சிந்தனையாளர் மாக்கியவெல்லி
பாவலர் நாரா. நாச்சியப்பன்சிந்தனையாளர் வரிசை-10

* * *

சிந்தனையாளர்

மாக்கியவெல்லி

* * *

பதிப்பாசிரியர்:

அரு. ராமநாதன்

எழுதியவர்:

நாரா. நாச்சியப்பன்

பிரேமா

பிரசுரம்

59, ஆற்காடு சாலை,

கோடம்பாக்கம்,

சென்னை - 600 024.

* * *

தொலைபேசி : 24800325, 24833180.

Fax : 044-2481 1755

E-mail : aruram @ md2.Vsnl.net.in

பிரேமா பிரசுரம் - 140

1952

ஸ்தாபிக்கப்பட்டது

முதற்பதிப்பு ⁠:பிப்ரவரி 1961

இரண்டாம் பதிப்பு ⁠:ஜுன் 1918

மூன்றாம் பதிப்பு ⁠:ஜனவரி 1993

நான்காம் பதிப்பு⁠: மார்ச் 2010

ஐந்தாம் பதிப்பு ⁠:ஆகஸ்ட் 2002

ஆறாம் பதிப்பு ⁠:செப்டம்பர் 2006

 

சிந்தனையாளர் வரிசை

1. பர்வின்

2. பிளேட்டோ

3. கார்ல் மார்க்ஸ்

4. ரூஸோ

5. பெஞ்சமின் பிராங்ளின்

6. அரிஸ்டாட்டில்

7. இங்கர்சால்

8. எமர்ஸன்

9. வால்டேர்

10. மாக்கியவல்லி

11. எபிகூரஸ்

12. எமர்ஸன்

13. பிராய்டு

14. மாண்டெயின்

15. கன்பூசியஸ்

16. சா அதி

17. நியட்சே

18. தொல்காப்பியர்

19. ஐன்ஸ்டைன்

20. விவேகானந்தர்

21. சாக்ரடீஸ்

22. டால்ஸ்டாய்

23. ஹவ்லக் எல்லீஸ்

விலை ரூ.30/

கணிப்பொறி ⁠ : ஏ.ஆர். எண்டர்பிரைசஸ், சென்னை - 24. வடிவமைப்பு

அச்சிட்டோர் ⁠ : காரிஸ் ஆப்செட் பிரஸ், சென்னை - 29

சிந்தனையாளர் வரிசை

தயாரிப்பு: அரு. ராமநாதம்

10

எந்த ஆட்சியும் நிலை பெறக்கூடிய

வழிவகைகள் எவை

எனச் சிந்தித்தவர்

சிந்தனையாளர் மாக்கியவெல்லி


பொருளடக்கம்

I. முதற்பகுதி :

1. நிலையான அரசு ஏன்?

2. வாழ்க்கை வரலாறு

3. மாக்கியவெல்லியின் நூல்கள்

4. மாக்கியவெல்லியைக் கையாண்டவர்கள்

II. இரண்டாம் பகுதி : நூல் சுருக்கங்கள்

1. அரசன் (அரசியல் நூல்)

2. டிட்டஸ் லீவியசின் முதற் பத்துப் புத்தகங்களைப் பற்றிய ஆராய்ச்சி

3. பேய் கட்டிக்கொண்ட மனைவி (சிறுகதை)

4. மந்திரகோலா (நாடகம்)

5. மாக்கியவெல்லியின் கடிதங்கள்

III. மூன்றாம் பகுதி :

1. மாக்கியவெல்லியின் மணி மொழிகள்

2. கலைச் சொற்களைப் பற்றி


1. நிலையான அரசு ஏன்?

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும் என்று அரசு நடத்துபவனின் கடமையைப் பற்றித் திருவள்ளுவர் கூறினார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அரசியல் எப்படியிருக்க வேண்டுமென்று திருவள்ளுவர் சிந்தித்தார். திருவள்ளுவர் தமிழ் நாட்டிலே பிறந்தவர்.

மேல் நாட்டிலே சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கும் முன்னால் நிலையான அரசியல் எப்படி இருக்க வேண்டுமென்று முதன் முதலாகச் சிந்தித்தவன் நிக்கோலோ மாக்கியவெல்லிதான்.

மாக்கியவெல்லி என்ற பெயரைக் கேட்டவுடன் அரசியல்வாதிகளும் முடிமன்னர்களும் பேய் பிசாசுகளைக் கண்டவர்களைப்போல் அரண்டு போனதுண்டு. மதகுருமார்கள் மாக்கியவெல்லியையே பிசாசு என்று அழைத்ததும் உண்டு. மேனாட்டு மத நூல்களில் பிசாசுக்கு நிக் என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மாக்கியவெல்லியின் முதல் பெயரான நிக்கோலோ என்பதிலிருந்து தான், அந்தப் பழைய பிசாசு தனக்கு நிக் என்ற பெயரை எடுத்துச் சூட்டிக் கொண்டது என்று வெறுப்புக் கலந்த வேடிக்கையுடன் அவனைப் பற்றிப் பேசிக் கொள்வதுமுண்டு. மாக்கியவெல்லிசம் என்றாலே அரசியல் அயோக்கியத்தனம் அல்லது அரசியல் கொடுமை என்று பொருள் கூறுவோரும் உண்டு.

ஆனால், மாக்கியவெல்லி இவ்வளவு பழிப்புக்கும் ஆளாகும்படி என்ன செய்தான் என்றால், தன் மனத்தில் ஏற்பட்ட கருத்துக்களை ஒளிவு மறைவில்லாமல் சொன்னான். அவ்வளவுதான்.

மாக்கியவெல்லி, அரசர்கள் கொடுங்கோலர்களாக இருக்க வேண்டுமென்று கூறினான் என்று அவன் மீது குற்றஞ்சாட்டுபவர்கள் இருக்கிறார்கள். அரசர்கள் கொலை கொள்ளைகளை அஞ்சாமல் செய்யவேண்டுமென்று கூறினான் என்று பழிசுமத்துபவர்கள் இருக்கிறார்கள். மாக்கியவெல்லி எந்தச் சந்தர்ப்பத்தில் எதற்காக அப்படிச் சொன்னான் என்பதை ஆராயாமலோ, அல்லாது தெரிந்திருந்தும், அவன்மீது குறை சொல்வதே குறிக்கோளாக அதை மறைத்தோ கூறியவர்களின் வாய்மொழியாகத்தான் இந்த நிந்தனைகள் இருக்க வேண்டும். அவர்கள் கூறுகிறபடி பார்த்தால்,

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட்டதனொடு நேர்.

என்று கூறிய திருவள்ளுவரும் கூடக் கொடுங்கோன்மையை ஆதரித்ததாகவே எடுத்துக் கொள்ள வேண்டி நேரிடும்.

மாக்கியவெல்லி பல இடங்களில் திருவள்ளுவரின் கருத்துக்கு மாறுபடுகிறான் என்றாலும் அவன் கூறுகின்ற கருத்துக்கள் ராஜதந்திரம் என்ற முறையிலே காலத்தையும் இடத்தையும் நோக்கி வரவேற்க வேண்டியவையாக இருக்கின்றன.

மாக்கியவெல்லியின் நோக்கம் ஒன்றே ஒன்று. அது பயன் நன்மையாக இருக்க வேண்டும். மக்கட்கு நன்மை செய்வதற்காக! அல்லது, மக்கள் நலமாக வாழக் கூடியபடி ஓர் அரசை நிலை நிறுத்துவதற்காக அந்த அரசன் ஆரம்பத்தில் நிலைமைக்குத் தகுந்தாற்போல் எவ்வளவு கொடுஞ் செயல்களை வேண்டுமானாலும் புரியலாம் என்பதேயாகும்.

உலகத்தில் எத்தனையோ அரசாங்கங்கள் எழுந்தன. அவற்றிலே நல்லனவும் தீயனவும் உண்டு. ஆனால் எந்த அரசாங்கமும் நீடித்து நிலைத்து நின்றதில்லை. இதன் காரணங்களைத் தான் மாக்கியவெல்லி ஆராய்ந்தான். அரசாங்கங்கள் அடிக்கடி மாறுவதால் அந்தந்த மக்கள் சமுதாயங்கள் அல்லலுற்றுத் தட்டுத்தடுமாறி ஒரு நிலையான வாழ்வைப் பெற முடியாமல் அலைக்கழித்து சீர்கெட்டு நசித்துப் போகின்றன. இந்த அவலநிலை அடிக்கடி ஏற்படாமல் இருக்க, நிலையான அரசாங்கங்கள் தேவை. அவை குடியரசாயினும் முடியரசாயினும் நிலைத்து நிற்கக் கூடியனவாக இருக்கவேண்டும். அப்படி அவை நிலைத்து நிற்கக் கூடிய வழிவகைகள் யாவை? இதைத்தான் சிந்தித்தான் மாக்கியவெல்லி.

குடியரசு, முடியரசு எதுவாயினும் அது மக்கள் நன்மை கருதும் அரசாக இருக்க வேண்டும்: மக்கள் நன்மை கருதும் அந்த அரசு நிலைத்து நிற்கவேண்டும் என்பதுதான் மாக்கியவெல்லியின் கொள்கை.

அப்படி ஓர் அரசு நிலைத்து நிற்கக் கூடிய வழிவகைகளைச் சிந்தித்துத்தான் அவன் தன் நூல்களிலே நமக்கு விளக்கிக் காட்டியிருக்கிறான்.

ஓர் அரசு நிலைப்பதற்காக ஒரு சிலரைக் கொல்ல வேண்டிய தேவையிருந்தால் கொல்வது தவறல்ல என்று குறிப்பிடுகின்றான். இப்படி அவன் துணிச்சலாகத் தன் கருத்தைக் கூறுவது தான் சிலர்க்குப் பிடிக்கவில்லை.

மாக்கியவெல்லியைத் தூற்றிய காலம் மறைந்துவிட்டது. அவன் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது. ஆனால், இன்று உலகெங்கும் குடியரசாதிக்கம் ஓங்கி வருகின்ற காலமாயிருக்கின்றபடியால், அவனுடைய முடியரசுக் கொள்கைகளை யொருபுறம் ஒதுக்கிவிட்டுக் குடியரசுக் கொள்கைகளை ஏற்றுக் கொள்வோமாக.

* * *

2. வாழ்க்கை வரலாறு

* * *

தன்னுடைய அரசியல் சிந்தனைகளை வெளியிட்டதன் காரணமாகத் தன் காலத்திலேயில்லாவிட்டாலும், பிற்காலத்திலே அரசியல் உலகிலே ஒரு பரபரப்பை உண்டு பண்ணிய மாக்கியவெல்லி இத்தாலிய நாட்டைச் சேர்ந்தவன். 1469-ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதியன்று பிளாரன்ஸ் நகரிலே மாக்கியவெல்லி பிறந்தான். அவன் பிறந்தபோது பிளாரன்ஸ், குடியாட்சி நடைபெற்று வந்த ஒரு நகர ராஜ்யமாக விளங்கியது மாக்கியவெல்லியின் முழுப்பெயர் நிக்கோலோ மாக்கியவெல்லி என்பதாகும். அவன் தந்தையின் பெயர் பெர்னார்டோ மாக்கியவெல்லி.

நிக்கோலோ மாக்கியவெல்லி தன் இளமைப் பருவத்தை எப்படிக் கழித்தான் என்பது தெரியவில்லை. எங்கு படித்தான், எப்படிப்பட்ட கல்வி பெற்றான் என்ற விவரமெல்லாம் தெரியவில்லை. ஆனால் அவனுடைய சிந்தனைக்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவை, அவன் இளமைப் பருவத்திலே நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகள் தாம் என்று சொல்லலாம். அந்த இரண்டு நிகழ்ச்சிகளும் சாதாரணமானவையல்ல.

அவற்றில் முதலாவது நிகழ்ச்சி எட்டாவது சார்லசின் தலைமையில் நடந்த பிரெஞ்சுப் படையெடுப்பாகும். ஒரு மிகச் சிறிய படையுடன் நடத்தப்பட்ட படையெடுப்புத்தான் என்றாலும் அது, இத்தாலிய ஆதிக்க முறைகளை, அட்டை வீடுகளைத் தட்டிக் குலைப்பது போல் தட்டுத் தடுமாறிக் குலைந்து போகும்படி செய்து விட்டது. இந்த நிகழ்ச்சி அந்த இளம் அரசியல்வாதியை அதிகார சக்தியின் அடிப்புறத்தை உற்று நோக்கும்படி செய்தது.

மற்றொரு நிகழ்ச்சி சாவனரோலாவின் உயர்ச்சியும் வீழ்ச்சியுமாகும். சாவனரோலா மதச் சீர்திருத்தம் ஒன்றைச் செய்ததன் காரணமாகப் பெருஞ் செல்வாக்கடைந்தார். எட்டாவது சார்லசின் ஆட்சிக்குட்பட்ட நகரத்தை எவ்வித தீங்கும் அடையாமல் காப்பாற்றினார். தமது பரிசுத்த பக்திக் கொள்கையை மிகத் தீவிரமாக அமுல் நடத்த அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார். அவருடைய அதிகாரத்தின் கீழ் இயங்கிய அந்த நகர ராஜ்யத்தில் பெரும்பாலான மக்கள் உலக இன்பங்களைத் துறந்து, எளிய உடையணிந்து, பஜனைப் பாட்டுகளைத் தவிர, வேறு பாட்டுக்களைப் பாடாதவர்களாய் நடந்து வந்தார்கள். சாவனரோலாவின் கொள்கை வெறி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மேலோங்கி வளர்ந்து வந்தது. கடைசியில், சிற்றின்பம் பற்றிய புத்தகங்களையும் பாட்டுக்களையும். தீய காம உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய கலைகளையும் பாடல்களையும், தேடிப்பிடித்துத் தீயிலிட்டு அழிக்கும்படி தம் சீடகோடிகளுக்கு உபதேசம் செய்தார். மாயைகளை எரிக்க வேண்டுமென்ற இந்த இயக்கத்தால், உயர்ந்த மதிப்புக்குரிய பல கலைநூல்கள் அழிந்து போயின.

அவருடைய சீர்திருத்த வேகம் இந்த அளவுக்கு முற்றியதும், யாருடனும் இணங்கிப் போகாத அகம்பாவ குணமும் சாவனரோலாவுக்கு நாட்டிலே பல எதிரிகளை உண்டாக்கிவிட்டது. நகரமக்களுக்குப் பரிசுத்த பக்திக் கொள்கையிலே அலுப்புத் தட்டியது. அந்தச் சமயத்தில் பிளாரென்சில் ஒரு கொள்ளை நோய் பரவியது. மெடிசி பரம்பரையைப் பின்பற்றுவோர் பலர் இறந்தனர். இப்படிப்பட்ட பல துன்பங்களும் ஏற்பட்டதால் அந்தப் புதிய சீர்திருத்தவாதிக்கு எதிராக எங்கும் அதிருப்தி பரவியது. அவர் தம் போதனைகளை, ஆயுத பாணிகளான காவல்வீரர்கள் புடைசூழ நடத்தவேண்டி வந்தது. கடைசியில் தங்கள் கொள்கையை மெய்ப்பிப்பதற்காக அவருடன் தீப்புகுந்து காண்பிப்பதாக அவருடைய சீடகோடிகள் அறிவித்தார்கள். இது நடைபெறவில்லை. அவரை ஏமாற்றுக்காரன் என்றும் கோழையென்றும் தூற்றிக் கொண்டு கற்களையும் தீவட்டிகளையும் கொண்டு மக்களில் ஒரு சாரார் அவருடைய மடாலயத்தைத் தாக்கிக் கலகம் விளைவித்தார்கள். பிறகு அவர் கைது செய்யப்பட்டுப் பல நாட்கள் வரை சித்திரவதை செய்யப்பட்டுக் கடைசியில் தூக்கிலிட்டுத் தீக்கிரையாக்கும்படி தண்டனை பெற்றார். இந்தக் கொடிய தண்டனை 1498-ம் ஆண்டு மே மாதம் 23-ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது.

அவரைப் பற்றி மாக்கியவெல்லி குறிப்பிடும்போது, "அவர் புதிய முறைகளைப் பாழாக்கினார். எப்படியென்றால் மக்கள் கூட்டம் அவரை நம்பாதபோது, நம்பிக்கை உடையவர்களையேனும் உறுதியாக இருக்கும்படிச் செய்ய அவருக்கு வழியில்லை. அல்லது நம்பிக்கையற்றவனிடம் நம்பிக்கையைப் புகுத்தும் வழியும் அவருக்குத் தெரியவில்லை ” என்கிறான். முடிவாக படை பலமற்ற தீர்க்கதரிசிகள் எக்காலத்திலும் அழிக்கப்பட்டேயிருக்கிறார்கள்: படை பலமுள்ள தீர்க்கதரிசிகளே வெற்றி பெற்றிருக்கிறார்கள்" என்று அந்தக் கருத்துரைக்கு முத்தாய்ப்பு வைக்கிறான்.

மாக்கியவெல்லியின் இல்லற வாழ்க்கை நன்றாக நடந்தது என்று சொல்லலாம். ஏனெனில் அவன் அன்புடைய மனைவியைப் பெற்றிருந்தான். அவள் தன் கணவனை மிகவும் மேலாக மதித்து வந்தாள். அவள் பெயர் மாதியெட்டாகோர்சினி என்பது. மாக்கியவெல்லி அவளை அடிக்கடி வம்புக்கிழுத்து, அவள் கோபம் கொள்வதைப் பார்த்து மகிழ்வது வழக்கமாயிருந்து வந்திருக்கிறது.

மாக்கியவெல்லிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருந்திருக்கிறார்கள். மகன் பிறந்தபோது மாக்கியவெல்லி அரசாங்க அலுவலாக ரோமாபுரிக்குப் போயிருந்தான். அப்போது அவன் மனைவி அவனுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து அவள் அவனை எவ்வளவு மதித்தாள் என்பதும், அவனிடம் எவ்வளவு அன்பு கொண்டிருந்தாள் என்பதும் புலப்படுகின்றன. அவள் தன் கடிதத்தில் குழந்தையைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறாள்.

"அவன் உங்களைப் போலவே இருக்கிறான். பனியைப் போன்ற வெண்மையான உடலும், கருப்பு வெல்வெட்டைப் போன்ற தலையும், உங்களுக்கிருப்பது போலவே உடல் முழுதும் மயிர் வளர்ந்தும் இருக்கிறான். அவன் அப்படியே உங்களை உரித்து வைத்தாற்போல் இருப்பதால் அவனை அழகான பையன் என்றே சொல்லத் தோன்றுகிறது. அவனைப் பார்த்தால் ஒரு வருஷத்துப் பிள்ளை என்று சொல்லுவீர்கள்! (அவ்வளவு ஊட்டமான பிள்ளை) அவன் பிறப்பதற்கு முன்னாலேயே கண்களைத் திறந்து கொண்டு விட்டான். பிறந்தவுடன் வீட்டை மேலும் கீழுமாகப் பார்க்கத் தொடங்கிவிட்டான்".

மாக்கியவெல்லி 1494 -ஆம் ஆண்டு தன் இருபத்தைந்தாவது வயதில் பொதுவாழ்வில் ஈடுபட்டான். பொது வாழ்வில் புகுந்த நான்கே ஆண்டுகளில் அவன் குடியரசு அரசாங்கத்தின் செயலாளன் (Secretary) ஆகவும், இரண்டாவது ஆலோசனைத் தலைவன் ஆகவும் வந்து விட்டான். 1498-ஆம் ஆண்டில் ஏற்ற இந்தப் பதவியில் 1512ஆம் ஆண்டுவரை, பதினைந்து ஆண்டுகள் நிலைத்து இருந்திருக்கிறான். இதற்கிடையே அவன் இத்தாலியில் உள்ள சிறிய ராஜ சபைகளுக்கும் ஐரோப்பாவில் உள்ள பல ராஜ்யத் தலைநகரங்களுக்கும் பிளாரென்ஸ் ராஜ்யத்தின் தூதனாகப் போயிருக்கிறான். அவனுடைய திறமையால் பிளாரென்ஸ் குடியரசு அரசாங்கம் பல நன்மைகளைப் பெற்றிருக்கிறது. அவனும், இப்படிப் பல தேசங்களுக்கும் போய்வந்ததன் பலனாக அரசியலைப் பற்றியும், ஐரோப்பிய நாடுகளைப் பற்றியும் நன்றாக அறிந்து அவற்றைப் பற்றித் தனக்குள் ஒரு கருத்தை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. 1503-ஆம் ஆண்டு ரோமாக்னாகோமகன் சீசர் போர்ஜியாவிடம் தூது சென்று திரும்பியபோது. அவன் தன்னுடைய ஆர்வத்தை இராணுவத் துறையில் செலுத்த ஆரம்பித்தான். இராணுவத் துறையில் தன் அறிவையும் அனுபவத்தையும் வளர்த்துக் கொண்ட பிறகு, 1506ஆம் ஆண்டில் அவனுக்குப் புதிய பதவியொன்றும் வழங்கப்பட்டது.

பிளாரென்ஸ் ராஜ்யத்திற்காகவென்று ஒரு மக்கள் படையமைப்பை ஏற்படுத்துவதற்காக உண்டாக்கப்பட்ட ஒரு விசேஷ இலாகாவிற்கு அவன் செயலாளராக நியமிக்கப்பட்டான். அடுத்த சில ஆண்டுகளில் அவன் மிகுந்த செல்வாக்கையடைந்தான். வெற்றிப்படியின் உச்சிக்கே சென்றுவிட்டான் என்று கூடக் கூறலாம். ஆனால், அதே சமயம் பல எதிரிகளையும் உண்டாக்கிக் கொண்டான். 1512-ஆம் ஆண்டில் பழைய ராஜ வமிசத்தினரான மெடிசி குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கத்திற்கு நகர ராஜ்யத்தின் ஆட்சியுரிமை திரும்பவும் உட்பட்டபோது, மாக்கியவெல்லி பதவியினின்றும் நீக்கப்பட்டான்.

மெடிசி குடும்பத்தினருக்கு எதிராக, அவர்கள் அரசுரிமையைக் கவிழ்ப்பதற்காக ஒரு சதி நடந்தது. அந்தச் சதியில் கலந்து கொண்டவர்களில் மாக்கியவெல்லியின் பெயரையும் அவனுடைய எதிரிகள் சேர்த்து விட்டார்கள். குடியரசுவாதிகளின் சதிக்கு மாக்கியவெல்லி உடந்தைக்காரனாகவோ அல்லது அனுதாபியாகவோ இருக்கக் கூடுமென்று சந்தேகப்பட்டார்கள். அதற்காக அவனைப் பிடித்து 1513-ஆம் ஆண்டில் ஒரு விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் முடிவில் அவன் குற்றமற்றவனென்று விடுவிக்கப்பட்டான்.

மாக்கியவெல்லி தன் பதவியிலிருந்து விலக்கப்பட்டதும், பிளாரென்ஸிலிருந்து பனிரெண்டு மைல் தூரத்தில் இருந்த சான்காசியானோ என்று ஊருக்கருகில் இருந்த தன் பண்ணைக்குச் சென்று விட்டான். அதுவரையில் அரசாங்கத்திலிருந்து வருவாய் வந்தது. அவனுடைய வாழ்க்கை எவ்விதமான கஷ்டமுமின்றிக் கழிந்தது. ஆனால், பதவியைத் துறந்து பண்ணைக்குச் சென்ற பிறகோ அவனை வறுமை பிடுங்கித் தின்ன ஆரம்பித்து விட்டது. தாங்க முடியாத வறுமையில் அவனும் அவன் குடும்பத்தினரும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர்.

அவன் தன் வாழ்க்கை நிலையை விளக்கி ரோமாபுரியில் தூதராயிருந்த அவனுடைய நண்பர் பிரான்செஸ்கோ விட்டோரி என்பவருக்கு அடிக்கடி கடிதங்கள் எழுதியிருக்கிறான். அந்தக் கடிதங்களிலிருந்து அவனுடைய தனிமைக் காலத்து அன்றாட நிகழ்ச்சிகளையும், வறுமையின் படப்பிடிப்பையும் அவன் கருத்தில் தோன்றிய எண்ணங்களையும் நாம் காண முடிகிறது.

"சூரியன் தோன்றும் பொழுதே நான் எழுந்து விடுவேன், எனக்குச் சொந்தமான சிறு காட்டுக்குப் போவேன். அங்கேயுள்ள மரங்களை வெட்டும்படி ஏற்பாடு செய்திருக்கிறேன். அங்கு மரம் வெட்டியவர்களோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, நீரோடைப் பக்கமாகப் போவேன். நீரோடையை விட்டு, தோப்புப் பக்கமாகச் செல்வேன். என்னுடைய மேல் சட்டைக்கு அடியில் நான் வழக்கமாகக் கொண்டு செல்லக்கூடிய கவிதை நூலை எடுத்து வைத்துக் கொண்டு படிக்க ஆரம்பிப்பேன். பெரும்பாலும் அவை மகாகவிகள் தாந்தே, பெட்ரியார்ச் ஆகியோரின் நூல்களாகவோ அல்லது கவிடி புல்லஸ், ஓவிட் ஆகியவர்களின் நூல்களாகவோ இருக்கும். அவர்களுடைய ஆசைக்கனவுகளையும், அவர்களுடைய காதற்கதைகளையும் படித்து, அவற்றை என்னுடைய வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே நீரோடைப்பக்கமாக உலவிக் கொண்டிருப்பேன்”.

இது மாக்கியவெல்லி தன் நாட்டு வாழ்க்கையைத் தொடங்கிய ஆரம்பகாலத்து நிகழ்ச்சிகளிலே ஒன்று.

காலை நிகழ்ச்சி இது. மாலை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கலாம்.

"சாயங்காலம் வந்தவுடன் நான் வீட்டிற்குத் திரும்பிச் சென்று என் படிக்கும் அறைக்குள் நுழைவேன். அப்படி நுழையுமுன், நான் தினமும் பகலில் உடுத்திக் கொண்டிருக்கும் அழுக்கும் தூசியும் நிறைந்த ஆடைகளைக் களைந்து விட்டு, அரசாங்க உடைகளை அணிந்து கொண்டு, முன்னோர்களான அந்தப் பெரியோர்களின் ஆஸ்தானத்திற்குள்ளே {புத்தக சாலைக்குள்) நுழைவேன். அங்கே அவர்கள் என்னை அன்போடு வரவேற்பார்கள். அங்கே எனக்கே சொந்தமான உணவுகளை நான் உண்பேன்; எவற்றை உட்கொள்ளுவதற்காக நான் பிறந்திருக்கிறேனோ அவற்றை நான் உண்பேன். பிறகு நான் ஊக்கத்துடன் அவர்களோடு உரையாடுவேன். அவர்களுடைய செயல்களுக்கெல்லாம் காரணம் என்னவென்று கேட்பேன். அவர்கள் எனக்கு மரியாதை காட்டி விருப்பத்தோடு என் கேள்விகளுக்குப் பதிலளிப்பார்கள். அந்த நான்கு மணி நேரமும் நான் என் மனக்கவலைகளையெல்லாம் மறந்திருப்பேன், அந்த நேரத்தில் நான் என் வறுமையைக் கண்டு பயப்படமாட்டேன். சாவும் என்னைப் பயமுறுத்தாது. நான் அவர்களோடு முழுக்க முழுக்க ஒன்றி விடுவேன்.”

மாக்கியவெல்லி, பழைய காலத்து நூல்களைப் படிப்பதைத்தான் இப்படிக் கற்பனையாகத் தம் நண்பருக்கு எழுதியிருக்கிறான். இவையெல்லாம் அவன் வறுமையின் ஆரம்பகட்டம். வறுமையின் உச்சக்கட்டத்திலே அவன் தன் நண்பருக்கு எழுதியுள்ள கடிதம் மிகவும் உருக்கமானது. "என் தொண்டின் பெருமையை அறியக் கூடியவர் யாரும் இல்லையே!" என்று வருந்துகிறான். "நான் எதற்காவது பயன்படுவேன் என்று நினைக்கக் கூடியவர் இல்லையே!” என்று ஏங்குகிறான்.

"என் வேலையின் சிறப்பை நினைத்துப் பார்க்கக் கூடியவர்கள் யாருமில்லை. நான் எதற்காவது பயன்படக் கூடியவன் என்று நினைப்பவர்களும் இல்லை. இப்படிப்பட்ட பேன் கூட்டத்தினிடையேதான் நான் தொடர்ந்து இருந்து வர வேண்டியிருக்கிறது. ஆனால் இதே நிலையில் நான் நீடித்து இருக்க முடியாது. என் கைப்பொருளெல்லாம் பெரும்பாலும் செலவழிந்து போய்விட்டது. எல்லாம்வல்ல அந்த இறைவன் என்னிடம் கருணைகாட்டி ஏதாவது செய்யவில்லையானால் நான் என்றாவது ஒருநாள் வீட்டை விட்டுப் புறப்பட்டுவிட வேண்டித்தான் நேரிடும். என்னால் எதுவும் நல்லபிழைப்பாகப் பிழைக்க முடியவில்லையென்றால் எவனாவது காவல் வீரனுக்குக் கடிதம் வாசிப்பவனாகவோ அல்லது கணக்கு எழுதிக்கொடுத்தோ தான் காலத்தைக் கழிக்க வேண்டும். இல்லாவிட்டால், எங்காவது தொலையிலுள்ள இடத்திற்குச் சென்று பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டியதுதான். இங்குள்ளவர்கள் நான் செத்துப்போய் விட்டதாக நினைத்துக் கொள்ளட்டும். நான் செலவாளியாக இருப்பதனால் இங்குள்ளவர்களுக்குப் பெரும் பாரமாக இருக்கிறேன். என்னால் செலவழிக்காமலும் இருக்க முடியவில்லை.

“நீங்கள் எனக்காக ஏதாவது சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இவ்வளவையும் சொல்லவில்லை. என் மனத்தில் இருக்கும் பாரத்தை இறக்குவதற்காகவே சொல்லுகிறேன். மறுபடியும் நான் உங்களிடம் இந்த விஷயங்களைக் கூறமாட்டேன்”

இந்தக் கடிதத்திலிருந்து அவன் கடைசி நாட்களில் பட்ட மன வேதனையை நாம் அப்படியே தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்த வறுமைக் காலத்திலே தான் மாக்கியவெல்லி தன் கவிதைகளையும் இன்பியல் நாடகங்களையும் எழுதினான். மாக்கியவெல்லி எழுதிய கவிதைகள் அப்படியொன்றும் உயர்ந்தவை அல்ல. ஆனால், அவன் தான் ஒரு கவிஞன் என்று பெயர் எடுப்பதிலேதான் மிகவும் ஆசையுள்ளவனாக இருந்தான்.

பிரான்செஸ்கோ டீ சாஸ்டிஸ் என்ற இத்தாலிய இலக்கிய விமரிசகன். பத்தொன்பதாவது நூற்றாண்டிலே மிகப் பிரசித்தி பெற்று விளங்கியவன். அவன் மாக்கியவெல்லியைப் பற்றித் தான் எழுதியுள்ள கட்டுரையின் ஆரம்பத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறான். ஓர்லாண்டோ பியூரியோசோ என்ற கவிதை நூல் வெளிவந்த சமயத்தில், மாக்கியவெல்லி ரோமில்தான் இருந்தான்.

கவிஞர் அரியோஸ்டோ எழுதியுள்ள அந்தக் கவிதை நூலின் கடைசிக் காண்டத்தில் இத்தாலியக் கவிஞர்களின் பெரிய பட்டியல் ஒன்றைச் சேர்த்திருக்கிறார். அதில் மாக்கியவெல்லியின் பெயரைச் சேர்க்காமல் விட்டுவிட்டது பற்றி மாக்கியவெல்லி குறை கூறினான். அந்தக் காலத்தில் ஏன் எல்லாக் காலத்திற்குமே. மிக ஆற்றல் வாய்ந்த அரசியல் சிந்தனையாளனான மாக்கியவெல்லி தன் அரசியல் நூல்களைக் காட்டிலும் கவிதை நூல்களைக் கொண்டே பெருமையடைய வேண்டுமென்று எண்ணியிருந்தான்.

மாக்கியவெல்லி ரோமிலிருந்து பிளாரென்சுக்கு வந்த பிறகு இதைக் குறித்துத் தன் நண்பரும் கவிஞருமான லோடோ விக்சோ அலாமானிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறான். அந்தக் கடிதம் கீழ்வருமாறு:

கவிஞர் லோடோவிக்சோ அலாமானி அவர்களுக்கு,

பிளாரென்ஸ், டிசம்பர் 17, 1517.

என் மதிப்பிற்குரிய லோடோவிக்சோ,

"கடந்த சில நாட்களாக நான் கவிஞர் அரியோஸ்டோவின் ஓர்லாண்டோ பியூரியோசோ என்ற நூலைப் படித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் மொத்தத்தில் அது ஓர் அழகிய கவிதையே. ஒரு சில இடங்களில் மட்டும் அது முற்றும் பாராட்டக் கூடியதாயில்லை. நீங்கள் அவரை அங்கு ரோமாபுரியில் சந்தித்தால், என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள். என்னுடைய ஒரே ஒரு வருத்தம், அவர் தம்முடைய கவிதையில் எல்லாக் கவிஞர்களையும் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு என்னை மட்டும் ஒன்றுமில்லாதவன் போல் விட்டு விட்டாரே என்பதுதான், என்பதையும் தெரிவியுங்கள். ஓர்லாண்டோ கவிதை நூலில் அவர் எனக்குச் செய்த இந்தக் காரியத்தை என்னுடைய நூலில் அவருக்குச் செய்யமாட்டேன். இந்த விஷயத்தில் நான் கவனமாக இருப்பேன்”.

மாக்கியவெல்லி, கவிஞர் அரியோஸ்டோ தன்னைச் சிறப்பிக்காததற்காக வருத்தப்படுகிறானே தவிர, அவரைச் சிறப்பாகவே மதித்துப் பேசுகிறான் என்பது அவனுடைய இந்தக் கடிதத்திலிருந்து தெரிகிறது.

அவனுடைய இன்பியல் நாடகங்களிலே மிகச் சிறந்தது 'மன்ட்ர கோலா' என்ற நூல்.

ஆரம்பத்தில் கவிதைகளும் நாடகங்களும் எழுதி வந்த மாக்கியவெல்லி பிறகு நூல் எழுதுவதில் மும்முரமாக ஈடுபட்டான். அவன் வரும்படியில்லாமல் வறுமையில் உழன்று கொண்டிருந்த காலத்தில் மூன்று பெரிய நூல்களை எழுதி முடித்தான். அவை லீவியின் புத்தகங்களைப் பற்றி ஆராய்ச்சி, அரசன், போர்க்கலை என்பனவாகும்.

'அரசன்' என்னும் நூலை எழுதிய போது அதை அப்போது பிளாரென்ஸ் நகர ராஜ்யத்தின் அரசராயிருந்த மெடிசி குடும்பத்தைச் சேர்ந்த லாரென்சோவுக்குக் காணிக்கை செலுத்துவதற்காக ஒரு முன்னுரையும் . கூட எழுதியிருக்கிறான். அதைக் காணிக்கையாகச் செலுத்தினானா இல்லையா என்பது சரியாகத் தெரியவில்லை. பெரும்பாலும் காணிக்கை செலுத்தியிருக்க வேண்டும் என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் மெடிசி அரசாங்கத்தினர் இவனுடைய வறுமையைக் கண்டு மனமிரங்கி ஏதாவது வேலை கொடுத்து ஆதரிக்க வேண்டும் என்பதற்காக, வருடாந்தர சம்பளமாக ஒரு சொற்பதொகையைப் பேசி பிளாரென்ஸ் நகர சரித்திரத்தை எழுதும்படி இவனைப் பணித்தார்கள். ராஜ்ய நிர்வாகத்தைச் சமாளிப்பது கஷ்டமாயிருந்த சமயத்தில், எப்படிப்பட்ட கொள்கையைப் பின்பற்ற வேண்டுமென்று இவனுடைய ஆலோசனையையும் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

குடியரசு முறையில் அரசாங்கத்தை மாற்றியமைக்க வேண்டுமென்று அவன் யோசனை கூறினான். அதற்காக ஓர் அரசியலமைப்புத் திட்டத்தையும் வகுத்தான். ஆனால், அவனுடைய யோசனை ஏற்றுக் கொள்ளப்படவுமில்லை; அவனுடைய திட்டம் அமுலுக்கு வரவுமில்லை.

1526-ஆம் ஆண்டில் பிளாரென்ஸ் நகரின் கோட்டை நிர்மாணத்தை மேற்பார்க்கும் வேலை அவனிடம் ஒப்படைக்கப்பட்டது.

1527-ஆம் ஆண்டில் குடியரசு வாதிகளின் கை மேலோங்கியது. முடியரசு ஆதிக்கத்திலிருந்து பிளாரென்ஸ் விடுதலையுற்றது. குடியரசு வாதிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் மாக்கியவெல்லியைத் திரும்பவும் அரசாங்கச் செயலாளர் பதவியில் நியமிக்க வேண்டுமென்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்தத் தீர்மானம் ஆதரிப்பாரில்லாமல் தோற்றுப் போய்விட்டது.

இந்நிகழ்ச்சி நடந்த சில வாரங்களுக்குப் பிறகு 1527ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் தேதியன்று, பிற்காலத்தில் உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளனான நிக்கோலோ மாக்கியவெல்லி வயிற்று வலியின் காரணமாகத் தன் வாழ்வை நீத்து விட்டான். அவனுடைய குடும்பத்துக்கு அவன் விட்டுச்சென்றது வறுமை ஒன்றுதான். அவன் சாவைப் பற்றி அவன் மகன் தன் நண்பனான பிரான்செஸ்கோ நெல்லோ என்பவனுக்கு சுருக்கமாக ஒரு கடிதம் எழுதியிருக்கிறான்.

பீசா, ஜூன் 22, 1527

என் அன்பு மிகுந்த பிரான்செஸ்கோ,

என் தந்தை நிக்கோலோ இந்த 22-ம் தேதியன்று இறந்து போனார் என்ற செய்தியை உனக்குச் சொல்ல வேண்டியிருப்பதை முன்னிட்டு என்னால் அழுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. 20ம் தேதியன்று - அவர் குடித்த ஒரு மருந்து உண்டாக்கிவிட்ட வயிற்று வலி அவர் உயிரைக் குடித்து விட்டது. கடைசிவரை அவர் கூடவே இருந்த சகோதரர் மாத்யூவை அவர் தம் பாவமன்னிப்புப் பிரார்த்தனையைக் கேட்க அனுமதித்தார். எங்கள் தந்தை எங்களை மிகப் பயங்கரமான வறுமையில் விட்டுவிட்டுப் போய்விட்டார். இது உனக்குத் தெரிந்ததே. நீ இந்த வழியாகத் திரும்பி வரும்பொழுது நான் உன்னிடம் சொல்லவேண்டியது ஏராளமாயிருக்கிறது. இப்பொழுது. நான் மிக அவசரமான கட்டத்தில் இருப்பதால் மேற்கொண்டு எதுவும் நான் சொல்லப் போவதில்லை. என் நல்வாழ்த்துக்கள்

உன் உறவினன்;

பியரோ மாக்கியவெல்லி.

நிக்கோலோ மாக்கியவெல்லிக்குப் பிறகு அவனுடைய குடும்பத்தில் அல்லது பரம்பரையில் யாரும் அவனைப் போல் சிறந்து விளங்கவில்லை.

உலகத்துப் பேரறிவாளிகள் பலர் தாங்கள் இறந்தபோது, தங்கள் ஆராய்ச்சியின் பயனாக விளைந்த கருத்துரைகளை உலகத்துக்குக் கொடுத்து விட்டுப் போனார்கள். ஆனால் தங்கள் பிள்ளைகளுக்குத் தங்கள் திறனறிவையும் கொடுத்து விட்டுப் போனதில்லை; அவர்கள் வாழ்வதற்காகப் பொருளும் வைத்து விட்டுப் போனதில்லை.

எத்தனையோ திறனறிவாளர்களின் பிள்ளைகளின் கதி இப்படித்தான் முடிந்திருக்கிறது. இதற்கு மாக்கியவெல்லியின் மகன் விதிவிலக்கல்ல!

* * *

3. மாக்கியவெல்லியின் நூல்கள்

இத்தாலியின் சரித்திரக் குறிப்புக்கள் (1504)

* * *

இத்தாலி தேசத்தின் சரித்திர நிகழ்ச்சிகளைப் பற்றிய குறிப்புக்களை காலக்கிரமமாக வரிசைப்படுத்தி இந்நூலில் மாக்கியவெல்லி எழுதியிருக்கிறான்.

டீட்டஸ் லீவியசின் முதல் பத்துப் புத்தகங்களைப் பற்றிய ஆராய்ச்சி . (1512-1522) மாக்கியவெல்லி எழுதிய மிகப் பெரிய நூல் இதுதான். 1512-ஆம் ஆண்டில் இந்நூலை எழுத ஆரம்பித்து 1522-ஆம் ஆண்டில் முடித்தான். ஆம், பத்து ஆண்டுகளில் பத்துப் புத்தகங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறான்.

இவன் ஆராய்ச்சிக்குக் காரணமாயிருந்த நூல் ஒரு சரித்திர நூல். இந்தச் சரித்திர நூலை எழுதியவன் லீவி என்ற ஆசிரியன். இந்த லீவி ரோமானிய சரித்திரத்திலே மிகப் புகழ் பெற்று விளங்குகிறான். படுவா நகரில் கி.மு. 59-ஆம் ஆண்டில் பிறந்து கி.பி. 17ஆம் ஆண்டில் இயற்கையடைந்த லீவி, அதற்கு முந்திய காலத்து ரோமானிய சரித்திரத்தை நூற்றி நாற்பத்திரண்டு புத்தகங்களாகத் தொகுத்து எழுதியிருக்கிறான். இந்தப் புத்தகங்களில் ரோமானியரின் கீர்த்தியையும் அற முறையையும் விளக்கக்கூடிய தேசீய சரித்திரம் அடங்கியிருக்கிறது. பழங்காலத்திலிருந்து டீட்டஸ் லீவியசின் இந்தச் சரித்திர நூல் ரோமானிய கலாச்சாரத்தின் பாதுகாப்புப் பத்திரமாகவும், வரலாற்று நூல்களுக்கு வழி காட்டும் முதல் புத்தகமாகவும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

லீவி எழுதிய நூற்றி நாற்பத்தி இரண்டு புத்தகங்களில் முதல் பத்துப் புத்தகங்களைப் பற்றி மட்டுமே மாக்கியவெல்லி ஆராய்ந்திருக்கிறான். மாக்கியவெல்லி ரோமானியரின் ஆட்சிமுறையைப் பல இடங்களில் போற்றுகிறான். தன் காலத்தவர்கள், சரித்திரம் படிக்காத காரணத்தினால்தான், கீர்த்தி வாய்ந்த முன்னோடிகளான அந்தக் காலத்துப் பேரரசர்களின் அல்லது பெரியோர்களின் பாதையைவிட்டு விலகி நடக்கிறார்கள் என்றும், அதனால்தான் பல கேடுகள் ஏற்பட்டனவென்றும் சுட்டிக் காட்டுகின்றான். முற்காலத்துப் பெரிய மனிதர்களின் வழிகளைப் பின்பற்றி நடக்க வேண்டியதன் அவசியத்தைத் தான் மாக்கியவெல்லி தன்னுடைய இந்த ஆராய்ச்சி நூலில் பெரும்பாலான இடங்களில் சுட்டிக்காட்டுகிறான்.

அரசன் :

மாக்கியவெல்லி, எழுதிய மிகப் பெரிய நூல் டீட்டஸ் லீவியசின் முதல் பத்துப் புத்தகங்களைப் பற்றிய ஆராய்ச்சி. ஆனால், மிகப் புகழ்வாய்ந்த நூல் "அரசன்” தான். இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமானால் அவனுக்குக் கீர்த்தியும் அபகீர்த்தியும் தேடித்தந்த நூல் அரசன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆராய்ச்சியில், அவன் பொதுப்படையாக அரசியல் விஷயங்களை ஆராய்கிறான். ஆனால் அரசன் நூலில் குறிப்பாக முடியரசுகளைப் பற்றி ஆராய்கிறான். அரசன் நூலில் அவன் தன் கருத்துக்களைத் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்கிறான். அரசியல் விஞ்ஞானம் என்று சொல்லக்கூடிய முறையில் அரசியலைப் பற்றிப் புதுமையான சிந்தனைகளை முதன் முதலில் அவன் இந்த நூலில் தான் வெளிப்படுத்தியிருக்கிறான். என்று சொல்லவேண்டும். அவனுக்கு முன் இப்படிச் சிரித்தவர்கள் கிடையாது. எப்பாடுபட்டேனும் அரசியலில் வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தைத் தான் அவன் தன் அரசன் நூலில் விதைத்திருக்கிறான்.

ஓர் அரசு நிலை பெறுவதற்காகக் கையாளக் கூடிய வழிகள் எப்படிப்பட்டவையாயினும் அவை வரவேற்கக் கூடியனவே என்று இந்த நூலில் அவன் கூறுகிறான். அரசியல் வெற்றிக்காக, சூழ்ச்சியும், நேர்மையற்ற முறைகளையும் கொடுமைகளையும் - ஏன் கொலைகளையும் கூடச் செய்யலாம் என்று (நம் மகாபாரதத்து அரசியல் சகுனி மாமாவைப் போல) சொல்வதை நாகரிக மனப்பான்மையுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்க வேண்டியிருக்கிறது. ஆனாலும் அவன் காட்டுகின்ற சூழ் நிலைகளோடு பொருத்திப் பார்க்கின்றபோது, வீழ்ச்சியடைய விரும்பாதவன் அவற்றைக் கையாளுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்படுகிறபோது அவை அந்தச் சூழ்நிலையைப் பொறுத்தவரை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவையாகவே இருக்கின்றன.

லீவியின் புத்தகங்களைப் பற்றிய ஆராய்ச்சியை மாக்கியவெல்லி மக்களுக்காகச் செய்தான் என்றால் அரசன் என்ற இந்த நூலை அரசர்களுக்காகச் செய்தான் என்று சொல்லலாம். அரசன் என்ற தலைப்பே இது முடியரசையாதரித்து எழுதப்பட்ட நூல் என்பதைக் காட்டுகிறது. இந்த நூலையும் மாக்கியவெல்லி ஓர் அரசனுக்கே காணிக்கையாக்கியிருக்கிறான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாக்கியவெல்லி, நிலைபெற்ற அரசு ஏற்பட்டு மக்கள் மகிழ்வுற்று வாழவேண்டும் என்பதற்காகத் தான் இந்நூலை எழுதினான். ஆனால் குடிமக்கள், அரசாங்கத்திற்கு வழிகாட்ட வேண்டிய நூலாக இருப்பதற்குப் பதிலாக அது சர்வாதிகாரிகளுக்குத் துணை போடும் நூலாகக் கருதப்பட்டு விட்டது. இது எப்படியிருக்கிறதென்றால், மருத்துவர்கள் மக்களின் நோயைப் போக்கக் கண்டுபிடிக்கிற மருந்து சிலருக்கு விஷமாகப் பயன்படுவது போலிருக்கிறது. மக்கள் உழைப்பைக் குறைப்பதற்காக விஞ்ஞானிகள் கண்டு பிடிக்கிற இயந்திர சாதனங்கள் ஒரு சிலரின் பணப் பையை வீங்க வைப்பதற்குப் பயன்படுவது போல், மாக்கியவெல்லியின் நூல் சர்வாதிகாரிகள் பலருக்குப் பயன்பட்டிருக்கிறது.

பாக்கியவெல்லியின் அரசன் என்ற இந்த நூலைப் படிக்கிறபோது, சரித்திர நூலைப் படிப்பதுபோல் சங்கடமோ, ஆராய்ச்சி நூலைப் படிப்பது போல் கஷ்டமோ ஏற்படவில்லை. துப்பறியும் கதையைப் படிப்பதுபோல் இருக்கிறது. விஷயங்களை அவ்வளவு கவர்ச்சிகரமாக எழுதியிருக்கிறான். விவாதங்கள் அவ்வளவு வேகமாக நடை பெறுகின்றன! 1559-ஆம் ஆண்டில் ரோமாபுரியில் தடை செய்யப்பட்ட புத்தகங்களின் பட்டியலில் அரசன் நூலும் சேர்க்கப்பட்டது.

காஸ்ட்ரூசியோட வாழ்க்கை (1520):

காஸ்ட்ரூசியோ என்பவரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி மாக்கியவெல்லி எழுதிய நூலாகும்.

போர்க்கலை:

போர் செய்யும் முறைகளைப் பற்றி மாக்கியவெல்லி ஏழு புத்தகங்கள் எழுதியிருக்கிறான், போருக்குச் செல்லுகின்ற அரசர்களும், அரசாங்க அதிகாரிகளும் கையாளவேண்டிய தந்திரங்களையும், சாமர்த்தியங்களையும், கொள்கைகளையும் விளக்கிக் கூறுகிறான்.

பிளாரென்ஸ் சரித்திரம் (1520) :

1518-ஆம் ஆண்டில் ஆட்சியிலிருந்த மெடிசி பரம்பரையைச் சேர்ந்தவர்கள். மாக்கியவெல்லியின் வறுமை நிலை கண்டு, இரக்கப்பட்டு அவனை அழைத்து பிளாரென்ஸ் சரித்திரத்தை எழுதும்படி நியமித்தனர். இதற்காக அவனுக்கு வருடாந்தரச் சம்பளமாக ஒரு சிறு தொகை கொடுக்கப்பட்டது. தர்க்கமுறையாகத் தொடர்ந்து ஏற்படும் மக்கள் வாழ்க்கையின் மாறுபாடுகளைப் பற்றிய இதுபோன்ற சரித்திரக் குறிப்பு எழுதும் முறை வேறு எந்த மொழியிலும் செய்யப்படாத முதல் முயற்சியாகும். ஆனால் மாக்கியவெல்லி இந்நூலை முற்றுப்பெற முடிப்பதற்கு முன்னால் அவனுடைய உயிர் வாழ்க்கை முடிந்துவிட்டது.

மன்ட்ர கோலா (1524):

முதன் முதலில் மாக்கியவெல்லி கவிதைகளும் இன்பியல் நாடகங்களும் எழுதினான். அவன் இயற்றிய செய்யுள்கள் மோசமானவை! ஆனால். இதயத்தைத் தொடக் கூடியவை. அவன் தனக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த அரசன் நூலைக் காட்டிலும் தன் செய்யுள் நூல்களையும் இன்பியல் நாடகங்களையுமே பெரிதும் விரும்பினான். அவையே தன் அரிய படைப்புக்கள் என்று கருதினான். மன்ட்ரகோலா என்ற இந்த இன்பியல் நாடகம் தனக்கேயுரிய தனி நடையுடையது. எவ்வகையிலும் இதைச் சிறந்த நூல் என்றே கூற வேண்டும்.

 பிற நூல்கள் :

இவை தவிர மாக்கியவெல்லி கிளீசியா என்ற ஓர் இன்பியல் நாடகத்தையும். பெல்பாகர் என்ற ஒரு நாவலையும், தலைப்பிடாமல் கவிதை நடையிலேயே இன்பியல் நாடகத்தையும் எழுதியிருக்கிறான். தனிச்செய்யுள்கள் பல இயற்றியிருக்கிறான். தான் ஒரு கவிஞன் என்று சொல்லிக் கொள்வதிலேயே அவன் பெருமை கொண்டான். ஆனால் உலகம் அவனைக் கவிஞன் என்ற பெயரில் பெருமைப்படுத்தவில்லை. ஒரு சிறந்த சிந்தனையாளன் என்ற முறையில்தான் போற்றிப் பெருமை செய்கிறது.

* * *

4. மாக்கியவெல்லியைக்

கையாண்டவர்கள்

* * *

மாக்கியவெல்லியின் ஆராய்ச்சி நூலும், முக்கியமாக அரசன் நூலும் பல தேசத்திலும் உள்ள அரசியல்வாதிகளுக்கும் பலவகைகளில் பயன்பட்டிருக்கின்றன. பல பெரிய புள்ளிகளெல்லாம் அவனுடைய நூலைத் தங்கள் காரியங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டில் பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு மூலக்கருத்தைக் கொடுக்கும் கருவூலமாக மாக்கியவெல்லியின் சிந்தனையில் விளைந்த இந்த அரசியல் நூல்கள் பயன்பட்டிருக்கின்றன.

இத்தாலி தேசத்துப் பேஸிஸ்ட் ஜடாமுனியாகவும் சர்வாதிகாரியாகவும் விளங்கிய முசோலினி கல்லூரி மாணவராயிருக்கும்போது. டாக்டர் பட்டம் பெறுவதற்காகத் தான் எழுத வேண்டிய பொருளாராய்ச்சிக் கட்டுரைக்கு (Thesis) மாக்கியவெல்லியின் அரசன் நூலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்.

உலக மகாயுத்தம் தொடுத்த ஜெர்மனி தேசத்து ஆதிக்க வெறியனான ஹிட்லரின் படுக்கையறையில் அவன் படுத்துக்கொண்டே படிப்பதற்காகப் பயன்படுத்திய நூல்களில் மாக்கியவெல்லியின் அரசன் நூல் முக்கியமானது.

மாகிஸ் வேனர் என்ற பேராசிரியர் இந்த இரண்டு நூல்களுக்கும் தாம் எழுதியுள்ள அருமையான முன்னுரையில், லெனினும், ஸ்டாலினும் கூட மாக்கியவெல்லியைத் தஞ்சமடைந்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஜெர்மானிய சரித்திரப் பேராசிரியர்களான ராங்கே, மெய்னிக்கே ஆகியோரும், இங்கிலாந்தின் வரலாற்றுத் துறை வல்லுனரான ஆக்டன் பிரபு அவர்களும் மாக்கியவெல்லி தான் புதிய அரசியல் விஞ்ஞானத்திற்கு அடிகோலிய முதல்வன் என்று ஒருமித்துப் பாராட்டுகிறார்கள்.

மகாகவி ஷேக்ஸ்பியர் எழுதியுள்ள "வின்ட்சரின் உல்லாச மனைவிகள்" (Merry wives of Windsor) என்ற நாடகத்தில் ஒரு பாத்திரம் “நான் சூது மனம் படைத்தவனா? நான் ஒரு மாக்கியவெல்லியா?” என்று கேட்பதாக ஒரு வரி வருகிறது. ஷேக்ஸ்பியர் இந்த இடத்தில் மாக்கியவெல்லியைச் சூது மனம் படைத்தவனுக்கு உவமையாகக் கூறுகிறார். இதிலிருந்து அவர் காலத்தில் மாக்கியவெல்லியைப் பற்றித் தவறான கருத்து பிரசாரம் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது.

இத்தாலியில் முசோலினியின் நேர் எதிரியாக விளங்கியவர் கவுண்ட் கார்லோஸ்போர்கா (Count Carlo Sforza) அவர் மாக்கியவெல்லியின் நூல்களைச் சுருக்கி "மாக்கியவெல்லியின் உயிருள்ள சிந்தனைகள்" (The Living Thoughts of Mackiavelli) என்ற பெயரில் ஒரு சிறு நூலை வெளியிட்டுள்ளார். இவ்வாறு, எதிரெதிர்ப் பாசறையில் உள்ளவர்களாலும் மாக்கியவெல்லி போற்றப்படுகிறான்.

இத்தாலியின் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட மாஜினி தன் கொள்கையைப் பொறுத்தமட்டில் மாக்கியவெல்லியின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டானே தவிர, மற்ற கருத்துக்களைத் தீவிரமாக எதிர்த்தான்.

கார்ல்மார்க்ஸ் தம்முடைய மூலாதாரக் கருத்துக்களை மாக்கியவெல்லியிடமிருந்தே பெற்றுக் கொண்டார்.

மார்லோ, ஹாப்ஸ், ஸ்பினோகா போன்ற மேதைகளிடையே மாக்கியவெல்லியின் கருத்துக்கள் செல்வாக்குடன் நடமாடியிருக்கின்றன.

