போதும் முதலாளித்துவம்
கா. அப்பாத்துரையார் 

மூலநூற்குறிப்பு

  நுற்பெயர் : போதும் முதலாளித்துவம் (அப்பாத்துரையம் - 44)

  ஆசிரியர் : கா.அப்பாதுரையார்

  தொகுப்பாசிரியர் : முனைவர் கல்பனா சேக்கிழார்

  பதிப்பாளர் : கோ. இளவழகன்

  முதல்பதிப்பு : 2017

  பக்கம் : 16+328 = 344

  விலை : 430/-

  பதிப்பு : தமிழ்மண் பதிப்பகம், எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை 600 017, தொ.பே.: 24339030, செல்: 9444410654

  மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in

  தாள் : 16.0 கி. மேப்லித்தோ, அளவு : 1/8 தெம்மி

  எழுத்து : 11.5 புள்ளி, பக்கம் : 312

  கட்டமைப்பு : இயல்பு படிகள் : 500

  நூலாக்கம் : கோ. சித்திரா

  அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)

  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.

நுழைவுரை

தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர்.

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம்.

தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும்.

தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம்.

தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.

அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன.

இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும்.

தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள்

கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை

யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர்

திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன்,

திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர்.

இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய ‘கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும்’சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி.

நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

“ஆக்கத்தை எனக்கிந் நாட்டார்
அளித்திட்ட அறிவை யெல்லாம்
தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே
செலவிடக் கடமைப் பட்டேன்.”

-   பாவேந்தர்

கோ. இளவழகன்

தொகுப்புரை

மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்!
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின.

“அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார்.

சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன.

-   தனித்தமிழ் இயக்கத் தோற்றம்

-   நீதிக் கட்சி தொடக்கம்

-   நாட்டு விடுதலை உணர்ச்சி

-   தமிழின உரிமை எழுச்சி

-   பகுத்தறிவு விழிப்புணர்ச்சி

-   இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர்

-   புதிய கல்வி முறைப் பயிற்சி

-   புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம்

இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன.

“தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது!

அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்!

பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக,

-   உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல்.

-   தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல்.

-   தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல்.

-   தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல்.

-   திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல்.

-   நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல்.

இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது.

பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது.

உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன.

1.  தமிழ் - தமிழர் - தமிழ்நாடு

2.  வரலாறு

3.  ஆய்வுகள்

4.  மொழிபெயர்ப்பு

5.  இளையோர் கதைகள்

6.  பொது நிலை

பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும்.

இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின்

உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன.

** -கல்பனா சேக்கிழார்**

நூலாசிரியர் விவரம்

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்
  இயற்பெயர் : நல்ல சிவம்

  பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989

  பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி

  பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி)

  உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர்

  மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு

  வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா

  தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி

  பள்ளிக் கல்வி : நாகர்கோவில்

  கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம், இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி ‘விசாரத்’, எல்.டி.

  கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி)

  நூல்கள் : 120 (ஆங்கிலம், 5)

  இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை.

  பணி :

-   1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர்.

-   1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர்.

-   பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு.

-   1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி

-   1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர்.

-   1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர்

அறிஞர் தொடர்பு:

-   தொடக்கத்தில் காந்திய சிந்தனை.

-   1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு

விருதுகள்:

-   மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது,

-   1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் ’சான்றோர் பட்டம்’, ‘தமிழன்பர்’ பட்டம்.

-   1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ’கலைமாமணி’.

-   1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய ’திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம்.

-   மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய ’பேரவைச் செம்மல்’ விருது.

-   1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.

-   1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார்.

-   இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது.

பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்:

-   அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005.

-   பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007.

பதிப்பாளர் விவரம்

கோ. இளவழகன்
  பிறந்த நாள் : 3.7.1948

  பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625,தஞ்சாவூர் மாவட்டம்.

  கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு

  இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல்

ஆற்றியுள்ள பொதுப்பணிகள்

1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர்.

பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் ’ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர்.

உரத்தநாட்டில் ’தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர்.

பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ’உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர்.

தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும்,

19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர்.

பொதுநிலை

தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர்.

தொகுப்பாசிரியர் விவரம்

முனைவர் கல்பனா சேக்கிழார்
  பிறந்த நாள் : 5.6.1972

  பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம்.

  கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர்

  இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

ஆற்றியுள்ள கல்விப்பணிகள்

-   அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி.

-   திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு.

-   புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.

-   பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.

-   பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார்.

-   50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

-   மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.

-   இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார்.

-   செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார்.

நூலாக்கத்திற்கு உதவியோர்

தொகுப்பாசிரியர்:

-   முனைவர் கல்பனா சேக்கிழார்

கணினி செய்தோர்:

-   திருமதி கோ. சித்திரா

-   திரு ஆனந்தன்

-   திருமதி செல்வி

-   திருமதி வ. மலர்

-   திருமதி சு. கீதா

-   திருமிகு ஜா. செயசீலி

நூல் வடிவமைப்பு:

-   திருமதி கோ. சித்திரா

மேலட்டை வடிவமைப்பு:

-   செல்வன் பா. அரி (ஹரிஷ்)

திருத்தத்திற்கு உதவியோர்:

-   பெரும்புலவர் பனசை அருணா,

-   திரு. க. கருப்பையா,

-   புலவர் மு. இராசவேலு

-   திரு. நாக. சொக்கலிங்கம்

-   செல்வி பு. கலைச்செல்வி

-   முனைவர் அரு. அபிராமி

-   முனைவர் அ. கோகிலா

-   முனைவர் மா. வசந்தகுமாரி

-   முனைவர் ஜா. கிரிசா

-   திருமதி சுபா இராணி

-   திரு. இளங்கோவன்

நூலாக்கத்திற்கு உதவியோர்:

-   திரு இரா. பரமேசுவரன்,

-   திரு தனசேகரன்,

-   திரு கு. மருது

-   திரு வி. மதிமாறன்

அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு:

-   வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14.

போதும் முதலாளித்துவம்

முதற் பதிப்பு 1946-47

பொதுவுடைமை

முதலாளித்துவத்திற்குச் சீட்டுக் கொடுக்க மக்கள் விரும்புகின்றனர். சீட்டுக் கொடுக்கப்போவதும் உறுதி, ஆங்கில ஆட்சிக்குச் சீட்டுக் கொடுத்தது போல். அத்துடன் நம் கடமை தீர்ந்துவிட்டதா? இல்லை. அடுத்து எப்படிப்பட்ட ஆட்சி வேண்டும்? மக்கள் வாழ்வு எப்படி அமைக்கப் பெறவேண்டும்? இக்கேள்விகள் எழுகின்றன. இவற்றிற்கு விளக்கமான விடைகளை விரைவில் வெளிவரும் பொதுவுடைமை என்ற நூலில் காணலாம்.

மொழி பெயர்ப்பு
பேராசிரியர் கா. அப்பாத்துரை ஆ.ஹ.

முதலாளித்துவ நாகரிகம் பற்றிய ஆராய்ச்சி

இன்று நம்மைச் சுற்றிலும் ஒரே குழப்ப நிலைமை காணப்படுகிறது. நடுக்கம் தரும் இடுக்கண்களே எங்கும் நிறைந்துள்ளன.

ஒருபுறம் தொழிலில்லாத் திண்டாட்டம் பரவுகிறது. கோடிக்கணக்கான உழைப்பாளிகள் எல்லையற்ற வறுமைக் கடலுளாழ்ந்து தவிக்கின்றார்கள். என்றென்றைக்கும் அவர்கள் கட்டை வெட்டிகளாகவும், ஏற்றமிறைப்பவர்களாகவும் மட்டுமிருக்க வேண்டுமென்ற தலையெழுத்துக்கு ஆளாகி யுள்ளார்கள். ஓய்வின் ஆறுதலோ, ஊதியத்தின் ஆர்வமோ அவர்களை எட்டிப் பார்ப்பதற்கில்லை.

ஆனால், அவர்களுக்கெதிராக மறுபுறமோ பணப்பைகள் மீது புரளும் ஒருசில சோம்பர்களடங்கிய சிறுகூட்டம்! அவர்களுக்குப் போதிய அளவைவிட எவ்வளவோ மிகுதியாக, செரிக்கக்கூடிய அளவுக்கும் எவ்வளவோ கூடுதலாக, பொருளும் மற்ற வாழ்க்கை வசதிகளும் குவிந்து கிடக்கின்றன. அவர்கள் செல்வம் உலகிற்கு மட்டுமின்றி அவர்களுக்கே ஒரு சாபக்கேடாய் கிடக்கின்றது.

இவ்விரு திறத்தினர்களையும் வளர்ச்சியடையச் செய்து கொண்டிருக்கும் இன்றைய நாகரிகம் எங்கே போய் முடியுமோ? என்று பகுத்தறிந்து சிந்திக்கும் எந்த அறிஞரும் கேட்காதிருக்க முடியாது. தற்கால சமூக அமைப்பு முறையில் இத்தீங்குகளை மென்மேலும் வளர்க்க என்னதான் கோளாறு இருக்க முடியும்? இக்கோளாற்றை அகற்றும் வலியுள்ள மாற்று எதுவும் கிடையாதா?

இவ்வினாக்களுக்குப் பல்வேறு வகையான விடைகள் தரப்படுகின்றன. ஒரு சிலர் இன்றைய முறையில் இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சீர்திருத்தங்கள் செய்வதனால் இத்தீமைகளை ஒழிக்க முடியும் என்று கருதுகிறார்கள். ஆனால், வேறு பலர் கங்கு கரையற்ற தற்கால சமூகத்தின் இன்னல்களைக் கண்டு மனம் நொந்துள்ளனர்.

இம்முறையில் ஏற்பட்டுள்ள தீமைகள் பேரளவானவை. அவற்றை இம்முறை ஒரு சிறிதும் அகற்றும் ஆற்றலுடையதாக இல்லை. உண்மையில் இவ்வகையில் அது செயலற்றதாகவே இயங்குகிறது. ஏனெனில், இவை அவற்றின் உள்ளார்ந்த குறைபாடுகளின் விளைவே. எனவே இம்முறையை அதன் வேரோடும் கிளை இலை பூவோடும் ஒழித்து சமூகத்தையே மாற்றியமைத்தாலொழிய இத்தீமைகள் அகலமாட்டா என்று அவர்கள் கருதுகின்றனர்.

பின் கூறப்பட்ட இக்கூட்டத்தினருள் மிக உரத்துத் தம் கண்டனத்தைத் தெரிவிக்கும் தீவிரக் குழுவினரே சமதர்மிகள் (Socialists). அவர்கள் ஆற்றல் வளர்ந்து கொண்டே வருகிறது. வரவர மிகுதியான மக்கள் அவர்கள் வாதத்தால் மனம் மாறி அவர்களுடன் சேர்ந்து வருகின்றனர். இந்தச் சமதர்மிகளின் வாதங்களையே இச்சிறு நூலில் பெரும்பாலும் பின்பற்றிச் செல்லுகிறோம்.

நம் ஆராய்ச்சியின் முதலாவது படி இன்றைய சமூக அமைப்பு முறையின் தனிப் பண்புகளையும், கூறுபாடுகளையும் அறிய முயல்வதேயாகும்.

முதலாளித்துவம் என்பது யாது?

நம் தற்போதைய சமூக அமைப்பு முறை முதலாளித்துவம் என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. ‘முதல்’ ‘முதலாளித்துவம்’ என்ற சொற்களை நாம் அடிக்கடி சொல்லுகிறோம், சொல்லக் கேட்கிறோம். ஆகவே அச்சொற்களின் பொருளைத் தெளிவாகவும் திண்ணமாகவும் அறிய முயல்வோம்.

முதல் என்ற சொல்லின் பொருள் பொதுவாக நன்கு உணரப்படுவதொன்றேயாகும். நம் நண்பர் ஒருவர் ரூ.1000 முதலிட்டு ஒரு சிறிய கடை திறக்கிறாரென்று வைத்துக் கொள்ளுவோம். அந்த ரூபாய் ஆயிரத்தை நாம் ‘முதல்’ என்கிறோம். பொருளியல் நூலார் வருவாய் தருவதற்குரிய எல்லா வகை செல்வப் பகுதியையும் முதல் என்றே குறிக்கின்றனர். இயந்திரங்கள் தொழிற்சாலைகள் முதலிய யாவையும் முதலாளிக்கு ஊதியம் தர உதவுபவையேயாதலால் அவைகளனைத்தும் முதலுள் அடங்கும்.

ஆனால், முதலாளித்துவம் என்ற சொல் முதலினை, அதாவது உற்பத்தியின் கருவிகளைக் குறிக்க வழங்குவதன்று. உண்மையில் நேர்மாறாக அது சமூகத்தை இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கும் ஒரு திட்ட அமைப்பேயாகும். ஒரு பிரிவு உற்பத்திக் கருவிகளை உடையது. அது - முதலாளி வகுப்பு எனப்படுகிறது. மற்றொரு பிரிவு உற்பத்திக் கருவிகளெதனையும் உடையதாயிராமல் உழைப்புத் தொழில் செய்பவர்களை மட்டுமே கொண்டது. இது உழைப்பாளர் வகுப்பு (Proletarian Class) எனப்படுகிறது. செல்வ உற்பத்திக்கு முதலும் உழைப்பும் பெரிதும் இன்றியமையாதவை. உற்பத்திக்குத் துணைக் கருவிகள் ஒரு புறமும் உற்பத்தி வகையில் அவற்றை ஈடுபடுத்தும் ஆட்கள் ஒருபுறமும் இருந்து தீர வேண்டும். ஆகவே, முதலாளித்துவ முறையின்கீழ் முதலாளியும் தொழிலாளியும் ஒத்துழைத்து உற்பத்தியை உண்டுபண்ணுவது இன்றியமையாததாகும்.

“கொள்கையளவில் தொழிலாளியும் தொழிலாற்றலை யுடை சுதந்திர மனிதனே; முதலாளியும் உற்பத்திச் சாதனங்களின் தொகுதியைப் பெற்றிருக்கும் சுதந்திர மனிதனே. இவ்விரு சாராரும் ஒருவருக்கொருவர் எதிரான இரண்டு பொருளியல் வகுப்பினர். இவ்விரு வகுப்புகளில் ஏதேனும் ஒரு வகுப்பு மற்ற வகுப்பின் ஊதியத்தைப் பயன்படுத்தினாலன்றி உற்பத்தி நிகழாது.”¹ ஆனால் நடைமுறையில் நிகழ்வது என்னவென்றால் முதலாளியே தொழிலாளரின் உழைப்பைப் பயன்படுத்திக் கொள்கிறான். ஆகவே முதலாளிகள் வேலையளிப்போரென்றும் தொழிலாளிகள் வேலை செய்வோர் என்றும் கூறப்படுகின்றனர். தொழிலாளிகள் முதலாளிகளை வேலையிலமர்த்துவது முடியாததென்பது தெளிவு. ஏனெனில் தொழிலாளிகள் ஏழைகளாகவும் பெரும்பாலும் கல்வியறிவற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

பேரளவில் ஒத்துழைத்துச் சங்கங்களமைத்தாலல்லாமல் தொழிலாளிகள் உற்பத்தியமைப்பை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் உடையவர்களாகமாட்டார்கள். அவ்வாறு ஒத்துழைத்துச் சங்கங்களமைப்பதும் எளிய காரியமன்று. ஆகவே, முதலாளி களைத் தொழிலாளிகளமர்த்துவதென்பது நடைமுறையில் எங்குமில்லாத ஒரு செய்தியாகும்.

நம் சமூக அமைப்பின் தற்போதைய முறை ‘முதலாளித்துவம்’ எனப்படும். ஆயினும் ‘பெர்னாட்ஷா’ கூறுகிறபடி இதனை முதலாளித்துவம் என்று குறிப்பதை விட ‘தொழிலாளித்துவம்’ என்று கூறினால் பொருத்தமாகவே இருக்கும் என்று சொல்லலாம். அவர் கூறுவதாவது: “முதலாளித்துவம் என்ற பெயர் தவறான எண்ணம் தருவதாக இருக்கிறது. நம் அமைப் பிற்கு சரியான பெயர் தொழிலாளித்துவம் என்பதாகும்!!”²

பெர்னாட்ஷா கூறுவது பொருத்தமானதே. ஏனென்றால் சமதர்மத்தைக் குறைகூற முதலாளித்துவம் என்ற பெயரைப் பலர் தவறான முறையில் பயன்படுத்துகிறார்கள். சமதர்மம் என்பது முதலாளித்துவத்துக்கு நேர் எதிரான சொல்லாகக் கொள்ளப்பட்டு விடுகிறது. “சமதர்மம் என்பது முதலாளித் துவத்தை அக்கு வேறு ஆணிவேறாகச் சின்னா பின்னப்படுத்த விரும்புகிறது என்று நாம் கூறும்போது, சமதர்மிகள் முதலீட்டையே அழிக்க முனைகின்றனர் என்றும், அதில்லாமலே காரியம் சாதிக்கலாம் என அவர்கள் நம்புகிறார்கள்”³ என்றும் மக்கள் எண்ணி விடுகின்றார்கள். இது முற்றிலும் பொருத்தமற்ற கூற்றாகும். முதலீடில்லாமல் நாம் ஒன்றும் செய்ய முடியாது. உற்பத்தியின் கருவிகளுள் முதலீட்டை அகற்றிவிட்டால் நமக்கு மீந்திருப்பவை தொழில், அமைப்பாண்மை (Organisation) அற்ற இயற்கை வளம் ஆகிய இரண்டு மட்டுமே. இவற்றை மட்டும் கொண்டு மனிதன் நெடுந்தொலை முன்னேறிச் செல்ல முடியாது.

மனித நாகரிகத்தின் தொடக்க காலத்திலிருந்து முதலீட்டின் தேவை மிகுதியாகிறது. பழங்காலச் செம்டவனுக்குக்கூடத் தனக்கு ஒரு வலையும் வலைக்கோலும் இருந்தால் அவற்றின் துணையுடன்தான் பிடிக்கும் மீனின் அளவை எவ்வளவோ பெருக்கிக் கொள்ளலாம் என்பது தெரிந்திருந்தது. மனித சமூகம் நாகரிகப் படியில் முன்னேறிச் செல்லுந்தோறும் முதலீட்டின் பயனும் பெருகிக் கொண்டே போகிறது. வரவர அதிகமாக மக்கள் அதனை நம்பியாக வேண்டியிருக்கிறது. ஆகவே, சமதர்மிகள் அழிக்க விரும்புவது முதலினையல்ல - முதலாளித்துவத்தையேயாகும் - ஏனெனில், முதலாளித்துவம் என்பது தொழிலாளித்துவத்துக்கும் வறுமைக்கும் இடப் பட்ட மறுபெயரேயாகும்.

முதலாளிகளும் அவர்கள் ஆதரவாளர்களும் பொதுமக்கள் அனுதாபத்தைத் தம் பக்கம் ஆக்கிக்கொள்ளப் பெரிதும் உதவுவது இச்சொற்பொருட் குழப்பமே. சமதர்ம வாதிகள் முதலையே அழித்துவிட விரும்புகிறார்கள் என்றும், எல்லா மக்களையும் தொழிலாளிகளாக்கிவிடப் பார்க்கிறார் களென்றும் அவர்கள் கூறுகிறார்கள். மக்கள் பலரும் தொழிலாளி களாயிருக்க விரும்பாதவர்களாதலால் அவர்கள் முதலாளித்துவத்தை ஆதரிக்க முற்பட்டுவிடுகிறார்கள். ஆனால், உண்மையில் சமதர்மம் அழிக்க விரும்புவது தொழிலாளித் துவத்தையேதான். அதுமட்டுமன்று. சமதர்மம் முதலை மிகப் பெரிய அளவில் சேர்க்கவும் முனைகிறது.

