பிரஞ்சு அறிஞர் ரூசோவின் சமூக ஒப்பந்தம்
கா. அப்பாத்துரையார் 

மூலநூற்குறிப்பு

  நுற்பெயர் : பிரஞ்சு அறிஞர் ரூசோவின் சமூக ஒப்பந்தம் (அப்பாத்துரையம் - 45)

  ஆசிரியர் : கா.அப்பாதுரையார்

  தொகுப்பாசிரியர் : முனைவர் கல்பனா சேக்கிழார்

  பதிப்பாளர் : கோ. இளவழகன்

  முதல்பதிப்பு : 2017

  பக்கம் : 20+252 = 272

  விலை : 340/-

  பதிப்பு : தமிழ்மண் பதிப்பகம், எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை 600 017, தொ.பே.: 24339030, செல்: 9444410654

  மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in

  தாள் : 16.0 கி. மேப்லித்தோ, அளவு : 1/8 தெம்மி

  எழுத்து : 11.5 புள்ளி, பக்கம் : 312

  கட்டமைப்பு : இயல்பு படிகள் : 500

  நூலாக்கம் : கோ. சித்திரா

  அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)

  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.

நுழைவுரை

தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர்.

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம்.

தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும்.

தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம்.

தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.

அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன.

இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும்.

தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள்

கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை

யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர்

திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன்,

திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர்.

இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய ‘கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும்’சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி.

நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

“ஆக்கத்தை எனக்கிந் நாட்டார்
அளித்திட்ட அறிவை யெல்லாம்
தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே
செலவிடக் கடமைப் பட்டேன்.”

-   பாவேந்தர்

கோ. இளவழகன்

தொகுப்புரை

மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்!
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின.

“அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார்.

சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன.

-   தனித்தமிழ் இயக்கத் தோற்றம்

-   நீதிக் கட்சி தொடக்கம்

-   நாட்டு விடுதலை உணர்ச்சி

-   தமிழின உரிமை எழுச்சி

-   பகுத்தறிவு விழிப்புணர்ச்சி

-   இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர்

-   புதிய கல்வி முறைப் பயிற்சி

-   புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம்

இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன.

“தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது!

அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்!

பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக,

-   உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல்.

-   தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல்.

-   தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல்.

-   தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல்.

-   திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல்.

-   நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல்.

இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது.

பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது.

உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன.

1.  தமிழ் - தமிழர் - தமிழ்நாடு

2.  வரலாறு

3.  ஆய்வுகள்

4.  மொழிபெயர்ப்பு

5.  இளையோர் கதைகள்

6.  பொது நிலை

பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும்.

இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின்

உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன.

** -கல்பனா சேக்கிழார்**

நூலாசிரியர் விவரம்

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்
  இயற்பெயர் : நல்ல சிவம்

  பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989

  பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி

  பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி)

  உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர்

  மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு

  வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா

  தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி

  பள்ளிக் கல்வி : நாகர்கோவில்

  கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம், இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி ‘விசாரத்’, எல்.டி.

  கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி)

  நூல்கள் : 120 (ஆங்கிலம், 5)

  இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை.

  பணி :

-   1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர்.

-   1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர்.

-   பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு.

-   1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி

-   1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர்.

-   1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர்

அறிஞர் தொடர்பு:

-   தொடக்கத்தில் காந்திய சிந்தனை.

-   1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு

விருதுகள்:

-   மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது,

-   1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் ’சான்றோர் பட்டம்’, ‘தமிழன்பர்’ பட்டம்.

-   1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ’கலைமாமணி’.

-   1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய ’திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம்.

-   மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய ’பேரவைச் செம்மல்’ விருது.

-   1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.

-   1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார்.

-   இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது.

பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்:

-   அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005.

-   பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007.

பதிப்பாளர் விவரம்

கோ. இளவழகன்
  பிறந்த நாள் : 3.7.1948

  பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625,தஞ்சாவூர் மாவட்டம்.

  கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு

  இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல்

ஆற்றியுள்ள பொதுப்பணிகள்

1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர்.

பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் ’ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர்.

உரத்தநாட்டில் ’தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர்.

பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ’உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர்.

தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும்,

19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர்.

பொதுநிலை

தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர்.

தொகுப்பாசிரியர் விவரம்

முனைவர் கல்பனா சேக்கிழார்
  பிறந்த நாள் : 5.6.1972

  பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம்.

  கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர்

  இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

ஆற்றியுள்ள கல்விப்பணிகள்

-   அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி.

-   திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு.

-   புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.

-   பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.

-   பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார்.

-   50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

-   மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.

-   இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார்.

-   செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார்.

நூலாக்கத்திற்கு உதவியோர்

தொகுப்பாசிரியர்:

-   முனைவர் கல்பனா சேக்கிழார்

கணினி செய்தோர்:

-   திருமதி கோ. சித்திரா

-   திரு ஆனந்தன்

-   திருமதி செல்வி

-   திருமதி வ. மலர்

-   திருமதி சு. கீதா

-   திருமிகு ஜா. செயசீலி

நூல் வடிவமைப்பு:

-   திருமதி கோ. சித்திரா

மேலட்டை வடிவமைப்பு:

-   செல்வன் பா. அரி (ஹரிஷ்)

திருத்தத்திற்கு உதவியோர்:

-   பெரும்புலவர் பனசை அருணா,

-   திரு. க. கருப்பையா,

-   புலவர் மு. இராசவேலு

-   திரு. நாக. சொக்கலிங்கம்

-   செல்வி பு. கலைச்செல்வி

-   முனைவர் அரு. அபிராமி

-   முனைவர் அ. கோகிலா

-   முனைவர் மா. வசந்தகுமாரி

-   முனைவர் ஜா. கிரிசா

-   திருமதி சுபா இராணி

-   திரு. இளங்கோவன்

நூலாக்கத்திற்கு உதவியோர்:

-   திரு இரா. பரமேசுவரன்,

-   திரு தனசேகரன்,

-   திரு கு. மருது

-   திரு வி. மதிமாறன்

அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு:

-   வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14.

பிரஞ்சு அறிஞர் ரூசோவின் சமூக ஒப்பந்தம்

முதற் பதிப்பு - 1952

நூற்சிறப்பு

நூல்: உலகையே மாற்றியமைக்க உதவிய ஒரு நூல் எது என்று கேட்டால் ‘சமூக ஒப்பந்தம்’ என்று தயங்காமல் கூறலாம். அமெரிக்கப் புரட்சிக்குத் தூண்டுதல் தந்து, பிரஞ்சுப் புரட்சியை எழுப்பி, உலகப் புரட்சிக்கே அது மூல காரணமாயிருந்தது.

‘சமூக ஒப்பந்தம்’ அல்லது ‘அரசியல் உரிமை முறையின் தத்துவங்கள்,’ என்பது நூலின் முழுப்பெயர். 1756இல் தொடங்கி முற்றுப்பெறாது விடப்பட்ட ‘அரசியல் நிலையங் கள்’ என்ற பெருநூலின் ஒரு முழுப் பெரும் பகுதி அது.

ஆசிரியர்: ‘ஒரு சுதந்திர நாட்டில் பிறந்து, அதன் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமைப் பேறு பெற்றவன்,’ என்று சமூக ஒப்பந்தத்தில் அதன் ஆசிரியர் ஜீன் ஜாக்ஸ் ரூசோ, தம் தாயக அரசு பற்றிப் பெருமைப்படுகிறார். அத்தாயக அரசு ஜெனிவாவே. அவர் அதில் 1712இல் பிறந்தார். ‘கலைகளும் இயல்களும் மக்கள் சமூக வாழ்வை மாற்றியமைத்த வகை’ ‘சமத்துவம் கெட்டழிந்த வரலாறு’ என்ற கட்டுரைகளும் கல்வி முறை பற்றிய கருத்துரையான ’எமிலி’யும் ’சமூக ஒப்பந்த’மும், ’உள்ளக் கருத்துகள் (confessions) என்பதும் அவரது சிறந்த நூல்கள் ’சமூக ஒப்பந்தத்’தில் ஜெனிவா அரசியலைப் புகழ்ந்திருப்ப தனால், அந்த நாட்டரசியல் அந்நூலை நன்கு வரவேற்கும் என்று அவர் நம்பியிருந்தார். ஆனால் அதன் மக்கள் சமத்துவக் கேட்டை அவர் கண்டித்திருந்ததனால், அந்நூல் அரசியலாரால் எரிக்கப்பட்டது. அவரும் அந்நாட்டின் குடியுரிமையை 1763இல் தூக்கி எறிந்தார். 1778இல் அவர் இயற்கை யெய்தினார்.

சமூக உரிமை

அரசியல் சமூக வாழ்வின் அமைதி முறைகளை ஆராய்ந்து வழிவகுக்க ஒருவன் மன்னனாகவோ, மன்னுரிமைச் சட்டங்கள் வகுப்பவனாகவோ இருக்க வேண்டியதில்லை. அவ்வாறு இருந்தால், அவன் அவற்றுக்கு வழி காட்டமாட்டான்; அவற்றைச் செயலாற்றுவான். தவிர ஒரு சுதந்திர நாட்டில் பிறந்து, அதன் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை உடையவன் என்ற முறையில், ஆளும் வகைபற்றி அவர்களுக்கு என் கருத்தைத் தெளிவுபடுத்தும் கடமை எனக்கு உண்டு. இந்நூல் அதை ஆற்றுகிறது.

மனிதர் பிறப்பது சுதந்திரமாகவே. ஆனால் எங்கும் வாழ்வில் அவர்கள் கட்டுண்டு கிடக்கின்றனர். பிறப்புக்கும் வாழ்வுக்கும் இடையே இந்த மாறுபாடு எப்படி வந்தது?

அடிமைகளின் தலைவர்கள்என்று சிலர் தம்மைக் குறித்துக் கொள்வதுண்டு. அவர்களும் அடிமைகளே.

அரசியலாட்சியும் சமூக ஆட்சியும் மனிதருக்காக அமைந்தவையே. மனிதர் அரசியல் ஆட்சிக்காகவும் சமூகத்துக்காகவும் அமைந்தவர் அல்லர்.

சமூகம் ஒரு பெரிய குடும்பம்: குடும்பம் ஒரு சிறிய சமூகம். குடும்பத்தில் பிள்ளைகள் நலத்துக்காகத் தந்தை அவர்கள் இயற்கை யுரிமையைத் தாம் கைக்கொண்டு செயலாற்றுகிறார். பிள்ளைகள் தேவை தீர்ந்த கணமே, தந்தையும் பிள்கைளும் ஒரே நிலையடைந்து ‘மக்கள்’ ஆகின்றனர். அதற்குப் பின்னும் தந்தை உரிமையாட்சி நீடிக்கலாம். ஆனால் இது முந்தைய இயற்கையுரிமையன்று

சமூகத்திலும் மக்கள் நலத்துக்காகவே சமூகத் தலைவரும் ஆட்சியாளரும் அவர்கள் இயற்கை உரிமைகளைக் கையாளு கின்றனர். தத்தம் நலங்கருதியே, ஆக்கம் கருதியே, மக்கள் தம் இயற்கை உரிமையைப் பொது உரிமையாகச் சமூகப் பொதுமைக்கு விட்டுக்கொடுக்கின்றனர். அப்பொது வுரிமையில் அவர்கள் பங்கு, அவர்கள் குடியுரிமை. அப்பொதுவுரிமையைக் காப்பதில் அவர்கள் பங்கு, அவர்கள் கடமை. தலைவர் கடமையை இயக்கும் முழு பொறுப்பும் ஏற்று, அதற்காகவே முழு உரிமையையும் கையாளுகின்றனர்.

