தத்தை விடுதூது
(குறு நாவல்)
தமிழ்மணி ந. பாலேஸ்வரி


தத்தை விடுதூது

(குறு நாவல்)

தமிழ்மணி ந. பாலேஸ்வரி

வெளியீடு:

மகளிர் நலன்புரி மன்றம்,

திருகோணமலை.

1992

நூல் விபரம்

நூற்பெயர் : தத்தை விடு தூது (குறுநாவல்)

ஆசிரியை : திருமதி ந. பாலேஸ்வரி.

பிரசுரத் தேதி : 22-7-1992.

பக்கங்கள் : 120

பிரதிகள் : 1000.

வெளியீடு : மகளிர் நலன்புரி மன்றம்,

திருகோணமலை.

அச்சமைப்பு : புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்,

மட்டக்களப்பு.

அட்டை : டாக்டர் வேலாயுதபிள்ளை (வேலு)

உரிமை : ஆசிரியை.

விலை : ரூ. 40ஃ-

Bibiliographical Data

Title : “Thaththai Vidu Thoothu”

(Short Novel)

Author : Mrs. N. Baleswari.

Date of Publication : 22-7-1992.

Pages : 120

Copies : 1000

Publishers : Women’s Welfare Society,

Trincomalee.

Printers : St. Joseph’s Catholic Press.

Batticaloa.

Cover : Dr. Velauthapillai (Velu)

Copyright : Author.

Price _ Rs. 40/-

வெளியீட்டாளர் உரை

திருக்கோணமலை மகளிர் நலன்புரி மன்றம் கடந்த 1986ம் ஆண்டு வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட விதவைப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சேவை செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு அரசாங்க சார்பற்ற நிறுவனமாகும். கடந்த ஆறு ஆண்டுகளாக இச்சேவையில் நாம் பல பணிகளைச் செய்துள்ளோம். எமது அலுவலகம் இல. 257, டொக்யாட் வீதியில் அமைந்துள்ளது. அநாதரவான பெண்களுக்காக எமது அலுவலகத்தில் ஒரு தையல் நிலையம் இயங்கி வருகிறது.

இதைவிட இல. 176ஃ2, நீதிமன்ற வீதியில் ‘போஷாகாரம்’ என்னும் சத்துணவுத் தொழிற்சாலை ஒன்றும் முழுக்க முழுக்கப் பெண்களினால் இயக்கப்பட்டு வருகின்றது. இத்துடன் அரிசிமா, குரக்கன்மா, உழுத்தம்மா, சிற்றுண்டி வகைகள், உணவுப் பொதிகள் போன்றவற்றையும் பெண்கள் தயாரித்து சந்தைப்படுத்துகிறார்கள். இதனால் வன்செயலினால் பாதிக்கப்பட்ட ஏராளமான பெண்கள் தாம் வாழ்வதற்கும், தமது குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்க்கவும் வழிவகுத்துள்ளோம்.

இதைவிட தையல் இயந்திரங்கள், சுயதொழில் வாய்ப்புப் போன்ற உதவிகளும் வழங்கப்படுகின்றன. இவ்வளவும் நாம் விளம்பரமின்றிச் செய்யும் உளமார்ந்த சேவை.

ஆனால் எமது மன்றம் இவற்றுக்கெல்லாம் புறம்பான மாறுபட்ட ஒரு இலக்கியப் பணியைச் செய்ய இன்று முன்வந்துள்ளது. அதன் அடிப்படையை விளக்க இதோ ஓர் சிறுகதை.

திருமதி பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கத்தி;ன் இலக்கியச் சேவையைக் கௌரவிக்கும் வகையில் இந்துக் கலாச்சார அமைச்சினால் கடந்த மே மாதம் 10ம் திகதி கொழும்பில் நடைபெற்ற தமிழ் சாகித்திய விழாவில் மாண்புமி பிரதமர் அவர்களால் “தமிழ்மணி” என்ற பட்டமும், விருதும் வழங்கி இவர் கௌரவிக்கப்பட்டார்.

அதையடுத்து 16-05-92ல் எமது மன்றம் அவருக்குத் திருக்கோணமலையில் ஒரு பாராட்டு விழா நடாத்தி விருதும் வழங்கியது. அவ்விழாவுக்குத் தலைமை வகித்த மதிப்புக்குரிய மேலதிக அரசாங்க அதிபர் திரு. நா. புவனேந்திரன் அவர்கள் தமது உரையின் நடுவே தமிழ்மணி பாலேஸ்வரிக்குப் பாராட்டு மட்டும் வைத்தால் போதாது. வெளியிடமுடியாமல் தேங்கிக் கிடக்கும் அவர் ஆக்கங்களை யாராவது வெளியிட முன்வந்தால் அதுவே அவருக்குச் செய்யும் சிறந்த நன்றிக்கடன் என்று ஒரு போடு போட்டார். அது எமக்குச் சற்று உறைக்கவே ஒரு அசட்டுத் துணிவுடன் அவரது வேண்டுகோளை நாம் நிறைவேற்றுவோம் என அந்த மேடையிலேயே வாக்குறுதியளித்தோம்.

வாக்குறுதியளித்த ஒரு மாதமும், ஆறு நாட்களும் இன்று முடிவுறும் வேளையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம். இல்லை! நிவைவேற்ற சகல ஏற்பாடுகளையும் செய்த சூத்திரதாரி யார் என்பது உங்களுக்கும் புரியும். புரியாவிட்டால் யாரிடமாவது கேளுங்கள் என்று விட்டுவிடுகிறேன்.

இது எமது மன்றத்தின் புதிய பணி. ஆனால் இந்த உதவியைத் தமிழ்மணி அவர்களுக்கு நாம் வழங்கியுள்ளோம். காரணம் மன்ற சட்டதிட்டங்களில் இப்படியான பணிகளுக்கு பண உதவியளித்தல்பற்றி எதுவும் கூறப்படாததே காரணம்.

இருந்தாலும் இந்த நூலை திருக்கோணமiலா மகளிர் நலன்புரி மன்றத்தின் வெளியீடாக வெளியிடுவதில் நாம் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகின்றோம்.

வாழ்க தமிழ்மணியின் பணி!

திருமதி பாலசிங்கம்

தலைவி,

257, டொக்யாட் வீதி, திருகோணமலை மகளிர்

22-07-1992. நலன்புரி மன்றம்

முன்னுரை

திருக்கோணமலை இலக்கியச் சோலையில் மலர்ந்த மூத்த பெண் எழுத்தாளர் தமிழ் மணி ந. பாலேஸ்வரி கடந்த பல ஆண்டுகளாக இலக்கியச் சேவை புரிந்து வருகின்றார். திரு. சி.வை. தாமோதரப்பிள்ளை, மகாமகோபாத்தியாய உ. வே. சாமிநாத ஐயர் ஆகியோருடன் பழைய தமிழ் இலக்கியங்களை மறு பதிப்புச் செய்து அச்சு வாகனமேற்ற உதவிய திரு. தி. த. கனசுந்தரம் பிள்ளையினதும், அவரது சகோதரரும், ஈழத்தின் முதல் நாவலான மோகனாங்கியை எழுதிய சரவணமுத்துப் பிள்ளையினதும் பரம்பரையில் வந்த பாலேஸ்வரி பலமான இலக்கிய பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டவர். தனது ஒன்பதாவது வயதில் ஸ்ரீ சண்முக வித்தியாலயத்தில் படிக்கும்போது எழுதத்தொடங்கிய இவர் இன்னும் தன் பேனாவைக் கீழே வைத்துவிடவில்லை. இருநூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை ஏற்கனவே எழுதி முடித்த இவர் இலங்கையில் ஆகக்கூடிய சிறுகதைகளை எழுதிய பெண் எழுத்தாளர் என்ற பெருமையையும் பெற்றுக்கொள்கின்றார். அது மட்டுமன்றி இலங்கையில் முதன் முதல் தமிழ் நாவலை வெளியிட்ட பெண் எழுத்தாளர் என்ற பெருமையும் இவருக்கே போய்ச் சேருகின்றது. இத்தகைய சிறப்புக்கள் வாய்ந்த இவரின் தத்தை விடு தூது குறுநாவல் ஒரு நூற்றாண்டுகாலப் பாரம்பரியத்தைக் கொண்டது. சரவணமுத்துப்பிள்ளை எழுதிய அழியாப் புகழ்கொண்ட தமிழ்க் கவிதைகளைத் தன் இயல்பான, இனிமையான வசனநடையோடு சேர்த்து உருவாக்கித் தரும் இந்தக் கற்பனைப் பூங்கா உண்மையிலேயே எம்மை கலை இலக்கியப் பூங்காவுக்கு அழைத்துச் சென்று மெய் மறக்க வைக்கின்றது. இந்நூல் உங்களையும் மெய்மறக்க வைக்குமென நம்புகிறேன்.

நா. புவனேந்திரன்

மேலதிக அரசாங்க அதிபர்,

திருக்கோணமலை.

ஆசிரியர் உரை

எனது படைப்புக்களுக்கு எப்போதும் ஊக்கமும், ஆதரவும் அளித்த உங்கள் கைகளில் தற்சமயம் ‘தத்தைவிடு தூது’ என்ற இந்நூல் தவழ்ந்துகொண்டிருக்கும். இது ஒரு புதுவிதமான ஆக்கம்.

இதுபற்றிக் கூறுவதானால்…… யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஆறுமுகநாவலர். மட்டக்களப்புக்கு ஒரு விபுலானந்தர். திருக்கோணமலைக்கு திரு. தி.த.கனகசுந்தரம்பிள்ளையென்று நாம் பெருமையுடன் கூறிக்கொள்ளலாம். அன்னாரின் இளைய சகோதரரும், ‘மோகனாங்கி’ என்ற ஈழத்தின் முதல் நாவலை எழுதியவருமான திரு. தி.த. சரவணமுத்துப்பிள்ளை எழுதிய ‘தத்தை விடு தூது’ என்ற பாடற் தொகுதியின் செய்யுள்களை உள்ளடக்கிய புனைகதையே இந்நூல்.

நான் சற்றும் எதிர்பாராத விதத்தில் திருக்கோணமலை மகளிர் நலன்புரி மன்றத்தினர் இந்நூலை வெளியிட எனக்கு முற்பணம் தந்துதவியுள்ளனர். அதற்காக இறைவனுக்கு முதற்கண் என் நன்றி.

எனக்குத் ‘தமிழ்மணி’ப் பட்டம் கிடைத்ததைக் கௌரவிக்குமுகமாகத் திருக்கோணமலை மகளிர் நலன்புரி மன்றத்தினர் எனக்கு அளித்த பாராட்டு வைபவத்தின்போது உரையாற்றிய திருக்கோணமலை மேலதிக அரசாங்க அதிபர் திரு.ந. புவநேந்திரன் தன் பேச்சினிடையே ‘பாலேஸ்வரியின் ஆக்கங்கள் பல வெளியிடப்படவேண்டியுள்ளன. நீங்கள் அவரின் ஒரு ஆக்கத்தையாவது வெளியிட்டுக் கொடுக்க முன்வந்தால் அதுவே நீங்கள் அவருக்குச் செய்யும் நன்றிக் கடனாகும்.’ என்று ஒரு சர்ச்சையைக் கிளப்பினார்.

மாபெரும் இக்கட்டான நிலையில் மன்றத் தலைவி திருமதி இறஞ்சி பாலசிங்கம் அவர்கள் திடமனதுடன் அவரது சவாலை ஏற்று மகளிர் மன்றம் அப்பணியைச் செய்யும் எனத் தனது உரையின்போது கூறிவைத்தார். ஆகவே இந்நூல் வெளியிடப்படுவதற்கு முதற் காரணகர்த்தாவாக இருந்த மேலதிக அரசாங்க அதிபர் திரு. ந. புவநேந்திரன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

இந்நூலை மனமுவந்து வெளியிட முன்வந்த திருக்கோணமலை மகளிர் நலன்புரி மன்றத் தலைவி, மன்ற உறுப்பினர் ஆகியோருக்கும் நன்றி கூறிக் கடப்பாடுடையேன்.

இந்நூலை மட்டக்களப்பு சென் ஜோசப் கத்தோலிக்க அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடத் தன்னாலான உதவிகள் அனைத்தையும் செய்த தமிழ்மணி இரா. நாகலிங்கம் (அன்புமணி) அவர்களுக்கு, இந்நூலை எழுத்துப்பிழைகளின்றி ‘சரவை’ பார்த்த மட்டக்களப்பு ஆசிரியர் சிரோண்மணி திரு. த.செல்வநாயகம், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் தங்கை தங்கேஸ்வரி கதிராமன் ஆகியோருக்கும், சிறந்த முறையில் அச்சிட்டுதவிய மட்டக்களப்பு சென். ஜோசப் கத்தோலிக்க அச்சகத்தினருக்கும், நூலை அழகு செய்யும் விதத்தில் அட்டைப்படம் வரைந்துதவிய தம்பி டாக்டர் வேலாயுதபிள்ளை அவர்களுக்கும், ஆழம், சிறப்பு, தரம், அழகுதமிழ் கலந்து பல வேலைகளின் மத்தியிலும் மதிப்புரை வழங்கிய கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராசிரியர் தம்பி செ. யோகராசா அவர்களுக்கும், மேலதிக அரசாங்க அதிபர் திரு. ந. புவநேந்திரன் அவர்களுக்கும், வேறு பல வழிகளிலும் எனக்குதவிய அனைவருக்கும், இந்நூலை வாங்கி எனக்கு மேலும் ஊக்கமும், உற்சாகமும் அளக்கப்போகும் உங்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி.

தமிழ்மணி

பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன்.

டைக் வீதி,

திருகோணமலை.

1-7-92.

மதிப்புரை

உங்கள் கரங்களிலே தவழ்கின்ற ‘தத்தை விடு தூது’ தொடர் நவீனமாக வெளிவந்ததொரு படைப்பாகும். ஆயினும், வழக்கமான நவீனங்களிலிருந்து மாறுபட்டுள்ளது இப்படைப்பு. இதுபற்றி நன்கு விளங்கிக்கொள்வதற்கு இப்படைப்பின் ‘ரிஷிமூலம்’ பற்றி அறியவேண்டியது அவசியமென்று கருதுகின்றேன்.

தத்தை விடு தூது நவீனத்திலே ஆங்காங்கே செய்யுட்கள் இடம்பெறுவதனை அவதானிப்பீர்கள். அவை தத்தை விடு தூது என்ற பிரபந்தத்திலே இடம்பெற்றிருப்பவை. அப்பிரபந்தம் திருகோணமலை தி.த.சரவணமுத்துப் பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டு 1892இல் வெளியிடப்பட்டது. அவர் திருகோணமலை தந்த அறிஞர் தி.த.கனகசுந்தரம்பிள்ளையின் சகோதரர்@ மோகனாங்கி (1895) என்ற முதல் வரலாற்று நாவலை தமிழ் நாவல் உலகிற்கு வழங்கியவர். இவர்களது நெருங்கிய உறவினரே இப்படைப்பின் ஆசிரியையான திருமதி ந. பாலேஸ்வரி அவர்கள். (ந.பா.)

தத்தை விடு தூதுப் பிரபந்தச் செய்யுட்கள் விரவி வருமாறு ந.பா. இந்நவீனத்தை எழுதியமை உறவினர் என்பதனாலன்றி. அதற்கான காரணம்பற்றி அவரே குறிப்பிட்டுள்ளார்:-

“இந்நோக்கமெல்லாம் இந்த அரும்பெரும் காவியத்தை உலகம் படிக்கவேண்டும். ரசிக்கவேண்டும்

என்பதே. அதை வெறும் பாடலாகத் தந்தால் கவர்ச்சி இருக்காது என்ற நினைவில் இதைக்

கவர்ச்சியாகத் தர முயன்றேன்.”

இக்கூற்றின் பொருத்தப்பாடுபற்றிச் சிந்திப்பது பலனுடைய முயற்சியென்று எண்ணுகின்றேன். இதற்கு அனுசரணையாக, தமிழ்த் தூதுப் பிரபந்த மரபுபற்றிய ஒரு சில விடயங்களைப் பொது வாசகர்களுக்காகக் கூறவேண்டியுள்ளது.

தமிழிலுள்ள தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் தூதுப் பிரபந்தமும் ஒன்றாகும். (இன்றுள்ள இலக்கிய ஆய்வாளர் சிலர் இவ்வெண்ணிக்கைபற்றி ஐயமெழுப்புவர்.) “தலைவன் தலைவியர்களுள் ஒருவர் மற்றொருவர் பால் தமது காதலைப் புலப்படுத்தித் தமது கருத்திற்கு உடன்பட்டமைக்கு அறிகுறியாக மாலையை வாங்கிவருமாறு அன்னம், வண்டு, கிளி முதலியவற்றைத் தூது விடுவதாகக் கவிவெண்பாவால் இயற்றப்படுவதே” தூதுப் பிரபந்தமாகும். இத்தகைய இயல்புகள்கொண்ட தூதுப் பிரபந்தமானது தமிழ் இலக்கிய வரலாற்றின் வௌ;வேறு பட்ட கால ஓட்டத்திற்கேற்ப அவ்வப்போது மாற்றங்களையும் கண்டுகொள்கிறது. முதற் தூதுப் பிரபந்தமான (14ம் நூற்றாண்டு) நெஞ்சு விடு தூதுகூட (உமாபதி சிவாசாரியார்), சைவ சித்தாந்தப் பொருண்மை கொண்டதாக அமைந்துவிடுகின்றதன்றோ! இவ்வாறான தூதுப் பிரபந்த இலக்கிய மரபிலே ஒன்றாக ஈழத்திலே எழுந்தது. தத்தை விடு தூது. நோக்கிலும், போக்கிலும், அமைப்பிலும் முன்னைய தூதுப் பிரபந்தங்களிலிருந்து இப்பிரபந்தம் வேறுபட்டிருப்பதை தமிழ் இலக்கிய வரலாற்றாய்வாளர் அறிவர். ஆயினும், அதுபற்றி விரிவாக ஆராய்வதற்கு ஏற்ற இடம் இதுவன்று. எனினும், அத்தகைய ஒரு சில விடயங்களையாவது எடுத்துக்கூறுவது ந. பா. இவ்வாறான நவீனம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டதற்கான நோக்கம்பற்றித் தெளிந்துகொள்வதற்கு உதவுமெனலாம்.