தற்கால சமூக அமைப்பு முறையாகிய தொழிலாளித்துவ முறையைத் தவிடு பொடியாகத் தகர்த்துவிட வேண்டுமென்றும், அதன் அழிபாட்டின் மீது தொழிலாளிகளுமில்லாமல் முதலாளிகளுமில்லாமல் எல்லோரும் சமமாயிருக்கும் வகுப்புப் பாகுபாடற்ற ஒரு சமூகத்தை உண்டு பண்ண வேண்டுமென்றும் அது எண்ணுகிறது.

முதலாளித்துவத்தின் வளர்ச்சி

முதலாளித்துவம் என்பது மேற்கூறியவாறு தொழிலாற்ற லுடையவரிடமிருந்து முதலுடையவர்களைப் பிரித்து வைக்கும் முறை ஆகும். வரலாற்றின் இடைக்காலத்தில்4 இந்நிலைமை ஏற்படவில்லை. 1750 முதல் 1850 வரை கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டளவு வளர்ச்சியடைந்து வந்த தொழிற் புரட்சிக்குப் பிற்பாடுதான் அது சமூக அமைப்பில் குறிப்பிடத் தக்க ஒரு பண்பாயிற்று. இங்ஙனம் தொழிற்புரட்சிக் காலம் ஒரு வகையில் மாறுபாட்டுக் காலமாய் அமைந்தது. அக்காலத் திலேயே சமூகத்தின் மூலாதாரமான அடிப்படை மாறுதலடைந்தது.

தொழிற்புரட்சிக்கு முன்னால் குடியானவர்களே - சுதந்திர உழவர்களே - நிலத்தின் சொந்தக்காரர்களாக இருந்தார்கள். பிற்காலத்தில் இவ்விரு சாராரும் இரண்டு வகையாகத் தங்கள் உற்பத்திச் சாதனங்களை இழந்தார்கள். முதல் வகை மிக முரட்டு முறை: ஏனெனில் அம்முறையில் உற்பத்திச் சாதனங்கள் அதன் சொந்தக்காரர்களிடமிருந்து வெளிப்படையாகவே பறிக்கப் பட்டன. இது உண்மையில் பழைய பிற்போக்கான காலத்திய முறையேயாகும். இங்கிலாந்தில் ஏற்பட்ட மனை வேலை இயக்கம் (Enclosure Movement) இதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு. பழைய நில ஆதிக்க ஆட்சிமுறை (Feudalism) சிதையத் தொடங்கியபோது ஆங்கிலக் குடியானவர்களுக்குத் தனிமையாகவோ பொது உரிமையாகவோ இருந்து வந்த நிலம், பயிர்த் தொழிலை ஒரு வேட்டையாகக் கொண்ட புதிய நில ஆதிக்க வகுப்பு ஒன்றினால் பறிக்கப்பட்டுவிட்டது.

இதனை அடுத்து ஏற்பட்ட இரண்டாவது வகை கொஞ்சம் நாகரிகம் மிக்க முறை. ஆனால், குடியானவர்களுக்கு ஏற்பட்ட ஆபத்து வகையில், அதுவும் முன்னையதை ஒத்ததே. தொழிற் புரட்சி காரணமாகப் பல அறிவியற் புதுமைகளும் தொழில் நுணுக்க முன்னேற்றங்களும் ஏற்பட்டன. பெரிய தொழிற் சாலைகள் எழுந்து குறைந்த செலவில் ஏராளமான பொருள்களை உற்பத்தி செய்து தள்ளின. இயல்பாகவே சிறு உற்பத்தியாளர்களின் பொருள் உற்பத்திக்கான செலவு தொழிற்சாலையின் உற்பத்திச் செலவைவிட எவ்வளவோ மிகுதியாயிருந்தது. இப்படியே சிறு உற்பத்தியாளர் வகுப்புக்குச் சாவு மணியடிக்கபடலாயிற்று. வர்த்தகக் களத்திலிருந்து தனிப்பட்ட உற்பத்தியாளர்கள் துரத்தியடிக்கப்பட்டுத் தொழிலாளிகளாக மாற்றமடைந்தனர். இங்ஙனமாக சமூகம் முதலாளி தொழிலாளி என்ற இரு வகுப்புகளாகப் பிரிந்தது.

மில், ரிக்கார்டோ போன்ற பழம்பற்றாளர் சார்பான பொருளியலறிஞர் முதலாளித்துவம் கடவுளாலேயே அமைக்கப்பட்டதென்று நம்பினர். அவர்கள் செய்த பொருளியல் ஆராய்ச்சியெல்லாம் அம்முதலாளித்துவத்தில் தற்காலிகமாகக் காணப்பட்ட பண்புகளைப் பற்றியதே. ஆனால் இன்றிக்கும் வடிவில் முதலாளித்துவ முறை மிக்க அண்மைக் காலத்தில் ஏற்பட்டதுதான். நில ஆதிக்க முறை சிதைந்த பின்னரே அது தோன்றியது.

வரலாற்று முறைப்படி பார்த்தால் இதற்கு முன்னிருந்த பழைய முதலாளித்துவம் உண்மையில் முதலாளித்துவ முறையின் குழந்தைப் பருவம் மட்டுமே. 18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை அது வாலிபப் பருவத்தையோ அல்லது முழுக் குழந்தைப் பருவத்தையோகூட அடைந்துவிட்டதாகக் கூற முடியாது என்பதைச் சமதர்மவாதிகள் வற்புறுத்தியுள்ளனர், வற்புறுத்து கின்றனர். அதன்பின் இது இவ்வளவு மிகக் குறைந்த காலத்திற்குள் வளர்ச்சி பெற்றுவிட்டது. இவ்வளர்ச்சிக்கான காரணங்கள்: புதிய வகை இயந்திரங்கள் மிக வேகமாகக் கண்டுபிடிக்கப்பட்டன; அதேசமயம் அவ்வியந்திரங்களை ஓட்டுவதற்குப் புதிய நீராவி அற்றல் கண்டுபிடிக்கப்பட்டது; இவற்றுடன் பொதுவாக, உற்பத்தி முறைகள் முன்னேற்ற மடைந்தன. இவற்றைச் சமதர்மிகள் வற்புறுத்திக் காட்டுகிறார்கள். இவற்றின் பயனாகச் சிறு அளவான பழைய உற்பத்தி மிகப் பெரிய அளவான புதிய உற்பத்தியாக மாறிற்று.

எடுத்துக்காட்டாக, பழைய சுதந்திர நெசவாளி சொந்தக் கைத்தறியை வைத்துக்கொண்டு புதிய தொழிற்சாலையாகிய கருவியுடன் போட்டியிட முடியவில்லை. இங்ஙனம் போட்டிக்கு நிற்காத கருவியாகிய தறியை உடைய அவர்கள் கையிலிருந்த கருவியுரிமை நழுவிப்போவது இயல்பே. இதற்குமுன் தமக்குத் தாமே மேலாளாகவும், தம் கருவிகளுக்குத் தாமே உரியவர்களாகவும் இருந்து தாம் உற்பத்தி செய்யும் பொருளைத் தாமே விற்பனை செய்யும் வணிகர்களாகவுமிருந்து வாழ்ந்து வந்த இவர்கள், முதலாளிகள் என்ற ஒரு புத்தம் புதிய வகுப்பின் ஆதிக்கத்துக்கு உட்படவும், தமக்குச் சொந்தமில்லாமல் அவர்களுக்கே சொந்தமான கருவிகளைக் கொண்டு வேலை செய்யவும், தாம் உற்பத்தி செய்த பொருளைத் தாமே விற்பதற்கு மாறாகத் தம் வேலையின் கூலியை மட்டுமே பெற்று வாழவும் நேர்ந்தது!⁷

முதலாளித்துவம் முதன் முதலாக இங்கிலாந்தில் நிலையமைக்கப்பட்டு அங்கிருந்து உலகின் பிற பகுதிகளுக்குப் பரந்தது. எங்கும் அது பழைய முறை வாழ்க்கையை வென்றடக்கித் தன் முன் தோற்றோடியவர்களை மீளா அழிவுக்கு அனுப்பியது.

சில ஆசிரியர்கள் முதலாளித்துவத்தின் தோற்றத்திற்குக் காலவரையறை தர முயன்றுள்ளார்கள். இங்கிலாந்தின் காசகம் (Bank of England) நிறுவப்பட்ட காலமாகிய 1694-ஆம் ஆண்டே அதன் பிறந்த நாளாக அவர்களால் கூறப்படுகிறது. வேறு சில ஆசிரியர்கள் இதுபோலவே 16-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த சமயப் போர்களிலிருந்து அதன் வளர்ச்சியைத் தொடங்கு கின்றனர். ஆனால், ஒரு சமூக முறை ஏற்படுவதற்குத் திண்ணமான கால வரையறை கூற முடியாது. அது ஒரு குழந்தை பிறப்பதுபோல் ஒரு நாளில் பிறந்து விடுவதன்று. மெள்ள வளர்ச்சி பெற்று உருவாவது. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகக் கூறமுடியும். தொழிற்புரட்சியின் பயனாகவே அது ஏற்பட்டது.

முதலாளித்துவ சமூக அமைப்பில் மக்கள் தொகைக் கூறுபாடு

மேலே குறிப்பிட்டபடி முதலாளித்துவ சமூகத்தில் இரண்டு தலைமையான வகுப்புகள் உண்டு. அவை முதலாளி வகுப்பும் தொழிலாளி வகுப்புமாகும். இந்த இரண்டு வகுப்பையும் கார்ல் மார்க்ஸ் தம் பொது உடைமை விளம்பர அறிவிப்பில் (Communist Manifesto) இன்ப வாழ்வினர் (பூர்ஷ்வா - Bourgeoisie) என்றும் உழைப்பாளிகள் (புரோலட்டேரியட் - Proletariat) என்றும் பெயரிட்டுக் குறிப்பிட்டார். சிற்சில இடங்களில் இவ்விரண்டு வகுப்புகளைத் தவிர வேறு வகுப்புகளும் இருக்கலாம். ஆனால் அவை கேடின்றி புறக்கணிக்கத்தக்க அளவுடையவையே.

இன்ப வாழ்வினர் பெரும்பாலும் ஆதாயம், வட்டி, வாடகை ஆகியவற்றின் மூலம் வாழ்க்கை நடத்தும் வகுப்பினர். வேறு வகையில் சொல்வதானால் இவ்வகுப்பு உற்பத்திக் கருவிகளின் சொந்தக்காரரடங்கிய வகுப்பு ஆகும். ஆனால், உழைப்பாளிகளோ எவ்வகையான உற்பத்திச் சாதனங்களு மில்லாதவர்களாய் உழைப்பாற்றல் மட்டும் உடையவர்கள். இவ்வுழைப்பாற்றலை அவர்கள் இன்ப வாழ்வினருக்கு விற்று வாழ்கிறார்கள்.

இவ்விரண்டு வகுப்பேயன்றி மூன்றாவதாகவும் துணை இன்ப வகுப்பு (Lesser Bourgeoisie) என்றொரு வகுப்பு உண்டு. அது சிறு கைவினைத் தொழிலாளர், சுதந்திரக் கலைப் பணியாளர், சிறு பண்ணையாளிகள், வர்த்தகர்கள் ஆகியவர்களடங்கியது. மார்க்ஸ் தம் பொது உடைமை விளம்பர அறிவிப்பில் இதைப் பற்றிக் கூறாது விட்டு விட்டார். அது அவர் கொள்கையில் அவருக்குப் பின்னால் உருவான ஒரு பகுதி.

இவ்வகுப்புச் சிறு அளவில் உற்பத்தி செய்யப்படுவதற்கு ஆதரவு தருகிறது. சிறு அளவான உற்பத்தியைச் சாகடித்துப் பேரளவான உற்பத்தியை விரும்பும் முறையான முதலாளித்துவத்தை அதுவும் ஆதரிக்கவில்லை. ஆனால் அது முற்றிலும் உழைப்பாளி மயமாகி விடவும் விரும்பவில்லை. இங்ஙனமாக அது எப்போதும் நிலை மாறிக்கொண்டே இருக்கிறது. “பெருத்த நெருக்கடிக் காலங்களில் அது உழைப்பாளிகளுடன் சேர்ந்து இன்ப வகுப்பினரை எதிர்க்கத் தொடங்குகிறது. இன்ப வகுப்பினர்களை எதிர்க்கும் சக்திகள் முதலாளித்துவ முறையின் அடிப்படையையே தகர்க்கப் போவதாகத் தோன்றியதும், அது கட்சி மாறி, மறுபக்கம் சேர்ந்து கொள்ளுகிறது.”⁸

துணை இன்ப வகுப்பு அழிந்து கொண்டு வரும் ஒரு வகுப்பு என்று மார்க்ஸும், எங்கெல்ஸும் கருதினர்.

இது அவர்கள் காலத்தைப் பற்றிய மட்டில் உண்மையே. ஆனால் பிற்கால நிகழ்ச்சிப் போக்கு வேறு திசை நாடிச் சென்றிருக்கிறது. தற்போது துணை இன்ப வகுப்பு ஒரு புதிய அரசியல், பொருளியல், முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஜெர்மனியிலும் இத்தாலியிலும் பாஸிஸம் என்ற பெயருள் முதலாளித்துவத்தை மீண்டும் தவிசேற்றி யமைக்கும் முயற்சியிலீடுபட்டு உழைத்தது இந்தப் புதிய துணையின்ப வகுப்பேயாகும். ஆனால், பாஸிஸம் என்பது, அழிந்து கொண்டுவரும் முதலாளித்துவத்தின் கடைசி உருவமெனவே கொள்ளப்படுகிறது. அது சமதர்மம் வரும் நாளைச் சற்றுத் தாமதப்படுத்தலாம், அதனைத் தடுத்து ஒழிக்க முடியாது. இரவுக்குப் பின் ஞாயிறு எழுவதும் அவ்வளவு உறுதியென்று கூறலாம்.

முதலாளித்துவத்தின் அடிப்படை

தொழிலாளிகளைச் சுரண்டி வாழ்வது முதலாளித் துவத்தின் உள்ளார்ந்த பண்பு: அதன் அடிப்படையே அது தொழிலாளர்களைச் சுரண்டுவதென்பது இல்லாவிட்டால் அது ஒரே நாளில் வாடி அழிந்துவிடும்.

முதலாளிகள் உற்பத்திச் சாதனங்களை ஏகபோகமாகக் கைக்கொண்டு, உற்பத்தித் தொழிலை நடத்தத் தொழிலாளி களிடம் வேலை வாங்ககின்றனர் என்பது சமதர்மிகள் வாதம். இத்தொழிலாளிகள் தம் முயற்சியாலும் உழைப்பாலும் ஒரு குறிப்பிட்ட அளவு செல்வத்தை உற்பத்தி செய்கின்றனர். ஆனால் உற்பத்தியாளர் செய்வது யாதெனில் உற்பத்தியான இச்செல்வத் தில் மிகச் சிறிய பகுதியை மட்டுமே தொழிலாளிகளுக்குக் கொடுத்து மீதியைத் தமக்கே வைத்துக் கொள்ளுகின்றனர்.

இங்ஙனம் முதலாளிகள் சுரண்டி வாழ்வதன் மூலம் நாளொரு மேனியாகக் கொழுந்து வரவரச் செல்வமிக்கவர்களாக வளர்கின்றனர். இவ்வகையில் முதலாளித்துவம் “சமூகத்தில் பல்வேறு தனி மனிதர்களின் செல்வ நிலையில் மிகுதியான ஏற்றத் தாழ்வு ஏற்படுத்துகிறது. ஒருபுறம் விதையாவது கதிரறுத்துக் குவிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யாது சோம்பேறிகளாக வாழும் ஒரு பணக்கார வகுப்பையும், மற்றொருபுறம் நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபட்டு இரவு பகலாய் உழைக்கும் ஏழை உழைப்பாளி வகுப்பையும் அது உண்டு பண்ணுகிறது. தம் உழைப்பிற்கு ஊதியமாக இவ்வேழை வகுப்புக்குக் கிடைப்ப தெல்லாம் வாரக் கூலிதான். இது அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் பாதுகாக்கக்கூடப் போதியதாயிருப்பதில்லை. முட்டுப்பட்ட காலங்களில் இதுகூட முடியாத காரியமாய் விடுகிறது. பொருளியல் நெருக்கடிக் காலங்களிலோ தொழிலாளிகள் வேலையில்லாதவர்களாய் தெருக்களில் திரிய வேண்டும், அல்லது கைகட்டிக் கொண்டு வீட்டுக்குள்ளிருக்க வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது.”

இப்பிரச்சனையை மார்க்ஸ் புதிய வகையில் விளக்கிக் கூறுகிறார். தொழிலாளிகள் ஒரு நாளைக்கு இவ்வளவு நேரம் உழைப்போம் என்று வரையறுப்பதாக வைத்துக் கொள்வோம். இவ்வரையறைப்படி இந்நேரத்தில் அவர்கள் செய்யும் வேலையின் மதிப்பு அவர்கள் பெறும் கூலிக்குச் சமமாயிருக்க வேண்டும். இங்ஙனம் வரையறுக்கப்படும் நேரத்தை மார்க்ஸ் “இன்றியமையா உழைப்பு நேரம்” (Necessary Labour Time) என்று குறிப்பிட்டார். இதுபோக மிகுதி யுழைத்தால் அந்நேர உழைப்பும் அதன் பயனும் முதலாளிகளால் சுரண்டப்படும் சுரண்டலின் அளவு ஆகும். இச்சுரண்டலின் மதிப்பை அவர் ‘மிகுதி உழைப்பு மதிப்பு’ (Surplus Value) என்கிறார்.

சுரண்டலை மதிப்பிடும் ’இம் மிகுதி உழைப்பு மதிப்’பிலிருந்தே ஆதாயம், வட்டி, தரகர் கழிவுத் தொகைகள் (Middlemens’s Commissions) ஆகியவை எல்லாம் எழுகின்றன. இம்மிகுதிச் செல்வம் தொழிலுற்பத்தியாளராலும் உற்பத்திக் கருவிகளின் ஏக போக முறையாளர்களாலும் கைப்பற்றிக் கொள்ளப்படுகிறது……. முதலாளித்துவ வர்த்தகமாகிய சதுரங்க ஆட்டமானது மேற்குறிப்பிட்ட பங்கு கொள்ளும் இனங்கள் தமக்கு முடியுமளவு பெரும் பகுதியைக் கைக்கொள்ளச் செய்யும் முயற்சியேயன்றி வேறன்று. முதலாளித்துவத் துறையில் போட்டி போட்டி என்று கூறப்படுவதன் முழு மறைபொருள் இதுவே. பல்கலைக் கழகங்களில் பெருமுயற்சியுடன் கற்றுத் தரப்படும் பொருளியலின் மயிரிழை நுட்பங்களும் சிக்கல்களும் இவ்வொன்றைப் பற்றியதே. பொது உடைமை விளம்பர அறிவிப்பின் மொழியில் கூறுவதானால் இன்ப வகுப்பினர் செய்யும் பெருங் கொடுமை சுரண்டலே - வெட்கமற்ற, நேரடியான, விலங்குத் தன்மை வாய்ந்த, வெளிப்படையான சுரண்டலே.

