ஒன்றே குலம்
புலவர் குழந்தை 


1.  ஒன்றே குலம்
    1.  மின்னூல் உரிமம்
    2.  மூலநூற்குறிப்பு
    3.  பதிப்புரை
    4.  புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு புகழ் பூத்த வரலாறு
    5.  முன்னுரை
2.  ஒன்றே குலம்
3.  காந்தியடிகள்
4.  புத்தர் பெருமான்
5.  இராசராச சோழன்
6.  தலைவர் நேரு
7.  காசிநாத தேவால்
8.  இயேசுநாதர்
9.  நபிகள் நாயகம்
10. சங்கரர்
11. இராமாநுசர்
12. இராமகிருட்டிணர்
13. விவேகானந்தர்


ஒன்றே குலம்

 

புலவர் குழந்தை

 

 


மூலநூற்குறிப்பு

  நூற்பெயர் : ஒன்றே குலம்

  தொகுப்பு : புலவர் குழந்தை படைப்புகள் - 9

  ஆசிரியர் : புலவர் குழந்தை

  பதிப்பாளர் : இ. இனியன்

  முதல் பதிப்பு : 2008

  தாள் : 16 கி வெள்ளைத் தாள்

  அளவு : 1/8 தெம்மி

  எழுத்து : 11 புள்ளி

  பக்கம் : 16+ 392 = 408

  நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)

  விலை : உருபா. 255/-

  படிகள் : 1000

  நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.

  அட்டை வடிவமைப்பு : வ. மலர்

  அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா, ஆப்செட் பிரிண்டர்ஸ், இராயப்பேட்டை, சென்னை - 14.

  வெளியீடு : வளவன் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017., தொ.பே. 2433 9030


பதிப்புரை

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரால் அடையாளம் காட்டப்பட்டவர். திராவிட இயக்கச் சான்றோர்கள் வரிசையில் முன்னவர். 1906இல் தோன்றி 1973இல் மறைந்தார். 68 ஆண்டுகள் தமிழ் மண்ணில் வாழ்ந்தவர். பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா போன்ற பெருமக்களால் பாராட்டப்பட்டவர்.

தமிழர்கள் ஆரிய சூழ்ச்சியால் பட்ட அவலங்களை எண்ணியெண்ணி நெஞ்சம் குமுறியவர். தம் நெஞ்சத்து உணர்வுகளை எதிர்காலத் தமிழ்ச் சமுதாயத்திற்கு பதிவுகளாக எழுதி வைத்துச் சென்றவர். தமிழ் இன எழுச்சி வரலாற்றில் அளப்பரும் தொண்டாற்றியவர். இவர் எழுதிய நூல்கள் 29. இந்நூல்கள் அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்து, பொருள் வழிப் பிரித்து, கால வரிசைப்படுத்தி 1 முதல் 15 படைப்புகளாக ஒரே வீச்சில் வெளியிடுகின்றோம். பல்வேறு அணிகலன்கள் அடங்கிய முத்து மாலையாகத் தந்துள்ளோம். இவர் நூல்கள் அனைத்தும் தமிழ்மொழி இன நாட்டின் மேன்மைக்கும், வாழ்வுக்கும், வளத்துக்கும் வித்திடுபவை.

குறிப்பாக இராவண காவியம் படைப்பு திராவிட இயக்க வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல். ஆரிய எதிர்ப்பு உணர்வைக் கட்டியமைத்த இன எழுச்சிக் காவியம். தமிழ் மண்ணில் தன்மானக் கொள்கைகள் நிலைத்து நிற்பதற்கு செயற்கரிய செயல்களைத் தமிழ் இளைஞர்கள் செய்வதற்கு முன் வரவேண்டும் எனும் இன உணர்வோடு எழுதிய படைப்புகள் அனைத்தையும் ஒரே வீச்சில் வெளியிடு கின்றோம். இப்படைப்புகள் வெளிவரப் பல்லாற்றானும் துணை நின்ற தமிழ்ப் பெருமக்களுக்கும், இந்நூல்களுக்கு அறிமுகவுரை தந்துதவிய பெரும்புலவர் இரா. வடிவேலன் அவர்களுக்கும், எம் பதிப்பக ஊழியர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பயன் கொள்ளும் வகையில் பிழையற்ற பதிப்பக வெளிவருகின்றது. வாங்கிப் பயனடையுங்கள்.

(இராவண காவியம் நூலுக்கு மிகச்சிறந்த தெளிவுரை எழுதப்பட்டு வருவதால் இப்படைப்பு வரிசையில் சேர்க்க முடியவில்லை. விரைவில் வெளிவரும்.)

கோ. இளவழகன்


புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு புகழ் பூத்த வரலாறு

இராவண காவியம் படைத்த புலவர் குழந்தை அவர்கள் கொங்கு நாட்டில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ‘ஓலவலசு’ என்னும் சிற்றூரில், பண்ணையக்காரர் என்னும் பழங்குடியில், முத்துசாமிக் கவுண்டர் - சின்னம்மையாருக்கு 1-7-1906இல் பிறந்தார். இவர்தம் பெற்றோருக்கு ஒரே மகனாக வளர்ந்தார்.

தாம் பிறந்த சிற்றூரில் திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார்; தொடர்ந்து படிக்காமல் இடையிடையே விட்டு விட்டுப் படித்தார். மொத்தத்தில் எட்டு மாதங்களே திண்ணைப் பள்ளியில் பயின்றார். கருவிலே திருவுடையவராகிய இவர் பத்தாம் ஆண்டில் இளம் பருவத்திலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றிருந்தார். யாரேனும் ஒருவர் ஒரு பாட்டைப் பாடக் கேட்டால் உடனே இவர் அப்பாட்டின் ஓசையில் புதுப்பாட்டு ஒன்றினைப் பாடுவார். எப்போதும் ஏதேனும் ஒருபாட்டை எழுதிக் கொண்டே இருப்பார். பாட்டு எழுதுவது இவருக்குக் கைவந்த கலையாக அமைந்து விட்டது.

இவர் காலத்தில் இவர் வாழ்ந்த பகுதியில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை. ஆகவே தானாகவே முயன்று படித்துக் கவிபாடும் திறம் பெற்றிருந்தார். இவர் முதன் முதலில் இசைப்பாடல்களைப் பாடினார். இவர்தம் கல்லாமல் பாடும் கவித்திறனையும், பாடல்களின் சிறப்பினையும் கண்டு வியந்த அறிஞர்கள் சிலர், தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படிக்குமாறு தூண்டினர்; ஊக்குவித்தனர். தாம் பிறந்த ஓலவலசிலோ, அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலோ தமிழ்ப் புலவர்கள் எவரும் அக்காலத்தில் இல்லை. ஆகவே இவர் ஆசிரியர் துணையின்றித் தாமாகவே முயன்று இலக்கிய இலக்கணங்களைப் படித்துத் தமிழில் சிறந்த புலமை பெற்றார். மேலும் இவர் ஆசிரியர் உதவியின்றித் தாமாகவே படித்து 1934ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தனித் தேர்வராகத் தேர்வு எழுதிப் புலவர் பட்டயம் பெற்றார்.

இவர் பவானியில் மாவட்டக் கழகப் பள்ளியில் 1924ஆம் ஆண்டில் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். 1940வரை தமிழாசிரியராகத் தொண்டாற்றினார். 1941 முதல் 1962ஆம் ஆண்டுவரை தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். மாணவர்கள் வியந்து பாராட்டும்வகையில் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். ஆசிரியர் பணியினின்று ஓய்வு பெற்ற பின்பும் எழுத்துப் பணியினின்று ஓய்வு பெறவில்லை. வாழ்நாள் முழுமையும் தமிழுக்காகத் தொண்டாற்றினார்; பல நூல்களைப் படைத்தார்; தமது கவிதைகள் வாயிலாகச் சமுதாய உணர்வை - பகுத்தறிவை மக்களிடையே பரப்பினார்.

இவருக்கு முன் ஓலவலசில் படித்தவர் எவருமில்லை. அவ்வூரில் உள்ளவர் களுக்குக் கையொப்பம் இடவும் தெரியாது. இளமைப் பருவத்திலேயே பொதுத் தொண்டில் -குமுகாயத் தொண்டில் ஆர்வமுடையவராக இருந்தார். தாமாகத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படித்துக் கொண்டிருந்த காலத்தில், தம் ஊரிலிருந்த தம்மையொத்த அகவையுடைய இளைஞர்களுக்குக் கல்வி கற்பித்தார். அவர்கள் மூலமாகப் பெரியவர்களுக்குக் கையொப்பம் போடப் பயிற்சியளிக்கச் செய்தார்; கை நாட்டு போடுவதை அறவே ஒழித்தார். அக்காலத்தில் இவரைவிட மூத்தவர் பலர் இவரிடம் கல்வி கற்றனர். ஓலவலசில் கல்லாமை இருளைப் போக்கினார்.

வேளாளஇன மக்களிடையே இருந்த பலபிரிவினரையும் ஒன்று சேர்ப்பதற் காகவும், அவ்வின இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்காகவும் 1946 முதல் 1950வரை ‘வேளாளன்’ என்னும் திங்களிதழை நடத்தினார். அவ்விதழில் இவர் எழுதிய கட்டுரைகள் அவ்வின இளைஞர்களிடையே புத்துணர்ச்சியை வளர்த்தது. விதவை மணம், கலப்புத் திருமணம், சீர்த்திருத்த மணம் முதலியன செய்யவும் அம்மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார்.

வேளாள சமூகத் தலைவரான திரு. வி.சி. வெள்ளியங்கிரி கவுண்டர் தலைமையில், தகடூர் (தருமபுரி) மாவட்டத்திலுள்ள அரூரில் வேளாள மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் புலவர் குழந்தை அவர்கள் ‘விதவை மணம்’ தீர்மானங் கொண்டு வந்தார்; ஒருமனமாக நிறைவேறச் செய்தார். அதன்படி நூற்றுக்கணக்கான விதவை மணங்களைச் செய்து வைத்தார். இச்செயல்கள் இவர்தம் சமூகத் தொண்டிற்குச் சிறந்த சான்றுகளாகும்.

இவர், யாப்பிலக்கணம் படிப்பதற்கு முன்னே 1918இல் ‘கன்னியம்மன் சிந்து’ என்னும் கவிதை நூலை வெளியிட்டார். இவர் பாடிய அச்சாகாத பாடல்களும் நூல்களும் பல உள்ளன; சில நூல்கள் அச்சாகி வெளியிடப்பட்டன. யாப்பிலக்கணம் கற்பதற்கு முன்பு பாடிய பாடல்கள் யாப்பிலக்கணப்படி அமைந்துள்ளன.

இவர் இதுவரை எழுதியுள்ள நூல்கள் : இராவண காவியம் உள்படச் செய்யுள் நூல்கள்-7, உரைநூல்கள் - 3, இலக்கண நூல்கள் -3, உரைநடை நூல்கள் -16 ஆகமொத்தம் 29 நூல்கள் படைத்துள்ளார். தீரன் சின்னமலை நாடகம் இன்னும் அச்சாகவில்லை.

‘விருத்தம் என்னும் வெண்பாவிற்கு உயர்கம்பன்’ என இதுவரையில் போற்றப்பட்டு வரும் புகழுரைக்கு ஈடாகப் புலவர் குழந்தை அவர்கள் இராவண காவியம் பாடிப் புகழ்பெற்றார். ‘காமஞ்சரி’ என்னும் செய்யுள் நாடக நூல், பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்களின் மனோன்மணீயம் என்னும் நூலுக்குப் பிறகு எழுதப்பட்ட சிறந்த நாடக நூலாகும். ‘நெருஞ்சிப் பழம்’ என்னும் நூல் தமிழில் இதுவரை வெளிவராத கற்பனைக் கருவூலமான காதல் கதையாகும்.

புலவர் குழந்தை அவர்கள் பெருங்கவிஞர் மட்டுமல்லர். சிறந்த எழுத்தாளர்; கேட்போர் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் பேசும் பெரும் பேச்சாளர். இவருடைய எழுத்துகள் உறுதியும் அஞ்சாமையும் ஆய்வும் செறிந்த புரட்சிக் கனல் தெறிக்கும் இயல்புடையவை. இவருடைய செய்யுள் நடையும் உரைநடையும் எளிய இனிய தனித்தமிழில் அமைந்தவை. இவர் படைத்த நூல்களெல்லாம் தமிழுக்கும் தமிழர்க்கும் ஆக்கம் தரும் வகையில் அமைந்துள்ளன.

தந்தை பெரியார் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். இவர் அவ்வியக்கத்தில் சேர்ந்தார்; பெரியாரின் அணுக்கத் தொண்டரானார். அன்று முதல் சுயமரியாதை இயக்கம் அதன் மறு பதிப்பான திராவிடர் கழகம், அதன் மறுமலர்ச்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுள் இணைந்து தொண்டாற்றியவர். பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதனையும் செய்யாதவர். பள்ளித் தமிழாசிரியராக இருந்துகொண்டே, அத்தொழிலுக்குச் சிறிதும் இடையூறு இல்லாமல், ‘பெரியார் சீடர்’, ‘கருப்புச் சட்டைக்காரர்’ என்று பொது மக்கள் கூறும்படி கட்சித் தொண்டாற்றியவர். இவரது சுயமரியாதை உணர்ச்சிப் பிழம்பே இராவண காவியம் படைக்கத் தூண்டியது; இவருக்குப் புகழைச் சேர்த்தது.

1948இல் சென்னையில் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் திருக்குறளுக்குப் பகுத்தறிவிற்கு ஏற்ப உரை எழுதுவதற்குத் தந்தை பெரியார், நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் ஐவர் கொண்ட குழுவை அமைத்தார். அக்குழுவில் புலவர் குழந்தையும் ஒருவர். இவரே தனிஒருவராக இருந்து திருக்குறளுக்கு உரை எழுதி ‘திருக்குறள்-குழந்தையுரை’ என்று வெளியிட்டார். அவ்வுரையை 28 நாட்களில் எழுதி முடித்த பெருமைக்குரியர்.

அறிஞர் அண்ணா அவர்கள் ஈரோட்டில் ‘விடுதலை’ ஆசிரியராக இருந்தபோது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றார். காங்கிரசு ஆட்சிக்காலத்தில் தடை செய்யப்பட்ட இவர்தம் இராவண காவியத்திந்ழு, தமிழக அரசால், தமிழ் வாழத் தாம் வாழும் தமிழவேள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் 17-5-1971இல் தடை நீக்கப்பட்டது. அதைக்கண்டு தமிழகமே அகமிக மகிழ்ந்தது; தமிழவேள் கலைஞரை உளமார வாழ்த்தியது.

புலவர் குழந்தை ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கொண்டவர். இவர் ஒரு புரட்சிப் புலவரே எனினும் அமைதியும் அடக்கமும் உடையவர்; ஆடம்பரமின்றி எளிய வாழ்வு வாழ்ந்தவர்; பழகுவதற்கு இனிய பண்பாளர்; கடமை தவறாதவர்; எதிர்க் கட்சியானாலும், மாற்றுக் கருத்து உடையவராலும் நன்கு மதிக்கத் தக்கவர்.

புலவர் குழந்தை அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் முத்தம்மையார். கல்வியறிவு பெற வாய்ப்பில்லாதவராயினும் பொது அறிவு நிரம்பப் பெற்றவர்; தன்மானக் கொள்கையுடையவர்; தம் கணவரின் கொள்கைக்கேற்ப இல்லறத்தை இனிது நடத்தியவர். இவ்விணையருக்குச் சமத்துவம், சமரசம் என்னும் இரு பெண்மக்கள் உள்ளனர். தமிழுக்குத் தொண்டு செய்து வந்த புலவர் பெருந்தகை தமது 68ஆம் அகவையில் 24-9-1973இல் இயற்கை அடைந்தார். மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் புலவர் குழந்தையிடம் அன்பும் மதிப்பும் உடையவர். அவர் மறைந்த பிறகு, அவர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய நூல்கள் 8-7-2006 அன்று அரசுடைமை ஆக்கப்பட்டதாக அறிவித்தார். குழந்தை அவர்களின் மகள்கள் இருவருக்கும் தலா ரூ.5 இலட்சம் பரிவுத் தொகை வழங்கினார்.

நன்றி : நித்திலக் குவியல் (திபி 2037 - டிசம்பர் 2006)

மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை

பெரும் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாளன்று தேனினும் இனிய ஆற்றினை நம் காதில் பொழியச் செய்தது மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு.

புலவர் குழந்தை அவர்களால் எழுதப்பட்ட 29 நூல்களையும் அரசுடைமை யாக்கிப் பரிவுத் தொகையாக ரூபாய் 10 இலட்சத்தையும் அளித்துள்ளது.

பணம் என்பது ஒரு பொருட்டன்று; அதே நேரத்தில் பெரும் புலவரின் நூல்களை அரசுடைமை ஆக்கியதன் மூலம் அவருக்குச் சிறப்பானதோர் அங்கீகாரத்தை அளித்துள்ளது - அதுதான் குறிப்பிடத்தக்கது.

தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப் பட்டவர்; தன்மான இயக்கத்தில் தன்னை ஒப்படைத்தவர் - திராவிடர் கழகத்தில் கருஞ்சட்டை வீரராக வீர உலா வந்தவர்.

அவர் இயற்றிய “இராவண காவியம்” - இனவரலாற்றில் - இயக்க வரலாற்றில் ஈடு இணையில்லாதது.

4.9.1971 அன்று விழுப்புரத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களுக்கு நடத்தப்பட்ட விழாவில் தந்தை பெரியார் பங்கு கொண்டு புலவர் குழந்தை அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டுரையும் புகன்றார்.

அவ்விழாவில் பகுத்தறிவாளர் கழக மாநிலப் புரவலர் என்கிற முறையில் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களும் பங்கேற்றுப் பாராட்டுரை புகன்றார்.

அவ்விழாவில் பங்கேற்றுப் புலவர் குழந்தை அவர்கள் ‘இராவண காவியம் எழுதியது ஏன்?” என்பது குறித்துத் தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

“இராமன் கடவுளல்ல என்கின்ற உணர்ச்சியினைத் தமிழக மக்களிடையே ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக இராவண காவியத்தை எழுதினேன். எனக்குத் துணிவினைத் தந்தவர் தந்தை பெரியாரவர்களே ஆவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் (‘விடுதலை’ 29.9.1971 பக்கம் 3).

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆனாலும், புலவர் குழந்தை யானாலும் தொடக்கத்தில் பக்திப் பாட்டெழுதிக் கிடந்தவர்கள்தாம். தந்தை பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பின்பே பகுத்தறிவுக் கருவை கவிதையின் மையமாக வைத்துப் பாட்டெழுதினார்கள் என்பது அடிக்கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும்.

விழுப்புரம் பாராட்டு விழாவில் தந்தை பெரியார் கூறினார்.

“புலவர் குழந்தையவர்கள் இராவண காவியம் எழுதி இருக்கின்றார், அது ஒரு இராமாயணம் போன்றதே! எத்தனையோ இராமாயணங்கள் இருக்கின்றன என்றாலும் நம் நாட்டிலிருப்பது பார்ப்பன இராமாயணமாகும். இந்த இராமாயணத்தின் தத்துவம் நம்மை இழிவுபடுத்துவதேயாகும். நம்மை அடக்கி ஒடுக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை வாய்த்தவரை செய்ய வேண்டியது; பார்ப்பான் தர்மத்தை நிலை நிறுத்த தன் மனைவியை விட்டுக் கொடுத்து, அதன் மூலம் அவனை ஒழிக்கலாம் என்பதை உணர்த்துவதற்காக எழுதப்பட்டதேயாகும்.

நமது புலவர்கள் மகா மோசமானவர்கள்; பார்ப்பான் எழுதியதைக் கண்டிக்காது, காது, மூக்கு வைத்துப் பெருமைப்படுகிறார்களே தவிர, அதனைக் கண்டித்து எழுதப் புலவர் குழந்தைபோல் எவரும் முன்வரவில்லை. முதன்முதல் நண்பர் பாரதிதாசன் அவர்கள்தான் துணிந்து பார்ப்பானைக் கண்டித்தார்.

புலவர் குழந்தை அவர்கள் பார்ப்பனர்களின் அயோக்கியத்தனங்களையெல்லாம் காவிய நடையில் எழுதியுள்ளார். அதுவும் இலக்கணப்படி எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தை நீங்களெல்லாம் வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டும். பார்ப்பான் தன் இனத்திற்காக பிரச்சாரம் செய்கின்ற காலிகளையெல்லாம் சாமியாக்குகின்றான். அதுபோல நமக்காகப் பாடுபடுகின்றவர்களை, தொண்டு செய்கிறவர்களை, எழுதுகிறவர்களைப் பெருமைப் படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் துணிந்து முன்வருவார்கள்” (விடுதலை 29.9.1971 பக்கம் 3) என்று தந்தை பெரியார் பாராட்டுதலுடன் ஆழமான கருத்தினை எடுத் துரைத்தார்கள்.

சேலம் பேரணியில் முன்வரிசையில் புலவர் குழந்தை

1971 (சனவரி 21) அன்று திராவிடர் கழகம் நடத்திய சேலம் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் கருப்புடை அணிந்து புலவர் குழந்தை அவர்கள் வீறுநடைபோட்ட காட்சி கண் கொள்ளாதது.

1938, 1948 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் முக்கிய பங்கெடுத்துக் கொண்டவரும் கூட!

எந்த இடத்திலும் தாம் ஏற்றுக் கொண்ட தன்மான இயக்க பகுத்தறிவுக் கருத்துக்களைக் கம்பீரமாகச் சொல்லத் தயங்காதவர்.

வெள்ளக்கோயில் தீத்தாம்பாளையத்தில் 1930இல், “ஞானசூரியன்” நூல் ஆசிரியரான சாமி சிவானந்த சரஸ்வதியுடன் ‘கடவுள் இல்லை’ என நான்கு நாள் நடத்திய சொற்போரில் புலவர் குழந்தை அவர்கள் வெற்றி பெற்றார் என்பதிலிருந்து, அவரின் விவாதத்திறன் பளிச்சிடுகிறது.

இரா. பி. சேதுப்பிள்ளையின் பாராட்டு!

கம்பன் கவிநயத்தை லயித்து, சப்புக் கொட்டிப் பேசும் சொல்லின் செல்வர் என்று போற்றப்பட்ட இரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள்கூட புலவர் குழந்தையின் இராவண காவியத்தில் சொக்கிப் போயிருக்கிறார்.

“தேனினும் இனிய செந்தமிழ்க் குழந்தை!”

நான் கம்பராமாயணக் கவிச் சுவையில் கட்டுண்டு கிடந்தனன். தங்கள் இராவண காவியம் அக்கட்டை அவிழ்த்து விட்டது. கருத்து மாறுபாடு வேறு” என்று குறிப்பிட்டதிலிருந்து புலவர் அவர்களின் புலமைத் திறன் குன்றின் மேல் ஒளிர்கிறது.

கம்ப இராமாயண அன்பரான புலவர் அய்யன் பெருமாள்கோனார் ஒருபடி மேலே தாவிப் பாடினார்.

“ இனியொரு கம்பனும் வருவானோ?
இப்படி யும்கவி தருவானோ?
கம்பனே வந்தான்;
அப்படிக் கவிதையும் தந்தான்
ஆனால்,
கருத்துதான் மாறுபட்டது”

என்று கவியால் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார்.

இத்தகைய தமிழ்ப் புலவர் பெருமகனாருக்குத்தான் தமிழக அரசு உரிய சிறப்பினைச் செய்திருக்கிறது.

கம்பனைப் போல் காட்டிக் கொடுத்து காவியம் புனைந்திருந்தால் இவருக்கு இமயப்புகழ் கிடைத்திருக்கும். என்றாலும் காலங் கடந்தாவது ஒரு அரசின் அங்கீகாரம் கிடைத்தது என்பது வரவேற்கத் தகுந்ததாகும்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், அதன் துணை அமைப்பான பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் மூலம், மறைக்கப்படும் தமிழினப் பெரு மக்களைத் (இலக்கியவாதிகளை) தம் தோளில் தூக்கிக் கொண்டாடத் தவறவில்லை.

தமிழ்நாட்டிலேயே இராவண காவியத் தொடர் சொற்பொழிவை அரங்கேற்றிய பெருமை அதற்குண்டு. சிலம்பொலி செல்லப்பனார் அவர்களைக் கொண்டு 29.9.1978-ல் தொடங்கி 7.12.1979வரை 21 சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. அதே போல் பேராசிரியர் அறிவரசன் அவர்கள் 29.9.1998 முதல் 13.11.1999வரை 15 சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

முனைவர் மறைமலை இலக்குவனார் 1.7.2004 முதல் 15.6.2006 வரை 23 தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

இராவண காவிய மாநாடு

இரண்டு இராவண காவிய மாநாடுகள் நடத்தப்பட்டன; முதல் மாநாடு 5.7.1986 அன்று காலை முதல் இரவுவரை சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது. இரண்டாவது இராவண காவிய மாநாடு 1.7.1989 அன்று (புலவர் குழந்தை அவர்களின் 83-ஆம் ஆண்டு பிறந்த நாள் அன்று) சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது.

இவையன்றி, தனித்தனிச் சிறப்புக் கூட்டங்களும் நடத்தப்பட்டதுண்டு. இத்திசை யில் மொத்தம் 77 நிகழ்ச்சிகள் நடத்திய சாதனை பெரியார் நூலக வாசகர் வட்டத்துக்கு உண்டு.

தீர்மானங்கள்

28.6.2005 அன்று சென்னை பெரியார் திடலில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விழாவில் நிறைவுரையாற்றினார். அவ்விழாவில் முக்கிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானம் தமிழக அரசு புலவர் குழந்தையின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என்பதாகும்.

இரண்டாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களின் நூல்களை நாட்டுடமை ஆக்க வேண்டும் என்பதாகும்.

மூன்றாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களைப் போற்றும் வண்ணம் அவர்தம் அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என்பதாகும்.

