அறிவுச்சுடர்
கா. அப்பாத்துரையார் 

 

மூலநூற்குறிப்பு

  நுற்பெயர் : அறிவுச்சுடர் (அப்பாத்துரையம் - 41)

  ஆசிரியர் : கா.அப்பாதுரையார்

  தொகுப்பாசிரியர் : முனைவர் கல்பனா சேக்கிழார்

  பதிப்பாளர் : கோ. இளவழகன்

  முதல்பதிப்பு : 2017

  பக்கம் : 22+290 = 312

  விலை : 390/-

  பதிப்பு : தமிழ்மண் பதிப்பகம், எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை 600 017, தொ.பே.: 24339030, செல்: 9444410654

  மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in

  தாள் : 16.0 கி. மேப்லித்தோ, அளவு : 1/8 தெம்மி

  எழுத்து : 11.5 புள்ளி, பக்கம் : 312

  கட்டமைப்பு : இயல்பு படிகள் : 500

  நூலாக்கம் : கோ. சித்திரா

  அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)

  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.

நுழைவுரை

தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர்.

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம்.

தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும்.

தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம்.

தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.

அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன.

இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும்.

தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள்

கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை

யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர்

திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன்,

திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர்.

இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய ‘கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும்’சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி.

நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

“ஆக்கத்தை எனக்கிந் நாட்டார்
அளித்திட்ட அறிவை யெல்லாம்
தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே
செலவிடக் கடமைப் பட்டேன்.”

-   பாவேந்தர்

கோ. இளவழகன்

தொகுப்புரை

மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்!
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின.

“அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார்.

சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன.

-   தனித்தமிழ் இயக்கத் தோற்றம்

-   நீதிக் கட்சி தொடக்கம்

-   நாட்டு விடுதலை உணர்ச்சி

-   தமிழின உரிமை எழுச்சி

-   பகுத்தறிவு விழிப்புணர்ச்சி

-   இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர்

-   புதிய கல்வி முறைப் பயிற்சி

-   புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம்

இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன.

“தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது!

அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்!

பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக,

-   உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல்.

-   தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல்.

-   தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல்.

-   தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல்.

-   திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல்.

-   நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல்.

இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது.

பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது.

உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன.

1.  தமிழ் - தமிழர் - தமிழ்நாடு

2.  வரலாறு

3.  ஆய்வுகள்

4.  மொழிபெயர்ப்பு

5.  இளையோர் கதைகள்

6.  பொது நிலை

பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும்.

இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின்

உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன.

கல்பனா சேக்கிழார்

நூலாசிரியர் விவரம்

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்
  இயற்பெயர் : நல்ல சிவம்

  பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989

  பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி

  பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி)

  உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர்

  மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு

  வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா

  தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி

  பள்ளிக் கல்வி : நாகர்கோவில்

  கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம், இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி ‘விசாரத்’, எல்.டி.

  கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி)

  நூல்கள் : 120 (ஆங்கிலம், 5)

  இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை.

  பணி :

-   1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர்.

-   1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர்.

-   பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு.

-   1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி

-   1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர்.

-   1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர்

அறிஞர் தொடர்பு:

-   தொடக்கத்தில் காந்திய சிந்தனை.

-   1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு

விருதுகள்:

-   மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது,

-   1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் ’சான்றோர் பட்டம்’, ‘தமிழன்பர்’ பட்டம்.

-   1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ’கலைமாமணி’.

-   1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய ’திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம்.

-   மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய ’பேரவைச் செம்மல்’ விருது.

-   1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.

-   1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார்.

-   இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது.

பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்:

-   அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005.

-   பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007.

பதிப்பாளர் விவரம்

கோ. இளவழகன்
  பிறந்த நாள் : 3.7.1948

  பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625,தஞ்சாவூர் மாவட்டம்.

  கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு

  இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல்

ஆற்றியுள்ள பொதுப்பணிகள்

1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர்.

பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் ’ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர்.

உரத்தநாட்டில் ’தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர்.

பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ’உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர்.

தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும்,

19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர்.

பொதுநிலை

தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர்.

தொகுப்பாசிரியர் விவரம்

முனைவர் கல்பனா சேக்கிழார்
  பிறந்த நாள் : 5.6.1972

  பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம்.

  கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர்

  இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

ஆற்றியுள்ள கல்விப்பணிகள்

-   அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி.

-   திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு.

-   புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.

-   பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.

-   பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார்.

-   50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

-   மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.

-   இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார்.

-   செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார்.

நூலாக்கத்திற்கு உதவியோர்

தொகுப்பாசிரியர்:

-   முனைவர் கல்பனா சேக்கிழார்

கணினி செய்தோர்:

-   திருமதி கோ. சித்திரா

-   திரு ஆனந்தன்

-   திருமதி செல்வி

-   திருமதி வ. மலர்

-   திருமதி சு. கீதா

-   திருமிகு ஜா. செயசீலி

நூல் வடிவமைப்பு:

-   திருமதி கோ. சித்திரா

மேலட்டை வடிவமைப்பு:

-   செல்வன் பா. அரி (ஹரிஷ்)

திருத்தத்திற்கு உதவியோர்:

-   பெரும்புலவர் பனசை அருணா,

-   திரு. க. கருப்பையா,

-   புலவர் மு. இராசவேலு

-   திரு. நாக. சொக்கலிங்கம்

-   செல்வி பு. கலைச்செல்வி

-   முனைவர் அரு. அபிராமி

-   முனைவர் அ. கோகிலா

-   முனைவர் மா. வசந்தகுமாரி

-   முனைவர் ஜா. கிரிசா

-   திருமதி சுபா இராணி

-   திரு. இளங்கோவன்

நூலாக்கத்திற்கு உதவியோர்:

-   திரு இரா. பரமேசுவரன்,

-   திரு தனசேகரன்,

-   திரு கு. மருது

-   திரு வி. மதிமாறன்

அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு:

-   வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14.

அறிவுச் சுடர்

முதற் பதிப்பு - 1951

இந்நூல் 2004இல் தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது.

உரை முத்துக்கள்

முத்துச் சுருக்கம் என்றும் முசிவு தருவதில்லை; அது என்றும் எவரும் விரும்பும் நல்விருந்தாளியாகவே இருக்கிறது.

காட்டியர்

மணிச்சுருக்கம் என்பது என்ன ? குறளுருவான ஒரு உடல் வடிவம்; ஆனால் அறிவுணர்வாகிய உயிர் உள்ள உடல்.

எஸ். டி. காலரிட்ஜ்

கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள் .

திருவள்ளுவமாலை

உரைத்தாங்கு உரைத்த உரை, எம்மொழியிலும் நல்லுரையே.

ஜான் டிரைடன்

மெய்யுணர்வுக்கும் உரைத்திறத்துக்கும் வேறுபாடு உண்டு; மெய்யுணர்வு விழுமிய குறிக்கோளை நாடுவது; உரைத்திறம் எங்கோ செல்வதுபோல் சென்று சட்டென அதை நோக்கித் திரும்புவது.

ஜான் டிரைடன்

நல்ல நூல்நிலைய மொன்றின் ஒரு பாதியைப் புரட்டித் திரட்டினால்தான் ஒரு நல்ல ஏடு எழுத முடியும்.

அறிஞர் ஜான்ஸன்

குழந்தைகள்

குழந்தையும் தெய்வமும் கொண்டாடு மிடத்திலே.

தமிழ்ப் பழமொழி

குழலினிது யாழ்இனிது என்ப தம்மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

(குறள் 66)

குழந்தைகளைத் திருத்த மிக நல்ல வழி, அவர்களைப் பாராட்டுவதுதான்.

ஆர். பி. ஷெரிடன்

சிறு குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்; தடுக்காதீர்கள். இறைவன் எழிலாட்சி அவர்கள் வசமே உள்ளது.

விவிலிய நூல் - மறைத்திரு. மார்க்.

நாளின் இயல்பை விடியற்காலம் காட்டுவதுபோல் மனித வாழ்வின் இயல்பைக் குழந்தைப் பருவம் காட்டுகிறது.

(துறக்கமீட்பு) மில்ட்டன்

குழந்தையே (குழந்தை வாழ்வே) மனிதனின் (மனித வாழ்வின்) தந்தை. குழந்தைகளை நன்கு பயிற்றச் சிறந்த வழி அவர்களை மகிழ்வுடையவராக்குவதே.

ஆஸ்கார் ஒயில்டு

படைத்தளிக்கின்றனர், பல்பொருள் ஹாலந்துச் சிறுவர்; உடைத்தழிக்கின்றனர், அவற்றையே ஆங்கிலச் சிறுவர்!

குழந்தைப் பாடல்

அடங்காக் குட்டி, மடங்காக் குதிரை.

(தெமிஸ்டாக்கிளிஸ்) புளூட்டார்க்

காதல்

நட்பு அடிக்கடி காதலாக மாறலாம், மாறுவதுண்டு; ஆனால் காதல் மீட்டும் நட்பாக ஆவதில்லை.

பைரன்

வாழ்க்கையின் தொடக்கமும் இடையும் இறுதியும் எல்லாம் காதலின் செயல்களே.

லாஃவந்தேன்

‘தளராத என்காதல், குளோரிஸ், இனி உன்மீது
வளராது, என்காத லாணைகள் மீதாணை!’ என்றான்;
‘தளராத காதல் தளர்ந்த தென்ன மாற்ற’ மென்றாள்;
‘தளரவில்லை அதுஇன்று முழுநிறைவு பெற்ற’ தென்றான் .

முழுநிறை மணவாழ்வு என்பது வாழ்க்கை நடுவேயுள்ள ஒரு வீட்டு விளக்கு; வாழ்க்கை அதனைச் சூழ்ந்த ஒரு வான விளிம்பகம்.

இளவரசி அந்தாயின் பிபேஸ்கொ

மணவாழ்வு என்பது ஒரு வகையில் வாழ்க்கையைப் போன்றதே - அது ஒரு போர்க்களம், மலர்ப் படுக்கையன்று.

ஆர். எல். ஸ்டீவென்ஸன்

மனிதன் அவாக்களின் முடிந்த முடிவு இல்வாழ்வின் இன்பம் பெறுதலே.

திருமணம் என்பது ஓர் உணர்ச்சிக் காப்புறுதி. மணமறுப்பு அதன் தளர்ச்சிப்பாடு.

ரஸ்ஸல் கிரீன்

மணவினையுட் புகாதவர் புக விரும்புகின்றனர்; புகுந்தவர் வெளியேற விரும்புகின்றனர். அப்படியானால், திருமணம் கேள்வி எழுப்பி ஆராய்வதற்குரிய செய்தி அல்லவா?

எமர்சன்

“ஒன்று என் வீட்டில் நான் ஆட்சித் தலைவனாயிருப்பேன்; இல்லாவிட்டால் அதன் காரணம் அறிவேன்”, என்கிறான் ஆடவன், மணவினைக்கு முன்பு! மணவினைக்குப் பின்பு, அவன் அக் காரணத்தைத்தான் அறிகிறான்.

ஒரு பெரியார்

மணவினைக்கு நீ ஒத்துக் கொள்கிறாயா என்றபோது ஆடவன், “ஆம்; நான் அதனை ஒத்துக்கொண்டாய் விட்டது. ஆனால் அது என்னை ஒத்துக்கொள்ளவில்லை” என்றான்.

கிளாரென்ஸ் வான்செஸ்டர்

ஆண்டவன் கைத்திறத்தால் படைக்கப் பெற்ற பொருள்களில் மிகமிக உயர்ந்த ஒன்றை நீ கோருகிறாய்- அதுவே ஒரு பெண்ணின் நெஞ்சம், ஒரு பெண்ணின் வாழ்வு ஆகிய இரண்டும் இணைந்துள்ள ஒரு பெண்ணின் காதல்!

மேரி. டி. லாத்தபீ

உன் காதல் இவ்வளவில் ஓங்குங்கொல், முன்காதல்.

கொள்ளாள புகழ்மாது எனின்

லவ்லஸ்

ஒருவனுக்கு நேரக்கூடும் எல்லா இன்னல்களையும் ஒருவன் காதல் மூலம் பெற்றவனாயிருந்தால்கூட, என்றும் காதலித்திராத ஒருவனைவிட அவன் ஆயிரமடங்கு இன்பமுடையவனே யாவன்.

ரிச்சர்டு மங்க்டன் மில்னிஸ்

அவளுடன் நான் எத்தனை இறப்புக்கள் இறக்கவும் ஆயத்த மாயிருக்கிறேன். அவளில்லாமல் வாழ ஒருப்படேன். அவளிடம் நான் கொண்டுள்ள பாசத்தின் தன்மை இது.

மில்ட்டன்

என் நெஞ்சிற்கினிய அமுதே, உன்னுடன் நான் கழித்த காலக் கூறுகளையெல்லாம் ஒரு முத்தாரமாகக் கோத்து, அம் முத்துக் களையே கையில் வைத்துக் கருத்திலும் உருட்டி வருகிறேன்; அதுவே என்னுடைய வழிபாட்டு மணிமாலையாயிருக்கிறது.

ராபர்ட் காமீரான் ரோஜரிஸ்

காதலும் காதன்மை கூரும் அதுக(ண்)ணீர்
கோதாட்டிக் கொள்ளப் பெறின்.

ஸ்காட் (ஏரிக்கரைச் சீமாட்டி)

நாடிப் பெறுங் காதல் நன்று; அதனிலும் நனிநன்று

நாடாது பெற்றிடும் காதல்.

ஷேக்ஸ்பியர்

ஆ, என்காதல் ஓர் செக்கச் சிவந்த செவ்வல்லி
ஆர்வமுறச் சித்திரையிற் பூத்திடும் அதன் பொலிவு
ஆ, என்காதல் ஒரு செவிக்கினிய யாழின் பண்
அரிய புதிய செல்வழிகள் ஆக்கிப் பொழியும் ஆங்கதுவே.

கவிஞர் பர்ன்ஸ்

ஒருவரை ஒருவர் கவர்ந்தீர்ப்பதிலும் ஒருவருடன் ஒருவரை ஆரப்பிணைப்பதிலும் முறுக்குற்று வரிந்து சுற்றும் நாண்போன்ற காதலைப்போல, எந்த வடமும் எந்த ஆழ்வடமும் (ஊயடெந) அவ்வளவு வலியதாகாது.

வர்ட்டன்

கருத்தெலாம், உணர்வெலாம், களிப்பெலாம் மெய்யில்
உருத்தெழும் ஆற்ற லவையெலாம் காதல்
குருத்தெழும் உணர்வில் அடங்கி அதன்அழல்
திருத்துவ தன்றித்தம் செயலெதும் இலவே.

காலரிட்ஜ்

என் காதலுக்குரிய மாதின் நல்லாதரவும் உதவியும் இன்றி, நான் மன்னனென்ற முறையில் என் பொறுப்புக்களை வகிக்கவும், என் கடமைகளை நிறைவேற்றவும் எள்ளளவும் முடியாதவனாயிருக்கிறேன்.

வின்ட்சர் கோமகன்

ஆடவன் முதலில் காதலையே காதலித்து, நாளடைவில் பெண்ணைக் காதலிக்கிறான். ஆனால் பெண்டிரோ முதலில் ஆடவனைக் காதலித்து, இறுதியில் காதலைக் காதலிக்கிறாள்.

ரெமி-டி-கூர்மாண்ட்

ஒரு ஆடவனுடன் நேசமாயிருக்க வேண்டுமானால், அவனை நன்கு உணரவேண்டும்; ஒரு சிறிது அன்பு செலுத்தவும் வேண்டும்; ஆனால் ஒரு பெண்ணுடன் நேசமாயிருக்க வேண்டுமானால், அவளை நிரம்ப நேசிக்க வேண்டும்; ஒரு சிறிதும் உணர முயலவே கூடாது!

ஹெலென் ரோலண்டு

மனிதன் காதலிப்பது சிறிதளவு, ஆனால் அடிக்கடி;
பெண்டிர் காதலிப்பது பெரிதளவு, ஆனால் அருகலாக.

பஸ்டா

நம் முதற்காதலும் கடைசிக் காதலும் எல்லாம் தற்காதல்தான்!

மயாலீ

காதல் என்பது ஃபிரான்ஸில் ஒரு களி நாடகம்; இங்கிலாந்தில் ஒரு துயர் நாடகம்; இத்தாலியில் ஒரு இசை நாடகம்; ஜெர்மனியில் ஒரு சோக நாடகம்.

மார்கரட் பிளலிங்டன்

சுவடிகள்

நூல்கள் வாசிப்பதில் எனக்குள்ள அடக்க முடியாத ஆவலை, இந்தியாவின் எழிலார்ந்த செல்வமுற்றும் கொடுத்தாலும், நான் கைவிட ஒருப்படேன்.

எட்வர்டு கிப்பன்

ஒரு பூண்டின் வாழ்வுக்கால முழு வளர்ச்சியின் பயனை ஒரு சிறுபுட்டி நன்மருந்து நமக்கு வேண்டும்போது தரக் காத்திருப்பது போல, ஒரு சிறந்த அறிஞன் முழு வாழ்வின் பயனை ஒரு நூல் நமக்கு வேண்டும்போது தரக் காத்துக் கொண்டிருக்கிறது.

மில்ட்டன்

சட்டைப் பையிலிட்டுக்கொண்டே செல்லக் கூடிய ஒரு சிறிய பூந்தோட்டம்- அதுதான் ஏட்டுச் சுவடி

சீனப் பழமொழி

சுவை பார்க்கத்தக்க ஏடுகளும் உண்டு; விழுங்கத்தக்க ஏடுகளும் உண்டு; மென்று சுவைத்துச் செரிமானம் செய்ய வேண்டிய ஏடுகளும் உண்டு.

பிரான்சிஸ் பேக்கன்

சட்டங்கள் அழியும்; சுவடிகள் அழியா.

புலவர் லிட்டன்

அறிவாளிகளின் உரைகள் மட்டுமே பின்னோர்களால் வீணாகச் சிதைக்கப்பட முடியாத செல்வம்.

லாண்டார்

தலைமகனொருவரின் உயிர்க்குருதி போன்றது ஒரு நல்லேடு; அது நறுமணமிட்டுப் பேணப்பட்டு வாழ்க்கை கடந்த பெரு வாழ்வை எதிர்நோக்கிப் பதனம் செய்து வைக்கப்பட்டதாகும்.

(அரியொபஜிட்டிக்கா) மில்ட்டன்

கல்வி

இம்மை பயக்குமால்; ஈயக் குறைவின்றால்;
தம்மை விளக்குமால்; தாமுளராக் கேடுஇன்றால்;
எம்மை உலகத்தும் யாம்காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.

(நாலடியார்)- சமண முனிவர்

கல்வி கற்றவரை எளிதில் நல்வழியில் திருப்பலாம்; ஆனால் ஏமாற்ற முடியாது. எளிதில் ஆளலாம்; ஆனால் அடிமைப்படுத்த முடியாது.

புரோ பெருமகனார்

எல்லாம் அறியும் அறிவுதனை விட்டு
எல்லாம் அறிந்தும் இலாபமங் கொன்றில்லை

திருமூலர் திருமந்திரம்

நான் கற்றுக்கொடுக்க எண்ணுவது அறிவையன்று; அறிவை அறியும் அறிவையே. என் அறிவு வளர வளர, இக்கோட்பாடும் வளர்ந்து வருகிறது.

டாக்டர் ஆர்னால்டு

கல்வியின் தலையான நோக்கம் மக்களைச் சிந்திக்கத் தூண்டுவதேயாகும்.

கிரேன்மர் பெருமகனார்

ஆசானுரைத்த தமைவரக் கொளினும்
காற் கூறல்லது பற்றலன் ஆகும்.

(நன்னூல்) - பவணந்திமுனிவர்

நம் தற்காலக் கல்வி முறையில் ஆசிரியர் போதனைக்கே நாம் மட்டு மீறிய முதன்மை கொடுத்து வருகிறோம். மாணவர் கற்றறிந்து கொள்வதில் கவனம் செலுத்துவதில்லை.

ஒரு பெரியார்

ஒருவன் கல்வியறிவின் மிகப் பெரும் பகுதி அவன் தன் முயற்சியால் தானே கற்றுக் கொள்வதாகும்.

ஸர் வாட்டர் காட்

பல்கலைக்கழகத்திலிருந்து (ஆக்ஸ்ஃபோர்டிலிருந்து) ஒருவன் பெறுவது வெறும் பட்டம் மட்டுமன்று (பட்டத் தகுதியே).

ஆர்தர் வாக்

ஒரு கல்வித்துறையின் பொது முடிபுகளை, நீ வீட்டி லிருந்தே ஏடுகள் மூலம் அறியலாம்; ஆனால் அதன் நுட்ப நுணுக்கங்கள், விளக்கங்கள், நயங்கள், அவற்றுக்கு உயிர் ஊட்டும் உயிர்ப் பண்புகள் ஆகியவற்றை அவற்றை உயிரியக்க மாக உடையவர் (பள்ளி ஆசிரியர்களிடமிருந்தே பெறக் கூடும்.