உரிமை, வலிமையால் ஏற்படுவது என்று சிலர் கருதுகின்றனர். இது தவறு. வலிமையால் ஏற்படும் ஆதிக்கம் வலிமையாலேயே என்றும் காக்கப்பட வேண்டும். வலிமையால் அது போக்கப்படவும் முடியும், வலிமை இருக்குமளவே அது இருக்கும். ஆகவே வலிமையால் ஏற்படும் ஆதிக்கம் ஆதிக்கமட்டுமே, உரிமை ஆட்சி ஆகாது. வலிமைக்கு அடங்கி நடப்பது அடிமை, அச்சம், கோழைமை, அறியாமை ஆகலாம்; கடமை ஆகாது.

‘ஆளப்படுபவர் நலனுக்காக ஆட்சி’ என்பதை அறிஞர் குரோட்டியஸ் மறுக்கிறார். அடிமை முறையைச் சுட்டிக்காட்டி ஆட்சியுரிமை ஆட்சியால் ஏற்படுவதே என்கிறார். ஆனால் மனித இனம் பேரரசர் காலிகுலா கருதியது போல், ஒரு சில மனிதக் கோனார்களுக்குச் சொந்தமான மனித ஆட்டுமந்தை அல்ல. ஆளப்படுபவரைப் போல, ஆள்பவரும் மனிதரே.

‘’சிலர் சுதந்திர உரிமை பெறப் பிறக்கிறார்கள். சிலர் அடிமை நிலை பெறவே பிறக்கிறார்கள். அடிமை நிலையை அவர்கள் விரும்பி ஏற்பதையும் காண்கிறோம்’’ என்கிறார் அரிஸ்டாட்டில். அடிமையான ஒரு தந்தையின் அடிமைத் தனத்தை அவர் பிள்ளை இயற்கையாக ஏற்பதையே இங்கே அரிஸ்டாட்டில் குறிப்பிடுகிறார். ஆனால் முதல் அடிமைத்தனம் பிறப்பினால் ஏற்பட்டிருக்க முடியாது. வலிமை காரணமாக அல்லது அச்சம் காரணமாகவே ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதை அரிஸ்டாட்டில் கவனிக்கவில்லை. அதே சூழ்நிலை இருக்கும்வரை அது தலைமுறை தலைமுறையாக நீடித்து இருக்கலாம். ஆனால் அடிமையின் பணிவு எப்போதும் அச்சம், கோழைமை, மடமை ஆகியவற்றுள் ஒன்றின சின்னமாகவே இயலக்கூடும். தன் நலங்கள் பற்றிய அறிவு உடைய இணக்கம் அதாவது கடமை ஆகாது.

மனிதரிடையே வேறுபாடுகள் உண்டு. இயற்கை வேறுபாடுகள் கூட உண்டு. ஆனால் உயர்வு தாழ்வு கிடையாது. சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் சில வேறுபாடுகள் உயர்வுதாழ்வு உண்டுபண்ணலாம். ஆனால் இது நிலையான தன்று. வலிமையுடையவர் ஆள்வர் சில காலம். செல்வமுடைய வர், அறிவுடையவர் என வேறு பல திறத்தவர் வேறு பல காலம் ஆள்வர். ஆகவே மொத்தத்தில் மனிதரிடையே வேறுபாடுகள் உண்டானாலும், உரிமையில் எல்லோரும் சரிநிகரே ஆவர்.

போர் வெற்றி, அடிமைத்தனத்துக்கும் காரணம், ஆட்சி உரிமைக்கும் காரணம் என்று அறிஞர் ஹாப்ஸ், குரோட்டியஸ் ஆகியோர் கூறுகிறார்கள். போர் வெற்றி அடிமைத்தனத்துக்குக் காரணமாகலாம். ஆனால் அந்த வெற்றியின் வலிமை இருக்கும் அளவே அடிமைத்தனம் நிலவும். ஆட்சியுரிமையோ அல்லது வேறு எந்த உரிமையோ போர் வெற்றியினால் ஏற்பட முடியாது. போரில் நாட்டு மக்களுக்கு நாட்டு மக்கள் பகைவரல்லர். மன்னருக்கு மன்னர்தான் பகைவர். தோற்ற மன்னர் நாடிழக்கலாம். அதனால் வென்றவர்க்குப் புது உரிமை வந்து விடாது. ஏனெனில் உரிமை எப்போதும் மக்கள் விருப்பத்தைப் பொறுத்தது.

போரில் கொல்லும் உரிமையால், கொல்லாது விடப்பட்டவர் உயிர்மீது வெற்றியாளருக்கு உரிமை ஏற்படுகிறது என்று சிலர் கூறுகின்றனர். கொல்லும் வலிமை அல்லது வாய்ப்பு உடையவராயிருப்பது கொல்லும் உரிமை ஆகாது, மேலும் கொல்லாது விடுதல் என்பது அச்சுறுத்தலேயாகும். அச்சம் அடிமைத்தனம் உண்டுபண்ணலாம். ஆனால் உரிமை தராது. அடிமைகள் உண்மையில் உரிமை மறுக்கப் பட்டவரே, உரிமை இழந்தவர் அல்லர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆட்சி உரிமையின் ஒரே அடிப்படை. ஆளப்படுபவர் இணக்கம். இந்த இணக்கம் அவர்கள் முன்னைய விருப்பத்தின் மரபு: அவ்விருப்பத்தைச் சமூகமே அறிய விரும்பும்போதுதான் பெரும்பாலார் கருத்தறிவதற்கான மொழியுரிமை தேவைப் பட்டது. சிறுபான்மையினர் இதை ஏற்பதிலிருந்து இன்றைய இணக்கம் முன்னைய ஓர் ஒப்பந்தத்தின் மரபு என்று காணலாம். அவ்வொப்பந்தம் ஓர் இயற்கை ஒப்பந்தம் - ஓர் எழுதா ஒப்பந்தம் - ஒரு மரபு ஒப்பந்தம். ஏனெனில் அடிமையின் பிள்ளை இயல்பாய் அதைத் தற்காலிகமாக ஏற்பதுபோல, ஒப்பந்தம் செய்தவன் பிள்ளையும், பிள்ளையின் பிள்ளையும், அதை இயல்பாக மரபாய் ஏற்கின்றனர். அது எழுதா ஒப்பந்தம். ஏனெனில் எழுத்து வகுக்கப்படுமுன், மொழிகள் தோன்று முன்பே அது வழங்கியது. அது இயற்கை ஒப்பந்தம். ஏனெனில் இயற்கைத் தேவை அடிப்படையில், இயற்கை உணர்ச்சி அடிப்படையில் அது தோன்றி வளர்ந்தது.

இயற்கை வாழ்வு தனி வாழ்வு. மனிதன் கூட்டுறவு வாழ்வு வாழும் உயிரினங்களைச் சேர்ந்தவன். தொடக்கத்தில் கூட்டு வாழ்விலும் அவன் தனித்தனி உரிமையும் தனித்தனி பாதுகாப்புப் பொறுப்பும் உடைய வனாகவே இருந்திருக்க வேண்டும். இதில் எல்லா மனிதருக்கும் சரிசம நிலையே இருந்தது. அவர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியிருப்பர். திறமை அல்லது வல்லமையுடையவர் துணை விரும்பப்பட்டது. அதே சமயம் துணை எத்தகையவர் தனித்திறத்தையும் உயர்த்திற்று. முழுக் கட்டைகள் உத்தரமானால். சிறிய கட்டைகள் விறகாகவும், சிறு துரும்புகள் பல்லுக் குச்சியாகவும் பயன்படலாம் அல்லவா?

கூட்டுறவில் உரிமைகள் வளரவில்லை. ஆனால் பாதுகாப்பு வலு வளர்ந்தது. தனிமனிதன் ஆற்றல் சிறிது, அவனைத் தாக்கிய இடையூறுகள் மிகப் பெரியது. அதே சமயம் இடையூறுகள் அவ்வப்போது தான் நேர்ந்தன. எனவே ஒவ்வொருவரின் இடையூற்றிலும் அனைவர் மொத்தப் பாதுகாப்பு வலுவும் பயன்பட்டது. கூட்டு வலுவின் இப்பயன் கண்டு தனி மனிதர் தாமாகத் தம் உரிமைகளைக் கூட்டுறவின் கையில் ஒப்படைத்து அதைப் பொதுவுரிமை ஆக்கினர். அதற்கும் அவர்களே உறுப்பினர் என்ற முறையில் உரியவர்களாதலால், அவர்கள் பழைய இயற்கை உரிமை இப்போது புதிய குடியுரிமை ஆயிற்று. குடியுரிமையும் குடியும் பேணும் பொறுப்பு கடமையாயிற்று. இக்கடமை சமுகத்தின் பாதுகாப்பு வலுவை வளர்த்தது.

ஆகவே சமூக ஒப்பந்தத்தின் மூலம், ஒவ்வொரு தனி உறுப்பினன் உரிமைகளையும் உடைமைகளையும் பேண, அவன் எல்லா உறுப்பினர் வலுவையும் ஒருங்கே பயன்படுத்துகிறான். ஒவ்வொருவனும் முழுமுதல் சமூகத்துக்கு உரிமையை விட்டுக்கொடுத்து அதைத் திரும்பக் குடியுரிமையாகப் பெறுவதன் மூலம் எல்லாருடனும் சரிசம நிலையிலிருந்து கொண்டே, தன் சுதந்திர உரிமையை விடாமலே, எல்லார் உதவியும் பெறுகிறான்; ஆனால் அதே சமயம் அவன் எல்லாருக்கும் உதவுகிறான். ஒரே பொது உரிமைக்குத் தானும் மனமாரப் பணிந்து, பிறரையும் மனமாரப் பணிய வைப்பதனால், அவன் தனக்குத்தானே பணிபவன் ஆகிறான்.

இங்கே முழுமுதலினிடம் உறுப்பினர் தம் இயற்கை உரிமை அனைத்தையும் கொடுத்து விடுகின்றனர். அது மட்டுமல்ல, தம் இயற்கை உடைமை அனைத்தையும் கொடுத்து விடுகின்றனர். ஆனால் கொடுத்த எதையும் அவர்கள் இழக்கவில்லை. இயற்கை உடைமையைச் சமூக உடைமையாக மீட்டும் பெறுகின்றனர். சமூகக் கூட்டுறவில் சேர்ந்ததனால் அவர்களுக்கு உண்மையில் நட்டம் மிகுதி இல்லை. ஆயினும் ஆதாயம் எல்லையற்றது. ஏனெனில் தன் ஒரு தனிமனித உரிமைக்கும் உடைமைக்கும் பதிலாக அவர்களுக்கு அத்தனை மனிதர் உதவியும் பாதுகாப்பும் நிலையாகக் கிடைக்கிறது. ஒரு துளி தன் ஆற்றலைக் கடலுக்குக் கொடுத்தது. கடல் தன் ஆற்றலை அத்துளிக்குத் திரும்பவும் கொடுத்தது. துளியை யாரும் விழுங்கிவிடலாம். கடலை எவரும் விழுங்க முடியாது. கடல் எல்லாரையும் யாவரையும் விழுங்கவல்லது. கூட்டுறவின் முழுமுதல் இப்போது சமூகம் ஆயிற்று.