காலப்பாதையில் முதலாளித்துவம் முன்னேறிச் செல்லுந்தோறும் சுரண்டலின் அளவும் வளர்ந்து கொண்டே தான் போக முடியும். ஏனென்றால், முதலாளித்துவத்தின் உயிர்நாடியான பண்பு போட்டியேயாகும். முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தியாளர் பலர். இவர்களனைவருமே விற்பனைக் களத்தைத் தாமே கைப்பற்றவும் தாமே ஆதாயம் பெறவும் முயற்சி செய்வார்கள். இப்போட்டியில் ஒருவர் வெற்றி காண வேண்டுமானால் அவரது சரக்கின் விற்பனை விலை மற்ற போட்டியாளர்களனைவரின் விலைகளைவிட மலிவாயிருக்க வேண்டுவது இன்றியமையாததாகும்.

விற்பனை விலை குறைவாக வேண்டுமானால் உற்பத்திச் செலவைக் குறைக்க வேண்டும். இது பெரும்பாலும் கூலியைத் தாழ்த்துவதன் மூலமே சாதிக்கப் பெற்று வருகிறது. கூலிக் குறைவு என்பது பெரும்பாலும் நேரடியான குறைவாயிருப்பதில்லை. மறைமுகமாகவே குறைக்கப்படுகிறது. ஒன்று, குறிப்பிட்ட நேரத்தில் மிக மும்முரமாக வேலை செய்விப்பர், அல்லது நுணுக்கத் துறை முன்னேற்றங்களால் உற்பத்தியைப் பெருக்குவர். புதிய முறைகள் குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தியாகும் பொருள் களின் அளவைப் பெருக்குகின்றன. அதாவது தொழிலாளர் உழைப்பின் உற்பத்தியாற்றல் பெருகுகிறது. இவ்வுற்பத்தி யாற்றலின் பெருக்கமும் உற்பத்தி வேகமும் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட காலத்தில் உண்டுபண்ணப்பட்ட பொருளின் மதிப்பை உயர்த்துகிறது.

எடுத்துக்காட்டாக, தொடக்கத்தில் உற்பத்தியான செல்வ மதிப்பு 5 கூறுகளானால் அதைப் பெருக்கும் முயற்சிகளின் பயனாகப் பிற்காலத்தில் அது 100 கூறுகளாகின்றது. முதலில் 5-ல் 2 பங்கு தொழிலாளர்களுக்குத் தரப்பட்டது என்று வைத்துக் கொள்ளுவோம். ஐந்தில் மூன்று பங்கு முதலாளிக்குச் செல்லும். நாளடைவில் 100 கூறுகள் உற்பத்தியாகும்போது தொழிலாள ருக்கு 20 கூறுகளே கூலியாகத் தரப்படுகின்றன. மீதி 80 கூறுகள் முதலாளிக்குரியதாகும். தொழிலாளர் தரப்பில் இயக்கங்கள் நடைபெற்றுக் கூலி உயர்ந்தால்கூட அது மிகவும் நுண்ணிய அளவிலேயே உயரும். 20 கூறுகள் என்பது 21 அல்லது 22 கூறுகள் ஆகலாம்; அவ்வளவு தான். இங்ஙனம் மிகுதி உற்பத்தி மதிப்பின் அளவு (அதாவது மொத்த உற்பத்தி மதிப்பிற்கும் கூலிக்கும் உள்ள வேறுபாடு) முதல் இடத்தில் 50-20 = 30 கூறுகளும் இரண்டாமிடத்தில் 100-22 = 78 கூறுகளும் ஆகும். இப்படியாகக் கூலி உயர்ந்தபோதும்கூட சுரண்டலின் அளவு வளர்ந்து கொண்டுதான் வருகிறது.

வெறுக்கத்தக்க இப்பகற் கொள்ளையைக் கண்டு கசப்படைந்துதான் கார்லைல், லங்காஷையர் உற்பத்தியாளர் வகுப்பின் தனிக்குணச் சித்திரமாகத் தாம் வரைந்த ‘பிளக்ஸன்’ வாயிலாகத் தம் சொற்களை அமைத்து ‘பிளக்ஸன்’ தன் தொழிலாளிகளிடம் கூறுவதாகக் குறிப்பிடுகிறார்.

“பெருந்தன்மை வாய்ந்த என் நூற்புத் தொழிலாளர்களே! நாம் ஒரு லட்சம் பவுன் சம்பாதித்துவிட்டோம். அவைகளனைத்தும் என் செல்வம். நாள்தோறும் நீங்கள் பெறும் மூன்று வெள்ளி ஆறு காசு (3 Shillings 6 Pence) உங்களதே. அதை எடுத்துச் செல்லுங்கள். இதோ உங்கள் குடிச் செலவுக்கு நாலு காசு. நான் கூலியுடன் தரும் இதைக் கொண்டு என் பெயரை வாழ்த்திக் குடித்து மகிழுங்கள்!”

முதலாளித்துவ சமூகம் முன் செல்லுந்தோறும் உற்பத்தி முறைகளில் பெருத்த முன்னேற்றங்கள் ஏற்படுகின்றன. தொழிலாளர் மேன்மேலும் மிகுதியான மதிப்புடைய செல்வத்தை உற்பத்தி செய்கின்றனர். ஆனால், வரவர அவர்கள் தம்மால் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த மதிப்பில் குறைந்த பங்கே பெறுகின்றனர். இவ்வகையில் சுரண்டல் வளர்ச்சி யடைந்து கொண்டே போகிறது.

முதலாளித்துவம் உழைப்பாளிகளின் வாழ்க்கைத் தரத்தைக் குறைத்துள்ளதென்று பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள கருத்துச் சரியல்ல என்பது மேற்கூறியவற்றால் விளங்கும். உண்மையில் உழைப்பாளிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதினாலேயேதான் முதலாளித்துவம் வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது. அப்படியானால் தொழிலாளிகளைச் சுரண்டுதல் வளர்ந்திருப்பது எத்துறையில்?

“இது, சுரண்டல் எது என்ற கருத்தைப் பொறுத்தது. உற்பத்தியாற்றல் பெருகுந்தோறும் ஒவ்வொரு படியிலும் நடைமுறையில் ஏற்படும் வாழ்க்கைத் தர உயர்வுக்கும், ஏற்படக் கூடும் தர உயர்வுக்கும் உள்ள வேறுபாடே அச்சுரண்டலின் அளவு ஆகும். அதாவது சுரண்டல் என்பது தொழிலாளி பெறும் ஊதிய அளவைப் பொறுத்ததன்று - அவன் பெறவேண்டிய, ஆனால் பெறாதிருக்கும் ஊதியத்தின் அளவையே பொறுத்தது.”

முதலாளித்துவமும் பொருளாதார நெருக்கடிகளும் - உள்ளார்ந்த முரண்பாடு

முதலாளித்துவ ஆட்சி அடிப்படையிலேயே போட்டி உணர்ச்சி வாய்ந்தது. முதலாளிகளக்குள்ளேயுள்ள போட்டி ஒருவர் குரல்வளையை ஒருவர் நெரிக்க முயலும் போட்டியாகும். ஒவ்வொரு உற்பத்தியாளனும் பெருத்த அளவில் உற்பத்திகளைச் செய்து பெருக்க எண்ணுகிறான். - ஏனெனில் தொழிலுற்பத்திச் சரக்குகளில் பல, ‘விலை குறைவு ஊதிய மிகுதி’ (Increasing Returns and diminishing costs’) என்ற தத்துவப்படி உற்பத்தியாகின்றன. சரக்குகள் மிகுதியாய் உற்பத்தியாக ஆக, சரக்குகளின் அளவுக் கூறுக்குச் சரியான உற்பத்திச் செலவுக் கூறு குறைபடுகிறது. உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டே போகும் இப்போக்குடன் உற்பத்திக் கருவிகளின் வேலைப்பாட்டை முன்னேற்றும் முயற்சியும் உற்பத்தி ஆற்றல்களைப் பெருக்கும் முயற்சியும் ஒன்று கூடுகின்றன.

இவ்வகையில் உற்பத்தி வளர்ந்து கொண்டே போகிறது. எல்லா உற்பத்தியாளனும் தான் உற்பத்தி செய்யும் அளவு எவ்வளவு மிகுதியோ, தான் உற்பத்தியிலீடுபடுத்தும் முறைகள் எவ்வளவு சிறந்தனவோ, அவ்வளவுக்குப் பொருள்களின் குறிப்பிட்ட கூறின் உற்பத்திச் செலவு குறையுமென்றும் அதனால் விற்பனைக் களத்தைக் கவரும் ஆற்றல் தனக்கு மிகுமென்றும் எண்ணுகிறான். இதன் இன்றியமையாத விளைவு யாதெனில் உற்பத்தி, தேவையின் அளவைப் பொருத்த அளவில் மிஞ்சி விடுகிறது. ஸ்பார்கோவும் ஆர்னரும் குறிப்பிடுவதாவது:9

“போட்டியிடும் உற்பத்தியாளர்களின் பூசல்களிடையே தேவையின் அளவு பெரும்பாலும் மிகுதியாக மதிப்பிடப்பட்டு விடுகிறது உற்பத்தியாளர்கள் தம் ஆலைகளில் முழு ஆற்றலையும் பயன்படுத்தி, அதன் விளைவாக ஆதாயத்துடன் விற்கும் அளவின் எல்லையை விட, மிகுதியாக உற்பத்தி செய்து விடுகிறார்கள். விற்பனையிலேற்படும் போட்டி, விலையை இறக்கி விடுகிறது. இறுதியாக விற்பனையாளர்கள், விற்பதைவிடச் சேகரித்து வைப்பதே மேலென்று எண்ணிவிடுகிறார்கள். ஆகவே தொழிற் சாலைகள் மூடப்படுகின்றன. பணியாளர்கள் வேலையில்லாது விடப்படுகின்றனர். சேகரித்து வைக்கப்பட்ட உற்பத்திச் சரக்குகள் படிப்படியாக விற்பனைக் களத்தில் செலவான பிறகுதான் உற்பத்தி மீண்டும் தொடங்கப்படுகிறது. தொடர்ச்சியாக ஆதாயமிக்க சில ஆண்டுகளில் உற்பத்தி மிகவும் ஊக்கப்பட்டு அதன் எல்லை கடந்த அளவினால் உற்பத்திப் பெருக்கம் என்று கூறப்படும் நிலை வந்துவிடுகிறது. எல்லாத் தொழில்களிலுமே இங்ஙனம் தேவைக்குமேல் உற்பத்தி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.”

ஆயினும், பொருளியல் புலவர்கள் பொது உற்பத்திப் பெருக்கம் என்ற ஒன்று இயல்பாக என்றுமே ஏற்படாதது என்று கூறுகின்றனர். “மிகுதிச் சரக்குகளையும் முன்னிலும் நல்ல சரக்குகளையும் சமூகம் விரும்பி ஏற்கும் தேவையின் அளவு செயல் முறையில் எல்லையற்ற விரிவுடையதே. சராசரியாக மனிதன் எப்போதுமே தான் உற்பத்தி செய்யும் பொருள் களனைத்தையும் பயன்படுத்துவது கூடுமான ஒரு செயலே யாகும்” என்று அவர்கள் கூறுகின்றனர். புலவர்களின் இக்கூற்று உண்மைதான். ஆகவே முதலாளித்துவ சமூகத்தின் உண்மையான கவலை உற்பத்திப் பஞ்சம் என்று கூற முடியாது. அதோடு உற்பத்திப் பெருக்கம் ஒருபுறம் இருக்கும்போதே, பட்டினி கிடந்தும் உணவு போதாமலும் இறப்பது மற்றொருபுறம் நடை பெறுகிறது என்பது விளக்கப்பட வேண்டிய செய்தியேயாகும்.

ஒவ்வொரு உற்பத்தி முயற்சியாளனும் உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காகக் கூலியைக் குறைக்க வேண்டி வருகிறது. ஆனால், கூலி குறைந்ததும் பொது மக்களின் பொருள் வாங்கும் ஆற்றல் தானாகவே குறைந்து விடுகிறது. அதன் விளைவாகப் பொருளும் உற்பத்தியாகி, தங்களுக்குத் தேவைப்படுவதாயிருக்கும்போதுகூட, மக்கள் அவற்றை வாங்க முடியவில்லை. அதனால் செலவுக்குறை (under-consumption) ஏற்படுகிறது.

சரக்குகள் இக்காரணத்தால் விற்பனையாகாமல் கிடக்கின்றன. சில உற்பத்தியாளர்கள் இதனால் தம் கடன்களைத் தீர்க்க முடியாமல் போகிறார்கள். இவர்கள் கடன் கொடுபடாது போகவே இவர்களுக்குக் கடன் கொடுத்தோர், தம் கடனுதவியாளர்களுக்கும் கடன் மீட்டுக் கொடுக்க முடியாமல் போகிறது. இங்ஙனமே ஒரு நச்சுச் சுழல் தொடர்கிறது. சேமநிலயங்கள் ஒவ்வொன்றாக இன்னலுட் படுகின்றன. மோசமான பொருளாதார நெருக்கடி விளைகிறது.

இதுபற்றி பொருட்குவை ஆராய்ச்சி (Finance) அறிஞர் கூறுவதாவது:- “பல வகையாகப் பின்னிக் கிடக்கிற பரந்த கடன்முறைவலையில் எத்தனையோ சிற்றிழைகள் ஒன்றுக் கொன்று ஆதரவாக நிலை பெறுகின்றன. இப்பின்னல் வலையில் எங்கோ ஓரிடத்தில் ஓரிழை அறுகின்றது. உடனே சில பெரிய பொருட்குவை நிலையங்கள் வீழ்ச்சியடைகின்றன. கடன் முறைக்கோட்டை தவிடு பொடியாகின்றது. விலைகள் தலைகுப்புற விழுகின்றன. பொருளாதார உற்பத்திகள் செயலற்று நின்றுவிடுகின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் அழிவெய்து கின்றனர். எங்கும் முன்னைய மகிழ்ச்சியில் மண் விழுந்து இருள் சூழ்கிறது. சில காலம் சென்றபின் சிறிது சிறிதாக நம்பிக்கை உயிர்க்கின்றது. மக்கள் நோக்கம் தெளிவடைந்து தொழிலுக்குச் சாதகமான நிலை ஏற்பட்டு என்றுமுள்ள நன்னிலை மீண்டும் எழுகின்றது. மருந்து உட்கொண்டு பிழைத்தெழுந்து உடல் நலம் பெறுபவன்போல் உலகம் நலமடைகின்றது. ஆயினும் இம் மருந்துக்கு ஏற்படும் செலவளவு வீணானதும் கணக்கிலடங் காததுமாகும்!”¹⁰

முதலாளித்துவத் தொழில்வளர்ச்சி கால வரலாறு முழுவதும் உண்மையில் தொழில் நிலைமையில் இத்தகைய ஒழுங்கான ஏற்றத் தாழ்வுகளே நிறைந்துள்ளது. உலக வர்த்தகக் களங்களில் செல்வ வளமிக்க பருவமொன்றிருந்தால் அதனையடுத்து வழக்கமாக ஒரு நெருக்கடி நிலைமை ஏற்படாதிருப்பதில்லை.

முதன் முதல் பெருத்த நெருக்கடி ஏற்பட்டது 1825-ல். அதன் பின் 1836, 1847, 1857, 1866, 1873, 1877, 1890, 1900, 1907, 1921 ஆகிய ஆண்டுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டன. இறுதியாக 1929-ல் வந்த நெருக்கடி இவையெல்லாவற்றையும் விட மிகக் கடுமையா யிருந்தது. இத்தகைய நிலைமை ஏற்பட்டே தீரும் என்று மார்க்ஸ் முன்னமே கூறியுள்ளார் என்பதைக் ‘கோல்’ எடுத்துக் காட்டுகிறார்.

‘விஞ்ஞானப் புதுமைகள் பெருக்கமடையுந்தோறும், தொழில் முறைப்படி முதலாளித்துவத்தினால் திறம்பட உற்பத்தி செய்யப்படக்கூடும் பொருள்களுக்கு, அதன் எல்லைத் திறத்திற்குள்ளாகச் செலவீடு கிடைக்காத காரணத்தினால், முதலாளித்துவம் தன்னைத்தானே முறியடித்துக் கொள்ளும்’ என்று அவர் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே கண்டுணர்ந்தார். உற்பத்திக் கொப்பாக, செலவீட்டையும் விரிவுபடுத்தினாலன்றி, மூலப்பொருள் வளங்களாலும், உற்பத்திச் சாதனங்களின் பெருக்கத்தினாலும் தொழிலில்லாத் திண்டாட்டமும் பொருளியல் நெருக்கடிகளும் ஏற்படுவது உறுதி. வேண்டாத உற்பத்தியைப் பேரளவில் குறைக்க முற்பட்டால் மட்டுமே - அதாவது பல உற்பத்தி ஆலைகள் அழிக்கப்பட்டு, பல நிலையங்கள் ஒடுக்கப்பட்டால் மட்டுமே முதலாளித்துவ முறை திருத்தியமைக்கப்படக் கூடும்.

மேற்கூறியவைகளனைத்தும் போட்டியடிப்படையில் அமைந்த முதலாளித்துவத்தில் உள்ளூர ஊறிக் கிடக்கும் ஓர் அடிப்படை முரண்பாட்டின் பயன் ஆகும். முதலாளித்துவ முறை சமூக முறை அல்லது கூட்டு முறைப்படி உற்பத்தியில் முனைகிறது. அதைப் பயன்படுத்தும் துறையில் மட்டும் அது தனி மனிதர் போட்டிக்கும் சுரண்டலுக்கும் உடன்படுகிறது. இம்முரண் பாட்டின் வெளிச் சின்னமே இன்ப வகுப்பினருக்கும் உழைப்பாளி வகுப்பினருக்கும் இடையே நிகழ்ந்து வரும் போராட்டமாகும். இதில் இன்ப வகுப்பினர் தனிமனிதர் சொத்துரிமைக்கும், சுரண்டலுரிமைக்கும் போராடுகின்றனர். உழைப்பாளி வகுப்பு சமூக மயமாக்கப்பட்ட தொழிலுக்கும் கூட்டு உற்பத்தி முறைக்கும் போராடுகிறது.

முதலாளித்துவத்தின் கையாலாகாத்தனம்

முதலாளித்துவம் என்றால் என்ன? அதன் முக்கிய கூறுகள் எவை? என்று ஆராய்ச்சி செய்தோம். இனி அதன் குறைபாடு களைப் பற்றி ஆராய்வோம். இப்போதிருக்கும் இச்சமூக அமைப்பு முறையை அறிஞர் நீக்குப் போக்கு இல்லாமல் முற்றிலும் கண்டிப்பது எக்காரணங்களால் என்று காண்போம். அதனைக் கண்டிப்பவர்களுள் தலைமையானவர்கள் சமதர்ம வாதிகளே. அவர்கள் கண்டனம் காரசாரமும் உணர்ச்சியும் உடையது. சமதர்மிகள் வாதம் இச்செய்தியில் அமைந்ததுபோல் வேறெங்கும் இவ்வளவு பொருத்தமானதாய் அமைந்ததில்லை என்றுகூடக் கூறலாம். ஆயினும், சமதர்மிகளில் பல திறத்தினர் முதலாளித்துவத்தின் பலதிறக் குறைபாடுகளை வேறு வேறாக வற்புறுத்துகின்றனர். "ஒரு கூட்டத்தின் கோட்பாட்டின்படி புல்லுருவித் தன்மை வாய்ந்த இடையீட்டாளன் அல்லது தரகனே சமூகத்துக்கு மிகவும் கேடுபயப்பவனெனப்படுகிறான். மற்றொரு கூட்டத்தார் சுரண்டும் முதலாளியே குடிகேடன் என்கின்றனர். மற்றொரு கட்சி தீம்பு முழுவதும் பங்கீட்டு முறையில்தான் இருக்கிறது என்கிறது. ஒழுக்கவாதி போட்டியினடிப்படையில் அமைந்த சமூகத்தின் தாழ்ந்த தர ஒழுக்க நிலைமைபற்றி மனம் வருந்துகிறான். கலைஞன் அவ்வுழைப்பு முறையின் பயனாயேற்படும் உற்பத்திப் பொருள்களின் கலைக்கு மாறான அழகின்மைப் பண்பை வற்புறுத்திக் காட்டுகிறான்.

