கிருட்டிண தேவராயர்
கா. அப்பாத்துரையார் 

மூலநூற்குறிப்பு

  நுற்பெயர் : கிருட்டிண தேவராயர் (அப்பாத்துரையம் - 5)

  ஆசிரியர் : கா.அப்பாதுரையார்

  தொகுப்பாசிரியர் : முனைவர் கல்பனா சேக்கிழார்

  பதிப்பாளர் : கோ. இளவழகன்

  முதல்பதிப்பு : 2017

  பக்கம் : 16+304 = 320

  விலை : 400/-

  பதிப்பு : தமிழ்மண் பதிப்பகம், எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை 600 017, தொ.பே.: 24339030, செல்: 9444410654

  மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in

  தாள் : 16.0 கி. மேப்லித்தோ, அளவு : 1/8 தெம்மி

  எழுத்து : 11.5 புள்ளி, பக்கம் : 312

  கட்டமைப்பு : இயல்பு படிகள் : 500

  நூலாக்கம் : கோ. சித்திரா

  அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)

  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.

நுழைவுரை

தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர்.

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம்.

தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும்.

தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம்.

தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.

அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன.

இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும்.

தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள்

கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை

யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர்

திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன்,

திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர்.

இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய ‘கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும்’சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி.

நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

“ஆக்கத்தை எனக்கிந் நாட்டார்
அளித்திட்ட அறிவை யெல்லாம்
தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே
செலவிடக் கடமைப் பட்டேன்.”

-   பாவேந்தர்

கோ. இளவழகன்

தொகுப்புரை

மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்!
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின.

“அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார்.

சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன.

-   தனித்தமிழ் இயக்கத் தோற்றம்

-   நீதிக் கட்சி தொடக்கம்

-   நாட்டு விடுதலை உணர்ச்சி

-   தமிழின உரிமை எழுச்சி

-   பகுத்தறிவு விழிப்புணர்ச்சி

-   இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர்

-   புதிய கல்வி முறைப் பயிற்சி

-   புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம்

இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன.

“தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது!

அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்!

பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக,

-   உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல்.

-   தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல்.

-   தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல்.

-   தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல்.

-   திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல்.

-   நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல்.

இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது.

பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது.

உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன.

1.  தமிழ் - தமிழர் - தமிழ்நாடு

2.  வரலாறு

3.  ஆய்வுகள்

4.  மொழிபெயர்ப்பு

5.  இளையோர் கதைகள்

6.  பொது நிலை

பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும்.

இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின்

உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன.

கல்பனா சேக்கிழார்

நூலாசிரியர் விவரம்

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்
  இயற்பெயர் : நல்ல சிவம்

  பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989

  பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி

  பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி)

  உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர்

  மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு

  வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா

  தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி

  பள்ளிக் கல்வி : நாகர்கோவில்

  கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம், இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி ‘விசாரத்’, எல்.டி.

  கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி)

  நூல்கள் : 120 (ஆங்கிலம், 5)

  இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை.

  பணி :

-   1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர்.

-   1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர்.

-   பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு.

-   1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி

-   1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர்.

-   1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர்

அறிஞர் தொடர்பு:

-   தொடக்கத்தில் காந்திய சிந்தனை.

-   1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு

விருதுகள்:

-   மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது,

-   1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் ’சான்றோர் பட்டம்’, ‘தமிழன்பர்’ பட்டம்.

-   1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ’கலைமாமணி’.

-   1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய ’திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம்.

-   மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய ’பேரவைச் செம்மல்’ விருது.

-   1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.

-   1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார்.

-   இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது.

பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்:

-   அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005.

-   பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007.

பதிப்பாளர் விவரம்

கோ. இளவழகன்
  பிறந்த நாள் : 3.7.1948

  பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625,தஞ்சாவூர் மாவட்டம்.

  கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு

  இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல்

ஆற்றியுள்ள பொதுப்பணிகள்

1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர்.

பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் ’ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர்.

உரத்தநாட்டில் ’தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர்.

பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ’உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர்.

தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும்,

19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர்.

பொதுநிலை

தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர்.

தொகுப்பாசிரியர் விவரம்

முனைவர் கல்பனா சேக்கிழார்
  பிறந்த நாள் : 5.6.1972

  பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம்.

  கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர்

  இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

ஆற்றியுள்ள கல்விப்பணிகள்

-   அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி.

-   திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு.

-   புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.

-   பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.

-   பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார்.

-   50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

-   மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.

-   இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார்.

-   செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார்.

நூலாக்கத்திற்கு உதவியோர்

தொகுப்பாசிரியர்:

-   முனைவர் கல்பனா சேக்கிழார்

கணினி செய்தோர்:

-   திருமதி கோ. சித்திரா

-   திரு ஆனந்தன்

-   திருமதி செல்வி

-   திருமதி வ. மலர்

-   திருமதி சு. கீதா

-   திருமிகு ஜா. செயசீலி

நூல் வடிவமைப்பு:

-   திருமதி கோ. சித்திரா

மேலட்டை வடிவமைப்பு:

-   செல்வன் பா. அரி (ஹரிஷ்)

திருத்தத்திற்கு உதவியோர்:

-   பெரும்புலவர் பனசை அருணா,

-   திரு. க. கருப்பையா,

-   புலவர் மு. இராசவேலு

-   திரு. நாக. சொக்கலிங்கம்

-   செல்வி பு. கலைச்செல்வி

-   முனைவர் அரு. அபிராமி

-   முனைவர் அ. கோகிலா

-   முனைவர் மா. வசந்தகுமாரி

-   முனைவர் ஜா. கிரிசா

-   திருமதி சுபா இராணி

-   திரு. இளங்கோவன்

நூலாக்கத்திற்கு உதவியோர்:

-   திரு இரா. பரமேசுவரன்,

-   திரு தனசேகரன்,

-   திரு கு. மருது

-   திரு வி. மதிமாறன்

அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு:

-   வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14.

கிருட்டிண தேவராயர்

(கி.பி. 1509 - 1529)

முதற் பதிப்பு - 1946

இந்நூல் 2003 இல் வசந்தா பதிப்பகம், சென்னை - 88 வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது.

முகவுரை

தென் இந்தியப் பேரரசன் என்று சங்க காலத்திற் கருதப்பட்டவன் கரிகாற் சோழன் ஆவன்; இடைக்காலத்தில் அப்பட்டத்தைப் பெற்றவன் வாதாபி வென்ற நரசிம்ம பல்லவன்; பிற்காலத்தில் புகழ் பெற்றவன் இராஜேந்திர சோழன். இவர்கட்குப் பிறகு தென் இந்தியாவிற் புகழ் பெற்ற பேரரசர் கிருஷ்ணதேவராயர் ஒருவரே ஆவர். விஜயநகர அரசர்கட்குள் பெயரும் புகழும் பெற்றவரும் அவர் ஒருவரேயாவர். பகைவரை வென்ற பேராண்மையும், போரை அறமுறைப்படி நடத்திய திறமையும், பெருநாட்டுச் சிற்றரசர்களை அடக்கி ஆண்ட முறைமையும், அயல்நாட்டு அரசர்களுடன் உறவு கொண்டாடிய பண்பும், அயல்நாட்டு வாணிகத்தை வளப்படுத்திய வகையும், நாகரிகக் கலைகளாகிய இசை - நடனம் - நாடகம் - ஓவியம் - சிற்பம் - மருத்துவம் முதலியவற்றை வளர்த்த முறையும், தம் பெருநாட்டு மொழிகள் அனைத்தையும் சமநிலையில் வளர்த்த திறமும் கிருஷ்ணதேவராயரைப் பேரரசர் ஆக்கின.

தென் இந்தியாவில் அந்நியர் படையெடுப்பைத் தடுக்க ஏற்பட்ட விஜயநகரப் பேரரசின் தலை மணியாக விளங்கிய கிருஷ்ணதேவராயர் வரலாறு தென்னாட்டு மக்களாகிய நாம் படித்துப் பயன்பெறத் தக்கதன்றோ? அவருடைய பரந்த நோக்கம், விரிந்த சிந்தை, ஆழ்ந்த கல்வி, அரசியல் அறிவு, பேராண்மை இன்ன பிறவும் தமிழ் இளைஞர் பின்பற்றத்தக்க நற்பண்புகள் ஆகும்.

கா. அப்பாத்துரை

விஜயநகர அரசு

விந்தியமலைக்குத் தென்பால்

கி.பி. 14-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டெல்ஹியைத் தலைநகராகக் கொண்டு வட இந்தியாவை அல்லாவுத்தீன் என்பவர் ஆண்டுவந்தார். அக்காலத்தில் விந்திய மலைக்குத் தெற்கே நான்கு பேரரசுகள் இருந்துவந்தன. தபதியாற்றுக்கும் கோதாவரியாற்றுக்கும் இடைப்பட்ட நிலப் பகுதியை, தேவகிரியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த யாதவ அரசு ஒன்று; கிழக்கே கோதாவரிக்கும் கிருஷ்ணைக்கும் இடைப்பட்ட ஓரங்கல்1 என்னும் நகரத்தைத் தலைநகரமாகக் கொண்ட காகதீய அரசு ஒன்று; மைசூர்ப் பகுதியில் உள்ள துவார சமுத்திரத்தைத் தலைநகரமாகக் கொண்ட ஹொய்சள அரசு ஒன்று; தெற்கே மதுரையைக் கோநகரமாகக் கொண்ட பாண்டிய அரசு ஒன்று.

இப்பேரரசுகள் நான்கும் முழு உரிமையுடன் அரசாண்டு வந்தன. தேவகிரியில் ஆண்ட யாதவர் பெருஞ் செல்வம் படைத்தவர். அவரது செல்வச் சிறப்பு வட இந்தியாவிலும் பரவியது. ஓரங்கல் நாட்டை, ஆண்ட காகதீயரும் செல்வப் பெருக்குடையவர். துங்கபத்திரைக்கும் காவிரிக்கும் இடைப்பட்ட பெருநாட்டை ஆண்ட ஹொய்சளரும் பணப் பெருக்கம் கொண்டிருந்தனர். அவர்கள் இராஜராஜ சோழனால் ஏற்படுத்தப்பட்டு ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் வரை வலியுற்றிருந்த சோழப் பெருநாட்டை விழுங்கியவர்கள்; அதனால் செல்வச் செருக்குடனும் பெருமிதத்துடனும் பெருநாட்டை ஆண்டு வந்தனர். ஹொய்சளருக்குத் தெற்கே இருந்த பாண்டியர் வாணிகப் பெருக்கம் உடையவர்.

விந்தியமலைக்குத் தெற்கே வாழ்ந்த இந்தப் பேரரசர் நால்வரும் இந்து சமயத்தினர்; ஆதலால் சைவ-வைணவ-பௌத்த-சமண சமயங்களை ஆதரித்தனர்; இந்து சமயக் கோவில்களை வளப்படுத்தினர்; அவற்றில் இருந்த உருவச் சிலைகட்கு விலையுயர்ந்த பொன் நகைகளை அணிவித்தனர்; நவரத்தினங்கள் பதித்த நகைகளைத் தானம் செய்து கண் குளிரக் கண் மகிழ்ந்தனர்; பல பெரிய கோவில்களில் தங்கக் கலசங்களைச் செய்து வைத்தனர்; தங்கம், வெள்ளி முதலிய உலோகத் தகடுகளால் கோவிற் பகுதிகளை அலங்கரித்தனர். இந்தப் பேரரசர் தம் அரண்மனைப் பண்டாரத்திலும் பெருஞ் செல்வத்தைச் சேமித்து வைத்திருந்தனர், குடிகளும் அரசரும் மனமொத்துக் கவலையின்றி - பிற நாட்டார் படையெடுப்பின்றி இன்பமாக வாழ்ந்து வந்தனர்.

அல்லாவுத்தீன் படையெடுப்பு

வடஇந்தியாவில் பேரரசராக இருந்த அல்லாவுத்தீன் மேற்சொன்ன பேரரசுகளைப் பற்றிக் கேள்விப்பட்டார். அவர் பொன் வேட்டைக்காரர்; தென் நாட்டிலும் தம் செல்வாக்குப் பரவவேண்டும் என்ற விருப்பங்கொண்டவர். ஆதலின், அவர் கி.பி. 1294-இல் விந்தியமலையைத் தாண்டி வந்தார். அவரது பெரும் படையைக் கண்ட தேவகிரி அரசன் அவருக்குக் கீழ்ப் படிந்தான்; அவருக்கு விலைமதிப்பற்ற நகைகளையும் பொற்குவியல்களையும் கொடுத்தான். அல்லாவுத்தீன் அரசு மகிழ்ந்தது டெல்ஹிக்கு மீண்டார்.

மாலிக் காபூர் படையெடுப்பு

அல்லாவுத்தீன் தன் சேனைத் தலைவரான மாலிக்காபூர் என்பவரைப் பெரும்படையுடன் கி.பி. 1309-இல் தெற்கே அனுப்பினார். மாலிக் காபூர் முதலில் தேவகிரியைத் தாக்கினார். அரசன் சிறைப்பட்டான்; அவனது பண்டாரம் கொள்ளை போயிற்று. அவன் ஆண்டுதோறும் கப்பம் கட்டுவதாக ஒப்புக் கொண்டு விடுதலை பெற்றான்.

அடுத்தபடி மாலிக் காபூர் ஓரங்கல் நகரத்தைத் தாக்கினார். அதன் அரசனான பிரதாபருத்தின் முஸ்லிம் படைகளை எதிர்த்துத் தாக்கினான்; முடிவில் தோற்று பெரும் பொருள் தந்து சமாதானம் செய்துகொண்டான்.

பின்னர் மாலிக் காபூர் தெற்கே இருந்த ஹொய்சள நாட்டைத் தாக்கினார். அப்பொழுது ஹொய்சள அரசனாக இருந்தவன் மூன்றாம் வல்லாளன் என்பவன். அவன் அறிவிற் சிறந்தவன்; கட்டுப்பாடும் தக்க பயிற்சியுமுடைய முஸ்லிம் படைகட்கு முன் நிற்பது தவறென்பதை உணர்ந்து அடங்கினான்; பெருஞ் செல்வத்தை அளித்து, டெல்ஹி அரசுக்கு அடங்கியிருப்பதாக உறுதி கூறினான்.

அவ்வமயம் பாண்டியன் அரியணைக்கு மதுரையில் போட்டி உண்டாயிற்று. அதனால் நாட்டில் குழப்பம் உண்டானது. அக்குழப்ப நிலையைக் கேள்வியுற்ற மாலிக் காபூர் பாண்டிய நாட்டின்மீது பாய்ந்தார். பாண்டியன் ஓடி ஒளித்தான். பாண்டிய நாட்டுக் கோவில்கள் சூறையாடப் பட்டன. விக்கிரகங்கள் தவிடு பொடியாயின. பல கோயில்கள் அழிக்கப் பட்டன. கோவில்களில் குவிந்திருந்த செல்வமும் பாண்டியன் அரச பண்டாரமும் கொள்ளை போயின. மதுரையில் சுல்தான் பிரதிநிதி ஒருவர் அரசராக்கப் பட்டார். இங்ஙனம் மாலிக் காபூர் நான்கு பேரரசுகளையும் ஒடுக்கி அளவற்ற செல்வத்துடன் டெல்ஹி மீண்டார்.

முஹம்மத் பின் துக்ளக்

இவர் டெல்ஹியில் பேரரசர் ஆவதற்கு முன்னரே ஓரங்கல் நாட்டைக் கைப்பற்றினார். அதனால் கிருஷ்ணையாறுவரை இவரது செல்வாக்குப் பரவியது. இவருக்கு அடங்கிய மாகாணத் தலைவரும் அத்தை புத்திரருமான பஹாபுத்தீன் என்பவர் இவரைப் பேரரசராக மதிக்கவில்லை. அதனால் இவர் பஹாவுத்தீனைப் போரில் முறியடிக்க முனைந்தார். பஹாவுத்தீன் துங்கபத்திரைக் கரையில் உள்ள கம்பிலி நகர அரசனிடம் சரண் புகுந்தார். துக்ளக் சினங்கொண்டு கம்பிலி நகரை முற்றுகையிட்டுக் கடும்போர் புரிந்து 1326-இல் கம்பிலி அரசனைக் கொன்றார்; பஹாவுத்தீனும் கொல்லப்பட்டார்.

மூன்றாம் வல்லாளன்

இங்ஙனம் கம்பிலி முஸ்லிம் ஆட்சிக்கு உட்பட்டவுடன் மூன்றாம் வல்லாளன் திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் உள்ள கண்ணனூரைத் தலை நகரமாகக் கொண்டான்; மதுரையை ஆண்ட சுல்தான்கள் தொல்லை மிகுதிப்படவே, கண்ணனூரைத் துறந்து திருவண்ணாமலையைத் தலை நகரமாகக் கொண்டான்; அங்கிருந்து பெரும்படை திரட்டிக் கண்ணனூரை அடைந்து, மதுரைச் சுல்தான் படைகளுடன் போரிட்டான்; முஸ்லிம்கள் சமாதானத்தை விரும்பினர். வல்லாளன் அதற்கு உடன்பட்டான். ஆயின் அன்றிரவே பகைவர் திடீரென வல்லாளன் படைகள்மீது பாய்ந்து கொன்றனர். வல்லாளனும் கொல்லப்பட்டான். இந்தியாவின் தென்பகுதியில் சிறப்புற்றிருந்த நான்கு வல்லரசுகளும் அயலவர் படையெடுப்பினால் இங்ஙனம் அழிந்தொழிந்தன.

சங்கமன் மக்கள்

‘யது’ என்னும் அரச மரபினைச் சேர்ந்த சங்கமன் என்பவனுக்கு மக்கள் ஐவர் இருந்தனர். அவர்கள் ஹரிஹரர், கம்பணர், புக்கர், மாரப்பர், முத்தப்பர் என்பவர். அவருள் ஹரிஹரரும் புக்கரும் காகதீய அரசனான பிரதாபருத்திரனிடம் அரச பண்டார அதிகாரிகளாக இருந்தனர். காகதீய அரசு வீழ்ச்சியுற்ற பிறகு கம்பிலி அரசனிடம் சென்று, அவனுடன் மணவுறவு கொண்டு வாழ்ந்தனர். கம்பிலி அரசன் போரில் கொல்லப்பட்டதும் ஹரிஹரரும் புக்கரும் சிறைசெய்யப்பட்டு டெல்ஹிக்கு அனுப்பப் பட்டனர். அவர்கள் சிறையில் ஒழுங்கு தவறாது நடந்து கொண்டமையால் சுல்தான் மகிழ்ச்சியடைந்து, அவர்களைத் தம் அரச சபையிலேயே உயர் அலுவலாளராக அமர்த்தினார்; அவ்விருவரையும் இஸ்லாத்தைத் தழுவச் செய்தார். அவர்கள் சுல்தானது பெருமதிப்புக்கு உரியவராக இருந்து வந்தனர்.

அக்காலத்தில் மூன்றாம் வல்லாளன் கன்னட காட்டில் குழப்பத்தை உண்டாக்கினான். துக்ளக் ஹரிஹரரையும் புக்கரையும் பெருஞ் சேனையுடன் அனுப்புனார். சகோதரர் இருவரும் கர்நாடகத்தை அடைந்து குழப்பத்தை அகற்றி அமைதியை நிலைநாட்டினர். சுல்தான் மனமகிழ்ந்து அவர்களைக் கர்நாடகத்தை ஆண்டுவருமாறு செய்தார். அதனால் கம்பிலி நகரம் உட்பட்ட கர்நாடகம் சகோதரர் ஆட்சிக்கு உட்பட்டது.

அக்கால நிலை

விந்தியமலைக்குத் தெற்கே அல்லாவுத்தீன் படையெடுத்த காலமுதல் நாட்டின் அமைதி குலைந்தது. முஸ்லிம்கள் இந்துக்கள் செல்வத்தைக் கவர்ந்தனர்; இந்து சமயத்தைப் பின்பற்றுவதை நிறுத்த முயன்றனர்; ஒரு நியாயமும் இன்றி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றனர். இந்துக்கள் விலங்குகள் போல வேட்டையாடப் பட்டனர்; இந்து விழாக்களும் பிறவும் அடக்கப்பட்டன. மதுரையை ஆண்ட கியாசுத்தீன் என்பவர் தினந்தோறும் குற்றமற்ற இந்துக்களைப் படுகொலை புரிந்தார். சுருங்கக்கூறின், முஸ்லிம்கள் ஆட்சியில் இந்துக்கள் நெருப்பிற் பட்ட புழுப்போலத் துடித்தனர் என்னல் தவறாகாது. அக்கால மக்கள் தங்கள் கோவில்கள் கொள்ளையடிக்கப் பட்டதையும் பேரூர்களும் சிற்றூர்களும் சூறையாடப்பட்டதையும் தம் இந்துசமய அரசர்கள் கொல்லப் பட்டதையும் சிறை செய்யப் பட்டதையும் நேரிற் கண்டு விழிப்படைந்தனர். தங்கள் உரிமைகளைக் காக்கத்தக்க வலிய இந்து அரசு ஒன்று தேவை என்பதை உணர்ந்தனர்; வன்மை மிகுந்த துக்ளக் ஆட்சி தளர்ச்சியுறும் சந்தர்ப்பத்தை ஆவலோடு எதிர்பார்த்துவந்தனர்.

முஹம்மத் பின் துக்ளக் இந்தியா முழுவதையும் வென்றார். ஆயினும், முழு இந்தியாவையும் அடக்கி ஆள அவரால் இயலவில்லை. அவரால் நியமிக்கப்பட்ட மாகாணத் தலைவர்கள் ஆங்காங்குக் கலகம் விளைத்தனர். சுல்தான் இஸ்லாத்தைத் தழுவிய இந்துக்களை மிக்க அன்புடன் நடத்தி வந்தமையால் பழைய முஸ்லிம் பிரபுக்களும் படைத்தலைவரும் சுல்தானை வெறுத்தனர். இங்ஙனம் உண்டான பல காரணங்களால் துக்ளக் பேரரசு பல பகுதிகளாகப் பிரிந்தது. அச்சமயத்தையே ஹரிஹரரும் புக்கரும் எதிர்பார்த்திருந்தனர்.

அக்கால மடங்கள்

நமது தென்னாட்டில் சமயத் தொடர்பான மடங்கள் நெடுங்காலமாக இருந்துவந்தன. இவை கோவில்களை அடுத்து இருந்தன. சைவ மடங்கள், வைணவ மடங்கள், பௌத்த மடங்கள், சமண மடங்கள் என்பன இவ்வகையின. இவை சமயக் கல்வியை அறிவுறுத்தியதுடன் நாட்டுப்பற்று, பல கலை அறிவு, சமூக அறிவு என்பவற்றையும் ஊட்டிவந்தன. இவை அந்தந்த இடத்துப் பொது மக்கள் துணையாலும் அரசர் ஆதரவினாலும் சிறந்த முறையில் தொண்டாற்றி வந்தன. அரசரும் அரசியல் உத்தியோகஸ்தர் களும் இவற்றிற்கு நிலங்களையும் பொருளையும் மானியமாக விட்டனர்; அடிக்கடி இவற்றைப் பார்வையிட்டனர். இந்த மடங்களில் சமயக் கல்வி கற்கும் மாணவர் இருந்தனர்; பொதுமக்கட்குச் சமயக் கல்வி புகட்டத் துறவிகள் இருந்தனர். அவர்கள் தங்கள் சமயம் வேற்று நாட்டார் படையெடுப்பினால் பாதிக்கப்படாமல் இருந்ததற்காகப் பொது மக்கட்கு நாட்டுப் பற்றை நன்முறையில் ஊட்டி வந்தனர். இத்தகைய மடங்களின் தலைவர்கள் அடிக்கடி அரசர்களைச் சந்திப்பதுண்டு; அவர்களைக் கொண்டு சமய முன்னேற்றத்துக்கான தொண்டுகளைச் செய்விப்பதும் உண்டு.

சிருங்கேரி மடம்

இங்ஙனம் பொது மக்கட்குத் தொண்டாற்றி வந்த மடங்களுள் சிருங்கேரி மடம் ஒன்று. அது துங்கபத்திரை யாற்றுக்குத் தென்பால் கர்நூல் ஜில்லாவில் இருக்கின்றது. அஃது ஆதி சங்கரரால் ஏற்படுத்தப் பட்ட எட்டு மடங்களில் ஒன்று. அதனில் கல்வியிலும் ஒழுக்கத்திலும் நாட்டுப்பற்றிலும் மிகச் சிறந்துவிளங்கிய துறவிகளே தலைவர்களாக இருந்து வந்தனர். அவர்கள் தக்கணப் பீடபூமியில் அத்வைத மதத்தைப் பொது மக்களிடம் பரவச் செய்து வந்தார்கள். துங்கபத்திரை, கிருஷ்ணை. கோதாவரியாறுகளின் அருகில் வாழ்ந்த அரசர்கள் சிருங்கேரி மடத்தை ஆதரித்து வந்தார்கள். ஆதிசங்கரர் காலத்தில் இருந்த சாளுக்கியர் என்ற பேரரசர்கள் சிருங்கேரி மடத்தை ஆதரித்துவந்தார்கள். அவர்கட்குப்பின் துவார சமுத்திரத்தைத் தலைநகராகக் கொண்ட ஹொய்சளரும் தேவகிரி5 யைத் தலைநகராகக் கொண்ட தக்காணப் பீடபூமியை ஆண்ட யாதவரும் சிருங்கேரி மடத்திற்கு ஆதரவு செய்துவந்தனர்.

வித்தியா சங்கரர்

கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வித்தியா சங்கரர் என்னும் பெரியார் சிருங்கேரி மடத்துத் தலைவராக இருந்தார். அவர் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவர்; நாட்டுப்பற்று மிக்கவர்; வீரவுணர்ச்சி கொண்டவர். அவர் சிருங்கேரி மடத்தை நன்னிலைக்குக் கொணர்ந்தார்; பக்கத்தில் இருந்த அரசர்களுடன் பழகி அவர்கள் ஆதரவைப் பெற்றார். அவர் எழுபத்து மூன்று ஆண்டுகள் மடத்துத் தலைவராக இருந்தார்; எட்டு இடங்களில் மடங்களை அமைத்துச் சமயக் கொள்கைகளைத் தம் சீடர் வாயிலாகப் பரப்பி வந்தார்; இறுதியில் இமயமலை அடிவாரத்தில் பதினைந்து ஆண்டுகள் யோகத்தில் இருந்து முத்தி அடைந்தார். அவருடைய சீடர்களிற் சிறந்தவரே விஜயநகரத் தோற்றத்திற்குக் காரணரான வித்தியாரண்யர் என்பவர்.

வித்தியாரண்யர்

இவருக்கு மாதவர் என்ற பெயரும் உண்டு. இவர் வேதங்களில் பெரும் புலமை உடையவர்; வேதங்களில் அழுத்தமான அறிவுடையவர்; இறை வழிபாட்டில் இணையற்றவர்; தர்க்க வாதங்களில் வல்லவர்; கம்பீரமான தோற்றம் உடையவர்; அக்கால இந்துக்கள் மனப்பான்மையை நன்கு அறிந்தவர். இப்பெரியார் சிருங்கேரி மடத்துத் தலைவர் ஆனபிறகு அம்மடம் மிக வுயரிய நிலையை அடைந்தது. மடத்துத் தலைவர் ‘இராஜ குரு’ என்ற பெயர் பெற்றார். அரச மரியாதைகள் நடைபெற்றன. சமய நூல்களைப் படித்தல் - அமைதியாக இருந்து யோகம் செய்தல் என்ற வழக்கமான நிகழ்ச்சிகளுடன் இத்தலைவர் நிற்கவில்லை. இவர் அரசியல் முனிவர் கோலத்திலும் விளங்கினார். அதற்கு அக்காலத்தில் விந்திய மலைக்குத் தென்பால் உண்டான முன்சொன்ன அரசியல் குழப்பமே காரணமாகும்.

வித்தியாரண்யரும் சீடர்களும்

வித்தியாரண்யர் சிருங்கேரி மடத்தில் இருபத்திரண்டாம் குருவாக இருந்து தம் சீடர்களுக்குப் பக்தியுடன் நாட்டுப் பற்றையும் சமயவுணர்ச்சியையும் ஊட்டி வந்தார். அக்காலத்தில் அவரிடம் புதியவராகச் சீடர் இருவர் வந்து சேர்ந்தனர். அவர்கள் ‘சங்கமர்’ என்ற வீரருடைய பிள்ளைகள். அவர்கள் புக்கர், ஹரிஹரர் என்பவர். அவர்கள் தக்க இடத்தில் ஒரு நகரை அமைத்துத் தமது அரசை ஏற்படுத்த விரும்பினர். முஸ்லிம் படையெடுப்புக்களைத் தடுக்கவும் இந்து சமயத்தைப் பாதுகாக்கவும் இந்து இராச்சியத்தை நிலை நாட்ட அவாவினர்; அதற்காக வித்தியாரண்யர் ஆசியையும் உதவியையும் பெறச் சிருங்கேரிக்குச் சென்றனர்.

விஜயநகரம்

வித்தியாரண்யர் அவர்களது நல்ல நோக்கத்திற்கு உதவி செய்ய விரும்பினார். உடனே அவர்களுடன் புறப்பட்டுத் துங்கபத்திரைக் கரையருகிற் சென்றார். அவர் ஓர் இடத்தில் தங்கி இளைப்பாறினார். அப்பொழுது குருக்கள் ஒருவர் அவ்வழி வந்தார். வித்தியாரண்யர் அவர் அந்த இடவரலாறு கூறுமாறு கேட்டார். குருக்கள், “இந்த இடமே பம்பை என்றும் ஹம்பி என்றும் சொல்லப்படுவது. இதனைச் சுற்றிலும் மாதங்கமலை. மாலவதம், ஏமகூடம், பசுபசிருங்கம், கிஷ்கிந்தம் என்னும் ஐந்து மலைகள் இருக்கின்றன. வால்மீகியால் புகழப்பட்ட பாம்பாசரஸ் இங்குத்தான் இருக்கின்றது. இவ்விடத்தில்தான் சுக்கிரீவன், அநுமார் முதலிய வானர வீரர் வசித்தனர். இராமன் வானரரைச் சந்தித்த இடம் இதுதான்” என்று கூறினர்.