இந்தத் தீர்மானங்களை இணைத்து, அவற்றைச் செயல்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து அன்றைய தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் கடிதம் ஒன்றை எழுதினார். (15.7.2005)

அந்தக் கடிதம் இன்னும் கோப்பில் குறட்டை விட்டுக் கொண்டுதானிருக்கிறது. காரணம் அந்த அரசுக்குத் தமிழ் உணர்வு இல்லாததுதான்.

மத்திய அரசு தொலை தொடர்பு மற்றும் தொழிற் நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு தயாநிதிமாறனுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் கி. சத்தியநாராயணன் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதினார். புலவர் குழந்தை அவர்களை நினைவுகூரும் வகையில் அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது. (12.8.2005).

தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் 24.8.2005 அன்று ஒரு கடிதம் எழுதினார். வாசகர் வட்டம் நிறைவேற்றிய தீர்மானங்களை இணைத்து அவற்றைச் செயலாக்கம் செய்ய அதில் வேண்டுகோள் விடப்பட்டு இருந்தது.

கலைஞரின் சாதனை!

இப்படி இடை விடாத தொடர் முயற்சிகளைக் கழகம் மேற்கொண்டதற்கு தி.மு.க. ஆட்சியில், மாண்புமிகு மானமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக முதல் அமைச்சர் ஆகியுள்ள நிலையில் வெற்றி கிடைத்திருக்கிறது.

இந்த அரும்செயலைச் செய்த முதல் அமைச்சரைப் பாராட்டி, தமிழக அரசைப் பாராட்டி, சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற புலவர் குழந்தை நூற்றாண்டு நிறைவு விழாவில் (29.6.2006) நன்றியைத் தெரிவித்துப் பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அஞ்சல்தலை வெளியிடுவது மட்டும் நிலுவையில் உள்ளது. அதனையும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றுவார் என்பதில் அய்யமில்லை. புலவர் குழந்தை அவர்கள் மறைந்தாலும் காலத்தை வென்று நம்மிடையே வாழ்கிறார்.

வாழ்க அப்பெருமகனார்!


முன்னுரை

நம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு இடையூறாக இருந்து வருவது, குல வேற்றுமை. குலவேற்றுமை என்பது, குறிப்பாகத் தீண்டாமையை உணர்த்தும்.

இந் நாட்டின் எதிர்காலக் குடிமக்களாகிய சிறுவர்களுக்கு, ‘மக்கள் ஒரே இனம்’ என்னும் ஒருமைப்பாட்டுணர்ச்சியை, இப் பள்ளிப் பருவத்திலேயே உண்டாக்குதல் ஏற்புடைத்தாகும். இந்நோக்கத்துடனேயே இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

‘ஒன்றே குலம்’ என்னும் இந்நூலில், தீண்டாமை விலக்கிய பெரியார் சிலரின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம், கதை வடிவில், எளிய இனிய தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளது.

இந்நூலைப் பள்ளிச் சிறார்க்குப் பயன்படும்படி செய்து அன்னார்க்கு மொழியறி வோடு, ஒருமைப்பாட்டுணர்ச்சியையும் உண்டாக்குதல், பெரியோர்களின் பொறுப்பும் கடமையும் ஆகும்.

  பவானி
  15.10.66

  அன்புள்ள,

  குழந்தை

ஒன்றே குலம்


ஒன்றே குலம் - என்பது, திருமூலர் என்னும் தமிழ்ப் பெரியாரின் திருவாக்கு. திருமூலர் செய்த திருமந்திரம் என்னும் நூலில் உள்ளதுதான், ‘ஒன்றே குலம்’ என்னும் இவ்வறவுரை. ஒன்றே குலம்! ஆம், ஒன்றே குலந்தான்!

ஒரே இனமான மக்களை - உயர்ந்த குலம், தாழ்ந்த குலம் என, இருவேறு வகையாகப் பிரித்து வைத்திருக்கும், அங்ஙனம் பிரித்து வைத்ததோடு நில்லாமல், அவ்வாறே நடைமுறையிலும் அதைக் கடைப்பிடித்து நடந்து வரும் குல வேற்றுமைக் கொடு மையைப் போக்க எழுந்ததே, ‘ஒன்றே குலம்’ என்னும் இத்திரு மூலர் திருமந்திரத் திருவாக்கு.

ஒன்றே குலம்- மக்கள் எல்லோரும் ஒரு குலமே, ஓரினமே; பிறப்பிலேயே இவர் உயர்ந்த பிறப்பினர், இவர் தாழ்ந்த பிறப்பினர் என்னும் உயர்வு தாழ்வு மக்களுக்குள் இல்லை. பிறவி வேற்றுமை என்பது வெறும் கட்டுக் கதையே, உண்மையன்று என்பதே, இதன் உட்கருத்து.

சாதி வேற்றுமை, உண்மையிலேயே பொருளற்றதாகும். சாதி வேற்றுமை என்பது, உண்மையானதன்று. ஆடு வேறு சாதி. அதாவது வேறு இனம், அல்லது வகை. மாடு வேறு சாதி என்பது உண்மையானதாகும். அவை வெவ்வேறு சாதிகளே. அவை ஒரே இனம் அல்ல. அவை வெவ்வேறு வடிவமும் உறுப்புக்களும் உடையவை. அவை வேறுபட்ட இயல்பும் உடையவை எனலாம். ஆட்டுக் குட்டி, ஐந்து மாதக் கருவாகும். மாட்டுக் கன்று, பத்து மாதக் கருவாகும்.

ஆனால், மக்களுக்கிடையே உள்ள சாதிகள் இத்தகையன அல்ல. எல்லாச் சாதியாரும், உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்ற எல்லாரும் ஒரே வகையான வடிவமும் உறுப்புக்களும் உடையவ ராகவே உள்ளனர். பொதுவாக எல்லா மக்களும் ஒரே வகையான இயல்புடையவரே யாவர் எனலாம்.

மேலும், இச்சாதி வேற்றுமையால், மக்களினம் ஒன்று பட்டு முன்னேற முடியாமல் இருந்து வருகிறது. இச்சாதி வேற்றுமை, மக்களினத்தை நல்லவாழ்வு வாழ முடியாமல் செய்து வருகிறது.

இவ்வுண்மையை உலகில் அவ்வக் காலத்தே தோன்றிய எல்லாப் பெரியார்களும் எடுத்துக் காட்டி, உண்மையற்ற அச்சாதி வேற்றுமை கூடவே கூடாதெனக் கண்டித்திருக்கிறார்கள். இச்சாதிக் கொடுமையைக் கண்டிக்காத சீர்திருத்தப் பெரியார்கள் ஒருவருமே இலர் எனலாம்.

“சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்
தாழ்ச்சி உயர்ச்சிசொலல் பாவம்!”

என்கிறார். பாரதியார், ‘சாதிகள் இல்லை’ என்று, உறுதியாகவே சொல்கிறார். அவ்வாறு இல்லாத சாதி வேற்றுமையை உண்டென்று சொல்வது, சாதி வேற்றுமை பாராட்டுவது ‘பாவம்’ என்றும் சொல்கிறார். பாவம் - குற்றம்.

மக்களுள் ஒரு சிலரைத் தொடக் கூடாது, தொடுவது தீட்டு; அவரோடு புழங்கக் கூடாது. புழங்குவது பாவம் - என, என்றோ எப்போதோ ஒரு காலத்தே, அவ்வொரு சிலரைத் தீண்டப் படாதவராக, புழங்கப்படாதவராகத் தாழ்த்தித் தனியாகத் தள்ளி வைத்தனர். அவர்கள் அன்று தொட்டுத் தீண்டாதார், தாழ்த்தப் பட்டோர் எனத் தனி இனமாகவே வாழ்ந்து வருகின்றனர். ‘தாழ்த்தப் பட்டோர்’ என்னும் அன்னார் பெயரே, அவர்கள் வலிதில் தாழ்த்தப் பட்டவர், தள்ளிவைக்கப் பட்டவர் என்பதற்குச் சான்றாகும். அவர்கள் பிறப்பிலேயே தாழ்ந்தவர், தாழ்வாகவே பிறந்தவர் எனக் கதை கட்டப்பட்டு, அத் தாழ்த்தப்பட்டோரும் அதை உண்மை யெனவே நம்பி, தாழ்ந்தவராகத் தனியாகவே வாழ்ந்து வரலாயினர். இக்குல வேற்றுமைக் கொடுமையை அறிவுடையார் அத்தனை பேரும் ஒருமுகமாகக் கண்டித்துள்ளனர். அதனுள் ஒன்றே, ‘ஒன்றே குலம்’ என்பது.

ஏழை பணக்காரர், அறிவுள்ளார் அறிவில்லார், நல்லவர் கெட்டவர், வலியவர் மெலியவர் என்னும் வேறுபாடு மக்களுக்குள் உண்டு. இவை மாறிமாறி வருபவை; ஒரே நிலையுடையவை அல்ல. இன்று ஏழை, நாளை பணக்காரன் ஆகலாம். இன்று கெட்டவர் நாளை நல்லவர் ஆகலாம். ஆனால், ஒரு தாழ்குலத் தோன், உயர்குலத்தோன் ஆக முடியாது. பிறப்பிலேயே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் பிறவி வேற்றுமைக் கொடுமை என்றும் மாறாது அப்படியே நிலையாக இருந்து வரும் கொடுமையாகும். இப்பிறவி வேற்றுமைக் கொடுமையால் உண்டானதே, தீண்டாமைக் கொடுமை!

உலக மக்கள் எல்லாரையும் இத்தீண்டாமை என்னும் கொடுநோய் தீண்டாமலில்லை. மேனாடுகளில் இது, வெள்ளை கறுப்பு என்னும் நிறவேற்றுமையால் ஆட்சி புரிந்து வருகிறது. இக் கொடுநோய் அறவே ஒழியாமல், மக்களினம் ஒரு போதும் முன்னேற முடியாது. இது, மக்கள் முன்னேற்றத்திற்குத் தடைக் கல்லாக இருந்து வருகிறது. இதனாலேதான், மக்கள் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள அத்தமிழ்ப் பெரியார், ‘ஒன்றே குலம்’ என்றார். பொருளற்ற அச்சாதி வேற்றமையைப் போக்கி, மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக, ஒரே இனமாக, ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதே, அப்பெரியார் கருத்து.

மீன், தவளை, நண்டு முதலிய நீர்வாழ்வனவெல்லாம் ஒன்றாகவே வாழ்கின்றன. ஆடு மாடு முதலிய விலங்குகள், காக்கை, புறா முதலிய பறவைகள், புழுப்பூச்சிகள் எல்லாம் கூட்டங் கூட்ட மாகக் கூடியே வாழ்கின்றன. ஆயிரக்கணக்கான காக்கைகள் ஒரே மரத்தில் உட்கார்ந்திருப்பதை நாம் பார்க்கிறோம். ‘ஆயிரம் காக்கைக்கு ஒரே கல்’ என்ற பழமொழியை நோக்குங்கள். ஒரு கோடி எறும்புகள் ஒரே வளையில் ஒன்றுகூடி ஒரே இனமாக வாழ்கின்றன. பறவை, விலங்கு, புழுப்பூச்சி ஆகியவற்றுக்குள் தீண்டாமை இல்லை. அவற்றைத் தீண்டாமை என்னும் தொத்து நோய் தீண்டுவதில்லை.

ஆனால், பகுத்தறிவுள்ள மக்கட் கூட்டத்தை மட்டும் அது வாட்டி வதைக்கிறது. மக்கள் ஒன்று கூடி ஒரே இனமாக வாழ முடியாமல் எதற்காக அத்தீண்டாமை என்னும் சுவர் குறுக்கே இருக்க வேண்டும்? உயர் மக்கள் என்போர் மனம் ஒரு சிறிது மாறினால், அதே நொடியில் இத் தீண்டாமை யென்னும் குறுக்குச் சுவரை இடித்து நொறுக்கி அடியோடு அப்புறப்படுத்தி விடலா மல்லவா?

மலந்தின்னும் நாய், கோழிகளைத் தொட்டால் தீட்டு உண்டாவதில்லை. வேண்டுமானால், தொட்ட கையைக் கழுவினால் அத்தீட்டுப் போய் விடுகிறது. ஆனால், பகுத்தறிவுள்ள மக்களில் ஒருசிலரைத் தொட்டால், எப்படித் தேய்த்துத் தேய்த்துக் கழுவி னாலும் தீட்டுப் போவதில்லை. பாம்பு கையைக் கடித்தால் நஞ்சு தலைக்கேறுவது போல், தீட்டு உடல் முழுதும் பரவி விடுகிறது. தலையோடு குளிக்க வேண்டியிருக்கிறது. உடுத்துள்ள உடையிலும் அத்தீட்டு ஒட்டிக் கொள்கிறது. நாய் கோழிகளை விடவா பகுத்தறிவுள்ள மக்களில் ஒரு சிலர் தாழ்ந்தவர்? ஈ எறும்புகளைத் தொட்டால், தொட்ட அக்கையைக் கழுவுவதில்லை. அவற்றை விடவா மக்களிற் சிலர் இழிந்தவர்?

அத்தீண்டாத மக்கள் தூய்மையின்றி (அசுத்தமாய்) இருக்கி றார்கள் எனில், நாயை விடவா அவர்கள் தூய்மை யில்லை? வெயில் வேளையில் கைவண்டி இழுப்போர், குப்பை எடுப்போர், செக்காட்டுவோர், புகையிலை திருப்புவோர், உணவுச் சாலை களில் சமையல் வேலை செய்வோர் ஆகிய உயர் குலத்தினரை விடவா அவர்கள் தூய்மையில்லா திருக்கிறார்கள்? குப்பை எடுப்போர் முதலியோர், அத்தொழில் செய்து கொண்டிருக்கும் போதே எங்கும் செல்கின்றனர். எதையும் தொடுகின்றனர். அவர்களை யாரும் அச்சமின்றித் தொடுகின்றனர்; தீட்டுண்டாவ தில்லை.

எல்லாக் கிணறுகளிலும் புழங்கக் கூடிய கிணற்றுரிமை அத்தீண்டாதார்க்கில்லை. கிணற்றுரிமையோடு, மாற்றிக் கட்ட வேறு கந்தையும் இல்லாத அவர்களில் பெரும்பாலோர் எப்படி நாடோறும் குளிக்க முடியும்? தூய்மையில்லா திருப்பவர்கள் போகட்டும்; குளித்துக் கொண்டு தூய்மையாக இருப்பவர்களைத் தொடலாமல்லவா? ஏன் அவர்களில் ஒருவரையுமே தொடுவ தில்லை? ஏன் தொட அஞ்சுகிறார்கள்?

நண்டு, தவளை, புழுப்பூச்சிகளெல்லாம் கிணற்று நீரில் வாழ்கின்றன. பாம்புகூடக் கிணற்றில் இருப்பதுண்டு. அவை யெல்லாம் இருப்பதால் தீட்டாகாத கிணற்று நீர், பகுத்தறி வுள்ள மக்களில் ஒரு சிலர் தொடுவதால் எப்படித் தீட்டாகி விடும்? குளத்தில் நாய் தண்ணீர் குடிக்கிறது. அதைப் பார்த்துக் கொண்டே தண்ணீர் குடிக்கிறார்கள்; தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர். ஆனால், மக்களில் ஒருசிலர் தொடக் கூடாது. இதை மடமை, அல்லது கொடுமை என்பதல்லாமல் வேறு என்னென்பது? எல்லா உயிர்களுக்கும் உரிமையுடைய கிணறும், குளமும் மக்களில் ஒரு சிலர்க்கு உரிமையில்லாது போனதன் காரணம் என்னவோ நமக்கு விளங்கவில்லை.

நெல், கம்பு, சோளம், கடலை, துவரை முதலிய எல்லா உணவுப் பொருள்களையும் தாழ்த்தப்பட்டோர் தொடுகின்றனர். தொடாமல் அவற்றை அறுத்து அடிக்க முடியாதல்லவா? களத்தில் அடித்த தவசங்களைத் தூற்றுவதே அவர்கள்தானே? அவர்கள் தொட்ட மிளகாயைக் கழுவிச் சாற்றுக்குப் போடுவதில்லை. அவர்கள் தொட்ட புகையிலையை அப்படியே வாய்க்குப் போடு கின்றனர். அவர்கள் தொட்ட பழங்களைக் கழுவித் தின்பதில்லை.

கிணற்றில் தண்ணீர் இறைக்கும் இரும்புச்சால், மண் வெட்டி, அரிவாள், பொன், வெள்ளி, செம்பு நாணயங்கள் முதலியவற்றை அவர்கள் தொட்டால் தீட்டுண்டாவதில்லை. செம்பு, பித்தளை ஏனங்களைத் (பாத்திரம்) தொட்டால் தீட்டு. கிராமக் கணக்குப் பிள்ளைகளின் கணக்கேட்டு அட்டைத் துணியை அவர்கள் தொட்டால் தீட்டுண்டாவ தில்லை. உடுத்தா டையைத் தொட்டால் தீட்டு. வீட்டுக் கூரை வேயும் ஓட்டைத் தொட்டால் தீட்டில்லை. சட்டி பானைகளைத் தொட்டால் தீட்டு. இது என்ன முறையோ?

மருத்துவச் சாலைக்குள் அவர்கள் போவதால் தீட்டுண்டா வதில்லை. தீண்டாதாரைத் தொட்டகையைக் கழுவாமலேயே மருத்துவர் உயர்குலத்தோரையும் தொடுகிறார். மருத்துவ சாலைக்குப் போய் வந்தோர் குளிக்காமலேயே வீட்டுக்குட் போகின்றனர். திருவிழாவுக்குப் போய் வந்தவர் எவரும் குளித்துக் கொள்வதில்லை. சந்தைக்குப் போய் வந்த ஒரு சிலர் சாணித்துளி போட்டுக் கொள்கின்றனர். திருவிழாக் கூட்டத்திலும் சந்தைக் கூட்டத்திலும் தீண்டாதாரைத் தொட்டால் தீட்டில்லை போலும்! இதிலிருந்தே தீண்டாமைக்குத் தூய்மையின்மை காரணம் அல்ல வென்பது விளங்குகிறதல்லவா? உயர்குலத்தோர் காலைத் தொட்டால் தீட்டில்லையாம். இதன் பொருள் நமக்கு விளங்கவில்லை.

தாழ்த்தப்பட்டோர் பல்லால் கடித்து, எச்சிலால் பதம் பண்ணிய வாரால் தைத்த தோல்பறி, தும்பிகளை அப்படியே கிணற்றுக்குள் விட்டுத் தண்ணீர் இறைக்கின்றனர். அப்பறித் தண்ணீரை மனங் கூசாமல் உயர்குலத்தோர் குடிக்கின்றனர். இங்கு தீட்டு என்னானதோ தெரியவில்லை!

நாயும் பன்றியும் நடமாடும் தெருக்களில் அன்னார் நடக்கக் கூடாது. மலந்தின்ற வாயுடன் நாய் படுத்திருக்கும். மலம் பறித்த காலுடன் கோழி நிற்கும். அங்கு மக்கள் செல்லக் கூடாது. பாம்பு, பல்லி, எலி, ஈ, எறும்பு, கொசு, இன்னும், எத்தனையோ புழுப் பூச்சிகள் எல்லாம் வாழும் வீட்டுக்குள் அன்னார் வரக் கூடாது. இது என்ன முறையோ, நமக்குப் புரியவில்லை!

அன்னார் மலமெடுக்கிறார், தெருக் கூட்டுகிறார், தோல் பதனிடுகிறார் எனில், தாய் தன் குழந்தையின் மலத்தை எடுக்கிறாள்; வாசல் கூட்டுகிறாள். மேலும், பன்றியெருப் பொறுக்குவோன் தீண்டத்தகாதவனாவதில்லை. சீழ்ப்பிடித்து முடைநாற்றம் வீசும் புண்ணைத் தொட்டுக் கழுவித் தோலைப் பதனிடும் மருத்துவரை விட, மாட்டுத் தோலைப் பதனிடும் அப் பாட்டாளிகள் எப்படித் தீண்டாதவராவர்? மாடு தின்கிறார் எனில், கோழி, பன்றியைவிட மாடு இழிந்ததா? மாடு தின்போரெல்லாம் தீண்டாதவராகவும் இல்லையே.

எப்போதும் நாய்க்கும் பன்றிக்கும் சோறு ஊற்றுகிறோம். கோழிக்குத் தீனி போடுகிறோம். ஆனால், ஆண்டில் சில மாதங்களில், வாரத்தில் சில நாட்களில் தீண்டாதாருக்குச் சோறு போடுதல், தண்ணீர் ஊற்றுதல் தீட்டு. நாய், பன்றி, கோழி களை விடவா மக்கள் கடைப்பட்டவர்கள்? வேகாத வெயிலில் ஒருவன் விறகுடைக்கிறான்; தாகத்தால் தொண்டை வறண்டு போய் விட்டது. மூச்சுவிட முடியவில்லை. ஆனால், அவன் அத்தாகத் துக்குக் கொஞ்சம் தண்ணீர் கேட்க முடியாமல் புரட்டாசி மாதம் வந்து குறுக்கே நிற்கும். அல்லது வெள்ளி, சனி, திங்கள், செவ்வாய் ஆகிய ஏதாவதொரு நாள் வந்து தடை செய்யும். சில மாதங்களும், சில நாட்களும் பண்டமேய்க்கிப் பையனுக்குக் ‘கஞ்சியூற்றாதீர்’ என்று கட்டளையிடும். ‘கொடுப்பது பாவம், கொடாமை புண்ணியம்’ - இது என்ன முறையோ! ‘ஐயம் இட்டுண்’ என்பது, ஒளவையார் வாக்கு. ‘கொள்ளுதல் தீது, கொடுப்பது நன்று’ என்பது, கம்பர் வாக்கு.

பிறப்பு, வளர்ப்பு, இறப்பு, நோய், நோய்க்கு மருந்து, உண்பது, உறங்குவது, உணர்வு, உறுப்புக்கள் முதலிய எல்லாம் உயர்ந்தோர்க்கும் தாழ்ந்தோர்க்கும் ஒன்றாகவே இருக்க, எப்படி அவர்கள் இழிந்த பிறப்பினர் ஆவர்? ‘பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றார், வள்ளுவர், ‘எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம்’ என்றார் பாரதியார். பன்றிப் பிறப்பினுமா பகுத்தறிவுள்ள மக்கட் பிறப்புத் தாழ்ந்த பிறப்பு?

தீண்டாமை அவர்களைப் பெரும்பாலும் ஏழைகளாகவே வைத்திருக்கிறது. துணிக்கடை, சில்லறைக்கடை, மளிகைக் கடை, சிற்றுண்டிச்சாலை, உணவுச்சாலை போன்ற நல்ல வருவாயுள்ள தொழில் செய்ய அது விடுவதில்லை. உடல் வருந்த விறகுடைக்க வேண்டுமே யன்றி, ஒரு வெற்றிலை பாக்குக் கடை வைக்கக்கூட முடிகிறதில்லை. கோயிலுரிமை வழங்கப்பட்டிருப்பது போல், கிணற்றுரிமை முதலிய எல்லா உரிமைகளும் வழங்க வேண்டும். அவற்றை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும். அவர்கள் தனித்து வாழாமல், உயர் குடிமக்கள் வாழும் ஊரோடு ஒன்றாகவே வாழ வேண்டும். அவர்கள் மாக்கள் நிலையினின்று மக்களாக வேண்டும். அப்போதுதான் நம்நாடு நன்னாடாகும்.

பள்ளியில் எல்லாரும் ஒன்றாக நெருங்க உட்கார்ந் திருக்கிறீர்கள். தாழ்த்தப்பட்ட சிறுவரைத் தொட எந்த ஒரு உயர்குலச் சிறுவனும் தயங்குவதில்லை. ஒருவர்க்கொருவர் பச்சைக் குதிரை தாண்டிக் கொண்டு விளையாடுகிறீர்கள்; தின்பண்டம் வழங்கிக் கொள்கிறீர்கள்; ‘நீங்கள் நாங்கள்’ என்று பேசிக் கொள் கிறீர்கள். ஆனால், பள்ளி வாழ்க்கையை விட்டுக் குடும்ப வாழ்க்கை தொடங்கினால், உயர்வு தாழ்வுணர்ச்சி வந்து விடுகிறது. இத்தலை முறையிலிருந்தாவது, பள்ளி வாழ்க்கையிற் போலவே குடும்ப வாழ்க்கையிலும் நடந்து கொண்டு, தீண்டாமை என்னும் தொத்து நோயை மக்களினத்தினின்று விரட்டுங்கள். கொஞ்சம் இனவுணர்ச்சி இதற்குத் தேவை.

இதுநாள் காறும் நம் நாட்டுச் சீர்திருத்தக்காரர்களும், சமயத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும், பிறரும் இத் தீண்டாமைக் கொடுமையைப் போக்கப் பெரிதும் முயன்று வந்திருக்கின்றனர். பலர் அதை எதிர்த்து வெற்றியுங் கண்டுள்ளனர். இந்நாட்டின் எதிர்காலக் குடிமக்கள் ஆகப் போகும், இந் நாட்டின் அரசரும் அரசியரும் ஆகப் போகும் நீங்கள், உங்கள் காலத்தில் தீண்டாமை என்னும் பெயரே இந்நாட்டில் இல்லாமல் செய்ய முற்படுங்கள். ‘இன்னார் தலைமுறையில் தீண்டாமை ஒழிந்தது. குலவேற்றுமை ஒழிந்து ’ஒன்றே குலமானது’ என்னும் புகழை அடையுங்கள். அதற்குத் துணையாகத் தீண்டாமை யொழித்த பெரியார்கள் சிலரின் வரலாற்றுக் கதைகளை அடுத்து வரும் தலைப்புக்களில் படித்தறியுங்கள்.

காந்தியடிகள்


நம் நாட்டை இன்று நாமே ஆண்டு வருகின்றோம். பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் இந் நாட்டை ஆண்டு வருகிறார்கள். நாம் எல்லோரும் இந்நாட்டு அரசர் களாகவும் அரசியர்களாகவும் இன்று விளங்குகின்றோம். நம் நாட்டில் இன்று மக்களாட்சி நடக்கிறது.