சமதர்மிகள் முதலாளித்துவ அமைப்பில் கண்டிக்கும் கூறுகள் அதன் வகை முறைகளும் நுணுக்கத் திறங்களும் அல்ல என்றும் அதன் அமைப்புத் திட்டமே என்றும் தொடக்கத் திலேயே நாம் தெளிவுபடுத்த விரும்புகிறோம். முதலாளித்துவ நாகரிகம் வெற்றிகரமாகச் செய்து முடித்த அருஞ்செயல்கள் பல. அது எடுத்துக் கொண்டுள்ள பணிகளும் அதன் பலன்களும் வியப்புக்கிடமானவை. ‘பொது உடைமை விளம்பர அறிவிப்பு’ இதனை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளுகிறது. அது கூறுவதாவது:- “இன்ப வகுப்பினர் ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு உட்பட்ட அவர்களின் ஆட்சிக் காலத்தில், தமக்கு முன்னிருந்த அத்தனை முறைகளும் சேர்ந்து உருவாக்கிய உற்பத்திச் சாதனங்களைவிட மிகவும் பிரம்மாண்டமான அளவில் மிகுதியான உற்பத்திச் சாதனங்களை உண்டுபண்ணியுள்ளனர். இயற்கையின் சக்திகளை மனித சக்திக்கு உள்ளடக்கல், இயந்திர சாதனங்கள், தொழில், உழவுத் தொழில் ஆகியவற்றில் இயைபியல் (Chemistry) அறிவை ஈடுபடுத்தல், நீராவிக் கப்பல், போக்குவரத்து புகைவண்டிப் பாதை, மின்சாரத் தந்தி, முழுமுழுக்கண்டங்களையெல்லாம் மனித வாழ்க்கைக்குப் பயன்படுவித்தல், ஆறுகளை வேண்டிய வழியில் செலுத்தல், மாயத்தால் உற்பத்தி செய்யப்பட்டனவென்னும்படி பெருவாரி யான மக்கள் தொகுதியை வளர்த்தல் ஆகிய இத்தனை உற்பத்தி ஆற்றல்கள் சமூக உழைப்பின் கருவில் இருந்தன என்று முந்திய தலைமுறையில் எவரும் கனவு கண்டிருக்கக்கூட முடியா தன்றோ?”

அளப்பரிய இப்பெரு நன்மைகளை ஒத்துக் கொண்டும், அவற்றை முற்றிலும் மறைக்கத்தக்க அளவில் அதன் தீமைகள் எல்லையற்றவையும் கொடியவையும் ஆகும் என்று சமதர்ம வாதிகள் கருதுகின்றனர்.

முதலாளித்துவ நாகரிகத்தின் கண்டனங்கள் இரு பெருந் தொகுதிகளுள் அடங்கும். முதல்தொகுதி சமதர்ம வாதிகளின் எதிர்ப்பில் முக்கியமான எதிர்ப்பிலக்காகும். அது முதலாளிகள், தொழிலாளி எதிர்ப்பிலக்காகும். அது முதலாளிகள், தொழிலாளி வகுப்பைச் சுரண்டி வாழ்கின்றனர் என்பதே. இரண்டாவது கண்டனம் முதலாளித்துவ அமைப்பின் உற்பத்தி முறை, போதிய திறம்பட்ட முறையும் நேர்மையான ஒழுங்காட்சியும் உடையதன்று என்பது. சமதர்ம இயக்கம் இவ்விரண்டு தீமைகளையும் நீக்க முயல்கின்றது. “உற்பத்தியாளர்களைச் சுரண்டுவதற்கென அமைந்த, உற்பத்திக்கு உழைக்காத ஒரு வகுப்பிடம் ஆதிக்கம் இருப்பதைத் தவிர்க்க உறுதி கொண்டிருப்பதே சமதர்ம இயக்கத்தின் முக்கிய நோக்க மாகும். அவ்வியக்கத்திற்கு உயிர்ப்பும் ஊக்கமும் தருவது இப்பண்பே………..இரண்டாந்தரமான நோக்கம் ஒன்றும் அதற்குண்டு. வீணே பொருள்கள் அழிவதைத் தடுத்துச் சமூகத்திற்கு அதன் முயற்சிக்கேற்ற பயன் ஏற்படும்படி தொழில் முறையின் அமைப்புத் திறத்தை முன்னேற்றுவித்து அதன் நடைமுறையாட்சியையும் மேம்படுத்துவதே அவ்விரண்டாவது நோக்கம்.”14

மூலப் பொருளின் உற்பத்தித் திறத்தை முதலில் எடுத்துக் கொள்வோம். முதலாளித்துவம் இம்முறையில் முற்றிலும் படுதோல்வியடைந்துள்ளது. மறுக்க முடியாதபடி முக்கியத்துவம் வாய்ந்த எத்தனையோ பொருள்கள் முதலாளித்துவத்தால் ஏற்பாடு செய்யக் கூடாதவையாயிருக்கின்றன. ஏனெனில் "அப்பொருளை உண்டுபண்ணித் தந்தபின் அதற்காக மக்களிடமிருந்து பணமாக விலை பெறுவதற்கில்லை. எடுத்துக் காட்டாகக் கலங்கரை விளக்கங்களைக் கூறலாம் (Light houses) இவையில்லாமல் பெரும் கடற்பிரயாணம் செய்தலரிது. வர்த்தகக் கப்பல்கள் அவையில்லாவிட்டால் அஞ்சி அஞ்சித் தங்கி மெள்ளவேதான் பிரயாணம் செய்ய நேரிடும். அப்படியும் அவற்றுட் பல அழிவெய்தும். இவ்வழிவால் கப்பலில் செல்லும் சரக்குகளின் விலையும், அவற்றின் இயற்கை மதிப்பு விலையை விட எவ்வளவோ மிகுதியாய் விடும். ஆகவே கலங்கரை விளக்கங்கள் கடற் பிரயாணஞ் செய்பவர்கட்கு மட்டுமல்லாமல் பயணம் செய்யாதவர், செய்ய எண்ணாதவர் ஆகியவர்களனை வர்க்குமே பெரிதும் பயன் தருபவை. கலங்கரை விளக்கங்கள் இவ்வளவு இன்றியமையாப் பயனுடையவையாயிருந்தபோதிலும் முதலாளிகள் அவற்றை என்றும் செய்ய முயலமாட்டார்கள். கலங்கரை விளக்கக் காவலர், வருகிற போகிற கப்பல்களொவ் வொன்றினிடமிருந்தும் வரி பிரிக்கக் கூடுமேயானால், பிரிஸ்டல் கடல் முகத்தில் காணப்படும் விளக்கு வரிசைகளைப்போல் கடல்களில் கரைகள் நெடுகக் கலங்கரை விளக்கங்கள் ஏற்படுவது உறுதி. ஆனால், இங்ஙனம் வரி விதிப்பதென்பது முடியாத காரியம். கப்பல் மாலுமிகளின் பொருளை எதிர்பார்க்காமலேயே ஒரு சார்பற்ற நிலையில் எல்லாக் கப்பல்கள் மீதும் அவ்விளக்கங்கள் ஒளி வீசியாக வேண்டும்.

இந்நிலையில் முதலாளிகள் செய்யக்கூடுவதெல்லாம் கடற்கரைகளை ஒளியில்லாதிருக்கும்படி விட்டுவிடுவதே. ஆகவேதான் அரசியல் இவ்விடத்தில் தலையிட்டுச் செயலாற்ற நேரிடுகிறது………இங்ஙனம் கடல் ஆற்றலை நம்பியிருக்கும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு உயிர் நிலையாயிருக்கிற இத்துறையில் முதலாளித்துவம் முற்றிலும் செயலாற்றாது போகின்றது, அரசியலே அதனைத் தொடர்ந்து நடைமுறைப் படுத்தியும் அதற்காகக் கப்பல் உடைமையாளர்கள் மீது வரி விதித்தும் வரவேண்டியிருக்கிறது."¹⁵

இக்குற்றச்சாட்டுக்கு விடையாக முதலாளித்துவத் தரப்பினர் கூறுவதாவது, இத்தகைய பயனுடைய வேலைகளைத் தனிமனிதர் மேற்கொள்ளாவிட்டாலும் அரசியல் ஏற்றுக் கொள்ளுகிறது. ஆடம் ஸ்மித்கூட விலக்க முடியாத குறைந்த அளவு அரசியல் கடமைகளுள் இதனை உள்ளடக்கிக் கூறியிருக்கிறார். அவர் குறிப்பதாவது, “எந்தத் தனி மனிதனுக்கோ. தனி மனிதர் சிறு குழுவுக்கோ பொருள் வகை ஊதியம் தராத சில பொது ஊழியங்கள் சில பொது நிலையங்கள் ஆகியவற்றை அரசியலாரே நிறுவி நடத்த வேண்டும். ஏனெனில், பெரிய அளவில் சமூகத்திற்கு அதன் செலவு பன்மடங்கு மிகுதியாகப் பயன் தருமாயினும், எந்தத் தனி மனிதருக்கோ தனிமனிதர் குழுவுக்கோ அச்செலவுக்கேற்ற கைம்மாறு கிடைக்க முடியாது.”¹⁶ இவ்விடை அறிவுக்குப் பொருந்துவதாயில்லை. இக்கடமை அரசியலுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டிருப்பது உண்மையே. ஆனால், மாற்றிக் கொடுக்கப்பட்டதனால் அது நிறைவேற்றப் பட்டதென்று ஆய்விடாது. இவ்வகையில் கேட்கப்பட வேண்டிய கேள்வியாவது; அரசியல் இத்துறையில் தன் கடமையைச் சரிவர ஆற்றியுள்ளதா என்பதே. இதற்கு விடை: ஆற்றியுள்ளதென்று பெரும்பாலும் கூறுவதற்கில்லை. உடல் நலத்துக்குக் கேடு பயக்கும் சேரிகள் மிகுதியாய் இருப்பது, தனிமனிதர் நன்கொடை உதவிகளிருந்தும்கூட கல்வியில்லாமை மிகுதியாயிருப்பது முதலிய கோளாறுகள், முதலாளித்து அரசியல் இப்பெரு முயற்சிகளைத் திறம்படச் செய்ய முடியவில்லையென்பதைக் காட்டுகின்றன.

இங்ஙனமாக ஒருபுறம் ஆதாயமில்லாத ஆனால் பயன்தரும் ஊழியங்கள் கவனிக்கப்படாதிருக்க, மறுபுறம் ஆதாயம் காட்டும் தொழில்களில் உழைப்புச் சக்திகளின் மட்டற்ற பெரு விகிதத்தினர் ஈடுபடுகின்றனர். இச்சில துறைகளுள் ஆயிர நூறாயிரக்கணக்கான ரூபாய்கள் முதலிடப்படுகின்றன. மற்றத் துறைகளிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளிகளை இத்துறைகள் இழுத்துத் தமதாக்குகின்றன. மேலும் நாட்டின் உடல் உழைப்புச் சக்திகள், மன உழைப்புச் சக்திகள் ஆகியவை இவற்றிலேயே கொண்டிணைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட ஒரு சில சரக்குகளிலேயே மக்களின் தேவை எல்லையற்றதாயிருக்க முடியாதென்பதையும் அவை வரம்புடையவையாக இருக்க வேண்டுமென்பதையும் யாரும் கவனிப்பதில்லை. மேலும் மேலும் காசு பணம் அடித்துப் பெருக்கும் மாய மருந்தின் கவர்ச்சிக்குட்பட்டு ஏராளமான உற்பத்தி ஆதாரங்கள் சிதைக்கப்படுகின்றன. இம்மந்திர சக்திக்கு ஒரு தடவை அடிமைப் பட்டவரிடம் அது மேன்மேலும் வளர்வதன்றிக் குறைவதில்லை. கடைசியில் வெறுங்கையராய் தொழில் முறிவடைந்து பெரும் பொருளிழப்பும் கொடிய பொருளியல் நெடுக்கடியும் ஏற்படுவது வரை அது குறைவதில்லை. செயற் சுதந்திரம் (Laissez-Faire) என்ற தனிமனிதர் போட்டி உரிமைக் கோட்பாட்டினரின் கனவுலக ‘இந்திரபுரி’ இங்ஙனம் நனவுலகப் பாறைகளில் பட்டுத் துகள் துகளாகப் போகிறது. சமூகத்தின் பொருளியல் நிலையாகிய கட்டட முழுவதும் அழிந்து கிடக்கும் இவ்வழிபாட்டினிடையே இன்றைய உற்பத்தி முறையின் திட்டமற்ற தன்மையும் குழப்ப நிலையும் பட்டப் பகலாக விளக்கம் பெறுகிறது.

மேலும், போட்டியினிடையே தேவையினளவை மதிப்பிட எவ்வகையுமில்லாது போகிறது. உற்பத்தியாளர்கள் கண்ணை மூடிக்கொண்டு உற்பத்திப் பொருள்களைப் பெருக்கி அவற்றை ஆதாயத்துடன் விற்றுவிடவும் செய்யலாம் என்று நம்பி வாழ்கின்றனர். வேலைகள் பல்வேறு உற்பத்தியாளர்களிடையே திட்டப்படி பங்கிடப்பட்டிருந்தால், ஒவ்வொரு உற்பத்தியாளரும் மொத்த உற்பத்தியில் எவ்வளவு பங்கு தாம் உற்பத்தி செய்தால் தமக்கு ஆதாயமுண்டென்று மதிப்பிட முடியும். ஆனால் அவ்விதத் திட்டமான பங்கீடு கிடையாது…………………… ஆகவே போட்டிகளால் விலைகளில் பெரிய ஏற்றத் தாழ்வுகளும் வாழ்க்கையின் உயிர்நிலைத் தேவைகளில் கூடப் போட்டிச் சூதாட்டங்களும், வர்த்தக நிலைய முறிவுகளும், ஒழுங்கற்ற உற்பத்தியும், அதன் பயனாக உழைக்கும் வகுப்புக்கு உரைக் கொணாத் துன்பங்களும் ஏற்படுகின்றன.

பொருள்களின் தேவை, தருவிப்பு (demand and supply) ஆகியவற்றினிடையே வேற்றுமைகளைச் சீர்படுத்தும் வகையில் இவ்வளவு குறைபாடு உண்மையில் இல்லையென்று முதலாளித்துவத்தின் ஆதரவாளர் கூறுவர். அவற்றிடையே விலைத் திட்டத்தைக் கொண்டு சமநிலை சரிப்படுத்தப்படுமாம். விலை குறைந்தால் அவ்விலைக்குரிய சரக்கு வேண்டுவதற்குமேல் உற்பத்தியாகியிருக்கிறதென்பதை அது காட்டும். உடனே உற்பத்தியாளர்கள் உற்பத்தியைச் சுருக்குவார்கள். ஏனெனில், அப்படிச் சுருக்காவிட்டால் ஆதாயம் குறைந்து சில நிலையங்கள் சிதையவும் நேரும். தருவிப்பு தேவைக்கு மிகவும் குறைவாயிருந்தால் விலை உயர்வு பெறும். ஆதாயம் மிகுதியாகி, உற்பத்தி மிகுதிக்கு ஊக்கமளிக்கும். இதனால் உற்பத்தி பெருக, மீண்டும் விலைகள் தாழும். இது விலை முறை உலக ஒழுங்கு. இதன்படி முதலாளித்துவ சமூகம் தேவைக்குப் போதிய தாளும் தாளுக்கேற்ற மையும் உற்பத்தி செய்வதாகக் கூறப்படுகிறது.

மேலீடாகப் பார்த்தால் முதலாளித்துவ அறிஞரின் வாதம் சரியானதாகத் தோன்றும். ஆனால், நடப்புச் செய்திகளைக் கவனித்தால் அது உள்ளீடற்ற இன்பகரமான மயக்கமே என்பது தெரிய வரும். தேவை தருவிப்பு ஆகியவற்றினிடையே சீர்கேடு இல்லையென்றால் அடிக்கடி வர்த்தகத் துறையில் செயலற்ற நிலைகள், வர்த்தகங்கள் மந்தம், பணங்காசு மறைவு, தொழிற்சாலைகளடைப்பு, தொரிலாளிகள் பட்டினி ஆகியவை ஏற்படுவானேன்? வாயுரைக் கொள்கைகளை வைத்து முடிவு கட்டுவதை விடக் கண்கூடான நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு முடிவு கட்டுவதே உண்மையில் சிறப்புடையதாகும். ஆயினும் வெறும் கொள்கையில்கூட முதலாளித்துவ அறிஞர் வாதத்தில் கோளாறு உண்டு. அவர்கள் செலுத்தும் கவனம் முழுவதும் நீண்டகாலப் போக்குகளில் மட்டுமே. வேற்றுமைகள் சரிப்பட்டுவிட்டபின் ஏற்படும் இந்நீண்ட காலங்களுக்கிடையில் வேற்றுமைச் சீர் கேடுகளும் எதிர் விளைவுகளும் நிறைந்த இடைக்காலத்தை அவர்கள் கவனியாது விட்டு விடுகின்றனர்.

ஒரு சமதர்ம எழுத்தாளர் இவ்வகையில் கூறுவதாவது: “உற்பத்தி, விலை இவற்றின் ஏற்றத்தாழ்வு விகிதங்கள் தம்மைத்தாமே சரிப்படுத்திக் கொள்ளும் என்ற இயற்கை நியதி நிறைவேற முதலாளிகள் நடைமுறையில் அனுமதிப்பதில்லை. விலைகளின் வீழ்ச்சி எவ்வளவு கடுமையாக இருந்தபோதிலும் உற்பத்தியைக் குறைக்க வேண்டிய அளவிற்கு இருப்பதில்லை. ஆகவே விலைகள் பின்னும் ஆதாயந் தருவதாகவே இருக்கின்றன. நுணுக்கத் துறை வளர்ச்சித் திறங்களின் மிகுந்த ஆற்றல், விலை ஏற்றத் தாழ்வின் மூலம் ஏற்பட வேண்டிய விளைவைத் தடுத்துவிடுகின்றது. ஆகவே அரசாங்கங்கள் இச்சமயம் தலையிட்டுத்தான் பட்டினியைத் தவிர்க்க முயற்சிகள் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இவ்வரசாங்கங்கள்கூட இயற்கை அமைதியைக் கட்டுப்படுத்தச் செயற்கையாகப் பொருட் பெருக்கத்தைக் குறைக்க வேண்டியிருக்கிறது.”

