கும் நிலச்சுவான்தார்களின் ஆதிக்கத்திற்கும் உட்படுத்தினாள் இவள் என்று ஒரு வரலாறு கூறுகிறது.

இவளுடைய ஆட்சியில், விவசாயிகள் அடிக்கடி கலகத்திற்குக் கிளம்பினார்கள். வாழ்க்கைக்காகப் போராட வேண்டிய அவசியம் இவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. இந்தக் கலகங்களை காதரைன், கடுமை யான முறைகளைக் கையாண்டு அடக்கினாள். இந்தக் கலகங்களில் குறிப்பிடத்தக்கது, ருஷ்யாவின் தென் கிழக்குப் பிரதேசங்களில் நிகழ்ந்த கலகமாகும். 1773-ஆம் வருஷத்திலிருந்து 1775-ஆம் வருஷம் வரை சுமார் இரண்டு வருஷகாலம் நடைபெற்ற இந்தக் கலகத்திற்கு புகாசேவ்5 என்ற ஒரு காஸாக்கு வீரன் தலைமை வகித்தான். இலட்சக்கணக்கான விவசாயிகள் இவனுடைய செல்வாக்குக் குட்பட்டனர். இவனை அடக்கு வதற்கு காதரைன் அதிக பிரயாசை எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. கடைசியில் இவன், முந்தி ராஸீனைப் போலவே, தன் இனத்தவரால் காட்டிக் கொடுக்கப்பட்டு, காதரைன் ஆட்கள் வசம் சிக்கிக்கொண்டு விட்டான். இவனுடைய கைகளையும், கால்களையும் துண்டித்து, சிறையில் அடைத்துவிடுமாறு உத்தரவிட்டாள் காதரைன். இவனுடைய கிராமத்து வீடு தரையோடு தரையாக்கப்பட்டது.

காதரைன் ஆட்சிக்காலத்தில், அதாவது 1789-ஆம் வருஷம் பிரெஞ்சுப் புரட்சி தொடங்கியது. சுதந்திரம், சமத்துவம், சகோரத் துவம் என்ற சப்தங்கள் தொலை தூரத்திலிருந்த ருஷ்யாவிலும் கேட்க ஆரம்பித்தன. வால்ட்டேர், ரூஸோ1 முதலியோருடைய உபதேசங் களில் மனம் லயித்துப்போன பணக்கார குடும்பத்துப்பிள்ளைகள், தங்கள் தாய் நாட்டை - ருஷ்யாவை - திரும்பிப் பார்க்க ஆரம்பித் தார்கள்; யாருடைய உழைப்பினால் தங்களுடைய வயிறு நிரம்பு கிறதோ அவர்கள் - அந்த விவசாய அடிமைகள் - எவ்வளவு வறுமை யிலே விழுந்து கிடக்கிறார் களென்று எட்டிப் பார்க்கத் தொடங் கினார்கள். இளைஞர்கள் இந்த மாதிரி சாதாரண ஆசை கொண்டது கூட காதரைனுக்குப் பிடிக்கவில்லை. வெறிபிடித்தவள் போலானாள். அடக்கு முறையைப் பிரயோகித்தாள்.

இவள் வெறி கொண்டாளென்பதற்கு ஒரே ஓர் உதாரணம். அலெக்ஸாந்தர் ராடிஷ்சேவ்2 என்ற ஓர் அறிஞன், வால்ட்டேர், ரூஸோ முதலியோருடைய முற்போக்குக்கருத்துக்களில் பெரிதும் ஈடுபட்டான். இவன் செயின்ட் பீட்டர்பர்க்கிலிருந்து மாக்கோ வரை பிரயாணம்3 என்று தலைப்புக் கொடுத்து ஒரு நூல் எழுதி வெளி யிட்டான். இதில், விவசாய அடிமைகளின் பரிதாபநிலை, இவர்கள் விஷயத்தில் அதிகாரவர்க்கம் அனுஷ்டிக்கும் கருணையற்ற முறைகள், அரச பீடத்தின் சர்வாதிகாரம் இவைகளையெல்லாம் பற்றி எழுதி யிருந்தான். இந்த நூல், காதரைன் பார்வைக்கு வந்தது. ஒரே கோபங் கொண்டுவிட்டாள். ஆட்சி பீடத்தைப் பற்றியும் அதிகார வர்க்கத்தைப்பற்றியும் யாராவது ஏதேனும் சொல்லலாமா? என்ன துணிச்சல் இந்த அலெக்ஸாந்தர் ராடிஷ் சேவுக்கு! உடனே இவன் கைதியாக்கப்பட்டான்; விசாரணையும் நடைபெற்றது. மரண தண்டனை! ஆனால் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. அதற்குள், காதரைனுக்கு, யாருடைய தூண்டுதல் பேரிலோ, சிறிது கருணை பிறந்தது. பத்து வருஷம் தீவாந்தர தண்டனையாக மாற்றி னாள். இந்தப் பத்து வருஷத்தையும் இவன் - ராடிஷ்சேவ்- கிழக்கு சைபீரியா மாகாணத்தில் கழித்தான். கடைசியில் விடுதலையும் பெற்றான். ஆனால் அடுத்த வருஷமே தற்கொலை செய்து கொண்டான்.

இங்ஙனமே ஏழை மக்களுக்காக அல்லும் பகலும் உழைத்து வந்த நிக்கோலா நோவிகாவ்1 என்பவனும் காதரைனின் கோபத்திற்காளாகி, பதினைந்து வருஷக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பெற்றான்.

காதரைன், உழைப்பிலே இன்பங்கண்டவள். காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்துவிடுவாள். தினந்தோறும் பதினைந்து அல்லது பதினாறு மணி நேரம் வேலை செய்வது இவளுக்குச் சர்வ சாதாரணம். அரசாங்க நிருவாக விஷயத்தில் பிடிவாதங் காட்ட மாட்டாள். பிறர் சொல்வதையும் கேட்டுக் கொள்வாள். தானே வலிய மற்றவர்களுடைய ஆலோசனைகளைக் கேட்பாள். மற்றவர் களிடத்தில் காணப் பெறும் சிறப்பியல்புகளைப் பாராட்டுவாள் இந்தச் சில நல்ல குணங்களை யெல்லாம் மறைப்பதுபோல், இவளுக்கு அதிகாரஞ் செலுத்துவதிலே அதிக ஆசை இருந்தது. இந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்யத் துணிந்தாள்.


IV. ரோமனாவ் பரம்பரை

(இரண்டாம் பகுதி)
1. வல்லரசுகளின் கூட்டு
காதரைனுக்குப் பிறகு பட்டத்திற்கு வந்தவன் முதலாவது பால். காதரைனின் மகன்தான் இவன். ஆயினும் அவளுடைய மரணச் செய்தியைக் கேட்டு சந்தோஷப்பட்டவர்களிலே இவன் ஒருவன்! அவள் இருந்தவரையில் இவனை அடக்கியே வைத்திருந் தாள்; ராஜ்ய விவகாரங் களைக் கவனிக்க இவனுக்குச் சந்தர்ப்பமே கொடுக்கவில்லை.

பால், சுயேச்சாதிகாரத்திலே வெகு நம்பிக்கை கொண்டவன். பிரஜா உரிமை, ஜனநாயகம் என்ற சொற்றொடர்களெல்லாம் இவனுக்குப் பிடிக்காது. முற்போக்கான கருத்துக்களைக் கொண்ட நூல்களை இவன் அறவே வெறுத்தான். ஐரோப்பாவில் வெளியான இத்தகைய நூல்கள் ருஷ்யாவுக்குள் வரக்கூடாதென்று தடை யுத்தரவு போட்டான்; வெளி நாடுகளிலிருந்த ருஷ்யர்களை, ருஷ்யா வுக்குத் திரும்பி வந்துவிடுமாறு கட்டளையிட்டான்.

பதினெட்டாவது நூற்ண்டின் கடைசியில், பிரான்சின் அரசியல் செல்வாக்கு ஓங்கி வளர்ந்து வந்தது. நெப்போலியன்1 பல பிரதேசங் களையும் ஜெயித்துக்கெண்டு வந்தான். இதனைக் கண்டு ஐரோப்பிய வல்லரசுகள் பலவும் கலக்கமடைந்தன; பிரான்சை எதிர்த்து நிற்கிற முறையில் ஒரு கூட்டாகச் சேர்ந்து கொண்டன. இந்தக் கூட்டுக்குக் காரணமாயிருந்தவன் பால். இங்கிலாந்து, ஆதிரியா, துருக்கி, போர்த்துகல் முதலிய நாடுகள் சேர்ந்ததே இந்தக் கூட்டு. ருஷ்யா, ஒரு பெரும் படையை பிரான்சுக்கு விரோதமாக அனுப்பியது. முதலில் வெற்றி; பிறகு தோல்வி. ஏராளமான உயிர்ச்சேதத்துடன் திரும்பி விட்டான். ருஷ்யப்படைத் தலைவன். இவன் பெயர் ஸூவரோவ்.2 இவன் வீரத்தை இன்றும் ருஷ்யர்கள் புகழ்ந்து பேசுகிறார்கள்.

இந்தச் சம்பவம் நடைபெற்ற சில மாதங்களுக்குப் பிறகு, மேற்படி வல்லரசுகளின் கூட்டில் பிளவு ஏற்பட்டு விட்டது. ஆதிரி யாவும் இங்கிலாந்தும், தன் விஷயத்தில் சரியாக நடந்துகொள்ள வில்லையென்று ருஷ்யா கருதியதுதான் இந்தப் பிளவுக்குக் காரணம். உடனே பால் மன்னன் நெப்போலியனுடன் சேர்ந்து கொண்டு விட்டான். இருவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். நெப் போலியனுக்கு எழுதுகிறான் பால் மன்னன்: - எப்படி ஆள்வது, எப்படிப் போர் செய்வது என்பவைகளைப்பற்றி நன்கு தெரிந்து கொண்டிருக்கும் ஒருவர், ஒரு நாட்டின் தலைவராக இருப்பதைப் பார்க்கிறபொழுது அவரிடத்தில் நான் பெரிதும் ஈடுபட்டு விடு கிறேன். இங்கிலாந்தினிடம் எனக்குள்ள அதிருப்தியைத் தெரிவிக்கும் பொருட்டே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். சர்வதேசங்களுக்கும் பொதுவாயுள்ள சட்டத்தின் ஒவ்வொரு பிரிவையும் அது மீறி நடக்கிறது. அகம்பாவமும் சுயநலமுமே அதற்கு வழிகாட்டிகளாக இருக்கின்றன. அதனுடைய அநீதமான நடவடிக்கைகளுக்கு ஒரு முடிவு கட்டவேண்டுமென்பதற் காகவே உங்களோடு சேர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நெப்போலியனும் பால் மன்னனும் சேர்ந்து, ஐரோப்பாவைத் தங்களுக்குள் பங்கு போட்டுக்கொள்வதென்றும், இந்தியாவின் மீது படை யெடுத்து அதனை ஆக்கிரமித்துக்கொள்வதென்றும், இப் படிப் பல திட்டங்கள் போட்டார்கள். எல்லாம் பகற்கனவாகவே போயின.

பால் மன்னன் திரபுத்தி யில்லாதவன்; பைத்தியக்காரன் மாதிரி பல சந்தர்பங்களில் நடந்து கொண்டான். சட்டையைச் சரி யாக அணிய வில்லை, பொத்தனைச் சரியாகப் போட்டுக் கொள்ள வில்லை என்பன போன்ற அற்ப காரணங்களுக்காக ஆயிரக்கணக் கான ராணுவ வீரர்களை சிறைக்கு அனுப்பினான்; ஸைபீரியா வுக்குப் பிரஷ்டம் செய்தான். இவன் ஆட்சியில், ஜனங்கள் எப்பொழுதும் உயிருக்குப் பயந்து கொண்டே வாழ்ந் தார்கள். இதனால் இவன், தன் உயிருக்கு எப்பொழுது ஆபத்து ஏற்படுமோ என்று பயந்த வண்ணம் வாழவேண்டிய வனாகிவிட்டான். இவன் பயந்திருந்தபடியே, 1801-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் இரு பத்து மூன்றாந் தேதி இவனு டைய பரிவாரத்தினராலேயே கொலை செய்யப்பட்டு விட்டான்.

பால் மன்னனுக்குப் பிறகு பட்டத்திற்கு வந்தவன் முதலாவது அலெக்ஸாந்தர்.1 இவனுடைய ஆட்சியை, குறிப் பிடத்தக்க ஆட்சிகளுள் ஒன்றெனச் சொல்லவேண்டும். ஏனென்றால் இவன் காலத்தில் தான் நெப்போலியன், ருஷ்யாமீது படையெடுத்து, பயன் பெறாமல் திரும்பிச் சென்றான்; ருஷ்யாவின் சக்தி வெளிப் பட்டது. ஐரோப்பாவின் முடிமன்னர்கள், தங்கள் சுயேச்சாதிபத்தி யத்தை ஊர்ஜிதம் செய்துகொள்ள, ருஷ்யாவை முக்கிய பங்காளியாகவும் அநேக அமிசங்களில் வழிகாட்டி யாகவும் கொண்டார்கள்.

அலெக்ஸாந்தர் பட்டத்திற்கு வந்ததும், அரசியல் காரணங் களுக்காகச் சிறைப்பட்டிருந்தவர்களை விடுதலை செய்வித்தான். ஐரோப்பாவிலிருந்து முற்போக்கான கருத்துக்கள் கொண்ட நூல்கள் ருஷ்யாவுக்குள் வரக் கூடாதென்று பால் மன்னன் உத்தரவு போட்டிருந் தானல்லவா, அதை ரத்து செய்தான். நிலச் சுவான்தார் களுக்குப் பந்தப் பட்டுக்கிடந்த விவசாய அடிமைகளுக்கு விடுதலை தேடித் தரும் பொருட்டு ஒரு சட்டமியற்றினான். ஆனால் விவசாயி களுக்கு இதனால் விசேஷ நன்மை எதுவும் உண்டாகவில்லை. அர சாங்க நிருவாகத்தை ஒழுங்கு படுத்த சில ஏற்பாடுகளைச் செய்தான். இங்ஙனம் உள்நாட்டு விவகாரங்களைக் கவனித்துக் கொண்டி ருக்கையில், ஐரோப்பிய அரசியல் அரங்கத்தில் பிரவேசிக்க வேண்டிய அவசியம் இவனுக்கு ஏற்பட்டது.

ஐரோப்பிய அரசியல் அரங்கத்தில் பிரான்சின் செல்வாக்கு வர வர அதிகப்பட்டுக்கொண்டு வந்தது. இதை மற்ற வல்லரசுகள் சகித்துக் கொண்டிருக்குமா? எனவே இங்கிலாந்து, ஆதிரியா, வீடன், ருஷ்யா ஆகிய நான்கும், பழையமாதிரி ஒரு கூட்டாகச் சேர்ந்து கொண்டன. இங்ஙனம் பிரான்சுக்கு விரோதமாகக் கூட்டுச் சேர்ந்தது 1805-ஆம் வருஷம். ஆனால் 1803 -ஆம் வருஷத்திலிருந்தே, இங்கிலாந்து, பிரான்சை எதிர்த்துப் போராடி வந்தது. அதனுடைய முயற்சியினாலேயே மேற்படி கூட்டு ஏற்பட்டது என்று சொல்லலாம்.

1805-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் ஆதிரியப் படைகளும் ருஷ்யப் படைகளும் சேர்ந்து பிரெஞ்சுப் படைகளை எதிர்த்தன. ஆட்டர்லிட்1 என்ற இடத்தில் கோரயுத்தம் நடைபெற்றது. ருஷ்யாவுக்குப் படுதோல்வி. இருபத்தோராயிரம் ருஷ்யர்கள் உயிரிழந்தார்கள். இதனால் அலெக்ஸாந்தருக்கு, பிரான்சின்மீதிருந்த குரோதம் அதிகரித்ததே தவிர, குறையவில்லை.

மறுபடியும் 1807 - ஆம் வருஷம், பிரான்சுக்கு விரோதமாக ஒரு கூட்டுச் சேர்த்தான் அலெக்ஸாந்தர். இங்கிலாந்து, வீடன், ப்ரஷ்யா ஆகிய மூன்றும் ருஷ்யாவோடு சேர்ந்து கொண்டன. ஆனால் இந்தக் கூட்டுப் படைகள் ஒன்று சேர்வதற்கு நெப்போலி யன் அவகாசம் கொடுக்க வில்லை. முன் கூட்டியே தாக்குதலை ஆரம்பித்துவிட்டான். இரண்டு இடங்களில் - ஈலாவ்2 என்ற இடத்திலும் ப்ரைத்லாந்து3 என்ற இடத்திலும் - ருஷ்யப் படைகள், நெப்போலியனின் படைகளை எதிர்த்துப் போராடின. இந்த இரண்டு இடங்களிலும் ருஷ்யர்கள் காட்டிய வீரத்தை நெப்போலியன் வியந்து பாராட்டினான். ஆயினும் என்ன? இரண்டு இடங்களிலும் ருஷ் யர்கள் தோல்வியே அடைந்தார்கள்.

இந்த யுத்தங்கள் நடைபெற்ற சில நாட்களுக்குப்பிறகு அலெக் ஸாந்தரும் நெப்போலியனும் டில்ஸிட்4 என்ற இடத்தில் சந்தித்து ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். பழைய பகைவர்கள் புதிய நண்பர் களானார்கள். இந்த டில்ஸிட் ஒப்பந்தத்தினால், ருஷ்யாவுக்கு, போலந்தில் ஒரு பகுதி கிடைத்ததென்பது வாதவம். ஆனால் அத னுடைய கௌரவமே குலைந்துபோய் விட்டது. ருஷ்யாவிலேயே இந்த டில்ஸிட் ஒப்பந்தத் திற்குப் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. ஏனென்றால், மேற்படி ஒப்பந்தத்தில் சில ரகசிய ஷரத்துக்கள் அடங்கியிருந்தன. இந்த ஷரத்துக்களுக்குக் கட்டுப்பட்டு, ருஷ்யா, எந்த வல்லரசுகளோடு கூட்டாகச் சேர்ந்திருந்ததோ அந்த வல்லரசு களையே விரோதித்துக்கொள்ளும்படி யாகிவிட்டது. 1808-ஆம் வருஷத்திலிருந்து 1812- ஆம் வருஷம் வரையில், ருஷ்யா, பிரான்சின் கூட்டாளி என்ற முறையில், இங்கிலாந்து, வீடன், துருக்கி ஆகிய நாடுகளுடன் யுத்தஞ்செய்தது. இந்த யுத்தங்களின் விளைவாக, துருக்கி யிடமிருந்து பெஸரேபியாவும்,1 வீடனிடமிருந்து பின்லாந்தும் ருஷ்யாவுக்குக் கிடைத்தன. ஆனால் இங்கிலாந்தோடு தொடுத்த யுத்தத் தினால், ருஷ்யாவின் வெளிநாட்டு வியாபாரம் பாதிக்கப்பட்டுவிட்டது. இது ருஷ்யாவில் அதிகமான அதிருப்தியை உண்டு பண்ணியது.

2. நெப்போலியன் படையெடுப்பு
அலெக்ஸாந்தரும் நெப்போலியனும் நீடித்த காலம் நண்பர் களாயிருக்கவில்லை. இரண்டுபேரும் சுயேச்சாதிகார மனப்பான்மை யுடையவர்கள். ஐரோப்பாவில், தங்களுடைய ஆதிக்கமே மேலோங் கியிருக்க வேண்டுமென்று இருவரும் ஆசைப்பட்டார்கள். எப்படி ஒற்றுமைப்பட்டிருக்க முடியும்? ஒருவர் மீது ஒருவர் குற்றஞ் சாட்டினார்கள். பிணக்கு முற்றியது. 1812-ஆம் வருஷம் மே மாதம், நெப்போலியன் சுமார் நாலரை இலட்சம் பேரடங்கிய பெரும் படையுடன் பாரிஸை விட்டுப் புறப்பட்டான். ருஷ்யாவை நோக்கி வருகிற வழியில், இத்தாலியர் என்ன, ஜெர்மனியர் என்ன, இப்படி பலரும் பிரெஞ்சுப் படையில் சேர்ந்து கொண்டார்கள். மொத்தம் ஆறு இலட்சம் பேர். அந்தக் காலத்திற்கு இது பெரும் படைதானே? ருஷ்யர்கள், சகல முதீப்பு களுடனும் தயாராயிருந்தனர்; பிரெஞ் சுக்காரர்களை, அவர்கள் முன்னேறி வருகிற வழிகளில் தடுத்துப் போர் புரிந்தனர். ஆயினும் பின்வாங்கும் படியாகிவிட்டது. கடைசி யில் 1812-ஆம் வருஷம் செப்ட்டம்பர் மாதம் பதினான்காந்தேதி பிரெஞ்சுப் படைகள் மாக்கோவை ஆக்கிரமித்துக் கொண்டன. நெப்போலியன், க்ரெம்லின் அரண்மனையில் வந்து அமர்ந்து கொண்டான். ஏற்கனவே ருஷ்யர்கள் மாக்கோ நகரத்தைக் காலி செய்து விட்டிருந்தனர்.

நெப்போலியன் க்ரெம்லினில் வந்து சில மணி நேரங்களுக்குள் மாக்கோ நகரத்தைப் பெரு நெருப்புப் பற்றிக் கொண்டது. இதற்கு ருஷ்யர்களே காரணமாயிருந்திருக்க வேண்டுமென்று சொல்லப் படுகிறது. அஃதெப்படி இருந்தாலும், நெருப்பை அணைப்பதற் கான சாதனங்கள் யாவும் தலைநகரத்தில் இருக்கவில்லை. அரசாங்கத்தாருடைய உத்தரவின்பேரில் அப்புறப்படுத்தப்பட்டு விட்டிருந்தன.

பிரெஞ்சுப் படைகள் நெருப்புக்கிடையே அகப்பட்டுக் கொண்டு தத்தளித்தன. அலெக்ஸாந்தர், இந்தச் சமயத்தில், ஜனங் களுக்கு ஆவேச முண்டாகும்படி ஒரு வேண்டுகோள் விடுத்தான். சிலுவையை இருதயத்தில் நிலை நாட்டிக் கொண்டு, கையிலே வாளை ஏந்துங்கள்; எந்த மனித சக்தியும் உங்களை எதிர்த்து நிற்க முடியாது. இது மேற்படி வேண்டுகோளின் ஒரு பகுதி வாசகம். ருஷ்யமக்கள், தங்களுக்குள்ளிருந்த பல வித வேற்றுமைகளையும் மறந்துவிட்டு, ஒருமுகமாக பிரெஞ்சுகாரர் களை எதிர்த்தார்கள்; அவர்களுக்கு உணவுப்பொருள்கள் முதலிய எதுவும் செல்லாதபடி தடுத்து இம்சை கொடுத்தார்கள். பிரெஞ்சுப் படைகளோ, பட்டினி யாலும், குளிரினாலும் தவித்தன. பார்த்தான் நெப்போலியன். அலெக்ஸாந்தரை சமசரத்திற்கு அழைத்தான். அலெக்ஸாந்தரோ, ருஷ்ய ராணுவத்தைப் பொறுத்த மட்டில் இன்னும் யுத்தம் ஆரம்பிக்கவில்லை யென்று சொல்லி சமரசத்திற்கு வரமறுத்து விட்டான். என்ன செய்வான் நெப்போலியன்? அவனுக்கு இயற்கை யாயிருந்த மனோ உறுதி, இந்தத் தடவை அவனைக் கைவிட்டு விட்டது. 1812-ஆம் வருஷம் அக்ட்டோபர் மாதம் பத்தொன்பதாந் தேதி, பிரெஞ்சுப் படைகள், மாக்கோவிலிருந்து பின்வாங்க ஆரம்பித்தன. பாரிஸுக்கு வந்து சேர்கிறபோது இந்தப் படையில் எண்பதினாயிரம் பேரே இருந்தனர்.

நெப்போலியனை இங்ஙனம் திரும்பிச் செய்துவிட்டதோடு அலெக்ஸாந்தர் திருப்தியடையவில்லை; அவனுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென்று தீர்மானித்தான். ப்ரஷ்யாவையும் ஆதிரியா வையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டு பிரெஞ்சுப்படைகளை விரட்டிச் சென்றான். இந்தக் கூட்டுப்படைகள் 1814-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் பாரிமா நகருக்குள் வெற்றி கோஷத்துடன் பிரவேசித்தன. அலெக்ஸாந்தர், ஆடம் பரமாக ஊர்வலம் வந்தான். நெப்போலியன் முடிதுறந்து எல்பா1 தீவுக்குச் சென்று விட்டான்.

இதற்குப்பிறகு 1814-ஆம் வருஷம் வியன்னா நகரத்தில் ஐரோப்பாவின் முடிமன்னர் பலரும் ஒன்றுகூடி, தாங்கள் ஒருவருக் கொருவர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதைப் பற்றியும், தங்கள் பிரஜை களை எப்படி நடத்த வேண்டுமென்பதைப் பற்றியும் பேசினார்கள். தங்கள் நடவடிக்கைகள் யாவும் கிறிதுவ தர்மத்தை அனுசரித்த தாக இருக்க வேண்டுமென்று கூறினார்கள். இந்த மகாநாட்டுக்கு வியன்னா காங்கிர1 என்று பெயர். இதற்கு மூல புருஷனா யிருந்தவன் அலெக்ஸாந்தர். இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட புனித ஒப்பந்தத்தை2த் தயாரித்தவனும் இவனே.

வியன்னா காங்கிரஸுக்குப் பிறகு அலெக்ஸாந்தரின் மனப் போக்கு அடியோடு மாறிவிட்டது. ஆரம்பத்தில் இருந்த முற்போக் கான எண்ணங்கள், பரந்தகொள்கைகள் எல்லாம் இவனை விட்ட கன்றன. சுயேச்சாதிகார சக்திக்குப் பூரண பக்தனாகிவிட்டான். ஐரோப்பாவிலிருந்து வந்துகொண்டிருந்த முற்போக்கான கருத்துக் களை அடக்கிவிட முயன்றான்.

ஆனால் இதற்கு நேர்மாறாக நெப்போலியனின் படை யெடுப்புக்குப் பின்னர் ருஷ்யாவின் இளைஞர்களுடையமனப் போக்கு, புரட்சிப் பாதையிலே திரும்பியது. ஆங்காங்கு ரகசியச் சங்கங்கள் முளைத்தன. இவைகளைத் தோற்றுவித்தவர்களில் பெரும்பாலோர் ராணுவ சேவைக்காவும் உயர்தரப் படிப்பிற்காக வும் பிரான், ஜெர்மனி முதலிய நாடுகளுக்குச் சென்று திரும்பிய வர்கள்; அங்கு ஜனங்கள், தன்மதிப்பு உணர்ச்சி பெற்று வருவதையும், அந்த உணர்ச்சியை வளர்க்கக் கூடிய தாபனங்கள் பல தோன்றி நன்றாக வேலை செய்து வருவதையும் நேரில் பார்த்தவர்கள். தவிர, உழைப்பிலே சிறிதுகூடச் சலிப்புக் காட்டாதவர் களும், பொறுமை யுடையவர்களும், புத்திசாலிகளுமான ருஷ்ய விவசாயிகள், தலை நிமிர முடியாதவர்களாய் ஒடுக்கப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து, இவர்கள் மனம் புழுங்கினார்கள். உலகத்தினரால் கௌரவிக்கப் படக்கூடிய ஒரு தானத்தை எதிர்காலத்தில் ருஷ்யா அடைய வேண்டு மானால், அதற்கு இந்த விவசாயிகளின் வாழ்க்கை அந்ததை உயர்த்த வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தார்கள். இதற்காக மேற்படி ரகசியச் சங்கங்களை தாபித்து வேலை செய்ய முயன்றார் கள். ஆனால், இவர்களுக் குள்ளே ஒழுங்கோ ஒற்றுமையோ இல்லை; ஒருவித வேலைத் திட்டமும் இல்லை.

சிறப்பாக ராணுவத்தைச் சேர்ந்தவர்கள், அலெக்ஸாந்தர் விஷயத்தில் அதிருப்தி கொண்டனர். ஆங்காங்கு ரகசியச் சங்கங்கள் தோன்றின.

அலெக்ஸாந்தர் இறந்தது 1825 - ஆம் வருஷம் டிசம்பர் மாதம். இவன் ஆட்சியில் ருஷ்யாவின் எல்லை விரிவடைந்தது. பிற்காலத் துப் புரட்சி களுக்கு விதையூன்றப்பட்டதும் இவன் ஆட்சியில் தான்.

அலெக்ஸாந்தருக்குப் பின் முடியேற்க வேண்டியவன், அவனுடைய அடுத்த சகோதரன் கான்ட்டண்ட்டைன்3 ஆனால், இவன் தன் உரிமையை மூன்று வருஷங்களுக்கு முன்னாடியே, அதாவது 1822-ஆம் வருஷத்திலேயே, தன் கடைசி சகோதரன் நிக்கோலாஸுக்காக விட்டுக் கொடுத்துவிட்டிருந்தான். இந்த விஷயம் ரகசியமாகவே வைக்கப் பட்டிருந்தது. இதனால் அலெக்ஸாந்தரின் மரணத்திற்குப் பிறகு, பட்டத்திற்கு யார் வருவது என்பது தெளிவு படாமல் சுமார் இருபது நாட்கள் கழிந்தன. கடைசியில் காண்ட் டண்ட்டைன், தான் ஏற்கனவே முடிதுறந்து விட்டிருப்பதைப் பகிரங்கமாகத் தெரிவித்து நிக்கோலாஸை பட்ட மேற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தினான். நிக்கோலாஸும்1 இதற்கிணங்க 1825-ஆம் வருஷம் டிசம்பர் - மாதம் அரச பதவியை ஏற்றுக் கொண்டான்.

3. டிசம்பர் புரட்சி
ஏற்றுக்கொண்டதும், அரசாங்கத்திற்கு விரோதமாக ஒரு புரட்சி கிளம்பியது. முதலாவது அலெக்ஸாந்தர் காலத்தில் பல ரகசியச் சங்கங்கள் தோன்றின வென்று சொன்னோமல்லவா, இந்தச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், அலெக்ஸாந்தர், மரணத்திற்குப் பிறகும் நிக்கோலா பட்டமேற்பதற்கு முன்னரும் ஏற்பட்டிருந்த நிச்சயமற்ற நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாக உபயோகித்துக் கொண்டு, ஒரு புரட்சிக்கு ஆயத்தம் செய்தார்கள். அப்படியே 1825-ஆம் வருஷம் - டிசம்பர் மாதம் இருபத்தாறாந் தேதி ஒரு புரட்சி நடைபெற்றது. இந்தப் புரட்சியில் சம்பந்தப்பட்டிருந்தவர்களில் பெரும் பாலோர் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள். இதற்கு டிசம்பர் புரட்சி2 என்றும், இதில் கலந்து கொண்டவர்களுக்கு டிசம்ப ரிட்டுகள்3 என்றும் பெயர்.

இந்தப் புரட்சியை ஒரே நாளில் அடக்கிவிட்டான் நிக்கோ லா. சிலர் தூக்கு மேடையிலேறினர்; பலர் ஸைபீரியாவுக்குப் பிரஷ்டம் செய்யப் பட்டு விட்டார்கள். இந்த புரட்சி, வெற்றிகரமாக முடியவில்லை யென்பது வாதவம். ஆனால், இதுவே, ருஷ்யாவின் பிற்கால புனருத்தாரணத்திற்குத் தூண்டுகோலாயிருந்தது; 1917-ஆம் வருஷத்துப் புரட்சிக்கு ஒத்திகை மாதிரி இருந்ததென்றும் கூறலாம்.

இந்தப் புரட்சிக்குப் பிறகு நிக்கோலா மன்னர், பிற்போக்குச் சக்திகளின் உபாசகனாகி விட்டான். இவனது சுமார் முப்பது வருஷ ஆட்சியில் பெரும் பகுதி, இந்த உபாசனையிலேயே கழிந்ததென்றும் சொல்லவேண்டும்.

இவன் எப்பொழுதும் புரட்சிக் கனவையே கண்டு கொண்டிருந் தான். சங்கீதம், கணிதம் முதலியவை சம்பந்தமாக வெளியான நூல் களில்கூட ஏதாவது ரசசியச் சூழ்ச்சி இருக்குமோ என்று மருண்டான். இருந்தாலும் இவன் காலத்தில் தான் அதிகமான நூல்கள் வெளியாயின. ஆனால் வெளி யான நூல்களைக் காட்டிலும், அந்த நூல்களைத் தணிக்கை செய்ய .இவன் நியமித்த அதி காரிகளின் எண்ணிக்கை அதிகமாயிருந்தது!

இன்னும், ருஷ்ய இளை ஞர்கள், ஐரோப்பிய சர்வ கலாசாலை களுக்குச் சென்று படிக்கவேண்டுமானால், அர சாங்கத்தின் விசேஷ உத்தரவு பெற வேண்டுமென்று விதித் தான். ருஷ்ய சர்வகலாசலை களில், தத்துவ ஞானத்தை ஒரு பாடமாகச் சொல்லிக் கொடுக்கக் கூடாதென்று தடை பிறப்பித்தான். பத்திரிகைகளைக் கண்டிப் பான கண் காணிப்புக் குட்படுத்தினான். நாட்டுக்கு நன்மை தரக் கூடிய கருத்துக்களை யாராவது வெளியிட்டால், அவர்கள், தீவாந்தர தண்டனையை சன்மானமாகப் பெற்றார்கள். சுருக்கமாகச் சொன்னால், இவன் மக்களின் சிந்தனா சக்தியை மண்ணிலே போட்டுப் புதைத் தான்; அவர்கள் வாயையும் கட்டிப் போட்டான்.

இங்ஙனம் உள்நாட்டிலே மட்டுமல்ல, வெளிநாடுகளில் புரட்சி முளைகள் விட்டால், அவைகளைக் கிள்ளி எறிவதற்குப் பெரிதும் துணை செய்தான் நிக்கோலா. 1830-ஆம் வருஷம் போலந்தில் ஒரு பெரிய புரட்சி ஏற்பட்டது. அதனைக் கடுமையான முறைகளைக் கையாண்டு அடக்கினான். ஆதிரியாவின் ஆதிக்கத்துக்குட்பட்டி ருந்த ஹங்கேரியில், 1848-ஆம் வருஷம் ஒரு புரட்சி தோன்றியது. இதனை அடக்க நிக்கோலா, ருஷ்யப்படையொன்றை அனுப்பி உதவி செய்தான்.

4. கிரிமியா போர்
நிக்கோலா ஆட்சியின் கடைசி காலத்தில், ருஷ்யாவின் தெற்கேயுள்ள கிரிமியா தீபகற்பத்தில் ஒரு பெரும் போர் மூண்டது. துருக்கிக்கு ஆதரவு அளிக்கின்ற முறையில், பிரிட்டன், பிரான், துருக்கி ஆகிய மூன்று நாட்டுப் படைகளும் சேர்ந்து ருஷ்யப் படை களைத் தாக்கின. சுமார் ஒன்றரை வருஷ காலத்திற்கு மேலாக (1854- 1856) நடைபெற்ற இந்தப் போரின் இறுதியில் ருஷ்யா தோல்வியே கண்டது. ஆனால் இதைக் காணு முன்னரே நிக்கோலா இறந்து விட்டான்.

5. இலக்கியத்தின் தங்கமான காலம்
பொதுவாக நிக்கோலா மன்னன், முற்போக்கான சக்தி களை முடக்க முயன்றான். என்றாலும், இவன் காலத்தில்தான், ருஷ்யா வில் அபேதவாத எண்ணங்கள் துளிர்க்க ஆரம்பித்தன.

மக்களிடையே அரசியல் அறிவு வளர்ந்து வந்தது, இன்னும் இவன் காலத்தில், ருஷ்ய இலக்கியத்துக்குப் புது வாழ்வு பிறந்தது. பேராசிரியர் பலர் புகழுடன் விளங்கினார்கள். இவர்களில் குறிப் பிடத்தக்கவர் கள் புஷ்கின்,1 லெர்மாண்ட் டாவ்,2 கோல்ட்ஸாவ்,3 கோகோல்4 ஆகியோர். இந்தக் காலத்தை - 1825-ஆம் வருஷத்தி லிருந்து 1855ஆம் வருஷம் வரை ருஷ்ய இலக்கியத்தின் தங்கமான காலம் என்று அறிஞர்கள் அழைக்கிறார்கள்.

மேலே சொல்லப் பெற்ற நான்கு பேராசிரியர்களையும் இந்த இடத்தில் சிறிது அறிமுகப்படுத்தி வைத்துக் கொள்வோம்.

புஷ்கின் :

புஷ்கின் வாழ்ந்ததெல்லாம் முப்பத்தெட்டு வருஷந்தான். இந்தச் சொற்ப காலத்திற்குள் இவன் எழுதிய நூல்கள் இவனுக்கு அழியாப் புகழ் தந்துவிட்டன. 1817 - ஆம் வருஷம்- அதாவது இவனு டைய பதினெட்டாவது வயதில்-இவனுடைய முதல் இலக்கியப் படைப்பு தலை தூக்கியது. ஒரு காவியம் எழுதினான். ஆனால் இது மேலும் மேலும் இவனுடைய உற்சாகம் அதிகரித்துக் கொண்டு போகக்கூடிய அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனால் இவனு டைய வாழ்க்கைப் போக்கில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. ஒரு கவிஞ னுக்கு இருக்கவேண்டிய சில பண்புகள் இவனிடமிருந்து விலகி நின்றன. ஆனால் இந்த மாற்றம் சிறிது காலந்தான். 1825-ஆம் வருஷம், அதாவது நிக்கோலா மன்னன் பட்டமேற்ற வருஷம், இவனுடைய வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. இலக்கியப் பணியே வாழ் நாள் பணியாக மேற்கொண்டான். இந்த வருஷத்திலிருந்து- இவனு டைய இருபத்தாறாவது வயதிலிருந்து - 1837-ஆம் வருஷம் இவனு டைய கடைசி நாட்கள் வரை, சுமார் பன்னிரண்டு வருஷ காலத்தில் இவன் ஆக்கித்தந்த நூல்கள் எண்ணிக்கையில் அதிகமாயிருந்த தோடு தரத்திலும் உயர்ந்திருந்தன. சிறுகதை, நாவல், கவிதை, சரித்திரம் இப்படிப் பல துறைகளிலும் இவனுடைய எழுதுகோல் சென்றது.

இவனுடைய நூல்களின் அருமை பெருமைகளை நாம் ஒரு வாறு உணர வேண்டுமானால், எந்தச் சூழ்நிலையில் இவைகளைப் படைத்தான் என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். இவன் வாழ்ந்த காலத்தில் ருஷ்ய அரசியல் வானத்தில் அடக்குமுறை மேகங்கள் படர்ந்திருந்தன. 1825-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் நடை பெற்ற புரட்சியின் விளைவாக, மனித சஞ்சாரத்திற்குத் தகுதியில் லாதிருந்த ஸைபீரியா போன்ற பிரதேசங்களுக்கும், சிறைச்சாலை களுக்கும், தூக்கு மேடைக்கும் அனுப்பப்பட்டவர் எத்தனையோ பேர். இதனால் மக்களிடையே ஒருவித அச்சம் நிலவி வந்தது. தவிர, டிசம்பர் புரட்சியில் சம்பந்தப்பட்டிருந்த பலர் புஷ்கினின் நெருங்கிய நண்பர்கள். இதனால், தனக்கு எந்த நிமிஷத்திலும் ஆபத்து ஏற்படக் கூடுமென்ற அச்சம் இவனை - புஷ்கினை – ஆட் கொண்டது; தான் எழுதி வைத்திருந்த குறிப்புக்கள், கையெழுத்துப் பிரதிகள் முதலிய வற்றை நெருப்புக் கிரையாக்கிவிட்டான்.

தவிர, இவனுடைய சொந்த வாழ்க்கை, பொதுவாக ஆரம்பத் திலிருந்தே, சிறப்பாக இந்தப் பன்னிரண்டு வருஷ காலமும் மிகவும் நொந்த வாழ்க்கையாக இருந்தது. இளமையில், அதாவது ஒரு கவிஞனாக அரும்புகின்ற தருணத்தில், சுதந்திர கீதமொன்று இயற்றி, கையெழுத்துப் பிரதியாகவே செயிண்ட் பீட்டர் பர்க் நகரத்தில் பலருக்கும் விநியோகம் செய்வித்தான். இதைக் கண்டு அந்த நகர அதிகாரவர்க்கம் மருண்டு விட்டது. ருஷ்யாவின் தெற்குப் பகுதியி லுள்ள ஓர் ஊருக்கு இவனை அனுப்பிவிட்டது. ஏறக்குறைய தேசப் பிரஷ்டனாயினான்.

டிசம்பர் புரட்சிக்குப் பிறகு, நிக்கோலா மன்னனுடைய தயவை நாட வேண்டியவனானான் புஷ்கின். குடும்ப வாழ்க்கையில் இன்பம் நுகர முடியாதவனானான். அதோடு, வரவுக்கு மிஞ்சிய செலவு செய் வது இவனுக்கு வழக்கமாகிவிட்டது. என்ன செய்வது? அரசாங்க சேவையில் அமரவேண்டிய அவசியத்திற்குட்பட்டான். சிலசமயம், இவனுக்களிக்கப் பட்ட உத்தியோகம், இவனுடைய சுதந்திர உணர்ச் சிக்குப் பங்கம் விளைவிப்பதுபோல இருந்தது. ஆயினும் வேறு வழி யில்லை. சிறிது காலம் உத்தியோகத்தோடு ஒட்டிக்கொண்டி ருப்பதும், சிறிது காலம் அதனின்று எட்டியிருப்பதுமாக வாழ்க்கை நடத்தினான்.

தன்னுடைய சுதந்திர உணர்ச்சியைச் செயல்படுத்த முடிய வில்லையே யென்ற எண்ணம், இவனை,-புஷ்கினை-உள்ளூர அரித்துக் கொண்டுவந்தது; உடலும் நாளுக்கு நாள் மெலிந்தது.

கடைசியில் இவனுக்கும் இவன் உறவினன் ஒருவனுக்கும் பகைமை ஏற்பட்டது. இதன் விளைவாக இருவரும், அப்பொழு தைய வழக்கப்படி 1837-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் எட்டாந்தேதி சண்டை யிட்டனர். இதில் புஷ்கின் நல்ல காயமடைந்து பத்தாந்தேதி மரண மடைந்தான்.

ருஷ்ய இலக்கியத்தின் பிற்கால வளர்ச்சிக்கு, புஷ்கினின் படைப்புகள் நல்ல உரமாயமைந்தன வென்று சுருக்கமாகச் சொல்லலாம்.

லெர்மாண்ட்டாவ்:

மைக்கேல் லெர்மாண்ட்டாவின் வாழ்வு இருபத்தேழவாது வயதிலேயே முற்றுப் பெற்றுவிட்டது. புஷ்கினைப் போலவே இவனும் தன்னிடம் பகைமை பாராட்டிய தன்னோடு படித்த ஒருவனுடன் சண்டை யிட்டு மடிந்தான்.

இவன், பதினைந்தாவது வயதில் பிசாசு என்ற தலைப்புடன் ஒரு கவிதை இயற்றினான். பின்னர் இவனாலேயே இது பலமுறை பரிசீலனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் இதை வெளியிடவே முடியவில்லை. காரணம், அரசாங்கக் கண்காணிப்பு அதிகாரி, இதனை வெளியிட அனுமதி கொடுக்க மறுத்துவிட்டதுதான்.

லெர்மாண்ட்டாவ் சிறிது காலம் ராணுவப் பயிற்சி பெற்றிருந் தான். இதனால் இவனுக்கு ராணுவத்தில் ஒரு சிறு உத்தியோகம் கிடைத்தது. ஆனால் சுபாவத்தில், அடங்கலுக்குப் புறத்தியாயிருந் தான். இதனால் இவன் அநேக சங்கடங்களை அனுபவிக்க வேண்டிய வனானான்.

புஷ்கினின் மரணம், இவன் மனத்தில் ஓர் அசைவைக் கொடுத்தது. ஜார் சக்ரவர்த்தியின் மீது ஆத்திரங்கொண்டான். ஒரு கவிஞனின் மரணம் என்ற தலைப்பிட்டு ஒரு கவிதை இயற்றி ஜாருக்கு அனுப்பி வைத்தான். இதற்குப் பதில் கிடைக்காமற் போகுமா? உடனே கைதிக் கூண்டில் ஏற்றப்பட்டான்; விசாரணையும் நடந்தது. காக்கஸ மலைப் பிரதேசத்தில் நிறுவப்பட்டிருந்த ஒரு படையில் சேர்ந்து வேலை செய்யு மாறு அனுப்பப் பட்டான். ஆனால் ஒரு வருஷத்திற்குப் பிறகு செயிண்ட் பீட்டர்பர்க் நகரத்திற்கு வந்து சேர்ந்தான். இதற்குப் பிறகுதான், நம் காலத்து வீரன் என்ற தலைப்புக்கொண்ட இவனு டைய பிரபல நாவல் வெளியாயிற்று. இதுதான், இலக்கிய உலகத்தில் இவனுக்கு ஒரு பெயர் ஏற்படுத்திக் கொடுத்தது. இது தவிர, இவன், அநேக கவிதைகள் புனைந்திருக்கிறான். இவற்றில் சில, சாதாரண மனிதர்களுடைய உணர்ச்சிகளைச் சித்தரித்துக் காட்டுவனவாயிருக் கின்றன. ருஷ்ய இலக்கிய கர்த்தர்களின் வரிசையிலே மட்டுமல்ல, ஐரோப்பிய இலக்கிய கர்த்தர்களின் வரிசையிலும் லெர்மாண்ட்டா வுக்கு ஓர் உன்னதமான தானம் உண்டு என்று அறிஞர்கள் இவனைப் போற்றி வருகிறார்கள்.

கோல்ட்ஸாவ் :

அலெக்ஸி கோல்ட்ஸாவ் என்பவன், சாதாரண ஒரு சில்லரை வியாபாரியின் குடும்பத்தில் பிறந்தவன். கல்வி அறிவு அதிகம் பெறாத சாதாரண வியாபாரிகளுடன் பழகுவதிலேயே இவனுடைய இளமைப் பருவம் கழிந்தது. இவனுடைய பள்ளிக் கூடப் படிப்பெல்லாம் ஒரு வருஷந்தான். ஆனாலும் இளமை யிலிருந்தே இவனுக்குக் கவிதை புனையும் ஆற்றல் இயற்கையாகவே அமைந்திருந்தது. இவனுடைய வாழ்க்கையின் பெரும்பகுதி கிராம மக்களிடையே கழிந்தபடியால், இவன் புனைந்த கவிதைகள், பெரும் பாலும் கிராம வாழ்க்கை, இயற்கைக் காட்சிகள், விவசாய மக்களின் அவல நிலை இவைகளையே பொருளாகக் கொண்டிருந்தன. இவனு டைய கவிதைகள், எல்லோரும் பேசுகின்ற, எல்லோருக்கும் புரி கின்ற மொழியில் அமைந்திருந்தபடியால், பாமர மக்கள் என்று அழைக்கப்படுகின்ற சமுதாயத்தின் கீழ்ப்படியிலுள்ளவர்கள், இவன் கவிதைகளை விரும்பிச் சுவைத்துப் படித்தார்கள். அவர்களிடையே இவனுக்கு நல்ல செல்வாக்கும் ஏற்பட்டது. பிற்காலத்தில் டர்கனீவ்1 என்ன, மாக்ஸிம் கோர்க்கி2 என்ன இப்படிப்பட்டவர்களுடைய இலக்கியப் படைப்புக்களுக்கு இந்த கோல்ட்ஸாவின் படைப்புக் கள் ஓரளவு முன்னோடிகளாயிருந்தன என்று அறிஞர்கள் கருது கிறார்கள். சிறந்த இலக்கிய விமர்சகன் என்று ருஷ்ய மொழி வல்லு நரால் போற்றப்படுகின்ற பெலின்கி3 என்ற அறிஞன், இந்த கோல்ட்ஸாவை, மகாகவி என்று அழைக்கிறான். கோல்ட்ஸாவ் வாழ்ந்ததெல்லாம் மொத்தம் முப்பத்து நான்கு வருஷ காலமேயாகும்.

கோகோல்:

நிக்கோலா கோகோல் சாதாரண ஒரு குடும்பத்திலேயே பிறந்தவன். நாற்பத்து மூன்று வருஷ வாழ்வு தான். இருபத்தோரா வது வயதில் எழுதத்தொடங்கினான். சிறு கதை, நாடகம், நாவல், ஆகிய துறைகளில் இவன் எழுதுகோல் அதிகமாகச் சென்றது. இவன் படைப்புகள் பெரும்பாலும் மத்தியதர வகுப்பாருடைய வாழ்க்கையைச் சித்தரித்துக் காட்டுவனவாகவே இருந்தன. இவன் எழுதிய இன்பெக்டர் - ஜெனரல் என்ற நாடகம் மிகவும் பிர சித்தி பெற்றது.

இந்த அறிஞர்களுடைய எழுத்துக்களை, ருஷ்யாவின் மத்திய வகுப்பு இளைஞர்கள் ஆவலோடு படித்தார்கள். இதன் பயனாகத் தங்கள் சமுதாயத்தின் சீர்கேடான நிலைமையைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார்கள். இந்தச் சிந்தனையானது, தேச நன்மைக்காக எல்லாவித தியாகங்களையும் செய்யக்கூடிய ஓர் உணர்ச்சியையும் உறுதியையும் இவர்களுக்கு அளித்தது. இந்தக் காலத்திலிருந்து, இவர்கள் மூலமாக, சுயேச்சாதி காரத்திற்கு விரோதமான எண்ணங்கள் தேசத்தில் வளர்ந்து வரலாயின.

6. தொழில் முயற்சிகள்
முதலாவது நிக்கோலா மன்னன் காலத்தில் ருஷ்யாவில் புதிதாகச் சில தொழில் முயற்சிகள் தொடங்கப் பெற்றன. விவசாயப் பொருள்களின் உற்பத்தி சிறிது அதிகமாயிற்று. ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் ஒரு சுறுசுறுப்பு காணப்பட்டது. தவிர, முதன் முதலாக ரெயில் பாதை போடப் பட்டது இந்த நிக்கோலா ஆட்சி யில்தான்; அதாவது 1837-ஆம் வருஷம். செயின்ட்பீட்டர் பர்க் நகரத்திலிருந்து, ஜார்கோ ஸேலோ1 என்ற இடத்திலுள்ள ஜார் சக்ர வத்தியின் வாசதலத்திற்குப் போடப்பட்ட இந்தப் பாதையின் நீளம் சுமார் பதினாறு மைல்தான். நிக்கோலாஸை சூழ்ந்து கொண்டிருந்த சில அதிகாரிகள், இந்த ரெயில் பாதையே போடக் கூடாதென்று முதலில் ஆட்சேபித்தார்கள். அப்படிப் போடு வதனால், மக்களுடைய நன்னடத்தைக்கு ஆபத்து உண்டாகு மென்றும், ஜனங்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் காரணமில்லாமல் போய்வந்து கொண்டிருப்பதை ஆதரித்ததாகு மென்றும், இதனால், தற்போது நாட்டில் நிலவிவரும் நிதானந் தவறிய உணர்ச்சிகளை வளர்த்துக் கொடுத்தது போலாகுமென்றும், இவர்கள் காரணங்கள் கூறியதைக் கொண்டு, பத்தொன்பதாவது நூற்றாண்டின் முற்பகுதியில் ருஷ்ய அதிகார வர்க்கத்தின் மனப் போக்கு எவ்வாறிருந்த தென்பதை நாம் ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம்.


V. ரோமனாவ் பரம்பரை

(மூன்றாம் பகுதி)
1. இரண்டாவது அலெக்ஸாந்தர்- ஒரு புதிர்
முதலாவது நிக்கோலாஸுக்குப் பிறகு இரண்டாவது அலெக்ஸாந்தர்.1 இவன் பட்டமேற்பதற்கு முன்னரே, அரசாங்கத் திலும், ராணுவத்திலும் சில பதவிகள் வகித்து நிருவாக, அனுபவமும் ராணுவ அனுபவமும் பெற்றவன். தவிர சிறு பிராயத்திலிருந்தே, பல ஊர்களைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு இவனுக்கு அதிகமாகக் கிடைத்தது. உதாரணமாக , 1837-ஆம் வருஷம், அதாவது இவனுடைய பத்தொன் பதாவது வயதில், சுமார் ஏழு மாதத்திற்குள் இவன் ருஷ்யாவில் மட்டும் முப்பது மாகாணங்களைச் சுற்றிப் பார்த்து விட்டான். இவனுக்கு முந்தியிருந்த எந்த ஜார் சக்ரவர்த்தியும் துணிந்து செல்லாத ஸைபீரியாவுக்குக் கூட சென்று வந்தான். இந்தச் சுற்றுப் பிரயாணம், இவன் ஆட்சி பீடத்தில் அமர்ந்த பிறகு இவனுக்கு எவ்வளவு தூரம் பயனளித்தது என்பது வேறு விஷயம்.

இந்த அலெக்ஸாந் தரின் சுபாவத்தையும் இவன் நடத்திய ஆட்சியையும் பொருத்திவைத்துப் பார்த்தால் ஒரு புதிர் போல இருக்கும். இவன் எளிதிலே உணர்ச்சி வசப்பட்டு விடுவான்; சில சமயங்களில், நான்கு பேர் முன்பாகக் கண்ணீரும் வடிப்பான். 1877-ஆம் வருஷம் மே மாதம் முடிய ருஷ்யாவுக்கும் துருக்கிக்கும் ஒரு யுத்தம் நடைபெற்றது. இதில் ருஷ்யாவுக்கு வெற்றி கிடைத்தது. இந்த யுத்தத்தில் காயமடைந்தவர் களுக்குத் துன்ப நிவாரணம் அளிக்கும் பொருட்டு, தான் ஓர் ஆண் நர்ஸாக இருந்து பணியாற்ற விரும்பினான் இந்த அலெக்ஸாந்தர்.

இப்படிக் கருணை உள்ளமுடையவனாகத் தோன்றிய போதிலும், இவன் ஆட்சியில், கடுமையான அடக்குமுறைகள் கையாளப் பட்டன. சம்பிரதாயமான விசாரணைகூட இல்லாமல் ஆயிரக் கணக்கான பேர், சிறைவாசத்திற்குட்பட்டனர்; தேசப்பிரஷ்டம் செய்யப்பட்டனர்.

பொதுவாக இரண்டாவது அலெக்ஸாந்தரை ஒரு வித நிச்சய புத்தி யில்லாதவனென்று சொல்லலாம்.

2. ஆதிக்க எல்லை விரிகிறது
இந்த அலெக்ஸாந்தர் காலம் வரையில், கானடா தேசத்திற்கு வடமேற்கிலும், வடமகா சமுத்திரத்திற்குத் தெற்கிலும் உள்ள அலாக்கா1 பிரதேசமும் அதையொட்டிய சிறிய தீவுகளும் ருஷ்யா வுக்குச் சொந்தமாயிருந்தன. ருஷ்ய - அமெரிக்கா என்றே இவை அழைக் கப்பட்டு வந்தன. அலெக்ஸாந்தர் பட்டமேற்ற பன்னிரண்டாவது வருஷம் - 1867-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் பதினெட்டாந் தேதி - இவை எழுபத்திரண்டு லட்சம் டாலர் விலைக்கு, அமெரிக்கா ஐக்கிய நாடுகளுக்கு விற்கப்பட்டுவிட்டன.

இப்படி ஒரு பிரதேசம் ருஷ்யாவின் கைவிட்டுப் போனபோதி லும், மத்திய ஆசியாவின் தென்மேற்கிலுள்ள சில பிரதேசங்களும் கிழக்கிலுள்ள சில பிரதேசங்களும் அலெக்ஸாந்தர் காலத்தில்தான் ருஷ்யாவின் ஆதிக்கத்திற்குட்பட்டன. அதாவது, இப்பொழுது சோவியத் சமதர்மக் குடியரசு ராஜ்யத்தின் தென்மேற்கிலுள்ள தாஜிக்தான், துர்க்மேனியா, கிர்கிதான், காஜக்தான் ஆகிய மாகாணங்களும், கிழக்கே வ்ளாடிவாட்டாக்2 நகரத்திலிருந்து வடக்கே விரிந்து கொண்டு போகும் ஆமூர்நதிப் பிரதேசமும் இதற்குக் கிழக்கேயுள்ள ஸக்காலின்3 தீவும் ருஷ்ய எல்லைக்குட்படுத்தப் பெற்றன.

தவிர, அலெக்ஸாந்தர் காலத்தில், அதாவது 1877-ஆம் வருஷம் ருஷ்யாவுக்கும் துருக்கிக்கும் போர் மூண்டது. இதில் ருஷ்யா வெற்றி பெற்றதேயாயினும், நிகரமான சாதகம் எதனையும் அடைய வில்லை. ஐரோப்பிய வல்லரசுகள், சிறப்பாக பிரிட்டன், ருஷ்யா மீது சந்தேகங் கொள்ள ஆரம்பித்தது. இதே பிரகாரம் ருஷ்யாவும் பிரிட்டன் மீது அதிருப்தி காட்டத் தொடங்கியது.

பொதுவாக, அலெக்ஸாந்தர் ஆட்சியில், ருஷ்யாவின் ஆதிக்க எல்லை விரிவடைந்தது. சர்வதேச அரசியல் அரங்கத்தில் இதன் பேச்சுக்கு ஒரளவு மதிப்பும் ஏற்பட்டது. ஆனால் இதே விகிதாசாரத் திற்கு, ஐரோப்பிய வல்லரசுகளின் சந்தேகமும், பொறாமையும் கலந்த பார்வை இதன் மீது விழுந்தது.

இஃதொருபுறமிருக்க, உள்நாட்டில் அலெக்ஸாந்தர் சில சீர் திருத்தங்களைக் கொணர்வித்தான். மக்கள், கல்வியறிவு பெறுவதற் கான வசதிகள் அதிகரிக்கப்பட்டன; சிறப்பாகப் பெண்களின் கல்வித் தேவையில் அதிக கவனஞ் செலுத்தப்பட்டது. பத்திரிகை களுக்கும், நூல் வெளியீட்டுக்கும் இருந்த கட்டுதிட்டங்கள் தளர்த் தப்பட்டன. இதனால் புதிய பத்திரிகைகள் பல தோன்றின; நூல் களும் வெளியாயின. ருஷ்ய இலக்கியத்தைப் பொறுத்தமட்டில், அலெக்ஸாந்தர் ஆட்சியின் ஆரம்ப காலத்தை, அதாவது 1855-ஆம் வருஷத்திலிருந்து சுமார் ஒரு முப்பது வருஷ காலத்தை நாவல் யுகம் என்று சொல்வதுண்டு. ஏனென்றால் இந்தக் காலத்தில்தான், உலக இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணக்கூடிய சில நல்ல நாவல்கள் ருஷ்ய மொழியில் வெளியாயின.

3. இலக்கிய கர்த்தர் சிலர்
இந்த நாவல் இலக்கிய யுகத்தில் பிரபலமாக விளங்கிய அறிஞர் மூவர். (1) டர்கனீவ்1 (2) டால்ட்டாய்2 (3)டோட்டோ வெகி.3

டர்கனீவ்

டர்கனீவ், மாக்கோ, செயிண்ட் பீட்டர் பர்க், பெர்லின் ஆகிய மூன்று சர்வகலாசாலைகளில் பயின்றவன்; வாழ்க்கையின் பெரும்பகுதியை ஜெர்மனியிலும் பிரான்சிலும் கழித்தவன். இளமை யிலேயே நல்ல கவிதைகள் இயற்றத் தொடங்கினான்; பின்னர் சில நாடகங்கள் எழுதினான். இவற்றில் இவன் திருப்தி காணவில்லை. விவசாயிகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சிறு கதைகள் எழுதத் தொடங்கினான். நல்ல பெயர் கிடைத்தது. ஆனால், இந்தக் கதைகளில் வரும் சிலகருத்துக்கள், அதிகாரிகளுக்குக் கசப்பா யிருந்தன. எனவே, இவனை இவனுடைய வாசதலத்திலேயே கைதி மாதிரி இருக்கும்படி செய்துவிட்டார்கள். இப்படி ஒன்றரை வருஷம் கழிந்தது. விடுதலை பெற்ற பிறகு, ஒன்றன்பின்னொன்றாகப் பல நாவல்கள் எழுதி வெளியிட்டான். இவை பெரும் பாலும் ருஷ்ய சமுதாய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இவை தான், இவனுக்கு அழியாப்புகழை வாங்கிக் கொடுத்தன. ஐரோப்பிய அறிஞர்கள் இவனுடைய நூல்களை வெகுவாகப் பாராட்டினார் கள். இவனுடைய சமகாலத்து இலக்கிய கர்த்தர்களில் இவன்தான், முதன் முதலாக, பிறமொழி அறிஞர்களின் பாராட்டுதலைப் பெற்றவன். இவன் வாழ்ந்தது மொத்தம் அறுபத்தைந்து வருஷம்.

டால்ட்டாய் :

டால்ட்டாய், எல்லா வசதிகளும் நிறைந்த ஒரு குடும்பத்தில் பிறந்தான். காஜான் சர்வகலாசாலை1யில் மூன்று வருஷ காலம் பயின்றான். ஆனால் பட்டம் பெறுவதற்கு முன் அதனின்று வெளி யேறிவிட்டான். இங்குப் பயின்றபோது, பிரெஞ்சு அறிஞனான ரூ ஸோவின் நூல்களைப் படிக்கும் வாய்ப்பு இவனுக்குக் கிடைத்தது. அவற்றில் பெரிதும் ஈடுபட்டான். பிற்காலத்தில் ரூஸோவினிடம் பெரு மதிப்பு வைத்துப் பேசுகிறான்.

சர்வகலாசாலையிலிருந்து வெளியேறிய நான்கு வருஷத்திற்குப் பிறகு, டால்ட்டாய், ராணுவத்தில் சேர்ந்து சுமார் இரண்டு வருஷ காலம் சேவை செய்தான். பின்னர், ஏறக்குறைய முப்பாதாவது வய திலும் முப்பத்து மூன்றாவது வயதிலும் இரண்டு தடவை, ஐரோப்பா வின் சில பகுதிகளுக்குச் சென்று வந்தான். தான் கண்ட அளவில், ஐரோப்பாவில் வியந்து பாராட்டக்கூடிய அமிசம் எதுவு மில்லை யென்ற அபிப்பிராயம் இந்த பிரயாணத்தினால் இவனுக்கு ஏற்பட்டது.

