கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்
டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளைகிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்

பேராசிரியர்

ரா. பி. சேதுப் பிள்ளை, பி. ஏ., பி. எல்.

தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவர்

சென்னைப் பல்கலைக் கழகம்

எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை

பப்ளிஷர்ஸ்

திருநெல்வேலி

காபிரைட்]

[விலே ரூபா 1.முதற் பதிப்பு: 1946

இரண்டாம் பதிப்பு: 1947

மூன்றாம் பதிப்பு : 1956

நான்காம் பதிப்பு: 1957

* * *

ஷண்முகம் பிரஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை-1.முகவுரை

தமிழ் மொழி தென்னிந்திய நாட்டிலுள்ள எல்லாச் சமயத்தார்க்கும் உரிய செம்மொழியாக இலங்குகின்றது. தமிழகத்திற் பிறந்த மதங்களும், புகுந்த மதங்களும் தமிழ் மொழியைப் பேணி வளர்த்தன. சைவரும், வைணவரும், சமணரும், சாக்கியரும் சிறந்த தமிழ் நூல்கள் இயற்றினர். மகமதியரும், கிருஸ்தவரும் தமிழ்த்தாய்க்குத் தொண்டு செய்தனர்.

தமிழ் மொழிக்குத் தொண்டு செய்த கிருஸ்தவர்களிற் பெரும்பாலோர் மேலை நாட்டு மொழிகளை நன்கு அறிந்தவர்கள். அவர்கள் ஆற்றிய பணி பலவகைப் பட்டதாகும். தமிழ் நாட்டுக் கலைச் செல்வத்தை மேலை நாட்டார்க்குக் காட்டினர் சிலர். தமிழிலக்கியத்தின் பண்புகளைப் பாட்டாலும் உரையாலும் விளக்கியருளினர் சிலர். இலக்கண வாயிலாக ஆராய்ந்து தமிழின்தொன்மையையும் செம்மையையும் துலக்கினர் சிலர். மேலே நாட்டு முறையில் தமிழகராதி தொகுத்து உதவினர் சிலர். தெள்ளிய தமிழ் வசன நடையில் அறிவுநூல் இயற்றித் தொண்டாற்றினர் சிலர். இவ்வாறு பல்லோரும் இயற்றிய நற்பணியின் பயனாகத் தமிழ் தலையெடுத்து வருகின்றது.

இத்தகைய தமிழ்த் தொண்டு செய்த பெருமக்களில் ஒரு சிலருடைய வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுவது இந்நூல். சென்னை வானொலி நிலையத்தில் யான் நிகழ்த்திய பேச்சு முதல் மூன்று கட்டுரையாகச் சேர்க்கப்பட்டுகிறது. அந் நிலையத்தார்க்கும், இந்நூலை வெளியிடுவதற்கு அனுமதி தந்த சென்னைப் பல்கலைக் கழகத்தார்க்கும் என் நன்றி உரியதாகும்.

சென்னை,

20–12–1945  ரா. பி. சேதுப் பிள்ளை


பொருளடக்கம்

1. வீரமாமுனிவர்

2. போப்பையர்

3. கால்டுவெல் ஐயர்

4. எல்லீசர்

5. ரேனியஸ் ஐயர்

6. வேதநாயகம் பிள்ளை

7. H. A. கிருஷ்ண பிள்ளை

8. வேதநாயக சாஸ்திரியார்

9. அகராதி ஆசிரியர்

⁠ முடிவுரை

⁠ அநுபந்தம்
கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்

* * *

1. வீரமாமுனிவர்

மேலை நாட்டு நல்லறிஞர் பலர் தமிழ் நாட்டிற் போந்து சிறந்த தமிழ்ப் பணி செய்துள்ளார்கள். அவருள் இத்தாலிய தேசத்து வித்தகர் சிலர் ; ஜெர்மானிய தேசத்தவர் சிலர் ; ஆங்கில நாட்டைச் சேர்ந்தவர் சிலர். அவர்களால் தமிழ் மொழி பெற்ற நன்மைகள் பலவாகும்.

ஏறக்குறைய இருநூற்று முப்பது ஆண்டுகளுக்கு முன்னே இத்தாலிய தேசத்தில் பிறந்த பெரியார் ஒருவர் தமிழ் நாட்டுக்கு வந்தார். அவர் [1] யேசுநாதர் சங்கத்தைச் சேர்ந்தவர் ; இளமையிலேயே துறவறத்தை மேற்கொண்டவர். பெஸ்கி என்பது அவர் பெயர். தமிழ் உலகம் அவரை வீரமாமுனிவர் என்று போற்றுகின்றது.

தமிழ் நாட்டில் யேசு மத போதகம் செய்வதற்காகத் தமிழ் மொழியைக் கற்கத் தொடங்கினார் வீரமாமுனிவர் ; அந்நாளில் சிறந்த தமிழாசிரியர்களாக விளங்கிய சுப்பிரதீபக் கவிராயர் முதலியோரிடம் முறையாகத் தமிழ் நூல்களை ஓதி உணர்ந்தார். திருக்குறளின் தெள்ளிய நயமும், சிந்தாமணியின் செழுஞ்சுவையும், கம்ப ராமாயணத்தின் கவியின்பமும் அவர் மனத்தைக் கவர்ந்தன. சிந்தாமணியைப் போல் கிருஸ்து மதச் சார்பாக ஒரு பெருங்காவியம் செய்ய அவர் ஆசைப்பட்டார். அவ்வாசையின் கனியே [2]தேம்பாவணி என்னும் அருங்காவியம்.

யேசுநாதரைக் கைத்தாதை சூசையப்பர் சரித்திரம் தேம்பாவணியில் விரித்துரைக்கப் படுகின்றது. சிந்தாமணிையைப் பின்பற்றி எழுந்த அக்காவியத்தில் திருக்குறளின் மணம் கமழ்கின்றது; கம்பரது கவிநலம் திகழ்கின்றது: கதைப் போக்கிலும் பலவிடங்களில் தேம்பாவணி கம்பரது காவியத்தைத் தழுவிச் செல்கின்றது. இதற்கு ஒரு சான்று காண்போம்.

மிதிலைமா நகரில் இராமன் வில்லை வளைத்துச் சீதையை மணம் புரிந்த செய்தியை மிக நயமாக எழுதியுள்ளார் கம்பர். மன்னன் மாளிகையில் மலைபோற் கிடந்தது மண வில். அதனை எடுத்து வளைப்பதற்காக இராமன் சென்றான். இமை கொட்டாமல் எல்லோரும் பார்த்து நின்றார். அவ்வில்லை எளிதில் கையால் எடுத்தான் இராமன். அவ்வளவுதான் தெரிந்தது. அப்பால் அது ஒடிந்து விழுந்த ஓசை இடிமுழக்கம் போல் கேட்டது. வில்லை எடுத்ததற்கும் ஒடித்ததற்கும் இடையே இராமன் என்ன செய்தான் என்பதை எவரும் அறிந்திலர். [3]'எடுத்தது கண்டனர், இற்றது கேட்டார்' என்று கூறுகின்றார் கம்பர்.

தேம்பாவணியில் முனிவர் இந் நயத்தை வடித்தெடுத்து வைத்துள்ளார். இளம் பாலனாகிய தாவீது கொடிய கோலியாத்து என்பவனைக் கொன்ற செய்தி கிருஸ்தவ ஆகமங்களிற் கூறப்பட்டுள்ளது. கோலியாத்து என்பவன் தேக வலிமை வாய்ந்தவன்; ஆனால் தெய்வ நிந்தனை செய்தவன். அவனது செருக்கையும் சிறுமையையும் அறுத்து ஒழிக்கக் கருதினான் தாவீது. ஆண்டவன் அருளைத் துணைக்கொண்டு, கவணும் கல்லும் கையில் எடுத்துப் பகைவனை நோக்கி நடந்தான். குன்று போல நின்ற கோலியாத்து, பகைத்துப் போர் செய்யத் துணிந்து வந்த பாலனை உருத்து நோக்கினான் ; கோடையிடி போல் முழங்கினான்; "அடா, மடையா மதயானையின் முன்னே சிறு நாயின் வேகம் செல்லுமா ? என்று ஏளனம் பேசினன். அப்பொழுது அக் கொடியவனது நெற்றியில் திண் என்று ஒரு கல்வத்து அடித்தது. திடீரென்று அவன் மண் மேல் விழுந்தான். அக்கல்லை விட்டெரிந்தவன் தாவீதனே என்று எல்லோ எல்லோரும் அறிந்தனர். அவன் எப்போது கல்லைக் கவணில் ஏற்றானான்? எப்படிச் சுழற்றினுன் ? எவ்வாறு வீசினான் ? இவற்றை எல்லாம் அங்கு நிறைந்து நின்றவருள் எவரும் அறிந்திலர் ; எல்லோரும் கல்லடித்த ஓசையைக் கேட்டார் ; வல்லுருவம் மண்ணிடை வீழக் கண்டார் என்று வீரமாமுனிவர் பாடியுள்ளார்.[4]

முனவரது கவித்திறனைக் குறித்து வழங்கும் கதைகள் பலவாகும். அவர் விரைவாகக் கவி சொல்லும்போது நான்கு மாணவர் வரிசையாக அமர்ந்து ஒவ்வொரு வரிசையை ஒவ்வொருவர் ஏட்டில் எழுதுவாரென்றும், ஐந்தாவது மாணவன் அந்நான்கு அடிகளையும் சேர்த்தெழுதிப் பாட்டு வடிவத்தில் காட்டுவானென்றும் ஒரு கதை வழ்ங்குகின்றது. இன்னும் தேம்பாவணிக் காவியத்தை முனிவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றிய பொழுது அதன் நயங்களை உணர்ந்த சங்கப் புலவர்கள் அவருக்கு வீரமா முனிவர் என்னும் பட்டம் அளித்தார்கள் என்று மற்ருெரு கதை கூறும். இத்தகைய கதைகளின் உதவியில்லாமலே தேம்பாவணிக் கவிதையின் பெருமையை நாம் உணர்ந்து கொள்ளக்கூடும்.

கிருஸ்து மத சேவையில் சிறந்த ஆர்வம் வாய்ந்த வீரமாமுனிவர் கொள்ளிட நதியின் வட கரையில் உள்ள ஏலாக்குறிச்சி என்ற சிற்றைரில் சிறந்த கோயில் ஒன்று கட்டினர் ; தேவ மாதாவாகிய மரியம்மையின் திருவுருவத்தை அக்கோயிலில் நிறுவினர்; அடியாரைக் காத்தருளும் மாதாவை அடைக்கல மாதா என்று அழைத்தார் ; அம்மாதாவின் அருட்காவலில் அமைந்த இடத்திற்குத் திருக்காவலூர் என்று பெயரிட்டார்; அவ்வூரின் பெருமையை அன்பர்கள் அறிந்து இன்புறும் வண்ணம் "திருக்காவலூர்க் கலம்பகம்“ என்னும் பிரபந்தம் பாடினார். அடைக்கல மாதாவின் திருவடிகளில் வீரமாமுனிவர் அணிந்த கலம்பகப் பாமாலை சிறந்த தமிழ் மணம் கமழ்வதாகும்.

திருக்காவலூரில் வீரமாமுனிவருக்கு இருந்த காதல் திருவேங்கடத்தில் குலசேகர ஆழ்வார் கொண்டிருந்த காதலை ஒத்ததாகும்; அரசர் குலத்திற் பிறந்த குலசேகர ஆழ்வார் மண்ணரசையும் விண்ணரசையும் விரும்பவில்லை; திருமால் நின்றருளும் திருவேங்கடமலையில் ஒரு மரமாக நிற்கவும், படியாகக் கிடக்கவும், ஆறாகப் பாயவும் மீனகத் திரியவும் ஆசைப்படுகின்றார்[5] . இத்தகைய ஆசை வீரமாமுனிவரது பாட்டிலும் வெளிப்படுகின்றது. அடைக்கல மாதாவின் அருட்காவலில் அமைந்த திருக்காவலூர்ச் சோலையில் புல்லாக நிற்கவும், வண்டாகத் திரிந்து தேன் உண்டு தெள்ளிய கீதம் பாடவும் விரும்புகின்றர் முனிவர்[6]. எனவே, திருவேங்கடமலையில் கல்லாய்க் கிடக்க விரும்பும் குலசேகர ஆழ்வாரும் திருக்காவலூர்ச் சோலையில் புல்லாய்க் கிடக்க ஆசைப்படும் வீரமாமுனிவரும் தத்தம் சமய வழிபாட்டில் தலைசிறந்த அன்பு வாய்ந்தவர் என்பது இனிது விளங்கும்.

இத்தகைய கவஞராகிய வீரமா முனிவர் தமிழ் அகராதியின் தந்தையாகவும் விளங்குகிறார். தமிழ்ச் சொற்களை அகரம் முதலாகத் தொகுத்தும் வகுத்தும் பொருள் எழுதியவர் அவரே. அவர் காலத்துக்கு முன்பு தமிழ்ப் பதங்களின் பொருள் தெரிந்து கொள்வதற்குப் பல நிகண்டுகள் இருந்தன. திவாகரம் என்பது ஒரு நிகண்டு. அது திவாகர முனிவரால் செய்யப்பட்டது. பிங்கலம் என்பது மற்றொரு நிகண்டு. அவை இரண்டும் மிகப் பழமை வாய்ந்தன. பிற்காலத்தில் சூடாமணி என்னும் நிகண்டு பெயர் பெற்று விளங்கிற்று. அந்நிகண்டுகள் எல்லாம் செய்யுள் நடையிலே அமைந்திருந்தன ; மனப்பாடம் செய்து கொள்வதற்கு ஏற்ற வகையிலே இயற்றப்பட்டிருந்தன. கவிபாடும் புலவர்களும் உரை காணும் அறிஞர்களும் அவற்றைக் கற்றுப் பயனடைந்தார்கள். ஆயினும் கற்றவரேயன்றி மற்றவரும் தமிழ்ப் பதங்களே எளிதாக உணர்வதற்கு மேல் நாட்டு அகராதி முறையே சிறந்ததென்று வீரமாமுனிவர் கருதினர். பண்டை நிகண்டுகளில் அமைந்த பதங்களை வரிசைப்படுத்திச் சதுர் அகராதி என்னும் பெயரால் அரியதோர் நூலை அவர் வெளியிட்டார். அதுவே பிற்காலத்தில் எழுந்த பேரகராதிகளுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது.

இன்னும் தமிழ் நூல்களுள் தலைசிறந்து விளங்கும் திருக்குறளை மேலே நாட்டார்க்கு முதன் முதற் காட்டியவர் வீரமாமுனிவரே என்பது பலர் கொள்கை. முப்பாலாக அமைந்த திருக்குறளின் அறத்துப்பாலேயும், பொருட்பாலையும் லத்தீன் மொழியில் மொழி பெயர்த்தார் முனிவர். அந்நூலே ஏனைய ஐரோப்பிய மொழிகளில் திருக்குறள் வழங்குவதற்கு வழிகாட்டிற்று. ஜெர்மானிய மொழியில் திருக்குறளே முற்றும் மொழி பெயர்த்த கிரால் என்பவர்க்கும், ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த எல்லீசர், போப்பையர் முதலிய அறிஞர்க்கும் அது பெருந்து திணையாயிருந்தது.

இவ்வாறு பல துறைகளில் தமிழ் மொழிக்குத் தொண்டு செய்த வீரமாமுனிவர், தமிழ் வசன நடையையும் வளர்ப்பாராயினர். கிருஸ்து மத போதகம் செய்யும் உபதேசியார்களுக்காக அவர் ஒரு வசன நூல் எழுதினர்; அதற்கு வேதியர் ஒழுக்கம் என்று பெயரிட்டார். அந்நூலே வீரமாமுனிவர் இயற்றிய உரைநடை நூல்களுள் தலை சிறந்தது என்று போப்பையர் கூறுகின்றார்.

சமயத்துறையில் எழுத்துவாதம் நிகழ்த்துவதிலும், வாக்குவாதம் செய்வதிலும் வீரமாமுனிவர் சிறிதும் தளர்ந்தவரல்லர். தரங்கம்பாடியில் அமைந்த[7] தேனிய சங்கத்தார்க்கும், வீரமாமுனிவர்க்கும் பெரியதோர் வாதம நிகழ்ந்தது. தேனிய சங்கத்தாரது கொள்கைகளை மறுத்து ஒரு நூல் எழுதினார் முனிவர். அதற்கு வேத விளக்கம் என்பது பெயர். தேனிய சங்கத்தார் வேத விளக்கத்தை மறுத்துத் திருச்சபை பேதகம் என்னும் பெயரால் ஒரு சிறு நூல் வெளியிட்டார்கள். அதற்கு மறுப்பாக முனிவர் பேதகம் அறுத்தல் என்று பெயரிட்டு ஒரு கட்டுரை எழுதினர். இவ்வாறாக வாதம் வளர வளரத் தமிழ் வசன நடையும் திருந்தி வளர்வதாயிற்று. இது வாதத்தால் விளைந்த நலம்.

இன்னும் முனிவர் பல வாக்கு வாதங்களும் செய்ததாக அவர் சரித்திரம் கூறுகின்றது. ஒருகால் முனிவரை வாதிலே வெல்லக்கருதி, ஒன்பது சடைப்பண்டாரங்கள் திருக்காவலூரில் போந்து ஒரு மாதகாலம் அவரோடு பெருவாதம் செய்து தோற்றார்கள் என்றும், தோற்றவர்களில் அறுவர் யேசு மதத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்றும், ஏனைய மூவரும் தம் சடையை அறுத்தெறிந்துவிட்டுப் போயினர் என்றும் சொல்லப்படுகின்றது.

பின்னொரு சமயம் சிவப்பிரகாச முனிவர் என்னும் வீர சைவப் பெரியார்க்கும், வீரமாமுனிவர்க்கும் ஒரு வாதம் நிகழ்ந்ததாம். கிருஸ்து மதக் கொள்கைகளை எடுத்துரைத்தாராம் வீரமாமுனிவர். அவற்றைச் செம்மையாக மறுத்து வெற்றி பெற்ற சிவப்பிரகாசர் 'ஏசு மத நிரா கரணம்' என்னும் பெயரால் ஒரு நூல் இயற்றினர் என்று அவர் சரித்திரம் கூறுகின்றது. இக்கதைகளை யெல்லாம் முற்றும் நம்ப முடியாவிட்டாலும் வீரமாமுனிவர் வாது செய்வதில் விருப்புடையவர் என்பது நன்கு விளங்குவதாகும்.

வீரமாமுனிவர் தமிழ் மொழியின் இலக்கணத்தையும் நன்றாக ஆராய்ந்தார். தொல்காப்பியம் முதலாக நன்னூல் ஈறாகவுள்ள இலக்கண நூல்களேயெல்லாம் கற்றார் ; 'தொன்னூல் விளக்கம்: என்னும் பெயரால் ஒரு செந்தமிழ் இலக்கணம் செய்தார். அது பெரும்பாலும் பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூலை ஒத்திருக்கின்றது. ஆயினும் நன்னூலில் எழுத்திலக்கணமும், சொல்லிலக்கணமும் மட்டுமே உண்டு. வீரமாமுனிவரது தொன்னூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து இலக்கணமும் அடங்கியுள்ளன. "அருந்தமிழ் இலக்கணம் ஐந்தையும் விரித்து விளக்கினன் வீரமாமுனியே“ என்பது தொன்னூலின் சிறப்புப் பாயிரம். மேலைநாட்டுச் சிறந்த கருத்துக்களும் அந்நூலில் அமைந்து அழகு செய்கின்றன. இன்னும் ஏட்டுத் தமிழுக்கும் [8]பேச்சுத் தமிழுக்கும் உள்ள வேற்றுமையை உணர்ந்த முனிவர் அவ்விரு தமிழுக்குமுரிய இலக்கணத்தைத் தனித்தனியாக லத்தீன் மொழியில் எழுதினார். அந்நூல் இரண்டும் இப்பொழுது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இருவகைத் தமிழின் இலக்கணத்தையும் கிருஸ்தவ வேதியர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டார் முனிவர்; திருக்காவலூரில் - ஒரு கல்லூரி அமைத்தார்; அங்குத் தாமே ஆசிரியராக அமர்ந்து இலக்கணம் போதித்தார் ; கிருஸ்து மத வேதியர்கள் பிழையின்றித் தமிழ் மொழியில் பேசவும் எழுதவும் வல்லவராக விளங்குதல் வேண்டுமென்று பெரிதும் முயன்றார்.

இன்னும் நகைச்சுவை நிரம்பிய கதைகளும் எழுதினார் வீரமாமுனிவர். அவற்றுள் 'பரமார்த்த குரு கதை’ என்பது சாலச் சிறந்தது.

இத்தகைய தமிழ்த்தொண்டு புரிந்த முனிவர் அறுபதாம் வயதில் அம்பலக்காட்டிலுள்ள கிருஸ்தவ மடத்தில் இவ்வுலக வாழ்வை நீத்தார். அவர் ஆக்கிய நூல்களால் தமிழ்த்தாய் அழகு பெற்றாள். தேம்பாவணி, தமிழ் அன்னையின் கழுத்தில் வாடாத மாலையாகத் திகழ்கின்றது. காவலூர்க் கலம்பகம் கதம்ப மாலையாகக் காட்சியளிக்கின்றது. தொன்னூல் பொன்னூலாக இலங்குகின்றது. சதுரகராதி முத்தாரமாக மிளிர்கின்றது. வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களில் ஒருவராக விளங்குகின்றார்.

* * *

* * *

குறிப்புகள்

↑ யேசுநாதர் சங்கம்-Society of Jesus (S J ) 41—2

↑ தேம்பாவணி என்னும் சொல்லுக்கு வாடாத மாலை என்பது பொருள்.

↑ ”தடுத்திமை யாமல் இருந்தவர் தாளின்

மடுத்ததும் நாண் துதி வைத்ததும் நோக்கார் கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால்

எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்”

என்பது கம்பர் கவி.

↑ ”கல்லை ஏற்றலும் கவணினைச் சுழற்றலும் அக்கல்

ஒல்லை ஒட்டலும் ஒருவரும் காண்கிலர் இடிக்கும் செல்லை ஒத்தன. சிலேதுதல் பாய்தலும் அன்னான் எல்லை பாய்ந்திருள் இரிந்தென வீழ்தலும் கண்டார்.”

என்பது முனிவர் பாட்டு.

↑ ஆதை செல்வத் தரம்பையர்கள் தற்குழ

வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்

தேனார் பூஞ்சோலைத் திருவேங் கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே

–குலசேகர ஆழ்வார்

↑ "தாள் அணிந்த மதிமுதலாத் தமியனும் அக்

கமலத்தாள் தாங்கி லேனோ

கோள் அணிந்த குழலணிதார் குடைவண்டாப்

புகழ்பாடி மதுவுண் ணேனோ

வாள் அணிந்த வினைப்படைவெல் வலிச்சிங்கம்

ஈன்ற ஒரு மானாய் வந்தாள்

கேள் அணிந்த காவல்நலூர்க் கிளர்புனத்துப்

பசும்புல்லாய்க் கிடவேன் நானோ“

–வீரமாமுனிவர்

↑ The Danish Mission at Tranquebar.