இவ்வளவோடு கதை முடிந்து விடவில்லை. திட்டமில்லா உற்பத்தியின் இயற்கைப் பலன் உற்பத்தியாளரிடையே ‘ஒருவர் குரல் வளையை ஒருவர் அறுக்கப் பார்ப்பார்களென்ற பழஞ்சொல்லை நினைவூட்டும், மோசமான போட்டியாகும். விளம்பர முறை இதுவகையில் ஒரு எடுத்துக்காட்டு. விளம்பரங்களில் ஒரு சிலவே தகவலறிவிப்பவையாயிருக்கின்றன. பெரும்பாலானவை போட்டி மனப்பான்மையுடன் முன்னுள்ள தேவைப் பொருள்களையே மீட்டும் வேறுருவில் தருவிக்கின்றன. கார்லைல் எடுத்துக்காட்டிக்கூறும் கதை ஒன்றில் லண்டன் ஸ்ட்ராண்டு பகுதியிலுள்ள ஒரு தொப்பி வர்த்தகன் மற்றப் போட்டியாளர்களைவிட நல்ல தொப்பிகளைச் செய்வதை விடுத்து அதற்கு மாறாக 7-அடி உயரமுள்ள பிரமாண்டமான தொப்பி ஒன்றைச் செய்வித்து அதனைத் தெருவழியே தள்ளிக் கொண்டுபோக ஒருவனை அமர்த்துகிறான். இத்தருணத்தில் அவர் கூறுவதாவது ’முன்னையிலும் சிறந்த தொப்பி செய்க’ என்ற இயற்கையன்னையின் பணியை அவன் கைவிட்டு விட்டான். இயற்கை அமைதியுடன் நடந்திருந்தால் அவன் இதனையே செய்திருப்பான் என்பதில் ஐயமில்லை. ஆனால், இப்போது அவன் தன் அறிவுத்திறத்தையெல்லாம் ஈடுபடுத்துவது, தான் அவ்வண்ணம் செய்வதாகக் காட்டிக் கொள்வதிலேயே. அவனுக்கும் இப்போது போலி வர்த்தகமே உலகத்தை ஆட்டிவைக்கும் கடவுளாய் விட்டார் என்பது தெரிந்து விட்டது போலும்!" இவ்வழியில் 7-அடித் தொப்பி இயற்றும் முயற்சி, உற்பத்தியாளனின் அறிவுத்திறம், விளம்பரக்காரன் உழைப்பு ஆகிய யாவும் முற்றிலும், விழலுக்கிறைத்த நீர் ஆகிறது. வீணழிவு மட்டுமன்றி விளம்பரத்தினால் வரும் இன்னொரு கேடு அதன் மூலம் பத்திரிகை உலகின் மீது ஏற்படும் நேர்மையற்ற ஆதிக்கம் ஆகும். பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் விளம்பரங்களில்லாமல் வாழ முடிவதில்லை. விளம்பரங்களைத் தரமாட்டோம் என்று அச்சுறுத்துவதன் மூலம் பல பத்திரிகைகளின் கோட்பாடுகளும் நோக்களுமே மாற்றமடைந்துள்ளன.

வீண் விளம்பரங்களோடு கூட அனாவசியமான வீண் வேலை இரட்டிப்புகள் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ளன. பக்கத்துக்குப் பக்கமாக இடப்படும் புகை வண்டிப்பாதைகள், சரக்குகளிருப்பில் இரண்டு தொகுப்பு வைத்திருத்தல். அதிகத்தளப்பரப்பு வைத்திருத்தல், சரக்குகள் கெட்டுப்போதல் முதலிய வகைகளில் எவ்வளவோ வீண் பொருளழிவு ஏற்படுகிறது.

இவையனைத்தும் தங்குதடையற்ற தனி மனிதர் போட்டியுரிமையின் இன்றியமையாப் பயன்கள். அவற்றால் ஏற்படும் சமூக நஷ்டம் மிகப் பெரிது.

சரக்குகளின் அளவை விடுத்து அவற்றின் தரத்தின் மீது கவனம் செலுத்தினால் தற்கால உற்பத்தி முறையில் தீமைகள் இன்னும் மிகுதியாகவே காணப்படும். ஒரே மனிதன் பல்வேறு துறைகளில் வெற்றி பெருவதானால், ஏமாற்றும் சரக்கு மாறாட்டமும் செய்யாமல் அங்ஙனம் செய்ய முடியாது. ஓர் உற்பத்தியாளன் இத்தகைய நேர்மையற்ற முறைகளைக் கையாளத் தொடங்கிவிட்டால், மற்றவர்களும் அவற்றையே கையாள வேண்டும். அல்லது தொழில் துறையை விட்டுச் செல்ல வேண்டும். மணல் கலந்த சர்க்கரை, அட்டைகள் உள்ளே வைக்கப்பட்ட மிதியடிகள் ஆகியவற்றைப் பற்றிய அனுபவம் நம் ஒவ்வொருவருக்குமே இருக்கிறது. ஓர் ஆசிரியர் குறிப்பிடுவ தாவது: “உணவுத் துறையில் அளவைப் பெருக்கிக் காட்டும் தந்திரமும், சரக்கு கலப்பட முறையும் பெருத்த ஆதாய மடைவதற்கான எளிய வழிகள் ஆகும். ஏனெனில், அவற்றைக் கடைசியாக வாங்கிப் பயன்படுத்துபவனுக்கு எதிர்க்கும் ஆற்றலும் இல்லை. சரக்கின் தரமறியும் அறிவும் கிடையாது…………….. உலகின் உணவுத் தொகுதியில் தனக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுக்கப் பெரும்பாலாகப் பெண்மணிகளே வருவர். இங்ஙனம் வரும் பெண்களுக்குத் தங்கள் வறுமை மிக்க குடும்பத்தில் வழக்கமாகக் கிடைக்கும் அனுபவமன்றி உணவின் உயர்வு தாழ்வு பற்றி வேறு எதுவும் தெரியாது.” சரக்குகளின் தரம் ஓரளவு நன்றாயிருக்கு மிடத்தில் கூட அவற்றின் கலைப் பண்பும் வனப்பும் சொல்லுந்தரமாயிருப்பதில்லை.

மேற்குறிப்பிட்ட தீமையை மட்டிலும் முதலாளித்துவ அறிஞர்கள் ஒப்புக்கொள்ளாமலில்லை. ஆனால் ‘இது ஒரு சில துணிகரக்கொள்ளைக்கார மனப்பான்மையுடைய தீயவர்கள் வேலைமட்டுமே, அதோடு எங்கள் முறையிலேயே இதனைத் திருத்துவதற்கான கூறுகள் இருக்கின்றன," என்று அவர்கள் கருதுகின்றனர். அது யாதெனில் ’உற்பத்தியாளர்கள் விலை மட்டிலுமல்ல போட்டியாடுவது, தரத்திலும்தான். ஆகவே உற்பத்தியாளர்கள் மனதில் மேன்மேலும் நல்ல தரமான சரக்குகள் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வர வர வளர இடமுண்டாகிறது. கடைசியாக அரசியலார் மேற்பார்வை, சரக்காய்வு, விளம்பரம் ஆகியவை இருக்கின்றன,’ என்பதே அவர்கள் விளக்கம்.

இத்தகைய திருத்தங்கள் நல்ல பயன் தரக்கூடும் என்ற நிலையிருப்பது உண்மையே - ஆனால், அப்பயன்கள் இருந்து வருகின்றனவா? தரத்தைக் குறைத்து அமோக ஆதாயம் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை தன் நலத்துக்காகவாவது தரத்தைப் பாதுகாக்கும் உணர்ச்சியைவிட சிலரிடம் மேம்பட்டுவிட ஏதுவாகிறது. அரசியல் மேற்பார்வையும் வலுவற்றதாக்கி விடப்படுகிறது. ஏமாற்று வித்தைகளில் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு ஒழிக்கப்படுமுன் பல வித்தைகள் முளைத்து விடுகின்றன. அதோடு சூழ்ச்சியறிவில் தேர்ந்த வழக்கறிஞர் படைகளின் உதவியால் உற்பத்தியாளர் சட்டத்தை மீறவும் சட்டத்தின் உதவியைக்கொண்டே அதன் வலைகளிடையே தப்பிச் செல்லும் வழி கண்டு கொள்ளுகின்றனர்.

முடிவாக - இத்தீமைகள் வேறோடு நீக்கப்பட்டால், அரசியல் மேற்பார்வைக்காகச் செலவிடப்படும் நாட்டுச் சாதன ஆதாரங்களத்தனையும், நாட்டு வாழ்வுக்கு வேறு வகையில் பயன்பட மீந்து நிற்பவையாகும். இவ்வாதார முழுவதும் பொருளுற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டால் மக்களுக்கு இன்னும் நல்ல உணவும் இன்னும் நல்ல உடையும் கிடைக்க வழி ஏற்படும்.

மேற்கூறப்பட்ட வர்த்தகச் சூதாட்டத்தை மின்மினியாக்கும் தன்மையுடையது. பொருள் துறைச் சூதாட்டம், ‘வெப்லன்’ எழுதுவதாவது: "பழைய பண அடிப்படைப் பொருளியல் (Money Economy) முறையிலும்; அதனோடிணைந்த பங்காளித்துவ முறைகள், தொழில் முயற்சிகளின் தனிஉடைமை முறை ஆகியவற்றிலும்; தொழில் உற்பத்தி நடைமுறைகளின் நிர்வாக நிர்ணய ஆதிக்கம் ஒருசில மனிதர் கையிலிருந்தது. அவர்கள் நலனும் நோக்கமும் பொதுமக்களின் பரந்த சமூகத்தின் நலன் நோக்கம் ஆகியவற்றிலிருந்து ஒரு படி வேறுபட்டது என்னலாம். ஆனால் அந்தப் பழைய பண அடிப்படைப் பொருளியல் முறையைவிடப் போதிய அளவு முதிர்ச்சியடைந்துள்ள பணமதிப்பு - அடிப்படைப் பொருளியல் (Credit-Economy) முறையிலும் அதனோடிணைந்த கொடுக்கல் வாங்கல் சக்தி வாய்ந்த மூல தன முறையிலும்; தொழில் துறையில் கொள்கை நிர்ணய உரிமையுடைய ஆதிக்க வர்க்கத்தினர், தங்கள் ஆதிக்கத்திலுள்ள நிலையங்களின் நலன்களிலிருந்து ஒருபடி வேறுபட்ட நலன்களை உடையவராகவும்; பொதுமக்கள் சமூகத்தின் நலன்களிலிருந்தும் மற்றும் ஒருபடி வேறுபட்ட நலன் உடையவர்களாகவும் இருக்கின்றனர்.

“நிலையங்களின் மேற்பார்வையாளர்களாகிய அவர் களுடைய தொழில் நோக்கம் உற்பத்திச் சரக்குகளின் நல்லுபயோகமுமன்று, அதன் விற்பனைகூட அன்று: தாங்கள் கையாண்டுவரும் முதலீட்டின் விலை மதிப்புக்களிடையே தங்களுக்குச் சாதகமாக ஏற்படும் உயர்வு தாழ்வு வேற்றுமைகள் மட்டுமே - அதாவது முதலீட்டின் உண்மையான சம்பாதிக்கும் ஆற்றலுக்கும் அவ்வாறு கொள்ளப்படும் மதிப்பீடான சம்பாதிக்கும் ஆற்றலுக்கும் உள்ள மாறுபாட்டளவே அவர்கள் தொழிலாதாயமாகும்.” அமெரிக்கத் தலைவர் ரூஸ்வெல்ட்கூடக் கீழ்வருமாறு தெரிவித்துள்ளார்: “சட்ட சபைகளையும் நகர சபைகளையும் கைக்கூலி முதலிய ஊழல்களால் கெடுத்து வாழ்பவனும், தன் கையில் சிக்கிய முதலீட்டுச் சீட்டாளர்களை (Stock-holders) உறிஞ்சி வாழ்பவனும் சூதாட்டக் களத்தில் பணம் பறித்துக் கொழுப்பவனை ஒத்த ஆன்மீக வளர்ச்சி நிலை உடையவரேயாவர்……… தரகு பெறுபவன்- மொழித்தரவுகளில் (Votes) வாணிபம் செய்பவன் - பிணையப் பணத்தில் சூழ்ச்சியாள்பவன் - ஒழுக்கக் கேட்டுக்கு வகை செய்பவன் - அதற்கு ஆதரவு தருபவன் - வழிப்பறிக் கொள்ளைத் தலைவன் - மக்கள் உணர்ச்சி வழி அவர்களை ஊக்கிப் பயன் பெறுபவன், (demagogue) - கூலிக்காக மக்களைத் துன்புறுத்திக் கொல்பவன் ஆகிய இன்னோர்களனைவரும் ஒருதரத்து ஊழல் பண்ணையில் முளைத்தவர்கள். மனிதத் தன்மையுடைய எவனும் இவர்களை வெறுக்காமலிருக்க முடியாது.”

பயனற்ற அல்லது தீமை தரும் பல தொழில்களை வளர்த்துப் பெருக்கும் குற்றம் முதலாளித்துவத்திற்குரியது. அவற்றுட் சில நாட்டு மக்களின் மிகச் சிறந்த மூளைகளைப் பயன்படுத்துகிறது. ஆயினும் சமூகச் செல்வ வளர்ச்சிக்கு அது சிறிதும் உதவுவதில்லை. வழக்கறிஞர்கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. உலகின் வழக்குகளில் 10க்கு 9 விழுக்காடு சொத்துரிமை பற்றியவையோ, அல்லது முதலாளித்துவத்தைச் சார்ந்த வேறு செய்திகள் பற்றியவையோதான். தனி உடைமை ஒழிக்கப்பட்டு விட்டால் இவ்வழக்கறிஞரின் தேவை மிகக் குறைந்து அவர்கள் உழைப்பு மற்ற ஆக்கத் துறைக்காரியங்களுக்கு உதவுமென்று சமதர்மிகள் நம்புகின்றனர்.

உற்பத்தித் திறமை பற்றியமட்டில் முதலாளித்துவத்தின் மீது சுமத்தப்படத் தக்க குற்றச் சாட்டுகள் இவை. சமதர்மிகளின் கண்டனத்தின் முதல் பகுதியாகிய இதனை விடுத்து அதன் இரண்டாம் பகுதிக்குச் செல்வோம். இது உழைக்கும் தொழிலாளிகளின் வாழ்க்கைச் சூழ்நிலைகள், இரு சாராரும் இணைந்து உற்பத்தி செய்யும் செல்வத்தில் அவர்களுக்குக் கிட்டும் பங்கு, அதன் பயனாய் அவர்கட்குக் கிடைக்கும் வாழ்க்கை வசதிகள் ஆகியவை பற்றியது. சமதர்மிகள் கண்டனத்தின் இவ்விரண்டாம் பகுதி முதற்பகுதியை விடக் காரசாரமானதும் விரிவானதும் ஆகும். நாம் ஏற்கனவே கூறியுள்ளபடி உழைக்கும் வகுப்பைச் சுரண்டி வாழ்வதே முதலாளித்துவத்தின் அடிப்படையாகும். தொழிலாளர்களில் பெரும்பாலோர் ‘கூலி அடிமைத்தனம்’ எனப்படும் நிலைமையில் உழல்கின்றனர்.

முதலாளித்துவத்தின் கீழ் உழைப்பாளிகளின் நிலையை இங்ஙனம் அடிமை நிலை என்று கூறுவது நேர்மையல்ல வென்றும், உழைப்பாளிகளின் தங்கள் வேலைகளை விட்டு விட்டு எங்கே செல்வதற்கும் யாரும் தடை செய்வதில்லை என்றும், ஆகவே அவர்கள் அடிமைகள் போன்றவர்களல்லர் என்றும் முதலாளிகள் கூறுவதுண்டு. ஆனால், சமதர்மிகள் இதற்குக் கூறும் விடை யாதெனில், ‘தொழிலாளிகள் கொள்கையளவில் சுதந்திர மனிதர்களே’ ஆனால் செயலளவில் அடிமைகள் நிலையிலிருந்து வேறுபட்டவர்களல்லர். ’உழைப்புக்கான சாதனங்களனைத்தையும் கைப்பற்றியிருப்பதன்மூலம் முற்காலங் களிலுள்ள எந்த அடிமை - முதலாளிக்குமில்லாத கொடுங் கோன்மையுரிமை இன்றைய தொழில் முதலாளிக்கு ஏற்பட்டிருக் கிறது. தற்காலத் தொழிலாளியை அவன் முதலாளிக்கே வேலை செய்யும்படி கட்டுப்படுத்தச் சட்ட முறைப்படி எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் வாழ்க்கைச் சாதனங்கள் வகையில் முதலாளி அடைந்துள்ள ஏகபோக நிலைமை எந்தத் தாள் சட்டக் கட்டுப்பாட்டையும்விட வலுவானது. பழைய அடிமைத்தனத்திற்கும், புதிய அடிமைத்தனத்திற்கும் இடையே யுள்ள தலைமையான வேறுபாடு யாதெனில் தற்கால அடிமை முதலாளிக்குத், தன் அடிமைகளை பட்டினியில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமைப்பாடுகூட இல்லை என்பதே. வேலை தொடங்குவது எப்போது, எவ்விடத்தில் என்பதையும், யாரை வேலையிலீடுபடுத்துவது, யாரை நீக்குவது என்பதையும் எத்தகைய வேலை செய்வது என்பதையும் முதலாளியே அறுதி செய்தல் வேண்டும். முதலாளியன்றி வேறு எவரும் அறுதியிட முடியாது.

கீர் ஹார்டி கூறுவதாவது: "உழைப்பாளி, தான் ’ஒருபழைய அடிமை முறையைவிட்டு, ஒரு புதிய அடிமை முறைக்குத்தான் மாறியிருக்கிறோம், என்று கண்டு கொண்டு விட்டான். ரோம்கால அடிமை, முதலாளியின் தோல்வாரினது கசையடியைவிட இன்றைய வயிற்றுப் பசியடி எத்தனையோ கொடுமையானது. தொழிலாளருக்கு இன்று வேலை கோரும் சந்தர்ப்பம் இல்லை, யாரும் அவனுக்கு வேலைதர வேண்டிய கடப்பாடு உடையவர் அல்லர். அன்றி அவன் தானே தன் வேலையைச் செய்யவாவது சுதந்திரமுடையவனா என்றால், அதுவுமில்லை. ஏனெனில், உழைப்பதற்காதாரமான நிலமும் அவனிடம் இல்லை, அதற்கு வேண்டிய முதலுமில்லை. உணவு கிடைக்குமிடம் தேடிச் சென்ற பழங்கால நாடோடிகள்போல் எந்த நிமஷத்திலும் வேலையைவிட்டு வேலையுள்ள இடம் நாடிச்செல்ல அவன் சித்தமாயிருக்க வேண்டும்.

“அவன் பட்டினி கிடக்காலம் ஆனால், உணவு உற்பத்தி செய்ய முடியாது. அவன் ஆடையின்றி இருக்கலாம், ஆடை நெய்ய முடியாது, வீடற்றவனாயிருக்கலாம்- வீடுகட்டிக் கொள்ள முடியாது, வேலை செய்யும்போது அவன் வேலை செய்யும் தொழிற்சாலையின் நடைமுறை விதிகள்மீதும் அவனுக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. எந்த வேலையைச் செய்ய வேண்டு மென்று உறுதி செய்வதும் அவனுக்கு அப்பாற்பட்டது. சொன்னதைச் செய்வதென்பதனுள் அவன் கடமைகள் தொடங்கி முடிவடைகின்றன. பக்கத்து இருக்கையிலுள்ள தொழிலாளியிடம் பேசுவதுகூட சட்டப்படி தண்டவரி சுமத்தப்படத்தக்க குற்றம் ஆகும். வேலை செய்யும்போது மகிழ்ச்சி தோன்றச் சீழ்க்கையடிப்பதுகூட முதலாளிக்குப் பிடிக்கா விட்டால் அதேவகைக் குற்றமாய் விடலாம். காலையில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் அடிக்கும் மணியோசை அவன் வாயில் கடந்து உட்செல்ல வேண்டும் என்றும் இயந்திரங்கள் வேலை செய்ய வேண்டுமென்றும் எச்சரிக்கை செய்யும் ஓசை ஆகும். குறிப்பிட்ட நேரத்தில் ஒரு மணி ஓசையோ சங்கு ஓசையோ அவனை வெளிச் சென்று உணவுகொள்ள அனுமதியளிக்கிறது. தான் ஓட்டும் இயந்திரமும் அவனுக்கு உரியதன்று, அவன் கூலிக்கு அல்லது வாடகைக்கு வாங்கப்பட்ட ஒரு சரக்கு; யார் வாங்குவார்களோ என்று ஏங்கி, வாங்க ஆள் கிடைத்தபோது மகிழவேண்டிய நிலையிலுள்ளவன் அவன்”

இவ்வடிமைத்தனத்தோடு கூடத் தொழிலாளிகளின் ஒரேபடித்தான இயந்திர உழைப்பால் ஏற்படும் மன முறிவு வேறு. தொழிற்சாலை வேலைத்திட்டம் என்பது மன எழுச்சியும் ஊக்கமுற்ற உயிரில்லாக் கட்டுப்பாடு, பல தொழிலாளிகளுக்கு அது ஒரு குறுகிய உலகமாய் விடுகிறது. உற்பத்திப் பெருக்கம் என்ற பலிபீடத்தின்மீது தனிமனிதன் சுதந்திரம் என்பது பலியிடப்படுகிறது. ஆட்ஸ்மித் கூறுவதாவது: “வாழ்க்கை முழுவதும் ஏதோ சிறிய எளிய வேலையிலேயே - அதுவும் ஒரேவிதான அல்லது கிட்டத்தட்ட ஒரேவிதமான பலனையே எப்போதும் மீண்டும் மீண்டும் தரும் வேலையிலேயே ஈடுபட்டிருப்பவனுக்குத் தன் அறிவைப் பயன்படுத்தவோ புதுமை காணும் ஆர்வத்தைத் தூண்டிப் பயிற்றுவிக்கவோ அல்லது ஏற்படும் தடங்கல்களை - தடங்கல்களே ஏற்படாததால் - அகற்றப் புதுவகைத் துறைகளைப் பற்றி முயன்று சிந்திக்கவோ தேவை ஏற்படாமலே போகிறது. இங்ஙனம் முயற்சியும் பயிற்சியுமில்லாக் காரணத்தால் முயற்சியாற்றலே நசித்துப் போகிறது. அவன் மனித முயற்சிகளற்று மனிதர் எவ்வளவு விலங்கு நிலைக்குச் செல்ல முடியுமோ அவ்வளவும் சென்று அறிவற்ற சடமாகின்றான். அவன் தொழிலில் அடையும் தேர்ச்சி இவ்வகையில் அவன் தன் அறிவுத்திறம், சமூக வாழ்வு, வீரம் ஆகிய பண்புகளைப் பறி கொடுத்துப் பெற்ற அற்பப் பொருளேயாகும்.”