கார்டினல் நியூமன்

(கல்விபெற வேண்டும்) சிறுவனைக் கீழ்த்தர நூல்கள் எவையும் இல்லாத நூல்நிலையம் பார்த்து அதில் உலவவிட வேண்டும். அவன் விரும்பும் சுவடிகளை அவன் படித்து முன்னேறிக் கொள்வான்.

அறிஞர் ஜான்ஸன்

படிப்பு ஒரு மனிதனை நிறைவுடையவனாக்குகிறது; கேள்வி அவனை எதற்கும் சித்தமுடையவனாக்குகிறது; எழுதுதலே அவனுக்குத் திட்பம் தருகிறது.

ஃபிரான்சிஸ் பேக்கன்

ஒரு குடியாட்சியின் உண்மையான அரண்வரிசை அதன் பள்ளிக் கூடங்களே யாகும்.

ஹோரேஸ் மான்.

கவிதை

பிற மாந்தரினும் கூரிய தொலை நோக்குடையவன் கவிஞன்.

வேவல் பெருமகனார்

இன்னிசை ஓசை, மறைபொருள் செறிவு, மாய மருட்கை இம்மூன்றும் கவிதையின் உயிர்நிலைகள். இவற்றுடன் அது பொருளும் உடையது.

வேவல் பெருமகனார்

ஆழ்ந்த அறிவனாக இல்லாமல் எவரும் கவிஞருட் சிறந்த வனாக இருந்ததில்லை.

கவிஞர் காலரிட்ஜ்

உரைநடை, கவிதை ஆகியவை பற்றிய என் விளக்கத்தைக் கவிதை இளஞ் செல்வர்கள் கூர்ந்து கவனித்தல் வேண்டும். உரைநடை என்பது சொற்களின் மிகச் சிறந்த ஒழுங்கமைதி; கவிதை என்பது மிகச்சிறந்த சொற்களின் மிகச்சிறந்த ஒழுங்கமைதி.

கவிஞர் காலரிட்ஜ்

ஆர்ந்தமர்ந்து கருத்திலுருவாக்கப்பட்ட உணர்ச்சி வேகமே கவிதை.

கவிஞர் வேர்ட்ஸ்வொர்த்

கவிதை என்பது இயற்கை யழகின் திரைநீக்கம்.

கவிஞர் ஷெல்லி

கவிதை என்பது யாது? புனைவாற்றல் குறிப்புரைகளால் உருவாக்குகின்ற உயிர் உணர்ச்சிகளுக்கான உயர் சூழலே.

ரஸ்கின்

கவிஞன் நம்மிடம் எழுப்ப வேண்டும் வியப்பதிர்ச்சி சிறப் பருமை சார்ந்ததா யிருக்கக்கூடாது; செழுங்கொழுமைச் சிறப்பு வாய்ந்ததாயிருக்க வேண்டும். நம் எண்ணங்களைத் தக்க சொல்லால் நினைவூட்டுவதாகவே இருக்க வேண்டும்.

கவிஞர் கீட்ஸ்

எல்லாக் கவிஞர்களும் வெறிகொண்ட பித்தர்களே.

ராபர்ட் பர்ட்டன்

கலைகளில் தலைமூத்த கலை, பல கலைகளுக்கும் தாய்க்கலை கவிதை!

காங்கிரீங்

கவிதையை இசைபயில் எண்ணம் என்னலாம்.

கார்லைல்

கவிதை என்பது அழகிலுறையும் வாய்மை.

கில்ஃவில்லன்.

கவிதை, உரைநடையைவிட, சில சொற்களுள் பல் பொருள் கூறுகிறது.

வால்ட்டேர்

கவிதை என்பது கட்டற்ற உணர்ச்சி வெளிப்பாடல்ல; உணர்ச்சியின் பிடிப்பிலிருந்து விடுபடுவதேயாகும்.

டி. எஸ். எலியட்

கவிஞனின் திறம் பொருளில் ஒரு சிறிது விளக்காது விட்டு மறைப்பதனால் செறிவளிப்பதேயாகும். அவன் அழகின் திரையை விலக்க முற்பட்டாலும் முழுதும் விலக்குவதில்லை.

ஈ. பி. ஒயிட்

குவெபெக் வெற்றியைவிட நான் பெருமை கொள்ள விரும்புவது கவிதை எழுதுவதாகும்.

படைத்தலைவர் உல்ஃவ்

அறிவுநூல்

ஒழுங்குபடுத்தப்பட்ட அறிவே அறிவுநூல்.

ஹெர்பெர்ட் ஸ்பென்ஸர்

அறிவியல் மெல்ல மெல்ல முன்னேறுகிறது; அடிமேலடியாக முன்னேறுகிறது.

ஸ்டியூவர்ட் சேஸ்

ஒரு அறிவியல் துறையில் துறைபோன வல்லுநர் ஆனவர் கள் வரவர இன்றியமையா நிலையில் பிற துறைகளில் மிகப் பொது நிலை அறிவுடையவராய் வருகின்றனர். தன் துறை முற்றிலும் ஆண்டறிய அவன் முழு அறிவாற்றலும் தேவைப் படுகிறது.

கெரால்டு ஹேர்டு

இன்றைய குடியுரிமையாளன் ஓர் அறிவியல் துறை வல்லுநனாயிருக்க முடியாதிருக்கலாம்- ஆனால் பொதுநிலை அறிவாளியாக, அதன் பொது முன்னேற்றத்தைக் கவனிப்ப வனாக இருக்க முடியும்; இருந்தாக வேண்டும்.

கெரால்டு ஹேர்டு

செய்பொருட் படைப்புக் கலையில் நம்மை விஞ்சிய ஊழிகள் உண்டு; உயர் குறிக்கோட்பற்றில் நம்மினும் உயர்வுற்ற ஊழிகள் உண்டு; நம்மினும் வீறுமிக்க, ஒழுங்கமைந்த சட்ட திட்டங்களுடைய ஊழிகள் இருந்ததுண்டு. ஆனால் நம் அறிவியலை எவரும் அணுகியது கிடையாது.

கெரால்டு ஹேர்டு

கலை யென்பது ‘நான்’; அறிவுநூல் என்பது ‘நாம்’!

கிளாட் பெர்னார்டு

அறிவுநூலின் ஒவ்வொரு முன்னேற்றப் படியும், ஒரு மனிதன் கற்பனைத் துணிவினின்றே தோன்றியுள்ளது.

ஜான் டியூயி

நீராவி நூறு ஆண்டுகட்கு முன்னிருந்ததைவிட இன்று, ஒன்றும் மிகுதி வலுவறியப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது - அவ்வளவுதான்!

எமர்சன்

அறிவுநூலும் கலையும் உலக முழுமைக்குமே உரியன. அவற்றின் முன் தேச எல்லைகள் மறைகின்றன.

கெதே.

அறிவியல் என்பது பொது அறிவின் வடித்தெடுப்பான பகுத்தறிவின் உயர்நிலை - அது திட்பமான காட்சியறிவு - சிறு வழுவுக்கும் இடந்தராத ஆராய்ச்சியறிவு ஆகியவற்றை அடிப்படை யாகக் கொண்டது.

டி. எச். ஹக்ஸ்லி

அறிவியல் என்பது வேறெதுவுமன்று; புலனறிவின் திறம்பட்ட வளர்ச்சி; அதன் திண்ணிய பொருள்கோள் பொது அறிவின் நுட்ப விளக்கம்.

ஜார்ஜ் ஸான்றாயனா

அனுபவ அறிவின் திட்டப்படுத்தப்பட்ட ஒழுங்கமைப்பே அறிவியல்.

ஜார்ஜ் ஹென்ரி லூயி

எதிலிருந்து தோற்றம், எதை நோக்கி நாட்டம், இயங்குவது ஏன், எவ்வாறு - இவ்வினாக்களின் விடையினுள் எல்லா அறிவு நூலும் அடங்கும்.

ஃழுபெர்ட்

வரலாறு

வரலாறு என்பது விளக்கச் சான்றுகளுடன் நல்லுரை தரும் மெய்விளக்க நூல் துறை என்னலாம்.

வைக்கவுண்ட் பாலிங்புரோக் (ஹென்ரி ஸென்ட் ஜான்)

வரலாறு என்பது ஒரு மாபெரும் நாடகக் காட்சி; காலமே அதன் மேடை; பொன்றா மெய்மையே அதன் பின்னணித் திரை; பகலவனொளியே அம் மேடையின் விளக்கங்கள்.

கார்லைல்

பெரியார் வாழ்வு எதுவும் வீணாவதில்லை. உலகின் வரலாறு பெரியார் வாழ்க்கை வரலாறுகளின் கோவையே.

கார்லைல்

வரலாறு என்றும் எதுவும் இரட்டுறச் செய்வதில்லை; வரலாற்றாசிரியர் செய்வர்.

ஒரு பெரியார்

எத்துணையோ அளவு வரலாறு வேண்டும், ஒரு சிறிதளவு இலக்கியம் உண்டாக.

ஹென்ரி ஜேம்ஸ்

வரலாற்றுச் சிக்கல்களை ஆராய்க; அன்மைக் காலப் பிரிவுகளையல்ல.

ஆக்டன் பெருமகனார்

மனித உலக வரலாறு என்பது மனிதர் கருதிய கருத்துக்களின் வரலாறேயாகும்.

(உலக வரலாற்றுச் சுருக்கம்) எச். ஜி. வெல்ஸ்.

கலையும் இயற்கையும்

கலைபயில் சீமாட்டி : இயற்கைக் காட்சியைக் கண் ணுற்றதும் எனக்கு என் கலை நினைவுக்கு வந்தது.

கருத்துரையாளர் : (இயற்கையைப் போற்றும் கலை எவ்வளவோ உண்டு) கலையைப் போற்றும் இயற்கையை எங்கும் கண்டதில்லை.

(ஒரு பத்திரிகை)

உயர் இசைபோலவே உயர்கலை ஒழுங்கமைதிக் கட்டுப் பாடற்றது. தன் அழகின்பத்தில் ஊறி அது வெறியுடையதாகும்.

ஜார்ஜ் ஜீன் நேதன்

எந்தப் படத்தைப் பார்த்தாலும், “ஆ, அது என் மீது பற்றிக் கொண்டு விடுகிறது”, என்கிறாள் அச் சீமாட்டி. “அவை என்ன காளான்களா, பாசிகளா?” என்றார் குளோவிஸ்

ஸர்கி

கேலிச்சித்திரம் வரைவது என்பது கூடவே கூடாது. அவற்றை வரைந்து வரைந்து பழகி, நான் மனிதரின் இயற்கை முகம் எப்படி இருக்கும் என்பதை மறந்தே போனேன்.

கலைஞன் ஹோகார்த்

கலை என்பதே கலையின் முடிந்த முடிபன்று; மனிதர் உள்ளமளாவும் வகைகளுள் அது ஒன்று.

எம். பி. முஸ்ஸார்க்ஸ்கி

கலை வாழ்வின் உணவாகாது- வாழ்வின் இன்தேறல் மட்டுமே.

ஜீன் பால்ரிஃட்டர்

கலைஞன் பொருள்களைக் காண்பது அவற்றின் இயல்பு கொண்டன்று; தன் இயற்கை கொண்டு.

ஆல்ஃபிரட் டானெஸ்

சமயமும் மெய்விளக்கத் துறையும்

மனிதர் சமயத்துக்காக, அச்சமயத்தைப் பின்பற்றி வாழ்வது தவிர, வேறு எதுவும் செய்யத் தயங்க மாட்டார் - அதற்காக வாதாடுவர், எழுதுவர், போராடுவர்!

கோல்ட்டன்

சமயமென ஒன்றிருந்தும் மக்கள் இவ்வளவு ஒழுக்கக் கேடுடையவர்களாயிருப்பார்களானால், சமயமில்லாது எந் நிலையில் இருப்பார்களோ?

ஃவிராங்க்லின்

சமயம் உண்மையில் ஒன்றே - அதுவே நல் வாழ்வு.

தாமஸ் ஃவுல்லா

எத்தனை கடவுளர், எத்தனை சமயங்கள்
எத்தனை வளைநெளி புதுமைய நெறிகள் ?
ஆனால் துன்பமிக்க இவ்வேழை உலகின் தேவை யெல்லாம்
அன்புநெறி என்ற கலை ஒன்றுதான்.

எல்லா வீலர் வீல் சாக்ஸ்

என் நாடு இந்த உலகம்; மனித வகுப்பினர் என் குடும்பத் தவர்; நன்மை செய்வதே என் சமயம்.

தாமஸ் பெய்ன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்.

புறநானூறு.

நானும் ஒரு காலத்தில் மெய்விளக்க அறிவராயிருக்க முயற்சி யெடுத்துக் கொண்டதுண்டு. ஆனால் இன்பம் வந்து அதை இடையிடையே கெடுத்துவிட்டது.

ஆலிவர் எட்வர்ட்ஸ்

மனிதன்

ஆ, மனிதன் எத்தகைய திறனமைந்த படைப்பு! எத்தனை அறிவாற்றல்! எத்தனை எல்லையில்லாக் கலைப் பண்பு! உருவில், இயக்கத்தில், செயலில் எத்தகைய மேதகைமை! உணர்வில் ஓர் இறையுரு வொப்பான்; உலகின் வனப்பெலாம் திரண்ட வடிவம்; உயிரினங்களின் ஒப்பற்ற கொடுமுடி!

ஷேக்ஸ்பியர்

மாவும் மாக்களும் ஐயறிவினவே
மக்கள் தாமே ஆறறி வுயிரே.

தொல்காப்பியர்

மனிதன் கற்பவற்றுள் உயர்ந்த கற்பனைக்குரிய பொருள் மனிதனே.

போப்

மனிதன் தான் நம்பும் நம்பிக்கைகளின் ஒரு கூட்டு.

செக்காவ்

இயற்கை வழக்கமாகப் படைத்து உருவாக்காமல், பல நூற்றாண்டுகள் இடையிட்டு மிக அருமையாகப் படைக்கும் படைப்புக்களுள் அவர் ஒருவர் (நெப்போலியனைக் குறித்தது)

ஜூனோ

பரம்பொருளுக்கும் பச்சைமண்ணுக்கும் இடையே ஊச லாடும் ஒரு மணிப் பொறியின் ஊசல் வட்டு - இதுவே மனிதன்.

பைரன்

மனிதன் பண்பு எதுவாயினும் ஆகுக; அவன் ஒரு தனி வகைப் படைப்பு என்பதில் ஐயமில்லை. அவன் கடவுளின் திருவுருவ மல்லவானால், அவனை மண்ணுலகின் ஒரு நோய் என்று கட்டாயம் கூறியாக வேண்டும்.

ஜி. கே. செஸ்டர்ட்டன்

ஒரு மனிதன் பண்புகளுள் பொது மக்களால் மிகவும் பாராட்டப் பெறுபவை பெரும்பாலும் அவனால் மிகத் துச்சமாகக் கருதப்படு பவவையாகவே இருக்கும்.

ஒரு பெரியார்

மனிதன் வரவர அறிவுத்திறமையுடையவனாகலாம்; அறிவுக் கூர்மையும் சூழ்ச்சியுமுடையவனாகலாம். ஆனால் செயலில் வலிவும், இன்ப வளர்ச்சியும் நல்வாழ்வும் உடைய வனாதல் அரிது - அது கூடுமானால், ஊழிக் கணக்கான காலத்தின் பயனாகவே.

கெதே.

ஒரு சில குறைபாடுகள்தான் அவரிடமில்லை. அவை இருந்திருந்தால் அவரை முழுநிறை மனிதராகக் கொள்ளலாம். (டியூக் டி லாங்கெவிலைப்பற்றி)

திருமதி. டி. செவிஞி

வாசிக்கும் வகையை மட்டும் அறிந்தால் ஒவ்வொரு மனி தனும் ஓர் ஏடேயாவன்.

வில்லியம் எல்லரி சானிங்

சிரிக்கவும் அழவும் செய்யப்கூடும் விலங்கு, மனிதன் மட்டுமே. ஏனெனில், ‘உலகம் எப்படி இருக்கிறது, எப்படி இருக்க வேண்டும்’ என்ற கருத்துக்கள் உடையவனாய், இரண்டின் வேற்றுமையையும் அறிந்தவன் அவனே.

ஹாஸ்லிட்

வாழ்க்கை

வாழ்க்கை நலத்தை நான் விரும்புகிறேன். அதை நான் பெறக் கூடுமானால், நான் வாழட்டும். அல்லவெனில் எதிர்பாராப் புகழ் வந்து என் வாழ்வைக் கொண்டு செல்லட்டும். நான் விரும்பும் முடிவு அதுவே.

ஷேக்ஸ்பியர்.

வாழ்வாவது இன்பம், அன்பரே… பகலும் இரவும்… இரண்டும் இனியன. ஞாயிறு, திங்கள், உடுக்குலங்கள் எல்லாம் இனியன. புறவெளிகளிலோ தங்கு தடையற்ற காற்று எங்குந் திரிகிறது.

ஜார்ஜ் பாரோ.

வாழ்க்கையில் நமக்கு என்ன வேண்டும் - நல்ல உடல் நலம். ஆண்டுக்கு இருநூறு முந்நூறு பொன் வருவாய் - ஆம், அத்துடன் நண்பர்கள்!

ஆர். எஸ். ஸ்டீவென்ஸன்.

காலமெனும் வெண்பளிக்கு வெளியில் தீட்டிக்
கறைகொண்ட பல்வண்ண மாடங்காண் வாழ்க்கை.

கவிஞன் ஷெல்லி.

வாழ்க்கையின் மெய்ம்மைமிக்க முடிவு, வாழ்க்கை முடி வற்றது என்று உணர்வதே.

வில்லியம் பென்.

கற்கத்தகும் வாழ்க்கை கருத்தாட்சி பெற்ற வாழ்க்கையே.

ஆர்தர் வாக்.

(இல்வாழ்க்கையல்லாது) வேறு எந்த வாழ்க்கை முறையும் அவ்வளவு புகழத்தக்கதன்று. ஏனெனில், இல்வாழ்க்கை என்பது எளிது; தூய்மை மிக்கதும் ஆகும்.

சாஸர்.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்.

திருவள்ளுவர்.

பலருக்கு வாழ்க்கை என்பது கிளர்ச்சிதரும் பல நிகழ்ச்சிகளின் தொடர்பாக மட்டுமே காணப்படுகிறது. ஆனால் வாழ்க்கை என்பது புறநிகழ்ச்சி எதுவுமன்று; அவற்றால் அகத்தே ஏற்படும் சிறு சிறு மாறுபாடுகளின் தொகுதியே என்பதனை அவர்கள் உணர்வதில்லை.

ஓர் அறிஞர்.

மாறுபாடற்ற ஒழுங்கமைதி என்பது சிறுமை உள்ளங் களின் அறியாமையால் வரும் மாய மருட்சி.

எமர்ஸன்.

வாழ்க்கை என்பது ஓர் இசையரங்கேற்றம்; ஆனால் அதில் யாழ் வாசிப்பவன் மேடையில் அரங்கேற்றும் போதுதான், யாழ் மீட்டவும் பயிற்சி பெற்றுக் கொள்ள முனைகிறான்!

சாமுவேல் பட்லர்.

வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சியற்ற வாழ்க்கை, வாழத் தகுந்த தல்ல.

சாக்ரடீஸ்.

எழுத்தளவில் அறிவராயிருப்பது மிக எளிதே; வாழ்க்கையில் அறிவராயிருப்பது அத்துணை எளிதன்று.

செக்காவ்.

நாம் எவ்வளவு நாள் வாழ்வோம் என்பது முக்கியமன்று; எங்ஙனம் வாழ்கிறோம் என்பதே முக்கியமானது.

பெய்லி.

உணர்ச்சித் திறமுடையவர்கட்கு வாழ்க்கை ஒரு துயர் நாடகம். அறிவுறுத்திற முடையவர்க்கு அது ஒரு களி நாடகம்.

லாபுருயேர்.

நாகரிகம்

பெயக் கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பலர்.

திருவள்ளுவர்.

நாகரிகம் ஏழை மக்களுக்குச் செய்து தரும் வாழ்க்கை வசதியின் அளவே, அதன் உண்மையான உரைகல் ஆகும்.

டாக்டர் ஜான்ஸன்.

வரவர மிகுதியான நல்வாழ்வுச் சாதனங்கள், வரவர மிகுதி யான ஓய்வு நேரம் - இவையே நாகரிகத்தின் இரு அடிப்படைக் கூறுகள்.

பெஞ்ஜமின் டிஸ்ரேலி.

தங்கள் ஆன்ம வாழ்வை மேம்படுத்திக் கொள்பவர் களாலன்று நாகரிகம் சிறப்பது! தம் கடமைகளைச் சரிவரச் செய்பவர்களே, அவர்களினும் நாகரிக வாழ்வுக்கு உகந்தவர்கள் ஆவர்.

கென்னத் பிக்ட்ஹார்ன்.

தனி மனிதரைப் போலவே நாடுகளும் ஆட்சிகளும் தோன்றி மறைகின்றன. ஆனால் நாகரிகம் ஓர் இறவாப் பண்பு.

