அரியலூர் அடுக்கு தோசை

ரஞ்சனி நாராயணன்


அரியலூர் அடுக்கு தோசை

ரஞ்சனி நாராயணன்

 

 

 

உள்ளடக்கம்

அரியலூர் அடுக்கு தோசை….. இன்னபிற…..

முன்னுரை

1. அரியலூர் அடுக்கு தோசை!

2. அரியலூர் அடுக்கு தோசை 2

3. அரியலூர் அடுக்கு தோசை – 3

4. அரியலூர் அடுக்கு தோசை 4

5. வெந்நீர் உள் …?

6. அரியலூருக்கு டாட்டா…!

7. அரியலூரின் சோகங்கள்

8. ‘நீங்க நான்-வெஜ்ஜா?’

9. ‘ஹௌ ஓல்ட் ஆர் யூ?’

10. நிக்கிமோ நிகாடோ

11. எங்க ஊரு… திருக்கண்ணபுரம்

12. இங்கிலீஷ் விங்க்லீஷ்!

13. கண்டேன் ரிமோட்டை!

14. அன்புள்ள அர்விந்த்!

15. மணிமொழியாகிற என் அன்பு அம்மாவே!

16. எங்க ஊரு அண்ணாவ்ரு!

17. ஹேப்பி பர்த்டே மிஸ்டர் ஷேக்ஸ்பியர்!

18. சரியாத்தான் சொன்னாரு ‘குஷ்’

19. கொழு கொழு கன்னே!

20. மரணம் என்பது என்ன?

21. தென்றல் …. முதல் மின்னூல்

22. கோபல்ல கிராமம்

23. வந்தார் விவேகானந்தர்!

24. சாம்பார் ஊத்தும்மா……!

25. பிங்குவும் பென்னியும் பின்னே ஞானும் எண்ட பேரன்மாரும்!

26. கிணற்றுக்குள் சொம்பு!

27. மாறி வரும் புது யுக திருமணங்கள்

28. மாறிவரும் புது யுகத் திருமணங்கள் – 2

29. பள்ளிக்கூட நினைவுகள்!

30. கையால் சாப்பிட வாங்க!

 

 

 

2 முன்னுரை

இது என்னுடைய இரண்டாவது மின்னூல். இதுவரை தொடர் எதுவும் எழுதியிருக்காத நான் முதல் முறையாக அரியலூர் அடுக்கு தோசை என்ற தொடரை ஆரம்பித்தேன். நாங்கள் அரியலூர் போயிருந்தபோது ஏற்பட்ட அனுபவத்தை சின்னச்சின்ன ஏழு பதிவுகளாக எழுதினேன். பலரையும் கவர்ந்தது இந்தப் பதிவுகள். அதையே இந்த மின்னூலின் முதல் கட்டுரையாகப் போட்டிருக்கிறேன். ‘சாதாம்மிணியின் அலப்பறைகள்’ போலவே இதுவும் படிப்பவர்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

ரஞ்சனி நாராயணன்

 

1 அரியலூர் அடுக்கு தோசை!

என் கணவருக்கு அரியலூரில் ஒரு சித்தி இருந்தார். ரொம்ப நாட்களாக எங்களை அரியலூர் வரும்படி கூப்பிட்டுக் கொண்டிருந்தார். நாங்களும் பல வருடங்கள் ‘பிகு’ பண்ணிக்கொண்டிருந்துவிட்டு ஒரு வழியாக ஒரு சுபயோக சுபதினத்தில் அரியலூர் போய்ச்சேர்ந்தோம்.

சித்தியா எங்களை வரவேற்க ரயில்நிலையம் வந்திருந்தார். என் இடுப்பிலிருந்த குழந்தையை ‘சித்தியா பாரு. அவர்கிட்ட போறியா?’ என்றேன். என் பெண் கொஞ்சம் வெடுக் வெடுக்கென்று பேசுவாள். ‘சித்தியாவா? தாத்தான்னு சொல்லு’ என்றாள். நான் கொஞ்சம் அசடு வழிந்தவாறே ‘ ஸாரி……சித்தியா…..!!!!’ என்றேன். ‘பரவால்ல மா என்னைப் பாத்தா தாத்தா மாதிரிதானே இருக்கு..!’ என்று பெருந்தன்மையுடன் தாத்தாவானார். உண்மையில் அவர் சின்னத் தாத்தாதான். எங்கள் உறவுக்காரர்களில் பலருக்கு இந்த தாத்தா பாட்டி உறவு சட்டென்று பிடித்துவிடாது. ‘நான் இன்னும் பாட்டியாகலை. என்னை பாட்டின்னு கூப்பிடக்கூடாது’ என்று சொல்வார்கள். அதாவது அவர்கள் குழந்தைகளுக்குப் பேரனோ பேத்தியோ பிறந்தபின் தான் எங்கள் குழந்தைகள் அவர்களை தாத்தா பாட்டி என்று கூப்பிடலாம்!.

சித்திக்கு மூன்று பெண்கள் இரண்டு பிள்ளைகள். எல்லோருமே ரொம்பவும் சின்னவர்கள். என் மாமியாரின் கடைசி தங்கை இவர். அவரே ரொம்பவும் சின்ன வயசுக்காரர் தான். வாசலிலேயே சித்தியின் குழந்தைகள் நின்று கொண்டிருந்தார்கள். ‘மன்னி, மன்னி; என்று என்னுடன் சகஜமாக ஒட்டிக்கொண்டார்கள். என் திருமணம் ஆன புதிதில் ஒவ்வொரு குழந்தை ஒவ்வொரு உறவில் என்னைக் கூப்பிடும். ‘மன்னி’, ‘சித்தி’, ‘மாமி’ என்று போதாக்குறைக்கு என் மாமியார் என்னை ‘புது மாட்டுப்பொண்ணே!’ என்பார். எனக்கு வியப்பாக இருக்கும். எத்தனை உறவுகள், உறவினர்கள்! திருமணம் ஒரு பெண்ணிற்கு எத்தனை அடையாளங்களைக் கொடுக்கிறது!

அரியலூர் வந்து சேர்ந்த போது மாலை நேரம். ‘என்ன சாப்பிடறே, நாராயணா?’ உபசாரம் ஆரம்பித்தது. இவர் காப்பி வேண்டுமென்றார். என் சின்ன மாமியார் காப்பி கலக்க தளிகை உள்ளிற்குப் போனார். நானும் அவருடன் கூடவே உள்ளே போனேன். மாட்டுப்பெண் என்றால் அப்படித்தானே செய்யவேண்டும்.

உள்ளே போனால்…….தலை சுற்றியது. ஒரு தட்டில் தோசைகள். ஒன்று இரண்டு அல்ல. ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி அடுக்கி ஒரு ஆள் உயரத்திற்கு தோசைகள்! கொஞ்சம் அதிகம் சொல்லிவிட்டேனோ? இல்லை இன்னும் இரண்டு மூன்று தோசைகள் வைத்தால் உத்திரத்தைத் தொடும்.

‘இது என்ன இவ்வளவு தோசை?’

‘உனக்குத்தான். நீ சாப்பிடமாட்டாயா தோசை?’

எனக்கா? இத்தனையா? நான் கொஞ்சம் அகலம் தான். ஆனால் இத்தனை தோசை சாப்பிட மாட்டேன் என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. தலை வேகமாகச் சுழல ஆரம்பித்தது. காப்பி டம்ப்ளரை எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டேன். என் கணவரிடம் சொன்னேன்:’சீவா சித்தி (அவரது பெயர் சீவரமங்கை – சீவா என்று கூப்பிடுவார்கள்) அடுக்கு தோசை பண்ணியிருக்கார் நாம சாப்பிட’ என்றேன்.

‘அடுக்கு தோசையா?’

‘ஆமா தோசை பண்ணி ஆளுயரத்துக்கு அடுக்கி இருக்கா…!’

என் கணவர் எழுந்து போய் பார்த்துவிட்டு வந்தார். ‘ஏய் சீவா (சித்தியை பேர் சொல்லித்தான் கூப்பிடுவார் – கிட்டத்தட்ட சம வயது என்பதால்) எதுக்கு இத்தனை பண்ணியிருக்க?’

‘நீ, ரஞ்சனி, குழந்தை சாப்பிடத்தான்!’

‘நாங்க என்ன பகாசுரனா?’

அதற்குள் சித்தியின் குழந்தைகள் சினிமா போகலாம் என்று சொல்லவே நாங்கள் கிளம்பினோம்.

‘தியேட்டர் எங்க இருக்கு?’

‘இதோ பக்கத்துல தான்’

‘தியேட்டரா? இங்க கொட்டாய் தான்’

ஒரு வாண்டு தன் அண்ணா வாண்டுவிடம் ஏதோ கேட்டது. அவனும் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே ‘மன்னி மெட்ராஸ். அதனாலேதான் தியேட்டர் அப்படின்னு சொல்றா’

‘இனிமே டிக்கட் கிடைக்குமா?’ என் கேள்விக்கு ஒரு வாண்டு பதில் சொல்லிற்று. ‘நாம போனாதான் படமே ஆரம்பிக்கும்’. எப்படி?

என் கேள்விக்கு கொட்டகைக்குப் போனவுடன் பதில் கிடைத்தது?

வாசலிலேயே ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

(தொடரும்)

எனது முதல் தொடர் இது.

 

2 அரியலூர் அடுக்கு தோசை 

என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்? ஆங்……கொட்டாய் வாசலில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். உங்களை மாதிரிதான் நானும் எங்களுக்காக அவர் காத்திருக்கிறார் என்று நினைத்தேன். எங்களைப் பார்த்ததும் எழுந்து நின்றார். அவர் எழுந்து நிற்கக் காரணம் என் புடவை என்றால் நம்புவீர்களா? நிஜம். நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

அன்று நான் கட்டிக்கொண்டிருந்தது வெள்ளையில் லைட்டாகப் பூப்போட்ட காட்டன் புடவை. நன்றாக ஸ்டார்ச் செய்து பெட்டி போட்டு மொடமொடவென்று இருந்தது அந்தப் புடவை. எழுந்து நின்றவரைப் பார்த்து எங்கள் சித்தியா சொன்னார்: ‘ஒக்காருப்பா, ஒக்காரு. எழுந்தெல்லாம் நிற்கவேண்டாம். சீட்டு போட்டிருக்கியா?’ என்ற கேள்வியுடன் எங்களைப் பெருமையாகப் பார்த்தார். இந்த ஊர்ல என் செல்வாக்கு எப்படி? என்று. அந்த ஆள் சொன்ன பதில் எல்லோரையும் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது. ‘அட! உங்களப் பார்த்து யார் ஸார் எழுந்தது? இந்த அம்மாவ தூரத்துலேருந்து பார்க்கும்போது வெள்ளை பொடவ கட்டிக்கிட்டு கலெக்டர் மாதிரி தெரிஞ்சாங்க. அதான்….!’ வாண்டுகளுக்கெல்லாம் சந்தோஷம் தாங்கவில்லை. ‘ஹை! கலெக்டர் மன்னி! கலெக்டர் மன்னி!’ என்று என்னைச்சுற்றி வந்து கும்மி அடிக்காத குறை! ‘அப்போ அண்ணா யாரு?’ ‘டவாலி!’ என்றது ஒரு விஷம வாண்டு. ‘சூ! அப்படியெல்லாம் சொல்லக்கூடாது!’ என்று நானே அடக்கினேன்.

ஆனாலும் இந்த வாண்டுகள் ரொம்பத்தான் பேசுகின்றன. கொட்டாய்க்கு வரும் வழியில் முதல் பெண் – பத்து வயசிருக்கும் கேட்டது:’மன்னி உங்களுக்கு கல்யாணம் ஆனவுடனே பார்த்த முதல் சினிமா எது?’ என்று.

‘ஊட்டி வரை உறவு’ என்றேன். ‘ஐயையோ அப்போ ஊட்டிக்குப் போகாதேங்கோ’ ‘ஏண்டி?’

‘உறவு முடிஞ்சுடுமே!’ ஊட்டி வரைக்கும் தானே உறவு!’ எனக்கு ஒரு மாதிரி இருந்தாலும் சின்ன மாமியார் குழந்தைகள். ஒண்ணும் சொல்லக்கூடாது என்று சும்மா இருந்தேன். அதைப் பார்த்து அடுத்த பெண்,

’ஏய் மாலா! மன்னிக்கு ஓம் மேல கோவம்! பாரு பேசாம வரா!’ என்றது.

எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. ‘எனக்கு யார் மேலேயும் கோவம் இல்லம்மா!’ என்றேன். நண்டு சிண்டுகள் எங்கேயாவது சிண்டு முடிந்து விடப்போகிறதுகளே என்று பயம்!

நல்லகாலம் கொட்டாய் வந்துவிட்டது. பேச்சும் முடிந்தது. இங்கே வந்தால் கலெக்டர் வரவேற்பு. என் கணவர் வாண்டுகளிடம் சொன்னார்: ‘மன்னி ரெண்டாவது தடவையா கலெக்டர் ஆயிருக்கா!’ என்று. ஏற்கனவே வாண்டுகள் ‘கெக்கேபிக்கே’ன்னு சிரிக்கறதுகள். இவர் வேற என்று நினைத்துக்கொண்டேன்.

ஒருமுறை ஸ்ரீரங்கம் கோவிலுக்குப் போயிருந்தோம். கோவிலில் அதிகம் கூட்டமில்லை. கருட மண்டபம் தாண்டி உள்ளே நுழைந்தோம். என் கணவர், குழந்தைகள், என் அத்திம்பேர் எல்லோருமாகத் தான் போனோம். அவர்கள் எல்லோரும் பேசிக் கொண்டே வர எனக்கு துவஜஸ்தம்பத்தின் அருகே இருக்கும் ஆஞ்சநேயரை சேவிக்க வேண்டும். அதனால் முன்னால் போய்கொண்டிருந்தேன். என்னைப்பார்த்தவுடன் அந்த டவாலி விருட்டென்று ஒரு சல்யூட் அடித்தார். நான் தூக்கி வாரிப்போட்டுக் கொண்டு பின்னால் திரும்பிப் பார்த்தேன். பின்னால் வந்துகொண்டிருந்த என் அத்திம்பேர் ‘பகபக’ன்னு சிரிச்சுண்டே சொன்னார்: ’ரஜினியை கலெக்டர் கரியாலின்னு நினைச்சுட்டாரு போல!’ என்று. உடனே டவாலியும் அசடு வழியச் சிரித்துக் கொண்டே ‘நீங்க கலெக்டர் அம்மா இல்லையா? மன்னிச்சுக்குங்க!” என்றார். ‘உத்தியோகத்திலேயே இல்லாத இந்த அம்மாவை ஒரு நொடில கலெக்டர் ஆக்கிட்ட! உனக்கு இவங்க தாங்க்ஸ் தான் சொல்லணும்’ என்று என் அத்திம்பேர் ஜோக்கடித்தார்.

பரவாயில்லை இந்த வெள்ளைப் புடைவை நமக்கு கலெக்டர் பதவியைக் கொடுக்கிறது ஒவ்வொரு தடவை இதைக் கட்டிக் கொள்ளும்போதும் என்று நினைத்துக் கொண்டேன். வாண்டுகளுக்கு இன்னும் சிரிப்பு அடக்கமுடியாமல் போயிற்று.

என்ன சினிமா பார்த்தோம் என்று இப்போது நினைவில்லை.

(தொடரும்)

 

3 அரியலூர் அடுக்கு தோசை 

படம் பார்த்தாதானே என்ன படம்னு நினைவிருக்கும்? படம் பார்க்கவிடாமல் நண்டு சிண்டுகள் கொட்டம் அடித்தன. கொட்டாய் உள்ளே நுழைந்து ‘பெஞ்சு’ சீட்டுக்கு போனோமோ இல்லையோ, ‘நான் மன்னி பக்கத்துல’, ‘நான் மன்னி பக்கத்துல’ என்று முட்டி மோதி ஒண்ணோட ஒண்ணு சண்டை. ‘நா நடுவுல உக்காந்துக்கறேன், நீங்க என் ரெண்டு பக்கத்துலயும் உக்காருங்கோ’ என்றால் என் பெண் ‘ஹோ’ என்று அழுகை. ‘நாந்தான் ஒன் கப்பத்துல (பக்கத்துல) என்று. ஒரு வழியா பெஞ்சின் ஒரு கோடியில் என் அகத்துக்காரர். இந்த கோடியில் நான். நடுவில் ஐந்து வாண்டுகள். எனக்கு அப்புறம் என் பெண். என் அகத்துக்காரருக்கு அந்தப் பக்கம் சித்தியா.

கொட்டாய் உள்ளே போறதுக்கு முன்னால நடந்துதே ஒரு கூத்து அதைச் சொல்லலையே. எழுந்து நின்ற ஆள் சீட்டு உள்ள போடல என்று தெரியவந்ததும் வாண்டுகள் ‘நா போய் இடம் பிடிக்கிறேன்; நா போய் எடம் பிடிக்கிறேன்’ என்று ஒரே சத்தம். சித்தியா ஒரு அதட்டல் போட்டார். கொஞ்சம் அமைதி. என் குழந்தைக்கோ இவர்கள் அடிக்கும் கூத்துக்களைப் பார்த்து ஒரே சிரிப்பு. என் இடுப்பில் உட்கார்ந்து கொண்டு குதிகுதின்னு குதிச்சுண்டிருந்தா. என் அகத்துக்காரர் சித்தியாவிடம் ‘நா டிக்கட் வாங்கறேன்’ ன்னு பர்ஸை எடுத்தார். ‘அண்ணா சேர் வாங்குங்கோ…. அண்ணா….!’ என்று எல்லாம் கோரஸ்ஸாக சொன்னதுகள். ‘அம்மாவோட வந்தா நாங்கள்ளாம் தரை டிக்கட்டுல தான் படம் பார்ப்போம். மணலை குமிச்சி வெச்சி அதும்மேல உக்காந்துண்டு படம் பார்ப்போம். கண்ணம்மா (சித்தியின் கடைசிக் குழந்தை) தூங்கியே போய்டுவா!’

‘மன்னி மெட்ராஸ். அதனாலே அண்ணா சேர்தான் வாங்குவார்’ என்று என்னைப்பார்த்து சிரித்தபடியே பெரியவன் சொன்னான்.

‘மெட்ராஸ் மெட்ராஸ்’ அப்படிங்கறது பாராட்டா, கேலியான்னு எனக்குப் புரியல. ஸ்ரீரங்கம் போனாலும் எல்லோரும் எங்களை ஒருமாதிரிதான் பார்ப்பார்கள். அதுவும் கொள்ளிடத்திற்குக் குளிக்கப் போனா நாங்கள் எல்லாம் கட்டிண்டு வந்த துணியோட ஆத்துல உக்காறத பார்த்து ஒரு நமுட்டு சிரிப்புடன், ‘பட்டணத்துலேருந்து வரேளா’ என்று அங்கருக்கற மாமிகளெல்லாம் கேலியா கேட்பா. அவா மாதிரி எங்களுக்கு ஒரு துண்டை கட்டிண்டு இடுப்புப் புடவையை தோய்ச்சுக் கட்டிக்கற வித்தை தெரியாது அதனால. இங்க இந்த குழந்தைகளும் மெட்ராஸ்ன்னு சிரிக்கறதுகளே! மெட்ராஸ்காரான்னா இளப்பமா?

டிக்கட் வாங்கின உடனே ‘உள்ள போலாம், உள்ள போலாம்’ ன்னு அமர்க்களம்.

‘படம் ஆரம்பிச்சிருக்குமா?’

‘ஊஹும். முதல்ல பீடி, சிகரெட் விளம்பரம். அப்புறம் அரசாங்க செய்திச் சுருள் வரும். ‘அஸ்ஸாமில் வெள்ளம்’, பஞ்சாபில் பஞ்சம்’ அப்படின்னு. அதுவும் சரியாத் தெரியாது. பிலிம் முழுக்க மழையா இருக்கும்!’

‘மழையா?’

‘ஆமா, மன்னி ஒரே பிலிம காமிச்சு காமிச்சு தேஞ்சு போயிருக்கும்!’

பரவாயில்ல. பசங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு. ‘சீவா பசங்களா கொக்கா?’ என்றார் என் அகத்துக்காரர் என் மனசப் படிச்சா மாதிரி.

அதற்குள் ஒரு வாண்டு திடீரென நினைவிற்கு வந்தது போல சொல்லித்து: ‘போனதடவ ஒரு கேலிப்படம் காமிச்சா. அதுல ஒரு மாமா முண்டாசெல்லாம் கட்டிண்டு ரயில்ல வருவா. தன்னோட ஊர் வந்தவுடனே – ரயில் அவா ஊருல நிக்காது – அதனால ரயில்ல இருக்கற செயினப் பிடிச்சு இழுத்துடுவா. ரயில் நின்னவுடனே ஜாலியா விசில் அடிச்சுண்டே ரயில்ல இருந்து இறங்கி நடந்து போவா. அப்போ ஒரு கை நீளமா பின்னாலேருந்து வந்து அந்த மாமாவோட கழுத்தைப் பிடிச்சு அழைச்சுண்டு போயி, ஜெயில்ல போடும்…! செயினைப் பிடிச்சு இழுக்கக் கூடாதுன்னு எழுதிக் காட்டுவா’.

‘மன்னி நீங்க அந்தப் படம் பார்த்திருக்கேளா? மெட்ராஸ்ல அதெல்லாம் காட்டுவாளா?’

‘ம்ம்ம்…. காட்டுவா…’ என்றேன். அப்போது இந்தக் கேலிச்சித்திரம் தொலைக்காட்சிகளில் வந்துகொண்டிருந்தது.

ஒரு வழியா உள்ள போயி உக்காந்துண்டோம். அங்கே ஒரு அமர்களம் ஆச்சு. உண்மையிலேயே குழந்தைகள் சொன்னா மாதிரி அரசாங்கச் செய்திச் சுருள், செயினைப் பிடிச்சு இழுக்கற ஆள் என்று எல்லாப்படங்களுக்கு காண்பித்தார்கள். எனக்குக் கதை சொன்ன வாண்டு ரொம்பவும் என்ஜாய் பண்ணிண்டு ‘கிலுகிலு’ வென்று சிரித்துக் கொண்டிருந்தது. படத்தைவிட இதுகளைப் பார்க்கிறது எனக்கு பெரிய எண்டர்டெயின்மென்ட் ஆக இருந்தது.

இடைவெளில நான் சொன்னேன்: ‘குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக் கொடுங்கோ’

காதுல விழுந்துதோ இல்லையோ, ‘அண்ணா, காளிமார்க் சோடா’, ‘ இல்லண்ணா எனக்கு கோலி சோடா’ , ‘எனக்கு குச்சி ஐஸ்க்ரீம்!’ என்று ஒரே கூச்சல், கும்மாளம்.

எல்லோருக்கும் அவரவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்தார். குழந்தைகளுக்கு குஷியோ குஷி.

படம் முடிஞ்சு வெளியே வந்தவுடன் இவர் கேட்டார் ‘பசிக்கறது, ராத்திரிக்கு என்ன சாப்பாடு?’

‘அடுக்கு தோசை….!’ என்றேன்.

(தொடரும்)

 

4 அரியலூர் அடுக்கு தோசை 

படம் முடிந்து திரும்ப அகம் வருகையில் ‘மன்னி, நீங்க இதுபோல கொட்டாய்-ல சினிமா பார்த்ததில்லையா?’ இந்தக் கேள்வி வரும் என்று நினைத்தேன். அதேபோல வந்தது.

‘ஊம், பார்த்திருக்கிறேனே! சீரங்கத்தில தேவி டாக்கீஸ், ரங்கராஜா டாக்கீஸ் அப்படின்னு இரண்டு இருக்கு. பேருதான் டாக்கீஸ். உள்ள போனா இப்படித்தான் இருக்கும்.’

வாண்டுகளுக்கு ஒரே சந்தோஷம். ‘அப்ப நீங்க மெட்ராஸ் இல்லையா? சீரங்கமா?

‘மக்கு, மக்கு, மன்னி மெட்ராஸ் தான். சீரங்கத்துக்கு வரும்போது கொட்டாய்-ல சினிமா பார்த்திருக்கா! இல்ல மன்னி?’

கேள்வி-பதில் எல்லாம் அவர்களுக்குள்ளேயே!

‘என்ன சினிமா மன்னி?’

‘பார்த்தால் பசி தீரும், அப்புறம்…….ஆங்….! வீரபாண்டிய கட்டபொம்மன். எங்க பாட்டியோட வருவோம். பாட்டி சேர் டிக்கட் எல்லாம் வாங்கமாட்டா. தரை தான். எங்களுக்கு சாப்பிட முறுக்கு, பர்பி எல்லாம் கொண்டுவருவா….!’

‘வீரபாண்டிய கட்டபொம்மனா? எந்த வருஷம்?’

‘வருஷம் நினைவில்ல. ஆனா நா ரொம்ப சின்னவ….. ஜக்கம்மா, ஜக்கம்மா என்று சிவாஜி சத்தம்போடும் போதெல்லாம் பாட்டி மடில படுத்துண்டுடுவேன்……பெரிசா ஜக்கம்மா முகம் வரும். நாக்க தொங்க போட்டுண்டு…..! ஜக்கம்மா போயிட்டா அப்படின்னு பாட்டி சொன்னவுடனேதான் படத்தை பார்ப்பேன்…..!’

நண்டுசிண்டுகள் ‘கிளுகிளு’ வென்று சிரித்தன.

‘அப்போ ஒரு வேடிக்கை நடந்தது சொல்லட்டுமா?’ என்றேன்.

‘சொல்லுங்கோ, சொல்லுங்கோ…!’

‘வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தைப் பார்த்துட்டு வந்து கொஞ்சநாள்ல இன்னொரு சினிமா போனோம். அதுலயும் சிவாஜிதான் ஹீரோ. எங்களோட கூட ரெண்டுபடத்துக்கும், எங்க உறவுக்காரப் பையன் வந்திருந்தான். இந்த இன்னொரு படத்துல சிவாஜி வந்தவுடனே ‘வீரபாண்டியன் படத்துல இந்த மாமாவ தூக்குல போட்டாளே…இப்போ எப்படி இந்த படத்துல வந்தா?’ அப்படின்னு கேட்டான் பாரு. தியேட்டர்லேயே! எங்களுக்கெல்லாம் சிரிப்பு தாங்கல…..’பக்’குனு சிரிச்சுட்டோம்.’

‘அப்புறம்?’

‘அவனுக்கு ஒரே கோவம். ‘நான் நன்னா பாத்தேன். இந்த மாமா கழுத்துல கயத்த மாட்டி மரத்து மேல இழுத்துட்டா. இந்த மாமா அப்படியே தொங்கினா’ என்று சொல்லிண்டே ‘ஓ’ன்னு அழ ஆரம்பிச்சுட்டான். எங்க பாட்டி அவன ரொம்ப பாடுபட்டு சமாதானப்படுத்தினா. பாவம் பாட்டி, அவன சமாதனப்படுத்தறதுல சினிமா பாக்கவே முயடியல’.

குழந்தைகளோட குழந்தையா நானும் பேசிண்டே வர அகம் வந்துடுத்து. ஆஹா! அடுத்த என்கௌண்டர் அடுக்கு தோசையுடன் தான் என்று நினைத்துக் கொண்டே மித்தத்துல (முற்றம்) போயி கால அலம்பிண்டு வந்தேன். நான்கு வீடுகளுக்கும் பொதுவாக அந்த மித்தம். (சீவா சித்தியின் பாஷையில் முற்றம் மித்தம் ஆகியிருந்தது.

எல்லோருக்கும் வாழலை சருகு போட்டு அடுக்கு தோசை போட ஆரம்பித்தார் சீவா சித்தி. ‘சித்தி ஒண்ணு போரும்’ என்றேன்.

‘ஒண்ணு எப்படிடி போரும். ரெண்டு போட்டுக்கோ’ என்றார் சித்தி. ‘கிட்டத்தட்ட 2 மைல் நடந்து வந்துருக்க…. நன்னா சாப்பிடு. அப்புறம் ராத்திரி பசிக்கும்’ என்று அருமை அருமையாக உபசாரம் செய்தார் சித்தி. கார்த்தால பண்ணின கொழம்பு, அப்புறம் மிளகாய்பொடி எண்ணெய். தம்ளர்ல மோரு. நல்ல பசி. மத்தியானம் சாப்பிட்டது.

சும்மா சொல்லக்கூடாது. தோசை பார்க்க தடிதடியாக இருந்தாலும் மெத்மெத்தென்று வாயில் கரைந்தது. என் பெண்ணிற்கும் அரைதோசை ஊட்டினேன்.

எல்லோரும் சாப்பிட்டு முடிந்ததும் சித்தி பாத்திரம் தேய்க்க ஆரம்பித்தார். ‘நான் தேய்ச்சு தரேன் சித்தி’ என்றேன். ‘நீ என்னிக்கோ வர. அதுவும் மெட்ராஸ் மாட்டுபொண்ணு. உன்ன வேல வாங்குவாளா?’ என்றார் சிரித்துக்கொண்டே. ‘பரவாயில்ல சித்தி. நான் நன்னா தேய்ப்பேன்’ என்றேன்.

‘உன்னோட சமத்தெல்லாம் தெரியும்டி எனக்கு. அப்படி உக்காந்துண்டு பேசிண்டிரு. நான் ‘கிடுகிடு’ன்னு முடிச்சுட்டு வந்துடறேன்’ என்றார் சித்தி. எங்கள் அரட்டைக் கச்சேரி நடந்துண்டு இருக்கும்போது என் பெண் வந்தாள். ‘அம்மா தொப்ப வலிக்கறது’

‘சித்தி லெட்ரீன் எங்கருக்கு. இவளுக்கு தொப்ப வலின்னா டூ பாத்ரூம் போகணும்னு அர்த்தம்’ என்றேன்.

சித்தி தன் பெண்ணைக் கூப்பிட்டார். ‘அந்த காடா விளக்கை எடுத்துண்டு மன்னி கூட போ. குழந்தை ‘வெளிக்கி’ போகணுமாம்’ என்றார்.

காடா விளக்கா? ‘லெட்ரீன்ல விளக்கு இல்லையா?’ என்றேன்.

‘இங்க எதுடி லெட்ரீன்?’ என்ன சொல்ல வருகிறார். சட்டென்று புரியவும், எனக்கு உள்ளுக்குள் பதைபதைத்தது. எப்படி இந்த ராக்ஷசிய சமாளிப்பேன்? ஆயிரத்தெட்டு கேள்வி கேக்குமே!

(தொடரும்)

 

5 வெந்நீர் உள் …?

மித்தம் என்று சொல்லும் முற்றம்

வெந்நீர் உள் அங்கிருக்கும் விறகு அடுப்பில் சருவம் (ஒரு பாத்திரம்) வைத்து வெந்நீர் போடுவது வழக்கம்.

முதல் முற்றம் தாண்டி உள்ளே போனால் இன்னொரு முற்றம் – இதனை இரண்டுகட்டு வீடு என்பார்கள்.

திண்ணை வீடு

‘லெட்ரீன் காணோம்பா! ஸ்க்வேரா (ஸ்கொயர்) ஒரு இடம். கதவே இல்லப்பா. அங்க ஒக்காரு ஒக்காருன்னு அம்மா மெரட்டினாப்பா! இருட்டு வேற. நான் என்னப்பா பண்றது?’ என்று கண்ணீரும் கம்பலையுமா என் பெண் என் அகத்துக்காரர் கிட்ட சத்தமா சொல்றத கேட்டு நண்டுசிண்டுகள், சித்தி சித்தியா எல்லோரும் ‘கடகட’ன்னு சிரிச்சா. என் கணவர் தனக்கு வந்த சிரிப்பை அடக்கிண்டு ‘சரி விடு. அம்மாக்குத் தெரியலை. நாம தூங்கலாம், வா!’ என்று அவளை பக்கத்தில் படுக்க விட்டுக் கொண்டார். ரொம்ப நேரம் இந்த ராக்ஷசி தூங்கலைன்னு தெரிஞ்சுது. எப்படின்னு கேக்கறேளா? ‘இவாத்துல லெட்ரீன் கிடையாதாப்பா?’ என்று தூங்கிப்போன என் அகத்துக்காரரிடம் இவள் கேட்டுக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது!

அசதியில் நான் நன்றாகத் தூங்கிவிட்டேன், அடுத்தநாள் எனக்கு இன்னும் ஒரு அதிர்ச்சி இருக்கிறது என்று உணராமலேயே. எழுந்திருக்கும்போதே ரொம்பவும் லேட்டாகிவிட்டது. சித்தி குளித்துவிட்டு தளிகை உள்ளில் வேலையாக இருந்தார். நான் கொஞ்சம் வெட்கத்துடன், ’ஸாரி! சித்தி! மணி ஆனதே தெரியலை’, என்றேன். ‘பரவாயில்லடி, பிரயாண அலுப்பு. பல்லு தேச்சுட்டு வா! காப்பி தரேன்’ என்றார். வெளியிலிருந்த மித்தத்தில் போய் பல்லைத் தேச்சுட்டு வந்தேன். சித்தியின் கைகாப்பி மணத்தது.