“இந்த அரும்பெரும் காவியத்தை உலகம் படிக்க வேண்டும்@ ரசிக்கவேண்டும்” என்று ந.பா.கூறுவது ஏன் என்ற வினா எழுவது இயல்பே. இப்பிரபந்தம் பல்வேறு சிறப்பியல்புகளைப் பெற்றுள்ளது என்பதே அதற்குரிய விடையாகின்றது. அவை எவை?

காதலிலே தோல்வியுற்ற ‘தலைவன்’ ஒருவனது மனஉணர்வுகளி; வடிகாலாக வெளிப்படுவதே தத்தை விடு தூதுப் பிரபந்தம. தலைவன் தத்தைக்கு எடுத்துரைப்பனவற்றினூடாக அவனது காதலின் ஆழம், ஏக்கம், பாசம், ஏமாற்றம், வேதனை, குமுறல் என்பன நுணுக்கமான விதத்திலும், நளினமான முறையிலும் வெளியாகின்றன. அத்தகு செய்யுட்களை நீங்கள் வாசிக்கும்போது அவற்றிலே லயித்துவிடுவீர்களென்பது உண்மை. அவ்வாறாயின், புலவரது ‘தான் கலந்து’ பாடும் தன்மையே அதற்குக் காரணமாகின்றது. கவித்துவப் பண்பு வாய்ந்த இத்தகைய செய்யுட்கள் இடம்பெற்றிருப்பது பிரபந்தத்தின் சிறப்பியல்புகளுள் ஒன்றாகின்றது.

புலவர் ‘தான் கலந்து’ பாடியதற்குப் பிறிதொரு காரணத்தையும் கூற முடியும். “இவர் ஒரு பெண்ணைக் காதலித்து அதிற் தோல்வியுற்றதால் அப்பெண்ணிற்குத் தூது விடுவதுபோன்று இப்பாடல்களை இயற்றினாராம்” இக் கதை உண்மையாயின், புலவரது செய்யுட்களிலே மேற்கூறிய பண்பு அமைந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தாது@ யதார்த்த தளத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்த காதற் பிரபந்தம் என்ற சிறப்பினையும் பெற்றுவிடும்.

‘காதலிற் தோல்வி’, ஈழத்து இலக்கிய உலகிற்கு ஒரு விதத்திலே நன்மையாகிவிட்டதென்றே கூறவேண்டும். ஏனெனில், பெண் விடுதலைபற்றிய சிந்தனையின் ஊற்று ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிலே தத்தைவிடு தூதுப் பிரபந்தத்திலிருந்தே ஆரம்பிக்கின்றதெனலாம். இப்பிரபந்தம் வெளிவருவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே (முதற் தமிழ் நாவலாசிரியரான) மாயூரம் வேதநாயகம்பிள்ளை ‘பெண்மணி மாலை’ இயற்றுகின்றார். (1869). பாரதி பெண் விடுதலைபற்றி முழங்க இன்னும் சில ஆண்டுகள் வேண்டியிருந்தன. இத்தகையோர் வரிசையில் - இப்பின்னணியில் - ஈழத்தவரான சரவணமுத்துப்பிள்ளையும் முக்கிய இடம்பெறுகின்றார். பெண் விடுதலைபற்றிப் பேசமுற்படும் முதற்தமிழ்ப் பிரபந்தம் என்ற சிறப்பினைப் பெற்றுவிடுகின்றது தத்தைவிடு தூது.

இன்னொரு முக்கிய விடயமும் இவ்விடத்தில் எனக்கு நினைவுக்கு வருகின்றது. பெண் விடுதலைபற்றிய சிந்தனை நீண்டகாலமாகத் திருக்கோணமலை மண்ணிலே சுவறி வந்துள்ளது என்பதே அதுவாகும். எமது இலக்கியச் சகோதரர் இருவரதும் உறவினரான திருமதி. தையல்நாயகி சுப்பிரமணியம் என்பவர் ‘திருக்கோணமலை மாதர் ஐக்கிய சங்கம்’ என ஒன்றினை ஏறத்தாழ இருபதுகள் அளவில் நிறுவி, அதன் காரியதரிசியாக விளங்கி பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக, பல இடர்கள் மத்தியிலும் நற்பணிகள் புரிந்துவந்துள்ளார். ‘மாதர் மதி மாலிகை’ (1927) என்றொரு பெண்கள் சஞ்சிகையையும் ஆரம்பித்து தொடர்ந்து சிலவாண்டுகள் வெளியிட்டுவந்துள்ளார். இத்தகைய பணிகளின் அறுவடையினை – எதிரொலியினை – ந. பா.வின் முயற்சிகளிலும் இன்று இனங்காணமுடிகின்றது@ தத்தைவிடு தூதிலும் கண்டுகொள்ளமுடிகின்றது.

தத்தைவிடு தூதுப் பிரபந்தத்தின் சில செய்யுட்கள் “காதலித்த பெண்ணின் பரம்பரைக்கு வசை பாடியிருப்பது போல் தொனிப்பதால்” ந.பா.அவ்வசையை நீக்கும் நோக்குடன் நவீனத்தின் ஈற்றில் சில பாடல்களை இயற்றிச் சேர்த்துள்ளார். தாம் இயற்றிய கடவுள் வணக்கத்திலும் சிந்தனைக்குரிய சில வினாக்களை எழுப்பியுள்ளார். இத்தகு முயற்சிகள் வியப்புக்குரியனவல்ல. ஏனெனில், திருக்கோணமலை மண்ணின் வளம் அத்தகையதல்லவா?

ந.பா. மேற்கூறிய தமிழ் இலக்கிய குடும்பப் பாரம்பரியத்திலே வந்தவராதலாலும், சாதாரண வாசகரை ஈர்க்கக்கூடிய விதத்திலே சுவையாக நாவல்களை எழுதுவதில் கைதேர்ந்தவராதலாலும், புலவரின் நெருங்கிய உறவினராதலாலும் (சரவணமுத்துப்பிள்ளை போன்றே) தத்தை விடுதூது நவீனத்தையும் ‘தான் கலந்து’ எழுத முயன்றிருக்கின்றார். அம்முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கின்றார். அவ்வாறே, செய்யுட்களின் பொருளை நன்கு கிரகித்துக்கொண்டு அநாயாசமான முறையிலே அவற்றை விபரித்துச் செல்வதையும் அவதானிக்க முடிகின்றது.

தத்தைவிடு தூது நவீனத்திலே சிற்சில குறைபாடுகள் காணப்படுமாயின் அவை தவிர்க்கவியலாதவை என்பேன். அவற்றிற்கு ‘வழுவமைதி’யுண்டு. செய்யுட்கள் ஆங்காங்கு இடம்பெறுவது நாவலின் தங்குதடையற்ற ஓட்டத்திற்கு குந்தகம் ஏற்படுத்துவது உண்மை. எனின், ந.பா. வின் நோக்கம், தந்தைவிடுதூதுப் பிரபந்தத்தை பலரும் படிக்கச் செய்வதல்லவா? சரவணனின் மன உணர்வுகள் வெளிப்படுத்துவதுபோல், சிவகாமியின் மன உணர்வுகள் வெளிப்படுத்தப்படவில்லை என்று ஒருசிலர் கூறலாம். நவீனத்தின் வடிவம் கச்சிதமாக அமையவில்லை என்றும் சிலர் கருதலாம். அவ்வாறெனில், தத்தைவிடு தூதுப் பிரபந்தத்தை அடியொற்றி அத்தடத்திலேயே இந்நவீனம் அமைகின்றது என்பதனை அத்தகையோர் மறுபடியும் நினைவுகூரவேண்டியதுதான்.

இறுதியாக ஒன்று@ தத்தைவிடு தூதுப் பிரபந்தத்தைக் கவர்ச்சிகரமான முறையிலே இவ்வாறு தந்துள்ளதாக ந.பா. குறிப்பிட்டுள்ளார் அல்லவா? எமது இக்கால வாசகரை மனதில் கொண்டே இவ்வாறு கூறியிருக்கவேண்டும். மூலை முடுக்கெல்லாம் தினந்தோறும் உதயமாகிக்கொண்டிருக்கும் வீடியோ நிலையங்களையும், பட்டுக்கோட்டைப் பிரபாகர், ராஜேஸ்குமார் முதலானோரை விற்றுத் தள்ளும் புத்தகக் கடைகளையும் மொய்த்துக்கொள்ளும் இன்றைய வாசகர் கூட்டம் - பெரும்பாலான மாணவர்களும், ஆசிரியருமுட்பட - இத்தகைய செய்யுள் நூல்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்களென்பதில் சந்தேகத்திற்கிடமில்லை இவ்வாறான ஆரோக்கியமற்ற பின்னணியில் இத்தகைய ஒரு விதத்தில், பரிசோதனை ரீதியிலான – முயற்சி பெரிதும் வரவேற்கத்தக்கது@ பாராட்டப்படவேண்டியது. இம்முயற்சிக்கு வாசகராகிய உங்களது பேராதரவு கிடைக்குமென்றே நம்புகின்றேன்.

செ. யோகராசா, எம்.ஏ

மொழித்துறை,

கிழக்குப் பல்கலைக் கழகம்,

மட்டக்களப்பு.

1992-06-23

அன்பார்ந்த வாசக நேயர்களே.

திருக்கோணமலையைப் பிறப்பிடமாகக்கொண்ட திரு.தி.த. கனகசுந்தரம்பிள்ளை, திரு. தி.த. சரவணமுத்துப் பிள்ளையாகிய இரு சகோதரர்களும் ஈழத்துப் புலவர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளார்கள். இவர்களில் திரு. தி.த. சரவணமுத்துப்பிள்ளை ‘மோகனாங்கி’ என்ற முதற் தமிழ் நாவலையும் ‘தத்தைவிடுதூது’ முத்துக்குமாரசாமி ‘இரட்டைமணிமாலை’ போன்ற பல கவிதைகளையும் எழுதியுள்ளார். இவற்றில் தத்தைவிடுதூது என்ற கவிதைத் தொகுதி தமிழ்நாட்டில் லிப்பன் அச்சியந்திரசாலையில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் வெளியாகியது.

மோகனாங்கி என்ற இரவது நாவல் 1919ம் ஆண்டு தமிழ்நாட்டில் வெளியாகிக் கணிசமான வரவேற்பைப் பெற்று இதன் சுருக்கம் அதே ஆண்டு சொக்கநாதநாயக்கர் என்ற பெயரில் சென்னையில் பாட நூலாகப் பிரசுரிக்கப்பட்டது.

தத்தைவிடுதூது என்ற கவிதை நூல் சிறந்த கவிதைகளை உள்ளடக்கியுள்ளன.

இக்கவிதையின் பின்னணி காதல். ஆம். திரு.தி.த. சரவணமுத்து திருகோணமலையைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து தோல்வியுற்றதால் மனம் நொந்து தத்தையை (கிளி) தூது விடுவதுபோல் இந்நூலை இயற்றியுள்ளார்.

அவரது நெருங்கிய உறவினரான எனக்கு இந்தப் பாடல்களின் வரலாறு தெரிந்தபடியால் இக்கவிதைகளை ஆதாரமாகவைத்து ஒரு தொடர் கதைபோல் இடையே அவரது பாடல்களை அமைத்து இந்நூலை ஆக்கியுள்ளேன்.

எனது நோக்கம் இந்த அரிய பாடல்களை நீங்களும் பார்த்து சுவைக்க வேண்டும். அத்துடன் பாடல்களில் பிறப்பதற்கான பின்னணியை நீங்கள் அறியவேண்டாத ஒன்றை அறியவேண்டும் என்பதே.

குறிப்பு:

இக்காவியத்தைப் படித்துச் சுவைக்கப்போகும் நேயர்களுக்கு என் நன்றி.

காதல் தோல்வியுற்றமையாற் பாடப்பட்ட இக்கவிதைகளில் சில காதலித்த கன்னியவள் பரம்பரைக்கு வசைபாடுவதுபோல் அமைந்துள்ளதால் அதே பரம்பரையைச் சேர்ந்த நான் அதற்குப் பிராயச்சித்தமாக ஒரு சில பாடல்களை இயற்றித் தந்துள்ளேன். இவற்றையும் தயவுசெய்து படிக்கும்படி உங்களை வேண்டுகிறேன்.

வாழ்த்துப் பா

ஐந்து முக விநாயகனே

ஆறுதல் அளிக்கும் கணபதியே

உங்களிடம் கேட்கும்

வரம் தந்தருளும் ஐங்கரனே.

மங்கை என் செய்வாள்

இந் - நிகழ்வின் காலமதைக்

கருத்திற் கொண்டால்

கால் விலங்கு பூட்டப்பட்டிருந்திருப்பான்

வாயாடியாய் மாறி வசைமாரி பொழிந்த நீர்

போராடிப் பெண்ணவளுக்கு

பொற்றாலி பூண்டிருக்கலாம்.

புலவர் சரவணமுத்துப் பிள்ளை

தாம் காதலித்த கன்னி

அவள் கரம் பற்றும்

வாய்ப்பை இழந்து துயருறும்

உம் மனம் எமக்கும் புரிகிறது

உம் நிலைக்காக கவல்கின்றோம்.

முதற் தமிழ் நாவல் மோகனாங்கியை

ஈழத்துக்களித்தோய் நன்றி பல உமக்கு

காதலிற் தோல்வியுற்று அதன்

பயனாய் அருமைக் கவி படைத்தாய்

காதலித்த கன்னியவள் வாரிசுகள்

வாழக்கூடாது என்று

கவி பாடியதும் தகுமோ?

உமது உயர்ந்த காதலின்

தாக்கமதனால் ஏற்பட்ட

உணர்ச்சிக் கவிதையாய் இருந்தும்

வருங்கால சந்ததியை

வாழாமற் பாடுவதும் அழகோ?

மூதறிஞர் தமக்குத்தான் தகுமோ?

உம்முடைய பரம்பரையின்

வாரிசாக இறையருளால்

தமிழ் எழுத்துலகில் நிலையாக

ஓரிடம் பெற்றுள்ள நான்

நீர் செய்த தவற்றிற்குப்

பிராயச்சித்தமாக இக்கவிதை பாடி

வாழ்த்துகிறேன் கன்னியவள்

பரம்பரை தழைத்தோங்க என.

சீர்மேவு விநாயகனே

கோணயம் பதியில் உதித்த

சிவகாமி முத்துக்குமரன்

வழிவந்த வாரிசுகள்

வாழையடி வாழையாய்

சீரும் சிறப்பும் பெற்று

என்றென்றும் நிலைபெற்று

நிம்மதியாய் நீடுழி வாழ்க!

1

ஆகாயத்தின் அழகை நிமிர்ந்து பார்த்தான். பூமியைப் பார்த்தான். ஆனால் அவன் கண்களுக்கு எதுவுமே புலப்படாத சூன்யந்தான் தோற்றமளித்தது. உலகமே அஸ்தமித்துவிட்டது போன்ற பிரமையில் அடர்ந்து செழித்து வளர்ந்திருந்த தேமாமரத்தின் அடியில் அடர்ந்து விண்வெளியையே பார்த்துக்கொண்டிருக்கிறான் சரவணன். சில நாட்களுக்கு முன்பாக இருந்திருந்தால் இந்தத் தேமாமரம் அவனுக்குக் கதை கதையாகக் கூறியிருக்கும். ஆனால் இன்று… ஆமாம்! இன்று அந்தத் தேமாமரம் கூடப் பேசாமடந்தையாகிவிட்டதுபோற் காட்சியளித்தது அவனுக்கு.

தமிழ்… தமிழ்… சரவணா சாப்பிட்டா… எத்தனை நாளைக்குத்தான் இப்படிச் சாப்பிடாமல் உன் உடலை வருத்தப்போகிறாய். அந்தப் பெண்ணையே தினம் தினம் நினைத்துக் கவலைப்படுவதால் அவள் வந்துவிடவா போகிறாள். அவள் இல்லாவிட்டால் இந்த உலகத்தில் உனக்கு வேறு பெண்ணே கிடைக்காமலா போய்விடுவாள். உன்னைப்போன்ற அழகனுக்குச் சுண்டிச் சுண்டிப் பெண் எடுக்கலாம். ம். எழுந்திருடா ராஜா! தகப்பன் மகனிடம் கெஞ்சுவதையும், அவன் நடைப்பிணமாக உட்கார்ந்திருப்பதையும் பார்த்த எவரும் கண்ணீர் வடிக்காமல் இருக்கவே முடியாது. அத்தனை உருக்கமாகவும், சோகமாகவும் இருந்தது அந்தக் காட்சி.

“டேய் கனகு… நீயும்கூட ஏன் பட்டினி கிடந்து சாகிறாய்? அவன்தான் சிவகாமியை நினைத்து நினைத்துக் கண்ணீர் வடிக்கிறான். இரண்டு பேருமே தேவலைத்தான். தம்பிக்குப் புத்தி சொல்லிச் சாப்பிட வைக்கிறதை விட்டுப் போட்டுப் பெண்பிள்ளை மாதிரி நீயும் அழலாமாடா? எழுந்திரு. தம்பியையும் கூட்டிப்போய்ச் சாப்பிடு.” தம்பி முத்துப்பிள்ளையின் கண்கள் மூத்த மகன் கனகசுந்தரத்தை நோக்குகின்றன.

சரவணமுத்துவைவிட இரண்டு, மூன்று வயது பெரியவன்தான் கனகசுந்தரம். ஆறு மாதங்களுக்கு முன்புதான் அவனுக்கும் விவாகப்பதிவு ஆகியிருந்தது. சிவகாமிக்கும், சரவணனுக்கும் விவாகப் பதிவைச் செய்துவிட்டு ஒரே மணவறையில் இருவரின் திருமணத்தையும் நடத்தவேண்டும் என்றுதான் திட்டம் போட்டிருந்தார் தம்பிமுத்துப் பிள்ளை.