“இத்தாலியிலும், ஜெர்மனியிலும் பாசிசக் கொள்கை தோன்றியதிலிருந்து அங்கிருந்த பல எழுத்தாளர்கள், மாக்கியவெல்லி வல்லரசுக் கட்சியைச் சேர்ந்தவன் என்ற கூறும்படியாக அவனுடைய நூல்களுக்குப் பொருள் திரித்துக் கூறி வந்தார்கள். ஆட்சியிலிருக்கும் கூட்டத்தாரைத் திருப்திப்படுத்தி அரசாங்கத்திலிருந்து சில சலுகைகளையும் பதவிகளையும் பெறுவதற்காக அவர்கள் கையாண்ட முறையிது. இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் பிரான்சிலும் இருக்கிறார்கள். இவர்கள் இத்தாலியிலும், ஜெர்மனியிலும் இருக்கும் தங்கள் கூட்டத்தாரைக் காட்டிலும் திறமை மிகுந்தவர்கள். ஆனால் ஈனத்தனத்தில் அவர்களைக் காட்டிலும் குறைந்தவர்களல்ல. அதிலும் உயர்ந்தவர்களே! இவர்களைக் கேட்டால் தங்கள் எழுத்துக்களைச் சோரம் போக விடுவதைத் தவிரத் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற வழியில்லை என்று கூறுகிறார்கள் என்று கவுண்ட் சார்லோஸ்போர்கா தம்முடைய "மாக்கியவெல்லியின் உயிருள்ள சிந்தனைகள்” என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

மாக்கியவெல்லியின் 400-வது பிறந்தநாளை 1869-ஆம் ஆண்டில் இத்தாலியர்கள் ஒரு தேசியத் திருவிழாவாகக் கொண்டாடினார்கள். அவனுடைய சொந்த ஊரான பிளாரென்ஸ் நகரத்தில் உள்ள அவனுடைய கல்லறையின் மேல் உள்ள தகட்டில் இந்த வாசகங்கள், பொறிக்கப்பட்டுள்ளன.

டாண்டோ ரோமினி நுல்லும் பார் எலோஜியம்” இவ்வளவு பெரிய பெயருக்கு எந்தப் புகழும் ஈடாகாது.

* * *

இரண்டாம் பகுதி

நூல் சுருக்கம் : 1

அரசன் (The Prince)

* * *

(இந்நூலை பியேரோடி மெடிசியின் மகனான மாமன்னன் லாரென்சோவுக்கு நிக்கோலோ மாக்கியவெல்லி காணிக்கையாக்கியுள்ளான். அவன் லாரென்சோவை நோக்கி இப்படிக் கூறியுள்ளான்.)

ஓர் அரசனுடைய ஆதரவைப் பெற விரும்புகிறவர்கள், அவனுக்குப் பெரும் மதிப்பு வாய்ந்த பொருள்களையோ அல்லது அவனுக்குப் பெரிதும் இன்பம் கொடுக்கிற பொருள்களையோ வெகுமதியாகக் கொடுப்பது வழக்கமாயிருக்கிறது. என்னுடைய ராஜபக்தியின் சிறு அடையாளமாக ஏதாவது தங்களுக்கு வெகுமதி கொடுக்க வேண்டுமென்று நினைக்கும் போது, தற்கால நிகழ்ச்சிகளின் அனுபவத்திலிருந்தும், முற்கால நிகழ்ச்சிகளைப் பற்றிய ஆராய்ச்சியிலிருந்தும் பெரிய மனிதர்களின் செயல்களைப் பற்றிய என்னுடைய ஞானத்தைப் போல் அருமையான மேன்மையான வேறு எந்தப் பொருளும் என்னிடத்தில் கிடையாது.

நான் நீண்ட நாட்களாகப் பெரிய மனிதர்களின் செயல்களை ஆராய்ச்சி செய்து அவற்றின் சாரத்தை இறக்கித் தங்களுக்குக் காணிக்கையாக்குகிறேன். இது தாங்கள் ஏற்றுக்கொள்வதற்குரிய மதிப்புடைய பொருள் அல்ல என்றாலும், எத்தனையோ ஆண்டுகளாக எத்தனையோ இன்னல்களுக்கிடையில் நானடைந்த அனுபவத்தைச் சுருக்கித் தருகிற நூல் என்ற முறையில் மனிதாபிமானத்தோடும் ஆதரவோடும் இதை ஏற்றுக் கொள்வீர்கள் என்ற உறுதி எனக்குண்டு. அலங்காரமான வார்த்தைகளைக் கொண்டு நான் இதை எழுதவில்லை.

என்னைப் போன்ற எளிய மனிதன் அரசர்களைப் பற்றியும் அரசாங்கங்களைப் பற்றியும் பேசவும் வழி காட்டவும் யோக்கியதை உண்டா என்று எண்ணிவிடக் கூடாது. மலையின் மேல் இருப்பவன் தான் சமவெளி முழுவதையும் அளக்க முடியும். மலையடியில் நிற்பவன்தான் அதன் அளவையும், உயர்வையும் பெருமையையும் உணரமுடியும். அதுபோல் எளியவரால்தான் அரசர்களின் தன்மையைச் சரியாக எடைபோட முடியும்.

ஆகவே, நான் எவ்விதமான உணர்ச்சியோடு இந்த வெகுமதியை அளிக்கிறேனோ அதே விதமான உணர்ச்சியோடு மேன்மை தங்கிய தாங்கள் இதை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இதை நீங்கள் படித்துப் பார்த்தால் உங்கள் செல்வமும் செல்வாக்கும் மேலோங்க வேண்டுமென்ற என் பெரு விருப்பத்தைக் காண்பீர்கள்.

மேன்மை தங்கிய தாங்கள் இருக்கும் அந்த மலையுச்சியில் இருந்து இந்த எளிய இடத்தை நோக்கினால், கொடிய விதியின் காரணமாக எத்தனை பெரிய நேர்மையற்ற துன்பங்கள் என்னைத் துன்புறுத்தியிருக்கின்றன என்பதைக் கண்டுகொள்வீர்கள்.

அரசாங்கத்தின் வகைகள்

மனித இனத்தைக் கட்டியாண்டு வந்த அல்லது ஆண்டு வருகிற எல்லா இராஜ்யங்களும் அரசுகளும் குடியரசுகளாகவோ அல்லது முடியரசுகளாகவோ இருக்கின்றன. முடியாட்சிகள், நெடுங்காலமாக ஒரே குடும்பத்தினரின் வழி வழி வந்த அரசர்களையுடைய பரம்பரையுரிமையாகவோ, அல்லது அண்மைக் காலத்தில் வேரூன்றியவையாகவோ இருக்கின்றன. புதிதாக ஏற்படுத்தப்பட்ட அந்த முடியாட்சிகள் முற்றிலும் புதியனவாகவோ அல்லது, முந்திய பரம்பரைக்கு அடுத்த கிளைப் பரம்பரையைச் சேர்ந்தனவாகவோ உள்ளன. இப்படிப் புதிதாக ஏற்படுத்தப்பட்ட முடியாட்சிகள் ஏற்கெனவே ஓர் அரசனால் ஆளப்பட்டவையாகவோ, சுதந்திர அரசுகளாகவோ இருந்து, அரசனால் தானே நேரடியாகவோ, மற்றவர்களைக் கொண்டோ படையெடுத்துத் தன்னாட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாகவோ, அதிர்ஷ்டவசமாகவோ அல்லது அவனுடைய விசேஷத் திறமையின் காரணமாகவோ அவனடியில் வந்து வீழ்ந்ததாகவோ இருக்கும்.

பரம்பரை முடியாட்சி :

குடியரசுகளைப் பற்றி ஏற்கெனவே வேறொரு புத்தகத்தில் விரிவாக ஆராய்ந்து விட்டபடியால் இப்பொழுது அவற்றைப் பற்றிக் கூறப் போவதில்லை. இப்பொழுது முடியாட்சிகளைப் பற்றியும் அதன் வெவ்வேறு வகைகளைப் பற்றியும் அவை எவ்வாறு ஆளப்படலாம், நடத்தப்படலாம், என்பது பற்றியும் மட்டுமே ஆராயப் போகிறேன். புதிதாக ஏற்படுத்தப்பட்ட முடியாட்சிகளைக் காட்டிலும் ஒரே ராஜ குடும்பத்தினரால் பரம்பரையாக ஓர் ராஜ்யத்தை ஆண்டு வருவதில் உள்ள கஷ்டம் மிகவும் குறைவுதான். புழைய வழக்கங்களை மீறாமல் இருப்பதும், முன் கூட்டியே அறிய முடியாத சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி நடந்து கொள்வதும், ஓர் அரசன் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளப் போதுமான காரியங்களாகும். ஒரு வேளை தவிர்க்கப்பட வேண்டிய மிகுதியான நெருக்கடி ஒன்றினால் அவன் தன் நிலையிலிருந்து தாழ்த்தப்பட்டாலும், புதிதாக அவன் இடத்தில் இருக்கக் கூடியவனுடைய மிகச் சிறிய தவறுதலைக் கூடப் பயன்படுத்திக்கொண்டு அவன் திரும்பவும் தன் நிலைக்கு வந்து விடலாம்.

புதிய முடியாட்சிகள் !

புதிய முடியாட்சியில் தான் உண்மையான சங்கடங்கள் ஏற்படுகின்றன. முதலாவதாக அது முற்றிலும் புதிய ஆட்சியாக இல்லாமல் ஒன்றாகச் சேர்ந்து கலந்திருக்கிற பல ராஜ்யங்களில் ஒன்றாக இருந்தால் எல்லாப் புதிய அரசுகளிலும் ஏற்படக் கூடிய இயற்கையான கஷ்டங்களில் இருந்து அதனுடைய குழப்பங்கள் உண்டாகின்றன. ஏனெனில் மக்கள் தாங்கள் மேலும் நன்றாக வாழமுடியும் என்ற நம்பிக்கையில் தங்கள் எஜமானர்களை தாங்களே விரும்பி மாற்றிக் கொள்கிறார்கள். இந்த நம்பிக்கையில் தான் மக்கள் தங்கள் அரசர்களை எதிர்த்துப் படை திரட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்து ஏற்கனவே இருந்ததைக் காட்டிலும் மோசமான ஆட்சியைப் பெறுகிறார்கள்.

இம்மாதிரியான அரசை ஏற்றுக்கொள்ளுகின்ற அரசனுக்கு இரண்டு வகையிலும் கெடுதல் ஏற்படுகிறது. அந்த ராஜ்யத்தை அடைவதில் யாராரைப் புண்படுத்தினானோ அவர்களையெல்லாம் பகைவர்களாக்கிக் கொள்கிறான். அவன் அதை அடைவதற்கு உதவி புரிந்தவர்களையும் திருப்திப்படுத்த முடியாமல் அவர்களுடைய நட்பை இழக்கிறான். அவர்களுடைய தயவு வேண்டியிருப்பதால் அவர்களிடம் கடுமையாகவும் நடந்து கொள்ளவும் முடியாது. தன்னை மனமுவந்து வரவேற்ற அவர்களாலேயே வெறுக்கப்படுபவனாகவும் ஆகி விடுகிறான்.

கலகப் பிரதேசங்களைத் திரும்பவும் தன் ஆட்சிக்கு உட்படுத்திய அரசன் மீண்டும் அவற்றை எளிதாக இழந்து விடுவதில்லை என்பது உண்மைதான். ஏனெனில் கலகத்திற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்தும், சந்தேகத்திற்குரியவர்களை வெளிப்படுத்தியும், குற்றவாளிகளைத் தண்டித்தும், தன் நிலையைப் பாதுகாத்துக் கொள்ளவும், தனக்குப் பலவீனமாக உள்ள இடங்களை வலுப்படுத்திக் கொள்ளவும் அந்த அரசனுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

ஏற்கனவே நிலை பெற்றிருக்கிற ஓர் ராஜ்யத்தோடு சேர்ந்திருக்கக் கூடிய ராஜ்யங்கள் ஒரே மக்களினத்தையும், ஒரே மொழியையும் கொண்டனவாக இருக்கலாம். அல்லது இல்லாமல் இருக்கலாம். அவை ஒரே மொழியும், ஒரே இனமும், நடமாடும் ராஜ்யங்களாக இருந்தால், அதிலும் சுதந்திர வாசனையே தலை காட்டாத இடங்களாக இருந்தால் அவற்றை வசப்படுத்திக் கொள்வது மிக எளிது. அந்த ராஜ்யங்களை அரசாண்ட ராஜ குடும்பத்தினர் அடியோடு ஒழிந்து போயிருந்தால் மிகவும் நல்லது. அவர்களுடைய பழைய நிலைமைக்கும் பழக்க வழக்கங்களுக்கும் குந்தகம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டால் அந்த மக்கள் தங்கள் புதிய அரசனுடைய ஆட்சியை மிகவும் அமைதியாக ஏற்றுக்கொண்டு விடுவார்கள்.

இப்படிப்பட்ட ராஜ்யங்களை அடைந்து அவற்றை நிலைநிறுத்திக்கொள்ள நினைக்கின்ற அரசர்கள் இரண்டு விஷயங்களை மனத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டும். முதலாவதாக அந்த ராஜ்யத்தின் பழைய அரசர்களின் இரத்தக் கலப்புள்ளவர்கள் யாரும் இல்லாதபடி ஒழித்துவிட வேண்டும். இரண்டாவதாக அவர்களுடைய நீதி முறைகளிலோ அல்லது வரிகளிலோ மாற்றம் செய்யக் கூடாது. இம்மாதிரியாக நடந்து கொண்டால் மிகக் குறைந்த கால அளவில் தங்கள் ஆதிக்கத்திலுள்ள எல்லா ராஜ்யங்களையும் ஒன்று சேர்த்து ஒரே ராஜ்யமாக ஆக்கிவிடலாம்.

ஆனால் வெவ்வேறு விதமான மொழிகளும், பழக்க வழக்கங்களும் நீதி முறைகளும் உடைய ராஜ்யங்களைக் கட்டி ஆள்வது மிகவும் கஷ்டம். அதற்குப் பெரும் உழைப்பும் நல்ல அதிர்ஷ்டமும் வேண்டும். அவற்றைத் தன் ஆட்சியில் நிலைப்படுத்திக் கொள்வதற்குள்ள மிகச்சிறந்த வழிகளிலொன்று புதிய அரசன் அங்கேயே இருந்து விடுவது தான். அங்கேயே இருந்தால் குழப்படிகள் ஏற்படுகின்றன. ஆரம்பத்திலேயே அவற்றைத் தெரிந்து கொண்டு அவ்வப்போதே அவற்றைத் தீர்த்துவிடலாம். அரசன் தூரப் பிரதேசத்திலிருந்தால் அவன் அவற்றைப் பற்றிக் கேள்விப்படுவதற்கு முன்னாகவே அவை தீர்க்கமுடியாத அளவிற்கு வளர்ந்துவிடக்கூடும். தவிரவும் அதிகாரிகள் இருந்து அரசாள்வதை விட அரசனே நேரில் இருந்து ஆண்டால் குடிமக்கள் அவனுடன் நேரடித் தொடர்பு கொள்ளவும், நேசங்காட்டவும், ராஜபக்தி கொள்ளவும் வாய்ப்பாயிருக்கும். வேறுவிதமாக இருந்தால் மக்கள் அவனுக்குப் பயப்படவே பெரிதும் இடங்கொடுக்கும். அந்த ராஜ்யத்தைத் தாக்க விரும்புகின்ற வெளி ஆதிக்க சக்தி எதுவும் எளிதாக அதை அபகரித்துவிட முடியாது.

அந்த ராஜ்யத்தைக் காப்பாற்றுவதற்குச் சிறந்த வேறொரு வழி, அந்தத் தேசத்தின் திறவுகோல் போலுள்ள இரண்டொரு இடங்களில் குடியேற்ற நாடுகளை உண்டாக்குவதுதான். ஒரு பெரிய ராஜ்யத்திற்கு ஆயுதபாணிகளான பெரும்படையை வைத்திருப்பதோ அல்லது குடியேற்ற நாடுகளைக் கொண்டிருப்பதோ மிக அவசியமாகும். இராணுவத்தை வைத்திருப்பதால் அரசனுக்கும் பெருஞ் செலவு ஏற்படும். குடியேற்ற நாடுகளால் அவனுக்குச் சிறிதுகூடச் செலவு இல்லை. ஏற்கனவே அங்கு வாழ்ந்தவர்களை ஓட்டாண்டியாக்கிவிட்டு அவர்களுடைய வீடு வாசல்களையும் நில புலன்களையும் தன் நாட்டவருக்குக் கொடுக்கப் போகிறான். ஓட்டாண்டிகளான அந்த நாட்டு மக்களோ, ஏழைகளாய், எளியவர்களாய், ஏதுமற்றவர்களாய் இருப்பதால் அவர்கள் அரசை எதிர்த்து எதுவும் செய்துவிடப் போவதில்லை. (சாதாரணமாக மனிதர்கள் சிறு தீமைகளுக்குத் தான் நம்மைப் பழி வாங்குவார்கள். பெருந்தீமைகளுக்குத் தகுந்தபடி. பழி வாங்க முடியாத நிலைமையில் அவர்கள் இருப்பார்கள்). ஆகவே அவர்கள் பழி வாங்கி விடுவார்களே என்று பயப்படத் தேவையில்லை. பட்டாளங்களை வைத்திருப்பதால் செலவு ஏற்படுகிறது. செலவுக்காக மக்களுக்கு வரி விதிக்க வேண்டியிருக்கிறது. அதனால், வரிப் பளுவைத் தாங்க முடியாத மக்கள் எதிரிகளாகி விடுகிறார்கள். எப்படிப் பார்த்தாலும் பட்டாளங்கள் வைத்திருப்பது பயனற்றது என்பதும் குடியேற்ற நாடுகளை வைத்திருப்பது பெரும்பயனுள்ளது என்பதும் புரியும்.

ஓர் அன்னிய நாட்டை அரசாளுகிறவன், அக்கம் பக்கத்தில் உள்ள வலுக்குறைந்த அரசர்களுக்குத் தான் ஒரு தலைவனாகவும், அவர்களின் பாதுகாவலனாகவும் இருக்கும்படி, தன்னை ஆக்கிக் கொள்ளவேண்டும்; வலு மிகுந்தவர்களைப் பலவீனமடையச் செய்ய முயல வேண்டும்; தன்னைக் காட்டிலும் பலக் குறைவில்லாத வேறோர் அன்னிய அரசனால் அவர்கள் ஆக்கிரமித்துக் கொள்ளப்படாதபடி அவன் எச்சரிக்கையாகப் பார்த்துக் கொள்ளவேண்டும். வலுமிகுந்த வேறோர் அன்னியன் படையெடுக்கும் போது வலுக்குறைந்த எல்லோரும் தன்னைச் சேர்த்துக் கொள்ளும்படி செய்து, படையெடுத்து வருபவனை அவர்கள் ஆதரவுடனும், தன் படைகளுடைய உதவியுடனும் தோற்கடித்து விடலாம். தன் உடன் சேரும் அக்கம் பக்கத்து அரசர்கள் மிகுந்த அதிகாரமும், ஆற்றலும் அடைந்து விடாதபடி சிறிது கவனமாகப் பார்த்துக் கொண்டால் போதுமானது. எப்பொழுதும் அந்த ராஜ்யங்களின் மத்தியஸ்தனாகத்தான் விளங்கவேண்டும். இந்த முறையில் தன் ஆட்சியைச் சரிவர நடத்தாதவன் பல கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாகித் தன் கைவசப்படுத்திய ஆட்சியையும் நழுவ விட்டு விடும்படி நேரிடும்.

எதிர்காலத்தில் நடக்கக் கூடிய குழப்படிகளையும் முன்னதாகவே அறிந்து, அவற்றை முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும். எல்லோரும் தெரிந்து கொள்ளும்படி அவை வளர்ந்துவிட இடம் கொடுத்து விட்டால் பிறகு பரிகாரம் தேடுவது அரிது.

இராஜ்யங்களை ஆக்கிரமித்துக் கொள்ள விரும்புவது இயற்கையானது; சாதாரணமான விஷயமும் கூட! வெற்றிகரமாக இதைச் செய்யக் கூடியவர்கள் செய்து முடித்தால் அவர்கள் இகழப்படுவதில்லை; எப்போதும் புகழப்படுவதே வழக்கம்! ஆனால், ஆக்கிரமிக்க முடியாத நிலையில், எப்படியானாலும் சரியென்று ஆக்கிரமிக்க விரும்புபவர்கள் தாம் தவறு செய்கிறார்கள்; பெரும் பழிக்கும் ஆளாகிறார்கள்!

இருவகை ஆட்சிகள் :

சரித்திரத்தில் காணப்படுகின்ற அரசாங்கங்கள் இரண்டுவிதமாக ஆளப்பட்டிருக்கின்றன. ஒன்று, அரசனும் அவனுடைய வேலையாட்களும் சேர்ந்து அரசாளுவது; மற்றொன்று, அரசனும் பிரபுக்களும் சேர்ந்து ஆளுவது. முதல் வகையில் அரசனுக்கடங்கிய மந்திரி பிரதானிகள் இருந்து அரசனுக்காக நாட்டையாளுவதில் ஒத்தாசை புரிகிறார்கள். அரசனுக்கே சகல அதிகாரங்களும் அந்த ஆட்சியில் உண்டு. இரண்டாவது வகையில், பிரபுக்கள் தங்கள் குலப்பெருமையையும், இரத்தச் சிறப்பையும் கொண்டு ஆளுகிறார்கள். அவர்களுக்கென்று தனிக்குடி படைகள் இருக்கின்றன. அவை அவர்களுக்கே-அவர்களுக்கு மட்டுமே அடங்குவன.

அரசனும் வேலைக்காரர்களும் சேர்ந்து ஆளுவதற்கு உதாரணமாகத் துருக்க நாட்டாட்சியையும், அரசனும் பிரபுக்களும் சேர்ந்து ஆளுவதற்கு உதாரணமாகப் பிரெஞ்சு நாட்டாட்சியையும் எடுத்துக் காட்டலாம். துருக்கர்கள் ஆட்சியைக் கைப்பற்றுவது கஷ்டம். ஆனால் ஒரு முறை கைப்பற்றி விட்டால் அதை அடக்கியாள்வது மிக எளிது. பிரெஞ்சு ஆட்சியைக் கைப்பற்றுவது எளிது, ஆனால், கைப்பற்றிய பின் அரசாள்வது மிகவும் தொல்லை பிடித்த காரியம்.

துருக்க ஆட்சியில் அதிகாரிகள் எல்லோரும் அடிமைகள். எல்லோரும் அரசனைச் சார்ந்து இருப்பவர்கள். ஆகவே அவர்களைக் கெடுப்பது அரிது. அப்படியே கெடுத்து விட்டாலும் அதனால் ஏற்படும் பயன் சிறிது. ஏனெனில் அவர்களால் மக்களைத் தங்களோடு ஒன்று சேர்த்துக் கொண்டு வர முடியாது. ஆகவே துருக்கர்களை எதிர்க்க முயலுபவர்கள் யாராயிருந்தாலும், குழப்பமுண்டாக்கி வெற்றி பெற முடியாது. அவர்களுடைய படைத் தொகைகள் அத்தனையையும் எதிர்க்கக் கூடிய வல்லமையுடையவர்களாக இருக்க வேண்டும். ஆனால், போரில் வென்றுவிட்டால் அரசகுடும்பத்தைத் தவிர வேறு யாருக்கும் பயப்படத் தேவையில்லை. அந்த அரசகுடும்பத்தையும் அழித்துவிட்டால் வேறு எவ்விதமான பயமுமின்றி அந்த சாம்ராஜ்யம் முழுவதையும் அரசாளலாம்.

பிரெஞ்சு தேசத்தைப் போன்ற ராஜ்யங்களிலோ, அந்த ராஜ்யத்தைச் சேர்ந்த சில பிரபுக்களைச் சேர்த்துக் கொண்டு வெகு எளிதாக நாட்டில் வெற்றிக் கொடியை நாட்டி விடலாம். ஆனால், ஆட்சி நடத்தத் தொடங்குகின்றபோது தான் பல தொல்லைகள் ஏற்படத் தொடங்கும். உதவி செய்தவர்களிடமிருந்தும், எதிர்த்து நின்றவர்களிடமிருந்தும் இந்தத் தொல்லைகள் ஏற்படும். அரச குடும்பத்தை அடக்கி விடுவதால் மட்டும் தொல்லை தீர்ந்து விடாது. உதவி செய்த பிரபுக்களைத் திருப்தி செய்யவும் முடியாது: எதிர்த்து நின்ற பிரபுக்களை ஒழித்துக் கட்டவும் முடியாது! ராஜ்யத்தை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இழந்து விடும்படி தான் நேரிடும்!

ஆசியா முழுவதும் வெற்றிக்கொடி நாட்டி உலகப் புகழ்பெற்ற மாமன்னன் அலெக்சாண்டரின் டாரியஸ் அரசாங்கம் துருக்க ராஜ்யத்தைப் போன்றது. டாரியஸ் இறந்துபோனபடியால் அந்த அரசாங்கம் அலெக்சாண்டர் வசமே பத்திரமாக இருந்தது. அலெக்சாண்டர் இறந்த பின்னும் கூட அவருடைய பின் வாரிசுகள் அந்த ராஜ்யத்தைத் தம் வசத்திலேயே வைத்திருந்தார்கள். அவர்கள் மட்டும் ஒற்றுமையாக இருந்திருந்தால் அமைதியாக அந்த ராஜ்யத்தை நீடித்து ஆண்டிருக்கக் கூடும்.

மூன்று வழிகள் :

தங்கள் சொந்த நீதி முறைகளைக் கொண்டு சுதந்திரமாக வாழ்ந்து வந்த ராஜ்யங்களை ஆக்கிரமிக்க நேர்ந்தால், அவற்றை நிலையாக ஆளுவதற்கு மூன்று வழிகள் இருக்கின்றன. முதலாவது வழி, அவற்றைக் கொள்ளையடித்து விடுவது. இரண்டாவது வழி, அரசனே அந்த ராஜ்யத்தில் தங்கி வாழ்வது. மூன்றாவது வழி, அரசனிடம் நட்புப் பாராட்டக் கூடிய சிலரைக் கொண்டு ஓர் ஆட்சிக் குழுவை ஏற்படுத்தி அவர்களைத் தங்கள் சொந்த நீதி முறைகளின்படி வாழவிட்டு, அவர்களிடமிருந்து கப்பம் பெற்றுக் கொள்வது. இந்த அரசாங்கம், அரசனால் ஏற்படுத்தப்பட்டதாகையால் அது அவனிடம் நட்புப் பாராட்டாமலும், அவனுடைய பாதுகாப்பைப் பெறாமலும் வாழ முடியாது. ஆகவே அந்த நட்பை நிலை நிறுத்த அது எல்லா வகையாலும் பாடுபடும்.

இந்த வழியில் வெற்றிபெற வாய்ப்பில்லாவிட்டால் முதலாவது வழியைக் கடைப்பிடிக்க வேண்டியதுதான். ஒரு சுதந்திரமான நகர ராஜ்யத்திற்கு அரசனாக வருபவன் அதை அழிக்காவிட்டால், அதனால் தான் அழிக்கப்படுவதை எதிர்பார்க்க வேண்டியது தான்.

இடையில் செலவழித்த காலத்தையோ, அரசனால் பெற்ற பலன்களையோ எண்ணிப் பாராமல், பழம் பெருமைகளையும், சுதந்திரத்தின் அருமைகளையும் முன்னிட்டே எப்போதும் கலகம் ஏற்படலாம். அங்கு வாழ்பவர்கள் பிரிக்கப் படாமல் அல்லது கலைக்கப்படாமல் ஒன்று சேர்ந்திருக்கும் வரையிலே தங்கள் பழமையையும் பெருமையையும் மறக்கவே மாட்டார்கள். ஆனால், ஓர் அரசனின் கீழ் வாழ்ந்தவர்களாக அந்தக் குடிமக்கள் இருந்தால், தங்கள் ராஜகுடும்பம் அழிந்து போய் விட்டால், கீழ்ப்படிந்தே பழக்கப் பட்டமையாலும் தங்களை ஒன்று சேர்க்கும் உணர்ச்சியைத் தூண்டக்கூடிய ராஜவமிசத்தினர் யாரும் இல்லாமையாலும், சுதந்திரமாக வாழ்ந்து பழக்கமில்லாததாலும் புதிய அரசன் அவர்களுடைய மனப்பான்மையை எளிதாகத் தன் வசப்படுத்தி விடலாம். ஆனால் குடியரசுகளில் உயிர்ப்பும், வெறுப்பும், பழிவாங்கும் துடிப்பும் மிக அதிகமாக இருக்கும். அவர்கள் தங்கள் முந்திய சுதந்திர வாழ்வின் நினைப்பை மறக்கவே மாட்டார்கள். ஆகவே, அவர்களுடைய ராஜ்யத்தை நிலையாக ஆளுவதற்குரிய வழி அவர்களுடைய நகரங்களைப் பாழடித்து விடுவதுதான் அல்லது அரசனே அந்த ராஜ்யத்தில் சென்று குடியிருப்பதுதான்!

திறமையால் கிடைத்த புதிய அரசுகள் :

(மனிதர்கள் தங்களுக்கு முந்தியவர்களின் செயல்களையே பாவனை செய்து பின்பற்றி அவர்கள் அடிவைத்துச் சென்ற பாதையிலேயே எப்பொழுதும் செல்கிறார்கள்) மற்றவர்களை எப்பொழுதும் சரியாகப் பின்பற்ற முடியாததாலும், தாங்கள் யாருடைய செயல்களைப் பின்பற்றுகிறார்களோ அவர்களளவு காரியங்களைத் திறம்படச் செய்ய முடியாததாலும், புத்திசாலியான ஒருவன் எப்பொழுதும் மிகப்பெரிய மனிதர்கள் அடிவைத்துச் சென்ற பாதையிலேயே போகவேண்டும்: மிகத்திறமையுடையவர்களின் செயல்களையே பின்பற்ற வேண்டும். அப்படிச் செய்வதால் அவன் அவர்களுடைய பெருமையைத் தான் அடைய முடியாவிட்டாலும் அதில் ஒரு சிறு அளவையாவது அடையமுடியும். கெட்டிக்காரர்களான வில் வீரர்கள், மிகத்தூரத்தில் உள்ள ஒரு பொருளை எய்ய விரும்பும்போது, தங்கள் வில்லினால் எவ்வளவு தூரம் எய்ய முடியும் என்பதைத் தெரிந்து கொண்டு, அந்தக் குறிக்கும் மேலான உயரத்தில் உள்ள ஓர் இடத்தைக் குறிவைத்துக் கொண்டு அம்பெய்வார்கள். அவ்வளவு உயரத்திற்குத் தங்கள் அம்பு செல்லாது என்றாலும், அதற்குக் கீழான தாங்கள் விரும்புகின்ற குறியை எய்வதற்கு இந்த முறை பயன்படும். அதுபோல்தான் (மனிதர்கள் மிகப் பெரிய மனிதர்களைப் பின்பற்ற முயல வேண்டும்)

ஒரு புதிய அரசன் இருக்கக் கூடிய புதிய அரசுகளை, ஏறத்தாழ அவனுடைய திறமைக்குத் தகுந்தபடி தன் பிடியில் வைத்திருப்பது எளிதாக இருக்கும். மிகத் திறமையுள்ளவன் மிக எளிதாகவும். குறைந்த திறமையுள்ளவன் சாதாரணமாகவும் அவற்றைத் தன் பிடியில் வைத்திருக்கலாம். தனிப்பட்ட மனிதன் ஒருவன் அரசனாகும்போது அவனிடம் பெருந்திறமையோ அல்லது நல்லதிர்ஷ்டமோ இவற்றில் ஏதாவதொன்றோ இருக்குமானால் பல கஷ்டங்களைக் குறைத்துக் கொள்ளலாம். நல்லதிர்ஷ்டம் குறையாக உள்ளவர்கள் கூடத் தங்கள் ராஜ்யங்களைச் சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள். அரசன் அந்த ராஜ்ய எல்லைக்குள்ளேயே தங்கினால் காரியம் மேலும் இலகுவாகும்.

சந்தர்ப்பங்கள் மனிதர்களுக்கு வாய்ப்பை அளிக்கின்றன. அவர்களுடைய பெரும் பண்புகள் அவற்றைக் கொண்டு அவர்கள் பலன் அடைய உதவுகின்றன. இதனால் அவர்களுடைய நாடு வளப்பட்டு அதன் செல்வங்கள் வளர்ச்சியடைகின்றன.

தங்கள் திறமையைப் பயன்படுத்தி அரசர் ஆனவர்கள். தங்கள் ராஜ்யங்களை அடையும்போது தான் கஷ்டப்படுகிறார்களே தவிர, அவற்றை எளிதாக நிலைப்படுத்திக் கொள்கிறார்கள். தங்கள் ராஜ்யங்களைத் தேடிக் கொள்கின்ற காலத்தில் அவர்கள் அடையும் கஷ்டங்களும், அவர்கள் தங்கள் நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நுழைக்கின்ற புதிய சட்ட திட்டங்களில் இருந்து ஓரளவு உண்டாகின்றன. புதிய நடை முறைகளைப் புகுத்தி நடைபெறச் செய்வதைப் போல் அதிகமான கஷ்டமோ, அதன் வெற்றியில் ஏற்படுகின்றதைப் போல் அதிகமான சந்தேகமோ, அல்லது அதைக் கடைப்பிடிப்பதைப் போல் அதிகமான ஆபத்தோ வேறு எதுவும் இல்லை என்பதை அறியவேண்டும். பழைய நடைமுறையால் பயனடைந்த எல்லோரும் சீர்திருத்தக்காரனுக்கு எதிரிகளாகி விடுவார்கள். புது நடை முறையால் நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்ற எதிராளியின் கையில் இருக்கின்ற சட்டத்திற்கு அஞ்சுகின்ற மனிதத் தன்மையில் நம்பிக்கையில்லாத அசமந்தப் பேர்வழிகள்தான். இந்தப் புதுச் சட்டங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கக்கூடியவர்கள். இவர்களுக்கும் புதுமையில் அதை அனுபவத்தில் காணும்வரை உண்மையில் எவ்விதமான நம்பிக்கையும் இருப்பதில்லை. எதிர்ப்பவர்கள் வேகமாக எதிர்க்கவும், ஆதரிப்பவர்கள் அரைகுறை மனத்தோடு ஆதரிக்கவும் இதற்கிடையிலே சீர்திருத்தம் புகுத்துகின்றவன் அடைகின்ற ஆபத்து மிகப் பெரிது. புதுமையைப் புகுத்துகின்றவர்கள் தன்னந்தனியாகவோ அல்லது பிறருதவியைக் கொண்டு கட்டாயப்படுத்தும் முறையில் செயலாற்றுகிறார்களா என்பதைப் பொறுத்திருக்கிறது. அவர்களுடைய வெற்றி தோல்வி தன்னந்தனியாக அவர்கள் முயற்சி செய்வதாயிருந்தால் அவர்கள் வெற்றி மோசமாகத்தானிருக்கும்.

தங்கள் சொந்த பலத்தையும் படைபலத்தையும் உபயோகப்படுத்தக் கூடுமானால் அவர்கள் அந்த விஷயத்தில் தோல்வியடைவது அபூர்வம். இதனால்தான் படைபலம் படைத்த தீர்க்கதரிசிகள் எல்லோரும் வெற்றியடைந்து இருப்பதையும், படை பலமற்றவர்கள் தோல்வியடைந்து இருப்பதையும், நாம் காணுகிறோம். மக்களை ஒரு விஷயத்திற்கு இணங்கச் செய்வது என்பது எளிதான காரியமல்ல. அவர்கள் தாமாக நம்பாத காரியத்தைப் படைபலத்தைக் கொண்டு தான் நம்பச் செய்ய வேண்டும்.

இவ்வாறு தங்கள் திறமையைக் கொண்டு மேலோங்கி வந்தவர்கள், தங்களுக்குக் கீழ்ப்படியாதவர்களை அடக்கியும், தங்கள் மீது பொறாமை கொண்டவர்களை ஒடுக்கியும் ஒரு முறை மேலோங்கி வந்து விட்டால் அவர்கள் பத்திரமும் பாதுகாப்பும் வல்லமையும் உடையவர்களாய் மதிப்பிற்குரியவர்களாய் மகிழ்ச்சியுடன் நிலைத்து இருக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

அதிர்ஷ்ட வசத்தால் அல்லது பிறர் ஆற்றலால்

கிடைத்த புதிய அரசுகள்

தனிப்பட்ட குடிமக்களாக இருந்து வெறும் அதிர்ஷ்டத்தால் அரசரானவர்கள். அவ்வாறு அரசராகும் போது எளிதாக உயர்ந்து வந்துவிட்டாலும், அந்த நிலையைக் காப்பாற்றிக் கொள்வதற்குள் பெரும் பாடுபட்டுப் போகிறார்கள்.

அரசைப் பெறுகின்ற பாதையில், அவர்கள் அப்படியே பறந்து வந்து விடுகிறபடியால், எவ்விதமான கஷ்டத்தையும் அடைவதில்லை. ஆனால் அவர்கள் நிலைபெறக் கூடிய சந்தர்ப்பத்தில் தான் எல்லாக் கஷ்டங்களும் உண்டாகின்றன. பணத்திற்காகவோ அல்லது ஓர் அரசனுடைய தயவினாலோ இராஜ்யங்களைப் பெற்றவர்கள் இருக்கிறார்கள். சில மன்னாதி மன்னர்கள் பட்டாளத்தினருக்கு இலஞ்சம் கொடுத்து வந்தவர்களாய் இருந்திருக்கிறார்கள். இப்படி அரசுரிமை பெற்றவர்கள் எப்பொழுதும் தங்களைத் தூக்கிவிட்டவர்களின் நல்லெண்ணத்தையும், அவர்களுடைய அதிர்ஷ்டத்தையும் முழுக்க முழுக்கச் சார்ந்திருக்க வேண்டியவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் சார்ந்திருக்கக் கூடிய அந்த இரண்டு விஷயங்களுமே நிலையற்றவை; உறுதியற்றவை! அவர்களுக்குத் தங்கள் அந்தஸ்தை எப்படிக் காப்பாற்றுவதென்றும் தெரியாது; எப்படி நிர்வகிப்பதென்றும் தெரியாது! ஒரு சாதாரணக் குடிமகனாக இருந்து அரச பதவிக்கு வந்தவன் மிகப் பெரிய திறமைசாலியாய் இருந்தாலொழிய, எப்படி ஆதிக்கம் செலுத்துவதென்பது தெரியாதவனாகத் தான் இருப்பான். அப்படிப்பட்டவர்கள் தங்கள் நிலையைத் தாங்களாகவே நிலை நிறுத்திக்கொள்ள முடியாதவர்களாயிருப்பார்கள். ஏனென்றால் தங்களிடம் நட்பும் விசுவாசமும் உடைய படைகள் அவர்களிடம் இருப்பதில்லை.

ஆரம்பத்தில் வெகு வேகமாக வளர்ச்சியடைந்த எதுவும் ஆழத்திற்கு வேரூன்றிவிட முடியாதாகையால், முதற் புயல் அடிக்கும் போதே வீழ்ந்து விடுவதுபோல, எளிதாக அடைந்த இராஜ்யங்களும் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆட்டங் கண்டுவிடக் கூடும். ஆனால், அப்படித் திடீரென்று அரசனாகக் கூடியவன் பெருந் திறமையுடையவனாக இருந்தால், அவன் தனக்கு அதிர்ஷ்டவசமாகக் கிடைத்த அந்த உயர்ந்த நிலையைக் காப்பாற்றிக் கொள்ள எவ்விதமான தீமை நேர்ந்தாலும் அவ்வவ்வற்றிற்குத் தக்கபடி அவசரமான காரியங்களை மேற்கொண்டு அவற்றைத் தடுத்து ஒழித்துவிட்டுப் பிறகு தன் அடிப்படையை வலுப்படுத்திக் கொண்டு விட முடியும்.

அதிர்ஷ்டவசத்தாலோ பிறர் உதவியாலோ அரசரானவர்கள் தங்கள் நிலையைக் காப்பாற்றிக் கொள்ளக் கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

பகைவர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நண்பர்களை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். படைபலத்தாலும் சூழ்ச்சித் திறத்தாலும் ஆட்சி நடத்த வேண்டும். குடிமக்கள் தன்னை நேசிக்கவும் தனக்குப் பயந்து நடக்கவும் செய்ய வேண்டும். இராணுவ வீரர்கள் தன் சொற்படி நடக்கவும், தன்னிடம் பயபக்தி காட்டவும் செய்யவேண்டும். தனக்குத் தீமை செய்யக் கூடியவர்களை ஒழித்துக் கட்ட வேண்டும். பழைய பழக்க வழக்கங்களிடையே புதுமையைப் புகுத்த வேண்டும். தன் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டவர்களிடம் கண்டிப்பாகவும், அன்பாகவும், மகத்துவமுடையவனாகவும் உதார குணமுடையவனாகவும் இருக்க வேண்டும். பழைய ராணுவத்தை ஒடுக்கிப் புதிய இராணுவத்தை உண்டாக்க வேண்டும். அக்கம் பக்கத்திலுள்ள அரசர்களும் மன்னர்களும் தனக்கு உதவி செய்ய மகிழ்ச்சியோடு முன் வரும்படியும் ஊறு செய்ய அஞ்சும்படியும் ஆன நிலையில் அவர்களுடன் நட்புறவு கொண்டாட வேண்டும். இப்படிப்பட்ட செயல்களில் கவனம் செலுத்தக் கூடிய அந்தப் புதிய அரசன் தன் அரசபீடத்தை நிச்சயமாகக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

கொடுஞ் செயல்கள் மூலம் அரசர் ஆதல் :

அதிர்ஷ்டவசமாகவோ அல்லது திறமையினாலோ அரசராவது தவிர இன்னும் இரண்டு வழிகள் இருக்கின்றன. அவை துரோகம் அல்லது கொடுஞ் செயலின் மூலம் அரசர் ஆதலும் அல்லது உடன் வாழும் குடிமக்களின் ஆதரவால் அரசர் ஆதலும் ஆகும்.

படைத் தலைமை வகிக்கும் சிலர் திடீரென்று ஆட்சிக் குழுவினரையும் முக்கியமானவர்களையும் ஒரேயடியாகக் கொன்றுவிட்டுத் தாங்கள் ஆட்சித் தலைமையைக் கைப்பற்றிக் கொள்கிறார்கள். ஒருவன் தன் உடன் வாழும் குடிமக்களைக் கொன்று குவிப்பதும், தன் நண்பர்களுக்கு இரண்டகம் பண்ணுவதும் உண்மை. இரக்கம், மனிதாபிமானம் முதலியவை இல்லாமல் இருப்பதும், அறமல்ல! இப்படிப்பட்ட கொடியவழியில் ஒருவன் அதிகாரத்திற்கு வேண்டுமானால் வரலாமேயொழிய கீர்த்தியும் புகழும் அடைய முடியாது.

இப்படிப்பட்ட எல்லையில்லாத கொடுமையும் துரோகமும் சதியும் புரிந்தவர்கள் சிலர், வெளிப் பகைவர் படையெடுத்த காலத்திலும் தங்களைக் காப்பாற்றிக் கொண்டு, தங்கள் குடிமக்களால் எவ்வித சூழ்ச்சியும் சதியும் செய்யப்படாமல் எப்படி நெடு நாளைக்குத் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளுகிறார்கள் என்று சிலர் ஆச்சரியப்படக் கூடும். எத்தனையோ பேர் சமாதான காலத்திலேயே தங்கள் கொடுந்தன்மையின் காரணமாகத் தங்கள் நிலையைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் திண்டாடிப் போயும் இருக்கிறார்கள். போர்க்களத்தில் அப்படிப்பட்டவர்களின் நிலைமையைப் பற்றிப் பேசவே வேண்டியதில்லை. ஆனால் ஒரு சிலர் இதற்கெல்லாம் ஆட்டங்கொடுக்காமல் நிலைத்திருக்கிறார்களே என்று கேட்டால், அது அவர்கள் செய்கின்ற கொடுஞ் செயலின் தன்மையைப் பொறுத்தது என்றே சொல்லவேண்டும். தங்கள் கொடுஞ் செயலைப் பூரணமாக நிறைவேற்றி முடித்தவர்கள் பின்னால் தங்கள் நிலைமையைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். அரைகுறையாக விட்டு வைத்தவர்களால் அது முடியாது.

ஓர் ராஜ்யத்தை அடையும்போது அதற்காகச் செய்ய வேண்டிய கொலை முதலிய கொடுமைகளையெல்லாம் ஒரேயடியாக உடனடியாகச் செய்துவிட்டால் பிறகு, மேற்கொண்டு எவ்விதமான கொடுமையும் செய்யாமல் மக்களுக்கு நன்மை செய்து வருவதன் மூலம் அவன் தன் நிலைமையைக் காப்பாற்றிக் கொள்ளலாம். கோழைத் தனத்தினாலோ, சரியான யோசனையில்லாததினாலோ ஒரே மூச்சில் தான் செய்ய வேண்டிய கொடுமைகளைச் செய்து முடிக்காதவன், தினந்தோறும் பாக்கியிருக்கின்ற கொடுமைகளைச் செய்வதற்காக வாளுங்கையுமாக இருந்து கொண்டே இருக்க வேண்டியிருப்பதால், அவன் மக்களுடைய அன்பைப் பெறமுடியாது. தனக்குத் தடையாயிருப்பவர்களை யெல்லாம் ஒரேயடியாக ஒழித்துக் கட்டிவிட்டு பிறகு கொஞ்சங்கொஞ்சமாக மக்களுக்கு நன்மைகளைச் செய்து வந்தால், அவற்றைப் படிப்படியாக அனுபவித்து வரக் கூடிய அவர்கள் பழைய பாதகத்தை மறந்து விடுவார்கள். மக்களோடு ஒன்றி வாழுகிற அரசனை எந்த நல்ல அல்லது தீய நிகழ்ச்சிகளும் சாய்த்து விட முடியாது.

மக்கள் ஆதரவால் அரசர் ஆதல்:

கொலை அல்லது கொடுமையால் அரசராவது தவிர மக்கள் ஆதரவால் அரசர் ஆவதும் ஒரு வழியாகும். முழுத்தகுதியோ அல்லது நிறைந்த அதிர்ஷ்டமோ இருந்தால் மட்டும் இந்த நிலையை அடைந்து விட முடியாது. அதிர்ஷ்டத்துடன் தந்திரமும் இருக்க வேண்டும்!

ஒவ்வொரு நகரிலும் இரண்டு கட்சிகள் ஏற்படுவது இயல்பு. ஒன்று மேன்மக்களுடைய கொடுமையைத் தவிர்க்க நினைக்கும் பொதுமக்கள் கட்சி. மற்றொன்று பொதுமக்களை ஒடுக்க நினைக்கும் மேன்மக்கள் கட்சி. இந்த இரு கட்சிகளின் மோதுதலின் விளைவாக ஓர் அரசனைக் கொண்ட முழுமையான அரசாங்கம் அல்லது மக்களின் சுயாதீனம் அல்லது கட்டுக்கடங்காத நிலை ஆகிய மூன்றில் ஒன்று ஏற்படும். முதலாவதாகச் சொன்ன முழுமையான அரசாங்கம் ஏற்படுகின்ற பொழுது நாட்டில் எந்தக் கட்சி ஓங்கியிருக்கிறதோ அந்தக் கட்சி தன் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகத் தங்கள் கொள்கையை ஆதரிக்கக் கூடிய ஒருவனை நாட்டின் அரசனாக்கி விடுவார்கள்.

மேன்மக்கள் ஆதரவால் அரசன் ஆனவன், பொதுமக்கள் உதவியால் அரசன் ஆனவனைக் காட்டிலும் தன் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கு அதிகக் கஷ்டப்பட நேரிடும்.

மேன்மக்கள் ஆதரவால் அரசனானவனைச் சுற்றி இருப்பவர்கள் அவனைத் தங்களுக்குச் சமதையானவனாகக் கருதுபவர்களாக இருப்பதால் அவன் அவர்களை ஏவவோ தான் விரும்புகிறபடி அவர்களுக்குக் கட்டளைகள் பிறப்பிக்கவோ முடியாது. ஆனால், குடிமக்களால் அரசனானவனுக்கு அடங்காதவர்கள் இருக்கமாட்டார்கள்; இருந்தாலும் வெகு சொற்பமாயிருப்பார்கள். தவிரவும். பிரபுக்களைத் திருப்திப் படுத்துவதைக் காட்டிலும் மக்களைத் திருப்திப்படுத்துவது சுலபம். பொது மக்கள் விரும்புவதெல்லாம் தாங்கள் ஒடுக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பது தான். பொது மக்கள் அரசரின் பகைவராயிருந்தால் அவனை விலக்க மட்டுமே நினைப்பார்கள். பிரபுக்களோ, தங்களுக்குப் பிடிக்காத அரசனுக்குப் பல சூழ்ச்சிகள் செய்வார்கள். அவர்கள் தந்திரத்திலும் முன்னறிவிலும் தேர்ந்தவர்களாகையால் தங்களுக்கு அனுசரணையாக வரக்கூடிய ஒருவன் பக்கம் மாறுவார்கள். மக்களுடன் அரசன் நிலைத்து இருக்க முடியும்; பிரபுக்களுடன் அது முடியாது பிரபுக்கள் எப்பொழுதும் தம் நலத்தையே நாடுபவர்கள் ஆகையால் அவர்களை இரகசியப் பகைவர்களாக எண்ணி அரசன் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மக்கள் ஆதரவால் அரசன் ஆனவன் அவர்களுடைய நட்பை எப்போதும் காப்பாற்ற வேண்டும். இது எளிது. ஏனெனில் அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் தாங்கள் அடக்கி ஒடுக்கப்படக் கூடாது என்பதுதான். பிரபுக்கள் ஆதரவுடைய அரசன் கூட மக்கள் ஆதரவைப் பெறுவது நல்லது. தங்களுக்குத் திமை செய்யக் கூடியவன் என்று எதிர்பார்க்கப்பட்டவன் நல்லவனாக இருப்பதைக் கண்டால் அவர்கள் அவனுக்குத் தங்கள் பேராதரவைக் காட்ட முன் வருவார்கள். எந்த அரசனும் மக்கள் நட்பைப் பெற வேண்டியது இன்றியமையாதது என்று நான் கூறுவேன். இல்லாவிட்டால் அவனுக்கு ஆபத்துக் காலத்தில் தஞ்சமடைவதற்கு ஓரிடமும் இருக்காது.

“மக்களை அடிப்படையாகக் கொண்டு எதையும் எழுப்புபவன் சேற்றின்மீது எழுப்புபவனாகிறான்”. என்ற பழமொழியை கொண்டு யாரும் என் வாதத்தை மறுக்க முயல வேண்டாம். தனிப்பட்ட மனிதர்களைப் பொறுத்தவரை அது சரிதான். தனிமனிதன் பகைவர் கையிலோ, அதிகாரிகள் கையிலோ அகப்பட்டால், பொதுமக்கள் தன்னை விடுவிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றமாகத் தான் முடியும். ஆனால் மக்கள் நட்பின் அடிப்படையிலே தன்னை நிலை நிறுத்திக் கொள்ளக் கூடியவனும், அதிகாரம் செலுத்தக் கூடிய ஆண்மையும் ஆற்றலும் உடையவனும், இடுக்கண்ணுக்கஞ்சாத இயல்புடையவனுமாகிய ஓர் அரசன் மக்களால் ஏமாற்றப்படவேமாட்டான்; தான் சரியான அடிப்படையிலேயே காலூன்றியிருப்பதைக் கண்டு கொள்வான்.

அரசன் தானே நேரடியாக ஆட்சி செய்யாமல். அதிகாரிகளைக் கொண்டு ஆட்சி செய்வது பேராபத்தானது. அதுவும் ஆபத்துக் காலங்களில் இந்த அதிகாரிகள் படு மோசம் செய்து விடுவார்கள். அவனுக்கெதிராகவோ அல்லது அவன் கட்டளைக்குக் கீழ்ப்படியாமலோ அவனை நிலை குலையச் செய்துவிடுவார்கள். குடிமக்களும் இந்த அதிகாரிகளிடமே உத்தரவுகளைப் பெற்றதும் அவர்களுக்கே அடங்கி நடந்தும் பழக்கப்பட்டுப் போய் விடுகிறபடியால் அவர்களையும் அரசன் தனக்கு இடுக்கண் வந்த காலத்தில் நம்ப முடியாது. ஆகவே புத்திசாலியான ஓர் அரசன் எப்போதும் மக்களுக்கு நண்பனாகயிருக்கவே முயல்வான். அவர்களும் அவனுக்கு எந்தக் காலத்திலும் உண்மையாக இருப்பார்கள்.

(குடிதழீஇக் கோலோச்சும் நில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு.

-திருக்குறள்.)

ராஜ்யங்களின் பலத்தை அளப்பது எப்படி? :

பலமான பாதுகாப்பையுடைய நகரத்தையுடையவனும், மக்களால் வெறுக்கப்படாதவனுமாகிய ஓர் அரசன் எப்போதும் தாக்குதலுக்குள்ளாக மாட்டான்; அப்படியே தாக்கப்பட்டாலும் அவனைத் தாக்கியவன் தான் அவமானப்பட்டுத் திரும்பிப்போக நேரிடும்.

ஜெர்மனியில் உள்ள நகரங்கள் பெருங்கோட்டைகளுடன் மிகப் பாதுகாப்பாக விளங்கின. மக்கள் எந்தச் சமயத்திலும் சக்கரவர்த்தியின் ஆணைக்குக் கீழ்ப்படியத் தயாராய் இருந்தனர். கோட்டைகளுக்குள்ளேயே ஓராண்டு காலத்திற்கு வேண்டிய உணவுப் பொருள்கள் இருப்பு இருந்து கொண்டேயிருக்கும். ஆனால், ஒருவருடம் வரை எந்தப் படையெடுப்பும் நடந்து கொண்டேயிருப்பதென்பது நடக்கக்கூடிய காரியமல்ல.

கோட்டைக்கு வெளியே மக்களின் சொத்துக்கள் இருக்குமானால், தங்கள் பொருள்கள் சொத்துக்கள் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டு மக்கள் சும்மாயிருக்க முடியாது. அவர்கள் பொறுமை எல்லை மீறி விடும். அவர்களுடைய சுயநலம் அரசனைப் பற்றிய எண்ணத்தையே அடியோடு மறக்கடித்து விடும்.

ஆற்றலும் தைரியமும் உள்ள அரசன், பகைவர் செய்யும் தீமைகள், அழிவுகள் நெடுநாளைக்கு நிலைக்காது என்று குடிமக்களுக்குத் தைரியம் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். உண்மையில் எதிரி எல்லாவற்றையும் எரித்து அழித்துக் கொண்டு வருவானானாலும், மக்கள் தங்களையாவது காப்பாற்றிக் கொள்ள எண்ணியிருப்பார்கள். சிறிது காலத்திற்குப்பிறகு, இந்த விஷயம் ஆறிப்போனபிறகு அவற்றைத் தவிர்க்க எவ்வித வழியும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு மக்கள் தங்கள் சொத்துச் சுதந்திரங்கள் எல்லாம் அழிந்துபோய் விட்டபடியால் மீண்டும் தங்களைக் காப்பாற்ற வேண்டியவன் அவனே என்று அவனிடம் வந்து ஒட்டிக்கொள்வார்கள்.

புத்திசாலியான ஓரரசன் தன் நாடு படையெடுப்புக்கு ஆளாகும் ஆரம்பக்கட்டத்திலும், படையெடுப்பு நடக்கும் சமயத்திலும் தன் குடிமக்களின் தைரியத்தை ஒன்று சேர்க்க முனையும் விஷயத்தில் கஷ்டப்படவேண்டியதேயில்லை. அவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வழியும் உணவுப் பொருள்களும் உடையவனாக இருந்தால் போதுமானது.