‘கார்த்தால டிபன் சாப்பிட்டுப் பழக்கமா உனக்கு? இங்க டிபன் தான் கார்த்தால’ என்று கேட்டார் சித்தி. ‘இல்ல சித்தி. ஒரேயடியா பத்து மணிக்கு சாப்பாடுதான். மச்சினர்கள் எல்லாம் 9 மணிக்கு சாப்பிட்டு விட்டு ஆபீசுக்குப் போய்விடுவா. அம்மாவும் நானும் பத்து மணிக்கு சாப்பிட்டுடுவோம். அப்புறம் ஒன்றரை மணிக்கு காப்பி. 3 மணிக்கு அப்பாவிற்கு டிபன். அதையே நாங்களும் சாப்பிடுவோம்… ராத்திரி சாப்பாடு இவாள்ளாம் ஆபீசுலேர்ந்து வந்தவுடன் தான்’.

‘அங்க எல்லாரும் பெரியவா. இங்க குழந்தைகள் இருக்கா பாரு. அதனால கார்த்தால டிபன் தான். திருப்பித்திருப்பி இட்லி, தோசைதான். குழந்தைகளுக்கு வயறு ரொம்பணும் இல்லையா?’ என்றார் சித்தி.

‘நீங்க பூரி சப்பாத்தி பண்ணமாட்டீங்களா?’ என்று என் பெண் கேட்டது. ‘இன்னிக்கு ராத்திரி குழந்தைக்கு பூரி பண்ணலாமா?’ என்றார் சித்தி. ‘தொட்டுக்க என்ன?’ என்றது பெரிய மனுஷி மாதிரி. ‘உருளைக்கிழங்கு கரமது?’ ‘ஐயையே! பூரிக்கு கரமது எல்லாம் பண்ணக்கூடாது. சன்னா, ராஜ்மா, பட்டாணி மசாலா பண்ணனும்!’ என்று நீட்டி முழக்கியது நான் பெற்ற செல்வம்.

‘உங்கம்மா இதெல்லாம் பண்ணுவாளா?’

‘ஊஹூம்! அம்மா ஆத்துல பாம்பே சட்னி பண்ணுவா. எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. ஹோட்டல சாப்பிடுவோம். அப்புறம் கோப்தா………!’

பயந்துகொண்டே சித்தியைப் பார்த்தேன். ‘என்னடிது…. வெளில ஹோட்டல்ல சாப்பிடுவீங்களா’ என்று கேட்பாரோன்னு. ஆனால் ரொம்ப டீசென்ட் ஆக விட்டுவிட்டார். அவரை அப்படியே விழுந்து சேவிக்க வேண்டும் போல இருந்தது.

என் மாமியாருக்கு வெங்காயமே உள்ளே வரக்கூடாது. பிள்ளைகள் மாமானார் எல்லோரும் சேர்ந்து எப்பவாவது வெங்காய சாம்பார் கேட்பா. அதுக்குன்னு தனியா பாத்திரங்கள், கரண்டி, ஸ்டவ் கூடத் தனிதான். தளிகை உள்ளில் பண்ணக்கூடாது. ஸ்டவ்வை வெளியே வைத்துக்கொண்டு பண்ணவேண்டும். சாம்பார் பண்ணிய பாத்திரம் ஒரு மூலையிலே இருக்கும். மற்ற உள் பாத்திரங்களுடன் சேர்க்கக்கூடாது அதை. பண்ணிமுடித்தவுடன் ஸ்டவ்வை (அந்தகாலத்திய பம்ப்பு ஸ்டவ்!) நன்றாக புளி சாணி போட்டு சித்து (சுத்தம்) பண்ணி வைக்கணும். வெங்காய சாம்பாருக்கே இத்தனை கெடுபிடின்னா எங்கேருந்து இது கேக்கற மசாலா, கோப்தா செய்யறது?

‘நான் குளிச்சுட்டு வரேன், சித்தி. மாலா! வெந்நீர் உள் எங்கேருக்கு? கொஞ்சம் காமி’, என்று சித்தியின் பெரிய பெண்ணைக் கேட்டேன்.

இங்க வா. நா காமிக்கறேன்னு சித்தி மித்தத்திற்கு அழைச்சுண்டு போனார்.

‘இதான் எங்காத்து வெந்நீர் உள்’

மேல் ஆகாசம். சுற்றிவர வீடுகள். மறைவு என்பதே இல்லாத இடம் அந்த மித்தம். நான்கு வீடுகளுக்கும் பொது. எல்லார் வீட்டின் பின்பக்கக் கதவுகளும் அந்த மித்தத்தில் திறந்தன.

நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். ‘இங்கேயா குளிக்கணும்?’ என் குரலில் இருந்த பதைபதைப்பு சித்திக்குப் புரிஞ்சது போலிருக்கு.

‘இது பட்டணம் இல்லடி பொண்ணே! பொட்டல்காடு. இங்க வந்து நீ லெட்ரீன், வெந்நீர் உள் எல்லாம் கேட்டால் நா எங்கப் போவேன்?’

‘இங்க எப்படி சித்தி குளிக்கறது? எல்லாரும் வந்து போற இடமாச்சே!’

‘நீ கவலைப்படாம குளி. நான் எல்லோராத்துலேயும் போயி எங்க மாட்டுப்பொண்ணு குளிக்கறா. சித்த நாழிக்கு யாரும் மித்தத்திற்கு வாராதேங்கோ ன்னு சொல்லிட்டு வரேன். மாலா! ஓடிப்போயி பக்கத்தாத்து, எதித்தாத்து மாமி கிட்ட மன்னி குளிக்கப் போறா. கொஞ்சம் கதவை தாழ்ப்பாள் போட்டுக்கோங்கோ ன்னு சொல்லிட்டு வா!’

‘ஐயையோ! வேணாம் வேணாம்…’ நான் கிட்டத்தட்ட அலறிட்டேன். நான் மித்தத்துல குளிக்கப் போற விஷயம் பிபிசி ல வந்துடும் போலருக்கே!

(தொடரும்…..அடுத்த பகுதியுடன் நிறைவடையும் இந்தத் தொடர் என்ற சந்தோஷ செய்தியை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.)

 

6 அரியலூருக்கு டாட்டா…!

போன பதிவில் நான் போட்டிருந்த படங்கள் எல்லாம் என் பெரிய மாமியார் ஜெயம்மா பெரியம்மாவின் அகத்தில் எடுத்த படங்கள். இப்போது பெரியம்மா இல்லை. அவரது பிள்ளையும் மாட்டுப்பெண்ணும் இந்த வீட்டில் இருக்கிறார்கள். அந்த ஊர் பெயர் சிவராமபுரம். தஞ்சாவூரில் உள்ள குற்றாலம் அருகே இருக்கும் ஊர். ஒரே ஒரு வீதிதான் சிவராமபுரம். வீதியின் ஒரு கோடியில்

ஊஞ்சல்!

சிவராமபுரம் – ஒரேவீதிதான்!

ஸ்ரீராமனுக்கு ஒரு கோவில். கோவிலுக்கு பின்னால் காவேரி வடக்கு முகமாக ஓடுகிறாள். நிறைய படிகள் இறங்கி ஆற்றுக்குள் போகவேண்டும். அத்தனை தண்ணீர் ஒருகாலத்தில் ஓடியிருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். இப்போது ஆற்றில் நீரே இல்லை. குழந்தைகள் ஆற்றைத் தாண்டி சிவராமபுரம் அரசுப் பள்ளிக்கூடத்திற்கு வருகிறார்கள்.

சென்ற வருடம் நாங்கள் அங்கு போயிருந்த அன்று காலை ஆறிலிருந்து மாலை ஆறுவரை மின்சாரம் கட். எனது அலைபேசியில் சார்ஜ் இருந்தவரை எடுத்த படங்கள் இவை. காவிரியை எடுப்பதற்குள் சார்ஜ் போயிந்தி. சரி அரியலூருக்கு விடை கொடுப்போமா?

**********************

நான் போட்ட சத்தத்தில் சித்தியாவும் என் கணவரும் மித்தத்திற்கு வந்துவிட்டனர். சித்தியா ரொம்பவும் கோபித்துக்கொண்டார் சித்தியை. ‘என்ன நீ! அவளைப் போயி மித்தத்துல குளிக்கச் சொல்ற. சரியே இல்ல நீ பண்றது’ என்றார். பாவம் சித்தி. ‘நான் மெட்ராசுக்குப் போய் குளிச்சுக்கறேன் சித்தி’ என்றேன் தீனமான குரலில். ‘ச்சே ச்சே…! அதெல்லாம் வேண்டாம். நான் வேறேதாவது பண்றேன். இப்ப உள்ள வா’ என்று சொல்ல எல்லோரும் உள்ளே வந்தோம்.

தளிகை உள்ளில் நுழைந்தவுடன் சித்தியின் முகம் சட்டென்று மலர்ந்தது. ‘ஒண்ணு பண்ணு. இங்க (தளி(கை) பண்ற உள்ளுல) இருக்குற மித்தத்தை ஒழிச்சுத் தரேன். இங்க குளி நீ. குழாய்ல தண்ணியும் வரும்’ என்று சொல்லிக்கொண்டே மித்தத்தில் இருந்த பாத்திரங்களை கிடுகிடுவென்று வெளியே எடுத்து வைத்தார். தளி பண்ற உள்ளின் ஒரு கோடியில் சின்னதாக ஒரு தடுப்பு சுவர். அங்கு ஒரு குழாய். ‘மாலா! மன்னிக்கு பித்தளை வாளியும் மொண்டாளியும் (நீரை முகர்ந்து கொள்ள பயன்படும் பாத்திரம்) கொண்டுவந்து குடு’ என்றார். ‘நான் தளிபண்ற உள் கதவ சாத்திண்டு போறேன். கவலைப்படாம குளி’ என்றவாறே வெளியே போனார். அன்று நான் அங்கு பார்த்த பித்தளை வாளி இன்னும் என் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. அந்த மொண்டாளிக்கு ஈடு இணை இந்த காலத்து ‘மக்’ (mug) கிற்கு வருமா?

எனக்கு அப்பாடி என்றிருந்தது. ஒரு பிரச்னை தீர்ந்தது! என் பெண்ணரசியையும் அங்கேயே குளிச்சுவிட்டேன். ‘இவாத்துல பாத்ரூமும் கிடையாதா?’ என்று நீட்டி முழக்கிக் கேட்டுக் கொண்டே குளித்து முடித்தாள். நான் எப்பவும் அதிகம் மேக்கப் போடமாட்டேன். அந்த காலத்தில் வீக்கோ டர்மரிக் க்ரீம் வரும். மெல்லிய சந்தன வாசனையுடன் ரொம்ப நன்றாக இருக்கும். குளித்து முடித்துவிட்டு வந்து தலையை வாரிக்கொண்டு முகத்திற்கு க்ரீம் போட்டுக்கொண்டேன். நான் மேக்கப் பண்ணிக் கொள்வதைப் பார்க்க நிறைய ஆடியன்ஸ்! ‘மன்னி நீங்க லிப்ஸ்டிக் போட்டுக்க மாட்டேளா?’, ‘பௌடர் போட்டுக்க மாட்டேளா?’ என்று நிறைய கேள்விகள் வேறு.

மதிய சாப்பாட்டையும் முடித்துக்கொண்டு அரியலூரை விட்டுக் கிளம்பினோம். சித்தி வெற்றிலைப் பாக்குத் தட்டை நீட்டினார். என் அகத்துக்காரர் அதில் இத்தனை பணத்தை வைத்து சித்தியிடம் கொடுத்தார். ‘எதுக்கு நாராயணா, இதெல்லாம்?’ என்றார். ‘வாங்கிக்கோ சீவா, குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக்கொடு’ என்றார்.

சித்தி கண்களில் நீர்மல்க விடை கொடுத்தார். ‘சித்தி! எனக்கு இங்க வந்து உங்களோட இருந்தது ஸ்ரீரங்கத்துல பாட்டியாத்துல இருந்த மாதிரி இருந்தது’ என்றேன். ‘எனக்கும் நீ எங்களோட வந்து இருந்தது ரொம்ப சந்தோஷம்டி, பொண்ணே! பட்டணத்துப் பொண்ணு, எப்படி இருப்பியோன்னு நினைச்சேன். துளிக்கூட பிகு பண்ணிக்காம நான் பண்ணிப் போட்டத சாப்பிட்டுட்டு எங்காத்து வால்களோட சுலபமாக பழகிண்டு….. குழந்தைய பாத்துக்கோ!’ என்று கையைப் பிடித்துக்கொண்டு குரல் கம்ம விடை கொடுத்தார். ‘நீங்க வாங்கோ சித்தி ஆத்துக்கு’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினோம். வறுமையில் செம்மை என்பதை அந்த இரண்டு நாட்களும் பூரணமாக அனுபவித்தோம் நாங்கள்.

அதற்குப் பிறகு எங்களுக்கு அரியலூர் போக வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவ்வப்போது ஏதாவது செய்தி வரும். ஒருநாள் அதிர்ச்சியான விஷயம் தெரிய வந்தது. சுந்தரம் வீட்டை விட்டு போய்விட்டான் என்று. சின்னப் பையன் எங்கு போயிருக்க முடியும் என்று நாங்கள் எல்லாம் மனம் முழுக்கக் கவலையுடன் பேசிக்கொண்டோம். சில வருடங்கள் கழித்து சுந்தரம் திரும்பி வந்தான். நேவியில் ஆபீசராக. வீட்டை விட்டு வெளியேறி எப்படியோ நேவியில் சேர்ந்திருக்கிறான். அங்கு மேல்படிப்புப் படித்து வேலையும் தேடிக்கொண்டு கப்பல் போகும் ஊர்களுக்கெல்லாம் இவனும் போய்வந்து கொண்டிருந்தான். உலகம் முழுவதும் சுற்றி வந்துகொண்டிருந்தான். எங்களுக்கெல்லாம் வியப்பான வியப்பு.

அரியலூரில் பார்த்த பிறகு நான் அவனை மறுமுறை பார்த்தது பெங்களூரில். ஒருமுறை நான் வெளியில் போய்கொண்டிருந்தேன். மாலை நேரம். வெகு அருகில் ‘மன்னி, மன்னி’ என்று ஒரு குரல். இந்த ஊரில் யார் என்னை இப்படிக் கூப்பிடுவது என்று திரும்பிப்பார்த்தேன். ‘நான்தான் மன்னி, அரியலூர் சுந்தரம்’ என்றான். ‘அட! நீ எப்படி இங்க?’ ‘ஒரு வேலையா வந்தேன். உங்க அட்ரஸ் தேடிண்டிருந்தப்போ நீங்க இங்கு போயிண்டிருந்ததை பார்த்தேன்…..அதான் கூப்பிட்டேன்!’

ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. அவனை குழந்தைகளுக்கு சித்தப்பா என்று அறிமுகப்படுத்தினேன். தன்னுடைய கடல் அனுபவங்களை குழந்தைகளிடமும் என்னிடமும் சுவாரஸ்யமான பகிர்ந்து கொண்டான். என் அகத்துக்காரர் அப்போது ஊரில் இல்லை. அடுத்த நாள் பிருந்தாவன் எக்ஸ்ப்ரெஸ்ஸில் மெட்ராஸுக்கு போவதாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

மாலாவிற்கு தபாலாபீஸில் வேலை கிடைத்திருக்கிறது என்று சித்தியா ஒருமுறை மெட்ராஸ் வந்திருந்தபோது சொன்னார். பாவம் சித்தி, கொஞ்சம் மூச்சு விட்டிருப்பார் என்று நினைத்துக்கொண்டேன்.

ரொம்பவும் நீண்டுவிடும் போலிருப்பதால் தொடரின் முடிவு அடுத்த பகுதியில்.

 

7 அரியலூரின் சோகங்கள்

உளுந்து உடைக்கும் இயந்திரம், சிவராமபுரம்

புழக்கடையில் கிணறு

போனவாரம் என் நாத்தனார் வந்திருந்தார். என் அகத்துக்காரர் பேச்சுவாக்கில், ’இவ சீவா பத்திதான் எழுதிண்டிருக்கா’ என்றார். ‘பாவம் சீவா, ‘என்னை அப்பா நல்ல இடத்துல கல்யாணம் செஞ்சு குடுக்கல’ என்று ரொம்பவும் குறைபட்டுப்பா’ என்று என் நாத்தனார் சித்தியைப் பத்தி நினைவு படுத்திண்டு சொன்னார்.

வாழைப்பூ மாம்பூ

பலா மூசு எலுமிச்சை

‘அஞ்சு பொண்ணு பொறந்தா அரசனும் ஆண்டி’ அப்படிங்கற போது பள்ளிக்கூட வாத்தியார் திருக்கண்ணபுரம் சௌரிராஜ ஐய்யங்கார் (என் அகத்துக்காரரின் அம்மாவப் பெத்த தாத்தா) 6 பெண்களைப் பெற்றவர் – 6 வது பெண் சீவரமங்கை. 6 பெண்களுக்கு அப்புறம் ஒரு பிள்ளை. 7 வது தடவை வெற்றி! அது வளந்து தன் பொண்களைக் கரையேற்றும் என்று என் அகத்துக்காரரின் தாத்தா நினைத்திருப்பாரோ, என்னவோ. கொடுப்பினை இல்லை. அந்தப் பிள்ளையும் சின்ன வயசுல திருக்கண்ணபுரம் கொளத்துல கால்தவறி விழுந்து போயிடுத்து. அதனாலேயோ என்னவோ என் மாமியாருக்கு திருக்கண்ணபுரம்னாலே கசப்புதான்.

எல்லாக் கல்யாணங்களுக்கும் சித்தி, சித்தியா வருவார்கள். குழந்தைகளும் வருவார்கள். அவ்வப்போது பார்த்துக்கொள்ளுவோம். ‘அரியலூர்ல வந்து அமர்க்களம் பண்ணின பொண்ணு’ என் பெண்ணைப் பார்க்கும்போதெல்லாம் சித்தி சொல்லிச் சொல்லி சிரிப்பார். சுந்தரம், மாலா இவர்களுக்குத் திருமணம் ஆயிற்று. மாலாவிற்கு இரண்டு பெண் குழந்தைகள். சுந்தரத்திற்கு ஒரு ஆண் ஒரு பெண் என்று தெரியவந்தது. சித்தியா அவ்வப்போது மெட்ராஸ் வருவார். போகப்போக அவர் வருவதும் குறைந்துவிட்டது. சர்க்கரை நோய் அவரைப் பாடாய் படுத்திக் கொண்டிருந்தது.

திடீர்னு ஒருநாள் மாலா போய்விட்டாள் என்று செய்தி எங்களை நிலைகுலையச் செய்தது. ரெண்டு குழந்தைகளை விட்டுட்டு என்னவாச்சு என்று எங்களுக்கு மனசு ரொம்பவும் நொந்து போயிடுத்து. சர்க்கரை நோய் இருப்பதே தெரியாமல் போய் சரியான சிகிச்சை எடுத்துக்காம ஒருநா இதயம் நின்னுடுத்து. கடசியில இந்த கதிக்கு அந்தக் கொழந்த ஆளாகணுமான்னு மனசு துடிச்சு போச்சு. சில வருடங்களில் சித்தியாவும் பரமபதித்தார். அவருக்கும் சர்க்கரை நோய் முற்றிப்போய் கடைசியில் கண் தெரியாமல் போய் ரொம்பவும் கஷ்டப்பட்டார். சித்தி கடைசி பிள்ளையுடன் இருந்தார். சித்தியா இருக்கும்போதே வத்சலாவிற்கு திருமணம் ஆயிற்று. அவளுக்கு இரண்டு பெண்கள். கண்ணம்மா தன் மனசுக்குப் பிடித்தவனை மணந்து கொண்டாள். குமாருக்கு இன்னும் திருமணம் ஆகியிருக்கவில்லை.

சுந்தரம் ஒருமுறை ரயிலில் பிரயாணம் செய்யும்போது மேலிருந்த சூட்கேஸ் ஒன்று தலையில் விழுந்து மண்டையில் அடி. சில மாதங்கள் புத்தி சரியில்லாமல் இருந்தான். பிறகு அவனும் போய்ச் சேர்ந்துவிட்டான் என்று செய்தி வந்தது. சித்தியும் பரமபதித்தார் சில வருடங்களில். ஆனாலும் அடுக்கடுக்கா இத்தன துன்பம் வந்திருக்க வேணாம் சித்திக்கு! மனசு எத்தன நொந்து போனாரோ? தெய்வம் சிலபேர கஷ்டப்படன்னே பிறவி எடுக்க வைக்கிறதோனு தோண்றது.

என் பிள்ளையின் திருமணத்திற்கு என் மாமியார் பக்கம் எல்லோரையும் கூப்பிடணம்னு எனக்கு. தேடித் தேடித் பிடித்து எல்லோருக்கும் டெலிபோன் செஞ்சு கூப்பிட்டேன். அதிர்ஷ்ட வசமா வத்சலா கிடைத்தாள். நிச்சயம் கல்யாணத்துக்கு வரேன் மன்னி. எனக்கும் ஒங்கள பாக்கணும்’ என்றாள். நடுவில் ஹார்ட் ப்ராப்ளம் இருந்து அறுவை சிகிச்சை ஆச்சு என்றாள். ‘கட்டாயமா வாம்மா’ என்றேன். ஆனால் வரவில்லை. சில மாதங்களில் அவளும் போய்விட்டாள் என்ற செய்திதான் வந்தது.

இந்தக் குடும்பத்தை நினைக்கறச்சசேல்லாம் எனக்கு இவா அத்தன பேரோட நினைவும் வரும். எத்தனை நல்ல குழந்தைகள். ஆயுள் இல்லாமல் போய்விட்டதேன்னு இருக்கும். சித்தியின் உபசாரம் இன்றைக்கும் என் நினைவில். இவர்கள் யாரையுமே நான் அவர்களது கடைசிக் காலத்துல பார்க்கல. அதனால என் நெனவுல இருக்கறது அரியலூர் நினைவுகள்தான். ‘மன்னி, மன்னி’ ன்னு என் காலச் சுத்தி சுத்தி வந்த, சிரிப்பும் கும்மாளமுமா இருந்த குழந்தைகள் தான் இன்னிக்கும் என் நினைவுல இருக்கிறார்கள். இந்த நினைவே சாஸ்வதமா இருக்கக்கூடாதா என்று இன்னிக்கும் மனசு ஏங்கறது. எல்லாத்தை அழிச்சுட்டு திரும்ப அரியலூர் நினைவுகள் நிஜமா ஆனா எத்தன நன்னாயிருக்கும்!

புகைப்படங்கள் சிவராமபுரத்தில் எடுத்தவை.

 

8 ‘நீங்க நான்-வெஜ்ஜா?’

வகுப்பறை என்றால் ஆசிரியர் கேள்வி கேட்கவேண்டும்; மாணவர்கள் பதில் சொல்லவேண்டும் என்று நியதி. ஆனால் நான் எடுத்த ஆங்கில (Spoken English) வகுப்புகளில் இது வேறுமாதிரி இருக்கும். ‘நீங்கள் என்னைக் கேள்வி கேட்கலாம் – ஆங்கிலத்தில் ‘ என்று அவர்களை ஆங்கிலத்தில் பேச வைப்பதற்காக சொல்லுவேன்.

எனது வகுப்பு என்று சொல்லும்போது பல வயதுகளில் மாணவர்கள் இருப்பார்கள். சில வகுப்புகள் எல்லோருமே சின்ன வயதுக்காரர்களாக – கல்லூரி மாணவர்களாக அமைந்துவிடும். வகுப்பறை ‘கலகல’ தான். ஆண்கள் பெண்கள் என்று கலந்து கட்டி இருப்பார்கள். சின்னவயதுக்காரர்கள் அதிகம் இருந்து ஒன்றிரண்டு 40+ வயதுக்காரர்கள் இருந்தால் என் பாடு திண்டாட்டம் ஆகிவிடும். காளையர்களுக்கும், கன்னியருக்கும் வகுப்பு ஜாலியாக இருக்கவேண்டும். நாற்பது வயதினருக்கோ ‘dead serious’ ஆக இருக்க வேண்டும். நான் சொல்லுவேன்: Let’s be alive and serious. Let’s not die to be serious’ என்று. சிலசமயங்களில் ‘மேம், இந்த uncle மறைக்கிறார்’ என்று ‘அழகன்’ படத்தில் வருவது மாதிரி குற்றச்சாட்டுகளும் வரும். எல்லாவற்றையும் சவாலே சமாளிதான்!

சில வகுப்புகளில் வெளிநாட்டவர்களும் இருப்பார்கள். அதுவும் கொரியன் மாணவர்கள் நிறையப்பேர் வருவார்கள். டூரிஸ்ட் விசாவில் 6 மாதம் வந்துவிட்டு 3 மாதங்களில் ஆங்கிலம் கற்றுக்கொண்டு போவார்கள். அப்படி ஒரு வகுப்பில் ஒரு கொரியன் மாணவர் இருந்தார் அவர் பெயர் மின்.

அது ஒரு மார்னிங் மார்னிங் (காலங்கார்த்தால!) வகுப்பு. அதாவது காலை 6.30 மணிக்கு வகுப்பு ஆரம்பம். வகுப்பு தொடங்கியவுடன் வழக்கம்போல நான் ‘any questions?’ என்று கேட்டேன். மின் என்னைப்பார்த்து ‘டீச்சர் ஐ ஹவ் அ க்வெச்சின்’ என்றார்.

‘fire…!’ என்றேன்.

மின் துள்ளி எழுந்தார். ‘Fire…..!!!!?’

‘No, No, I mean fire your question!’

ஆசுவாசப்படுத்திக்கொண்டு உட்கார்ந்தார் மின்.

‘ஆர் யூ நான்-வெஜிடேரியன்?’ என்று கேட்டார். திடீரென்று வந்த இந்தக் கேள்வியில் கொஞ்சம் – இல்லையில்லை நிறையவே அதிர்ந்து போனேன். நான் மட்டுமல்ல; தூக்கக்கலக்கத்தில் இருந்த மற்ற மாணவர்களும் இந்த கேள்வியில் ‘திடுக்’கென்று விழித்துக்கொண்டனர். நான் சற்று நிதானப்படுத்திக் கொண்டு ‘why Min?’ என்றேன். அந்த மாணவர் தன்னிலை விளக்கம் கொடுப்பதற்கு முன் ‘Our teacher is pure vegetarian’ என்று விழித்தெழுந்த மாணவர்கள் சிலர் கொரியன் மாணவர் மீது பாயாத குறையாக பதிலளித்தனர். மின்னின் கவனம் இப்போது சற்று மாறி, ‘is there not-so-pure-vegetarian?’ என்ற கேள்வியாக மாறியது.

இன்றைக்கு யார் முகத்தில் விழித்தேன்? நரி முகத்திலா? பரி முகத்திலா? யோசிக்க ஆரம்பித்தேன். மின் தொடர்ந்தார்: ‘டீச்சர்! இரண்டு வகைதானே இருக்கிறது? வெஜிடேரியன், நான்-வெஜிடேரியன்? ப்யூர் வெஜிடேரியன், நாட் ஸோ ப்யூர் வெஜிடேரியன் என்று இருக்கிறதா?’

நிச்சயம் பரி முகத்தில்தான் என்ற தீர்மானத்திற்கு வந்தேன். குரலைக் கண்டிப்பாக வைத்துக்கொண்டு, ‘ஏன் மின், உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம்?’ என்றேன். மற்ற மாணவர்கள் தங்களுக்குள் என்னவோ கிசுகிசுவென்று பேசத்தொடங்கிவிட்டனர். குரலை உயர்த்திச் சொன்னேன்: ‘Let’s listen to Min!’

‘டீச்சர் உங்கள் நெற்றியில் ஏன் சிவப்புக் கலர் வட்டம்?’

அட கஷ்டமே! என் பொட்டைப் பார்த்துவிட்டு இவருக்கு ஏன் நான்-வெஜ் சந்தேகம் வரவேண்டும்?

‘டீச்சர்! உணவு பொட்டலங்களின் மேல் வெஜெடரியன் என்றால் பச்சைக் கலர் வட்டமும் நான்-வெஜ் என்றால் சிவப்புக் கலர் வட்டமும் அச்சடித்துக் கொடுக்கிறார்கள், இல்லையா? நீங்கள் ஏன் சிவப்பு வட்டத்தை உங்கள் நெற்றியில் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் நான்-வெஜ் என்று தெரிவிக்கத்தானே?’ என்றார் ஒரே மூச்சில்!

நான் நாற்காலியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். மற்ற மாணவர்களும் என்னுடன் சிரிப்பில் கலந்துகொள்ள மின்னுக்கு அப்போதுதான் தான் ஏதோ தவறாகக் கேட்டுவிட்டதாக தோன்றியது.

‘டீச்சர், நான் கேட்டது தவறா?’ என்றார். ‘தவறேயில்லை, மின். ஆனால் நம் வகுப்பில் இருக்கும் எல்லா பெண்களும் நெற்றியில் வைத்துக்கொண்டு இருக்கிறார்களே!’ என்றேன்.

மின் அதற்கும் சரியாக ஒரு பதில் சொன்னார். ‘அவர்கள் எல்லோரும் நீளமாக கலர்கலராக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் மட்டும்தான் தினமும் சிவப்புக் கலரில், வட்டமாக வைத்துக் கொண்டு வருகிறீர்கள்’.

நிஜம்தானே!

இனிமேல் மாணவர்களைப்பார்த்து கேள்வி கேளுன்னு சொல்லுவியா? சொல்லுவியா?

 

9 ‘ஹௌ ஓல்ட் ஆர் யூ?’

‘ஹௌ ஓல்ட் ஆர் யூ?’

நேர்முகப்பேட்டிக்கு வந்திருக்கும் நிருபமா ராஜீவிடம் கேட்கப்படும் முதல் கேள்வி இது.

’36….!’

‘இந்த வேலைக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற கண்டிஷனைப் பார்க்க வில்லையா?’

‘ஒரு வயசு தானே கூடுதல்….?’ கெஞ்சும் பாவனையில் கேட்கிறாள் நிருபமா ராஜீவ்.

‘ஸாரி…!’

சோர்வுடன் வெளியே வருகிறாள். கணவனும், மகளும் அயர்லாந்து போகத் தயாராகிறார்கள். அங்கு ஒரு வேலை கிடைத்தால் தானும் அவர்களுடன் போகலாம் என்ற நிலையில் இந்த நேர்முகப்பேட்டி.

35 வயதானவுடன் பெண்களுக்கு தோன்றும் ஒரு சின்ன தாழ்மை உணர்வு இவளுக்கும். முன்தலையில் தெரியும் நரைக்கு கலர் செய்துகொள்ளுகிறாள்.

ஒரு நாள் மகள் வந்து சொல்லுகிறாள்: ‘நீ எனக்கு சொல்லிக் கொடுத்த கேள்வியை கேட்டு குடியரசுத் தலைவர் ரொம்பவும் பாராட்டியிருக்கிறார். உன்னுடன் காலை சிற்றுண்டி சாப்பிட விரும்பிகிறார்’.

‘நான் உனக்கு கேள்வி சொல்லித்தந்தேனா? என்ன கேள்வி அது?’ என்று கேட்க, மகள் சொல்ல மறுக்கிறாள். ‘சொல்லமாட்டேன், நீயே ஞாபகப்படுத்திக் கொள்’

கேள்வி நினைவிற்கு வரவில்லை என்றாலும் குடியரசுத் தலைவரைப் பார்க்கப்போகிறோம் என்ற பயம் கலந்த தவிப்பில் நாட்கள் செல்லுகிறது. குடியரசுத் தலைவரைப் பார்ப்பதென்றால் சும்மாவா? பல நாட்கள் முன்பிருந்தே செக்யூரிட்டி செக் அது இது குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து பாதுகாப்புப் படையினர் வந்த வண்ணமிருக்க சில நாட்களிலேயே நிருபமாவைப் பார்ப்பவர்கள் எல்லோரும் ‘இவ தான் குடியரசுத் தலைவரைப் பார்க்கப்போகிறாளாம்…’ என்று பேசும் அளவிற்கு புகழ் பெறுகிறாள்.