இவனுடைய எழுத்து முயற்சி சிறு கதையிலேயே தொடங்கியது. இவனுடைய முதற்கதை குழந்தைப் பருவம் என்பது. இது, 1852- ஆம் வருஷம், அதாவது இவனுடைய இருபத்து நான்காம் வயதில் வெளியா யிற்று. இதையடுத்து ஸெபாட்டபூலின் கதைகள்2 என்ற தலைப்பில் கட்டுரைகள் பல, ஒரு பத்திரிக்கையில் தொடர்ந்து வெளிவந்தன. இவை, ருஷ்யாவின் தலைசிறந்த இலக்கிய கர்த்தர்களின் வரிசையில் வைத்து எண்ணப்படக்கூடிய ஒரு தகுதியை இவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்தன.

ராணுவ சேவையிலிருந்து திரும்பிவந்த பிறகு டால்ட்டாய், யநையா பொலியானா1 என்ற தன்னுடைய எடேட்டில் வந்து தங்கி, குடியானவர் களின் பிள்ளைகளுக் கென்று ஒரு பள்ளிக் கூடம் தொடங்கினான். இதே சமயத்தில், விவசாயிகளுக்கும் நிலச் சுவான் தார்களுக்கும் ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து வைக்கும் ஓர் அரசாங்க உத்தியோகம் இவனுக்குக் கிடைத்தது. ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு, பள்ளிக்கூடம் நடத்துவதையும், அரசாங்க உத்தி யோகத்தையும் விட்டுவிட்டான். இதற்குப் பிறகு நூல்கள் எழுதுவ திலேயே இவனுடைய பெரும் பொழுது கழிந்தது. இவனது இலக்கியப் படைப்புக்களில் சிறந்தனவாகக் கருதப்படுகின்றவை போரும் சமாதானமும்2 என்பதும் அன்னா கரினீனா3 என்பதுமாகும்.

டால்ட்டாயின் பிற்பகுதி வாழ்க்கை ஒரு பெரிய மாற்றத்தை யடைந்தது. நாகரிகம் என்ற பெயரால் நடைபெறும் போலி வாழ்க் கையை, ஆடம்பர வாழ்க்கையை வெறுத்தான்; எளிமையும், இனிமை யும், உண்மையும் நிறைந்த வாழ்க்கையை விரும்பினான்; அதனையே மேற்கொண்டான். எல்லா ஜீவராசிகளிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும்; மது மாமிசத்தைத் தவிர்க்க வேண்டும்; காமக்குரோதங் களுக்கு உட்படலாகாது; பலாத்காரத்தை அடிப்படையாகக் கொண்ட எண்ணம், செயல் அனைத்தையும் நீக்க வேண்டும்; வாழ்க் கையில் உண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்; இன்னோரன்ன நியதிகள் இவன் உள்ளத்தில் உரம் பெற்று நின்றன; இவைகளைக் கடைப்பிடிக்கவும் பரப்பவும் முனைந்தான். இதனால் இவனுக்கும் இவன் குடும்பத்திற்கும் பிணக்கு உண்டாயிற்று. மனவேதனை இவனை வாட்டியெடுத்தது. திடீரென்று ஒரு நாள் - 1910ஆம் வருஷம் அக்டோபர் மாதம் இருபத்தெட்டாந்தேதி - இரவு யாருக்கும் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டான். சுமார் பத்து நாள் கழித்து இறந்தும் போனான். இறக்கும் பொழுது இவனுக்கு வயது எண்பத்திரண்டு.

மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்ட தற்கு டால்ட்டாயின் நூல்கள் பெரிதும் துணை செய்தன என்று சொல்லலாம். இருவருக்கும் கடிதப்போக்கு வரத்துகள் நடை பெற்று வந்தன என்பதை யாவரும் அறிவர். இதே பிரகாரம் பிரபல பிரெஞ்சு அறிஞனும், இந்தியாவின் பாரமார்த்திக வாழ்க்கைக்குப் பெருமதிப்புக்கொடுத்துப் பேசியவனுமான ரோமெய்ன் ரோலாந்து4 டால்ட்டாயிடம் மிகவும் ஈடுபாடுடையவனாயிருந்தான். இரு வருக்கும் கடிதப்போக்கு இருந்து வந்தது.

டோட் டோவெகி :

டோட்டோவெகி ஒரு வைத்தியனுடைய மகன். ராணுவ இஞ்சினீரிங் கல்வி பயின்றான். அதில் தேர்ச்சி பெற்று ராணுவ சேவை யில் அமர்ந்தான். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு அதிலிருந்து விலகிக் கொண்டு இலக்கியத் துறையில் இறங்கினான். ஏழை மக்கள் என்ற தலைப்புக் கொண்ட ஒரு நாவல் எழுதினான். இது தான் இவனுடைய முதல் படைப்பு. இஃது இவனுடைய இருபத் தைந்தாவது வயதில் - 1846ஆம் வருஷத்தில் - வெளிவந்தது. முதல் வெளியீடாக இருந்த போதிலும் இஃது அறிஞர் பலருடைய பாராட்டுதலைப் பெற்றது. இவனுடைய புகழ் வளர ஆரம்பிக்கும் தருணத்தில், இவன் ஒரு ரகசியச் சங்கத்தில் சம்பந்தப்பட்டிருக் கிறானென்று சொல்லி, அரசாங்கம் இவனைக் கைது செய்து மரண தண்டைனைக்குட்படுத்திவிட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில், மரணத்தண்டனை, சிறைவாசத் தண்டனையாக மாற்றப்பட்டது. எனவே, இவன் ஸைபீரியாவுக்கு அனுப்பப்பட்டு அங்கே நான்கு வருஷ காலம் கடினமான உழைப்புக் குட்படுத்தப் பெற்றான். பிறகு ஸைபீரியாவிலேயே, ராணுவ சேவைக்குட்படுத்தப்பெற்று அதில் ஆறு வருஷ காலம் கழித்தான். 1859-ஆம் வருஷம், அதாவது இவனுடைய முப்பத்தெட்டாவது வயதில் விடுதலை பெற்று, செயிண்ட் பீட்டர்பர்க் நகரம் போந்து, பழைய மாதிரி எழுதும் தொழிலில் ஈடுபட்டான். பத்திரிகைகளில் பல கட்டுரைகள் எழுதி வந்தான்; பத்திரிகாசிரியனாக இருந்து பணியாற்றினான். சிறுகதை களென்ன, பெரிய நாவல்களென்ன, இப்படி ஒன்றன்பின்னொன் றாக வெளிவந்தன. இவனுடைய படைப்பு களிற் பெரும்பாலான, சமுதாயத்தின் கீழ்ப்படியிலுள்ளவர் களுக்குப் பரிவு காட்டுகின்ற முறையிலேயே இருந்தன.

டோட்டோவெகி, ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கும் அநேகந் தடவை பிரயாணம் செய்து வந்தான். இந்தப் பிரயாணத் தினால், டால்ட்டாயைப் போல் இவனுக்கும் மேனாட்டு நாகரிகத் தின் மீது ஒரு வித வெறுப்பு ஏற்பட்டது. தவிர, ஸைபீரியாவில் கைதியாயிருந்ததன் விளைவாக, இவனிடத்தில் ஒரு பெரிய மன மாறுதல் காணப்பட்டது. பழமையான கிறிதுவ மதாசாரங் களில் நம்பிக்கை கொண்டான். எளிய வாழ்வில்தான் இனிமை இருக்கிற தென்ற உண்மையை உணரலானான். வறுமைமிக்க நமது தாய் நாடு - ருஷ்யா - உலகத்திற்கு நற்செய்தியை அளிக்கப்போகிறது என்ற கருத்தை இவன் ஒரு சமயம் வெளியிட்டான். 1917-ஆம் வருஷத் துப்புரட்சிக்குப் பிறகு இஃது எவ்வளவு உண்மையாகி விட்டது!

டோட்டோவெகி, குடும்ப வாழ்கையில் இன்பம் நுகர வில்லை. இவனுக்கு வாய்த்த மனைவியர் இருவர். இருவரும் இவனுக்கு யம தூதர்களாயினர். மூன்றாவதாக ஒருத்தியை விவாகஞ் செய்து கொண்டான். ஆனால் இவளைக் கைபிடித்த வேளையில் இவனுக்குப் பெரிய பணக் கஷ்டம் ஏற்பட்டது. கடனாளியாகி விட்டான். கடன்காரர்கள் தொந்தரவு பொறுக்க முடியாமல்தான், இவன் வெளியூர்ப் பிரயாணத்தை மேற்கொண்டான். வெளியூர்களிலும், தன் மனக்கவலைகளை மறக்க, இவன், சூதாட்டங்களில் ஈடுபடலானான். சிறிது காலத்திற்குப் பின்னர், கடுமையாக உழைத்து, அதாவது வேகமாக எழுதி அதிகமான நூல்களை வெளியிட்டு, கடன் தொல்லையைத் தீர்த்ததோடு, ஓரளவு வசதியுடன் வாழ்வதற் கான வகையும் தேடிக்கொண்டான்.

டோட்டோவெகி வாழ்ந்தது மொத்தம் அறுபது வருஷம்.

இந்த மூவரைத் தவிர, வேறு சில அறிஞர்களும் அலெக்ஸாந்தர் காலத்தில் வாழ்ந்திருந்தார்கள். இவர்களுடைய இலக்கிய சிருஷ்டி கள், உலகப்புகழ் பெறவில்லையாயினும் ருஷ்ய மொழிவளர்ச்சிக்குப் பெரிதும் துணை செய்தன.

4. ஜார் - எங்கள் ரட்சகன்
இனி, இரண்டாவது அலெக்ஸாந்தரின் ஆட்சிக்கு வருவோம். இவன் பட்டமேற்றதும், கூடிய மட்டில் பொதுஜன அபிப்பிராயத் தைத் தழுவிக் கொண்டு செல்லவே முயன்றான். முதலாவது நிக் கோலா ஆட்சியில் நடைபெற்ற டிசம்பர் புரட்சியிலும் போலந்து புரட்சியிலும் சம்பந்த பட்டிருந்த சிறைவாசிகளை விடுதலை செய்வித் தான். முந்தின ஆட்சியில் விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவுகளை யெல்லாம் ரத்து செய்தான். புதிதாகப் பல தல தாபனங்கள் நிறுவி அவை மூலம் ஜனங்கள் நிருவாக அனுபவம் பெறுமாறு செய்தான். நீதி தலங்களைச் சீர்திருத்தியமைத்தான்.

இவை தவிர, நிலச்சுவான்தார்களுக்குக் கட்டுப்பட்டு அடிமை களாகக் கிடந்த விவசாயிகளுக்குச் சில அமிசங்களில் விடுதலை தரக் கூடிய ஒரு சட்டத்தை நிறைவேற்றச் செய்தான். விவசாய அடிமை களாகச் சுமார் நாலரை கோடி பேருக்கு மேல் இருந்தார்கள். இவர்கள் மேற்படி சட்டம் இயற்றப்பட்டது தெரிந்ததும் ஜார் எங்கள் ரட்சகன் என்று அலெக்ஸாந்தரைக் கொண்டாடினார்கள்; தங் களுக்கு விடுதலை கிடைத்து விட்டதாகக் கருதி மகிழ்ச்சியடைந் தார்கள். ஆனால் இந்த மகிழ்ச்சி நீடித்திருக்கவில்லை. ஏனென்றால், விடுதலை கிடைத்ததே தவிர, விடுதலையின் பயனை இவர்களால் அனுபவிக்க முடியவில்லை. ஏனென்றால், ஜீவனத்திற்குத் தேவை யான நிலங்கள் இவர்கள் வசம் இல்லை. எல்லாம், நிலச்சுவான் தார்கள் வசம் இருந்தன. நிலச்சுவான் தார்களும், பரம்பரையாகத் தாங்கள் அனுபவித்து வந்த உரிமைகளை விட்டுக் கொடுக்கச் சம் மதப்படவில்லை. இந்தக் காரணங்களினால், விவசாயிகளிடையே அதிருப்தி எண்ணங்கள் வளர்ந்து வரலாயின. நிலச்சுவான்தார் களும், இந்த விடுதலைச் சட்டமானது, இன்றைக்கில்லா விட்டாலும் என்றைக்காவது ஒருநாள் தங்களுடைய பரம்பரை உரிமைகளை பாதிக்குமென்று கருதி, அலெக்ஸாந்தர் மீதும் அவனுடைய ஆலோசகர்கள் மீதும் அதிருப்தி கொள்ளலானார்கள்.

5. விவசாயிகளுக்கு விமோசனம் உண்டா?
விவசாயிகளுக்கு விடுதலை வாங்கித்தர வேண்டுமென்று பாடு பட்டவர்களில் முக்கியமானவன் அலெக்ஸாந்தர் ஹெர்ஸென்1 என்பவன். இவன் ஒரு நூலாசிரியனாகவும் பத்திரிகாசிரியனாகவும் பெயரெடுத்தவன். இவன் லண்டனில் இருந்துகொண்டே ருஷ்ய விவசாயிகளின் நலன் நாடிக் கிளர்ச்சி செய்து வந்தான்.

1857 - ஆம் வருஷம், ஒகாரேவ்2 என்ற ஒரு நண்பனுடன் சேர்ந்து கொண்டு ஓர் அச்சகத்தைத் தொடங்கினான் ஹெர்ஸென். இவனுடைய ஆசிரியப் பொறுப்பில், அதிலிருந்து மணி3 என்ற பெயருடன் ஒரு பத்திரிகை வெளிவந்தது. ஹெர்ஸென், ருஷ்ய அரசாங்கத்தின் பிற்போக்கான நடவடிக்கைகளைக் கண்டித்தும், விவசாய அடிமைகளின் விடுதலையை வலியுறுத்தியும், தன் பத்திரி கையில் பல கட்டுரைகள் எழுதி வந்தான். இவன் பத்திரிகைக்கு ருஷ் யாவில் நல்ல செல்வாக்கு ஏற்பட்டது. முற்போக்கான எண்ணங் களையுடைய இளைஞர்கள் மட்டு மல்ல, அனுபவம் நிறைந்த அறிஞர் களும், அரசாங்க உத்தியோகதர்களும் இவனுடைய எழுத்துக் களை விரும்பிப் படித்தார்கள்; இவனைப் பெரிதும் போற்றினார்கள்.

இந்த நிலையில் தான் அலெக்ஸாந்தர் மன்னன், 1861-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம், விவசாய அடிமைகளுக்கு விமோசனம் அளிப்பதாகச் சொல்லப்பட்ட மேற்படி சட்டத்தைப் பிரகடனம் செய்வித்தான். உடனே ஹெர்ஸென், அலெக்ஸாந்தரைப் பாராட்டித் தன் பத்திரிகையில் எழுதினான்; விடுதலை யளித்த ஜார் என்று அவனைப் போற்றினான். இந்தப் போற்றி வாசகத்தின் எதிரொலி யாகத்தான், அடிமைப்பட்டுக் கிடந்த விவசாயிகள் ஜார் - எங்கள் ரட்சகன் என்று கோஷத்தைக் கிளப்பினார்கள்.

மேற்படி விடுதலைச் சட்டத்தின் ஷரத்துக்களைப் படித்துப் பார்த்தான் ஹெர்ஸென்; ஏமாற்றமடைந்ததான். தவிர, இந்தச் சட்டத்தை ஆதாரமாகக் கொண்டு, விவசாயிகள் தங்கள் உரிமை களைக் கோரினார்கள். இதன் விளைவாகச் சில இடங்களில் கலகங்கள் கிளம்பின. இவைகளை அரசாங்கம் கடுமையான முறை களைக் கையாண்டு அடக்கியது. இவைகளை யெல்லாம் பார்த்தான் ஹெர்ஸென். உண்மையில் விவசாயிகளுக்கு விமோசனம் அளிக்க வேண்டுமென்ற எண்ணம் ஜார் மன்னனுக்கு இல்லையென்று கண்டு கொண்டான். அரசாங்கத்தின் செயலக் கண்டித்து ‘ஜனங்களுக்கு என்ன தேவை?’ என்ற தலைப்பில், நீண்ட தொரு தலையங்கம் தன் பத்திரிகையில் எழுதினான். இதில் ஜனங் களுக்கு நிலமும் சுதந்திர மும் தேவை என்று அறுதியிட்டுக் கூறினான். இந்த வாசகம் பிற் காலத்தில் புரட்சிவாதிகளின் கோஷமாயமைந்தது.

தவிர, ஹெர்ஸென், மேற்படி தலையங்கத்தில், ருஷ்யாவில் என்னென்ன சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென்பதற்கு ஒரு வேலைத் திட்டத்தை வகுத்துக் காட்டினான். இந்தத் திட்டம் செயல் படுவதற்கு ருஷ்யாவில் ஆங்காங்கு ரகசியச் சங்கங்கள் தாபிக்கப் பட்டு, அவை மூலம் விவசாயி களிடையிலும் ராணுவத்தினரிடை யிலும் கிளர்ச்சி நடத்த வேண்டுமென்று இவன் பத்திரிக்கையில் தொடர்ந்து எழுதி வந்தான். இளைஞர்களே, மக்களிடம் செல்லுங்கள்; அவர்களிடையே பிரசாரம் செய்யுங்கள் என்ற வாசகங்களை இவன் திரும்பத் திரும்ப முழக்கி வந்தான்.

இ.ருந்தாலும் இவன் பலாத்காரப் புரட்சியில் நம்பிக்கை யில்லாதவன். அரசியல் லட்சியத்தையடைய, பலாத்கார முறை களைக் கையாளக் கூடாதென்ற கொள்கையுடையவன். சுருக்க மாகச் சொல்ல வேண்டுமானால், ஹெர்ஸென், சீர்திருத்தவாதியே தவிர, பலாத்காரப் புரட்சிவாதியல்ல.

இதனால், பலாத்காரப் புரட்சியின் மூலந்தான் ருஷ்யாவுக்கு விமோசனம் காண முடியுமென்று கொள்கை கொண்டவர்கள், ஹெர்ஸெனிடமிருந்து பிரிந்தார்கள். இவனுடைய செல்வாக்கு மங்க ஆரம்பித்தது. மணி பத்திரிகையின் சந்தாதார்களும் வரவரக் குறைந்து வந்தனர். 1867-ஆம் வருஷம் பத்திரிகையும் நின்று போயிற்று. கடைசியில் ஹெர்ஸென், மனமுடைந்தவனாய் லண்டனை விட்டு, ஜினீவாவுக்குச் சென்று, அங்கும் நீண்டகாலம் தங்க முடியா மல் பாரிமா நகரடைந்து, அங்கே 1870-ஆம் வருஷம் ஜனவரி மாதம் இறுதியாகக் கண் மூடிக்கொண்டுவிட்டான்.

6. புரட்சியாளர் மூவர்
ருஷ்யாவின் விமோசனம் பலாத்காரப் புரட்சியின் மூலம்தான் சாத்தியம் என்று மனப்பூர்வமாக நம்பி அதில் முனைந்தவர்களில் முக்கிய மானவர்கள் - முதன்மை யானவர்கள் கூட - மூவர் என்று சொல்லலாம். ஒருவன் பக்குனின்1; இன்னொருவன் நெசேவ்2; மற்றொருவன் கச்சேவ்3

பக்குனின் என்பவன், பரம்பரையாகப் பணம் படைத்திருந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவன். இருபத்தைந்தாவது வயதிலிருந்தே, ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் நடைபெற்ற புரட்சிகளில் அதிக பங்கு கொண்டான். இதனால் இவனுடைய வாழ்க்கை நாடோடி வாழ்க்கை யாகவே போய்விட்டது. கார்ல்மார்க்1, 1864-ஆம் வருஷம் சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தை (முதல் இண்ட்டர் நேஷனல்) தாபித்தபோது, இவன் அதில் பெரிதும் பங்கு கொண்டான். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு மார்க்ஸுக்கும் இவனுக்கும் பிணக்கு ஏற்பட்டு சங்கத்திலிருந்து விலக்கப்பட்டான். மார்க்ஸீயத்தில் விளக்கப்படுகின்ற ராஜ்யத்தின் ஒடுக்கம் என்ற தீவிரக் கொள்கை, உடனடியாகச் செயல்பட வேண்டு மானால், வெறும் அரசியல் கிளர்ச்சியினால் அது சாத்தியமாகாதென்றும், பலாத்கார புரட்சியினால்தான் அது சாத்தியமாகுமென்றும், பிரசாரம் செய்தான். இவனைப் பின்பற்றுகின்ற ஒரு கோஷ்டியும் இவனுக்கு அமைந்தது.

பக்குனினுடைய முக்கிய சீடனும் நெருங்கிய தோழனுமான நெசேவ் என்பவன் பலாத்காரத்தில் பெரு நம்பிக்கையுடையவன்; பலாத்காரச் செயல்கள் வெற்றி பெற ஒழுங்கான ஒரு திட்டம் வகுத்துக் கொடுத்தவன்; தன் நோக்கம் நிறைவேற எந்த விதமான முறைகளையும் கையாளலாம் என்பது இவன் கோட்பாடு. இதனால் இவனுக்குப் பொய்புரட்டுகள் சர்வசாதாரண விஷயங்களாயி ருந்தன. மார்க், பக்குனின் இவர்களுக்குக்கூட இவன் செயல்கள் பிடிக்கவில்லை யென்றால், இவனுடைய தீவிரத் தன்மையை ஒரு வாறு அறியலாம். இரண்டாவது அலெக்ஸாந்தர் கொலையுண்ட தற்கு இவனே முக்கிய தூண்டுதலாயிருந்தான்.

கச்சேவ் என்பவன், நெச்சேவின் நெருங்கிய நண்பன். மக்களி டையே அரசியல் பிரசாரம் செய்வதன் மூலம் அரசாங்க ஆதிக்கம் பெற முடியாதென்பதும், பலாத்காரத்தினால்தான் அது சாத்திய மென்பதும் இவன் கொள்கை. இவன் பல தடவை சிறை செய்யப் பட்டு விடுதலை யடைந்திருக்கிறான்; நாடு கடத்தப்பட்டிருக்கிறான். நகரங்களில் வேலை செய்யும் தொழிலாளர் நலத்தைக் காட்டிலும் கிராமங்களிலுள்ள விவசாயிகளின் நலத்துக்கே இவன் அதிக முக்கியத்துவம் கொடுத்தான்.

ஆக, இரண்டாவது அலெக்ஸாந்தர் ஆட்சியில், அரசாங்கத் திற்கு விரோதமான எண்ணங்களும், பலாத்காரப் புரட்சிக்குச் சாதக மான எண்ணங்களும் வளர்ந்தன; சிறிது வேகமாக வளர்ந்தன என்று கூடச் சொல்லலாம்.

7. ஜனசக்திக் கொள்கை
இந்த எண்ணங்களெல்லாம் சேர்ந்து ஒரு கொள்கையாக உருக் கொண்டது. இதனை ஜனசக்தி1 கொள்கையென்று சொல்ல லாம். இந்தக் கொள்கையைக் கொண்டவர்கள் பொதுவாக நாரோத்னிக்குகள்2 என்று அழைக்கப்பட்டார்கள். புரட்சி நடத்தி வெற்றிகாண வேண்டுமானல், விவசாயிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் அவசியம் என்ற கருத்துக்கு இவர்கள் முக்கியத்துவம் கொடுத்துப் பேசி வந்தார்கள். ஆனால் இவர்களுக்குள் ஒருமைப்பட்ட அபிப் பிராயங்கள் இருக்கவில்லை. சிலர், மக்களிடையே சென்று பிரசாரம் செய்து மெதுமெதுவாகப் புரட்சி எண்ணங்களை வளர்க்கவேண்டு மென்று கருதினார்கள்.; வேறு சிலர், பலாத்காரப் புரட்சி செய்து உடனடியாக அதிகாரத்தைக் கைப்பற்றி அதன் மூலம் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று கருதினார்கள்.

முன்னவர்கள் ,கிராமங்கள் தோறும் சென்று பிரசாரம் செய்து புரட்சி விதைகளை விதைக்கத் தொடங்கினார்கள். இவர் களுடைய உற்சாகம் கரைபுரண்டோடியதென்று சொல்லலாம். விவ சாயிகளைப் போலவே உடையணிந்து விவசாயிகளை அணுகினால் அவர்கள் தங்களை நம்புவார் களென்றும், தங்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடப்பார்களென்றும் இவர்கள் தவறாகக் கருதிக் கொண்டுவிட்டார்கள். விவசாயிகள், எந்த நாட்டிலும், கள்ளங்கபட மற்றவர்களென்றாலும், உண்மையை எளிதிலே உணர்ந்து கொள்ளும் சக்தி வாய்ந்தவர்களல்லவா? தங்களிடையே வந்து பிரசாரம் செய்த வர்கள் மீது இவர்களுக்கு - விவசாயிகளுக்கு - நம்பிக்கை உண்டாக வில்லை. அவர்களுடைய பிரசாரங்களைச் செவிகொடுத்தோ மனம் வைத்தோ கேட்கவில்லை. அவர்களைப் போலீ உளவாளிகள் என்று கருதினார்கள். இவர்களும் - பிரசாரம் செய்தவர்களும் - போலீஸார் வசம் எளிதில் சிக்கிக்கொண்டார்கள். இதன் விளைவாக, நூற்றுக்கணக்கான பேருக்குச் சிறைவாசத் தண்டனை கிடைத்தது. பலர் ஸைபீரியாவுக்கு நாடுகடத்தப்பெற்றனர்.

போலீஸார் வசம் சிக்கிக்கொண்டவர்கள் போக எஞ்சி யிருந்தவர்களிற் சிலர், அதாவது பொறுமையும் நிதானமுமுடைய சிலர், தனியாகப் பிரிந்து, கிராமங்களிலேயே நிரந்தரமாகத் தங்கி அமைதியான சேவைகளில் ஈடுபட்டார்கள்; ஜனங்களுக்கு, அவர்களுடைய தேவை இன்னதென்பதை உணர்த்தி வந்தார்கள். புரட்சி எண்ணங்கள் தாமாகவே வளர்ந்தன.

பொறுமையும் நிதானமுமில்லாத வேறு சிலர், நகரங்கள் தோறும் சென்று பலாத்காரச் செயல்களில் இறங்கினார்கள். அரசாங்க உத்தியோகதர்களில் முக்கியமானவர் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். வேறு சில பலாத்காரச் செயல்களும் நடை பெற்றன. இவைகளைக் கண்டு அரசாங்கம் மருண்டு விட்டது. கடுமையான அடக்கு முறையைக் கையாளத் துணிந்தது. பலருக்குச் சிறைவாசம், தூக்குமேடை, தேசப் பிரஷ்டம், எல்லாம் முறையாக நடைபெற்றன.

அரசாங்கம், இங்ஙனம் தன்னைப் பலமாக பந்தோபது செய்து கொண்ட போதிலும், இரண்டாவது அலெக்ஸாந்தர் மன்னன், புரட்சி வாதிகளின் கையிலிருந்து தப்புவிக்க முடியவில்லை. ஆறு தடவை அவனைக் கொலைசெய்ய முயற்சிகள் நடைபெற்றன. கடைசியில் ஏழாவது தடவை, 1881-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் முதல்தேதி புரட்சி வாதிகளின் முயற்சி கைகூடியது. அலெக்ஸாந்தர், இவர்கள் வீசிய வெடிகுண்டுகளுக்கு இரையானான்.

8. புயலுக்குமுன் அமைதி
இரண்டாவது அலெக்ஸாந்தருக்குப் பிறகு அவனுடைய இரண்டாவது மகனான மூன்றாவது அலெக்ஸாந்தர்1 பட்டத்திற்கு வந்தான். இவன் ஆட்சிக்காலத்தில், ருஷ்ய சமுதாயத்தை மேல் நோக்காகப் பார்க்கிறவர்களுக்கு ஒருவித அமைதி நிலவியிருந்த தாகவே தென்படும். ஏனென்றால் இந்தக் காலத்தில், புதிய தொழில் முயற்சிகள் பல தொடங்கப்பட்டன. உள்நாட்டுத் தொழில்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு கிடைத்து வந்தது. புதிய ரெயில் பாதைகள் போடப்பட்டன. ஐரோப்பிய வல்லரசுகளுக்கும் ருஷ்யாவுக்கும் நிலவி வந்த உறவில் அதிக கரகரப்புக்கு இடமில்லாமலிருந்தது.

இப்படி மேற்பார்வைக்கு அமைதி தென்பட்டபோதிலும், இது, புயற்காற்றுக்கு முன் காணப்படும் அமைதியாகவே இருந்தது. அரசாங்கம் கையாண்ட கடுமையான அடக்குமுறை காரணமாகவே இந்த அமைதி காணப்பட்டதென்று சொல்ல வேண்டும். மக்களு டைய ஜீவாதாரமான உரிமைகள்கூட நசுக்கப்பெற்றன. இரண்டவது அலெக்ஸாந்தர் மன்னன் காலத்தில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தச் சட்டங்கள் பல, ரத்துசெய்யப் பட்டுவிட்டன. ஏகபோக உரிமைக் காரர்களுடைய செல்வாக்கு அதிகரித்தது. 1891-ஆம் வருஷம் பெரிய பஞ்சம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் மடிந்தனர். விவசாயிகள் தங்கள் கஷ்ட நஷ்டங்களையெல்லாம் மௌனமாகப் பொறுத்துக் கொண்டிருந்தனர். என்றாலும் ஆங்காங்கு முணுமுணுப்புச் சப்தம் கேட்காமலில்லை. இது, சிறு சிறு கலகங்களாகத் தோன்றி, உடனே, அரசாங்கத்தின் அடக்குமுறை அடியை வாங்கிக் கொண்டு அடங்கி விட்டது. இதே அடக்குமுறை காரணமாக, முந்தின ஆட்சியில் புரட்சி விதையைத் தெளித்து வந்தவர்களும் அவர்களைப் பின்பற்றி வந்தவர்களும் பல இடங்களுக்குத் தலைமறைவாகப் போய் விட்டார்கள்; சிலர்,சிறைவாசிகளாகவும், தேசப்பிரஷ்டர் களாகவும் ஆனார்கள்; தூக்குமேடையில் ஏறியவர்களும் சிலர். இருந்தாலும் இவர்கள் தெளித்து வந்த புரட்சி விதைகள் முளைவிடாமல் இல்லை; ஏன்? சில இடங்களில், வெளிப்பார்வைக்கு அதிகமாகத் தெரியாமல் வளர்ந்தும் வந்தன. அடுத்த ஆட்சியோடு ருஷ்யாவின் பரம்பரை முடியாட்சி முற்றுப்பெற்று விடுவதற்கான அறிகுறிகள் இந்த வளர்ச்சியில் காணப்பட்டன.

இந்த வளர்ச்சிக்குக் காரணமாயிருந்தவர்களில் பெரும் பாலோர் கல்லூரி மாணாக்கர்கள்; நாட்டு நலனுக்காக உயிரைக் கொடுக்கத் துணிந்தவர்கள். ருஷ்ய சரித்திரத்தின் ஆச்சரியமான அமிசம் இது.

இவர்களிற் சிலர் ஒன்று சேர்ந்து, மூன்றாவது அலெக்ஸாந் தரின் உயிருக்கு உலைவைக்கத் தீர்மானித்து அதற்கான சில முன்னேற் பாடுகளையும் செய்தனர். 1887-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் முதல் தேதி அவன் மடிய வேண்டுமென்று, நாளும் குறிப்பிடப்பட்டு விட்டது. ஆனால் இந்தச் சதியாலோசனையை அரசாங்க ஒற்றர்கள் எப்படியோ கண்டு கொண்டார்கள்; இதில் சம்பந்தப்பட்ட பதினைந்து பேரைக் கைது செய்து விசாரணைக்குட் படுத்தினர். ஐவருக்கு மரண தண்டனை கிடைத்தது. இந்த ஐவரில் ஒருவன் லெனினின்1 மூத்த சகோதரனான அலெக்ஸாந்தர் உலியனாவ்.2 அப்பொழுது லெனினுக்குப் பதினேழாவது வயது நடந்துகொண்டி ருந்தது. பிற்காலத்தில் இவன் புரட்சி இயக்கத்தில் தீவிரமாக ஈடு பட்டதற்கு, இவனுடைய மூத்த சகோதரனின் துணிச்சலான மரணம் ஒரு முக்கிய காரணமாயமைந்தது.

பொதுவாக மூன்றாவது அலெக்ஸாந்தர், புரட்சி சக்திகளை வளர்த்துக் கொடுத்துவிட்டு, ஆனால் அந்தப் புரட்சி சக்திகள், இவனுடைய உயிருக்கு உலை வைக்கச் செய்த முயற்சிகளிலிருந்து தப்பி, 1894 - ஆம் வருஷம் அக்டோபர் மாதம் இருபதாந்தேதி குடல் சம்பந்தப்பட்ட நோயினால் இறந்து போனான்.


VI. முடியரசின் மறைவு

1. விசித்திரப் போக்குள்ள நிக்கோலா
மூன்றாவது அலெக்ஸாந்தருக்குப் பிறகு இரண்டாவது நிக் கோலா1 அரசு கட்டில் ஏறினான். இவனோடு ரோமனாவ் பரம் பரை முற்றுப் பெற்றுவிட்டது; ரோமனாவ் பரம்பரையென்ன, ருஷ்யாவில் முடியரசுக்கு முற்றுப்புள்ளி வைத்தவனும் இவன்தான்.

நிக்கோலா, பலமொழிகளைக் கற்றுத் தேர்ந்தவன்; ருஷ்யா வின் பல பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் சுற்றுப் பிரயாணம் செய்து ஓரளவு அனுபவம் பெற்றவன். 1890- 91-ஆம் வருஷங்களில் உலகயாத்திரையாகப் புறப்பட்டு எகிப்து, இந்தியா, ஜப்பான் முதலிய நாடுகளைப் பார்த்திருக் கிறான். இளமையில், ருஷ்ய ராணுவத்தில் ஓர் உத்தியோகதனாகப் பொறுப்பேற்று, படை அனுபவம் பெற்றவன்.

ஆனால் இவனுடைய மனப்போக்கு விசித்திரமுடையதா யிருந்தது. எது முக்கியமோ அதை அலட்சியப்படுத்துவான்; எது முக்கிய மில்லையோ அதன் மீது அதிக கவனஞ் செலுத்துவான். இவன் ஒழுங்காக நாட்குறிப்பு எழுதி வந்தான். இதில், அன்றாடம் கண்டது, கேட்டது, நடந்தது எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் எழுதி வருவது இவன் வழக்கம். என்னென்னவற்றை எழுதி வந்தான் தெரியுமா? நாய்களோடு விளையாடியது, உலாவப்போனது, டென்னி பந்து ஆடியது, படகோட்டியது, மனைவியும் மக்களும் என்னென்ன பேசினார்கள், என்னென்ன செய்தார்கள் ஆகிய இந்தமாதிரி விஷயங்கள் தான் இவனுடைய நாட் குறிப்பில் இடம் பெற்றிருந்தன! அரசாங்க நிருவாகத்தைப் பற்றியும், அதில் தன்னு டைய பங்கு எவ்வளவு என்பதைப்பற்றியும் ஒரு சில வரிகள் கூட இதில் இடம் பெறவில்லை. அரச கடமையை எவ்வளவு பொறுப் புணர்ச்சியுடன் நிறைவேற்றி வந்தா னென்பதை இவற்றிலிருந்து நாம் ஒருவாறு தெரிந்து கொள்கிறோம். அரசனாகத்தான் ஆளத் தெரிய வில்லையென்றால், மனிதனாகவாவது வாழத்தெரிந்து கொண் டிருந்தானா என்றால் அதுவும் இல்லை. ரத்தக்களரியின் மத்தியில் அரச பீடத்தில் ஏறிய இவன் ரத்தக்களரியின் மத்தியிலேயே அதிலிருந்து இறங்கியும் விட்டான்; அது மட்டுமல்ல; உயிரையும் இழந்துவிட்டான். இவன் மாத்திரமா? இல்லை; இவன் குடும்பமும் இவனோடு சென்று விட்டது.

என்ன அபசகுனம் என்று சொல்லக்கூடிய மாதிரி இவனுடைய ஆட்சி தொடங்கியது. இவனுடைய முடிசூட்டு விழா வெகு விமரி சையாகக் கொண்டாடப்படுவதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப் பட்டிருந்தன. குறிப்பிட்ட ஒரு தேதியில், மாக்கோ நகரத் திற்கருகிலுள்ள ஒரு சதுக்கத்தில், ஜனங்களுக்குத் தான தருமங்கள் வழங்கப்படுமென்று அரசாங்க அதிகாரிகள் அறிக்கை வெளி யிட்டார்கள். அன்று மேற்படி சதுக்கத்தில் கட்டுக்கடங்காத ஜனக் கூட்டம் நிரம்பிவிட்டது. இதனை ஒழுங்கு படுத்தி, காரியங்களைச் செய்துகொண்டு போக அதிகாரிகளால் முடியவில்லை. இதனால் ஒரே நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சுமார் ஆயிரத்து முந்நூறு பேர் மடிந்து போனார்கள்; பலர் காயமடைந்தனர். இந்த உயிர்ப் பலியோடு முடிசூட்டு விழாவும் முடிவுற்றது. ஆனால் இதில் என்ன விசேஷமென்றால், அரச தம்பதிகள் - நிக்கோலாஸும் இவன் மனைவியும் - இத்தனை பேர் உயிரிழந்ததைக் குறித்துச் சிறிதும் கவலைப்படாமல், அன்று மாலை, பிரெஞ்சு தூதராலயத்தில், இவர்களைப் பாராட்டு முகத்தான் கொடுக்கப்பட்ட ஒரு தேநீர் விருந்துக்குக் குதூகலத்துடன் சென்றதுதான்!

நிக்கோலா உலகத்தின் பல இடங்களையும் சுற்றிப் பார்த்த வனாதலால், உலக அனுபவம் நிரம்பப்பெற்றவனாய், காலப்போக்கை அனுசரித்து அரசாங்கயந் திரத்தை இயக்குவிப்பானென் றும், முந்திய ஆட்சியில்- மூன்றாவது அலெக்ஸாந்தர் ஆட்சியில் - கையாளப் பெற்ற அடக்குமுறைகள் ரத்தாகு மென்றும், மக்களுடைய கோரிக்கைகளுக்கு மதிப்புக் கொடுக்கப்படுமென்றும் எல் லோரும் எதிர்பார்த்தார்கள்; ஆனால் ஏமாற்றத்தையே அடைந்தார்கள். இவன் பட்ட மேற்ற மூன்றாவது மாதம், அரசாங்க நிருவாகத்தில் ஜனங் களுக்கு ஓரளவு பிரதிநிதித் துவம் அளிக்கப்படுமென்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், இது மகிழ்ச்சிக்குரியதாகுமென்றும் தெரிவிப்பதற்காக ஒரு தூதுகோஷ்டி இவனைப் பேட்டி கண்டது. இதற்குப் பதிலளிக்கின்ற முறையில், நிக்கோலா, இவையெல்லாம் முட்டாள்தனமான கனவுகள் என்றும், சுயேச்சாதிகாரக் கொள்கைகளை என் தகப்பனார் எவ் வளவு உறுதியுடன் கடை பிடித்து வந்தாரோ அவ்வளவு உறுதியுடன் நான் கடைபிடித்து வருவேன் என்பதை எல்லோரும் அறிந்து கொள் ளட்டும் என்றும் எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் தெரி வித்தான். இதிலிருந்து இவனுடைய ஆட்சிப் போக்கு எவ்விதமிருக்கு மென்பதை, அரசியலில் ஈடுபட்டிருந்தவர்கள், சிறப்பாக இளைஞர்கள் ஊகித்துக் கொண்டு விட்டார்கள்.

இந்த ஊகத்தில் தவறில்லையென்று சொல்லிக் காட்டுகின்ற மாதிரி, நிக்கோலாஸின் ஆட்சி தொடங்கிய காலத்திலேயே, முந்திய ஆட்சியில் கையாளப்பட்ட அடக்குமுறைகளைக் காட்டிலும் கடுமையான அடக்கு முறைகளுக்கு ஜனங்கள் இரையாக வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. இதனால் தேசத்தில் அமைதி ஏற்படு மென்று அரசாங்கம் எதிர்பார்த்தது. இதற்குமாறாக, அரசாங்கத் தின்மீது ஜனங்களுக்கிருந்த அதிருப்தி வளர்ந்து வரலாயிற்று. பொது மக்கள், புரட்சி வாதிகளுக்கு முன்னைக்காட்டிலும் அதிகமான ஆதரவு காட்டலானார்கள். அடக்கு முறைக்குத் தப்பி அநேக இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு ஓடி விட்டார்கள். இவர்கள் அங்குச் சும்மாயிருக்கவில்லை; தங்கள் தங்கள் இடத்திலிருந்து கொண்டே ருஷ்யாவில் புரட்சி எண்ணங்களை வளர்த்து வந்தார்கள்; வெளி நாடுகளில் துண்டுப் பிரசுரங்களையும் பத்திரிகை களையும் அச் சடித்து ருஷ்யாவில் பொது ஜனங்களிடையே, சிறப்பாகக் கிராம விவசாயிகளிடையே பரப்பி வந்தார்கள்.

2. சீர்திருத்தமும் அடக்குமுறையும்
இப்படி அரசாங்கம் ஒரு புறத்தில் அடக்கு முறையை அனுஷ்டித்து வந்த போதிலும், மற்றொரு புறத்தில் மேற்போக்கான சில சீர்திருத்தங் களையும் அவ்வப்பொழுது மருந்து மாதிரி அளித்து வந்தது. இதற்கு முக்கிய காரணமாயிருந்தவன் விட்டே1 என்பவன். இவன் 1892-ஆம் வருஷத்திலிருந்து 1903 -ஆம் வருஷம் வரை அரசாங்கத்தின் பொக்கிஷ மந்திரியா யிருந்தான். இவன் நீதி இலாகாவிலிருந்த ஊழல்களைக் களைந்தான்; அரசாங்கத்தின் வரவு செலவு முறையைச் சீர்திருத்தினான்; நாணயமாற்று முறையைத் திருத்தியமைத்தான்; ஏற்கனவே பெயரளவில் இருந்த தல தாபனங்களை உயிர்ப்பித்து, கல்வி, சுகாதாரம் முதலிய பொதுநல விஷயங்களைக் கவனித்துக் கொள்ளும்படி அவைகளுக்கு அதிகாரம் அளித்தான். அமைதியாகக் கிராமசேவை செய்து கொண்டிருந்த புரட்சிவாதிகள் இந்த தல தாபனங்களில் இடம் பெற்றார்கள்; ஜனங் களிடத்தில் நெருங்கிப் பழகுவதற்கும், அவர்களுடைய மனப் பான்மையைத் திருத்தி யமைப்பதற்கும் இந்த தாபனங்களை உபயோகித்துக் கொண்டார்கள்.

இந்தக்காலத்தில் சீனாவில், ஐரோப்பிய வல்லரசுகள், வியா பார உரிமைகள், சலுகைகள் முதலியவற்றைப் பெறும் விஷயத்தில் போட்டி போட்டுவந்தன. இந்தப் போட்டியில் ருஷ்யா கலந்து கொண்டது. இப்படி மேற்கு வல்லரசுகள், தனக்கருகிலுள்ள சீனாவில் வந்து போட்டியிடுவது, அப்பொழுதுதான் துளிர்த்துத் தலை யெடுத்துக் கொண்டிருந்த ஜப்பானுக்குச் சிறிது கூடப் பிடிக்க வில்லை. இது சம்பந்தமாக ஜப்பானுக்கும் ருஷ்யாவுக்கும் அடிக்கடி சில்லரை மனதாபங்கள் நேரிட்டு வந்தன.

இந்த மனதாபங்கள் குறையாமலிருக்க, பிரிட்டன், பிரான், ஜெர்மனி முதலிய மேலைநாடுகளைச் சேர்ந்த முதலாளிகள் அடிக் கடி தூபம் போட்டுக்கொண்டே வந்தார்கள். 1860-ஆம் வருஷத்தி லிருந்தே இந்த முதலாளி வர்க்கத்தினர், ருஷ்யாவின் முக்கியமான நகரங்களில் தொழிற் சாலைகளை ஆரம்பித்து நடத்தி வந்தனர். ருஷ்ய அரசாங்கம் இவர்களுக்கு ஆதரவு அளித்தது. இந்த ஆதரவின் நிழலில், ருஷ்யப் பணக்காரர் சிலரும், தங்கள் சொந்த முதலைப் போட்டுத் தொழிற்சாலைகள் தொடங்கினார்கள். இந்தத் தொழிற் சாலைகளில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் எல்லா இடங்களிலும் பரவின. இவைகளின் மீது ஜனங்களுக்கு ஒரு மோகம் விழத் தலைப் பட்டது. எப்பொழுது யந்திரப் பொருள்கள் மீது மோகம் விழுந்ததோ அப்பொழுதே கிராமக் கைத்தொழில்கள் குன்ற வேண்டியதுதானே; அப்படியே குன்றிப்போயின.

இவைகளினால் உண்டான விளைவுகள் இரண்டு. ஒன்று, நிலச்சுவான்தார்களின் ஆதிக்கம் போய், தொழில் முதலாளிகளின் ஆதிக்கம் ஏற்பட்டது. மற்றொன்று, தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர் கூட்டம் பெருகியதால், தொழிலாளர் இயக்கம் என்ற தனியானதோர் இயக்கம் தோன்றியது. இந்த முதலாளி இயக்கமும் தொழிலாளி இயக்கமும் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்தன. முன்னது அரசாங்கத்தின் துணைபெற்று வளர்ந்தது; பின்னது புரட்சி வாதிகளின் ஆதரவைப்பெற்று வளர்ந்தது. புரட்சிவாதிகள், இதுவரையில் கிராம விவசாயிகள் மத்தியில் வேலை செய்து வந்தார்கள். இப்பொழுது நகரத்தொழி லாளர்கள் மத்தியிலும் வேலை செய்ய வேண்டிய அவசியம் ஏற் பட்டது. ஆனால் இதில் ஓர் அனுகூலம் இருந்தது. என்னவென்றால், இந்த தொழிலாளர்கள், தொழிலுக்குப் புதியவர்கள். இதற்கு முன் கிராமங்களில் விவசாயிகளாக வேலை செய்து கொண்டி ருந்தவர்கள் தானே இப்பொழுது நகரத்தொழிற்சாலைகளில் வேலை செய் கிறார்கள். இவர்களுக்குத் தங்கள் தொழில் சம்பந்தமான நிறைகுறை களோ, நன்மை தீமைகளோ சரிவரத் தெரியாதல்லவா? இதனால் எந்தவிதமான புதிய எண்ணத்தையும் ஏற்றுக்கொள்ளக் கூடிய திறந்த மனப்பான்மை இவர்களிடத்தில் இருந்தது. இதனை ருஷ்யப் புரட்சி வாதிகள் மிகுந்த சாமர்த்தியமாக உபயோகப்படுத்திக் கொண் டார்கள். எப்படியென்றால், அப்பொழுது செல்வாக்குப் பெற்றிருந்த கார்ல் மார்க்ஸின் கொள்கை களைத் தொழிலாளர்களிடையில் புகுத்தினார்கள். அவர்களும் இந்தக் கொள்கைகளை உற்சாகத் தோடு வரவேற்றார்கள்.

ஆனால், துரதிருஷ்டவசமாக இந்தக் காலத்தில் ஐரோப்பா வின் பல பாகங்களிலும் பரவி யிருந்த மார்க் கோஷ்டியினருக்குள் கருத்து வேற்றுமைகள் தோன்றத் தலைப்பட்டன. ஒரு சாரார், மார்க்ஸின் கொள்கைகளை இம்மியளவும் பிசகாது பின்பற்றி நடக்கவேண்டு மென்றும், இது விஷயத்தில் வேறெந்தக் கட்சி யுடனும் சமரஸம் செய்துகொள்ளக் கூடாதென்றும், இப்படி உறுதி யாக நடப்பதன் மூலந்தான் தொழிலாளர் புரட்சியை உண்டுபண்ண முடியுமென்றும் கூறினார்கள். மற்றொரு சாரார், இருக்கப்பட்ட சூழ்நிலையை அனுசரித்து, சமரஸம் செய்துகொள்ள வேண்டிய இடத்தில் சமரஸம் செய்தும், தனித்து இயங்கவேண்டிய சந்தர்ப் பத்தில் தனித்து இயங்கியும், இப்படிப் படிப்படியாகச் சென்றுதான் தொழிலாளர் புரட்சியை உண்டுபண்ண முடியு மென்று கரு தினார்கள். இந்தக் கருத்து வேற்றுமை, ஐரோப்பாவிலுள்ள எல்லா நாடுகளிலும் தேசப்பிரஷ்டர்களாகச் சிதறிக்கிடந்த ருஷ்ய மார்க் வாதிகளிடையிலும் ஏற்பட்டது. இவர்களிற் பெரும்பாலோர் லெனினைப் பின்பற்றி நடந்தார்கள். லெனின் அப்பொழுது லண்டனில் வசித்து வந்தான். இவனுக்குச் சமரஸம் என்பது பிடிக் காது. ஒரு கட்சிக்கு எப்பொழுது சமரஸ மனப்பான்மை ஏற்பட்டு விடுகிறதோ அப்பொழுதே அந்தக் கட்சிக்குள் சந்தர்ப்பவாதிகள் புகுந்து கொண்டு, கட்சியின் பலத்தைக் குலைத்து விடுவார் களென்று இவன் உறுதியாக நம்பினான். இருக்கப்பட்ட சூழ் நிலையை அனுசரித்து படிப்படியாகப் புரட்சியை வளர்ப்ப தென்பது அனுபவ சாத்தியமற்றதென்று இவன் கருதினான். தன்னுடைய இந்தக் கொள்கைக்கு இணங்கி வருகிறவர்கள் எத்தனை பேர் என்பதைப் பற்றி இவன் கவலையே கொள்ளவில்லை. எண்ணிக்கைக்கு இவன் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பரிபூரணப் புரட்சியில் நம்பிக்கை யுள்ளவர்கள் யாரோ, அதற்காகத் தங்களுடைய சர்வத்தையும் - பொது ஜனங்களின் கைதட்டலையும் தலையாட்டுதலையுங்கூட - துறந்து விடத் தயாராயிருக்கிறவர்கள் யாரோ அவர்கள் மட்டும் தனியாகப் பிரிந்து விடுதல் நல்லதென்று இவன் சொல்லி வந்தான். புரட்சியின் தத்துவங் களையும், அதன் செயல்முறைகளையும் நன்கு தெரிந்துகொண்டுள்ள ஒரு நிபுணர் கோஷ்டி முதலில் தயாராக வேண்டும்; அப்படித் தயாரான கோஷ்டியினால்தான் ஒழுங்கான புரட்சியை நடத்த முடியும்; புரட்சியில் அநுதாபம் இருக்கிறதென்று மட்டும் சொல்லிக்கொண்டிருந்தால் போதுமா? லெனினுடைய இந்த நிபந்தனைகள் மிகவும் கடுமையாக இருந்தபோதிலும், பெரும் பான்மையோர் இவனுடைய அபிப்பிராயத்தையே அங்கீகரித்தனர்; இவனைப் பின்பற்றி நடக்கத் தீர்மானித்தனர். இந்தப் பெருபான்மை, சிறுபான்மை அபிப்பிராய பேதத்திலிருந்துதான் போல்ஷ்வெக், மென்ஷ்வெக்1 என்ற இரண்டு வார்த்தைகள் கிளம்பின. இவை இரண்டும் ருஷ்ய வார்த்தைகள். லெனினைப் பின்பற்றிய பெரும் பான்மையோர் போல்ஷ்வெக்கர் என்றும், இவனுடைய கருத்துக்கு மாறுபட்ட சிறுபான்மையோர் மென்ஷ்வெக்கர் என்றும் அழைக்கப் பட்டார்கள். இந்தப் பிளவு ஏற்பட்டது 1903-ஆம் வருஷம்.

3. இரத்த ஞாயிறு
ருஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் மனதாபங்கள் இருந்தன வென்று ஏற்கனவே சொல்லியிருக்கிறோமல்லவா? இவை முற்றி 1904-ஆம் வருஷ ஆரம்பத்தில் ருஷ்ய - ஜப்பானிய யுத்தமாக மூண்டது. தங்களுடைய தேசம், ஜப்பானுடன் யுத்தந் தொடுத்ததை ருஷ்யப் பொதுஜனங்கள் விரும்பவில்லை. யுத்தந் தொடங்கிய காலத்திலிருந்து, நாட்டில் தரித்திரம் தாண்டவமாடியது; ஜனங்கள் பஞ்சத்தினால் வாடினார்கள்; பிணியினால் இறந்து போனார்கள். இவை தவிர, ஏற்கனவே ஜனங்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை முதலியன வெல்லாம் மறுக்கப்பட்டிருந்தன. இந்த உரிமைகள் சம்பந்தமாக யாரேனும் அற்ப சொற்பமாக முணுமுணுத்தால் கூட அவர்கள் மீது அடக்குமுறை ஆயுதம் பலமாகப் பிரயோகிக்கப் பட்டது. இவ் வளவுக்கும் ஜனங்கள் பொறுமையை இழக்கவில்லை; அமைதியாகவே கிளர்ச்சி செய்து வந்தார்கள். அவர்கள் வேறொன்றும் கேட்க வில்லை; ஜீவாதாரமான உரிமைகள் என்று சொல்லப்படுகிற எண்ண உரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை, நான்கு பேர் சேர்ந்து கூட்ட மாகக் கூடுகிற உரிமை முதலியன தங்களுக்கு அளிக்கப்பட வேண்டு மென்றும், தேசமக்களின் பிரதிநிதிச் சபையாக ஒரு சபை கூட்டப்பட வேண்டுமென்றும் கேட்டார்கள்; தங்களுடைய கோரிக் கைகளைக் குறிப்பிட்டு ஒரு தேசீயத் திட்டம் தயாரித்து வெளி யிட்டார்கள். இதற்குத் தேசத்தில் பரிபூரண ஆதரவு ஏற்பட்டது.

இதற்கு மத்தியில், ருஷ்ய சரித்திரத்தையே கறைபடுத்தக் கூடிய ஒரு சம்பவம் நடைபெற்றது. 1905-ஆம் வருஷம் ஜனவரி மாதம் ஒன்ப தாந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை பீட்டர்பர்க் நகரத்திலுள்ள தொழிற் சாலைகளில் வேலை செய்துகொண்டிருந்த ஆயிரக்கணக் கான தொழிலாளர்கள், தங்கள் பெண்டுபிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு காபோன்1 என்ற ஒரு பாதிரியின் தலைமையில் ஜார் மன்னனுடைய குளிர்கால அரண்மனைக்கு ஊர்வலமாக அணி வகுத்துக் கொண்டு ஒழுங்காகச் சென்றார்கள். ஊர்வலத்திற்கு முன்னாடி நிக்கோலா மன்னனுடைய உருவப்படம் அரசவிருதுகளுடன் சென்றது. இந்தக் கூட்டத்தைப் பார்த்தால், ஏழ்மையே உருவெடுத்து வந்தாற் போலிருந்தது. எதற்காக இந்த ஏழை ஜனங்கள் ஊர்வல மாகச் செல்கிறார்கள்? மேலே சொன்ன தேசியத் திட்டத்தை அரசரின் சந்நிதானத்தில் சமர்ப்பிப்பதற்காக; தங்களுடைய கஷ்டநிஷ் டூரங் களுக்கு ஏதேனும் பரிகாரம் தேடிக்கொடுக்கும்படி பிரார்த்திப் பதற்காக. தெய்வத் திருத்தந்தை யான ஜார் தங்களுடைய பரிதாப நிலையை நேரில் பார்த்தால் நிச்சயம் மனமிரங்குவான் என்று கபட மற்ற இந்த ஜனங்கள் நம்பினார்கள். மெதுவாக ஊர்வலம் அரச மாளிகையை அடைந்தது. அரசனும் தரிசனம் கொடுத்தான். ஜனங்கள், தங்கள் குறைகளை மரியாதையோடு தெரிவித்துக் கொண்டார்கள். வயிற்றுக்கு ஆகாரம் கிடைக்கவில்லை என்று விண்ணப்பித்துக் கொண்டார்கள். எங்கள் பிரார்த்தனைக்குச் செவி சாய்க்காமல் இருந்துவிட்டால் தங்கள் திருமாளிகை முன்னர் இறந்து போவ தைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று தங்களுடைய நிர்க்கதியான நிலைமையைப் புலப்படுத்தினார்கள். அரசன் வாய்திறந்து ஓர் ஆறுதல் வார்த்தை சொல்வான் என்று ஏழைத் தொழிலாளர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவன் இவர்களைச் சுட்டுத் தள்ளும்படி கைநீட்டி உத்தரவு கொடுத்தான். அவ்வளவு தான். பீரங்கிகள் முழங்கின. ஆகாரமில்லாமல் காலியா யிருந்த ஏழை மக்களின் வயிற்றிலே குண்டுகள் பாய்ந்தன. வெள்ளைப் பனி படிந்திருந்த அரண்மனை முன்சதுக்கமெல்லாம் சிவப்பு ரத்தம் படிந்தது. நூற்றுக் கணக்கான பேர் யமபுரத்திற்குச் சென்றார்கள். உயிர் தப்பியவர்களைக் குதிரைப் படை வீரர்கள் சவுக் காலடித்து விரட்டினார்கள். இந்த ஞாயிற்றுக் கிழமை சிவப்பு ஞாயிறு என்றும் ரத்த ஞாயிறு என்றும் சரித்திரத்தில் பிரசித்தமும் அடைந்துவிட்டது.

4. மக்கள் கொதிப்பு
ரத்த ஞாயிறு சம்பவம் ருஷ்ய சமுதாயத்தின் அதிவாரத் தையே அசைத்துக் கொடுத்தது. ஆனால் அதே சமயத்தில் ருஷ்யா வின் கொடுங்கோலாதிக்கத்துக்கு முடிவு காலமும் ஆரம்பித்து விட்டது. ஜனங்கள் இப்படிக் கிளர்ச்சி செய்வதும் சீர்திருத்தங்கள் வேண்டுமென்று கேட்பதும் அரசாங்கத்திற்குச் சிறிதுகூடப் பிடிக்க வில்லை. ஜப்பானுடன் தான் நடத்திவரும் யுத்தத்தை இவை தடை செய்கின்றன வென்று அது கருதியது; கோபங்கொண்டது; பயங் கரமான அடக்குமுறைகளைக் கையாண்டது. இவைகளைக் கண்டு ஜனங்கள் கொதித்தெழுந்தார்கள். இரண்டாவது நிக்கோலாஸின் நெருங்கிய உறவினனும் உயர்தர ராணுவ உத்தியோகத்தில் இருந்த வனுமான ஸெர்கிய கோமகன், 1905-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் நான்காந்தேதி பட்டப்பகலில் வெடிகுண்டினால் கொல்லப் பட்டான். இவனைக் கொன்ற இளைஞன் தப்பியோட முயற்சி செய்யவில்லை. போலீ அதிகாரிகள் இவனிடமிருந்து ஏதாவது வாக்கு மூலம் வாங்கிவிட வேண்டு மென்று எவ்வளவோ பிரயத்தனப் பட்டார்கள். முடியவில்லை. எல்லாவற்றிற்கும் மௌனஞ் சாதித்து விட்டான் இவன். தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைப் புன்சிரிப்போடு ஏற்றுக் கொண்டான். இந்தப் புன்சிரிப்பு, ருஷ்ய சுயேச்சாதிகாரக் கோட்டைக்கு நெருப்புப் பொறியாயிருந்தது. நாடெங்கணும் வேலை நிறுத்தங்கள் தொடங்கப்பட்டன. வேலை நிறுத்தத்தை ஒழுங்காக நடத்திச் செல்லும் பொருட்டு ஒவ்வொரு முக்கிய நகரத்திலிருந்த தொழிலாளர்களும் தங்களுக்குள் ஒவ்வொரு சிறிய சோவியத்தை அமைத்துக் கொண்டார்கள். (சோவியத் என்ற ருஷ்ய வார்த்தைக்கு, சபை அல்லது கவுன்சில் என்று அர்த்தம்) இந்தச் சோவியத்துகள், வேலை நிறுத்தத்தை மிகத் திறமையாகவும் கட்டுப்பாடாகவும் சுமார் எட்டு மாத காலம் நடத்தின. கடைசியில் ஜார் அரசாங்கம் தம்பித்துப் போய்விட்டது. அரசாங்க இலாகாக் கள் அவைகளுக்குரிய கடமைகளைச் செய்ய முடியாமல் நிலை குலைந்தன. போக்குவரத்து சாதனங்கள் இல்லை. வீதிகளிலே விளக்குகள் இல்லை. பத்திரிகைகள் வெளிவர முடியவில்லை. வைத் தியர்களுடைய தொழில் ஒன்று தவிர, மற்றெல்லாவகைத் தொழில் களும், நின்றுபோய்விட்டன. போலீஸார்கூட. சட்டத்தையும் அமைதியையும் பாதுகாக்கிற தொழிலைச் செய்ய முடியாதவர் களானார்கள்.