உடனே முனிவர், “இந்தப் புண்ணிய பூமியே புதிய நகரத்திற்கு ஏற்ற இடமாகும்,” என்று கூறினர். பிறகு நல்ல நாளில் நகர அமைப்புத் திட்டம் போடப்பட்டது. உடன் பிறந்தார் இருவரும் முனிவரும் பொருள் உதவி செய்து கட்டிட வேலையைத் தொடங்கினர். அவர்கள் அங்கிருந்த மலைக்குகை ஒன்றில் பெருஞ் செல்வத்தைக் கண்டெடுத்தனர்; அதன் உதவியைக் கொண்டு நகர அமைப்பு வேலை நடந்தது.

விஜயநகர அரசு

வித்தியாரண்யர், ஹம்பியில் கோவில் கொண்டுள்ள விரூபாக்ஷருக்கு நாட்டை அளித்து ஹரிஹரரை அக்கடவுளின் பிரதிநிதியாக இருந்து அரசாளுமாறு யோசனை கூறினார். ஹரிஹரரும் புக்கரும் இஸ்லாத்தை விட்டு முன் போல இந்துக்களாகி வித்தியாரண்யர் கூறியவாறே நாட்டை விரூபாக்ஷருக்குத் தானமாக அளித்து, அவர் பிரதிநிதியாக இருந்து நாட்டை ஆளலாயினர்; வித்தியாரண்யர் உதவி கொண்டு அமைக்கப்பட்ட நகரத்திற்கு வித்தியாநகரம் எனப் பெயரிட்டனர். அந்நகரமே நாளடைவில் விஜயநகரமே எனப் பெயர் பெற்றது.

விஜயநகர அரசு முஸ்லிம் படையெப்பைத் தடுக்கவும் இந்து தர்மத்தைப் பாதுகாக்கவும் ஏற்பட்டது. அஃது ஏறத்தாழ கி.பி. 1336-இல் ஏற்பட்டதென்னலாம். வித்தியாரண்யர் இராஜ குருவாக இருந்த அரசு வலுப்பெறத் தம்மால் இயன்றன எல்லாம் செய்து 1386-இல் காலமானார். அப்பெரியாருக்கு ஹம்பியில் விரூபாக்ஷர் கோவிலுக்கு மேல் அமைந்துள்ள பாறைமீது கோவில் கட்டப் பட்டது. அப்பாறைமீது இருந்து கவனிப்பின் விஜயநகரத்தின் முழு அமைப்பையும் செவ்வனே காணலாம்.

அடிக்குறிப்புகள்

1.  இதனை ‘வாரங்கல்’, ‘வாரங்கல்’, ’ஓரங்கல் என்றும் கூறுவர்.
2.  இச்சங்கமன் ஹொய்சளர் படைத்தலைவன்; கருநாடகத்தின் ஒரு பகுதிக்குத் தலைவனாக இருந்தான். இவன் முஸ்லிம்களுடன் போரிட்டவன்; சீரங்கப் பட்டணத்தை வென்றவன்Beginnings of Vijayanagara History, PP. 73-74.
3.  Further Sources of Vijayanagara History, l. Vol. I. PP. 32-33.
4.  Ibid. P. 42.
5.  தேவகிரி பிற்காலத்தில் ‘ஒளரங்கபாத்’ எனப் பெயர் பெற்றது. V.A.Smith, Oxford History of India. P. 204.

தமிழகத்தில் விஜயநகர அரசு

நாட்டின் உட்பிரிவுகள்

துங்கபத்திரையாற்றுக்குத் தென்பாற்பட்டதும் காவிரியாற்றுக்கு வடபாற்பட்டதும் ஆகிய சங்கமன் மக்கள் ஆட்சிக்கு உட்பட்டது. அப்பகுதி பல இராச்சியங்களாகப் பிரிக்கப்பட்டது. கீழ்க்கரையில் இருந்த உதயகிரி ராச்சியம் என்பது கம்பணர் ஆட்சியில் இருந்தது. ஹொய்சள நாட்டு உயிர் நிலையான பகுதி - பெனுகொண்டா, ஹளபீடு முதலிய கோட்டைகளைக் கொண்ட பகுதி - புக்கர் ஆட்சியில் இருந்தது. தென் மஹாராஷ்டிரம் எனப்பட்ட மேல்கரைப்பகுதி ஹரிஹரர் ஆட்சியில் இருந்தது. மைசூரில் ஷிமோகா ஜில்லாவில் உள்ள ஆரகம் என்பதைத் தலைநகராகக் கொண்டு சுற்றிலும் உள்ள நிலப்பகுதியை மாரப்பர் ஆண்டுவந்தார். பெனுகொண்டாவில் முத்தப்பர் ஆண்டுவந்தார்.1

இந்த ஐவர் ஆண்ட நிலப்பகுதிக்குத் தெற்கே இருக்கும் நிலப் பகுதிக்குப் புக்கரது புத்திரர் அரசப் பிரதிநிதியாக இருந்தார். அவர் ஆண்ட பகுதிக்குத் தலைநகரம் ‘முள்பாகல்’ என்பது. அவர் பெயர் கம்பணவுடையார்என்பது.

தமிழக நிலைமை

தமிழகம் நீண்ட காலமாகச் சேர, சோழ, பாண்டியரால் ஆளப்பட்டு வந்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை சோழர் பேரரசராக இருந்தனர்; பின்னர்ப் பாண்டியர் பேரரசர் ஆயினர். அவர்கள் இருவரும் வலிகுன்றிய காலத்தில் ஹொய்சளர் செல்வாக்குத் தமிழகத்தில் பரவியது. சோழ பாண்டியர் ஹொய்சாளரிடம் பெண்கொண்டு உறவு கொண்டாடினர். ஹொய்சளர் கண்ணனூர், திருவண்ணாமலை என்ற இடங்களில் தலை நகரங்களை அமைத்துக் கொண்டு சோழ நாட்டை ஆளத் தொடங்கினர். சோழப் பெருநாடு சிதறுண்ட பிறகு தொண்டை மண்டலம் சாம்புவராயர் என்ற சிற்றரசர் ஆட்சியில் இருந்தது. வடபாண்டிநாடு முஸ்லிம்கள் கைப்பட்டது.

கம்பணவுடையார் வெற்றி

கம்பணவுடையார் ஏறத்தாழ கி.பி. 1352-இல் தொண்டை நாட்டைக் கைப்பற்ற விரும்பினார். அவரது தானைத் தலைவரும் அமைச்சரும் ஒருவரே. அவர் சோமய்ய தண்ட நாயக்கர் என்பவர். அவர் மைந்தர் மாரய்ய நாயக்கர் என்பவர் கம்பணவுடையாரிடம் சேனைத்தலைவராக இருந்தார். அச்சேனைத் தலைவர் ஒரு பெரும்படையுடன் தொண்டை நாட்டின்மீது படையெடுத்தார்; எளிதில் சாம்புவராயரைத் தோல்வியுறச் செய்தார். இராஜ நாராயணச் சாம்புவராயர் என்பவர் கம்பணவுடையார்க்கு அடங்கிய சிற்றரசராக இருக்க ஒப்புக் கொண்டார். இந்த வெற்றியால் விஜயநகர அரசு தென் ஆர்க்காடு ஜில்லாவரை பரவியது.

மதுரையில் முஸ்லிம் ஆட்சி

மதுரையில் கி.பி. 1324 முதல் 1371 வரை முஸ்லிம் ஆட்சி நிலவி இருந்தது. அக்காலத்தில் பாண்டிய நாடு கொள்ளை கொலை கொடுமை ஆகிய மூன்றையும் தரிசித்தது. புகழ்பெற்ற மதுரை மீனாக்ஷியம்மன் கோவில் சீரழிக்கப்பட்டது. அதன் ஏழு மதில்களும் பதினான்கு கோபுரங்களும் மதில்கட்கு இடைப்பட்ட தெருக்களும் தலைமட்டம் ஆயின; கருவறை, நடு மண்டபம், முன் மண்டபம் ஆகிய மூன்றே விடப்பட்டன. கோவிலில் இருந்த விக்கிரகங்கள் நாஞ்சில் நாட்டுக்கு (தென் திருவாங்கூர்க்கு) எடுத்துச் செல்லப்பட்டன. சீரங்கம் கொள்ளைக்கும் கொலைக்கும் நிலைக்களன் ஆயது. பல கோவில்கள் பாழாயின. பலவற்றில் இருந்த விக்கிரகங்கள் வேறு இடங்கட்குக் கொண்டு செல்லப்பட்டன. நாட்டில் சைவ வைணவச் சமயங்கள் தத்தளித்தன. முஸ்லிம் ஆட்சிக் கொடுமையிலிருந்து தங்களைக் காப்பவர் ஒருவரும் இல்லையே என்று பாண்டி நாட்டுக் குடிகள் தத்தளித்தனர்.

மதுரையில் விஜயநகர அரசு

தொண்டை நாட்டைக் கைப்பற்றிய கம்பணவுடையார் மிகப் பெரிய படைகொண்டு மதுரையில் இருந்த முஸ்லிம்களைத் தாக்கினர். போர் கடுமையாக நடந்தது. முடிவில் முஸ்லிம் அரசு ஒழிந்தது. மதுரை, கம்பணர் கைப்பட்டது. அவ்வீரர் பாண்டிய நாட்டில் அமைதியை உண்டாக்கினார்; மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலைப் புதுப்பித்தார்; ஸ்ரீரங்கம் கோவிலை நன்நிலைக்குக் கொணர்ந்தார். இந்த இரண்டு பெருஞ் செயல்களால் அவ்வீரர் சைவர் வைணவர் நன்மதிப்பைப் பெற்றார். நாட்டில் அமைதி ஏற்பட்டதால் மக்கள் அவரைக் கண்கண்ட தெய்வமாகப் போற்றினர். திருப்பதிக்குக் கொண்டு செல்லப்பட்ட அரங்கநாதர் சிலை மீட்டும் திருவரங்கத்திற்குக் கொண்டுவரப்பட்டது. நாட்டில் மூடப்பட்டு இருந்த கோவில்கள் திறக்கப்பட்டன. பூசை, விழாக்கள் முதலியன முன்போல நடைபெறத் தொடங்கின. கம்பணவுடையார் நாயக்கர் பலரைக் கோவில் நிருவாகத்தை மேற்பார்க்க நியமித்தார்; பாண்டிய நாட்டில் முஸ்லிம் அரசுக்கு அஞ்சி மறைந்திருந்த வீரபாண்டியன் என்பவனை மதுரைக்கு அரசனாக்கினார். இது பெருந்தன்மையான செயல் அன்றோ?

இலங்கை வெற்றி

கம்பணர் இலங்கையைக் கைப்பற்ற விரும்பினார்; பண்பட்ட தம் படைகளைப் பல கப்பல்களில் ஏற்றி வாழ்த்துரை கூறி அனுப்பினார். அவருடைய படைத்தலைவர்கள் வீரமிக்க இளைஞர்கள்; வெற்றி ஒன்றைத் தவிர வேறு அறியாதவர்கள்; ஆதலின் ஈழநாட்டை எளிதில் வெல்லலாம் என்று எண்ணினர். ஆயின், அவர்கள் அரும்பாடு பட்டே இலங்கையை வெல்ல வேண்டியவர் ஆயினர். இலங்கை இறைவன் விஜயநகர அரசுக்கு அடங்கி நடப்பதாக ஒப்புக் கொண்டான்; ஆண்டுதோறும் கப்பங் கட்டுவதாக இசைந்தான்.

தென்காசிப் பாண்டியர்

மாலிக் காபூர் படையெடுப்பினால் நிலைகுலைந்த பாண்டியருள் ஒரு கிளையினர் திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள தென்காசி என்னும் நகரத்தில் தங்கிவிட்டனர். அவர்கள் அமைதியாக திருநெல்வேலி ஜில்லாவை ஆண்டுவந்தனர். அவர்கள் கம்பணவுடையாரை வரவேற்று வேண்டிய உதவிகள் செய்தனர்; விஜயநகர அரசுக்கு அடங்கியிருப்பதாக வாக்களித்தனர். இங்ஙனம், கொள்ளை - கொலை - கொடுமை இவற்றுக்கு நிலைக்களனாக இருந்த தமிழகத்தைக் கம்பணவுடையார் என்ற பெருவீரர் கைப்பற்றி நாட்டில் அமைதியான அரசியலை நிலை நாட்டினார். தமிழகம் விஜயநகரப் பெருநாட்டின் தென்பகுதி யாகத் திகழத் தொடங்கியது.

புதிய அரசியல்

விஜயநகர ஆட்சியில் பண்டைத் தமிழர் அரசியல் சிறிது மாறுதல் அடைந்தது. தமிழர் ஆட்சியில் கோவில்கள் சிறந்த தொண்டாற்றி வந்தன. அவை மக்கட்குப் பணவுதவி செய்தன; கிராமப் பொது நலன்களுக்காக நிலங்களை வாங்கின; வரிகட்ட இயலாதவர் நிலங்களை விலை கொடுத்து வாங்கி வரிப் பணத்தைத் தட்டாமல் அரசாங்கத்திற்கு உதவி வந்தன. பொதுமக்களின் நன்மைக்கான பல்வேறு துறைகட்கும் கோவில்கள் பயன்பட்டன. அந்த நிலைமை புதிய அரசியலில் மறைந்துவிட்டது. கிராமச் சபைகள் மறையத் தொடங்கின. ‘குடிமக்கள் ஆட்சி’ என்ற சோழர் அரசியல் தத்துவம் மறைந்தது; அதற்குப் பதிலாக ‘ஓர் அரசன் ஆட்சி’ ஏற்பட்டது; நாட்டின் ஆள் பலமும் பொருள் பலமும் முஸ்லிம் படையெடுப்புத் தென்னாட்டில் உண்டாகாதிருக்க திரட்டப்பட்டன. இந்த ஒரு துறையிலேயே புதிய அரசு மிகுந்த கவலை கொண்டது. விஜயநகரப் பேரரசர் வடக்கே இருந்த முஸ்லிம்களுடன் போர் தொடங்கிய பொழுதெல்லாம் தமிழ் நாட்டுப் படைகள் அவர்க்கு உதவியாக அனுப்பப்பட்டன; தமிழ் நாட்டுப் பொருளும் அனுப்பப் பட்டது. இந்த இருவகைத் தொண்டுகளையும் தமிழ் நாட்டார் மிக்க மகிழ்ச்சியோடு செய்து வந்தனர்.

அரசர் நல்லவராயினும் உத்தியோகஸ்தர்களில் பலர் பலவாறு இருந்தனர்; விஜயநகர அரசர் ஒவ்வொருவர் பட்டம் பெறும் பொழுதும் ‘பரிசு’ என்று பொதுமக்களிடம் பணம் பெற்று வந்தனர். அரசர் அறிந்தவுடன் இந்தப் பழக்கம் நின்றுவிட்டது. அதிகாரிகளால் சில புதிய வரிகள் அதிகமாக விதிக்கப்பட்டன. அவை அரசர்க்கு அறிவிக்கப்பட்டதும், அந்த அதிகாரிகள் தண்டிக்கப்பட்டனர். இவை சிறிய குறைபாடுகள். பொதுவாக விஜயநகர அரசு தமிழ்நாட்டில் ஏற்பட்டது. அக்கால நிலையை நோக்க, மிகவும் பாராட்டத்தக்கது என்று திண்ணமாகக் கூறலாம்.

அடிக்குறிப்புகள்

1.  ஹரிஹரர் மூத்தவர்; இரண்டாம் சகோதரர் கம்பணர்; புக்கர் மூன்றாம் சகோதரர்; மாரப்பர் நான்காம் சகோதரர், முத்தப்பர் ஐந்தாம் சகோதரர்.

2.  இவர் இரண்டாம் கம்பணர் எனப்படுவர்,

விஜயநகரம்

நகர அமைப்பு

வித்தியாநகரம் அல்லது விஜயநகரம் என்பது துங்க பத்திரையின் தென் கரையில் அமைப்புண்ட நகரமாகும். ஆற்றின் வடகரையில் ஆனெ கொந்தி நகரம் அமைந்திருந்தது. அது கம்பிலி அரசனுக்குரிய சிறப்பிடங்களில் ஒன்றாகும். அதனைச் சூழ மலைகள் இருக்கின்றன. விஜயநகரத்தின் சுற்றளவு அறுபது கல் என்று 1420-இல் அதனைப் பார்வையிட்ட இத்தாலியர் ஒருவர் குறித்துள்ளார். நகர மதில் பக்கத்தில் உள்ள மலையடிவாரம் வரை கொண்டு செல்லப்பட்டிருந்தது. நகரம் ஏறத்தாழ மலையரணைப் பெற்றதாக இருந்தது.

விஜயநகரம் ஏழு கோட்டைகளைக் கொண்டது. ஏழாம் கோட்டையின் நடுவிற்றான் அரசர் அரண்மனை அமைந் திருந்தது. வெளிக் கோட்டைச் சுவரிலிருந்த வடக்கு வாயிலுக்கும் தெற்கு வாயிலுக்கும் இடைப்பட்ட நீளம் ஏழு அல்லது எட்டுக் கல்லாகும். மேற்கு வாயிலுக்கும் கிழக்கு வாயிலுக்கும் இடைப் பட்ட தூரமும் இவ்வளவேயாகும். முதல் மூன்று கோட்டைச் சுவர்கட்கு இடையில் விளை நிலங்கள், தோட்டங்கள், போர்வீரர் இல்லங்கள் அமைந்திருந்தன. மூன்றாம் மதிற் சுவரிலிருந்து ஏழாம் கோட்டைச் சுவர் வரை கடைகளும் கடைத் தெருக்களும் குடிகள் வாழ் தெருக்களும் நெருங்கியிருந்தன.

அரண்மனைக்குப் பக்கத்தில் பெரிய கடைத்தெருக்கள் நான்கு காணப்பட்டன. அவை ஒன்றுக்கொன்று எதிராக அமைந்திருந்தன. ஒவ்வொரு கடைத்தெருவின் தலைப்பிலும் பெரிய மேடையும் மக்கள் இருக்கத் தக்க இடமும் அமைந்திருந்தன. துங்கபத்திரை யாற்றில் பெரிய அணைகட்டுக் கட்டி நீர் தேக்கப் பட்டது. அத்தேக்கத்திலிருந்து பதினைந்து கல் தொலைவில் நீர் கொண்டுவரப்பட்டு நகரத்திற்கு உதவுமாறு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

கடைத் தெருக்கள்

மேற்சொன்ன நான்கு கடைத்தெருக்களும் கண்டு களிக்கத் தக்கவையாக இருந்தன. மிக்க விலை மதிப்புள்ள நவரத்தினக் கடைகள், பொன்நகைக் கடைகள், பொன்னும் மணியும் விரவிச் செய்யப்பட்ட நகைகளை விற்கும் கடைகள், வெள்ளிப் பாத்திரக் கடைகள் என்பன சிறப்பிடம் பெற்றிருந்தன. அவற்றை அடுத்துச் செம்பு, ஈயம், வெண்கலம், தகரம், இரும்பு முதலிய உலோகப் பொருள்களைக் கொண்ட கடைகள் அமைந்திருந்தன. பருத்தியாடைக் கடைகள், சீனப் பட்டாடைக் கடைகள் ஒருபுறம் சிறப்புறத் திகழ்ந்தன. ஒருபால் தந்தம், மரம், வெள்ளி, வெண்கலம் இவற்றால் செய்யப்பட்ட பலவகைப் பொருள்களைக் கொண்ட கடைகள் இடம் பெற்றிருந்தன, ஒருபக்கம் அகில், சந்தனம், குங்கிலியம் முதலிய மணப் பொருட் கடைகள் மலிந்திருந்தன.

குழல், யாழ், வீணை, மத்தளம் முதலிய இசைக் கருவிகளை விற்கும் கடைகள் வீறுகொண்டிருந்தன. நெல், சோளம், வரகு, தினை, சாமை, முதலிய கூலப் பொருட் கடைகள் பல இருந்தன. எள்நெய், தேங்காய்நெய், முத்துக்கொட்டை நெய் முதலிய நெய் வகைக் கடைகள் பல; புத்தகங்கள், எழுதுவதற்குரிய பனை யோலை ஏடுகள், பதப்படுத்தப்பட்ட எழுத்தாணிகள் என்பன வைக்கப் பட்டிருந்த கடைகள் பல; மல்லிகை, முல்லை, இருவாக்ஷி, ரோஜா முதலிய மலர்களைக் கொண்டு செய்யப்பட்ட பலவகை மனப் பொருட்கடைகள் பல பொலிந்திருந்தன. விஜயநகரத்தில் இருந்த அரசர்முதல் ஆண்டியீறாக அனைவரும் தினந்தோறும் ரோஜா மலர்களை மிகுதியாகப் பயன்படுத்தி வந்தனர். அதனால் விஜய நகரத்தில் ரோஜா மலர் விற்பனை மிகுதியாக நடைபெற்று வந்தது. வெற்றிலை - பாக்குக் கடைகளும் மிகப் பலவாக இருந்தன. நகர மக்கள் வெற்றிலை பாக்கை மிகுதியாகப் பயன்படுத்தினமையே இதற்குக் காரணம்.

நகர மாந்தர் தெருக்கள்

அரண்மனையைச் சுற்றிலும் அமைச்சர், பிரபுக்கள், மண்டலத் தலைவர், படைத்தலைவர், அரசாங்க அலுவலாளர், அவைப் புலவர்கள் முதலிய பெருமக்கள் வாழ்ந்த தெருக்கள் அமைந்திருந்தன. ஒவ்வொரு தெருவும் அகன்று காற்றோட்டம் பொருந்தியதாக இருந்தது. அத் தெருக்களில் மாடமாளிகைகளே காணப்பட்டன. அத்தெருக்களை அடுத்து வாணிகப் பெரு மக்களின் தெருக்கள் விளங்கின. விஜயநகரப் பெருநாட்டில் உள்நாட்டு வாணிகமும் அயல்நாட்டு வாணிகமும் சிறந்த முறையில் நடைபெற்று வந்ததால் வாணிகப் பெருமக்கள் வளமுற்று வாழ்ந்தனர். அவர்கள் தெருக்கள் பொன் கொழிக்கும் தெருக்களாகக் காணப்பட்டன. அவற்றுக்கு அப்பால் பொற்கொல்லர், இரும்புக் கொல்லர், கன்னார், தச்சர், தந்தவேலை செய்பவர், முத்துக் கோப்பவர், பவள வேலைக்காரர் கல் இழைப்பவர், கல்லுருச் செய்பவர், செம்பு, வெண்கலம், வெள்ளி, பொன் இவற்றைக் கொண்டு பல உருவங்களை அமைப்பவர் முதலியோர் வாழ்ந்த தெருக்கள் வளமாகக் காணப் பட்டன. நகரத்தின் சிறப்பிடத்தில் நடன மகளிர், நாடக மகளிர், இசைவாணர், ஆடல் ஆசிரியர், இசை ஆசிரியர், குழல்-யாழ்-வீணை-முழவு முதலியவற்றை இசைப்பவர், ஓவியக் கலைஞர் முதலியோர் வாழ்ந்த தெருக்கள் அழகுற்று விளங்கின. இசை, நடனம், நாடகம் இவற்றில் வல்லவராக இருந்த பொதுமகளிர் தெருக்கள் மாடமாளிகைகள் பெற்றுப் பெருவனப்புற்று விளங்கின என்று யாத்ரிகர் ஒருவர் குறித்துள்ளனர். அவர் கணக்குப்படி நகரத்தில் ஏறத்தாழ இலக்ஷம் வீடுகள் இருந்தன என்னலாம்; மக்கள்தொகை ஐந்து இலக்ஷம் என்று சொல்லலாம்.

அரண்மனை

நகரத்தின் நடுநாயகமாக விளங்கியது அரசர் அரண்மனை யாகும். அஃது அமைந்துள்ள இடத்தில் துங்கபத்திரையாற்றுக் கால்வாய்களிலிருந்து பிரிக்கப்பட்ட நீரோட்டங்கள் பளிங்குக் கற்கள்மீது பாய்ந்த வண்ணம் இருந்தன. அரண்மனை வானளாவிய கட்டிடங்களைப் பெற்றிருந்தது. அதன் வாயிலில் (கிருஷ்ணதேவராயர் காலத்தில்) கிருஷ்ணதேவராயர் உருவச் சிலையும் அவர் தந்தையாரான நரச நாயக்கரது உருவச் சிலையும் மிகவுயர்ந்த கற்களில் செய்து நிறுத்தப்பட்டிருந்தன. அரண்மனைக்குள் அரசர் மாளிகை, அரசமகளிர் மாளிகை, அரசர் தொழில் நிலையம், நடன மண்டபம், நாடக அரங்கு, இசை அரங்கு முதலியனவும் செய்குளங்களும் செய்குன்றுகளும் வளமுற்ற பூஞ்சோலைகளும் பொலிவுற்று விளங்கின.

அரண்மனையில் இருந்த அறைகள் பலவற்றுள் பெரு வேலைப்பாடு கொண்டது தந்த அறையாகும். அதன் சுவர்கள், மேற்கூரை, தூண்கள், அனைத்தும் தந்தத்தால் அமைந்திருந்தன. அவற்றின்மீது தாமரை மலர்கள் அழகாகச் செதுக்கப்பட்டிருந்தன. அத்தகைய அறையைத் தாம் யாண்டும் கண்டதில்லை என்று மேனாட்டு யாத்ரிகர் ஒருவர் குறித்துள்ளார் எனின், அதன் பேரழகை என்னென்பது! பார்க்கத்தக்க மற்றோர் அறை செல்வ அறையாகும். அதன் சுவர்கள் பொன் தகடுகள் அறையப் பெற்றவை. மேற்சொன்ன யாத்ரிகர் நெடுநேரம் விழித்த கண் இமையாமல் அந்த அறையைப் பார்த்து வியந்தனராம். அவ்வறையில் பொன் கட்டிகள், பொன் தகடுகள், நவரத்தினக் குவியல்கள், விலை மதிப்புடைய நகைகள் முதலியன நிறைந்திருந்தனவாம். அரண்மனை வெள்ளிப் பாத்திரங்களும் பொன் பாத்திரங் களுமே வழக்கில் இருந்தன என்று அந்த யாத்ரிகர் குறித்துள்ளார்.

அரண்மனையுள் இருந்த நடன மண்டபம் விழிகட்கு விருந்தளித்தது. அதன் சுவர்கள் முழுவதிலும் பல திறப்பட்ட அழகிய ஓவியங்கள் நிறைந்திருந்தன. தூண்கள்மீது நடன ஓவியங்கள் பேரழகுடன் காணப் பட்டன. மண்டபத் தரை ஒளிபெற்றும் வழவழவென்றும் காணப் பட்டது. அம்மண்டபத்தில் அரச மாதர் நடனம் கற்று வந்தனர். நடனமாதர் அரசர் கண்டுகளிக்க நாடோறும் நடித்துவந்தனர்.

அரசர் அரசியருடன் செய்குன்றுகளில் மாலைப் பொழுதினைக் கழிப்பது வழக்கம். அக்குன்றுகள் மீது பச்சைக் கொடிகள் படர்ந்து பசுமைக் காட்சியை நல்கின. குன்றுகளைச் சுற்றிலும் நறுமணம் நல்கும் மலர்ச் செடிகள் வைத்துப் பயிராக்கப் பட்டிருந்தன. செய்குளங்கள் ஆழமற்றுத் தெளிந்த நன்னீரைப் பெற்றுத் திகழ்ந்தன. அரசரும் அரசமாதரும் நீராடத் தனித்தனிச் செங்குளங்கள் இருந்தன. அரண்மனைக்குள்ளேயே அழகிய பூஞ்சோலைகள் இருந்தன. அவற்றில் வானுற ஓங்கி வளம்பெற வளர்ந்த பாக்கு, தென்னை, மா, பலா முதலிய மரவகைகள் காணப்பட்டன. அசோக மரங்கள் மிக்கிருந்தன. மரக்கிளைகளில் ஆங்காங்கே ஊஞ்சல்கள் தொங்கவிடப்பட்டிருந்தன.

நகரப் பெருமக்கள்

மண்டலேசுவரர் (மாகாணத் தலைவர்கள்), அமைச்சர், பிரபுக்கள், சேனைத்தலைவர் முதலியோர் அரையில் ஆடையும் உடம்பில் சட்டையும் தலையிற் பாகையும் அணிந்திருந்தனர். அவரவர் அலுவலுக்குத் தக்க ஆடை வேறுபாடுகள் இருந்தன. அவர்கள் பல்லக்கிற் செல்லும் உரிமை பெற்றிருந்தனர். பிரபுக்கள் தங்கள் வருவாயைத் தாராளமாகச் செலவிட்டுப் போக பாக்கியங்களை அநுபவித்து வந்தனர். அவர்கள் இல்லங்கள் மாடமாளிகைகள். அவை திருமகள் திருவோலக்கம் கொண்ட இடங்களாகக் காட்சி அளித்தன.

கலை மகளிர்

விஜயநகரத்தில் இருந்த இசை-நடன-நாடகக் கலைகளை வளர்த்த மகளிர் அரசராலும் பொது மக்களாலும் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டனர். அவர்கள் உயர்ந்த மாடமாளிகைகளில் வாழ்ந்து வந்தனர். பிரபுக்கள் முதலிய பெருமக்கள் அவர்கள் மாளிகைக்கட்குத் தாராளமாகச் சென்று வந்தனர். அஃது இழிவாகக் கருதப்படவில்லை. அம்மகளிர் அரண்மனையைச் சேர்ந்த பெண்மணிகட்கு ஆடல் பாடல்களைக் கற்பித்து வந்தனர்; தங்களுடைய ஆடல்-பாடல்களால் அரசரையும் அவையோரையும் அடிக்கடி மகிழ்வித்து வந்தனர்; ஆண்டு தோறும் மஹாநகமியன்று அரசர் முன்னர் மற்போர் புரிந்து பரிசு பல பெற்றனர். அவர்கள் அணிந்திருந்த அணிகள் விலைமதிப்புப் பெற்றவை. அவர்கள் தாம்பூலம் தரிப்பதில் பெருவிருப்பம் உடையவர்; தாம்பூலப் பட்டிகளைப் பலவகை யாக மடிப்பதில் பயிற்சிபெற்றவர். அரசரும் பிரபுக்களும் அவர்கட்கு நிலங்களை மானியமாக விட்டிருந்தனர். சுருங்கக் கூறின், கலை மகளிர் எல்லா நலன்களையும் பெற்று இனிதாக வாழ்ந்து வந்தனர் என்னலாம்.