1947க்கு முன், நாம் அயலார்க்கு அடிமைகளாக இருந்தோம். இந்நாட்டை அன்று ஆங்கிலேயர்கள் ஆண்டு வந்தனர். 15.8.1947 இல் நாம் விடுதலை அடைந்தோம். இந்நாட்டு ஆட்சி, ஆங்கிலேயர் கையினின்று நம் கைக்கு மாறியது. அது முதல் நாம் அடிமை நீங்கி உரிமை வாழ்வு வாழ்கின்றோம். இத்தகைய நல் வாழ்வை நமக்கு அளித்தவர் யார்? எனில், நீங்கள் தயங்காமல் காந்தியடிகள் என்பீர்கள். ஆம், அண்ணல் காந்தி தான் நம்மை இங்ஙனம் வாழவைத்தவர். நம் எல்லோரையும் இந்நாட்டு மன்னர் களாக்கியது அண்ணல் அவர்கள்தான். காந்தியடிகள் பிறவாதிருந்திருந்தால், இன்னும் நாம் அயலார்க்கு அடிமையாகவே வாழ்ந்து வருவோம். இன்னும் நம்மை ஆங்கிலேயரே, அவ்வயல் நாடரே ஆண்டு வருவர். காந்தியடிகள் பிறவாதிருந்திருந்தால், நமக்கு விடுதலை உணர்ச்சியே உண்டாகி யிருக்காது; நாம் அடிமை வாழ்வு வாழ்கிறோம் என்பதையே எண்ணியிருக்கமாட்டோம்.

‘சொந்த நாட்டில் அயலார்க்கு, அதுவும் அயல் நாடர்க்கு அடிமையாக இருக்கக் கூடாது’ என்ற எண்ணத்தை, விடுதலை வேட்கையை நமக்கு உண்டாக்கி, நம்மை இந்நாட்டின் உரிமைக் குடி மக்களாய் வாழ வைத்தவர் அண்ணல் காந்தி அவர்கள் தான். வாழ்க அண்ணல் காந்தி வண்புகழ்!

இந்நாட்டின் பதினைந்து மாநிலங்களில் குசராத்தி மாநிலம் ஒன்று. அம்மாநிலத்தில் மேல் கடற்கரையில் உள்ளது கத்தியவார் என்னும் தீவகற்பம். கத்தியவாரிலுள்ள போர்பந்தர் நகரில் காபா காந்தி என்னும் வணிகர் ஒருவர் இருந்தார். அவர் மனைவி புத்திலிபாய் என்பவர். அப்பெற்றோரின் கடைசிப் பிள்ளை தான் நம் காந்தியடிகள்.

2.10.1869இல் அண்ணல் பிறந்தார். மோகனதாஸ் கரன் சந்திர காந்தி என்பது அண்ணலின் முழுப்பெயர். ‘காந்தி’ என்பது, அக்குடிப்பெயர். 13ஆம் ஆண்டுப் பருவத்தில் அண்ணல், கஸ்தூரி பாய் அம்மையாரை வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டார். இலண்டனில் சட்டப் படிப்புப் படித்து வழக்கறிஞரானார். 1893 முதல் 1914வரை தென்னாப்பிரிக்காவில் இருந்தார். அக்காலத்தே அண்ணல், தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர் விடுதலைக்காகப் பாடுபட்டார். 1914இல் இருந்து நம் நாட்டின் விடுதலை வாழ்வுக் காகவே அண்ணல் வாழ்ந்து வந்தார்.

காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு ஒருவாறு உங்களுக்குத் தெரியும். அவர் ஓர் இல்லறத்துறவி; மனைவி மக்களுடன் இருந்து கொண்டே துறவு வாழ்க்கை நடத்தி வந்தார். அத்துறவு வாழ்க்கையை, இந்நாட்டின் அரசியல் வாழ்க்கையாக நடத்தி வந்தார்.

1915இல், சபர்மதி என்னும் இடத்தில் அண்ணல் ஒரு தவப்பள்ளி (ஆச்சிரமம்) ஏற்படுத்தினார். அவ்வூர், பம்பாய் மாநிலத்தில், ஆமதாபாத்துக்கருகில் உள்ள சபர்மதி ஆற்றங் கரையில் இருக்கிறது. அண்ணலின் தவநிலை ஏற்பட்ட பிறகு அவ்வூர் உலகப் புகழ் பெற்றது. சபர்மதியே இந்திய அரசியலின் தலைமையிடமாக இருந்து வந்தது. அன்றைய இந்திய அரசியல், சபர்மதியை எதிர்பார்த்தே நடந்து வந்தது.

1. பழங்குடிப் புதுக்குடும்பம்

சபர்மதித் தவப்பள்ளி ஏற்பட்ட சில மாதங்களில், ‘தங்கள் தவப் பள்ளிகளில் ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பம் சேர விரும்புகிறது. தங்கள் கருத்தென்ன?’ என்று, அமிர்தலால் தாக்கூர் என்பவரிட மிருந்து ஒரு கடிதம் வந்தது. அடிகள் அக்கடிதம் கண்டு மகிழ்ந்தார்; உடனே அனுப்பிவைக்குமாறு அவர்க்கு எழுதினார்.

தூதாபாய் என்பவரும், அவர் மனைவியாரான தானிபென் என்பவரும், தங்கள் எட்டு மாதக் கைக்குழந்தை யான இலக்குமியை எடுத்துக் கொண்டு சபர்மதியை அடைந்தனர். அண்ணல் அன்னாரை அன்புடன் வரவேற்றனர்; இலக்குமியை ஆவலுடன் வாங்கி மார்போடணைத்து முத்தமிட்டனர். இலக்குமியின் பெற்றோர்களான அப் பழங்குடி மக்கள், அக் குழவியைப் பெற்ற நாளினும் பெரிது உவந்தனர். அத் தவப்பள்ளி வியப்புக் கடலுள் ஆழ்ந்தது. ஏன்? திடுக்கிட்டதென்றே சொல்லலாம்.

தவப்பள்ளிக் கிணற்றில் அத்தோட்டக்காரனுக்குப் பாதி சொந்தம். தானிபென் அக்கிணற்றுக்குத் தண்ணீர்க்குப் போனாள். தோட்டக்காரன், ‘அடா! இதென்ன முறைகேடு! தீண்டாதாரை யெல்லாம் ஒன்றாக வைத்துக் கொண்டேதாடு, அவள் கிணற்றுக்குத் தண்ணீர்க்கு வேறு வந்துவிட்டாள். இச்சண்டாளி தொட்ட தண்ணீரையா நாம் தொடுவது? இவரென்ன பித்தர் போல் இருக்கிறாரே! எங்கேயோ போகிற இழவு இங்கே வந்து தொலைத்தது! ஏ புலைமகளே! இனி இங்கே வராதே. வந்தால் அப்புறம்…’ எனப் பலவாறு திட்டினான்.

தானிபென் வந்து அண்ணலிடம் கூறினாள். அண்ணல், ‘அவர் என்ன சொன்னாலும் சரி. அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் தண்ணீர் மொண்டு வாருங்கள். வாய் வலித்தால் அவர் நிறுத்திக் கொள்வார். பொறுமை வெற்றியளிக்கும்’ என்றார். அவ்வம்மை அவ்வாறே தோட்டக்காரன் திட்டுவதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் தண்ணீர் எடுத்து வந்தார். தோட்டக் காரன் மனமிரங்கி, வைவதை விட்டுச் சும்மா இருந்தான்.

இதை அவ்வூரார் அறிந்து அண்ணல் மீது வெறுப்புக் கொண்டனர். இனி யாரும் தவப்பள்ளிக்கு ஒரு காசு கூடக் கொடுக்கக்கூடாது என்று கட்டுத் திட்டம் செய்தனர். அதனால், தவப்பள்ளிச் செலவுக்குப் பணமில்லாமல் வருந்த வேண்டிய நிலை ஏற்பட்டது. கையிருப்பில் ஒரு காசு கூட இல்லை. அடுத்த நாளைக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தவப்பள்ளியி லுள்ள எல்லாரும் மனங்கலங்கினர். அது கண்ட அண்ணல், ‘செலவுக்கு இல்லா விட்டால் எல்லோரும் சேரிக்குப் போய் விடலாம்’ என்று தீண்டாமை ஒழிப்பில் உள்ள தமது உறுதியான கொள்கையை வெளியிட்டார்.

அன்று மாலை ஒரு சேட்டு சபர்மதிக்கு வந்தார். அண்ண லோடு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, ‘தங்கள் தவப் பள்ளிக்குக் கொஞ்சம் நன்கொடை கொடுக்கலாம் என்று விரும்புகிறேன்; தாங்கள் அன்பு கூர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்றார். வழி கேட்டுக் கொண்டு தானாக வந்த பொருளை யார்தான் வேண்டாமென்று மறுப்பர்? மேலும், தவப் பள்ளியின் பொருள் நிலை மறுக்கக் கூடிய நிலையிலா இருந்தது? அண்ணல், ‘தங்கள் விருப்பம்’ என்றார். மறுநாள் அச்சேட்டு ரூ.13 ஆயிரம் அனுப்பினார். தவப்பள்ளியே மகிழ்ந்தது.

சில நாளில் அவ்வூராரும் உடன்பட்டனர். ஏன்? உலகமே உடன்பட்டது. அண்ணலின் அன்பு வலைக்கு உட்படாத மக்களும் உண்டோ? ‘ஒன்றே குலம்’ என்னும் உயர் நெறிக்குச் சபர்மதி இருப்பிடமானது. தெருக் கூட்டல், மலமெடுத்தல் முதலிய எல்லாத் தொழில்களையும் அத்தவப் பள்ளி மக்கள் எல்லோரும் சரி நிகராகவே செய்து வந்தனர். காந்தியடிகளும் அதிலொரு பங்காளியே. அத்தவப் பள்ளியில் உள்ள எல்லோரும் உயர்வு தாழ்வின்றி ஒரே குடும்பமாகவே வாழ்ந்தனர்.

அண்ணலின் வளர்ப்பு மகளான இலக்குமியின் குடியேற்றம், அத்தவப் பள்ளியைப் புனிதமாக்கியதோடு நிற்கவில்லை; இந்தியா முழுதும் பரவியது; இந்திய மக்களைப் பிடித் தாட்டி வரும் தீண்டாமை என்னும் நோயின் வலியை நிலை குலையச் செய்தது. சபர்மதி, இந்நாட்டின் தீண்டாமை விலக்குக்கு வழி காட்டியாய் விளங்கியது.

2. பழங்குடிப் பாட்டி

தீண்டாமை என்னும் நோயை ஒழிக்கவும், அதேபோது பழங்குடி மக்களுக்குத் தொண்டு செய்யவும் அண்ணல் ஒரு சங்கம் ஏற்படுத்தினார். அதை நன்கு நடத்துதற்குப் பெரும் பொருள் சேர்க்க எண்ணினார். அதற்காக, 1934இல், நாடெங்கும் சுற்றுப் பயணம் செய்தார். சென்றவிட மெல்லாம் மக்கள் அண்ணலை அன்புடன் வரவேற்றனர்; தங்களால் இயன்ற பொருளைக் காணிக்கையாகக் கொடுத்தனர். எட்டு நூறாயிரம் (8 லட்சம்) ரூபாய் சேர்ந்தது.

அண்ணல் போன ஊர் தோறும் பொதுக் கூட்டம் நடந்தது. தீண்டாமைக் கொடுமை பற்றியும், அதை ஒழிக்க வேண்டியதன் இன்றியமையாமை பற்றியும் அண்ணல் எடுத்துரைத்தார். விடாப் பிடியுள்ள பலர் மனம் மாறுபட்டது. பழமை விரும்பிகள் பலர் தீண்டாமை விலக்கி வாழத் தொடங்கினர். தீண்டாமை என்பது, மூடப் பழக்க வழக்கங்களில் ஒன்றென்பதை மக்கள் உணரத் தலைப்பட்டனர்.

ஒரு நாள் அண்ணல் ஓரூருக்குப் போயிருந்தார். அவ்வூரே அன்று இன்பக்கடலாடியது. திருவிழாப் போல அவ்வூரார் அவ்வூரை அணி செய்தனர். பொதுக் கூட்டம் தொடங்கியது. அண்ணலைக் கண்டு களிக்க ஏராளமான மக்கள் காணிக்கை யுடன் வந்து கூடினர். தீண்டாமைக் கொடுமையைப் பற்றி அண்ணல் பேசிக் கொண்டிருந்தார்.

70 ஆண்டு நிரம்பிய ஒரு பழங்குடிப் பாட்டியார், காணிக்கை யுடன் சென்று காந்தியடிகளைக் காண விரும்பினார். கையில் ஒரு காசும் இல்லை. கடன் கொடுப்பவர் யார் அந்த ஏழை மூதாட்டிக்கு? வேறு யாதொரு பொருளும் இல்லை. அண்ணலுக்கு விருப்ப மானது ஆட்டுப் பால் என்பதைக் கேள்விப்பட்டிருந்தார் அப்பாட்டி யார். அதை ஏற்றுக் கொள்வாரோ கொள்ள மாட்டாரோ என்ற ஐயம் ஒரு பக்கம். எப்படியாவது அண்ணலைக் கண்ணாரக் கண்டு களிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஒரு பக்கம். ஆர்வம் ஐயப்பாட்டைப் போக்கியது. ஒரு மட்கலத்தில் கொஞ்சம் வெள்ளாட்டுப் பால் கறந்து கொண்டு வீட்டை விட்டுப் புறப் பட்டார்.

அண்ணலைக் காண வேண்டும் என்னும் ஆசை பிடர் பிடித்துத் தள்ள, தலை நடுங்க, தள்ளாடித் தத்தளித்துக் கொண்டு, கோலுங்கையுமாய்க் கூட்டத்தை அடைந்தார். தேன் கூட்டை ஈக்கள் மொய்த்திருப்பது போல் மக்கள் அண்ணலை மொய்த் திருந்ததால், கூட்டத்திற்குள் நுழைய முடியவில்லை. தவித்துக் கொண்டு கூட்டத்திற்கு வெளியே நின்றார் அம் மூதாட்டி.

தன்னைக் காணப் பாட்டி தவித்துக் கொண்டிருப்பதை அண்ணல் கண்டார்; உடனே மேடையிலிருந்து இறங்கினார்; கூட்டத்தை விலக்கிக் கொண்டு பாட்டியிடம் சென்றார்; பாட்டியின் கையிலிருந்த மட்கலத்தை வாங்கிக் கொண்டு, பாட்டியின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போய் மேடையில் உட்காரவைத்தார். பாட்டியின் காணிக்கைப் பொருளான ஆட்டுப் பாலையே முதலில் ஏற்று உண்டு மகிழ்ந்தார். அக்காட்சியைக் கண்ட அக்கூட்டம் கல்லாய்ச் சமைந்தது; இந்தியாவை விட்டே தீண்டாமை என்னும் கொடும்புலி விரண் டோடும்படி, ‘அண்ணல் காந்தி - வாழ்க! தீண்டாமை - ஒழிக!’ என ஆர்த்தது. அப்பாட்டி, அண்ணலையும் கூட்டத்தையும் மாறி மாறிப் பார்த்தபடியே தன்னை மறந்து உட்கார்ந்திருந்தார். பாட்டியின் மகிழ்ச்சிப் பெருக்கை நீங்களே கணித்தறியுங்கள். என்னே அண்ணலின் அருட் பெருக்கு!

3. ஊராளியின் மனமாற்றம்

1934இல், சபர்மதித் துறவி, வார்தாத் துறவி ஆனார். வார்தா என்னும் ஊர், மத்திய மாநிலத்தில் உள்ள ஒரு புகை வண்டிச் சந்திப்பு. வார்தா அருகில் உள்ள மகன்வாடி என்னும் இடத்தில் 1934இல் அண்ணல் தம் தவப்பள்ளியை ஏற்படுத்தினார்.

அவ்வூராளி, (கிராமாதிகாரி) 60 ஆண்டு நிரம்பிய முதியவர்; நல்ல வைதிகர். முதலில் அவர் அண்ணல் மீது வெறுப்புக் கொண்டிருந்தார்; சில நாளில் அண்ணலின் அன்புக் கயிற்றால் கட்டுண்டார். அண்ணலின் சமையல்காரன், கோவிந்தன் என்னும் பழங்குடி மகன்.

ஒரு நாள், வீமன் என்னும் அவ்வூர் மழிப்போன் (நாவிதன்) அண்ணலுக்கு மயிர் வெட்டினான். பாதிமயிர் நறுக்கினதும் அண்ணல், ‘நீர் இங்குள்ள தாழ்த்தப்பட்ட தோழர்களுக்கும் செய்வீரா?’ என்றார். வீமன் முணுமுணுத்தான். ‘ஆனால், எனக்கும் செய்ய வேண்டாம் போ’. என்றார் அண்ணல். அப்போது அவ்வூராளி அங்கு வந்தார். அண்ணல் அவரிடம் வீமன் நடத்தையை கூறினார்.

அவ்வூராளி ,‘நான் சாதி நீக்கம் செய்து விடுவேன் என்று வீமன் அஞ்சுகிறான். நம்ம கோவிந்தனுக்குச் செய்த கையோடே இவனிடம் நான் செய்து கொள்கிறேன்; இது உறுதி’ என்றார்.

அது கேட்ட வீமன், ‘பெரியீர். இன்று முதல் நான் பழங்குடித் தோழர்களுக்கும் செய்கிறேன். ஊராளி அய்யா அவர்கட்கு அஞ்சியே தயங்கினேன். அவரே தங்கள் அன்புக்குக் கட்டுப்பட்ட பின் எனக்கென்ன தடை?’ என்றான். அண்ணல் மகிழ்ந்து, முழுதும் செய்து கொண்டார். பின்னர் வீமன், கோவிந்தனுக்கும் அவ்வூ ராளிக்கும் செய்தான்.

என்னே ஊராளியின் மனாற்றம்! அவ்வூராளிபோல, நம் நாட்டிலுள்ள எல்லா ஊராளர்களும், ஊர்த்தலைவர்களும், சமூகத் தலைவர்களும், பண்ணையக்காரர்களும், காணியாளரும் மனமாற்றம் அடைந்தால், உண்மையை யுணர்ந்தால், அப்புறம் தீண்டாமை என்னும் கொடும் புலி இந்நாட்டில் இருக்குமா என்ன!

பழமையில் ஊறிக் கிடந்த அவ்வூராளியின் மனத்தை, இவ்வாறு மாறுபடும்படி செய்த, இவ்வாறு எளிதில் மாற்றிய அண்ணலின் ஆற்றல்தான் என்னவோ! அண்ணலின் மனத் துணிவே, நல்லதென்று பட்டதைச் செய்தே தீரும் உறுதிப் பாடே, அவ்வூராளியின் மனத்தை அவ்வாறு மாற்றியது. அம்மன வுறுதிதானே நம்மை நூற்றைம்பதாண்டுகளுக்கு மேல் அடக்கி யாண்ட வெள்ளைக்காரரை மூட்டை முடிச்சுகளுடன் கப்ப லேறச் செய்தது!

அத்தகைய துணிவுடையவர்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்; தாம் மேற்கொண்ட செயலை எளிதில் செய்து முடிக்க முடியும் என்பதை உணருங்கள்.

புத்தர் பெருமான்


ஒருநாள் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் இருக்கும். ஓர் அழகிய இளைஞன்; ஆண்டு இன்னும் இருபத்தொன்பது நிரம்பவில்லை. தன் அருமை மனைவி அயர்ந்து தூங்குகிறாள். அரசிளங்குழவி அன்னையின் அருகில் படுத்திருக்கிறது. அரச செல்வத்தையும், மனைவி மக்களையும் துறந்து ஓர் இளவரசன் அரண்மனையை விட்டு வெளிப்பட்டான். எனில், உடனே நீங்கள் ’ கௌதம புத்தர்’ என்பீர்கள்.

ஆம், புத்தர் பெருமான்தான்! ‘அருளறம்’ என்னும் ஒர் உயரிய கொள்கையைக் கண்ட புத்தர்தான் அவ்வாறு வெளிப் பட்டார். உலக நிலையாமையை, உலக வாழ்வின் உண்மையை உலகுக்குணர்த்த, மக்களை அன்பும் அருளும் உடையவராக்க, அரசசெல்வத்தைத் துறந்து ஆண்டியானார்.

பழங்கால வட இந்திய நாடுகளில் வடகோசலம் என்பதும் ஒன்று. அது கங்கை வெளியில் இருந்தது. கபிலபுரம் என்பது, அந்நாட்டின் தலைநகர். கி.மு.6ஆம் நூற்றாண்டில் சுத்தோதனன் என்னும் அரசன் அவ் வடகோசல நாட்டை ஆண்டு வந்தான். அச் சுத்தோதனன் மனைவியான மாயாதேவி என்பாள் பெற்ற பிள்ளைதான் நமது புத்தர் பெருமான்.

புத்தர், கி. மு.567இல் பிறந்தார்; கி.மு.487 வரை, 80 ஆண்டுகள் வாழ்ந்தார். இவரது இயற்பெயர்- சித்தார்த்தன் என்பது. சித்தார்த்தன் கற்க வேண்டிய கலைகளை யெல்லாம் கசடறக் கற்றுணர்ந்தார்; அரசியல் முறையிலும் நல்ல பயிற்சி பெற்றார். சுத்தோதனன் தன்மகனுக்கு, யசோதரை என்னும் மங்கையை மணம் முடித்தான்.

ஆனால், சித்தார்த்தன் மனம் இல்லற வாழ்வில் அவ்வள வாக ஈடுபடவில்லை. ‘உலகம் நிலையானதன்று. உலக வாழ்வு இன்பமும் துன்பமும் கலந்தது; நல்லதும் கெட்டதும் நிறைந்தது. இளமை போய் முதுமை வருகிறது. கண் மங்குகிறது. காது செவிடாகிறது. பல் விழுந்து விடுகிறது. நரை திரையால் உடல் அழகிழந்து அருவருக்கத்தக்கதாகிறது. வாட்டி வருத்தும் தீராத கொடிய நோய்க்கு ஆளாகிறது இவ்வுடல். பிறந்தோர் இறந்து விடுகின்றனர். இதென்ன நிலையில்லாத உலகம்!’ என, உலக நிலையாமையை எண்ணி யெண்ணி இரங்கினார்.

இளமை நிலையாதது. உடம்பு நிலையாதது. செல்வமும் நிலையாதது. நிலையில்லாத இவற்றை நிலையுடையவை என நம்புவதால், மக்கள் துன்புறுகின்றனர். இதனால், மக்கள் வாழ்வே துன்ப முடையதாக உள்ளது. இத் துன்ப வாழ்வைப் போக்கி மக்களை இன்பவாழ்வு வாழச் செய்வதெப்படி? இதை அறிவதில் அவர் மனம் அல்லும் பகலும் ஓயாமல் ஈடுபடுவதாயிற்று. ஒரு வழியுந்தோன்றவில்லை.

ஒருநாள் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் இருக்கும். யசோதரை அயர்ந்து தூங்கினாள். நாடாளப் பிறந்த மகன் அன்னையின் அருகில் படுத்திருந்தான். மனைவி மக்களை அப்படியே படுக்கவைத்து விட்டுப் பள்ளியறையை விட்டு வெளிப்பட்டார் சித்தார்த்தர்.

தன் நண்பனான சயந்தகன் என்பவனைக் குதிரை கொண்டு வரச் சொல்லி இருவரும் வெளிக்கிளம்பினர். நகரை விட்ட கன்றனர்; பொழுது கிளம்புகிற நேரத்தில் குதிரையை விட்டிறங் கினர். தன் நகைகளையும் உடைவாளையும் சயந்தகனிடம் கொடுத்து, ‘இவற்றை என் தந்தையிடம் கொடுத்து, என்னை மறந்துவிடும்படி சொல்லுக’ என்றார் சித்தார்த்தர். சயந்தகன் கண்ணீர் விட்டுக் கலங்கினான். அவனைத் தேற்றியனுப்பி விட்டுத் தனியாகச் சென்றார் கௌதமர்.

நாடாளப் பிறந்த அவர் காடாளலானார்; காடுகளில் வாழ்ந்து வரும் துறவிகளிடம் உண்மை நிலையைப் பற்றிக் கேட்டார். ஒருவரும் சரியான விடை சொல்லவில்லை. பின்பு தனியாக ஓர் அரசமரத்தின் கீழ் இருந்து நெடு நாள் தவம் செய்து உண்மை உணர்வு பெற்றார். அதிலிருந்து சித்தார்த் தர்க்கு - புத்தர், போதி முனிவர் என்னும் பெயர்கள் வழங்க லாயின. போதி-அரச மரம். புத்தருக்கு ஆயிரக்கணக்கான மாணாக்கர்கள் ஏற்பட்டனர். புத்தர் தம் மாணாக்கருடன் நாடு முழுவதும் சுற்றித் தம் கொள்கையைப் பரப்பி வந்தார்.

புத்தர் தம் மாணாக்கருடன் ஓரூரில் தங்கியிருந்தார். புத்தரின் மாணவரிலொருவரான ஆனந்தர் என்பவர் வெளியே சென்றிருந்தார். அது வெயிற்காலம்; நண்பகல் நேரம். அவருக்கு நீர்வேட்கையுண்டானது. தண்ணீர்த் தாகம் பொறுக்க முடிய வில்லை.

வழியில் உள்ள ஒரு கிணற்றில் மாதங்கி என்னும் தாழ்த்தப் பட்ட பெண் ஒருத்தி தண்ணீர் சேந்திக் கொண்டிருந்தாள். ஆனந்தர், ‘அம்மா! மிக்க விடாயாக இருக்கிறது; கொஞ்சம் தண்ணீர் ஊற்றுங்கள்’ என்றார்.