இயற்கை வாழ்வில் வலிமை, வாழ்வின் ஒரே பாதுகாப்பு. மனிதன் செயல்கள் அவன் பசி, வேட்கை முதலிய உடலின் உணர்ச்சிகளின் பயன் மட்டுமே. சமூக வாழ்வில் உரிமை என்ற புதுப்பாதுகாப்பு எழுகிறது. செயல்களைக் கடமை, நேர்மை ஆகிய உயர்வகை அறிவுணர்ச்சிகள் இயக்குகின்றன. மனிதன் அறிவு செயலாற்றத் தொடங்குகிறது. அறிவு ஒரு சமூகப் பண்பு. ஒரு தனி மனிதன் அனுபவம் அடுத்த தனி மனிதனுக்கும், ஒரு தலைமுறை அனுபவம் அடுத்த தலைமுறைக்கும் என்றிப்படி அறிவாற்றல் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு வளர்கிறது. இவ்வறிவின் கருவியாக மொழியும், எழுத்தும், இலக்கியமும், நூலும், நூல் துறைகளும் வளர்கின்றன.

கூட்டுறவின் உரிமை, உறுப்பினர் அனைவரின் இயற்கை உரிமைகளின் தொகுதி. சமூக உறுப்பினர் அதைச் சரிசமமாகப் பங்கிட்டு ஒரு பகுதி உரிமையைத் தம் சமூக உரிமையாகக் கொள்கின்றனர். தனித் தனி உரிமையின் இச் சரிசம நிலையையே நாம் நேர்மை என்கிறோம். அதைப் பேணும் முறைகளையே ஒழுங்கு, சட்டம் என்கிறோம்.

முழுமுதல் உரிமை என்றும் கூடவோ குறையவோ மாறவோ செய்ய முடியாது. ஏனெனில் அது கூட்டுறவின் எல்லாத் தனி மனிதரின் உரிமைகளின் கூட்டு முதல் மட்டுமே. அது தனி மனிதர் இயல்பாக, தம்மிச்சையாக அளித்ததாதலால், அவ்வுரிமை பொதுவிலிருந்து என்றும் எடுபடவோ குறையவோ மாட்டாது. ஆகவே முழுமுதல் உரிமைக்கும் எந்த வரையறையும் கட்டுப்பாடும் கிடையாது. அது முழுநிறை உரிமை (sover eignty) ஆகும்.

தனி மனிதன் விருப்பம் அவன் குடி உரிமை எல்லைக்குள் நிற்பதல்ல. ஏனென்றால் குடி உரிமை பொதுவிருப்ப அடிப்படையிலமைந்த சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது. இப் பொதுவிருப்பத்துக்கு மாறாக நடக்கத் தனி மனிதன் முயலும்போதெல்லாம். பொது விருப்பம் அதாவது சமூக விருப்பம் அவனைத் தடுத்துத் தண்டிக்க உரிமை பெற்றிருக்கிறது. இது சமூக ஒப்பந்தத்தின் ஒரு கூறு. ஆனால் தனி மனிதன் விருப்பம் தனி மனிதர்கள் விருப்பமாகப் பரவிப் பொது விருப்பம் ஆகவே வழியுண்டு. அப்போது அது புதிய சமூக உரிமை ஆகிவிடும். எனவே சமூக ஒப்பந்தத்தால் முழுமுதல் உரிமையும் கட்டுப் பாடற்று வலுவடைந்து வளர இடம் இருக்கிறது. தனி மனிதர் உரிமையும் கட்டுப்பாடற்று வளர இடமிருக்கிறது. முழு முதலுரிமையும் தனி மனிதனுரிமையும் காதலன் - காதலி உரிமை போல, ஒன்றை ஒன்று தொதிந்து, ஒன்றை ஒன்று வளர்க்கும் திறம் உடையவை.

தனி மனிதன் இயற்கை உடைமை சமூகத்தில் பொது உடைமை தனி உடைமை என்ற இரு வடிவம் பெறுகிறது. வீடுகள். தோட்ட வயல்கள் தனி உடைமை. தெருக்கள், ஊர் மதில்கள், பொது நிலையங்கள் பொது வுடைமை.

இயற்கை உடைமை என்பது என்ன? அதாவது உடைமை என்ற தத்துவம் எப்படித் தோன்றிற்று?

ஒரு பொருள் ஒருவன் உடைமையாகுமுன் அது பற்றிய மூன்று செய்திகள் கவனத்துக் குரியவை ஆகின்றன.

1.  அவ்வுடமை முன் எவர் உரிமையும் ஆகியிருக்கக்கூடாது.

2.  அது உடையவன் உழைப்பின் பயனாய் உண்டாகி, அவன் உழைப்பின் பயனாகவே பேணப்படுவதாக இருக்கவேண்டும்.

3.  அது அவன் தேவைக்கு மேற்பட்டதாகவோ, அவனால் பேணிக் காக்கும் எல்லைக்கு மேற்பட்டதாகவோ இருக்கக் கூடாது.

நாகரிக சமூகத்தில் இம்மூன்றும் எப்போதும் செயலாற்றுவதில்லை. ஆனால் இப்பண்புகள் உள்ளார்ந்த கூறுகளாய் எப்போதும் நிலவித் தீரும். நூனெஸ் பால் பாவ் பசிபிக் கடலையும் தென் அமெரிக்காவையும் முதல் முதல் கண்ட வெள்ளையர் ஆவர். அக்கடலையும் அக்கண்டத்தையும் அவர் தம் மன்னர் போர்ச்சுகீசு அரசருக்கே உரிமையாக்கினார். ஆனால் அக்கடலை அந்நாடு ஆள முடியவில்லை. அந்தக் கண்டத்திலோ முன் குடியிருந்த மக்களை அகற்றமுடியாது போயிற்று. அத்துடன் பிற வல்லரசுகள் நுழைவையோ, வெள்ளையர் புதிய குடியேற்றங்களையோ யாரும் தடுக்க முடியவில்லை.

தேவைக்கு மேற்பட்ட உடைமைகளை ஒருவன் வைத்திருப்பது உரிமையாலல்ல; வலிமை, அதனடிப்படையாகச் சமூகத்தில் ஏற்பட்ட இயற்கைக் கோளாறுகள் ஆகியவற்றின் பயனாலேயே ஆகும்.

தேவைக்கு மேல் உடைமை, உழையாத உடைமை ஆகிய இரண்டும் இன்று பலருக்கு உண்டு. ஆனால் இது நாகரிக சமூகத்தின் பாதுகாப்புத் தரும் விளைவு. இது இயற்கையுரிமை அல்ல. இது சமூகத்தின் மொத்த வலுவைக் குறைக்கும். சமூகப் பாதுகாப்புத் தளர்ந்து இயற்கை நிலை ஏற்பட்டவுடன், உரிமைகள் பழைய இயற்கை நிலையிலேயே மீண்டும் அமையும். சமூகத்தில் இத்தகைய கோளாறுகள் குலைவுற்றுத் தகர்ந்து; அதன் பயனாக இயற்கை உரிமையின் அடிப்படையில் திரும்பவும் திருந்திய சமூகம் அமையும் நிலையையே நாம் புரட்சி என்கிறோம்.

இயற்கை உரிமை நிலைக்குச் சமூக உரிமை நிலை எவ்வளவு அருகாமையிலிருக்கிறதோ, அந்த அளவுக்குச் சமூக அமைப்பு வலுவடைகிறது.

முழுமுதலுரிமையும் சட்ட திட்டங்களும்

சமூகத்தின் முழுமுதலுரிமை அதன் உறுப்பினரின் மொத்த உரிமையே - பெரும்பான்மை உரிமை கூட அல்ல! பெரும்பான்மை அதன் ஏகதேச நிலை மட்டுமே அதனை மனமார விரும்பும் உறுப்பினரே, அதனை மனமாரப் பின்பற்றி ஒத்துழைப்பர். மனமார விரும்பாதவரும் இணங்கியாக வேண்டும். இது ஒப்பந்தத்தில் ஏற்பட்ட கூறு. ஆனால் மனமில்லாத இந்த இணக்கம் தற்காலிகமானதாக, மிகுதி வளராததாக இருந்தாக வேண்டும். ஏனெனில் அது நீடிக்குந்தோறும், பெருகுந்தோறும் சமூகக் கட்டுப்பாடு தளரும். சமூக வலுக்குறையும். இன்னொரு வகையாகச் சொல்வதானால், சமூகத்தில் மிகப் பெரும்பாலாரும்- கூடுமானால் அனைவரும் - மனமார விரும்பி ஏற்கும் பண்புகளே சமூகத்தை வலுப்படுத்தும் அடிப்படைப் பண்புகள் ஆகும்.

மனமார விரும்பி ஒத்துழைத்தல் சமூக உரிமையின் உயர் நிலைப் பண்பு. மனமார விரும்பாமல் இணங்குதல், அதன் நடுத்தரப் பண்பு. வெறுத்துக் கீழ்ப்படிதல் இருக்கக்கூடாத இழிநிலைப் பண்பு. மூன்றாவது பண்பு மிகுந்தோறும் சமூகம் அழிவை நோக்கிச் செல்லும். பலர் ஆதிக்கம், சிலர் ஆதிக்கம், ஒருவர் ஆதிக்கம் ஆகிய மூன்றும் இக்கீழ்ப்படிதற் பண்பைப் பெருக்கும் படிகள்! அவை சமூகத்தின் உயிர்ப் பண்பைக் குலைப்பவை. ஆகவே சமூகத்தின் முழுமுதல் உரிமை சமூகத்தில் ஒருவரிடமோ, சிலரிடமோ, பலரிடமோ கூடத் தங்கக் கூடாது. முழுமுதல் அதாவது மொத்தச் சமூகத்தின் உரிமையாகவே இருந்து தீரவேண்டும்.

இவ்வுரிமை பங்கிட்டுத் தரத்தக்கதுமல்ல. பகிரக்கூடியது மல்ல. ஆயிரத்தில் ஒன்று குறைந்தால், ஆயிரமல்ல. அதுபோல, முழுமுதலில் ஒரு சிறிது குறைந்தால் கூட, அது முழுமுதலுரிமை யல்ல.

உயிருள்ள உடலைக் கூறிட்டுச் சேர்த்தால் உடலாகும், உயிருள்ள உடலாகாது. முழுமுதல் உரிமை உடலின் வேறான உயிர் போன்ற உயிர்ப் பண்பு ஆகும்.

முழுமுதல் உரிமை சர்வ வல்லமை உடையது. ஏனெனில் சமூக உறுப்பினர் சமூகத்துக்குத் தப்ப முடியாது. ஆனால் அது சர்வ நீதி உடையது. ஏனெனில் எல்லார் நலங்களையும் கலந்து உருவான எல்லாரது பொது நலமே அது. சமூக எல்லைக்குள் அது எல்லாம் அறிவது. ஏனெனில் எல்லார் அனுபவ அறிவும் அதை ஆக்குகிறது. அது முழு நிறை அன்புடையது. ஏனெனில் அது எல்லார் தன்னல ஆர்வத்தினையும் உட்கொண்டது. (இயற்கைச் சமயத்தில் இப்பண்புகள் உடையதாகவே தெய்வம் அல்லது கடவுள் கற்பனை செய்யப்பட்டுள்ளது.)

முழுமுதல் உரிமை வலுக் குறைந்தால், அது சமூகத்தின் பிளவு, உயர்வு தாழ்வு வேறுபாடு ஆகியவற்றின் பயன் ஆகும். சர்வ நீதி பிழைத்தல், சரிசம உரிமை பிழைப்பதாலும்; எல்லாம் அறியும் நிலையில் குறைதல், எல்லாரும்: அறிந்தாராயும் வாய்ப்பு இல்லாமையாலும், முழு நிறை அன்பில்லாமையாலும், எல்லார் ஆர்வத்தையும் சரிசமமாக நிழற் படுத்தாமையாலுமே ஏற்படும். இவை சமூகத்தின் கோளாறுகள் ஆகும்.