மக்கள் வாழ்க்கை

விஜயநகரத்தில் எல்லாப் பொருள்களும் குறைந்த விலைக்குக் கிடைத்தன. மேனாட்டு யாத்ரிகர் ஒருவர், ‘ஒரு கோழியின் விலை அரையணா; ஆறு முதல் எட்டுக் கவுதாரியின் விலை ஒன்றரையணா; மூன்று திராiக்ஷக் குலைகளின் விலை எட்டணா; பன்னிரண்டு ஆடுகளின் விலை ஐந்து ரூபாய் என்று குறித்துள்ளார்.’ இக்குறிப்பைக் கொண்டு பொருள்களின் விலை மலிவினை நன்கறியலாம்; அறியவே, எளிய மக்கம் இன்பமாக உணவுண்டு வாழ்ந்து வந்தனர் என்பதை எளிதில் உணரலாம் அல்லவா?

பொழுது போக்கு

பெருமக்கள் காலையிலும் மாலையிலும் உடற்பயிற்சி, படைப் பயிற்சிக்குரிய வேலைகளில் ஈடுபட்டனர்; மற்ற நேரங்களில் தத்தம் உத்தியோகம் காரியங்களைக் கவனித்தனர்; ஓய்வு நேரங்களில் இசை, நடனம், நாடகம் முதலியவற்றில் ஈடுபட்டனர். பொது மக்கள் மாலை வேளைகளில் கோவில்கட்கும் சென்று இறை வணக்கம் செய்தனர்; அங்கு நடைபெற்ற ஆடல், பாடல்களைக் கவனித்தனர்; பிற நேரங்களில் தத்தம் அலுவல்களை ஊக்கமாகக் கவனித்து வந்தனர். சுருங்கக் கூறின்.

“வண்ணம் இல்லையோர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லைநேர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லைபொய் உரைஇ லாமையால்;
வெண்மை இல்லைபல் கேள்வி மேவலால்”

என்ற கம்பர் பெருமானது கூற்று விஜயநகர மக்கள் அளவில் மிகவும் பொருத்தமாக இருந்தது என்னல் தவறாகாது.

கோவில்கள்

தலைநகரத்தில் சைவ, வைணவ, சமணக் கோவில்கள் இருந்தன. பம்பாபதீசுவரர் கோவில், இராமசுவாமி கோவில், விட்டலசுவாமி கோவில், கிருஷ்ணசுவாமி கோவில் என்பன குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்தும் முதல்தரமான கற்களைக் கண்டு கட்டப்பட்டவை; வானளாவிய கோபுரங்களைக் கொண்டவை. இவற்றில் உள்ள இரட்டைத் தூண்கள் கவனிக்கத்தக்கவை. தூண்களும் சுவர்களும் மேற்கூரைகளும் சிறந்தது சிற்ப வேலைப்பாடு கொண்டவை. ஓவியங்கள் விழிகட்கு விருந்தளிப்பவை. கோவில்களில் உள்ள சிற்பங்களும் ஓவியங்களும் விஜயநகரப் பேரரசின் காலத்தில் உண்டான கலை வளர்ச்சியை உலகறியச் செய்வனவாகும். விஜயநகரம் அழிந்து பட்ட இந்தக் காலத்திலும் அதன் சிற்ப-ஓவியச் சிறப்பு உலகம் பாராட்டத் தக்கதாக இருக்கின்றது எனின், அந்நகரம் வளமுற்றிருந்த காலத்தில் அக்கலைகள் எங்ஙனம் வளர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் என்பதை ஒருவாறு உய்த்துணரலாம் அல்லவா?

அடிக்குறிப்பு

1.  பாலகாண்டம், நாட்டுப்படலம் - 53.

விஜயநகர அரசர்கள்

ஹரிஹரர்

விஜயநகர அரசு ஏறத்தாழ கி.பி. 1335-இல் ஏற்படுத்தப் பட்டது என்னலாம். அதன் முதல் அரசர் ஹரிஹரர் ஆவர். அவர் ஆட்சிமுறையைச் செவ்வைப்படுத்தினார்; நான்கைந்து சிற்றூர்களை ஓர் ஊராக்கி அதன் ஆட்சியைக் கணக்கர் ஒருவர் வசம் ஒப்புவித்தார்; இருபது அல்லது முப்பது கிராமங்களை ‘ஸ்தலம்’ என்ற பெயரால் ஒன்றாக்கி, அத்தொகுதியை ஸ்தல கணக்கர் அதிகாரத்திற்கு உட்படுத்தினார். பல ஸ்தலங்கள் சேர்ந்தது நாடு. நாட்டில் சட்டத்தையும் அமைதியையும் நிலைநாட்ட நாடாள்வாரை நியமித்தார்.

புக்கர்

ஹரிஹரர் தம்பியாரான புக்கர் ஆண்ட காலத்தில் சமண - வைணவப் போராட்டம் ஏற்பட்டது. புக்கர் இருதிறத்தாரையும் வரவழைத்தார்; சிறுபான்மையோரான சமணரை வைணவரிடம் ஒப்புவித்து, “இச்சமணர்களைக் காத்தல் உங்கள் கடமை. இவர் சமயத்தைப் பாதுகாத்தலும் உங்கள் கடனாகும். இவர்களும் உங்களைப் போல இந்நாட்டிற்கு உரியவர். நீங்கள் அநுபவிக்கும் எல்லா உரிமைகளையும் அநுபவிக்க இவர்கட்கும் நமது அரசாங்கத்தில் உரிமையுண்டு. எல்லாச் சமயங்களும் ஒற்றுமையுடன் இந்நாட்டில் வாழவேண்டும்” என்று அறிவுறுத்தினார். இதிலிருந்து விஜயநகர அரசரது பரந்த சமரச மனப்பான்மையை நன்குணரலாம் அல்லவா?

இரண்டாம் ஹரிஹரர்

இவர் புக்கராயர் மகனாராவர். விஜயநகரப் ‘பேரரசர்’ என்ற பட்டத்துடன் மணிமுடி தரித்து அரசாண்ட முதல் அரசர் இவரேயாவர். இவர் காலத்தில் போர்கள் நடைபெறவில்லை. இவர் ‘வேத விதிகளைப் பின்பற்றுபவர்’, ‘வேத உரைகளை வெளியிடுபவர்’ என்று கல்வெட்டுகள் குறித்திருத்தலால், இவர் வடமொழிப் பற்றுடையவர் - வடமொழிப் புலவர்களை ஆதரித்தவர் என்பன புலனாகும்.

முதலாம் தேவராயர்

விஜயநகர அரசு ஏற்பட்ட சில ஆண்டுகட்குப் பின் துங்க பத்திரைக்கு வடக்கே பாமினி அரசு ஒன்று ஏற்பட்டது. அதன் சுல்தான்கள் தமது புதிய அரசினைப் பலப்படுத்துவதில் அக்காலப் பாமினி சுல்தான் ஆண்டுக்கு ஒருமுறை விஜய நகரத்தின் மீது படையெடுத்து வந்தார். தேவராயர் ஒவ்வொரு முறையும் பெரும் பொருள் தந்து சமாதானம் செய்து கொண்டார்.

இரண்டாம் தேவராயர்

இவ்வரசர் காலத்திலும் போர்கள் பல நடந்தன. இவர் முஸ்லிம்களைத் தம் படையில் வீரர்களாகச் சேர்த்தார்; எனினும் இவர் எதிர்பார்த்தபடி படைவன்மை பெறவில்லை. அதனால் இவர் சுல்தானுக்குக் கப்பம் கட்டிவர இசைந்தார்.

இவரது காலத்தில் இந்துக்கள் மானவுணர்ச்சி பெற்றுப் போரில் திறமை பெறலாயினர். இவர் காலத்தில் வெளிநாட்டு வாணிகம் சிறப்புற்றது. வெளிநாட்டுத் தூதுவர் இவரிடம் வந்து சென்றனர். அரசர் அவர்களை வரவேற்று உபசரித்துப் பாராட்டியதையும் விஜயநகரப் பெருநாட்டின் பல விவரங்களையும் அத்தூதர்கள் பாராட்டி எழுதியுள்ளனர்.

ஹரிஹரர்-புக்கர் முதல் அரசர் பதின்மூவர் 150 ஆண்டளவும் விஜயநகர அரசர்களாக இருந்தனர். அக்காலத்தில் தென் இந்தியா அந்நியர் படையெடுப்புக்கு ஆளாகாது ஒருவாறு அமைதி பெற்றிருந்தது. அதனால் நாட்டில் வடமொழி-தமிழ்-தெலுங்கு-கன்னட மொழிப் புலவர்கள் தோன்றிப் பல நூல்களைச் செய்தனர். சமய வளர்ச்சி மிகுதிப்பட்டது. பழைய கோவில்கள் பழுதுபார்க்கப் பட்டன. சிற்றரசர்கள் பேரரசர்க்கு அடங்கி ஒழுங்காக நடந்து வந்தனர்.

** இரண்டாம் பரம்பரை**
கஜபதி படையெடுப்பு

ஒரிஸ்ஸா மாகாணத்தை ஆண்டுவந்த அரசர்கள் கஜபதிகள் எனப்பட்டனர். அவர்கள் பாமினி சுல்தானையும் விஜயநகர அரசரையும் சமயம் வாய்த்தபோதெல்லாம் தாக்கி வந்தனர். ஏறக்குறையக் கி.பி. 1475-இல் பாமினி நாட்டிற் குழப்பம் உண்டானது. கஜபதி அரசர் அதனைப் பயன்படுத்திக் கொண்டு கீழ்க் கரையோர நாடுகளைக் கைப்பற்றிக் கொண்டே திருவண்ணாமலை சென்றார். அவரை எதிர்க்க அக்கால விஜய நகர அரசருக்கு வலிமை இல்லை. அதனால் உள்நாட்டிலும் சிற்றரசர் பலர் குழப்பங்களை விளைத்தனர். விஜயநகரப் பெருநாடு குழப்பத்திற்கு இடமாயிற்று.

சாளுவ நரசிங்கர்

திருப்பதியை அடுத்த சந்திரகிரியைச் சாளுவ மரபினரான நரசிங்கர் என்பவர் அரசாண்டு வந்தார். அவர் விஜயநகர அரசர்க்கு அடங்கிய சிற்றரசர். அவர் சிறந்த போர் வீரர்; எடுத்த காரியத்தைச் செய்து முடிக்கும் ஆற்றல் மிக்கவர்; அஞ்சா நெஞ்சினர்; விஜயநகர அரசரது வலியற்ற நிலையையும் கஜபதியின் படையெடுப்பையும் உள்நாட்டுக் குழப்பத்தையும் கண்டு மனம் வருந்தினார்; பெருநாட்டைச் சிதறவிடாமல் காக்கவேண்டும் என்று உறுதி கொண்டார். அவரது தானைத் தலைவர் நரச நாயக்கர் என்பவர். அவர் நரசிங்கரைப் போலவோ சிறந்த போர்வீரர். நிரசிங்கர் அத்தானைத் தலைவருடன் கலந்து ஆலோசித்தார்; பெரும் படையைத் திரட்டினார்; கஜபதி வென்ற நாடுகளைக் கைவசப் படுத்தினார்; பின்னர் விஜயநகரத்தின் மீது படையெடுத்தார். அப்பொழுதிருந்த பயனற்ற அரசர் நாட்டை விட்டு ஓடி ஒளித்தார். நரசிங்கர் விஜயநகரப் பேரரசர் ஆனார். அவரும் அவர் மரபினரும் விஜயநகரத்தை ஆண்ட இரண்டாம் பரம்பரையினர் எனப்பட்டனர்.

நரசிங்கர் சிறந்த அரசியல் அறிஞர்; பெருவீரர்; உள்நாட்டுக் குழப்பத்தை அடக்கிய வீரர்; நாட்டு ஆட்சியை நன்முறையில் நடத்தினார்; கோவில்கட்கு மானியங்களை அளித்தார்; கற்றாரைப் பெருமைப் படுத்தினார்; குடிமக்கள் பாராட்டுக்கு உரியவர் ஆயினார். அவரது ஆற்றலையும் நல்லியல்புகளையும் கண்ட அயல்நாட்டுத் தூதுவர் விஜயநகரப் பெருநாட்டை ‘நரசிங்கர் நாடு’ என்று அழைப்பாராயினர். நரசிங்கர் பெருநாட்டைக் காத்து வந்ததுடன் வடக்கே இருந்த சுல்தான்களுடன் ஓயாது போரிட்டு வந்தார்.

நரசிங்கர் அரேபியாவிலிருந்து போர்க்குதிரைகளை வரவழைக்க விரும்பினார்; அவை வந்தது இறங்குதற்குரிய துறை முகங்களுக்காகத் துளுவ நாட்டைக் கைப்பற்றினார்; அத்துறை முகங்களில் தம் படைகளைப் பாதுகாப்புக்காக வைத்தார்; நல்ல குதிரைகளைக் கொண்டுவந்து விற்ற அரேபிய வாணிகர்க்குப் பெரும்பொருள் பரிசாகக் கொடுத்தார்; இங்ஙனம் அவர் சிறந்த குதிரைப் படைகளைத் தயாரித்தார்; புதிய படைவீரர்களைச் சேர்த்துச் சிறந்த முறையிற் பயிற்சி அளித்தார். நரசிங்கர் விஜயநகர அரசினைக் கைப்பற்றியிராவிடில், விஜயநகரப் பெருநாடு அழிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

நரசிங்கர்க்குப் பின்

நரசிங்கர் இறக்குந்தறுவாயில் அவருக்கு ஆண்மக்கள் இருவர் இருந்தனர். அவர் அவர்களைத் தம் சேனைத்தலைவரான நரச நாயக்கரிடம் ஒப்புவித்து, ‘நாட்டைக் காத்து வருக; இச்சிறுவருள் அரசுத் திறமையுடையவன் என்று உமக்குப் புலப்படும் ஒருவனைத் தக்க வயதில் அரசனாக்குக’ என்று கூறி இறந்தார். நரச நாயக்கர் தம் தலைவர் ஆணை கடவாது நாட்டையும் அவர் மக்களையும் காத்து வந்தார்.

நரசிங்கருடைய மூத்தமகன் திம்ம பூபாலன் என்பவன். நரச நாய்க்கர் அவனை அரசனாக்கினார். ஆனால் நரச நாயக்கருக்குப் பகைவனான திம்மரசன் என்ற தானைத் தலைவன், ‘நரச நாயக்கர் நாட்டைத் தமதாக்க அரசனைக் கொன்றுவிட்டார்’ என்று குடிகள் நினைக்க வேண்டுமென்று கருதித் திம்ம பூபாலனைக் கொன்று விட்டான். அச்சூழ்ச்சியை அறிந்த நரச நாயக்கர் தாம் குற்றமற்றவர் என்பதை நாட்டுக்கு அறிவிக்க நரசிங்கருடைய இரண்டாம் மகனான இம்மடி நரசிம்மன் என்பவனை அரசனாக்கினார்; அவன் இளைஞன் ஆதலின் நாட்டின் முழுப் பொறுப்பையும் தாமே கவனித்து வந்தார். இம்மடி நரசிம்மன் திம்மரசனை மதித்து வந்தான். ‘திம்மரசனே உமது சகோதரன் கொலைக்குக் காரணமானவன். ஆதலின் அவனைத் தக்கவாறு தண்டிக்க வேண்டும்’ என்று நரச நாயக்கர் அரசனிடம் வற்புறுத்தினார். அரசன் அதனைப் பொருட்படுத்தவில்லை. அவன் நரச நாயக்கரது செல்வாக்கை உளமார வெறுத்தான்; அவரால் தாம் பட்டமடைந்ததை மறந்தான்; ‘திம்மரசன் நம் அண்ணனைக் கொன்றதால் அல்லவா நாம் பட்டமடைந்தோம்’ என்று எண்ணி அவனை நேசிக்கலானான்; அக் கொடியவனைச் சிறப்பிக்கலானான்; நரச நாயக்கரை அமைச்சர் பதவியிலிருந்து விலக்கி அப்பதவியில் திம்மரசனை நியமித்தான்.

நரச நாயக்கர் சிறந்த வீரர்; நாட்டைப் பாதுகாத்தவர். ஆதலால் விஜயநகர வீரர்கள் அவரிடம் மிக்க அன்புடன் நடந்து வந்தனர். அவர் அவ்வீரர்களைத் திரட்டித் திடீரென்று விஜய நகரத்தின் மீது படையெடுத்தார். அனுபவமற்ற இம்மடி நரசிம்மன் அஞ்சிச் சமாதானம் வேண்டினான். நரச நாயக்கர் விருப்பப்படி திம்மரசன் தலை அவரது கோபத்தை அடக்கக் கொண்டுவரப் பட்டது. அவர் செல்வாக்கு முன்னிலும் மிகுதியாக வேரூன்றிப் பரவலாயிற்று. அரசன் ‘பொம்மை அரசன்’ ஆனான்.

நரச நாயக்கர் சிறந்த அரசியல் அறிஞர். அவர் பொறுப்பற்ற நரசிம்மனைப் பெனுகொண்டாவில் இருந்து இன்பமாக வாழுமாறு யோசனை கூறினார்; ஆண்டுக்கு இருபதினாயிரம் பொன் அவன் செலவுக்கு அளித்தார். அரசன் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு பெனுகொண்டாவில் வாழலானான். அவனிடம் சூழ்ச்சிக்காரர் நெருங்காத படியும் அவனைக் கொலை புரியாதபடியும் பாதுகாக்க இருபதினாயிரம் வீரர் கொண்ட சேனை பெனுகொண்டாவில் வைக்கப் பட்டது. நரச நாயக்கரது நம்பிக்கைக்குப் பாத்திரரான திம்மப்ப நாயக்கர் என்பவர் அச்சேனைத் தலைவராக இருந்தார்.

** மூன்றாம் பரம்பரை**
இம்மடி நரசிம்மன் தன் தமையனைக் கொன்ற திம்மரசனை அமைச்சனாக்கினவன்; தன்னை வளர்த்துப் பாதுகாத்தது அரசனாக்கிய வரை வேலையிலிருந்து நீக்கியவன்; சூழ்ச்சிகட்கு இடந்தந்தவன். இக் குற்றங்களையுடைய பொறுப்பற்ற இளைஞன் பெருநாட்டுக்கு அரசனாக இருப்பதில் பயன் என்ன? இதனை நரச நாயக்கர் எண்ணி எண்ணி மனம் வருந்தினார்; இறுதியில் அவனை முன்சொன்னவாறு பெனுகொண்டாவில் காலங்கழிக்க விட்டுத் தாமே நாட்டை ஆண்டுவந்தார். அவர் தமது இறுதிக் காலத்தில் தாமே விஜயநகர அரசராக விளக்கமுற்றார். அவருக்குப் பிறகு அவர் மரபினரே அரசர்களாக வந்தனர். ஆதலின் நரச நாயக்கரும் அவர் மரபினரும் விஜயநகரத்தை ஆண்ட மூன்றாம் பரம்பரையினர் எனப்பட்டனர்.

நரசிங்க சாளுவர் விஜயநகர அரசர் இழந்த இராயச் சூரைக் கைப்பற்ற முனைந்து தோற்றார்; நரச நாயக்கரும் அதனைக் கைப்பற்றிக் கூடவில்லை. சிற்றரசர்களை அடக்கிப் பெருநாட்டைக் காப்பதிலேயே அவர் காலம் கழிந்தது. அப்பெரு வீரர் சேர, சோழ, பாண்டியர்களை அடக்கினார்; கஜபதி அரசரை வென்றார்; வடக்கே இருந்த பாமினி சுல்தான்களது படையெடுப்பைத் தடுத்து நின்றார். சுருங்கக் கூறின், அவரால் பெருநாடு சிதறுண்டு போகமாற் காக்கப்பட்டது என்னலாம்.

வீர நரசிம்மர்

இவர் நரச நாயக்கரது மூத்த புதல்வர். இவர் சில ஆண்டுகள் தம் தந்தையாரைப் போலவே அரசர் சார்பாக நின்று நாட்டை ஆண்டார்; பிறகு கி.பி. 1505-இல் இம்மடி நரசிம்மனைக் கொன்று தாமே அரசராக முடிசூடிக் கொண்டார். இச்செயல் பெருநாட்டில் பெருங் குழப்பத்தை உண்டாக்கியது. சிற்றரசர்கள் கலகம் விளைத்தனர். அவ்வமயம் யூசூப் ஆடில்கான் என்ற பாமினி சுல்தான் விஜயநகரப் பெருநாட்டின்மீது படையெடுத்தார். அவருடன் விஜயநகர அரசுக்கு அடங்கிய சிலர் சேர்ந்து கொண்டனர். எனினும் ‘ஆரவீடு’ சீமையை ஆண்ட சிற்றரசர் முதலியோர் வீர நரசிம்மருடன் உறுதியாக நின்று போரிட்டுச் சுல்தானை விரட்டியடித்தனர். வீரநரசிம்மர் பெரும்படையுடன் கன்னடம், துளு, கொங்கு நாடுகட்குச் சென்று, அங்கிருந்து கலகம் செய்துவந்த சிற்றரசர்களை அடக்கினார்.

வீர நரசிம்மர் சிறந்த போர் வீரர். வாட்போரினை வளர்த்தார்; குடிகளுள் இருவர் தமக்குள் உண்டான பூசலை வாட்போரைக் கொண்டு தீர்த்துக் கொள்ளலாம் என்று பிரசாரம் செய்வித்தார். இப்பிரசாரத்தால் நாட்டில் வாட்போர்ப் பயிற்சிக் கூடங்கள் தோன்றின. குடிகள் வாட்போர்ப் பயிற்சியில் ஊக்கம் காட்டினர். சிறந்த வாட்போர் வீரர்க்கு அரசர் அழகிய பெண்களைப் பரிசாக அளித்தனார். ‘அச்சம் என்பது குடிகளிடம் இருத்தலாகாது. வீர வாழ்க்கையே வேண்டும்’ என்று வீர நரசிம்மர் விரும்பினார். அவர் விருப்பம் ஓரளவு பயனளித்தது. இளைஞர்கள் வீரர்களாக விளங்கினர். அதனால் மூன்றுமுதல் நான்கு லக்ஷம் போர்வீரர் இராணுவத்திற் சேரலாயினர்.

வீர நரசிம்மர் குடிகளிடம் அன்புடையவர். அவர்கட்கு ஒரு குறைவும் ஏற்படலாகாது என்பது அவர் கருத்து. அவர் தம்மால் இயன்றவரை குடிகட்கு நம்மை செய்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தார்.

வீர நரசிம்மர் நரச நாயக்கரது முதல் மனைவியின் புத்திரர்; கிருஷ்ணதேவ ராயர் இரண்டாம் மனைவியான நாகலாதேவி குமாரர்; அச்சுத ராயரும் சீரங்கரும் மூன்றாம் மனைவியான ஓபாம்பாள் பிள்ளைகள். வீர நரசிம்மர்க்குப் பிறகு கி.பி. 1509-இல் கிருஷ்ணதேவராயர் அரியணை ஏறினார். அவர் முடிசூடிக் கொண்ட நாள் கிருஷ்ண ஜயந்தி நாளாகும்.

அடிக்குறிப்பு

1.  8-8-1509

கிருஷ்ணதேவராயர் போர்ச் செயல்கள்

தென்னாட்டு நிலைமை

கிருஷ்ணதேவராயர் அரியணையேறிய காலத்தில் தென்னாட்டு நிலைமை எங்ஙனம் இருந்தது? பெருநாட்டில் இருந்த சிற்றரசர்கள் பேரரசர்க்கு முழுவதும் அடங்கியவர்களாக இல்லை. தென் கன்னட நாட்டை ஆண்டுவந்த கங்கராஜன் என்ற சிற்றரசன் இராயர்க்கு அடங்கவில்லை. அவன் தலைநகர் உம்மத்தூர் என்பது. அவன் சீரங்கப்பட்டணம், சிவசமுத்திரம் என்னும் நகரங்களையும் கைப்பற்றி அங்குக் கோட்டைகளை அமைத்துப் பலப்படுத்தினான். வீர நரசிம்மர் காலத்திலேயே அவன் கலகம் விளைத்தான்; கிருஷ்ணதேவராயர் காலத்திலும் அடங்காப் பிடாரியாகத் திரிந்தான்; மைசூர்ப் பிரதேசம் முழுவதையும் தனக்கு உரிமையாக்கிக் கொள்ள எண்ணினான். ஒரிஸ்ஸா அரசனான பிரதாபருத்ரன் விஜயநகரப் பெருநாட்டின் வடகிழக்கு ஜில்லாக்களைக் கைப்பற்றியிருந்தான். அவன் இராயர்க்குக் கொடிய பகைவனாக விளங்கினான். வடக்கே பாமினி அரசு ஐந்து சிற்றரசுகளாகப் பிரிந்து சுல்தான்கள் ஐவர் ஆட்சியில் இருந்தது. அப்பிரிவுகள் பிரார், அஹ்மத்நகர் பிதர், கோல்கொண்டா, பிஜாப்பூர் என்பன. பிஜாப்பூர்ச் சுல்தான் அடிக்கடி விஜயநகரப் பெருநாட்டின் எல்லைப் புறத்தைத் தாக்கி வந்தார். போர்ச்சுகீசியர் இராயர்க்கு வேண்டியவராக இருந்ததும் சில சமயங்களில் துன்பம் இழைத்து வந்தனர். ஆதலின் கிருஷ்ணதேவராயர் பட்டம் ஏற்றது முதல் போர்த்துறையில் இறங்க வேண்டியவரானார்.

இராயரும் சுல்தானும்

பிதர் சுல்தான் மதவெறி கொண்டவர். அவர் ஆண்டுக் கொருமுறை தம் நாட்டுப் பிரபுக்களை அழைத்துப் படை திரட்டி விஜயநகரப் பெருநாட்டின் மீது படையெடுத்து விக்கிரக வணக்கத்தாரை அழித்து அல்லது மாற்றி இஸ்லாத்தைப் பரப்புவதைக் கொள்கையாகக் கொண்டவர். அவர் ஏறத்தாழக் கி.பி. 1501 முதல் அவ்வாறு செய்துவந்தார். கிருஷ்ணதேவராயர் 1509-இல் அரசரானார் அல்லவா? அதற்கு அடுத்த ஆண்டில் குறிப்பிட்ட நாளில் பிதர்சுல்தான் முன்போலப் படை திரட்டி விஜயநகர நாட்டின்மீது படையெடுத்தார். இராயர் இளமை முதலே பிதர்சுல்தான் படையெடுப்பை நன்கறிந்தவர்; ஆதலால் அவர் பட்டம் ஏற்றதும். பெரும்படையைத் தயாரித்தார்; சுல்தான் தன் பிரபுக்களுடன் படையெடுத்து வருவதை அறிந்ததும், இராயர் தம் பெரும்படையுடன் சென்று சுல்தானைத் தீவானீ என்னும் இடத்தில் எதிர்த்துப் போரிட்டார். போர் கடுமையாக இருந்தது. சுல்தான் படை சிதறடிக்கப்பட்டது. சுல்தான் ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டார். அவர் விஜயநகர சேனைத் தலைவர் ஒருவரால் காக்கப்பட்டார். தனியே அகப்பட்ட அவரை விட்டு விடுமாறு இராயர் கட்டளை பிறந்தது. இங்ஙனம் பிதர்சுல்தான் தோல்வியுற்று உயிர் பிழைத்து ஓடலானார். இராயர் அவரது படையைப் பின்பற்றி சென்றார். இராயர் படையைத் தடுக்கப் பிஜப்பூர்ச் சுல்தான் முயன்றார். இரு திறத்தார்க்கும் கோவில் கொண்டா என்னும் இடத்தில் போர் நடந்தது. சுல்தான் போரில் தோற்று உயிர் துறந்தார். கோவில் கொண்டாவில் இருந்த கோட்டை இராயர் வசப்பட்டது.

இராயர் மேற்சொன்ன வெற்றிகட்குப் பிறகு விஜயநகரத்தை அடைந்தார்; தம் படைகளைத் திருத்தி அமைத்தார்; குதிரைப் படைகளைப் பெருக்கினார்; சிறந்த வீரர்கட்கு உயர்ந்த பதவிகளை அளித்தார்; உயரிய முறையில் போர்ப் பயிற்சியை மிகுதிப் படுத்தினார்.

இராயரும் இராயச்சூரும்

இராயச்சூர்ப் பிரதேசம் முதலில் இராயர்களைச் சேர்ந்த பகுதியாக இருந்தது. முதல் பரம்பரையினர் காலத்திலேயே பாமினி அரசர் அப்பகுதியைக் கைப்பற்றிக் கொண்டார். அது முதல் அதனைக் கைப்பற்ற நரசிங்கர், நரச நாயக்கர் முதலியோர் முயன்றும் பயன் பெறவில்லை. கிருஷ்ண தேவராயர் அதனைக் கைப்பற்ற வேண்டும் என்று துணிந்து சமயத்தை எதிர் பார்த்திருந்தார்.