அந்த தினமும் வருகிறது. பல கெடுபிடிகளுக்கு நடுவே நிருபமா ராஜீவ் குடியரசுத் தலைவரின் மாளிகைக்குப் போகிறாள். குடியரசுத்தலைவரின் வருகைக்கு அந்த மாளிகையில் உள்ள ஒரு பெரிய ஹாலில் காத்திருக்கிறாள். சுற்றிவர கருப்பு கண்ணாடிகள் அணிந்த பாதுகாப்பு வீரர்கள். நிருபாமாவின் போன் ஒலிக்கிறது. ‘அதை ஆஃப் செய்யுங்கள்’ என்று கண்டிக்கிறார் ஒரு பெண்மணி. பாவம் நிருபமாவிற்கு இந்த சூழ்நிலை ரொம்பவும் ஹிம்சையாக இருக்கிறது. ‘எழுந்திருங்கள்.. இங்கே வந்து நில்லுங்கள்…’ என்று ஆணைகள்.

குடியரசுத் தலைவர் வருகிறார் என்ற அறிவிப்புடன் முதலில் அவரது பாதுகாப்பாளர்கள் கையில் துப்பாக்கியுடன் வந்து வரிசையாக நிற்கிறார்கள். பிறகு ஒரு கதவு திறக்கிறது. இன்னும் நாலு பாதுகாப்பு படைவீரர்கள் சூழ நிஜமாகவே குடியரசுத் தலைவர் வருகிறார். நேராக நிருபமாவைப் பார்த்து நடந்து வருகிறார். கைகள் இரண்டையும் கூப்பி ‘நமஸ்தே’ என்கிறார். அவ்வளவுதான் நிருபமா கண்கள் சுழல தடாலென்று மயங்கி விழுகிறாள்.

முதலில் வியந்த ஊர் மக்களின் பார்வையில் நிருபமா இப்போது ஒரு கேலிப் பொருளாகிறாள். மகளும் கணவரும் அயர்லாந்து கிளம்பிப் போகிறார்கள். தனியே விடப்பட்ட நிருபமாவை அவளது தோழி சந்திக்கிறாள். ‘உனக்கு நினைவு இருக்கிறதா? அந்தக் காலத்தில் நமக்கு கம்ப்யூட்டர் லாப் வேண்டுமென்று நீதானே போராடிப் பெற்றுக் கொடுத்தாய்? அப்போது நீ நிருபமா கிருஷ்ணன் ஆக இருந்தாய். இப்போது என்னவாயிற்று உனக்கு? நீ ஏன் பிரசிடென்ட்டைப் பார்த்து மயங்கி விழுந்தாய்?’ என்று அவளது தைரியத்தை நினைவு படுத்திவிட்டுச் செல்லுகிறாள்.

நிருபமாவுடன் தினமும் பஸ்ஸில் ஒரு பெண்மணி வருவார். கொஞ்ச நாட்களாக அவரைக் காணோம் என்று அவரது வீட்டைத் தேடிச் செல்லுகிறாள் நிருபமா. போகும்போது தன் வீட்டில் விளைந்த காய்கறி பழவகைகளை எடுத்துச் செல்லுகிறாள். மனம் நெகிழும் அந்தப் பெண்மணி இவளைப் பற்றி தான் வேலை செய்யும் பணக்கார வீட்டில் சொல்லுகிறார். ஒரு நாள் அந்த பணக்காரரிடமிருந்து நிருபமாவிற்கு அழைப்பு வருகிறது. தங்கள் வீட்டில் இன்னும் நாலு மாதத்தில் நடக்கவிருக்கும் திருமணத்திற்கு காய்கறி பழங்கள் சப்ளை செய்ய முடியுமா என்று. இது சாத்தியமா? தான் ஏதோ பொழுதுபோக்கிற்காகசெய்து வரும் காய்கறிப் பயிரிடல் பெரிய அளவில் செய்ய முடியுமா என்று யோசனை செய்தபடியே கண்ணயர்ந்து விடும் நிருபமா கண் விழித்தபோது தன் வீட்டைச் சுற்றி வர இருக்கும் வீடுகளில் இருக்கும் காலி மொட்டைமாடிகள் கண்ணில் பட ஒவ்வொருவரிடமும் போய் பேசுகிறாள். எல்லோரும் ஒத்துழைத்தால் நடக்கவிருக்கும் கலியாணத்திற்கு காய்கறி சப்ளை செய்வதுடன் இதையே தங்கள் வருமானமாகவும் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லுகிறாள். எல்லோருக்கும் இந்த யோசனை பிடித்திருக்கிறது.

வெளிநாட்டிலிருக்கும் கணவனுக்கு இஷ்டமே இல்லை. ‘முடியாது என்று சொல்லிவிடு’ என்கிறான். ஆனால் இந்த முறை நிருபமா முடிவை தானே எடுக்கிறாள். நான்கு மாதங்களுக்குள் நினைத்தபடியே எல்லோர் வீட்டு மாடித் தோட்டங்களிலும் காய்கறிகளும், பழங்களும் காய்த்துத் தொங்க இழந்த தைரியத்தை மீண்டும் பெறுகிறாள் நிருபமா ராஜீவ். மாநில அரசும் அவளைப் பாராட்டுகிறது. மறுபடியும் குடியரசுத் தலைவரிடமிருந்து அழைப்பு வருகிறது நிருபமாவிற்கு.

கணவனும் மகளும் இவளை வெளிநாட்டிற்கு அழைத்துப் போக வருகிறார்கள். இவளது வெற்றிக் கதை அவர்களை சந்தோஷத்தில் ஆழ்த்துகிறது.

‘நமது நாட்டில் இதுவரை ஒரே ஒரு பெண் பிரதம மந்திரி. ஒரே ஒரு பெண் குடியரசுத் தலைவர். ஒரு பெண் தன் திறமையை வெளிப்படுத்த வயது வரம்பு உண்டா?’

இந்தக் கேள்வியைத்தான் மகளுக்கு தான் சொல்லிக் கொடுத்தது என்று நினைவிற்கு வருகிறது நிருபமாவிற்கு.

***************

ஸ்ரீதேவியைத் தொடர்ந்து மலையாள நடிகை மஞ்சு வாரியார் வெள்ளித்திரைக்கு இந்தப் படம் மூலம் மறுபடி வந்திருக்கிறார். தன் வயதுக்குத் தகுந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டு வெளுத்து வாங்கியிருக்கிறார் மஞ்சு.

குடியரசுத் தலைவரைப் பார்க்க போகும் முன் தனக்கு கிடைத்திருக்கும் அந்த 15 நிமிடப் புகழை ரசிப்பதாகட்டும், பின் குடியரசு தலைவரின் மாளிகையில் தான் மயங்கி விழுந்ததை எல்லோரும் கேலி செய்யும் போது ஓடி ஒளிவதாகட்டும் அற்புதமாக நடித்திருக்கிறார். அடிப்பொளி!

முதல் காட்சியில் நேர்முகப் பேட்டி கொடுக்கும்போதே நம்மை கவர்ந்து விடுகிறார். முகத்தில் சின்ன முதிர்ச்சி தெரிந்தாலும் ஒல்லியான உடல்வாகுடன் இருப்பதால் மஞ்சு வாரியாரிடம் இன்னமும் இளமை ஊஞ்சலாடுகிறது என்றே சொல்லலாம். மிக மிக இயற்கையான நடிப்பு. எந்த காட்சியிலும் மிகை என்பதே இல்லை. நம் பக்கத்து வீட்டில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்பது போன்று படம் இயல்பாகப் போகிறது.

இந்த வயதிலும் (ஸ்ரீதேவியைப் பார்க்கும் போது மஞ்சு வாரியார் ரொம்பவும் சின்னவர்தான்) தனது திறமையை நிரூபிக்க முடியும் என்று மஞ்சு வாரியார் வெள்ளித்திரை உலகிற்கு மட்டுமல்ல நமக்கும் காட்டியிருக்கிறார். வாழ்த்துக்கள், மஞ்சு! இன்னும் இதைப் போல நிறைய படங்கள் நீங்கள் நடித்து வெளிவர வேண்டும்.

ஸ்ரீதேவி comeback செய்ததிலிருந்து பல பழம் பெரும் நடிகைகளுக்கும் ‘comeback’ ஆசை வந்திருக்கிறது. வயதுக்குத் தகுந்த வேடம் அணிந்தால் எல்லோரையும் கைநீட்டி வரவேற்கலாம்.

எல்லோரும் பார்க்க வேண்டிய படம் ‘ஹௌ ஓல்ட் ஆர் யூ?’

 

 

10 நிக்கிமோ நிகாடோ

தூர்தர்ஷனில் செய்தி வாசிக்கும் பெண் ஒருவர், சீனப்பிரதமர் Xi Jinping அவர்களின் பெயரை இலெவன் (11) Jinping என்று படித்ததால் வேலைநீக்கம் செய்யப்பட்டார் என்று. படித்தவுடன் வாய்விட்டு சிரித்துவிட்டேன். அவர் என்ன செய்வார் பாவம்? Xi –ஐப் பார்த்தவுடன் அவருக்கு பள்ளியில் படித்த ரோமன் கணித எண் நினைவிற்கு வந்திருக்கிறது செய்தியை தயாரித்த மகானுபாவராவது அந்தப் பெண்ணிற்கு சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும் – சீனப்பிரதமரின் இந்தப் பெயரை எப்படி உச்சரிப்பது என்று.

சீனர்கள் பெயர் வைக்கும் முறை தெரியுமா? ‘குழந்தை பிறந்தவுடன் ஒரு தட்டை (plate) கீழே போடுவார்களாம். அது போடும் சத்தத்தை வைத்து ‘டிங்….டாங்..பங்’ அல்லது ‘தங்….கிங் …சங்’ என்று பெயர் வைப்பார்களாம். இந்தப் பிரதமர் பிறந்தவுடன் அவரது அம்மா கீழே போட்ட தட்டு ஜீ…ய் என்று சுற்ற ஆரம்பித்து ஜிங்….பிங் என்று நின்றுவிட்டதோ என்னவோ?

நமக்கு எப்படி அவர்கள் பெயர் வாயில் நுழையவில்லையோ, அதேபோலத்தான் நம் பெயர்களும் அவர்களுக்கு வாயில் நுழையாது போலிருக்கு. சீனர்கள் மட்டுமில்லை; வெளிநாட்டுக்காரர்கள் எல்லோருக்குமே நம் பெயர்கள் விசித்திரம் தான். இல்லையென்றால் என் மகனுக்கு நான் அருமையாக வைத்த ‘மாதவன்’ என்ற பெயர் அவனது வெளிநாட்டு சகாக்களால் ‘maddy’ ஆகியிருக்குமா? நாராயணன் என்ற பெயர் நட்டு-வாகியிருக்குமா?

இதனாலோ என்னவோ வெளிநாட்டிலிருக்கும் நம்மவர்கள் அங்கு குழந்தை பிறந்தவுடன் வெளிநாட்டுக்காரர்கள் வாயில் நுழையும் பெயராக தேடுகிறார்கள். எனது மகனின் நண்பனின் முதல் குழந்தையின் பெயர் சியா. இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது என்றவுடன் நான் கேட்டேன்: ‘குழந்தையின் பெயர் ‘மியா(வ்)?’ என்று!

எனது வெளிநாட்டு மாணவர்கள் குறிப்பாக கொரியன்ஸ் இந்தப் பிரச்னையை அழகாக சமாளிப்பார்கள். அவர்கள் நிஜப்பெயரை சொல்லவே மாட்டார்கள். ஜேம்ஸ், ஜான், மேரி என்று நமக்குத் தெரிந்த பெயராகச் சொல்லிவிடுவார்கள். மங்கோலியாவிலிருந்து ஒரு மாணவர். தனது பெயரைச் சொல்லிவிட்டு ‘Teacher! you can call me NUTS!’ என்றவுடன் அடக்க முடியாமல் சிரித்துவிட்டேன். சிறிது நேரம் நான் ஏன் இப்படிச் சிரிக்கிறேன் என்று புரியாமல் விழித்துவிட்டு அவரும் அசடு வழியச் சிரித்தபடியே வகுப்பில் உட்கார்ந்து கொண்டார்.

ஒரு பெயரை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என்பதை நான் முதன்முதலில் தெரிந்து கொண்டது 9 ஆம் வகுப்பில் படித்த போதுதான். பள்ளி அப்போதுதான் கோடைவிடுமுறைக்குப் பின் திறந்திருந்தது. எங்கள் வகுப்பிற்கு புதிதாக ஓர் பெண் வந்திருந்தாள். நாங்களாகப் போய் அவளுடன் பேசவில்லை. வகுப்பு ஆரம்பித்து சிறிது நேரத்தில் எங்கள் வகுப்பு ஆசிரியர் லில்லி கான்ஸ்டன்டைன் ஆசிரியர் வந்தார். அவர் கையில் ஒரு காகிதம். நாற்காலியில் உட்கார்ந்தவர் ‘புது அட்மிஷன் யாரு?’ என்றார். இந்தப் பெண் மெதுவாக எழுந்து நின்றாள். தன் கையிலிருந்த காகிதத்தைப் பார்த்து ‘பசுபாதம், (வகுப்பு முழுவதும் ‘கெக்கே பிக்கே’ என்று சிரித்தது) இன்னா பேருடி இது? பசுபாதமா? cowfoot? உம்பேரு இன்னா?’ என்றார். பாவம் அவள். கொஞ்சம் திணறியபடியே, ‘எம்பேரு பாசுபதம், டீச்சர்,’ என்றாள். ‘ஏண்டி வேற பேரே கிடைக்கலையா? முருகன், சீனிவாசன் அப்படின்னு?’ ‘டீச்சர், அதெல்லாம் ஆம்பளைங்க பேரு….!’ கடைசி பெஞ்சிலிருந்து ஒரு குரல்! ‘என்ன கஷ்டமோ! ஒக்காரு’ என்றபடியே பாடத்தை நடத்த ஆரம்பித்தார்.

அன்றிலிருந்து பாசுபதம் எஸ்எஸ்எல்சி முடிக்கும்வரை லில்லி டீச்சரால் பசுபாதமாகவே கூப்பிடப்பட்டாள். எங்களுக்கெல்லாம் அவளைப் பார்த்தால் பாவமாக இருக்கும். சே! கொஞ்சம் நல்ல பேராக வைத்திருக்கலாம் என்று நினைத்துக் கொள்வோம். ஆனால் அவள் என்னவோ அப்படியெல்லாம் ‘feel’ பண்ணியதாகத் தெரியவில்லை. ‘மகாபாரதத்துல அர்ஜுனன் சிவபெருமானைக் குறித்து தவம் செய்து வாங்கிய அஸ்த்திரம் என்னோட பேரு!’ என்று பெருமிதமாகவே சொல்லிக்கொள்ளுவாள்.

சமீபத்தில் நாங்கள் ஜோக் செய்து சிரித்த பெயர்: குனால் கெம்மு. ‘கெம்மு என்றால் கன்னட மொழியில் ‘இருமல், இருமு’ என்று அர்த்தம்! அவர்கள் குடும்பத்தில் எல்லோரும் கெம்முவார்கள் போலிருக்கு என்று சொல்லி சிரித்துக்கொண்டிருந்தோம்.

சரி, தலைப்புல என்னவோ சொல்லிட்டு இப்ப என்னவோ பேசிகிட்டு இருக்கீங்களே என்கிறீர்களா? இதோ ஒரு ஜோக்:

ஜப்பானியர்களும், தமிழர்களுமாகச் சேர்ந்து ஒரு கட்டிடம் கட்டுகிறார்கள். பாதிவரை நன்றாக நிமிர்ந்து நின்ற கட்டிடம் பாதி கட்டியபின் ஒரு பக்கமாக சாய ஆரம்பித்தது பைசா கோபுரம் போல. ஜப்பானிய பொறியாளர் சொன்னார்: ‘இப்படி ஒரு பக்கமாக சாய்கிறதே! எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடும் போல இருக்கு. சீக்கிரமா இதற்கு ஒரு பெயர் வைத்துவிடலாம். பாதி ஜப்பான் பெயராகவும், பாதி தமிழ் பெயராகவும் இருக்க வேண்டும்’ என்று. நம்மாளு சொன்னார் பட்டென்று: ‘நிக்கி(கு)மோ நிகாடோ(தோ)!’

 

11 எங்க ஊரு… திருக்கண்ணபுரம்

தென்றல் சசிகலா அவர்கள் ஒரு தொடர் பதிவுக்கு அழைத்தார் மார்ச் மாதத்தில். இப்போதுதான் எழுத முடிந்தது எங்க ஊரு பற்றி. சசியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன் இத்தனை தாமதமாக இதை எழுதியதற்கு.

முதன்முதலில்1974 ஆம் ஆண்டுதான் இந்த ஊர் பற்றி எங்கள் வீட்டில் அதிகம் பேசப்பட்டது. அந்த வருடம் என் பெரியம்மா பெண்ணின் திருமணம். மாப்பிள்ளையின் அம்மாவின் ஊர் திருக்கண்ணபுரம். ‘திருக்கண்ணபுரத்திலிருந்து சம்மந்தி என்றால் கொடுத்து வைத்திருக்கணுமே’ என்று எங்கள் வீட்டில் எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அப்போது தெரியாது அடுத்தவருடம் நானும் அங்கேதான் வாழ்க்கைப்படப் போகிறேன் என்று.

திருமணத்திற்கு முன் திருக்கண்ணபுரம் போனதில்லை. திருமணம் ஆனவுடன் போகவேண்டும் என்று சொன்னபோது என் மாமியார் சொன்னார்: ’சௌரிபெருமாளை அத்தனை சீக்கிரம் நீ சேவிக்க முடியாது. பெருமாளே பார்த்து இவள் என்னை வந்து சேவிக்க வேண்டும் என்று மனசு வைத்தால் தான் நடக்கும்’ என்றார். திருமணம் நடந்தவுடன் கும்பகோணம் போய் உப்பிலியப்பனை சேவிக்கப் போனோம். என் கணவரிடம் அப்படியே திருக்கண்ணபுரம் போகலாம் என்று சொன்னேன். ‘அவ்வளவு சுலபமில்லை அது. சரியா பஸ் வசதி ஒண்ணும் கிடையாது. மெயின் ரோடுல இறங்கி ரொம்ப தூரம் நடக்கணும்’ என்றார். ரொம்பவும் ஏமாற்றமாக இருந்தது. இனி பெருமாள்தான் மனசு வைக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

அதற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து ஒரு நாள் போனோம். அந்த முதல் விஜயம் பற்றி கணபுரத்தென் கருமணியே என்ற பதிவில் எழுதியிருக்கிறேன். ரொம்பவும் சின்ன ஊர். இப்போது இங்கிருந்தவர்கள் எல்லோரும் இந்த ஊரை விட்டு வெளியே போய்விட்டார்கள். மிகப்பெரிய குளம். குளத்தை சுற்றி நாலு மடிவளாகம் என்ற வீதிகள். அவ்வளவுதான் ஊர். ஊரில் நுழையும் முன் ஓர் பெரிய வளைவு. அருள்மிகு ஸௌரிராஜப்பெருமாள் திருக்கோவில் என்று எழுதியிருக்கும். 1991 இல் சம்ப்ரோக்ஷணம் நடந்தது. அப்போது நாங்களிருவரும் போயிருந்தோம். ஊர் நிரம்பி வழிந்தது சந்தோஷமாக இருந்தது.

இங்கு எப்படிப் போவது என்று கேட்பவர்களுக்கு:

மாயவரம் என்னும் மயிலாடுதுறைக்குப் போய் அங்கிருந்து நாகபட்டினம் போகும் பேருந்தில் போகலாம்.இன்னொரு வழி. திருவாரூரிலிருந்தும் வரலாம். உங்கள் பக்கம் அதிருஷ்டம் இருந்தால் திருக்கண்ணபுரம் உள்ளேயே வரும் பேருந்தும் கிடைக்கலாம் திருவாரூரிலிருந்து!

இல்லையென்றால், மாயவரம்-காரைக்கால் பேருந்தில் ஏறி திருப்புகலூர் என்ற இடத்தில் இறங்க வேண்டும். இடது பக்கம் போனால் திருப்புகலூர். வலது பக்கம் திருக்கண்ணபுரம். பேருந்து செல்லும் முக்கிய பாதையிலிருந்து 3 அல்லது 4 கிலோமீட்டர் உள்ளே நடக்க வேண்டும். பேருந்திலிருந்து இறங்கியவுடன் உங்களை வரவேற்பது காவிரி ஆறு. நீரில்லாத ஆறு வருத்தத்தைக் கொடுக்கிறது. ஒரு காலத்தில் நிறைய நீர் ஓடியிருக்க வேண்டும். ஆற்றின் மேல் இருக்கும் பாலம் இதற்கு அத்தாட்சி! இரண்டு பக்கமும் பச்சை பசேல் என்று வயல்வெளிகள். சுவாசிக்குபோதே புத்துணர்ச்சி பரவும். இதையெல்லாம் அனுபவித்தால்தான் புரியும்.

பெருமாள் திருநாமம் சௌரிராஜன்; தனிக்கோவில் நாச்சியார் கண்ணபுர நாயகி. வருடத்திற்கு ஒருமுறை பத்மினித் தாயாருடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.

முதல்முறை போயிருந்தபோது அங்கிருந்த ஒரு குடும்பத்துடன் அறிமுகம் ஏற்பட்டது. இன்றுவரை எப்போது திருக்கண்ணபுரம் போனாலும் அவர்கள் வீட்டில் தான் தங்குவோம். முதல்முறை போனபோது மாமா, மாமி இருவரும் இருந்தனர். இப்போது இருவருமே பரமபதித்துவிட்டனர். ஆனாலும் எங்களுக்கு அந்தக் குடும்பத்தின் இளைய தலைமுறையுடன் ஆன உறவு தொடர்கிறது.

முதல்முறை போனபோது இரவு பெருமாளுக்கு தினம்தோறும் அமுது செய்யும் முநியதரையன் பொங்கல் கிடைத்தது. ஐந்து அரிசி, மூன்று பச்சைபயறு, இரண்டு நெய் என்ற அளவில் செய்யப்படுகிறது இந்தப் பொங்கல். அரிசியும் பருப்பும் நன்றாகக் குழையக் குழைய வேக வைக்கப்படுகிறது. பயறு அதில் இருப்பது தெரியவே தெரியாது. அதில் நெய்யை ஊற்றி ஐந்து உருண்டை செய்கிறார்கள். ஒரு உருண்டையை மூன்று நான்கு பேர்கள் சாப்பிடலாம். கொஞ்சம் சாப்பிடும் போதே வயிறு நிரம்பிவிடும்.

மிகப்பெரிய கோவில். சேவிக்கத்தான் ஆளில்லை. ஒவ்வொருமுறை போகும்போதும் அங்கேயே தங்கிவிடலாம் என்று தோன்றும். அப்படி ஒரு அமைதி; ஒரு மன நிறைவு. எப்போதும் நீர் நிறைந்திருக்கும் திருக்குளம். ஒவ்வொருமுறை போகும்போதும் அங்கு நிச்சயம் தீர்த்தமாடுவோம்.

பெருமாளுக்கென்று நிறைய நிலபுலங்கள் இருக்கின்றன. ஆனால் விளைச்சலைக் கொடுக்க மனிதர்களுக்கு மனம் வருவதில்லை.

நித்ய புஷ்கரிணியில் எப்படி இவ்வளவு நீர் என்ற என் கேள்விக்கு மாமியிடமிருந்து பதில் கிடைத்தது. காவிரியில் நீர் வரத்து மிகும் போது அந்த உபரி நீர் இங்கு வரும்படியாக செய்திருந்தனர். அதைத்தவிர மழை பெய்யும்போது கோவிலில் விழும் நீர் நேரடியாக திருக்குளத்தில் வந்து சேருமாறு அமைத்திருக்கிறார்கள். அந்தக் காலத்திலேயே மழை நீர் அறுவடை! திருக்குளத்தில் பெருமாளுக்கு தெப்போற்சவம் உண்டு.

திருவிழா சமயங்களில் வரும் பாகவதர்களின் கூட்டம் அப்படியொரு பக்தியில் திளைக்கும். ஆட்டம், பாட்டம் என மெய்மறந்து பெருமாளை சேவிப்பார்கள். குலசேகர ஆழ்வாரின் ‘மன்னுபுகழ் கோசலைதன்’ பாடலைப் பாடி ஆடியபடியே வீதிவலம் வருவார்கள்.

பெருமாள் வீதி உலா முடித்துவிட்டு திரும்பவும் கோவிலுக்குள் வரும்போது பெருமாளுக்கு வெந்நீரில் திருவடித் திருமஞ்சனம் நடைபெறும். வெளியே போய்வந்த அலுப்பு தீர இந்த உபசாரம். உடனே தோசை அமுது செய்யப்படும். அந்த தோசையின் ருசி ஆஹா!

குலசேகர ஆழ்வார் இந்தப் பெருமாளை ஸ்ரீராமனாக நினைத்து தாலாட்டுப் பாடினார். திருமங்கையாழ்வார் நாயகி பாவத்தில் இந்தப்பெருமாளை நினைத்து உருகுகிறார். பெருமாள் சந்நிதிக்கு பின்னால் திருமங்கையாழ்வார் சந்நிதி இருக்கிறது. விளகேற்றக்கூட ஆள் இல்லை.

மாசிமகத்தன்று பெருமாள் தீர்த்தவாரிக்கு திருமலைராயன் பட்டினத்திற்கு (கடற்கரை ஊர்) எழுந்தருளுவார் பெருமாள். அங்கு மீனவர்களின் மாப்பிள்ளையாக பெருமாளுக்கு ஏகப்பட்ட உபசாரம் நடக்கும். பெருமாள் தங்கள் ஊருக்கு எழுந்தருளும் ஆனந்தத்தை கொண்டாட பெருமாளை அப்படியே தூக்கித் தூக்கிப் போட்டு தங்கள் தோள்களில் பிடிப்பார்களாம். இதுவரை சேவித்தது இல்லை.

வாழ்நாளில் ஒருமுறையாவது இந்தப் பெருமாளை சேவித்துவிட்டு வாருங்கள். அந்த அழகு உங்களை மறுபடி மறுபடி அழைக்கும்.

இதைத் தொடர நான் அழைக்க விரும்புபவர்கள்:

திருமதி சித்ரா

திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம்

திரு பாண்டியன்

திருமதி ராதா பாலு

என் அழைப்பை ஏற்று எழுத வருமாறு அழைக்கிறேன்.

 

12 இங்கிலீஷ் விங்க்லீஷ்!

பத்துவருடங்கள் ஆங்கிலம் பேசச் சொல்லிக் கொடுத்தது ரொம்பவும் நிறைவான அனுபவம். ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு வகையான அனுபவம். எதைச் சொல்ல எதை விட?

நம்மூர் மாணவர்களுக்கு எல்லாவற்றையும் அவர்களது மொழியில் சொல்ல வேண்டும். கன்னட மாணவர்களுக்கு கன்னடதல்லி ஹேள பேக்கு. தமிழ்ல சொல்லுங்க – தமிழ் மாணவர்கள் கேட்பார்கள். ஹிந்தி மே போலியே மேடம் என்பார்கள் ஹிந்தி மாணவர்கள். தெலுகல் செப்பண்டி, மலையாளம் அறியுமோ? போன்றவைகளையும் அவ்வப்போது சமாளிக்க வேண்டும்.

ஒருமுறை அபுதாபியிலிருந்து ஒரு மாணவர். பிரைவேட் டியுஷன். (ஒரு மாணவர் – ஒரு ஆசிரியை) என்ன கேட்டாலும் ‘இன்-ஷா அல்லா’ என்பார். அல்லது ‘மாஷா அல்லா’ என்பார். அவர் நிறைய பேசுவார் – ஆங்கிலத்தில் இல்லை; உருதுவில்! அவர் என்னிடத்திலிருந்து ஆங்கிலத்தில் என்ன கற்றுக் கொண்டாரோ தெரியாது. நான் அவரிடத்திலிருந்து இன்-ஷா அல்லா, மாஷா அல்லா கற்றுக் கொண்டேன்!

ஆந்திராவிலிருந்து ஒரு பெண். படித்தது M.Tech. ஆங்கிலத்தில் பேசுவது சிம்ம சொப்பனமாக இருந்தது இந்த மாணவிக்கு. ஒருநாள் என்னிடம் ‘Tomorrow going to father-in-law house’ என்றாள். எனக்கு வியப்பு. ‘Are you married?’ என்றேன். நோ, நோ மேடம், I am going to my mother brother house!’ அம்மாவின் சகோதரர் ஃபாதர் இன் லா! அதேபோல அப்பாவின் சகோதரி மதர் இன்லா! இது எப்படி இருக்கு? இந்த மாணவி எப்படி எம்.டெக் படித்து தேறியிருப்பாள் என்று எனக்கு இன்றுவரை புரியவில்லை.

father’s name, mother’s name என்பதெல்லாம் அடிப்படை வகுப்பு மாணவர்களுக்குப் புரியவே புரியாது. எம்.டெக் படித்த பெண்ணிற்கே புரியவில்லை என்றால் இவர்களைப்பற்றி சொல்லவே வேண்டாம். ஒரு முறை ஒரு மாணவரை father’s name என்று சொல்லுங்கள் என்று சொன்னதற்கு எனக்கு ஒரு அப்பாதான் மேடம் என்றார்!!!!! S சேர்த்தால் அது பன்மைதான் அம்மாவாக இருந்தாலும், அப்பாவாக இருந்தாலும்!

இன்னொரு மாணவர். திருமணமானவர். மனைவியுடன் அமெரிக்கா செல்ல வேண்டும். ஆங்கிலத்தில் பேச வராது. மனைவி சொன்னார்: ‘அடிப்படை வகுப்பிலிருந்து இருக்கும் எல்லா வகுப்புகளிலும் படிக்கட்டும்’ என்று. அதனால் நான் எடுக்கும் எல்லா வகுப்புகளுக்கும் வருவார். எந்த வகுப்பிலும் வாயை மட்டும் திறக்கமாட்டார். கடைசி நாளன்று கூட ஆங்கிலத்தில் பேசாமல் என் பொறுமையை ரொம்பவும் சோதித்தார். ‘நீங்கள் இன்று பேசினால்தான் நான் மேற்கொண்டு வகுப்பை நடத்துவேன்’ என்று சொல்லி நாற்காலியில் உட்கார்ந்துவிட்டேன். கொஞ்சநேரம் யோசித்தார். மற்ற மாணவர்களும் அவரை பேசும்படி வற்புறுத்தவே ‘ஒன் ஸ்டோரி’ என்றவாறே எழுந்து வந்தார்.

‘டூ பிரெண்ட்ஸ். ம்…..ம்……ம்…. வென்ட் துபாய்…….ம்…..ம்…..ம்…. ஏஜென்ட் சீட் (cheat) ……ம்…..ம்….. பாதர் மதர் சூசையிடு…..’

நான் அவரை இடைமறித்தேன். இது ஆங்கிலமா? என்ன பேசுகிறீர்கள்?’ என்று கோபமாக ஆரம்பித்தேன். அவ்வளவுதான். ‘மேடம், ப்ளீஸ். ஸ்டோரி இன்டரஸ்டிங்! டோன்ட் டிரபிள்!(trouble) என்று ஆளுக்குஆள் சொல்ல (கத்த!) வகுப்பே எனக்கு எதிரியானது.

உண்மைதானே கதை புரிகிறது. சுவாரஸ்யமாக வேறு இருக்கிறது. யாருக்கு வேண்டும் is, are எல்லாம்?

இதோ நாடக நடிகர் மௌலி அவரது ப்ளைட் 172 நாடகத்தில் பேசுகிற ஆங்கிலத்தை ரசியுங்கள்!

 

 

13 கண்டேன் ரிமோட்டை!

உங்கள் வீட்டு சோபாவில் என்னவெல்லாம் இருக்கும்?

கேள்வியே தப்பு! சோபாவில் ஜடப்பொருள் இருக்குமா? யாரெல்லாம் இருப்பார்கள் – உட்கார்ந்திருப்பார்கள் என்று கேட்க வேண்டும்!

சரி, நீங்கள் உட்கார்ந்திருப்பீர்கள் கூட என்னவெல்லாம் இருக்கும்?

ம்ம்…..செய்தித்தாள்?…..

அப்புறம்?

ம்ம்ம்…..

விடுங்கள்…. ரொம்ப யோசிக்க வேண்டாம். எங்கள் வீட்டு சோபாவில் என்னவெல்லாம் இருக்கும், தெரியுமா?

ம்ம்ம்.. அதே செய்தித்தாள்….கூடவே ரிமோட் கண்ட்ரோல் ஒன்றல்ல இரண்டு…. ஒன்று தொலைக்காட்சியை ஆன் செய்ய… இன்னொன்று வால்யூம் கூட்ட, சானல் மாற்ற….