‘சாப்பாடாம் சாப்பாடு! ஆருக்கு வேண்டுமாம். இப்போது சாப்பாடு…! பசிக்குதென்று சாப்பிட்டாப்போல அது உடல்ல ஒட்டிக்கொள்வா போகிறது. அப்பப்பா இந்த வயதுபோனவர்களுக்கு இதெல்லாம் புரியவா போகிறது. ஒருவேளை இவர்கள் திருமணஞ் செய்து, குழந்தைகுட்டி பெற்று அனுபவப்பட்டு விடுவதால் மற்றவர்களின் மனவேதனை புரிவதில்லையாக்கும். அண்ணன் பாவம் அவன் வாழ்க்கையை இன்னும் அனுபவிக்கத் தொடங்காததால் என் வேதனையை உணர்கிறான். அப்பாவுக்குக் காதலைப்பற்றி என்ன தெரியப்போகிறது. சிவகாமியின் காதலைப் பெறுவதற்கு நான் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எனக்குத்தானே தெரியும். அவளைத் தனிமையிற் சந்திக்க நான் எடுத்த முயற்சிகள்…? அவளைச் சந்திக்க அவள் வீட்டுக்கு எத்தனை முறை போயிருப்பேன். என்னைக் கண்டதும் அவள் அடையும் மகிழ்ச்சி…!

கைநிறைய வேலையிருந்தாலுங்கூட அதையெல்லாம் அப்படியே போட்டுவிட்டு என்னுடன் பேசி மகிழ அவள் துடிக்கும் துடிப்பு! வேண்டுமென்றே நான் சிறிது தாமதமாகிச் சென்றால் அவள் அடையும் ஆத்திரம். அவளுக்கு என்மீது அத்தனை அன்பு! ஏன் அப்பாகூடத்தான் பார்த்துக்கொண்டிருப்பாரே. எனக்காகத்தான் சிவகாமி பிறந்துள்ளாள் என்பது ஊரறிந்த செய்தியாச்சே. நாங்கள் இருவரும் மணிக்கணக்காகப் பேசிச் சிரிப்போம். நேரம் போவதே தெரியாது. ‘சிவகாமி பசிக்குது’ என்று அவள் அப்பா குரல் கொடுத்தபின்புதர் பிறிதோர் உலகமும் உண்டு என்பதை நாம் அறிவோம். சரவணா, நீ நன்றாகப் படிக்கவேண்டும். படித்த முன்னேறினாற்தான் சிவகாமிக்கு உன்னால் சோறுபோட முடியும் என்பார் அவர் என்னைப் பார்த்து. அந்த ஒரு வசனம் என்னைப் பொறுப்புள்ள மனிதனாக்கிவிடும். நான் ஓட்டமும் நடையுமாகச் சென்று வீட்டில் படிக்க ஆரம்பிப்பேன்.

இப்படியெல்லாம் எங்கள் காதல் வளர உறுதுணையாக இருந்த அவள் அப்பா இராஜவரோதயம் ஏன் இப்படி மாறினார். என்னிடம் திடீர் என என்ன குறையைக் கண்டுவிட்டார். அவர் மகள் சிவகாமிக்கு நான்தான் தக்க மணாளன் என்பதை எப்படி மறந்தார்? கொடுத்த வாக்கை மீறுவது அவர்போன்ற பெரியவர்களுக்கு நல்லதா? இதுதான் நீதியா? அப்படியாயின் தர்மம் எங்கே? காத்திருந்தவன் பெண்ணை நேற்று வந்தவன் கொண்டுபோன கதையாகவா என் கதையும் முடியவேண்டும்? கடவுளே எனக்கு என் சிவகாமியை கொடுத்துவிடு. அல்லது நான் இப்படி அழுதழுதே இறந்துவிடுவேன்.

சிவகாமி! கடைசியில் நீ கூடவா என்னை மறந்துவிட்டாய்! சிறு பிராயத்தில் உன் வீட்டு முன்றிலில் என்னோடு கைகோர்த்து விளையாடியதைக் கூடவா மறந்துவிட்டாய்? இவற்றையெல்லாம் எடுத்து உன் அப்பாவிடம் சொல். அவர் மனதை மாற்றிவிடு சிவகாமி.

தனக்குள்ளாகவே பொருமிய சரவணன் மீண்டுந் தலை நிமிர்த்தித் தேமாமரத்தைப் பார்க்கிறான். அங்கே ஒரு பசுங்கிளி சிறகடித்து மரக்கிளையொன்றில் அமர்ந்திருக்கிறது. அதைப் பார்த்த அவன் உள்ளத்தில் எழுந்த கற்பனை காவியமாக உருவெடுக்கிறது.

தேனோங்கு பூம்பொதும்பர்ச்

செறிந்து பசுந் தழைபரப்பி

வானோங்கு தேமாவில்

வாழுமிளம் பைங்கிளியே

நானேங்கு மைவிழியென்

வஞ்சியிடைப் பைந்தொடிபால்

நானீங்கு புகலுமொழி

நற்கிளியே கூறாயே

நங்கையவள் பாற்சென்று

நலம் பெற நீ கூறாயே.

சரவணனின் கண்களில் அவனையறியாமலே நீர் சுரக்கிறது. மனம் நிறைந்த வேதனை. அற்புதமான கவிதைகள் எல்லாம் துன்பத்தின் மத்தியிற்தான் உதயமாகி இருக்கவேண்டும் என்ற நினைவில் அந்தக் கிளியைப் பார்த்துப் பன்முறை தன் கவிதையைப் பாட விடுகிறான். அவன் பாடுவதைக் கேட்ட கிளி தன் கொண்டையைச் சிலுப்பிவிட்டு சிறிது ஒய்யாரமாக அமர்ந்துகொள்கிறது. அதைப் பார்த்த சரவணனின் மனக்கண்ணில் சிவகாமி தோன்றுகிறாள்.

இந்து நுதற் சந்தவளைச்

சுந்தரியென் னின்னுயிர்பாற்

சந்து நடந்திளங்கிளியே

தமியேன் சொற் கூறுதியால்

முந்திருவ ருஞ்சிறியேம்

முன்றிலிலா டுங்காலந்

தந்தை மொழிந்திட்டதனைத்

தவறுவதேன வினவுதியால்

தானு மெனை மறந்தனளோ

தத்தா அய் வினவுதியால்

சிவகாமியின் பெற்றோர் சரவணனுக்குப் பெண் தர மறுத்தபோது அவன் தந்தை தம்பிமுத்துப்பிள்ளை அவர்களிடங் கேட்ட கேள்விகளெல்லாம் அவனுக்கு ஞாபகம் வருகின்றன. தான் கொடுத்த வாக்கை அவர் மறந்துவிட்டதாகக் கூறலாம். ஆனால் சிவகாமிகூட மறந்துவிட்டதாக நடித்தால்… அன்று அவன் மனதில் எழுந்த நினைவுகள் அந்தத் தந்தையை மையமாக வைத்து அவனைப் பாடிவிடத் தூண்டிவிடுகின்றன. இயற்கையாகவே கவி புனைவதில் அவனுக்கு ஒரு தனியார்வம்.

சின்ன வயதில் பாடப்புத்தகங்களில் வரும் கவிதைகளைப் படித்துவிட்டு அவற்றுடன் ஒன்றியேவிடுவான் சரவணன். அவற்றின் இனிமையை நுகரும்போது தானும் அவைபோன்ற கவிதை புனையவேண்டும் என்று ஆசைப்படுவான். அப்படி ஆசை எழும்போது தன் கற்பலகையில் எதையாவது கிறுக்கிவிட்டுத் தன் தாயாரிடம் காட்டுவான். அவள் அதைப் படித்துவிட்டு நம்ம சரவணன் பிற்காலத்தில் ஒரு சிறந்த கவிஞனாகப் போகிறான் என்று தன் கணவனிடங் கூறிச் சிரித்துக்கொள்ளும்போது அவனுக்குப் பெருமையாக இருக்கும். ஆயின் இதுவரை அப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என்று கூறலாமா?

அப்படியும் இருக்கலாம்! ஆயினும் இது அவனுக்கு திருப்தி அளிக்கவில்லை. போயும் போயும் இப்படியொரு சோதனையிற்தானா கவிதை பிறக்கவேண்டும்?

2

கவிதை பிறந்த பிற்பாடுங்கூட சரவணனின் துன்பம் ஒழிந்தபாடாக இல்லை. மல்லிகை, சண்பகம், கோங்கு, மந்தாரை, வெட்சி மலர்களுடன்கூடிய புல்பூண்டுகள் நிறைந்த தோட்டம் அவன் கண்ணுக்கு விருந்தாகியுளது. அந்தத் தோட்டத்திலே அவன் சகோதரன் கனகசுந்தரமும், அவனும், சிவகாமியும் கூடி விளையாடியதும், பந்தடித்ததும் அவன் நினைவுக்கு வருகின்றன. சிவகாமி பந்தைக் கனகசுந்தரத்திற்கு ஏறிவதுபோற் பாவனை செய்துவிழட்டு தனக்கு எறிவதும், அதனால் கனகசுந்தரம் சிவகாமியைக் குட்டுவதற்காகத் துரத்துவதும், அவள் ஓடி ஒளிந்துகொள்வதும் திரும்பி அதுவே ஒரு புதுவித விளையாட்டாக மாறிவிடுவதையும் நினைத்தபோது அவனுக்குச் சிரிப்பாக இருந்தது.

கனகசுந்தரம் அனேகதாகத் தனித்துத்தான் விளையாடுவான். சரவணனும் சிவகாமியும் வற்புறுத்தினால் மட்டும் சேர்ந்துகொள்வான். மற்ற வேளைகளில் சரவணனும் சிவகாமியும் தனித்தே விளையாடுவார்கள். அதுதான் அவர்களுக்குப் பிடிக்கும். அப்பா, அம்மா, விளையாட்டு, சின்னச் சோறு கறி சமைத்தல், இடையில் கனகசுந்தரம் புகுந்து ஏதாவது, குழப்பத்தை உண்டு பண்ணிவிடுவான். அவர்கள் கட்டும் வீட்டை உடைத்தோ, சோறுகறியைத் தின்றோ, பொம்மைகளைத் திருடியோ சரவணனின் ஆத்திரத்தைக் கிளப்பிவிடுவான். அவன் அழுதுகொண்டே சென்று தன் தாயிடம் முறையிடுவான். தாய் அவனை அணைத்துச் சமாதானஞ் செய்து, கனகா நீ ஏன் போய் அவர்கள் விளையாட்டைக் குழப்புகிறாய். பிற்கால வாழ்க்கைக்கு அவர்கள் இப்பவே ஒத்திகை பார்க்கிறார்கள் என்று கூறிச் சிரிப்பாள்.

சிலவேளைகளில் மல்லிகைச் செடி நிறைய மலர்ந்திருக்கும். கனகசுந்தரம் அவற்றைப் பொறுக்கி எடுத்துத் தன் தாயாரிடங் கொடுப்பான். அவள் அதை அழகான மாலைகட்டி சிவகாமி அங்கு வரும்பொது அவள் தலையிற் சூடிவிடுவாள். சரவணனுக்கும் அப்படிச் செய்யவேண்டும்போற் தோன்றும். தானும் பூக்களைப் பறித்து தனக்குத் தெரிந்த மாதிரி ஒரு மாலைகட்டி அதைச் சிவகாமியிடம் ஆசையோடு கொண்டுபோய்க் கொடுப்பான். சிறுவர்கள்தானே! விபரம் தெரியாத வயது. அவன் எவ்வளவு ஆசையோடு அதைக்கொடுப்பானோ அவ்வளவு நிஷ்டூரத்தோடு அவள் அதன் மதிப்பை இகழ்வாள். அத்துடன் நில்லாது அதை அவன் மொட்டத் தலையிலேயே சூடவும் முற்படுவாள். அப்போது அந்த மலர்கள் எல்லாம் உதிர்ந்து பூமியிற் சிதறும். அதைப் பார்த்த கனகசுந்தரம் கைகொட்டிச் சிரிப்பான். சரவணனுக்கு அழவேண்டும்போல் இருக்கும். அவன் ஓடிச்சென்று தன் தாயிடம் முறையிடுவான். அவள் அங்கிருந்தபடியே, கனகா, தம்பியைக் கேலி செய்யாதே என்று குரல் கொடுப்பாள். அத்துடன் அவன் கோபந் தணிந்துவிடும்.

அந்த இனிய நினைவுகள் நிறைந்த தோட்டம் அவன் மனதில் ஒரு கவிதையைப் பிறக்கச் செய்துவிடுகிறது. அவன் வாய்விட்டே அதைப் பாடுகிறான்.

மல்லிகை சண்பகங் கோங்கு

மந்தாரை வெட்சியுடன்

புல்லினமும் பலவளரும்

பூமிபொழி லிலக்காலம்

மெல்ல மெல்ல பந்து கொடு

விளையாடும் காலவாடாய்

சொல்லியதும் மறந்தனளோ

சுகமே வினவுதியால்

தோகையெனைத் துறந்தனளோ

சுகமே வினவுதியால்.

திடீர் என ஏதோ நினைத்துக்கொண்ட சரவணன் தன் வீட்டின் அடிவளவில் இருக்கும் ஈரப்பலா மர நிழலிற் சென்று அமர்ந்துகொள்கிறான். அகன்று வானோங்கி வளர்ந்திருந்த அம்மர நிழல் குளிர்ச்சியாக இருந்தது. அவன் மனதுக்கும் சிறிது இதமாக இருந்தது. பக்கத்திலிருந்து மல்லிகை, செம்பக மரங்களிலிருந்து நறுமணம் வீசிக்கொண்டிருந்தது. உடனே பழைய நினைவுகள் அவன் மனதில் மீட்கப்படுகின்றன. எப்போதோ ஒருநாள் சிவகாமி பொறுக்கி எடுத்த பூக்களையெல்லாம் சரவணன் விளையாட்டாகக் கீழே தட்டிவிடுகிறான். அதைத் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த கனகசுந்தரம் அவ்விடத்திற்கு வந்து சரவணனை அடிக்கக் கையோங்கும்பொது அவனைத் தடுத்து நிறுத்திவிடுகிறாள் சிவகாமி. அப்போது அவன் அவனை நன்றிப் பெருக்கோடு பார்க்கிறான். உடனே கீழே சிதறிய மலர்களை எல்லாம் ஒன்று சேர்த்து மாலையாக்கி அவள் எதிர்பாராதவிதமாக அவள் கழுத்தில் அணிந்துவிடுகிறான். சிவகாமியும் மல்லிகைச் செடியின் ஒரு துண்டைப் பிய்த்து அவன் கழுத்தில் மாலையாக அணிந்துவிடுகிறாள். அப்போது இருவரும் கைகொட்டிச் சிரித்த சத்தங்கேட்டு சரவணனின் தாயாகிய வள்ளியம்மையே அங்கு வந்துவிடுகிறாள்.

குழந்தைகள் இருவரையும் அளவு கடந்த மகிழ்ச்சியுடன் அணைத்துக்கொண்டு டேய் கனகா… உன்ர தம்பி மாப்பிள்ளைக் கோலத்தில் இருக்கிறான். கெட்டி மேளங் கொட்டடா என்று மகிழ்ச்சிமேலிட்டாற் கூற, ஏதோ செய்து கொண்டிருந்த கனகசுந்தரம் ஓடோடி வந்து பக்கத்துப் பூவரசமரத்தில் ஒரு இலையைப் பிய்த்து குழல் செய்து ஊதிக்கொண்டே இரண்டு கையாலும் ஒரு தகரத்தில் அடித்து மேளங் கொட்டினான். எங்கோ போய்விட்டு அப்போதுதான் திரும்பிவந்துகொண்டிருந்த தம்பிமுத்துப் பிள்ளை இந்தக் காட்சியைக் கண்டு அப்படியே சொக்கிப் போய் நின்றுவிட்டார்.

“அப்பா, மாப்பிள்ளையையும், பெண்ணையும் ஆசீர்வாதம் பண்ணுங்கப்பா” என்று கனகசுந்தரம் வேடிக்கையாகக் கூற, அவர்கள் இருவரையும் கணவனிடம் அழைத்து வந்தாள் வள்ளியம்மை. போக்கிரிக் குட்டிகள் என்நு செல்லமாகக் கூறிவிட்டு இருவரையும் இரண்டுபக்க இடுப்பிலும் தூக்கிவைத்துக்கொண்டார் தம்பிமுத்து. பெண்ணும் மாப்பிள்ளையும் பல்லக்கில் போறாங்க அம்மோவ்! என்று பலமாகக் குரல் கொடுத்தான் கனகசுந்தரம். சரவணனின் கண்களில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. இளமைப் பருவத்து எந்த நிகழ்ச்சியை மறந்தாலுங்கூட இதை மறக்க முடியுமா? அல்லது இது மறக்கக்கூடிய ஒன்றா? அவன் ஒரு ஆண் மகனாக இருந்தும் அவனால் இந்த சம்பவத்தை மறக்கமுடியவில்லையானால் ஒரு பெண்ணாக இருக்கும் அவளால் இவற்றையெல்லாம் எளிதில் - எப்படி மறக்க முடிந்ததோ? இந்த இனிய நினைவுகள் அவள் உள்ளத்தில் பசுமையாக இருக்குமாக இருந்தால் முத்துக்குமாரனை மணக்க அவள் ஒருபோதுஞ் சம்மதித்திருக்கமாட்டாள். சம்மதித்திருக்கவும் முடியாது. இன்னும் சின்னாளில் அவள் திருமணஞ் செய்துகொள்ளப்போகிறாளே. அப்படியாயின் அவளது பூரண சம்மதமின்றி இந்தத் திருமணம் எப்படி நிறைவேற முடியும்? இதிலிருந்து அவன் கண்கள் கலங்கின. தன் சோகத்தை யாரிடமாவது எடுத்துக்கூறினாற்தான் நிம்மதியேற்படும் என்ற எண்ணம் உண்டாக அவன் அந்த மரக்கிளையை உற்றுநோக்குகிறான். அந்தக் கிளை அவனையே பார்த்துக்கொண்டிருப்பதுபோன்ற பிரமை ஏற்படுகின்றது. உடனே தன் துன்பத்தை அந்தப் பறவையிடஞ் சொல்லி மனம் ஆறுகிறான்

தீம் பலவி னீழலின்கட்

டெரிவையவட் கியானறியேன்

ஆம்பள்மலர் மாலை

யணிந்தேன் மகிழ்ந்தனளால்

சாம்பொழுதும் யான் மறவேன்

தையலவளிக்காலம்

வீம்பான் மறந்தனளோ

வினவாய் பசுங்கிளியே

வீணே புலம் புவதென்

விதியோ பசுங்கிளியே.