↑ பேச்சுத் தமிழின் இலக்கணத்திற்குக் 'கொடுந் தமிழ் இலக்கணம்' என்னும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

2. போப்பையர்

* * *

போப்பையர் என்று தமிழ் நாட்டார் போற்றும் அறிஞர் பத்தொன்பதாம் வயதில் தமிழ் நாட்டில் கிருஸ்தவப் பணி செய்ய வந்தார் ; அறுபதாண்டளவும் தமிழகத்தில் அரும்பணி ஆற்றினார் : பின்பு சீமைக்குச் சென்று ஆக்ஸ்போர்டு சர்வ கலாசாலையில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிக்கும் ஆசிரியராக அமர்ந்து, இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்த் தொண்டு செய்தார். சுருங்கச் சொல்லின், இவர் மேலை நாட்டார்க்குத் தமிழகத்தின் கலைச் செல்வத்தைக் காட்டினார் ; நீதியின் நீர்மையை உணர்த்தினார் ; ஞானச் செல்வத்தை வழங்கினார்; தமிழ்ப்பணியே தம் உயிர்ப்பணியாகக் கொண்டார் என்னலாம்.[1]

இத்தகைய பெரியாரது தமிழ்த் தொண்டு நெல்லை நாட்டிலே தொடங்கிற்று. அந்நாட்டில் [2]சாயர்புரம் என்னும் ஊர் ஒன்று உண்டு. அது கிருஸ்தவ நாடார்கள் நிறைந்த சிற்றூர். அங்கே கிருஸ்து மத போதகராகச் சென்றார் போப்பையர்; அவ்வூரில் உள்ள சிறுவர்களின் அறிவை வளர்ப்பதற்கு ஒரு கல்லூரி அமைத்தார்; சிறந்த ஆசிரியர்களைப் பாடம் சொல்ல நியமித்தார். எல்லாக் கலைகளும் அங்கே போதிக்கப்பட்டன. பள்ளிப் பிள்ளைகள் தினந்தோறும் படிக்க வேண்டிய பாடம்: தமிழ், லத்தீன், கிரீக்கு, ஈபுரு ; அதற்கு மேல் கணிதம், தர்க்கம், தத்துவம் இவற்றைப் போதிப்பதற்குப் பகற் பொழுது போதாமையால் இரவிலும் நெடுநேரம் பாடம் நடைபெற்றது. சாயர்புரக் கல்லூரி ஒரு சர்வகலாசாலையாக விளங்குதல் வேண்டும் என்பது போப்பையரின் ஆசை. தம் இளங் குழந்தைகள் இனிது வளர வேண்டும் என்ற ஆசையால் அளவுக்கு அதிகமாக உணவையூட்டி வயிற்று நோயை வரவழைக்கும் தாயாரைப்போல் பள்ளிப் பிள்ளைகளின் அறிவை வளர்க்கக் கருதிய போப்பையர் பளுவான பாடங்களைச் சுமத்தி மலைப்பையும் திகைப்பையும் உண்டாக்கினர். மாணவர்கள் ஒருவர் பின்னே ஒருவராய் நழுவத் தொடங்கினர். ஐயரும் ஊக்கம் இழந்து, உடல் நலம் குன்றி ஆங்கில நாட்டுக்கு இளைப்பாறச் சென்றார்.

இரண்டு ஆண்டுகள் இளைப்பாறி மீண்டும் இவர் தமிழ் நாட்டுக்குப் பணி செய்ய வந்தார். தஞ்சாவூரிலும், நீலகிரியிலுள்ள உதகமண்டலத்திலும், மைசூர் தேசத்தில் உள்ள பங்களுரிலும் பல்லாண்டுகளாகச் சிறந்த தொண்டு புரிந்தார். நீலகிரியிலுள்ள ஊட்டியில் போப்பையர் பத்தாண்டு பாடசாலை யொன்று நடத்தினார். அப்பொழுது அம்மலையில் வாழும் தோடர் என்ற இனத்தாரோடு இவர் நெருங்கிப் பழக நேர்ந்தது. தோடர் பேசும் மொழியில் பாட்டும் இல்லை ; வசனமும் இல்லை. எருமை மாடு மேய்ப்பதே அவர்கள் தொழில். அன்னார் குடியிருக்கும் ஊருக்கு மந்து என்பது பெயர். கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுச் சென்னை அரசாங்கத்தாரும் செல்வரும் சென்றடைகின்ற 'ஒத்தக்க மந்து' என்ற ஊரின் பெயரில் அச்சொல்லைக் காணலாம். [3]ஒத்தைக்கல் மந்து என்று தோடரால் இடப்பட்ட பெயரே ஒட்டக்க மண்டாயிற்று என்று சிலர் கருதுகின்றார்கள். நீலகிரித் தோடர் பேசும் மொழியைப் போப்பையர் ஆராய்ந்து அதன் இலக்கணத்தை எழுதியுள்ளார்.

தமிழ் மொழிக்கு ஐயர் செய்த தொண்டுகள் பலவாகும். தமிழில் அமைந்த அருமையான நீதி நூல்களை இவர் படிப் படியாகக் கற்றார். பள்ளிச் சிறுவர் முதலாகப் பரிபக்குவமடைந்த பெரியோர் ஈருக எல்லோருக்கும் பயன்படத்தக்க முறையில், தமிழ் மொழியில் நீதி நூல்கள் அமைந்திருக்கக் கண்டு மனம் மகிழ்ந்தார். ஐந்து வயதில் பள்ளிக்குச் செல்லும் சிறுவர் "அறச்செய விரும்பு“, "ஆறுவது சினம்“ என்று பாடல் ஓதுகிறார்கள். அறிவு வளர வளர தாலடியார், திருக்குறள் முதலியவற்றை நுணுகி நுணுகி, ஆராய்கின்றார்கள். நீதி நூல் வகையில் தலை சிறந்த பெருமை தமிழ் நாட்டில் நால்டியாருக்கும் திருக்குறளுக்கும் உண்டு. "ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி“ என்பது இந்நாட்டுப் பழமொழி. நாலு என்பது நான்கு அடிகளில் அமைந்த நாலடியார். இரண்டு என்பது ஈரடிகளில் அமைந்த திருக்குறள். இவ்விரண்டு நீதி நூல்களிலும் அடங்கிய அறிவுச் செல்வத்தை ஆராய்ந்தறிந்தார் போப்பையர்; அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

போப்பையர் காலத்திற்கு முன்னமே திருக்குறள் சில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. வீரமாமுனிவர், திருக்குறளின் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் லத்தீன் மொழியில் மொழியில் பெயர்த்திருந்தார். ஜெர்மன் மொழியில் கிரால் என்பவர் திருக்குறளை முற்றும் மொழி பெயர்த்திருந்தார். பிரஞ்சு மொழியில் ஏரியல் என்பவரால் திருக்குறளின் ஒரு பாகம் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. ஆங்கிலத்தில் அதனை மொழி பெயர்க்க முயன்றவர்கள் அரைகுறையாக விட்டுப் போயினர். எல்லீசர் என்னும் அறிஞர் பதின்மூன்று அதிகாரங்களின் சில பகுதிகளை மொழிபெயர்த்திருந்தார். துருவர் என்னும் ஆங்கிலப் பாதிரியார் அறுபத்து மூன்று அதிகாரங்களை மொழிபெயர்த்து விட்டு விட்டார். இந்த நிலையில் இருந்த திருக்குறளை முற்றும் ஆராய்ந்து, நன்றாக மொழி பெயர்த்து ஆங்கிலத்தில் வெளியிட்ட பெருமை போப்பையருக்கே உரியதாகும்.

அந்நூலை மொழி பெயர்க்கும் பொழுது கிருஸ்து நாதர் அருளிய சில கருத்துக்களும், திருவள்ளுவர் கருத்துக்களும் ஒற்றுமையுடையனவாக இருக்கக் கண்டு இவர் உள்ளம் மகிழ்ந்தார். இவ் வகையில் போப்பையர் மனத்தைக் கவர்ந்த குறள்களில் இரண்டொன்றைப் பார்ப்போம்.

"ஒறுத்தார்க்(கு) ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்

பொன்றும் துணையும் புகழ்“

என்ற குறள் இவர் உள்ளத்தை அள்ளுவதாயிற்று. கிருஸ்து நாதரது வாழ்க்கையின் சிறப்பினை எடுத்துக் காட்டுவதுபோல் தோன்றிற்று இப்பாட்டு. தீயவர் பலர் கிருஸ்து நாதரைத் துன்புறுத்தினார்கள் ; கழியால் அடித்தார்கள் ; அவர் மீது காறி உமிழ்ந்தார்கள். இவ்வாறு அவரை ஒறுத்த சிறியோர் ஒரு நாளை இன்பத்தையே பெற்றார்கள். ஆனால் அச்சிறுமை யெல்லாம் பொறுத்திருந்த கிருஸ்து நாதரோ உலகமுள்ளளவும் அழியாப் புகழ் பெற்றார். இவ்வுண்மையைக் குறட்பாவிலே கண்டு இன்புற்றார் போப்பையர். இன்னும் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்தல் வேண்டும் என்பது திருவள்ளுவர் கொள்கை. "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண, நன்னயம் செய்துவிடல்“ என்பது வள்ளுவர் வாக்கு. கிருஸ்து நாதரைப் பகைவர்கள் சிலுவையில் அறைந்த பொழுது அவர் பேசிய வாசகத்தின் பொருளும், வள்ளுவர் குறளின் பொருளும் ஒன்றுபட்டிருக்கக் கண்டார் போப்பையர். தம் கையிலும் காலிலும் இருப்பாணி அறைந்து பொறுக்க முடியாத துயரம் விளைத்த பகைவரைக் கிருஸ்து நாதர் வெறுத்தாரல்லர் ; சபிக்க நினைத்தாரல்லர் ; அக்கொடியாரிடம் இரக்கம் கொண்டார்; அவரை மன்னிக்கும்படி ஆண்டவனை வேண்டிக்கொண்டார். இது இன்னா செய்தார்க்கு நன்னயம் செய்தல் அன்றோ ?

இங்ஙனம் சிறந்த ஒற்றுமைகளைக் கண்ட போப்பையர் மனத்தில் ஒரு கருத்துத் தோன்றிற்று. திருமயிலாப்பூரில் வாழ்ந்த திருவள்ளுவர், அர்ச்தாமஸ் முதலிய கிருஸ்தவ சீலர்கள் அங்குச் செய்த போதனையை அறிந்து இவ்வுண்மைகளை வெளியிட்டிருக்கலாம் என்னும் பொருள்பட எழுதியுள்ளார். [4]இது அறிஞர் ஆராய்தற்குரியதாகும்.

இன்னும் போப்பையர் மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் என்னும் அருள் நூலையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். தமிழ்நாட்டில் திருவாசகத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. படிப்போர் மனத்தை உருக்கிப் பக்தியை விளைவிக்கும் பான்மையில் ஒப்பற்ற நூல் திருவாசகம். "திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்“ என்பது இந்நாட்டில் நெடு மொழியாக வழங்குகின்றது. அந்நூலில் அடங்கிய அறுநூற்று ஐம்பத்தெட்டுப் பாடல்களையும் போப்பையர் ஆராய்ந்து அறிந்தார். ஆக்ஸ்போர்டு சர்வகலாசாலையில் ஆசிரியராக இருந்தபோது இவர் அந்நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கத் தொடங்கினர். அப்போது இவருக்கு வயது எழுபத்தேழு. எடுத்த வேலை முடியுமளவும் உயிர் இருக்குமோ என்ற ஐயம் இவர் உள்ளத்தில் எழுந்ததுண்டு.

ஒரு நாள் மாலேப்பொழுதில் பால் நிலா எங்கும் பரந்திருந்தது. பாலியல் கலாசாலைத் தலைவராகிய பெரியாரும் போப்பையரும் ஒரு நிலாமுற்றத்தில் இருந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப் பெரியாரிடம் திருவாசகத்தின் பெருமையை எடுத்துரைத்தார் போப்பையர். இப்படிப்பட்ட புத்தகத்தை விரைவில் அச்சிட்டு வெளியிடல் வேண்டும் என்று அழுத்தமாகக் கூறினர் பெரியவர். அவரது ஆர்வத்தை அறிந்த போப்பையர், "ஐயனே, அவ்வேலை முடிவதற்கு நெடுங்காலம் செல்லுமே; நான் சாகாவரம் பெற்றிலேனே“ என்றார். அது கேட்ட பெரியவர் போப்பையர் தோளைப் பற்றிக் கொண்டு, அறிஞரே! ஒரு பெரிய வேலையைத் தொடங்கி நடத்துவதுதான் நெடுங்காலம் வாழ்வதற்குரிய வழி. அவ்வேலை முடியுமளவும் உயிர் இருந்தே தீரும்“ என்று உறுதியாகக் கூறினர். அவ்வாய்மொழியைப் போப்பையர் தாரக மொழியாகப் போற்றினார்; தளர்வுற்ற பொழுதெல்லாம் அம்மொழியை நினைத்து ஊக்கமும் உறுதியும் பெற்றார் ; தமது எண்பதாவது பிறந்த நாளன்று திருவாசகத்தை அச்சிட்டு வெளிப்படுத்தினார். அப் பெரும்பணியை நிறைவேற்றிய போது இவர் மனம் சிறந்த இன்பம் அடைந்தது. தோன்றாத் துணையாக நின்று உதவிய இறைவன் கருணையை ஐயர் வாயார வாழ்த்தினார்; நேர் முகமாக நின்று ஆசியுரை கூறி ஊக்கப்படுத்திய பாலியல் கலா சாலைப் பெரியார் அம் மகிழ்ச்சியிற் கலந்து கொள்ளாது மாண்டுபோயினரே என்று மனம்வருந்தினர்.

போப்பையர் வெளியிட்ட திருவாசகத்தை அறிஞர் உலகம் ஏற்றுப் போற்றுவதாயிற்று. பாரிஸ் நகரத்தின் தேசியக் கலாசாலையில் பேராசிரியராக விளங்கிய சூலியன் வின்சன் என்பவர் ஒரு தமிழ்ப் பாட்டு இயற்றிப் போப்பையரைப் புகழ்ந்தார். "இரு வினை கடந்த செல்வன் இசைத்த வாசகத்தை யெல்லாம், வரு விளையாட்டாற் போலும் மறுமொழி யதனில் வைத்தீர்" என்பது வின்சன் வாக்கு. தமிழ் நாட்டுப் புலவர்கள் ஐயர் திருவாசகத்தைப் பாட்டாலும் உரையாலும் பாராட்டினர்கள்."[5]

இத்தகைய அரிய தமிழ் நூல்களை அச்சிட்டு வெளிப்படுத்தும் வகையில் மிகுந்த கைப்பொருளைச் செலவிட்டார் போப்பையர். அவற்றை ஆங்கில நாட்டார் அதிகமாக வாங்கி ஆதரிக்க மாட்டார் என்பது இவருக்கு நன்கு தெரியும். ஆயினும் தம் கைப்பொருளைச் செலவு செய்தேனும் தமிழ் நாட்டாருடைய கலைச் செல்வத்தையும் ஞானத்தையும் மேலே நாட்டாருக்குக் காட்டுதல் வேண்டும் என்பதே இவர் கருத்து. 'தமிழ்ப் புலமையே வறுமைக்கு நேரான வழி' என்று இவர் அடிக்கடி கூறுவதுண்டு. எனவே, பயன்கருதாது தமிழ் மொழிக்குத் தொண்டு புரிந்த பெருமக்களில் போப்பையரும் ஒருவர் என்று கூறுதல் ஒரு சிறிதும் மிகையாகாது.

பழுத்த புலவராகிய போப்பையர் எண்பத்தாறாவது வயதை எட்டினர். அப்பொழுது ஆங்கில நாட்டுக் கலைஞர் சங்கம் இவரைப் பெருமைப்படுத்த முன்வந்தது. மாட்சிமை தங்கிய விக்டோரியா மகாராணியாருடைய வயிர விழாவின் ஞாபகார்த்தமாக ஆங்கில நாட்டு ராயல் 'ஏஷியாட்டிக் சொசைட்டி' என்ற சங்கத்தில் ஒரு தங்க மெடல் பரிசு ஏற்படுத்தியிருந்தார்கள். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசாங்கத்தார் தேர்ந்தெடுக்கும் அருங்கலைவாணர் ஒருவருக்கு அப்பரிசு வழங்கப்பட்டு வந்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஆறாம் ஆண்டில் அப்பரிசு பெறுவதற்கு உரியவராகப் போப்பையர் தேர்ந்தெடுக்கப்பட்டார்[6]. அப்பொழுது இந்திய நாட்டு மந்திரியாக இருந்த சர். ஜான் மார்லி என்பவர் தலைமையில் ஒரு பாராட்டுச் சபை கூடிற்று. போப்பையர் தமிழுக்குச் செய்துள்ள அரும்பெருஞ் சேவைகளைத் தலைவர் புகழ்ந்து பேசித் தங்கப் பதக்கத்தைப் புலமைப் பரிசாக அளித்தார். பலர் அறிஞர் ஐயரைப் பாராட்டி ஆசி கூறினாள்கள்.

அதற்கு அடுத்த ஆண்டில் போப்பையர். இவ்வுலகத்தை விட்டகன்றார். தமது கல்லறையில் "போப்பையர்—[7] ஒரு தமிழ் மாணவர் என்ற வாசகம் எழுதப்படல் வேண்டும் என்று இவர் ஆசைப்பட்டார். இவரது தமிழ் ஆர்வத்திற்கு இவ்விருப்பம் ஒன்றே போதிய சான்றாகுமன்றோ ? எந்நாட்டிற் பிறந்தாலும், எந்நாட்டில் இறந்தாலும் போப்பையரைப் போன்றவர்கள் சிறந்த தமிழரே. என்பதில் தடையும் உண்டோ?

* * *

குறிப்புகள்

↑ Dr. Pope himself had truly said that Tamil Scholarship was the direct road to poverty. Notwithstanding this disadvantage, Dr. Pope had devoted almost sixty years of his life to the study of the Tamil. literature and to its critical examination.-Siddhanta Deepika Vo. VII p. 192.

↑ சாமுவேல் சாயர் என்னும் போர்ச்சுகீசியக் கிருஸ்தவரது பொருள் உதவியால் வாங்கப்பட்ட நிலத்தில் எழுந்த ஊர் சாயர்புரம் என்று பெயர் பெற்றது.

↑ ஒத்தைக்கல் மந்து என்பது ஒற்றைக்கல் மன்று என்ற சொல்லின் சிதை வென்பர்.

↑ “Pope speaks of the Kural as the one Oriental book much of whose teachings is an echo of the Sermon on the Mount.........Many Christians have a tendency to think that the ideas of forgiving one's enemies, abstaining from returning evil for evil, humility etc. have been first taught to the world only by Jesus Christ. But it can be safely asserted that these ideas were the common property of great minds at least for centuries before Jesus was born, and Tiruvalluvar had enough in the sacred literature of India, to say nothing of his illumined Self to enable him to build these truths is his grand scheme of life without being in any way indebted to the teachings of Jesus, though he would certainly have studied with love and humility the teachings of the great Risihi had he known of his existence "-Preface to V. V. S. Iyer's Tirukurai,

↑ தெய்வத் தமிழ்மறைச் செய்யமெய்ப் பொருளைச்

செந்தமிழ் பயிலா மைந்தர் நன்குணரத்

தீங்கில தாகிய ஆங்கில மொழியில்

பெயர்த்தினி தளித்துப் பேரிசை நிறுவினன் அன்னபேர் அறிஞன் யாரெனிற் கூறுதும்

ஆங்கில நாட்டுக்கு அணியென உதித்து

அருந்தமிழ் அணங்கைத் திருந்திய செவிலித் தாயென வளர்க்கும் நேயமிக் குடையோன்

கிருஸ்தவ சமயக் குருத்துவ சீலன்

போப்பெனும் நாமம் புனைந்த நாவலனே“

என்று பாடினர். சரவணப்பிள்ளை என்ற புலவர்.

↑ In commemoration of the Diamond Jubilee of Queen Victoria the Royal Asiatic Society established a Gol; Medal to be awarded every third year to some specially selected savant of repute by whose labours Oriental learning has been encouraged amongst English speaking people throughout the world. The time for this triennial award has once more come round and the choice has fallen on that eminent Tamil scholar, the Rev. G. U. Pope—The Times of India dated 20th April 1906.

↑ Whenever I die "A Student of Tamil wil be inscribed on my monument "-Dr. Pope's letter dated 20th October, 1900, to J. M. Nallasami Pillai–Editor of the Siddhanta Deepika.

கால்டுவெல் ஐயர்

* * *

மேல் நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற் போந்து தமிழ்த் தொண்டு செய்த அறிஞருள்ளே தலை சிறந்தவர் மூவர். வீரமாமுனிவர் ஒருவர் ; போப்பையர் மற்றொருவர்; இன்னொருவர் கால்டுவெல் ஐயர். இம்மூவரும் மூன்று வகையிலே தமிழ் மொழிக்குத் தொண்டு செய்தவர்கள். வீரமாமுனிவரும் போப்பையரும் செய்த சேவையை முன்னமே அறிந்தோம். இனி, கால்டுவெல் ஐயர் ஆற்றிய தமிழ்த் தொண்டைச் சிறிது கருதுவோம்.

கால்டுவெல் ஐயர் தம் வாழ்க்கை வரலாற்றை நான்கு வாக்கியங்களில் நன்கு விளக்கியுள்ளார். "நான் அயர்லாந்து தேசத்திலே பிறந்தேன். ஸ்காத்லாந்து தேசத்திலே கல்வி பயின்றேன்; ஆங்கில நாட்டுக் கிருஸ்தவ சங்கத்தைச் சார்ந்தேன் ; ஆயினும் இந்திய தேசத்திலே நெடுங்காலம் வாழ்ந்து, இந்தியரது வாழ்க்கையில் ஈடுபட்டமையால் நான் இந்தியருள் ஒருவனுய் விட்டேன்“ என்று அவர் கூறுகின்றார்.

கால்டுவெல், கிருஸ்தவ சங்கத் தொண்டராய் ஆயிரத்து எண்ணூற்று முப்பத்தெட்டாம் ஆண்டில் சென்னமா நகர் வந்துசேர்ந்தார். அப்போது அவருக்கு வயது இருபத்து மூன்று. அது முதல் அவர் ஐம்பத்து மூன்று ஆண்டுகள் தமிழ் நாட்டில் அருந்தொண்டு புரிந்தார். திருநெல்வேலி நாட்டிலுள்ள இடையன்குடி என்னும் சிற்றூரை அவர் இருப்பிடமாகக் கொண்டார். நெல்லைநாடு அவரைத் தன் மகனக ஏற்றுக்கொண்டது. இங்ஙனம் தம்மை ஏற்றுக்கொண்ட நெல்லை நாட்டிற்குச் சிறந்த முறையில் நன்றி செலுத்தினார் கால்டுவெல். திருநெல்வேலி நாட்டுச் சரித்திரத்தை வரன் முறையாக முதன் முதல் எழுதியவர் அவரே. அதனைச் சென்னை அரசாங்கத்தார் அச்சிட்டு வெளிப்படுத்தினர்; ஆசிரியருக்கு ஆயிரம் ரூபாய் நன்கொடையும் அளித்தனர்.