மதச் சார்பான அரசுரிமை :

ஒரு மதத்தைக் காரணமாகக் கொண்டு அரசுரிமை அடைவதில் நிறையக் கஷ்டங்கள் இருக்கின்றன. இவ்வாறு அரசுரிமை அடைவதற்குத் திறமையோ அல்லது அதிர்ஷ்டமோ வேண்டும். ஆனால், அதை நடத்துவதற்கு இவற்றில் எதுவும் தேவையில்லை. ஏனெனில் அவை பழைய மத ஆசாரங்களினாலேயே நிலைநிறுத்தப்பட்டு விடுகின்றன. அந்த மத ஆசாரங்கள் மிகுந்த ஆற்றலும், தன்மையும் உடையனவாக இருப்பதால், இப்படிப்பட்ட மத அரசுகளின் அரசர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை நடத்தினாலும் என்றும் ஆதிக்கத்தில் நிலை நிற்க முடிகிறது. இந்த மத ராஜ்யங்களின் அரசர்கள் மட்டுமே பாதுகாக்கத் தேவையில்லாத ராஜ்யங்களைப் பெற்றிருக்கிறார்கள்; ஆளப்படவேண்டிய இல்லாத குடிமக்களை அடைந்திருக்கிறார்கள். அவர்களுடைய ராஜ்யங்கள் பாதுகாக்கப் படாதவையாகையினாலே அவர்களிடமிருந்து பறிக்கப்படுவதுமில்லை; அவர்களுடைய குடிமக்கள் ஆளப்படுவதில்லையாகையினாலே, அவர்கள் இந்த அரசர்களிடம் பகைமை பாராட்டுவதுமில்லை. ஆகவே இந்த உலகத்தில் இந்த மத ராஜ்யங்களின் அரசர்கள் மட்டுமே பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இன்பமாகவும் ஏற்றமாகவும் இருக்கிறார்கள். இந்த அரசாங்கங்கள் இறைவனாலேயே உயர்த்தப்பட்டும் நடத்தப்பட்டும் வருவதால் இவற்றை ஆராய்பவன் அகம்பாவமும் மூடமதியும் உள்ளவனாகிவிடுவான்.

ஆனால், திருச்சபை (Church) இவ்வளவு பெரிய லௌகிக ஆதிக்கத்தை எப்படியடைந்தது என்று கேட்கலாம். படை பலத்தாலும் பண பலத்தாலும் தான் இந்த அரசு நிலை நிறுத்தப்பட்டது என்பதைச் சரித்திரம் நமக்குத் தெள்ளத் தெளியக் காட்டுகிறபடியால் அதைப் பற்றிப் பேசுவது அதிகப் பிரசங்கித்தனமாகாது என்றே எண்ணுகிறேன். நான்காவது அலெக்சாண்டர் போப்பாவதற்கு முன்னால் போப்பாண்டவர்களின் பாடு திண்டாட்டமாகவே இருந்தது. எதிர்ப்பு சக்திகளை அடக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்கள். நான்காவது அலெக்சாண்டர்தான் இந்த லௌகிக பதவியைக் காப்பாற்றப் படைபலத்தையும், பண பலத்தையும் உபயோகிக்கலாம் என்று செய்து காட்டினார். அவர் வாலென்டைன் கோமகனைத்தான் உயர்த்தப் பாடுபட்டார் என்றாலும் அது திருச்சபையின் மேம்பாட்டில் வந்து முடிந்தது. பிறகு வந்த போப் ஜூலியால் திருச்சபையின் ஆதிக்கத்தைப் பலவகைகளிலும் பலப்படுத்தினார். புனித போப் பாண்டவர் பத்தாவது லியோ இந்தக் குருபீடத்தை மிகுந்த அதிகாரம் நிறைந்த நிலை பெறச் செய்தார். மற்ற போப் பாண்டவர்கள் படைபலத்தை நாடினார்கள். இவரோ நல்ல குணத்தினாலும் வேறுபல நன்னெறிகளாலும் இந்தக் குருபீடத்தை மேன்மையுடையதாகவும் போற்றத் தகுந்ததாகவும் ஆக்கினார்.

கூலிப்படைகள் :

அரசு முறைகளைப்பற்றி ஆராய்ந்து விட்டோம். இப்போது அவை கையாளக் கூடிய படையெடுப்பு முறைகளைப் பற்றியும் பாதுகாப்பு வழிகளைப்பற்றியும் காண்போம். ஓர் அரசன் தன்னுடைய அடிப்படையைச் சரியாக அமைத்துக் கொள்ள வேண்டுமென்றும் இல்லாவிட்டால் அவனுக்கு நிச்சயம் அழிவு வரும் என்றும் நாம் முன்னரே தெரிந்து கொண்டிருக்கிறோம். எல்லா அரசாங்கங்களுக்கும் முக்கியமான அடிப்படைகள் நல்ல நீதிமுறைகளும் நல்ல படையமைப்பும் தாம். நல்ல படையமைப்பைப் பெறாத நாட்டில் நல்ல நீதிமுறை இருக்க முடியாது. நல்ல படையமைப்புள்ள நாட்டில் நல்ல நீதி முறைகள் இருக்கும். இப்போது நாம் படைகளைப் பற்றிப் பேசுவோம்.

ஓர் அரசன் தன் உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ள உபயோகிக்கின்ற படைகள் ஒன்று அவனுடைய சொந்தப் படைகளாயிருக்கவேண்டும் அல்லது கூலிப்படைகளாகவோ, உதவிப்படைகளாகவோ அல்லது எல்லாங்கலந்த கலப்புப் படைகளாகவோ இருக்க வேண்டும். கூலிப்படைகளும் உதவிப்படைகளும் பயனற்றவை மட்டுமல்ல ஆபத்தானவையும் கூட கூலிப்படைகளின் துணையை நாடுகிற அரசன் நிச்சயமாகவும் உறுதியாகவும் நிலைத்திருக்க முடியாது.

கூலிப் படைகளிடம் ஒற்றுமையிருப்பதில்லை. பேராசையே நிறைந்திருக்கும். இராணுவ ஒழுங்கு முறையிருக்காது. உண்மை விசுவாசம் இருக்காது. நேசப்படைகள் எதிரில் வீரங்காட்டும்; எதிரிப்படைகள் முன்னிலையில் கோழைத்தனத்தை நிலை நாட்டும். கடவுள் நம்பிக்கையும் இருப்பதில்லை. மனிதர்களுக்கும் நம்பிக்கையாக நடப்பதில்லை. படையெடுப்பை ஒத்திப்போடுகின்ற கால அளவுக்கே அழிவையும் ஒத்திப்போடலாமேயன்றி இவற்றால் ஒருவனுக்கு அழிவே நிச்சயம் உண்டாகும். அமைதிக் காலத்தில் இந்தக் கூலிப்படைகளாலும், போர்க்காலத்தில் எதிரிகளாலும் அரசன் சீரழிக்கப்படுகிறான். இதற்குக் காரணம் என்னவென்றால் அவர்கள் சம்பளத்திற்கு வேலை செய்கிறார்களேயன்றி நாட்டுப்பற்று, ராஜபக்தி ஆகிய வெற்றிக்காகவும் வேலை செய்வதில்லை. அந்தச் சம்பளம் அவர்களைத் தன் அரசனுக்காக உயிரைக் கொடுக்கக் கூடிய தன்மையைக் கொடுத்து விட முடியாது. போர் நடைபெறாதவரையிலே அவர்கள் அரசனிடம் வேலை பார்த்துக் கொண்டிருக்க விரும்புவார்கள். போர்வந்து விட்டாலோ ஓடி விடுவார்கள் அல்லது கலைந்து போய்விடுவார்கள்.

இந்தக் கூலிப்படைகளின் தலைவன் சாமர்த்திய முடையவனாயிருந்தாலும் கெடுதல், இல்லாவிட்டாலும் கெடுதல். அவன் சாமர்த்தியசாலியாயிருந்தால் அரசனையோ அல்லது அரசனுடைய நோக்கத்திற்கு மாறாக மற்றவர்களையோ அடக்கித் தன்னுடைய உயர்வையே நிலைநாட்டிக் கொள்ளவே எப்பொழுதும் முற்படுவான். சாமர்த்தியமில்லாதவனால் ஏற்படக் கூடிய தீமைகளைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. இந்தத் தீமைகளைத் தவிர்ப்பதற்கு நான் சொல்லக் கூடிய யோசனை என்னவென்றால், படை நடத்திச் செல்வதற்கு அரசனே நேரிற் போகவேண்டும். குடியரசாயிருந்தால், அந்தக் குடியரசு தன் சொந்தக் குடிமக்களையே நேரில் அனுப்ப வேண்டும். இப்படித் தாமே நேரில் சென்று, நடத்துகின்ற படைகளினால் தான் எந்த அரசாங்கமும் பெரிய முன்னேற்றத்தைக் காணமுடியும். கூலிப்படைகளால் கெடுதலைத் தவிர வேறு காணமுடியாது.

உதவிப் படைகள் :

ஓர் அரசன் தன் அருகாமையிலுள்ள ஒரு வல்லமை மிக்க அரசனைப் படைகளுடன் வந்து தன் நாட்டைக் காக்கும்படி கேட்டுக் கொண்டால், அப்படி வரும் படைகளுக்கு உதவிப்படைகள் என்று பெயர். இந்த உதவிப்படைகள் கூலிப் படைகளைப் போலவே பயனற்றவை. இந்தப் படைகள் தங்களைப் பொறுத்தவரையில் நல்லவையே. ஆனால், அவற்றின் உதவியை நாடுகிறவனுக்கு எப்போதும் ஆபத்தானவை. போரில் அவை பின் வாங்கினால், உதவி பெற்றபின் தோற்க நேரிடும்; போரில் அவை வெற்றி பெற்றாலோ, உதவி பெற்றவன் அவற்றிடம் சிறைப்பட்டுவிட நேரிடும்.

ஆகவே எந்த வகையிலும் தான் வெற்றியடைய வேண்டாமென்று நினைக்கக்கூடியவர் தான் இந்தப்படைகளின் உதவியை நாடவேண்டும். இந்தப்படைகள் கூலிப்படைகளைக் காட்டிலும் கொடுமையான ஆபத்துடையவை. இவை என்றும் ஒன்று சேர்ந்து ஒரே தன்மையில் இயங்கக்கூடிய படைகள் ஆகையால், இவற்றிடம் அகப்பட்டுக் கொண்டவனுக்கு அழிவு நிச்சயம். கூலிப்படைகளோ ஒன்றாகச் சேர்ந்தேயிருப்பது இல்லை. அதுவும் தவிர, அந்த அரசனிடம் சம்பளம் வாங்குவதால், அவனுக்கு எதிராக ஒன்று கூடுவதில்லை. ஆகவே, மூன்றாவது. ஆளொருவன் கூலிப்படைகளின் துணையால் அவற்றின் உதவியைப் பெற்ற அரசனுக்குக் கேடு செய்ய முயல்வது என்பது சாதாரணமாக நடக்கக் கூடிய காரியமல்ல. ஒரே வார்த்தையில் விளக்கமாகச் சொன்னால் கூலிப்படைகளால் ஏற்படக்கூடிய பேராபத்து அவற்றின் கோழைத்தனத்தினால் ஏற்படுகிறது. ஆனால், இந்த உதவிப் படைகளால் ஏற்படக்கூடிய பேராபத்தோ அவற்றின் தைரியத்திலேயே இருக்கிறது.

மொத்தத்தில் தன் சொந்தப்படைகளின் உதவியால்தான் ஒரு மன்னன் பாதுகாப்பாக இருக்கலாம் என்று முடிவாகச் சொல்வேன். இல்லாவிட்டால் இடுக்கண் வருங்காலத்தில் அவன் நம்பியிருப்பதற்கு எந்தவிதமான ஏதுவுமில்லாததால் அவன் விதியை நம்பியிருப்பது தவிர வேறு வழியில்லை. தன் குடிமக்களையும் தன்னைச் சார்ந்தவர்களையும் கொண்ட சொந்தப்படைதான் ஓர் அரசனுக்கு என்றும் உதவியாயிருக்கும் மற்றவற்றால் என்றும் நன்மையில்லை.

அரசன் கடமை - போர்ப் பயிற்சி :

ஓர் அரசன் போரைப் பற்றியும், அதற்கு வேண்டிய படையமைப்பைப் பற்றியும், அந்த அமைப்பின் ஒழுங்கைப் பற்றியும் தவிர வேறு எதையும் குறிக்கோளாகக் கொள்ளவோ, நினைக்கவோ கூடாது. வேறு எதையும் தன் ஆராய்ச்சிக்குரிய பொருள்களாகக் கொள்ளக்கூடாது. ஏனெனில் ஆதிக்கஞ்செலுத்தக்கூடிய ஒருவனுக்குத் தேவையான கலை போர் ஒன்றுதான்! அரசரால் பிறந்தவர்களை அந்தத் தகுதியில் நிறுத்தி வைக்கக்கூடிய அறநெறியாக மட்டுமல்லாமல், தனிப்பட்ட மனிதர்களையும் அந்தத் தகுதியுடையவர்களாகச் செய்யக்கூடிய கலை போர் ஒன்றே!

படையெடுப்பைக் காட்டிலும் இன்பக் கேளிக்கைகளைப் பற்றியே அதிகமாக எண்ணக்கூடிய அரசர்கள் வெகு சீக்கிரத்தில் தங்கள் ராஜ்யத்தை இழந்து விடுவார்கள்.

ஆயுதந்தரித்த மனிதனுக்கும் ஆயுதமற்ற மனிதனுக்கும் இடையிலே ஒப்புமை காட்டக்கூடிய விஷயம் ஒன்றுமேயில்லை. ஆயுதபாணியான ஒருவன் ஆயுதமற்ற ஒருவனுக்கு மனதாரக் கீழ்ப்படிந்து நடப்பான் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமே இல்லை. ஆயுதமற்ற ஒருவன் ஆயுதபாணிகள் இடையில் பத்திரமாக இருப்பான் என்று எதிர்பார்ப்பதிலும் அர்த்தமேயில்லை. ஏற்கனவே சொல்லப்பட்ட பல குறைபாடுகளோடு. இராணுவ அறிவும் இல்லாத அரசன் தன் படை வீரர்களால் மதிக்கப்படவும் மாட்டான்; அவர்களிடம் அவன் நம்பிக்கை வைத்திருக்கவும் முடியாது!

ஆகவே, எந்த அரசனும் என்றும் போர்ப் பழக்கத்தைத் தவிர வேறு எதிலும் நாட்டங் கொள்ளவே கூடாது. சமாதான காலத்திலும் கூட அவன் தன் போர்ப்பயிற்சியை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். செயல் மூலமாகவும், படிப்பின் மூலமாகவும் இதை அதிகப்படுத்திக் கொள்ளலாம். செயல் மூலமாகத் தன் பயிற்சியை நடத்துவதற்கு அவன் தன் படை வீரர்களைத் தினமும் பயிற்சிபெறச் செய்தும், ஒழுங்கு முறையுடன் இருக்கச் செய்தும் வருவதோடு அடிக்கடி வேட்டைக்குச் சென்று தன் உடலைக் சுடின உழைப்பிலே பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். வேட்டைக்குச் செல்வதால் அவன் நாட்டையும், நாட்டில் உள்ள காடு மலைகளின் அமைப்பையும் பற்றிய அறிவைப் பெறுகிறான். இவ்வாறு ஒரு நாட்டுப் புறத்தின் அமைப்பைப்பற்றிய இயற்கையறிவையறிந்த ஒருவன் புதிதாகக் காணக்கூடிய வேறொரு நாட்டின் இயற்கையமைப்பைப் பற்றி எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். நாட்டின் இயற்கையமைப்பைப் பற்றிய அறிவு நிரம்பிய அரசன்தான் எதிரியை எவ்வாறு கண்டு பிடிப்பது. எவ்வாறு களம் அமைப்பது, எவ்வாறு படை நடத்துவது, எவ்வாறு போர்த்திட்டம் வகுப்பது, எவ்வாறு கோட்டை பிடிப்பது என்பன போன்ற விஷயங்களை நன்றாகத் தெரிந்து செயலாற்றுவான்.

ஓர் அரசன் தன் மனப்பயிற்சியை வளர்த்துக் கொள்வதற்கு சரித்திரமும் படிக்க வேண்டும். முற்காலத்துப் பெரும் வீரர்களின் செயல்களைப் பற்றியும், அவர்கள் போர்களில் நடந்து கொண்ட முறைகளைப் பற்றியும் அவர்களின் வெற்றி தோல்விகளைப் பற்றியும் ஆராய்ச்சி செய்து வெற்றி வீரர்களின் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

கீர்த்தியும் புகழும் வாய்ந்தவர்களுடைய அருஞ்செயல்களைப் பற்றிப் படித்துச் சமாதான காலத்தைப் பயனுள்ளதாகக் கழிக்க வேண்டும். அந்த அறிவைப் பயன்படுத்திக் காலம் மாறுகின்ற பொழுது எதிரிகளைத் தாக்குவதற்கும், அவர்களிடமிருந்து தன் ராஜ்யத்தைக் காப்பாற்றுவதற்கும். இடுக்கண்களை அடுக்காக தடுப்பதற்கும் ஆயத்தமாயிருக்க வேண்டும்.

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்

ஆற்ற லதுவே படை.

புகழும் இகழும் :

ஓர் அரசன் நல்ல குணங்கள் எல்லாவற்றையும் உடையவனாயிருப்பது போற்றுதலுக்குரியதே. ஆனால், மனித இயற்கை அவை எல்லாவற்றையும் கடைப்பிடிக்க அனுமதிப்பதில்லை. ஆனால் முன்யோசனையுள்ள அரசன் தன்மீது எவ்விதமான பழிச் சொல்லும் ஏற்படாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். தேவைக்குத் தகுந்தபடி நல்லவனாகவும் கெட்டவனாகவும் நடந்து கொள்ளவும் அவன் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

தாராள மனப்பான்மையும் கருமித்தனமும் :

தாராள மனப்பான்மை பற்றி உலகம் கொண்டிருக்கிற உத்தமமான முறையில் அறவழியில் கையாண்டால் அதுவெளியில் தெரியப்போவதுமில்லை; மேற்கொண்டு அதனால் அவமானமும் மாறுபட்ட பயனும்கூடக் கிடைக்கும். ஓர் அரசன் தான் தாராளமானவன் தருமவான் என்று பெயர் எடுக்க விரும்பினால் அதற்கு நிறையப் பொன்னும் பொருளும் வேண்டும். இந்தப் பொன்னையும் பொருளையும் பெறுவதற்கு அவன் வரி விதிக்க வேண்டிவரும். வரிப்பளுவைத் தாங்க முடியாத மக்கள் அவன் உதாரகுணத்தைப் புகழ்வதற்குப் பதிலாக வரிக் கொடுமைக்காகப் பழி தூற்றிப் பேசுவார்கள். பலரின் மனம் நோவச் சிலருக்குத் தான் கொடை கொடுப்பதைவிட அவன் கருமியாக இருப்பதே மேலானது.

கொடுங்கோலன் என்று பெயர் எடுப்பதைக் காட்டிலும் ஈயாத லோபி என்று பெயரெடுப்பதைப் பற்றிப் புத்தியுள்ள எந்த அரசனும் வருத்தப்படமாட்டான். தன் மக்களைச் சுரண்டாமலும் தான் ஏழ்மையடையாமலும், கொள்ளைக்காரனாகப் பிரியப்படாமலும் இருக்கும் அரசன் தான் ஒரு கருமி என்று பெயர் எடுப்பதைப் பற்றிக் கவலைப்பட மாட்டான்.

சில அரசர்கள் தங்கள் படைவீரர்களிடம் மிகத் தாராளமாக நடந்து கொண்டு பெரும் பெரும் காரியங்களைச் சாதித்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். அரசன் தன் கைப்பணத்தைச் செலவழிப்பதாயிருந்தாலும் தன் குடிமக்களின் பணத்தைச் செலவழிப்பதாயிருந்தாலும் தான் கேடுண்டாகும். ஆனால், பிறருடைய பணத்தைத் தாராளமாகச் செலவிடுவதிலே எவ்விதமான நஷ்டமோ அல்லது கஷ்டமோ அவன் அடையப்போவதில்லை. தன் படைகளுடன் எப்பொழுதும், கொள்ளையடிப்பதும், ஆட்களைப் பிடிப்பதும், அவர்களிடம் மீட்புத் தொகை கேட்பதும் இப்படியாகத் தன் வாழ்வை நடத்துகிற அரசனுக்குத் தாராள மனப்பான்மை மிகமிக அவசியமானது. அந்த மனப்பான்மையில்லையானால், படை வீரர்கள் அவனைத் தொடர்ந்து திரிய மாட்டார்கள். தன் பணமும் இல்லை, தன் குடிமக்களின் பணமும் இல்லை ...... யாரோ பகைவர்களுடைய பணம் தன் தாராளத்திற்குப் பயன்படுகிறதென்றால், யாராயிருந்தாலும் மிகத் தாராளமாகத்தான் இருப்பார்கள்.

வெறுப்பையும் பழிப்பையும் உண்டாக்கக் கூடிய கொள்ளைக்காரன் என்ற பெயரை அடைவதைவிட வெறுப்பு இல்லாத பழிப்பை மட்டும் பெறக்கூடிய கருமி என்ற பெயரைப் பெறுவது வரவேற்கத் தக்கதாகும்; அதுவே புத்திசாலித்தனமுமாகும்.

கொடுந்தன்மை :

ஒவ்வோர் அரசனும் தான் கொடுந்தன்மையுடையவனாக மதிக்கப்படுவதைவிட அருளுடையவனாக நினைக்கப்படுவதையே விரும்ப வேண்டும். ஆனால், அவனுடைய அருளுடைமையைத் தவறான முறையில் பயன்படுத்தாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தன் குடிமக்களை உண்மையுள்ளவர்களாகவும் ஒற்றுமையுள்ளவர்களாகவும் இருக்கச் செய்வதற்காக ஓர் அரசன் கொடியவன் என்று குற்றஞ்சாட்டப்படுவதைப் பற்றிக் கவலைப் பட வேண்டியதில்லை. கொடியவன் என்று பெயர் எடுக்கக் கூடியவன் உண்மையில் இளகிய உள்ளம் படைத்தவர்களைக் காட்டிலும் கருணையுள்ளவன் என்று மெய்ப்பித்துக்காட்டலாம். எவ்வாறெனில் இளகிய உள்ளம் படைத்தவர்களின் கருணைக் குணத்தினால், நாட்டிலே ஒழுங்கின்மையும் குழப்பங்களும் ஏற்பட்டு அதனால், பலர் இரத்தஞ் சிந்த வேண்டிய கட்டங்கள் ஏற்படக் கூடும். இதனால், சமூகம் முழுவதுமே துயர்ப்படுவதைக் காட்டிலும், குறிப்பிட்ட தனிப்பட்ட மனிதர்களுக்கு மட்டும் மரண தண்டனை விதிக்கக் கூடிய அரசன் கருணையுள்ளவன் என்று தானே குறிப்பிடப்பட வேண்டும். எல்லா அரசர்களிலும் புதிதாக அரசரானவர்கள் கொடியவர் என்ற குற்றச்சாட்டுக்குத் தப்புவது அரிது. ஏனெனில், புதிய ராஜ்யங்களில் இயற்கையாகவே எப்பொழுதும் ஆபத்துக்கள் நிறைந்திருக்கும்.

ஓர் அரசன் நம்பிக்கை வைப்பதிலும், செயலாற்றுவதிலும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்காக அவன் தன் நிழலையே கண்டு பயப்பட்டு விடவும் கூடாது. அதிகமாக நம்பிக்கை வைத்து எச்சரிக்கையாக இல்லாமல் போய்விடவும் கூடாது. அதிகமாகச் சந்தேகப்பட்டுத் திறமையற்றவனாகிவிடவும் கூடாது.

அரசன் அன்பிற்குரியவனாக இருக்க வேண்டுமா அஞ்சுதலுக்குரியவனாக வேண்டுமா என்று கேட்டால், அஞ்சப்படவும் வேண்டும் அன்பு செய்யப்படவும் வேண்டும் என்று தான் பதிலளிக்க வேண்டும். ஆனால், இரண்டு நிலைமைகளையும் ஒருங்கே அடைவது முடியாதே; இவற்றில் ஒன்றைத்தானே அடைய முடியும் என்று கேட்டால், அன்பிற்காளாவதை விட அச்சத்திற்காளாவதே மிக்க பாதுகாப்பானாது என்று கூறுவேன்.

(தங்களை அன்பு காட்டச் செய்கின்றவனுக்குக் குற்றமிழைப்பதைக் காட்டிலும் அச்சமுறச் செய்கின்றவனுக்குக் குறைவாகவே குற்றமிழைப்பது மனிதர் இயல்பு.) காரணம் என்னவென்றால்; அன்பு மனிதர்களின் சுயநலத்தின் அடிப்படையில் எழுவது. தாங்கள் ஏதாவது நன்மை பெறுகின்றவரையில் அன்பு செலுத்துவார்கள். அது நின்று போனதும் அன்பும் அறுந்து போகும். ஆனால் தண்டனைக்குப் பயப்படுவதால் ஏற்படக் கூடியதாக இருப்பதால், எப்பொழுதும் அவர்கள் உள்ளத்தை விட்டுப் போகாமல் நிலைத்து நிற்கும்.

தான் மக்கள் அன்பைப் பெறாவிட்டாலும் அவர்கள் வெறுப்பதைத் தவிர்க்கக் கூடிய வகையிலே ஓர் அரசன் தனக்கு அவர்கள் அஞ்சும்படி செய்துகொள்ள வேண்டும். அரசன் ஒருவனுடைய உயிரை எடுத்துவிட வேண்டுமென்று எண்ணினால், அதற்குத் தகுந்த காரணமும் நியாயமும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இருக்குமானால் அவன் உடனே குறிப்பிட்ட அந்த மனிதனுடைய உயிரைப் பறித்துவிடலாம். ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் பிறருடைய சொத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்ளவோ பறித்துக்கொள்ளவோ கூடாது. ஏனெனில் தங்கள் தந்தை. இறந்ததை எளிதாக மறந்துவிடுவது மக்கள் இயல்பு, ஆனால் தங்கள் பிதிரார்ஜித சொத்தை இழப்பதை மட்டும் அவர்கள் மறக்கவும் மாட்டார்கள்; பொறுக்கவும் மாட்டார்கள்!

தன் ஆதிக்கத்தில் ஏராளமான போர்வீரர்கள் அடங்கிய படையை வைத்து நடத்துகின்ற ஓர் அரசன் தான் கொடியவனாக எண்ணப்படுவதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் இருக்க வேண்டியது பெரிதும் அவசியமாகும். இந்தப் பெயரெடுக்காத அரசன் ஒரு படையை ஒற்றுமையாகவோ அல்லது எந்தக் கடமையையும் சரிவரச் செய்யக் கூடியதாகவோ வைத்திருப்பது முடியாத காரியம்.

மனிதர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் அரசனை நேசிக்கிறார்கள். ஆனால் அரசனுடைய விருப்பத்தின் பேரில் அவனுக்கு அஞ்சுகிறார்கள். புத்திசாலியான ஓர் அரசன் தன் வசம் இருக்கக் கூடிய ஒன்றைத்தான் நம்பியிருக்க வேண்டுமேயொழிய, பிறர் வசம் இருக்கக் கூடிய ஒன்றை நம்பியிருக்கக் கூடாது. ஆகவே அன்பு செய்யப்படுவதைக் காட்டிலும் அச்சப்படச் செய்வது விரும்பத்தக்கது.

அரசன் எப்படி உண்மையைக் காப்பாற்ற வேண்டும்?

(போரிடுவதில் இரண்டு முறைகள் உண்டு. ஒன்று அற வழியில் நின்று போரிடுவது. மற்றொன்று பலத்தைக் கொண்டு மட்டுமே போரிடுவது. முதல் வழி மனிதர்களுடையது. இரண்டாவது வழி மிருகங்களுடையது) முதல் வழி போதுமானதாக இல்லாததால் இரண்டாவது வழியிலும் செல்ல வேண்டியதாயிருக்கிறது. ஆகவே ஓர் அரசன் இரண்டு முறைகளையும் கையாளத் தெரிந்து வைத்திருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.

(மிருகங்களைப் போல் நடந்துகொள்ள விரும்புகிற அரசன் குள்ள நரியையும் சிங்கத்தையும் பின்பற்ற வேண்டும். சிங்கத்திற்கு வலைகளிலிருந்து தப்பிக்கத் தெரியாது. குள்ள நரிக்கு ஓநாய்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாது. ஆகவே ஓர் அரசன் சதி, சூழ்ச்சி ஆகிய வலைகளை அறிந்து கொள்ளும் குள்ள நரியாகவும், ஓநாய்களை அச்சுறுத்தும் சிங்கமாகவும் இருக்க வேண்டும்).

உண்மையாக அல்லது நேர்மையாக நடந்துகொள்ளக் கூடிய அரசன் தன் நன்மைக்கே கேடு விளைவித்துக் கொள்பவனாகிறான். மனிதர்கள் எல்லோரும் நல்லவர்களாய் இருந்துவிட்டால், இந்த வார்த்தை தவறானதாக இருக்கலாம். ஆனால் அவர்கள் தீயவர்களாக இருப்பதனாலும், தாங்கள் பிறரிடம் நேர்மையைக் கடைப்பிடிக்காதவர்களாக இருப்பதனாலும், அவர்களிடத்தில் உண்மையாயிருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. இதற்குச் சான்றாக, குள்ளநரிச் செயல் புரிந்தவர்களின் கூட்டமே மிகச் சிறந்த வெற்றியை அடைந்திருக்கிறார்கள் என்பதை மெய்ப்பிக்க வரலாற்றிலிருந்து எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் காட்ட முடியும்.

புதிதாக அரசனான ஒருவன் தன் ராஜ்யத்தைக் காப்பாற்ற உண்மைக்கு மாறாகவும், தயாள குணமில்லாமலும், மனிதத் தன்மைக்கு விரோதமாகவும், மதத் துரோகமாகவும் கூட நடந்துகொள்ள வேண்டி நேரிடும். அவன் இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட முடியாது (காற்றடிக்கிற திசையில் வளைந்து கொடுத்துத் தன் காரியத்தை முடித்துக்கொள்ள வேண்டும்)

எந்த அரசனும் தான் எவ்வளவு நியாய விரோதமாக நடந்துகொண்டாலும், அருளும், உண்மையும், நேர்மையும், மனிதத் தன்மையும் மனிதாபிமானமும் உடையவன் போலக் காட்டிக்கொள்ள வேண்டும். ஏனெனில் பெரும்பாலான மனிதர்கள் தங்கள் கண்களால் ஒன்றை மதிப்பிடுவார்களே தவிரக் கையினால் மதிப்பிடுபவர்களாக இல்லை. எல்லோராலும் ஒன்றைக் காண முடியும். ஒரு சிலரால் தான் உணர முடியும்! ஒருவன் தோற்றத்தைக் கொண்டே ஒவ்வொருவரும் அவனை மதிப்பிடுகிறார்கள். மிகச் சிறுபான்மையினர்தாம் அவன் உண்மையில் எப்படிப்பட்டவன் என்பதை அறிந்து கொள்கிறார்கள்.

தற்காலத்தில் ஓர் அரசர், (அவர் பெயரைக் குறிப்பிட நான் விரும்பவில்லை) நேர்மையையும், சமாதானத்தையும் பற்றிப் பஜனை செய்வதைத் தவிர வேறு எதுவும் செய்வதில்லை. ஆனால் உண்மையில் இவை இரண்டுக்கும் நேர் எதிரி-பெரும்பகைவர் அவர். அவர் மட்டும் இந்த இரண்டில் ஒன்றைக் கையாளுபவராக இருந்தாலும் எந்தெந்தச் சந்தர்ப்பத்திலோ தன் ராஜ்யத்தையோ அல்லது தன் கீர்த்தியையோ இழக்க வேண்டி நேர்ந்திருக்கும்!

(பொய்மையும் வாய்மை யிடத்து புரைதீர்ந்த

நன்மை பயக்கு மெனின்.

-திருக்குறள்)

வெறுக்கப்படுவதையும் பழிக்கப்படுவதையும் விலக்கிக்கொள்ள வேண்டும்:

ஓர் அரசன் தன்னை வெறுக்கும்படியும் பழிக்கும்படியுமான காரியங்களை விலக்கிக் கொள்வதில் வெற்றி பெற்றுவிட்டால், வேறு எவ்விதமான தீமையும் அவனுக்குக் கேடு செய்ய முடியாது. கொள்ளைக்காரனாகவும் தன் குடி மக்களுடைய சொத்துக்களையும் பெண்களையும் சூரையாடுபவனாகவும் இருக்கக் கூடிய அரசன்தான் வெறுக்கப்படுவான். அவன் அவ்வாறு செய்யாவிட்டால் மக்கள் மனத் திருப்தியோடிருப்பார்கள். அவன் ஒரு சிலருடைய பேராசையை மட்டுமே எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும். அவர்களை எத்தனையோ வகைகளில் தீர்த்துக் கொள்ளலாம்.

ஓர் அரசன் தீர்மானமில்லாதவனாகவும், அடிக்கடி மாறக் கூடியவனாகவும், அற்ப குணமுடையவனாகவும், கோழைத்தனமும் அச்சமும் உடையவனாகவும் இருந்தால் அவன் நிச்சயம் நிந்தனைக்காளாவான். அவனுடைய செயல்களில் பெருந்தன்மையும், ஊக்கமும், கவர்ச்சியும், ஆண்மையும் இருக்கவேண்டும். அவனுடைய குடிமக்களின் அரசாங்கத்தில் அவனுடைய வார்த்தைக்கு மறுப்பு இருக்கக் கூடாது. அவன் தன் முடிவுகளைக் கடைசிவரை உறுதியாகக் கொள்ள வேண்டும். அவனை ஏமாற்றி விடலாமென்றோ அல்லது மோசம் செய்துவிடலாம் என்றோ யாருக்கும் எண்ணந் தோன்றும்படி உறுதியற்றவனாய் இருக்கக் கூடாது.

தன்னைப் பற்றி ஒரு நல்லெண்ணத்தை உண்டாக்குகிற அரசன் பெருங்கீர்த்தியடைகிறான். பெருங் கீர்த்தியுள்ள அரசன் தன் குடிமக்களால் போற்றப்படுவான். ஆகையால் அவனுக்கு எதிராக சதி செய்வதும், சண்டை புரிவதும் எளிய காரியமல்ல. ஓர் அரசனுக்கு இருக்கக்கூடிய பயமெல்லாம் இரண்டே வகையானவை தாம். ஒன்று தன் குடிமக்களிடையே தனக்கெதிராகச் சதி செய்யப்படுவது; மற்றொன்று, அயலரசர்களால் தாக்கப்படுவது. நல்ல படையமைப்பையும் நல்ல நண்பர்களையும் உடைய அரசன் வெளித்தாக்குதலுக்கு அஞ்சத் தேவையில்லை. சூழ்ச்சிகள் தவிர்க்கப்படுவதற்குச் சரியான வழி மக்கள் கூட்டத்தால் தான் வெறுக்கப்படாமல் செய்வதேயாகும்.

சாதாரணமாகச் சதியில் இறங்குபவன் எவனும் என்ன நினைப்பானென்றால், அரசனைக் கொன்றுவிட்டால் தான் மக்களைத் திருப்தியடையச் செய்துவிடலாம் என்றுதான்! ஆனால் அதே காரியத்தைத் தான் செய்தால், மக்களுக்கு குற்றம் செய்வதாக இருக்குமானால், எவனும் சதி செய்யப் பயப்படுவான்.

சதி செய்கிறவன் மனதில் அச்சமும், சந்தேகமும், பொறாமையும், எப்பொழுதும் குறுகுறுக்கச் செய்து கொண்டிருக்கும். தண்டனை பற்றிய பயமுமே குடி கொண்டிருக்கும். அரசனிடத்திலோ, மிகப் பெரிய அரசாங்கமும், நீதி முறைகளும், நண்பர்களின் பாதுகாப்பும், ராஜ்ய பாதுகாப்பும் எல்லாம் இருக்கின்றன. இத்துடன் மக்களின் நல்லெண்ணமும் சேர்ந்துவிட்டால் எவருக்கும் சதி செய்ய வேண்டுமென்ற எண்ணமே தோன்ற மார்க்கமில்லை. சதி செய்பவன் ராஜவிசுவாசமுள்ள மக்களையும் தன் எதிரிகளாக மதிக்க வேண்டிய நிலை இருப்பதால், சதி கண்டு பிடிக்கப்பட்டுத் தண்டனையடையும் சமயத்தில், புகலடையும் இடமில்லாமல் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். ஆகையால் சதியைப் பற்றி நினைக்கவேமாட்டான்.

மக்கள் ஒழுங்காக வாழ்க்கை நடத்தும் காலத்தில் எந்தவிதமான சதியைப் பற்றியும் அரசன் கவலைப்பட வேண்டியதேயில்லை. ஆனால் மக்கள் அரசனை எதிரியாக நினைத்து வெறுக்கும்படியான நிலையிருக்குமானால், அவன் ஒவ்வொன்றிற்கும், ஒவ்வொருவருக்கும் பயந்து கொண்டேயிருக்க வேண்டும். நல்ல நிலையில் உள்ள ராஜ்யங்களும், புத்திசாலியான அரசர்களும் ஆறுதலற்ற நிலைக்குப் பிரபுக்களை அடித்தோட்டிவிடாமலும், மக்களை மன நிறைவோடு வைத்திருக்கவும் மிகவும் கவனமாக முயற்சி எடுத்துக் கொள்வதுண்டு. ஏனெனில் ஓர் அரசன் கண்காணிக்க வேண்டிய மிகவும் முக்கியமான விஷயங்களிலே இதுவும் ஒன்று.

கோட்டைகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும்!

தங்கள் உடைமைகளைப் பத்திரமாய்க் காப்பாற்றிக் கொள்வதற்காகச் சில அரசர்கள் தங்கள் குடி படைகளை நிராயுத பாணிகளாக்கியிருக்கிறார்கள். சிலர் குடிமக்களின் நிலங்களை பல பகுதிகளாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். வேறு சிலர் மக்களுக்குள்ளேயே பகைமைகளை வளர்த்து விட்டிருக்கிறார்கள். சிலர் தங்கள் ஆட்சியின் தொடக்க காலத்தில் சந்தேகத்திற்குரியவர்களாயிருந்தவர்களைத் தங்கள் வசப்படுத்த முயன்றிருக்கிறார்கள். சிலர் கோட்டைகளை எழுப்பியிருக்கிறார்கள். வேறு சிலர் அவற்றையிடித்துத் தரைமட்டமாக்கியிருக்கிறார்கள். இந்த விஷயங்களைப் பற்றி ஆராயுமுன் அந்தந்த அரசின் நிலைமைகளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டால் தான் சரியான முடிவு சொல்ல முடியும். இருந்தாலும் கூடுமானவரை பொதுப்படையாகப் பேசலாம்.

ஒரு புதிய அரசன் தன் குடி படைகளை நிராயுதபாணியாக்கியதே கிடையாது. அவன் அவர்களை ஆயுதபாணியாக்குவதன் மூலம் அவர்களைத் தன் வைரிகளாக்குகிறான். சந்தேகத்திற்குரியவர்கள் இந்தச் செயலினால் நம்பிக்கைக்குரியவர்களாக மாறுகிறார்கள். நம்பிக்கைக்குரியவர்களோ, அதே நிலையில் இருக்கிறார்கள். ஒருவன் தன் குடிமக்கள் எல்லோரையும் ஆயுதபாணிகளாக்க முடியாது. சிலரையே ஆயுதபாணிகளாக்க முடியும். இவ்வாறு செய்வதால் மற்றவர்களுடன் மிகவும் பாதுகாப்பாகத் தொடர்பு கொள்ளலாம்.

ஓர் அரசன் தன் குடிமக்களை நிராயுத பாணிகளாக்கினால் அவர்களிடம் தன் உறுதியின்மையாலோ அல்லது கோழைத்தனத்தினாலோ அவர்களிடம் தன் நம்பிக்கையின்மையைக் காட்டிக் கொண்டவனாகிறான். இதனால் அவர்கள் வெறுப்புக்காளாகிறான்.

ஆயுதபாணிகள் இல்லாமல் ஓர் அரசன் ஒரு நாட்டை ஆள முடியாதாகையால், கூலிப் படைகளின் உதவியை நாட வேண்டியிருக்கும். அவற்றின் தன்மையை நாம் முன்னே அறிவோம். அந்தக் கூலிப்படைகள் நல்லவையாக இருந்தால் கூட ஆற்றல் மிகுந்த பகைவர்களிடமிருந்தும் சந்தேகப்படக் கூடிய குடிகளிடமிருந்தும் அரசனைக் காப்பாற்ற முடியாது. ஆகவே, புதிய அரசிலுள்ள எந்தப் புதிய அரசனும் தன் குடிபடைகளை எப்பொழுதும் ஆயுதபாணிகளாக வைத்திருக்கவே செய்வான்.

ஆனால், ஏற்கனவே ஒரு பழைய ராஜ்யத்தையுடைய அரசன் ஒரு புதிய ராஜ்யத்தை ஆக்கிரமித்துக் கொண்டால், அந்த மக்களை நிராயுதபாணிகளாக்கிவிடுவான். அந்த மக்களின் ஆயுதங்கள் அனைத்தையும் தன் சொந்தப் படைகளின் உடைமையாக்கி விடுவது நல்லது.

சில அரசர்கள் எதிர்ப்பிலேயே உயர்ந்து ஓங்குகிறார்கள். அதற்காக அவர்கள், பகைவர்களை உண்டாக்கிக் கொண்டு போராடிப் பல வெற்றிகள் பெற்றுப் பெரும் கீர்த்தியடைவதுண்டு.

அரசர்கள், அதிலும் புதிதாக அரசரானவர்கள், ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த காலத்தில் தங்கள் நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்தவர்களைக் காட்டிலும் சந்தேகத்திற்கு உரியவர்களாய் இருந்தவர்கள் மிக உண்மையும் பயனும் உடையவர்களாய் இருந்திருப்பதைக் கண்டிருக்கிறார்கள்.

சில குடிமக்கள் தங்கள் ராஜ்ய ஆட்சி பிடிக்காமல் இரகசியமாக வேறோர் அரசனைக் கூட்டிவந்து தங்கள் நாட்டரசனாய் ஆக்குவதுண்டு. இப்படி அரசரானவர்கள் நெடு நாள் நிலைத்திருக்கமாட்டார்கள். ஏனெனில், தங்கள் நிலைமையில் திருப்தி காணாதவர்களைத் திருப்திப்படுத்துவதென்பது இயலாத காரியம். தங்கள் நிலைமையில் திருப்தியடையக் கூடியவர்களை முதலில் பகைவர்களாய்ப் பெற்றாலும் கூடப் பிறகு நண்பர்களாக்கிக் கொள்வது எளிது.

சில மன்னர்கள் தங்கள் ராஜ்யங்களைப் பத்திரமாகக் காப்பாற்றுவதற்காகவும் பகைவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காகவும் திடீர்த் தாக்குதலுக்குத் தற்காத்துக் கொள்ளவும் கோட்டைகளைக் கட்டிக் கொள்வதுண்டு. இது பழைய முறை என்பதற்காக வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம்.

கோட்டைகள் காலத்திற்கும் சூழ்நிலைக்கும் தகுந்தாற்போல் பயனுள்ளவையாகவும் பயனற்றவையாகவும் இருக்கலாம். சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். அன்னியரைக் காட்டிலும் தன் மக்களுக்கு அதிகமாகப் பயப்படுகிற அரசனுக்குக் கோட்டைகள் இன்றியமையாதவை. ஆனால் தன் மக்களைக் காட்டிலும் அன்னியருக்கு அதிகமாகப் பயப்படுகிறவனுக்குக் கோட்டைகள் அவசியமில்லை.

உண்மையான-மிகச் சிறந்த கோட்டை மக்களின் அன்பின் அடிப்படையில் எழுப்பப்படுவதேயாகும். ஏனென்றால் எத்தனை கற்கோட்டைகள் வைத்திருந்தாலும் மக்கள் வெறுப்புக்காளான அரசனை அவை காப்பாற்ற முடியாது.

கீர்த்தியடைய வழி :

செயற்கருஞ்செயல்களையும், தன் பராக்கிரமத்தைக் காட்டிக் கொள்வதும் போல, அரசனை மதிப்படையச் செய்வது வேறில்லை. நிர்வாகத்திலும் உயரிய தன்மையை வெளிப்படுத்தக் கூடிய செயல்கள் சிலவற்றைச் செய்வது அவனுக்குப் பெரிதும் பயனளிக்கும். யாராவது ஒருவர் ஏதாவது ஒரு அசாதாரணமான காரியத்தைச் செய்தால், அப்பொழுது அவற்றின் நன்மை தீமைக்குத் தகுந்தபடி பாராட்டி வெகுமதியளித்தலும் அல்லது தண்டித்தலும் வேண்டும். இச்செயல்கள் பற்றி எங்கும் பேசும்படியாக இருக்க வேண்டும். அரசனும் தான் மிகப்பெரியவனாகவும் மிகத் திறமையுள்ளவனாகவும் புகழ் பெற்று இருப்பதற்குரிய செயல்களில் ஈடுபட வேண்டும்.

தன் அருகாமையில் உள்ள இரண்டு அரசர்களுக்கிடையே போர் ஏற்படும் காலத்தில் அவன் நடுநிலை வகிக்கவே கூடாது. ஏதாவது ஒரு பக்கம் சேர்ந்து கொள்ள வேண்டும். இரண்டு பேரில் ஒருவர் வெற்றியடைந்தால் வெற்றியடைந்தவனுக்கே இந்த அரசன் பயப்பட வேண்டும்.

இல்லாவிட்டால் பயப்பட வேண்டியதில்லை. யாராவது ஒருவர்பக்கம் சேர்ந்து தானும் போரில் இறங்க வேண்டும். அவ்வாறு இறங்காவிட்டால், வெற்றி பெற்றவனுக்குத்தான் இரையாக நேரிடும். அந்தச் சமயத்தில் தனக்கு உதவி செய்ய ஆளில்லாது திண்டாட வேண்டி நேரிடும். ஏனெனில் நடுநிலை வகித்தவன் சந்தேகத்திற்குரியவனாகையால் வெற்றி பெற்றவன் அவனை நண்பனாகக் கருதமாட்டான். தோல்வியுற்றவனோ, தனக்கு உதவி செய்யாதவனைக் காக்க முன் வரமாட்டான்.

நட்பாக இல்லாத ஒருவன் தான் இந்த அரசன் நடுநிலை வகிக்க வேண்டுமென்று விரும்புவான். நட்புடைய அரசனோ, தனக்கு உதவியாக இவன் படையெடுத்து வர வேண்டுமென்றுதான் விரும்புவான். இது உலகத்தியற்கை ஒருமனம் இல்லாத அரசர்கள்தாம். ஆபத்திலிருந்து விலகி நிற்கவேண்டுமென்ற எண்ணத்துடன் நடுநிலைமைக் கொள்கையைக் கடைப்பிடிப்பார்கள். பெரும்பாலும் அதனால் அழிவையே காண்பார்கள். ஆனால், பொருதுகின்ற இருவரில் ஒருவர் பக்கம், வெளிப்படையாகச் சேர்ந்து கொள்ளும் பொழுது, அப்படித்தான் சேர்ந்த பக்கந்தான் வெற்றி பெற்றாலும், அவன் தன்னைக்காட்டிலும் வல்லமை மிகுந்தவனாயிருந்தாலும், தான் அவனைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தாலும், அவன் தனக்குக் கடமைப்பட்டவனாக இருப்பான்; நட்பும் உறுதிப்படும். ஆனால், தான் சேர்ந்து கொண்ட பக்கந்தான் தோல்வியுற்றாலும் கூட, அவன் அவனால் முடிந்த வரையிலும் தனக்கு உதவி செய்வதையும் தன்னைக் காப்பாற்றுவதையும் கடமையாகக் கொண்டு செயலாற்றுவதைக் காணலாம். மீண்டும் ஒருவனுடைய கூட்டுறவினால் உயர்வதற்கு முடியும்: வழியுண்டு. இந்த விஷயத்தில் வெற்றி பெற்றவனுக்கு அஞ்சத் தேவையில்லை. ஏனெனில் தான் அழிவை அடையும்போது தன்னுடன் இன்னொருவன் துணையோடேயே ஆழிவதால், அவன் தன்னைக் காப்பாற்றக் கடமைப்பட்டவனாகிறான். பெரும்பாலும், உதவியைப் பெற்றவன் வெற்றி பெறாமற் போகமாட்டான்.

இங்கே இன்னொரு விஷயம் கவனிக்கப்பட வேண்டும். தன்னைக் காட்டிலும் அதிக வல்லமையுள்ளவன் ஒருவன் மற்றொருவனை அடித்து வீழ்த்துவதற்குத் தான் துணை போகவே கூடாது: இன்றியமையாத தேவையிருந்தாலொழிய!

நான் சற்று முன் சொன்னபடி தான் அவனைச் சார்ந்திருக்கவேண்டிய நிலை ஏற்படும். ஆகையால் அரசர் கூடுமானவரையிலும் பிறர் விருப்பப்படி நடக்கும் நிலைமைக்கு ஆட்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.

எந்த ராஜ்யமும் தான் எப்போதும் பாதுகாப்பான கொள்கையைப் பின்பற்றலாம் என்றோ, அல்லது எப்போதும் ஐயத்திற்கிடமான நிலையில் இருக்கவேண்டுமென்றோ எண்ணக்கூடாது. இது அந்தந்த நிகழ்ச்சிகளைப் பொறுத்தது. ஒருவன் ஒரு கஷ்டத்தைத் தீர்க்க வேண்டுமென்றால், இன்னொரு கஷ்டத்தில் மாட்டிக்கொள்ளும்படியும் நேரிடலாம். ஆனால் அந்தக் கஷ்டங்களின் தன்மையை அறிந்து துன்பம் குறைவாயுள்ளதை நல்லதாக எண்ணிக் கொள்வதே புத்திசாலித்தனம்.

கீர்த்தியடைய விரும்புகின்ற அரசன் தகுதி உடையவர்களை விரும்புபவனாக்கி காட்டிக் கொள்ள வேண்டும். திறமையுடையவர்களுக்கும் ஒவ்வொரு கலையிலும் மேம்பாடடைந்தவர்களுக்கும் சிறப்புச் செய்ய வேண்டும். தன் குடிமக்கள் தங்கள் உழவு. வாணிகம் முதலிய வாழ்க்கைத் துறைகளில் நன்றாக ஈடுபடும்படி. உற்சாகமளிக்க வேண்டும். ராஜ்யத்திற்கு நலமளிக்கக் கூடிய காரியங்களைச் செய்தவர்களுக்குப் பரிசுகள் வழங்க வேண்டும். ஆண்டுதோறும் இடையிடையே திருவிழாக்கள் நடத்தி அந்த விழாக்களில் மக்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

அமைச்சர்கள் :

ஓர் அரசன் தன் அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியத்துவமில்லாத காரியமல்ல. அவர்கள், அரசனின் புத்திசாலித்தனத்திற்கேற்ப நல்லவர்களாகவோ கெட்டவர்களாகவோ இருக்கிறார்கள். அந்த அமைச்சர்களைப் பார்த்தே அரசனுடைய குணத்தையும் புத்திசாலித்தனத்தையும் எடைபோட்டுக் கொள்ளலாம்.

உலகத்தில் மூன்று விதமான மூளைகள்

இருக்கின்றன. ஒன்று தானாக விஷ்யங்களை

யூகித்தறிந்து கொள்கிறது. இது நல்ல மூளை.

இரண்டாவது, மற்றவர்கள் எடுத்துச் சொல்லிய

பிறகு தெரிந்து கொள்கிறது. இதுவும் நல்ல

மூளைதான்.

ஆனால் மூன்றாவதோ தானாகவும் அறிந்து கொள்வதில்லை; பிறர் விளக்கியும் அறிந்து கொள்வதில்லை. இது பயனற்றது. இதில் முதல் இரண்டு வகை மூளைகளையுடையவர்களைத் தான் அரசன் தன் அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்.

ஓர் அமைச்சன் தன் அரசனைக் காட்டிலும் தன்னையே உயர்வாக மதித்தும். எந்தக் காரியத்தையும் தன் இலாபத்திற்காகவே செய்தும் வரக்கூடியவனாக இருந்தால் அவனை நம்பியிருக்கவே முடியாது.

பொதுவாக ஓர் அரசன் தன் அமைச்சர்களுக்கு கௌரவங்களும், பொறுப்புள்ள வேலைகளும், செல்வமும் செல்வாக்கும் நிறைய அளித்து அவர்கள் அதற்கு மேற்பட்ட ஆசைகொள்ளாதிருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தன் பதவியில் மாறுபாடு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அமைச்சன் பயந்து கொண்டிருக்கும்படியும் செய்ய வேண்டும்.

இப்படிப்பட்ட உறவு நிலை அரசனுக்கும் அமைச்சனுக்கும் இடையில் இருந்தால் அவர்கள் ஒருவரையொருவர் நம்பியிருக்க முடியும். இல்லா விட்டால், இருவரில் ஒருவருக்குத் தீமையே உண்டாகும்.

முகஸ்துதி:

முகஸ்துதி மனிதர்களை அறிவிழக்கச் செய்து விடுகிறது. இந்த முகஸ்துதியிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சிலர் அலட்சியவாதிகளாக நடந்து கொள்கிறார்கள். இப்படி நடந்து கொள்பவர்களிடம் எல்லோரும் உண்மையையே பேசவேண்டுமென்பதை அறிந்து கொள்ள வாய்ட்பேற்படுகிறது. ஆனால் எல்லோரும் உண்மையையே பேசினாலும் அவர்களுடைய தகுதிகளை உணர முடியாது.

விவேகியான ஓர் அரசன் வேறொரு வழியைக் கையாளுகிறான். தன் ஆலோசனை சபையில் அறிவாளிகளைச் சேர்த்து அவர்களை மட்டுமே தன்னிடம் உண்மைகளைப் பேசும்படி செய்கிறான். ஆனால், அவர்களும் தான் கேட்கும் விஷயங்களைப்பற்றி மட்டுமே பேச உரிமை கொடுக்கிறான். அப்படி அவர்கள் கூறிய விஷயங்களையும் அப்படியே ஏற்றுக்கொண்டு விடாமல் தன் போக்கில் ஆராய்ந்து முடிவு செய்து கொள்கிறான். தன் முடிவில் அவன் உறுதியாகவும் நிற்கிறான். இப்படியில்லாமல், முகஸ்துதிக்கேற்ப முன்யோசனையில்லாமல் நடப்பவனும், வெவ்வேறுவிதமான கருத்துக்களுக்கேற்ப மாறி மாறி நடப்பவனும் மதிக்கப்படமாட்டான்.

ஓர் அரசன் தான் விரும்புகிறபோது ஆலோசனை சபையைக் கூட்ட வேண்டுமேயில்லாமல், தான் கேட்காமலே தனக்கு யோசனை செய்ய முற்படுவதைத் தடுக்க வேண்டும். ஆனால், கேள்விகள் கேட்பதில் மிகப் பெரியவனாகவும் சொல்லப்படும் உண்மைகளை ஊன்றிக் கவனிக்கும் பொறுமையுடையவனாகவும் அவன் இருக்க வேண்டும். ஓர் அரசன் அறிவுள்ளவன் என்பதை அவன் இயல்பைக் கொண்டு பார்க்கவேண்டியதில்லை என்றும், அவனுடைய ஆலோசனையாளர்களைக் கொண்டே தீர்மானித்துவிடலாம் என்றும் நினைப்பவர்கள் ஏமாற்றமடைகிறார்கள்.

தானே புத்திசாலியாக இல்லாத அரசன், சரியான யோசனைகளை அறிந்து கொள்ளக் கூடியவனாக. இருக்கமாட்டான். சொல்லப்படும் ஆலோசனைகளை ஒன்று சேர்த்து ஒரு முடிவுக்கு வர அவனால் முடியாது. அப்படிப்பட்டவனிடம் ஆலோசனையாளர்கள் தங்கள் நன்மைகளைச் சாதித்துக் கொள்ளும் நோக்கத்தோடு தான் நடந்து கொள்வார்கள். அவர்களைப் புரிந்து கொள்ளவோ திருந்தவோ முடியாதவனாக அவன் இருப்பான். எவ்வளவு புத்திசாலித்தனமான யோசனையாகயிருந்தாலும், அது யாரிடமிருந்து வந்தாலும், அரசனும் புத்திசாலியாக இருந்தால்தான் ஒப்பேறும். ஆகவே, புத்திசாலித்தனமான யோசனைகளைக் கொண்டு அரசனைப் புத்திசாலியாக மதிக்க முடியாது.

எப்பொருள் பார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

- திருக்குறள்

தன்கையே தனக்குதவி :

இதுவரை குறிப்பிட்ட விஷயங்களை நல்லறிவோடு பின்பற்றி வந்தால், எந்தப் புதிய அரசனும், நீண்ட நாளாக அரசராயிருந்து வருகிறவர்களைக் காட்டிலும் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும், வசதியாகவும் தன் நிலையைக் காப்பாற்றிக் கொள்ளலாம். பரம்பரையரசனைக் காட்டிலும் புதிய அரசன் தான் என்னென்ன செய்கிறான் எப்படியெப்படி செய்கிறான் என்று அதிகமாகக் கவனிக்கப்படுகிறான்.