சிவகாமி! எனது உடல் இந்த மண்ணோடு மண்ணாகும்வரை என்னால் உன்னை மறக்கமுடியாது. என்றெல்லாம் எண்ணி எண்ணி ஏங்குகிறது அவன் உள்ளம்.

3

சிவகாமியின் அன்பு முகத்தைப் பார்க்க முடியாமல் சரவணமுத்து தடைசெய்யப்பட்ட நாள் அவன் மனதிலே இன்னும் பசுமையாக இருக்கிறது. அப்போது சரவணனுக்கு பதினான்கு வயதிருக்கலாம். அவன் ஏதோ படித்துக் கொண்டிருந்தான். சிவகாமி பருவமடைந்துவிட்ட செய்தியை யாரோ தம்பிமுத்துப்பிள்ளையின் காதோடு காதாகக் கூறிவிட்டுச் செல்கின்றனர். சில நிமிடங் கழித்து அதே செய்தியை சிவகாமியின் அப்பாவே நேரடியாக வந்து தம்பி முத்துப்பிள்ளையிடம் நேரடியாகக் கூறிவிட்டுச் செல்கின்றார். தம்பிமுத்துப்பிள்ளைக்கு உள்ளங்கொள்ளாத மகிழ்ச்சி. என்ன செய்வதென்று தெரியாத நிலையில் அவர் திக்கு முக்காடிப்போய் விடுகிறார். ஆயினும் அவர் உள் மனதில் இதுகால வரை நீறுபூத்த நெருப்புப்போல் இருந்த ஏதோ ஒரு துன்பம் மறைந்திருந்த இடத்திலிருந்து வெளிப்பட்டு அவரை வாட்டுகிறது.

ஆமாம்! கடந்த வருடம் திடீர் எனக் காலன் கைப்பட்டு அவரைவிட்டுப் பிரிந்த அவர் மனைவி வள்ளியம்மையின் ஞாபகம் அவருக்கு வந்துவிடுகிறது. அவள் இறப்பதற்கு இரண்டு மூன்று மாதங்கள் முன்கூட்டியே இதை எதிர்பார்த்திருந்தாள். ஆனால் இந்த மங்களகரமான நிகழ்ச்சியில் பங்குகொள்ள அவளுக்குக் கொடுத்த வைக்காமற் போய்விட்டது.

இந்த நிகழ்ச்சியைப்பற்றி அவள் பற்பல மனக்கோட்டைகள் கூடக் கட்டி எழுப்பியிருந்தாள். தன் வருங்கால மருமகள் என்ற கோதாவில் சிவகாமிக்குக் கொடுப்பதற்கென்று தனது விலையுயர்ந்த முத்து மாலையைக்கூட ஒரு பெட்டியில் இட்டுப் பத்திரப்படுத்தியிருந்தாள். ஒருநாள் அதை அவரிடம் கூறவுஞ் செய்தாள். அப்போது அவர் “அப்பாடா பருவம் அடையும்போது கொடுப்பதற்கே இவ்வளவு உளர்ந்த பரிசென்றால் நாளைக்கு நம்ம சரவணன் அவளைக் கைப்பிடிக்கும்போது நீ வீட்டுச் சாவியையே அவளிடம் ஒப்புவித்துவிடுவாயாக்கும்” என்று குறும்புசெய்ய, “கனகனுக்கும் திருமணம் முடிந்து சரவணனுக்கு ஏற்ற மனைவியாக நம்ம சிவகாமி வீட்டுக்கு வந்தப்புறம் நமக்கேன் வீட்டுச்சாவி? இரு மருமக்களும் அறுசுவை உணவு போடுவார்கள். நாம் நேரத்திற்கு நேரம் வயிற்றை நிரப்பிவிட்டு சிவா! சிவா! பாராயணத் தொடங்க வேண்டியது தான்” என்று அவள் கூற இருவருமே வாய்விட்டுச் சிரிப்பார்கள்.

அந்த நிகழ்ச்சி அவர் உள்ளத்தை நெகிழவைத்து விடுகிறது. அவர் கண்களில் இரண்டு துளி நீர் பெருக்கெடுத்தோட அதைத் தன் சுண்டுவிரலால் தெறித்து விட்டபடி பெருமூச்செறிகிறார்.

இந்த மகிழ்ச்சியில் பங்குகொள்ளத் தன் மனைவி இல்லையே என அவர் மனம் வேதனைப்படுகிறது. ஆயினும் அவர் தன் உள்ளத்தைத் தேற்றிக்கொள்கிறார். ஏதோ நிதை;துக்கொண்டவராய் வீட்டுக்குட் சென்று அலுமாரியைத் திறந்து அதற்குள் வள்ளியம்மையால் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த முத்துமாலைப் பெட்டியைத் தூக்கி தன் சட்டைப்பைக்குட் திணித்துக் கொண்டு வேகமாக வெளியே செல்கிறார். அவர் கால்கள் சிவகாமி வீட்டை நோக்கித் துரித நடைபோடுகின்றன. அவர் செல்வதைப் பார்த்த சரவணன் அவர் பின்னால் ஓடோடிச் சென்று, எங்கே அப்பா இந்த அதிகாலையிற் செல்கிறீர்கள்? என்று இடைமறிக்கிறான். அவன் கண்களில் ஆவல் ததும்பி வழிகிறது. தம்பிமுத்துப்பிள்ளை இப்படித்தான் சிலவேளைகளில் ஏதோ நினைத்துக் கொண்டு திடீர் எனப் புறப்பட்டுச் சிவகாமி வீட்டுக்குப் போவார். அதே சாட்டைவைத்து சரவணனும் அவருடன் தொற்றிக்கொள்வான். அவனது வினா தம்பிமுத்துப் பிள்ளைக்குச் சிரிப்பை வரவழைக்கிறது. அவர் தன் கொடுப்புக்குட் சிரித்தபடியே, நீ போய்ப்படி@ நான் வரோதய மாமா வீடு வரை போய் வருகிறேன் என அவன் முதுகில் தட்டிக் கொடுக்கிறார். ‘நான் எல்லாம் படிச்சு முடிச்சாச்சு. இப்போ நானும் உங்ககூட வரப்போறான். நீங்க வரோதய மாமாவைப் பாருங்க. நான் சிவகாமியைப் பார்க்கப்போறன்.’

அவனது சாதுரியப் பேச்சால் தம்பிமுத்து ஒருமுறை தத்தளித்து விடுகிறார். இருந்தும் அவனை எப்படியாவது சமாளித்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் நான் இப்போ சிவகாமியைத்தான் பார்க்கப்போகிறேன் சரவணா. நீ ஆறுதலாகப் பார் அப்பா’ என்கிறார்.

‘நானும் உங்களுடன்தான் வருகிறேன் அப்பா. விடாப்பிடியாகத் தொடருகிறான் சரவணன். தம்பிமுத்துப் பிள்ளையின் நிலை தர்மசங்கடமாய் விடுகிறது. இனி அவனிடம் உள்ளதைச் சொல்லித்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் இனி நீ சிவகாமியை அடிக்கடி பார்க்கமுடியாது. அவள் பெரியவளாகிவிட்டாள் என்று கூறிவிட்டு மகனைப் பார்க்கக் கூச்சப்பட்டவர்ணபோல் பக்கத்தில் முகிழ் அவிழ்ந்திருந்த முல்லை மலர்களின்மேல் தன் பார்வையைப் பதித்துக்கொள்கிறார்.

சரவணன் மறுபேச்சின்றி வீட்டுக்குத் திரும்பிச் செல்லக் காலடி எடுத்துவைப்பது அவர் கண்களில் படுகிறது. அவர் மெதுவாக நிமிர்ந்து சென்றுகொண்டிருக்கும் அனையே கண் வெட்டாமற் பார்க்கிறார். திடீர் எனச் சரவணன் தன்னைவிடப் பல்லாண்டுகள் முதிர்ந்துவிட்டது போன்ற உணர்வு தோன்றுகிறது அவரிடத்தில். இப்போது சிவகாமியைப்பற்றி நான் கூறியதில் இவனுக்கு என்ன விளங்கியிருக்கும். முப்பது வயது மனிதனைப்போல நடந்து செல்கிறானே. அவனுக்குப்போய் நான் என்னத்தைக் கூறுவது. எனக்கே அவனுடன் பேச வெட்கமாயிருக்கிறது. ம்! ஒருவேளை இப்போது அவனுடைய அம்மா இருந்திருந்தால் அவனுடன் மனம்விட்டுப் பேசியிருப்பாளாக்கும்!

அவர் தனக்குள்ளாகப் பேசிச் சிரித்துக்கொண்டே சிவகாமியின் வீட்டை நோக்கி நடக்கிறார். சிவகாமியின் அலுவல்கள் எல்லாம் ஒருவாறு முடிவடைகின்றன. இப்போது அவள் வீட்டைவிட்டே வெளியேறுவதில்லை. அவளுக்கு அத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. சரவணனுக்கு அவளைப் பார்க்காமல் பசியே எடுப்பதில்லை. அவளை எப்படியாவது பார்த்தாற்தான் மனம் ஆறுதுல் அடையும் போன்றதோர் தவிப்பு. அந்தத் தவிப்பின் தாக்கத்தினால் உந்தப்பட்டவனாய் துணிவு பெற்றுச் சிவகாமியின் வீட்டை நோக்கி நடக்கிறான். ஆனால் அவனுக்குத் தான் என்ன ஏமாற்றம்! பாவம்! அவன் அங்கே காலடி எடுத்துவைக்கும்போது அவர்கள் வீட்டுக் கதவு அடைபடுகிறது. உள்ளம் உடைந்த நிலையில் தாளாத துயரத்துடன் வீடு திரும்பிப் புலம்புகிறான்.

பன்னிரு யாண்டவ ளொடுயான்

பயின்றிருந்து மிக்காலம்

கன்னிமுக நோக்கவிடார்

கதவடைத்தார் கருணையிலார்

என்னிரு கண் மணியனையா

ளெனக்குரிய ளென்றிருந்தேன்

என்னேயெனதெண்ண

மின்றுபட்ட வாறந்தோ

ஏதிலனாயிங்கே

யிரங்குவன்யான் பைங்கிளியே

யாருடைய துன்பத்திற்கும், இன்பத்திற்குங் காத்திராமல் காலச்சக்கரஞ் சுழல்கிறது. சரவணன் மணப்பவத்தை அடைந்துவிடுகிறான். சிவகாமி வீட்டுக்கு அவள் அப்பாவிடம் முறைப்படி பெண் கேட்கத் தம்பிமுத்துப்பிள்ளை செல்கிறார்.

4

எத்தனை எத்தனையோ மனக்கோட்டைகளுடன் சென்ற தம்பிமுத்துப்பிள்ளை அந்த எண்ணக் குவியங்களையெல்லாம் சிவகாமி வீட்டு வாயிலிலேயே சிதறடித்துவிட்டு, உடைந்த உள்ளத்துடன் மனம் நிறைந்த துயரத்துடன் தன் வீட்டை நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கிறார். ஆமாம்! சரவணனுக்குச் சிவகாமியைத் தரமுடியாது என அழுத்தந் திருத்தமாக ஆணியறைந்ததுபோற் கூறிவிடுகிறார் அவள் அப்பா. பஞ்சவர்ணக் கிளிபோன்ற தன் பெண் சிவகாமியை மணப்பதற்குச் சரவணனுக்கு எந்த விதத் தகுதியும் இல்லையென்று மனந் துணிந்தே கூறிவிடுகிறார் இராஜவரோதயம்.

பிறந்த நாளிலிருந்தே தன் மகளுக்குச் சரவணன்தான் கணவன் என்று தம்பட்டம் அடித்துத் திரிந்த இராஜவரோதயம் எதிரில் அவன் இப்போது நாதியற்றவனாய் விடுகிறான். இத்தனைக்கும் அவன் தன் பட்டப்படிப்பை முடித்து ஒரு பி.ஏ. பட்டதாரியாகத் திகழ்கிறான். ஆயினும் அந்தப் பட்டத்துக்கும், கல்விக்கும் இப்போது மதிப்பில்லை. கல்வியைவிடச் செல்வத்தின் தரம் உயர்ந்து விடுகிறது. சகடக்கால் போன்றது, நீர்க்குமிழிக்கு ஒப்பானது என்றெல்லாம் பெரியோர்களாற் பழித்துக் கூறப்பட்ட செல்வத்தைப் பெரிதாக மதித்துத் தன்னை இகழ்ந்துவிடும் சிவகாமியின் அப்பாமேல் சரவணனுக்கு ஆத்திரம் பிறக்கிறது. ஆனால் இதையெல்லாம் அவன் யாரிடங் கூறி அழமுடியும்?

கடந்த பன்னிரெண்டாண்டுகளாக உனக்குத்தான் என் பெண் எனக் கூறியிருந்தவர் திடீர் எனப் பணத்தாசை பிடித்து இப்படி மாறிக்கொள்வார் என அவன் எதிர் பார்க்கவேயில்லைதான். இதையெல்லாம் நினைத்தபோது அவனுக்கு வாய்விட்டு அழவேண்டும்போலத் தோன்றுகிறது. அதனால் தான் ஒரு ஆண்பிள்ளை என்பதைக்கூட மறந்து வாய்விட்டே அழுகிறான். அந்தக் கண்ணீரில் பிறக்கிறது ஒரு கவிதை.

செல்வமில்லை யென்றுரைப்பார்

சிந்தியார் மற்றொன்றுங்

கல்வியெனுஞ் செல்வங்

கருதார் கருதாரால்

செல்வமோ வின்றிருக்குஞ்

சென்றிடுமா னாளைமற்றக்

கல்வியொரு காலுமண்மேற்

கற்றோர்ப் பிரிவிலதால்

கல்வி சிறந்ததன்றோ

கழறாய் பசுங் கிளியே.

கல்வியைப்பற்றிப் பெரியோர்கள் கூறிவைத்ததெல்லாம் பொய்த்துவிட்டது போன்ற பிரமை ஏற்படுகிறது அவனுக்கு. தம்பிமுத்துப்பிள்ளை தன் தள்ளாத வயதில் கனகசுந்தரனையும், தன்னையும் கடல் கடந்து பாரதம் சென்று படிக்கவைத்துப் பட்டதாரியாக்கியதெல்லாம் வீண் என நினைத்து உள்ளம் நைகிறான். தங்களைப் படிக்க வைக்க அவர் பட்ட கஷ்டங்களையும், இன்னல்களையும் நினைந்து ஏங்குகிறான். சிவகாமியின் அப்பாமீது அவனுக்கு ஆத்திரம் பீறிடுகிறது.

தன் மனம் ஆறும் பொருட்டு முற்றத்தைப் பார்த்த படி காற்றோட்டமான ஓர் இடத்தின் அவன் அமர்ந்து கொள்கிறான். அப்போது ஒரு அழகான பேட்டுக் கோழி ஒன்று நிலத்தைத் தன் காலால் கிளறி இரை பொறுக்கித் தின்றுகொண்டிருக்கிறது. அதற்குப் பக்கத்தில் ஒரு இளஞ்சேவல் ஒன்று தன் அடித் தொண்டையால் கொக்கரித்து உணவு இருக்கும் இடங்களைத் தன் காற் பெரு விரலால் கிளறிக் காட்டிக்கொண்டிருக்கிறது. அதே நேரம் திடீர் என எங்கிருந்தோ வந்த ஒரு கிழட்டுச் சேவல் விரைவாகப் பறந்துவந்து இளஞ் சேவலைக் கொத்தித் துரத்திவிட்டுப் பேட்டை அணைத்துகொள்ள அந்த இளஞ் சேவல் ஒதுங்கிக்கொள்கிறது. ஆயின் அதற்குள் பேட்டுக் கோழியும் அந்தக் கிழட்டுச் சேவலிடம் இருந்து தப்புவதற்காகப் பக்கத்தில் இருந்த பலா மரத்திற்குப் பாய்ந்து கிளைகளிடையே ஒதுங்கிக்கொள்கிறது.

ஏதோ சிந்தனையில் ஊறிப்போயிருந்த சரவணனின் கண்களில் அந்தக் காட்சி பட்டுவிடுகிறது. அவனுக்குச் சிவகாமியின் நினைவு வந்துவிடுகிறது. ஆமாம்! சிவகாமிக்கும் வேறோர் இடத்தில் திருமணம் நிச்சயமாகிவிட்ட செய்தி தம்பிமுத்துப்பிள்ளை வீட்டுக்கும் எட்டிவிடுகிறது. சிவகாமிக்குப் பேசியிருந்த மாப்பிள்ளையைப்பற்றிப் பலரும் பலவிதமாகப் பேசிக்கொள்கின்றனர். சிவகாமிக்குக் கூட அந்தத் திருமணத்தில் ஒரு துளியும் விருப்பமில்லை என்ற கதையும் அடிபடுகிறது. அப்படித்தான் அவள் திருமணஞ் செய்துகொண்டாலும் அவள் சந்தோஷமாக வாழமாட்டாள் என்று ஊரார் பலமாதிரியெல்லாம் பேசிக்கொள்கின்றனர்.