அப்பெண்மணி, ‘ஐயா! நானோர் தீண்டப்படாத குலப் பெண்; நான் தங்களுக்குத் தண்ணீர் ஊற்றக் கூடாது; நான் தொட்ட தண்ணீரைத் தாங்கள் குடிக்கக் கூடாது’ என்றாள்.

‘அம்மணி! நீ யாராயிருந்தாலும் குற்றமில்லை. எனக்குத் தாகம் அதிகம். நாவறண்டு போய்விட்டது. பேசவே முடிய வில்லை. தண்ணீர் குடியாமல் நான் என் இருப்பிடம் போய்ச் சேர முடியாது. காலத்தே செய்த இவ்வுதவி ஞாலத்தினும் பெரிதாகும். வேறொன்றும் எண்ணவேண்டாம்; கொஞ்சம் தண்ணீர் ஊற்றும்’ என்றார் ஆனந்தர்.

அப்பெண், பார்க்கலாம் என்று ஊற்றினாள். ஆனந்தர் ஆர்வத்தோடு அத்தண்ணீரைக் குடித்துவிட்டு, ‘நன்றாக இரு’ என்றார்.

அது கண்ட மாதங்கி வியப்புற்று, ‘ஐயா! தாங்கள் யார்? உயர் குலத்தினராக இருந்தும், வழக்கத்திற்கு மாறாகத் தாழ்த்தப்பட்ட குலத்தினளான, தீண்டத் தகாதவளான என்னிடம் தண்ணீர் வாங்கிக் குடித்தீர்கள். இது புதுமையாக வல்லவோ இருக்கிறது?’ என்றாள்.

‘என் குருநாதர் அங்கிருக்கிறார். அவரிடம் வந்து கேட்டால் உண்மையை உரைப்பார். வருக’ என்று, ஆனந்தர் அப் பெண்ணைப் புத்தர் பெருமானிடம் அழைத்துச் சென்று, நடந்ததைக் கூறினார்.

புத்தர், ’அம்மணி! மக்கள் எல்லோரும் ஒரே இனம்; ஒரே பிறப்பு. மக்களிடை உயர்வு தாழ்வு கற்பிப்பது மடமை, அல்லது கொடுமையாகும். சாதி வேற்றுமைக்கு உண்மையான காரணம் இல்லவே இல்லை.

இதோ, இவர்களைப் பார், எனத் தம் மாணவர்களைச் சுட்டிக் காட்டி, ’இவர்கள் காரணமில்லாமல் கற்பிக்கப் பட்டுள்ள உயர்வு தாழ்வான பல சாதியைச் சேர்ந்தவர்கள். இவர்களிடை ஏதாவது சாதி வேறுபாடு தெரிகிறதா? இல்லை யல்லவா? இவர்கள் எத்தகைய வேறுபாடு மின்றி, ஒன்றாகவே இருந்து வருகின்றனர்; ஒருங்கே கலந்திருந்துண்டு வருகின்றனர்.

தீட்டு, அல்லது தீண்டாமை என்பதெல்லாம் அறியா மையின் பாற்பட்டதாகும். எக்காலத்தோ, யாரோ சில தன்னலமி களால், வேண்டுமென்றே உண்டாக்கப்பட்ட இக்கொடுமை, மக்களினத்தை வாட்டி வருத்தி வருகிறது’ என, உண்மை யறிவு புகட்டி அனுப்பினார் அப்பெண்ணை.

இச்செய்தி அந்நாட்டரசனான பிரசேனசித்து என்பான் காதுக்கெட்டியது. அவன் தன் அமைச்சர் முதலியோருடன் அங்கு வந்து, புத்தர் பெருமானை வணங்கி, ‘பெரியீர்! மக்களில் தாழ்வுயர்வில்லை; எல்லோரும் ஓரினம். தீட்டில்லை; தீண்டாமை இல்லை எனல், எப்படிப் பொருந்தும்? சாதி வேறுபாடும், தீட்டும் இல்லை என்றால், அவை ஏன் நடை முறையில் இருந்து வருகின்றன?’ என, வழக்காடினான்.

புத்தர், தீண்டாமையின் உண்மையான உட்கருத்தை விளக்கமாக எடுத்துக் கூறி, தீட்டும், தீண்டாமையும் உண்மை யானவை அல்ல என்பதை அவனை ஒப்புக் கொள்ளுமாறு செய்தார். அரசன் மகிழ்ந்து, தன் அறியாமையை மன்னிக்கும் படி வேண்டி, விடைபெற்றுச் சென்றான்.

அவன் அதோடு நின்றுவிட வில்லை; தன் நாட்டினின்றும் தீண்டாமை என்னும் அக்கொடும்புலியை விரட்டியடிக்க முற்பட்டான்.

புத்தரின் அறிவுரையால், பிரசேனசித்து மட்டுமா உண்மை யுணர்வு பெற்றான்? அக்காலத்தரசர்கள் எத்தனையோ பேர் மனமாற்றம் அடைந்தனர். அன்னார் நாட்டுக் குடிமக்கள் சாதிக் கொடுமையினின்று தப்பினர். அதனாலன்றோ, 2500 ஆண்டு கட்குமேல் ஆகியும், இன்னும் புத்தர் பெருமானின் புகழ் அப்படியே ஒளிவீசிக் கொண்டிருந்து வருகிறது! புத்தர் பெருமானின் அறிவுரையை நீங்கள் பின்பற்ற வேண்டாமா!

இராசராச சோழன்


தமிழகத்தே ஆட்சிமுறை என்று ஏற்பட்டதோ அன்று தொட்டுத் தமிழகம், சேர சோழ பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர் மரபினரால் ஆளப்பட்டு வந்தது. தமிழரசு தோன்றியதி லிருந்து, கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைக் காலம் வரை அம் முடியுடை மூவேந்தரும் சீருஞ் சிறப்புடன் தொடர்ந்து ஆண்டு வந்ததால், தமிழகம் சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என முப்பெரும் பிரிவாகப் பிரிந்திருந்தது.

இவற்றுள், திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் - சோழநாடு ஆகும். உறையூரும், காவிரிப்பூம்பட்டினமும் சோழ நாட்டின் பழைய தலைநகரங்கள். கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப் பகுதிக்குப் பின், கி.பி.9ஆம் நூற்றாண்டு வரை சோழ மன்னர்கள் வலிகுன்றி, வரலாற்றுச் சிறப்பின்றிப் போயினர். அக்காலத்தே இருந்த சோழமன்னர்கள் இன்னார் என்றே தெரியவில்லை. கி.பி.9ஆம் நூற்றாண்டில், விசயாலயன் என்னும் சோழ மன்னன், தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு மறுபடியும் சோழப் பேரரசைத் தோற்றுவித்தான். விசயாலயன் முதல் வந்தோர் பிற்காலச் சோழர் எனப்படுவர். அப்பிற்காலச் சோழர்களில் முதல் இராசராசன் என்பான், முதன்மை யுடையவன் ஆவான்.

இவன், கி.பி.985 முதல், 1014 வரை சோழ நாட்டைச் சீருஞ் சிறப்புடன் ஆண்டு வந்தான். இவன், கல்வி கேள்விகளிற் சிறந்தவன்; தமிழ் மொழியிடத்து அளவு கடந்த அன்புடை யவன். இவனொரு பெரு வீரனாகவும் விளங்கினான். சங்க காலத்திற்குப் பிறகு, (கி.பி. 250 பின்) சீர்குலைந்து போன சோழப் பேரரசை முன்னிலும் சிறப்புடைய தாக்கியவன் இராசராசனே. தேய்ந்து மாய்ந்து போன சோழ மன்னர் புகழை, முன்னிலும் பன்மடங்கு விளங்கச் செய்த பெருமை இவனையே சாரும். இவன், சிறந்த சைவ சமயப் பற்றுடையவன். தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியவன் இவனே.

ஒருநாள் இவன் அவைக்கு வந்த சிவனடியார் ஒருவர், தேவாரப் பதிகம் ஒன்றை உருக்கமாகப் பாடினார். அத் தேவாரப் பாடல்களின் சுவையில் ஈடுபட்ட இராசராசன், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய தேவாரம் முழுமையையும் ஒன்று திரட்டி வைக்க ஆவல் கொண்டான். தமிழகத்தின் பல இடங் கட்கும் ஆள் விட்டுத் தேடினான். மூவர் தேவாரம் முழுமையும் சிதம்பரத்திலிருந்து கிடைத்தன. எண்ணிய எண்ணம் நிறைவேறிய சோழன் அளவிலா மகிழ்ச்சி யடைந்தான். திருநாரையூர் நம்பி யாண்டார் நம்பி என்னும் சைவப் புலவரைக் கொண்டு, அத்தே வாரப் பாடல்களைத் திருமுறைகளாக வகுத்தான். சம்பந்தர் தேவாரம் - முதல் மூன்று திருமுறைகள். அப்பர் தேவாரம் - நான்கு ஐந்து ஆறு திருமுறைகள். சுந்தரர் தேவாரம் - ஏழாந் திருமுறை. இத்தேவாரத் திருமுறைகள் ஏழும் -‘மூவர டங்கல் முறை’ எனப்படும். அதனால் இவன், திருமுறை கண்ட சோழன் எனப் பெயர் பெற்றான்.

பத்துப்பாடல்கள் கொண்டது - பதிகம் எனப்படும். தேவாரப் பாடல்கள், ஒவ்வொரு கோயில் மீதும் ஒவ்வொரு பதிகமாகப் பாடப் பெற்றவையாகும். அவை, திருக்கழுமலப் பதிகம், திருநணாப்பதிகம், திருவையாற்றுப் பதிகம் எனப் பெயர் பெறும்.

தேவாரப் பதிகங்கள் - குறிஞ்சி, நட்டபாடை, பஞ்சமம், சாதாரி, புறநீர்மை, தக்கேசி முதலிய பண்களுடன் பாடப் பட்ட வையாகும். பண் - இசை. சிதம்பரத்தில் கிடைத்த தேவார ஏடுகளில் பண் எழுதப்படவில்லை. அத்தேவாரப் பதிகங்களுக் கெல்லாம் பண்ணமைக்க விரும்பினான் இராசராசன்.

சிவநேயச் செல்வர்களை வரவழைத்துக் கேட்டான்; சில பதிகங்களுக்குச் சிலர் ஒருவாறு பண் கூறினர். எல்லாப் பதிகங் களுக்கும் பண் தெரிந்தவர் எங்கு தேடியும் கிடைக்க வில்லை. சோழன் மிகவும் மனம் வருந்தினான்; அதே கவலையாக இருந்தான். முடிவில் ஒரு நல்ல செய்தி கிடைத்தது.

திருஞான சம்பந்தர் தேவாரங்களை, திருநீலகண்டப் பெரும்பாணர் என்பார் யாழிலமைத்து வாசித்து வந்தார். பாணர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்; திருவெருக்கத்தம் புலியூரினர். அத்திருநீலகண்டப் பெரும்பாணர் குடும்பத்தினர் வழிமுறையாகத் தேவாரப் பண்முறைகளைப் பயின்று வந்தனர். அக்குடும்பத்தில், நன்கு பண்முறை தெரிந்த பாண் மகள் ஒருத்தி இருப்பதாகக் கேள்விப்பட்டான் இராசராசன்.

சோழன் தன் எண்ணம் நிறைவேறியதை அறிந்து மகிழ்ந்தான்; அப்பாணிச்சியை அழைத்து வரும்படி அமைச்சரை அனுப்பினான். அமைச்சர் திருவெருக்கத்தம் புலியூர் சென்றார்; அவ்விறலியிடம் அரசன் கருத்தைத் தெரிவித்தார். அப்பாண் மகள் அகமகிழ்ந்து, அரசன் கட்டளையை ஏற்று அமைச்சருடன் தஞ்சைக்குப் புறப்பட்டாள்.

பாடினி வருகையை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண் டிருந்த சோழன், அவளைத் தமிழ் மகளே எனக் கொண்டு அன்புடன் வரவேற்றான். அவள் ஒரு தீண்டப் படாத வகுப்பினள் என்பதை அவன் எண்ணவில்லை; அரண்மனைக்குள் அழைத்துச் சென்றான். அறுசுவை உணவிட்டு அன்புடன் போற்றினான். பின்னர்ச் சரி சமனான இருக்கையில் அவளை இருக்கச் செய்து, எல்லாத் தேவாரப் பதிகங்களுக்கும் பண்ணமைத்தான்; பண்ணமைத்து முடிந்ததும், சிவநேயச் செல்வர்களை வர வழைத்து அப்பாண்மகளைக் கொண்டு பண்ணரங்கேற்றினான். அதாவது, அப்பதிகங் களைப் பண்ணுடன் பாடிக்காட்டும்படி செய்தான். பண்ணமைத்த நாட்களில் அப்பாண்மகள் அந்தப்புரத்தில் அரசியுடன் அரண்மனை விருந்தினளாகவே இருந்து வந்தாள். பின் வேண்டிய வரிசைகளுடன் எருக்கத்தம் புலியூரில் கொண்டு போய்விட்டனன். என்னே இராசராசனின் பெருந் தன்மை! மக்கள் எல்லோரும் ஓரினம் என்னும் ஒருமை மனப்பான்மை!

தீண்டாத குலத்தினளான அப்பாண் மகளால் பண்ண மைக்கப்பட்ட தேவாரப் பதிகங்களைப் பண்ணுடன் மன முருகப் பாடுகிறோம். பாடக் கேட்டு மகிழ்கிறோம். ஆனால், அக்குலத் தினரை, அப்பாண்மகள் வழியினரைத் தொடுதல் தீட்டு, அவர் களுக்கு இடுதல் தீட்டு என்கிறோம். இது என்ன முறை? அத்தாழ்த்தப்பட்ட குலமகள் அமைத்த பண்ணன்றோ கேட்போர் மனத்தை உருகச் செய்கிறது! அப்பண்ணுடன் கூடிய தேவாரத் திருமுறைகள்தான், சைவத் தமிழ் மறையாகும்.

தலைவர் நேரு


உலகப் பேரொளி என்பது, கதிரவனின் (சூரியன்) பெயர்களில் ஒன்று. உலக முழுமைக்கும் பேரொளியைத் தருதலால், கதிரவனுக்கு அப்பெயர் ஏற்பட்டது. ஆனால், இன்று, ‘உலகப் பேரொளி’ என்னும் அப்பெயர், கதிரவனைக் குறியாது, இவ்வுலக மக்கள் தலைவர்களில் ஒருவரைக் குறிக்கும் பெயராக ஆகி விட்டது.

யார் அவர்! பகலவனுக்குப் போட்டியாக உள்ள அவர் யார்? இக்கேள்விக்கு நீங்களே விடை சொல்வீர்கள், நேரு என்று. ஆம், நமது ஒப்பற்ற தலைவர், காந்தியடிகளுக்கு அடுத்த நமது மாபெருந் தலைவர் நேரு அவர்கள்தான். அப்பெயருக்கு உரியவர். உலகப் பேரொளி, நேரு!

இந்திய அரசியல் வானில் தோன்றி ஒளிவீசிய பேரொளி களில், நமது தலைவர் நேரு அவர்கள் மங்காப் பேரொளி யாவர். மேருவே அன்ன நம் நேருவே, இந்திய அரசியல் வானில், உலகப் பேரொளி என்னும் அத்தகு சிறப்பைப் பெற்றனர்.

நேரு அவர்களின் வாழ்வே அரசியல் பொதுவாழ்வாகும். இவர் குடும்பமே அரசியல் வாழ்வுக் குடும்பம். குடும்பமே அப்படியே அரசியல் தொண்டு செய்த பெருமை, நேரு குடும்பத் திற்கே உண்டு. தலைவர் நேரு அவர்கள் அஞ்சா நெஞ்சமும் அதற்கேற்ற தகுதியும் திறமையும் உடையவர்; ஓயா உழைப்பினர். உலையா முயற்சியினர். பொது நலத்தையே அவர் பூணாகப் பூண்டவர்; பரந்த நோக்கமும் விரிந்த எண்ணமும் உடையவர்; அருளுள்ளங் கொண்ட அரசியல் வீரர். உலக அரசியல் அறிஞர் களில் தலைவர் நேரு அவர்கள் முன் வைத் தெண்ணத் தக்கவர். இதனால்தான் அவர்க்கு, ‘உலகப் பேரொளி’ என்னும் பெயர் ஏற்பட்டது. ‘மக்களுள் மாணிக்கம்’ என்பது அவரது மற்றோர் அத்தகு பெயர்.

இப்பெயர்களைவிட, நேரு மாமா என்னும் பெயர் உங்களுக்கு அவ்வளவு அறிமுகமான பெயர். ஆம், தலைவர் நேரு அவர்கள், சிறுவர்களாகிய உங்களிடத்தில், அளவு கடந்த அன்புடையவர். உங்களை ‘எதிர்காலச் செல்வங்கள்’ என்று பெருமையாக அழைத்தவர் நேரு ஒருவரேயாவர். ‘உங்களை’ என்பது, தமிழ்ச்சிறார்களை மட்டும் குறிப்பதாகாது. இந்தியச் சிறுவர்களையும், இல்லை, உலகச் சிறுவர்களையே குறிக்கும். உலகச் சிறுவர்களெல்லாம் நேரு அவர்களை, ‘நேரு மாமா’ என்றேதான் அன்போடு அழைத்து வந்தனர்; இன்றும் அவ்வாறே தான் அழைத்து வருகின்றனர்.

நேரு அவர்களின் தந்தையார் பண்டித மோதிலால் நேரு ஆவர். அவர் ஊர் அலகாபாத்து. அவர்தம் மாளிகையின் பெயர் ஆனந்த பவனம் என்பது. மோதிலால் நேரு பெருஞ் செல்வர்; சிறந்த வழக்கறிஞர்; இந்திய நாடே கலங்கிக் கண்ணீர் விட்டழ அரசியல் குற்றவாளியாகச் சிறையிலேயே உயிர் விட்ட பெரியார் ஆவர். நேரு அவர்களின் தாயார் சொரூபராணி அம்மையார் ஆவர்.

தலைவர் நேரு, 14.11.1889 இல் பிறந்தார். பண்டித ஐவகர்லால் நேரு என்பது இவரது முழுப் பெயர். பெருஞ் செல்வப் பிள்ளையாதலால், இளமையில் இவர் ஆங்கிலச் செவிலியால் வளர்க்கப்பட்டனர்; ஆங்கில ஆசிரியர்களிடம் கல்விகற்றனர். பின்னர் இவர், இங்கிலாந்திலுள்ள மன்னர் மக்கள் படிக்கும் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்று, சட்டம் படித்து வழக்கறிஞரானார்.

இவர் இந்தியா வந்ததும், நாட்டு விடுதலைப் போரில் ஈடுபட்டார்; 7 முறையினில், 12 ஆண்டுகள் சிறையில் இருந்தார். 1916 இல், கமலா நேரு என்னும் அம்மையாரை, இவர் வாழ்க்கைத் துணைவியராகக் கொண்டார்; இன்றைய இந்திய முதலமைச்சர் திருவாட்டி இந்திரா காந்தி அவர்களை நமக்குத் தந்தார். காந்தியடிகளின் அரசியல் செல்லப் பிள்ளையாகிய நேரு அவர்கள், 15.8.1947 இல் விடுதலை இந்தியாவின் முதலமைச்சர் ஆனார்; 27.5.1964 இல் நம்மை விட்டுப் பிரியும் வரை இந்திய முதலமைச்ச ராகவே இருந்தார்.

14.3.1937 இல், டில்லியில் ஒர் அரசியல் மாநாடு நடந்தது. அதற்கு நம் நேரு அவர்கள் சென்றார். அன்று நேரு, முதலமைச்சர் நேருவாக இல்லை. வெறும் அரசியல் தலைவர் நேருவாகவே இருந்தார். ஆனால், அன்றே அவர் இந்திய மக்களின் பெருமதிப்பைப் பெற்றுவிட்டார். ஓரூர்க்கு நேரு வருகிறார் என்றால், மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடிவிடுவர். நேரு அவர்களைக் கண்டு களிக்கவும், அவர் பேச்சைக் கேட்கவும் நெடுந்தொலைவில் இருந்தெல்லாம் மக்கள் வந்து குவிந்து விடுவர்.

டில்லி மாநாட்டுக்குச் சென்ற நேரு, டில்லியிலுள்ள காசிதாபாத்து என்னும் புகை வண்டி நிலையத்தில் இறங்கினார். நேருவைப் பார்க்க மக்கள் ஏராளமாகக் கூடி விட்டனர். வெள்ளம் போன்ற மக்கட் கூட்டத்தினிடையே மிதக்கும் கப்பல் போல நின்றார் நேரு.

அப்போது புகைப்படம் பிடிப்போன் ஒருவன், நேருவைப் படம் பிடிக்க முடின்றான். நெருக்கமான அக் கூட்டத்தில் அமைதியாக நின்று படம் எடுப்பது அவ்வளவு எளிதாகத் தோன்றவில்லை. கூட்டமென்ன சிறிய கூட்டமா? நேருவின் எதிரில் உள்ள மேரு போன்ற கூட்டம்! படம் பிடிக்கும் வரை அக்கூட்டம் அமைதியாக இருக்க வேண்டுமே. எனவே, நேரு படம் பிடிக்க மறுத்துவிட்டார்.

மக்கட் கூட்டத்தினிடையே செல்லும் நேருவைப் பார்க்க மக்கள் மேலும் மேலும் வந்து கூடிக்கொண்டே இருந்தனர். அங்குள்ள தோட்டியொருவன், நேருவைப் பக்கத்தில் சென்று பார்க்க விரும்பினான். ஆனால், தேன் கூட்டை மொய்க்கும் தேனீக்கள் போல் மக்கள் கூடியுள்ள அந்நெருக்கத்தில், குப்பை கூட்டும் விளக்குமாற்றுடன் அக்கூட்டத்துள் செல்ல முடியாமல், ‘பக்கத்தில் போய்ப் பார்க்க முடியவில்லையே’ என்னும் ஏக்கத்துடன் அவன் ஒரு மூலையில் நின்றுகொண்டிருந்தான்.

மக்கட் கூட்டத்தினிடையே, விண்மீன் கூட்டத்தினிடையே செல்லும் மதியைப் போல் செல்லும் நேரு, அத்தோட்டி நிற்கும் நிலையைக் கண்டார்; அவன் தம்மை அணுகி, தம்மை நன்றாகக் கண்டு களிக்கவேண்டும் என்று பேராவலாக உள்ளான் என்பதை அவன் முகக் குறிப்பால் உணர்ந்தார்; அவனை நன்கு உற்றுப் பார்த்தார். அவனும் இவரையே பார்த்தகண் மாறாமல் பார்த்தான்.

பல கோடி இந்திய மக்களின் வாழ்வே தம் வாழ்வெனக் கொண்டுள்ள நேரு அவர்கள், அவ்வேழைப் பாட்டாளி மீது இரக்கங் கொண்டார். அவனது ஆவலை நிறைவேற்றி வைக்க எண்ணினார்; கடல் போல் தம்மைச் சூழ்ந்து நின்ற மக்கட் கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவ்வேழைப் பாட்டாளியிடம் ஓடினார்; அருகில் சென்று, அவனைத் தழுவிக் கொண்டு, ‘என்ன வேண்டும்?’ என்று அன்புடன் கேட்டார்.

அவன், ‘தங்களைப் பக்கத்தில் வந்து கண்குளிரக் கண்டு களிக்க வேண்டும் என்றுதான் அரும்பாடுபட்டேன். இத்துடைப் பத்துடன் கூட்டத்தின் உள்ளே வர என் மனம் இடந்தர வில்லை. இனி எனக்கு வேண்டியது என்ன இருக்கிறது? இனி எனக்கு ஒன்றும் குறைவில்லை’ என்று, தான் பெற்ற பெரும் பேற்றை வெளியிட்டான்.

புன்முறுவலுடன் நேரு அவனைத் தடவிக் கொடுத்துக் கொண்டே, முன் தன்னைப் படம் பிடிக்க முயன்றவனைக் கூப்பிட்டார். அவனிடம், ‘இத்தோழனோடு என்னைப் படம் எடும்’ என்றார். அக்கூட்டமே வியப்புக் கடலில் மூழ்கியது. அவ்வேழைப் பாட்டாளித் தோழனின் தோள்மேல் கையைப் போட்டுக் கொண்டு, படம் பிடிப்பதற்கு ஏற்ற நிலையில் நின்றார் நேரு. அப்பாட்டாளி, ஒரு கையில் பிடித்த துடைப்பத்துடன் அவன் நிற்பது போல நின்றான்.

அப்படம் பிடிப்போன் பெருமகிழ்ச்சியுடன், ‘இனி இந்தியாவின் ஏழ்மை நிலையும், ஏற்றத்தாழ்வான சாதிக் கொடுமையும், தீண்டாமைப் புலியும் அடியோடழிந் தொழி வதற்கு இதுவே அறிகுறி’ என்பதை மக்கள் கண்டு களிக்கும்படி, அத்தோட்டியையும் நேருவையும் ஒன்றாகப் படம் பிடித்தான்.

புன்னகை பூத்த முகத்துடன் அப்பாட்டாளித் தோழனுடன் படம் பிடித்துக் கொள்ள நிற்கும் நேருவை, படத்தில் அமைக்கப் படப்பெட்டியின் வழியாகப் பார்த்த அப்படம் பிடிப்போன் கண்கள், அக்காட்சியைக் கண்டு களித்த வண்ணம், ‘யாம் பெற்ற பேறு பெறுக இவ் வையகம்’ என்று பெருமிதம் கொண்டன.

அக்காட்சியைக் கண்ட அக்கூட்டமே திடுக்கிட்டது; நேருவின் பெருந்தன்மைக்கு ஒப்புக் காணாது மயங்கிற்று. அவன் படம் பிடிக்கும்போது அக்கூட்டம் படம் போலவே இருந்தது; ஏன்? அப்பாட்டாளிக்கு வாய்த்த வாய்ப்புத் தனக்கு வாய்க்க வில்லையே என்று, பொறாமை கொண்டது என்று கூடச் சொல்லலாம். அப்பாட்டாளி தன்னை மறந்து படம் போலவே நின்றான். டில்லி மக்கள் கண்கள் அப்புதுமைக் காட்சியைக் கண்டு களித்தன. அவர் மனம் நேருவின் தனிப் பெருந் தன்மையை எண்ணி மகிழ்ந்தது. என்னே நேருவின் அருட்பெருக்கு! ஒப்பற்ற ஒருமைப்பாட்டுத் தன்மை!