கோவில் கொண்டாப் போருக்குப் பிறகு பிதர், பிஜாப்பூர் அரசர்கட்கும் பிரபுக்களுக்கும் போர் மூண்டது. அவர்கள் நாடுகள் குழப்பத்தில் ஆழ்ந்தன. பிஜாப்பூர் நாட்டைச் சேர்ந்த பெல்காம் முதலிய இடங்களிலிருந்து இந்துக்கள் கலக்கமுற்றுக் கிருஷ்ண தேவராயரைத் துணைக்கு வருமாறு அழைத்தனர். தமது நாட்பட்ட எண்ணத்தை முடித்துக்கொள்ள அதுவே தக்க சமயம் என்று எண்ணிய இராயர் பெரும்படையுடன் 1510-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்று இராயச்சூரைக் கைப்பற்றினார்; பிறகு குல்பர்க்காவைத் தாக்கினார்; அதனைக் கைப்பற்றி அதன் கோட்டைக் கதவுகள் மீது தமது அரச முத்திரையைப் பதித்தார்; சிறைப்பட்டிருந்த பிதர் நாட்டுச் சுல்தானை விடுவித்து அரசராக்கினார்; அதனால் ‘யவன ராச்சிய ஸ்தாபனா சாரியர்’ என்ற பட்டத்தைப் பெற்றார்.

உம்மத்தூர் அரசனை அடக்குதல்

இராயர் அடுத்தபடி உள்நாட்டுக் குழப்பத்தை அடக்க முனைந்தார்; பல ஆண்டுகளாக அடங்காதிருந்த உம்மத்தூர் அரசனை அடக்க விரும்பினார். உம்மத்தூர் அரசனான கங்கராஜன் சீரங்கப்பட்டணம், சிவசமுத்திரம் என்னும் தீவுகளில் கோட்டைகளை அமைத்துக்கொண்டு இராயர்க்கு அடங்காது திரிந்தான். அவன் பெனுகொண்டாவையும் கைப்பற்றிக் கொண்டான். அதனாற் சீற்றங்கொண்ட இராயர் பெரும்படையை அனுப்பினார். சில வாரங்கட்குப் பிறகு பெனுகொண்டா வீழ்ச்சியுற்றது. கங்கராஜன் சிவசமுத்திரக் கோட்டைக்குள் போர்க் கருவிகளைச் சேமித்து வைத்திருந்தான்; அதனையே தன் தலை நகராகவும் கொண்டிருந்தான். இராயர் தம்படையுடன் அங்குச் சென்றார்.

ஓராண்டுக்கு மேலாக முற்றுகை நீடித்தது. இராயர் வேறு சிற்றரசர் சிலருடைய உதவியைப் பெற்றுச் சிவசமுத்திரக் கோட்டையைக் கைப்பற்றினார்; பின்னர்ச் சீரங்கப் பட்டணத்தையும் வசப்படுத்தினார்; அந்தப் பகுதியைத் தனி மாகாண மாக்கினார். சீரங்கப்பட்டணத்தை அதன் தலை நகரமாக்கினார்; சாளுவ கோவிந்தராசர் என்பவரைக் கவர்னராக நியமித்தார்.

உதயகிரி முற்றுகை கலிங்கப்போர்

சாளுவ நரசிங்கரது ஆட்சி இறுதியில் கஜபதி கைப்பற்றிய உதயகிரி, கொண்டவீடு முதலிய இடங்கள் கிருஷ்ணதேவர் காலம் வரை விஜயநகர அரசர்களால் மீட்கப்படாமல் இருந்தன. கிருஷ்ண தேவராயர் அவற்றை மீட்க மனம்கொண்டார். அவர் கி.பி. 1513-இல் உதயகிரிக் கோட்டையை முற்றுகையிட்டார். உதய கிரிக் கோட்டை எளிதில் கைப்பற்றப்படாதது ஆதலின் முற்றுகை ஒன்றரையாண்டு நீடித்தது. இராயர் மலைப் பாதைகளை அகலமாக்கினார்; பாறைகளை உடைத்து வழிகளை உண்டாக்கினார்; கோட்டையை நெருங்கி வளைத்துக் கொண்டார். அப்பொழுது கோட்டைக்குள் இருந்தவர் கஜபதியின் சிறிய தகப்பனாராவர். அவர் கோட்டையை விட்டு வெளிவரவில்லை.

உதயகிரி ஒன்றரை வருடகாலமாக முற்றுகையிடப்பட்டு இருப்பதைக் கேள்வியுற்ற கஜபதி பெரும்படையுடன் உதயகிரியை நோக்கி வந்தான். அதனை அறிந்த இராயர் தம் சேனையின் பெரும் பகுதியை அழைத்துக் கொண்டு எதிர் சென்று கஜபதியைத் தாக்கினார். போர் கடுமையாக நடைபெற்றது. இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியது. இறுதியில் கஜபதி அரசன் தோற்றோடினான். இராயர் மீட்டும் உதயகிரியை அடைந்தார்; உள்ளேயுள்ள தலைவன் தலைமீது தம் பாதத்தை வைக்கும் வரை தாம் நீராடி உணவு கொள்வதில்லை என்று சபதம் செய்தார். இதனை அறிந்த கோட்டைத் தலைவர் தமது முடியை அனுப்பு அதன்மீது இராயர் பாதத்தை வைத்துத் தமது உயிரைக் காக்குமாறு வேண்டினார். இராயர் அங்ஙனமே செய்து கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டார்; கொண்டமரசையன் என்பனைக் கவர்னராக நியமித்தார்.

பின்னர் இராயர் தம் மனைவியாரான திருமல தேவி, சின்னாதேவி என்பவருடன் திருவேங்கடத்தை அடைந்தார்; நின்ற கோலத்தில் அங்கு உள்ள நீலவண்ண நெடியோனை - தம் குல தெய்வமான வேங்கடப் பெருமானை மனமார வாழ்த்தி வழிபட்டார்; விலையுயர்ந்த ஆடையணிகளை வழங்கி மகிழ்ந்தார்; பிறகு விஜயநகரத்தை அடைந்தார்; தம் உதய கிரியிலிருந்து கொணர்ந்த பாலகிருஷ்ண விக்கிரகத்திற்குப் புதிய கோவில் கட்டி விழாச் செய்தார். வியாசராயர் என்ற மஹான் அப்புதிய கடவுளுக்குப் பல தோத்திரப்பாக்களை இயற்றினார். உதயகிரி கைப்பற்றப் பட்டதை அறிந்த விஜயநகர மக்கள் அவ்வெற்றியைப் பல நாள் கொண்டாடினார்கள்.

‘கொண்டவீடு’ முற்றுகை

இராயரது படை உதயகிரியைக் கைப்பற்றிய பிறகு கொண்டை வீடு நோக்கிச் சென்றது. கடல் போன்ற இராயர் சேனையைக் கண்ட கொண்ட வீடு சீமையைச் சேர்ந்த கஜபதியின் படைகள் கலக்கங் கொண்டு ஓடின. குடிமக்கள் தங்கள் பொருள்களைப் போட்டுக் காடுகட்கு ஓடி ஒளித்தனர்; பல கோட்டைகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பிடிபட்டன. இறுதியில் இராயர்படை ‘கொண்டைவீடு’ கோட்டையை முற்றுகை யிட்டது.

‘கொண்டைவீடு’ கோட்டை கிருஷ்ணயாற்றுக்குத் தெற்கே உள்ளது; கஜபதியின் தென் நாட்டின் தலைநகர் என்று அதனைக் கூறலாம். கஜபதி அரசனுக்கு அடங்கிய தலைவர் பலர் தம் சேனைகளுடன் அக்கோட்டைக்குள் இருந்தனர். அவர்கள் இராயர் தாக்குதலை எதிர் நோக்கித் தயாராக இருந்தனர். ஆதலின் முற்றுகை பல நாள் நீடித்தது. இராயரது அமைச்சரான சாளுவ திம்மர் என்ற அப்பாஜி முற்றுகையை வெற்றிபெற நடத்தினார். கோட்டைக்குள் இருந்த உணவுப் பொருள்கள் காலியாயின; வெளியிலிருந்து வர வழியுமில்லை. எனவே, உள்ளே இருந்தவருட் பலர் பட்டினி கிடந்து முடிவில் மடிந்தனர். இராயர் கோட்டை மதிற் சுவர்மீது நின்று போராடுபவருடன் தம் வீரர் சமமாக நின்ற போராட நகரத்தக்க மரமேடைகளை அமைத்துக் கொடுத்தார்; தாம் உடனிருந்து வீரர்களை ஊக்கினார். இறுதியில் கொண்டவீடு இராயர் கைப்பட்டது. கஜபதி அரசன் மகனும் வேறு சிற்றரசர் சிலரும் சிறைப்பட்டனர்; அவர்கள் விஜய நகரத்திற்குக் கொண்டு செல்லப் பட்டனர். இராயர் ‘கொண்டவீடு’ சீமையைத் தம் அமைச்சரான அப்பாஜியின் ஆட்சியில் விட்டார்; கோட்டையில் தம் படையை நிறுத்தி ‘ஆரவீடு’ அரச குடும்பத்தினரான திம்மராஜு என்பவரைச் சேனைத்தலைவராக்கினார்.

பின்னர்க் கிருஷ்ணதேவராயர் தம் மனைவியருடன் அமராவதி நகரை அடைந்தார்; அமரேசுவரரை வழிபட்டுத் திருப்பருப்பதத்தை (ஸ்ரீ சைலம்) அடைந்தார்; அங்கு எழுந்தருளியுள்ள இறைவரை வழிபட்டுத் தம் கோநகரத்தை அடைந்தார். அவரது படை கொண்டபல்லியை அடைந்தது.

கொண்டபல்லி முற்றுகை

கொண்டபல்லி என்பது பெஜவாடாவிற்கு வடமேற்கில் சில கல் தொலைவில் உள்ளது. அங்கு வன்மை மிகுந்த கோட்டை இருந்தது. அதுவும் கஜபதியின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அக்கோட்டை மதில்கள் மிக்க உயரமானவை; கோட்டையில் வன்மை மிகுந்த படைகள் வைக்கப் பட்டிருந்தன. கிருஷ்ண தேவராயருடைய படைகள் அக்கோட்டையை வளைத்துக் கொண்டன.

இராயர் தலைநகரத்திற்குச் சென்று அரசியல் அலுவல்களைக் கவனித்துவிட்டுக் கொண்டபல்லியை நோக்கிப் புறப்பட்டார். வழியில் அஹோபளம் என்னும் வைணவத் தலத்தைத் தரிசித்துப் பெஜவாடாவை அடைந்தார்; அதனைப் போர்த்தளமாக வைத்துக் கொண்டு கொண்டபல்லியை அடைந்தார்; முற்றுகையைப் பலப்படுத்தினார். இதனை அறிந்த பதினாயிரம் குதிரைகளுடனும் ஐந்து லக்ஷம் காலாட்படை யுடனும் தெற்கு நோக்கி வந்தான். இராயர் தம் படையில் பெரும்பகுதியை அழைத்துக் கொண்டு கஜபதியை எதிர்க்கச் சென்றார்.

இரண்டு பெரும் படைகளும் இரண்டு கடல்களை ஒத்தன. கரிவீரர் கரிவீரருடன் போரிட்டனர்; பரிவீரர் பரிவீரருடன் போராடினர்; தரைப் படையினர் தரைப்படையினருடன் வாட்போர்-விற்போர்-ஈட்டிப்போர் புரிந்தனர். போர்க்களம் செங்களமாகக் காட்சி அளித்தது. வெட்டுண்ட யானைகள் உடலங்கள் இரத்த ஆற்றுக்கு அமைந்த கரைகள் போலக் காணப்பட்டன. வீரர்கள் யானை உடலங்கள் மீது நின்று போரிட்டனர். போர் கடுமையாகக் காணப்பட்டது. இராயர் வாளேந்திப் போரிட்டார். பகைவர் சேனையாகிய கடலில் இராயர் என்னும் மரக்கலம் தடையின்றிச் சென்று மீண்டது. முடிவில் பகைவர் சிதறிக் கலிங்கம் நோக்கி ஓடினர்.

இராயர் பெருவெற்றியுடன் கொண்டபல்லிக்குத் திரும்பினார்; வெற்றியால் மனக்களிப்புற்ற படைவீரர் முற்றுகையை நெருக்கினர். இரண்டு மாதங்கட்குப் பிறகு கோட்டை இராயர் வசப்பட்டது. கோட்டைத் தலைவனும் பிறரும் சிறைப்பட்டனர்.

கொண்டபல்லி வெற்றிக்குப் பிறகு பல கோட்டைகள் பிடிபட்டன. இராயர் கோதாவரிக்கு வடக்கேயுள்ள சிம்மாத்ரியை நோக்கிப் புறப்பட்டார். அப்பொழுது அப்பாஜியும் பிற தானைத் தலைவரும், “நாம் கஜபதி நாட்டிற்குள் போகும் பொழுது வழியில் மேற்குப் பக்கத்திலிருந்து முஸ்லிம்களின் தாக்குதல் ஏற்படின் துன்பம் மிகுதிப்படும். அதே சமயத்தில் கஜபதியும் வடக்கிலிருந்து நம்மைத் தாக்கினால், நாம் தோல்வி அடைய வேண்டியவராவோம். ஆதலின் திரும்பி விடுதலே நல்லது” என்றனர். இராயர் அதற்கு இசையவில்லை; “கஜபதியின் செருக்கை அடக்குதலே நல்லது. அவன் நமது நாட்டின் பல பகுதிகளை நீண்டகாலமாகப் பிடித்து ஆளவில்லையா? அந்த அவமானத்தைப் போக அவன் நாட்டைத் தாக்கி அவனைப் பணியவையாவிடில் நமது பெருமை என்னாம்?” என்றனர். அனைவரும் ‘சரி’ என்று ஒப்பு கொண்டு வடக்கு நோக்கிப் புறப்பட்டனர்.

வழியில் பொட்னூர்க்குத் தெற்கே மலைக் கணவாயைத் தாண்டிச் செல்ல முயன்றபொழுது முஸ்லிம் தளகர்த்தர் ஒருவர் அறுபதினாயிரம் குதிரை வீரருடன் தாக்கினர். எதிர்பாராத இத்தாக்குதலால் இராயர்படை நிலைகுலைந்தது. ஆயினும் இராயரது பண்பட்ட குதிரைப் படைவீரர்கள் கணவாயின் இரண்டு பகுதிகளிலும் மலைமீதேறிப் பகைவர் படையைத் தாக்கத் தொடங்கினர். அதனால் பகைவர் இருபுறத் தாக்குதலுக்கு உட்பட்டு நிலைகலங்கி ஓடினர். இராயர் அக்கணவாயைக் காக்க முப்பதினாயிரம் வீரரை விட்டு, சிம்மாத்ரியை நோக்கிச் சென்றனர். வழியில் இருந்த ஊர்கள் பாழாயின. சிம்மாத்ரியில் இராயரது வெற்றித் தூண் நடப்பட்டது.

இது கலிங்கநாட்டுத் தலைநகரம்; ‘கட்டக்’ அல்லது ‘கட்டாக்’ என இன்று வழங்கப்படுகிறது. இதனைத் தாக்க வேண்டும் என்று இராயர் விரும்பினார்; அதனால் இரைவேட்ட பெரும்புலிபோல் இகல்மேற் சென்றார். கடல் கொந்தளித்து வந்ததுபோல அவரது சேனை கலிங்கநாட்டிற்குட் புகுந்தது.

பிருதாபருத்ர கஜபதி தனக்கடங்கிய பதினான்கு சிற்றரசர்களின் உதவியை நாடினான். அவர்கள் தத்தம் சேனைகளுடன் வந்தனர். அனைவரும் இராயர் படையை எதிர்க்கத் தக்க போர் முயற்சிகளை மேற்கொண்டனர். இதனை அறிந்த இராயர் அப்பாஜியுடன் கலந்து ஆலோசித்தார். அப்பாஜி சிறந்த மதிநுட்பம் வாய்ந்தவர் அல்லவா? அவர் பதினாறு பெட்டிகளில் விலையுயர்ந்த ஆடையா- பரணங்களை நிரப்பினார்; ஒவ்வொரு பெட்டிக்கு ஓர் இரகசியக் கடிதம் வீதம் எழுதினார்; பதினான்கு ஆட்கள் தலைமீது அப்பெட்டிகள் வைத்தார்; கடிதங்களைத் தந்தார்; “பெட்டியையும் கடிதத்தையும் கஜபதி பார்க்கும்படி அவருடைய சிற்றரசர்கள் இருக்கும் கூடாரங்கட்குக் கொண்டு செல்லுங்கள்” என்ற கட்டளை யிட்டார். அவர் ஒவ்வொரு கடிதத்திலும் “நாம் முன் கஜபதிக்கு மாறாகச் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இஃது அனுப்பப் பட்டுள்ளது. நாம் தாக்குகையில் கஜபதியைத் தனியே விட்டு விடுக” என்று எழுதியிருந்தார். அப்பாஜியின் சூழ்ச்சியே தவிரக் கடிதச் செய்தி உண்மையன்று. பதினாறு பெட்டிகளையும் கடிதங்களையும் வழிமறித்துப் பார்வையிட்ட கஜபதி, கடிதச் செய்தியை உண்மை என்று நம்பித் தம் சிற்றரசரை நம்பாது, தம் அரண்மனையை விட்டுத் தப்பி ஓடி ஒளிந்து கொண்டான். சூழ்ச்சியை அறியாத சிற்றரசர், “கஜபதியே ஓடிவிட்டார் எனின், நாம் என் செய்வது?” என்று எண்ணித் தத்தம் கோட்டைகட்குத் திரும்பினர். அதனால் போரின்றிக் கடகம் வீழ்ச்சியுற்றது. ஆயின், இராயர் பகைவர்பால் மிக்க பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார். கஜபதி அரசன் வேறு வழியின்றி இராயருடன் சமாதானம் செய்து கொண்டான். அவ்வரசன் தன் மகளான ஜகன்மோகினி என்ற துக்காதேவி என்பவளை இராயருக்கு மணம் செய்து கொடுத்தான்; கிருஷ்ணையாற்றுக்கு வடக்கே இராயர் வென்ற கலிங்க நாட்டுப் பகுதியைத் திரும்பப் பெற்றுக் கொண்டான்.

இராயச்சூர்ப் போர்

கிருஷ்ணதேவராயர் மேற்சொன்ன போர்களில் ஈடுபட்டிருந்த சமயத்தில் பிஜாப்பூர்ச் சுல்தான் இராயர் பிடித்திருந்த இராயச்சூரைத் தம் வசப்படுத்திக் கொண்டார். மேற்சொன்ன கலிங்கப் போரை முடித்துக் கொண்ட இராயர் 1520-இல் இராயச்சூரைத் தாக்கினார்; பிஜாப்பூர்ச் சுல்தானைப் போரில் முறியடித்து, இராயச்சூரைக் கைப்பற்றினார்.

குல்பர்க்கா மீது படையெடுப்பு

இராயருடன் சமாதானம் வேண்டிய பிஜாப்பூர்ச் சுல்தான் 1523-இல் தூதுவர் ஒருவரை அனுப்பினார்; குறித்த நாளில் எல்லைப்புறத்தில் இராயரும் சுல்தானும் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது. ஆயின், குறித்த இடத்தில் இராயர் ஒருவரே சென்றிருந்தார்; சுல்தான் வரவில்லை. அதனாற் சீற்றங்கொண்ட இராயர் பிஜாப்பூர் நாட்டின்மீது படையெடுத்தார்; கிருஷ்ணையாற்றைத் தாண்டிப் பல கோட்டைகளைக் கைப்பற்றினார்; பல உயிர்கள் தீக்கிரையாயின. வன்மை மிகுந்த குல்பர்க்கா கோட்டையும் பிடிபட்டது. அக்கோட்டைக்குள் பழைய பாமினி அரச மரபைச் சேர்ந்த அரசகுமாரர் மூவர் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இராயர் அவர்களை விடுதலை செய்து சிறப்பு முறையில் நடத்தினார்; அவருள் மூத்தவரை அரசராக்கி இளைஞர் இருவரையும் விஜயநகரம் கொண்டு சென்றார்; அவர்களை மிக்க மரியாதையுடன் நடத்திவந்தார்.

பெருவீரர்

இங்ஙனம் கிருஷ்ணதேவராயர் பட்டமேற்ற நாள்முதல் 1523-வரை பல போர்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றார்; தம் முன்னோர்களால் அடக்க முடியாதிருந்த கஜபதியை அடக்கி அடிபணிய வைத்தார்; சுல்தான்களைப் பல போர்களில் வென்று அடக்கினார்; தம் பெருநாட்டைப் பலம் மிகுந்ததாகச் செய்தார். தமது படைப் பெருக்கத்தால் எதிரிகளை நடுங்க வைத்தார். போர் வீரர்களை நாள்தோறும் சந்தித்துப் பேசினார்; காயம் பட்டவர்கட்கு உடனுக்குடன் உதவியளித்து வந்தார்; போரில் இறந்த வீரர் குடும்பங்கட்கு அரசாங்க உதவி அளித்தார். போரில் தம் திறமையைப் புலப்படுத்தியவரைக் கனப்படுத்தினார். அவர் ஒவ்வொரு போரிலும் முன்னணியில் நின்று வீரரை ஊக்கப் படுத்தினார். அவரது வீர முகத்தைப் பார்த்தும் வீரவுரைகளைக் கேட்டும் விஜயநகரப் படைவீரர் ஊக்கம் கொண்டு போரிட்டனர். அவரது அன்புக்கு வீரர்கள் அடிமையாயினர்; தம் உயிரைத் துரும்பென மதித்தனர்; சென்ற இடமெல்லாம் வெற்றி பெற்றனர்.

அப்பாஜி இராயருக்கேற்ற அமைச்சர். அவர் சந்திர குப்தனுக்கு அமைந்த சாணக்கியரைப் போலச் சிறந்த அரசியல் அறிஞர்; நுட்ப அறிவினர்; இராயரைத் தம் உயிரெனக் கருதியவர். இராயரும் அவரைத் தம் தந்தையாராகவும் குருவாகவும் கருதிப் பாராட்டிவந்தார்; அவர் சொற்படியே நடந்து வந்தார். அரசரும் அமைச்சரும் ஒத்த மனத்தினராய் இருந்து வந்தமையே இராயரது வெற்றிக்குச் சிறந்த காரணம் என்னலாம்.

கிருஷ்ணதேவ ராயர்

இராயர் வாழ்ந்த காலம்

தென் இந்திய வரலாற்றில் கிருஷ்ணதேவ ராயர் வாழ்ந்த காலம் பொன் எழுத்துக்களில் பொறிக்கத்தக்க காலம் ஆகும். ஓவியம், சிற்பம், இலக்கியம், இசை, நடனம், நாடகம், கட்டடக் கலை முதலிய பலவகைக் கலைகள் வளர்ச்சி பெற்றன. இராயர் அசோகர், சமுத்திரகுப்தர், ஹர்ஷர், இராஜராஜ சோழர் போன்ற பேரரசர்களுடன் ஒப்பிடத் தக்கவர். அவர் பெயரும் அவருடைய அமைச்சரான திம்மரசு என்ற அப்பாஜியின் பெயரும் அறியாத தென் இந்தியர் இல்லை என்னலாம். இராயரது முழு வரலாற்றை அறியத்தக்க சான்றுகள் இல்லை; ஆயின் அவரைப் பற்றிய, அவரை நேரிற்கண்ட அயல் நாட்டவர் எழுதி வைத்த குறிப்புகளைக் கொண்டும் அவர் செய்துள்ள நூல்களைக் கொண்டும் ‘இராய வாசகம்’ முதலிய தெலுங்கு நூல்களைக் கொண்டும் கல் வெட்டுக்களைக் கொண்டும் அவர் வரலாற்றை ஒருவாறு கூறலாம்.

பெருநாடு

இராயர் காலத்தில் விஜயநகரப் பெருநாடு துங்க பத்திரையாறு முதல் குமரி முனை வரை பரவி இருந்தது; வடகிழக்கில் கோதாவரிக்கு அப்பாலும் பரவி இருந்தது. இப்பெருநாடு பல இராச்சியங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்ததது. ஒவ்வொன்றையும் அரச மரபினர் அல்லது சேனைத்தலைவர் ஆகிய பிரபுக்கள் அரசப் பிரதிநிதிகளாக இருந்து அரசாண்டனர். பேரரசரைத் தமிழ் மக்கள் இராயர் என்றும், தெலுங்கர் இராயலு என்றும், கன்னடர் இராயரு என்றும் அழைத்தனர்.

கிருஷ்ணதேவராயர்

கிருஷ்ணதேவராயர் வாழ்ந்த அரண்மனை ‘மலையகூடம்’ என்று வழங்கியது. அவர் கொலுவிருந்த அரண்மனை ‘புவன விஜயம்’ எனப் பெயர் பெற்றது. அவர் நடுத்தர உயரம் உடையவர்; சிவப்பும் வெண்மையும் கலந்த அழகிய நிறம் உடையவர்; நடுத்தர உடல் அமைப்புக் கொண்டவர்; சிறிதளவு அம்மைத் தழும்புடைய வசீகரிக்கத்தக்க முகத்தை உடையவர். அவர் எப்பொழுதும் மலர்ந்த முகத்தோற்றம் உடையவர்; போர்ச்சுகீசியர், அராபியர், பாரசீகர், சீனர் முதலிய அயல் நாட்டினரையும் மலர் முகத்துடன் வரவேற்று அளவளாவும் இயல்புடையவர்; அவரவர் நாட்டுப் பழக்க வழக்கங்கள், நாகரிகம், கல்விநிலை, அரசியல் முதலியவற்றைக் கேட்டறியும் இயல்பு வாய்ந்தவர், அப்பேரரசர் அறநெறியிலிருந்து வழுவாதவர். அவர் இருபது வயதுடைய வாலிபராக இருந்தபோது பட்டம் பெற்றார். எனினும் பெருநாட்டைத் திறம்பட ஆண்டு வந்தமை ஒன்றே அவரது அரசியல் அறிவை நன்கு உணர்த்தப் போதுமானது. இராயர் மெல்லிய வெண்ணிற உடைகளையே உடுத்துவது வழக்கம். அந்த வெள்ளையாடைகள் தங்கரோசா இதழ்கள் வைத்துத் தைக்கப் பெற்றவை. அவர் கழுத்தில் வைர மாலை விளங்கியது. தலையில் அழகிய பீலியணிந்த பாகை இருந்தது. நுனியில் கூர்மைபெற்ற பட்டு ஜோடுகளை அவர் அணிந்திருந்தார். ‘அவர் உடற்கட்டிலும் உடை அழகிலும் பேச்சுத் திறமையிலும் புலமையிலும் அரசர்க்கு உரிய பிற இலக்கணங்களிலும் அணுவளவும் தவறாது இருந்தார்’ என்று அவரை நேரிற் காணும் பேறு பெற்ற அயல் நாட்டினர் பாராட்டி வரைந்துள்ளனர்.

இராயர் உடற்பயிற்சி

இராயர் பலவகை உடற்பயிற்சிகளை நாள்தோறும் செய்து வந்தார். குதிரையேற்றம், மற்போர் இவற்றில் அவருக்கு விருப்பம் மிகுதி. அவர் குதிரை ஏற்றத்தில் நகுலனை ஒத்திருந்தார் என்று பாரிஜாதாபஹரணம் என்னும் தெலுங்கு நூல் கூறுகின்றது. அவர் உடற்பயிற்சிகளால் தமது உடலை வலிய நிலையில் வைத்திருந்தார். அவர் வைகறையில் எழுந்து தமது உடலில் எண்ணெய் பூசிக் கொண்டு, அது காயும் வரையில் குதிரைச் சவாரி செய்வது வழக்கம்; சில நாட்களில் குதிரைச் சவாரிக்குப் பதிலாகக் கனமுள்ள உடற்பயிற்சிப் பொருள்களைக் கைகளில் தூக்கிக் கொண்டு பயிற்சி புரிவார்; அதன் பின்னர்த் தம் அரசாங்க மல்லர் ஒருவருடன் மற்போர் செய்வார். இப்பயிற்சிகள் அனைத்தும் பொழுது விடிவதற்குள் நடைபெறும். பின்னர் இராயர் அரண்மனைக் குளத்திற் குதித்து நன்றாக நீந்திக் களிப்பார். இத்தகைய அரசரை வரலாற்றில் காண்பது அருமை அல்லவா?

அடங்காச் சீற்றம்

இராயர் சில சமயங்களில் திடீரெனச் சினம் கொள்வார். அப்பொழுது அவருடைய கண்கள் செந்நிறம் அடையும்; மீசை துடிக்கும்; புருவங்கள் நெற்றி முற்றச் செல்லும். அவர் பற்களை நறநறவென்று கடிப்பார். தமது அரசியல் உத்தியோகஸ்தர்கள் தவறு செய்தனர் என்பதைக் கேட்கும் பொழுதும் தமது ஆணை நிறை வேற்றப்படவில்லை என்பதை அறியும் பொழுதும் அவர் இங்ஙனம் அடங்காச் சீற்றம் கொள்ளுதல் இயல்பு. ஒருமுறை அப்பாஜியின் அரசியலில் சில குறைகள் நேர்ந்து விட்டன என்பதை அறிந்ததும் இராயர் அடங்காச் சினம் கொண்டார். அப்பாஜியோ தம்மை வளர்த்த பெரியவர்; தம் நன்மையில் நாட்டம் உடையவர். ஆதலின் அவரைத் தண்டிக்க மனம் இல்லாமல், இராயர் சீற்றம் தணியாதவராய் நகருக்கு வடக்கே இருந்த கோவில் ஒன்றில் சென்று தங்கிவிட்டார். அப்பாஜி இராயரிடம் சென்று பக்குவமாக அவர் சீற்றத்தைப் போக்கி அரண்மனைக்கு அழைத்து வந்தார்.