போதாக் குறைக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் ருஷ்ய -ஜப்பானிய யுத்தம். ருஷ்யாவுக்குத் தோல்வியாக முடிந்தது. ஜார் அரசாங்கத்தின் திறமை யின்மையும் நிருவாக ஊழலுமே இந்தத் தோல்விக்குக் காரணம் என்று ருஷ்ய மகாஜனங்களுக்கு நன்றாகப்பட்டு விட்டது. இதை அரசாங்கமும் உணர்ந்திருந்தது. எனவே, ஜனசக்திக்கு முன்னே தலை வணங்கியது. சட்டமியற்றும் உரிமையோடு கூடிய ஒரு ஜனப்பிரதிநிதி சபை அமைக்கப்படுமென்றும், இந்தச் சபை யினால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு மந்திரி சபை அரசாங்கத்தை நடத்து மென்றும், ஜனங்களுடைய ஓட்டுரிமை விசாலிக்கப்படு மென்றும் ஜார் அரசன் ஓர் அறிக்கை வெளி யிட்டான். இந்த அறிக்கையை அனுசரித்து ஒரு மந்திரி சபையும் அமைந்தது. மேற் போக்கான இந்த சீர்திருத்தம் அநேக சந்தர்ப்பவாதிகளின் ஆவேசத்தைத் தணித்துவிட்டது. இவர்கள், அரசாங்கத்தின் பக்தர்க ளானார்கள். இவர்களுடைய தூண்டுதலின் பேரில், மாதக்கணக் காகத் தொடர்ந்து நடைபெற்ற வேலை நிறுத்தம் முடிவடைந்தது. பழைய மாதிரி அரசாங்க இலாகாக்கள் வேலை செய்ய ஆரம் பித்தன.

ஆனால் இந்தச் சீர்திருத்தம், புரட்சி வாதிகளுக்குத் திருப்தியை அளிக்க வில்லை. இவர்கள் மேலும் தொடர்ந்து வேலை நிறுத்தத்தைத் நடத்துவதற்கு முனைந்தார்கள். இவர்களுடைய நோக்கம் அரசியல் முன்னேற்றம். அதாவது ஜார் அரசாங்கத்தினிடமிருந்து சர்வ அதிகாரங் களையும் பிடுங்கி ஜனங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்பது. ஆனால் நகரத் தொழிலாளர்களும் கிராம விவசாயிகளும் அரசியல் முன்னேற்றத்தை அவ்வளவு பிரதானமாகக் கருதவில்லை. அப்பொழு திருந்த திதியில், தொழிலாளர்களுக்குத் தேவையாயிருந்தது உயர்ந்த கூலி; விவசாயிகளுக்குத் தேவையா யிருந்தது உழுது பயிரிடப் போதுமான நிலம். இதனால் புரட்சி வாதிகளுக்கும், பெரும்பாலோரான தொழிலாளர்கள் - விவசாயிகள் இவர்களுக்கும் மத்தியில் ஒரு பிளவு ஏற்படத் தொடங்கியது. இதனை அரசாங்கத்தார் விரிவுபடுத்தினார்கள். பசி நோயால் பரிதவித்துக் கொண் டிருக்கும் பாமர ஜனங்களுக்கு, தாங்கள் ஏதோ அனுகூலங்கள் செய்யப்போவதாகச் சமிக்ஞை காட்டி அவர் களைப் புரட்சிவாதிகளுக்கு விரோதமாகத் தூண்டி னார்கள். இதனால் சில்லரைக் கலகங்களும் குழப்பங்களும் ஆங்காங்கே ஏற்பட்டன. நாட்டிலே அமைதியை நிலை நாட்ட வேண்டுமென்று சொல்லிக் கொண்டு அரசாங்கத்தார் அடக்குமுறையைக் கடுமை யாகப் பிரயோகித்தனர்; மேலே சொன்ன சோவியத்துகளைப் பல வந்தமாகக் கலைத்தனர்; ஓரிரண்டு மாதங்களுக்குள் புரட்சி இயக்கத்தை அடக்கி ஒடுக்கிவிட்டனர். ருஷ்யா முழுவதிலும் கணக் கெடுத்துப் பார்த்தபோது, சுமார் பதினாலாயிரம் பேர் இந்த அடக்கு முறைக்குப் பலியாகியிருந்தனர். சிறிய ஜப்பானிடத்தில் தோல்வி யடைந்ததற்குப் பிரதியாகத் தன் பிரஜை களிடத்தில் பெரிய பழி தீர்த்துக்கொண்டுவிட்டான் ஜார் அரசன்!

புரட்சியை அடக்கி ஒடுக்கியாகிவிட்டது. இனி ஜார் அரசன் தன் இஷ்டப்படி அரசியல் விவகாரங்களை நடத்திக் கொண்டு போகலாம். ஆனால் அவன் அப்படிச் செய்ய இஷ்டப்படவில்லை. தனது சுயேச்சாதி காரக் கோலத்தை ஜனநாயகப் போர்வையினால் மறைத்துக் கொண்டு அரசியல் மேடையில் நடிப்பதென்று தீர் மானித்தான். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று. சமு தாயத்தின் மேல் படியிலிருந்த நிலச்சு வான்தார்கள், பெரிய வியாபாரிகள், தொழில் முதலாளிகள் முதலியோரைத் தன் கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டுமென்பது. ஏனென்றால், தேசத்து மகாஜனங்கள் அடக்கமுறைகளினாலும் ,வறுமை, பஞ்சம், பிணி முதலியவைகளினாலும் அதிகக் கஷ்டப்பட்டுக் கொண் டிருந்தார் கள். இந்தக் கஷ்டத்தினால் அவர்களுக்கு அரசாங்கத்தின்மீது அதிகக் கோபம் ஏற்பட்டிருந்தது. அவர்கள் எந்தச் சமயத்திலும் அரசாங்கத்திற்கு விரோதமாகக் கிளம்பலாம். அப்பொழுது தனக்கு ஒரு சிலருடைய துணையாவது தேவையாயிருக்குமல்லவா? இதற் காகப் பணக்காரர்களைத் திருப்திப்படுத்தி வைத்திருக்க வேண்டு மென்று ஜார் மன்னன் கருதினான். மற்றொன்று, மேற்கு வல்லரசு களிடத்தில் நல்ல பெயரெடுத்துக் கொள்ள வேண்டு மென்பது. ஜார் ஆட்சி என்று சொன்னால், அடக்குமுறைக்கு அடையாளம் என்கிற மாதிரிதான் ஐரோப்பிய நாடுகளில் அபிப்பிராயம் இருந்தது. இந்த அபிப்பிராயத்தைப் போக்கி ஜனவிருப்பப்படியே தான் நடந்து கொள்வதாகக் காட்டிக் கொள்ள வேண்டுமென்று ஜார் அரசன் விரும்பினான். எனவே, மேலே சொன்ன அறிக்கைப்படி ஜனப் பிரதிநிதி சபையைக் கூட்டு மாறு உத்தரவு செய்தான். ஜனப்பிரதிநிதி சபைக்கு ருஷ்ய பாஷையில் டூமா1 என்று பெயர். இதைத்தான் ருஷ்யாவின் பார்லிமெண்ட் என்று சொல்வார்கள். டூமா என்றால் சிந்தனை செய்கிற இடம் என்று அர்த்தம்2

5. அரசாங்கங்கத்தின் கண் துடைப்பு
டூமாவுக்குச் சம்பிரதாயமான தேர்தல்கள் நடைபெற்றன. சமுதாயத்தின் மத்திய வகுப்பைச் சேர்ந்தவர்கள் அபேட்சகர்களாக நின்று வெற்றி பெற்றார்கள். இவர்களிற் பெரும்பாலோர் மிதவாத மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களைக் கொண்ட டூமா முதன் முறையாக 1906-ஆம் வருஷம் மே மாதம் கூடியது. விவசாயி களின் வறுமைப் பிணியைப் போக்கி அவர்களுடைய கோபத்தை தணிக்க வேண்டுமென்பதற்காக அங்கத்தினர்கள் சிலர், சீர் திருத்தப் பிரேரணைகளைக் கொண்டு வந்தார்கள். ஆனால் இவை ஜார் மன்னனுக்குப் பிடிக்கவில்லை. டூமாவைக் கலைத்துவிட்டான். சுமார் இரண்டரை மாதத்தோடு முதல் டூமாவின் வாழ்வு முடிந்தது.

1907 - ஆம் வருஷ ஆரம்பத்தில் இரண்டாவது டூமாவுக்குத் தேர்தல்கள் நடைபெற்றன. புரட்சி வாதிகளும் அவர்களை ஆதரிக் கிற மற்றத் தீவிரவாதிகளும் தேர்தலில் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக, போலீஸார் என்னென்ன உபத்திரவங்களைச் செய்யவேண்டுமோ அவைகளை யெல்லாம் செய்தனர். தீவிரப் போக்குடைய அபேட்சகர் களைச் சிறையிலே பிடித்துத் தள்ளிவிடுவ தென்கிற சுலபமான முறையை அனுஷ்டித்தனர். இதனால் சாமான்யத் திறமையுடைய வர்களும், கொஞ்சம் பயந்த சுபாவ முடையவர்களும் தேர்தலில் வெற்றி பெற்றுப் பிரதிநிதிகளாக வந்தனர். ஆனால் இவர்களுடைய போக்குக்கூட ஜார் மன்னனுக்குப் பிடிக்க வில்லை. அரசாங்கத்திற்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்த குற்றத்தை இவர்கள் மீது சுமத்தி, டூமாவைக் கலைத்து விட்டான். கடைசியில் விசாரித்துப் பார்க்கிறபோது, அரசாங்கத்தின் ரகசியப் போலீஸாரே ஒரு சதியாலோசனைக் குற்றத்தைச் சிருஷ்டித்து அதனை அங்கத்தினர்மீது சுமத்தினர் என்று வெளியாயிற்று. இந்த இரண்டாவது டூமாவின் வாழ்வும் மூன்று மாதத்தோடு முடிந்தது.

பார்த்தான் ஜார். வயது வந்த எல்லோருக்கும் ஓட்டுக்கொடுக் கும் உரிமை அளித்திருப்பதால்தான், தீவிர வாதிகள் பிரிதிநிதி களாக வர முடிகிறதென்று கருதி ஓட்டுரிமையைக் குறைத்தான். சொந்தப் பண்ணைக்காரர்கள் முதலிய சமுதாயத்தின் மேல் அந்த திலுள்ளவர்கள் மட்டுமே ஓட்டுக் கொடுக்கலாம் என்று சட்டத்தைத் திருத்தியமைத்தான். இதனோடு தீவிரப்போக்குடைய பலரையும் சிறைக்கூடத்திற்கு அனுப்பினான். சுயமாகச் சிந்தனை செய்வ தென்பது அரசாங்கத்திற்கு விரோதமென்று கருதப்பட்டது. கொள் ளைக்கூட்டத்தினர் ஆங்காங்கு அக்கிரமச் செயல்கள் புரிந்து வந்தனர். தேசம் சோர்ந்து கிடந்தது. இந்தமாதிரியான நிலைமையில் மூன்றாவது டூமாவுக்குத் தேர்தல்கள் ந்டைபெற்றன. அரசாங்கத்தை ஆதரிக்கும் மனப்பான்மையுள்ள பணக்காரர்களும், விவசாயம், தொழில் முதலியவைகளைப் பற்றின அந்ததுடையவர்களுமே பிரிதிநிதிகளாகத் தெரிந்தெடுக்கப்பட்டனர். இவர்களைக் கொண்ட இந்த மூன்றாவது டூமா 1907-ஆம் வருஷத்தி லிருந்து 1912-ஆம் வருஷம்வரை, அதாவது சட்ட ரீதியாக அதற்கேற்பட்ட ஐந்து வருஷ ஆயுட்காலம் வரை, கௌரவமான முறையில் ஜார் அரசனின் தலை யீடினின்றித் தன் விவகாரங்களை நடத்தி வந்தது. சிலர் பயந்திருந்த படி இந்த மூன்றாவது டூமா அவ்வளவு பிற்போக்குடையதாயில்லை. இதன் அங்கத்தினர்கள், தங்களாலான வரையில் ஜனங்களுக்கு நன்மையைச் செய்ய வேண்டுமென்ற எண்ணமுடையவர்களா யிருந்தார்கள். ஆரம்பக் கல்வி எல்லோருக்கும் இலவசமாகப் போதிக்க ஏற்பாடு செய்தனர். ஜனங்களின் மத உரிமையும் கலாசார உரிமையும் கௌரவிக்கப்படுமாறு ஏற்பாடுகள் செய்தனர். எழுத் துரிமை, பேச்சுரிமை முதலியவை சம்பந்தமாக இருந்த நிர்பந்தங்கள் தளர்த்தி விடப்பட்டன. அரசாங்கத்தின் பொக்கிஷ நிலைமை சீர்திருந்தி வந்தது. இதனால் அந்நிய நாட்டு முதலாளிகள் முன்னைவிடத் தாராளமாக முதல் கொண்டு போட்டார்கள். புதிய தொழில்கள் தொடங்கப்பட்டன. இந்த ஐந்து வருஷ காலத்தில் ருஷ் யாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் சுமுகமான தொடர்பு ஏற்பட்டது.

ருஷ்யா - ஜப்பான் யுத்தம் வரையில், ருஷ்யாவைப்பற்றி, பிரிட்டனுக்கு ஒருவித பயம் இருந்தது. மேற்படி யுத்தத்தில் ருஷ்யா தோல்வியுற்ற பிறகு அந்தப் பயம் போய்விட்டது. அதற்குப் பதில், ஜெர்மனியைப் பற்றிய பயம் பிரிட்டனுக்குப் பிடித்துக் கொண்டது. இதற்குத் தகுந்தாற்போல் ஜெர்மனியும் இருபதாவது நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து இரண்டாவது வில்லியம் கெய்ஸ1ருடைய தலைமையின் கீழ்தனது ஆயுத பலத்தை அதிகரித்து வந்தது; ஐரோப்பாவின் மற்றச் சிற்றரசுகளையும் பேரரசுகளையும் திரணமாக மதித்து நடத்தி வந்தது. இதை மனத்தில் வைத்துக்கொண்டு, ஆம், ஜெர்மனிக்கு விரோதமாக, பிரான், பிரிட்டன், ருஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து ஒரு சிநேக ஒப்பந்தம் செய்து கொண்டன.2 இதைப் பார்த்து ஜெர்மனி, ஆதிரியா, இத்தலி ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து ஒரு சிநேக ஒப்பந்தம் செய்து கொண்டன.3 இந்த இரு சார்பினரும் ஒருவருக்கொருவர் விரோதமாக யுத்த மு தீப்புகள் செய்து வந்தனர். வெகு சீக்கிரத்தில் மகாயுத்தம் ஒன்று ஏற்படப் போகிறதென்று விஷய மறிந்தவர்கள் சொல்லிக்கொண்டு வந்தார்கள்.

1912-ஆம் வருஷம் நான்காவது டூமாவுக்குத் தேர்தல் நடை பெற்றது. ஏறக்குறைய பழைய பிரதிநிதிகளே தெரிந்தெடுக்கப் பட்டார்கள். இந்த நான்கவாது டூமா, தனது பூரா ஆயுட்காலமும் 1917-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் புரட்சி ஏற்படுகிற வரையில் இயங்கிக்கொண்டிருந்தது. ஆனால் இதன் ஆரம்ப காலத்திலிருந்தே ஜார் ஆட்சியின் அதிவாரம் ஆட்டங் கொடுக்கத் தொடங்கியது.

6. ராபுட்டீன்
இரண்டாவது நிக்கோலா ஒருவித அசட்டை மனப்பான்மை யுடையவன்; அறிவுப் பிரகாசமில்லாதவன்; அறிஞர்களுடைய புத்தி மதிகளைச் சரியானபடி பாராட்டத் தெரியாதவன். அரச லட்சண மான ஆண்மைத் தனத்தைத் தனது மனைவியினிடத்தில் ஒப்புவித்து விட்டு, தான் ஒரு கோலைமட்டும் கையில் பிடித்துக்கொண்டி ருந்தான். அதனைச் செங்கோலாக இவன் கருதிவந்தானென்றாலும், செங்கோ லோச்சும் காருண்ய அரசனாக நடித்துவந்தா னென்றாலும், இவனுடைய பிரஜைகள் கொடுங்கோலாட்சியின் கீழ் தான் வாழ்ந்து வந்தார்கள். இவன், தன் மனைவியினிடத்தில் அதிகமாகக் காதல் கொண்டிருந்தான். அதற்காக அவளிடத்தில் தன் இருதயத்தோடு அறிவையும் ஒப்புக்கொடுத்து விட்டான். இதனால் தனக்கும், முந்நூறு வருஷமாகத் தொடர்ந்துவந்த ரோமனாவ் வமிசத்திற்கும் அழிவு தேடிக்கொண்டான். ஆனால் இவனுக்கு இது தெரியவில்லை. ஓர் அறிஞன் எழுதுகிறான்:

ஜார் அரசனும் அரசியும் அநேக முட்டாள்களாலும் அயோக்கியர்களாலும் சூழப்பட்டிருந்தார்கள். இவர்களுக்குச் சரியானபடி விஷயங்களை எடுத்துச் சொல்லக்கூடிய தைரியம் ஒருவருக்கும் இல்லை. கிரகோரி ராபுட்டீன்1 என்ற ஒரு பரம அயோக்கியன் இவர்களுக்கு நெருங்கிய சிநேகி தனாக ஏற்பட்டான். இந்த ராபுட்டீன் (ராபுட்டீன் என்ற வார்த்தைக்கு அழுக்குப் படிந்த நாய் என்று அர்த்தம்) ஓர் ஏழைக் குடியானவன். சிறு வயதில் விவசாயிகளின் குதிரை களைத் திருடுவதில் வல்லவன். இதனால் அநேகம் தொந்தரவு கள் இவனுக்கு ஏற்பட்டன. எனவே பணம் சம்பாதிப் பதற்குச் சந்நியாசிக்கோலம் பூண்டான். இந்தியாவைப்போல் ருஷ்யா விலும் பணம் சம்பாதிப்பதற்கு இது சுலபமான வழி. இவன் தன் மயிரை நீளமாக வளர்த்துக் கொண்டான். மயிர் நீள நீள இவன் புகழும் நீண்டு கொண்டே போய், கடைசியில் ஜார் மன்னனின் சந்நிதானத்தை அடைந்தது. அப்பொழுது ஜார் மன்னன் குமாரனுக்கு உடம்பு அசௌக்கியமாயிருந்தது. இதனை ராபுட்டீன் குணப்படுத்தி விட்டான் . இது முதற் கொண்டு ஜார் தம்பதிகளிடம் இவனுடைய செல்வாக்கு வளர்ந்து வந்தது. இவனுடைய விருப்பப்படியே அரசாங்க உயர்தர உத்தியோகதர்கள் நியமிக்கப்பட்டு வந்தார்கள். இவன் சிற்றின்பத்திலே ஈடுபட்டும், அநேக பேரிடத்தில் லஞ்சம் வாங்கியும் மிகக் கேவலமான வாழ்க்கையை நடத்தி வந்தான். இருந்தாலும் இவன் அநேக வருஷகாலம் ஜார் தம்பதிகளின் செல்வாக்கிலேயே இருந்தான்.

ராபுட்டீனை அரச தம்பதிகள் இவ்வளவு கௌரவமாக நடத்துவதும், அவன் சொற்படி அரச காரியங்களைச் செய்வதும் பொது ஜனங்களுக்குச் சிறிதுகூடப் பிடிக்கவில்லை. தவிர, இந்தக் காலத்தில் போலீ உளவாளி களின் உபத்திரவம் ஜனங்களிடத்தில் அதிகமா யிற்று. இதற்கு எதிர்ப்பாகப் புரட்சிவாதிகளும் சுறுசுறுப்பாக வேலை செய்தனர். போல்ஷ்வெக்கரின் கட்சி நாளுக்குநாள் எண் ணிக்கையிலும் செல்வாக்கிலும் பெருகிவந்தது. இந்தக் கட்சியினர் ஆங்காங்கு தாபித்திருந்த காரியசபைகளில் போலீ உளவாளி கள் அங்கத்தினராகச் சேர்ந்துகொண்டு, அந்தச் சபைகளின் அந்தரங்க வேலைகளையெல்லாம் தெரிந்து கொண்டனர். இதன் விளைவாக, உண்மைத் தொண்டர் பலர் தூக்கு மேடையில் ஏறினர். இந்த மாதிரி நடைபெற்ற துரோகச் செயல்கள், ஜனங்களின் ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டன. எங்குப் பார்த்தாலும் புரட்சிப் பேச்சாகவே இருந்தது. கூடிய சீக்கிரத்தில் புரட்சி உண்டாகுமென்று அனைவரும் எதிர்பார்த்தார்கள்.

7. ருஷ்யா யுத்தத்தில் இறங்குகிறது
இப்படி யிருக்கையில் 1914-ஆம் வருஷம் ஆகட் மாதம் ஐரோப்பிய மகா யுத்தம் மூண்டது. ஆதிரிய இளவரசனான ஆர்ச் - ட்யூக் பெர்டினாந்து,1 செர்வியா2வில் கொலை செய்யப்பட்டதுதான் இதற்குக் காரணம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். செர்வியாவுக்குப் பரிந்துகொண்டு ருஷ்யாவும், ஆதிரியாவுக்குப் பரிந்து கொண்டு ஜெர்மனியும் முறையே படை திரட்டின. பிரான்சும் பிரிட்டனும் ருஷ்யாவின் பக்கம் சேர்ந்து கொண்டன. இந்த யுத்தத்திற்கு ஜெர்மனியைப்போல் ருஷ்யா அவ்வளவு தயாரா யிருந்த தென்று சொல்ல முடியாது. எப்படியோ ஐரோப்பா விலுள்ள எல்லா முக்கிய நாடுகளும், விருப்பத்தினாலோ அல்லது நிர்பந்தத் தினாலோ இந்தக் கோரமான தீக்குழியில் இறங்கின.

ருஷ்ய மகாஜனங்களுடைய கவனம் இந்த யுத்தத்திலே சென்றது. வெளிச் சக்தி ஏதேனுமொன்று ஒரு மனிதனைத் தாக்குகிறபோது அவனுக்குள்ளேயிருக்கும் வியாதிகள் அனைத்தும் மாயமாய் மறைந்து போவதை நாம் பார்த்திருக்கிறோம். அதைப்போல் ருஷ்யா, தன் முகத்தைப் போர் முகத்துக்குத் திருப்பிக்கொண்டதும், உள்ளே குமுறிக் கொண்டிருந்த போல்ஷ்வெக் இயக்கம் தானாக ஒடுங்கிவிட்டது. போல்ஷ்வெக்கர்களில் ஒரு சிலர், யுத்தம் கூடா தென்றும், இது முதலாளிகளின் யுத்தமென்றும், இந்த யுத்தத்தில் கலந்துகொள்வதனால் ஏழைத்தொழிலாளர்களுக்கோ விவசாயி களுக்கோ எவ்வித நன்மையும் உண்டாகாதென்றும் கூறினார்கள். ஆனால் இவர்களுடைய நல்வார்த்தை களைக் காது கொடுத்துக் கேட்பவர் யாருமில்லை. ஜனங்கள், இவர்கள் மீது அருவருப்புக் காட்டவும் தொடங்கினார்கள்.

ருஷ்ய அரசாங்கம் யுத்தத்தில் இறங்குகிறபோது, தன்னுடைய சக்தியைச் சரியாக நிதானித்துக் கொள்ளவில்லை. ருஷ்யாவுக்கு விசாலமான நிலப்பரப்பு இருந்ததைப்போல், அதிக எண்ணிக்கை யுள்ள துருப்புகளும் இருந்தன வென்பது வாதவம். ஆனால் இந்தத் துருப்பு களுக்கு எவ்வளவு உற்சாகம் இருந்ததோ அவ்வளவு பயிற்சி இல்லை. போதிய ஆயுத பலமும் இவைகளுக்கு இல்லை. ராணுவ நிருவாகமோ மகா ஊழலாயிருந்தது; கேட்க வேண்டுமா உயிர்ச் சேதத்திற்கு? யுத்தந் தொடங்கின முதல் பத்து மாதத்தில் சுமார் முப்பது இலட்சம்பேர் போர் முனையில் இறந்து போனார்கள். திறமையான ராணுவ உத்தியோகதர்கள் பலர் உயிரிழந்தார்கள். போர்க்களத்தில் பிணங்கள் மலைமலையாகக் குவிந்து கிடந்தன வென்றும், இந்தப் பிணமலைகளை அப்புறப்படுத்திக் கொண்டு தான், தாங்கள், எதிரில் வரும் எதிரியின் புதுப்படைகளைக் குறி பார்த்துத் தாக்க வேண்டியிருந்ததென்றும் ஜெர்மன் சேனைத் தலைவர்கள் எழுதிவைத்துப் போயிருக்கிறார்கள். இவ்வளவு சேதங்கள் ஏற்பட்டாலும், யுத்தத்தின் ஆரம்ப காலத்தில் ருஷ்ய ஜனங்கள் மிகவும் உற்சாகம் காட்டி வந்தார்கள். போர்முகத்தில் போர்புரியும் வீரர்களுக்குப் பலவித உதவிகள் செய்து வந்தார்கள். காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை செய்வதற்காக அரசாங்கத்தார் செய்திருந்த ஏற்பாடுகள் போதுமானவையாயில்லை. சரியான சிகிச்சை இல்லாமல் ஆயிரக்கணக்கான பேர் பிராணனை விட்டார்கள். இதனால் ஜனங்களே ஆங்காங்குத் தொண்டர் படைகளைத் திரட்டிப் போர்களத்திற்கு அனுப்பினார்கள். இந்தத் தொண்டர் படையினர் சுமார் ஒரு மாதகாலத்திற்குள் பத்து இலட்சம் பேருக்குச் சிகிச்சை செய்திருக்கிறார்களென்று சொன்னால், இதற்கு முன்னர் சரியான சிகிச்சை இல்லாமல் எத்தனைபேர் செத்துப் போயிருக்க வேண்டு மென்பதை நாம் ஊகித்துக் கொள்ளலா மல்லவா? ஆனால் துரதி ருஷ்டவசமாக, இந்தச் சிகிச்சைத் தொண்டர்படை செய்த அருமையான சேவையைப் பற்றிச் சில துர்மந்திரிகள் ஜார் மன்னனி டத்தில் தாறுமாறாகச் சொல்லிவந்தனர். இந்தச் சிகிச்சைப் படை யினர் அத்தனை பேரும் புரட்சிக்காரர்களென்றும், இவர்கள் ராணுவத் திற்குள் புரட்சியை உண்டு பண்ணி அதன் மூலமாக அரசாங்கத்தைக் கவிழ்த்துவிடப் பார்க்கிறார்களென்றும் ஜாரின் காதைக் கடித்தார்கள். மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தானே? ஏற்கனவே ஜார் மன்னனும் அவனுடைய நெருங்கிய சகபாடிகளும் எங்கும் புரட்சியைக் கண்டு வந்தார்கள். இப்பொழுது யுத்த பீதியினால் மூளை வேறே குழம்பி யிருந்தது. கேட்க வேண்டுமா? சுயேச்சாதிகார சக்திக்குத் தன்னையே தான் அழித்துக் கொள்கிற சக்தி உண்டென்று சொல்வார்கள். தன்னுடைய கனவைத் தானே நனவாக்கிக் கொள்ளும் சக்தியும் அதற்குண்டென்பதை இரண்டாவது நிக்கோலா மன்னன் நிரூபித்து விட்டான். சிகிச்சைப் படைக்கு யார் தலைவனா யிருந்தானோ அவனே - ஜார்ஜ் ல்வோவ் என்பவனே1 - ஜார் ஆட்சி யின் வீழ்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட புரட்சி அரசாங்கத்தில் பிரதம மந்திரியானான்!

1915-ஆம் வருஷம் ஆகட் மாதம் கடைசி வாரத்தில் டான் னென்பெர்க்1 என்ற இடத்தில் ருஷ்யர்களுக்கும் ஜெர்மானியர் களுக்கும் ஒரு கடுமையான யுத்தம் நடந்தது. இதில் ருஷ்யர்கள் படுதோல்வி யடைந்தார்கள். இதிலிருந்து ருஷ்யர்களுக்குத் தோல்வி மேல் தோல்வியே ஏற்பட்டுக் கொண்டு வந்தது. இதனால் ஜார் மன்னன் கவலை கொண்டான். தன் பழைய மந்திரிகளை நீக்கி விட்டுப் புதிய திறமையான மந்திரிகளை நியமித்து அவர்கள் மூலம் யுத்தத்தை வெற்றிகரமான முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று ஆசைப்பட்டான். ஆனால் அவன் மனைவியும் ராபுட்டீன் என்ற மகா பாபியும் சேர்ந்து அவனுக்குத் துர்ப்போதனைகள் செய்தார்கள்; மந்திரிகள், தங்களுடைய கைப்பொம்மைகளாக இருக்கவேண்டு மென்று கங்கணம் கட்டிக் கொண்டு அதன் பிரகாரமே காரியங் களை நடத்தி வந்தார்கள்; அதனால் தேசத்திற்கு விரோதிகளாகி விட்டார்கள்.

8. முதல் புரட்சி
ராபுட்டீனுடைய நடவடிக்கைகள், அவன் விஷயத்தில் ஜார் கொண்டிருந்த அபார நம்பிக்கை ஆகிய இவைகளைக் கண்டு அரச குடும்பததைச் சேர்ந்த பலரும் வெறுப்படைந் தார்கள். இந்த வெறுப்பு, சதியாலோசனையாக மாறியது. 1916-ஆம் வருஷக்கடைசி யில் ராபுட்டின், அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனாலேயே சுட்டுக் கொல்லப்பட்டான். ஜனங்கள் விடுதலை மூச்சு விட்டனர். ஆனால் இந்தக் கொலை, போலீ அதிகாரிகளின் அக்கிரமத்தை அதிக மாக்கியது. அடக்குமுறை வலுத்தது. இதனால் ஜனங்கள் கோபங் கொண்டார்கள். போதாக்குறைக்கு உணவுப் பஞ்சம் வேறே. எல்லாம் தனக்கென்று சொல்லி, ஜனங்களுடைய தேவைப் பொருள் களை யெல்லாம் ராணுவம் விழுங்கிக்கொண்டு வந்தது. அப்படி விழுங்கினாலும் அந்த ராணுவம் திறமையாகப் போர்புரிந்து வெற்றிக் கொடி நாட்டிக்கொண்டு வருகிறதா? இல்லவே இல்லை. தங்களுடைய ராணுவத்தின் மீது ருஷ்ய மகாஜனங்கள் எவ்வளவுக் கெவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்களோ அவ்வளவுக் கவ்வளவு ஏமாந்து போனார்கள். இந்த ஏமாற்றம், அவர்களுடைய பசிப் பிணியை இன்னும் அதிகமாகத் தூண்டியது. ஜார் மன்னனின் மீது வெறுப்பு வேறே. போலீ உபத்திரவமோ சொல்லி முடியவில்லை. என்ன செய்வார்கள்? புரட்சிக்குக் கிளம்பு வதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது? புரட்சிக்குப் பிறகு என்ன செய்வதென்பது அப்புறம் யோசிக்க வேண்டிய விஷயம். இப்பொழுது உடனே இருக்கப் பட்டதை அழிக்க வேண்டும். அவ்வளவு தான். இந்த மாதிரியான மன நிலை மைக்கு 1917-ஆம் வருஷத் தொடக்கத்தில் ருஷ்ய மகாஜனங்கள் வந்து விட்டார்கள்.

இந்த லட்சணத்தில் ஜார் மன்னன் போர் முகத்திற்குச் சென்று பிரதம சேனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டான். தன்னால், ஏதோ சாதித்துவிட முடியும் என்ற மூட நம்பிக்கைதான் இதற்குக் காரணம். இவனுடைய இந்தச் செய்கை, ராணுவத்திலிருந்த உயர்தர உத்தி யோகதர்களுக்கு அதிருப்தியையும் ஆத்திரத்தையும் உண்டு பண்ணிவிட்டது. யுத்த நடவடிக்கைகளில் அசிரத்தை காட்டத் தொடங்கிவிட்டார்கள். இந்த அசிரத்தை சாதாரணத் துருப்பு களிடத்திலும் பரவியது.

இப்படி முக்கிய நகரங்களிலும் போர் முனையிலும் பரவி யிருந்த அதிருப்தி ஏதேனும் ஒரு வழியில் வெளியாக வேண்டுமல்லவா? ருஷ்யப் பெண்மணிகள்தான் முதன் முதலில் அதிருப்தியை வெளிக் கொணரும் இந்தக் கைங்கரியத்தைச் செய்தார்கள். இது மகா ஆச்சரியமான விஷயம். ருஷ்யப் புரட்சியின் சிருஷ்டி கர்த்தர்கள் பெண்மக்களாயிருந்திருக் கிறார்களென்று நினைக்கிறபோது, நமக்கு மயிர்க்கூச் செறிகிறது. உலகத்திலே ஆண் அழிக்கிறான்; பெண் சிருஷ்டிக்கிறாள். உடலுக்குள் ஒட்டிக்கொண்டிருக்கும் உயிர்முதல் எல்லையில்லா அழகு வரையில், எல்லாம் அவளுடைய சிருஷ்தான்.

1917-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் எட்டாந்தேதி காலை பீட்ரோகிராட்1 நகரத்திலுள்ள நெசவுத் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த திரி தொழிலாளர்கள், தங்கள் தொழிற் சாலைகளிலிருந்து வெளியேறி வீதிகள் தோறும் ஊர்வலம் வந்தார்கள். தங்களுக்குச் சரியான உணவு கிடைக்க வில்லையென்பது இவர்கள் கூக்குரல். இவர்களோடு மற்ற ஆண் தொழிலாளர்களும் சேர்ந்து கொண்டார்கள். புரட்சி ஆரம்பம்! இந்த வேலை நிறுத்தம் எல்லா முக்கிய நகரங்களிலும் உடனே பரவி விட்டது. எங்கணும் குழப்பம்! எங்கணும் சுயேச்சாதிகாரம் வீழ்க என்ற முழக்கம்.! ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருந்த அரசாங்கம் இந்த வேலை நிறுத்தங் களைக் கண்டு கலங்கிவிட்டது; வேலை நிறுத்தக்காரர்களை அடக்கி ஒடுக்கும்படி துருப்புகளை ஏவியது. ஆனால் துருப்பினர் வேலை நிறுத்தகாரார்களோடு சேர்ந்து கொண்டுவிட்டார்கள்! கேட்க வேண்டுமா ஜனங்களுக்கு உண்டான உற்சாகத்தை? அரசாங் கத்தின் உத்தரவுக்கிணங்கி, போலீஸார் மட்டும் சில இடங்களில் ஜனங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ஜனங்கள் ஆத்திரங் கொண்டு அவர்களைக் கல்லாலும் கழியாலும் தாக்கினார்கள். ஒழுங் கீனங்கள் அதிகமாயின. மார்ச்சு மாதம் எட்டாந் தேதியிலிருந்து பன்னிரண்டாந்தேதி வரையில் ஐந்து நாட்களும் எங்கும் ஒரே கலவரமாயிருந்தது. அரசாங்கம் என்பது எங்கே இருக்கிறது, என்ன செய்து கொண்டிருக்கிளறது என்ற விவரங்கள் ஒன்றும் தெரிய வில்லை.

சரி, ஜார் அரசன் எங்கே? அவன் போர்முனைக் கருகில் எங்கேயோ ஒரு கிராமத்தில் தங்கியிருந்தான். தான் தலைமை வகித்துப் போரை நடத்திக்கொண்டிருப்பதாக அவனுக்குள் எண்ணம். தலைநகரமாகிய பீட்ரோகிராட்டில் தொழிலாளர்களும் படைவீரர்களும் சேர்ந்து குழப்பம் விளைவித்துக் கொண்டிருக் கிறார்களென்றும், அவர்களோடு மற்ற ஜனங்களும் சேர்ந்து கொண்டிருக்கிறார்களென்றும் அவனுக்குச் செய்திகள் எட்டின. ராணுவச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வரும் படியும், கலகக் காரர்களைச் சுட்டு வீழ்த்துமாறும் உத்தரவிட்டான். உத்தரவு செய்து விட்டான் சுலபமாக. ஆனால் அதை நிறைவேற்றுவது யார்? பீட்ரோகிராட் நகர சேனைத் தலைவன், தான் எடுத்துக் கொண்ட ராஜவிசுவாசப் பிரமாணத்திற்குப் பங்கம் உண்டாக்கக் கூடாதென்ப தற்காக, மேற்படி ராணுவச் சட்ட உத்தரவைப் பிரகடனம் செய்தான். ஆனால், அது ஜனங்களுக்குத் தெரியும்படியாகத் தமுக்கடிப்பதோ, சுவர்களில் விளம்பரங்கள் ஒட்டுவதோ முதலிய ஒன்றையும் செய்ய முடியவில்லை. ஏனென்றால் செய்வோர் யாருமில்லை. அரசாங்கம் அப்படித் துண்டு துணுக்குகளாகச் சிதறிப் போய்விட்டது. ஜாருக்கு இது விஷயம் எட்டிற்று. தானே நேரில் தலைநகரத்திற்கு வந்து ஒழுங்கை நிலைநாட்டத் தீர்மானித்தான். ரெயிலேறி வந்து கொண்டி ருக்கையில், ரெயில்வே தொழிலாளர்கள், இவனது வண்டி, மேற்கொண்டு செல்லாதபடி தடுத்துவிட்டார்கள். பீட்ரோகி ராட்டின் அருகிலிருந்த ஜார் அரசிக்கு இந்தத் தகவல் தெரிந்தது. அலறினாள். தன் கணவனுக்கு என்ன கதி நேர்ந்ததோ என்று கவலை கொண்டாள். உடனே ஜாருக்கு ஒரு தந்தி கொடுத்தாள். விலாச தாரரின் இருப்பிடம் தெரியவில்லை என்ற ஒரு பென்சில் குறிப் புடன், தந்திக் காரியாலயத்திலிருந்து தந்தி திரும்பி வந்துவிட்டது! நிலைமை மோசமாகி விட்டது விமோசனம் என்ன?

அவசரம் அவசரமாக டூமா கூடியது. சுயேச்சாதிகாரம் இதனோடு ஒழிய வேண்டுமென்றும் அதற்கு அத்தாட்சியாக ஜார் அரசன் முடிதுறக்க வேண்டுமென்றும் தீர்மானங்கள் நிறைவேறின. போர் முனையிலிருந்த ராணுவத் தலைவர்களும், ஜார் மன்னன் முடி துறப்பதுதான் நல்லதென்று அபிப்பிராயம் தெரிவித்தார்கள். என்ன செய்வான் நிக்கோலா? தனக்குப் பின்னால் தன்னுடைய சகோ தரனான மைக்கேலை1 அரசனாக நியமித்து விட்டு, தான் முடிதுறந்து விட்டான். இது நடை பெற்றது 1917-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் பதினைந்தாந்தேதி. மைக்கேல், அரசனாக நியமிக்கப் பட்டாலும் அரச பீடத்தில் அமரவில்லை; அதற்கான சூழ்நிலையும் ஏற்பட வில்லை. நிக்கோலா மன்னனோடு ரோமனாவ் அரச வமிசம் முற்றுப் பெற்று விட்டது.

9. நிக்கோலா முடிவு
முடிதுறந்த பிறகு இவனுடைய கதி என்னவாயிற்று? அதையும் இங்கே சொல்லி முடித்துவிடுவோம்.

முடிதுறந்த பிறகு - 1917-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் மூன்றாம் வாரம் - நிக்கோலாஸும் அவன் குடும்பத்தினரும் கைது செய்யப் பட்டு ஜார்கோஸெலோ என்ற இடத்தில் வைக்கப்பட்டனர். இவர் களுக்குப் பிரிட்டிஷ் அரசாங்கம் அடைக்கலம் கொடுக்கு மென்றும், ஆதலால் இவர்கள் இங்கிலாந்து செல்லக்கூடுமென்றும் முதலிற் சொல்லப்பட்டன. ஆனால் பின்னர் பிரிட்டிஷ் அரசாங்கம், சொன்னபடி நடக்கவில்லை; இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்துவிட்டது.

பின்னர் ஜார் குடும்பத்தினர் 1917-ஆம் வருஷம் ஜூலை மாதம் ஸைபீரியாவிலுள்ள டோபோல்ஸக்1 என்ற இடத்தில் கொண்டு போய் வைக்கப்பட்டனர். இங்கு சுமார் ஒன்பது மாதகாலம் கழித்தனர். பிறகு 1918ஆம் வருஷம் மார்ச்சு மாதம் முதலில், எக்காடெரின்பர்க்2 என்ற ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு ஜூலை மாதம் பதினாறந் தேதி நள்ளிரவில், இவர்கள் தங்கியிருந்த வீட்டிலுள்ள ஓர் அறையில் ஒன்றாக நிறுத்தி வைக்கப்பட்டு, சுட்டு வீழ்த்தப்பட்டனர். நிக்கோலா, அவன் மனைவி, மகன், நான்கு புதல்வி கள், அரச குடும்பத்தின் வைத்தியன், சமையல்காரன், பணிப்பெண், வேலைக்காரன் ஆக மொத்தம் பதினோரு பேர் ஒரே சமயத்தில் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாயினர். இவர்களுடைய உடல்கள் துண்டுதுண்டாக நறுக்கப்பட்டு, சாம்பிராணி தைலத்திலும் கந்தகத் திராவகத்திலும், தோய்த்து நெருப்பிலிட்டு எரித்துவிட்டனர். எரிந்து போனவற்றை மண்ணோடு மண்ணாகக் கலந்து, பூமிக்குள் புதைத்து விட்டனர். கொடுங் கோல் மன்னர்கள் பல பலவித மாகக் கொலையுண்டதை உலக சரித்திரத்தில் பார்க்கிறோம். அவர் களுடைய எலும்புகளோ, சாம்பலோ, அவர்களை ஆதரித்துவந்த ஒரு சிலருடைய பார்வைக்கு ஒரு சிறிது காலமாவது தென்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் நிக்கோலா அரச குடும்பத்தினருக்கு நேர்ந்த கதி வேறு யாருக்கும் நேரிடவில்லை யென்றுதான் சொல்ல வேண்டும்.


VII. மகா புருஷன் லெனின்

1. தற்காலிக அரசாங்கம்
நிக்கோலா மன்னன் 1917-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் பதினைந்தாந் தேதி முடிதுறந்து விட்டானல்லவா, அதற்குச் சுமார் ஒரு மாதங்கழித்து, ருஷ்யாவின் வருங்காலத் தலைவனான லெனின், பீட்ரோகிராட் நகரம் வந்து சேர்ந்தான். இவன் நல்ல சந்தர்ப்பத்தில் வந்து சேர்ந்தானென்று சொல்ல வேண்டும். அந்தச் சந்தர்ப்பத்தில் இவன் வாராதிருந்தால், ருஷ்யாவின் சரித்திரப்போக்கு வேறெவ்வித மாகத் திரும்பி யிருக்குமோ, யார் அறிவார்?

நிக்கோலா மன்னன் முடிதுறக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்ட காலத்திலிருந்தே, ருஷ்யாவின் பல பகுதிகளிலும் சோவியத்துகள் விரிவடையத் தொடங்கின; செல்வாக்கும் பெற்று வந்தன. இவற்றில் தொழிலாளர் பிரதிநிதி களோடு போர்வீரர்களின் பிரதிநிதிகளும் அங்கத்தினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். இந்தச் சோவியத்துக் களில் தலை சிறந்து நின்றது பீட்ரோகிராட் சோவியத். இதற்கு காரணம் இதன் தாபகனான ட்ரோட்கி1 ஆதியிலிருந்தே இதனை ஒழுங்குப்படுத்தி வைத்துச் சென்றதுதான். புரட்சியின்போது இவன் அமெரிக்காவிலே அஞ்ஞாதவாசம் செய்துகொண்டிருந்தானாயினும், இவன் ஏற்படுத்தி விட்டுப்போன ஒழுங்கு, குலையாமலிருந்ததால், இந்த பீட்ரோகிராட் சோவியத் துக்கு எப்பொழுதுமே ஒரு செல்வாக்கு இருந்து வந்தது. இந்த பீட்ரோகிராட் சோவியத், டூமா எந்தக் கட்டடத்தில் கூடி வந்ததோ அதே கட்டடத்தின் ஒரு பாகத்தைப் புரட்சியின் ஆரம்பத்தில் கைப்பற்றி அதில் தன் காரியாலயத்தை தாபித்துக்கொண்டது.

சரி: புரட்சி வெற்றிகரமாக முடிந்துவிட்டது. ஜார் அரசனும் முடிதுறந்து விட்டான். இனி அரசாங்கம் நடக்க வேண்டுமே? நடத்துவது யார்? தாங்களே இதைச் செய்யலாம், செய்ய முடியும் என்று சோவியத் அங்கத்தினர்களுக்குப் படவேயில்லை. இஃது ஓர் ஆச்சரியமான விஷயம். டூமா தான் அரசாங்கத்தை நடத்த வேண்டு மென்று இவர்கள் முடிவு செய்து கொண்டார்கள். அப்படியே இவர் களுடைய விருப்பத்தைத் தெரிவிப்பதற்காகப் பிரதிநிதிக் கூட்ட மொன்று, டூமா அங்கத்தினர்கள் கூடியிருந்த இடத்திற்குச் சென்றது. ஒரு கூட்டம், அதிலும் தொழிலாளர் படைவீரர் இவர்களடங்கிய ஒரு கூட்டம், தங்களை நோக்கி வருவதைப் பார்த்து டூமா அங்கத் தினர்கள் மிகவும் பயந்து விட்டார்கள். தங்களைக் கைது செய்வதற் காகவே .இந்தக் கூட்டம் வருகிறதென்று கருதி விட்டார்கள்! அரசாங்க நிருவாகத்தை ஏற்று நடத்துமாறு மேற்படி சோவியத்துப் பிரதிநிதிக் கூட்டத்தினர், டூமா அங்கத்தினர்களைக் கேட்டுக் கொண்டார்கள். டூமா அங்கத்தினர்களுக்கு இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள மனமில்லை; ஆனால் மறுக்கவும் தைரியமில்லை. வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார்கள். ஒரு சிறிய கமிட்டி நியமிக்கப் பட்டு அதனிடம் அரசாங்க நிருவாகம் ஒப்படைக்கப் பட்டது. இந்தக் கமிட்டிக்குத் தான் தற்காலிக அரசாங்கம்1 என்று பெயர். அரசியல் அகராதியிலே அர்த்தமில்லாத ஒரு பெயர் இது.

ஒரே கட்டடத்தின் ஒரு பாகத்தில் தற்காலிக அரசாங்கம்; வேறொரு பாகத்தில், இந்தத் தற்காலிக அரசாங்கத்தை ஏற்படுத்தின சோவியத். இரண்டுக்கும் அடிக்கடி மனதாபங்கள் ஏற்பட்டன. சோவியத், நிருவாகப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டு, தற்காலிக அரசாங்கத்தின் செயல்களில் அடிக்கடி தலையிட்டு வந்தது. இதற்கு முக்கிய காரணமென்ன வென்றால், தற்காலிக அர சாங்கத்தின் அங்கத்தினர் அனைவரும் மிதவாதிகள்; சோவியத்தைச் சேர்ந்தவர் அத்தனைபேரும் தீவிரவாதிகள். முரண்பாடுகள் ஏற்படாமலிருக்குமா? ஒரே காலத்தில் இரட்டை அரசாங்கங்கள் ஆட்சி செலுத்துவது போலிருந்தது. தற்காலிக அரசாங்கம் ஓர் உத்தரவு பிறப்பிக்கும்; சோவியத் அதை மறுத்து வேறோர் உத்தரவு விடும். இந்த நிலையில் ஒழுங்கு என்பது ராஜ்யத்தில் லவலேசமும் இல்லாமற் போய்விட்டது. சிறப்பாக போர்முனையில் ஒழுங் கீனங்கள் அதிகமாகத் தலைகாட்டத் தொடங்கின.

2. லெனின் வருகை
இந்த சந்தர்ப்பத்தில்தான் லெனின் வந்து சேர்ந்தான். இவன் அது காறும் விட்ஜர்லாந்தில் அஞ்ஞாதவாசம் செய்து கொண்டி ருந்தான். ருஷ்யாவில் புரட்சி ஏற்பட்டிருக்கிறதென்று தெரிந்ததும், தன்னுடைய தாய் நாட்டுக்கு, செயலாற்ற வேண்டிய தலத்திற்கு விரைந்து வர ஆவல் கொண்டான். அப்படியானால், இவன் யார், இவன் வரலாறு என்ன, இவன் ஏன் அஞ்ஞாத வாசம் செய்ய வேண்டி யவனானான் என்பவைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள, வாச கர்களே, உங்களுக்கு ஆவலா யிருக்கிறதல்லவா? கேளுங்கள்.

லெனின் என்பது புனைப்பெயர். இயற்பெயர் வ்ளாடிமீர் இலிச் உலியனாவ்1 என்பது. ஆனால் புனை பெயரே இயற்பெயர் மாதிரியாகி விட்டது. லெனின் என்று சொன்னால்தான் எல்லோருக் கும் தெரிகிறது. ஆகையால் நாமும் லெனின் என்றே அழைத்துக் கொண்டு போவோம்.

3. பிறந்ததும் படித்ததும்
வால்கா நதிக் கரையோரமாகவுள்ளது சிம்பிர்க்2 என்ற ஊர். இதில் 1870 - ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் இருபத்திரண்டாந் தேதி லெனின் பிறந்தான். இவன் தாயார் : மேரியா அலெக்ஸாந்த் ரோவ்னா3; தந்தை : இல்யா உலியனாவ்.4 இவர்களுடைய குடும்பம் மத்தியதரக் குடும்ப மென்றே சொல்ல வேண்டும். இவர்களுக்கு ஆறு குழந்தைகள். முன்று ஆண்; மூன்று பெண். லெனின் இரண்டாவது மகன். மூத்த மகன் அலெக்ஸாந்தர். மூன்றாவது அலெக்ஸாந்தர் மன்னனைக் கொலை செய்ய முயன்றதாகக் கைது செய்யப்பட்டு தூக்குமேடையில் ஏற்றுவிக்கப் பட்ட இளைஞர் ஐவரில் ஒருவன்.5 இவனை வீட்டில் சாஷா6 என்று செல்லப் பெயரிட்டழைத்தனர். லெனினின் செல்லப்பெயர் வோலோத்யா.

லெனின் தந்தை, சிம்பிர்க் மாகாணத்திலுள்ள ஆரம்பப் பள்ளிக் கூடங்களைத் தணிக்கை செய்யும் மேலதிகாரியாயிருந் தான். நிரம்பக் கண்டிப்பான பெயர்வழி; குழந்தைகளையும் கண்டிப்பான தோரணை யிலேயே வளர்த்து வந்தான்.

லெனின், படிக்க வேண்டிய பருவத்தை யடைந்ததும், சிம்பிர் கிலுள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் கொண்டு போய்ச் சேர்க்கப் பட்டான். இந்தப் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியப் பதவியிலிருந்தவன், பிற்காலத்தில் ஜார் ஆட்சி வீழ்ச்சியுற்ற பிறகு ஏற்பட்ட தற்காலிக அரசாங்கத்திற்குத் தலைமை தாங்கி நின்ற அலெக்ஸாந்தர் கெரன்கியின்1 தகப்பனான பியாடோர் கெரென்கி2 என்பவன். லெனின் தலைமையிலே போல்ஷ்வெக் அரசாங்கம் அமைந்ததும், தற்காலிக அரசாங்கம் கரைந்து போய்விட்டதென்பதையும், அந்தச்சமயத்தில் அலெக்ஸாந்தர் கெரென்கி தப்பியோடி விட்டா னென்பதையும் பின்னாடி நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

பியாடோர் கெரென்கி, சிம்பிர்க் பள்ளிக்கூடத்தின் தலை மையாசிரியனாக இருந்ததோடு, லெனின் குடும்பத்தின் கண்காணிப் பாளனாகவும், அதாவது, கார்டியனாகவும் இருந்தான். பிற்காலத்தில், தன் மகனுடைய அரசியல் வாழ்க்கையின் முற்றுப்புள்ளியிலிருந்து தன் மகனுடைய அரசியல் ஆதிக்கம் ஆரம்பமாகுமென்று அப் பொழுது இந்த பியாடோர் கெரென்கிக்கு எப்படித் தெரியும்?

வ்ளாடிமீர் - லெனின் - பள்ளிக்கூடத்திலேயாகட்டும், வெளி யிலேயாகட்டும், ஆசிரியர்களுக்கோ, மற்ற பள்ளிக்கூட அதிகாரி களுக்கோ அதிருப்தி யுண்டாகும்படி ஒரு சமயம்கூட நடந்து கொண்ட தில்லை என்று பியாடோர் கெரென்கி ஓரிடத்தில் குறிப்பிட்டி ருக்கிறான்.

லெனினுக்குப் பதினாறு வயது. தகப்பன் இறந்து போய் விட்டான். அடுத்த வருஷம் இவன் தமையன் அலெக்ஸாந்தர் தூக்குமேடையில் ஏறிவிட்டான். குடும்பம் தத்தளித்தது. தன் சகோதரனிடத்தில் லெனி னிக்குப் பரம பக்தி. அவனைத் தன் வழிகாட்டியாகக் கொண்டிருந் தான். அவனுடைய முடிவு, இவனுடைய எதிர்கால வாழ்க்கையை ஒருவாறு உருவாக்கிக் கொடுத்ததென்று சொல்லவேண்டும்.

லெனின், சிம்பிர்க் பள்ளிக்கூடத்தில் படித்து முடிந்து பரீட்சையில் தேறினான். தலைசிறந்த மாணாக்கன் என்பதற்காகத் தங்கப் பதக்கமும் பெற்றான். மேற்கொண்டு என்ன? காஜான் சர்வகலாசாலை1யில் சேர்ந்து சட்டப் படிப்பு படிக்க வேண்டும். இதுதான் இவனுடைய நோக்கம்; தாயாரின் விருப்பம். ஆனால் சர்வ கலாசாலை அதிகாரிகள் இவனைச் சேர்த்துக்கொள்ள மறுத்து விட்டார்கள். புரட்சிவாதிகளில் ஒருவனான அலெக்ஸாந்தரின் சகோதரனல்லவா இவன்? இவனைச் சேர்த்துக் கொண்டால் சர்வ கலாசாலைக்கு ஆபத்து ஏற்படக்கூடுமென்று அஞ்சினார்கள். கடைசி யில் பியாடோர் கெரென்கி செய்த பெரு முயற்சியின் பேரில், இவன் மேற்படி சர்வகலாசாலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டான்.

அப்பொழுது அரசாங்கத்தின் அடக்குமுறை, எங்கணும் பரவி யிருந்தது; கல்வி நிலையங்களைக் கூட விடவில்லை. அரசியலில் முற்போக்கான கருத்துக்களை லேசாக வெளியிட்டால் போதும். ஆசிரியன்மார்களோ, மாணாக்கர்களோ உடனே கல்வி நிலையங் களிலிருந்து விலக்கப்பட்டார்கள்; சில சமயங்களில் தேசப் பிரஷ்ட மும் செய்யப்பட்டார்கள். இதனால் அநேக கல்வி நிலையங்களில் மாணாக்கர்கள் வெகுண்டெழுந்தார்கள். காஜான் சர்வகலா சாலையிலும் கிளர்ச்சி எழுந்தது. இதில் உற்சாகத்தோடு கலந்து கொண்டான் லெனின். விளைவு என்ன? கிளர்ச்சி தொடங்கிய அன்றிரவே இவனும் இவனோடு சேர்ந்த சுமார் நாற்பது பேரும் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்கள்.

சிறைச்சாலைக்குச் செல்லும் வழியில், இவனை அழைத்துச் சென்ற போலீகாரன், இவனைப்பார்த்து இளைஞனே, ஏன் இப்படி யெல்லாம் தொந்தரவு கொடுக்கிறாய்? ஒரு பெருஞ் சுவரையல்லவோ நீ இடிக்கப் பார்க்கிறாய்? என்ற சொன்னான். இதற்கு லெனின் சுவரா? சிதிலப்பட்டுக் கிடக்கும் சுவரல்லவா அது? ஒரு தள்ளு தள்ளினால் அது விழுந்துவிடுமே? என்று அலட்சிய மாகப் பதில் கூறினான். அப்பொழுது இவனுக்குப் பதினேழு வயதுதான் நடந்து கொண்டிருந்தது. அந்த இளம் பிராயத்திலேயே, இவன் ஜார் ஆட்சியைப் பற்றி என்ன மதிப்புப் போட்டு வைத்திருந் தான் என்பது இதிலிருந்து ஒருவாறு புலனாகிறது.

கைதியானதும் இவனுடைய சர்வகலாசாலை வாழ்வு முற்றுப் பெற்றுவிட்டது அதிகாரிகள் இவனை காஜான் மாகாணத் திலேயே, போக்குவரத்து வசதியில்லாத ஒரு சிற்றூரில் கொண்டு போய், போலீ கண்காணிப்பின்கீழ் வைத்து விட்டார்கள். அங்கு சுமார் ஒரு வருஷ காலம் கழித்தான். பின்னர், காஜான் சர்வகலா சாலையில் திரும்பச் சேர்ந்து படிக்க விரும்பி அதிகாரிகளுக்கு விண்ணப்பம் செய்து கொண்டான். முடியாதென்று சொல்லி விட்டார்கள். வெளி நாடுகளுக்குச்சென்று வர அனுமதி கோரினான். மறுக்கப்பட்டது. கடைசியில், இவன், வேண்டுக்கோளுக்கிணங்க, காஜான் நகரில், குடும்பத்தோடு சேர்ந்து வசிக்கலாமென்று சொன்னார்கள் அதிகாரிகள். அப்படியே காஜானுக்கு வந்து சேர்ந்தான்.

4. உள்ளம் கவர்ந்த மார்க்
வந்து என்ன செய்தான்? சும்மா இருக்க இவனால் முடியாது. காலத்தை வீணாக்குகிற சுபாவம் இவனுக்குக் கிடையாது. தந்தையும் தமையனும் வைத்துப் போயிருந்த சில நூல்களைப் படிக்கத் தொடங்கினான். சுயேச்சாதிகாரத்தின் துரதிருஷ்டமோ, ஜனநாயகத் தின் அதிருஷ்டமோ, இவன் கைக்கு, கார்ல் மார்க் எழுதிய காப்பிடல்1 என்ற நூல் அகப்பட்டது. .இதை உற்சாகத்தோடு படித்தான். இதிலுள்ள கருத்துக்கள் இவன் உள்ளத்தை அசைத்துக் கொடுத்தன. இதன் விளைவாக, புதியதொரு சமுதாயம், இவன் அகக்கண்முன் தோன்றியது. அந்தச் சமுதாயத்தின் நிர்மாண கர்த்தனாக, அப்பொழு திருந்தே தன்னைத் தகுதிபடுத்திக் கொண்டு வரத் தொடங்கினான்.

புதிய சமுதாயத்தை நிர்மாணம் செய்ய வேண்டுமானால், பழைய சமுதாய அமைப்பை அகற்ற வேண்டும். அஃது எப்படிச் சாத்தியம்? ருஷ்யாவின் அப்போதைய அரசியல், சமுதாய, பொரளா தாரத்துறைகளில் காணப் பெற்ற ஏற்றத் தாழ்வுகளையும், மற்றக் குறைபாடுகளையும் மக்கள் உணரும்படி செய்ய வேண்டும். அப்படி உணர்த்துவதற்குத் திட்டம் வகுத்து நிதானமாக வேலை செய்து கொண்டு போக வேண்டும். எந்த ஒன்றையும் திட்டமிட்டு நிதான மாக வேலை செய்து கொண்டு போனாலன்றி, இறுதியில் வெற்றி காண முடியாது. இந்த மாதிரியான வகையில், இவனுடைய சிந்தனைப் போக்கு அந்த வாலிபப் பருவத்திலேயே சென்று கொண்டிருந்தது. மூன்றாவது அலெக்ஸாந்தரைக் கொலை செய்ய யத்தனித்தாக சாஷா கைது செய்யப்பட்டிருக்கிறானென்ற செய்தியைக் கேட்டதும், இவன், நின்று நிதானமாக, அந்த வழி, அதாவது அண்ணன் சென்ற வழி - சரியல்ல; அந்த வழியில் நாம் செல்லக் கூடாது என்று சொன்ன ஒரு வாசகத்திலிருந்து, இவனுடைய அப்பொழுதைய சிந்தனைப் போக்கை நாம் ஒருவாறு அறிந்து கொள்ளலாம். இது நிற்க.

காஜானில், புரட்சி மனப்பான்மையுடைய இளைஞர் பலர், தனித்தனி கோஷ்டியினராக இருந்து கொண்டு, அரசாங்கத்திற்கு விரோதமான எண்ணங்களை மக்களிடையே பரப்பி வந்தனர். இவர்கள் ரகசியமாகவே வேலை செய்தனர். இவர்களுள் ஒற்றுமை யில்லை; ஒரு முகப்பட்ட வேலைத் திட்டத்தையும் இவர்களால் அமைத்துக் கொள்ள முடிய வில்லை. ஆனால் அடிக்கடி சந்தித்து, மார்க்ஸின் நூல்களைப் படித்து, அவைகளைப் பற்றி வாதஞ் செய்து வந்தனர். லெனின், இவர்களோடு பழக்கம் ஏற்படுத்திக் கொண்டான். இவர்களுடைய விவாதங்களில் கலந்து கொண்டு, மார்க்ஸின் கருத்துக் களுக்குத் தனக்குத் தெரிந்த வரையில் விளக்கங் கொடுத்து வந்தான்.

ஆனால் அப்பொழுது ருஷ்யாவில் மார்க்ஸின் கொள்கைகள் அவ்வளவாகப் பரவவில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே, சிறப்பாக உயர் படிப்பு நிமித்தம் மேனாடுகளுக்குச் சென்று திரும்பி வந்த இளைஞர் களுக்கு மட்டுமே மார்க்ஸைப் பற்றி ஓரளவு தெரிந் திருந்தது. நாரோத்னிக்குகள் என்று அழைக்கப் பட்டுவந்தவர்கள் தான் அப்பொழுது ஓரளவு செல்வாக்குப் பெற்றிருந்தார்கள். ஆனால் இவர்களால் உருப்படியான காரியம் எதுவும் சாதிக்க முடியா தென்று லெனின் கருதினான். என்றாலும் இவர்களுடைய பழக்கத்தை இவன் அடியோடு துறந்து விடவில்லை. இவர்களோடு பழகப் பழக, மார்க்ஸீயம் ஒன்றுதான் மக்களுக்கு உய்யும் வழி காட்டக்கூடியது என்ற உறுதி இவனுக்கு ஏற்பட்டது. இவர்களுக்கு மார்க்ஸீயத்தைப் புகட்டுவது தன் கடமை யென்று கொண்டான்.