மாஜினி.

தானே தன் காரியம் எதையும் செய்து கொள்ளாமல் கூடிய மட்டும் பிறரைக் கொண்டே செய்து வாழ்வதுதான் நாகரிகத்தின் தொடக்கம் ஆக அமைகிறது.

எச். ஸி. பெய்லி.

நம் நாகரிகம் நம் உடலின் தோல்வரைகூடச் செல்வ தில்லை. அது பெரும்பாலும் நம் ஆடையுடன் நின்று விடுகிறது.

மிகு தூயதிரு டப்ள்யூ. ஆர். இங்க். டி. டி.

பண்புடைமை

பண்புடையார் என்பவர் யார்? நன்றி கூறுவதில் முதல்வராக முந்திக் கொள்பவர், குறை கூறுவதில் கடைசியாகப் பிந்திக் கொள்பவர்!

ஸெர்பிய நாட்டுப் பழஞ்சொல்.

பிறரால் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும்
மறவாமே நோற்பதொன் றுண்டு - பிறர்பிறர்
சீரெல்லாம் தூற்றிச் சிறுமை புறங்காத்து
யார்யார்க்கும் தாழ்ச்சி சொலல்.

(நீதிநெறி விளக்கம் : குமரகுருபரர்)

நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

திருவள்ளுவர்.

தன்னையறியாமற்கூடப் பிறரைப் புண்படுத்தாதவனே பண்புடையாளன்.

பிஸ்மார்க்.

பண்புடைமை என்பது இரு பண்புகளின் இணைப்பு. கோடாத நற்பொருளார்வச்சுவை ஒன்று; உலகெலாம் அணைத்தா தரிக்கும் தாராள மனப்பான்மை மற்றொன்று.

டப்ள்ளூ. எச். மாலர்.

என்னால் ஒரு பெருமகனை ஆக்க முடியும். ஆனால் எல்லாம்வல்ல இறைவனே ஒரு பண்புடையாளனை ஆக்க முடியும்.

முதலாம் ஜேம்ஸ் மன்னன்.

முன்னேற்றம்

முன்னேற்றமென்பது ஒரு குறிக்கோளன்று; ஒரு மறுக்க முடியா நடைமுறைத் தேவை. அது மனித வகுப்பின் ஒரு கடமை யன்று; இயற்கையின் ஓர் ஒழுங்கமைதி. இத்தகைய முன்னேற்றத்தில் உள்ள உறுதியான நம்பிக்கையே சென்ற நூற்றைம்பது ஆண்டுகளாக மேலை உலக நாகரிகத்தின் அடிப்படைப் பண்பா யிருந்து வருகிறது.

மிகு தூயதிரு. டப்ள்யூ. ஆர். இங்க், டி. டி.

இணக்கமுள்ள மனிதன், உலகுக்குத் தக்கபடி தன்னைச் சரி செய்து கொள்கிறான்; இணக்கமற்ற மனிதனோ, ஓய்வு ஒழிவின்றித் தனக்குத் தக்கபடி உலகத்தை ஆக்குவதிலேயே முனைகிறான். ஆகவே உலகின் முன்னேற்றங்கள் யாவும் இணக்கமற்றவர்களால் ஏற்படுபவையே.

பெர்னார்டு ஷா.

தாவி ஏறிச் செல்வது, தற்போதைய நிலையில் மனக்குறை யுறுவது, ஆகிய இவை மனிதன் உள்ளர்ந்த உணர்ச்சிப் பண்புகள் என்பதும், நிலையான வாழ்க்கை நிறைவை விரும்புவதே மற்றெல்லாம் உயிர் வகைகளின் உள்ளார்ந்த உணச்சிப் பண்பு என்பதும் விளக்கப்பட வேண்டிய மெய்ம்மைகள் ஆகும்.

மிகு தூயதிரு. டப்ள்யூ. ஆர். இங்க், டி. டி.

தற்காலப் புதிய முன்னேற்றங்களால் வரும் செல்வப் பெருக் கனைத்தும் பெருஞ் செல்வர் செல்வத்தைப் பெருக்கவும், இன்ப வாழ்வினர் இன்பமிகுக்கவும், உடையோர் இல்லோர் வேற்றுமை நிலையையும் மாறுபாட்டையும் அகலமாக்கவும் மட்டுமே பயன் படும்வரை, முன்னேற்றங்கள் உண்மையான முன்னேற்றமாகவோ, நிலையான முன்னேற்ற மாகவோ இருக்க முடியாது.

ஹென்ரி ஜார்ஜ்.

தொழிலுக்கு மேன்மேலும், மிகுதி ஊதியந் தர முயல் வதிலேயே முன்னேற்றம் அடங்கியுள்ளது.

கார்லைல்.

உலகின் பெரும்பாலான மூட மக்கள் எவ்வகை இன்னலு மின்றி நன்கு வாழ்நாளை நடத்தி வருகிறார்கள்.

கார்ல். ஏ. மென்னிங்கர்.

பித்தர்கள் இன்பமாகவே வாழ்கின்றனர் - அமைந்த அறிவு டையவர் களைவிட அவர்கள் இன்பம் எத்தனையோ பெரிது!

அறிஞர் பால் மண்டேன்.

உலகத்தின் ஒவ்வொரு படி முன்னேற்றமும் ஒரு கழு மேடை யிலிருந்து மறு கழு மேடைக்கும் ; ஒருபுதுக் கருத்துக்குப் போராடு வதிலிருந்து மறு புதுக் கருத்துக்குப் போராடும் வகையிலேயும் அமைந்துள்ளது.

வென்டெல் ஃவிலிப்ஸ்.

பல்வேறுபட்ட மக்களும் ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்வது பற்றிய கதையே உலக வரலாறு; யாரேனும் அறிவுத் திறமுடையவர் ஒரு புதுத் தவறு கண்டுபிடித்து, அதன் மூலம் வழக்கத்திற்கு மாறான சறுக்கல் ஏற்படுவதையே முன்னேற்றம் என்கிறோம்.

ஓர் அறிஞர்.

ஒரு தொல்லையே விட்டுக் கொடுத்து, மற்றொரு தொல் லையை வாங்குவதையே நாம் முன்னேற்றம் என்கிறோம்.

ஹாவ்லக் எல்லிஸ்.

நாடு

வேறு எந்த நாட்டிலிருந்தாயினும் இருவர் ஓரறைக்குள் நுழைந்து அமர நேர்ந்தால், உடன் தானே ஏதாவது உரையாடத் தொடங்காமலிருக்க மாட்டார்கள். ஆனால் அதே நிலையில் இரண்டு ஆங்கிலேயர்களின் விடப்பட்டால், ஒவ்வொரு வரும் கூடியமட்டும் தொலைவாக வேறு வேறு திசை நோக்கிய பலகணி யண்டை சென்று வாளா வெளியே பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

அறிஞர் ஜான்ஸன்.

ஒரு காரியம் எவ்வளவு நல்லதாயினும் சரி, எவ்வளவு கெட்டதாயினும் சரி, அதைச் செய்யும் ஓர் ஆங்கிலேயனைக் காண்பதரிதன்று; ஆனால் ‘தவறு’ எதனையும் எவனும் செய்வதாக உணர்வது கிடையாது. அவன் செய்வதெல்லாம் ஒரு ‘கொள்கை’ யுடன்தான்! அவன் போராடுவதெல்லாம் நாட்டுப்பற்றுக் கோட்பாட்டினாலேயே; அவன் சுரண்டுவ தெல்லாம் தொழில் முறைக் கோட்பாட்டினாலேயே அவன் அடிமைப் படுத்துவதுகூட, ’பேரரசாட்’சிக் கோட்பாட்டுக்கு இணங்கியே!

பெர்னார்டு ஷா.

சமயத்தையும் ஒழுக்கக் கேட்டையும் தவிர, இங்கிலாந்தில் பொழுது போக்கு எதுவும் இல்லை - எவ்வளவு வருந்தத்தக்க நிலை!

ஸிட்னி ஸ்மித்.

ஆங்கிலேயன் வழக்காற்றில், ‘நாகரிகத்தில் பிற்பட்ட நாடுகள்’ என்றால், அவன் நாட்டினிடமிருந்து ‘வாணிகச் சரக்குகள் பெறாத நாடுகள்’ என்று பொருள்.

டக்ளஸ் உட்ரஃவ்.

என் தாய்நாடு யாதாயினும் ஆகுக; என்ன குறை களுடைய தாயினும் ஆகுக. எப்படியும் அது என் தாய்நாடே.

சார்லஸ் சர்ச்சில்.

நாட்டுணர்ச்சி என்பது மனித வகுப்பின் ஒரு குழந்தைப் பருவ நோய் அது ஒரு கூவை வீக்கம் போன்றது.

ஆல்பெர்ட் ஈன்ஸ்டீன்.

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரும் நாடு.

திருவள்ளுவர்.

மன்னர் திருத்தவிசு; மன்னுசெங்கோல் வாழரங்கம்;
துன்னும் உயர் தோற்றத் திருவிடம்; மால்- மின்னுசெவ்வாய்க்
கோளிருக்கும் கோயில்; குறைவறநற் சீரியற்கை
வேளிருக்கும் கோட்டை விறல்மாடம்;- நாளிருக்கும்
தீங்குகள் வாராநீர்சேர் திரையே எம்நாடு,
பாங்குயர் வீரர் பயில்மரபின் - ஓங்குமனை;
வெள்ளிப் பரவை விளக்கநாடு வேபதித்த
ஒள்ளரக்கு மாமணிஎன் றோது.

ஷேக்ஸ்பியர்.

உருவ நீனிறக் கடலகங் கீண்டெழுந் தோங்கித்
திருவி னீள்பிரித் தானியா தோன்றிய ஞான்று
பெருமி தத்துடன் பீடுறும் இறைபடைப் பார்ந்தே,
உருமினார்த்தனர் தேவர்கள் உயர்விறற் பாடல்.
வாழ்க நீள்பிரித் தானியா; ஆட்படா தென்றும்
ஆள்க நீள்பிரித் தானியர்
அனைத்துல கொருகுடைப் படுத்தே!

(நாட்டுரிமைப் பாட்டு) ஜேம்ஸ் தாம்ப்ஸன்.

அரசாங்கம்

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.

திருவள்ளுவர்.

மக்கள் தேவைக்காக, மக்களின் அறிவு வகுத்துக்கொண்ட வகைமுறையே அரசு.

எட்மண்ட் பர்க்.

நம் தேவைக்கு மேற்பட்ட அரசியல் இயந்திரத்தை வைத்துக் கொண்டு, நாம் இன்னலுறுகிறோம் என்று எனக்குத் தோற்றுகிறது. உழைப்பவர் உழைப்பை இவர்கள் பெரிதும் உறிஞ்சி விடுகின்றனர்.

ஜெஃவ்வெர்ஸன்.

மக்கள் விருப்பமே எந்த அரசாங்கத்திற்கும் உரிய நேர்மை யுரிமை ஆகும். ஆகவே மக்கள் சுதந்தர உரிமையைப் பாதுகாப்பதே அதன் முதற் கடமையா யிருக்க வேண்டும்.

ஜெஃவ்வெர்ஸன்.

வேற்றுமையுற்ற குடும்பம் நில்லாது - பாதி அடிமைப் பண்பும், பாதி சுதந்தர மக்களையும் உடைய எந்த அரசாங்கமும் நிலைக்க முடியாது.

லிங்கன்.

அவ்வந்நாட்டின் தகுதிக்கேற்ற அரசாங்கம் அததற்குக் கிடைக்கிறது.

ஜோஸஃவ் டி. மேய்ஸ்டர்.

அரசாங்கம் இருப்பது சிறுபான்மையினரின் உரிமை களைப் பாதுகாக்கவே. எல்லாரும் விரும்புபவர்களுக்கும் பணக்காரர் களுக்கும் பாதுகாப்பு தேவையில்லை - அவர்களுக்கு நண்பர் பலர், பகைவர் குறைவு.

வென்டெல் ஃவிலிப்ஸ்.

மிகத் தாழ்ந்த தொழிலைக்கூட அதற்கென்று பயிற்சி யில்லாமல் எவரும் மேற்கொள்வதில்லை. ஆனால், தொழில் களுள் மிகக் கடினமான பிறரை ஆளும் தொழிலுக்கு மட்டும், எவர் வேண்டுமானாலும் தகுதியுடையவர் என்று முன்வந்து விடுகி றார்கள்.

சாக்ரட்டீஸ்.

நம் அரசாங்க அமைப்பின் அடிப்படையையே மாற்றிய மைக்கும் உரிமை நம் மக்களுக்கு உண்டு, என்ற அடிப்படை யிலேயே நம் அரசியலமைப்பு அமைந்துள்ளது.

வாஷிங்டன்.

என் மனம் போல நான் செயலாற்ற முடியுமட்டும் என் குடிமக்கள் எவரும் தம் விருப்பப்படி சிந்தனையாற்றலாம்.

பேராளன் ஃவிரெடரிக்

அரசியல் முறை எதுவாயிருந்தாலும் (வல்லாட்சியாளர்) கொடுங்கோன்மையை எதிர்த்து நின்று மக்களைக் காக்க மனித உள்ளத்திலேயே ஓர் இயற்கைப் பண்பு இருக்கிறது.

அறிஞர் ஜான்ஸன்.

எல்லாவற்றையும் மாற்றியமைக்க வேண்டும் என்பவர் களும், எதையும் மாற்றக்கூடாது என்பவர்களுந்தான் வாழ்க்கைப் போரில் பெருத்த இடைஞ்சல் விளைவிப்பவர்கள்.

ஆஸ்டர் பெருமாட்டி.

எல்லா அரசியல் முறைகளிலும் சட்டம் அமைப்பவர்கள் மக்களே.

எட்மண்ட் பர்க்.

குடியாட்சி

தொடக்க நாளிலிருந்தே நம் குடியாட்சிப் பண்பு மிகச் சிறந்த உயர் குடியாட்சிப் பண்புடையதாகவும், அதே சமயம் நம் உயர் குடியாட்சிப் பண்பு மிகச் சிறந்த குடியாட்சிப் பண்புடையதாகவும் இருந்து வந்திருக்கிறது. (பிரிட்டனைப் பற்றி)

மெக்காலே.

தன் தனிப்பட்ட நலங்களை மதித்துப் பேணி வளர்க்கும் மனிதன், பொதுச் சமூக நலனுக்கு எதிரியாகிறான் என்ற கருத்து அடிப்படையான ஒரு தவறாகும். குடியாட்சியின் தனிச் சிறப்பு யாதெனில், தனி மனிதன் தன் நலத்தைப் பேணும் வகைகளாலன்றி, பொது நலத்தை வளர்க்க முடியாது என்ற கருத்தே.

பேராசிரியர் ஸி. கே. ஆலன்.

மக்கள் அரசியல் தவறு செய்யாதவர்கள், என்று எண்ணுதல் தவறு; அவர்கள் பெருந் தவறு செய்கிறார்கள். அதை உணரவும், அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள். ஆனால் வல்லாட்சி வகைகளின் தவறுகளைப் பார்க்க, இவை குறிப்பிடத் தக்கவையேயல்ல.

கால்வின் கூலிட்ஜ்.

மிகப் பொதுநிலைப்பட்ட மக்களுள்ளாக மிகச் சிறப்பு வாய்ந்த அடங்கியலான ஆற்றல்கள் உள்ளன என்ற மெய்ம்மையை அடிப்படையாகக் கொண்டதே குடியாட்சி.

ஹாரி எமர்சன் ஃபாஸ்டிக்.

மக்களை, மக்களே, மக்கள் நலத்துக்காக ஆள்வதென்பது தான் குடியாட்சி.

ஏபிரகாம் லிங்கன்.

குடியாட்சியின் தீங்குகளுக்கு மருந்து இன்னும் மிகுதியான குடியாட்சி உரிமைகளே ஆகும்.

ஆல்ஃபிரட் ஸ்மித்.

எனக்குக் குடியாட்சியில் உறுதியான பற்று உண்டு; ஏனெனில் அதுவே ஒவ்வொரு மனிதனின் உள்ளார்ந்த ஆற்றலையும் வெளிப் படுத்த வல்லது.

உட்ரோ வில்ஸன்.

குடியாட்சி என்றால், மக்களை, மக்களுக்காகவே, மக்களைக் கொண்டு தடியடிகளால் அடித்தடக்குவது என்று பொருள்!

ஆஸ்கார் வைல்டு.

குடியாட்சி என்பது ஒரு கல்லறை போன்றது; அது வாங்கு வதை என்றும் மீட்டுத் தருவதில்லை!

எட்வர்டு புல்லேர் லிட்டன் பெருமகனார்.

ஒரு சிறு தன்னல இலஞ்சக்குழுவினால் ஆட்சியாளர் அமர்த்தப் பெறும் பழைய முறைக்கு மாறாக, திறமையற்ற ஒரு பெரும்பான்மைக் கூட்டம் அவர்களைத் தேர்ந்தெடுக்கும் புதிய முறையே குடியாட்சி எனப்படுகிறது!

பெர்னார்டு ஷா.

குடியாட்சியில் அமைப்பொழுங்கும் கட்டுப்பாடும் இருக்க வேண்டியதே. ஆனால் அதன் உயிர்நிலை தனிமனிதன் சுதந்திரமே யாகும்.

சார்லஸ் எலன்ஸ் ஹியூஸ்.

சரிநிகர் நெறி

நம் துன்பங்களனைத்தையும் ஒருங்கே திரட்டிச் சரிநிகராகப் பங்கு வைத்து, ஆளுக்கு ஒரு பங்கு கொண்டு செல்க என்றால், பெரும்பாலோரும் தம்தம் பங்கை மனம் நிறைந்து ஏற்றுச் செல்லத் தயங்க மாட்டார்கள்.

சாக்ரட்டிஸ்.

செய்தித்தாள்

மூன்று செய்தியிதழ்களின் எதிர்ப்புக்கு நான் நடுங்குகிறேன்; ஆனால் ஒரு நூறாயிரம் துப்பாக்கிகள் ஏந்திய படைவீரருக்கு நான் நடுங்குவதில்லை.

நெப்போலியன்.

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.

திருவள்ளுவர்.

செய்தியிதழ் விடுதலையுரிமை ஒரு குடியாட்சி வாழ்வின் ஊன்றுகோல் ஆகும்.

வெண்டெல் எல். வில்கி.

நம் விடுதலை, செய்தியிதழின் விடுதலையுரிமையைப் பொறுத்தது - அதைக் கட்டுப்படுத்தினால் நம் விடுதலை அழியா மலிருக்க முடியாது.

ஜெஃவ்வெர்ஸன்.

பொதுமக்களின் நினைவாற்றல் பத்தாண்டுகள் நீடித் திருக்கு மானால், எந்த அமைச்சரும் இரண்டு தடவை பணித்துறைக்கு வர முடியாது. அது பத்து வாரம் நீடிக்க முடியுமானால் செய்திகளின் வாய்மை, கருத்துக்களின் பொருத்த அமைதி ஆகியவற்றில் கருத்துடையவர்களால் எத்தனை செய்தியிதழ்கள் ஏற்கப்பட முடியும்?

போர்ட்ஸ்மத் கோமகன்.

சட்டமுறையும் வரையறையும்

சட்ட ஒழுங்கு ஓய்வுற்ற இடமே கொடுங்கோன்மை தொடங்குமிடம்.

(வில்லியம் பிட்) சாதம் கொமான்.

நாடொறு நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.

திருவள்ளுவர்.

சட்டங்கள் தனி நிகழ்ச்சிகளை எண்ணிச் செய்யப்பட வில்லை. பொதுவாக மனித இனத்தை எண்ணியே.

ஒரு பெரியார்.

வீடுகள் ஒன்றை ஒன்று சார்ந்தே நிலைபெறுவது போல், சட்டங்களும் ஒன்றை ஒன்று சார்ந்தே நிற்கின்றன.

எட்மண்ட் பர்க்.

சட்டங்கள் நூலாம்படை போன்றன. குளவி முதலிய பேர் இனங்களை ஊடாடவிட்டு, சிறிய ஈ, கொசுகு ஆகியவற்றை அகப்படுத்திக் கொள்ளும்.

ஜோனதன் ஸ்விஃப்ட்.

சட்டம் கண்டிப்பான வரையறையில்லாமலிருப்பதே அதன் மாபெரும் புகழ் ஆகும்.

(விருந்துரை) திரு. வில்பிரகன்.

நல்ல சட்டங்கள் வகுப்பது எளிது; அருமையாவது அவற்றை நடைமுறையில் வெற்றிபெற நடத்துவதில்தான் இருக்கிறது.

வைக்கவுண்ட் பாலிங்புரோக்.

ஒருவன் எத்தனை உயர்வுடையவனாயினும், சட்டம் அதனினும் உயர்வு உடையதே.

தாமஸ்ஃவுல்லர்.

சட்டங்கள் மிகவும் மென்மை யுடையவையாயிருந்தால் அவற்றுக்கு யாரும் கீழ்ப்படிய மாட்டார்கள். அவை மிகவும் கடுமையுடையவையாய் இருந்தால் பெரும்பாலும் நிறை வேற்றப் படுவதில்லை.