தனி மனிதன் ஆற்றலுக்கு ஒரு எல்லை உண்டு. ஆனால் இதை வளர்க்கவே அவன் முழுமுதலில் இணைந்தான். இணைந்தபின் முழு முதலின் ஆற்றலுக்கு ஒரு எல்லை உண்டு. ஆனால், இதை முழுமுதல் வளர்க்க முடியும். முழுமுதலின் உரிமையே தனி மனிதன் கடமை. தனி மனிதன் உரிமை யையே முழுமுதல் அவன் கடமை ஆக்க முடியுமானால், தனி மனிதன் ஆற்றலும் வளரும். முழுமுதலின் ஆற்றலும் வளரும். குடியாட் சியை அணுகுந்தோறும் இந்த ஆற்றல் வளருகிறது. பொது உடைமையை அணுகுந்தோறும் அது இன்னும் வளர்கிறது. அன்பாட்சியை அணுகுந்தோறும் அது பின்னும் வளரும்.

தனி மனிதன் உரிமை மீது முழுமுதல் செலுத்தும் ஆட்சி அதைக் குறைப்பது போலத் தோற்றுகிறது. ஆனால் இது அதன் நோக்கம் அன்று. அவ் வாட்சியில் மிகக் கொடிய தீம்பு தனிமனிதன் உயிரை வாங்கும் உரிமையே. ஆனால் இது கூட தனிமனிதன் உயிரைப் பாதுகாக்கும் ஆர்வம் காரணமாகவே ஏற்பட்டது. புலியிடமிருந்து பிள்ளையை மீட்கத் தந்தை தன் உயிரை இடருக்கு உள்ளாக்கவில்லையா? இதுபோலப் பல உயிரைப் பாதுகாக்க வேறு வழி காணாமல், முழுமுதல் தரும் இடர் பாதுகாப்பு முறையே தூக்குத் தண்டனை! இப்பாதுகாப்புக்கு வேறு வழி கண்டால், தூக்குத் தேவைப்படாது. தனிமனிதன் உரிமை சமூக அடிப்படையாகும் எல்லையில், எந்தத் தண்டனையுமே தேவைப்படாது. தண்டனையாகிய நஞ்சு மருந்து ஆகி, மருந்து உணவாய், உணவு தின்பண்டமாய் விடும். அதன் பின் தண்டனையின் படிகள் மறைந்துவிடும். துன்பமே இன்பமாய் விடும்.

உரிமையின் பாதுகாப்புக் கடமை. கடமையின் பாதுகாப்பு சட்டம். உரிமை யறிந்தோர் திறமையுடையவர். கடமை யறிந்தோர் தகுதி உடையவர், ஒழுக்கம் உடையவர், சட்டம் உணர்ந்தோர் அறிவுடையவர். சட்டம் உரிமையைக் கொண்டு கடமையை வலியுறுத்துகிறது. பொது உரிமையைக் கொண்டு தனி உரிமையைக் கட்டுப்படுத்துகிறது. அறிவு கலந்த அன்பு அல்லது அருள் பொது உரிமை அடிப்படையில் தனி உரிமையையும் தனி உரிமை அடிப்படையில் பொது உரிமையையும் வளர்த்து இரண்டையும் ஒன்றாக்குகிறது.

ஆகவே சட்டம் என்பது ஆதாரமும் நோக்கமும் அற்றதல்ல. கடமையை நில ஆதாரமாகக் கொண்டு உரிமை என்னும் வேரின் உதவியால் அது நிற்க வேண்டும். சமூகப் பொது நலம் என்னும் வானோக்கி அது வளரவேண்டும். எந்த அளவுக்கு அது முழு நிறை பொதுநலத்தை நோக்கிச் செல்லுமோ அந்த அளவுக்கு அது உயர்வுடையது.

ஒரு கொலைக்குத் தண்டனை, மற்றொரு கொலை! மனித சமூகத்தின் இந்த நீதி கண்டு இரக்கமும் ஏளனமும் நகைப்பும் கொண்ட அறிஞர் பலர். ‘’சட்டம் இயற்றுபவரே அதைப் பயன்படுத்துபவர்.’’ இந்நிலை முழுதும் பேணப்பட்டால் தண்டனை தேவைப்படாது. இந்நிலையை அணுகுந்தோறும் தண்டனையின் தேவை குறையும். ஏனெனில் தண்டனை என்பது சமூகம் தன் ஆதாரமான தனிமனிதன் வலுவைக் குறைக்கும் செயல் ஆகும்.

தண்டிப்பவர் தண்டலாளர். முறைமன்றத் தலைவர். ஆனால் சட்டம் அமைப்பவர் வேறு. அவர் தகுதியும் வேறு. அவர் அறிய வேண்டுவது சட்டமன்று; மனித வாழ்வின் தேவை. இதற்கு அவர் மனிதரிடையே மனிதராக வாழ்பவராயிருக்க வேண்டும். மனித உணர்ச்சிகளுடையவரா யிருக்க வேண்டும். ஆனால் அதே சமயம் அவர் தனி மனிதருடன் ஒரு தனி மனிதராயிராமல், பொது மனித அவா ஆர்வங்களையும் கனவார்வங் களையும் உடையவராகவும், பொது மனிதன் நலங்களை அவாவுபவராகவும் இருக்க வேண்டும். அத்துடன் அவர் மனித உணர்ச்சி உடையவராயினும் அதற்கு அடிமைப்படாத வராயிருக்க வேண்டும். அவர் தன்னலம் அறிய வேண்டும். ஆனால் பொது நலம் உடையவராயிருக்க வேண்டும். பொது நலத்தின் பகைவரான தீயவர்களைத் திருத்தும் திறமுடைய வராயிருக்க வேண்டும். ஆனால் அவர் தீயவராயிருக்கக் கூடாது.

சுருங்கச் சொன்னால், அவர் சட்ட அறிஞராயிருந்தால் போதாது. சமூக அறிஞராய், அன்பறிஞராய் இருத்தல் வேண்டும். அரசியல் அறிஞராய் இருத்தல் போதாது, மனித இனப்பற்றாளராய். மனித இன அறிஞராய் இருத்தல் வேண்டும்.

சட்டம் வகுப்பவரின் அருமையை மனித சமூகம் தொன்று தொட்டு நன்குணர்ந்துள்ளது என்னலாம். ஆதென்ஸுக்கு லைகர்ஸ் சட்டம் வகுக்க எண்ணியதால் அவர் அரசுரிமையைத் துறந்தாராம். சட்டம் வகுப்பவர் நிலை அரசர் நிலையினும் மேம்பட்டதாகக் கருதப்பட்டது என்பதை இது காட்டுகிறது. அத்துடன் சட்டம் வகுப்பவர் அச் சட்டத்தைப் பயன்படுத்தும் பதவி அல்லது நிலை உடையவராயிருக்கக் கூடாது என்பதையும் மக்கள் உணர்ந்திருந்தனர். ஏனெனில் இத்தாலியும் ஜெனிவாவும் அடிக்கடி அயல் இனத்தவரையே சட்டம் வகுக்க அழைத்தன. சட்டமும் சட்டத்தை இயக்கும் பகுதியும் ஒன்றாயிருந்த தனாலேயே, உரோமப் பேரரசில் கொடுங்கோன்மை மிகுதியாயிருந்தது.

சட்டம் வகுப்பவரே சட்டத்தை இயக்குபவராகவும் இருக்கக் கூடாது என்பது குடியாட்சியின் அடிப்படைத் தத்துவம். சட்டத்தைப் பயன்படுத்து பவருள்ளும் பொது நலங்கடந்த தன்னலமோ, ’குழுநலமோ இருக்கக் கூடாது. என்பதும், வெளிப்படை, சட்ட மன்றத்தில் எல்லாச் சமூக நலன், இடநலன், வகுப்பு நலன்களின் பேராட்கள் இடம் பெறுவது இதனாலேயே.

இறுதியாகக் கவனிக்கத்தக்க ஒரு பண்பு உண்டு. சட்டம் வகுப்பவர் மக்கள் விருப்பத்துக்கு உரியவராயிருத்தல் வேண்டும். அதே சமயம் அது வெறும் விருப்பமாயிருக்கக்கூடாது. சட்டம் வகுப்பவர் பொது மக்கள் நிலை கடந்த பொது நல அறிவு உடையவர்களாயிருக்க வேண்டும். இத்தகைய புகழ்மதிப்பும் அவர்கள் விருப்ப மதிப்பில் இடம் பெறத்தகும்.

ஆனால் சமூக வளர்ச்சி, சட்டம், சட்டம் வகுப்பவர் ஆகிய முத்திறங் களின் தன்மையும் சமூக மக்களின் பொது விருப்பெல்லையை, பொது அறிவு, பொதுப்பண்பு எல்லையைப் பொறுத்தது. இவற்றுள் சமூக வளர்ச்சி முதலிய பண்புகள் கவணில் எறியப்படக் காத்திருக்கும் கற்கள். பொது விருப்பம் முதலிய பண்புகளே எறியும் கையின் தசைவலுவும் திறமுமா யமையும். ஆகவே மக்கள் பண்பே சமூக ஆட்சியின் அடிப்படை ஆகும். பேரரறிஞர் பிளேட்டோ ஒரு தடவை ஆர்க்கேடியராலும், கைரீணியராலும் சட்டம் வகுக்க அழைக்கப்பட்டார். செல்வ மிக்க அந்நாடுகளில் மக்களிடையே உயர்வு தாழ்வு மிகுதியாயிருந்ததால், எந்தச் சட்டமும் அவர்களுக்குப் பயன்படாது என்று கூறி அவர் மறுத்துவிட்டார் என்று அறிகிறோம். கிரீட்டில் மினாஸ் என்பவர் எல்லாராலும் மெச்சத் தக்க நல்ல சட்டங்கள் வகுத்தார். ஆனால் நீதியொழுக்க மிக்க அந் நாட்டவரிடையே அச்சட்டங்கள் பயனற்றவையாயின.

ஒரு நாடு தன் பொது நலத்துக்கு ஏற்ற சட்டங்கள் பெற, அது தன் பண்பாட்டிளமைக் காலம் வரை காத்திருக்க வேண்டும். குழந்தைப் பருவ நாடுகள் சட்டத்தை மதிக்கமாட்டா. முதுமைப் பருவ நாடுகள் சட்டத்தை இரும்புச் சங்கிலியாக்கி அவற்றின் பயனை மறக்கும். குழந்தைப் பருவத்தின் முழுநெகிழ்ச்சியும் முதுமையின் முழுவிறைப்பும் இல்லாமல் நடு நிலையான நெகிழ்வும் வலிவும் உடைய இளமைப் பருவமே சட்டத்தின் உறுதிக்கும் நோக்க அடிப்படை சார்ந்த நெகிழ்ச்சிக்கும் உரிய பருவம்.

மனிதனை விடப் பெரிய விலங்குகளும் உண்டு. மனிதனை விட மிகச் சிறிய உயிரினங்களும் உண்டு. இரு கோடிகளையும் விட மனிதன் மேம்பட்டவன். இது எதனால்? அவன் உடல் வலுவற்றவனும் அல்ல. உடல் வலுவையே நம்பியிருப்பவனும் அல்ல. இந்நிலையே அறிவை வளர்க்கும் நடுநிலை அல்லது செவ்வுநிலை. சமூக நிலையிலும் சட்டங்களிலும் இதே போன்ற செவ்வுநிலை தலைசிறந்த பண்புடையது. கூடிய அளவு மிகுதி யான தனி மனிதன் சுதந்திரம், அதனடிப்படையில் கூடிய அளவு மிகுதியான கட்டுப்பாடு - இதுவே சமூகத்தின் செவ்வி. கூடிய மட்டும் குறைந்த தண்டனை. கூடிய மட்டும் கூடுதலான பொதுநலம் பரப்பு - இதுவே சட்டத்தின் செவ்வி. தன் உரிமை, தற்பண்பு விடாது, பொது உரிமை, கடமை பேணுதல் - இதுவே தனி மனிதன் உயர் சமூகப் பண்பின் செந்நிலை.