இவற்றையெல்லாம் நினைத்து நினைத்து சரவணனும் மனங்குமுறிக்கொண்டிருக்கிறான். இந்தத் திருமணத்திற்குச் சிவகாமி ஒருபோதும் உடன்பட்டிருக்கமாட்டாள். அவளை ஏமாற்றித்தான் இதைச் செய்யப்போகிறார்கள். கடைசிவரை அவள் இந்தத் திருமணத்தால் மகிழ்ச்சியடையப்போவதில்லை. கருத்தொருமிக்காத இருவர் எப்படித் திருமணஞ் செய்து சதிபதிகளாய் வாழ முடியும்? அப்படி வாழ முடியாது. வாழவே முடியாதப்பா. இதனால் மூவரின் வாழ்க்கை பலியாகப்போகிற. இது வெறும் அநியாயம். நீதி இல்லை, நியாயம் இல்லை. கடைசியில் மனச்சாட்சி கூட அற்றுவிட்டது. தருமதேவதைகூட வாய் மூடி மௌனியாய்விட்டாளா? என்ற சரவணனின் குரல் கேட்ட அவன் தந்தையின் விழிகளில் நீர் முட்டிய. துன்பத்தைச் சகிக்க முடியாத அவர் ஒரு மூலையிற் சென்று ஒடிந்துபோய் அமர்ந்திருந்தார். கனகசுந்தரமும் ஒரு பக்கத்திலிருந்து கண்ணீர் பெருக்கினான்.

சரவணனின் உள்ளம் பொருமியது. உடல் துடித்தது. அவன் மட்டும் நினைத்திருந்தால் துணிந்துசென்று சிவகாமியைக் கையைப் பிடித்தே இழுத்து வந்திருக்கமுடியும். ஆனால் குடும்ப கௌரவம் என்ற ஒன்று அவனைப் பிடித்துத் தடுத்து நிறுத்திவிட்டது. இரண்டு நிமிடத்தில் சிவகாமியோடு தன் திருமணத்தை நடத்தி இழந்த நிம்மதியை மீட்டிருக்கலாம். ஆயின் நாளை தொடக்கம் இன்னும் வரப்போகும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஈறாக அந்த வசை அவ் சந்ததியைப் பாதித்துக்கொண்டேயிருக்கும். அப்படியொரு ஈனந் தன் குடும்பத்தைப் பாதிப்பதை அவன் விரும்பவில்லை. அதைவிடத் தான் அழுதழுதே சாவது மேல் என்ற முடிவுக்கு வந்துவிட்டான் அவன். அதனால் மீண்டும் ஒரு கவிதை பாடுகிறான் அவன்.

கல்வி மிக விருந்தென்

கணக்கில செல்வம் மிருந்தென்

மெல்லியற்கு நாயகன்மேல்

விருப்பிலதேற் பைங்கிளியே

சொல்லரிய காதறுகடயவுள்

ளொன்றினன்றோ

நல்லார் மணம் புரிவர்

நலம் பெறுவார் ருண்மகிழ்வார்

நாரியர்பா லிம்மாற்றம்

நவில் வாயிருஞ் சுகமே.

அவனுக்கு இப்போது தன் துன்பத்தைவிடச் சிவகாமி மீதுதான் அதிக பரிதாபம் உண்டாகிறது. மனம் விரும்பாத ஒருவனுடன் அவள் எப்படிச் சென்று வாழ்க்கை நடத்தப்போகிறாள்? அவள் உள்ளம் ரோஜா மலர்போன்றதே. சிறிது ஊன்றி மணந்தாலும் கசங்கிவிடும் இதழ்போன்ற மென்மையான உள்ளம் படைத்தவள் சிவகாமி. அவள் எப்படித்தான் இப்படியொரு பெரிய துன்பத்தைச் சகிக்கப்போகிறாளோ என்றெல்லாம் ஏங்கித் தவிக்கிறான் அவன்.

5

“தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்று கூறிப் போந்துள்ளார்கள் எம் பெரியோர். ஆயின் அவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக அவர்கள் செய்வது சுத்தத் தவறு என்று தெரிந்தபின்பும் அதற்குச் செவிசாய்ப்பது சுத்த முட்டாள்தனமாகும். பெற்றோரும் தம் குழந்தைகளின் நலன் கருதி அவர்களுக்காகச் சிறிது விட்டுக் கொடுத்து நடப்பார்களானால் பிள்ளைகளும் அவர்கள் வாக்கைத் தேவ வாக்காகக் கொள்ளலாம். அதை விட்டு ஒரு அப்பாவிப் பெண்ணின் முன் யாரோ ஒரு புதிய நபரைக் கொண்டுவந்து கட்டாயத்திற்காக மாலை போடு என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்? இது எவ்வளவு பாதகமான செயல். சிறு வயது முதற்கொண்டு ஒன்றாகப் பேசிப் பழகி ஆடிப் பாடிக் கூடித் திரிந்தவர்களைப் பிரிப்பது எவ்வளவு கொடுமை நிறைந்த செயல். இவ்வளவு வயதும் அனுபவமும் முதிர்ந்துங்கூட இவர்கள் மனம் ஏன் இப்படிப் பேதலித்துப் போகிறது? பெற்ற பிள்ளைகள் வடிக்குங் கண்ணீரில் இன்பங் காண்பதுதான் பெற்றோர் செயலா? இறiவா, சிவகாமியின் உள்ளத்திற்கு நிம்மதியைக் கொடுக்க அவள் அப்பாவைக் கருணையுள்ளவராக்கி விடு. அவர் மனம் மாறட்டும். எமது வாழ்வு மலரட்டும். சரவணன் சிந்தித்துக்கொண்டேயிருக்கிறான்.

மல்லிகைப் பந்தலின் கீழ் அமர்ந்தபடி பைத்தியம் பிடித்தவன் நிலையில் கேசங்களைந்துகிடக்க உணவும், உறக்கமும் இன்றி உடல் வாடி வதங்கியிருக்க கீழே கிடந்த மல்லிகைப் பூக்களைப் பொறுக்கி மாலை தொடுத்து அதை மடியில் வைத்துக் கலங்கிய கண்களுடன் பார்த்துக்கொண்டேயிருக்கிறான் அவன்.

அப்படியான மாலைகள் செய்து சிவகாமிக்கு அணிவித்த நாட்கள் அவன் மனதுக்கு வருகின்றன. அவன் அவள் தலையில் அணிவிக்கும் மாலை அடுத்த நாள் விடியும்வரை அவள் கூந்தலை அழகு செய்யும். தலை சீவும் போது வலோற்காரமாக அவள் தாய் அதை எடுத்து எறிந்தாற்தான் உண்டு. நாளாந்தம் சரவணன் புத்தம் புதிய மலரெடுத்து அவளுக்கு அணிவித்துவிடுவான். அதில் அவர்கள் இருவருக்குமே ஒரு மகிழ்ச்சி. அந்த மாலை இன்று அவன் மடியில் மலர்ச்சியற்று, மணமற்றுத் தேடுவாரற்றுக் கிடந்தது. அதை மிருதுவாக வாத்ஸல்யத்துடன் தடவி விட்டுக்கொள்கிறான் அவன். அதில் ஒரு மகிழ்ச்சி கலந்த நிம்மதி அவனுக்கு. ஆயினும் அவனையறியாமலே அவன் கண்கள் பனிக்கின்றன. உள்ளத்தில் விம்மி வெடிக்கும் வேதனையைக் கட்டுப்படுத்த முடியாதவனாய் மாலையைக் கையில் எடுத்துக்கொண்டு அழுகிறான் அவன். திடீர் என ஒரு சிந்தனை. அப்படியே அந்த மாலையை ஒரு மரக்கொம்பரில் அணிவித்துவிட்டுத் தலையைப் பிடித்துக் கொண்டு எங்கோ செல்கிறான். அவன் நிலையைப் பார்த்த கனகசுந்தரம் அவனைப் பின்தொடர்கிறான்! தம்பி…… இப்படியே நீ கவலைப்பட்டு அழுதுகொண்டிருந்hல் உன்நிலை என்னாவது…? நடந்ததை மறந்து மனதைத் தேற்றிக்கொள் என்கிறான்.

எப்படியண்ணா என் மனம் ஆறமுடியும்? சிவகாமி கூடவா என்னை மறந்துவிட்டாள்? தாம் பெற்றெடுத்த குழந்தையின் நன்மையிது, தீமையிது என்பதை உணராத பெற்றோரின் வார்த்தைகளை அவளால் மீறமுடியாதா என்ன? தாய் தந்தையருக்கும் ஓரளவுக்குக் கீழ்ப்படியத்தான் வேண்டும். ஆனால் அதுவே தன் வாழ்க்கைக்குக் கூற்றுவனாக அமையும் என உணர்ந்துகொண்டும்ட கண் மூடித்தனமாக நடக்கக்கூடாது. இதையெல்லாம் நான் அவளுக்கு எப்படித் தெரியப்படுத்துவது…… தன் மனத்தாக் கத்தைக் கனகசுந்தரத்திடம் கூறியதில் ஒரு நிம்மதி உண்டாக அவன் மனதில் ஒரு கவிதை பிறக்கிறது.

தந்தை மொழி தலைவகித்துத்

தாய்சொல் மொழியுளம் பேணி

நந்தமருக்குத் தீங்கிழைத்த

னலமோ பசுங்கிளியே

மைந்தர் துயர் நோக்கார்

மனமெழுந்தவாறுரைக்கில்

அந்தோ மறுத்த

லவசியமாம் பைங்கிளியே

ஆருங் குறை சொல்லா

ரறிவாய் பசுங்கிளியே

நான் பாடுகின்ற அரிய கருத்துக்கள் நிறைந்த கவிதைகளைச் சிவகாமியிடம் யார் எடுத்துக்கூறுவது…? இந்தப் பைங்கிளி சென்று கூறுமா? அதற்கு அவ்வளவு சக்தியுண்டா? என்றெல்லாம் சிந்திக்க அவன் தயாராக இல்லை. அவன் நோக்கமெல்லாம் தன் உள்ளத்து உணர்ச்சிகளையும், தன் துன்பத்தையும் வெளிப்படுத்தும் வாய்க்காலாகக் கவிதைகளை அமைத்தலே. அதில் அவனுக்கு ஒரு திருப்தி. ஒரு நிம்மதியுங்கூட.

சரவணனுக்கு எரிச்சல் எரிச்சலாக வருகிறது. உள்ளேயிருக்கப் பைத்தியம் பிடித்துவிடுமோ என்ற மனக்கிலேசம் ஏற்பட அவன் மெதுவாகத் தெருவாயிலுக்குப் போகிறான். வாயிலில் தன்னை மறந்து நிற்கும்போது ஏதோ அவன் காலில் தட்டுப்படுகிறது. அது என்னவாக இருக்கும் என அவன் குனிந்து எடுத்துப் பார்த்தான். அதில் அழகிய பெண் ஒருத்தியின் படம் ஓவியமாகத் தீட்டப்பட்டிருந்தது. அந்த ஓவியத்தையே கண் மூடாமற் பார்த்துக்கொண்டிருந்த அவனது கண்களில் சிவகாமி தோற்றமளிக்கிறாள்.

செந்தாமரையைவிட அழகிய கண்கள் அவளுக்கு. அந்தக் கருவிழிகளில் எப்போதும் ஒளி நிறைந்திருக்கும். குங்குமம் போன்ற சிவந்த மேனி. திருக்கோணமலையில் அப்போது வாழ்ந்த பெண்களில் அழகி என்றே கூறலாம். அந்த அழகுதான் தன்னையும் அடிமைப்படுத்தியது என்று நினைக்க அவனுக்கு அப்படத்தின்மீதே ஆத்திரம் வந்தது. அதனால் காற்றோடு காற்றாகப் பறக்கும்படி அதைக் கைநழுவ விட்டான். அதன்பின் தெருவில் நிற்கக்கூட விரும்பாதவனாய் உள்ளே போகத் திரும்பியபோது எதிர்வீட்டுப் பொன்னையா அவனைக் கை அசைத்து நிறுத்தித் தெருவைக் கடந்து வந்துகொண்டிருந்தார்.

“தம்பி நான் எல்லாங் கேள்விப்பட்டேன் அப்பா. அந்த இராஜவரோதயம் இவ்வளவு கொடுமை செய்வார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. உம்! இனி என்ன செய்வது? பேசாமல் மனதைத் தேற்றிக்கொள் அப்பா.” பொன்னையா அவனைத் தேற்ற முயன்றார். சிறு பராயத்தில் இருந்தே பொன்னையாவுக்கு அவன்மீது அப்படி ஒரு பாசம். அவனைத் தன் மார்பிலும் தோளிலும் சுமந்து வளர்த்து ஆளாக்கியவர் அவர். அவன் என்னுடைய மகன் என்று பிள்ளையில்லாத அவர் அடிக்கடி கூறித் தன் மனதைத் தேற்றிக்கொள்வார். அவனுக்குத் திருமணம் நடக்கும்போது சிவகாமியை நான்தான் தத்தம் பண்ணி வேண்டிக்கொள்வேன் என்று பெருமையுடனும், உரிமையுடனுங் கூறிக்கொள்வார். அப்படிப்பட்ட அன்புள்ளம் படைத்த ஒருவர் கேட்கும்போது அவன் மௌனமாக இருக்குமுடியுமா? அதனால், ஆமாம் மாமா! ஏதோ விதிப்படி நடந்து விட்டது. மனதைச் சமாதானப்படுத்திக்கொள்ளத்தானே வேண்டும் மாமா! அல்லது வேறு வழி? என்று அவன் பதில் கூறியபோது அவன் குரல் சாடையாகக் கம்மிக் கொண்டது.

உனக்காக நான் ரொம்பவும் பரிதாபப்படுகிறேன் தம்பி. இப்படி நடக்கும் என்று யார் எதிர்பார்த்தார்கள்? சிவகாமிக்கு இப்படி ஒரு விதியா வரவேண்டும்? அவளது அழகுக்கும் குணத்துக்கும் இப்படி ஒரு கணவன்தானா வாய்க்கவேண்டும்? என்று அவர் கூறியபோது சரவணன் மிகவும் ஆவலுடன் அவரைப் பார்த்தான். சிவகாமிக்கு இப்படி ஒரு விதியா வரவேண்டும்? அவளது அழகுக்கும் குணத்துக்கும் இப்படி ஒரு கணவன்தானா வாய்க்க வேண்டும்? அன்று அவர் கூறியபோது சரவணன் மிகவும் ஆவலுடன் அவரைப் பார்த்தான். சிவகாமியின் கணவரைப் பற்றி அவர் தொடர்ந்து என்ன கூறப்போகிறார் என அவன் உள்ளம் ஏங்கியது.

6

விதி வலிமையுடையது எனச் சரவண கேள்விப் பட்டிருந்தானே தவிர அதைப்பற்றிய நம்பிக்கை அவனுக்கு ஏற்பட்டதுமில்லை. அதைப்பற்றி ஆராய அவன் முற்பட்டதுமில்லை. ஆயினும் இன்றைய நிலையில் இராமாயணத்தின் ஒரு கட்டத்தில் இலக்குமணன் கூறியதுபோல விதியொன்று இருக்கத்தான் செய்கிறது என அவனும் நம்பினான். அதனாற்தான் தனக்கும் சிவகாமிக்குங்கூட இப்படியானதோர் அவல நிலை ஏற்பட்டதாக அவன் எண்ணினான்.

அப்போது பொன்னையா தான் நிறுத்திய பேச்சைத் தொடர்ந்தார். கிளி போன்ற சிவகாமியைக் கைபிடிக்க அந்த மனிதனுக்கு என்ன தகுதியிருக்கோ…? உத்தியோகம் ஒன்றுதான் உன்னைவிட அவரை உயர்த்திவிட்டது. சிவகாதிக்கு இப்பத்தானே பதினான்கு வயது முடிஞ்சிருக்கு. அவருக்கு வயது என்னெண்டு நினைக்கிறாய்…? சரியாக முப்பத்திமூன்று வயதாம். சிவகாமியின்ர வயதைப்போல இரு மடங்கு பெரியவர். அவளைவிட பதினெட்டு வயது மூத்தவர். இது எவ்வளவு பெரிய அநியாயம் எண்டு நினைக்கிறாய்…? எல்லாரும் இதைப்பற்றித்தான் பேசிக்கொள்வினம். ஆனால் இதை எடுத்துச் சொல்லுந் துணிவுதான் யாருக்குமில்லை. அந்த மனிதனோட யாரப்பா கதைக்கிறது? சிவகாமியின்ர அம்மாவுக்கு இதில அவ்வளவு விருப்பமில்லையாம். மாப்பிள்ளையை நான் கண்டனான். ஆனால் நல்ல நெடுப்பம். சிவகாமியோட ஒப்பிட்டுப் பார்க்கும் போது அப்பாவும் மகளும் என்றுதான் சொல்லுவார்கள்.

இவற்றையெல்லாம் கேட்கக் கேட்க சரவணனின் உள்ளம் எரிமலைபோற் குமுறியது. இப்படியொரு அநீதியை எதிர்க்காமல் பொறுத்துக்கொண்டிருக்க அவனால் முடியவில்லை. யாரிடமாவது போய் முறையிட வேண்டும்போல் அவன் உள்ளம் உந்தியபோதும் மிகுந்த சிரமத்துடன் அவன் தன்னை அடக்கிக்கொள்கிறான். பொன்னையா தொடர்ந்து ஏதோ பேசிக்கொண்டே இருக்கிறார். ஆனால் சரவணனின் உள்ளம் அதில் இப்போது ஈடுபாடு கொள்ளவில்லை. அவன் சிந்தனை முழுவதும் சிவகாமியைச் சுற்றியே வட்டமிட்டது.