இந்த நிலையில், காஜானிலுள்ள புரட்சி கோஷ்டியினர் மீது அரசாங்க ஒற்றர்களின் கண் விழுந்தது. லெனின் பழகி வந்த கோஷ்டி யினர் பலர் கைது செய்யப்பட்டனர். ஆனால் லெனின் மட்டும் தப்பித்துக் கொண்டு விட்டான். காரணம், இவன் அப்பொழுது காஜானில் இல்லை. சுமார் இரண்டு மாதங்களுக்கு முந்தியே ஸமாரா1 என்ற ஊருக்குத் தன் தாயார் முதலியோருடன் சென்று விட்டான்.

ஸமாராவில் இவனைப் போலீ கண்காணிப்பு தொடர்ந்தே வந்தது. ஆயினும் இவன் அதைப் பொருட்படுத்தாமல், அங்குள்ள புரட்சிவாதி களுடன் தொடர்பு கொண்டான். மார்க் - எங்கெல் ஸின் கம்யூனிட் அறிக்கையை2 ருஷ்ய மொழியில் மொழி பெயர்த்து. அவர்களுக்குப் படித்துக் காட்டி, அதற்கு விளக்கவுரை யும் தந்து வந்தான். தவிர, ருஷ்யாவின் சரித்திரம், அங்குப் புரட்சி எண்ணங்கள் ஏன், எப்படி உதயமாயின, சமுதாய வாழ்க்கை அமைப்பு, இவைகளையெல்லாம் பற்றி ஆராய்ச்சி செய்து வந்தான். இதற்காக அநேக நூல்களைப் படித்தான்.

ஆனால் வெறும் நூலறிவு பெறுவதோடு இவன் திருப்தி யடைய வில்லை; அனுபவ அறிவையும் பெறவிழைந்தான். இதற்காக ஸமாரா விற்கு அருகிலுள்ள சிறிய சிறிய கிராமங்களுக்கு அவ்வப் பொழுது சென்று அங்கு வசிக்கும் குடியானவர்களைக் கண்டு பேசினான். அவர்களுடைய அன்றாட வாழ்க்கை எப்படி நடை பெறுகிறதென்பதை., அவர்களோடு கூடவே வசித்துத் தெரிந்து கொண்டான். இதே பிரகாரம், சிறுசிறு நகரங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் எப்படி இருக்கிறதென்பதை நேரிற் சென்று அறிந்து வந்தான். இவைகளை யெல்லாம் பற்றிக் குறிப்புகள் எடுத்து வந்து, அவற்றை ஆதாரமாகக் கொண்டு கட்டுரைகள் பல எழுதினான். சுருக்கமாக, ஸமாரா வாழ்க்கை, இவனை, வருங்காலத் தலைவனாக உருவாக்கிக் கொடுத்த தென்று சொல்லலாம்.

5 . வக்கீலாக வாழ்ந்த கதை
இஃதொரு புறமிருக்க, லெனின், அரைகுறையாக விட்டுப் போயிருந்த தன் சட்டப் படிப்பை முடித்து, அதில் தேர்ச்சி பெற முயற்சி எடுத்துக் கொண்டான். ஆனால் அதிகாரிகள், எந்த ஒரு கலாசாலையிலும் சேர்ந்து படிக்க இவனுக்கு அனுமதி தர முடியா தென்று சொல்லி விட்டார்கள். ஆயினும் இவன் விடா முயற்சி செய்து வந்தான். சட்ட புத்தகங்களையும் விடாமற் படித்து வந்தான். கடைசியில், 1891-ஆம் வருஷம் இவனுடைய இருபத்தோராவது வயதில் பீட்ரோகிராட் சர்வகலா சாலை சார்பில் நடைபெறும் சட்டப் பரீட்சைக்கு வெளி மாணாக்கனாக இருந்து எழுத, அதாவது கலாசாலையில் கிரமமாகச் சேர்ந்து படித்து பரீட்சை எழுதித் தகுதி பெறாத மாணாக்கனாக இருந்து எழுத அனுமதி பெற்றான். இவனோடு சேர்ந்து மொத்தம் முப்பத்து மூன்று மாணக்கர்கள் பரீட்சை எழுதினார்கள். இவர்களில் லெனினே முதல்வனாகத் தேறினான்.

இதற்குப் பிறகு லெனின், ஸமாராவிற்குச் சென்று சுமார் இருபது மாத காலம் வக்கீல் தொழில் நடத்தினான். முதல் பன்னிரண்டு மாத காலத்தில் இவனிடம் பன்னிரண்டு வழக்குகள் வந்தன. பெரும் பாலும் குற்றஞ்சாட்டப் பட்டவர்கள் சார்பாகவே இவன் ஆஜராக வேண்டி வந்தது. குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் யார்? பெரும் பாலோர் ஏழை விவசாயிகள்; 1891-ஆம் வருஷம் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தின் காரணமாக, பசிக் கொடுமையினால் உந்தப்பட்டு சிறுசிறு திருட்டுக் குற்றஞ் செய்தவர்கள். இவன் ஆஜரான பன்னிரண்டு வழக்குகளில் இரண்டு வழக்குகளில்தான் இவனுக்கு வெற்றி கிடைத்தது. இந்த இரண்டு வழக்குகளில் சம்பந்தப் பட்டிருந்தவர்கள், பதின் மூன்று வயதே அடைந்த இரண்டு இளைஞர்கள். இவர்கள் விடுதலை பெற்றார்கள். தையல் தொழில் செய்து கொண்டிருந்த ஒருவனுக்காக இவன் ஆஜரானான். கடவுளையும் ஜார் சக்ரவர்த்தியையும் தூஷித்த தாக அவன்மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அவன் செய்தது குற்ற மல்ல என்று இவன் - லெனின் - எவ்வளவோ வாதாடிப் பார்த்தான். பயனில்லை. அவனுக்கு ஒரு வருஷம் சிறைவாசத் தண்டனை கிடைத்தது.

ஸமாராவில் இருபது மாத வாசத்திற்குப் பிறகு லெனின் 1893 - ஆம் வருஷம் ஆகட் மாதம் 31ஆம் தேதி பீட்ரோகிராட் நகரம் வந்து அங்கே வக்கீல் தொழில் தொடங்கினான். பெயரவுக்குத்தான் வக்கீல் தொழில். உண்மையில் இவனுடைய நாட்டமெல்லாம் அரசியல் துறையையே நாடியது. அதில் இன்னும் அதிகமாக ஈடுபட வேண்டுமென்பதே, இவன் பீட்ரோகிராட் வந்ததின் உண்மையான நோக்கம்.

அப்பொழுது ருஷ்யாவின் முக்கியமான நகரங்களில் தொழிற் சாலைகள் பல ஏற்பட்டு, அதன் விளைவாகத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வந்தது.

லெனின், பீட்ரோகிராட் நகரம் வந்து சேர்ந்ததும், முதல் வேலையாகத் தொழிலாளர்களோடு தொடர்பு கொண்டான். அவர்களைக் கூட்டங் கூட்டமாகச் சந்தித்துப் பேசினான். போதிய கல்விப் பயிற்சி யில்லாத அவர்களிடையே வெறும் வறட்டுத் தத்துவங் களை அழகான பாஷையில் அடுக்கிக் காட்டாமல், இவன், அவர் களுடைய அறிவுப் பக்குவத்திற் கேற்றாற் போல் அவர்கள் புரிந்து கொள்ளும் பாஷையில், அவர்களைப் பலவிதமாகப் பிணித்துக் கொண்டிருக்கும் பல்வேறு சக்திகளின் தன்மையையும், அவர் களுடைய நிகழ்கால நிலைமையையும் நிதானமாக எடுத்துக் காட்டினான். தொழிலாளர் களிடையில் இவனுக்கு அபரிமிதமான செல்வாக்கு ஏற்பட்டது.

தொழிலாளர்களைக் கண்டு பேசுவது முதலிய இந்த வேலை களையெல்லாம் இவன் பெரும்பாலும் ரகசியமாகவே செய்ய வேண்டி யிருந்தது. அரசாங்க ஒற்றர்களின் சந்தேகப் பார்வைக்குட் பட்டிருக்கிற வனல்லவா?

ஜார் அரசாங்கத்தினால் புரட்சிவாதிகளென்று கருதப் பட்ட பலர் நாடு கடத்தப்பெற்று, ஐரோப்பாவின் பல பாகங்களில் வசித்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் மார்க்ஸின் கொள்கை களைப்பற்றி ஆங்காங்குச் சர்ச்சை செய்து கொண்டிருந்தார்கள். இவர்களனைவரையும் ஒருங்கு கூட்டி, ருஷ்யாவில் தொழிலாளர் இயக்கத்திற்கு ஆக்கந் தருமாறு செய்யவேண்டுமென்று லெனின் கருதினான். இதற்காக விட்ஜர்லாந்தில் கூட்டப்பெற்ற ஒரு மகாநாட்டுக்குச் சென்றான். சென்று, பலரையும் கண்டு பேசினான். தனக்கும் அங்குள்ளவர்களுக்கும் கருத்து வேற்றுமைகள் இருப்பதை உணர்ந்தான். இதனால் ருஷ்யாவுக்குத் திரும்பிய பிறகு, தன்னுடைய அரசியல் போக்கை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டு மென்பதை ஒரு வாறு தெரிந்துகொண்டான்.

விட்ஜர்லாந்திலிருந்து, பாரி,பெர்லின் முதலிய முக்கிய மான நகரங்களுக்குச் சென்று ஆங்காங்குள்ள தொழிலாளர் நிலைமையை நுணுக்கமாக விசாரித்துத் தெரிந்துகொண்டு, சுமார் நான்கு மாதத்திற்குப் பிறகு 1895-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் முதல் வாரம் ருஷ்யாவுக்குத் திரும்பி வந்தான்.

வந்ததும், தொழிலாளி வர்க்கத்தின் விமோசனத்திற்காகப் போராடும் சங்கம்1 என்ற பெயரால் ஒரு சங்கத்தை தாபித்தான். தொழிற்சாலை களுள்ள பல .இடங்களிலும் இதே மாதிரி சங்கங்கள் அமைக்கப்பட்டன. தொழிலாளர் நலனை முன்னிட்டு ரகசியமாக ஒரு பத்திரிகையும் வெளியிடுவதென்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதை வெளிக் கொணர முடியவில்லை.

இந்த நிலையில் லெனின், மேற்படி போராட்டச்சங்கத்தின் ஆதரவில், நெசவுத் தொழிலாளர்களின் குறைகளைச் சுட்டிக் காட்டி, அவர்களுடைய கோரிக்கைகளையும் தெரிவித்து மகஜர் ரீதியில் ஒரு துண்டுப் பிரசுரத்தை வெளி யிட்டான்.

6. சிறையிலும் ஸைபீரியாவிலும்
இந்த பிரசுரம் வெளியான மறுநாளே, தார்ண்ட்டன் மில்1 என்ற ஒரு நெசவு மில்லின் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இந்த வேலை நிறுத்தத்தை லெனினே தலைமை பூண்டு நடத்தினான். அரசாங்கம் சும்மாயிருக்குமா? உடனே இவனைக் கைது செய்தது; பதினான்கு மாதம் சிறையில் கிடத்தியது. சிறையில் இருந்த காலத்தில் கூட இவன் சும்மா இருக்கவில்லை. மேற்படி போராட்டச் சங்க அங்கத்தினர்களுடன் ரகசியமாகத் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தான். சங்க வேலைகள் எப்பொழுதும்போல் தீவிரமாக நடக்க வேண்டுமென்று உற்சாகப்படுத்தி வந்தான். துண்டுப் பிரசுரங்கள் முதலியன எழுதியனுப்பி விநியோகிக்கச் செய்தான்.

இப்படிச் சிறையில் இருந்த காலத்தில்தான், இவன், தன்னு டைய வருங்கால வாழ்க்கைத் துணைவியான க்ரூப்கயாவை2ச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றான். இவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியையா யிருந்தாள்; லெனின் பீட்ரோகிராட்க்கு வருமுன்ன மேயே புரட்சி இயக்கத்தில் சம்பந்தபட் டிருந்தாள். லெனின் வந்த பிறகு அவனுடைய பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் பெரிதும் ஈடுபட்டு அவனைத் தன் தலைவனாக வரித்துக்கொண்டு விட்டாள். அவன் சிறையிலிருந்த காலத்தில், தேகப் பயிற்சி நிமித்தமாகவோ வேறு காரணத்திற்காகவோ வெளியில் கொண்டு வரப்பட்டால் அப்பொழுது ஜன்னல் வழியாகத் தன்னைப் பார்க்கக் கூடுமென்று சிறைச்சாலைக்கு வெளியே மணிக் கணக்காகக் காத்துக் கிடப்பாள். இந்த முறையிலேயே லெனின் இவளைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றான்.

பதினான்கு மாதச் சிறை வாசத்திற்குப் பிறகு, இவனை விசா ரணைக்குக் கொண்டு வந்தார்கள் அதிகாரிகள். சம்பிரதாயமான விசாரணையும் நடைபெற்றது. மூன்று வருஷ காலம், ஸைபீரியா வின் கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு குக்கிராமத்தில் சென்று வசிக்கு மாறு தண்டனை விதிக்கப்பட்டான். இந்தக் கிராமம், போக்கு வரத்து வசதியற்றது. இங்கிருந்து தப்பிச் செல்வதென்பது அசாத்தியம். கடுமை யான குளிர்ப் பிரதேசம். 1897-ஆம் வருஷம் மே மாதம் முதல் பகுதியில் மேற்படி சிற்றூருக்கு வந்து சேர்ந்தான். அதே சமயத்தில் க்ரூப்கயாவும் அங்கு வந்து சேர்ந்தாள். புரட்சி இயக்கத்தில் சம்பந்தப்பட்டிருந்ததாக இவள் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டிருந்தாள். லெனினுடன் வசிக்க அனுமதி பெற்று இந்தச் சிற்றூருக்கு வந்து சேர்ந்தாள். லெனினிடத்தில் இவளுக்கிருந்த பக்தியை என்னென்று சொல்வது? இருவருக்கும் இந்தக் கிராமத்தி லேயே திருமணமும் நடைபெற்றது.

மேற்படி குக்கிராமத்தில் லெனினுக்குப் பொழுது நிறைய வேலையிருந்தது. இவனைப் போல் ஸைபீரியாவுக்கு அனுப்பப் பட்டிருந்த புரட்சிவாதிகளுடன் ரகசியத் தொடர்பு கொண்டு, அவர் களை உற்சாகப்படுத்தி வந்தான். ருஷ்யாவின் முதலாளித்து வத்தின் வளர்ச்சி என்ற ஒரு நூலை எழுதி முடித்தான். ஏழை விவசாயி களுக்கு இலவசமாக ஆலோசனை சொல்லும் வக்கீலாயிருந்தான். தவிர, தான் இல்லாத காலத்தில் ருஷ்யாவின் பல பகுதிகளிலுமுள்ள போராட்டச் சங்கங்கள் எப்படி வேலை செய்து வருகின்றன, தொழிலாளர்களின் நிலைமை எப்படி இருக்கிறது என்பவைகளை யெல்லாம் கேள்வி வாயிலாக அறிந்து வந்தான்; அவற்றின் வேலைத் திட்டங்களை உருவாக்கிக்கொடுத்தான். இவன் சகாக்களும், இவன் விட்டுப்போன வேலையை உற்சாகத்துடன் தொடர்ந்து நடத்தி வந்தனர். ஆனால் இவர்களுக்குள் ஒருமைப்பாடு இல்லை. அனை வரும் ஒரு முகப்பட்டு வேலை செய்ய வேண்டுமென்ற நோக்கத் துடன் ருஷ்யாவின் மேற்கெல்லையிலுள்ள மின்க்1 என்ற ஊரில் 1898-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் ஒரு மகாநாடு கூட்டப்பெற்றது. இந்த மகாநாட்டில் ருஷ்ய அபேதவாத ஜனநாயகத் தொழிற்கட்சி2 என்ற ஒரு கட்சி உருவாகியது. இந்தக் கட்சிதான் லெனினின் பிற்கால அரசியல் வேலைகளுக்கு அடித்தளமாயமைந்த தென்று சொல்ல வேண்டும்.

ஸைபீரியாவில் மூன்று வருஷ வாசத்தை முடித்து விட்டு லெனின், 1900-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் பீட்ரோகிராட் நகரம் வந்து சேர்ந்தான். வந்ததும், அதிகாரிகள், பீட்ரோகிராட், மாக்கோ போன்ற தொழிற்சாலைகள் நிறைந்த நகரங்களில் இவன் வசிக்கக் கூடாதென்று தடை யுத்தரவு விதித்தார்கள். எனவே, பீட்ரோகிராட் நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கத்தொடங்கினான். அங்கு சுமார் ஐந்து மாத காலந்தான் இவன் வசித்தான். அதற்குள் தொழிலாளர் நலத்தை நாடுகின்ற ஒரு பத்திரிகையை வெளியிட வேண்டிய அவசியத்தை உணர்ந்தான். ஏற்கனவே ஒரு பத்திரிக்கையை வெளியிடத் திட்டமிட்டு1 அது நிறை வேறாமற் போய்விட்ட தல்லவா, அதைத் திரும்பவும் தொடங்க ஆவல் கொண்டான். ஆனால் அப்படிப்பட்டதொரு பத்திரிகையை ருஷ்யாவில் பகிரங்க மாக வெளியிட அதிகாரிகள் அனுமதி அளிக்கமாட்டார்களென்று இவனுடைய அனுபவம் கூறியது.

7. வெளிநாடுகளில் வாசம்
எனவே விட்ஜர்லாந்துக்குச் சென்று அங்குள்ள நண்பர் களின் ஆதரவைப் பெற்று, பத்திரிகையை வெளியிட்டு வருவதென்றும், பத்திரிகை இதழ்களை ரகசியமாக ருஷ்யாவுக்கு அனுப்பி நண்பர்கள் மூலம் விநியோகிக்கச் செய்வதென்றும் தீர்மானித்தான். இதற்காக வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு 1900 - ஆம் வருஷம் ஜூலை மாதம் விட்ஜர்லாந்துக்குச் சென்றான்.

ஆனால் விட்ஜர்லாந்தில் இவன் உத்தேசித்தபடி பத்திரிகையை வெளிக்கொணர முடியவில்லை. இவன் யாராருடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்த்துச் சென்றானோ, அவர்களுக்கும் இவனுக்கும் கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டுவிட்டன.

இதனால் ஜெர்மனியிலுள்ள ம்யூனிக்2 நகரம் சென்று பத்திரி கையை வெளியிடத் துணிந்தான். பத்திரிகை, லைப்ஸிக்3 என்ற நகரத்தில் அச்சாகி வெளிவர வேண்டியதென்றும், லெனின் உள்பட ஆசிரியக்குழுவினர் வேறு வேறு புனைபெயர்களுடன் ம்யூனிக் நகரத்திலிருந்துகொண்டு விஷய தானம் செய்து வருவதென்றும் தீர்மானிக்கப்பட்டன. எல்லாம் ரகசியமாகத் தான். ஏனென்றால் இவனையும் இவன் சகாக்களையும் கண்காணிக்கும் விஷயத்தில் ருஷ்ய அரசாங்க ஒற்றர்களும், ஜெர்மன் அரசாங்க ஒற்றர்களும் உற்சாகத்தோடு ஒத்துழைத்தார்கள்.

கடைசியில் 1900-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் பத்திரிகை யின் முதல் இதழ் வெளி வந்தது. இதற்கு இக்ரா1 என்று பெயர்; தீப்பொறி என்று அர்த்தம். பத்திரிகையில் இவன், லெனின் என்ற பெயரில் அநேக கட்டுரைகள் எழுதி வந்தான். அப்பொழுதிலிருந்து வ்ளாடிமீர் உலியனாவ் என்ற பெயருக்குப் பதில் லெனின் என்ற பெயர் பிரசித்தமடைந்தது.

தொடர்ந்து வெளிவர ஆரம்பித்த இக்ரா ருஷ்யாவின் பல பகுதி களுக்கும் ரகசியமாக அனுப்பப்பட்டு தொழிலாளர் முதலி யோரிடையே விநியோகிக்கப்பட்டது. பத்திரிகையின் இதழ்களைத் தொடர்ந்து படித்து வந்த தொழிலாளர் முதலியோர், தங்களுடைய மோசமான வாழ்க்கைக்கு விமோசனம் ஏற்படுவது வெகு தொலை வில் இல்லையென்று உணரத் தலைப்பட்டார்கள்.

லெனின், ம்யூனிக்கிலிருந்தபோது க்ரூப்கயாவும் வந்து சேர்ந்தாள். இவள் வருகை, லெனினுக்கு எவ்வளவு உதவியா யிருந்த தென்பதைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை.

இக்ரா பத்திரிகை, சுமார் ஒன்றரை வருஷகாலந்தான் ம்யூனிக்கி லிருந்து வெளிவந்து கொண்டிருந்தது. அதற்குப் பிறகு அங்கிருந்து வெளியிடுவது அசாத்தியமாகிவிட்டது. ஒற்றர்களின் கண்காணிப்பு, நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு வந்தவர்கள் கொடுத்த தொல்லைகள் எல்லாம்தான் காரணம். ஆனால் லெனின், எங்கிருந்தாவது எப்படியாவது பத்திரிகையைத் தொடர்ந்து வெளி யிட்டு வருவதென்று உறுதி கொண்டான். அப்படியே க்ரூப்கயா சகிதம் 1902-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் லண்டனுக்குச் சென்று, அங்கு வேறு புனைபெயருடன் வசித்துக் கொண்டு, பத்திரிகையை வெளியிட்டு வந்தான்.

லண்டனிலிருந்த காலத்தில், லெனின், பத்திரிகை வேலை நேரம் போக, மற்ற நேரங்களில், தன் குருநாதனான கார்ல்மார்க், நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, எந்த பிரிட்டிஷ் மியூசியத்தில் எந்த இடத்தில் அமர்ந்து ஓயாமல் படித்து காப்பிடல் என்ற நூல் எழுதுவதற்குக் குறிப்புகள் சேகரித்து வந்தானோ, அதே பிரிட்டிஷ் மியூசியத்தில் அதே இடத்தில் அமர்ந்து அவனைப்போல் ஓயாமல் படித்து வந்தான். அதோடு மார்க் அடக்கம் செய்யப்பட்ட ஹைகேட் சமாதிக்கு அடிக்கடி சென்று அங்குச் சிறிது நேரம் மௌமாக இருந்துவிட்டு வருவான்.

லெனின், ஜெர்மனியிலும், லண்டனிலும் இருந்த பொழுது, ருஷ்யாவில், அரசாங்கத்தின் நடைமுறைகளைச் சகித்துக் கொண்டி ருக்க முடியாத நிலையில், அடிக்கடி தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன; கல்வி நிலையங்களில் மாணாக்கர்களின் கிளர்ச்சி அதிகரித்தது; வறுமைப் பிணியால் வாட்டமுற்ற மக்கள், கும்பல் கும்பலாகக் கூடி வீதிகளில் பகிரங்கமாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்தார்கள். இவற்றின் விவரங்களையெல்லாம் லெனின் அவ்வப் பொழுது அறிந்து வந்தான்; இக்ரா பத்திரிகையில் இவற்றின் காரண காரியங்களை அலசி ஆராய்ந்து எழுதினான். ஆனால் லண்டனில், தொடர்ந்து பத்திரிகையை நடத்திவர முடியவில்லை. சகாக்களூக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமைகள்தான் இதற்கு அடிப்படையான காரணம்.

இஃது இப்படியிருக்க, 1898-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் மின்க் நகரத்தில் கூடிய மகாநாட்டில், ருஷ்ய அபேதவாத ஜன நாயகக் கட்சி உருக்கொண்டதல்லவா1 . அதையொட்டி அந்தக் கட்சியின் இரண்டாவது மகாநாட்டை ஓர் ஆறு மாத காலத்திற்குள் கூட்டுவதென்று அப்பொழுது தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அதன் படி கூட்ட முடியவில்லை. ஏனென்றால், அந்த மகாநாட்டில் சம்பந் தப்பட்டிருந்த பலரும் ருஷ்ய அரசாங்கத்தினால் கைது செய்யப் பட்டுவிட்டனர்.

அந்த மகாநாட்டை இப்பொழுது ருஷ்யாவில் இல்லாமல் வேறெங்கேனும் கூட்டி, அதில், தனக்கும் தன் சகாக்களுக்கு முள்ள கருத்து வேற்றுமைகளுக்கு ஒரு முடிவு காண வேண்டுமென்று லெனின் உறுதி கொண்டான். அதன்படி இந்த இரண்டாவது மகாநாடு, 1903-ஆம் வருஷம் ஜூலை மாதம் மூன்றாவது வாரம் பெல்ஜியத்தின் தலைநகரான ப்ரஸெல்5 நகரத்தில் ரகசியமாகக் கூடியது. பெல்ஜியம் போலீஸாரின் கண்காணிப்பு வலைக்குட் படாதிருக்க வேண்டுமென்பதற்காக, மகாநாட்டின் கூட்டங்கள் இடம்விட்டு இடம் மாறி நடைபெற்றன. நாலைந்து கூட்டங் களுக்குப் பிறகு போலீஸாரின் உறுத்த பார்வை மகாநாட்டின் மீது விழவே செய்தது. இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் பெல்ஜியம் எல்லையைவிட்டு வெளியேறிவிட வேண்டுமென்றும் மகாநாட்டுப் பிரதிநிதிகள் எச்சரிக்கை செய்யப்பட்டார்கள்.

எனவே, பிரதிநிதிகள் அனைவரும் லண்டனுக்குச் சென்று அங்கே மகாநாட்டை நடத்துவதென்று தீர்மானித்தார்கள். அப்படியே லண்டனில் ஆகட் மாதம் இரண்டாவது முறையாக மகாநாடு கூடி, மூன்று வாரம் தொடர்ந்து நடைபெற்றது. ஆரம்பத்திலிருந்தே காரசாரமான வாதங்கள் எழுந்தன. இந்த வாதங்களில் கலந்து கொள்ளும் முறையில் லெனின் நூற்றிருபது தடவை பேசினான்!

மகாநாட்டில் லெனின் கருத்துக்களுக்கும் திட்டங்களுக்கும் பெரும்பான்மையோர் ஆதரவு கொடுத்தனர்; சிறுபான்மையோர் எதிர்த்தனர். பெரும்பான்மையோர் போல்ஷ்வெக்கர்களென்றும், சிறுபான்மையோர் மென்ஷவெக்கர்க ளென்றும் இந்த மகாநாட்டி லிருந்து இரண்டு கட்சியினராகப் பிரிந்தார்கள்.1 இக்ரா பத்திரிகையும் லெனின் கைவிட்டுப் போய்விட்டது.

இதற்குப் பிறகு லெனின், போல்ஷ்வெக் கட்சியை வலுப் படுத்துகின்ற முறையிலும், மென்ஷ்வெக்கர்களின் செல்வாக்கை ஓங்க விடாமற் செய்யவும் சுமார் ஒரு வருஷம் முயன்று, ஒரு பத்திரிகையைத் தொடங்கினான். முற்போக்கு2 என்று இதற்கு பெயர். இதன் ஆசிரியப் பொறுப்பனைத்தையும் லெனினே ஏற்றுக் கொண்டு நடத்தினான். முதல் இதழ் 1904-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் வெளியாயிற்று.

இந்த நிலையில் ருஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் போர் மூண்டு, ருஷ்யா தோல்வியுற்றது. இந்தத் தோல்வி, ருஷ்ய சுயேச்சாதிகாரக் கோட்டையின் பலவீனத்தை நன்கு எடுத்துக்காட்டுகிறதென்றும், அது சரிந்து விழுந்து போகும் காலம் வெகு தொலைவில் இல்லை யென்றும் லெனின் திட்டவட்டமாகக் கூறினான். மற்றும் இந்தத் தோல்வி, புரட்சி வெள்ளத்தின் வருகையைத் துரிதப்படுத்திக் கொடுக்குமென்றும் இவன் சொன்னான். இவன் சொன்னது பொய் யாகப் போகவில்லை. தவிர ரத்த ஞாயிறு சம்பவம்3 சுயேச்சாதி காரத்தின் உண்மை சொரூபத்தை வெளிப் படுத்திவிட்ட தென்றும், இதுவே மக்களை விழிக்கச் செய்யுமென்றும் இவன் கருதினான்.

ரத்த ஞாயிறு சம்பவத்திற்குப் பிறகு 1905-ஆம் வருஷம் பூராவிலும் ருஷ்யாவின் பல இடங்களிலும் பல ரகத் தொழிலாளர் களின் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. கிராமாந்தரங்களில் விவசாயிகள் கலகம் செய்யத் தொடங்கினார்கள். இவை தவிர, ராணு வத்திலும் முணு முணுப்புச் சப்தம் கேட்கத் தொடங்கியது. அவ்வள வென்ன, 1905-ஆம் வருஷம் ஜூன் மாதம் போட்டெம் கின்4 என்ற யுத்தக் கப்பலைச் சேர்ந்த மாலுமிகள், புரட்சிக் கொடி தூக்கியே விட்டார்கள். இவைகளைக் கண்டு ஜார் அரசாங்கம் மருண்டது. ஆனால் கடுமையான முறைகளைக் கையாண்டு இவற்றை அடக்கி விட்டது.

8. மாக்கோ புரட்சி
இஃது இப்படியிருக்க, ஆங்காங்குத் தொடங்கப்பெற்ற வேலை நிறுத்தங்களைத் திறம்பட நடத்த, அந்தந்தத் தொழிற் சாலையிலும் ஒரு சோவியத் அமைந்தது. முதன் முதலாக அமைந்தது பீட்ரோகிராட் சோவியத். இதன் முதற் கூட்டம் 1905 - ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாதிரி, தொழிற்சாலைகளுள்ள எல்லா நகரங்களிலும் சோவியத்துகள் ஏற் பட்டன. பொதுவாக இந்தச் சோவியத்துகள், வேலை நிறுத்தங்களை ஒழுங்காக நடத்த ஏற்பட்டன வாயினும், பின்னர் அரசியல் கிளர்ச்சி செய்வதற்கேற்ற தாபனங்களாக மாறி, கடைசியில் அரசியல் அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளும் நிலைமையை யடைந்தன. சோவியத்துகளின் குரலாக இருந்து பேச இவெடியா1 என்ற ஒரு பத்திரிகையும் தொடங்கப்பட்டது.

பீட்ரோகிராட் சோவியத் தொடங்கின இரண்டவது நாள், அதன் உத்தரவின் பேரில் நகரத்துக் கடைகள் யாவும் அடைக்கப் பட்டன. நகர மக்களின் வாழ்க்கை இரண்டு நாள் தம்பித்தே போய் விட்டது. இதைக் கொண்டு, ஆரம்பத்திலிருந்தே இந்தச் சோவியத்து கள் செல்வாக்குப் பெற்றிருந்தன வென்பது தெளிவாகிறது. இரண்டு நாள் பீட்ரோகிராட் நகர வாழ்க்கை தம்பித்துப் போனதைக் கண்ட பிறகு தான், நிக்கோலா மன்னன் கண் விழித்துக் கொண்டு விட்டே என்பவனைப் பிரதம மந்திரியாக நியமித்து, சில சீர்திருத்தங்கள் வழங்கச் செய்தான்.

ஆரம்பத்தில், சோவியத்துகள் அமைந்ததை லெனின் அவ்வள வாக விரும்பவில்லையாயினும், பிறகு, அவற்றின் சக்தியும் செல்வாக் கும் அதிகரித்து வருவதை யறிந்து, அவற்றை ஜார் அரசாங்கத்திற்குப் போட்டியாகச் செயலாற்றக் கூடிய ஒரு தாபனமாகப் பயன் படுத்தத் தீர்மானித்தான்.

சோவியத்துகள் செல்வாக்குப் பெற்று வரத்தொடங்கின இந்தக் காலத்தில் - 1905-ஆம் வருஷத்தில் - லெனின் ஜினீவாவில் இருந்தான். அங்கே இருப்புப் கொள்ளவில்லை இவனுக்கு; தாய் நாட்டுக்கு வந்து நேரில் நிலைமையைத் தெரிந்துக்கொள்ள ஆவல் கொண்டான். எப்படியோ 1905-ஆம் வருஷம் நவம்பர் மாத மத்தியில் பீட்ரோகிராட் நகரம் வந்து சேர்ந்தான். வந்ததும், கட்சி அங்கத் தினர்களோடு கலந்து பேசி, மேற்படி வேலை நிறுத்தம் முதலிய ஆர்ப்பாட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, அரசாங்கத் தைக் கவிழ்க்கும் அளவுக்குப் பெரும் புரட்சி நடத்துதல் பீட்ரோ கிராட் நகரத்தில் சாத்தியமில்லை யென்றும், மாக்கோ நகரத்தில் சாத்தியமாயிருக்குமென்றும், ஆகவே, அங்கே டிசம்பர் மாத மத்தியில் புரட்சி தொடங்குவதென்றும் தீர்மானித்து, அதற்கு வேண்டிய ஏற்பாடு களைச் செய்தான்.

செய்துவிட்டு, ருஷ்யாவின் மேற்குப் பக்கத்துப் பிரதேசமாகிய பின்லாந்தில்1 டிசம்பர் மாதம் முதல் வாரம் நடைபெற்ற போல்ஷ் வெக் கட்சி மகாநாடொன்றுக்குச் சென்றான். இந்த மகாநாட்டில் தான், பிற்காலத்தில் சோவியத் அரசாங்க நிருவாகத்தை ஏற்று நடத்திய டாலினுக்கும் லெனினுக்கும் முதன் முதல் நேரிடை.யான சந்திப்பு ஏற்பட்டது.

மகாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கையில், குறிப்பிட்டி ருந்த நாளுக்கு முன்னாடியே, மாக்கோ நகரத்தில் புரட்சி தொடங்கிவிட்டது. இதனால் லெனின் ,மகாநாட்டை அரைகுறை யாக முடித்துவிட்டு மாக்கோ வந்தான். இங்கு போல்ஷ்வெக் கட்சியினரின் மேற்பார்வையில் சுமார் ஒன்பது நாள் புரட்சி நடைபெற்றது. இதில் தொழிலாளர்களே பெரும் பங்கு எடுத்துக் கொண்டனர்.மாக்கோவில் தொடங்கப் பெற்ற புரட்சியை அனு சரித்து மற்ற முக்கியமான நகரங்களிலும் புரட்சிகள் ஏற்பட்டன. ஆனால் ஜார் அரசாங்கம், இவற்றைத் தன்னுடைய முழு ராணுவ பலம் கொண்டு அடக்கி ஒடுக்கிவிட்டது.

இந்தப்புரட்சிகள் நடைபெறுங் காலத்தில், லெனின், போலீஸின் கண்காணிப்புக்குட்படாமலிருக்கும் பொருட்டு, பல புனை பெயர் களுடன், ஓரிடத்தில் நிலையாகத் தங்காமல், அதாவது, மாக்கோ என்ன, பீட்ரோகிராட் என்ன, பின்லாந்து என்ன, இப்படி மாறிமாறி வசித்து வந்தான்.

புரட்சி தோல்வியுற்றதற்காக இவன் சிறிதுகூட மனச்சோர்வு கொள்ளவில்லை; அதற்கு மாறாக அதிக உற்சாகமே கொண்டான்; தன் சகாக்களையும் உற்சாகம்பெறச் செய்தான்; தோல்வியின் காரணங்களை அறிந்து அவற்றைத் திருத்தி ஒழுங்குப்படுத்திக் கொண்டு மேலும் புரட்சியைத் தொடர்ந்து நடத்த உறுதி கொண் டான். இதைப்பற்றி ஆலோசித்து ஒரு முடிவுக்கு வர 1906-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் டாக்ஹோம்2 நகரத்தில் போல்ஷ்வெக்கர் மகாநாடு கூடியது. இஃது அபேதவாத ஜனநாயகக் கட்சியின் நான் காவது மகாநாடு என்று அழைக்கப்பட்டது. இதில் லெனின் வகுத்த புரட்சித் திட்டங்கள் பலவும் அப்படியே ஏற்றுக்கொள்ளப் பட்டன.

9. உயிர் தப்பிய விந்தை
மகாநாட்டுக்குப் பிறகு, லெனின், பீட்ரோகிராட் நகரம் வந்து அங்கே 1907-ஆம் வருஷம் ஜனவரி மாதம் வரையில் தங்கி, மேற்படி மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறையில் கொணர்வதற்கான ஏற்பாடுகளை ரகசியமாகச் செய்தான். போலீ ஸார் இவனைச் சிறைப்படுத்த வெகுவாக முயன்றனர். இதனால் இவன் தலைமறை வாகவே இருக்கும்படி நேரிட்டது. இந்த நிலை மையிலும், கட்சிக்கு ஆக்கந்தேடுகின்ற முறையில்,துண்டு பிரசுரங்கள் எழுதி வெளியிட்டும், லண்டனிலும் ஜெர்மனியிலுள்ள டுட் கார்ட்1 என்ற நகரத்திலும் நடைபெற்ற கட்சி மாநாடுகளுக்குச் சென்று பேசிவிட்டும் வந்தான். பின்லாந்தில் சிறிது காலம் வசித்தான். ஆனால் அங்கே நீடித்து வசிக்க முடியாதபடி போலீஸாரின் உபத் திரவம் அதிகமாயிற்று. அங்கிருந்து வெளியேறத் தீர்மானித்தான். ஆனால் அஃது அவ்வளவு சுலப சாத்தியமா யில்லை. இவனை டாக் ஹோம் நகருக்குக் கப்பலேற்றி அனுப்பிவிடுவ தென்று இவனு டைய சகாக்கள் முதலில் உத்தேசித்தார்கள். ஆனால் கப்பலேறுகிற போது, துறை முகத்தில் போலீஸார் வந்து கைது செய்தாலென்ன செய்வது? இதனால், அருகிலுள்ள ஒரு தீவுக்கு முன்னாடியே சென்று காத் திருப்பதென்றும், அங்கு வரும் கப்பலில் ஏறிச்செல்வதென்றும் ஏற் பாடு செய்தார்கள். அந்தத் தீவுக்குச் செல்லும் வழியோ பனி யினால் உறைந்து போயிருந்தது. ஆயினும் என்ன செய்வது? இரண்டு குடியானவர்கள் வழிகாட்ட, லெனின், அந்த வழியே நடந்து சென்றான். தீவை அடையுந் தறுவாயில், பனி வழி இடைவெளிவிட்டது. லெனின் அப்படியே அழுந்திப்போக இருந்தான். மயிரிழை தப்பியது. தீவை அடைந்துவிட்டான். பிற்காலத்தில் இதைப் பற்றிப் பிரதாபம் எழுதுகிறபோது, மரணமடைவது இந்த வழியிலா? எவ்வளவு அற்பத்தனமான சாவு? என்ற எண்ணமே அப்பொழுது தனக்கு எழுந்ததென்று கூறுவான்.

கடைசியில் எப்படியோ தப்பிக்கொண்டு டாக்ஹோம் வழியாக ஜினீவா நகரத்திற்கு 1907-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் கடைசி வாரம் வந்து சேர்ந்தான். அரசியல் ஆரவாரத்திற்கு மத்தியில் அதுகாறும் இருந்துவிட்டு, இப்பொழுது அமைதியான ஒரு சூழ் நிலையிலே வந்திருப்பது இவனுக்கு முதலில் சங்கடமாகவே இருந்தது. நகரமே தூங்கி வழிந்து கொண்டிருக்கிற மாதிரி இவனுக்குப் பட்டது. வந்த அன்றே மண்ணிலே போட்டுப் புதைக்கப்படு வதற்குத்தான் இங்கே வந்திருக்கிறேன் போலும் என்று வேதனை யோடு கூறினான். ஆனால் இந்த நகரத்தில் தான் இவன், நாட்டுக்குப் புறத்தியனாக அதிக காலம் கழிக்க வேண்டியிருந்தது.

ஜினீவாவுக்கு வந்து சேர்ந்த சிறிது காலம் வரையில், லெனினை, ஒருவித மனச் சோர்வு ஆட்கொண்டிருந்தது. ஸைபீரியாவில் தேசப் பிரஷ்டனாக வசித்துக் கொண்டிருந்த காலத்தில் கூட, இவனுக்கு இத்தகைய சோர்வு ஏற்படவில்லை. எவ்வளவோ உற்சாகத்தோடு வேலை செய்து வந்தான். ஏனென்றால், அப்பொழுது புரட்சி ஏற் படக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகிக் கொண்டுவந்தது. அதை ஒழுங்குபடுத்தி விடுவது தனது கடமை யென்று கருதி உழைத்தான். இப்பொழுதோ? இவன் திட்டமிட்டிருந்த மாக்கோ புரட்சி முறிந்துவிட்டது. இதன் விளைவாக, அரசாங்கத்தின் அடக்கு முறைக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. அபேதவாத ஜனநாயக தொழிற்கட்சிச் சங்கங்கள் பலவும் கலைக்கப் பட்டுவிட்டன. கட்சியைச் சேர்ந்த பலர் மனம் மாறிவிட்டிருந்தனர்; கட்சித் துரோகிகளாகவும் ஆகிவிட்டனர். இந்த நிலையில் லெனினுக்கு மனச்சோர்வு உண்டானதில் ஆச்சரியமில்லை. ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு, இவனிடத்தில் குடிகொண்டிருந்த உற்சாகம் தலை தூக்கிவிட்டது.

10. மற்றொரு புரட்சியின் அவசியம்
ருஷ்ய சுயேச்சாதிகாரக் கோட்டை கடைசி தடவையாக இடிந்து விழவும், சமுதாயத்தின் அடித்தளத்திலே யுள்ளவர்கள் விமோசனம் பெறவும் மற்றொரு புரட்சி அவசியமென்று லெனின் கருதினான்; அப்படியொரு புரட்சி நடைபெறுமென்று நம்பவும் செய்தான். கட்சித் துரோகிகள் மீது கடும்போர் தொடுக்கின்ற முறை யிலும், புரட்சியின் வருகைக்கு வழி வகுக்கின்ற முறையிலும் அநேக பிரசுரங்களை எழுதி வெளியிட்டான்.

ருஷ்யாவிலிருந்து நாடுகடத்தப் பட்ட புரட்சிவாதிகள் பலர், பாரி மாநகரில் வசித்துக்கொண்டிருந்தனர். இவர்களுடன் கலந்து பேசி, முடிந்தவரையில் இவர்களுடைய ஒத்துழைப்பைப் பெற்று, போல்ஷ்வெக் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்துடன் லெனின் 1908 - ஆம் வருஷம் டிசம்பர் மாதக் கடைசியில் பாரி மாநகரம் சென்றான். சென்று, அபேவாத ஜனநாயகத் தொழிற்கட்சியின் ஐந்தாவது மகாநாட்டைக் கூட்டுவித்தான். இந்த மகாநாட்டில், போல்ஷ்வெக் கட்சிக்கு எதிர்ப்புக் காட்டிய சந்தர்ப்ப வாதிகள் பலரும், லெனினுடைய வாதத் திறமையினாலும், உறுதியாகச் செயலாற்றிய தன்மையினாலும் ஒதுங்கிப் போயினர்; விலக்கவும் பட்டனர்.

இந்த அரசியல் வேலைகளோடு, லெனின், தினந்தோறும் பாரி மாநகரத்துப் பெரிய புத்தகசாலைக்குச் சென்று படித்து வருவான். படித்தவற்றிற்குக் குறிப்புக்கள் எடுத்துக்கொள்வான். உழைப்பிலே இன்பங்காணும் ஆற்றல் பெற்றவன் லெனின்.

பாரிஸில் நிரந்தரமாகத் தங்க இவனால் இயலவில்லை. கட்சியை வலுப்படுத்துவதற்காக, கோப்பன்ஹேகன்1 நகரத்திலும் அடுத்தடுத்த வருஷங்களில் நடைபெற்ற போல்ஷ்வெக் கட்சி மகாநாடுகளுக்குச் சென்று வந்தான். ப்ரேக்2 மகாநாட்டில், கட்சிக் கொள்கைகளை விளக்கிச் சொல்வதற் கென்று ருஷ்யாவில் ஒரு தினசரிப் பத்திரிகையைத் தொடங்குவதென்று தீர்மானிக்கப்பட்டது. இதற்கு ப்ராவ்டா3 என்று பெயர்; உண்மை என்று அர்த்தம். இதன் முதல் இதழ் 1912-ஆம் வருஷம் மேமாதம் பீட்ரோகிராட் நகரத்தி லிருந்து வெளிவந்தது. இதன் முதல் ஆசிரியன் டாலின்.

ப்ராவ்டா பத்திரிகை வெளியாவதற்கு முந்தி, அதாவது 1912-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம், ஸைபீரியாவின் வட பகுதியி லுள்ள லேனா தங்கச் சுரங்கத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். இது காரணமாக, தொழிலாளர் பிரதிநிதிகள் சிலரை அரசாங்கம் கைது செய்தது. இவர்களை விடுதலை செய்யக்கோரி, தொழிலாளர்கள் ஒருங்கு கூடி ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கூட்டத்தைக் கலைக்க ராணுவம் ஏவப்பட்டது. அவ்வளவுதான். எவ்வித எச்சரிக்கையும் கொடாமல் கூட்டத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பேர் மாண்டனர். இந்தச் செய்தி ருஷ்யா முழுவதும் பரவியது. தொழிற் சாலைகள் நிறைந்த எல்லா நகரங்களிலும், சுமார் இரண்டு இலட்சத்துப் பதினை யாயிரம் தொழிலாளர்கள், இறந்து போனவர்களுக்குத் துக்கம் தெரிவிக்கின்ற முறையில் வேலை நிறுத்தம் செய்தனர். 1905ஆம் வருஷம் நடைபெற்ற தொழிலாளர் ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு மிகப் பெரிய அளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தைக் கண்டு அரசாங்கம் சிறிது அசந்தே போயிற்று. இனிச் சும்மாயிருக்குமா? பலரைக் கைது செய்தது. கைது செய்யப் பட்டவருள் ஒருவன் டாலின்.

இந்தச் செய்திகளை ப்ராவ்டா பத்திரிகை விவரமாக வெளியிட்டு வந்தது. தொழிலாளர் மத்தயில் இதன் செல்வாக்கு அதிகரித்தது; இதன் பிரதிகளும் அதிகமாகச் செலவாயின. இதன் தலையங்கங்கள், கட்சிக் கொள்கைகளை விளக்கும் கட்டுரைகள் முதலியவற்றை லெனினே எழுதிவந்தான். ஆனாலும், இவன் திருப்தி யடையவில்லை. பத்திரிகைத் திறம்பட நடைபெற வேண்டு மென்ப தற்காக, அது வெளியாகிற இடத்திற்குச் சமீபத்தில், அதாவது பீட்ரோகிராட் நகருக்கருகில்தான் இருந்தால் நல்லதென்று உணர்ந்தான். ஆகவே 1912- ஆம் வருஷம் ஜூன் மாதம் ருஷ்யாவின் தென்மேற்கு எல்லைக்கருகில் ஆதிரிய அரசாங்கத்தின் ஆதிக்கத் துக்குட்பட்டிருந்த கலீஷியாவில் கிராக்கௌ1 என்ற ஊரில் வந்து வசிக்கத் தொடங்கினான். சுமார் இரண்டு வருஷகாலம் இங்கேயே தங்கியிருக்கும் படியான அவசியம் இவனுக்கு ஏற்பட்டது. இந்த இரண்டு வருஷ காலத்தில் இவன் மேற் கொண்ட உழைப்பின் பயனாக போல்ஷ்வெக் கட்சியின் அதிவாரம், ஜார் அரசாங்கத் தின் கடுமையான அடக்கு முறைகளினால் தகர்க்க முடியாதபடி அவ் வளவு பலமாக அமைக்கப்பட்ட தென்று சுருக்கமாகக் சொல்லலாம்.

11. யுத்த எதிர்ப்புப் பிரசாரம்
லெனின், கலீஷியாவில் இருந்து கொண்டிருந்த போது, 1914-ஆம் வருஷம் ஆகட் மாதம் முதல் வாரம், முதல் உலக மகா யுத்தம் தொடங்கியது. தொடங்கிய நாலைந்து நாட்கள் கழித்து, ஆதிரிய போலீஸார், இவனை ஒரு ருஷ்ய ஒற்றன் என்று தவறாகக் கருதி, கைது செய்து, சிறைக்குக் கொண்டு போயினர். ஆனால் மேலதிகாரிகள் இதைப் பற்றி விசாரித்து, பத்து நாட்கள் கழித்து இவனை விடுதலை செய்வித்தனர். இவன், ஜார் ஆட்சிக்குக் கடுமையான விரோதியென்று அவர்களுக்குப் பின்னரே தெரிந்தது. இனி, ஆதிரிய எல்லைக்குள்ளிருப்பது உசித மன்று என இவன் உணர்ந்தான். எனவே, யுத்தத்தில் சம்பந்தப்படாமல் நடு நிலைமையுட னிருந்த விட்ஜர்லாந்துக்குச் சென்று விடுவதென்று தீர்மானித் தான். இதற்கு ஆதிரிய அதிகாரிகளும் அனுமதி கொடுத்தனர். அப்படியே இவன் செப்டம்பர் மாதம் முதல் வாரம் விட்ஜர் லாந்துக்குச் சென்று, முதலில் சுமார் ஒன்றரை வருஷகாலம் பெர்ன்2 என்ற ஊரிலும், பின்னர், அதாவது 1916-ஆம் வருஷம் ஜனவரி மாதத்திலிருந்து ஜூரிக்3 என்ற ஊரிலும் வசித்து வந்தான்.

யுத்தம் தொடங்கியதும், ருஷ்ய போலீஸார் இவனை எப்படி யாவது சிறைப்படுத்தி விடவேண்டுமென்று வெகுவாக முயன்றனர். ஆனால் அது பலிக்கவில்லை.

விட்ஜர்லாந்தைச் சுற்றி யுத்த நெருப்பு எரிந்து கொண்டி ருக்கிறது. ஆனால் லெனினோ சிறிதும் அமைதி குலையாதவனாய், யுத்தத்திற்கு விரோதமாக யுத்தம் தொடுத்துவிட்டான். இந்தப் போர், ஏகாதிபத்திய வாதிகளுக்குள் நடைபெறும் போரென்றும் முதலாளித் துவத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் அரசாங்கங் களுக்குள், உலகத்துப் பல்வேறு நாடுகளை ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டுமென்கிற விஷயத்தில் ஏற்பட்டிருக்கிற போட்டியே இந்த யுத்தத்திற்கு அடிப்படையான காரணமென்றும், குடியேற்ற நாடு களைக் கொள்ளை யடித்துத் தங்கள் செல்வத்தையும் செல்வாக்கை யும் பெருக்கிக் கொள்ள வேண்டுமென்பதே இவைகளின் நோக்க மென்றும், இங்ஙனமெல்லாம் விவரித்து, லெனின்,துண்டுப் பிரசு ரங்கள் மூலமாகவும் கட்டுரைகள் வாயிலாகவும் பிரசாரம் செய்து வந்தான்.

தொழிலாளர் நலனுக்குப் பாடுபட்டு வருவதாகச் சொல்லிக் கொள்ளும் அபேதவாதிகளுக்கு இந்த யுத்தம் ஒரு பரிசோதனையா யமைந்தது. இங்கிலாந்து, ஜெர்மனி, ருஷ்யா முதலிய யுத்தத்தில் ஈடுபட்டிருந்த நாடுகளிலுள்ள அபேதவாதிகள் பலரும், தங்கள் தங்கள் தாய்நாடு காப்பாற்றப்பட வேண்டுமென்ற ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு, இந்த யுத்தத்தை ஆதரித்து வந்தனர். யுத்தத்தில் கலந்து கொண்டு பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாவோர் யார்? பெரும் பாலும் சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ளவர்களே. இவர்க ளனைவரும் எந்த நாட்டினராயினும் ஒரே நிலையிலிருப்பவர்களே. இவர்களுடைய நலமும் ஒன்றே. அப்படியிருக்க, இவர்கள், வெவ் வேறு நாட்டினர் என்ற காரணத் திற்காக, தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ளலாமா? இவர்களைச் சண்டையில் இழுத்து விடலாமா? இந்த மாதிரியான காரணங்களைக் காட்டி, அபேத வாதிகளென்றும் ஜனநாயக வாதிகளென்றும் சொல்லிக் கொண்டு, யுத்தத்தை ஆதரிக்கிறவர்களைக் கடுமையாகத் தாக்கி வந்தான் லெனின். மற்றும், தன்னுடைய போல்ஷ்வெக் கட்சிக்கு, யுத்தத்தை எதிர்த்துப் பிரசாரம் செய்யும்படி சொன்னான். ருஷ்ய பார்லி மெண்ட்டிலுள்ள போல்ஷ்வெக் கட்சிப் பிரதிநிதிகள், யுத்தத்தை எதிர்த்துப் பேசியதற்காகக் கைது செய்யப்பட்டு, ஸைபீரியாவுக்கு நாடு கடத்தப் பட்டார்கள். இதனால், போல்ஷ் வெக்கர்களின் யுத்த எதிர்ப்புப் பிரசாரம் தீவிரமாயிற்றே தவிர குறையவில்லை.

மற்றும் லெனின், இந்த ஏகாதிபத்திய யுத்தத்தை உள்நாட்டு யுத்தமாக, அதாவது, ருஷ்யக் கொடுங்கோலாட்சியை ஒழிக்கும் யுத்தமாக மாற்றிக்கொள்ளுங்களென்று ருஷ்யத் தொழிலாளர் களுக்கு வேண்டுகோள் விடுத்தான். இங்ஙனமே உலகத் தொழிலாளர் அனைவரும் ஒன்றுகூடி, யுத்தத்தை எதிர்த்து நிற்க வேண்டு மென்று, யுத்தத்தில் கலந்து கொண்டிருக்கிற நாடுகளிலுள்ள தொழிலாளர் தலைவர்களையும் தொழிலாளர் கட்சிகளையும் கேட்டுக் கொண்டான்.

இந்தக் காலத்தில் இவனுடைய சொந்த வாழ்க்கை அநேக கஷ்ட நிஷ்டூரங்களுக்குட்பட்டு நடைபெற்றது. இவனுக்கு ஏற்பட்ட பணமுடை சொல்லிமுடியாது. கார்ல் மார்க் நடத்திய வறுமை வாழ்க்கையின் நிழல் இவன் மீது படர்ந்திருந்த தென்று சுருக்கமாகச் சொல்லலாம். தவிர, இந்தக் காலத்தில், ருஷ்யாவிலுள்ள தன் சகாக் களோடு நெருங்கிய தொடர்பு கொள்ள முடியவில்லையே யென் பதற்காக இவன் அனுபவித்த மனவேதனை அதிகம். இவ்வளவிருந் தாலும், இவன், முயற்சியில் தளர்ச்சியுறவில்லை. யுத்தத்திற்கு விரோத மான பிரசுரங்களைத் தயாரித்து, அவ்வப்பொழுது ருஷ்யாவுக்கு ரகசியமாக அனுப்பி வந்தான்.

யுத்தத்தில், ருஷ்யா, நிகரமான வெற்றி எதனையும் காண முடிய வில்லை; தோல்விமேல் தோல்வியே கண்டு வந்தது; ஏராளமான பொருட் சேதத்தையும் உயிர்ச்சேதத்தையும் அடைந்து வந்தது. திறமையற்ற ஜார் அரசாங்கத்தின் மீது மக்கள் வெறுப்புக் கொண்டார்கள். அவர்களுடைய பொருளாதார வாழ்க்கை, படு மோசமாகி விட்டது. சுருக்கமாக, ஒரு புரட்சிக்குத் தேவையான சரக்குகள் பலவும் சேர்ந்துவிட்டன. இனி என்ன? புரட்சிதான். மக்களுடைய பொறுமையின் எல்லைக்கோட்டை மீறிக் கொண்டு, புரட்சித் தீயானது. 1917-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் ருஷ்ய சுயேச்சாதிகாரக் கோட்டையைச் சூழ்ந்து கொண்டது. அந்தத் தீயிலே, மன்னராட்சியும் ரோமனாவ் பரம்பரையும் ஐக்கியமாகி விட்டன. இதைப்பற்றி,இதற்குப் பிறகு புரட்சி ஏற்பட்டதைப் பற்றியும் சென்ற அத்தியாயத்தில் சொல்லியிருக்கிறோம்.

12. புரட்சியும் லெனின் பங்கும்
புரட்சி நடைபெற்றபோது, லெனின், ஜூரிக் நகரத்தில் இருந்தான்; ஆம்; அஞ்ஞாத வாசம் செய்து கொண்டிருந்தான். புரட்சியின் வெற்றி கேட்டு, தாய் நாட்டுக்குத் திரும்பிவர ஆவல் கொண்டான். எப்படி வருவது? ஜெர்மனி வழியாகத்தான் வர வேண்டும். எனவே, இவனுடைய சார்பாகச் சில நண்பர்கள் ஜெர்மன் அரசாங்கத்தினிடம் தூது சென்று, இவனை, ருஷ்யாவுக் குள் செல்ல அனுமதிக்கும்படி கோரினார்கள். ஜெர்மன் அரசாங்கம் இதற்குச் சம்மதித்தது. லெனின், யுத்தத்திற்குப் பரம விரோதி யென்பது அதற்குத் தெரியும். இவன், ருஷ்யாவுக்குள் சென்றால் சும்மா இருக்கமாட்டானென்றும், யுத்த எதிர்ப்புப் பிரசாரம் செய்து, ருஷ்யாவின் போரிடுஞ் சக்தியை அடியோடு குன்றச் செய்வா னென்றும், இதனால் கிழக்குப் போர் முனையில் தனக்கு எதிர்ப்பு இல்லாமல் செய்து கொள்வது சாத்தியமென்றும், அப்பொழுது, மேற்குப் போர் முனையில், அதாவது பிரான், பிரிட்டன் இவைகளுக்கு விரோதமாகத் தன்னுடைய முழுக் கவனத்தையும் செலுத்தலாமென்றும் ஜெர்மன் அரசாங்கம் கருதியது. இவைகளை யெல்லாம் மனத்தில் கொண்டு, லெனினையும், அவனோடிருந்த சகாக்கள் சிலரையும், தக்க பந்தோபதுடன் ருஷ்ய எல்லையில் கொண்டுவிட்டது. 1917-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் பதினாறாந் தேதி பீட்ரோகிராட் நகரம் வந்து சேர்ந்தான் லெனின், தன் சகாக்களுடன்.

இதற்குப் பிறகு, இவனுடைய வாழ்க்கை, ருஷ்யக் குடியரசின் உதயகால வாழ்க்கையோடு இணைந்து விட்டது. அதை அடுத்த அத்தியாயத்தில் காண்போம். ஆயினும் இந்த அத்தியாயத்தில் இவனுடைய வாழ்க்கை முழுவதையும் சுருக்கமாகச் சொல்லி முடித்து விட ஆசைப்படுகிறோம். இப்படி ஆசைப் படுவது, கூறியது கூறல் என்னும் குற்றத்திற்கு நம்மை ஓரளவு உட்படுத்து மென்பதை நாம் அறியாம லில்லை. என்றாலும், முழு மனிதனாக வாழ்ந்த லெனினின் வாழ்க்கை முழுவதையும் இந்த ஓர் அத்தியாயத்தில் கூறி முடிப்பதுதான், அவனுடைய நிறைந்த வாழ்க்கைக்கு முழு மதிப்புக் கொடுத்ததாகவும், இந்த அத்தியாயத் தலைப்புக்குப் பொருத்தமாக வும் இருக்குமென்று கருதுகிறோம்.

13. ஒளிந்து வாழ்தல்
லெனின், பீட்ரோகிராட் நகரம் வந்து சேர்ந்தபோது, தற்காலிக அரசாங்கம் என்ற பெயரால் ஓர் அரசாங்கம் செயலாற்றிக் கொண்டி ருந்தது. இது, யுத்தத்தைத் தொடர்ந்து நடத்தி வருவதிலேயே முனைந்திருந்தது. இதனை லெனின் வன்மையாகக் கண்டித்து வந்தான். ராஜ்ய அதிகாரங்கள் யாவும் சோவியத்துக்களின் கைக்கு வரவேண்டு மென்றும், இதன் விளைவாக, சோவியத் குடியரசு முறை அமுலுக்கு வரவேண்டுமென்றும், யுத்தத்தைத் தொடர்ந்து நடத்தி வருவதில் முனைந்திருக்கும் தற்காலிக அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவுதரக் கூடாதென்றும் பலவழியாகப் பிரசாரம் செய்து வந்தான். போல்ஷ்வெக் கட்சியின் செல்வாக்கு அதிகரித்து வந்தது. 1917-ஆம் வருஷம் ஜூலை மாதம் 16, 17-ஆம் தேதிகளில் பீட்ரோ கிராட் நகரத்திலுள்ள தொழிலாளர்கள் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிய பலரும், தாங்களாகவே முன் வந்து, அரசாங்க அதிகாரங்கள் யாவும் சோவியத்துக்களின் கைக்கு வரவேண்டு மென்றும்கோரி, பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். யுத்த எதிர்ப்புக் கிளர்ச்சியும் வலுத்தது. இந்த ஆர்ப்பாட்டமோ, கிளர்ச்சியோ பலாத்காரத்தில் இறங்கிவிடாத படிக்கும், தற்காலிக அரசாங்கம் அடக்குமுறை களைக் கையாள்வதற்கு இடங்கொடாத படிக்கும் லெனின் பார்த்துக் கொண்டான்.

ஆனால் தற்காலிக அரசாங்கம், இந்த ஆர்ப்பாட்டம் ,கிளர்ச்சி முதலியவைகளை விரும்பவில்லை. போல்ஷ்வெக் கட்சியைக் கலைத்து விடவும், அந்தக் கட்சி அங்கத்தினர்களில் முக்கியமானவர் களைக் கைது செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. லெனின், ஜெர்மன் அரசாங்கத்தின் ஒற்றனென்று பிரசாரம் செய்வித்து, இவனைக் கைதி செய்வதற்கு உத்தரவு பிறப்பித்த தோடல்லாமல், இவனைப் பிடித்துக் கொடுக்கிறர்வகளுக்குச் சன்மானம் வழங்குவ தாகவும் பிரகடனம் செய்தது. இதனால் லெனினும், போல்ஷ்வெக் கட்சியைச் சேர்ந்த முக்கியதர்களும் தலைமறைவாகச் செல்ல வேண்டியதாயிற்று. லெனின், மாறு வேடங்கள் பூண்டும், பல புனை பெயர்களைத் தாங்கிக் கொண்டும் நாளுக்கோர் இடமாக, மாறி மாறி வசித்து வந்தான்; இந்த நிலையிலும், போல்ஷ்வெக் கட்சி, அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான எல்லா ஏற்பாடு களையும் செய்து வந்தான். 1917-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் இந்த ஏற்பாடுகள் முற்றுப் பெற்ற தருணத்தில் இவன் பீட்ரோ கிராட் வந்து சேர்ந்தான். இவனுடைய தலைமையில், போல்ஷ்வெக் கட்சியினர் அரசாங்க அதிகாரங்களைக் கைப்பற்றிக் கொண்டனர்.