ஒரு புதிய அரசன் மக்கள் இதயத்தைக் கவர்ந்துவிட்டால் அவர்கள் அவனுக்குப் பெரிதும் கட்டுப்பட்டு நடக்கிறார்கள். பழைய இரத்த வாரிசுகளைக் காட்டிலும் அவனைப் போற்றுவார்கள். ஏனெனில் மக்கள் தாங்கள் வாழும் தற்காலத்தைப் பற்றியே அதிகம் கவலைப்படுவார்களே தவிர இறந்தொழிந்து சாவதைப்பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை. மற்ற விஷயங்களில் குறைபாடில்லாமல் இருந்தால் மக்களே அரசனுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள். ஒரு புதிய அரசை ஏற்படுத்தி அதற்கு நல்ல நீதி முறையையும், நல்ல படையமைப்பையும் நல்ல நட்புறவுகளையும் ஏற்படுத்திய அரசன் இரட்டிப்பு கீர்த்தியடைகிறான். மன்னனாகவே பிறந்து மதியில்லாமல் தன் அரசுரிமையை இழந்தவன் இரட்டிப்பு நிந்தனைக்காளாகிறான்.

பல ஆண்டுகளாகத் தங்கள் உடைமையாக இருந்த ராஜ்யத்தை இழக்கும்படி நேர்ந்தால் அதற்காக அரசர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை - நோவது அர்த்தமற்றது. தங்கள் அசட்டுத்தனத்திற்குத்தான் வருந்த வேண்டும். ஒரு சில அரசர்கள் ஆபத்துக் காலத்தில் நாட்டைக் காப்பதற்குப் பதிலாக நாட்டை விட்டுவிட்டு ஓடுவதற்கே நினைத்திருக்கிறார்கள். ஆக்கிரமிப்பாளர்களின் அகந்தையைக் கண்டு கோபமுற்ற மக்கள் அவர்களை எதிர்த்து நின்று விரட்டிவிட்டுத் தங்களைத் திரும்பவும் அழைத்து அரசுகட்டிலில் ஏற்றுவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். மற்றவர்களுக்குத் தேவையிருக்கும் வரையில் இந்த - நடவடிக்கை நல்லது தான். ஆனால், பாதுகாப்பு ஏற்பாடுகளையெல்லாம் கைவிட்டு ஓடுவதுபோல் அதிமோசமான காரியம் வேறு எதுவும் இல்லை. மற்றவர்கள் தூக்கிநிறுத்துவார்கள் என்பதற்காக ஒருவன் வீழ்ச்சியடைவது விரும்பத்தக்கதில்லை. ஓர் அரசன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வழி இதுவல்ல. ஏனெனில், தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளாமல், ஒரு கோழையைப் போல் மற்றவர்களால் காப்பாற்றப் படுகிற இழிவான வழி இது. தன்னைத் தானே நம்பித் தன் சொந்தத் திறமையை நம்பித் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முற்படுவதே நல்லது, உறுதியானது, நிலையானது!

காலகாறிதல் :

தன் பண்பாட்டிலோ வேறு விதத்திலோ எவ்விதமான மாறுபாடும் அடையாத ஓர் அரசன் இன்று அதிர்ஷ்டத்துடன் சிறப்பாயிருக்கிறான். நாளை அழிந்து போகிறான். இதற்குக் காரணம் என்னவென்றால், அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பியிருக்கக் கூடியவன் அதிர்ஷ்டம் மாறும்போது தானும் வீழ்ந்து விடுகிறான் என்பதே. அது போலவே காலத்திற்குத் தகுந்தபடி நடந்து கொள்கின்றவன் இன்பமாகவும் காலப் போக்கிற்கு மாறாக நடந்து கொள்கிறவன் துன்பப்பட்டுக் கொண்டும் இருக்கிறான் என்றே நான் எண்ணுகிறேன். செல்வமும் கீர்த்தியும் அடையும் விஷயத்தில் மனிதர்கள் வெவ்வேறு விதமான வழிகளைக் கையாளுகிறார்கள். ஒருவன் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு நடக்கிறான்: மற்றொருவன் மும்முரமான வேகத்தோடு நடந்து கொள்கிறான். ஒருவன் மூர்க்கமாக நடந்து கொள்கிறான்; மற்றொருவன் தந்திரமாக நடந்து கொள்கிறான். ஒருவன் பொறுமையைக் கையாளுகிறான்; ஒருவன் அதற்கு மாறுபாடான முறையைக் கையாளுகிறான். இப்படிப் பல்வேறுபட்ட வழிகளில் செல்பவரும் தத்தம் குறிக்கோள் நிறைவேறக் காணமுடியும். முன்னெச்சரிக்கையுள்ள இரண்டு மனிதர்களில் ஒருவன் தன் குறிக்கோளில் வெற்றியடைவதையும் மற்றொருவன் தோல்வியடைவதையும் காண்கிறோம். அதுபோலவே முன்னெச்சரிக்கையுள்ளவன் ஒருவனும், அவசரக்காரன் ஒருவனும் வெவ்வேறு காலத்தில் தங்கள் குறிக்கோளில் வெற்றியடைவதையும் காண்கிறோம். இப்படியெல்லாம், நிகழ்வதற்குக் காலமும் சூழ்நிலையும் காரணம் என்றுதான் சொல்ல வேண்டும். காலத்திற்குத் தகுந்தபடி தன் செயல்முறையை வகுத்துக் கொள்ளாதவன் தோல்வியடைகிறான். எவ்வளவு முன்னெச்சரிக்கையுடைய வனாயிருந்தாலும் தகுந்த காலம் வரும்போது சட்டென்று விரைந்து செய்து முடித்தால் ஒழிய வெற்றி பெற முடியாது. காலத்திற்கும் சூழ்நிலைக்கும் தகுந்தபடி தன் திட்டங்களையும் செயல்முறைகளையும் வகுத்துக் கொள் கிறவனிடம் அதிர்ஷ்டம் என்றும் மாறாமல் நிலைத்து நிற்கும்.

(ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

கருதி இடத்தாற் செயின்

-திருக்குறள்)

இத்தாலி பரதேசிகளிடமிருந்து விடுதலை பெற யோசனை:

அரசே. இதுவரை இருந்த இத்தாலியர்கள் யாரும், தாங்கள் செய்யக்கூடும் என்று நம்புகிற அளவு பெருங்காரியத்தைச் செய்ததில்லை. இதுவரை நடந்த கலகங்களிலும், போர் நடவடிக்கைகளிலும் இத்தாலியின் இராணுவத் திறமை அடியோடு ஒழிந்து போனது போன்றே தோன்றுகிறது. அதற்குக் காரணம், பழைய முறைகள் நல்லவையல்ல என்பதே. புதிய முறைகளைக் கண்டுபிடிப்பது எப்படி என்று அறிந்தவர்கள் இதுவரை தோன்றியதில்லை. புதிதாகத் தோன்றிய ஒருவர் புதிய நீதிமுறைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுவதைப் போல் சிறப்பானது வேறு ஒன்றும் இல்லை.

இந்த நாட்டினரிடத்திலே பெரும் பண்புகள் இருக்கின்றன. ஆனால், தலைமை ஏற்று நடத்தியவர்களின் தலையிலேதான் எதுவும் இருந்ததில்லை. போட்டிகளிலும் தனி மனிதர்கள் நேருக்கு நேர் நின்று போராடும் நிகழ்ச்சிகளிலும் இத்தாலியர்கள் எவ்வளவு பலமும், புத்திசாலித்தனமும், சாமர்த்தியமும் காட்டுகிறார்கள். ஆனால், படையென்று வரும்பொழுது அவர்கள் எவ்வளவு மோசமாகத் தோன்றுகிறார்கள். இதற்குக் காரணம் தலைவர்களிடம் உள்ள பலவீனம்தான். தாங்கள் சரியாகக் கீழ்ப்படியப்படவில்லை என்று அறிந்தும் அந்த நிலைக்கு அவர்கள் தங்களை உயர்த்திக் கொள்ள முயன்றதில்லை. இதனால்தான் கடந்த இருபதாண்டுகளில் எந்தச் சண்டையிலும் இத்தாலியப் படைகள் தோல்வியையே தழுவி வந்திருக்கின்றன.

ஆகவே, ஒளி பொருந்திய தங்கள் ஆஸ்தானம், தங்கள் நாடுகளை ஈடேற்றிய அந்தப் பெரிய மனிதர்களின் வழியைப் பின்பற்ற விரும்பினால், முதற்காரியமாக தங்களுக்கென்று சொந்தமான ஒரு படையமைப்பை ஏற்படுத்த வேண்டும். அந்தச் சொந்தப் படைவீரர்களைக் காட்டிலும் உண்மையும் சிறப்பும் பொருந்திய வீரர்களை வேறு எங்கும் காணமுடியாது. அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே மிக நல்லவர்களாயிருந்தாலும் கூடத் தங்கள் அரசன் தலைமையில் இயங்கும்போது, அவனால் சிறப்பாகவும் ஆதரவாகவும் நடத்தப்படும்போது ஒற்றுமையாகவும் நன்றாகவும் இயங்குவார்கள்.

அந்நியரிடமிருந்து நம் நாட்டைப் பாதுகாக்க இப்படிப்பட்ட பராக்கிரமமுள்ள இத்தாலியப் படையை உண்டாக்க வேண்டியது இன்றியமையாதது. சுவிஸ் தேசத்துக் காலாட் படைகளும், ஸ்பானியக் காலாட்படைகளும் பயங்கரமானவை என்றாலும் அவ்வவ்வற்றிற்குரிய குறைபாடுகள் இல்லாமல் இல்லை.

ஸ்பானியர்களின் காலாட்படை குதிரைப் படைகளை எதிர்த்து நிற்க முடியாது. பிரெஞ்சுவின் தேசத்தாரின் படைகளோ, தமக்குச் சமமான பலமுள்ள படைகளை எதிர்த்து நிற்க முடியாது. பிரெஞ்சு குதிரைப் படைகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஸ்பானியப் படைகள் திணறியதையும் ஸ்பானியக் காலாட்படையால் ஸ்விஸ் படைகள் வீழ்த்தப்பட்டதையும் அனுபவத்தில் பார்த்திருக்கிறோம். இன்னும் பல நிகழ்ச்சிகளையும் கண்டிருக்கிறோம். ஆகவே, குதிரைப் படைகளை எதிர்த்து நிற்கக் கூடியதும், காலாட்படைகளுக்குப் பயப்படாததுமான ஒரு புதிய படையமைப்பை உண்டாக்க வேண்டும். இப்படிப் புதிதாக உண்டாக்கப்படுகின்ற படை புதிய அரசனுக்குப் பெருமையையும் புகழையும் தேடித் தரும். கடைசியாக இத்தாலி தன்னை விடுவிக்கக் கூடிய ஒருவரைக் கண்டுபிடித்துவிட்ட இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட்டு விடக்கூடாது. அன்னியர் படையெடுப்பால் அவதிப்பட்ட மக்கள், பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் மக்கள், இப்படிப்பட்ட விடுதலை வீரனிடம் எவ்வளவு அன்பு பாராட்டுவார்கள். எவ்வளவு உண்மையாக இருப்பார்கள், எவ்வளவு நன்றிக் கண்ணீர் வடிப்பார்கள் என்று என்னால் விவரிக்க முடியாது. அவனுக்கெதிராக எந்தக் கதவு மூடியிருக்கும்? யார் அவனுக்குக் கீழ்ப்படிய மறுப்பார்கள்? எந்தப் பொறாமை அவனை எதிர்த்து நிற்க முடியும்? மிலேச்சர்களுடைய ஆதிக்கம் ஒவ்வொருவருடைய மூக்குத் துவாரத்தையும் கொத்திக்கொண்டிருக்கிறது. ஆகவே, ஒளி பொருந்திய தங்கள் ஆஸ்தானம் ஆண்மையோடும், நியாயத்திற்காகப் போராடுகிறோம் என்ற நம்பிக்கையோடும் இந்தக் காரியத்தை மேற்கொண்டு நமது வெற்றிக் கொடியின் கீழே நம் தந்தையர் நாடு தலை நிமிர்ந்து நிற்கச் செயலாற்ற முனைவீர்களாக!

“இத்தாலியர்களின் முன்னைப் பெருமை இறந்துவிடவில்லை. இன்னும் இதயத்தைத் தூண்டிக்கொண்டுதான் இருக்கிறது!” என்ற பெட்ரார்ச்சின் மொழி நிறைவேற்றப்படுமாக!

⁠மாக் - 5

* * *

நூல் சுருக்கம் : 2

டிட்டஸ் லீவியசின் முதல் பத்துப்

புத்தகங்களைப் பற்றிய ஆராய்ச்சி

(Discourses On The First Ten Books Of Titus Livius)

* * *

மாக்கியவெல்லியின் முன்னுரை

பழங்காலத்து அற்புதச் சிற்பங்களைக் காணும்போது அவற்றைப் பெரிதும் போற்றி நம் வீடுகளில் அலங்காரமாக வைத்துக் கொள்ள விரும்புகிறோம். அந்தச் சிற்பங்களைப் பெறவோ, அவை போல் உருவாக்கவோ நாம் அவற்றை வைத்திருப்போருக்கோ, செய்வோருக்கோ பெரும் விலை கொடுக்கிறோம். ஆனால், தங்கள் தங்கள் நாட்டுக்காகத் தங்களையே தியாகம் செய்த பழங்காலத்து மன்னர்களைப் பற்றியும், படைத் தலைவர்களைப் பற்றியும் மக்களைப் பற்றியும் சரித்திரத்தில் படிக்கும்போது, அவர்களின் ஞானத்தையும் அறநெறியையும் கண்டு ஆச்சரியப்படுகிறோமே தவிர அவற்றைப் பின்பற்ற எண்ணுவதில்லை. பழைய அறநெறியின் அடையாளமே இல்லாதபடிக்கு நாம் அதைப் புறக்கணித்து வருவதைக் கண்டு வருந்தாமலிருக்க முடியவில்லை.

அந்தக் காலத்து மருத்துவர்களின் அனுபவங்களின் அடிப்படையில் எழுந்ததே இன்றைய மருத்துவ விஞ்ஞானம். அதுபோலவே, இன்றைய சட்டங்களெல்லாம் அந்த முன்னோர்களுடைய நியாய ஆலோசகர்களின் முடிவுகளைக் கொண்டு இன்றைய புதிய நியாய சாஸ்திரிகள் வகுத்தவை தாம்! இருப்பினும் ஒரு குடியரசை நிறுவவோ, அரசுகளை நிலைபெறச் செய்யவோ, சாம்ராஜ்யத்தையாளவோ, படை நடத்தவோ, போர்புரியவோ, சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்தவோ, நீதியை நிலைநாட்டவோ, எந்த மன்னனும் அல்லது குடியரசுவாதியும் அல்லது படைத்தலைவனும், அல்லது குடிமகனும் முன்னையுதாரணங்களைப் பின்பற்றுவதில்லை. உலகத்தைச் சுருங்கச் செய்துவிட்ட நமது கல்வியின் தீமைகளினால் உண்டாகிய பலவீனம் காரணமாக இந்தப் புறக்கணிப்பு ஏற்பட்டது என்பதைக் காட்டிலும், அகங்காரமான சோம்பேறித்தனத்தின் தீயபயன்களினாலும், உண்மையான சரித்திர அறிவு இன்மையாலும், அதைப் பெற வேண்டுமென்ற ஆர்வம் இல்லாமையாலும் ஏற்பட்டது என்றே சொல்ல வேண்டும்.

மனித இனத்தை இந்தப் பிழைபாட்டிலிருந்து விடுவிப்பதற்காக, முற்காலத்து நடந்தவற்றையும் தற்காலத்து நிகழ்ச்சிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து, சரியான தெளிவு பெறத் தேவையான விஷயங்களையெல்லாம் எழுதுவது நல்லதென்று எண்ணினேன்.

மற்றவர்களைப் போல நான் ஆர்ப்பாட்டமான வசனங்களையும், அலங்காரமான வார்த்தைகளையும் போட்டு எழுதவில்லை. விஷயத்தின் முக்கியத்துவத்துக்கும் கருத்தின் உண்மைக்குமே என் நூலில் இடமிருக்க வேண்டுமென்று எண்ணினேன்.

மலையின் மேல் இருப்பவனால்தான் கீழேயுள்ள சமவெளிப் பிரதேசத்தை முழுதும் காண முடியும் கீழேயிருப்பவனால்தான் மலையின் உயரத்தையும் பெருமையையும் அளவிட முடியும். அதுபோல மக்களின் இயல்பை நன்றாயறிய ஒருவன் மன்னனாயிருக்க வேண்டும் மன்னனின் இயல்பை நன்கு புரிந்து கொள்ள விரும்புபவன் மக்களில் ஒருவனாயிருக்க வேண்டும். ஆகவே மன்னர்களின் நடத்தையைப் பற்றி ஆராயவும், வழிகாட்டவும், எளியவனும் தாழ்ந்தவனுமாகிய நான் முற்படுவது தன் மூப்பான காரியம் என்று கருதப்படாதென நம்புகிறேன்.

என் குறிப்புகளைப் படிப்பவர்கள், வரலாறு படித்ததன் பயனை அடையலாம்.

நகரங்கள் ஏற்பட்ட கதை :

ரோமாபுரியின் ஆரம்பத்தைப் பற்றியும், அதன் நீதிமான்களைப் பற்றியும் நிர்வாகத்தைப் பற்றியும் படித்தவர்கள் இத்தனை நூற்றாண்டுகளாக அங்கு நிலைத்து நின்று வரும் நீதி நெறியைக் கண்டு வியப்படையமாட்டார்கள்.

எல்லா நகரங்களுமே அந்தந்த நாட்டு மக்களாலோ அல்லது அன்னியர்களாலோ உண்டாக்கப்பட்டவையாகவே இருக்கும். தனித்தனிக் கூட்டங்களாகப் பிரிந்து வாழ்ந்த நாட்டு மக்கள், வெளிப் பகைவர்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்போது எதிர்த்து நிற்க மாட்டாமையாலும், தேவைப்பட்ட நேரத்தில் ஒன்று சேர முடியாமையை எண்ணியும், இப்படிப்பட்ட ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்காக நகரங்களை நிர்மாணித்தார்கள். ஏதன்ஸ் மாநகரும் வேனிஸ் மாநகரும் இவ்வாறு ஏற்பட்டவையே. தனித்தனியே பிரிந்து வாழ்ந்த நாட்டு மக்களை ஒன்று திரட்டித் தீசியஸ் என்பவன் கட்டிய நகரம் ஏதன்ஸ், ரோமானிய சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்தபின் இத்தாலியை நாசப்படுத்திய துஷ்டர்களிடமிருந்தும், போரிலிருந்தும் தப்பிப்பதற்காக அட்ரியாட்டிக் கடலின் முன் பகுதியில் இருந்த சிறு தீவுகளில் குடியேறி வாழ்ந்த அகதிகளால் நிர்மாணிக்கப்பட்டது வேனிஸ் நகரம். இந்த அகதிகளை எந்த அரசனும் ஆளவில்லை. தங்களுக்குச் சிறந்ததென்று தோன்றிய சட்டங்களை ஏற்படுத்திக் கொண்டு தங்கள் புதிய ராஜ்யத்தில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். இத்தாலியைச் சூறையிட்டவர்களிடமிருந்து தப்பி இவர்கள் நெடுங்காலம் அமைதியாக வாழ்ந்தார்கள்.

ஒரு ராஜ்யத்தில் மக்கள் தொகை அதிகமாகி விட்டால், அந்த ராஜ்யத்தின் அரசனோ குடிமக்களோ வேறு ஒரு நகரத்தை உண்டாக்குவதுமுண்டு. அன்னியர்களால் இப்படித்தான் நகரங்கள் உண்டாக்கப்படுகின்றன. ரோமானியர்கள் இப்படிப் பல நகரங்களைத் தங்கள் சாம்ராஜ்யத்தில் ஏற்படுத்தியிருக்கிறார்கள். மன்னர்கள் தாம் வாழுவதற்காக என்றும். தங்கள் கீர்த்தியின் சின்னங்களாகவும் பல நகரங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

நகரங்களை நிர்மாணிப்பவர்கள் மோசசைப் போல் தாங்கள் வசப்படுத்திய நகர்களில் குடியேறுவதுமுண்டு; ஏனியசைப் போல் புதிய நகரங்களைக் கட்டுவதுமுண்டு. செழிப்பற்ற நிலத்தில் தங்கள் நகரங்களை ஏற்படுத்திக் கொண்டவர்கள், சோம்பலற்றுச் சுறுசுறுப்பாகவும், ஒற்றுமையாகவும், வறுமையைத் தவிர்க்கப் போராடும் தன்மையும் உடையவர்களாகி விடுகிறார்கள். வளமான நாட்டில் வாழ்பவர்களின் சோம்பலைக் குறைத்து உழைப்பைப் பெருக்குவதற்குச் சட்டங்கள் தாம் கட்டாயப்படுத்த வேண்டும்.

அலெக்ஸாண்டர் தன் வெற்றிச் சின்னமாக ஒரு நகரை நிர்மாணிக்க முற்பட்ட பொழுது, அவனுடைய சிற்பி டினோக்கிரேட்ஸ் என்பவன் ஆதோஸ் மலையின் மீது பலம் பொருந்தியதாகவும் பார்ப்பவர்கள் வியந்து பாராட்டும் படியாக மனித உருவமுடையதாகவும் கட்டிக் கொடுப்பதாகக் கூறினான். அலெக்ஸாண்டர், டினோக்கிரேட்ஸை நோக்கி, “மக்கள் எதைக் கொண்டு வாழ்வார்கள்?” என்று கேட்டபோது சிற்பி விழித்தான். அதன் பிறகு தன் வெற்றிச் சின்னமான அலெக்ஸாண்டிரியா நகரை நைல் நதிக்கும் கடலுக்கும் அருகாமையில் உள்ள வளம் நிறைந்த பிரதேசத்தில் நிர்மாணித்தான்.

ரோமாபுரியை உண்டாக்கியவன் ஏனியஸ் என்றால் அது அன்னியரால் உண்டாக்கப்பட்டதாகிறது. ஆனால் ரோமுவஸ் தான் அதை உருவாக்கியவன் என்றால் தன் நாட்டவர்களாலேயே ஆக்கப்பட்டதாகிறது. எப்படியானாலும் ரோமாபுரி ஆரம்ப காலத்திலிருந்தே உரிமையும், சுதந்திரமும் உடையதாகவேயிருந்து வந்திருக்கிறது.

ரோமுலஸ், நூமா போன்றவர்களின் கடுமையான சட்டங்கள் அங்கு வாழ்ந்தவர்களை வீண். கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக்கிவந்ததால் தான், நிலவளமோ, நீர்வளமோ, வெற்றிகளோ, சாம்ராஜ்யத்தின் பெருகிப் பரந்த நிலையோ பல நூற்றாண்டு காலமாக அவர்களைக் கெடுக்க முடியாமல் இருந்தது; மற்ற எந்தக் குடியரசிலும் காணாத ஆசார ஒழுக்கங்களையும் அவர்கள் நிலை நிறுத்தி வந்தார்கள்.

அரசாங்கம் அல்லது தனிப்பட்ட மனிதர்களின் சாதனைகளினால் ரோமாபுரி பெரும் பயன்களை அடைந்தது. பீட்டடஸ், லீவியஸ் அவற்றை நினைவில் வைத்துக் காப்பாற்றியிருக்கிறார். அவற்றில் வெளிப்படையான விஷயங்களை விட்டு விட்டு அரசாங்கத்தின் குறிப்பிடத் தகுந்த உள்ளந்தரங்கமான நடவடிக்கைகளைப் பற்றி ஆராய்ந்து அவற்றின் பயனை எடுத்துக் காட்ட முயல்கிறேன்.

குடியரசு தோன்றிய கதை :

தோற்றத்திலேயே அன்னிய ஆதிக்கத்திற்கு உட்பட்ட நகரங்களைப் பற்றி இப்போது பேசப் போவதில்லை. தடியரசு அல்லது தலைமைத் தூய ஆதிக்கத்திற்கு உட்பட்டு சுதந்திரமாகத் தன்னுடைய சட்டங்களைக் கொண்டு தன்னை யாண்டு கொண்ட நகரங்களைப் பற்றி மட்டுமே பேசுவோம். ஒரே சட்டத்தின் மூலம் தேவையான நீதி முறைகள் அனைத்தையும் வழங்கக்கூடிய ஞானமுள்ள சட்டம் செய்பவனை ஆரம்பத்திலேயே பெற்ற நகரங்கள் அதிர்ஷ்டமுடையவை.

நெடுநாளைக்கு மாற்றப் படாமல் இருக்கக் கூடிய நிலைத்த சட்டங்களைப் பெற்ற நாடு இன்பபூமியாக இருக்கும். அப்படியில்லாமல் நீதி முறைகளை அடிக்கடி சீர்திருத்தவேண்டிய நிலையில் உள்ள நாடு, மிகுந்த துன்பத்தில் உழலும். நல்ல அரசியலமைப்பைப் பெறாத குடியரசு சரியான வளர்ச்சியும் நல்ல நிலைமையும் அற்றதாகும். முழுமையான அரசியலமைப்பை ஆரம்பகாலத்தில் பெறாதிருந்தாலும் கூட நல்ல அடிப்படையில் துலங்கிய குடியரசுகள் நாளடைவில் முன்னேற்றமடையக் கூடும். அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படவேண்டிய இன்றியமையாமையைத் தெளிவாக்கினால் அன்றிப் பெரும்பான்மையினர் இந்தச் சீர்திருத்தங்களை ஏற்றுக் கொள்ள முன் வருவதில்லை. ஆகையால், இந்தச் சீர்திருத்தங்கள் ஆபத்தில்லாமல் நிறைவேறுவதில்லை. அரசியலமைப்பை பூரணத்துவப் படுத்தக்கூடிய இந்த ஆபத்தான முயற்சியில் அந்தக் குடியரசே எளிதாக அழிக்கப்பட்டுவிடவும் கூடும்.

சில அரசியல் நூலாசிரியர்கள் மூன்று விதமான அரசாங்கங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். அவை, முடியாட்சி, மேன்மக்களாட்சி, பொதுக் குடியாட்சி என்பனவாகும். புத்திசாலிகள் என்று பெரும்பாலோரால் கருதப்படுகிற வேறு சில ஆசிரியர்கள், நல்ல அரசு மூன்று, தீய அரசு மூன்று என ஆறுவகை அரசுகளைப் பற்றிப் பேசுகிறார்கள். நல்லவை மூன்று நாம் மேலே குறிப்பிட்டிருப்பவை. தீயவை மூன்று என்பன, அவற்றில் இருந்து திரிந்து மாறுபட்டவை - அவற்றையே ஒத்த அவற்றில் இருந்தே பிறந்த தீய பயனுடையவையாம். எனவே அவற்றிற்கிடையேயுள்ள வேறுபாட்டையுணர்வது எளிது.

இம்முறையில் பார்த்தால் முடியாட்சி கொடுங்கோலாட்சியாகிறது; மேன்மக்களாட்சி ஒரு சில பேர்வழிகளின் ஆட்சியாகிறது; பொதுக் குடியாட்சி கட்டுப்பாடற்ற தனிமையடைகிறது. நல்ல ஆட்சிகள் மூன்றும் இப்படி மாறு படாமல் தவிர்ப்பதற்கு வழி எதுவும் இல்லை. ஏனெனில் இரண்டு வகைகளுக்கும் உள்ள ஒப்பான தோற்றமும் தொடர்பான நிலையும் மிக நெருக்கமானவை.

உலகந் தோன்றிய காலத்தில் இருந்த மனிதர்களின் எண்ணிக்கை சிறிதே, அவர்கள் மிருகங்களைப் போல் தனித் தனியே பிரிந்து வாழ்ந்தார்கள். மனித இனம் பெருகியபோது தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, அவர்கள் ஒன்று சேரவேண்டிய, அவசியம் ஏற்பட்டது. அப்படி ஒன்று சேர்ந்தவர்கள் தங்களைக் கட்டுப்பாடாக நடத்த வலிவும் வீரமுமுடைய ஒருவனைத் தலைவனாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். பிறகு தங்களிலே, நல்லவர்களையும் கெட்டவர்களையும் பிரித்து அறியத் தலைப்பட்டார்கள்; நீதி முறைகளை ஏற்படுத்தித் தங்களுக்கு விரோதிகளானவர்களுக்குத் தண்டனைகளையும் உண்டாக்கினார்கள். இதுதான் நீதி பிறந்த கதை.

தேர்ந்தெடுக்கும் முறை நின்று அரசுரிமை பரம்பரைப் பாத்தியதை யாக்கப்பட்ட காலத்தில், மன்னனுக்குப் பின் மன்னனாக அவன் மகன் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளாமல், வகை வகையான இன்பங்களை அனுபவிக்கப் பிறந்தவன் தான் என்று எண்ணிக்கொள்ள ஆரம்பித்தான்.

இந்நிலையில் அந்த மன்னன் குடிமக்களின் வெறுப்புக்குரியவனானான். வெறுப்புக்காளானவன் அச்சமடைந்தான், அச்சத்தின் காரணமாக எச்சரிப்புடையவனாகவும் கொடுமைகள் புரிபவனாகவும் மாறினான். இவ்வாறுதான் கொடுங்கோலாட்சி பிறந்தது.

மன்னன் என்ற பெயரையே வெறுக்கத் தொடங்கிய மக்கள், தங்களுக்குள் ஒரு புதிய அரசாங்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். கொடுங்கோன்மையின் தன்மைகளை நன்றாக நினைவில் வைத்துக் கொண்டு, கண்டிப்பான முறையில் அந்த ஆட்சியை நடத்தினார்கள். இந்த ஆட்சி நல்லெண்ணமுடைய மேன்மக்களால் நடத்தப் பெற்று வந்தது. நாளடைவில், ஆட்சித்தலைவர்களாயிருந்தவர்கள் பொது நலத்தை மறக்கத் தொடங்கிவிட்டார்கள். இவ்வாறாக மேன்மக்கள் ஆட்சி, தன்னலம் பிடித்த ஒருசிலராட்சியாக மாறியது. கொடுங்கோலாட்சியைப் போலவே இந்த ஆட்சியும் விளங்கவே வெறுப்படைந்த மக்கள், ஆளுவோரை எதிர்த்துப் போராடிப் பொதுக்குடியாட்சியை நிறுவினார்கள். மறுபடியும் ஒரு மன்னன் கையிலோ, ஒரு சில பேர்வழிகளின் கையிலோ ஆட்சி சிக்காத முறையில் பொதுக்குடியாட்சி மிகவும் எச்சரிக்கையாக நடத்தப்பட்டு வந்தது. ஆனால், மற்ற அரசுகளைப் போலவே இதுவும் நிலைத்து நீடிக்க வழியில்லாமல் போய்விட்டது. ஏனெனில் பொதுக் குடியாட்சியை நிறுவியவர்கள் தலைமுறை இருக்கும் வரை தான் அது ஒழுங்காக நடக்க முடிந்தது. அதற்குப் பிறகு அந்த ஆட்சியில், கட்டுப்பாடற்ற தன்மை மிகுந்து பொதுநலத்திற்கும் தனியார் நலத்திற்கும் கேடு விளைக்கும் படியாக ஆட்சியின் நிலைமை மாறிவிட்டது. இப்படிப்பட்ட குழப்படியான நிலையைக் காட்டிலும் ஓர் அரசன் ஆளுவதே சிறந்ததென்று தோன்றியது. இவ்வாறு மன்னன் ஆட்சி ஏற்பட்டு அது மீண்டும் கொடுங்கோலாட்சியாகியது. இப்படியே மாறி மாறி ஆறுவித ஆட்சி முறைகளும் வட்டமிட்டுக் கொண்டு வரலாயின.

நான் எல்லா அரசாங்கங்களும் குறைபாடுள்ளன என்று கூறுகிறேன். ஏனெனில் நல்லன என்று நாம் கூறிய அந்த மூன்று ஆட்சிகளும் குறுகிய கால அளவே நிலைத்து நிற்கக் கூடியன; தீய ஆட்சிகளோ, வெளிப்படையாகவே தீமை பயப்பன.

இந்த ஆட்சி முறைகள் ஒவ்வொன்றிலும் உள்ள தீமைகளை நன்குணர்ந்து எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஓர் ஒப்பற்ற அரசாங்கத்தைக் கூர்மையான அறிவுள்ள சட்டஞ் செய்பவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த விஷயத்தில் ஸ்பார்டா அரசாங்கத்தை ஏற்படுத்திய லைக்கர்கஸ் பெரும் பாராட்டுக்குரியவன். அரசனுக்கும், பிரபுக்களுக்கும் குடிமக்களுக்கும் அவரவருக்குரிய உரிமைகளையும் கடமைகளையும் அவன் ஏற்படுத்திய அரசியலமைப்பு வரையறுத்து வழங்குவதாயிருந்தது. அதனால் அந்த அரசு எண்ணூறு ஆண்டு காலம் வரை நிலைத்து நிற்க முடிந்தது. சோலோன் என்பவன் ஏதேனியர்களுக்காக வகுத்த அரசியலமைப்பின்படி ஏற்படுத்திய பொதுக் குடியாட்சியோ சிறிதே காலத்தில் முடிவடைந்துவிட்டது. சோலோன் தான் சாகுமுன்னாலேயே கொடுங்கோலரசு உதயமாகிவிட்டதைக் காணும்படி நேர்ந்துவிட்டது.

ரோமாபுரியில் லைக்கர்கஸ்ஸைப் போல் கூரிய அறிவுள்ள சட்ட அமைப்பாளன் இருந்ததில்லை. என்றாலும் ஆட்சிக் குழுவிற்கும் மக்களுக்கும் இடையேயிருந்த ஒற்றுமையின்மை, நீதிமுறைகளால் முடியாத ஓர் அசாதாரணமான வாய்ப்பையுண்டாக்கி ரோம சாம்ராஜ்யத்தை நீடித்து நிலைக்கச் செய்தது, ஆகவே, முதல்தரமான இன்பத்தைக் காணாவிட்டாலும் ரோமாபுரி இரண்டாந்தரமான மகிழ்ச்சியையாவது காண முடிந்தது. ரோமுலஸ் முதலிய அரசர்கள், சுதந்திரமுள்ள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நல்ல நீதி முறைகளைக் கொண்டுதான் அரசாண்டார்கள். ஆனால், குடியரசு அல்லாத முடியரசை நிலைநிறுத்த அவர்கள் நோக்கம் கொண்டிருந்தார்கள். இந்த மன்னர் ஆட்சியிலிருந்து விடுதலைபெற்ற மக்கள், மன்னர்களை வெளியேற்றிவிட்டு, அவர்கள் இருந்த இடத்தில் இரண்டு தலைமை அதிகாரிகளை ஏற்றிவைத்தார்கள்.

இதனால் ரோமாபுரியில் அரசன் என்ற பெயர் ஒழிந்ததே தவிர ஆதிபத்திய முறை மாறவில்லை. தலைமையதிகாரிகளும் ஆட்சிக்குழுவினரும் அடங்கிய அரசாங்கத்தில் முடியாட்சி முறையும், மேன்மக்களாட்சி முறையும் இருந்ததே தவிர பொதுமக்கள், அதிகாரம் செல்லுபடியாகவில்லை. நாளடைவில் உயர்குலத்தவர்கள் அல்லது பிரபுக்களின் இறுமாப்பு, பொதுமக்களை அவர்களுக்கெதிராகக் கிளர்ந்தெழச் செய்தது. பிரபுக்கள் தங்கள் அதிகாரம் முழுவதையும் இழந்துவிடாமலிருக்கப் பொதுமக்களுக்கும் ஒரு பங்கு கொடுக்க வேண்டியதாயிற்று. இவ்வாறுதான் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கும் முறை ஏற்பட்டது. மூன்று வித ஆட்சிகளின் கூறுகளும் அடங்கிய அந்தக் குடியரசு வலுப்பெற்றது. மூன்று சக்திகளும் கலந்து ரோமாபுரியின் அரசியலமைப்பை முழுமையடையச் செய்தன.

இவ்வகையில்தான் ரோமாபுரி அதிர்ஷ்டவசமாக நிலைத்த அரசாங்கத்தைப் பெற்றது என்று கூறினோம்.

குடியரசு மேலும் வலுப்பட்ட விதம் :

ஓர் அரசை ஏற்படுத்தி அதற்குரிய நீதி முறைகளை வகுக்க விரும்புகின்ற எவரும், எல்லா மனிதர்களும் தீயவர்கள் என்றும், அவர்கள் சமயம் வாய்க்கும் போது தங்கள் தீயகுணத்தை வெளிப்படுத்தத் தயாராக இருக்கக் கூடியவர்கள் என்றும் மனத்தில் கொள்ளவேண்டும். மனிதர்களுடைய தீய குணங்கள் சிலகாலம் மறைந்திருக்கிறதென்றால், அதற்கு ஏதாவது விவரந் தெரியாத காரண மிருக்க வேண்டும். அது வெளிப்படுவதற்குச் சரியான சமயம் நேரவில்லை என்று நாம் எண்ணிக்கொள்ள வேண்டும். ஆனால், உண்மையின் தலைவன் என்று சொல்லப்படுகின்ற காலம், அவர்களுடைய தீய குணத்தை வெளிப்படுத்தாமல் விட்டு விடுவதில்லை. இந்தக் கருத்தைத்தான் பொது அமைப்புக்களைப் பற்றி எழுதுகின்றவர்கள் பலர் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். இந்தக் கருத்தை வலியுறுத்தும் எடுத்துக்காட்டுக்கள் சரித்திரத்தில் நிறைய இருக்கின்றன.

தார்க்குவின்களை வெளியேற்றிய பிறகு ரோமாபுரியில் பிரபுக்களுக்கும் குடிமக்களுக்கும் இடையே அதிக ஒற்றுமை நிலவியது. தார்க்குவின்கள் இறந்த பிறகு பிரபுக்கள் அமைத்த ஆட்சி அதே மாதிரியான ஒழுங்கீனமுடையதாயிருந்தது. அதனால் ஏற்பட்ட பல தொந்தரவுகள், கஷ்டங்கள், ஆபத்துக்களின் காரணமாகத்தான் மக்கள் பிரதிநிதிகள் ஏற்பட்டார்கள். இந்த மக்கள் பிரதிநிதிகள் குடிமக்களுக்கும் ஆட்சிக் குழுவினருக்கும் இடையில் ஆற்றல் மிகுந்த ஒரு தடைச்சுவராக இருந்தார்கள். ஆட்சிக்குழுவினரின் இறுமாப்புக்குச் சரியான அணைபோட்டார்கள் இவர்கள்.

ரோமானியக் குடியரசு உரிமையும் வலிமையும் பெற்ற விதம்:

தார்க்குவின்கள் இறந்ததிலிருந்து மக்கள் பிரதிநிதிகள் உண்டாக்கப்பட்டது வரையுள்ள இடைக்காலத்தில் ரோமர்களின் குடியரசு குழப்ப நிலையும் ஒழுங்கீனமும் என்று சொல்பவர்களுடைய கருத்தை நான் மறுத்துக் கூறுகிறேன். நல்லதிர்ஷ்டமும் இராணுவக் கட்டுப்பாடும் மட்டும் இல்லாவிட்டால் குடியரசுகளினிடையில் மிகக் கேவலமான நிலைக்கு ரோமாபுரிக் குடியரசு போயிருக்கும் என்பதையும் மறுக்கிறேன்.

ரோமாபுரியின் ஆட்சிக் குழுவினருக்கும் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட போராட்டங்களைக் கண்டிப்பவர்கள், அதனால் விளைந்த கூச்சலையும் குழப்பத்தையும் எண்ணுகிறார்களே தவிர, அதனால் விளைந்த நல்ல பலனை நினைத்துப்பார்க்கவில்லை. ஆட்சிக் குழுவினரும் பொதுமக்களும் இரண்டு கட்சியினர் என்று அவர்கள் கருதுவதில்லை. விடுதலை வேட்கையைத்தான் எல்லா நீதி முறைகளும் ஆதரிக்கின்றன என்பதையும் குறைகூறுபவர்கள் உணர்வதில்லை. மக்கள் நன்னடத்தை உடையவர்களாயிருக்க வேண்டுமானால் நல்ல கல்வி கற்றவராயிருக்கவேண்டும். நல்ல கல்வி நல்ல நீதி முறையிருந்தால்தான் கிடைக்கும். நல்ல நீதிமுறை, பலரால் பழிக்கப்படும் இப்படிப்பட்ட கலகங்களால் தான் கிடைக்கும். கலகம் பிறந்தால் தான் நியாயம் பிறக்கும்.

குடிமக்களின் இந்தக் கலகங்களை எண்ணிப் பார்த்தால், அவற்றால் எவ்விதத் தீமையும் விளையவில்லை என்பதும் பொது மக்கள் உரிமைபெற வகை செய்யும் நீதி முறைகள் தாம் அவற்றால் தோன்றியிருக்கின்றன என்பதும் தெளிவாகும்.

மக்கள் கூச்சல் எழுப்புவதும், வீடுகளை மூடிவிட்டு வீதியில் குழப்பமான நிலையில் ஓடுவதும், ஆகிய காரியங்கள் பற்றிப் படிப்பதற்கும் பயங்கரமாகத்தான் தோன்றும். ஆனால் சுதந்திரமுள்ள ஒவ்வோர் அரசும், குடிமக்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று நான் கூறுவேன். எல்லாவற்றிற்கும் மேலாக அந்தக் குடியரசு முக்கியமான சமயங்களில் இதே பொதுமக்களின் உதவியை நாடவேண்டியும் வரும். “மக்கள் அறியாமையுள்ளவர்களாய் இருந்தாலும் உண்மையை மதிக்கத் தெரிந்தவர்கள். தங்கள் நம்பிக்கைக்குரிய ஒருவனால் அது வெளிப்படுத்தப்படும்போது அவர்கள் அதற்கு ஆட்படத் தயாராயிருக்கிறார்கள்” என்று சிசரோ கூறுகிறான்.

மக்கள் பிரதிநிதிகள் ஏற்பட்டது. பொது நிர்வாகத்தில் மக்களுக்குப் பங்கேற்படுத்திக் கொடுத்தது மட்டுமல்லாமல் ரோமானியர்கள் விடுதலைக்கு உறுதியான பாதுகாப்பளிப்பதாகவும் ஆகியது.

உரிமையைப் பாதுகாக்கும் பொறுப்பைட யாரிடம் ஒப்படைப்பது?:

குடியரசுக்கு விவேகமான அரசியலமைப்புக்களை யளித்த சட்டஞ் செய்பவர்கள் எல்லோரும், விடுதலையைப் பாதுகாப்பதற்கு வேண்டிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை வற்புறுத்திக் கூறியிருக்கிறார்கள். ஒவ்வொரு குடியரகம் பொதுமக்களும் பிரபுக்களும் அடங்கியதாக இருப்பதால், இவர்களில் யார் வசம் விடுதலையைப் பாதுகாக்கும் பொறுப்பைத் தருவது என்ற கேள்வி எழுகிறது.

பிரபுக்கள் மற்றவர்களை அடக்கியாள வேண்டுமென்ற பேராசையுள்ளவர்கள். பொதுமக்களோ, தாங்கள் அடக்கப் படக்கூடாதென்ற விருப்பம் மட்டுமேயுள்ளவர்கள்; விடுதலையுரிமையைச் சுதந்திரமாக அனுபவித்து வாழவேண்டுமென்ற ஆசையுள்ளவர்கள். ஆகவே விடுதலையுரிமையைப் பாதுகாக்கும். பொறுப்பை அவர்கள் கையில் விட்டால், மற்றவர்கள் உரிமையில் தலையிட வேண்டுமென்ற எண்ணம் கொள்ளாமல், அதை இயல்பாகவே கவனமாகப் பாதுகாத்து வருவார்கள். தாங்களே முழுதும் அந்த உரிமையை வசப்படுத்திக்கொள்ள இயலாத அவர்கள் மற்றவர்கள் அவ்வாறு செய்யாமலும் பார்த்துக் கொள்வார்கள்.

உரிமையைப் பாதுகாக்கும் பொறுப்பைப் பிரபுக்கள் வசம் ஒப்படைத்தால் இருவிதமான நன்மைகள் உண்டென்று சொல்லப்படுகிறது. முதலாவது, அந்தப் பிரபுக்களுடைய அதிகார ஆசையை இதனால் தணிக்க முடியும். இரண்டாவதாக, பொதுமக்கள் கையில் அதிகாரம் இருப்பதால், தொல்லைகளையும் குழப்பங்களையும் உண்டாக்கக் கூடிய இடைவிடாத உணர்ச்சி அவர்களிடம் இல்லாதபடி செய்யப் பிரபுக்களால் முடியும்!

தங்களிடம் இல்லாத அதிகாரத்தைத் தேடிக்கொள்ள முயலுகின்றவர்களா, அல்லது ஏற்கனவே தங்களிடம் உள்ள அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள விரும்புகின்றவர்களா, இவர்களில் யார் குறைந்த ஆபத்தானவர்கள் என்று பார்க்க வேண்டும். கையில் அதிகாரமுள்ளவர்களால் தான் பெரும் தொல்லைகள் அடிக்கடி ஏற்படுகின்றன. தங்கள் அதிகாரத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சமும் அவநம்பிக்கையும் இருப்பதன் காரணமாக அவர்கள் மேன்மேலும் அதைத் தேடிக் கொள்ள முயலுகிறார்கள். இன்னும் மோசமானதென்னவென்றால், பிரபுக்களும் பணக்காரர்களும் தங்கள் அகங்காரத்தினாலும் இறுமாப்பினாலும், உயர்ந்த குடிப்பிறப்போ, செல்வமோ இல்லாதவர்களுடைய நெஞ்சிலே, அவற்றைப் பெற வேண்டுமென்ற எண்ணத்தை மட்டுமல்லாமல், அவற்றைஅந்தச் செல்வங்களையும் மரியாதைகளையும் மிக மோசமான நிலையில் அனுபவித்து வரும் அவர்களிடமிருந்து அதைப் பறித்துக்கொண்டு பழிவாங்கிவிட வேண்டுமென்ற விருப்பத்தையும் தூண்டி விடுவதுதான்!

குடியரசில் உரிமையை நிலைநிறுத்தக் குற்றஞ் சாட்டும் வாய்ப்பு இருக்கவேண்டியது இன்றியமையாதது :

பீட்டஸ் லீவியஸ் கொரியோலானசைப் பற்றிக் கூறுகிற நிகழ்ச்சியொன்று நமக்கு ஓர் உண்மையைப் புலப்படுத்துகிறது. ரோமாபுரியில் பஞ்சம் வந்தபோது சிசிலித்தீவிலிருந்து தான்யங்கள் கொண்டுவர ஆட்சிக் குழு ஏற்பாடு செய்திருந்தது. அப்போது கொரியோலானஸ், குடிமக்கள் பிரதிநிதிகளை ஏற்படுத்தியதன் மூலம் அடைந்திருக்கிற அதிகாரத்தைப் பறிப்பதற்கு இது நல்ல சந்தர்ப்பம் என்று ஆட்சிக் குழுவினருக்குக் கூறினான். உணவுப் பொருள் கிடைக்காவிட்டால் - அது வழங்கப்படாவிட்டால், அவர்கள் வழிக்கு வருவார்கள் என்றான். இதைக் கேள்விப்பட்ட மக்கள் கொதித்தெழுந்தார்கள். மக்கள் பிரதிநிதிகள் அவனைத் தங்கள் முன்னிலையில் வந்து குற்றத்திற்குப் பதில் கூறவேண்டும் என்று அவனை அழைத்திராவிட்டால், அவன் படுகொலை செய்யப்பட்டிருப்பான் என்பதோடு பெருங் குழப்பம் உண்டாகியிருக்கும். மக்களுடைய வெறுப்பை வெளிப்படுத்துவதற்கு இப்படிப்பட்ட சட்டரீதியான ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்படாவிட்டால் அவர்கள் சட்டத்தை மீறத்தொடங்குவதோடு பலவிதக் குழப்பங்களும், தொல்லைகளும் உண்டாகும். குடியரசும் நிலைகுலைந்து போய் விடும். ஏனெனில் இந்தக் கொடுமை தனிப்பட்டவர்களாலோ, அன்னியப் படைகளினாலோ செய்யப் பட்டதில்லை; பொது சக்தியான ஆட்சிக்குழுவினால் விளைந்ததுவேயாகும்.

வதந்தியினால் வரும் கேடு :

குடியரசிலும், மற்ற எந்த அரசிலும், மிகவும் அருவருக்கத் தகுந்த நிகழ்ச்சி வதந்தி கிளப்பி விடுவதுதான். அவைகளைக் காலா காலத்தில் அடக்குவதற்குக் கையாள வேண்டிய முறைகளையெல்லாம் ஒன்று பாக்கிவிடாமல் செய்ய வேண்டியது. அந்த அரசின் கடமையாகும். சட்டரீதியாகக் குற்றஞ்சாட்டக் கூடிய முறையை ஏற்படுத்துவதைக் காட்டிலும், வதந்திகளை நிறுத்துவதற்குச் சரியான வழி வேறு எதுவும் இல்லை. வதந்திகள் ஒரு குடியரசை எவ்வளவு பாழ்படுத்த முடியுமோ, அவ்வளவு இந்த முறை நலங்கொடுக்கும் என்பது திண்ணம்.

வதந்தி கிளப்பி விடுவதற்கும் குற்றஞ்சாட்டுவதற்கும் ஒரு பெரிய வேற்றுமை இருக்கிறது. வதந்திக்கு எவ்விதமான சாட்சியமோ சான்றோ தேவையில்லை; அதை மெய்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை; நேருக்கு நேர் எதிர்த்து நின்று பழி சுமத்த வேண்டியதுமில்லை! ஆகவே ஒவ்வொரு மனிதனும் மற்றொரு மனிதனால் வதந்தியை ஏற்றுக் கொள்ளும்படி செய்யப்பட முடியும். ஆனால், குற்றஞ் சாட்டுவது என்ற முறை ஏற்பட்டால், யாரும் யார் மீதும் தக்க சான்றில்லாமல் எதுவும் செய்யாது. குற்றச்சாட்டுகள், நீதிபதிகளின் முன்னாலோ, முடி அல்லது ஒரு சட்ட சபையின் முன்னாலோ அல்லது பொது மக்கள் முன்னிலையிலோ கொண்டு வந்து தான் செய்யப்பட வேண்டும். வதந்தியோ பொது இடங்களில் மட்டுமல்லாமல் தனி வீடுகளிலுங் கூடக் கூறப்படுகின்றன. குற்றஞ்சாட்டக் கூடிய முறையில்லாத இடங்களில்தான் வதந்தியைப் பரப்பும்முறை பெரிதும் கையாளப்படுகிறது. குற்றஞ்சாட்டும் முறையை அனுமதிக்காத அரசியலமைப்புக்களைக் கொண்ட நகர அரசுகளில்தான். வதந்தி கிளப்பி விடும் முறை கையாளப்படுகிறது.

ஒரு குடியரசுக்குச் சட்டம். வகுப்பவன், ஒவ்வொரு குடிமகனும் மற்றொருவன் மேல் எவ்விதமான பயமோ, சந்தேகமோ இல்லாத முறையில் குற்றஞ்சாட்டக் கூடிய உரிமையை அந்தச் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். வதந்தி கிளப்புபவர்களுக்குக் கொடிய தண்டனை வழங்க வேண்டும். இந்த முறை சரியாக நிலை பெறாத இடங்களில் எப்பொழுதும் ஒழுங்கற்ற நிலையே இருந்து கொண்டிருக்கும். ஏனெனில் இந்த வதந்திகள் யார்மீது கிளப்பி விடப்பட்டனவோ அவர்கள் தண்டிக்கப்படுவதில்லை; அவர்களுக்கு இதனால் மன அரிப்புத் தான் ஏற்படும். இந்த மன அரிப்பின் காரணமாக அவர்கள் தங்களை வலுப்படுத்திக்கொள்ள நினைப்பார்கள். தங்கள்மீது ஏற்பட்டுள்ள வதந்திகளை வெறுப்பார்களே தவிர அவற்றிற்குச் சிறிதும் அஞ்சமாட்டார்கள்.

ஆட்சி, தனி மனிதனிடத்தில் இருக்க வேண்டும் :

ஒரு புதிய குடியரசை அமைப்பதோ அல்லது பழைய அமைப்பை முற்றிலும் சீர்திருத்துவதோ ஒரே ஒரு மனிதனுடைய செயலாக இருக்க வேண்டும். ஓர் அரசியலமைப்பை ஏற்படுத்தியவன், தானே அதை நடைமுறையில் கொண்டு வருவது இன்றியமையாதது. அப்பொழுதுதான் அது நல்ல அமைப்பையும் நிர்வாகத்தையும் பெற்றதாகவும் தன் சொந்த நலத்தினும் பொது மக்கள் நலத்தை முன்னேற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டவனும், தன் வாரிசுகளைக் காட்டிலும் தன் தேசத்தையே பெரிதாகக் கருதுபவனும் ஆகிய ஒரு விவேகமுள்ள சட்டம் வகுப்பவன் எல்லாவிதமான அதிகாரங்களையும் தன் ஒருவனிடத்திலேயே வைத்திருப்பது அவசியம். இம்மாதிரியாக ஒருவன் ஓரரசையோ, குடியரசையோ நிலை பெறச் செய்வதற்கு - என்று செய்த எவ்விதமான அசாதாரணமான காரியத்தையும், புத்தியுள்ள எந்த மனிதனும் மறுத்துரைக்க முன் வரமாட்டான். அவன் செய்த காரியத்திற்காகச் சட்டம் அவனைக் குற்றம் சுமத்துமானால், அந்தக் காரியத்தால் ஏற்பட்ட நல்ல பலன் அவனை அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கும்.

ஒரு நீதி முறையை ஏற்படுத்தி ஆட்சி நடத்தியவன், தன் அதிகாரத்தைத் தன் வாரிசுகளிடமோ, அல்லது தான் தேர்ந்தெடுக்கக் கூடிய ஒருவனிடமோ விட்டுச் செல்வது புத்திசாலித்தனமான காரியமல்ல. ஏனெனில், மனிதத்தன்மை நன்மையைக் காட்டிலும் தீமையின் பக்கமே சாயும் இயல்புடையது. அவன் பொது நன்மைக்காகவே பயன்படுத்தி வந்த அதிகாரத்தை அவனுடைய பின் வாரிசாக வரக் கூடியவன் தீய காரியங்களுக்காகப் பயன்படுத்தக் கூடும். தவிரவும் ஓர் அரசாங்கத்தைத் தனி மனிதனே இயக்குவது நல்லது என்றாலும், அதை நடத்தும் பொறுப்பு முழுவதும் தனியொருவனிடத்திலேயே இருக்குமானால், அந்த அரசு நெடுநாளைக்கு நிலைத்திராது என்பது உண்மை. ஆகவே அதன் பொறுப்பைப் பலரிடத்திலே ஒப்படைப்பதுதான் நல்லது. எந்த நிர்வாகமும் பலரால் நடத்தப்படக் கூடியது அல்ல. ஏனென்றால் அவர்களுடைய கருத்து வேற்றுமைகள் எது சிறந்த முறை என்பதை ஒப்புக்கொள்ளத் தடையாக இருக்கின்றன. இருப்பினும் இந்தத் தடையின் காரணத்தைச் சரியாகப் புரிந்து கொண்டவுடன், ஆட்சிப் பொறுப்பைக் கைவிட்டு விடுவதற்கு அவர்கள் உடனடியாக ஒப்புக்கொண்டுவிட மாட்டார்கள். இப்படிப்பட்ட பல விஷயங்களையும் யோசித்துத்தான் அரசுகளை ஏற்படுத்தியவர்கள் அதிகாரம் முழுவதையும் தம்மிடமே வைத்திருந்தார்கள்.