பாண்டி நாட்டின் பழம் பெருமையை அச்சரித்திர நூலிற் பரக்கக் காணலாம். முற்காலத்தில் பாண்டி நாட்டின் சிறந்த செல்வம் முத்துச் சலாபமே. அந்நாட்டைச் சேர்ந்த கடலில் நல்முத்து ஏராளமாக[1] விளைந்தது. பிற நாட்டார் தென்னுட்டு முத்தைப் பிரியமாக வாங்கி அணிந்து கொண்டார்கள். தமிழ் நாட்டுக் கவிகள் தென்னாட்டு முத்துச் செல்வத்தை வியந்து பாடி மகிழ்ந்தார்கள். இத்தகைய புகழ் வாய்ந்த முத்துச் சலாபம் திருநெல்வேலிக் கடற் கரையின் அருகே அமைந்திருந்தது. நெல்லை நாட்டை நீர் ஊட்டி வளர்க்கும் தாம்பிரபரணியாறு கடலோடு கலக்குமிடத்தில் கொற்கைத் துறைமுகம் விளங்கிற்று. முற்காலத்தில் கொற்கை உலகறிந்த பெருந் துறைமுக நகரமாய் இருந்தது. அத்துறையிலே மிகுதியாக முத்து விளைந்தது. அழகாக உருண்டு திரண்ட ஆணி முத்து அங்கே அகப்பட்டதென்று நெல்லை நாட்டுக் கவிஞராகிய குமர குருபரர் கூறுகின்றார்[2]. முத்து விளைந்த கொற்கைத் துறையைப் பழைய கிரீக்க ஆசிரியர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இவ்வாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சீரும் சிறப்பும் வாய்ந்து விளங்கிய கொற்கை இப்பொழுது திருநெல்வேலி நாட்டிலே கடற்கரையிலிருந்து ஐந்து மைல் தூரத்தில் உள்ள சிற்றூராகக் காணப்படுகின்றது. அவ்வூருக்குச் சென்றார் கால்டுவெல் ஐயர் ; அதனைச் சிறிது துருவிப்பார்க்க ஆசைப்பட்டார்; திருநெல்வேலிக் கலெக்டரிடம் அனுமதிபெற்றுக் குறிப்பிட்ட சில இடங்களைத் தோண்டுவதற்கு ஏற்பாடு செய்தார். அப்போது கொற்கையூர் வாசிகள் திரண்டு எழுந்தார்கள் ; "வெள்ளைக்காரப் பாதிரியார் புதையல் எடுக்கப் புறப்பட்டு வந்தார்“ என்று எண்ணினார்கள். முன்னோர் பாடுபட்டுத் தேடி மண்ணிலே புதைத்து வைத்த பொன்னும் பொருளும் பூதங்களின் வசப்பட்டிருக்கும் என்றும், அவற்றை எவரேனும் புரட்டி எடுக்க முயன்றால் அப் பூதங்கள் கிளர்ந்தெழுந்து ஊராரையெல்லாம் அறைந்து கொன்று விடும் என்றும் அவர்கள் அஞ்சினார்கள். அவர்களது துயரத்தை யறிந்த கால்டுவெல் ஐயர், புதையலருகே தாம் போவதில்லை என்று வாக்களித்தார்; ஊரார் சிலரை உடன் இருந்து பார்த்துக்கொள்ளும்படி வேண்டினார். அங்கும் இங்கும் சில இடங்களை அவர் தோண்டிப் பார்த்தபொழுது பழைய கொற்கைத்துறை தரை மட்டத்திற்கு எட்டடிக்குக் கீழேயிருந்ததென்றும், அப்போது அதன் அருகே கடல் இருந்ததென்றும் தெளிவாகக் கண்டார்; தாம்பிரபரணியாற்று நீரில் கலந்து வந்த மண்ணும் மணலும் நாளடைவில் துறைமுகத்தைத் தூர்த்துக் கடலை ஐந்து மைல் தூரம் துரத்தி விட்டதென்று தெரிந்துகொண்டார்.

கொற்கைத் துறைமுகம் தூர்ந்த பின்னர் காயல் என்னும் கடற்கரையூர் சிறந்த துறையாயிற்று. அத்துறையும் தாம்பிரபரணி கடலோடு கலக்குமிடத்திலேயே அமைந்திருந்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டி நாட்டுக்கு வந்த மார்க்கோபோலோ என்னும் மேலை நாட்டு அறிஞர் காயல் துறையைத் தமது நூலிற் குறிப்பிட்டுள்ளார். பாண்டி நாட்டில் "காயல் சிறந்ததொரு பெரு நகரம்“[3] என்று அவர் கூறுகின்றார். அரேபியா, சைனா முதலிய அயல் நாட்டுக் கப்பல்கள் காயல் துறைமுகத்தை நாடி வருவதையும், அத்துறையில் பரதவர் மூழ்கி முத்தெடுக்கும் முறையினையும் அவர் விவரமாக எழுதியுள்ளார். அக்காயலைத் துருவிப் பார்த்தார் கால்டுவெல். அவர் பார்த்த காலத்தில் காயலினின்றும் கடல் இரண்டு மைல் விலகி நின்றது. செம்படவரும் லெப்பையரும் அச்சிற்றூரில் வசித்து வந்தார்கள்.

காயல் துறைமுகம் துர்ந்த பின்னர் தூத்துக்குடி பாண்டி நாட்டுத் துறைமுகமாயிற்று. பதினைந்தாவது நூற்றாண்டு முதல், தமிழ் நாட்டில் வியாபாரம் செய்யத் தொடங்கிய போர்ச்சுகீசியர் முதலிய மேலே நாட்டார் தூத்துக்குடியைச் சிறந்த துறைமுகமாகத் திருத்தினர்கள். ஆகவே, பாண்டி நாட்டின் முற்காலத் துறைமுகம் கொற்கை : இடைக்காலத் துறைமுகம் காயல்; தற்காலத் துறைமுகம் தூத்துக்குடி. இவற்றை எல்லாம் நன்கு ஆராய்ந்து நமக்கு அறிவித்தவர் கால்டுவெல் ஐயரே.

இன்னும் முற்காலத்தில் சேர நாட்டுக் கரையிலும், சோழ நாட்டுக் கரையிலும் அமைந்திருந்த சிறந்த துறைமுகங்களைப் பிற நாட்டார் எழுதி வைத்த சரித்திரக் குறிப்புக்களிலிருந்து கண்டறிந்தார் கால்டுவெல் ஐயர். தென்னாட்டு முத்து பிற நாடுகளுக்குச் சென்றது போலவே உணவுப் பொருளாகிய அரிசியும் மரக்கலமேறிச் சென்றது. தமிழ் நாட்டில் வளமார்ந்த காவிரியாறு சென்ற இடமெல்லாம் செந்நெல் விளைத்தது. காவிரி நாடு எனப்படும் சோழ நாடே அன்றும் தமிழகத்தின் களஞ்சியமாய் விளங்கிற்று; இன்றும் களஞ்சியமாய் விளங்குகின்றது. காவிரியாறு கடலோடு கலக்குமிடத்தில் சிறந்த துறைமுகம் ஒன்று இருந்தது. காவிரிப்பூம்பட்டினம் என்றும் பூம்புகார் நகரம் என்றும் பண்டை இலக்கியங்கள் அதனைப் பாராட்டுகின்றன. அத்துறைமுகத்தின் வழியாகத் தமிழ் நாட்டு அரிசி மேல் நாடுகளுக்குச் சென்றது. கிரிக்கு மொழியில் அரிசியை அருஸா எனச் சிதைத்து வழங்கலாயினர் ; அதனடியாகவே ஆங்கிலத்தில் வழங்கும் ரைஸ் என்னும் சொல் பிறந்தது. இவற்றையெல்லாம் ஆராய்ந்து கண்டவர் கால்டுவெல் ஐயரே.

இன்னும் தோகை என்னும் சொல், தமிழிலும் மற்றைய திராவிட மொழிகளிலும் மயிலின் இறகைக் குறிப்பதாகும். மயிலிறகு தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட காலத்தில் தோகை என்ற சொல்லும் அதனுடன் பிற நாடுகளுக்குச் சென்றது. ஈபுரு மொழியிலுள்ள கிருஸ்தவ வேதமாகிய பைபிளிற் காணப்படும் துகி என்னும் சொல் தோகையின் சிதைவேயாகும் என்று விளக்கிக் காட்டினார் கால்டுவெல் ஐயர்.

தமிழ் நாட்டுக் கோழியைப்பற்றி அவர் செய்துள்ள ஆராய்ச்சியும் அறியத்தக்கதாகும். மத்திய ஆசியாவில் வழங்கும் சித்திய மொழிகளில் கோழியைக் கோரி என்ற சொல்லாற் குறிக்கின்றார்கள். கோரி என்பது கோழி என்ற தமிழ்ச் சொல்லின் சிதைவே என்று கால்டுவெல் ஐயர் காட்டியுள்ளார். தமிழில் சிறப்பெழுத்தாக வழங்கும் ழகரம் பிறநாட்டார் நாவில் எளிதாக நுழைவதில்லை. சோழ மண்டலக் கரையைக் கோர மண்டலக் கரையாகச் சிதைத்தனர் மேலே நாட்டார். தமிழகத்தைத் தமரிக்கா என்று குறித்தார் பழைய யவன ஆசிரியர் ஒருவர். இவ்வண்ணமே ஆசிய தேசத்து மொழிகளிலும் கோழி என்பது கோரியாயிற்று. தமிழ்நாட்டில் வான்கோழி என்னும் ஒரு வகைக் கோழி உண்டு. அதைக் குறித்துப் பாடியுள்ளார் ஒரு தமிழ்க் கவிஞர்.

"கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானும் அதுவாகப் பாவித்துத்—தானும்தன்

பொல்லாச் சிறகைவிரித் தாடினாற்போலுமே

கல்லாதவன் கற்ற கவி.”

என்பது மூதுரை யென்னும் தமிழ் நூலிற் கண்ட பாட்டு. அந் நூல் செய்தவர் ஔவையார் என்பர். கால்டுவெல் ஐயர் அதைப்பற்றி ஒன்று கூறுகின்றார். வான்கோழி ஐரோப்பிய நாடுகளிலிருந்து பதினாறாம் நூற்ருண்டில் தமிழ் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. ஆங்கிலத்தில் அதற்கு டர்க்கி என்பது பெயர். வான்கோழியைப் பற்றிய குறிப்பு மூதுரையில் காணப்படுவதால் அந்நூல் பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்னே எழுதப்பட்டிருத்தல் இயலாது என்று அவர் கருதுகின்றார்.

இவ்வாறு சரித்திர ஆராய்ச்சியால் பல உண்மைகளே வெளிப்படுத்திய கால்டுவெல் ஐயர் தென்னிந்தியாவில் வழங்கும் திராவிட மொழிகளுக்குச் செய்த அருந்தொண்டு எந்நாளும் அழியாததாகும். நெடுங்காலமாகத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் என்னும், ஐந்து மொழிகளும் தென்னிந்தியாவில் வழங்கி வருகின்றன. ஆயினும் அவை ஐந்தும் ஒரு தனிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் என்றும், அவற்றுள் சாலப் பழமை வாய்ந்தது தமிழ் மொழியே என்றும் ஆராய்ச்சி யுலகத்திற்குக் காட்டியவர் கால்டுவெல் ஐயரேயாவர். இன்று தென்னிந்திய சர்வ கலாசாலைகளில் திராவிட மொழிகள் ஏற்றமும் தோற்றமும் பெற்று விளங்குவதற்கு அடிப்படை கோலியவர் அவரே. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் பெயரால் அவர் எழுதியுள்ள ஒப்பற்ற இலக்கணம் தென்னிந்திய மொழிகள் உள்ளளவும் அழியாததாகும்.

கால்டுவெல் ஐயர் பல மொழிகளைக் கற்றறிந்த வித்தகர். அவர் இளமையிலேயே மேலைநாட்டுச் செம்மொழிகளாகிய கிரிக்கும் லத்தீனும் கற்றிருந்தார் ; கிருஸ்து மதப் பழைய வேதங்களை விளக்கமாகத் தெரிந்துகொள்ளும் பொருட்டு ஈபுரு மொழியைப் படித்தார் ; தமிழ் நாட்டுக்கு வந்த பின்னர் வடமொழியாகிய ஆரியத்தையும், தென் மொழியாகிய தமிழையும் ஆர்வத்தோடு பயின்றார்; ஜெர்மானிய அறிஞர்கள் இந்திய மொழிகளைக் குறித்து எழுதியிருந்த ஆராய்ச்சி நூல்களை அறிந்து கொள்வதற்காக ஜெர்மானிய மொழியைக் கற்றார். இவ்வாறு சிறந்த பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்த கால்டுவெல் ஐயர் தென்னிந்திய மொழிகளுக்குத் தொண்டு செய்யத் தலைப்பட்டார்.

இயற்கையிலேயே மொழி நூல் ஆராய்ச்சியில்[4] ஆர்வமுடையவராயிருந்தார். கால்டுவெல். ஸ்காத்லாந்து தேசத்திலுள்ள கிளாஸ்கோ சர்வ கலாசாலேயில் அவர் கல்வி பயின்றபோது அவ்வாசை அதிகரித்தது. அதற்குக் காரணமாக இருந்தவர் அச்சர்வகலாசாலையில் கிரீக்குமொழி கற்பித்த பேராசிரியர். அவர் ஊக்கமாக நடத்திய மொழி நூற்பாடம் கால்டுவெல் உள்ளத்தில் பசுமரத்தாணிபோற் பதிந்தது. பல மொழிகளை ஒப்பிட்டு ஆராயும் முறையில் அவருக்கு இருந்த ஆசை வளர்ந்தெழுந்தது. சர்வகலாசாலையில் பி. ஏ. பட்டம் பெற்றுத் தமிழ்நாட்டில் தொண்டு செய்யப் போந்தபோது அவர் மனத்திலெழுந்த ஆசை நிறைவேறுவதற்கு நல்லதோர் வாய்ப்புக் கிடைத்தது.

கால்டுவெல் ஐயர் தமிழ் மொழிக்குச் செய்துள்ள நன்மையை நன்கு அறிந்துகொள்ள வேண்டுமானல், அவர் காலத்திற்கு முன்னே தமிழ் நாட்டில் வழங்கிய சில கொள்கைகளைத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். தென்னாட்டு மொழியாகிய தமிழை வடநாட்டு மொழியாகிய ஆரியத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. நினைப்பிற்கு எட்டாத நெடுங் காலமாக ஆரியமும் தமிழும் இந்திய நாட்டில் வழங்கி வருதலால் அவற்றைக் கடவுளே பிறப்பித்தார் என்று அறிஞர்கள் கருதினார்கள். ஆதிபகவனே ஆரிய இலக்கணத்தைப் பாணினி முனிவர்க்கும், தமிழ் இலக்கணத்தை அகத்திய முனிவர்க்கும் அறிவுறுத்தியதாகப் பாடினர் ஒரு புலவர்.[5]

அகத்தியர் இயற்றிய இலக்கணம் மறைந்துவிட்டமையால் ஆரிய இலக்கணத்தைப் பின் பற்றித் தமிழிலக்கணம் எழுதத் தலைப்பட்டார் பலர். வீரசோழியம் என்னும் இடைக்காலத் தமிழிலக்கணம் அப்போக்கை நன்கு காட்டுகின்றது. நாளடைவில் ஆரிய மொழியிலிருந்தே தமிழ் முதலிய தென்னாட்டு மோழிகள் எல்லாம் பிறந்தன என்னும் கருத்து நிலைபெறுவதாயிற்று. பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இலக்கணக் கொத்து என்ற நூலில் இக்கொள்கை அழுத்தமாகக் கூறப்படுகின்றது. "வட மொழி தென்மொழி எனும் இரு மொழியினும், இலக்கணம் ஒன்றே என்றே எண்ணுக“ என்றார் அவ்விலக்கண ஆசிரியர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் கால்டுவெல் செய்த ஆராய்ச்சியின் பயனாக அக்கொள்கை தவறு என்பது நன்கு விளங்கிற்று. அக்காலத்தில் மதிநலம் வாய்ந்த மேலைநாட்டுத் தொண்டர் நால்வர். நான்கு சிறந்த திராவிட மொழிகளையும் ஆராயத் தொடங்கினார்கள். மலையாள மொழியை [6]டாக்டர் குந்தார்த்தர் துருவி யறிந்தார். கன்னடத்தை டாக்டர் கிட்டல் கற்றுணர்ந்தார். தெலுங்கை பிரெளவுன் என்னும் அறிஞர் ஆராய்ந்தார். தமிழின் நீர்மையை அளவிட்டறிந்து கொண்டிருந்த கால்டுவெல் ஐயர், இம் மூவரும் செய்த ஆராய்ச்சியைத் துணைக்கொண்டு "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்“ என்னும் சிறந்த நூலை இயற்றினார்.

ஆரிய மொழியின் இலக்கணம் வேறு, திராவிட மொழியின் இலக்கணம் வேறு என்பதைக் கால்டுவெல் தமது ஒப்பிலக்கணத்தில் தெள்ளத் தெளிய உணர்த்தினார்; தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளுக்கும் அடிப்படையான இலக்கணம் ஒன்றே என்பதைச் சான்று காட்டி நிறுவினார் ; தென்னிந்திய மொழிகளைத் திராவிட மொழி என்னும் பொதுச் சொல்லாற் குறித்தார். அவர் இட்ட பெயர் மொழிநூல் உலகத்தில் நிலைத்துவிட்டது.

தமிழ் மொழியைக் குறித்து ஒப்பிலக்கணத்திற் காணப்படும் இரண்டொரு கருத்துக்களை இங்கே கூறலாம். சங்க காலம் என்று சொல்லப்படும் பழங் காலத்தில் எழுதப்பட்ட நூல்களில் ஆரியச் சொற்கள் அருகியிருத்தலையும், பிற்காலத்தில் எழுதப்பட்ட தமிழ் நூல்களில் ஆரியப் பதங்கள் பெருகியிருத்தலையும் கால்டுவெல் ஐயர் எடுத்துக் காட்டுகின்றார். தமிழ் மொழியில் பல கருத்துக்களை உணர்த்தக்கூடிய பதங்கள் இருந்தும், அவற்றைக் கைவிட்டு ஆரியப் பதங்களே எடுத்தாளும் பழக்கம் ஏற்பட்டதனாலேயே நாளடைவில் பல தமிழ்ச் சொற்கள் இறந்து பட்டன என்று கூறுகின்றார். இன்னும், ஆரியச் சொற்களின் உதவியின்றியே தமிழ் தனித்து இயங்கவும், செழித்து ஓங்கவும் கூடும் என்று சொல்கின்றார். இவை போன்ற பல ஆழ்ந்த கருத்துக்கள் ஒப்பிலக்கணத்தில் ஆராய்ந்து கூறப்பட்டுள்ளன. சுருங்கச் சொல்லின், திராவிட மொழிகளுக்குப் புத்துயிர் அளித்தவர் கால்டுவெல் ஐயரே. அம்மொழிகளின் பழமையையும் பண்புகளையும் மேலைநாட்டார்க்குச் செப்பமாகக் காட்டியவர் கால்டுவெல் ஐயரே. ஆதலால் திராவிட மொழிகள் உள்ளளவும் அவர் இயற்றிய ஒப்பிலக்கணம், குன்றில் இட்ட விளக்குப்போல் நின்று. நிலவும் என்பது திண்ணம். கால்டுவெல் ஐயர் வாழ்ந்த இடையன்குடி இக்காலத்தில் எல்லா வன்கயிலும் ஏற்றமுற்று முன்னணியில் நிற்கின்றது. அங்குள்ள பெரிய கிருஸ்தவக் கோயில் கால்டுவெல் ஐயரின் சிறந்த ஞாபகச் சின்னமாக விளங்குகின்றது. அத்திருப் பணியைச் செய்து முடித்தவர் அவரே. கோயில் கட்டுமான வேலை அரை குறையா யிருக்கும் பொழுது சென்னைக் கவர்னர் லார்டு நேப்பியர் இடையன்குடிக்கு விஜயம் செய்தார் ; பரிவாரங்களோடு ஒரு வாரம் அங்குத் தங்கி ஐயரோடு அளவளாவி மகிழ்ந்தார்; ஐந்நூறு ரூபாய் திருப்பணிக்கு நன்கொடையாக அளித்தார்.

கால்டுவெல் ஐயர் தமிழ் நாட்டில் வாழ்ந்த ஐம்பத்துமூன்று ஆண்டுகளில் மூன்று முறை ஆங்கில நாட்டுக்கு இளைப்பாறச் சென்றார். மூன்றாம் முறை சென்றபொழுது அங்கேயே தங்கி விடும்படி அன்பர் பலர் அவரை வேண்டிக்கொண்டார்கள். அதற்குக் கால்டுவெல் இணங்கவில்லை. "இத்தனை காலமும் இந்தியர்களுக்காகவே வாழ்ந்தேன்; இன்னும் உயிர் உள்ள அளவும் அவர்களுக்காகவே உழைப்பேன் ; அவர்கள் நாட்டிலேயே உயிர் துறப்பேன்“ என்று உருக்கமாகக் கூறினார். அவ்வாறே எழுபத்தேழாம் வயதில் கொடைக்கானல் மலையில் அவர் ஆவி பிரிந்தது.

ஐயர் மேனியை இடையன்குடிக்கு எடுத்துச் சென்று அவர் கட்டிய கோயிலிலே அடக்கம் செய்தார்கள். தன்னலம் கருதாது, மெய்வருத்தம் பாராது, தமிழ் நாட்டுக்காகவே ஐம்பத்து மூன்று ஆண்டுகள் அரும்பணி புரிந்து அமைதியுற்ற கால்டுவெல் ஐயர் தமிழ்த் தாயின் தவப்ப்தல்வர் அல்லரோ ?

* * *

* * *

குறிப்புகள்

↑ "வேழம் உடைத்து மலைநாடு, மேதக்கச்

சோழ வளநாடு சோறுடைத்து-பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து, தெண்ணீர் வயற்றொண்டை

தன்னாடு சான்றோர் உடைத்து“

என்று பாடினார் ஔவையார்.

↑ "கோடும் குவடும் பொருதரங்கக் குமரித்துறையிற்

படுமுத்தும் கொற்கைத் துறையில் துறைவாணர்

குளிக்கும் சலாபக் குவால் முத்தும்

ஆடும் பெருந்தண் துறைப் பொருநை

ஆற்றிற் படுதெண் நிலா முத்தும்

அந்தண் பொதியத் தடஞ்சாரல்

அருவிசொரியும் குளிர் முத்தும்“

என்பது அவர் அருளிய பாட்டு.

↑ “a great and noble city.”