லெனின், அதிகார மேற்றதும், முதன்முதலாக, ருஷ்யாவைச் சமாதானப் பாதையில் திருப்பிவிட்டான்; சுயேச்சாதிகாரத்தின் சின்னங்களாயிருந்த பலவற்றை அப்புறப் படுத்தினான்; மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தக் கூடிய வழிமுறைகளை வகுத்தான். இன்ன பலவும் செய்து கொண் டிருக்கையில், அயராத உழைப்பின் விளைவாக, 1924-ஆம் வருஷம் ஜனவரி மாதம் இருப்பத்தோராந் தேதி, ஐம்பத்து நான்காவது வயதில் இறந்துவிட்டான்.

14. லெனின் இறந்தும் இருக்கிறான்
லெனின், ருஷ்யாவின் அரசியலிலே, சமுதாய வாழ்க்கை யிலே, பொருளாதாரத்துறையிலே பெரும் புரட்சியை உண்டுபண்ணி விட்டான். ஓர் அறிஞன் கூறுகிற மாதிரி, அவன், ஒருநாளின் இருபத்து நான்கு மணிநேரமும் புரட்சிக் கனவையே கண்டுகொண் டிருந்தான்; புரட்சியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான். தேசமே அவனுக்குப் பெரிதா யிருந்தது. தேச நலனுக்காக நட்பைப் பலிகொடுக்க அவன் தயங்கிய தில்லை. அதே பிரகாரம், தேசநலனுக் காக, பகைமையை மறந்து விட்டு நட்புரிமை கொண்டாட அவன் பின் வாங்கியதில்லை. அவனுடைய சொந்த வாழ்க்கை, நேர்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. அவன், நிசப்தமான காட்டை நேசித்ததுபோல், சந்தடி நிறைந்த நகரத்தையும் நேசித்தான். சூழ்நிலைக்கேற்றவாறு தன்னைச் சரிப்படுத்திக்கொண்டு செய லாற்றும் மனப்பக்குவம் அவனுக்கு ஏற்பட்டிருந்தது. அவன், ஒரு பிறவித் தலைவனாக வாழ்ந்தான் என்று சுருக்கமாகச் சொல்லலாம்.

லெனின், இறந்துவிட்டானென்பது வாதவம். ஆனால் அவன் இருக்கிறானென்பதும் உண்மை. இஃதென்ன புதிர் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா, வாசகர்களே, உங்களுக்கு? சிறிது பொறுமையின் கையைப் பற்றிக் கொண்டு வாருங்கள்; புதிருக்கு விடைகாண்பீர்கள்.

ருஷ்யாவின் தலைமை தானம் மாக்கோ. மாக்கோவின் இருதய தானம் சிவப்புச் சதுக்கம். இந்தச் சதுக்கத்தின் மத்தியி லுள்ள உயர்ந்த கட்டடத்திற்குள் உயிரில்லாத ஓர் உருவம் வீற்றிருக் கிறது. அது யார்? ருஷ்ய மகாஜனங்களின் இருதய மூர்த்தி; உலகத்து ஏழை மக்களின் நம்பிக்கை புருஷன்; லெனின். அவன் இறந்து அநேக ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அவன் இறந்து போன போது எப்படி இருந்தானோ அப்படியே இப்பொழுதும் காட்சி யளித்துக் கொண்டிருக்கிறான்; எப்பொழுதும் காட்சியளித்துக் கொண்டிருப்பான்.

கவிக்கும் சிரங்கள், குவிக்கும் கரங்கள், நீர் மல்கும் கண்கள், அசைக்கும் உதடுகள்,இப்படித் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பேர் அந்த மகா புருஷனின் உருவத்தைத் தரிசித்துக் கொண்டு போகிறார்கள்.ஏன்? வாழ்க்கையிலே புதிய ஒளி பெறுவதற்காக. கடவுள் பக்தி என்று சொல்லிக்கொண்டு, மூட நம்பிக்கையிலே ஆழ்ந்து கிடந்த ஜனங்களை, எவன், தன்னம்பிக்கை என்னும் கரைக்கு ஏற்றி விட்டானோ அவனை இப்பொழுதும் அதே ஜனங்கள் கடவுளாகக் கும்பிடுகிறார்கள்; தேவ புருஷன் என்று கொண்டாடுகிறார்கள். ஆனால், எட்டாத கடவுளாக அல்ல; வழிகாட்டாத அவதார புருனாக அல்ல; லெனின் உயிரோடிருந்த போது, பிறருக்காவே வாழ்ந்தான். இறந்தபிறகும்,அவனுடைய உடல் பிறருக்காகவே இருக்கிறது.

இறந்த பிறகு, தேகத்தை மட்டும் பரிமள தைலத்திலிட்டுப் பாதுகாத்து வைப்பது என்கிற கௌரவம், இதுவரையில் எந்த மகா னுக்கும் ஏற்பட்டதில்லை. மகா பட்டம் பெற்ற கிரேக்க அலெக் ஸாந்தர் என்ன1, ருஷ்ய பீட்டர் என்ன2, ப்ருஷ்ய ப்ரெடெரிக் என்ன3, பிரெஞ்சு நெப்போலியன் என்ன- யாருமே இப்படிப் போற்றப் படவில்லை; ஆனால், பின்பற்றப் படவுமில்லை. கோல் பிடித்த அரசர்கள், வாளேந்திய வீரர்கள், அன்பையே அணிகலனாகப் பூண்ட அடியார்கள், அறிவுச்சிகரத்தின் மீது ஏறி நின்றவர்கள், மானிட ஜாதியின் இருதய ஆழத்தைக் குடைந்து பார்த்தவர்கள் முதலிய பலரையும் நாம் எங்கே பார்க்கிறோம்? அவர்கள் எழுதி வைத்துப்போன நூல்களிலே, அல்லது காவியக்காரர்களுடைய கற்பனையிலே., அல்லது ஓவியக்காரர்களுடைய சித்திரங்களிலே தான். உயிருக்குப் பிறகு உடலைமட்டும் வைத்துக்கொண்டு யாரும் இதுவரையில் கௌரவம் பெறவில்லை, புராதன எகிப்திய மன்னர்களைத் தவிர்த்து. அவர்களில் யாருக்கும் ஏற்படாத ஒரு கௌரவம் லெனினுக்கு மட்டும் ஏன் ஏற்பட்டது? காரணம், அவர்கள் சீர்திருத்தினார்கள்; லெனின் சிருஷ்டித்தான். சிருஷ்டிக் கிறவர்களுக்கு எப்பொழுதுமே பெருமை உண்டுதானே? ஒரு தலை முறை காலத்திற்குள், ருஷ்யாவில் ஒரு புதிய சமுதாயம் அமைந்து விட்டது; ஒரு புதிய நாகரிகம் தோன்றிவிட்டது.

லெனினுடைய வாழ்க்கை, வற்றாத நதி; குறையாத சுரங்கம்; துருப்பிடியாத இரும்பு; அணையாத விளக்கு; அழியாத முத்திரை. அவன், மானிட சமுதாயமென்னும் கொந்தளிப்பு நிறைந்த சமுத்திரத்தில், சமதர்மக் கப்பலைத் துணிச்சலாக மிதக்கவிட்டான். அஃது அவனுக்குப் பிறகு, புதிய உலகத்தை நோக்கி எத்தனையோ தடைகளையும், புயல் களையும் சமாளித்துக் கொண்டு வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. அவன் அதைப் பார்த்தவண்ணம் சிவப்புச் சதுக்கத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறான். வாழ்க லெனின்.

15. அறிஞர் இருவர்
ஒரு நாட்டு மக்களைச் செயலுக்கு உந்துகிறவர்கள் கர்ம வீரர்கள்; சிந்திக்கச் செய்கிறவர்கள் இலக்கிய கர்த்தர்கள். இரு வகையினரும் மக்களின் நன்றியிலே என்றும் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். இங்ஙனம் ருஷ்ய மக்களின் நன்றியில் வாழ்ந்து கொண்டி ருக்கிற இலக்கிய கர்த்தர்கள் சிலரை -புஷ்கின், லெர்மாண்ட்டாவ், கோல்ட்ஸாவ், கோகோல், டர்கனீவ், டால்ட்டாய், டோட்டோ வெகி, இப்படிச் சிலரை- ஏற்கனவே வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறோம். கர்மவீரர் களின் தலைவனான லெனினைப் பற்றிக் கூறி முடிக்கின்ற இந்த அத்தியாயத்தின் இறுதியில், மேற்சொன்ன இலக்கிய கர்த்தர்களின் வரிசையில் வந்த முக்கியமான வேறு இருவரைப் பற்றிச் சுருக்கமாகக் கூறி இந்த வரிசையை ஒருவாறு முடித்துக் கொள்ள விரும்புகிறோம். ஒருவன் செக்காவ்; மற்றொருவன் கோர்க்கி.

செக்காவ் :

சிறந்த நாடகாசிரியனும், சிறுகதை எழுத்தாளனுமான செக்காவ்1 1860-ஆம் வருஷம் டாகன்ராக்2 என்ற ஊரில் ஒரு சில்லரை வியாபாரியின் மகனாகப் பிறந்தான். வைத்தியக் கல்லூரி யில் படித்துத் தேர்ச்சி பெற்றான். சில வருஷ காலம் வைத்தியத் தொழிலும் நடத்தினான். ஆனால் இவன் மனமெல்லாம் இலக்கியத் தில் ஈடுபட்டிருந்தது. வைத்தியத் தொழில் நடத்திக்கொண்டிருந்த காலத்தில்கூட, பத்திரிகை களுக்கு அவ்வப்பொழுது, சிறு கதை களென்ன, கட்டுரைகளென்ன, இப்படி எழுதி ஆத்ம திருப்தி கண்டு வந்தான். ஆனால் இதன் மூலம் இவனுக்குப் பேரும் புகழும் கிடைத்தன. எனவே, வைத்தியம் செய்வதை நிறுத்திக் கொண்டு இலக்கியப் படைப்பிலேயே முழுக்கவனத்தையும் செலுத்தினான். நகைச் சுவைக் கதைகள் எழுதத் தொடங்கிய இவன், காலக் கிரமத்தில், அறிவுக்கு உரந்தரக் கூடிய அநேக சிறு கதைகளென்ன, கட்டுரை களென்ன, நாடகங்களென்ன, இப்படிப் பலவும் எழுதி, ருஷ்ய இலக்கியத் திற்குச் செழூமை கொடுத்தான்.

ருஷ்ய அரசாங்கத்தினால் ஆயுள் பரியந்த தண்டனை விதிக்கப் பெற்ற பலர், ஸக்காலின் என்ற தீவில்1 கொண்டுபோய் வைக்கப்பட் டிருந்தனர். செக்காவ், தன்னுடைய முப்பதாவது வயதில் மேற்படி தீவுக்குச் சென்று, சிலமாத காலம் தங்கி அங்குள்ள நிலைமையை விசாரித்தறிந்து வந்து, பிறகு, க்காலின் தீவு என்ற தலைப்பில் ஒரு நூலெழுதினான். இந்த நூல் ருஷ்ய மக்களிடையே பெரிய பர பரப்பை உண்டு பண்ணியது.

இவனுடைய இலக்கியப்படைப்புகள், பத்தொன்பதாவது நூற்றாண்டின் கடைசிப் பகுதியில், ருஷ்ய சமுதாயம் இருந்த நிலை மையை அப்படியே படம் பிடித்துக் காட்டின வென்று சுருக்கமாகச் சொல்லலாம். இவனுடைய எழுத்துக்களை, டால்ட்டாய், பெரிதும் போற்றிப் பேசியிருக்கிறான். இவனுடைய படைப்புக்களுக்காக இவன் பெற்ற பரிசுகள் பல.

செக்காவ், பல ஆண்டுகளாக க்ஷயரோகத்தினால் அவதைப் பட்டு, கடைசியில் 1904-ஆம் வருஷம் ஜூலை மாதம், நாற்பத்து நான் காவது வயதில் இறந்து போனான்.

கோர்க்கி:

பழமைக்கும் புதுமைக்கும் பாலமா யமைந்தவன் என்று போற்றப் படுகின்ற கோர்க்கி;2 1868-ஆம் வருஷம், நிஷ்னி நோவ் கோராட்3 என்ற ஊரில் பிறந்தான். சொற்ப வருமானமுடைய குடும் பத்திலே பிறந்த இவன், சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து விட்டான். பத்தாவது வயதிலிருந்து, தன் ஜீவனத்திற்குத் தானே வழி தேடிக் கொள்ள வேண்டிய நிலைமை இவனுக்கு ஏற்பட்டது. இதனால், சமையற்காரனாகவும், பட்சிகளை விற்றுப் பிழைக்கிற வனாகவும், இப்படிப் பல வித சில்லரைத் தொழில்களில் ஈடுபட்டு, எப்படியோ வயிறு வளர்த்து வந்தான். இந்தக் காலத்தில் இவன் அனுபவித்த துன்பங்கள் பல. ஆனால், வாழ்க்கையிலே நம்பிக்கை யும், வாழவேண்டுமென்ற உறுதியும் இவனுக்கு நிறைய இருந்தன. இவை இரண்டுந்தான் இவனை ஓர் இலக்கிய கர்த்தனாக்கின வென்று சொல்லவேண்டும்.

இவனுடைய இருபத்து நான்காவது வயதில் இவனுடைய முதல் இலக்கியப் படைப்பு வெளியாற்று. அடுத்த வருஷம், இவனுடைய சிறு கதைகளும் கட்டுரைகளும் அடங்கிய நூல் தொகுதிகள் இரண்டு வெளியாயின. பேரும் புகழும் இவனை நாடி வந்தன.

மக்களின் சிந்தனா சக்தியைத் தூண்டிவிட்ட இவனுடைய படைப்புக்கள், ஜார் அரசாங்கத்திற்குக் கோபத்தை உண்டு பண்ணின. இதனால் இவன் அடிக்கடி சிறைவாசியாகவும் தேசப் பிரஷ்டனாக வும் இருக்க நேர்ந்தது. இவன் போல்ஷ்வெக்கர்க்ளோடு நெருங்கிய தொடர்பு கொண்டு, 1905-ஆம் வருஷம் நடைபெற்ற புரட்சியில் பங்கு கொண்டான். 1906-ஆம் வருஷம் ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் சென்று ஜார் அரசாங்கத்தின் அட்டூழியங் களைப் பகிரங்கமாக எடுத்துச் சொல்லி வந்தான்; ருஷ்யாவில் பெரும் புரட்சி ஏற்படப்போகிறதென்பதைச் சூசகமாகத் தெரிவித்தும் வந்தான்.

இந்த 1906-ஆம் வருஷத்தில் தான், இவனுடைய பிரசித்தி பெற்ற தாய்1 என்ற நாவல் வெளியாயிற்று. இது ஜார் அரசாங்கத் திற்கு இன்னும் அதிகமான கோபத்தை உண்டு பண்ணிவிட்டது. இதனால் இவன் ருஷ்யாவில் வசிக்க முடியாதவனானான். இத்தலி யைச் சேர்ந்த காப்ரி2 என்ற தீவில் சென்று குடியேறினான். இங்கு தான், இவனுக்கும் லெனினுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட ஆரம்பித்தது.

1905-ஆம் வருஷத்திலிருந்து 1917-ஆம் வருஷம் வரை, கோர்க்கி, அநேக நல்ல நூல்களை எழுதி, மக்களின் மதிப்பிலே உயர்ந்து வந்தான்.

1917-ஆம் வருஷம் நடைபெற்ற புரட்சிக்குப் பிறகு இவன் ஆக்கித் தந்த நூல்கள், ருஷ்ய எழுத்தாளர்களுக்கு நல்ல வழி காட்டி களா யமைந்தன.

1917-ஆம் வருஷத்திலிருந்து 1946-ஆம் வருஷம் வரையில், இவனுடைய நூல்கள் அறுபத்தாறு பாஷைகளில் மொழி பெயர்க் கப்பட்டு வெளிவந்தனவென்றால், இவை மொத்தம் நானூற்று இருபது இலட்சம் பிரதிகள் விற்பனையாயிருக்கின்றனவென்றால், ருஷ்ய மக்களின் மனத்தில் இவன் பதித்த முத்திரை எவ்வளவு ஆழமானதென்பதை ஒருவாறு தெரிந்து கொள்ளலாம். இவன் 1936-ஆம் வருஷம் அறுபத்தெட்டாவது வயதில் காலமானான்.


VIII. குடியரசின் தோற்றம்

1. ஜனங்களின் தேவை
லெனினுடைய வருகையின் போது, பீட்ரோகிராட் சோவியத் தில், போல்ஷ்வெக்கர்கள், எண்ணிக்கையிலும், செல்வாக்கிலும் குறைந்தவர்களாகவே இருந்தார்கள். மென்ஷ்வெக்கர்களுடைய கைதான் ஓங்கியிருந்தது. லெனின், போல்ஷ்வெக் கட்சியின் தலை வனல்லவா? எனவே தன் கட்சியின் நலத்தை நாடி ஒரு திட்டம் வகுத்தான். என்ன திட்டம்? யாருடைய முயற்சியினால் புரட்சி வெற்றி கரமாக முடிந்ததோ அவர்களுடைய, அந்த தொழிலாளர்களுடைய ஆதரவை, போல்ஷ்வெக்கர்கள் முதலில் சம்பாதித்துக் கொள்ள வேண்டும்; பின்னர் அந்த ஆதரவையும் பலத்தையும் கொண்டு சோவியத்தைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டும்; அதன் பிறகு அரசாங்க அதிகாரம் தானாகத் தங்கள் கையில் வந்து சேரும். இப்படி ஒழுங்காகத் திட்டம் போட்டு வேலை செய்யக்கூடியவர்கள், போல்ஷ்வெக் கட்சியில், லெனின் வருகைக்கு முன் ஒருவரு மில்லை. தவிர, லெனின், ஒரு பிறவித்தலைவனாதலின், ருஷ்ய மண்ணில் காலடி எடுத்து வைத்தவுடன், ஜனங்களின் தேவை இன்ன தென்பதை உணர்ந்து கொண்டான். ஜனங்கள் சமாதானம் வேண்டு மென் கிறார்கள்; ஆகாரம் வேண்டுமென்கிறார்கள்; நிலம் வேண்டுமென் கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அளிக்கப்படுவது என்ன? யுத்தம்; பட்டினி. அவர்களுக்கு ஆகாரம் கிடைப்பதில்லை. நிலச்சுவான் தார்கள் தங்களிஷ்டப்படி நிலத்தை அனுபவித்துக் கொண்டு வரு கிறார்கள் என்று ஓரிடத்தில் கூறினான். தன்னுடைய கட்சியினர், அதாவது போல்ஷ்வெக்கர்கள், இந்த மாதிரியான விஷயங்களில் கவனஞ் செலுத்தாமல், மென்ஷ் வெக்கர்களோடு தங்களை ஐக்கியப் படுத்திக் கொண்டும், தற்காலிக அரசாங்கத்தின் விருப்பு வெறுப்புக் களுக்கு இணங்கிக் கொண்டும் போவதை இவன் விரும்பவே இல்லை. இதற்காகத் தன் கட்சியினரைக் கண்டித்தான்; அவர்களைச் செயலுக்குத் தூண்டினான்.

லெனின் வந்த பிறகு, பீட்ரோகிராட் சோவியத்தில் போல்ஷ் வெக்கர்களின் கை வலுத்தது. இது, தற்காலிக அரசாங்கத்தைப் பாதிக்காம லிருக்குமா? போல்ஷ்வெக்கர்கள், மெதுமெதுவாக ஜனசாதகமான பிரேரணைகளை, உதாரணமாகத் தொழிலாளர் களுடைய வேலை நேரத்தை எட்டுமணியாக்குவது போன்றவை களைக் கொண்டு புகுத்தி அவற்றை அமுலுக்குக் கொண்டுவரச் செய்தார்கள். தற்காலிக அரசாங்கம் இவைகளுக்குக் கெல்லாம் இணங்கியே கொடுத்தது. ஆயினும், அதன் போக்கு, போல்ஷ் வெக்கர் களுக்குப் பிடிக்கவில்லை. மிதவாதிகளையும் பணக்காரர்களையும் கொண்ட கூட்டந்தானே தற்காலிக அரசாங்கம்? இவர்களுக் குள்ளே அடிக்கடி மனதாபங்கள் வேறே ஏற்பட்டு வந்தன. இவை காரணமாக, அரசாங்கம் அடிக்கடி கைமாறிக் கொண்டு வந்தது. ஒரு சமயம் மிதவாதிகளையும் சில தீவிரவாதிகளையும் கொண்ட ஒரு கூட்டு அரசாங்கம் ஏற்பட்டது. இதற்கு கெரென்கி1 என்பவன் தலைவனானான்; அதாவது பிரதம மந்திரி. இவன் சிறந்த நாவலன்; வக்கீல். தொழிலாளர் களின் மத்தியில் இவனுக்குக் கொஞ்சம் செல் வாக்கு இருந்தது. தன்னுடைய செல்வாக்குக்குப் போட்டியாக, போல்ஷ்வெக்கர்களுடைய செல்வாக்கு வளர்ந்து கொண்டு வருவதை இவன் விரும்பவில்லை. இது மனித சுபாவந்தானே? அதுவும் அரசிய லிலே பிரவேசித்திருப் பவர் களுக்குக் கேட்க வேண்டுமா? பொறாமை யும் போட்டியும் அரசியலோடு கலந்த பொருள்கள். கெரென்கி,. தனக்கிருக்கிற அதிகார பலத்தைத் துணையாகக் கொண்டு, போல்ஷ்வெக் கட்சியை ஒடுக்க முயன்றான். லெனின் உள்பட அந்தக் கட்சியின் முக்கியதர்கள் சிலரைக் கைதி செய்யுமாறு உத்தர விட்டான். பலர் கைதியாயினர். ஆனால் லெனினும் வேறு சிலரும் கைதியாகாமல் தலைமறைந்துவிட்டனர். கெரென்கிக்கு ஆத்திரம் அதிகரித்தது. இன்னும் சில அடக்கு முறைகளைக் கை யாண்டான். எதிர் பார்த்தபடி வெற்றி கிடைக்கவில்லை. போல்ஷ் வெக்கர்களுடைய செல்வாக்கு ஜனங்களிடத்தில் அதிகமாயிற்று.

இதைக் கண்டு மனம் புழுங்கினான் கெரென்கி. தன் அதிகார பலத்தில் இன்னும் அதிகமான நம்பிக்கை வைக்கலானான். போல்ஷ் வெக்கர்களைத் திருப்தி செய்ய முடியாமற் போனாலும், பிரான்,. பிரிட்டன் முதலிய நேசக் கட்சியினரையாவது திருப்திப் படுத்திப் பார்ப்போம் என்கிற மாதிரி, போர் முனையில் யுத்த முதீப்புகளை அதிகப்படுத்தினான். போரைத் தீவிரமாக நடத்தி ஜெர்மனியைத் தோற் கடித்துவிட்டால், அந்தச் செல்வாக்கைக் கொண்டு, போல்ஷ்வெக்கர் களின் செல்வாக்கை முறியடித்து விடலாம், ஜனங்களுடைய நம்பிக் கையையும் சம்பாதித்துக் கொண்டுவிடலாம் என்று என்னென் னவோ நினைத்து ஏதேதோ ஏற்பாடுகள் செய்தான்.

ஆனால், ராணுவத் தலைவர்கள் இவனுக்கு விரோதிகளா யிருந்தார்கள். கெரென்கியினுடைய இந்தப் புதிய யுத்த முயற்சி கள் அவர்களுக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. ஆத்திரங் கொண்டார்கள். கோர்னிலாவ்1 என்ற ஒரு சேனைத் தலைவன் தற்காலிக அரசாங்கமாவது, போல்ஷ்வெஸமாவது, கெரென் கியாம், லெனினாம், எல்லாவற்றையும், எல்லாரையும் நசுக்கிப் போடுகிறேன் பார் என்று வீறு பேசிக்கொண்டு, ஆயிரக்கணக்கான துருப்பு களுடன் பீட்ரோகிராட் நகரத்தை நோக்கிப் படையெடுத்து வந்தான். ஆனால், தலைநகரத்திற்கருகே வருகையில் அவனுடைய துருப்புகள் மாயமாகக் கரைந்து விட்டன. எங்கே போய்விட்டார்கள் அத்தனை பேரும்? போல்ஷ்வெக்கர்களோடு சேர்ந்து கொண்டு விட்டார்கள்! கோர்னிலாவ் கண்முன்னே, கெரென்கியின் அதிகார நிழலிலே, கைகுலுக்கல்களும் கட்டித்தழுவுதல்களும் நடை பெற்றன!

சுருக்கமாகச் சொல்கிறபோது, ஜார் ஆட்சி வீழ்ந்த பிறகு சுமார் எட்டுமாத காலம் வரை, ருஷ்யா முழுவதும் ஒரே கலவரமா யிருந்தது. அரசியல் வாழ்க்கையிலாகட்டும். சமுதாய வாழ்க்கையிலா கட்டும் ஒழுங்கு என்பது தலைமுழுகி விட்டது; அமைதி என்பது ஆரவாரத்திலே அடைக்கலம் புகுந்து கொண்டது. படைபலம், பணபலம், அதிகார பலம் முதலியன வெல்லாம், சமாதானம் தேவை என்கிற ஜனங்களின் ஆவலுக்குப் பலியாயின. இந்த ஆவலின் பிரதிநிதியாக நின்றான் ஒருவன். அவன் யார்? லெனின்.

லெனின் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் ஜனங் களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. அவர்கள் முகத்திலே ஜீவகளை ரேகைவிட்டது. புது உலகம், புது நாகரிகம், புது வாழ்வு என்றெல் லாம் அவர்கள் பேசிக் கொண்டார்கள். லெனின் மீது அவ்வளவு நம் பிக்கை! இந்தக் காலத்தில் , குழப்பங்களும் போட்டிகளும் நிறைந்த இந்த எட்டுமாத காலத்தில், லெனின், தனது லட்சியத்தை அடை வதற்கான பாதையை மிகக் கவனமாகச் செப்பனிட்டுக் கொண்டு வந்தான். இதில்தான் இவனுடைய திறமையும் பெருமையும் இருக் கின்றன. இந்த எட்டு மாத காலத்தில் சுமார் நான்கு மாத காலம் இவன் ஒளிந்திருந்து தன் கட்சியை வலுப்படுத்திக் கொண்டுவந்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

தற்காலிக அரசாங்கமோ இந்த எட்டு மாத காலத்தில் படிப் படியாக க்ஷீணித்துக்கொண்டு வந்தது. கடைசியில் வெம்பிப்போய் கீழே விழும் தறுவாயிலுள்ள ஒரு பழம் மாதிரி ஆகிவிட்டது. இருந் தாலும் அது தன்னை ஊர்ஜிதம் செய்து கொள்ளும் பொருட்டுப் பிடிவாதமாகப் போராடி வந்தது. சமுதாயத்தின் மேல்படியிலிருந்த ஒரு சிலரும், அறிவை மட்டும் கொண்டு பிழைப்பு நடத்தும் மத்திய வகுப்பினர் சிலரும் இதற்குப் பக்க பலமாயிருந்தார்கள். ஆனால் ஓர் அரசாங்கத்திற்கு இந்த பலம் மட்டும் இருந்தால் போதுமா? போதாது என்பதை, தீர்க்கதரிசியான லெனின் நன்கு தெரிந்து கொண்டிருந்தான். இதனாலேயே சமுதாயத்தின் கீழ்ப்படியில் பெரும்பான்மையோராயுள்ள விவசாயிகள், தொழிலாளர்கள் முதலியோருடைய ஆதரவைத்திரட்டுவதிலேயே தன் முழுக்கவனத் தையும் செலுத்தி வந்தான். அந்த ஆதரவும் இவனுக்கு நிறையக் கிடைத்து வந்தது. அந்த ஆதரவைக் கொண்டு அரசாங்க அதிகாரத் தைக் கைபற்றிக் கொள்வதற்கு, தகுந்த சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அதந்தச் சமயம் வந்தவுடன் அதற்கான ஏற்பாடு களையெல்லாம் ட்ரோட்கியைக் கொண்டு செய்வித்தான்.

2. அரசாங்கத்தைக் கைப்பற்ற திட்டம்
1917 - ஆம் வருஷம் நவம்பர் மாதம் ஏழாந் தேதி அகில ருஷ்ய சோவியத் காங்கிர பீட்ரோகிராடில் கூடுவதாக ஏற்பாடு செய்யப்பட்டது. அன்றைய தினமே அரசாங்கத்தைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டுமென்று லெனின் திட்டம் போட்டிருந்தான். குறிப்பிட்டபடி காங்கிர கூடியது. 650 பிரதிநிதிகள் ஆஜராயிருந் தார்கள். இவர்களில் 390 பேர் போல்ஷ்வெக்கர்கள். எனவே, போல்ஷ்வெக்கர்களின் சார்பாகவே சோவியத் காங்கிர பேசு கிறது என்று லெனின் சுட்டிக்காட்டியது பொருத்த மாகவே இருந்தது. வந்திருந்த 650 பேரில் 505 பேர், சோவியத் கையிலேயே அரசாங்க நிருவாகம் இருக்கவேண்டுமென்று அபிப்பிராயமுடைய வராயிருந் தனர். தனக்கு வெற்றி நிச்சயம் என்பதை லெனின் திரப்படுத்திக் கொண்டான்.

காங்கிர கூடியதும் வழக்கமான வாதப்பிரதி வாதங்கள் நடை பெற்றுக் கொண்டிருந்தன. இப்படி நடைபெற்றுக் கொண்டிருக் கிறபோது, ஏற்கனவே செய்திருந்த ஏற்பாட்டின்படி போல்ஷ் வெக்கப் படை வீரர்கள், அரசாங்கக் காரியால யத்தையும், தந்தி ஆபீ, தபாலாபீ, டெலிபோன் ஆபி, அரசாங்க பொக்கிஷ சாலை முதலிய முக்கிய தாபனங்களையும் சுவாதீனப்படுத்திக் கொண்டுவிட்டார்கள். இங்கெல்லாம் வேலை செய்து கொண்டி ருந்த மந்திரிகள், முக்கியமான உத்தியோகதர்கள் முதலிய பலரை யும் கைது செய்து பந்தோபதில் வைத்துவிட்டார்கள். பிரதம மந்திரி யான கெரென்கி மட்டும் பெண் வேஷம் தரித்துக் கொண்டு தப்பி யோடிவிட்டான். தற்காலிக அரசாங்கம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இந்த தகவல், வாதப் பிரதி வாதங்களில் மும்முரமாக ஈடுபட்டிருந்த சோவியத் காங்கிரசுக்கு எட்டியது. உடனே, இனி எல்லா அரசாங்க அதிகாரிகளுக்கும் சோவியத்துகளினுடையவே என்ற தீர்மானம் நிறைவேறியது. தற்காலிக அரசாங்கம்போய், சோவியத் அரசாங்கம் தாபிதமாயிற்று. லெனினும், பகிரங்கமாகக் காங்கிரசில் வந்து கலந்து கொண்டான். காங்கிரசில் காரியங்கள் துரிதமாக நடைபெற்றன. மந்திரி சபை அமைந்தது. மொத்தம் பன்னிரண்டு மந்திரிகள். லெனின், மந்திரி சபையின் தலைவன்; ட்ரோட்கி, அந்நிய நாட்டு மந்திரி; டாலின், சிறுபான்மைச் சமூகத்தினரின் நலன்களைக் கவனிக்கும் மந்திரி. இப்படி இலாகாக் கள் பிரிக்கப்பட்டு, தக்கவர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டது.

மந்திரிசபை அமைந்த பிறகு, மகாநாட்டில் இரண்டு தீர் மானங்கள் நிறைவேறின. ஒன்று, ஜெர்மனியோடு நடைபெறும் யுத்தத்தை நிறுத்திச் சமாதானம் செய்துகொள்ள வேண்டுமென்பது. மற்றொன்று, விவசாய நிலங்களின் மீது நிலச்சுவான்தார்களுக்கு இருந்த உரிமைகள் ரத்து செய்யப்பட்டு, அவை, அந்த நிலங்கள், தேசீய சொத்தாகக் கருதப்பட வேண்டு மென்பது. இந்தத் தீர்மானங் கள் நிறை வேறின பிறகு காங்கிர கலைந்துவிட்டது.

1917-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் நடைபெற்ற புரட்சியினால் சுயேச்சாதிகார ஆட்சி வீழ்ந்தது. எட்டு மாதங்கழித்து நவம்பர் மாதம் முதல் வாரம் நடைபெற்ற புரட்சியினால் ஜன ஆட்சி தாபிதமாயிற்று.1 ஒரே வருஷத்தில் இரண்டு புரட்சிகள்! ஒன்று அழிப்பதற்கு; மற்றொன்று ஆக்குவதற்கு. இரண்டிற்கும் சூத்திரதாரி யாக இருந்தவன் லெனின். முந்திய புரட்சியை நாட்டுக்கு வெளியே இருந்து நடத்தினான். பிந்திய புரட்சியை நாட்டுக்குள்ளிருந்தே நடத்தினான்.

இந்த இரண்டாவது புரட்சிக்குப் பிறகுதான், லெனின் பிறக் கிறபோதே ஒரு தலைவனாகப் பிறந்தான் என்ற உண்மையைப் பொதுவாக உலக மகாஜனங்களும், சிறப்பாக ருஷ்ய மகாஜனங் களும் தெரிந்து, கொண்டார்கள்.

3. லெனின் கண்ட காட்சி
அரசாங்க நிருவாகத்தைக் கைப்பற்றிக்கொண்டு விட்டான் லெனின். சுக்கானைப் பிடித்துக் கொண்டிருக்கிற மீகாமன் போல் கம்பீரமாக நிற்கிறான். அரசாங்க அமைப்போ புதிய மாதிரி. ஜனங் களுடைய அரசாங்கம் ஜனங்களுக்காக அரசாங்கம். ஜனங்களுக்கே இது புதிது. இதனை ருஷ்ய சமுதாயமென்னும் சமுத்திரத்தில் இப்பொழுதுதான் முதன் முதலாக மிதக்க விட்டிருக்கிறான் லெனின். பார்க்கப் போனால், இஃதொரு பரிசோதனை. இதற்கு மகத்தான துணிச்சல் வேண்டும். ஆனால் ருஷ்ய மக்களின் அதிருஷ்ட வசமாக, லெனின் ஒரு துணிச்சல்காரனாக மட்டும் இல்லை; வீர னாகவும், தலைவனாகவும் இருந்தான். இவன் மேற்படி அரசாங்கக் கப்பலில் சுக்கானை எந்த நிமிஷத்தில் பிடித்தானோ அந்த நிமிஷத்தி லிருந்தே இவனைச் சுற்றி எவ்வளவு கொந்தளிப்பு! எவ்வளவு கடுமை யான புயற்காற்று! மேலே மேகங்கள் குமுறின. கீழே திமிங்கிலங்கள் இவன் காலைப்பற்றி இழுத்தன. ஆனால் அசையாத தம்பம்போல் இவன் உறுதியாக நின்றான்; எத்தனையோ பேருடைய சாபங் களுக்கும் கோபங்களுக்கும் ஆளானான். எதற்காக? ருஷ்ய சமுதாயத் தின் நல்வாழ்வுக்காக; உலக மகாஜனங்களின் எதிர்கால க்ஷேமத்திற்காக.

அப்பொழுது லெனின், தன்னைச் சுற்றி எந்த மாதிரியான காட்சியைக் கண்டான்? ருஷ்ய ராணுவம் துண்டு துணுக்குகளாகச் சிதறுண்டு கிடந்தது. அது மறுபடியும் சக்திபெற்றுச் சண்டை போடும் என்று சொல்வதற் கில்லாமல் இருந்தது. ஆனால் ஜெர்மனி யோடு சண்டை மட்டும் நடந்து கொண்டிருந்தது. தேச முழுவதும் ஒரே கலவரம். போர் முனையிலிருந்து ஓடி வந்து விட்டவர்களும், வழிப்பறிக் கொள்ளைக்காரர்களும் தங்கள் இஷ்டப்படி காரி யங்கள் செய்துகொண்டு போனார்கள். சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு அடியோடு சீர்குலைந்து போயிருந்தது. உணவுப் பொருள் கள் அகப்படுவது அருமையாகிவிட்டது. ஜனங்களோ பட்டினி கிடந்தனர். பழைய ஜார் ஆட்சி முறையின் பிரதிநிதிகள், புரட்சியை அடக்கிப் போடுவதற்குத் தயாராகக் காத்துக் கொண்டிருந்தனர். பழைய அரசாங்கத்தின் ஊழியர்கள், புதிய அரசாங்கத்துடன் ஒத் துழைக்க மறுத்துவிட்டார்கள். பாங்கிக்காரர்கள் பணங் கொடுக்க மறுத்து விட்டார்கள். தந்திக் குமாதாக்கள்கூட, தந்தி அனுப்ப முடியாதென்று சொன்னார்கள். எப்படிப்பட்ட மனோதிடங் கொண்டவனையும் பிரமிக்கச் செய்யக்கூடிய ஒரு கடினமான நிலைமை ஏற்பட்டு விட்டது.

அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக்கொண்டதும் லெனின் செய்த முதல் காரியம் என்னவென்றால், ஜெர்மனியோடு சமாதானம் செய்துகொள் வதற்கான நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டது தான். அப்பொழுது போர்முகத்தில் சேனாதிபதியாக இருந்தவன் துக் கோனியன்1 என்பவன். யுத்தத்தை நிறுத்தி ஜெர்மன் சேனைத் தலை வனுடன் சமாதானப் பேச்சுத் தொடங்குமாறு லெனின் அவனுக்கு டெலிபோன் மூலம் உத்தரவு கொடுத்தான். ஆனால் அவன் இதற்குக் கீழ்ப்படிய மறுத்துவிட்டான். உடனே, அவனை வேலையிலிருந்து விலக்கியிருப்பதாகவும், கிரிலென்கோ2 என்ற சேனைத் தலைவனைப் படைமுகத்திற்கு அனுப்பி யிருப்பதாகவும், அவனிடத்தில் பொறுப்பை ஒப்புவித்து விடுமாறும், பீட்ரோகிராட்டிலிருந்து கண்டிப்பான உத்தரவு சென்றது.

கிரிலென்கோ யுத்த களத்திற்குச் சென்றான்; பதவியை ஒப்புக் கொண்டான். சோர்ந்தும், கோபமடைந்தும் இருந்த போர்வீரர்கள், யுத்த முனையிலேயே துக்கோனினை உயிரோடு கொளுத்தி விட்டார்கள்.

ருஷ்யாவுக்கும் ஜெர்மனிக்கும் சமரஸப் பேச்சுகள் தொடங்கின. ப்ரெட் - லிடோவ்க்2 என்ற ஊரில் இரண்டு நாட்டுப் பிரதிநிதி களும் கூடினார்கள். ருஷ்யர்களின் பலவீனமான நிலைமையை நன்கு தெரிந்து கொண்டிருந்த ஜெர்மானியர்கள், மிகக் கடுமையான நிபந்தனைகளை விதித்தார்கள். இந்த நிபந்தனைகளை ஒப்புக்கொள் வதைக் காட்டிலும், ருஷ்யாவென்று பெயர் சொல்லிக்கொண்டு தனியாக ஒரு தேசம் இல்லாமலிருப்பதே நல்லதென்கிற மாதிரியாக போல்ஷ்வெக்கர்களில் பெரும்பாலோர் அபிப்பிராயப்பட்டார்கள். ருஷ்யப் பிரதிநிதிக் கூட்டத்தின் தலைவனாயிருந்தவன் ட்ரோட்கி. இவன், தனது வாசாலகத்தையெல்லாம் உபயோகப்படுத்தி, ஜெர்மானியர்களைச் சிறிது இறங்கி வரும்படி செய்ய எவ்வளவோ முயன்றான். ஜெர்மனியால் வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளுக்குச் சுயநிர்ணய உரிமை அளிக்க வேண்டுமென்று மன்றாடினான். பயனில்லை. இன்னும் சாதாரணமான பல கோரிக்கை களைக் கிளத்தினான். ஜெர்மானியர்கள் பிடிவாதமா யிருந்துவிட்டார்கள். எனவே, சமரஸப் பேச்சுகள் முறிந்தன. ஜெர்மனியர், மீண்டும் யுத்த கோஷம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுடைய படை, பீட்ரோகிராட் நகரத்தை நோக்கி வரத் தொடங்கியது.

4. சமாதான ஒப்பந்தம்
இந்த நிலைமையில் என்ன செய்வது? பார்த்தான் லெனின். ருஷ்யப் பொது ஜனங்கள், சமாதானத்தில் எவ்வளவு ஆவலுடை யவர்களா யிருக்கிறார்களென்பது இவனுக்கு நன்றாகத் தெரியும். யுத்த களத்தில் போர் வீரர்கள் ஓர் அடிகூட முன் எடுத்து வைக்கத் தயாராயில்லை என்பதையும் இவன் தெரிந்து கொண்டிருந்தான். எனவே, ஜெர்மானியர்கள் கூறுகிற சமாதான நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தான். இதனால் இவன் மீது, இவனுடைய கட்சியினராகிய போல்ஷ்வெக்கர் களுக்கு அதிக அதிருப்தி ஏற்பட்டது. இவர்களைச் சமாதானப்படுத்தி நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளச் செய்வது இவனுக்குப் பெரிய பிரயாசையாகி விட்டது. முடிவாக, மேலே சொன்ன ப்ரெட் - லிடோவ்க் என்ற ஊரிலேயே 1918-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் மூன்றாந் தேதி ஜெர்மானியப் பிரதிநிதிகளும் ருஷ்யப் பிரதிநிதிகளும் சமாதான ஒப் பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். இதற்கு ப்ரெட் - லிடோவ்க் ஒப்பந்தம் என்று பெயர். இதனால் ஏற்பட்ட பகிரங்கமான பலன் என்னவென்றால், ருஷ்யாவின் மேற்குப் பக்கத்தில் அதற்குச் சொந்த மாயிருந்த பெரும்பாலான பிரதேசம் ஜெர்மனியைப் போய்ச் சேர்ந்தது. போல்ஷ் வெக்கர்கள், தங்கள் அரசாங்கத் தலைமை தானத்தை பீட்ரோகிராட்டி லிருந்து மாக்கோவுக்கு மாற்றிக் கொண் டார்கள். அது முதற்கொண்டு, மாக்கோவே, ருஷ்யாவின் தலை நகரமாயிந்து வருகிறது.

5. நிலப் பங்கீடு
இரண்டாவதாக, லெனின் நில விஷயத்தைப் பற்றிக் கவனிக்கத் தொடங்கினான். ஏற்கனவே சோவியத் காங்கிரசில், நிலச்சுவான்தார் களுடைய நிலங்களும், மற்ற சொத்துக்களும் பறிமுதல் செய்யப் பட்டு கிராம சோவியத்துகளின் கையில் தேசீயசொத்தாக ஒப் படைக்கப்படு மென்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதல்லவா? இந்தத் தீர்மானத்தைப் பல உத்தரவுகளின் மூலம் அனுஷ்டானத் திற்குக் கொண்டுவந்தான். இது சம்பந்தமாக இவன் குறை கூறப்படு கிறானாதலின், இதைப்பற்றிச் சிறிது விதரித்துக் கூறுவது நல்லது.

தற்காலிக அரசாங்கத்தின் நிருவாக காலத்தில், அதனுடைய பலவீனத்தை உணர்ந்த நிலச்சுவான்தார்கள், போல்ஷ்வெக்கர்கள் அதிகார பதவியை ஏற்றுக் கொண்டால், எங்கு தங்கள் நிலங்களைக் பறிமுதல் செய்துவிடுவார்களோ என்று அஞ்சி, ஒரு சூழ்ச்சி செய் தார்கள். தங்களுடைய நிலங்களைச் சிறுசிறு தளைகளாகப் பிரித்து, தங்களிடத்தில் ஏதோ ஒரு வகையில் கட்டுப்பட்டிருக்கிறவர் களுக்குச் சுவாதீனப்படுத்தி விட்டார்கள். தங்களுடைய சொத்துக் களில் சிலவற்றை அந்நியர்களுக்கு மாற்றிவிட்டார்கள். இப்படித் தற் காலிகமாகப் பிரித்தும் மாற்றியும் கொடுத்து, பின்னாடி தக்க சமயம் வருகிறபோது எல்லாவற்றையும் தங்களுக்கே திருப்பி மாற்றிக் கொண்டுவிடலாமென்பது இவர்கள் எண்ணம். விவசாயிகள் இதன் சூட்சமத்தைத் தெரிந்து கொள்ளாமா லிருப்பார்களா? அவர்கள் ஏழைகள்தான். ஆனால் முன்கூட்டி வர ப்போவதை ஊகித்துக் கொண்டு விடும் சக்தி அவர்களுக்கு உண்டு. இந்த நிலமாற்ற விவகாரங்களை நிறுத்தச் செய்ய வேண்டுமென்று தற்காலிக அரசாங்கத்திற்கு விண்ணப்பித்துக் கொண்டார்கள். ஆனால் அஃது, அந்தத் தற்காலிக அரசாங்கம், எல்லோரையும் திருப்தி செய்ய முயன்று கடைசியில் எல்லோருடைய அதிருப்தியையும் சம்பாதித் துக்கொள்கிற வேலையில் சுறுசுறுப்பாக இருந்தது.

பார்த்தார்கள் விவசாயிகள். அரசாங்கத்தை நம்புவதில் பிரயோஜன மில்லை என்று தெரிந்துகொண்டார்கள். தாங்களே, நிலச்சுவான்தார் களிடமிருந்து நிலங்களைப் பலாத்காரமாகச் சுவாதீனப்படுத்திக் கொண்டும், தங்களுக்குள் பங்குபோட்டுக் கொண்டும், வந்தார்கள். எதிர்த்து நின்ற நிலச்சுவான்தார்கள் கொலை செய்யப்பட்டார்கள். அவர்களுடைய சுகபோக வாழ்க்கை தலங்கள் சூறையாடப்பட்டன; தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் ஏராளமான சொத்துக்களுக்கு நஷ்டம் உண்டாயிற்று. இந்தச் சொத்து நஷ்டம் சமுதாயப் பொதுவுக்கு ஒரு கஷ்டமல்லவா?

விவசாயிகள் இப்படி நிலங்களைப் பங்கு போட்டுக் கொள் கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டு, போர் முகத்திலிருந்த படை வீரர்கள், லட்சக் கணக்கில் கிராமங்களுக்குத் திரும்பி வந்து, இந்தப் பங்கு போட்டுக் கொள்ளும் வேலையில் ஈடுபட்டார்கள். ஏற்கனவே இவர்கள் விவசாயி களாக இருந்தவர்கள்தானே? போர் முகத்திலும் இவர்களுக்குச் சரியான உடையோ உணவோ கிடையாது. அதிகமாகச் சோர்வுற்றுக் கிடந்தார்கள். வயிற்றுப் பிழைப்புக்கு ஏதேனும் ஒரு வழி ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமல்லவா? எறும்புக் கூட்டங்கள் மாதிரி, கும்பல் கும்பலாகக் கிராமங்களுக்குள் நுழைந்தார்கள். எந்த அரசாங்கந்தான் இதனைத் தடுக்க முடியும்? அஃது எவ்வளவு வல்லமை பொருந்திய அரசாங்கமாகத்தான் இருக் கட்டுமே? விவ சாயிகளின் ஆக்கிரமிப்புச் செயலைக் கண்டித்து விடுவதால் மட்டும் ஏதேனும் நன்மை உண்டாகுமா? இதனால்தான் லெனின், புத்தி சாலித்தனமாக, தேசத்திலுள்ள நிலமனைத்தையும் ஜனங்களுடைய சொத்தாக்கிவிட்டான். ஜார் அரசனுக்கும், அவனுடைய குடும்பத் தினருக்கும், மத தாபனங்களுக்கும் சொந்தமா யிருந்த எல்லாச் சொத்துக்களும் பங்கிடப்பெற்று விவசாயிகளுக்கு விநியோகிக்கப் பெற்றன. இந்த விநியோக வேலையை யார் செய்வது? அந்தந்தக் கிராமக் கமிட்டிகளின் வசத்திலேயேவிட்டான். இந்தக் கமிட்டி களோ அந்தக் கிராம விவசாயிகளால் தெரிந்தெடுக்கப்பட்டவை. விவசாய சம்பந்தமான பரிசோதனைகள் நடத்துவதற்காக மட்டும் முக்கியமான இடங்களில் சில நிலங்களை அரசாங்கமானது, தனக்கென்று வைத்துக் கொண்டது. ஆனால் இவைகளைக் கூட விவசாயிகள் சிறிது காலங்கழித்துத் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்டு விட்டார்கள். நிலத்தேவை அவ்வளவு அதிக மாயிருந்தது.

நிலச்சுவான்தார்களை அவர்களுடைய நிலத்திலிருந்து விவ சாயிகள் அப்புறப்படுத்தி விட்டது போலவே, நகரத் தொழிற் சாலை களில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள், பல இடங் களில் தங்களுடைய முதலாளிகளைத் துரத்திவிட்டு, தாங்களே தொழிற்சாலை களை ஆக்கிரமித்துக் கொண்டு விட்டார்கள். ஆக்கிரமித்துக் கொண்டு என்ன செய்வது? அவைகளை நடத்த வேண்டுமே? இதற்குப் பணமும், திறமையும், நிருவாக ஒழுங்கும் தேவை யல்லாவா? எல்லாம் பொது வுடைமை என்கிற உற்சாகத் திலே, தொழிலாளர்கள், தொழிற்சாலைகளில் வேலை நடைபெற வொட்டாதபடி செய்து விட்டார்கள். இப்படி வேலை யற்றுப்போன தொழிற்சாலைகளை என்ன செய்வது? ஆடம்பர வதுக்கள் எது வும் வேண்டியதில்லையென்றாலும், வாழ்க்கைக்கு அவசியம் தேவை யாயிருக்கிற துணிமணி களாவது, ஜனங்களுக்கு, ஏதோ ஒன்றுக்குக் கால் விகித மேனும் கிடைக்கச் செய்ய வேண்டுமல்லவா? மேற்படி தொழிற் சாலைகளை மறுபடியும் முதலாளிகள் வசம் ஒப்புவித்து, வேலை தொடங்கச் செய்ய, சோவியத் அரசாங்கத்திற்கு இஷ்ட மில்லை. அப்படிச் செய்வது, முதலாளித்துவத்தின் ஆக்கத்திற்கு, தானே தூண்டுகோல் போட்டதாகு மல்லவா?

6. அரசாங்க அமைப்பும் நோக்கமும்
இன்னும் சில இடங்களில், தேசத்தில் ஏற்பட்டிருக்கிற கலக் கத்தை ஆதாரமாகக்கொண்டு, பொதுவுடைமை இயக்கம் வளரக் கூடாதென்ற நோக்கமுடைய முதலாளிகளிற் சிலர், தங்கள் வசத்த லிருந்த தொழிற் சாலைகள் சரியாக வேலை செய்ய வொட்டாத படி விஷமம் செய்து வந்தார்கள். இவற்றைத் தடுத்துத் தொழிற்சாலை களைக் காப்பாற்ற வேண்டியது அவசியமாயிருந்தது. எனவே, இந்தப் பல காரணங்களையும் உத்தேசித்து, எல்லாத் தொழிற்சாலை களையும் அரசாங்கத்தாரே சுவாதீனப் படுத்திக்கொண்டு விட்டார்கள். இதுதான் சமயமென்று லெனின், தேச முழுமைக்கும் பொதுவுடை மைத் தத்துவத்தைக் கொண்டு புகுத்தினான். அரசாங்கத்தின் அமைப்பையும் நோக்கத்தையும் தெளிவு படுத்திக்காட்டினான். 1918 - ஆம் வருஷம் ஜூலை மாதம் பத்தாந்தேதி அவன் வெளியிட்ட அறிக்கையின் முதல் பாகம் வருமாறு:

1.  தொழிலாளர்கள், படைவீரர்கள், விவசாயிகள் ஆகியோருடைய பிரதிநிதிகள் அடங்கிய சோவியத்து களைக் கொண்ட குடியரசு நாடாக ருஷ்ய இனி இருக்கும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. எல்லா மத்திய, தல அதிகாரங்களும் இந்தச் சோவி யத்துகளின் கையிலேயே ஒப்படைக்கப்படுகின்றன.

2.  சுதந்திரமாயுள்ள ஜாதியினர், அவர்கள் விருப்பப்படி ஒன்று சேரலாமென்கிற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, தேசீயக் குடியரசு நாடு களின் சமஷ்டியாக, ருஷ்ய சோவியத் குடியரசு தாபிக்கப்படுகிறது.

3.  மனிதனை மனிதன் சுரண்டுவதைத் தடுக்கும் பொருட்டும், சமுதாயத்தைத் தரவாரியாகப் பிரிவினை செய்வதை நிறுத்தும் பொருட்டும், சுரண்டுபவர்களைக் கண்டிப்பாக அடக்கிப்போட வேண்டு மென்பதற் காகவும், சமுதாயத்தை அபேதவாத முறையில் அமைக்க வேண்டு மென்பதற்காகவும், எல்லா நாடுகளிலும் அபேத வாதம் வெற்றி பெற வேண்டுமென்பதற்காகவும் கீழ்க் கண்டவாறு உத்தரவு செய்யப் படுகிறது:

(அ) நிலங்களின் மீது தனிப்பட்டவர்களுக்குள்ள சொந்த பாத்தியதை இதன் மூலம் ரத்து செய்யப் படுகிறது. எல்லா நிலங்களும், தேசீய சொத்தாகக் கருதப்பட்டு, உழைப்பாளிகளின் வசத்தில் ஒப்பு விக்கப்படும். இதற்கு முந்தி நிலத்துக்குச் சொந்த காரர்களாயிருந்தவர் களுக்கு எவ்வித நஷ்ட ஈடும் கொடுக்கப்படமாட்டாது. நியாய மான முறையில் எல்லோருக்கும் நிலங்கள் பங்கிட்டுக் கொடுக்கப்படும். ஆனால் எல்லோருக்கும் நிலத்தை உபயோகப்படுத்திக் கொள்ள மட்டுமே பாத்தியதை உண்டு.

(ஆ) காட்டுப் பிரதேசங்கள், பூமியின் கீழ் உள்ள சுரங்கப்பொருள்கள், தேசீய முக்கியத்துவம் பெற்ற நீர் வசதிகள், கால் நடைகள், அவற்றைச் சேர்ந்தவைகள், மாதிரி விவசாயப் பண்ணைகள், விவசாய முயற்சிகள் முதலியயாவும் தேசீய சொத்துக்களாகவே இனிக் கருதப்படும்.

(இ) தொழிற்சாலைகள், பொருள் விற்பனை தா பனங்கள், சுரங்கங்கள், ரெயில்வேக்கள் முதலிய உற்பத்தி சாதனங்களும், போக்கு வரத்து சாதனங் களும், தொழிலாளர் - விவசாயிகளடங்கிய சோவியத் குடியரசின் கைக்குப் பரிபூரணமாக மாறுவதற்கு முன்னேற்பாடாகவும், சுரண்டு பவர்களைக் காட்டிலும் உழைப்பாளிகளின் அந்ததுதான் மேலானதென்பதை ஊர்ஜிதம் செய்யும் பொருட்டும், தொழில் தாபனங்களி னுடைய நிருவாகம் இனி , தலைமைப் பொருளா தாரக் கவுன்சிலின் வசம் ஒப்படைக்கப்படும்.

சுமார் மூன்று வருஷ காலம், இந்தப் பொதுவுடைமைக் கொள் கையை, சோவியத் அரசாங்கம் கண்டிப்பான முறையில் அனுஷ் டித்து வந்தது. இதற்கு யுத்தகாலப் பொதுவுடைமை என்ற பெயர்.

முக்கியமான இந்த விஷயங்களைக் கவனித்து விட்டு, லெனின் பிறகு அரசாங்க யந்திரத்தைப் பழுது பார்க்கத் தொடங்கினான். முறுக்காணிகளும் திருகாணிகளும் நிறைய இருந்தன. இவைகளை யெல்லாம் நிர்த்தாட்சண்யமாக அப்புறப்படுத்தினான். உதாரண மாக, பழைய நிருவாகத்தின் கீழ் வேலை பார்த்துக்கொண்டிருந்த அரசாங்க உத்தியோகதர்கள் புதிய நிருவாகத்தின் கீழ் வேலை செய்வதற்கு முணுமுணுத்தார்கள்; ஒத்துழையாமையை அனுசரித் தார்கள். இவர்களெல்லோரையும் கண்டிப்பாக உத்தியோகத் தினின்று விலக்கிவிட்டான். வேலையில்லாதவர் களுக்கு உணவு கிடையாது என்று எல்லோருக்கும் பொதுவாக ஒரு விதியை ஏற் படுத்தினான். பாங்கி முதலாளிகள், தங்களுடைய இரும்புப் பெட்ட கங்களைத் திறந்து பணத்தை எடுத்துப் புழக்கத்திற்குக் கொண்டு வர மறுத்தார்கள். அவற்றை வெடி மருந்து வைத்துத் திறந்து பணத்தைச் செலாவணிக்குக் கொண்டுவரச் செய்தான். இப்படிச் சில்லரையாக ஏற்பட்ட பல தடைகளைக் கொஞ்சங்கூட தயை காட்டாமல் விலக் கினான்.

7. பல நாடுகளின் எதிர்ப்பு
ருஷ்யர்கள், ஜெர்மானியர்களுடன், ப்ரெட் - லிடோவ்கில் தனித்து ஒப்பந்தம் செய்து கொண்டது நேசக் கட்சியினருக்குப் பிடிக்கவில்லை. யுத்த நடுவில், ருஷ்யர்கள் தங்களைக் கைவிட்டதாக நினைத்தார்கள். தவிர, ருஷ்யாவில் பொதுவுடைமைத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சோவியத் அரசாங்கம் ஏற்பட்டி ருப்பது, முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட வல்லரசுகளுக்குப் பிடிக்க வில்லை. தங்கள் நாடுகளில் புரட்சியும் பொதுவுடைமைக் கொள்கையும் பரவி விடுமோ என்று அஞ்சினார் கள். எனவே, சோவியத் ஆட்சி முறை, ருஷ்யாவில் நிலைபெறுவதற்கு முன்னரே அதனை அழித்துவிடுவது தங்கள் கடமை யென்று கருதி விட்டார்கள். இதற்காக, படை பலம், பணபலம் முதலியன யாவும் திரட்டப்பட்டன. ஐயோ, 1918-ஆம் வருஷம் பதினான்கு தேசங்கள், தங்கள் படை பலத்துடன் ருஷ்யாவை வளைத்துக் கொண்டன. ருஷ்யாவுக்குள் எந்தவிதமான உணவுப் பொருள்களும் செல்ல வொட்டாதடி தங்கள் கப்பற்படைகளைக் கொண்டு தடுத்தன. 1918-ஆம் வருஷத் தொடக்கத்திலிருந்து 1920-ஆம் வருஷம் முடிய, சுமார் மூன்று வருஷ காலம் இந்த வல்லரசுகள் சோவியத் அர சாங்கத்தையும் ருஷ்ய மகாஜனங்களையும் படுத்தின பாடு சொல்லத் தரமன்று. பிரிட்டன் மட்டும் இந்தக் கைங்காரியத்திற்காக, சுமார் நூறு கோடி ரூபாய் செலவழித்தது

இந்த வல்லரசுகள், ஏற்கனவே ஜார் அரசாங்கத்தின் கீழ் வேலை செய்துகொண்டிருந்து, இப்பொழுது சோவியத் அரசாங்கத் திற்கு விரோதமாகக் கலகக் கொடி தூக்கியிருக்கிற ராணுவத் தலை வர்கள் பலருக்கும் ஆயுதங்கள் உதவின; ஆட்களை அனுப்பின. எல்லாம் ஜனநாயகத்தின் பெயரால்! ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்குத் தான்!

இப்படி ஒன்று திரண்டெழுந்த ஏகாதிபத்திய சக்தியை எதிர்த்து நிற்பது, சோவியத் அரசாங்கத்தின் இன்றியமையாத கடமையாயிற்று. அப்படி எதிர்த்து நின்றிராவிட்டால், அன்றே மடிந்துபோயிருக்க வேண்டியதுதான். எனவே, அது, சீர்குலைந்துபோயிருந்த தனது ராணுவத்தை முதலில் ஒழுங்குபடுத்தியது. இந்த வேலையை ட்ரோட்கி மிக அருமையாகச் செய்தான். இவனுடைய கண்டிப்பான நிரு வாகத்தின்கீழ், சோவியத் ராணுவமானது, ஒழுங்கிலும், ஒழுக்கத்திலும், திறமையிலும் வெகுவாக முன்னேறியது. ராணுவத்தின் எண்ணிக்கையும் லட்சக் கணக்கில் பெருகியது.

சோவியத் படைக்கு செம்படை என்றும், புரட்சி விரோதி களின் படைக்கு வெண்படை யென்றும் பெயர். சோவியத் செம்படை, வெண்படை களை எதிர்த்துப் பதினேழு போர்முகங்களில் ஒரே சமயத்தில் போராடி யிருக்கிறது என்று சொன்னால், அஃதொன்றோ, ட்ரோட்கியின் நிருவாகத் திறமைக்கு அத்தாட்சியல்லவா? இந்த இரண்டு படைகளுக்கும் மத்தியில் தேச மகாஜனங்கள் அகப்பட்டுக் கொண்டு திணறினார்கள். உயிரழிவும் பொருட் சேதமும் சொல்லி முடியாது. சுமார் எழுபது லட்சம் ஜனங்கள் அகால மரணமடைந் தார்கள். உக்ரேன் என்ற பிரதேசத்தின் நிருவாகம் மட்டும், இந்தச் சண்டை நடைபெற்ற மூன்று வருஷத்தில், செம்படைக்கும் வெண் படைக்குமாகப் பதினான்கு முறை கைமாறியது!