சிவகாமியும் தானும் இனி ஒன்றுசேர முடியுமா? அவனது அப்பா கூடத்தான் தன் மானத்தையும் மரியாதையையும் விட்டுக்கொடுத்து சிவகாமி வீட்டுக்குச் சென்று இரண்டு முறை பெண் கேட்டு அவமானப்பட்டுவிட்டார். சரவணனுக்காக அவர் இன்னும் பலமுறை சென்று கேட்கவும் ஆயத்தமாக இருந்தார். ஆனால் அவன்தான் அவரைத்தடுத்துவிட்டான். எனக்குச் சிவகாமி கிடைக்காதுவிட்டாலும் பாதகமில்லை… அவள் அப்பாவிடம் மட்டும் நீங்கள் சென்று அவமானப்படவேண்டாம். நாங்கள் மானஸ்தர் என்பதை அவர்கள் உணரட்டும். சிவகாமியை நினைக்கும் போதுதான் எனக்கு மனவருத்தமாக இருக்கிறது. பாவம்! அந்த முத்துக்குமரனுடன் அவள் எப்படித்தான் போய்க்குடும்பம் நடாத்தப் போகிறாளோ தெரியாது. அவளது மலர்போன்ற மென்மையான மனம் நோகாமல் நடந்து கொள்ள அந்த மனிதனுக்குத் தெரிகிறதோ…? அவள் மனதைப் பூரணமாக அறிந்து வைத்திருப்பவன் நான்தானே. அவளது ஆசைகள் மனப்போக்குகள், அவள் விரும்பி உண்ணும் உணவு, பிடித்த நிறம் விரும்பிச் சூடிக்கொள்ளும் மலர், அவளுக்குப் பிடித்த பாட்டுக்கூட எனக்குத்தானே தெரியும். அப்படியிருக்கும்போது வேற்று மனிதனாகிய முத்துக்குமரனோடு அவள் எப்படித்தான் வாழப்போகிறாளோ? அவள் மனம் நோகும்படி நான் என்றுமே நடந்து கொண்டதில்லை. அவனிடம் அடி அல்லது குட்டுப்பட்டாற் கூடப் பொறுத்துக்கொள்ளும் சக்தி எனக்குமட்டுந்தான் உண்டு.

ஆமாம்! அன்றொருநாள் என்னிடம் மல்லிகைப்பூ மாலை வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்தாள். என்னால் முடியாது என்று சவால் விட்டேன் நான். அவளுக்குக் கோபம் வந்துவிட்டது. தானாகவே சென்று உதிர்ந்த மலர்களையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து மாலை கோர்த்துக் கூந்தலில் அவள் அணிந்துகொள்ளப்போன சமயம் பின்னாற் பூனைபோற் சென்ற நான் அம்மாவையைப் பிடித்து இழுக்க மலர்கள் எல்லாம் சிதறிக் கீழே சிந்தின. அதனால் மேலும் ஆத்திரமடைந்த அவள் கையோங்கி என் கன்னத்தில் பளார் என அறைந்து விட்டாள். அந்த அறை என் கன்னத்தில் சுளீர் எனப்பட்டபோது நான் சிறிது நிலைதடுமாறிவிட்டேனாயினும் பொறுத்துக்கொண்டேன். அவள் என்னைப் பரிதாபமாகப் பார்த்தாள். நான் அவளிடம் எனது இடக்கன்னத்தையும் நீட்டி ‘உம்! இதிலும் அடி சிவகாமி’ என்றேன். அவ்வளவு தான் அவள் வாய்விட்டுக் கதறி அழுதுவிட்டாள். அடுத்த நிமிடம் அவளது பஞ்சுபோன்ற மென்கரம் என் சிவந்த கன்னத்தைத் தடவிக்கொடுக்க நான் அவள் சிந்திய கண்ணீர் முத்துக்களைத் துடைத்து விட்டேன். அந்த ஒரு உணர்வில் இருவரும் நடந்ததை மறந்து சிரித்துக்கொண்டோம். அந்தச் சிரிப்பு இன்னும் என் மனதைவிட்டு அகலவில்லை.

இப்படியெல்லாம் நினைத்து நினைத்துக் கண்ணீர் உகுத்தான் சரவணன். அந்தக் கண்ணீரில் பிறந்தன இரு கவிதைகள்.

செங்கமல வாள் விழியாட்

சேர்க்கக் கருதுமுவன்

மங்கை தனக்கேற்ற

மணவாளனோ புகலாய்

நங்கை நிலைக்கேற்க

நடக்கவல னோபுவியிற்

கொங்குமலர் மாலை

குரங்கிற் களிப்பாரோ

கோதையிட மிம்மாற்றங்

கூறுதியாற் பைங்கிளியே

மூடருக்கும் பேடருக்கும்

முதியோர் மெலியோர்க்குந்

தேடருநல் லிரத்தினம்போற்

றெரிவையரைச் சேர்த்து வரேற்

பிடுடைய கல்வி நலம்

பெற்றிருக்கும் வாலிபர் யாம்

வேடுவரை வேட்போமோ

விளம்பாய் பசுங்கிளியே

விரும்புவமோ சந்நியாசம்

விளம்பாய் பசுங்கிளியே

பாடல் பாடி முடிந்ததும் அவன் தன் உருவத்தை மேலிருந்து கீழ்வரை பார்த்துக்கொள்கிறான். கடந்த இரண்டு வாரங்களாகச் சவரஞ் செய்துகொள்ளாத முகத்தோடு முற்றுந் துறந்த முனிவர்போல் இருந்தான் அவன். எப்படிப்பட்ட வியாதிக்கும் மருந்துண்டு. ஆனால் மனவியாதிக்கு மட்டும் மருந்தில்லை என்று யாரோ கூறிவைத்தது அவன் வரையில் மெய்யாகிவிட்டது. அவனுக்கும் யார்யாரோ எல்லாம் எப்படி எப்படியெல்லாமோ புத்தி புகட்டியும் அவன் சமாதானம் அடையவில்லை. அவன் சீராக உண்டு, உறங்கி நாட்கள் பலவாகிவிட்டன. எதிர்வீட்டுப் பொன்னையாகூட அவன் அருகில் மணிக்கணக்கில் அமர்ந்து, அவனைத் தன் மகனிலும் மேலாக நேசித்து எவ்வளவோ புத்திகள் கூறிப்பார்த்தார். அவனைச் சமாதானப்படுத்தவே அவரால் முடியவில்லை. அதனால் அவனை வளர்த்த குற்றத்திற்காக அவன் நிலைக்குப் பரிந்து அவரே சிவகாமி அப்பாவிடம் தூது சென்றார். அங்கு சரவணனது மனநிலையைப் புகைப்படம் பிடித்தாற்போல் எடுத்துக்கூறியும் பயனின்றித் தோல்வியுடன் திரும்பி வந்தார்.

தம்பி முத்துப்பிள்ளைகூடத் தன் மகனுக்கு எவ்வளவோ ஆறுதல் கூறியும் அவன் கேட்கத் தவறிவிட்டான். அவனது மனநிலையை மாற்ற யாராலும் முடியவில்லை. இதன் காரணமாக அவன் தேகநிலை பாதிக்கப்பட்டது. பார்த்திருக்க அவன் துரும்புபோல் இளைத்துவந்தான். ‘உனக்கு வருத்தம், வரப்போகிறது சரவணா! ஏதாவது சாப்பிட்டுக் கொள், என்று யாராவது கெஞ்சினால் எதுவும் வேண்டாம். என்னை நிம்மதியாகச் சாகவிடுங்கள். சிவகாமி இல்லாத வாழ்க்கை எனக்குச் சந்திரனற்ற வானம்போல் இருக்கும். அவளது நினைவு என் நெஞ்சைவிட்டு ஒரு போதும் நீங்காது. அந்த நினைவு அக்கினி ஜுவாலை போல் என் உள்ளத்தை நாளாந்தம் பொசுக்கிக்கொண்டேயிருக்கும். அந்த வேதனையைச் சுமந்துகொண்டு சிறுகச் சிறுக நாளாந்தம் செத்துக்கொண்டிருப்பதைவிட இப்படிப் பட்டினி கிடந்தாவது என் உயிரை மாய்த்துக்கொள்வது மேல். இனிமேல் நான் யாருக்காகத்தான் வாழவேண்டும்? நான் வாழ்வதால் யாருக்கு என்ன லாபம்? இந்த நன்றி கெட்ட உலகத்தில் நான் இருக்க விரும்பவில்லை. என் உள்ளத்தில் சிறு வயது முதற்கொண்டே குடிகொண்டிருந்த தெய்வமே என்னைவிட்டு நீங்கிவிட்டபோது இனி எனக்கு வாழ்வும், சாவும் ஒன்றுதான். எனக்கென்றே வாழ்ந்த சிவகாமியே என்னை மறந்து முன்பின் அறிமுகமில்லாத மாற்றான் ஒருவனை மணக்கச் சம்மதித்து விட்டாளாம். இத்தனையும் நடந்து பின்பும் எனக்கு வாழ்வு ஒரு கேடா? என வாழ்க்கை அஸ்தமித்துவிட்டது. என் வாழ்க்கையில் இனி விடிவே இல்லை. சிவகாமியைப் பிரிந்து என்னால் வாழமுடியாது. வாழவே முடியாது என்று சரவணன் அரற்றியபோது அங்கு நின்றவர்களின் கண்களில் எல்லாம் நீர் நிறைந்தது. அவர்கள் அவனைத் தட்டிப் பேசமுடியாதவர்களாய் குனிந்த தலை நிமிராமல் நின்றனர்.

7

சிவகாதியின் நினைவு சிறுகச் சிறுகச் சரவணனை வாட்டிக்கொண்டேயிருந்தது. அவனது மன நிலையில் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை. சிவகாமியின் திருமணம் அநேகமாக நிச்சயமாகிவிட்டதாகப் பலரும் கதைத்தது அவன் காதிலும் விழத்தான் செய்தது. மாப்பிள்ளைகூட அங்கு அடிக்கடி வந்து போய்க்கொண்டிருப்பதாகப் பேசிக்கொண்டனர். ஆயினும் அவன் மட்டும் இன்னும் அவரைத் தன் கண்ணாற் காணவில்லை.

ஒருநாள் இப்படித்தான் அவன் அழுது புலம்பிக்கொண்டிருந்தபோது கனகசுந்தரம் அவன் பக்கத்தில் அமர்ந்து அவனைத் தேற்றிக்கொண்டிருந்தான். அந்நேரம் பார்த்து எதிர்வீட்டுப் பொன்னையா அவர்ளை நோக்கி மிகவும் விரைவாக வந்துகொண்டிருந்தார். என்ன செய்தி கொண்டு வருகிறாரோ என்ற ஆவலில் இருவரும் அவரையே பார்த்து நின்றனர். அவர்களை நெருங்கிய அவர் அவர்கள் காதோடு காதாக அவர்களுக்கு மட்டுங் கேட்கும்படியாக தெருப்படலையின் ஓடிப்போய்ப் பாருங்கள் என்றார். கனகசுந்தரம் அவர் வாய் மூடுவதற்குள்ளேயே அங்குபோய்விட்டான். ஆனால் உடல் நலிந்து உள்ளங் குழம்பியிருந்த சரவணனோ ஒரு அடிகூடப் பெயர்த்தெடுத்துவைக்க முடியாதவனாய் “என்ன விடயம்…?” என்பதுபோல அவரைப் பார்த்தான். “ஓடு சரவணா… ஓடிப்போய் பார் மாப்பிள்ளை சிவகாமி வீட்டுக்கு வந்துகொண்டிருக்கிறார்” என்று சொல்லிமுடித்தபோது சரவணனுக்குக் கதறி அழவேண்டும் போலிருந்தது. ஆயினும் தன் உள்ளத்தைக் கொள்ளைகொண்டு தற்போது தன்னை நடைப்பிணமாக்கி விட்டிருக்கும் அழகி சிவகாமியை மணக்கப் போகிறவரை ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்று மனந் துடியாய்த் துடித்தது. அதனால் மெதுவாக எழுந்து இடுப்பில் இருந்த வேட்டியை இறுக்கிக்கொண்டே தெருப்படலையை நோக்கித் தன்னால் இயன்றவரை வேகமாக நடந்தான்.

அவன் தெருவாயில்லை அடைவதற்கும் முத்துக்குமரன் அவர்கள் தெருப்படலையைக் கடப்பதற்கும் சரியாக இருந்தது. சிவகாமிக்கு மாப்பிள்ளையாக வரப்போகிறவர் இவர்தானா? என்ற வினா அவன் மனதில் எழுந்தபோது அவனுக்கு அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. ஐயோ! பார்ப்பதற்கே முரடன்போற் தோற்றமளிக்கிறாரே! இவரிடமா என் செல்லக்கிளி சிவகாமி சென்று வாழ்க்கைப் படப்போகிறாள்…? இவரைப் பார்த்தாலே அவளது அமுத கலசம்போன்ற அழகிய விழிகள் அச்சத்தில் அல்லற்படும். எவ்வளவு அருமையாக வளர்த்து இப்படியொரு பெண்ணருமை தெரியாத ஒருவனிடம் அவளை அளிக்கப்போகும் அவள் அப்பா நிச்சயமாக நரகலோகத்திற்குத்தான் உரியவராவர். நரகத்தில் இருந்து அவர் தப்பவே முடியாது என்று கதறி அழும் சரவணனைத் தேற்றி விடுகிறார் பொன்னையா.

சரவணன் வாயிலில் நின்றபடி சென்றுகொண்டிருக்கும் முத்துக்குமரனையே பார்த்துக்கொண்டிருக்கிறான். அவர்மேல் அவன் கோபந் திரும்புகிறது. ஆத்திரம் அழுகையாகப் பிரலாபித்துவிடுமோ என்ற பீதியில் தன் உணர்ச்சிக்கு அணைபோட்டுவிடுகிறான். ஆயினும் அவன் உணர்ச்சி ஒரு கவிதையாக உருவாகிறது.

பெண்ணருமை தானறியாப்

பேதையர்க்கும் பெண் கொடுத்தார்

மண்ணிலுள்ள காலம்

வருந்துதற்கே பெற்றெடுத்தார்

கண்ணிலரித் தந்தைதமர்

கடுநரகிற் கேயுரியர்

எண்ணி யினைந்தேங்கி

யிருந்த பெரும் பயனென்

என்னுயிரை மாய்த்த

லியைவதாம் பைங்கிளியே

உடைந்த உள்ளத்துடனும், கலங்கிய கண்களுடனும் வீட்டுக்குள் வந்த சரவணனுக்கு எதிலுமே மனஞ் செல்லவில்லை. எஞ்சியிருந்த சிறு நிம்மதியும் அவனைவிட்டு அகன்றுவிட்டது. இதுகாலவரை படுக்கையிலாவது சிறுதுளி நிம்மதி பெற்ற அவனுக்கு இப்போது படுக்கைகூட முள்ளாக இருப்பதுபோன்ற பிரமையேற்பட்டது. அதனால் அவன் கால்போன திசையெல்லாம் நடந்து சென்றான். ஆயின் இழந்த நிம்மதி மட்டும் அவனுக்குக் கிடைப்பதாக இல்லை. அதனால் தனது அறைக்குட் சென்று ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டினான். அதிலே சில சிறந்த ஓவியங்கள் காணப்பட்டன. அதிலே சில சிறந்த ஓவியங்கள் காணப்பட்டன. அதிலே மனதைப் பதிக்க முயற்சித்தான். அவற்றிலே காணப்பட்ட ஓவியங்களில் ஒன்று அவன் கவனத்தை ஈர்த்தது. அந்த ஓவியத்திற் காணப்பட்ட காட்சியை உற்றுப்பார்த்தான்.

அப்போது அங்கே வந்துகொண்டிருந்த பொன்னையாவிடம் அந்த ஓவியத்தைக் காட்டினான். பொன்னையாவுக்குப் பெரும் ஆச்சரியமாக இருந்தது. சரவணன் மனம் மாறிவிட்டானோ என்றுகூடச் சிந்தித்தார். அல்லது தன்னிடம் ஓவியத்தைக் காட்டிக் கருத்துப் பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு அவனுக்கு என்ன வந்துவிட்டது? ஒருவேளை இவன் மனம்மாறும் விதமாகச் சிவகாமி ஏதாவது கூறி அனுப்பியிருப்பாளோ…? என்னவாக இருக்கும் என்ற எண்ணத்தில் அவனிடம் இருந்த ஓவியத்தை வாங்கி அதிற்தன் விழிகளைப் பதித்தார். அதிலே கண்ட ஓவியம் அவரை அதிர்ச்சியடையச் செய்தது. எவ்வளவு தூரம் சரவணனின் மனம் புண்பட்டுப்போயுள்ளது? என்பதை அந்த ஓவியம் உள்ளங்கை நெல்லிக்கனிபோற் காட்டியது.

இந்த ஓவியத்தில் அப்படி என்னதான் விசித்தரமாக இருக்கிறது? என்று அவனைப் பார்த்து ஒன்றும் புரியாதவர்போற் கேட்டார் பொன்னையா. சரவணன் அவர் கேள்வியைக் கேட்டுச் சிரித்தான்.

அவன் கண்கள் மீண்டும் இந்த ஓவியத்தின்மீது பதிந்து கொண்டன. அதில் இருக்கும் புலியின் வாயில் அகப்பட்ட மானைப் பார்க்கும்போது எனக்கு சிவகாமியின் நினைவு தான் வருகிறது. அவளது வாழ்க்கையும் வெம்புலியின் வாயில் அகப்பட்ட மானின் கதைபோல் ஆகிவிட்டது என்று கூறி அவரைப் பார்த்தான்.

அடர்ந்த காடொன்றில் வெம்புலியின் வாயில் அழகிய புள்ளிமான் ஒன்று அகப்பட்டுச் சித்திரைவதைப்படுவதை ஒரு ஓவியர் தத்ரூபமாக விளக்கியிருந்தார். சரவணனின் கண்களுக்கு அந்தப் புலி முத்துக்குமரனைப்போலவும், புள்ளிமான் சிவகாமி போலவும் காட்சியளித்தன. சிவகாமியின் வாழ்க்கை பாழாகிவிட்டது என நினைத்து நினைத்துப் புலம்பினான் சரவணன். அவனாற் தன் துன்பத்தை ஆற்றவே முடியவில்லை. தன் துயரையெல்லாஞ் சேர்த்து கவிதையாக்கிப் பாடுகிறான் அவன்.