தோற்றாரிடம் பெருந்தன்மை

பகைவரிடத்தும் போரில் தோற்றவரிடத்தும் பெருந்தன்மை காட்டுதல் இராயரிடம் காணப்பட்ட தனிப்பண்பாகும். பிரதாபருத்திர கஜபதி என்பவன் கலிங்க நாட்டு அரசருள் ஒருவன். இராயர் அவன்மீது படையெடுத்துச் சென்று அவனைப் போரில் முறியடித்தார்; போரில் தோற்ற அவனைக் கௌரவமாக நடத்தினார். இராயர் உம்மத்தூர் முதலிய மேற்குப் பகுதி ஊர்களைக் கைப்பற்றியவுடன் அப்பகுதியில் இருந்த சிற்றரசரை மலர் முகத்துடன் வரவேற்று அன்பு கனியப் பேசினார்; அவர்களை முன்போலச் சிற்றரசராகவே இருக்குமாறு செய்தார். இராயர் பிஜாப்பூர்ச் சுல்தானிட மிருந்து இராயச்சூரைக் கைப்பற்றிய பொழுது சுல்தானுடைய படைவீரர் சிதறி ஓடினர். அங்ஙனம் ஓடிய பகைவரை இராயர் படைவீரர் துரத்தித் துரத்திக் கொன்றனர். அப்படுகொலையைக் கண்ட இராயர் கண்ணீர் வடித்தார்; தம் படைகளைத் திரும்பி விடுமாறு பணித்தார்; ‘பகைவர் படைகளை முற்றும் நாசமாக்குதலே நன்று’ என்று சேனைத் தலைவர்கள் கூறியதற்கு இராயர் இசையவில்லை. நாம் இந் நிகழ்ச்சிகளிலிருந்து இராயரது இரக்கவுள்ளத்தையும் போரில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் சீரிய பண்பையும் நன்கு அறியலாம் அல்லவா?

இராயர் குடும்பம்

இராயர்க்கு மனைவிமார் பன்னிருவர் இருந்தனர். அவருள் மூவர் சிறந்திருந்தனராம். அவர்தம் பெயர்கள் திருமலாம்பாள், அன்னபூரணி, சின்னாதேவி என்பன. அவருள் திருமாலாம்பாள் பட்டத்தரசி. திருப்பதியில் உள்ள இராயர் சிலைக்கு இருபுறங்களில் அரசியர் இருவர் சிலைகள் இருக்கின்றன. அவை திருமலாம்பாள், சின்னாதேவி என்பவரைக் குறிப்பனவாகும்.

கிருஷ்ணதேவராயரை மணந்துகொண்ட கஜபதி மகளான ஜகன்மோகினி அல்லது துக்காதேவி என்பவள் மணம் செய்து கொண்ட நாள் முதலே இராயரது அன்புக்கு உரிய முறையில் நடந்துகொள்ளவில்லை என்பது தெரிகிறது. ‘இராயர் அரச மரபினர் அல்லர் - விஜயநகர அரசினைக் கவர்ந்து கொண்ட சேனைத் தலைவருடை புதல்வர். சிறந்த அரச மரபில் வந்த நாம் அவரை மணந்துகொள்ள நேர்ந்தமைக்கு நம் தந்தையார் தோல்வியே காரணமாகும்’ என்ற எண்ணம் இவள் உள்ளத்தில் ஊன்றியிருந்தது. இராயரும், ‘கஜபதி நமக்கு முன்னர்க் கொடிய பகைவனாக இருந்தவன். அவன் தன் மகளை நமக்குக் கொடுத்ததினாலேயே நம் நம்பிக்கைக்கு முற்றும் உரியவனாகான். அவன் சமயம் பார்த்துத் தன் மகளைக் கொண்டு நம்மைக் கொல்லக்கூடும்’ என்று ஐயுற்றார். இராயர் எதிர்பார்த்தபடியே, ‘அவ்வரசமகள் இராயரைப் பள்ளியறையிற் சந்தித்து முதல்நாள் இரவில் (தாயின் சொற்படி) அவரைக் கொல்லத் துணிந்தாள். அச்சூழ்ச்சியை முன்னர் அறிந்த அப்பாஜியின் தந்திரத்தால் இராயர் உயிர் தப்பினார்’ என்று செவிவழிச் செய்தி செப்புகிறது.

இன்ன பிற காரணங்களால் அவள் வாழ்க்கையை வெறுத்தாள்; துறவுபூண்டாள்; சுடப்பை ஜில்லாவில் உள்ள கம்பம் என்னும் இடத்தில் ஓர் ஏரியை உண்டாக்கினாள்; அதன் கரையில் ஓர் ஆசிரமத்தை அமைத்து அதனில் வாழ்ந்துவந்தாள். அவள் சிறந்த வடமொழிப் புலமை உடையவள்; தன் கணவர் தன்னைத் துறந்தமைக்காக வருந்தி, வடமொழியில் ஐந்து செய்யுட்களைப் பாடினாள். அது ‘துக்கா-பஞ்சகம்’ எனப்படும்.

இராயருக்குத் திருமலைராயன் என்ற மகன் இருந்தான். ஆனால் அவன் இளமையிலேயே இறந்துவிட்டதால், இராயருக்கு இளவலான அச்சுதராயர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறகு பட்டம் பெற்றார். இராயருக்குப் பெண்மக்கள் இருவர் இருந்தனர். அவர்கள் திருமலாம்பாள், வெங்கலாம்பாள் என்பவராவர். அவர்கள் அரசமரபினரான ‘ஆரவீடு’ இராமராயர் என்பவரையும் அவர் தம்பியார் திருமலைராயர் என்பவரையும் மணம் செய்து கொண்டனர். ‘இராயருக்குப் புலமை மிக்க மற்றொரு மகளும் இருந்தாள். அவள் பெயர் மோஹனாங்கி என்பது. அவள் ’மாரீசீ பரிணயம்’ என்னும் நூலை எழுதினாள் என்று செவிவழிச் செய்தி செப்புகிறது.

இராயர் புலமை

கிருஷ்ணதேவராயர் வடமொழியிலும் தெலுங்கிலும் நல்ல புலமை உடையவர்; ‘ஆமுக்தமால்யதா’ என்னும் நூலைத் தெலுங்கில் பாடியுள்ளார். அஃது ஆண்டாள் வரலாற்றை விரித்துரைப்பது. அவர் வடமொழியில் சில நூல்கள் செய்திருப்பதாக ஆமுக்தமால்யதாவில் கூறப்பட்டுள்ளது. ஜாம்பவதீ கல்யாணம் என்னும் நூல் இப்பொழுது கையெழுத்து நூல் வடிவில் ‘கையெழுத்து நூல் நிலையத்’தில் இருக்கின்றது. கிருஷ்ண தேவராயர் ’பண்டித சோழன்’ என்ற இராஜேந்திர சோழனைப் போலப் பெரும் புலமை படைத்தவர். போஜன் வடமொழியை வளர்த்தவாறு கிருஷ்ணதேவ ராயர் தெலுங்கு மொழியை வளப்படுத்தினார்; அதனால் ‘ஆந்திர போஜன்’ என்ற புகழ்ப் பெயரைப் பெற்றார். அவர் முல் அமைச்சரான அப்பாஜி, அகத்தியர் என்பவர் வரைந்த சம்பு பாரதத்திற்கு உரை வகுத்த பெரியார் ஆவர்.

அவைப் புலவர்

இராயரது அவைப்புலவர் எண்மர். அவர்கள் (1) அல்லஸானி பெத்தன்னா, (2) நந்தி திம்மன்னா, (3) இளையராஜு ராமபத்திரன் , (4) துர்ச்சடி, (5) மாதய்யகாரி மல்லன்னா, (6) பிங்கள சூரன்னா, (7) பூஷணன், (8) தெனாலி இராமகிருஷ்ணன் என்பவர். அந்த எண்மரும் ‘அட்ட கஜங்கள்’ எனப் பெயர் பெற்றிருந்தனர். புலவர் எண்மருள் அல்லஸானி பெத்தன்னா என்பவரே முதன்மையானவர். இராயர் இப் புலவரிடம் கொண்டிருந்த மதிப்புக் கூறுந்தரத்ததன்று. இராயர் புலவரது பல்லக்கைத் தம் தோளில் தூக்கி மகிழ்வர் - அவருக்குத் தம் கைகளால் தங்கத் தோடாவை அணிவித்து மகிழ்வர் - தாம் செல்லும் எல்லா இடங்கட்கும் அவரை அழைத்தேகுவர் எனின், அம்மம்ம! அரசர் பெருமான் புலவர் பெருமானிடம் காட்டிய பெருமதிப்பை என்னென்பது! பெத்தன்னா வரைந்த மனுசரித்திரம், பாரிஜாதாபஹரணம் என்ற நூல்கள் கிருஷ்ண தேவராயருக்கு உரிமையாக்கப் பட்டன. கிருஷ்ணதேவராயர் புலவர்களைத் தம் உயிரைப் போல எண்ணிப் பாதுகாத்தார்; அவர்கட்கு எல்லாப் போக பாக்கியங்களையும் வழங்கினார்; புலவர்கள் யானைமீதும் பல்லக்கிலும் வருவதைக் கண்டு மகிழும் பெருங்குணம் பெற்றிருந்தார்; அவர்கள் யானைமீதிருந்து இறங்கும் பொழுது கைலாகு கொடுத்து அவர்களை இறக்கி மரியாதை செய்யும் அருங்குணம் வாய்ந்து விளங்கினார்.

சமயநிலை

இராயரது சமயம் வைணவம். அவருக்கு விருப்பமான கடவுள் வேங்கடமலையில் எழுந்தருளியுள்ள திருமாலேயாவர். அவருடைய செப்புச் சிலையும் அவர் மனைவியர் இருவருடைய செப்புச் சிலைகளும் திருப்பதிக் கோவிலில் இன்றளவும் இருந்து வருதல் இதனை மெய்ப்பிக்கும். புக்கராயர் போன்ற பேரரசரைப் போலவே வடக்கே சிம்மாசலத்திலிருந்து தெற்கே இராமேசுவரம் வரையில் உள்ள பெருங் கோவில்களில் இராயர் செய்த திருப்பணிகளைக் காணலாம். விஜய நகரத்தில் கிருஷ்ணன் கோவிலும் இராமசுவாமி கோவிலும் அவர் காலத்தில் கட்டப் பட்டன. விட்டலர் கோவில் கட்டட வேலை இராயர் காலத்தில் தொடங்கப்பெற்றது. ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட நரசிமம் விக்கிரகம் இராயர் காலத்ததேயாகும்.

இராயர் தம் போர்ச் செயல்கள் முடிந்தபிறகு, திருப்பதி திருக்காளத்தி, காஞ்சி, சிதம்பரம், மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, குற்றாலம், திருச்செந்தூர், இராமேசுவரம், கோகர்ணம் முதலிய தலங்கட்குச் சென்று வழிபட்டார்; அக்கோவில்கட்குப் பல மானியங்களை விட்டார்; ஸ்ரீவில்லிபூத்தூரில் தெப்பக் குளத்தை எடுப்பித்தார்; திருநெல்வேலியில் தாமிரசபையைக் கட்டுவித்தார்; கிருஷ்ணராய சமுத்திரம் என்ற பெயரால் திருநெல்வேலிக்கருகில் ஒரு சிற்றூரைத் தோற்றுவித்தார். இராயர் முஸ்லிம்களால் அழிவுற்ற கோவில்களைப் புதுப்பிக்கப் பதினாயிரம் பொன்னை உதவினார். இந்த உதவி நாளடைவில் வளர்ந்த பல புதிய கோவில்களையும் உண்டாக்கியது. ‘இராய கோபுரம்’ என்னும் பெயருடன் பல இடங்களில் உள்ள கோபுரங்களில் தோற்றத்துக்கு அடிப்படையிட்டவர் கிருஷ்ணதேவராயரே ஆவர். பகைவர் கைப்பற்றிக் கொள்ளத்தக்க புண்ணிய nக்ஷத்திரங்களில் இருந்த மூர்த்தங்களைத் தமது தலை நகரத்திற்கே கொணர்ந்து கோவில் கட்டி அவற்றுக்குப் பூசை முதலியன நடைபெறச் செய்தவரும் கிருஷ்ணதேவராயரே ஆவர். இந்த இரண்டு செயல்களும் போற்றத்தக்க சமயத் தொண்டுகள் அல்லவா?

விஜய நகர அரசர்கள் சமய தர்மத்தைக் காக்கவே நாடாண்டனர். ஆதலின் சைவம்-வைணவம்-சமணம் என்னும் சயமங்களைப் பொது நோக்கத்துடன் வளர்த்து வந்தனர்; இம்மூன்றுக்குள் உண்டான பிணக்குகளை வெறுத்தனர்; ஒற்றுமை நிலவச் செய்தனர்.

கிருஷ்ணதேவராயரும் இனியவராகவே இருந்தார். விஜய நகரத்தில் சமணர் கோவில்களும் நல்ல நிலையில் இருந்தன. விரூபாக்ஷர் கோவில் கோபுரம் இராயரால் கட்டப்பட்டதாகும். இராயர் வல்லபாசாரியர் என்னும் சமணப் பெரியாரைக் கனகாபிஷேகம் செய்து வரவேற்றார். இராயர் சைவ சமயத்திற்கும் தொண்டு செய்துள்ளார். அவர் காலத்தில் சிவன் கோவில்கள் சிறப்புற்று இருந்தன என்பதைக் கொண்டே கிருஷ்ணதேவராயரது பரந்த சமய நோக்கத்தை நன்கறியலாம் அல்லவா?

அரசியல் நோக்கம்

இராயர் பரந்த அரசியல் நோக்கம் உடையவர் என்பது அவரது ஆமுக்த மால்யதா என்னும் நூலிலிருந்து அறியப்படும். சுக்கிர நீதி முதலிய அற நூல்களில் கூறப்பட்டுள்ள அரச நீதிகளை இராயர் தமது நூலுள் குறித்துள்ளதை நோக்க, அவர் அவற்றின் படி ஓரளவேனும் நடந்திருப்பார் என்பதை நம்பலாம் அல்லவா? ‘குடிகளைத் தன்னால், தன் பரிசனத்தால், கள்வரால், விலங்குகளால், பகைவரால் உண்டாகும் தீமைகளிலிருந்து காத்தல் அரசனது கடமை’ என்ற உயர்ந்த அரசியல் நோக்கத்தை இராயர் கடைப் பிடித்தவர்; எவரும் அறநெறி தவறி நடக்கலாகாது என்பது அவர் கருத்து. எல்லோரும் நடுவு நிலையிலிருந்தது நீதி வழங்க வேண்டும் என்பது அவர் விருப்பம்.

அரசியல் அறிவு

‘ஓர் அரசன் தன் வருவாயை நான்கு பகுதிகளாகப் பிரித்தல் வேண்டும்; அவற்றுள் ஒன்றைத் தனது நன்மைக்கும் பொது நலத்திற்கும் செலவழிக்க வேண்டும்; இரண்டு பகுதிகளை வன்மை மிகுந்த படையைப் பாதுகாக்கச் செலவிட வேண்டும்; எஞ்சிய ஒரு பகுதியைச் சேமித்து வைக்க வேண்டும்’, என்று இராயர் தாம் இயற்றிய ஆமுக்த மால்யதாவில் குறிப்பிட்டுள்ளார். இதுவே அவரது நோக்கம் என்பதை அவர் அமைத்த எண்ணிறந்த கோவில்களாலும் பிற கட்டடங்களாலும் பெரும் படையினாலும் பெரும் பொக்கிஷத்தினாலும் நன்கறியலாம். இராயர் தம் படை வன்மையை மிகுதியாகப் பெருக்கினார். அவரிடம் ஆறு லக்ஷம் வீரர் இருந்தனர்; அறுபதினாயிரம் குதிரைகள் இருந்தன; இரண்டாயிரம் யானைகள் இருந்தன. இப்பெரும் படையை வைத்திருந்தமையாற்றான் அவரைக் கண்டு எல்லா அரசர்களும் அஞ்சினார்கள். அத்தகைய பெரும்படை இருந்திராவிடில் விஜய நகரப் பேரரசு துங்கபத்திரை முதல் கன்னி முனைவரை நிலைத்து இருந்திருத்தல் இயலாதன்றோ?

‘கரிகளையும் பரிகளையும் வாங்குவதிலும் அவற்றைப் பாதுகாப்பதிலும் வீரரைப் பாதுகாப்பதிலும் செலவழியும் பணமும் இறை வழிபாட்டிலும் கற்றோரைப் பாதுகாப்பதிலும் செலவழியும் பணமும் செலவினத்தில் சேர்க்கத் தக்கவை அல்ல’ என்பது இராயர் கருத்தாகும். இதிலிருந்து அப்பேரரசருடைய அரசியல் அறிவும் பண்பட்ட கல்வி அறிவும் தெற்றெனத் தெரிகின்றன அல்லவா?

இராயர் சிறந்த அரசியல் அறிவு படைத்தவர் என்பதை விளக்கப் பல சான்றுகள் உண்டு. அவர் பிஜாப்பூர் முதலிய நாடுகளை ஆண்ட சுல்தான்களை அடக்கி வைத்திருப்பதையே நோக்கமாகக் கொண்டவர்; அதனால் போர்ச்சுகிஸியர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்து அவர்களைத் தம் நண்பராகக் கொண்டார்; தம் பேரரசில் இருந்த சிற்றரசர் அனைவரையும் நன்முறையில் நடத்தி அவர்களது ஒத்துழைப்பைப் பெற்றார்; கலிங்கம் முதலிய அயல்நாட்டு அரசர் நட்பையும் பெற்றுத் தம் பேரரசுக்குப் பலத்தைத் தேடிக் கொண்டார். பேரரசர் தம் அமைச்சர், படைத்தலைவர் முதலியவர்களைக் கலந்து ஆலோசித்தே எக்காரியத்தையும் செய்வது வழக்கம். இந்த வழக்கம் உத்தியோகஸ்தர் உள்ளத்தைத் திருப்திப்படுத்துவதாகும் அல்லவா?

சிறந்த கொடையாளி

கிருஷ்ணதேவராயர் மாரி அன்ன கையர்; பாரியைப் போலவே இரப்போர்க்கு ‘இல்லை’ என்னாதவர்; புலவர்கட்கு வழங்கி மகிழ்வதே அவரது பழக்கம். அவர் ஆண்டுதோறும் நடைபெற்ற வசந்த விழாவில் புலவர்கட்குப் பலவகைப் பரிசுகள் வழங்குதல் வழக்கம்; தம்மைத் தங்கத்தாலும், நவமணிகளாலும் நிறுத்து அவற்றைக் கோவில்கட்கும் நான்மறையாளர்க்கும் அளித்தலை வழக்கமாகக் கொண்டிருந்தார்; தக்க சமயங்களில் தம் அமைச்சர்க்கும் பிற அலுவலர்க்கும் பரிசுகள் அளித்துப் பெருமைப் படுத்தி வந்தார். கலிங்க வெற்றிக்குப் பிறகு அப்பாஜி ஒரு பட்டு ஜமக்காளத்தின் மீது உட்காரவைத்துப் பொன்னாலும், நவரத்தினங்களாலும் அபிஷேகம் செய்யப்பட்டார் எனின் இராயரது கொடைச் சிறப்பை என்னெனப் புகழ்வது!

புவி அரசரும் கவி அரசரும்

தென்னிந்திய இலக்கிய வரலாற்றில் கிருஷ்ண தேவராயர் ஆட்சி மிக்க சிறப்புடைய பகுதியாகும். அவரது பேரவையில் வடமொழி-தெலுங்கு-கன்னடம்-தமிழ்மொழிகள் சார்பாகப் புலவர் பெருமக்கள் பலர் இருந்தனர். அவர்கள் தத்தம் மொழியில் பல நூல்களைச் செய்து பெயர் பெற்றனர். கிருஷ்ணதேவராயர் புலவர்களைப் போற்றிய புரவலர்மட்டும் அல்லர். அவரே பெரும் புலவராகவும் இருந்தார்; பிறர் புலமையை அளந்தறியும் ஆற்றல் பெற்றவராயும் இருந்தார்; எச்சமயத்தைச் சேர்ந்த புலவராக இருந்த போதிலும் அவர்கள் புலமை ஒன்றுக்கே மதிப்பீந்து ஆதரித்தார்; புலவர்களைத் தேவைக்கு மேற்பட்ட நிலையில் உயர்த்திப் பல நூல்களை வரையுமாறு செய்தார். இராயரது ஆட்சியில் தெலுங்கு இலக்கியம் ஒப்பற்ற உயரிய நிலையை உற்றது. முதலில் புவியரசராகிய கிருஷ்ண தேவராயர் வரைந்த நூல்களைக் காண்போம்.

வடமொழி நூல்கள்

இராயர் வடமொழி நூல்களை வரைந்தனர் என்பது தெரிகிறது. அவை-(1) மதாலஸ சரித்திரம், (2) சத்யாவ பிரேணனம் (சத்தியபாமா-திருமணம்), (3) சகல கதா சார சங்கிரகம், (4) ஞான சிந்தாமணி, (5) இரச மஞ்சரி என்பன. இவை இப்பொழுது கிடைக்குமாறில்லை. ஜாம்பவதி கல்யாணம் என்பது ஒரு நாடக நூல். இது இராயரால் செய்யப்பட்டது என்பர். ஜாம்பவதி என்பவள் ஜாம்பவான் மகள்; கிருஷ்ணனுடைய மனைவியர் எண்மருள் ஒருத்தி. அவளைக் கண்ணன் மணந்த வரலாற்றை நாடக வடிவில் உணர்த்தும் இந்நூல் ஐந்து காட்சிகளைக் கொண்டது. இஃது ஆண்டுதோறும் விரூபாக்ஷர் கோவிலில் வசந்த விழாவில் நடித்துக் காட்டப்பட்டது.

ஆமுக்த மால்யதா

கிருஷ்ணதேவராயர் பாடிய தெலுங்கு நூல் ஆமுக்த மால்யதா என்பது. அது தெலுங்கு இலக்கிய உலகில் தலை மணியாகத் திகழ்வது. அது பெரியாழ்வார் மகளாரான ஆண்டாள் அம்மையாரைப் பற்றியது. அது பாடத் தொடங்கிய காலம் 23-1-1519. அன்று இராயர் விஜயவதி எனப்பட்ட பெஜவாடாவில் தங்கி இருந்தார்; அங்குக் கோயில் கொண்டிருந்த மதுசூதனப் பெருமானை வணங்கி விரதம் இருந்த ஏகாதசியன்று கனவு கண்டார். கனவில் பெருமாள் தோன்றி ஆண்டாள் வரலாற்றைப் பாடுமாறு பணித்து மறைந்தார். உடனே இராயர் அந்நூலைப் பாடத் தொடங்கினார். நூல் முடிந்த பிறகு அவைப்புலவர் தலைவரான அல்லசானி பெத்தன்னா அதனை முழுவதும் நன்கு பார்வையிட்டுச் செப்பம் செய்தார்.

வரலாற்றுக் குறிப்புகள்

ஆமுக்த மால்யதாவில் கிருஷ்ணதேவராயருடைய போர்ச் செயல்கள், அவருடைய அரசியல் கொள்கைகள், பொது மக்கள் இருக்க வேண்டும் நிலை முதலிய குறிக்கப்பட்டுள்ளன. இராயருடைய போர்ச் செயல்களும் படையெடுப்பும் முறையாகக் கூறப்பட்டுள்ளன. இராயர் உதயகிரி-கொண்டவீடு- கொண்டபல்லி இவற்றைவென்று சிம்மாசனத்தில் பெருமானை வணங்கி வெற்றித்தூணைப் பொட்நூர் என்னும் இடத்தில் நாட்டினார்; பின்னர்க் கெம்பாவி அரணை அழித்தார்; பிறகு நெய்ராமணம்3 என்னும் இடத்தில் வெற்றிபெற்றார்.

வடமொழிப் புலவர்

1.  இராயர் அவையில் ரக்ஷ்மீதரர், திவாகரர் என்பவர் இருந்தனர். இவர் இருவரும் ஒரிஸ்ஸா நாட்டுக் கஜபதி அரசரது அவைப் புலவராக இருந்தவர். இராயர் கஜபதியை வென்றபிறகு புலவர் இருவரும் விஜய நகரத்தில் இருந்து வரலாயினர். இவருள் முதல்வர் சாஹித்யம், ஆகமம், சோதிடம், வேதாந்தம் பற்றி நூல்களை வரைந்துள்ளார்; சங்கரர் வரைந்த சௌந்தரிய லஹரிக்கு உரை எழுதியுள்ளார். திவாகரர் பாரத வரலாற்றைப் ‘பாரதமித்திர’ என்னும் நூலாகப் பாடிள்ளார்.

2.  இராயருடைய முதல் அமைச்சரான அப்பாஜி சிறந்த வடமொழிப் புலவர். அவர் அகத்தியர் என்பார் வரைந்த பால பாரதத்திற்கு உரை எழுதியுள்ளார். அந்த உரை ‘மனோரமா’ எனப் பெயர்பெறும்.

3.  நாதிண்ட்ல கோபமந்திரி என்பவர் கொண்ட வீட்டில் இருந்த அரசப் பிரதிநிதி. அவர் அப்பாஜிக்கு நெருங்கிய உறவினர். அவர் பிரபோத சந்திரோதயம் என்னும் வடமொழி நூலுக்கு உரை வகுத்தவர். அந்த உரையின் பெயர் ‘சந்திரிகா’ என்பது. அந்த உரை கோப மந்திரியின் கல்வி ஆழத்தைக் கவினுறக் காட்டுவது. அவர் தெலுங்கில் ‘கிருஷ்ணர்ச்சுன சம்வாதம்’ என்ற ஒரு நூலையும் எழுதியுள்ளார்.

4.  கோபமந்திரிக்கு அமைச்சராக இருந்தவர் யுச தேசா என்பவர். இவர் முன்சொன்ன லக்ஷ்மீதரர் மாணவர். இப்பெரியார் 4’சிவபஞ்ச ஸ்தவம்’ என்ற ஐந்து நூல்கட்கு உரை வரைந்துள்ளார். தெனாலி இராமலிங்கர் இவரிடம் மிக்க மதிப்புடையவர். அவர் தாம் செய்த ‘உத்பட ஆராத்ய சரித்திரம்’ என்னும் தெலுங்கு நூலை இவருக்கு உரிமையாக்கினார் எனின், இந்த அமைச்சருடைய புலமையும் புலவரை ஆதரிக்கும் தன்மையும் நன்கு விளங்கும்.

இந்த அமைச்சருடைய புத்திரர் சங்கர் கவி என்பவர், அவர் சிறந்த தெலுங்குப் புலவர். அவர் ‘அரிச்சந்திர உபாக்கியாநம்’ என்னும் நூலைத் தெலுங்கில் பாடியுள்ளார்.

5.  பந்தம் லக்ஷ்மி நாராயணர் என்பவர் ஒரு வடமொழிப் புலவர். அவர் கிருஷ்ணதேவராயர் அவையில் நாட்டியப் புலவராக இருந்தவர். அவர் அபிநவ பரதாசாரியர், சூக்கும பரதாசாரியர் முதலிய பட்டப்பெயர்களைப் பெற்றவர். இராயர் அவருக்கு யானை, தங்கப் பல்லக்கு, வெண் முத்துக் குடைகள் இரண்டு, வாத்தியங்கள் முதலிய அரச மரியாதைகளை அளித்தனர். அப்புலவர் ‘சங்கீத சூரியோதயம்’ என்னும் இசைநூல் ஒன்றை ஐந்து அதிகாரங்களில் வரைந்துள்ளார்; அதனைக் கிருஷ்ணதேவராயர்க்கு உரிமையாக்கியுள்ளார்.

6.  ஈசுவர தீக்ஷிதர் என்பவர் இராயர் அவைப்புலவருள் ஒருவர். அவர் இராயர் தூண்டுதலால் வால்மீகி ராமாயணத்துக்குச் சிற்றுரை எழுதினர். அவர் வால்மீகி ராமாயணம் முழுவதும் அறுபது நாழிகைக்குள் மனப் பாடமாக ஒப்பித்துக் கிருஷ்ண தேவராயர் வியப்புக்கும் பாராட்டுக்கும் உரியவரானார்.

7.  துக்காதேவி என்பவள் கிருஷ்ணதேவராயர் மனைவி; கஜபதி மகள். அவள் நிறைந்த வடமொழிப் புலமை உடையவள். அவள் ‘துக்கா பஞ்சகம்’ என்றும் சிறு நூலைப் பாடியுள்ளாள். நூலில் இருப்பவை ஐந்து சுலோகங்களேயாகும். துக்காதேவி ஒருத்தியே கிருஷ்ணதேவராயர் காலத்தில் வடமொழிப் புலமைபெற்ற பெண்மணி ஆவள்.

தெலுங்கு மொழிப் புலவர்

கிருஷ்ணதேவராயர் காலத்தில் இருந்த தெலுங்கு மொழிப் புலவர் பலராவர். ஆயினும் அவருள் எண்மரையே சிறப்பாகக் கூறுதல் வழக்கம். ஆயின், நாம் இங்கு அந்த எண்மரையும் பிறரையும் பற்றிக் காண்போம்:

1.  அல்லசானி பெத்தன்ன-இவர் இராயருக்கு உயிர் போன்ற நண்பர்; முதற்புலவர்; சைவராக இருந்து பின் வைணவரானவர்; பிராமணர். இவர் ‘ஆந்திர கவிதா பிதாமகர்’ என்ற பட்டம் பெற்றவர். இவர் இரண்டு நூல்களை வரைந்தனர்: ஒன்று மனு சரித்திரம்; மற்றொன்று ஹரிகதாசாரம். இராயர் இவரைத் தாம் சென்ற இடமெல்லாம் அழைத்துச் சென்றார்; இவருக்குப் பல்லக்கு, யானை முதலிய அரச மரியாதைகளை அளித்தார்.

2.  நந்தி திம்மன்னா-இவர் சைவர்; பிராமணர்; அகோர சிவாசாரியார் மாணவர்; கிருஷ்ணதேவராயர் தந்தையாரான நரசராயருக்கு உரிமை செய்யப்பட்டதும் தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டது மான வராஹ புராணத்தின் ஆசிரியர் இருவருள் ஒருவரான நந்தி மல்லையர் என்பவர்க்கு நெருங்கிய உறவினர். இவர் பாரிஜாதாபஹரணம், திரிஷ்டஹலி தண்டகம், வாணி விலாசம் என்ற நூல்களை எழுதினார். இவற்றுள் வாணி விலாசம் என்பது கிடைத்திலது.