தொழிற்சாலைகளில் தொழில் நிலைமைகள் மிகவும் உடல் நலத்துக் கொவ்வாததாகவும் மிகவும் மனத்தாங்கல் தருவதாகவும் இருக்கிறது. மார்க்ஸ் தம் ‘டாஸ் கேப்பிட்டல்’ (முதலீடு) என்ற நூலில் கூறுவதாவது:

“தொழிலாளர் தொழில் செய்யுமிடத்திலுள்ள சுகாதார நிலைமைகளை மட்டுமே இங்கே குறிப்பிட எடுத்துக் கொள்ளுகிறேன். செயற்கை நிலையாக ஏற்படும் காற்றின் வெப்பத்தாலும், தூசி நிறைவாலும், காது செவிடுபடும் சத்தத்தாலும், இவை போன்ற பிறவற்றாலும் ஐம்பொறிகளில் ஒவ்வொரு பொறிக்கும் ஒவ்வொரு வகையில் சம அளவான தீமையே ஏற்படுகிறது. சமூகக் கட்டுமுறையில் அமைந்த இவ்வுற்பத்திச் சிக்கன முறையானது செயற்கைப் பண்ணை களாகிய மூடுபெட்டியில் வளர்த்து உருவாக்கப்பட்ட முதலாளித் துவத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டபின், தொழிலாளர்க்கு உயிர் நிலையான வாழ்க்கை வசதியையே திட்டமிட்டுக் கொள்ளையிடும் கொள்ளையாகிவிடுகிறது. வாழுமிடம், வெளிச்சம், காற்று, உடலுயிர்களுக்கு ஆபத்த வராமல் காக்கும் உரிமை ஆகிய எல்லாம் பறிக்கப்படுகின்றன. இவ்வுற்பத்தி முறை அவர்கள் உடல் நலத்துக்கும், உயிருக்கும் உலைவைப்பதாகிறது, உழைப்பவன் வசதிகளுக்காக இவ்வியற்கைக் கருவிகள்கூடக் கொள்ளை போகின்றன. உழைப்பாளியின் நரம்பு மண்டலத்தை இத்தொழிற்சாலை வாழ்வு அரித்தெடுத்து விடுவதுடன், தசை மண்டலங்களின் பல்வேறுபட்ட செயலாற்றலையும் நசிக்கச் செய்கிறது. உடல் வகையிலும், உள்ளத்துகையிலும் உழைப்ப வனாகிய அம்மனிதன் சுதந்திரத்தை அது அணுஅணுவாகப் பறிமுதல் செய்துவிடுகிறது.”

இவையெல்லாவற்றையும்விடத் தீமை தருவது தொழிலாளிகள் செய்ய வேண்டும் தொழிலின் கடுந்தீவிரத் தன்மையாகும். இது அவர்கள் உயிரின் சத்தில் ஒவ்வொரு துளியையும் உறிஞ்சிவிடுகிறது. அவர்கள் வாழ்வின் வளத்தைத் தேய்த்து அவர்களை வெறும் எலும்புக் கூடுகளாக்குகிறது. தொழிற்சாலை இயந்திரங்கட்கும், சுரங்க விபத்துகளுக்கும் ஆளாகி, நூறாயிரக்கணக்கானவர்கள் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றார்கள். அவர்களிலும் பல நூறாயிரக்கணக் கானவர்கள் காயமடைந்தும் நோய்ப்பட்டும் நலிகிறார்கள். இவ்விபத்துக்களைத் தடுக்கச் செய்யப்படும் முயற்சிகள், செலவு பிடிப்பவையானால் நிறைவேறாது தடுக்கப்படுகின்றன. ஆதாயத்துக்குத் தடையாயிருக்கும்போது ஏழை மக்கள் உயிர் என்பது ஒரு சிறு தூசியளவு மதிப்புத் தான் பெறுகிறது. தொழில் முதலாளியின் அணிவகுக்கப்பட்ட வழக்கறிஞர் படைகளுக் கெதிரில் அனாதையான ஏழைத் தொழிலாளி சட்ட மார்க்கங்களிலும், எவ்வகை நீதியும் பெறமாட்டாதவன் ஆகிறான். செல்வமிக்க முதலாளியின் செல்வத்தைப் பெருக்கமட்டுமே உதவுகின்ற அபாயகரமான இம்முதலாளித் துவ இயந்திரத்திற்கு ‘பல வாய்களுக்கு ஒரு கையாய்’ இருந்து உணவு தேடிய தொழிலாளர் பலர் காணிக்கையாகச் செலுத்தப்பட்டதனால் நூற்றுக்கணக்கான, குடும்பங்கள் பட்டினிக்கிரையாகின்றன.

தொழிலாளியின் சூழ்நிலைகளில் காணப்படும் நிலைமையிது. ஆனால், முதலாளிகள் நாம் மேற்குறிப்பிட்ட மதிப்புரையை ஏற்பத்தில்லை. அவர்கள் கூறுவதாவது: தொழிலாளிகள் முதலாளிகளைச் சார்ந்து வாழ்கின்றனர் என்பது தவறு. அடிமை வாழ்வு என்று அவர்கள் வாழ்வைக் குறிப்பதற்கேயிடமில்லை. இருவரும் சம நிலையிலேயே தொடர்பு கொண்டுள்ளனர். தொழிலாளிகள் முதலாளிகளை எந்த அளவுக்குச் சார்ந்துள்ளனரோ அந்த அளவுக்கு முதலாளிகளும், தொழிலாளிகளைச் சார்ந்தே உள்ளனர்." முதலாளிகளின் இவ்வாதம் ஒரு உயிர்நிலையான உண்மையைப் புறக்கணித்து விடுகிறது. தொழிலாளிகள் வேலை செய்யாத காலத்தில் தனித்து நின்று வாழுவதற்கான வழிகளில்லாதவர்கள். அவர்கள் பேரம் செய்யும் ஆற்றலை இது பெரிதும் குறைத்து விடுகிறது. இந்நிலையில் முதலாளிகள் தொழிலாளிகளைச் சுரண்ட முடிவதில் வியப்பென்ன இருக்க முடியும்? மனித இயல்பு இருக்கும் நிலையில் இது இயற்கையேயாகும்.

முதலாளிகள் மேலும் கூறும் செய்தி ’வெளிச்சம், இயங்கும் இடம் ஆகிய வகையில் உடல் நலத்துக்கேற்ற குறைந்த அளவு இது என்று ஒவ்வொரு அரசாங்கமும் வரையறை செய்துள்ளதென்பதே: மற்றும் முதலாளிகளை எதிர்த்துக் கூட்டுப் பேரம் செய்து சரியான முன்னணியமைக்கும் வகையில் தொழிற் சங்கங்கள் அமைந்துள்ளன என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், கடுந்துன்ப நேரங்களில், தொழிற் சங்கங்கள் ஆற்று வெள்ளத்தில் அடிக்கப்பட்டுக் கொண்டிருப்பவனுக்குக் கிட்டிய துரும்பு போல் வலுவற்றதாய் விடுகின்றன. அத்தகைய வேளைகளில் தொழிலாளர் எதிர்ப்பின் பலனாகப் பல எதிர் விளைவுகள் ஏற்படுகின்றன என்பதும் மறுக்கக்கூடாத உண்மை ஆகும்.

அடுத்தபடியாக இருதரப்பாரும் இணைந்து உற்பத்தி செய்யும் உற்பத்திச் செல்வத்தின் பங்கீடு பற்றி, அதாவது, நிலம் உழைப்பு, முதலீடு ஆகிய மூன்று கூறுகளின் ஒத்துழைப்பினால் ஏற்படும் செல்வம் அல்லது, தேசீய வருவாயின் பங்கீடு பற்றிக் கவனிப்போம். முதலாளித்துவ நாகரிகத்தின் கீழ் தொழிலாளி களுக்குத் தேசீய வருமானத்தில் தங்கள் நேர்மையான பகுதியின் ஒரு சிறு அளவே கிடைக்கிறது. ஆகவே அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே வறுமைச் சேற்றில் கிடந்து உழலவேண்டிய வர்களாகிறார்கள். "முதலாளித்துவத்தின் கீழ் இக்குறை பாட்டுக்கு எதிராக உற்பத்தியாளரால் தரப்படும் வசதிகள் தொழிலாளர்களின் தேவையைக் கவனித்துத் தரப்படுபவையும் அல்ல; சமூகத்துக்குத் தொழிலாளிதரும் பொருள்களின் மதிப்பைக் கவனித்துத் தரப்படுபவையும் அல்ல; தொழிலாளர் உழைப்பாற்றல், விற்பனைக் களத்தில் வாங்கி விற்கும் ஒரு பொருளாயிருப்பதுடன், ஒவ்வொரு காலத்திலும் அதன்விலை, தேவை, தருவிப்பு, ஒழுங்குமுறையின்கீழ் (Unber the Law of supply and Demand) அறுதியிடப்படுவதாகவும் உள்ளது. நாளடைவில் எந்தவகையான உழைப்பின் கூலியும், அதன் உற்பத்திச் செலவுக்கு ஒத்தே போகிறது. இவ்வுழைப்பும் அதே உழைப்புக்குச் சமமான நீராவியாற்றல் அல்லது நீராற்றல் ஆகியவற்றைப் போல் மனிதத் தொடர்பற்ற ஒரு பொருளாக மதிக்கப்பட்டு விடுகிறது. தற்போது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள பொருளியல் கோட்பாட்டின் விளக்கப்படி சொல்வதானால், முதலீடு, நிலம், உழைப்பு ஆகிய மூன்று உற்பத்தி சாதனங்களில், உழைப்பு, மற்ற இரண்டுடன் ஒத்த ஒர சாதனமாக மட்டுமே கருதப்படுகிறது.’’

தொழிலாளர் துன்பமாவது அவர்கள் தாங்கள் உற்பத்தி செய்த செல்வத்தின் ஒரு கூறினையே பெறுகின்றனர் என்பது மட்டுமல்ல. இதைவிடக் கொடுமையானது உழைக்கும் வகுப்பில்கூட அவன் நிலைமை, இன்று எங்கோ, நாளை எங்கோ என்ற உறுதியற்ற தன்மையாய் இருப்பதே. "முதலாளியின் விருப்பு வெறுப்புக்கு ஒருபுறமும் தொழில் உலகப் போக்கின் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஒருபுறமும் ஆக இருவகைப்பட்ட அடிமை நிலை காரணமாகவும் தம் தொழில் உழைப்புத் துறையிலிருந்து அதைவிடவும் கீழான ஏதேனும் ஒரு நிலைக்கோ அல்லது, தொழிலில்லாத் திண்டாட்டப் படைகளில் ஒருவனாகும் நிலைக்கோ போய்விட வேண்டி வருமோ என்றி இடைவிடாத அச்சம் காரணமாகவும் தொழிலாளி என்றும் கவலை நிறைந்தவனாகிறான்’ (பெர்ன்ஸ்டீன்).

மேற்குறிப்பிட்ட கையழுத்த முறையை (Thumb-rule method) விட விஞ்ஞான நிர்வாக முறை சிறந்தது. தான் தொழிலாளர்கட்கு உற்பத்திச் செல்வத்தில் நேர்மையான பங்கு தருவதாக அது கூறிக் கொள்ளுகிறது. ஆனால் இம்முறையில்கூடத் தொழிலாளர் நேர்மையற்ற முறையில் நடத்தப்படுவதாக வற்புறுத்திக் கூறப்படுகிறது.

தொழிலாளர் இங்ஙனம் எப்படியும் மிகச் சிறிய அளவு பொருள்தான் ஈட்ட முடிகிறது. அதனால் அவர்கள் இரங்கத்தக்க நிலையில் மிகத் தாழ்ந்த வாழ்க்கைத் தரத்திலேயே மனநிறை வுடையவர்களாய் வாழவேண்டியிருக்கிறது. அவர்கள் மிக மோசமான, உடல் நலத்துக்கு முற்றிலும் ஒவ்வாத, நடுக்கந்தரும் வறுமை வாய்ந்த வீடுகளில் வாழவேண்டும். மாஞ்செஸ்டர் தொழிலாளர் நிலமைபற்றி எங்கெல்ஸ் தரும் ஓவியம் இது:-

"பெருந்திரளான இவ்வேழை மக்களைச் சமூகம் நடத்தும் வகை மிகவும் உள்ளத்தைத் துளைப்பதாயிருக்கிறது. அவர்கள் தாம் வாழ்ந்த நாட்டுப்புறத்தில் தாம் சுவாசித்த காற்றைவிடப் பன்மடங்கு நச்சுத் தன்மை வாய்ந்த காற்றையுடைய பெரிய நகரங்களுக்கு இழுத்துக் கொண்டுவரப்படுகின்றனர். அவர்கள் தங்குவதற்கென ஒதுக்கித் தரப்படும் நகரப் பகுதியிலும் அவர்களுக்குக் கிடைக்கும் கட்டடம் கட்டும் பொருள் வசதிக் குறைவு காரணமாக வீடுகளில் வேறெங்குமிருப்பதைவிட மோசமான காற்றோட்ட வசதியே கிடைக்கிறது. தூய்மையோடிருக்க உதவும் சாதனங்களெதுவும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. தண்ணீர்கூடத்தான் அவர்களுக்கு அருமையாகிவிடுகிறது. ஏனெனில், பணம் கொடுத்தாலன்றிக் குழாய்கள் போட்டுக்கொள்ள முடியாது. ஆறுகளிலோவெனில் அவற்றிலமைந்த அழுக்கின் பயனாக, அவை அழுக்கேற்றப் பயன்படுமேயல்லாமல், அகற்றப் பயன்படமாட்டா. குப்பை கூளங்கள் கழிசடை நீர்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேறு சாதனங்கள் ஏதுமில்லாததால் அவற்றை அவர்கள் தெருவில் வீட்டின் முன் கொட்டிக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. அவர்கள் வீட்டினுள்ளே உள்ள கழிசடை நாற்றம் போதாமல் தெருவின் முடை நாற்றம் பெரிதாயிருக்கிறது. இவ்வளவும் போதாதற்கு அவர்கள் அடிக்கடி ஓர் அறைக்கு 12 (ஒரு டஜன்) ஆட்கள் வீதம் ஆடு மாடுபோல் அடைந்து வாழவேண்டி யிருக்கிறது. அடிக்கடி அவர்கள், தங்குவதற்கு ஈரம் கசிந்த அறைகள், நிலவரைகள், பரணிகள் ஆகியவை தரப்படுகின்றன. இவற்றில் நிலக்கசிவைத் தடுக்கவோ, கூரை ஒழுக்கைத் தடுக்கவோ, வகை கிடையாது. அவர்கள் வீடுகட்டப்படும் விதத்தில் உள்வரக் கூடாதவை வருவது மட்டுமல்ல, வெளிச் செல்ல வேண்டுபவை - நாற்றம், நச்சுக் காற்று - வெளிச் செல்லவும் முடிவதில்லை. பாலத்திலிருந்து காணப்படும் இக்காட்சி நாடெங்கும் காணப்படும் காட்சியின் ஒரு கூறுமட்டுமே. அவர்கள் வீடுகளின் கீழ்ப்புறமாக இடுங்கிய நாற்றமிக்க கரி நிறக்கால்வாயாகிய ‘இர்க்’ ஓடுகிறது - அது அடித்துக்கொண்டு வரும் குப்பையும் கூளமும், ஆழம் குறைந்த அதன் வலது கரையோரத்தில் ஒதுக்கித் தள்ளப்படுகிறது. இந்த ‘இர்க்’ கால்வாயின் இரு கரைகளும் திட்டமிட்டு கட்டப்பட்டவையல்ல. உண்மையில் அவை ‘இர்க்’ அடித்துக் கொண்டுவந்து ஒதுக்கிய குப்பை கூளங்களால் உருவாகியவையே. வீடுகள் ஆங்காங்கு கந்தையின் முடிச்சுகள்போல் எழுந்து தோன்றும். மக்கள் வாழத்தக்க இடங்களின் கீழ்த்தர எல்லைகள் என இவற்றைக் கூறலாம். அவை உள்ளும் புறமும் ஒத்த அருவருப்பு உடையவை.

“தற்கால சமூகத்தின் புத்துலக அடிமைகளாகிய தொழிலாளர் வறுமை நிலையைப் பார்த்தால், அவர்கள் சேரிகள், அவர்கள் பக்கத்திலுள்ள பன்றிக்கூட்டங்களை, விட நேர்த்தியாயில்லை யென்றால், அதற்காக அவர்களை யாரும் குறை கூற முடியாது. எனது இவ்வர்ணனை மிக்க கோரமானதேயாயினும், இச்சேரியின் அழுக்கு, அழிபாடு, வாழ்க்கைக்கு மாறுபட்ட நிலைகள், தூய்மையின் வாடைக்குமிட மில்லாமை, காற்றோட்டமின்மை ஆகியவற்றின் கோரத்தை ஓரளவேனும்-மனக்கண்முன் கொண்டுவர இவ்விரிவுறைகூட ஒரு சிறிதும் போதாதது ஆகும்.”

இன்றைய சமதர்மிகள் பலரும் இதே போன்ற இருண்ட சித்திரங்கள் வரைந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலைகளின் தவறாத பயன் ஒன்றே - மனிதன் உயிராற்றல் இற்று விடுவதும், தொற்று நோய்களுக்கு அவர்கள் எளிதில் இலக்காகி இரையாவதுமே.