தம்பெருமை தாமறியாத்

தஞ்சமிலாப் பெண்கடமை

வெம்புலிவாய் மானென்ன

வீணேகொடுத்திடுவார்

செம்பொனிலாவின்பஞ்

சிறந்ததெனக் கூறுதியால்

தெரிவையவட் கிம்மாற்றஞ்

சீர்க்கிளியே கூறுதியால்

8

பக்கத்து வீட்டுக் குழந்தை பகீரதி தம்பிமுத்துப்பிள்ளையிடம் தமிழ் கேட்டுப் படிப்பதற்காக வந்திருக்கிறாள். அவரும் அவளை மிகவும் அன்புடன் பக்கத்தில் அமர்த்திப் பாடஞ் சொல்லித்தருகிறார். இடையிடையே அவள் கேட்கும் சில வினாக்கள் அவரைத் திணறவைக்கின்றளன. ஆயினும் அவர் சிரித்துக்கொண்டே மிகுந்த உற்சாகத்தோடு அவளுக்கு விளக்கந்தருகிறார். அப்போது புதிதான தந்திக் கம்பி இணைக்கப்பட்ட வீணையில் இருந்து எழுகின்ற நாதம் போல பகீரதியின் சிரிப்புக் கேட்கிறது.

இந்தக் காட்சி சரவணனின் உள்ளத்தில் பழைய நினைவுகளை மீட்கின்றன. அவர்கள் சிறுவர்களாக இருக்கும்போதும் இப்படித்தான். தம்பிமுத்துப்பிள்ளை அவர்கள் இருவரையும் பக்கத்தில் இருத்தி அன்புடன் பாடஞ்சொல்லித்தருவார். சிவகாமிகூடப் பாடங்கேட்க அங்குதான் வருவாள். அவளும் பகீரதியைப்போலத்தான். திடீர் திடீர் என ஏதாவது வினாக்கள் கேட்டுக்கொண்டேயிருப்பாள். அவரும் அலுக்காமல் அவளுடைய வினாக்களுக்கெல்லாம் ஆணித்தரமான பதில் கொடுப்பார். கனகசுந்தரம் சிவகாமியின் குறும்புத்தனத்தைப் பார்த்துச் சிரித்துக் கொள்வான். ஆனால் சரவணனுக்கு மட்டும் கோபங் கோபமாக வரும். தம்பிமுத்துப்பிள்ளையிடம் மட்டும் ஒரு கொள்கையுண்டு. பாடந் தொடங்கும்போதும் மூவரையும் ஒருமித்துத்தான் வைத்துத் தொடங்குவார். முடியும் போதும் ஒருமித்துத்தான் விடுவார். சரவணன் சிறுவனாகவும், வீட்டுக்குச் செல்லப்பிள்ளையாகவும் இருந்ததால் அவனுக்கு நேரத்தோடு தூக்கம் வந்துவிடும். அவன் தூங்கி வழிந்துகொண்டே சிவகாமியை முறைத்துப் பார்ப்பான்.

சிவகாமி அவனை அலட்சியஞ் செய்யவேமாட்டாள். போதுமப்பா இனி நாளைக்குப் படிக்கலாம் என்பான் சரவணன் கொட்டாவி விட்டுக்கொண்டே. கொஞ்சம் பொறுமையாக இரு சரவணா. சிவகாமியின் சந்தேகங்களை முதலில் தீர்த்துவிடுகிறேன். அதற்குப்பின் நீ நிம்மதியாகப் படுக்கப்போகலாம் என்பார் அவன் அப்பா. அவனுக்கு ஆத்திரம் எல்லை கடந்துவிடும். அடுப்பூதும் பெண்ணுக்கு எதுக்கப்பா படிப்பு…? சிவகாமி எப்படியும் சமையல் வேலை தானே பார்க்கப்போகிறாள். விடுங்கள் அப்பா என்பான் அலுத்துக்கொண்டே.

“டேய்… உனக்கு யார் அப்படிச் சொல்லிக்கொடுத்தது…? உன் அம்மாகூடச் சமையல் வேலைதானே செய்தாள். இருந்தும் உனக்கும், அண்ணனுக்கும், சிவகாமிக்கும் பாடஞ்சொல்லித்தருபவள் அவள்தானே. அவள் படித்திருந்தபடியாற்தான் உங்களையெல்லாம் ஒழுக்கமாக வளர்க்க முடிந்தது. பெண்கள் எப்போதும் படித்திருக்க வேண்டும். நாளைக்குச் சிவகாமிகூட நம்ம வீட்டுக்கு மருமகளாக வரும்போதும் எனக்கு ஒரு படித்த பெண் மருமகளாக் கிடைக்கிறாளே என்று நான் எவ்வளவு பெருமைப்படுவேன் தெரியுமா?” என்று அவர் திருப்பிக் கேட்கும்போது சரவணன் மிகுந்த சிரமத்தோடு தன் ஆத்திரத்தை அடக்கிக்கொள்வான்.

அப்படியெல்லாம் எத்தனையோ பெரிய மனக்கோட்டைகள் கட்டி தமிழறிவூட்டிப் பாசத்தோடும், நேசத்தோடும் வளர்த்தெடுத்த சிவகாமி இன்று மாற்றான் ஒருவனுக்கு மாலை சூடப்போகிறாள் என்பதைக் கேட்கும்போதெல்லாம் அவன் உள்ளம் கொதித்தது. பெண்ணினது பெருமையையும் அருமையையும் அறியமுடியாத ஒருவனுக்குச் சிவகாமி வாழ்க்கைப்பட்டு என்ன சுகத்தை அனுபவிக்க முடியும் என்று எண்ணி எண்ணி ஏங்குகிறான். அந்த எண்ணக் குவியல் கவிதையாக உருவெடுக்கிறது.

கல்வி நலம் பெற்றனரேற்

காரிகையர் காதலர்க்குச்

சொல்லருநற் துணையன்றோ

தொல்லுலகு சிறக்குமன்றோ

மெல்லியர்பாற் கல்வி

விரும்பாத வீணரெல்லாம்

எல்லையிலாவின் படைதற்

கிடையூறென் றேயியம்பாய்

என்னிரு கண் மணியனையாட்

கியம்பாய் பசுங்கிளியே.

சிவகாமிக்குக் கணவனாகப் போகும் முத்துக்குமரனைப் பற்றிப் பலரும் பலமாதிரிப் பேசிக்கொள்கின்றனர். அவரைத் திருமணஞ் செய்துகொள்வதால் அவளுக்கு எந்தவித சுகமும் கிடைக்கப்போவதில்லை என்று ஊர் பேசிக்கொள்கிறது. கூட்டிலே அடைத்து சுதந்திரம் பறிக்கப்படப்போகும் பசுங்கிளிபோல சிவகாமியும் வீட்டிற்குள் அடைக்கப்பட்டு விடுவாள் என்று சிலர் கூறுகிறார்கள். சிவகாமியைப்போன்ற அழகான மாம்பழம்போன்ற பெண் அந்த முத்துக்குமரனுக்கு எங்கே கிடைக்கப்போகிறது…? என்னவோ அவன் அதிர்ஷ்டம் சிவகாமி கிடைத்துவிட்டாள். அவள் பாவம். இனி எங்குமே செல்லமுடியாது. அவன் அவளைப் பூட்டித் தான் வைப்பான்’ என்றுதான் எல்லோரும் கதைக்கிறார்கள் தம்பி, என்று ஒருநாள் எதிர்வீட்டுப் பொன்னையா கூறியது ஞாபகத்திற்கு வருகிறது.

உடனே பழைய நிகழ்ச்சி ஒன்றும் அவன் கண்முன்னே தோற்றமளிக்கின்றது. அவர்கள் சிறுவர்களாக இருக்கும் போது ஒருநாள் சிவகாமியும் இவர்களோடு சேர்ந்து ஏதோ விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது சிவகாமியை அவளது தாயார் கூவி அழைத்துக்கொண்டு வந்தாள். தாயின் குரல் கேட்ட சிவகாமி போவதற்குத் துடித்தாள். ஆனால் சரவணனோ அவளை விடுவதாக இல்லை. இருவரும் வாக்குவாதப்பட்டு ஈற்றில் சிவகாமியை தன் விருப்பப்படியே போவதற்கு அடியெடுத்துவைத்தபோது சரவணன் அவள் கையைப் பிடித்து இழுத்து அவர்கள் வீட்டின் முன்புறத்தில் இருந்த சிறிய அறைக்குட்போடம்டு கதவை அடைத்துவிட்டான். சிவகாமிக்குப் பொதுவாக இருள், தனிமை இரண்டுமே பிடிக்காது. அதனால் தனிமையில் அறைக்குள் அடைபட்ட சிவகாமி சத்தமிட்டுப் பெரிதாக அழுதாள். அவள் குரல் கேட்டு ஓடோடிலந்த சரவணனின் தாய் அவனைக் கண்டித்துவிட்டுக் கதவைத் திறந்து சிவகாமியை வெளியேற்றியபோது அவளது முகம் அழுதழுது குங்குமம்போற் சிவந்திருந்தது.

அதற்குள் சிவகாமியின் தாயாரும் அங்கு வர கனகசுந்தரம் நடந்ததைக் கூறினான். அவள் வாய்விட்டுச் சிரித்துவிட்டு சரவணா, உனக்குச் சிவகாமிமேல் அவ்வளவு பிரியமென்றால் அவள் அப்பாவிடம் கேட்டு அவளை உன் வீட்டிலேயே வைத்துக்கொள் என்று கூறியதெல்லாம் நேற்று நடந்ததுபோல ஞாபகத்திற்கு வந்தது.

இவ்வளவு நிகழ்ச்சிகளையும் அவனாற் கூட மறக்கமுடியாதிருந்தால் சிவகாமியால் எப்படிச் சுலபமாக மறக்க முடிந்தது? என்று ஏங்கித் தவித்தான். அவளுடன் சேர்ந்து பழகிய நாட்களை அவனால் மறக்கவே முடியவில்லை. அவன் உள்ளத்தில் அவள் நிரந்தரமான ஓர் இடத்தைப் பெற்றிருந்தாள். சிறியவர்களின் உறவு இந்தவகையில் மலர்வதற்குப் பெரியவர்களே பாலமமைத்துக் கொடுத்தார்கள் என்றால் அது மிகையாகாது.

இந்த நினைவுகளில் திளைத்திருந்த சரவணனைப் ‘போயிட்டு வாரன் மாமா’ என்ற பிஞ்சுக் குரல் திடுக்கிடவைத்தது. பகீரதி பாடஞ்சொல்லி முடிந்துபோய்க் கொண்டிருந்தாள். அவளையும் அவள் சுமக்கமுடியாதற் சுமந்துகொண்டு சென்ற புத்தகங்களையும் பார்த்தபோது அவன் கவிதா உள்ளம் கற்பனை செய்கிறது.

கூட்டிற் பசுங்கிளிபோற்

கோதையரை எப்பொழுதும்

வீட்டி லடைத்துவைக்கும்

விரகிலருக் கியாதுரைப்போம்

பூட்டித் திறந்தெடுக்கும்

பொருளாக் கருதினரோ

கேட்டோர் நகைப்பதுவுங்

கேட்டிலரோ பைங்கிளியே

கிஞ்சுகவாய் பைந்தொடிபாற்

கிளித்தாய் பசுங்கிளியே.

பகீரதியைப் பார்த்தபோது சரவணனுக்குத் துக்கமாக இருந்தது. இவள் வளர்ந்தால் இவளும் சிவகாமியைப்போற் கவலையும், அல்லலும்படவேண்டி ஏற்படுமே என்று எண்ணிப் பார்க்கிறான். பொதுவாகப் பெண்ணாகப் பிறப்பதே பாவம் என்ற முடிவுக்கு வருகிறான். பெண்களுக்காக அவன் மனம் இரங்கிக்கொள்கிறது.

உண்பதுவு முறங்குவது

மூர்க்கதைகள் பேசுவதும்

பெண்க டொழிலா மென்றே

பேசிடுவா ரொருசாரார்

பெண்களுக்குத் தம்பதியே

பெருந் தெய்வ மென்பார் சிலர்

பெண்களுக்கும் அடிமைகட்கும்

பேதமில்லை யென்பார் சிலர்

பேதமை காணிவர் கொள்கை

பேர்த்தறிவாய் பசுங்கிளியே

மாதரார் தாமிலரேல்

மனையும் வனமா நல்ல

மாதரார் தாமுளரேல்

வனமும் வள மனையாம்

மாதாரான்றோவிவ்

வாழ்விற்p கருங்கலமாம்

மாதரா ரன்றோ

வருந்துலரிம் மாநிலத்தில்

மாது சிரோன் மணிக்கிவை நீ

வகுப்பாய் பசுங்கிளியே.

பெண்களைப்பற்றி அவன் தொடர்ந்து பாடி முடிக்கிறான். பெண்கள் இல்லாவிடின் வீடும் வனமாகும். பெண்கள் இருந்தால் வனமும் வீடாகும் என்ற கருத்துப்படப் பாடுகின்றான்.

9

தம்பிமுத்துப்பிள்ளைக்கு மகனைப் பார்க்கும்போதெல்லாம் கண்களில் நீர் சுரந்தது. தான் உயிருக்குயிராக அன்புடன் பெற்றுவளர்த்த பிள்ளை தன் கண்முன்னாலேயே கண்ணீர் விடுவதைப் பார்த்துக்கொண்டிருக்கமுடியவில்லை. அதனாற்தான் தன் கௌரவத்தைக்கூடப் பொருட்படுத்தாமல் சிவகாமியின் அப்பாவிடம் இரண்டுமுறை தூது சென்றார். ஆனால் அவரது முகத்தைக்கூட அந்த மனிதன் பார்க்கவில்லை. அதை நினைத்துப்பார்க்க அவர் உள்ளம் வேதனைப்பட்டது. அவர்தன் மனைவியை இழந்த துயரை ஒரளவுக்கு மறந்துவந்துகொண்டிருந்தபோது இந்த நிகழ்ச்சி அவருக்கு இன்னும் பேரிடியாக இருந்தது.

இந்தத் துன்பத்தில் இருந்து அவரால் விடுபடவே முடியவில்லை. அதனாற் தன் மனதை ஒரு நிலைப்படுத்துவதற்காகத் தேவாரப் புத்தகத்தைத் தூக்கிக்கொண்டு தன் படுக்கையிற் சாய்ந்து வாய்விட்டுப்பாடத் தொடங்கினார். நமச்சிவாய பதிகத்தில்வரும் புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்… அவர் தன் பாட்டுக்குப் பாடிக்கொண்டிருந்தார்.

அவரது பாட்டில் லயித்தபடி சரவணன் வெளித்திண்ணையில் அமர்ந்திருந்தான். அவர் பாடிய இந்த அடிகள் அவன் மனதில் திருப்பித் திருப்பி ஒலித்துக்கொண்டேயிருந்தன. அவற்றில் ஆழமான பொருள் பொதிந்திருப்பது போலவும் தோன்றின. மாணிக்கவாசகர் எவ்வளவு அழகாகப் பாடியிருக்கிறார் என்று தன் மனதிற்குள்ளேயே கூறிக்கொண்ட அவன் மனித வாழ்வைப்பற்றி ஆழமாகச் சிந்திக்கத் தொடங்கினான். பேசும் சக்தியையும் பகுத்தறிவையும் கொண்டு இயங்கும் ஒரேயொரு உயிர்ஜாதி மனிதனே. அவனாற்தான் சிந்திக்கமுடிகிறது. அப்படியான வல்லமைகள் பெற்றிருக்கும் சிலவேளைகளில் மனிதன் மிருகமாகிறான். இன்னும் சில சந்தர்ப்பங்களில் மனிதன் ஊமையாகியும் விடுகிறான். பேசவேண்டிய இடத்திற் பேசவும் சிந்திக்கவேண்டிய இடத்திற் சிந்திக்கவும் தவறிவிடுகிறான். தன் துன்பங்களை வெளியிட முடியாமல் மனதுக்குள்ளேயே புதைத்துச் சிறுகச் சிறுகத் தன்னை அழித்துக்கொள்கிறான்.

இன்னும் சில சந்தர்பங்களில் ஒருசிலர் பேசுவதற்கு ஆசைப்பட்டாலுங்கூட அவர்களுக்குப் பேச்சு சுதந்திரம் அளிக்கப்படுவதில்லை. மிருகங்களைவிடக் கேவலமான அடிமைகளாய் நடாத்தப்படுகிறார்கள். இப்படியெல்லாம் நடைபெறுவதற்குக் காரணத்தான் என்ன? அந்த வகையில் சிவகாமியையும் இவர்களில் ஒரு சாராருடன் ஒப்பிடலாம். என அவன் எண்ணிப் பார்த்தான். ஆம்! சிவகாமிக்குக் கூடப் பேச்சுரிமை மறுக்கப்பட்டுள்ளது. அவளை எங்களுடன் பேசவிடாமற் தடுத்துவிட்டார்கள் பாதகர்கள். என்னுடைய முகத்தைக்கூடப் பார்க்கப் பயப்படும். அளவுக்கு அவள் அடிமைப்படுத்தப்பட்டுள்ளாள். மனவிருப்பம் இல்லாமல் இருந்துங்கூட அவள் மாற்றான் ஒருவனுக்கு மாலையிடும்படி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளாள்.

இதையெல்லாம் நினைக்க நினைக்க அவன் உள்ளம் பற்றி எரிந்தது. இதை யாரிடமாவது சொல்லி ஆறவேண்டும்போல மனதில் ஒரு தவிப்பு. ஆயின் இதை எப்படிப் பிறரிடம் கூறமுடியும்…? ஆகவே அவன் கவிதையாகவே பாடிவிடுகிறான்.

அத்தி முதற் சிற்றெறும்பீ

றானவுயிர் யாவதிலும்

உத்தமராம் மாந்த

ரொருவரே பேசவலார்

சித்த மகிழ்ந் தேபிறர்பாற்

றெரிவையரைப் பேச விடார்

எத்தான் மறுத்தனரோ

விசையா யிளங்கிளியே

ஏது குற்றஞ் செய்தனர்க

ளிசைவாய் பசுங்கிளியே

எதைச் சிந்தித்துத்தான் என்ன? தாம் செய்வது தீங்கு என்று உணர்ந்துகொண்டும் செய்யும்போது அதை யாராற்றான் தடுக்கமுடியும்….? உணராவிட்டாலுங்கூடப் பிறர் எடுத்துக்கூறும்போது எதையும் ஆராய்ந்து செய்யப் பழகிக்கொள்ளவேண்டும். மற்றவர்கள் கூறுவது நன்மைக்குத்தான் என்ற உணர்ச்சி ஏற்படவேண்டும். அதை விடுத்து நான் செய்வதுதான் சரியென ஒற்றைக்காலில் நின்று வாதாடுபவர்களிடம் என்னத்தைப் பேசமுடியும்? பெண் என்றாற் பேயும் இரங்கும் என்பார்கள். இங்கே பெற்றவர்கள்கூட இரங்குகிறார்கள் இல்லை. எத்தனையோ பேர் எடுத்துக் கூறியுங்கூட அவர்களுக்குப் பெண்ணைவிடப் பணமும் பதவியுந்தான் பெரிதாகப் போய்விட்டது. மகளின் எதிர்கால வாழ்வைப்பற்றி அவர்கள் ஒரு துளிகூட அக்கறைப் படவில்லை.