↑ Comparative Philology.

↑ "வடமொழியைப் பாணினிக்கு

வகுத்தருளி அதற்கிணையாத்

தொடர்புடைய தென்மொழியை

உலகமெலாம் தெர்ழுதேத்தும்

குடமுனிக்கு வலியுறுத்தார்

கொல்லேற்றுப் பாகர் எனில்

கடல்வரைப்பின் இதன் பெருமை

யாவரே கணித்தறிவார்.“

↑ Dr. Gundert

4. எல்லீசர்

* * *

ஆங்கில நாட்டிலே தோன்றினார் எல்லீசர் என்னும் நல்லறிஞர் ; இந்திய துரைத்தனத்திற்குரிய கலைகளைக் கற்றுத் தேறினார். அவர் சிறந்த மதிநலம் வாய்ந்தவர் : எப்பொருளையும் ஆராய்ந்து மெய்ப்பொருள் காணும் மேதை.

அரசியலாளர் அவரைச் சென்னை [1]நிலவரி மன்றத்தின் செயலாளராக முதலில் நியமித்தனர்; எட்டாண்டுகள் அவர் அம்மன்றத்தில் சிறந்த பணி புரிந்தார் ; அக்காலத்தில் தென்னாட்டுக் [2]காணியாட்சி முறைகளைக் கருத்தூன்றிக் கற்றார்; காணியாளருடைய கடமையையும் உரிமையையும் தெள்ளத் தெளியச் சென்னை அரசியலாளருக்கு உணர்த்தினார். மிராசு முறையைக் குறித்து அவர் எழுதிய நூல் இன்றும் ஆதாரமாகக் கொள்ளப்படுகின்றது.

பின்னர், பத்தாண்டுகள் எல்லீசர் சென்னைக் கலெக்டராக இருந்தார் ; அப்போது இந்திய நாட்டு மொழிகளைக் கற்றுணர ஆசைப்பட்டார் ; நல்லாசிரியர்களின் உதவி பெற்று வடமொழியும் தென்மொழியும் வருந்திக் கற்றார். தென்னாட்டில் வழங்கும் மொழிகளுள் தமிழ் மொழியின் செம்மையும் தொன்மையும் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன ; சென்னையில் சிறந்த தமிழ்ப் புலவர்களாக விளங்கிய சாமிநாத பிள்ளை, இராமச்சந்திரன் கவிராயர் முதலியோருடன் ஏட்டுச் சுவடிகளில் அமைந்த தமிழ் நூல்களை நாள் தோறும் மெய்வருத்தம் பாராது கற்றார். பழந்தமிழின் பண்புகளைப் பளிங்குபோற் காட்டும் திருக்குறளை மேலே நாட்டாரும் அறிந்து பயனுற வேண்டும் என்பது அவரது பேராசை. அந்நோக்கத்தைக் கொண்டு திருக்குறளுக்கு ஆங்கிலத்தில் விளக்கமான விரிவுரை யொன்று எழுதத் தொடங்கினார். ஆனால் அப்பணி முற்றுப்பெறாது போயிற்று. அடியும் முடியுமின்றி அது அரைகுறையாக அச்சிடப்பட்டிருக்கின்றது. அந்நூல். ஒன்றே எல்லீசரது தமிழ்ப் புலமைக்கு அழியாத நினைவுச் சின்னமாக நிலவுகின்றது.

அந்நூலில் திருக்குறட் பாக்களின் ஆங்கில் மொழி பெயர்ப்பை முன்னே தருகின்றார் எல்லீசர். பரிமேலழகர் உரையைப் பின்பற்றிய விளக்கவுரை பின்னே வருகின்றது. அதைத் தொடர்ந்து சங்கத் தமிழ் இலக்கியங்களிலிருந்தும், பிற்காலத் தமிழ் நூல்களிலிருந்தும் பொருத்தமான மேற்கோள்கள் ஆங்கில மொழிபெயர்ப்புடன் காட்டப்படுகின்றன. இறுதியாக இலக்கணக்குறிப்பு எழுதப்பட்டுள்ளது. தொல்காப்பியம், நன்னூல், தொன்னூல் முதலிய இலக்கணங்கள் நன்கு எடுத்தாளப்படுகின்றன. -

எல்லீசரது புலமைத் திறத்தையும், நடுவு நிலைமையையும் அறிந்து கொள்வதற்கு ஒரு சான்று போதியதாகும்.

"அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.

என்னும் குறளில் உள்ள அறவாழி, பிறவாழி பதங்களை விளக்குகின்றார் எல்லீசர். பரிமேலழகர் அறவாழி என்பதற்கு அறக்கடல் பொருள் உரைத்து, "பலவேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவாக உடையனாகலின் அறவாழி அந்தணன் என்பது கடவுளைக் குறிப்பதாயிற்று“ என விளக்ககம் கூறியுள்ளார். இக்கருத்தை எல்லீசர் ஏற்றுக் கொண்டார்; ஆயினும் சமண சமயத்தார் கூறும் உரையையும் விரிவாகத் தருகின்றார். அறவாழி என்னும் பதத்திற்குத் தரும சக்கரம் பொருள் கூறுவர் சமணப்புலவர்கள். பழைய நிகண்டுகளில் அறவாழி அந்தணன்? என்னும் பெயர் அருக தேவனுக்கே உரியதாக ஆளப்பட்டிருத்தலை எடுத்துக் காட்டி எல்லீசர் ஆராய்ச்சிக்கு ஒரு தூண்டுகோல் அளிக்கின்றார்.[3]இனிப் பிறவாழி என்னும் சொல்லுக்குப் பொருட் கடலும் இன்பக் கடலும் என்று உரை கூறினார் பரிமேலழகர். அக் கருத்தை ஆதரித்து ஆங்கிலத்தில் சில அறிஞர் மொழி பெயர்த்துள்ளார்கள்.[4] இன்னும், பிறவாழி என்பதனப் பிறவு ஆழி எனப் பிரித்துப் பிறப்பாகிய கடல் என்று பொருள் கொள்வாரும் உளர். எல்லீசர் வேறு ஒரு பொருள் கூறுகின்றார், அறமே உருவாய இறைவனை அறவாழி என்றமையால், அறத்தின் மாறுபட்ட பாவக்கடல் 'பிறவாழி' என்னும் பதத்தால் குறிக்கப்பட்டது என்பது அவர் கருத்து[5]. இவ்வாறு சில குறட்பாக்களுக்குப் புதியவுரை கண்டுள்ளார் எல்லீசர்.

தென்னாட்டு மொழிகளில் துரைத்தனத்தார்க்கு முறையாகப் பயிற்சியளிக்கும் வண்ணம் சென்னை அரசாங்கத்தார் கல்விச் சங்கம் ஒன்று நிறுவினர்.[6] அச் சங்கத்தை அமைப்பதற்குப் பெருமுயற்சி செய்தவர் எல்லீசரேயாவர். அதனை நேரில் அறிந்த தமிழறிஞர் ஒருவர் அவர் பெருமையை மனமாரப் புகழ்ந்துள்ளார். கொழு கொம்பில்லாது அலைகொடி போலும், கொழுநன் இல்லாக் குலக்கொடி போலும், ஆதாரமின்றித் தேய்ந்து கிடந்த ஆரியம், தெலுங்கு, மலையாளம் முதலிய இத்தேச மொழிகளில் தேர்ந்து, தமிழ் இலக்கண இலக்கியத்தை ஒருங்குணர்ந்து, சென்னையில் கல்விச் சங்கம் நாட்டுதறகு வேண்டும் முயற்சி செய்தமைத்து, அப்பல்கலைச் சங்த்தைப் பாண்டியனைப் போலும் பாதுகாத்தார். எல்லிசு துரை என்பது அவர் அளித்த பாராட்டுரை.

அக் கல்விச் சங்கத்தின் மானேசராக இருந்த முத்துசாமிப் பிள்ளை என்பவர் சிறந்த தமிழ் அறிஞராகவும் விளங்கினார். ஏசு மதத்தின் சார்பாகத் தத்துவ போதகர், வீரமாமுனிவர், சாங்கோ பாங்கர் முதலிய துறவோர் எழுதிய நூல்களை அவர் நன்கு கற்று, அவற்றில் அமைந்த கருத்து நுட்பங்களையும் கட்டுரை நயங்களையும் யாவரும் கேட்டு வியக்கும்வண்ணம் சொற்பொழிவு செய்து வந்தார். புதுச்சேரி அன்பர் ஒருவரால் சுருக்கமாக எழுதப்பட்டிருந்த குறிப்புகளை ஆதரவாகக் கொண்டு, முதன் முதல் வீரமாமுனிவரது சரித்திரத்தை விளக்கமாக எழுதி வெளியிட்டவர் அவரே. அப்பணியில் அவரை உய்த்து ஊக்குவித்தவர் எல்லீசர். வீரமாமுனிவர் தொண்டு செய்த இடந் தொறும் சென்று அவர் இயற்றிய நூல்களைச் சேகரிக்கும் பணியை எல்லீசர் அவரிடம் ஒப்புவித்து, அதற்கு வேண்டிய பொருளும் தாராளமாக உதவினார். இங்ஙணம் முத்துசாமிப் பிள்ளை சேகரித்த நூல்களுள் சிறந்தது தேம்பாவணிக் காவியம்.

வீரமாமுனிவர் தாமே எழுதிய தேம்பாவணிக் கையெழுத்துச் சுவடி ஆவூர் என்ற சிற்றூரில் அகப்பட்டது. அந்நூலைக் கண்டு அகமகிழ்ந்தார் முத்துசாமிப் பிள்ளை: அச்சுவடிக்குரியவராகிய நாயக்கரை எல்லீசரிடம் அழைத்துச் சென்றார். அவர் அதனை மிக்க ஆசையோடு ஏற்றுத் தக்கவிலை கொடுத்துப் பெற்றுக் கொண்டார். அருந்தமிழ்ச் சுவடிகளைச் சேகரிப்பதிலும், பாதுகாப்பதிலும் எல்லீசர் சிறந்த ஆர்வமுடையவராயிருந்தார் என்பதற்கு இது ஒன்றே போதிய சான்றாகும்.

எல்லீசர் தமிழ்ச் செய்யுளும் இயற்றியதாகத் தெரிகின்றது. அவற்றுள் நமக்குக் கிடைத்திருப்பது நமசிவாயப் பாட்டேயாகும். நமசிவாயத்தைப் பற்றி ஐந்து பாட்டுப் பாடியுள்ளார் எல்லீசர்.

"சர்வ வல்லமையுள்ள தெய்வமே! பேரானந்த வடிவாய பெருமானே! பரந்த உலகமெல்லாம் பற்றியாளும் பரமனே ! இம்மண்ணுலகத்தையாளும் சிற்றரசர்கள் தம் குடிகளைக் கண்டித்தும் தண்டித்தும் வரிப்பணம் வாங்குவர். ஆனல் அரசர்க்கெல்லாம் அரசனாய் விளங்கும் நீயோ ஒன்றையும் திறையாகப் பெறுதல் இல்லை. ஆதலால் வாக்காலே திறையளக்கும் வழக்கத்தை விட்டு, என் உள்ளத்தில் ஊறி எழுகின்ற அன்பினையே உனது திருவடியிற் காணிக்கையாகச் சொரிகின்றேன்“ என்ற கருத்தை யமைத்து எல்லீசர் பாடினார்.[7]

"நமசிவாய என்னும் ஐந்தெழுத்து சைவ சமயத்தார் போற்றும் தாரகமந்திரம் ஆயிற்றே! அதனை எவ்வாறு கிருஸ்தவராகிய எல்லீசர் எடுத்தாளலாம்“ என்ற கேள்வி எழுந்தது. அதற்கு விடை கூறும் வாயிலாக முத்துசாமிப் பிள்ளை நமசிவாயப் பாட்டுக்கு விருத்தியுரை யொன்று இயற்றிய எல்லீசர் கருத்தை விளக்கிக் காட்டினார் என்பர். "என்றென்றும் நிற்கும் ஏக கடவுட்கு நன்றென்று இதோ புரிந்தேன் நமஸ்காரம்“ என்பதே நமசிவாய என்ற சொல்லின் பொருள் என்பது முத்துசாமியார் கொள்கை. சிவம் என்ற சொல்லுக்கு நன்மை என்னும் பொருள் உண்டு. அது பற்றியே "நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே“ என்ற திருவாக்கு எழுந்தது. அருக தேவனைச் 'சிவகதி நாயகன்' என்று சிலப்பதிகாரம் குறிக்கின்றது. நற்கதியளிக்கும் நாயகனையே சிவகதிநாயகன் என்றார் இளங்கோவடிகள். எனவே, எந்நலமும் தரும் இறைவனேயே சிவ நாமத்தால் எல்லீசரும் குறித்தார் என்பது இனிது விளங்குவதாகும்.

தமிழ் மொழியின் செம்மையையும் தொன்மையையும் குறித்துப் பல ஆராய்ச்சிக் குறிப்புகள் எழுதி வைத்திருந்தார் எல்லீசர். ஆயினும் அவற்றை முறையாக வகுத்தும் தொகுத்தும் நூல் வடிவத்தில் எழுதுமுன்னமே முத்தமிழ் வளர்த்த மதுரைமா நகரைக் கண்ணாக் கண்டுவர விரும்பினர் ; அரசியலாரிடம் விடுமுறை பெற்று மதுரைக்குச் சென்றார். அங்கு கலெக்டராயிருந்த பெற்றி என்பவர் மனையில் விருந்தினராக அமர்ந்து, மதுரை மாநகரைப் பன் முறை சுற்றிப் பார்த்தார். "பாண்டி மன்னர் அரசு வீற்றிருந்து அருந் தமிழை ஆதரித்த நகரம் இதுவன்றோ ? கலை பயில்தெளிவும், கட்டுரை வன்மையும் வாய்ந்த புலவர் பல்லாயிரவர் சங்கத்தின் வாயிலாகத் தமிழ் வளர்த்த தலைநகரம் இதுவன்றோ ?

"புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி

வையை என்ற பொய்யாக் குலக்கொடி“

என்று இளங்கோவடிகள் பாடிய ஆற்றின் கரையில் அமைந்த அழகிய நகரம் இது வன்றோ ? என்று எண்ணி எண்ணி விம்மிதமுற்றார் ; கடைச் சங்கப் புலவர்களில் தலைசிறந்து விளங்கிய நக்கீரரைத் தனிக் கோயிலில் அமைத்து வழிபடும் மதுரைத் தமிழரது ஆர்வத்தைப் போற்றினார்.

இங்ஙணம் மதுரையம்பதியைக் கண்டு புதியதோர் ஊக்கமுற்ற எல்லீசர் ஒருநாள் இராமநாதபுரம் என்னும் மூதூரைக் காணச் சென்றார். அங்கு தாயுமானவர் சமாதி அடைந்த இடத்தைக் கண்டு நெஞ்சுருகி நின்றார். "இன்றைக்கிருந்தாரை நாளைக்கிருப்பர் என்றெண்ணவோ திடமில்லையே“ என்ற பாட்டை உருக்கமாகப் பாடினார். பின்பு அவ்வூரில் காணத்தக்க இடங்களை எல்லாம் கண்டு, நண் பகலில் தம் இருப்பிடம் போந்து உணவருந்தினார். சிறிது நேரத்தில் அவ்வுணவிலே கலந்திருந்த நஞ்சு அவர் குடலை அறுப்பதாயிற்று. மாற்றுக் கொடுக்கவல்ல மருத்துவர் யாவரும் அவ்வூரில் அகப்படவில்லை. எல்லீசர் துயருற்றுத் துடித்து உயிர் துறந்தார்.

சென்னையிலும் மதுரையிலும் இருந்த அவர் உடைமைகளை அரசாங்கத்தார் நியமித்த அதிகாரி ஒருவர் ஏலமிட்டார். பெற்றியின் பங்களாவில் எல்லீசரின் ஆராய்ச்சிக் குறிப்பமைந்த பொதிகள் ஓர் அறையில் குவிந்திருந்தன. அத்தமிழ்ப் பொதிகளை அதிகாரி ஏலம் கூறினார். பாண்டியர் தமிழ் வளர்த்த பழம்பதியில் அவற்றைத் தீண்டுவார் யாருமில்லை. பெற்றியின் பங்களாவில் அடுப்பாரும் எடுப்பாரு மின்றி அவலமாய்க் கிடந்த ஆராய்ச்சித் தாள்களை அவர் சேவகர் பலநாள் அடுப்பெரித்து இடத்தைக் காலி செய்தாராம். [8]"யாரறிவார் தமிழ் அருமை. “.........................................." மதுரை முதூர் நீர் அறியும் நெருப்பறியும்“ என்று பாடிய புலவர் வாக்குப் பலித்ததே !

* * *

குறிப்புகள்

↑ நிலவரி மன்றம்—Board of Revenue.

↑ காணியாட்சி–Land Tenure.

↑ The title அறவாழி அந்தணன் though assigned by R. C. J. Beschi in the orgsgårrá to the Supreme Being, is in all other Tamil Dictionaries given to அருகன்—Ellis.

↑ The Stormy seas of wealth and Sense-delights cannot be traversed except by those who cling to the feet of the Sage who is the Ocean of Righteousness, —V. V. S. Iyer

↑ அறவாழி the sea of virtue occuring at the beginning of the couplet as an epithet of the Deity. பிறவாழி the other sea signifies consequently that which different from virtue, that is, the sea of vice: thiru- valluvar uses this term பிற to designate of some quality or thing previously mennoned Ellis—p.14

↑ In 1812 Government created the Boards for the College of Fort St. George. The Colleg besides training the Civil servants in the vernaculars of the Province supervised the instruction of mmshisa and of persons who were to be appointed as law officers and pleaders in the Provincial Courts. This College had a very useful career. History of Madras—P. 216.

↑ "சிற்றிறைவர் இவ்வுலகுள் சிறியோரின் சிறுபொருளில்

வற்றிறையை வாங்குவரே வல்லமையும் மகிழ்ச்சியுள்ள

பற்றிறைவன் நீதிறையை வாங்காயே ஆனதினால்

சொற்றிறைவிட்டுட்டிறையைச் சொரிவேனே நமசிவாய“

என்பது அப்பாடல்.

↑ “Arriving in India as a young civilian in 1796, he early devoted himself to the study of the languages, history and antiquities of the land in which his lot was cast. When his task was almost completed he undertook a journey to Madura, the Athens of the South, for the elucidation of some minor details and resided for sometime with Mr. Rous Petre, the Collector of the District. During a short excursion to Ramnad, he accidentally swallowed some poison and died on March 10, 1819. His ordinary tangible property was sold by auction at Madura and Madras under instructions from the Administrator-General, but all his papers were lost or destroyed. It used to be currently reported that they served Mr. Petre's cook for months to kindle his fire and singe fowls ”. — Indiam Antiquary Vo. IV. p. 220.

5. ரேனியஸ் ஐயர்

* * *

தமிழ் மொழிக்குப் பேச்சாலும் எழுத்தாலும் பெருந் தொண்டு புரிந்தவருள் ஒருவர் ரேனியஸ் ஐயர். அவர் பிரஷ்யா தேசத்திலே பிறந்தவர். அவர் தந்தை அந்நாட்டுப் பட்டாளத்தில் ஒரு பதவி பெற்ற வீரர். இளமையிலேயே தந்தையை இழந்த ரேனியஸின் உள்ளம் கிருஸ்தவ வேத நெறியிற் கவிந்தது. இருபத்திரண்டாம் வயதில் அவர் அவ்வூர்க் கிருஸ்தவ சங்கத்தைச் சேர்ந்தார்.

அடுத்த ஆண்டில் ஆங்கில நாட்டுச் சர்ச்சு முறைச் சங்கம்[1] அவரைப் பணி செய்ய அழைத்தது. அதற்கிணங்கி ஆங்கில நாட்டிற் போந்து அவர் சில காலம் தொண்டு புரிந்தார் ; பின்பு அச்சங்கத்தின் சார்பாகச் சென்னையில் வந்து சேர்ந்தார்.

தமிழ் நாட்டில் சிறப்பாகக் கிருஸ்தவப் பணி செய்யக் கருதிய ரேனியஸ் ஐயர் தமிழ்மொழியை விரைந்து கற்றார். ஐந்தாண்டு சென்னையில் தொண்டு செய்த பின்பு சங்கத்தார் அவரைப் பாளையங்கோட்டைக்கு மாற்றினர். அங்கு அவர் தமிழறிவு வளம் பெற்றது ; தமிழ்ப் புலமைவாய்ந்த திருப்பாற்கடல்நாதன் கவிராயரை அடுத்துப் பதினாகு ஆண்டு நன்னூல் முதலாய இலக்கணங்களை முறையாகக் கற்றுணர்ந்தார். இனிமையாகப் பேசுந் திறம் அவர்க்கு இயல்பாகவே அமைந்திருந்தது. பிற மதத்தினரும் அவர் பேச்சைக் கேட்க ஆசைப்பட்டார்கள். திருநெல்வேலி நகரத்தில் வாரந்தோறும் அவர் சொற்பொழிவு நிகழ்ந்தது. அதைக் கேட்ட இந்துக்களிற் பலர் நற்கலைப் பயிற்சியில் நாட்ட முற்றார்கள். [2]

தமிழ் நாட்டில் ஆண்களப் போலவே பெண்களும் கல்வி கற்றல் வேண்டும் என்பது ரேனியஸ் ஐயரின் கொள்கை. பெண்களுக்குக் கல்வி பயிற்றுவதற்காகப் பாளையங்கோட்டையில் அவர் ஒரு பாடசாலை நிறுவினர். முப்பத்தாறு மாணவிகளோடு தொடங்கிய கல்லூரி இன்று மிகச் சிறப்பாக அவ்வூரிலே நடைபெற்று வருகின்றது.