இச்சூழ்நிலைகளால் தொழிலாளர் மன உணர்ச்சி நிலைகளில் ஏற்படும் தாக்குதல் உண்மையில் மிகவும் தீமையானதேயாகும். “மயக்கந்தருங் குடி வகைகளில் மட்டுக்கு மிஞ்சி யீடுபடும் கெட்ட குணத்துக்கு அடுத்தபடியாக ஆங்கில நாட்டுத்தொழிலாளரிடையே காணப்படும் பெருங்கேடு, ஆண் பெண் பாலரின் தொடர்பில் ஏற்படும் வரம்பற்ற தன்மையாகும். ஆனால் இதுவும் தன் சுதந்திரத்தைச் சரிவரப் பயன்படுத்துவதற் கான வாய்ப்புக்களில்லாமல் பாதுகாப்பின்றி விடப்பட்ட ஒரு வகுப்பில் அந்நிலையின் இன்றியமையாப் பயனாய் ஏற்படும் காரண காரியத் தொடர்பான இயற்கை விளைவே. இன்ப வகுப்பினர் உழைக்கும் வகுப்புக்கு அனுமதிக்கும் இன்பங்கள் இந்த இரண்டு மட்டுமே - அவர்கள் மீது சுமத்தும் கடமைகளும் கடுமைகளும் மிகப்பல. எனவேதான் வாழ்க்கை இன்பத்தில் தமக்கு அனுமதிக்கப்படும் இச்சிறு பகுதியையேனும் முழு அளவில், துய்க்க எண்ணி, அவர்கள் அதில் தம் முழு ஆற்றலையும் ஈடுபடுத்தி வரம்புக்கு மிஞ்சிய இன்பத்துள், அமிழ்ந்து தம் நிலையழிகின்றனர்.”

இதே ஆசிரியர் மேலும் கூறுவதாவது. "சமூக அமைப்பு முறையில் உழைப்பாளிக்குக் குடும்ப வாழ்க்கை என்பது கிட்டத்தட்ட முடியாத காரியமாய் போய்விடுகிறது. இன்ப வசதிகள் எதுவுமற்ற வீடு……………மக்கள் கூட்டமாக நெருங்கி வாழ்வதால் புழுக்கமும் நச்சுக்காற்றும் நிறைந்த அறை ஆகிய இவற்றிடையே வீட்டு வாழ்வில் இன்பம் இருக்க முடியாது. கணவன் பகல் முழுவதும் வேலை செய்கிறான். பல இடங்களில் மனைவியும் மூத்த பிள்ளைகளும், தனித்தனி வேறிடங்களில் வேலை செய்கின்றனர். அவர்கள் காலையும் மாலையும் மட்டுமே சந்திக்கின்றனர் - அப்போதும் குடித்து அயர்ச்சி தீர்க்கும் அவாக்களுக்கிடையில். இச்சூழ்நிலையில் குடும்ப வாழ்க்கை ஒரு கேடா?

இதுமட்டுமா? "நாம் தொழிலாளியை அவனது தொழில் சக்கரத்துடன் சேரவைத்து இறுகக்கட்டி விடுகிறோம். அவன் தன் சூழ்நிலைகளையும் நிலைமைகளையும் அபிவிருத்தி செய்வதற்கான எந்தவகையான வாய்ப்புகளும் அவனுக்குக் கிட்டமுடியாமல் அவற்றிலிருந்து அவனை விலக்கி வைக்கிறோம். பண்பாடுடைய மக்களின் உயர் எண்ணங்கள், பரந்த அனுதாபங்கள் ஆகியவற்றில் பங்குகொண்டு நல்வாழ்வடைதற் கான வகைகளையும் அவனுக்கு மறுக்கிறோம். நமக்காக உழைக்கும் உழைப்பின் மூலம் அவன் வாழ்நாளைக் குறுக்குகிறோம். தொழிற்சாலைகளில் மாட்டி அவன் வளர்ச்சியை மட்டுப்படுத்துகிறோம். அதிக உழைப்பின் மூலம் அனாவசியமான நோய்களுக்கு அவனை ஆளாக்கி அவனை வதைக்கிறோம். ’ஆன்மாவின் வேதனைகளுள் மிகக் கொடிதாகிய வறுமையின் அச்சத்தால் அவனை ஓயாது தண்டிக்கிறோம். அவன் ஓயாது ஒழியாது உழைத்தும் அவன் மனைவி, பிள்ளைகள் அவன் முன்னாகவே நோயுற்று வாடி மாண்டு மடிகின்றனர். இத்தனையும் அவன்மீது சுமத்தியபின் அவனைக் குறைகூறுகிறோம்!

"அவனுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையிருப்பதில்லை என்கிறோம். உழைப்பால் அடையமுடியாத நலனைச் சூதாட்டத்தில் அவன் தேடி ஏங்கி ஏமாறுவதைக் கண்டிக்கிறோம். இயற்கை வாழ்வில் கிடையாத ஆறுதலைக் குடியால் பெற விரும்புவதைப் பழிக்கிறோம். பழி பாவம் என்ற உயர்ந்த பாறையின் சரிவில் உருண்டுகொண்டு வரும் அவன் தன் பழிகள் மூலம் வறுமையைப் பெருக்கியும், வறுமையின் மூலம் பழிகளைப் பெருக்கியும் நச்சுச் சூழலில் பட்டுழன்று இறுதியில் இவற்றின் பயனாய் சமூகத்தில் ஒரு தொற்றுநோய் என மதிக்கப்படும்படி செய்து இழிவுபடுத்துகிறோம். இவ்வளவும் நம் நன்மைக்காகச் செய்தபின், நமது ஆன்மாவின் ஆறுதலுக்காக நமக்கினிதான ஒரு வேதாந்தம் ஏற்படுத்திக் கொள்ளுகிறோம். வாழ்க்கையில் நன்மை தீமைகளின் சந்தர்ப்பங்கள் அவனுக்கு இருந்தும் அவன் தீமைகளை நாடிய குற்றத்தாலேயே அவன் துன்புறுகிறான் என்று அவன் மீது தீர்ப்பளித்துக் கொள்கிறோம்: அல்லது இரங்கு கிறோம். அவனிடையேயும், அவன் தோழரிடையேயும் சென்று இரக்கத்தால் தூண்டப்பட்டு, சிக்கனம், மிதக்குடி, நன்னெறி, நல்லறிவு ஆகியவைபற்றி உபதேசிக்கிறோம். ஆயினும் அவ்வுப தேசத்தினிடையே கூட நம் நலனுக்கும் அவன் அழிவுக்கும் வேராயிருக்கும் உடலுழைப்பு பற்றியும் வற்புறுத்தாமல் நம்மால் பேச முடிவதில்லை. அவர்கள் உழைப்பின் மூலமே ஓடவல்ல உற்பத்திச் சக்கரத்தை அவர்கள் ஓயாது ஒழியாது ஓட்டினால் தான் அவ்வுழைப்பைச் சுரண்டி நாம் வாழ முடியும் என்பதை நம் நல்லெண்ணெப் பூச்சுக்களிடையேயும் நாம் மறப்பதில்லை.

‘நம் தர்ம கைங்கரியங்கள்’ இப்பழிகளைக் குறைக்க முற்படுவது உண்மையே. ஆனால், இது பெரும் பழி செய்து அதனுடனே நுண்ணிய சிறு திருத்தங்களையும் உடன் செய்வது போன்றதுமட்டுமே. சமூகம் இன்று மனமாரத் தன் மக்களைப் பட்டினியாக்க முயலவில்லை என்பது உண்மையே. பஞ்சமும் வறுமையும் தாண்டவமாடும்போது தக்க உதவிகள் செய்ய முயற்சிகள் எடுக்கப்படவே செய்கின்றன. இதற்காகப் பெரும் பொருட் செலவில் பல அமைப்புகள் நிறுவப்பட்டு பல மக்கட் பணியாளர் தம் உழைப்பையும் ஊக்கத்தையும் அவற்றிலீடு படுத்துகின்றனர். ஆயினும், தர்ம சிந்தனையின் பலன் பல இடங்களில் துன்பத்தை இன்னும் பெருக்கவே செய்கிறது. “அது அஞ்சி அஞ்சி இரக்கும் அடிமை மனப்பான்மையையே தொழிலாளியிடம் வளர்க்கிறது. அவன் குடும்ப மதிப்பைக் குறைத்துத் தன் மதிப்பை அழித்து விடுகிறது. தர்ம சிந்தனையாகிய போர்வையின்கீழ் வஞ்சகர் அவன் குடும்ப நிலைமைகளைத் துருவியறிந்து அவனைப் பாழ்படுத்த வகை செய்துவிடுகிறது.”

உழைக்கும் வகுப்பின் துயர்களைத் தணிக்கவேனும் எத்தனையோ வகை முயற்சிகள் செய்யப்படுகின்றனவே என்று முதலாளிகள் கேட்பர். தொழிலாளர் நலன்களுக்கான சட்டப் பாதுகாப்புகளை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால், இவை துன்பங்களைக் குறைக்கப் பாடுபடுகின்றனவேயன்றித் துன்பத்தின் காரணங்களையறிந்து நீங்கும் நோக்கம் உடையவை யல்ல. துன்பம் அபாயகரமான அளவுக்கு அதிகப்பட்டுவிடாமல் காக்கவே அவை பயன்படுகின்றன. முதலாளித்துவம் எவ்வளவு காலம் நீடிக்குமோ, தொழிலாளர் கூலியானது தேவை - தருவிப்பு ஒழுங்குப்படி எவ்வளவு காலம் வரை அறுதியிடப்படுமோ, அவ்வளவு நாளும் வறுமை ஒழியாது, பெருகவே செய்யும்.

இங்ஙனம் எந்தக்கூறினை எடுத்துக்கொண்டாலும், முதலாளித்துவம் எத்தனையோ குறைபாடுகளும், குற்றங்களும் உடையதாயிருக்கிறது.

ஆகவேதான், முதலாளித்துவம் சமூக அமைப்பில் ஏற்பட்ட ஒரு நோய் என்றும் தற்கால நாகரிகத்தின் ஒரு சாபக்கேடு என்றும் உண்மையிலேயே ஒழிக்கப்பட வேண்டிய ஒரு தீமை என்றும் முடிவு செய்ய வேண்டியதா யிருக்கிறது.

‘முதலாளித்துவத்தின் திண்டாட்டம்’

முதலாளித்துவம் எத்தனையோ பொல்லாத தீங்குகள் நிறைந்தது. அவற்றின் பாரம் இப்போது அதனாலும் தாங்க முடியாததாயிருக்கிறது. அச்சுமை பொறுக்கக் கூடாமல் அது உள்ளூர ஏங்கிக் கதறிக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவத்தின் தோல்வி பெரும்பாலும் செல்வத்தையும், வருவாயையும் பங்கீடு செய்வதில் நேரிட்ட தோல்வியாகும். செல்வத்தின் உற்பத்தி பற்றிய பிரச்சினையை அது கிட்டத்தட்ட தீர்த்து வருகிறதென்றே கூறக்கூடுமாயினும் அதிலும், முழு நிறைவடையவில்லை. எப்படியும் முற்போக்கான நாடுகளில் உற்பத்தியாற்றல் முன் என்றுமில்லாத அளவில் எவ்வளவோ பெரிய வளர்ச்சிப் பெருக்கம் அடைந்துள்ளது, என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். முதலாளித்துவம் இத்துறையில் அடைந்துள்ள வெற்றியைக் குறித்து, ‘ராபர்ட் ஓவென்’, ‘கார்ல்மார்க்ஸ்’, ‘எங்கெல்ஸ்’ முதலிய சமதர்ம எழுத்தாளர் வாயாரப் பாராட்டிப் புகழ்ந்துள்ளார்கள். பெரிய தொழில் முதலாளி மன்னர்களான ‘கிரிப்ஸ்’, ‘போர்டு’ ஆகியவர்கள் தொழில் வளமாகிய குன்றில் எவ்வளவு உயர்ந்த கொடுமுடிகளை அடைந்து அவ்வுயர்வையும் பாதுகாத்து வருகின்றனர் என்பது வியந்து பாராட்டுவதற்குரிய செய்தியேயாகும்.

ஒரு தனிப்பட்ட அமெரிக்க கழுத்துப்பட்டை உற்பத்தித் தொழிற்சாலை மட்டும் ஆண்டுதோறும் ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் 3 பட்டைகள் வீதம் செய்து தரமுடியுமாம்! இவ்வளவு தூரம் உற்பத்தி திறம்படப் பெருக்கமடைந்துள்ளது என்பதைக் காணலாம். தற்காலத் தொழில் வசதி வினியோக நிலைமைகளின் பயனாக உற்பத்தியை எந்தச் சமயத்திலும் ஒரு விநாடி முன்னறிவிப்பின்பேரில் எத்தனை மடங்கு வேண்டு மானாலும் எல்லையற்ற அளவுக்குப் பெருக்கிவிட முடியும் என்று 1937-ல் நடைபெற்ற உலகப் பொருளியல் மாநாட்டில் சேம்பர்லேன் கூறினார்.

இவையனைத்தும் நல்லதே, பாராட்டுவதற்குரியதே. ஆயினும், கடைசியில் அதுவே பல கேள்விகளாக விடுகிறது. இதிலிருந்து இயற்கையான கேள்வி ஒன்று எழுகிறது. இம்மாபெரும் உற்பத்திப் பெருக்கம் மக்கள் வறுமையைப் போக்க உதவிற்றா? பாமரர்களின் துயரங்களையும் திக்கற்ற தன்மையினையும், குறைக்க உதவிற்றா? காலடியில் கிடந்து நையும் கோடிக்கணக்கான ஏழை மக்களின் மிக அவசியமான தேவைகளை ஒரு சிறிதளவாவது நிறைவேற்ற உதவிற்றா? இவற்றிற்கு மறுமொழி தெளிவான பதில் ‘இல்லை’ என்பதே. மக்கள் இன்னும் பட்டினியாகவேயிருக்கிறார்கள். குளிர் மிகுந்த ஊதற் காற்றில் ஆடவரும் பெண்டிரும் ஆடையின்றி நடுக்கத்துடன்தான் செல்கின்றனர். முதலாளித்துவ நாகரிக நாடுகளில் இளைஞர்களுக்கு இன்னும் வயிற்றுக்கு உணவு காண்பதே ஒரு தீராத பெரும் பிரச்சினையாயிருக்கிறது. உயிர் வாழ்வது எப்படி என்ற கவலையே இன்னும் உலகின் சிறந்த மூளைகளை வதைத்து வாழ்வை அரித்துத் தின்கிறது. இவற்றுக்குக் காரணம் என்ன?

உணவு, உடைகளோ ஏராளமாயிருக்கின்றன. மற்ற இன்றியமையாப் பொருள்களும், இன்பப் பொருள்களுங்கூட ஏராளமாகவே இருக்கின்றன. பசியால் நொந்தவர்களும், ஆடையற்றவர்களும் நிரம்ப இருப்பதால் இவற்றுக்கான தேவைகளும் மிகுதியாகவே உள்ளன. ஆயினும், இச்சரக்குகள் விற்கப்பட முடிவதில்லை. வாங்கப்படவும் முடிவதில்லை. தேவை மிக்கவர்கள் உண்ண உணவில்லாமலும் உடுக்க உடையில் லாமலும், இருக்கின்றனர். இவை ஏன்? இவற்றை வாங்குவதற்கு மக்களிடம் பணம் இல்லாத குறைதான். அவர்களிடம் தேவையிருந்தும் அத்தேவை (பணமின்மையால்) நிறைவேறுவ தில்லை. வாங்கும் விருப்பம் அவர்களிடம் உண்டு; வாங்கும் ஆற்றல் தான் கிடையாது. இதன் காரணம் உலகெங்கும் வேலையில்லாத் திண்டாட்டம் மிகுதியாய் இருப்பதே.

முதலாளித்துவம் உலகில் கோடிக்கணக்கான மக்களை வீடற்றவர்களாகவும், நாடோடிகளாகவும் ஆக்கியிருக்கிறது. ஏனெனில், முதலாளித்துவ இயந்திரம் ஓடுவதற்கு தொழி லில்லாமை என்பது மிக அவசியமான ஒரு கருவியாகும்! ஆனால் இதே தொழிலில்லாத நாடோடிகளுக்குப் பொருள்கள் வாங்கப் பணமிருக்க முடியாதென்பது இயற்கை. பணம் வானிலிருந்து பொழிவதில்லை, மண்ணிலிருந்து முளைப்பதில்லை. எங்காவது தொழிலில்லாதவனுக்குத் தொழில் கிடைத்தால்தான் அதனைப் பெறலாம். இங்ஙனம் தொழிலில்லாதவர்களுக்கு வாங்கும் ஆற்றலில்லாது போகிறது.

தொழிலுள்ளவர்களும், இவர்களைவிட மிக நல்ல நிலையிலில்லை. அவர்கட்குத் தரப்படும் கூலி அவர்கள் இன்றியமையாத தேவைகளுக்கு மட்டும் போதியது. அல்லது அதில் சற்று மீவது. எனவே மொத்தத்தில் மக்களுக்குப் போதிய வாங்கும் ஆற்றல் இல்லை. உலக மக்கள் தொகையில் பாதிப்பேர் உணவு, உடை, உறையுள் ஆகிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நிலையில் இல்லையென்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

அடுத்தபடியான நேரிய கேள்வியாவது: ’கூட்டு உழைப் பால் வரும் உற்பத்தியில் தொழிலாளிகளுக்கு ஏன் நேர்மையான பங்கு கிடைப்பதில்லை? பொதுப்படையாக முதலாளியே இவ்வகையில் குற்றஞ் சாட்டப்படுகிறான். அவனுடைய பேரவாவும், வரம்பற்ற பணப் பைத்தியமுமே இத்தீமையின் ஆணி வேர் என்று கூறப்படுகிறது. ஆனால், இதற்கான பழி முழுதும் முதலாளி மீதே சுமத்தப்பட வேண்டுமென்பதில்லை. ஏனெனில், ஒரு முதலாளி தானாக அதிகக் கூலி கொடுத்தானானால் விரைவில் அவன் கடையைக் கட்டவேண்டியதுதான். இந்நிலை தனி மனிதருக்கு மட்டுமல்ல. நாடுகளுக்கும் தான். ஒரு நாட்டின் உற்பத்தியாளர் மற்ற நாடுகளின் உற்பத்தியாளர்களது போட்டியைச் சமாளித்தாக வேண்டும். அதுமட்டுமன்று, எந்நாட்டினரும் தங்கள் தொழிலை அழிவினின்று பாதுகாக்க வேண்டுமானால் சர்வ தேசக் கூலியளவில் நின்றுதான் கூலி தரமுடியும். ஆகவே தாழ்ந்த கூலி கொடுக்கப்படுவது முதலாளிகளின் தனிப்பட்ட குற்றத்தினா லல்ல. முதலாளித்துவ முறைதான் அவர்களைக் குறைந்த கூலி கொடுக்க வற்புறுத்துகிறது. ஆதலால்தான் நாம் முதலாளிகளைக் குறை கூறுவதைவிட, முதலாளித்துவ முறையைக் குறைகூற வேண்டியவர்களாயிருக்கிறோம். முதலாளியிடம் இருக்கக்கூடிய குற்றமெல்லாம், அவன் பேராவலுக்கும், செல்வப் பித்துக்கும் அடிமையாயிருக்கக் கூடுமென்பதும், பணத்தினால் வரும் மதிப்பு, அதிகாரம் ஆகியவற்றின் ஆட்சிக்கு அடிமைப்பட்டு அவன் அவற்றின் பிடியிலிருந்து விடுபட முடியாதவனாயிருக்கக்கூடும் என்பதுமே. ஆனால், மனித இயற்கையின் இக்குறைபாடுகளை நாம் அனுதாபத்துடன் தான் கவனிக்க முடியும்.