கூடவே இன்னொன்றும் இருக்கும்… எனது கணவரின் இன்சுலின் பென். பொதுவாக குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும். உணவு வேளையின் போது வெளியே வரும்.

நேற்று காலை.

‘டிபன் ரெடி, நீங்க மருந்து எடுத்துக்கலாம்!’

‘என்னோட இது எங்க?’

‘உங்களோட எது எங்க?’

‘அதாம்மா… நான் போட்டுப்பேனே!’

‘மருந்து பவுச்?’

‘மருந்தைப் போட்டுப்பேனா? மருந்தை சாப்பிடுவேன். நான் கேட்கறது இன்னொண்ணு…’

சிறிது நேரம் மவுனம். கிடைத்துவிட்டதோ? சமையலறையிலிருந்து எட்டி பார்த்தேன். தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. அனுமனை மனதில் நினைத்துக் கொண்டு, பஜ்ரங் பலி, எட்டணா வைக்கிறேன், தேடுவது கிடைக்கட்டும் என்று வேண்டினேன்.

சட்டென்று கண்ணில் பட்டது. இன்சுலின் பென், சோபாவின் மேல் ரிமோட் அருகில்.

‘இதோ இருக்கே…!’ எடுத்துக் கொடுத்தேன். அப்பாடா!

சற்று நேரம் கழித்து, ‘இன்னொண்ணைக் காணுமே!’

பஜ்ரங் பலி! இன்னிக்கு உனக்கு ஒரு ரூபா வேணுமா?

இந்த மாதிரி தேடும்போதெல்லாம் எனக்கு என் அம்மாவின் நினைவு வருகிறது. சின்ன வயதில் நாங்கள் ஏதாவது தேடினால், ‘எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்கணும்….’ என்பாள் அம்மா. அதேபோல நடக்கும்போது காலில் ஏதாவது இடறினால், ‘காலுக்கு கண் வைக்கணும்….!’ அந்தக்காலத்தில் ஒவ்வொரு அறையிலும் அலமாரிகள் இருக்காது. எங்கள் புத்தகங்கள் எங்கள் பைகளிலேயே இருக்கும். பைகள் அறையின் ஒரு முலையில். புத்தகங்கள் நாங்கள் எங்கு உட்கார்ந்து படிக்கிறோமோ, அங்கேயே இருக்கும். தேடுதலும் காலில் பொருட்கள் இடறுதலும் தினசரி நடக்கும் விஷயங்கள். அம்மாவின் இந்த இரண்டு வாக்கியங்களும் தினமும் கேட்டு கேட்டு பழகிப் போன ஒன்று.

‘இப்போ என்ன காணும்?’

‘ரிமோட்!’

‘அதோ இருக்கே!’

‘இன்னொண்ணு……?’

செந்தில் மாதிரி அதுதாங்க இது என்று சொல்ல வேண்டும் போல இருந்தது.

தீவிரமான தேடுதலைப் பார்த்துவிட்டு ஜோக் அடித்தால் எனக்கு அடி கிடைக்கும் போல இருக்கவே, சும்மா இருந்தேன்.

‘எங்க வைச்சீங்க?’

‘அது நினைவு இருந்தால் உன்னை ஏன் கேட்கிறேன்….?’

அதுவும் சரிதான்.

‘காலைலேருந்து டீவி போட்டீங்களா?’

என்னைத் திரும்பி, நீ என்ன துப்பறியும் சாம்புவா? என்பது போல ஒரு பார்வை.

‘இல்ல…..’

‘…………………………….?’

‘இங்க தான் சோபா மேல இருந்தது. டிபன் சாப்பிடறதுக்கு முன்னால இருந்தது. மூணும் ஒண்ணா….’

மூணும் ஒண்ணா இருந்ததா? கேள்வி கேட்கவில்லை. மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

‘இன்சுலினைப் போட்டுண்டு பார்க்கறேன்…காணோம்..!’

கொஞ்சம் யோசித்தேன். எங்கே போய்விடும்?

வர வர தேடுதல் அதிகமாகிவிட்டது. ஜெயநகர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்-இல் ஒரு ஸ்டேஷனரி கடை. எந்த பொருள் கேட்டாலும் அந்த கடை சிப்பந்தி தேடுவார். அவருக்குத் தேடல் மன்னன் என்று பெயர் வைத்தேன். இப்போது என்ன ஆயிற்று தெரியுமோ? கடையின் நிஜப்பெயர் மறந்து போய் தேடல் மன்னன் கடை என்று ஆகிவிட்டது.

காலையிலிருந்து டீவியைப் போடவில்லை. எங்கே போயிருக்கும்? மறுபடியும் எங்கள் வீட்டு சோபாவைப் பார்த்தேன். ஒரு ரிமோட், பக்கத்தில் பென்சுலின் இன். கடவுளே! மறதி என்னையும் குழப்புகிறதே! இன்சுலின் பென்!

ஆ! பளிச்! மின்னல்! துப்பு கிடைத்துவிட்டது!

ஃபிரிட்ஜை திறந்தேன். ‘குளுகுளு’வென இன்சுலின் பென் இருக்குமிடத்தில் அமர்ந்திருந்தது அந்த ‘இன்னொண்ணு!’

பைதாகரஸ் போல ‘யுரேகா….’ – ச்சே! ஆர்க்கமீடிஸ் இல்லையோ யுரேகா? நமக்கு இவர்களெல்லாம் வேண்டாம். எனக்கு உதவிய அனுமனைப் போல கண்டேன் ரிமோட்டை!

எப்படிக் கண்டுபிடித்தேன் என்கிறீர்களா? நேற்று இரவு இன்சுலின் போட்டுக் கொண்டு அதை உள்ளே வைப்பதாக நினைத்துக் கொண்டு ரிமோட்டை வைத்து விட்டாரோ, என்று தோன்றியது.

என் யூகம் சரிதான். இன்சுலின் பென்னிற்கு பதிலாக ரிமோட் உள்ளே போயிருக்கிறது!

பஜ்ரங் பலிக்கு இன்று ஒரு ரூபாய்!

 

14 அன்புள்ள அர்விந்த்!

திரு அர்விந்த் கெஜ்ரிவால் மீதான எனது நம்பிக்கையை ஒரு திறந்த மடல் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறேன். இந்தக் கடிதம் 4tamilmedia.com தளத்தில் வெளியாகியிருக்கிறது.

வளமான இந்தியாவை உருவாக்க…!

வணக்கம்.

உங்களை மிகவும் கவனமாகக் கவனித்து வரும் பலகோடி இந்தியர்களில் நானும் ஒருவள். அரசியல் அதிகம் தெரியாத எனக்கு உங்களின் வரவு ஒரு புது நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. உங்கள் வரவினால் இந்திய அரசியல் நிச்சயம் ஒரு புதிய அத்தியாயத்தை நோக்கிச் செல்லும் என்ற நம்பிக்கை. புதிதாகப் பிறக்கும் குழந்தை எப்படி ஒரு குடும்பத்திற்கு ஆனந்தம், நம்பிக்கை கொடுக்குமோ அதுபோல இந்திய அரசியலில் புதிதாக பிறந்திருக்கும் குழந்தையான ஆம் ஆத்மி கட்சி பல கோடி இந்தியர்களுக்கு ஆனந்தத்தையும், புதிதான நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது.

டெல்லி முதலமைச்சர் ஆவதற்கு முன்பே, திரு அண்ணா ஹசாரேயுடன் தலைமையில் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்திய அன்றே நீங்கள் அடையாளம் காணப்பட்டு விட்டீர்கள், என் போன்ற சாமான்ய இந்தியர்களால். உங்களது நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும் தெளிவான பேச்சும், என்ன செய்ய வேண்டும் என்பதில் இருந்த உறுதியும், எங்களது நம்பிக்கையை அதிகப்படுத்தியது. இளைய தலைமுறையைச் சேர்ந்த வசீகரமான தலைவராக நீங்கள் இருப்பீர்கள் என்று மனதில் உறுதி பிறந்தது.

60 வருடங்கள் நாட்டை ஆண்டவர்களைப் பார்த்து பார்த்து, அரசியல் தலைவர்கள் என்றால் வயதானவர்கள், சொல்லியதையே திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டு இருப்பார்கள் என்ற எங்கள் எண்ணத்தை உங்கள் ‘இளம் தலைமுறையை சேர்ந்தவர்’ என்கிற அடையாளம் உடைத்தது. இத்தனை நாட்கள் சாமான்ய இந்தியன் உங்களைப் போன்ற ஒருவருக்காகத் தான் காத்திருந்தான் என்பது போல தோன்றியது.

உன் நண்பனைக் காட்டு; உன்னைப்பற்றிக் கூறுகிறேன் என்பார்கள். அதேபோல ஆரம்பத்தில் உங்களுடன் கூட திரு அண்ணா ஹசாரே, காவல்துறை அதிகாரி கிரண் பேடி, நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, திரு பிரஷாந்த் பூஷன் ஆகியவர்கள் இருந்தனர். இவர்களுடனான உங்களது நட்பில் உங்கள் மேலிருந்த எங்கள் நம்பிக்கை வானளவு உயர்ந்தது.

யார் நீங்கள், இவ்வளவு நாட்கள் எங்கிருந்தீர்கள் என்று ஆராய முற்பட்டேன். அப்போது எனக்குக் கிடைத்தது நீங்கள் எழுதிய ஸ்வராஜ் என்கிற புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘தன்னாட்சி’ என்கிற புத்தகம்.

இந்த புத்தகத்தின் மூலம் உங்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன். 1989 ஆம் ஆண்டு ஐஐடி கரக்பூரில் இயந்திரவியலில் பட்டம் பெற்றவர்; சிறிது காலம் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணிபுரிந்து 1992 இல் இந்திய வருவாய்த்துறையில் இணை ஆணையராக இருந்தவர்; பரிவர்த்தன் என்ற அமைப்பை உருவாக்க நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டு தில்லியில் சேரிகளில் வாழும் மக்களுக்கு நிறைய சேவை செய்தவர்; தகவல் அறியும் சட்டத்துக்காக பெரு முயற்சிக்காக ராமோன் மாக்சேசே விருது பெற்றவர்; இவை மட்டுமல்ல; இந்த புத்தகம் எழுதுவதற்காக பலவிடங்களுக்கு பயணம் செய்து, சோதனை முயற்சிகள் செய்து பார்த்திருக்கிறீர்கள். இதனால் உங்கள் மேல் நான் கொண்டிருந்த மதிப்பு பலமடங்கு உயர்ந்தது. இதில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இன்னொரு விஷயமும் என்னை வியக்க வைத்தது. இந்த புத்தகத்தை எல்லோரும் வாங்கும் விலையில் விற்க வேண்டும் என்பதற்காக ராயல்டி கூட வேண்டாம் என்று நீங்கள் பதிப்பகத்தாரிடம் சொல்லியிருப்பது.

இந்தப்புத்தகத்தில் நீங்கள் சொல்லியிருப்பவை எல்லாமே நடைமுறையில் சாத்தியம் என்பது புரிந்தபின் இத்தனை வருடங்கள் வீணாகிவிட்டனவே என்று வருத்தப்பட்டோம். ஆனால் தாமதமானாலும் உங்கள் வருகை சரியான சமயத்தில் தான் நடந்திருக்கிறது என்று புரிந்தது.

நீங்கள் தனிக்கட்சி ஆரம்பித்தவுடன் எங்கள் நம்பிக்கைகள் இன்னும் வளர்ந்தன. இனி இந்தியாவுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என்று நம்பினோம். சாமான்ய மக்களின் கட்சி என்ற பெயரை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டோம். எங்கள் குரலாக நீங்கள் பேசுவீர்கள் என்று மேலும் மேலும் நம்பிக்கைகளை வளர்த்துக்கொண்டோம்.

கட்சியை வளர்க்க சில வருடங்கள் ஆகும்; பிறகுதான் நீங்கள் தேர்தலில் நிற்பீர்கள் என்ற எதிர்பார்ப்பை முறியடித்துவிட்டு அதிரடியாக டெல்லி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றீர்கள்.

அரசியல் என்பது ஒரு சாக்கடை; யாரும் அதில் இறங்கி சுத்தம் செய்ய விரும்புவதில்லை என்கிற சொல்லை கையில் துடைப்பத்துடன் வந்து பொய்யாக்கிக் காட்ட முயன்றது எங்களிடைய பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் சாக்கடையை துப்புரவு செய்ய வந்த துப்புரவாளர் நீங்கள் என்று நினைத்தோம். அதுமட்டுமல்ல; பொதுவாழ்வில் நேர்மை, நாணயம் என்ற நல்ல செய்தி தாங்கி வந்திருப்பவர் நீங்கள் என்று இந்தியாவே உங்களைக் கொண்டாடியது.

காங்கிரஸ், பாஜகா இரண்டு கட்சியை விட்டால் வேறு வழியில்லை என்றிருந்தஎங்களுக்கு உங்கள் வரவு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது. இந்திய அரசியலில் நிச்சயம் மாறுதல் கொண்டுவருவீர்கள் என்று நினைத்தோம். உங்களை முதலில் இந்தக்கட்சிகள் பலத்த எதிரியாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் உங்களது அதிரடி வெற்றி எல்லோரையும் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ள வைத்துவிட்டது.

நீங்கள் தனிக்கட்சி ஆரம்பித்தவுடன் ஏதோ காரணத்தினால் அண்ணா உங்களிடமிருந்து விலகினார். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் உங்களுடன் கூட இருந்த உங்கள் நண்பர்கள் ஒவ்வொருவராக விலக ஆரம்பித்தனர். இது கொஞ்சம் நெருடலாக இருந்தாலும், நீங்கள் யாரைப்பற்றியும் எதுவும் கூறவில்லை. நாங்களும் உங்கள் மேல் இருந்த நம்பிக்கையில் இவற்றை அதிகம் பொருட்படுத்தவில்லை.

தொலைக்காட்சிகள் உங்களின் நேர்முக பேட்டிகளை மாறி மாறி ஒளிபரப்பின. கேள்விக் கணைகளால் உங்களைத் துளைத்தனர் ஒவ்வொருவரும். உங்களை எப்படியாவது மண்டி போடச் செய்துவிட வேண்டும் என்பதே அவர்களது குறியாக இருந்தது. நீங்கள் துளிக்கூட அசரவில்லை. முகத்தில் இருந்த புன்னகை மாறவில்லை. கீழே குனிந்துகொண்டோ, சூனியத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டே பதில் கூறவில்லை. கேள்வி கேட்பவரின் கண்களைப் பார்த்து நேராக பதில் அளித்தீர்கள். எல்லாவிதமான கேள்விகளுக்கும் உங்களிடம் பதில் இருந்தது. அதுவே எங்களை வியக்க வைத்து, உங்கள் மேலிருந்த மரியாதை அதிகரித்தது.

பொதுவாக ‘பழுத்த மரம்தான் கல்லடி படும்’ என்பார்கள். ஆனால் உங்கள் விஷயத்தில் பழுப்பதற்கு முன்னாலேயே கல்லடிக்க காத்திருந்தார்கள். ஒருவேளை எங்கே பழுத்துவிடுவீர்களோ என்று பயந்து கல்லடித்து உங்களை வீழ்த்தப் பார்த்தார்களோ?

நீங்கள் டெல்லியில் உங்கள் பலத்தை நிரூபித்தது எங்களை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஒருவிதத்தில் சற்று கலக்கமாகவும் இருந்தது; காரணம் கூட்டணி அரசு அமைக்கும் நிலை வந்திருந்தது உங்கள் வெற்றியால். கோடிக்கணக்கான பணம் செலவழித்து நடக்கும் தேர்தலில் நிலையான அரசு வேண்டும் என்றுதான் மக்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் கூட்டணி அரசு தான் தில்லியில் அமைந்தது. அதுவும் எனக்கு சற்று குழப்பமாக இருந்தது நீங்கள் ஊழல் என்று குற்றம் சாட்டிய காங்கிரசுடனேயே கூட்டணி வைக்கிறீர்களே என்று.

இன்று உங்களின் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து பார்த்து விமரிசனம் செய்யும் ஊடகங்கள் இதேபோல ஒவ்வொரு அரசியல்வாதியையும் செய்திருந்தால் நாடு இவ்வளவு சீரழிந்திருக்காதே என்று தோன்றுகிறது. உங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்களா என்று இதுவரை எந்த அரசியல்வாதியையும் ஊடகங்கள் கேட்டதில்லை. ஆனால் உங்களைக் கேட்கிறார்கள்.

டெல்லி அரசு நிர்வாகத்தை கவனித்து அதை சரி செய்து, இந்தியாவிற்கே வழி காட்டியாக நீங்கள் இருந்தால் போதுமே, ஏன் அனாவசியமாக போலீசுக்கு எதிராக தர்ணா செய்தீர்கள்? ஊழல் அரசியல்வாதிகள் என்று ஒரு பட்டியல் படித்தீர்கள், தேவைதானா இது? உங்கள் கட்சிக்கு ஆதரவு கொடுத்த சிலர் உங்களிடமிருந்து விலகினார்கள். இதுவும் உங்களை வீழ்த்திவிடுமோ? என்றெல்லாம் உள்ளத்தில் பல பல கேள்விகள். ஆனால் அரசியலில் எதிரிகள் ஆடும் ஆட்டத்திற்கு நீங்களும் எதிராட்டம் ஆடத்தானே வேண்டும்?

இன்றைய நிலவரப்படி ஜன்லோக்பால் கொண்டுவரப்பட வேண்டும்; இல்லையென்றால் பதவி விலகுவேன் என்று சொல்லியிருக்கிறீர்கள். என்ன ஆகுமோ தெரியாது. ஆனால் ஒன்று நீங்கள் முன் வைத்த காலை பின் வாங்க மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

அரசியலில் ஒரு கட்சி ஆரம்பித்து நடத்துவது என்பது எத்தனை கடினம் என்று எங்களுக்குத் தெரியும். அரசு இயந்திரத்தில் பதவி கிடைக்காத காரணத்தால் மட்டும் தாய்கட்சியிலிருந்து விலகி வேறு கட்சி ஆரம்பிக்கும் பலரையும் பார்த்துவிட்டோம். தொண்டர்கள் செய்யும் அக்கிரமங்களை தட்டிக் கேட்காத தலைவர்களையும் பார்த்துவிட்டோம். இப்போது நடக்கும் நிகழ்ச்சிகள் உங்களை வீழ்த்தலாம். ஆனால் ஆம் ஆத்மி கட்சியை அடியோடு அழிக்க முடியாது. என்னைபோல பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம்.

மற்ற கட்சிகளிடம் இல்லாத கை சுத்தம் உங்களிடம் இருக்கிறது. அதை இந்திய மக்கள் புரிந்துகொள்ள நேரம் ஆகலாம். வரும் தேர்தலில் உங்கள் கட்சிக்கு ஆதரவு நிறைய இருக்கும் என்று தோன்றினாலும், டெல்லியில் ஏற்பட்டிருக்கும் இழுபறிநிலை பாராளுமன்றத் தேர்தலில் ஏற்படக்கூடாது என்று விரும்புகிறேன். மத்தியில் நிச்சயம் ஒரு நிலையான அரசு தேவை. கூட்டணி அரசியல் உங்களுக்கும் தெரிந்திருக்கும். இப்போதே அதை அனுபவித்துக்கொண்டு தானே இருக்கிறீர்கள்!

பல கோடி இந்தியர்களின் சார்பில் நான் சொல்ல விரும்புவது இதுதான்:

2014 தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் 2019 தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று நாட்டை ஆளும் பொறுப்பு உங்களுக்குக் கிடைக்கட்டும். இந்த ஐந்து வருடங்களை நாடு முழுதும் விழிப்புணர்வு கொண்டுவர பயன்படுத்திக் கொள்ளுங்கள். கட்சியைப் பலப்படுத்துங்கள். இதுவரை எந்தக் கட்சிக்கும் இந்த அளவு வரவேற்பு இருந்ததில்லை. என்னைப்போன்ற பல கோடி இந்தியர்கள் ‘உங்களால் முடியும்’ என்று நம்புகிறோம். அந்த நம்பிக்கையை காப்பாற்றுங்கள்.

தன்னாட்சி: வளமான இந்தியாவை உருவாக்க (உங்கள் புத்தக தலைப்பு) என்பது உங்கள் தேர்தல் கோஷமாக இருக்கட்டும். நாங்களும் உங்கள் கைகளை பலப்படுத்த தயாராக இருக்கிறோம்.

இப்படிக்கு

அன்புடன்

பல கோடி இந்தியர்களின் பிரதிநிதி

 

15 மணிமொழியாகிற என் அன்பு அம்மாவே!

வல்லமை குழுமம் நடத்திய கடித இலக்கியப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற எனது கடிதம்:

மணிமொழியாகிற என் அன்பு அம்மாவே!

உன் நெடுநாளைய ஆசையை இன்று நிறைவேற்றியிருக்கிறேன். நீ சொல்வாயே, இந்த ஈமெயில் கொசு மெயில் எல்லாம் எனக்கு வேண்டாம். கொஞ்ச நேரம் எனக்காக செலவழித்து காகிதமும் பேனாவும் எடுத்து சற்று மெனக்கெட்டு நாலுவரி எழுது. எனக்குத் தோன்றும் போதெல்லாம் படித்துப் பார்ப்பேன் என்பாயே, அந்த உன் ஆசையை நிறைவேற்றிவிட்டேன்.

இப்போதெல்லாம் பழைய நினைவுகளே அதிகம் வருகின்றன, அம்மா. உன் கையைப் பிடித்துக் கொண்டு பள்ளிக்குப் போவேனே, அந்த நினைவுகள். இன்னும் இன்னும் அந்த காலத்திய நினைவுகள் பசுமையாக மனதில் வாசம் வீசிக் கொண்டிருக்கின்றன, அம்மா.

‘எனக்கு ஏன் மணிவண்ணன் என்று பெயர் வைத்தாய், என் பள்ளித்தோழன் என்னை வணி மண்ணன் என்று கேலி செய்கிறான்’ என்று ஒருமுறை உன்னிடம் வந்து அழுதேன், நினைவிருக்கிறதா, அம்மா? நீ என்ன சொன்னாய் தெரியுமா? ‘அட! உன் தோழனுக்கு Spoonerism தெரியுமா? இரண்டு வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை மாற்றிப் போட்டுப் பேசுவது தான் Spoonerism. உன் பெயரை அவன் என்ன அழகாக மாற்றி இருக்கிறான் பார்’ என்று இன்னும் பல ஸ்பூனரிச வார்த்தைகளைச் சொன்னாய். ‘என்.எஸ். கிருஷ்ணன் இந்த உத்தியை ‘சந்திரலேகா’ படத்தில் பயன்படுத்துவார். ‘தரையிலே உக்காரு’ என்பதை உரையிலே தக்காரு என்பார்’ என்றாய்.

நான் கொஞ்சம் சமாதானம் ஆனவுடன், ‘இத பாரு மணி, நம் குடும்பமே ‘மணி’ குடும்பம். மணிமணியான குடும்பம்! உன் அப்பா பெயர் மணிமாறன், என் பெயர் மணிமொழி, உன் பெயர் மணிவண்ணன். உன் அக்கா மணிமேகலை. வேறு யாருக்காவது இப்படி கிடைக்குமா? இன்னொரு விஷயம் ஒப்பிலியப்பனை ஆழ்வார் ‘பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன்’ என்கிறார். திருமங்கையாழ்வாரும் ‘முத்தினை, மணியை, மணி மாணிக்க வித்தினை’ திருவிண்ணகர் போய் சேவித்துவிட்டு வாருங்கள்’ என்கிறார். உனக்குத் தெரிந்த திருப்பாவையில் மாலே! மணிவண்ணா! என்று கண்ணனை அழைக்கிறாள் ஆண்டாள். உன் பெயர் அத்தனை அழகான பெயர்’ என்று சொல்லிவிட்டு, ‘உன் மனைவியின் பெயரும் இதேபோல மணி என்று வரவேண்டும்’ என்றாய். நான் சின்னவன் அப்போது. ‘போம்மா’ என்று சிணுங்கிக்கொண்டு எழுந்து போய்விட்டேன். ஆனால் நீ இதைப் பற்றி எத்தனை தீவிரமாக இருந்திருக்கிறாய் என்று பிறகு தெரிந்தது. எனது மனைவி பெயர் ரமா என்றிருந்ததை நீ ரமாமணி என்று மாற்றினாய், எங்கள் திருமணத்திற்குப் பிறகு.

எப்படியம்மா நீ ஸ்பூனரிசம் பற்றியும் பேசுகிறாய், திவ்யபிரபந்தம் பற்றியும் பேசுகிறாய் என்று வியந்து நின்றேன் மனதிற்குள். இப்போதும் அந்த வியப்பு மாறவில்லை அம்மா!

எனக்கு உன்னையும் அப்பாவையும் நன்றாக நினைவிருக்கிறது. நீ கொஞ்சம் கருப்புதான் ஆனாலும் ரொம்பவும் அழகு. அப்பா நல்ல நிறம். சட்டென்று பார்த்தால் நீதான் உயரம் போலத் தோன்றும். உன் ஆளுமை அப்படி. உன் பெயர் போலவே நீ சொல்லும் மொழிகளும் மணிதான். பேசும்போதே உன் குரலின் மென்மை மற்றவர்களை வசீகரிக்கும். வார்த்தைகளையும் அப்படித்தான் தேர்ந்தெடுத்துப் பேசுவாய். கோவம் என்பதே வராது உனக்கு. மென்மையான குரலில் நீ பாடும் ‘ஆசை முகம் மறந்துபோச்சே’ இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறதம்மா. கடிதம் எழுதுவதும் நான் உன்னிடமிருந்து கற்றதுதான். குட்டிகுட்டியாக உன் எழுத்துக்கள் ஒரு சீராக மணிமணியாக இருக்கும். உன் அப்பா நீ இப்படித்தான் இருப்பாய் என்று அகக்கண்களால் உணர்ந்து இப்படி ஒரு பெயர் வைத்தாரோ? உன் கடிதங்களைப் படிக்கும்போது உன் வார்த்தைகள் அருவமாக நின்று மனதை வருடிக் கொடுக்கும்.

உன்னையும் அப்பாவையும் பலமுறை இங்கு வந்து என்னுடன் இருக்கும்படி சொன்னேன். ஏனோ இருவருக்கும் இங்கு வர விருப்பம் இல்லை. அக்காவிற்கும், எனக்கும் திருமணம் ஆகி இருவரும் வேறு வேறு ஊர்களில் இருந்தோம். நீங்கள் இருவரும் ஒவ்வொரு வருடம் ஒவ்வொரு திவ்ய தேசம் போய் அங்கு தங்கி எல்லா உற்சவங்களும் சேவித்துவிட்டு வருகிறோம் என்று சொல்லி கிளம்பிவிட்டீர்கள். எனக்கு மிகவும் வருத்தம். ஒருமுறை நீங்கள் இருவரும் திருக்கண்ணபுரத்தில் இருந்தபோது நான் மனைவி குழந்தைகளுடன் அங்கு வந்திருந்தேன். இரவு முநியதரையன் பொங்கல் வாங்கி வரச்சொல்லி எங்களுக்குக் கொடுத்தாய். இரவு நாமிருவரும் மெல்லியதாக அலையடித்துக் கொண்டிருந்த மிகப்பெரிய குளக்கரையில் உட்கார்ந்திருந்தபோது சொன்னாய்: ‘ஸ்ரீரங்கத்தில் பிறக்க வேண்டும்; திருக்கண்ணபுரத்தில் பரமபதிக்கவேண்டும். எனக்கு அந்த பாக்கியம் கிடைக்குமா? ஸ்ரீரங்கத்தில் பிறந்துவிட்டேன்.

‘சரணமாகும் தனதாளடைந்தார்கெல்லாம்

மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்’

எனக்கு இந்த பாக்கியத்தைக் கொடுப்பாரா?’ என்றாய். என்னுடன் வர மறுத்துவிட்டாய்.

நீ இங்கு வரவேண்டும் அம்மா. வந்து என் குழந்தைகளுக்கு நிறைய கதைகள் சொல்லவேண்டும். சௌரிபெருமாள் பக்தனுக்காக கூந்தல் வளர்த்தது, தவிட்டுப் பானை தாடாளன், ஸ்ரீரங்கம் பெருமாளின் ஈரவாடை வண்ணான் சேவை – ஆ! மறந்துவிட்டேனே, திருவரங்கனின் உலா பற்றி நிச்சயம் சொல்லவேண்டும். இதைப்போல சரித்திர நிகழ்வுகளை நம் அடுத்த தலைமுறைக்கு நாம்தானே சொல்லவேண்டும் என்று நீதானே அடிக்கடி சொல்லுவாய்?

குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி இருப்பது எத்தனை பெரிய பாக்கியம்? இன்னும் ஒரு விஷயம், அம்மா. சீர்காழியில் இருக்கும் நம் பூர்விக வீட்டை விற்றுவிட வேண்டாம். நாங்கள் சின்ன வயதில் கோடைவிடுமுறை என்றால் ஸ்ரீரங்கத்தில் இருந்த பாட்டி வீட்டிற்குத் தான் போவோம். மறக்கமுடியாத நாட்கள்! கொளுத்தும் வெயில் எங்களை ஒன்றுமே செய்யாது. காலையில் எழுந்து காப்பி குடித்துவிட்டு (அப்போதெல்லாம் காப்பி தான் எங்களின் ஆரோக்கியபானம்) கொள்ளிடத்திற்குப் போவோம். நாங்களாகவே நீச்சல் கற்றுக் கொண்டோம். வேடிக்கை என்ன தெரியுமா, அம்மா? என் பிள்ளைகளுக்கு பயிற்சியாளர் வந்து நீச்சல் சொல்லிக் கொடுப்பார். சிறுவயதில் ‘இளங்கன்று பயமறியாது’ என்பதற்கேற்ப ஆடிபெருக்கன்று ரயில் பாலத்தின் மேலிருந்து கொள்ளிடத்தில் குதித்து நீந்திக் கரை சேர்ந்ததை அவர்களிடம் சொல்லிச் சொல்லி பெருமைப்படுவேன். என் குழந்தைகளுக்கும் பாட்டி வீடு என்கிற சொர்க்கத்தைக் காட்ட விரும்புகிறேன்.

என் ஞாபகசக்தி உனக்கு வியப்பாக இருக்கிறது, இல்லையா? ஆனால் ‘வர வர இப்போது நடப்பதெல்லாம் உங்களுக்கு நினைவே இருப்பதில்லை’ என்று ரமாமணி சொல்கிறாள் அடிக்கடி. டாக்டர் வருகிறார். ஏதேதோ மருந்துகள் கொடுக்கிறார். இதோ இப்போதும் என் காலடியில் ஒரு சின்னப் பையன் உட்கார்ந்திருக்கிறான். என்னை தாத்தா, தாத்தா என்கிறான். யார் என்றே தெரியவில்லை.

உன்னுடன் செலவழித்த நாட்கள் மட்டுமே நினைவில் இருக்கின்றன. உனக்கு தினமும் பல பல கடிதங்கள் எழுதுகிறேன்.

மணிமொழியாகிற என் அம்மா…..என் அம்மா…..

 

16 எங்க ஊரு அண்ணாவ்ரு!

சிங்காநல்லூரு புட்டஸ்வாமி முத்துராஜு தான் எங்க ஊரு அண்ணாவ்ரு என்றால் யார் இது என்பீர்கள். மேலே படியுங்கள், புரியும். இன்றைக்கு எங்க ஊரு அண்ணாவ்ருவின் பிறந்த நாள். அதற்காக இந்தப் பதிவு.

நாங்கள் இந்த ஊருக்கு வந்த புதிது. இந்த ஊரில் இருக்கும் எனது தோழி சொன்னார்: ‘எரடு கனஸு’ (இரண்டு கனவு) படம் கட்டாயமாகப் பாருங்கள்’ என்று.

நான் அப்போதுதான் கன்னட கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தேன். தட்டுத்தடுமாறி பேசவும் தொடங்கிய சமயம். ‘யார் நடித்த படம்?’ என்றேன் தோழியிடம். ‘இந்த ஊரு அண்ணாவ்ரு டாக்டர் ராஜ்குமார் நடித்தது’ என்றார். ‘அப்படியென்ன அதில்?’ என்றேன் விடாமல். ‘வெளியில் எல்லோரிடமும் பேசும் கணவன் தன்னிடம் ஏன் பேசுவதில்லை’ என்று கல்பனா (இந்தப் படத்தில் ஒரு கதாநாயகி) ஒரு கத்து கத்துவார் பாருங்கள். அட, அடா! அந்த காட்சிக்காகவே பார்க்கணும், அந்தப் படத்தை!’