அக்காலத்தில் தமிழ்க் கிருஸ்தவர்கள் ஓதி வந்த வேத நூலைத் திருத்திப் பதிப்பிக்கக் கருதினார் சென்னை பைபிள் சங்கத்தார் ; அதற்குத் தக்க தமிழ்ப் புலமை வாய்ந்தவர் ரேனியஸ் ஐயரே எனக் கருதி அவரை வேண்டிக்கொண்டார்கள். ஐயர் அப்பணியிலே புகுந்து ஆராய்ந்த பொழுது, முந்திய தமிழ் வேத நூலைத் திருத்துவதைவிடப் புதிதாகப் பைபிளை மொழி பெயர்த்தலே பொருத்தமுடையதாகத் தோன்றிற்று. பதம் பதமாக எடுத்துப் பைபிளை மொழி பெயர்க்கும் முறை சிறந்த தன்று என்றும், வேதப் பொருளைத் தெளிவாகத் தெரிவிக்கும் முறையில் அமைந்த மொழிபெயர்ப்பே ஏற்றமுடைய தென்றும் அவர் கருதினார். அவ்வண்ணமே பன்னீராண்டு முயன்று ஆதி நூல்களுக்கு இணங்கப் 'புதிய ஏற்பாடு' முழுவதும் மொழி பெயர்த்து முடித்தார். அவர் மொழி பெயர்த்த நூலைப் பரிசீலனை செய்தது. சென்னை பைபிள் சங்கம். வேத வாக்கை ஒல்லும் வகையில் அடுக்குப் பிறழாமல் அப்படியே மொழி பெயர்த்தல் வேண்டும் என்பது சங்கத்தார் கொள்கை. ஆதலால் ரேனியஸ் ஐயரின் மொழி பெயர்ப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

தமிழ் இலக்கணம் பயிலும் மாணவர்களுக்கு அந்நாளில் நன்னூல் ஒன்றே சிறந்த சாதனமாக இருந்தது. நல்லாசிரியர் ஒருவரை யடுத்து அந்நூலைப் பாடங் கேட்டல் அக்காலத்து வழக்கம். ஆனால் அது எல்லோர்க்கும் இயலவில்லை. கிருஸ்தவ சமயத்தைப் பரப்பும் பணியை மேற்கொண்ட அன்பர்கள் எளிதாகத் தமிழிலக்கணத்தைக் கற்றுப் பிழையறப் பேசவும் எழுதவும் வேண்டும் என்று ரேனியஸ் ஆசைப்பட்டார் ; அதற்கு ஏற்ற வகையில் ஓர் இலக்கணம் எழுதினார். அது வீரமாமுனிவர் இயற்றிய கொடுந் தமிழ் இலக்கணத்தைத் தழுவி எழுந்ததாகும். எழுத்தியில், சொல்லியல், தொடரியல் என்னும் மூன்று பகுதிகளையுடைய இவ்விலக்கணத்தில் தொடரியல் விரிவாக எழுதப்பட்டிருக்கின்றது. எழுவாய், பயனிலை முதலிய வாக்கிய உறுப்புக்கள் உரைநடையில் அமையும் பான்மையை ஆசிரியர் பல உதாரணங்களுடன் விளக்கியுள்ளார். தமிழ் நாட்டில் போப்பையரது இலக்கணம் தோன்றுவதற்கு முன்னே ரேனியஸ் ஐயர் இலக்கணமே நன்னூலுக்கு அடுத்த வரிசையில் சிறந்து விளங்கிற்று.

தமிழில் அவர் எழுதிய வசன நூல்கள் பலவாகும். உயர்ந்த கருத்துக்களைத் தெளிந்த நடையில் உணர்த்தும் திறம் அவரிடம் அமைந்திருந்தது. அவர் இயற்றிய வசன நூல்களில் அழகுண்டு ; இனிமையுண்டு : நிரந்துரைக்கும் நீர்மையுண்டு ; வகுத்தும் தொகுத்தும் கூறும் வனப்பும் உண்டு. 'சமயசாரம்' முதலிய நூல்களில் இப்பண்புகளைக் காணலாம்.

இத்தகைய தமிழ்த் தொண்டராகிய ரேனியஸ் ஐயரின் ஆர்வத்திற்குச் சான்றாக நெல்லை நாட்டில் இன்றும் பல சின்னங்கள் காணப்படுகின்றன. பாளையங்கோட்டையின் முகப்பிலே அமைந்து அணி செய்கின்ற[3] கிருஸ்தவக் கோயில் ரேனியஸ் ஐயரின் முயற்சியாலேயே கட்டப்பட்டது. இந்துக்களும் இஸ்லாமியரும் அதற்குப் பொருளுதவி செய்தார்கள். பாளையங்கோட்டையில் வாழ்ந்த வெங்கு முதலியார் என்ற பெருஞ் செல்வர் சிறந்த நன்கொடை வழங்கினர்.

இன்னும், இக்காலத்தில் நெல்லை நாட்டில் சிறப்புற்று விளங்கும் டோனாவூர் என்னும் ஊரை உண்டாக்கியவர் ரேனியஸ் ஐயரே. புலியூர்க்குறிச்சி என்பது அதன் பழம் பெயர். ரேனியஸ் ஐயர் அவ்வூரிலுள்ள காலியிடங்களை விலைக்கு வாங்கி அங்கே கிருஸ்தவர்களைக் குடியேற்றினார். பிரஷ்யா தேசத்தைச் சேர்ந்த பிரபு ஒருவர் கிரையத் தொகையை நன்கொடையாக அளித்தார். டோனா என்பது அவர் பெயர். அவர் வழங்கிய நன்கொடையின் சிறப்பு என்றும் விளங்கும் வண்ணம் அவ்வூருக்கு [4]டோனாவூர் என்று ரேனியஸ் பெயரிட்டார்.

ரேனியஸ் ஐயர் பிடித்த கொள்கையைச் சாதிக்கும் பெற்றி வாய்ந்தவர் ; தாம் மெய்யாகக் கண்டவற்றை வற்புறுத்தும் முறையில் இறையளவும் தளர்பவர் அல்லர். அவர் மனத்தை மாற்ற எவராலும் இயலாது. சமயக்கொள்கையில் அவருக்கும் சர்ச்சு முறைச் சங்கத்தார்க்கும் கருத்து வேற்றுமை உண்டாயிற்று. நாளடைவில் அது வேரூன்றி வலுத்தது. சங்கத்தார் பலவாறாக முயன்றும் அவரைச் சரிப்படுத்த முடியவில்லை. வேறு வழியின்றி அவரை வேலையினின்றும் விலக்கினர். அதைக் குறித்து ரேனியஸ் சிறிதும் கவலைப்படவில்லை; தனிப்பட்ட நிலையில் தம் தொண்டுகளைத் தடையின்றிச் செய்துகொண்டிருந்தார். பலர் பொருளுதவி செய்து அவரை ஆதரித்தார்கள். திருநெல்வேலிக் கிருஸ்தவ

* * *

குறிப்புகள்

↑ சர்ச்சு முறைச் சங்கம்-C. M. S. Mission.

↑ * “He is bold, impressive, vivid, cheerful in his whole appearance, happy in his illustrations, and a master not only of their language (Tamil) but of their feelings and views.” –The C. M. S. în Tinnevelly, p. 42.

↑ The Trinity Church was built by public subscription through the exertions of C. E. Rhenius in 1826. The expenses of lighting the Church are still met from the proceeds of land which Vengu Mudalivar presented to the Mission. —Tinnevelly Gazetteer P. 482.

↑ In 1827 Rhenius purchased a sité formerly known as Pooliyurkurichy with money subscribed by a devout Prussian gentleman Count Dohna of Schledin, and called it after him Dohnavur. —The C. M. S. in Tinnevelly P. 46.

6. வேதநாயகம் பிள்ளை

* * *

தமிழ் நாட்டிலே தோன்றிய நல்லியற் கவிஞருள் ஒருவர் வேதநாயகர். அவர் நகைச்சுவை நிரம்பிய நூல்களால் தமிழ் மொழியை அழகு செய்தவர். இசைத் தமிழின் பெருமையைக் கீர்த்தனங்களால் நாட்டியவர். தமிழில் நாவல் என்னும் நவீனக் கதை இயற்றுவார்க்கு நல்வழி காட்டியவர்.

இத்தகைய வித்தகர் திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் உள்ள குளத்தூரிலே பிறந்தார். அவர் பிறந்த குலமும், பெற்ற நலமும் ஒரு சிறப்புப் பாயிரத்தால் விளங்கும். [1]"கொங்குராய கோத்திரம் அதனில், வந்தவதரித்த செந்தமிழ்க் குரிசில்“ என்று அவரைப் பாராட்டினர் மகா வித்வான் மீனுட்சிசுந்தரம் பிள்ளை.

இளமையிலேயே வேதநாயகரிடம் விளங்கிய ஆங்கிலப் பயிற்சியையும், ஆன்ற பண்பினையும் அறிந்த அரசியலாளர் அவரை ஜில்லாக் கோர்ட்டில் மொழி பெயர்ப்பாளராக அமைத்தனர். அப்பணியில் அவர் காட்டிய திறமை துரைத்தனத்தாரது கருத்தைக் கவர்ந்தது; அதன் பயனகத் தரங்கம்பாடியில் முனிசீயாக அவர் நியமிக்கப்பெற்றர். அப் பணியை ஏற்று நீதி பரிபாலனம் செய்யுங்கால் உற்றார் என்றும் மற்றார் என்றும் அவர் உணர்ந்ததில்லை; கீழோர் என்றும், மேலோர் என்றும் கருதியதில்லை இச்சகம் பேசும் கொச்சை மாக்களுக்கு இடங் கொடுத்ததில்லை. வழக்கின் தன்மையை உள்ளவாறுணர்ந்து தீர்ப்புச் செய்வதே அவர் வழக்கம். இத்தன்மை வாய்ந்த வேதநாயகரை நீதிமான் என்று எல்லோரும் புகழ்வாராயினர்.

தரங்கம்பாடியிலிருந்து வேதநாயகர் சீர்காழிக்கு முனிசிபாக மாற்றப்பட்டார். அப்போது நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம்சேர்ந்தாற்போல் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அங்குப் போந்து சில காலம் தங்கியிருந்தார். உணர்ச்சி யொத்த அறிஞர் இருவரும் சிலநாளில் சிறந்த நண்பர் ஆயினர். அவ்வூர்ப் பெரியோர் விரும்பிய வண்ணம் மகா வித்வான் சீகாழிக் கோவை என்னும் பிரபந்தம் இயற்றினார். அக் கோவை சீர்காழிச் சிவன் கோயிலில் உள்ள வலம்புரி மண்டபத்தில் வாசித்து அரங்கேற்றப்பட்டது. வேதநாயகர் நாள்தோறும் வந்து கேட்டு இன்புற்று அக்கோவையின் நயங்களையும், பிள்ளையவர்களின் புலமைத் திறத்தையும் பாராட்டிப் பல கவிகள் பாடினர்.

நன்னெறியில் நாட்டம் உடைய வேத்நாயகர் அவ்வப்போது தம் மனத்தில் அரும்பிய கருத்துக்களைப் பாட்டாகப் பாடி வைத்திருந்தார் : அப் பாடல்களை மகா வித்வானிடம் படித்துக் காட்டி அவர் அளித்த சிறப்புப் பாயிரத்தோடு நீதிநூல் என்னும் பெயரால் வெளியிட்டார். அந் நூலில் வேதநாயகர் பரோபகாரம் முதலிய அறங்களைப் பாராட்டுகின்றார் ; பஞ்சமா பாதகங்களைக் கடிந்துரைக்கின்றார் ; பரிதானம் பெறுவோரையும், பற்றுள்ளம் உடையோரையும் பரிகசிக்கின்றார். நல்லரசின் நீர்மையையும் வல்லரசின் தன்மையையும் அவர் நீதிநூலில் விளக்கிக் காட்டும் பான்மை நன்கு அறியத் தக்கதாகும். நன்னெறி வழுவாத மன்னர்க்கு நாடெல்லாம் அரண்மனை ; மன்னுயிர் எல்லாம் அவர் நற்படை : அன்னார் மனமெல்லாம் அவர் வீற்றிருக்கும் அரியாசனம். ஆனால் கொடுங்கோல் மன்னர்க்குக் குடிகளே பகைவர் ; அவர் அடி வைக்கும் இடமெல்லாம் படுகுழி ; மாளிகையே மயானம் என்னும் பொருள்பட வேதநாயகர் பாடியுள்ளார்.

சீர்காழியில் வாழ்ந்த காலத்தில் வேதநாயகர் இசைப் பாட்டிலே விருப்பம் உற்றார். தென்னாட்டு இசைத் தமிழின் வரலாற்றில் சிறந்ததோர் இடம் பெற்று விளங்குவது சீர்காழிப் பதியாகும். "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர்“ பிறந்த ஊர் சீர்காழியே. கம்பர் அருளிய இராமாயணத்தை அழகிய கீர்த்தனங்களாகப் பாடி அழியாப் புகழ்பெற்ற அருணசலக் கவிராயர் வாழ்ந்ததும் அப்பதியே. தில்லை மன்றத்தில் திருநடம் புரியும் இறைவனத் தெள்ளிய தமிழ்ப் பாட்டாற் போற்றிய முத்துத் தாண்டவரை ஈன்றதும் அவ்வூரே. இத்தகைய சீர்காழியின் மருங்கே யமைந்த ஊர்களும் இசை மணம் வாய்ந்தனவாகும். "பண்ணோடு இசை பாடும் அடியார்க்கு இம்மை யின்பமும் மறுமை இன்பமும் தரும் மணிகண்டன் மருவும் இடம்“ என்று திருஞானசம்பந்தர் போற்றிப் புகழ்ந்த [2]புள்ளிருக்குவேளூர் சீர்காழிக்கு அண்மையில் அமைந்துள்ளது. இன்னும், நற்றமிழ்ப் பாடல்களை ஒற்றறுத்துப் பாடும் வண்ணம் ஞானசம்பந்தருக்கு ஈசன் பொற்றாளம் ஈந்தருளிய கோலக்காவும் சீர்காழியை அடுத்துள்ள சிவப்பதியாகும்.

இத்தகைய சீர்காழியிலிருந்து மாயூரத்திற்கு முனிசீபாக மாற்றப்பட்டார் வேதநாயகர். பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல இசைப் பாட்டில் ஆசையுற்றிருந்த வேதநாயகர்க்கு மாயூரத்தில் சிறந்த இசைவாணர் பழக்கம் ஏற்பட்டது. 'நந்தனர் கீர்த்தனம்' பாடிப் புகழ்பெற்ற கோபால கிருஷ்ண பாரதியார் அப்போது அவ்வூரில் இருந்தார். அவர் பாடிய கீர்த்தனம் வேதநாயகர் உள்ளத்தைக் கவர்ந்தது. இசைப் பாட்டில் ஈடுபட்ட இருவரும் நாளடைவில் நண்பராயினர்.

மாயூரத்தில் வேதநாயகர் நீதிபதியாக இருந்த போது வல் வழக்குகள் நீதி மன்றத்திலே வரக்கண்டு மனம் வருந்தினார். அவ் வழக்குகளின் தன்மைக்கு அவரே ஒரு சான்று காட்டியுள்ளார். "கரமிலான் ஒருவன் வாதியைப் பிடித்தான் ; காலிலான் அவனை உதைத்தான்; வாயிலான் அவனைக் கடித்தான் ; இப்படிப் பிடித்து, உதைத்து, கடித்தவர்கள் மீது வாதி வழக்குத் தொடுத்தான். அவனுக்காக விறு விறுப்புடன் வாதாடி வம்பு செய்தார்கள் வக்கீல்கள். இவ்வாறு,

'தொண்டை கிழித்துக் கொண்டு

சண்டை செய்யும் வக்கீல்கள்

அண்டையில் இருந்து நம்

மண்டையை உடைத்தால் -

ஆண்டவனை நினைப்ப தெப்போது நெஞ்சே

ஐயன் பதத்தை நினைப்பதெப்போது நெஞ்சே”

என்று அவர் பாடுகின்றார்.

தெய்வ சாட்சியாக நீதிபரிபாலனம் செய்து வேதநாயகர் அடைந்த பெரும் புகழைக் கண்டு பொறாமை கொண்ட சிறியோர் சிலர் மேலதிகாரிகளிடம் கோளும் பொய்யும் சொல்லிக் குழப்பம் விளைவித்தார்கள். அன்னார் சிறுமையை ஒரு பாட்டாகப் பாடி ஆண்டவனிடம் முறையிட்டார் வேதநாயகர். "நல்லவர்களெல்லாம் நாட்டை விட்டு அகன்றார் ; ஞான சூனியரெல்லாம் நமக்கு அதிபதி என்றார். ஆகாத காலம் இது; அசடர் தலையெடுத்தார். பூவிற்ற கடையிலே புல் விற்கத் தொடங்கி விட்டார். என்ன வந்தாலும் மனமே-ஐயன் இருக்கையில் என்ன விசனமே என்னும் கீர்த்தனம் பாடிக் கவலையற்றிருந்தார். இறுதியில் அறம் வென்றது; அழுக்காறு வேரற்று வீழ்ந்தது[3].

அப்பொழுது தஞ்சை நாட்டில் கடும் பஞ்சம் வந்துற்றது. அதன் கொடுமையைக் கண்ட வேத நாயகர்! நெஞ்சுருகிப் பாடினார். "ஐயோ! மண்ணில் அநேகர் என் கண்முன்னே மாய்ந்தார்; எண்ணிறந்தவர் சருகுபோல் காய்ந்தார் : கண்ணிருண்டு களைத்து உடல் ஓய்ந்தார்; ஆண்டவனே உன்னையன்றி யாரே துணையாவார்“ என்று முறையிட்டார். ஒல்லும் வகையால் பசியின் கொடுமையைத் தணிப்பதற்குத் தன் செல்வத்தையும் செல்வாக்கையும் செலவிட்டு மாயூர நகரின் பல பாகங்களில் கஞ்சிச் சாலைகள் அமைத்தார். அங்கு வார்த்த கஞ்சியைப் பருகி மனங்குளிர்ந்து அவரை வாயார வாழ்த்திய ஏழை மாந்தர் பல்லாயிரவர். அவ்வறப் பணியைக் கண் குளிரக் கண்ட கோபாலகிருஷ்ண பாரதியார் வேத நாயகரை வியந்து 'நீயே புருஷ மேரு' எனத் தொடங்கும் கீர்த்தனம் பாடினர். பாரதியார் இயற்றிய கீர்த்தனங்களுள் இதுவொன்றே நரஸ்துதி[4] என்றால் வேதநாயகர் பெருமைக்கு வேறு சான்றும் வேண்டுமோ?

அக்காலத்தில் மாயூரத்துக்கு அண்மையிலுள்ள திருவாவடுதுறை ஆதீனத்தில் சுப்பிரமணிய தேசிகர் என்னும் சீலர் தலைவராக விளங்கினார். கற்றவரும், பொருளற்றவரும் அவர் ஆதரவை நிரம்பப் பெற்றனர். கலையின் கோயிலாகவும், கருணையின் நிலையமாகவும் திகழ்ந்த தேசிக மூர்த்தியிடம் வேதநாயகர் மிகவும் ஈடுபட்டார்.

"ஏனென்று கேட்பவர் இல்லாத் தமிழை இனிதளிக்க

நானென்று கங்கணம் கட்டிக் கொண்டாய் இந்த நானிலத்தே“

என்று அப்பெரியாரைப் பாராட்டினார்.

பஞ்சக் காலத்தில் அத்தேசிக மூர்த்தி பசித்தோர் முகம் பார்த்துப் பரிவுடன் உணவளித்தார். இவ்வாறு வருந்தி வந்தவர் அரும்பசி தீர்த்து 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத் தோரே' என்னும் வாசகத்தை மெய்ப்பித்த பெரியாரை வேதநாயகர் மனமாரப் போற்றினார்[5].

கிருஸ்தவ மதத்தில் வேதநாயகர் சிறந்த பற்றுடையவராயினும் தெய்வத்தின் பெயரால் சமயவாதிகள் சண்டையிட்டுக் கொள்ளுதல் தவறு என்பது அவர் கொள்கை. பாரத நாட்டிலுள்ள பல சமயவாதிகளும் சமரச உணர்ச்சியோடு பணி செய்தல் வேண்டும் என்பது அவர் ஆசை. இக் கருத்துக் கொண்டு அவர் பாடிய கீர்த்தனங்கள் பலவாகும்; அவற்றைத் தொகுத்துச் 'சர்வசமய சமரச கீர்த்தனம்' என்னும் பெயரால் வெளியிட்டார்.

பிறசமயத்தாருடன் வேதநாயகர் வேற்றுமையின்றிப் பழகினர். சைவ சமயத்தைப் போற்றி வளர்ப்பதற்காகத் தோன்றிய திருவாவடுதுறை மடத்திற்கு வேதநாயகர் அடிக்கடி சென்று வந்தார். இன்னும், சைவ சமயத்தில் சிறந்த ஆர்வமுடையவரும், திருவாவடுதுறை ஆதீன மகா வித்வானும் ஆகிய மீனாட்சிசுந்தரம் பிள்ளை வேதநாயகரின் ஆருயிர் நண்பர். வேதநாயகரைப் பாட்டுடைத் தலைவனாக அமைத்து அம் மகா வித்வான் ஒரு [6]கோவை பாடினார். குளத்தூர் வேதநாயகர் மீது பாடப்பட்ட கோவையாதலால் அது குளத்தூர்க் கோவை என்று வழங்குகின்றது. அக் கோவையில் தன்னேரிலாத தமிழ்வேத நாயகன் என்றும், நூல் ஆய நோற்ற மதிவேத நாயகன் என்றும் அவர் பெருமையை மகா வித்வான் பாடியுள்ளார்.

தமிழ் நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தில் மிகுந்த ஆர்வமுடையவர் வேதநாயகர். நல்ல எண்ணங்கள் இளமையிலே நங்கையர் மனத்திற் பதிதல் வேண்டும் என்பது அவர் கொள்கை. அக் கருத்துக்கொண்டு எழுந்தது 'பெண்மதிமாலை' என்னும் நூல். வேதநாயகர் தம் பெண் குழந்தைகள் படிப்பதற்காக அதனை எழுதினார் என்று தெரிகின்றது. பிறந்த மனையிலும், புகுந்த மனையிலும் பெண்கள் சோம்பலின்றி வேலை செய்தல் வேண்டும் என்றும், வாழ்க்கைப்பட்ட பெண் இல்லாள் என்று சொல்லப்படுவதால் அவளே வீட்டுக்கு அதிபதி என்றும், இல்லறம் நடத்தும் பெண்கள் நாள்தோறும் அறஞ்செய்தல் வேண்டுமென்றும், மாதா பிதா குரு தெய்வம்-இவர்களிடம் அன்பும் பணிவும் உடையவர்களாய் இருத்தல் வேண்டும் என்றும் [7]பெண்மதி மாலை கூறுகின்றது.

பெண்களுக்குக் கல்வி இன்றியமையாதது என்பதைப் பல கட்டுரைகளாலும் எடுத்துரைத்தார் வேதநாயகர். பெண் கல்வி, பெண்மானம் முதலிய கட்டுரைகள் பெண்மதி மாலையிற் சேர்க்கப்பட்டுள்ளன. பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும் என்பதற்குள்ள நியாயங்களைப் பெண் மானம் என்னும் வியாசம் விளக்குகின்றது.

வேதநாயகர் கதை நூல்களும் சில இயற்றினார். அவற்றுள் தலை சிறந்தது பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் கற்பனைக் கதையே யாகும். அதுவே தமிழில் எழுந்த முதல் நவீனக் கதை (நாவல்) என்று சொல்லப்படுகின்றது. பிரதாபன் கதை நகைச் சுவை நிரம்பியது; படிப்போர் மனத்தைப் பற்றி இழுத்துச் செல்லும் பண்புடையது ; மூடப்பழக்க வழக்கங்களே ஒழிப்பது; நல்ல பழக்கங்கள் பரவ வழிகாட்டுவது; கதாநாயகனாகிய பிரதாபனது கள்ளங் கபடமற்ற உள்ளம் நம் கருத்தை அள்ளுகின்றது. அவன் தாயாகிய சுந்தரமும், மனையாளாகிய ஞானாம்பாளும் மதிநலம் வாய்ந்த மங்கையர் குலத்திற்கு அணிகலன்களாக விளங்குகின்றார்கள். சுருங்கச் சொல்லின் அந் நவீனம் கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் கதையாகும். அக் கதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப் பட்டிருப்பதாகத் தெரிகின்றது[8].