ஃவாங்க்லின்.

கேடுள்ள, வெறுப்பூட்டத்தக்க சட்டங்களை ஒழிக்க வேண்டுமானால் அவற்றை வழுவற நிறைவேற்ற வேண்டும். அதனினும் சிறந்த வழி காண முடியாது.

யுனிஸல் எஃகிரான்ட்.

சட்டங்களை ஆக்குவதினும் அவற்றை நிறைவேற்றிச் செயற்படுத்துவதே முதன்மை வாய்ந்தது.

ஜெஃப்பெர்ஸன்.

சட்டங்கள் சில சமயம் தூங்கக்கூடும். ஒரு போதும் இறப்பதில்லை.

சட்டக் கருத்துரை.

சிறுமையுடைய சட்டங்கள் பெரும்படியான குற்றங்களை ஆக்குவன.

ஊயீடா.

நல்லார் சட்டங்களுக்கு அஞ்ச வேண்டுவதில்லை. தீயோரை அடக்கவும், அவர்களைக் காக்கவுமே அது அமைந்துள்ளது.

மாஸிங்கர்.

நாட்டில் சட்டங்கள் பெருகுவது, மருத்துவர் பெருகுவது போன்றது. அது நற்குறியன்று.

வால்ட்டேர்.

சட்டங்கள் ஏழைகைள வருத்தும்; செல்வர்களைத் தீண்டாது - அவற்றை இயக்குபவர் அவர்கள்.

கோல்டுஸ்மித்.

வகுப்பும் வகுப்புணர்ச்சியும்

ஒரு வகுப்பினர் உலகத்தை இருபெரு வகுப்பாக வகுப்பவர்கள்; மற்ற வகுப்பினர் அங்ஙனம் வகுக்காதவர்கள். நான் (இரு வகுப்பாக வகுப்பவனாயினும்) பிந்திய வகுப்பையே விரும்புகிறேன்.

பஞ்ச் பத்திரிகை.

உலகம் இருசார்பாளர் அடங்கியது; ஒரு சார்பினர் செயல் செய்வோர்; மற்றையோர் செயலின் பயன் அடைவோர். எப்போதும் முதல் வகுப்பிலேயே சேர்ந்திருக்கப்பார். ஏனெனில் அதில்தான் போட்டி மிகக் குறைவு!

டுவைட் மாரோ.

இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.

திருவள்ளுவர்.

மக்களை இன்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்; ஓயாது உழைத்துச் சாகிறவர்கள், ஓயாக் கவலையால் சாகிறவர்கள், நேரம் போகாமல் சாகிறவர்கள்!

ஒரு பெரியார்.

பீவரிட்ஜ் அறிக்கைபற்றிக் கருத்துக் கூறுவோருள் மூன்று வகுப்பார் இருக்கிறார்கள். அதை ஆதரிப்பவர்களும் எதிர்ப்ப வர்களும் முதலிரு வகுப்பார்கள். அதை வாசித்துப் பார்த்தவர்கள் தான் மூன்றாவது வகுப்பினர்.

(முதலாம் சார்லஸ் மன்னரிடம் இச்சகமாயிருந்து மக்களைக் கெடுத்து வாழ்ந்த பக்கிங்ஹாம் கோமகளைப் பற்றிய கூற்று).

டிரைடன்.

புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார்
உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் - புத்தகத்தைப்
போற்றும் புலவரும் வேறு பொருள் தெரிந்து
தேற்றும் புலவரும் வேறு.

நாலடியார்.

கடவுள் ஆடவர்களையும் படைத்தவர்; பெண்டிர்களையும் படைத்தவர்; ’பக்கிங்ஹாம்’களையும் படைத்தார்!

டிரைடன்.

இருவகை நல்லார்கள் இருக்கிறார்கள் என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு - நம்மைக் காப்பதற்கென்றே பிறந்தவர் ஒரு சாரார், நம் துன்பங்களை உணரப் பிறந்தவர் மறு சாரார்!

ஒரு பெரியார்.

செல்வம் குவிய மனிதர் சிதறுறுங்கால்
தொல்லை பெருகும், சூழ்உலகு கேடடையும்!
மன்னர் இளங்கோக்கள் வாழிலென், வீழிலென்?
உன்னும் நொடியில் அவர் வாராரோ போகாரோ?
ஆயின் ஒருநாட்டின் உயிர்போன்ற வேளாளர்
மாயின் மறித்துப் பிறப்புறுதல் அரிதரிதே.

(பாழ்பட்ட சிற்றூர்) கோல்டுஸ்மித்.

இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர்.

இளங்கோவடிகள்.

ஒருவர் தம் வகுப்பைப் பற்றிப் பெருமை கொண்டால், அவர் அதற்குரியவரல்லர்; அதனில் தாழ்ந்தவர் என்பதற்குச் சான்று வேறு வேண்டியதில்லை.

ஸ்டானிஸ்லாஸ்.

விடுதலை

விடுதலை என்பது ஓர் எதிர்மறைப் பண்பன்று; உருப்படி யான; நுகரத்தக்க, ஒரு மெய்ப்பண்பு ஆகும்.

கார்ஃபீல்டு.

விடுதலையினால் பொறுப்பு ஏற்படுகிறது. பெரும்பாலான மனிதர் இதனால்தான் அது வகையில் அச்சமடைகின்றனர்.

பெர்னார்டு ஷா.

விடுதலை நம் உடைமை ஆக வேண்டுமானால், அது கட்டுப் படுத்தப்பட வேண்டும், ஆயினும் இக் கட்டுப்பாட்டைச் சமூகம் எவ்வளவு கூடுதல் சகித்துக் கொள்ளும் என்பது அல்ல, எவ்வளவு குறைந்த அளவு சகித்துக்கொள்ளும் என்பதே ஒவ்வொரு அறிவுடை யோர் குழுவும் இடைவிடாது விழிப்புடன் நுணுகிக் கவனித்து வரவேண்டிய செய்தி ஆகும்.

எட்மண்ட் பர்க்.

தத்தம் விடுதலைபற்றி எல்லாரும் கருத்தொன்று பட்டேயி ருக்கிறோம். அது எவ்வளவு கிடைத்தாலும், அவ்வளவுக்கு நமக்கு மகிழ்ச்சிதான். ஆனால் பிறருக்கு எவ்வளவு விடுதலை என்பதைத் தான் ஒத்துக் கொள்வது அரிதாயிருக்கிறது. ஏனெனில், நமக்கு எவ்வளவு கூடுதல் கிடைக்கிறதோ, அந்த அளவு அதுபிறருக்குக் குறைகிறது.

டாக்டர் ஜான்ஸன்.

நம் விடுதலையை நாம் நுகர்வது நாட்டின் ஆட்சித் துறையில் மட்டுமன்று. நாள் முறை வாழ்வில் ஒருவர்க்கொருவர் எப்போதும் அதை வழங்குகிறோம். அவரவர் மனம்போல் நடக்க விடுகிறோமே யன்றி, நாம் அதில் தலையிட்டுக் கண்டனம் செய்வதில்லை. இது ஏனெனில், அங்ஙனம் கண்டனம் செய்வது (சட்டப்படி) தண்டனை யாகாதானாலும், அதனால் அவர்கட்கு வருத்தம் உண்டாகும்.

பெரிக்ளிஸ்.

மனிதன் விடுதலை யுரிமையுடனேயே பிறக்கிறான். ஆனால் எங்குமே அவன் தளைப்பட்டிருக்கிறான்.

ரூசோ.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

திருவள்ளுவர்.

சுதந்தர நாட்டில் கூக்குரல் மிகுதி; ஆனால் துன்பம் குறைவு. வல்லாட்சி நடைபெறினும் நாட்டில் குறையிரத்தல் என்பதே கிடையாது. ஆனால் மக்கள் மனக்குறை மிகவும் பெரிது.

கார்னாட்.

பிறர் விடுதலை மறுப்பவர்கள் தாமும் அதற்கு உரிய வராகார். தெய்வ நேர்மையின்கீழ் அவர்கள் நெடுநாள் அதனை நுகரவும் மாட்டார்.

ஆபிரகாம் லிங்கன்.

விடுதலையை நன்கு பயன்படுத்தும் தகுதி வரும்வரை, எவரும் அதற்கு உரியர் ஆகார் என்பது ஒரு மறுக்க முடியாத உண்மையென்று கொண்டு பல அரசியல் அறிஞர்கள் பசப்புவ துண்டு. நீந்தக் கற்றபின் அன்றி எவரும் நீரில் இறங்கக் கூடாதென்று பேசிய பழைய கதையில் வரும் படித்த முட்டாள் கூற்றையே இது நினைவூட்ட வல்லது.

மக்காலே.

நமக்கு நலமெனத் தோன்றுவதை நாம் விரும்பும் முறையிலேயே நம்மைச் செய்யவிடும் உரிமை தருவதே விடுதலை. அதே உரிமையை நாம் பிறருக்கு மறுக்காமலும், அவர்கள் அதைப் பெறுவதை மறுக்காமலும் இருக்கும்வரை அது உண்மையான விடுதலை ஆகும்.

ஜான் ஸ்டூவர்ட் மில்.

வெறும் அரசியல் விடுதலை எவ்வளவு இருந்தாலும் ஏழ்மையும் பசியும் உடைய மக்களுக்கு அதனால் மன நிறைவு ஏற்படாது.

மார்ஷல் லெனின்

வெல்வெட்டுப் பட்டு மெத்தையில் பிறருடன் இடர்ப் பட்டு அமர்வதினும், எனக்கெனத் தனி உரிமையுடைய ஒரு பூசணிக்காய் மீது உட்காருவதையே நான் பெரிதும் விரும்புவேன்.

தோரோ.

தனி மனிதன் உடலுக்கு உடல்நலம் எப்படியோ, அப்படியே நாட்டு நலனுக்கு உகந்தது விடுதலை. உடல் நலமின்றி மனிதனால் இன்பங்களை நுகர முடியாது; விடுதலையின்றி நாட்டு மக்களும் இன்ப வாழ்வினைப் பெற முடியாது.

பாலிங்புரோக்.

விடுதலையே, ஆம், விடுதலையே வேண்டுவது என் சிறை ஒரு பொன்னுலகாயிருந்தால் கூட, அதன் பொன்மதிலைத் தாவிக் கடப்பதற்கே நான் துடிதுடிப்பேன்.

டிரைடன்.

வேறு எந்த விடுதலையும் எனக்கு வேண்டாம். அறிவை அறிய, ஆராய, நம்புவதை நம்ப, அகச்சான்றுக்கேற்ப இவற்றைக் கூற, இவற்றுக்கான விடுதலையே எனக்கு வேண்டும்.

மில்ட்டன்.

உடல் நலம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

தமிழ்ப் பழமொழி.

வாழ்க்கை இன்பங்களனைத்தின் உயிர் நிலையாவது உடல் நலமே; அஃது இல்லாதவிடத்து அவை சுவையற்றவை; உயிரற் றவை என்று கூடக் கூறலாம்.

ஸர் வில்லியம் டெம்பிள்.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

திருமூலர்.

ஒரு நாட்டு மக்களின் உடல்நலமே அம்மக்கள் நல்வாழ் வுக்கும் அடிப்படை; அவர்கள் ஆற்றலால் வரும் நாட்டின் ஆற்றலுக்கும் அடிப்படை அதுவே.

பெஞ்ஜமின் டிஸ்ரேலி.

உன் உடல்நலத்தில் அக்கறை கொள்; அதை நீ பெற்றால், உன் நன்மனச் சான்றுக்கு அடுத்தபடி அது வகையிலேயே நீ இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டவனாவாய். ஏனெனில், மனிதர் பெறும் பேறுகளுள் இரண்டாவது பேறாகக் கொள்ளத் தக்கது அதுவே. (முதலதைப் போலவே) பணத்தால் பெற முடியாத பேறு அது.

ஜஸாக் வால்ட்டன்.

உடல்நல முடையவன் உள்ளத்தில் நல்ல அவர்களை உடையவன்; உள்ளத்தில் நல் அவா உள்ளவனுக்கு உள்ள தல்லாதது எதுவுமில்லை.

அராபிப் பழமொழி.

மனம் நலத்தின் ஆகும் மறுமை.

திருவள்ளுவர்.

ஒரு நாட்டு வாழ்வின் போக்கு அடிக்கடி அதன் முதல மைச்சரின் உணவுச் செரிமானம் சரியாயிருக்கிறதா, அல்லதா என்பதையே பொறுத்ததாயிருக்கிறது!

வால்ட்டேர்.

உடல்நலம் உடல் நிலையைச் சார்ந்ததன்று, மன நிலையைச் சார்ந்தது.

மேரி பேக்கர் எடி.

தன்னுடன் விருந்துண்ணத் தூண்டும்படி அவன் தன் விருந்துணவு வகைகளின் பட்டியலை என்னிடம் காட்டினான். நான் அதனை ஒருபுறம் ஒதுக்கி வைத்து, “உம் உண்டிப் பட்டியல் எனக்குத் தேவையில்லை. உடனுண் போர் பட்டியலைப் பார்த்துத்தான் நான் வர இணங்கக்கூடும்”, என்றேன்.

ஸ்விஃப்ட்.

நடிகர் எட்மண்ட்கீன் தம் நடிப்புக்கேற்ற உணவே உண்டு நடிப்பாராம். கொடுங்கோலனாக நடிக்குமுன் பன்றிக்கறியும், கொலையாளியாக நடிப்பதற்கு முன் பச்சை மாட்டுக் கறியும், காதலனாக நடிப்பதற்கு முன் பதம் செய்த ஆட்டுக் கறியும் உண்பாராம்!

ஸிட்னி ஸ்மித்.

உன் மன நிறைவுக்காக உண்; பிறர் மன நிறைவுக்காக உடு.

ஃவிராங்க்லின்.

ஆரணங்குகளல்ல ஆடைகளை அணிவது; ஆடைகளே ஆரணங்குகளை அணிந்து கொள்கின்றன.

எச். எல்மெங் கென்.

பெண்டிர் தூக்குமேடைக்குச் செல்ல நேர்ந்தால், அப்போது கூட ஆடை சிங்காரித்துக்கொண்டு தூக்கு மேடை செல்வதற்காகச் சிறிது நேர ஓய்வு கேட்பர்.

கிராம்ஃவோர்ட்.

உழைப்பும் ஓய்வும்

உழைப்பே நம் குடிக்கும் வகுப்பின் கூற்றாயமைந்துள்ளது. (குடியல்ல நம் உழைப்பு, வகுப்பின் கூற்றுவன்).

ஆஸ்கார் ஒயில்டு.

இன்றியமையா முட்டுப்பாடே புதுமைக் கண்டுபிடிப்பு களின் தாய் என்று நாம் கூறுகிறோம். ஆனால் ஓய்வே சிந்தனை, கலை ஆகியவற்றின் தாய்.

பெருந்தகை ஆல்ஃவிரடு ஸிம்மர்ன்.

கற்றறிந்தவர் அறிவு அவரவர்களுக்குக் கிட்டும் ஓய்வு வாய்ப்பின் பயனே.

எக்ளிஸியாஸ்டிக்கஸ்.

ஓய்வே மெய் விளக்கத்தின் தாய்.

தாமஸ் ஹாக்ஸ்.

உழைப்பாளிக்கு உழைப்பால் ஏற்படும் வலுத்தேய்வு குறைவுகளுக்குத் தக்க ஓய்வு கட்டாயம் தரப்பட வேண்டும்.

போப்லியோ.

உழைப்பின் நோக்கம் ஓய்வு.

அரிஸ்டாட்டில்.

தொழிலுடையோருக்குப் போதிய ஓய்வு, ஓய்வுடையோ ருக்குப் போதிய தொழில், இவை இருந்தால் உலகத்தின் குறைகள் குறைவுறும்.

திருமதி திரெல்.

உழைப்பிற்கினிய சுவையூட்டுவது ஓய்வு.

புளூட்டார்க்.

ஓய்வுட னுழைப்பே நீடித்து உழைக்கும்.

ஓவிட்.

மருத்துவர்

திருவாளர் உணவு, திருவாளர் ஓய்வு, திருவாளர் மகிழ்ச்சி ஆகிய மூவருமே தலைசிறந்த பண்புடைய மருத்துவர் ஆவர்.

ஸிட்னி ஸ்மித்.

நல்ல மருத்துவர் கழுகின் கட்புலனும், அரிமாவின் மன உரமும் ஒரு நங்கையின் மென்கரமும் உடையவராயிருத்தல் வேண்டும்.

ஸர்ஃவிலிங் சிட்னி.

மருத்துவன் குணப்படுத்துகிறான்; இயற்கை குணம் காண்கிறது.

அரிஸ்டாட்டில்.

இயற்கை, காலம், பொறுமை இம்மூன்றும் மூன்று தலை சிறந்த மருத்துவர் என்னலாம்.

எச். ஜி. போன்.

ஒரு நாள் ஒரு பழம் உண்க; ஒரு நாளும் மருத்துவரை நாட வேண்டி வராது.

ஆங்கிலப் பழமொழி.

மருத்துவர் செய்யும் நன்மையைவிட இயற்கை செய்யும் நன்மை மிகுதி.

ஆலிவெர் கிராம்வெல்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

திருவள்ளுவர்.

மருத்துவனின் மிகச் சிறந்த அறிவு ஊகமே. பெரும்பாலாக அவர்கள் கருத்துக்கள் போலிக் கருத்துக்கள். அவர்கள் வெற்றி, நோயாளியின் விருப்பங்களையறிந்து அவர்கள் நடப்பதைப் பொறுத்ததே. இதனால் அவர்கட்கு ஆதாயமும் உண்டாகிறது.

ஸர் ஜான் பிராம்ப்டன்.

வழக்கறிஞர்களைப்போல மருத்துவரும் மாறுபட்ட கருத்து கொள்ளுவதுண்டு. வழக்கறிஞர் மாறுபாடுகளில் தீர்ப்புக் கூறுபவர் மன்ற நடுவர். ஆனால் மருத்துவர் மாறு பாட்டிடையே யார் கூறுவது! தவறு என்பதைக் காட்டுபவன் நோயாளியின் சவப்பெட்டி அமைப்பவனே!

ஜேம்ஸ் வாலர்.

மருத்துவரும் அரசியலறிஞரும் ஒருவகையில் ஒப்பாவர். உடல் அல்லது அரசியலின் அமைதியை அவர்களுள் ஒரு சாரார் காப்பர்; மற்றொரு சாரார் குலைப்பர்.

ஒரு பெரியார்.

(அடிக்கடி) நோயைவிட மருந்து கொடிதாயிருப்பதுண்டு.

போமண்ட் ஃவ்ளெச்சர்.

உலகிலுள்ள மருத்துவரின் மருந்துகளத்தனையையும் கடலகத்தில் போட்டமிழ்த்திவிட்டால் அது மனித உலகுக்கு நன்மையா யிருக்கும்; மீன்களின் உலகிற்கு மட்டுமே அது தீமை பயக்கக் கூடும்!

ஹால்ம்ஸ்.

மருத்துவர் என்பவர் தமக்குத் தெரியாத மருந்துகளை, தமக்குச் சிறிதளவும் தெரியவராத நோய்களைத் தீர்க்கும் படி, தமக்கு எவ்வகையிலும் அக்கறையற்ற மனிதர்களுக்குக் கொடுப்பவரே ஆவர்.

வால்ட்டேர்.

மருத்துவர் ஒவ்வாரென்னில் மன்னி உரைப்பார் யாரே?கருத்துற ஆயும்யாங்கள் மாறுறின் கருத்தும் என்னாம்?

கவிஞர் போப்.

உரையாடல்

இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

திருவள்ளுவர்.

நற்செயல்கள் மூலம் பிறரை நண்பர்களாக்க முயல்வதை விட, வன்சொற்கள் மூலம் அவர்களைப் பகைவராக்கமா லிருப்பது எளிது.

பர்ட்டன் காலின்ஸ்.

நல்ல தோழமை, நல்ல உரையாடல், இவைபிரண்டுமே நல்லொழுக்க வாழ்வின் நாடி நரம்புகள்.

ஜஸாக் வால்ட்டன்.

ஏடுகளிலிருந்து நான் கற்பதைவிட உரையாடல்களிலிருந்து கற்பதே மிகுதி.

ஸி. ஜே. பாக்ஸ்.

கற்றலிற் கேட்டலே நன்று.

முன்னுறை அரையனார்.

கற்றிலன் ஆயினும் கேட்க; அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை.

திருவள்ளுவர்.

நல்லுரையாடலின் கூறுகள் வாய்மை, நல்லுணர்வு, நகைத் திறம், சொல்திறம் ஆகிய நான்குமே.

ஸர். வில்லியம் டெம்பிள்.

நல்ல உரையாடலுக்கு நன்கு பேசும் திறன் எவ்வளவு சிறப்போ, அவ்வளவு நன்கு கவனித்துப் பொறுமையுடன் கேட்கும் திறனும் வேண்டும். அது போல் கவர்ச்சி தருவது பிறிதில்லை.

சீனப் பழமொழி.

உரையாடலின் மறைதிறவு மற்றவர் விருப்பம் பேசுவதா, கேட்பதா என்றறிவதே.