ஒரு சின்ன ஆச்சர்யத்துடன் தோழியைப் பார்த்தேன். இப்படி ஒரு விமரிசனம் யாராவது ஒரு படத்திற்கு செய்திருப்பார்களா என்பது சந்தேகமே. பக்கத்திலேயே இருந்த ஒரு வீடியோ கடைக்குப் போய் காசெட் வாங்கிவந்தேன். எனக்கும் திரைப்படம் மிகவும் பிடித்திருந்தது. தோழி சொன்ன காரணம் மட்டுமல்ல; அண்ணாவ்ருவின் அசாத்தியமான நடிப்புத் திறன், பாடும் திறன், எல்லாவற்றையும் தூக்கி அடிக்கும் கன்னட உச்சரிப்பு இவற்றில் நானும் மனதைப் பறிகொடுத்து அவரது விசிறி ஆனேன். என்ன ஒரு அழுத்தம் திருத்தம் வார்த்தைகளில்! கன்னட மொழியின் அழகு அவரது குரலில், பேசும் விதத்தில் தெரிந்தது.

இவரைப் பற்றி மேலே பேசுவதற்கு முன், ‘எரடு கனஸு’ படத்தின் கதையைப் பார்க்கலாமா? அண்ணாவ்ருவின் சொந்தக்காரப் பெண் மஞ்சுளா (முதல் கதாநாயகி) இருவரும் கல்யாண செய்துகொள்ளப் போகிறோம் என்ற ஆசையில் முதல் கனவை கண்டு கொண்டிருக்கும்போது இரு குடும்பத்திற்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு, வேறு வழியில்லாமல் அண்ணாவ்ரு கல்பனாவை மணக்கிறார், அம்மாவின் நச்சரிப்புத் தாளாமல். ஆனால் தனது பழைய கனவிலேயே வாழ்ந்துவரும் அண்ணாவ்ரு கல்பனாவை திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. அண்ணாவ்ரு ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார். (இந்த சமயத்தில்தான் என் தோழி சொன்ன அந்த காட்சி வருகிறது)

ஒருமுறை தன்னுடன் வேலை செய்யும் ஒரு நண்பனின் வீட்டிற்கு அவனது அழைப்பின் பேரில் அண்ணாவ்ரு போகும்போது அங்கு நண்பனின் மனைவியாக, ஒரு குழந்தைக்கு தாயாக மஞ்சுளாவை பார்க்கிறார். தனது தவறு புரிந்து, கல்பனாவைப் பார்க்க ஓடோடி வருகிறார். வீட்டில் கல்பனா இல்லாததைப் பார்த்து அவர் வழக்கமாகப் போகும் கோவிலுக்கு அவரைத்தேடிக் கொண்டு அண்ணாவ்ரு வர, கோவிலிலிருந்து வெளியே வரும் கல்பனா, தன் கணவன் தன்னை முதல்முறையாக பெயரிட்டு அழைப்பதைக் கேட்டு, கண்மண் தெரியாமல் ஓடிவர, இருவருக்கும் குறுக்கே ஒரு கார் வர……! (மீதியை வெள்ளித்திரையில் காண்க என்று சொல்லாலாம்….ஆனால் இதைப்படிப்பவர்கள் கன்னட படம் பார்ப்பார்களா, தெரியவில்லையே!) அடிபட்ட கல்பனா பிழைக்க வேண்டும் என்று அவரது தலைமாட்டிலேயே அண்ணாவ்ரு தவம் கிடக்க, ஒருவழியாக கல்பனா கண்ணைத் திறந்து பார்க்க………… ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?’ என்று கதை சுபமாக முடிகிறது. இரண்டாவது கனவு ஆரம்பமாகிறது.

இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட். கல்பனா, மஞ்சுளா இருவருக்குமே நிஜ வாழ்க்கையில் அண்ணாவ்ரு மேல் ஒரு ‘இது’ என்பது ஊரறிந்த ரகசியம். ஆனாலும் அண்ணாவ்ரு பார்வதம்மா (அண்ணாவ்ருவின் மனைவி) கிழித்த கோட்டைத் தாண்டாதவர் என்பதும் ஊரறிந்த விஷயம். லீலாவதி இரண்டாம் தாரம். (இதுவும் எல்லோருக்கும் தெரிந்ததே) அவர்கள் படத்தில் ரஜினியின் அம்மாவாக வருவாரே அவர்தான் இந்த லீலாவதி. இத்தனை சொல்ல காரணம் கீழே!

நம் ஊர் கதாநாயகிகள் சரோஜாதேவியிலிருந்து, லக்ஷ்மி, ஜெயப்பிரதா, ஜெயந்தி, சரிதா, மாதவி, அம்பிகா, ராதா, ஊர்வசி வரை இவருடன் நடித்தவர்கள். சரிதாவுடன் நடித்த காமன பில்லு (வானவில்) படத்தில் அண்ணாவ்ரு செய்யும் யோகாசனங்கள் மிகவும் பிரசித்தம். இவரது ஆரோக்கியத்திற்கு இவர் செய்யும் ஆசனங்களே காரணம் என்று சொல்வார்கள். வீரப்பனின் பிடியில் இவர் இருந்தபோது கர்நாடகாவே ஸ்தம்பித்துப் போயிற்று.

ஆரம்பத்தில் இவருக்கு பின்னணி பாடியவர் பி.பி. ஸ்ரீநிவாஸ். போகப்போக அண்ணாவ்ரு தானே பாட ஆரம்பித்துவிட்டார். இப்படிச் செய்து அவரது பின்னணிப் பாடகர் வாய்ப்பை கெடுத்துவிட்டார் என்றும் கூட இவரது ரசிகர்களே சிலர் சொல்லுவார்கள். ஆனால் நாடக மேடையிலிருந்து திரைப்படத்திற்கு வந்தவர் ஆதலால் மிக நன்றாகப் பாடக் கூடிய திறமை படைத்தவர் அண்ணாவ்ரு. ‘ஜீவன சைத்ர’ படத்தில் தோடி ராக ஆலாபனை செய்து ராகமாலிகையில் ஒரு பாட்டுப் பாடுவார் பாருங்கள். மெய்மறக்கச் செய்யும் குரல் வளம், Bபாவம்!

நாதமய ஜீவன சைத்ர

பல சரித்திரப் படங்களிலும் நடித்திருக்கிறார் அண்ணாவ்ரு. பிரபலமான படங்களில் சில: B’பப்ருவாஹன’, ‘கவிரத்ன காளிதாசா’, ‘கிருஷ்ணதேவராய’. பப்ருவாஹன வில் அர்ஜுனன், அவன் மகன் பப்ருவாஹன என்று இரண்டு பாத்திரங்கள். இருவரும் யுத்தகளத்தில் பாடும் பாடல் மிகவும் பிரபலம்.

இதோ கேளுங்கள்:

யாரு திளியரு நின்ன புஜபலத பராக்ரம

கவிரத்ன காளிதாஸ படத்தை மிகவும் பாசிடிவ் ஆக முடித்திருந்தது மிகவும் ரசிக்கும் படி இருந்தது. இதோ அந்தப் படத்தில் இவரும் வாணி ஜெயராமும் பாடும் பாடல்:

https://www.youtube.com/watch?v=1jcakqbeCQg

இவரைப் பற்றி இன்னும் இன்னும் எழுதிக் கொண்டே போகலாம். அடுத்த வருடம் எழுதுகிறேன். இப்போது ஒரு சின்ன விஷயத்துடன் முடிக்கிறேன்.

இவர் மறைந்த போது இங்கு உலா வந்த ஒரு SMS: தனது விசிறிகளை இவர் அபிமானி தேவர்களே என்று தான் அழைப்பார். இவர் சொர்க்கம் போய்ச் சேர்ந்து அங்கிருந்து எழுதுவது போல அமைந்த அந்த SMS இதோ:

‘அபிமானி தேவர்களே! நான் இங்கு சுகமாக இருக்கிறேன். மஞ்சுளா, கல்பனா என்னை நன்றாக கவனித்துக் கொள்ளுகிறார்கள். லீலா, நீ உடனே வா. பாரு, உனக்கு அவசரமில்லை. நிதானமாக வா!’

 

17 ஹேப்பி பர்த்டே மிஸ்டர் ஷேக்ஸ்பியர்!

இனிய 450வது பிறந்த நாள், மிஸ்டர் ஷேக்ஸ்பியர்!

நான்காம் தமிழ் ஊடகத்தில் இன்று (23.4.2014) வெளியான எனது கட்டுரை

கிட்டத்தட்ட 400 வருடங்களுக்கு மேலாக ஆங்கில இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு கொடுங்கனவாக இருந்துவருகிறார், ஷேக்ஸ்பியர். பாவம், எத்தனை உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இவரது குழப்பமான நாடகங்களையும், அதில் வரும் குழப்பமான கதாபாத்திரங்களையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமே என்று நடுங்கிக் கொண்டிருக்கிறார்களோ, தெரியாது. இவரது நாடகங்களை நடிப்பவர்கள் எத்தனை பேர் இவரது புகழ் பெற்ற வசனங்களையும், இறவா வரம் பெற்ற வரிகளையும் மேடையில் மறக்காமல் பேசவேண்டுமே என்று தவிக்கிறார்களோ, தெரியாது. ஏன் தான் இவரது துன்பக்கதைகளுக்கு பக்கம் பக்கமாக விரிவுரை எழுதினோம் – பேசாமல் ஹாலிவுட் நகைச்சுவை படங்களுக்கு விரிவுரை எழுதியிருக்கலாம் என்று பல ஆங்கில பேருரையாளர்கள் வருந்திக் கொண்டிருப்பார்களோ? எப்படியாயினும், இவர்கள் எல்லோரும் ஷேக்ஸ்பியரை நேசிப்பவர்களே, அதில் சந்தேகமில்லை.

இப்படி எல்லோரையும் ஏதோ ஒருவிதத்தில் கவர்ந்த, ஆங்கில இலக்கியத்தில் தனக்கென ஒரு இடம் பிடித்த மகா கவிஞன், நாடக ஆசிரியர், நாடக நடிகர், எழுத்தாளர் ஷேக்ஸ்பியரின் 450 வது பிறந்த நாள் இந்த வருடம் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இவர் யார், இவருக்கு ஏன் இத்தனை பெயரும் புகழும் என்று பார்ப்போம்:

முதலில் அவரது கொடையாண்மையைப் பார்ப்போமா? ஆங்கில மொழிக்கு இவர் அளித்த வார்த்தைகள் 1700 க்கும் அதிகம். அதுமட்டுமா? ஆங்கில மொழியில் இருக்கும் பெயர் சொற்களை வினைச் சொற்களாகவும், வினைச்சொற்களை பண்புச் சொல்லாகவும் மாற்றி, பழக்கத்தில் இருக்கும் ஒரு வார்த்தைக்கு முன்னொட்டு (prefix), பின்னொட்டு (suffix) சேர்த்து அவற்றை புது வார்த்தைகளாக மாற்றி, புத்தம்புது அசல் வார்த்தைகளையும் கண்டுபிடித்து ….எத்தனை எத்தனை செய்திருக்கிறார்?

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் பல சொலவடைகள் இவரது எண்ணத்தில் உதித்தவை. எதாவது நமக்குப் புரியவில்லை என்றால் “It’s Greek to me’ என்கிறோமே, இந்த சொற்றொடர் ஷேக்ஸ்பியரால் பயன்படுத்தப்பட்டது. உண்மையில் அவருக்கு கிரேக்க மொழி தெரியாதா? கிரேக்கத்தை மையக் கருத்தாக வைத்து Timons of Athens, Troilus and Cressida போன்ற நாடகங்களை எழுதியவருக்கு கிரேக்க மொழி தெரியாதா? இல்லை கிரேக்கர்களை வெறுப்பேற்ற இப்படிச் சொல்லுகிறாரா? அவருக்கே வெளிச்சம்!

இவர் பயன்படுத்திய நாம் இன்றைக்கும் பயன்படுத்தும் சில சொற்றொடர்கள்: ‘vanish into thin air’, too much of a good thing, seen better days, live in a fool’s pradise…… இவற்றை தவிர 38 நாடகங்கள், 154 சானேட்ஸ் (14 வரிகள் கொண்ட பாடல்கள்), மற்றும் பல பல்சுவை பாடல்களையும் எழுதியிருக்கிறார். இவரது நாடகங்களில் மெல்லிய நகைச்சுவையிலிருந்து ஆழ்ந்த துன்பியல் சுவை வரை காணலாம். இந்நாடகங்களின் கதாபாத்திரங்கள் மனிதனின் நல்ல பக்கங்களையும், கெட்ட பக்கங்களையும் காட்டுபவையாக இருக்கின்றன. இவர்கள் உயிரோட்டமுள்ளவர்களாக நம்முடனேயே வாழுபவர்கள். பலதலமுறை வாசகர்களும் நாடக விரும்பிகளும் இந்தக் கதாபாத்திரங்களை விரும்புவார்கள் அல்லது இவர்களை வெறுப்பதற்கு முயற்சிப்பார்கள்

ரோமியோ ஜூலியட்டை ஈர நெஞ்சத்துடன் நினைக்காத காதலர்கள், காதல் கதைகள் உண்டோ? தமிழ் சினிமாக்களில் காணப்படும் இரண்டு குடும்பங்களுக்கு இடையே நிலவும் கடுமையான பகைமையை மீறி அங்கு இருக்கும் இரு இளநெஞ்சங்களில் மலரும் காதல் – இவரது கொடைதான். மென்மையான மேக்பெத் மெல்ல மெல்ல பழிவாங்கும் வில்லனாக மாறுவதாகட்டும்; ஒதேல்லோவின் கண்மூடித்தனமாக பொறாமையாகட்டும் – மனித இனத்தின் உணர்ச்சிக் குவியல்கள் இவரது கதாபாத்திரங்கள்.

ஸ்ட்ராட்போர்டு அபான் ஏவன் என்ற ஊரில் பிறந்த இவரது பிறந்த தேதி நிச்சயமாகத் தெரியவில்லை. ஞானஸ்நானம் செய்யப்பட போது இவருக்கு இடப்பட்ட பெயர் கிலியாமஸ் பிலிய ஜோஹனஸ் ஷேக்ஸ்பியர். (Guiliamus filius Johannes Shakspere) லத்தீன் மொழியில் இதன் பொருள் வில்லியமின் மகன் ஜான் ஷேக்ஸ்பியர் என்பது. இவருக்கு ஞானஸ்நானம் செய்யப்பட்டது ஏப்ரல் 26, 1564. அதனால் இவர் பிறந்தது ஏப்ரல் 23 ஆக இருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். மறைந்ததும் ஏப்ரல் 23 அன்று தான், வருடம் 1616.

எழுதுவது, நாடகங்களை தயாரிப்பது, நடிப்பது என்று லண்டன் நகரிலேயே தனது வாழ்நாளை கழித்தாலும், தான் பிறந்த சின்னஞ்சிறு ஊரை மறக்காமல் அடிக்கடி வந்துபோய்க் கொண்டிருந்தார் இவர்.

இவர் எப்போது எழுதத் தொடங்கினார் என்று தெரியவில்லை. ஆனால் 1592 ஆம் வருடத்திலேயே இவரது நாடகங்கள் லண்டன் நகரில் அரங்கேறத் தொடங்கிவிட்டன. அப்பொழுதே இவரை கடுமையாக விமரிசித்தவர் ராபர்ட் கிரீன். ‘எல்லாம் தெரிந்தவன் போல காட்டிகொள்ளும் ஒன்றுக்கும் உதவாதவன், இரண்டாம்தர எழுத்தாளன்’ என்று ஷேக்ஸ்பியரை வர்ணித்தார். பென் ஜான்சன் இவரை கொஞ்சம் கூட கற்பனைத் திறன் இல்லா கவிஞன் என்று கூசாமல் திட்டினார். ஆனால் அகராதிகளின் தந்தை என்று அழைக்கப்பட்ட சாம் ஜான்சன் ஷேக்ஸ்பியரின் மிகப்பெரிய விசிறி. ஏனென்றால் ஷேக்ஸ்பியர் இல்லையென்றால் ஒலியியலில் 2,000 வார்த்தைகள் குறைந்திருக்குமே!

எழுத்தாளர், நடிகர், நாடக ஆசிரியர் இவை தவிர ஷேக்ஸ்பியர் ஒரு சிறந்த தொழிலதிபராகவும் இருந்தார். அவரும் அவரது சகாக்கள் சிலரும் சேர்ந்து சொந்த நாடகக் கம்பனி ஒன்றை தேம்ஸ் நதியின் தெற்கு கரையில் ஆரம்பித்து அதற்கு குளோப் என்று பெயரும் இட்டனர். உலகமே நாடக மேடை என்று சொன்னவரின் நாடகக் கம்பனிக்கு இதைவிட பொருத்தமான பெயர் உண்டோ? இதில் வந்த வருமானத்தை மிகவும் பத்திரமாக மறுபடி மறுபடி முதலீடு செய்து லண்டன் நகரில் பல சொத்துக்களையும், ஸ்ட்ராட்போர்டில் இருந்த இரண்டாவது பெரிய வீட்டையும் வாங்கினார் ஷேக்ஸ்பியர்.

பாரிசிலும், லண்டனிலும், மற்ற ஐரோப்பிய நகரங்களிலும் இவரது 450வது பிறந்த நாளைக் கொண்டாட விமரிசையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவர் பிறந்த ஸ்ட்ராட்போர்டு அபான் ஏவனிலும் பல கலை நிகழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

நாமும் இந்த மகா கவிஞனை வாழ்த்துவோம், வாருங்கள்.

இனிய 450 வது பிறந்த நாள் வாழ்த்துகள் மிஸ்டர் ஷேக்ஸ்பியர்.

 

18 சரியாத்தான் சொன்னாரு ‘குஷ்’

2014 ஏப்ரல் சினேகிதி (திருமதி மஞ்சுளா ரமேஷ்) இதழில் வெளியான கட்டுரை

நிறைய எழுத்தாளர்களின் படைப்புக்களைப் படித்தாலும், ஒரு சிலரது எழுத்துக்கள் நம்மை மிகவும் கவர்ந்து விடுகின்றன. அந்த சிலரில் இன்று மறைந்த குஷ்வந்த் சிங் என்னைக் கவர்ந்தவர்களில் ஒருவர். நிறைய எழுதியிருக்கிறார். இவரது எழுத்துக்களில் கிண்டலும் கேலியும் அதிகமாக இருக்கும். எல்லோரையுமே நகைச்சுவை கலந்து சாடியிருப்பார். அதுவே இவரது எழுத்துக்களுக்கு சுவாரஸ்யம் கூட்டியது என்று சொல்லலாம். சம்பந்தப்பட்டவர் படித்தால் கூட நிச்சயம் சின்ன புன்னகையாவது செய்வார். பிறகுதான் கோபித்துக் கொள்வார். அவருக்கும் கூட சிலசமயம் இவர் எழுதுவது ‘நிஜம்தானே?’ என்று தோன்றலாம்!

இவர் எழுதும் பெரிய நூல்களை விட தினசரியில் இவர் எழுதி வந்த சின்ன சின்ன பத்திகள் மிகவும் சுவாரஸ்யம் வாய்ந்தவை. மற்றவர்களைப் பற்றி மட்டுமல்ல; தனது தவறுகளையும் வெளிப்படையாக பேச இவர் எப்போதும் தயங்கியது இல்லை. இவர் எழுதிய பத்திகளில் நான் படித்தவற்றில் எனக்கு நினைவு இருப்பது இதோ:

வெளிநாடு போயிருந்தபோது ஒருமுறை வயிற்று உபாதைக்காக ஒரு மருத்துவரிடம் சென்றாராம். மருத்துவர் இவரைப்பார்த்து, ‘கடந்த ஒரு வாரத்தில் என்னவெல்லாம் சாப்பிட்டீர்கள்?’ என்று கேட்டுவிட்டு இவர் சொல்வதைக் குறித்துக் கொண்டாராம். மருந்து எழுதிக்கொடுத்துவிட்டு, ‘ஒரு வாரம் கழித்து வந்து பாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

ஒருவாரம் கழித்து இவர் மருத்துவமனைக்குப் போனபோது அங்கு ஒரு பெரிய கண்ணாடி ஜாடி ஒரு மேஜையின் மேல் இருந்ததாம். அதனுள் நிறைய திரவம், நிறைய திடப்பொருள் என்று ஒரு கலவை. அதைப்பார்க்கவே இவருக்கு ஒரு மாதிரி இருந்ததாம். மருத்துவர் சொல்லும்வரை காத்திருக்காமல், இவரே கேட்டாராம்: ‘அந்த ஜாடிக்குள் என்ன?’ என்று. ‘நீ ஒரு வாரமாக என்னென்ன சாப்பிட்டாயோ அதெல்லாம் அந்த ஜாடிக்குள் இருக்கிறது’ என்று பதிலளித்தாராம் மருத்துவர். ‘வயிறு என்பதை வயிறாக நினை. இதைபோல ஒரு கண்ணாடி ஜாடி என்று நினைத்து கிடைத்ததை எல்லாம் அதற்குள் போடாதே!’ என்றாராம் மருத்துவர்.

அவரது பெயரைப்போலவே மிகவும் ஜாலியானவர். இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் அவரது எழுத்துக்களுக்கு ரசிகர்கள் உண்டு. 99 ஆண்டுகள் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்த அவர் ஒரு மனிதனின் என்ன தேவை என்று பட்டியலிடுகிறார்:

முதல் தேவை: பரிபூரண ஆரோக்கியம். சின்ன நோய் என்றால் கூட உங்கள் சந்தோஷத்தை அது பாதிக்கும்

இரண்டாவது தேவை: போதுமான அளவு வங்கித் தொகை: இது லட்சக்கணக்கில் இல்லாமல் போனாலும், வாழ்க்கையின் வசதிகளை அளிக்க வல்லதாக இருக்கவேண்டும். வெளியில் போய் சாப்பிடுவதற்கும், அவ்வப்போது திரைப்படங்கள் பார்ப்பதற்கும், பிடித்த இடங்களைப் போய் பார்த்து வருவதற்கும், விடுமுறையை மலை வாசஸ்தலத்திலோ அல்லது கடற்கரை அருகிலோ கழிக்கவும் உதவுவதாக இருக்க வேண்டும். பணப்பற்றாக்குறை உங்களை நிலைகுலையச் செய்யும். கடன் வாங்குவது, கிரெடிட் கார்டுகளில் வாழ்வது தவறான பழக்கம். நம்மைப் பற்றிய பிறரது கணிப்பில் நம் மதிப்பு குறையும்.

மூன்றாவது தேவை: சொந்தவீடு. நம் வீட்டில் கிடைக்கும் சுகம் வாடகை வீடுகளில் கிடைக்காது. சின்னதாக ஒரு தோட்டம். நம் கையால் விதை போட்டு சின்னஞ்சிறு செடிகள் முளைத்து பூக்கள் மலருவதைப் பார்ப்பதும், அவற்றுடன் ஒரு நட்புணர்வை வளர்த்துக் கொள்வதும் அதிக சந்தோஷத்தைக் கொடுக்கும்.

நான்காவது தேவை: நம்மைப் புரிந்துக்கொண்ட ஒரு மனைவி/கணவன்/ ஒரு நண்பன். புரிதல் இல்லாத வாழ்வில் சேர்ந்து இருந்து, ஒருவரையொருவர் கடித்துக் குதறிக் கொள்வதை விட மணவிலக்கு எவ்வளவோ மேல்.

ஐந்தாவது தேவை: நம்மைவிட நல்ல நிலையில் இருக்கும் ஒருவரைப் பார்த்து பொறாமை கொள்ளாமல் இருத்தல்: பொறாமை உங்களை அரித்துவிடும். மற்றவருடன் உங்களை ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள்.

ஆறாவது தேவை: விலகி இருத்தல். வதந்திகளைப் பரப்புபவர்களை கிட்டே நெருங்க விடாதீர்கள். அவர்களது வார்த்தைகள் உங்களை செயலிழக்கச் செய்வதுடன், உங்கள் மனதையும் விஷமாக்கும்.

ஏழாவது தேவை: உங்களுக்கென்று ஒரு பொழுதுபோக்கை வளர்த்துக் கொள்ளுங்கள். தோட்டவேலை, புத்தகம் படித்தல், எழுதுதல், படங்கள் வரைதல், விளையாடுதல் அல்லது இசையைக் கேட்டல் என ஏதாவது உங்களுக்கென்று வேண்டும்.

எட்டாவது தேவை: தினமும் காலையும் மாலையும் 15 நிமிடங்கள் சுயபரிசோதனைக்கு ஒதுக்குங்கள். காலை பத்து நிமிடங்கள் மனதை அமைதிப்படுத்தவும், 5 நிமிடங்கள் இன்று என்ன செய்யவேண்டும் என்று திட்டமிடவும் ஒதுக்கவும். அதேபோல மாலை 5 நிமிடங்கள் மனதை நிலைநிறுத்தவும், பத்து நிமிடங்கள் என்னென்ன செய்து முடித்தீர்கள் என்று பார்க்கவும் நேரத்தை செலவிடுங்கள்.

கடைசியாக கோபம் கொள்ளாதீர்கள். முன்கோபம், பழி வாங்கும் எண்ணம் வேண்டவே வேண்டாம். உங்களின் நண்பர் கடுமையாகப் பேசினால் கூட சட்டென்று அந்த இடத்திலிருந்து நகர்ந்து விடுங்கள்.

இவையெல்லாவற்றையும் விட மிகவும் தேவையான ஒன்று:

இறக்கும்போது நாம் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றிய வருத்தங்களோ, உறவினர்கள், நண்பர்கள் பற்றிய எந்தவிதமான மனக்குறைகளோ இல்லாமல் மரணிக்க வேண்டும். பாரசீக மொழியில் கவிஞர் இக்பால் சொல்லுவதை நினைவில் கொள்வோம்: ‘உண்மையான மனிதனின் லட்சணங்கள் என்ன தெரியுமா? மரணத்தைப் புன்னகையுடன் வரவேற்பதுதான்’.

2014 மார்ச் மாதம் 20 நாள் மரணத்தைத் தழுவிய இந்த மனம்கவர் எழுத்தாளருக்கு நம் அஞ்சலிகள்!

 

19 கொழு கொழு கன்னே!

எங்கள் கதைசொல்லி பாட்டி ஸ்ரீரங்கம்மாள்

நேற்று ஒரு சந்தோஷமான பதிவு எழுதினேன். எப்போதும் எழுதும் செல்வ களஞ்சியமே – குழந்தைகள் வளர்ப்புத் தொடருக்கு எழுதும் பதிவுதான். ஆனால் நேற்று ஒரு சிறப்பு என்னவென்றால் நான் எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குச் சொல்லும் ஒரு மிகப்பழைய கதையை எழுதினேன். இந்தக் கதையை எனக்குச் சொன்னது எங்கள் பாட்டி. எங்கள் அம்மாவும் சிலசமயம் சொல்லியிருக்கிறார். ஆனாலும் பாட்டி சொல்லும்போது ஒருவித ராகத்துடன் சொல்லுவார். கேட்க மிகவும் இனிமையாக இருக்கும்.

பெயர் மறந்து போன ஈ!

‘ஒரே ஒரு ஊரில ஒரு ஈ இருந்துதாம். ஒருநாள் அதுக்கு திடீர்னு அதோட பேரு மறந்து போயிடுத்தாம். என்ன பண்றதுன்னே தெரியலை. வீட்டுக்கு வெளியே வந்து பார்த்துதாம். அங்கே ஒரு கன்னுக்குட்டி நின்னுண்டு இருந்துதாம். உடனே இந்த ஈ அதுகிட்ட போயி

‘கொழு கொழு கன்னே! எம்பெரென்ன?’ அப்படின்னு கேட்டுதாம்’

அது சொல்லித்தாம்: ‘எனக்குத் தெரியாதுப்பா, என் அம்மாவ கேளு’ ன்னு.

அந்த ஈ உடனே அதோட அம்மாகிட்ட போயி,

‘கொழு கொழு கன்னே,

கன்னுந்தாயே எம்பெரென்ன?’ அப்படின்னு கேட்டுதாம்.

அது சொல்லித்தாம்: ‘எனக்குத் தெரியாதுப்பா, என் மேய்க்கற இடையன கேளு’ அப்படீன்னு.

அந்த ஈ உடனே அந்த இடையன் கிட்ட போயி,

‘கொழு கொழு கன்னே,

கன்னுந்தாயே,

தாய மேய்க்கற இடையா, எம்பெரென்ன?’ அப்படீன்னு கேட்டுதாம்.

அவன் சொன்னானாம்: எனக்கு தெரியாதுப்பா, என் கைல இருக்கற கோலக் கேளு’

ஈ: ‘கொழு கொழு கன்னே,

கன்னுந்தாயே,

தாய மேய்க்கற இடையா,

இடையன் கை கோலே, எம்பெரென்ன?’ அப்படீன்னு கேட்டுதாம.

கோல் சொல்லித்தாம்: எனக்குத் தெரியாதுப்பா, என் மேல இருக்குற கொடிமரத்த கேளு’

ஈ: ‘கொழு கொழு கன்னே,

கன்னுந்தாயே,

தாய மேய்க்கற இடையா,

இடையன் கை கோலே, கோல்ல இருக்குற கொடிமரமே! எம்பெரென்ன?’

கொடிமரம்: எனக்குத் தெரியாதப்பா, என் மேல இருக்குற கொக்க கேளு!

ஈ: ‘கொழு கொழு கன்னே,

கன்னுந்தாயே,

தாய மேய்க்கற இடையா,

இடையன் கை கோலே, கோல்ல இருக்குற கொடிமரமே, கொடிமரத்துல இருக்குற கொக்கே! எம்பெரென்ன?

கொக்கு: எனக்குத் தெரியாதுப்பா, நான் நீராடும் குளத்த கேளு!

ஈ: ‘கொழு கொழு கன்னே,

கன்னுந்தாயே,

தாய மேய்க்கற இடையா,

இடையன் கை கோலே, கோல்ல இருக்குற கொடிமரமே!

கொடிமரத்துல இருக்குற கொக்கே, கொக்கு நீராடும் குளமே! எம்பெரென்ன?’

குளம்: எனக்குத் தெரியாதுப்பா, குளத்துல இருக்குற மீனைக் கேளு!

ஈ: ‘கொழு கொழு கன்னே,

கன்னுந்தாயே,

தாய மேய்க்கற இடையா,

இடையன் கை கோலே, கோல்ல இருக்குற கொடிமரமே!

கொடிமரத்துல இருக்குற கொக்கே, கொக்கு நீராடும் குளமே, குளத்துல இருக்குற மீனே! எம்பெரென்ன?’

மீன்: எனக்குத் தெரியாதுப்பா, என்னை பிடிக்கிற வலையன கேளு!

ஈ: ‘கொழு கொழு கன்னே,

கன்னுந்தாயே,

தாய மேய்க்கற இடையா,

இடையன் கை கோலே, கோல்ல இருக்குற கொடிமரமே!

கொடிமரத்துல இருக்குற கொக்கே, கொக்கு நீராடும் குளமே, குளத்துல இருக்குற மீனே, மீனப் பிடிக்கிற வலையா! எம்பெரென்ன?

வலையன்: எனக்குத் தெரியாதுப்பா, என் கைல இருக்குற சட்டிய கேளு!

ஈ: ‘கொழு கொழு கன்னே,

கன்னுந்தாயே,

தாய மேய்க்கற இடையா,

இடையன் கை கோலே, கோல்ல இருக்குற கொடிமரமே!

கொடிமரத்துல இருக்குற கொக்கே, , கொக்கு நீராடும் குளமே, குளத்துல இருக்குற மீனே, மீனப் பிடிக்கிற வலையா! வலையன் கை சட்டியே! எம்பெரென்ன?

சட்டி: எனக்குத் தெரியாதுப்பா, என்ன பண்ற குயவன கேளு!

ஈ: ‘கொழு கொழு கன்னே,

கன்னுந்தாயே,

தாய மேய்க்கற இடையா,

இடையன் கை கோலே, கோல்ல இருக்குற கொடிமரமே!

கொடிமரத்துல இருக்குற கொக்கே, கொக்கு நீராடும் குளமே, குளத்துல இருக்குற மீனே, மீனப் பிடிக்கிற வலையா! வலையன் கை சட்டியே! சட்டி பண்ற குயவா! எம்பெரென்ன?

குயவன்: எனக்குத் தெரியாதுப்பா, என் கைல இருக்குற மண்ணை கேளு!

ஈ: ‘கொழு கொழு கன்னே,

கன்னுந்தாயே,

தாய மேய்க்கற இடையா,

இடையன் கை கோலே, கோல்ல இருக்குற கொடிமரமே!

