உலகம் பலவிதம்
வெ. சாமிநாத சர்மா
1. உலகம் பலவிதம்
    1. காப்புரிமை அறிவிப்பு
    2. நன்றி
    3. மூலநூற்குறிப்பு
    4. வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள்
    5. அணிந்துரை
    6. பதிப்புரை
    7. நுழையுமுன்…
    8. பிரசுராலயத்தின் வார்த்தை
    9. உலகம் பலவிதம்
    10.நடுவிலே வந்த வாழ்வு
    11.ஆபத்திலே வேற்றுமை
    12.பசிக்கொடுமை
    13.கூப்பன்
    14.சுகம் எங்கே?
    15.போனகுடி வந்தது
    16.வாடகைக்கு இடம்
    17.கடவுளும் வாழ்க்கையும்
    18.சொல்லும் செயலும்
    19.காந்தி தரிசனம்!
    20.தேர்தலுக்கு முந்தி
    21.காலேஜ் படிப்பு
   


உலகம் பலவிதம்

 

வெ. சாமிநாத சர்மா


நன்றி

இந்நூல் படைப்பாக்க பொது உரிமையின் கீழ் வெளியாவதற்கு பொருளாதார ஆதரவு வழங்கிய ரொறன்ரோ இசுகார்புரோ பல்கலைக்கழக நூலகம், கனடா (UNIVERSITY OF TORONTO SCARBOROUGH LIBRARY, CANADA) விற்கு நன்றி


மூலநூற்குறிப்பு

  நூற்பெயர் : உலகம் பலவிதம்

  தொகுப்பு : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 11

  ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா

  பதிப்பாளர் : இ. இனியன்

  முதல் பதிப்பு : 2005

  தாள் : 16 கி வெள்ளைத் தாள்

  அளவு : 1/8 தெம்மி

  எழுத்து : 10.5 புள்ளி

  பக்கம் : 16+296=312

  நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)

  விலை : உருபா. 195/-

  படிகள் : 500

  நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.

  அட்டை வடிவமைப்பு : இ. இனியன்

  அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6.

  வெளியீடு : வளவன் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030


வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள்

தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூறவேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். சர்மாஜி என்று அனைவராலும் அழைக்கப் பட்டவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடர் உறவுப் பிணைப் போடு பணியாற்றியவர்! சுதந்திரமான எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தவர். 1895ஆம் ஆண்டில் பிறந்த சர்மாஜி தனது பதினேழாவது அகவையில் எழுதத் தொடங்கி, பத்தொன்பதாவது அகவையிலேயே தனது முதல் நூலை (கௌரீமணி) வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய தேச பக்தன் நாளேட்டிலும், பன்னிரண்டு ஆண்டுகள் நவசக்தி கிழமை இதழிலும், இரண் டாண்டுகள் சுயராஜ்யா நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணி யாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான பாரதியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது குமரி மலர் மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு.

தமிழ்த் தென்றல் திரு. வி. க., மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. இவரது இல்லற வாழ்க்கை இலட்சியப் பிடிப்பாலும், தமிழ்ப்பணியாலும் சிறப்பு பெற்றது. தம்பதியர் இருவருமே அண்ணல் காந்தியின் பக்தர்கள். தனது அனைத்து எழுத்துலகப் பணிகளிலும் உறுதுணையாக நின்று, ஊக்கமளித்து, தோழமைக் காத்து, அன்பு செலுத்திய மனையாள் மங்களம் அம்மையாருடன் 1914ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் இல்லறத்தை நல்லறமாக்கி நிறைவு கண்டவர் சர்மாஜி. இத்தகைய பாக்கியம் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே! தம்மிருவரின் ஒத்துழைப்பால் தோன்றிய நூல்களையே தங்கள் குழந்தைகளாக எண்ணி மகிழ்ந்தனர் அந்த ஆதர்ச தம்பதியர். ஆங்கிலம், தமிழ், வட மொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளை அறிந்திருந்தவர் அம்மையார். தனக்கு உற்றத் துணையாயிருந்த மனையாள் உயிர் நீத்தது சர்மாஜியைத் துயரக் கடலில் ஆழ்த்தியது. தனது ஆற்றாமையைத் தன் நண்பருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். இவைதான் பின்னர் அவள் பிரிவு என்று நூலாக்கம் பெற்றது.

இரங்கூனுக்குச் சென்ற சர்மாஜி 1937 இல் ஜோதி மாத இதழை தொடங்கினார். பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய வெளிச்சமாக அமைந்தது ஜோதி. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலரும் ஜோதியில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்கள்தாம். புதுமைப் பித்தனின் விபரீத ஆசை முதலான கதைகள் ஜோதியில் வெளிவந்தவையே! இலட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி பத்திரிகையாக விளங்கிய ஜோதியில் வருணன், சரித்திரக்காரன், மௌத்கல்யன், தேவதேவன், வ.பார்த்த சாரதி முதலான பல புனைப் பெயர்களில் பல துறைகளைத் தொட்டு எழுதியவர் சர்மாஜி. இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் ஜோதி அணையாமல் தொடர்ந்து சுடர்விட்டது குறிப்பிடத்தக்கது.

போர்க் காலத்தில் குடும்பத்தோடு அவர் மேற்கொண்ட பர்மா நடைப் பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட் களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழையால் திகிலும், பரபரப்பும் சூழ்ந்திருந்த போது பாதுகாப்புக் குழிகளில் முடங்கவேண்டிய தருணத்திலும் தன் தமிழ்ப் பணியை மறந்தார் இல்லை. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில், உயிர் போவதற்குள் தான் மேற்கொண்டிருந்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆகவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழிபெயர்த்து எழுதி முடிக்கப்பட்டதுதான் பிளாட்டோவின் அரசியல் என்ற உலகம் போற்றும் நூல்.

சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்று விக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்கதரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனைகளையும் ஒருபோதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும்.

சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரண வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. ‘பிளாட்டோவின் அரசியல்’, ‘ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்’, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, மாஜினியின் ‘மனிதன் கடமை’, இங்கர்சாலின் ‘மானிட சாதியின் சுதந்திரம்’, சன்யாட்சென்னின் ‘சுதந்திரத்தின் தேவைகள் யாவை? முதலான நூல்களைப் படித்தவர்களுக்கு இது நன்கு விளங்கும்.

காரல் மார்க் வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜி யினுடையதே!

எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய லெட்சுமிகாந்தன், உத்தியோகம், பாணபுரத்து வீரன், அபிமன்யு ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன.

எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக வளவன் பதிப்பகம் மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்று தலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் திரு கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே!

  6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், ஞானாலயா பி. கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை - 622 002.
  டோரதி கிருஷ்ணமூர்த்தி


அணிந்துரை

எழுத்திடைச் செழித்தச் செம்மல் வெ. சாமிநாத சர்மா (1895-1978) அவர்கள் தன்னுடைய எழுத்துப் பணியை, எதிர்காலம் மறக்காது எனும் நம்பிக்கையைத் தமது நாள் குறிப்பு ஒன்றில் (17.9.1960) பின் வருமாறு பதிவு செய்துள்ளார்.

ஆங்கிலக் கணக்குப்படி இன்று என்னுடைய 66வது பிறந்த நாள். வாழ்க்கைப் பாதையில் அறுபத்தைந்தாவது மைல் கல்லைக் கடந்து விட்டேன். என்ன சாதித்துவிட்டேன்? அதைச் சொல்ல எனக்கு சந்ததிகள் இல்லை. ஆனால் வருங்காலத் தமிழுலகம் ஏதாவது சொல்லுமென்று நினைக்கிறேன்.

அவருடைய எழுத்துப் பணியோகத்திற்கு உறுதுணையாக வாழ்க்கைத் துணைவியாக, விளங்கிய மங்களம் அம்மையார், மகப் பேறு - சந்ததி - இல்லாததை ஒரு குறையாகக் கருதாமல் சாமிநாத சர்மாவின் நூல்களே குழந்தைகள் எனும் கருத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குழந்தைகள்தாம் - நூல்கள்தாம் - எங்களுக்குப் பிற்காலத்தில் எங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும்

இறுதிக் காலத்தில் தம்முடைய நூல்கள், கையெழுத்துப் படிகள் அனைத்தையும் வெளியிடும் உரிமையை எனக்கு வழங்கிய சமயத்தில் அவருடைய நூல்கள் அனைத்தையும் பொருள்வாரி யாகப் பிரித்துப் பல தொகுதிகளாக வெளிவரும் காலம் கைகூடும் என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறினேன். அதைக் கேட்டு அவர் புன்னகை பூத்தார்.

ஆமாம், வெ. சாமிநாத சர்மாவின் நூல்கள் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி ஆட்சி காலத்தில் கி.பி. 2000த்தில் நாட்டுடைமை யாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல பதிப்பகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடைய நூல்கள் பலவற்றை மறுவெளியீடுகளாகக் கொண்டு வந்துக் கொண்டிருக் கின்றன.

இவற்றிற்கெல்லாம் மணிமகுடம் வைப்பது போன்று, வளவன் பதிப்பகம் சாமிசாத சர்மா அவர்களுடைய நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிடுகின்றது.

83 ஆண்டுகால வாழ்க்கையில் சாமிநாத சர்மாவின் இலக்கிய வாழ்க்கை 64 ஆண்டுகாலமாகும். அவருடைய 78 நூல்கள் அவருடைய இலக்கிய வாழ்க்கையின் சுடர் மணிகளாக ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன.

அண்மைக் காலமாகத் தமிழ்ப் பேரறிஞர்கள் தம் நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிட்டு தன்னேரில்லாத சாதனைகள் படைத்து வருகின்றது தமிழ்மண் பதிப்பகம்.

காலத்தேவைக்கேற்றத் தமிழ்த்தொண்டாற்றி வரும் வளவன் பதிப்பகம் சாமிநாதசர்மாவின் நூல்களனைத்தையும் தொகுத்து வெளியிடும் அரிய முயற்சியைத் தமிழர்கள் வரவேற்று வெற்றி யடையச் செய்ய வேண்டும், செய்வார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன்.

  இராமகிருஷ்ணபுரம், 2வது தெரு, மேற்குமாம்பலம், சென்னை - 600 033.
  பெ.சு. மணி


பதிப்புரை

சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்! என்ற தமிழ்ப்பெரும் பாவலர் பாரதியின் கட்டளைக்கேற்ப உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங்களைத் தாய்மொழியாம் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சி சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலக சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர்; இவர் ஆற்றிய பணி வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துகளால் பதியத்தக்கது.

தம்மை உயர் தகுதி உடையவர்களாக்கிக் கொண்ட மாந்தர்களைத் தான் வரலாற்று ஆசிரியர்கள் உலகுக்கு வரலாறாக வடித்துத் தந்துள்ளனர். மக்களின் மகிழ்ச்சிக்காக உழைத்த உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, நூல் தொகுப்பாகத் தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுப்புகளை உங்கள் கைகளில் தந்துள்ளோம்.

சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகிறது. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல் களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்ப தற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல்திறமையைக் குறிக் கோளாகக் கொண்ட - பகுத் தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தமிழர்களின் கைகளில் போர்க் கருவிகளாகக் கொடுத்துள்ளோம்.

தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும் வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடாமுயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்ப வர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரை களை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன.

சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். மக்கள் இவரின் நூல்களைப் படிக்கும் போது அந்த நூல்களின் கதைத் தலைவனோடு நெருங்கி இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியவர். இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை இனிப்புப் பொங்கலாகத் தமிழ் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம்.

முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் தலைவர்கள், அறிவியல் அறிஞர்களின் வரலாற்று இலக்கியங்கள் 26 ஆகும். இதனை 9 நூல் திரட்டுகளாக வெளியிடுகிறோம். ஏனைய நூல்களையும் மிக விரைவில் தமிழ் கூறும் உலகுக்கு வழங்க உள்ளோம்.

தமிழர்கள் பொதுவாழ்வில் நாட்டம் கொள்ள வேண்டும்; உலக அரசியல் அறிவைப் பெறவேண்டும் என்னும் பெருவிருப்பால் இந்நூல்களைக் கண்டெடுத்து நூல்திரட்டுகளாக உங்கள் முன் தந்துள்ளோம். வடமொழியின் ஆளுமை மேலோங்கி இருந்த காலத்தில் இவரின் தமிழ் உரைநடை வெளிவந்ததாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழிநடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கியுள்ளார். மரபு கருதி உரை நடை யிலும், மொழிநடையிலும், மேலட்டைத் தலைப்பிலும் மாற்றம் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம்.

அடிமை உணர்வையும், அக்கறையற்றப் போக்கையும் தூக்கி யெறிந்து உலக அரங்கில் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இவ்வரலாற்று இலக்கியங்கள் கலங்கரை விளக்காக அமையும் என்று நம்புகிறோம். தலைவர்களின் வரலாற்று இலக்கியங்களைப் படியுங்கள். அவர்களின் வாழ்வை நெஞ்சில் நிறுத்துங்கள். தமிழின மேன்மைக்கும், வளமைக்கும் தம் பங்களிப்பைச் செய்ய முன் வாருங்கள். நூலாக்கத்திற்கு உதவிய அனைவருக்கும் எம் நன்றி உணர்வை தனிப்பக்கத்தில் குறித்துள்ளோம்.

பதிப்பாளர்


நுழையுமுன்…

-   படைப்பு இலக்கியமே நாடக இலக்கியம் ஆகும். மாந்த இனம் தோன்றியபொழுதே உணர்ச்சிகளும் தோன்றின. மொழி அறியாத மாந்தன் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு இன்பம் - துன்பம் கண்ட காலத்தும் தம்முடைய உணர்வு களைக் கட்டுப்படுத்த முடியாமல் தன் விருப்பமாகவே ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதுவே பின்னர் நாடகமாக செழுமையுற்றது.

-   அரசியல், வரலாறு, மொழிபெயர்ப்பு, அறிவியல் சார்ந்த நூல்களைத் தமிழுலகுக்குத் தம் பங்களிப்பாகச் செய்த சாமிநாத சர்மா இந்திய நாட்டின் விடுதலையையும், தமிழகத்தின் குமுகாயப் போக்கையும் நெஞ்சில் நிறுத்தி பாண புரத்து வீரன், அபிமன்யு, மனோதருமம், உத்தியோகம், உலகம் பலவிதம் போன்ற நாடகங்களைப் படைத் தளித்தார்.

-   மனோதத்துவ உணர்வுகளை வெளிப்படுத்தும் நாடகம் மனோதருமம் ஆகும். இதன் பின்னணியும், படைப் பாற்றாலும் நாடகத்
    திற்கு வெற்றியைத் தேடித்தந்தது. ஒரு பெண்ணின் மரணச் செய்தி அந்தக் குடும்பத்தாரிடம் பக்குவ மாக எடுத்துரைக்கப்படும் நிலையும், நுண்ணிய மனவுணர்வு களின் உரையாடல்களும் வாழ்க்கை நிலையற்றது என்பதும் இந்நாடகத்தின் மூலம் அறியும் செய்திகள்.

-   பழந்தமிழ் பண்பாட்டின் பண்டைச் சிறப்பும், மேலை நாகரிகத்தால் புண்ணாகிப் போன தமிழர் நிலையும், நாட்டின் நலனை மறந்து வயிற்றுப் பிழைப்பிற்காக வேலை பார்ப்பதும். நரம்பெழுந்து உலரிய . . (புறம்.278) என்னும் புறநானூற்று வரி உத்தியோகம் எனும் இந்நாடகத்திற்கு பெருமை சேர்க்கும் வரியாகும்.

-   பாரதக் கதையை தழுவி எழுதப்பட்ட நாடகமே அபிமன்யு. பழமைக்குப் புதுப்பொலிவூட்டும் நாடகம். பழய நூல்களில் பொதிந்து கிடக்கும் அரிய செய்திகளுக்குப் புதிய ஆடை அணிவித்து, புத்துணர்ச்சியூட்டி தமிழர்களுக்குக் காட்சியாக அமைத்து தந்த நாடகமே அபிமன்யு.

-   செந்தமிழ் நாடெனும் போதினிலே. . .”, காவிரி தென் பெண்ணை பாலாறு . . ”., செல்வம் எத்தனையுண்டு. .”., என்னும் பாரதியின் இந்த வரிகள் இந்நாடகத்தைப் படிப்பார்க்கு தமிழ்மொழி, நாட்டுப்பற்றும், விடுதலை உணர்வும், வீர முழக்கமும் ஏற்படுத்தும்.

-   காட்லாந்து விடுதலைப் போராட்டக் கதையைத் தழுவி எழுதப்பட்ட ஒரு வழி நூலே பாணபுரத்து வீரன் என்னும் இந்நாடகப் படைப்பு. குறியீடுகளும், காட்சியமைப்பு களும், உரையாடல்களும் இந்தியத் தேசிய விடுதலையைக் களமாக வைத்து எழுதப்பட்டது.

-   ஆங்கில வல்லாண்மையின் சூழ்ச்சிகளையும், மக்கள் எழுச்சியையும் நடுவமாகக் கொண்டு விடுதலை! விடுதலை!! விடுதலை!!! என்னும் வீர முழக்கங்களை மக்களுக்குக் கண்ணாடிப் போல் காட்டுவது. கணவரின் பிரிவும், தன்னை மறப்பினும் தாய்
    நாட்டை மறவாதீர் என்று கணவனை வேண்டும் வீரமகளின் குறிப்பு.

-   தமிழ் நாடக உலகில் முதன் முதலில் ஓரங்க நாடகத்திற்குப் பொன்னேர் பூட்டியவர் சாமிநாத சர்மா. உலகம் பலவிதம் என்னும் ஓரங்க நாடகம் குமுக வாழ்வில் மாறுபட்ட உணர்ச்சி களையும், வேற்றுமைகளையும், சுவையான நிகழ்ச்சிகளையும் படைத்துக்
    காட்டுவது.

-   அரசியல் - இலக்கியம் எனும் கருத்தோட்டத்தின் அழுத்தத்தை மீறி ஒரு நாடக ஆசிரியனாக இருந்துகொண்டு இந்திய விடுதலை
    யுணர்விற்கு ஊக்கம் ஊட்டியவர். நாட்டுப்பற்றும், குமுகாய ஒழுக்கமும் அமைந்த நாடகம். இரண்டாம் உலகப் போரின் காலச்
    சூழலில் வெளிவந்த நாடகம். இதில் பதின்மூன்று நாடகங்கள் அடங்கியுள்ளன.

  நூலாக்கத்திற்குத் துணை நின்றோர்

  _நூல் கொடுத்து உதவியோர்_ _ஞானாலயா_ கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், பெ.சு. மணி,

  _புலவர்_ கோ. தேவராசன், முனைவர் இராகுலதாசன், முனைவர் இராம குருநாதன், முத்தமிழ்ச் செல்வன் க.மு., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

  _நூல் உருவாக்கம்_ _நூல் வடிவமைப்பு_ செ. சரவணன்

  _மேலட்டை வடிவமைப்பு_ இ. இனியன்

  _அச்சுக்கோப்பு_ _முனைவர்_ செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோபாய்

  _மெய்ப்பு_ _முனைவர்_ செயக்குமார், வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மப்பிரியா, நா. இந்திராதேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன்

  _உதவி_ அரங்க. குமரேசன், வே. தனசேகரன், நா. வெங்கடேசன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா

  _எதிர்மம் (Negative)_ பிராசசு இந்தியா (Process India)

  _அச்சு மற்றும் கட்டமைப்பு_ வெங்கடேசுவரா மறுதோன்றி அச்சகம் (Venkateswara Offset Printers)

இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . .


பிரசுராலயத்தின் வார்த்தை

தமிழில் ஓரங்க நாடகங்கள் மிகக்குறைவு என்பதை நாம் சொல்லத் தேவை இல்லை. சமீப காலத்தில்தான் சில நாடகங்கள் பத்திரிகைகளில் வெளியாவதைக் கண்டு மகிழ்ச்சி கொள்ள வேண்டி யிருக்கிறது. ஆனால் எங்கள் ஆசிரியர், இந்த குறையைப் பல ஆண்டு களுக்கு முன்னரே உணர்ந்து சில சில சஞ்சிகைகளில் அவ்வப் பொழுது சில நாடகங்கள் எழுதிவந்தார். அவற்றுள் சிலவற்றைத் தொகுத்து, இங்குப் புத்தக வடிவாகத் தந்திருக்கிறோம். இவற்றுள் இரண்டு நாடகங்களைத் தவிர மற்றவை, இரண்டாவது உலக மகா யுத்தம் நடந்துகொண்டிருந்த காலத்திலும் (1939-1945) நடந்து முடிந்த காலத்திலும் எழுதப்பட்டவை என்பது இந்நாடகங்களைப் படிக்கும்போது வாசகர்களுக்கு நன்கு புலனாகும். உலகம் பலவிதம் என்ற நாடகமும் தேர்தலுக்கு முந்தி என்ற நாடகமும் சமீபத்தில் எழுதப்பட்டவை. இதில் வந்துள்ள நாடகங்கள் பெரும்பாலன வருணன் என்ற புனை பெயரில் வெளியானவை.

பள்ளிக்கூடங்களிலும் சங்கங்களிலும் ஆண்டு விழா முதலியன நடைபெறும் பொழுது சுருங்கிய காலத்தில் நடிப்பதற்கு இந்நாடகங் கள் பயன்பெறுமென நம்புகிறோம்.

பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம்


உலகம் பலவிதம்

முதற் களம்
இடம் : ட்வெண்ட்டியத் செஞ்சரி கிளப் (Twentieth Century Club- 20வது நூற்றாண்டு சங்கம்) கட்டடத்தின் முன் ஹால்.

காலம் : மாலை சுமார் 6 மணி

_(ஒரு பக்கம் கஜேந்திரன், துரைசிங்கம், ராஜேந்திரன், கதிர்வேலு ஆகிய நால்வரும் ஒரு வட்டமேஜையைச் சுற்றி உட்கார்ந்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். மற்றொரு பக்கம் இரண்டு பேர் மேஜைப்பந்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இன்னொரு பக்கம், உயரமான ஒரு சாய்வு மேஜையின் மீது சில பத்திரிகைகள் பரப்பப் பட்டிருக்கின்றன. கிளப்பின் சேவகனான ராஜாபாதர் என்னும் சிறுவன் அங்குமிங்குமாகப் போய்க்கொண்டிருக்கிறான்)_

கஜேந்திரன் : யாருது பிரதர் கைவரிசை? (ராஜேந்திரனைப் _பார்த்து)_ என்ன சோழரே? உங்களுடையது தானே? சொல்லுங்களேன் துருப்பை?

ராஜேந்திரன் : இருங்க ஐயா யானையாரே! அவசரப்பட்றீங்களே.

கஜே : நான் யானைதான். ஆனால் நான் கூப்பிட்ட உடனே கடவுள் ஓடிவந்தாரே!

ராஜே : ஆமாம்; ஆபத்திலே மாட்டிக்கிண்டு கத்தினாரு; கத்தலைப் பொறுக்கமுடியாமே கடவுள் ஓடி வந்தாரு!

கஜே : அப்படியாவது ஓடிவந்தாரா இல்லையா? நீங்க கூப்பிட்டா வருவாரா?

ராஜே : நான் கூப்பிடவும் இல்லை ; அவர் வரவும் வேண்டாம். (துரைசிங்கத்தைப் _பார்த்து)_ என்ன பிரதர்! கடவுளை, நம்ப கிளப் பாய் (Club boy) ராஜாபாதர்னு நினைச்சு பேசறாரு இவர்.

கதிர்வேலு : ஏன் ஐயா! கிளப்புக்கு எதுக்காக வந்தீங்க ? சீட்டா டவா? வம்பு பேசவா?

கஜே : கிளப்புன்னா என்ன ஐயா! வம்பு பேசற இடந்தானே?

கதிர் : அப்படியானா நான் எழுந்து போறேன்.

கஜே : இருங்க பிரதர். சும்மா பொழுது கழிக்கத்தானே இங்கே நிதம் வரோம்? வீட்டுக்குப் போய் என்ன செய்யப் போறீங்க ?

துரைசிங்கம் : வீட்டுக்குப் போய் கடவுளே கும்பிடு வாரு! உங்களுக் கென்ன அதைப்பற்றி?

கஜே : கடவுளை கும்பிட் ராரு! நல்லா சொன் னீங்க!

ராஜே : (துரைசிங்கத்தைப் _பார்த்து)_ நம்ப பிரதர் பேரு தான் கதிர் வேலு; ஆனால் இவருக்கும் முருகக் கடவுளுக்கும் தொலை தூரம்!

துரை : வீட்டுக்குப் போய் கடவுளைக் கும்பிட லேன்னா அம் மாளை கும்பிட்ராரு!

கதிர் : சட் நான்சென் ! ஐ வில் கெட் அப் (I will get up - நான் எழுந்து விடுகிறேன்) ( _நாற்காலியைப் பின்பக்கமாகத் தள்ளி விட்டு எழுந்து நிற்கிறார்)_

கஜே : அண்ட் கோ (and go) பண்ணிவிடாதீங்கோ. (போய்விடா தீர்கள்) (அவர் _கையைப் பிடித்திழுத்து)_ உட்காருங்கோ பிரதர், உட்காருங்கோ. இதுக்கெல்லாம் கோவிச்சுக்கலாமா?

துரை : தமாஷூக்குத்தானே சொன்னேன் பிரதர் நானு. இதுக்குப் போய் இப்படி கோபம் பண்ணிக்கிறீங்களே?

கஜே : சூடா ஒரு கப் காபி சாப்பிட்டாரானால் பிரதர் (Brother- rnfhju®) கோபமெல்லாம் பறந்தோடிப் பூடும்.

ராஜே : அதுதான் ரைட். (Right - சரி) ஆனால் வெறுங்காபி மட்டும் கொடுக்ககூடாது பிரதருக்கு. அடே பாய் (Boy - பையன்) (ராஜா _பாதர் ஓடிவருகிறான்.)_ காண்ட்டீன்லே இன்னிக்கின்னாடா பெஷல்?

ராஜா : தெரியாதுங்கோ.

மேஜைப்பந்து ஆடிக்கொண்டிருக்கிற ஒருவர் : (ராஜா _பாதர் பக்கம் பார்த்து)_ பாய் ! ஒரு காலணாவுக்குப் பொடி வாங்கிக் கிண்டு வாடா.

ராஜா : (மேஜைப் _பக்கம் வேகமாகச் சென்று)_ - என்னா பொடீங்க?

ஒருவர் : செங்கல் பொடி! போடா இடியட்! (Idiot - முட்டாள்.)

மற்றொருவர் : அடே! எனக்கு ஒரு சோடா வாங்கிக்கிண்டு வாடா

ராஜா : என்னா சோடாங்க?

மற்றொருவர் : போடா பூல்! (Fool - முட்டாள்)

ராஜே : (கையில் _வைத்திருந்த சீட்டுக்களை ஆத்திரத்துடன் போட்டுவிட்டு)_ அடே! நான் என்னா கேட்டேன்?

ராஜா : (சீட்டாட்ட _மேஜைப் பக்கம் ஓடிவந்து)_ பெஷல் கேட் டீங்கோ ஸார்!

ராஜே : கேட்டுக்கிண்டு வந்தாயா?

ராஜா : இல்லை ஸார்?

ராஜே : ஏண்டா?

ராஜா : அதுக்குள்ளே அந்த ஐயா பொடி வாங்கி வரச் சொல்றாரே.

மேஜைப்பந்து ஒருவர் : அடே ! பொடி வாங்கிக்கிண்டு வந்தாயா?

மற்றொருவர் : அடே! சோடா வாங்கி வந்தாச்சா? நாக்கு உலர்ந்து போவுதேடா!

ஒருவர் : எனக்கு மூக்கு அடைக்குதேடா! ஜல்தி போ.

துரை : எங்களுக்கு வயிறு பசிக்குதேடா!

ராஜே : (கதிர்வேலுவைச் _சுட்டிக் காட்டி)_ இந்த ஐயாவுக்கு கோபம் பற்றி எரியுதேடா!

ராஜா : (உட்கார்ந்து _அழ ஆரம்பித்து விடுகிறான்.)_

கதிர் : ஏன் அழறான் இவன்?

ராஜே : ஏண்டா தலையை குனிய வைச்சுக்கிண்டு அழறே?

ராஜா : (தேம்பியவண்ணம்) ஒவ்வொத்தரும் ஒவ்வொரு வேலையைச் சொன்னா, நான் எந்த வேலையைத்தான் செய்யறது?

கதிர் : முருகா! முருகா! (எல்லோரும் _சிரிக்கிறார்கள்)_ பிரதர்! என் கோபமெல்லாம் தணிஞ்சு போச்சு. எனக்கு காபியும் வேண் டாம். பெஷலும் வேண்டாம்.

மேஜைப்பந்து ஒருவர் : அப்பா! எனக்குப் பொடியும் வேண்டாம்; கிடியும் வேண்டாம். நீ அழாதே.

மற்றொருவர் : தம்பீ! எனக்கு சோடாவும் வேண்டாம், கீடாவும் வேண்டாம். நீ அழாதே.

_(எல்லோரும் சிரித்துக்கொண்டிருக்கையில் கிளப்பின் காரியதரிசி கருணாகரன் பிரவேசிக்கிறார். இவர் கதர் உடையுடனும் காந்தி குல்லாயுடனும் இருக்கிறார்)_

துரை : வாங்க, கருணாகரக் கடவுளே!

கருணாகரன் : எல்லோருக்கும் நமதே.

துரை-கதிர் : வணக்கம் ; வணக்கம்.

கஜே : (ராஜாபாதரைச் _சுட்டிகாட்டி)_ இந்த அழுகுணிச் சித்தரை எப்படி பிரதர், கிளப் பாயாக நியமனம் பண்ணீங்க?

கரு : ஏன்? என்ன சமாசாரம்? (ராஜாபாதரைப் _பார்த்து)_ ஏண்டா அழரே?

ராஜா : என்னை அழப்படுத்தறாங்க ஸார், இவங்கள்ளாம் சேர்ந்து.

கஜே : (கோபத்துடன்) டாம் இடியட் (Damn Idiot)

ராஜா : வாய்க்கு வந்தபடி பேசறாங்க ஸார், இவங்கள்ளாம்.

கரு : (எல்லோரையும் _பார்த்து)_ சின்னப் பையனோடு என்னத்துக்கு வம்பு பிரதர்? வேலையைச் சொன்னா செய்துவிட்டுப் போறான்.

கஜே : சொன்ன வேலையைச் செய்தானா, கேளுங்க?

ராஜா : ஒவ்வொத்தரும் ஒவ்வொரு வேலையைச் சொன்னா நான் எந்த வேலையைச் செய்யறதுங்கோ?

_(மறுபடியும் அழத்தொடங்குகிறான்)_

கரு : அழாதே. போய் குழாயண்டை முகத்தைக் கழுவிக்கொண்டு உன் வேலையைப் பார். (அப்படியே _ராஜாபாதர் போய் விடு கிறான்)_

ராஜே : (கருணாகரனைப் _பார்த்து)_ ஏன் பிரதர், உங்களுக்கு யாரு கருணாகரன் என்று பேர் வைச்சது?

கரு : எதற்காக இந்த கேள்வி?

ராஜே : கேவலம் ஒரு பியூன் (Peon) கிட்ட இவ்வளவு கருணை காட் றீங்களே, அதுக்காகத்தான் கேட்டேன்.

கரு : மனிதராய்ப் பிறந்தவர்கள், எல்லா ஜீவராசிகளிடத்திலுந்தான் கருணை காட்ட வேண்டும்.

கஜே : (ராஜேந்திரனைப் _பார்த்து)_ ஏன் பிரதர் அவரோடு வீண் பேச்சு? அவர் காரியதரிசி கருணாகரனாகப் பேசல்லே, காந்தி கருணாகரனாகப் பேசறாரு.

கரு : (லேசாகச் _சிரித்துக்கொண்டு)_ நான் வெறுங் கருணாகரனாகத் தான் பேசுகிறேன். ஆன்றோர்கள் அருளியிருப்பதை எடுத்துக் கூறினேனே தவிர வேறொன்றுமில்லை.

_(உள்பக்கம் போய்விடுகிறார்)_

கஜே : எவ்வளவு செந்தமிழில் பேசுகிறார், பார்த்தீங்களா? (துரை _சிங்கத்தையும் கதிர்வேலுவையும் பார்த்து)_ வணக்கம் வணக்கம் என்று சொன்னால் மட்டும் தமிழ்ப் பண்பு வந்துவிடுமா என்ன?

கதிர் : அடே ! பண்பு கிண்பு என்றெல்லாம் தெரியுதே பிரதருக்கு! (கஜேந்திரனையும் _ராஜேந்திரனையும் பார்த்து)_ நீங்க ரெண்டு பேரும் முதல்லே உங்க பேரை மாற்றி வைச்சுக்கொள்ளுங்கள்.

கஜே -ராஜே : அதெப்படி பிரதர்?

கதிர் : தமிழ்ப் பேரா வைச்சுக் கொள்ளுங்கள் பிரதர்.

கஜே : அதனாலே என்ன நன்மை?

கதிர் : நன்மையா? நாம் எந்த மொழியைப் பேசுகிறோமோ அந்த மொழியிலேதானே நம்மள் பெயரும் இருக்க வேண்டும்?

கஜே : மொழியோ, முழியோ, பெரியவங்க என்ன பேரை வைச்சு கூப்பிட்டாங்களோ அந்தப் பேரோடு இருக்கிறதுதான் நியாயம் என்று எனக்குத் தோணுது.

ராஜே : எனக்கும் அப்படித்தான் தோணுது.

கதிர் : பெரியவங்க குடுமி வைச்சுண்டிருந்தாங்க. அப்படியே நீங்களும் குடுமியை வைச்சுக்கிறதுதானே? ஏன் கிராப் பண்ணிண்டிங்க?

துரை : ஏன் பிரதர் வீண் பேச்சு? ஆட்டமாவது ஆடணும்; வீட்டுக் காவது போகணும்.

கதிர் : அதுதான் சரி; நான் முந்தியே சொன்னேனில்லையா?

ராஜே : இருங்க பிரதர். எனக்குக்கூட வயித்தே கிள்ளுது.

கஜே : ஆமாம்; (கதிர்வேலுவைப்பார்த்து) பிரதருக்கு காபி கொடுக் கிறோமின்னு சொன்னோம். அதுவும் கொடுக்கல்லே. அடே பாய்! (ராஜாபாதர் _ஓடிவருகிறான்)_ காண்ட்டீன்லே போய் இன்னிக்கி என்ன பெஷல்னு கேட்டுக்கிண்டு வா. ஜல்தி வரணும். (ராஜாபாதர் _போகிறான்)_

துரை : அங்கே என்ன இருக்கும் பிரதர்? ரவா தோசைதான் இருக்கும்

கஜே : பார்ப்போமே, அதையுந்தான்.

ராஜா: (வேகமாக _வந்து)_ ரவா தோசைங்க.

துரை : நான் அப்பவே சொல்லல்லே!

கஜே : நான்சென். இந்த ஐயருக்கு வேறெ ஒன்றும் தெரியாதா? அடே பாய்! இந்தக்காண்டீன் ஐயரை இப்படி இட்டுக்கொண்டு வா. (ராஜாபாதர் _வேகமாகப் போகிறான். சிறிது நேரங்கழித்து ஐயர், நீளமான ஒரு கணக்குப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு ராஜாபாதருடன் வருகிறார்)_ என்ன ஐயர்! என்ன பெஷல் இன்னிக்கு?

ஐயர் : ரவா தோசை.

கஜே : வேறே ஒண்ணும் தெரியாதா உங்களுக்கு?

ஐயர் : (பல்லை _இளித்துக்கொண்டு)_ எல்லாம் தெரியும்.

ராஜே : பின்னே ஏன் நிதம் இதையே போட்றீங்க?

ஐயர் : இல்லையே. ரெண்டு நாளா தோசையே வேண்டாமின்னு செக்ரெட்டரி (Secretary - காரியதரிசி) சொன்னாரு. அதனாலே நேத்தும் முந்தாநாளும் பெஷல் எதுவுமே இல்லீங்களே.

கஜே : நல்ல செக்ரெட்டரி! நல்ல காண்டீன் ஐயர்!

துரை : இல்லை பிரதர்; இந்த விஷயத்தைப் பற்றி எக்ஸிகியூட்டிவ் கமிட்டியிலே (Executive Committee - நிருவாக சபை) பேசணும்.

ராஜே : ஆமாம் பிரதர்! இந்த செக்ரெட்டரி, காந்தி குல்லாயே போட்டுக்கிண்டு ரொம்ப அட்டகாசம் பண்றான். எதுக் கெடுத்தாலும் பணம் இல்லே, பணம் இல்லேன்றான்.

துரை : மிஞ்சிக் கேட்டால் மெம்பருங்க சரியா ஸப்கிரிப்ஷன் (Subscription - சந்தா) கொடுக்கல்லேன்னு சொல்லி புட்ரான்.

கஜே : நான் பேசறேன் இதைப் பற்றி அடுத்த எக்ஸிகியூட்டிவ் கமிட்டி மீட்டிங்கிலே. (அப்பொழுது _ஐயர், தான் கொண்டு வந்திருக்கும் நீளமான கணக்குப் புத்தகத்தை நீட்டுகிறார்.)_ என்ன ஐயர் இது?

ஐயர் : பெஷல் கணக்குப் புத்தகங்க.

கஜே : அப்படின்னா?

ஐயர் : ஆறு மாதத்திற்கு மேலே காண்டீன் பில் கொடுக்காத வங்களே யெல்லாம், தனியாக ஒரு கணக்குப் புத்தகத்திலே எழுதிவைச்சிருக் கேனுங்க.

கஜே : நீங்களா எழுதிவைச்சிருக்கிங்களா, அல்லது செக்ரெட்டரி உத்தரவா?

ஐயர் : அவர் கேட்டாரானால் நான் பதில் சொல்லணுங்களே.

கஜே : என் பில் (Bill) எவ்வளவு?

ஐயர் : அதிகமில்லீங்க. 63 ரூபா, 9 அனா, 6 பைசா. அவ்வளவுதான்.

கஜே : இவ்வளவு எங்கே ஐயர் நான் சாப்பிட்டேன்?

ஐயர் : (பல்லை இளிக்கிறார்)

கஜே : வேறே யாருக்காவது கொடுத்துவிட்டு என் கணக்கிலே எழுதிவைச்சிருக்கிங்களா?

ஐயர் : உங்க பேர் கொண்டவங்க கிளப்பிலே வேறொருத்தரும் இல்லையே!

கஜே : (மேஜையைச் _சுற்றியுள்ள மூவரையும் சுட்டிக்காட்டி)_ இந்த மூணுபேருடையதும் பில் பாக்கி எவ்வளவு?

ராஜே-துரை : பிரதர்! உங்க பாக்கியைப் பற்றி நீங்க பேசுங்க. மற்ற வங்க விஷயத்திலே ஏன் தலையிடறீங்க?

ஐயர் : (பல்லிளித்துக்கொண்டே) ஆமாம்; ஆமாம்.

கஜே : (ஆத்திரத்துடன்) டாமிட் (Damn it)

ராஜே- துரை : ரைட் ஐயர். (Right)

_(இந்தச் சமயத்தில், காரியதரிசி அறையிலிருந்து கூப்பிடும் மணிச் சப்தம் கேட்கிறது. ராஜாபாதர் வேகமாகப்போகிறான்)_

கதிர் : ஏன் ஐயர் நிக்கிறிங்க?

ஐயர் : ஐயா கணக்குப் புத்தகத்தையும் கொடுக்கலே, பாக்கிக்கு பதிலும் சொல்லல்லையே.

கஜே : சட் நான்சென்! உனக்கென்ன பதில் சொல்றது நானு?

ஐயர் : அப்படியானா கணக்குப் புத்தகத்தைக் கொடு.

கஜே : ஏய் கொடு, எடு என்று பேசாதே; மரியாதையாகப் பேசு. இல்லாபுட்டா பல்லெல்லாம் உதிர்ந்து பூடும்.

ஐயர் : பேச்சுக்குப் பேச்சு; அப்படியே பல்லுக்குப் பல்லு. அவ்வளவு தானே.

_(இந்தச் சந்தர்ப்பத்தில் ராஜாபாதர், சிவப்பு அட்டைபோட்ட ஒரு கணக்குப் புத்தகத்தையும், பச்சை அட்டைபோட்ட ஒரு கணக்குப் புத்தகத்தையும் கொண்டுவந்து, முன்னதை கஜேந்திரன் கையிலும் பின்னதை துரைசிங்கம் கையிலும் கொடுக்கிறான்)_

கஜே : அதென்ன புதகம்? இதென்ன புதகம்?

ராஜா : (கஜேந்திரன் _கையிலிருப்பதைக்காட்டி)_ இது ஒரு வருஷத் துக்கு மேலே சந்தா பாக்கி இருக்கிறவங்க புதகம். (துரை _சிங்கம் கையிலிருப்பதைக் காட்டி)_ அது போன மாசத்து சந்தா பாக்கி இருக்கிறவங்க புதகம்.

துரை : ஓ! என்ன பிரதர்! கிளப்புக்கு சந்தா கூட சரியா கொடுக்கிற தில்லையா?

ராஜா : ஆமாம்: பதினாலு மாசம் சந்தா பாக்கின்னு சொன்னாரு சக்ரவர்த்தி ஐயா.

கதிர் : அது யாரு சக்ரவர்த்தி ஐயா?

ஐயர் : செக்ரெட்டரி என்ற வார்த்தை, சக்ரவர்த்தின்னு இவன் வாயிலே வரது.

_(எல்லோரும் சிரிக்கிறார்கள். இந்தச் சமயத்தில் கஜேந்திரன் வீட்டி லிருந்து அவனுடைய எட்டு வயதுப் பையன் சுசீந்திரன் வேகமாக வருகிறான்)_

சுசீந்திரன் : நாயனா! அம்மா உன்னை ஜல்தி இட்டுக் கொண்டு வரச் சொன்னாங்க.

கஜே : ஏன்? என்ன அவசரம்? வீடு பற்றி எரியுதா?

சுசீ : இல்லை நாயனா! பால்காரன் வந்து ஒரே கூச்சல் போட்றான். வாசற்படியிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.

கஜே : பைத்தியம் பிடிச்சுப் போச்சா அவனுக்கு?

சுசீ : இல்லை நாயனா! எட்டுமாசத்துக்கு பால் பாக்கி கொடுக் கணுமாம்.

ஐயர் : (லேசாகச் _சிரித்துக் கொண்டு)_ நமக்கு ஆறு மாசத்துக்குத்தான் பாக்கி!

கஜே : ஐயர்! ஜாக்கிரதை.

ஐயர் : ஆமாம். இனி ஜாக்கிரதையாகத்தான் இருக்கணுங்க. கேட்ட

போதெல்லாம் பலகாரம், காபி கொடுத்து வரமாட்டேனுங்க.

_(எல்லோரும் சிரிக்கிறார்கள். கஜேந்திரன் கோபங்கொண்டு, தன் கையிலிருக்கும் கணக்குப் புத்தகத்தை சுசீந்திரன் மீது வீசி எறிய, அவன் அழுகிறான்.)_

துரை : அவனை என்னத்துக்கு பிரதர் அடிக்கிறீங்க?

கதிர் : நான் சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க பிரதர்! நீங்க ரேசு (Race) போகிறதே குறைச்சுக்கிணங்க.

ஐயர் : நிறுத்திக்கிணங்க.

கஜே : (ஆத்திரத்துடன்) நீங்கள்ளாம் யாரு எனக்கு புத்திசொல்ற துக்கு?

ஐயர் : நான் திண்ணைப் பள்ளிக்கூடத்திலேதான் படிச்சேனுங்க. பாடம்பண்ண செய்யுளெல்லாம் மறந்து போச்சுங்க. ஒரே ஒரு செய்யுள் மட்டுந்தான் நினைவிலே இருக்குது.

ராஜா : அதென்ன செய்யுள்? ஒப்பி பார்க்கலாம்.

ஐயர் : ஆன முதலில் அதிகஞ் செலவானால் மானமழிந்து மதி கெட்டு …………….

கஜே : ஐயர்! நீ ரொம்ப மிஞ்சிப் பேசறே.

_(எழுந்து போகிறான்)_

ஐயர் : மிச்சம் செய்யுளையும் கேட்டுவிட்டுப் போங்க. ……………. போன திசை

கஜே : சட் நான்சென். (காண்டீன் _கணக்குப் புத்தகத்தோடு போகிறான்)_

ஐயர் : (பின்னாலே _போய்)_ கணக்குப் புத்தகத்தைக் கொடுங்க.

கஜே : முடியாது, போ.

ஐயர் : அப்படியானால் நானும் கூடவே வீட்டுக்கு வந்து பால்கார னுடன் உட்கார்ந்துகொள்கிறேன்.

துரை - ராஜே-கதிர் : (மூவரும் _சிரிக்கிறார்கள்)_

_(கஜேந்திரன், கணக்குப் புத்தகத்தை ஐயரை நோக்கி எறிந்து விட்டு வேகமாகப் போகிறான். கூடவே அவன் மகன் சுசீந்திரனும் அழுது கொண்டே போகிறான்.)_

ராஜே : வாங்க பிரதர். நாமும் போகலாம்.

ஐயர் : இருங்க. பூரா செய்யுளையும் கேட்டு விட்டுப் போங்களேன்.

_போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய்,
ஏழ்பிறப்பும் தீயனாய், நல்லார்க்கும்
பொல்லனாம் நாடு._

ராஜே : பேஷ் ஐயர்.

_(போகிறான். கூடவே துரைசிங்கமும் கதிர் வேலுவும் போகிறார்கள்.)_

ராஜா : ஐயர்! ரவா தோசை!

ஐயர் : வாடா! உனக்கு இல்லாமலா?

_(இருவரும் காண்ட்டீன்பக்கம் போகிறார்கள்)_

இரண்டாவது களம்
இடம் : மாதர் முன்னேற்ற சங்கக் கட்டடத்தின் முன் ஹால்.

காலம் : மாலை சுமார் ஐந்து மணி

_(தனகோடி அம்மாளும் அங்கயற்கண்ணி அம்மாளும் இரண்டு நாற்காலிகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அருகில் நின்றவண்ணம் கோகிலாவும் விமலாவும் அவர்கள் சம்பாஷணையை ரசித்துக் கொண்டும்,இடையிடையே சம்பாஷ ணையில் கலந்துக் கொண்டும் குதூகலமாகக் காணப்படு கிறார்கள். ஆங்காங்கே சில திரீகள் சிரித்துப் பேசிக் கொண்டும் விளை யாடிக் கொண்டுமிருக்கிறார்கள். சங்கத்தின் வேலைகளைப் பார்ப் பதற்கென்றுள்ள சிவபாக்கியம், எட்டினாற் போலிருந்து, எல்லா வற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.)_

தனகோடி :** ** என்ன அங்கு! நம்ம பெண்கள் சமூகம் இன்னும் ரொம்ப தூரம் முன்னேறணும்.

அங்கயற்கண்ணி : ஆமாம். நாம் இன்னும் கி.மு. விலேயே இருக்கி றோமே தவிர ».ã.க்F வரவேயில்லையே?

விமலா : கி.மு. என்றால் என்ன? கி.பி. என்றால் என்ன?

கோகிலா : எனக்குக்கூட தெரியல்லே அக்கா!

தன : சங்கத்திலே இப்போழுதுதானே சேர்ந்திருக்கிறீர்கள். கொஞ்சம் பழகினால் தெரிஞ்சு போகும்.

அங் : கி.மு. என்றால் கிறிது பிறப்பதற்கு முந்தி; கி.பி. என்றால் கிறிது பிறந்த தற்குப் பிந்தி.

தன : அதாவது கி.மு. என்றால் பழைசு; கி.பி என்றால் புதுசு.

விம : ஓ ஓ! எங்கள் வீட்டிலே அவர், அவருடைய தாயா ரைப் பார்த்து ரொம்பக் கர்நாடகம் என்று கேலி பண்ணுவாரு. அதனாலே, பழைய மோதரெல் லாம் கர்நாடகம் என்று நினைச்சிருக்கேன்.

அங்:அதெல்லாம் ஆம்பளை கள் பேசற பாஷை.

கோகி : எங்க வீட்டிலே கூட எங்க மாமியாருக்கு, நான் இப்படி சங்கத்துக்கு வரு வது கொஞ்சங்கூட பிடிக் கிறதில்லை. ஆனால் அதையெல்லாம்…………

தன : பொருட்படுத்தறதேயில்லை …………………… அதுதான் ரைட்.

அங் : மாமியார் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தால் அடிமைப் புத்திதான் வரும்.

தன : அடிமைப் புத்தி மட்டுமா? அடிமைகளாகவேதான் ஆயுசு பூரா இருக்கணும்.

விம : மாமியார் பேச்சைக் கேட்காது போனாலும், கட்டின புருஷன் பேச்சையாவது கேட்கணமில்லையா அக்கா?

அங் : எதுக்கு கேட்கணமோ அதுக்குத்தான் கேட்கணும். எல்லாத் துக்குமே கேட்டுக்கொண்டிருந்தால் ஆடு மாதிரி அவங்க பின்னாலேயே போய்க்கொண்டிருக்க வேண்டியது தான்.

தன : ஆமாம்; இந்த ஆம்பளைகளெல்லாம் சுயநலக்காரப் பேர் வழிகள். கெஞ்சினால் மிஞ்சுவாங்க; மிஞ்சினால் கெஞ்சுவாங்க.

விம : ஆமாம் அக்கா! நீங்க சொல்றது ரொம்ப சரி. இப்போ இப்போதான் தெரியுது எனக்கு.

தன: அதனாலே எப்பொழுதுமே நாம் மிஞ்சறாப்போலவே நடந்து கொள்ளணும்.

அங் : நடந்துகொள்ளணுமின்னு ஏன் சொல்றே? நடக்கணுமின்னு சொல்லு.

தன : (அங்கயற்கண்ணியைச் _சுட்டிக்காட்டி)_ இந்த அம்மாள், திரீ சுதந்திரத்திற்காகவே தமது வாழ்நாளை அர்ப்பணம் செய்திருக் காங்க. இவங்க தான் இந்தச் சங்கத்தை ஆரம்பிச்ச வங்க.