நேருவின் இவ் வருட்பெருஞ் செயல், தன்னைக் காண முடியாமையால், மரத்தின் மீது ஏறிப் பார்த்த சகேயு என்னும் ஆயக்காரனிடம் சென்று, கீழே இறங்கும்படி செய்து, அவனோடு அளவளாவிய ஏசுநாதரின் அருட்பெருஞ் செயலையும் மீறி விட்டதல்லவா?

‘நேரு மாமா’ என, அவர்க்கு, உங்களுக்கென ஒரு தனிப் பெயர் படைத்துக் கொண்ட நீங்கள், அவர் கொள்கையை, நடக்கையைக் கடைப்பிடித்து நடக்க விரும்புவீர்களல்லவா? ஆம், அதுதான் தலைவர்களிடம் அன்பு கொள்வதன் பயன் ஆகும்.

காசிநாத தேவால்


தமிழ்நாடு, மலையாள நாடு, ஆந்திர நாடு, கன்னட நாடு என்னும் நான்கு மாநிலங்களும் 1956க்கு முன்னர். சென்னை மாநிலம் என ஒரே மாநிலமாக இருந்து, பின்னர் நான்கு மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது போலவே, அன்று ஒரே மாநிலமாக இருந்த பம்பாய் மாநிலம், இன்று - மராட்டியம், குசராத்தி என இரு மாநிலங்களாகப் பிரிக்கப் பட்டுவிட்டது.

மராட்டிய மாநிலத்தின் தலைநகர் - பம்பாய். அது, மேல் கடற்கரையில் உள்ள ஒரு சிறந்த துறைமுகப் பட்டினம். இந்தியா விலேயே சிறந்த தொழில்வளமுடைய நகராக விளங்குகிறது பம்பாய் மாநகர். தமிழ் நாட்டின் சிறந்த தொழில் வளமுடைய நகரான கோவை மாநகரை, இரண்டாவது பம்பாய் என்பர். அதனினும் மிக்க தொழில் வளமுடையது அந்நகர்.

இன்று தனி மாநிலமாகப் பிரிந்துள்ள மராட்டிய மாநிலம், ஒரு காலத்தே தனியரசு நாடாக விளங்கிற்று. அம் மாராட்டியத் தனியரசை நிறுவியவன், வீர சிவாஜி என்பது உங்களுக்குத் தெரியும். சிவாஜி கண்ட அம்மராட்டிய நாட்டிற்கு, பூனா என்பது தலைநகராக விளங்கியது. அந்நகர், பம்பாய்க்குத் தெற்கில் உள்ளது. அஃதும் ஒரு சிறந்த தொழில் வளமுடைய நகரே.

பூனா நகரில் காசிநாததேவால் என்னும் பெருஞ் செல்வ ரொருவர் இருந்தார். அவர் மராட்டியப் பிராமண குலத்தினர்; 1866இல் பிறந்தவர்; செல்வமாக வளர்க்கப் பட்டவர்.

காசிநாதர், பள்ளிச் சிறுவராய் இருக்கும்போதே ஏழைச் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடுவார்; பெற்றோர் கண்டித்தால் தக்க மறுமொழி கூறி அவர்களை மகிழ்விப்பார். மிகவும் வைதிக மான குடும்பத்தில் பிறந்த இவர்க்கு இத்தகைய மனப்பான்மை எப்படி உண்டானதென்பது, புதிராகவே உள்ளது. வீட்டுப் பழக்கத்துக்கு நேர்மாறாக இயல்பாகவே இவர்க்கு இச்சீர்திருத்த குணம் அமைந்தது வியப்புக்குரிய தொன்றேயாகும்.

பருவம் ஆக ஆக, வளர வளரக் காசிநாதரின் இச்சீர்திருத்த மனப்பான்மையும் வளர்ந்து கொண்டே வந்தது. மக்களில் ஒரு சிலரைத் தொடக்கூடாது என்னும் தீண்டாமைக் கொடுமை யைப் பற்றி எந்நேரமும் சிந்திக்கத் தொடங்கினார். பல அறிஞர்களிடம், தீண்டாமை என்னும் தொத்து நோயை ஒழிக்கும் வழியைப் பற்றி வினாவினார். ‘சாதி வேற்றுமை இருக்கிற வரையில் தீண்டாத வகுப்பினரும் இருந்துதான் தீருவர். தீண்டாத வகுப்பினர் இருக்கும் வரை மக்களினம் அமைதியான இன்பவாழ்வு வாழ முடியாது. நம் நாடும் விடுதலை பெறாது’ என்ற முடிவுக்கு வந்தனர்.

ஆனால், ‘இக்கொடுமை இப்படியேதான் இருக்க வேண்டுமா? இதனை ஒழிக்கும் வழி ஒன்றும் இல்லையா?’ என்று, எப்போதும் இதே கவலையாக இருந்தார். தன் குடும்பக் கவலை சிறிதும் இல்லாதிருக்க அத்தகு செல்வப் பெருக் குடையராய் இருந்தும், பிறர் குடும்பக் கவலையால் மனம் நோகலானார்.

முடிவில், ‘ஒவ்வொரு உயர் குலக் குடும்பத்தினரும் தாழ்த்தப் பட்ட வகுப்புக் குழந்தை ஒன்றை எடுத்து வளர்ப்பதே தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கத் தகுந்த வழியாகும்’ எனத் தீர்மானித்தார். அதைத் தாமே முதலில் செய்து, மற்றவர்க்கு வழி காட்டுதல் வேண்டும் என முடிவு செய்தார். மனைவியாரிடம் தன் கருத்தைக் கூறினார். கணவன் கருத்தின்படி ஒழுகும் அவ்வம்மையும் அதற்கு உடன்பட்டார்.

மனைவியைத் தன் கருத்துக்கு உடன் படச்செய்ய இவர் எத்தனை நாள் எவ்வளவு படாதபாடுபட்டாரோ யார் கண்டார்? எப்படியோ அந்த அம்மையாரை உடன்படச் செய்துவிட்டார். சீர்திருத்தக்காரர்க்கு இத்தகு திறமை இன்றியமையாததாகும்.

மனைவியாரைத் தன் கருத்துக்கிணங்கு வித்த அன்றே இருவரும் ஒரு சேரிக்குச் சென்றனர். தாங்கள் வளர்த்துக் கொள்ள ஒரு சிறுவனைத் தரும்படி கேட்டனர். அவ்வெளியோர் பெரு வியப்புற்றனர். ஏதோ விளையாட்டாக இப்படிக் கேட்கின்றனர் என்று எண்ணினர். இவர்கள் இன்னார் என்பதும் அவர்கட்குத் தெரியும்.

"நாங்கள் அருமையாகப் பெற்ற பிள்ளையை உங்களுக்குக் கொடுப்போமா? பிள்ளைப் பேற்றைவிடப் பெரும் பேறுவேறு என்ன இருக்கிறது? அப்படிக் கொடுப்பதுதான் முறையா? எங்களுக்கென்ன பிள்ளை சுமையாகவா இருக்கிறது? பாலும் பழமுமா கேட்கிறது? நாங்க குடிக்கிற கஞ்சியை அதுங் குடிக்கிறது’ என்று, அவர்களும் விளையாட்டாகவே உண்மையைக் கூறி மறுத்தனர்.

காசிநாதர் தாங்கள் கொண்டுள்ள முடிவை விளக்கிக் கூறி வேண்டினர். அவர்கள் உண்மையை யுணர்ந்து, காசி நாதரை மனமார, வாயாரப் பாராட்டி, ஒரு சிறுவனைக் கொடுத்தனர். ஆனால், சிறுவனின் பெற்றோர், மற்றவரின் வற்புறுத்தலுக்கு இசைந்தனரேயன்றி, வருத்தத்துடனேதான் கொடுத்தார்கள். பெற்ற மனம் பித்தல்லவா? ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ தானே?

வறியோன் பெரும்பொருள் பெற்றாற் போல மகிழ்ந்து, அச்சிறுவனை அன்புடன் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர் அப்பெற்றோர்.

வீட்டுக்கு வந்ததும் அவ்வம்மையார், அச்சிறுவனுக்கு நீராட்டி வேறு உடையுடுத்தத் தொடங்கினார். அது கண்ட காசிநாதர், ’என்ன இருக்க என்ன செய்தாய்? இதுவா தீண்டாமையை ஒழிக்கும் வழி? தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கிணற்றுரிமையின்மையால், அவர்கள் தூய்மையின்றிக் கிடக்கின்றனர். அதனால், அவர்களைத் தொடு வதற்கு அருவருப்பாக இருக்கிறது. உயர் குலத்தினர் எல்லோருடைய மனமும் ஒரேயடியாய் மாறி, தாராளமாய்ப் புழங்கும்படி கிணற்றுரிமை கொடுத்தாலன்றி, அவர்கள் நம்மைப் போல் நாடோறும் குளித்துத் தூய்மையாக இருக்க முடியாது. அது இப்போது நடக்கக் கூடியதா?

ஆகவே, நாம் இச்சிறுவனை இந்நிலையிலேயே வைத்துக் கொண்டு பழகினால், பின் எல்லோரையும் அருவருப்பின்றித் தொடலாம். வந்ததும் வராததும் அதை மாற்றவே தொடங்கி விட்டாயே? இன்றைக்கு இப்படியே யிருக்கட்டும்’ என்று, அச் சிறுவனை யெடுத்து, மடிமேல் வைத்து, மார்போடு அணைத்து முத்தமிட்டார். என்னே காசிநாதரின் மாசிலா உள்ளம்!

அது கண்ட அம்மையார், ‘ஆ! இதென்ன கொடுமை! இப்படிச் செய்வீர்களென்று தெரிந்திருந்தால் நான் முன்னமே இசைந்திருக்க மாட்டேனே. நீங்கள் இப்படி விடாப்பிடி செய்தால், நான் என் பெற்றோர் வீட்டுக்காகிலும் போய் விடுகிறேன்’ என்று மனம் வருந்திக் கூறினார்.

காசிநாதர், ‘பெண்ணே! மலந்தின்னும் நமது நாயை அச்சமின்றித் தொடும் நீ, பகுத்தறிவுள்ள இம்மக்கட் குழவியைத் தூய்மையில்லதென்று தொடுவதற் கஞ்சுவதன்றோ கொடுமை! மலந்தின்ற வாயை நாய் கழுவிக் கொண்டா உன் கையை வந்து நக்குகிறது? வெயிற் காலத்தில் வேர்த் தடங்கினால் நமது மேலுந் தானே நாற்ற மடிக்கிறது?’ எனத் தீண்டாமையின் உண்மை நிலையை எடுத்துரைத்தார்.

அவ்வம்மையார் உண்மையை யுணர்ந்து, உண்மையுணர் வுற்று, அப்பழங்குடிச் சிறுவனைத் தான் பெற்ற பிள்ளை யினும் பேரன்புடன் வாங்கி, மார்போடணைத்து முத்தமிட்டார். அச்சிறுவன் தன் மழலை மொழியால், ‘அம்மா!’ என்றான். அவ்வன்னை, ‘ஏண்டா கண்ணே!’ என்றார். மனைவியின் மனமாற்றத்தைக் கண்ட காசிநாதர், அகமிக மகிழ்ந்தார். பின்னர் அச்சிறுவனை, நீராட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தனர்.

இதையறிந்த ஊராரும் உறவினரும் கடுஞ்சினங் கொண்டனர்; காசிநாதர் ஏதோ செய்யத்தகாத அத்தகைய கொடிய குற்றத்தைச் செய்துவிட்டது போல எண்ணிச் சீறிவிழுந்தனர். காசிநாதரின் சீர்திருத்த நடக்கையால் முன்னமே வெறுப்புக் கொண்டுள்ள அவர்கள், இதைக் காரணமாகக் கொண்டு, காசிநாதரை அந்த எண்ணத்தையே விட்டுவிடும்படி செய்துவிட வேண்டு மெனத் தீர்மானித்தனர். முதியோர் பலர் ஒன்று கூடிக் காசிநாதர் வீட்டுக்கு வந்து,

“காசி நாதா! என்ன இருக்க என்ன செய்தாய்? நமது புனிதமான பிராமண குலத்துக்கே நீங்காத இழிவைத் தேடி விட்டாயே? நம்ம தெருப் பக்கமே வரக் கூடாத அச்சண்டாளப் பயலை வீட்டுக்குள்ளேயே கொண்டு வந்துவிட்டாயே? நீ தொட்டுத் தொலை; அவர்களோடு கட்டிப் புரள். ஆனால், அத்தீண்டத்தகாத சிறுவனை ஊர்க்குள், அதுவும் வீட்டுக்குள் கொண்டு வரலாமா? பெருமையாக வாழ்ந்து வந்த குடும்பத்தில் பிறந்த உனக்கேன் இந்தச் சிறுமதி? அந்த இழிசாதிப் பயலை விட்டில் வைத்திருந்தால் உன்னைச் சாதிக்குப் புறம்பாகத் தள்ளி வைத்துவிடுவோம். போனது போகட்டும், மரியாதையாக அப்பையனைக் கொண்டு போய்க் கொடுத்துவிடும்”என்று விரட்டினர்.

காசிநாதர், அவர்கள் மிரட்டலைக் கண்டு சிறிதும் அஞ்ச வில்லை. அவர் பணிவாக, "எம்மவரே! மக்களில் ஒரு சிலரைக் கேவலம் புழுப் பூச்சிகளினும் இழிவாக எண்ணி, அவர்களைத் தொடுவதே தீட்டு எனக்கூறும் நமது குலமா புனிதமான குலம்? மக்களை மக்களாக மதிப்பதன்றோ புனிதத் தன்மை? அதுவன்றோ மக்கட் பண்பு?

நம்மைவிட அப்பாட்டாளிகள் எந்த வகையில் தாழ்ந் தவர்கள்? ஓயாமல் உடல் தேய உழைத்து உலகத்தை வாழ்விக்கும் அவரன்றோ உயர்ந்தவர்? எல்லோரினும் நாமே உயர்ந்தவர் என எண்ணும் சாதிச் செருக்குடைய நாமா உயர்ந்த குலம்? மக்களை மக்களாக மதியாத நாமன்றோ தாழ்ந்தவர்?

ஈரறிவுடைய புழுப் பூச்சிகள் கூட, ஒவ்வோரினமும் ஏற்றத் தாழ்வின்றி ஒன்று கூடி ஒரு நிகராய் வாழ்ந்துவர, ‘ஆறறிவுடைய மக்கள்’ என்று பெருமையாகக் கூறிக் கொண்டு, நம்மில் ஒரு சிலரைத் தாழ்ந்தவர் என்றும், தொடுவது தீட்டு என்றும் தனியாகத் தள்ளி வைத்திருக்கும் நாமா ஆறறிவுடையவர்? இதுவா பகுத் தறிவின் பயன்? மக்களைத் தவிர, வேறு எந்த உயிர்கள் தம்முள் ஒன்றையொன்று தீண்டுதற் கஞ்சுகின்றன?

இந்தச் சிறுவன் புகுந்ததால் எங்கள் வீடு என்ன இடிந்தா போய்விட்டது? நம்ம தெருப்பக்கமே வரக்கூடாத இவனென்ன சிங்கமா புலியா!’’ என, அச்சிறுவனைத் தழுவிக் கொண்டே,

‘’பல கோடி பாட்டாளி மக்கள், இரவு பகலாய் ஓயாமல் உடல் வருந்த உழைத்தும், குடிக்கக் கஞ்சியும், கட்டக் கந்தையும், இருக்கக் குடிசையும், ஏன்? குடிக்கத் தண்ணீருங் கூடச் சரியாக இல்லாமல் தவிப்பதற்குச் சாதிக் கொடுமை யன்றோ காரணம்? ஓயாமல் உழைத்தும் அவ்வுழைப்பாளி மக்கள் வாழ வழியின்றி வாடும் போது, நாங்கள் மட்டும் நல்வாழ்வு வாழ விரும்பவில்லை. நீங்கள் விலக்கா முன், இதோ நாங்களே உங்கள் சாதியை விட்டு விலகிக் கொள்கிறோம்’’ என்று, ஊர்க்குப் புறம்பேயுள்ள தமது நிலத்தில் ஒரு குடிசை கட்டி, குடும்பத்தோடு அங்கு குடி யேறினார்.

பின்னர்ச் சில தாழ்த்தப்பட்ட குடும்பங்களை அங்கு குடியேற்றினார். அந்நிலத்தில் பயிர்த் தொழில் செய்து வாழும்படி செய்தார். அவர்கட்குக் கல்வி கற்பித்தார்; நல்ல கைத் தொழில்கள் செய்யப் பழக்கினார். அவர்கள் உண்ணும் உணவையே தாமும் உண்டு, அவர்களோடு ஒன்றாகவே வாழ்ந்து வந்தார். அக்குடி யிருப்பு, தீண்டாமை விலக்குக் குருகுலம் ஆகத்திகழ்ந்தது. காந்தியடிகள், நம் காசிநாதரின் இப் பெருந் தொண்டைப் பல படப் பாராட்டியுள்ளார். தாழ்த்தப்பட்டோரின் தந்தையும் தாயும் உடன் பிறந்தோனும் ஊழியனுமாக விளங்கினார் காசிநாதர்.

‘’ஒவ்வோர் உயர் குலத்தோரும், தாழ்த்தப்பட்டோரில் ஒருவரைத் தமது குடும்பத்தில் ஒருவராகக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தீண்டாமை ஒழியும்’’-சாமி சிரத்தானந்தர்.

இயேசுநாதர்


‘இவன் , 1956 இல் பிறந்தான். இப்பொழுது இவனுக்குப் பத்தாண்டுகள் ஆகின்றன’ என்கின்றார் ஒரு தந்தை. ‘இப்பொழுது’ என்றது, 1966ஆம் ஆண்டினை யாகும் . 1966 என்பது, உலகப் பெருஞ் சமயங்களில் ஒன்றான கிறித்து சமயத்தை உண்டாக்கிய, இயேசுநாதர் பிறப்பு ஆண்டாகும். இவ்வாண்டே, உலகில் பெரும்பாலும் வழங்கி வருகிறது. அது, கி.மு. எனவும், கி.பி. எனவும் வழங்கி வருகிறது. கி.மு. கிறித்துப் பிறப்பதற்கு முன்; கி. பி. கிறித்துப் பிறந்த பின், எனப்படும். இன்று கிறித்துப் பிறந்து 1966 ஆண்டுகள் ஆகின்றன. கிறித்து- இயேசுநாதர்.

ஆசியாக் கண்டத்தில், அரேபியாவுக்கு வடமேற்கில், பாலத்தீனம் என்னும் நாடு இருக்கிறது. அது ஒருகாலத்தே, ‘பாலும் தேனும் பாயும் பாலத்தீனம்’ என்னும் சிறப்புடன் விளங்கியது. செரூசலம் என்பது, அந்நாட்டின் தலைநகர்.

அப்பாலத்தீனத்தில் முற்காலத்தே, யூதர் என்னும் சாதியார் வாழ்ந்து வந்தனர். அவர்கள், ‘மக்கட் பிறப்பில் தாங்களே உயர்ந் தவர்கள். தங்களைவிட உயர்ந்தவரோ, ஒப்பானவரோ மக்கட் பிறப்பில் இல்லை’ என்னும் நம்பிக்கையுடையவர்; பிறர்க்கு ஏவற் றொழில் செய்வது இழிவு என்னும் எண்ணமுடையவர். ‘யூதர்கள் பிறரை அடிமை கொள்ளப் பிறந்தவரே யன்றி, பிறர்க்கு அடிமைப் படப் பிறந்தவர்கள அல்லர்’ என்பது, அவர்களது உறுதியான நம்பிக்கை.

இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகட்கு முன், பாலத்தீனம் உரோமர் ஆட்சிக் குட்பட்டிருந்தது. உரோம அரசுக்கு ஆயம் (சுங்கம்) வாங்கி அனுப்பி வந்த யூதர்களை, ஆயம் வாங்கும் அரசியல் அலுவல் பார்த்து வந்த தம் இனத்தவரை, மற்ற யூதர்கள் இழிந்தவரெனக் கருதினர். அவர்களைத் தீண்டத் தகாதவரெனத் தள்ளி வைத்தனர். அவ்வாயக்காரர், நம் நாட்டுத் தாழ்த்தப்பட்ட மக்களைப் போலத் தள்ளுண்டு தவித்து வந்தனர். சென்ற நூற்றாண்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் இங்கு எந்நிலையில் இருந்து வந்தனரோ அந்நிலையில் இருந்து வந்தனர் அன்று அவ்வாயக்காரர்.

செரூசலத்திற்கு அண்மையிலுள்ள பெத்தலகேம் என்னும் ஊரில், யூசேப்பு என்னும் தச்சர் ஒருவர் இருந்தார். அவர் உயர்ந்த யூதவகுப்பைச் சேர்ந்தவர். அவர் மனைவியா ரான மரியாள் என்னும் மங்கையர்க்கரசியார்தான் உலக முழுவதும் பரவியுள்ள கிறித்துவ சமயத்தை ஏற்படுத்திய இயேசுநாதரை ஈன்றவர். இயேசுநாதர் வீட்டிலேயே கல்வி கற்று வந்தார். குலத் தொழிலான தச்சுவேலையும் பழகினார். தந்தை இறந்தபின், அவர் தானே வருந்தியுழைத்துத் தாயாரைக் காப்பாற்றி வந்தார்.

இவர் இயல்பாகவே ஏழைகளிடத்தில் இரக்கமுள்ளவர்; ஏழைகளை ஈடேற்றுவதற்காகவே பிறந்தவர் எனலாம். பொறுமையே உருவானவர். ‘இந்தக் கன்னத்தில் அடித்தால் அந்தக் கன்னத்தைக் காட்டு’ என்பது, இயேசுநாதர் பொறை. தமது தாய்நாட்டில் வாழும் ஆயக்காரரின் இரங்கத்தக்க இழி நிலையைக் கண்டு மன முருகினார். அவர்களை மாக்கள் நிலையி லிருந்து மக்களாக்கும் வழியை ஆராய்ந்தார். முடிவில் நல்ல வழியொன்றைக் கண்டறிந்தார்.

தாங்கண்ட கொள்கையை மக்களுக்கு எடுத்துரைத்து வந்தார். ‘மக்களில் ஏற்றத்தாழ்வு கிடையாது. எல்லாரும் ஓரினம். ஒன்றே குலம்’ என்ற உண்மையை எடுத்துரைத்து வந்தார். இவர்க்கு மாணாக்கர் சிலர் ஏற்பட்டனர். அம் மாணாக்கர் களுடன் ஊர்தோறும் சென்று தம் கொள்கையைப் பரப்பி வந்தார்.

அது பொறாத யூத குருமார்களால் இவர் பல இன்னலுக் குள்ளாக்கப்பட்டார். முடிவில் அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டி விடுகிறார் என்னும் குற்றஞ் சாட்டப் பெற்றுச் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். இயேசுபெருமான், ஏழைகளுக் காகவே பிறந்து, ஏழைகளுக்காகவே வாழ்ந்து, ஏழைகளுக் காகவே உயிர்விட்டார்.

பாலத்தீனத்தின் நடுவில் சமாரியா என்ற சிறிய நாடொன் றுண்டு. அது கீழ்மேல் நீளவடிவ மானது. அது ஆயக்கார மக்கள் வாழ்விடம். அதனால், உயர்குல யூதர்கள் அச்சமாரிய நாட்டை மிதிப்பதுங்கூடத் தீட்டென எண்ணி, வடக்கும் தெற்கும் செல்ல வேண்டுமானால், சமாரிய நாட்டைச் சுற்றிக் கொண்டே செல்வர்; ஒரு கி.மீ.தொலை வுக்கு ஒன்பது கி.மீ. சுற்றிக் கொண்டு செல்வர் பாவம்! தீட்டைக் கண்டு அவர்களுக்கு அவ்வளவு அச்சம்!

அச்சமாரியர்கள் மலையாள நாட்டில் உள்ள நாயாடிகள் என்னும் வகுப்பார், முப்பதாண்டுகளுக்கு முன்னர் எந்நிலையில் இருந்து வந்தார்களோ அந்நிலையில், யூதர்களால் கண்ணால் பார்க்கவுங் கூடாத பாவிகளாய்க் கருதப்பட்டு வந்தனர். அச்ச மாரியர் பாலத்தீனத்தில் கால் வைக்க முடியுமா என்பதைக் கேட்கவா வேண்டும்? அவர்கள் காற்றுக்கூடப் பாலத்தீனத்தில் வீசக் கூடாது. அவ்வளவு இழி மக்களாகக் கருதப்பட்டு வந்தனர் அச்சமாரிய மக்கள்.

ஒருநாள் இயேசுநாதர் தம் மாணாக்கருடன் அச்சமாரிய நாட்டுக்குச் சென்றார்; அங்குள்ள சீகார் என்னும் ஊரையடைந் தார்; வெயிலில் நெடுந்தூரம் நடந்ததால் மிகவும் களைப் படைந்தனர்; ஒரு மரத்து நிழலில் போய் உட்கார்ந்தார். மாணவர்கள் உணவுப் பொருள்கள் வாங்கிவர ஊருக்குட் சென்றனர். கிறித்து நாதர் தனியாக உட்கார்ந்திருந்தார்.

ஒரு சமாரியப் பெண் தண்ணீர் எடுத்துச் செல்ல வந்தாள். இயேசுநாதர் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் ஊற்றும் படி கேட்டார். அப்பெண், ’ஐயா! தங்களைப் பார்த்தால் யூதர் போல் தோன்று கிறது. நானோ தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண், நான் தொட்ட தண்ணீரைத் தாங்கள் குடிக்கலாமா? தாங்கள் எங்கள் நாட்டிற்குள் வந்ததே பாவம்! இதற்கு முன் எந்த யூதரும் இங்கு வந்ததில்லை! என்றாள்.