இந்த நிலையில் சமுதாயமானது எப்படி ஒழுங்காக இயங்கிக் கொண்டிருக்க முடியும்? உணவுப் பொருள்கள் உற்பத்தியாவது குறைந்து விட்டது. தொழிற்சாலைகள் சரியாக நடைபெறவில்லை. 1913 -ஆம் வருஷத்தில் ருஷ்யா முழுவதிலும் உற்பத்தியான விவசாயப் பொருள்கள் எவ்வளவோ அதில் மூன்றில் ஒரு பங்குதான் 1920-ஆம் வருஷத்தில் உற்பத்தி யாயிற்று. வயிற்றுப் பசிக்குச் சாப்பாடு அகப் படாது; அடுப்பெரிக்கக் கரி அகப்படாது. அநேக சந்தர்ப்பங்களில், ஜனங்கள், சிறப்பாக பீட்ரோகிராட் நகரத்தில் வசித்துக் கொண்டி ருந்தவர்கள், பசியையும் குளிரையும் தாங்க முடியாமல் மரணத்தின் வாயிற்படியை எட்டிப் பார்த்திருக்கிறார்கள். இறந்து தான் அமைதி பெற வேண்டுமென்ற ஒரு நிர்க்கதியான திதியில் ஜனங்கள் இருந்தார்கள். இந்த கால நிலையை ஓர் அறிஞன் வருணிக்கிறான் :-

ஜனங்களுடைய நிலைமை மிக மோசமாயிருந்தது. உலகத்திலுள்ள எல்லா வல்லரசுகளினுடையவும் துவேஷமோ சொல்லி முடியாது. இந்தத் துவேஷம் காரணமாக இவை, கிளப்பிவிட்டு ஆதரவும் தந்து வந்த போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன; கடுமை யாகவும் நடைபெற்றன. இந்த நிலைமையில் சோவியத் அரசாங்கம், சாகாமல் உயிர் வைத்துக்கொண்டிருக்கத் தான் முடிந்தது.

1920-ஆம் வருஷக் கடைசியில் தான் வல்லரசுகளின் தலையீடு நின்றது. அவைகளும் வருஷக்கணக்காகச் சண்டை போட்டுச் சண்டை போட்டு ஓய்ந்து போயிருந்தன. எனவே, வேறு வழியின்றி, தங்கள் துருப்புகளை ருஷ்யாவிலிருந்து வாப வாங்கிக் கொண்டு விட்டன. இந்தத் துருப்புகளோடு, சோவியத் அரசாங்கத்தின் கொள்கைகளை அங்கீகரிக்க முடியாத ருஷ்யர்களும், அந்நியர் களும், எல்லோரும் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள். ருஷ்யாவில் ஏற்பட்ட கலகங்களைச் சாதகமாகக் கொண்டும், அந்நிய வல்லரசுகளின் தூண்டுதலின் பேரிலும், நூற்றாண்டுக் கணக்காக ருஷ்ய ஏகாதிபத்தியத்திற் குட்பட்டிருந்த லாட்வியா, லிதூனியா, எதோனியா முதலிய நாடுகள் சுதந்திரக் கொடி தூக்கின. சோவியத் அரசாங்கம் மிகுந்த ராஜதந்திரத்துடன் இவைகளின் சுதந்திரத்தை அங்கீகரித்து, இவைகளோடு சிநேக ஒப்பந்தமும் செய்து கொண்டது.1 கடைசியில், 1920-ஆம் வருஷம் நவம்பர் மாதத்தோடு எல்லாச் சச்சரவுகளும் ஒருவாறு தீர்ந்தன; அமைதி ஏற்பட்டது.

ஆனால் சோவியத் அரசாங்கம் இந்த அமைதியிலே ஆறுதல் அடைந்துவிடவில்லை. யுத்தகாலப் பொதுவுடைமைத் திட்டத்தை முன்னைவிட அதிக தீவிரமாக அனுஷ்டிக்கத் தொடங்கியது. அதா வது, எல்லாத் தொழில்களும் தேசீய மயமாக்கப்பட்டன. தனிப்பட்ட வர்கள் லாபத்திற்காக வியாபாரம் செய்யக்கூடாதென்று தடுக்கப் பட்டார்கள். பொதுவுடைமை முறையில் விவசாயம் நடைபெற வேண்டுமென்று உத்தரவு பிறந்தது. ரெயில், தபால், தந்திக் கட் டணங்கள் முதலியன ரத்து செய்யப்பட்டன. நாணயச் செலாவணி என்பது இல்லாதொழிந்தது. இந்த மாதிரி புதுப்புது உத்தரவுகள் பிறந்துகொண்டிருந்தன.

8. பொதுவுடைமைத் திட்டத்தின் பலன்
இவைகளினால் உண்டான பலன் என்ன? கிராமங்களிலுள்ள விவசாயிகள், தங்களுக்குத் தேவையான அளவு மட்டும் உணவுப் பொருள் களை உற்பத்தி செய்து கொண்டார்கள். அதனால் நகர வாசிகளுக்குப் போதிய ஆகாரம் கிடைப்பது அரிதாயிற்று. கிராமங் களிலிருந்து உணவுப் பொருள்கள் சென்றால் தானே, நகரவாசிகள் சாப்பிட முடியும்? கிராம விவசாயிகள், விற்பனைக்கென்று உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய இஷ்டப்படவில்லை. விற்றால் பணங்கிடைக்காதென்பதை, அவர்கள் தெரிந்து கொண்டு விட்டார் கள். நாணயப் பரிவர்த்தனை ரத்து செய்யப் பட்டுவிட்டதல்லவா? பண்டமாற்றல் விவகாரந்தானே? நகரவாசிகளின் பண்டங்கள் கிராம வாசிகளுக்கு என்ன உபயோகம்? எனவே, நகரவாசிகள், தங் களிடத்திலேயுள்ள சாமான்களை மூட்டை கட்டிக் கொண்டு, கூட்டங் கூட்டமாகக் கிராமங்களுக்குச் சென்று அந்தச் சாமான் களை விவசாயிகளிடம் வலியக் கொடுத்து, தங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களை வாங்கிக்கொண்டு நகரங்களுக்குத் திரும்புகிற நிலைமை ஏற்பட்டது.

நகரங்களிலுள்ள தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான கூலி விகிதம் என்ற முறை அமுலுக்குக் கொண்டுவரப்பட்டு விட்டபடியால், பொருளுற்பத்தி குன்றி விட்டது. ஜனங்களுக்குத் தேவையான பொருள்கள் அகப் படாமையினால், அநேக நகரங்கள் காலியாயின. பீட்ரோகிராட் நகரத்தில் மட்டும் ஜனத்தொகை மூன்றில் ஒன்றாகக் குறைந்து விட்டது. அங்கிருந்த மர வீடுகள் உடைக்கப்பட்டு அடுப்பெரிக்க உபயோகிக்கப்பட்டன. வியாபாரம் என்பது இல்லாமலே போய் விட்டது.

இத்தனை அவதைகளுக்கு மத்தியிலே, என்றுமில்லாத ஒரு பஞ்சம் தேச முழுவதிலும் ஏற்பட்டுவிட்டது. இதற்கு முன் ருஷ்யா வில் எத்தனையோ பஞ்சங்கள் உண்டாயிருக்கின்றன; ஜனங்கள் மாண்டிருக் கிறார்கள். ஆனால் இந்த 1921-ஆம் வருஷத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைப்போல் கடுமையான பஞ்சம் ஒரு பொழுதும் ஏற்பட்ட தில்லை. இதில் மொத்தம் 430 இலட்சம் பேர் இறந்து போனார்கள். வயிற்றுக்குத் தீவனம் அகப்படாமல், கால் நடைகள் வேறே லட்சக் கணக்கில் மாண்டு வந்தன. இனியும் லட்சியம் என்று சொல்லிக் கொண்டிருந்தால், ஜனங்கள் பொறுத்துக்கொண்டிருப்பார்களா? அரசாங்கத்திற்கு விரோமாகக் குட்டிக் கலகங்கள் ஆங்காங்குக் கிளம்ப ஆரம்பித்தன. வயிற்றுக்குச் சாப்பாடு வேண்டுமென்ற கூக் குரல் வலுத்தது. போல்ஷ்வெக்கர்களின் பிடிவாதத் தினால்தான் இவ் வளவு தூரம் தேசம் சீர்கெட்டுப்போய்விட்டது என்ற எண்ணங்கூட ஜனங்களுக்கு உண்டாகத் தொடங்கியது.

பார்த்தான் லெனின்; யுத்தகாலப் பொதுவுடைமைத் திட்டத்தைத் தற்காலிகமாக வாப வாங்கிக்கொண்டு விட்டு, ஒரு புதிய பொருளாதாரத் திட்டத்தை1 அனுஷ்டானத்திற்குக் கொண்டு வந்தான். பழைய மாதிரி, நாணயச் செலவாணி முறை அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. விவசாயிகள், தங்கள் விளை பொருள் களைப் பணத்திற்குக் கிரயம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். நிலவரி புதுப்பிக்கப்பட்டது. ரெயில், தபால், தந்திக் கட்டணங்கள் முன்மாதிரி விதிக்கப்பட்டன. தனிப்பட்டவர்கள் சொந்த முறையில் தொழில்கள் ஆரம்பிப்பதற்கு ஊக்கமளிக்கப்பட்டார்கள். தொழிற் சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் மார்க்கெட்டு களில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன.

இந்தப் புதிய பொருளாதாரத் திட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்ததனால், லெனின் தனது பொதுவுடைமைக் கொள்கையின் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டானென்று, முதலாளித்து வத்தின் மடியிலே வளர்ந்தவர்கள் கொக்கரிக்கத் தொடங்கினார்கள். ஆனால், இது சரியல்ல; உண்மையுமல்ல. லெனின் ஒரு சிறந்த ராஜ தந்திரி. இரண்டு அடி முன்செல்வதற்கு ஓர் அடி பின் வாங்க வேண்டியது அவசியம் என்று உணர்ந்தால், அப்படிச் செய்ய அவன் பின்வாங்கியதே கிடையாது. அது போன்றதொரு சந்தர்ப்பம்தான் இது. பொதுவுடைமை என்னும் கட்டடத்தின் மேல் மாடியில், தான் திரமாக இருந்து கொண்டு, கீழேயுள்ள சில சாளரங்களைச் சில்லரை வியாபாரிகளுக்குத் திறந்துவிட்டான். இதுதான் புதிய பொருளா தாரத் திட்டத்தின் ரகசியம். இதைப் பற்றிப் பின்னரும் விதரித்துக் கூறுவோம்.

சோவியத் அரசாங்கம், யுத்தகாலப் பொதுவுடைமைத் திட்டத்தை எப்பொழுது வாப வாங்கிக்கொண்டுவிட்டதோ அப்பொழுதே, அந்நிய நாட்டு முதலாளிகள் அதனுடன் சிநேகம் செய்யத் தொடங்கினார்கள். எந்த வல்லரசுகள் இதுகாறும் சோவியத் அரசாங்கத்தை அழித்துவிட வேண்டு மென்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்தனவோ அந்த வல்லரசுகளே, இப்பொழுது சோவியத் அரசாங்கம் அழியவில்லையென்பதை அறிந்து கொண்டன; அதற்கு நல்ல புத்தி ஏற்பட்டு மறுபடியும் முதலாளித்துவ வழிக்கே வந்து விட்டதென்று சுய திருப்தி அடைந்தன; அதனோடு கைகுலுக்க விரும்பிய தங்கள் நாட்டு முதலாளிகளுக்கு ஆதரவு காட்டின. முதலாளிகளின் நோக்கமென்ன? லாபம் சம்பாதிக்க வேண்டு மென்பது. எப்படிச் சம்பாதித்தாலென்ன? எங்கே சம்பாதித்தா லென்ன? அதற்காக யாரோடும் சிநேகம் செய்துகொண்டாலென்ன? இங்கிலாந்துதான் - கொலைகாரர்களோடு கைகுலுக்க முடியாது என்று சொன்ன லாயிட் ஜார்ஜை1 பிரதம மந்திரியாகக் கொண்டி ருந்த இங்கிலாந்து தான் - இதற்கு முதல் வழிகாட்டியது. 1921 - ஆம் வருஷம் மார்ச்சு மாதம் ஆங்கிலோ- சோவியத் வியாபார ஒப்பந்தங் கள் செய்துகொண்டன. அந்நிய நாட்டு முதலாளிகள் கூட்டங் கூட்டமாக ருஷ்யாவுக்குச் சென்றார்கள். வெறுங்கையுடனா? இல்லை. பணப் பையுடன். ஏன்? தொழில்கள் ஆரம்பிக்க; அரசாங் கத்திற்குக் கடன் கொடுக்க. இப்படித் தொழில்கள் ஆரம்பிப்பதும் அரசாங்கத்திற்குக் கடன் கொடுப்பதும் எதற்காக? லாபம் சம்பாதிக்கவேண்டும் மென்பதற்காகவா? இல்லவே இல்லை. ருஷ்யாவை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்பதற்காக! ருஷ்யர்கள் நன்றாக வாழ வேண்டுமென்பதற்காக! எந்த நாட்டுக்குமே முதலாளி கள் இந்த மாதிரி நோக்கத்துடன்தான் செல்கிறார்கள்!

9. சமதர்மக் குழந்தை
புதிய பொருளாதாரத் திட்டம் 1921 -ஆம் வருஷத்திலிருந்து 1928 - ஆம் வருஷம் வரை நடைமுறையில் இருந்தது. இந்த ஏழு வருஷ காலத்தில், சோவியத்தலைவர்கள்,தேசத்தை ஓர் உருப்படி யாக்கினார்கள்; உடைந்து போய்க் கிலமாகிக்கிடந்த பொருளாதார வாழ்க்கையைச் சீர்படுத்தினார்கள்; புதிய ஒரு ஜாதியையே சிருஷ் டித்தார்கள். இதற்காக இவர்கள் பட்டபாடும், உழைத்த உழைப்பும் சொல்லத்தரமன்று. ஒரு ஜாதி முன்னுக்கு வர வேண்டுமானால், அதற் காக அந்த ஜாதியின் தலைவர்கள் எவ்வளவு தன்னல மறுப்புடை யவர்களாயிருக்க வேண்டியிருக்கிறது! எளிய வாழ்க்கை, அதாவது இயற்கை வாழ்க்கை என்பதை எப்படி எழுத்துப் பிசகாமல் அனுஷ் டிக்க வேண்டியிருக்கிறது!

ஒரு தேசம் பொருளாதார விஷயத்தில் மற்றொரு தேசத்திற்கு அடிமைப்பட்டிராமல் தன்னைக் காப்பாற்றிக் கொண்டு விடு மானால், அது, தன்னுடைய சுதந்திரத்தையும் காப்பாற்றிக்கொண்டு விட முடியும் என்பதைத் தீர்க்கதரிசி யான லெனின் நன்கு தெரிந்து கொண்டிருந்தான். இதற்கேற்றாற் போலவே திட்டங்களைத் தயாரித்தான். முதலில் மின்சார உற்பத்திக்கு ஏற்பாடு செய்தான். அநேக நிபுணர்களைக் கொண்டு ஒரு திட்டம் வகுத்தான். நாடெங்க ணும் மின்சார உற்பத்தி தாபனங்கள் ஏற்பட்டன. இப்படி ஏற் பட்டதன் பயனாக, கிராமங்களுக்கும் நகரங் களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டாயிற்று. தொழில்கள் அபிவிருத்தி யாயின. மின்சார உதவியினால், விவசாயிகளுக்கும் தொழிலாளர் களுக்கும் குறைவான உழைப்பில் அதிகமான பொருள்களை உற் பத்தி செய்தார்கள். இதனால் கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளுக்குத் தேவையான செய்பொருள்களும், நகரத்தில் வசிக்கும் தொழிலாளர் களுக்குத் தேவையான உணவுப் பொருள்களும் மலிவாகவும் நிறை யவும் முறையே கிடைத்தன. ஜனங்களுக்கு ஒரு புதிய மனப்பான்மை ஏற்பட்டது. பழைய குருட்டு வழிகளை விடுத்து, புதிய வழிகளைக் கடைப்பிடித்தார்கள்.

10. பொருளாதாரத் திட்டங்கள்
தேசத்தின் நிருவாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு நடத் தினால் மட்டும் போதாது, தேசத்தின் பொருளாதார வாழ்வையும் தங்கள் சுவாதீனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும், அப்படி வைத்துக்கொண்டால்தான் சமதர்ம லட்சியத்தைக் கைவிடாமல் காப்பாற்ற முடியும் என்பதை, சோவியத் தலைவர்கள் ஆரம்பத்தி லிருந்தே நன்கு தெரிந்து கொண்டிருந்தார்கள். யுத்தகாலப் பொது வுடைமைத் திட்டத்தை லெனினும் அவனுடைய சகாக்களும் வாப வாங்கிக் கொண்டு விட்டார்களென்று சொன்னால், தேசத்தின் உற் பத்திச் சாதனங்கள், பொருளுற்பத்தி, வியாபாரம் முதலிய அனைத்தையும் தனிப்பட்டவர் களுடைய சுவாதீனத்திற்கு விட்டு, அவர் களிஷ்டப்படி சுரண்டுவதற்கு அனுமதி கொடுத்துவிட்டார்கள் என்பது அர்த்தமல்ல. அப்படி அவர்கள் செய்யவே இல்லை. சில்லரைச் சாமன்களை உற்பத்தி செய்வது, சில்லரை வியாபாரம், இப்படிப்பட்ட சிறிய அமிசங்களைத்தான் தனிப்பட்டவர் களுடைய உரிமைக்குவிட்டனர். இப்படிச் செய்து, தேசத்தின் உற்பத்திச் சக்திக்குச் சிறிது உற்சாகம் கொடுக்க வேண்டுமென்பதே அவர்களின் நோக்கம். ஏனென்றால், லாபம் சம்பாதிக்க வேண்டு மென்ற ஓர் ஆசை, சதா தூண்டிக் கொண்டிருக்குமல்லவா? ஆனால், இந்த ஆசையை வள ரவிடாமல் பார்த்துக்கொண்டு வந்தார்கள். எப்படி? தேசத்தின் பெரிய தொழில்கள், மின்சார தாபனங்கள், அந்நிய நாட்டு வியாபாரம், உள்நாட்டு வியாபாரம்,போக்குவரவு சாதனங்கள் முதலியவற்றில் ஒரு சிறிய விகிதாசாரம் தவிர, பெரும் பாகம் ஜனங்களின் பொதுச் சொத்தாகவே கருதப்பட்டது. அதாவது இவையனைத்தும் அரசாங்கத்தின் சுவாதீனத்தில் இருந்தன. இதனால், அரசாங்கமே,பொருளுற்பத்தி செய்கிற முதலாளி யாகவும், அந்தப் பொருள்களை விநியோகிக்கிற வியாபாரியாகவும் இருந்தது. ஜனங் களுக்குத் தேவையான பொருள்களை நல்ல முறையில் தயார் செய்து, குறைந்த விலைக்கு விற்க இவர்களால் முடிந்தது. ஏனென் றால், இவர்களுக்குத்தான் லாபம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம் இல்லையே. லாபம் மனிதனுடைய தேவையைப் பூர்த்தி செய்யும் சாதனமல்ல; அவனுடைய சுயநலத்தை வளர்க்கும் ஒரு தூண்டுகருவி. சோவியத் அரசாங்கம் ஜனங்களுடைய அரசாங்கம். அரசாங்கம் வேறே, ஜனங்கள் வேறே என்ற வேற்றுமை அங்கு இல்லை. ஜனங்களுடைய நன்மையைத் தவிர்த்து அரசாங்கத்தின் நன்மை என்று தனியாக ஒன்று இல்லை. இதனால், சுயநலத்திற்கு அங்கு இடமில்லை. லாபம் சம்பாதிக்கவேண்டுமென்ற அவசியமும் அதற்கு இல்லை. ஜனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலேயே அது திருப்தியடைகிறது; அடைந்தது. இப்படி, ஜனங்களுக்குத் தேவை யான சாமான்களை நல்ல முறையில் தயார்செய்து அடக்க விலைக்கு விற்பதற்கென்று அரசாங்கமானது, பல கூட்டுறவுப் பண்டசாலை களை ஆங்காங்கு தாபித்தது. இந்தக் கூட்டுறவு தாபனங்கள் மொத்தமாகவும், சில்லரை யாகவும் வியாபாரம் செய்தன; நல்ல பொருள்களை மலிவாக விற்றன. ஜனங்கள் இவைகளை ஆதரித்தார் கள். இவைகளுக்கு எதிராகத் தனிப் பட்ட வியாபாரிகள் என்ன செய்ய முடியும்? எப்படி லாபம் சம்பாதித்துப் பணக்காரர்களாக முடியும்? புதிய பொருளாதாரத் திட்டத்தின் ஆரம்பத்தில் சிறிது காலம் வரை, அதாவது ஜனங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்கிற சக்தி தனக்கு ஏற்பட்டுவிட்டது என்று அரசாங்கம் உணர் கிறவரை, இவர்கள் ஆதரிக்கப்பட்டார்கள். பிறகு இவர்களுக்கு அநேக நிர்ப்பந்தங்கள் விதிக்கப்பட்டன. மெதுமெதுவாக இவர்கள் ஒடுக்கப்பட்டுவிட்டார்கள். இவர்கள் தான் பிற்காலத்தில் சோவியத் அரசாங்கத்திற்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்தவர்கள்.

அந்நியநாட்டு வியாபாரம் முழுவதையும் சோவியத் அரசாங் கம் தன்னுடைய சுவாதீனத்திலேயே வைத்துக் கொண்டிருந்தபடி யால், அது, தேசத்தின் தொழில் அபிவிருத்திக்கும் விவசாய அபி விருத்திக்கும் என்னென்ன தேவையோ அவைகளை மட்டுந்தான் அந்நிய நாடுகளி லிருந்து வரவழைத்துக் கொண்டது. இதனோடு, சொந்த நாட்டில் அகப்படாத - ஆனால், ஜனங்களுக்கு அவசியம் தேவையாயிருக்கிற- சில பொருள்களையும் இறக்குமதி செய்ய அனுமதித் தது. ஆடம்பரப் பொருள்கள் யாவும் இறக்குமதி செய்யப் படுவதினின்று கண்டிப்பாக விலக்கப்பட்டன. தேச மக்கள் ஆடம் பர வாழ்க்கையில் ஈடுபடக் கூடாதென்றும், இயற்கை யான, நிதான முள்ள வாழ்க்கையையே நடத்த வேண்டு மென்றும், ஆரம்பத்தி லிருந்தே சோவியத் அரசாங்கம் வேலை செய்து கொண்டுவந்தது. ஆடம்பரம், சமதர்மத்தை அழித்து விடும்; வெளிப்பகட்டு, வீண் செலவு, அகம்பாவம் இவைகளை உண்டாக்கும்; இவைகளில்லாமல் செய்யவேண்டுமென்பது எங்கள் நோக்கம் என்று சோவியத் அதிகாரிகள் கூறி வந்தார்கள். இப்படி அந்நிய நாடுகளிலிருந்து வர வழைக்கப்பட்ட பொருள்களை அரசாங்கத்தார், சொற்பலாபத் திற்கு, கூட்டுறவு தாபனங்கள் மூலம் ஜனங்களுக்கு விற்றார்கள். இதே பிரகாரம், தேசத்தில் உற்பத்தியாகிற பொருள்களில், ஜனங் களின் தேவைபோக மிகுதியானவற்றை அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள். இதன் மூலம் அரசாங்கத் திற்கு வருமானம் கிடைத்தது. இந்த வருமானங்களைக் கொண்டு, தேசத்தின் தொழில் அபிவிருத் திக்கும் விவசாய அபிவிருத்திக்கும் தேவையான யந்திரங்கள், கருவிகள் முதலியவற்றை வாங்கினார்கள். பிரதி வருஷமும் தொழிற் சாலைகள் அதிகப்பட்டுக்கொண்டே வந்தன. விவசாய உற்பத்தியும் விருத்தியாகிக் கொண்டு வந்தது.

இதே பிரகாரம் விவசாயிகளின் க்ஷேமத்தையும் அரசாங்கத் தார் கவனிக்கத் தொடங்கினார்கள். ருஷ்யாவில் விவசாயிகளை மூன்று தரத்தினராகப் பிரித்திருந்தார்கள். முதலாவது, பெரிய பண்ணைக்காரர்கள். இவர்களைக் குலாக்குகள்1 என்று அழைப் பார்கள். கிராமத்துப் பெரியதனக் காரர்கள் என்று இவர்களைச் சொல்லலாம். கொஞ்சம் அதிகமான பூ திதியுடையவர்களெல்லா ரும் இந்தத் தரத்தில் சேர்க்கப்பட்டனர். இரண்டாவது, மத்தியதரத்து விவசாயிகள். இவர்கள் சொற்ப நிலபுலங் களை வைத்துக் கொண்டு சுயமாக ஜீவனம் செய்துகொண்டிருக்கிறவர்கள். மூன்றாவது, நிலத்திலே வேலை செய்கிறவர்கள். இவர்களுக்குச் சொந்தமாக நிலம் கிடையாது. மற்றவர்களுடைய நிலத்தைக் கூலிக்கு உழுது பயிரிடுகிற வர்கள். விவசாயிகளிலே இவர்கள் தான் பெரும்பான்மையோர். இவர்களைக் குலாக்குகள் கசக்கிப்பிழிந்து வந்தனர். இவர்களுக்குத் தேவையானபோது கடன் கொடுத்து, இவர்களைத் தங்கள் அடிமை கள் போல் நடத்தி வந்தனர். ஒருவர் உழைப்பிலே மற்றொருவர் வாழக்கூடாதென்ற கொள்கையுடைய சோவியத் அரசாங்கத்தார், இந்த மாதிரி அக்கிரமங்களை யெல்லாம் சட்ட மூலமாக அகற்றி விட்டனர்.

ருஷ்யா எப்பொழுதுமே மதபக்தி நிறைந்த நாடு. தெய்வத் திருநாடு என்று தங்கள் நாட்டைப்பற்றிச் சொல்லிக் கொள்வதிலே ருஷ்யர்களுக்கு ஒரு பெருமை. ஜார் மன்னனை தெய்வத்திருத் தந்தை என்றுதான் அழைப்பார்கள். இப்படிப்பட்ட ஒரு நாட்டிலே, புரோகிதர்களுடைய ஆதிக்கத்துக்குக் கேட்க வேண்டுமா? இவர்களுக்கு ஏராளமான சொத்து, சுதந்திரங்கள் இருந்தன. இவை களையெல்லாம் சோவியத் அரசாங்கத்தார் பறி முதல் செய்ததோடு, புரோகிதர்களுடைய ஆதிக்கத்தையும் குறைத்தனர். எதிர்ப்பு காட்டியவர்கள் கடுமையாக அடக்கப்பட்டார்கள். மதம் காரண மாக ஒருவனுக்கு விசேஷ சலுகைகள் காட்டப்படக் கூடா தென்பது சோவியத் அரசாங்கத்தின் நோக்கம். கடவுள் நம்பிக்கை என்று சொல்லிக்கொண்டு, ஜனங்கள் தன்னம்பிக்கையை இழந்துவிடக் கூடாதென்பது அவர்கள் கவலை. ஜனங்கள் மதச் சடங்குகள் என்று சொல்லி ஏராளமான பணத்தைச் செலவழித்து வந்தார்கள். இப்படிச் செலவழித்து அவர்கள் மோட்சமார்க்கத்தில் செல்லவில்லை; வறுமைக் குழியில்தான் இறங்கினார்கள். இதனை அரசாங்கத்தார் தடுத்துவிட்டனர். அரசியல் வேறாகவும், மதம் வேறாகவும் பிரிக்கப் பட்டது. பள்ளிக் கூடங்களில் மதபோதனை நிறுத்தப்பட்டது. பதினெட்டு வயதுக்குட்பட்ட சிறுவர்களாக நான்கு பேரைக் கூட்டி வைத்துக்கொண்டு யாராவது மதபோதனை செய்தால், அவர் களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தியாவைப் போலவே ருஷ்யாவிலும் பல மாகாணங்கள் உண்டு. ஒவ்வொரு மாகாணமும் ஒவ்வொரு தனிநாடு மாதிரி. 1917-ஆம் வருஷத்தில் போல்ஷ்வெக் கட்சியினர் அரசாங்க நிரு வாகத்தை ஏற்றுக் கொண்டபோது, பொதுவாக, ருஷ்யா, குடியரசு முறையில் ஆளப்படும் என்று பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால் இது சரிவர விளக்கப்பட வில்லை. 1923-ஆம் வருஷம், ஒவ்வொரு மாகாணத்திற்கும் பூரணப் பொறுப்பாட்சி உரிமை அளிக்கப்பட்டு, எல்லா மாகாணங் களும் சேர்ந்த ஒரு சமஷ்டிக் குடியரசு ஏற்படுத்தப் பட்டது. இது முதற்கொண்டுதான் ருஷ்யாவுக்கு சோவியத் சம தர்மக் குடியரசு நாடுகளின் ஐக்கிய ராஜ்யம் என்ற பெயர் வந்தது. அதாவது, பல குடியரசு நாடுகளின் ஐக்கியந்தான் ருஷ்யா. இதுதவிர ருஷ்யாவிலுள்ள பல ஜாதியினருடைய பாஷை, கலாசாரம், நாகரிகம் முதலியன பாதுகாக்கப்படுவதற்காகத் தனித்தனி தாபனங்கள் ஏற்படுத்தப்பட்டன. இவைகளின் மூலமாக அவரவர் களுடைய பாஷை முதலியன வளர்ச்சி பெற்றன. எல்லோருக்கும் பொதுவான தேசம் என்ற உணர்ச்சியை நன்றாக வலியுறுத்தி விட்டு, மற்ற விஷயங் களில் அந்தந்த ஜாதியினருக்கும் பரிபூரண உரிமை அளித்து விட்டனர் சோவியத் அரசாங்கத்தினர்.

பொதுவாக, இந்தப் புதிய பொருளாதாரத் திட்ட காலத்தில், ருஷ்யா, பொருளுற்பத்தி, விவசாய அபிவிருத்தி முதலிய விஷயங் களில் ஐரோப்பிய மகாயுத்தத்திற்கு முன்னிருந்த நிலைமையை அடைந்தது. ஜனங்களுடைய வாழ்க்கையில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. கொடுங் கோலாட்சியினாலும், பொருளாதார அடிமைத்தனத்தினாலும் சகஜமாக ஏற்படுகிற ஒரு சோர்வு அவர்களை விட்டகன்றது. அவர்கள் புதிய நம்பிக்கை பெற்றார்கள்; புதிய வாழ்க்கை தொடங்குவதற்குத் தயாரானார்கள். இவ்வளவுக்கும் காரணம் என்ன? சோவியத் தலைவர் களின் தன்னலமற்ற உழைப்பு; லட்சியத்திலே அவர்கள் கொண்ட உறுதியான நம்பிக்கை.

ஆனால் துரதிருஷ்டவசமாக, லெனின், இந்தப் புதிய பொருளா தாரத் திட்டத்தின் வளர்ச்சியையும் விளைவையும் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. எப்பொழுதுமே மகான்கள், தங்களுடைய காரியத்தின் பலனைப் பாராமலும் அனுபவியாமலுமே போய்விடுகிறார்கள். லெனினும் அப்படித்தான். புதிய பொருளாதாரத் திட்டம் ஒரு வகையாக வேலை செய்யத்தொடங்கின காலத்திருந்தே, அவனுக்கு உடம்பு சரியில்லாமலிருந்தது. வரவர க்ஷீணதசை அடைந்து கொண்டு வந்தான். கடைசியில் 1924- ஆம் வருஷம் ஜனவரி மாதம் இருபத்தோராந் தேதி கடைசி தடவையாகக் கண்முடிக் கொண்டு விட்டான். அன்று ருஷ்ய மகாஜனங்கள் அவனைத் தங்கள் கண்ணீரினால் கழுவினார்கள். ஏனென்றால், அவர்களுடைய கண்ணைத் திறந்துவிட்ட மகான் அல்லவா அவன்?


IX . சமதர்மம் என்றால் என்ன?

1. மார்க் கண்டது
சமதர்ம சித்தாந்தத்தின் சிருஷ்டி கர்த்தன் கார்ல் மார்க். அவனுடைய வாழ்க்கை ஒரு துன்பக்கடல். ஆனால் அதிலிருந்து தான், மானிட ஜாதியின் இன்ப வாழ்க்கைக்கு ஏற்ற சாதனம் பிறந்தது. அவன் வாழ்ந்த காலத்தில் அவனுடைய சித்தாந்தம் பரிக சிக்கப்பட்டது. ஆனால், அவன் பிறந்த நூறாவது வருஷத்தில், அஃது ஒரு திட்டமாக அதிகார தானத்தில் ஏறி அமர்ந்து ஆட்சி புரியத் தொடங்கியது. பகற் கனவாகக் கருதப்பட்டது, நனவு முறையாக அனுஷ்டானத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

மார்க்ஸின் தத்துவத்தை எவ்வளவுக்கெவ்வளவு ஆராய்ச்சி செய்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதனுடைய ஆழத்திலே நாம் அமிழ்ந்து போகிறோம். அதனுடைய தர்க்க நியாயத்தில் ஈடுபட்டு விடுகிறோம். ஒரு சிலருடைய இருதயம், அந்தத் தத்துவத்திற்கு இடங் கொடாமலிருக்கலாம். ஆனால், யாருடைய அறிவும் அதற்கு வணக்கஞ் செலுத்தாமலிருக்க முடியாது. ஏனென்றால், மனித அறிவுக்கு எட்டாத ஒரு விஷயத்தைப் பற்றி அல்லது ஒரு சக்தியைப் பற்றி அவன் சொல்ல வில்லை; கற்பனை உலகத்திற்கு நம்மை அழைத்துக் கொண்டு போக வில்லை. இந்த உலகத்திலே மனிதனுடைய வாழ்க்கை மனிதர் பலரைக் கொண்ட ஒரு சமுதாயத்தின் வாழ்க்கை, எப்படியிருக்க வேண்டும், எந்த மாதிரி இருந்தால் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த எல்லா ஜனங்களுக்கும் க்ஷேமம் உண்டாகும் என்பவைகளைப் பற்றியே அவன் சொல்கிறான்; அமானுஷ்ய சக்திகள் என்று சொல்லிக் கொண்டு அவைகளைக் கண்டு மனிதன் அஞ்சிக் கொண்டிராமல் அவைகளைத் தன் ஆதீனத்திற்குட் படுத்திக் கொள்ள முயல வேண்டியது மனிதன் கடமை என்று வற் புறுத்துகிறான். மனிதராய்ப் பிறந்த எல்லோருக் குமே, அவன் தத்துவம் பொதுவானது; பொருந்தியது. அவன் பேசுவ தெல்லாம் உலகத்தை நோக்கி; சர்வ ஜனங்களின் சௌக்கியத்தைக் கருதி. பால், வகுப்பு, மதம், நிறம் முதலிய எந்தவிமான வேற்றுமை களும் அவன் பார்வையில் படவேயில்லை. அவனுடைய தத்துவத்தை, சமதர்மம் என்ற பெயரிட்டு அழைப்பதுதான் பொருந்தும். அபேத வாதம் என்றும் பொது வுடைமை என்றும் அழைப்பது, அவனுடைய கோட்பாட்டின் அல்லது நோக்கத்தின் ஒவ்வோர் அமிசத்தை மட்டும் எடுத்துக் காட்டுவது போல இருக்கிறது. அபேதவாதம் என்று சொன்னால், அது நடைமுறையில் கொணரமுடியாத ஒரு தத்துவ அளவோடு நிற்பது போல் அர்த்தம் தொனிக்கிறது. மார்க்ஸின் தத்துவம், எதிர்மறைத் தத்துவமல்ல; உடன்பாட்டுத் தத்துவம், பொது வுடைமை என்று சொல்கிறபோது, மனிதனுடைய அல்லது சமுதாயத் தினுடைய பொருளாதார வாழ்க்கையை மட்டும் குறிப்பது போல இருக்கிறது. ஆனால் மார்க்ஸின் சித்தாந்தம், மானிட வாழ்க்கையின் எல்லா அமிசங்களையும் ஐக்கியப் படுத்திக்காட்டு கிறது; எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஒரு குலம் என்ற உண்மையை வலியுறுத்துகிறது. அது, மானிட வாழ்க்கை முழுவதையும் கவிந்து கொண்டிருப்பதால், அதனைச் சமதர்மம் என்று அழைத்தலே பொருந்தும். மானிட வாழ்க்கையின் அடிப்படையான நோக்கங் கள், நலன்கள் இவையனைத்திலும், மானிட வாழ்க்கையின் ஒவ் வொரு விகாசத்திலும், பரிபூரணமான மாறுதலை நாடி நிற்பது போல்ஷ்வெஸம் என்பது ஓர் அறிஞனுடைய வாக்கு.

மார்க்ஸினுடைய சித்தாந்தத்தைப்பற்றி விரிவான வியாக் கியானம் செய்து கொண்டு போவது இங்கு நோக்கமல்ல. அவனுடைய வாழ்க்கை எப்படி ஒரு பெருந் துன்பக் கடலாயிருந்ததோ அப்படியே அவனுடைய சித்தாந்தமும் ஒரு விரிவான சமுத்திரம். மானிட சமுதாயத் தின் சரித்திரத்தை அவன் விஞ்ஞானக் கண் கொண்டு பார்க்கிறான். மனிதன் போராடிப் போராடித்தான், காட்டுமிராண்டி நிலையிலிருந்து இன்றைய சிக்கலான நாகரிக நிலைக்கு வந்திருக்கிறானே தவிர, புறச் சக்திகள், அதாவது மனிதனுடைய அறிவுக்கு எட்டாத சக்திகள் ஒன்று சேர்ந்து கொண்டு அவனை மேல் நிலைக்குக் கொண்டுவரவில்லை யென்பதை அவன் தர்க்கரீதியாக நிரூபித்துக் காட்டுகிறான்.

2. மனிதனும் சரித்திரமும்
மனிதன்தான் சரித்திரத்தைச் சிருஷ்டிக்கிறானே தவிர, சரித்திரம் மனிதனைச் சிருஷ்டிக்கவில்லை. அவனுடைய இந்தச் சரித்திரம், போராட்ட மயமாகவே இருந்து வந்திருக்கிறது. இயற்கை யோடு போராட்டம்; சகோதர மனிதனோடு போராட்டம்; இல்லாத வர்களுக்கும் உள்ளவர்களுக்கும் போராட்டம்; பழைய நம்பிக்கை களுக்கும் புதிய எண்ணங்களுக்கும் போராட்டம். எல்லாம் போராட் டம், எப்பொழுதும் போராட்டம். இந்தப் போராட்டங்கள், அரசியல் புரட்சி யென்றும், பொருளாதாரக் குழப்பம் என்றும், மதச் சண்டை யென்றும் இப்படிப் பலவிதமாகப் பெயரெடுத்துக் கொண்டு சரித் திரத்தில் இடம் பெற்று விடுகின்றன. இந்தப் போராட்டங்களுக்கு மத்தியிலேதான் மனிதன் வளர்ச்சியடைய வேண்டியிருக்கிறது; சமுதாயம் உருப்படியாக வேண்டியிருக்கிறது.

ஏன் இப்படி? போராட்டங்கள் நடைபெற வேண்டியதன் அவசியம் என்ன? ஆதிகாலத்தில் மனிதன், தனக்குத் தேவையான பொருள்களைத் தானே உற்பத்தி செய்துகொண்டு வந்தான். பிறகு ஜனத்தொகை பெருகப் பெருக, சமுதாயம் விரிய விரிய, அவனுடைய உற்பத்தி முறைகள் மாறின. தேவைக்கு மிஞ்சின பொருள்களை உற்பத்தி செய்யத் தொடங் கினான். சமுதாயத்தில் பிளவு ஏற்பட்டது. உழைத்து உழைத்துப் பொருள் களை உற்பத்தி செய்வோர் பெரும் பாலோராகவும், அந்த உழைப்பை மேற்பார்வை செய்வோர், உழைப் பினின்று ஊதியம் பெறுவோர், அந்த உழைப்பாளிகளைப் பகைவரி னின்று காப்பாற்றுவோர், அவர்களுடைய க்ஷேமத்திற்காகக் கடவுளை நோக்கிப் பிரார்த்தனை செய்வோர்,தேசத்தின் அரசியலை நடத்து வோர் ஆகிய இவர்கள் சேர்ந்து சிறுபான்மை யோராகவும் பிரிந்தனர். அதாவது ஏழைகளென்றும் பணக்காரர்களென்றும் இரு பிரிவின ராகப் பிரிந்தார்கள். இந்த இரு பிரிவினரும் அவரவருடைய உரிமை களை தாபித்துக் கொள்வதற்காக நடத்திய போராட்டங்களின் தொகுப்புதான் சரித்திரம். பணக்காரர்கள், பழைய சம்பிரதாயங்கள், பழைய கொள்கைகள், பழைய சமுதாய அமைப்பு, இப்படி எல்லாம் பழமையாக, இருந்தது போலவே இருக்கவேண்டு மென்பதற்காகப் போராடுவார்கள். ஏழைகள் புதிய வாழ்வு பெற வேண்டு மென்பதற் காகப் போராடு வார்கள். சமுதாயத்தில் ஏழைகளென்றும் பணக்காரர் களென்றும் வித்தியாசங்கள் இருக்கிற வரையில், இந்தப் போராட்டங் கள் இருந்து கொண்டுதான் இருக்கும். மார்க்ஸீய பாஷையில் சொல்லப்படுகிற வர்க்கப் போராட்டம் என்பதுதான். இந்த வர்க்கப் போராட்டங்கள் இல்லாதிருக்க வேண்டு மானால், வர்க்கப் பிரிவினை களே இல்லாதிருக்க வேண்டும். அப்படிப் பட்ட ஒரு சமுதாயம் -வர்க்கப் பிரிவினைகள் இல்லாத ஒரு சமுதாயம், உலகப் பொதுவான ஒரு சமுதாயம் - அமையுமானால்தான், சர்வ ஜனங்களும் சுகப்பட முடியும். இப்படி வர்க்கப் பிரிவினைகளே இல்லாத ஒரு சமுதாயம் அமைய வேண்டுமானால், வர்க்கப் போராட்டங்களே இல்லாதிருக்க வேண்டு மானால், பொருளுற் பக்தி முறையை மாற்றியமைக்க வேண்டும். அதாவது தேவைக்காகப் பொருளை உற்பத்திசெய்ய வேண்டுமே தவிர, லாபத்திற்காகப் பொருளை உற்பத்தி செய்யக்கூடாது. மற்றும், பொருளுற்பத்திக்குச் சாதனங்களாயுள்ளவை களை ஒரு சிலருடைய சுவாதீனத்தற்கு விடாமல், தேசத்தின் பொதுச் சொத் தாக்க வேண்டும். இந்த இரண்டு நோக்கங்களும் நிறைவேறுவதற் கேற்ற விதமாக அரசியல் அமைப்பு இருக்க வேண்டும். இந்த அரசியல் அமைப்பில், மனிதனுடைய சக்திகள் சமுதாய நலனுக்காகவே உபயோகிக்கப் பெறுகின்றன. தனக்கென வாழாப் பிறர்க் குரியாளனாய் இருப்பதுவே தனது கடமையென்று ஒவ்வொருவனும் கருதுகிறான். இந்த மாதிரி யான பலதிறப்பட்ட அமிசங் களைக் கொண்ட மார்க்ஸின் சித்தாந்தத்திற்கு லெனின் அநேக வியாக்கியா னங்கள் செய்திருக் கிறான்; அப்படி வியாக்கியானங்கள் செய்ததோடு நில்லாமல், அனுஷ்டானத் திற்கும் கொண்டு வந்தான்.

இப்படி இவன் அனுஷ்டானத்திற்குக் கொண்டு வந்த பிறகு தான், மார்க்ஸின் தத்துவத்திற்கு அறிஞர் உலகத்தில் ஒரு மதிப்பு ஏற்பட்டது. அதன் மீது ஜனங்களுக்கு ஒரு நம்பிக்கை உண்டா யிற்று. அதுவரையில், ஒரு சிலருக்கு அது பொற்கன வாக இருந்தது; இன்னுஞ் சிலருக்கு, எளிதிலே உடைந்து போகக்கூடிய மட்பாண்ட மாக இருந்தது. ஆனால் அஃது, இரண்டும் இல்லை. ஒரு ஆசிரியன் கூறுகிற மாதிரி, சமதர்மம் என்பது ஒரு பூதமுமல்ல; அல்லது நமக்கு எட்டாத ஒரு கடவுட் சக்தியுமல்ல. இப்படி இரண்டிலே ஒன்றாக நினைப்பதற்குக் காரணம் அறியாமைதான்; அச்சந்தான். பொருள் பலமில்லாதவர்கள் நினைக் கிறார்கள், சமதர்மம் - அபேதவாதம் - பொதுவுடைமை என்று சொன்ன மாத்திரத்தில், தாங்கள், மாளிகை யிலே குடிபுகுந்து ஓயாமல் சாப்பிட்டுக் கொண்டு, ஒருவேலையும் செய்யாமல் தூங்கிக் கொண்டிருக்கலாமென்று. பணக்காரர்கள் பயப்படுகிறார்கள். சமதர்மம் அனுஷ்டானத்திற்கு வந்துவிட்டால், தங்களுடைய செல்வமெல்லாம் போய் கந்தை உடுத்து வீதிகளிலே பிச்சை யெடுக்க வேண்டி வந்துவிடும் என்று. ஏழைகளைப் பணக் காரார்களாக்குவதும், பணக்காரர்களை ஏழைகளாக்குவதும் சமதர்ம மல்ல; அதன் நோக்கமுமில்லை. பணம் காரணமாக ஒருவனுக்கு விசேஷ சலுகைகளோ, உரிமைகளோ, தனியான நீதி முறைகளோ இருக்கக்கூடாது என்று தான் சமதர்மம் கூறுகிறது; பொருளா தாரம் காரணமாகச் சமுதாயத்தில் பிரிவினைகள் அல்லது ஏற்றத் தாழ்வுகள் இருக்கக் கூடாதென்று தான் வலியுறுத்துகிறது.

3. சமதர்மத்திற்கு வியாக்கியானம்
சமதர்மம் என்றால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான உடை, உணவு, இருப்பிடம் என்பது அர்த்தமில்லை. எல்லோரும் ஒரே உயர மாகவும், ஒரே பருமனாகவும் இருக்க முடியுமா? அப்படியே எல் லோரும் ஒரே மாதிரியான புத்திசாலிகளாகவோ அல்லது ஒரே மாதிரியான முட்டாள்களாகவோ அல்லது ஒரே மாதிரியான தேகபல முடைய வர்களாகவோ இருக்க முடியுமா? யானைக்கும் பூனைக்கும் ஒரே அளவு ஆகாரத்தைப் பங்கிட்டுக் கொடுக்க முடியுமா? அப்படிச் செய்தால், யானை, போதிய ஆகாரம் இல்லாமல் செத்துப் போகும்; பூனை அதிக ஆகாரத் தினால் செத்துப்போகும். சமதர்மத் தில், இந்த மாதிரியான நியாயத்திற்கு இடமே கிடையாது; யானைக் குத் தேவையான அளவை யானைக்குக் கொடு, பூனைக்குத் தேவை யான அளவைப் பூனைக்குக் கொடு என்று அது கூறுகிறது. ஒன்றை நினைத்துக் கொண்டு, மற்றொன்றை மறந்து விடக்கூடாது என்பதையே அது வலியுறுத்துகிறது.

சமுதாயம் என்பது, ஓர் உடல் மாதிரி. உடலிலுள்ள ஒவ்வொர் உறுப்பும் ஒவ்வொரு வேலையைச் செய்கிறது. ஆனால், எல்லா உறுப்புகளையும் நாம் ஒரேவிதமாகக் கவனிக்கிறோம்; ஒரேவித மாகவே காப்பாற்றுகிறோம். இதில் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது. ஓர் அவயவம் மட்டும் நன்றாக வளர்ச்சியடைய வேண்டுமென்று சொல்லி, அதற்காக மற்ற அவயவங்களை நாம் புறக்கணித்து விடு கிறோமா? இல்லை. அப்படிச் செய்தால், நம்முடைய உடல், உடலா யிராது; ஒரு மாமிசப் பிண்டமாகவே இருக்கும். உடல் என்பதற்கு என்ன லட்சணங்கள் உண்டோ அந்த லட்சணங்களோடு நமது உடல் இருக்கவேண்டுமானால், ஒவ்வோர் அங்கத்தையும் அதனதன் வேலையைச் செய்யுமாறு விட்டுவிட்டு, எல்லா அவயவங்களையும் ஒரே மாதிரியாகப் போஷித்துவர வேண்டும். இது தான் நியாயம். இந்த நியாயத்தையே சமுதாய விஷயத்திலும் அனுசரிக்க வேண்டும் என்று சமதர்மம் கூறுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளை திடசாலியாக இருக்கிறது; இன்னொன்று நோயாளியாக இருக்கிறது. திடசாலி யான பிள்ளையை மட்டும் நாம் குடும்பத்தில் வைத்துக்கொண்டு, நோயான பிள்ளையைக் கழுகுகளுக்கு இரையாகக் காட்டிலே எறிந்து விடுகிறோமா? இல்லையே. அது போலவே, சமுதாயம் என் கிற குடும்பத்திலுள்ள பிரஜைகளாகிற பிள்ளைகளின் விஷயத் தி லும் அவரவருடைய தேவையை அனுசரித்து நடக்க வேண்டு மென்பதுவே சமதர்மத்தின் முழக்கம்.

ஒரு தேசத்திலுள்ள எல்லா ஜனங்களினுடைய வருமானத் தையும் ஒன்றாகக் கூட்டி, ஜனங்களெல்லோருக்கும் சரிசமானமாக ஈவு போட்டுக் கொடுத்துவிடு என்று சமதர்மம் கூறுவதாகச் சிலர் கலங்குகிறார்கள். அப்படி இல்லவே இல்லை. ஒவ்வொருவருடைய தேவையையும் கவனி; தேவை போக மிச்சம் இருப்பதைச் சரியான வரி மூலம் ஒன்று சேர்த்து எல்லா ஜனங்களுடைய நன்மைக்காகவும் உபயோகி என்றே சமதர்மம் சொல்கிறது. இப்படி உபயோகிக்கிற விஷயத்தில் எவ்விதப் பாகுபாடும் கூடாது. ஓர் ஊரில் நல்ல பாதைகள் போட்டால், அவற்றில் இன்னார்தான் நடக்கலாம், இன்னார் நடக்கக்கூடாது, அல்லது மோட்டார் வண்டிகள் மட்டுந்தான் போகலாம், மாட்டு வண்டிகள் போகக்கூடாது என்கிற மாதிரி யான வித்தியாசங்கள் இருக்கக்கூடாது. எல்லோருக்கும் உபயோகமாகிற நல்ல பாதைகள், நல்லகுழாய் நீர், நல்ல ஆபத்திரிகள், நல்ல பள்ளிக்கூடங்கள், இந்த மாதிரியான வசதிகளை, மேலே சொன்ன மிச்சப் பணத்திலிருந்து செய்து கொடுக்க வேண்டும். இதுவே சமதர்மத்தின் நீதி.

4. மூல தத்துவங்கள்
சம தர்மத்தின் மூல தத்துவங்களில் ஒன்று என்னவென்றால், எல்லாப்பொருள்களுக்கும் மூலமாய் இருக்கப்பட்டவை எவையோ அவை யாவும், எல்லோருக்கும் பொதுவான சொத்தா யிருக்க வேண்டுமென்பது. உதாரணமாகச் சூரிய வெளிச்சத்தை எடுத்துக் கொள்வோம். இஃது எல்லோருக்கும் பொது. இந்தச் சூரிய வெளிச்சத்தால் காடுகள் உண்டா கின்றன. அவை யாருக்குச் சொந்தம்? தேசப் பொதுவுக்கே சொந்தம். நிலத்தின் மீது வளர்ந்த மரங்கள், பல்லாயிரம் வருஷங்களுக்கு முன்னால் கீழே விழுந்து, மண்ணுக்குள்ளே புதைந்து போய், நிலக்கரியாகி விடுகின்றன. அந்த நிலக்கரி யாருக்குச் சொந்தம்? தேசத்திற்குத்தான். ஆறுகள், மலைகள், சுரங்கங்கள் முதலிய பொருளுற்பத்திக்கான மூலங் களும், ரெயில், கப்பல் போன்ற போக்குவரத்துகள், மின்சாரம், தொழிற் சாலைகள் முதலிய பொருளுற்பத்திக்கான சாதனங்களும் தேசப் பொதுவுக்கு, அதாவது தேசமக்களுக்குச் சொந்தமானவை; தனிப்பட்டவர் களுடைய லாபம் சம்பாதிப்பதற்கான கருவிகளல்ல.

இரண்டாவது மூல தத்துவம் என்ன வென்றால், லாபம் சம் பாதிக்கிற முறை. முதலாளித்துவ நாடுகளில், பொருளை உற்பத்தி செய்து பணத்தைக் குவிப்பதற்குத் தூண்டு கோலாயிருப்பது எது? தனிப்பட்ட நபர்கள் லாபம் சம்பாதிப்பதற்குச் சந்தர்ப்பம் இருப்பதுதான். இலாபம் சம்பாதிக்கிற இந்தத் தூண்டுதலானது, தொழில்கள் பெருகுவதற்கு உதவி செய்கிறது. முதலாளியும் தனக்கு அதிகமான லாபம் கிடைக்குமென்று எதிர்பார்க்கிறான். ஆனால் அவன், இப்படித் தனக்குக் கிடைக்கிற லாபத்தை, தேச நன்மைக்குச் செலவிடுகிறானா? இல்லை. சுயநலத்துக் காகவே உபயோகப்படுத்து கிறான். தவிர, லாபம் சம்பாதிக்கிற இந்தத் தூண்டுதலின் விளைவாக, ஒரு புறம், மலிவான மார்க்கெட்டிலே சரக்குகளை வாங்கிக் கிராக்கி யான மார்க்கெட்டிலே விற்றுப் பணத்தைக் குவிக்கிற ஒரு கூட்டத்தினர் உண்டாகின்றனர். இவர்கள் பொருள் உற்பத்திக்கு எவ்வித உதவியும் செய்யாமலே பணத்தைச் சம்பாதித்து விடுகின்றனர். மற்றொரு புறத்தில், சுரண்டுவதையே முக்கிய தொழிலாகக் கொண்ட ஒரு கூட்டத்தினர், வேலையாட்களைக் கூலி கொடுத்து அமர்த்தி அவர்களின் உழைப்பினின்று உற்பத்தியான பொருள் களை விற்று, தாங்கள் பணக்காரர்களாகிறார்கள். இந்த இரண்டு அமிசங்களை யும், அதாவது ஒரு பொருளின் விலையை ஒரு நிர்ணயத்துக் குட்படுத்தாமல் ஏற்றியும் இறக்கியும் லாபம் தரத்தக்க விதமாக விற்பனை செய்தல், பிறருடைய உழைப்பின் பேரில் அதிகமான பணத்தைச் சேகரித்தல் என்ற இரண்டு அமிசங்களையும், சமுதாயத் தின் பொருளாதார வாழ்வினின்று அப்புறப்படுத்தி விட வேண்டு மென்று சமதர்தம் கூறுகிறது.

ஆக, சமதர்மத்தின் நோக்கம், முதலாவது, மனிதனோடு மனிதன் வைத்துக் கொண்டிருக்கிற பரபர சம்பந்தத்தில் நியாயம் என்பது நிரந்தமாக நிலவ வேண்டுமென்பது. அதாவது பரபர நன்மையை முன்னிட்டுத்தான் விவகாரங்கள் நடத்தப்பட வேண்டுமே தவிர, ஒரு சிலருக்கு நன்மையாயிருப்பது, வேறு சிலருக்குத் தீமை யாய் முடிவதாக இருக்கக் கூடாது. இரண்டாவது, பொருளாதார விஷயத்தில் பாகுபாடுகள் இல்லாத, ஏற்றத்தாழ்வுகள் இல்லாத ஒரு ஜன சமுதாயத்தை அமைக்க வேண்டுமென்பது. வித்தியாசங்கள் இல்லாத இந்த ஜன சமுதாயத்தில், அவரவரும் தங்களுடைய திறமைக்குத் தகுந்தபடி உழைக்கவும், தேவைக்குத் தகுந்தபடி ஊதியம் பெறவும் சந்தர்ப்பம் உண்டு. இந்த இரண்டு நோக்கங்களும் எந்தச் சமுதாயத்தில் அனுஷ்டானத்தில் இருக்கின்றனவோ அந்தச் சமுதாயத்தில்தான், மனிதனுடைய வாழ்க்கை பூரணத்துவம் பெறு கிறது; எல்லாத் துறைகளிலும் பிரகாசிக்கிறது.

சமதர்மத்தின்படி, தேசமே எல்லாவற்றிற்கும் மூலகாரணமா யிருக்கிறது; எல்லாவற்றைக் காட்டிலும் முக்கியமானதாயிருக் கிறது. தேசத்திற்குத்தான் எல்லா உரிமைகளும் உண்டு. அப்படியே அந்தத் தேசத்திலுள்ள தனி மனிதர்களுக்கும் உரிமைகள் உண்டு; எல்லா உரிமைகளும் உண்டு; ஆனால் தேசத்திற்கு விரோதமான உரிமைகள் கிடையா. தனி மனிதனுடைய உரிமையா, தேசத்தினு டைய உரிமையா என்கிற பிரச்னை எழுமானால், சமதர்மத்தின் படி தேசத்தின் உரிமைதான் முக்கிய இடம் பெறுகிறது. தேசம் ஒரு பெரிய யந்திரம்; தனி மனிதன் அந்த யந்திரத்திலிருக்கும் ஒரு சுள்ளாணி. யந்திரம் சுழல்கிற விதமாகத்தான் சுள்ளாணி சுழல முடியுமே தவிர, அது தனியாகச் சுழல முடியாது. அதுபோல் தனி மனிதன், சமுதாயத் திற்கு விரோதமாக நடக்க முடியாது; நடக்கக் கூடாது. இது சமதர்மத்தின் கண்டிப்பான உத்தரவு.

சமதர்ம சித்தாந்தப்படி, ஒரு சமுதாயத்தின் அரசியல் அமைப் பானது, அந்தச் சமுதாயத்தின் பொருளாதார நிலைமையை அடிப் படையாகக் கொண்டிருக்கிறது. சமுதாயத்தின் முக்கிய ஜீவனோ பாயத் தொழிலாக விவசாயம் இருந்த காலத்தில், செல்வமானது, நிலச்சுவான்தார்களின் மேற்பார்வையில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இப்படி உற்பத்தி செய்யப்பட்ட செல்வத்தில் பெரும் பகுதி நிலச்சுவான்தார் களுக்கும், சிறு பகுதி விவசாயி களுக்கும் போய்ச் சேர்ந்தது. யாரிடத்தில் செல்வம் அதிகமாகயிருக் கிறதோ அவர்களிடத்தில் அரசியல் அதிகாரம் போயடைவது இயற்கையல்லவா? எனவே, நாளாவட்டத்தில் பணம் படைத்த நிலச் சுவான்தார்களிடம் அரசியல் அதிகாரம் சென்றது. இதற்கே ப்யூடலிஸம்1 என்று பெயர். பின்னர் விஞ்ஞான அறிவு விருத்தியாக, அதன் பயனாகத் தொழில்கள் பெருக, தொழில் முதலாளி களிடத்தில் அரசியல் அதிகாரம் சென்றது. அதாவது நிலச்சுவான் தார்களின் ஆதிக்கம் போய், தொழில் முதலாளிகளின் ஆதிக்கம் ஏற் பட்டது. அதுதான் இப்பொழுது நடைமுறையில் இருக்கிறது. இதற்கு முடிவு காலம் ஏற்படுமென்றும், இதற்குப் பிறகு, பொருளுற் பத்தி செய்கிறவர்கள் யாரோ அவர்களுடைய ஆதிக்கம் ஏற்படு மென்றும், மார்க் அறுதியிட்டுச் சொல்லியிருக்கிறான். அரசியல் அமைப்பும் பொருளாதார வாழ்க்கையும் பிரிக்கமுடியாத ஒரு பின்னல் என்ற உண்மையை, சமர்தர்மம் மையமாகக் கொண்டி ருக்கிறது.

ஆகவே, சமதர்மம் என்பது, ஏற்றத் தாழ்வுகளில்லாத பொருளாதாரத் திட்டம்; எல்லோருக்கும் சம உரிமை வழங்குகிற அரசியல் அமைப்பு; மனிதனுடைய வளர்ச்சியின் முடிந்த நிலை; எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு புதிய நாகரிகம். உலகத்திலே தோன்றின நாகரிகங்கள் பலவும் மதத்தை அடிப்படையாகக் கொண்டவை; சமதர்ம நாகரிகமோ பொருளாதாரத்தை அடிப் படையாகக் கொண்டது. இப்படிப் பொருளாதாரத்தை அடிப் படையாகக் கொண்டிருந்தாலும், அது மானிட வாழ்க்கையின் எல்லா அமிசங்களுடனும் நெருங்கிய தொடர்பு உடையது.