அங் : ஆரம்பத்திலே இதுக்கு எவ்வளவு எதிர்ப்பு? எத்தனை பேர் சாபங் கொடுத்தாங்க? ஆம்பளைகள் மட்டுமா? பொம்பளைகள் கூட!

தன : ஆமாம்; பெண் சமூகத்திற்குப் பெண்கள்தான் விரோதிகள்.

அங் : இதோ பார், தனம்! இந்த தாலி கட்டிக்கிற பிசினஸே (Business) எனக்குப் பிடிக்கிறதில்லே.

விம : (சிறிது _துணுக்குற்று)_ அதென்ன அப்படிச் சொல்லிப் புட்டீங்க?

அங் : ஆமாம்; உங்களுக்கெல்லாம் என்ன தெரியும்? ஆம்பளைகள் செய்து வைத்த யுக்தி இது?

விம : அப்படியானால் காலந் தொட்டு இதை திரீகள் ஏன் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்?

அங் : அறியாமைதான் காரணம். இந்த அறியாமை, அடிமை புத்தி, மூடப் பழக்க வழக்கங்கள், இவைகளையெல்லாம் ஒழிக்கத் தான் இந்தச் சங்கத்தை ஆரம்பித்திருக்கிறேன்.

தன : தாலி வேண்டாமென்று சொல்கிற அளவுக்கு நான் போகத் தயாராயில்லை.

அங் : பார்; உனக்கே அடிமைப் புத்தி இவ்வளவு தடித்துப் போயிருக்கிறதே? (விமலாவையும் _கோகிலாவையும் சுட்டிக் காட்டி)_ இவர்களுக்கெல்லாம் எப்படி இருக்கும்?

விம : (தனகோடியிடம்) நான் வீட்டிக்குப் போறேன் அக்கா!

அங் : என்னம்மா இவ்வளவு அவசரம்? மணி இன்னும் ஆறு கூட அடிக்கல்லே?

கோகி : ஆமாம்; நான் கூடப் போகணும். ஆபீசிலிருந்து வந்திருப் பாங்க. குழந்தை வேறே அழும்.

அங் : ஆபீசிலிருந்து வந்தால் என்ன? குழந்தை அழுதால், பெத்த தகப்பன் ஏதாவது ஆகாரம் கொடுத்து தூங்க வைக்கிறான்.

விம : சரி; வா கோகிலா! நாளைக்கு சாயங்காலம் வரலாம்.

_(இருவரும் போகிறார்கள்)_

அங் : இவர்களையெல்லாம் மெம்பர்களாகச் சேர்த்தால் சங்கம் உருப்படியானாப் போலத்தான்.

தன : பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்றது லேசா?

அங் : இதோ பார், தனம்? ஆம்பளைகளுக்கு மட்டும் எத்தனை சங்கங்கள், எத்தனை ஆட்டபாட்டங்கள்? பெண்களுக்கு அத்தி பூத்தாற் போல இந்த ஒரு சங்கம் தானே இருக்கிறது?

தன : ஆமாம்; பேட்டைக்கு ஒரு மாதர் முன்னேற்ற சங்கமாவது இருக்கணும்.

அங் : எனக்கொரு யோசனை? ஆண்களுக்கு வேறே சங்கம், பெண் களுக்கு வேறே சங்கம் என்று ஏன் தனித்தனியா இருக்கணும்? ஒரே சங்கமா இருந்தால் என்ன?

தன : அதனால் என்ன அனுகூலம்?

அங் : ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமானமாய்ப் பழக வழி ஏற்படுமல்லவா?

தன : ஆமாம்; இந்த சரிநிகர் சமானமாய் என்பதை ரொம்ப இடங்க ளிலே நான் கேட்டிருக்கிறேன். (பொறுத்து) ஆமாம்; இந்த மாதிரி ஒரே சங்கம் அமைப்பதற்கு ஆண் பிள்ளைகள் ஒப்புக் கொள்வார்களா?

அங் : ஏன் ஓப்புக்கொள்ளாமல்? நன்றாக ஒப்புக் கொள்வார்கள்.

தன : ஆண்பிள்ளைகள் ஒப்புக்கொண்டாலும் பெண்பிள்ளை
கள் நிச்சயமாக ஒப்பு கொள்ளமாட்டார்கள்.

அங் : பார்க்கலாம். இதைப்பற்றியும், தாலி விஷயத்தைப் பற்றியும் நம்மள் அடுத்த மகாநாட்டில் தீர்மானங்கள் கொண்டு வரலா மின்னு நினைக்கிறேன்.

தன : செய். வா, அந்தப் பக்கம் போய் அவர்களெல்லாம் என்ன பேசுகிறார்கள், கேட்போம்.

_(இருவரும் செல்கிறார்கள்)_

மூன்றாவது களம்
இடம் : கஜேந்திரன் வீடு.

காலம் : முன்னிரவு.

_(கஜேந்திரனின் மனைவி ஒருபுறம் உட்கார்ந்து அழுதுகொண்டிருக் கிறாள். தெரு வாசற்படியில் உட்கார்ந்திருந்த பால்காரன், கஜேந்திரன் வரவைக் கண்டதும் எழுந்து நிற்கிறான். கஜேந்திரன் உள்ளே நுழைந்ததைக் கண்ட அவனது மூன்று வயதுக் குழந்தை நாயனா என்று சொல்லி அவன் காலைக் கட்டிக்கொள்கிறது. கஜேந்திரன், அந்தக் கட்டினின்றும் விடுவித்துக்கொண்டு, தலைப்பாகை மாட்டி யில் தன் தொப்பியை மாட்டிக் கொண்டே பேசுகிறான்.)_

கஜேந்திரன் : என்ன பால்காரர்! எங்கே இந்த வேளை கெட்ட வேளையிலே?

பால்காரன் : பாக்கி ரொம்ப நாளா தங்கிப் போச்சுங்களே?

கஜே : நான் என்ன ஓடியா பூடுவேன்?

பால் : அதுக்கில்லேங்க. நான் மாடு கன்னு வைச்சு பிழைக்கறவன் பாருங்க.

கஜே : நீ ஊத்தறது அவ்வளவும் தண்ணி பாலு. பணத்துக்கு வேறே விரட்டறயே?

பால் : ஆமாங்க; பணம் கேக்கிறபோதுதான் பால் தண்ணியா போவுது.

கஜே : மிஞ்சி பேசாதே. நாளை வந்து பணத்தை வாங்கிக் கொண்டு போ.

பால் : இப்படி தவணை சொல்லி, நானும் வந்து வந்து கால் தேஞ்சு போவுதுங்களே.

கஜே : செருப்பு வாங்கி போட்டுக்கொள்.

பால் : அதுக்கும் சேர்த்து நீங்கதானே பணம் கொடுக்கணும்?

கஜே : வீண் பேச்சுப் பேசாதே. நாளைக்கு வா.

பால் : வீட்டுக்கு வரவா? கிளப்புக்கு வரவா?

கஜே : ஏய், மரியாதை கெட்டுப் பேசாதே. கிளப்புக்கு ஏன் வரே?

பால் : வீட்டிலேதான் இருக்கிறதேயில்லையே?

கஜே : சட், வெளியே போ.

பால் : (போகும் _போது தனக்குள்)_ காலம்பரே வந்து உன்னை ஒரு கை பார்த்துக்கறேன். (போகிறான்)

கஜே-மனைவி : (தேம்பி _அழுதவண்ணம்)_ அவன் ஏதோ கறுவிக் கொண்டே போகிறானே?

கஜே : அதுக்காக நீ ஏன் அழரே? அழுது அழுதுதான் இந்த வீடு குட்டிச் சுவராப் போச்சு.

கஜே -மனைவி : நீங்க கிளப்புக்கும் ரேஸூக்கும் போய்த்தான் வீடு இப்படிக் குட்டிச் சுவராப் போச்சு.

கஜே : என்ன சொன்னே? (மனைவியை _அடிக்கப் போகிறான். அவள் அலறிக்கொண்டு உள்ளே போய் விடுகிறாள். இந்தச் சமயத்தில் கஜேந்திரன் மகன் சுசீந்திரன் அழுது கொண்டே வருகிறான்.)_ ஏண்டா அழுது கொண்டே வரே? கிளப்புக்கு ஏண்டா வந்தே? (முதுகில் _பளீர் பளீர் என்று அறைகிறான்.)_

சுசீ : ஐயோ ! ஐயோ!

_(அழுதுக்கொண்டே உள்ளே போய்விடுகிறான். இதைப் பார்த்து மூன்று வயதுக் குழந்தையும் வீறிட்டு அழுகிறது.)_

கஜே : நீ எதுக்கு இப்போ கத்தரே? (அதையும் இரண்டு அடி கொடுக்கிறான். அதுவும் அழுதுக்கொண்டு உள்ளே போய் விடு கிறது) வீடு, வாசல் இல்லாதே இருக்கிறவர்கள் பாடுதான் நிம்மதி. (தெருப்பக்கம் _போகிறான்)_

கஜே-மனவி : (உள்ளிருந்த _வண்ணம்)_ நாயனாவை சாப்பிடக் கூப்பிடடா. கோவிச்சுகிண்டு போனா வயிறு கிள்ளாதா?

சுசீ : நாயனா! அம்மா உன்னை சாப்பிட கூப்பிட்றாங்க.

_(கஜேந்திரன் திரும்பி உள்ளே வருகிறான்.)_

நான்காவது களம்
இடம் : கோகிலாவின் வீடு.

காலம் : மாலை சுமார் ஐந்தரை மணி.

_(கோகிலாவின் கணவன் ஞானசேகரன் ஆபீசிலிருந்து களைத்துப் போய் வீட்டுக்குள் நுழைகிறான். வீட்டில் வேலைக்காரப் பெண் மட்டும் இருக்கிறாள்)_

ஞானசேகரன் : (வேலைக்காரப் _பெண்ணைப் பார்த்து)_ எங்கே உங்க அம்மா?

வேலைக்காரப் பெண் : எங்கே? அதான் சங்கத்துக்கு.

ஞான : பாழாய்ப் போக இந்தச் சங்கம். காபி, கீபி ஏதானும் வைச்சி ருக்காளா?

வே.பெண் : ஹோட்டலுக்குப் போய் சூடா குடிச்சுட்டு வரச் சொன் னாங்க.

ஞான : ஏன்? ஜில்லுனு குடிச்சா அம்மாளுக்கு வியர்க்குமாமோ?

வே.பெண் : அதென்னமோ, எனக்கென்ன தெரியும்?

ஞான : ராத்திரி சாப்பாட்டுக்கு என்ன சொல்லிப்புட்டு போனா?

வே. பெண் : வந்து பண்றேன்னாங்க. ரொம்ப நேரமாப் போச் சானா ஹோட்டல்லேயிருந்து ஒரு சாப்பாடு எடுத்துவரச் சொன்னாங்க.

ஞான : பேஷ்; பேஷ். காசு கொடுத்திருக்காளா?

வே. பெண் : உங்களை கேட்டுதான் வாங்கிக்க சொன்னாங்க.

ஞான : நல்லாப் பொச்சு! ஹோட்டலிலேயே ரூம் எடுத்துக் கொண்டு இருந்து விடலாமே? (பொறுத்து) சரி; குழந்தை எங்கே?

வே.பெண் : பக்கத்து வீட்டு ஆயா கையிலே கொடுத்துட்டு போயிருக்காங்க.

ஞான : அட கடவுளே! இப்படியுமா காலம் கெட்டுப் போகும்? (பெருமூச்சு _விட்டு)_ நல்ல சங்கம் ஏற்பட்டுது?

_(இந்தச் சந்தர்ப்பத்தில் தனகோடி அம்மாளின் கணவர் தனபாலர் வருகிறார்)_

தனபாலர் : என்ன தம்பி ஞானம்! நீயே என்னமோ பேசிக்கறயே?

ஞான : வாங்க மாமா!

தன : இப்போதான் ஆபீசிலிருந்து வந்தாயா? ரொம்ப களைப்பா இருக்குதே முகம்?

ஞான : ஆமாம்; முகம் பார்த்து செய்யறதுக்கு வீட்டிலே பொம் பளை இருந்தாதானே?

தன : அதென்ன அப்படிச் சொல்லிபுட்டே? கோகிலா எங்கே? எங்கேயாவது அனுப்பிச்சிருக்கியா?

ஞான : என்ன மாமா சொல்றீங்க? இந்தக் காலத்துப் பொம் பளைகள், ஒருத்தர் அனுப்பியா போறாங்க? அவங்க இஷ்டத் துக்குப் போறாங்க; இஷ்டத்திற்கு வறாங்க. இதுதான் மாதர் முன்னேற்ற காலமாச்சே?

தன : ஓ ! சங்கத்துக்குப் போயிருக்குதா?

வே. பெண் : (தனபாலைப் _பார்த்து)_ நம்ப வூட்டு அம்மாதான் வந்து இட்டுக்கிணு போச்சு.

தன : ஹூம்; நம்ப வீட்டுக்காரிதான் இருக்காளே? என்ன தம்பீ! நாலு வருஷத்துக்கு முன்னே கல்யாணம் பண்ணிண்டே நீ; நாற்பது வருஷத்துக்கு முன்னே கல்யாணம் பண்ணிண்டேன் நான். இரண்டு பேர் கதியும் ஒரே மாதிரிதான் இருக்குது.

ஞான : இப்படி இருக்கும் என்று தெரிஞ்சிருந்தால் கல்யாணமே செய்துகொள்ளாமலிருக்கலாம்.

தன : கல்யாணம் செய்துகொண்ட சில வருஷங்களுக்குப் பிறகு தானே, செய்தது தப்பு என்று புத்திக்குத் தட்டுப்படுது?

ஞான : இந்தமாதிரி வீடு தங்காத பொம்பளைகளா இருப்பாங் கன்னு யாருக்குத் தெரியும்?

தன : நீ சொல்றது ரொம்ப கரெக்ட். (Correct - சரி.) தம்பீ! எங்க வீட்டுக்காரி கூட நல்லவளாகத்தான் இருந்தாள். வீடு உண்டு, வாசலுண்டு என்று அடைச்சு கிடந்தாள். இந்த நாசகாரி மீனாட்சி வந்து சேர்ந்தாள், கெட்டது குடி.

ஞான : மீனாட்சியா? அது யார் மாமா?

தன : அதுதான் அப்பா, அங்கயற்கண்ணி என்று பேரை மாற்றி வைச்சுகிண்டு இருக்காளே?

ஞான : ஓ! அவளா? ஏன் பேரை மாற்றி வைச்சிகிண்டு இருக்கா?

தன : அது பெரிய கதை. சொன்னால் வெட்கக்கேடு. அவளும் நாலு பேருக்கு முன்னாலே பேச வந்துட்ரா? ஹூம்……………..

ஞான : அவளைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது, மாமா.

தன : தெரிஞ்சிக்கவே வேண்டாம் தம்பீ! அவள் புருஷன் ஒரு கேசிலே அகப்பட்டுக்கொண்டு தலைதெரியாமல் ஓடிப்போய் விட்டான். அக்கரைக்கு, சமுத்திரம் தாண்டி போயிட்டான்னு சொல்றாங்க. அது முதற் கொண்டு இந்த அம்மா பேரை மாற்றி வைச்சுகிண்டு அட்டகாசம் பண்றா.

ஞான : அப்படியா? அவள் பேரே அங்கயற்கண்ணி என்றுதான் நினைச்சுக்கொண்டிருக்கேன்.

தன : இல்லை; இல்லை. இப்போதான் பெரியவங்க வைச்ச பேரை விரட்டிவிட்டு, தாங்களா ஒரு பேரு வைச்சுக்கிறாங்களே. கேட்டா, தமிழ்ப் பேரு என்று சொல்லி நம்ம வாயை அடக்கிப் புட்றாங்க.

ஞான : என்னமோ மாமா, இந்த மாதர் சங்கம், ஏற்பட்டாலும் ஏற்பட்டுது; ராத்திரி சாப்பாடு எனக்கு தகராறா போயிட்டுது.

தன : ஹூம்; பகல் சாப்பாடாவது கிடைக்குது உனக்கு. எனக்கு அதுவும் சரியா கிடைக்கிறதில்லே தம்பீ! தெரியுமா உனக்கு?

ஞான : ஏன் மாமா அப்படி? உலகம் தெரிஞ்சவங்களாச்சே வீட்டிலே?

தன : அதனாலேதான் இந்த அலங்கோலம். உலகம் தெரியாதவங் களாயிருந்தா சொன்னால் கேட்பாங்க. நாமும் சொல்லலாம். உலகம் தெரிஞ்சவங்க கிட்ட என்ன பேச முடியும்? பெண் டாட்டி யாயிருந் தாலென்ன? பிள்ளையாயிருந்தாலென்ன?

ஞான : ஏன் உங்கள் வீட்டிலே?

தன : தம்பீ! என் வயிற்றெரிச்சலே ஏன் கிளப்பறே? பென்ஷன் என்னிக்கு வாங்க ஆரம்பிச்சேனோ அன்றைய தினத்திலிருந்து என் சம்சாரமும் வீட்டிலிருந்து பென்ஷன் வாங்கத் தொடங்கி விட்டாள். அந்த மீனாட்சி பின்னாலே………………….

ஞான : அங்கயற்கண்ணி பின்னாலே………………….

தன : ஆமாம்; அங்கயற்கண்ணி; அங்கயற்கண்ணி துடைப்பக் கட்டைக்கு பட்டு குஞ்சலமாம்!

ஞான : (சிரிக்கிறான்.)

தன : நீ சிரிப்பாய் தம்பீ! பாலிய முடுக்கு: சிரிக்கிறே. என் நிலைமை எனக்குத் தானே தெரியும்? நல்ல சோறு உண்டா? நல்ல துணி உண்டா? பென்ஷன் வாங்கி அவள் கையில் அழுதுவிடுகிறேன். அவ இஷ்டப்பட்டு சோறு போட்டா உண்டு; இல்லேன்னா பட்டினி கிடக்கிறேன்.

ஞான : ஏன் மாமா பென்ஷனை வாங்கி அவள் கையிலே கொடுக் கணும்?

தன : ஐயோ! கொடுக்காது போனால், என் வீட்டு ஓடு, என் மண்டை ஓடு எல்லாம் காற்றிலே பறக்க வேண்டியதுதான். தாடகை, சூர்ப்பனகை இவங்கள்ளாம் இவள் கிட்ட பிச்சை வாங்கணும்.

ஞான : (சிரிக்கிறான்)

தன : உனக்கு இப்பொழுது சிரிப்பாகத்தான் இருக்கும். நீயும் பென்ஷன் வாங்கினபிறகுதானே தெரியப் போவுது.

ஞான : கொஞ்சம் உருட்டி மிரட்டிப் பார்க்கிறது தானே மாமா?

தன : ஆ ஆ! உருட்டினால் நாம் உருள வேண்டியதுதான். எல்லாம் வயசானால் தான் தெரியும் தம்பீ! நாம் அவர்களை உருட்டு கிறமா, அவர்கள் நம்மை உருட்டுகிறார்களா என்று?

ஞான : அப்படியானால் ஆண்பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து ஏன் ஒரு சங்கம் ஆரம்பிக்கக் கூடாது?

தன : ஏன் இருக்கிற சங்கங்கள் போதாதுன்னு இன்னொரு சங்கமா?

ஞான : ஆமாம்; ஆண்கள் விடுதலை சங்கமென்று ஒரு சங்கம் ஆரம்பிச்சு, மாதர் சங்கத்திலே சேர்ந்திருக்கிறவர்கள் கொட் டத்தை அடக்கணும் மாமா!

தன : சும்மா விடு தம்பீ! இப்படித்தான் இருக்கும் உலகம். உலகம் பலவிதம் என்று சொல்லுவாங்க இல்லையா? ஆனால் ஒன்று சொல்றேன். கேளு. ஆண்பிள்ளையாகட்டும், பெண்பிள்ளை யாகட்டும், வீட்டை மறந்து விட்டு வெளியிலே சுற்ற ஆரம்பிச் சங்களானால் அந்த வீடு உருப்படவே படாது.

ஞான : நீங்கள் சொல்றது ரொம்ப சரி மாமா! இதுக்காக நாம் எதுவும் நடவடிக்கை எடுக்க வேண்டாமா?

தன : நடவடிக்கையாவது கிடவடிக்கையாவது? நீயும் நானும் என்ன செய்ய முடியும்? உலகம் பலவிதம் என்று வேடிக்கை பார்த்துக் கொண் டிருந்து விட்டு ஒரு நாள் கண்ணை மூடிக் கொள்ள வேண்டியது தான்.

ஞான : இது என்ன உலகம் பலவிதம் வேதாந்தம் மாமா?

தன : ஆமாம், தம்பீ! பென்ஷன் வாங்கின பிறகுதான் உனக்கும் உலகம் பலவிதம் என்ற உண்மை தெரியும்.

ஞான : அப்பொழுது?

தன : சும்மாயிருப்பதே சுகம் என்ற ஞானமும் உண்டாகும். (பொறுத்து) சரி; சாப்பாட்டுக்கு என்ன பண்ணப்போறே? ஹோட்டலுக்கு வரயா?

ஞான : ஏன் மாமா? நீங்க கூடவா?

தன : புதிசா கேக்கறயே? அந்த ரஞ்சித விலா ஹோட்டல்காரனுக்கு நாம் எவ்வளவு பாக்கி கொடுக்கணுமோ அதை இந்த ஜன்மத்தி லேயே கொடுத்துத் தீர்த்துடுவோம். வா. (வேலைக்காரப் _பெண்ணை பார்த்து)_ ஏ குட்டி! வீட்டை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள். நாங்கள் போய் வருகிறோம். வா தம்பீ! _(இருவரும் போகிறார்கள்)_


நடுவிலே வந்த வாழ்வு

முதற் களம்
இடம் : வீட்டின் முன் பக்கம்

காலம் : மாலை.

_(பாக்கியநாதன் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு உள்ளே பிரவேசிக்கிறார். அவருடைய இரண்டாவது பெண் எட்டு வயதுள்ள ரேணுகா, தகப்பனார் வருகையைப் பார்த்து ஆனந்தங்கொண்டு ஓடோடியும் வந்து அவரைக் கட்டிக் கொள்கிறாள்.)_

ரேணுகா :அப்பா! ரிப்பன் வாங்கிக் கொண்டு வந்தீர்களா?

பாக்கியநாதன் : போ, மூதேவி! உன் பவிஷூக்கு ரிப்பன் வேறே!

_(பாக்கியநாதனின் சம்சாரம் பாக்கியத்தம்மாள் சமையலறையி லிருந்து வெளியே வருகிறாள்)_

பாக்கியத்தம்மாள் : வந்ததும் வராததுமாய் ஏன் இப்படி குழந்தை யின் மீது வள்ளென்று விழவேண்டும்?

பா.நா: வந்ததும் வராததுமாய் அது ஏன் இப்படி என்னைப் பிடுங்க வேண்டும்?

பா: வயதான பெரியவர்களுக்கும் அறியாத குழந்தைகளுக்கும் வித்தியாசமில்லை போலிருக்கிறது? ஏதோ வந்தவுடன் ஆசை யாக ஓடிவந்து கேட்டால் இப்படியா எரிந்து பேசுவது?

பா. நா: நீ ஒன்றும் பெண்ணுக்குப் பரிந்து கொண்டு வரவேண்டாம். எனக்குக்கூட அவள் பெண்தான். கடிந்து கொள்ள எனக்கும் பாத்திய முண்டு.

_(இந்த சமயத்தில் பாக்கியநாதனின் மூன்றாவது குமாரனான ஆறு வயதுடைய சுகுமார் வெளியிலிருந்து உள்ளே ஓடி வருகிறான்)_

சுகுமார் : அப்பா! எனக்கு மோட்டார் வாங்கிக் கொண்டு வருகிறே னென்று சொன்னீர்களே; எங்கே யப்பா?

பா.நா : மோட்டார், வழியிலே உடைஞ்சுபோச்சு. சும்மா விடுங்கள் என்னை; தொந்தரவு பண்ணாதீர்கள். இந்தா ரேணுகா! (சட்டை முதலியவைகளை யெல்லாம் கழற்றிக் கொடுக்கிறார்) ஏய்! அந்த ஈஸிசேரைக் கொண்டு போடு. சுடச்சுட ஒரு டம்ளர் காபி கொண்டு வா. மண்டையை உடைக்கிறது.

_(பாக்கியத்தம்மாள் ஈஸிசேர் கொண்டு போடுகிறாள். அதில் பாக்கியநாதன் சாய்ந்து கொள் கிறார்.)_

பா : இதோ, காபி கொண்டு வந்துவிட்டேன்.

பா.நா : அடே குமார்! ரேணுகா! சந்தடிசெய்யாமல் சும்மாயிருக்க வேணும். தெருவிலே போய் கொஞ்ச நேரம் விளையாடுங்கள்.

_(குழந்தைகள் வெளியே போய் விடுகிறார்கள். பாக்கியத் தம்மாள் காபி கொண்டு வந்து கொடுக்கிறாள்)_

பா : ஏன்? என்ன உடம்பு? முக மெல்லாம் வாடிப் போயிருக் கிறதே?

பா.நா : உடம்புக்கு ஒன்றுமில்லை.

பா : அப்படியானால் மனதுக்கு ……………. ஏதாவது……………?

பா.நா : மனதில் ஏதோ கிலி புகுந்து கொண்ட மாதிரி இருக்கிறது.

பா : என்ன காரணம் திடீரென்று இப்படி ஏற்படுவதற்கு? சென்ற மூன்று வருஷமாக எவ்வித குறைவுமில்லாமல் நடந்துவந்த வியாபாரத்தில் ஏதாவது சங்கடமா?

பா.நா : சங்கடமென்ன? வியாபாரத்திலே மண் விழுந்துவிட்டது.

பா : மண் விழுந்துவிட்டதா? ஏன்? மறுபடியும் குண்டு பயம் ஏற்பட் டிருக்கிறதா என்ன?

பா.நா : அசடே! சண்டையே நின்று விட்டது. மத்தியானம் ரேடி யோவிலே சொன்னார்கள்.

பா : சண்டை நின்றுவிட்டதா? அம்மாடி, தலைச்சுமை இறங்கின மாதிரி இருக்கிறது எனக்கு. (கொஞ்சம் _பரபரப்புடன்)_ இனி இந்த ரேஷன் தொந்தரவு இராதில்லையா?

பா. நா: உன் ரேஷன் தலையிலே இடிவிழ. மார்க்கெட்டிலே ஓரே கலவரமாயிருக்கிறது. வியாபாரிகளெல்லாம் பேந்தப்பேந்த முழிக்கிறான்கள். லட்சம் லட்சமாய் வைத்துக் கொண்டிருக்கிற சரக்கை என்ன செய்வதென்று தெரியாமல். நீ என்னடா வென்றால் ரேஷனுக்கு அழுகிறாய்.

பா : அவரவர்கள் விசாரம் அவரவர்களுக்கு. நமது வியாபாரத்திற்கு ஒன்றும்………….

பா.நா : அதுதான் சொன்னேனே முதலிலேயே, மண் விழுந்து விட்டதென்று.

பா : ஐயோ!

பா.நா : அலறாதே. ஆயிரக்கணக்காய் முதல்வைச்சு வியாபாரம் பண்ணது என்ன முழுகிப்போச்சு? புரோக்கர் வியாபாரம் இப் பொழுது பிரேக் (Break) ஆகி (உடைந்து) விட்டது. அவ்வளவு தான். இதற்காக கவலைப்படமுடியுமா என்ன?

பா : நான் ஒன்றும் கவலைப்படவில்லை. நீங்கள்தான் வருகிற போது, தேய்க்காத பாத்திரம் மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு வந்தீர்கள்.

பா.நா : சரி, சரி ; நீ வர்ணிக்க ஆரம்பித்துவிடாதே. இனி நீ கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். செலவுகளை யெல்லாம் குறைக்கவேண்டும். பால் இப்பொழுது தினம் எவ்வளவு வாங்குகிறாய்?

பா : காலை அரைப் படி; சாயந்திரம் அரை படி.

பா.நா : இனி காலை மூன்று ஆழாக்கும் சாயந்திரம் மூன்று ஆழாக் கும் வாங்கு; போதும். இந்தத் தண்ணிப் பாலைப் குடிப்பதை நிறுத்திவிட்டால் குழந்தைகள் இளைச்சு போகாது. வந்தவர், போனவர் எல்லோருக்கும் காபி கொடுக்கிற வழக்கத்தை நிறுத்தி விடு. இது என்ன முட்டாள் பழக்கம்? நம்மைப் பெரிய மனுஷாள் இல்லையென்று நினைச்சுக்கொள்கிறவர்கள் நினைச்சுக் கொள் ளட்டும்.

பா : இன்னும் என்னென்ன கட்டு திட்டங்கள்?

பா.நா : உனக்கென்ன சொல்லாமல்? இனிமேல் நான் எங்கே போய் என்ன வேலை செய்யமுடியும்? இந்தச் சண்டையிலே சம்பாதித்த பணத்தை வைத்துக் கொண்டுதான் மிகுதி காலத்தையும் கழிக்க வேண்டும்.

பா : அப்படியானால் என்ன செய்யவேண்டு மென்கிறீர்கள்? வயிற்றிலே ஈரத்துணியை மடித்துப் போட்டுக் கொள்ளச் சொல்கிறீர்களா என்ன? வளர்கிற குழந்தைகளுக்கு வயிறு நிறையச் சொறு போட வேண்டாமா? எப்படியும் பெரியவன் துரைராஜ் சம்பாதிக்கிறான். என்ன குறைவு வந்து விட்டதென்று இப்போழுது விசாரப்படுகிறீர்கள்?

பா.நா : பெரியவன் உத்தியோகம் என்ன சாசுவதமா? ஏ.ஆர்.பி. யிலிருக்கிறவர்களையெல்லாம் மடமடவென்று எடுத்துவிட மாட்டார்களா? அவனும் ராத்திரி வருகிறபோது என்ன சேதி கொண்டு வருகிறானோ?

பா : நல்ல சேதிதான் கொண்டு வருவான். அது கிடக்கட்டும். நான் இரண்டு புடவை எடுத்து வைத்திருக்கிறேன். இதோ பாருங்கள். (உள்ளே _சென்று இரண்டு புடவைகளடங்கிய ஒரு கட்டைக் கொண்டு வந்து பிரிக்கிறாள்)_ இது நூற்று நாற்பத்தெட்டு ரூபாயாம்; இது நூற்று அறுபது ரூபாயாம். இரண்டையும் எடுத்துக் கொள்ளச் சொன்னாள் எதிர்வீட்டு லோகநாயகி. கட்டிக்கொண்டால் என் உடம்புக்கு நன்றாகப் பொருந்தி யிருக்குமாம்.

பா. நா: அப்படியானால் அவளையே ரூபாய் கொடுத்து விடச் சொல்.

பா : அசல் வீட்டுப் பொம்பளைகளைப் பற்றி இப்படியெல்லாம் பேசக்கூடாது. அவள் காதில் பட்டால் என்ன நினைத்துக் கொள்வாள்?

பா.நா : ஒன்றும் நினைத்துக் கொள்ள மாட்டாள். புடவைகளைத் திருப்பிக் கொடுத்து விடு என்று உனக்குச் சிபார்சு செய்வாள்.

பா : ஹூஹூம், ஹூஹூம். இந்த புடவை இரண்டும் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. இதையே கட்டிக்கொள்ள வேண்டு மென்று ஆசையாக இருக்கிறது.

பா.நா : எவ்வளவு வயதானாலும் என்ன பிரயோஜனம்? ஆசை யென்னமோ போகவில்லை. பட்டுப்புடவையிலே என்ன அவ்வளவு மோகம்? நூறும் இருநூறும் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டு விட்டதனாலேயே பெரிய மனுஷ்யர்களாகி விடுகிறார்களா என்ன? சீலையிலேயா இருக்கிறது ஒருவ னுடைய பெருமையும் சிறுமையும்? குஞ்சியழகும் கொடுந் தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல என்று பெரியவர்கள் தெரியாமலா சொல்லியிருக்கிறார்கள்? வெளி வேஷத்திலே ஒன்றுமில்லை, பாக்கியம்! உள்ளே யிருக்கிற ஆத்மா இருக்கிறது பார் ஆத்மா, அது சுத்தமாயிருக்க வேண்டும் ; அது அழகா யிருக்க வேண்டும்.

பா : வருமானம் குறைகிறபோது வேதாந்தம் வந்து புகுந்து கொள்கிறதே இந்த ஆம்பளைகளுக்கு, அதுதான் ஆச்சரியம். போன வருஷமெல்லாம் சொன்னீங்க வெளியிலே போகிற போது காலிலே லிப்பர் போட்டுக்கணும், முகத்திலே பவுடர் பூசிக்கணும், பார்த்தால் நாலு பேருக்கு மதிப்பா இருக்கணும், அப்போதான் நம்ம துரைராஜூக்கு பெண் கேட்கப் போகிற இடத்திலே கௌரவமா நினைப்பாங்க, இப்படியெல்லாம் சொன்னீங்க. இப்போ என்னான்னா, வெளிவேஷம் வேண்டா மென்கிறீங்க?

பா.நா : ஆமாம் பாக்கியம்! (கையைச் _சுண்டிக்காட்டி)_ எல்லாம் பணத்திலேதானே இருக்கிறது. பொருளில்லார்க்கு இவ்வுலக மில்லை யென்று சொல்லவில்லையா வள்ளுவர்? உலகத்திலே பணத்திற்கு மதிப்பா? மனிதனுக்கு மதிப்பா? யோசித்துப் பார்

பா : எனக்கு ஒரு மதிப்பும் வேண்டாம்; என்றைக்கும் ஒரே சீராகயிருந்தால் போதும். வேதாந்தம் அப்புறம் பேசுவோம். இந்த இரண்டு புடவைக்கும் அடுத்த மாதம் பணங்கொடுக்கிற னென்று சொல்லிவிட்டு வரச்சொல்கிறேன்.

பா.நா : பைத்தியம்! பட்டுவிலையெல்லாம் குறையப் போகிறது. இவ்வளவு நிறைய விலைகொடுத்து இப்பொழுது வாங்குவா னேன்? புருஷர்களுக்கு சரிப்படவில்லையென்று சொல்லித் திருப்பி விடு.

பா : கடைக்காரன் நம்மை என்னவென்று நினைப்பான்? எப்பவோ நான் கிழவியாப் போனபிறகு பட்டுவிலை குறையப்போகிறது. அதுவரையில் வேறு புடவை வாங்காமலே இருக்கப்போகிறீர் களா?

பா.நா : இதோ பார், கொஞ்சம் பொறு. பட்டு விலை, வெள்ளி விலை, சவரன் விலை எல்லாம் குறையப் போகிறது. உனக்கு திருப்தியா எல்லாம் வாங்கிக்கொள்ளலாம்.

பா : அப்பொழுது பணமிராதே?

பா.நா : பணத்திற்குத் தகுந்த பணியாரம்.

பா : என்ன, இப்படி முன்னுக்குப்பின் சம்பந்தமில்லாமல் பேசுகிறீர் கள்? இந்த யுத்தம் எத்தனையோ பேருடைய மூளையையும் மனத்தையும் மாற்றிவிட்டது போல உங்களையும் மாற்றி விட்டாற் போலிருக்கிறது.

பா.நா : அதனால் கொஞ்சம் பணமாவது சம்பாதிக்க முடிந்தது. இந்த யுத்தத்திலே சம்பாதித்தவர்களெல்லோரும் சாமர்த்தியத் தினாலே சம்பாதித்தார்களென்று நினைக்கிறாயா? அல்லது கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்தார்களென்று நினைக்கி றாயா? இரண்டும் இல்லை. அவர்கள் ஜாதகத்தில் எங்கேயோ ஒரு கிரகம் கொஞ்சகாலம் நேராகப் பார்த்துக்கொண்டிருந் தது. அடிச்சான்கள் ஒரு அடி.

பா : நமக்கும் இது பொருந்துந்தானே?

பா.நா : பேஷாய். சண்டைக்கு முன்னே நான் என்ன பண்ணிக் கொண்டிருந்தேன்? மானம் பார்த்த செட்டிபாத்திரக் கடை யிலே பாத்திரங்களை எடைபோட்டுக் கொடுத்துக் கொண் டிருந்தேன். சண்டை வந்தது; பித்தளைத்தகடு விலை ஏறியது. வியாபார நளுவு சுளுவெல்லாம் கொஞ்சம் தெரிஞ்சு வைச்சுக் கொண்டிருந்ததினாலே கொஞ்சம் அப்படியும் இப்படியுமா பித்தளை தகடுகளை வாங்கி விற்றேன். பணம் கிடைத்தது. அவ்வளவுதானே?

பா : சரி; இத்தனை நேரம் பேசி தலைவலியெல்லாம் போச்சோ, இல்லையோ?

பா. நா: கொஞ்சம் குறைச்சல்தான். (பொறுத்து) இதோ பாரு, பாக்கியம்! பணத்தை எப்படியாவது சம்பாதிக்கணும். பணம் சம்பாதிக்கிற நேரத்திலே நியாயம், தருமம், என்று பார்த்தாயா னால் ஒரு சல்லிக்காசு கூட கையிலே சேராது. பணம் சம்பாதிச்சு கொஞ்சம் சேர்த்துக்கொண்ட பிறகு, காணி பூமி, வீடு வாசல் எல்லாம் கொஞ்சம் ஏற்பாடு செய்துகொண்ட பிறகு, கூடிய வரையில் கடவுளுக்குப் பயந்து நடக்கப்பார்க்கணும். நாமும் ஆண்டவன் கீழே குடியிருக்கிறோமென்ற நினைப்புடனே வாழணும், தெரியுதா?

பா : தெரியுது; நல்லா தெரியுது. ஆம்பளைகள் நியாயமே அலாதி நியாயந்தானே?

பா.நா : இதோ பார்.தோட்டத்திலே மண் வெட்டுகிறோம். வெட்டுகிறபோது, பூச்சிகள், புழுக்கள் அகப்பட்டுச் செத்து போகின்றனவேயென்று மண்ணைக் கொத்தாமல், கிளறாமல் இருக்கிறோமா? அப்படிக் கொத்தாமல் கிளறாமல் இருந்தால் அந்த மண்ணில் நல்ல செடிகளைப் பயிரிட முடியுமா? நல்ல பலனைக் காண முடியுமா? ஆகையால் நாம் வாழவேண்டு மானால் மற்றொருவரைக் கஷ்டப்படுத்தித்தானாக வேண்டி யிருக்கிறது. உலகத்திலே இது சகஜமான தர்மமாகப் போய் விட்டது.

பா : சரி, சரி; இந்தக் காரியத்திற்கு தர்மம் என்று மட்டும் பெயர் சொல்லாதீர்கள்.

பா.நா : எந்த நாசமாய்ப்போன பெயரை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளேன், எனக்கென்ன அதைப்பற்றி? ஆக, ஒருவர் துக்கத்தின் மீதுதான் மற்றொருவர் சுகப்படவேண்டி யிருக்கிறது.

பா : அப்படியானால் இதுவரையில் நீங்கள் சம்பாதித்தது எத்தனைபேருடைய வயிற்றெரிச்சலின் மீது?

பா.நா : ஆம், அப்படித்தானிருக்கும் உலகத்தில். இதையெல்லாம் யார் ஆராய்ச்சி பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்? எனக்கு இன்றைய தினம் இரண்டு ரூபாய் லாபம் வந்ததென்று சொன்னால் இன்னொருவருக்கு இரண்டு ரூபாய் நஷ்டமேற் பட்டுத்தான் இருக்கும்.

பா : அப்புறம் -

பா.நா : சுகம் வருகிறபோது சந்தோஷப்படவேண்டியதுதான்; துக்கம் வருகிறபோது அழவேண்டியதுதான். பணம் வருகிற போது செலவு செய்யவேண்டும். வரும்படி வழி அடைத்துப் போய்விட்டதேயானால் கோயில் குளங்களுக்குச் சென்று நிம்மதியாகக் காலத்தைக் கழிக்க வேண்டும். காலத்திற்கேற்றப் படி நடந்துகொள்வதுதானே புத்திசாலித் தனம்?

பா : நல்ல புத்திசாலித்தனம்! இந்த புத்திசாலித்தனமுள்ள புருஷர்க ளுடைய சகவாசமே கூடாதென்று தோன்றுகிறது. எவ்வளவு சுயநலம்! மற்றவர்கள் கெட தாங்கள் வாழவேண்டுமென்ப திலே எவ்வளவு ஆசை! அம்மம்மா! உங்கள் பக்கத்திலே நிற்பது கூட பாவம்! (போகப் _பார்க்கிறாள்)_

பா.நா : அடடா, பெண்களெல்லாம் தியாக மூர்த்திகள்! வெய்யி லிலே காயாமல் மழையிலே நனையாமல் வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு பெண்டுகள் என்ன தியாகம் செய்கிறார்கள்! என்ன தியாகம் செய்கிறார்கள்!

பா : வேண்டாம்; பெண்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள வேண்டாம்.

பா.நா : பாக்கியம்! கோபித்துக் கொள்ளதே போய் அடுப்பைப் பார்.

இரண்டாவது களம்
இடம் : வீட்டின் தெருப்பக்கம்.

காலம் : மேற்படி சம்பவம் நடந்த அரை மணி நேரங் கழித்து.

_(பாக்கியநாதனும் பாக்கியத்தம்மாளும், இன்னும் துரைராஜ் ஆபீசிலிருந்து வரவில்லையேயென்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்)_

பா.நா : ஏன் இன்னும் தம்பி வரவில்லை?

பா : தெரியவில்லையே. என் வயிற்றில் புளியைக் கரைக்கிறதே. எதிர் வீட்டு லோகநாயகியை வேண்டுமானால் கேட்டு வரட் டுமா?

பா.நா : எதற்கு?

பா : அவள் எஜமானர் ஆபீசிலிருந்து வந்து விட்டாரா, எங்காவது தம்பியைப் பார்த்தாரா என்று கேட்டு வருகிறேன்.

பா.நா : அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். வீண் கலாட்டா செய்யாதே. (தமக்குள்) இந்தப் பெண்பிள்ளைகளே இப்படித் தான்.

_(சிறிது தூரத்தில் கூச்சல் கேட்கிறது. எல்லோரும் கவனித்துக் கேட்கிறார்கள். உள்ளே விளக்கண்டை படித்துக் கொண்டிருந்த ரேணுகாவும் சுகுமாரும் வீதிப்பக்கம் ஓடிவருகிறார்கள்)_

ரே : என்ன அப்பா கூச்சல்!

பா. நா: என்ன இருக்கும்? இந்த காந்திக்காரன்கள் எதாவது கூச்சல் போடுவான்கள். இவங்களுக்கு என்ன வேலை?

பா : அந்த மாதிரி நீங்கள் கொஞ்சம் கூச்சல் போட்டுப் பாருங்க ளேன்? அதற்கு தைரியம் ஏது?

பா.நா : இதற்கு தைரியம் வேண்டுமா என்ன? கனத்த தொண்டை வேண்டும்.

பா : இப்படியெல்லாம் பெரியவர்களை அவமானப் படுத்தாதீர்கள். நமக்காக அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்? எத்தனை பேருக்கு என்னென்ன உதவிகளெல்லாம் செய்திருக்கிறார்கள்?

_(மகாத்மா காந்திக்கு ஜே! டெம்பரவரி தொழிலாளர்களை எடுத்து விடாதீர்கள்! ஏழைகளின் வயிற்றிலே அடிக்காதீர்கள்! வந்தே மாதரம்! என்ற கோஷங்கள் செய்துகொண்டு தொழிலாளர் ஊர்வலம் ஒன்று வந்து போகிறது.)_

பா : அப்படியானால் நம்ப தம்பிக்குக்கூட வேலை நின்று போய்விடுமா?

பா.நா : நான்தான் அப்பொழுதே சொன்னேனே?

பா : ஏன் இன்னும் அவன் வரவில்லை?

பா.நா : ஆபீசிலே சம்பளத்தைத் தீர்த்துக் கொடுத்திருப்பான்கள். அதை வாங்கிக் கொண்டு மெதுவாக வருவான்.

பா : வேலை போய்விட்டதேயென்று வருத்தப்பட்டுக் கொண்டு வராமலே எங்காவது போய்விடுவானோ?

பா.நா : போய் விடுவான் சீமைக்கு? போயேன். கழுதை கெட்டா குட்டிச் சுவரு என்கிற மாதிரி ஆடிப்பாடி விட்டு வீட்டுக்கு வந்து சேருகிறான்.

பா : இதுவரையில் அவனை இந்திரன் சந்திரன் என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள். இப்பொழுது வேலை போய்விடுமோ என்று சந்தேகம் இருக்கையிலே அவன் கழுதையாகிவிட்டான். (துக்கப்படுகிறாள்)

பா.நா : வீதியிலே அழாதே ; உள்ளே போய் அழு.

_(எல்லோரும் உள்ளே போகிறார்கள். பாக்கியநாதன் பழைய படி ஈஸிசேரில் போய் சாய்ந்து கொள்கிறார்)_

ரே : (தகப்பனார் _அருகில் சென்று)_ ஏன் இன்னும் அண்ணண் வரவில்லை?

பா.நா : வருவான்; போய் படி.

சுகுமார் : பெரியண்ணன் எனக்கு மோட்டார் வாங்கிக்கொண்டு வருமா?

பா.நா : வரும்; தலையிலே தூக்கிக்கொண்டு வரும். நீ போய் படி. உயிரெழுத்து பன்னிரண்டும் இன்னும் சரியாக வரவில்லை?

_(துரைராஜ் முகத்தில் கவலைதட்ட மெதுவாக உள்ளே வருகிறான்.)_

பா. நா: என்ன தம்பீ! ஏன் இத்தனை நேரம்!

_(சமையலறையிலிருந்து பாக்கியத்தம்மாள் வருகிறாள்.)_

பா : ஏன் துரை, ஒரு மாதிரியாயிருக்கிறாய்? ஏன் இவ்வளவு நேரம்? பலகாரம் ஒன்றும் சாப்பிடவில்லையா?

துரைராஜ் : எல்லாம் சாப்பிட்டாச்சு.

_(சட்டை முதலியவைகளைக் கழற்றிவிட்டு தகப்பனார் எதிரில் உள்ள ஒரு நாற்காலியில் உட்காருகிறான்)_

பா.நா : என்ன சமாசாரம்?

து : ஒன்றுமில்லை. நடுவிலே வந்த வாழ்வு நடுவிலேயே போய் விட்டது.

பா : ஏன் தம்பி அப்படிச் சொல்றே?

து : இந்த மாதம் கடைசி வரையில் சம்பளத்தைக் கையிலே கொடுத்து அனுப்பிவிட்டார்கள்.

பா : அப்படியானால் அடுத்த மாதம் முதலிலே இருந்து உனக்கு வேலை இல்லையா?

பா.நா : புட்டுபுட்டு உனக்குச் சொல்லவேணுமாக்கும். எதிர் வீட்டு லோகநாயகியிடம் போய்ச் சொல்லி விட்டு வா, என் பிள்ளைக்கு வேலை போய்விட்டதென்று.

து : சரி சரி; நீங்கள் இரண்டு பேரும் சண்டை போடாதீர்கள்.

பா.நா : கையிலே எவ்வளவு பணம் கொடுத்தார்கள்?

து : இருபத்தோரு ரூபா, ஓன்பது அ, ஆறு பைசா.

பா.நா : நான் அப்பவே சொன்னேன் கேட்டியா? சில்க் ஷர்ட் வேண்டும், கோட் வேண்டும், சூட் வேண்டும் என்று சண்டை போட்டுத் தைத்துக் கொண்டு, வந்த பணத்தையெல்லாம் செல வழித்து விட்டாயே, இப்பொழுது என்ன செய்யப்போகி றாய்? கோட்டையும் சூட்டையும் மாட்டிக்கொண்டு எங்கே போகப் போகிறாய்?

து : திருடப் போகிறேன். உங்களுக்கென்ன அதைப் பற்றி?

பா.நா : (பாக்கியத்தம்மாளிடம்) பார்த்தாயா, உன் பிள்ளையின் பவிஷை?

பா : ஆமாம்; வயசு வந்த பிள்ளையைக் கண்டபடி சொன்னால் இப்படித்தான் பதில் பேசும்.

பா.நா : இந்தமாதிரி பரிந்து பரிந்து பேசித்தான் பிள்ளையைக் குட்டிச்சுவராக்கி விட்டாய்.

து : அப்பா! மரியாதையில்லாமல் பேசாதீர்கள். நான் குட்டிச்சுவராயிருந்தால் நீங்கள் என்ன?

பா.நா : இரண்டு காசு சம்பாதிக்க யோக்கியதை இல்லை யானாலும் வாயென்னமோ அகலமாகத்தான் வைத்திருக்கிறார் கடவுள்.

பா : இத்தனை நாளாய் சம்பாதனை பண்ணலையா அவன்? இந்த மாதம் பூராவுக்குங்கூட சம்பாதிச்சுண்டு வந்திருக்கிறானே?

பா.நா : சரி; இனி ஹோட்டலுக்குப் போய் காசைச் செலவழிக் காதே. வீட்டிலேயே பலகாரம் சாப்பிடு. எனக்குக் கூட வியா பாரம் நின்றுபோச்சு. எல்லோரும் வீட்டிலே உட்கார்ந்த படியே சாப்பிடணும்.

து : ஏன்? நீங்கள் பழைய வேலைக்கு போகிறது தானே?

பா.நா : எதற்கு? பாத்திரங்களை எடைபோடுகிற வேலைக்கா?

து : போனால் என்ன? எப்படியும் என் செலவுக்கு தினத்துக்கு அரை ரூபாய் கொடுத்தாகணும் நீங்க.

பா.நா : நல்லாப் போச்சு. உன்னை இந்த ஏ.ஆர்.பி யிலே சேர்த்ததை விட ஏதாவது ஒரு தொழில் கற்றுக் கொள்ளும்படி விட்டிருந் தால், ஒரு நாளைக்கு எட்ட சம்பாதிக்கிறதுக் காவது யோக்கியதை வந்திருக்கும். இப்போழுது என்னடாவென்றால், சம்பாதிப்பதற்குச் சரியாகத் தெரிந்து கொள்ளாவிட்டாலும் நன்றாகச் செலவழிப்பதற்குக் கற்றுக் கொண்டிருக்கிறாய். கொடுக் கிற மகாராஜாவைத்தான் காணோம்.