‘அம்மணி! மக்களில் உயர்வு தாழ்வு கிடையாது. இக்கிணற்றுக்குள் இருக்கும் மீன், தவளை, நண்டு முதலிய வற்றை விட நீ எவ்வகையில் தாழ்ந்தவள்? தாகம் அதிகமாக இருக்கிறது. கொஞ்சம் தண்ணீர் ஊற்று’ என்றார் இயேசு.

‘ஐயா! இவ்வளவு பெருங்குணமுள்ள பெரியீராகிய தாங்கள் இன்னாரென்று தெரியவில்லையே?’

‘அம்மா! நீ இயேசு என்பானைப் பார்த்திருக்கிறாயா?’

அது கேட்ட அப்பெண், அவர்தான் இயேசுநாதர் என்பதை அறிந்து, ‘எங்களை வாழ்விக்க வந்த சாமி! தங்கள் பெயரைக் காதால் கேட்டிருக்கிறேன். இப்போதுதான் தங்களைக் கண்ணாரக் கண்டு களித்தேன்’ என்று கூறிக் கொண்டே ஓடிப்போய்த் தண்ணீர் சேந்திக் கொண்டு வந்து ஊற்றினாள். அண்ணல் அன்புடன் குடித்துக் களைப்பு நீங்கினார்.

தண்ணீர் ஊற்றினதும் அப்பெண் அண்ணலிடம் யாதும் பேசவில்லை. அங்கு நிற்கவும் இல்லை. தண்ணீர் ஊற்றினதும் குடத்தைக் கீழே வைத்து விட்டு விரைந்து ஓடினாள். ஏன் தம்மிடம் ஒன்றும் பேசாமல் அப்படி ஓடுகிறாள் என்பது தெரியாமல், அண்ணல் அவள் ஓடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்பெண் ஓடிப்போய் ஊராரிடம் கூறிவிட்டு, ‘இயேசுநாதர்! இயேசுநாதர்!’ என்று, திரும்பி ஓடி வந்தாள். அப்போதுதான் அவள் எதற்காக அவ்வளவு விரைவாக ஓடினாள் என்பது இயேசுநாதர்க்குத் தெரிந்தது.

அவள் ஓடிவந்து, அண்ணலின் காலடியில் தொப்பென்று விழுந்து வணங்கி எழுந்து, ‘சாமி! மிகவும் பசியாக இருக்கிறீர்கள். சமையல் செய்து சாப்பிடுங்கள்’ என்றாள்.

அண்ணல் ‘அம்மணி! தண்ணீர் ஊற்றி என் களைப்பைப் போக்கினவள், என் பசியைப் போக்கக்கூடாதா?’ என்றார். அதற்குள் ஊரார் திரண்டு வந்து, அண்ணலை வணங்கி, ஊர்க்குள் அழைத்துச் சென்றனர். சீகார் அன்று இன்பத்தின் இருப்பிட மாக விளங்கிற்று. இயேசுநாதர் இரண்டு நாள் அப்பெண் மணியின் விருந்தாளியாக இருந்தார். அப்பெண்மணி எந்நிலையில் இருந் திருப்பாள் என்பதை நீங்களே எண்ணிப் பாருங்கள்.

இவ்வளவு பெரிய கொடிய குற்றங்கள் பல செய்ததனா லேயே இயேசுநாதர் சிலுவையில் அறைந்து கொல்லப் பட்டார். தாழ்த்தப்பட்டோரைத் தொடுவதும், அவருடன் புழங்குவதும் கொலைக் குற்றமாகக் கருதப்பட்டு வந்தது அக்காலத்தே. 1900 ஆண்டுகளுக்குக் மேல் ஆயிற்று. இன்னும் அத்தீண்டாமைக் கொடுமை அடியோ டொழிந்தபாடில்லை. என்னே அதன் அளப்பரும் ஆற்றல்!

நபிகள் நாயகம்


‘பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றார் வள்ளுவர். மக்கள் எல்லாரும் ஒரே வகையான பிறப்பினை யுடையவரே யாவர். மக்களுக்குள் பிறவி வேற்றுமை என்பது இல்லை. பிறப்பிலேயே உயர்ந்த பிறப்பினர் தாழ்ந்த பிறப்பினர் என்னும் பிறவி வேற்றுமை மக்களுக்குள் இல்லை.

எனவே, மக்களுள் ஒருசிலரைத் தாழ்ந்த பிறப்பினர், பிறப்பிலேயே தாழ்ந்தவர், தாழ்வாகவே பிறந்தவர் எனத் தாழ்த்தி வைத்திருப்பது, தீண்டத் தகாதவராக, தீண்டப்படாத வராகத் தள்ளிவைத்திருப்பது தகாது. மக்களுக்குள் தாழ்வுயர் வில்லை. மக்கள் ஒரே இனம் என்பது வள்ளுவர் கருத்து.

இக்குறளுக்கு அப்படியே எடுத்துக் காட்டாக விளங்குவது இஸ்லாம் சமயம். இஸ்லாம் சமயத்தைச் சார்ந்தவர் - முஸ்லீம் எனப்படுவர். முஸ்லீம்கள் முகமதியர் என அழைக்கப் படுகின்றனர்.

முஸ்லீம்கள் ஒரே இனமாக வாழ்ந்து வருகின்றனர். முஸ்லீம் களுக்குட் சாதி வேற்றுமை கிடையாது. தாழ்ந்த சாதி உயர்ந்த சாதி என்பது முஸ்லீம்களுக்குள் இல்லை. நடைமுறையில் சாதி வேற்றுமை பாராட்டாத இனம் ஒன்று உண்டெனில், அது முஸ்லீம் இனமே யாகும். தீண்டாமை, தீட்டு என்பன அவர்கள் அறியாதன வாகும்.

வீரன் என்ற பழங்குடி மகன் தமிழனாக இருந்தும் நாம் அவனைத் தொடுவதில்லை; அவனைத் தொட அஞ்சுகிறோம். அவனை நம் வீட்டுக்குள் விடுவதில்லை. ஆனால், வீரன் தன் பெயரை, அப்துல் என மாற்றிக் கொண்டால் போதும், அதாவது இஸ்லாம் சமயத்தில் சேர்ந்தால் போதும், நாம் அப்பழைய வீரனைத் தொட அஞ்சுவதில்லை. அவனைத் தாராளமாக வீட்டுக்குள் விடுகிறோம். இத்தகைய சிறப்புடையது இஸ்லாம் சமயம், முஸ்லீம் இனம்!

இத்தகைய பெருமை பொருந்திய இஸ்லாம் சமயத்தை மக்களிடைப் பரப்பியவர் யார்? அவர் பெயர் என்ன? அவர் வரலாறு யாது? என்பவற்றைத் தெரிந்து கொள்ள நீங்கள் விரும்பு வீர்கள் அல்லவா? ஆம், அன்னார் வரலாற்றை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். இஸ்லாம் சமயத்தைப் பரப்பியவர் நபிகள் நாயகம் என்னும் பெரியார் ஆவர்.

எகிப்து, கிரேக்கம், உரோம் முதலிய பழம் பெருமை வாய்ந்த மேனாடுகளில் அரேபியா நாடும் ஒன்று. இந்தியாவின் மேற்கெல்லையாக உள்ளது அரபிக்கடல். அது இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையில் உள்ளது. அரபிக்கடலின் வட மேற்கு மூலையில் உள்ளது அரபுநாடு. அவ்வரபு நாட்டை அடுத்துள்ளதால்தான் அக் கடல், அரபிக்கடல் எனப் பெயர் பெற்றது.

அவ்வரபு நாட்டின் தலைநகர், மக்கா என்பது. நமது நபிகள் நாயகம் அம் மக்கா நகரில்தான் பிறந்தார். நபிகள் நாயகத்தின் தந்தை - அப்துல்லா என்பவர். தாய்-ஆமினா என்பவர். கி.பி.571 இல் நபிகள் நாயகம் பிறந்தார். இவரது இளமைப் பெயர் முகமது என்பது. முகமது என்றால், புகழப் பட்டவர் என்பது பொருள். இவர் பிறப்பதற்கு முன்னரே இவரது தந்தை இறந்துவிட்டார்.

மக்கா நகர்ச் செல்வர்கள் தங்கள் குழந்தைகளை, நாட்டுப் புறத்து ஏழைப் பெண்களிடம் கொடுத்து வளர்ப்பது அக்கால வழக்கம். அந்நாட்டுப்புறப் பெண்கள் செல்வர் குழந்தைகளை வாங்கிச் சென்று இரண்டு மூன்றாண்டுகள் வளர்த்துப் பின்னர்த் திருப்பிக் கொண்டு வந்து பெற்றோரிடம் கொடுப்பர்.

அவ்வாறே, அலீமா என்னும் நாட்டுப் புறச் செவிலித் தாயார் நமது முகமதுவை வாங்கிச் சென்று அன்போடு வளர்த்து வந்தார். அலீமா அன்னையிடம் முகமது அன்பாக வளர்ந்து வந்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பின், அலீமா முகமதுவை ஆமினா அம்மையாரிடம் கொண்டு வந்து கொடுத்தார். அதன் பின் முகமது தம் தாயாரிடம் வளர்ந்து வந்தார்.

முகமது அவர்களின் கட்டழகையும், அறிவுக் கூர்மையையுங் கண்ட கதீஜா என்னும் பெருஞ்செல்வியார் இவரை மணந்து கொண்டார்.

நபிகள் நாயகம், இயல்பாகவே ஏழை எளியார்களிடம் இரக்கம் உள்ளவர்; இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் இயல்புடையவர்; சொன்ன சொல் தவறாதவர்; பொறுமையே உருவானவர்; மிகுந்த சீர்திருத்த நோக்கம் உள்ளவர்.

இவர் காலத்து அரபு நாட்டு மக்கள் மிகுந்த மூடப்பழக்க வழக்கம் உடையவராக இருந்து வந்தனர். குடி, சூது கொள்ளை முதலிய குற்றங்களை இயல்பாகவே செய்பவராக இருந்து வந்தனர்; பெண்களை மிகவும் கொடுமையாக நடத்தி வந்தனர். மக்கா நகரின் பெரிய கோயிலில் இருந்த 360 தெய்வ உருவங்களை (விக்கிரகம்) வணங்கிவந்தனர்; உருவ வழிபாட்டில் அவ்வளவு நம்பிக்கை யுடையவராக இருந்தனர்.

நபிகள் நாயகம் இவற்றையெல்லாம் எதிர்த்தார்; உருவ வழிபாட்டை வன்மையாகக் கண்டித்தார்; ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதை வற்புறுத்தி வந்தார். இதனால் வெறுப்புக் கொண்ட அரபியர், இவர்க்குச் சொல்லொணாத் தொல்லை கொடுத்தனர்; முடிவில் கொல்லவுந் துணிந்தனர். அது கண்ட நபிகள், மக்கா நகரைவிட்டு, 400 கி.மீ. தொலைவில் உள்ள மதீனா நகர்க்குச் சென்றுவிட்டனர்.

அங்கு சென்றுங்கூட அரபியர்கள் விடவில்லை. பலமுறை படையெடுத்துச் சென்று தொல்லை கொடுத்தனர். பத்தாண்டு களுக்குப் பிறகு, நபிகள் நாயகம் பத்தாயிரம் மதீனா வீரர் களுடன் மக்காவுக்கு வந்து, போரில்லாமல் மக்காவைக் கைப்பற்றினார், எதிரிகள் சிறைபிடிக்கப்பட்டு, கைகள் கட்டப் பட்டு, நபிகள் நாயகத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டனர். நபிகள் நாயகம் அவர்களைப் பார்த்து,

‘இப்போது நீங்கள் என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க் கிறீர்கள்?’ என்றார்.

‘நாங்கள் தங்களுக்குப் பொறுக்க முடியாத இன்னல்கள் இழைத்துள்ளோம். சொல்ல முடியாத தொல்லைகள் கொடுத் துள்ளோம். நாங்கள் செய்துள்ள குற்றங்களுக்குக் கொலையே தண்டனையாகும். ஆனால், இயல்பாகவே இரக்க குணமுள்ள தாங்கள், கொடிய குற்றங்களையும் பொறுக்கும் உயர்குணக் குன்றாகிய தாங்கள், எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்களை விடுதலையும் செய்யலாம். அது தங்களுக்கு ஒரு பெரிய காரிய மல்ல’ என்றனர்.

‘உங்கள் விருப்பப்படியே விடுதலை செய்கிறேன். உங்களைச் சிறைபிடித்த போதே நீங்கள் செய்த குற்றத்தை மன்னித்து விட்டேன். நீங்கள் முன் போலவே இந் நாட்டில் உரிமையுடன் வாழலாம்’ என்றனர் நபிகள் நாயகம்.

அவர்கள் கட்டவிழ்த்து விடப்பட்டனர். யாவரும் வெளியே சென்றனர். சற்றுநேரங் கழித்து எல்லாரும் திரும்பி வந்து நபிகளை வணங்கி, அவர் கொள்கையை மேற்கொண்டு, அத்தனை பேரும் முஸ்லீம் ஆயினர். காலத்தே உதவிய மதீனா மக்கள் விருப்பப் படி, நபிகள் மதீனா சென்று இறுதிவரை அங்கேயே இருந்து வந்தனர்.

அக்காலத்தே, அரேபியா முதலிய அம் மேல் நாடுகளில், ஆடுமாடுகள் போல மக்களை விற்றுக் கொள்ளும் அடிமை வழக்கம் இருந்து வந்தது. அபிசீனியா நாட்டைச் சேர்ந்த, சைத் என்ற எட்டாண்டுப் பருவமுள்ள நீக்கரோ வகுப்புச் சிறுவன் ஒருவனைச் சிலர் பிடித்துவந்து, நபிகள் நாயகத்தின் மனைவியா ரான கதீஜா அம்மையாரின் உடன்பிறந்தாருக்கு விற்றுவிட்டனர். அவர் அச்சிறுவனைத் தம் தங்கைக்கு அடிமையாகக் கொடுத் தனர். கதீஜா அம்மையார் தம் கணவருக்கு அச்சிறுவனைக் கொடுத்தார்.

நபிகள் அவனை அடிமையாகப் பெற்றதும் விடுதலை செய்து, ‘நீ உன் ஊருக்குப் போகலாம்’ என்றார். அவன் போக மறுத்து, அவரிடமே உரிமையுடைய வேலைக்காரனாக இருந்து வந்தான். சைத்தின் தந்தையாகிய ஆரித் என்பான் வந்து அழைத்தும் அவன் நபிகளை விட்டுத் தந்தையுடன் போக மறுத்துவிட்டான். சைத், நபிகளிடம் அவருடைய தம்பி போலவே இருந்துவந்தான்.

அந்த நீக்கரோ அடிமைச் சைத்துக்கு இத்தகு உரிமை கொடுத்ததோடு நபிகள் நின்றுவிடவில்லை. தம்மை மணந்து கொள்ளச் சொன்ன தமது அத்தை மகளான ஜைனப் என்பாளை, சைத்துக்கு மணஞ்செய்து வைத்தார். இப்போது சைத், நபிகள் நாயகத்தின் தம்பிதானே!

நபிகள் நாயகத்தின் சீர்திருத்த நோக்கினை, மக்கள் ஒரே இனம் என்னும் ஒருமைப்பாட்டுணர்ச்சியைப் பார்த்தீர்களா? என்னே நபிகள் நாயகம் அவர்களின் பெருந்தன்மை! தங்கள் தலைவரின் கொள்கையை நடைமுறையில் கடைப்பிடித் தொழுகும் முஸ்லீம் இனமக்களின் நடக்கையை, மற்ற இன மக்களும் கடைப்பிடித் தொழுகுதல் நன்றல்லவா?

சங்கரர்


ஒரே இனமான மக்கள் பல்வேறு சாதியினராகப் பிரிந்து வாழ்ந்து வருவது போலவே, பல்வேறு சமயத்தினராகவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு சாதியிலும் பல உட்பிரிவுகள் ஏற்பட்டுள்ளன போலவே, ஒவ்வொரு சமயத்திலும் பல பிரிவுகள் ஏற்பட்டுள்ளன.

ஒவ்வொரு சாதியினரும் தங்கள் சாதிக்கெனத் தனிப்பட்ட சில பழக்கவழக்கங்களை உடையராய் இருத்தல் போலவே, ஒவ்வொரு சமயத்தினரும் தங்கள் சமயத்துக் கெனத் தனிப்பட்ட சில கொள்கைகளை உடையராய் இருக்கின்றனர்.

அச் சாதிப் பழக்க வழக்கங்களும், சமயக் கொள்கைகளும் என்றும் ஒரே நிலையாய் இருப்பவை அல்ல. கால மாறுபாட்டுக்கும், மக்களின் நாகரிக மாறுபாட்டுக்கும் ஏற்ப அவை மாறுபடக் கூடியவைகளே.

சென்ற நூற்றாண்டில் இருந்த சில சமூகப் பழக்க வழக்கங்கள் இன்று இல்லை. அவ்வாறே சமயக் கொள்கைகளும் மாறுபாடு அடைந்து வருகின்றன.

சமூக சீர்திருத்தப் பெரியார்களும், சமய சீர்திருத்தப் பெரியார்களும் அவ்வப்போது தோன்றிச் சமூகப் பழக்க வழக்கங் களையும், சமயக் கொள்கைகளையும், சீர்திருத்தி வந்திருக் கின்றனர். குறிப்பாகச் சமய சீர்திருத்தத்தினால், பழங் கொள்கைகள் மறைந்து புதுக் கொள்கைகள் தோன்றுவ துண்டு.

இவ்வாறு இந்து சமயத்தைச் சீர்திருத்திய பெரியார்களில் சங்கரர், இராமாநுசர், மாத்துவர் என்போர் குறிப்பிடத்தக்க வராவர். இவர்கள் சமயாச்சாரியர் எனப்படுவர். இவர்களைப் பற்றி நீங்கள் வரலாற்றுப் பாடத்தில் படித்திருப்பீர்கள்.

இம்மூவருள், சங்கரர் என்பார், மலையாள நாட்டிலுள்ள காலடி என்னும் ஊரில் பிறந்தவர்; பிராமண வகுப்பினர். இவருடைய தந்தை - சிவகுரு; தாய்- ஆரியாம்பாள். இவர் தென்மொழி. வடமொழி இரண்டிலும் மிக்க தேர்ச்சி யுடையவர். வடமொழியில் மிக்க வல்லுநர். இவர் கி.பி.788இல் பிறந்து, 820 வரை, 32 ஆண்டுகளே வாழ்ந்தனர். இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர்.

சங்கரர் காலத்தே மலையாள நாடு, மலையாள நாடாக இல்லை. தமிழ் நாட்டுப் பிரிவுகளில் ஒன்றான சேர நாடாக, தமிழ்நாடாக இருந்தது. அதன்பின்னரே, தமிழ் திரிந்து மலையாள மொழி உண்டானது. எனவே, சங்கரர் ஒரு தமிழ்ப் பெரியார் என்பதை அறிந்து இன்புறுங்கள்.

சங்கரர், இளமையிலே துறவு பூண்டார். இளந்துறவியாகிய சங்கரர், இந்தியா முழுவதும் சுற்றித் தமது கொள்கையைப் பரப்பி வந்தார். இவ்விளந் துறவியின் சமயச் சீர்திருத்தக் கொள்கையை நாட்டில் பெரும்பாலான மக்கள் பின்பற்றினர்.

சங்கரர் பேரறிஞர் மட்டும் அல்லர்; பெரும் பேச்சாளர்; தமது கொள்கையை மக்கள் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதியும்படி அவ்வளவு எளிதாகவும், விளக்கமாகவும் எடுத்துக் கூற வல்லவர். அவர் பேச்சை மக்கள் விரும்பிக் கேட்டு, அவர் கொள்கையைப் பின்பற்றினதற்கு அப்பேச்சு வன்மையே காரண மாகும் எனலாம். எந்த ஒரு பொருளையும் விற்போர் சொல் வன்மையால் மக்கள் விரும்பி வாங்குவதையும், வாயில்லார் விற்கும் நல்லதொரு பொருளையும் மக்கள் விரும்பாமையையும் இன்றுங் காண்கிறோமல்லவா? இவ்வுண்மையை அறிந்தே சமயத் தலைவர்களெல்லாரும் பெரும் பேச்சாளர்களாகத் திகழ்ந்தனர். இதில் சங்கரர் தலைசிறந்தவர் எனலாம்.

சங்கரர் பேச்சை நேரில் கேட்டவர், அவர் சொல்வன்மையில் மயங்கி, அப்படியே அவர் கொள்கையைப் பின்பற்றி வந்தனர். நேரில் சென்று அவர் சொல்லைக் கேளாதவர், கேட்டவர் சொல்லக் கேட்டு, ‘ஆ! நாம் கேட்காமல் போனோமே? நாளையும் பேசுகிறாரா?’ என்று, அவர் பேச்சைக் கேட்க விரும்புவர். அத்தகைய சொல்லாற்றலுடையவர் சங்கரர்.

சங்கரர் கண்டறிந்த கொள்கை என்ன? ‘உயிரும் கடவுளும் ஒன்றே. உயிர் வேறு கடவுள் வேறு என்பதில்லை. அவ்வொரு பொருளே உலகில் உள்ள எல்லாப் பொருள்களிலும் நிறைந்து, அப்பொருள்களை இயக்குகிறது. உடல்தான் அழியுமேயன்றி, உயிர் என்றும் அழியாதது; நிலையானது.’ என்பதே சங்கரர் கண்ட புதிய சமயக் கொள்கையாகும்.

சங்கரர் கண்ட இக்கொள்கை - அத்துவிதம் எனப்படும். அத்துவிதம் - இரண்டற்றது; அதாவது கடவுள் வேறு, உயிர் வேறு என்பதில்லை. இரண்டும் ஒன்றெனல். இது, அத்துவைதம் எனவும் வழங்கும்.

சங்கரர் தாங்கண்ட கொள்கையை மக்களிடைப் பரப்பு வதற்காக, சிருங்கேரி, துவாரகை, பூரி, காஞ்சிபுரம், கும்பகோணம் ஆகிய இடங்களில் மடங்கள் அமைத்து, தம் மாணவர்களை அம்மடங்களின் தலைவர்களாக ஏற்படுத்தினார். அவை இன்றும் சங்கர மடம் என்னும் பெயருடன் விளங்கி வருகின்றன. இவரது மாணவர் இவரை, உலக குரு என்றழைத்தனர்.

இவர் வடமொழியில் பல நூல்கள் எழுதியுள்ளார். வேதாந்த சூத்திரம், பகவத்கீதை முதலிய வடமொழி நூல்களுக்கு, தாம் கண்ட அத்துவிதக் கொள்கைப்படி உரை எழுதியுள்ளார்.

சங்கரர்க்கு மாணாக்கர் பலருண்டு. இவர் தம் மாணாக்கர் களோடு நாடெங்கும் சுற்றித் தம் கொள்கையைப் பரப்பி வந்தார். ஒரு நாள் சங்கரர் தம் மாணாக்கருடன் ஓரூருக்குப் போனார். மக்கள் திரளாகக் கூடினர். சங்கரர் அக்கூட்டத்தில், ’கடவுளும் உயிரும் (பரமாத்துமா, சீவாத்துமா) ஒன்றே. ஒரு பொருளே எங்கும் நிறைந்திருக்கிறது.

இதோ ஓர் எடுத்துக்காட்டு; நூறு கிண்ணங்களில் தண்ணீரை ஊற்றி வைத்தால், அந்நூறு கிண்ணங்களிலும் வானவெளியி லுள்ள கதிரவன் தெரிகிறான். தண்ணீரைக் கீழே ஊற்றிவிட்டால், அக்கிண்ணங்களில் கதிரவன் தெரிவதில்லை. கதிரவன் ஒன்றே. ஒரே கதிரவன் வானத்திலும் தண்ணீரிலும் தெரிவது போலவே, ஒரே பொருள் எல்லா உடல்களிலும் நிறைந்திருக்கிறது. கதிரவன் ஒளி தெரியும் கிண்ணங்கள் போன்றவரே நாம்’ என்று, தமது கொள்கையை விளக்கிப் பேசினார். ‘நானே கடவுள்’ என்பது, சங்கரர் கொள்கைச் சுருக்கம். கடவுள் வேறு, நான் வேறு அல்ல என்பது.

ஒரு நாடகக் கொட்டகையில் நாடகம் நடக்கிறது. நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் நல்ல நடிகர்கள். திறமையாக நடித்தனர். நாடகம் முடிந்தது. நாடகம் பார்த்தோர் வீட்டுக்குச் செல்கின்றனர். அவர்கள் வழியில் சும்மா வாயை மூடிக் கொண்டு செல்லவில்லை.

அந்நாடகத்தின் கதையைப் பற்றி, கதை அமைப்பைப் பற்றி, நடிகரைப் பற்றி, நடிப்புத் திறனைப் பற்றி ஒருவருக் கொருவர் காரசாரமாக உரையாடிக் கொண்டு சென்றனர். இதுவே நாடகம் பார்ப்பதன் பயனும்.

இங்ஙனமே, சங்கரர் பேசி முடித்ததும், சங்கரர் பேச்சுத் திறனைப் பற்றி, அவர்தம் கொள்கையைப் பற்றி ஒருவருக் கொருவர் சொற்போரிட்டுக் கொண்டு சென்றனர். இதுவே ஒருவர் பேச்சைக் கேட்பதன் பயனும்.

மறுநாள் சங்கரர், அவ்வூரிலிருந்து தம் மாணாக்கருடன் வேறூருக்குச் சென்றனர். செல்லும் வழியில் ஒரு தாழ்த்தப் பட்டோன் எதிரில் வந்தான். பொதுவாக, ஒரு உயர்குலத் தோன் எதிரில் ஒரு தாழ்குலத்தோன் - தாழ்த்தப்பட்டவன் - வர நேர்ந்தால் அவன், யானையைக் கண்டு அஞ்சி ஓடுபவன் போல் விலகிச் செல்லுதல் வழக்கம். ஆனால், சங்கரர் எதிரில் வந்த இவன் விலகிச் செல்லவில்லை.