பாரிஜாதாபஹரணம்: இது மிகச் சிறந்த நூல். இந்நூல் பாடியது பற்றி ஒரு வரலாறு வழங்குகிறது. ‘திம்மன்னா இராயரை மணந்த அரசமா- தேவியருள் ஒருவருடன் விஜயநகரம் வந்தார். அந்த அம்மையார் இராயரைச் சிறிது சினங்கொள்ளச் செய்த காரணத்தால் இராயர் அவ்வமையாரிடம் சில நாட்கள் வரை பேசவில்லை; அவர் அந்தப்புரத்திற்குச் செல்லவும் புலவரிடம் கூறினார். புலவர் இராயருக்கு மறைமுகமாக நல்லுரை புகட்ட விரும்பிப் ’பாரிஜாதாபஹரணம்’ பாடினார்’; அதனில் தன்னிடம் வருத்தம் கொண்ட மனைவியரிடம் கண்ணன் எவ்வாறு நடந்து அவர்களை இன்புறுத்தினான் என்பதைத் தெளிவாக விளக்கினார். அந்நூல் முழுவதையும் படித்துப் பார்த்த கிருஷ்ணதேவராயர் தமக்கு மறைமுகமாக நல்லுரை புகட்டிய புலவரது கவித்திறனைப் பாராட்டிச் சிறப்பித்தார்’ , என்பது வரலாறு.

இந்நூலில் கிருஷ்ணதேவராயர் தந்தையரான நரசராயர் செய்த போர்ச் செயல்கள் குறிக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணதேவராயர் போர்ச் செயல்களும் இடம் பெற்றுள்ளன. எனவே, இராயர் வரலாற்றை அறிய இந்நூல் ஓரளவு துணைபுரியத் தக்கது. இது சிறந்த நடையில் ஆற்றொழுக்குப் போல அமைந்த நூலாகும். இதனை இராயர் பல முறை படித்து மகிழ்ந்து, திம்மன்னாவுக்கு ஓர் அக்கிரகாரத்தை அளித்து மகிழ்ந்தார்.

3.  மாதய்யகாரி மல்லன்னா-இவர் சைவர்; பிராமணர்; அகோர சிவாசாரியார் மாணவர். இவர் ‘இராஜசேகர சரித்திரம்’ என்னும் நூலைத் தெலுங்கில் எழுதி, முன்சொன்ன கோப மந்திரியின் உடன் பிறந்தாரான அப்ப - மந்திரி என்பாருக்கு உரிமையாக்கினார்.

4.  தூர்ச்சடி-இவர் சைவர்; காளத்தியைச் சேர்ந்தவர். இவர் காளத்தி மஹாத்மியம், காளத்தீசுவர சதகம் என்னும் நூல்களை எழுதினவர்.

5.  அய்யலராஜு இராமபத்திர கவி-இவர் வைணவர்; சகல மதசார சங்கிரகம், இராமாபியுதயம் என்னும் இரு நூல்களை வரைந்தவர். முதல் நூல் கிருஷ்ணதேவராயர் தூண்டுதலால் வரையப்பட்டது. இரண்டாம் நூல் இராயருடைய மருமகனார்க்கு உரிமை செய்யப்பட்டது.

6.  பிங்கலி சூரன்னா-இவர் கிருஷ்ணதேவராயர்க்குப்பிறகு பல ஆண்டுகள் இருந்தவர்; அவருக்குப் பிறகே நூல்களைப் பாடியவர். இவர் பாடியன இராகவப் பாண்டவீயம், கலா புருஷோதயம், பிரபாவதி-பிரத்யும்னம் என்பன. இவை பிற்காலத் தெலுங்குப் புலவரால் நன்கு போற்றப்பட்டவை.

7.  இராமராஜ பூஷணர்-இவரும் இராயருக்குப் பிறகே நூல் செய்தவர். இவர் செய்த ‘வசு சரித்திரம்’ புகழ்பெற்றது. அது காளத்திக் கவிஞர் என்பவரால் வடமொழியில் பெயர்த்து எழுதப்பட்டது. எனின், அதன் சிறப்பை நன்கறியலாம் அன்றோ?

8.  தெனாலி-இராமலிங்கர்-இவர் பிராமணர்; முதலில் சைவராக இருந்தவர்; பின்னர் வைணவராக மாறித் தெனாலி - இராமகிருஷ்ணர் எனப்பெயர் பெற்றார். இவர் ஏறத்தாழக் கி.பி. 1530-இல் ‘உத்படாராத்ய சரித்திரம்’ வரைந்தனர். இவருக்குக் குமாரபாரதி என்ற பெயரும் உண்டு. இவர் பிறகு ‘பாண்டுரங்க மஹாத்மியம்’, ‘கடிகாசல மஹாத்மியம்’ என்றும் நூல்களை (1560-70) எழுதினார். இவர் ‘கந்தர்ப்பகேது விலாசம்’ என்னும் நூலையும் வரைந்தார்.

தெனாலிராமன் கதைகள்

இக்கதைகள் எல்லாம் இப்புலவரைப் பற்றியனவே ஆகும். இவர் சிறந்த புலவர்; அதே சமயத்தில் சிறந்த விகடராகவும் இருந்தவர். இவரைப் பற்றிய கதைகள் எந்த அளவு உண்மையானவை என்பதை உறுதியாக உரைத்தல் இயலாது; ஆயினும் அவை நாட்டில் வேரூன்றி விட்டன; வழிவழியாகத் தென் இந்திய மக்கள் அக்கதைகளைக் கேட்டுத் திளைத்து வருகின்றனர்.

9.  கந்துகூர்-ருத்ர கவி-இவர் பொற்கொல்லர் வகுப்பினார்; பன்னிரண்டு ஆண்டுகள் கிருஷ்ணதேவராயர் அவையில் இருந்தவர். இவர் ‘நிரன் குசோபாக்கியாநம்’ என்னும் சிறந்த பிரபந்தத்தையும், சுக்கிரீவ விஜயம், யக்ஷகான்ம், ஹரிசதகம் என்னும் நூல்களையும் இயற்றியவர்.

10. தல்லபாக பெத்த திருமலய்யா-இவர் திருப்பதியைச் சேர்ந்தவர். இவர் கிருஷ்ணதேவராயர் வழிபடு கடவுளான வேங்கடேசப் பெருமாள்மீது பல சங்கீர்த்தனங்களைப் பாடியவர்; ஹரிவம்சம், சிருங்கார சதகம், நீதி சதகம், வெங்கடேசுவரோத் தாரணம் முதலிய நூல்களை வரைந்தவர்; பகவத்கீதைக்கு உரை எழுதியவர். இவரது நீதி சதகம் கிருஷ்ண தேவராயரால் மிகவும் பாராட்டப்பட்டதாகும். இப்புலவர் யாப்பிலக்கணம் நூல் ஒன்றையும் செய்தனர்.

11. தல்லபாக சின்னன்னா-இவர் மேற்சொன்ன புலவர் புத்திரர். இவரது பெயர் திருவேங்கடநாதன் என்பது. இவர் பரமயோகி விலாசம். அஷ்டமஹிஷி கல்யாணம் என்னும் நூல்களை எழுதியுள்ளார்.

12. சிந்தல்பூடி எல்ல கவி-இவர் பொட்நூரைச் சேர்ந்தவர். அவ்விடம் கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்கு உட்பட்ட பொழுது இவர் விஜயநகரத்திற்கு வந்து சேர்ந்தனர். இராயர் இவரது கவிதா வன்மையைச் சோதித்து அறிந்தனர்; இவர் இயற்றிய ‘இராதா மாதவம்’ என்ற நூலைப் பாராட்டி, இவர்க்கே ‘இராதாமாதவம்’ என்ற பட்டம் அளித்தார். இவர் இராயர் காலமான பின்னர் ‘விஷ்ணூமய நாடகம்’, ‘தாரசு பிரமராஜியம்’ என்பவற்றை எழுதினார்; கடைசி நூலை அச்சுதராயரிடம் படைக் கணக்கு களைப் பார்த்துவந்த அதிகாரி ஒருவர்க்கு உரிமையாக்கினார்.

13. வல்லபாசாரியார்-இவர் கவிதேவிந்திரர் எனவும் அழைக்கப் பட்டனர். பாஸ்கராச்சாரியர் வடமொழியில் வரைந்த லீலாவதி என்ற நூலை இப்புலவர் தெலுங்கில் மொழி பெயர்த்தார்; அதனைக் கிருஷ்ணதேவராயர் நம்பிக்கைக்கு உரிய பிரபுவான பொம்மலதகாளர் என்பவர்க்கு உரிமையாக்கினர்.

14. குமார மல்லம்மாள்-இவர் ஒரு பெண்பாற் புலவர்; தெலுங்கு மொழியில் சிறந்த புலமை உடையவர். இவர் ஒருவரே கிருஷ்ணதேவராயர் காலத்துத் தெலுங்குப் பெண்பாற் புலவர். இவர் இராமாயணத்தைத் தெலுங்கில் பாடியுள்ளார். கிருஷ்ண தேவராயர் இவருக்கும் பலவகைப் பரிசுகள் அளித்து மகிழ்வித்தார்.

15. வேறு புலவர்கள்-கிருஷ்ணதேவராயர் காலத்தில் அவரால் ஆதரிக்கப்படாத புலவர் சிலர் இருந்தனர். அவருள் எடபாட்டி எர்ரன்னா என்பவரும், சங்குசல நரசிமம் கவி என்பவரும் குறிக்கத்தக்கவர் ஆவர். இவருள் முன்னவர் குமாரநைஷதம், மல்ஹண சரித்திரம் என்னும் இரு நூல்களை எழுதியவர்; பின்னவர் கவிகர்ண ரசாயனம் என்ற நூலை வரைந்தவர்.

கன்னடப் புலவர்
கிருஷ்ணதேவராயர் ஆட்சியில் கன்னடம் ஓரளவு சிறப்புற்றது. புலவர் பலர் அவர் காலத்தில் இருந்து பல நூல்களைச் செய்தனர். அவருள் சிலரைப்பற்றி ஈண்டுக் காண்க:

1.  திம்மன்னா-இவர் பானுகவி என்பவர் மகனார் ஆவர். பானுகவி என்பவர் கன்னட மொழியில் மிகப் பெரும்புலவர். திம்மன்னா கன்னட மஹாபாரதத்தை முடித்துக் கிருஷ்ண தேவராயர்க்கு உரிமையாக்கி மதிப்புப்பெற்றவர்.

2.  வியாசராயர்-இவர் வியாச தீர்த்தர் என்றும் அழைக்கப் பட்டனர்; ‘மாத்வமுனிவர்’ எனப் பெயர் பெற்றவர்; வியாசராய மடத்தை உண்டாக்கியவர். இவர் வடமொழியில் தர்க்க தாண்டவம், நியாயமிருதம், தாத்பரிய சங்கிரகம் என்ற நூல்களை எழுதினவர்; கன்னடத்தில் பல கீர்த்தனங்களைப் பாடினவர். கிருஷ்ணதேவராயர் இவரைப் பெரிதும் மதித்து வந்தார்.

3.  புரந்தரதாசர்-இவர் வியாசராயர் மாணவர்; கன்னடத்தில் சிறந்த எழுத்தாளர்; சிறந்த பாடகர்; இவர் பண்டரிபுரத்தில் வாழ்ந்தவர். இவருடைய பாடல்கள் கன்னட மக்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன.

4.  கனகதாசர்-இவர் தார்வார் ஜில்லாவைச் சேர்ந்தவர்; சிறந்த புலவர். இவர் மோஹன தரங்கிணி, நளசரித்திரம், ஹரிபக்தசாரம் முதலிய நூல்களை எழுதியுள்ளார்.

5.  வித்யானந்தர்-இவர் ‘அபிநவவாதி வித்யானந்தர்’ என்றும் பெயர் பெற்றவர். இவர் ‘காவியசாரம்’ என்னும் தொகுப்பு நூல் செய்தவர். இவர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் விஜயநகரத்தில் இருந்த சமணர் ஆவர்.

6.  மல்லனார்யா-இவர் குப்பி என்ற ஊரினர்; சைவர்; கிருஷ்ண தேவராயர் காலத்தவர். இப்புலவர் ‘பவசிந்தா ரத்தினம்’, ‘வீரசைவாமிருதம்’ என்னும் நூல்களைச் செய்தவர்.

7.  சாட்டு விட்டலநாதர்-இவர் பாகவத புராணத்தைக் கன்னடத்தில் வரைந்தவர். இவர் கிருஷ்ணதேவராயர் காலத்திலும் அச்சுதராயர் காலத்திலும் வாழ்ந்திருந்தவர்.

** தமிழ்ப் புலவர்**
1.  கச்சி ஞானப்பிரகாசர்-இவர் காஞ்சீபுரத்தில் உள்ள ஞானப்பிரகாச மடத்துத் தலைவராக இருந்தவர். அந்த மடத்துத் தலைவர் அனைவர்க்கும் ‘ஞானப்பிரகாசர்’ என்ற பட்டமுண்டு. இவரது இயற்பெயர் தத்துவப் பிரகாசர் என்பது. இவர் வேளாளர்; கல்வி கேள்விகளில் சிறந்தவர்; சிதம்பர புராணம் இயற்றிய புராணத் திருமலைநாதர், அவர் மகனார் பரஞ்சோதி யார் முதலியவர் இவரிடம் சைவதீட்சை பெற்றவர்கள். இந்த ஞானப்பிரகாசர் தம் காலத்தில் விஜயநகரப் பேரரசராக இருந்த கிருஷ்ணதேவர்மீது மஞ்சரிப்பா என்றொரு பிரபந்தம் பாடினார்; கச்சி ஒருமாவின் கீழ் உறையும் பெருமான் மீது கலம்பகம் பாடினார். இந்தக் குறிப்பை,

“வானப்ர காசப் புகழ்க்கிருஷ்ண ராயர்க்கு மஞ்சரிப்பா
கானப்ர காசப் புகழாய்ந்து கச்சிக் கலம்பகம்செய்
ஞானப்ர காச குருராயன் வாழ்ந்து நலஞ்சிறந்த
மானப்ர காச முடையோர் வளர்தொண்டை மண்டலமே”

என்னும் தொண்டைமண்டல சதகச் செய்யுளால் அறியலாம். இராயர் மனமகிழ்ந்து பலவகைப் பரிசுகள் அவரது தகுதியறிந்து அளித்து மகிழ்ந்தார்.

2.  குமார சரசுவதி-இவர் இன்ன ஊரினர் - இன்ன மரபினர்-என்னும் விவரங்கள் அறியக்கூடவில்லை. இவர் தமிழில் சிறந்த புலமை பெற்றவர்; கன்னடம், தெலுங்கு, இந்துஸ்தானி மொழிகளை அறிந்தவர். இவர் கிருஷ்ணதேவராயர் அவையில் புலவராக இருந்தவர். இராயர் பிரதாபருத்ர கஜபதி என்ற அரசனை (1504-1532) வென்று அவனது தலைநகரமான கடகத்தை (கட்டாக்கை)க் கைப்பற்றினார்; வன்மகளான துக்காதேவியை மணம் புரிந்து கொண்டார். இது வரலாற்றுச் செய்தி. இதனைக் குமார சரசுவதி சிலேடைப் பொருள் அமைய ஒரு வெண்பாவில் வைத்துப் பாடினார். அப்பாடல் இது:

“கலிகம் இகழ்ந்துநுதிக் கைச்சங்கம் தோற்று
மெலிந்துகட கம்நழுவ விட்டாள்-மலிந்தமலர்ப்
பொன்னிட்ட மானகிட்ண பூபாலா! உன்றனுக்குப்
பின்னிட்ட ஒட்டியன்போல் பெண்.”

கஜபதியைக் குறிக்கும்போது, ‘கலிங்க நாட்டை இழந்தும், பல யானைக் கூட்டங்களைத் தோற்றும், கடகம் என்ற ஊரை விட்டும் ஓடினான்’ என்பது இதன் பொருள். கஜபதி மகளைக் குறிக்கும் பொழுது, ‘(கிருஷ்ண தேவராயரது சிறப்பைக் கேட்ட பொழுது) ஆடையை நெகிழ விட்டாள்; நுனிக் கையில் இருந்த வளையல்கள் கழன்றன; காதல் நோயால் உடல் மெலிந்து தோள்வளையும் கழன்றன’ என்பது பொருள்.

3.  அரிதாசர்-இவரது இயற்பெயர் திருமலையப்பர் என்பது; இவருக்குக் கிருஷ்ணன் என்ற பெயரும் உண்டு. இவர் தொண்டை மண்டலத்து இருபத்துநான்கு கோட்டங்களுள் ஒன்றான குன்றவர்த்தனக் கோட்டத்து அரிவாசபுரத்தைச் சேர்ந்தவர். அவ்வூர் சந்திரகிரி ராச்சியத்து வேதகிரி, தேசத்து வேதநதி தீரத்து அமைந்திருப்பது என்று கல்வெட்டுக் கூறும்.

இவர் தமையனார் வடமலை என்பவர் சிறந்த அரசியல் பதவி வகித்துவந்தார். அப்பொழுது பேரரசராக இருந்தவர் கிருஷ்ண தேவராயர். திருமலையப்பர் வைணவ பக்தியில் சிறந்து தமதூரில் பெருமாள் கோவில் ஒன்றைக் கட்டி அதனில் கருமாணிக்க வண்ணரையும், வேதவல்லி நாச்சியாரையும் தாபித்துப் பூசை, விழா முதலியவை குறைவற நடக்குமாறு ஏற்பாடுசெய்து அரிதாசர் எனப் பெயர் பெற்றார்.

கிருஷ்ணதேவராயர் திக்கு விஜயமாகப் புறப்பட்டு வந்த பொழுது அரிதாசர் அவரைத் தம் ஊர் வந்து பெருமானைச் சேவித்துச் செல்லுமாறு வேண்டினார். இராயர் தம் போர்ச் செயல்களை முடித்துக் கொண்டு தெற்கு நோக்கி வந்தபொழுது அரிதாசர் விருப்பப்படி பெருமானைச் சேவித்துப் பல தானங்களைச் செய்து சென்றார் என்று நாகலாபுரக் கோவிலில் உள்ள கல்வெட்டும் பட்டயமும் கூறுகின்றன. அரிவாசபுரம் இராயரது தாயார் (நாகலாதேவி) பெயரால் நாகலாபுரம் என வழங்கலாயிற்று. அரிதாசர் பல நாடுகட்கும் சபைகட்கும் தலைவராக நியமனம் பெற்றார்; பல கோவில்களில் மேற்பார்வையும் இவரிடம் விடப் பட்டது. இப்பெரியார் இருசமய விளக்கம் என்னும் நூலைச் செய்தார்.

இரு சமய விளக்கம்-இந்நூல் ஆற்றுக்கு நீராடச் சென்ற பெண்மணிகள் இருவர் சைவம், வைணவம் என்னும் சமயங்கள் இரண்டினையும் சீர்தூக்கி, வைணவ சமயத்தின் சிறப்பியல்பு களைத் தம்முன் பேசிக்கொள்வதாக அமைந்திருப்பது. இந்த நூல் நான்கு காண்டங்கள், இருபத்தாறு படலங்கள், நூற்றுமுப்பது பரிச்சேதங்கள், 2119 விருத்தங்கள் உடையது. இது கருமாணிக்க வண்ணரது திருமுன்பு அரங்கேற்றப்பட்டது. அரிதாசர் இந்த நூலில் கிருஷ்ணதேவராயரைப் பாராட்டியுள்ளார்.

“கிரிபோல் விளங்கிக் கிளரும் புயக்கிட்ண ராயன்
தரைமீது சிங்காத் திரியில் செய்த்தம்பம் நாட்ட
வரமா தரவால் அளித்தே வடகூவம் மேயும்
கருமா மணிவண் ணனைநீ டுகருத்தில் வைப்பாம்.”

4.  தத்துவப்பிரகாச-இவர் திருவாரூர்த் தியாகராஜப் பெருமானது கோவில் கண்காணிப்பாளர்; கிருஷ்ணதேவராயர் காலத்தவர். கோவில் அர்ச்சகரான வீழிப் பிராமணர் கோவிற்- காரியங்களைச் செவ்வனே நடத்தவில்லை. விழாக் காலத்தில் செய்யப்பட வேண்டியன செய்யப் படவில்லை. இக்குறைகளைக் கண்ட தத்துவப் பிரகாசர் பெருமான் மீதும் அரசன் மீதும் ஆணையிட்டுக் கொடியிறக்காமற் செய்தார், இதனை,

“மருவுபுகழ்க் கிட்ண மாராயர் ஆணை
அரிய வடமலையான் ஆணை - திருவாரூர்ப்
பாகற் கொடியறுப்பார்7 பாதந் திருவாணை
தியாகக் கொடியிறக்காதே”

என்று அவர் பாடிய செய்யுள் வலியுறுத்தும். பின்னர் அவர் நடந்த தவறுகளை எல்லாம் கிருஷ்ணதேவராயருக்கு வெண்பா மூலம் தெரிவித்தார். இதனை,

“ஊழித் துலுக்கல்ல ஒட்டியான் தானுமல்ல
வீழித் துலுக்கு வந்து மேலிட்டு - வாழி
சிறந்ததிரு வாரூர்த் தியாகருடை பூசை
இறந்ததே கிருட்டினரா யா”

என்னும் வெண்பா உறுதிப்படுத்தல் காண்க.

கிருஷ்ணதேவராயர் கோவிலில் தவறு செய்தவர்களை மாற்றி யாஸவம் நன்முறையில் நடைபெறுமாறு செய்தனர். அப்போது தத்துவப் பிரகாசர் வீழிப் பிராமணரை நோக்கி,

“உண்ட வயிற்றில் உமிக்காந்தல் இட்டதே
தொண்டரே! வீழித் துலுக்கரே! - பண்டெல்லாம்
அப்பம் அவல்எள் அதிரசமும் தோசைகளும்
கப்புவதும் போச்சே கவிழ்ந்து,”
என்று ஏளனம் செய்தார்.

5.  மண்டல புருஷர்-இவர் சமணர்; தமிழில் சூடாமணி நிகண்டைச் செய்தவர். இவர் கிருஷ்ணதேவராயர் காலத்தவர் என்பது கூறப்படுகிறது.

அறம் வளர்த்த முதலியார் என்பவர் கிருஷ்ணதேவராயர் அமைச்சருள் ஒருவர்; பாண்டிய சிற்றரசர் ஒருவன் அம்முதலியார் மீது கலம்பகம் ஒன்றைப் பாடினான்.9

இராயர் மரியாதை

இங்ஙனம் தம் காலத்தவராக வாழ்ந்த மேற்சொன்ன கவியரசர் பலரையும் புவியரசராகிய கிருஷ்ணதேவராயர் எங்ஙனம் நடத்திவந்தார்? இராயர் அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு அரச மரியாதைகளைச் செய்தார்; நிலங்களை மானியமாக விட்டார்; பட்டாடைகளை நல்கினார்; உயர்ந்த ஆபரணங் களைப் பரிசாக வழங்கினார்; போஜராஜன் வசந்த விழாவைக் கொண்டாடிப் புலவர்கட்குப் பரிசளித்தது போல இராயரும் வசந்த விழாவில் தம் பெருநாட்டுப் புலவர்களை வரவழைத்து வரையாது வழங்கினார்; அவ்வப்பொழுது துலாபாரம் புகுந்து, அந்தப் பொன்னையும் மணிகளையும் பாவலர்க்கே வழங்கினார்; பெத்தன்னா போன்ற பெரும் புலவர் பல்லக்கைத் துக்கி மகிழ்ந்தார்; யானைமீது அல்லது பல்லக்கில் வந்த பெரும் புலவர்களைத் தாம் எதிர் சென்று வரவேற்று மகிழ்ந்தார். சுருங்கக் கூறின், தம் காலப் புலவர்கட்குக் கிருஷ்ணதேவராயர் பெரிய வள்ளலாக விளங்கினார் என்று கூறுதல் பொருத்தமாகும்.

அடிக்குறிப்புகள்

1.  ஆமுக்த-சூடி, மால்ய - மாலை, தா-கொடுத்தவள், சூடிக்கொடுத்தவள்; ஆண்டாள். 2. இராய்ச்சூர்க்கு 70 அல்லது 80 மைல் தூரத்தில் உள்ளது. குல்பர்காப் போரில் ஈடுபட்ட இடம்.

2.  இது துங்கபத்திரைக்கு வடகரையில் இராய்சூர்க்கருகில் இருப்பது.

3.  ஸ்தவம் - தோத்திரம்

4.  ஒட்டியன் - கஜபதி அரசன்.

5.  நாகலாபுரக் கல்வெட்டு 628 டிக 1905

6.  திருவாரூரில் பங்குனித் திருவிழாவில் சுவாமி தேரிலிருந்து இறங்கியபின் இராஜநாராயண மண்டபம் புகுந்து அபிஷேகமான பிறகு அடியார்க்குக் காட்சி தருவார். அதற்கு முன் அண்மையில் உள்ள வேலங்குடி என்னும் ஊரில் இருக்கும் பாகற்காய் மண்டபத்துக்கு எழுந்தருளி அங்கு உண்டாக்கப்பட்டிருக்கும் பாகற்கொடியை அறுத்தல் வழக்கம்.

7.  திருவீழிமழலையிலிருந்து வந்திருந்த அர்ச்சகர்.

8.  Dr. N.V.Ramanayya, Studies in the History of the Third Dynasty of Vijayanagar, P. 426..

கலை வளர்ச்சி

நாகரிகக் கலைகள்

ஓவியம், சிற்பம், இசை, நடனம், நாடகம் முதலியன நாகரிகக் கலைகள் எனப்படும். இவை வளர்ச்சி பெற்ற நாடு நாகரிக வளர்ச்சி பெற்றது என்று அறிஞர் கூறுவர். இந்தக் கலைகள் அனைத்தும் விஜய நகரப் பேரரசில்-சிறப்பாகக் கிருஷ்ணதேவராயர் காலத்தில் வளர்ச்சி அடைந்தன என்பதை, இவற்றை நேரிற் கண்டு குறிப்- பெழுதிய மேனாட்டறிஞர் கூற்றிலிருந்தும் ஹம்பியில் அழிந்து கிடக்கும் கோவில்களிற் காணப்படும் சிற்பங்கள், ஓவியங்கள், கட்டடங்கள் வாயிலாகவும் நன்கறியலாம்.

ஓவியம்

விஜய நகரத்தில் தந்தத்தினால் செய்யப்பட்ட பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்ட அறை இருந்தது. அதனில் இருந்த பொருள்களுடன் சிறந்த ஓவியங்களும் பலவாக இருந்தன. ‘அவை, தமது பெருநாட்டில் பணயர் முதலியோர் வாழும் வகையை அந்தப்புர மாதர் அறிந்துகொள்வதற்காகத் தீட்டப்பட்டவை’ என்று அவற்றை நேரிற்கண்ட மேனாட்டு அறிஞர் கூறியுள்ளார்.

அரண்மனைக்குள் சில அறைகளின் சுவர்கள் மீது ஓவியங்கள் தீட்டப்பட்டு இருந்தன. “குறிப்பிட்ட ஓர் அறைக்கு மேல் மற்றோர் அறை உண்டு. இவற்றில் பொருள்கள் இல்லை. சுவர்கள் ஓவியங்களைக் கொண்டு விளங்குகின்றன. சுவர்களும் தலையும் தங்கத் தகடுகளால் அலங்கரிக்கப் பட்டுள்ளன.” இங்ஙனம் சுவர்களில் ஓவியம் தீட்டல் நாட்பட்ட பழக்கமாகும். அப்பழக்கம் விஜயநகர அரசரும் மேற்கொண்டது பாராட்டத்தக்கது. அவர்கள் அதனை மேற்கொண்டனர் என்பதை, இன்று ஹம்பியில் பழுதுபட்டுக் கிடக்கும் கோவிற் சுவர்களிலும் பிற கட்டடச் சுவர்களிலும் உள்ள சிவப்புமஞ்சள் நிற ரேகைகளைக் கொண்டு உணரலாம். கோவில் மண்டப மேல் கூரையில் காணப்படும் பலவகைச் சிற்பங்கள் நிறம் தீட்டப் பெற்றவையாகக் காண்கின்றன. அரசர் சென்று அரச காரியங்களைக் கவனிக்கும் பெரிய கட்டடம் முழுவதும் திரைச் சீலைகளால் அலங்கரிக்கப் பட்டது. சுவர்கள் மிக்க அழகான ஓவியங்களைக் கொண்டவை. அக்கட்டடத்தின் நாற்புறங்களிலும் வாயில்கள் உண்டு. ஒவ்வொரு வாயிலிலும் அழகிய மாதர் இருவர் ஓவியங்கள் காண்கின்றன. அரண்மனை மாதர்கள் நடனம் பயில்வதற்கு உரிய அரங்கின் சுவர்களில் பலவகை நடன நிலைகளைக் குறிக்கும் ஓவியங்கள் அழகாகத் தீட்டப்பட்டுள்ளன. யானைகள், குதிரைகள் இவற்றின் மீது போடப்பட்ட உயர்வகைத் துணிகள் சிறந்த சித்திர வேலைப்பாடு கொண்டவை. யானைகளின் தலைமீது அரக்கர் முகங்களும், புலி, சிங்கம் முதலிய பெரிய விலங்கு உருவங்களும் தீட்டப்பட்டிருக்கும்.

‘இராயர் இருப்பிடத்திற்குச் செல்லும் வழியை உணர்த்தும் வாயிலின் இருபுறங்களிலும் இரண்டு உருவச் சிலைகள் இருக்கின்றன. அவை பல நிறங்களால் அழகு பெறத் தீட்டப் பட்டுள்ளன. வலப்புறம் இருப்பது கிருஷ்ணதேவ ராயர் தகப்பனாரான நரசநாயக்கர் உருவச்சிலை. அவர் சிறிது கறுப்பு நிறம்-நல்ல உடற்கட்டு-அழகிய தோற்றம் உடையவர் என்பனவற்றை அச்சிலையைக் கொண்டு நன்கறியலாம். இடப்புறம் இருப்பது கிருஷ்ணதேவராயருடைய உருவச்சிலை. அஃது அழகிய தோற்றமும் உடற்கட்டும் நடுத்தர உயரமும் கம்பீரமான பார்வையும் கூடியதாய்க் காண்கின்றது.’