து : ஏன், நீங்கள் இருக்கிறபோது எனக்கென்ன குறைவு?

பா.நா : போடா போ அதிகப் பிரசங்கி! இப்பொழுதிருந்தே எங்கே யாவது வேலைக்கு அப்ளிகேஷன் போட்டுக் கொண்டிரு. இரண்டு தொழில் கற்றுக் கொண்டிருந்தால்தான் இந்தக் காலத் திலே பிழைக்கலாம். வெறும் கூல் படிப்பு மட்டும் பிரயோஜன மில்லை.

பா : எல்லோரும் சாப்பிட வாருங்கள்.

வேலை கிடைக்குமா?

முதற் களம்
இடம் : பிரபாகர் அண்ட் கம்பெனி.

காலம் : பகல்

_(பிரபாகர் அண்ட் கம்பெனியின் அதிபர் மிடர் தாமோதர பிரபாகர், தமது ஆபி அறையில் உட்கார்ந்து, அன்று காலையில் வந்த தபால்களைப் பிரித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவரது அறைக்கு அடுத்தாற் போலுள்ள ஹாலில் பேச்சுக் குரல் கொஞ்சம் பலமாகக் கேட்கிறது. உடனே பிரபாகர், தமது மேஜையின் மீதுள்ள மணியை அடிக்கிறார். ப்யூன் கேசவலு வருகிறான்.)_

பிரபாகர் : ஏன் இப்படி எல்லோரும் சேர்ந்து கூச்சல் போடுகி றீங்கோ?

கேசவலு : இல்லே ஸார்…………..

பிர : இது ஆபீஸூன்னு நினைப்பே இல்லையா உங்களுக்கு?

கேச : இல்லே ஸார்………………….

பிர : என்னா இல்லே ஸார்? எதுக்கெடுத்தாலும் இல்லேன்னு சொல்ல நல்லா கத்துக்கிண்டு இருக்கே நீ ! இனிமேல் இல் லேன்னு சொல்லு, உன்னை வீட்டுக்கு அனுப்பிச்சுப்புடு வேன். இது மீன் கடையின்னு நினைச்செங்களா?

கேச : ஆமாம் ஸார்………………………

பிர : என்னா ஆமாம்? மீன் கடையா இது?

கேச : இல்லே ஸார் …………………………

பிர : சட், நான்சென்! நீ போ வெளியே. ஐயர் மிடர் ஐயர்! (மணியடிக்கிறார். _கேசவலு வெளியே போகிறான். குமாதா ஐயர் ஓடோடியும் வருகிறார்.)_ ஏன் ஆபிஸிலே இப்படி எல்லாரும் கத்தராங்க?

ஐயர் : யாரோ ஒரு ஆள் வந்து உங்களைப் பார்க்கணுமின்னு சொன்னான். இப்போ தபால் பார்க்கிற சமயம், சாயந்திரத்திற்கு மேலே வா என்று சொன்னாலும் போகாமல் சண்டித்தனம் பண்ணுகிறான்.

பிர : நல்ல வார்த்தைகளைச் சொல்லி அனுப்பிவிடுவதை விட்டு எல்லோரும் சேர்ந்து என் கூச்சல் போடுறீங்க?

ஐயர் : நான் போடல்லே, அவன் தான் இப்பவே எஜமானனை பார்க்கணும்னு கத்தறான். அவனுக்கெதிராக கேசவலு கத்துகி றான்.

_(இதை வெளியிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த கேசவலு உள்ளே ஆத்திரத்தோடு வருகிறான்.)_

கேச : என்னா ஸார், என் மேலே பழி போடறீங்க! நீங்கதான் அவன் மேலே வாள் வாள்னு விழுந்தீங்க. இங்கே எஜமான்கிட்டே வந்து பொய் பேசறீங்களே?

பிர : ஏய், அதிகப் பிரசங்கி! தாறுமாறாகப் பேசாதே. வெளியே போ. சரி; ஐயர். நீங்க போய் அந்த ஆளை அனுப்புங்க. என்ன கேக்கறான் அவன்?

ஐயர் : அவனைப் பார்த்தால் மிலிடேரி ஆள் மாதிரி இருக்குது.

பிர : இருந்தால் என்ன? உள்ளே அனுப்புங்கள்.

_( ஐயர் வெளியே போகிறார். அடுத்த நிமிஷத்தில் முருகேசு உள்ளே பிரவேசித்து ராணுவ தோரணையில் வணக்கம் (ஸல்யூட்) செய்கிறான்.)_

பிர : யார் நீ?

முருகேசு :** ** மை நேம் முருகேசு ஸார். (My name Murugesu Sir.)

பிர : என்ன வேணும்?

முரு : (ஜேபியிலிருந்து _ஒரு கவரை எடுத்து நீட்டுகிறான்.)_

பிர : (அதை _பிரித்துப் படித்துப் பார்த்துவிட்டு)_ வேலை வேணுமா?

முரு : ஆமாம் ஸார்.

பிர : மிலிட்டேரியிலே இருந்தாயா?

முரு : ஆமாம் ஸார். ரொம்ப தொலைவு சுத்தியிருக்கிறேன் ஸார்.

பிர : மிலிட்டேரியிலே என்ன வேலை பார்த்திக்கிண்டு இருந்தே?

முரு: ஸெண்ட்ரி ட்யூட்டி (Sentry duty.)

பிர : ஏன் வேலையை விட்டுவிட்டே?

முரு: அதான் டீமாப் (Demob) பண்ணிப்புட்டாங்களே. நான் ஒருத்தன் தானா? என்னைப் போல ஆயிரக்கணக்கான பேரை கலைச்சுப் புட்டாங்களே? சண்டை நிந்துச்சு; எங்க வேலையும் போச்சு.

பிர : என்ன வேலை செய்வே நீ?

முரு : என்ன வேலை கொடுத்தாலும் செய்யத் தயார். எனக்கு ஹிந்துதானி தெரியும்; இங்கிலீசு தெரியும்; தமிழ், தெலுங்கு, மலையாளம், எல்லாம் வரும். இவன் எகிப்துகாரன், இவன் ஈரான்காரன் என்று வித்தியாசம் கண்டு பிடிச்சு சொல்லுவேன். சீனாக்காரன், பர்மாக்காரன், அன்னாம்காரன், மலேயாக்காரன், இவங்க ஒவ்வொருத்தரையும் அடையாளம் கண்டுபிடிச்சு சொல்லுவேனுங்க. கடந்த நாலு வருஷமா சுத்தாத ஊரில் லேங்க; பார்க்காத இடமில்லேங்க.

பிர : அப்படியா?

முரு : ஜப்பல்பூர், பவால்பூர், ஹோஷியார்பூர், பிரோபூர், டினாஜ்பூர், டிமாபூர்…………

பிர : பூர், பூர்; போதும், போதும்.

முரு : இவ்வளவு தானுங்களா? கெய்ரோ, பக்தாத், டெஹ்ரன், ஏடன், இந்தப் பக்கம் ஹாங்காங், ஷாங்காய், காண்ட்டன் எல்லா ஊரும் தெரியுங்க.

பிர : சரி; இப்போ இங்கே வேலை ஒண்ணும் இல்லையே?

முரு : அப்படிச் சொல்லிப்புட்டா எப்படீங்க?

பிர : உன் அப்ளிகேஷனை இங்கு வைச்சுட்டுப் போ வேலை காலி ஏதாவது இருந்தா உனக்கு ஆள் விட்டு அனுப்பறோம்.

முரு : வாச்மேன் வேலை ஒண்ணும் இல்லேங்களா?

பிர : இப்ப ஒண்ணும் இல்லை.

முரு : எஜமான் வூட்டுக்கு வாச்மேன் தேவையில்லேங்களா?

பிர : நம்ப வூட்டுக்கு வாச்மேன் தேவையில்லை; வாச் டாக் (Watch dog - காவல் நாய்) இருக்குது.

முரு : எஜமான் என்னை நினைவு வைச்சு கூப்பிடணுங்க.

பிர : சரி; எனக்கு ரொம்ப வேலையிருக்குது. பியூன்!

முரு : நானே போறேனுங்க.

_(ராணுவ தோரணையில் ஸல்யூட் செய்துவிட்டுப் போகிறான்)_

இரண்டாவது களம்
இடம் : முருகேசுவின் குடிசை.

காலம் : காலை.

_(முருகேசுவின் தகப்பன் முனியனும், தாயார் முனியம்மாளும் குடிசையின் முன் பக்கத்திலுள்ள திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். உள்ளே முருகேசுவின் மனைவி பாப்பாத்தி யம்மாள் முணுமுணுத்துக் கொண்டே ஏதோ வேலை செய்து கொண் டிருக்கிறாள். தெருப்பக்கத்தில், முருகேசுவின் மகன் பத்து வயதுள்ள சின்னப்பனும், மகள் எட்டு வயதுள்ள சின்னம் மாவும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.)_

முனியன் : என்னமோ நாலு வருசமா வவுறு ரொம்ப கஞ்சி குடிச்சு கிணு இருந்தோம். இப்போ இன்னடான்னா பழைய குருடி கதவைத் திறடியா வந்திடுச்சு.

முனியம்மா : அப்போ சொன்னா கேட்டாத்தானே? சண்டையி லேந்து மவன் மாதா மாதம் பணம் அனுப்பிகிணு இருந்தான். கூத்தடிச்சே. அழு, நல்லா அழு.

முனியன் : நான் அழுதா உனக்கு திருப்தி தானே? அது உனக்கு இல்லையாங்காட்டியும்?

முனியம்மா : பின்னே என்னா, வவுறு எரியுது; சொல்றேன். நம்ம ரெண்டு பேரும் வயசானவங்க. என்னமோ, இன்னிக்கோ, நாளைக்கோ கண்ணை மூடிக்கப்போறோம். இதோ (தெரு _விலே விளையாடுகிற குழந்தைகளைக் காட்டி)_ இந்த இரண்டு குழந்தைங்க கதி என்ன ஆவுறது.

முனியன் : என்ன ஆவுறது? கடவுள் தான் காப்பாத்தணும்.

முனியம்மா : அதுங்க என்னா, நம்பளேபோல காலம்பர பழஞ் சோறு தின்றேன்னு சொல்லுதுங்களா? காபி, பலகாரம் ஓணும்னு சொல்லுதுங்க. காப்பி தூளுக்கு எங்கே போவறது? சர்க்கரைக்கு எங்கே போவறது?

பாப்பாத்தி : (உள்ளே _யிருந்தவண்ணம் குழந்தைகள் இரண்டு பேரையும் கூப்பிட்டு)_ சின்னப்பா! சின்னம்மா! விளையாடினது போதும். உள்ளே வந்து கலயத்தை எடுத்து வைச்சுகுங்கோ; சோறு போடறேன்.

சின்னப்பன் : பழஞ்சோறுதானே? எனக்கு வாணாம் போ. சுடச்சுட காபிதான் ஓணும்.

சின்னம்மா : ஆமாம்; எனக்குக்கூடதான்.

பாப்பாத்தி : காபி தூள், சர்க்கரை வாங்கிக்கிணு வர நாயனா வெளியே போயிருக்காரு. இப்போ பழஞ்சோறு தின்னுப் புடுங்கோ; நாளைக்கு காபி தரேன்.

சின்னப்பன் : எனக்கு இப்பவே காபி ஓணும். நாயனா சண்டை யிலே இருக்கச் சொல்ல, நிதம் காபி பலகாரம் குடுத்தீங்களே?

சின்னம்மா : அடிக்கடி சினிமாவுக்கு இட்டுக்கினு போனீங்களே?

முனியம்மா : ஆமாம்; உங்க அப்பன் அப்போ பணம் அனுப்பிச் சிட்டிருந்தான். உங்க தாத்தா செலவழிச்சாரு. இப்போ பாரு. தெருத்திண்ணையிலே குந்திக்கிணு அழுவறாரு. போங்கோ, உள்ளே போயி சோறு தின்னுங்க.

பாப்பாத்தி : வாங்க, எனக்கு நேரமாவுது. சாணிதட்டிப்புட்டு, தலை முழுகணும். அப்புறம் சோறு ஆக்கணும்.

சின்னப்பன் : ஹூஹூம். பழஞ்சோறு வேணாம். எனக்கு ஒரு அணா கொடு; ரொட்டி வாங்கித் தின்றேன்.

முனியன்: உனக்குக் கொடுத்தா, தங்கச்சிக்கும் கொடுக்கணு மில்லே?

சின்னம்மா : ஆமாம்; எனக்குந்தான் கொடுக்கணும். நான் மாத்திரம் பழஞ்சோறு தின்னுவேனா?

பாப்பாத்தி : எக்கேடாவது கெட்டுப் போங்கோ. எனக்கென்னா? உங்க வவுறு தான் காயப்போகுது.

_(உள் பக்கம் சென்று விடுகிறாள்)_

முனியம்மா : அப்பவே சொன்னா கேட்டாத்தானே? புள்ளாண் டான் சண்டையிலேந்து கொஞ்சமா அனுப்பிச்சுது? அம்பதும் நூறுமா அனுப்பிச்சுது. அதிலே அஞ்சு, பத்து மீத்தி வைச் சிருந்தா, இப்போ எவ்வளவு நல்லாயிருக்கும்? பத்து ரூபா சீட்டு பிடிக்கச் சொன்னேன். இரண்டடி நிலம் வாங்கிப் போட் டிருந்தா, அதிலே குடிசை போட்டுக்கிணு இருக்கலாமில்லே? இப்போ இந்த பொத்தல் குடிசைக்கு மாதம் இரண்டு ரூபா அழுவாதே இருக்காலமில்லே? (பொறுத்து) மருமவள்தான் கேட்டாளா? மாமனோடு சேர்ந்து ஆட்டம் போட்டா, பட்டுச் சீலையென்ன, பவுன் வித்த விலையிலே கழுத்துக்கு சங்கிலி என்ன, எல்லாம் சேஞ்சு போட்டுக்கிணா. போட்டுகிணா என்னமோ நல்லாதான் இருக்குது. ஆனால் அதுக்கு அந்தது வேண்டாமா?

பாப்பாத்தி : (உள்ளிருந்து _வெளியே வந்து)_ ஏன் என்னை பிடிச்சு இழுக்கிறீங்க? என் புருஷன், ராத்தூக்கமில்லாதே, பகலெல் லாம் உடம்பு ஒடிய வேலை சேஞ்சு, உசிருக்குப் பயந்து பயந்து சம்பாரிச்சு அனுப்பிச்ச பணத்தை செலவழிக்க எனக்கு அதிகாரமில்லையா?

முனியம்மா : அதிகாரம் - அதிகாரத்தைப் பாரு. பெத்தவளுக்கு இல்லாத அதிகாரம் வந்தவளுக்கு வந்துடுச்சாங்காட்டியம்?

முனியன் : ஏன் சண்டை போடுறீங்க? நாளைக்கே புள்ளாண்டான் நிறைய சம்பாதிக்கப் போறான்.

பாப்பாத்தி : ஆமாம்; அப்போ குந்திக்கினு தின்னலாம் எல்லாரும்.

முனியம்மா : வாயைப் பாரு. ஆத்தா வூட்லேந்து கொண்டு வந்தவ மாதிரி பேசறா.

பாப்பாத்தி : இல்லாகிட்டி இங்கே வாழ்ந்துதான் காட்டியம்? என்னமோ சண்டைக்குப் போனாங்க; ரெண்டு காசு சம்பாரிச் சாங்க. அதுக்கு முன்னே இருந்தது தெரியாதா? விறட்டி வித்து வவுறு வளர்த்த வங்கதானே? அந்த கால்வழி போகாமே எனக்கும் சாணி தட்ற வேலை அமந்தது இப்போ.

முனியன் : ஏய் சாதி பேசாதே. எங்க புராதனமெல்லாம் தெரிஞ் சாப்பலே பேசறா. வந்தவளுக்கு வாயைப் பாரு. போ உள்ளே.

சின்னப்பன் : அம்மா! அப்பா வராரு.

பாப்பாத்தி : போ. வரச்சேயே அதிகாரத்தோடதான் வருவாங்க.

(உள்ளே _போகிறாள்)_

_(முருகேசு சோர்ந்தவனாய் வருகிறான்)_

முனியன் : எங்கே தம்பீ, காலம்பரே சொல்லாமே கில்லாமே வெளியே போயிட்டே?

முருகேசு :** ** (த்ஹூ _கொட்டிக்கொண்டு)_ அந்த பட்டரை பரசு ராம நாய்க்கர் வரச்சொன்னாரு. யாரோ ஒரு பணக்கார முதலியார் இருக்காராம், அவர்கிட்டே ஏதாவது வேலைக்கு சிபார்சு பண்றேன்னு சொன்னாரு.

முனியன் : பாத்தியா அவரை?

முரு : பாத்தேன். அவங்களுக்கென்னா, வவுத்திலே பசியாயெடுக் குது? இன்னும் பத்து நாள் போவட்டும். முதலியார் கிட்டே நானே உன்னை அழைச்சுக்கிணு போறேன்,அப்படின்னாரு.

முனியம்மா : நீயே அந்த முதலியாரை நேரே பாக்கறதுதானே?

முனியன் : நாய்க்கர் ஏதாவது நெனச்சுக்கிணா? பொம்பளேங்க ளுக்கு என்னா தெரியும்?

முனியம்மா : என்னா தெரியும்? அரிசி கொணாந்தா ஆக்கிப் போடத் தெரியும். (எழுந்து _விர்ரென்று உள்ளே போகிறாள்.)_

முரு : (முனியம்மா _உட்கார்ந்திருந்த இடத்தில் உட்கார்ந்து உள் பக்கம் பார்த்து)_ வவுத்துக்கு ஏதாவது இருக்குதா?

பாப்பாத்தி : (உள்ளிருந்தபடியே) பழஞ்சோறுதான் இருக்குது.

முரு : அது யாருக்கு ஓணும்?

சின்னப்பன் : பாத்தியா, அப்பா சாப்பிடமாட்டேன்றாரு; நாங்க மாத்திரம் சாப்பிடுவோமா?

மூன்றாவது களம்
இடம் : புதிதாகக் கட்டப்பெற்று வரும் ஒரு வீடு.

காலம் : முற்பகல்.

_(ராணுவ கண்ட்ராக்டர் அதபூஷண முதலியாரின் வீடு புதுப்பிக்கப் படுகிறது. கொத்தர்களும் சிற்றாள்களும் வேலை செய்து கொண் டிருக் கிறார்கள். அதபூஷண முதலியாரின் மனைவி குணபூஷணி அம்மாள் மேற்பார்வை செய்கிறாள். பக்கத்தில் ஒரு வேலைக்காரன், அம்மாள்மீது வெயில் படாமலிருக்க ஒரு குடை பிடித்து நிற்கிறான்.)_

குணபூஷணி : ஏ பொம்பளே! என்ன அங்கே சதிர் ஆட்றே? ஜல்தி ஜல்தி செங்கல்லைக் கொண்டு மேலே கொடு. ஏ சித்தாள்! வெத் திலை பாக்கு போட்டுகிறதுக்கா உனக்குக் கூலி கொடுக்கிறது?

ஒரு கொத்தன் : இந்த பொம்பள இன்னா இப்படி அதிகாரம் பண்றா? ஐயா, பாவம், பசு போல இருக்கிறாரு; இவ என்ன டான்னா ஆர்ப்பாட்டம் பண்றா.

இன்னொரு கொத்தன் : புதுப்பணம் படைச்சா இப்படித்தான்.

_(மோட்டார் டிரைவர் வேகமாக வருகிறான்.)_

மோட்டார் டிரைவர் : ஐயா வெளியிலே பொறேன்னு சொல்லச் சொன்னாரு.

குண : சரி; சாயந்திரம் ஜல்தி வந்துடச் சொல்லு. சினிமாவுக்கு போகணும்.

மோ-டிரைவர் : சரீங்க (போகிறான்)

குண : டிரைவர், டிரைவர்! வருகிறபோது அந்த ரேடியோ ரிப் பேராச்சா என்னு கேட்டு வரச் சொல்லு. (சரீங்க _என்று சொல்லிவிட்டு டிரைவர் வேகமாகப் போய்விடு கிறான். பிறகு தனக்குள்)_ ஒரு வாரமாக ரேடியோ இல்லாமல் என்ன கஷ்டமா யிருக்குது? இந்த வீட்டு வேலை ஏற்பட்டாலும் ஏற்பட்டது, சாயந்திரம் சாயந்திரம் பீச்சுக்கும் போக
முடியல்லே; சினிமா வுக்கும் போக முடியல்லே. (பக்கத்திலே _குடை பிடித்துக் கொண்டிருக்கிற ஆளிடம்) தவசுப்பிள்ளையை, ஸெகண்ட டோ (இரண்டாவது முறை)_ காபி கொண்டுவரச் சொல். வெயில் கொளுத்தறது. உ…………

வேலைக்காரர்களிலே ஒருவன் : (தனக்குள் _முணு முணுத்துக் கொண்டே)_ நிழலிலே இருக்கவங்களுக்கு வெயில் காயுது. வெயிலிலேயே காயறவங்களுக்கு, வெயில் உறைக்கவே மாட்டேன்குது.

_(தவசுப்பிள்ளை காபி கொண்டு வந்து கொடுக்கிறான். குணபூஷணி அம்மாள் குடிக்கிறாள்.)_

ஒரு பெண் சிற்றாள் : அம்மா, குழந்தை அழுவுது, பால் கொடுத்துட்டு வரேன்.

குண : இது என்ன, அடிக்கடி இப்படி வேலையை விட்டுவிட்டு போனா கூலியை பிடிச்சுடுவேன். வேலை மேலே வறபோது குழந்தையை ஏன் தூக்கிகொண்டு வறே?

பெண் சிற்றாள் : ஆறு மாதம் கூட ஆகல்லே அம்மா. வூட்லே எப்படி வுட்டுட்டு வறது?

குண : அப்படீன்னா வீட்டிலேயே இருக்கிறது. வேலைக்கு வரக் கூடாது.

பெண் சிற்றாள் : வவுத்துக் கொடுமைதான்அம்மா.

குண : சரி; போய் ஜல்தி வா.

_(முருகேசு பிரவேசித்து மிலிட்டேரி ஸல்யூட் செய்கிறான்.)_

குண : யார் நீ?

முருகேசு :** ** மிலிட்டேரியிலிருந்து வந்தவனுங்க.

குண : என்ன வேணும்?

முரு : ஏதாவது வேலை.

குண : வேலையென்ன கையிலேயா வைச்சுக்கொண்டிருக்கிறேன்? இப்போ வந்து கேட்கறயே?

முரு : எப்போ உத்தரவிட்றீங்களோ அப்போ வரேன்.

குண : இப்போ வேலை ஒன்றும் இல்லை. வேறே எங்கேயாவது போய் பாரு. (தனக்குள்) பெரிய தொல்லையா போச்சு இது. மிலிட்டேரியைக் கலைச்சாலும் கலைச்சாங்க, பொழுது போனா பொழுது விடிஞ்சா, வேலையிருக்குதான்னு வந்து கேட்கிற கூட்டம் அதிகமாகப் போச்சு. பிச்சைக்காரர் தொந் தரவைவிட இவங்க தொந்தரவு அதிகமாகப் போச்சு.

முரு : வேலையில்லேன்னா போயிட்றேன் அம்மா; பிச்சைக்காரன், கிச்சைக்காரன்னு சொல்லவாணாம்.

குண : அதிகம் பேசாதே. காம்பவுண்டை விட்டு வெளியே அனுப்பிச்சுப்புடுவேன்.

முரு : அதுக்கில்லேம்மா, வேலை கேக்க வந்தேனே தவிர பிச்சை கேக்க வல்லேன்னு சொன்னேன்.

குண : அப்படி மரியாதையா பேசு. மிலிட்டேரியிலே இருந்தேன்னு சொன்னா, எல்லாரும் பயப்படுவாங்கன்னு பாத்தியா? 1942-ம் வருஷம் மார்ச்சு-ஏப்ரல் மாதத்திலே இவாகியுவேஷன் சமயத் திலே கூட, நாங்க மத்தவங்களை போல பயந்துண்டு ஓடல்லே. மதராசிலேதான் இருந்தோம். தெரியுமா?

முரு : வீடு வாசலே வுட்டுட்டுப் போக மனசு வருங்களா?

குண : அந்தத் தத்துவமெல்லாம் உன்னைக் கேக்கலே. போ, வெளியே.

முரு : வேலை ஏதாவது………….

குண : அதுதான் இப்போது ஒன்றுமில்லையென்று சொன்னேனே.

முரு : நீங்க மனசு வைச்சா ஏதாவது ஒரு வேலையிலே என்னை வைக்கக்கூடாதா? புள்ளைகுட்டிக்காரன். தள்ளாதவங்க தாயாரும் தகப்பனாரும் இருக்காங்க. எந்த வேலை வேண்டுமா னாலும் செய்யறேன்.

குண : நிறுத்து உன் பாரதக் கதையை.

_(சைக்கிளில் ஒருவன் ஒரு பொட்டலத்தை எடுத்து வந்து குணபூஷணி அம்மாளிடம் கொடுக்கிறான்.)_

குண : என்ன அது?

சைக்கிளில் வந்தவன் : வில்காக் கம்பெனியிலே டாக் பிகட் (நாய் தின்கிற பிகோத்து) ஆர்டர் பண்ணி இருந்திங்களாமே, அது டெலிவரி கொடுத்துட்டு வரச் சொன்னாங்க.

குண : யெ, யெ. (Yes,Yes) பில் கொடுத்தாங்களா?

சைக்-வந் : இதோ. (ஒரு _கவரை நீட்டுகிறான்.)_

குண : (பிரித்துப் _பார்த்துக்கொண்டே)_ சிக் எய்ட் (Rs.6-8-0) சார்ஜ் பண்ணியிருக்காங்களா; ரைட். (Right) (பக்கத்தில் _குடை பிடித்துக் கொண்டிருக்கிற ஆளிடம், இடுப்பிலிருக்கும் கொத்துச் சாவியை எடுத்துக் கொடுத்து)_ பீரோவை திறந்து சின்ன இரும்புப் பெட்டி யிலேயிருந்து ஆறரை ரூபாய் எடுத்துக் கொண்டு வா. ஜாக்கிரதை யாய் பெட்டியையும் பீரோவையும் பூட்டிக்கொண்டு வா.

_(அவன் அப்படியே சாவியை வாங்கிக்கொண்டு போகிறான்.)_

குண : (முருகேசுவைப் _பார்த்து)_ நீ ஏன் இன்னும் நிக்கறே? வேலை இல்லேன்னுதான் அப்பவே சொன்னேனே. ஒருதரம் சொன்னா உனக்கு அறிவில்லே?

முரு : அறிவு இருக்குது அம்மா; அதை உபயோகிச்சுக் கொள்ற வங்கதான் இல்லே. (பொறுத்து) பசியாற்றதுக்கு ஒரு இரண் டணா இருந்தா கொடுங்களேன்.

குண : சற்று நேரத்திற்குமுன்னே நான் பிச்சைக்காரன் இல்லேன்னு சொன்னாயே?

முரு : எல்லாம் வவுத்துக் கொடுமைதான்அம்மா!

குண : சரி; இது கஜானா இல்லை. பணம் கொடுக்கிறதுக்கு. வந்த வழியே பார்த்துண்டு போ.

முரு : ஹூம்.

_(பெருமூச்சு விட்டுக்கொண்டே போகிறான்.)_

நான்காவது களம்
இடம் : பாதையோரத்தில் ஒரு மரத்தடி.

காலம் : நண்பகல்.

_(முருகேசு களைப்புற்றவனாய் வந்து உட்கார்ந்து கொண்டு, மரத்தின் மீது சாய்ந்தவண்ணம் தனக்குள்ளேயே பேசிக் கொள்கிறான்.)_

முருகேசு : நாலு வருஷமா சண்டைக்குப்போயி சங்கடப்பட்டேன். உசிருக்குப் பயந்தேனே தவிர, பசிக்குப் பயப்படவில்லை. இப்போ என்னடான்னா, பசிக்குப் பயந்து உசிரை விட்டுடணும் போலே இருக்குது. (பொறுத்து) அடே, துப்பாக்கிப் பிடிச்சு நிந்த கோலமென்ன? இப்போ கண்ட வங்ககிட்டேயும் கை யேந்தி நிற்கிற காலம் என்ன? கடவுளே! கடவுளே! (பொறுத்து) வேலைக்காக எந்த இடத்துக்குப் போனாலும் இல்லேன்னு கையை விரிக்கிறாங்களே தவிர ஒருத்தராவது உண்டுன்னு சொல்லி ஒரு வேலை கொடுக்கமாட்டேங்கிறாங்க. காலெல் லாம் கடுக்குது. (மேல் _துணியை எடுத்துப் பிரித்துக் கீழே போட்டுக் கொண்டு படுக்கிறான். மேலே பார்த்த வண்ணம்)_ வூட்லே புள்ளே குட்டிங்கள்ளாம் என்னா கத்துதுங் களோ? பாப்பாத்தி, ஏன் இன்னும் வல்லேன்னு தெருவிலே பார்த்துகிணு இருப்பா. (வெறுப்புடன்) இருக்கட்டும் அவங் களை யெல்லாம் காப்பாத்தவா நான் பொறந்தேன்? இருந்தா இருக்காங்க, செத்தா சாவுறாங்க. (அப்படியே _கண்மூடிக் கொள்கிறான்.)_


ஆபத்திலே வேற்றுமை

முதற் களம்
இடம் : அருளய்யாவின் பங்களா.

காலம் : மாலை.

_(அருளய்யா ஒரு மிராசுதார். ஊரில் சொத்து பற்று நிறைய இருக்கிறது. இந்த வருமானத்தை வைத்துக் கொண்டு நகரவாசம் செய்கிறார். நாகரிகமாக வாழ்க்கை நடக்கிறது.)_

அருளய்யா : (பங்களாவின் _உட்புறம் தாழ்வாரத்தில் உலவிக் கொண்டே)_ அடே துரை! பேபி! வெளியில் எங்கேயும் திரிந்து கொண்டிராதீர்கள். ஸைரன் கிய்ரன் ஊதித் தொலைக்கப் போகிறான்கள்.

துரை : ஏனப்பா உங்களுக்கு இப்பொழுது திடீரென்று அந்த நினைவு வந்துவிட்டது?

அ : இல்லையடா, நிலவுகாலமல்லவா இப்பொழுது? நீங்கள் பாட்டுக்கு, நல்ல நிலாவாயிற்றேயென்று ஊர் சுற்றிக்கொண் டிருந்தீர்களானால், வேதனைப்படுவது யார்?

பேபி : ஏன் இப்படி பயப்படுகிறீர்கள்? நாங்கள் என்ன சின்ன குழந்தைகளா?

அ : இல்லை, இல்லை; பெரிய மனுஷ்யர்கள்!

து : அதற்கில்லையப்பா, பீ.ஏ.வும் இண்டர்மீடியட்டும் படிக்கிற பிள்ளைகளுக்கு ஸைரன் (Siren -அபாய அறிவிப்புச் சங்கு) ஊதினால் ஷெல்ட்டர் (Shelter-ஒதுக்கிடம்) எடுத்துக் கொள்ளத் தெரியாதா?

அ : ஷெல்ட்டர் இல்லாத இடத்தில்?

பே : அதுதான் அங்கேயே டிரெஞ்ச் (Trench - ஆள் பதுங்கிக் குழி) வெட்டி விட்டிருக்கிறார்களே?

அ : அட, டிரெஞ்சு ம் இல்லாமற் போச்சு?

து : எங்காவது வீட்டுக்குள் புகுந்துவிடுகிறோம். இதற்கெல்லாம் கூட விசாரமா?

பே : ஆபத்து வந்த பிறகு அதைச் சமாளிக்க எல்லாரும் பிரயத்தனப் படுவார்கள். ஆனால், அப்பா, ஆபத்து வராமலிருக்கையிலேயே அதனை எப்படிச் சமாளிக்க போகிறோமென்று கவலைப்படு கிறார்.

அ : உங்களுக்கென்னடா தெரியும் காலம் இருக்கிற கோலம்? கிரோசின் அகப்படமாட்டேன் என்கிறது. விறகு அகப்பட மாட்டே னென்கிறது; உளுத்தம்பருப்பு கெட்ட கேடு படி ஒரு ரூபாயாம்!

து : நமக்கேன் இந்த விசாரமெல்லாம்? நம் வீட்டில்தான் எலக்ட்ரிக் விளக்கு எரிகிறது; தோட்டத்திலே நிறைய மரம் இருக்கிறது விறகுக்கு; உளுத்தம் பருப்பு இல்லையென்றால் பயத்தம்பருப்பு இருக்கிறது இதற்காக என்ன கவலை?

பே : ஆமாம்; ஸைரன் ஊதினால் ஷெல்ட்டர் எடுத்துக் கொள்வதற்கும், மண்ணெண்ணெய், விறகு பருப்பு முதலியவை கள் அகப்படவில்லை யென்பதற்கும் என்ன சம்பந்தம்?

அ : அதற்கில்லையடா! இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு உங்களைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது; நீங்களென்னவென் றால் வேளை, சமயம் ஒன்றுமில்லாமல் ஊர் சுற்றுகிறோமென்கி றீர்கள்.

து : அப்படி எங்கே ஊர் சுற்றி எந்த ஆபத்திலே அகப்பட்டுக் கொண்டோம்.?

அ : அகப்பட்டுக்கொள்ளப் போகிறீர்களே யென்றுதான் எச்ச ரிக்கை செய்கிறேன்.

பே : நடவாத விஷயத்தைப் பற்றிக் கவலை; நடக்கவேண்டியதைப் பற்றி அலட்சியம். பெரியவர்களுடைய சுபாவமே இப்படித் தான்.

அ : சரி, சரி. சாப்பிட்டுவிட்டீர்களா? இந்தக் காலத்தில் பொழு தோடு சாப்பிட்டுத் தொலைத்துவிட வேண்டியிருக்கிறது. (சிறிது _உரத்த குரலில்)_ அடே முனியா!

_(தோட்டக்கார முனியன் வருகிறான்.)_

அ : அடே, தெருப்பக்கம் வராந்தா கதவைப் பூட்டினையா?

மு : பூட்டிவிட்டேனுங்க.

அ : உள்பக்கந்தானே?

மு : ஆமாங்க.

அ : நான் மறு உத்தரவு சொல்கிறவரையில் சாயந்திரம் பொழு தானதும், வராந்தா கதவை உள்பக்கம் பூட்டி விட வேண்டும். அதற்குப் பிறகு நடமாட்டமெல்லாம் புழக்கடை பக்கந்தான்.

மு : உத்தரவுங்க. அப்படித்தான் இப்போ நடந்து வருதுங்க.

அ : அடே துரை! பேபி! எப்போழுதும் கையில் பஞ்சும் பென்சிலும் தயாராக வைத்திருங்கள்; தெரிகிறதா? ஸைரன் ஊதினா னென்று சொன்னால், காதிலே பஞ்சை வைத்து அடைத்துக் கொள்ள வேண்டும்; வாயிலே பென்சிலை இடுக்கிக்கொள்ள வேண்டும். தெரிகிறதா?

து : பே : (இருவரும் _சிரிக்கி றார்கள்)_

அ : என்னடா சிரிக்கிறீர்கள் முட்டாள் பசங்களா? ஜன்னல் கதவுகளையெல்லாம் இழுத்துச் சாத்திக் கொண்டு, கீழே குப்புறப் படுத்துக் கொண்டு விட வேண்டும்.

து : அடேயப்பா, எவ்வளவு உஷார்?

அ : உஷாரில்லாமல் என்ன? ஏழைபாழைகளுடைய உயிர்களைப் போலவா நம் முடைய உயிர்கள்? (தோட்டக் _காரனிடம்)_ அடே முனியா! சங்கு ஊதினது கேட்டு, யாராவது பிச்சைக்காரர்கள், கூன், குருடு,செவிடுகள் உள்ளே வந்து ஒட்டிக்கொள்ளப் பார்ப் பார்கள். அவர்களுக்கெல்லாம் இடங்கொடுக்கக் கூடாது.

மு : ஆமாங்க, அவங்களுக்கெல்லாம் இடங்கொடுக்கலாங்களா?

_(இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறபோதே ஸைரன் ஊதுகிறது. அவரவரும் முகத்தில் கவலை தட்ட பரபரப்புடன் உள் பக்கம் ஓடுகிறார்கள்.)_

அ : நான் அப்பொழுதே சொன்னேனே பார்த்தீர்களா? பரிகாசம் பண்ணினீர்களே? அடே, வாயைத் திறக்கக்கூடாது. அவர வரும் கப்சிப்பென்று அந்த நடு உள்ளில் சென்று கவிழ்ந்து படுத்துக் கொள்ள வேண்டும். அம்மா, பாட்டி எல்லாரையும் கூப்பிடுங்கள்; காரியம் அப்புறம் செய்து கொள்ளலாம்.

பாட்டி :** ** (உள்ளிருந்து) அடே அருளு! நீ உள்ளே வா.

அ : இதோ வருகிறேன். அடே துரை! நம்ப நாய் ரோ எங்கேடா? அதையும் உள்ளே அழைத்துக் கொண்டு போ. அது எங்கேயா வது செத்துகிடக்கப் போகிறது. அடே முனியா! தெருக்கத வண்டை உள்பக்கமாக உட்கார்ந்திரு. நீயும் எங்களைப் போல குப்புறப் படுத்துக்கொண்டுவிடாதே. ஒன்றும் பயமில்லை. யாரும் வராமல் பார்த்துக்கொள்.

மு : உத்தரவுங்க.

_(அருளய்யா உட்பக்கம் போய்விடுகிறார். சங்கு ஊதிக்கொண்டே யிருக்கிறது. முனியன், எஜமானன் சொற்படி உட்கார்ந்து கொள்கிறான். அந்தச் சமயத்தில் ஓர் ஏழை தீரி,இடுப்பிலே குழந்தையுடன், கண்ணில்லாத தன் கணவனை, கோல்பிடித்து அழைத்துக் கொண்டு வருகிறாள்.)_

திரீ : ஐயா, கொஞ்சம் இடங்கொடுங்கய்யா! (குழந்தை அழுகிறது) அழுவாதே! அழுவாதே! ஐயா! கண்ணில்லாத கபோதியை இட்டுக்கிணு வந்திருக்கேன் ஐயா! கொஞ்சம் கதவை திறவுங்க ஐயா!

மு : தா, கத்தாதே. ஐயா கோவிச்சுக்குவாங்க. வெளியே போயிடு.

: எங்கே ஐயா போறது? ரோட்டிலே போனா உள்ளே போ போன்னு நெட்டி பிடிச்சு தள்றாங்க.

கண்ணில்லாத புருஷன் : ரவை பெரிய மனசு பண்ணுங்க ஐயா! பசுமாடு கத்தறதே பார்த்தாலே உங்க மனசு இரங்கலையா? குயந்தே வீல் வீல்னு கத்துதுங்களே.

மு : அடே என்னாய்யா என்னை பிடிச்சு எஜமான் திட்ட போறாங்கோ.

அ : (உள்ளிருந்தபடியே) யார் அது? எனக்குத் தெரியுமே முன்ன மேயே? பிச்சைக்கார நாய்களை ஏன் உள்ளே விட்டே?

: சாமி! கொஞ்சம் கதவைத் திறவுங்க! ஐயா! ரொம்ப பயமா இருக்குது.

க.பு : எல்லா உசிரும் ஒண்ணுதானே ஐயா! கொஞ்சம் தயவு பண் ணுங்க ஐயா!

அ : நாய்க்கு வாயைப் பார். எல்லா உயிரும் ஒன்றுதானாம்! அடே முனியா! உனக்கு மூளை இல்லை? கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளக்கூடாது?

மு : கதவு உள்புறமா பூட்டியிருக்குதுங்களே; நான் எப்படி அவுங்களை கழுத்தைப் பிடிச்சு தள்றது?

: ஐயா! ஈவு இரக்கமில்லையா? புள்ளே குட்டி பெத்தவங்க இல்லையா நீங்க?

க.பு : ஐயோ, நாய் அழுவற மாதிரி இருக்குதுங்களே இந்த சங்கு ஊதறது; அடிவயத்தையே கலக்குதே. ஐயா! ரவை உள்ளே இடம்விடுங்கய்யா. எல்லாரும் கடவுளின் கீழே குடியிருக்கப் பட்டவங்க தான் ஐயா!

து : (உள்ளே _யிருந்து)_ அப்பா! கதவைத்திறந்து அவர்களை உள்ளே வரச் சொல்லுங்களேன். அவரவர் உயிர் அவரவருக்கு வெல்லந்தானே?

அ : சரி, சரி, உன்னுடைய தருமோபதேசம் இங்குத் தேவையில்லை. ஏ பொம்பளை! அண்டை வீடு, எதிர் வீடு எங்கேயாவது போய் ஒண்டிக்கொள்.

: நான் வெளியே நிந்துக்கறேன். உசிரு போனா போவுது. இந்தக் குழந்தையையும் கண்ணில்லாத இவரையும் மட்டும் உள்ளே இட்டுக்கொள்ளுங்க ஐயா!

அ : (உள்ளிருந்து) இதென்னடா நச்சு! இந்த பொம்பளைகள் சமாசாரமே இப்படித்தான். ஏய்! உன் உசிரு போகலாமின்னா அவங்க உசிருந்தான் போகட்டுமே. ரொம்ப துணிஞ்சவள் மாதிரி பேசறயே!

_(ரோட்டிலிருந்து ஏ.ஆர்.பி. தொண்டர் விசில் அடிக்கிறார்.)_

ஏ.ஆர்.பி. தொண்டர் : ஏய், யாரது வெளியே நிக்கறது? உள்ளே போ.

அ : (உள்ளிருந்து) வெளியே போ.

: வெளியே இருக்கப்பட்டவங்க உள்ளே போன்றாங்க; உள்ளே இருக்கப்பட்டவங்க வெளியே போன்றாங்க. எங்கேதான் போவறது?

அ : (உள்ளிருந்து) செத்துப்போறது.

து : (உள்ளிருந்தபடியே) ஏழையாய்ப் பிறந்தவர்களுக்கு அது ஒன்றுதான் சுலபமான வழி!

க.பு : சரி. வா, ஐயாதான் வழி சொல்லிக் கொடுத்துப் புட்டாரே; வா. எங்கேயாவது மரம் இருக்குதா பாரு! அதன் கீழே போய் குந்திக்கலாம்.

: வீட்டைத்தான் கல்லாலே கட்டிக்கிணாங்க! மனசு கூடவா கல்லாகிவிடணும்! கடவுளே! கடவுளே!

க.பு : கடவுளு! கடவுளு! அவரு எங்கே இருக்காரு? அப்படி இருந்தாரானா, அவரும் என்னைப்போல கபோதியாகத்தான் இருக்கணும்.

இரண்டாவது களம்
இடம் : ஒரு சாலை.

காலம் : மேற்படி சம்பவம் நடந்த மறுநாள் மாலை.

_(அருளய்யாவும் அவர் மனைவியும் காற்று வாங்கிக் கொண்டே நடந்து செல்கிறார்கள்.)_

அருளய்யா : நான் சொல்கிறேன் கேள்; வீண் பிடிவாதம் பிடிக் காதே. தங்கம் விற்கிற விலையிலே என்ன நகைகள் பண்ண முடியும்? வெள்ளி விற்கிற விலையிலே என்ன பாத்திரங்கள் செய்ய முடியும்? சண்டை நிற்கட்டும். எல்லாம் விலை குறையப் போகிறது. வேணது செய்துகொள்ளலாம்.

மனைவி : அதுவரையில் யார் இருக்கிறார்களோ? யார் காயம் என்ன நிலை?

அ : அட பைத்தியமே! நமக்கெல்லாம் இப்பொழுது சாவே கிடையாது. இன்னும் எத்தனையோ வருஷங்கள் இருக்க வேண்டும்; எவ்வளவோ அனுபவங்கள் அனுபவிக்கவேண்டும்.

ம : அந்த வேதாந்தமெல்லாம் வேண்டாம். இப்பொழுது நான்கு பேருக்கு மத்தியில் கௌரவமாய் இருப்பதை விட்டு விட்டு………………….

அ : இப்பொழுது கௌரவத்திற்கு என்ன குறைச்சல்? வைர அட்டிகை தவிர உனக்கு எல்லாந்தான் இருக்கிறதே.

ம : அதுதான் வேண்டுமென்கிறேன்.

அ : அப்புறம் ஆகட்டுமே என்கிறேன்.

ம : முடியாது. நாளைக்கு துரைக்கு யாராவது பெண்ணைக் கொடுப்பதாக வந்தால் அவர்கள் எதிரில் நான் வெறுங் கழுத் தோடவா போய் நிற்பது?

அ : அதுவும் நியாயந்தான், நாளைக்கே கம்பெனியில் ஆர்டர் கொடுத்து விடுகிறேன்.

_(ரோட் ஓரத்தில் ஒரு குடிசை, குடிசைக்கு முன்புறத்தில் ஓர் ஏழைக்குடியானவன் தன் மனைவியுடன் களைப்புத்தீர பேசிக் கொண்டிருக்கிறான். அவர்களுடைய குழந்தை எதிரில் விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்தச் சமயத்தில் அபாயச் சங்கு ஊதுகிறது.)_

குடியானவன் மனைவி : ஐயய்யோ, வவுத்தே கலக்குது. வாடா கண்ணு! (குழந்தையை _வேகமாக ஓடிவந்து எடுத்துக்கொண்டு கணவனிடம்)_ நீயும்உள்ளே வந்துடு.

_(அருளய்யாவும் அவர் மனைவியும் சங்கு ஊதலைக்கேட்டு, என்ன செய்வது, எங்கே சென்று பதுங்குவது என்று திகைக்கிறார்கள்.)_

குடியானவன் : ஐயா! உள்ளே வந்துடுங்க. வெளியிலே நிந்தா ஆபத்து.

ம : இந்தக் குடிசைக்குள்ளேயா போய் நுழைவது?

அ : வா, வா! அதெல்லாம் இப்பொழுது பார்த்தால் முடியாது.

கு : ஏம்மா தயங்குறிங்க? ஆபத்திலே ஏழை பணக்காரருன்னு வித்தியாசம் பார்த்தா முடியுங்களா?

ம : நம்மள் அந்ததென்ன, கௌவரமென்ன. ஆபத்து என்று சொல்லிக்கொண்டு இந்தக் குடிசைக்குள்ளேயா போய் உட்காரு வது? போகிற பிராணன் எங்கிருந்தாலுந்தான் போகப்போகிறது. வெளியில் தானே நிற்போமே?

கு : அந்ததை பாக்கிறிங்களே தவிர ஆபத்தே பாக்கல்லியே? வாங் கம்மா வாங்க, உள்ளே வாங்க. உங்களுக்கும் ஐயாவுக்கும் ஒரு பக்கமா ஒழிச்சு விடறோம். கொஞ்ச நேரத்துக்கு குந்திக்கினு இருந்தீங்கன்னா. திரும்பவும் சங்கு பிடிச்சா நீங்க வெளியே வந்துடலாம் பாருங்க.

அ : வா, வா; சங்கு அழுவது நிற்கப்போகிறது.

ம : (முகஞ் _சிணுங்க)_ உள்ளே ஒரே அழுக்கா யிருக்கும்.

கு : இருக்கலாங்கோ, ஆனா அன்போடு கூப்பிட்ரேனுங்களே? அழுக்கு பெரிசா? அன்பு பெரிசா?

கு-ம : வாங்கம்மா உள்ளே. ஆபத்து நெருங்கிக்ணு வருது. இடம் அகப்பட்டா போதுமிண்ணு அவங்கவங்க ஓடி ஒளியறாங்கோ.

கு : உ; பெரிய மனுசருங்கோ; அவங்களையெல்லாம் அதிகமாக ஒண்ணும் பேசாதே.

கு-ம : நான் என்ன பேசிப்புட்டேன்? உள்ளே வரச் சொல்றேன்; அவ்வளவுதானே?

_(ரோட்டில் ஏ.ஆர்.பி.தொண்டர் ஒருவர் சைக்கிளில் விசில் ஊதிக்கொண்டே போகிறார்.)_

தொண்டர் : யார் ஸார் அது? உள்ளே போங்க. (பொறுத்து) என்னா ஸார் முறைச்சு பார்க்கிறீங்களே? அந்தக் குடிசைக் குள்ளேதான் போய் கொஞ்சநேரம் இருங்களேன்.

ம : வந்துடுங்கோ ; வந்துடுங்கோ.

அ : தேளுக்கு அதிகாரங்கொடுத்தாற்போலேதான்.

கு : அவங்க சொல்றது நெசந்தானுங்களே. குண்டு விழுந்தா, பணக்காரர், ஏழைன்னு வித்தியாசம் பார்த்தா விழப்போவுது? எல்லாருக்கும் ஆபத்து ஒண்ணுதானுங்களே. வாங்க, உள்ளே வாங்க, அம்மா! பயப்படாமே வாங்க. நாங்கள்ளாம் குடியானவங்க; கஷ்டப்பட்டு கஞ்சி குடிக்கிறவங்க; அண்ணன், தங்கைகளோடு வாழறவங்க; ஈவு, இரக்கம் உடையவங்க. உள்ளே வாங்க.

_(எல்லோரும் குடிசைக்குள் செல்கிறார்கள். அழுகைச் சங்கு நிற்கிறது. மேலே ஆகாய விமானங்கள் பறக்கின்றன.)_


பசிக்கொடுமை

முதற் களம்
இடம் : பாதையோரத்தில் ஒரு மரத்தடி.

காலம் : பிற்பகல்.