பதினைந்து ஆண்டுகள் வேதநாயகர் முனிசீபாக வேலை பார்த்தார் ; அவ்வேலையின் கடுமையால் உடல் தளர்ந்தார்; அரசியலார் அனுமதி பெற்று வேலையினின்று விலகினார் ; பின்பு தமிழ்க் கலைகளிலே பொழுது போக்கினார். மாயூரம் நகர சபைத் தலைவராக அமர்ந்து நற்பணிகள் பல செய்தார்; ஞானசுந்தரி என்னும் நாவலும் இயற்றி வெளியிட்டார்; கடைசியாக "சத்திய வேத கீர்த்தனை“ என்னும் இசைப் பாட்டியற்றி அறுபத்தைந்தாம் வயதில் ஆண்டவன் அருளிலே கலந்தார்.

* * *

குறிப்புகள்

↑ நீதி நூலின் சிறப்புப்பாயிரம் - மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பாடியது.

↑ புள்ளிருக்குவேளூர் இப்பொழுது வைத்தீஸ்வரன் கோயில் என வழங்கும்.

↑ As District Munsif, he (Vedanayagam Pillai, was very popular and discharged his duties with great credit and ability, at a time when Munsifs of the present type were rare. He was distinguished also for his independence; he once declined to put up with the treatment accorded to him by a Judge, who was then well-known for his idiosyncrasies and who is now practising in the Madras Bar. -The Hindu 24th July 1889.

↑ கோபாலகிருஷ்ண பாரதியர்-டாக்டர், சாமிநாதய்யர் எழுதியது. பக். 81.

↑ நேரொன்று மில்சுப் பிரமணி யாதிப நின்னைப்பல்லோர்

காரென்று சொல்வர் அக் காரும் வஞ்சித்த இக் காலத்திலே

ஊரென்றும் வாழ அறுசுவை யுண்டி உதவி உன்தன்

பேரென்றும் நிற்கச் செய்தாய் உனக் காரெனல் பேதைமையே

என்பது அவர் பாட்டு.

↑ இக்கோவை நானுற்று முப்பத்தெட்டுச் செய்யுட்களை உடையது.

↑ மதியிது மதியிது பெண்ணே-புண்ய

வதியல்ல வோநல்ல மகராஜி கண்ணே

வேலைக்கு நீ சிணுங்காதே-ஒரு

மூலக்குள் புகுந்து நீ-முணுமுணுக்காதே⁠ —மதி

வீட்டுக் கதிபதி நீயே-வெளி

நாட்டுக் கதிபதியுன்-நாயகன் சேயே⁠ — மதி

புண்ணியம் செய்யலாம் நாளை என

எண்ணி யிராதே—இது நல்ல வேளை⁠ —மதி

↑ I wish he could have lived to have seen Pratapa Mudaliar in English (the first hundred pages of which are now printed) Mr. G. Mackenzie Cobban's letter dated 26th July 1889 to Vedanayagam's son— Pratapa Mudaliar Charitram, Īrth edition, Ap.p. 5.7. H. A. கிருஷ்ண பிள்ளை[1]

* * *

தென்தமிழ் நாடாகிய நெல்லை நாடு மேலே நாட்டு அறிஞர் பலரைத் தமிழ்த்தொண்டராக்கிய பெருமை யுடையதாகும். இத்தாலிய தேசத்து வித்தராகிய வீரமாமுனிவரது தமிழ்ப் புலமைக்கு அடிப்படை கோலியது நெல்லை நாடு. பெருந்தமிழ்த் தொண்டராகிய போப்பையருக்குத் தமிழ் அறிவு ஊட்டியது நெல்லைநாடு. மொழிநூற் புலமையில் தலை சிறந்த கால்டுவெல் ஐயர் வாழ்ந்ததும் நெல்லே நாடே.

இங்ஙணம் பிற நாட்டு அறிஞரைத் தமிழ்ப் பணியில் உய்த்த தென்தமிழ் நாட்டில் ரெட்டியார் பட்டி என்ற சிற்றூர் ஒன்று உண்டு. அவ்வூரிலே தோன்றினார் கிருஷ்ண பிள்ளை. அவர் வேளாளர் குலத்தினர் ; வைணவ மதத்தினர். இளமையிலேயே தமிழில் உள்ள நீதி நூல்களையும், சமய நூல்களையும் அக்கால முறைப்படி அவர் நன்றாகக் கற்றார்.

அப்பொழுது நெல்லை நாட்டில் கிருஸ்தவ சங்கங்கள் கிளர்ந்து எழுந்து, சிறந்த சமயத் தொண்டு செய்து கொண்டிருந்தன. சர்ச்சு முறைச் சங்கத்தின் சார்பாகச் சார்சந்தர் என்னும் சீலர் சிறந்த பணி செய்தார். வேத விளக்கச் சங்கத்தின் சார்பாகக் கால்டுவெல் ஐயர் பெருந்தொண்டு புரிந்தார்.[2] அச்சங்கங்களின் ஆதரவில் பல ஊர்களில் பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட்டன.

சாயர்புரம் என்ற சிற்றூரில் போப்பையர் ஒரு கல்லூரி அமைத்துக் கண்ணும் கருத்துமாய்க் காத்துவந்தார். அவர் ஆங்கில நாட்டுக்கு இளைப்பாறச் சென்றபோது அக்கல்லூரிக்குத் தமிழ்ப் புலமைவாய்ந்த நல்லாசிரியர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கால்டுவெல் ஐயரைச் சார்ந்தது. அப்பதவிக்கு விண்ணப்பம் செய்த மூவருள் ஒருவர் கிருஷ்ண பிள்ளை. அவருக்கு அப்பொழுது வயது இருபத்தைந்து.

தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் போதிய அறிவு பெற்றிருந்தார் கிருஷ்ண பிள்ளை ; அந்நாளில் சிறந்த தமிழ்ப் புலவராக விளங்கிய திருப்பாற்கடல் நாதன் கவிராயரிடம் நன்னூலை முறையாகப் பாடங் கேட்டிருந்தார்; சமய நூல்களைக் குலவித்தையாக அறிந்திருந்தார். இத்தகைய தகுதி வாய்ந்தவரைக் கால்டுவெல் ஐயர் தெரிந்தெடுத்துச் சாயர்புரக் கல்லூரியில் தமிழாசிரியராக நியமித்தார்.

சாயர்புரத்தில் வேலை யேற்றுத் தமிழ்ப் பணி செய்து வரும் பொழுது கிருஷ்ண பிள்ளையின் வைணவப் பற்று மெல்லத் தளர்வுற்றது. கிருஸ்து மத போதகர்கள் காட்டிய அன்பென்னும் பாசம் அவர் உள்ளத்தை இழுத்தது. அன்றியும் அவர் உற்றார் உறவினர் சிலர், கிருஸ்துமதத்தை ஏற்றுக்கொண்டு அதன் செம்மையை அடிக்கடி எடுத்துரைப்பாராயினர். அந்நிலையில் கிருஷ்ண பிள்ளை கிருஸ்தவ நூல்களைக் கற்கத் தொடங்கினார். மன்னுயிர்க்காகத் தன்னுயிரை வழங்கிய கிருஸ்து நாதரின் தியாகம் அவர் மனத்தை ஈர்த்தது. விரைவில் மனம் திரும்பி, முப்பதாம் வயதில் சென்னையிலுள்ள மயிலைத் தேவாலயத்தில் அவர் ஞானஸ்நானம் பெற்றுக் கிருஸ்து மார்க்கத்தில் சேர்ந்தார். கிருஸ்து நாதரை அருட்பெருங் கடலாகவும், அஞ்ஞானத்தை அகற்றும் மெய்ஞ்ஞானக் கதிரவனாகவும், அடியவர்க்காக அருந்துயருற்று ஆவி துறந்த கருணை வள்ளலாகவும் கருதி வழிபட்டார் கிருஷ்ண பிள்ளை.

கிருஸ்து மதச் சார்பாகவுள்ள சிறந்த நூல்களை அவர் ஆர்வத்தோடு கற்றார், ஆங்கிலத்தில், ஜான் பனியன் என்பவர் இயற்றிய பாவனாசரிதம் [3]'மோட்சப் பிரயாணம்' என்னும் பெயரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. அந்நூலின் நயந் தெரிந்த கிருஷ்ண பிள்ளை. அதைத் தழுவித் தமிழில் ஒரு காவியம் இயற்ற ஆசைப்பட்டார். அவ்வாசையின் பயனே இரக்ஷணிய யாத்திரிகம் என்னும் காவியம்.

பாவத்திற் படிந்த உயிர் கவலையுற்று வாடி, ஆன்ம ரக்ஷகராகிய கிருஸ்து நாதரது அருளால் நித்தியஜீவனைப் பெற்றுப் பேரானந்தம் அடையும் தன்மையை விரித்துரைக்கும் காவியமே இரக்ஷணிய யாத்திரிகம். எனவே, கிருஸ்து நாதரே அக்காவியத்தில் போற்றப்படும் தலைவர்.

பெருங் காவியம் என்பது தன்னிகரில்லாத் தலைவனை உடையதாய் இருத்தல் வேண்டும் என்பர் தமிழிலக்கண நூலோர். தமிழ் மொழியில் பெருங் காவியங்கள் சிலவுண்டு. கம்பராமாயணமும், சிலப்பதிகாரமும் இரு பெருங் காவியங்கள். தன்னிகரில்லாத் தலைவனாகிய இராமன் பெருமை. இராமாயணத்தில் பேசப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் தன்னிகரில்லாத் தலைவியாகிய கண்ணகியின் செம்மை போற்றப்படுகின்றது. இவ்விரண்டும் வீரகாவியம். இவ்வுலகில் நிறைந்திருந்த தீமையை வில்லின் ஆற்றலால் வென்று ஒழித்தான் இராமன். கற்பின் வன்மையால் மதுரையம்பதியில் செறிந்திருந்த தீமையைச் சுட்டெரித்தாள் கண்ணகி. இரக்ஷணிய காவியத்தின் தலைவராகிய கிருஸ்து நாதர் இம்மாநிலத்தில் நிறைந்திருந்த தீமையை மகத்தான தியாகத்தின் ஆற்றலால் துடைத்தருளினார். ஆகவே இரக்ஷணிய யாத்திரிகம் ஆத்ம தியாகத்தின் பெருமையை அறிவுறுத்தும் அருங் காவியமாகும்.

கிருஸ்து நாதரது அரும் பெருந்தியாகத்தை அறிவதன் முன்னே, இவ்வுலகில் தீமை புகுந்த தன்மையைத் தெரிந்து கொள்ளுதல் வேண்டுமாதலால் இரக்ஷணிய காவியம் தொடக்கத்தில் அதனை எடுத்துரைக்கின்றது. இறைவன் ஆதி மனிதனையும், அவன் மனையாளையும் படைத்து, நிலவுலகத்தில் ஒரு வளமார்ந்த சோலையில் வாழ வைத்தார். அவ் வாழ்க்கையைக் கண்டான் சாத்தன் என்னும் அழிம்பன். அவன் பாவத்தை மணந்தவன் ; பழியைப் பெற்றவன் ; ஆண்டவனது சாபத்தை அடைந்தவன்; அனைவர்க்கும் ஆபத்தை விளைவிப்பவன். அக்கொடியவன் இறைவன் படைத்த மாநிலப் பரப்பையும், ஆற்றின் அழகையும், சோலையின் செழுமையையும், கடலின் விரிவையும் கண்டு பொறாமை கொண்டான் ; பூஞ்சோலை வாசிகளை வஞ்சித்து ஆண்டவன் படைத்த உலகத்தைத் தன்வசப்படுத்தக் கருதினான் ; பாம்பின் உருவம் கொண்டு சோலையிற் புகுந்து பசப்பு மொழி பேசி இருவரையும் தன் வசப்படுத்தினான். அந்நச்சு மொழியை நம்பி இருவரும் இறைவன் இட்ட ஆணையை மீறினர் ; மீளாத் துயரத்திற்கு ஆளாயினர். பாவத்தின் பயனாகப் பயங்கர மரணம் வந்துற்றது. சீரெல்லாம் சிதைந்தது. சிறுமை வந்துற்றது. "தற்பதம் இழந்த மாந்தர் தலையிழி சிகையே யன்றோ“ என்று சீரழிந்து சிறுமையுற்ற ஆதி மாந்தரை நினைந்து இரங்கிக் கூறுகின்றார் இரக்ஷணியக் கவிஞர்.

இவ்வாறு உலகத்திற் பல்கி யெழுந்த பாவத்திற்குரிய தண்டனையைத் தாம் அடைந்து, மாந்தர் குலத்தை ஈடேற்றத் திருவுளம் கொண்டார் தேவகுமாரன் ; மனித வடிவம் கொண்டு மண்ணுலகில் பிறந்தார்; சொல்லாலும் செயலாலும் எல்லார்க்கும் நன்னெறி காட்டினார்.

மன்னுயிர் பால் வைத்த அன்பினால் மரச்சிலுவை யேறினார். கிருஸ்து நாதர். அவர் சிலுவையில் ஏறவே, விண்ணுலகில் உவகை ஏறிற்று; பேயுலகில் திகில் ஏறிற்று; ஆன்றோர் : அருள் வாக்கு நிறைவேறிற்று. அன்று முதல் சிலுவை மாபெருந் தியாகத்தின் சின்னமாயிற்று. பரலோகம் என்னும் மூத்தி நகரத்தின் நெடிய கோபுரவாசலில் கிருஸ்து நாதரது தியாகக் கொடியைக் காண்கின்றார் கவிஞர். "நீதியும் இரக்கமும் கலந்து நிலவும் திருக்கோபுர வாசலில், கிருஸ்து நாதரது குருதி தேய்ந்த சிலுவைக்கொடி, மாந்தர் எல்லோரையும் இறைவனிடம் பரிந்து அழைக்கும் பான்மைபோல் இளங்காற்றில் அசைந்து ஆடும்“ என்று கவிஞர் உருக்கமாகக் கூறுகின்றார்.

அருள் வள்ளலாகிய கிருஸ்து நாதர் காட்டிய பொறுமையும் கருணையும் வாய்ந்தவரே மெய்க் கிருஸ்தவர் ஆவர் என்பது கிருஷ்ண பிள்ளையின் கருத்து. கிருஸ்தவப் பண்பு இந்நிலவுலகில் நிலை பெறல் வேண்டும் என்பது அவர் ஆசை. "எப்பொழுதும் மெய்யே பேசவேண்டும் : பொய் பேசலாகாது“ என்பது கிருஸ்து நாதர் அருளிய பத்துக் கட்டளைகளுள் ஒன்று. அதற்கு மாறாக "நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடும்“ தீயோரை நோக்கிப் பரிவு கூர்ந்து பாடுகின்றார் இரக்ஷணியக் கவிஞர்.

"அந்நியரையும் உன்னைப்போல் நேசிப்பாயாக என்னும் திருவாக்கை மறந்து, நெஞ்சாரப் பிறரை வஞ்சித்து வாழும் மதிகெட்ட மாந்தரே! மனம், மொழி, மெய் என்னும் மூன்றின் தன்மையையும் முற்றும் அறியவல்ல மகாதேவனை ஒரு நாளும் வஞ்சித்தல் இயலாது. ஆதலால் மனத்தில் நிகழும் அழுக்காறு முதலிய குற்றங்களையும், வாக்கில் நிகழும் பொய் முதலிய தீமைகளையும், செய்கையில் நிகழும் கொலை முதலாய கொடுமைகளையும் நீக்கி இறைவன் திருவருளை அடைந்து வாழ்வீராக“ என்று வேண்டுகின்றார் கவிஞர்.

இன்னோரன்ன உண்மைகளை உருக்கமாகப் பாடி மாந்தரையெல்லாம் நல்வழிப்படுத்த முயன்ற கிருஷ்ண பிள்ளை, எல்லாம் வல்ல இறைவனை ஊன்கரைந்து, உயிர் கரைந்து பாடிய பாடல்கள் இரக்ஷணிய மனோகரம் என்னும் நூலிற் காணப்படும். சைவ நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் பாடிய திருப் பாசுரங்களின் மணம் இரக்ஷணிய மனோகரத்திற் கமழ்கின்றது. இறைவனது பேரின்ப வெள்ளம் பொங்கிப் பெருகிப் பூரணமாய் நிற்கும் நிலையினைக் கண்டு அதனைப் பருகுமாறு பரிந்தழைக்கும் தாயுமானவர் முதலிய ஆன்றோர் பாடல்களில் உள்ள ஆர்வம் இரக்ஷணியப் பாடல்களிலும் அமைந்து நம் உள்ளத்தை அள்ளுகின்றது.[4]

இங்ஙனம் கிருஸ்து நாதர் பெருமையை விளக்கும் பெருங் காவியமும், அவரைப் போற்றி மனமுருகுவதற்கேற்ற திருப் பாசுரங்களும் இயற்றித் தமிழ் நாட்டார்க்குத் தொண்டு செய்த கவிஞர் எழுபத்து மூன்றாம் வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார். அவரது நற் குடியிற் பிறந்தவர்கள் பாளையங்கோட்டையில் இன்றும் சிறந்து வாழ்கின்றார்கள்.

* * *

குறிப்புகள்

↑ Henry Alfred Krishna Pillai.

* * *

Bishop Sargent of the Church Mission Society (C. M. S.). Bishop Caldwell of the Society for the Propagation of the Gospel (S. P. G.)

↑ The Pilgrim's Progress by John Bunyan.

↑ "தந்தை யாகி உலகனைத்தும் தந்து மதுக்கள். தமைப்புரக்க

மைந்த னாகிப் புனிதாவி வடிவாய் ஞான வரமருளிப்

பந்த மறநின் றிலங்குதிரி யேக பரமன் பதாம்புயத்தை

சிந்தையாரத் தொழு தேத்திச் சேர வாரும் செகத்தீரே.“

-இரக்ஷணிய நவநீதப் படலம், ?

8. வேதநாயக சாஸ்திரியார்[1]

* * *

தொண்ணூறு ஆண்டு தமிழ் நாட்டில் வாழ்ந்து தொண்டு புரிந்தவர் வேதநாயக சாஸ்திரியார். அவர் திருநெல்வேலி நகரில் தேவசகாயத்தின் மைந்தனாய்த் தோன்றினார்.அவர் பிறந்த வருஷம் 1774 என்பர். இளமையிலே அவர் தாயார் இறந்துவிட்டமையால், பாட்டனார் அவரைத் தம் வீட்டிற் கொண்டுபோய் வளர்த்தார். தாயில்லாப் பிள்ளையென்று அங்கு, யாவரும் அவர்மீது பரிவு காட்டினர். அதனை அறிந்த வேதநாயகம் அவ்வூர்ச் சிறுவரோடு சேர்ந்து ஆடிப் பாடிக் காலம் கழித்தார்.

கல்வி கற்பதற்குரிய இளமைக் காலம் இவ்வாறு விளையாட்டிற் கழியக்கண்ட தேவ சகாயம் வருத்தமுற்றார்; பாட்டனார் வீட்டிலிருந்து தம் மகனை வருவித்துத் திருநெல்வேலித் திண்ணைப் பள்ளியிற் சேர்த்தார். ஆயினும் பள்ளிப் படிப்பில் வேதநாயகத்தின் உள்ளம் பற்றவில்லை. அது கண்ட தந்தையார் கவலைகொண்டார். செய்வதொன்றும் அறியாது கர்த்தரை நாள்தோறும் தொழுது நின்றார் ; மைந்தனது உள்ளத்தைக் கல்வியிலே கவியச் செய்யவேண்டும் என்று கண்ணீர் வடித்து வேண்டினார். இந்த நிலையில் வேதநாயகத்துக்குப் பல ஆண்டுகள் கழிந்தன.

பன்னிரண்டாம் வயதில் வேதநாயகம் பண்பு நெறியிலே தலைப்பட்டார். அவரை அந் நெறியில் உய்த்த பெருமை சுவார்த்தர் என்னும் கிருஸ்தவ சீலருக்கே உரியதாகும். தஞ்சைமா நகரில் அரசரும் அறிஞரும் போற்ற அருந்தொண்டு செய்தவர் சுவார்த்தர். அவர் ஒரு தேவ காரியத்தை முன்னிட்டுத் திருநெல்வேலிக்கு அருகேயுள்ள பாளையங் கோட்டைக்கு வந்து சேர்ந்தார். தேவசகாயம் தம் மைந்தனை அழைத்துக்கொண்டு அப் பெரியாரைக் காணச் சென்றார். இளங் கொழுந்தென விளங்கிய வேதநாயகம் சுவார்த்தரது கருத்தைக் கவர்ந்தார். இங்ஙனம் அப்பெரியாரது அருளைப் பெற்ற காலமே வேதநாயகரது வாழ்க்கையின் அடிப்படை கோலிய காலம்.

"விளையும் பயிர் முளையிலே தெரியும்“ என்னும் முதுமொழிக்கிணங்க வேத நாயகத்தின் எதிர்காலச் சிறப்பை யெல்லாம் அவரது இளமைக் கோலத்திலே கண்ட சுவார்த்தர் தம்மோடு அவரைத் தஞ்சைக்குக் கொண்டு செல்ல விரும்பினார் ; தந்தையின் அனுமதி பெற்றுத் தம்முடன் அழைத்துச் சென்றார். அன்று முதல் வேதநாயகத்துக்குத் தாயும் தந்தையும், தகை சான்ற சற்குருவும் அவரேயாயினர்.

தஞ்சையில் அரசாண்ட துளசி மன்னனின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார் சுவார்த்தர். திருநெல்வேலியிலிருந்து அவர் திரும்பி வந்த போது இறக்கும் தருவாயில் இருந்த அம்மன்னன் மனக்கவலை நீத்துச் சாந்தியடைந்தான் ; பத்து வயதுப் பாலனாகிய இளவரசனை அவர் கையில் அடைக்கலமாக ஒப்புவித்து உயிர் துறந்தான், நெல்லையிலிருந்து அழைத்து வந்தவேதநாயகமும் தஞ்சையிலே தம்மைத் தஞ்சமாக வந்தடைந்த இளவரசனாகிய சரபோஜியும் சுவார்த்தரது அருட் காவலில் அமைந்தார்கள். கண்ணினைக் காக்கும் இமைபோல் அவ்விருவரையும் அவர் காத்து வந்தார்,

தஞ்சைமா நகரில் துளசி மன்னனிடமிருந்து நன்கொடையாகப் பெற்ற நிலத்தில் சுவார்த்தர் ஒரு திருக்கோயிலும், தமக்கு ஒரு வீடும் கட்டியிருந்தார். அந்தப் பகுதிக்கு மகர் நோன்புச் சாவடி என்பது பெயர், அங்குள்ள சுவார்த்தர் திருமனையில் வேதநாயகம் அவர் பிள்ளைபோல் வளர்ந்தார் ; அல்லும் பகலும் அவரருகே யிருந்து பணிவிடை செய்தார்.