ஒருபுறம் சரக்குகள் பெரிய அளவில் உற்பத்தி செய்யப் பட்டுக் குவிப்பதும், இன்னொருபுறம் அவற்றை வாங்கப் பொதுமக்களிடம் பணமில்லாதிருப்பதும் ஆகிய இந்நிலைமை களின் பயனாக உற்பத்தியான பொருள்கள் விற்கப்படாமல் போகின்றன. பண்டக சாலைகளில் பண்டங்களின் இருப்பு மிகுதியாகிறது. வர்த்தகர்களால் அவற்றை வெளியேற்ற முடியவில்லை. நாள் செல்லச் செல்ல இப்பண்டங்கள் பண்டகசாலைகளிலேயே கிடந்து மக்கி அழிவுறுகின்றன. புழு பூச்சிகள் தின்று அழிக்கின்றன. கெட்டும் அழுகியும் பெரும் பகுதி எறியப்பட வேண்டியதாகிறது. இவ்வழிகளில் இயல்பாய் அழியாதபோது வருந்தத்தக்க, வியக்கத்தக்க, திகைக்கத்தக்க வழியில் அவற்றை மனமார முதலாளிகளே அழிக்க நேருகிறது.

சரக்குகள் ஆதாயமான விலையில் முழுதும் விற்கப்பட முடியாத அளவில் உற்பத்தியாய்விட்டன என்று முதலாளிகள் கண்டால் அவர்கள் அவற்றை மனமார அழிக்க முற்படுகின்றனர். இம்முறைக்கு மாற்றான மற்ற முறையை - விலை தாழ்த்தி விற்பதை அவர்கள் விரும்புவதில்லை. ஏனெனில் அதனால் அவர்களுக்கு மேலும் சங்கடங்கள் உண்டாகும். விலைகள் தாழ்ந்துபோவதை அவர்கள் விரும்புவதற்கில்லை. விலைகளை உயர்வாக வைத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகக் கிட்டத்தட்ட பித்துக் கொள்ளிகள் செய்வது போலவே அவர்களும் கோடிக்கணக் கான ‘டன்’ பருத்தியைச் சொக்கப்பானை கொளுத்தவும், ஆயிர, பதினாயிரக்கணக்கான ஆரஞ்சுப் பழங்களைக் கடலில் அமிழ்த்தித் தள்ளவும் செய்கின்றனர்.

முதலாளித்துவத்தின் அறிவுக்கு முரண்பட்ட பரிதபிக்கத் தக்க நிலை இது. பசியால் வாடுகின்ற போதிய உடையற்ற மக்கட்கூட்டம் ஒருபுறம்; அத்துன்புற்ற ஆடவர் பெண்டிர் தேவைகளை நிறைவேற்றி அவர்களுக்கு இன்பமும் மகிழ்ச்சியும் தரவல்ல ஏராளமான பயன்படும் பொருள்களை வீணாக அழிக்கும் கொடுமை மற்றொருபுறம், என்ற இந்நிலைமையைப் பார்த்தால் தற்போதைய சமூக அமைப்பு முறையில் அடிப்படையான கோளாறு இருக்கிறதென்று மிகத் தெளிவாக விளங்குகிறது.

முதலாளித்துவத்தின் முரண்பாடு இத்துடன் நிற்கவில்லை. இன்னொரு மோசமான முரண்பாடு யாதெனில், எவ்வளவோ வேலை இன்னும் செய்யப்படாமல் கிடப்பதேயாகும். மூக்கைத் துளைக்கும் நாற்றமுடைய சேரிகள், மண் குடில்கள், இடுகலான சந்துகள், இட நெருக்கமிக்க திட்டைகள், அவற்றைச் சுற்றி இடைஞ்சல் தரும் சூழ்நிலைகள், இன்றும் நம் தற்காலத் தொழில் நாகரிகத்தின் ‘இருட் கூடங்கள்’ ‘தொற்று நோயிடங்கள்’ ஆகிய இவையனைத்தும் நல் சீர்திருத்த வேலைக்கு உரியவையாகக் கிடக்கின்றன. இவ்வளவு வேலை செய்யப்படாமலிருக்கும்போது உலக மக்களில் பாதிப்பேருக்கு மேல் வேலையில்லாம லிருக்கிறார்கள்! மக்கள் ‘தொழில் வேண்டும், தொழில் வேண்டும்’ என்று கதறுகின்றனர். அவர்கள் கைகள் வேலை செய்யத் தினவெடுக்கின்றன; ஆனால் தொழில் தருவாரில்லை!

முதலாளித்துவம் இப்போது போக்கிடமற்றதாகவும் நம்பிக்கையிழந்ததாகவும் இருக்கிறது. அது இயற்கையான சாவு செத்து வருகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் (U.S.A) கோடிக்கணக்கான ‘டன்’ கோதுமையைச் சுட்டுக் கருக்கிற்று. இங்கிலாந்தோ ஆயிரக்கணக்கான ஆரஞ்சுப் பழங்களைக் கடலில் தள்ளி அமிழ்த்திற்று. பிரேஃஜிலில் ஆயிரக்கணக்கான டன் காப்பிக்கொட்டையைப் புகைவண்டியியக்கும் பொறிகளில் எரிபொருளாய் பயன்படுத்தப்படுகிறதாம்! இந்நாடுகள் எவையும் தம் மக்கள் மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள் என்றோ, வயிறு நிறைந்தும் போதிய ஆடை அடைந்தும் வருகிறார்கள். என்றோ கூறமுடியாது. தொழிலில்லாத் திண்டாட்டம் முதலாளித்துவ நாடுகளெங்கும் அமர்க்களப் பட்டு வருகிறது. எங்கள் நாட்டில் வேலை செய்ய வேண்டுவதில்லை என்றோ எங்களிடையேயுள்ள தொழிலில்லா மக்கள் இன்பமாகவும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள் என்றோ எந்த நாடும் தைரியத்துடன் துணிந்து கூற முன் வராது. எங்கும் சூழ்நிலைகள் கேலிக்குரியதாகவும் அதேசமயம் மிக வருந்தத்தக்க தாகவும் இருக்கிறது.

திருமதி பார்பாரா ஊட்டன் கூறுவதாவது: “எப்பொழுதுமே பட்டினி கிடப்பதென்பது மனத்தை உருக்கும் காட்சி. அத்துடன் (அதற்கடுத்தபடியாக) போக்கிடமற்ற வறுமையிலிருப்பதும் செய்யத் தொழிலற்றிருப்பதும் பரிதாபத்துக்குரியவை. ஆனால், ஏராளமான செல்வப் பெருக்குக்கிடையே, அதை வைத்துக்கொண்டு பட்டினி கிடப்பதென்பது ஒரு பக்கம் கேலிக்கூத்தாகவும் மற்றொரு பக்கம் கோரமிக்கதாகவும் இருக்கிறது. செல்வப் பெருக்கத்தின் காரணமாகப் பட்டினி கிடப்பதென்பது இன்னும் மிகுதியாக வெறுக்கத்தக்கது. வெளிப்படையாகவே பல வேலைகள் செய்வதற்கு இருக்கும்போது வேலையில்லாமலிருப்பது இன்னும் எள்ளி நகையாடத்தக்கது. அதுவும், அவற்றின் இயந்திர சாதனங்களும் மூலப்பொருள்களும் பயன்படுத்தப்படாமல் கிடக்கும்போது வேலையில்லாதிருப்பது கேலிக்கூத்திலும் கேலிக்கூத்து, பரிதாபத்திலும் பரிதாபம்!”

இவ்வளவு ஏறுமாறான முரண்பாடு நிரம்பவுள்ள ஒரு முறையில் உண்மையில் ஏதோ ஒரு பைத்தியக்காரத்தனம் இருந்துதானே ஆகவேண்டும்? இம்முறையின் பயனின்மையும் தோல்வியும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் எண்பிக்கப்பட்ட பின்னும் அம்முறையின் கீழ் நாம் வாழ ஒருப்பட்டால் அத்தகைய மடமையையும் அறியாமையையும் எண்ணி வருங்காலத்திலுள்ள நம் பின்னோர்கள் நம்மை நகையாடமாட்டார்களா? ஒட்டிய வயிறுகளுடன் மட்டற்ற சரக்கு உற்பத்தியையும் வேலை கிடைக்காது சோம்பியிருக்கும் ஆட்களுடனே செய்ய வேண்டிய பெரிய வேலைகளையும் கொண்டிருக்கும். இத்தகைய அதிருப்தி நிறைந்த முறையை ஒழித்துக்கட்டும் நாள் இன்னுமா வரவில்லை? இக்கேள்விகளுக்கு ஒரே ஒரு விடைதான் இருக்கமுடியும். அது ‘ஆம், வந்து விட்டது’ என்பதே. முதலாளித்துவம் தன் வேலையைச் செய்து முடித்துவிட்டது. இனி அதற்கு வேலை யில்லை. இனி நமது நன்மை அப்பழைய நண்பனிடம் ‘போதும் உம் தொடர்பு; போய்வருக!’ என்று வழியனுப்புவதே!

பின்னுரை

ஒரு முறையின் குறைபாடுகளை எடுத்துரைப்பதே அதனைப் பழிக்கப் போதுமானது. ஆனால், அம்முறையை வேரோடு இலை தழை கொப்பு ஒன்றும் விடாமல் அகற்றி விடவேண்டும் என்ற உறுதியுடையவர்களின் வேலை அத்துடன் நின்றுவிடாது. அவர்கள் அகற்றி ஒழிக்க எண்ணும் முறையைவிட நல்ல திட்டமொன்றையும் உருவாக்க வேண்டும்.

பல மாற்று முறைகள் தரப்பட்டுள்ளன. ஆனால், கும்பல் கும்பலாகத் தரப்படும் மாற்று முறைகளிடையே ஒருவர் முடிவான ஒரு தீர்மானத்திற்கு வருவது அரிது. தரப்பட்ட மாற்று முறைகளான சமதர்மம், பொது உடைமை, மாற்றுடைமை (Syndicalism) சங்க சமதர்மம் (Guild Socialism) முதலிய பலவற்றினிடையேயும் புகுந்து சுற்றித் தேர்வு செய்ய எவ்வளவோ காலமும் பொறுமையும் அழ்ந்த ஆராய்ச்சியும் சமநிலை மனமும் வேண்டும்.

இப்பகுதி ஆராய்ச்சி இச்சிறு நூலிலடங்குவதன்றாதலால் அதனை வேறு தனி நூலுக்குரியதாகவிட்டு வைப்போம்.

முற்றிலும் புறக்கணித்துவிட முடியாத இன்னொரு கேள்வி இவ்விடத்தில் எழக்கூடும். முதலாளித்துவ மதத்தின் புரோகித ஆட்சியாளர் இக்குறைபாடுகளை உணர்ந்துள்ளனரா? உள்ளனரானால் அவற்றை அகற்ற அவர்கள் எடுத்துக் கொண்டுள்ள முயற்சிகள் எவை? அவற்றின் பலன் யாது?

இதற்கு விடையாகக் கூறப்படுவது யாதெனில் முதலாளித்துவ இயந்திரத்தின் உயிர்நிலையே திடுமென மூச்சடைத்து நின்றுவிட்டதாலும்: மிகக் கவலைக் கிடமான நெருக்கடிகள் ஏற்பட்டு நீண்டகால விளைவுகள் அதன் பயனால் ஏற்பட்டுள்ளதனாலும்; கடைசியாக சமதர்மிகள் அதனை உரத்த குரலுடன் எதிர்த்து நின்று முழுமையும் கண்டித்துவிட்ட தனாலும், முதலாளித்துவத்தின் ஆதரவாளர்கள்கூட அம்முறை யிலுள்ள பெருங்குறைபாடுகளை நன்கு கண்டுகொண்டனர். கட்டுப்பாடு, திட்டமமைத்தல் ஆகிய முறைகளின் மூலம் அக்குறைபாடுகளை அகற்றவும் அவர்கள் பெருமுயற்சி எடுத்துக்கொண்டனர். ஆனால், இம்முயற்சிகளனைத்தும் ஆவியாய் புகைந்துபோயின. இதுவகையில் ஜி.டி.எச். கோலினுடைய ‘பொருளியல் திட்டம் பற்றிய ஆராய்ச்சிகள்’ பொருளியல் திட்டம்பற்றிய ஆராய்ச்சிகள்’ என்ற நூலின் முடிவுரையிலிருந்து இவ்விடத்துக் கியைந்த சில உரைகளை அப்படியே இங்கே எடுத்துக் காட்டுவது பொருத்தமாயிருக்கும். அவர் கூறுவதாவது:-

“ஆழ்ந்து ஆராய்ந்தால் நம் முக்கிய படிப்பினையாவது முதலாளித்துவம் இயற்கையிலேயே திட்டமிடும் ஆற்றல் அற்றது. நேர்மாறாக சமதர்மமோ திட்டமிட முடிவது மட்டுமல்ல, திட்டமிட்டே தீர வேண்டியது. முதலாளித்துவத்தின்படி உற்பத்தியை ஒழுங்கமைப்பவர்களின் குறிக்கோள் மக்கள் தேவையை நிறைவேற்றுவதன்று; ஆதாயம் அடைவதேயாகும். ஆகவே கைவசமுள்ள சாதனங்களைப் பயன்படுத்தும் வகையில் முதலாளிகள் கொஞ்ச தூரத்துக்குமேல் செல்லமாட்டார்கள். மேலும், சாதனங்களை ஈடுபடுத்துவதால் ஆதாயம் குறையு மென்று கண்டால், அவர்கள் அதை நிறுத்திக் கொள்வார்கள். ஆனால், சமதர்மிகள் கிடைக்கத்தக்க உழைப்பாளிகள், உற்பத்திக் கருவிகள் முதலிய சாதனங்கள் முழுவதையும் மனிதர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் பயன்படுத்தத் தயங்க மாட்டார்கள். தற்போது தேவைகளை நிறைவேற்றுவதற்கு நம்மிடமுள்ள சாதனங்களைப் பார்க்கிலும் தேவை எவ்வளவோ எல்லையற்றுப் பெருக்கம் அடையத்தக்கவை. ஆதலால், பயன்படுத்தப்படத்தக்க எத்தகைய சாதனங்களையும் ஈடுபடுத்தாமலிருப்பதென்பது பொருளியல் வளர்ச்சிக்கு மாறானதாகும். இனி, ஓய்வு அல்லது இருக்கின்ற மூலப் பொருள்களே தேவைகளை நிறைவேற்றுவதற்குப் போதுமானது என்று ஏற்பட்டாலன்றி உற்பத்தி வளர்ச்சிக்கு ஓர் எல்லை காண முடியாது. சமதர்ம முறையில் தொழிலில்லாமை என்பதே கிடையாது என்பது மட்டுமன்று - தொழிலில்லாமை என்பதே என்றுமிருக்க முடியாது என்று கூடக் கூறலாம்.”

ஜி.டி.எச். கோல் தரும் இறுதிப் படிப்பினையாவது: “அறிஞராக்கப்பட்டவர்களை இருபெரும் போர்ப்படை வீடுகளாகப் பிரிக்க நாம் விரும்பினாலல்லாமல் நாம் பொருட்பெருக்கத்திற்குத் திட்டமிடாமலிருக்க முடியாது. - இத்திட்டத்திற்கான முயற்சிகள் முதலாளித்துவ முறையை அழிக்காமல் அதை அப்படியே வைத்துக் கொண்டு நம்மால் செய்யப்படக்கூடியவையும் அல்ல.”

அடிக்குறிப்புகள்

1.  G.D. H. Cole: What Marx Really Meant P.47.

2.  Bernard Shaw: The Inteligent Woman’s Guide P. 108 (Pelican)

3.  Bernard Shaw: The Inteligent Woman’s Guide P. 103 (Pelican)4. உலக வரலாற்றை மேநாட்டார் நான்கு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். 1. வரலாற்றுக்கு முந்திய காலம், கி.மு. 1500 வரை. 2. பண்டைக்காலம் கி.மு. 1500 முதல் கி.பி. 1500 வரை. 3. இடைக்காலம் அல்லது இருண்ட காலம் கி.பி. 500 முதல் கி.பி. 1500 வரை. 4. தற்காலம் அல்லது நாகரிக காலம் கி.பி. 1500 முதல். இவற்றுள் பண்டைக்காலம் கிரேக்கர், ரோமர் தமிழர் ஆகியவர் நாகரிக ஒளி பரவியிருந்தது. தற்காலம் மேனாட்டு நாகரிக ஒளி பரவியிருக்கிறது. இடைக்காலம் ஐரோப்பாவில் நாகரிகமில்லாத காலம். இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் சமய புராண ஆதிக்கமும் பகுத்தறிவு விளக்கமின்மையும் நிறைந்திருந்த இக்காலத்தை வரலாற்று ஆசிரியர்கள் இருண்டகாலம் என்கின்றனர். வரலாற்றுக்கு முந்திய காலம் உலகில் நாகரிகமே ஏற்படாத காலம். ஆயினும் எகிப்து, திராவிட இந்தியா, பாபிலோனியா ஆகிய இடங்களில் பரந்த, மறைந்த ஒரு நாகரிக நிலையிருந்தது.

4.  John Strachey: The coming Struggle for Power, Ch. 2.6. குநரனயடளைஅ: நில ஆதிக்க ஆட்சிமுறை. இது ஐரோப்பாவில் ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து தொடங்கி 1200 வரை தழைத்துப் பின் அழிந்த முறையாம். இதன்படி அரசனே எல்லா நிலங்கட்கும் உரிமையாளன். அவனுக்குக் கீழ் பல படியான பெருமக்கள் (Over lords & lords) ஒருவர் கீழ் ஒருவராக நிலத்தைப் பிரித்துப் பெற்றுப் பின் குடியானவர்களிடம் அதைப் பயிரிட விட்டனர். பெருமக்கள் ஜமீன்தார்கள் போல் குடியானவர்களை அடக்கி ஆண்டு போர்க்காலத்தில் மட்டும் தம் படைகளுடன் அரசனுக்கு உதவினர். பெருமக்களே ஆதிக்கம் வகித்த இம்முறையை நில ஆதிக்கமுறை என்கிறோம். நுnஉடடிளரசந ஆடிஎநஅநவே: மனைவேலி இயக்கம். இது இங்கிலாந்தில் 14-ம் நூற்றாண்டில் ஏற்பட்டது. 1348-ல் நிகழ்ந்த பெரிய பிளேக் நோயினால் உழவுத் தொழிலாளர் குறைந்து கூலி மிகுந்ததனால் நில முதலாளிகள் நிலத்தை வேலியிட்டு ஆடு மாடுகளின் பண்ணைகளாக்கிக் குடியானவர்களைத் தவிக்க விட்டனர். உழவு நாடாயிருந்த இங்கிலாந்து தொழில், வாணிக நாடாகத் தொடங்கியது இதனாலேயே.

5.  W.H. Mallock: Acritical Excamination of Socialism, PP-2-3.

6.  Cole: op. cit. P.107.

7.  Jayaprakash: Why Socialism? P. 15.

8.  Cole: Op: cit. PP. 51-22.

9.  Spargo & Arner: Elements of Socialism, Ch. III.

10. Agger: Organized Banking, P.95,

11. Cole: What is Ahead of Us, ch.I

12. Mellor: Socialism, in Ercyclopedia of Religion and Ethics, Vol.XI.

13. Skelton: Socialism P. 16

14. Spargo and Arner: Elements of Socialism P.227.

15. Bernard Shaw: The Inteligent Woman’s Guide (Pelican) PP. 138-139.

16. Adam Smith: Wealth of Nations, bk. IV. ch. IX.

17. Stafford Cripps: Why this Socialism? P. 56.

18. Carlyle: Past and Present, P.122.

19. Charlotte P. Stetson, Women and Econamics.

20. See Spargo and Arner, Op. cit. PP.20-21.

21. Veblen:- Theroy of Business Enterprise, PP. 158-159.

22. Keir Hardie:- From Serfdom of Socialism, Quoted by Skelton in Socialism.

23. Adam Smith: Wealth of Nations bk V. Ch. I.

24. Ghent: Mass and class.

25. Spargo and Arer: Op. cit. P.14.

26. e.g. Simons: Packingtown.

27. Engels: Conditions of the Working class, P. 128.

28. G.D.H. Cole: Studies in Economic Planning. PP.262, 356.