_(இரண்டு கந்தல் பாய்கள் கீழே விரிக்கப்பட்டிருக்கின்றன. சில கந்தல் துணிகள்,இரண்டொரு கிழிந்த புதகங்கள், தகரக்குவளை, மூன்று நான்கு கரிய சட்டி பானைகள் முதலியன மூலைக்கொன்றாய் அலங்கோலமாகக் கிடக்கின்றன. மாணிக்கம் சோர்ந்துபோய் ஒரு பாயின்மீது உட்கார்ந்து கொண்டிருக்கிறான்)_

மாணிக்கம் : (தனக்குள்) அறங்கையும் புறங்கையுமாய் நக்குகிற வாழ்க்கை யென்று சொல்லுவார்கள். அதற்குக்கூட மோசம் வந்து விட்டது இப்பொழுது. ஹூம், வெள்ளம் வடிந்து எத்த னையோ நாட்களாகின்றன; ஆனால், நமது கஷ்டம் விடியவே இல்லை. பாவம், தனபாலன் தினந் தோறும் எத்தனை இடங் களுக்குத்தான் போய்வருவான்? யாராவது முகங் கொடுத்துப் பேச வேண்டுமே? எத்தனை பேரிடத்தில் உழைத்திருப்பேன். எத்தனை பேருடைய தோட்டங்களில் என் வியர்வையைக் குடம் குடமாகக் கொட்டியிருப்பேன்? எஜமான்மார்களுடைய மனம் குளிர்ந் திருக்க வேண்டுமென்பதற்காக இரவெல்லாம் கண் விழித்து எத்தனை பேருடைய கால்களை அமுக்கியிருப் பேன்? ஒருவருக்காவது கொஞ்சம் இரக்கம் இருக்கவேண் டுமே? உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்க வேண்டுமென்று சொல்கிறார்கள். வாதவம், ஆனால், உடல் நோக உழைத்தவர் களை ஒரு கணத்திலே மறந்துவிட்டு உயிரோடு கொன்று விடலாமா? இதென்ன நியாயம்? ஏழைகளுக்கு மட்டுந்தான் நன்றி விசுவாசம் இருக்கவேண்டுமாம்! அட உலகமே! நன்றிகெட்ட உலகமே!

_(தனபாலன் தள்ளாடிக்கொண்டு வருகிறான்)_

மாணி : வா! தனம்! என்ன சமாசாரம்? கண், மூஞ்சியெல்லாம் உள்ளே போயிருக்கிறதே? வயிற்றுக்கு ஒன்றுமே அகப்பட வில்லையா? இந்தா, குவளையில் கொஞ்சம் கஞ்சி வைத்திருக் கிறேன். அதையாவது குடி.

_(கை நீட்டி அதை எடுக்கப் போகிறான்)_

தனபாலன் : வேண்டாம் அப்பா! நீங்கள் உடம்பை அலட்டிக் கொள்ள வேண்டாம்.

மாணி : அலட்டிக்கொள் ளாமல் இன்னும் எத்தனை வருஷத்திற்கு இந்த உயிரைக் காப்பாற்றி வைத்துக் கொண்டிருக்க வேண்டும்? போகிற பிராணன் சீக்கிரமாகத் தான் போகட்டுமே.

தன : அப்படியெல்லாம் சொல்ல வேண்டா மப்பா! உங்களுக்கு ஒரு வேளையாவது சோறும் கறியுமாக ஆகாரம் கொடுக்கவேண்டு மென்று பார்க்கிறேன். அதற்குப் பணம் அகப்படமாட்டே னென்கிறது. நானும் மூன்று நாளாக அலைகிறேன்.

மாணி : நீ ஏன் வீணில் அலையவேண்டும்? அகதியாகப் போனவர் களுக்கு ஆகாரம் எங்கிருந்து கிடைக்கும்? அஜீரணக்காரனுக்கு மருந்து கொடுத்தாவது ஆகாரத்தைத் திணிக்கிற காலமல்லவா இது? இருக்கட்டும். அந்தக் கஞ்சியைக் குடி. உன் முகத்தைப் பார்த்தால் என் வயிறு பகீரென்கிறது. அந்த மட்டும் அவள்-உன் தாயார்- இந்தக் கண்ராவிகளை யெல்லாம் பாராமல் போய் விட்டாளே, அவள் மகராஜிதான்.

தன : அவர்களையெல்லாம் இப்பொழுது நினைத்துக் கொள்வா னேன்? செத்தவர்கள் சுகப்பட்டவர்கள்.

மாணி : சரி; அதுவும் உண்மைதான். ஏதோ அந்தக் கஞ்சியில் கொஞ்சம் குடி. சிறிதாவது களைப்பு தீரும்.

தன : காலையில் நான் வைத்துவிட்டுப் போன கஞ்சிதானே அது?

மாணி : ஆமாம்; நான் கொஞ்சம் குடித்தேன். உனக்குக் கொஞ்சம் வைத்திருக்கிறேன்.

தன: அதை எப்படி மனமொப்பிக் குடித்தீர்கள் அப்பா?

மாணி : ஏன் அதற்கென்ன? ஏன் மூஞ்சியைச் சிடுத்துக் கொள் கிறாய்? (பொறுத்து) ஓ! அதற்கு உப்பில்லையென்று சொல்கி றாயா? நாம்தான் உப்பில்லாமல் கஞ்சி குடிக்கப் பழக்கப் படுத்திக் கொண்டு விட்டோமே?

தன : (உடம்பு _சிலிர்க்கிறது; கண்ணீர் விடுகிறான். தனக்குள்)_ எத்தனை நாளைக்கு இந்தப் பஞ்சை வாழ்க்கை? தம் உயிரைக் கொடுத்து என் உடலை வளர்த்த தந்தைக்கு உப்புப்போட்ட கஞ்சி வார்க்க என்னால் முடியவில்லை. சை! என்ன வாழ்க்கை!

_(எழுந்திருக்கிறான்.)_

மாணி : (ஏறிட்டுப் _பார்த்து)_ ஏன் கண்ணீர் விடுகிறாய்? அழாதே; நானல்லவோ உனக்காக அழவேண்டும்? எத்தனையோ பாடுகள் பட்டு உன் வயிற்றை நிரப்பி வந்தேன். நான் பிண்ணாக்காகப் போய்விட்டாலும் சரி, நீ எண்ணெயாக வந்தால் போதுமென்று எத்தனையோ பேரிடம் பல்லைக் காட்டி உனக்குப் படிப்புச் சொல்லிக்கொடுத்தேன். இப்போது உப்பில்லாதக் கஞ்சியைக் காட்டி, குடியென்று கூசாமல் சொல்கிறேனே, அதற்காக நானல்லவோ அழவேண்டும்? (பொறுத்து) இருக்கட்டும்; இன்று யாராரிடம் போயிருந்தாய்?

தன : ஓரிடமா? இரண்டிடமா? எத்தனையோ பேரைப் பார்த்தேன். ஒருவராவது முகங்கொடுத்துப் பேசவில்லை.

மாணி : அந்த ரகுநாத விஜயர் என்ன சொன்னார்?

தன : பிச்சைக்காரருடைய தொந்தரவு பொறுக்க முடியவில்லை யென்று சொல்லி நாயை என்மீது ஏவி விட்டார்.

மாணி : அட பாவி! இவர் பிச்சைக்காரராயிருந்தது எனக்கு நன்றாகத் தெரியுமே. ஒரு பகலிலே பணக்காரரான பெயர்வழி யல்லவா இவர்?

தன : இருக்கலாம். இப்பொழுது அவர் பணக்காரர்தானே? அகதி கள் நிதிக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார். அடுத்த வருஷத்தில் ஏதாவது பட்டம் வருமென்றுகூடச் சொல்லிக் கொள்கிறார்கள்.

மாணி : அதென்ன பட்டமப்பா? ஆகாசத்திலே பறக்கிற பட்டமா? அதுவாவது, சிறு பிள்ளைகளுக்கு விளையாட்டாக உபயோகப் படுகிறது! சரி! பழனியாண்டவரிடம் போயிருந்தாயா?

தன : பரதேசிகளுக்கு, தாம் அன்னசத்திரம் கட்டி வைக்க வில்லையென்று சொல்லிவிட்டார்.

மாணி : பரதேசியா? உன்னைப் பார்த்துச் சொன்னாரா?

தன : ஆம்; அவர் இப்பொழுது, பழைய பேப்பர் விற்றுப் பிழைத்த பழனியல்லவே; பக்த சிரோமணியான பழனியாண்டவ ரல்லவோ?

மாணி : அவரிடம் தர்மம் கேட்கச் சொல்லி உன்னை நான் அனுப்ப வில்லையே? அவர் ஒரு நாள் வியாபாரமே இல்லையென்று, வீட்டுச் செலவுக்காக ஏழணா என்னிடம் வாங்கிக்கொண்டு போனார். அதை ஞாபகப்படுத்தவல்லவோ சொன்னேன்?

தன : அவர் தன்னையே இப்பொழுது மறந்துவிட்டிருக்கிறாரே? இந்த ஏழணா எங்கே ஞாபகம் இருக்கப் போகிறது?

மாணி : வாதவம். புதிய மோகத்திலே பழைய நிலைமையை மறந்து விடுகிற காலமல்லவா இது? சரி; நமது முதலாளி சுந்தர நாதர் என்ன சொன்னார்?

தன : ஏதோ அவசர ஜோலியாய் இருக்கிறாராம். சிறிது நேரம் பொறுத்து வரச் சொன்னார். இப்பொழுது மறுபடியும் அவ ரிடத்தில் போக வேண்டும்.

மாணி : அவரிடம் நான் ரொம்ப சொன்னதாகச் சொல்லி, கழிந்து போன மாதங்களுக்கு, அவர் விட்டிருந்த மனைக்கு வாடகை கேட்க வேண்டாமென்று சொல்.

தன : அவர் சும்மா மனையைக் கொடுத்துவிடவில்லையே. அவர் பிள்ளைக்குப் பாடமல்லவோ சொல்லிக் கொடுத்துக் கொண் டிருந்தேன்?

மாணி : இருக்கலாம். ஆனால் பணக்காரர்களுக்கு இந்த நியாய மெல்லாம் புரியாது. லாபம் குறைந்து விட்டால் அதை நஷ்டம் வந்துவிட்டதென்று சொல்வார்கள். தம்மைப் போன்ற பணக் காரர்களுக்கு உதவி செய்வார்கள். அவர்களுடைய காப்பிக்குச் சர்க்கரை குறைந்து விட்டதேயென்று அங்கலாய்ப்பார்கள். ஏழைகளைப் பார்த்தால் அவர் களுக்கு ஏளனம்; பூமிக்குச் சுமையாக இவர்கள் ஏன் பிறந்திருக்கிறார்கள் என்கிற மாதிரி நம்மைப் பார்த்து ஒருவித அலட்சிய சிரிப்பு.

தன : எப்படியும் உலகம் அவர்களைச் சுற்றியல்லவோ சுழல்கிறது? இருக்கட்டும். சுந்தரநாதரிடம் போய் வருகிறேன்.

மாணி : போய் வா. நேற்றுக் காலையிலிருந்து வயிற்றுக்கு ஒன்றும் இல்லையே? பட்டினியோடு எவ்வளவு தூரம் அலைவாய்?

தன : பட்டினி கிடக்கத்தானே நாம் பிறந்திருக்கிறோம். ஜாக்கிர தையப்பா! நான் சீக்கரமாக வந்து விடுகிறேன்.

_(தனபாலன் செல்கிறான். மாணிக்கம், பெருமூச்சு விட்டுக் கொண்டு படுத்துக்கொள்கிறான்.)_

இரண்டாவது களம்
இடம் : சுந்தரநாதர் பங்களாவில் முன் தாழ்வாரம்.

காலம் : மாலை.

_(இச்சகம் பாடி வயிறு வளர்க்கும் ஞானபண்டிதர் என்ற ஒரு நபரிடம் சுந்தரநாதர் பேசிக்கொண்டிருக்கிறார்.)_

சுந்தரநாதர் : என்ன பண்டிதர்வாள்! இந்த ஏழைப் பயல்களுக்கு இரக்கமே காட்டக்கூடாது. நம்மைச் சுரண்டப்பார்க்கிறான் கள்.

ஞானபண்டிதர் : தொழிலாளர் கூட்டங்களில் இந்தச் சுரண்டுதல் என்ற வார்த்தையை நான் அதிகமாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

சுந் : ஆமாம், பிழைப்புக்கு வழியில்லாத சிலர், சில தொழிலாளர் களைக் கூட்டிக்கொண்டு காச்சு மூச்சென்று கத்துகிறார்கள். கடைசியில் நம்மிடத்தில்தான் காசு பிடுங்க வருகிறார்கள்.

ஞான : வெல்லம் இருக்கிற இடத்தில்தானே ஈக்கள் மொய்க்கும்?

சுந் : பாருங்கள்; நம்ம நெரிஞ்சல் பள்ளத்தாக்கிலே குடிசைகள் போட்டுக் கொள்ளச் சொல்லியிருந்தேனல்லவா? வெள்ளம் வந்து குடிசை களையெல்லாம் அடித்துக் கொண்டு போய் விட்டது. அதற்கு நானா பொறுப்பாளி.

ஞான : நீங்கள் எப்படிப் பொறுப்பாளி? வெள்ளம் போன்ற கருணை யுடையவர்களல்லவோ தாங்கள்?

சுந் : பதினெட்டாந் தேதி காலையில் வெள்ளம் வந்தது. பதினேழாந் தேதிவரை, காலி மனைக்கு வாடகை கொடுக்க வேண்டு மல்லவா? மாட்டேனென்கிறார்கள் இந்தப் பசங்கள். கேட் டால், குய்யோ முறையோ என்று கத்துகிறார்கள்.

ஞான : விவரம் தெரியாதவர்கள்.

சுந் : நானென்ன மற்றவர்களைப் போல் ஈவு இரக்கமில்லாதவனா? தயை தாட்சண்யம் காட்டாதவனா?

ஞான : அப்படிச் சொல்கிற வாயை அலம்ப வேண்டும்.

சுந் : ஏதோ ஏழைகள், வீடு வாசலில்லாமல் கஷ்டப்படுகிறார்களே, போனால் போகிறதென்று சொல்லி, நான் இரண்டு நாள் வாடகையைத் தள்ளிவிட்டு, பதினைந்து நாள் வாடகையை மட்டும் கொடுங்கள் என்று சொல்லுகிறேன். அதற்குக் கூட மாட்டேனென்கிறார்கள் இந்தப்பயல்கள்.

ஞான : அப்படியென்ன பிரமாதமான வாடகை?

சுந் : அதைத் தான் கேளுங்களென்கிறேன். நானே ரொம்பக் குறைச்சலாக வாடகைக்கு விட்டிருக்கிறேனென்று கம்ப்ளெ யிண்ட் பண்ணுகிறார் தாண்டவராயர். என்ன வாடகை வாங்குகிறேன் தெரியுமா? இருபதடிக்கு இருபதடி சதுரத்திற்கு மாதம் இரண்டு ரூபாய்தான்.

ஞான : இரண்டு ரூபாய் ஒரு பெரிய தொகையா?

சுந் : பதினைந்து நாளைக்கு என்ன ஆகிறது? ஒரு ரூபாய். இந்த ஒரு ரூபாய் கொடுக்க முடியாதென்று வழக்காடுகிறார்கள்.

ஞான : அப்படி எவ்வளவு வரவேண்டும்?

சுந் : மொத்தம் இருபத்து மூன்று குடிசைகள் இருந்தன. இருபத்து மூன்று ரூபாய் வரவேண்டும். இந்தக் காலத்தில் இருபத்துமூன்று ரூபாய் ஒரு பெரிய தொகை அல்லவா? நான் ஏன் அதை நஷ்டப்படவேண்டும்? உங்களைப் போலொத்தவர்களுக்குக் கொடுத்தாலும் பிரயோஜனமுண்டு.

ஞான : (பல்லிளித்துக்கொண்டே) ஆமாமாம்.

_(தனபாலன் பிரவேசிக்கிறான்.)_

சுந் : என்னய்யா? பணம் கொண்டு வந்தாயா?

தன : பணம் கேட்க வல்லவோ வந்தேன்?

சுந் : உனக்கென்ன புத்தி இருக்கிறதா, இல்லையா?

தனபாலன் : இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைக்கு பாடஞ் சொல்லிக் கொடுக்கச் சொல்லி எனக்கு உத்தரவிட்டிருக்க மாட்டீர்களே?

சுந் : நானெங்கே ஐயா, உத்தரவிட்டேன்? படித்த படிப்பு மறந்து விடக்கூடாதே என்பதற்காகப் பிள்ளைக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்கிறே னென்று சொன்னாய். சும்மா சொல்லக்கூடாதே யென்பதற்காக, மனைக்கு, வாடகை வேண்டாமென்று சொன் னேன். இப்பொழுது வெள்ளத்தினால் எனக்கு எவ்வளவு நஷ்டம் பார்! அதனால்தான் பாதி வாடகையாவது கொடுக்க வேண்டுமென்று சொல்கிறேன்.

தன : எட்டு மாதமாகக் குழந்தைக்குப் பாடஞ் சொல்லிக் கொடுத்து வந்தேனே?

சுந் : அதற்காக ஒரு ரூபாய் விழுக்காடு தள்ளிக் கொண்டு விட் டேனே?

தன : மாதம் இரண்டு ரூபாய் இல்லையா? மனை வாடகைக்கு ஈடாகப் பாடஞ் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்பதல்லவோ பேச்சு?

சுந் : பேச்சு! பேச்சு!! பேச்சை ரொம்ப கண்டு விட்டான் இவன். நீ படிப்பித்த படிப்புக்கு ஒரு ரூபாய் போதாதோ?

ஞான : அப்படி இவர் எவ்வளவு பாக்கி?

தன : பாக்கி ஒன்றுமேயில்லை, பண்டிதரே! என்னை பாக்கி தாரனாக வைத்துப் பேசாதீர்.

சுந் : பார்த்தீரா அதிகப் பிரசங்கியை? பாக்கிதாரன் இல்லாமல் நீ என்ன முதலாளியோ?

தன : நான் முதலாளியாக இல்லாமலிருக்கலாம்; ஆனால் கடன் காரன் இல்லை.

சுந் : பிச்சைக்கார பையலுக்கு வாயைப்பார்.

தன : நான் பிச்சைக்காரன்தான். ஆனால், நான் யாரையும் மோசடி செய்யவில்லை.

ஞான : ஏனய்யா சும்மா வார்த்தைகளைக் கொட்டுகிறீர்? ஏதோ எஜமானைக் கெஞ்சிக் கேட்டால் மனமிரங்கிக் கொடுப்பாரே? அதை விட்டுவிட்டு……………..!

சுந் : எனக்கு இரக்கமே கிடையாது பண்டிதரே! அதுவும் இந்தப் பயலிடத்தில். என்ன தனபாலப்பிரபு! நாளை காலை பத்து மணிக்குள் என்னுடைய எட்டு ரூபாயைக் கொண்டு வந்து கட்ட வேண்டும். இல்லாவிட்டால் போலீஸில் எழுதி வைப் பேன்.

ஞான : எட்டு ரூபாய்தானே? எங்கேயாவது பிரயத்தனப்பட்டு, கொண்டு வந்து கட்டிவிடும்.

தன : இருக்க நிழலில்லை. ஐந்து நாட்களாக மரத்தடியில் வாசம். தகப்பனாருக்கு உப்பில்லாத கஞ்சியைக் கொடுத்துவிட்டு நேற்றுக்காலையிலிருந்து பட்டினி கிடக்கிறேன். நான் எட்டு ரூபாய்க்கு எங்கே போவேன்?

சுந் : நரக லோகத்திற்குப் போ!

ஞான : (சுந்தரநாதருடைய _சாமர்த்தியமான பேச்சை மெச்சுவது போல் சிரிக்கிறார்.)_

தன : பண்டிதருக்கு வழி தெரியும் போலிருக்கிறது; அதனால்தான் சிரிக்கிறார்.

சுந் : அடே யாரங்கே, தோட்டக்காரன்! இவனை கேட்டுக்கு வெளியே கல்தா கொடு.

தன : நானே போகிறேன். என்னை கல்தா கொடுத்து அனுப்ப வேண்டாம்.

சுந் : நாளை காலை பத்து மணிக்கு - ஞாபகமிருக்கட்டும். இல்லை யானால் பதினொரு மணிக்கு போலீ டேஷன்.

தன : இருக்க இடமும், வயிற்றுக்குச் சோறுமாவது அங்கே கிடைக்கும்.

சுந் : சோறு போடச் சொல்கிறேன்! இரு, இரு நல்ல பூசை கொடுக்கச் சொல்கிறேன். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகருகிறது.

தன : அம்மியே உடைந்துபோய் விட்டாலோ?

_(வேகமாய்ப் போய்விடுகிறான்)_

சுந் : வயிற்றிலே சோறில்லாதவர்களுக்கு வாய் எவ்வளவு நீளம் பார்த்தீர்களா?

ஞான : காலம் கெட்டுப் போய்விட்டது. நல்லவர்களுக்கு இது காலமில்லை.

சுந் : காலமா? அதனால்தான் இப்படி ஆயிரக்கணக்காகச் செத்துப் போகிறார்கள் இந்த வாயாடி ஏழைகள்.

ஞான : (எழுந்து _நின்று)_ உத்தரவு கொடுக்கிறீர்களா?

சுந் : எங்கே இதற்குள் கிளம்பிவிட்டீர்கள்?

ஞான : போகவேண்டும். வீட்டிலே அரிசி இல்லையென்று சொன் னார்கள். அதனால்தான் இப்படி வந்து பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தேன்.

சுந் : எவ்வளவு வேண்டும் இப்பொழுது?

ஞான : (பல்லிளித்துக் _கொண்டே)_ ஐந்து ரூபாய் இருந்தால் போதும்.

சுந் : (சட்டைப் _பையிலிருந்து ஐந்து ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்து)_ இந்தாரும்; இதை இப்பொழுது வைத்துக் கொள் ளும். இந்தப் பசங்களிடமிருந்து வாடகைப்பணம் வரட்டும். அதில் ஏதாவது கொடுக்கிறேன்.

ஞான : அதற்கென்ன! (இளிக்கிறார்) தர்மப் பிரபுக்கள் நீங்கள். உங்களைப் போலொத்தவர்கள் இருக்கிறதினால்தான், இந்த இரண்டு துளி மழையாவது பெய்கிறது. நானும் அந்தப் பயல் களிடத்தில் நல்லதனமாகச் சொல்கிறேன். ஏழைகள்தானே? இல்லாத கொடுமையினால் என்னென்னவோ உளறுகிறார்கள். (பொறுத்து) வரட்டுமா? ………………….. மறுபடியும் எப்பொழுது உத்தரவு?

சுந் : சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக் கிழமை இந்தப் பக்கமாக வாருங்களேன்.

ஞான : அவசியம் வருகிறேன்.

_(செல்கிறார்)_

மூன்றாவது களம்
இடம் : ஆபத்திரி.

காலம் : இரவு பன்னிரண்டு மணி.

_(தனபாலன் ஒரு கட்டிலின் மீது கிடத்தப்பட்டிருக்கிறான். அடிக்கடி பினத்தல் உண்டாகிறது)_

டாக்டர் : கே பிழைக்குமா?

நர் : எனக்குத் தோன்றவில்லை டாக்டர். டார்வேஷன் (Starvation - பட்டினி) கே இது.

டாக் : வருகிறபோதே மூன்று நாள் பட்டினியென்று சொன்னான்.

நர் : இல்லை; அதற்கு முன்னாடியிருந்தே பட்டினியாயிருந் திருக்க வேண்டும்; ந்யுட்ரிஷ வால்யூ (Nutiritious Value) இல்லாத புட் (Food) களை (சத்தில்லாத உணவு வகைகளை) ச் சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

தன : (பினத்துகிறான்) அப்பா! அப்பா! கஞ்சி குடிச்சீர்களா? ரொம்ப குளிர் நடுக்குகிறதா? ஐயோ! ஐயோ!

டாக் : இந்தப் பேஷண்ட் (Patient - நோயாளி) க்கு ரிலேஷன் (Relation - உறவினர்) யாராவது இங்கே கே எண்டர் (Enter -பதிவு) ஆயிருக்கிறதா?

நர் : கொஞ்ச நேரத்திற்கு முன்னாலே முனிஸிபல்வான் (Municipal Van)ny போட்டுக்கொண்டு வரவில்லையா சில கேசுகளை. அதிலே அந்த ஓல்ட்மான் (Oldman கிழவன்) னுடைய ஸன் (Son - மகன்) போலேயிருக்கிறது இந்த பேஷண்ட்.

டாக் : ஆமாம்; அப்படித்தானிருக்கிறது.

தன : (மறுபடியும் _பினத்தல்)_ வெள்ளத்தால் அழியாது, வெந்தணலால் வேகாது என்பதெல்லாம் பொய்.

நர் : (குனிந்து) இதோ பார்! என்னா வேணும் உனக்கு?

தன : (இரு _கைகளையும் கூப்பிக்கொண்டு)_ யாரம்மா நீ? பரதேவதை மாதிரி இருக்கிறது. எங்கப்பா பிழைச்சு விடுவாரா? கூல் பைனல் பா பண்ணினேனம்மா! ஒரு வேலையும் கிடைக்க வில்லையம்மா! இந்த ஆபத்திரியிலே ஏதாவது வேலை கிடைக்குமா? ஒரு வேளையாவது எங்கப்பாவுக்குக் கறியும், சோறுமா சாப்பாடு போடணும்னு ஆசை. என் ஆசை நிறை வேறுமா அம்மா! சொல்லு; உன் வாயாலே சொல்லு.

நர் : உ; ரொம்பப் பேசாதே. மருந்து கொடுக்கிறேன். குடி.

தன : உப்பில்லாத கஞ்சியைக் கொடுத்து கொன்னுப்புட்டேன் அம்மா.

டாக் : (தனபாலனுடைய _நாடியைப் பார்த்து உதட்டைப் பிதுக்கிக் கொண்டே)_ நோ ஹோப் ஆப் ஸர்வைவல். (No hope of survival) பிழைக்குமென்ற நம்பிக்கையில்லை)

நர் : தூங்கு : தூங்கு.

தன : நான் எங்கேயிருக்கிறேனம்மா? போலீ டேஷனிலா? ஆபத்திரியிலா? (பாடுகிறான்) அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்…………… அப்ப நீ அம்மை நீ…………… கருணாகரக் கடவுளே…………………..

_(பிராணன் போகிறது.)_


கூப்பன்

இடம் : குடிசையின் முன்பக்கம்.

காலம் : பகல்.

_(வயதான தந்தை, தன் மகன் வரவை எதிர்பார்த்துக் கொண் டிருக்கிறான்.)_

தந்தை : எந்நேரமாவுது? சூரியன் உச்சிக்கு வரப்போவுது? இன்னும் வரலியே இந்த புள்ளே? அந்த பாழாப் போன கூப்பன் கிடைக்காமே போனாத்தான் என்ன? அதான் நல்லாத் தெரியுதே, பணக்காரர் போய் ட பு என்று ரெண்டு வார்த்தைகளைச் சொன்னா, நெனெச்ச காரியம் கைகூடிப் போவுது. ஏழைங்க போனா, நாள் கணக்கா தபசு பண்ண வேண்டியதுதான். ஹூம் ……… அடுப்பெரிக்கிற சுள்ளிக்குக் கூப்பனாம். அது போயி வாங்கிகினு வரணுமாம். கூப்பன் வாங் கிகினு வர போயிக்கணே இருந்தா, வவுத்துக்கு கஞ்சி யார் ஊத்துவாங்க? நேரத்திலே வேலை மேலே போகாத போனா, அன்னிக்கு பூரா கூலி இல்லன்னு புட்ராங்க. இன்னிக்கு வேலையில்ல; கூலியுமில்லே.

_(வியர்த்து விறு விறுத்து மகன் வருகிறான்.)_

மகன் : (சந்தோஷத்துடன்) நாயனா! கூப்பன் கிடைச்சுப் போச்சு! கூப்பன் கிடைச்சுப் போச்சு!

த : ஏன் இத்தினி நேரம்?

ம : லேசிலே கொடுக்கறாங்களா? இன்னிக்கு எப்படியாவது இருந்து வாங்கிக்ணு வறதுன்னு ஒரே பிடியா இருந்தேன். நம்பளே போலே ஏழைங்க பாழைங்க போனா யாராவது முகங் கொடுத்து பேசறாங்களா?

த : ஆமாம்; பணக்காரருக்குத்தானே இப்போ ராஜாங்கம் நடக்குது.

ம : இன்னிக்கு எனக்கு கூப்பன் கிடைச்சுது அதிர்ஷ்டந்தான். குப்பத்திலே யிருந்து வந்தவங்க இன்னும் எத்தனை பேரு காத்துக்கிட்டு இருக்காங்க தெரியுமா?

த : ஆமாண்டா, இன்னிக்குக் கூலி போச்சே?

ம : கூப்பன் கிடைச்சுச்சே!

த : ஏண்டா, உனக்கு மூளை கீளை இருக்குதா இல்லையா? கூப்பன் கஞ்சி வார்க்குமா என்னா?

ம : அதுக்கு வழி காட்டுமா இல்லையா?

த : காட்டும்; நல்லா காட்டும். எதோ கொஞ்சம் எனக்குக் கஞ்சி ஊத்தச் சொல்லு உன் கூப்பனை?

ம : (தனக்குள்) அப்பாருக்கு வவுத்துலே பசிபோலே இருக்குது. அதான் இப்படிக் கோவிச்சுக்கிறாரு.

த : கோவத்துக்காக சொல் லல்லே அப்பா! ஏழைங்க கோவுச்சிக்கினா என்னா பண்ண முடியும்? இல்லே, பேச்சுக்குக் கேக்கறேன், கூப்பன் கொடுத்தாங்களே, காசு கொடுத்தாங்களா?

ம : காசு ஏன் கொடுக்கி றாங்கோ?

த : அப்படியானா கூப்பனை வைச்சுக்கினு என்னா பண்றது? நாக்கிலே வழிச்சுக்கிறதா?

ம : அது நம்ம இஷ்டம்.

த : அதுக்கில்லேடா, மண்ணெண்ணெய்க்கு கூப்பன்,விறகுக்கு கூப்பன், அரிசிக்கு கூப்பன், எல்லாத்துக்கும் கூப்பன்.

ம : பாலுக்குக்கூட கூப்பன் கொடுக்கப் போறாங்களாம் இனிமேல்.

த : ஆமாம்; குடல் கூழுக்கு அழுவுதாம்; கொண்டை பூவுக்கு அழுவு தாம். பாலில்லேன்னுதான் வவுறு ஒட்டிப் போயிருக்குதாங் காட்டியம்?

ம : இல்லே,சேதிக்குச் சொன்னேன்.

த : இதோ பாரு, ஆளுக்கு தினத்துக்கு இரண்டரை ஆழாக்கு அரிசி வாங்கிக்கலாமுன்னு சொல்றாங்கோ இப்போ. இல்லையா? சரி, அதுக்கு துட்டு ஓணும்; அதை கஞ்சியா காச்சறதுக்கு விறகு ஓணும்; அதுக்கு துட்டு ஓணும். வூட்லே இருட்டிலேயா குந்திக்கிணு கஞ்சி குடிப்பே? விளக்கெரிக்க எண்ணெய் ஒணும்; அதுக்கு துட்டு ஓணும்.

ம : ஆமாம், காசில்லாமல் காரியம் நடக்குமா என்ன?

த : கொடுக்கிற காசுக்கு கிடைக்கிற சாமானோ நாலிலே ஒண்ணு தான். அதுக்குத் தகுந்தாப்போலே சம்பாதனை கூடியிருக்குதா? இல்லையே!

ம : ஆமாம்; முன்னே கூலி வேலை செஞ்சா ஆணாளுக்கு ஏழணா.

த : இப்போ?

ம பன்னிரண்டணா.

த : பார்த்தியா? சம்பாதனை ஒட்டிக்கு இரட்டியாத்தான் கூடியிருக் கிறது; ஆனால் சாமான் விலை ஒண்ணுக்கு நாலா ஏறியிருக்குது; எப்படி பிழைப்பு நடத்தறது?

ம : அதைப்பத்தி யாருக்கு என்ன கவலை?

த : கடவுளே நம்பளைபத்தி கவலைப்படல்லே; மனுஷ்யரு எங்கே கவலைப்பட போறாங்கோ? சுருக்கமாகச் சொல்றேன் கேளு. பணமுள்ள வங்களுக்குத்தான் இந்த உலகம்.

ம : ஆனால் ஏழைங்கதானே இந்த உலகத்திலே அதிகமா இருக்காங்க.

த : அதுதானே வேடிக்கை. அதிகமான பேருக்குக் குறைவான சாப் பாடு கிடைக்குது: குறைவான பேருக்கு அதிகமான சாப்பாடு கிடைக்குது.

ம : அப்படின்னா?

த : ரெண்டுபேர் இருந்து ரெண்டாயிரம் ரூபா வரும்படி வந்தா அவங்களுக்குப் பதினைஞ்சு குண்டு கட்டை ; ஏழு பேர் இருந்து பதினஞ்சு ரூபா வருமானம் கிடைச்சா அவங்களுக்கு ரெண்டு குண்டு கட்டை. அப்படித்தானே இப்போ பங்கிட்டு கொடுக்க றாங்கோ?

ம : ஆமாம்; பணமுள்ளவங்கோன்னா, சுடு தண்ணியிலே உடம் புக்கு ஊத்திக்குவாங்கோ; சுடு தண்ணியே குடிப்பாங்கோ. அதுக்காக அவங் களுக்கு விறகு அதிகமாக தேவைதானே?

த : ஏன், ஏழைங்களுக்கு தலை நோவு, குலை நோவு ஒண்ணும் வராதா? அவங்களுக்கு. சுடுதண்ணி வேண்டாமா?

ம : சரி நாயனா! உன்னோடு பேசிக்கிட்டிருந்தா, வவுத்தே பசிக்குதே. காசு இருந்தா கொண்டா, கட்டை வாங்கிக்கினு வறேன். வூட்லே இருக்கிற நொய்யைப் போட்டுக் கஞ்சியாவது காய்ச்சிக் குடிக்கலாம்.

த : வா, ரெண்டு பேரும் யமலோகத்துக்கு போகலாம் துட்டு சம்பாதிச்சிகினு வர.

_(இருந்த இடத்திலேயே சுருண்டு படுத்துக்கொள்கிறான்; மகன் தம்பித்து நிற்கிறான்.)_


சுகம் எங்கே?

முதற் களம்
இடம் : ஒரு குடிசை.

காலம் : விடியற்காலை.

(அப்பொழுதுதான் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது. பொத்தல் குடிசையிலிருந்து இன்னமும் நீர் சொட்டிக் கொண்டிருக்கிறது. ஈரத்தரையில் வேலனும் அவன் மனைவி வள்ளியும் சுவர் ஒரமாக ஒண்டியபடி உட்கார்ந்திருக்கிறார்கள். இவர்கள் நடுவில் விரிக்கப் பட்டிருக்கும் ஒரு கந்தல் பாயின் மீது நான்கு வயதுள்ள ஓர் ஆண் குழந்தை உட்கார்ந்த வண்ணம் கேவிக் கேவி அழுதுகொண்டிருக் கிறது. வள்ளி அதைச் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.)

வள்ளி : அழுவாதே, அழுவாதே. காலம்பர நயனாவே நல்ல சட்டெ ஒண்ணு வாங்கியாறச் சொல்றேன். இப்பத் தூங்கு. (அதன் உடம்பைத் தடவிக் கொடுத்து) பாவம், அதுதான் என்னா செய்யும்? குளுர்லே கைகாலெல்லாம் வெறச்சுகினு போயிருக் குது. சும்மா அதெப்போயி திட்டினா அது என்ன செய்யும்?

வேலன் : ரொம்பத்தான் நீ அங்காலய்க்கிறே! உந்துணியெத்தான் அதுமேலே போத்திவிடேன்.

வ : அப்பிடிண்ணா போத்திட்றேன். அப்பறம் உனக்கு அவுமானமாச் சேண்ணுதான் பாக்கறேன்.

வே : எனக்கென்ன அவமானம்? அது ஓனக்குந்தான்.

வ : சேலைங்க அடுக்கடுக்கா வைச்சிருக்காப்பலெதான் பேசறது. இந்த ஒத்தெ கந்தெய நானுந்தான் ஒரு வருசமாக் கட்டிக்கினு காலங் கடத்தறேன். நீ தான் இத்தெக் கவனிச்சியா? நானுந்தான் நம்ம புருஷன் தானேன்னு வாய்விட்டு கேட்டிருப்பேனா?

வே : சரி, புள்ளெக்கி சட்டெ இல்லெ; பொஞ்சாதிக்கு சீலை இல்லெ. அப்புறம்?

வ : ஒனக்குந்தான் கட்டிக்கத் துணியில்லை. வெளியிலே போற புருஷன், கந்தலெ, அதுவும் வெறுங் கந்தலெ, கட்டிக்கினு போறேயேண்ணுதான் மனசு அடிச்சுகுது.

வே : இப்பத் துணி விக்கிற வெலெயிலே நம்ப மூணு பேருக்கும் துணி வாங்க ஆரம்பிச்சோமானால், முப்பதுநாளும் பட்டினி தான் கடக்கணும். அடேப்பா! என்னா வெலெ, என்னா வெலெ? ஒண்ணுக்கு நாலா?

வ : நம்ம ரெண்டுபேரும் எப்படிண்ணா காலத்தெ கடத்திடறோம். இந்தக் கொழந்தைக்கிண்ணா ஏதாச்சியும் ஒரு பழசு, கிழசு வாங்கிப் போத்திவிடாமப் போனா அது நிச்சிமா குளி ராலே செத்தேதாம் போய்டும்.

வே : நான் சொல்றேன் கேளு. பணக்காரங்களுக்குத்தான்கொழந்தை. நமக்கெல்லாம் ஏன்?

வ : அந்த ஞானமெல்லாம் இப்பொ ஏன் பேசறே? காலம்பர எசமாங்கிட்ட போயி நெசத்தே சொல்லி ஏதாச்சியுங் கேளு. கந்தெ, கிந்தெ, ஏதானுமிருந்தா வாங்கிக்கிணுவா.

வே : போயும், போயும் நல்ல ஆளாப் பாத்துத்தான் கேக்கச் சொன்னே. சோறு தின்ன கையாலேகூட காக்கா ஓட்ட மாட் டாரு. அவங்க வீட்டிலே, பழைய துணியெல்லாம் சேத்துப் பாத்திரக்காரன் கிட்டப் போட்டுப் பாத்திரமா வாங்கி அடுக்கி வைக்கிறாங்கோ.

வ : நமக்கெல்லாம் சட்டி பானை வாங்கறதுக்கு துட்டு இல்லெ. அவங்கள்ளாம் கந்தை துணியைப் போட்டு பாத்திரம் வாங்க றாங்க. எப்படியிருக்குது காலம்?

வே : காலந்தான் தலைகீழா இருக்குதே? பணமுள்ளவன், பத்தலை யேண்ணு உரக்கக் கத்தறான். பணமில்லாதவன், இல்லை யேண்ணு ஏங்கி நிக்கறான்.

வ : கடவுளே! கடவுளே!

வே : கடவுளே ஏன் கூப்பிட்றே? அவர் எங்கே இருக்காரு? அவர் இல்லவே இல்லேன்னுதான் தோணுது. அப்படி இருந்தாலும், அவருக்குக் கண்ணும் தெரியல்லே, காதும் கேக்கல்லே, அது நிச்சயம்.

வ : சும்மா சாமியை ஏன் திட்றே?

வே : உனக்கென்னா தெரியும் உலகத்திலே நடக்கிற அக்கிரமம்? குடிசையிலே குந்திக்ணு இக்கறே நீ?

வ : என்னா அப்படி அக்கிரமத்தைக் கண்டுட்டே நீ?

வே : பணக்காரன், பத்து ரூபா கொடுத்தாவது பெட்ரோல் எண்ணெ போட்டுக்கிணு ஊர் ஊரா சுத்தறான்; நம்பளைப் போல ஏழெங்கே வூட்லே விளக்கெரிக்க மண்ணெண்ணெ வாங்க ரெண்டு காசு இல்லேன்னு அழறோம். இதுக்கு மேலே என்னா டான்னா, ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமே, எல்லாருக்கும் கூப்பன் கொடுத்துட்டோமின்னு பேசிக்கி றாங்கோ. கூப்பன் சோறுபோடுமா? அடுப்பு எரிக்குமா? என்னமோ அர்த்தமில்லாத பேசறாங்கோ?

வ : உன் நியாயத்தை யாரோ கேக்கப் போறாப்போலேதான் பேசறது.

வே : கேக்கமாட்டாங்கோ. இப்ப கேக்கமாட்டாங்கோ; ஆனா, நிச்சயமா அடுத்த தலைமுறையிலே எங்க நியாயந்தான் எடு படப் போவுது.

வ : அப்போ பாத்துக்கலாம். நாம்ப இருக்கோமோ, போறோமோ?

இரண்டாவது களம்
இடம் : எஜமானன் வீடு.

காலம் : காலை.

(பங்களாவின் முன் வராந்தாவில் தலையில் குரங்குக் குல்லாயும், உடம்பில் பிளானல் ஷர்ட்டும் போட்டுக்கொண்டு எஜமானன் நிற்கிறான். படிக்கட்டுகளின் கீழே வேலன், இரண்டு கைகளினாலும் தன் உடம்பை மூடிக்கொண்டு நிற்கிறான்.)

வே : எசமான்களுக்கு உடம்பு சரியில்லையா?

எஜமானன் : ஆமாம். ராத்திரியெல்லாம் மழை அடித்ததோ இல் லையோ, அதனால் குளிர் தாங்கவில்லை. என்ன விசேஷம், காலையில் வந்துவிட்டாய்?

வேலன் : சும்மா, எசமானைக் கண்டிட்டுப் போவலாமின்னுதான் வந்தேன்.

எஜ : கண்டாச்சோ இல்லையோ, போய்விட்டு வா.

வே : இல்லிங்க; ராவெல்லாம் குழந்தை, குளிரிலே வெறெச்சிகிணு அழுவுதுங்கோ. கிழிசல் சட்டே ஏதானும் கொடுத்தீங்கண்ணா புண்ணியம் உண்டு.

எஜ : சட்டை வேணுமா, துணி விற்கிற விலையிலே? இந்த பிளானல் ஷர்ட்டை மூன்று வருஷமாய்ப் போட்டுக் கொண்டிருக்கிறேன். இது முந்தி ஐந்து ரூபாய்; இப்பொழுது இது பதினெட்டு ரூபாயாம்.

வே : அது தெரிஞ்சுதான் பழைய சட்டை ஏதானும் இருந்தா கொடுங்கோன்னு கேக்கறேன்.

எஜ : அதெல்லாம் ஒன்றும் கிடையாது. இஷ்டமிருந்தால் வேலை யிலே இரு. இப்பொழுது வாங்குகிற சம்பளத்துக்கு மேலே ஒரு சல்லிக்காசு கூடக் கூட்டிக் கொடுக்க முடியாது. சம்மதமில்லை யானால் நல்ல உத்தியோகம் எங்கேயாவது பார்த்துக்கொள். (உள் பக்கம் பார்த்து) வேலனைப் பார்த்தாயா? நல்ல சமயம் பார்த்துச் சம்பளத்திற்கு அடி போடுகிறான்.

வே : நான் சம்பளம் கேக்கலிங்க; சட்டைதான் கேக்கறேன்.

எஜ : இன்றைக்குச் சட்டை; நாளைக்குச் சம்பளம். அதற்குத்தானே இந்த அஸ்திவாரம்?

வே : (தனக்குள்) ஹும், பணம் போற போக்கே போக்கு (வெளியே) போய் வாரேன் எசமான்.

எஜ : சரி, போ. (பொறுத்து) நீ சரியா வேலை செய்யறது இல்லேன்னு தோட்டக்காரன் சொல்லிக் கொண்டிருக்கிறான். ஜாக்கிரதை, இனியாவது சரியாக வேலை செய்.

வே : (போய்க்கொண்டே) சட்டே கேட்டதுக்குப் பதில், வேலே மேலே குத்தம். நல்ல நாயம்! தெய்வம் தேவாதிங்கள்ளாம், பணமுள்ளவங் களுக்குத் தான் உதவுது.

(போகிறான்.)

மூன்றாவது களம்
இடம் : வேலன் குடிசைக்கு முன்.

காலம் : காலை ஏழு மணி.

(வேலன் தன் குடிசைக்கு முன் நின்று கொண்டு தானே பேசிக் கொள் கிறான்.)

வே : எசமான், பழைய சட்டையை போட்டுகிணு இருக்கிற னேயென்னு அழுவுறாரு. நான் சட்டேயேயில்லேன்னு அழுவு றேன். எசமான் குயந்தே பாலுக்குச் சர்க்கரே இல்லை யேன்னு அழுவுது; என் குயந்தே கஞ்சிக்கு உப்பு இல்லையென்னு அழு வுது. எசமான் வூட்லே நாயைக் குளிப்பாட்ட சுடு தண்ணி போட சவுக்குக் கட்டை அகப்படலி யேன்னு அழுவுறாங்க; கஞ்சி காய்ச்சிக் குடிக்கச் சுள்ளி அகப்பட்டா போதுமின்னு நான் அழறேன். வெள்ளி விலை, தங்கம் விலை எல்லாம் ஏறிப் போச்சேன்னு மாடி வீட்டிலே இருக்கிறவங்க வேதனைப் படறாங்க. அரிசி வாங்கப்போனா, மண்ணெண்ணெய் வாங்கப் போனா, விறகு வாங்கப்போனா அடிப்பட்டுச் சாவறமேன்னு என்னைப்போலொத்தவங்க கண்ணீர் வடிக்கிறாங்க. (பொறுத்து) செய்யற வேலைக்குக் கூலி சரியா கிடைக்கிற தில்லே. கூலி கிடைச்சா, சாமான் அகப்பட்றதில்லே. சாமான் அகப்பட்டா ஒண்ணுக்கு மூணுவிலை. எங்கே பார்த்தாலும் பணமில்லே, சாமான் இல்லேண்ணு கூப்பாடுமட்டும் அதிகமாயிருக்குது. ஆனா, சினிமாக்கொட்டாயிலே, காபி ஓட்டல்லே கும்ப லுக்கோ குறைவேயில்லை. எதுக்கெடுத்தாலும் சண்டே, சண்டேன்றாங்கோ. சண்டெக்கும், ஏழைங்களுக்கும் என்ன சம்பந்தமின்னு தெரியல்லே.

(குடிசைக்குள்ளிருந்து வள்ளி வெளியே வருகிறாள்)

வ : சட்டை கொடுத்தாங்களா? (பொறுத்து) நான் கேக்கறது காதிலே விழல்லே? பையன் அப்போ பிடிச்சு அழுதுகிணு கிடக் கிறான்.

வே : அழட்டும்; அழுது, அழுது சாவட்டும். செத்தாதான் அவனுக் குஞ் சுகம்; நமக்கும் நிம்மதி. ஏழைங்களா பிறந்தவங்களுக்குச் சாவிலேதான் சுகம்.

(வள்ளியுடன் குடிசைக்குள் செல்கிறான்.)


போனகுடி வந்தது

முதற் களம்
இடம் : குடிசையின் முன்னால்.

காலம் : மாலை.

(கறுப்பாயி ஏதோ எண்ணமிட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். அவளுடைய பத்து வயதுப் பெண் மீனாட்சி, தெருப் பக்கத்திலிருந்து ஓடிவருகிறாள்)

மீனாட்சி :** ** அம்மா! அம்மா! இந்த வருசம் கார்த்திகையின் போது, போன வருசத்தைவிட நல்லா, நிறைய விளக்கேத்தணும். அவ லுருண்டை எல்லாம் வாங்கி, சாமிக்குப் படைச்சு கும்பிடணும்.

கறுப்பாயி : என்னமோ உங்க அப்பாரு மனசு எப்படியிருக்கோ?

மீனா : ஏன் எப்படி யிருக்கும்? போன வருசம், அதுக்கு முந்தின வருசம் எல்லாம் கூட, அப்பாவே அகல் எல்லாமே வாங்கிவந்து விளக்கேத் தினாரு. எனக்குக் கூட, சுருசுரு வாணம், மத்தாப்பு, பட்டாசு எல்லாம் வாங்கிக் கொடுத்தாரு. ஏன் அம்மா, உன் முகம் என்னமோ மாதிரி இருக்குது! என் மேலே என்னமானா கோவமா?

கறு : உன் மேலே என்னா கோவம்? நம்பளே யெல்லாம் படைச்சாரே அந்தக் கடவுள் மேலே தான் கோவம்!

மீனா : கடவுள் என்னா பண்ணாரு? அவர்தான் நம்ப கண்ணுக்குக் கூட அகப்படாமே எட்டினாப் போலெ எங்கேயோ இருக் காரே. இன்னிக்குக் கூட, பள்ளிக்கூடத்திலே வாத்தியாரம்மா கடவுளெப் பத்தி, தோத்திரப் பாடல் ஒண்ணு சொல்லிக் கொடுத்தாங்களே.

கறு : ஆமாம்; இப்படித் தோத்திரம் சேஞ்சு சேஞ்சுதான் கடவு ளுக்குக்காது செவிடாப் போச்சே; சூடம் ஏத்திக் காட்டித் தான் அவர் கண்ணு கூட குருடாப் போச்சு.

மீனா : கடவுளை இப்படியெல்லாம் திட்டாதே, அம்மா! பாவ மில்லே!

கறு : ஆமாம், கடவுளுக்குக் கண்ணிருந்தா, கள்ளுக் கடையெல் லாம் மறுபடியும் திறக்கவிடுவாரா? பெரியவரு காந்தி வந்தாரு, கள்ளுக் கடைங்கள்ளாம் மூடிடுங்கோன்னு உத்தரவு போட் டாரு. வவுத்திலே பாலை வாத்தாருன்னு நெனைச்சோம். இப்போ மறுபடியும் கள்ளுக் கடைங்கள்ளாம் திறந்து விடப் போறாங்களாமே?

மீனா : அப்படியானா முன்னே போலே, அப்பா, கள்ளெக் குடிச்சுப் புட்டு வந்து என்னையும் உன்னையும் அடிப்பாங்களா?

கறு : என்ன பண்ணுவாங்களோ? விட்ட பழக்கத்தை மறுபடியும் பிடிச்சுக்காதே இருக்கணும். கடவுள் அதுவரைக்கும் நல்ல புத்தியே கொடுத்தாரானா போதும்.