இவ்வாறு உருவச்சிலைகள் அமைத்தல் விஜயநகர அரசர்க்குப் பழக்கமானதேயாகும். விஜயநகரத்தில் உள்ள அச்சுதராயர் கோவில் திருச்சுற்றில் ஓர் அரசன், அரசி உருவச் சிலைகள் அழகிய அமைப்பில் இன்றும் காணக் கிடைக்கின்றன. திருப்பதியில் உள்ள கிருஷ்ண தேவராயர், அவர் மனைவியர் இருவர் உருவச்சிலைகளும் இப்பழக்கத்தை மெய்ப்பிக்கின்றன. பேரரசர் பழக்கத்தை அவருடைய சிற்றரசரும் பின்பற்றினர் என்பதை, மதுரை மீனாஷியம்மன் கோவிலில் உள்ள திருமலை நாயக்கர் உருவச்சிலையைக் கொண்டு அறியலாம்.

கட்டடக் கலை (Architecture)
கிருஷ்ணதேவராயர்க்கு முற்பட்ட பேரரசர் தம் நாட்டை முஸ்லிம்களிடமிருந்து காப்பதிலேயே தம் காலத்தைக் கழித்தனர்; ஆதலின், புதிய கட்டங்கள் பலவற்றைக் கட்டவோ, கலைகள் வளர்க்கவோ அவர்கட்கு ஓய்வு ஏற்படவில்லை. ஆனால் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் பிற்பகுதி அமைதி நிறைந்தது. அதனால் அவர் பல கோவில்களைக் கட்டினார். அவற்றில் அவர் காலக் கட்டக் கலையையும் சிற்ப-ஓவியங்கலை வளர்ச்சியையும் வளமுறக் காணலாம். அவர் கட்டிய ஹஸார இராமசுவாமி கோவில், விஜயநகரப் பேரரசின் காலத்துக் கட்டடக்கலை உயர்வுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.2 கட்டடக்கலை வளர்ச்சியை அறிவிக்கும் மற்றொரு கோவில் கிருஷ்ணதேவராயர் கட்டிய விட்டலசுவாமி கோவில் ஆகும்.

விட்டலசுவாமி கோவிலின் கருவறை, நடுமண்டபம், முன் மண்டபம் என்பன உயரமான தளத்தின் மீது அமைந்தவை. கோவிலின் திருச்சுற்றுத் தாழ்ந்த தளத்தின்மீது அமைந்துள்ளது. திருச்சுற்றுச் சதுரமானது. திருச்சுற்றின் சில பகுதிகளில் வெளிச்சம் உள்ளே வர வசதி செய்யப் பட்டிருக்கிறது. திருச்சுற்றுக்கு வர இரண்டு வழிகள் உண்டு. திருச்சுற்றில் விட்டல சுவாமிக்குரிய ‘கல்தேர்’ இருக்கின்றது.

திருச்சுற்றுக்குமேல் உள்ள கட்டட அமைப்புக் காணத்தக்கது. அதனில் ஹொய்சளரும் பாண்டியரும் யானை உருவங்களை அமைத்தனர். ஆனால் கிருஷ்ணதேவராயர் போர்ச்சுகீசிய குதிரைச் சேவகர், அவர்தம் குதிரைகள் உருவங்களை அமைத்தனர். இது காலத்திற்கேற்ற சீர்திருத்தமாகும்.

இக்கட்டடத்திற்கு மேற்பட்டது ‘உபானம்’ என்பது. உபானத்தில் பலவகைப் பூக்கள், பறவைகள், கட்டங்கள், இலை அமைப்புகள் முதலியன கண்கவர் வேலைப்பாடு கொண்டவை. விட்டலசுவாமி கோவில் உபானம் பார்த்து மகிழத்தக்கது. உபானத்தின்மீது இதழ் விரிந்த தாமரை மலர்கள் செதுக்கப் பட்டிருக்கின்றன. இதழ்கள் நெருக்கமாகவுள்ளன; சிறிது தடித்தும் உயர்த்தியும் காட்டப்பட்டிருக்கின்றன. இவ்வேலைப்பாடு மிக்க அழகுடையது. பதுமத்துக்கு மேலாகக் குமுதம் காணப் படுகிறது. அதனைச் சுற்றிலும் எல்லை கோலப்பட்டுள்ளது. எல்லைக்குள் பலவகைக் கட்டடங்கள் அழகுடன் அமைந்துள்ளன.

குமுதத்துக்கு அப்பால் உள்ள பகுதியில் பொது வாழ்வைக் குறிக்கும் சித்திரங்கள் - நடன மாதர், இசை மாதர், மற்போர், சிலம்ப விளையாட்டுகள் முதலியன செதுக்கப் பட்டுள்ளன. இவற்றுடன் தாமரை மலர் தலைகீழாக வைக்கப்பட்டாற் போன்ற வேலைப்பாடு பார்க்க அழகானது.

தூண்கள்

கிருஷ்ணதேவராயர் காலத்தில் சதுரத் தூண்களே பெரும்பாலன. வட்டத் தூண்கள் சதுரத் தூண்களுடன் இணைப் புண்டு, அழகு வேலைகட்கு இடமாகப் பயன்பட்டன. இத்தகைய வேலைப்பாடு கொண்ட வட்டத் தூண்களை அஸார இராமசுவாமி கோவிலிற் காணலாம். தூணின் அடிப்பகுதி சதுர அமைப்புடையது. அதன்மீது அழகிய வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன. சில தூண்களின் அடிப் பகுதிகள் குதிரைச் சவாரி வீரர்களைக் கொண்ட அமைப்புடையன. சில கோவில்களில் சதுரத் தூண்கள் வட்டத் தூண்களுடன் இணைந்து காணப்படு கின்றன; சிலவற்றில் தனித்துக் காண்கின்றன. சில இரட்டைத் தூண்களின் அடிப்பகுதி சிங்க அமைப்புடன் காண்கின்றன. முதல் வரிசையில் உள்ள முக்கியமான சதுரத் தூணில் அரசர், அரசியர் உருவங்கள் செதுக்கப்பட்டதும் உண்டு. வேலூரில் கிருஷ்ண தேவராயர் கட்டிய வைகுந்தப் பெருமாள் கோவிலில் உள்ள கல்யாண மண்டபத் தூண் ஒன்றில் அவரது உருவச்சிலையையும் அரசியர் மூவர் உருவச் சிலைகளையும் காணலாம். அச்சதுரத் தூண்களில் விளக்குகள் மாலைகளைப்போலக் காணப்படும் ஒருவகை வேலைப் பாட்டைக் காணலாம்.

சதுரத்தூண் பல சதுரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு சதுரத்திலும் தெய்வத்தொடர்புடைய அல்லது சமயத் தொடர்புடைய அல்லது சமூகத் தொடர்புடைய உருவங்கள் - நிகழ்ச்சிகள் செதுக்கப்பட்டு இருக்கும். இத்தூணின் உச்சியில் தாமரைப்போது தொங்கவிடப் பட்டிருக்கும். கிருஷ்ணதேவராயர் காலத்தில் இத்தாமரைப் போது சிறிய அளவினதாகவே இருந்தது. இஃது அச்சுதராயர் காலமுதல் நீண்ட அளவுடையதாகக் காட்டப்பட்டது.

கூரை

இச்சதுரத் தூண்களுக்கு மேல் உள்ள கூரை மிக்க வேலைப்பாடு கொண்டது. அது நீளமானது; அழகிய பல வேலைப்பாடுகளைக் கொண்டது; கூரைக்கு மேல் சில அறைகள் உண்டு. அவற்றில் பலவகைத் தேவர் சிலைகள் வைக்கப் பட்டிருக்கும். இந்தக் காட்சியை விட்டலசுவாமி கோவிலிற் காணலாம். கூரையின் நான்கு முனைகளிலும் விளக்கு வைக்கத் தக்க அமைப்புக் காணப்படுகிறது.

நுழைவின் இரு புறங்களிலும் கதாயுதத்தைப் பிடித்துள்ள வாயிற் காவலர் உருவச்சிலைகள் அல்லது மிக்க திறமை வாய்ந்த வேலைப்பாடு கொண்ட யானைகளின் உருவச் சிலைகள் காணப்படும்.

விமானம்

இவை அனைத்திற்கும் மேலாகக் காண்பது விமானம். இது சில கோவில்களில் நடுமண்டபத்தின்மீது கட்டப்படும். கோபுரங்கள் காணத்தக்க கவின்பெறு வேலைப்பாடு கொண்டவை. விமானம், கோபுரம் என்பன செங்கல், சுண்ணாம்பு, மரம் இவற்றால் ஆகியவை. அவை முழுவதும் கனமுள்ள பாறைக் கற்களால் கட்டப்படல் ஆபத்தானதன்றோ? ஆதலின் அவை ஒரு பலமுள்ள பாளையின்மீது உயர்த்திக் கட்டப்பட்டன. அவை, அந்தோ! அழிந்து கிடப்பதனால் அவற்றைப் பற்றிய முழு விவரங்களையும் உள்ளவாறு உணரக் கூடவில்லை.

சிற்பம்

விஜயநகரச் சிற்பங்கள் இணையற்றவை. அவை கோவில்களிலும் கட்டடங்களிலும் காணப்படுகின்றன. அக்காலச் சிற்பங்களை விஜயநகரம், வேலூர், முதுபித்ரி, பட்கல் முதலிய இடங்களிற் காணலாம். விஜய நகரத்தில் உள்ள ‘வெற்றி இல்லம்’ சிற்பங்கட்குப் பெயர் பெற்றது. பெரியவும் சிறியவுமான குரங்குகள், அரசர் அயல் நாட்டுத் தூதரை வரவேற்று அளவளாவுதல், அரசரும் அரசமா தேவியரும் நடன நிகழ்ச்சியைக் காணுதல், காட்டில் மான், பன்றி முதலியவற்றைப் பெருமக்கள் வேட்டையாடுதல், அவர்களுடன் அவர் தம் பெண்டிரும் வில்லும் அம்பும் ஏந்தி வேட்டையாடுதல், பெண்கள் கண்ணாடியில் தங்களைப் பார்த்து ஒப்பனை செய்து கொள்ளுதல், பெண்கள் நடனமாடுதல், சிறைப் பட்டோரை அரசர்முன் சிற்பங்களை வெற்றி இல்லத்திற் காணலாம். அக்காட்சிகள் கண்ணையும் கருத்தையும் கவரத்தக்கவை; கற்பனைத் திறமும் கவிமதவன்மையும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பேரழகும் வாய்ந்தவை. மான்கள், நாய்கள், பாய்ந்து செல்லும் குதிரைகள், போர் வீரர் அணிவகுப்பு முதலியவற்றை உணர்த்தும் சிற்பங்கள் உயிருள்ளனபோலக் காட்சி அளிக்கின்றன. அவை, தம்மை ஒரு முறை கண்டவர் கண்களை விட்டு அகலாதவை.

இசை
கிருஷ்ணதேவராயர் இசையில் ஈடுபாடு உடையவர்; நல்ல இசைப் பயிற்சி உடையவர்; பல்வகைப் பண்களைக் கேட்டு அநுபவிக்கும் ஆற்றல் உடையவர். மேனாட்டு அரசர் ஒருவர் தமக்கு அனுப்பிய இசைக் கருவிகளை இராயர் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார் என்று மேனாட்டு யாத்திரிகர் குறித்துள்ளார். இராயர்தம் அரண்மனையைச் சேர்ந்த இசைமாதர் பாடுவதைக் கேட்டு மகிழ்வது வழக்கமாம். நல்ல காரியங்கள் நடைபெறும் பொழுதும் பெருமக்கள் அரசரைப் பார்க்கச் செல்லும் பொழுதும் அரண்மனையில் இன்னிசை முழங்குதல் வழக்கம். பலவகை இசைக் கருவிகள் அக்காலத்தில் இருந்தன.

** நாடகம்**
பண்டைக்காலத்தில் இருவகை நாடகங்கள் நடிக்கப் பட்டன. அவை அரசர்க்கென்று நடிக்கப்பட்டவை. பொது மக்கட்கு என்று நடிக்கப்பட்டவை என்பன. அவை முறையே ‘வேத்தியல், பொதுவியல்’ எனப்பட்டன. இவ்விருவகை நாடகங்களும் இராயர் காலத்தில் வழங்கியிருந்தன. இராயரே பெரும்புலவர் அல்லவா? அவர் செய்த ‘ஜாம்பவதி கல்யாணம்’ என்ற நாடகம் வசந்த விழாக்காலத்தில் நடிக்கப்பட்டது. அத்துடன் ‘தாயிகுந்து நாடகம்’ என்பது ஒன்றும் நடிக்கப்பட்டது. அதனில் சிறப்பும் நடித்த நட்டுவநாயகன் என்பவனுக்கும் ‘பாத்ரி’ என்ற நடனமாதிற்கும் நிலங்கள் மானியமாக விடப்பட்டன. இதிலிருந்து, அக்கால நாடகங்களில் ஆடவரும் பெண்டிரும் சேர்ந்து நடித்தனர் என்பதை நன்குணரலாம் அன்றோ?

நடனம்

தேவதாசிகள்

விஜயநகரத்துத் தேவதாசிகள் பண்பட்ட நடனமாதர். அவர்கள் பத்து வயதிற்குள் கோவிலுக்குப் பொட்டுக்கட்டும் வழக்கத்தை மேற்கொண்டு இருந்தனர். பொட்டுக் கட்டப்பட்ட பிறகு அவர்கள் ‘தேவதாசிகள்’ எனப் பெயர் பெற்றனர். அவர்கள் மிகவும் கௌரவமாக நடத்தப்பட்டனர். பொதுமக்கள் அவர்களை இழிவாகக் கருதவில்லை. அவர்கள் நகரத்தின் சிறந்த பகுதியில் - நல்ல தெருக்களில் - மாடமாளிகைகளில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் அக்காலத்தில் எல்லா நகரங்களிலும் இவ்வாறே நல்ல தெருக்களில் வசித்து வந்தனர். அவர்கள் பிரபுக்களாலும் பொது மக்களாலும் கௌரவமாக நடத்தப் பட்டார்கள். கௌரவமுள்ள எந்த மனிதனும் அவர்கள் வீடுகட்குச் சென்றுவரலாம். அவனைப் பொது மக்கள் இழிவாகக் கருதார். தேவதாசிகள் அரச மாதேவியருடன் நெருங்கிப் பழகினர்; அவர்களுடன் இருந்து தாம்பூலம் தரித்துக் கொள்வர். அவர்கள் மற்போர்ப் பயிற்சியும் பெற்றிருந்தனர். ஆண்டுதோறும் மஹா நவமி அன்று வெற்றி இல்லத்தின் படிக்கட்டு வரை அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அன்று தேவதாசிகளுக்குள் ‘மற்போர்’ நடைபெறும். அரசரும் அரசமாதேவியரும் பிரபுக்களும் அதனைக் கண்டு மகிழ்வர்.

தேவதாசிகள் செல்வ நிலை

இங்ஙனம் அரசரிடமும் பிரபுக்களிடமும் மதிப்புப்பெற்ற தேவதாசிகள் செல்வப் பெருக்குடையராக இருந்தனர் என்பதில் வியப்பில்லை அன்றோ? அவர்கள் அணிந்திருந்த நகைகள் விலை மதிப்பு அற்றவை. வைரம் முதலிய நவரத்தினங்கள் வைத்து இழைக்கப்பட்ட கழுத்தணிகள், கடையங்கள், வளையல்கள், ஒட்டியாணம், காலணிகள் முதலியவற்றை அம்மாதரசியர் மாண்புற அணிந்திருந்தனர். அவர்கட்குச் சொந்தமாக நிலங்கள் இருந்தன; பணியாளர் இருந்தனர்; பிற போக பாக்கியங்கள் இருந்தன. அந்த நடன மாதர் அணிந்திருந்த பலவகை நகைகளையும் அவர்கள் ஆடிய நடன வகைகளையும் ஹஸார இராமசுவாமி கோவில் சிற்பங்களிலும் வெற்றி இல்லத்துச் சிற்பங்களிலும் கண்டு மகிழலாம்.

நடன உடை

நடன மாதர் உடைய விசேடம் பல வகைப்பட்டது. கால்களில் சல்லடம் அணிந்து உடம்பில் கச்சை அணிந்து கொண்டு நடனம் செய்தல் ஒரு வகை. அவர்கள் மார்பில் ஆடையில்லை. பலவகைக் கழுத்தணிகளே மார்பை மறைத்திருத்தன. இப்பழக்கம் மலையாளத்திலும் ‘பலி’ என்னும் தீவுகளிலும் இன்றும் இருந்து வருகிறது. அரைக்கச்சை மட்டும் அணிந்து நடனம் ஆடுதல் மற்றொரு வகை.

நடனக்கலை

தேவதாசிகள் நடனக்கலையை நன்கு வளர்த்து வந்தனர். மஹாநவமி விழாவில் ஒவ்வொருநாள் காலையிலும் கிருஷ்ணதேவராயர் வெற்றி இல்லத்தில் கொலுவிருக்கையில் நடனம் நடைபெற்று வந்தது. தேர்விழாக் காலங்களிலும் நடனம் நடைபெற்றது. கோவில்களில் விக்கிரகங்கட்கு எதிரில் சனிக்கிழமை தோறும் தேவதாசிகள் நடிப்பது வழக்கம். நடனம் நடைபெற்ற அன்று மாலை அவர்கள் மற்போர் புரிதலும் மரபு. அக்காலத்து நடனமகளிர் தக்க ஆடல் ஆசிரியரிடம் பயிற்சி பெற்றனர், செய்வதற்கு அருமையான நடன வகைகளை நடத்திக் காட்டினர் என்பன விஜய நகரத்துச் சிற்பங்களைக் கொண்டு அறியக் கிடக்கின்றன.

நடனமண்டபம்

அரண்மனைக்குள் நடனமண்டபம் ஒன்று இருந்தது. அங்குத்தான் அரசமாதேவியர் நடனக் கலையைக் கற்றனர். நடனமண்டபம் நீளமானது. அதன் தூண்கள் சிற்பங்கள் நிறைந்தவை. சில தூண்கள் பாதியளவாக இருந்தன. அவை உள்ளே கூடாகவும் பளபளப்பாகவும் இருந்தன. தூண்களின் மேற்புறத்தில் யானைகள் முதலிய உருவச்சிலைகள் வைக்கப் பட்டிருந்தன. தூண்களின் மேற்புறம் திறந்திருந்தால். மேற்சொன்ன விலங்கு முதலிய உருவச்சிலைகட்குப் பின்னர் வைக்கப்பட்டிருந்த வேறு உருவங்கள் நன்கு தெரியத்தக்கனவாக இருந்தன. முதுகுக்கு முதுகு திருப்பப்பட்ட நிலையில் இருந்த சித்திரங்கள் காணப்பட்டன. இச்சித்திரங்களும் சிற்பங்களும் பலவகை நடனச் சிற்பங்களை அழகுபடுத்தி நின்றன. நடனச் சிற்பங்களும் ஓவியங்களும் நடனக்கலையை அம்மண்டபத்தில் பயின்ற மாதர்க்குப் பேருதவியாக இருந்தன.

கிருஷ்ணதேவராயர் நடன மண்டபத்தில் இருந்து தம் அரண்மனை மாதரது நடனப் பயிற்சியைக் கவனிப்பது வழக்கம். அவர் அமரும் இடம் தங்கத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்ட தரையையும், சுவர்களையும் பெற்றிருந்தது. ஒரு சுவரின் நடுவில் பன்னிரண்டு வயதுடைய நடனப் பெண்ணின் தங்கச்சிலை வைக்கப்பட்டு இருந்தது.

கலைகள் வளர்த்த காவலர்

இதுகாறும் கூறப்பட்டவை நடன மண்டபத்தை நேரிற்கண்ட மேனாட்டறிஞர் கூற்று. அம்மண்டபம் நமது தவக் குறைவால் அழிக்கப்பட்டு விட்டது. இசை, நடனம் முதலிய நாகரிகக் கலைகளை நன்முறையில் போற்றி வளர்த்த கிருஷ்ணதேவராயர் நாகரிக உலகம் எங்ஙனம் மறத்தல் கூடும்?

அடிக்குறிப்புகள்

1.  Sewell-A Forgotten Empire, PP. 250, 277, 285-289

2.  “Although comparatively a small building it is one of the most perfect specimens of Hindu temple architecture of the Vijayanagara period in existence.” - Longhurst, Humpi Ruins. P.69

3.  Sewell, A Forgotten Empire, PP. 288-9..

அரசியல்

பெருநாட்டுப் பரப்பு

மேற்குக் கரையில் கோவாவிற்குத் தெற்கே இருந்த அங்கோலா என்ற துறைமுக நகரத்திலிருந்து தார்வரர் - இராயச்சூர் வழியே கிருஷ்ணையாற்று முகத்துவாரம் வரை இழுக்கப்படும் கோடு விஜயநகரப் பெருநாட்டின் வட எல்லையாகும்; தெற்கே சேரநாடு தவிர எஞ்சிய நிலப்பகுதி முழுவதும் பெருநாட்டைச் சேர்ந்திருந்தது.

மக்கள் தொகை

பெருநாடு மக்கள் தொகையை மிகுதியாகப் பெற்றிருந்தது. நிலக்கோலோ கொண்டி, அப்துர் ரஸாக், பார்போசா, பயெஸ் என்ற அயல்நாட்டு யாத்திரிகர், “விஜயநகரப் பெரு நாட்டில் மக்கள் தொகை அதிகம். நன்றாக ஆராய்ந்துபாராமல் எண்ணிக்கை கூற இயலாது. நாடெங்கும் கிராமங்களும் தனியூர்களும் நகரங்களும் நிறைந்துள,” என்று குறித்துள்ளனர்.

மூர்லண்ட் என்பவர் கணக்குப்படி விஜயநகரப் பெருநாட்டின் மக்கள்தொகை கிருஷ்ணதேவராயர் காலத்தில் ஏறக்குறைய 180 லக்ஷம் என்னலாம்.

நகரங்கள்

இராயர் காலத்தில் பெருநாட்டில் இருந்த நகரங்கள் யாவை என்பதைக் காண்போம்: மேற்குக் கரையில் அங்கோலா, மிர்ஜான், தஹானாவர், பத்கல், மைந்தூர், பாரகூர், பஸ்ரூர், மங்களூர் முதலியன; பெருநாட்டின் நடுப்பகுதியில் இராயச்சூர், ஆதவானி, ஆனெகொந்தி, விஜயநகரம், பெனுகொண்டா, ஸ்ரீரங்கபட்டணம், துவாரசமுத்திரம், இக்கேரி, பங்காபுரம் என்பன குறிக்கத்தக்கவை; கிழக்குக்கரைப் பகுதியில் ஸ்ரீசைலம், கொண்ட வீடு, உதயகிரி, காளத்தி, திருப்பதி, சந்திரகிரி, புலிகட், மயிலாப்பூர், காஞ்சி, சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர், மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், திருநெல்வேலி, இராமேசுவரம், தனுஷ்கோடி என்பன முக்கியமானவை.

இந்த நகரங்களுள் பெரியதும் சிறந்ததும் விஜயநகரமே ஆகும். அதுவே பெருநாட்டின் கோநகரம், கிருஷ்ணதேவராயர் காலத்துத் தலைநகரை, (1) விருபாக்ஷர் கோவிலையும் பெரிய கடைத் தெருவையும் தன்னகத்தே கொண்ட ஹம்பி, (2) அரண்மனை, அரசியற் கூடங்கள், வெற்றி இல்லம், ஹஸார இராமசுவாமி கோவில் முதுலியவற்றைக் கொண்ட நடுப்பகுதி, (3) கிருஷ்ண தேவராயர் அமைத்த நாகலாபுரம் (இக்கால ஹாஸ்பேட்டை) என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். இம்மூன்று பகுதிகளும் தண்ணீர் வசதி கொண்டது. துங்க பத்திரையிலிருந்து பல கால்வாய்கள் வெட்டப்பட்டு நகரத்தின் பகுதிகளில் இடம் பெற்றிருந்தன. நகரத்தின் நடுப்பகுதி உயரமான இடத்தில் அமைந்திருந்ததால் கிணற்று நீரே பயன் படுத்தப்பட்டது. கிருஷ்ணதேவராயர் நாகலாபுரத்தில் பெரிய ஏரியைத் தோற்றுவித்தார். விஜயநகரத்தில் ஒரு லக்ஷம் வீடுகள் இருந்தன வென்று அயல் நாட்டு யாத்திரிகர் குறித்துள்ளனர். எனவே விஜயநகர மக்கள்தொகை ஏறத்தாழ நான்கு அல்லது ஐந்து லக்ஷம் என்னலாம்.

பயிர்த் தொழில்

பெருநாட்டில் பயிர்த்தொழில் மிகுதியாக நடைபெற்றது. கன்னட நாட்டில் கரையோரப் பகுதிகளில் ஆட்டுப் பண்ணை, மாட்டுப் பண்ணைகள் மிகுதியாக இருந்தன. நெல் மிகுதியாகப் பயிர் செய்யப்பட்டு மலையாள நாட்டிற்கு அனுப்பப்பட்டது. கோவாவிற்கு அருகில் கோதுமை, இராகி, கீரை வகைகள், பருத்தி, எள் முதலியன நன்கு பயிராயின. ஆடுகளும் மாடுகளும் மிகுதியாகக் காணப்பட்டன.

மத்கல் என்னும் இடத்திலிருந்து விஜயநகரம் வரும் சாலையின் இரு பக்கங்களிலும் நெல், சோளம், இராகி, கம்பு, அவரை, மொச்சை, கோதுமை, பருத்தி முதலியன மிகுதியாகப் பயிராயின. ஆடுகள், மாடுகள், எருமைகள் மிகுதியாகக் காணப்பட்டன. தார்வார் ஜில்லாவில் உயர்ந்த விதைகள் சேகரித்து விற்கப்பட்டன; கால்நடைகளைப் பெருக்கும் பண்ணைகள் மிகுதியாக இருந்தன.

புலிகட் முதலிய கிழக்குப் பகுதியில் நெல் மிகுதியாகப் பயிர் செய்யப்பட்டது; இறைச்சி மிகுதியாகக் கிடைத்தது; கோதுமையும் காய்கறி வகைகளும் பயிராயின.

நீர்ப்பாசன வசதி

பெருநாட்டில் இவ்வாறு யாவும் மிகுதியாக விளைந்தன. எனின், அவ்விளைவுக்கு அடிப்படையாக நீர்ப்பாசன வசதிகள் செவ்வையாக இருந்திருத்தல் வேண்டும் அல்லவா? பெருநாட்டில் அத்தகைய வசதிகள் இருந்தனவா? விஜயநகரத்தின் அருகில் உள்ள கடப்பை, கர்நூல், பல்லாரி, அனந்தப்பூர் ஜில்லாக்களில் ஆயிரக்கணக்கான குளங்கள், நூற்றுக் கணக்கான ஏரிகள் தோண்டப்பட்டன. கடப்பை ஜில்லாவில் 3,574 சதுர மைல் உள்ள நிலப் பரப்பில் 4,194 குளங்கள் இருந்தன. அவை இப்பொழுது பாழ்பட்டுக் கிடக்கின்றன. எனின், விஜயநகர அரசர்கள் பயிர்த் தொழிலை வளர்க்க எவ்வளவு பாடுபட்டனர் என்பதை நன்கறியலாம் அன்றோ?

“அரசாங்கம் நீர்ப்பாசன வசதிகட்காகக் குளங்களையும் ஏரிகளையும், கால்வாய்களையும் அமைக்கவேண்டும்; ஏழைக் குடியானவர்க்கு நிலங்களைக் குத்தகைக்கு விட்டுவிடவேண்டும். இந்த இருவகை முயற்சியால் அரசாங்கத்திற்கு மிகுந்த வருவாய் கிடைக்கும்,” என்று கிருஷ்ண தேவராயர் தமது ஆமுக்த மால்யதாவில் குறித்திருத்தல் நோக்கத்தக்கது.

இராயர் நாகலாபுரத்தில் பெரிய குளத்தைத் தோண்டினார் அல்லவா? அக்குளத்து நீர் ஊர் மக்கட்குப் பலவகையிற் பயன்பட்டது. குளத்திலிருந்து பல கால்வாய்கள் நீரை வயல்கட்குக் கொண்டு சென்றன. மக்கள் நீராடவும் குடிக்கவும் அக்குளத்து நீரைப் பயன்படுத்தினர்; கால்வாய்களில் கால் நடைகள் குளிப்பாட்டப்பட்டன. கிருஷ்ணதேவராயர் நாகலாபுர மக்கட்கு, சுற்றியிருந்த நிலங்களைத் தண்ணீர் வரியில்லாமல் ஒன்பதாண்டுகள் பயிரிட உரிமை அளித்தார். மக்கள் மனமகிழ்வுற்று ஊக்கமாகப் பயிரிட்டு நிலவரியைச் செலுத்தினர்; நிலங்களை நல்ல விளைச்சலுக்குரிய முதல்தர நிலங்களாக மாற்றினர். இராயர் கொர்கொல் என்னும் இடத்தில் அணைக் கட்டும் கால்வாயும் அமைத்தார். அக்கால்வாய் இன்றும் நாட்டு மக்கட்குப் பயன்பட்டு வருகின்றது. இராயருடைய மாகாணத் தலைவரான கொண்டமரசய்யன் என்பவர் உதயகிரி இராச்சியத்தில் ‘அனந்தசாகரம்’, ‘காலுவாயி’ என்ற பெயர் கொண்ட பெரிய குளங்களை அமைத்தார். இவ்வாறே மாகாணத் தலைவர் பலர் தத்தம் மாகாணங்களிற் செய்த நீர்ப்பாசன வசதிகள் பலவாகும்.

கைத்தொழில் வளர்ச்சி

கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் கைத்தொழில் வளர்ச்சியில் ஐரோப்பிய நாடுகளைவிட இந்தியா மிக்க வளர்ச்சி பெற்றிருந்தது. இந்தியா அக்காலத்தில் அயல்நாடுகளை உணவுக்கோ-உடைக்கோ-பிற பொருள்களுக்கோ எதிர்பார்க்க வில்லை. இந்திய மக்கட்கு வேண்டியன அனைத்தும் இந்தியாவிலேயே கிடைத்தன. அக்கால அயல்நாட்டுப் பொருள் குதிரைகளும் அரசர்க்குத் தேவையான ஆடம்பரப் பொருள்களுமேயாகும். ஆதலின் பொது மக்கள் அயல்நாட்டு இறக்குமதிப் பொருள்களை எதிர்பாராது வாழ்ந்துவந்தனர்.