சமூகம் விரியுந்தோறும் தனி மனிதன் பெறும் சமூக நலன் உயர்கிறது. ஆனால் சமூகம் விரியுந்தோறும் தனி மனிதனுக்கும் அதற்கும் உள்ள தொலை பெருகுகிறது. இதனால் தனி மனிதனுக்கும் சமூகத்துக்கும் இடைப்பட்ட உயர்வு தாழ்வுக் குழுக்கள், வேறுபாட்டுக் குழுக்கள் ஏற்பட வழியுண்டு. ஆகவே தனி மனிதன் வலுவுக்கேற்ற விரிவும் அவன் பற்றார்வத்துக்கேற்ற குறுக்கமும் சமூக விரிவெல்லையின் செவ்வி ஆகும்.

மொத்தத்தில் ஒற்றுமை கெட்ட பரந்த எல்லையைவிட ஒன்றுபட்ட சிறு இன எல்லையே விரும்பத்தக்கது. பேரரசுகள், வல்லரசுகள் வீழ்ச்சிக்கு அவை அவாவிய பேரெல்லையே காரணம். உண்மையான பேரெல்லை விரும்புபவர் சமூக அளவைப் பெருக்குவது தவறு. தனி மனிதர் கூட்டுறவால் அமையும் கூட்டுச் சமூகத்தையே அவர்கள் விழைதல் வேண்டும்.

சரிசமத்துவமில்லாத சமூகங்கள் தம் உட்கோளாற்றை மறைக்க மற்ற சமூகங்கள் மீது தாக்குதல் செய்கின்றன. இது பேரரசரின் ஆட்சி ஆதிக்க வடிவில் அமையலாம். அல்லது வல்லரசின் அரசியல் ஆதிக்கமாயிருக்கலாம். அல்லது பொருளாதார ஆதிக்கமாயிருக்கலாம். ஆனால் சமூக நலனை எதிர்த்த தனி மனிதன் நலன் நீடித்து இருக்க முடியாது. அதுபோலவே சமூகத்தின் நலனை எதிர்த்த குழுநலனோ, ஒரு சமூகத்தின் நலனெதிர்த்த மற்றொரு சமூக நலனோ நீடித்திருக்க முடியாது.

சமூகத்தை அதன் நிலப் பரப்பினால் அளப்பதைவிட வளத்தால் அளப்பதைவிட, மக்கள் தொகையால் அளப்பதை விட, நல்லதோர் அளவை உண்டு. மொத்த வளத்தை மக்கள் தொகையால் வகுத்துவரும் வீதமே சமூகத்தின் பண்பாட்டு அளவைக் குறிப்பிடும் நல் அளவையாகும். எனவே ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகைக்கு அதன் மூலம் சமூகம் உண்டுபண்ணும் வளத்தின் அளவு எவ்வளவு மிகுதியோ, அந்த அளவுக்கு அது உயர்ந்த சமூகம் என்னலாம். நாகரீகத்தின் உயர்வும் வளர்ச்சிக் குறியீடும் இதுவே.

பாதுகாப்புப் போர் சமூக வாழ்வுக்கு ஒரு இன்றியமையாச் சூழ்நிலையாகக் கருதப்படலாம். ஆனால் போர் எப்படியும் ஒரு நாட்டின் வளத்துக்கு அறிகுறியல்ல. வளர்ச்சிக்கும் வழியல்ல. நல்ல சமூகம் தன் சூழலைக்கூட மாற்றியமைத்துத் தற் காப்புப்போருக்குக்கூட அவசியமில்லாமல் செய்து விட முடியும்.

நல்ல சமூகத்தில் சமூகம் வேறல்ல. அரசாங்கம் வேறல்ல. ஆனால் இவ்வுயர் குறிக்கோள்நிலை இல்லாத இடத்திலும், சமூகத்தை வளர்க்கும் அரசாங்கமே நல்ல அரசாங்கம். போர் சமூகத்தை வளர்ப்பதன்று. ஆகவே போரை உண்டுபண்ணும் அரசாங்கமும், போரிடையே வலுப்பட்டு வளரும் அரசாங்கமும், சமூகத்தை அழிக்கும் அரசாங்கங்கள் ஆகும்.

ஒரு அரசாங்கத்தின் ஆட்சிக்குரிய சமூகமே ஒரு நாடு. நாடு அல்லது அரசியல் சமூகம் பொதுவாக ஒரு சமூகமாகவே இருக்கலாம். அதைவிட விரிவாகவும் இருக்கலாம். முந்திய நிலை மிகக் குறுகிய மனப்பான்மையை வளர்க்கும். அதன் சட்டங்கள் இக்குறுகிய மனப்பான்மையைக் காட்டும். பிந்திய நிலை ஒற்றுமையைக் கெடுக்கும். ஆதிக்கக் குழுவை உண்டுபண்ணும். நடுநிலைச் செவ்வி, ஒரு சமூகத்துடன் அதன் மொழி, பண்பு, வரலாற்று மரபு, வாழ்க்கை நலன்கள் ஆகியவற்றில் ஒத்த பிற சமூகங்கள் ஒன்று படுவதன் மூலமே அமையும். இதில் ஒரே குறுகிய சமூகத்துக்குரிய மூட நம்பிக்கைகள், குருட்டுப் பழக்க வழக்கங்கள் தளரும். அதே சமயம் ஒன்று பட்ட வளர்ச்சிக்கு வழி ஏற்படும். சட்டங்கள் முன்னவற்றின் அடிப்படையாக எழுந்து, பிந்திய நிலை நோக்கி வளரும்.

சட்டங்களின் உள்ளுறை பொது நலமே. ஆனால் பொதுநலம் என்றால் என்ன? இரண்டு சொற்களில் அதைத் தொகுத்துக் கூறலாம். சுதந்திர உரிமை! சமத்துவம்! இவையே அச்சொற்கள்.

சுதந்திர உரிமை என்பது பொது உரிமைக்கு உட்பட்ட மிகக் கூடுதலளவான தனிமனித உரிமை ஆகும். சமத்துவம் என்பது ஒரே மட்ட நிலை, அல்லது மட்ட நிலை பேணுதல் என்பதன்று. சட்டங்கள், அரசிய லமைப்பு முறை ஆகியவை எல்லாருக்கும் சரிசம வளர்ச்சிக்கான சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். அத்துடன் கடமையும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சரிசமமாயிருக்க வேண்டும். மிகுதி கடமையாற்றுபவனுக்கு மிகுதி உரிமை இருக்க வேண்டும். கடமையாற்றுபவன் உரிமையைச் சட்டம் கடமை யாற்றாதவனுக்குக் கொடுப்பது அநீதி. ஏனென்றால் அது அவன் கடமை யார்வத்தைக் குலைத்துச் சமூகத்தை நலிய வைக்கும்.

சட்டங்கள் நாட்டின் வாழ்வுக்கு வழி காட்டும். நாட்டின் தனிப் பண்புகள் வளர்வது இதனாலேயே. இத்தனிப் பண்புகள் நாட்டின் நிலைக்கு ஏற்றதாயிருக்கவேண்டும். ஸ்பார்ட்டா நகர மக்கள் பகைவரிடையே வாழ்ந்தனர். போரில் மிக ஆபத்தானது பாதுகாப்புப் போர். ஏனென்றால் அது எப்போதும் போருக்கு ஆயத்தமாயிருக்கும் நிலைமையைக் கோருகிறது. இதனால் ஸ்பார்ட்டா நகர மக்கள் உடல்வலு வளர்த்தனர். உரோம நாடு உழையாதவர் ஆதிக்கமுடைய நாடு. ஆதிக்கப் போராலேயே அது வாழ முடியும். ஆகவே அது மக்கள் வலுவைப் பெருக்காமல், படை வலிமையைப் பெருக்கிற்று. நில வளமில்லா அதேனியர் கலை வளர்த்தனர். கடற்கரையோரம் வாழ்ந்த கார்த்தெஜினியர், டயர் நகர மக்கள் ஆகியவர்கள் கடல் வாணிகம் வளர்த்தனர். ஒற்றுமைக்கு வகையற்ற சிதறிய வாழ்வுடைய அராபியர், எபிரேயர் சமயம் வளர்த்தனர். இவ்வெல்லா மக்கட் குழுவின் சட்டங்களும் அவரவர் பண்பாட்டு வளர்ச்சியிலேயே நின்றனர்.

சட்டங்களின் வகைகள் பல. அவை எந்த எந்தச் சமூகக் கூறுகளை இணைக்கின்றன என்பதைப் பொறுத்தது அவற்றின் வகை பேதங்கள். ஆள்பவர் தொகுதியும் ஆளப்படுபவர் தொகுதியும் உண்மையில் ஒன்றே. ஆயினும் இருநிலைப் பண்புகளும் வேறு. ஆட்சிக் கூறு, மக்கட் கூறு ஆகிய இரண்டின் உரிமை கடமைத் தொடர்புகளை வகுக்கும் சட்டங்கள் அடிப்படைச் சட்டங்கள் அல்லது அரசியலமைப்புச் சட்டங்கள் ஆகும். இவை அரசியல் ஏற்படுவதற்கு முற்பட்ட சமூக அமைப்பு முறை சார்ந்த வழக்கம் அல்லது எழுதாச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஆள்பவர், ஆளப்படுபவர் ஒருமையை உணர்ந்து செய்யப்படுந்தோறும் இவ்வடிப்படைச் சட்டங்களைச் சமூகம் வளர்க்கும். அதை உணராத அளவுக்கு அவை அழிவுச் சட்டங்களா யமையும்.

இரண்டாவது வகைச் சட்டம் சமூக உறுப்பினர் ஒருவருடன் ஒருவரும், உறுப்பினர் பொது சமூகத்துடனும் கொள்ளும் தொடர்பு பற்றியது. இது உறுப்பினர் சமத்துவம் போலும் அளவிலேயே சமூகத்தை ஒன்றுபடுத்தி வலுவூட்டும்.

மூன்றாவது சட்டவகை சட்டத்துக்கும் தனி மனிதனுக்கும் இடையேயுள்ள தொடர்பை வரையறுப்பது. பொது வாழ்வாகிய பயிரைத் தனி மனிதன் உரிமையாகிய உரமும் வேலியாகிய சட்டங்களும் பேணி வளர்க்கின்றன. உரம் மிகுதியாகிச் சமூகத்தின் பொது நலனழிக்கும் களையாகாமல் குற்றச் சட்டங்கள் பாதுகாக்கின்றன. சட்டமாகிய வேலி மிகுதி வளர்ந்து பயிரை மூழ்கடிக்காமல் தனிமனிதன் உரிமைப் பாதுகாப்புச் சட்டங்கள் பார்க்கின்றன.

இம்மூன்றன்றி நான்காவது சட்டவகையும் ஒன்று உண்டு. அதுவே முக்கியமான அடிப்படையான வகை. ஆயினும் அதுவே சட்டம் வகுப்பவர் பெரிதும் கவனியாதது. அது மக்கள் மரபுகள், நடையுடை பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், கருத்துகள் ஆகியவற்றை இயக்குபவை. அதில் கருத்துச் செலுத்துபவரே உண்மையான நாட்டுப்பற்றாளர், உண்மையான மக்கட் பற்றாளர். அவர்களே சமூகச் சீர்திருத்தவாதிகள் என்று அழைக்கப்படுவர்.