மீனா : அதுக்காகவா கவலைப்படறே அம்மா நீ? நாயனா அப்படி யெல்லாம் செய்ய மாட்டாங்க அம்மா! கள்ளுக்கடை போவறத்தை நிறுத்திட்ட பிறகு, இப்போ எல்லாம், வேலெ மேலேயிருந்து வந்தவுடனே குளிக்கிறாரு. துண்ணூறு பூசிக்கி றாரு. பஜனை மடத்துக்குப் போறாரு. புஸ்தகம் எடுத்துப் படிக்கக் கத்திக்கிணு இருக்காரு. காலம்பரவும் இப்படியே தான் செய்யறாரு. ரெண்டு மூணு வருசமா இப்படியா சேஞ்சு கினு வராரு. இனி மேலே மாறுவாரா என்ன அம்மா! இதுக் காக வெல்லாம் நீ விசனப்படாதே யம்மா.! அப்பா வந்தாரானா, நான் சொல்லிக்கிறேன்.

கறு : ஐயோ, பைத்தியமே! உனக்கொண்ணும் தெரியாது. கள்ளுக் கிருக்கிற சக்தி எதுக்கு இருக்குது? குதிரை,கொள்ளு தின்றத்தை மறுந்துட்டாலும் விடும்; மனுசன், கள்ளுப் பழக்கத்தை விடவே மாட்டான். இன்னிக்கு நேத்திக்கு ஏற்பட்ட பழக்கமா? அந்தப் படுபாவி மாயாண்டி பழக்கப் படுத்திப்புட்டுப் பூட்டான் இருபது வருசத்துக்கு முன்னாலே; என் குடிக்குத் தீம்பா வந்து சேந்துது. சப்பாதிக்கிற பணமெல்லாம் குடிக்குத்தான். கட்டிக்க நல்ல சீலையுண்டா? ஒரு நாளைக்காவது நல்லாமுகங் கொடுத் துப் பேசுவாங்களா? ஒருநாள் போறது ஒரு யுகமா யில்லா இருந்துது? என்னமோ புண்ணியவான் காந்தி வந்தாரு; குடியும் குடித்தனமுமா ஆனோம். இருக்கிற வரைக்கும் செம்மையாய் புழைச்சுட்டுப் போவோ மின்னு நினைச்சேன். நடுவிலே கடவுள் கல்லை தூக்கிப் போட்டுட்டாரு.

மீனா : கடவுள் என்னாம்மா பண்ணுவாரு? கெவர்ன மெண்டார் உத்தரவு போடறாங்கோ. அதன் பிரகாரம் நடக்குது.

கறு : அந்த காந்தி சொல்றபடி சேஞ்சா, எல்லாருக்கும் நல்ல தில்லையா?

மீனா : அவர்தான் இப்போ செத்துப் போய் தெய்வமா இருக்காரே. அவர் சொல்லிக் கொடுத்ததை யெல்லாம் காத்திலே பறக்க வுட்டுபுட்டு கெவர்மெண்டாரு இஷ்டப்படி செய்யறாங்க.

கறு : ரொம்ப கெவர்னமெண்டைக் கண்டவ நீ? போயி உள்ளே விளக்கேத்து. உங்கப்பாரு வரத்துக்கு நேரமாச்சு.

மீனா : நீ விசனப் படாதே யம்மா! நான் அப்பாவைச் சரிப்படுத்தி விடறேன்.

(மீனாட்சி உள்ளே போகிறாள்.)

இரண்டாவது களம்
இடம் : தெரு மூலை.

காலம் : மறுநாள் மாலை.

(முருகன், கண்ணன், மாயாண்டி ஆகிய மூவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்)

மாயாண்டி :** ** என்ன முருகா! இனி மேலே பஜனை மடத்துக்குப் போவயா? இல்லாட்டி கள்ளுக் கடைக்குப் போவயா?

முருகன் : கள்ளுக் கடை யெல்லாம் திறந்துட்டாங்களாம். அதுக்காக இவன் இவ்வளவு கும்மாளம் போடறாண்டா.

கண்ணன் : பின்னே இன்னாடான்னா; உண்றது, துண்றது இதுங் களை யெல்லாங் கூடவா கெவர்னமெண்டாரு கட்டுப்படுத்து வாங்கோ? அவன் அவன் பிரியமானத்தைக் குடிக்கிறான். அப்படியெல்லாம் கூடாதுன்னு சட்டம் போட்டா, அது எத்தினி நாளைக்கு நடக்கும்?

மாயா : அதான் நானும் கேக்கறேன், எத்தினி நாளைக்கு நடக் கும்ணே? இந்தக் காங்கிரஸ்காரனுங்க கொட்டங்கள்ளாம் அடங்கிப் போச்சு பாத்தியா?

முரு : நல்லத்தைத் தானே சொன்னாங்க அவங்க?

கண் : ரொம்ப நல்லத்தை கண்டுட்டவருடா இவரு?

மாயா : என்னா நல்லத்தைச் சொன்னாங்கப்பா, காங்கிரஸ்காரரு? நம்பளை யெல்லாம் கூட்டி வெச்சிக்கிணு, கள்ளுக் குடிக்கா தேன்னாங்கோ…………….

கண் : அதுக்கு முழ நீளம் பேருகூடச் சொல்லுவாங்களே, இன்னா அது?

முரு : மது விலக்கு………..

கண் : ஆம், அதுதான். நீ பஜனை மடத்துக் கெல்லாம் போறே, உனக்கெல்லாம் தெரியுது.

மாயா : சரி, நம்பளை கள்ளுக் குடிக்கக் கூடாதுண்றாங்களே; இவங்கள்ளாம் மட்டும் காபி குடிக்கலாமா?

கண் : அப்படிக் கேளு நாயத்தை? பெரிய மனுசன்னா மொடா மொடாவா காபி குடிக்கலாம்; நாமெல்லாம் மொந்தை மொந் தையா கள்ளு குடிக்க கூடாதாங் காட்டியம்?

மாயா : இவங்களுக்கு என்னடா தெரியும். நம்ம கஸ்டம்? காலை யிலே பதினொரு மணிக்கு ஒயுங்கு பண்ணிக்கினு ஆபிசுக்குப் போறாங்கோ; அங்கே ரவை நேரம் மேஜை கிட்ட குந்திக்கிணு அப்படியும் இப்படியுமா கிறுக்கிப் புட்டு, சாயங்காலம் அஞ்சு மணிக்கு வூட்டுக்கு வந்துப் புடராங்க. நம்பளைப் போலே காலம்பர புடிச்சு ராவு வரையில் ஏரு புடிச்சு உழுதா, தெரியும்? ஏத்தம் இறைச்சா, தெரியும்?

கண் : இல்லாட்டி எங்கேயாவது நெசவு மில்லு கில்லுலே வேலெ சேஞ்சா, தெரியும். எலும்பு முறிஞ்சு போறாப்போல வேலெ சேஞ்சுட்டு, களைப்பாறதுக்கு ஏதாச்சிம் தண்ணி கொஞ்சம் போட்டுக்கிணாத்தான் சரிப்படுது.

மாயா : இதோ பாரு, முருகா! இந்த வேசம் கீசமெல்லாம் உட்டுப்புடு. கடவுளே கும்பிட்டுக்கிணு இருக்கிற காலம் வேறே. இப்போ புடிச்சு ஏன் கட்டிக்கிணு அழறே? நாளையிலேந்து நம்ப பழைய மாதிரி ஆரம்பிச்சுக்கலாம்.

கண் : இதோ பாரு, முருகா! இப்போ ரெண்டு மூணு வருசமா கள்ளுக் குடிக்காதே நம்ப உடம்பு எப்படி கயிறாப் போச்சு. பாத்தியா? இப்படியே விட்டு விட்டோமானா எத்தனே நாளைக்கு இந்த தேகம் தாக்குப் பிடிக்கும்ணு நெனெச்சுக்கிணு இருக்கே? நாம்ப செத்துப் பூட்டா. பொஞ்சாதி புள்ளெங் களை யெல்லாம் யார் காப்பத்தறது? இந்தக் காங்கிரஸ் கார னுங்களா காப்பாத்தப் போறாங்கோ?

மாயா : காப்பாத்துவாங்களே! நல்லா காப்பாத்துவாங்க! காந்திக்கு ஜேன்னு கூச்சப் போடுவாங்கோ. அவ்வளவுதான். அது கிடக் குது. கள்ளுக் கடைக்கு நாளெக்குத் தான் போவணுமின்னு என்னா எழுதி வெச்சிருக்கு? இன்னிக்கு போயி ரவை போதும் ருசி பார்த்தா என்னா கெட்டுப் போச்சு?

கண் : கடை திறந்துட்டாங்களா?

மாயா : ஓ ஓ! இன்னிக்குக் காலம்பரவே பிள்ளையார் பூசையெல் லாம் பண்ணி, தேங்காய் உடைச்சு, ஒரு பீப்பாய் கள்ளு வண்டியிலே கொண்டாந்தாங்களே. நம்ப குப்பன் மகன்தானே வண்டியெ ஓட்டிக்கிணு வந்தான்.

முரு : பார்த்துக்கலாம் நாளைக்கு; இன்னிக்கி என்னா அவசரம்? வூட்லே பொம்பளைங்கோ, கள்ளுக் கடைக்குப் போறேன்னா, கண்ணை கசக்குவாங்கோ. கொயந்தே வேறே பரிகாசம் பண் ணும்.

மாயா : அடேய், நீ என்னா இப்படிப் பொம்புளெங்களுக்கும் கொயந்தெங்களுக்கும் பயப்படறேயே? ரெண்டு உதே குடுத்தா, சும்மா கிடக்கறாங்கோ.

கண் : என்னா முருகா! இப்படி யோசிக்கிறியே! நீ ஆம்பளே இல்லே? நீ சம்பாதிக்கிற பணத்தை இஸ்டம் போலே செலவழிக் கிறதுக்கு உனக்கு அதிகாரமில்லே?

முரு : இப்போ என்னா சொல்றீங்க? வூட்லே போயி, பணம் எடுத்து வரச் சொல்றீங்களா?

மாயா : இல்லாட்டி வூட்லே போய்ச் சாமி கும்பிடச் சொல்றோமா? போடா. போயி, பொம்பளெங்களே ரெண்டு அதட்டுப் போட்டு குந்த வெச்சுப்புட்டு பணத்தே எடுத்தாடா. டே கண்ணா! நானும் போய் வூட்லே இருக்கிற காசைப் பீராஞ்சி கிணு வரேன்.

(எல்லோரும் போகிறார்கள்)

மூன்றாவது களம்
இடம் : முருகனின் குடிசை.

காலம் : மாலை.

(குடிசையில் ஒரே கூச்சல். கறுப்பாயியும் மீனாட்சியும் அழுது கொண்டிருக்கிறார்கள்.)

முரு : கார்த்திகைக்கு விளக்கேத்தப் போறாங்களாம் விளக்கு. விளக்கேத்தினா விடிஞ்சுப் பூடுமா வூட்டுத் தரித்திரமெல்லாம்? காசு கேட்டா, கொடுக்கமாட்டேன்றீங்களா ஒளிச்சு வெச்சுக் கினு? யார் சம்பாரிச்ச காசு? ஏய் மீனாட்சி! சும்மா அழுவாதே. போன வாரம் எட்டணா கொடுத்தேனே, அதைக் கொண்டா.

மீனா : வாணாம்ப்பா! கள்ளு கடைக்குப் போக வாணாம். அவங்க பேச்சைக் கேட்டு ஏன் இப்படி கெட்டுப் போவணும்?

முரு : யார் கெட்டுப் போறது? எனக்கு இன்னா நீ புத்தி சொல்றது? அந்த எட்டணாவை கொண்டு வரயா? இல்லாட்டி இப்போ உங்க ஆத்தாளுக்கு விழுந்த உதை உனக்கும் கிடைக்கும்.

மீனா : அந்த எட்டணாவுக்கு அரிசி வாங்கினா எத்தனை நாளைக்கு நம்ம வூட்டுக்கு வரும்! ஒரு வேளை கள்ளு குடிச்சுப்புட்டா, எங்க எல்லாரையும் பட்டினி போட்டாப் போலேதானே ஆகுது?

முரு : உன்னெ பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிச்சத்துக்கு என்னா டான்னா, இந்த மாதிரி வாயாட கத்துக்கிணை யாக்கும். சீ,சீ! உள்ளே போய்ப் பணத்தெ எடுத்துக்கிணு வா.

(கண்ணனும் மாயாண்டியும் தெருவிலிருந்து கொண்டு கூப்பிடு கிறார்கள்.)

கண் - மாயா : டே முருகா!

முரு : இந்தா வந்திட்டேன். தா, மீனாச்சி! ஜல்தி எடுத்தா அந்த எட்டணாவை.

மீனா : படுபாவிங்க நல்லா வந்து சேந்தாங்க. வூடு இனிமேலே நாசந்தான்.

கண் : (வெளியிலிருந்தபடியே) இந்த முருகன் இருக்கானே ரொம்ப கோழை மனசுக்காரன். எத்தினி நேரம் ஆக்கறான், பாரு.

மாயா : கோழை மனசுமில்லே, மண்ணுமில்லே. பொம்பளெங் களுக்குப் பயந்தவன். தான் சம்பாரிச்ச காசை எடுத்துக்கினு வரத்துக்கு எத்தினி நேரம் பாரேன்.

மீனா : அப்பா! நான் சொல்றேன், கேளு.

முரு : கிளிப்புள்ளெக்கி சொல்ற மாதிரி அப்போ புடிச்சு சொல் றேன் பணத்தைக் கொண்டு வான்னு. என்னமோ கதை பேசிக் கிணு இருக்காளே.

(அருகில் சென்று ஓங்கி இரண்டு அறை கன்னத்தில் கொடுக்கிறான். மீனாட்சி “கோ” வென்று அழுகிறாள்.)

கறு : (உள்புறமாக இருந்துகொண்டு) ஐயையோ! கொயந்தையெ கொன்னுப்புடராங்களே.

முரு : உன்னை, உன் கொயந்தையெ ரெண்டு பேரையும் கொன்னுப் புடுவேன் இப்போ. வெச்சிருக்கற பணத்தே கொண்டுவரீங்களா இல்லையா?

கறு : (எட்டணாவை வீசி எறிந்து) எடுத்துக்கிணு போ. நாசமாப் போவானுங்க எல்லாம். இப்படிக் குட்டிச் சுவராக்கறாங்களே. இவங்
கள்ளாம் அழிஞ்சுதான் பூடுவாங்க. ஐயோ! நல்லா ஒயுங்கா இருந்தவரை எப்படி கெடுத்துப்புடுது இந்தக்குடி?

(முருகன் வெளியே போய்விடுகிறான். கண்ணனும், மாயாண்டியும் கூடவே சிரித்துக் கொண்டு போகிறார்கள். கறுப்பாயி, குடிசைக்கு முன்புறமாக வந்து உரக்கக் கத்துகிறாள்.)

கறு : ஊரிலே கேள்வி முறையே இல்லியா? தெய்வம், தேவாதிங்கள் ளாம் இல்லியா? நல்லா இருந்த குடும்பம் கெட்டுப் போவுதே. கடவுளே! உன்னைக் கும்பிட்டதெல்லாம் வீணாப்போச்சே. போனகுடி மறுபடியும் வந்துட்டுதே.

(மீனாட்சி, மானம் பொறுக்கமுடியாமல், தாயாரைக் கைபிடித்து உள்ளே அழைத்துக்கொண்டு போகிறாள்.)


வாடகைக்கு இடம்

முதற் களம்
இடம் : சென்னையில் ரோட் ஓரமாகவுள்ள ஒரு நடை பாதை.

காலம் : காலை நேரம்.

(தலை குனிந்துகொண்டும், இரண்டு கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டும், சோமு, தனக்குத்தானே ஏதோ பேசிக் கொண்டு மெது வாக நடந்து கொண்டிருக்கிறான்.)

சோமு : எத்தனை நாள் இப்படி அலைவது? சென்னையிலுள்ள தெருக்களின் பெயர்களெல்லாம் இப்பொழுது நன்றாக நெட்டுருவாகிவிட்டது. ஒரு பேட்டையா, ஒரு புறமா, ஒரு நகரா? சுற்றாத வீதியில்லை; நுழைந்து பாராத வீடு இல்லை. எந்த வீட்டிலே எந்த மாதிரி மனுஷ்யர்கள் இருக்கிறார்களென்பது இப்பொழுது எனக்கு நன்றாகத் தெரியும். இப்படி அலைந்து திரிந்ததற்கு எனக்கு ஒரு பிரயோஜனம் ஏற்பட்டது. ஓர் உத்தி யோகத்திற்கு என்னைத் தகுதிப்படுத்திக் கொண்டு விட்டேன். அதுதான் ஸென்ஸஸ் ஆபீஸர் (ஜன கணித உத்தியோகஸ்தர்) வேலை. ஆனால் உத்தியோகம் என்ன திறமையைப் பார்த்தா கொடுக்கிறார்கள்? உம்… இந்த சென்னை மகாஜனங்களுடைய சுபாவமே ஒரு தினுசாயிருக்கிறது. நானுந் தான் இருபத்துமூன்று வருஷங்களாக வெளியூர்களில் இருந்திருக்கிறேன். தெற்கே தூத்துக்குடி முதல் வடக்கே விசாகப்பட்டணம் வரை முக்கியமான ஊர்களிளெல்லாம் உத்தியோகம் பார்த்திருக்கிறேன். இந்த மாதிரி வீட்டுக்குக் கஷ்டப்பட்டதுமில்லை; இந்த மாதிரி மனுஷ்யாளை பார்த்தது
மில்லை ஐயா! அதுவும் வீட்டுக்குச் சொந்தக்காரரா யிருந்துவிட்டால் அவர்கள் பேசுகிற பேச்சு, தனி தோரணையாகவே இருக்கிறது. “ஏன் ஸார், இங்கே இடம் காலியாயிருக்கிறதென்று சொன்னார்களே, இருக்கிறதா?” என்று போய்க்கேட்டால் “யார் உமக்குச் சொன்னது?” என்று நம்மையே திருப்பிக் கேட்கிறார்கள். “இல்லை, இப்படி காற்றுவாக்கில் கேள்விப்பட் டேன்” என்று ஈனஸ்வரமாக, பல்லை இளித்துக் கொண்டு, தலையைச் சொறிந்துகொண்டு, எப்படியாவது இடம் இருக்கிறதென்று சொன்னால் போதும் என்று எதிர்பார்த்துப் பதில் சொன்னால் “காற்றுவாக்கில்தானே கேள்விப்பட்டீர்கள்; அந்தக் காற்றையே போய்க் கேளும்” என்று அலட்சியமாகப் பதில் திருப்பிச் சொல்லி விடுகிறார்கள். தாங்கள் ஏதோ சாமர்த்தியமாகப் பேசி விட்டதாகவும், நம்மை முட்டாளாக்கி விட்டதாகவும் அவர்கள் நினைப்பு. இன்னும் சில வீடுகளில் நுழைந்து கேட்டால் “எத்தனை குழந்தைகள்?” என்று கேட்கி றார்கள். புருஷன், பெண்சாதியாக மட்டும் இருந்தால் இடம் கொடுப்பார்களாம். இந்த இடத்திற்காக, எனது தள்ளாத தாயா ரையும், மூன்று குழந்தைகளையும் எங்கே கொண்டுபோய் தள்ளிவிடுவது? வேறு சில இடங்களில் “உங்களுக்கென்ன எழுதுகிற உத்தியோகமா? படிக்கிற உத்தியோகமா?” என்று கேட்கிறார்கள். படிக்கிறவர்கள் வந்தால் இரவெல்லாம் படித் துத் தொலைப்பார்கள்; ‘எலக்ட்ரிக் சார்ஜ்‘ அதிகமாகும் என்பது இவர்கள் கவலை. மற்றுஞ் சிலர் “உங்களுக்கு கவர் மெண்ட் உத்தியோகந்தானே?” என்று கேட்கிறார்கள். கவர்ன் மெண்ட் உத்தியோகமாயிருந்தால் வாடகை ஒழுங்காக வரும் என்பது இவர்கள் நம்பிக்கை. சரி, இப்படியெல்லாந்தான் கேட்கிறார்களே, அதிலே ஒரு மரியாதை உண்டா? பேச்சிலே இனிமை உண்டா? ஹுஹூம் - லவலேசமும் கிடையாது. இவர்கள் வீடேறி வந்து பிச்சை கேட்கிறவர்கள் மாதிரி நினைத்துப் பேசுகிறார்கள். வீடேறிப் போவானேன்? தெரு விலே போய்க் கொண்டிருக்கிறபோது, யாராவது ஒருவரைப் பார்த்து “ஐயா! இதென்ன வீதி?” என்று கேளுங்கள். உங்கள் முகத்தைக்கூட பாராமல் “எனக்குத் தெரியாது” என்று சொல்லி விட்டுப் போய்க் கொண்டே இருப்பார்கள். ஏதாவது ஓர் ஆபீஸிலே சென்று அல்லது வியாபாரஞ் செய்கிற கடையிலே சென்று, “ஏன் சார், இந்த விலாசதார் எங்கே யிருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேளுங்கள். “ஏன் ஐயா! இதென்ன போஸ்டாபீஸ் என்று நினைத்துக் கொண்டீர்களா?” என்று வள்ளென்று விழுவார்கள். இவையெல்லாம் சென்னைப் பட்டணத்து மரியாதைகள்!

(சோமுவின் நண்பன் ராமு எதிர்ப்படுகிறான்.)

ராமு : என்ன சோமு? நீயே ஏதோ பேசிக் கொண்டு போகிறாய்? வீடு எங்கேயாவது அகப்பட்டதா?

சோ : வா, ராமு, உன்னைப் பார்க்கவேண்டுமென்றுதான் இருந் தேன். உம்… வீடா? சுடுகாட்டிலேகூட இடம் இல்லை.

ரா : ஏன் அவ்வளவு வெறுப்பு?

சோ : என்ன அப்பா, ஒரு நாளா, இரண்டு நாளா? மூன்று மாதமாக நானும் இந்த வீட்டுக்கு அலைகிறேன். ஒரு இடம்கூட அகப் படமாட்டேனென்கிறதே. ஏன் தஞ்சாவூரிலிருந்து மாற்றலாகி வந்தோ மென்று இருக்கிறது.

ரா : ஆமாம் கஷ்டந்தான். தாயப்ப முதலி தெரு விலே ஓர் இடம் சொன் னேனே, அதைப் பார்த் தாயா?

சோ : நீ திருவல்லிக்கேணியி லல்லவோ அந்த இடம் இருக்கிற தென்று சொன்னாய்? அங்கே அந்த மாதிரி பெயருள்ள தெருவே இல்லையே. வேறு எங்கேயோ தையப்ப முதலி தெரு என்று ஒன்று இருக்கிறதாம்.

ரா : சென்னையிலே இது ஒரு சங்கடம். நமது நாட்டிலேயுள்ள ஜாதிப் பெயர்களையெல்லாம் தெருக்களுக்கு வைத்திருக்கி றார்கள். நமது நாட்டிலே எத்தனையோ கவிஞர்கள், எத்த னையோ நல்ல அரசர்கள் இருந்திருக்கிறார்களே, அவர்களுடைய பெயர்களை வைக்கக்கூடாதா?

சோ : பெயர் வைக்கிற தொல்லையே வேண்டாம். ரங்கூன், கொளும்பு முதலிய நகரங்களில் இருக்கிற மாதிரி தெருக்க ளுக்கு வரிசையாக ஒன்று, இரண்டு என்று நம்பர் கொடுத்து விடலாமே.

ரா : வாஸ்தவம். அப்படியே செய்திருக்கலாம். புதிதாகத் தோன்றிய தியாகராயநகரிலாவது இப்படித் தெருக்களுக்கு நம்பர் தொடுத்
திருக்கலாம். ஆனால் தற்பெருமையென்று ஒன்றிருக் கிறதல்லவா? அது, எந்தச் சீர்திருத்தத்தையும் செய்யவிடாமல் குறுக்கே நிற்கிறது.

சோ : சரி, சரி, ராமு! நீ யென்ன நகரச் சீர்திருத்தம் செய்யப் போகிறாயா? அல்லது எனக்கு வீடு பார்த்துக் கொடுக்கப் போகிறாயா?

ரா : இல்லையப்பா! பேச்சுவாக்கில் வந்த விஷயம் இது. இருக் கட்டும். நாளை காலை காபி சாப்பிட்டுவிட்டு என் வீட்டுக்கு வா. இரண்டு பேரும் ஒரு சுற்று சுற்றிக் கொண்டு வரலாம். உனக்கு திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம்பேட்டை, இராயப் பேட்டை, புதுப்பேட்டை இதற்குள் இருந்தால் பரவாயில்லை தானே?

சோ : எந்தப் பேட்டையானாலும் சரி. வண்ணாரப் பேட்டை யானால்
கூட போகத் தயார். அதற்கப்பால்கூட ஏதாவது பேட்டை இருக்கிறதோ?

ரா : (சிரித்துக் கொண்டே) இருக்கிறது; காலாடிப் பேட்டை, கொருக்குப்பேட்டை………..

சோ : வேண்டாம், வேண்டாம். எனக்குக் கால் ஆடிப்போக வேண்டுமென்றும், கிறுக்குப்பிடிக்க வேண்டுமென்றும் ஆசீர் வதிக்கிறாய் போலிருக்கிறது.

ரா : (உரக்கச்சிரித்து) பட்டணத்திற்கு வந்து நல்ல அனுபவம் ஏற்பட்டுவிட்டது உனக்கு, இல்லையா? சரி; நாளை காலை உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்;

சோ : வருகிறேன். இன்னும் எத்தனை நாளைக்கு இந்தக் கால் நடையோ? (ராமு செல்கிறான்.)

சோ : (தனக்குள்) பட்டணத்திற்கு வந்தாலே மரியாதைகூட மாறிவிடுகிறது. காபி சாப்பிட்டுவிட்டு வா என்று சொல்கி றானே தவிர, காபி சாப்பிட வா என்று சொன்னானா பார் இந்த ராமு? தஞ்சாவூரில் எவ்வளவு அன்னியோன்னியமாக இருவரும் பழகினோம். (உதட்டைப் பிதுக்கிக் கொள்கிறான்.)

(எதிர்ப்புறமாக சீனு வருகிறான்.)

சீனு : என்ன சோமு! எதை நினைத்துக் கொண்டு உதட்டைப் பிதுக்குகிறாய்? வீடு எங்கேயாவது அகப்பட்டதா? எங்கே அகப்பட்டாலும் சரி, எனக்கும் அதில் ஒரு ‘போர்ஷன்’ (பாகம்) கிடைக்கும்படி ஏற்பாடு செய். இந்த ஹோட்டல் சோறு ஒத்துக் கொள்ளவேயில்லை யப்பா! வயிற்றுவலி விடமாட்டேனென் கிறது.

சோ : (கொஞ்சம் ஆத்திரத்துடன்) எனக்கு மட்டுமென்ன, மாமியார் வீட்டில் வடித்துக் கொட்டுகிறார்களென்று நினைத்துக் கொண்டாயோ? போடா போ. கடுகு வெடிப்பது போல் என்னமோ வார்த்தைகளைக் கொட்டுகிறான். நான்தான் மூன்று மாதமாக அலைகிறேன் வீட்டுக்கு. இவனுக்குப் ‘போர் ஷன்’ வேண்டுமாம்.

சீ : கோபித்துக் கொள்ளாதே சோமு. படுகிற கஷ்டத்தினால் சொன் னேன்.

சோ : நானென்ன இந்திர போகத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறாயோ? ஹோட்டல் சோறு எனக்குந்தான் பிடிக்கவில்லை. அதுவும் இந்த ‘ரேஷன்’ காலத்திலே சொல்ல வேண்டியதேயில்லை. ஹோட்டலுக்குள் நுழைந்தாலே பசி மந்தித்துப் போய்விடுகிறது.

சீ : இதனால்தான் டாக்டர்களுக்கு நல்ல வருமானம் இப்பொழுது.

சோ : அந்த ஆராய்ச்சி நமக்கு எதற்கு? உனக்கு எங்கேயாவது இடம் அகப்பட்டதா?

சீ : எங்கும் அகப்படவில்லையே. உன்னைத்தான் நம்பிக் கொண்டிருக்கிறேன்.

சோ : என்னையா? அதைவிட இந்த ராந்தல் கம்பத்தை நம்பு. இருட்டு வேளையிலே வெளிச்சம் கொடுக்கும்; உன்னைத் தன்மீது சார்த்திக் கொள்ளும்; காலில் அழுக்குப்பட்டால் அதில் துடைத்துக் கொள்ளலாம்; முதுகில் தினவு எடுத்தால் அதில் தேய்த்துக் கொள்ளலாம்; வா, ஆபீசுக்கு நேரமாயிற்று. போய் பிண்டம் கொட்டிக் கொண்டு போகவேண்டுமில் லையா?

(இருவரும் ஹோட்டலுக்குப் போகிறார்கள்.)

இரண்டாவது களம்
இடம் : ஒரு மாடி வீட்டின் முன்பக்கம்

காலம் : காலை நேரம்.

(கீழேயுள்ள தாழ்வாரத்தில் ஒரு சார்மணையில் இருவர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் அந்த வீட்டுச் சொந்தக்காரர். வயது சுமார் ஐம்பத்தெட்டு இருக்கும். பென்ஷன்தார். மற்றொருவர், அடுத்த தெருவிலுள்ள ஒரு வீட்டுக்குச் சொந்தக்காரர். அவரும் இதேமாதிரி பென்ஷன்தார்; ஏறக்குறைய இதே வயதுதான்.)

முதல் வீட்டுக்காரர் : என்ன ஸார் போங்கள்! பொழுது போனால், பொழுது விடிஞ்சால், இந்த குடித்தனக்காரர் தொல்லை, பெருந் தொல்லையாகப் போய்விட்டது. அங்கே ஓட்டை, இங்கே ஒழுகல், அதைச் செய்யணும், இதைச் செய்யணும், இதே பாரா யணமா?

இரண்டாவது வீட்டுக்காரர் : அதை ஏன் கேட்கிறீர்கள்? எனக் கும் இதே அவஸ்தைதான். இப்பொழுது சுண்ணாம்பு விற்கிற விலையிலே, சிமெண்ட் விற்கிற விலையிலே வெள்ளையடிக்க முடியுமா? ‘ரிப்பேர்’ பண்ண முடியுமா?

மு-வீ : ‘கஷ்டமா யிருக்கிறதென்றால் காலி பண்ணி விடுங்கள்’ என்று சொன்னால் அதுவும் மாட்டேன் என்கிறார்கள். ‘எங்களுக்கு வேறு சௌகரியமான இடம் அகப்பட்டால்தான் போவோம்’ என்கிறார்கள். மிஞ்சிப் போனால் ‘ரெண்ட் கண்ட் ரோல் ஆக்ட்’ (வாடகை நிர்ணயச் சட்டம்)படி எங்களை நீங்கள் போகச் சொல்ல முடியாது என்று முரண்டு பிடிக்கிறார் கள். என்ன செய்வது? பெரிய அவஸ்தையாகப் போய்விட்டது.

இ-வீ : கல்லிலும் சுண்ணாம்பிலும் ஏன் இவ்வளவு பணத்தைக் கொட்டினோம், எங்காவது கிராமத்திலே போய் நிம்மதியாக இருந்திருக்கக் கூடாதா என்று இப்பொழுது தோன்றுகிறது. என் வீட்டிலும் இதே கதிதான். மூன்று குடித்தனக்காரர்கள் இருக்கிறார்களென்று பேர். இந்த மூன்று பேரும் சேர்ந்து என்னைப் படுத்துகிற பாடு உண்டே அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும். இத்தனைக்கும் நானென்ன மற்றவர்களைப் போல் வாடகையை உயர்த்தி இருக்கிறேனா?

மு-வீ : இப்பொழுது என்ன வாடகை வருகிறது?

இ-வீ : மொத்தம் அறுபத்தேழு ரூபாய் வருகிறது.

மு-வீ : முன்னே?

இ-வீ : நாற்பது ரூபாய் வந்து கொண்டிருந்தது. ஆனால் முன்னைவிட இப்பொழுது செலவு எவ்வளவு ஆகிறதென்று நினைக்கிறீர்கள். ஒட்டிக்கு இரட்டியல்லவோ ஆகிறது?

மு-வீ : இருந்தாலும் உம்ம பாடு அதிர்ஷ்டந்தான். வாடகை ஒழுங்காக வந்து கொண்டிருக்கிறதோ இல்லையோ?

இ-வீ : அதெல்லாம் மூன்றாந்தேதி காலையில் கறந்து வாங்கி விடுவேன். எல்லாரும் கவர்ன்மெண்ட் உத்தியோகஸ்தர்கள் பாருங்கள்.

மு-வீ : இந்த வீட்டிலே நான்கு குடியிருக்கிறார்கள். இடத்திற்குத் தகுந்தாற்போல் மூன்று, நான்கு என்று வாடகையை உயர்த்தி யிருக்கிறேன். இதற்கு இவர்கள் போடுகிற கூப்பாடு இருக் கிறதே, சொல்ல முடியாது. நான் ஒன்றையும் காதில் போட்டுக் கொள்ளாதவன் போல் இருந்து விடுவது.

இ-வீ : பின் என்ன செய்கிறது? என் வீட்டில் பின்புறம் தட்டுமுட்டுச் சாமான்கள் போட்டிருக்கிறேன். அந்த இடத்தைக் காலி பண்ணி விட்டால் கூட பத்து ரூபாய் கிடைக்கும். இப்பொழுது ஜனங்கள் வீட்டுக்கு அலைகிறது இருக்கிறதே, அதைச் சொல்லி முடியாது.

மு-வீ : ஏதோ இந்த வீட்டைக் கட்டினோமோ, பிழைத்தோமோ? இல்லாவிட்டால் இந்த மாதிரி சார்மணையில் நிம்மதியாக உட்கார்ந்து கொண்டிருக்க முடியுமா என்ன?

இ-வீ : என்ன அலைகிறார்கள், என்ன அலைகிறார்கள்? கட்டை முட்டை போட்டிருக்கிற பரண் இருக்கிறதே அதைக் காலி பண்ணி விட்டால் கூட வாடகை வரும் போலிருக்கிறது.

மு-வீ : இருந்தாலும் ஸார், இதற்குமேலே நாம் குடித்தனம் வைத்துக் கொள்ளக் கூடாது. இதுவே நம்மால் சமாளிக்க முடியவில்லை. குடித்தனக்காரர்களுக்கு என்ன, ராத்திரி பன்னிரண்டு மணியா னாலும் ‘லைட்’ போட்டுக் கொண்டிருக்கிறார்கள்; கண்ட இடத்திலும் காரித்துப்பு
கிறார்கள்; குப்பையைப் போடுகிறார் கள். போதும், போதும். இப்பொழுது என் வீட்டிலே கூட ஒரு சின்ன இடம் காலியிருக்கிறது. அதை வாடகைக்கு விடலாம். ஆனால் தொந்தரவு அதிகமாகுமே யென்றுதான் பார்க்கிறேன்.

இ-வீ : அதற்கில்லை ஸார் நான் சொல்வது. இப்பொழுது கார்ப் பொரேஷனிலே வரியை வேறே அதிகப்படுத்தப் போகிறார் களாமே? ‘அஸ்ஸெஸர்’ வந்துவிட்டுப் போக வில்லையா போன வாரம்? அதை எப்படியாவது சரிக்கட்ட வேண்டாமா?

மு-வீ : ஆமாம் ஸார், ஞாபகமே இல்லை பார்த்தீர்களா? இங்கே கூட வந்துவிட்டுப் போனாராம். நான் அப்பொழுது வீட்டில் இல்லை. இந்தக் குடித்தனக்காரர்கள் என்ன சொல்லித் தொலைத் தார்களோ? நான் இருந்திருந்தால் ஒரு தினுசாகச் சொல்லியிருப் பேன். ஆமாம், வரியை அதிகப்படுத்தினால் அதை எப்படியாவது சமாளிக்க வேண்டும் ஸார்!

(இருவரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள், அப்பொழுது ராமு வும் சோமுவும் வருகிறார்கள்.)

ரா : குட் மார்னிங்!

மு-வீ : யாரு? என்ன வேணும்?

ரா : இங்கே ஏதாவது ‘போர்ஷன்’ காலியிருக்கிறதா?

மு-வீ : யாருக்கு? உமக்கா, இவருக்கா?

ரா : இவருக்குததான். என் ‘பிரெண்ட்’ (நண்பர்) இவர். தஞ்சாவூரி லிருந்து மாற்றலாகி இங்கு வந்திருக்கிறார். மூன்று மாதமா கிறது. எங்கும் வீடு அகப்படவில்லை.

இ-வீ : எங்கே உத்தியோகமோ?

சோ : ஒரு இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியிலே இருக்கிறேன்.

இ-வீ : ஆமாம், இந்தக் கம்பெனிகளிலெல்லாம் கவர்ன் மெண்டைப் போல மாதம் ஒழுங்காகச் சம்பளம் கொடுக்கி றார்களா?

சோ : இதுவரையில் எனக்கு ஒழுங்காகத்தான் கிடைத்துக் கொண்டு வருகிறது.

ரா : வாடகை சரியாகக் கிடைக்குமா என்று யோசிக்கிறீர்களோ? அதற்கு நான் ‘காரண்டி’. மாதம் பிறந்து ஐந்தாந்தேதி காலை யில் வாடகைப் பணம், உங்களுடைய ரசீதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்.

இ-வீ : பொடிவைத்துப் பேசுகிறார் பார்த்தீர்களா ஸார்! வாடகைப் பணத்தை வீட்டுக்காரர் வந்து வாங்கிக் கொண்டு போக வேண்டுமாம். அவர் வந்து கொடுக்கமாட்டாராம்.

ரா : (லேசாகச் சிரித்துக் கொண்டு) என் வார்த்தைக்கு இவ்வளவு அர்த்தம் இருக்கிறதென்று எனக்குத் தெரியாது.

மு-வீ : இருக்கட்டும். (சோமுவைப் பார்த்து) எத்தனை பேர் நீங்கள்?

சோ : நான், என் சம்சாரம், தாயார், மூன்று குழந்தைகள். அவ்வளவு தான்.

மு-வீ : எவ்வளவு சம்பளம் உமக்கு?

சோ : அறுபத்தைந்து ரூபாய்.

மு-வீ : இந்த ரூபாயில் இத்தனை பேரையும் வைத்துக் கொண்டு உம்மால் எப்படி சமாளிக்க முடியும்?

ரா : அது அவர் பொறுப்பல்லவா?

இ-வீ : மதராசிலேயே இருந்து பழக்கம் போலிருக்கு. அதுதான் பேச்சு தோரணையே ஒரு மாதிரியாயிருக்கு.

மு-வீ : பசங்களெல்லாம் ரொம்பச் சிறிசுகளோ?

சோ : எல்லாம் பத்து வயதுக்குட்பட்டதுகள்தான்.

மு-வீ : தாயார் ரொம்பத் தள்ளாதவளோ?

ரா : ரொம்ப பாலியமாகவும் இருக்க முடியாதில்லையா?

மு-வீ : அதற்கில்லை ஐயா, ரொம்ப வயதானவளாயிருந்தால் எல்லாருக்கும் தொந்தரவுதானே என்று கேட்கிறேன்.

ரா : எப்படி யிருந்தாலென்ன, அவாளவாள் இடத்திலே அவாளவாள் இருக்கப் போகிறார்கள்.

மு-வீ : ராத்திரி யெல்லாம் இருமிக் கொண்டிருந்தால், மற்றக் குடித் தனக்காரர்களுக்கும் சங்கடந்தானே?

ரா : இருமல், தும்மல் ஒன்றும் வராது என்று ‘காரண்டி’ எழுதிக் கொடுக்கிற டாக்டர் யாராவது இருந்தால் சொல்லுங்கள். அவரிடத்தில் சீட்டு வாங்கிக் கொண்டுவரச் செய்கிறேன்.

இ-வீ : (தமக்குள்) கொஞ்சம் அதிமாத்திரைதான் இவர்.

மு-வீ : என்ன வாடகை கொடுக்க முடியும்?

ரா : இடத்தைப் பார்த்தல்லவோ சொல்ல வேண்டும்.

இ-வீ : இடம் இருக்கிறது. இந்த வீடு முழுவதும் ஒழித்துக் கொடுக் கிறேன். இவருடைய சக்தி எவ்வளவு என்றுதான் கேட்கிறேன்.

ரா : இவருக்கு எவ்வளவு இடம் தேவையோ அவ்வளவு இடமிருந்து, தமது சக்திக்கும் அனுசரித்ததாயிருந்தால் அந்தப்படி வாடகை கொடுக்கத் தயார்.

இ-வீ : (பொடிமட்டையைத் தட்டிப் போட்டுக் கொண்டு) பலே பேர்வழி! பலே பேர்வழி!

சோ : ராமு, போகலாம் வா! இடமும் வேண்டாம், கிடமும் வேண்டாம்.

இ-வீ : (தமக்குள்) வாடகைக்கு வருகிற பெயர்வழிகளுக்குக் கோபம் வேறே, கௌரவம் வேறேயா?

ரா : ஸார் என்னமோ தானே சொல்லிக் கொள்கிறாரே?

மு-வீ : ஸார்! என்னத்துக்கு வீண் பேச்சு? சின்ன இடம் ஒன்று இருக்கிறது. பின் பக்கத்திலே இரண்டு அறை. வெந்நீர் உள் தனியாகக் கிடையாது. வீட்டுக்குள்ளே வரவேண்டுமானால் கொல்லைப்பக்கமாகத்
தான் வரவேண்டும். பசங்கள் அதிகமாக சேஷ்டை செய்யக் கூடாது. வெளியார் யாரும் அதிகமாக வந்து போய்க் கொண்டிருக்கக் கூடாது. ராத்திரியிலே அதிகநேரம் வளவளவென்று பேசக்கூடாது. எல்லாக் குடித்தனக்காரர்க ளுடனும் ஒத்துப் போகவேண்டும். உள் இரண்டும் பழைய ரூம்கள்தான். இப்பொழுது சுண்ணாம்பு அடிக்க முடியாது. அதிக மழை பெய்தால் கொஞ்சம் ஒழுகத்தான் செய்யும். வாடகை பன்னிரண்டு ரூபாய். லைட் செலவு முதலியவைக ளெல்லாம் வேறே. மொத்தம் பதினைந்து ரூபாயாகும்.

ரா : ரொம்ப சந்தோஷம், இவ்வளவு விஸ்தரித்துச் சொல்லி விட்டீர்களே.

மு-வீ : ஆமாம்; பின்னாடி மனஸ்தாபம் வரக்கூடாது பாருங்கள்.

சோ : (கோபத்துடன்) வா, ராமு! நாம் போகலாம். இந்த நிர்ப்பந்தங்
களுக்குட்பட்டு குடியிருப்பதைவிட நரகத்திலே போய் வாசஞ்செய்யலாம்.

இ-வீ : தாராளமாகப் போய் வாசஞ்செய்யலாமே!

ரா : அங்கேயும் உங்களுடைய தொந்தரவு இருக்குமே யென்றுதான் யோசனையாயிருக்கிறது.

சோ : வா ராமு! வீண் பேச்சு எதற்கு? குடித்தனமும் வேண்டாம், மண்ணாங்கட்டியும் வேண்டாம். பழையபடி மாற்றல் செய்து கொண்டு போய்விடுகிறேன். சென்னையிலே ஒண்டுக்குடி யிருந்து சங்கடப்படுவதைவிட தஞ்சையிலே பஞ்சையாகப் பறப்பதுவே மேல்.

(இருவரும் வேகமாகச் செல்கிறார்கள்.)

இ-வீ : பார்த்தீர்களா அகம்பாவத்தை?

மு-வீ : போகிறார்கள் தறிதலைகள். யாருக்கு நஷ்டம்?


கடவுளும் வாழ்க்கையும்

முதற் களம்
இடம் : பூஜை அறை.

காலம் : காலை.

(செல்வச்சீமானான வேதமூர்த்தி, ஆடம்பரமான தமது பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருக்கிறார். எட்டினாற்போல், அவருடைய மகன் தாமோதரன் நிற்கிறான்.)

வேதமூர்த்தி : (பாடுகிறார்) மூவா போற்றி! முதல்வா போற்றி! முத்தே போற்றி! முனியே போற்றி! (எதிரிலிருக்கும் ஒரு வெள்ளி சம்புடத்தைத் திறந்து பார்த்து) அடே, கர்ப்பூரமே இல்லையே. தாமோதரம்! முந்தாநாளே சொன்னேனே வாங்கிவாவென்று. மறந்துவிட்டாயா?

தாமோதரன் : மறக்கவில்லை; வாங்கி வர மனமில்லை.

வே : (திடுக்கிட்டு) என்ன? என்ன?

தா : இரண்டணா விற்ற கற்பூரத்திற்கு இரண்டு ரூபாய் கொடுக்க மனமில்லை.

வே : அடே, அடே, உனக்கு இப்படிச் சொல்ல என்ன துணிச்சல்?

தா : நியாயத்தைச் சொல்ல பயப்படுவானேன்?

வே : என்ன நியாயம்? கடவுளுக்குக் கர்ப்பூரம் வாங்கிக் கொளுத்துவது அநியாயமா?

தா : அதைப்பற்றி நான் சொல்லவில்லை; இரண்டணா சாமானை இரண்டு ரூபாய் கொடுத்து வாங்குவது அநியாயம் என்றுதான் சொல்கிறேன்.

வே : (ஆத்திரம் கலந்த சிரிப்போடு) ஓ! நீ எகனாமிக்ஸ் (பொருளாதார சாஸ்திரம்) பாஸ் பண்ணியிருக்கிறாயோ?

தா : வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொள்ள அந்த சாஸ்திரம் உபயோகப்படுமே தவிர கடவுளை அறிய உபயோகப்படாது.

வே : (கோபத்துடன்) போடா அதிகப் பிரசங்கி! படிக்க வைத்ததன் பலன், பெற்ற அப்பனோடு நன்றாக வாயாடத் தெரிந்து கொண் டிருக்கிறான்!

தா : கோபியாதீர்கள் அப்பா! கர்ப்பூரத்திற்குப் பதில் விளக்கை ஏற்றிக் காட்டினால் என்ன?

வே : பண்ணின பாவம் போக கர்ப்பூரம் ஏற்ற வேண்டு மென்றே பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்தக் கர்ப்பூரத்தைப் போல் நமது பாவங்களும் கரைந்து எரிந்துவிடுமாம்.

தா : பாவத்தைச் செய்து விட்டு, பிறகு அதை எரிக்க முயல்வதைவிட, பாவத்தைச் செய்யாமலே இருந்துவிட்டாலோ?

வே : அடே, நீ ரொம்ப பெரிய மனிதனாகி விட்டாய்! பெரியவாள், பெருந்தலை யென்ற மரியாதை கொஞ்சங்கூட இல்லாமல் குதர்க்கம் செய்ய எங்கே கற்றுக் கொண்டாய்?

தா : பாவம் செய்யாம லிருக்கவேண்டுமென்று சொல்வது குதர்க் கமா?

வே : பாவம் செய்யாமல் ஒரு நிமிஷமாவது இருக்க முடியுமா?

தா : இது வேறேயா? பாவஞ் செய்வது சகஜம் என்ற நிலைமையிலா உங்கள் பூஜை உங்களைக் கொண்டு விட்டிருக்கிறது?

வே : பின் கடவுள் எதற்காக இருக்கிறார்? அவரை நாம் ஏன் பூஜிக்கிறோம்? நமது பாவங்களைப் போக்குவார் என்பதற்குத் தானே?

தா : அப்படியானால் கடவுள் என்ன வண்ணானா?

வே : அபசாரம்! அபசாரம்! இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு நாஸ்திகத்தழும்பு நன்றாக ஏறியிருக்கிறது. அடே தாமோதரம்! கண்டிப்பாகச் சொல்கிறேன். இனி இந்த மாதிரி யெல்லாம் என் எதிரே பேசிக் கொண்டு நில்லாதே. பெற்ற தோஷத்திற்காக உனக்குப் பிண்டம் கொட்டிவிடுகிறேன். நீ எங்காவது போ; என்னமாவது செய்.

தா : நான் ஏன் எங்காவது போகவேண்டும்? நான் உங்களுடைய பிள்ளை; பிச்சைக்காரனல்ல.

வே : கர்ப்பூரம் வாங்கி வரவில்லையா என்று கேட்டதற்கு இவ்வளவு வாதப் பிரதிவாதமா? காலம் கெட்டுவிட்டது.

தா : காலம் கெடவில்லை; நாம்தான் கெட்டுவிட்டோம். கடவுளை நன்றாக ஏமாற்றத் தெரிந்துகொண்டிக்கிறோமில்லையா?

வே : அது எப்படி?

தா : பூஜை அறைக்கு வந்தபிறகுதானே நமக்குக் கடவுள் ஞாபகம் வருகிறது. அவர் முன்னே பலகாரத்தைத் திறந்து காட்டிவிட்டு நாம் சாப்பிடுகிறோம். நாம் பொய் சொல்கிறபோது அல்லது மற்றவர்களைத் திட்டுகிறபோது, அவர் காதை மூடிக் கொள்ள வேண்டும். தோத்திரப் பாடல்கள் பாடுகிறபோது மட்டும், அவர், காது திறந்து கேட்க
வேண்டுமென்று எதிர்பார்க் கிறோம். பொதுவாக, நம்மைப்போல அவரை ஆக்கிவிடுகி றோமே யொழிய, அவரைப்போல் நாம் ஆகவேண்டுமென்று முயற்சி செய்வதுகூட இல்லையே. வீடு கட்டி முடிந்தால் ‘என் வீடு; நான் கட்டினேன்’ என்று பெருமையாகச் சொல்லிக் கொள் கிறோம். மழையினாலோ காற்றினாலோ சுவர் விழுந்து விட்டால் ‘கடவுளின் கோயில் குட்டிச் சுவராய்ப் போக’ என்று, பாவம், எங்கேயோ நமக்கெல்லாம் எட்டாம லிருக்கும் அந்தக் கடவுளைச் சபிக்கிறோம்

வே : போதும்; படித்ததற்குப் பயன் நன்றாகப் பிரசங்கம் செய்யத் தெரிந்துகொண்டுவிட்டாய். இந்தப் படிப்புக்காகச் செல வழித்த பணத்திற்குப் பால் வாங்கி அபிஷேகம் செய்திருந் தாலும் புண்ணிய
முண்டு.