ஸ்டீல்.

பெருமையும் சிறுமையும்

பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்
சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்.

அதிவீரராம பாண்டியர்.

தம்மை என்றும் சிறியர் என்றெண்ணாதவர் ஒரு சிலர் உண்டு; இவர்களே முற்றிலும் சிறுமை உடைய ஒரு சிலரும் ஆவர்!

ஜி. கே. செஸ்டர்ட்டன்.

போலிப் பகட்டினால் இதுவரை யாரும் பெருமை பெற்ற தில்லை.

ஸாமுவேல் ஜான்ஸன்.

பெருத்த குற்றங்கள் பெரியாருக்கே உரிய சிறப்புரிமையாம்.

லாருஷ்ஃவூகோல்ட்.

சிலர் பெரியாராய்ப் பிறக்கின்றனர். சிலர் பெருமையை ஆக்கிக் கொள்கின்றனர்; இன்னும் சிலர்மீது பெருமை திணிக்கப் படுகிறது.

ஷேக்ஸ்பியர்.

பெரியார் பெரியாராயிருப்பதன் காரணம் நாம் அவர் களிடம் மண்டியிடுவதுதான். நாமும் நிமிர்ந்து நிற்போம்.

ஸ்டர்னர்.

தக்கார் தகவிலர் ஆதல் அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.

திருவள்ளுவர்.

நகைத்திறம்

நீண்ட ஆயுளுக்கு நன்மருந்தாக உடற்பயிற்சி, நகைப்பு ஆகிய இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். என்னளவில், நான் தயங்காமல் நகைப்பையே தேர்ந்தெடுத்துக் கொள்ளுவேன்.

ஸர் சார்லஸ் வில்ஸன்.

ஒரு நகைத் துணுக்கை விளக்கமுயன்றால் போதும், நகைத் திறத்தைக் கொலை செய்ய வேறு எதுவும் வேண்டாம்.

மாக்ஸ் ஈஸ்ட்மன்.

நகை, நகைத்திறம் பற்றி ஒருவன் ஒரு நூல் எழுத முனைவ தானால், அதனை ஒரு இலக்கிய நோயின் முன்னறி விப்பு என்றே கருதலாம். ஏனெனில் இம் முயற்சியே அதன் ஆசிரியரிடம் அவ்விரு திறங்களும் இல்லை என்பதற்கான அறிகுறி ஆகும்.

பெர்னார்டு ஷா.

ஒருவன் தன் நேரத்தின் ஒரு பகுதியை நகையாடுபவர் களுடன் கழித்தல் நலம்.

டாக்டர் ஜான்ஸன்.

நகைப்புத் திறம் மனிதனுக்கு மட்டுமே இருப்பது ஏன் என்பது எனக்கு நன்கு விளங்குகிறது - கடுந் துயருக்கு அவனே மிகுதி ஆளாவதால், நகைப்புத் திறனை அவன் கண்டுபிடிக்க வேண்டிய தாயிற்று. உயிரினங்களில் துயர் மிகுதியும் அவலமும் உடைய அவனே, மிகுதியான மகிழ்ச்சிக்கும் உரியவனாயிருப்பது பொருத்த மானதே.

நீட்ஷ்.

முறுவலித்தற்குரிய நேரம் வேறு; நகைத்தற்குரிய நேரம் வேறு. ஆனால் நகைப்புறத்திறத்தை நாம் மறந்து வருவதுடன் பல்லிளித் தலையே முறுவலிப்பாகக் கொண்டும் வருகிறோம் என்பது வருந்தத்தக்கது.

எச். கெம்பால் கூக்.

தன்னிடமில்லாத பண்புகளுக்கு ஓர் இழப்பீடாகவே மனித னுக்குப் புனைவாற்றல் தரப்பட்டுள்ளது. அக்குறை பாடுபற்றி அவனுக்கு ஆறுதல் அளிக்கவே நகைத்திறம் தரப்பட்டுள்ளது.

ஓர் அறிஞர்.

கீழ் மக்கள் எப்போதும் சிரிப்பர். முறுவலித்தல் செய்யார்; பண்பிற் பயின்ற உயர்வுடையோர் புன்முறுவல் பூத்தவராகவே இருப்பர். அவர்கள் சிரித்தல் அருமை.

செஸ்ட்டர்ஃபீல்டுப் பெருமகனார்.

வாழ்க்கைப் புயலில் நகைத்திறம் ஓர் அரிய தற்காப்பிடம் ஆகும். கூருணர்ச்சியுடைய ஒருவன் நகைத்திற மற்றவனாயிருந் தால், அவ்வுணர்ச்சிகளால் அவனடையும் துன்பம் மிகவும் பெரிது.

அறிஞர் பெர்னார்டு ஹார்ட்.

வசைத்திறம் வாய்ந்த கூரிய நகைத்திறம், கூர்மை மிக்க கத்தியைப் போன்றது. ஆனால் கூர்மை மிக்க கத்தியைப் போலவே அது தன்னைப் பயன்படுத்துவாரையும் வெட்ட வல்லது.

ஆரோ ஸ்மித்.

பொதுமக்கள் நகைத்திறத்தை இன்னும் மறந்துவிட வில்லை; அவர்கள் இன்னும் நமக்கு அதன் மறைதிறவைக் கற்பிக்கக்கூடும்.

ஆரோஸ்மித்.

இடுக்கண் வருங்கால் நகுக; அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்.

திருவள்ளுவர்.

நம்மைப் பித்துக்கொள்ளிகளாகாமல் தடுத்து வரும் நல்லாற்றல் நகைப்புத்திறனே.

ஹென்ரி பெர்க்ஸன்.

உருக்கமான கோயில் மேடைச் சொற்பொழிவொன்றைக் கேட்ட அனைவரும் கண்ணீர் வடித்தனர். ஒருவன் மட்டும் அசையாதிருந்தான். இது பற்றி அங்குள்ளார் அவனை வினவிய போது அவன் "ஐயா, நான் இவ்வூரல்ல’ என்று கூறினானாம். அவன் கண்ட கண்ணீருக்குரிய பண்பு நகைப்புக்கும் உண்டு. நகைப்பு எங்கும் இயற்கையாக எழுவதாக எவ்வளவு தோற்றினாலும், அது பரந்த ஓர் ஒப்புமைக் கூட்டுறவில், தோழமைத் தொடர்பு காரணமாக ஏற்படுவதேயாகும்.

ஹென்ரி பெர்க்ஸன்.

நகைப்பு கட்டாயமாக உனக்கு நலஞ் செய்வது. நகைத்த வுடன் உன் குருதிகளிலெங்கும் ஒரு மின்னோட்டம் போன்ற ஓட்டம் ஏற்படுகிறது. ஆற்றலடக்கி வைத்துள்ள கசியாக் குழல்களிலிருந்து ஒரு சக்தி வெடித்து நாடி நரம்புகள் எங்கும் பரவுகிறது. அது தொட்ட இடமெல்லாம் உயிர் தருகிறது.

கெரால்டு ஹெர்டு.

நகைக்க முடியாத மனிதன் துரோகம், சூழ்ச்சி, அழிமதி ஆகியவற்றுக்கே உரியவன். அவன் வாழ்நாள் முழுவதுமே ஒரே சூழ்ச்சியாக இருக்கும் என்று கூறினால் மிகையாகாது.

கார்லைல்.

நகைத்திறன் உரையாடலாகிய உணவுக்குச் சுவையூட்டும் உப்பு - அதுவே உணவாய் விடாது.

ஹாஸ்லிட்.

நகைமன் இயன்மாதணி; பலர்நாடும்
தகை; ஒரு நாவுரைச் சால்பு.

கவிஞர் போப்.

பெருநகையும் ஆன்ற பெரியார் உரையும்

ஒருதகையாம் ஒண்மைத் திறத்தே - சிறுதகையார்

தேறாச் சிறுநகை செப்பமறச் சிரழிக்கும்

மாறாப் பழிசூழும் மற்று.

ஷேக்ஸ்பியர்.

நகைச்சுவை மணிகள்

இந்நூலில் புதியனவும் நல்லவுமாக எவ்வளவோ உள்ளன வாம். ஆனால் அந்தோ, நல்லன எவையும் புதியன அல்ல; புதியன எவையும் நல்லன அல்ல!

லெஸ்ஸிங்.

சுவடிகளை இரவல் கொடுக்காதேயுங்கள்; அதனை எவரும் திருப்பிக் கொடுப்பது கிடையாது. என்னுடைய நூல் நிலையத்திலுள்ள நூல்கள் யாவுமே இரவலாகப் பிறர் கொடுத்தவைதான்!

அனதோல் ஃபிரான்சு.

மொழி

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

திருவள்ளுவர்.

எண்ணங்களின் உடையமைதி மொழி.

அறிஞர் ஜான்ஸன்.

மொழி கருத்துக்களைக் கொண்டுலாவும் ஊர்தி மட்டுமன்று; கருத்தாராய்ச்சித் தொழிலுக்கான ஓர் ஒப்பற்ற நல்ல கருவியுமாகும்.

சர் ஹம்ஃப்ரி டேவி.

மொழி மனித உள்ளத்தின் படைக்கலச்சாலை; அதில் பழம் புகழ்ச் சின்னங்களுடன் வருங்காலப் புகழுக்குரிய போர்க் கருவிகளும் வைக்கப் பெற்றுள்ளன.

காலரிட்ஜ்.

மெல்லிய இனிய மேருவ வருதகுந
இவை மொழியாம்.

சங்கப்புலவர் அம்மூவனார்.

ஒரு மனிதன் பண்பை நன்கு தெரிவிக்கும் கருவிகளிற் சிறந்தது மொழியே; ஒருவன் இயல்பை உணர வேண்டுமானால், அவனைப் பேச விடுக. நம் உள்ளத்தின் உள்கடந்த உட்பகுதி யிலிருந்து அது வெளிப்படுகிறது.

பென் ஜான்ஸன்.

மொழி, மாந்தர் போற்றுதலுக்குரிய ஒன்று. அது வாழ்க்கை யிலிருந்து எழுவது - வாழ்க்கையின் பேரிடர்கள், பெருமகிழ்வு களிடையே; அதன் தேவைகள், அதன் சோர்வுகள் ஆகியவற் றினிடையே அது மலர்கிறது. ஒவ்வொரு மொழியிலும் அதனைப் பேசும் மக்களினத்தின் உயிர்நிலைப் பண்புகள் அடங்கியுள்ளன.

இ. டப்ள்யூ. ஹால்ம்ஸ்.

ஒழுக்கம்

ஒழுக்கம் விழுப்பந் தரலான், ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

திருவள்ளுவர்.

சமய வகைகள் பல; ஏனெனில் அவை மனிதனால் ஆக்கப்பெற்றன. ஒழுக்கம் எங்கும் ஒரே நிலைப்பட்டது; ஏனெனில் அது கடவுளுக் குரியது.

வால்ட்டேர்.

ஒழுக்கத்தால் மட்டும் ஒருவன் சமயப் பற்றாளனாக முடியாதிருக் கலாம். ஆனால் ஒழுக்கமில்லாமல் ஒருவன் சமயப் பற்றாளனா யிருக்க முடியாது.

கலைமகன் வில்ஸன்.

மக்கள் எதில் ஈடுபட்டுப் பெருமை கொள்கிறார்களோ, அதுவே அவர்கள் கோட்பாடும், அவர்கள் ஒழுக்கமும் ஆகும்.

ஜே. மார்ட்டினோ.

அறிவுத்திறத்தில் கடைசி எண்ணமே தலைசிறந்த எண்ணம்; ஒழுக்கத்துறையிலோ முதல் எண்ணமே தலைசிறந்தது.

ராபர்ட் ஹால்.

சமயப்பற்றற்ற ஒழுக்கம் வேரில்லாமரம்; ஊற்றுக் கசிவில்லாத ஓர் ஓடை; அது மணல்மீதமைந்த மனை. மழையில்லாத போது அது வாழ்வதற்கெளிதாம். ஆனால் புயல் வந்தால் தங்காது.

பெர்னார்டு ஷா.

ஆழ்ந்த ஒழுக்க உணர்வில்லாவிட்டால், உயர்நடை ஒழுங்கு இருக்க முடியாது.

எமெர்ஸன்.

மெய்யறிவு

ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு.

திருவள்ளுவர்.

பொது அறிவெல்லை கடந்த நிலையே மெய்யறிவு.

காலரிட்ஜ்.

முனைத்த மெய்யறிவு என்று நாம் கூறுவது முந்திய தலைமுறைகளின் மெய்யறிவுத் தொகுதியின் புது விளைவே நம் மிகச் சிறந்த தற்காலச் செயல் முறைகள் முறிந்து பட்டமரத்தின் வேர்களில் தோன்றிய புது முனைகளே.

எச். டப்ள்யூ. பீச்சர்.

டெல்ஃபித் தெய்வ மொழியாளர், கிரேக்கரில் சிறந்த அறிவாளி என்று என்னையே குறிப்பிட்டது ஏன் தெரியுமா? தனக்கு ஒன்றுமே தெரியாது என்பதைத் தெரிந்தவன் கிரேக்கர்களுள் நான் ஒருவனே.

ஸாக்ரட்டீஸ்.

அறிவின் பிறப்பிடம் எது, அது எங்கேயுள்ளது, அது யாரால் இயக்கப்படுவது - இவற்றை அறிந்தவன் மெய்யறிஞன்.

ஏ. ஏ. ஹாட்ஜ்.

ஒவ்வொருவர் அறிவினும் உயரிய அறிவு ஒன்றுண்டு; அதுவே அனைவரின் அறிவு.

டாலிராண்ட்.

சொல் மிக அருகிய இடமே அறிவு மிகுந்த இடம்.

ஸாஃபக்ளிஸ்.

அறிவை அறிவது மெய்யறிவன்று; அறிவைச் சரிவரப் பயன்படுத்த அறிவதே மெய்யறிவு.

ஸ்பர்ஜியன்.

மெய்யறிவாளன் உண்மையான அறிவுலகில் ஒரு தொடக்க வகுப்புக் குழந்தை. அவன் இயற்கையின் புரியாப் எழுத்துக் களால் எழுதப் பெற்ற சுவடியைப் படிக்கிறான். அதற்கு விளக்கம் நாடுவதற்கான சொல்விளக்க நூலோ, எல்லையிலா ஊழிதான்.

கார்லைல்.

உடலுக்கு உடல்நலம் எப்படியோ அப்படியே மெய்யறிவு உளத்துக்கு.

ராஷ்ஃபூகால்டு.

நம் உண்மையான அறிவு நம்மை நாம் திருத்திக் கொள்ள உதவும்படி, நம் குற்றங் குறைபாடுகளை உணர்வதுதான், - திருந்தும் வகைதெரிவது அரிது; குற்றம் தெரிவதுகூடச் சிறப்பே.

அராபி நல்லுரைகள்.

கடவுள் பொன்னையும் அளித்துள்ளார், மெய்யறிவையும் அளித்துள்ளார். ஆனால் பொன்னைப்போலவே மெய்யறிவும் அளிக்கப் பெற்றுள்ளது. கடவுள் அளித்த பொன் களஞ்சியத்தி லில்லை, சுரங்கங்களினுள் கிடக்கின்றது.

அராபி நல்லுரைகள்.

இவ்வுலகு பற்றிய அறிவு மனிதருக்கு எங்குமிகுதியோ, அங்கு அவ்வுலக அறிவு குறைவு என்பதை நன்கு காணலாம்.

கிப்ஸன்.

“பொருளிலார்க்கு இவ்வுலக மில்லை; அருளிலார்க்
கவ்வுலக மில்லாகி யாங்கு”.

திருவள்ளுவர்.

அறிஞர் மனிதனை உணர்வது, குதிரைக்காரர் குதிரை காண்பது போன்றதே - செல்வம், மதிப்பு, பதவி ஆகியவை குதிரையின் சேணம், கடிவாளம் முதலியவையே.

ஸிஸீல்.

ஒரு தலைமுறையின் அறிவு மறு தலைமுறையின் மடமை.

ப்ர்ஸ்ட்லி.

அறிவின் ஒழுங்குகளை அறிந்தும் அவற்றை வாழ்க்கையில் வழங்காதவன், நன்கு உழுதும் விதையாதவன் போன்றவனே.

ஸாதி.

முழுநிறை அறிவு நாற்கூறுடையது. அவையே அறிவு அதாவது நேர்மையான செயல் செய்யும் ஒழுங்கு முறை; நேர்மை, அதாவது தனி வாழ்வு, பொது வாழ்வு இரண்டிலும் ஒப்ப நடக்கும் நிலை; வீரம், அதாவது இடர் கண்டு விலகாது ஏற்றல்; தன்னடக்கம், அதாவது அவாவை அடக்கி வழிப்படுத்தல்.

பிளேட்டோ.

மெய்யறிவர் உள்ளம் பளிங்கு போன்றது. அது வானகத்தின் ஒளியை ஏற்ற நமக்குத் தருகிறது.

ராஷ்ஃபூகால்டு.

அன்பு

அன்பு தானே கொடுக்கும், தன்னையே கொடுக்கும்; ஆனால் அதை விலைக்குப் பெற முடியாது.

லாங்ஃவெல்லோ.

அன்பிலார் எல்லாந் தமக்குரியர், அன்புடையார்
என்பு முரியர் பிறர்க்கு.

திருவள்ளுவர்.

நாம் எதில் அன்பு செலுத்துகிறோமோ, அதுவே நம்மை உருவாக்கி நம் பண்பாயமைகிறது.

கெதே.

அன்புக்கு அழிவு இல்லை; அன்புக்குரியவர் அதனை ஏற்கா விட்டால்கூட, அன்பு செய்பவரிடமே அது மீண்டு அவரைக் கனியச் செய்து தூய்மைப்படுத்தி உயர்வுறுத்தும்.

வாஷிங்டன் இர்விங்.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்.

திருமூலர்.

அன்பு கடவுளின் வடிவுரு; உயிரற்ற உருவன்று, உயிருடைய உரு; கடவுளியல்பின் நிறைநலப் பண்புகளின் உயிரியங்கும் வடிசாற்றின் சாயல் அது.

மார்ட்டின் லூதர்.

அன்பு செய்யும்வரை மனிதன் ஒழுக்கக் கேடுடையவனாக முடியாது.

சார்ல்ஸ் லாம்.

இவ்வுலகில் நாம் பெறும் பேரினத்தின் மணிமுடி ஒருவர்க் கொருவர் அன்பு காட்டுதலே.

மீன்ட்டல்.

கடவுள் மனிதனுக்கு மட்டும் கொடுத்துள்ள ஒரே அரும் பொருள் அன்பு. அது நெஞ்சுடன் நெஞ்சை, உள்ளத் துடன் உள்ளத்தை, உயிருடன் உயிரைப் பிணைக்கும் ஒரு வெள்ளித்தளை.

சர் வால்ட்டர் ஸ்காட்.

அன்பு என்றும் முன்பின் ஆய்ந்து தயங்குவதில்லை - அது வரையறையின்றிக் கொடுக்கிறது; கருத்தற்ற ஊதாரி இளைஞன் போலக் கொடுக்கிறது. கொடுத்தபின அது துடிக்கிறது - மிகுதி செய்யத் தவறிவிட்டோமோ என்று துடிக்கிறது.

லூனா மோர்.

அன்பிற்கு முண்டே அடைக்கும்தாழ்; ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

திருவள்ளுவர்.

அன்பு உலகைக் காண்பது கண்கொண்டல்ல, உளங் கொண்டு.

ஷேக்ஸ்பியர்.

விரும்பி அன்பு செய்தல் நன்று; விரும்பாது அது செய்தல் அதனினும் நனிநன்று.

ஷேக்ஸ்பியர்.

வாழ்வின் மிகச் சிறந்த இன்பம் நாம் நேசிக்கப்படுகிறோம் என்பது - நம் பண்புகளுக்காக நேசிக்கப் படுகிறோம் என்பதை விட, பண்புகள் இல்லாதவிடத்தும் நேசிக்கப்படுகிறோம் என்பதே.

விக்டர் ஹியூகோ.

ஆடவர் அன்பு செய்வதைவிட, பெண்டிர் மிகுதி அன்பு காட்டுகிறார்கள் என்று கூற முடியுமோ, முடியாதோ - ஆடவரினும் அவர்கள் நல்லன்பு காட்டுகிறார்கள் என்று கட்டாயம் கூற முடியும்.

துபே.

கடவுள்

பொருள்களின் இயல்பில் மனிதன் உள்ளத்தால், அறிவால், ஆற்றலால் முற்ற உணரமுடியாத ஏதோ ஒன்று இருக்கிறது. மனிதனால்கூட அறியப்பட முடியாத இதனை ஆக்கும் பொருள் மனிதனியல்பு கடந்ததாகவே இருக்க வேண்டும். இது கடவுளை யன்றி வேறு யாதாகத்தானிருக்கக் கூடும்?

ஸிஸரோ.

ஆங்கில (ஜெர்மானிய) இனத்தவர் கடவுளைக் குறிக்க வழங்கிய சொல்லிலேயே (ழுடின) ஒருதனி அழகு இருக்கிறது - நன்மை அவர் பண்புகளின் சிறப்புக்கூறு. ஆதலால் அவ்வடிப்படை யிலேயே அப்பெயர் அமைந்தது.