கொடிமரத்துல இருக்குற கொக்கே, கொக்கு நீராடும் குளமே, குளத்துல இருக்குற மீனே, மீனப் பிடிக்கிற வலையா! வலையன் கை சட்டியே! சட்டி பண்ற குயவா! குயவன் கை மண்ணே! எம்பெரென்ன?

மண்: எனக்குத் தெரியாதுப்பா, என் மேல வளர புல்லைக் கேளு!

ஈ: ‘கொழு கொழு கன்னே,

கன்னுந்தாயே,

தாய மேய்க்கற இடையா,

இடையன் கை கோலே, கோல்ல இருக்குற கொடிமரமே!

கொடிமரத்துல இருக்குற கொக்கே, கொக்கு நீராடும் குளமே, குளத்துல இருக்குற மீனே! மீனப் பிடிக்கிற வலையா! வலையன் கை சட்டியே! சட்டி பண்ற குயவா! குயவன் கை மண்ணே! மண்ணுல வளர்ற புல்லே! எம்பெரென்ன?

புல்: எனக்குத் தெரியாதுப்பா, என்னை திங்கற குதிரைய கேளு!

ஈ: ‘கொழு கொழு கன்னே,

கன்னுந்தாயே,

தாய மேய்க்கற இடையா,

இடையன் கை கோலே, கோல்ல இருக்குற கொடிமரமே!

கொடிமரத்துல இருக்குற கொக்கே, கொக்கு நீராடும் குளமே, குளத்துல இருக்குற மீனே! மீனப் பிடிக்கிற வலையா! வலையன் கை சட்டியே! சட்டி பண்ற குயவா! குயவன் கை மண்ணே! மண்ணுல வளர்ற புல்லே! புல்லத் திங்குற குதிரையே! எம்பெரென்ன?

குதிரை ஈ யைப் பார்த்து ‘ஹிஈ…ஈ..ஈ… ஹி..ஈ…ஈ.. ன்னு சிரிச்சுதாம்! உடனே ஈக்கு தன் பேரு நினைவுக்கு வந்துடுத்தாம்.

எத்தனை எளிமையான ஒரு கதை!

குழந்தைகளுக்குச் சொல்லவென்று அதிகம் சிந்திக்க வேண்டாம். சாதாரண ஒரு நிகழ்வைக் கூடக் கதையாக்கலாம் என்று தோன்றுகிறது, இல்லையா?

குழந்தைகளுக்கு கதை சொல்வது என்ற நீண்ட நாளைய பாரம்பரிய வழக்கத்தைக் கைவிடாதீர்கள் என்று இன்றைய தலைமுறையினரைக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

பி.கு. இந்தப் பதிவு நான்குபெண்கள் தளத்தில் இன்று வெளியானது. இந்தக்கதையில் ஒரு வரியை நான் மறந்துவிட்டேன். அதை நினைவு படுத்திய எனது தோழி ராதாபாலுவுக்கு என் மனமார்ந்த நன்றி!

 

20 மரணம் என்பது என்ன?

4tamilmedia.com – தளத்தில் இன்று பிரசுரம் ஆகியிருப்பது

20.3.2014 அன்று மறைந்த பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் அவர்களின் Absolute Kushwant: The Low-Down on Life, Death & Most Things In-Between – என்ற புத்தகத்திலிருந்து:

இறப்பு என்பதை நம் வீடுகளில் அவ்வளவாக பேசுவதில்லை. நம் ஒவ்வொருவருக்கும் தெரிந்ததுதானே – மரணம் என்பது வந்தே தீரும்; தவிர்க்க இயலாதது என்று. பின் ஏன் மரணத்தைப் பற்றிப் பேசுவது இல்லை என்று நான் வியப்பதுண்டு. உருது கவிஞர் யஸ் யகானா சாங்கேசி (Yas Yagana Changezi) வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் ‘கடவுள் இருப்பதைநீ சந்தேகிக்கலாம்; சந்தேகிக்காமல் இருக்கலாம். ஆனால் மரணம் என்பதன் நிச்சயத்தன்மையை நீ சந்தேகிக்க முடியாது’. மரணத்திற்கு ஒருவர் தன்னை தயார் செய்துகொள்ள வேண்டும்.

இந்த 95வது வயதில் மரணத்தைப் பற்றி நான் நினைக்கிறேன். அடிக்கடி நினைக்கிறேன். ஆனால் அதை நினைத்து என் தூக்கத்தை இழப்பதில்லை. மறைந்து போனவர்களைப் பற்றி நான் நினைக்கிறேன். எங்கு இருப்பார்கள்? எங்கு போயிருப்பார்கள்? எங்கு இருக்கக்கூடும்? என்னிடம் விடைகள் இல்லை. எங்கு போகிறோம்? மரணத்திற்குப் பின் என்ன?

உமர் கய்யாம் சொல்லுகிறார் ‘எங்கிருந்தோ இந்த பூமியில் ஏன் என்று தெரியாமலேயே… மெல்ல ஓடும் நீர் போல…..’

‘அதோ ஒரு கதவு என்னிடம் திறவுகோல் இல்லை;

அதோ ஒரு திரை என்னால் ஊடுருவி பார்க்கமுடியவில்லை;

என்னைப் பற்றியும் போனவர்களைப் பற்றியும்

சின்ன சின்ன பேச்சு சில காலத்திற்கு

பிறகு பேச்சு நான், அவர்கள் யாரும் இருப்பதில்லை…..’

ஒருமுறை தலாய் லாமாவைக் கேட்டேன்: மரணத்தை ஒருவன் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று. அவர் தியானத்தை அறிவுறுத்தினார். மரணத்தைப் பற்றி நான் பயப்படவில்லை. அது என்னை பயமுறுத்துவதும் இல்லை. மரணம் தவிர்க்கமுடியாதது. மரணத்தைப் பற்றி நான் அதிகமாக நினைத்தாலும் அதை நினைத்து நினைத்து மாய்வதில்லை. மரணத்திற்கு நான் என்னைத் தயார் செய்துகொள்ளுகிறேன்.

அசதுல்லாகான் காலிப் சரியாகச் சொன்னார்:

‘வயது நாலுகால் பாய்ச்சலில் பிரயாணம் செய்கிறது;

யாருக்குத் தெரியும் அது எப்போது நிற்கும் என்று?

அதன் கடிவாளம் நம் கைகளில் இல்லை

நம் கால்களும் அதன் வளையத்தில் இல்லை’

என் வயதொத்தவர்கள், சமகாலத்தவர்கள் – இந்தியாவில், இங்கிலாந்தில், பாகிஸ்தானில் – எல்லோரும் போய்விட்டார்கள். இன்னும் இரண்டொரு வருடத்தில் நான் எங்கிருப்பேன் என்று எனக்குத் தெரியாது. மரணத்திற்கு அஞ்சவில்லை; ஆனால் நான் பயப்படுவது ஒரு நாள் கண் தெரியாமல் போய்விட்டால்? வயதானதால் இயலாதவனாகிவிட்டால்? இப்படி ஒரு நிலையில் இருப்பதை விட இறப்பது மேல். ஏற்கனவே என் பெண் மாலாவிற்கு நான் பாரமாகவிட்டேன். மேலும் சுமக்க முடியாத பாரமாக விரும்பவில்லை.

நான் வேண்டுவது எல்லாம் மரணம் வரும்போது அது சடுதியில் வரட்டும்; அதிக வலி இல்லாமல், ஆழ்ந்த தூக்கத்திலேயே மறைவது போல. அதுவரை நான் வேலை செய்து கொண்டே ஒவ்வொரு நாளையும் அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ விரும்புகிறேன். இன்னும் நான் செய்து முடிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. அதனால் நான் ‘பெரிய அண்ணா’ (கடவுளை இப்படித்தான் குறிப்பிடுகிறேன்) விடம் சொல்ல விரும்புவது இது தான்: ‘நான் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்துவிட்டு வரும்வரை நீ எனக்காக காத்திரு’.

ஜெயின் தத்த்வத்தில் மரணத்தை கொண்டாட வேண்டும் என்கிறார்கள். நானும் இதை நம்புகிறேன். முன்பெல்லாம் உற்சாகம் குறைந்தால் நான் சுடுகாட்டிற்குப் போவதுண்டு. மனதை தூய்மைபடுத்தி, எனது மனவருத்தத்திற்கு சிகிச்சையாக இது இருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பே எனக்காக நான் ஒரு கல்லறை வாசகம் எழுதினேன்.

இங்கே உறங்குகிறான் ஒருவன்

மனிதனையும், ஏன் இறைவனையும் கூட

சாடத் தயங்காத ஒருவன்

இவன் ஒரு பதர், இவனுக்காக உங்கள் கண்ணீரை வீணாக்காதீர்கள்

மோசமாக எழுதுவதை நகைச்சுவை என்று நினைத்தவன்

பாவி மகன் ஒழிந்தான் என்று கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்

1943 ஆம் வருடத்திலேயே (எனது இருபது வயதுகளில் இருந்தேன் அப்போது) என்னுடைய நினைவுநாள் செய்தி எழுதினேன். பல வருடங்களுக்குப் பின் இது ‘இறப்பிற்குப் பின்’ என்ற என்னுடைய சிறுகதைத் தொகுப்பில் வெளியானது. என்னுடைய மறைவு ‘டிரிப்யூன்’ பத்திரிகையில் இப்படி வருகிறது:

முதல் பக்கத்தில் ஒரு சின்ன புகைப்படத்துடன்: ‘சர்தார் குஷ்வந்த் சிங் மறைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம். ஒரு இளம் விதவையையும், இரண்டு சின்னக் குழந்தைகளையும், ஏராளமான நண்பர்களையும், நேசித்தவர்களையும் விட்டுவிட்டுச் சென்று விட்டார், செய்தி அறிந்து சர்தாரின் வீட்டிற்கு வந்தவர்கள் தலைமை நீதிபதி, பல மந்திரிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரின் உதவியாளர்கள்’.

என் மனைவி இறந்த போது மரணத்தை நேரடியாக எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நான் ஒரு லோகாயுதவாதி. மதம் சார்ந்த சடங்குகளில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை. நான் ஒரு தனிமை விரும்பி ஆதலால் என் நண்பர்கள், உறவினர்கள் என்னை சமாதனப்படுத்த வருவதை தவிர்த்தேன். மனைவி இறந்த அன்று இரவு தனிமையில் இருட்டில் எனது நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே அந்த இரவுப் பொழுதை கழித்தேன். சிலசமயம் அடக்க முடியாமல் அழுதேன். வெகு சீக்கிரம் தேறினேன். ஓரிரு நாட்களில் எனது மாமூல் வாழ்க்கையை ஆரம்பித்தேன். விடியலிலிருந்து சூரியன் அஸ்தமிக்கும் வரை உழைத்தேன். இனி தனிமையில்தான் வாழவேண்டும் என்ற நிதர்சனத்தை, காலி வீட்டில் எனது மீதி வாழ்நாட்களைக் கழிக்க வேண்டும் என்ற நிலையை என் மனதிலிருந்து மறக்க இந்த உழைப்பு உதவியது. நண்பர்கள் வந்து எனது சமநிலையை கெடுப்பதற்குமுன் கோவாவிற்குச் சென்றுவிட்டேன்.

இறந்த பின் புதைக்கப்படுவதையே விரும்பினேன். எந்த மண்ணிலிருந்து வந்தோமோ அதே மண்ணுக்குப் போகிறோம், புதைக்கப்படுவதால். பஹாய் முறையில் நம்பிக்கை கொண்ட நான் இறந்த பின் என்னைப் புதைக்க முடியுமா என்று கேட்டேன். முதலில் ஒப்புக்கொண்ட அவர்கள், பிறகு ஏதேதோ சட்டதிட்டங்களுடன் வந்தார்கள். ஒரு மூலையில் புதைக்கப்பட்டு எனது புதைகுழி அருகே ஒரு அரச மரம் நடவேண்டும் என்றேன். இதற்கும் சரி என்றவர்கள் பிறகு வந்து எனது புதைகுழி ஒரு வரிசையின் நடுவில் இருக்குமென்றும், மூலையில் இருப்பது சாத்தியம் இல்லையென்றும் சொன்னார்கள். எனக்கு இது சரிவரவில்லை. இறந்தபின் எல்லாம் ஒன்றுதான் என்று தெரிந்தாலும் ஒரு மூலையில் புதைக்கப்படுவதையே விரும்பினேன். இன்னொன்றும் அவர்கள் சொன்னார்கள் நான் இறந்தபின் சில பிரார்த்தனைகளை சொல்வார்கள் என்று. இதற்கும் நான் ஒப்பவில்லை – நான் மதத்தையோ, மதச் சடங்குகளையோ நம்பாதவன் என்பதால்.

நான் இப்போதைக்கு நல்ல ஆரோக்கியத்தில் இருந்தாலும் அதிக நாட்கள் என்னிடம் இல்லை என்று தெரியும். மரணத்தின் விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள என்னை தயார் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. மரணம் என்பது எனது பாவ புண்ணியங்களுக்கு தீர்ப்பு சொல்லும் நாள் என்பதையும், சுவர்க்கம் நரகம் இவற்றிலும் நம்பிக்கை இல்லை. மறுபிறவியிலும் நம்பிக்கை இல்லை. அதனால் மரணம் என் வாழ்க்கையின் முற்றுப்புள்ளியாக இருக்கவேண்டும். மரணமடைந்தவர்களைக் கூட நீ விடுவதில்லையா என்று என்னை விமரிசிக்கிறார்கள் சிலர். மரணம் ஒருவனைத் தூய்மைப்படுத்துவதில்லை. ஒருவர் ஊழல்வாதியாக இருந்தால் மரணத்திற்குப் பின்னும் அவரை நான் விடுவதில்லை; சாடுகிறேன்.

மரணம் என்பதன் இறுதிநிலையை ஏற்றுக்கொள்ளுகிறேன். மரணத்திற்குப் பின் நமக்கு என்ன ஆகும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் ஒருவர் அமைதியாக மரணத்தைத் தழுவ நாம் உதவ வேண்டும். தான் வாழ்ந்த வாழ்க்கை, இந்த உலகம் இரண்டிலும் சமாதானம் அடைந்தவனாக முழுமை அடைந்தவனாக மரணத்தை தழுவ வேண்டும்.

எல்லாவற்றையும் விட மரணவேளையில் வருத்தங்களோ, மனக்குறைகளோ இல்லாதவனாக ஒருவன் இருக்க வேண்டும். பாரசீகக் கவிஞன் இக்பால் சொன்னது போல: ‘உண்மையான மனிதனின் அறிகுறி என்ன என்று என்னைக் கேட்டால் – மரணம் வரும்போது அவனது இதழில் புன்னகை இருக்க வேண்டும்!’

தமிழ் மொழியாக்கம், கட்டுரை ஆக்கம்: ரஞ்சனி நாராயணன்

 

21 தென்றல் …. முதல் மின்னூல்

இந்தப்பதிவில் இரண்டு செய்திகள்.

முதல் செய்தி:

‘உங்கள் பதிவுகள் வருவது ரொம்பவும் குறைந்துவிட்டது வருத்தமாக இருக்கிறது’ என்று திரு ஓஜஸ் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தார். உண்மைதான். கொஞ்சநாட்களாக மனதில் சிறிது தொய்வு. நிறைய காரணங்கள். வழக்கமாகப் போகும் தளங்களுக்கும் போகவில்லை.

அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டுவிட்டு எழுதுவதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்த ஆரம்பிக்க நினைத்தேன். அதற்குக் கட்டியம் கூறுவதுபோல அமெரிக்காவிலிருந்து வரும் ‘தென்றல்’ மார்ச் இதழில் எனது வலைப்பூ அறிமுகம் செய்யப்பட்ட செய்தி எனது தோழி திருமதி சித்ரா சுந்தர் மூலம் தெரியவந்தது. இணைப்புக் கொடுக்கிறேன். ஆனால் தென்றல் இதழ் உள்ளே போக பதிவு செய்து கொள்ளவேண்டும். பயனர் பெயர், பாஸ்வேர்டு வேண்டும்.

வலையுலகின் வளைக்கரங்கள் என்ற பகுதியில் என்னைப்பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். நான் எழுதும் குழந்தைகள் வளர்ப்பு தொடர், அறிவியல் கட்டுரைகள் பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். நன்றி தென்றல் இதழ்! என்னுடன் எனக்குத் தெரிந்த நிறைய பெண்பதிவர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். எல்லோர்க்கும் பாராட்டுக்கள்.

தென்றலின் பாராட்டுரை:

தென்றல் இதழில் வந்த வலைத்தள அறிமுகம்.

மார்ச் 2014

ரஞ்சனி நாராயணன் என்ற தனது பெயரையே வலைப்பதிவுக்கும் வைத்திருக்கும் இவர் மருத்துவம், சமூகம், அறிவியல், குழந்தை வளர்ப்பு பற்றிய சுவாரஸ்யமான கட்டுரைகளை எளிய நடையில் எழுதி வருகிறார். இவர் அடிப்படையில் ஒரு எழுத்தாளர். குழந்தைகள் ஏன் பொய் சொல்லுகிறார்கள்? என்ற கட்டுரை புதிதாகப் பல விஷயங்களைச் சொல்கிறது. பாம்பு விஷத்தை முறிக்கும் மூலிகைகள், விசித்திர தோற்றங்களில் பால்வெளிகள், மரபணுக்கள் என்று பல அறிவியல் தகவல்கள் வியப்பளிக்கின்றன. பல இதழ்களில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். மொழிபெயர்ப்பாளரும் கூட. விவேகானந்தர் பற்றி இவர் எழுதிய நூலை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இணைய இதழ்களிலும் வலைப்பதிவிலும் சிறந்த பங்களிப்புகளைத் தந்து வருகிறார், 60 வயது கடந்த இந்த இளைஞி.

மேலேயிருக்கும் படத்தில் வலமிருந்து இரண்டாவதாக என் அழகிய முகம்!

நன்றி தென்றல் இதழ்!

அடுத்த விஷயம்:

எனது வலைப்பதிவில் இருக்கும் சில பதிவுகளின் தொகுப்புகள் மின்னூலாக வெளிவந்திருக்கிறது. இது எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது. எனது எழுத்துக்கள் எனது எழுத்துக்களாகவே வெளிவந்திருப்பது எத்தனை ஆறுதலைக் கொடுக்கிறது, தெரியுமா? இந்த என்னுடைய முதல் மின்னூலின் பெயர்:

சாதாம்மிணியின் அலப்பறைகள்

இந்த இணைப்பை சொடுக்கி புத்தகத்தை தரவிறக்கலாம்.

எனது வலைத்தளத்திலிருந்து தொகுக்கப்பட்டபதிவுகளை இந்த மின்னூலில் படிக்கலாம். ஒரே இடத்தில் முப்பது பதிவுகளை வரிசையாகப் படிக்கலாம். சில நீங்கள் ஏற்கனவே படித்திருக்கக் கூடும். மின்னூல் என்பதால் நீங்கள் அதை தரவிறக்கம் (download) செய்துகொள்ள வேண்டும். அந்தத் தளத்திலேயே தரவிறக்கம் பற்றி விவரங்கள் கொடுத்திருக்கிறார்கள்.

freetamilebooks.com திரு ஸ்ரீநிவாசன் அவர்களுக்கும், திரு ரவிசங்கர் அய்யாக்கண்ணு அவர்களுக்கும் நல்ல முறையில் எனது மின்னூலை கொண்டு வந்ததற்கு முதலில் நன்றி. இதை அழகாக வடிவமைத்துக் கொடுத்த திரு கி. சிவ‍கார்த்திகேயன் அவர்களுக்கும், அட்டைப்பட வடிவமைப்பு செய்த திரு ‘ப்ரியமுடன் வசந்த்’ அவர்களுக்கும் நன்றி.

படித்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

 

22 கோபல்ல கிராமம்

வல்லமை இதழில் புத்தக மதிப்புரைக்காக எழுதியது.

எழுதியவர்: கி. ராஜநாராயணன்

பதிப்பகம்: காலச்சுவடு

விலை: ரூ. 150

பக்கங்கள் : 199

வெளியான ஆண்டு: 1976

ஆசிரியர் குறிப்பு:

ஆசிரியர் திரு கி.ரா என்கிற கி. ராஜநாராயணனைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கரிசல் காட்டின் வளமையை தமிழ் எழுத்துலகிற்குக் கொண்டு வந்தவர். கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்தில் பிறந்தவரின் கதைகளில் கரிசல் பூமியும் அங்கு வாழ்ந்த மக்களும்தான் கதைக் களம், கதை மாந்தர்கள். இவரது கதைகளுக்கு பின்புலம் தனது தந்தையாரிடத்தில் இவர் கேட்ட கதைகள் தாம்.

எனது பணிவான வேண்டுகோள்

சாகித்ய அகாதெமி விருது பெற்ற இந்த மூத்த எழுத்தாளரை விமரிசிக்கும் அளவிற்கு எனக்கு தகுதியில்லை. அதனால் நான் இங்கு பகிர்ந்து இருப்பது நான் படித்து ரசித்த ‘கோபல்ல கிராமம்’ புத்தகத்தில் இருந்து சில துளிகள். என்னைக் கவர்ந்த பாத்திரங்கள், வியக்க வைத்த நிகழ்வுகள் அவ்வளவே. இதைப் படித்துவிட்டு சிலராவது இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்தால் எனது ஜென்மம் சாபல்யம் பெறும். ஏற்கனவே படித்தவர்கள் என்னுடன் கூட இன்னொருமுறை கோபல்ல கிராமத்திற்குப் போய்வரலாம்.

கோபல்ல கிராமம்

ஒரு கிராமத்தின் விடியலுடன் தொடங்குகிறது கதை. ஒரு ஜீவ இயக்கத்துடன் கிராமம் பூரணமாக விழித்துச் செயல்பட ஆரம்பிப்பதை படிக்கத் துவங்கும்போது நமக்குள் தோன்றும் நவரசமான உணர்வுகள் புத்தகத்தை முடிக்கும்வரை நீடிக்கிறது. கோட்டையார் வீடு, அதன் வாரிசுகள் என்று கொஞ்சம் கொஞ்சமாக நம் கண் முன் கோபல்ல கிராமம் விரிகிறது. கோட்டை கட்டி வாழ்ந்தவர்கள் இல்லை; அந்த வீட்டை சுற்றி கோட்டைச்சுவர் கட்டியிருந்ததனால் கோட்டையார். ‘ரொம்பத் தாட்டியாக வாழ்த்த குடும்பம்; இப்போது சிதிலமடைந்த வீடும், இடிபாடுகள் அடைந்த கோட்டைச் சுவரும் புராதன சின்னங்கள் போல சோகமாய் நின்று கொண்டிருக்கின்றன’. கோட்டையார் வீட்டு சகோதரர்கள் ஏழு பேர்கள். அண்ணன் தம்பி ஏழுபேரும் குடும்பத்தில் ஒவ்வொரு ‘இலாகா’வை நிர்வகித்தார்கள்.

இந்த சகோதரர்களின் கதையை வாசித்துக் கொண்டே இருக்கும்போது அந்த கதைக்குள் ஒரு கதைசொல்லியாக 137 வயதான பூட்டி மங்கத்தாயாரு அறிமுகம் ஆகிறாள். ‘எலும்பும் தோலுமாய் நீண்ட மூக்குடன் இருக்கும்’ மங்கத்தாயாருவை ‘பார்க்கும்போதெல்லாம் ரோமத்தை எல்லாம் இழந்துவிட்ட ரொம்ப வயசான ஒரு கழுகின் ஞாபகம் வரும்’ என்கிறார் கி.ரா.

இவள் கதை சொல்லும் அழகில் நாமும் அவளைப்போலவே நேரம் காலம் தெரியாமல் லயித்து விடுகிறோம். அந்த லயிப்பில் இவள் வர்ணிக்கும் சில அமானுஷ்யங்கள், இவள் எந்தத் தலைமுறையைச் சேர்ந்தவள் என்பதெல்லாம் கேள்வி கேட்கப்படாமல் நம்மால் ஒத்துக்கொள்ளப்பட்டுவிடுகிறது. மங்கத்தாயாரு தாங்கள் துலுக்க ராஜாவிடமிருந்து தப்பி வந்த கதையை சொல்லும்போது அந்தக் கதைக்குள் ஒரு பெண்மணி தனது பெண் துளசியின் கதையை சொல்லுகிறார். கதைக்குள், கதைக்குள், கதை!

மங்கத்தாயாருவின் கதையின் கதாநாயகி சென்னாதேவி தன் அழகால் எல்லோரையும் தன்னை கையெடுத்துக் கும்பிடும் தேவியாக நினைக்க வைக்கிறாள். ஆனால் அத்தனை அழகு இருக்கும் பெண்ணின் வாழ்க்கை துன்பமயமாகத்தான் இருக்கும் என்று மங்கத்தாயாரு சொல்லும்போதே நம் மனம் பதறத் தொடங்கிவிடுகிறது. என்ன ஆகியிருக்கும் சென்னாதேவிக்கு? துலுக்க ராஜாவிற்கு ராணியாக வாழ்க்கைப்படும் ‘அதிர்ஷ்டம்’ உண்டாகிறது சென்னாவிற்கு. திருமணத்திற்கு முன் தினம்தான் தெரிகிறது மாப்பிள்ளை வீட்டவர்கள் பசு மாமிசத்தை தங்களுக்கு விருந்தாகக் கொடுக்க இருக்கிறார்கள் என்று! அதிர்ந்து போய் அங்கிருந்த தப்பி ஓடிவரும் இவர்கள் வந்து சேருவது ‘அரவ’ (தமிழ்) தேசத்திற்கு. அங்கு தங்களுக்கென்று ஒரு கிராமத்தை அமைத்துக் கொள்ளுகிறார்கள். இதுதான் கோபல்ல கிராமம். இந்தப் பூர்வ கதை மங்கத்தாயாருவின் மூலம் சொல்லப்படுகிறது.

நிகழ்காலத்தில் நடக்கும் கதை இரண்டாம் அத்தியாத்தில் தொடங்குகிறது. ‘காதுல பாம்படம் போட்டுக்கொண்டு, சேப்புக் கண்டாங்கிச் சேலை கட்டியிருக்கும் ஈருசுரு ஆள்’ மங்கம்மா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வருகிறாள். வழியில் ஊருணியில் இறங்கி நீர் குடிக்கும்போது ஒரு வழிப்போக்கனால் கொல்லப்படுகிறாள் அவளது காதுகளில் தொங்கும் பாம்படங்களுக்காக. முதல் அத்தியாயத்திலேயே கோபல்ல கிராமத்தின் பஞ்சாயத்து பற்றி ஆசிரியர் விலாவாரியாகச் சொல்லிவிடுவதால் இந்தக் கொலைக்கு என்ன தண்டனை, அது எப்படி நிச்சயிக்கப்படுகிறது, எப்படி நிறைவேற்றப்படுகிறது என்பதெல்லாம் நமக்குள் கதையை ஊன்றிப் படிக்க உத்வேகம் கொடுக்கும் விஷயங்கள். பூர்வ கதைக்கும் இப்போது நடக்கும் கதைக்கும் நடுவில் வேறு வேறு மனிதர்களின் கதைகள் – எல்லாமே கோபல்ல கிராமத்தின் கதைதான்.

சீரியஸ்ஸான கதையாக இருக்குமோ என்று இந்தப் புத்தகத்தைப் படிக்க யோசிப்பவர்களுக்கு இந்த கோபல்ல கிராமத்தின் காமெடியன் அக்கையாவின் வேடிக்கை வினோதங்கள் நல்ல சிரிப்பு விருந்து. சுந்தரப்ப நாயக்கரை ‘புதூச் சுண்ணாம்பு எடுத்துக்க…’ என்று சொல்லி ஏமாற்றுவதும், தான் ரொம்பவும் அழகி என்ற இறுமாப்பால் இவரை மதிக்காமல் இருக்கும் துண்டபண்டு (கோவைப்பழம் போல சிவப்பாக இருந்ததால் வந்த பெயர்) வெங்கிடம்மாவை விளையாட்டாக ஒரு பொய்யைச் சொல்லி பழி வாங்குவதும் இவரது முத்திரை காமெடிகள். இவர் வெறும் காமெடியன் மட்டுமல்ல; ஒரு கண்டுபிடிப்பாளியும் கூட! கோடை உழவு முடிந்து, முதல் மழை பெய்ததும் விதைப்புக்குத் தயாராக்க நிலத்தை உழ ஆரம்பிக்கும் உழவுக்கு எழுப்படிப்பு என்று சொல்லுவார்கள். இதற்கு ஒத்தைக் கலைப்பையை வைத்துக் கொண்டு உழுவதால் உழுது முடிக்கும் முன்பு மழை வந்துவிடும். மழைக்கு முன் உழுது முடிக்க அன்று அக்கையாவால் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைக் கலப்பை கரிசல் காட்டில் பெருத்த மாறுதலையும், பரபரப்பையும் அந்த நேரத்தில் உண்டு பண்ணியது. அக்கையா சொல்லும் ராஜகுமாரனின் கதை நிச்சயம் படித்து, ரசித்து, சிரித்து மகிழ வேண்டிய ஒன்று. அக்கையாவின் தலைமையில் கிராம மக்கள் தீவட்டிக் கொள்ளைக்காரர்களுடன் ‘சந்திப்பு’ நடத்துவது இந்நாளைய திரைப்படங்களில் வரும் ‘க்ளைமேக்ஸ்’ காட்சிகளுக்கு சற்றும் சளைத்ததில்லை!

ஜோஸ்யம் எங்க்கட்ராயலு, மண்ணுதின்னி ரெங்க நாயக்கர், பச்சைவெண்ணெய் நரசய்யா, பயிருழவு பங்காரு நாயக்கர், வைத்தி மஞ்சையா, வாகடம் புல்லையா, ஜலரங்கன் யாரைச் சொல்ல, யாரை விட? இவர்களது ஒவ்வொரு பெயருக்கும் ஒரு கதை! ஒரு நிகழ்வு! இப்படி பல பாத்திரங்கள் நம்முடன் சகஜமாக உலா வருகிறார்கள். எழுத்தாளருக்கும் நமக்கும் இடையில் இடைவெளி என்பதே இல்லை என்பதே இந்தக் கதையின் சிறப்பம்சம்.

நான் இங்கு சொன்னது 25% அவ்வளவே. மீதி 75% புத்தகம் வாங்கி நீங்களாக படித்து ரசிக்க வேண்டியவை. திரு கிரா வின் நடையின் கோபல்ல கிராமம் நம் கண் முன் உயிர்த்தெழுந்து வருகிறது என்று சொன்னால் மிகைப்படுத்தல் இல்லை.

 

23 வந்தார் விவேகானந்தர்!

எத்தனை நாட்களாய் இந்த நாளுக்காய் தவமிருந்திருப்பேன்! காத்திருத்தல் என்பதன் உண்மையான பொருள் தெரிந்தது என்று சொல்லலாம்.

எந்த மொழியில் எந்தப் புத்தகத்தைப் படித்தாலும் அவற்றை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாட்களாக உண்டு. யாரைப் பிடிப்பது, யாரிடம் உதவி கேட்பது என்று தெரியவில்லை. திரு சொக்கன் அவர்களைக் கேட்டேன். அவர் திரு ஜவர்லால்-ஐக் கை காட்டினார். போனவருடம் திரு ஜவர்லால் மொழிபெயர்ப்பு செய்திருந்த கெஜ்ரிவால் எழுதிய தன்னாட்சி புத்தகம் வாங்கியிருந்தேன். அவரிடம் கேட்கலாம் என்று அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். கிழக்குப்பதிப்பகத்தை அணுகலாம் என்று சொன்னார். கிழக்குப்பதிப்பகத்திற்கு தொலைபேசினேன். அகப்பட்டார் திரு மருதன்.

மொழிபெயர்ப்பு பற்றி கேட்டவுடன் ஏதாவது புத்தகத்தை மொழிபெயர்ப்பு செய்ய ஆசைப்படுகிறீர்களா என்று கேட்டார். நான் சொன்ன இரண்டு புத்தகங்களுக்கும் ‘ஊஹூம்’ சொல்லிவிட்டார். ‘நீங்கள் ப்ளாகில் எழுதிய (சில) வற்றை அனுப்புங்கள்’ என்றார். பிறகு ‘எங்களது ‘ஆழம்’ பத்திரிகையில் எழுதுங்கள். பிறகு பார்க்கலாம்’ என்றார். முதலில் எழுதியது பெண்கள் தினம் பற்றியது. அவர் சொன்னது மார்ச் 6 ஆம் தேதி. மார்ச் 8 பெண்கள் தினம். அவசரமா எழுதி அனுப்பினேன் உடனே வேண்டும் போலிருக்கிறது என்று. ஆழம் ஒரு மாதப் பத்திரிகை; நான் எழுதுவது அடுத்த மாதம் வரும் என்பது தெரியாமல்! எப்படியெல்லாம் கற்றுக்கொள்ளுகிறேன்! அடுத்தாற்போல ஒன்பில்லியன் ரைஸ் என்பது பற்றி எழுதச்சொன்னார். இந்த முறை முதலிலேயே காலக்கெடு பற்றிக் கேட்டுக்கொண்டுவிட்டேன்.