சங்கரர், அவனை விலகிச் செல்லும்படி சொன்னார். அவன் முதல் நாள் சங்கரர் பேச்சைக் கேட்டவன்; அவர் பேச்சு வன்மையில் மயங்கினவன்; அவர் பேச்சுக்குத் தன்னைப் பறி கொடுத்தவனென்றே சொல்லலாம். நேற்றுச் சங்கரர் பேசிய தற்கும், இன்று அவர் கூறியதற்கும் முன்னுக்குப் பின் முரணா யிருத்தலைக் கண்டு அவன் திடுக்கிட்டான். உடனே அப்பாட்டாளி,

‘பெரியீர்! உயர் குலத்தோராகிய தங்களிடத்தில் உள்ள உயிரன்றோ தாழ்குலத்தோனாகிய என்னிடத்திலும் விளங்குகிறது? உங்கள் உயிர் வேறு, என் உயிர் வேறா? ’உயிரும் கடவுளும் ஒன்றே. அது கதிரவன் ஒளிபோல் எங்கும் நிறைந்திருக்கிறது. நீங்களும் நானும் வேறல்ல. உடல்தான் நமக்கு வெவ்வேறு; உயிரொன்றே’ என்று, நேற்றுத் தாங்களே சொல்லி விட்டு, இன்று என்னை வேறாகவும், தாழ்ந்தவனாகவும் கருதி விலகும்படி சொல்வது முறையா?

தங்கள் பேச்சை நான் உண்மை என்றல்லவோ நம்பினேன்? இப் பெரியாரால் தீண்டாமை என்னும் கொடும்புலி இனி நம் நாட்டைவிட்டே தொலைந்துவிடும். இனி நமது நிலை உயர்ந்து நாமும் மக்களாக வாழலாம் என்று எண்ணி யெண்ணி மகிழ்ந் தேனே. அவ்வெண்ணத்தில் மண்ணைப் போட்டு விட்டீர்களே?’ என்று, கலக்கத்துடன் கூறினான்.

அது கேட்ட சங்கரர் திடுக்கிட்டார். அவர்க்கு மெய்மயிர் சிலிர்த்தது, மேலெல்லாம் வியர்த்தது; உள்ளம் கலங்கிற்று, உடல் நடுங்கிற்று. சற்று நேரம் அவர் தன்னை மறந்து அப்படியே நின்றார்.

அப் பழங்குடி மகன், அவரைப் பார்த்தபடியே மரப் பாவைபோல அசைவற்று அப்படியே நின்றான். சங்கரரைப் பின் தொடர்ந்து சென்ற அம் மாணாக்கர்கள், அவ்விரு வரையும் பார்த்தபடியே கற்சிலைகள் போலக் காட்சியளித்தனர்.

தன்னை மறந்து நின்ற சங்கரர், பின்னர் மெய்யுணர் வுற்று, ‘அத்துவிதக் கலையின் உண்மைப் பொருளை அடியேனுக் கறிவுறுத்திய அருட்குரு நாதா! இன்றுதான் எனக்கு உண்மை யறிவு வந்தது. எனது அறியாமையை மன்னிக்கவும். எனக்கு உண்மை யறிவு புகட்டிய அண்ணலே ! இனி உய்ந்தேன்’ என, அப்பாட்டாளி மகனின் காலில் விழுந்து வணங்கினார்.

அப்பாட்டாளி அப்படியே அவரை வாரி யெடுத்தனன். அது கண்ட மாணாக்கர்கள் பெரு வியப்புற்றனர். தம் குருநாதரின் உண்மையறிவையும், பெருந்தன்மையையும் கண்டு அகமிக மகிழ்ந்தனர்.

இக் கண்ணைவிட்டகலா ஒன்றே குலக் காட்சியைக் கண்முன் கண்டு, அக்காட்சியை உங்கள் கண்ணைவிட்ட கலாது செய்யுங்கள். அக்காட்சியின்படி ஒழுகுங்கள். தீண்டாமை என்னும் கொடும்புலி அஞ்சி ஓடுவதைக் கண்டு களியுங்கள்!

’’ சாதிகள் இல்லையடி பாப்பா!– குலத்
தாழ்ச்சி உயர்ச்சிசொல்லல் பாவம்! ’’

என்ற, பாரதியார் பாடலைப் பாடி மகிழுங்கள்!

இராமாநுசர்


கொசுக் கடியினால் குளிர்காய்ச்சல் வருகிறது. அக்காய்ச்சல் மிகவும் கொடியது . பொறுக்க முடியாத குளிர்! அத்தகைய காய்ச்சல்! குளிர் காய்ச்சலால் உடல் நலம் குன்றுகிறது.

குளிர்காய்ச்சல் வராமல் செய்ய வேண்டுமானால், வீட்டில் கொசு இல்லாமல் செய்யவேண்டும். கொசு இல்லாமல் இருந்தால் குளிர் காய்ச்சல் வராது. வீட்டில் கொசு இல்லாமல் செய்வது எப்படி?

தேங்கி நிற்கும் நீரில் கொசு உண்டாகிறது. எனவே, கொசு இல்லாமல் செய்ய, கொசுவை ஒழிக்க, தண்ணீர் தேங்காமல் செய்கின்றனர்; கிணற்றுத் தண்ணீரில் மருந்து போடுகின்றனர்; சலதாரையை அடிக்கடி தேய்த்துக் கழுவித் துப்புரவாக இருக்கச் செய்கின்றனர்; இரவில் துளசியைத் தீயில் போட்டுப் புகைக் கின்றனர் . கொசு கடிக்காமல் இருக்கக் கொசுவலை கட்டிக் கொள்கின்றனர். அக் கொசுவை ஒழிக்க, இவ்வாறு பல வகையைக் கையாளுகின்றனர்.

இங்ஙனமே, குல வேற்றுமையை ஒழிக்க, ஒவ்வொரு பெரியாரும் ஒவ்வொரு வழியினைக் கையாண்டு வந்தனர். சமூகச் சீர்திருத்த வழியிலும், சமயச் சீர்திருத்த வழியிலும், அரசியல் சீர்திருத்த வழியிலும், இன்னும் பிற வழிகளிலும் ஒவ்வொரு காலத்தே ஒவ்வொரு பெரியார் தோன்றி அரும்பாடு பட்டு வந்தனர். அவ்வாறு முயன்றவர்களில் இராமாநுசரும் ஒருவரா வார்.

இவர், செங்கற்பட்டு மாவட்டத்துக் காஞ்சிபுரத்தில் உள்ள திருப்பெரும்பூதூர் என்னும் ஊரில் பிறந்தவர்; பிராமண குலத்தினர்; தந்தை - கேசவாச்சாரியார். தாய் - காந்திமதி அம்மையார். இவர், கி.பி.1017இல் பிறந்தார்; நீண்டகாலம் வாழ்ந்து வந்தார். இவர் சிறந்த கல்வியறி வுடையவர்; வைணவ சமயத்தைச் சார்ந்தவர். வைணவ சமயத்தை நன்கு வளர்த்த பெருமை இராமாநுசரையே சாரும். பெரிய நம்பி என்பவர், இவருடைய அருளாசிரியர் ஆவர். வேதாந்த சூத்திரத்திற்கும் பகவத் கீதைக்கும் அத்துவிதக் கொள்கைப்படி சங்கரர் உரை யெழுதி உள்ளார் என்பதை முன்பு கண்டோம். இராமாநுசர், இவ்விரு நூல்களுக்கும் வைணவ சமயக் கொள்கைப்படி உரை எழுதியுள்ளார்.

அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்னும் சைவ சமயப் பெரியார்கள், தேவாரப் பாடல்கள் பாடிச் சைவ சமயத்தை வளர்த்து வந்தமை போல, நம்மாழ்வார், பெரியாழ்வார் முதலிய வைணவப் பெரி யார்கள் பன்னிருவர், செந்தமிழ்ப் பாடல்கள் பாடி வைணவ சமயத்தை வளர்த்து வந்தார்கள். அப்பன்னிரு ஆழ்வார்களும் பாடிய பாடல்கள் நாலாயிரம் ஆகையால், அப்பாடல்களையுடைய நூல் நாலாயிரப் பிரபந்தம் எனப் பட்டது.

இராமாநுசர், வேதாந்த சூத்திரம், பகவத் கீதை ஆகிய வடமொழி நூல்கட்கு உரை எழுதியதோடு, நாலாயிரப் பிரபந்தத் திற்கும் உரை எழுதியுள்ளார். அதனால், வைணவர்கள் இவரை, உரைகாரர் எனப் பெருமையாக அழைத்து வருவதோடு, அப்பெருந் தொண்டுக்காக இவரை, உடையவர் என உரிமையுடனும் அழைத்து வருகின்றனர்.

இவர், திருவரங்கம் முதலிய இடங்களில் மடங்கள் அமைத்து, அங்கங்கு தம் மாணவர்களை ஏற்படுத்தி, வைணவ சமயத்தை மக்களிடைப் பரப்பி வந்தார். இவர் பெரும்பாலும் திருவரங்க மடத்தில் இருந்து வந்தார்.

இவர் அருளுருவானவர்; ஏழையெளியவர் படும் இன்னலைத் தமதெனக் கொண்டு உளங்கசிந்துருகுவார். அதனால் இவர், மக்கட் கொழுந்து எனச் சிறப்பிக்கப் பட்டனர்.

ஏழைப் பங்காளராகிய இவர், தீண்டாமைக் கொடுமையைப் போக்கப் புதிய வழி யொன்றை மேற்கொண்டார். என்ன அப்புது வழி? இவர் வைணவ சமயத்தினர் அல்லவா? வைணவ சமயத்தின் திருக்குறி யாகிய நாமத்தைக் கொண்டு தீண்டாமையைப் போக்க முடிவு செய்தார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நாமந் தரித்து அவர்களை வைணவராக்கினார். உயர்குல வைணவருடன் அவர்களைப் புழங்கும்படி செய்தார். தாழ்த்தப்பட்டோரைத் திருக்குலத்தார் எனப் பெருமையாக அழைத்தார். இவரால் தாழ்வகன்று உயர் வடைந்த தமிழர் பல்லாயிரவராவர். இவருக்குத் திருக்குல மாணவர்களும் சிலர் இருந்தனர்.

இராமாநுசர் திருவரங்க மடத்திலிருந்து நாடோறும் காவிரிக்கு நீராடப் போவார். போகும்போது கூரத்தாழ்வார், முதலியாண்டார் என்னும் இரு பிராமண மாணவர் தோள்களின் மீது பட்டாடையை விரித்து, அதன் மேல் தமது கையை வைத்துச் சாய்ந்து கொண்டு போவார். நீராடித் தூயராய் மடத்திற்கு வரும்போது, இரு திருக்குல மாணவர் தோள்களின் மேல் பட்டாடையின்றிச் சும்மா கையை வைத்துச் சாய்ந்து கொண்டு வருவார்.

ஏன் இப்படிச் செய்கிறார் என்று கேட்டுத் தெரிந்து கொள்ள எவருக்கும் துணிவு பிறக்கவில்லை. காரணமோ தெரியவில்லை. இருசாரார் தோள்மேலும் ஒரே வகையாகச் சாய்ந்து கொண்டு போனாலும் தவறில்லை. உயர் குலத் தோராகிய பிராமண மாணவர் தோள் மேல் பட்டாடையை விரித்து அதன் மேல் கையை வைப்பது; இழிகுலத்தோராகிய தாழ்த்தப்பட்ட மாணவர் தோள்மேல் ஆடையின்றிக் கையை வைப்பது. இது சரியான முறையா? நேருக்கு மாறாகவன்றோ இருக்கிறது?

மேலும், நீராடப் போகும்போது பிராமண மாணவர் தோள்மீது சாய்ந்து கொண்டு போவதும், நீராடித் தூயராய் வரும்போது தீண்டாத மாணவர் தோள் மீது சாய்ந்து கொண்டு வருவதும் புதுமுறையாக வன்றோ இருக்கிறது?

ஆம், புது முறைதான். வழக்கத்துக்கு மாறாக நடப்பது புதிதுதானே? இதற்கு ஏதாவது காரணம் இருக்கலாம். காரணம் இல்லாமலா அறிவறிந்த அப்பெரியார் அப்படிச் செய்வர்? நமக்கு அதன் காரணம் இன்ன வென்று புரியவில்லை. அதனால் அது நமக்குப் புதுமையாகத் தோன்றுகிறது. காரணம் இன்ன தெனத் தெரிந்தால், ‘ஆ! இதற்காகவா இப்படிச் செய்தனர்? என்னே இவரது பெருந்தன்மை!’ என்று வியப்புறுவோம்.

இவர் இவ்வாறு, காவிரிக்குப் போவதையும் வருவதையும் கண்ட பொது மக்கள், நம்மைப் போலவே காரணம் விளங்காமல் திகைத்தனர். ஒரு உயர் குலப் பெரியார், குளித்துக் கொண்டு தங்கள் குலத்தவர் தோள் மீது கையை வைத்துக் கொண்டு செல்வது கண்ட அத்திருக்குலத்தோர் கொண்ட மகிழ்ச்சிக்கு எல்லையும் உண்டோ? அவர்கள் நம் பெரியாரை வாயார வாழ்த்தினர்.

ஆனால், உயர் குலத்தாரோ உள்ளம் வெதும்பினர். ‘என்னே இவர் இப்படிச் செய்கின்றனர்! பிராமணராக இருந்தும், மேலும் ஒரு பெரிய மடத் தலைவராக இருந்தும், குளித்துக் கொண்டு தீண்டத்தகாத அவ் விழி குலத்தார் தோள்மீது கையை வைத்துக் கொண்டு போகின்றாரே? அவர்களைத் தொட்டால் நாமெல் லாரும் குளித்துக் கொள்கிறோம். இவர் குளித்துக் கொண்டு அவர்களைத் தொடுகிறார். இவருக்குப் பித்துப் பிடித்துக் கொண்டது போல் இருக்கிறது. இல்லை, காலம் இப்படிக் கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போய்விட்டது; என்ன செய்வது!’ என்று பேசிக் கொண்டனர்.

இவ்வாறு வழக்கமாய் நடந்து வருவது கண்டு மனம் புழுங்கிய பிராமண மாணவர்கள், பொறுக்க முடியாமல் ஒரு நாள் முணுமுணுத்தனர். அது கண்ட உடையவர்,

"தோழர்களே! சாதிச்செருக்கு, கல்விச் செருக்கு, செல்வச் செருக்கு என்னும் இம்மூன்றும் ஒருவனை நல்லது செய்து நலமடைய முடியாமல் துன்புறுத்தும் தீராப் பெருநோய் களாகும். இம் முப்பெரும்பிணிகளைத் தீர்க்கும் மருத்துவர் இத்திருக்குலச் செல்வர்களே யாவர்.

சாதிச்செருக்குத் தீண்டத் தகாதது. நாம் உயர்சாதி என்னும் அச்சாதிச்செருக்கும், கல்விச் செருக்கும் கொண்டுள்ள உங்களைத் தொடுவதனால் உண்டாகும் தீட்டு, நீராடுவதனால் நீங்காது. சாதிச்செருக்கு, கல்விச் செருக்கு, செல்வச்செருக்கு ஆகிய மூவகைச் செருக்கும் இன்றிப் புனிதர்களாய் விளங்கும் இத்திருக் குலத் தோழர்களைத் தீண்டுவதனாலேயே அத்தீட்டு நீங்குகிறது. அதற்காகவே நான் இவ்வாறு செய்து வருகிறேன்"என்றார்.

உடையவர் அறிவுரையால் உண்மையுணர்வுற்ற கூரத்தாழ் வார் முதலிய அப்பிராமண மாணவர்கள் அத்திருக்குலத் தோழர் களைத் தொழுதெழுந்து, அவர்களை மார்புறத் தழுவிக் கொண்டனர்.

‘உடையவரே நம் தெய்வம்’ என்று வாயாரப் பாடிக் கொண்டும், ‘உரைகாரர்’ எனப் பெருமை பாராட்டிக் கொண்டும், அவர் உரையைப் படித்துக் கொண்டும், அவர் நடந்து காட்டிய வழியைப் பின்பற்றாமல் இருப்பது முறையாகுமா? திருமாலுக் குரியவை எனக் கொண்டு, ஒரே தன்மையான சில நாள், மாதங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தண்ணீர் ஊற்றுவதுங் கூடத் தீட்டு என்பது, உடையவர் கொள்கையைப் புறக்கணிப்ப தாகுமன்றோ? நன்கு எண்ணிப் பாருங்கள்.

இராமகிருட்டிணர்


இன்று நீங்கள் உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறீர்கள். இதற்குமுன் நீங்கள் தொடக்கப் பள்ளியில் படித்தீர்கள். இப்பள்ளிப் படிப்பு முடிந்ததும், உயர் படிப்புப்படிக்க உங்களிற் சிலர் கல்லூரிக்குச் செல்வீர்கள். ஆம், கட்டாயம் செல்லுங்கள். சென்று படித்துப் பட்டம் பெறுங்கள். நம் நாட்டின் நல்வாழ்வுக்குக் கல்லூரிப் பட்டம் பெற்ற நல்லறிவாளர்கள் மிகவுந் தேவை.

நம் நாட்டுப் பள்ளிகளும் கல்லூரிகளும் யாரால் நடத்தப் படுகின்றன? பல அரசினரால் நடத்தப்படுகின்றன; ஒரு சில நாட்டு நலத்தில் அக்கறை கொண்ட பெருஞ் செல்வர்களால் நடத்தப்படுகின்றன. ஒரு சில கல்வித் தொண்டைப் பயனாகக் கொண்ட தனியார்களால் நடத்தப் படுகின்றன. ஒருசில கிறித்துவ மடத்தினரால் நடத்தப்படு கின்றன.

இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய வெளிநாடுகளில் உள்ள கிறித்துவ மடத்தினர், இந்நாட்டில் பள்ளிகளும் கல்லூரிகளும் நடத்திக் கல்வித் தொண்டு செய்து வருவது போலவே, இந்நாட்டு இராமகிருஷ்ண மடத்தினரும் பள்ளிகளும் கல்லூரிகளும் நடத்திக் கல்வித் தொண்டு செய்து வருகின்றனர்.

இம் மடத்தினரால் நடத்தப்படும் பள்ளி மாணவர்கள், பழைய குருகுலமுறைப் பள்ளி மாணவர்களைப் போல, பெரும் பாலும் பள்ளி விடுதியில் தங்கியிருந்தே படித்து வருகின்றனர். இம்மடம், இராமகிருஷ்ணர் என்னும் பெரியார் பெயரினால் ஏற்படுத்தப்பட்டதாகும். அப்பெரியார் வரலாறு யாது?

இந்திய மாநிலங்களில் வங்காள மாநிலம் ஒன்று. அது கங்கை வெளியில், வங்கக் கடலைச் சார்ந்துள்ளது. அது இரண் டாகப் பிரிக்கப்பட்டு, ஒரு பகுதி பாகித்தானைச் சேர்ந்து விட்டது. மற்றொரு பகுதியாகிய மேற்கு வங்காளம், இந்திய மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. 1947க்கு முன், அது ஒரே மாநிலமாகவே இருந்து வந்தது.

வங்காள மாநிலத்து மாவட்டங்களுள் ஊக்ளி மாவட்டம் ஒன்று. அம் மாவட்டத்தில் உள்ளது காமர்ப்புகூர் என்னும் ஊர். கல்கத்தாவுக்கு 128 கி.மீ. மேற்கில் உள்ளது இவ்வூர். வங்க மாநிலத்திற்கே, ஏன்? இந்தியாவிற்கே பெருமையைத் தேடித் தந்தது அவ்வூர்.

அவ்வூரில், குதிராம் சட்டர்ஜி என்ற பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் மனைவியார் சந்திராமணி தேவி என்பார். அப்பெற்றோரின் நாலாவது பிள்ளையே பகவான் இராம கிருஷ்ணர் என்பவர்.

இவர், 18.2.1836இல் பிறந்தார். இவரது இயற்பெயர் கதாதரன் என்பது. கதாதரன் ஒரு திண்ணைப் பள்ளியில் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டார். அவ்வளவுதான் இவர் பள்ளிப் படிப்பு. இளமையிலிருந்தே இவர் இயற்கையறிவை வளர்த்து வந்தார். அவ்வியற்கையறிவு வளர்ச்சியே இவரைப் பெரிய வராக்கியது; ‘பகவான் இராமகிருஷ்ணர்’ என்ற பட்டப் பெயருக் குரியவராக்கியது; ஒரு தனிப்பட்ட கொள்கைக்கே தலைவ ராக்கியது.

இருபத்தைந் தாண்டுப் பருவமுள்ள இராமகிருஷ்ணருக்கு, சாரதாமணி என்னும் ஐந்தாண்டுச் சிறுமியை வாழ்க்கைத் துணைவியாக்கினர். சாரதாமணி அம்மையார் பின்னர், கண வரையே குருநாதராகக் கொண்டனர். சாரதா உயர்நிலைப் பள்ளி, சாரதா கல்லூரி என்பவை, இவ்வம்மையார் பெயரால் நடப்ப வையே யாகும்.

கல்கத்தாவில், இராசமணி தேவி என்னும் செம் படவகுலச் செல்வி யொருத்தி இருந்தார். அவ்வம்மையார், பல நூறாயிரம் செலவு செய்து, 1853இல், கல்கத்தாவுக்கு 6கி.மீ. வடக்கில் கங்கைக் கரையில், ஒரு காளி கோயில் கட்டினார். இராம கிருஷ்ணர் அக்காளி கோயில் பூசனை செய்யும் பணியிலமர்ந்தார்.

ஆனால், இராமகிருஷ்ணர் சில நாட்களில் அவ்விறைப் பணி செய்வதை விட்டுவிட்டு, அக்காளி கோயிலுக் கருகில் இருந்த ஆல மரத்துக்குப் பக்கத்தில் இருந்த பஞ்சவடி என்னும் இடத்தில் அமர்ந்து, காளியின் அருளை வேண்டித் தவம் செய்து வந்தார். இரவு பகல் எந்நேரமும் உட்கார்ந்தபடியே இருப்பார்.

இங்ஙனம் இருக்கையில், பைரவி என்னும் பெண்துறவி ஒருவர் அங்கு வந்தார். அவர் சில ஆண்டுகள் அங்கு தங்கி, இராமகிருஷ்ணருக்கு யோக முறைகளையும், பல சமயக் கருத்துக் களையும் அறிவுறுத்திச் சென்றார்.

பின்னர், தோதாபுரி என்னும் துறவி அங்கு வந்தார். அவர், மேலும் சிறந்த யோக முறைகளை உணர்த்தி, இராம கிருஷ்ணர் என்ற சமயப் பெயர் சூட்டிச் சென்றார். அதிலிருந்து இவருக்கு இராமகிருஷ்ணர் என்ற பெயர் வழங்கலானது.

இராமகிருஷ்ணர் அதன் பின்னர்த் தொடர்ந்து முயன்று மெய்யறிவு கைவரப் பெற்றார். இவருக்கு விவேகானந்தர் முதலிய மாணாக்கர்கள் பலர் ஏற்பட்டனர். இராமகிருஷ்ணர் ஆராய்ந்து கண்டறிந்த உயர் நெறிகளை, விவேகானந்தர் உலகெங்கும் பரப்பினார்.

பகவான் இராமகிருஷ்ணர் இயல்பாகவே அருளுள்ளம் வாய்க்கப் பெற்றவர்; ஏழையெளியவர்களிடம் அளவு கடந்த இரக்கம் உடையவர்; பிறர் துயர் கண்டு பொறாத உள்ள முடையவர். ‘ஏழைகளுக்குத் தொண்டு செய்வதே இறைபணி’ என்பதே, இவர் கண்டறிந்த முடிவான கொள்கையாகும்.

இராமகிருஷ்ணருக்கு மாணவர் பலர் உண்டல்லவா? அவர்களில், அடிகளோடு உடனிருந்து வந்த மாணவர்களே யன்றி, வெளி மாணவர்களும் பலர் இருந்து வந்தனர். அவருள் ஏழை முதல் பெருஞ்செல்வர் ஈறாகப் பலதரப்பட்டவர் இருந்தனர். அவர்களுள் மதுரநாதர் என்பவர் ஒருவர். அவர் இராசமணி தேவியின் மருகர்; பெரும் பணக்காரர்; அடிகளிடம் அளவு கடந்த அன்புடையவர்.

மதுரநாதர் ஒரு நாள் காசியாத்திரை போய்வர விரும் பினார்; அடிகளையும் அழைத்தார். அடிகளும் மதுர நாதர் விருப்பத்திற் கிணங்கினார். காசிக்குச் செல்லும் வழியில் அவர்கள் ஓரூரில் தங்கினார்கள்.

அடிகள் தனியாக அவ்வூர்ச் சேரிக்குச் சென்றார். அச்சேரிப் பாட்டாளி மக்கள் உணவும் உடையும் இன்றி வருந்துவதைக் கண்டார். அடிகளின் மனம் வருந்தியது. மதுரநாதரிடம் வந்து, ‘அவ்வேழைகளுக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் கொடுக்க வேண்டும். அவர்கள் உண்டு உடுத்துக் களிப்பதைக் கண்டு களிக்க வேண்டும்’ என்றார்.

‘காசிக்குப் போய் வருவதற்கு வேண்டிய அளவு பணந்தான் கொண்டு வந்திருக்கிறேன். அதில் இங்கு செலவழித்து விட்டால் காசிக்குப் போய் வருவதெப்படி?’ என்றார் மதுரநாதர்.

‘இவர்களுக்குச் சோறும் துணியும் கொடுத்தால்தான் நான் காசிக்கு வருவேன். இல்லையேல், நான் இவர்களுடனே இருந்து விடுகிறேன்’ என்றார் அடிகள்.