டர்னர்.

எல்லா இடமும் மையம், ஆனால் சுற்றுவட்டத்தை எங்கும் காணோம்! அவ்வெல்லையிலா மாபெரு வட்டமே கடவுள்.

எம்பிடாக்ளிஸ்.

கடவுள் என்பதற்குரிய எகிப்தியரின் சொற்குறி ஓவிய எழுத்துமுறை வடிவம் செங்கோலில் பொறித்த ஒரு கண் - எல்லாம் கண்டு, எல்லாம் இயக்குபவர் அவர் என்பதை அது குறிக்கிறது.

பார்க்கர்.

கடவுளைப்பற்றிய தவறான கருத்துக் கொள்பவரை விட, கடவுளைப் பற்றிக் கருதாதவரே நல்லவர். பிந்தியவர் நம்பாதவர் மட்டுமே, முந்தியவர் அவரை அவமதிப்பவர்.

புளூட்டார்க்.

உலகின் பருமையிலும் நுண்மையிலும் நாம் ஒருங்கே கடவுளின் அடிச்சுடுகளைக் காணலாம். இயற்கையின் எல்லை யளவில் அவர் திருத்தவிசின் திருச்சுழல்விலும், மின்மினியின் நுண்சிறகொளியிலும் அதனைக் கண்டு களிக்கலாம்

வில்லியம் கூப்பர்.

கடவுள் இல்லை என்று கருதுபவர் (உலகை உணர) வேறு ஒரு கடவுளைப் புனைந்துருவாக்கியே ஆக வேண்டும்.

வால்டேர்.

கடவுள் பெரியர், ஆகவே மக்கள் அவரை நாடுவர்; அவர் நல்லவர், ஆகவே அவரைக் காண்பர்.

ஜான் ஜே.

கடவுள் விருப்பத்திற்குரிய மனிதர் இருவகையினர் - கடவுளை அறிந்தவர், இவர்கள் அவர் வழிநின்று செயலாற்றுவர். கடவுளை அறியாதவர், இவர்கள் அவரை நாடுவர்.

பேனின்.

வாய்மை அவர் உடல்; ஒளி அவரது நிழல்.

பிளேட்டோ.

“கடவுளுக்கு நான் அஞ்சுகிறேன்; கடவுளுக்கு அடுத்தபடி, கடவுளுக்கு அஞ்சாதவனைக் கண்டு அஞ்சுகிறேன்!”

ஸாதி.

சொற்பதம் கடந்த அப்பன்
தாளதா மரைகள் ஏத்தித்
தடமலர் புனைந்து நையும்,
ஆளலா தவரைக் கண்டால்
அம்ம நாம் அஞ்சுமாறே.

மாணிக்கவாசகர்.

பெண்மை

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப.

திருவள்ளுவர்.

ஒரு சாராருக்காக மற்றொரு சாராராகவே ஆண், பெண் இருபாலாரும் அமைந்துள்ளனர். அறிவமைதியுடனும், அன்பமைதியுடனும் இரு திறத்தினரும் ஒத்து வாழ்வதன் மூலமே வாழ்க்கை நலமும் வாழ்க்கைக் கடமைகளும் நிறைவெய்தி, வாழ்க்கைப் பயனாகிய இன்பம் கிட்டும்.

டப்ள்யூ. ஹால்.

இருபாலாருள் ஒரு பாலாரை அவமதிக்கும் அல்லது புறக்கணிக்கும் எவரும், மனிதப் பண்பிற் குறைபட்டவராகவே இருக்க முடியும். “இணைத்தது இறைவன்; மனிதன் இணை பிரிக்கா திருப்பானாக,” (விலிலிய நூல்)

ஸி. ஸிம்மன்ஸ்.

இருபாலாருள் எப்பாலரிடையே என்ன சீர்திருத்தம் நிகழினும், அதனை மறுபாலரிடம் காணாதிருக்க முடியாது. ஏனெனில், ஆண்பாலார் திறங்களைப் பெண்பாலாரும், பெண்பாலார் திறங்களை ஆண்பாலாரும் நிழற்படுத்திக் காட்டும் நிலைக் கண்ணாடிகள் போன்றவரே யாவர். ஒரு திறத்தவர் செப்பம் மறு திறத்தவர் செப்பத்தின் அளவுக்கொத்தாகவே இருக்கும்.

கால்ட்டன்.

சிந்தனைக்கு அவன்; வீரத்துக்கு அவன். மெல்லியல்புக்கு அவள்; இனிமைக்கும், நயத்துக்கும் அவள். கடவுளுக்காக அவன்; அவனிடமமைந்த கடவுள் தன்மைக்காக அவள்.

மில்ட்டன்.

கால மாறுபாடுகளிடையே மாறுபடாப் பொருள் ஒன்று உண்டு. அதுவே பெண்மை நலம் உடைய பெண்.

ஜாபினா ராஃஸ்டன்.

மனிதர் நிலவுலகு போன்றவர்; நாம் (மாதர்) திங்களுலகு போன்றவர். (திங்களைப்போல்) நம் ஒரு புறத்தையே நாம் அவர்களுக்குக் காட்டுகிறோம். ஆகவே, மறுபுறம் ஒன்று உண்டு என்பதை அவர்கள் அறிவதில்லை.

ஆலிவ் ஷரைனர்.

பெண்ணாயிருந்து செயலாற்றும் செயல் மிகத் தொல்லை தருவதுதான்! அவர்கள் கையாளவேண்டியதாயிருக்கும் பொருள் மனிதனாயிற்றே!

ஜோஸஃவ் கான்ராட்.

வனப்பும் பயிர்ப்பும் வாய்ந்த மாது! கடவுளின் படைப்புக் கலைத்திறத்துக்கு ஒரு முழுநிறை வெற்றிச் சின்னம்; பொன்னுலகக் கற்பனைக்கு ஒரு புகழ்ச்சான்று; உலகின் அருள்விளையாட்டுப் புதுமைக்கு ஒரு எடுத்துக் காட்டு; உலகின் புதுமைப்புதிர்களுள் ஒன்று!

ஹெர்மீஸ்.

கடவுளுக்கு நாம் செலுத்த வேண்டிய கடப்பாட்டுக்கு அடுத்த கடப்பாடு பெண்மைக்கு நாம் செலுத்த வேண்டிய கடப்பாடே - மனித வாழ்க்கையை நமக்குத் தந்தவர்களும், அதை மணம்பெறச் செய்பவர்களும் அவர்களே.

போளி.

சட்டங்களைவிடப் பெண்டிர் கண்கள் சக்தி வாய்ந் தவை; தண்டனையைவிட அவர்கள் கண்பனிப்பு திருத்தும் ஆற்றலு டையது; நம் வாதங்களைவிட அவர்கள் பார்வை தெளிவு தருபவை.

ஸெவில்.

அழகு பெண்களைத் தற்பெருமைகொள்ளச்செய்கிறது. பண்புநலம் அவர்களுக்குப் பாராட்டை உண்டு பண்ணுகிறது. ஆனால், அவர்கள் பயிர்ப்பு அவர்களைத் தெய்வங் களாக்குகிறது.

ஷேக்ஸ்பியர்.

பெண்மையே! நீ பொது வாழ்வின் இன்பப் போதினிலே கொடிபோல் நுடங்கித் தள்ளாடும் மென்மையுடையாய்! மாலை நிழல்போல் மாறுகின்றாய்! ஆனால், பொறுக்க வொண்ணாத் துயரத்தின் பளுவில் எங்கள் புருவங்கள் தெறிக்கின்ற காலையில், உன்போன்று உறுதியும், ஆறுதலும் தருபவர் யார்?

வால்ட்டர்ஸ்காட்.

துயருறுபவன் தன் துயரால் பெறும் நோவினும் மிகுதியாக, அவன் துயர்கண்டு துயருறும் ஆள் ஒருவர் உண்டு; மகிழ்ச்சியிடையே மகிழ்பவன் மகிழ்ச்சியினும் மிகுதியாக, மகிழ்ச்சி பெறுபவர் ஒருவர் உண்டு… அன்பு, கனிவு, உளமார்ந்த பற்று ஆகியவற்றில் தன் தனித்தன்மையிழந்த அவ்வொருவர் - பெண்.

வாஷிங்டன் இர்விங்.

பற்றுறுதியும் பண்புநிறைவும் உடைய பெண் எல்லா வகைகளிலும் ஒரு பண்பை நல்யாழ் போன்றவளே - ஆண்டு செல்லுந் தோறும் அதன் இசையிழைவு இனிமையும் நுண்மையும் மிகு மன்றிக் குறைபடாது.

ஓ. டப்ள்யூ. ஹாம்ஸ்.

புதுமலர்ச்சி யறிஞரைக் கண்டுணரும் கண்கள் பெண்டிர் கண்களே; புத்தறிவுக்குச் செவி சாய்ப்பவரும் பெண்டிரே. ஆனால், அதே பெண்டிர் வெற்றுரைச் சோம்பேறிகளிடையே வெற்றுரை யாடிக் கொண்டே, அவற்றிடையே பயனுரைகூறும் நன்மாந் தரையும் பிரித்துணர்வார்.

ஸி. எச். டால்.

வனப்புடைய பெண் ஒரு மணி. நற்பண்பு வாய்ந்த பெண் ஒரு மணிக்குவை.

ஸாதி.

பெண்ணின் பெருமை புறஉலகறியாத தன்மையினது. அவள் அவாவும் புகழ், அவள் கணவன் மதிப்புக்குள் அடங்கிவிடுகிறது. அவள் இன்பமே அவள் குடும்பத்தின் நல்வாழ்வுக்குள் அடங்கிக் கிடக்கிறது.

ரூஸோ.

தெய்வங்களுக்கும் பெண்களுக்கும் உரிய பொதுப் பண்பு; இது துன்புறுவோர் பக்கமே அவர்கள் ஒத்துணர்வு செல்லும்.

பால்ஸக்.

வானின் கவிதைமலர்கள் வான்மீன்கள்; நிலவுலகின் கவிதை மலர்கள் பெண்மணிகள். ஒத்தியல் இசையுடன் ஒளிதந்து (வான் மீன்கள் வான வெளியிலியங்கும் நிலவுலகை இயக்குவது போலவே) மாதர் நிலவுகில் மனித வாழ்வை உருவாக்கி இயக்குகின்றனர்.

ஹார்கிரேவ்.

மறைநூலை ஓதிப் பிறருக்கு உரைக்கும் வேலை பெண் டிருக்குக் கூடாதென்று தடை செய்யப்பட்டிருப்பது ஏன் தெரியுமா? அவர்கள் வாதமின்றி உலகை அதன் வயப்படுத்தி, வருந்தாது எவரையும் திருத்தி விடுவரே!

நியூட்டன்.

தென்றலின் ஒவ்வோரசைவிலும் நுடங்கி, புயலில் மடியாத நாணல் போன்றவள் பெண்.

வாட்லி.

பெண்டிரே நம்மை இயக்குகின்றனர்; எனவே, அவர் களையே முழு நிறைபண்புடையவராக்குக. அவர்கள் திருந்துந் தோறும், நாம் தாமாகவே திருந்துவோம். பெண்மனம் அறிவு பெறுவதைப் பொறுத்ததே மனிதன் அறிவுவளர்ச்சி.

ஷெரிடன்.

பெண்ணின் கைப்பாவை மனிதன்; சைத்தானின் கைப்பாவை பெண்.

விக்டர் ஹியூகோ.

மிகச் சிறந்த பெண்ணிடம் ஆடவர் வீரத்தின் கூறு உண்டு. மிகச் சிறந்த ஆணிடம் பெண்டிர் கலைநயத்தின் கூறு உண்டு.

செல்வி மலாக்.

இன்பவாழ்வு நிறைவுற்ற நாடு, இன்பவாழ்வு நிறைவுடைய பெண் - இருவர்பற்றியும் வரலாறு வாயாடாது.

ஜார்ஜ் எலியட்.

நற்குண நங்கையின் நெஞ்சை மட்டும் மனிதன் திறந்து பார்க்க முடியுமானால், அதில் எத்தனை அன்புக் கனிவுகளின் செறிவை, எத்தனை தன் மறுப்புக்களின் புதைந்த பொதிவுகளை, எத்தனை மாறாட்டத்துக் குள்ளான தூய நற்பண்புகளை காண முடியும்!

ரிஷிட்டெர்.

நூல் நிலையம்

என் நூல் நிலையமே எனக்குப் போதிய பண்ணைப் பெருஞ் செல்வம்.

ஷேக்ஸ்பியர்.

ஒரு நூல் நிலையத்தில் உனக்குக் கிடைப்பது என்ன என்பதை நினைத்துப்பார்! ஆயிரக்கணக்கான ஆண்டுகளிடையே உலகில் பல நாடுகளிலும் வாழ்ந்தவருள் தலைசிறந்த அறிஞர், சொற்செல்வர், கலைப்பண்பாளர் தம் கல்வியின் பயனான, அறிவின் பயனான தலைசிறந்த கருத்துக்களைத் தலை சிறந்த முறையிலும், ஒழுங்கிலும் தொகுத்த தொகுப்புக்களின் சூழல், உன்னுடன் உறவாடக் காத்திருக்கிறது… தம் உயிர்த் தோழனுக்குக் கூட அவர்கள் முற்றிலும் மனந்திறந்து உரைத் திருக்க மாட்டாத உயர் அருங்கருத்துக்கள் தெள்ளத்தெளிய வரையப்பட்டு, ஏதோ ஓர் ஊழியில் வரும் உன்னிடம் தரப்பட்டுள்ளன!

எமெர்ஸன்.

இக் காலத்தின் உண்மைப் பல்கலைக்கழகம், நூல்களின் தொகுதிதான்.

கார்லைல்.

படிப்படியாக நான் தேர்ந்து திரட்டிய என் தனிப்பட்ட நூல் நிலையமே, என் அறிவுப் பணிகட்கெல்லாம் மூல அடிப்படை; அத்துடன் என் தாயகத்திலும், புறத்தும் என் வாழ்க்கையில் ஒருங்கே இன்பமும், ஆறுதலும் அளித் துள்ளவையும் அவையே.

கிப்பன்.

நூல்நிலையங்கள்… பண்டை உலகின் சின்னங்கள்; இக்கால உலகின் புகழ்க் கொடிகள்!

லாங்ஃவெல்லோ.

சுவடிகளில்லாத வீடு பலகணியில்லா வீடு போன்றது. சுவடிகள் வாங்க ஆற்றலுடைய எவரும் சுவடிகளில்லாத வீட்டில் பிள்ளைகளை வளர விடுதல் தகாது. தம் குடும்பத் திற்கு அவர்கள் இதனினும் பெரிய தீங்கு தேட வேண்டிய தில்லை. பிள்ளைகள் இயற்கையாகவே சுவடிகளை விரும்பு கின்றனர் - சுவடியார்வம் வாசிப்பார்வமாக, அறிவார்வமாக வளர்கிறது. அவர்களைத் தீமைகளினின்றும் காக்கும் சாவிகளில் இதனினும் சிறந்தது இல்லை.

ஹோரேஸ் மான்.

ஒருவருக்குப் பெருந்துணை தரும் நூல்கள் அவரைச் சிந்திக்கத் தூண்டும் நூல்களே.

தியோடோர்பார்க்கர்.

நீ சிந்திப்பதைச் சிந்திக்கும் நூலன்று, உன்னைச் சிந்திக்க வைக்கும் நூலே வாசிக்கத்தக்கது.

மக்காஷ்.

நட்பு

புதிய நண்பர்களைப் பெற முடியாதபோதுதான் மனிதன் வாழ்வின் கலைப்பண்பை இழந்தவனாகிறான்.

எஸ். வீர். மீச்செல்.

இளமையில் நண்பரிருப்பது நன்று; முதுமையில் இன்னும் மிக நன்று. இளமையில் எல்லா வளமும் போல, நட்பு வளமும் எளிது. ஆனால் நண்பர் இருப்பதன் அருமையை முதுமையிலேயே காணலாம்.

எட்வர்டு கிரிக்.

நடுநிலை நேர்மையும் ஒத்துணர்வும் உடைய நண்பரைப் பெற்றவர்கள், தங்கள் உளப்பண்புச் செல்வத்தை இரட்டித் தவராவர்.

ராபர்ட் ஹால்.

நட்பு இன்பம் பெருக்குகிறது. துன்பம் குறைக்கிறது. முன்னதை அது இரண்டு மடங்காக்குகிறது. பின்னதைப் பகிர்ந்து கொள்கிறது.

அடிஸன்.

பிழையும் பீழையும் நேர்ந்தபோது நட்பின் சிறப்பு ரிமையைப் பயன்படுத்தி ஒறுத்துத் திருத்தத் தயங்குபவர் போலி நண்பர்.

பேக்கன்.

நகுதற் பொருட்டன்று நட்பு; மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.

திருவள்ளுவர்.

அறிவுத் திறமுடைய நண்பர்களைப்போல வாழ்வின் நல்ல புகழ்த்திரு வேறில்லை.

யூரிப்பிடிஸ்.

இன்பத்தில் நாடுவதை விடத் துன்பத்தில் நண்பனை விரைந்து நாடிச் செல்லுக.

சிலோ.

மென்மையான உணர்ச்சி யியல்புடைய இளமையிலேயே பெரும்பாலாக நட்பு ஏற்படுகிறது. ஆண்டு முதிர்ந்தபின் ஏற்படும் நட்பு அஃது, உரத்திலும் குறைவுடையது. அது நீடித்து வேர்க் கொள்ளுதல் முடியாது.

ஃவிட்ஸ் ஆஸ்பேர்ண்.

மாலை நிழல் போன்றது நட்பு. வாழ்க்கையாகிய ஞாயிறு படியுந்தோறும் அது நீட்சியுறுகிறது.

லாஃவரதேன்.

தீயோர் நட்பு, காலை நிழல் போன்றது, அது வாழ்க்கை முன்னேற முன்னேறக் குறுகும் தன்மையுடையது. நல்லோர் நட்பு, மாலை நிழல் போன்றது.

ஹொடர்.

நிறைநீர நீரவர் கேண்மை; பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு.

திருவள்ளுவர்.

உண்மை நட்பு மிகப் படிப்படியாக வளர்வது; இரு சார்பிலும் தகுதியிருந்தால் மட்டுமே அதுபற்றியிணைத்து வளரும் தன்மையது.

செஸ்டர்ஃவீல்டு.

நண்பரை நாடி அவர்கள் தகுதியைத் தேர்ந்துணர்ந்த பின் அவர்களை எஃகுத் தளைகளால் உன் நெஞ்சத்துடன் பிணைக்க.

ஷேக்ஸ்பியர்.

விழிப்புணர்வில்லா நண்பனினும், இடர் தருபவன் இல்லை. அவனைவிட விழிப்புணர்வுடைய பகைவன் மேலாம்.

லாஃவந்தேன்.

நட்பின் ஒளி எரியத்தின் (ஞாடிளயீhடிசரள) ஒளி போன்றது. சுற்றிலும் இருள் செறியச் செறிய, அதன் ஒளி பிறங்குதல் மிகுதி.

கிராம்வெல்.

போலி நண்பர் நிழல் போன்றவர். ஒளியிடையே அவர் தாளொடுதாளாக இருப்பர். இருளடையின் காணப்பெற மாட்டார்.

போவீ.

குண ஒருமையால் நட்பு ஏற்படுவதினும், குறைபாடொற்று மையால் ஏற்படுதல் மிகுதி.

போவீ.

காய்ச்சும் கடுஞ் சூட்டில் இரும்பு இணைவது போலவே, பெருந்துன்பத்திடையே நட்பின் பிணைப்பு வலிவுறுகிறது.

கால்ட்டன்.

மருத்துவன் திறமையும் கூர்நோக்கும்; செவிலியரின் சுறுசுறுப்பும், விழிப்பும்; தாயின் பொறுமையும் கனிவும் யாவும் நட்பினும் உண்டு.

கிளாரெண்டன்.

நட்பாடுவதில் காலம் தாழ்த்து; நட்பாடியபின் என்றும் உறுதியாக அதனைப்பற்று.

ஸாக்ரட்டீஸ்.

நண்பனை இழத்தல் ஓர் உறுப்பை இழப்பது போன்றது. அதன் வெந்துயர் ஆறும். ஆனால், இழப்பைச் சரி செய்தல் முடிவதன்று.

ஸதே.

என் நண்பனுக்காக நான் செய்ய முடியாத அளவு பெரிய காரியம் எதுவும் இல்லை. அவனுக்காக நான் செய்யக்கூடாத அவ்வளவு சிறு செய்தியும் எதுவும் இருக்க முடியாது.

ஸர் ஃவிலிப் ஸிட்னி.

இசை

இயற்கையின் நான்காவது இன்றியமையாத் தேவை இசையே. முதலது உணவு, இரண்டாவது உடை, மூன்றாவது உறையுள், நான்காவது இசை.

போவீ.

மேதக்க எண்ணங்களை உள்ளத்தெழுப்ப, கடுஞ்சினங் கனிந்தெழும்படித் தூண்ட, அன்பைப் பெருக்க, மனிதரை இயக்கி ஆட்கொள்ளச் செய்ய, எதற்கும் இசையினும் அருந்திறல் வாய்ந்த மறைகலை இல்லை.