கீர்த்திக்கு வழி :

பாராட்டுக்குரிய எல்லா மனிதர்களிலும் மதங்களை ஏற்படுத்தியவர்களே முதன்மையாகப் பாராட்டப்படுகிறார்கள். அடுத்தப்படியாக குடியரசு அல்லது சாம்ராஜ்யங்களை யுண்டாக்கியவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் பின்னால், தங்கள் சாம்ராஜ்யத்தை அல்லது தேசத்தை விஸ்தரித்த வீரர்கள் வருகிறார்கள். இவர்களோடு இலக்கியம் படைத்தவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், அவர்கள் வேறு துறையினராய்ப் போய்விட்டபடியால் இந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டியதில்லை. மதங்களை அழித்தவர்களும், அரசுகளை நிலை குலையச் செய்தவர்களும், நேர்மைக்குப் பகையாய் உள்ளவர்களும் வெறுத்துப் பழித்துச் சபிக்கப்படுகிறார்கள். அடி முட்டாள்களாகவோ, அதி புத்திசாலிகளாகவோ, பெருங்கொடுமைக்காரர்களாகவோ, மிக நல்லவர்களாகவோ யாரும் இல்லாதபடியால், இந்த இருவகைப் பட்டவர்களிலே யாரும் இல்லாதபடியால், போற்றப்பட வேண்டியவர்களைப் போற்றுவாருமில்லை, தூற்றப்பட வேண்டியவர்களைத் தூற்றுவாரும் இல்லை.

பெரும்பாலும் எல்லா மனிதர்களும் மாயமான நல்ல தன்மையையும் மாயமான கீர்த்தியையும் கண்டு ஏமாந்து அறியாமையுற்று அவமதிப்புக்குரியவற்றைப் போற்றிப் புகழத் தாமாகவே முன்வந்து விடுகிறார்கள்.

பரம்பரை வாரிசுரிமைப்படி ஆட்சிக்கு வந்த மன்னர்கள் அனைவருமே, ஒருவரிருவரைத் தவிரக் கெட்டவர்களாகவே யிருந்திருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சக்கரவர்த்திகள் எல்லாருமே நல்லவர்களாகவேயிருந்திருக்கிறார்கள். பரம்பரை வாரிசுரிமை ஆட்சிக்கு ஆட்பட்ட தேசங்கள், சாம்ராஜ்யங்கள் அழிந்தே போயிருக்கின்றன.

நல்ல பேரரசர்களின் ஆட்சிக் காலத்திலே இருந்த மன்னன் மக்களிடையிலே தானும் பாதுகாப்பாக இருப்பான். ஏனெனில், மக்களும் பாதுகாப்பாக இருப்பார்கள். உலகில் நீதியும் சமாதானமும் நிலைத்திருக்கும். ஆட்சிக் குழுவினருக்கு மதிப்பும், நீதிபதிகளுக்கு மரியாதையும் கிடைக்கும், பணக்காரர்களும் தங்கள் செல்வங்களை அனுபவித்துக் கொண்டு சுகபோகங்களில் இன்பமாக இருப்பார்கள். எங்கும் இன்பமும் வளமும் நிறைந்திருக்கும். நல்ல பேரரசர்களின் ஆட்சி பொற்காலமாயிருக்கும். குடிமக்கள் பாதுகாப்பாகவும் இன்பமாகவும் இருப்பதால், தங்கள் அரசனிடம் அன்பும், மதிப்பும், மரியாதையும் உடையவர்களாயிருப்பார்கள். ஆனால், தீய மாமன்னர்களின் ஆட்சியிலோ, குழப்பமும், கலகமும், பகைமையும் குரோதமும் தாண்டவமாடக் காணலாம். ஓர் அரசன் உலகத்தின் நல்லெண்ணத்திற்கும், கீர்த்திக்கும் பாத்திரனாக வேண்டுமென்றால், நிலை குலைந்த ஒரு நகரத்துக்கோ நாட்டுக்கோ அவன் அதிபதியாயிருக்க வேண்டும். அதை அவன் முழுதும் அழிக்கக் கூடாது. திரும்பவும் நல்ல நிலைக்குக் கொண்டுவரப் பாடுபட வேண்டும். ஓர் அரசன் கீர்த்தியடைய இதைக் காட்டிலும் அருமையான சந்தர்ப்பத்தை ஆண்டவன் கூடக் கொடுக்க முடியாது.

மதமும் அரசியலும்:

ரோமானிய சரித்திரத்தை ஊன்றிப் படித்தால் படைகளை நடத்துவதற்கும், மக்களை நல்லொழுக்கமுள்ளவர்களாக வைத்திருப்பதற்கும் மதம் எவ்வளவு தூரம் உதவி புரிந்திருக்கிறது என்பது தெரியவரும். மதம் இருக்கக் கூடிய தேசத்திலே தான் இராணுவமும் ஒழுங்கும் இருக்கும்படி செய்வது எளிதாகும். இராணுவம் மட்டும் இருந்து மதம் இல்லாத தேசத்திலே ஒழுங்கு இருப்பது அரிது. ரோமுலஸ், ஆட்சிக் குழுவையும் வேறு தேசிய இராணுவ அமைப்புக்களையும் தெய்வீக சக்தி எதுவும் இல்லாமலே நடத்த முடிந்தது. ஆனால் நூமாவுக்கு அவை அதிகம் தேவைப்பட்டன. நூமா தெய்வீக சக்தியைக் கையாளாமல் இருந்திருந்தால், அவனுடைய அருமையான நீதிமுறைகள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அவன் தான் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றுவதற்காகத் தான் வன தேவதையொன்றுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி வந்தான். ரோமானியர்கள் நூமாவின் ஆலோசனைகளையெல்லாம் ஏற்றுக்கொண்டார்கள்.

பிளாரன்ஸ் தேசத்து மக்கள் அறியாமை மிகுந்தவர்களல்ல. இருந்தாலும், ஜீரோலாமோ சாவனரோலா தான் கடவுளுடன் பேசியதாக அவர்களை நம்பச் செய்தான். இது உண்மையா பொய்யா என்பதைப் பற்றி நான் இப்போது பேசப் போவதில்லை. ஆனால், ஏராளமானவர்கள் அதை நம்பினார்கள். அவர்கள் நம்புதற்குரிய அதியற்புதமான அசாதாரண நிகழ்ச்சிகள் எதையும் அவர்கள் காணாவிட்டாலும் கூட, அவனுடைய வாழ்க்கைத் தூய்மையையும், உபதேசமொழிகளையும், அவன் பேச எடுத்துக்கொண்ட விஷயங்களையும் கண்ட மக்கள் அவனை நம்பத் தயங்கவில்லை. எல்லோரும் பிறப்பதும் இறப்பதும் ஒரே மாதிரிதான். ஆகவே யாவரும் ஒருவரைபோல் ஒருவர் இருக்கிறோம் என்பதிலும் ஐயமில்லை. எனவே மற்றவர்களால் செய்யப்பட்ட இது போன்ற காரியத்தை நம்மால் செய்ய முடியுமா என்று யாரும் பயப்படத் தேவையில்லை.

விடுதலையுற்ற அரசின் எதிரிகள் :

நெடு நாளாக அடைத்தே வைக்கப்பட்டிருந்த காட்டு மிருகம் ஒன்று, கூட்டைத் திறந்து விட்டவுடன் வெளியே பாய்ந்தோடி, தனக்கு உணவும் உறையுளும் தேடிக்கொள்ள வகையற்றதாய்த் திரியும்போது, அதைப் பிடித்துக் கட்டி வைப்பதற்குக் காத்திருக்கும் முதல் ஆளிடம் மீண்டும் அகப்பட்டுக் கொள்வது போன்ற நிலையில்தான், சந்தர்ப்ப வசமாக ஓர் அரசனின் ஆட்சிக் கொடுமையிலிருந்து விடுதலையுற்ற மக்கள் இருக்கிறார்கள்.

பொதுக் காரியம் எதுவென்றோ, பகைமை எது அல்லது பாதுகாப்பு எதுவென்றோ அறியாதவர்களாகவும் மன்னர்களைத் தாங்கள் தெரிந்து கொள்ளாமலும் அவர்களால் தாங்கள் தெரிந்து கொள்ளப் படாமலும் இருந்து. இந்த நிலையில், முன்னைய ஆட்சியைக் காட்டிலும் மோசமான ஆட்சிக்கு வெகு எளிதில் உட்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

இத்துடன் இன்னொரு கஷ்டமும் இருக்கிறது. விடுதலையடைகிற ராஜ்யம் நண்பர்களைப் பெறுவதில்லை; பகைவர்களையே பெறுகிறது. கொடுங் கோலாட்சியில் நன்மையடைந்தவர்களும், மன்னனின் நிதிப் பணத்தில் உண்டு கொழுத்தவர்களும், ஆட்சி மாறியவுடன் அப்படிப் பட்ட வசதிகளையெல்லாம் இழந்து விடுகின்றபடியால், அதன் பகைவராக மாறுகிறார்கள். முந்திய அதிகாரங்களையும் நன்மைகளையும் திரும்பப் பெறுவதற்காக அந்த மனிதர்கள் மீண்டும் கொடுங்கோலாட்சியைக் கொண்டுவர முயற்சி செய்கிறார்கள். இதனால்தான் விடுதலையடைகிற ஓர் அரசு நண்பர்களைப் பெறுவதில்லை; பெரும் பகைவர்களையே பெறுகிறது என்று கொள்கிறோம். இந்தப் பகைவர்களைக் கொன்றொழிப்பதைத் தவிர, அந்த நாடு தன் விடுதலையைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழி எதுவும் இல்லை.

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்

கொல்குறும்பும் இல்லது நாடு

- திருக்குறள்

பழமைப் போர்வையில் புதுமையைப் புகுத்த வேண்டும் :

ஒரு ராஜ்யத்தின் அரசாங்கத்தைச் சீர்திருத்த முயல்கிறவன் அதன் பழைய நடவடிக்கைகளின் வெளித் தோற்றம் மாறாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியும். உண்மையில் மகத்தான மாறுதல் ஏற்பட்டிருந்தாலும் வெளிக்கு மாறாததுபோல் தோன்றச் செய்ய வேண்டும். இந்த இரகசியத்தை ரோமானியர்கள் நன்றாக உணர்ந்திருந்தார்கள் என்று தெரிகிறது. அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றி இரண்டு தலைமையதிகாரிகளை அரசனுக்குப் பதிலாக நியமித்த அவர்கள், அவர்களுடைய உத்தியோகஸ்தர்களைப் பனிரெண்டு பேருக்கதிகமாக நியமிக்கவில்லை. ஏனெனில் அரசன் பனிரெண்டு உத்தியோகஸ்தர்களையே வைத்திருந்தான். தவிரவும் ரோமானியர்கள் ஆண்டுதோறும் பலி கொடுக்கும் திருநாள் ஒன்றை நடத்தி வந்தார்கள். இதை அரசனே நேரில் சென்று நடத்தி வைப்பது வழக்கமாக இருந்து வந்தது. அரசனில்லாததால் தங்கள் பரம்பரைப் பழக்கவழக்கங்கள் மாறிவிட்டதாக மக்கள் குறைப்பட்டுக் கொள்ளக் கூடாதென்று எண்ணிய அரசியல்வாதிகள், இந்தச் சடங்கைச் செய்வதற்காகப் பலியரசன் என்ற பெயரில் ஒரு விசேஷத் தலைவனை உண்டாக்கினார்கள். அவனுக்குத் தங்கள் மதகுருவிற்கு அடுத்த இடத்தில் வைத்துப் போற்றினார்கள். புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள விரும்புகிறவர்கள் இந்தமுறையைக் கையாள வேண்டியது இன்றியமையாதது. ஆனால், பழங்காலத்து ஆசிரியர்கள் கொடுங்கோலர்கள் என்று குறிப்பிட்டபடி சர்வாதிகாரமாக, நடக்க எண்ணுபவர்கள் எல்லாவற்றையும் அடியோடு மாற்றித்தான் ஆக வேண்டும்.

புதிய அரசன் முழுக்க முழுக்கக் கெட்டவனாயிருக்க வேண்டும்.

புத்தம் புதிதாக ஒரு ராஜ்யத்திற்கு அல்லது நகரத்திற்கு அரசனாக வருகிறவன். முக்கியமாக அவனுடைய அதிகாரத்தின் அடிப்படை பலமற்ற நிலையில் இருக்கும் சமயத்தில் அவன் ஒரு குடியரசையோ அல்லது முடியரசையோ ஏற்படுத்த விரும்பாத நிலையில் அவன் அந்த அரசாங்கத்தை முற்றிலும் புதிய முறையில் நடத்துவது சிறந்த வழியாகும். அதாவது, அவன் புதிய பட்டங்களும், புதிய அதிகாரங்களும் கூடிய புதிய ஆட்சித்தலைவர்களை நியமிக்க வேண்டும். புதிய மனிதர்களை உண்டாக்க வேண்டும். ஏழைகளைப் பணக்காரர் ஆக்க வேண்டும். பணக்காரர்களை மொட்டையடிக்க வேண்டும். இதுவும் தவிரப் பழைய நகரங்களை அழித்துப் புத்தம் புதிய நகரங்களை உண்டாக்கவேண்டும். ஓரிடத்தில் இருக்கும் குடிமக்களை மற்றோரிடத்திற்குக் குடியேறச் செய்யவேண்டும். தன் ஆட்சிக்குட்பட்ட, பட்டம், பதவி, செல்வம், மரியாதை, இடம், ஊர், மக்கள் ஆகிய எதுவும் மாறுபடாமல் இருக்கும்படி விடக்கூடாது. அலெக்ஸாண்டரின் தந்தை பிலிப் இப்படித்தான் சாதாரணச் சிற்றரசனாக இருந்து கிரேக்க தேசத்துப் பேரரசனாக மாறினான். அவன் தன் குடிமக்களை ஆட்டு மந்தைகளை நடத்திச் செல்வது போல் ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்கு விரட்டிக்கொண்டு சென்றான் என்று சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள். உண்மையில் இது நாகரிகத்திற்குப் புறம்பான பெருங்கொடுமையான செயல்தான். இருப்பினும் மனிதத் தன்மையுள்ள முதல் வழியைக் கடைப்பிடிக்க விரும்பாத எவனும், தன் அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள விரும்பினால், இந்தக் கொடிய நடைமுறையைத்தான் கையாள வேண்டும். ஆனால், பொதுவாக மனிதர்கள் இரண்டுக்கும் இடையேயுள்ள முறையையே மோசமான வழியையே பின்பற்றுகிறார்கள். ஏனெனில், முழுக்க முழுக்க நல்லவராயிருக்கவோ அல்லது முழுக்க முழுக்கக் கெட்டவராயிருக்கவோ அவர்களுக்குத் தெரிவதில்லை.

நன்றி கெட்டவர் யார்?

நன்றி கெட்டவர்கள் என்று சொல்லப்பட வேண்டியவர்கள் ஒரு தேசத்து மக்களா அல்லது அரசனா என்று அறிந்து கொள்வதற்கு முன் நன்றி கெட்ட தனம் எப்படியுண்டாகிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். லோபித்தனத்தினால் அல்லது பயத்தினால்தான் நன்றிகெட்டதனம் உண்டாகிறது. ஒரு தேசத்து மக்களோ அல்லது மன்னனோ ஒரு படைத்தலைவனை வெளி தேசத்தின்மீது படையெடுத்து வரும்படி அனுப்புகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவன் தன் வெற்றிகளினால் பெருங் கீர்த்தியடைந்து திரும்பி வந்தால் மன்னனோ அல்லது மக்களோ, அவனுக்கு வெகுமதியளித்துச் சிறப்பிக்க வேண்டும். ஆனால், தங்கள் லோபகுணத்தினால் அவனுக்கு வெகுமதியளிக்காமல் பெருந்தீமையிழைத்து அவகிர்த்தியைத் தேடிக் கொள்கிறார்கள், இதற்கு டாசிட்டஸ் கீழ்க்கண்டவாறு காரணம் கூறுகிறான். “மனிதர்கள் நன்றியற்றவராக நன்மை செய்வதைக் காட்டிலும் நன்றிக் கேடாகத் தீமை செய்யவே தயாராயிருக்கிறார்கள். ஏனெனில், நன்றி காட்டுவது பெருஞ் சுமையாகவும், கேடிழைப்பது இன்பந் தருவதாகவும் இருக்கிறது”. சரித்திரத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் ஏராளம். ஒரு படைத் தலைவன் அடைந்த பெரு வெற்றியே அவனுக்குக் கசப்புத் தரக் கூடியதாகி விடக் கூடும். அவன் அடைந்த வெற்றிக்குக் காரணம் அவன் திறமையல்ல என்றும், எதிரியின் கோழைத்தனம் அல்லது கூடச் சென்ற துணைப்படைத் தலைவர்களின் உழைப்பாக இருக்கும் என்று கூறி அவனைச் செல்வாக்கிழக்கச் செய்துவிடுவார்கள்! சில சமயம் கொன்றுவிடவும் செய்வார்கள்.

அச்சமும் ஐயப்பாடும் அரசர்களுக்கு ஏற்படுவது இயல்பு. அவற்றை எதிர்த்துத் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அவர்களால் இயலாது. ஓர் அரசன் எப்படித் தவறு செய்யாமல் இருக்க முடியாதோ அப்படியே ஒரு தேசத்து மக்களும் இருக்க முடியாது என்று கூறுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

முடிவாக, இந்தத் தவற்றுக்கு லோபித்தனம் காரணமாக மக்கள் ஆளாவதே கிடையாது. அச்சத்தின் காரணமாக அரசர்களைப் போல அவர்கள் இதற்கு ஆளாவதும் அதிகமில்லை. ஏனெனில் அவர்கள் அச்சமடையக் காரணமும் அதிகமில்லை.

ஆபத்துக் காலத்துச் சலுகை :

ரோமாபுரியின் ஆட்சிப் பீடத்தில் மீண்டும் பழைய மன்னர்களான டார்க்குவின்களை அமர்த்துவதற்காகப் போர் சென்னாதாக்கிய போது, ரோமானியக் குடியரசுக்கு ஆபத்து வந்துவிட்டது. யுத்தத்தில் இறங்குவதைக் காட்டிலும், பழைய அரசர்களையே திரும்பவும் குடிமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா என்ற சந்தேகம் ஆட்சிக் குழுவினருக்கு ஏற்பட்டது. இந்தச் சந்தேக நிலையை நீக்கித் தங்கள் நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உப்பு வரி போன்ற சில வரிகளை அவர்கள் நீக்கிவிட்டார்கள். பஞ்சம், போர் முதலிய கொடுமைகளைப் பொறுத்துக்கொண்டு மக்களும் எதிரிகளை எதிர்த்துப் போராட உதவியாயிருந்தார்கள். ஆனால், இதே உதாரணத்தை எல்லா அரசுகளும் பின்பற்றி விடக் கூடாது. ஏனெனில் இப்படிப்பட்ட சலுகைகளுக்கு ஆட்சியாளர்கள் தாம் காரணம் என்று மக்கள் நினைக்கமாட்டார்கள். தங்கள் பகைவர்கள் தாம் காரணம் என்றுதான் எண்ணுவார்கள். போர் முடிந்ததும் மீண்டும் அந்த வரிகள் குட்டி போட்டுக் கொண்டு வந்துவிடும் என்பதை அவர்கள் அறியாதவர்கள் அல்ல. ஆனால், ரோமாபுரியில் மட்டும் இந்தக் கொள்கை வெற்றி பெற்றதே என்றால் அங்கு அந்தச் சமயத்தில் ஆட்சி புதிது. வேறு பல சட்டங்கள் தங்கள் நன்மைக்காக உருவாக்கப்பட்டதை மக்கள் அறிந்திருந்தார்கள். பகைவர்கள் வந்து விட்டதால் வரிவிலக்கு அளிக்கப்பட்டது என்று நினைக்காமல்.- தங்கள் ஆதரவைப் பெறுவதற்காக ஆட்சிக் குழுவினர் செய்த ஏற்பாடு என்று அவர்கள் கருதினார்கள்.

எந்தக் குடியரசுத் தலைவனோ, அல்லது அரசனோ. ஆபத்துக் காலத்தில் மக்களுக்குச் சலுகையளிப்பதன் மூலம் அவர்கள் நல்லெண்ணத்தைப் பெறலாம் என்று எண்ணினால் அவன் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டவனாகிறான் என்பதில் ஐயமில்லை. மக்களின் நல்லெண்ணத்தைப் பெறாமற் போவது மட்டுமல்லாமல் அவன் தனக்கே குழி தோண்டிக்கொண்டவனும் ஆவான்.

தீயசக்திகளை எதிர்க்கக் கூடாது:

ஒரு குடியரசுக்கு உள்ளாக ஒரு தீயசக்தி எழுந்தாலோ அல்லது வெளியிலிருந்து கொண்டு அந்த தீயசக்தி அச்சுறுத்திக் கொண்டு இருந்தாலோ, அதைச் சூழ்நிலைக்குத் தகுந்தபடி நடந்து படிப்படியாக வலுவிழக்கச் செய்ய வேண்டுமேயல்லாமல் அடியோடு நிர்மூலப்படுத்த முயலக்கூடாது. அதை வேரோடழித்துவிட முயல்கிறவன் அதனுடைய வேகத்தை அதிகரிக்க உதவுபவனாகவே ஆகிறான். இப்படிப்பட்ட தீய சக்திகள் வெளிக் காரணங்களைக் காட்டிலும் பெரும்பாலும் ஒரு குடியரசின் உட்காரணங்களிலிருந்தே எழுகின்றன. அது பெரும்பாலும் ஒரு குடிமகனிடம் அவனிடம் இருக்கவேண்டியதற்குமேல் அதிகமான அதிகாரம் தேடிக்கொள்ள அனுமதித்து விடுவதன் பலனாக ஏற்படுகிறது; அல்லது சுதந்திரத்தின் உயிர்நாடியான நீதி முறையில் மாறுதல்கள் அனுமதிக்கப்படுவதால் உண்டாகிறது. அதன் பிறகு இந்த ஆபத்து, திருத்தப்பட முடியாத அளவுக்கு மோசமாக வளர்ந்துவிடுகிறது. எந்த விஷயத்தையும் ஆரம்பத்தில் ஆதரிப்பது மனிதர்களின் இயல்பாக இருப்பதால் இந்தத் தீய சக்திகளை அவற்றின் அடிப்படை வேர்க்கொள்ளும்போதே கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமாயிருக்கிறது. அதிலும் இப்படிப்பட்ட செயல்கள் ஏதோ சிறிது தகுதியுடையதாகத் தோன்றும் பொழுதும், இளைஞர்களால் செய்யப்படும் பொழுதும் இந்த ஆதரவு வெகு விரைவில் கொடுக்கப்படுகிறது. ஒரு குடியரசில் அசாதாரணமான தகுதிகள் வாய்ந்த ஒரு மேற்குலத்து இளைஞன் தலைதூக்குவதைக் கண்டால், குடிமக்கள் எல்லோருடைய கணகளும் அவன் பக்கம் திரும்புகின்றன. விளைவைப் பற்றி எண்ணிப் பாராமல் எல்லோரும் அவனுக்கு மதிப்பளிக்க முந்துகிறார்கள். இந்த மாதிரியாக வெகு விரைவில் அவன் உயர்ந்த நிலைக்கு வந்து விடுகிறான். குடிமக்கள் தங்கள் தவறுதலை உணர்கின்ற காலத்தில் அவனை அடக்கக்கூடிய வழிவகையற்றவர்களாகி விடுகிறார்கள்.

இப்படிப்பட்ட தீயசக்திகளை விலக்குவதற்குக் கையாளக் கூடிய புத்திசாலித்தனமானவழி அவற்றைக் கடுமையாக எதிர்ப்பதல்ல காலத்திற்கேற்றபடி நடந்து, அவற்றைத் தாமாகவே அழியச் செய்ய வேண்டும். அல்லது அவற்றின் தீயவிளைவுகளை நீண்டகாலங் கடந்து நிகழும்படியாவது விட்டுவிடவேண்டும். இப்படிப்பட்ட தீயசக்திகளை ஒழிக்க விரும்புகின்ற அரசர்கள் அல்லது அதிகாரிகள் எல்லாவிஷயங்களையும் நன்றாக ஆராய்ந்து பார்த்து அவற்றைத் தாக்குகின்ற காரியத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். நெருப்பை ஊதியணைத்து விடலாம் என்று அவர்கள் நம்பிவிடக் கூடாது. அந்தத் தீய சக்தியின் அளவையும் ஆற்றலையும் நன்றாக உணர்ந்து, அதை எதிர்க்கப்போதுமான பலம் தங்களிடம் இருக்கிறதென்று கருதினால், விளைவைப்பற்றி எண்ணாமல் அவர்கள் தாக்க வேண்டும், இல்லாவிட்டால் அந்த முயற்சியையே கைவிட்டு விட வேண்டும்.

குடியரசு, சமயத்தில் சர்வாதிகாரத்திற்கு இடங்கொடுப்பதாய் இருக்கவேண்டும் :

ரோமாபுரியை ஆண்ட முதல் கொடுங்கோலரசன் சர்வாதிகாரி என்ற பெயரில் ஆண்டதன் காரணமாக, யதேச்சாதிகார ஆட்சிக்கு வழிகோலும் முறையில் ரோமானியர்கள் சர்வாதிகாரர்களை உற்பத்தி செய்ததாகச் சொல்லிக் குற்றஞ்சாட்டுகின்ற பல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். சீசர்கூட இந்தப்பட்டப் பெயருக்குத் தகுந்தாற்போல் நடக்க வேண்டும் என்பதற்காகவே எதேச்சாதிகாரமாக நடந்து கொண்டான் என்று கூறுகிறார்கள், ரோமாபுரியின் ஆட்சிப் பீடத்திற்குச் சர்வாதிகாரி என்ற பட்டம் இல்லாவிட்டால் வேறொரு பட்டம் இருக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. ஓர் ஆதிக்க சக்தி எந்தப் பெயரையும் தனக்குச் சூட்டிக்கொள்ள முடியும். ஆனால், எந்த ஒரு பெயரும் அந்த சக்தியைக் கொடுத்துவிட முடியாது. பொது நீதி முறைப்படி உண்டாக்கப்பட்ட சர்வாதிகாரம் எப்பொழுதும் ரோமாபுரிக்கு நன்மையையே ஏற்படுத்தியிருக்கிறது. முறைப்படி ஏற்படுத்தப்பட்ட எந்தச் சர்வாதிகாரியும் ரோமாபுரிக் குடியரசுக்குப் பயன் கொடுக்கத் தவறியதே கிடையாது.

இதற்குக் காரணம் தெளிவானது. ஒரு குடிமகன் அசாதாரணமான அதிகாரமுடையவனாவதற்கு முன்னால் பல காரியங்கள் நடக்க வேண்டியிருக்கின்றன.

சர்வாதிகாரியாக வரக்கூடியவன் பெரும் பணக்காரனாக இருக்கவேண்டும். பக்கத் துணையாகவும் அனுசரணையாகவும் இருக்கக்கூடிய பலர்தன் கட்சியைச் சேர்ந்தவர்களாயிருக்க வேண்டும். நீதிமுறைகள் கண்காணிக்கப்படுகிற நாட்டில் இது நடைபெறாத காரியம். அப்படியே அவன் கட்சி சேர்த்துக் கொண்டவனாயிருந்தால், பொதுமக்கள் அவனை ஓர் ஆபத்தான ஆசாமியாகக் கருதுவார்கள். ஆகையால் அவர்களுடைய ஆதரவு அவனுக்குக் கிடைக்காது. மேலும் சர்வாதிகாரிகள் குறிப்பிட்ட கால வரையறையளவே நியமிக்கப்படுவார்கள். அந்தக் குறிப்பிட்ட கால அளவிற்கே அவர்கள் அதிகாரம் செல்லுபடியாகும். ஆபத்துக் காலத்தில் நியமிக்கப்படுகிற சர்வாதிகாரி, அவசரத்தை முன்னிட்டு யாருடைய யோசனையையும் கேளாமல் தனக்குச் சரியென்று தோன்றுகிறபடி எதுவும் செய்யலாம். எவருடைய முறையீட்டையும் கேட்காமல் அவர்களைத் தண்டிக்கலாம். இப்படிப்பட்ட காரியங்களைச் செய்யலாமே தவிர, அரசாங்கத்தில் எவ்விதமான மாறுதலையும் செய்யவோ, ஆட்சிக்குழு அல்லது மக்களின் அதிகாரத்தைக் குறைக்கவோ, இருக்கின்ற அமைப்புக்களை ஒழித்துக் கட்டிவிட்டுப் புதிய அமைப்புக்களை உண்டு பண்ணவோ, ஒரு சர்வாதிகாரியால் முடியாது. குறிப்பிட்ட கால அளவுக்கு வரையறுக்கப்பட்ட அதிகார எல்லைக்குள் நின்று செயலாற்றும்படி நியமிக்கப்பட்ட சர்வாதிகாரிகளால் ரோமாபுரிக் குடியரசு நன்மையடைந்ததே தவிர எவ்விதமான தீமையும் அடையவில்லை.

வேனில் குடியரசில், குடிமக்களில் ஒரு சிலர், அவசரமான காரியங்களில் பெரிய ஆலோசனை சபையைக் கலக்காமலே முடிவு செய்யும் அதிகாரம் உடையவர்களாய் இருந்தார்கள். இப்படிப்பட்ட ஏதாவதொரு முறையில்லை யானால் நீதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றுகின்ற எந்தக் குடியரசும் அழிந்துவிடும். அப்படி அது அழியாமல் காப்பாற்ற சட்டத்தைச் சட்டை செய்யாமலாவது இருக்கவேண்டும். எல்லாவற்றிற்கும், எந்தவிதமான அவசர நிலைமைக்கும் பொருந்தக்கூடிய நீதி முறையில்லாத எந்தக் குடியரசும் பூரணமானதல்ல. முடிவாகச் சொன்னால், ஆபத்தான அல்லது இக்கட்டான சமயத்தில் சர்வாதிகாரம் அல்லது அதைப்போன்ற ஏதாவது ஓர் அதிகாரத்திற்கு உட்படாத எந்தக் குடியரசும் பொதுவாக அழிந்துவிடும் என்றே கூறவேண்டும்.

உயர்பதவியிலிருந்தவன் கீழான பதவியையும் ஏற்கவேண்டும்:

ரோமாபுரிக் குடியரசின் தலைமை அதிகாரியாய் இருந்த குவின்டஸ் பேபியஸ் சேனைத் தலைவனாக மாறினான். ஒரு மகத்தான போரில் தன் தேசத்திற்கு வெற்றியைத் தேடிக் கொடுத்துத் தன் உயிரையும் இழந்தான். ரோமானியர்கள் கீர்த்தியிலும் புகழிலும் பெரு நாட்டமுடையவர்களாயிருந்த போதிலும், தங்கள் அதிகாரத்திற்குட்பட்டிருந்தவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதை அவமானமாகக் கருதவில்லை என்பது இதிலிருந்து நமக்குத் தெரிகிறது. இந்த வழக்கம் நம்முடைய காலத்துப் பழக்கத்திற்கும் விதிமுறைக்கும், கருத்துக்கும் முற்றிலும் மாறானது. வேனிசில் பெரும்பதவியில் இருந்த ஒருவன் கீழ்ப்பதவியை ஏற்கும்படி சொல்லப்படுவதே அவனை அவமானப்படுத்துவதாகும் என்று கருதப்பட்டு வந்திருக்கிறது. தனிப்பட்ட மனிதனைப் பொறுத்தவரையில் இந்தப் பெருமை பாராட்டுவதில் அர்த்த முண்டு. ஆனால் பொதுமக்களைப் பொறுத்தவரையில் இது முற்றிலும் பயனற்றதேயாகும். வேனிசையும் மற்ற புதிய அரசுகளையும் போல, ரோமாபுரியிலும் ஒரு முறை ஆட்சித் தலைமைப் பீடத்தில் இருந்தவன் அதற்குக் கீழ்ப்பட்ட பதவியொன்றை ஏற்றுக்கொள்ள முடியாதென்று மறுத்தால், அதனால், பல குழறுபடிகள் பெரிதும் பொது உரிமையைப் பாதிக்கக் கூடிய வகையில் நடந்திருக்கும்.

நிலவரம்புச் சட்டம்:

மனிதர்கள் தேவைக்காகப் போராடுகின்ற நிலை போன பிறகு தங்கள் பேராசைக்காகப் போராடத் தொடங்குகிறார்கள். அந்தப் பேராசை மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது. அவர்கள் எவ்வளவு உயரத்திற்குப் போன பிறகும் கூட அது அவர்கள் இதயத்தை விட்டுப்போவதில்லை. இதற்குக் காரணம் என்னவென்றால் இயற்கை, மனிதர்களை எல்லாவற்றிற்கும் ஆசைப்படக் கூடியவர்களாகவும், ஆனால், அவற்றையெல்லாம் அடைய முடியாதவர்களாகவும் படைத்திருக்கிறது. தேடுகின்ற சக்தியைக் காட்டிலும் எப்பொழுதும் ஆசை பெரிதாயிருக்கிறது. தாங்கள் அடைந்திருப்பது போதாது என்றும் அதனால் மனக்குறையும் ஏற்படுகிறது. இதனால் அவர்களின் செல்வ நிலையில் மாறுதல் ஏற்படுகிறது. சிலர் தாங்கள் வைத்திருப்பதைக் காட்டிலும் அதிகமாகப் பெற விரும்புகிறார்கள். அதேசமயம் மற்றவர்கள் தாங்கள் வைத்திருப்பதை இழக்கப் பயப்படுகிறார்கள். இதன்பயனாகப் பகைமையும் போரும் உண்டாகின்றன. இதனால் ஒரு நாடு அழிந்து மற்றொரு நாடு ஏற்றம் பெறுகிறது. இவற்றையெல்லாம் நான் ஏன் குறிப்பிடுகிறேனென்றால் ரோமானிய மக்கள் பிரபுக்களை எதிர்த்துத் தங்கள் பிரதிநிதிகளை ஏற்படுத்தியதோடு மனத்திருப்தி அடையவில்லை; இந்த நிலைக்கு வந்த பிறகு அவர்கள் பேராசை வயப்பட்டுப் போராடத் துவங்கினார்கள். பிரபுக்கள் பெரிதாக மதிக்கின்ற அவர்களுடைய உடைமைகளையும் செல்வாக்கையும் பங்கு போட்டுக்கொள்ள மக்கள் விரும்பினார்கள். இதன் காரணமாக எழுந்த நிலவரம்புச் சட்டத்தை முன்னிட்டு உன்மத்தமான போராட்டம் எழுந்தது. இறுதியில் ரோமானியக் குடியரசின் அழிவுக்குக் காரணமாக இருந்தது இந்த நிலவரம்புச் சட்டமேயாகும்.

இந்தச் சட்டத்தின்படி ஒரு குடிமகன் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிலம் வைத்திருக்கக் கூடாது. பகைவரிடமிருந்து பெறும் நிலத்தைக் குடிமக்கள் எல்லோருமே பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று ஏற்பட்டது. இது இருவகையிலும் பிரபுக்களைப் பாதித்தது. பிரபுக்கள் அனைவரிடமும் அதிகமான நிலமிருந்தது. குறிப்பிட்ட அளவுக்குமேல் இருந்த நிலங்களை அவர்கள் இழக்கவேண்டியிருந்தது. இரண்டாவதாகப் பகைவரின் நிலங்களைக் கொண்டு தங்கள் செல்வத்தை உயர்த்திக் கொள்ளும் வாய்ப்பையும் அவர்கள் இழக்கவேண்டியிருந்தது. இதனால் தான் அவர்கள் இந்தச் சட்டத்தை எதிர்த்தார்கள் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்குமுன் பிரபுக்கள் மிகவும் பொறுமை காட்டினார்கள். ஒரு படைப்பிரிவையோ, அல்லது மக்கள் பிரதிநிதி ஒருவனையோ கொண்டு இந்தச் சட்டத்தை எதிர்க்கும்படிச் செய்து பார்த்தார்கள்.

ரோமானியர்கள் தங்கள் படை பட்டாளங்களை இத்தாலியின் எல்லைவரைக்கும் அதற்கப்பாலும் கூட அனுப்பிவைத்தார்கள். ஆனால், பகைவரிடமிருந்து பெற்ற நிலங்கள் தங்கள் கண்ணுக்கெட்டாத தூரத்தில், ரோமில் இருந்து வெகுதொலைவில் இருந்தன. எளிதாக விவசாயம் செய்யக்கூடாத நிலையில் இருந்த அவை பெரிதும் விரும்பப்படாதனவாகப் போயின. பகைவர்களை அந்தப் பிரதேசங்களிலிருந்து விரட்டியடித்தபின், புதுக் குடியேறிகளை அங்கு அனுப்பினர். இப்படிப்பட்ட நிலையில் நிலவரம்புச் சட்டம் நெடுநாள் வரையில் தூங்கிக் கொண்டிருந்தது.

ஆனால் கிராச்சி என்பவன் காலத்தில் அவன் அந்தச் சட்டத்திற்கு மீண்டும் உயிர்கொடுத்தான். இதனால் ரோமானியக் குடியரசு அடியோடு அழிய நேர்ந்தது. ஏனெனில் இதற்கிடையில் நீதி முறைக்கு எதிரியானவர்களின் தொகை இரட்டிப்பாகியிருந்தது. நிலவரம்புச் சட்டம் உயிர்ப்பிக்கப் பட்ட செயல், ஆட்சிக் குழுவிற்கும் மக்களுக்கும் இடையே மனக்கசப்பை வளர்த்தது. இந்த வெறுப்பு கட்டுப்பாடற்ற கொடுமையான இரத்தப் போராட்டத்தில் வந்து முற்றியது.

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால், பெரும்பாலான மக்கள் கௌரவத்தைக் காட்டிலும் தங்கள் சொத்துக்களையே பெரிதாக மதிக்கிறார்கள் என்பது தான். ரோமானியப் பிரபுக்கள் தங்கள், அதிகாரத்தையும், மரியாதையையும் மக்களுக்கு விட்டுக் கொடுக்க அதிகமான வருத்தமடையவில்லை. ஆனால், சொத்துப் பிரச்சனை வந்த மாத்திரத்தில் அசையாத பிடிவாத குணத்தோடு அதை எதிர்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

அரசு நடத்த மனவுறுதி வேண்டும்:

ரோமாபுரியில் கொள்ளை நோய் பரவியிருந்த சமயத்தில், அதைத் தாக்குவதற்கு இதுதான் தக்க சமயமென்று எண்ணிய வோல்சியர்களும், ஈக்குவேனியர்களும் பெரும்படை திரட்டிக் கொண்டு, ரோமாபுரி ராஜ்யத்தைச் சேர்ந்த லத்தின்காரர்களையும் ஹெர்னீசியர்களையும் கொன்று கொள்ளையிட ஆரம்பித்தார்கள். அவர்கள் ரோமானியர்களைத் தங்கள் உதவிக்கு வரும்படிக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், கொள்ளை நோய்க்கு ஆளாகியிருந்த ரோமானியர் தாங்கள் உதவிக்கு வரக்கூடிய நிலையில் இல்லாததால் அவர்கள் தாங்களே தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டியது தான் என்று கூறிவிட்டார்கள். ரோமானிய ஆட்சிக்குழுவின் புத்திசாலித் தனத்தையும் நல்லெண்ணத்தையும் நாம் இந்த நிகழ்ச்சியில் இருந்து அறிகிறோம்.

வேறு சமயங்களில் பகைவர் படையெடுத்தபோது அந்த மக்கள் போராடக் கூடாதென்று தடுத்த அதே ஆட்சிக்குழுவினர் இப்போது சந்தர்ப்பத்தையொட்டி அவர்களே தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று கூறிவிட்டனர். அவர்கள் அவ்வாறு கூறாவிட்டாலும் அந்த மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளத் தாங்களே போராடித் தீரவேண்டிய நிலையில் தான் இருந்தார்கள். இதிலே கவனிக்க வேண்டியதென்ன வென்றால், ரோமானியர் உதவி செய்யக்கூடாத நிலையில் இருந்தபோதிலும், தங்கள் அனுமதியின் பேரில் அந்த லத்தீன் காரர்களும், ஹெர்னீசியர்களும் போருக்குச் சென்றனர் என்று பேர் பண்ணியதுதான். அவர்கள் அவ்வாறு அனுமதித்ததாகக் காட்டிக்கொள்ளாவிட்டால் ஒருமுறை அவர்கள் உத்தரவின்றி ஒரு காரியத்தைச் செய்த மக்கள் அதையே வாடிக்கையாகக் கொண்டு விடுவார்கள். எல்லாச் சமயத்திலும் அவர்கள் தம் விருப்பப்படி நடக்காமல் செய்வதற்கு இந்தச் சூழ்ச்சி அல்லது ராஜதந்திரம் பயன்பட்டது.

வாலென்டினோ கோமகன் பாஎன்சா, போலோகனா ஆகியவற்றை அடிப்படுத்திவிட்டு ரோமாபுரிக்குத் திரும்பும் வழியில் துஸ்கானி வழியாக கடந்து செல்ல வேண்டியிருந்த எல்லையில் தன் படையுடன் செல்ல அனுமதி கேட்டுப் பிளாரென்சுக்கு ஆளனுப்பினான். பிளாரென்சு அதிகாரிகள் ஓர் ஆலோசனை சபை கூட்டினார்கள். அனுமதி கொடுக்கலாமென்று யாரும் யோசனை கூறவில்லை. கோமகனோ பெரும் படையுடன் வந்திருந்தான். பிளாரென்ஸ் காரர்களிடமோ போதிய படை கிடையாது. இந்தச் சந்தர்ப்பத்தில், அவர்கள் கோமகனுக்கு அனுமதி கொடுத்திருந்தால் அவர்களுக்குப் பெருமையாக இருந்திருக்கும். கோமகன் பலவந்தமாக அதைக் கடந்து சென்றதால் அவர்களுக்குப் பெருத்த அவமானந்தான் மிஞ்சியது.

நம்பிக்கையும் உறுதியும் இல்லாத குடியரசுகள், புத்திசாலித்தனமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது கிடையாது. அவற்றின் பலவீனம்தான் அவற்றைச் சரியான முடிவுக்கு வராமல் தடை செய்கின்றன.

சலுகை காட்டுவது போல் சுமையை ஏற்றும் முன்யோசனைக்காரர்கள் :

ரோமானிய படைவீரர்கள், தங்கள் வாழ்க்கைச் செலவுகளைத் தாங்களே தேடிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இப்படிப்பட்ட நிலையில் போரை நீடித்த நாள் நடத்துவதென்பதோ தூரப் பிரதேசங்களுக்குப் படை நடத்திக் செல்லுவதென்பதோ முடியாத காரியம் என்பதையுணர்ந்த ஆட்சிக் குழுவினர், படை வீரர்களுக்குப் பொதுப் பணத்தில் இருந்து சம்பளம் கொடுப்பதென்று முடிவு செய்தார்கள். தேவையை உத்தேசித்துச் செய்த இந்தக் காரியம் அவர்களுக்குக் கீர்த்தி தரும்படியான முறையில் அவர்கள் செய்தார்கள். இந்தச் சலுகையைக் கேட்ட மக்கள் இதனால் தங்களுக்கு ஏதோ எதிர்பாராத பெரிய இலாபம் வரப் போவதாக எண்ணிப் பெருமகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். இதனால், மக்களின் மேல் பெருஞ்சுமை ஏற்றப்படுகிறதென்று மக்கள் பிரதிநிதிகள் எவ்வளவு எடுத்துச் சொல்லியும், ஆட்சிக் குழுவின் முடிவை மக்கள் ஏற்றுக் கொண்டதைப் பிரதிநிதிகளால் தடுத்துவிட முடியவில்லை. பின்னால், ஆட்சிக் குழுவின் வரிகளை அதிகப்படுத்திய போது இந்தச் சுமை மேலும் அதிகரித்தது. முன்யோசனையுள்ளவர்கள் தங்கள் செயலின் மூலம் சந்தர்ப்பங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுபவர்கள் என்பது இதில் இருந்து தெரிகிறது. தேவையை முன்னிட்டு ஒரு குறிப்பிட்ட முறையைக் கையாள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் தங்கள் தாராள மனப்பான்மையால் அதைச் செய்ததுபோல் காட்டிக் கொள்வார்கள் அறிவாளிகள்.

பொதுமக்களின் புத்திசாலித்தனம்! :

வெயின்டி நகரைக் கைப்பற்றிய பிறகு ரோமானிய மக்கள், ரோமாபுரியில் வாழ்பவர்களிலே சரிபாதிப் பேர் அங்கு போய்க் குடியேறி வாழ்ந்தால் நல்லது என்று எண்ணினார்கள். வெயின்டி நகரில் நிறைய நிலபுலங்களும், வீடுகளும் இருந்ததோடு ரோமாபுரிக்கு அருகிலேயே இருந்ததும் அவர்களுடைய இந்த ஆசைக்குச் சரியான தூண்டுகோலாயின. இது. பயனற்ற வேலையாகவும், ஆபத்து நிறைந்ததாகவும், விவேகிகளான ஆட்சிக் குழுவினருக்கு நன்றாகப் புலப்பட்டது. செத்தாலும் இந்தக் காரியத்திற்கு அனுமதி கொடுக்க முடியாதென்று அவர்கள் தெரிவித்தார்கள். இந்த விஷயம் விவாதிக்கப்பட்ட போது, மக்கள் ஆட்சிக் குழுவினரின் மீது பெருங்கோபம் கொண்டார்கள். ஆட்சிக் குழுவினர் மட்டும், மிக மேலானவர்களாக மதிக்கப்பட்ட வயது முதிர்ந்த சில பெருமக்களின் பின்னால் சென்று மறைந்து கொள்ளாமல் இருந்திருந்தால், குத்துப்பழி வெட்டுப்பழி நிகழ்ந்திருக்கும்; இரத்தம் சிந்தப்பட்டிருக்கும்.

இதிலிருந்து நாம் இரண்டு விஷயங்களையறிந்து கொள்ளுகின்றோம். மக்கள் பொதுவாக ஒரு கற்பிதமான நன்மையை நம்பி ஏமாந்து தங்கள் அழிவைத் தாங்களாகவே தேடிக் கொள்ளுகிறார்கள் என்பது ஒன்று. அவர்களுக்கு நம்பிக்கையான சிலர் எது நல்லது எது கெட்டது என்று விளக்கிக்கொள்ளாமல் மட்டும் இருந்துவிட்டால், அவர்கள் குடியரசையே குட்டிச்சுவராக அடித்து விடுவார்கள். மக்களுக்கு நம்பிக்கையானவர்கள் யாருமே இல்லாவிட்டால், ஏற்கனவே சில நிகழ்ச்சிகளால் அல்லது சில மனிதர்களால் ஏமாற்றப்பட்ட அவர்கள், நிச்சயமாக ராஜ்யத்தை அழிவு நோக்கி நடத்திச் செல்வார்கள்.

வெளிப்படைக்குப் பயனுள்ளதாகவும் தைரியமளிப்பதாகவும் உள்ள எந்த வழியிலும் அவை உள்ளந்தரங்கமாக மிகுந்த நஷ்டமும் அழிவும் விளைப்பனவாக இருந்தாலும் மக்களைச் செலுத்துவது எளிது. ஆனால், அந்த வழி ஆரம்பத்திலேயே சந்தேகத்திற்கிடமளிப்பதாயிருந்தாலும், நஷ்டமடையச் செய்யக் கூடியதாகத் தோன்றினாலும், அதன் அடித்தளத்தில் குடியரசுக்கு நன்மையும் லாபமும் மறைந்திருந்தாலும் மக்களை அந்த வழிக்குத் திருப்புவது முடியாத காரியம். மக்கள் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் வெளிப்படைத் தோற்றங்களுக்கே பெரிதும் மதிப்பளிப்பவர்கள்.

உடன்படிக்கைகள் :

குடியரசுகளும், அரசர்களும் தத்தமக்கிடையே ஒப்பந்தங்கள் செய்து கொள்வதும் அல்லது குடியரசு ஒன்றும் ஓர் அரசனும் தமக்கிடையே ஒப்பந்தம் செய்து கொள்வதும் நாள் தோறும் நடைபெறுவதைக் காண்கிறோம். ஒரு குடியரசு நிலையான நம்பிக்கைக்குரியதா அல்லது ஓர் அரசன் நம்பிக்கைக்குரியவனா என்பதை ஆராய்ந்து பார்ப்பது நல்லதென்று எண்ணுகிறேன். பல சந்தர்ப்பங்களில் இரு பக்கமும் சரிசமமாகவே இருக்கின்றன. ஆனால் வேறு சில சந்தர்ப்பங்களில் வித்தியாசம் இல்லாமல் இல்லை. ஆக்கிரமிப்பின் காரணமாக ஏற்பட்ட ஒப்பந்தங்கள் அரசனாலும் கடைப்பிடிக்கப் படுவதில்லை. தங்கள் ராஜ்யத்தை இழக்கக் கூடிய எந்தத் தரப்பாரும் அதைக் காப்பாற்றுவதற்காகத் தங்கள் உறுதியை மீறி நன்றி கெட்டதனமாகவும் குறை கூறத் தகுந்த முறையிலும் நடந்து கொள்ளுவார்கள். அச்சமுற்ற நிலையில் உள்ள எந்தத் தரப்பினரும் நம்பிக்கைக்கு அருகதையற்றவராகவே யிருப்பார்கள். இந்த விஷயங்களையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்கும் போது, பயங்கரமான கட்டங்களில் ஓர் அரசனைக் காட்டிலும் குடியரசிலேயே நிலையான தன்மை மிகுதியாகக் காணப்படும் என்று நினைக்கிறேன். அரசர்களைப் போலவே ஒரே மாதிரியான உணர்ச்சிகளும், நோக்கங்களும், குடியரசுகளுக்கும் உண்டாகுமானாலும், அவற்றின் நடைமுறைகள் மிக மெதுவாக நடப்பதாலும் எதற்கும் தீர்மானம் போட்டு வேலை செய்ய வேண்டியிருப்பதால் அதிகக் காலம் பிடிக்குமாதலாலும் அவை நம்பிக்கை தவறி நடப்பது கிடையாது.

பலாபலன்களைக் கருதிப் பல நேச உடன்படிக்கைகள் உடைபட்டிருக்கின்றன. இந்த விஷயத்தில் அரசர்களைக் காட்டிலும், உடன்படிக்கைகளின்படி நடப்பதில் குடியரசுகள் மிகக் கவனம் காட்டி வருகின்றன. அரசர்கள் மிகச் சாதாரணமான ஒரு பலனை முன்னிட்டுக் கூட ஒப்பந்தங்களை மீறத் துணிந்து விடுவார்கள். குடியரசுகளோ பெரும்பலன் கிடைத்த போதிலும் கூட உடன்படிக்கைகளை மீறத் தவறி விடுகின்றன. குடியரசுகள் எவ்வளவு பலன் கிடைத்தாலும் தங்கள் கண்ணியத்தை இழக்கத் துணிவதில்லை.

ஆள்வோரிடம் தாழ்வு மனப்பான்மை கூடாது :

தாழ்வு மனப்பான்மை என்பது பயனற்றது என்பது மட்டுமல்ல; உண்மையில் துன்பந் தருவதுமாகும். அதுவும், பொறாமையினாலோ வேறு காரணங்களினாலோ நம்மீது வெறுப்புடைய தலைக்கனம் பிடித்தவர்களிடம் தாழ்ந்து போவதென்பது பெருந் துன்பந்தருவதாகும். இதற்குச் சரித்திராசிரியர்கள் பல சான்றுகளைக் காட்டுகின்றார்கள்.

லத்தீன்காரர்கள் தங்களைத் தாக்குவதாக கான்மைட்டுகள் ரோமானியரிடம் முறையிட்ட போது. லத்தீன்காரர்களுக்கு எரிச்சலூட்ட விரும்பாத ரோமானியர்கள், தொடர்ந்து போரிடுவதை நிறுத்தும்படி சொல்லித் தாழ்ந்து போனார்கள். இந்த நடவடிக்கை, அவர்கள் விரும்பியபடி லத்தீன்காரர்களுக்கு எரிச்சலூட்டவில்லை என்பதோடு, அவர்களை நேரடியாக ரோமானியரோடு பகைமை பாராட்டக் கூடிய தைரியத்தையும் அளித்தது. ரோமானியர்கள் தெள்ளத் தெளிவாக இப்படித் தாழ்ந்து போனதுதான் லத்தீன்காரர்களின் இறுமாப்பை அதிகரிக்கச் செய்தது. ஆகவே எந்த அரசனும் தன் அந்தஸ்தை இழக்கும்படியான காரியம் எதையும் செய்யக்கூடாது. அந்தஸ்தை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் ஒழிய, தன்னிச்சையாகக் கூட எதையும் விட்டுக்கொடுக்க முன் வரக்கூடாது. விட்டுக்கொடுக்க நேர்ந்தாலும் பலாத்காரத்தின் பேரில் விட்டுக் கொடுக்கலாமே தவிர பலாத்காரத்திற்கு அஞ்சி விட்டுக் கொடுக்கவே கூடாது. அவன் போரைத் தவிர்ப்பதற்காக - அச்சத்தின் காரணமாகத் தாழ்ந்து போவானேயானால், அந்தப் போரிலிருந்து தப்புவான் என்பது அரிதே! கோழைத்தனமுடையவனிடம் இருந்து ஒன்றைப் பெற்றவன், அத்துடன் திருப்தியடையப் போவதில்லை. அரசனிடம் அவன் வைத்திருந்த மதிப்புக் குறையக் குறைய எதிரியின் அகந்தை ஓங்கிக் கொண்டு போகும். மேலும், அரசன் தளர்ந்தவனாகவோ கோழையாகவோ காணப்பட்டால் உடனிருக்கும் அவன் நண்பர்களின் உற்சாகமும் குறைந்து போகும். ஆனால், தன் படை சிறிதாயினும் பகையை எதிர்த்துப்போராடத் துணிச்சலுடன் கிளம்புகிற அரசனுக்குப் பகைவனும் மதிப்பும் மரியாதையும் காட்டுவான். அக்கம் பக்கத்து அரசர்களும் அவன் வீரத்தைப் பாராட்டி அவனுக்கு ஒத்தாசைக்கு வர முற்படுவார்கள்.

ஒரே ஒரு பகைவன் எதிர்க்கும்போது மட்டும் தான் மேற்கூறிய கருத்தைக் கைக்கொள்ள வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பல பகைவர்கள் சூழ்ந்தெதிர்க்க முனைகிற காலத்தில் அவர்களில் ஒருவர் இருவரைத் தன் வசப்படுத்திக் கொள்ளவோ, தன் பகைக் கும்பலிலிருந்து விட்டுப் பிரிந்து செல்லும்படிச் செய்யவோ, ஏதாவது சிலவற்றை இழக்க முனைவதுதான் ஒரு புத்திசாலித்தனமான அரசனின் செயலாக இருக்க முடியும்.

எண்ணித் துணிக கருமம் :

எவ்விதமான ஆலோசனையிலும் முக்கியமான பிரச்சனையில் உடனடியாக ஒரு முடிவுக்கு வருவது நல்லது. எப்பொழுதும் தீர்மானமற்ற நிலையிலும் நிலையற்ற தன்மையிலும் இருப்பது நல்லதல்ல.

லத்தின்காரர்கள் ரோமானியரிடமிருந்து பிரிந்து விடுவது பற்றி ஆலோசனை செய்து கொண்டிருந்தார்கள். ரோமானியர்களும் அவர்களுடைய பிரச்சனையைத் தீர்த்து அவர்களுடன் நட்புப் பாராட்ட விரும்பினார்கள். அதற்காக லத்தின் மக்களில் எட்டுப் பேரை ரோமாபுரியில் நடக்கும் ஓர் ஆலோசனைக் கூட்டத்திற்கு வரும்படி அழைத்திருந்தார்கள். ரோமானியர்களின் இந்த நல்லெண்ணத்தைப் பற்றி அறிந்த லத்தின்காரர்கள், இதுவரை தாங்கள் அவர்கள் கசப்படையும்படிச் செய்த பலகாரியங்களையும் மனத்தில் வைத்துக்கொண்டு, யாராரை அனுப்புவது என்னென்ன பேசும்படி அவர்களிடம் சொல்லியனுப்புவது என்று ஆராய்ந்தார்கள். அப்போது, பிரேட்டர் அன்னியஸ் என்பவன் கூறிய வார்த்தைகள் இவை:

“நாம் அவர்களிடம் என்ன பேச வேண்டும் என்பதைக் காட்டிலும் நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்ப்தே நம்முடைய நன்மைக்குப் பெரும் முக்கியத்துவமுடையது என்று நான் கருதுகிறேன். இந்த விஷய்த்தில் நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டால், நம் செயல்களுக்குத் தகுந்தாற்போல் நம் வார்த்தைகளை அமைத்துக் கொள்ளலாம்”

இது உண்மைதான்! ஒருவிதமான தீர்மானமுமற்ற சந்தேகமான இரண்டுங்கெட்டான் நிலையில் ஒருவன் எவ்வளவு பேசினாலும் தன் நிலையை விளக்கிச் சொன்னவனாக மாட்டான். தீர்மானமாக ஒரு காரியத்தை முடிவு செய்துவிட்டால், அப்புறம் அவன் அதற்குத் தகுந்தாற்போல் பேசிக் கொள்ளலாம்.