அது கேட்ட மதுரநாதர், கல்கத்தாவிலிருந்து வேண்டிய அளவு அரிசியும் துணியும் வரவழைத்து அப் பாட்டாளி மக்களுக்கு விருந்திட்டுத் துணியும் கொடுத்தார். அவ்வெளியரோடு தாமும் மகிழ்ந்து காசிக்குப் புறப்பட்டார் அடிகள். என்னே அடிகளின் அருளுள்ளம்! ‘பெரியோர்க் கழகு பிறர் நலம் பேணுதல்’ என்பதற்கு, எடுத்துக்காட்டாக விளங்கும் அடிகளின் பெருங் குணத்தை என்னென்பது!

பகவான் இராமகிருஷ்ணர் ஒரு நாள் இரவு, தம் மாணாக்கர் எல்லாரும் தூங்கின பிறகு, ஒருவருக்கும் தெரியாமல் எழுந்து, பக்கத்தில் உள்ள ஒரு சேரிக்குச் சென்றார். அச்சேரியில் உள்ளோர் யாரும் அறியாமல் அங்கு கிடந்த குப்பை கூளங்களையெல்லாம் வாரி எறிந்து அச்சேரித் தெருவைத் துப்புரவு செய்துவிட்டு வந்து ஒருவரும் அறியாமல் படுத்துக் கொண்டார்.

காலையில் எழுந்து பார்த்த அப் பாட்டாளி மக்கள் திகைப்புற்றனர். ‘இது யார் செய்த வேலை? நாம் தாம் உயர்குடி மக்கள் தெருவைக் கூட்டித் துப்புரவு செய்கிறோம். தாழ்த்தப் பட்டோராகிய நமது தெருவைக் கூட்டினவர் யார்? அதுவும், ஒருவருக்கும் தெரியாமல் இரவில் வந்து, யார் இவ்வளவு அக்கறை யோடு நம்ம தெருவைத் துப்புரவு செய்பவர்? குப்பையை வேண்டுமானால் யாராவது காணாமல் வாரிக் கொண்டு போ வார்கள். கூட்டிய குப்பையும் இங்கேயே கிடக்கிறதே! இது என்ன புதுமையாக இருக்கிறது?’ என்று அச் சேரியே திகைப் புற்றது. இன்றிரவு விழித்திருந்து, களவுங்கையுமாக அக் கள்வனைப் பிடிக்கலாமென்று முடிவு செய்தனர்.

மறுநாளும் அடிகள் அவ்வாறே அச் சேரிக்குச் சென்று, தெருவைத் துப்புரவு செய்துகொண்டிருந்தார். ஒருவன் எழுந்து வந்து பார்த்து, ‘யாரது?’ என்றான்.

‘யாருமில்லை, நான்தான். இங்கே வாரும்’ என்றார் அடிகள். அவன் பக்கத்தில் வந்து பார்த்ததும், ‘சாமி! சாமி’ எனப் பித்துப் பிடித்தவன் போல் கத்தினான்.

எல்லாரும் எழுந்து வந்து பார்த்து, அடிகளை வணங்கி, ‘ஐயோ! இதென்ன கொடுமை!’ இது யார் செய்கிற வேலை? தாங்கள் இந்நள்ளிரவில் இங்கு வந்து இத்தொழில் செய்தல் தகுமோ? இது முறையோ?’ என்று, வருத்தத்துடன் கூறினர்.

‘தோழர்களே! உயர்வு தாழ்வு என்னும் வேற்றுமை உணர்வும், உயர்சாதி என்னும் செருக்கும் ஒழிய, இத்தொழிலைச் செய்வதே ஏற்றதென முடிவு செய்தேன். அவ்வாறே செய்தேன். ஒவ்வொரு நாளும் இவ்வாறே வந்து உங்கள் தெருவைத் துப்புரவு செய்யப் போகிறேன். நீங்கள் இதை ஊரறியச் செய்யக்கூடாது’ என்றார் அடிகள்.

அப்பாட்டாளி மக்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. என்னமோ தங்கள் விருப்பம் என்றனர். அடிகள் நாடோறும் அத் திருத்தொண்டைத் தொடர்ந்து செய்து வந்தனர்.

‘ஊர் வாயை மூட உலைமூடி உண்டா?’ சில நாட்களில் அது, மாணாக்கர்க்குத் தெரிந்துவிட்டது. அது கேட்டுத் திடுக் கிட்ட அவர்கள் அடிகளை வணங்கி, ‘குருநாதா! தாங்கள் நள்ளிரவில் தீண்டாதார் சேரிக்குச் சென்று, அச் சேரித் தெருவைத் துப்புரவு செய்து வருவதாகக் கேள்விப் பட்டோம். என்ன இருக்க என்ன செய்தீர்கள்? தாழ்ந்த பிறப்பினரான அச் சண்டாளர்கள் இருக்கும் இடத்தை மிதிப்பதே பாவம். அப்படியிருக்க, அவர்கள் சேரியைத் துப்புரவு செய்வது பாவத்தினும் கொடிய பாவ மல்லவா? இது, தங்கள் ஒப்புயர் வற்ற புனிதத் தன்மைக்கும் பெருமைக்கும் ஏற்றதாகுமா?’ என்று வருந்தினர்.

அது கேட்ட குருநாதர், ’ஆ! இதுவோ உங்கள் அறிவின் பெருமை! அப்பாட்டாளிகளா சண்டாளர்கள்? ஒரு தொழிலும் செய்யாத நாமல்லவோ சண்டாளர்கள்? இரவு பகலாக ஓயாமல் உழைத்து உலகை வாழ்விக்கும் உயர் மக்களல்லவோ அவர்கள்? உழைப்பின்றேல் உலக வாழ்வேது? உழைப்பன்றோ உலகத்தின் செல்வம்?

கடவுள் உருவங்களாகிய அப் பாட்டாளிகளை, செருக் கென்பது இன்னதென்றே அறியாத அவ்வருட் செல்வர்களை, தனக்கென வாழா அப்பிறர்க்குரியாளரை, குடிக்கக் கஞ்சியும், கட்டக் கந்தையும், இருக்கக் குடிசையும் மட்டுமா? குடிக்கத் தண்ணீருங்கூடச் சரியானபடி கிடைக்காதபடி அடக்கியாளும் நாமன்றோ பரம சண்டாளர்கள்?

உயர் சாதி என்னும் செருக்கன்றோ மக்களைத் தூய்மை யின்மையினும் தூய்மையில்லவ ராக்குகின்றது? கடவுட் படைப்புக் குட்பட்ட ஒரு சிலரை, அப்படைப்பின் புறம்பாக எண்ணி ஈவிரக்க மின்றி அடக்கியாண்டு வரும் சண்டாளர்கள் வாழும் இவ்வுலகில் பிறந்த குற்றத்தைப் போக்கிக் கொள்ள, தாழ்த்தப் பட்ட மக்களாகிய அவர்கள் தெருவைத் துப்புரவு செய்வதைவிட வேறு வழியொன்றுமே இல்லை’ என, மனவுருக்கத்தோடு கூறினார்.

உண்மை யுணர்ந்த மாணாக்கர்கள் தங்கள் அறியாமையை மன்னித் தருளும்படி வேண்டிக்கொண்டனர்.

என்னே அடிகளின் உண்மை யுணர்வின் திண்மை! உண்மை யென்று கண்டதை அப்படியே செயல்படச் செய்வது தானே அறிவின் பயன்? உண்மை என்று கண்டதைத் தான் செய்ய அஞ்சுவது அறிவுடைமை ஆகாது. உண்மையென்று கண்டதை அப்படியே செயல்படச் செய்த அடிகளின் அறிவுடைமையை என்னென்பது!

‘மெய்யறிவு மெய்யறிவு’ என்பது என்ன? என்ற கேள்விக்குச் சரியான விடை இப்போது கிடைத்துவிட்ட தல்லவா? மக்கள் ஒரே இனம். மக்களுக்குள் ஏற்றத் தாழ்வான சாதி வேறுபாடு, பிறப்பிலேயே உயர்ந்த பிறப்பினர், தாழ்ந்த பிறப்பினர் என்ற பிறவி வேற்றுமை இல்லை என்று கண்ட இதுதான் மெய்யறிவு! இதுதான் உண்மையறிவு! கண்ட உண்மையைச் செயல்படச் செய்த அடிகளே மெய்யறிஞர்!

அடிகள் அப் பாட்டாளி மக்களிடமும், தம் மாணாக் கரிடமும் கூறிய அறவுரையை இன்னொரு முறை திருப்பிப் படித்துப் பாருங்கள். படித்துப் பார்த்து ‘ஒன்றே குலம்’ என்னும் உண்மையை உணருங்கள்.

‘செயற்கரிய செய்வார் பெரியர்’ என்ற வள்ளுவர் குறளுக்கு அடிகள் அப்படியே எடுத்துக்காட்டாவரன்றோ? இனி உங்களுக்கு, அக்குறளுக்கு உரை விளக்கம் தேவையே இல்லை யல்லவா?

“தீண்டாத சாதியார் கட்டாயத்தின் கீழ்ச் செய்யும் தோட்டி வேலையை, நாம் மனமாரச் செய்யும் அறிவையும் ஆற்றலையும் கடவுள் நமக்கு அருள்வாராக”- காந்தியடிகள்.

விவேகானந்தர்


காந்தியடிகளை நேரில் கண்டு களியாதவர்க்கும், அடிகளின் திருவுருவம், அவரை நேரில் கண்டு களிப்பதுபோல, அந்நேரில் காணார் கண்முன் காட்சியளிக்கும். அத்திருவுருவத்தின் மயக்கப் புன்சிரிப்பு அடிகள் நேரில் நின்று சிரிப்பது போன்ற உணர்வை உண்டாக்கும்.

இவ்வாறே, ‘ஒருவகை உருமாலைக்கட்டும்’ நேர் நிமிர்ந்து பார்க்கும் வீரப் பார்வையும் உடைய ஒருவரின் திருவுருவம் அவரை நேரில் காணாதவர்க்கும் நேரில் கண்டு களிப்பது போல அவர்தம் கண்முன் காட்சியளிக்கும். யார் அவர்?’ என்ற கேள்விக்கு விவேகானந்தர் என்ற விடை உடனே கிடைக்கும். ஆம், நேரில் காணார் கண்முன்னும் காட்சியளிக்கும் அத்தகைய உருவத் தோற்றம் உடையவரே விவேகானந்தர்.

‘ஏழைகளுக்குத் தொண்டு செய்வதே இறைவன் திருப்பணி’ என்னும் பகவான் இராமகிருஷ்ணர் கொள்கையை உலகெங்கும் பரப்பிய பெருமை, உலகம் அறிந்தின்புறச் செய்த பெருமை விவேகானந்தரையே சாரும். இவர், இராம கிருஷ்ணரின் முதன் மாணாக்கர் ஆவார். இவர் இராம கிருஷ்ணரின் வெறும் முதல் மாணாக்கர் மட்டும் அல்லர்; இராமகிருஷ்ணரின் மறுபதிப்பே விவேகானந்தர் என்பதே மிகவும் பொருத்தம். தம் குருநாதர் கொள்கையை அப்படியே மேற் கொண்டவர் விவேகானந்தர்.

வங்க மாநிலத்தின் தலைநகரான கல்கத்தாவே விவேகானந் தரின் சொந்த ஊர். இவர் தந்தை விசுவநாத தத்தர் என்பவர். அவர் கல்கத்தா உயர்நீதி மன்ற வழக்கறிஞர்; பெருஞ்செல்வர். அரசமரபைச் சார்ந்தவர் இவர். விவேகானந்தரின் தாயார் புவனேசுவரி அம்மையார். அவர் நல்ல கல்வியறிவுடையவர்.

12.11.1863இல் நம் விவேகானந்தர் பிறந்தார். நரேந்திர நாதன் என்பது இவரது இயற்பெயர். நரேந்திரனின் பிள்ளைப் பருவம் மிகமிகத் துடுக்குத் தனம் நிறைந்ததாக இருந்தது. இவனை வைத்துத் தாட்டவே முடியாதெனத் தாயார் வெறுப்புக் கொள்ளு மளவுக்கு நரேந்திரனது துடுக்குத் தன.ம் மிதமிஞ்சியதாக இருந்தது.

எனினும், நரேந்திர நாதன் அறிவுடையவனாகவே காணப் பட்டான். பிள்ளைப் பருவம் போய்ப் பள்ளிப் பருவம் வந்தது. நரேந்திரன் கல்வியிற் கருத்தைச் செலுத்தினான். பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரியிற்சென்று படித்துப் பட்டம் (பி.ஏ.) பெற்றான் நரேந்திரன்.

கல்லூரிப் பட்டம் பெற்ற நரேந்திரன், உலக வாழ்வில் ஏனோ வெறுப்புக் கொண்டு, பகவான் இராமகிருஷ்ணரை அடைந்து, அவர்க்கு முதல் மாணாக்கனாகி, சாமி விவேகானந்தர் என்ற சிறப்புப் பெயர் பூண்டு துறவி ஆனான்.

‘காசைக் கையால் தொடுவதில்லை; உயிர் போவதாயிருந் தாலும் ஒருவரை உணவு கேட்பதில்லை; நாளைக் கென்று யாதொரு பொருளையும் மீத்துவைப்பதில்லை’ என்னும், மக்கள் இயல்பைமீறிய கடுமையான நோன்புடையவர் இவர். உலக முழுவதும் சுற்றுப் பயணம் செய்துள்ளார். தம் வாழ்நாள் முழுதும் ஓரிடத்தில் நிலையாகத் தங்கியிராமல் அங்கங்கே சென்று தமது கொள்கையைப் பரப்பிக் கொண்டே இருந்தார்.

இவர் சிறந்த பேச்சாளர்; எவ்வளவு நேரம் வேண்டு மானாலும் ஓயாமல் பேசுவார். கல்லூரிப் பட்டம் பெற்ற இத்துறவி, சொல்லாற்றலில் வல்லுநராய் விளங்கியதில் வியப்பொன்று மில்லை. உலகமே இவர் பேச்சை ஆவலுடன் கேட்டது; கேட்டு இன்புற்றது. ஆசியாவே யன்றி, அமெரிக்கா, ஐரோப்பாக் கண்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து சொற்பொழிவாற்றியுள்ளார். அங்கெல்லாம் இவர்க்கு மாணாக்கர்கள் உண்டு. இவர் ஓர் உலக அறிஞரும், உலகத் துறவியும், உலகப் பெரியாரும் ஆவர். காண்போர் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவரும் தோற்றப் பொலிவுடையவராவர்.

1893இல் அமெரிக்க நாட்டுச் சிகாகோ என்னும் நகரில், உலகச் சமய மாநாடு ஒன்று நடந்தது. உலகிலுள்ள எல்லாச் சமயங்களையும் சீர் தூக்கிப் பார்த்தற்காகக் கூட்டப்பட்டது அம் மாநாடு. உலகில் உள்ளபேரும் புகழும் பெற்ற சமயத் தலைவர்கள் எல்லாரும் அம்மாநாட்டில் கலந்து கொண்டனர். நமது சாமிகளும் அம் மாநாட்டிற்குச் சென்றிருந்தார்.

11.9.1893அன்று அம் மாநாடு தொடங்கிற்று. தலைவர் முன்னுரைக்குப் பின், பலர் பேசினர். நம் சாமிகளின் முறை வந்தது. அரியேறு போல எழுந்து மேடைக்குச் சென்றார். சாமிகளின் தோற்றப் பொலிவால் அம் மாநாடு மருண்டது. பெருமிதமான வெண்கலக் குரலில், ‘அமெரிக்க நாட்டுப் பிறந்தவிகளே! பிறந்தவர்களே!’ (சகோதரிகளே, சகோதரர் களே) என்றார். அவ்வளவுதான்! அதற்கு மேல் அவரைப் பேசவிட வில்லை. யார்? இடியென முழங்கிய கைதட்டலின் ஒலி. காரணம்,

மற்ற பேச்சாளர்களெல்லாரும், ‘செல்விகளே! செல்வர்களே!’ (சீமாட்டிகளே சீமான்களே) என்று, அவையோரை விளித்துத் தம் பேச்சைத் தொடங்கினர். நமது சாமிகளோ, உலக மக்களை உடன் பிறந்த ஒரே குடும்பமாகக் கொண்டதே யாகும். அதன்பின் இவர் சொன்மாரி பொழிந்தார். அம் மாநாடென்ன, அமெரிக்காவே இவரைப் பாராட்டியது.

இம் மாநாட்டுக்காக 1893இல் அமெரிக்கா சென்ற நம் சாமிகள், நான்காண்டுகள் அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய வெளிநாடுகளில் தமது கொள்கையைப் பரப்பி விட்டு, 1897இல் இலங்கை வழியாகத் தமிழ்நாட்டை அடைந்து, சென்னையில் தமிழ் மக்களின் வரவேற்பைப் பெற்று, சென்னையிலிருந்து கல்கத்தா சென்றார்.

இந்தியாவின் எல்லாப் பெரிய நகரங்களுக்கும் சாமிகள் சென்றிருக்கிறார். சாமிகள் முதல் முதல் இந்தியச் சுற்றுப் பயணம் செய்த போது, ஆழ்வார் நகருக்குச் சென்றிருந்தார். அது ஓர் இந்தியச் சிற்றரசின் (சமஸ்தானம்) தலைநகர். அங்கு மூன்றுநாள் தொடர்ந்து சொற்பொழிவாற்றினார் சாமிகள். சாமிகளின் இன்சொல் தேனுண்டு மதிமயங்கிய மக்கள் அவரது பசியைப் பற்றிக் கவனிக்கவே இல்லை.

அப்போது இவர் பெயர் நாட்டில் நன்றாகப் பரவவில்லை. ‘யாரோ ஓர் இந்தியத் துறவி; சிறந்த பேச்சாளி, பெரிய படிப்பாளி’ - இவ்வளவே அன்று அவ்வூர் மக்கள் சாமிகளைப் பற்றி அறிந் திருந்தது. இன்று போல் அன்று, பேச்சாளரை வரவேற்று உணவிட்டுப் போற்றும் வழக்கமும் அவ்வளவாக இல்லை.

எனவே, சாமிகள் நீண்ட நேரம் பேசுவதும், பேசிவிட்டுப் போய்த் தனியாக ஓரிடத்தில் தங்குவதுமாக இருந்து வந்தார். ‘புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ என்பது, ஒரு தமிழ்ப் பழமொழி யாகும். ஆனால், நமது சாமிகளோ எவ்வளவு பசித்தாலும், பசியினால் உயிரே போய்விடுவதாக இருந்தாலும், ஒருவர் கொடுத்தால் வாங்கிச் சாப்பிடுவதே யல்லாமல், தாமாகக் கேட்டு வாங்கி யுண்ணும் வழக்கமில்லாத கடுமை யான நோன்பு நோற்று வந்த காலம் அது. ஆகையினால், அம் மூன்று நாளும் பட்டினி யாகவே இருந்து வந்தார்.

மூன்றா நாள் சொற்பொழிவு முடிந்தது. கூட்டத்தினர் எல்லாரும் அவரவர் பாட்டில் எழுந்து போய் விட்டனர். இது அவர்கட்கு வழக்கமானது. ஆனால், மூன்று நாளாய்ச் சரியான உணவின்றி, அதாவது உண்ணாமலேயே சொல்மாரி பொழிந்து ஓய்ந்து போன அடிகள், கடும்பசியால் மிகவும் களைப்புற்றார். நடக்க முடியவில்லை. கால்கள் தள்ளாடின. பசி காதை அடைத்தது. இந்நிலையிலும், ‘பசிக்கின்றது’ என்று, பிறரிடம் சொல்லக் கூடாத அத்தகு கடுநோன்பு உடைய அவர் அங்கேயே அயர்ந்து படுத்திருந்தார். படுத்திருந்தார் என்பதைவிட, படுத்துக் கிடந்தார் எனலே பொருந்தும், நெடு நேரம் அங்கு ஒருவரும் வரவில்லை. தனியாகவே களைத்துப் படுத்துக் கிடந்தார்.

அவ்வழியாக வந்த பழங்குடிமகன் ஒருவன் (சக்கிலி) அடிகள் தனியாகப் படுத்திருப்பதைக் கண்டான்; அவர் ஏனோ களைத்துப்படுத்திருக்கிறார் என்பதை ஒருவாறு அறிந்து கொண்டான். அவன் பக்கத்தில் சென்று, ‘சாமி! சாமி!’ என்றான். சாமிகள் கண்விழித்துப் பார்த்துவிட்டு மறுபடியும் கண்ணை மூடிக் கொண்டார். மிகுந்த பசியினால் களைத்துப் படுத்திருக்கிறார் என்பதை அப்பாட்டாளி அறிந்து வருந்தினான்.

‘பெரியீர்!’ பசியால் மிகவும் களைத்துப் படுத்திருக்கிறீர்கள் போல் இருக்கிறது. எத்தனை வேளையாகச் சாப்பிட வில்லையோ பாவம்! இந்நிலையிலுங்கூடத் தங்கள் பசியைப் போக்க முடியாத வனாக இருக்கிறேன். ஐயோ! நான் என்ன செய்வேன்?

சாமி! தாங்களோ உயர் குலத்தினர் போல் காணப்படு கிறீர்கள். நானோ இழிகுலத்தினன்; தீண்டப்படாத சாதி. கொஞ்சம் மாவு தருகிறேன். சமைத்துச் சாப்பிடுகிறீர்களா? அதுகூட இப்போது தங்களால் முடியாது போல் தோன்றுகிறது. வேறு ஒரு வழியுந் தோன்றவில்லையே. என் செய்வேன்? இந்த நிலையிலும் உதவ முடியாத பாவி!’ என்று வருந்தினான்.

சாமிகள் மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தார். பசியின் களைப்பால் தொண்டை வறண்டு போய்விட்டதால், மங்கிய குரலில், ‘தோழ! வருந்தாதே. உன் அருளுள்ளம், அவ்வுள்ளத்தினின்று வெளி வந்த அன்பு மொழி, உன் ஒப்பற்ற பெருங்குணம் இவையே என் கண்களைத் திறக்கும்படி செய்தன. உன்னுடைய உணவே எனக்குப் பாற்சோறு போன்ற தாகும். உன் வீட்டில் உள்ள உணவில் கொஞ்சம் கொண்டு வாரும்; வருந்து வதைவிடும்’ என்றார்.

‘பெரியீர்! நானோ தாழ்த்தப்பட்டவன். உயர்குலத்தில் பிறந்த தாங்கள் நான் தொட்ட உணவை உண்ணலாமா? நான் தங்களுக்கு உண்ண உணவு கொடுப்பது பாவமல்லவா?’

‘நண்பா! மக்களில் உயர்வு தாழ்வு கருதுவது மடமை யாகும். என்றோ, எவராலோ தாழ்த்தப்பட்டீர்கள். பாவம்! அக்கொடுமை இன்னும் தொலையாது மக்களினத்தை ஆட்டிப்படைக்கிறது; வாட்டி வருத்துகிறது. ’இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்’ என்பது, ஆன்றோர் வாக்கன்றோ? நீ அன்புடன் அளிக்கும் உப்பில்லாப் பழங்கூழும் எனக்கு ஆரமுதமாகும். தயங்காமல் போய்க்கொண்டு வாரும்’ என்றார் சாமிகள்.

அப் பாட்டாளி, ஓர் உயர்குலத் துறவிக்கு ஒரு தீண்டப் படாதவன் உணவு கொடுத்தா னென்று ஊரார் வெகுளுவார் என அஞ்சினான். எனினும், சாமிகளின் பசி தணிய வேண்டும், அவர் களைப்பு நீங்க வேண்டும் என்னும் ஆர்வம் பிடர் பிடித்துத் தள்ள விரைந்து தன் குடிசைக்குச் சென்று, கொஞ்சம் பழைய சோறு கொண்டுவந்து கொடுத்தான். சாமிகள் அதை அன்புடன் வாங்கி உண்டு பசி தணிந்தார்.

கொஞ்ச நேரத்தில் பசியினாலுண்டான களைப்பு நீங்கிற்று. ‘நண்பா! இன்று நீ இல்லாவிட்டால் நான் இவ்வுலகை விட்டுச் சென்றிருப்பேன். நான் உயிரோடு இவ்வுலகத்தில் இருக்க உதவியவன் நீயே’ என, அப்பழங்குடி மகனை மார்புறத் தழுவினார்.

அவன் அச்சத்தால் நடுங்கினவனாய், ‘பெரியீர்! இதை யாரிடமும் சொல்லாதீர்கள். தங்களுக்கு நான் உணவு கொடுத்தது தெரிந்தால் நான் உயிரோடு வாழ முடியாது’ என்று வேண்டிக் கொண்டான்.

மறுநாள் சாமிகள் ஆழ்வார் மன்னரின் அரண்மனைக்குச் சென்றிருந்தார். நெடுநேரம் மன்னரிடம் ஏதோ பேசிக் கொண் டிருந்தனர். முடிவில், முதல் நாள் தனக்கு உணவு கொடுத்த பழங்குடிமகனின் அரும்பெருங் குணத்தைப் பற்றி அரசனிடம் கூறினார். அரசன் அடிகளின் பெருங்குணத்தை மெச்சிய தோடு, அப்பழங்குடிமகனை வரவழைத்து வேண்டிய பொருள் கொடுத் தனுப்பினான்.

இதுவன்றோ பெரியார்க் கழகு! என்னே சாமிகளின் ஒருமை மனப்பான்மையும் செய்நன்றியறிதலும்!

அரசன் அறிந்தது அம்பலத்துக்கு வராமலா இருக்கும்? அச்செய்தி அந்நகர் எங்கும் பரவியது. சாமிகளின் பேச்சைக் கேட்டு இன்புற்றோரெல்லாரும் அவர் பசியைப் பற்றிக் கவனியாத தவற்றை எண்ணி வருந்தினார்கள். அடிகளின் பெருங்குணத்தைப் பாராட்டினர். ‘யாரோ ஒரு இந்தியத் துறவி’ என்ற நிலை போய், சாமிகளிடம் அளவு கடந்த அன்பு கொள்ளலாயினர்.