அடிசன்.

ஓவியக் கலையின் மிகப்பெரு நலிவு, அது உயர் ஒழுக்க உணர்ச்சியைத் தூண்ட முயலுவதில்லை என்பதே - இசை இதனைத் திறம்படச் செய்கிறது.

திருமதி ஸ்டோ.

எவ்வளவு வற்புறுத்தும் வாதங்களையும்விட எளிதாக மாந்தரைப் போரில் முன்னணிக்குத் தூண்டிப் போரிடச் செய்வதும்; எந்த அறிவுரையையும் விட, மக்களிடையே நாட்டுப் பற்றார்வத்தையும், செயலாக்கத்தையும் உண்டுபண்ணுவதும், படைத்துறை இசை, நாட்டுப் -r பாடல் ஆகியவையே.

டக்கர்மன்.

இசை மிக வியத்தகு புதுமை வாய்ந்த கலைப்பண்பு. அது செயல்துறைக்கும் நினைவுத் துறைக்கும் இடைப்பட்ட ஓர் இடையீடு - உள்ளத்துக்கும் புறப்பொருளுக்கும் இடை யிணைப்புச் செய்யும் ஓர் ஊடுவாயில். அது பொருளுமன்று, பொருட்பண்பு மன்று; புறத்துறையுமன்று, அகத்துறையு மன்று; பொருள் சார்ந்த தாயினும் பொருளன்று.

எச். ஹின்.

இசை பல வகையில் கவிதையோடொத்த கலை. இரண்டிலும் அறிவுத்திறத்தால் கற்பிக்க முடியா நுண்ணயங்கள் உண்டு. கலை யாட்சித் திறம்படைத்த கலைஞன் ஒருவனாலேயே அந்நயங்கள் ஆட்சிப்பட முடியும்.

போப்.

மற்ற எல்லாப் படைப்புக் கலைகளையும் போலவே, இசைக் கலையும் அதனைப் படைக்கும் கலைஞனாகிய படைப்பாளனை விட ஆற்றல் வாய்ந்தது.

பீகவன்.

இசை ஒரு தடவை உள்ளத்தின் வாயிலைத் திறந்து உள் நுழைந்து விட்டால், அது அங்கே தனி உயிர் பெற்று விடுகிறது. பின் அது என்றும் இறவாது. அது ஓய்வொழிவின்றி நினைவுக் கூட்டத்தில் வாயில் இடைவாயில் வழிகளிலெல்லாம், ஊடாடிக் கொண்டே யிருக்கிறது.

புல்லர்.

அன்பு, அமைதி ஆகியவற்றின் குரல்களுள், இசையினும் மென்மையான, இனிமையான, திறம்படைத்த குரல் வேறு இல்லை.

எலிஹூபரிட்.

உயர் கலைகள் அனைத்திலும், உணர்ச்சியை இயக்கி யாளும் தன்மையுடைய கலை இசையே, சட்டமியற்றும் எவராலும் மிகுதியான ஆதரவுரதரத் தக்க கலை அது.

நெப்போலியன்.

கதையிலக்கியம்

நல்ல கதை, கேட்க இன்பமா யிருக்க வேண்டும்; மெய்யான தாகத் தோற்ற வேண்டும்; பொருத்தமுடையதாக, சுருக்க மானதாக, இன்னுரை புணர்ந்ததாக, புதிதாக இருக்க வேண்டும். இவ்வமைதி களிலிருந்து வழுவினால், அது அறிவிலிகள் பாராட்டைப் பெறலாம் அறிவுடையோருக்கக் கண்ணாய்வு மட்டுமே தரும்.

ஸ்டில்லிங்ஃவ்ளீட்.

மக்கள் விருப்பத்துக்கும், அவர்கள் திருத்தத்துக்கும் ஒருங்கே உகந்த முறையில் அவர்கள் உள்ளங்கள் மீது ஆட்சி செய்யும் சிறந்த ஏடுகள் புனைகதை ஏடுகளே. அவை வாழ்க்கையின் படிப்பினைகளை ஒழுங்கு படுத்தித் திறம்பட மீண்டும் தெளிவான முறையில் எடுத்துக் காட்டுகின்றன; நம் குறுகிய மனப்பான்மை களிலிருந்து நம்மை வெளியே கொண்டுசென்று, பிறரை உள்ளவாறு அறிய வைக்கின்றன. நிகழ்ச்சிகளை வாழ்க்கை வாழ்பவனுக்குக் காட்டுவது போலவே - ஆனால் ஒரே ஒரு வேறுபாட்டுடன் - அவை நமக்குக் காட்டுகின்றன. அவ் ஒரே ஒரு வேறுபாடு யாதெனில், நம் அறிவை மூடியிருக்கும் தப்பெண்ண ஆணவத்திரையை அவை விலக்கிக் காட்டுவதே.

ஆர். எல். ஸ்டீவென்ஸன்.

வரலாற்றில் கூட மிகநல்ல வரலாறு எது? முக்கியமல்லாத நொய்யவரைகளை விட்டுவிட்டு, முக்கியமானவற்றைச் சிறிது மிகைப்படுத்திக் காட்டி, வாய்மையின் தடத்தை நன்கு பதிப்ப வையே. வாய்மையின் உருவம் மனத்தில் இவ்வழியிலேயே பற்றி நீடித்து நிற்கும்.

மக்காலே.

புகழ்

தோன்றிற் புகழொடு தோன்றுக; அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

திருவள்ளுவர்.

புகழார்வம் மக்களுலகில் மிகப் பொதுவாகப் பரந்த உணர்ச்சி என்பதைக் கல்லறை வாசகமரபே காட்டும். தம் வாழ்க்கையில் உயர்பண்பு இல்லாதிருந்தால் கூட அப்பெயரை விரும்புபவர்களே மிகுதி. கல்லறையுடன் மறக்கப்பட விரும்புபவர் மிகமிக அரியர்.

கெட்.

புகழ் வீரச்செயல்களாகிய நன்மலர்களின் மணம்.

சாக்ரட்டீஸ்.

வீரச் செயல்கள், நற்செயல்களுக்கான ஒரு நற்றூண்டு தலாகவே நான் புகழை விரும்புகிறேன்.

மாலெட்.

புகழ் ஆற்றைப்போல் பிறப்பிடத்தில் ஒடுங்கியது. ஆனால், அது நீண்டு செல்லுந்தோறும் அகன்று செல்கிறது.

டாப்னென்ட்.

நான் பொன்னை விரும்பவில்லை. ஆயினும், புகழை விரும்புவது ஒரு பழிச்செயலானால், உலகின் உள்ள உயிர்களிடையே பெரும் பழிக்குரியவன் நானே.

ஷேக்ஸ்பியர்.

இறந்தபின்னரே புகழ் வருமாயின், அதைப் பெற நான் விழையமாட்டேன்.

மார்ஷியல்.

சிப்பிக்குள் ஒளியுடை முத்து முதிர்வுறுவது போல, உண்மைப் புகழ் கல்லறைக்குள்ளிருந்தே விளைவுற்றது ஒளி பிறங்குகிறது.

லாண்டார்.

புகழை விரும்புபவன் இகழுக்கு அஞ்சக்கூடாது. இகழச்சமே புத்தறிவுக்குச் சாவுமணி.

சிம்ஸ்.

இல்வாழ்க்கையின் செல்வங்களுளெல்லாம் சிறந்தது புகழே. உடல் மண்ணிற் கலந்தபின்னும் புகழ்வாய்ந்தவர் பெயர் நீடித்து வாழ்கிறது.

ஷில்லர்.

புகழுக்கு உரிமையாகிறவர் மிகச் சிலரே. விலைக்கு வாங்கப் பெற முடியாத மிகச் சிலவற்றுள் அது ஒன்று - மனித இனத்தின் நன்கொடை அது ஒன்றே. அது பெறுமுன் தகுதித் தேர்வு மிகுதி; தகுதி கண்டபின்னும் உலகம் வழங்க மன மில்லாததுபோல் அளந்து தான் அதனை வழங்குகிறது.

ஜான்சன்.

காலமென்னும் பேரேட்டின் பக்கங்களில் எத்தனையோ சிறப்புடையவர் பெயர்கள் எழுதப்பெற்று வருகின்றன. ஆனால், ஒரு பெயர் எழுதப்பெறும்போது மறுபெயர் அழிய, அல்லது மங்க விடப்படுகிறது. ஆனால், இவற்றிடையேயும் ஒரு சில என்றுமழியா ஒளியெழுத்துக்களாக இலங்குகின்றன.

லாங்ஃவெல்லோ.

எண்ணில் இசைதேர்ந்த ஆன்றோர் அருஞ்செயலே

மண்ணில் மலர்ந்து வாடா உயிர்மலரே.

ஷர்லி.

மனித இனத்தின் நல்வாழ்க்கை யின்பத்தை மேம்படுத்தும் நற்செயல்களின் மீதன்றி நிலையான மெய்ப்புகழ் நாட்டப்பெற மாட்டாது.

சார்லஸ் சம்னா.

இன்பமும் துன்பமும்

இன்ப வாழ்க்கையாளன் ஒருவன் ஒரு கோவிலகத் தலைவ னாக, வேட்டைக்காரனாக, படக்காட்சி நடிகனாக, உண்டி விற்போனாக இருக்க முடியும்; முதல்தர ஓவியக்காரனாக, சிற்பியாக, இசைஞனாக, இலக்கியப் படைப்பபாளனாக, எந்த இன்ப வாழ்வினனும் இருந்ததில்லை.

ஜே. ஜி. நேதன்.

துன்பம் ஒருவனுக்கு அவனையே அறிமுகப்படுத்தி வைக்கிறது.

ஓர் அறிஞன்.

கடவுள் மக்களைத் துன்பக் கடலின் ஆழத்துக்குக் கொண்டு செல்வது அவர்களை அதில் அமிழ்த்துவதற்கன்று; அவர்களை நீராட்டித் தூய்மைப் படுத்துவதற்கு.

ஆதி.

ஓயா வெற்றி நமக்கு உலகின் ஒரு புறத்தையே காட்டுகிறது. துன்பம் அதன் மறுபுறத்தை உணர வைக்கிறது.

கோல்ட்டன்.

இன்னாமை யுள்ளும் இனிதாம் பயனுண்டு;
பன்னூறு தேரை நச்ச ருவருப் புளதெனினும்
மன்னும் அதன்தலையில் துன்னரிய மாமணியே.

ஷேக்ஸ்பியர்.

துன்பத்தை ஒத்த பயிற்சிக் கருவி வேறில்லை.

டிஸ்ரேலி.

மகிழ்ச்சியும் இன்பமும்

கடமைகளை விளையாட்டாகவும், விளையாட்டுக்களை இடைப் பொழுதுபோக்குகளாகவும் கொள்ளும் மனிதனே இன்ப முடையவனாவான்.

மிகு. தூயதிரு. டப்ள்யூ. ஆர். இங்க்.

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.

திருவள்ளுவர்.

அறிவிலார் எதையெதை எண்ணி வாழ்கின்றனரோ, அவற்றையெல்லாம் விலையாகத் தந்து, நேசித்தல், நேசிக்கப் பெறுதல் ஆகிய இரண்டினையும் பெற விழைவர் அறிவுடையோர்.

டப்ள்யூ. எஸ். லாண்டார்.

மனிதன் இன்பத்தைத் தானே ஆக்கவல்லவன்.

தோரோ.

அவாக்களை நிறைவுபடுத்துவதை விடுத்து அவற்றைக் குறைப்பதன் மூலமே இன்பத்தை நாட முடியும் என்று நான் கண்டு கொண்டேன்.

ஜான் ஸ்டூவர்ட் மில்.

எண்ணுமளவு இன்பத்தை நாம் என்றும் பொறுவதில்லை. ஆனால் நாம் எண்ணுமளவு துன்பமும் நமக்கு எப்போதும் வருவதில்லை.

லாருஷ்ஃவொகோல்ட்.

மனிதன் இன்பம் அவன் வாழ்நாளை நீட்டிக்கும் தன்மையது.

எக்ளிஸியாஸ்டிகஸ்.

மனித இன்பங்கள் அனைத்தம் விரைந்து ஓடுவன;
இறைவன் அமைப்பு அது;
ஏனெனில் எளிதில் கிடைக்கும் எப்பொருளும்,
கிடைத்தவுடன் இல்லையாகி விடுகிறது.
யூஜீன் ஃவீல்டு.
அழகு வாய்ந்த பொருள், என்றும் இன்பம் நல்கும் பொருள்.
கவிஞர் கீட்ஸ்.
இனிமை, இனிமையுடன் போரிடுவதில்லை - மகிழ்ச்சியில், மகிழ்ச்சி மகிழவே செய்யும்.

ஷேக்ஸ்பியர்.

மறைவாக ஒரு நல்ல செயலைச் செய்து, அதைத் தற்செயலாக யாராவது வெளிப்படுத்தக் கிடைத்தால் அது போலும் இன்பமிகுதி தரும் செயல் வேறு இருக்க முடியாது.

சார்லஸ் லாம்.

இன்பமென்பது வேறு எதுவுமன்று; துன்பத்தின் இடை ஓய்வு மட்டுமே.

ஜான் ஸெல்டன்.

இன்பம் என்பது சுட்ட நிலக்கரி போன்றது; அது ஒரு செய்பொருளின் கிளை விளைவேயாகும்.

எமர்ஸன்.

காலம்

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

திருவள்ளுவர்.

நாளை வாழ்வேன் என்பவன் அறிவிலி இன்று வாழ எண்ணுவது கூடக் காலங் கடந்த எண்ணமே. நெற்றே வாழத் தொடங்கினவர் அறிவுடையோர்.

நொடிப் பொழுதுகளைப் பற்றி நீ நன்கு கவன மெடுத்துக் கொள்; ஓரைகள் தம்மைத்தாமே கவனித்துக் கொள்ளும்.

செஸ்டர்ஃபீல்டு.

இன்றையப் பொழுதை நுகர்; நாளையைப் பற்றிக் கவலைப் படாதே.

ஹொரேஸ்.

சேணியன் குழலினும் விரைந்தது என் வாழ்நாள்.

ஜாப்.

செய்யாதிருப்பதிலும் பிந்திச் செய்தல் நன்று.

லிவி.

காலம் சட்ட உரிமை தரும் - ஒழுக்கமுறைச் சட்டத்தில் கூட.

எச். எல். மெங்கன்.

காலத்தினும் சிறந்த அறிவுரையாளர் இல்லை.

பெரிக்ளிஸ்.

காலத்தைச் சிக்கெனப் பிடித்துக் கொள்.

பிட்டாக்கஸ்.

ஒரு நகரம் வளர ஓர் ஊழி வேண்டும். அதை அழிக்க ஒரு மணி நேரம் போதும்.

ஸேனெக்கா.

காலம் என்பது அடிமைகளுக்காக ஏற்பட்டது.

ஜாண். பீ. பக்ஸ்டன்.

இளமையும் முதுமையும்

இளைஞர் கனாக்கள் நடைபெற முடியாதவை; முதியவர் கனாக்கள் முன் நடைபெற்று விட்டவை. உலகின் குறைபாடறிந்து கனாக் காணாதவர் நடுவயதினரே.

சாக்கி.

வாழ்க்கையின் மயக்கங்களை அகற்றும் நிகழ்ச்சிகள் நிறைந்தது இளமை. மயக்கங்கள் அகன்றவுடன் இளமையும் முற்றுப் பெற்று விடும்.

ஆர்தர் வாக்.

மக்கள் பல்வேறு வயதில் முதுமை அடைகின்றனர். சிலர் 65 ஆண்டு முதுமையுடன் பிறந்து உடனேயே வாழ்க்கையிலிருந்து ஒதுங்கத் தொடங்குகிறார்கள். சிலர் 90 வயதில்கூட 21 வயது இளமையை விடுவதில்லை.

(பிரெஞ்சுப் புரட்சி குறித்து)

பெருவாழ் வுடையதப் பேரொளி விடியல்
மருவும் இளமையெனில் வானெழில் ஒளியே.

வோர்ட்ஸ்வொர்த்.

இளமையின் அகரவரிசையில் ‘தோல்வி’ என்ற சொல் கிடையாது.

புல்வர் லிட்டன்.

இளமையில் கற்கிறோம்; முதுமையில் உணர்கிறோம்.

மெரி எப்ளா எஷென்பாஃக்.

இளமையின் முதுமை 40; முதுமையின் இளமை 50.

(மணமாகாக்) கன்னியர் இளையராயின் இடர் ஆவர்; நடுவயதின ராயின் வருந்துதற்குரிய நிலையினர். ஆனால் முதுமை யிலோ அவர் மகிழ்வுக்குரியவராவர்.

அறிஞர் ஸ்டீவென் டெய்லர்.

இளமை ஒரு பெரும் பிழை; நடு வயது ஒரு பெரும் போராட்டம்; முதுமையோ ஒரு பெருங் கழிவிரக்கம்.

டிஸ்ரேலி.

இளமை காரியமுணர்ந்தால், முதுமைக்கு உணர்ந்ததை ஆற்றும் ஆற்றலிருந்தால், வறுமை என ஒன்று உலகிலிருக்க மாட்டாது.

பழமொழி.

நம் தந்தையர் அறிவிலிகள் என நாம் நினைக்கிறோம். நாம் அத்தனை அறிவுடையவர்கள் ஆய்விட்டோம். ஆனால் அதே மாதிரி நம்மினும் அறிவுடையவர்களாய் நம் மக்கள் நம்மையும் அதேபோல நினைப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

போப்.

உணர்ச்சிப்பாங்கு

உள்ளத்தின் திரிந்த நிலைகள் ஒரு திடீர் அதிர்ச்சியால் ஏற்படுபவை யல்ல; குழந்தைமைப் போதைய சூழ்நிலைகளின் விளைவுகளேயாகும்.

அறிஞர். ஜே. ஏ. ஹாட்ஃவீல்டு.

நாம் எதை நம்புவது என்பதைவிட, ஏன் நம்புகிறோம் என்பதே இக்கால உள ஆராய்ச்சி முறையில் முதன்மையா யிருக்கிறது.

ஒரு செய்தித்தாள்.

ஒருவரை யொருவர் விரும்புவதன் அடிப்படைக் காரணங் களுள் ஒன்று, இருவரும் மூன்றாவதொரு பேர்வழியை மனமொத்து வெறுப்பதாகும்!

பெர்ட்ராண்டு ரஸ்ஸல்.

செல்வம்

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.

திருவள்ளுவர்.

பெருஞ் செல்வத்தின் ஒரே பயன் பகுத்துப் பயன் படுத்துவதே. இது தவிர, வேறு உண்மைப் பயன் கிடையாது. மற்றவையெல்லாம் வீணாரவார மட்டுமே.

பேக்கன்.

செல்வம் இன்பத்தை விலைக்குப் பெற முடியாது. ஆனால், அதனைக் கொண்டு மனிதன் துன்பத்தை விலைக்கு வாங்கக் கூடும்.

மைக்கேல் ஆர்லென்.

செல்வப் பற்றே, தீமைகள் எல்லாவற்றுக்கும் வேர்முதல்.

தூயதிரு. பால்.

மிகுதியாகப் பொருளீட்டும்படி என்னை நானே வற்புறுத்த விரும்பினேன். ஆகவே, மிகுதியாகச் செலவிடத் தொடங்கினேன்.

ஜேம்ஸ் அகேட்.

செல்வத்தை மட்டும் திரட்டிவிடு; உலக முழுவதும் சேர்ந்து உன்னை ஒரு பண்பாளன் என்று கூறத்தயங்காது.

பெர்னார்டு ஷா.

தன் தேவைக்கு மேற்பட மனிதன் மிகுதியாக ஈட்டுந் தோறும், கவலை அவனைப் பிடித்துத் தின்னத் தொடங்கி விடுகிறது.

பெர்னார்டு ஷா.

மற்ற மனிதர்களெல்லாம் பணத்திற்காக இவ்வளவு பேயாய் அலையாதிருந்தால், எந்தத் தனி மனிதனும் பணமில்லாமல் எவ்வளவோ அழகாக வாழ்க்கை நடத்திவிட முடியும்.

மாகரேட் கேஸ்ஹரிமன்.

வேறு எந்த நற்பரிசுக்கும் தகுதியில்லை என்று கண்ட பின்னர் அத்தகுதியற்ற மனிதனுக்கே கடவுள் பொருளைத் தருகிறார்.

தலூர்.

ஊசியின் காதில் ஒரு தேர்வடத்தைப் புகுத்தினாலும் புகுத்தலாம்; செல்வரை வானுலக முய்க்கும்படி செய்தல் அரிது.

மறைத்திரு. மாத்யூ.

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.

திருவள்ளுவர்.

சொகுசாக இறப்பதற்கு எவ்வளவோ பணம் பிடிக்கிறது.

ஸாமுவேல் பட்லர்.

ஐய, (நீங்கள் கோருகிறபடி) எனக்குப் பொருளுதவி செய்தவர்கள் பெயர்ப்பட்டியலை வெளியிட முடியாமைக்கு இரண்டு காரணங்களுண்டு; ஒன்று அப் பட்டியலை நான் தொலைத்து விட்டேன்; மற்றொன்று அப்பணமும் செலவாகிப் போய்விட்டது.