தா : ஏழைகளுக்குக் கஞ்சி வார்த்தாலும் பிரயோஜனமுண்டு என்று சொல்லுங்கள்.

வே : சரி, சரி; இலை போட்டாயிற்றா பார்.

(தாமோதரன் செல்கிறான்.)

வே : (தனக்குள்) தவமிருந்து ஒரு பிள்ளையைப் பெற்றேன். அது இப்படியாகிவிட்டதே!

(யோசித்துக்கொண்டே செல்கிறார்.)

இரண்டாவது களம்
இடம் : முன்பக்கத்து ஹால்.

காலம் : நடுப்பகல்.

(வேதமூர்த்தி சாப்பிட்டுவிட்டு வருகிறார். அங்கே இவருக்காகக் காத்துக் கொண்டிருக்கும் பூஷணம் என்னும் வியாபாரியைச் சந்திக்கிறார்.)

வேதமூர்த்தி : வாருங்கள், வாருங்கள். ஏது இவ்வளவு தூரம்? நல்ல வெயில் வேளை.

பூஷணம் : தங்களிடத்தில்தான் ஒரு காரியமாக வந்தேன்.

வே : என்ன காரியமோ? செய்யக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

பூ : சரக்கு வந்து காத்துக்கொண்டிருக்கிறது. பாங்கியில் பணத்தைக் கட்டிவிட்டு அதை எடுக்க வேண்டும். அதற்காகத்தான் உங்க ளிடம் வந்தேன்.

வே : என்னிடத்திலே பணமேது? (பொறுத்து) அப்படி எவ்வளவு பணம் தேவையிருக்கும்.

பூ : எல்லாம் ஒரு எண்ணாயிரம் ரூபாய் இருந்தால் போதும்.

வே : அவ்வளவுக்கு திடீரென்று எப்படிக் கிடைக்கும்? (பொறுத்து) எவ்வளவு வட்டி கொடுப்பீர்கள்?

பூ : நியாயமான வட்டியைக் கொடுக்கத் தயார். சரக்கை ‘டிலவரி’ எடுத்தவுடன் கிராக்கியிருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் ரொக்கமாகப் பணம் வந்துவிடும். அதை அப்படியே திருப்பிக் கொடுத்து
விடுவேன். இரண்டு மூன்று நாட்களுக்குப் போட்டுத் திருப்புவதற்குத்தான் பணம் வேண்டியிருக்கிறது.

வே : ஈடு என்ன காட்டுகிறீர்கள்?

பூ : என்ன, எட்டு ரூபாய்க்கு நான் பெறுமானமில்லையா? இன்று நேற்று வியாபாரியா நான்? ஏதோ அவசரத்திற்குத்தானே கேட் கிறேன்?

வே : இருந்தாலும் பாருங்கள். இன்றைக்கிருந்தாரை நாளைக் கிருப்பரென்றெண்ணவோ திடமில்லை. இந்தக் காலத்திலே யார், யாரை நம்புகிறார்கள்? ஏதேனும் பெறுமானமுள்ள சொத்தை ஈடு காட்டுங்கள்; யோசிக்கிறேன்.

பூ : உயிருள்ள மனிதனைக் காட்டிலும் உயிரில்லாத பொருளி னிடத்தில்தான் உங்களுக்கு அதிகமான நம்பிக்கைபோலிருக் கிறது.

வே : பூஷணம்! நாம் இங்கே பேசுவது வேதாந்தமல்ல; வியாபாரம்.

பூ : சரி, என்ன ஈடுமானம் வேண்டுமென்கிறீர்கள்? என் சம்சாரத்தி னுடைய வைர அட்டிகை இருக்கிறது. அது போதுமா?

வே : வைரமா? பூ! அதை யார் இந்தக் காலத்தில் சட்டை பண்ணு கிறார்கள்? அது ஒரு பெறுமானமுள்ள பொருளா என்ன?

பூ : சரி, வேறு எதை ஈடு காட்டுவது? தங்க நகைகள் அவ்வளவுக் கில்லையே. என்னுடைய பங்களாவின் கிரய பத்திரத்தை வேண்டு மானால் கொடுத்து வைக்கிறேன்.

வே : இன்ஷ்யூர் செய்திருக்கிறீர்களோ இல்லையோ?

பூ : செய்திருக்கிறேன்.

வே : எவ்வளவுக்கு?

பூ : ஐம்பதினாயிரம் ரூபாய்க்கு.

வே : சரி, அந்த இன்ஷ்யூரன்ஸ் பாலிஸியையும், பங்களாவின் கிரய பத்திரத்தையும் சேர்த்துக் கொடுங்கள்.

பூ : (யோசித்து) சரி, கொடுக்கிறேன், அவசரம்; என்ன செய்வது?

வே : ஒரு மாதத்திற்குள் எப்பொழுது திருப்பிக் கொடுப்பதாயிருந்த போதிலும், ஒரு மாதம் பூராவுக்கும் வட்டி கொடுத்துவிட வேண்டும்; அதுவும் முன்னாடியே கொடுத்துவிட வேண்டும்; அதாவது உங்களுக்குக் கொடுக்கிற பணத்தில், வட்டியைக் கழித்துக் கொண்டே கொடுப்பேன். சம்மதமா?

பூ : என்னுடைய அவசரத்தை நன்றாகத் தெரிந்து கொண்டுவிட் டீர்கள்.

வே : அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. வேறே எங்கேயாவது சௌகரியமாகப் பார்த்துக் கொள்ளலாமே?

பூ : வட்டி எவ்வளவோ?

வே : ஒரு வட்டி. அதுதான் தெரிந்தேயிருக்கிறதே.

பூ : இவ்வளவு பெரிய தொகைக்குக்கூடவா? ஈடு வேறே கொடுக்கி றேன்.

வே : ஐயா, சம்மதமானால், பத்திரம், பாலிஸி எல்லாம் எடுத்துக் கொண்டு சாயங்காலம் குளிர்ந்த வேளையில் வாருங்கள். எல்லாவற்றையும் ஒரு நிமிஷத்தில் முடித்துக் கொண்டு போகலாம். நான் கொஞ்சம் அலுப்பாற வேண்டும்?

பூ : சாயந்திரம் வருகிறேன். ஏதோ யோசித்துச் செய்யுங்கள். நீங்கள் பெரிய தெய்வ பக்தர் - எத்தனையோ தரும காரியங்கள் செய் திருக்கிறீர்கள். இந்த வட்டித் தொகை தங்களுக்கு ஒரு பிரமாத மல்ல.

வே : இந்த மாதிரி உபதேசங்களைக் கேட்டுச் சலித்துப் போனவன் நான். கடவுள் வேறே, தொழில் வேறே. இரண்டும் ஒன்று என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருப்பதனால்தான் உங்களுக்கு பண முடை ஏற்படுகிறது. சரி, போய் வாருங்கள்.

(வீட்டுக்குள்ளே போகிறார். பூஷணம் வெளியே போகிறார்.)

மூன்றாவது களம்
இடம் : முன்தாழ்வாரம்.

காலம் : மாலை.

(வேதமூர்த்தி உட்கார்ந்திருக்கிறார். எதிரில் இரண்டு மரமேறிகள் நிற்கிறார்கள்.)

முதல் மரமேறி : என்ன எஜமான், அம்பது மரம் இருக்குது; அம்பது ரூபா வாங்கிக்க கூடாதுங்களா?

வே : எண்பது ரூபாய்க்கு ஒரு சல்லிகூட குறைக்க முடியாது. இப்பொழுதுதான் மதுவிலக்குச் சட்டத்தைக்கூட எடுத்து விட்டார்கள். கள்ளுக் கடைகளெல்லாம் நல்ல ஏலத்திற்குப் போகின்றன.

இரண்டாவது மரமேறி : எங்கிங்கோ, பணத்தைக் கொட்டி ஏலம் எடுத்துப்புட்டாங்களே தவிர, கள்ளு முன்னே போலே செல வாகுங்களா?

வே : அந்த விஷயமெல்லாம் எனக்குத் தேவையில்லை. எண்பது ரூபாய்க்குச் சம்மதமா?

மு-ம : கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க. திருவிழா, கிருவிழா எல்லாம் செய்யறீங்க. எவ்வளவோ பணம் செலவழியுது உங்க தங்கக் கையாலே. இந்தத் தொகை வந்து உங்களுக்கு என்ன ஜீவனம் நடக்கப் போவுதுங்களா?

வே : அடே, அதிகமாகப் பேசாதே. குத்தகைச் சீட்டு எழுதிக் கொடுத்து, ரூபாயைக் கட்டிவிட்டு மரமேறுவதானால் ஏறு; இல்லாவிட்டால் இரண்டு பேரும் தோட்டத்தைவிட்டு வெளியே போங்கள்.

இ-ம : சரி எஜமான், காலம்பரே வரோம். ஏதோ பெரிய மனசு பண்ணி பாருங்கோ.

வே : பெரிய மனசும் கிடையாது; சின்ன மனசும் கிடையாது. ஒரே மனசுதான். எண்பது ரூபாயை எடுத்துக் கொண்டு காலையில் வாருங்கள்.

(மரமேறிகள் போகிறார்கள். இந்தச் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த தாமோதரன், வேதமூர்த்திக்குச் சமீபத்தில் வந்து நிற்கிறான்.)

தா : ஏன் அப்பா, தென்னை மரங்களை, கள்ளுக் குத்தகைக்கு விட லாமா? அது பாவமில்லையா?

வே : பாவமென்ன இருக்கிறது? கள்ளை நாமா குடிக்கிறோம்?

தா : குடிக்கச் செய்கிறோம்.

வே : அதற்கு நாமா ஜவாப்தாரி?

தா : இல்லையா? திருடியவனைக் காட்டிலும், திருட்டுக்கு உடந் தையா யிருக்கிறவன் பெரிய குற்றவாளி இல்லையா?

வே : உலகத்தில் எத்தனையோ அக்கிரமங்கள் நடக்கின்றன. அவை களுக்கெல்லாம் நாமா பொறுப்பாளி?

தா : நம் மூலமாக அக்கிரமங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ளலா மல்லவா?

வே : அடே, இந்தத் தர்க்க நியாயமெல்லாம் எனக்குத் தெரியாது. மரத்தைத் தண்ணீர் ஊற்றி வளர்த்தோம். இதற்காக நாம் பணத்தைச் செலவழித்திருக்கிறோம். அதிலிருந்து பலனைப் பெறுவதில் என்ன தவறு?

தா : நன்றாகப் பலனை அனுபவியுங்கள். தேங்காய், தென்னங் கீற்று எல்லாவற்றையும் எடுத்து உபயோகியுங்கள். யார் வேண்டா மென்றார்கள்? ஆனால் கள் மட்டும் எடுக்கவேண்டா மென்று தான் சொல்கிறேன்.

வே : வேண்டாமென்றால் அது ஏன் அதில் உற்பத்தியாகிறது?

தா : தண்ணீரில் தூசி இருந்தால் அதை அப்புறப்படுத்தி விட்டுத்தானே உபயோகிக்கிறோம். அதைப் போல் கள்ளை நீக்கிவிட்டு மற்றவற்றை உபயோகிக்கலாமே?

வே : நீ இப்படியெல்லாம் பேசிப் பேசித்தான், சேர்த்து வைத் திருக்கிற பணத்தைத் தொலைத்துவிடப் போகிறாய்; கடைசி யில் திண்டாடப் போகிறாய்.

தா : ஆனால் மனிதனாக வாழ்வேனல்லவா?

வே : இந்த நாஸ்திக வாதமும் குதர்க்க புத்தியும் உனக்கு எப்பொழுது ஏற்பட்டதோ தெரியவில்லையே.

தா : மனச் சாட்சி யென்பதொன்று இருக்கிறதென்று நான் தெரிந்துகொண்ட பிறகு.

(இருவரும் மௌனம்.)


சொல்லும் செயலும்

முதற் களம்
இடம் : பஞ்சநதம் வீட்டில் முன் முற்றம்.

காலம் : காலை.

(எதிரெதிராகப் போடப்பட்டுள்ள இரண்டு நாற்காலிகளில் பஞ்சநத மும் குருநாதமும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இருவரும் பென்ஷன்தாரர். இரண்டு நாற்காலிகளுக்கும் நடுவே ஒரு சிறு வட்ட மேஜை. அதன்மீது பஞ்சாங்கம், டைரி, ஜாதகக் குறிப்புக்களடங்கிய ஒரு நோட்டுப் புத்தகம், சில துண்டுக் காகிதங்கள், ஒரு பென்சில், மூக்குக்கண்ணாடிக் கூடு இவ்வளவும் பரப்பிக் கிடக்கின்றன. எட்டினாற்போல் தாழ்வாரத்தில் பஞ்சநாதத்தின் இரண்டாவது மகனான சிவபாதம் ஒரு சிறு மேஜைக்கு முன்னர் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் பஞ்சநதமும் குருபாதமும் பேசிக் கொண்டிருப்பது அவன் காதில் விழுந்துகொண்டிருக்கிறது.)

பஞ்சநதம் : என்ன குரு! வைகாசி பிறந்துவிட்டது. இன்னும் ஒன்றும் நிச்சயமாகவில்லையா உன் பிள்ளைக்கு?

குருநாதம் : என்ன அவசரம்? பிள்ளைக்குத்தானே?

ப : இருந்தாலும் நமது மூச்சு இருக்கிறபோதே யாராவது ஒரு பெண்ணுக்கு முடிச்சுப்போட வைத்தால் தானே நல்லது? மனித காயம் அநித்தியம் பார். (மறந்தவர்போல் மேலே தலையைத் தூக்கிக் கொண்டு) உன் மகன் பெயரென்ன அப்பா, மறந்தே விட்டேன்! அவனைத் தினந்தோறும் பார்க்கிறேன், ஆனால் அவன் பெயர் மட்டும் நினைவில் இருப்பதில்லை.

கு : வயதாயிற்றோ இல்லையோ? எனக்கு இரண்டு வருஷத்துக்கு முன்னாடியிருந்தே நீ பென்ஷன் வாங்குகிறாயல்லவா? நீ சர்வீஸில் ‘ஜாயின்’ ஆனது எப்போது?

ப : 1908. நீ?

கு : 1910.

ப : இரண்டு தடவை எனக்கு ‘எக்ஸ்டென்ஷன்’ கிடைத்தது. அந்த மாதிரியெல்லாம் இப்போது கிடைக்குமா என்ன?

கு : உம்…….. காலந்தான் இப்போது அநியாயமாய்க் கெட்டுவிட்டதே! நாம் பிள்ளையாய்ப் பிறந்து எப்போதாவது துவரம்பருப்பு ரூபாய்க்கு ஒரு படி விற்றிருக்கிறதா? விறகுக்கு இப்படி அலைந்த துண்டா?

ப : ஆமாம்! பாரேன், இருநூற்றுப்பத்து ரூபாய் பென்ஷன் வருகிற தென்று பெயர். எட்டு தேதியானால் எல்லாம் ‘குளோஸ்’. முதலி லிருந்து மாதம் ஐம்பது, அறுபது வீதம் கரைந்துகொண்டு வருகிறது.

கு : என் வீட்டிலேயே மாதம் மூன்று, மூன்றரை வீசை காபிக் கொட்டை செலவழிகிறது, என்ன செய்வது?

ப : (உள்ளே பார்த்தபடி) அடே சிவபாதம்! இரண்டு பேருக்கும் காப்பி வாங்கிக் கொண்டு வாடா.

கு : இப்பொழுது என்னத்திற்கு அப்பா! மணி ஒன்பதாகிறது.

ப : இல்லை; இரண்டாவது ‘டோஸ்’ சாப்பிட்டால் தான் உடம்பு கொஞ்சம் தெம்பு கொடுக்கிறது. அது இருக்கட்டும். உன் பிள்ளை பெயரென்ன?

கு : குமாரசுவாமி. குமாரு என்று எல்லோரும் சொல்லுவார்கள்.

ப : எத்தனையோ இடங்கள் வந்ததென்று சொன்னாயே, ஒன்றும் குதிரவில்லையா?

கு : எங்கேயப்பா, ஒன்றைப் பார்த்தால் மற்றொன்று சரிப்பட்டு வரவில்லை. பெண் சிவப்பாய் லட்சணமாய் இருக்க வேண்டு மென்று சொல்கிறான் பையன்.

ப : அது இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு சகஜந் தானே?

கு : பெண்ணைப் பார்த்தால் பணம் இருக்கமாட்டேனென்கிறது; கொஞ்சம் அந்தஸ்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது, பார்.

ப : ஆமாம். நமக்கெல்லாம் ‘சோஷல் லைப்’பிலே ஒரு பொஸி ஷன்’ இருக்கிறதோ இல்லையோ?

கு : நம்ப லோகநாதத்தின் பெண் வந்தது.

ப : எந்த லோகநாதம்?

கு : அதானப்பா, நம்ப ‘டிவிஷ’னிலே ‘ஹெட் கிளார்க்’கா இருந்து, இப்போது ‘ஆபீச’ராக வந்திருக்கிறானே!………

ப : ஓ! அவனா? ஆமாம், நல்ல மனிதனாயிற்றே! நாம் சொன்னபடி கேட்பானே?

கு : வாஸ்தவம், நம்ம வீட்டில் சம்பந்தம் வைத்துக் கொள்ளவேண்டு மென்று தவங்கிடக்கிறான். நன்றாய்ச் செலவழித்துக் கல்யாணத்தை நடத்துவதாகவும் சொல்கிறான். பெண்ணும் சுமாராய் இருக்கிறது. எல்லோருக்கும் சம்மதந்தான்.

ப : பின் என்ன? முடித்து விடுவதுதானே?

கு : ஜாதகம் பொருந்தவில்லை; அதுதானே குறுக்கே வந்து நிற்கிறது.

ப : (ஆச்சரியப்பட்டவராக) என்ன குரு! நீ என்ன இன்னும் ஐந்தாம் பசலியாகவே இருக்கிறாயே? ஜாதகமாவது கீதக மாவது! இந்தக் காலத்திலே இதையெல்லாம் யார் பார்க்கி றார்கள்?

கு : அப்படியில்லை. பெரியவர்கள் ஏதோ சில ஏற்பாடுகளைச் செய்துவிட்டுப் போயிருக்கிறார்களே; அவைகளின்படி நாம் நடந்துவிட்டுப் போவோமே!

ப : (த்ஸு கொட்டிக்கொண்டு) என்ன அப்பா நீ, சுத்த மடிசஞ்சியாக இருக்கிறாய்?

கு : அப்படியில்லையே. கண்ணுக்கு விளக்கெண்ணெயை விட்டுக் கொண்டு பார்த்தால்கூட, பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறது; பிள்ளையின் ஜாதகத்தில் ஒன்றும் இல்லை, பரிஷ்காரமாய்த் தெரிந்திருந்தும் எப்படிச் செய்வது?

(சிவபாதம் இரண்டு டம்ளரில் காப்பி கொண்டு வந்து மேஜை மீது வைக்கிறான்.)

ப : சிவபாதம்! இந்த வருஷத்து ‘சோஷல் ரிபார்ம் அசோஷியேஷன் ஆன்யுவல் ரிபோர்ட்’ வந்திருக்கிறது, இல்லையா?

சிவபாதம் : ஆமாம், முந்தாநாள் தான் வந்தது. (குரு நாதத்தின் பக்க மாய்ப் பார்த்து) நம்ப மாமாதான் அதில் ‘வைஸ் பிரசி டெண்டு’களிலே ஒருத்தராக இருக்கிறாரே!

ப : (உரக்கச் சிரித்து) ஓ! அதனால்தான் ஜாதகத்தை இவ்வளவு உன்னிப்பாய்ப் பார்க்கிறாரோ?

கு : ஆசார சீர்திருத்த சங்கத்திற்கும் ஜாதகம் பார்ப்பதற்கும் என்ன சம்பந்தம்? தவிர ‘பப்ளிக் லைப்’ வேறே; ‘பிரைவேட் லைப்’ வேறே.

ப : ஓ! (உரக்கச் சிரிக்கிறார்.)

கு : இல்லையா? வெளியிலே எங்காவது போகிற போது நன்றாக ‘ட்ரெஸ்’ பண்ணிக் கொள்கிறோம். வீட்டிலும் அப்படியே இருக்கிறோமா? இல்லையே? வீட்டு வாழ்க்கை வேறே; நாட்டு வாழ்க்கை வேறே!

(இதுகாறும் நின்று கேட்டுக் கொண்டிருந்த சிவபாதம் சிரித்துக் கொண்டே தன்னிருப்பிடத்திற்குப் போய் உட்கார்ந்து விடுகிறான்.)

ப : நீ சொல்வதிலே கொஞ்சம் உண்மை யிருக்கிறது.

கு : கொஞ்சமென்ன? நிறைய இருக்கிறது. மேடை மீதேறி விதவா விவாகத்தை ஆதரித்து வாசாம கோசரமாய்ப் பேசுகிறார்கள். அவர்
களெல்லோரும் அதைச் செயலில் கொண்டு வந்து காட்டு கிறார்களா என்ன? காட்டத்தான் முடியுமா?

ப : பெண் குழந்தை இல்லாதவர்கள்தானே விதவா விவாகத்தைப் பலமாக ஆதரித்துப் பேசுகிறார்கள்!

கு : அப்படித்தான் இருக்குமப்பா உலகம். ‘சத்தியம் வத. தர்மஞ் சர’வென்று சொன்னார்கள் சத்தியத்தையே பேசிக் கொண் டிருந்தால் சோறு கிடைக்குமா? தர்மத்தையே செய்து கொண் டிருந்தால் நமது பெண்டு பிள்ளைகள் பிழைப்பதெப்படி? இவையெல்லாம் ஒரு லட்சியமாகத்தான் சொல்லிவிட்டுப் போனார்களே தவிர, அப்படியே நமது அன்றாட வாழ்க்கையில் நடந்துகாட்ட வேண்டுமென்று கண்டிப்புச் செய்துவிட்டுப் போகவில்லை நமது முன்னோர்கள். இல்லாவிட்டால், “பொய்ம்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்” என்று சொல்லியிருப்பாரா வள்ளுவர்?

சி : (தனக்குள் மெதுவாக) பென்ஷன்தாரர்களுடைய பேச்சு!

ப : என்ன அப்பா நீ, வள்ளுவரைக் கூடச் சாட்சியாய்க் கொண்டு வந்து விட்டாய். அதிருக்கட்டும். செவ்வாய்தோஷம் இருக்கிற தென்று சொன்னாயே, யாருக்கு?

கு : லோகநாதத்தின் பெண்ணுக்கு.

ப : இருந்தால் என்ன?

கு : இருந்தால் என்னவா? பேஷ். பிள்ளை பெண் ஆகிய இரண்டு பேருக்கும் செவ்வாய் தோஷம் இருக்க வேண்டும். அல்லது இரண்டு பேருக்கும் இல்லாமலாவது இருக்க வேண்டும். ஒருவருக்கிருந்து மற்றொருவருக்கில்லாவிட்டால் சம்பந்தம் கூடாது என்று சொல்வார்கள்.

ப : என்னமோ அப்பா, இதிலெல்லாம் எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை. அன்று எழுதி வைத்துவிட்டுப் போனவன், மறுபடியும் மாற்றி எழுதப்போவதில்லை.

கு : அப்படி விதியை நம்பியே நம் வாழ்க்கையை நடத்த முடியுமா?

ப : ஏன் முடியாது என்று கேட்கிறேன்? ஜோசியன், ஜாதகத்தைப் பார்த்து, நல்ல காலம் வரப்போகிறது என்கிறான். அதற்காக இப்பொழுது துள்ளிக் குதிக்க முடியுமா? அல்லது கெட்ட காலம் வருமென்று சொல்கிறான். அதற்காக இப்போதிருந்து அழுது கொண்டிருக்க முடியுமா?

கு : இரண்டும் செய்யவேண்டாம். ஆனால் இரண்டுக்கும் எச்சரிக் கையா யிருக்கலாமல்லவா?

ப : எச்சரிக்கையாவது, மண்ணாவது? வருவது வந்தே தீரும்.

கு : வாஸ்தவம். அதை முன்கூட்டித் தெரிவிப்பது தான் ஜோசியம்; அதற்குக் கருவியாயிருப்பது தான் ஜாதகம்.

ப : எங்கே அப்பா அதெல்லாம்? ஜோசியன் நல்லதைச் சொன்னால் அவனுக்கு நாலணா கொடுத்தனுப்புகிறோம். கெட்டதைப் பற்றி ஏதாவது ஹேஷ்யமாகச் சொன்னால்கூட அவனுக்குச் சரியாகப் பார்க்கத் தெரியவில்லை யென்கிறோம்; அல்லது ஜாதகம் கணித்திருப்பதே தப்பாயிருக்குமென்று எண்ணித் திருப்தியடைகிறோம்.

கு : ஆமாம்; மனிதன் நல்லதைத்தான் விரும்புவான்; கெட்டதைக் கை கொட்டி அழைப்பானா என்ன?

ப : அப்படியானால் நல்லதுக்காகத்தான் ஜாதகத்தைப் பார்க்கி றோம் என்று சொல். என்னமோ அப்பா, எனக்கு இதிலெல் லாம் அவ்வளவு பிடித்தமில்லை. நமது விதி சரியாயிருக்கும் பட்சத்தில், “நாளென் செயும், வினைதான் என் செயும், மற்றக் கோளென் செயும்” என்று யாரோ ஒரு பெரியவர் பாடியிருக்கி றாரே, அதில்தான் எனக்கு நம்பிக்கை, (பொறுத்து) அடே சிவபாதம்! வெந்நீரை அண்டாவில் எடுத்து வைக்கச் சொல்; குளித்து விட்டுச் சாப்பிடலாம்.

கு : ஆமாம், நாழிகை ஆகிறது. நான் வரட்டுமா, பஞ்சம்?

ப : அப்பா! எல்லோரும் என்னைப் பஞ்சு என்று கூப்பிடுவார்கள்; நீ பஞ்சம் என்றே கூப்பிட ஆரம்பித்து விட்டாயே!

கு : காலம் அப்படியிருக்கிறது!

ப : நீ என்னவேண்டுமானாலும் கூப்பிட்டுத் தொலை. கல்யாணம் நிச்சயமானால், சாப்பாட்டிற்கு மட்டும் கூப்பிட மறந்து விடாதே.

(இருவரும் பிரிகிறார்கள்.)

இரண்டாவது களம்
இடம் : பஞ்சநதம் வீட்டில் சமையலறை

காலம் : பகல்.

(பஞ்சநதம் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். அவர் மனைவி சிவகாமி அம்மாள் பரிமாறிக்கொண்டிருக்கிறாள். கூடவே சிவபாதமும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான்.)

பஞ்சநதம் : என்ன, உன் பெரிய பிள்ளையாண்டான் டில்லியி லிருந்து கடிதம் போட்டிருக்கிறானே; ஏண்டா, அம்மாகிட்ட சொல்லவில்லை இன்னும்?

சிவபாதம் : உங்களுக்கு வந்த கடிதமல்லவா அது? அதை நான் பிரித்துக் கூடப் பார்க்கவில்லை.

ப : அடடா, இந்தக் காலத்துப் பிள்ளைகள், என்னுடையது, உன் னுடையது என்று பிரித்துக் காட்டுவதில் மகா கெட்டிக்காரர் களாயிருக்கிறார்கள்.

சி : அப்படியில்லையே; ஒருவருக்கு வந்த கடிதத்தை மற்றொருவர் பிரிக்கலாமா?

ப : ஆமாம்; நான் வேறே, நீ வேறேயல்லவா?

சிவகாமி : போதுமே! இப்படிக் குற்றங் கண்டு பிடித்தால் என்ன செய்வது? விஷயத்தைச் சொல்லாமல் என்னவோ………….

ப : இல்லை; ஒன்றும் உளறவில்லை. நீ கோபித்துக் கொள்ளாதே. (பொறுத்து) டில்லியில் ராவ் பகதூர் குப்பு ராம் இருக்கிறாரே, அவருடைய இரண்டாவது பெண்ணை நம்ம சிவபாதத்துக்குக் கொடுக்க வேண்டு
மென்று ஆவல் படுகிறாராம்; ஜாதகத்தையும் அனுப்பியிருக்கிறார்.

சிவகாமி : அவருக்கு என்ன சம்பளம்?

ப : 1,800 ரூபாய். மனிதர் என்னமோ நல்லவர்தான். இரண்டு பெண் தவிர வேறே பிள்ளை கிடையாது. ஊரிலே நிலம், வீடு எல்லாம் இருக்கின்றன.

சிவகாமி : அப்படியானால் முடித்துவிடலாமே! நன்றாகச் சீர் செய்வார்களோ இல்லையோ?

ப : அப்பா! இந்தப் பெண்களுக்கு எப்பொழுதும் சீர்களிலேயே குறி!

சிவகாமி : ஆண்களுக்குப் பணத்தின் மேலேயே குறி!

ப : (மெள்ளச் சிரித்துவிட்டு) முன்னமேயே ஒருமுறை இந்த ஜாத கத்தை வேறொருவர் மூலமாக அனுப்பியிருந்தார் குப்புராம்.

சிவகாமி : அது என்னவாயிற்று? என்னிடத்தில் சொல்லக்கூட இல்லையே.

ப : பையனுடைய ஜாதகத்தையும் அந்தப் பெண்ணின் ஜாதகத் தையும் நம்ப ராகவ ஜோஸியரிடம் காட்டினேன். இரண்டுக்கும் பொருந்த வில்லையென்று அவர் செல்லிவிட்டார். அதனால்தான் உன்னிடம் சொல்லவில்லை.

சிவகாமி : என்ன தோஷம் இருக்கிறதாம்?

ப : அதென்னவோ, அதையெல்லாம் அவ்வளவு விவரமாக நான் விசாரிக்கவில்லை. பொருந்தவில்லை என்றார்; போதுமென் றேன்.

சிவகாமி : இடம் நல்ல இடமாயிருந்து, நன்றாகவும் செய்வார்க ளானால், ஜாதகம் சரிப்படாவிட்டால் என்ன? ராமாயண சகுனம் போட்டுப் பார்த்துவிட்டால் போகிறது.

ப : சகுனமாவது, கிகுனமாவது? ஜாதகம் சரிப்பட வில்லையென் றால், எவ்வளவு பெரிய இடம் வந்தாலும் சரி, நான் தலை நிமிர்ந்துகூடப் பார்க்கப் போவதில்லை.

சி : (களுக்கென்று தனக்குத்தானே சிரித்துக் கொள்கிறான்.)

ப : என்னடா சிரிக்கிறாய்?

சிவகாமி : ஆனந்தம் பொங்குகிறது அவனுக்கு, உங்கள் வார்த்தை யைக் கேட்டு.

சி : அதில்லையப்பா, இப்பொழுதுதானே அந்த குருநாத மாமா விடம் ஜாதகமாவது, கீதகமாவது என்று சொன்னீர்கள்? இன்னும் அரைமணி நேரங்கூட ஆகவில்லையே!

ப : அட பைத்தியக்காரா! அவருக்கல்லவோ சொன்னது அது? எனக்குச் சொல்லிக்கொண்டதில்லையே?

சி : ஓ! உனக்கு வேறே, எனக்கு வேறே என்ற நியாயமா?

ப : ஆமாம், உலகமே அப்படித்தானிருக்கிறது. கவர்ன்மெண்டிலே கூட, வெள்ளைக்காரர்களுக்கு ஒருவிதமாகவும், இந்தியர்க ளுக்கு ஒருவிதமாகவும் பென்ஷன் கொடுக்கிறார்களே!

சி : எதற்கு எது சம்பந்தம்? (தனக்குள்) பென்ஷன்தாரர் பேச்சு என்பது சரியாக இருக்கிறது.

ப : என்ன, நீயே முணு முணுத்துக் கொள்கிறாய்? உரக்கத்தான் சொல்லேன்.

சி : ஒன்றுமில்லை; இத்தனை நேரம் அவரிடத்தில் விதியைப் பற்றிப் பிரசங்கம் செய்தீர்கள்; நாளென் செயும், கோளென் செயும் என்று பாடிக்கூடக் காட்டினீர்கள். இப்பொழுது என்னடா வென்றால், ஜாதகம் பொருந்தவில்லையானால் அந்த இடத் தைத் தலைநிமிர்ந்துகூடப் பார்க்கப்போவதில்லை என்று சொல்கிறீர்கள்.

ப : அடே! இதிலெல்லாம் நீ தலையிடாதே. வெளியாரிடத்திலே பேசுகிறபடியெல்லாம் வீட்டிலே நடக்க முடியுமா என்ன? உங்கள் காலேஜ் படிப்பிலேகூட ‘தியரி’ (கூhநடிசல) வேறே, பிராக்டிகல்’ (ஞசயஉவiஉயட) வேறே இல்லையா?

சி : பள்ளிக்கூடப் படிப்புக்கும், அன்றாட விவகாரங்களுக்கும் என்ன சம்பந்தம்?

ப : சம்பந்தமில்லையல்லவா? அதைப் போலத்தான் நான் சொல்கிற அபிப்பிராயத்திற்கும் செய்கிற காரியத்திற்கும். “நான் சொல்லு கிறபடி செய்; செய்கிறபடி செய்யாதே” என்றுதானே பெரியவர் கள் சொல்லி விட்டுப் போனார்கள்?

சிவகாமி : என்னென்னவோ தர்க்கம் செய்கிறீர்களே இரண்டு பேரும்? டெல்லிப் பெண்ணை, ஜாதகம் பொருந்தவில்லை என்பதற்காக வேண்டாமென்று சொல்லிவிடப்போகிறீர்களா?

ப : கட்டாயமாக; நிச்சயமாக. ஜாதகப் பொருத்தத்திலே எனக்கு உடும்பு நம்பிக்கை இருக்கிறது. நாள் பார்ப்பது, சகுனம் பார்ப்பது முதலியவற்றை அலட்சியமாக நினைக்க என்னால் முடியவில்லை. எப்பொழுதாவது நவமியில் நான் பிரயாணம் புறப்பட்டிருக்கிறேனா பார்த்தாயா? “நாள் செய்வது நல்லவர் செய்யமாட்டார்” என்பது பழமொழி அல்லவா?

சி : இப்படிச் சொல்வது பெருமையா என்ன? தனக்கு ஒரு நியாயம், ஊராருக்கு ஒரு நியாயமா!

ப : ஆமாம்; இகலோகம் வேறே, பரலோகம் வேறே இல்லையோ?

சி : சிவ சிவா!

(இருவரும் சாப்பிட்டு எழுந்திருக்கிறார்கள்.)


காந்தி தரிசனம்!

முதற் களம்
இடம் : ‘ஹிமோத்கிரி’ பங்களாவின் முன் ஹால்.

காலம் : மாலை.

(மேற்படி பங்களாவின் முன் வாயிலில் ஒரு மோட்டார் வண்டி, வெளியிலே புறப்படு வதற்குத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறது. அதன் டிரைவர், வண்டியின் முன் பக்கமுள்ள ‘பான்னெட்’ (க்ஷடிnநேவ) மீது சாய்ந்து நின்று கொண்டு, பங்களாவின் உள் பக்கம் ஹாலில் நடக்கிற தட புடல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான். அவ னுக்கு அடிக்கடி சிரிப்பு வரு கிறது. அதை அடக்கிக் கொள் கிறான். உள்ளே ஹாலில், பங்களாவின் முக்கியஸ்தரர் களான ராவ்பகதூர் கைலாசம், அவர் சம்சாரம் சிவக்கொழுந்து அம்மாள், அவருடைய ஒரே புத்திரியான காலேஜில் படிக்கும் மிஸ் சுகதா ஆகிய மூவரும், காந்தியடிகளின் பிரார்த்தனைக் கூட்டத்திற்குப் போகத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஹாலின் பின் பாகத்தில், சமையல்கார ராமனும், வேலைக்கார செல்லக் கண்ணுவும், ஐயாவினுடையவும் அம்மாமார்களுடையவும் உத்தரவு
களுக்காகக் காத்து நிற்கின்றனர்.)

கைலாசம் : (சாய்வு நாற்காலியில் இருந்துகொண்டே) என்ன, இன்னும் ‘ரெடி’யாகவில்லையா? மணி ஐந்தடித்து ஐந்து நிமிஷமாகிறது.

சிவக்கொழுந்து : ஐந்து நிமிஷத்தில் கார் போகாது?

கை : டிரைவர்! (டிரைவர் ஹாலுக்குள்ளே வந்ததும்) இங்கிருந்து அந்த மைதானம் எவ்வளவு தூரம் இருக்கும்?

டிரைவர் : நாலு பர்லாங்காவது இருக்கும், ஸார்.

கை : ஐந்து நிமிஷத்திலே போய்விடலாமில்லே?

டி : போகலாம்.

கை : பெட்ரோல் போட்டாச்சு இல்லை?

டி : இரண்டு காலன் போட்டிருக்குது.

கை : இன்று காலையிலே காரை ‘க்ளீன்’ (ஊடநயn-சுத்தம்) பண்ண வில்லையே?

டி : இல்லை ஸார். காலையிலே ரொம்ப தலைவலி. மீட்டிங்கிலே யிருந்து திரும்பி வந்த பிறகு ‘க்ளீன்’ பண்ணி வைச்சுப்புட்டு வீட்டுக்குப் போறேன்.

கை : பார், அந்தப் பிரார்த்தனை மைதானத்திலே வரிசையாக நூற்றுக்கணக்கிலே, கார்கள் வந்து ‘பார்க்’ (ஞயசம) பண்ணி யிருக்கும். அத்தனை கார்களிலேயும் நம்பள் கார் ஒன்றுதான், தனிச்சு, அழுக்குப்படிஞ்சு இருக்கும். த்ஸு!

சுகதா : துணியாலேயாவது துடைக்கச் சொல்லுங்க அப்பா! எங்க ‘காலேஜ் மேட்ஸ்’ (சகாக்கள்) வருவார்கள். இந்த அழுக்குப் படிந்த காரிலே என்னைப் பார்த்தால், என்ன நினைப்பார்கள்?

கை : ஆமாம்; குழந்தை சொல்வதுபோல, துணியாலேயாவது துடைச்சு விடு; ஜல்தி ஆகட்டும்.

(டிரைவர் த்ஸு கொட்டிக் கொண்டே துடைக்கப் போய்விடுகிறான்.)

சு : (டிரெஸ்ஸிங் டேபில் முன்னர் நின்று கண்ணாடியில் பார்த்த வண்ணம் முகத்தைத் துடைத்துக் கொண்டே) ஏன் அப்பா, க்யூட்டி குரா பவுடர் டின் நேற்று புதிசா வாங்கி வந்தீங்களே, அது எங்கே?

கை : அது என்னத்துக்கு குழந்தை இப்போ? எங்கேயோ மாடி மேலே வைச்சிருக்கேன். இப்பொழுதிருக்கிற பவுடரைத்தான் பூசிக் கொள்ளேன், அம்மா.

சு : ஹுஹும், முடியாது. புதிசுதான் வேண்டும். நாலு பேர் மத்தியிலே போகிறபோது கொஞ்சம் ‘டீஸெண்டா’க (ஒழுங் காக)ப் போகவேண்டாமா?

கை : நாலு பேரா? நாற்பதாயிரம் பேருக்கு மேலே கூட்டம் இருக்குமே தவிர குறைவாக இராது. அடே செல்லக்கண்ணு! மாடி மேலே போய், அலமாரி மேல் தட்டிலே புது பவுடர் டப்பா வைச்சிருக்கேன். அதைக் கொண்டு வந்து குழந்தை கையிலே கொடு.

சிவக்கொழுந்து : ஏன் அம்மா சுக்கு? (சுகதாவின் செல்லப் பெயர்) நான் அந்தப் பச்சைப் புடவையை கட்டிக்கொள்ளட்டுமா? அல்லது சிவப்புக் கொட்டடியை கட்டிக் கொள்ளட்டுமா?

சு : எனக்குத் தெரியாது. அப்பாவைக் கேளு.

கை : போனவாரம் வாங்கிக் கொண்டு வந்ததே அந்த பெங்களூர் தலைப்புப் புடவை, மாந்துளிர் கலர், அதைக் கட்டிக் கொள்ளச் சொல்லேன்.

சு : அப்பா, நீங்கள் கூட ஒழுங்காக ‘டிரெஸ்’ பண்ணிக்கொள்ளுங் கள். ஷர்ட்டும் மேல் அங்கவஸ்திரமுமாக வரவேண்டாம்.

(இதற்குள் செல்லக்கண்ணு, மேலேயிருந்து பவுடர் டப்பாவைக் கொண்டு வந்து மேஜைமீது வைக்கிறான்.)

கை : அந்தப் பெரிய கூட்டத்திலே நம்மை யாரம்மா கவனிக்கப் போகிறார்கள்? அது மட்டுமல்ல, இந்த மாதிரியான கூட்டங்க ளுக்குப் போகிறபோது நாம் கொஞ்சம் ‘ஸிம்பில்” ஆக (எளிமையாக) இருப்பதாகக் காட்டிக் கொள்ளணும். எந்தெந்த இடத்திற்கு எப்படி எப்படி ‘டிரெஸ்’ பண்ணிக்கொள்ள வேண்டுமென்பது எனக்குத் தெரியாதா? கலெக்டர் தர்பாருக் குப் போகிற போது வேறு ‘டிரெஸ்’தான்; காந்தியைப் பார்க்கப் போகிறபோது வேறு ‘டிரெஸ்’தான். அடே, மேலே போய் பீரோவிலிருந்து என்னுடைய கதர் ஷர்ட்டையும், விசிறி மடிப்போடு இருக்கிற கதர் அங்கவஸ்திரத்தையும் எடுத்துக் கொண்டுவா.

சி : அப்படியானா, அரைக்குக் கட்டிக் கொள்ள கதர் வேஷ்டி வேண்டாமா?

கை : கீழே யார் பார்க்கப்போகிறார்கள்? எல்லாம் மேலுக்குத்தானே?

சி : அது என்னமோ, பாதி சீமைத்துணி, பாதி கதர்; எனக்குப் பிடிக்கவில்லை.

கை : நம்மாலே பூரா காந்தியாக முடியாது பார். அதுமட்டுமில்லை; எட்டுமுழ வேஷ்டி கோணி மாதிரி கனக்கிறது. அதை யார் கட்டிக் கொள்ள முடியும்? அது எப்படி இருக்கிறதென்று பார்ப்பதற்காக வாங்கினதே தவிர கட்டிக் கொள்வதற்காகவா அதை வாங்கியிருக்கிறது?

சி : உங்களிஷ்டம். பார்க்கிறவர்கள் கேலி பண்ணக்கூடாதே யென்பதற்காகச் சொன்னேன்.

சு : அப்பா, எனக்கு போனமாசம் வாங்கின மாதிரி, இன்னும் இரண்டு பெங்கால் சில்க் ஸாரி (புடவை) வாங்கணும்.

கை : ஆகட்டும்; அடுத்தவாரம் பார்ப்போம். என்னம்மா தாமதம்? கொஞ்சம் சீக்கிரமாகப் போனால் தான், அந்த மகானைக் கண்ணாலேயாவது பார்க்கலாம்.

சி : காதாலே அவர் பேச்சை கேட்கவேண்டாமா?

சு : ஆமாமப்பா, அவர் பேச்சை கேட்கணும். இங்கிலீஷிலே அவரைப்போல அழகாக எழுதுகிறவர்களும் பேசுகிறவர்களும் இல்லையென்று எங்கள் காலேஜ் இங்கிலீஷ் ‘லெக்சரர்’ (டுநஉவரசநச-ஆசிரியர்) கூட சொல்லியிருக்கிறார்.

கை : அட அசடே, அவர் பிரார்த்தனைக் கூட்டங்களிலே இங்கிலீ ஷிலே எங்கே பேசுகிறார்? நமக்கெல்லாம் புரியாத ஹிந்துஸ் தானியிலல்லவா பேசுகிறார்?

சு : அவர் இங்கிலீஷிலே பேசினாலென்ன, ஹிந்துஸ்தானியிலே பேசினால் என்ன, அவர் சொல்கிறபடி நம்மாலே நடக்க முடியுமா என்ன?

கை : அது வாஸ்தவம். ரொம்ப சரியான பேச்சு. அவர் சொல்கிறபடி நடக்கிறது இருக்கட்டும். அவர் சாதாரணமாக நடந்து போகி றாரே அந்த மாதிரிகூட நம்மாலே நடக்க முடியாது!

சு : கொய்ட் ரைட் பாதர். (ணுரவைந சiபாவ, கயவாநச - ரொம்ப சரி, அப்பா.) அவர் என்ன, எல்லோரையும் போல் நடக்கிறாரா? அவர் நடக் கையே அலாதிதான்.

கை : பேஷ் குழந்தை! ரொம்ப புத்திசாலித்தனமா பேசறே நீ? (தனக்குள்) பெண்களுக்கு ‘எஜுகேஷன்’ (நுனரஉயவiடிn-கல்வி) கொடுக்க வேண்டுமென்பது இதற்குத்தான்! (பொறுத்து) அடே ராமா! சூடாக ஒரு கப் காபி கொண்டுவா!

(இதற்குள் செல்லக்கண்ணு, மாடிமீதிருந்து கதர் ஷர்ட்டும் கதர் அங்கவஸ்திரமும் கொண்டு வந்து கொடுக்கிறான். அதைப் போட்டுக் கொள்கிறார்.)

என் ‘வாக்கிங் ஸ்டிக்’ (றுயடமiபே ளுவiஉம-கைத்தடி) எங்கே?

சு : அப்பா! ‘பைனாகுலர்’ (க்ஷiயேஉரடயச-தூரத்துப் பொருள்களைப் பார்க்கும் கண்ணாடி) எடுத்துக் கொள்ளுங்கள்.

சி : இந்தப் பாழாய்ப்போன பூக்காரன் இன்னும் வரவில்லை பார்த்தீர்களா? இன்றைக்குத்தான் பரிசோதனையா அவனுக்கு இல்லாத அவதிகளெல்லாம் வந்துவிடும்.

கை : அடே ராமா! தோட்டத்திலே போய், கொஞ்சம் கனகாம்பரமும் டிஸம்பர் பூவும் பறிச்சுக் கொண்டுவா!

ராமன் : (உள்ளிருந்தபடியே) காபியை சூடுபண்ணிக் கொண் டிருக்கிறேன்.

கை : அடே செல்லகண்ணு! நீ என்ன செய்யறே?

செல்லக் கண்ணு : ‘பைனாகுலர்’ தேடிக்கொண்டிருக்கேன்.

கை : டிரைவர்! நீயாவது தோட்டத்திலே போய் குழந்தைக்கும் அம்மாவுக்கும் கொஞ்சம் கனகாம்பரமும் டிஸம்பர் பூவும் பறிச்சுக் கொண்டுவா.

டி : (தனக்குள்) காந்தி ஊருக்குப்போன பிறகுதான் இவங்க காந்தியைப் பார்க்க போவாங்கபோலே இருக்குது!

(பூ பறிக்கச் செல்லுகிறான். இதற்குள் உள்ளே ராமன், கைலாசத்திற்கு காபி கொண்டு வந்து கொடுக்கிறான்.)

கை : என்ன இவ்வளவு கொதிக்க கொதிக்க காபி கொண்டு வந்திருக்கிறாயே?

ரா : வெளியிலே சில்லுன்னு காற்று வீசுது. அதனாலே எஜமான் கொஞ்சம் உஷ்ணமாகப்போனங்களானா உடம்புக்கு நல்ல துன்னு இப்படிக் கொண்டு வந்தேன்.

கை : இதை எப்படி குடிக்கிறது?

ரா : ஆத்திக் கொடுக்கிறேன்.

சி : ஆமாம், ராமன் சொல்லுகிற மாதிரி வெளியிலே சில்லுன்னு காற்று அடிக்கிறது. அடே செல்ல கண்ணு, மேலே போய் என்னுடைய பனாரஸ் சில்க் சால்வையை எடுத்துக் கொண்டு வந்து காரிலே வை.

சு : அப்படியே என்னுடைய ‘புல் ஓவரை’யும் (ஞரடட டிஎநச - மேல் சட்டை) எடுத்துக் கொண்டு வரச் சொல்லு.

கை : என்னுடைய ‘மப்ளர்’ கூட.

டி : (புஷ்பத்தை கொடுத்துவிட்டு) ஸார்! மகாத்மா மைதானத்திற்கு வருகிறார் போலிருக்கிறது. கூட்டம் மைதானத்தின் பக்கம் திரண்டுகொண்டிருக்கிறது.

கை : இதோ, புறப்படுங்கோ. அடே செல்லகண்ணு, ‘டார்ச் லைட்’ டை காரிலே வைச்சிருக்கயா?

செ : உத்தரவிடவில்லையே.

கை : போடா முட்டாள்; உடனே கொண்டு வா. சுக்கு! ஜல்தி புறப்படம்மா! அம்மாவை முன்னே ஏறிக் கொள்ளச் சொல்லு.

சு : அப்பா! நான் நன்றாயிருக்கேனா?

கை : ரொம்ப நன்றாக இருக்கேம்மா. (சிவக்கொழுந்து அம்மா ளைப் பார்த்து) குழந்தை எவ்வளவு புத்திசாலி பார்! காலேஜுக் குப் போகிறபோது இரட்டைப் பின்னல், இந்த மாதிரி பொது இடங்களுக்குப் போகிறபோது ஒற்றைப் பின்னல் போட்டுக் கொள்ள வேண்டுமென்று நன்றாகத் தெரிந்து கொண்டிருக் கிறாள். பார். உன்னைப்போல எங்கே போனாலும், எப்போ பார்த்தாலும் ஒரே சீராயிருக்க இந்தக் காலத்துக் குழந்தைக ளுக்குத் தெரியல்லேன்னு உனக்கு வருத்தமாயிருக்கு இல் லையா?

சி : எனக்கென்ன வருத்தம் நீங்கள் இருக்கிற போது? என் காலத்தை இப்படியே ஒரே சீராயிருந்து கழிச்சுவிடுகிறேன். ஹும், புறப் படலாம் வாருங்கள்.

(எல்லோரும் காரில் ஏறிக் கொண்டு பிரார்த்தனைக் கூட்டத்திற்குப் போகிறார்கள்.)