அக் காலத்தில் தரங்கம்பாடியில் நல்ல கல்லூரி யொன்று இருந்தது. அதன் தலைமையாசிரியராகிய ஜான் என்பவர் பல கலைகளில் வல்லவராயிருந்தார். அவருடைய பள்ளியில் வேதநாயகம் சிலகாலம் படித்தல் வேண்டும் என்பது சுவார்த்தரின் விருப்பம்; அப்படியே ஆசிரியரிடம் தெரிவித்துத் தரங்கம்பாடிக் கல்லூரியில் அவரை மாணவராகச் சேர்த்தார். அங்கு இரண்டு ஆண்டுகள் வேத நூல், வான நூல் முதலிய அறிவு நூல்களைக் கற்றார் வேதநாயகம். அப்போது தரங்கம்பாடியில் இருந்து தமிழ்ப்பணி செய்து வந்த டாக்டர் ராட்லர்[2] என்னும் பெரியாருடைய பழக்கமும் அவருக்கு வாய்த்தது. தமிழ் மொழியில் இயற்கையாகவே கவிந்திருந்த அவருள்ளம் இத்தகைய சேர்க்கையால் இன்னும் அதிகமாகத் தமிழாராய்ச்சியில் ஈடுபடுவதாயிற்று.

தரங்கம்பாடிப் படிப்பு முடிந்தவுடன் தஞ்சைக்குத் திரும்பி வந்தார் வேதநாயகம். அவரது கல்விப் பயிற்சியையும் ஒழுக்கத்தையும் கண்டு களிப்புற்ற சுவார்த்தர் தஞ்சையில் ஒரு வேதக் கல்லூரி[3] நிறுவி, அதற்கு வேதநாயகத்தைத் தலைமையாசிரியராக நியமித்தார். அவரிடம் அரும்பியிருந்த கவித்திறம் அந்நிலையில் விரிந்து மணங்கமழத் தொடங்கிற்று. வேதாகமம் பயிலும் மாணவர்க்கு உணர்ச்சியும் உள்ளக் கிளர்ச்சியும் உண்டாதல் வேண்டும் என்னும் ஆசையால் பல சிறு பாடல்களை இயற்றினார் வேதநாயகம். பராபரன்மாலை, ஞானக்கும்மி, ஆதியானந்தம் முதலிய நூல்கள் அத்தன்மை வாய்ந்தனவாகும்.

பராபரன் மாலை என்பது ஓர் இனிய தமிழ்ப் பாமாலையாக இலங்குகின்றது. பரம்பொருளாகிய இறைவனது - கருணையையும் பெருமையையும் உருக்கமாக எடுத்துரைப்பது அந் நூல். "ஆண்டவனே! உன்னை அடைவதற்கு வேத நெறி யுண்டு; நேசிக்க நெஞ்சுண்டு ; நினைக்க மனமுண்டு; மாசெல்லாம் தீர்ப்பதற்கு ஏசுநாதர் அருளுண்டு; தாயிருக்கச் சேய் தவிப்பதுண்டோ“ என்ற கருத்தடங்கிய பாட்டில் இரக்கமும் உருக்கமும் நிரம்பி நிற்கின்றன.[4]

இத்தகைய பராபரன் உலகத்தை யெல்லாம் படைத்த பான்மையை வியந்து வேதநாயகம் பாடிய பாடல் 'ஞானத் தச்சன் நாடகம்' என்னும் பெயரால் வழங்குகின்றது. ஞானத் தச்சனாகிய இறைவன் ஆதி மனிதனைப் படைத்த மேன்மையும், நோவாவின் பேழையைப் பற்றிய கப்பற் பாட்டும், பிறவும் அந் நாடகத்தில் உள்ளன.

"ஞாலத்திலே அதி காலத்திலே-மிகு

ஞானத்திலே நன்னி தானத்திலே கொண்டு சாலத்தமக்குத் தேவாலய மாகவே

தம்முடைச் சாயலாய்த் தம்முடை ரூபமாய்-

வீடு கட்டினானே ஞானத் தச்சன்

வீடு கட்டினானே'.

[5]

என்னும் பாடலைப் போன்ற நூற்றுக் கணக்கான கீர்த்தனங்கள் அந்நூலில் உண்டு.

அக்காலத்தில் சரபோஜி மன்னன் தஞ்சையில் அரசுபுரிந்தான். அவன் அருங்கலை விநோதன்; அரசாளும் பொறுப்பை ஆங்கிலக் கம்பெனியாரிடம் ஒப்புவித்து விட்டுக் கலைவாணர் கலையினொடும் கவியினொடும். பொழுது போக்கினான். தஞ்சாவூரில் இன்றும் அறிஞர் போற்றும் சரஸ்வதி மஹால் என்ற அருமையான நூல் நிலையத்தை நிறுவியவன் அவனே. இத்தகைய சரபோஜி மன்னனுடன் நெருங்கிப் பழகும் நீர்மை வேதநாயகத்துக்கு இளமையிலேயே வாய்த்தது. இருவரும் சுவார்த்தையரை ஞானத் தந்தையாகக் கொண்டமையால் சகோதர முறையில் பழகி வந்தனர்.

சரபோஜியின் கொடைத் திறத்தையும் கலை நலத்தையும் பல தமிழ்ப் புலவர்கள் பாட்டிலமைத்துப் பாராட்டுவாராயினர். அவ்விதம் அம்மன்னன் மீது பாடப்பட்ட பிரபந்தங்களில் ஒன்று சரபேந்திர பூபால. குறவஞ்சி நாடகம். குறவஞ்சி நாடகங்களுள் சிறந்த குற்றாலக் குறவஞ்சியையும், தஞ்சையில் அரசர் ஆதரவு பெற்று விளங்கிய சரபேந்திர குறவஞ்சியையும் பலமுறை கற்று இன்புற்றார் வேதநாயகம்; அவற்றைப் பின்பற்றித் தாமும் குறவஞ்சி நாடகம் ஒன்று இயற்ற ஆசைப்பட்டார். கர்த்தராகிய ஏசுநாதரையே பாட்டுடைத் தலைவராக வைத்துப் 'பெத்தலேம் குறவஞ்சி' யென்னும் பெயரால் ஒரு நாடகம் இயற்றினார். “சீரேசு நாதனுக்கு ஜெய மங்களம் - ஆதி - திரியேக நாதனுக்குச் சுப மங்களம்” என்பது அக்குறவஞ்சியில் உள்ள மங்கல வாழ்த்து. ஏசுநாதர் பெருமையைக் குறவஞ்சியின் வாயிலாக வெளிப்படுத்தும் தமிழ் நூல் இது ஒன்றேயாகும்.

இந்நூல் சென்னைமா நகரில் வேப்பேரிப் பாக்கத்துக் கிருஸ்தவ சபையில் அரங்கேற்றப்பட்டது. தமிழ்ச் சுவை தெரிந்த சென்னைக் கிருஸ்தவ சபையார் அதனைத் தலைக்கொண்டு போற்றினர் ; வேதநாயகத்தைப் பல வகையாகப் பாராட்டினர் ; தேவாலயத்தின் முகப்பில் பெருஞ் சபையொன்று கூட்டி ஞானதீபக் கவிராயர் என்ற பட்டத்தை அவருக்கு - வழங்கினர் ; அறுபது வராகன் பெறும் அழகிய சிவிகையைப் பரிசாக அளித்தனர் ; வேதநாயகத்தைச் சால்வையாலும் - பட்டாலும் அலங்கரித்து, சிவிகையில் ஏற்றி வேப்பேரியை வலம் வந்து சிறப்பித்தனர்.

இவ்வாறு சென்னை நகரத்தார் செய்த சீர்மையெல்லாம் கண்டு களிகூர்ந்த வேதநாயகம் 'சென்னபட்டணப் பிரவேசம்' என்று ஒரு நொண்டி நாடகம் எழுதினார். சென்னையில் அன்பர்கள் அளித்த விருந்துகளும், செய்த சிறப்புக்களும் அந்நாடகத்தில் - இனிமையாக எடுத்துக் கூறப்படுகின்றன. ஆயினும் குறவஞ்சி நாடகம் அரங்கேறுவதற்கு முன்னின்று உதவி செய்த முத்துசாமியா பிள்ளை என்ற கிருஸ்தவரை அந்நூலில் புகழ்ந்து பாடியிருப்பது நரஸ்துதியென்று பலர் கருதுகின்றனர். 'பராபரனைப் பாடுகிறவனே பாக்கியவான்' என்று கூறும் வேத வசனத்திற்கு இந் நாடகம் மாறுபட்ட தென்பது அன்னார் கொள்கை[6].

தமிழ் நாட்டில் நெற்றி வேர்வை நிலத்தில் விழப் பாடுபடும் பாமர மக்கள் பாட்டுப் பாடிக் கொண்டே பணி செய்தல் வழக்கம். நிலத்தில் ஏரைப் பிடித்து உழும் பொழுதும், நாற்று நடும் பொழுதும், களை பறிக்கும் பொழுதும், பாட்டாளிகள் பாட்டுப் பாடுவார்கள். தோட்டப் பயிர் செய்பவர்கள் கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்து நிலத்திலே பாய்ச்சும்போது பாடுவார்கள். அப்பாட்டுக்கு 'ஏற்றப் பாட்டு' என்பது பெயர். அதன் இனிமை யறிந்தோர் ”ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப் பாட்டு இல்லை” என்பர். "மூங்கில் இலை மேலே, தூங்கும் பனி நீரே, தூங்கும் பனிநீரை, வாங்கும் கதிரோனே” என்ற ஏற்றப் பாட்டு நாடறிந்த தாகும். ஏழை மக்களே பெரும்பாலும் ஏற்றமிறைத்துப் பணி செய்பவர் என்பதை யறிந்த வேதநாயகம் அவர்களுக்கு ஏற்றப்பாட்டின் வாயிலாக ஞானத்தை ஊட்டக் கருதினார். அவ்வகையில் நூறு செய்யுள் இயற்றியுள்ளார்.

ஒரு பொருளே தெய்வம்- நீ

உகந்து தொழு நெஞ்சே

உடைந்து மனம் நெஞ்சே-அந்த

ஒரு பரனுக் கஞ்சே

என்பது முதற் பாட்டு, அந்நூல் ஞான ஏற்றப் பாட்டு என்று பெயர் பெற்றுள்ளது.[7]

இவ்வாறு ஆயிரக்கணக்கான பாடல்களை இயற்றிய வேதநாயகம் கிருஸ்தவ வேதாகமங்களின் சாரத்தைப் பாடினமையால் 'சாஸ்திரியார்' என்று பாராட்டப் பெற்றார். ஆயினும் அவர் கவிதை இன்னும் தமிழ் நாட்டில் போதிய விளக்கம் பெறவில்லை. திருமணக் காலங்களில் அவர் பாடிய மங்கல வாழ்த்துப் பாடல்கள் ஆங்காங்கு பாடப்படுகின்றன. கற்றார்க்கும். கல்லார்க்கும் களிப்பருளும் வேதநாயகம் போன்ற நல்லியற் கவிஞர்களைப் போற்றி அவர் கவிதையைப் பாராட்டும் நாளே தமிழ் நாட்டுக்கு நன்னாளாகும்.

* * *

குறிப்புகள்

* * *

வேதநாயகம் பிள்ளையை வேதநாயகர் என்றும் வேதநாயக சாஸ்திரியாரை வேதநாயகம் என்றும் வழங்கினால் மயக்கம் ஏற்படாது.

↑ இவர் தமிழ்ப் பேரகராதி தொகுத்துதவிய அறிஞர்.

↑ வேதக்கல்லூரி--Theological Seminary.

↑ "நீயிருக்க வேத நெறியிருக்க நெஞ்சமுற

வாயிருக்க நின்பதத்தில் வந்திருக்க என்மனமும் போயிருக்க நின்புதல்வன் புண்ணியனார் அன்பிருக்கத் தாயிருக்கச் சேய்க்குத் தவிப்பேன் பராபரனே”

↑ “ஞானத்திலே பர மோனத்திலே-உயர்

மானத்திலே அன்ன தானத்திலே

கானத்திலே அமுதாக நிறைந்த

கவிதையிலே உயர் நாடு-இந்தப்

பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள்

பாரத நாடு".

என்னும் பாரதியார் பாட்டை இதனோடு ஒப்பு நோக்குக.

↑ நரஸ்துதி செய்தமையால் “மூன்று வருஷத்துக்குள்ளே பல்லக்கு நாற்பது வராகனுக்கு விற்கப்பட்டழிந்து போனதுமன்றி அதைக் கொடுத்த சினேகிதர்களுடைய பட்சமும் வெகுதூரம் குளிர்ந்து போயிற்று” என்று அத் நொண்டி நாடகத்தின் முகவுரை எழுதியவர் கூறுகின்றார்.

↑ இரண்டு மரஞ் செய்தான்-அதில்

ஒன்றருந்தத் தீது

பண்டுவில காது-பவம்

கொண்டு வந்தாள் மாது”

என்பது மற்றொரு பாட்டு.

9. அகராதி ஆசிரியர்

* * *

முற்காலத்தில் சமண முனிவர்கள் தமிழ் இலக்கியங்களை அறிதற்குக் கருவியாயுள்ள நிகண்டு நூல்கள் இயற்றியவாறே பிற்காலத்தில் கிருஸ்தவத் தொண்டர்கள் அகராதி நூல்கள் தொகுத்து உதவினர். 'அகரம் முதல எழுத் தெல்லாம்' என்று திருவள்ளுவர் கூறிய முறையில் தமிழ் மொழியில் வழங்கும் சொற்களை அகரம் முதலாக வரிசைப் படுத்திப் பொருள் விளக்கும் நூலே அகராதி எனப்படும். இத்தகைய அகராதியை முதன் முதல் தமிழுலகத்திற்கு அளித்தவர் வீரமா முனிவரேயாவர். அவர் தொகுத்த அகராதி நான்கு பகுப்புடையதாய் விளங்கிற்று; ஆதலால் சதுர் அகராதி என்று பெயர் பெற்றது[1]

சதுர் அகராதி அளவிற் சிறிது ; ஆயினும் அருமை வாய்ந்தது. வீரமா முனிவரது அகராதி நெறியைக் கடைப்பிடித்து, . நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் பாப்ரீசியர் என்பார் விரிவான அகராதி யொன்று வெளியிட்டார்[2] அவர் ஜெர்மானிய லூதரன் மடத்தைச் சேர்ந்தவர். அவர் தொகுத்த அகராதியில் இலக்கியச் சொற்கள் மட்டுமேயன்றிப் பேச்சு வழக்கிலுள்ள பல சொற்களும் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழில் வந்து வழங்கும் வடமொழிச் சொற்கள் உடுக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளன[3]. அன்றியும் ஒவ்வொரு சொல்லின் பொருளும் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கப்பட்டிருத்தலால் அவ்வகராதி தமிழ் நாட்டில் வர்த்தகம் செய்த ஆங்கில நாட்டார்க்கும், கிருஸ்து மத போதகம் செய்த அறிவாளர்க்கும் பெரும் பயன் விளைப்பதாயிற்று.

பாப்ரீசியரது அகராதியின் பயனறிந்த அறிஞர் சிலர் மேலும் அத்துறையில் ஊக்கமுற்று உழைப்பாராயினர். அன்னவருள் முன்னின்றவர் ராட்லர் என்னும் நல்லறிஞர். அவர் தமிழாசிரியர்களின் உதவி பெற்றுப் பல்லாண்டுகளாக உழைத்து முப்பத்தேழாயிரம் தமிழ்ச் சொற்களைத் தொகுத்தார்; அவற்றை நான்கு பாகங்களாக வகுத்து அச்சிடத் தொடங்கினார். இரண்டாம் பாகம் அச்சாகும் பொழுது அவர் வாழ்நாள் முடிவுற்றது. அவர் எடுத்த பணியைத் தொகுத்து முடிக்க முன்வந்தார் டெயிலர் என்னும் அறிஞர். ஆயிரத்து. நானூறு பக்கங்கொண்ட பேர் அகராதியாக அது வெளிப்பட்டது.

அதற்கு இருபதாண்டுகளுக்குப் பின்னர் தமிழ் நாட்டில் கிருஸ்தவப் பணி செய்து கொண்டிருந்த அமெரிக்க சங்கத்தார் இன்னும் விரிவான அகராதி யொன்று வெளியிடவிரும்பினர். அவர்கள் சார்பாகப் பெர்சிவல் முதலிய அறிஞர் பலர் பல் காலமாகத் திரட்டிய அகராதியைப் பதிப்பிக்கும் பொறுப்பும் உரிமையும் வின்சுலோ என்னும் வித்தகர்க்கு வாய்த்தது, எடுத்த பணியைத் திறமையாக நடத்தும் மனத்திண்மை வாய்ந்த அவ்வறிஞர், அறுபத்தேழாயிரம் சொற்கள் அடங்கிய, பேரகராதியை அச்சிட முற்பட்டார்[4] அதன் செலவு, அளவு கடந்து. சென்றது. அமெரிக்க சங்கத்தார் அதன் பொறுப்பை ஏற்று நடத்த இயலாது தளர்வுற்றார். முந்நூற்று அறுபது பக்கம் அச்சிட்டு முடிந்த அளவில், அகராதி வேலை முறிந்துவிடுமோ என்ற கவலை பிறந்தது. அந் நிலையில் ஆசிரியர். வின்சுலோ சென்னை அரசாங்கத்தாரது உதவியை நாடினார். அன்னார் அகராதி முற்றுப் பெற்றவுடன், நூறு, பிரதிகள் விலை கொடுத்து வாங்குதல் கூடும் என்று வாக்களித்தனரேயன்றி முன்பணம் கொடுத்து உதவ இசைந்தாரல்லர். எடுத்த வேலையை முடிக்கும் வகையறியாது பெருங் கவலைகொண்டார் வின்சுலோ ஐயர் ; அகராதி அச்சிட்டு முடிவதற்குப் பின்னும் ஆறாயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகும் : என்று கணக்கிட்டார். அத் தொகையை எவரும் கொடுக்க முற்படாமையால் பங்கு சேர்த்துப் பணம் திரட்டலாமா என்று கருதினார். பங்கு ஒன்றுக்கு இருநூறு ரூபாயாக எழுபது பங்கு சேர்க்க முயன்றார். ஆயினும் அவர் கருதியவாறு பங்குகள் விலைப்படவில்லை. அந் நிலையில் வேறு வழியின்றித் தம் சொந்தப் பொறுப்பில் ஐயாயிரம் ரூபாய் கடன்பட்டு, அச்சு வேலையை முடித்து அகராதியை வெளிப்படுத்தினார்[5]. ”கடன் கொண்டும் செய்வன செய்தல் நன்று” என்ற உண்மையை மனத்திற்கொண்டு, தொண்டு செய்த வின்சுலோ ஐயர் போன்ற பெரியார் என்றும் தமிழ் நாட்டாரது நன்றிக்கு உரியராவர் அன்றோ ?

இவ்வாறு வளர்ந்து வந்த தமிழகராதியில் பின்னும் பல சொற்கள் பல திசைகளினின்றும் வந்து சேர்ந்தன, தமிழ் நூல்களில் இடம் பெறாத பல்லாயிரம் சொற்கள் பேச்சுத் தமிழிலே வழங்கி வந்தன. மகமதியரது ஆட்சிக் காலத்தில் வந்த அரேபியச் சொற்களும் பாரசீகச் சொற்களும் பலவாகும். இன்று நீதிமன்றம், நிலவரி மன்றம் முதலிய அரசியல் நிலையங்களில் வழங்கும் சொற்கள் இதற்குச் சான்று பகரும். வக்கீல் என்பது அரேபியச் சொல். குமாஸ்தா என்பது பாரசீகச் சொல். அயன் என்பதும், இனாம் என்பதும் அரேபியப்பதங்கள். அரசியல் துறையில் சர்க்கார், தர்பார் முதலிய சொற்கள் பாரசீகம். ஜில்லா, கஸ்பா முதலியன அரேபியம். இன்னும் ஐரோப்பியர் வர்த்தக முறையிலும், துரைத்தன வகையிலும் இந்நாட்டிற் கலந்த பொழுது அவர் மொழிச் சொற்கள் தமிழ் மொழியிலே சேர்ந்தன. அவ்விதம் சேர்ந்த சொற்கள் தமிழ்ச் சொற்கள் போலவே வழங்கி வருகின்றன. ஜன்னல் என்னும் சொல் வீடுதோறும் வழங்குகின்றது. ஆயினும் அது தமிழ்ச்சொல் லன்று. காலதர் என்ற சொல் முற்காலத்தில் வழங்கிற்று[6]. காற்று வரும் வழி என்பது அச்சொல்லின் பொருள், அது இக் காலத்தில் வழங்குவதில்லை. பலகணி என்பது மற்றொரு சொல். சாளரம் என்பது இன்னொரு சொல். இவையெல்லாம் இப்பொழுது பெரும்பாலும் மறைந்து விட்டன. ஜன்னல் என்ற போர்ச்சுகீசியச் சொல் நிலைத்து விட்டது.

ஜன்னல் போலவே சாவியும். வீடுதோறும் வழங்கும் சொல். பூட்டைத் திறப்பதற்குப் பயன் படும் கருவி சாவி யெனப்படும். முற்காலத்தில் திறவுகோல் என்பது அதன் பெயராக வழங்கிற்று. சேர நாட்டார் தாழ்க்கோல் என்று அதனை அழைத்தனர். தாழ் என்பது பூட்டு. எனவே தாழ்க்கோல் பூட்டைத் திறக்கும் கருவிக்குப் பெயராயிற்று. இப்போது அச்சொற்கள் பெரும்பாலும் பேச்சுத் தமிழினின்றும் போய்விட்டன. சாவி வந்துவிட்டது. சாவி என்பது தமிழன்று; போர்ச்சுகீசியம். இவ்வாறு பரங்கியரோடும் ஆங்கிலேயரோடும் கலந்து தமிழ் நாட்டார் ஏற்றுக் கொண்ட பதங்கள் நூற்றுக் கணக்கானவை [7]

இத்தகைய சொற்களை யெல்லாம் சேர்த்து வின்சுலோவின் அகராதியைப் பெருக்கியும் புதுக்கியும் வெளியிடல் வேண்டும் என்ற கருத்து அறிவாளர் உள்ளத்தில் அரும்பிற்று. பல்லாண்டு தமிழ் நாட்டில் உழைத்துப் பழுத்த முதுமையுற்று, ஆங்கில நாட்டிற் போந்து தமிழ்ப்பணி செய்து கொண்டிருந்த போப்பையர் மனத்திலும் இவ்வார்வம் பிறந்தது. தமிழறிந்தவர் ஒருவரை உதவிக்கு அனுப்பினால் தாமே வின்சுலோவின் அகராதியைப் புதுக்கித் தருவதாக அவர் சென்னை அரசாங்கத்தாருக்கு அறிவித்தார். ஆயினும் அக் கருத்து நிறைவேறு முன்னமே போப்பையர் வாழ்வு முடிந்துவிட்டது. அவர் தொகுத்து வைத்திருத்த சொற்களையும் குறிப்புக்களையும் சென்னைக் கையெழுத்து நூல் நிலையத்திற்கு அவர் மைந்தர் அன்புகூர்ந்து அனுப்பினார்.