தாமதமான காலந் தாழ்ந்த யோசனைகளால் எதுவும் பயனில்லை. அது தீமை பயக்கக் கூடியது. பல வீ ன முள்ளவர்களோ, படைபலமற்றவர்களோ, தைரியமற்றவர்களோ தாம் தாமதங் காட்டுவார்கள். நல்ல குடிமக்கள் எந்த விஷயத்திலும் விரைவான ஒரு முடிவுக்கு வந்து விடுவார்கள்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவ மென்ப திழுக்கு

-திருக்குறள்

அடுத்துக் கெடுப்பதால் ஆட்சியைக் கைப்பற்றலாம் :

ரோமானியக் குடியரசில் மக்களுக்கும் பிரபுக்களுக்கும் இடையே பெரும் பிளவு ஏற்பட்டிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தையொட்டி, ரோமாபுரியின் மீது படையெடுத்தால் எளிதாக ரோமாபுரி ராஜ்யத்தை அடியோடு அழித்து விடலாமென்று லெயண்டியர்கள் துஸ்காளியரின் பக்க பலத்தோடு படையெடுத்துச் சென்றார்கள். ஆனால், லெயண்டியர்கள் படையெடுத்து வந்ததைக் கண்ட ரோமானியர்கள், தங்களுக்குள் இருந்த வேற்றுமைகளை மறந்துவிட்டு ஒன்று சேர்ந்து பகைவர்களைத் தாக்கித் தோற்கடித்துத் துரத்திவிட்டார்கள்.

எந்த வழியைக் கையாண்டால் வெற்றி பெறலாம் என்று தெரியாமல் மனிதர்கள் தங்களைத் தாங்களே எவ்வாறு ஏமாற்றிக் கொள்ளுகிறார்கள் என்பதைத்தான் இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது.

ரோமாபுரி பிளவு பட்டிருக்கும் சமயத்தில் லெயண்டியர்கள் படையெடுத்துச் சென்றால் வென்றுவிடலாம் என்று எண்ணி ஏமாந்தார்கள். அவர்கள் இந்தச் சமயத்தில் படையெடுத்துச் சென்றிருக்க வேண்டியதேயில்லை. அவர்கள் சமாதான முறையிலேயே பிரிந்து போயிருக்கும் மக்களின் நம்பிக்கையைப் பெற்று நடு நின்று தீர்ப்புச் சொல்லுபவர்களைப் போல் உள்ளே நுழைந்திருக்கலாம். அல்லது படையெடுத்துச் சென்றே பல்வீனமுள்ள கட்சியாருக்காகப் போராடுவதாகப் பாவனை செய்து ஒரு கட்சியையொழித்து, மற்றொரு கட்சியைத் தங்கள் அடிமைகளாக்கி இருக்கலாம். அந்த நாட்டையும் தங்கள் ஆட்சிக்குட்படுத்தியிருக்கலாம்.

அறிவினனாக நடப்பதும் சில சமயம் பெரிய புத்திசாலித் தனமாகும்.

ஜூனியஸ் புரூட்டஸ் அறிவீனன் போல், கபடநாடகமாடியதைப் போல், வேறு யாரும் அத்தனை புத்திசாலித்தனமாக நடந்துகொண்டிருக்க முடியாது. அவனுடைய இந்தக் கள்ள நாடகத்துக்கு டீட்டஸ் லீவியஸ் ஒரே ஒரு காரணம் தான் சொல்லுகிறான். அதாவது, அவன் தன் பிதிரார்ஜித சொத்துக்களைக் காப்பாற்றுவதற்காகவும், தான் பெரும் பாதுகாப்புடன் வாழ்வதற்காகவும் இந்த நாடகமாடினான் என்று சொல்லுகிறான். இருப்பினும் நாம் அவனுடைய நடத்தையை நன்றாகக் கவனித்தால் இதற்கு வேறொரு காரணமும் இருப்பது புலப்படும். இவ்வாறு தன்னைப் பற்றி மற்றவர்கள் கவனிக்காதபடி செய்து கொண்டு, அவன் அரசர்களை அழித்துத் தன் நாட்டை விடுதலை செய்யக்கூடிய சிறந்த வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டு இருந்திருக்கக்கூடும் என்பதுதான் அது.

தங்கள் அரசனை வெறுக்கக் கூடிய எவரும் புரூட்டஸின் உதாரணத்திலிருந்து ஒரு பாடத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் அவர்கள் தங்கள் பலத்தை அளந்துகொள்ள வேண்டும். அரசனுடைய பகைவர்களாகத் தங்களை அறிவிக்கப் போதுமான பலம் இருப்பதாகத் தெரிந்தால் அவர்கள் அவனுக்கு எதிராகப் போர் தொடுப்பது கண்ணியமானதும் ஆபத்துக் குறைந்ததுமான வழியாகும். அரசனை எதிர்த்து நேரடிப் போர் நடத்தக்கூடிய நிலையில் அவர்கள் இல்லையென்றால், அவனுடைய நட்பைப் பெறத்தக்க உபாயங்களை எல்லாம் கையாள வேண்டும். அவனுக்குப் பிடித்தமான விஷயங்கள் தங்களுக்குப் பிடிப்பது போலவும் அவனுக்கு மகிழ்ச்சி தரத்தக்க விஷயங்களில் தாங்களும் சந்தோஷம் காண்பது போலவும் காட்டிக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட பழக்கம் எவ்விதமான ஆபத்துமற்ற மன நிம்மதியை உறுதிப்படுத்துவதோடு, அரசனுடைய சொத்துச் சுதந்திரங்களைப் பங்கு போட்டுக் கொண்டு அனுபவிக்கும் வாய்ப்பையும் அதே சமயத்தில் குரோதத்தைத் திர்த்துக் கொள்ளக் கூடிய வசதியையும் உண்டாக்கும். ஓர் அரசனிடம் பழகுபவர்கள் அவனுடைய அழிவிலே தாங்களும் சம்பந்தப்படும்படியாக மிக நெருங்கியிருக்கக் கூடாதென்றும், அவன் அழியக்கூடிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தன் சொத்துச் சுகங்களைப் பெருக்கிக் கொள்வதை விட்டு அவனை விட்டு வெகுதூரத்தில் இருந்துவிடக் கூடாதென்றும் சிலர் சொல்லுவார்கள். இந்த நடுத்தரமான வழி சிறந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அது நடைபெறக் கூடியதல்ல. அரசர்களை விட்டு முற்றும் விலகியிருப்பதோ அல்லது மிக நெருங்கியிருப்பதோ ஆகிய இரண்டில் ஒன்றுதான் கையாள முடிந்த வழிகள். மற்ற எந்த வழியைப் பின்பற்றுகிறவர்களும், அவர்கள் எவ்வளவு மேன்மையுடையவர்களாயிருந்த போதிலும் தம்மைத் தாமே நிலையான ஆபத்துக்கு ஆளாக்கிக் கொள்பவர்கள் ஆகிறார்கள். “நான் எதற்கும் கவலைப்படவில்லை. பெருமையும், இலாபமும் அடைய நான் விரும்பவில்லை. அமைதியாக எவ்விதமான தொந்தரவுமின்றி வாழ விரும்புகிறேன்” என்று எவரும் கூறித் தப்பித்துக்கொள்ள முடியாது. சூழ்நிலைக்கு ஆட்பட்ட மனிதர்கள் தங்கள் வாழ்க்கையைத் தாங்கள் விருப்பப்படுகின்ற முறையில் நடத்தமுடியாது. அவர்கள் உண்மையாகவே எவ்விதமான பேராசையுமின்றித் தங்கள் வாழ்க்கையை வகுத்துக் கொள்ள முயன்றாலும் அவர்கள் நம்பப்படமாட்டார்கள். அந்த நிம்மதியான வாழ்க்கையில் அவர்கள் ஒட்டிக்கொள்ள முயன்றாலும் மற்றவர்கள் விட்டு வைக்கமாட்டார்கள்.

சமயத்தில் புரூட்டசைப் போலக் கபட நாடகம் ஆடுவது புத்திசாலித்தனமானது. தங்கள் மனச்சாட்சிக்கு விரோதமாய் அரசனை மகிழ்விப்பதற்காக அவனைப் புகழ்ந்தும், உடன் பேசியும், பார்த்தும், காரியங்களை நடத்தியும் தங்கள் எண்ணத்திற்கு மாறுபட்ட முறையில் நடந்தால் போதுமானது.

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

-திருக்குறள்

நூல் சுருக்கம் : 3

சிறுகதை

(மாக்கியவெல்லி எழுதிய கதை ஒன்றை இங்கே மொழி பெயர்த்துக் கொடுத்திருக்கிறோம். கட்டுக் கதைபோன்ற அமைப்புடன் நகைச்சுவை நிறைந்த கதை இது)

பேய் கட்டிக் கொண்ட மனைவி

Devil Takes a Wife

* * *

பிளாரென்டைன் நாட்டு வரலாற்றின் பழைய ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால், மிகவும் புனிதமான ஒரு மனிதரைப் பற்றிப் படிக்கலாம். அவருடைய வாழ்க்கை முறை, அந்தக் காலத்தில் இருந்த எல்லோராலும் போற்றப்படத்தக்க அளவு உயர்ந்ததாக இருந்தது.

அந்த மகான், பிரார்த்தனையில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். தம் பிரார்த்தனையின் மூலமாகக் கிடைத்த சக்தியைக் கொண்டு, ஞான திருஷ்டியால் நரகத்தில் நடப்பதைக் காணக்கூடியவராயிருந்தார். கடவுளின் அருளில்லாமலே இறந்துபோன கணக்கற்ற அழியுந்தன்மையுள்ள உயிர்கள் நரகத்திற்குப் போவதை அவர் கண்டார். அப்படி நரகத்திற்குப் போன உயிர்களிற் பெரும்பாலானவை, தாம் அவ்வாறு துன்பமடைவதற்கு மனைவி ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டது தவிர, வேறு எவ்விதமான காரணமும் சொல்லிக் குறைப்பட்டுக் கொள்ளவில்லை.

இந்தக் கருத்து, மீனோஸ் ராதா மந்தூஸ் ஆகிய நரகலோகத்து நீதிபதிகளை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. பெண்ணினத்தின் மீது சாட்டப்பட்ட இந்தப் பழிசொற்களை அவர்களால் உண்மையென்று நம்ப முடியவில்லை. ஆனால், பெண்ணினத்தின் மீது சொல்லப்பட்ட இந்த அவதூறு நாளுக்கு நாள் அதிகமாக இது பற்றிய சரியான முழு விவரங்களையும் அறிய நரகலோகத்து மாமன்னர் புளூட்டோவிடம் கூறியபோது. அவர் நரகலோகத்துச் சிற்றரசர்களையெல்லாம் கூட்டி ஒரு மந்திராலோசனைக் கூட்டம் நடத்துவதென்று திர்மானித்தார். அதன் பிறகு இந்த அவதூறு பொய்யானதாக இருந்தால் இதை ஒழித்துக் காட்டுவதற்கும், அல்லது இதுபற்றிய முழு உண்மையையும் கண்டுபிடிப்பதற்கும் தான் சிறந்ததாகக் கருதுகிற ஆலோசனையை ஏற்றுக் கொள்வதென்று எண்ணினார். ஏற்பாட்டின்படி ஆலோசனை சபை கூடியபோது புளூட்டோ இவ்வாறு பேசினார்.

“பேரன்புக்குரிய நரகலோக வாசிகளே! தேவலோக முறைப்படியும், தெய்வீகமாகவும் மாற்ற முடியாததாகவும் உள்ள நல்லதிர்ஷ்டத்தினாலும் நான் இந்த சாம்ராஜ்யத்திற்கு உரியவனாயிருக்கிறேன். இருந்த போதிலும், சக்திமிகுந்தவர்கள் எல்லாம், நீதிக்குக் கட்டுப்பட்டு நடக்கும் விஷயத்தில், தங்கள் பேரறிவைப் பெரிதும் பயன்படுத்துவதுண்டாகையாலும், மற்றவர்களுடைய நியாய முடிவுகளைப் பெரிதும் மதித்து உயர்வாகக் கருதுவதுண்டாகையாலும், நான் பொறுப்பேற்று ஆட்சி புரிந்து வருகின்ற இந்தப் பரமண்டல சாம்ராஜ்யத்திற்கே அவமானம் வரக்கூடிய ஒரு விஷயத்தில், உங்களுடைய ஆலோசனைகளைப் பெறுவதென்று முடிவு செய்துவிட்டேன். நம் இராஜ்யத்திற்கு வந்து சேருகின்ற ஒவ்வொரு மனிதனுடைய ஆவியும், தான் பாவியானதற்குக் காரணம் தன் மனைவியே என்று கூறுகின்றது. இது முற்றிலும் நம்பக்கூடாத காரியமாக நமக்குத் தோன்றுகிறது. இந்தச் சாட்சியத்தை வைத்து நாம் தீர்ப்புச் சொல்வதென்றால், நாம் பெரும் பேதைகளாய் அல்லது ஏமாளிகளாய் ஆகிவிடக் கூடுமோ என்று பயப்படவேண்டியிருக்கிறது. இந்த விஷயத்தில் நாம் ஒரு முடிவுக்கு வந்து தீர்ப்புச் சொல்லாவிட்டால், நீதியிடத்தில் நமக்குக் கண்டிப்பான தன்மையும் பற்றும் பிடிப்பும் இல்லையென்றாகிவிடும். இந்த விஷயத்தில் எமக்கு ஒரு வழியும் தோன்றாதிருப்பதால், உங்களுடைய அரிய ஆலோசனைகளைக் கேட்பதற்காகவே இந்த சபையைக் கூட்டியுள்ளோம். குற்றச்சாட்டிற்கிடமில்லாதபடி, அவதூறுக்காளாகாதபடி இந்த சாம்ராஜ்யம் முன்போலத் தொடர்ந்து சிறந்து நடைபெற ஆலோசனை கூற உதவுவீர்களென எதிர்பார்க்கிறேன்”,

நரகலோகத்துச் சிற்றரசர்கள் எல்லோரும் இந்த விஷயம் அதிமுக்கியத்துவமும் ஆவசியகமும் நிறைந்ததென்றும், உண்மையை வெட்ட வெளிச்சமாக்க வேண்டுமென்றும் முடிவு செய்தார்கள். ஆனால் அதை எவ்வாறு செய்வது என்ற பிரச்சினையில் அவர்கள் ஒரேமாதிரியான கருத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால், ஒரு சிலர் தங்களில் ஒருவர் மனித உருவமெடுத்துக்கொண்டு பூமிக்குப்போய் உண்மையை நேரில் அறிந்து வரும்படி அனுப்பப்படவேண்டுமென்று எண்ணினார்கள். வேறு சிலர், தங்களில் பலபேர் அவ்வாறு அனுப்பப்படவேண்டுமென்று கருதினார்கள். மற்றும் சிலரோ, இந்தத் தொந்தரவே தேவையில்லையென்றும், நரகலோகத்துக்கு வந்துசேருகிற சில பாபாத்மாக்களை அச்சுறுத்தி உண்மையைக் கக்கவைத்து விடலாமென்றும் நினைத்தார்கள். ஆனால் பெரும்பான்மையினர், ஒரே ஒருவர் மட்டும் பூமிக்கு அனுப்பப்பட்டால் போதுமென்ற கருத்தை ஆதரித்ததால், எல்லோரும் அந்த முடிவை ஏற்றுக்கொண்டார்கள். யாரும் இந்தக் காரியத்தைச் செய்யத் தாமாக முன்வராததினால் திருவுளச் சீட்டுப் போட்டுப் பார்ப்பதென்று முடிவு செய்தார்கள். இந்தத் துரதிர்ஷ்டம் தலைமைப் பேய்த் தூதரான பெல்பாகருக்கு ஏற்பட்டது. பெல்பாகர் நரகலோகத்தில் வந்து விழுவதற்கு முன்னால் தேவலோகத்தில் தலைமைத் தேவதூதராக இருந்தார். இப்போது தலைமைப்பேய்த் தூதராக இருந்து வருகிறார்.

பெல்பாகருக்கு இந்த வேலையை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லையென்றாலும், நரகலோக அதிபதியான புளூட்டோவின் அதிகாரத்திற்கடங்கி நடக்க வேண்டிய கட்டாயத்திற்காக ஆலோசனை சபையின் முடிவுப்படி நடக்க ஒப்புக் கொண்டார். சபையினர் பூலோகம் செல்பவரை கீழ்க்கண்ட ஏற்பாட்டின்படி அனுப்புவதென்று முடிவு செய்தார்கள்.

பூலோகம் செல்லுபவர் மனித உருவம் எடுத்துக்கொண்டு போய் அங்கு ஒரு மனைவியைத் திருமணம் புரிந்துகொண்டு பத்து ஆண்டுகள், வாழவேண்டும். முடிவில், செத்துப் போவதுபோல் நடித்து நரகலோகத்துக்குத் திரும்பி வந்து குடும்பபாரத்தில் ஏற்பட்ட நன்மை தீமைகளைத் தன் மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும். பத்து ஆண்டுகளும் அவர் செலவுக்காக ரொக்கமாக ஓர் இலட்சம் டூச்சாட்டு நாணயங்கள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவார். இது தவிர அந்தக் குறிப்பிட்ட பத்தாண்டுக் காலத்திற்குள் அவர் மனிதர்கள் அனுபவிக்கக் கூடிய நோய்கள், சிறைச்சாலை வாசம், வறுமைத்துயர் ஆகிய துன்பங்களையும் அனுபவிக்கக் கட்டுப்பட்டவராவார். வேண்டுமானால், தந்திரமாகவோ அல்லது மற்றவர்களை ஏமாற்றியோ அவர் இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

இந்த ஏற்பாட்டின்படி பேய்த்தலைவர் பெல்பாகர் பணத்துடன் பூலோகத்துக்குப் புறப்பட்டார்.

பெல்பாகர், தன் பூதகணங்களைத் தனக்குக் குதிரைகளும், வேலையாட்களும் ஏற்பாடு செய்து தரும்படி உத்தரவிட்டு, பெருத்த ஆடம்பரத்துடன் பிளாரென்ஸ் பட்டணத்திற்குள் நுழைந்தார். எத்தனையோ ஊர்கள் பூலோகத்தில் இருக்கும் போது அவர் பிளாரென்ஸ் பட்டணத்தை ஏன் தேர்ந்தெடுத்தார் என்றால், அங்குதான் தம் பணத்தைக் கெட்டிக்காரத்தனமாகச் செலவழிக்க முடியும் என்று அவருக்குத் தோன்றியது. காஸ்டிலி தேசத்து ரோடரிக் பிரபு என்ற பெயருடன் அவர் ஒகின் சாந்திப் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்துக் கொண்டார். தம்மைப் பற்றி மற்றவர்கள் துருவி, ஆராய்ந்து விடாமலிருப்பதற்காக, தாம் அண்மைக் காலத்தில் ஸ்பெயின் தேசத்தை விட்டுப் புறப்பட்டு சிரியாவுக்குப் போய், அலெப்போல் பட்டணத்தில் பணம் சம்பாதித்து வந்ததாக எல்லோரிடமும் கூறினார். நல்லவர்கள் கூட்டுறவில் வாழ வேண்டுமென்பதற்காகவும், தம் மனத்திற்குப் பிடித்திருந்தது என்பதற்காகவும் இத்தாலி நாட்டிற்கு வந்து அங்கேயே ஒரு நல்ல பெண்ணைத் திருமணம் புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்த எண்ணியிருப்பதாகவும், கூறினார். ரோடரிக் பிரபு முப்பதே வயதுள்ள அழகான ஓர் இளைஞராகத் தோற்றமளித்தார். சீக்கிரத்தில் தாம் பெரிய பணக்காரர் என்று மற்றவர்கள் கருதும்படி பகட்டாக நடந்து கொண்டார். தாம் தாராள மனப்பான்மையும் தரும குணமும் உடையவராகக் காட்டிக் கொண்டார்.

ஏராளமான பெண்களையும் குறைவான சொத்துக்களையும் பெற்றிருந்த பல உயர் குலத்தினர், தங்கள் பெண்களில் ஒருத்தியை அவருக்கு மணம் புரிந்து கொடுக்க முன் வந்தார்கள். அப்பெண்கள் எல்லோரிலும் மிக அழகுடையவளும், அமெரிகோ டொனாட்டி என்பவரின் மகளும், “யோக்கிய வதி” (ஹானெஸ்டா) என்ற பெயருடையவளுமான ஒரு பெண்ணைத் தமக்கு மனைவியாகத் தேர்ந்தெடுத்தார் ரோடரிக் பிரபு. அவருடைய வருங்கால மாமனார் பிளாரென்ஸ் பட்டணத்திலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த உயர் குலத்தைச் சேர்ந்தவர். ஆனால் ஏழு பிள்ளைகளைப் பெற்ற அவர், தம் உயர்குலத்திற்குத் தகுந்தபடி ஆடம்பரமாகத் தொடர்ந்து வாழ்க்கை நடத்தி வந்தபடியால் வறுமைக்காளாகிவிட்டார்.

ரோடரிக் பிரபு தம் திருமணத்தை மிகச் சிறப்பாகவும். அலங்காரமாகவும் நடத்தினார். அப்படிப்பட்ட ஆடம்பரமான திருமண விழாவிற்குத் தேவையான எதுவும் கைவிடப்படவில்லை! நரகலோகத்தாரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு மனித ஆசைகளுக்கு ஆட்பட்டவராக இருந்தார் ரோடரிக் பிரபு. அதனால் மற்றவர்கள் தன்னைப் புகழ்ந்து பாராட்டும் வண்ணம் பெருமையான சடங்குகளையெல்லாம் உடனடியாகச் செய்யத் தொடங்கினார். இதற்கெல்லாம் செலவழித்த பணம் கொஞ்ச நஞ்சமல்ல! அதுவும் தவிர, தம் அருமை மனைவி யோக்கியவதியுடன் (ஹானெஸ்டாவுடன்) மண வாழ்க்கை நடத்தத் தொடங்கிச் சில நாட்கள் ஆவதற்கு முன்னாலேயே அவர் அவள்மீது மாபெருங் காதல் கொண்டுவிட்டார். அவள் எப்போதாவது துன்பமாகவோ கவலையுடனோ இருப்பதைக் கண்டால் அவருக்கு உள்ளம் பொறுக்காது.

குலப் பெருமையோடும் அழகோடும் சீமாட்டி ஹானெஸ்டா, லூசியருக்குக் கூட இல்லாத அகங்காரத்துடனும் ரோடரிக் பிரபுவின் வீட்டில் காலடி எடுத்து வைத்தாள். அவர்கள் இரண்டு பேருடைய அகங்காரத்தையும் நேரில் கண்ட ரோடரிக் தன் மனைவியின் இறுமாப்புத்தான் உயர்ந்தது என்று சொன்னார். தன் கணவருக்குத் தன்மேல் இருந்த காதலைக் கண்டறிந்த பிறகு, அவளுடைய கர்வம் மேலும் பெரிதாகியது. எல்லா விஷயத்திலும் தன் விருப்பப்படி கணவரை ஆட்டி வைக்கலாம் என்று கண்ட பிறகு அவள் இரக்கமில்லாமலும், மரியாதையில்லாமலும் அவரைப் பல வகையிலும் ஏவத்தொடங்கிவிட்டாள். அவர் ஏதாவது மறுத்துரைத்தால் மிகக் கீழ்த்தரமான வார்த்தைகளால் அவள் சீறிக் கடிந்துரைக்கச் சிறிதும் தயங்கவில்லை. இதெல்லாம் ரோடரிக் பிரபுவிற்கு அளவற்ற வேதனையையளித்தது. இருந்தும் அவருடைய மாமனாரும் அவளுடைய சகோதரர்களும், உறவினரும், திருமண ஒப்பந்தமும் அவரைப் பொறுமை கொள்ளச் செய்தன. எல்லாவற்றுக்கும் மேலாக அவர் அவளிடம் கொண்டிருந்த காதல் அவரைப் பெரும் பொறுமைக்காரராகச் செய்தது.

மனைவி புதிது புதிதாக, நவநாகரிகமான உடைகளை அணிவதற்காக அவர் ஏராளமான பொருள் செலவு செய்ய வேண்டியிருந்தது. அவளுடன் சச்சரவில்லாமல் இருப்பதற்காகத் தன் மாமனாரின் மற்ற பெண்களுக்கும் திருமணம் செய்ய ஏற்படும் செலவுகளுக்காக அவர் ஏராளமாகப் பொருள் உதவ வேண்டியிருந்தது. மேலும் அவளுடன் ஒற்றுமையாக இருப்பதற்காக, அவளுடைய சகோதரர்களில் ஒருவனைத் தன் செலவில் முதல் போட்டுத் துணி வியாபாரம் செய்யக் கிழக்கத்திய நாடுகளுக்கும், இன்னொருவனைப் பட்டு வியாபாரம் செய்ய மேற்கத்திய நாடுகளுக்கும், மற்றொருவனைப் பிளாரென்ஸ் பட்டணத்திலேயே தங்க வியாபாரம் செய்வதற்கும் அனுப்ப வேண்டியதாயிருந்தது. இந்தத் தொழில்களுக்காக அவருடைய பொருளிற் பெரும் பகுதி கரைந்துவிட்டது.

திருநாள் காலத்திலும் செயின்ட்ஜான் தினத்திலும் நகர் முழுவதும் தொன்றுதொட்ட வழக்கப்படி விழாக் கொண்டாடியது. பணக்காரர்களும், உயர் குலத்தின்ரும் ஆடம்பரமான விருந்துகள் நடத்தி ஒருவரையொருவர் சிறப்பித்துக் கொண்டார்கள். சீமாட்டி ஹானெஸ்டாவும், மற்ற பெண்களால் தாழ்த்தியாகக் கருதப்பட விரும்பாமல் மற்ற எல்லோரைக் காட்டிலும் மிக உயர்ந்த ஆடம்பரத்துடன் விருந்து வைக்கும்படி ரோடெரிக்கைக் கேட்டுக்கொண்டாள். இந்தச் செலவுகளையும் அவர் முன் கூறிய அதே காரணங்களுக்காகப் பொறுத்துக் கொண்டார். இந்தக் கட்டுப்பாடில்லாத பொறுக்க முடியாத செலவுகளினாலும், இறுமாப்பாக மனைவி நடந்து கொண்டதாலும் அவருக்கு எல்லையில்லாத கவலை ஏற்பட்டது. அந்த வீட்டில் எஜமானியம்மாளுக்கு அடங்கி நடக்காத வேலைக்காரர்கள் யாரும் இல்லை. ஆகவே ரோடெரிக் பிரபு தமக்கென ஒரு நம்பகமாக ஆளை வைத்துக் கொள்ள முடியாமல் பெரிதாகத் திண்டாடினார். மற்றவர்களைப் பற்றி ஏன் சொல்ல வேண்டும்? நரகத்திலிருந்து அவர் தம்முடன் அழைத்து வந்த வேலைக்காரர்களோ, இங்கே அந்தப் பெண்மணியின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டு அடிமைகளாய் திரிவதைவிட நரகத்து நெருப்புக் குழிக்கே திரும்பிப் போய்விடலாமென்று நினைத்தார்கள்.

கலக்கமும், குழப்பமும் சூழ்ந்த இந்த நிலையில், ரோடரிக் பிரபு தம் கையிருப்பு ரொக்க முழுவதையும் அதிகச் செலவு செய்துவிட்டார். அதற்குமேல் கிழக்கு நாடுகளிலிருந்தும் மேற்கத்திய நாடுகளிலிருந்தும் வர வேண்டிய வியாபார முதலீட்டை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அவர் இன்னும் கெளரவமாகவே மதிக்கப்பட்டபடியால், தம் வீட்டுச் செலவுகளுக்காக அவர் பலபேரிடம் பற்றுச் சீட்டுக் கொடுத்துக் கடன் வாங்கினார். உண்டியல் கடன் பத்திரங்கள் பலவற்றில் கையெழுத்துப் போட்டுப் பணம் வாங்கினார். அவர் ஒரே ஒரு பொருளையே ஈடு வைத்து அதன் மேல் பல தடவை பலபேரிடம் பணம் வாங்குவதை அந்தத் தொழிலில் ஈடுபட்டவர்கள் சீக்கிரம் கண்டுபிடித்து விட்டார்கள். அவருடைய நிலைமை இந்த மாதிரி மோசமாக இருக்கும்போதே, கீழ்த்திசையிலிருந்தும் செய்திகள் கிடைத்தன. சீமாட்டி ஹானெஸ்டாவின் சகோதரர்களில் ஒருவன், தான் வியாபாரம் செய்யக் கொண்டு போன பணம் முழுவதையும் சூதாடித் தோற்றுவிட்டான்! மற்றொருவன் ஒரு கப்பல் நிறைய இன்சூர் பண்ணாமல் சரக்கேற்றிக் கொண்டு வந்து, அந்தக் கப்பலோடு கடலில் மூழ்கிப் போய்விட்டான். இந்தச் செய்தி நகரில் பரவிய உடனே, ரோடெரிக்கின் கடன்காரர்கள் ஒன்றாகக் கூடி அவர் திவாலாகிவிட்டதாக முடிவு செய்தார்கள். இருந்தாலும் அவரிடமிருந்து இன்னும் பாக்கி வசூல் பண்ணாததால் தங்கள் சந்தேகங்களை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல், அவரையும் அவருடைய நடவடிக்கைகளையும், இரகசியமாய்க் கவனித்து வருவதென்று தீர்மானித்தார்கள். இதனால் ரோடெரிக் பிரபு இரகசியமாக அந்த ஊரை விட்டுத் தப்பியோடவும் முடியாமல் இருந்தது. கடைசியில் அவர் என்ன நேர்ந்தாலும், தப்பியோடி விடுவதென்று முடிவுக்கு வந்தார்.

ஒருநாள் காலை அவர் குதிரையொன்றின்மீது ஏறிக்கொண்டு தம் மாளிகையருகில் இருந்த பிராட்டோ வாசல் வழியாக நகரை விட்டு வெளியேறினார். இந்தச் செய்தியை அறிந்தவுடன், கடன்காரர்கள் ஒரேயடியாகக் கூச்சலிட்டு, வழக்கறிஞர்கள் மூலமாக நியாயாதிபதிகளிடம் முறையிட்டுக் கொண்டார்கள். அதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் எதிர்ப்பையும் கிளப்பி விட்டு, ரோடெரிக் பிரபுவை விரட்டிக் கொண்டு வந்தார்கள். ரோடெரிக் பிரபு ஊரை விட்டு ஒரு மைல் தூரம் கூடப் போயிருக்கமாட்டார். அதற்குள் பின்னால் ஏற்பட்ட கூச்சலையும் கூக்குரலையும் கேட்டு நிலைமையைப் புரிந்துகொண்டார். அவர்களிடமிருந்து தப்ப இரகசியமாகச் சென்றால்தான் முடியும் என்று வீதிப் பாதையை விட்டு விலகி வயல் வெளிகளுக்குள்ளே புகுந்து செல்லத் தொடங்கினார். ஆனால், வழியில் பல குழிகளையும் வரப்புக்களையும் கடக்க வேண்டியிருந்ததால் அந்தப் பாதையில் குதிரையேறிச் செல்வது கடிதாக இருந்தது. எனவே, அவர் கால்நடையாகக் கிளம்பினார். வயல் வயலாகக் கடந்து, கடைசியில் பெரிட்டோலா என்ற ஊர்ப் பக்கம் ஜீயான் மாட்டியோ என்ற ஒரு தொழிலாளியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அப்போது அதிர்ஷ்டவசமாக அந்தத் தொழிலாளியே தன் மாடுகளுக்குத் தீனி எடுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தான். ரோடெரிக் பிரபு அந்த மனிதனிடம் அடைக்கலம் புகுந்தார். தன்னைப் பிடித்துச் சிறையிலடைத்துக் கொல்வதற்காக விரட்டிக் கொண்டு வரும் பகைவர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றும் படியும், அவ்வாறு செய்தால், அவனைத் தான் பணக்காரனாக்கி விடுவதாகவும், அதற்குரிய அத்தாட்சிகளைத் தான் போகுமுன் காட்டிவிட்டுப் போவதாகவும், அல்லது செய்யத் தவறினால் அவனே தன்னைத் தன் பகைவரிடம் காட்டிக் கொடுத்து விடலாமென்றும் உறுதி கூறி வேண்டிக் கொண்டார். ஜீயான் மாட்டியோ சாதாரண விவசாயியாக இருந்தபோதிலும் தைரியமுள்ளவன். அவன் அவரைக் காப்பாற்றுவதாக உறுதி கூறினான். அவன் ரோடெரிக் பிரபுவை ஒரு குப்பை மேட்டுக்குள்ளே தள்ளி அவர்மீது குப்பைகளைக் கொட்டி மூடினான்.

ரோடெரிக் இவ்வாறு மூடி மறைக்கப்பட்ட நேரத்தில், அவரை விரட்டிக்கொண்டு வந்தவர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் விவசாயியை எவ்வளவோ அச்சுறுத்திக் கேட்டபோதிலும், அவன் அவரைப் பார்த்தானா பார்க்கவில்லையா என்ற விஷயத்தையே தெரிந்துகொள்ள முடியவில்லை. அன்றும் மறுநாளும் தேடியலைந்து விட்டுப் பயனில்லாமல் அலுத்துப்போய் அவர்கள் பிளாரென்சு பட்டணத்திற்குத் திரும்பிவிட்டார்கள். அவர்கள் போன பிறகு, குப்பைக் குழியிலிருந்து ரோடெரிக் பிரபுவை வெளிப்படுத்தி, அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும்படிக் கேட்டுக் கொண்டான் விவசாயி.

“அன்புள்ள சகோதரனே! நான் உனக்கு மிகவும் கடமைப்பட்டவன். நான் உன்னைப் பூரணத் திருப்தியடையச் செய்ய விரும்புகிறேன். நான் இந்த விஷயத்தில் ஆற்றல் உடையவன் என்பதை நீ நம்புவதற்காக நான் யார் என்பதை உனக்குத் தெரிவிக்கிறேன். நான் ஒரு பேய்த் தலைவன்!” என்று சொல்லி அவர், தன்னைப் பற்றியும், நரகலோகத்தில் தனக்கு இடப்பட்ட கட்டளைகளைப் பற்றியும், தான் கட்டிக்கொண்ட மனைவியைப் பற்றியும் சொல்லி, அந்த விவசாயியைப் பணக்காரானாக்கும் வழியையும் சொன்னார். அவனைப் பணக்காரனாக்க ரோடெரிக் பிரபு சொன்ன வழி இதுதான்! யாராவது ஒரு பெண்ணுக்குப் பேய் பிடித்திருக்கிறதென்று கேள்விப்பட்டால், ரோடெரிக் தான் அவள் உடலில் புகுந்திருக்கிறார். என்பதை விவசாயி தெரிந்து கொள்ள வேண்டும். அவன் பேயோட்ட வந்தாலொழிய அவர் அந்தப் பெண்ணை விட்டுப் போகமாட்டார். அந்தப் பேய் பிடித்த பெண்ணின் குடும்பத்தாரிடமிருந்து விவசாயி தான் விரும்பிய தொகையைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டியது. அவர்கள் இந்த ஒப்பந்தத்தைச் செய்து முடித்துக்கொண்ட பின் ரோடெரிக் பிரபு அங்கிருந்து மறைந்துவிட்டார்.

பிளாரென்ஸ் பட்டணம் முழுவதும், அம்புரூ லோஜியோவின் மகள் ஒருத்திக்குப் பேய் பிடித்திருக்கும் செய்தி பரவ அதிக நாட்கள் ஆகவில்லை. அவர்கள் பேயோட்டுவதற்கு வழக்கமாகக் கையாளுகின்ற முறைகளையெல்லாம் தவறாமல் கையாண்டார்கள். பேய் பிடித்த பெண்ணின் தலையில் புனித ஞானி செனோபியசின் மண்டையைக் கொண்டு வந்து வைத்தார்கள். ஞானி ஜான்லால் பெர்ட்டின் மேலங்கியைக் கொண்டு வந்து வைத்தார்கள்; இவற்றையெல்லாம் கண்டு ரோடெரிக் வெறும் பரிகாசச் சிரிப்புத் தான் சிரித்தார். அந்தப் பெண்ணுக்குப் பெரும் மனோவேதனையால் இந்த மாற்றம் ஏற்படவில்லை. பேய்தான் பிடித்திருக்கிறது என்பதை மெய்ப்பிப்பதற்காக அவர் லத்தின் மொழியில் பேசினார். தத்துவ விசாரணைகள் செய்தார். பல பேர்களுடைய பாப காரியங்களை வெளிப்படுத்தினார். ஒரு சன்னியாசியின் பெயரைக் குறிப்பிட்டு அவர் சீடன் வேடத்தில் நான்கு வருடங்களாகத் தம் அறையில் ஒரு பெண்ணை வைத்திருப்பதையும் அம்பலப்படுத்தினார். இந்த மாதிரியான ஊழல் உண்மைகள் ஒவ்வொருவரையும் வியப்பிலாழ்த்தின.

அம்புரூலோஜியோ தம் குமாரியைக் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையையே இழந்துவிட்டார். இந்தச் சமயத்தில் விவசாயி ஜியான்மாட்டியோ அங்கு வந்தான். பெர்ட்டோலாவில் ஒரு நிலம் வாங்குவதற்காகத் தனக்கு 500 பிளாரின் பணம் தந்தால், அந்தப் பெண்ணைக் குணப்படுத்துவதாக அவன் உறுதி கூறினான். அம்புரூலோஜியோ ஒப்புக்கொண்டார்.

ஜீயான் மாட்டியோ, முதலில் தந்திரமாகச் சில மந்திரங்களையும் சடங்குகளையும் செய்து காட்டினான். பிறகு மெல்ல அந்தப் பேய் பிடித்த பெண்ணின் காதில் வாயை வைத்து, “பூதகனத் தலைவரே! தங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் தான் நான் இங்கு வந்தேன்” என்று சொன்னான். “நல்லது, ஆனால், இந்தப் பணத்தால் நீ பெரிய பணக்காரனாகிவிட முடியாது. ஆகவே, நான் இந்தப் பெண்ணை விட்டு நீங்கியபின் நேப்பிள்ஸ் மன்னர் சார்லஸ் பெருமானின் குமாரியைப் போய்ப் பிடித்துக் கொள்கிறேன். நீ வரும் வரை நான் அவளை விட்டு அகலமாட்டேன். அங்கே நீ பெருத்த வெகுமதி பெற்றுப் பெரும் பணக்காரனாகி விடலாம். அதன் பிறகு நீ என்னைத் தொந்தரவு செய்ய வேண்டியதில்லை” என்று சொன்ன ரோடெரிக் பிரபு அந்தப் பெண்ணை விட்டு நீங்கிச் சென்றார். பிளாரென்ஸ் பட்டணம் முழுவதும் வியப்பில் ஆழ்ந்தது.

நேப்பிள்ஸ் மன்னர் சார்லஸின் குமாரிக்குப் பேய் பிடித்தது. அந்தத் துன்பத்தைப் பற்றிய செய்தி வெகு சிக்கிரத்தில் இத்தாலி தேசம் முழுவதும் பரவியது. பேய் ஓட்டும் வழி எதுவுமே பயன்படவில்லை. கடைசியில் விவசாயி ஜீயான்மாட்டியோவைப் பற்றிக் கேள்விப்பட்ட மன்னர், பிளாரென்சு பட்டனத்துக்கு ஆளனுப்பினார். அவன் நேப்பிள்ஸ் நகருக்குச் சென்றான். வழக்கம்போல் இரண்டொரு மந்திரங்களை உச்சரித்துச் சடங்குகளைச் செய்து அவன் அந்தப் பெண்ணைக் குணப்படுத்தினான். ஆனால் இளவரசியை விட்டு பேயான ரோடெரிக் பிரபு நீங்குமுன்னால் அவர் அவனிடம், “ஜீயான்மாட்டியோ! நான் கொடுத்த வாக்குறுதியை இப்போது காப்பாற்றிவிட்டேன். நீ பணக்காரனாகிவிட்டாய். ஆகவே நம் ஒப்பந்தம் இன்றோடு தீர்ந்துவிட்டது. இனிமேல் என்னைச் சந்தித்தால் அது உனக்கு நல்லதல்ல. மீறி என் விஷயத்தில் நீ தலையிட்டால், இப்போது உனக்கு நன்மை செய்த நான் பின்னால் தீமை செய்வேன் எச்சரிக்கை!” என்று சொன்னார்.

விவசாயி ஜீயான்மாட்டியோ, பிளாரென்சு பட்டணத்திற்குப் பெரிய பணக்காரனாகத் திரும்பி வந்தான். (மன்னன் அவனுக்கு ஐம்பதினாயிரம் டூக்காட்டு பணம் கொடுத்தனுப்பினார்) அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு அவன் அமைதியாகவும் இன்பமாகவும் வாழலாமென்று எண்ணியிருந்தான். ரோடெரிக் பிரபு தனக்குத் தீமை செய்ய நினைக்கக் கூடும் என்று அவனால் நம்பக் கூடவில்லை. ஆனால், பிரெஞ்சு மன்னர் எட்டாவது லூயிஸ் மகளுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்ற செய்தி கேட்டு அவன் கவலைக்குள்ளானான். பிரெஞ்சு மன்னரின் அதிகார பலத்தையும், ரோடெரிக்கின் வார்த்தைகளையும் ஒன்று சேர்த்து நினைத்துப் பார்த்தபோது அவனுக்கு மன நிம்மதியே போய்விட்டது. தம் குமாரியை எவ்விதத்திலும் குணப்படுத்த முடியாத மன்னர், விவசாயி ஜீயான்மாட்டியோவைப் பற்றிக் கேள்விப்பட்டு அவனுக்கு ஓர் ஆளனுப்பினார். ஆனால், அவன் வர மறுத்துவிட்டதைக் கண்ட மன்னர், ஊர்ப் பெரிய மனிதர்களிடம் சொல்ல வேண்டி வந்தது. அவர்கள் மன்னர் ஆணையை மதித்து நடக்கவேண்டுமென்று அவனைக் கட்டாயப்படுத்தினார்கள். மனத்துயரத்தோடு அவன் பாரிஸ் நகருக்கு வந்து சேர்ந்தான். முதலில் மன்னர் பிரானிடம் சென்று தான், பேய் பிடித்த பெண்கள் சிலரைக் குணப்படுத்தியிருந்தாலும், எல்லாப்பேய்களையும் தன்னால் விரட்ட முடியாதென்றும், சில பேய்கள், எவ்வளவு மந்திரஞ் சொன்னாலும், பயமுறுத்தினாலும் அஞ்சுவதில்லையென்றும் கூறினான். இருந்தாலும் தான் முயன்று பார்ப்பதாகவும், முடியாவிட்டால் மன்னித்துக் கொள்ளும்படியும் கூறினான். ஆனால், மன்னர் பெரும் சீற்றத்துடன், தம் குமாரியை குணப்படுத்தாவிட்டால் அவனைத் தூக்கிலிட்டு விடுவதாகக் கூறிவிட்டார். விவசாயி ஜீயான் மாட்டியோவை இது பெருஞ் சங்கடத்திற்குள்ளாக்கியது. இருந்தாலும் அவன் தன் மனதைத் திடப்படுத்திக்கொண்டு, அந்த அரசகுமாரி தன்னருகில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டவுடன், மெல்ல அவள் காதருகில் சென்று ரோடெரிக்கிடம் தன் நிலையை எடுத்துக சொல்லித் தன்னைக் காப்பாற்றும்படி மிகவும் தயவாகக் கேட்டுக் கொண்டான்.

“ஆ! கீழ்த்தரமான துரோகியே! என் முன்னால் வர உனக்கு என்ன துணிச்சல்? என்னை வைத்து மகாப் பெரிய பணக்காரனாகிவிட முடிவு செய்துவிட்டாயா? கொடுக்கவும் கெடுக்கவும் என்னால் முடியும் என்பதை நீயும் மற்றவர்களும் அறியச் செய்கிறேன். பார்!” என்று சீ றினார் பேய்த் தலைவர் ரோடெரிக் பிரபு.

விவசாயி ஜீயான்மாட்டியோ அரசரிடம் திரும்பி வந்து, “மன்னர் பிரானே! இது மகாக் கொடிய பிசாசு! இதை என்னால் விரட்ட முடியாது. நான் முன் சொன்னதுபோல் இது எதற்கும் கட்டுப்படாதது. இருந்தாலும் இன்னொரு முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால், அதிலும் முடியாவிட்டால், தாங்கள் என் மீது இரக்கங் காட்டி நடந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். நம் சீமாட்டிச் சதுக்கத்தில் ஒரு மேடையமைக்க வேண்டும். இந்த நகரத்தில் உள்ள பிரபுக்களும் மத போதகர்களும் அமரும்படியான அளவு அது பெரியதாக இருக்கவேண்டும். அந்த மேடையில் பொன்னாலிழைத்த பட்டுத் திரையொன்றைத் தொங்கவிட வேண்டும். அதன் நடுவில் ஒரு பீடம் அமைக்கப்பட வேண்டும். அடுத்த ஞாயிற்றுக் கிழமை காலையில் மதபோதகர், சிற்றரசர்கள், பிரபுக்கள் எல்லோரையும் தாங்கள் மேடைக்கு அழைத்து வந்து வழக்கம் போன்ற ராஜாங்க ஆடம்பரங்களுடன் அமரச் செய்ய வேண்டும். பொதுப் பிரார்த்தனை செய்து முடித்தபின், பேய்பிடித்த இளவரசியை அங்கு அழைத்து வரவேண்டும். இதற்கிடையில் சதுக்கத்தின் ஒரு மூலையில் குறைந்தது இருபது பேராவது இருந்து, கொம்புகளையும், பேரிகைகளையும், பிறவாத்தியங்களையும் தயாராக வைத்துக் கொண்டிருக்க வேண்டும். நான் என் தொப்பியைத் தூக்கிச் சைகை காட்டியவுடன் அவர்கள் வாத்தியங்களை முழக்கிக் கொண்டே மேடையை நோக்கி வரவேண்டும். இந்த ஏற்பாட்டுடன், வேறு சில இரகசியமான முறைகளைக் கொண்டு அந்தப் பேயை விரட்டி விடலாம் என்று எண்ணுகிறேன்” என்றான்.

அவன் கூறிய எல்லா ஏற்பாடுகளையும் செய்யும்படியாக உடனே மன்னர் பிரான் கட்டளையிட்டார். ஞாயிற்றுக் கிழமை காலை பொழுது விடிந்ததும் மேடை முழுவதும் அதிகாரிகளும், சதுக்க முழுவதும் பொதுமக்களும் வந்து நிறைந்துவிட்டார்கள். பொதுப் பிரார்த்தனை நடைபெற்று முடிந்தவுடன், இரண்டு மதகுருமார்களும் பல பிரபுக்களும் சேர்ந்து பேய்பிடித்த இளவரசியை மேடைக்கு அழைத்து வந்தார்கள். அவ்வளவு பிரும்மாண்டமான ஏற்பாடுகளையும், நிறைந்திருந்த மக்கள் கூட்டத்தையும் கண்ட ரோடெரிக் பிரபு, “இந்தக் கோழைப் பயல் என்னதான் நினைத்திருக்கிறான்?” இந்தக் காட்சியைக் கொண்டு என்னைப் பயமுறுத்தி விடலாமென்று எண்ணுகிறானா? நான் சொர்க்கலோகத்து ஆடம்பரங்களையும் நரகலோகத்துப் பயங்கரங்களையும் கண்டு பழகிப் போனவன் என்பது இந்தப் பயலுக்குத் தெரியாதா? இருக்கட்டும், இவனைச் சரியானபடி தண்டிக்க வேண்டும்!” என்று தமக்குள் நினைத்துக்கொண்டார்.

விவசாயி ஜீயான்மாட்டியோ, அவர் அருகில் வந்து போய் விடும்படிக் கெஞ்சினான். ஆனால், அவர் “நீ எனன் நினைத்துக் கொண்டாய். இந்த நாடகத்தைக் கொண்டு என்ன செய்ய நினைத்திருக்கிறாய்? இதன் மூலமாக என்னிடமிருந்தும், அரசரின் கோபத்திற்கும் தப்பி விடலாமென்று மனப்பால் குடிக்கிறாயா? அற்ப நாயே! எப்படியும் உன்னைத் தூக்குமரத்தில் ஏற்றுகிறேன் பார்!” என்று ரோடெரிக் பிரபு கூறினார்.

ஒருவர் கெஞ்சிப் பணிய ஒருவர் மிஞ்சிப் பழிக்க இவ்வாறு நேரம் போய்க் கொண்டிருந்தது. இனிக் காலத்தை வீணே கடத்தக் கூடாதென்று எண்ணிய ஜீயான் மாட்டியோ தன் தொப்பியை ஆட்டிச் சைகை காட்டினான். உடனே ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாத்தியக் குழுவினர் விண்ணதிர இசை முழக்கிக் கொண்டு மேடையை நோக்கி நெருங்கி வரத் தொடங்கினார்கள். திடீரென்று எழுந்த அந்தப் பெரும் முழக்கத்தைக் கண்டு, என்ன ஏதென்று புரியாமல் திகைத்துப் போன ரோடெரிக் பிரபு, விவசாயியை நோக்கி, “என்ன நடக்கிறது?” என்று கேட்டார்.

“ஐயோ! என் அன்பிற்குரிய ரோடெரிக்! உங்கள் மனைவி உங்களைத் தேடிக்கொண்டு வருகிறாள்!” என்று அனுதாபப்படும் பாவனையில் சற்றுப் பலமாகவே கூறினான் விவசாயி ஜீயான் மாட்டியோ. தன் மனைவியின் பெயரைக் கேட்டவுடனே ரோடெரிக்கிடம் ஏற்பட்ட அந்தத் திடீர் மாறுதல் பெரிதும் வியப்படையக் கூடியதாயிருந்தது. அவர் பெரும் பீதியும் குழப்பமுமடைந்து, உண்மையில் தம் மனைவி அங்கு வரக் கூடுமா. இந்தச் செய்தி நம்பக் கூடியதுதானா என்றெல்லாம் எண்ணிப் பார்க்காமல், பதில் கூடச் சொல்லாமல், தாம் பிடித்திருந்த பெண்ணை விட்டுவிட்டுப் பறந்தோடிவிட்டார்.

மறுபடியும் திருமண நுகத்தடியில் சிக்கிக் கட்டுப்பட்டு அதற்குரிய வேதனைகளையும், துயரங்களையும், ஆபத்துக்களையும் அனுபவிப்பதைவிட உடனடியாக நரகத்திற்குத் திரும்பித் தம் நடவடிக்கைகளைப் பற்றித் தெரிவிப்பதென்ற முடிவுக்கு வந்தார். ஆகவே, பெல்பாகப் நரகத்திற்குத் திரும்பிச் சென்று தம் மனைவி தமக்குக் கொண்டு வந்து சேர்த்த கேடுகளைப் பற்றிய விவரங்களை அங்குள்ளவர்களுக்குத் தெரிவித்தார். அந்த நரகவாசியைக் காட்டிலும், அதைப் பற்றி நன்றாக அறிந்திருந்த விவசாயி ஜீயான்மாட்டியோ, ஆனந்தத்துடன் தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றான்.

* * *

நூல் சுருக்கம் : 4

மந்திர கோலா

(மாக்கியவெல்லி எழுதிய இன்பியல் நாடகத்தின் சுருக்கம்)

* * *

நாடக உறுப்பினர்

கலிமாக்கோ - பிளாரன்சைச் சேர்ந்த ஓர் இளைஞன். சிரோ - அவனுடைய வேலைக்காரன்.

லிகுரியோ - ஒரு தரகன்,

மெசர் நிக்கியா - ஒரு வழக்கறிஞர்,

லுக்கிரிசியா . அவர் மனைவி,

சோஸ்ட்ராட்டா - அவள் தாய்,

டிமோஷியோ - பாதிரியார்.

காட்சி : 1

பிளாரன்ஸ் நகரில் ஒரு சதுக்கம்

வேலைக்காரன் சிரோ போகப் புறப்படுகிறான் : வாலிபன் கலிமாக்கோ அவனைத் தடுக்கிறான்.

கலி : டேய், சிரோ! போகாதே! இங்கேயே இரு

சிரோ : சரி, இருக்கிறேன், எசமான்!

கலி : நான் பாரிஸிலிருந்து திடீரென்று புறப்பட்டது உனக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும். அப்படித் திடீரென்று புறப்பட்டு வந்தவன் இங்குவந்து ஒரு மாத காலமாக எதுவும் செய்யாமல் இருப்பதைக் கண்டு நீ இன்னும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறாய் அல்லவா?

சிரோ : உண்மைதான்! எசமான்!

கலி : இதன் காரணத்தை நான் முன்னமேயே உன்னிடம் சொல்லவில்லை என்றால், அது நான் உன்மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்பதால் அல்ல. எதையும் தேவையானால் ஒழிய யாரிடமும் சொல்லாமல் இருப்பது தான் இரகசியத்தைக் காப்பாற்றச் சிறந்த வழி என்பது என் கருத்து. ஆனால், இப்போது உன் உதவி எனக்குத் தேவைப்படுகிறபடியால் எல்லாவற்றையும் உன்னிடம் சொல்லப்போகிறேன்.

சிரோ : நான் உங்கள் வேலைக்காரன் தானே! வேலைக்காரர்கள் தங்கள் முதலாளிகளின் காரியங்களில் தலையிடக் கூடாது. ஆனால், அவர்கள் அதில் பங்கு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டால், அவர்கள் உண்மையாக வேலை செய்யவேண்டும். நான் அவ்வாறுதான் இதுவரை நடந்திருக்கிறேன். இனிமேலும் நடப்பேன்.

கலி : எனக்குப் பத்து வயதாகும்போது என் பெற்றோர் இறந்து போனதும், அதன்பின் நான் பாரிசுக்குப் போய் இருபது ஆண்டுகள் அங்கேயே நிரந்தரமாக இருந்து வருவதும், இந்த் வீ ட்டைத் தவிர வேறு எல்ல்ாச் சொத்துக்களையும் விற்று விட்டு அமைதியாகக் காலங்கழித்து வந்ததும் உனக்குத் தெரிந்தது தான்!

சிரோ : ஆம் நன்றாகத் தெரியும்.

கலி : ஆனால், நான் இன்பமாயிருப்பது காலத்திற்குப் பொறுக்கவில்லை. அது, நண்பன் காமிலோ கல்பூசியைப் பாரிஸ் பட்டணத்துக்கு அனுப்பி வைத்தது.

சிரோ : புரிகிறது! உங்கள் கவலைக்குக் காரணம் என்னவென்பது இப்போதுதான் எனக்குப் புரிய ஆரம்பிக்கிறது:

கலி : பிளாரென்ஸ்காரர்கள் யார் வந்தாலும் நம் வீட்டிற்கு வரவேற்று விருந்து வைப்பதுதான் என் வழக்கமாயிற்றே? நண்பன் காமிலோ கல்பூசியும் அவ்வாறே என்னால் சிறப்பிக்கப்பட்டான். ஒருநாள் சாப்பாட்டுக்குப் பிறகு நாங்கள் எந்த நாட்டுப் பெண்கள் அழகிகள் என்று விவாதித்துப் பேசிக்கொண்டிருந்தோம். இத்தாலியப் பெண்கள் தான் அழகிகள் என்று காமிலோ வாதாடினான். இன்னொரு நண்பன் பிரெஞ்சுப் பெண்களுக்கு நிகரான அழகிகள் உலகத்திலேயே கிடையாதென்றான். கடைசியில், இத்தாலியப் பெண்கள் எல்லோரும் அழகிகள் அல்ல என்று காமிலோ ஒப்புக் கொண்டாலும், தனக்குச் சொந்தக்காரியான ஒரு பெண்ணுக்கு ஈடான அழகி உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் புகுந்து தேடினாலும் கிடைக்கமாட்டாளென்று உறுதியாகக் கூறினான்.

சிரோ : புரிகிறது! புரிகிறது. அடுத்து என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதும் எனக்கு இப்போதே தெரிகிறது!