இரண்டாவது களம்
இடம் : ஒரு வீதி

காலம் : மாலை ஐந்து மணிக்கு மேல்.

(குருவப்ப பிள்ளை, ஒரு கம்பெனியில் குமாஸ்தா உத்தியோகம் பார்க்கிறவர், மாதம் ஐம்பது ரூபாய் சம்பளம். சாயந்திரம், தள்ளாடிக் கொண்டே வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்.

குருவப்ப பிள்ளை : (தனக்குள்) இந்த காந்தி வந்தாலும் வந்தார், கறி காயெல்லாம் என்ன விலை விற்கிறது? டிராமிலே, பஸ்ஸிலே, டிரெயினிலே நிற்கிறதுக்குத் தான் இடம் உண்டா? என்ன கூட்டம்! என்ன கூட்டம்! காந்தி வந்ததிலிருந்து தினமும் ஆபீசுக்கு நடந்து போகிறதும், நடந்து வருகிறதுமாகவே போச்சு. கறிகாய் சாப்பிட்டு நாலு நாளாச்சு. கத்தரிக்காய் கெட்டகேடு பத்தணா வீசை! எப்படி வாங்கிச் சாப்பிடுவது? (பொறுத்து) ஒரு திருவிழாவுக்குக்கூட இவ்வளவு கும்பல் சேரக்காணோம். அடேயப்பா! இந்த ஜனங்களுடைய மூடத்தனமே மூடத்தனம்! கடவுளைக் கும்பிட்டாலும் கதி மோட்சம் உண்டு என்று சொல்வார்கள். காந்தியைப் பார்த்தால் என்ன உண்டு? போலீசாருடைய அடி உதை உண்டு. வேலையில்லாதவர்களோடு சேர்ந்து கொண்டு தொண்டை கிழிய கத்திக் கொண்டிருக்கலாம். அவ்வளவு தான். எத்தனை குடும்பங்கள் அவர் பேச்சைக் கேட்டு கெட்டுப் போச்சு? நம்மள் அக்காள் பிள்ளை ஆறுமுகம் அடியோடு கெட்டுப்போய் விட்டானில்லே? என்னமோ தத்துவம் பேசுவான். அரைக்காசு சம்பாதிக்கத் தெரியாது.

(எதிரில் குருவப்ப பிள்ளையின், பத்து வயதுக் குமாரன் குமரகுரு ஓடி வருகிறான்.)

கு : எங்கே தம்பி, குதிச்சுண்டு ஓடிவரே?

குமரகுரு : அத்தை மகன் ஆறுமுகம், அத்தை எல்லோரும் வீட்டுக்கு வந்திருக்காங்க அப்பா!

கு : ரொம்ப சந்தோஷம்! என்ன விசேஷமாம்?

கும : இது தெரியாதா உனக்கு? எல்லாம் காந்தியைப் பார்க்கத்தான்.

கு : (பெருமூச்சு விட்டுக் கொண்டே) இந்த ரேஷன் காலத்திலே, சாமான் விற்கிற விலையிலே, இப்படி கும்பல் கூடினா. குடித்தனம் எப்படி உருப்படியாகிறது?

கும : என்னப்பா, நீயே என்னமோ சொல்லிக்கிறே?

கு : ஒன்றுமில்லை. வீட்டிலே ஏதாவது கறி காய் இருக்குதா?

கும : அதுக்குத்தான் அம்மா என்னை அனுப்பிச்சாங்க. வழியி லேயே உன்னைப் பார்த்து கறிகாய் ஏதாவது வாங்கிவரச் சொல்லும்படி சொன்னாங்க.

கு : சரி; நான் மார்க்கெட்டு பக்கமா போறேன். நீ வீட்டுக்குப் போய் அந்த கறிகாய் வாங்குகிற பையை எடுத்துக் கொண்டு வா. (பையன் போகிறான். பிறகு தனக்குள்) இப்பொழுது யாரிடத்தில் போய் கடன் கேட்பது? மாதக் கடைசி. யார் கிட்ட போனாலும் கையை விரிப்பார்கள். தவிர, என்னை நம்பி யார் பத்தும் பதினைஞ்சும் இந்தக் காலத்தில் கொடுப்பார்கள்? ஹும், எதற்கும் கருடாசல முதலியாரிடத்திலே போய் கேட்கி றேன். நல்ல காந்தி வந்தார், காந்தி!

(மார்க்கெட் பக்கம் போகிறார்.)

மூன்றாவது களம்
இடம் : பிரார்த்தனை மைதானத்தில் ஒரு பக்கம்.

காலம் : மாலை ஐந்தேகால் மணி.

(செங்கனும் கங்கனும் தனிமையில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.)

செங்கன் : நீ என்ன ஓணுமின்னாலும் சொல்லு, காந்திதான், நம்மைப் போலொத்த ஏழை மக்களுக்கெல்லாம் கதிமோச்சம் கொடுக்கப்போறாரு.

கங்கன் : அது வாஸ்தவம். அவரை எங்கே தனியே விட்றாங்க? ஒரு பக்கத்திலே கவர்ன்மெண்டு அவரை புடிச்சு புடிச்சு விட்டு வேடிக்கை பார்க்கிறாங்க; மிஞ்சினா கெஞ்சறாங்க, கெஞ்சினா மிஞ்சறாங்க. இன்னொரு பக்கத்திலே, பணக்காரரெல்லாம் அவரைப் பிடிச்சுகிணு தொங்கிக்கிணே இருக்காங்க. அவர் இஷ்டப்படி விட்டாதானே அவர் ஏதாச்சியம் செய்வாரு?

செ : சுயராட்சியமில்லாத தேசத்திலே இப்படித்தான் மெது மெதுவாத்தான் நகர்ந்து போகணும். இதோ பாரு, இந்த மைதா னத்தை. இந்தா பெரிசு ஜனத்தை இதுக்கு முன்னே எங்கே யாவது பார்த்திருக்கயா?

க : சரிதான்; சிதம்பரம் ஆருத்திரேன்னுவாங்க. மயிலாப்பூர் அறு வத்து மூவருன்னுவாங்க, அண்ணாமலை தீபமின்னு வாங்க, அதுக்கெல்லாம் இவ்வளவு கூட்டம் ஏது? என் ஆயுசிலே இப்படி பார்த்ததில்லேப்பா.

செ : அப்படியானா, காந்தியை ஏன் கண்கண்ட தெய்வமின்னு சொல்லக்கூடாதுன்றேன்?

க : ஒரு தெய்வமா? எத்தனையோ தெய்வங்கள்ளாம் சேர்ந்த அவதாரமின்னா அவரு? இல்லாகிட்டி, இப்படியா ஜனம் கூடும்?

செ : அப்படிச் சொல்லு. அவரைக் கண்டா, கர்மம் தொலையும்; பார்த்தா, பாவம் போகும்.

க : அது என்னமோ சரி. ஆனா செங்கா! எனக்கொரு சந்தேகம்? அவரைப் பார்த்தால் பாவம் போகுமிண்ணு சொல்றே. ரொம்ப சரி. ஆனா புண்ணியம் வருமா?

செ : அடேயப்பா! பெரிய சந்தேகமாயிருக்குதே?

க : இல்லே, பேச்சுக்குத்தான் கேக்கறேன், பாவம் சேஞ்சுதான் இப்போ ஏழைங்களா பொறந்திருக்கோம். அடுத்த பொறப் பிலேயாவது பணக்காரரா பொறக்கணுமின்னா. இப்போ புண்ணியம் செய்யத் தேவலையான்னு கேக்கறேன்.

செ : ஆமாம், புண்ணியம் செய்யத்தான் ஓணும்.

க : அப்படியானா, காந்தியை பார்த்துட்டதனாலேயே புண்ணியம் வந்துடுமா? அல்லது புண்ணியம் சேஞ்ச மாதிரி ஆயிடுமா?

செ : அதென்னமோ அப்பா, எனக்கு அதெல்லாம் தெரியாது; பெரியவங்கள்ளாம் சேர்ந்து அவரை மகாத்மான்னு சொல்றாங்க………….

க : இரு, இரு. இன்னொரு சந்தேகம். பெரியவங்க, பெரியவங்கன்னு அடிக்கடி சொல்றையே, பெரியவங்கன்னா யாரு? பணம் வைச்சுகிணு மோட்டார்லே போறவங்கள்ளாம் பெரியவங் களா? படிச்சவங்கள்ளாம் பெரியவங்களா? இல்லே, வயசான வங்கள்ளாம் பெரியவங்களா?

செ : அதென்னமோப்பா, அந்த குயுக்தியெல்லாம் எனக்குத் தெரியாது. யாரை பார்த்தா அவங்களிடத்திலே நம்மை அறியா மலே ஒரு பயம், பக்தி உண்டாவுதோ அவங்கள்ளாம் பெரியவங் கன்னு நான் நெனெச்
சுண்டிருக்கிறேன்.

க : சரி, மேலே சொல்லு.

செ : கடவுளை நாம் பார்த்திருக்கோமா? இல்லே. பெரியவங் கள்ளாம் சேர்ந்து ஒரு கல்லை, கடவுளுன்னு சொன்னா, நாமும் அதை கடவுளுன்னு கும்பிட்றோம். அதைப்போலே, எல் லோரும் சேர்ந்து அவரை மகாத்மான்னு சொல்றபோது, அவர் ஏதோ ரொம்ப பெரியவராகத்தான் இருக்கணும், அவர் கிட்டே ஏதோ அபுரூபசக்தி இருக்கணுமின்னு சொல்லி அவரை நம்பறோம், வாழ்த்தறோம், வணங்கறோம்.

க : அதென்னமோ செங்கா, என் சந்தேகம் தீரல்லே. அவரை நம்பினா, வாழ்த்தினா, வணங்கினா, நமக்குப் புண்ணியம் வருமா?

செ : புண்ணியமின்னா என்ன அர்த்தத்திலே சொல்றே நீ?

க : அர்த்தமென்ன இருக்குது? ஒரே அர்த்தம் தான். எல்லோ ரையும்போல் பசியாற சாப்பாடும், மானம் போகாதே துணியும் கிடைச்சா, அது நாம் சேஞ்ச புண்ணியமின்னு இப்போ சொல்லவேண்டியிருக்குது.

செ : புண்ணியத்தை சுலபமா சொல்லிப்புட்டையே நீ? பெரியவங் கள்ளாம், புண்ணியம்னா அது எங்கேயோ, மேலோகத்திலே கண்காணாத இடத்திலே இருக்குதுன்னு சொல்றாங்க. நீ என்னடான்னா, சுலபமா, சோத்திலேயும் துணியிலேயும் இருக்குதுன்னு சொல்லிபுட்டே. (தலையைத் தூக்கிப் பார்த்து) அடே கங்கா! அதோ காந்தி மகாத்மா வராப்போலே இருக்குது. அங்கே பார். ஒரே கலாட்டா. ஜனங்கள்ளாம் கை தட்ட றாங்கோ பார்.

க : எங்கேடா?

செ : அதோ பார், மேடைமேலே ஏறி நிக்கறாரு பாரு. புண்யாத் மாடா அவரு. (கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு இரு கன்னங்க ளிலும் அறைந்து கொள்கிறான். அவனைப் பார்த்து கங்கனும் அப்படியே செய்கிறான்.)

க : ரொம்ப வயசானவர்ரா பாவம். அவர் கண்ணை மூடிக்கிணு இருக்காரு; மத்தவங்கள்ளாம் என்னமோ பாடறாங்க.

(ரகுபதி ராகவ ராஜாராம் கீத கோஷம். எல்லோரும் தாளம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது செங்கன் மனைவி, நோய்வாய்ப்பட்டிருக்கிற தன் கைக்குழந்தையுடன் வருகிறாள்.)

செ : (தன் மனைவி வருகிற பக்கம் பார்த்து) எங்கே இந்த கும்பல்லே குழந்தையை தூக்கிகிணு வந்தே?

செ-மனைவி : என்னா ஜனம், என்னா ஜனண்டியம்மா! நெருக்கித் தள்ளிப்பிடிச்சுங்களே!

க : இந்தக் கூட்டத்திலே குழந்தையை தூக்கிக்கிணு வருவாங்களா?

செ-ம : குயந்தைக்கு மருந்து மாயமெல்லாம் கொடுத்து பார்த்தோம். ஒண்ணும் பிரயோஜனமில்லே. காந்தி பார்வைபட்டா குயந்தை நேராக ஆகும், நோயெல் லாம் போகுமின்னு சொன் னாங்க, அதுக்காக கொண் டாந்தேன். அவரை பாக்க வுட்டான்னா இந்த ஜனங்க?

க : செங்கா, அதோ பார், யாரோ ஒரு பெரியம்மா நடுப்புறே எழுந்து நின்னு கிணு காந்தியிருக்கிற பக்கம் பார்த்து விழுந்து விழுந்து கும்பிட்றாங்கோ.

செ : (இன்னொரு பக்கமாகக் காட்டி) அதோ பார் அந்த கிழவனாரை, விக்கி விக்கி அழுவறாரு பாரு. காந்தியைக் கண்டுட்டாராம், அவ்வளவு சந்தோசம் அவருக்கு.

செ-ம : (செங்கனிடம்) தா, நீ ரவை இந்த குயந்தையே எடுத்துகிணு போயி, காந்தி, எந்த வழியிலே நடந்து போனாருன்னு பார்த்து, அந்த மண்ணை எடுத்து நெத்தியிலே இட்டுப்புட்டு, ரவை போதும் வாயிலேயும் போட்டு எடுத்துக்கிணு வாயேன். அவர் மிதிச்ச மண், பூசாரி கொடுக்கிற துண்ணூறு மாதிரின்னு சொல்றாங்களே.

செ : சரி, கொண்டா குயந்தையே.

(செங்கன், குழந்தையை வாங்கிக் கொண்டு போகிறான். அவன் மனைவியும் கூட தொடர்கிறாள். கங்கன், கூட்டத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறான்.)

நான்காவது களம்
இடம் : பிரார்த்தனை மைதானத்தில் மற்றொரு பக்கம்.

காலம் : பிரார்த்தனை நடக்கிறபோது.

(ஓரிடத்தில் வடை, சுண்டல், முறுக்கு முதலிய தின்பண்டங்களும், இன்னோரிடத்தில் பழம், புஷ்பம், பெப்பர்மிண்ட், சிகரெட், பீடி முதலியனவும், இப்படிப் பலவகையான சாமான்கள் ஆங்காங்கு விற்கப்படு
கின்றன. அவரவரும் அவரவருக்கிஷ்டமானதை வாங்கி உபயோகித்துக் கொண்டும், நடு நடுவே பேசிக் கொண்டும், அவ்வப்பொழுது பிரார்த்தனை மேடைப் பக்கம் தலையைத் தூக்கித் தூக்கிப் பார்த்துக் கொண்டும் இருக்கின்றனர்.)

உட்கார்ந்திருக்கிற ஒருவர் : (முன்னால் எழுந்து நிற்கிற வரைப் பார்த்து) ஏய், உட்காரய்யா.

எழுந்து நிற்கிறவர் : (பின்னால் திரும்பி முறைத்துப் பார்க்கிறார்.)

உ-ஒ : நீ முன்னாலே மாடு மாதிரி எழுந்து நிந்தா, பின்னாடி குந்திக் கினு இருக்கவங்கள்ளாம் எப்படிய்யா பாக்கறது?

எ-நி : எருமை மாதிரி எழுந்து நிந்து பாக்கிறது.

மூன்றாமவர் : ஏன்யா, காந்தி எதிருக்கே சண்டை போடுறீங்க? ரெண்டு பேரும் மனுசன் மாதிரி பேசுவீங்களா? ஹும், கடவுளே! ஏ எழுந்து நிக்கற பெரிய மனுசா! அந்த சுண்டலே ரவை கூப்பிடு.

எ-நி : நீ வைச்ச ஆளா நானு?

மூ : சாஸ்தி பேசினா, அதுக்குண்டானது கிடைக்கும். காந்தி கூட்டமாச்சேன்னு பாக்கரேன். இல்லா கிட்டி இத்திநேரம் எங்கே யிருப்பையோ?

நான்காமவர் : அந்த ஆளோடு ஏன்யா சண்டை போட்றே, சும்மா குந்திகிணு கிடக்காதே?

தொண்டர் : இரைச்சல் போடாதேங்கோ.

(ஒரு பக்கத்திலுள்ள ஜனங்கள் எழுந்து போகத் தொடங்குகிறார்கள்.)

தொ : ஏனய்யா இதுக்குள்ளே எழுந்துட்டிங்க? இன்னும் பிரார்த் தனை முடியல்லே; காந்தியே இன்னும் பேச ஆரம்பிக்கவில் லையே ஐயா!

போகிறவரில் ஒருவர் : அவர் பேச்சை கேக்கவா நாங்க வந்தோம்? சும்மா பாக்க வந்தோம். பாத்தாச்சு, போக வேண்டியதுதானே! நேரமாச்சுல்லே? அப்புறம் பஸ் கிடைக்காது.

ஒரு காந்தி பக்தர் : மூட ஜனங்கள்! மூட ஜனங்கள்! போகிறபோது சும்மாவாவது போகிறார்களா? சத்தம் போட்டுக் கொண்டு போகிறார்கள். இவர்களையெல்லாம் எப்படி முன்னுக்குக் கொண்டுவரப் போகிறார் காந்தி?

ஒரு ஸ்திரீ : (உரத்த குரலில்) அடீ கண்ணம்மா!

தொ : ஏன் இப்படி கத்தறே?

ஒ-ஸ் : ஆங், இதின்னாடியம்மா, என் கொயந்தையே காணாது போனா நான் கூப்பிட்டுக்கிறேன். இந்த காந்திகாரருக்கு ஏன் இப்படி கோவம் வருது?

தொ : கோபம் இல்லையம்மா! அதோ பார், காந்தி பேசுகிறார். அந்தப் பேச்சிலே இரண்டு வார்த்தையாவது காதிலே விழவேண் டாமா?

ஒ-ஸ் : எங்களுக்கெல்லாம் அவர் பேசறது என்னா புரியப்போவுது?

தொ : (தனக்குள்) அப்படியானால் கூட்டத்திற்கு வந்தே இருக்கக் கூடாது.

ஒ-ஸ் : நீ யாரு வரக்கூடாதுன்னு சொல்றது? நீ என்னா கலைக்டரா? கவுர்னரா?

ஒரு காந்தி-ப : வாலண்டியர் ஸார்! சும்மா யிருங்களேன். பெண் பிள்ளையோடு என்னத்துக்கு வீண் பேச்சு?

ஓ-ஸ் : அப்படிச் சொல்லுங்க பெரியவரே! உன்னை பார்த்தா காந்தி மாதிரி இருக்குது. ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி பொக்கை வாய்தான்!

(இதைக் கேட்டு பக்கத்திலிருக்கிறவர்கள் எல்லோரும் கொல்லென்று சிரிக்கிறார்கள்.)

தொ : உஸ், கூச்சல் போடாதங்கோ.

கூட்டத்திலே ஒருவர் : காந்தி பேசறது ஒண்ணுமே காதிலே விழல்லே.

மற்றவர்கள் : மகாத்மா காந்திக்கு ஜே!

(ஒரே கும்பலாக எழுந்து நிற்கிறார்கள். அவர்களை உட்காரு மாறு சொல்லி, பின்னாடி யிருக்கப்பட்டவர்கள் சத்தம் போடுகிறார்கள். பிரார்த்தனை முடிந்து கூட்டம் கலைகிறது.)

ஐந்தாவது களம்
இடம் : தொண்டர் முகாம்

காலம் : இரவு

(இரண்டு தொண்டர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.)

முதல் தொண்டர் : மகாத்மா காந்தியைப் பார்ப்பதற்காக லட்சக் கணக்கில் ஜனங்கள் வந்தார்களே, இவர்களில் எத்தனை பேர் அவர் பேச்சைக் கேட்டிருப்பார்கள்?

இரண்டாவது தொண்டர் : ஒரு சில ஆயிரம் பேராவது இருக்க
மாட்டார்களா?

மு-தொ : அந்த சில ஆயிரம் பேரிலே எத்தனை பேர் அவர் பேச்சைப் புரிந்து கொண்டிருப்பார்கள்?

இ-தொ : ஒரு சில நூறு பேராவது இருக்கமாட்டார்களா?

மு-தொ : அந்த சில நூறு பேரிலே எத்தனை பேர் அவர் பேச்சின் படி நடக்கிறவார்களா யிருப்பார்கள்?

இ-தொ : ஒரு சில பத்து பேர் என்று வைத்துக் கொள்ளேன்.

மு-தொ : அந்த ஒரு சில பத்து பேரும் அவருடைய சத்தியாக்கிரக தத்துவத்தையும், அஹிம்ஸை தத்துவத்தையும் பரிபூரணமாய் அறிந்து அதன்படி அனுஷ்டிக்கக் கூடியவர்களென்று நீ நினைக் கிறாயா?

இ-தொ : அதெப்படி நிச்சயமாகச் சொல்லமுடியும்? ஏதோ ஏகதேச மாக ஒருவர் இருவர்தான் அவரைப் பின் பற்றமுடியும்.

மு-தொ : அதுவும் அறைகுறையாகத்தான் பின் பற்றமுடியும். இந்த உண்மையை, நம்மைக் காட்டிலும், அந்நியர், சிறப்பாகப் பிரிட்ஷார் நன்றாக தெரிந்து கொண்டிருக்கின்றனர். ஓர் ஐரோப்பிய அறிஞர் கூறுகிறமாதிரி, “காந்தி மகாத்மா மீது உலகத்தின் கவனம் அதிகமாகச் செல்கிறது; ஆனால் அவர் செய்துகொண்டு வரும் காரியங்களைப்பற்றி யாரும் அதிகமான கவனஞ் செலுத்துவதில்லை.”

இ-தொ : ஐரோப்பியர் சொல்வதையெல்லாம் நாம் அப்படியே ஏற்றுக்கொண்டு விட வேண்டுமென்பதில்லையே.

மு-தொ : அது வாஸ்தவம். பொதுவாக, நம்முடைய தலைவர் களை அவதார புருஷர்களென்றும், கடவுள் அமிசமுடையவர் களென்றும் இப்படிப் பலவிதமாகப் போற்ற எப்பொழுது தொடங்கிவிட்டோமோ அப்பொழுதே அவர்களைப் பின் பற்றுவதினின்று நாம் ஒதுங்கிவிட்டோ
மென்பது அர்த்தம். அவர்களுடையப் போதனைகளுக்குப் பதில் அவர்
களுடைய உருவமே நமது இருதயத்தில் அதிகமாக இடம் பெற்றுவிட்ட தென்பது என் அபிப்பிராயம்.

இ-தொ : உன்னுடைய அபிப்பிராயம் அப்படியிருக்கலாம். ஆனால் பொதுஜனங்கள் அப்படி நினைக்கவில்லையே.

(மணியடிக்கிற ஓசை கேட்கிறது.)

இ-தொ : படுக்கைமணி அடித்து விட்டார்கள். படுக்கப் போகலாம் வா.

(இருவரும் படுக்கச் செல்கிறார்கள்)


தேர்தலுக்கு முந்தி

முதற் களம்
இடம் : கண்ணுசாமிப்பாவலர் பங்களாவின் முன்பக்கத்து ஹால்.

காலம் : மாலை.

(ஹாலில் மேஜை, நாற்காலி, சோபா முதலியவை உரிய இடங்களில் ஒழுங்காக இருக்கின்றன. கீழே ஒரு பக்கமாக, பாவலரின் தாயார் வள்ளியம்மாள் உட்கார்ந்து கொண்டு, கடையிலிருந்து வாங்கிவந் திருக்கிற கடலையைக் கற்களில்லாமல் சுத்தப்படுத்திக் கொண்டிருக் கிறாள். ஒரு பக்கம் சோபாவின் மீது, பாவலரின் மனைவி பொன்னம் மாள் அமர்ந்து, வெளியே புறப்படப்போகும் தன் கணவருக்குத் தேவையா
யிருக்கக் கூடிய உடைகளிற் சிலவற்றை மடிமீது வைத்துக் கொண்டிருக்
கிறாள். முகத்தை கழுவிக்கொண்டுவிட்டு பாவலர் அவசரம் அவசரமாகப் பிரவேசிக்கிறார்.)

கண்ணுசாமிப் பாவலர் : (இருகைகளையும் நீட்டிக் கொண்டே) டவல்! டவல்!

பொன்னம்மாள் : (நமட்டு சிரிப்புடன்) ஐயோ! அவசரம் அள்ளிக்
கொண்டு போகிறது ஐயாவை! (டவலை பாவலர் கையில் விழும்படியாக வீசி எறிகிறாள்.)

க-பா : (டவலால் முகத்தைத் துடைத்துக்கொண்டே) ஆமாம்; சிட்டுக்குருவியாகப் பறக்கணும் இப்போ நானு. மணி ஆறு அடிச்சுப் போச்சு இல்லே?

பொ : இல்லை; இன்னும் அஞ்சு நிமிஷம் பாக்கியிருக்குது.

க-பா : அப்போ சரி, கொண்டா ஷர்ட்டு, ஷர்ட்டு.

பொ : இருக்கிற நேரமெல்லாம் சும்மா இருக்கிறது, அப்புறம் என்னை விரட்டறது. உம், எது வேணும்? கதர் குடுத்தாவா? சில்க் ஷர்ட்டா?

க-பா : (ஆத்திரத்துடன்) எதுவோ ஒன்று கொடுத்துத் தொலையேன்.

பொ : (பதில் ஆத்திரத்துடன்) எந்த மீட்டிங்குக்கு போகப் போறீங்களோ, எனக்கென்ன தெரியும்?

க-பா : ஆமாம்; ஆமாம். கதர் குடுத்தாவும் காந்தி குல்லா யும் கொடு. இன்று ஹிந்தி சங்கத்தின் ஆண்டு விழா. அங்கே கூடியிருக்கிறதெல் லாம் காந்தி பைத்தியங்களா இருக்கும். அதனாலே………

பொ : ஆமாம்; உங்களுக்கு ஹிந்தி தெரியாதே? ஹிந்தி சங்கத்திலே போய் என்ன பேசப்போறீங்க?

க-பா : அடே, ஹிந்தி சங்கத் திலே பேசறதுக்கு ஹிந்தி தெரியணுமா என்ன? என்ன பொம்பளே நீ? எந்தக் காலத்திலே இருக்கே நீ? நான் எதுக்காக அங்கே போறேன் தெரியுமா?

பொ : ஹூம்; அது கூட தெரியாதா எனக்கு? ஓட்டுப் பிடிக்க.

க-பா : சீ ! அப்படிச் சொல்லாதே. மீன் பிடிக்க என்கிற மாதிரி இருக்குது அது.

பொ : அப்படியானால் ஓட்டுக் கேட்கப் போறீங்க என்று சொல்லட்டுமா?

க-பா : அதுவும் தப்பு. பிச்சை கேட்கிற மாதிரி இருக்குது அது…………. சரி, கண்ணாடி கொண்டு வா. ஜல்தி, ஜல்தி.

பொ : இப்போ எதுக்கு கண்ணாடி? சாயங்காலத்திலேயா கண்ணாடி போட்டுக்கொள்வாங்க?

க-பா : இல்லை, இல்லை. நடு நிசியிலே நல்ல தூக்கத்திலே போட்டுக்கொள்வாங்க. போ, போ. மூடம், மூடம். நான் கூலிங் கிளாஸா (ஊடிடிடiபே ழுடயளள - குளிர்ந்த கண்ணாடி) கேட்டேன் இப்பொழுது? முகம் பார்க்கிற கண்ணாடியைக் கேட்டால் என்னமோ பேசறா?

பொ : ஆமாம்; மீட்டிங்குக்குப் போகிறவங்கள்ளாம் கண்ணாடி யில் முகத்தைப் பார்த்துக் கொண்டுதான் போவாங்க?

க-பா : இந்தக் காலத்திலே ஆம்பளைகள் சட்டைப் பையிலேயே கண்ணாடியும் சீப்பும் வைச்சிருக்காங்க; தெரியுமா உனக்கு?

பொ : அதென்னமோ எனக்குத் தெரியாது. நான் தான் மூடமாச்சே.

க-பா : நீ கோவிச்சுக்காதே. ஆம்பளை வெளியிலே புறப்படுகிற சமயத்திலே பொம்பளை கோவிச்சுண்டா நல்லதில்லை. கண் ணாடியை கொண்டுவா பார்க்கலாம்.

(பொன்னாம்மாள் கண்ணாடி எடுத்துவர உள்பக்கம் போகிறாள்.)

வள்ளியம்மாள் : (தனக்குள்) வாயை அடைச்சுக் கிடக்கலாமென் றால் வயிறு கேட்கமாட்டேனென்கிறது. (வெளியே) ஏண்டா கண்ணு ! இப்படி ஓடு ஓடுன்னு ஓடறயே? உடம்பு ஓடாப் போச்சேடா?

க-பா : எல்லாம் ஓட்டுக்குத்தான் அம்மா. உனக்கொன்றும் தெரி யாது. சும்மாயிரு.

வ : சும்மாயிராதே நான் என்ன இந்தக் காலத்து பொம்பளைகள் மாதிரி ஆட்டமா ஆடப்போறேன்?

பொ : (உள்ளிருந்து கண்ணாடியைக் கொண்டு வந்து பாவலர் கையில் கொடுத்தவண்ணம்) இந்த மாதிரி இடிச்சு பேச மட்டும் நல்லா தெரியும்?

வ : உன்னைச் சொல்லவில்லையடி அம்மா! நீ கிளம்பி விடாதே.

பொ : (முகஞ்சுளிக்க) நான் என்ன பருந்தா, குரங்கா கிளம்புவதற்கு?

க-பா : சே, சே! பருந்துமில்லை, குரங்குமில்லை, பொம்பளேன்னா நீ? எல்லோரும் அப்படித்தானே உன்னை நினைச்சுண்டிருக் காங்க, ஏ, ஏ!!

பொ : சொல்லிவிட்டு இளிக்காதீங்க; இந்த ஆம்பளைகளே இப்படித்
தான்.

வ : போனா போவுது. ஓட்டுன்னா என்னடா கண்ணு?

பொ : ஓட்டுன்னா கடலையைச் சுண்டி கடவுளுக்குப் படைக் கிறதுன்னு அர்த்தம்.

வ : பாத்தியாடா, மருமகளா பேசறாளா, பாத்தியா?

க-பா : ஏய், மாமியார் கிட்ட மரியாதையாகப் பேசு.

வ : கடவுளுக்குப் படைச்சா கெட்டுப்பூடுவாங்களா? நாளைக்கு வியாழக்கிழமை. கடலை சுண்டல் செய்து கோயிலுக்கு எடுத்துக் கொண்டு போய், சாமி கும்பிட்டுவிட்டு, நாலு ஏழை பாழைங்க ளுக்குக் கொடுக்கத்தான் போறேன். எனக்கும் இந்த வீட்டிலே அதிகாரமுண்டு.

க-பா : எல்லாருக்கும் அதிகாரமுண்டு. அம்மா! நீ நாளைக்கே கோயிலுக்குப் போய் சாமி கும்பிடணுமா?

வ : ஏன்? எதுக்காக கேக்கறே?

க-பா : இல்லையம்மா! நாளைக்கு கோயிலிலே ஒரு மீட்டிங். அதிலே நான் பேசப்போறேன்.

வ : நல்ல மீட்டிங்! வேளா வேளைக்கு சோறு இல்லை. இராவில்லை; பகலில்லை; எப்பவும் மீட்டிங், மீட்டிங்குன்னு ஓடறயே?

க-பா : ஆமாமம்மா; இப்போ எலெக்ஷன் பாரு. நான் ஓட்டுக்கு நிக்கறேன். அதனாலே அங்கங்கே மீட்டிங் போட்டு பேசணு மில்லே?

வ : இதுக்கெல்லாம் காசு செலவழிக்கணுமா?

க-பா : ஆமாம்; சும்மாதானா? ஆயிரக்கணக்கிலே செலவழிக் கணும்.

வ : ஐயோ! இதனாலே என்ன லாபம்?

க-பா : லாபமா? பேர்தான்: புகழ்தான்.

வ : எனக்கொண்ணும் புரியல்லேப்பா. (பொறுத்து) ஆமாம்; நாளைக்கு கோயில்லே என்ன பேசப்போறே?

க-பா : அப்போ என்ன வாயிலே வரதோ அதைப் பேசுவேன். இதெல் லாம் யோசனைப் பண்ணி பேசற பேச்சில்லை. யோசனை பண்ணி பேசினா, கேக்கறதுக்கு ஆள் இருக்கமாட்டாங்க.

பொ : அப்படியானால் யோசனை பண்ணக்கூட உங்களுக்குத் தெரியுமின்னு சொல்லுங்க.

க-பா : என்ன அப்படி சொல்றயே! நான் யாரு தெரியுமா?

பொ : தெரியுமே; நல்லாத் தெரியும். எனக்குக் கூடவா தெரியாது பாட்டுப் படிக்கத் தெரியாத பாவலருன்னு?

க-பா : பாத்தியா, பாத்தியா இவளை? பரிகாசம் பண்றாளே சமயம் பார்த்து.

வ : அவனுக்கென்னடி? அவன் தாதா பாவலர் : அவன் நாயனா பாவலர். அதனாலே அவனும் பாவலருன்னு பெயர் வைச்சிண் டிருக்கான்.

பொ : அதைத்தான் நானும் சொல்றேன்.

வ : அது கிடக்குது. நீ நாளைக்கு கோயிலிலே வந்து பேசறபோது நான் இருந்து கேக்கலாமில்லே?

க-பா : ஐயோ அம்மா! நீ வராதே. உனக்கு அங்கேயெல்லாம் நாகரிகமாக நடந்துகொள்ளத் தெரியாது. என் மகன் பேச றான்னு தமுக்கடிப்பே.

வ : நல்லா பொன்னாம்மாளைக் கூட்டிக்கொண்டு போயேன். அவளுக்கு நாகரிகமாக நாட்டியமாடத் தெரியும்.

பொ : (க-பா வைப்பார்த்து) உங்க ஆத்தா மிஞ்சித்தான் பேசறா. (பொறுத்து) உங்களுக்கு மீட்டிங்குக்கு நேரமாகல்லே? அப்பவே பறந்திங்களே?

க-பா : இரு; சங்கத்திலிருந்து ஆள் வரும், கூட்டிக் கொண்டு போக- இந்த மாதிரி கூடடங்களுக்கெல்லாம் கொஞ்சம் நேரம் பொறுத்துத்தான் போகணும். ஏன் என்று கேட்டால், அப்போ தானே ஜனங்கள் நம்மை எதிர்பார்த்து ஆவலாயிருப்பாங்க. வராரு, வராரு என்று சொல்லிக்கிட்டே நம்மைப்பற்றியே பேசு வாங்க, பாரு.

(கண்ணன், குமாரன்,கோபு, சோமு என்ற நான்கு தொண்டர்கள் பிரவேசிக்கிறார்கள்)

க-பா : எங்கே அப்பேன், இன்னும் நீங்கள் ஹிந்தி சங்கக்கூட் டத்துக்கு போகல்லையா?

கண்ணன் : போகறதுக்காகத்தான் வந்திருக்கோம்.

க-பா : பின்னே ஏன் இங்கே வந்தீங்க?

குமாரன் : காபி தண்ணிக்கு சில்லரை வாங்கிக்கினு போகலாமின்னு வந்தோம்.

கோபு : நானும் சோமுவும் இன்று காலம்பரலேயிருந்து பட்டினிங்க.

க-பா : போனவாரந்தானே ஆளுக்கு அஞ்சு அஞ்சு ரூபா கொடுத் தேன். அதுக்கு என்ன வேலை செய்திங்க?

க : அதின்னா அப்படி கேட்டுட்டிங்கோ? அந்தச் சேரியிலே போய் ஒரு கலக்கு கலக்கிப்பிட்டு வந்திருக்கோமே.

கு : அந்த ஆண்டியப்ப பண்டாரத்துக்கு ஒரு ஓட்டுக்கூட கிடைக்காதபடி வேலை சேஞ்சிருக்கோம்.

கோ : அந்த பண்டாரத்தின் வண்டவாளம் தண்ணியா ஓடுதுங்க சேரியிலே.

சோமு : இனி அவன் ஒரு கூட்டம் போட்டு நடத்த முடியுங்களா?

க-பா : இல்லெப்பா, அவன் - அந்தப் பண்டாரம் - காசை, தண் ணியா வாரி இறைப்பான்னு தோணுது.

க : அதுக்கின்னாங்க, அவன் அஞ்சு கொடுத்த இடத்திலே நாம்ப பத்து கொடுத்தா போச்சு.

கு : எப்போ ஓட்டுக்கு நிந்துட்டமோ காசை அள்ளி வீசணங்க.

பொ : கொட்டிக்கிடக்குது இங்கே.

வ : காய்ச்சு தொங்குது மரத்திலே.

க : ஆம்பளைங்க விவகாரத்திலே பொம்பளைங்க குறுக்கிட்டா எப்படி?

க-பா : ஆமாம்; நீங்க ரெண்டு பேரும் உள்ளே போங்க.

வ : ஓட்டு ஒட்டுன்னு சொல்லி பானை ஓடு கூட மிஞ்சப்போற தில்லே.

பொ : ஏன்? அது மிஞ்சும். இரந்து குடிக்கணுமில்லை?

வ : இரந்து குடிக்கிறீங்களோ, பறந்து போறேங்களோ, எனக் கென்ன வந்தது?

பொ : எனக்குந்தான் என்ன வந்தது? நான் எங்க ஆத்தா வீட்டுக்குப் போறேன்.

(இருவரும் உள்பக்கம் சென்றுவிடுகிறார்கள்.)

க-பா : (தொண்டர்களைப் பார்த்து) ஆமாம் தம்பீ! அந்த சேரியிலே மொத்தம் எத்தனை ஓட்டு?

க : ஓட்டர் ஜாபிதாவே சரியா கிடைக்கலிங்களே? அதுக்கும் சில்லரை தளர்த்த வேண்டியிருக்குதுங்களே?

கு : இந்தக் காலத்திலே துட்டுதானே எங்கேயும் பேசுது.

கோ : இந்த ஓட்டர் ஜாபிதா ஒரு கண்ராவிங்க.

சோ : செத்தவங்க பேரெல்லாம் இருக்குது; இருக்க வேண்டியவங்க பேரெல்லாம் இல்லவே இல்லை.

க-பா : ஆமாம்; நீங்கள் சொல்றது சரி. நாளைக்கு இதைப்பற்றி மேலிடத்திலே விசாரிக்கிறேன். (பொறுத்து) உத்தேசமா சேரி யிலே மொத்தம் எத்தனை ஓட்டு இருக்கும்?

க : அதைப்பற்றி உங்களுக்கேன் கவலைங்க? இருக்கிற ஓட்டு அத்தனையையும் பீறாஞ்சு கொண்டுவந்து உங்க காலிலே போட்டுரேனுங்க.

க-பா : பேஷ்! அந்தப் பண்டாரத்துக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காத படி பண்ணிவிடணும்.

கோ : அந்தக் கவலையே வேண்டாங்க. அந்தப் பண்டாரம் சேமக் கலம் கொட்டிக்கிணுதான் போகணும்.

க-பா : அடுத்த வாரம் சேரியிலே ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய ணுமே.

க : நல்லா செய்யணுங்க. ஞாயிற்றுக்கிழமை சாயரட்சை ஏற்பாடு செய்யட்டுமா? அன்னிக்குதான் எல்லாரும் வேலைக்கு போகா மல் சேரியிலே இருப்பாங்க. பேசறதுக்கு மட்டும் நல்ல ஆளா பாத்து இட்டுக்கிணு வந்துடுங்க.

க-பா : அதுக்கின்னாப்பா, பேசற ஆளுக்கா பஞ்சம்? அதுவும் இந்த எலெக்ஷன் சமயத்திலே?

சோ : அவங்களுக்கெல்லாம் பணம் கொடுக்கணுங்களா?

க : (சோமுவைப் பார்த்து) டேய், அதையெல்லாம் நாம கேட்டு தெரிஞ்சுக்கலாமா? கொடுக்கறாங்களோ, வாங்கறாங்களோ, யாரும் வெளியே சொல்லமாட்டாங்க. (க-பா.வைப் பார்த்து) கூட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சுட்ரேனுங்க. செலவுக்கு -?

க-பா : அதுக்கின்னாப்பா கவலை? நாளை காலை வாங்க. அம்பது ரூபாய் போதுமா?

க : சரிக்கட்டலாங்க. மேலே அஞ்சு பத்து ஆனால் கேட்டு வாங்கிக் கிறோம். நீங்க மட்டும் நல்லா பேசணும். இப்போ பிடிச்சு தயார் பண்ணிக்கிங்க.

க-பா : பேச்சுக்கு என்னப்பா? எல்லாருக்கும் பக்கா வீடு கட்டித் தரச் சொல்றேன், கிணறு தோண்டித் தரச் சொல்றேன். இப்படி எல்லாந்தானே தம்பீ பேசணும்?

க : அவ்வளவுதானுங்க. செய்யறமோ இல்லையோ அதைப் பின் னாடி பார்த்துக்கலாம்.

சோ : இந்த எலெக்ஷன் கலாட்டா வெல்லாம் முடிஞ்ச பிறகுதானே அதைப்பற்றியெல்லாம் யோசிக்கணும்.

கோ : நீங்க பேசற பேச்சிலே, அந்த பண்டாரம், அவன் கட்சி எல் லாம் பொசுங்கிப் போகணுங்க.

க : என்னடா அப்படிச் சொல்றயே? ஐயா வாயைத் திறந்தாங்க ளானால், எதிரிலே ஒரு ஆள் நிக்க முடியுமா என்ன?

க-பா : (சந்தோஷப்பட்டுகொண்டு) இப்போ உங்களுக்கென்ன வேணும்?

க : இப்போ காபி செலவுக்கு வேணும். அது தவிர, ஆளுக்கு அஞ்சு ரூபா கைச்செலவுக்கு வேணும்.

சோ : உங்கள் மாதிரி எங்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒரு கதர் குடுத்தா, ஒரு காந்தி குல்லாய் வேணுங்க.

கோ : இடுப்பிலே கட்டிக்க கதர்வேட்டி.

க : வேட்டி இல்லேன்னாலும் கதர் பைஜாமா தைச்சு கொடுத் துடுங்க.

கு : எங்களைப் பார்த்தாலே, பாவலர் தொண்டர்கள் இவர்கள் என்று எல்லோருக்கும் தெரியணுங்க.

க-பா : அப்படியே செய்வோம்! எல்லாத்துக்கும் சேர்த்து நாளை கொடுக்கறேன். காலம்பர வாங்க. இப்போ நேரே ஹிந்தி சங்கத்துக்குத்
தானே போகப் போறீங்க? போற வழியிலே ஹைரோட்டிலே காபி ஹோட்டல் இருக்குது பாரு, அங்கே போய், என் பேரைச் சொன்னீங்
களானா, காபி, பலகாரம் எல்லாம் கொடுப்பாங்க; வயிறு ரொம்ப சாப்பிட்டுவிட்டு மீட்டிங்குக்கு ஜல்தியா போங்க.

க : ரொம்ப நல்லதுங்க.

க-பா : நீங்க போய் சேர்ந்த கொஞ்ச நேரங்கழிச்சுதான் நான் வரணும்.

க : ஆமாங்க. நாங்க முன்னாடிபோய் ‘பாவலருக்கு ஜே’ போடணு மில்லே?

க-பா : அது மட்டுமில்லையப்பா. எலெக்ஷனைப்பற்றி நாலுபேரிடத்திலே பேச்சு கொடுத்து பேச்சு வாங்கணுமில்லே?

க : இதெல்லாம் தெரியாதா எங்களுக்கு? இதுக்கு முந்தி எத்தனை பேருக்கு எத்தனை எலெக்ஷ்ன்களிலே வேலை செஞ்சிருக் கோம்?

கோ : எங்கே போனாலும் உங்களை ஆகாசத்திலே தூக்கி வைச்சு பேசமாட்டோமா?

க-பா : சரி; நீங்கள் சீக்கிரம் போங்கள். அதோ, சங்கக் காரியதரிசி யும் வருகிறார்.

(நால்வரும் போகிறார்கள். ஹிந்தி சங்கக் காரியதரிசி பிரபுதேவ் வருகிறார்.)

பிரபுதேவ் : நமஸ்தே ! நமஸ்தே !

க-பா : வாங்க, வாங்க.

பி-தே : கூட்டம் சேர்ந்துபோச்சு, உங்களை எல்லோரும் எதிர் பார்த்து உட்கார்ந்துகொண்டிருக்காங்க.

க-பா : அப்படியா? மன்னிக்கணும். பேச வந்திருந்தாங்க. அவங் களை பேசி இப்போதான் அனுப்பிச்சேன். ஆமாம்; நான் எலெக்ஷனுக்கு நிக்கறேனென்று சங்கத்திலே எல்லாருக்கும் தெரியுமில்லை?

பி-தே : தெரியும்.

க -பா : அதைப்பற்றி நீங்க ரெண்டு வார்த்தை மீட்டிங்கிலே பேசு வீங்க இல்லை?

பி-தே : ஹிந்தி சங்கம் எல்லாருக்கும் பொதுவானது. தேர்தல் பிரசாரத்துக்கு அதை ஒரு இடமா நாங்க வைச்சுக்கல்லே.

க-பா : என்ன தேவ்! என்னமோ தரும நியாயம் பேசறீங்க? உங்க சங்கத் துக்கு கொஞ்சம் நன்கொடை கொடுக்கலாமின்னு யோசனை பண்ணிக்கொண்டிருக்கிறேன்.

பி.தே : நன்கொடை கொடுங்க; நன்றியோடு ஏற்றுக்கொள்கிறோம். சங்கம் எல்லாருக்கும் பொதுவானது, பாருங்கள்.

க-பா : அப்படியானால், உங்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், யாருக்கும் ஓட்டுக் கொடுக்கப் போவதில்லையா?

பி-தே : யாரும் யாருக்கும் ஓட்டுக் கொடுக்கலாம். அது அவரவர்க ளுடைய சொந்த விஷயம். சங்கந்தான் பொதுவானது என்று சொன்னேனே தவிர,அங்கத்தினர்களைப் பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லையே.

க-பா : புரிஞ்சுது இப்போ. உங்கள் சங்க மெம்பர்களின் லிஸ்ட் ஒன்று கொடுக்கமுடியுமா?

பி-தே : சங்க நிருவாகக் கமிட்டிக்கு எழுதிக் கேளுங்கள். அவர்கள் கொடுக்கச் சொன்னால் கொடுக்கிறேன்.

க-பா : பலே பேர்வழி நீ! வடக்கத்தியான் இல்லை?

பி-தே : வடக்கு,தெற்கு என்ற வித்தியாசமே எங்கள் சங்கத்திற்குத் தெரியாது. (சிறிது பொறுத்து) உம்- மீட்டிங்குக்கு நேரமாச்சே?

க-பா : சரி; போகலாம். (போகும்பொழுது தமக்குள்) இந்த ஹிந்தி சங்கத்தை ஒரு கை பார்த்துட்ரேன்.

(பிரபுதேவ் முன்னே செல்ல பின்னே செல்கிறார்.)

இரண்டாவது களம்
இடம் : சேரி.

காலம் : பிற்பகல் சுமார் மூன்று மணி.

(நாட்டாண்மைக்காரனாகிய நாயகத்தின் வீட்டுக்கு முன்புறம், நாயகத்தின் இருமருங்கிலும் கோயிலான், கும்பிடுவான், செருகளத் தான், சிங்காரம் ஆகிய நால்வரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக் கின்றனர்.)

கோயிலான் : (நாயகத்தைப் பார்த்து) வாத்தியாரே! நீ என்ன சொல்றியோ அந்த மாதிரியே கேக்கறோம்.

நாயகம் : அப்படியில்லை கோயிலு! சேரியிலே மத்தவங்க என்ன சொல்றாங்கோ என்றத்தை நாம் தெரிஞ்சக்கணும் பாரு.

கும்பிடுவான் : ஆமாம் போ. சேரியிலுள்ளவங்க என்ன சொல் வாங்க? ஆடு, மாடு மாதிரி முன்னே போனா பின்னே வருவாங்க.

செருகளத்தான் : சேரியைப் பொறுத்தவரை பாவலனும் ஓண்ணு தான்; பண்டாரமும் ஒண்ணுதான்.

சிங்காரம் : அப்படிச் சொல்லிபுட்டா எப்படி? பண்டாரம் கொஞ்சம் யோக்கியனில்லை.

செ : எல்லாரும் ஒண்ணுதான்; அதுக்கின்னா, பாவலன் பேச்சை அள்ளிவிட்றான்; பண்டாரம், கொஞ்சம் குறைச்சு பேசறான்.

கு : ரெண்டு பேரும் சேரிக்கு செய்யப்போறது ஒண்ணுமில்லை.

சி : எனக்கென்னமோ பண்டாரம் ஏதாட்டியம் செய்வான்னு தோணுது.

செ : மேல் ஜாதி கீழ் ஜாதி கிடையாது. எல்லார் ரத்தமும் ஒண்ணு தான், எல்லாரும் சகோதரர்கள். இப்படியெல்லாம் அந்தப் பண்டாரம் பேசறதை கேட்டு சிங்காரம் மயங்கிப்போனான்.

கோ : பாவலன் கையிலே கொஞ்சம் துட்டு நடமாடுது. பண்டாரம் கையிலே அவ்வளவு இல்லை.

கு : பாவலன், தன் பணத்தையெல்லாம் சேரியிலே வாரி இறைச்சுடப் போறான்னு நீ நினைக்கிறயா?

கோ : இல்லை; இல்லை. ஏதானும் செய்யணுமின்னு மனசு வைச்சா, பாவலன் செய்வான்.

கு : மனசு வைச்சாதானே? பணமிருந்தா மனசு இராது. தெரிஞ் சுக்கோ. மேலும் மேலும் பணத்தை சேக்கணுமின்னுதான் மனசு போகும்.

சி : பண்டாரம் என்னிக்கும் ஒரே மாதிரி வேஷம் போட்றான். இந்தப் பாவலன், ஒரு நாளு காந்தி வேஷம் போட்றான்; ஒரு நாளு வெள்ளைக்காரன் மாதிரி சராய் தொப்பி எல்லாம் வைச்சுக்கறான்.