நிதானமாக எல்லாத் தகவல்களையும் சேகரித்து எழுதினேன். நன்றாக இருக்கிறது என்றார். அப்பாடா! பிறகு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வாய்ப்புக் கொடுத்தார். இந்தமாதம் வரை எழுதி இருக்கிறேன். சென்ற செப்டம்பர் மாதம் ‘சென்னை வருகிறேன். உங்களை சந்திக்க முடியுமா?’ என்று கேட்டபோது ‘நிச்சயம் வாருங்கள்’ என்றார். செப்டம்பர் 10 ஆம் தேதி சந்தித்தேன். நன்றி சொல்லப் போனவளுக்கு இந்த புத்தகம் எழுதும் வாய்ப்புக் கொடுத்தார். இராமகிருஷ்ணமடத்திலிருந்து சுவாமிஜியின் வரலாற்றுப் புத்தகங்கள் இரண்டு வாங்கிக்கொண்டு பத்து தலைப்புகள் கொடுத்து ஒரு முன்னோட்டம் எழுதி அனுப்பினேன். அப்போதே சொன்னார்: ‘உங்களுக்கு அதிக நேரம் இல்லை; நவம்பர் இறுதிக்குள் முடித்து அனுப்பவேண்டும்’ என்றார். நான் எழுதிய முன்னோட்டத்தைப் படித்து பச்சை விளக்கு காட்டியபோது அக்டோபர் வந்துவிட்டது. நவராத்திரி ஆரம்பம்.

கிடைத்த நேரத்தில் எல்லாம் புத்தகமும் பென்சிலும் கையுமாக விவேகானந்தரை மெல்ல மெல்ல உள் வாங்க ஆரம்பித்தேன். என்னவென்று சொல்ல? படிக்கப்படிக்க சொல்ல முடியாத உணர்ச்சிகள். என்ன மனிதர்! எதற்காக இத்தனை கஷ்டப்பட வேண்டும்? கடவுளை தேடி அலைந்து கடைசியில் மனிதனில் மனிதத்தைக் கண்டு அதுவே தெய்வம் என்கிறாரே! எல்லா மனிதர்களின் மேலும் எல்லையில்லா கருணை. துறவறம் என்பது உன் சொந்த முக்தி மட்டுமல்ல; சக மனிதனிடம் கருணை வை என்கிறாரே! துறவு என்று சொல்லி கதவை சாத்திக் கொள்ளாதே; வெளியே வா. சமுதாயத்திற்கு சேவை செய் என்கிறாரே! துறவறத்திற்கு ஒரு புது அர்த்தம் கொடுத்து, மனித சக்தியின் மேல் நம்பிக்கை வைக்கச்சொல்லி, கீதை படிக்கும் நேரத்தில் கால்பந்து விளையாடு, உடல் வலிமை உள்ளவலிமையைப் பெருக்கும் என்கிறாரே!

அதைவிட ஆச்சரியம் இன்னொன்று: இந்தியாவிற்கே இந்தியாவை காட்டிக் கொடுத்தாரே, அது! இந்தியா என்றால் வறுமையும், பஞ்சமும், பெண் குழந்தைகளைக் கொல்லுவதும், பெண்கள் கொடுமைக்கு உள்ளாவதும் மட்டுமே என்று நினைத்திருந்த மேலைநாடுகளின் எண்ணத்தை மாற்றி, ஆன்மீகச் செல்வம் செழிக்கும் நாடு இந்தியா என்ற கருத்தை நிலைநாட்ட தன்னந்தனியாக மேலைநாடுகளுக்குச் சென்றாரே, அவருடன் கூடப் போனது யார்? எந்த இந்து சமய அமைப்பின் சார்பில் அவர் மேலைநாடுகளுக்குச் சென்றார்? சர்வமத மகாசபையில் எல்லோரும் முன்கூட்டியே தயார் செய்துகொண்டு வந்து பேசியபோது, முன்தயாரிப்பு எதுவும் இல்லாமல், ‘அமெரிக்க சகோதர சகோதரிகளே’ என்று பேச ஆரம்பித்து அனைவரையும் ஸ்தம்பிக்கச் செய்தாரே, அவரை வழி நடத்திய அற்புத ஆற்றல் எது? 150 ஆண்டுகளுக்குப் பின்னும் நாம் அவரை தெய்வத் திருமகனாக நினைக்கக் காரணம் என்ன? அவருடனேயே, அவர் வாழ்ந்த காலத்திலேயே இருப்பது போல இரவும் பகலும் அவர் சிந்தனையே!

நவராத்திரி ஆயிற்று தீபாவளி; தொடர்ந்து கார்த்திகை! நவம்பர் இறுதிக்குள் முடிக்க முடியுமா? கடைசி அத்தியாயத்தை எப்படி முடிப்பது என்று ஒரு குழப்பம். நெருங்கிய நண்பர் – பதிவர் வழிகாட்டினார். நான் நினைத்ததும் அவர் சொன்னதும் சரியாக இருந்தது. சுவாமிஜி அன்று கொடுத்த உத்வேகம் எனக்குள்ளும் புகுந்து புத்தகத்தை முடித்து அனுப்பியும் விட்டேன். நம்பமாட்டீர்கள், அனுப்பிய அன்று உறக்கமே வரவில்லை!

இதோ இப்போது புத்தக வடிவில் வந்தே விட்டார் விவேகானந்தர்! இந்த சந்தோஷச் செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக மிக சந்தோஷமடைகிறேன். திரு மருதனுக்கும், கிழக்குப் பதிப்பகத்திற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

சென்னை புத்தகக்கண்காட்சியில் கிழக்குப்பதிப்பகம் ஸ்டாலில் கிடைக்கும் இந்த புத்தகம்.

 

24 சாம்பார் ஊத்தும்மா……!

தீபாவளி என்றால் ஒரு சம்பவம் தவறாமல் எனக்கு நினைவுக்கு வரும்.

ஒருமுறை நானும் என் தோழியும் ‘கல்யாணப்பரிசு’ படம் பார்க்கப் போயிருந்தோம். என் தோழிக்கு ரொம்பவும் இளகிய மனது. சோகப் படம் என்றால் பிழியப் பிழிய அழுவாள். அழுது அழுது சினிமா அரங்கமே அவளது கண்ணீரில் மிதக்கும். எனக்கோ அவளைப் பார்க்கவே சிரிப்பாக இருக்கும்.

கல்யாணப்பரிசு படம் பாதிவரை நன்றாகவே இருந்தது. தங்கவேலு, சரோஜாவின் நகைச்சுவைக் காட்சிகளை ரொம்பவும் ரசித்துக் கொண்டிருந்தோம். அப்புறம் வந்தது படத்தில் ஒரு திடீர் திருப்பம்.

தான் விரும்பும் ஜெமினி கணேசனையே தன் அக்காவும் (விஜயகுமாரி) விரும்புவது தெரிந்து தங்கை சரோஜா தேவி தன காதலைத் தியாகம் செய்கிறார். (இந்த இடத்தில் என் தோழியின் அழுகையும் ஆரம்பித்தது.) ஜெமினியும் விஜயகுமாரியும் திருமணம் செய்துகொண்டு வெளியூரில் குடும்பம் நடத்தச் செல்லுகிறார்கள். ரயில் நிலையத்தில் இருவரையும் வழி அனுப்ப வரும் சரோஜாதேவி கண்ணீருடன் கையை அசைத்து அவர்களுக்கு விடை கொடுப்பார். பின்னணியில் ‘காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்’ பாட்டு ஒலிக்கும்.

என் தோழியால் அழுகையை அடக்கவே முடியவில்லை. பொதுவிடம் என்பதையும் மறந்து விக்கி விக்கி அழ ஆரம்பித்துவிட்டாள். என் சமாதானங்கள் அவளிடம் செல்லவேயில்லை. சொல்லப்போனால் அரங்கம் முழுவதுமே சோகமான சூழல் தான். பலரும் ‘ப்ச்…ப்ச்’…..’ என்று சரோஜாதேவியின் நிலைக்கு வருந்திக் கொண்டிருந்தார்கள்.

அடுத்த சீன். வெளியூரில் விஜயகுமாரியும், ஜெமினியும் குடித்தனம் நடத்துவதைக் காட்டினார்கள். ஜெமினி சோகமான முகத்துடன் சாப்பிட உட்காருவார். வி.குமாரி சாதம் போடுவார். திடீரென்று அரங்கத்தில் ஒரு குரல்: ‘சாம்பார் ஊத்தும்மா…!’ என்று.

அடுத்த கணம் அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது. என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. ரொம்பவும் சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். என் தோழிக்கோ ஒரே கோவம். ‘ச்சே! என்ன மனிதன்! அங்க ஒருத்தி கண்ணீரும் கம்பலையுமாக இருக்கும்போது இப்பிடியா ஜோக் அடிக்கிறது!’ என்று பொரிந்து தள்ளினாள். நான் சிரிப்பது அவளது கோவத்தை இன்னும் அதிகமாக்கியது. ‘மனசாட்சி இருந்தால் நீ இப்படி சிரிக்க மாட்டே!’ என்று என்னை கோபித்துக் கொண்டாள்.

‘ஏய்! இது வெறும் சினிமா. இதற்கு ஏன் உனக்கு இவ்வளவு கோவம் வரது?’ என்று நான் கேட்டவுடன் தான் அவள் கொஞ்சம் நிதானத்திற்கு வந்தாள்.

இந்தப் படத்தில் வரும் அழகான தீபாவளி பாட்டு இதோ உங்களுக்கு.

 

முதலில் சந்தோஷமாகப் பாடப்படும் இந்தப் பாடல் பிறகு சோகமாகவும் பாடப்படும். நான் சந்தோஷத்தை மட்டுமே உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன்.

சில நாட்களாக இணையத்திற்கு வர முடியாத நிலை. இந்த நிலை இன்னும் பல நாட்கள் தொடரும் என்று தோன்றுகிறது. இதனால் பலருடைய பதிவுகளைப் படித்துப் பின்னூட்டம் போட முடியவில்லை. எல்லோரிடமும் மன்னிப்பு வேண்டுகிறேன்.

தீபாவளி வாழ்த்துகளை தெரிவிக்கவாவது ஒரு பதிவு போட வேண்டாமா? அதனால் இந்தப் பதிவு.

எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

 

25 பிங்குவும் பென்னியும் பின்னே ஞானும் எண்ட பேரன்மாரும்!

முன் குறிப்பு: தலைப்பைப் பார்த்துவிட்டு ஏதோ மலையாளப் பட விமரிசனம் என்று நினைத்தால் ஞான் – மன்னிக்கவும் – நான் பொறுப்பல்ல!

‘பிங்கு’ என்பது நானும் என் பெரிய பேரனும் மிகவும் விரும்பிப் பார்த்த கார்ட்டூன் நிகழ்ச்சி. அந்த சமயத்தில் வெறும் கார்ட்டூன் நெட்வொர்க் மட்டும்தான். போகோ, சிபிபிஸ் எல்லாம் கிடையாது. கார்ட்டூன் நெட்வொர்க்கிலேயே காலை 11 மணியிலிருந்து டைனி (TINY TV) என்று 2 மணிநேரத்திற்கு வரும். அதில் சின்ன சின்னதாக நிறைய கார்டூன்கள் வரும். அதில் ஒன்று தான் பிங்கு என்னும் ஒரு குட்டி பெங்குயின். பேச்சே கிடையாது. வெறும் இசைதான். படம் பார்த்துக் கதை சொல் தான். எடுத்தவுடன் ஒரு குட்டி பெங்குயின் வந்து தன் மூக்கை நீட்டி இரண்டுதடவை ‘பீயங்…பீயிங்..’ என்று கத்தும்.

அந்தக் குட்டி பிங்குவிற்கு ஸ்கூல் போகப் பிடிக்காது. இழுத்துப் போர்த்திக் கொண்டு ஜுரம் வந்தது போல நடிக்கும். பிங்குவின் அம்மா டாக்டரை அழைத்துக் கொண்டு வரும். டாக்டர் பெரிய – நிஜமாகவே பெரிய – ஊசியை எடுத்துக் கொண்டு வருவதைப் பார்த்து குட்டி பிங்கு பின் பக்க கதவு வழியாக ஸ்கூலுக்கு ஓடி விடும்! ஒவ்வொரு கதையும் இவ்வளவுதான்.

ஸ்னோமேன், சின்ன சின்ன பெங்குயின் வீடுகள் என்று பனிக்கட்டிகளுடன் பெங்குயின்கள் இருக்கும் அன்டார்டிகாவை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துவார்கள்.

நாடி, ஆஸ்வால்ட் (ஆக்டோபஸ்), பாப் த பில்டர் என்று நிறைய வரும். பிங்குவிற்கு அடுத்தபடியாக எங்கள் இருவரையும் கவர்ந்தது ஆஸ்வால்ட். மிக மிக நல்ல ஆக்டோபஸ். தலையில் சின்னதாக ஒரு தொப்பி போட்டிருக்கும். நண்பர்களைப் பார்க்கும்போதெல்லாம் அந்த தொப்பியை கழற்றி அது ‘விஷ்’ பண்ணும் அழகே அழகு!

அதன் தோழன் ஒரு குட்டி நாய். ‘வின்னி’ என்று பெயர். நல்ல ஆங்கிலத்தில் உரையாடல்கள் இருக்கும். இவர்கள் இரண்டுபேரும் சேர்ந்து வீட்டுத் தோட்டத்தில் தக்காளிசெடி போடுவார்கள். தக்காளி அழகழகாக வரும். அடுத்த நாள் காலையில் பார்த்தால் சின்னச்சின்ன புழுக்கள் வந்து அவற்றை சாப்பிட்டிருக்கும். அலுக்காமல் சலிக்காமல் வாங்கி வாங்கி வந்து செடி நட்டு கடைசியில் எல்லாப் புழுக்களும் சாப்பிட்டது போக மீதி இருக்கும் செடியிலிருந்து தக்காளியை ஆஸ்வால்டும், அதன் தோழன் வின்னியும் சாப்பிடும்.

அடிதடி சண்டை, ஒருவரையொருவர் வெட்டுவது, குத்துவது என்று எதுவுமே இந்த கார்டூன்களில் இருக்காது. வரும் அத்தனை விலங்குகளும் ஒன்றுகொன்று ஒற்றுமையாக விளையாடும். நட்பு, விட்டுக் கொடுத்தல் இவைதான் முக்கிய கரு.

அடுத்து பென்னி. இதுவும் ஒரு பெங்குயின் தான். இது கார்டூன் இல்லை. ஒரு விளையாட்டு. இதன் கதை வேறு. அண்டார்டிகாவில் ட்ரெக்கிங் போகும்போது பென்னிக்கு வழி தவறிவிடும். மீண்டும் வீட்டிற்கு போக பணத்தை சம்பாதிக்க வேண்டும். அதற்காக ஒவ்வொரு இடத்திலும் உணவகங்கள் வைத்து சமைத்து பரிமாறி பணம் சேர்த்து கடைசியில் அன்டார்டிகா போகும்.

இந்த விளையாட்டை நான் என் சின்னப் பேரனுடன் விளையாடுவேன். இதில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் பென்னி பல வேலைகளை (multi-task) அழகாக கிடுகிடுவென செய்யும் பாங்கு.

காலையில் 9 மணிக்கு உணவகம் திறக்கும். மொத்தம் 5 மேசைகள். வரும் வாடிக்கையாளர்களை டேபிளில் உட்கார வைத்து ஆர்டர் எடுத்து பரிமாறி பணத்தை பெற்றுக் கொண்டு…..மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் Penguin Diner என்ற இந்த விளையாட்டு.

மொத்தம் மூன்று சுற்றுகள். முதல் சுற்று கொஞ்சம் சுலபமாகவே இருக்கும். உணவகத்தின் பெயர் Hill Top Cafe. முதல் நாள் 105 டாலர்கள் சம்பாதிக்க வேண்டும். அடுத்தநாள் இன்னும் கொஞ்சம் கூட. இந்த சுற்று முடிந்தவுடன், இரண்டாவது சுற்று.

இந்த உணவகத்தின் பெயர் Ice Rink Cafe. இப்போது இன்னும் சீக்கிரம் சீக்கிரம் விருந்தாளிகள் வருவார்கள். இரண்டிரண்டு பேர்களாக வருவார்கள். சில சமயம் நாம் சரியாக அவர்களை அமர்த்தி ஆர்டர் எடுத்து சப்ளை பண்ணவில்லையானால், அடுத்து க்யூவில் காத்திருக்கும் பெங்குயின்களின் முகம் ‘சிவப்பா’க மாறும். விருட்டென்று வெளியேறி விடுவாரகள். என் பேரன் அலறுவான்: ‘பாட்டி, பாட்டி, மூஞ்சி செவந்து போச்சு, சீக்கிரம் சீக்கிரம் உட்கார வை’. அவசரமாக மௌஸ்-ஐ இங்கும் அங்கும் நகர்த்தி…… அப்பா! பேரன் முகத்தில் சிரிப்பு வரும்.

சற்று நேரம் கழித்து இடம் காலியானவுடன் முகம் சிவந்தவர்களை அமர்த்தி அவர்கள் கேட்டதைக் கொடுத்தால், சற்று குறைவாக டிப்ஸ் வைப்பார்கள்.

பென்னிக்கு புது ஷூக்கள் வாங்கலாம். இன்னும் வேகமாக ஓடி ஓடி சப்ளை செய்வாள். ஹோடேலின் உள்அமைப்புகளை மாற்றலாம். தொலைக்காட்சி பெட்டியை வைத்தால், உணவுக்குக் காத்திருக்கும் பெங்குவின்கள் சற்று பொறுமை காக்கும். விருந்தினர்கள் உட்கார்ந்தவுடன், உணவு பரிமாற தாமதமானால் அப்போதும் முகம் சிவந்து வெளியேறிவிடுவார்கள். ‘சீக்கிரம் சீக்கிரம் சாப்பாடு கொண்டு வா…ஆஅ…..’ என்பான் பேரன்.

ஒரு நாளைக்கு இவ்வளவு என்று பென்னி சம்பாதிக்க வேண்டும். குறைவாக சம்பாதித்தால், மறுபடி அதே நாளை ஆட வேண்டும். விருந்தினர்கள் வருவதும், டேபிளில் உட்கார்ந்தவுடன், அவர்கள் கையில் மெனு கார்டு வருவதும், உணவு வரும்வரை விருந்தினர்கள் காலை ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பதும் அழகோ அழகு!

ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு விலை. பின்னணி இசை நன்றாக இருக்கும். காசை எடுத்து பாக்கெட்டில் பென்னி போடும்போது காசுகள் குலுங்கும் ஓசை; விருந்தினர்கள் ஆர்டர் எடுத்துக் கொள்ள பென்னியை கூப்பிடும் ‘ஹலோ’ எல்லாமே நன்றாக இருக்கும். நானும் என் சின்னப் பேரனும் ரசித்து ரசித்து ஆடுவோம்.

மூன்றாவது உணவகத்தின் பெயர் Ice Berg Cafe. இங்கு வரும் விருந்தாளிகள் எல்லோரும் கழுத்தில் ஸ்கார்ப் கட்டிக் கொண்டு வருவார்கள். அண்டார்டிகாவின் சமீபம் ஆயிற்றே!

மூன்றாவது சுற்றும் வெற்றிகரமாக ஆடிவிட்டால், பென்னி நமக்கெல்லாம் ‘டாடா’ காட்டிவிட்டு, சூப்பராக உடை அணிந்துகொண்டு, ஸ்டைலாக கோலா குடித்தபடியே, கப்பல் ஏறி அண்டார்டிகா போய்விடுவாள்.

இப்போது பேரன்கள் இருவரும் பெரியவர்களாகி படிப்பில் ரொம்பவும் மும்முரமாக இருக்கிறார்கள். அதனால் கார்டூன் பார்ப்பதோ, பெங்குயின் டைனர் விளையாடுவதோ இல்லை. வெறும் ஸ்பைடர் சாலிடேர் தான்!

நீங்களும் பெங்குயின் டைனர் ஆடலாம் :

 

26 கிணற்றுக்குள் சொம்பு!

என் மாமியார் ரொம்பவும் ஆசாரம் பார்ப்பவர். திருமணம் ஆன புதிதில் சமையலறைக்குள் செல்ல வேண்டுமென்றால் கையை அலம்பிக்கொண்டுதான் நுழைய வேண்டும். இது என்ன பெரிய இதுவா என்கிறீர்களா? சற்று பொறுங்கள், நான் இன்னும் மெயின் கதைக்கே வரவில்லையே!

சமையலறைக்கு வெளியே ஒரு சொம்பு இருக்கும். தங்கம், வெள்ளி, பித்தளை, மண் இவற்றால் ஆன சொம்பு அல்ல; சிமென்ட் சொம்பு! என் வாழ்க்கையில் அப்போதுதான் முதன்முதலாக சிமென்ட் சொம்பு பார்க்கிறேன். குளியலறைக்குள் போய் அந்த சொம்பில் இருக்கும் நீரில் கையை அலம்ப வேண்டும்.

சரி, கையை அலம்பியாயிற்று; உள்ளே போய் ஏதாவது எடுக்கலாம் என்றால், ‘இரு, இரு…’ என்று என் மாமியாரின் குரல் ஒலிக்கும் – அவர் எங்கிருந்தாலும் நான் சமையலறைக்குள் நுழைவது அவருக்குத் தெரிந்துவிடும். இது என்ன மாய மந்திரம் என்று இதுவரை எனக்குப் புரிந்ததே இல்லை!

அடுத்தாற்போல சமையலறையில் இருக்கும் குழாயில் கையை அலம்ப வேண்டும். அந்தக் குழாயை – விரல்களால் அல்ல – மேல் கைகளால் இரண்டு பக்கமும் பிடித்துக் கொண்டு –– திறந்து கையை அலம்ப வேண்டும்.

ஒரொரு சமயம் இப்படியாவது கையை அலம்பி அலம்பி சமையலறையிலிருந்து ஏதாவது எடுக்க வேண்டுமா என்று தோன்றும். உள் பாத்திரங்கள், வெளி பாத்திரங்கள் என்று இருக்கும். உள் பாத்திரங்களை வெளியே கொண்டு வரக் கூடாது. வெளியில் இருப்பது உள்ளே போகக் கூடாது. வெளியே குடிக்கும் நீருக்கு தனியாக ஒரு பாத்திரம். அதில் நீர் காலியாகிவிட்டால், சமையலறைக்குள் போய் சொம்பில் (இது வேறு சொம்பு – பித்தளை சொம்பு!) இருக்கும் கொதித்து ஆறின நீரை மேலே சொன்ன முறையில் கையை அலம்பிக் கொண்டு எடுத்து வந்து வெளியில் இருக்கும் பார்த்திரத்தில் ஊற்ற வேண்டும். பொதிகை தொலைக்காட்சியில் வரும் ‘அத்தே! நான் ஸ்கூலுக்குப் போய்விட்டு வரேன்’ விளம்பர மாமியார் போல என் மாமியாரும் என்னைப் பார்த்துக் கொண்டே இருப்பார்.

எனக்கு சவாலாக இருந்தது அந்த சிமென்ட் சொம்பு தான். (இப்போது கூட அவ்வப்போது கனவில் வந்து ‘ஹா…..ஹா…..!’ என்று வீரப்பா ஸ்டைலில் சிரிக்கும் அந்த சொம்பு) திருமணம் ஆன அடுத்த நாள் ‘வாசல் தெளித்து கோலம் போடு’ என்றார் என் மாமியார். ‘கிணற்றிலிருந்து தண்ணி சேந்திக்கோ..!’ இது உபரி கட்டளை. கிணறு, தண்ணி இந்த இரண்டு வார்த்தைகளை வைத்துக் கொண்டு சேந்திக்கோ என்றால் இறைப்பது என்று அர்த்தம் புரிந்து கொண்டேன். (I am always good at reading in between the lines….!)

நான் கேட்க மறந்தது எதால் சேந்திக் கொள்வது? நான் மரியாதையாக (திரு திரு) முழிப்பதைப் பார்த்து ‘அந்த சிமென்ட் சொம்பு இருக்கு பாரு, அதில் சேந்திகோ..!’ என்றார் என் மாமியார்.

‘எனக்குதான் கிணற்றில் நீர் சேந்த வருமே! ஸ்ரீரங்கத்தில் என் பாட்டி அகத்தில் கிணற்றில் நீர் ‘சேந்தி’ இருக்கிறேனே’ என்று மனதிற்குள் தன்னைபிக்கை ஊற்றுப் பெருக்கெடுக்க, சிமென்ட் சொம்பை தூக்கிக் கொண்டு கிணற்றை நோக்கி நடந்தேன். தாம்பக் கயிற்றில் சொம்பைக் கட்டி உள்ளே இறக்கினேன். மேலே இழுத்தால் கனமே இல்லை. சிமென்ட் சொம்பில் இத்துனூண்டு தண்ணீர்!

அசோக்நகரில் எங்கள் வீடு. MIG அடுக்குக் குடியிருப்பு. 2 பெட்ரூம் வீடு. வீட்டின் முன்னாலும் பின்னாலும் நிறைய இடம் இருக்கும். சிமென்ட் சொம்பில் வந்த நீரைப் பார்த்து எனக்கு கண்ணில் நீர்! இத்தனூண்டு இத்தனூண்டாக எத்தனை முறை நீர் சேந்தி வாசல் தெளிப்பது?

‘மொதல் தடவ சேந்தினத கீழ கொட்டிடு…!’ பின்னாலிருந்து கட்டளை. ‘ரெண்டாவது தடவ தண்ணி எடுத்து வாசல் தெளி…!’

‘ராத்திரில கிணற்றை பூதம் காவல் காக்கும். அதனால மொத தண்ணியை கொட்டிடணும்…!’ காரணம் புரிந்தது.

‘இத்துனூண்டு தண்ணி தான் வரது…’ தைரியத்தை வரவழைத்து கொண்டு கேட்டேன். ‘இன்னொரு தடவ தண்ணி எடுத்துண்டு வா…!’

‘எத்தன தடவ?’

என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, ‘சரி பெரிய பக்கெட் எடுத்துக்கோ!’ ஒரு வழியாக பெரிய பக்கெட்டில் நீர் எடுத்து வாசல் தெளித்து எனக்கு தெரிந்த ‘மாடர்ன் ஆர்ட்’ கோலத்தைப் போட்டு முடித்தேன்.

‘புள்ளிக் கோலம் வராதா?’

‘வராது…’

அரிச்சந்திரனின் தங்கை நான்!

ஒரு நாள் காலை எழுந்திருக்கும்போதே தூக்கமான தூக்கம். முதல் நாள் இரவு இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு வந்ததன் விளைவு.

‘ஆவ்வ்வ்….!’ என்று கொட்டவி விட்டுக் கொண்டே சிமென்ட் சொம்பை கயிற்றில் கட்டி கிணற்றுக்குள் இறக்கினேன். மேலே இழுத்தால் சிமென்ட் சொம்பு காணோம்! அய்யய்யோ!

சட்டென்று தூக்கம் கலைந்து, கயிற்றைப் பார்த்தால் சொம்பின் கழுத்து மட்டும் கயிற்றில்! தூக்குப்போட்டுக் கொண்டு விட்டதோ? சொம்பு கிணற்று சுவற்றில் பட்டு உடைந்து விட்டது. தூக்கக்கலக்கத்தில் எனக்கு இது உறைக்கவே இல்லை!

மாமனார் வேறு ரொம்ப கோபக்காரர். என்ன செய்வது? கயிற்றை மறுபடி கிணற்றில் இறக்கிவிட்டு – சொம்பின் கழுத்துடன் தான் – ஆபத் பாந்தவா, அனாத ரக்ஷகா என்று கணவரிடம் ஓடி – இல்லையில்லை – நடந்து தான் – போய் சொன்னேன்.

ஒரு நிமிடம் யோசித்தார். பிறகு சொன்னார்: ‘ அந்தக் (சொம்பின்) கழுத்தையும் கிணற்றில் போட்டுவிடு. அம்மாவிடம் சொம்பு கிணற்றுக்குள் விழுந்துடுத்து அப்படின்னு சொல்லிடு’ என்றார்.

மாமியாரிடம் போய் சொன்னேன் ‘சொம்பு கிணத்துக்குள் விழுந்துடுத்து!’ நான் சொன்னது மாமனாரின் காதிலும் விழுந்துவிட்டது.

மாமனார் ஏதோ கோவமாக சொல்ல ஆரம்பித்தார். மாமியார் சொன்னார் : ‘புது பொண்ணு; விடுங்கோ!’

அப்பாடி பெரிய ரிலீப். மாமனார் மாமியார் கோவிச்சுக்கலை என்பதற்காக இல்லை.

NO MORE சிமென்ட் சொம்பு!

பாவம் அந்த சொம்பு. நான் கரித்து கொட்டியதிலேயே தற்கொலை பண்ணிண்டுடுத்தோ?

 

27 மாறி வரும் புது யுக திருமணங்கள்

திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்களின் ‘சினேகிதி’ செப்டம்பர், 2013 இதழில் வெளியான என்னுடைய கட்டுரை

எனது வகுப்புகளில் மாணவர்களை மிகவும் குஷிப்படுத்தும் விஷயம் விவாதங்கள். அதுவும் காதல் கல்யாணமா? பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணமா? எது சிறந்தது என்ற விஷயத்தை கொடுத்துவிட்டால் போதும். வகுப்பே களை கட்டிவிடும். எத்தனை பேசினாலும் சுவாரசியம் குறையாத விஷயமாயிற்றே!

காதல் திருமணங்களுக்குத் தான் வோட்டு நிறைய விழும். ஒருமுறை இந்த விவாதத்தில் காதல் திருமணங்களே சிறந்தவை என்று பேசிய மாணவரை யாராலும் அசைக்கவே முடியவில்லை.

பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணங்களே என்ற பிரிவில் பேசிய மாணவ மாணவியர்கள் அவரை நோக்கி கேள்விக் கணைகளை வீச அவர் அசராது பதில் சொன்னார்.

‘உங்கள் வீட்டில் அப்பா அம்மா சம்மதிக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?’

‘நாங்கள் எங்கள் காதலில் காட்டும் தீவிரம் அவர்களை சம்மதிக்க வைக்கும்’

‘உங்கள் காதலியின் வீட்டாரை எப்படி சம்மதிக்க வைப்பீர்கள்?’

‘பெண் வீட்டில் முக்கியமாக என்ன எதிர்பார்ப்பார்கள் வரப்போகும் மாப்பிள்ளையிடம்? பெண்ணின் அப்பா மாப்பிளைக்கு நல்ல படிப்பு, நல்ல உத்தியோகம் இருக்கிறதா என்று பார்ப்பார். அம்மா நல்ல குடும்பமா என்று பார்ப்பார். பெண்ணிற்கு அழகு! இவை எல்லாமே என்னிடம் இருக்கின்றன. அவர்கள் சம்மதம் கிடைத்துவிடும்’.

‘பெண் வீட்டில் பெற்றோர்கள் அவளை பயமுத்துகிறார்கள்:’ நீ எங்கள் பேச்சைக் கேட்கவில்லையானால் உன்னை வீட்டைவிட்டு வெளியேற்றிவிடுவோம்’ என்று. என்ன செய்வீர்கள்?

‘சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட, சண்டைக்காரன் காலில் விழுவது மேல். நான் நேராக பெண்ணின் பெற்றோர்களிடம் போய் ‘உங்கள் சம்மதத்துடன் நாங்களிருவரும் கல்யாணம் செய்துகொள்ள ஆசைபடுகிறோம். ஓடிபோய் திருமணம் செய்துகொண்டால் இரண்டு குடும்பங்களுக்கும் அவமானம்’ என்று புரிய வைத்து சம்மதம் வாங்கிவிடுவேன்’.

‘ஒருவேளை இருவரின் பெற்றோர்களும் சம்மதிக்கவில்லை என்றால்?’

‘நிச்சயம் நாங்கள் திருமணம் செய்து கொள்வோம். நாங்கள் குடும்பம் நடத்தும் அழகைப் பார்த்து அவர்களாகவே சிறிது காலத்திற்குப் பிறகு மனமுவந்து ஏற்றுக் கொள்வார்கள்.’

‘உன் காதலுக்காக உயிரைக் கொடுப்பாயா?’