அரசாங்கங்கள்

அரசாங்கம் என்பது என்ன?

இது பற்றி மக்களிடையே - அறிஞரிடையே கூட - பெருங் குழப்பம் நிலவுகிறது.

அரசியல் சமூகத்தின் முழுமுதல் பிரதிநிதியே அரசாங்கம் என்று பலர் கருதுகின்றனர்.

அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது என்பது இக்கருத்துக்கு ஆதாரமாயிருக்கிறது.

ஆனால் அரசாங்கம் அல்லது அரசர் கடவுளருளால் உரிமை பெறுகின்றனர் என்ற கருத்தும் நிலவுகிறது. இதைக் குடியாட்சியாளர் எதிர்க்கின்றனர்.

உண்மை இரண்டு கருத்திலும் உண்டு என்றும், இரண்டு கருத்திலும் இல்லை என்றும் கூறலாம். அதாவது இரண்டு கருத்திலும் உண்மையின் ஓரோர் பகுதி உண்டு.

எல்லாரும் எல்லாரையும் ஆள்வதே நல் அரசாங்கம்.

ஆனால் இது எப்படி முடியும்?

ஒவ்வொரு தனிமனிதன் செயலுக்கும் ஒவ்வொரு சமூகத்தின் செயலுக்கும் இரண்டு சக்திகள் வேண்டும். ஒன்று செயல் விருப்பம். இன்னொன்று செயல் துணிவு. சமூகத்தின் செயல் விருப்பம் அதன் சட்ட வகுப்புத் தொழில் (Legislative Power). அதன் செயல் துணிவு, அதன் நடை முறையாட்சி (Executive Power).

எல்லாரும் ஆள்வது சட்ட வகுப்புத் துறையில்.

எல்லாரும் ஆளப்படுவது நடைமுறையாட்சித் துறையில்.

முன்னது மக்கள் விருப்பத்துக்கு உட்பட்டது. இது குடியாட்சியாளர் வற்புறுத்தும் துறை.

பின்னது மக்கள் விருப்பத்துக்கோ, உணர்ச்சிக்கோ உட்பட்டதன்று. அவர்கள் அறிவுக்கும் நேர்மையுணர்ச்சிக்கும் மட்டுமே உரியது. சட்டம் மூலமாக அவர்களால் இயக்குவதற் குரியது. நேரடியாகத் தீண்டத் தகாதது. ஆட்சியின் தெய்வீக உரிமையை நம்பும் முடியாட்சியாளர் வற்புறுத்தும் துறை இது.

முன்னது சமூக ஒப்பந்தத்தின் அடிப்படையிலெழுந்த முழு முதலுரிமை.

பின்னது அதைச் சாராத தற்காலிகப் பண்பு.

ஆனால் முன்னது மக்கள் பிரதிநிதித்துவம் கோருவது. நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம் வேறுபடுவது. பின்னது திறமை கோருவது. நடுநிலை நாடுவது. நாடு, இனம் கடந்தது.

அரசாங்கங்கள் அமைவது இப்பண்புகளின் அடிப்படை யிலேயே என்று காணலாம். வலிமையும் திறமையு முடையவரே நடைமுறையாட்சியைக் கைப்பற்ற முடியும். மக்கள் விருப்பத்துக் குரியவரே அவ்வாட்சியை இயக்க, நீடித்து நிலவ வைக்க முடியும்.

அரசாங்க மாறுதல்கள் எல்லாம் அரசியல் சமூக மாறுபாடுகளல்ல. புதிய அரசாங்கம் பழய அரசாங்கத்தின் சட்டங்களை அப்படியே ஏற்கத் தடையிராது. ஆனால் அரசியல் சமூக மாறுபாடு ஒரு புரட்சியில்லாமல் நடைபெறாது. அரசாங்கத்துக்கும் அரசியல் சமூகத்துக்கும் அதாவது சட்டத்தை நிறை வேற்றுபவருக்கும் சட்டம் வகுக்கும் உரிமையுடையவர்க்கும் இடையே வேற்றுமை ஏற்பட்டால், அப்போதும் உள் நாட்டுக் குழப்பம் அல்லது புரட்சி ஏற்படும்.

அரசாங்கத்தின் வலு எப்போதும் ஆள்பவர் வலுவைப் பொறுத்ததன்று. ஆளப்படும் குழுவின் விருப்பம், அவர்கள் கருத்துகள், நம்பிக்கைகள் ஆகியவற்றுக் கிணங்கிய அரசாங்கத்தில், ஆள்பவர் வலுக்குறைவாயிருந்தாலும் அரசாங்கம் வலுவுடைய தாயிருக்கும். அஃது அல்லாத இடத்தில், ஆட்சியாளர் வலிமை மிகுதி தேவைப்படும். ஆகவே அரசாங்கத்தின் வலிமை, ஆட்சியாளர் வலிமையை மட்டும் பொறுத்ததல்ல; மக்கள் விருப்பத்துக்கு அவர்கள் இணங்கும் அளவு, ஆட்சியாளர் வலு ஆகியவற்றின் தொடர்பு வீதத்தையே அது பொறுத்தது.

இன்னொரு வகையாகக் கூறினால் முழு முதல் உரிமை உடைய சட்ட வகுப்புக்குழு விரிவுபட்டிருக்குந் தோறும், அதாவது அது மக்கள் விருப்பத்தைத் தழுவுந் தோறும், ஆட்சி வலுவுடையது. அதே சமயம் நடைமுறை யாட்சித் துறை குறுகுந்தோறும், அதாவது அது மக்கள் விருப்பத்தைத் தழுவாது விலகுந்தோறும், ஆட்சி வலுவற்றது.

நடைமுறை ஆட்சியில் எப்போதும் பிரதிநிதித்துவம், தொகை இரண்டையும் விட, திறமையே மிகுதி கருதத் தக்கது. எனவே இதன் அடிப்படையில் வலுவான ஆட்சிமுறைக்கும், நல்லாட்சிமுறைக்கும் வேறுபாடு இல்லை. ஆயினும் அரசாங்க முறையில் நடைமுறை ஆட்சியாளரும் சட்ட வகுப்பாளரும் ஒரே அரசாங்கமேயாகின்றது. எனவே தான், ஆட்சி முறை வேறுபாடுகள் யாவும் சட்ட வகுப்புத் துறை, நடைமுறை ஆகிய இரண்டும் சார்ந்தவையாகின்றன.

எல்லா மக்களும் அல்லது எல்லா மக்களின் பிரதிநிதிகளும் ஆட்சி செய்யும் ஆட்சியே குடியாட்சி (Democracy) ஆட்சி செய்பவர் சிலரானால் அது சில குடியாட்சி (Oligarchy) அல்லது உயர் குடியாட்சி (Aristocracy) ஆகும். அது ஒரு மனிதனானால் அது முடியாட்சி (Monarchy) ஆகும்.

இப் பெருங் கூறுகளுள் சிறு பிரிவுகள் உண்டு. அவை ஒரு வகையிலிருந்து அடுத்த வகை நோக்கிச் செல்லும் படிகளாக உள்ளன.

சட்டத்தை ஆக்குபவர்களே அதனைக் கையாளவும் அதன் பொருள் விளக்கவும் சிறந்தவர்கள். இது உண்மையானால், சட்ட வகுப்பு, சட்டத்தீர்ப்பு, நடைமுறை ஆட்சி மூன்றும் ஒன்றாயிருக்கலாம். குடியாட்சியில் இம்மூன்றும் தொடர்பு படுத்தப் படுகின்றன.

உண்மையான குடியாட்சி அரிது. ஏனென்றால் எல்லாரும் அரசியலில் அக்கறைகொள்ளும் அளவு அது சிறிதாயிருக்க வேண்டும். இரண்டாவது அதில் மக்களிடையே உண்மையான பழக்கவழக்கக் கருத்தொற்றுமை இருக்கவேண்டும். அதனுள் சரி நிகர்நிலை இருக்க வேண்டும். ஒருவருக் கொருவர் உயர்வுதாழ்வு, ஆதிக்க அடிமைத் தொடர்பு ஆகியவை சரிசம நிலையை அழித்துவிடும். தவிர, போர் முதலிய நெருக்கடி நிலையில் குடியாட்சி செயல் திறம் உடையதாயிராது.

பல நாடுகளில் தொல்பழங்காலக் குடியாட்சிக் காலங்களில் குடும்பத்தில் மூத்தவர் ஆண்டனர். இளையோர் அவ்வாட்சியிலடங்கி அவர்களை வாளாது பின்பற்றினர். நாளடைவில் மூத்தோர் வழிவந்த சில குடிகள் உயர்வு பெற்று உயர் வகுப்பாயின. உயர் வகுப்பாட்சி ஏற்பட்டது.

திறமையுடைய தனி மனிதன் ஆட்சியைக் கைப்பற்றி, அவன் வழியில் ஒரு மனிதன் ஆட்சி ஏற்பட்டபோது, அது முடியரசாயிற்று.

குடியாட்சியிலுள்ள குறைகளைவிட உயர் குடியாட்சி யிலும் முடியாட்சியிலும் ஓர் அடிப்படைக் குறைபாடு உண்டு. திறமை பிறப்படிப் படையாக என்றும் அமைவதில்லை. உயர்குடி திறமையற்ற இறுமாப்புக் குடியாவது இயல்பு. திறமையற்ற முடியரசன், திறமையில் பயிற்சி கூடப் பெற முடியாத முழு மூடனாக இருக்கும் நிலை ஏற்படுவதுண்டு.

ஆனால் வரலாற்றின் போக்கில் எல்லா ஆட்சி முறையிலும் எல்லா அரசாங்க முறையின் கூறுகளும் உண்டு. அத்துடன் குடியாட்சிக் கால அடிப்படைச் சட்டம் உயர் குடியாட்சி, முடியாட்சிக் காலங்களிலும் தொடர்ந்துள்ளது.

குடியாட்சி, உயர் குடியாட்சி, முடியாட்சி, இம்மூன்று கூறுகளும் கலந்த ஆட்சி ஆகிய நான்கு வகை ஆட்சிகளிலும் மிக நல்ல ஆட்சி முறை எது?

மக்கள் பண்புக்கேற்றதும் கூடியமட்டும் சிக்கலில்லாது எளிதில் செயலாற்றத்தக்கதுமான ஆட்சிமுறைதான் நல்லாட்சி முறை ஆகும். ஆகவே நல்லாட்சி என்பது ஆட்சி முறையை மட்டும் பொறுத்ததன்று. அந்தந்த மக்கள் பண்புக்கியைய அவரவர்கள் வாழ்வை வளப்படுத்தத் தக்க ஆட்சியே நல்லாட்சி என்னலாம்.

ஆனால் பொதுவாக நடைமுறையாட்சித் துறையும் (Executive) சட்ட நடைமுறையாட்சித் துறையும், (Judiciary) இரண்டும் சட்ட வகுப்புத் துறைக்கு (Legislature) உட்பட்டிருக்கும் ஆட்சி முறையே நல்லாட்சி என்று கூறலாம்.