கலி : சரி, கேள். நிக்கியா என்பவரின் மனைவி லுக்கிரியோவின் பெயரைச் சொல்லி அவள் அழகையும், வடிவையும் பலவாறாகப் புகழ்ந்து பாராட்டிப் பேசினான் அவன். அது என் இதயத்தில் அப்படியே பதிந்துவிட்டது. இங்கு வந்தபின் அந்த அழகி லுக்கிரியோவின் புகழ் உண்மையிலேயே பெரிதாக இருந்தது. எனக்கு எப்படியாவது அவளையடைந்த்ாக வேண்டுமென்ற எண்ணம் உண்டாகிவிட்டது.

சிரோ : பாரிசில் இருக்கும் போதே நீங்கள் என்னிடம் சொல்லியிருந்தால் தகுந்த புத்திமதி சொல்லியிருப்பேன்.

கலி : டேய் உன் புத்திமதியொன்றையும் நான் எதிர் பார்க்கவில்லை. இதில் உன் உதவியையே எதிர்பார்க்கிறேன்.

சிரோ : தாராளமாகச் செய்கிறேன்! ஆனால், உங்களுக்கு ஏதாவது நம்பிக்கை இருக்கிறதோ?

கலி : அதற்குத் தான் வழியேயில்லாமல் இருக்கிறது. முதலாவதாக அந்த அழகியின் குணமே என் எண்ணத்திற்கு நேர்மாறானதாக இருக்கிறது. அவள் உத்தமபத்தினி. காதலைப் பற்றிச் சிறிதும் எண்ணாத கற்புக்கரசியாக இருக்கிறாள். அத்துடன் அவள் சொற்படி ஆடுகிற ஒரு பணக்காரனைக் கணவனாகப் பெற்றிருக்கிறாள். அவன் வாலிபன் அல்ல என்றாலும் கிழவனும் அல்ல. யார் வீட்டுக்காவது விருந்துக்கோ நடனத்திற்கோ அந்த அழகி வருவாள் என்று எதிர்பார்க்கலாமென்றால் அதற்கும் வழியில்லை. ஏனென்றால், அவளுக்கு நண்பர்களோ உறவினர்களோ கிடையாது. வெளி வேலைக்காரர்கள் யாரையும் அவர்கள் வீட்டுக்குள்ளே விடுவதில்லையாம். உள்ளேயிருக்கிற வேலையாட்களைக் கொண்டு ஏதாவது முயற்சி செய்யலாம் என்றால், அவர்கள் அந்தக் கற்புக்கரசியின் தூய குணங்களைக் கண்டு அஞ்சுகிறார்கள். அவளை நெருங்குவதற்கே வழியில்லாமல் இருக்கிறது.

சிரோ : அப்படியானால் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்!

கலி : இருந்தாலும் நான் இன்னும் நம்பிக்கை கொண்டிருக்கச் சில காரணங்கள் இருக்கின்றன.

சிரோ : என்ன?

கலி : அவளுடைய கணவன் மெசர் நிக்கியா படித்துப் பட்டம் பெற்ற மனிதரே தவிர புத்திசாலியல்ல. மிகவும் சாதாரணமான ஒரு முட்டாள். அடுத்தபடியாக, அவர்களுக்குத் திருமணமாகி ஆறு ஆண்டுகளாகியும் இன்னும் ஒரு பிள்ளைக்கூடப் பிறக்கவில்லை. பிள்ளை வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். மூன்றாவதாக அந்தப் பேரழகியை பெற்றெடுத்த ஒர் தாய்க்காரி ஒர் உல்லாசப் பெண்மணி. பெரிய செலவாளி, ஆனால், இப்போது அவளிடம் ஏராளமாகப் பணம் குவிந்திருப்பதால் அவளை எப்படி வசப்படுத்துவதென்று எனக்குத் தெரியவில்லை.

சிரோ : நீங்கள் சிறிதாவது முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்களா?

கலி : இல்லையென்று தான் சொல்லவேண்டும். ஆனால், திருமணங்கள் பேசி முடிக்கிற தரகன் லிகுரியோவை உனக்குத் தெரியுமே. அவன் மெசர் நிக்கியாவிடம் நல்ல பழக்கமுடையவன். பணமுடை ஏற்படும்போதெல்லாம் அடிக்கடி அவரிடம் சில்லறை வாங்கிக்கொள்வான். நான் அவனிடம் என் காதலை எடுத்துச் சொன்னேன். அவன் தன்னால் முடிந்தவரை உதவி செய்வதாக வாக்களித்திருக்கிறான்.

சிரோ : அவன் உங்களை ஏமாற்றிவிடாமல் இருக்க வேண்டும்!

கலி : அப்படியெல்லாம் செய்ய மாட்டான். மெசர்நிக்கியா தன் மனைவியைப் பிள்ளை வரத்திற்காக தீர்த்த யாத்திரைக்கு அழைத்து வரும்படிச் செய்வதாக அந்தத் தரகன் எனக்கு வாக்களித்திருக்கிறான்.

சிரோ : பத்தினி திர்த்த யாத்திரை போனால், உங்களுக்கு அது எப்படி உதவும்.

கலி : அவள் நீராட வருமிடத்தில், அவள் என்னைக் கவனிக்கும்படியாகவும், என்னுடன் பேசிப் பழகும்படியாகவும் செய்து கொள்ள வேண்டும்.

சிரோ : அவ்வளவு மோசமான யோசனையில்லை. அதோ தரகன் லிகுரியோவும், மெசர் நிக்கியாவும் வருகிறார்கள்.

கலி : சரி, கொஞ்சம் மறைந்து நிற்போம்.

(இருவரும் மறைந்து நின்று கொள்கிறார்கள். அழகியின் கணவன் நிக்கியாவும் தரகன் லிகுரியோவும் அந்தவழியில் பேசிக்கொண்டே வருகிறார்கள், பிறகு நிக்கியர் போய்விடுகிறார். தரகன் மட்டும் நிற்கிறான். வாலிபன் கலிமாக்கோ மறைவிடத்தில் இருந்து வெளிப்பட்டு வருகிறான்)

கலி : லிகுரியோ! நீ மெசர்நிக்கியாவுடன் வந்ததைப் பார்த்தேன். காரியம் எப்படி முடிகிறதென்று அறிந்து கொள்வதற்காகவே காத்திருந்தேன்.

லிகு : அந்த மடப் பயல், பெரிய முன்னெச்சரிக்கை உள்ளவனாக இருக்கிறான். இந்த பிளாரென்சை விட்டு அடியெடுத்து வைப்பேனா என்று விட்டான். எப்படியோ ஓரளவு சரிப்படுத்தியிருக்கிறேன். ஆனால், அதனால் உமக்கு நன்மையுண்டோ? சொல்லுமையா!

கலி : ஏன் இல்லை!

லிகு : கேளும் இந்தத் தீர்த்த ஸ்தலங்களுக்கு எத்தனையோ பேர் வருவார்கள். வேறு எந்தப் பயலாவது அழகி லுக்கிரிசியாவின் பேரழகில் ஈடுபட்டுவிடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் உம்மைக் காட்டிலும் கவர்ச்சியானவனாக இருந்துவிட்டால், நாம் பாடுபட வேறொருவன் பலனடைந்ததாக முடிந்துவிடாதோ? சொல்லுமையா!

கலி : நீ சொல்லுவதும் சரிதான். ஆனால், வேறு ஏதாவது வழியிருக்கிறதா? அந்தப் பேரழகுப் பெண்மணியை அடைவதற்காக நான் கொள்ளை, கொலை எதுவும் செய்யச் சித்தமாயிருக்கிறேன். அவளையடையாவிட்டால் நான் செத்துப்போய் விடுவேன்.

லிகு : இப்படியெல்லாம் பேசாதிரய்யா! கொஞ்சம் அமைதியாயிரும். என்னால் முடிந்தவரை பார்க்கிறேன்.

கலி : உன்னைப் போன்ற தரகர்கள் ஏமாற்றியே பிழைப்பவர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் நான் உன்னைப் பரிபூரணமாக நம்புகிறேன்.

லிகு : இப்படியெல்லாம் நீர் அவநம்பிக்கை கொள்ளக் கூடாது. முதலில் விஷயத்தைக்கேளும், அவளுடைய புருஷன் மெசர் நிக்கியா பிரபு எந்தத் திர்த்த யாத்திரை ஸ்தலம் நல்ல பலனளிக்குமென்று கேட்டுத் தெரிந்து கொள்ள ஒரு வைத்தியரைப் பார்த்துவரும்படி என்னை அனுப்பி இருக்கிறார். நான் சொல்லுகிறபடி நீர் இப்போது நடக்க வேண்டும். நீர் வைத்தியம் படித்தவரென்றும், பாரீஸ் பட்டணத்தில் தொழில் நடத்தியதாகவும் கூறவேண்டும். நீர் தான் படித்திருக்கிறீரே, ஐயா, கொஞ்சம் லத்தின் வார்த்தைகளை ஊடே ஊடே நுழைத்துப் பேசினால் போதும், அவர் அப்படியே நம்பிவிடுவார்.

கலி : அதனால் என்ன பலன் வந்துவிடப் போகிறது?

லிகு : நாம் நினைத்த தீர்த்த யாத்திரை ஸ்தலத்துக்கு அவரைப் போகச் செய்ய முடியும் அல்லது, அதைக்காட்டிலும் மேலான ஒரு திட்டத்தை நாம் முயன்று பார்க்கவும் உதவக்கூடும்.

கலி : என்ன சொல்லுகிறாய்?

லிகு : நீர் என்னை நம்பி இதில் காலை விடுவதானால் சொல்கிறேன். நாளைக் காலையில், உம் எண்ணம் நிறைவேறும்படி செய்து விடுவேன்.

கலி : ஆ! உன் சொற்கள் என்னைத் திரும்பவும் உயிர் பெறச் செய்கின்றன. என்ன செய்யப்போகிறாய் சொல்!

லிகு : கூடிய சிக்கிரம் அதைச் சொல்கிறேன். இப்போது உம் வீட்டுக்குத் திரும்பு. நான் மெசர் நிக்கியா பிரபுவை கூட்டிக்கொண்டு வந்தால் சொன்னபடி நடந்துகொள்.

கலி : அப்படியே செய்கிறேன். ஆனால் நீ ஊட்டும் இந்த நம்பிக்கையெல்லாம் புகைபோல் மறைந்துபோய் விடுமோ என்றுதான் பயமாயிருக்கிறது!

காட்சி : 2

(கணவன் மெசர் நிக்கியாவும் தரகன் லிகுரியோவும் வருகிறார்கள்)

லிகு : ஆண்டவனேதான் இந்த மனிதனை நம்மிடம் அனுப்பியிருக்கிறார். பாரிஸ் பட்டனத்தில் அதிசயங்கள் புரிந்தவர் இந்த வைத்தியர். இங்கே பிளாரென்சில் ஏன் தொழில் தொடங்கவில்லை என்று ஆச்சரியப்படாதீர்! பணம் சேர்ந்துவிட்டது. அதனால் தொழிலில் அவர் அக்கறை காட்டவில்லை. இந்த மனிதன் வைத்தியம் பார்க்கிறேன் என்று ஒப்புக் கொள்வதுதான் பெரிய காரியம். ஒப்புக்கொண்டு விட்டால், முடியும் வரை இருந்து ஒருகை பார்த்துவிடுவான்.

மெசர் நிக்கியா : முதலில் அந்த ஆளைப் பார்த்துப் பேசுகிறேன். சரியான ஆள் என்று தெரிந்து கொண்டுவிட்டால், அப்புறம் அவரை வசப்படுத்தி ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டியதெல்லாம் உன் பொறுப்பு.

லிகு : அந்த ஆள் மட்டும் கெட்டிக்காரனாக இல்லையென்றால் நான் என் பெயரையே மாற்றி வைத்துக்கொள்கிறேன்.

நிக்கியா : சரி, வா போகலாம், அந்த வைத்தியர் வீட்டுக்கு.

(இருவரும் வந்து வீட்டுக் கதவைத் தட்ட வேலைக்காரன் சிரோ யாரென்று கேட்டு திறந்து விடுகிறான். வைத்தியர் உடையில் வாலிபன் கலிமாக்கோ உள்ளறையிலிருந்து வருகிறான்.)

கலி : யார் என்னைப் பார்க்க வேண்டும்?

நிக்கியா : போனாடைஸ், டொமைன் மாஜிஸ்டர்.

கலி : எட் வோபிஸ் போனா, டொமைன் டாக்டர்.

லிகு : என்ன அர்த்தம் இது!

நிக்கியா : சும்மா மாதிரி பார்த்தேன்!

லிகு : இதோ பாருங்கள்! எனக்குப் புரிகிறமாதிரி பேசாவிட்டால், நான் இங்கேயிருந்து போய் விடுகிறேன்.

கலி : என்ன காரியமாக வந்திர்கள்? தெரிந்து கொள்ளலாமா?

நிக்கியா : இந்தத் தரகன் லிகுரியோ, முன்னாலேயே விஷயத்தைச் சொல்லியிருப்பாரென்று நினைக்கிறேன். என் மனைவி எந்த ஸ்தலத்துக்கு தீர்த்த யாத்திரை போனால் நல்லது? முடிவு செய்து வைத்திருக்கிறீர்களா?

கலி : ஆமாம் இந்த தரகர் சொன்னார். ஆனால், முதலில் உங்கள் மனைவியின் மலட்டுத் தன்மைக்கு மூலகாரணம் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு பெண் மலடாயிருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. நாம் காசேஸ்டெரிலிட்டட்டிஸ் சன்ட், ஆட் இன்சென்டன், ஆட் இன் மேட் ரைஸ், ஆட் இன் இன்ஸ்ட்ருமென்டிஸ் செமி நரிஸ், ஆட் இன்வர்சா, ஆட் இன் காசா எக்ஸ்டிரின் சிக்கா.

நிக்கியா : (தனக்குள் - ஆள் பலே கைகாரனாகத்தான் இருக்கிறான்)

கலி : (தொடர்ந்து) இப்படிப் பலகாரணங்கள் இருக்கலாம். உங்கள் ஆண்மையின்மை காரணமாக இருந்தால் அதற்கு மாற்றே கிடையாது.

நிக்கியா : என்ன விளையாடுகிறீர்கள்! எனக்கா ஆண்மையில்லை. இந்த பிளாரென்ஸ் நகரிலேயே என்னைக் காட்டிலும் ஆண்மையும் வீரியமும் உள்ளவர் வேறு யார் இருக்கிறார்கள்?

கலி : அப்படியானால், நாம் ஏதாவது வழி கண்டுபிடிக்கலாம்.

நிக்கியா : தீர்த்தமாடுவதைக் காட்டிலும் வேறு நல்ல வழியிருந்தால் தேவலாம். ஏனென்றால் என் மனைவிக்கு வெளியூர் போவதென்றால் மிகச் சங்கடமாயிருக்கும்.

லிகு : கருத்தரிக்க ஏதோ மருந்து கலந்து கொடுப்பதாகச் சொன்னீர்களே?

கலி : கொடுக்கலாம். ஆனால், நம்மிடம் பூரண நம்பிக்கையில்லாதவர்களுக்கு எப்படி மருந்து கொடுக்க முடியும்?

நிக்கியா : அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. உங்களைத்தான் நம்பியிருக்கிறேன்.

லிகு : இவருடைய சம்சாரத்தின் நீரைப் பரிசோதிக்க மாதிரி நீர் வேண்டுமோ?

கலி : ஆம். இல்லாமல் முடியுமா?

நிக்கியா : இதோ கொண்டு வருகிறேன். (மெசர் நிக்கியா தன் வீட்டுக்குப்போய் பெரும்பாடு பட்டுத் தன் மனைவியிடம் இருந்து நீர் மாதிரி கொண்டு வருகிறார். கலிமாக்கோ அதை வாங்கிப் பார்த்துவிட்டு)

கலி : ஆ! மிகவும் பலவீனமாயிருக்கிறது! மெசர் நிக்கியா, நீர் என்னிடம் பூரண நம்பிக்கை வைத்திருக்கிறீர் என்று தெரிந்தால் நான் இதற்குச் சரியான பரிகாரம் செய்வேன். இல்லையென்றால் செய்யவே மாட்டேன். உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் மருந்து வாங்கிக் கொள்ளுங்கள். இன்னும் ஓராண்டு காலத்திற்குள் ஒரு குழந்தையை உங்கள் மனைவியின் மடியில் அது தவழவிட வில்லையென்றால் நான் உங்களுக்கு இரண்டாயிரம் நோட்டுகள் பணம் தந்துவிடுகிறேன்.

நிக்கியா : சொல்லுங்கள். கட்சிக்காரனுடைய வழக்கை கேட்பதைக் காட்டிலும் கவனமாக நான் உங்கள் யோசனையைக் கேட்கிறேன்.

கலி : மந்திரகோலா மருந்தில் ஒரு “டோஸ்” சாப்பிட்டால் போதும். எந்தப் பெண்ணுக்கும் உடனே கர்ப்பம் தரித்துவிடும். இந்த மருந்து மட்டும் இல்லையென்றால் பிரஞ்சு தேசத்து மகாராணிக்குப் பிள்ளைகள் பிறந்திருக்காது. இன்னும் எத்தனையோ இளவரசிகளின் கதியும் அப்படித்தான் ஆகியிருக்கும்!

நிக்கியா : ஆ!

கலி : மந்திர கோலா மருந்து தயாரிப்புக்கு வேண்டிய எல்லாம் நான் கொண்டு வந்திருக்கிறேன். எப்பொழுது வேண்டுமோ அப்பொழுது நீர் வாங்கிக் கொள்ளலாம்.

நிக்கியா : எப்பொழுது கொடுத்தால் நல்லது?

கலி : இன்று இரவு சாப்பாட்டுக்குப் பின்னால், சந்திரனும் சாதகமான நிலையில் இருக்கிறது. இதைக் காட்டிலும் நல்ல நேரம் வாய்ப்பதரிது!

நிக்கியா : அதைப்பற்றிக் கவலை வேண்டாம். நீங்கள் மருந்தைத் தயாரித்துக் கொடுங்கள். என் சம்சாரம் அதைக் குடிக்கும்படி நான் பார்த்துக் கொள்ளுகிறேன்.

கலி : ஆனால், இந்த விஷயத்தில் ஒரு பெரிய கஷ்டம் இருக்கிறது. இந்த மருந்தை அவள் உட்கொண்ட பிறகு, முதன் முதலாக அவளோடு மகிழ்ந்திருக்கிற மனிதன் எட்டு நாட்களுக்குள் இறந்து போய்டுவான். அவனைக் காப்பாற்ற இந்த உலகத்தில் எந்த மார்க்கமுமேயில்லை.

நிக்கியா : மரணம், நரகம் சே! அந்த மோசமான மருந்தை நான் தொடவேமாட்டேன்! என்னிடம் விளையாட வேண்டாம். என் கோபத்தைக் கிளற வேண்டாம்.

கலி : கொஞ்சம் பொறுங்கள். அதற்கும் ஒரு மாற்று வழி இருக்கிறது. நிக்கியா : என்ன அது?

கலி : மந்திர கோலா மருந்தை அவள் உட்கொண்டவுடனே, வேறொருவனை அவளுடன் இருக்கும்படி செய்கிறது. அந்த மருந்தின் விஷ நீர் முழுவதும் அவன் உட்லில் இறங்கிவிடும். பிற்கு நீங்கள் எவ்விதமான ஆபத்துமின்றி வழக்கம்போல் உரிமை கொண்டாடலாம்.

நிக்கியா : முடியாது என்னால் முடியாது!

கலி : ஏன் முடியாது?

நிக்கியா : என் மனைவி விபசாரியாவதையோ நான் விபசாரியின் கணவனாக இருப்பதையோ நான் விரும்பவில்லை.

கலி : இப்படியா உமது புத்தி போகிறது? நான் உன்னைப் புத்திசாலி என்றல்லவா எண்ணிக் கொண்டிருந்தேன். பிரான்ஸ் தேசத்து மகாராஜாவும் அவருடைய மந்திரி பிரதானிகளும் கடைபிடித்தவழியைப் பின்பற்ற உனக்கு இவ்வளவு தயக்கமா?

நிக்கியா : இந்தப் பைத்தியக்காரத்தனத்துக்கு யாரை எங்குபோய் பிடிக்க முடியும். மந்திரகோலா மருந்து உட்கொண்ட மங்கையோடு முதன் முதலில் மகிழ்ந்திருப்பவன் எட்டு நாட்களுக்குள் செத்துப் போய்விடுவான் என்று சொன்னீரே. உண்மையைக் கூறினால் எந்த மடையன் இந்த விஷயத்துக்கு ஒப்புக்கொள்வான். என் மனைவி இருக்கும் பக்கமே எட்டிப்பார்க்காமல் ஓடி விடுவானே? உண்மையைச் சொல்லாவிட்டாலும் நான் அவனை ஏமாற்றிக் கொன்றதாகப் போய்விடும். என் கழுத்துக்கும் தூக்குக் கயிற்றை எதிர்பார்க்க வேண்டியதுதான். இந்தத் துன்பம் எல்லாம் நமக்கு வேண்டாம்.

கலி : இதற்குத்தான் கவலைப்படுகிறீரா? பூ! இதெல்லாம் என் பொறுப்பில் விட்டுவிட்டால் போச்சு!

நிக்கியா : நீர் என்ன செய்வீர்!

கலி : சொல்லுகிறேன் கேளும். இன்று இரவு பத்து மணியைப்போல் மந்திரகோலா மருந்தை உம் சம்சாரம் உட்கொள்ளும்படி செய்யும். பிறகு, நான், சிரோ, லிகுரியோ, நீர் ஆகிய நால்வரும் மாறு வேடத்தில் தெருவில் சென்று முதலில் எதிர்ப்படுகிற மடப்பயல் ஒருவனை அப்படியே மடக்கிக் கண்ணை கட்டிக்கொண்டு போவோம். பிறகு அவனைப் படுக்கையில் விட்டு என்ன செய்யவேண்டும் என்பதை அவனிடம் சொல்வோம். அதில் எவ்விதமான தொந்தரவும் இருக்காது. பிறகு, அவனை அதிகாலையில் கிளப்பி மறுபடி கண்ணைக் கட்டி தூரத்தில் எங்காவது விட்டு விட்டு வருவோம். அவனுக்கு வீடு அடையாளம் தெரியாது. உமது மனைவியைக் குளித்து முழுகிச் சுத்தமாயிருக்கச் செய்து அதன் பிறகு நீர் உமது விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்: ஒரு சிறு ஆபத்துக் கூட ஏற்படாது!

நிக்கியா : பிரான்சு தேசத்து மகாராஜாவே அப்படிச் செய்திருக்கிறார் என்னும்போது நாம் செய்தால் என்ன? ஆனால், விஷயம் வெளிக்குத் தெரியக் கூடாது.

கலி : அது ஏன் தெரியப்போகிறது?

நிக்கியா : இதில் இன்னொரு கஷ்டம் இருக்கிறதே! அது பெரிய கஷ்டமாச்சே!

கலி : என்ன அது!

நிக்கியா : என் மனைவியை எப்படிச் சம்மதிக்கச் செய்வது! அவள் இந்த மாதிரிக் காரியத்துக்கு ஒப்புக் கொள்ளவேமாட்டாளே!

கலி : நானாயிருந்தால், நான் சொல்லுகிறதை என் மனைவி கேட்கவில்லையென்றால் அவளுக்குக் கணவன் என்று சொல்லிக் கொள்ளவேமாட்டேன்.

லிகுரியோ : எனக்கொரு யோசனை தோன்றுகிறது.

நிக்கியா : என்ன?

லிகு : அவளுடைய மத குருவைக் கொண்டு அவளைச் சம்மதிக்கச் செய்யலாம்.

கலி : அவரை யார் சரிப்படுத்துவது?

லிகு : நீர், நான், பணம் எல்லாமாகச் சேர்ந்து தான்!

நிக்கியா : என்ன, இருந்தாலும் விஷயத்தைச் சொன்னால், என் உத்தமமனைவி அந்த மதகுருவைப் போய்ப்பார்க்கக் கூட வரமாட்டாள்.

லிகு : அதற்கொரு வழியிருக்கிறது.

கலி : என்ன?

லிகு : அவள் தாயாரைக் கொண்டு, அவளை மதகுருவிடம் அழைத்துச் செல்லும்படி வைக்கலாம்.

நிக்கியா : அது சரியான யோசனை. என் சம்சாரத்திற்கு தன் தாயிடம் நல்ல நம்பிக்கை உண்டு.

லிகு : சரி, இந்தத் திட்டப்படியே எல்லாம் செய்வோம்!

காட்சி : 3

(தாயார் சோஸ்ட்ராட்டா அம்மையார், மெசர் நிக்கியா, லிகுரியோ ஆகியோர்)

சோஸ்ட்ராட்டா : இரண்டு வழியும் தீமையானதென்றால், தீமை குறைவாயுள்ள வழியைத் தேர்ந்தெடுப்பதுதான் ஒரு புத்திசாலியின் கடமை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். பிள்ளைப்பேற்றை அடைவதற்கு வேறு வழியில்லையென்றால், அந்த வழியை மனமொப்பி ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.

மெசர் நிக்கியா : நானும் அதே முடிவுக்குத்தான் வந்தேன்!

லிகு : (சோஸ்ட்ராட்டாவிடம்) நீங்கள் உங்கள் புத்திரியைப் போய்ப்பாருங்கள். அதற்கிடையில் நாங்கள் அவளுடைய மதகுருவான டிமோவியோ சாமியாரைப் போய்ப் பார்த்து நிலைமையை விளக்கிச் சொல்கிறோம். அவர் என்ன சொல்லுகிறார் என்று பார்க்கலாம்.

சோஸ் : அப்படியே செய்யலாம் நான் லுக்கிரிசியாவைத் தேடிப்பிடித்து எப்படியாவது சாமியாரிடம் கூட்டிக்கொண்டு வருகிறேன்.

(அவள் போகிறாள்)

லிகு : இந்த மத குருமார்கள் இருக்கிறார்களே, பெரிய ஆசாமிகள், மகா தந்திரசாலிகள் அவர்களுக்கு நம் எல்லோருடைய பாவங்களும் மட்டுமல்லாமல், தங்கள் தங்கள் பாபங்களும் நன்றாகத் தெரியும். அதனால், அவர்களை நன்றாக அறிந்தவர்கள், தவறான வழியில் அவர்கள் ஆதரவைப் பெறுவது மிக எளிது. நீர் ஒன்றும் பேசவேண்டாம். நானே அவரிடம் பேசிக்கொள்கிறேன்.

நிக்கியா : நான் என்னதான் செய்யவேண்டும்?

லிகு : நான் சைகை காட்டினால் ஒழியப் பேசவேண்டாம். நீர் செவிடு என்று அவரிடம் சொல்லிவிடுகிறேன். எல்லாம் நன்றாக முடியும்.

நிக்கியா : சரி.

இருவரும் போகிறார்கள். சாமியாரைக்கண்டு, அவருக்கும், தருமத்திற்கும் பணம் கொடுப்பதாகச் சொல்லி பத்தினி லுக்கிரிசியாவிடம் அவள் தங்கள் திட்டப்படி கருப்பவதியாவதில் தவறில்லை என்று சொல்லி ஒப்புக்கொள்ளச் செய்துவிடுகிறார்கள். இதற்கிடையில் பத்தினி, லுக்கிரிசியாவும் அவருடைய தாயார் சோஸ்ட்ராட்டாவும் வருகிறார்கள்.

சோஸ்ட்ராட்டா : அடி பெண்ணே லுக்கிரிசியா! என்னைப்போல் மானம் மரியாதை பார்ப்பவர்கள் இந்த உலகத்திலேயே இல்லை என்பதும் உனக்கு நன்றாகத் தெரியும். நான் உன் நன்மைக்குப் பாதகமாக எதுவும் செய்யமாட்டேன் என்பதும் உனக்கு நன்றாகத் தெரியும். எதற்கும் சாமியாரைப் பார்ப்போம். அவர் இதனால் மனச்சாட்சிக்குப் பாதகமில்லை என்று சொல்லிவிட்டால், பிறகு நீ இதைப்பற்றி அதிகம் யோசிக்க வேண்டியதில்லை.

லுக்கிரிசியா : இது என்னம்மா விசித்திரமான யோசனை! நான் கற்பிழக்கவேண்டுமென்பதும், என்னைக் கற்பழித்தவன் எட்டு நாளைக்குள் இறந்துபோக வேண்டுமென்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதா? என்னால் பெண்ணினத்துக்கே அவமானம் ஏற்படுவதா?

சோஸ் : இதோ பார்! எனக்கு அதிகம் பேசத்தெரியாது. டிமோஷியோ சாமியார் தர்மம் தெரிந்த பெரியமகான். அவர் என்ன சொல்கிறாரோ, அதன்படி செய்யலாம். வா.

லுக்கி : ஆண்டவனே! என் இதயம் வெடித்துவிடும் போலிருக்கிறது!

மதகுரு டிமோஷியோ சாமியார் முன்னிலையில் அவர்கள் வருகிறார்கள்.

டிமோஷியோ : வாருங்கள்! வாருங்கள்! நீங்கள் எதற்காக வருகிறீர்களென்று எனக்கு முன்ன்மேயே தெரியும். நிக்கியா சொல்லி விட்டுப் போய்விட்டார். நான் நம் மதநூல்கள் எல்லாவற்றையும் புரட்டிப் பார்த்துவிட்டேன். முடிவு நமக்குச் சாதகமாகவேயிருக்கிறது.

லுக்கி : குருதேவரே! உண்மையில் தான் சொல்லுகிறீர்களா? அல்லது விளையாடுகிறீர்களா?

டிமோ ; லுக்கிரிசியா! இது என்ன விளையாடக்கூடிய விஷயமா? அல்லது நான் உனக்கு முன்பின் தெரியாத ஆளா?

லுக்கி : இல்லை, இந்த யோசனையே விசித்திரமானதாக இருக்கிறதல்லவா?

டிமோ : இதிலென்ன விசித்திரம். நிச்சயமில்லாத ஒரு தீமைக்குப் பயந்து நிச்சயமான நன்மையை அடையாமல் இருந்துவிடக்கூடாது என்கிறது திருநூல். உன் விஷயத்தை எண்ணிப் பார்ப்போம்.

நீ மருந்தை உட்கொண்ட பின், உன்னோடு முதன் முதலில் மகிழ்ந்திருப்பவன் எட்டு நாளைக்குள் இறந்து போவான் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை அவன் இறந்து போகாமலும் இருக்கலாம். ஆண்டவனுடைய அருள் அப்படி. ஆனால், எப்படியும் உனக்குப் பிள்ளைப்பேறு உண்டு எனபது நிச்சயம். இந்த நிச்சயமான நன்மையை அடைய அந்த நிச்சயமற்ற பாவத்தை எண்ணிப் பயப்படலாமா?... கற்புப் பற்றி நீ பயப்பட்டால் அதற்கு நான் சமாதானம் சொல்கிறேன். உள்ளத் தூய்மைதான் கற்பே தவிர உடல் தூய்மையல்ல. அப்படியே உடல் தூய்மை கெடுகிறதென்று எண்ணினாலும், உன் கணவன் வெறுப்படையும்படி நடந்து கொள்ளவில்லை. அவனை மகிழ்விக்கவே அவ்வாறு செய்யப்போகிறாய். ஆகவே கணவனை மனநிறைவு கொள்ளச் செய்வதால் உனக்கு சொர்க்கத்தில் இடம் பதிவு செய்யப்படுகிறது.

லுக்கிரிசியா : குருதேவரே! நீங்கள் என்னதான் சொல்லுகிறீர்கள்?

டிமோஷியோ : உன் கணவன் விருப்பத்தை நிறைவேற்று. அதனால் ஏற்படக்கூடிய புண்ணியம் பெரிது. பாவமோ, வெள்ளிக்கிழமை மாமிசம் சாப்பிடுவதைக் காட்டிலும் அற்பமானது. ஒருவேளை தீர்த்தம் குடித்தால் அந்தப் பாவம் தீர்ந்து போய்விடும்.

லுக்கிரிசியா: குருதேவரே! நீங்கள் என்னை எங்கே கொண்டு செல்லுகிறீர்கள்?

டிமோஷியோ : ஆண்டவன் அருளுக்குப் பாத்திரமாகும் வழியில் தான் குழந்தாய்!

சோஸ்ட்ராட்டா : மகளே! இனியும் அசட்டுத்தனமாக மறுக்காதே!

லுக்கிரிசியா : சரி, உங்கள் ஏற்பாட்டுக்கு ஒப்புக் கொள்கிறேன். ஆனால் பொழுது விடிவதற்குள் நான் செத்துப் போய் விடுவேன் என்று தான் தோன்றுகிறது.

டிமோஷியோ : அஞ்சாதே குழந்தாய்! உனக்காக நான் ஆண்டவனைப் பிரார்த்தித்துக் கொண்டேயிருப்பேன்.

சோஸ்ட்ராட்டா : குருதேவரே! தங்களுக்குச் சாந்தி உண்டாகட்டும்!

லுக்கிரிசியா: ஆண்டவனும் அன்னை மேரியும்தான் இனி என்னைக் காக்க வேண்டும்.

(அவர்கள் போகிறார்கள்)

காட்சி : 4

கலிமாக்கோ : என்ன செய்தார்களோ? என்ன நடந்ததோ? இப்பொழுதே மணி பதினொன்றாகியிருக்கும் போலிருக்கிறதே ஆ! அதோ தரகன் லிகுரியோ வருகிறான்.! எவ்வளவு அவசரமாக வருகிறான்! அவன் சொல்லப் போகும் செய்தி என்னை இன்னும் சில நாட்கள் வாழ வைத்தாலும் வைக்கலாம். அல்லது உடனடியாகச் சாகச் செய்தாலும் செய்யலாம்.

(லிகுரியோ வருகிறான்)

கலி : லிகுரியோ! லிகுரியோ! என்ன செய்தி?

லிகு : நல்ல செய்தி!

கலி : உண்மையாகவா?

லிகு : ஆம்!

கலி : பத்தினி லுக்கிரிசியா ஒப்புக்கொண்டுவிட்டாளா?

லிகு : ஆம்!

கலி : குருதேவர் நம் திட்டத்திற்கு உடன்பட்டாரா?

லிகு : உடன்படாமல் இருப்பாரா!

கலி : கடவுள் என் பிரார்த்தனைக்கு இரங்கிவிட்டார்.

லிகு : ஆம்! நல்லவர்களுக்கு மட்டுமல்ல, பொல்லாதவர்கள் பிரார்த்தனைக்கும் கடவுள் அருள் புரிகிறார். அவர் பிரதிநிதியான மதகுருவும் அப்படித்தான். ஆனால் அவர் வெறும் பிரார்த்தனையை மட்டும் எதிர்பார்க்கமாட்டார். வேறு பலனும் எதிர்பார்ப்பார்.

கலி : அதென்ன? அவர் எதிர்பார்ப்பது?

லிகு : பணம்!

கலி : கொடுத்து விடுவோம். எவ்வள்வு?

லிகு : முந்நூறு டூக்காட்.

கலி : சம்மதம்!

லிகு : மெசர் நிக்கியா வேறு இருபத்தைந்து டூக்காட் கொடுத்திருக்கிறார்.

கலி : (ஆச்சரியமாக) என்ன? அவரா?

லிகு : ஆம்! அதைப் பற்றி நீர் கவலைப்பட வேண்ட்ாமையா? சரி, மருந்து தயார்ாக வைத்திருக்கிறீரா?

கலி : ஆம்!

லிகு : என்ன மருந்து?

கலி : திராட்சைப் பழரசம் தான்! அதுதான் அவளுக்கு உடலுக்கும் மனத்திற்கும் கிளர்ச்சியுண்டாக்கக் கூடிய நல் மருந்து. ஆனால், ஆ! கடவுளே! நான் எவ்வளவு முட்டாள்தனமாக நடந்து கொண்டுவிட்டேன்.

லிகு : என்ன இப்படித் திடீரென்று...

கலி : ஐயோ, நம் திட்டப்படி வேறு எவனோ மடப்பயலையல்லவா அவளிடம் அனுப்பப் போகிறோம்? இதற்காகவா நாம் இவ்வளவு திட்டமிட்டோம்?

லிகு : . ஏனய்யா! நீரே அந்த மடப்பயலாயிருந்து விட்டுப் போயேன்!

கலி : அதெப்படி முடியும், நான் உங்களோடு கூட இருக்க வேண்டுமே?

லிகு : அதற்கும் அந்த மதகுருவையே பிடிக்கிறேன்.

கலி : பிடித்து...?

லிகு : எல்லோரும் மாறு வேடம் போட்டுக் கொள்வோம். மதகுருவும் அப்படியே மாறுவேடத்தோடு வரச் செய்கிறேன். அவர்தான் நீர் என்று மெசர் நிக்கியா பிரபுவிடம் கூறுகிறேன். நீர் கிழிந்த ஆடைகளோடு ஒரு மடப் பயலைப்போல் தெரு வழியாக வாரும். உம்மைப் பிடித்துப் போகிறோம்.

கலி : முகத்தை மூடிக்கொண்டுதானே.

லிகு : சேசே! அது சந்தேகத்தை உண்டாக்கும்.

கலி : முகம் திறந்திருந்தால், அந்த நிக்கியா நான்தான் என்று தெரிந்து கொள்வானே!

லிகு : முகத்தைக் கோணலாக வைத்துக் கொள்ளும். வாயை அகலத் திறந்து, உதட்டை விரித்து வைத்துக் கொள்ளும். அல்லது பல்லெல்லாம் தெரியக் காட்டும். ஒரு கண்ணை எப்போதும் மூடிக்கொண்டேயிரும். எங்கே செய்து காண்பியும் பார்க்கலாம்.

கலி : (முகத்தைக் கோணல் செய்து) இப்படியா?

லிகு : இல்லை.

கலி : இன்னும் கோணலாக்கி இது மாதிரியா?

லிகு : இன்னும் சரியாக வரவில்லை.

கலி : சரி, இப்போ பார்.

லிகு : ஆம் இதே மாதிரிதான்; மறந்து விடாதீரய்யா! என்னிடம் வீட்டில் பொய் மூக்கு ஒன்று இருக்கிறது. அதைத் தருகிறேன். ஒட்டிக்கொள்ளும்.

கலி : அப்புறம்?

லிகு : நாங்கள் மாறு வேடத்துடன் வருகிறோம். நீர் பைத்தியக்காரப் பயலைப் போல் தெருவில் வாரும். உம்மைப் பிடித்துக்கொண்டு போகிறோம்.

கலி : பிறகு நான் என்ன செய்வது?

லிகு : அது உம் காரியம். உம் சாமர்த்தியம் அதில் எங்களுக்கென்ன இருக்கிறதய்யா?

கலி : என்னதான் சொல்லுகிறாய்?

லிகு : அந்தப் பத்தினி அன்றிரவு உன் விருப்பத்திற்கு இணங்கி விடுவாள். உம் நெடுநாள் ஆவல் நிறைவேறியதும் அவளிடமிருந்து பிரிந்து வருவதற்கு முன்னால், நீர் யாரென்று தெரிவித்து உம் அளப்பரும் காதலையும் எடுத்துக் கூறும். அவ்வாறு கூறி அவளை என்றும் உமக்கு இணங்கிய வளாக்குவது உம் கெட்டிக்காரத்தனத்தைப் பொறுத்தது. அவளும், உம்முடன் இருப்பது இதுவே கடைசியிரவாக இருக்க வேண்டுமென்று விரும்பமாட்டாள்.

கலி : உண்மையாகவா?

லிகு : ஆம்! மருந்தைச் சீக்கிரம் கொடுத்தனுப்பும். நான் வருகிறேன். எல்லாம் நான் சொன்னபடி நடக்கட்டும்.

(போகிறான்)

(அன்று இரவு பத்து மணி சுமாருக்கு, மெசர் நிக்கியா பிரபு, தரகன் வேலைக்காரன் சிரோ ஆகியோர் மாறு வேடத்துடன் தெருவிற் போகிறார்கள்._ஒரு மூலையிலிருந்து வாலிபன் கலிமாக்கோ பிச்சைக்காரனைப் போல் வருகிறான். அவன்மீது பாய்ந்து பிடித்துக் கண்ணைக் கட்டி இருட்டில் இழுத்துச் செல்லுகிற்ார்கள். நிக்கியாவின் வீட்டில், பத்தினி லுக்கிரிசியாவின் பள்ளியறைக்குள் வாலிபன் கலிமக்கோ தள்ளப்படுகிறான். அறைக் கதவு சாத்தப்படுகிறது)

காட்சி : 5

(தேவாலயத்தின் முன்னால், மெசர் நிக்கியா பிரபுவும், அவருடைய பத்தினி லுக்கிரிசியாவும் வருகிறார்கள். அப்போது தரகன் லிகுரியோவும் வாலிபன் கலிமாக்கோவும் எதிரில் வருகிறார்கள். அதே சமயம் தேவாலயத்தை நோக்கி மதகுரு டிமோஷியோ சாமியார் வந்து கொண்டிருக்கிறார்)

கலி : ஆண்டவர் உங்களைக் காப்பாராக!

நிக்கியா : வைத்தியரே! இதோ என் மனைவி! கை குலுக்கிக் கொள்ளுங்கள்.

கலி : ஆகா!

நிக்கியா : கண்ணே, லுக்கிரிசியா! இவர்தான் நமக்கு முதுமைக் காலத்தில் ஓர் உதவி கிடைக்க வகை செய்தார். இவருக்கு நீ நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறாய்.

லுக்கிரிசியா : நான் அவருக்கு மிகவும் நன்றியுடைய வளாயிருப்பேன். அவர் இனி எப்போதும் நம் நண்பராக இருக்கட்டும்.

நிக்கியா : ஆண்டவர் உனக்கு என்றும் அருள் புரிவார். அன்பே இந்த வைத்தியரையும் தரகன் லிகுரியோவையும் இன்று நம் வீட்டில் விருந்துண்ண அழைப்போமே!

லுக்கிரிசியா : ஆகா! மெத்த மகிழ்ச்சி.

டிமோஷியோ சாமியார் : ஏழைகளுக்குத் தருமம் செய்ய பணம் கொடுக்கிறீர்களா?

நிக்கியா : குருமகானே. இப்போதே அனுப்புகிறோம். (அப்போது பத்தினியின் தாயார் சோஸ்ட்ராட்டா அம்மையாரும் வருகிறாள்)

டிமோஷியோ சாமியார் : அம்மணி சோஸ்ட்ராட்டா, உங்களைப் பார்த்தால் இளமை திரும்ப வந்ததுபோல் இருக்கிறதே!

சோஸ்ட்ராட்டா : இன்று எல்லோருக்கும் ஆனந்த நாள்! எல்லோருக்கும் மகிழ்ச்சி.

சாமியார் : சரி, எல்லோரும் தேவாலயத்திற்கு வாருங்கள். ஒன்றாக உட்கார்ந்து ஆண்டவனைப் பிரார்த்திப்போம். பிரார்த்தனை முடிந்ததும் நீங்கள் விருந்துண்ணப் போகலாம். நான் இங்கேயே ஆலயத்தில் இருந்து எல்லோருடைய பாவத்தையும் மறைக்கும் பணியைத் தொடர்ந்து செய்கிறேன்!

* * *

நூல் சுருக்கம் : 5

மாக்கியவெல்லியின் கடிதங்கள்

* * *

கடிதம் : 1

அரசியற் கொள்கைகளில், பலனையே கருதவேண்டும்: முறைகளையல்ல!

(பியரோ சோடர்னி) என்பவர் சிறிது காலம் பிளாரண்டைன் அரசாங்கத்தின் தலைவராக இருந்தவர் 1513-ம்ஆண்டில் இந்தக் கடிதம் எழுதப்பட்ட சமயத்தில் அவர் நாடு கடத்தப்பட்டுதால் மாட்டியாவில் இருந்தார். மாக்கியவெல்லியின் மூலமாக அவர் பிளாரென்சுக்குத் திரும்பிவர முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் மொட்டையாக எழுதியனுப்பிய கடிதம் ஒன்றுக்கு மாக்கியவெல்லி எழுதிய பதில் இது. பகைவர் கையில் சிக்கக் கூடும் என்ற ஐயப்பாட்டில் எழுதப்பட்ட கடிதம் ஆகையால் இதில் பல விஷயங்கள் குழுஉக் குறியான சொற்றொடர்களில் அமைந்திருக்கின்றன. கூடுமானவரை அவற்றைப் புரிய வைக்க முயன்றிருக்கிறோம்.)

ரகுசாவில் உள்ள பியரோ சோடர்னி அவர்களுக்கு,

(தேதியிடப்படவில்லை)

உங்கள் கடிதம் ஒன்று எனக்கு முக்காடும் போர்வையுமாக வந்து சேர்ந்தது. அதாவது குளிர் நிறைந்த ஜனவரி மாதத்தில் மொட்டைக் கடிதமாக வ்ந்தது. அதாவது குளிர் நிறைந்த ஜனவரி மாதத்தில் மொட்டக் கடிதமாக வந்தது. ஆனால் அதில் பத்து வார்த்தைகளைப் படித்த மாத்திரத்திலேயே அது உங்கள் கடிதம் என்பதைத் தெரிந்து கொண்டேன். உங்களையறியப் பியாம்பினோவை அடிக்கடி நம்புகிறேன். அடிக்கடி பியாம்பினோவிலிருந்து வரும் ஆளைப் பார்க்கிறேன். அவன் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை எனக்குத் தெரிவித்துக் கொண்டிருக்கிறான்) உங்களில் ஒருவன் வெளிச்சம் இல்லாமலும் இன்னொருவன் அதிக வெளிச்சத்தினாலும் அவதிப்படுகிறார்கள் என்று நிச்சயமாக நினைக்கிறேன். உங்கள் காரியக்காரர்களில் ஒருவன் முட்டாளாகவும் மற்றொருவன் அயோக்கியனாகவும் இருப்பதால்தான் உங்கள் உடன்பாட்டுப் பேச்சு வார்த்தைகள் ஒரு பலனும் இல்லாமல் போய்விட்டன என்பதை நான் தெளிவாகத் தெரிந்து கொண்டேன். பிப்ரவரி சரியாக இருக்கும் வரை நான் ஜனவரியைப் பற்றிக் கவலைப்படவில்லை. தற்போது காரியம் வெற்றிகரமாக முடியும் என்று தோன்றுகிறபடியால் போன மாதம் பேச்சு வார்த்தைகள் முறிந்து போனதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. பிலிப்போவின் சந்தேகத்தைக் கண்டு வருந்திப் பலனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். மேற்படியாரை பிலிப்போ நம்பாதிருப்பதைக் கண்டு வியப்படைந்தேன். என்ன நடக்கிறதென்று எச்சரிக்கையாகக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் கடிதம் சுருக்கமாக இருந்தாலும், திரும்பத் திரும்பப் படித்து அதை விரிவாக்கி விளக்கம் அடைந்தேன். உண்மையில் நான் தயக்கமடைந் திருக்கிறேன். கடிதத்தின் இந்தப்பகுதிதான் சரியாகப்பட வில்லை. {மேற்படியாரைப் பார்க்க நான் தயங்கிக் கொண்டிருந்தேன். ஆனால், உங்கள் கடிதத்தில் உள்ள குறிப்புப்படியே நடந்து வருகிறேன். நான் அவரைச் சந்திக்க முடிவு செய்து கொண்டேன். அவரைப் பற்றித் தாங்கள் பயப்படுவது அர்த்தமற்றது. நீங்கள் சொல்கிறபடி அவர் பேசியிருப்பார் அல்லது செய்திருப்பார். உங்களையும் உங்கள் பிரயாணத்திசையையும் நான் அறிவேன். உங்களுக்குத் தேவை என்ன என்பதும், நீங்கள் அது பற்றி என்ன செய்யப் போகிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். உங்கள் போக்கில் தவறு கண்டாலும் நான் அதைக் கண்டித்துரைக்க மாட்டேன். அது உங்களுக்கு அளித்திருக்கும் வெற்றியை எண்ணும்போது கண்டிக்க முடியாது. அது மேலும் வெற்றி தருமென்று நம்புகிறேன்.

அறவொழுக்கமும் அறிவு நுட்பமும் உடைய உங்களுடைய நிலையைக் கொண்டு தீர்மானிக்காமல், பலப் பலருடைய நிலையைக் கொண்டு தீர்மானிக்கும்போது, அரசியல் கொள்கைகளைப் பற்றிய முடிவுகளை அவற்றின் செயல் முறைகளைக் கொண்டு தீர்மானிக்காமல் அவற்றின் மூலம் அடைந்த பலன்களைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்திருக்கிறேன்.

ஓர் இடத்திற்குப் பல பாதைகளின் மூலம் போய்ச் சேர்வது போல, ஒரே காரியத்தைப் பலவிதமான முறைகளால் செய்யலாம். பல்வேறு மக்களும், பெரிதும் வேறுபட்ட கொள்கைகளின் மூலம் தங்கள் - இலட்சிய முடிவுகளை எய்துகிறார்கள். இந்தக் கொள்கையை மெய்ப்பிப்பதற்கு இதுவரையில்லாதிருந்த சாட்சியத்தை இப்போதைய போப்பாண்டவரின் நடத்தையும் அதனால் அவர் நிறைவேற்றிய காரியங்களும் கொடுத்து விட்டன.

ஹனிபாலும் சிப்பியோவும் இராணுவத் திறமையில் ஒன்று போல் உயர்ந்த நிலையில் இருந்தவர்கள்; பல வெற்றிகளையும் அடைந்திருக்கிறார்கள். ஹனிபால், தன் இராணுவத்தை ஒன்றுபடுத்தி, இத்தாலிய மக்களின் அனுதாபத்தைப் பெற்று, அவர்களைக் கொடுமையும், சதியும், துரோகமும், அக்கிரமுமான வழிகளில் ரோமானியருக்கு எதிராகப் புரட்சி செய்யும்படி தூண்டினான். ஆனால் சிப்பியோவோ, அன்பு, நேர்மை, உண்மை ஆகியவற்றில் ஸ்பெயின் தேசத்து மக்களிடையே அதே வெற்றியை அடைந்தான். ரோமானியர்களுடைய உதாரணம் நம் நாட்டுக்குச் சரிப்படாது என்று சொன்னால், இப்போது நம் நாளிலேயே, லாரென்சோ டிமெடிசி மக்கள் ஆயுதங்களைப் பறி முதல் செய்ததன் பலனாகப் பிளாரென்சை வசப்படுத்திக் கொண்டதையும், ஜியோலாணி பெண்டிவோக்லியோ மக்களுக்கு ஆயுதம் வழங்கி போலோக்னாவை வசப்படுத்திக் கொண்டதையும் சொல்லலாம். பேரரசர் டிட்டஸ் தாம் யாருக்கோ நன்மை செய்யத் தவறியதால் தம் சிங்காதனத்தை இழக்கும் விதி ஏற்பட்டது என்று எண்ணினார். வேறு பலர் யாருக்கும் நன்மை செய்வதால் தங்கள் சிங்காதனத்தை இழக்கும்படி நேரிடும் என்று நினைத்ததாகத் தோன்றுகிறது. ஒவ்வொரு விஷயத்தையும் ஆற அமர யோசித்துச் செய்வதால்தான் பலர் தங்கள் குறிக்கோளில் வெற்றியடைகிறார்கள். இப்போதுள்ள போப்பாண்டவரோ, எவ்வளவு சிறந்த திட்டங்களாலும், எவ்வளவு சக்தி வாய்ந்த ஆயுதங்களாலும் செய்ய முடியாத காரியத்தை எவ்விதமான குறிக்கோளும் ஆயுதமுமின்றி வெற்றிகரமாகச் செய்து முடித்து விடுகிறார். ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டத்தின் மீதோ தான் மனித இருந்த பல இகழப்படுவர்கள் வெளையும் வாய்ப்புக்குத் தகுந்தபடி இராச்சியங்களை அடைபவர்களையும், இழப்பவர்களையும் நாம் பார்க்கிறோம். அவர்கள் வென்றால் புகழப்படுகிறார்கள்: தோற்றால் இகழப்படுகிறார்கள். நீண்ட காலம் வளமாக இருந்த பிறகு இழப்பு நேரிடும்போது மட்டும்தான் மனிதன்மீது பழியை ஏற்றாமல் ஆண்டவர் மீதோ அல்லது அவனுடைய தீய விதியின் மீதோ அந்தப் பழி சுமத்தப்படுகிறது.

மனிதர்களுக்கு வெவ்வேறு விதமான முகங்களைக் கொடுத்தது போலவே, இயற்கை அவர்களுக்கு வெவ்வேறு விதமான மனத்தையும் குணத்தையும் கொடுத்திருக்கிறதென்று நான் நம்புகிறேன். மனிதர்கள் தங்கள் குணவியற்படியும், மனப்போக்கின்படியும் செயலாற்றுகின்றார்கள். ஆனால், இன்னொரு புறத்தில் காலமும் சூழ்நிலையும் மாறுபடுகிறது. தன் போக்கின்படி ஒருவன் ஆற்றுகின்ற செயல்கள், காலத்திற்கும் சூழ்நிலைக்கும் பொருந்தி விடுகின்றபோது, அந்த மனிதன் தன் காரியத்தில் தான் எதிர்பார்க்கும் பலனை அடைகின்றான். காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஒத்து வராத போக்குடைய மனிதன் தோல்வியடைகிறான். காலப் போக்கும் சூழ்நிலையும் இடத்துக்கு இடம் தேசத்திற்குத் தேசம் மாறுபடுவதால், மாறுபட்ட இரண்டு முறைகளில் செயலாற்றுகின்ற வெவ்வேறு மனிதர்கள் ஒரே பலனையடைய முடியும். ஆனால், காலமும் சூழ்நிலையும் பொதுவாகவும் குறிப்பாகவும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. அதே சமயம் மனிதனின் குணமும் போக்கும் ஒரே மாதிரியாக அப்படியே இருக்கின்றன. ஆகவேதான் மனிதனுக்கு ஒரு - சமயம் நல்லதிர்ஷ்டமும் மற்றொரு சமயம் துரதிர்ஷ்டமும் உண்டாகின்றன. காலமும் சூழ்நிலையும் இவ்வாறு இருக்கும் என்று முன் கூட்டியே அறியக் கூடிய அவ்வளவு புத்திசாலியாக மனிதன் இருந்து அதற்குத் தகுந்தாற்போல் நடந்து கொண்டால் அவன் எப்போதும் நல்லதிர்ஷ்ட முடையவனாகவேயிருப்பான். அல்லது தீமைகளையாவது தவிர்த்துக்கொள்ளக் கூடியவனாக . இருப்பான். மதியுடையவன் விதியையும் விண் மீன்களையும் ஆளுவான் {விதியை மதியால் வெல்லலாம்) என்ற பழமொழியும் உண்மையாகி விடும். துரதிர்ஷ்ட வசமாக இந்த உலகத்தில் அவ்வளவு புத்திசாலிகள் காணப்படவில்லை. ஏனென்றால், முதலாவதாக மனிதர்களால் எதிர் காலத்தையறிய முடிவதில்லை. இரண்டாவதாக அவர்கள் தங்கள் இயல்புகளை மாற்றிக்கொள்ள முடிவதில்லை. ஆகவே தன் மாறுபாட்டுக்குத் தக்கபடி மனிதர்களை அதிர்ஷ்ட வாய்ப்புத்தான் ஆள வேண்டியதாயிருக்கிறது, கொடுமையும், துரோகமும், அக்கிரமும் நீண்ட நாட்களாக நிலவிய நாட்டிலே மனிதத் தன்மையும், நேர்மையும், உண்மையும் கொண்டு ஒருவன் கௌரவத்தையடைவது போலவே, மனிதத் தன்மையும், நோமையும், உண்மையும் நீண்ட நாட்களாக மதிப்பையிழந்து போன இடத்திலே கொடுமையாலும், துரோகத்தாலும் அக்கிரமத்தாலும் ஒருவன் மரியாதையைப் பெற்றுவிடலாம். கசப்பான பொருள்களால் சுவை ஊறுபடுவது போலவே, மிகப் பல இனிய பொருள்களால் குமட்டலும் ஏற்படுகிறது. அது போலவே மனிதர்கள் நன்மைகளால் அலுப்பும், தீமைகளால் வெறுப்பும் அடைகிறார்கள். ஹனிபாவின் கையில் இத்தாலியும், சிப்பியோவின் கையில் ஸ்பெயினும் சேர்ந்ததற்குக் காரணம் இவைதாம். காலமும் சூழ்நிலைகளும் இந்த இரண்டு மனிதர்களின் தன்மைக்கும் - போக்குக்கும் பொருந்தியிருந்தன. நாம் சொல்லுகின்ற அந்தக் குறிப்பிட்ட காலங்களில் சிப்பியோவைப் போன்ற ஒரு மனிதன் இத்தாலியிலோ அல்லது ஹனிபாவைப் போன்ற ஒரு மனிதன் ஸ்பெயினிலோ அவர்கள் இருவரும் தத்தம் தேசத்தில் அடைத்தது போன்ற வெற்றியை அடைந்திருக்க முடியாது.