கு : அவன் கோயிலுக்கு போகச்சொல்ல பாக்கணுமே? கழுத்திலே கொட்டை; உடம்பெல்லாம் துண்ணூறு. கண்ணை மூடிக் கொண்டுதான் போவாரு ஐயா.

சி : நந்தன் என்னு நெனெச்சுக்கிறானாங்காட்டியம்?

நா : அந்தப் பேச்செல்லாம் நமக்கென்னத்துக்கு? பாவலன், நம்ம சேரிக்கு ஒரு பள்ளிக்கூடம் கட்டித்தரேன்றான்.

சி : அதுக்கென்ன, பண்டாரங்கூட சேரிக்கு ஒரு கோயில் கட்டித் தரேன்றான்.

செ : அதிலேதான் மோசடி இருக்குது. ஜாதிக்காரங்கள் கோயிலுக் குள்ளே நாம்ப வராதபடி தடுக்க இது ஒரு சூழ்ச்சி.

நா : சே, சே! அப்படிச் சொல்லாதே.

கு : நமக்கு பள்ளிக்கூடமும் வேணாம்; கோயிலும் வேணாம். குடிக்க நல்ல தண்ணியும், வவுத்துக்கு நல்ல சோறும் கிடைச்சா போதும்.

கோ : மானங்காக்க துணி வேணாமா?

கு : அதுவும்தான் ஓணும். (தூரத்தில் சுட்டிக்காட்டி) அதோ பாரு, நம்ப வூட்டு பொம்பளை எங்கேயிருந்து தண்ணி கொண்டு வராங்க பாரு. அவங்களே பாத்தா என் வவுறு எரியுது.

நா : இந்த மாதிரி பேசி மத்தவங்களை திட்டிகிணு கிடக்கிறமோ தவிர, நமக்கு நாமே ஏதானும் செஞ்சிக்கிறோமா?

கு : என்ன செஞ்சுக்கணுமின்றே?

கோ : வாத்தியாரே! நான்தான் முதலிலேயே சொன்னேனே, நீ சொல்றபடி செய்யறோமின்னு.

நா : சேரியிலே நாமெல்லாம் சேர்ந்து ஒரு கிணறு தோண்டினா என்ன?

கோ : நல்லா தோண்டலாம். ஆனால் கட்டடம் கட்றதுக்கு செங்கல்?

நா : அதுக்குதான், இந்த ஓட்டுக்கு வராங்களே அவங்கள்ளே யாரு கட்டி தருவாங்கன்னு கேக்கறது.

கோ : ஆமாம்; நாளை பாவலனும், நாளை நின்னு பண்டாரமும் கூட்டம் போட்டு பேசப்போறாங்களாம். அப்போ கேட்டு பார்க்கலாம்.

கு : கூட்டத்திலே கேட்டா என்ன சொல்லப்போறாங்கோ? மழுப்பி, மழுப்பி, வளைச்சு, வளைச்சு பேசுவாங்க. தனியாக கூட்டி யாந்து, எங்க ஓட்டு ஓணுமின்னா எங்களுக்கு என்னென்ன சேஞ்சுதரேன்னு கேட்டு பிரமாணம் வாங்கிக்கணம்.

சி : அதான் சரி.

செ : இந்த பிரமாணத்துக்கெல்லாம் பயந்தவங்களா அவங்க? உனக்கும் எனக்குந்தான் பிரமாணம். படிச்சவங்கள்ளாம் பிரமாணத்தை காத்திலே பறக்க விட்டுப்புட்டு பேசுவாங்க.

சி : எனக்கென்னமோ பண்டாரம் அப்படி செய்ய மாட்டான்னு தோணுது.

நா : அதையும் பார்த்துடலாமே? இப்போ நமக்கு என்னென்ன ஓணும்? நமக்குள்ளே பேசி ஒரு முடிவுக்கு வந்துக்கலாம்.

கோ : நம்ம சேரிக்கு பக்காவா ரோட்டு போட்டுத் தரணும்.

கு : ரோட்டுக்கு இப்போ என்ன அவசரம்? குடிக்க நல்ல தண்ணீர் ஓணும். பெரிய கிணறு ஓண்ணு தோண்டி கட்டித்தரச் சொல் லணும்.

செ : நம்ப வூட்டு படிக்கிற பிள்ளைங்களுக்கு இனாமா படிப்புச் சொல்லித்தர ஏற்பாடு செய்யணும்.

சி : வவுத்துக்கு சோறு? ஒரு வேளை சாப்பாடாவது போடச் சொல்லணும்.

கோ : ஆமாமாம். புஸ்தகம், பலகை இதுங்கள்ளாம் கூட வாங்கித்தரச் சொல்லணும்.

நா : செய்யறாங்களோ இல்லையோ? கேட்டுத்தான் வைப்போ மின்னு பேசறீங்களாங்காட்டியம்?

கு : ஆமாம் வாத்தியாரே! ஆனால் எனக்கென்ன தோணுதுன்னா, யாரும் ஒண்ணுஞ்செய்யப்போறதில்லை. ஓட்டுக்கு அஞ்சு அஞ்சு ரூபா கொடுத்து நம்ம வாயை அடைச்சுடப்போறாங்க. நாமும் ஆடு மாதிரி போயி ஓட்டு போட்டுட்டு வரப்போறோம்.

சி : எனக்கென்னமோ பண்டாரம் ஏதானும் செய்வான்னு தோணுது.

கோ : நம்ம சிங்காரத்துக்கு பண்டாரத்தின் மேலே ரொம்ப பக்தி.

சி : என்னமோ அப்பா! என் மனசிலே பட்டதைச் சொன்னேன்.

நா : சரி; வாங்க. மத்தவங்களையும் கலந்து பேசலாம்.

(எல்லோரும் எழுந்து போகிறார்கள்)

மூன்றாவது களம்
இடம் : ஆண்டியப்ப பண்டாரத்தின் வீட்டு முன்வாசல்.

காலம் : காலை சுமார் எட்டு மணி.

(ஆண்டியப்ப பண்டாரமும் கைலாச குருக்களும் பேசிக் கொண்டிருக் கிறார்கள்.)

ஆண்டியப்ப பண்டாரம் : தெரியாத்தனமா இந்த எலெக்ஷன் விவகாரத்திலே காலை விட்டுக்கொண்டு விட்டேன். அதென்னடா வென்றால் தலையே போய்விடும் போலிருக்கிறதே?

கைலாச குருக்கள் : ஆமாம்; அரசியல் என்பதே ஆழங்கால் சேறு மாதிரி.

ஆ-ப : சேற்றிலே இறங்கினால் எப்படியாவது சமாளித்துக் கொண்டு மேலே வந்துவிடலாமே? இது நொய் மணலிலே இறங்கிவிட்டவன் கதியாகவல்லவோ இருக்கிறது? ஆளையே இழுத்துவிடும் போலிருக்கிறதே?

கை -கு : நம்மைப் போலொத்தவர்களுக்கு இவையெல்லாம் சரிப் படுமா என்ன?

ஆ-ப : என்ன குருக்களே! நாளொரு வேஷம்; பொழுதொரு பேச்சா?

கை-கு : ஆமாம்; அப்படித்தானிருக்கிறது.

ஆ-ப : அறத்தை அடிப்படையாகக்கொண்டு அரசியல் அமைய வேண்டுமென்று பெரியோர்கள் சொல்லிப் போந்தார்கள்.

கை-கு : இந்தக் காலத்தில் அது ஏற்குமா?

ஆ-ப : அறத்தை அரங் கொண்டல்லவோ அறுத்து விடுகிறார்கள். இன்றைய அரசியல்வாதிகள்?

கை-கு : அதனால்தான் பொம்மலாட்டம் மாதிரி இருக்கிறது இன்றைய அரசியல்?

ஆ-ப : எனக்கென்னமோ சிறிதுகூடப் பிடிக்கவில்லை. இந்தத் தேர்தல் போட்டியிலிருந்து விலகிக் கொண்டு விடலாமென்று நினைக்கிறேன்.

கை-கு : வீட்டிலே அம்மையார் என்ன சொல்கிறார்கள்?

ஆ-ப : கடைசி வரையில் ஒரு கை பார்த்துவிடுங்களென்று சொல்கி றாள்.

கை-கு : “எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவ மென்பது இழுக்கு” என்ற குறளை நினைவு படுத்துகிறார் போலும்.

ஆ-ப : குறளைக் கண்டாளா, நாலடியாரைக் கண்டாளா அவள்? என்னமோ சொல்லுகிறாள். நீங்களே வேண்டுமானால் கூப் பிட்டுக் கேளுங்களேன். (உள்பக்கம் திரும்பி) ஏய்! யாரது வீட்டு உள்ளே?

(உள்ளிருந்து பண்டராத்தின் மனைவி உமையாள் வருகிறாள்)

உமையாள் : ஏன்?

கை-கு : நம்மள் பண்டாரம் சொல்லுகிறார். இந்தத் தேர்தல் போட்டியிலிருந்து விலகிக்கொண்டு விடுவதாக, நடக்கிற பொய் பித்தலாட்டங்களை அவரால் சகிக்கமுடியவில்லையாம்.

உ : எனக்குக் கொஞ்சங்கூட இஷ்டமில்லை. இப்பொழுது விலகிக் கொண்டால் நம்மள் மானம் போகுமில்லை?

ஆ-ப : மானம் போகாமலிருப்பதற்குத்தான் இப்பொழுதே விலகிக் கொண்டு விடுகிறேனென்று சொல்கிறேன்.

கை-கு : “மானம்பட வாழாமை முன்னினிதே” என்றார்கள் பெரி யோர்கள்.

உ : குருக்களையாவுக்கு என்ன வேலை? எதற்கெடுத்தாலும் செய்யுள் தான்; சாஸ்திரந்தான்.

கை-கு : அவைகளில்தானே எல்லாச் சூட்சுமங்களையும் வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள் பெரியோர்கள்.

உ : நான் அப்பொழுதே சொன்னேன் இவருக்கு. முனைந்தால் முடிய முனையவேண்டும், இல்லையானால் இதில் இறங்கவே கூடா தென்று.

ஆ-ப : ஆமாம்; எல்லோரும் யோக்கியமாக நடந்து கொள்வார்க ளென்று நினைத்தேன். இவ்வளவு பொய், பித்தலாட்டங்கள் நடக்குமென்று என்னால் கனவிலே கூட எண்ணமுடியவில்லை.

கை-கு : நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் உலகம்.

ஆ-ப : அஹிம்ஸை என்று சொல்லிக்கொண்டு முழங்கைக்கு மேல் சட்டையைச் சுருட்டிக் கொள்கிறார்கள்.

கை-கு : “அஹிம்ஸா பரமோ தர்ம;” என்று சாஸ்திரம் சொல்லு கிறது.

ஆ-ப : காந்தி பெயரைச் சொல்லிக்கொண்டு கண்டபடி திட்டுகி றார்கள்.

உ : நீங்கள் அடிக்கவும் வேண்டாம்; திட்டவும் வேண்டாம். நியாத்தை எடுத்துச் சொல்லுங்களேன்.

ஆ-ப : அதுதான் பேச ஆரம்பித்தாலே ‘காந்திக்கு ஜே’ என்று கூச்சல் போட்டு கூட்டத்தைக் கலைத்துவிடுகிறார்களே?

உ : நீங்களும் அதேமாதிரி செய்யுங்களேன்.

ஆ-ப : பெண்பிள்ளை பேசுகிற பேச்சா இது?

கை-கு : உமையாம்பிகை திருவாய் மலர்ந்தருளுகிறார்!!

உ : இல்லாவிட்டால் உங்களுக்கு ஓட்டு எப்படிக் கிடைக்கும்?

ஆ-ப : அடிப்பதற்கும் திட்டுவதற்கும் ஆள் வைத்தல்லவோ வேலை செய்யவேண்டும்?

உ : செய்யுங்களேன்.

ஆ-ப : ஆட்களுக்கு பணமல்லவோ கொடுக்கவேண்டும்?

உ : கொடுங்கள்.

ஆ-ப : நானென்ன கள்ளமார்க்கெட்டில் கொள்ளையடித்துப் பணத்தைக் குவித்து வைத்திருக்கிறேனா?

உ : முதலிலேயே ஏன் இது தோன்றவில்லை?

ஆ-ப : சட்டசபையில் மெம்பரானால் மக்களுக்கு இயன்றவரை சேவை செய்ய சந்தர்ப்பம் கிடைக்குமென்று நினைத்தேன். இது என்னடாவென்றால், பெரிய பேயாட்டமாகவல்லவோ இருக்கி றது?

கை-கு : சூதாட்டமுங்கூட. இதைக் காட்டிலும் அம்பர் சர்க்காவை பம்பரமாகச் சுற்றிக்கொண்டிருந்தால் சுவேதாம்பரமாவது கிடைக்கும்.

உ : நீங்கள் இப்பொழுது விலகிக்கொண்டால் உங்களை எல்லாரும் கேலி செய்வார்கள். ஏற்கனவே அந்தப் பொன் னம்மா என்னை பண்டாரச்சி என்று ஏய்த்துக் காட்டிக் கொண் டிருக்கிறாளாம். இனிமேல் கேட்கவே வேண்டியதில்லை. தெரு விலே நடந்துகூட போகமுடியாது.

ஆ-ப : பல்லக்கிலே போ.

கை-கு : “அறத்தாறு இது என வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை” என்று அருள்கின்றார் வள்ளுவனார்.

உ : நல்ல குருக்களையா வந்துசேர்ந்தார். எதற்கெடுத்தாலும் செய்யுளா? சாஸ்திரமா?

ஆ-பெ : குருக்களையாவை சும்மா விட்டுவிடு. ஒன்று மட்டும் சொல்கிறேன். பொன்னம்மாள் உன்னை ஏய்த்துக்காட்டுகி றாளேயென்று நீ திருப்பி அவளை ஏய்த்துக் காட்டாதே.

உ : அவள் பவிஷூ எனக்குத் தெரியாதா? பானை சுட்டு விற்றவர்கள் தானே? பாவலர் என்று பெயர் வைத்துக்கொண்டால் மட்டும் அது மறைந்துவிடுமா?

ஆ-ப : அவையெல்லாம் நமக்கு எதற்கு? குலம் பெரிதா? குணம் பெரிதா?

கை-கு : “குலத்தளவேயாகுங் குணம்.”

ஆ-ப : இதோ பாருங்கள் குருக்களையரே! நாளைக்கு நான் ஒரு துண்டுப் பிரசாரம் அச்சடித்து எல்லோருக்கும் கொடுக்கப் போகிறேன்.

கை-கு : முதலிலே சிவமயம் என்று அச்சடிக்கச் சொல்லுங்களேன்.

உ : எதைப்பற்றி துண்டுப்பிரசாரம் என்று கேட்காமல் சிவமயம் என்று போடச் சொல்கிறீர்களே? அதுதானா முக்கியம்?

ஆ-ப : தேர்தலில் நான் அபேட்சகனாக நிற்பதன் நோக்கமென்ன, வெற்றிபெற்றால் என்னென்ன காரியங்களைச் செய்ய உத்தேசம் என்பவைகளை வரிசைக்கிரமமாக எடுத்துக் காட்டப்போகி றேன். இப்படி அச்சடித்துக் கொடுத்துவிட்டு சும்மாயிருக்கப் போகிறேன். யாரையும் அணுகி ஓட்டுக் கொடுங்களென்று கேட்கப் போவதில்லை; கூட்டங்கள் போட்டு சுயபுராணம் படிக்கப் போவதுமில்லை.

உ : ஒரு ஓட்டுக்கூட உங்களுக்குக் கிடைக்காது.

ஆ-ப: நிரம்ப நல்லதாய்ப் போச்சு. இதனோடு இந்தத் தேர்தல் விவகாரத்திற்குத் தலைமுழுக்குத்தான். ஜனங்களாக விரும்பி நமக்கு ஓட்டுக் கொடுக்க வேண்டுமே தவிர, நாம் அவர்களிடம் வலியக் கேட்டு வாங்கக் கூடாது.

உ : தருமபுத்திரரோடு தீர்த்த யாத்திரைக்குப் போங்கள்.

கை-கு : ஐயோ! என்னை விட்டுவிட்டா?

ஆ-ப : உங்களை விட்டுவிட்டா? ஒருகாலுமில்லை. இப்பொழுது இரண்டுபேரும் கோயிலுக்குப் போய்வரலாம். காலை பூஜை இன்னும் முடிந்திராதல்லவா?

(இருவரும் எழுந்து போகிறார்கள். உமையாள் உள்ளே போகிறாள்)

நான்காவது களம்
இடம் : தெரு மூலை.

காலம் : முற்பகல் சுமார் பத்து மணி.

(கல்லூரி மாணாக்கர்களான ராமகிருஷ்ணன், விவேகானந்தன் என்ற இருவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.)

ராமகிருஷ்ணன் : இப்பொழுதெல்லாம் எலெக்ஷனுக்கு வேலை செய்வது அதிக கஷ்டமில்லை.

விவேகானந்தன் : நன்றாகச் சொன்னாய். இப்பொழுதுதான் அதிக கஷ்டம்.

ரா : அதென்ன அப்படிச் சொல்கிறாய்?

வி : முந்தி, ஓரளவு படித்தவர்கள், ஆஸ்தியுடையவர்கள். இப்படிப் பட்டவர்களுக்கு மட்டும் ஓட்டுரிமை இருந்தது. அவர்களிடத் தில் அபேட்சகரைப்பற்றியோ அவருடைய கொள்கைகளைப் பற்றியோ அதிகம் சொல்லத் தேவையில்லை. அவர்களே தராதரம் அறிந்து ஓட்டுப்போட்டு வந்தார்கள். இப்பொழுதோ, வயதுவந்த எல்லாருக்கும் ஓட்டுரிமை. இவர்களிடத்திலே சென்று அபேட்சர்களைப்பற்றியோ கட்சிகளைப் பற்றியோ சொன்னால், அவர்களுக்கு ஏதாவது புரிகிறதா என்ன? ‘அதெல் லாம் தெரியாது. யார் எவ்வளவு ரூபாய் கொடுப்பார்களென்று’ தான் கேட்கிறார்கள்.

ரா : ஆனால் படித்தவர்களென்று அழைக்கப்படுகிறவர்கள் இல்லாத பொல்லாத வாதங்களை எழுப்புவார்கள்; குயுக்தி யாகப் பேசுவார்கள். படிக்காதவர்கள் எதைச் சொன்னாலும் கேட்டுக்கொண்டு நம்மிஷ்டத்திற்கு ஓட்டுச் செய்வார்கள்.

வி : இதுதான் ஜனநாயகம்! சர்வ ஜன ஓட்டுரிமையை அடிப் படையாகக்கொண்ட இந்த ஜனநாயகத்தில், மக்களை வாயில் லாப் பூச்சிகள் மாதிரி கருதி அவர்களை ஏய்க்கவோ, அவர் களை ஒரு சில சுயநலவாதிகள் தங்கள் கைக்கருவிகளாக உப யோகிக்கவோ நிறைய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன இல் லையா?

ரா : அப்படியானால் சர்வாதிகார ஆட்சி நல்லதென்கிறாயா?

வி : இல்லை, இல்லை. விவேகமுள்ள ஜன ஆட்சி வேண்டுமென் கிறேன்.

ரா : அதென்னமோ எனக்குப் புரியவில்லை. (பொறுத்து) ஆமாம்; இப்பொழுது நாம் அரசியல் பேசவில்லையே; எலெக்ஷன் பேசுகிறோம். நீ யாருக்காக வேலை செய்யப் போகிறாய்?

வி : நான் யாருக்காகவும் வேலை செய்யப் போவதில்லை. யாருக்கு யோக்கியதை இருக்கிறதென்று எனக்குத் தோன்றுகிறதோ, அவருக்கு நான் ஓட்டுச் செய்யப் போகிறேன்; எனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லப் போகிறேன்.

ராம : உனக்கென்ன அப்பா! நீ அரிஜன். படிப்பு முடிந்தவுடன் உனக்கு வேலை கிடைத்துவிடும். எனக்கு அப்படியில்லையே. யாருடைய தயவோ, சிபார்சோ தேவையாயிருக்கிறதில்லையா?

வி : அப்படியானால் படிப்பு முடிந்ததும் உத்தியோகத்திற்குத் தான் போகப் போகிறாயா?

ரா : படிப்பதே எதற்காக? உத்தியோகத்திற்குத் தானே?

வி : தற்காலச் சூழ்நிலை அப்படித்தான் இருக்கிறது. ஆனால் நானென்னவோ உத்தியோகத்திற்காகப் படிக்கவில்லை. அறிவை அதிகரித்துக்கொள்ள வேண்டுமென்பதற்காகப் படிக் கிறேன். படித்ததைச் சமுதாய நலனுக்குப் பயன்படுத்த வேண்டு மென்று விரும்புகிறேன்.

ரா : எனக்கென்னவோ அந்த உத்தேசமெல்லாம் இல்லை. எங்கா வது ஒரு கவர்ன்மெண்ட் ஆபீசில் நூறு ரூபாய் உத்தியோகம் கிடைத்தால் போதும். அதனுடன் என் காலத்தைக் கடத்தி விடலாமென்று பார்க்கிறேன். அந்த நோக்கத்துடன்தான் இப் பொழுது கண்ணுசாமிப் பாவலரின் எலெக்ஷன் ஏஜெண்டாக வேலை செய்கிறேன்.

வி : உத்தியோகம் சம்பாதிப்பதற்கும் எலெக்ஷன் ஏஜெண்டாக வேலை செய்வதற்கும் என்ன சம்பந்தம்?

ரா : என்ன அப்பா, புரியாதவன்போல் பேசுகிறாய்? எலெக்ஷனில் கண்ணுசாமிப் பாவலர் ஜெயித்தால், அவர் சிபார்சைக் கொண்டு எந்த கவர்ன்மெண்ட் ஆபீசிலாவது உத்தியோகம் பெறலாமல்லவா?

வி : எலெக்ஷனில் கண்ணுசாமிப் பாவலர் ஜெயிப்பார் என்பது என்ன நிச்சயம்?

ரா : எப்படியாவது ஜெயித்துவிடவேண்டுமென்ற நோக்கம் அவருக்கு இருக்கிறது. அதற்காக எந்த முறையையும் கடை பிடிக்க அவர் தயாராயிருக்கிறார். அதனால் ஜெயிப்பார்.

வி : என்ன அப்பா இது? காந்தியுகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிற நீ, நோக்கம் வேறே. அதை நிறைவேற்றிக் கொள்ள கையாளும் முறை வேறே என்று சொல்லுகிறாயே?

ரா : காந்தியுகம் காந்தியோடு போய்விட்டதப்பா. இப்பொழு தெல்லாம் நோக்கம்தான் முக்கியம்; வழி முக்கியமல்ல.

வி : கடவுளே! கடவுளே!

ரா : கடவுள் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறார் அப்பா!

வி : எப்படியாவது தொலை. உன்னைப் போன்ற ஆசாமிகள் அதிகரிப்பார்களானால், ஜனநாயகம் உருப்பட்டாற்போல் தான்.

(இருவரும் செல்கின்றனர்.)


காலேஜ் படிப்பு

முதற் களம்
இடம் : வீட்டில் கூடம்.

காலம் : மாலை.

(மூலைக்கரை என்னும் கிராமத்தில் வரமருளும் பிள்ளை பெரிய சொத்துக்காரர். சுமார் பத்து வேலி நிலமுண்டு. ஓரே பிள்ளை. உமை யொருபாகன் என்று பெயர். ஸ்கூல் பைனல் படிப்பு முடிந்துவிட்டது. சென்னைக்குச் சென்று ஏதேனும் ஓரு காலேஜில் சேரவேண்டும். அதற்காக பையனைஅழைத்துக்கொண்டு தகப்பனார் சென்னை செல்ல
விருக்கிறார். வீட்டிலே அது சம்பந்தமான ஏற்பாடுகள் நடை பெறுகின்றன. ஏக தடபுடல். தகப்பனார் வரமருளும் பிள்ளை, தாயார் மீனாம்பிகை அம்மாள், மகன் உமையொருபாகன் ஆகியோர் பேசிக்கொண்டிருக்
கின்றனர். முற்றத்தில் வண்டிக்கார இருளாண் டியும், வேலைக்கார சின்னப்பாவும் நின்று கொண்டிருக்கின்றனர்.

வரமருளும் பிள்ளை : (மனைவியைப் பார்த்து) உன் மகனுக்கு பிடிச்ச எல்லா பலகாரங்களும் பண்ணியாச்சா?

மீனாம்பிகை அம்மாள் : என் மகனுக்குப் பிடிச்சதெல்லாம் பண்ணியாச்சு; உங்க மகனுக்குப் பிடிச்சதெல்லாம் சொல்லுங்க; பண்ணிவைக்கிறேன்.

வ : அதுக்கில்லே: இரவோடிரவாய் கண்விழிச்சு இவ்வளவு பஷணங் களையும் சேஞ்சு கொடுக்கறையே, இந்தக் காலத்துப் பிள் ளைங்க, இதுங்களையெல்லாம் தின்னுமா? மெட்ராஸூக்கு போனா ஹோட்டல் இருக்குது; அங்கே போய் இரண்டு ரூபாயை செலவழிச்சாதான் அதுங்க வயிறு ரொம்பும். உன் பொரி உருண்டையையும் முறுக்கையுமா இவன் தின்னப் போறான்? எனக்கென்னமோ தோணலை…………….ஏன் தம்பீ?

உமையொருபாகன் : சும்மா இருங்களேன் அப்பா! அம்மா சேஞ்சு கொடுக்கிறதை சேஞ்சு கொடுக்கட்டுமே; ஏன் வேணாமின்னு சொல்லணும்?

வ : ஏன் வேணாமின்னு சொல்லணும்; சேஞ்சு கொடுக்கிறதை கொடுக்கட்டும்; அங்கே கொண்டுபோய் கடலிலே கொட்டிப் புட்டா போகிறது என்று நினைக்கிறையோ?

மீ : நம்ப பிள்ளை அப்படியெல்லாம் ஓண்ணும் செய்யாது. நீங்களுந் தான் கூட போறீங்களே, கொஞ்சம் கவனிச்சுக்க மாட்டீங்களா?

வ : (நமட்டுச் சிரிப்புடன்) நீ கொடுக்கிற பலகாரத்தையெல்லாம் அவன் ஒழுங்காக தின்கிறானா என்று கவனிச்சுக்கத்தான் நான் போறேனாக்கும்? நல்லா ஏற்பாடு பண்ணி கொடுத்தே எனக்கு உத்தியோகம்?

உ : ஏன் அப்பா, அம்மாவை வம்பு பண்றீங்க?

மீ : தம்பீ! நான் சொல்றத்தைக் கேளு. கண்ட இடத்திலேயும் போய் கண்டதையும் தின்னாதே. இன்னும் பதினைஞ்சு நாளைக் காவது வரும் நான் சேஞ்சு வைச்சிருக்கிற பட்சணமெல்லாம். அப்புறம் இங்கிருந்து யாராவது வந்தாங்களானா அவங்ககிட்ட கொஞ்சம் சேஞ்சு கொடுத்தனுப்பறேன்.

வ : ஆமாம் அப்பனே, மாசத்திற்கு இரண்டுதரம் பட்சண பார்சல் வந்துகொண்டிருக்கும். உனக்குக் கவலையே இல்லை!

மீ : நான் எது சொன்னாலும் பரிகாசமாகத்தான் இருக்கும் இப் பொழுது.

வ : அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. பழைய காலத்துப் பட்சணங் களைப் பண்ணிக் கொடுக்கிறாயே. புது மாதிரியாக ஏதேனும் சேஞ்சு கொடுக்கக்கூடாதா என்றுதான் சொல்கிறேன்.

மீ : பழைசு என்று எதெதை நீங்கள் பரிகாசம் பண்ணுகிறீர்களோ அவைகளெல்லாந்தான் நீடித் திருப்பது : கெடாத சுபாவ முடையது; நல்லதைச் செய் வது. புதிசு என்று சொல்லி எதெதைப் பிரமாதப்படுத்து கிறீர் களோ அவையெல்லாம் சீக்கரத்திலே கெட்டுப்போகக் கூடியவை; அவைகளை உப யோகிக்கிறவர்களையும் கெடுக்கக்கூடியவை.

வ : பழமையையும் புதுமை யையும் பற்றி அருமையான உபந்நியாசம்!

மீ : அப்படித்தான் இருக் கட்டுமே; மேலே நடக்க வேண் டியதற்கு ஏற்பாடு செய்யுங்க.

வ : ஏற்பாடென்ன? அடே இருளாண்டி! வண்டிக்கு மை கிய் எல்லாம் போட்டாச்சா? கூண்டு கீண்டெல்லாம் சரியாயிருக்குதா?

இருளாண்டி : எல்லாம் சரியாயிருக்குது எஜமான்!

வ : வண்டியிலே கொஞ்சம் கனமா வைக்கலை போட்டு மேலே அந்த சின்ன ஜமக்காளத்தைப் போடு. இரவு இங்கேயே படுத்துக்கோ. விடியற்காலை வெள்ளி முளைச்சதும் வண்டியைக் கட்டணும்.

இ : சரி, எஜமான்!

வ : என்ன சின்னப்பா, நீ வண்டியோட ரெயில்வே ஸ்டேஷனுக்கு வரையா?

சின்னப்பா : ஆமாங்க. தலைமுறை தலைமுறையா இந்த வூட் லேயே வேலை சேஞ்சு வந்ததினாலே மனசு கேக்கமாட் டேங்குது. அதனாலே இரண்டொரு வார்த்தை சொல்றேன், கோவிச்சுக்காதெங்கே. சின்ன எஜமானை, இப்போ பட்டணத் துக்கு அனுப்பாகட்டி என்னா குடிமுழுகிப்போவுது? பட்ட ணத்துக்குப் போனா சம்பாரிச்ச சொத்
தெல்லாம் கரைஞ்சல்லா பூடும்? இதுவரைக்கும் படிச்ச படிப்பு போதாதா?

மீ : சரி; இவன் உபதேசத்திற்கு ஆரம்பிச்சுட்டானா?

வ : இரு; அவன் நல்லதுக்குத்தானே சொல்கிறான்.

சி : பெரிய எஜமான், எஜமானியம்மாளை கண்ணாலம் பண்ணி வூட்டுக்கு வரப்ப முதற்கொண்டு எனக்கு நல்லாத் தெரியுமே. ஏன் அம்மா, நானுந்தான் கேக்கறேன், பண்ணையை நிருவாகம் பண்றதுக்கு இந்தக் கோண படிப்பு ஓணுமா? அதுக்குந் தான்,கோண எழுத்து கொஞ்சம் தெரிஞ்சிருக்குதே நம்ப சின்ன எஜமானுக்கு? அது போதாதா? நம்ப பெரிய எஜமான் இங்கி லீசு படிச்சாங்களா? அவங்க ஐயா இங்கிலீசு படிச்சாங்களா? அவங்கள்ளாம் சொத்தோடு சொத்து சேத்தாங்க. அதே அந்த கீழக்கரை கோபாலையர் குடும்பம் போன கதியே பாத்தீங் களா?

மீ : அவங்களுக்கென்ன? இரண்டு பிள்ளைகளும் மெட்ராஸிலே வக்கீலாயிருக்காங்கோ.

சி : வைக்கலுதானுங்க! அவங்க வூட்டு சமாசாரம் எனக்கு நல்லா தெரியும். எங்க சித்தாப்பார் மகன் அங்கேதான் வேலை சேஞ்சிக் கினு இருந்தான். அந்த கோபாலையா இருக்கக் கொள்ள பதினஞ்சு வேலி நிலம் இருந்துச்சு. பெரிய தோப்பு ஒண்ணு இருந்துச்சு. நல்லாத்தான் வாழ்ந்தாங்க; ரெண்டு பொண்ணுக்கு கண்ணாலம் பண்ணாங்க; ரெண்டு புள்ளையை படிக்கவைச் சாங்க. கண்ட பலன் என்னான்னு கேட்டீங்கன்னா, அவ்வளவு சொத்தும் போயி, ரெண்டாயிரம் ரூபா கடன் இருக்குதாம்.

வ : இவன்தான் கணக்கெழுதினவன் மாதிரி சொல்றான் பாரு.

சி : பொய்யில்லை. எஜமான்! நீங்க வேணுமின்னா விசாரிச்சு பாருங்க.

மீ : ஆமா, விசாரிச்சாங்க! இப்போ நீ என்னா பண்ணனுமின்றே?

சி : சின்ன எஜமான் படிச்ச படிப்பு போதும். இனி மேல் ஊரோ டவே இருந்து, நிலபுலன்களை பாத்துகிட்டு இருக்கட்டுமின்னு சொல்றேன்.

வ : அம்மா என்ன நினைக்கிறாங்கன்னா, நல்ல மருமகள் வரணு மாம். அதுக்காக மகன் நல்லா படிக்கணுமாம். நல்லா படிச் சிருந்தாதானே நாலுபேரு பொண்ணை கொடுக்கிறேன்னு வருவாங்க.

சி : ஊரிலே காணி பூமி இருந்து, நல்ல குணமுமிருந்தா, பொண்ணுங்க வராதயா போவுது?

வ : சின்னப்பா! நீ பத்தாம் பசலி ஆள்மாதிரி பேசறே. இந்தக் காலத்திலே சொத்தையும் குணத்தையும் யார் கவனிக்கிறாங்க? படிப்புக்குத்தான், அதுவும் பீ.ஏ., எம்.ஏ. படிப்புக்குத்தான் பெருமை. பீ.ஏ. பாஸ் பண்ணிவிட்டு பத்து ரூபா உத்தியோகத் திலே இருந்தா கூட அவனுக்குத்தான் பொண்ணை கொடுக்கி றேன்னு வராங்களே தவிர, சொத்து சுதந்திரத்தையும் நல்ல நடவடிக்கையையும் யார் லட்சியம் பண்றாங்க?

சி : அப்படியானா, நல்ல பொண்ணை கட்டணுமின்னு, சின்ன எஜமானைப் படிக்கவைக்கறிங்கோன்னு சொல்லுங்க.

உ : சரி அப்பா, அவனோடு என்ன தர்க்கம்? வேலைக்காரனை சரிசமமா வைச்சுப் பேசவே கூடாது.

வ : அப்படிச் சொல்லிவிடாதே தம்பீ! நான் சிறுபிள்ளையாயிருந்த காலத்திலிருந்து அவனுக்கு என்னை நல்லாத் தெரியும். அந்த ஒரு சுவாதீனத்திலே சொல்கிறான். நம்ம குடும்பத்திலே அக்கரை
யிருப்பதனாலேதான் சொல்கிறான்?

உ : இருந்தாலும் வேலைக்காரனை சரிசமமாக வைச்சு பேசக் கூடாது.

சி : காலத்தின் போக்கை பாத்தீங்களா எஜமான்? இந்த வூட்லே ஆண்டை அடிமை வித்தியாசமில்லாமே, தாயும் பிள்ளையும் போல இதுவரை நடந்துவந்திச்சு. இப்போ இந்த குயந்தே வந்து, ரெண்டு கோண எழுத்தே தெரிஞ்சுக்கிட்டு, எஜமான் வேறே, ஆள்காரன் வேறென்னு நியாயம் சொல்லுது.

வ : நீ அதற்காக வருத்தப்படாதே சின்னப்பா. பிள்ளை மெட்ராஸி லேபோய் படிக்கணுமின்னு தாயார் இஷ்டப்படறாங்க. மகனும் போகணுமின்னு பிடிவாதம் பண்றான். எல்லா ஏற்பாடுகளும் சேஞ்சாச்சு. இனி நிறுத்தமுடியாது. அவங்க இஷ்டப்படி போய் வரட்டும்.

சி : நல்லா போய் வரட்டும் எஜமான்! மனசிலே பட்டதை கள்ளங் கவடில்லாமே சொன்னேன். அவ்வளவுதான். பொன்னியம்மன் கிருவையாலே சின்ன எஜமானுக்கு ஒரு குறைவும் வராது.

வ : சரி, எல்லோரும் போய் படுத்துக்குங்கோ. விடியற்காலம் எழுந் திருக்கணுமில்லே.

இ : ஆமாம் எஜமான்! எல்லாரும் நிம்மதியாக தூங்குங்க. நான் எழுப்பறேன். காலா காலத்திலே ரெயிலிலே கொண்டு சேத்துட் றேன்.

(எல்லாரும் கலைகிறார்கள்.)

இரண்டாவது களம்
இடம் : சென்னையில் ராவ் பகதூர் கார்மேகம் பிள்ளை வீடு.

காலம் : காலை.

(ராவ் பகதூர் பிள்ளை, தமது நண்பர் சிலருடன், வீட்டின் முன் ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். அப்பொழுது வரமருளும் பிள்ளை, தமது மகன் உமையொருபாகனுடன் பிரவேசிக்கிறார்.)

கார்மேகம் பிள்ளை : வாங்க, வாங்க! பிள்ளைவாள் ஊரிலே யிருந்து எப்பொழுது வந்தாப்போலே? உட்காருங்கோ, தம்பி யாரு? உட்காரு தம்பீ!

(தந்தையும் மகனும் அங்கே போடப்பட்டிருக்கும் நாற்காலிகளில் அமர்ந்துகொள்கிறார்கள்.)

வரமருளும் பிள்ளை : போனவாரம் ஊரிலேயிருந்து வந்தேன்.

கா : ஓ ! ஒரு வாரமாச்சா? எங்கே தங்கியிருக்கிறீங்க?

வ : ‘அன்னக்களஞ்சியம் லாட்ஜி’ லே தங்கியிருக்கிறேன்.

கா : ஊரிலே எல்லாரும் சௌக்கியந்தானே? என்ன விசேஷம் இப்படி மெட்ராஸ் பக்கம் கருணை வைத்தது? மெட்ராஸ் என்றால்தான் உங்களுக்கு அவ்வளவு பிடிக்காதே.

வ : நம்ம மகனை காலேஜிலே சேர்க்கணும். அதுக்குத்தான் வந்திருக்கேன்.

கா : அப்படியா, ரொம்ப சந்தோஷம். எந்த காலேஜிலே சேர்க்கணு மின்னு பிரியப்பட்றீங்கோ?

வ : எந்த காலேஜிலே இடமிருக்கிறதோ அந்த காலேஜிலே சேர்க்க பிரியந்தான்.

கா : அப்படியானா எந்த காலேஜிலேயாவது ‘ட்ரை’ (கூசல-பிரயத் தனம்) பண்ணிப் பார்த்தீங்களா?

உ : எல்லா காலேஜ்களிலும் ‘ட்ரை’ பண்ணி பார்த்தோம். எங்கேயும் ‘சீட்’ (ளுநயவ-இடம்) இல்லையென்று சொல்லிவிட் டார்கள்.

வ : (சிறிது சலிப்புடன்) மோட்ச லோகத்திலே இடம் கிடைச்சாலும் கிடைக்கும் போலே இருக்குது. இந்தக் காலேஜ்களிலே இடம் அகப்படுகிறது மிகவும் சிரமமாய் இருக்கிறது.

(கூட இருக்கிற நண்பர்களெல்லோரும் சிரிக்கிறார்கள்.)

கா : பிள்ளைவாள் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டாற் போலிருக்குது இந்த ஒரு வாரமா?

வ : ஆமாங்க, ஒவ்வொரு காலேஜிலேயும் எவ்வளவு நேரம் கால் கடுக்க நிற்கிறது? பலன் ஏதாவது உண்டா? கடைசியில் கையைத்தான் விரிக்கிறார்கள் எல்லாரும். அவர்கள் கேட்கிற கேள்விகளோ, செஷன்ஸ் கோர்ட்டிலேகூட அப்படி ‘க்ராஸ்’ (ஊசடிளள-குறுக்கு விசாரணை) பண்ணமாட்டார்கள்.

கா : ஆமாம்; இப்பொழுது காலேஜிலே ‘சீட்’ அகப்படறது கொஞ்சம் சிரமம்தான்.

கா-பி-யின் ஒரு நண்பர் : காலேஜில் என்ன? செகண்ட் ஸ்டாண்டர்ட்’ ‘தர்ட் ஸ்டாண்டர்ட்’ (இரண்டாவது, மூன்றா வது வகுப்பு) களிலே கூட ‘சீட்’ இல்லேன்னு சொல்றாங்க.

மற்றொரு நண்பர் : அதனாலேதான் நம்ப பேரப்பிள்ளைங்களை வீட்டிலேயே படிக்கவைச்சு, நேரே ‘பஸ்ட் பாரத்திலே’ கொண்டு சேர்த்துவிடலாமின்னு தீர்மானம் பண்ணியிருக்கேன்.

கா : அதுதான் நல்ல ஏற்பாடு.

வ : நாசமாய்ப்போச்சு இந்தப் படிப்புக்குப்படுகிற பிரயத்தனம். இதற்குப்படுகிற சிரமத்திற்குப் பதிலாக இரண்டு ஏக்கரா நிலம் பயிரிட்டாலும் ஒரு வருஷச் சாப்பாட்டுக்கு நெல் கிடைக்கும்.

ஒரு நண்பர் : படித்தால் உத்தியோகம் கிடைக்குமே?

வ : ஆமாம், உத்தியோகம் மட்டுமென்ன, லேசாகக் கிடைக் கிறதாக்கும்? புத்திசாலித்தனத்துக்கும் திறமைக்குமா இப் பொழுது உத்தியோகம்? ஜாதிக்குத்தானே இப்பொழுது உத்தி யோகம்?

கா : ஏது, பிள்ளைவாள் ‘பாலிடிக்ஸ்’ (ஞடிடவைiஉள- அரசியல்) பேச ஆரம்பிச்சுட்டீங்க?

வ : நியாயத்தைத்தான் பேசறேன்.

கா : காலம் நியாயமாயில்லையே. நியாயமா போனீங்களே, காலேஜிலே ‘அட்மிஷன்’ (ஹனஅளைளiடிn - சேர்ந்து கொள்ள அனுமதி) கிடைச்சுதா?

வ : அதுக்குத்தான் உங்ககிட்டே வந்தேன். நீண்ட கால சிநேகித மல்லவா?

கா : அப்படி வாங்க வழிக்கு. மெட்றாஸூக்கு வந்து ஒரு வாரமா இந்த சிநேகிதர் ஞாபகம் வரவில்லை பார்த்தீங்களா?

வ : உங்களுக்கு அனாவசியமாகத் தொந்தரவு கொடுக்கக் கூடாதுன்னுதான் வரவில்லை.

கா : சரி தம்பி! என்ன மார்க்குகள் வாங்கியிருக்கே, சொல்லு?

உமையொருபாகன் : இங்கிலீஷில் 53; ‘ஹிஸ்டரி’ (ழளைவடிசல-சரித்திரம்) யில் 49.

கா : போதும்; போதும். என்ன பிள்ளைவாள், இவ்வளவு குறைச்சலா மார்க் வாங்கியிருந்தா எப்படி காலேஜிலே ‘அட்மி ஷன்’ கிடைக்கும்?

வ : சிபார்சு இருந்தால் நடக்குமின்னு சொல்றாங்களே.

கா : நியாயமா நடக்கணுமின்னு சொல்றீங்க, சிபார்சுக்கு வறீங்க! (பொறுத்து) இருக்கட்டும். போன வாரமே வந்திருந்தா நிச்சி யமா எந்த காலேஜிலாவது ‘அட்மிட்’ பண்ணியிருப்பேன்.

ஒரு நண்பர் : பிள்ளையவர்கள் வாய் திறந்து சொன்னால் போதுமே, எந்தக் காலேஜிலும் சேர்த்துக்கொண்டிருந்திருப் பார்களே………………..ஹிஹிஹி……………

கா : யாராரோ சுபார்சுக்கு வருகிறார்கள். அவர்களெல்லாருக்கும் செய்து வைக்கிறேனே; நீங்கள் கொஞ்சம் முந்திக்கொண் டிருக்கக்கூடாதா?

மற்றொரு நண்பர் : சிநேகிதர்களுக்கு உபகாரம் செய்வதை ஒரு விரதமாகவல்லவா கொண்டிருக்கிறார் நமது பிள்ளையவர்கள்.

கா : மூலைக்கரைப் பிள்ளைவாள்! நாளை நின்று வாருங்கள். நான் விசாரித்து வைக்கிறேன். எந்த ‘க்ரூப்’ (ழுசடிரயீ-பாடத் தொகுதி) தம்பீ!

வ : எந்த ‘க்ரூப்’ பிலே இடம் அகப்பட்டாலும் பரவாயில்லை.

கா : சரி, நாளை மறுதினம் வாருங்கள் பிள்ளைவாள்! போயிட்டு வரீங்களா? நமஸ்காரம்.

(வரமருளும் பிள்ளையும் உமையொருபாகனும் செல்கிறார்கள்.)

கா : (நண்பர்களிடம்) பொழுதுபோனா, பொழுது விடிஞ்சா,இந்தத் தொல்லைதானுங்க நமக்கு. அந்தக் காலேஜிலே அட்மிஷன் வேணும், இந்த உத்தியோகத்துக்கு சிபார்சு வேணும். அந்தக் கூட்டத்திற்கு தலைமை வகிக்கணும். இந்தப் பத்திரிகைக்குக் கட்டுரை எழுதணும், இப்படி தினம் மணிக்கு பத்து பேரா வந்து தொந்தரவு பண்றாங்க. என்ன பண்றது?

ஒரு-ந : “எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றுமறியேன் பராபரமே” என்று தாயுமானவர் கூறி யதைப்போல்……………..

கா : ஆமாம், அவருக்கென்ன சும்மா சொல்லிவிட்டுப் போய் விட்டார். நாம் இன்புற்றிருந்தால்தானே மற்றவர்களை இன்புற்றிருக்கச் செய்யமுடியும்? (பொறுத்து) நேரமாகிறது. நாளைக்கு சந்திப்போம்.

(எல்லோரும் கலைந்து போகிறார்கள்.)

மூன்றாவது களம்
இடம் : மூலைக்கரை கிராமத்தில் வரமருளும் பிள்ளை வீடு.

காலம் : முற்பகல்.

(வரமருளும் பிள்ளையும் அவர் மனைவி மீனாம்பிகை அம்மாளும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.)

வ : (உமையொருபாகனிடமிருந்து வந்த கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு) இரண்டாந்தேதி இருநூறு ரூபா அனுப் பிச்சேன்; தேதி இன்னிக்கு பதினெட்டு; இன்னும் எனக்கு இருநூறு ரூபா அனுப்பு என்று எழுதுகிறானே, என்னஅர்த்தம்?

மீ : என்ன செலவோ!

வ : செலவு………….. மண்ணாங்கட்டி……………. கிராமத்திலே ரொக்கமா எப்பவும் கையிலே இருக்குமா? காலேஜிலே சேர்த்து ஆறு மாசமாகல்லே……………….. இரண்டாயிரம் கடன் வாங்கியாச்சு.

மீ : நாளைக்கே இதற்கு வட்டிபோட்டு சம்பாதிச்சு கொடுத் துடுவான்.

வ : கொடுப்பான், சம்பா விரைச்சு கொடுப்பான்! பார்த்துண்டே இரு.

மீ : என்னை என்ன பண்ணச் சொல்றீங்க இப்ப?

வ : இவனை காலேஜிலே சேர்க்கப்பட்டபாடு பெரும் பாடாப் போச்சு. இவனுக்காக போகாதவங்க கிட்ட எல்லாம் போயி பல்லை இளிச்சுண்டு நிக்கவேண்டியிருந்தது.

மீ : ஏன் அப்படி?

வ : இல்லாது போனா காலேஜிலே இடம் கிடைக்காதுபோலே இருந்தது. அந்த மூங்கை பிள்ளை மகன் கார்மேகம் சின்ன வயசிலே நம்ப வீட்டுக்கு வந்து ஒரு வேளை சாப்பாட்டுக்கு காத்துகிணு நிப்பான். இப்போ என்னாடான்னா, ராவ் பகதூர் கார்மேகம் பிள்ளையாம், மெட்ராஸிலே ஒரு பெரிய மனுஷனாம் அவன். அவனையெல்லாம் சிபார்சு பிடிக்கவேண் டியிருந்தது.

மீ : நல்லா படிச்சு முன்னுக்கு வந்தானாக்கும்?

வ : படிச்சான்,அவன் படிச்சதும் நான் படிச்சதும் ஒண்ணுதான். ஊரை அடிச்சு உலையிலே போட்டு எப்படியோ பெரிய மனுசனாப்பூட்டான்.

மீ : அவன் எப்படியானா போறான். இந்த கடுதாசிக்குக் பதில் எழுதி போடுங்க.

வ : பதில் என்ன, இல்லைன்னு எழுதிப் போடவேண்டியதுதான்.

மீ : கேட்டதுக்கு பாதியாவது அனுப்பிச்சு வையுங்க.

வ : என்னமோ அவன் பீ.ஏ.படிச்சு முடிக்கிறதுக்குள்ளே நம்ம நிலத்தையெல்லாம் கடன்காரன்தான் எடுத்துக்கொண்டு போகப்
போகிறான்.

மீ : ஏன் அப்படிச் சொல்லணும்? நல்ல வாக்குதான் வாயிலே வரட்டுமே.

வ : மனசு நல்லா இருந்துதானா வாயிலே நல்ல வார்த்தை வரும்.

மீ : மனசு என்ன கெட்டு போச்சு இப்போ? ஒரு பிள்ளை படிக்கி றதுக்கு இப்படி கஷ்டப்பட்டா ஆகுமா?

வ : படிப்பைப் பார் படிப்பு! வாழ்க்கையிலே லவலேசமும் பிரயோஜனப்படாத படிப்பு என்ன படிப்பு! காலேஜிலே படிச்சவங்களுக்கு உலகத்தைப் படிக்க தெரியமாட்டேங்குது. உலகத்தைவிட்டு தாங்கள் வேறேன்னு நினைக்கிறாங்கோ. இதனாலே அவங்களுக்கும் பிரயோஜனமில்லை; உலகத்துக்கும் பிரயோஜனமில்லை.

(இதைக் கேட்டு மீனாம்பிகை அம்மாள் முகத்தைச் சுளித்துக் கொண்டு உள்ளே போய்விடுகிறாள். வரமருளும் பிள்ளை தெருத் திண்ணைக்குப் போய் சார்மணையில் சாய்ந்து கொள்கிறார்.).