குடியாட்சியிலிருந்து உயர் குடியாட்சி, உயர் குடியாட்சியிலிருந்து முடியாட்சி என்ற போக்கில் ஆட்சிமுறை செல்லுமானால், அது ஆட்சி முறையின் அழிவு என்று கூறலாம். ஆனால் இதைவிட மோசமான அழிவு ஒன்று உண்டு. சட்டங்கள், திட்டங்கள் கைவிடப்பட்டு. ஆட்சியாளர் தன்னலக் குழுவாய் விடக்கூடும். இங்கே ஆள்பவர் ஆளப்படும் நாட்டவரானாலும், வெளி நாட்டவர் போலாகி விடுகின்றனர். மக்கள் நலன் வேறு, ஆள்பவர் நலன் வேறு ஆகிவிடுகிறது. பொது உரிமை நாளடைவில் ஒரு சிலர் தனி உரிமையாகிப் பின் ஒரு குழு உரிமை ஆகி விடுவது உண்மையில் வெளி நாட்டவராட்சியை விட மோசமானது. ஏனெனில் வெளி நாட்டவராட்சியில் எல்லாரும் அடிமைப் படுவர். ஒரே வகை அடிமைத் தனத்தில் சமத்துவப் பண்பு உண்டு. இது நாளடைவில் அடிமைத் தனத்தை ஒழிக்கும் பண்பு ஆகிவிடும். ஆனால் தனி நலன்கள் சரிசம நிலையைக் குலைக்கும். தனி நலன் குழு நலனாகப் பெருகினால் கூடத் தீமை குறையாது, கூடவே செய்யும். சரிசம நிலையில்லாத போது பெரும்பான்மை ஆட்சி கூடத் தாங்க முடியாத கொடுங்கோன்மை ஆகிவிடும்.

அரசாங்கத்தின் அழிவு அரசியல் சமூகத்தின் அழிவல்ல. அரசாங்கங்கள் தம்மையே அரசியல் சமூகமாகக் கருதுவதுண்டு. இதனால் தம் பகைவரைச் சமூகப் பகைவராக அவர்கள் தண்டிப்பதும் உண்டு. ஆனால் ஒரு அரசாங்கத்தின் பகைவரே அடுத்த அரசாங்கமாக அமைய முடியும். அரசியல் சமூகப் பகைவர் என்றும் பகைவராகவே இருப்பர். அதாவது அரசாங்கத் துரோகிகள் எல்லாரும் தேசத் துரோகிகள் அல்லர். ஆனால் தேசத்துரோகிகள் எல்லாரும் அரசாங்கத்துக்கும் துரோகிகளே.

சட்டப்படி ஆளும் அரசாங்கம் அல்லது அரசனே அரசியல் சமூகம் ஏற்கும் அரசாங்கம் அல்லது அரசு. போரில் வென்ற அரசன்கூட இதற்கு விலக்கல்ல. வெற்றி கொண்ட பல அரசர் இதனை உணர்ந்து செயலாற்றியுள்ளனர். சட்டத்தை மீறுபவரே தகா அரசர் (Usurper).

அரசாங்கத்தின் வாழ்வு அதன் வலுவைப் பொறுத்தது. ஆனால் அரசாங்க வீழ்ச்சிகளையும் மாறுதல்களையும் கடந்து அரசியல் சமூகம் வாழ்வது அச் சமூகத்தின் பண்பைப் பொறுத்தது. ஆனால் அரசியல் சமூகம் மக்கள் சமூகமாக, அது கடந்த மக்களாக, கலைவு பெறக்கூடும். இது படை யெடுப்பு, உட்குழப்பம், சட்டச் சீரழிவு ஆகியவற்றால் நேருவது.

உறுதியான தற்பண்பு, சூழ்நிலைகளுக்கு ஏற்ப நெகிழ்ச்சியடையும் ஒப்புரவுப்பண்பு ஆகியவற்றின் கூட்டுறவே நீடித்த சமூக, அரசியல் சமூகப் பண்பு ஆகும்.

ஆட்சியுரிமை சமூக முழுமுதலைச் சார்ந்தது. அரசியலமைப்புச் சட்டம் அம் முழுமுதலின் உரிமையை அரசாங்கத்துக்கு அளிக்கிறது. அரசாங்கம் தன் திறமையால் நடைமுறையாட்சி செய்கிறது. ஆனால் வலுவான ஆட்சிக்கு அடிக்கடி முழுமுதலின் ஆதரவு தேவை. வேண்டும்போது மக்கள் பேரவை கூட்டப்பெறுகின்றன. தவிர, குறிப்பிட்ட தவணையில் மக்கள் பேரவைகள் கூடும்படி ஒழுங்குமுறைகள் ஏற்பட்டுள்ளன. ஆட்சியாளர் உண்மையான ஆட்சியுரிமைக் குழுவை இங்கே சந்திக்கின்றனர். அக் குழுவில் ஒவ்வொருவரும் - உயர்ந்தவரும் தாழ்ந்தவரும் - நடைமுறை யாட்சியில் அரசாங்கத்தின் குடிகள்தான்; ஆனால் இப்போது இங்கே அவர்கள் அரசாங்கத்தின் தலைவர்கள்.

பெரிய அரசியல் சமூகத்தில் முழுமுதற் குழுவின் எல்லா உறுப்பினரும் ஆட்சியாளரைச் சந்திக்க முடியாது. ஆகவே அவர்கள் பிரதிநிதிகளை அனுப்புகின்றனர். ஆட்சியாளருக்கும் மக்களுக்கும் இடையே இவர்கள் இடையீட்டாளர் ஆகின்றனர்.

இடையீட்டாளர் மக்களின் நிலையான முழுப் பிரதிநிதிகள் அல்லர். தற்காலிகக் குறைநிலைப் பிரதிநிதிகளே. காலாகாலத் தேர்தலும், வேறு வகை மக்கள் தொடர்புகளும் இதனால் குடியாட்சியில் தேவைப் படுகின்றன.

(கட்சிகள், பத்திரிகைகள், சுதந்திர நிலையங்கள் ஆகியவை இத்தகையவை.)

ஆட்சி முறை

அரசாங்கம் சமூக ஒப்பந்தத்தில் தொடர்புடைய ஒரு உறுப்பு அல்ல. அவ் வொப்பந்தம் சமூகம் தன்னுடனேயே ஏற்படுத்திக்கொண்ட ஒரு உடன்படிக்கை-ஆளப்படும் மக்கள் சமூகம் என்ற முறையில் அது தன்னைத் தானே ஆளும் சமூகம் ஆக்கிக்கொண்டு, அம்முறையில் அந்த ஆளும் சமூகம் அல்லது அரசியல் சமூகத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் அது.

அரசியல் சமூகத்தின் சார்பில் ஆட்சியை மேற்கொண்ட திறமையுடைய குழு அல்லது திறமையுடையவர் வகுத்த குழுவே அரசாங்கம்.

ஆனால் ஆட்சி முறை அரசாங்கத்துக்கு முற்பட்டே தொடங்கிவிட்டது. இன்றும் சட்ட வகுப்புத் துறை இதைக் காட்டுகிறது. புதிய அரசாங்கம் அமைக்கும் சட்ட வகுப்புத் துறையை நாம் இன்றும் மரபுமன்றம் (Convention) என்று கூறுகிறோம்.

ஆளப்படும் குழு அப்படியே ஆட்சிக் குழுவாய் இருக்க முடியுமா?

பிரிட்டிஷ் அரசியல் மன்றம் ஆட்சி முறைக் காரியங்களைத் தானே ஆற்ற நேரிடும்போது தன்னைத்தானே நிறை குழு (Grand Comittee) ஆக்கிக் கொள்கிறது. நிறை குழுவாக இருந்து அது வகுத்த திட்டத்தை, அரசியல் மன்றமாக இருந்து அதுவே ஆராய்கிறது!

இன்றும் அரசாங்கம், ஆட்சியுரிமைக் குழுவாகிய அரசியல் சமூகத்தின் பிடியை விட்டுத் தப்பியோடுவ துண்டு. அதுவே சட்டமில்லாத, மன்றமில்லாத தான்தோன்றி ஆட்சி.

ஆட்சி செய்யும் அரசாங்கத்தை ஒழிக்கவும், ஆட்சி முறையையே மாற்றவும் ஆட்சியுரிமைக் குழு முற்படுவது உண்டு. இதனாலேயே கிளர்ச்சியும் புரட்சியும் ஏற்படுகின்றன.

ஆனால் ஆட்சியுரிமைக் குழுவின் உரிமை, சமூகப் பொதுஉரிமை. சமூகம் அழிந்தாலன்றி அது அழியாது.

தேர்தல்கள் வாக்குரிமையாலும் சீட்டெடுப்பாலும் நடக்கலாம். திறமை தேருமிடத்தில் வாக்குரிமை நல்லதன்று. ஆனால் எல்லாரும் ஆட்சியுரிமை பெறச் சீட்டெடுப்பு நல்லமுறை ஆகலாம், பல இடங்களில் சீட்டெடுப்பு, தேர்தல் ஆகிய இரண்டுமே நடைபெறுகின்றன.

தேர்தல் முறைகள், மன்றத்தின் உறுப்பினர் மொழியுரிமை முறைகள், மன்றங்களின் வகைகள், நடைமுறைகள் ஆகியவை பலவகையாக நிலவுவதுண்டு. உரோம் நாட்டில் தேர்தல் தொகுதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்பட்டன. அவ்வக் காலச் சூழ்நிலையையும் ஆட்சியாளர் தன்னலத்தையும் இவை ஒருங்கே அடிப்படையாகக் கொண்டன. ஆனால் உரோமரின் தன்னலம் அறிவும் பெருமிதப்பண்பும் உடையது. அவர்கள் உலகை ஆண்டனர். தம் நாட்டையும் ஒரு உலகாகக் கருதி மக்கள் உணர்ச்சிகளின் போக்குக்கெல்லாம் விட்டுக்கொடுத்து, அதே சமயம் அவர்களை ஆட்சியில் ஈடுபடுத்தி, அமைப்பு முறை மூலமே அவர்கள் சக்தியைத் தம் விருப்பப்படி இயக்கினர்.

அரசியலும் சமயமும்

மனிதர் தம்முள் ஒரு மனிதரைத் தலைவராக ஏற்குமுன், கண்காணாத் தெய்வங்களையே தலைவராகக் கொண்டு பின்பற்றினர். மன்னர் அல்லது குலபதிகளினிடத்தில் குல தெய்வங்களும், அரசியலினிடத்தில் வழிபாட்டு வினை முறைகளும் இருந்தன. ஒவ்வொரு அரசியல் சமூகத்துக்கும் ஒரு தெய்வம் இருந்தது. மக்கள் போரிட்டபோது, அவர்கள் சார்பில் தெய்வங்களும் போரிட்டன. ஆனால் வெற்றி தோல்விகளுக்குப் பின் சில சமயம் ஒரு தெய்வம் அழிந்தது; சிலசமயம் ஒரு தெய்வம் தலைமை நிலைக்கு உயர்ந்து அடுத்த தெய்வம் அதற்கு அடிமை ஆயிற்று. சில சமயம் இருதெய்வங்களும் ஒரு தெய்வமாக்கப் பட்டன. ஒரு தெய்வம் ஆணாகவும், மற்றது பெண்ணாகவு மிருந்தால் அவை கணவன் மனைவியாவது கூட உண்டு. கிரேக்கரிடையே வெளியார் தெய்வங்களைத் தம் தெய்வங் களாகக் கருதும் பண்பை மிகுதியாகக் காண்கிறோம். உரோமர் காலத்தில் தோற்றவர் தெய்வங்கள், வென்றவர்களால் மேற்கொள்ளப்பட்டு, பேரரசின் எல்லா மக்கள் தெய்வப் பட்டியல்களும் ஒன்றுபட்டன. உரோம தெய்வங்களின் பட்டியலும் உரோம அரசுபோல உலகளாவின; உரோம சமயமும் அரசியலும் இரண்டுமே பேரரசுகளாக இயங்கின.