நிக்கோலோ மாக்கியவெல்லி.

கடிதம் : 2

பேசினால் அரசியல் பேசவேன்: இல்லாவிட்டால்

பேசாமலிருப்பேன்!

பெருமைமிக்க பிரான்சிஸ்கோ வெட்டோரி அவர்கள், ரோமில், பிரதான குருவின் சமஸ்தானத்துக்கு அனுப்பப் பட்ட ராஜதூதர்.

ரோமாபுரி.

பிளாரென்ஸ், ஏப்ரல் 9.1513.

பெருமைமிக்க ராஜப்பிரதிநிதி அவர்களே,

தங்கள் கடந்த கடிதம். சித்திரவதை இயந்திரத்திற்கு அழைப்பதைக் காட்டிலும் மேலான பயத்தை எனக்கு உண்டாக்கிவிட்டது. எனக்குத் தீமையிழைக்கப்படும் என்று தாங்கள் கனவு காண்பது கூட எனக்கு வருத்தமளிக்கிறது. எனக்குப் பட்டுப்பட்டுப் பழக்கமாகி விட்டது. ஆனால் உங்களுக்காகவே நான் வருந்துகின்றேன். தங்கள் நல்லறிவினாலும் சாதுர்யத்தினாலும் வாழ்வதைவிடக் குறுகிய புத்தியினாலும் திறமையினாலும் தொல்லை பிடித்தவர்களாக உலகில் வாழ்க்கை நடத்துகின்றவர்களைப் பின்பற்றி நடக்கும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் டாட்டோ பற்றிச் சொன்ன விஷயத்தை முன்னிட்டு உங்களுக்காக நான் வருந்துகிறேன். உண்மையில் நான் அந்த விஷயத்தை முக்கியத்துவமுடையதாக எண்ணவில்லை. உருட்ட முடியாத கல்லைப் புரட்டிப் பார்க்க வேண்டும். நான் ஏதேனும் உங்களிடம் கேட்கும் பொழுது, எனக்காக நீங்கள் துன்பத்திற்காளாகும்படி நடந்துகொள்ள வேண்டாம் என்பதை எப்பொழுதும் போல இப்பொழுதும் நினைவு படுத்துகின்றேன். ஏனென்றால் நான் விரும்புகிற விஷயத்தில் பலன் பெறவில்லையென்றால், அதற்காக நான் அப்படியொன்றும் பெருந்துன்பம் அடைந்துவிடப் போவதில்லை.

பல விஷயங்களில் ஒன்றை எதிர்பார்த்திருக்க வேறு வி தமாக முடிவதைக் கண்டு நீங்கள் அலுத்துப் போயிருந்தால் அதனால் தவறில்லை. ஏனெனில் என் விஷயத்திலும் அது மாதிரியே பல தடவை நடந்திருக்கிறது. எப்படியிருந்தாலும் - நான் உங்களை நேரில் சந்திக்க முடிந்தால், உங்கள் மனத்தில் விதவிதமான மனக் கோட்டைகளை நிரப்பாமல் என்னால் இருக்க முடியாது. பட்டு வியாபாரத்தைப் பற்றியோ, கம்பளி வியாபாரத்தைப் பற்றியோ அல்லது லாப நட்டக் கணக்குகளைப் பற்றியோ பேசாமல் அரசியலைப் பற்றிப் பேச வேண்டும் என்று எனக்கு விதி ஏற்பட்டிருக்கிறது. எனக்கு ஒரே ஒரு வழியிருக்கிறது. ஒன்று அரசியல் பேச வேண்டும் அல்லது பேசாமல் இருப்பதாக உறுதி பூண வேண்டும்.

நிக்கோலோ மாக்கியவெல்லி

செயலாளர் எர்ஸ்ட்வெல்.

கடிதம் : 3

பேன் கூட்டத்திடையே வாழ்கிறேன்

பிரான்சிஸ்கோ வெட்டோரி அவர்களுக்கு,

பிளாரென்ஸ், ஜுன் 10, 1514.

பெருமை தங்கிய ராஜதூதர் அவர்களே,

என் கூட்டத்துடன் நான் நாட்டுப் புறத்தில் இருக்கின்ற பொழுது, தங்கள் இரு கடிதங்களும் கிடைத்தன. பிரான்காசியோவிற்காக டொனாட்டோ அவற்றை அனுப்பி வைத்தார். என் சொந்த விஷயம் பற்றியும், தங்களுடைய இருதயப் பிரச்சனைகள் பற்றியும் பிற எல்லா விஷயங்களுக்கும், எனக்குப் பொருத்தமாகத் தோன்றிய முறையில் நான் அவற்றிற்குப் பதில் அளித்தேன். ஆனால், அதன் பிறகு எல்லாவற்றையும் மறந்து விடுவதற்காக பிளாரென்சுக்கு இரண்டு நாட்களாக வந்திருக்கிறேன். நான் எழுதிய எல்லாவற்றையும் திரும்ப எழுதுவது எனக்குச் சிறிது சிரமமாகத் தோன்றுகிறது. ஆகவே நான் பொறுத்திருந்து, தாங்கள் இப்பொழுது எனக்கு அறிவித்த அதே காரணங்களை முன்னிட்டு ரோமாபுரிக்குச் செல்லவில்லை என்பதைப் பற்றிச் சுருக்கமாக விளக்கியெழுதி அந்தக் கடிதத்தைப் பின்னால் அனுப்புகிறேன். நானே அவற்றையெல்லாம் பற்றி முன் கூட்டி அறிந்துகொண்டு விட்டேன்.

ஆகவே, என் உழைப்பின் பெறுமதியை நினைவு வைத்திருப்பவர்களோ, அல்லது நான் ஏதேனும் நல்ல காரியத்துக்குப் பயன்படுவேன் என்று எண்ணுபவர்களோ யாரும் இல்லாத இந்தப் பேன் கூட்டத்தினிடையே நான் தொடர்ந்து இருந்து வருகிறேன். ஆனால், இதே நிலையில் நான் நெடுநாட்கள் இருக்க முடியாது. என் பொருளாதாரம் குறைந்து கொண்டு வருகிறது. கடவுள் தாமாக என்னிடம் ஏதேனும் அருள் புரியாவிட்டால், எப்போதாவது ஒருநாள் நான் வீட்டை விட்டுக் கிளம்பி, எங்காவது கடிதம் வாசித்துக் காண்பிப்பவனாகவோ, அல்லது யாராவது காவற் சேவகனுக்குக் கணக்குப் பிள்ளையாகவோ இருந்து காலத்தைக் கழிக்க வேண்டியதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. அப்படியும் ஒரு நல்ல நிலையில் என்னால் வாழ முடியவில்லை என்றால், இங்கே உள்ளவர்கள் நான் செத்துத் தொலைந்து விட்டதாக எண்ணிக் கொள்ளும்படி செய்துவிட்டு, எங்காவது தூரந் தொலையில் சென்று சிறு குழந்தைகளுக்கு எழுத்துகள் சொல்லிக் கொடுக்கும் வாத்தியாராகவாவது இருக்க வேண்டியதுதான், அந்த விஷயத்தில் நான் அவர்களுக்கு முற்றிலும் ஒரு பாரமாக இருக்கிறேன். நான் செலவாளியாக இருக்கிறேன். செலவழிக்காமல் என்னால் இருக்க முடியவில்லை.

இந்த விஷயங்களையெல்லாம், நீங்கள் எனக்காக ஏதேனும் கஷ்டப்பட வேண்டும் என்பதற்காகவோ, அல்லது கவலையெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலோ நான் சொல்லவில்லை. ஆனால், என் இதயத்திலிருந்து துன்பபாரத்தை அகற்றுவதற்காகவே சொல்லுகிறேன், இன்னொரு முறை நான் உங்களிடம் இதைச் சொல்ல மாட்டேன்.

சிந்தைக்கினிய நண்பரே, காதல் மக்களின் இதயத்திலே பொருந்தும்போது, அதைக் கட்டி வைக்கவோ அதன் இறக்கைகளைச் சேர்த்து இறுக்கி வைக்கவோ முயலுபவர்களைத் தான் அது மிகுந்த வேதனைக்குள்ளாக்குகிறது என்பதை நான் தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். சிறு குழந்தையாகவும் அடிக்கொரு நினைப்புமாக உள்ள அந்தக் காதல், அவர்கள் கண்களையும் இருதயங்களையும் அவர்களுடைய குடலையும் கூடப் பிடுங்கியெடுத்து விடுகிறது. ஆனால், அதை விரும்பி அதன் போக்குக்கேற்ப வளரவிட்டு விடுகிறவர்களும் இருக்கிறார்கள். அது தங்கள் இதயத்தை விட்டுப் போகும்போது அவர்கள் அதைப் போகவிட்டு விடுகிறார்கள். அது திரும்பி வரும்பொழுது அவர்கள் அதை மகிழ்ச்சியுடன் விரும்பி வரவேற்றுக் கொள்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் எப்பொழுதும் அதன் அருளுக்குப் பாத்திரர்கனாகி அதன் ஆட்சியின் கீழ் வெற்றியுடன் திகழ்கிறார்கள். ஆகவே அன்புக்குரியவரே, இயற்கையாகவே நிலையற்ற ஒன்றை நிலைப்படுத்த முயலாதீர்கள். நீங்கள் விட்டு வைக்கக் கூடிய ஒவ்வோர் இறக்கைக்கும் ஓராயிரம் வீதம் கொடுத்து உங்களை உயர உயரப் பறக்க வைக்கக் கூடிய ஆற்றல் படைத்த அந்த இறக்கைகளை இறுக்கிப் பிணைத்து வைக்கவும் முயலாதீர்கள். நீங்கள் நலமாக இருப்பீர்களாக!

நிக்கோலோ மாக்கியவெல்லி.

கடிதம் : 4

ஐம்பது வயதிலும் ஆசை

பிரான்சிஸ்கோ வெட்டோரி அவர்களுக்கு,

பிளாரென்ஸ், ஆகஸ்டு, 3.1514,

என் அன்பு நண்பரே,

ரோமாபுரியில் நடந்த உங்கள் காதல் விவகாரங்களைப் பற்றி நீங்கள் எழுதிய பல விஷயங்களும் என்னை இன்பத்தில் ஆழ்த்தின. உங்கள் உல்லாச வாழ்க்கையைப் பற்றியும், துயரங்களைப்பற்றியும் படித்து நினைத்துப் பார்த்தபோது என் இதயத்திலிருந்து துன்பத்தின் ஒரு கோடி கூடத் தூக்கியெறியப் படவில்லை. உங்களுக்குச் சரிக்குச் சரி சொல்லிக் காட்டும் நிலையில் இருப்பது என் அதிர்ஷ்டமே. நான் நாட்டுப்புறத்தில் இருக்கும் பொழுது, இயற்கையாகவும், இயற்கையின் மேல் அலங்காரமாகவும் மிகுந்த அழகும், மிகுந்த கவர்ச்சியும், மிகுந்த மென்மையும், இனிமையும் பொருந்திய ஒருத்தியைக் கண்டேன். நான் மிகுதியாக அவளைப் புகழ்ந்துரைக்கவோ, அதற்குமேல் அதிகமாகக் காதலிக்கவோ முடியாத அளவு அவ்வளவு பேரெழில் படைத்தவளாக அவள் இருந்தாள்.

நீங்கள் எனக்குச் சொன்னது போலவே, அதெல்லாம் எப்படி ஆரம்பமாகியது. எந்த வலையால் காதல் என்னைப் பிடித்துக்கொண்டது. எங்கு அதனை விரித்தது. அதன் பின்னல் எப்படிப்பட்டது என்றெல்லாம் நானும் உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கருதுகிறேன். காதல் தேவதையினால் மலர்களினிடையிலே மிக இனிமையாகவும். அருளுடனும், நெய்யப்பட்ட அந்தத் தங்க வலையிலிருந்து, சாதாரணமாக எவனும் கிழித்து எரிந்து தப்பிக்கொள்ள முடியுமாயினும், நான் அதிலிருந்து வெளியேற மனமின்றிக் கிடந்தேன். அந்த மென்மையான கண்ணிகள் பலமாக முடியப் பட்டு பெருங்கட்டுக்களாக மாறும் வரையில் நான் அவற்றின் அரவணைப்பிலே சிக்கிக் கிடந்தேன். இவ்வாறு என்னைப் பிடித்த காதல் சாதாரணமாகவே என்னிடம் தன் நடவடிக்கைகளைக் காட்டியது என்று எண்ணிவிடவேண்டாம். நான் தவிர்த்துக்கொள்ள மாட்டாத அல்லது விரும்பாத மாதிரியான தந்திரோபாயங்களை அது கையாண்டது. ஒரே வார்த்தையில் சொன்னால், ஐம்பது வயதான ஒரு முதிர்ந்த மனிதனாகிய என்னை, இந்தக் கண் கூசும்படியான பிரகாசமுடைய சூரியர்களால் குருடாக்கி விட முடியவில்லை; இந்த முரட்டுத்தனமான போக்கு என்னை அலுப்படையச் செய்ய முடியவில்லை; இந்த இருண்ட இரவுகளால் என்னைப் பயமுறுத்த முடியவில்லை . ஒவ்வொன்றும் எனக்கு எளிதாகத் தோன்றுகிறது. அவளுடைய ஒவ்வொரு விருப்பத்திற்கும் சாதாரணமாக என் விருப்பத்தினின்றும் வேறுபட்டதாகவோ அல்லது என் விருப்பத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாகவோ இருந்தாலும் கூட நான் அவற்றிற்கு இசைவாக நடந்துகொள்கிறேன். நான் மிகவும் தகுதியான பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பதை உணர்கிறேன். ஆனால், நான் அதற்காக நிச்சயமாக மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில், இந்த அபூர்வமான, மனங்கவரும் அழகு என் மனக்கவலைகளையெல்லாம் அகற்றிவிடுகிறது. நான் உலகத்தில் உள்ள எதற்காகவும் அதைப் பிரியமாட்டேன்.

ஆகவே, நான் மிக முக்கியமான பெரிய விஷயங்களைப் பற்றிய கவலைகளையெல்லாம் விட்டு விட்டேன். முன்னைப் பழங்கதைகளைப் படிப்பதையும் பின்னைப் புதுமைகளைப் பற்றி ஆராய்வதையும் விட்டு விட்டேன். காதல் இன்பத்தையே நான் நாடுகிறேன். காதல் தேவதையையும் அவளுடைய தேவதைக் கூட்டமனைத்தையும் நான் போற்றுகின்றேன். உங்கள் காதலியைப் பற்றி நீங்கள் எதுவும் தெரிவிக்கவேண்டுமென்றால் என்னிடம் தெரிவியுங்கள். மற்ற விஷயங்களை, என்னைக் காட்டிலும் அவற்றைப் புரிந்து ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களைப் பார்த்துத் தெரிவியுங்கள்.

முக்கியமான விஷயங்கள் வேதனையைத் தவிர வேறு எதையும் எனக்களித்ததில்லை. அற்பவிஷயங்களோ ஆனந்தத்தையும் இன்பத்தையுமே அளிக்கின்றன.

தங்கள் பணியாள் நிக்கோலோ மாக்கியவெல்லி

கடிதம் : 5

கூடுமானவரை குறைத்துச் செலவழி:

நிக்கோலோ மாக்கியவெல்லியின் மகன் கெய்டோவுக்கு,

இமோலா, ஏப்ரல் 2,1527.

கெய்டோ, என் அன்புள்ள மகனே,

உன் கடிதம் கிடைத்தது. எனக்கு அது பெருங்களிப்பை உண்டாக்கியது. ஏனெனில் நீ மீண்டும் உடல் நலம் பெற்று விட்டாய் என்ற விசேஷச் செய்தியை அது எனக்குத் தெரிவித்தது. வேறு எந்தச் செய்தியும் மேலும் என்னை மகிழ்ச்சியடையச் செய்தது. ஆண்டவன் உயிர் கொடுத்து . அருள் புரிந்தால், எனக்குக்கூட அருள் புரிந்தால், தான் உன்னைக் கொண்டு, சிறப்பாக, உன்னால் முடிந்ததையெல்லாம் நீ செய்து முடித்தால், ஏதாவது பயனடையலாம் என்று நம்புகிறேன். நீண்ட நாட்களாக என்னோடு நண்பர்களாக இருந்த முக்கியமான மனிதர்களோடு இப்போது நான் கார்டினல் சையோ அவர்களுடன் மிக உயர்ந்த நட்புக்கொண்டிருக்கிறேன். உண்மையில் இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையே கொடுக்கிறது. இந்தத் தொடர்பு உன்னை நன்னிலைக்குக் கொண்டு வரும். ஆனால், தானாகவே படித்துக்கொள்ள வேண்டியதுதான். நீ தவறு செய்து விட்டுச் சாக்குப் போக்குக் கூற இனி முடியாதாகையால், கடினமாக உழைத்து, இலக்கியத்தையும் சங்கீதத்தையும் நன்றாகப் படித்துக்கொள். எனக்குக் கிடைக்கும் மதிப்பு முழுவதும் என்னிடமுள்ள சிறு திறமையின் காரணமாகவே வருகிறதென்பதையறிந்து கொள். ஆகவே, என் அன்பு மகனே, நீ என்னை இன்பமடையச் செய்யவேண்டுமானால், எதிலும், வெற்றிகரமாக முன்னேறு. உன்னை நீயே நம்பு. கடுமையாகப் படி. யோக்கியமாக நட. கல்வியில் கவனம் செலுத்து. உனக்கு நீயே உதவி செய்து கொண்டால் ஒவ்வொருவரும் உனக்கு உதவி செய்வார்கள். சின்னக் கோவேறு கழுதைக்குப் பைத்தியம் என்று எழுதியிருந்தாய். நல்லது. சாதாரணப் பைத்தியங்களை நடத்துகிறதற்கு மாறாக இதை நடத்தவேண்டும். பைத்தியம் பிடித்தவர்களை நீ கட்டித்தானே வைப்பாய். இந்தச் சின்ன கோவேறு கழுதையை அவிழ்த்து விட்டு விடவேண்டும். ஆகவே, வெஞ்சிவோவிடம் அதைக்கொடுத்து, மோண்டிப் ⁠மாக் - 10 புகலியானோவுக்கு அதைக் கொண்டுபோய் அங்கே அதன் கடிவாளத்தையும் கழுத்துக்கட்டையும் அவிழ்த்து விட்டுவிடச்சொல். அது தனக்குப் பிரியமான இடத்தில், தன் வயிற்றுக்கு வேண்டியதைச் சாப்பிட்டுச் சுற்றித்திரிந்து பைத்தியம் மாறட்டும். அங்கே பெரிய வயல் வெளிகள் இருக்கின்றன. அதுவோ சின்னஞ்சிறு கோவேறு கழுதைதான். அதனால் யாருக்கும் கேடுவந்து விடப் போவதில்லை. அதைப்பற்றி நாம் கவலைப்படாமல், அது எப்படித் திரிகிறது என்று கவனித்து வரலாம். அதனுடைய மனம் சரிப்பட்டு விட்டால் அதன் பிறகு மீண்டும் அதைப் பிடிக்க முயலலாம்.

மற்ற குதிரைகளை லோபோலிகிசோ சொல்கிறபடி செய். அவன் மறுபடி நலமாக இருப்பதையும், குதிரைகளை விற்று விட்டதையும் அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். அவற்றால் நமக்குச் செலவே ஏற்பட்டு வந்தபடியால் அவன் செய்தது சரியென்றே நினைக்கிறேன். ஆனால், அவன் எனக்கு எழுதிக் கேட்காமல் செய்தது தான் எனக்குக் கோபத்தையும் ஆத்திரத்தையும் உண்டாக்குகிறது.

உன் தாய் மாரியாட்டாவுக்கு என் அன்பைத் தெரிவி. நாளுக்கு நாள் நான் இங்கிருந்து புறப்பட வேண்டிய நிலைக்கு வந்து கொண்டு இருக்கிறேன், என்பதையும் அவளுக்குச் சொல். பிளாரென்சுக்குத் திரும்பி வர வேண்டும் என்று இப்பொழுது நான் கொண்டிருக்கும் ஆவலைப்போல் எப்போதும் நான் ஆசைப்பட்டதில்லை. துரதிர்ஷ்டவசமாக நான் இது குறித்து எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். அவள் என்ன கேள்விப்பட்டாலும் நல்ல சந்தோஷத்தோடு இருக்க வேண்டும் என்று அவளுக்குச் சொல். எதுவும் மோசமாக நடப்பதற்கு முன்னால் நான் வீட்டுக்கு வந்து விடுவேன்.

பாக்சினாவுக்கும். பியாரோவுக்கும், டாட்டோ இன்னும் அங்கிருந்தால் அவனுக்கும் எல்லோருக்கும் முத்தம். அவன் கண்கள் எப்படியிருக்கின்றன என்று தெரிவிப்பாய் என்று எண்ணுகிறேன். எல்லோரும் . நீங்கள் எல்லோரும் சந்தோஷமாயிருங்கள். கூடுமான வரை குறைத்துச் செலவழியுங்கள். பெர்னாடோவை கவனமாக நடந்து கொள்ளச் சொல். இரண்டு வாரமாக இரண்டு முறை அவனுக்கு எழுதிவிட்டேன். பதிலேயில்லை. ஆண்டவர் உங்கள் அனைவரையும் காப்பாற்றி அருள் புரிவாராக!

நிக்கோலோ மாக்கியவெல்லி.

* * *

மூன்றாம் பகுதி* * *

1. மாக்கியவெல்லியின்

மணி மொழிகள்

அறநெறி

வாழ்ந்தவர்களைக் கொல்லுவதும், உற்ற நண்பர்களுக்குத் துரோகம் புரிவதும், நேர்மையில்லாமல் நடப்பதும், இரக்கமில்லாமல் இருப்பதும், மதாபிமானமற்ற செயலும் அறநெறியென்று சொல்லப்பட மாட்டாது. இந்த வழிகளால் ஒருவன் அதிகார பதவி அடையலாம். ஆனால் புகழ் அடைய முடியாது.

அறிவு

உலகத்தில் மூன்று விதமான மூளைகள் இருக்கின்றன. ஒன்று, பிறர் உதவியில்லாமல், தானாகவே எதையும் அறியக் கூடியது. இது நல்ல மூளை, இரண்டாவது, மற்றவர்கள் எடுத்துச் சொல்லிய பிறகு அறியக்கூடியது. இதுவும் நல்ல மூளைதான். ஆனால் மூன்றாவதோ தானாகவும் அறிந்து கொள்வதில்லை; பிறர் விளக்கியும் அறிந்து கொள்வதில்லை. இது பயனற்றது.

அதிகாரம்

அதிகாரம் வெகு சுலபமாகத் தனக்கொரு பெயரைச் சூட்டிக் கொள்ள் முடியும். ஆனால் வெறும் பெயர் தனக்கோர் அதிகார சக்தியை அடைய முடியாது.

அதிகாரத்தை அடைபவர்கள் அதை மேன் மேலும் அதிகரித்துக் கொள்ளவே ஆசைப்படுகிறார்கள். அதனால் அவர்கள் ஆபத்தானவர்கள்.

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம் என்பது ஒரு பெண். அவளைப் பலவந்தமாகத் தான் அடையவேண்டும்!

அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பியிருக்கக் கூடியவன் அதிர்ஷ்டம் மாறும்போது தானும் வீழ்ந்து விடுகிறான்!

அமைச்சர்

நாடாளும் அரசனின் நலத்தைவிட தன்னலத்தையே அதிகமாகக் கவனிக்கிறவன் சரியான அமைச்சனாக மாட்டான்.

நாடாளும் புரவலன் தன் அமைச்சர்களுக்குப் பெருமையும் செல்வமும் அதிகமாகக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் வேறொன்றின் மீது ஆசை வைக்க மாட்டார்கள்.

அரசியலமைப்பு

குடியரசு, மேன் மக்களாட்சி, முடியாட்சி ஆகிய இம்மூன்று வகைக்கும் இடமளித்து உருவான அரசியலமைப்பைப் பெற்ற அரசு நிலைத்து நிற்கும்.

அரசியல்

நல்லதோர் அரசியல் அமைப்பைப் பெற்றிறாத குடியரசு நல்லின்பத்தோடு வாழ முடியாது.

அரசியல் கொள்கைகளைப் பற்றிய முடிவுகளை, அவற்றை நிறைவேற்றுவதற்காகப் பின்பற்றிய செயல் முறைகளைக் கொண்டு தீர்மானிக்காமல், அவற்றின் மூலம் அடைந்த பலா பலன்களைக் கொண்டுதான் திர்மானிக்கவேண்டும்.

எல்லா இராஜ்யங்களின் அடிப்படை அஸ்திவாரம், நல்ல சட்டங்களிலும் நற்படைகளிலுந்தான் அமைந்திருக்கிறது. ஆளும் பதவியை அடையும் ஒருவனுக்கு, அவனால் தாக்கப்பட்டவர்களும் எதிரிகளாகிறார்கள். அவனுக்கு உதவியாய் இருந்தவர்களும், அவர்களுடைய ஆசைய பிலாஷைகளை அவன் நிறைவேற்ற முடியாமல் போவதால் எதிரிகளாகிறார்கள்.

மக்களின் அன்பைப் பெற்றுள்ள ஆட்சியாளன் எப்படிப்பட்ட ஆபத்தில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.

எதிர்ப்பிலே வளர்ந்தோங்கும் அரசன் பேரரசனாகிறான்.

தன் பலத்தை நம்பி வாழாத ஆட்சியாளன் என்றும் பாதுகாப்புடன் இருக்க முடியாது!

ஆட்சியாளன் எப்போதும் திறமையை மதிப்பவனாகக் காட்டிக் கொள்ள வேண்டும்.

ஆட்சி நடத்தும் அரசனிடம் பொதுமக்கள் அன்பு கொண்டிருப்பது நல்லதா அச்சம் கொண்டு அடங்கியிருப்பது நல்லதா என்று கேட்டால், அஞ்சுவதே நல்லது என்றுதான் வேண்டும்.

ஆளுபவனிடம் மக்கள் கொள்ளும் அன்பு மாறும் இயல்புடையது; அச்சமோ என்றும் மாறாது.

அரசாளும் தலைவன் அவனுடைய குடிமக்களால் பழிக்கப்படலாம். ஆனால் வெறுக்கப்படக் கூடாது.

மக்கள் மன்னனுக்கு அஞ்சி நடக்கலாம். ஆனால் தன்னை வெறுக்கும்படியாக மன்னன் நடந்துகொள்ளக் கூடாது.

அன்னியரைக் காட்டிலும் தன் மக்களுக்கு அதிகமாகப் பயப்படுகிற அரசனுக்குத்தான் கோட்டைகள் தேவைப்படும்.

மக்களின் வெறுப்புக்காளான மன்னரெல்லாம் சதிகளுக்கு ஆளாகி கொல்லப் பட்டிருக்கிறார்கள்.

எந்த அரசாங்கமாய் இருந்தாலும், அதன் தலையாய விஷயம், தன்னை வெறுப்பிற்கும் நிந்தனைக்கும் ஆளாகாமல் காப்பாற்றிக் கொள்வதேயாகும். இது அதன் பிரஜைகளிடையே அது கொள்ளும் தொடர்பிற்கும் பொருந்தும். அண்டை அயல் நாடுகளிடையே அது கொள்ளும் தொடர்பிற்கும் பொருந்தும்.

பொது மக்கள் ஓர் ஆட்சியாளனை அலட்சியப் படுத்தத்தொடங்கிவிட்டால், அவன் விரோதியைப் போல் ஆபத்தானவன் அல்ல என்றோ, நண்பன் என்றோ கருதப்பட்டாலொழிய, அவன் மீது பலவிதமான ஏளனங்கள் வீசப்படும் எனவும் அவனைக் கவிழ்ப்பதற்கு ஒவ்வொரு விதமான சதித்திட்டமும் உருவாக்கப்படும் எனவும் எதிர்பார்க்கலாம்.

ஒரு நாட்டு மக்கள் தங்களை ஆளும் ஒர் அரசனைப் படையெடுத்து வரும்படி வரவேற்பார்களானால், அப்படி வரவேற்கப்பட்ட வெளி நாட்டான் ஆட்சியும் நிலைத்திருக்காது. ஏனெனில் அவனாலும் அவர்களைத் திருப்திப்படுத்த முடியாது. நரியைப்போல் சதிவலைகளை அறிந்து கொள்ளும் தந்திர சூட்சும அறிவும், ஓநாய்களான பகைவர்களை சிங்கத்தைப் போல் அச்சுறுத்துந் தன்மையும் ஓர் ஆட்சியாளனுக்கு வேண்டும்.

ஓர் ஆட்சியாளன், தாராள மனப்பான்மையுள்ள வள்ளல் என்று பெயரெடுப்பதற்காக, வரிபோட்டு, மக்களைச் சுரண்டிக் கொடுங்கோலன் என்று நிந்திக்கப் படுவதைவிட, கருமித்தனம் உடையவன் என்று பெயரெடுப்பது நல்லது.

நாடாளும் மன்னன், தேவை ஏற்பட்டால் ஒருவன் உயிரை வேண்டுமானாலும் பறிக்கலாம். ஆனால் ஒருவன் உடமையை மட்டும் பறிக்கவே கூடாது! ஏனெனில் மக்கள் தங்கள் தந்தையின் சாவைக்கூட மறந்து விடுவார்கள். ஆனால் பிதிரார்ஜித சொத்தை இழப்பதை மட்டும் பொறுக்கவே மாட்டார்கள்!

ஆட்சிபீடம் ஏறிய ஒருவன் தன் ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள விரும்புவானேயாகில், அவன் சந்தர்ப்பத்திற்கேற்ப. நல்லவனாய் இல்லாமல் இருக்கவும், தேவைக்கும் நிலைமைக்கும் ஏற்பத் தன் அறிவைப் பயன்படுத்தவோ, பயன்படுத்தாமலோ இருக்கவும் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆட்சியாளன் புத்தியுள்ள வனாயிருந்தால் சமாதான காலத்தில் சோம்பேறியாய் இருக்கக் கூடாது. ஆபத்துக் காலத்தில் தற்காத்துக் கொள்ளவும், தாக்குதல்களைச் சமாளிப்பதற்கும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பலம் பொருந்திய நகரத்தையும், தன்னை வெறுக்காத மக்களையும் உடைய அரசன் தாக்குதலுக்கு ஆளாக மாட்டான் . அப்படியே தாக்கப்பட்டாலும், தாக்கியவனே வெட்கமடைந்து புறமுதுகு காட்டி ஓடும்படி நேரிடும்.

சீர்கெட்ட ஒரு நகரத்தை அடையும் ஒர் அரசன் அதை சீர்த்திருத்துவதன் மூலம் புகழடைகிறான்!

நல்ல அரசுகள் நிலைத்து நிற்கக் கூடிய தன்மையற்றுப் போவதால் தீய அரசுகளாக மாறி விடுகின்றன. இவ் வகையில் நல்ல அரசுகளும் குறைபாடுடையனவே.

பரம்பரை அரசர்கள் தங்கள் ராஜ்யத்தை இழக்க நேரிட்டால் அது அதிர்ஷ்டத்தின் கோளாறல்ல. அவர்களுக்கு ஆளத் தெரியாததின் கோளாறேயாகும்!

 உடைமைகளை (அல்லது நாடுகளை) சேர்த்துக்கொள்ள விரும்புவது இயற்கையானது. அதைச் செய்யவல்லவர்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்து விடுவார்களேயானால், என்றும் புகழப்படுவார்களே தவிர, இகழப்பட மாட்டார்கள். வல்லமையில்லாதவர்கள் எப்படியாவது செய்ய முனையும்போதுதான் தவறு செய்கிறார்கள். பழிக்கும் இகழ்ச்சிக்கும் இரையாகிறார்கள்.

கொடுமையும் துரோகமும் புரிந்தவர்கள். எப்படித் தங்கள் ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டு நீடித்திருக்கிறார்கள் என்றால், அவர்கள் தாங்கள் செய்த கொடுமைகளை முற்றிலும் சரிவரச் செய்தவர்களாய் இருப்பார்கள்!

அன்பு

அன்பு, மனிதர்களின் சுயநலத்தின் அடிப்படையில் எழும்புகிறது. தாங்கள் ஏதாவது நன்மை பெறுகிற வரையில் அன்பு செலுத்துவார்கள். அது நின்று போனதும் அன்பும் நின்றுபோகும்.

ஆலோசனை

ஆலோசனையாளர்கள் எத்தனை யோசனை சொன்னாலும் ஆட்சியாளனுக்குப் புத்தியில்லாவிட்டால் அத்தனையும் பாழ்!

இலட்சியம்

இலட்சியவேகம் என்பது, நாம் எவ்வளவு உயரத்தை எட்டிப் பிடித்தாலும் திருப்தியே ஏற்படாதளவு மனித இருதயத்தில் எழும்பும் அதிவலிமையான ஒரு வேட்கையாகும்.

இழத்தல்

இகழ்ச்சிக்கிடமான முறையில் ஒரு சிறுபகுதியை இழப்பதை விட, எல்லாவற்றையுமே துணிவுடன் இழந்து விடுவது எவ்வளவோ மேலாகும்.

உணர்தல்

எல்லோராலும் ஒன்றைக் காண முடியும். ஒரு சிலரால்தான் உணர முடியும்!

உண்மை

ஒவ்வோருவரும் உண்மையே சொல்லுவார்களானால் அந்த உண்மைக்குரிய மதிப்பே போய்விடும்!

உதவி

உனக்கு நீயே உதவி செய்து கொள். ஒவ்வொருவரும் உனக்கு உதவி செய்வார்கள்!

ஏழ்மை

நான் ஓர் ஏழை; அதுவே என்விசுவாசத்திற்கும் கண்ணியத்திற்கும் அத்தாட்சியாகும்.

கஷ்டம்

ஒரு கஷ்டத்தைச் சமாளிக்க இன்னொரு கஷ்டத்தில் சிக்கிக் கொள்ள நேரிடுவது இயற்கைதான். ஆனால், இரண்டு கஷ்டங்களில் எதில் துயரம் குறைவோ அதை நல்ல வழியாகக் கைக்கொள்ள வேண்டும்.

காதல்

காதல், மக்களின் இதயங்களிலே சிறகடித்துப் பறக்கும் போது, அதைக் கட்டி வைக்கவோ அதன் இறக்கைகளைப் பிணைத்துப் பிடித்து வைக்கவோ முயலுபவர்களைத் தான் அது பெரும் சித்திரவதைக்கு உள்ளாக்குகிறது.

சிறு குழந்தையைப் போலவும், அடிக்கொரு நினைப்புமாகவும் உள்ள அந்தக் காதல், அவர்கள் கண்களையும், இருதயங்களையும் அவர்களுடைய முதுகெலும்பையுங்கூடப் பிடுங்கியெடுத்து விடுகிறது.

காதலை விரும்பி, அதன் போக்குப்படி யெல்லாம் போகவிட்டு விடுபவர்களும் இருக்கிறார்கள். அது தங்களை விட்டு பறந்து போகும் போது அவர்கள் அதைப்போக விட்டுவிடுகிறார்கள். அது திரும்பி வரும்போது அதை மறுபடியும் ஆனந்தத்துடன் வரவேற்றுக் கொள்கிறார்கள்.

காலப்போக்கு

காலத்திற்கும் சூழ் நிலைக்கும் தகுந்தபடி தன் திட்டங்களையும் செயல்முறைகளையும் வகுத்துக் கொள்கிறவனிடம் அதிர்ஷ்டம் என்றும் மாறாமல் நிலைத்து நிற்கும்.

காலத்திற்குத் தகுந்தபடி நடந்து கொள்ளுகின்றவன் இன்பமாகவும், காலப் போக்கிற்கு மாறாக நடந்து கொள்கிறவன் துன்பப்பட்டுக் கொண்டும் இருக்கிறான்.

குடியரசு

குடியரசில் உரிமையை நிலை நிறுத்தக் குற்றஞ்சாட்டும் வாய்ப்பு இருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.

கோட்டை

குடிமக்கள் அன்பின் மீது எழுப்பப்படுகிற கோட்டை தான் உண்மையில் சிறந்த கோட்டை!

ஆளப்படும் மக்களால் வெறுக்கப்படும் ஆட்சியாளன் எத்தனை கோட்டைகளை யுடையவன் ஆனாலும் அவன் பத்திரமாக இருக்க முடியாது.

சதிகாரர்கள்

மனத் திருப்தியில்லாத மக்கள் மலிந்துள்ள நாட்டிலேதான் சதிகாரர்கள் முளைப்பார்கள்.

நாடாள்பவனிடம் மக்கள் நல்லெண்ணம் உடையவர்களாயிருந்தால், சதிகாரர்கள் மக்களையும் தங்கள் எதிரிகளாகப் பாவித்துப் பயப்படுவார்கள். தங்கள் சதிக்குற்றம் வெளிப்பட்டு விட்டால் புகலிடம் இல்லாமல் திண்டாட நேரிடுமேயென நினைத்துச் சதி செய்யும் எண்ணமே அற்றுப் போவார்கள்.

சந்தர்ப்பம்

புத்தியுள்ளவர்கள் தாம் சந்தர்ப்பங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சந்தர்ப்பத்தைக் கடந்து போகும் படி கை நழுவ விட்டு விடக் கூடாது.

சுதந்திர அரசு

சுதந்திரமுள்ள ஒவ்வோர் அரசும், குடிமக்கள் தங்கள் விருப்பத்தை வெளிப் படுத்துவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று நான் கூறுவேன்.

சுதந்திரம்

புதிதாகச் சுதந்திரமடைந்த ஒரு நாடு தன் சுதந்திரத்திற்கு எதிரியாய் உள்ளவர்களையெல்லாம் ஒழித்துவிட்டால் தான் அமைதியாக இருக்க முடியும்!

செயல்

காற்றடிக்கிற திசையில் வளைந்து கொடுத்துத் தன் காரியத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.

எப்போதும் மிகவும் எச்சரிக்கையாக நடக்கக் கூடிய பேர்வழியும், சமயம் வந்தால் சட்டென்று காரியத்தை முடித்தால்தான் வெற்றி காண முடியும்!

காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப நடக்கிறவர்கள் தாம் செயல்களில் வெற்றி காண்பார்கள்.

புத்தியுள்ள வில் வீரர்கள் தூரத்தில் உள்ள ஒரு பொருளை எய்வதற்காக அதனினும் உயரத்தில் உள்ள ஓரிடத்தைக் குறியாக வைத்து அம்பு விடுவார்கள். அது போலவே, புத்திசாலியான மனிதர்கள் தாங்கள் பெரியவர்களைப் போல் காரிய சித்தியடைவதற்காக, முற்காலத்திலிருந்த மிகப் பெரியவர்களைப் பின்பற்றி நடக்க முயல்வார்கள்.

சொத்துடைமை

பெரும்பாலான மக்கள் கெளரவத்தை விடத் தங்கள் சொத்துக்களையே பெரிதாக மதிக்கிறார்கள்.

தங்கள் தந்தை இறந்ததை எளிதாக மறந்து விடுவது மக்கள் இயல்பு. ஆனால், தங்கள் பிதிரார்ஜித சொத்தை இழப்பதை மட்டும் அவர்கள் மறக்கவும் மாட்டார்கள்! பொறுக்கவும் மாட்டார்கள்

தலைவர்கள்

பின்பற்றுவோர் இல்லாத தலைவர்கள் அதிவிரைவில் அழிந்து போவார்கள். அதனால் ஒரு பெருந்தொல்லையும் விளையாது.

பொதுமக்கள், மேலும் சிறப்பாய் வாழலாமென்று தங்கள் தலைவர்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் அதில் ஏமாற்றமே அடைகிறார்கள்.

தாழ்வு மனப்பான்மை

தாழ்வு மனப்பான்மை என்பது பயனற்றது என்பது மட்டுமல்ல, உண்மையில் துன்பந் தருவதுமாகும்.

நடு நிலைமை

பக்கத்தில் உள்ள இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால், நடு நிலைமை வகிப்பதை விட ஏதாவது ஒரு தரப்பில் சேருவதே அறிவுடமையாகும்.

தன்னைக் காட்டிலும் வலிமை மிக்கவன் பக்கம் சேர்வதைவிட, தன் உதவியை விரும்பிப் பெறக்கூடியவன் பக்கம் சேர்வதே நன்மை பயக்கும்.

நடுநிலை வகித்தவன் சந்தேகத்திற்குரியவனாகையால் வெற்றி பெற்றவன் அவனை நண்பனாகக் கருதமாட்டான். தோல்வியுற்றவனோ தனக்கு உதவி செய்யாதவனைக் காக்க முன் வரமாட்டான்.

நம்பிக்கை

உன்னையே நீ நம்பு.

நன்மை தீமைகள்

மனிதத் தன்மை நன்மையைக் காட்டிலும் தீமையின் பக்கமே சாயும். இயல்புள்ளது.

கசப்பான பண்டங்களால் சுவை ஊறப்படுவது போலவே, அதிகப்படியான இனிப்புப் பண்டங்களால் திகட்டலும், குமட்டலும் ஏற்படுகிறது. அது போலவே மனிதர்கள் நன்மைகளால் அலுப்பும் திமைகளால் ஆத்திரமும் அடைகிறார்கள்.

எந்த மனிதனும் எப்பொழுதும் நல்லவனாகவோ அல்லது எப்பொழுதும் தீயவனாகவோ இருக்க முடியாது. அவன் தன் தேவைக்கும் சந்தர்ப்பத்திற்கும் ஏற்றபடி நல்லவனாகவோ தீயவனாகவோ மாறிக் கொண்டால்தான் தன் அதிகாரத்தை நிலை நிறுத்த முடியும்.

தwய சக்திகளை நேரிடையாக எதிர்த்தால் அவற்றின் பலம் அதிகரித்து விடும். சமயத்திற்கேற்றபடி நடந்து தான் அவற்றைச் சாய்க்க வேண்டும்.

நன்றியின்மை

லோபித்தனத்தினால் அல்லது பயத்தினால்தான் நன்றி கெட்டதனம் உற்பத்தியாகிறது.

நாடு

என் தேசத்தை என் ஆத்மாவையும் விட அதிகமாக நேசிக்கிறேன்.

நீதிமுறை

நல்ல படைபலமில்லாத ஒரு நாட்டில், நல்ல நீதி முறைகள் இருக்க முடியாது.

நெடு நாளைக்கு மாற்றப்படாமல் இருக்கக் கூடிய நிலைத்த சட்டங்களைப் பெற்ற நாடு இன்பப் பூமியாக இருக்கும். அப்படியல்லாமல் நீதி முறைகளை அடிக்கடி சிர்திருத்த வேண்டிய நிலையில் உள்ள நாடு மிகுந்த துன்பத்தில் உழலும்.

வளமை மிகுந்த ஒரு நாட்டின் மக்கள் சோம்பேறிகளாயிருப்பது இயற்கை. அவர்களைச் சுறுசுறுப்புடன் விளங்க வைக்க வேண்டுமானால் கடுமையான சட்டங்கள் தேவை.

ஓர் அரசாங்கத்தை ஏற்படுத்தி அதற்குரிய நீதி முறைகளை வகுக்க விரும்புகிற எவரும், எல்லா மனிதர்களும், தீயவர்கள் என்றும், அவர்கள் சமயம் வாய்க்கும்போது தங்கள் தீய குணத்தை வெளிப்படுத்தத் தயாராக இருக்கக் கூடியவர்கள் என்றும் மனத்தில் கொள்ள வேண்டும்.

மக்கள் நன்னடத்தை உள்ளவர்களாயிருக்க

வேண்டுமானால் நல்ல கல்வி கற்றவர்களாயிருக்க வேண்டும். நல்ல கல்வி, நல்ல நீதிமுறை இருந்தால்தான் கிடைக்கும். நல்ல நீதிமுறை, பலரால் பழிக்கப்படும் கலகங்களால்தான் கிடைக்கும். கலகம் பிறந்தால் தான் நியாயம் பிறக்கும்.

படை

குடிமக்களையே தன் படைவீரர்களாகப் பெற்றுள்ள ஓர் ஆட்சியாளன் வேறு எந்தக் கொடிய பகைவருக்கும் அஞ்ச வேண்டியதில்லை.

படைபலம் படைத்த திர்க்கதரிசிகள் அனைவரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். படை பலமற்றவர்களே தோல்வியடைந்திருக்கிறார்கள்.

படைப் பயிற்சியைவிட இன்பக் கேளிக்கைகளையே பெரிதாக மதிக்கிற ஆட்சியாளர்கள், அதிரைவில் தங்கள் ராஜ்யத்தை இழந்து விடுவார்கள்.

இராணுவத்தினருக்கு இலஞ்சம் கொடுத்து ஆட்சி பீடம் ஏறியவர்கள் பெருந்திறமைசாலிகளாக இருந்தாலொழிய அந்தப் பீட்த்தில் நிலைத்திருக்க முடியாது.

பட்டங்கள்

பட்டங்கள் மனிதர்களுக்குக் கெளரவம் அளிப்பதில்லை. மனிதர்கள்தான் பட்டங்களுக்கு கெளரவமளிக்கிறார்கள்.

பயமுறுத்தல்

யாரைպւե பமுறுத்தவோ, அல்லது பழிக்கவோ செய்யாமல் ஒருவன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்வானாகில், அது அவனிடமுள்ள மாபெரும் புத்திசாலித்தனத்தின் அறிகுறியெனக் கருதுகிறேன். ஏனெனில், பயமுறுத்துவது, பழிப்பது, இவை இரண்டில் எதுவும் எதிரியைப் பலஹீனப் படுத்திவிடுவதில்லை. அதற்கு மாறாக, ஒன்று அதிக எச்சரிக்கையுடன் அவனை விழித்திருக்கச் செய்கிறது: மற்றொன்று அவனுக்குத் தீராக் குரோதத்தையும் பழிவாங்கும் வெறியையும் தூண்டிவிடுகிறது.

பழி வாங்குதல்

சாதாரண மனிதர்கள் சிறு தீமைகளுக்குத்தான் நம்மைப் பழி வாங்குவார்கள். பெருந் தீமைகளுக்குத் தகுந்தப்டி பழி வாங்க முடியாத நிலைமையில் அவர்கள் இருப்பார்கள்.

பிரபுக்கள்

வேலை செய்யும் தேவை எதுவுமில்லாமல், தங்களுடைய அவனவற்ற நிலபுலன்களிலிருந்து வரும் வாடகையைக் கொண்டு சோம்பேறித் தனமாக

வாழுபவர்களைத் தான் பிரபுக்கள் என நாம் அழைக்கிறோம்.

பெரியோர்

மனிதர்கள், மிகப் பெரிய மனிதர்களைப் பின்பற்ற முயலுதல்வேண்டும்.

பெரிய மனிதர்கள் என்போர் தாங்கள் செல்லும் பாதையில் ஒவ்வோரடியிலும் குறுக்கிட்ட பேராபத்துக்களையும், பெருங் கஷ்டங்களையும் தங்கள் திறமையாலும், ஆண்மையாலும் அகற்றியெறிந்து கொண்டே மேலோங்கி வந்திருக்கிறார்கள்.

பேராசை

தேடுகிற சக்தியைக் காட்டிலும் எப்பொழுதும் ஆசை பெரிதாயிருக்கிறது.

மனிதர் தங்கள் தேவைக்காகப் போராடுகிற நிலைமை போன பிறகு தங்கள் பேராசைக்காகப் போராடத் தொடங்குகிறார்கள். அந்தப் பேராசை மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது. அவர்கள் எவ்வளவு உயரத்திற்குப் போன பிறகும் கூட அது அவர்கள் இதயத்தை விட்டுப் போவதில்லை.

போராட்டம்

போராடுவதில் இரு முறைகள் உண்டு. ஒன்று அறவழியில் நின்று போராடும் முறை: மற்றொன்று மூர்க்கமான பலத்தைப் பயன் படுத்தும் முறை. முதல் வழி மனிதத் தன்மை இரண்டாவது வழி மிருகங்களுக்குரியது. ஓர் ஆட்சியாளனுக்கு மனிதத் தன்மையும் வேண்டும். மிருகத் தன்மையும் வேண்டும்.

மகனுக்கு

மகனே, நீ என்னை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டுமானால், எதிலும் வெற்றிகரமாக விளங்கு. உனக்கே ஒரு மதிப்பை உண்டாக்கிக்கொள் : கடுமையாகப் பயில்; நீயாகவே நன்றாக நடந்துகொள்; கற்றுக்கொள்.

மக்கள் பிரதிநிதிகள்

மக்கள் பிரதிநிதிகள் என்போர் ஆட்சியில் மக்களின் பங்கை ஏற்பவர்களாக மட்டும் இருப்பதில்லை. மக்கள் உரிமையைப் பாதுகாப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

மதம்

இராணுவம் மட்டும் இருந்து மதம் இல்லாத தேசத்திலே ஒழுங்கு இருப்பது அரிது.

மத சாம்ராஜ்யத்தின் அதிபதிகள் மட்டுமே, பாதுகாக்கப்படாத ராஜ்யங்களையும் ஆளப்படாத பிரஜைகளையும் உடையவர்களாயிருக்கிறார்கள். அவர்களுடைய ராஜ்யங்கள் பாதுகாக்கப்படாதவையாகையால் அவர்களிடமிருந்து பறிக்கப்படுவதில்லை. அவர்களுடைய பிரஜைகள் ஆளப் படாதவர்கள் ஆகையால், அவர்கள் ஆதிக்கத்தை மறுப்பதில்லை.

மதிப்பு

எனக்குக் கிடைக்கும் மதிப்பு அனைத்தும் என்னிடமுள்ள சிறு திறமையின் காரணமாகவே வருகிறது.

மனித இயற்கை

மனிதர்களை எல்லாவற்றிற்கும் ஆசைப்படக் கூடியவர்களாகவும், ஆனால் அவற்றையெல்லாம் அடைய முடியாதவர்களாகவும் இயற்கை படைத்திருக்கிறது.

மனிதர்களுக்கு இயற்கை வெவ்வேறு விதமான முகங்களைக் கொடுத்தது போலவே, அவர்களுக்கு வெவ்வேறு விதமான மனங்களையும் சுபாவங்களையும் கொடுத்திருக்கிறதென்று நான் நம்புகிறேன்.

காலப் போக்கும் சூழ்நிலைகளும் பொதுவாகவும் குறிப்பாகவும், மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஆனால் அதே சமயம் மனிதனின் சுபாவங்களும் நடைமுறை போக்கும் மாறாமல் ஒரே மாதிரியாக அப்படியே இருக்கின்றன. அதனால் தான் மனிதனுக்கு ஒரு சமயம் நல்லதிர்ஷ்டமும் மற்றொரு சமயம் துரதிர்ஷ்டமும் ஏற்படுகின்றன.

அடி முட்டாள்களாகவோ, அதி புத்திசாவிகளாகவோ, மிகவும் நல்லவர்களாகவோ யாரும் இல்லை. மனிதர்கள் தங்களுக்கு முந்தியவர்களின் செயல்களையே பாவித்துப் பின்பற்றி அவர்கள் அடிவைத்துச் சென்ற பாதையிலேயே எப்பொழுதும் செல்கிறார்கள்.

தங்களை அன்பு காட்டச் செய்கிறவருக்குக் குற்றமிழைப்பதை விடத் தங்களை அச்சமுறச் செய்கிறவர்களுக்குக் குறைவாகவே குற்றமிழைப்பது மனிதர் இயல்பு.

மெதுவாக நகர்வதுதான் பொதுமக்களின் வழக்கம்.

எல்லோராலும் கண்களால் தான் பார்க்க முடியும். ஒரு சிலரால்தான் உணர்ந்து பார்க்க முடியும்.

பெரும்பாலானவர்கள் எதையும் கண்களால் பார்த்தே மதிப்பிடுகிறார்கள். சிலர் தம் கையினால் தொட்டுப்பார்த்து உண்மையான மதிப்பை உணர்கிறார்கள்.

முகஸ்துதி

முகஸ்துதி செய்பவர்களை நம்பவே கூடாது.

முகஸ்துதி மனிதரை அறிவிழக்கச் செய்து விடுகிறது. இந்த முகஸ்துதியிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகச் சிலர் அலட்சியவாதிகளாக நடந்து கொள்கிறார்கள்.

மொழிவழி அரசியல்

மொழியிலும், நீதி முறையிலும், பழக்க வழக்கங்களிலும் மாறுபட்ட பல பகுதிகளை ஒன்று சேர்த்துக் கட்டியாளுவது மிக கடினம்.

ஒரே மொழிபேசும் ஒரே இனமக்கள் வாழும் பல இராஜ்யங்களை ஒன்று சேர்த்து ஆளுவது சுலபம். அதிலும் அவர்கள் சுதந்திரமாக இருந்து பழக்கப் படாதவர்களாயிருந்தால் இன்னும் சுலபம்.

யுத்தம்

யுத்தம் என்பது எந்த மனிதனும் அதன் மூலம் கண்யமாக வாழமுடியாத ஒரு தொழிலேயாகும். அந்த வேலையின் மூலம், ஏதாவது இலாபத்தை அறுவடை செய்கிற போர்வீரன், பொய்மையும், வெறியும், கொடுமையும், உடையவனாக விளங்கவே கடமைப் பட்டிருக்கிறான்.

எவன் யுத்தம் உண்டாக்குவதையே தன் தொழிலாகக் கொண்டிருக்கிறானோ, அவன் பாபி என்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது. - யுத்தம், திருடர்களை உண்டாக்குகிறது. சமாதானம் அவர்களைத் தூக்கு மேடைக்கு கொண்டு வருகிறது.

வதந்தி

குற்றஞ் சாட்டக்கூடிய வழிவகைகள் இல்லாத இட்ங்களில் தான் வதந்தியைப் பரப்பும் முறை பெரிதும் கையாளப்படுகிறது.

விதி

மனித விவகாரங்களின் போக்கைச் சிந்தித்துப் பார்த்தால், பல விஷயங்கள் கிளம்புவதையும், அவற்றை நாம் எதிர்த்து காக்கவிடாதபடி வானத்து விதி செய்து விடுவதையும் காணலாம்.

பட்டு வியாபாரத்தைப் பற்றியோ, கம்பளி வியாபாரத்தைப் பற்றியோ அல்லது லாப நட்டக் கணக்குளைப் பற்றியோ பேசாமல் அரசியலைப் பற்றிப் பேச வேண்டும் என்று எனக்கு விதி வகுத்திருக்கிறது.

விஷயங்கள்

திவிரமான விஷயங்கள் வேதனையைத் தவிர வேறு எதையும் எனக்குக் கொண்டுவந்ததில்லை. அற்ப விஷயங்களோ திருப்தியையும் பேரானந்தத்தையும் தவிர வேறு எதையும் கொண்டு வந்ததில்லை.

வெற்றி தோல்வி

தன் போக்கின்படி ஒருவன் செய்கிற காரியங்கள் காலப்போக்கிற்கும் சூழ் நிலைகளுக்கும் பொருந்தி விடுகிறபோது, அந்த மனிதன் தன் காரியத்தில் தான் எதிர்பார்க்கும் பலனை அடைகிறவனாகவும் வெற்றி பெறுகிறவனாகவும் ஆகிவிடுகிறான். காலப்போக்கிற்கும் சூழ்நிலைகளுக்கும் ஒத்து வராத போக்குடைய மனிதன் தோல்வியடைகிறான்.

எதையும் சிர்தூக்கி ஆராய்ந்து அளவிட்டு, ஆற அமர ஆலோசித்து செய்வதால்தான் பலர் தங்கள் திட்டங்களில் வெற்றியடைகிறார்கள்.

ஒருவன் மாபெரும் வெற்றியுடன் பத்துக் காரியங்களைக் கூடச் செய்து முடித்து விடலாம்; ஆனால் முக்கியமானதொரு தோல்வியே முன்னதனைத்தையும் அழித்து விடப்போதுமானது.