அப்பொழுது தமிழ் நாட்டில் வாழ்ந்த சாந்தலர்[8] என்னும் ஆங்கில அறிஞர் அப் பேரகராதியை வெளியிடுவதற்கு ஒரு திட்டம் வகுத்துச் சென்னை அரசாங்கத்தார்க்கு அனுப்பினார். அன்னார் அதனை ஆதரித்தார்கள். இந்திய நாட்டு அமைச்சர் அப்பணியின் அவசியத்தை உணர்ந்து நூறாயிரம் ரூபாய் செலவிட அனுமதியளித்தார்.[9] பேரகராதியின் பதிப்பாசிரியராகச் சாந்தலரே நியமிக்கப்பட்டார். ஒன்பது ஆண்டுகள் அவர் வேலை பார்த்தார் ; எழுபதாம் வயதில் இளைப்பாறக் கருதி விடுதி பெற்றார்.

அரசாங்கத்தார் குறித்தவாறு ஐந்து ஆண்டுகளில் அகராதி முற்றுப் பெறவில்லை; அதன் செலவு நூறாயிரம் ரூபாய் அளவில் நிற்கவும் இல்லை. அந்நிலையில் அரசியலாளர் கருத்துக்கிணங்கி அகராதியின் பொறுப்பையும் உரிமையையும் சென்னைப் பல்கலைக் கழகம் ஏற்றுக் கொண்டது[10]. ஏறக்குறைய இருபத்தைந்து. ஆண்டுகளில் முற்றுப்பெற்ற பேரகராதி ஏழு பெருந்தொகுதியாகத் 'தமிழ் லெக்சிக்கன்' என்னும் பெயரோடு விளங்குகின்றது. நூறாயிரம் சொற்கள் அவ்வகராதியிற் காணப்படும். அப் பேரகராதியைச் சுருக்கிச் சிற்றகராதியொன்று வெளியிடும் முயற்சி இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

ஆகவே நிகண்டுக் காலம் கழிந்து அகராதிக் காலம் வந்த பின்னர் தமிழ் மொழியின் சொல் வளம் பெருகி வருவது நன்கு விளங்கும். அச் சொற்களைத் தொகுக்கும் பெரும்பணியில் ஈடுபட்டு உழைத்த வீரமாமுனிவர், பாப்ரீசியர், ராட்லர், டெய்லர், வின்சுலோ, சாந்தலர் ஆகிய அறிஞர் அறுவரையும், அவருக்குத் துணைபுரிந்த புலவர் பல்லோரையும் தமிழ்நாடு என்றும் போற்றும் கடப்பாடு உடையதாகும்.

* * *

குறிப்புகள்

↑ பெயர், பொருள், தொகை, தொடை என்னும் நான்கு வகுப்புகள் அவ்வகராதியில் உள்ளன.

↑ இது கி.பி. 1779ம் ஆண்டில் சென்னை வேப்பேரியில் பதிப்பிக்கப்பட்டது.

↑ "Asterisks are used as the sign of Grandam words -- become usual in-the Malabar {Tamil) language“ -Preface to the Dictionary

↑ This Comprehensive Tamil and English Dictionary embraces both the common and poetic dialects of the Tamil language, including its principal astronomical, astrological, mythological, botanical, scientific and official terms, as also the names of many authors: poets, heroes and gods”. -Preface to Winslow's Dictionary,

↑ கி. பி. 1882ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

↑ "மான் கண் காலதர் மாளிகை” என்பது சிலப்பதிகாரம் கால் - காற்று ; அதர் - வழி.

↑ இவற்றின் தன்மையை Tamil-Literary and Cal-loanial'" என்ற என் கட்டுரையிற் காண்க. (Annals of the Oriental Research Institute, University of Madras, Vo. III. part 2)

↑ Rev. R. S. Chandler.

↑ The Secretary of State stated:– “the estimated cost of Rs. 1,00,000 is heavy but in view of the evident need for such a work I have decided to sanction the expenditure.” —Despatch dated 30th August 1912.

↑ The total cost of preparation and publication of the Lexicon, since its commencement: in January, 1913 has come, to .about Rs. 4,00,000.. The excess over the Government grant of Rs. 1,00,000 has been met by the University. -Preface to the Tamil Lexico

முடிவுரை

* * *

கிருஸ்தவத் தொண்டர்களால் தமிழ்மொழி அடைந்த மேம்பாடு இதுவரை சொல்லியவற்றால் ஒருவாறு விளங்கும். பொதுமறையென்று தமிழ் நாட்டார் போற்றும் திருக்குறளின் செம்மையை உலகறியக் காட்டிய பெருமை அன்னவர்க்கே உரியதாகும். திருக்குறளின் ஆசிரியராகிய திருவள்ளுவரை மெய்ஞ்ஞான ஒளியாகக் கண்டார் வீரமாமுனிவர். "ஞானத் திருவிளக்கு எறிப்பத் தெளிந்து உணர்ந்து, எங்கும் ஒரு விளக்கென நின்று உயர்ந்த திருவள்ளுவர்“ என்பது வீரமாமுனிவர் வாய்மொழி[1] வள்ளுவர் வழங்கிய திருக்குறள் உலகத்தார்க்கெல்லாம் ஒரு பொதுவுடைமை என்று கருதினார் முனிவர் ; கீழ் நாட்டில் எழுந்த ஞானக் கதிரொளி மேலை நாட்டிலும் வீசுதல் வேண்டும் என்று ஆசைப்பட்டார் ; அவ்வாசையால் திருக்குறளின் இருபாலை லத்தீன் மொழியின் வாயிலாக அறிவுலகத்திற்கு ஊட்டினார். அதன் நலமறிந்த கிரால் என்னும் நல்லறிஞர் திருக்குறளின் முப்பாலையும் ஜெர்மானியத்தில் மொழி பெயர்த்தார். ஆங்கிலத்தில் எல்லீசரும், துருவரும் சில பாகங்களை மொழி பெயர்த்தனர்[2]. போப்பையர் அதனை முற்றும் மொழிபெயர்த்தருளினார். பிரஞ்சு மொழியில் திருக்குறளின் இன்பச் சுவையை ஏற்றியவர் ஏரியல் என்னும் அறிஞர்[3]. அவருக்குப் பின் லெமிரேசர் என்பவர் திருக்குறள் முழுமையும் பிரஞ்சு மொழியில் எழுதிப் போந்தார்.[4] இங்ஙனம் பல தொண்டர்கள் பணி செய்த பான்மையாலேயே

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"

என்று பாடும் பெருமை இன்று தமிழ் நாட்டார்க்குக் கிடைத்தது.

கிருஸ்து மத வேதமாகிய பைபிளைத் தமிழில் மொழி பெயர்க்கும் சிறந்த பணியில் ஈடுபட்டார் சில தொண்டர். பாப்ரீசியர் என்னும் ஜெர்மானியப் பாதிரியார் பைபிளைப் பரிவுடன் மொழி பெயர்த்தார். ஆயினும் அதனை எல்லோரும் நன்றென ஏற்றுக்கொள்ளவில்லை. அதிற் கண்ட குறைபாடுகளை நீக்கி, குற்றம் களைந்து, செப்பனிடும் பணியைச் சென்னை பைபிள் சங்கத்தார். ரேனியஸ் ஐயரிடம் ஒப்புவித்தனர். அவர் அந் நூலைத் திருத்துவதிற் பயனில்லை என்றறிந்து தாமே ஒரு மொழி பெயர்ப்புச் செய்து தந்தார், அதனைப் பைபிள் சங்கத்தார் ஏற்றுக்கொள்ள வில்லை. இதற்கிடையில் யாழ்ப்பாணத்தில் கிருஸ்தவப் பணி செய்து கொண்டிருந்த பெர்சிவல் ஐயர் தமது மொழி பெயர்ப்பைப் பைபிள் சங்கத்தில் சமர்ப்பித்தார். அதனையும் அச்சங்கத்தார் விருப்புடன் ஏற்றுக்கொள்ளவில்லை. அந் நிலையில் கிருஸ்தவ வேத நூலைப் பல்லோரும் ஏற்றுப் போற்றும் வகையில் மொழி பெயர்த்தல் தனிப்பட்ட ஒருவரால் முடிவதன்று என்று - கருதிய கிருஸ்து மத சங்கத்தார் பன்னிருவர் அடங்கிய ஒரு கழகத்தை அமைத்து, அப்பணியை அதனிடம் ஒப்புவித்தனர். பவர் என்பவர் அக் கழகத்தின் தலைவர்.[5] கால்டுவெல் ஐயரும், சார்சந்தரும் அதன் அங்கத்தினரில் இருவர். தமிழ்ப் புலமை வாய்ந்த முத்தைய பிள்ளை கழகத்தார்க்கு உதவியாளராக நியமிக்கப்பட்டார். அவர்கள் பல்லாண்டு. பழுதறப் பணி செய்து 1871-ம் ஆண்டில் தமிழ். பைபிளை வெளியிட்டார்கள். ஆங்கில நாட்டு இளவரசர் திருநெல்வேலிக்கு விஜயம் செய்தபோது தமிழ் பைபிளை அவர்க்குக் கையுறையாக அளித்து மகிழ்ந்தனர் கிருஸ்துமத சங்கத்தார்[6].

தமிழ் பைபிளை வெளியிடும் பணியை மேற்கொண்ட கழகத்தில் தமிழ்ப் புலவராக விளங்கிய முத்தைய பிள்ளை என்பவர் இரக்ஷணிய கவிஞராகிய கிருஷ்ண பிள்ளையின் தம்பியாவர். அவர் இலக்கியமும் இலக்கணமும் முறையாகக் கற்றறிந்தவர்; தத்துவ ஆராய்ச்சியில் தனிப் பற்றுடையவர் ; ஜன விநோதனி என்னும் வாரத் தமிழ்ப் பத்திரிகையின் ஆசிரியராகச் சில காலம் பணி செய்தவர்; 'வேதாந்த சாரம்' முதலிய பல வசன நூல்களை இயற்றியவர்[7]. தமிழ் பைபிளுக்கு அவர் செய்த சேவை சாலச் சிறந்ததாகும்.

இங்ஙனம் ஆங்கிலமும் தமிழும் அறிந்த கிருஸ்தவத் தொண்டர்கள் சிறந்த தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும், உயர்ந்த ஆங்கில நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தும் நற்பணி செய்து வரும்பொழுது, சில அறிஞர் தமிழ் நாட்டில் வழங்கும் பழமொழிகளை ஆராயத் தலைப்பட்டனர். ஒவ்வொரு நாட்டிலும் பழமொழிகளுண்டு. அவற்றால் மக்களின் பழக்க வழக்கங்களும் பண்பாடும் நன்கு புலனாகும். தமிழ்நாடு தொன்று தொட்டுப் பயிர்த்தொழிலில் ஈடுபட்ட நாடாதலால் அத் தொழிலடியாகப் பிறந்த பழமொழிகள் இங்கு மிகுதியாக வழங்கும், 'விளையும் பயிர் முளையிலே தெரியும்' என்பது ஒரு பழமொழி. 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' என்பது மற்றொரு பழமொழி. பண்டைத் தமிழறிஞர் இப் பழமொழிகளின் பெருமை யறிந்து போற்றினார்கள். முன்றுறை அரையர் என்னும் தொல்லாசிரியர் சங்க காலத்தில் வழங்கிய பழமொழிகளில் நானூற்றைத் தொகுத்துப் 'பழமொழி நானூறு' என்னும் பெயரால் ஒரு நூல் இயற்றினார். அதற்குப் பின்பு நெடுங்காலமாகப் பல்கிப் பரவிய பழமொழிகளைத் திரட்டித் தந்தவர் கிருஸ்தவத் தொண்டரே யாவர்.

பெர்சிவல் என்னும் பெரியார். ஏறக்குறைய இரண்டாயிரம் பழமொழிகளைத் திரட்டி அச்சிட்டு வெளிப் படுத்தினார்[8]. சென்னையில் சிறந்த தமிழறிஞராய் விளங்கிய லாசரஸ் ஐயர் தமிழ் நாட்டின் பல பாகங்களிலும் வழங்கிய பழமொழிகளைச் சேகரித்துப் பெரு நூலாக வெளியிட்டார். பத்தாயிரம் பழமொழிகள் அந் நூலிற் காணப்படும்.[9] அதனைப் பின்பற்றித் தமிழில் எழுந்த பழமொழி நூல்கள் பலவாகும்.

தமிழ்நாட்டாரது பழமையான நாகரிகத்தை உலகமெல்லாம் அறியும் வகை செய்தல் வேண்டும் என்று ஆசைப்பட்டார் பல கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர். அந்த வகையில் கால்டுவெல் ஐயர் ஆற்றிய தொண்டு என்றும் தமிழ் நாட்டாருக்கு ஊக்கம் அளிப்பதாகும். தமிழகத்தில் மறைந்து கிடக்கும் மாநகரங்களையும், தூர்ந்து கிடக்கும் துறைமுகங்களையும், அவர் துருவிப் பார்க்க முற்பட்டார். சங்க காலத்திலும், இடைக் காலத்திலும் பெருமையுற்று விளங்கிய கொற்கைத் துறையையும், காயல் துறையையும் அவர் அகழ்ந்து பார்த்து அறிந்த உண்மைகளை ஆர்வத்தோடு வெளியிட்டார். கொற்கைத் துறை போன்ற பழந்துறைகள் தமிழ் நாட்டில் இன்னும் பல உண்டு. காவிரியாறு கடலிற் பாயுமிடத்தில் சோழ நாட்டுப் பெருந்துறைமுகப் பட்டினம் முற்காலத்தில் இருந்தது, அதனைக் காவிரிப்பூம் பட்டினம் என்றும், பூம்புகார் நகரம் - என்றும், பண்டைப் புலவர் பாராட்டினார்கள். சங்க நூல்களில் அதன் பெருமை விரிவாகக் கூறப்படுகின்றது. இன்னும் சேர நாட்டில் பெரியாறு கடலிற் கலக்குமிடத்தில் முசிறி யென்னும் துறைமுக நகரம். அமைந்திருந்தது. எனவே, பழங்காலத்தில் பாண்டி நாட்டுத் துறைமுகம் கொற்கை ; சோழ நாட்டுத் துறைமுகம் காவிரிப்பூம் பட்டினம்; சேர நாட்டுத் துறைமுகம் முசிறி என்பது தமிழ் இலக்கியத்தால் நன்கு புலனாகின்றது[10]. இத் துறைமுகப் பட்டினங்களெல்லாம் இப்பொழுது தூர்ந்து அழிந்து கிடக்கின்றன. இன்னும் நெல்லை நாட்டிலுள்ள ஆதிச்சநல்லூர் மேட்டிலும், புதுச்சேரியைச் சேர்ந்த அரிக்கன் மேட்டிலும் பழைய நாகரிகம் புதைந்து கிடப்பதாகத் தெரிகின்றது. ஜாகர் என்னும் ஜெர்மானிய அறிஞர் ஆதிச்சநல்லூர் மேட்டின் ஒரு பாகத்தை அகழ்ந்து ஆராய்ந்தார் ; கண்டெடுத்த பழம் பொருள்களைப் பெர்லின் நகரத்திற்குக் கொண்டு சென்றார்[11]. அதனை அறிந்த இந்திய அரசாங்கத்தார் ரேயர் என்ற ஆங்கில அறிஞரை யனுப்பி அம்மேட்டை ஆராய்ந்தனர் ; எளிதிற் கிடைத்த பொருள்களைச் சென்னைக் காட்சிச்சாலையில் வைத்தனர்[12]. ஆயினும் நூறு ஏக்கர் அளவுள்ள ஆதிச்சநல்லூர் மேடு பழம் பொருளடங்கிய பண்டசாலையாக இன்றும் ஆராய்ச்சியாளர் வருகையை எதிர் நோக்கி நிற்கின்றது. இவ்வண்ணமே புதுவை நாட்டில் செஞ்சியாற்றின் கரையிலுள்ள அரிக்கன்மேடு, ஒரு புதையுண்ட நகரமாயிருத்தல் கூடும் என்று சில அடையாளங்களாற் கண்டு, பிரஞ்சு அரசாங்கத்தார் அதனை ஆராய்வதற்கு இசைந்துள்ளனர்[13].

இங்ஙனம் தமிழகத்தில் அடங்கிக் கிடக்கும். நாகரிகச் சின்னங்களைத் துலக்கினால் தமிழ் நாட்டின் பழம் பெருமை விளங்கும் என்று கருதினார் கால்டுவெல் ஐயர். சென்னைச் சர்வ கலாசாலைப் பெரு விழாவில் அவர் இக் கருத்தை விரித்துரைத்தார்[14] ; பட்டம் பெற்ற மாணவர்களிற் சிலரேனும் இத்தகைய பணியை ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும் என்று, ஆர்வத்தோடு பேசினார் ; கற்கோயில்களில் அமைந்த சாசனங்களும், மறைந்து கிடக்கும் மாநகரங்களும் வெளிப்படும் காலமே தமிழ் நாடு ஏற்றமுறும் காலம் என்று எடுத்துரைத்தார். இவ்வாறு சொல்லாலும் செயலாலும் நல்வழி காட்டிய கிருஸ்த்தவத் தொண்டர் அனைவருக்கும் தமிழ். நாட்டாரது. நன்றி என்றும் உரியதாகும்.

* * *

குறிப்புகள்

↑ தொன்னூல் விளக்கம், ப. 1.02.

↑ The edition jointly brought out by Drew and the great Ramanuja Kavirayar is an excellent one. But - it goes' only up to:63 chapters out of a total of 133. -Preface to V.V. S. Iyer's Tirukkural.

↑ M. Ariel speaks of Tirukkural as 'the imaster-piece of Tamil literature-one of the highest and purest expressions of human thought' —Letter published in the Journal Asiatique, 1848.

M. Ariel refers to a translation of the Kural into French by some author about 1767 which is to the found in the Bibliotheque Nationale of Paris.

—Preface to v. V: S. Iyer's Tirukkural.

↑ M, Lamairesse has more recently published a complete translation in French which, however, is little better than a bad paraphrase—ibid, p. 20.

↑ Bower, was an Anglo-indian, who worked in the S. P. G. Mission and obtained the degree of D. D.. from Lambeth. - -The. C. M. S. in Tinnevelly : p. 152.

↑ The complete Tamil Bible was published in 1871 and copies of it and of the Prayer Book beautifully bound were presented to the Prince of Wales when he visited Tinnevelly in 1875 --ibid. p. 152.

↑ சென்னை ஹைக்கோர்ட்டில் நீதிபதியாக இருந்தவரும் Council of state என்னும் சட்டசபையின் உறுப்பினராக இருந்தவரும் ஆகிய சர். டேவிட் தேவதாஸ் இவருடைய புதல்வர்.

↑ இந்நூல் யாழ்ப்பாணத்தில் 1843-ம் ஆண்டில் அச்சிடப்பட்டது.

↑ The Dictionary of Tamil Proverbs" is the most cortiplete collection : ever - made and a 'valuable contribution to Tamil Literature: ' - Tamil Literature, M's. Pp. 358.

↑ கொச்சி நாட்டிலுள்ள கிராங்கனூர் என்னும் கொடுங்கோளூரே பண்டை முசிறி என்பர்.

↑ Tinnevelly Gazetteer, p 424.

↑ Madras Museum

↑ செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு, 18

↑ Address delivered at the convocation of the university of Madras in 1879.

அநுபந்தம்

* * *

வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள்,

1. தேம்பாவணி.

2. திருக்காவலூர்க் கலம்பகம்.

3. கித்தேரியம்மாள் அம்மானை.

4. அன்னையழுங்கல் அந்தாதி.

5. அடைக்கல மாலை.

6. செந்தமிழ் இலக்கணம்.⁠ [லத்தீன் பாஷையில்]

7. கொடுந்தமிழ் இலக்கணம்.

8. தொன்னூல் விளக்கம்.

9. சதுரகராதி.

10. வேதியர் ஒழுக்கம்.

11. வேத விளக்கம்.

12. பரமார்த்த குரு கதை.

* * *

போப்பையர் இயற்றிய நூல்கள்

I. First Catechism of Tamil Grammar for Schools.

2. Second Catechism of Tamil Grammar for Schools.

3. Third and complete Grammar of the - Tamil Language in both its dialects, with the native authorities.

4. Grammar of the Tulu Language. 15. Tamil - English.and English - Tamil Lexicon

6. Tirukkural — English Translation.

7. Naladiyar — ⁠" ⁠

8. Tiruvasagam — ⁠" ⁠

9. Select Stanzas from Purananuru, Purapporul Venba Malai etc.translated into English. (Contributed to the journal of the Royal Asiatic Society and the Siddantha Deepika.)

* * *

கால்டுவெல் ஐயர் இயற்றிய நூல்கள்

1. A Comparative Grammar of the Dravidian or South Indian family of languages.

2. A political and General History of Tinnevelly.

3. History of the Tinnevelly Mission of the S. P. C. K and S. P. G.

4. The Spiritual Temple.

5. Dynamalai.

6. Elementary Catechism.

7. Rudimentary Catechism on Confirmation.

8. Translation of Service of the Dedication of Churches.

* * *

ரேனியஸ் ஐயர் எழுதியவை.

1. Evidences of Christianity (வேத உதராணத் திரட்டு)

2. Idolatry. 3. Short History of Mankind.

4. The Solar system.

5. Phenomena of Nature.

6. Astrology and Chronology. 7. The new Testament (translated into Tamil.)

8. Substance of Religion.

9. Tamil Geography.

10. Tamil Grammar.

* * *

வேதநாயகம் பிள்ளை இயற்றிய நூல்கள்.

1. சர்வ சமய சமரசக் கீர்த்தனை.

2. சத்தியவேதக் கீர்த்தனை.

3. திருவருள்மாலை.

4. திருவருள் அந்தாதி.

5. தேவமாதா அந்தாதி.

6. நீதி நூல்.

7. பெண்மதி மாலை.

8. சுகுண சுந்தரி.

9. பிரதாப முதலியார் சரித்திரம்.

* * *

H. A. கிருஷ்ண பிள்ளை இயற்றிய நூல்கள்.

1. இரக்ஷணிய யாத்திரிகம்.

2. இரக்ஷணிய மனோகரம்.

3. இரக்ஷணிய சமய நிர்ணயம்.

* * *

வேதநாயக சாஸ்திரியார் இயற்றிய நூல்கள்

1. பராபரன் மாலை.

2. ஞான உலா.

3. ஞானக்கும்மி.

4. பேரின்பக் காதல்.

5. பெத்தலேம் குறவஞ்சி.

6. ஞானத்தச்சன் நாடகம்.

7. வண்ண சமுத்திரம்.

8. தியானப் புலம்பல்.

9.. அறிவானந்தம்.

10. ஆதியானத்தம்.

11. ஆரணாதிந்தம் (முதலியன)

* * *