தெய்வ வழிபாடு ஒரு அரசியல் வழிபாடாயிருந்த காலத்தை விவிலிய நூலிலே காண்கிறோம். ‘அம்மன்’ நாட்டவரைப் பார்த்து ‘ஜெப்தா’ ‘’உங்கள் தெய்வம் சாமாஸ். அவர் உடைமைகள் ஒழுங்குமுறைப்படி உங்கள் உரிமையே அல்லவா? அதுபோலவே அதே உரிமையால், எங்கள் உரிமையும், எங்கள் வெற்றித் தெய்வம் வென்று பெற்ற நிலங்களும் எங்களையே சாரவேண்டு மல்லவா?’’ என்று கூறுவது காண்க.

ஆனால் யூதர்கள் அரசிழந்த பின்பும் தங்கள் விடுதலை யார்வத்தால் குலதெய்வங்களை விடாப்பிடியாகக் கொண்டிருந்தனர். இது அக்கால உலகுக்குப் புதிது. நாட்டெல்லைக்குள் ஆண்ட நாட்டுத் தெய்வம் நாடுகடந்த மக்கள் தெய்வம் அதாவது குலதெய்வமாகச் செயலாற்றிற்று. கிறிஸ்துவ சமயம் இதனினும் புதிதாக அக்கால மக்களுக்குத் தோற்றி யிருக்க வேண்டும். இயேசு குறிப்பிட்ட தெய்வீக அரசு உண்மையிலேயே ஒரு வருங்கால நில அரசு என்று கருதித்தான் கிறிஸ்தவரை அக்கால உரோமப் பேரரசர் இரகசியப் புரட்சிக்காரர் என்று கருதினர்.

அரசியல் வேறு, சமயம் வேறு என்ற வேறுபாட்டைப் புகுத்திய முதல் சமயம் கிறிஸ்துவ சமயமே.

சமயமே அரசியலாயிருந்தபோது நாட்டெல்லை கடந்து நாட்டு இனம் வளர முடிந்தது. கிறிஸ்துவ சமயம் இந்நிலையை மாற்றியது. இன்று வரை கிறிஸ்தவ நாடுகள் தத்தம் தனிப் பண்பு பேணி வேற்றுமை காத்து வருகின்றன. சமய ஒற்றுமை அரசியல் ஒற்றுமை ஆகவில்லை.

சமயம் வேறன்று, அரசியல் வேறன்று என்ற கொள்கையினிடையே எழுந்த சமயம் இஸ்லாம். ஆனால் முகம்மது நபி ஒரு நல்ல அரசியலையும், ஒரு நல்ல சமயத்தையும் திறம்பட இணைத்து ஒன்றுபடுத்திக் காட்டினார். தொடக்கக் கலிபாக்கள் கால முழுவதும் அது திறம்படச் செயலாற்றிற்று. ஆனால் அராபியர் பிறநாட்டவர் கைப்பட்டபின், சமயம் வேறு, அரசியல் வேறு என்ற பிரிவினை தலைதூக்கிற்று. ’அலீ’யின் சமயக் கலையிலும் பாரசீகத்திலும் இதைக் காண்கிறோம்.

சமயம் வேறு, அரசியல் வேறு என்ற நிலை ஏற்படும்போது, அரசியலை விடச் சமயம் மிகுதி ஆதிக்கம் நாடுவது ஆகும். அரசியலின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட உரிமை சமயத்துக்கு இருக்குமிடங்களி லெல்லாம், சமயத் தலைவர்கள் நாட்டின் ஆட்சிக்குள் ஆட்சியமைத்து அரசியலைச் செயலற்ற தாக்கி விடுகின்றனர். அரசியலாட்சிக்கு உட் பட்டிருக்கும் இடங்களில் அவர்கள் அந்த அரசியலின் ஆதிக்கத் தன்மையைப் பெருக்குகின்றனர்.

கிறிஸ்துவ சமயம் முன் இருந்த எந்தச் சமயத்தையும் தாண்டி உலகளாவிய ஆதிக்கம் நாடுவது. அது அரசியலுடன் இணைக்கப் பட்டிருந்தால், அது உலகைத் தன் வேட்டைக்காடு ஆக்கியிருக்கும்!

அரசிய லடிப்படையில் சமயங்களை இரண்டு வகை யாகப் பிரிக்கலாம். ஒன்று தனிமனிதன் சமயம், இதில் உருவமும் கோயிலும் வினைமுறையும் கட்டுப்பாடும் கிடையாது. விவிலிய நூலின் எளிய மூலக் கிறிஸ்தவ சமயம் இது. ஆனால் நடைமுறையிலுள்ள கிறிஸ்துவ சமயம் மற்ற எல்லாச் சமயங்களையும் போல சமூக சமயம் அல்லது அரசியல் சமயமே. அதற்கு உருவம், கோவில், நில ஆட்சி, வினைமுறை யாவும் உண்டு. அது மட்டுமல்ல. தன் ஆட்சிக்கு வெளியே யுள்ள மனித இனத்தவர் எவரையும் மதிப்பதில்லை. குறுகிய பழங்கால அரசியல் பண்பால், அது தன் எல்லைக்குள்ளேயே வாழ்கிறது. பழைய சமயங்களுக்கும் கிருஸ்தவ சமயத்துக்கும் இவ்வகை யிலுள்ள ஒரே வேற்றுமை யூதர் சமயத்தின் மூலம் வந்த வேற்றுமையே. அதாவது நாட்டெல்லை கடந்து, சமயச் சமூக எல்லையில் அது செயலாற்றுகிறது.

மேற்கூறிய இருவகைச் சமயங்களையும்விட மோசமான மூன்றாம் வகைச் சமயம் ஒன்று உண்டு. அது சமய ஆட்சி எல்லையை ஒரு சமயச் சமூகமாக்காமல் இரண்டு சமய சமூகக் குழுக்கள் ஆக்கி, இரண்டினங்களின் அடிப்படையில் இருவேறு முரண்பட்ட சட்டத் தொகுதிகள். இருவேறு முரண்பட்ட கடமைகள், உரிமைகள் வகுக்கின்றன. திபெத்திய லாமாக்களின் சமயம். ஜப்பானிய சமயம், உரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவ சமயம், (இந்தியாவின் வைதிக சமயம்) ஆகியவை இத்தகையவை.

சமூகச் சமயம் அரசியலுக்கு அடிக்கடி துணை தருவது. சமயத் தலைவரைப் போலவே மன்னருக்கு வணக்கம் செய்தல், சட்டங்களை மீறுவதற்கு அரசியல் தண்டனையை விட ஆற்றல் வாய்ந்த பாவ அச்ச எச்சரிக்கை தருதல், எதிரிகளை மனச்சான்றின் குத்தலும் இரக்க உணர்ச்சியும் இல்லாமல் எதிர்க்க உதவுதல், வீரப்போராட்டத்தில் இறப்பவர்க்கு வீரத்துறக்கப் பரிசு உறுதி தரல் ஆகியவை இத்தகைய உதவிகள். ஆயினும் மொத்தத்தில் இவ்வகைச் சமயம் சமூக வளர்ச்சிக்கும் அரசியல் வளர்ச்சிக்கும் குந்தகமானது. அது அறிவுக்குப் பதில் நம்பிக்கையை வளர்க்கிறது. தூய ஒழுக்கப் பற்றுக்குப் பதில் வினைமுறைகளை வற்புறுத்துகிறது. ஒற்றுமைக்கு மாறாக வேற்றுமையையும், சமரசத்துக்கு மாறாகச் சகிப்பற்ற தன்மையையும் வளர்க்கிறது. பல வேளைகளில் சமயம் தன் குறுகிய எல்லைக்கு வெளியில் தயக்கமின்றிக் குருதியாறு பெருக்குகின்றது.

இரண்டாவது வகையிலும் மூன்றாவது வகை கேடு பயப்பதென்று கூறத் தேவையில்லை. விவிலிய நூலின் சமயம் அல்லது உண்மையான கிறிஸ்துவ சமயத்தில் மேற்கூறிய கூறுகள் இருக்க முடியாது. அது தனி மனிதர் சமயம், அது தனிமனிதன் ஒழுக்கத்தை உயர்த்தி அவனை நல்ல குடியுறுப்பின னாக்கும். ஆயினும் அனைவரும் நல்லோராயில்லாத விடத்தில், ஒரு கொடுங்கோலன் இருக்குமிடத்தில், இந்தக் கிறிஸ்துவ நெறி அதை எதிர்த்துப் போராடும் பண்பாய் இயங்கமாட்டாது. சமூக சமயமாகிய கிறிஸ்துவ நெறியே அவ்வகையில் செயலாற்ற முடியும். ஏனெனில் அது சமய ஆட்சியாளராகிய சமயத் தலைவர்களின் சமயம், அரசியலுடன் போட்டியிடும் மனப்பான்மை அதற்கு உண்டு.

சமயம் அரசியலுக்கு முற்பட்டது. ஆகவே சமய அடிப்படை முற்றிலுமில்லாத அரசைக் காண்பதரிது. மன்னர் உறுதிமொழியில் இது இன்னும் இடம் பெறுகிறது. ஆனால் சமய ஆட்சி, அரசியல் ஆட்சி வேறு பிரிக்கப்படாத பழங்கால எளிய சமயமே இது. இது ஒப்பந்தத்துக்குப் புறம் பாயும், ஒப்பந்தம் செய்யும் சமூகத்தில் ஒற்றுமை, இணக்கம் ஆகியவற்றைப் பேணுவதும் ஆகும். அது ஒப்பந்தத்துக்கு முந்திய நாகரிகப்படியின் எச்சமிச்ச மரபு. இதில் கடவுள் சமூக ஒற்றுமையின் சின்னம். மேலுலகம் என்பது வருங்காலத் தலைமுறைகளின் நல்வாழ்வு. பழி என்பது சமூகத்துக்குக் கேடு பயக்கும் செயல். மொத்தத்தில் இந்த அரசியற் சமயம் அரசியலுக்கு இன்றியமையா அடிப்படையான சமூக ஒழுக்கத்தைத் திறம்பட வகுக்கிறது.

குடியாட்சியின் அடிப்படையான இந்தச் சமூக ஒழுங்கு முறை அல்லது இயற்கைச் சமயத்தில், கடவுள் எல்லாருக்கும் ஒரே வகையான தொடர்புடைய பொதுப் பெருந்தந்தை. மக்கள் அனைவரும் ஒரேவகை உடன்பிறந்தார் போன்ற உரிமை உடையவர். தனிமனித வேறுபாடுகள் கருத்து வேறுபாடு களிடையே ஒப்புரவு பேணப்படும் இவ்வியற்கைச் சமயம் எளிதாகவும் சிக்கல்கள் அற்றதாகவும், உரைகள், விளக்கங்கள் தேவையற்றதாகவும், பல வகைக் கருத்து வேறுபாடுகள், கட்சிகளுக்கு இடமில்லாத நிலையில் ஒற்றுமைச் சின்னமாகவும் அமைகின்றது.

இந்த இயற்கைச் சமயத்தினடிப்படையில் சமூக ஒப்பந்தம்; அதன் அடிப்படையில் அரசியற் சமூகக் குழு; அதன் இணக்கம் பெற்றும் விருப்பம் அறிந்தும் தத்தம் இயல்பு, திறம் ஆகியவற்றுக்கேற்ப அமைந்த அரசாங்க முறைகள், என மக்கள் நாகரீக சமூகம் முன்னேறிச் செல்கிறது. ஆனால் இயற்கை யோடொட்டிய அளவிலேயே அதன் முழு நிறை வெற்றி மலருமாதலால் அதன் வளர்ச்சி அடிப்படைப் பண்புகள் தழுவியும் அவற்றிற்கு மாறாக இல்லாமலும் இருத்தல் வேண்டும்.