X. சமதர்மக் கட்சி

1. தொண்டர் கூட்டமே
மார்க், சமதர்மத்தை உலகத்திற்குப் பொதுவான ஒரு தத்துவமாக வகுத்துவிட்டுப்போனான். லெனின், அதனை, ருஷ்யா வில் நடைமுறைத் திட்டமாகக் கொணர்ந்து, வெற்றிக்கான அறிகுறி களைக் கண்டுவிட்டுக் கண்மூடி விட்டான். ஒரு திட்டத்தை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவர வேண்டுமானால், அதற்கென்று ஒரு தொண்டர் கூட்டம் தேவை. இந்தத் தொண்டர் கூட்டந்தான் சமதர்மக் கட்சி. சமதர்மக் கட்சி யில்லாவிட்டால், லெனின் வெற்றி யடைந்திருக்க முடியாது. அப்படியே லெனின் இல்லா விட்டால், சமதர்மக் கட்சியும் தோன்றியிருக்க முடியாது. மார்க்ஸின் சிந்தனை அரும்பு, இன்று ருஷ்ய மகா ஜனங்களின் வாழ்க்கை மலராகப் பரிணமித்திருக்கிறதென்று சொன்னால், அதற்குக் காரணம் இந்தச் சமதர்மக் கட்சிதான். உலகத்தில் இதுவரை எத்தனையோ அரசியல் கட்சிகள் தோன்றியிருக்கின்றன; எத்தனையோ மததாபனங்கள் கிளம்பி யிருக்கின்றன; எத்தனையோ சமுதாயச் சீர்திருத்தச் சங்கங் கள் உற்பத்தியாகி யிருக்கின்றன. ஆனால் சமதர்ம கட்சியைப் போல் எந்தக் கட்சியும், எந்த தாபனமும், எந்தச் சங்கமும் பயப்படக் கூடிய ஒரு புதிராக இருந்ததில்லை. ருஷ்யாவுக்கு புறம்பாயுள்ள பெரும்பாலோருக்கு, சமதர்மக் கட்சி என்று சொன்னால், அது நெருப்பையும் ரத்தத்தையும் கக்கக்கூடிய ஒரு இம்ஸைக் கூட்டம் என்கிற மாதிரியான ஒரு மருட்சி இருக்கிறது. இந்த மருட்சிக்கு ஆதாரமேயில்லை. சமதர்மக் கட்சியென்பது ஒரு தொண்டர் படை சந்நியாசக் கூட்டம்; கட்டுப்பாடான ஒரு கட்சி; பரநலத்திற்கென்றே வாழ்கிற ஒரு கோஷ்டி. சமதர்மக் கொள்கைக்கு முற்றிலும் விரோத மாயுள்ள மாக் ஈட்மான் என்ற ஒரு மேனாட்டு அறிஞன் பின்வருமாறு கூறுகிறான் :-

உலகத்திலுள்ள எத்தனையோ தாபனங் களைப் போன்றதன்று ருஷ்ய சமதர்மக் கட்சி. ஒரு தொழில் தாபனம், ஓர் ஆராய்ச்சிக் கழகம், ஒரு சகோதர சங்கம், ஒரு ராணுவம், ஓர் அரசியல் கட்சி ஆகிய இவை யாவும் ஒன்று சேர்ந்தால் எதுவோ அது தான் சமதர்மக் கட்சி. பொருளாதார வாழ்க்கையில் பலதிறப்பட்ட அந்ததுடையவர்களும் இந்தச் சம தர்மக் கட்சியில் சேர்ந்திருக்கிறார்கள். இந்தக் கட்சியின் வேரானது, அரசியல் உணர்ச்சியே இல்லாதவர்களும் சமுதாயத்தின் கடைசி படியிலே உள்ளவர்களுமான பாமர ஜனங்கள் வரை சென்றிருக்கிறது. அப்படிச் சென்று பரவக்கூடிய மாதிரியாகவே .இந்தக் கட்சி அமைப்பு இருக்கிறது. அந்நியர்கள் யாரும் கனவிலே கூடக் கருத முடியாத படி அவ்வளவு சாமர்த்தியமாக வும் சூட்சுமமாகவும் லெனின் இந்தச் சமதர்தக் கட்சி என்னும் அரசியல் கருவியை உபயோகப்படுத்தி வந்திருக்கிறான். அவன் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டபோது, கல்வியறிவில்லாத பாமர ஜனங்களின் பெயரால், தான் அதிகாரத்தைக் கைப் பற்றிக் கொண்டிருப்பதாகக் கூறினான். அவன் அப்படிக் கூறியது முற்றிலும் பொருந்தும். அப்படிக் கைப்பற்றிக் கொண்ட அதிகாரத்தை, அவன் தன் ஒரு கையில் மட்டும் வைத்துக் கொண்டிருந்த போதிலும் உலகத்து எல்லா அரசாங்கங்களும் சேர்ந்து அவனைக் கீழே வீழ்த்த முடியவில்லை.

2. ஆரம்ப வரலாறு
இந்தச் சமதர்மக் கட்சியின் ஆரம்ப வரலாறு என்ன? பத் தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மார்க்ஸீய மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு ஐரோப்பாவின் பல பாகங்களிலும் அநேகம் கட்சிகள் தோன்றின. இவற்றிலே ஒன்றாக ருஷ்யாவில் 1898-ஆம் வருஷம் அபேதவாத ஜனநாயகக் கட்சி என்ற பெயருடன் ஒரு கட்சி தாபிதமாயிற்று.1 ருஷ்யாவிலிருந்து தேசப் பிரஷ்டம் செய்யப்பட்ட புரட்சிவாதிகளிற் சிலரே, இதனை வெளி நாடுகளி லிருந்து கொண்டு, நடத்தி வந்தனர். இவர்களில் லெனினும் ஒருவன். இவனுக்கு வாய் வேதாந்தம் பிடிக்காது. வாய்ப் பந்தல் வேய்ந்து அதன் கீழிருந்து கொண்டு புரட்சியை நடத்த முடியாதென்பது இவனுடைய திடமான நம்பிக்கை. புரட்சி என்று சொன்னால், பழமையை அழிப்பது மட்டுமல்ல; புதுமையைச் சிருஷ்டிப்பதுங் கூட. ருஷ்யாவில் சுயேச்சாதிகார ஆட்சி முறையைக் களைந்து விட்டு அதன் மீது புதியதோர் அரசியலை, புதியதொரு சமுதாயத்தை நிர் மாணம் செய்யவேண்டுமென்பதே இவனுடைய நோக்கம். அதாவது மார்க் கண்ட கனவை நனவாக்க வேண்டுமென்பதே இவன் கோரிக்கை. இதற்காக, அபேதவாத ஜனநாயகக் கட்சி யை ஒரு கருவியாக உபயோகப்படுத்தத் தீர்மானித்தான். இவன் இந்தக் கட்சியில் சேர்ந்தபோது, அவ்வளவு பிரபலதனாயிருக்கவில்லை. மார்க்ஸின் தத்துவத்தில் மோகங் கொண்டிருந்த பலரில் ஒரு வனாகவே இருந்தான். பின்னரே, கட்சியில் சேர்ந்த சுமார் இரண்டு வருஷங்களுக்குப் பிறகே, இவனுடைய சக்தி, இவனுடைய தலைமை யின் தகுதி இவனுடைய புருஷத்துவம், கட்சியில் பிரதிபலிக்க ஆரம் பித்தது. ஒரு கட்சி யென்றிருந்தால், அதைச் சேர்ந்தவர்கள் அத்தனை பேரும் ஒரே லட்சிய முடையவர்களாகவும், ஒரே மனப்பான்மை யுடையவர்களாகவும், ஒரே மாதிரியான கட்டுப்பாட்டுக்குட்பட்ட வர்களாகவும் இருக்கவேண்டும். அப்படிக்கில்லாமல், கட்சிக் கொள்கையிலே அநுதாபம் இருக்கிறதென்று சொல்லிக் கொண்டும், ஜனங்களுக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் தங்களுக்கு இருக்கிற தென்பதைக் காட்டிக் கொள்வதற்காவும், கட்சியில் அங்கத்தினராகச் சேர்ந்து கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? அப்படிப்பட்டவர்களால் கட்சிக்கு என்ன நன்மை யுண்டாகும்? லெனினுடைய கருத்துப்படி, கட்சியென்பது, பெரும் பான்மை தானங் களைக் கைப்பற்றிக் கொள்வதற்கான ஒரு கருவியல்ல; ஜனங் களிடத்திலே செல்வாக்குப் பெறுவதற்கான ஒரு சாதனமல்ல; பொருள், பதவி, பட்டம் முதலியவற்றைச் சுலபமாக அடைவதற்கு அவ்வப்பொழுது உபயோகப்படுத்திக் கொள்ளும் ஒரு பீடமுமல்ல. இந்த மாதிரியான எண்ணங்களை, லெனின், அடிக்கடி தன் கட்சிக்கூட்டங்களில் வலியுறுத்தி வந்தான்.

புரட்சி செய்கிறவர்கள் யார்? படித்த கூட்டமா? இல்லை. வாதப் பிரதிவாதங்களிலே மூழ்கி யிருப்போரா? இல்லை. பின் யார்? பாமர ஜனங்கள். இவர்களைச் செயலுக்குத் தூண்டவும், ஒழுங்கான பாதையில் இவர்களை அழைத்துக் கொண்டு செல்லவும், புரட்சிக் குப் பிறகு இவர்களைக் கொண்டு சமுதாயத்தைப் புனர்நிர்மாணம் செய்யவும் ஒருகோஷ்டி தேவை. இந்தக் கோஷ்டி, எண்ணிக்கை யிலே பருத்திருக்க வேண்டு மென்பதில்லை; உறுதி நிரம்பியதா யிருக்க வேண்டும்; கார்ல் மார்க்ஸின் சமதர்மக் கொள்கைகயில் பரி பூரண நம்பிக்கை யுடையதாயிருக்க வேண்டும்; அப்படி நம்பிக்கை கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல்,சமயம் நேர்கிறபோது அதனை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வரக்கூடிய ஆற்றல் படைத்ததாகவும் இருக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்லப் போனால், பிரசாரத் திறமை, செயலாற்றும் திறமை, நிருவாகத் திறமை ஆகிய அனைத்துமுடைய ஒரு நிபுணர் கூட்டம் தேவை. அபேதவாத ஜனநாயகக் கட்சி யை இப்படிப்பட்ட தொரு நிபுணர் கூட்டமாக உருவாக்க வேண்டு மென்று லெனின் சுமார் பதினைந்து வருஷகாலம் ஓயாது உழைத்தான்; சலியாது போராடினான் இவனுடைய இந்தக் கண்டிப்பான முறை, கட்சியைச் சேர்ந்த பலருக்குப் பிடிக்கவில்லை. எப்படிப் பிடிக்கும், சொல்லினால் சேவை செய்து திருப்தியடைகிறவர்களுக்கு? இதனால், கட்சியில் பிரிவினை உண்டாயிற்று. அபேதவாத ஜனநாயாகக் கட்சி யின் கீழ் போல்ஷ்வெக்கர் (பெரும்பாலோர்) என்றும் மென்ஷ்வெக்கர் (சிறுபாலோர்) என்றும் இரண்டும் பிரிவினர் தோன்றினர். லெனினைத் தலைவனாகக் கொண்டவர்கள் போல்ஷ்வெக்கர்.

1914-ஆம் வருஷத்தில் தொடங்கின ஐரோப்பிய மகா யுத்தத்தின்போது, இந்த போல்ஷ்வெக்கர்களுக்கும், மற்றப் புரட்சிப் பிரிவினர்களுக்கும் கருத்து வேற்றுமைகள் வலுத்தன. இந்த மகாயுத்தம் ஏகாதி பத்திய சக்திகளுக்கிடையே நடைபெறுகிற யுத்த மென்றும், இதில் ஏழை ஜனங்கள் கலந்து கொள்ளவேண்டிய தில்லையென்றும் அப்படிக் கலந்து கொள்வதனால் அவர்களுக்கு எவ்வித நன்மையும் உண்டாகா தென்றும் லெனின் சொல்லிக் கொண்டு வந்தான். ஆனால், ருஷ்யா விலுள்ள மற்றப் புரட்சிவாதிகள், தாய் நாட்டைக் காப்பாற்றுவதாகிற முகாந்திரத்தை வைத்துக் கொண்டு யுத்தத்தை ஆதரித்தார்கள்; யுத்தத்திற்கு உதவி செய்தார்கள். ஆனால், யுத்தம் தொடங்கின சிறிது காலத்திற்குப் பிறகு, ஜனங்களுக்கு யுத்தத்தின் மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டு விட்டது. இந்த வெறுப்பை லெனின் சாமர்த்தியமாக உபயோகித்துக் கொண்டு தன் கட்சியை வலுப்படுத்தினான். 1917-ஆம் வருஷம் பிப்ரவரி மாதத்தில் ஒரு கணக்கு எடுத்துப் பார்த்தபோது, போல்ஷ்வெக்கட்சியில் முப்ப தினாயிரம் பேர் அங்கத்தினரா யிருந்தனர். அதாவது, இந்த முப்ப தினாயிரம் பேரும் ,புரட்சியையே தொழிலாகக் கொண்டவர்கள்; லட்சியத்திற்காகத் தங்களுடைய சர்வத்தையும் துறந்துவிட்டவர் கள். அப்பொழுது ஜார் அரசாங்கத்தின் அடக்கு முறையோ வருணிக்க முடியாத அவ்வளவு கொடூரமாயிருந்தது. இதற்கு மத்தியில் போல்ஷ்வெக் கட்சி, எண்ணிக்கையிலேகூட வளர்ந்து வந்தது என்று சொன்னால், லெனினுடைய செயலாற்றும் திறனை நாம் எப்படி வியந்து பாராட்டா மலிருக்க முடியும்? 1917-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் புரட்சி ஏற்பட்டு ஜார் ஆட்சி வீழ்ந்துவிட்ட பிறகு, தற்காலிக அரசாங்கம் என்ற பெயருடன் முதுகெலும்பில்லாத ஒரு கூட்டம் நிருவாக தானங்களைச் சுமார் எட்டு மாத காலம் பற்றிக்கொண்டிருந்ததல்லவா, அந்தக் காலத்தில் போல்ஷ்வெக் கட்சியின் எண்ணிக்கை இரண்டு இலட்சமாகப் பெருகியது; என்ன வேடிக்கை? லெனின், இந்தக் காலத்தில் ஒரு யந்திரம்போல் உழைத்தான்.

1917-ஆம் வருஷக் கடைசியில், போல்ஷ்வெக்கர்களின் பலத்தைக் கொண்டு லெனின், அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டான்; குடியரசு முறையை ஏற்படுத்தினான். கட்சியின் பெயரையும் மாற்றி யமைத்தான். அபேதவாத ஜனநாயகக் கட்சி யாயிருந்தது ருஷ்ய சமதர்மக்கட்சி(போல்ஷ்வெக்)என்றுமாறியது..1 1923-ஆம் வருஷத் தொடக்கத்தில், குடியரசு முறையை சமஷ்டி அரசாக மாற்றி, அரசியலை ஒரு புதிய ஒழுங்குக்குக் கொண்டுவந்தபோது, அதை அனுசரித்தாற்போல் கட்சியின் பெயரையும் சிறிது திருத்தி யமைக்க வேண்டியதா யிருந்தது. ருஷ்ய சமதர்மக் கட்சி (போல்ஷ்வெக்) என்பது போய், (சோவியத் சம தர்மக் குடியரசு நாடுகளடங்கிய) ஐக்கிய ராஜ்யத்தின் சமதர்மக் கட்சி (போல்ஷ்வெக்)2 என்று ஆயிற்று. அதுவே இப்பொழுது, எவ்வித எதிர்ப்பு மில்லாத, வேறு பிரிவினைகளை அல்லது அபிப் பிராய பேதங்களைத் தன்னகத்தே கொண்டிராத சமதர்மக் கட்சி யாக விளங்குகிறது. ருஷ்யாவில் சாதாரணமாக, கட்சியாக விளங்கு கிறது. ருஷ்யாவில் சாதாரணமாக, கட்சியைச் சேர்ந்தவன், கட்சியைச் சேராதவன் என்றுதான் சொல்லுவார்கள். கட்சி என்றால், அது ஒரு கட்சிதான்; சமதர்மக் கட்சிதான். பொதுவாக இப்பொழுது இந்தச் சமதர்மக்கட்சியின் பெயராலேயே போல்ஷ்வெக்கர்கள் அழைக்கப் படுகிறார்கள். எனவே, போல்ஷ்வெக் கட்சி யென்றாலும் சமதர்மக் கட்சி யென்றாலும் இப்பொழுது ஒன்றுதான்.

1937-ஆம் வருஷம் ருஷ்யாவில் புதிய அரசியல் திட்டம் அனுஷ்டானத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இந்த அரசியல் திட்டத்தில் சமதர்மக் கட்சிக்கு ஒரு தானம் கொடுக்கப்பட்டிருக் கிறது. சட்ட mங்கீகாரம்bபற்றïந்தக்fட்சியின்bசல்வாக்குதான்,Uஷ்யாவின்mரசியல்tழ்க்கை,rமுதாயtழ்க்கை,bபாருளாjரtழ்க்கைKதலியvல்லாத்Jறைகளிலும்gடிந்திருக்கிறது.Mdhš, இந்தக் கட்சிக்கும் அரசியல் நிருவாகத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.3 கட்சியில் அங்கத்தினர்களாகவோ, தலைவர் களாகவோ இருக்கிறார்கள், அரசாங்க அதிகாரிகளாக இருக்கலாம். ஆனால், கட்சிவேறு; அரசாங்கம் வேறு.

3. கட்சி அமைப்பு
சமதர்மக் கட்சியின் அமைப்பு ஒரு கோபுரம் மாதிரி இருக்கிறது. விரிவான உரிமையின் மீது கூர்மையான கடமை வைக்கப்பட்டிருக் கிறது. சமுதாயத்தின் எல்லாப் படியிலுள்ளவர்களும் எவ்வித சலுகையோ வித்தியாசமோ காட்டப்படாமல் இதில் அங்கத்தின ராகச் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆனால், மேலிருக்கப் பட்ட ஒரு சிலருடைய அதிகாரத்திற்கு எல்லாரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

கட்சியில், ஏதோ சந்தா செலுத்திவிட்டு அங்கத்தினராகச் சேர்ந்து விடலாம் என்பது முடியாது. கட்சியின் விதிகளை முதலில் தெரிந்து கொண்டு, அவற்றில் கூறப்பட்டுள்ள அநேக நிபந்தனைகள் படி தன்னால் நடக்க முடியுமா என்று பிரதியொரு நபரும் தன்னைத் தானே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால், எடுத்த உடனே, ஒருவனை அல்லது ஒருத்தியை அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்வதென்பது சமதர்மக் கட்சியில் கிடையாது. அநேக பரி சோதனை நிலைகளை ஏற்படுத்தி யிருக்கிறார்கள். இவற்றில் தேறிச் சென்ற பிறகுதான், அங்கத்தினர் என்ற கௌரவமான, ஆனால் மிகவும் பொறுப்புள்ள தானம் கிட்டும். கௌரவமான தானம் என்று ஏன் சொல்கிறோமென்றால், இவர்கள் அங்கத்தினர்களாக எப்பொழுது அங்கீகரிக்கப்படுகிறார்களோ அப்பொழுதே இவர் களுக்குத் துறவு மனப்பான்மை இருக்கிறது என்பது விசதமாகி விடு கிறது. சேவை செய்வதற்கு இவர்கள் தகுதியுடையவர்களாகி விடு கிறார்கள். ஜனங்களுக்குத் தலைமை பூண்டு அவர்களை வழி நடத்திச் செல்வதற்கு இவர்களுக்கு யோக்கியதை இருக்கிற தென்பது அங்கீகரிக்கப் பட்டதாகிறது. சேவை செய்கிறவர் களுக்கு, தலைமை ஏற்றுக் காரியங்களை நடத்துகிறவர்களுக்கு, சமுதாயத்திலே எப் பொழுதும் கௌரவமான தானம் உண்டல்லவா?

கட்சியிலே அங்கத்தினராகச் சேர விரும்புவோர், முதலாவது, மார்க்ஸின் சமதர்ம சித்தாந்தத்தை ஒப்புக் கொள்பவர்களா யிருக்க வேண்டும். இரண்டாவது, அவர்கள் எந்த உத்தியோகத்திலிருந்தாலும், எந்தத் தொழில் செய்து கொண்டிருந்தாலும், அரசியல் விவவகாரங் களில் சிரத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். அதாவது, அரசியல் விஷயங்களில் அக்கரை காட்டுவதென்பது அவர்களுடைய வாழ்கை யோடு ஒட்டிய ஒரு சுபாவமாக இருக்க வேண்டும். இந்தச் சுபாவம் செயலிலும் பரிணமிக்க வேண்டும். எப்படியென்றால், வயிற்றுப் பிழைப்புக்கான உத்தியோகமோ, தொழிலோ செய்து முடிந்து விட்ட பிறகு, தினந்தோறும் ஏதோ சில மணிநேரம் பொதுநலத் தொண்டு ஒன்றில் ஈடுபட்டு உழைக்கவேண்டும். மூன்றாவது, அவர் களுக்கு எந்தவிதமான மதப்பற்றும் இருக்கக்கூடாது. இவை, தவிர, தனிச் சொத்துரிமையில் ஆசை இருக்கக் கூடாது. சமுதாயத்தைப் பலதரத்தினராகப் பிரித்து வைத்து, எல்லாத் தரத்தினரையும் திருப்தி செய்து கொண்டுபோக வேண்டுமென்ற மனப்பான்மை இருக்கக் கூடாது. உழைக்காமலே அல்லது லேசாக உழைத்து அதிகமான சுகத்துடனே வாழ விரும்புவோர், தங்களுக்கென்று சொந்தமாக அநேக சொத்து சுதந்திரங்களை வைத்துக்கொண்டு அனுபவிக்க வேண்டு மென்ற இச்சை யுடையவர்கள், புரோகிதர்கள், மடாதிபதி கள், நிலச்சுவான் தார்கள் தொழில் முதலாளிகள், லாபம் சம்பாதிப்ப தற்காக வியாபாரம் செய்வோர் ஆகிய பலரும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் கட்சியில் அங்கத்தினர் களாகச் சேர்த்துக் கொள்ளப் பட மாட்டார்கள்.

கட்சியில் யாரும் நேரடியாக அங்கத்தினராகச் சேர்ந்து கொண்டுவிட முடியாது. ஏற்கனவே கட்சியில் அங்கத்தினரா யுள்ளவர்களில் இரண்டு பேரோ, மூன்று பேரோ அல்லது ஐந்து பேரோ சேர்ந்து ஒருவனை அல்லது ஒருத்தியைச் சிபார்சு செய்ய வேண்டும். இப்படிச் சிபார்சு செய்யப் படுகிறவர்கள் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களா யிருக்கவேண்டும். சிபார்சு செய்கிறவர்கள், சிபார்சு செய்யப்படுகிறவர்களை நன்றாகத் தெரிந்து கொண்டிருக் கிறவர்களாகவும், அவர்களுடைய நன்னடத்தைக்குப் பொறுப்பாளி களாகவும் இருக்க வேண்டும். இப்படிச் சிபார்சு செய்யப்படுகிற வர்கள் முதலில் உமேதவாரிகளாகச்1 சேர்த்துக் கொள்ளப்படுவார் கள். ஒரு வருஷ காலமோ, இரண்டு வருஷ காலமோ, அவரவர் களுடைய தொழில் அந்தத்துக்குத் தகுந்தபடி இந்த உமேதவாரிக் காலம் இருக்கும். உதாரணமாக, பொருளுற்பத்தி வேலையில் ஐந்து வருஷகாலம் தொடந்து ஈடுபட்டிருக்கிற தொழிலாளியொருவன், கட்சியில் அங்கத்தினனாகச் சேருவதற்கு, ஐந்து வருஷ காலம் கட்சி யில் அங்கத்தினராயுள்ள மூன்று பேருடைய சிபார்சு வேண்டும். இவன் ஒரு வருஷ காலந்தான் உமேதவாரியாக வைக்கப்படுவான். ஐந்து வருஷ காலத்திற்குக் குறைவாகப் பொருளுற்பத்தி வேலையில் ஈடுபட்டிருக்கிற தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், செம்படையிலே சேர்ந்திருக்கிற விவசாயிகள் - தொழிலாளர்கள், தொழிற்சாலைகளில் வேலை செய்துகொண்டிருக்கும் இஞ்சினீர் கள் முதலியோருக்கு ஐந்து பேருடைய சிபார்சும், இரண்டு வருஷ உமேதவாரிக் காலமும் வேண்டும். இப்படித் தொழில் அந்த துக்குத் தகுந்தபடி அங்கத்தினர்களுக்குப் பிரவேச நிபந்தனைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. உமேத வாரிகளாக இருக்கிறபோது இவர்கள் அபேட்சகர்கள்2 என்று அழைக்கப்படுகிறார்கள். ஒரு வருஷ காலமோ இரண்டு வருஷ காலமோ அபேட்சகர்களாக இராமல் யாரும் கட்சியில் பொறுப்புள்ள அங்கத்தினராக முடியாது. இது விஷயத்தில் எவ்வித விதிவிலக்கும் கிடையாது. இந்த ஒரு விஷயத்தில் மட்டுமென்ன? எந்த விதிக்கும் விலக்குக் கிடையாது தான். அபேட்சகர்கள், அங்கத்தினர்களுக்கு என்ன சந்தா விதிக்கப் பட்டிருக்கிறதோ அந்தச் சந்தாவைச் செலுத்தவேண்டும்.

அங்கத்தினர்களுடைய சந்தா அவரவர்களுடைய வருமானத் திற்குத் தகுந்தபடி நிர்ணயிக்கப் பட்டியிருக்கிறது. உதாரணமாக, சுமார் நூறு ரூபாய் சம்பாதிக்கிறவர், மாதம் பன்னிரண்டு அணா சந்தா செலுத்த வேண்டும். முந்நூறு ரூபய்க்கு மேற்பட்டுச் சம்பாதிக்கிறவர்கள், வருமானத்தில் நூற்றுக்கு மூன்று விகிதம் சந்தாவாக கொடுக்கவேண்டும். சந்தாத் தொகை தவிர, அபேட்ச கராகச் சேருகிறபோது பிரவேசக் கட்டணமாக ஒரு சிறு தொகை கொடுக்கவேண்டும். அபேட்சகர் களாயிருக்கப்பட்டவர்கள், எல்லாக் கட்சிக் கூட்டங்களுக்கும் ஆஜராயிருக்கலாம். ஆனால், ஓட்டு மட்டும் கொடுக்கக்கூடாது. ஓர் அங்கத்தினர் வசம் என்னென்ன வேலைகள் ஒப்படைக்கப்படுகின்றனவோ அந்த வேலைகள் யாவற்றையும் அபேட்சகர்கள் வசம் ஒப்புவித்து அவர்கள் திறமை யையும் தகுதியையும் பரிசோதனை செய்து பார்ப்பார்கள். மற்ற அங்கத்தினர்களும், இந்த அபேட்சகர்களுடைய நடவடிக்கை களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பார்கள். கட்சியின் மேலதிகாரிகளுக்கு இவர்களைப் பற்றி அடிக்கடி அறிக்கைகள் சென்று கொண்டிருக்கும். உமேதவாரிக் காலமாகிய பரிசோதனைக் காலத்தை அபேட்சகர்கள் வெற்றிகரமாகக் கடத்தி விடுவார் களனால், உடனே அங்கத்தினர்களாகப் பதிவு செய்து கொள்ளப் படுகிறார்கள். பரிசோதனையில் இவர்கள் திருப்திகரமாக நடந்து கொள்ள வில்லை யென்று கட்சி அதிகாரிகளுக்குப்படுமானால், உமேதவாரிக் காலத்தை நீடிக்கச் செய்கிறார்கள்; அல்லது கட்சியில் சேருவதற்குத் தகுதியில்லையென்று சொல்லி விலக்கிவிடுகிறார்கள்.

4. மூன்று நியமங்கள்
கட்சியிலே சேர்ந்துவிட்ட பிறகு அங்கத்தினர்கள் மூன்று வித மான நியமங்களுக்குக் கண்டிப்பாக உட்பட்டுத் தீர வேண்டும். இந்த நியமங்களைத் தங்களுடைய அன்றாட வாழ்கையில் அனுஷ்டானத் திற்குக் கொண்டுவந்தாக வேண்டும். இவையென்ன?

1.  சமதர்ம தத்துவத்தைப் பற்றியோ அல்லது சோவியத் அரசாங்கத்தின் கொள்கைகளைப் பற்றியோ அவ்வப்பொழுது தலைவர்கள் என்ன வியாக்கியானம் செய்கிறார்களோ அல்லது என்ன முடிவை வெளியிடு கிறார்களோ அந்த வியாக்கியானத்தை அல்லது அந்த முடிவை அங்கீகரித்து அதன்படியே நடக்கவேண்டும். இது விஷயத்தில் இம்மியளவு கூட பிறழக் கூடாது. இடதுசாரி அபிப்பிராய மென்றும் வலதுசாரி அபிப் பிராயமென்றும், சொல்லிக் கொண்டு, கட்சியின் முடி வான அபிப்பிராயத்தோடு தங்களுடைய சொந்த அபிப் பிராயத்தை ஒட்டுப் போடக்கூடாது. பிரதியோர் அங்கத்தினரும், கட்சியோடு மட்டும் ஒன்று பட்ட வரல்ல; கட்சியினுடைய அபிப்பிராயத்திலும் ஒன்று பட்டவர். ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றிக் கட்சியின் தலைமை தானம் முடிவான அபிப்பிராயம் தெரி விக்கவில்லையென்று வைத்துக் கொள்வோம். அப்படித் தெரிவிக்கப்படும் வரை, அந்த விஷயத்தைப் பற்றி அந் தரங்கமாகவோ பகிரங்கமாகவோ தர்க்கம் செய்யவோ, கண்டிக்கவோ, மாற்று அபிப்பிராயம் சொல்லவோ பிரதியோர் அங்கத்தினருக்கும் பரிபூர்ண உரிமை உண்டு. ஆனால், முடிவான அபிப்பிராயம் வெளியாகி விட்டபிறகு, அதற்குக் கட்டுப்பட்டே எல்லா அங்கத் தினர்களும் நடந்து கொள்ள வேண்டும்; எதிர்ப்போ, கண்டனமோ இருக்கக் கூடாது. அப்படிச் செய்தால், தண்டனை கிடைக்கும். கட்சியி லிருந்து விலக்கப் படலாம்; அல்லது சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்படலாம்; அல்லது தேசப்பிரஷ்டம் செய்யப்படலாம்.

2.  கட்சியின் அதிகாரத்திற்குப் பிரதியோர் அங்கத்தினரும் கட்டாயம் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். கட்சியின் தலைவர்கள், ஓர் அங்கத்தினரின் தகுதியைப் பார்த்து அவரிடத்தில் எந்த வேலையை ஒப்பு வித்தாலும் அந்த வேலையை அந்த அங்கத்தினர் செய்தாக வேண்டும். தனக்குத் தகுதியில்லை யென்றோ அல்லது வேறு வேலையிட்டால் அதைத்தான் சிறப் பாகச் செய்துகாட்ட முடியுமென்றோ சொல்லக் கூடாது. தனக்கிட்ட வேலையைச் செய்வதற்காக அந்த அங்கத்தினர் எந்த இடத்திற்குப் போகவும், எந்த இடத்தில் வசிக்கவும், எந்தத் தொழிலைச் செய்யவும், எதற்கும் தயாராயிருக்க வேண்டும். உலகத்தில் சம தர்மம் பரவ வேண்டுமென்ற ஒரே நோக்கந்தான் பிரதியோர் அங்கத் தினருக்கும் இருக்கவேண்டும்.

3.  கட்சி அங்கத்தினர்கள், சாதாரண -அதாவது ஆடம்பர அல்லது பரம தரித்திரம் இரண்டும் இல்லாத - இயற்கையான வாழ்க்கையை நடத்த வேண்டும். கட்சியிலே சேர்ந்து விட்டால், அவர்கள், உணவுக்கும் உடைக்கும் திண்டாடிக் கொண்டு சேவை செய்ய வேண்டுமென்பது அர்த்தமல்ல. அப்படியே, கட்சியில் சேர்ந்துவிட்ட பிறகு, செலவுத் தொகை ஒன்று கிடைக் கிறதென்று,எந்த வேலையையும் செய்யாமல் சும்மா யிருக்கவும் முடியாது. வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதைப் பிரதியோர் அங்கத்தினரும் பெறுவதற்கு உரிமையுடையவர் என்று கட்சித் தலைவர்கள் நிர்ணயப் படுத்தியிருக்கிறார்கள். கட்சி அங்கத்தினர்கள், எந்தத் தொழிலைச் செய்து கொண்டிருந்தபோதிலும், அந்தத் தொழிலி லிருந்து கிடைக்கிற வருமானத்திலிருந்து, கட்சி அங்கத்தினர் என்ற ஹோதாவில் தாம் எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டுமோ அவ்வளவு எடுத்துக் கொண்டு, மிகுதித் தொகையைக் கட்சி நிதிக்குச் சேர்த்து விடவேண்டும். இப்படிச் சொல்வதனால், அங்கத்தினரா யுள்ளவர்கள், தங்கள் உத்தியோக அவசியத்திற்காக என்ன செலவழிக்க வேண்டுமோ அதைச் செலவழிக்கக் கூடாதென்பது அர்த்தமல்ல. உதாரணமாக, கட்சி அங்கத்தினர் ஒருவர், அரசாங்க உயர்தர உத்தியோக தராயிருக்கிறா ரென்று வைத்துக் கொள்வோம். அவர், உத்தியோகதர் என்ற தோரணையில் ரெயிலிலோ, கப்பலிலோ, ஆகாய விமானத்திலோ பிரயாணம் செய் வதற்கும், மோட்டார்கள் வைத்துக் கொள்வதற்கும், சௌகரியமான இடத்தில் வசிப்பதற்கும் உரிமை யுடையவர். இந்தச் செலவுகள், அவருக்கு அரசாங்கப் பொக்கிஷத்திலிருந்து அளிக்கப்பட்டு விடுகின்றன. அப்படியே, ஓர் அரசாங்கத்தினர், தமது நியாயமான வருமானத்தைக் காட்டிலும் அதிகமான ஒரு தொகை யைக் கட்சி வேலைக்காகச் செலவழிக்கும்படி நேரிட்டு விட்டால், அந்தத் தொகை, கட்சி நிதியிலிருந்து கொடுக்கப்பட்டு விடுகிறது.

இந்த மூன்று நியமங்களையும் தவிர, பொதுவாக எல்லாக் கட்சி அங்கத்தினர்களும், சொந்த விவகாரங்களிலாகட்டும், பொது விவகாரங் களிலாகட்டும் மிகவும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். அவர்களுடைய பேச்சு, நடை, உடை, ஒரு காரியத்தைச் செய்கிறமாதிரி முதலியவைகளைப் பார்த்ததும், அவர் களுடைய தனித்துவம் விளங்க வேண்டும். அதாவது ஒழுங்கு முதல் ஒழுக்கம் வரையில், புறத்தூய்மை முதல் அகத்தூய்மை வரையில் எல்லா வற்றிலும் அவர்கள் மற்றவர்களுக்கு வழி காட்டிகளா யிருக்கவேண்டும். இன்னும் சாதாரண பாஷையில் சொல்வதானால், அவர்கள், உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரையில் சமதர்மக் கட்சி அங்கத்தினர்களா யிருக்க வேண்டும். ஒரு தொழிற் சாலையில் அல்லது ஒரு காரியாலயத்தில், பலருக்கு மத்தியில் இரண்டு மூன்று சமதர்மக்கட்சி அங்கத்தினர்கள் இருந்தால், அந்த இரண்டு மூன்று பேரும் மற்றவர்களை அதிகமான வேலை செய் வதற்குத் தூண்டவேண்டும்; தாங்களும், மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக வேலை செய்து காட்டவேண்டும். கணக்கெழுதுவது முதல் யந்திரம் சுற்றுவது வரை, மற்றவர்களுக்கு முன்மாதிரியா யிருக்க வேண்டும். இப்படி அதிகமான உழைப்பை மேற்கொண்ட போதிலும், வேறு விதங்களில் சிரமப்பட்டாலும், மற்றவர்களை விட விசேஷமான சலுகைகளை எதிர்பார்க்கக் கூடாது.

இங்ஙனம் சமதர்மக் கட்சியில் ஒழுங்கான அங்கத்தினர் களைத் தவிர, அநுதாபிகள்1 என்ற ஒரு பிரிவினர் உண்டு. இவர்கள், கட்சியினிடத்தில் விசுவாசமுடையவர்கள்; அதன் கொள்கையில் அநுதாபமுடையவர்கள்; ஆனால், அந்தக் கொள்கையைப் பற்றி, பொதுவாக மார்க்ஸீயத்தைப் பற்றிப் பிறர்க்கு விளங்குமாறு சொல்லத் தெரியாதவர்கள். இப்படிப்பட்டவர்கள் ஒழுங்கான அங்கத்தினர்களாக முடியாது. அநுதாபிகள் கோஷ்டி2 என்று இவர்களைத் தனியாகப் பிரித்து, கட்சியின் பிரதம சபை3களோடு இணைத்துவிடுகிறார்கள். இவர்கள் மேற்படி பிரதம சபையின் கூட்டங்களுக்கு ஆஜராகலாம்; அங்கு நடைபெறும் எல்லா விஷயங் களிலும் கலந்து கொள்ளலாம்; ஆனால் ஓட்டு மட்டும் கொடுக்கக் கூடாது.

கட்சியில் அங்கத்தினராகச் சேரும் விகிதாசாரத்தைக் கட்சித் தலைவர்கள் எப்பொழுதும் ஒரு நிதானத்திற்குள்ளாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, கையினாலுழைத்துப் பிழைக்கிற வர்கள் யாரோ அவர்களுடைய விகிதாசாரம் எப்பொழுதும் கொஞ்சம் கூடுதலாக இருக்குமாறு பார்த்துக்கொள்கிறார்கள். பொதுவாகவே, தொழிலாளர்கள், விவசாயிகள், செம்படையி லுள்ளவர்கள் ஆகிய இவர்களுடைய எண்ணிக்கைதான், சமதர்மக் கட்சியில் எப்பொழுதும் அதிகமாக இருந்துகொண்டு வருகிறது.

5. பல்வேறு சபைகள்
கட்சியின் அமைப்பைப் பற்றிச் சிறிது கவனிப்போம். கட்சியின் அமைப்பானது ஒரு கோபுரம் மாதிரி இருக்கிறதென்று ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். இந்தக் கோபுரத்தின் அடிப்படையில் இருப்பது, பிரதம சபை. இந்தப் பிரதம சபையில் குறைந்தது மூன்று பேர் அங் கத்தினராயிருக்கவேண்டும். ஒரு தொழிற்சாலை, கல்லூரி, ஆபத்திரி, பத்திரிகாலயம், ரெயில், கப்பல் முதலிய எந்த தாபனத்திலும், எந்த இடத்திலும் கட்சி அங்கத்தினர்களாக மூன்று பேர் இருப்பார்களா னால், அவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு பிரதம சபை ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த மூன்று பேர் என்பது குறைந்தபட்ச எண் ணிக்கையே தவிர, இதற்கு மேல் எத்தனை பேர் வேண்டுமானாலும் ஒரு பிரதம சபையில் அங்கத்தினராயிருக்கலாம். ஒரு தொழிற்சாலை யிலோ அல்லது வேறெந்த தாபனத்திலோ நூற்றுக்கணக்கான கட்சி அங்கத்தினர்கள் இருப்பார்களானால், கட்சியின் நிருவாக சௌரிகரியத்திற்காகவும் வேலை சௌகரியத்திற்காகவும், இலாகா வாரியாகப் பிரதம சபை ஏற்படுத்திக் கொள்ளலாம். இப்படி ஒரே தாபனத்தில் பல பிரதம சபைகள் இருக்கும் பட்சத்தில், இவை களின் வேலையை ஒருமுகப்படுத்தி, கொண்டு செலுத்தும் பொருட்டு, பொதுக் கமிட்டி ஒன்று ஏற்படுத்திக் கொள்வார்கள்.

இந்தப் பிரதம சபையின் வேலை என்ன? எந்த ஒரு தாபனத்தின் வேலையிலும் இந்தப் பிரதம சபைதலையிடாது. உதாரணமாக, ஒரு தொழிற்சாலையில் சமதர்மக் கட்சியின் பிரதம சபையொன்று இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அந்தத் தொழிற்சாலையை எப்படி நிருவாகம் செய்யவேண்டும் என்பது போன்ற விவகாரங்களில் இந்தப் பிரதம சபை அங்கத்தினர்கள் தலையிடமாட்டார்கள். மற்றத் தொழிலாளர்களுக்கு என்ன உரிமைகள், என்ன கடமைகள் உண்டோ அதே உரிமைகள், அதே கடமைகள் தான், கட்சி அங்கத்தினர்களுக்கும் உண்டு. ஆனால், கட்சி அங்கத்தினர்கள் என்ற ஹோதாவில் இவர்களுடைய பொறுப்பு அதிகம். இவர்கள், உழைப்பிலே சோர்வு காட்டுகிறவர்களுக்கு உற்சாகம் அளிக்கவேண்டும்; தவறி நடந்தவர்களைச் சீர்திருத்த வேண்டும்; பொதுவாகச் சமதர்ம தத்துவத்தை எங்கும், எல்லாரிடத்திலும் புகுத்த வேண்டும். இவர்கள் நடந்து கொள்கிற மாதிரியைப் பார்த்து, மற்றவர் களும் சமதர்மக் கட்சியில் சேர வேண்டும்மென்று ஆவல் கொள்ள வேண்டும். தொழிலாளர் சங்கங்கள், கூட்டுறவு தாபனங்கள் முதலிய எல்லாவற்றிலும் இவர்களுடைய செல்வாக்கு பரிணமித் திருக்கிறது. இவர்கள்தான், இந்தப் பிரதம சபைகள்தான், சமதர்மக் கட்சிக் கோபுரத்தின் அதிவாரம்; உயிர் நாடி.

பிரதம சபைகளுக்கு மேல் ஜில்லா சபை; ஜில்லா சபைக்கு மேல் மாகாண சபை; மாகாணசபைக்கு மேல் மத்தியக் கமிட்டி. இப்படி வரிசைக்கிரமமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இதே வரிசையில் ஜில்லா மகாநாடுகள், மாகாண மகா நாடுகள் அகில ஐக்கிய மகாநாடு முதலியன அவ்வப்பொழுது கூடுகின்றன. இவைகளுக்கு, அவ்வவற்றின் கீழ்ப்படியி லுள்ள மகாநாடுகளினால் தெரிந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆஜாரா வார்கள். அதாவது, கிராம சபைகளினால் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஜில்லா மகா நாட்டுக்கும், ஜில்லா மகாநாடுகளினால் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகள் மாகாண மகாநாட்டுக்கும் இப்படி முறையே ஆஜரா வார்கள். இந்த மாகாநாட்டுகள் வருஷத்துக்கொருமுறை கூடி, தங்கள் தங்கள் நிருவாகக் கமிட்டியைத் தெரிந்தெடுத்துக் கொள்கின்றன. இந்த நிருவாகக் கமிட்டிகள்தான் மேலே சொன்ன ஜில்லா சபை முதலியன. இந்த மகாநாடுகளில் அரசாங்கத்தார் நிறைவேற்றின வேலைத் திட்டங்கள், இனி செய்யப் போகிற காரியங்கள் முதலிய யாவும் பரிசீலனை செய்யப்பெறும். ஆனால், வாதப் பிரதிவாதங் களுக்கு இங்கு அதிகமாக இடம் அளிக்கப்படுவதில்லை.

கட்சியின்மேல் அமைப்பில் இருப்பது மத்தியக் கமிட்டி என்று சொன்னோமல்லவா? இதுதான் கட்சியின் நிருவாக சபை. இதில் சுமார் எழுபது அங்கத்தினர்கள் இருக்கிறார்கள். இந்த நிருவாக சபையானது, ஒரு தலைவர், ஒரு காரியதரிசி, மூன்று உதவிக் காரியதரிசிகள், இரண்டு காரியக் கமிட்டிகள் இவைகளின் மூலமாக எல்லா விவகாரங்களையும் நடத்திக் கொண்டு போகிறது. காரியக் கமிட்டிகளில் ஒன்றுக்கு பாலிட் பீரோ1 என்று பெயர். மற்றொன் றுக்கு ஒர்க் பீரோ2 என்று பெயர். இந்த ஒவ்வொன்றிலும் ஒன்பது அல்லது பத்து பேர் அங்கத்தினர்கள். இந்த இரண்டு காரியக் கமிட்டி களையும் தவிர கட்சி நிருவாகக் கமிஷன்3 என்றும், கணக்குப் பரிசோதனைக்கமிஷன்4 என்றும் இரண்டு கமிட்டிகள் இருக்கின்றன. இந்தக் கமிட்டிகளும், மேலே சொன்ன தலைவர், காரியதரிசி முதலிய உத்தியோகதர்களும், அகில சமதர்மக் கட்சிக் காங்கிர சினால் தெரிந்தெடுக்கப்படுகிறார்கள். கட்சி நிருவாகக் கமிஷனும், கணக்குப் பரிசோதனைக் கமிஷனும், கட்சிக் காங்கிரசினால் நிறை வேற்றப்படுகிற தீர்மானங்களை எல்லா அங்கத்தினர்களும் சரியாக அனுஷ்டானத்திற்குக் கொண்டு வருகிறார்களா என்பதையும், கட்சி விஷயத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டவர்களை விசாரித்துத் தகுதியில்லாதவர்களை விலக்குகிற வேலையையும் கவனித்துக் கொள்ளும்.

காரியக் கமிட்டிகளில் பாலிட் பீரோ என்பது தான் முக்கிய மானது. கட்சி உத்தியோகதர்கள், இந்த பாலிட் பீரோவைக் கலந்து கொண்டுதான் எல்லாக் காரியங்களையும் செய்வார்கள். அர சாங்கத்தின் உயர்தர உத்தியோகதர்களில் பெரும்பாலோர் இந்த பாலிட் பீரோவில் அங்கத்தினர்கள். பாலிட் பீரோ என்றால் அரசியல் கழகம் என்று அர்த்தம்.

மத்தியக் கமிட்டியானது ஏறக்குறைய மாதத்திற் கொருமுறை கூடுகிறது. இந்த மாதாந்தரக் கூட்டத்தில், ஒரு மாதத்தின் வேலைகள் பூராவும் விமரிசனம் செய்யப்படுவதோடு, அடுத்த மாதத்து வேலைத் திட்டமும் தயாரிக்கப்படுகிறது. இவைகளுக்கெல்லாம் மூலகாரணமா யிருப்பது பாலிட் பீரோ. கட்சியின் உத்தியோகதர்களாகிய தலைவர், காரியதரிசி முதலியோர், இந்த மாதக் கூட்டங்களில், ஒளி மறைவின்றி எல்லா விஷயங்களையும் ஆஜர்படுத்தி, கமிட்டியின் நம்பிக்கையையும் அங்கீகாரத்தையும் பெறுவார்கள்.

6. கட்சியும் அரசாங்கமும்
சோவியத் ருஷ்யாவில் ஒரு விசித்திரம் (அதாவது, ஒரு புதிர் மாதிரி காணப்படுவது) என்னவென்றால், சமதர்மக் கட்சிக்கும் அரசாங்க நிரு வாகத்திற்கும் உள்ள தொடர்புதான். சோவியத் அரசியல் திட்டத்தில் சமதர்மக் கட்சிக்குப் பொதுவாக ஒரு தானம் கொடுக்கப்பட்டி ருக்கிற தென்பது வாதவம். ஆனால், கட்சியின் மத்தியக் கமிட்டிக்கோ, அந்த மத்தியக் கமிட்டியின் காரியக் கமிட்டியாகிய பாலிட் பீரோவுக்கோ அதில் இடமில்லை. இவை, அரசாங்க தாபனங்களு மில்லை. ஆனாலும், இவை, இந்த மத்தியக் கமிட்டியும் பாலிட் பீரோவும், அரசாங்க நிருவாகத்தைப் பற்றின விஷயங்களையே பெரும்பாலும் கவனிக்கின்றன. தேசத்தின் ஒழுங்கான நிருவாகமும், தேச மக்களினுடைய க்ஷேமமும் தங்களுடைய சொந்த விவகாரங்கள் மாதிரியாகவே பாலிட் பீரோவின் அங்கத்தினர்கள் கருதுகிறார்கள். பாலிட் பீரோவின் என்ன மாதிரியான திட்டங்கள் வகுக்கப்படு கின்றனவோ, அவற்றையே அரசாங்கம் அனுஷ்டானத்திற்குக் கொண்டு வருகிறது. பாலிட் பீரோவும் மந்திரிச் சபையும் தனித்தனி தாபனங்களாயிருந்த போதிலும், ஒருவரே, இரண்டிலும் அங்கத் தினராயிருப்பதனாலும், தேசம் வேறே அரசாங்கம் வேறே என்ற வேற்றுமை இல்லையாதலினாலும், எல்லாக் காரியங்களும் மிக ஒழுங்காக நடைபெற முடிகிறது.

அரசாங்கக் காரியாலயம் எப்படி பல இலாகாக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறதோ அப்படியே மத்தியக் கமிட்டியின் காரி யாலயமும் பல இலாகாக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வோர் இலாகா வும் ஒவ்வோர் அங்கத்தினருடைய நிருவாகத்தின் கீழ் வைக்கப் பட்டிருக் கின்றது. சமீபத்தில் ஏற்பட்ட ஒரு சீர்திருத்தத்தின்படி, மேற்படி காரியாலயம், விவசாய இலாகா என்றும், தொழில் இலாகா என்றும், இப்படி ஒன்பது இலாகாக்களாகப் பிரிக்கப்பட் டிருக்கின்றது. இந்த ஒன்பது இலாகாக்களின் கீழ் உப இலாகாக்கள் வேறு உண்டு. உதாரணமாக, லெனினிஸத்தைப் பற்றிய பிரசார இலாகா என்கிற முக்கிய இலாகாவின் கீழ் (1) கட்சியைப்பற்றின பிரசாரம், கிளர்ச்சி; (2) பத்திரிகைகள், பிரசுரங்கள்; (3) பள்ளிக் கூடங்கள்; (4) புத்தகசாலைகள், விளையாட்டுச் சங்கங்கள்; (5) புதிய விஷயங்களை ஆராய்ச்சி செய்வது, கண்டு பிடிப்பது முதலிய யாவற்றையும் முறையே கவனிப்பதற்கென்று ஐந்து உப இலாகாக் கள் இருக்கின்றன. இதே மாதிரி, மாகாண, ஜில்லா, பிரதம சபை களிலும் இலாகாக்கள் ஏற்படுத்தப்பட்டு, காரியங்களை ஒழுங்காகச் செய்து வருகிறார்கள். கட்சிக் காரியாலயமென்றால், அரசாங்கக் காரியாலயம் மாதிரிதான்.

கட்சியின் ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் காப்பாற்று வதற்காக, தகுதியில்லாதவர்களை அவ்வப்பொழுது விலக்கிக் கொண்டு வருவதென்கிற முறையைத் தலைவர்கள் கண்டிப்பாக அனுஷ்டித்து வருகிறார்கள். இதற்காக, எவ்வித யதேச்சாதிகார முறையும் கையாளப் படுவது கிடையாது. தகுதியில்லாதவர்கள் என்று யார் சந்தேகிக்கப் படுகிறார்களோ அவர்கள் பகிரங்கமாகவே பரிசோதனை செய்யப்படு கிறார்கள். அவர்களுக்குச் சாதகமாகவோ பாதகமாகவோ, யார் வேண்டு மானாலும் சாட்சி சொல்லலாம். தகுந்த ருஜு ஏற்பட்டாலன்றி யாரும் அனாவசியமாக விலக்கப் படுவது கிடையாது. (1) கட்சியின் கொள்கைகள், வேலைத் திட்டங்கள், அவ்வப்பொழுது நிறைவேற்றப்படுகிற தீர்மானங்கள் இவைகளைப் பற்றிச் சரியாக அறிந்து கொள்ளாதவர்கள், இவை களைப்பிறர்க்கு விளங்குமாறு சொல்லாதவர்கள், சொல்லத் திறமை யில்லாதவர்கள்; (2) கட்சியின் மூலமாகத் தமக்குக் கிடைத் திருக்கிற அந்ததை, சொந்த நலனுக்காக உபயோகப்படுத்திக் கொள் கிறார்கள், லஞ்சம் வாங்குகிறவர்கள், ஊழலாகக் காரியஞ் செய் கிறவர்கள், அரசாங்கத்தினிடம் தப்பெண்ணம் உண்டாகும்படி யாகப் பாமரஜனங் களிடத்தில் போதனை செய்கிறவர்கள் முதலியோர்; (3) கிராமங்களிலே தேசீய சொத்தாகக் கருதப் படுகிற நிலப்புலங் களை, பிறருடைய அநியாயமான ஆக்கிர மிப்பினின்று காப்பாற்றா தவர்கள் ஆகிய இப்படிப்பட்டவர்கள், கட்சி அங்கத்தினர் பதவி யினின்றும் விலக்கப்படு கிறார்கள். கடுமையான குற்றவாளிகள் என்று கருதப்படுகிறவர்களைக் கட்சியினின்று அடியோடு அப்புறப் படுத்தி விடுவதும், லேசான குற்றஞ்செய்தவர்களை அநுதாபிகள் கோஷ்டிக்கு இறக்கி விடுவதும் சர்வ சாதாரண தண்டனைகள். கட்சிக்கு விரோதமாக, தேசத்திற்கு அல்லது அரசாங்கத்திற்கு விரோதமாகக் குற்றஞ்செய்கிறவர்கள், மற்றெல்லோரையும் போல் சட்டப்படி நடத்தப்படுகிறார்கள்.

கட்சியிலிருந்து விலக்கப்பட்டு விட்டார்களென்று சொன்னால், அவர்களுக்கு உத்தியோகம் போய்விட்டது, வாழ்க்கை போய் விட்டது என்பது அர்த்தமல்ல. கட்சியிலே அங்கத்தினராயிருக்கிற கௌரவம் போய்விட்டது. அவ்வளவுதான். அவர்களிடத்தில் பொறுப்பான வேலை ஏதும் ஒப்படைக்கப்பட மாட்டாது. சமு தாயத்தினர், அவர்களைக் கீழ்க் கண்ணோடுதான் பார்ப்பார்கள். பொதுவாக, மனிதத் தன்மை யில்லாதவர்கள் என்று அவர்கள் கருதப்படுவார்கள்.

7. இளைஞர் இயக்கம்
சமதர்மத்தை இளைஞர்களின் பசுமனத்தில் புகுத்த வேண்டு மென்ற நோக்கத்துடன் இளைஞர் இயக்கம் ஒன்று ருஷ்யாவில் அமைக்கப் பட்டிருக்கிறது. சமதர்மக் கட்சிக்கு அடுத்தப்படியாக இந்த இளைஞர் இயக்கந்தான் ருஷ்யாவிலேயே மிகவும் முக்கிய மானது. இதனை மூன்று தரமாகப் பிரித்திருக்கிறார்கள். முதலாவது காம்ஸோமால்1 என்கிற பிரிவு. இதில் பதினான்கு வயதுக்கு மேல் இருபத்து மூன்று வயதுக்குட்பட்ட இளைஞர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். இந்த இளைஞர் கட்சி 1922-ஆம் வருஷத் தில் தாபிக்கப்பட்டது. இரண்டாவது பயோனீர்கள்2 பத்து வயதுக்கு மேல் பதினான்கு வயதுக்குட்ப்பட்டவர்கள் இதில் அங்கத் தினராகச் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். இது 1923 - ஆம் வருஷம் தாபிக்கப்பட்டது. மூன்றாவது சிறிய அக்ட்டோ பரிட்டுகள்3 1917-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் நடைபெற்ற புரட்சியின் ஞாபகார்த்தமாக இந்தப் பெயர் இடப்பட்டிருக்கிறது. எட்டு வயதிலிருந்து பத்து வயது வரையிலுள்ளவர் இதில் அங்கத் தினர்கள். இதுவும் 1923-ஆம் வருஷத்திலிருந்துதான் ஆரம்பிக்கப் பட்டது.

வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் இளைஞர்களுக்குத் தகுந்த பயிற்சியளிக்க வேண்டு மென்பதற்காகவே, காம்ஸோ மால் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தை ஏறக்குறைய சாரணச் சிறுவர் இயக்கத்திற்குச் சமானமாகச் சொல்லலாம். இதில் சேர்ந்துள்ள இளைஞர்கள் தங்களுடைய ஆசாரிய புருஷனாகிய லெனினுடைய பெயருக்குக் கௌரவம் உண்டாகக்கூடிய மாதிரி நடந்து கொள்ள வேண்டும். சலியாது உழைக்கிற, கண்ணியம் வாய்ந்த, துணிச்சலான போர் வீரர்களாகவும், எந்த நோக்கத்திற் காகப் புரட்சி செய்யப்பட்டதோ அந்த நோக்கத்தினிடத்தில் விசுவாசமுடையவர்களாகவும், இளைஞர்களுக்கும் மற்ற எல்லாத் தொழிலாளர்களுக்கும் வழிகாட்டிகளாகவும் இருக்க வேண்டும். தங்கள் கட்சிக்கு, அதாவது காம்ஸோமாலுக்கு அங்கத்தினர்கள் சேர்ப்பதற்காகத் தினந்தோறும் வேலை செய்யவேண்டும். காம் ஸோமாலில் திறமையான வேலை செய்கிறவர்கள் தான், சமதர்மக் கட்சியில் அங்கத்தினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். காம்ஸோமால்கள், மார்க், எங்கெல், லெனின், இவர்களுடைய போதனை களை ஒழுங்காகப் படிக்க வேண்டும். சமதர்மக்கட்சி அங்கத்தினர்களுக்கு எல்லா வகையிலும் உதவி புரிய வேண்டும். ஏதோ குறிப்பிட்ட ஒரு தொழிலைத் திறமையாகச் செய்வதற்குப் பயிற்சி பெற வேண்டும். தேசத்தின் விவசாயம், பொருளாதாரம் முதலியவற்றைப் பொதுவுடைமை களாக்க எல்லா வகையிலும் உழைக்க வேண்டும். ஒவ்வொரு காம்ஸோமாலும் தேகப் பயிற்சியில் திறமைசாலியாயிருக்க வேண்டும். எந்தச் சமயத்திலும் ஐக்கிய சோவியத் ராஜ்யத்தைக் காப்பாற்றும் பொருட்டு ஆயுத மெடுத்துப் போராடச் சித்தமாயிருக்க வேண்டும். ராணுவத்தில் எந்த ஒரு துறையிலாவது நன்றாகப் பயின்றிருக்க வேண்டும். ஆகாயப்படை, கப்பற்படை இவற்றில் உற்சாகம் கொள்ள வேண்டும். தங்களுக்குக் கீழ் இருக்கப்பட்ட பயோனீர்களுக்கு உதவி செய்து அவர்களை முன்னுக்குக் கொண்டுவருவது ஒவ்வொரு காம்ஸோ மாலினதும் இன்றியமையாத கடமையாகும்.

காம்ஸோமால்களுக்கென்று தனியாகப் பத்திரிகைகள், நூல்கள், துண்டுப் பிரசுரங்கள் முதலியன வெளியிடப்படுகின்றன. அடிக்கடி மகாநாடுகள் நடைபெறுகின்றன. சமதர்மக் கட்சியி லுள்ளது போலவே, இதிலும், தகுதியில்லாதவர்கள் கண்டிப்பாக விலக்கப் படுவதற்கு ஏற்பாடுகள் இருக்கின்றன.

காம்ஸோமால்களுக்கு அடுத்தபடியாக உள்ளவர்கள் பயோனீர்கள். இவர்களுடைய உள்ளத்தில் எப்பொழுது, மனிதத் தன்மை என்கிற அரும்பு உண்டாகிறதோ அப்பொழுது தான், அந்த வயதில்தான் அவர்களைப் பயோனீர்களாக்கி அவர்களுடைய சமுதாய உணர்சியைத் தூண்டிவிட வேண்டுமென்பது லெனின் கருத்து. இதற்காக, இந்தச் சிறுவர் இயக்கத்தைத் தொடங்கினான். வர்க்கப் பிரிவினையே இல்லாத சமுதாயம் என்கிற லட்சியம், இவர்களுடைய பசிய மனத்தில் பதிய வைக்கப் படுகிறது. அதற்கேற்ற விதமாகவே இவர்கள் பயிற்சி பெறுகிறார்கள். ஒவ்வொரு பயோனீ ரும் அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு முன்னர், உலகத்திலுள்ள எல்லாத் தொழிலாளர்கள், விவசாயிகள், ஆகியோ ருடைய போதனைகளை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவருவ தாகவும், பயோனீர்களுக்கு விதிக்கப் பட்டிருக்கிற சட்டத்தின்படி நடந்து கொள்வதாகவும் பிரதிக்ஞை எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகுதான் அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டு, அதற் குரிய சின்னங்களாகிய சிவப்பு நட்சத்திரம், சிவப்புக்கைகுட்டை ஆகிய இரண்டும் அளிக்கப்படுவார்கள். பயோனீர்கள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்கள் ஐந்து: அனுஷ்டிக்க வேண்டிய திட்டங்கள் ஐந்து. ஐந்து சட்டங்களாவன:

1.  பயோனீர், தொழிலாளர் சமுதாயம் என்கிற லட்சியத்திற்கும், லெனினுடைய போதனைகளுக்கும் விசுவாசமுடையவனாயிருக்கிறான்.

2.  பயோனீர், சமதர்மக் கட்சி அங்கத்தின ருடைய இளைய சகோதரன்.

3.  பயோனீர், தன்னைக் காட்டிலும் வயதில் சிறுவர்களை ஓர் அமைப்புக்குட்படுத்தி அவர்களுக்கு தான் ஒரு வழி காட்டியா யிருக்கவேண்டும்.

4.  பயோனீர்,எல்லாப் பயோனீர்களுக்கும், உலகத்திலுள்ள தொழி லாளர்கள், விவசாயிகள் முதலி யவர்களுடைய குழந்தைகளுக்கும் தோழன்.

5.  பயோனீர், அறிவை விருத்தி செய்து கொள் வதில், முனைய வேண்டும். விஷய ஞானந்தான், தொழி லாளர் சமுதாயத்தை அமைப்பதற்காக நடத்த வேண்டிய போராட்டத் திற்குத் தேவையாயுள்ள சக்தி.