அறிஞர் ஜான்ஸன்.

செல்வமனைத்தும் உழைப்பின் விளைவே.

லாக்.

வசையுரை

அரசியல் : டாலிராண்டு குறித்து :

இவரிடம் பழைய ஆட்சியின் பழிப்பண்புகள் ஒன்று விடாமல் உள்ளன. அதே சமயம் புதிய ஆட்சியின் நற்பண்பு களுள் ஒன்றுகூட அவரிடம் இடம் பெறவில்லை.

கார்னோ.

திருவருட் பரம்பரை : எக்ஸிட்டர் தலைமகளைக் குறித்து:

திருவருட்பரம்பரை பற்றி நான் இப்போது நம்பி ஆக வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால், ஜூடாஸ் இஸ்காரி யட்டின் பரம்பரையில் இப்போதும் ஒரு எக்ஸிட்டர் தலை மகள் எப்படி ஏற்பட முடியும்?

புது முயற்சி வீரம் :

புது முயற்சி வீரனாகயிருக்க விரும்பாதே! தொடக்கக் காலப் புதிய கிறிஸ்தவர்தான் கோளரிகளுக்கு இரையாக வேண்டி யிருந்தது. மலைகடந்து செல்ல விரும்புவோர் நாடுவது (புதுப் பாதையல்ல) கழுதைகளும் கோவேறு கழுதைகளும் நடந்து சென்று தேய்பட்ட பாதைகளையே. அத்தகைய வற்றையே நீ நாடு.

தூய்மைமிகு திரு. டப்ள்யூ. ஆர். இங்க். டி. டி.

ஜெர்மானிய தத்துவ அறிவர் :

‘நான்’ என ‘அது’ என விளக்கினார்
‘எனை’ என ‘அதை’ என முழக்கினார்
‘மேரியன்பாடில்’ சென் றிறந்தனர்
காரிருட் கடலக மிதந்தனம்.

ஸ்டீவிஸ்மித்.

தனிப்பட்ட மனிதர் சமயம் :

தனக்கென எவருக்கும் ஒரு சமயம் இருக்க முடியுமென்பது தமக்கென ஒவ்வெருவருக்கும் ஒரு ஞாயிறு திங்கள் இருக்க முடியும் என்பது போன்றது ஆகும்.

ஜி. கே. செஸ்டர்ட்டன்.

நல்லுரைகள்

ஆர்வம் மிகுதி உடையவன், ஆனால் அமைதிவாய்ந்தவன்; உலகம் அவனுக்கே உரியது.

வில்லியம் மெக்ஃவாக்ஸ்.

தோல்வியென்பது வீழ்ச்சி யடையும்போது விழுவது அல்ல; விழ அஞ்சி விழாது நிற்பதேயாகும்.

ஒரு பெரியார்.

உன் கைப்பிடிக் கயிற்றின் கோடிவரை சறுக்கி விட்டால், உடனே கயிற்றில் ஒரு முடிச்சிட்டு அதைப் பற்றித் தொங்கிக் கொள்.

அமெரிக்கத் தலைவர் ரூஸ்வெல்ட்.

பிறர் காலடியிலிருந்து புல்லறுத்துக் காயவைத்துக் கொள் பவனே திறமைசாலி.

ஒரு பெரியார்.

அந்தப் பேர்வழியிடம் காணக்கூடிய கருத்து ஒன்றே ஒன்று; அதுதான் அவற்றில் தவறான கருத்து.

அறிஞர் ஜான்ஸன்.

மௌனத்தைப் பற்றிய நம் மறைவாசகத்தைக் கார்லைல் மிகவும் அரும்பாடுபட்டுச் சுருக்கி, இறுதியில் முப்பது அழகிய ஏட்டுப் பகுதிகளாக உருவாக்கினார்.

மார்லிப் பெருமகனார்.

பேரளவு சமயப் பற்றுடனே சிறிதளவு சிற்றின்ப அவாவை எந்த அளவில் எந்த முறையில் சேர்த்தால் மனச்சான்றின் தொல்லை குறையக் கூடும். அந்த அளவுக்கு மிகக் குறைந்த கட்டற்ற இன்ப நுகர்வு பெருகக்கூடும். அந்த அளவுக்குப் பெருகும்போதே அந்த விழுக்காடறிந்து அவற்றை மேற் கொள்வதில் திரு. சார்லி மார்கன்… ஒப்பற்ற திறம் பெற்றுள்ளார்!

ராபர்ட் ஃவர்சைத்.

அவரை மக்கள் மாசற்றவர் என்கிறார்கள் - ஆம் அவர் தொழுநோய் அந்த அளவுக்கு முதிர் நிறைவுடையதாயிருக்க வேண்டுமே!

கவன்ட்ரி பாட்மோர்.

சாவினாலேயே திருத்தம் பெறத்தகும் மந்திரிகளுள் வால்டோ ஒருவர்.

ஸாக்கி.

மாகி (மார்கரட்), ஸ்காட்லந்துக்காரரின் மிக உயர்ந்த பண்பு எது என்பதனை நீ மறந்து விட்டாய்! கெடுதி பயக்கலாம் என ஐயுறத் தகும் எதனையும் அவர்கள் செய்ய மாட்டார்கள்!

ஜே. எம். பாரி.

மனைவி : அன்ப, இது முற்றிலும் பொருளற்றதாகவல்லவா தோற்றுகிறது?

கணவன் : ஆம், அன்பே! அங்ஙனம் தோற்றுவது உண்மையே. ஆயினும் அதனாலேயே அது நல்ல சட்ட மாயிருக்கப் படாது என்று கூறிவிட முடியாது.

சர் வால்டர் ஸ்காட்.

செல்வருக்குத் தனிச் சட்டமுண்டு; மிகுசெல்வருக்கு அதனினும் வேறான தனிச் சட்டம் உண்டு.

ஒரு பெரியார்.

ஒருவன் எவ்வளவு நல்லவனாயிருந்தாலுஞ் சரி, ஒவ் வொரு செயலையும் ஒவ்வொரு எண்ணத்தையும் சட்டத்தை ஆராய்ந்து பின்பற்றியே அவன் செய்தாலும் சரி, அவன் வாழ்க்கையில் சட்டம் குறுக்கிட்டும் தூக்குத் தண்டனைக்குரிய குற்றத்திற்குப் பத்துத் தடவையாவது ஆளாக்காமலிராது.

மாண்டேய்ஸ்.

முறைவர் முதலில் தன் வாழ்க்கைக் காவனவற்றைப் பார்த்துக் கொண்டு, பின் தன் மதிப்புக் காவனவற்றைக் கவனித்துக் கொண்டு அதன்பின்தான் நேர்மையைப் பற்றிச் சிந்திக்க முடியும்.

ஒரு பெரியார்.

வழக்குரைஞர் ஆவோர் தொடக்கத்தில் ஐந்து வெள்ளிக் காக 500 வெள்ளி அளவு உழைப்புச் செய்து, இறுதியில் 500 வெள்ளிக்காக ஐந்து வெள்ளி உழைப்பு உழைப்பவரே ஆவர்.

பெஞ்சமின் ப்ரூஸ்டர் கூற்று.

வழக்குரைஞர்கள் பெரும்பாலும் வழக்காடச் செல்வ தில்லை; இம் மறைபொருளை மக்கள் அறிந்திருந்தால் நல்லுது.

மேஸல்கு ரோஸஸ்.

நம் பின்னோருக்காக நாம் ஏன் சட்டம் வகுக்க வேண்டும்? நமக்கு அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்?

ஸர் பாய்ல்ராஷ்.

இருபெண் மணத்துக்குரிய மிக்க கடுந் தண்டனை யாது? இரண்டு மாமியார் இருப்பதுதான்!

பாஸ்வெல்.

தண்டலாளர்: (கணவனைப் பார்த்து): இவ்வழக்கில் உன் மனைவிக்கு நீயே வழக்குரைஞராக இருக்க எண்ணமா?

கணவன்: அண்ணலே, நான் வழக்குரைஞனல்லன்; நான் உண்மை பேசப் பழகி விட்டவன்.

சமயப் பணியாளர்கள் வாய்மையிலேயே கருத்துச் செலுத்தவில்லையென்று புரூடு ஸ்காட்லாந்து நாட்டு இளைஞர்கட்கு அறிவுறுத்துகிறார்.

வரலாறு என்பது ஒரு பெரும் புளுகு மூட்டையென்று தூயதிரு. சமய அறிஞர் கிங்ஸ்லி கழறுகிறார்.

இந்த வசையுரைப் போராட்டத்தின் காரணம் என்ன? இதனை விளக்குவது எளிது;

கிங்ஸ்லி ஒரு சமய அறிஞர் என்று புரூடு நினைத்து விட்டார்.

புரூடின் நூல்கள் வரலாறுகள் என்ற கிங்ஸ்லியும் கருதிக் கொண்டார்!!

அறிஞர் வில்லியம் ஸ்டப்ஸ்

வரலாற்றை நையாண்டி செய்து ‘பிரலு’ க்கு வாடிக்கை யாய் விட்டது; ‘பிரலை’ நையாண்டி செய்வதும் வரலாற்றுக்கு ஒரு வேடிக்கையாயிருப்பது உறுதி. (பிரல் என்பவர் பற்றி)

ஈ.பி. ஆஸ்பார்ன்

ஓரரசன் இரக்க உணர்ச்சியுடையனாக இருந்தால், அவன் ஆட்சி ஒரு முழுத் தோல்வியாகவே இருக்கும்.

முதலாம் நெப்போலியன்

வரலாற்றின் படிப்பினைகளை மனிதர் படித்துக் கொள்வ தில்லை என்பதே வரலாற்றிலிருந்து நாம் படிக்கத்தகும் படிப்பினை ஆகும்.

ஹெகெல்.

கட்டுக் கதையிலுள்ள கதைப் பொருத்தப் பண்புகூட இல்லாத கட்டுக் கதைத் தொகுதியே வரலாறு.

ரஸல் கிரீன்.

அந்தோ வரலாற்றைப் படிக்காதீர்! அது என்றும் பொய்யாக வே இருக்கும்.

ஸர் ராபர்ட் வால்போல்.

வரலாறு படிக்காதே, வாழ்க்கை வரலாறுகளே படி. ஏனெனில் இவைகளே ஊகக் கோட்பாடுகளற்ற வரலாறுகள் ஆகும்.

பெஞ்சமின் டிஸ்ரெய்லி.

என்றும் நடைபெற்றிராத செய்திகளைப்பற்றி அவற்றுக் குரிய காலத்தில் வாழ்ந்திருக்க முடியாத ஒருவர் எழுதி வைத்த கற்பனை - இதுதான் வரலாறு!

ஒரு பெரியார்.

வரலாறு என்பது மனித வகுப்பார் இதுவரை செய்துள்ள கொலை முதலிய குற்றங்கள், அவர்கள் அறியாமையால் நிகழ்ந்த பிழைகள், அவர்கட்கு நேர்ந்த இடையூறுகள் ஆகியவற்றின் தொகுதியே யல்லாது நேவறொன்றும் இல்லை.

கிப்ஸன்.

வரலாறு என்பது அறிஞர் பலர் சேர்ந்து ஒத்துப் புளுகும் புளுகன்றி வேறென்ன?

நெப்போலியன்.

வரலாற்றாசிரியனும் ஒரு தொலைநோக்கறிஞனே; ஆனால் ஒரே ஒரு வேற்றுமை; வரலாற்றாசிரியன் நோக்கு முன்நோக்கல்ல, பின் நோக்கு.

ஷலெருகல்.

நாம் விரும்பாதவற்றுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டு நாம் விரும்புகிறவற்றுக்கு அடிமைப் பட்டிருக்க விரும்புவதே விடுதலை ஆகும்.

ஸர். எர்னஸ்ட் பெடன்.

காதலின் முதல் மூச்சே அறிவின் கடைசி மூச்சு.

அத்தாய்ன் ப்ரெட்.

வாழ்க்கை என்பது சோர்வு கொள்வதற்கான ஒரு நீள் பயிற்சி.

ஸாமுவேல் பட்லர்.

வாழ்க்கையைப் பொறுத்துக் கொள்ளக் கூடும்; இந்தப் பொழுதுபோக்கு வேடிக்கைகள் இல்லாவிட்டால்!

ஸர். எஸ். கார்ன்னவால்லூயி.

வாழ்க்கை ஒரு தீராத நோய்.

ஏபிரசம் கௌலி.

வாழ்விது ஓர்நிழலாட்டம்; பயிற்சியற்ற நடிகன்
வந்தாடி ஓடித்தன் அரங்காட்ட மாடிப்
பாழ்வெளியில் மறைகின்ற வறிதாட்டாம்; பொருளில்
பருவரலும் பகட்டுமிக்க பயனீடாக் கதையின்
பண்பற்ற புனைசுருட்டுப் பொறியெனலாம் தகைத்தே.

ஷேக்ஸ்பியர்.

நாம் வாழ்வது எதற்காக? நம் அயலார் வெட்டிப் பொழுது போக்குக்காக! அத்துடன் அவர்களையும் நம் பொழுதுபோக்காக ஆக்க!

ஜேன் ஆஸ்டன்.

உலகம் ஒரு பெரும் குமிழி; அதில் மனித வாழ்வு ஒரு சாணிலும் குறுகியது.

ஃவிரான்ஸிஸ் பேக்கன்.

அழுகையுடன் தொடங்கி அலறலுடன் முடிவுறும் இந்த வாழ்க்கையிடம் நமக்கு ஏன் இவ்வளவு பற்றுதல்?

மேரி வார்விக் கோமாட்டி.

வாழ்க்கை என்பது அழுகை, சிணுக்கம், சிரிப்பு ஆகிய வற்றின் கூட்டு. ஆனால் அதில் பெரும்பகுதி சிணுக்கம்தான்!

ஒரு பெரியார்.

பெரும்பாலும் வீரம் வேண்டுவது மாள்வதற்கல்ல. வாழ்வத ற்கே.

ஆல்ஃவியரி.

ஆடவர் வாழ்க்கையின் இயல்பை மிக முன் கூட்டி உணர்ந்து விடுகிறார்கள். பெண்களோ மிகப் பிந்தி உணர நேரிடுகிறது.

ஆஸ்கார் ஒயில்டு.

காதல் அணங்கனாய்! நீயும் நானும் சேர்ந்தால்
காதொடு மூக்கிலாக் காசினியின் கூட்டையெல்லாம்
மோதித் தகர்த்துத் துகளாக்கி அத்துகளைக்
காதல் உளநேர்வில் மீட்டுரு ஆக்குவமே.

ஒமார் கயாம்.

வதைப்பும் பதைப்பும் புதைபடும் வரை - அப் புதைப்புக்கும் முன்னறிவுப்பு கிடையாது! மொத்தத்தில் இந்த வாழ்க்கைத் திட்டம் ஒரு வேடிக்கையான திட்டம்தான்!

ஜார்ஜ். எம். கோஹன்.

வாழ்க்கையைப் பற்றிப் பொதுவாகக் கூறினால் ஒரே முடிவுதான் கூற முடியும் - ஏனெனில் இளமைக் கால முழுவதும் ஒரே இழுக்கு, நடு முதிர்ச்சிக் கால முழுவதும் ஒரே போராட்டம்; முதுமைக்கால முழுவதுமோ ஒரே கழிவிரக்கம்.

அவன் பண்புடையாளன் என்று கூறப்படுபவர் நிலையி லேயே பயிற்றுவிக்கப் பட்டான் - அதாவது எதுவும் செய்ய முடியாதவனாகப் பயிற்றுவிக்கப்பட்டான்!

ஃபீல்டிங்.

ஐய, என் கை அச்சாளர், ஒரு நங்கை யாதலால் உம்மைப் பற்றி நான் எண்ணுவதைக் காதால் கேட்டுக் கை அச்சடிக்க முடியாது. நானும் ஒரு பண்புடையாளனாதலால் அதை மனம் விட்டுச் சொல்லவும் முடியாது. ஆனால் இந்த இரு தடையும் உமக்கு இல்லை. ஆகவே என் மனக் கருத்தை நீர் அறிந்து கொள்ளலாம்.

வில்லியம் கூப்பர்.

காலரிட்ஜ் ஆங்காங்கே வீணுரையாகச் சிதறிய சொற்களைப் பொறுக்கி யெடுத்துக் கொண்டால் போதும் - ஒரு பத்துப் பன்னிரண்டு (டஜன்) கவிஞர்களுக்கு அவை ஈடு செலுத்தும்!

ஹூக்ஹாம்ஃவ்சேர்.

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

திருவள்ளுவர்.

நினைப்பு சொல் செயல் எல்லாம் நல்லவனாகவே இருத்தல் வேண்டும். எளிய வாழ்க்கையே சிறந்தது. பிறருடன் அன்பாகவே நடக்க வேண்டும். எல்லா உயிர்களிடத்தும் அன்பு பாராட்ட வேண்டும். மனிதன் வாழ்க்கை முறையில் நற்பேறு அடைய வேண்டுமேயொழிய வழிபாட்டாலும், வரையாது அறஞ்செய்வதாலும் துன்பத்தை ஒழித்துவிட முடியாது. கொல்லாமையே சிறந்த பண்பாக அமைய வேண்டும்.

கௌதம புத்தர்.

முரண்பாடு

-r என் கருத்தில் முரண்பாடா?-

சரி, அப்படியானால் நான் முரண்பட்ட கருத்துக்கள் உடையவன் தான்! என் நெஞ்சம் பெரிது; திரளான முரண்பாடு களுடைய மனித வகுப்பே அதில் அடங்கியுள்ளது.

புரட்சிக் கவிஞர் வால்ட் விட்மன்.

உலகமுள்ளளவும் விதைப்புக் காலமும் இருந்தே தீரும்; அறுவடைக் காலமும் இருந்தே தீரும். தட்பும், வெப்பும், வேனிலும் கூதிரும், பகலும், இரவும் என்றும் முடிவடைய மாட்டா.

விவிலிய நூல், உலகத் தோற்றப்பகுதி.

ஆ! என் தீராப் பகைவர்கள் பற்றி நான் விரும்புவதெல்லாம் அவர்கள் ஒரு நூலாசிரியர் ஆகவேண்டும் என்பதே!

விவிலியநூல், பழைய ஏற்பாடு, யோபுவின் ஏடு.

ஒரு நூல் பற்றிக் கருத்துரை எழுத நேரும்போது, கருத்து ரைக்கு முன்பு அந்நூலை நான் வாசிக்கத் துணிவதேயில்லை. கருத்துரைக்கு அதனினும் தப்பெண்ணம் உண்டாக்குவது வேறு எதுவும் இல்லை.

(பத்திரிகை ஆசிரியர், கருத்துரையாளர்) ஸிட்னி ஸ்மித்.

நூலை வாசிக்காவிட்டால் என்ன, அதில் ஒரு சொல்லைக் கூட உணராவிட்டால் என்ன; நூலைப்போல அழகு செய்யும் பொருள் வேறு எதுவும் கிடையாது.

ஸிட்னி ஸ்மித்.

சிந்திக்கும் பழக்கத்தை அகற்றுவதற்கு நூலை வாசிப்ப தென்பது அடிக்கடி ஒரு திறமிக்க சூழ்ச்சியாயமைகிறது.

ஆர்தர் ஹெல்ப்.

ஏட்டுப் பேர்வழி ஒரு பெருத்த இடர் - அவன் வகையில் விழிப்புடன் இருக்க!

ஜஸாக் டிஸ்ரெய்லி.

பெருத்த விற்பனையுடைய ஏடு - ஆம், இடைத்தர அறிவுடை யோனுக்கு அமைக்கப்பட்ட பகட்டான கல்லறை மாளிகை அது!

லோகன். பி. ஸ்மித்.

நல்ல ஏடு என்றும் அல்லாத எடு என்றும் எதுவுமில்லை. ஏடு நன்று எழுதப்படுகிறது. நன்கு எழுதப்படவில்லை அவ்வளவுதான்.

ஆஸ்கர் ஒயில்டு.

நெருப்பு அருகே இருந்தாலும், தயக்கமில்லாமல் கையில் வைத்துக்கொண்டு படிக்க இடந்தரத்தக்க சுவடிகளே பயன்தரும் சுவடிகள் எனக் கூறத்தக்கவை ஆகும்.

அறிஞர் ஜான்ஸன்.

இந்நூலை வாசிப்பதைவிட அதை எழுதுவது எளிதாயிருந் திருக்க வேண்டும். (ஒரு நண்பர் நூல் பற்றி).

கோல்டுஸ்மித்.

மனிதன் பேசும் ஆற்றல் படைத்திருப்பது தன் கருத்துக் களை மறைப்பதற்காகவே.

வால்ட்டேர்.

மூளை நடுநிலைமையில் நிற்கும்போதுதான் நாக்கு இரு சார்புக்கும் அலைந்து திரியும்.

ஒரு பெரியார்.

சொற்போர் ஆண்மையுடையது; உரையாடல் பெண்மை யுடையது. நினைவாற்றல் குறையுந்தோறும் மக்கள் நா நீள்கிறது.

மண்டிஸ்யூக்.