நெசவுத் தொழில்

கிருஷ்ணதேவராயர் காலத்தில் கோவன்புத்தூர், மதுரை, புலிகட் முதலிய இடங்களில் அழகிய மெல்லிய கண் கவரத்தக்க விலை உயர்ந்த பருத்தி ஆடைகளும், பட்டாடைகளும் நெய்யப்பட்டன. அவை மலாக்கா, பெரு, சுமத்ரா, கூர்ஜரம், மலையாளம் முதலிய அயல்நாடுகட்கு அனுப்பப் பட்டன.

வைரம்-பொன்-வெள்ளிப் பொருள்கள்

குத்திக்குத் தென்மேற்கே இருபது கல் தொலைவில் உள்ள வச்சிரக்குரூர் என்னும் இடம் அக்காலத்தில் வைரத்திற்குப் பெயர் பெற்றதாக இருந்தது. அங்கு இருந்த அரசாங்க அதிகாரி அங்குக் கிடைத்த உயர்தர வைரக் கற்களை எல்லாம் இராயருக்கு அனுப்பிவந்தான். விஜய நகரத்திலேயே மலைப் பாறைகளிடம் வைரச் சுரங்கம் இருந்ததென்று 1534-இல் இந்தியாவிற்கு வந்த கார்ஸிகாடிவொர்தா என்பவர் குறித்துள்ளார். அவர் தக்கணத்தில் வைரம் கிடைக்கும் இடம் வேறொன்றையும் குறித்துள்ளார். போலி வைரங்கள், புஷ்பராகக் கற்கள் முதலியனவும் மிகுதியாகக் கிடைத்தன.

பொன் நகைகள், பொன் பாத்திரங்கள் முதலியன அரண்மனையிலும் பிரபுக்கள் இல்லங்களிலும் மிகுதியாகப் பயன்பட்டன. அரசர் கோவில்கட்குப் பெருவாரியாக நகைகளைத் தானம் செய்தார். அவர் திருக்காளத்தி ஈசுவரர்க்கு மணிகள் பதித்த மாலை, பூசைக்குரிய தங்கப் பாத்திரங்கள் முதலியவற்றைத் தானமாகக் கொடுத்தார். இங்ஙனம் அவர் கோவில்கட்குச் செய்தளித்த விலையுயர்ந்த பொருள்கள் பலவாகும். தேவதாசிகள் அணிந்திருந்த பலவகைப்பட்ட நகைகள் முன்னரே கூறப்பட்டன அல்லவா? போர் வீரர்கள் அணிந்திருந்த நகைகள் பல. கரிகளும் பரிகளும் மணிகள் பதித்த பொன் பட்டங்களை முகத்தில் அணிந்திருந்தன. அவற்றின் மீது போடப்பட்ட பட்டாடைகள் பொன் வேலைப்பாடு கொண்டவை. போர்வீரத் தலைவர்கள் பயன்படுத்திய வாள்களின் கைப்பிடிகள் மணிகள் பதித்தவை. பொது மக்களுள் ஆடவர் காதணிகளை அணிந்தனர். பெண்கள் காதணி, கழுத்தணிகள், மூக்கணி, பவளமாலை, முததுமாலை முதலியவற்றை அணிந்தனர். வெள்ளியிலும் நகைகளும் பாத்திரங்களும் செய்யப்பட்டன.

பிற உலோகங்கள்

செம்பும் இரும்பும் மிகுதியாகப் பயன்பட்டன. இரும்பு பத்கல் என்னும் நகரத்திலிருந்து மிகுதியாகக் கொண்டு வரப்பட்டது. வாள், வேல், ஈட்டி, போர்க் கோடரி, வில், அம்பு முதலியன அக்காலப் போர்க்கருவிகள் ஆகும். விற்கள் பொன்முலாம், வெள்ளிமுலாம் பூசப்பட்டிருந்தன. விஜயநகரப் பேரரசின் போர் வீரர் பத்து லக்ஷத்துக்கு மேற்பட்டவர்; தேவைப்படின் மற்றொரு பத்துலக்ஷம் வீரர் குவிந்துவிடுவர் எனின், போர்க் கருவிகளின் எண்ணிக்கையை எவ்வாறு கூறுவது! ஆகவே, உலோகத் தொழிலாளர்க்கு எப்பொழுதுமே ஓயாத வேலை இருந்துவந்தது என்று கூறுவதே பொருத்தமாகும்.

செம்பு, ஈயம், இரும்பு என்பன வீட்டுப் பொருள்கள் செய்ய மிகுதியாகப் பயன்பட்டன. விஜயநகரத்தில் செம்பு, பித்தளை, வெண்கலக் கடைகள் மிகுதியாக இருந்தன.

வாசனைப் பொருள்கள்

சந்தனம், கஸ்தூரி, புனுகு, சவ்வாது முதலிய மணப் பொருள்கள் விஜய நகரத்தில் விற்கப்பட்டன. சந்தனக் கட்டைகள் சேரநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டன. ரோஜாப் பூக்கள் நாள்தோறும் தலைநகரத்தில் விற்கப்பட்டன. அவற்றை விற்கும் கடைகள் மிகப் பலவாக இருந்தன. ரோஜா மலரை அரச குடும்பத்தினரும் பெருமக்களும் மிகுதியாகப் பயன்படுத்தினர்; நீராடிய பிறகு சாம்பிராணிப் புகை, அகிற்புகை இவற்றைக் கூந்தலுக்கு ஊட்டினர்.

தொழிலாளர் கூலி

வேலையாள் வேலை தொடங்குமுன் வேலை தந்தவர் வீட்டில் உண்பான்; வேலை முடிந்தபிறகு ஒரு பணம் பெற்று மீள்வான். அக்காலக் குதிரைச் சேவகர், குதிரையைப் பழக்குவோர், வண்ணார், தச்சர், கொல்லர் முதலிய அரண்மனைப் பணியாளர் பலர் அன்றாடம் கூலி பெற்றனர். அரண்மனைக் கணக்கன் அரண்மனை வெளிவாயிலில் இருந்து அவர்கட்குக் கூலி தருதல் வழக்கம்.

அயல்நாட்டு வாணிகம்

‘கிருஷ்ணதேவராயர் காலத்துக்கு முன்வரை அயல் நாட்டு வாணிகம் அராபியர், அபிசீனியர், மூர் வகுப்பார் முதலிய முஸ்லிம்கள் கையில் இருந்தது; ஆனால் இராயர் காலத்தில் போர்ச்சுகீசியர் குதிரைகளையும், முத்துக்களையும், கண்ணாடிப் பொருள்களையும் விஜய நகரப் பெரு நாட்டிற்குக் கொண்டுவந்து வாணிகம் செய்தனர்; பெருநாட்டிலிருந்து அரிசி, ஆடை, சர்க்கரை, இரும்பு, வாசனைப் பொருள்கள் முதலியவற்றை வாங்கி அயல்நாடுகட்குக் கொண்டு சென்றனர். பஸ்ரூர், பாரகூர், மங்களூர் இவற்றிலிருந்து அரிசி மலையாளநாடு, மாலத்தீவுகள், ஏடன் முதலிய இடங்கட்குக் கொண்டு செல்லப்பட்டது. இரும்பு பத்கல் நகரத்திலிருந்து மலையாளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. போர்ச்சுகீசியரும் பெரு நாட்டு வணிகரிடம் இரும்பை வாங்கினர்.பத்கல்லிலிருந்து சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது. அராபியக் கப்பல்கள் பத்கல்லிலிருந்து வாசனைப் பொருள்களை ஏற்றிச் சென்றன.’

விஜயநகரப் பேரரசு மேற்கே போர்ச்சுகல் முதல் கிழக்கே சீன நாடுவரை அயல்நாட்டு வாணிகம் செய்துவந்தது. இவ்வளவு பரந்த நிலையில் வேறு எந்தத் தென் இந்திய அரசும் கடல்வாணிகம் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஜயநகரப் பெருநாட்டில் அப்தூர் ரஸாக் என்ற யாத்திரிகர் பிரயாணம் செய்தவர். அவர் அப்பெருநாட்டில் முந்நூறு துறைமுகங்கள் இருந்தன என்று குறித்துள்ளார். மேற்குக் கரையில் மிகச் சிறந்த துறைமுகம் கள்ளிக்கோட்டை என்பது.

கிருஷ்ணதேவராயர் கடல்வாணிகத்தில் மிக்க அக்கறை கொண்டவர். அவர் தாம் இயற்றிய ஆமுக்தமால்யதாவில், “அரசன் தன் நாட்டுத் துறைமுகங்களை நன்னிலையில் வைத்திருத்தல் வேண்டும். பரிகள், கரிகள், நவமணிகள், சந்தன மரங்கள், முத்துக்கள் முதலியன பெரிய அளவில் இறக்குமதியாகத் தக்க வசதி செய்துதருதல் வேண்டும். புயற்காற்றினாலோ - உடல் நலிவாலோ - கப்பல் கவிழ்வதாலோ தன் நாட்டுக் கரையை அடையும் கப்பல் வாணிகரையும் மாலுமிகளையும் அரசன் அக்கரையோடு கவனித்து வேண்டும் உதவிகளைச் செய்ய வேண்டும்; பெருநாட்டில் உள்ள தோட்டங்கள், பண்ணைகள், கரங்கங்கள் முதலியவற்றைத் தன் நம்பிக்கைக்கு உரிய அதிகாரிகளிடமே ஒப்புவித்தல் வேண்டும்; கரிகளையும் பரிகளையும் கொணர்ந்து விற்கும் அயல்நாட்டு வணிகர்க்கு வேண்டும் மாளிகை அளித்து, அவர்கட்கு உணவு-உடைகளை வழங்கி, அவர்களை நாடோறும் கண்டு அளவளாவி, மிக்க இலாபத்தை அளித்துப் பலவகைப் பரிசுகளையும் கொடுப்பின், கரிகளும் பரிகளும் பகை அரசர்க்கு விற்கப்படா,”1 என்று குறித்துள்ளார். இதுவே இராயர் கையாண்ட முறை. அறிவும் அன்பும் மிக்க இந்த முறையினால் அவர், அராபிய வணிகரையும் போர்ச்சுசீசிய வணிகரையும் தம்பால் இழுத்துக் கொண்டார். அதனால் அயல்நாட்டு வாணிகம் மிக்க உயரிய அளவில் செம்மையாக நடைபெற்று வந்தது.

இறக்குமதிப் பொருள்கள்

பெருநாட்டார் அயல்நாட்டாரிடமிருந்து வாங்கியவை குதிரைகள், யானைகள், முத்துக்கள், பவளம், செம்பு, இரசம், சீனப்பட்டு, வெல்வெட் முதலியனவாகும். ஆண்டுதோறும் ஆயிரம் குதிரைகள் தமக்கு வேண்டுமென்று கிருஷ்ணதேவராயர் கோவாவில் இருந்த போர்ச்சுகீசிய வணிகர் தலைவரைக் கேட்டிருந்தார். யானைகள் ஈழத்திலிருந்து இறக்குமதி ஆயின. ஆர்மஸ் என்னும் இடத்திலிருந்து முத்துக்கள் வந்தன. போர்ச்சுகீசியர் செம்பு, பவளம், கண்ணாடிப் பொருள் இவைகளை விஜயநகரப் பெருநாட்டிற்கு உதவினர். சீனர் பட்டினை உதவினர்; வாசனைப் பொருள்களையும் மருந்து வகைகளையும் வாணிகம் செய்தனர். வங்காளமும் மலேயாவும் வாசனைப் பொருள்களையும் மருந்து வகைகளையும் விற்றன. மெக்காவிலிருந்து வெல்வெட் இறக்குமதியாயிற்று. இங்ஙனம் பல நாடுகளிலிருந்து விலையுயர்ந்த பொருள்கள் விஜயநகரப் பெருநாட்டில் இறக்குமதியாயின.

கரையோர-உள்நாட்டு வாணிகம்

கரையோர வாணிகத்திலும் உள்நாட்டு வாணிகத்திலும் பங்கு கொண்டவர் முஸ்லிம்கள், மலையாளத்தார், தெலுங்கு - கன்னட - தமிழ்ச் செட்டியார் ஆவர். இருவருள் முதல் இருவரும் கரையோர வாணிகம் செய்துவந்தனர்; பின்னவர் மூவரும் உள்நாட்டு வாணிகம் செய்தனர்.

போர்ச்சுகீசியர் இந்தியாவிற்கு வருவதற்கு முன் கரையோர வாணிகம் முஸ்லிம்கள் கையிற்றான் இருந்தன. போர்ச்சுகீசியர் வந்தபிறகு அந்த வாணிகம் ஓரளவு குன்றியது. எனினும் கிருஷ்ணதேவராயர் காலத்தில் அவர்கள் மிகுதியாகவே வாணிகம் செய்துவந்தனர். அவர்கள் முக்கியமான இந்தியத் துறைமுக நகரங்களில் குடியேறி இருந்தனர். அவர்கள் மேற்கு நாடுகளிலிருந்தும் கிழக்கு நாடுகளிலிருந்தும் பொருள்களைக் கொண்டுவந்து, இந்தியாவின் மேற்குகக் கரையிலும் கிழக்குக் கரையிலும் வாணிகம் செய்துவந்தனர்.

மலையாளிகள் மிக்க சுறுசுறுப்பு வாய்ந்தவர். அவர்கள் தங்கள் நாட்டுப் பொருள்களான வாசனைப் பொருள்கள், தென்னைமரப் பொருள்களைக் கொண்டு செய்யப்பட்ட பலவகைப் பொருள்கள், பனை வெல்லம், பனங்கற்கண்டு, பனஞ்சாறு முதலியவற்றைக் கன்னட நாட்டிற்குக் கொண்டுவந்து கொடுத்துப் பதிலுக்கு அரிசியும் இரும்பும் பெற்றுச் சென்றனர்.

செட்டிமார் உள்நாட்டு வாணிகத்தைத் திறம்படச் செய்து வந்தனர். தமிழ்நாட்டுச் செட்டிமார் நல்ல செல்வநிலை பெற்றவர். விலைமதிப்புயர்ந்த நவரத்தினங்களையும், முத்துக்களையும் மிகுதியாகக் கொண்டுசென்று வாணிகம் செய்தனர். அவர்கள் ஒவ்வொரு வாணிகத் துறையிலும் தந்திரத்திற் பெயர் பெற்றிருந்தனர்.

உள்நாட்டு வாணிகப் பொருள்கள்-பலவகைத் தானியங்கள், மிளகாய், புளி, மிளகு முதலிய பொருள்கள், கோதுமை, காய்கறிகள், உப்பு, தேங்காய், நெய், வாசனைப் பொருள்கள், சர்க்கரை, வெற்றிலைப் பாக்கு, சாய வகைகள், இரும்பு-தகரம்-செம்புத் தகடுகள் இவற்றால் ஆன பொருள்கள், பருத்தி, நூற்கட்டு, கோணிப் பைகள் முதலியன அக்கால உள்நாட்டு வாணிகப் பொருள்கள் ஆகும்.

பொருள்கள் சென்ற வகை

இப்பொருள்கள் எருது, கோவேறு கழுதை, எருமை முதலியவற்றின் மீதும், கூலியாட்கள்மீதும் கொண்டு செல்லப்பட்டன. சில சமயங்களில் பெரிய இரட்டை மாட்டு வண்டிகளிலும் காவடிகளிலும் கொண்டு செல்லப் பட்டன. மலையாள நாட்டிலிருந்து கழுதைகள் மீது விஜய நகரத்திற்கு மிளகு கொண்டு செல்லப்பட்டது. ஆயிரக் கணக்கான எருதுகள் பண்டப் பொதிகளை ஏற்றிக்கொண்டு விஜயநகரத்திலிருந்து பத்கல் துறை முகத்திற்குச் சென்றன; இங்ஙனமே அந்தந்த ஊர்ப் பொருள்கள் பிற மாகாணங்கட்குக் கொண்டு செல்லப்பட்டன. இருபது அல்லது முப்பது எருதுகட்கு ஒரு மனிதன் வீதம் உடன்செல்வது வழக்கம்.

பொருள்கள் சென்ற வழிகள்

கிருஷ்ணதேவராயர் காலத்தில் விஜயநகரம் தென் இந்தியாவின் நடுவிடமாக விளங்கியது. அதனால் அத்தலை நகரத்திலிருந்து பல பாதைகள் பெருநாடு முழுவதும் சென்றன; ஒரு பாதை பங்காபூர் வழியாகக் கோவாவிற்குச் சென்றது; மற்றொன்று பங்காபூரிலிருந்து ஹொனாவர் வழியாகப் பத்கல் துறைமுக நகரத்திற்குச் சென்றது; தலைநகரிலிருந்து பெனு கொண்டா, சந்திரகிரி, திருப்பதி, புலிக்கட் இவற்றின் வழியாக மயிலாப்பூரை அடையப் பெரும்பாதை ஒன்று இருந்தது; மற்றொரு பாதை சிவசமுத்திரத்திற்கும் ஸ்ரீரங்கப் பட்டணத்திற்கும் சென்றது; ஒன்று ஆதவாணி, இராயச்சூர் என்னும் நகரங்கட்குச் சென்றது; பிறிதொன்று உதயகிரி, கொண்டவீடு, கொண்டபல்லி-பிறகு கடலோரமாகச் சிம்மாசலம், ஸ்ரீகூர்மம் முதலிய இடங்கட்குச் சென்றது; மற்றொரு பாதை விஜய நகரத்திலிருந்து புறப்பட்டுத் திருப்பதி, காளத்தி, காஞ்சி, சிதம்பரம், மதுரை, இராமேசுவரம், தனுஷ்கோடி முடியச் சென்றது.

நாணய மாற்று

விஜயநகர ஆட்சியில் பொன் நாணயங்களே மிகுதி. அரசாங்க முத்திரையிடப்பட்ட நாணயம் வராஹம் என்பது. கிருஷ்ணதேவராயர் காலத்தில் கீழ்வரும் நாணயங்கள் வழக்கில் இருந்தன.

1.  தங்க நாணயம் வராஹன்

2.  தங்க நாணயம் அரை வராஹன்

3.  தங்க நாணயம் கால் வராஹன்

4.  தங்க நாணயம் பணம் (1/20 வராஹன்)

5.  வெள்ளி நாணயம் தர் (1/60 வராஹன்)

6.  செம்பு நாணயம் ஜிதல் (1/90 வராஹன்)

பொருள் விலை

ஒவ்வொரு பொருளின் விலை மதிப்பு மிகக் குறைவானது. விஜய நகரத்தில் அரிசி, கோதுமை, சோளம் கேழ்வரகு, கொள்ளு முதலிய தானிய வகைகளும் கொட்டை வகைகளும் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் மிக்க மலிவான விலைக்கே கிடைத்தன. ஒரு கோழியின் மிதிப்பு அரையணா; ஆறு அல்லது எட்டுக் கௌதாரிகளின் விலை ஒன்றரை அணா; ஒரு பணம் (எட்டணா மதிப்பு) கொடுத்து மூன்று திராiக்ஷக் குலைகள் வாங்கலாம்; பன்னிரண்டு ஆடுகளை ஐந்து ரூபாய்க்குப் பெறலாம். விஜயநகரத்திற்கு வெளியே மேலும் குறைந்த விலைக்கே கிடைத்தன. எனவே, மக்கள் மிகக் குறைந்த பணச் செலவில் சுகமாக வாழ்ந்து வந்தனர் என்பது தெளிவாகிறது அல்லவா?

பெருமக்கள் வாழ்க்கை

அரசர், பெருமக்கள் தேவதாசிகள், உத்தியோகஸ்தர்கள் என்பர் உல்லாச வாழ்வு வாழ்ந்தனர். அரசர் ஆண்டுதோறும் அரைக்கோடி வராஹன் சேர்த்து வைப்பது வழக்கம். ஆயின், மாகாணத் தலைவர்கள், அமைச்சர்கள், சேனைத் தலைவர்கள், பிற அலுவலாளர் என்பவர் சேர்த்து வைப்பதில்லை. அரசர் தேவைப்படும்பொழுதோ - தம்மீது சினங்கொள்ளும் பொழுதோ தம் பொருளைக் கைப்பற்றிக் கொள்வார் என்ற அச்சத்தினால் அவர்கள் ஈட்டிய பொருளை நன்றாகச் செலவிட்டுச் சுக வாழ்வு வாழ்ந்து வந்தனர்.

இல்லங்கள்

நகரத்தில் அரசர் அரண்மனை நடுநாயகம் போன்றது. அதனுள் பல மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் மலர்ச் சோலைகளும் செய்குளங்களும் விளையாடும் வெளிகளும் இருந்தன. மாகாணத் தலைவர், அமைச்சர் முதலிய பெருமக்கள் விடுதிகளும் இவ்வாறே அமைந்திருந்தன. தலைநகரத்தில் அரண்மனை அடுத்திருந்த தெருக்களில் பெருமக்கள் வாழ்ந்திருந்தனர். அவர்தம் இல்லங்கள் நன்முறையில் - திடமாக - கண்கவர் வேலைப்பாட்டுடன் கட்டப்பட்டிருந்தன. விரூபாக்ஷர் கோவிலுக்கு எதிரில் அமைந்திருந்த அகன்று நீண்ட தெரு, அழகிய மாடங்களைக் கொண்ட இல்லங்களைப் பெற்றிருந்தது.

உடை

பெருமக்கள் இக்கால ஆந்திரர் கட்டுவது போலப் பல மடிப்புகளுடன் கூடிய வேஷ்டியை அரையிற் கட்டிவந்தனர்; உடம்பில் நீண்டு தொங்கிய சட்டையை அணிந்தனர்; தலையில் பாகை அல்லது ஒரு வகைத் தொப்பியை அணிந்தனர்; காலுக்குச் செருப்பணிந்தனர்; தோள்மீது மடிப்புள்ள மேலாடைகளைப் போட்டிருந்தனர்; பெருமக்கள் வீட்டுப் பெண்மணிகள் பத்துமுழ நீளமுள்ள மெல்லிய வெள்ளைப் பருத்திப் புடைவைகளையும் பட்டுப் புடைவைகளையும் உடுத்தினர்; பட்டுடன் ஜரிகைவேலை செய்யப்பட்ட தோற் செருப்புகளை அணிந்தனர்; கூந்தலை நன்றாகச் சீவித் தலைமீது முடிந்தனர்.

உணவு

அரசர் கொக்கு, புறா, கோழி, ஆட்டிறைச்சி முதலியவற்றை உண்டனர்; பிராமணர், வீரசைவர், சமணர் நீங்கப் பிறர் அனைவரும் இறைச்சி உணவை உட்கொண்டனர். அரண் மனையில் பருவத்திற்குப் பருவம் உணவு வகைகள் வேறுபட்டன. நகரப் பெருமக்களும் பிறரும் தாம்பூலம் தரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இப்பழக்கத்தை அறியாத அயல் நாட்டு யாத்திரிகர் வியப்புடன் ‘தாம்பூலம் தரித்தல்’ என்னும் ஒன்றைப்பற்றி விளக்கமாக வரைந்துள்ளமை நமக்கு நகைப்பைத் தரும் அல்லவா?

குடையும் விளக்கும்

கற்கள் பதிக்கப்பெற்ற கைப்பிடி கொண்ட பட்டுக் குடைகளைப் பிரபுக்கள் வைத்திருந்தனர். இரவில் அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு நான்கு முதல் பன்னிரண்டுவரை விளக்குகள் வைத்திருக்கலாம். அரசர்க்கு நூறு முதல் நூற்றைம்பதுவரை வைத்திருக்க உரிமை இருந்தது.

பொதுமக்கள்

வணிகர், நிலக்கிழவர் முதலிய நடுத்தர வகுப்பினர் நன்னிலையில் வாழ்ந்தனர். அவர்களைப் பற்றி மிகுதியாக அறியத்தக்க சான்றுகள் இல்லை. பொதுமக்கள் - கிராம மக்கள் அரசாங்க அலுவலர் தொல்லைகளால் துன்பப்பட்டனர்; அரசர் அனுமதியின்றி மாகாண வரி உத்தியோகஸ்தர்கள் குடிகட்கு அதிக வரியை விதித்து, அவர்களைத் துன்புறுத்தி வசூலித்தனர். அதிகாரிகளுடைய கொடுமைகட்கு அஞ்சிக் குடிகள் வேறு ஊர்கட்கும் நாடுகட்கும் குடிபோயினர் என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. ஆனால் இக்கொடுமைகள் அரசர்க்கு அறிவிக்கப் பட்டவுடன் அவை நீக்கப்பட்டனர்; அதிகாரிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். ஆகவே, அரசர் செங்கோல் அரசர்; அதிகாரிகளுட் பலர் கொள்ளையடிக்கும் மனப்பான்மை கொண்டவர் என்று கூறல் பொருத்தமாகும்.

சிறந்த ஆட்சி

முஸ்லிம்கள் படையெடுப்புகளால் அல்லலுற்ற இந்துக்களையும் அவர்தம் சமயமாகிய இந்துமதத்தையும் காக்க உண்டான விஜயநகர அரசு தன் கடமையைச் செவ்வனே செய்துவந்தது. அது கிருஷ்ணதேவராயர் காலத்தில் பெருஞ் சிறப்புற்றுத் திகழ்ந்தது. விஜயநகரப் பேரரசர்கள் தங்கள் பெருநாட்டை மிக்க திறமையுடன் அரசாண்டனர்; நாட்டு வருவாயின் பெரும் பகுதியைத் தங்கள் இரண்டு நோக்கங்களான (1) சமய வளர்ச்சிக்கும் (2) பெருநாட்டுப் பாதுகாப்புக்கும் செலவழித்தனர். இந்த இரண்டு முயற்சிகட்கும் பெருநாட்டு மக்கள் தங்கள் உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றையும் மனமுவந்து உதவினர். சுருங்கக்கூறின், விஜய நகரப் பேரரசு இரண்டு நூற்றாண்டுகள் (கி.பி. 1336-1565) வரை தென் இந்தியப் பேரரசாக இருந்து தென் இந்தியாவைக் காத்து வந்தது.

பொதுவாகக் கிருஷ்ணதேவராயர் ஆட்சியில் பெருநாடு பூலோக சுவர்க்கமாக விளங்கியது என்னலாம்; பயிர்த்தொழில் - கைத்தொழில் - உள்நாட்டு வாணிகம் - வெளிநாட்டு வாணிகம் - படைவலிமை - கலை வளர்ச்சி - ஆட்சிமுறை முதலிய அனைத்தும் மிகவுயர்ந்த நிலையில் இருந்தன என்று உறுதியாகக் கூறலாம்.

தென்னாட்டுப் பழைய பழக்க வழக்கங்களையும் நாகரிகத்தையும் காப்பதே தமது தொழில் என்று பேரரசர் கூறிவந்தனர். அக்கூற்றுக்கு ஏற்ப அவர்கள் பழைய நாட்டுப் பிரிவுகளை மாற்றவில்லை; நாணயச் செலாவணியை நிறுத்த வில்லை; தமிழ் - தெலுங்கு - கன்னட மக்களுடைய மொழிகளையோ, கலைகளையோ மாற்றவில்லை; இவற்றுக்கு மாறாகப் பழைய பழக்க வழக்கங்களை நிலைபெறவிட்டனர்; சமயத் துறையில் பெருந்தொண்டு செய்தனர்; தக்கவாறு நியாயம் வழங்கினர்; பலவகைக் கலைகளைப் பரப்பினர்; பெருமக்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டனர்.

பேரரசர் இலக்கிய வளர்ச்சியில் மிக்க ஆர்வம் காட்டினர்; வடமொழி - கன்னட - தெலுங்கு - தமிழ்ப் புலவர்களை ஆதரித்தனர்; பல நூல்களை இயற்றச் செய்தனர்; அவரவர் ஆற்றலுக்குத் தக்க பரிசுகள் அளித்தனர். இங்ஙனம் பேரரசர்களும், சிறப்பாகக் கிருஷ்ணதேவராயரும் கலை வல்லாரை ஆதரித்தமையால் விஜய நகர ஆட்சிக் காலத்தில் தென் இந்தியாவில் இசை - ஓவியம் - சிற்பம் - நடனம் - நாடகம் - மருத்துவம் முதலிய கலைகள் செழித்து வளர்ந்தன. பேரரசரைப் பின்பற்றியே சிற்றரசரும் தத்தம் அளவிற்கு ஏற்றவாறு இக்கiலைகளை வளர்த்துப் புகழ்பெற்றனர்.

அரசாங்கம் செல்வ வளம் மிக்கது; வாழ்க்கைப் பொருள்களைப் பெற்றது. அது பெருநாட்டுப் பல வருவாய்களைக் கொண்டிருந்ததால் சிறந்த பண்டாரத்தைப் பெற்றிருந்தது. “அரண்மனையில் இருந்த பண்டார அறைக்குள் நில அறைகள் இருக்கின்றன. அவை பொன் கட்டிகள் நிரம்பினவையாகக் காண்கின்றன” என்று அப்துர் ரஸாக் என்ற பாரசீக அரசியல் தூதர் குறித்துள்ளதைக் காண்க.

அடிக்குறிப்புகள்

1.  verses 245 & 258

2.  Within three or four decades of its foundation the King of Vijayanagara became the sole and unchallenged masters of a vast portion of the south, from Goa in the west to the mouth of the Krishna and a little beyond, it in the east. This extensive empire had to be organised in such an efficient way as to make it proof against collapse in times of danger. In this the emperors were eminently successful. While they carried on the struggles with the enemies of Hinduism in the north the provinces supplied them with a perennial source of revenues to continue their wars. Several times in its early days the emperors failed but in the reign of the Maharajadiraja Krishnadeva Raya and even later on till its fall in A.D.1565. Vijayanagara played the part of an arbiter of South Indian Politics. Never was such a conspicuous and important position occupied by any South Indian dynasty. -Rev. H.Heras and V.K.Bhandarkar, Vijayanagara Sexcentenary commemoration Volume, P.93