ஐந்து திட்டங்களாவன:

1.  பயோனீர், தன்னுடைய தேகத்தைப் பாது காப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களுடைய தேகத் தையும் பாதுகாக்க வேண்டும். அவன் சகிப்புத் தன்மை யுடையவனாகவும், சந்தோஷமுடையவனாகவும் இருக்க வேண்டும். தினந்தோறும் காலையில் எழுந்து காரியங்களை ஒழுங்காகத் தொடங்க வேண்டும்.

2.  பயோனீர், தன் காலத்தையும் மற்றவர் களுடைய காலத்தையும், வீணாக்காமல், சுருக்கமாகச் செலவழிக்க வேண்டும். அவன், தன் காரியங்களைக் காலா காலத்திலும் விரைவாகவும் செய்து முடிக்க வேண்டும்.

3.  பயோனீர், சுறு சுறுப்புள்ளவனாகவும் விடா முயற்சி யுடைய வனாகவும் இருக்கவேண்டும். எந்த நிலைமையிலும் யார் கீழும் வேலை செய்து சமாளித்துக் கொள்ள அவன் நன்றாகத் தெரிந்துக் கொண்டிருக்க வேண்டும்.

4.  பயோனீர், மற்றவர்களுடைய சொத்துக் களைக் காப்பற்றிக் கொடுக்கவேண்டும். தன்னுடைய துணிமணிகள், புதகங்கள், தொழிலுக்குரிய கருவி கள் முதலியவைகளின் விஷத்தில் சர்வ ஜாக்கிரதை யுடனிருக்கவேண்டும்.

5.  பயோனீர், பேசுகிறபோது, பிரமாணமாக, சத்தியமாக என்று சொல்லிக் கொண்டு பேசக்கூடாது; புகை பிடிக்கக் கூடாது; மதுபானம் செய்யக் கூடாது.

இதே பிரகாரந்தான், சிறிய அக்ட்டோபரிட்டுகளுடைய சட்டதிட்டங் களும், தாபன அமைப்பும் இருக்கின்றன. இவற்றில் ஆண் பெண் வித்தியாசமில்லாமல், எவ்விதத் தொழில் வேற்றுமை யும் பாராட்டப் படாமல் எல்லோரும் அங்கத்தினர்களாச் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இளைஞர் இயக்கத்தை நாம் பொதுப்படையாக நோக்குகிறபோது, ஒருவன் அல்லது ஒருத்தி, சமுதயாத்திலே பயனுள்ள ஓர் அங்கத்தினராவதற்கு எப்படிப் பாலியத்தி லிருந்தே ஒழுங்கான முறையில் பயிற்சி செய்யப்பட்டு வருகிறார்கள் என்பது நன்கு புலனாகும். சிறுவர்கள் அல்லது சிறுமிகள் இந்த இளைஞர் இயக்கங்களிலே சேர்ந்திருப்ப தனால் அவர்களுடைய படிப்புக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டு விடுகிறதோ என்று யாரும் சந்தேகிக்க வேண்டியதில்லை; பயப்பட வேண்டியதில்லை. பாடமுறைகளை யும், இந்த இளைஞர் அமைப்புக்களையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே ஏற்படுத்தி யிருக்கிறார்கள். பொதுவாக இளைஞர்கள், சமதர்ம சமுதாயத்தை அமைப்பதற்கு, அவர்களால் இயன்ற வரை வேலை செய்யுமாறு தூண்டப்படுவதற்கே இந்த இளைஞர் இயக்கம் தாபிக்கப்பட்டிருக்கிறது. இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பொது நன்மைக்கான எல்லாக் காரியங் களையும் விருப்பு வெறுப்பின்றிச் செய்ய வேண்டுமென்று எதிர் பார்க்கப்படுகிறார்கள். இவர்கள் சாக்கடை கழுவலாம்; தெருப் பெருக்கலாம்; பொது கட்டடங்கள் கட்டுகிறபோது அவைகளுக்கு உதவி செய்யலாம்; கல்வி வாசனையில்லதவர்களுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கலாம்; குடிப்பழக்கத்தை நிறுத்த வேலை செய்யலாம்; எதிர்பார்க்கிற அளவு பொருளுற்பத்தி செய்யாத தொழிற் சாலைகள், விவசாய தாபனங்கள் முதலியவற்றில் புகுந்து அங்குள்ளவர்களுக்கு உதவி செய்யலாம்; கூட்டங்களில், ஊர்வலங் களில் அமைதியை நிலைநாட்டவும் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தவும் உதவி செய்யலாம். இப்படிப் பலவகைத் தொண்டுகளிலே ஈடுபட்டு, பிறர்க்குச் சேவை செய்து கொண்டிருப்பது தான் வாழ்க்கையின் பயன் என்ற உண்மையை அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டு விடுகிறார்கள் ருஷ்ய இளைஞர்கள். தேசம் வேறு, தனி மனிதன் வேறு, சமுதாயம் வேறு என்ற வேற்றுமை உணர்ச்சியே இவர்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது. இப்படிப் பட்டவர்கள்தான் பிற்காலத்தில் தேசத்தின் தலைவர்களாக வருகிறார்கள்.

இனி, கோமிண்ட்டர்ன்1 என்ற ஒரு தாபனத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லிவிடுவோம். இது தான், சர்வதேச சமதர்மக் கட்சிகளின் தலைமை தாபனம். லெனின் முதலியவர்களுடைய நோக்கம், வர்க்கப் பிரிவினைகள் இல்லாத, உலகத்திற்குப் பொது வான ஒரு சமுதாயத்தை ஏற்படுத்திவிட வேண்டுமென்பது. இதனைப் படிப்படியாகச் செய்துகொண்டு போவதா அல்லது மொத்தமாகச் செய்வதா என்பதைப்பற்றிச் சோவியத் தலைவர்களுள் கருத்துக்குள் வேற்றுமை இருந்துவந்தது. இதனால் இரண்டு கட்சிகள் ஏற் பட்டன. என்றாலும் இரு கட்சியினருக்கும் உலகப் புரட்சி, உலக சமுதாயம் என்பதுதான் லட்சியம். இந்த லட்சியத்தின் பிரதிநிதியா யிருப்பதுதான் கோமிண்ட்டர்ன். உலகத்துப் பல நாடுகளிலுமுள்ள சமதர்மக் கட்சிகளுக்கு இதில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டி ருந்தது. இந்தப் பிரதிநிதிகள் அடங்கிய மகா நாடு, இரண்டு வருஷத்திற்கொரு முறையோ, நான்கு அல்லது ஏழு வருஷத்திற் கொரு முறையோ உலக நிலைமைக்கேற்றவாறு கூடிவந்தது. கோமிண்ட்டர்னின் தலைமைக் காரியாலயம் 1919-ஆம் வருஷத்தி லிருந்து, அதாவது கோமிண்ட்டர்ன் தாபிதமான காலத்திலிருந்து மாக் கோவிலேயே இருந்துவந்தது. கோமிண்ட்டர்ன் என்பதுதான் தர்ட்.இண்ட்டர் நேஷனல் என்று சொல்லப்படுகிற மூன்றாவது சர்வதேச அமைப்பு. முதலாவது இண்ட்டர் நேஷனல் 1864-ஆம் வருஷத்திலும் இரண்டாவது இண்ட்டர் நேஷனல் 1989-ஆம் வருஷத்திலும் தாபிக்கப்பட்டுக் கலைந்து போயின. தர்ட் இண்ட்டர் நேஷனல் என்கிற மூன்றாவது சர்வதேச அமைப்பும் 1943-ஆம் வருஷம் ஜூன் மாதம் பத்தாந்தேதி கலைக்கப்பட்டு விட்டது.


XI. சோவியத் அரசியல் அமைப்பு

1. ஓட்டுரிமை
சமதர்மத்தைப் பிரசாரம் செய்வது, அதைப்பற்றிய அறிவை ஜனங்களுக்குப் புகட்டுவது, சமதர்மக் கட்சி; அதனை அனுஷ்டானத் திற்குக் கொண்டு வந்து நிருவாகம் செய்வது சோவியத் அரசாங்கம். இந்த அரசாங்க அமைப்பு, அரசியல் பண்டிதர்களுக்கு ஒரு சிக்கலான பிரச்னை. ஆனால், சோவியத்தலைவர்கள், இந்த சிக்கலை வெகு அழகாகத் தீர்த்து வைத்திருக்கிறார்கள்; சிறுபான்மையோர் உரிமை, எல்லோருக்கும் ஓட்டுரிமை, ஜனப்பிரதிநிதித்துவம், ஜனங்களுடைய ஜீவாதாரமான உரிமைகளுக்குச் சட்டரீதியான பாதுகாப்பு முதலியவை சம்பந்தமாக எழக்கூடிய பாதுகாப்பு முதலியவை சம்பந்தமாக எழக்கூடிய எல்லாச் சிக்கல் களையும் ஒழுங்கு படுத்தி, பொருளுற்பத்தி, பொருளுற்பத்திக்கான சாதனங்கள் ஆகிய வற்றைத் தேசீய மயமாக்கி, சமதர்மத்தை அடிப்படை யாகக் கொண்ட சமுதாயத்தை அமைத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். சோவியத் தலைவர்களிடத்தில் காணப்படுகிற ஒரு விசேஷ அமிசம் என்னவென்றால், அவர்கள் எந்த ஒரு புதிய திட்டத்தையும், அல்லது எந்த ஒரு புதிய சீர்திருத்தத்தையும், லட்சியத்தின்மீது கொண்டுள்ள அபார மோகத்தினால், அவசப்பட்டு அனுஷ்டானத்திற்குக் கொண்டு வந்து விடுவதில்லை; ஒரே மூச்சாகவும் கொண்டுவந்து விடு வதில்லை. ஜனங்களுடைய பரிபக்குவம், தேசத்தினுடைய திதி, தங்களுடைய நிருவாக சக்தி முதலியவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் ஒரு திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வரு கின்றனர். ஒரே சட்டம், அல்லது ஒரே திட்டம் எந்தக் காலத்திற்கும், எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும் பொருந்தாது என்ற உண்மையை அவர்கள் நன்றாக உணர்ந்து, அதன் பிரகாரம் புதிதாகச் சிருஷ்டிக்க வேண்டிய இடத்தில் மாற்றியும் ஒழுங்காகவும் நிதானமாகவும் காரியங்களைச் செய்துகொண்டு போகின்றனர். ஒரே ஓர் உதாரணத்தை மட்டும் இங்கு எடுத்துக்காட்ட விரும்புகிறோம்.

1918-ஆம் வருஷ ஆரம்பத்தில், சோவியத் தலைவர்கள் அரசாங்க நிருவாகத்தைக் கைப்பற்றிக்கொண்ட பிறகு, கீழ்க் கண்டவர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது என்று சட்டத்தின்மூலம் தடைசெய்து விட்டனர்:-

1.  லாபம் சம்பாதிப்பதற்காகக் கூலிகளை அமர்த்தி வேலை வாங்குவோர்; (2) தங்களுடைய சொந்த உழைப்பினின்று பெறாத வருமான முடையவர்கள் - அதாவது வட்டித் தொழில் செய்து சம்பாதிப்போர், தொழிற் தாபனங்களை நடத்திச் சம்பாதிப் போர், பூதிதிகளினின்று சம்பாதிப்போர் முதலியவர்கள்; (3) வியாபாரிகள், வியாபார ஏஜெண்ட்டுகள்; (4) மதப்புரோகிதர்கள், மடாதிபதிகள்; (5) ஜார் ஆட்சிக் காலத்தில் போலீ இலாகாவிலும் ரகசியப் போலீ படையிலும் வேலை செய்தவர்கள்; ஜார் குடும் பத்தைச் சேர்ந்தவர்கள் முதலியோர்; (6) சித்த சுவாதீனமில்லா தர்வ களென்று சட்ட மூலமாக அங்கீகரிக்கப்பட்டவர்கள், மற்றொரு வருடைய பாதுகாப்பின்கீழ் இருக்கிறவர்கள் முதலானோர்; (7) நியாய தலங்களில் கடுமையான குற்றங்களுக்காகத் தண்டிக்கப் பட்டவர்கள்.

1937-ஆம் வருஷம் புதியதோர் அரசியல் திட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. இதன்படி, கடைசியில் சொன்ன இரண்டு பிரிவினருக்குமட்டும், அதாவது (1) சித்த சுவாதீன மில்லாதவர் களென்று சட்ட மூலமாக அங்கீகரிக்கப் பட்டவர்கள் முதலாயி னோர்; (2) நியாய தலங்களில் கடுமையான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் ஆகிய இவர்களுக்கு மட்டும் ஓட்டுரிமை கிடையாதே தவிர, வயது வந்த மற்றெல்லாருக்கும் ஓட்டுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? இருபது வருஷங்களுக்கு முன்னர், எந்தக் காரணங் களுக்காகச் சில பிரி வினருக்கு ஓட்டுரிமை மறுக்கப்பட்டதோ அந்தக் காரணங்கள் இருபது வருஷங்களுக்குப் பின்னர் இல்லாமற் போய் விட்டன. அதனால் மறுக்கப்பட்டிருந்தவர்களுக்கு மறுபடியும் உரிமை வழங்கப்பட்டுவிட்டது. அதாவது, போல்ஷ்வெக்கர்கள் அரசாங்க நிருவாகத்தைக் கைப்பற்றிக் கொண்டபோது, சமதர்மக் குழந்தையை வளர்க்க வேண்டியிருந்தது; அதற்காக, அதன் வளர்ச்சிக்கு இடை யூறாயிருந்த சக்திகளையெல்லாம் அப்புறப்படுத்தி வைக்க வேண்டியது அவசியமாயிருந்தது. இப்பொழுது குழந்தை நன்றாக வளர்ந்து யௌவனதசையை அடைந்துவிட்டது. இனி எந்தச் சக்தி யும் அதற்கு இடையூறு செய்ய முடியாது. இடையூறு செய்யக்கூடு மென்று கருதப்பட்ட சக்திகளும் இப்பொழுது சக்தி யிழந்து விட்டன. இனியும் அந்தச் சக்திகளைப் பொருட்படுத்தி அவற்றிற்குச் சட்ட புத்தகத்தில், இடங்கொடுத்துக் கொண்டிருப்பானேன்? ஆகவே, அவற்றை ரத்து செய்துவிட்டனர்.

எந்தச் சந்தர்ப்பத்தில் எதைச் செய்யவேண்டுமோ அதை நிர்த்தாட்சண்யமாகச் செய்யவோ, பலருடைய நன்மைக்காக ஒரு சிலருடைய சலுகைகளைப் பறிமுதல் செய்யவோ, ஜனங்களுக்கு அதிகமான நன்மையுண்டாகுமென்று தெரிந்தால் போட்ட திட்டத்தை மாற்றச் செய்யவோ சோவியத் தலைவர்கள் பின் வாங்கியது கிடையாது. இதற்காகப் போற்றுதல் ஏற்படுமானாலும் சரி, தூற்றுதல் ஏற்படுமானாலும் சரி அதை அவர்கள் லட்சியம் செய்வதே இல்லை. அவர்களுடைய நோக்கம் சமுதாய நலன். ஜனங் களுக்கு எதைச் செய்தால் சந்தோஷமா யிருக்குமோ அதைச் செய்யா மல், எதைச் செய்தால் நன்மையா யிருக்குமோ அதையே அவர்கள் செய்திருக்கிறார்கள்.

சோவியத் ராஜ்யத்தில் இப்பொழுது அனுஷ்டானத்தில் இருந்து வருகிற 1937-ஆம் வருஷத்து அரசியல் திட்டம் பரிபூரண ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டது; சிலர், தவறாக நினைக்கிறபடி சர்வாதிகாரத்தை மட்டும் சிகரமாக உடையதல்ல. மனிதனுடைய ஜீவாதாரமான உரிமைகளென்று, புனிதமான உரிமைகளென்று கருதப்படு கின்றயாவும் இந்தச் சட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.

சோவியத் அரசியல் அமைப்பானது, சமதர்மக் கட்சி அமைப்பு மாதிரி, ஆறு அடுக்குகள் உள்ள ஒரு கோபுரம்; கிராமத்தில் ஆரம் பித்து தலைநகரத்தில் முடிகிறது. இந்த அமைப்பைப்பற்றிச் சுருக்க மாக இங்கு கூறுவோம்.

2. சோவியத்துகள்
சோவியத் என்ற வார்த்தைக்குச் சபை என்பது பொருள். முன்னர் இஃது எந்தவிதமான சபையையும் குறிப்பதாயிருந்தது. இப் பொழுது, தொழிலாளர்கள், போர் வீரர்கள், விவசாயிகள் ஆகிய இவர்களுடைய பிரதிநிதிகளடங்கிய ஒரு சபையையே குறிக்கிறது. இதில் முதலாளிகள், நிலச்சுவான்தார்கள், கடைக்காரர்கள், வேலை யில்லாதவர்கள் முதலியோர் அங்கத்தினர்களாகச் சேர முடியாது. 1905-ஆம் வருஷத்துப் புரட்சியின்போது இந்தச் சோவியத்துகள் இயற்கையாகத் தோன்றி, ஒடுங்கி, மீண்டும் 1917-ஆம் வருஷத்துப் புரட்சியின் போது தலைதூக்கின வென்பதைப்பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோமல்லவா? பீட்ரோ கிராட் நகரத்திற்கு லெனின் வந்த பிறகு, இந்தச் சோவியத்துகளை பலப்படுத்தி1, இவற்றின் ஏகோபித்த பலத்தைக்கொண்டு, 1917-ஆம் வருஷம் நவம்பர் மாதம் அரசாங்க நிருவாகத்தைக் கைப்பற்றிக் கொண்டான். இவற்றை ஜனசக்தியின் பிரதிநிதிகளாக வலுப்படுத்தினான். இந்த ஜனசக்தியின் பலம் அவனுக்கு இருந்ததனால்தான் எந்தவிதமான எதிர்ப்பையும் அவனால் சாமாளிக்க முடிந்தது. புதிய சமுதாயத்தை அமைக்க முடிந்தது. 1918-ஆம் வருஷம், இந்தச் சோவியத்துகளை அதிவார மாகக் கொண்டு ஓர் அரசியல் அமைப்பு தாபிக்கப்பட்டது. இதுவே, பின்னர் 1923-ஆம் வருஷம் ருஷ்ய சமஷ்டி அரசியல் அமைப்பாக மாறியது. பின்னர் 1937 - ஆம் வருஷம், இந்த அரசியல் அமைப்பு, புதிய முறையில் சீர்திருத்தப்பட்டு அனுஷ்டானத் திற்குக்கொண்டு வரப்பட்டது.

இந்த அரசியல் அமைப்பின் அடிப்படையிலுள்ள கிராம சோவியத்தைப்பற்றி முதலில் கவனிப்போம். இஃது, ஏறக்குறைய நமது கிராமப் பஞ்சாயத்து மாதிரி; ஆனால் அதைவிட அதிகமான பொறுப்பும் கடமையும் உடையது. இது, மூன்று வருஷத்திற்கொரு முறை தெரிந் தெடுக்கப் படுகிறது. சித்த சுவாதீனமில்லாதவர்கள், குற்றஞ் செய்து தண்டனை அடைந்தவர்கள் ஆகிய இவர்களைத் தவிர்த்து, கிராம எல்லைக்குள் வசிக்கிற, பதினெட்டு வயதுக்கு மேற் பட்ட, ஆண் பெண் எல்லாரும் இதற்குப் பிரதிநிதிகளைத் தெரிந் தெடுக்கிற உரிமையுடைய வர்கள். அதாவது இவர்களெல்லோரும் வாக்காளர்கள். இவர்கள் அடிக்கடி கூடி, கிராமப் பொதுவான விஷயங்களைப் பற்றிச் சர்ச்சை செய்வார்கள். இதற்கே கிராமக் காங்கிர என்று பெயர். இப்படிக் கூட்டங்கூடிப் பேசுவது தவிர, இவர்கள் மூன்று வருஷத்திற்கு ஒரு முறை கிராம சோவியத்துக்குப் பிரதிநிதிகளைத் தெரிந்தெடுக்கிற முக்கியமான கடமை யையும் செய்யவேண்டும். நூறு பேருக்கு ஒருவர் விகிதம் பிரதிநிதிகள் தெரிந் தெடுக்கப்படுவார்கள். ஆனால் ஒரு சோவியத்தில் குறைந்தபட்சம் மூன்று பிரதிநிதிகளாவது இருக்கவேண்டும். எனவே, ஒரு கிராமத் தினுடைய ஜனத்தொகையைப் பொறுத்திருக்கிறது, அந்தக் கிராம சோவியத்தின் பிரதிநிதிகளுடைய எண்ணிக்கை.

ருஷ்ய கிராமாந்தரங்களில், இந்தத் தேர்தல் கூட்டம் மிகவும் ருசிகரமா யிருக்கும். ஜனங்கள், இதில் மிகவும் உற்சாகத்துடன் கலந்து கொள்வார்கள். தேர்தலை நடத்துவதற்கென்று ஒரு தலை வரும், அவருக்கு உதவி செய்யக் கிராமத்துப் பெரியதனக்காரர் களாகப் பத்து பேரும் தெரிந்தெடுக்கப்படுவார்கள். இவர்களுடைய தலைமையில் தேர்தல் கூட்டம் தொடங்கும். கூட்டத்திற்கு மொத்த ஓட்டர்களில் நூற்றுக்கு நாற்பது பேர் விகிதம் ஆஜாராகியிருக் கிறார்களா என்று பார்ப்பார்கள். அந்த விகிதாசாரம் இருந்தால் தான் தேர்தல் நடைபெறும். இல்லாவிட்டால் கூட்டமே தள்ளி வைக்கப்பட்டுவிடும். பிறகு, சோவியத்தில் எத்தனை தாபனங்கள் உண்டோ அத்தனை தாபனங்களும் பெயர்கள் ஒன்றன் பின் ஒன்றாய்ப் பிரேரிக்கப்படும். சிலர் நிராகரிக்கப் படலாம்; சிலர் அங்கீ கரிக்கப்படலாம். இப்படி மணிக்கணக்கில் நடைபெற்று, கடைசியில் எல்லாப்பிரிதி நிதிகளும் தெரிந்தெடுக்கப்படு வார்கள். இவர்களடங் கியது தான் கிராம சோவியத்.

கிராம சோவியத்தின் கடமை விரிவானது. கிராம நிரு வாகத்தைக் கவனிப்பதோடல்லாமல், இது தனக்கு மேற்பட்ட ஜில்லா, மாகாண, தேச விவகாரங்களிலும் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று சோவியத் அரசாங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர். ஒரு சோவியத்தானது தனது நிருவாக எல்லைக்குள், அரசாங்கத்தின் எல்லாச் சட்ட திட்டங்களும் சரியானபடி அனுஷ்டிக்கப்பட்டு வரு கின்றனவா என்பதைப் பார்த்துக் கொள்ளவேண்டும்; நீதிதலங்கள் ஏற்படுத்தி எல்லோருக்கும் நியாயம் கிடைக்குமாறு செய்ய வேண்டும். தேசப் பாதுகாப்பு விஷயத்தில் எல்லா ஜனங்களும் பங் கெடுத்துக் கொள்ளூமாறு செய்யவேண்டும். கிராமத்திலுள்ள தொழில் தாபனங்கள், கூட்டுப்பண்ணைகள், கல்விச் சாலைகள், கூட்டுறவுப் பண்டகசாலைகள் முதலியவற்றைத் திறம்பட நடத்த வேண்டும்; சுகாதார வசதிகளைக் கவனிக்கவேண்டும் சுருக்கமாகச் சொன்னால், ஜனன மரணக் கணக்குப் பதிவு செய்வதுமுதல், விளக்கேற்றுவது, ரோடுபோடுவது வரை எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும். ஒரு கிராம சோவியத் இன்னின்ன காரியங்களைச் செய்ய வேண்டுமென்பதாகச் சுமார் தொண்ணூற்றிரண்டு கடமைகள் வரிசைக் கிரமமாக வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. இந்த ஜாபிதா வைப் பார்க்கிற போது, யாருமே பிரமித்துப் போகக்கூடும்.

இந்தக் கடமைகள் யாவும் அப்படியே நிறைவேற்றப்படு கின்றனவா என்று கேட்பதில் பிரயோஜனமில்லை. நிறைவேற்றவும் படலாம்; நிறை வேற்றப்படாமலுமிருக்கலாம். அது வேறு விஷயம். ஆனால், இவைகளையெல்லாம் செய்வதற்கு உரிமை அளிக்கப் பட்டிருக்கிறதே அதுதான் முக்கியம். இந்த உரிமையை எவ்வளவு தாராளமாக உபயோகிக்கலாமோ அவ்வளவு தாராளமாக உப யோகிக்குமாறு ஒவ்வொரு கிராம சபையும் அடிக்கடி தூண்டப் பட்டு வருகிறது. இதன் மூலமாக, ருஷ்ய மகாஜனங்கள் அரசியலில் உணர்ச்சி பெறுவதோடு, தங்களுடைய கடமையையும் உணர்ந்து வருகிறார்கள். இதனால் தான் உரிமையினுடைய புனிதத்தன்மை அவர்களுக்கு நன்றாகப் புலப்பட்டிருக்கிறது.

கிராம சோவியத்துக்கு, தலைவர், காரியதரிசி, நிருவாகக் கமிட்டி முதலிய எல்லாச் சம்பிரதாயங்களும் உண்டு. இந்த உத்தி யோகதர்கள் அடிக்கடி மாற்றப்படுகிறார்கள். ஏனென்றால், எல் லோருக்கும் நிருவாக அனுபவம் ஏற்பட வேண்டுமல்லவா? இந்த உத்தியோகதர்களுக்குச் சம்பளம் உண்டு. இவர்கள் வேறெந்த தாபனங்களிலேனும் வேலை செய்து கொண்டிருந்தால்,அந்த தாபனங்களிலிருந்து, கிராம நிருவாகத்தை ஏற்று நடத்திக் கொண்டிருக்கிற காலம் வரையில் இவர்களுக்கு ரஜா கிடைக்கிறது; அதே சம்பளமும் கிடைக்கிறது. அப்படியில்லாதவர் களுக்குக் கிராம சோவியத்திலிருந்து கமிட்டியார் நிர்ணயிக்கிறபடி ஒரு தொகை சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது. இவர்கள் - இந்தக் கிராம அதிகாரிகள் - தங்களுக்குக் கிடைத்திருக்கிற இந்தப் பதவியை, அதி காரம் செலுத்துவதற்கான ஒரு கருவியாக உபயோகியாமல், தொண்டு செய்வதற்கேற்ற ஒரு சந்தர்ப்பமாக உபயோகிக்கிறார்கள்.

கிராம சோவியத்துக்கு அடுத்தபடியாக உள்ளது நகர சோவியத். இது நகர முனிஸிபாலிடி. மாதிரி. இதனுடைய தேர்தல் முறை சிறிது சிக்கலானது. ஒரு பெரிய நகரத்தில் அநேக தொழிற் சாலைகள் இருக்கின்றன. ஒவ்வொரு தொழிற்சாலையிலும் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு எப்படிப் பிரதிநிதித்துவம் அளிப்பது? சோவியத் தலைவர்கள் என்ன செய்திருக் கிறார்களென்றால், ஒவ்வொரு தொழிற்சாலைக் கும், அதிலே வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் பொறுத்து, இத்தனை பிரதிநிதிகள் என்று நிர்ணயித்திருக்கிறார்கள். இது தவிர, தொழிற்சாலை களில் வேலை செய்கிற தொழிலாளர் அல்லாத மற்றவர்களுக்கு, ஒரு தெருவுக்கு அல்லது ஒரு பேட்டைக்கு இத்தனை பிரதிநிதிகள் என்று நிர்ணயம் செய்திருக்கிறார்கள். இப்படி நிர்ணயம் செய்யப்பட்ட பிரிதிநிதிகளுக்கு, அந்தத் தெரு முனை அல்லது சதுக்கத்தில் தேர்தல் நடைபெறுகின்றது. இந்த தேர்தலானது, கிராம சோவியத் தேர்தல் மாதிரி, ஒரு முறை நடந்து முடிந்து போகாது; வடிக்கட்டி வடிக்கட்டிப் பிரதிநிதிகளைத் தெரிந் தெடுக்கிற முறையில் தேர்தல்கள் நடைபெறும். இதற்காக அநேகம் தேர்தல் கூட்டங்கள் நடைபெறவேண்டிருயிருக்கும். இந்தத் தேர்தல்கள் மூன்று வருஷத்துக்கொருமுறை நடைபெறு கின்றன. பெரிய நகரங்களாயிருந்தால், ஜனத் தொகைக்குத் தகுந்த படி நகர சோவியத்தில் நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் அங்கத் தினராயிருப் பார்கள்.

இந்த நூற்றுக்கணக்கான பிரிதிநிதிகளும் ஒன்று சேர்ந்து ஒரு காரியத்தைச்செய்ய முடியாதல்லவா? இதற்காக ஒரு நிருவாகசபை ஏற்படுத்தப்படுகிறது. இந்த நிருவாகசபை அடிக்கடி கூடிப் பொது வாக எல்லா நிருவாக விஷயங்களையும் பரிசீலனை செய்கிறது. ஆனால், நகரசபையின் அன்றாட அலுவல்களைக் கவனிப்பதற் கென்று ஒரு காரியக்கமிட்டி உண்டு. இதில் சுமார் பத்து அல்லது பன்னிரண்டு அங்கத்தினர்கள் இருப்பார்கள். இவர்கள் ஒவ்வோர் இலாகாவின் நிருவாகப் பொறுப்பை ஏற்று நடத்துவார்கள். இவர் களுக்கு ஆலோசனை சொல்லவும், வேறுவிதமான உதவிகளைச் செய்யவும், மேற்படி நிருவாகக் கமிட்டியானது, பல உப கமிட்டி களாகப் பிரிந்துகொண்டு, ஒவ்வொர் இலாகாவுக்கும் ஒவ்வோர் உப கமிட்டி வீதம் வேலை செய்யும். நகரசபையின் அன்றாட வேலை களில் பழகுவதற்கென்று தொண்டர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதன்மூலமாக, நகரப் பிரஜைகளுக்கு நிருவாகப் பயிற்சி உண்டாகிறது.

பெரிய நகரங்களை மொத்தமாக நிருவாகம் செய்யமுடியா தென்பதற்காக, அதனைப் பல பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு நகரசபை விகிதம் ஏற்படுத்தி யிருக்கிறார்கள். இதற்குப் பகுதி சோவியத் (ரேயன் சோவியத்)1 என்று பெயர். ரேயன் என்றால் பேட்டை அல்லது பகுதி என்று அர்த்தம். இதுவும் மேற்படி நகர சோவியத் முறையிலேயே நிருவாகம் செய்யப்படுகிறது.

நகர சோவியத்துக்கு அடுத்தபடியாக உள்ளது ஜில்லா சோவியத். இதனை க்ராய் அல்லது ஓப்ளாட்2 என்று அழைப் பார்கள். இது நமது ஜில்லா போர்ட் மாதிரி. பிரதியொரு ஜில்லாவின் தலைநகரத்திலும் அந்த ஜில்லாவின் எல்லைக்குள்ளிருக்கிற கிராம சோவியத்துக்களினாலும் நகர சோவியத்துகளினாலும் தெரிந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட ஜில்லா சோவியத் காங்கிர, வருஷத்துக் கொருமுறை கூடுகிறது. இந்தக் காங்கிர சானது ஜில்லா நிருவாகத்திற்காகத் தலைவர், காரியதரிசி, நிருவாக சபை முதலிய உத்தியோகதர்களைத் தெரிந்தெடுக்கிறது. இந்த ஜில்லா சோவியத்துகள் பரிபூரணப் பொறுப்பாட்சி பெற்றவை. தனிப்பட்ட ஒரு ஜாதியார் குறிப்பிட்ட ஒரு ஜில்லாவில் வசிக்கிறார் களென்று சொன்னால், அது பூரணப்பொறுப்பாட்சியுடைய ஒரு தனி மாகாணமாகக் கருதப்பட்டு அதன் பிரகாரமே நடத்தப்பட்டு வருகிறது.

3. மாகாணக் குடியரசுகள்
ஜில்லா சோவியத்துக்கு மேற்பட்டது மாகாண சோவியத். இவற்றில் சில, பூரணப் பொறுப்பாட்சி பெற்ற பல சிறிய மாகாணங் களைத் தன்னகத்தே கொண்ட சமஷ்டிக் குடியரசு நாடுகளாக இருக்கின்றன. சோவியத் ருஷ்யாவில் மொத்தம் பதினாறு குடியரசு நாடுகள் அடங்கியிருக்கின்றன. இவற்றின் சமஷ்டிதான் அதாவது ஐக்கியந்தான் சோவியத் சமதர்தமக் குடியரசு நாடுகளின் ஐக்கிய ராஜ்யம் மேற்படி பதினாறு குடியரசு நாடுகளும், பூரணப்பொறுப் பாட்சி பெற்ற பல குடியரசு நாடுகளாக அல்லது சிறு மாகாணங் களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. உள்ளுக்குள் சுழன்றோடுகிற பல சக்கரங்களைக் கொண்ட ஒரு யந்திரம் மாதிரியுள்ளது சோவியத் அரசியல் அமைப்பு. உதாரணமாக, பதினாறு குடியரசு நாடுகளில் ஒன்றும், மிகப் பெரியதுமான ருஷ்யக்குடியரசு நாட்டில் பதினான்கு குட்டி மாகாணங்கள் ஐக்கியப் படுத்தப்பட்டிருக் கின்றன. கோபுரம் மாதிரியுள்ள இந்த அரசியல் அமைப்பில், ஒவ்வொரு வரிசையும் , தனக்குக் கீழ் இருக்கப்பட்ட வரிசைகளின் மீது ஆதிக்கஞ் செலுத்த உரிமை பெற்றிருக்கிறது; தனக்கு மேற்பட்ட வரிசைகளின் ஆதீனத் திற்கு அடங்கி நடக்கக் கடமைப்பட்டிருக்கிறது.

பூரணப் பொறுப்பாட்சி பெற்ற இந்தப் பதினாறு குடியரசு நாடுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி காங்கிரகள் உண்டு. அதாவது நமது மாகாண மகாநாடுகள் மாதிரி. இந்த குடியரசு நாடு களின் காங்கிரசுகளுக்கு, ஜில்லா சோவியத், நகர சோவியத், கிராமசோவியத் இவைகளின் மூலமாகப் பிரதிநிதிகள் தெரிந் தெடுக்கப்படுகிறார்கள். இந்தப் பிரதி நிதிகள் சில வருஷங்களுக்கு ஒரு முறை கூடி, மாகாண நிருவாகத்திற்காக ஒரு நிருவாக சபையைத் தெரிந்தெடுக்கிறார்கள். இந்த நிருவாக சபையில், அந்தந்த மாகாணத்தின் விதீரணத்திற்குத் தகுந்தபடி சுமார் நூறு பேர் முதல் நானூறு பேர் வரையில் அங்கத்தினர்களா யிருக்கிறார்கள். இந்த நிருவாக சபைதான் மாகாணச் சட்டசபை. இது, வருஷத்தில் மூன்று முறையோ நான்கு முறையோ, அந்தந்த மாகாண நிலைமையை அனுசரித்துக் கூடி, சட்ட சம்பந்தமானவையும் நிருவாக சம்பந்த மானவையுமான எல்லா விவகாரங்களையும் கவனிக்கிறது. இந்த நிருவாக சபையினால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காரியக்கமிட்டி, மாகாண அரசியலை நடத்துகிறது. இதுவே மாகாண மந்திரி சபை. இந்த மந்திரி சபையானது, அந்தந்த மாகாணத்தின் விதீரணத்தை யும் மற்றத் தேவைகளையும் அனுசரித்துச் சிறியதாகவும் பெரிய தாகவும் இருக்கும்.

மேலே சொன்ன பதினாறு குடியரசு நாடுகளுக்கும் மேற் பட்டது சமஷ்டி அரசாங்கம். இஃது, அகிலருஷ்ய சோவியத் காங்கிரசினால் தெரிந்தெடுக்கப்படுவது. சாதாரணமாக நான்கு வருஷத்திற்கொருமுறை கூடுகிற இந்தக் காங்கிரசுக்கு, விசாலமான சோவியத் ராஜ்யத்தின் எல்லாப் பாகங்களிலிருந்தும், ஜனத் தொகையில் சுமார் ஐம்பதினாயிரம் பேருக்கு ஒருபிரிதிநிதி விகிதம் தெரிந்தெடுக்கப்பட்ட ஆயிரக் கணக்கான பிரிதிநிதிகள் வருகிறார்கள். ஒவ்வொரு காங்கிரசுக்கும் பிரதிநிதிகள் எண்ணிக்கை வித்தியாசப் படுகிறது. இதற்குக் காரணம் ஜனத்தொகையின் சுருக்கப் பெருக்கம். தனித்தனி பாஷைகளைப் பேசுகிற, விதம்விதமான கலாசாரங் களையுடைய, ஒருவரை யொருவர் முன்பின் பார்த்தறியாத, ஆண் பெண் என்ற வித்தியாசமோ, சமதர்மக் கட்சியைச் சேர்ந்தவர் சேராதவர் என்ற வித்தியாசமோ இல்லாத ஆயிரக் கணக்கான பிரதிநிதிகள் ஒரே இடத்தில் ஒரே மகாநாட்டில் ஒரே நோக்கத் திற்காகக் கூடி, விவகாரங்களை ஒழுங்காக நடத்துகிற காட்சி மிகவும் அற்புதமானது. இதில் வாதப் பிரதிவாதங்களும், அபிப் பிராய வேற்றுமைகளும் வராம லிருப்பதில்லை. ஆனால், எல்லாம் சுமுகமாகவே தீர்க்கப்பட்டு விடுகின்றன.

4. சட்ட சபைகள்
இந்த அகில - ருஷ்யக் காங்கிரசின் முக்கியமான வேலை, நிருவாகக் கமிட்டியைத் தெரிந்தெடுப்பது. அடுத்த காங்கிர கூடு கிறவரையில் இந்த நிருவாகக் கமிட்டிதான் இருக்கும். அதாவது இதனுடைய ஆயுட்காலம் நான்கு வருஷம். இதுவே சமஷ்டி சட்ட சபை; சுப்ரீம் சோவியத்1 என்பது. இஃது இரண்டுபிரிவினைகளை யுடையது. ஒன்று, சோவியத்துகளின் சட்டசபை.2 மற்றொன்று, ஜாதீய சட்டசபை,3 அதாவது, ருஷ்யாவின் விதவிதமான பாஷை, கலாசார பரம்பரை முதலியவற்றையுடைய பல ஜாதியினருக்குத் தனிப் பிரதிநிதித்துவம் தேவை யென்பதற்காக இந்த ஜாதீய சபை நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு சபைகளும் வருஷத் திற்கு இரண்டு முறை கூடுகின்றன. கூடி, சமஷ்டி அரசாங்கத்தின் எல்லாச் சட்ட நிருவாக விவகாரங்களையும் கவனிக்கின்றன. விசேஷ அலுவல்களிருந்தால் அவைகளைக் கவனிக்க விசேஷக் கூட்டங் களும் நடைபெறுவதுண்டு.

இந்த இரண்டு சபைகளுக்கும் ஒரே காலத்திலேயே தேர்தல் நடைபெறுகின்றன. அப்படி நடைபெறுகிற தேர்தல்கள் நான்கு வருஷத்திற் கொருமுறை, இந்தத் தேர்தல்களின்போது, ஓட்டுரிமை யுடைய பிரதியொரு நபரும், சோவியத்துகளின் சட்டசபைக்கு ஒரு பிரதி நிதியையும், ஜாதிய சபைக்கு ஒரு பிரதிநிதியையும் ஒரே சமயத்தில் தெரிந்தெடுக்கலாம். அதாவது ஓட்டுரிமையுடைய ஒவ்வொருவருக்கும் இரண்டு ஓட்டுகள் கொடுக்க உரிமையுண்டு. இதன் மூலம், சோவியத் ராஜ்யத்திலுள்ள எல்லா ஜனங்களுக்கும் பொதுவாயுள்ள நலன்களும் பாதுகாக்கப்படுகின்றன.

இந்த இரண்டு சபைகளும் ஒரே மாதிரி அந்ததுடையவை. மேல் சபை, கீழ் சபை என்கிற வித்தியாசம் கிடையாது. ஒன்றுக்கு மற்றொன்று துணை, இரண்டு சபைகளும் ஒரே காலத்தில் கூடி ஒரே காலத்தில் கலைகின்றன. சட்ட நிர்மாணம் செய்கிற விஷயத்தில் இரண்டு சபைகளும் ஒரே மாதிரியான உரிமையுடையவை. ஒவ் வொரு சபையும், தன் விவகாரங்களை நடத்திக் கொள்ள, ஒரு தலை வரையும் இரண்டு உபதலைவர் களையும் தெரிந்தெடுத்துக் கொள்கிறது.

இந்த இரண்டு சபைகளும் ஒன்று கூடி பிரெசிடியம்4 என்ற ஒரு சபையை ஏற்படுத்துகிறது. இந்த பிரெசிடியம் தான், சுப்ரீம் சோவியத்தின் பிரதி நிதியாயிருந்து எல்லாக் காரியங்களையும் கவனிக்கிறது. அதாவது, சுப்ரீம் சோவியத்தானது எப்பொழுதுமே கூடிக்கொண்டிருக்க முடியாதல்லவா? அதன் பிரதிநிதியாயிருந்து அதன் காரியங்களைக் கவனிக்க ஒரு தாபனம் வேண்டுமல்லவா? அது தான் இந்த பிரெசிடியம்.

5. மந்திரி சபை
சுப்ரீம் சோவியத் தானது, பிரெசிடியத்தை ஏற்படுத்துவது போலவே ஒரு மந்திரி சபையையும், இந்த மாதிரி சபையோடு ஒத் துழைக்கக்கூடிய சில கமிட்டிகளையும் நியமனம் செய்கிறது. இந்த மந்திரி சபையை, சுப்ரீம் சோவியத்தின் காரிய நிருவாக சபை யென்று சுருக்கமாகச் சொல்லலாம். சோவியத் அரசியல் அமைப் பிலேயே இந்த மந்திரி சபைதான் நாயகமாயிருப்பது; அதிகார ஊற்றுப் போலிருப்பது. வாசகர்களுக்கு நன்றாகத் தெரியும் பொருட்டு இதனை நாம் மந்திரி சபை என்று அழைக்கிறோமே தவிர, ருஷ்யாவில் இதற்கு இந்தப் பெயரில்லை. ருஷ்ய அரசாங் கத்தின் தலைவர்கள் தங்களை மந்திரிமார்கள் என்று அழைத்துக் கொள்வதோ அதிகாரிகளென்று கருதிக்கொள்வதோ கிடையாது. ஜனங் களுடைய காரியத்தை நடத்துகிறவர்கள்1 என்று தான் தங் களை அழைத்துக் கொள்ளுகிறார்கள். ஜனங்களுடைய காரியத்தை நடத்துகிற வர்களின் சபை2 என்பதே மந்திரி சபையின் பெயர். இந்த மந்திரி சபை தவிர, தொழில் திட்டக் கமிட்டி, போக்குவரத்துக் களைக் கவனிக்கிற கமிட்டி முதலிய பல கமிட்டிகள் இருக்கின்றன.

1.  அந்நிய நாட்டு விவகாரங்கள் (அதாவது சண்டை செய்வது, சமாதானம் செய்து கொள்வது ஒப்பந்தம் செய்து கொள்வது, எல்லையை மாற்றியமைப்பது, அந்நிய நாட்டு தானீகர்களோடு பேச்சுவார்த்தைகள் நடத்துவது முதலியன) (2) ராணுவம் (3) போக்கு வரத்துகள், தபால், தந்தி, ரேடியோ முதலியவை (4) நாணயச் செலாவணி, அரசாங்கப் பணலேவாதேவி விவகாரங்கள் (5) பிரஜா உரிமை (6) நிலம், நீர், சுரங்கம் முதலிய தேசீய சொத்துக்களைப் பராமரித்தல் (7) அந்நிய நாட்டு ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் (8) பொருளுற்பத்தி, பொருள் விநியோகம் இவைகளைப் பற்றின நிருவாகம் முதலியவை, சமஷ்டி அரசாங்கத்தின் அதிகாரங்களாக வகுக்கப்பட்டிருக்கின்றன.

ஏற்கனவே நாம் கூறியுள்ளபடி, சமஷ்டி மந்திரி சபைக்கும், சமதர்மக் கட்சியின் நிருவாக சபைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உதாராணமாக, அரசாங்கத்தின் எல்லா உத்தரவுகளும், சட்ட திட்டங்களும் சரியானபடி அனுஷ்டிக்கப்படுகின்றனவா வென் பதைக் கவனிப்பதற்காக, சமதர்மக் கட்சியின் நிருவாக சபையானது தனியாக ஓர் இலாகாவை ஏற்படுத்தி, ருஷ்யாவின் மூலை முடுக்கு களுக்கெல்லாம் பரிசோதகர்களை அடிக்கடி அனுப்புகிறது; ஆங்காங்கு நியமனமும் செய்கிறது. சமதர்மத்தின் வளர்ச்சியிலே, அரசாங்கமும் கட்சியும் எப்படி ஒரே மாதிரி கருத்துடையனவா யிருக்கின்றன என்பதையே இது புலப்படுத்துகிறது.

இந்தச் சமஷ்டி அரசாங்கத்தின் மந்திரி சபையானது ஏறக் குறைய தினந்தோறும் கூடுகிறது. ஒழுங்கு முறையென்று சொல்லிக் கொண்டு, எந்த ஒரு காரியத்தையும் இங்கே தாமதப் படுத்துவது கிடையாது. மற்றும், மந்திரி சபையானது இன்னது செய்யப் போகிறது, இன்னது செய்ய உத்தேசித் திருக்கிறது என்பன போன்ற ஹேஷ்யங்களுக்கும், அனாவசிய மான வதந்திகளுக்கும் அரசாங்கத்தார் இடங்கொடுப்பதில்லை. இதற்குப் பதிலாக அரசாங் கத்தின் ஒவ்வோர் இலாகாவும், அந்தந்த இலாகாவில் என்னென்ன வேலைகள் நடைபெறுகின்றன, இனி நடைபெறப் போகின்றன எவை என்பதைக் குறிப்பிட்டு, வாரத்திற்கொருமுறை அல்லது மாதத்திற்கு கொருமுறை அறிக்கைகள் வெளியிடுகின்றன. இந்த அறிக்கைகள், பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படுகின்றன; எல்லா பொதுஜனங்களின் நம்பிக்கைதான், அரசாங்கத்தின் மூலபலம் என்பதை சோவியத் தலைவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.

சமஷ்டி அரசாங்க இலாகாக்களில் முக்கியமானதொன்று ராணுவ இலாகா. இதற்குப் பாதுகாப்பு இலாகா என்ற பெயரே தவிர, யுத்த இலாகா என்பது அல்ல. இஃதொன்றைக் கொண்டே சோவியத் அரசாங்கத்தின் அந்நிய நாட்டுக் கொள்கை சமா தானத்தை அடிப்படையாகக் கொண்ட தென்பது நன்கு புலனாகும். செம்படையென்று அழைக்கப்படுகிற சோவியத் ராணுவம், மற்ற நாட்டு ராணுவங்களைப் போன்றதன்று. அது ஜனங் களுடைய ராணுவம். ஜனங் களுடைய பாதுகாப்புக்காக அஃதிருக் கிறதே தவிர, ஜனங் களுக்கு மேலே இருந்துகொண்டு ஜனங்களைப் பயமுறுத்திக் கொண்டிருப்பதற்காக அல்ல. யுத்தப் பயிற்சிக்காகவும் செம்படை இருக்கிறது. ராணுவத்திலுள்ளவர்கள், தங்களை ஒரு தனி ஜாதி யினராக, சாதாரண சமுதாயத் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர் களைக் காட்டிலும் மேலான ஜாதியினராகக் கருதிக் கொண்டு விடும்படியான சந்தர்ப்பமோ பயிற்சியோ அளிக்கப்படுவதில்லை. ஒரு விவசாயி அல்லது ஒரு தொழிலாளி அல்லது ஒரு வைத்தியன் ஆகிய இவர்களைக் காட்டிலும், ஒரு ராணுவ உத்தியோகதன் எந்த விதத்திலும் மேலான வனில்லையென்று ஒவ்வொரு சமதர்ம வாதியும் சித்தாந்தப்படுத்திக் காட்டுவான்.

6. ராணுவப் பயிற்சி
ருஷ்யாவில், வயது வந்த எல்லோரும் கட்டாயமாக ராணுவப் பயிற்சி பெற வேண்டுமென்ற விதி அனுஷ்டானத்தில் இருந்து வருகிறது. இருந்தாலும், விவசாயிகளும் தொழிலாளர்களுமே ராணுவத்தில் பெரும்பாலோராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டுப் பயிற்சி அளிக்கப் படுகின்றனர். தரைப்படையினர் இரண்டு வருஷ காலமும், ஆகாயப் படையினர் மூன்று வருஷகாலமும், கப்பற் படையினர் ஐந்து வருஷ காலமும் முறையே பயிற்சி பெற வேண்டும். இங்ஙனம் பயிற்சி பெற்றவர்களில் ஒரு சிறு எண்ணிக்கையினரை மட்டும் ஒழுங்கான ராணுவத்தில் சேர்த்துக்கொண்டு விடுகின்றனர். மற்றவர்கள், வீடு திரும்பி அவரவர்களுடைய தொழில்களில் ஈடுபட்டு விடுகின்றனர். வருஷந் தோறும் இந்த மாதிரி ராணுவப் பயிற்சி பெற்றுவிட்டுச் சுமார் ஐந்து லட்சம் பேர் வீடு திரும்பு கின்றனர். இவர்கள் ஒழுங்கான கல்விப் பயிற்சியும் ராணுவப் பயிற்சியும் பெற்றவர்களாதலினால், எந்தத் தொழிலில் பிரவேசித் தாலும் அதில் ஒழுங்கையும் திறமையையும் நிலைநாட்டு கின்றனர். ருஷ்யாவில், கிராமங்கள், நகரங்கள் முதலியன வெல்லாம் சேர்த்துச் சுமார் ஆறு லட்சம் இருக்கின்றன. இவைகளினுள்ளிருக்கும் எல்லா தாபனங்களிலும் இந்த ராணுவப் பயிற்சியாளர்கள் புகுந்து, உன்னதமான ஒரு பதவியை வெகு சுலபமாக அடைந்து விடு கின்றனர். கிராம சோவியத்துகள் பலவற்றிற்கு இவர்கள்தான் தலைவர்கள். கூட்டுறவுப் பண்டகசாலைகளா, கூட்டுறவுப் பண்ணை களா, எல்லா வற்றிலும் அநேகமாக இவர்கள்தான் அதிகாரிகள். மகாநாடுகளுக்கு விஷயந் தெரிந்தவர்களைப் பிரதிநிதிகளாகப் பொறுக்கியெடுத்து அனுப்ப வேண்டுமென்பதற்காக இவர்களே தெரிந்தெடுக்கப்படுகிறார்கள். இதனால் வருஷந்தோறும் லட்சக் கணக்கில் ராணுவப் பயிற்சி பெற்று வீடு திரும்பு கிறவர்கள், யுத்த காலத்தில் சிறந்த போர்வீரர்கள்; சமாதான காலத்தில் நல்ல பிரசாரகர்கள் - திறமையான நிருவாகிகள்.

இவர்கள் மேலே சொன்ன பிரகாரம் இரண்டு வருஷமோ மூன்று வருஷமோ பயிற்சி பெற்று விட்டபிறகு, இவர்களுக்கும் ராணுவத்திற்கும் தொடர்புவிட்டுப் போகிறதென்பது அர்த்த மில்லை. பிரதி வருஷமும் சில நாட்கள் ராணுவப் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கவேண்டும். அப்பொழுது தான் இவர்களுக்கு நவீன யுத்த முறைகள் யாவும் தெரியும்; இவர் களுடைய பயிற்சியும் துருப் பிடியாமலிருக்கும். இவர்களில் யார் எந்தத் தொழிலில் ஈடுபட்டி ருந்தபோதிலும், அரசாங்கம் ராணுவ சேவைக்கு அழைத்துக் கொள்ளலாம். அப்படி ராணுவத்திலே சேர்ந்து சேவை செய்து கொண்டிருக்கிறபோது, தொழிலாளர் சங்கத்திலோ, வேறெந்த தாபனத்திலோ அங்கத்தினரா யிருந்திருந்தால், அந்தப் பதவியை ராஜிநாமா செய்து விடவேண்டும். ஆனால், சோவியத் அரசாங்கத் தில் உரிமை யுள்ள பிரஜைகள் என்ற முறையில், தேர்தல்களில், தங்களுக் கிஷ்டமான பிரதிநிதிகளுக்கு ஓட்டுப்போடலாம்; பத்திரிகைகளுக்கு நிருபர் களாயிருக்கலாம்; தாங்களே கூட்டுறவுப் பண்டகசாலைகளை ஏற்படுத்தி அவற்றை நிருவாகம் செய்யலாம். சுருக்கமாகச் சொல்கிறபோது, ராணுவத்தைச் சேர்ந்தவர்கள், திறமையான போர் வீரர்களாயிருப்பதோடு, செல்வாக்குள்ள பிரஜைகளாகவும் இருக்கிறார்கள்.

7. நியாயவாதிகள்
உலகத்திலுள்ள எல்லா நாடுகளிலும் சிறந்த ராஜதந்திரி களாகவோ அரசியல் வாதிகளாகவோ இருக்கிறவர்களில் பெரும் பாலோர் வக்கீல்களே. இவர்கள் அதிகமான வருமானத்தை யுடையவர்களாகவும் சமுதாயத்தில் செல்வாக்குப் பெற்றவர் களாகவும் இருக்கிறார்கள். ஆனால் சோவியத் ருஷ்யாவில் வக்கீல்களுக்கு அதிக வருமானமோ செல்வாக்கோ கிடையாது. சோவியத் தலைவர்கள், வக்கீல் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஏனென்றால், நீதி வழங்குகிற முறையை அவர்கள் சிக்கலாக வைக்கவில்லை. தவிர, ருஷ்யாவில் பணச் செல்வாக்கைக் கொண்டு நீதியை வாங்கிவிட முடியாது. மற்றும், நீதி வழங்குகிறவர் களுக்கும் நீதி கோருகிறவர்களுக்கும் நேரான தொடர்பு ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. இவையெல்லாம் இருந்தாலும் அங்கே வக்கீல்கள் இருக்கிறார்கள்; வக்கீல் தொழிலும் நடக்கிறது; ஆனால் புதிய முறையில். எப்படியென்றால், அரசாங்கத்தார், வக்கீல்களுக்கென்று ஒரு சங்கம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். சட்டப் பரீட்சையில் தேறி யவர்கள், அல்லது ஏற்கனவே நீதி இலாகாவில் இரண்டு வருஷகாலம் உத்தியோகம் பார்த்தவர்கள் முதலியோர் இந்தச் சங்கத்தில் அங்கத்தினராகப் பதிவு செய்து கொள்ளப் படுகிறார்கள். சட்ட சம்பந்தாக இவர்கள் யாருக்கும் ஆலோசனை சொல்லக் கடமைப் பட்டவர்கள். இன்னின்ன மாதிரியான வழக்குகளுக்கு ஆஜரானால் இவ்வளவு இவ்வளவு கட்டணம் என்று ஒரு திட்டம் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. அந்தத் திட்டப்படியே இவர்கள் கட்சிக்காரர்களிட மிருந்து கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால் கட்சிக்காரர்கள் ஏழைகளாகவோ, நோயாளிகளாகவோ, வயதான பென்ஷனர் களாகவோ இருந்தால் அவர்களிடத்திலிருந்து எவ்விதக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. பொதுவாக, கட்சிக்காரர்களுடைய பொருளா தார நிலைமைக்குத்தக்கவாறு கட்டணம் வசூலிக்க வேண்டும் ஆனால், இப்படி வசூலிக்கிற கட்டணத்தை மேற்படி சங்க நிதியில் சேர்ப்பித்துவிடவேண்டும். இதற்குப் பிரதியாக ஒவ்வொரு வக்கீலுக்கும் அவரவருடைய திறமைக்கும் வேலைக்கும் தகுந்தபடி மாதந்தோறும் ஒரு தொகை சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது. இன்னொரு முக்கியமான விஷயமென்னவென்றால், மேற்படி வக்கீல் சங்கத்திலே அங்கத்தினராகப் பதிவு செய்து கொள்ளாத யாரும், வக்கீல் தொழிலை நடத்தவே முடியாது; நடத்தக்கூடாது. வக்கீல்களில் பெரும்பாலோர் வைத்தியர்களைப் போலவும், நூலாசிரியர்களைப் போலவும் சமதர்மக் கட்சியில் சேராமல் ஒதுங்கியே இருக்கிறார்கள். அப்படி யிருந்தால்தான் தங்கள் கடமையைத் தாங்கள் நிஷ்பட்ச பாதமாகச் செய்ய முடியும் என்று இவர்கள் நம்புகிறார்கள். இதை அரசாங்கமும் ஆதரிக்கிறது.

8. ஜாதீய உரிமைகள்
ஜார் ஆட்சிக் காலத்தில் ருஷ்யாவில் வசிக்கும் பலவகைப் பட்ட ஜாதியினருடைய நிலைமை மகாமோசமாயிருந்தது. உரிமை மறுப்பு, வறுமை வாழ்க்கையும், அறியாமைப் போராட்டமும் இவர் களுடைய கூடப்பிறந்த சகோதரர்களாயிருந்தன. வருஷந்தோறும் ஆயிரக்கணக்கான பேர் இறந்துபோவது அப்பொழுது சர்வ சாதாரண சம்பவம். ருஷ்யா, பல ஜாதியாரைக்கொண்ட ஒரு சிறைக் கூடம் என்று லெனின் சொன்னதில் அர்த்தமில்லாமலில்லை. 1917-ஆம் வருஷம் நவம்பர் மாதம் புரட்சி ஏற்பட்டு, போல்ஷ்வெக்கர்கள் அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டதும், இந்த நிலைமை அடியோடு மாறிவிட்டது. ருஷ்யாவில் வசிக்கும் எல்லா ஜாதியாருடைய உரிமைகளும் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படும் என்று 1917-ஆம் வருஷம் நவம்பர் மாதம் பதினைந்தாந்தேதியிட்டு ஓர் அறிக்கை வெளியிடப் பெற்றது. இதன்படி, ருஷ்யாவிலுள்ள சகல ஜாதியாருக்கும் ஒரே மாதிரியான உரிமைகள் உண்டு என்று அங்கீகரிக்கப்பட்டது. ஜாதி காரணமாகவோ மதம் காரணமாகவோ யாருக்கும் எந்தவிதமான விசேஷ உரிமையோ சலுகையோ கிடை யாது. ஒவ்வொரு ஜாதியாருடைய கலை, தொழில், சம்பிரதாயம், நாகரிகபரம்பரை முதலியன வளர்ச்சி பெறுவதற்கு எல்லா வசதிகளும் சந்தர்ப்பங்களும் அளிக்கப்பட்டன. எந்த ஜாதியினராக இருந்தாலும், எந்த மதத்தினராக இருந்தாலும் உழைத்துப் பிழைக் கிறவர்கள் என்ற முறையில் எல்லோரும் ஓரினம் என்ற உணர்ச் சியைப் பொது ஜனங்களுக்கு வலியுறுத்திக் காட்டுவதிலே சோவியத் தலைவர்கள் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டனர்; இந்த உணர்ச்சியைக் கொண்டு தான், ஆரம்பத்தில் ஏற்பட்ட வெளிநாடு களின் எதிர்ப்பு, உள்நாட்டுக் குழப்பம் முதலிய இடையூறுகளை யெல்லாம் சமாளித்தனர்; பின்னர் இந்த உணர்ச்சியை வளர்த்தும் வந்தனர். ஜாதிப் போராட்டம், மதப்போராட்டம் முதலியவற்றிற் கெல்லாம் அடிப்படையான காரணம் பொருளாதாரத்திலேயுள்ள ஏற்றத்தாழ்வுகள்தான். இந்த ஏற்றத்தாழ்வு களை அகற்றி, அரசியலில் எல்லோருக்கும் சம உரிமை அளித்து விட்டார்கள். ஜாதிப் போராட்டங்களும் நின்றுவிட்டன. அவரவருடைய கலைகள், நாகரிகங்கள் முதலியன வளர்ச்சியடையத்தொடங்கின.

1937 - ஆம் வருஷத்து அரசியல் திட்டத்தின் 123 - வது பிரிவில் இந்த ஜாதீய சமஉரிமை பின்வருமாறு அழகாக வற்புறுத்தப் பட்டிருக்கிறது:

சோவியத் ருஷ்யாவிலுள்ள எல்லாக் குடி மக்களும், அவர்கள் எந்த ஜாதியினராக அல்லது எந்தச் சமுதாயத்தினராக இருந்த போதிலும், பொருளா தாரம், ராஜ்ய விவகாரம், கலாசாரம், சமுதாயம், அரசியல் முதலிய எல்லா வாழ்க்கைத்துறைகளிலும் சம உரிமை உண்டு. இதை யாரும் மாற்ற முடியாது.

ஜாதி காரணமாக அல்லது சமூகங் காரணமாக எந்த ஒரு பிரஜைக் கேனும் நேர்முகமாகவோ மறைமுக மாகவோ உரிமைகள் மறுக்கப் பட்டாலும், அல்லது விசேஷ சலுகைகள் வழங்கப்பட்டாலும், அல்லது ஒரு ஜாதிக்கும் மற்றொரு ஜாதிக்கும் பிரிவினையோ துவேஷமோ வெறுப்போ உண்டுபண்ணக்கூடிய விதமாக வாதம் செய்தாலும், இவை யாவும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படும்.

இந்த மாதிரி ஜாதீய உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வருவதன் விளைவு என்னவென்றால், மிகவும் பிற்போக்கடைந்திருந்த ஜாதியர், வெளியார் பார்த்துப் பிரமித்துப் போகக்கூடிய மாதிரி முற்போக்கு அடைந்திருக்கின்றனர். இவர்களூடைய பிரதேசங்கள், செழுமை யுற்று, அநேகம் உலோகப் பொருள்களை உபயோகத்திற்குக் கொணர்கின்றன. எங்கு பார்த்தாலும் தானியங்களை உதிர்க்கும் நிலங்கள்; பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்