‘நிச்சயம் மாட்டேன். நான் வாழப் பிறந்தவன். காதலுக்காக உயிரைக் கொடுப்பது முட்டாள்தனம். எங்கள் காதலையும் வாழவைத்து நாங்களும் வாழுவோம். நாங்கள் வாழ்ந்தால்தானே எங்கள் காதலும் வாழும்?’

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நான் வியப்பின் எல்லைக்கே சென்றுவிட்டேன். வகுப்பு முடிந்த பின் அந்த மாணவனைக் கூப்பிட்டு வேடிக்கையாகக் கேட்டேன்:’யாரந்த அதிருஷ்டசாலி பெண்?’

அந்த மாணவர் அடக்க முடியாமல் சிரித்துவிட்டு, ’மேடம், இதெல்லாம் ஒரு விவாதத்திற்காக நான் பேசியது. என் பெற்றோர்கள் பார்த்து வைக்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வேன். என் பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை. அவர்களை கடைசிவரை நான் பார்த்துக் கொள்ளவேண்டும். அதனால் என் திருமணம் அவர்கள் நிச்சயிக்கும் பெண்ணுடன்தான். காதல் கல்யாணம் என்பதெல்லாம் பேசுவதற்கு படிப்பதற்கு நன்றாக இருக்கும். நம் நிலைமையை நாம்தான் புரிந்து கொண்டு நம் வாழ்க்கையை தீர்மானிக்க வேண்டும்’ என்றார்.

நான் இப்போது மறுபடியும் வியப்பின் எல்லையில்! அடுத்தடுத்த வகுப்புகளில் பல மாணவ மாணவியரிடம் பேசியதில் எல்லோருமே பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணத்தை, அல்லது பெற்றோர்களின் சம்மதத்துடனேயே தங்கள் திருமணத்தை செய்து கொள்ள விரும்பினர் என்று தெரிந்தது. பெற்றோர்களின் சம்மதம் என்பது தங்களுக்கு பாதுகாப்பு என்று பலரும் சொன்னார்கள்.

உடனேயே எனக்கு இன்னொரு விஷயத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. மாணவர்களிடமே கேட்டேன்:

‘நீங்கள் உங்கள் திருமணத்தில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?’

அவர்கள் சொன்னதை உங்களுக்கும் சொல்லுகிறேன்.

பெண்கள்:

முன்னைப்போல் கணவன்மார்களே தங்களையும் தங்கள் குழந்தையையும் கடைசி வரை காப்பாற்ற வேண்டும் என்றோ, அவனது மறைவுக்குப் பின்னும் அவனது சொத்துக்கள் மூலம் பாதுகாப்பு வேண்டும் என்றோ பெண்கள் நினைப்பதில்லை. பெண்களும் படிக்கிறார்கள்; வேலைக்குப் போய் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். பணத்தை கையாளத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆணுக்குப் பெண் சமம்.

இப்படி இருக்கும்போது திருமணம் என்கிற பந்தம் அவர்களை எந்த அளவு கட்டுப்படுத்தும்; அல்லது எந்த அளவு பாதுகாப்புக் கொடுக்கும்?

பெண்களுக்கும், அம்மாக்களுக்கும் எல்லையில்லாத பொறுமை இருக்கிறது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பை செலுத்த அவர்களால் முடியும். இதற்கு பதிலாக அவர்கள் எதிர்பார்ப்பது மரியாதை, அங்கீகாரம், தூய அன்பு இவைதான். ஒவ்வொரு தடவையும் அவர்களே எல்லாவற்றிற்கும் ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. பெற்றோர்கள் கூட ‘கொஞ்சம் விட்டுக் கொடும்மா, பொறுத்துப் போம்மா’ என்கிறார்கள். திருமண முறிவு என்பது ஆணை விட பெண்ணை அதிகம் பாதிக்கும் என்பதால் இந்த மாதிரி எதிர்பார்ப்புகளை ஒரு பெண் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது.

‘எங்களுக்கு வேண்டியது சம உரிமை, தடங்கல் இல்லாத அன்பு’

‘கணவன், குழந்தைகள் எங்களை சர்வ சாதாரணமாக நினைக்கிறார்கள். நாங்கள் செய்யும் செயலுக்கு ஒரு நன்றி, ஒரு பாராட்டு கூட வராது. ஆனால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் நாங்கள் பாராட்டி, புகழ்ந்து உச்சி முகர்ந்து கொண்டாட வேண்டும். இது எந்த விதத்தில் சரி? அவர்கள் எங்களை நேசிப்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும். பரிசுகள் கொடுக்க வேண்டும்’

எங்களுக்கு வேண்டியது வெளிப்படையான பாராட்டு, வெளிப்படையாக காட்டும் அன்பு’.

வீட்டைப் பார்த்துக் கொள்வது, வீட்டு வேலைகள் செய்வது, குழந்தைகளை கவனிப்பது, விருந்தாளிகளை அவர்கள் மனம் நோகாமல் உபசரிப்பது என்று எல்லாமே பெண்களின் பொறுப்பு. ஆணுக்கு இந்தப் பொறுப்புகள் இல்லையா? மனைவி இதையெல்லாம் முகம் சுளிக்காமல் செய்தால் கணவனுக்கு புகழ்! இது எந்த விதத்தில் நியாயம்? இல்லத்தரசி என்கிற வார்த்தை வழக்கொழிந்து விட்டது என்பதை ஆண்கள், அவர்கள் குடும்பத்தவர்கள் உணர வேண்டும். பெண்களும் இப்போது நாள் முழுவதும் உழைக்கிறார்கள். வீடு, வீடு விட்டால் அலுவலகம் என்று.

வளர்ந்த குழந்தைகளும், கணவனும் வீட்டுப் பொறுப்புகளில் பங்கு கொள்ள வேண்டும்.

மனைவியின் வீட்டவர்களை கீழாகப் பார்ப்பது இந்திய குடும்பங்களில் வெகு சகஜம். ஆண் வீட்டவர்களுக்கு பெண் வீட்டவர்கள் எந்த விதத்தில் குறைந்தவர்கள்? பெண் என்ன செடியில் பூக்கிறாளா? அல்லது காசு கொடுத்து வாங்கி வருகிறார்களா? அவர்களையும் பத்து மாதம் சுமந்து தான் பெறுகிறார்கள். படிக்க வைக்கிறார்கள். நம் நாட்டில் சில மாநிலங்களில் கணவன் வீட்டவர்கள் மனைவி வீட்டில் எதுவும் சாப்பிடக் கூட மாட்டார்கள். திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் மட்டும் இணைவதில்லை; இரு குடும்பங்கள் இணையும் சந்தோஷ நிகழ்ச்சியாக இருக்க வேண்டும்.

அடுத்த பதிவில் மீதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

 

28 மாறிவரும் புது யுகத் திருமணங்கள் 

போன பதிவின் தொடர்ச்சி

பெண்களின் எதிர்பார்ப்புகள் தொடர்கின்றன

பழங்காலத்து வழக்கம் என்று சொல்லி எங்கள் குடும்பங்களை மரியாதைக் குறைவாக நடத்தக் கூடாது.

முக்கால்வாசி கணவன்மார்கள் வீட்டின் சொத்துக்கள் பற்றியோ, அல்லது புதிதாக ஒரு சொத்து வாங்கும்போதோ மனைவிகளை கலந்தாலோசிப்பது இல்லை. இதை ஒரு பெரிய ரகசியமாக பூட்டிப் பூட்டி வைக்கிறார்கள். எந்த ஒரு விஷயமானாலும் மனைவியின் யோசனைகளை காது கொடுத்துக் கேட்க வேண்டியது அவசியம். வீடு என்றால் அது கணவன், மனைவி இருவரும் சேர்ந்ததுதான்.

வீட்டிற்கு ஒரு நல்லது செய்யும்போது மனைவியை கட்டாயம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

வெளி உலகில் ஆணும் பெண்ணும் பலவிதமான மன அழுத்தங்களுக்கும், போட்டிகளுக்கும் ஆளாகிறார்கள். அதனால் இருவருமாகச் சேர்ந்து தான் குழந்தைகளை வளர்க்க வேண்டும். நான் ரொம்ப பிசி என்று சொல்லி எந்த ஒரு ஆணும் குடும்பப் பொறுப்புகளிலிருந்து நழுவக் கூடாது. குழந்தைகளின் தினசரி வளர்ப்புகளிலும் தந்தையின் பங்கு அத்தியாவசியம்.

அம்மாவின் கவனிப்பு குழந்தைக்கு எத்தனை தேவையோ, அதே அளவு அப்பாவின் கவனிப்பும் தேவை.

அன்பு என்பது மகளிர் தினத்தன்று மட்டுமோ, பிறந்த நாளின் போது மட்டுமோ காண்பித்துவிட்டு மறந்துவிடக் கூடிய ஒன்றல்ல. எப்போதும், எந்நாளும் கணவன் மனைவியரிடையே அன்பு நிலவ வேண்டும். ஒரு நல்ல குடும்ப உறவு வளர, மேன்மை பட குறையில்லாத அன்பு தேவை.

இப்போது ஆண்களிடம் கேட்டேன். உங்கள் எதிர்பார்ப்பு என்ன?

‘இப்போது சொன்னவற்றையெல்லாம் அப்படியே திருப்பிப் போடுங்கள். எங்கள் அம்மாவையும், சகோதரிகளையும் இழிவாகப் பேசக் கூடாது. இன்று வந்தவர்களுக்காக எங்களால் பிறந்ததிலிருந்து இருக்கும் உறவுகளை மறக்கவோ துறக்கவோ முடியாது. வெளிஉலகில், அலுவலகத்தில் எத்தனையோ பேர்களை அட்ஜஸ்ட் செய்து கொண்டு போகும் இவர்களால் ஏன் எங்கள் அம்மாக்களையும் சகோதரிகளையும் பொறுத்துப் போக முடியவில்லை?’

இந்தக் கேள்வி நியாயம் என்றே படுகிறது எனக்கு.

கடைசியாக கேட்டேன்:

திருமணம் என்பது பிணைக்கும் பந்தமா? அல்லது கட்டுப்படுத்தும் கால்கட்டா?

‘நான் ஒரு கதை சொல்லுகிறேன்’ என்று எழுந்தாள் ஒரு பெண்.

‘மகளின் திருமணத்தின் போது அவள் அம்மா அவளிடமும், தனது மருமகனிடமும் இரண்டு வங்கி பாஸ் புத்தகங்களைக் கொடுத்துவிட்டு சொன்னார்:

‘உங்கள் இருவர் பேரிலும் நான் வங்கிக் கணக்கு ஆரம்பித்திருக்கிறேன். இன்று நீங்கள் இருவரும் இணையும் மகிழ்ச்சியான தருணம் என்பதற்காக ஒரு சிறிய தொகையையும் போட்டிருக்கிறேன். எப்போதெல்லாம் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியான, மறக்க முடியாத தருணங்கள் வருகின்றதோ அப்போதெல்லாம் ஒரு தொகையை இருவரும் உங்கள் கணக்கில் போடுங்கள். எதற்காக, எந்த இன்பமான தருணத்தில் போட்டீர்கள் என்று ஒரு சிறிய நாட்குறிப்பில் எழுதி வாருங்கள்.’

அம்மா சொன்னது போலவே இருவரும் சின்ன சின்ன சந்தோஷங்களிலிருந்து பெரிய பெரிய மகிழ்ச்சியான தருணங்களுக்கும் வங்கியில் பணம் போட ஆரம்பித்தனர். வருடங்கள் பல சென்றன. கணவன் மனைவியரிடையே சின்ன பூசல்கள். கொஞ்சம் கொஞ்சமாக இவை பூதாகாரமாக உருவெடுத்து, இருவரும் பிரிய முடிவு செய்தனர்.

பெண் தன் அம்மாவிடம் தங்களது விவாகரத்து குறித்து சொன்னாள். அம்மா சொன்னார்: ‘சரி, இருவரும் பிரிவதற்கு முன் வங்கி கணக்கில் எத்தனை சேர்ந்துள்ளது என்று பாருங்கள். இருவரும் பிரிவதற்குமுன் அதை செலவழித்து விடலாம்’.

மகள் வங்கிக்கு சென்று பணத்தை எடுத்து வந்தாள். தான் எழுதி வைத்திருக்கும் நாட்குறிப்பையும் பார்த்தாள். அசுவாரசியமாகப் படிக்க ஆரம்பித்தவள் கண்களில் நீர்!

எனது வாழ்க்கையில் எத்தனை எத்தனை இன்பமான தருணங்கள் வந்து போயிருக்கிறது. அதையெல்லாம் மறந்துவிட்டு, இப்போது மணமுறிவு வரை வந்துவிட்டேனே’ என்று மனம் வருந்தினாள். எப்படியாவது தனது மண வாழ்க்கையை சரி செய்து விட வேண்டும் என்று கணவனிடம் தனது பாஸ் புத்தகத்தை கொடுத்து நடந்ததைக் கூறினாள்.

அடுத்த நாள் கணவன் அந்த பாஸ் புத்தகத்தை அவளிடம் திருப்பிக் கொடுத்து விட்டு ‘இதில் புதிதாக ஒரு தொகையை போட்டிருக்கிறேன். நாம் இருவரும் இத்தனை வருடங்கள் ஒன்றாக வாழ்ந்ததைக் கொண்டாடவும், இனிமேலும் சேர்ந்து இருக்கப் போவதைக் கொண்டாடவும் என்று இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்’ என்றான்.

இதைப் பார்த்த அம்மா கூறினார்: வாழ்க்கை என்பது தவறுகளை திருத்தி கொள்ள; உறவுகளை முறித்துக் கொள்ள அல்ல’

வகுப்பிலிருந்த அனைவரும், நான் உட்பட கைத்தட்டினோம். நீங்களும் தானே?

 

29 பள்ளிக்கூட நினைவுகள்!

ஐந்தாம் வகுப்பு வரை திருவல்லிக்கேணி திருவேட்டீச்வரன் பேட்டையில் இருந்த (இப்போது இருக்கிறதா?) கனகவல்லி எலிமெண்டரி பள்ளியில் படித்தேன். என்னுடன் கூட ஒரு பிரபல குழந்தை நட்சத்திரமும் படித்தார் அதே பள்ளியில். ‘கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே’ பாடிய குட்டி பத்மினி தான் அந்த குழந்தை நட்சத்திரம்!

இப்போது புரிகிறதா என் பாபுலாரிடிக்குக் காரணம்?

முதல் வகுப்பு ஆசிரியை தர்மு என்கிற தர்மாம்பாள். வாரத்திற்கு ஒருமுறை வீட்டை ஒட்டடை அடித்து, ஜன்னல்கள், கதவுகள் எல்லாவற்றையும் துடைத்து சுத்தம் செய்து வீட்டை ‘பளிச்’சென்று வைத்திருக்க வேண்டும் என்ற பாடத்தை முதல் வகுப்பிலேயே எங்கள் பிஞ்சு மனதில் ஏற்றியவர்.

ஆறு, ஏழாம் வகுப்புகள் அங்கிருந்த ஒரு அரசு நடுநிலை பள்ளியில் படித்தேன். இந்தப் பள்ளியில் இருந்த பாட்டு ஆசிரியையும், (பெயர் மறந்து விட்டது. மன்னித்துவிடுங்கள் டீச்சர்) ஆங்கில ஆசிரியையும் (திருமதி கனகவல்லி) என்னால் மறக்க முடியாதவர்கள்.

‘தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அவர்கொரு குணம் உண்டு’,

‘சூரியன் வருவது யாராலே, சந்திரன் திரிவது எவராலே?’

‘மீன்கள் கோடி கோடி சூழ வெண்ணிலாவே, ஒரு வெள்ளிவோடம் போல வரும் வெண்ணிலாவே’ (இந்தப் பாட்டிற்கு கோலாட்டம் ஆடுவோம்) போன்ற அதி அற்புதமான பாடல்களை நான் கற்றது இந்த பாட்டு ஆசிரியையிடம் தான்.

அவரே எங்கள் பள்ளியின் ‘ப்ளூ பேர்ட்’ (Blue bird) என்ற – கிட்டத்தட்ட ஸ்கௌட் போன்ற ஒரு அமைப்பிற்கும் ஆசிரியை. இந்த அமைப்பின் பாடல்கள் ஆங்கிலத்தில் இருக்கும். அதை அழகாகத் தமிழ் படுத்தி எங்களுக்கு சொல்லிக் கொடுப்பார்.

எனக்கு நினைவிருக்கும் ஒரு பாடல்:

bits of paper, bits of paper

lying on the floor, lying on the floor

make the place untidy, make the place untidy

pick them up, pick them up!

தமிழ் வடிவம்:

காகித துண்டுகள், காகித துண்டுகள்

தரையிலே பார், தரையிலே பார்,

அசுத்தபடுத்துதே, அசுத்தபடுத்துதே,

பொறுக்கி எடு, பொறுக்கி எடு.

இன்னொரு பாடல்

கரடி மலைமேல் ஏறி கரடி மலைமேல் ஏறி

கரடி மலைமேல் ஏறி அது என்ன பார்த்தது?

அது என்ன பார்த்தது? அது என்ன பார்த்தது?

மலையின் அடுத்த பக்கம் மலையின் அடுத்த பக்கம்

மலையின் அடுத்த பக்கம் அது எட்டி பார்த்தது

அது எட்டி பார்த்தது அது எட்டி பார்த்தது

திரும்ப மலைமேல் ஏறி திரும்ப மலைமேல் ஏறி

திரும்ப மலைமேல் ஏறி அது வீடு சென்றது!

இதே பாடலை ஆங்கிலம், கன்னட மொழிகளிலும் நான் பாட்டு ஆசிரியையாக இருந்தபோது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறேன் இவரை நினைத்துக் கொண்டே.

அவரே நடன ஆசிரியையும் கூட. பாரத நாட்டின் தவப்புதல்வா என்ற பாடலுக்கு நடனம் அமைத்துக் கொடுத்து எங்களை குடியரசு தினத்தன்று ஆட வைத்தவர்.

லீலாவதி டீச்சர்

ஏழாம் வகுப்பு வரை திருவல்லிக்கேணியில் படித்துக் கொண்டிருந்த நான் எட்டாம் வகுப்பிற்கு புரசைவாக்கம் லேடி எம்.சி.டி.முத்தையா செட்டியார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு சமூக பாட ஆசிரியை குமாரி லீலாவதி. வரைபடம் இல்லாமல் பாடம் நடத்தவே மாட்டார். என்னுடைய மேப் ரீடிங் ஆசைக்கு விதை ஊன்றியவரே இவர் தான். பாடம் சொல்லிக் கொடுப்பதென்றால் இவர் சொல்லிக் கொடுக்க வேண்டும். நம் தலைக்குள் பாடத்தை ஏற்றிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்.

அசாத்திய கோபம் வரும். பத்தாம் வகுப்பிற்கு போனவுடன், இவரே எங்கள் ஆங்கில ஆசிரியை. இன்று ஓரளவுக்கு ஆங்கிலம் பேசுகிறேன் என்றால் அடித்தளம் போட்டது இவர்தான். ஒருமுறை பள்ளியில் ஒரு பேச்சுப் போட்டி: தலைப்பு ஆங்கிலக் கல்வி அவசியமா? எல்லோருமே அவசியம் என்று பேசவே தயார் செய்து கொண்டிருந்தார்கள். அதனால் நான் ஒரு மாறுதலுக்கு வேண்டாம் என்று பேசினேன். வந்தது பாருங்கள் ஒரு கோபம். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் என்னுடன் பேசவே இல்லை. என்னுடைய சமாதானங்கள் எதுவுமே அவர் காதில் விழவில்லை.

சாந்தா டீச்சர்

பதினொன்றாம் வகுப்பு (SSLC) ஆங்கில இலக்கணம் மற்றும் துணைப் பாட (non-detailed) ஆசிரியை. வெகு எளிமையாக ஆங்கில இலக்கணத்தை சுவாரஸ்யமாக சொல்லித் தருவார். எனது வகுப்பில் ஒரு ஆங்கில ஆசிரியை வந்து சேர்ந்தார். ஒருநாள் வகுப்பு முடிந்தவுடன் சொன்னார்: ‘Present Perfect Tense இவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. நன்றி’. நான் ‘என் பதினொன்றாம் வகுப்பு ஆசிரியை திருமதி சாந்தாவிற்கு இந்த நன்றிகள் சேரட்டும்’ என்றேன்.

கேதாரேஸ்வர சர்மா என்னும் சர்மா ஸார்

எனது தமிழ் வாத்தியார். இன்று நான் ஒரு தமிழ் வலைப்பதிவாளர் ஆக பெயர் எடுத்திருப்பதற்கு இவரே காரண கர்த்தா. இவர் சொல்லிக் கொடுத்த ‘தேமா, புளிமா’ இன்னும் நினைவில் இருக்கிறது. இவர் வருடந்தோறும் செய்யும் ஆண்டாள் கல்யாணமும் மறக்க முடியாத ஒன்று.

லில்லி கான்ஸ்டன்டைன் டீச்சர்

எனக்குப் புரியாத கணிதத்தை என் தலையில் ஏற்றப் பார்த்து முடியாமல் போனவர். மன்னித்துக் கொள்ளுங்கள் டீச்சர். இன்றுவரை கணிதம் எனக்கு எட்டாக்கனிதான்.

இன்னும் பல பல ஆசிரியர்கள். நேரம் வரும்போது அவர்களைப் பற்றியும் எழுத வேண்டும். நிச்சயம் எழுதுகிறேன்.

நானும் ஒரு ஆசிரியை ஆவேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. மிகவும் தாமதமாக எனக்கு ஆசிரியை ஆக ஒரு வாய்ப்புக் கிடைத்து, அதில் நான் வெற்றியும் பெற்றேன் என்றால் இந்த அத்தனை ஆசிரியர்களின் பங்களிப்புதான். இவர்கள் எல்லோருமே என்னை ஏதோ ஒருவிதத்தில் மெருகேற்றி இருக்கிறார்கள்.

எல்லா ஆசிரியப் பெருமக்களுக்கும் என் இதயம் கனிந்த வணக்கங்கள். ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

 

30 கையால் சாப்பிட வாங்க!

திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்களின் ‘சினேகிதி’ ஜூலை இதழில் வெளியான கட்டுரை.

இப்போது நாம் பின்பற்றும் மேற்கத்திய நாகரீகத்தில் கையால் சாப்பிடுவது பத்தாம்பசலித்தனம், பழங்கால வழக்கம், ஆரோக்கிய குறைச்சல், நாகரீகமில்லாத செயல் என்று கருதப் படுகிறது.

ஆனால் கையால் சாப்பிடும் பழக்கம் நம் உடலுக்கு மட்டுமில்லாமல் உள்ளத்திற்கும், ஆன்மாவிற்கும் வலுவூட்டும் என்கிறது ஒரு பழைய சொல்வழக்கு.

இப்போது பல வீடுகளில் கையால் சாப்பிடுவதைத் தவிர்த்து ஸ்பூனால் சாப்பிடுகிறார்கள்.

ஏன் நம் முந்தைய தலைமுறை கையால் சாப்பிட்டு வந்தார்கள் என்று யோசித்திருக்கிறீர்களா? இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆயுர்வேதத்திலிருந்து இந்தப் பழக்கம் ஆரம்பித்தது. வேத காலத்து மக்களுக்கு நம் கைகளில் இருக்கும் வல்லமை தெரிந்திருந்தது.

கைகளினால் பல்வேறு முத்திரைகள் காண்பிக்கும் பழக்கம் பரத நாட்டியத்தில் உண்டு. அதேபோல தியானம் செய்யும்போதும் விரல்களை மடக்கியும், நீட்டியும் வேறு வேறு விதமான முத்திரைகளுடன் அமருவது வழக்கம். இது போன்ற முத்திரைகளினால், அவற்றில் இருக்கும் நன்மைகளை கருத்தில் கொண்டு நம் முன்னோர்கள் கையினால் சாப்பிடும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கலாம்.

நமது செயல்களுக்கு கைகள் தான் மிகச்சிறந்த உறுப்பு. வேதத்தில் வரும் ஒரு இறைவணக்கம் இதை சொல்லுகிறது. காலையில் எழுந்தவுடன் ‘கர தரிசனம்’ செய்ய வேண்டும். அப்போது கீழ்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லவேண்டும்.

‘கராக்ரே வசதே லக்ஷ்மி; கர மூலே சரஸ்வதி; கர மத்யே து கோவிந்த: ப்ரபாதே கர தர்சனம்’

‘நமது கைகளில் லக்ஷ்மி வாசம் செய்கிறாள். கைகளின் மூலையில் சரஸ்வதி தேவி; கைகளின் நடுவில் கோவிந்தன் இருக்கிறான். இதை ஒவ்வொருவரும் காலையில் எழுந்தவுடன் நமது உள்ளங்கைகளைப் பார்த்துக் கொண்டே சொல்ல வேண்டும்.

அன்றைய நாள் நல்லபடியாக இருக்கும் என்ற நம்பிக்கையை இந்த ஸ்லோகம் தருகிறது.

நம் கைகள், கால்களின் வழியாகத்தான் பஞ்சபூதங்களும் நம் உடம்பில் நுழைகின்றனவாம். ஒவ்வொரு விரலும் இந்த ஐம்பூதங்களின் நீட்சிகள் என்று ஆயுர்வேதம் சொல்லுகிறது.

நமது கட்டை விரல் அக்னி. சின்னக் குழந்தைகள் விரல் சூப்புவதைப் பார்த்திருப்பீர்கள். அவர்களால் உடல்ரீதியான செயல்கள் செய்ய முடியாத போது, உண்ட உணவு செரிக்க இயற்கை கட்டை விரலை சூப்புவதன் மூலம் அவர்களின் செரிமானத்திற்கு இப்படி உதவுகிறது.

ஆட்காட்டி விரல் வாயு. நடுவிரல் ஆகாசம். (இதையே ஈதர் என்கிறார்கள். அதாவது மனித உடலில் உள்ள செல்களின் நடுவில் இருக்கும் வெற்றிடங்கள்.) மோதிர விரல் ப்ருத்வி (பூமி). சுண்டு விரல் நீர்.

ஆக ஒவ்வொரு விரலும் நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்ய உதவுகிறது. விரல்களிலேயே செரிமானம் ஆரம்பம் ஆகிவிடுகிறது. கையால் உணவை அள்ளி எடுக்கும்போது ஐம்பூதங்களின் ஆற்றலும் தூண்டப் படுகிறது. அக்னி செரிமான நொதிகளை சுரக்க உதவுகிறது. செரிமானம் தூண்டப் படுவதுடன், உண்ணும் உணவின் சுவை, தன்மை, வாசனை முதலிய அம்சங்களும் அதிகரித்து உணவை நன்கு அனுபவித்து ருசித்து உண்ணமுடிகிறது.

நம் வீட்டில் அந்தக் காலத்துப் பெரியவர்கள் உணவுப் பொருட்களை அளக்க ஆழாக்கு, கரண்டி அல்லது ஸ்பூன் பயன்படுத்த மாட்டார்கள். ‘ஒரு பிடி அரிசி, ஒரு சிட்டிகை உப்பு, சின்ன கோலி அளவு புளி’ என்று கை விரல்களாலேயே அளவு காண்பிப்பார்கள். புட்டு மாவிற்கு பதம் சொல்லும்போது கையால் பிடித்தல் பிடிபடவேண்டும். உதிர்த்தால் உதிர வேண்டும் என்பார்கள். வெல்லப்பாகுப் பதமும் இரண்டு விரல்களால் கரைந்த வெல்லத்தைத் தொட்டுப் பார்த்து ஒரு கம்பிப் பதம், இரண்டு கம்பிப் பதம் என்பார்கள்.

கெட்டியான உணவுப் பொருளோ, அல்லது திரவப் பொருட்களோ அவற்றை அளக்க, 6 விதமான கையளவுகள் இருக்கின்றன.

சின்ன வயதில் அம்மா கையால் கலந்து நம் கையில் சாதம் போடுவாள். அதில் சின்னதாக ஒரு குழி செய்து அதற்குள் குழம்பு விட்டுக் கொண்டு சாப்பிடுவோமே, அந்த ருசி இன்னும் நாவில் இனிப்பதற்குக் காரணம் அம்மாவின் கை ருசி தானே?

கோடை விடுமுறையில் பாட்டி வீட்டில் சாப்பிடுவோமே, நினைவிருக்கிறதா? கல்சட்டியில் இரவு நீர் ஊற்றப்பட்ட சாதத்தில் காலையில் உப்பு, மிளகாய், துளி பெருங்காயம் நுணுக்கிப் போட்டு நீர் மோர் ஊற்றி பாட்டி தரும் ஆரோக்கிய பானம் சாதேர்த்தம் (சாதமும் நீரும் கலந்த திரவம்) அது நமது உடலுக்கு மட்டுமில்லாமல் மனதையும் குளிரப் பண்ணுமே, அதற்குக் காரணம் உப்பு மிளகாய் பெருங்காயம் மட்டுமா? இல்லையே, பாட்டியின் கை மணமும் அதில் சேர்ந்திருப்பதால் தானே?

இட்லிக்கு அரைத்து வைக்கும்போது என்னதான் அரவை இயந்திரம் அரைத்தாலும் கடைசியில் நம் கைகளால் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து கலந்து வைக்கிறோம், இல்லையா? அடுத்தநாள் காலையில் பொங்கி இருக்கும் மாவைப் பார்த்து நம் மனமும் பொங்கி, இன்றைக்கு மல்லிகைப் பூ போல இட்லி என்று பூரிக்கிறோமே!

சப்பாத்திக்கு மாவு பிசையும்போது நீரை சிறிது சிறிதாக கொட்டி, மாவை கைகளால் நன்றாக அளைந்து, உருட்டி பிசையுங்கள். நீங்கள் அதிக நேரம் பிசையப் பிசைய மிக மிக மிருதுவான சப்பாத்திகள் வரும். முக்கியமாக ஃபூல்கா சப்பாத்திக்கு கையால்தான் கலக்க வேண்டும். அப்போதுதான் நெருப்பில் நேரிடையாக சப்பாத்திகளைப் போடும்போது அவை உப்பும்.

பழைய விஷயங்கள் என்றாலே ஒரு மாதிரி பார்த்து ‘இப்போ இப்போ நிகழ்காலத்துக்கு வாங்க, யாராவது கைகளை பயன்படுத்தி ஏதாவது செய்கிறார்களா சொல்லுங்க’ என்பவர்களுக்கு:

6 விதமான கையளவுகள் பற்றி ஏதாவது குறிப்பு கிடைக்கிறதா என்று இணையத்தில் தேடியபோது ஒரு காணொளி கிடைத்தது.

அதில் அரிசோனா மாநில பல்கலைகழக ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து துறையில் பணி புரியும் திருமதி சிமின் லேவின்சன் என்ற பெண்மணி நாம் தினமும் சாப்பிடும் உணவுகளை ஒருவேளைக்கு எந்த அளவில் சாப்பிடுவது என்பதை நமது உள்ளங்கைகளை வைத்துக் கொண்டு விளக்கினார். ரொம்பவும் வியப்பாக இருந்தது.

மாவுப்பொருள்கள் எவ்வளவு சாப்பிட வேண்டும்? கை விரல்களை மடக்கிக் காட்டுகிறார்: ஒரு கைப்பிடி;

பழங்கள்: கையை விரித்து ஒரு கையளவு;

பச்சை காய்கறி, கீரைவகைகள் இரண்டு கைகளையும் விரித்து சேர்த்து வைத்து இரண்டு கையளவு;

கொழுப்பு: (வெண்ணை, நெய், எண்ணெய்) கட்டை விரலின் நுனியிலிருந்து கட்டைவிரலின் பாதி வரை;

சீஸ்: முழு கட்டைவிரலின் அளவு – ப்ரோடீன் இருப்பதால்.

திரவங்கள்: ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் விரித்து ஒரு டம்ளர் அளவு என்கிறார்.

காணொளி இணைப்பு: http://usatoday30.usatoday.com/video/measuring-food-with-the-palm-of-your-hand/2308102638001

பாருங்கள், இந்த விஷயங்களை நம் முன்னோர்கள் என்றைக்கோ செயல் படுத்தி இருக்கிறார்கள்.

பழைய விஷயங்கள் இவற்றில் என்ன இருக்கின்றன என நாம் ஒதுக்கும் பலவற்றில் நிறைய விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள் மறைந்து இருக்கின்றன. இவற்றை அறிந்து கொண்டு நம் வாழ்வை சீராக அமைத்துக் கொள்வோம்.

இந்த காணொளியையும் காணுங்கள்.

இந்திய உணவை எப்படி கையால் எடுத்து சாப்பிடுவது என்று விளக்குகிறார்கள்!

 

 

Free Tamil Ebooks -  FreeTamilEbooks.com