அவர்களுக்கு இப்படியான ஒரு நிலை ஏற்பட்டால் எப்படித்தான் பொறுப்பார்களோ…? ஒவ்வொன்றும் அவரவர்களுக்கு வந்தாற்தான் தெரியும். ஆண்மகன் ஒருவனுக்குச் சிவகாமியின் நிலை வந்திருந்தால் அவன் நிச்சயமாக அதைப் பொறுத்திருக்கமாட்டான். அப்பா மட்டும் நீ சிவகாமயைத் திருமணஞ் செய்துகொள்ளக் கூடாது என்று எனக்கு கட்டளையிட்டிருந்தால் அவர் சொல்லுக்கு நான் அடிபணிந்திருக்கவே மாட்டேன். என் உயிர் போவதாக இருந்தாலுங்கூட நான் சிவகாமியையே திருமணஞ் செய்திருப்பேன். நான் மட்டும் என்ன? எந்த ஆண்மகனும் இதைத்தான் செய்திருப்பான். செய்யவும் வேண்டும்.

சிறு வயதில் ஒருநாட்கூட என்னைப்பார்க்காமல் இருக்க முடியாத சிவகாமிக்கு இப்போது எப்படித்தான் வாரக் கணக்காக என்னைப் பார்க்காமல் இருக்கமுடிகிறதோ… ஒருவேளை அவள் கூடப் பணத்திலும் பதவியிலும் மயங்கி விட்டாளோ…? சந்தர்ப்பத்திற்கு ஏற்றவிதமாக நிறம் மாற்றிக்கொள்ளும் பச்சோதி வர்க்கத்தைச் சேர்ந்தவளல்ல சிவகாமி என்பதும் அவனுக்கு நன்கு தெரியும். ஆயினும் இன்றைய நிலையில் எதைத்தான் நிச்சயமாகக் கூறமுடிகிறது. இருந்தாலும் சிவகாமி கொஞ்சமாவது கருணை காட்டியிருந்தால் விஷயங்கள் இவ்வளவு தூரத்திற்குச் சென்றிருக்க முடியாது என்பது அவன் சித்தாந்தம்.

இப்படியெல்லாம் அவன் தன் பாட்டுக்கு நினைந்து ஏங்குவதுபோல சிவகாமி கவலைப்படுகிறாளோ என்னவோ? அப்படியாக இருந்தால் அவள் நிலை எப்படியிருக்கும். அவனாவது கவிதைமூலம் தன் துன்பத்தையெல்லாம் தீர்த்துக்கொள்கிறான். அதற்காக அவன் கடவுளுக்கு நன்றி செலுத்தினான். தான் எழுதும் கவிதைகளை அவன் தனக்குள்ளாகவே வாசித்து மகிழ்வான். அவன் கவிதைகளைப் பிறர் போற்றியதில்லை. அதையிட்டு அவன் கவலைப்படவும் இல்லை. எப்படியாவது ஒருநாள் என் கவிதைகளையும் உலகம் புகழத்தான்போகிறது என்ற தெம்பு அவனுக்கு. உலகம் கவி, ஷேக்ஸ்பியர், மில்ரன் பாரதிபோன்றவர்களின் அரும்பெருங் கவிதைகளையெல்லாம் அவன் விரும்பிப் படித்திருக்கிறான். அப்போது அந்தக் கவிதைகள் மேல் உண்டான அபிமானம் அவனை அந்தக் கவிஞர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கத் தூண்டியது. அந்தப் பெயர்போன கவிஞர்களெல்லாம் உயிரோடிருக்கும்வரை அவர்களையே அவர்களது படைப்புக்களையோ எவரும் போற்றவில்லையென்றும் அவர்கள் இறந்த பின்புதான் அவர்களைப் புகழேணியின் உச்சிப்படியில் ஏற்றிவைத்தனர் என்பதையும் அவனால் அறியமுடிந்தது. அதற்காக அவன் கவலைப்படவில்லை. புகழை விரும்பி அவன் எழுதவும் இல்லை. கவிதை கற்பனையாக ஊற்றெடுக்கும்போதெல்லாம் அழகு தமிழில் தேன் சொட்டச்சொட்டப் புனைந்து விடுவான். அதே வேகத்தில் அவன் எழுதிய கவிதைகள் எண்ணிக்கையற்றவை.

சிவகாமியைப் பிரிய நேர்ந்ததிலிருந்து அவன் உள்ளத்துயரையெல்லாம் கவிதையாகப் புனைவதில் அவனுக்கு ஒரு திருப்தி. அவன் உள்ளத்திற்கோர் நிம்மதி.

அந்தோ விசைப்பதெனை

யரிவையர்க்குத் தீங்குபல

சிந்தை மகிழ்ந்தே புரிவார்

சிந்தியா ரொரு சிறிதும்

பைந்தொடியார் தம்பாற்

பரிதாபஞ் சற்று மிலார்

அந்த நிலை தமக்காமே

விருப்பரோ வாடவர்தாம்

இறை சகியா ரிறை

சகியா ரெழிலார் பசுங்கிளியே.

அவனையறியாமலே அடுத்த பாட்டும் ஊற்றெடுத்து விட்டது. அவனுக்கு வாய்விட்டுக் கதறியழவேண்டும்போல இருந்தது. ஆயினும் ஆண்பிள்ளை அழுதால் அது ஆண்மைக்கு இழுக்கு என்ற எண்ணத்தில் தன் சோகத்தையெல்லாம் மிகவும் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டான்.

10

அன்று விடிந்து வெகு நேரமாகியும் சரவணன் தன் படுக்கையைவிட்டு எழுந்திருக்கவில்லை. அதனால் கனகசுந்தரமும் எழுந்திருக்கவில்லை. கனகசுந்தரம் அயர்ந்த நித்திரையில் இருந்தான். ஆனால் சரவணனோ தலையையுயர்த்தித் தமையனைப் பார்ப்பதும் படுப்பதுமாக இருந்தான். அப்போது பின் திண்ணையில் பேச்சரவங் கேட்டது. அவன் தன் காதைக் கொடுத்துக் கேட்கிறான். குரலில் இருந்து பக்கத்துப் பொன்னையாதான் தன் தந்தையுடன் பேசிக்கொள்வதாக உணர்கிறான்.

“என்ன பொன்னையா… அதிகாலையில் இந்தப் பக்கம். என்ன ஏதாவது புதினமே… தம்பிமுத்துப்பிள்ளை அவரை வரவேற்கிறார்.

“புதினமோ… இதைவிட இனி இந்தத் திருகோணமலையில் வேறு என்ன புதினமிருக்கப்போகிறது? சிவகாமிக்கு முத்துக்குமாரை நிச்சயம் செய்ததே ஒரு புதினந்தானே. நல்லகாலம்@ பொடியள் இரண்டுமே நல்ல நித்திரையாகக் கிடக்குதுகள். இனி இந்தப் பேச்சையே இந்த வீட்டில் எடுக்கக்கூடாது என்று இருந்தனான். என்னவோ எனக்கு இந்த வீட்டுப் படியை மிதிச்சா வேறு எந்த நினைவுமே வாறதில்லை. ஒரு பாடாக மனந்தேறியிருக்கிறதுகளை ஏன் கவலைப்படுத்தவேண்டும்? எப்படியோ பேச்சு என்னையும் மீறி வந்திட்டுது. நல்ல காலம் அதுகள் நித்திரை…!

நான் ஏன் விடிய வந்தனான் தெரியுமே…? நேற்று ஒரு இறாத்தல் சூடைமீன் மலிவாக வாங்கினனான் என்றெல்லே சொன்னனான். என்ற மனுசி அதை நல்லாப் பொரித்து இன்று காலை பிட்டுக்குச் சாப்பிடலாம் எண்டு பத்திரப் படுத்திவைச்சது. ஆனால் விடியப்புறம் ‘படார்’ என்றொரு சத்தங் கேட்டுது. நான் திடுக்கிட்டு எழுந்து சத்தங்கேட்ட திக்கை நோக்கிப்போனேன். என்னெண்டு நினைக்கிறாய். பூனையொண்டு ஓடிக்கொண்டிருந்தது. நான் அவசர அவசரமாக ஓடிப்போய் அடுக்களையைத் திறந்துபார்த்தன். என்னத்தைச் சொல்ல மீன் பொரியல் வைத்து மூடியிருந்த சட்டியுங் கறிமூடியும் உடைஞ்சு சுக்கு நூறாக நிலத்தில் கிடக்க, பொரியல் எல்லாம் மாயமாய் மறைஞ்சுபோச்சு.”

“அப்ப பூனை திண்டிட்டுச் சட்டியையும் உடைச்சுப் போட்டுது எண்டு சொல்லன்…” தம்பிமுத்துப்பிள்ளை இடைமறித்துக் கூறிவிட்டுச் சிரித்துக்கொண்டான். பல நாட்களுக்குப்பின் அவர் மனம்விட்டுச் சிரித்தசிரிப்பாக இருந்ததான் அது உள்ளத்தைத் தொடுவதாக இருந்தது.

“ஓ அதைத்தானே சொல்லவந்தனான். எனக்கு வந்த ஆத்திரத்தில் பூனையை அந்த இடத்திலேயே கொன்றிருப்பன். என்ன செய்வது மனுசி விடமாட்டன் எண்டிட்டுது. ஒரு பூனையைக் கொன்றால் ஒன்பது பிராமணர்களைக் கொன்ற பாவமே. பின்ன விடிய எழுந்ததும் முதல் வேலையா என்ன செய்தனான் தெரியுமே…? அந்தப் பூனையைத் தேடிப் பிடித்து ஒரு குட்டிச் சாக்கிலைபோட்டு ஒரு மைல் தூரம் நடந்துபோய் கண்டங்காட்டுப் பக்கம் விட்டுப் போட்டுவந்தனான். வந்த கையோட மனுசி தந்த கோப்பியைக் குடித்துப்போட்டு அப்படியே இங்க வாறன். அதுசரி ஏன் இன்றைக்கு பொடியன்கள் இன்னும் எழுந்திருக்கல்ல. இரவு வெகு நேரம் முழிச்சிருந்தவங்களே…?”

“என்ர பொடியனுகள் இப்ப சரியா நித்திரைகொண்டு எத்தினை நாளாச்சுத் தெரியுமே? என்னவோ இன்றைக்காவது நிம்மதியாகப் படுக்குதுகள். படுக்கப்பட்டும் அப்பவாவது சரவணன் சிவகாமியைக் கொஞ்சநேரம் மறந்திருப்பான். மூத்தவன் இளையவனை மறந்திருப்பான் உம் என்ன செய்யட்டும்… எல்லாம் விதி, பொன்னையா விதி…!”

பொன்னையாவின் வினாவுக்குத் தம்பிமுத்துக் கூறியபதில் சரவணனை அப்படியே உலுப்பிவிடுகிறது. சிவகாமியின் அப்பாவையும் தனது தந்தையையும் அவன் ஒப்பிட்டுப் பார்க்கிறான். அப்பாவின் காற்தூசிக்குக்கூட அந்தக் கிழவன் ஒப்பாகமாட்டான் என்ற முடிவுக்கு வந்து தனது தலையை நிமிர்த்தி கனகசுந்தரனை பார்க்கிறான். கனகசுந்தரத்தின் கால் அசைவது தெரிகிறது. அவன் இன்னும் விழிப்போடு தான் இருக்கிறான் என்ற எண்ணத்தில் மெதுவாக எழுந்து கொள்கிறான். இதுவரை பொன்னையா கூறிய அத்தனையும் அவனது சிந்தனையில் நிழலாடுகின்றன. அந்தப் பூனையையும் சிவகாமியையும் அவனது உள்ளம் ஒப்பிட்டுப்பார்க்கிறது. பூனையைக் கண்ணைக்கட்டிக் காட்டில்விட்டது போலத்தான் சிவகாமியையும் இப்போது விட்டிருக்கிறார்கள். கண்ணால் கண்டிராத ஒருவனைக் காதல் மொழிபேசிக் கலந்துரையாடிக்கொள்ளாத ஒருவனை சிவகாமி மணந்து கொள்ளப்போகிறாள். இதைவிடக் கொடுமையான செயல் வேறு என்னதான் இருக்கமுடியும்? சிவகாமியின் நிலை ஒரு பாடலாகவே உருவெடுக்கிறது அவன் உள்ளத்தில்.

கண்ணை மறைந்தே கொண்டுபோய்க்

காட்டில்விடும் பூனையைப்போல்

பொண்ணைமனை யடைத்துவைத்துப்

பின்னொருவர் கைக்கொடுப்பர்

கண்ணால்முன் கண்டுமிலர்

காதலர் சொற் கேட்டுமிலர்

எண்ணாது மெண்ணி

யிருந்தயர்வர் மங்கையர்கள்

இக்கொடுமைக் கியாது

செய்வ திசையாய் பசுங்கிளி

சரவணன் கவிதையைத் திருப்பித் திருப்பிக் கூறிப்பார்க்கிறான். கவிதை நன்றாக அமைந்துவிட்டதில் ஒரு திருப்தி அவனுக்கு. அப்போது கனகசுந்தரனும் எழுந்து படுக்கையில் அமர்ந்துகொள்கிறான். சரவணன் அவனைப் பார்த்துவிட்டு ஏதோ நினைத்துக்கொண்டவனாய். “அண்ணா! நேற்றிரவு நான் ஓர் சொப்பனங் கண்டேன்” என்று கூறுகிறான். ஆச்சரியத்தோடு கனகசுந்தரம் அவனைப் பார்த்த பார்வை@ ‘அது என்ன கனவு?’ என்று கேட்பதுபோல் இருக்கிறது.

அவனது பார்வையைப் புரிந்துகொண்டு “சிவகாமியை நான் இரவு கண்டேன். ஒருநாட்கூடப் பேசிப் பழகாத அந்த முத்துக்குமாரனுடன் நான் எப்படித்தான் என் வாழ் நாளைக் கழிக்கப்போகிறேனோ தெரியாது. உங்களைத் தவிர நான் வேறு யாரைத்தான் திருமணஞ் செய்துகொண்டாலும் அவர்களுடன் ஒரு கணப்பொழுதேனும் இன்பமாகக் கழிக்கப்போவதில்லை. இதை ஏன் அப்பா உணரமாட்டேன் என்கிறார். என் மனதை நன்றாக உணர்ந்த பின்பும் ஏன் இவ்வளவு கொடூரமான ஒரு காரியத்தைச் செய்கிறார் என எனக்கே தெரியவில்லை. இதிலிருந்து என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று அவள் மண்டியிட்டு என்னிடங் கேட்டதுபோலிருந்தது. இந்தக் கனவைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய் அண்ணா?” என்ற அவனது வினா கனகசுந்தரனைச் சிறிது சிந்திக்கவைத்தது.

‘இவன் கனவில் சிவகாமி தோன்றிவிட்டாள். சிறிது மனந்தெளிந்திருந்தவனின் நிம்மதி மீண்டும் குலையப் போகிறது. அதனால் அவனது நினைவை இந்தக் கனவில் இருந்து ஈர்ந்து விடவேண்டும்’ என்ற எண்ணத்தில் “சரவணா, சிவகாமி உன்னிடங் கனவில் மட்டுந்தான் வருவாள். நினைவில் நேராக உன்னிடம் வந்து இவற்றைக் கூற அவளுக்குத் துணிவில்லை. அவள் ஒரு முழுக் கோழை, நீ இப்படி இரவும் பகலும் அவள் நினைவில் இருந்து உருகுவதுபோல அவள் மட்டும் ஒரு சிறிதாவது உருகியிருந்தால் நிச்சயமாக அவள் எப்படியாவது உன்னிடம் வந்திருப்பாள். அவள் உன்னை மறந்துவிட்டாள். அவளுக்கு உன் நினைவு அற்றுவிட்டது. ஆதலால் நீயும் அவளை இனி மறந்துவிடு” என்று கனகசுந்தரம் தன்னை மறந்து பேசினான்.

“அண்ணா! என்னை வேண்டுமானால் நீ திட்டு. வசை கூறு. அதற்கு உனக்குப் பூரண உரிமையுண்டு. ஆனால் சிவகாமி ஒன்றுமறியாத பேதைப் பெண். அதனால் அவளைப்பற்றிக் குறைவாக என்முன் பேசாதே. அவள் எங்காவது சந்தோஷமாக வாழட்டும்” என்று இடைமறித்துப் பேசிய சரவணன் காலமெல்லாம் கணவனுடன் வாழப்போகிறவள் பெண். அப்படியிருக்கும்போது மனம் ஒத்துப் போகாத கணவனுடன் சிவகாமி எப்படித்தான் காலங்கழிக்கப்போறாளோ என்று சிந்திக்கிறான். அதற்கு விடை கவிதையாகவே பிறக்கிறது.

ஓரிருவன் னோர்பகலன்

றுயிருள்ள நாளளவுங்

காரிகையா ருடன் வாழ்வார்

கணவரே யாமாயின்

ஓரிறையு மவ்விருவ

ருள்ளமதை வினவாதே

பாரிலே மணம் புரிவோர்

பாதகர் காண் பைங்கிளியே

பாவை தனக் கிம்மாற்றம்

பகர்வாய் பசுங்கிளியே.

சரவணனின் உள்ளம் ஓர் உயர்ந்த உள்ளம். இவ்வளவு நடந்த பின்பும் சிவகாமியைப்பற்றி ஒரு வாhத்தைகூடப் பிறர் தீமையாகப் பேசுவதே அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவனது உள்ளத்திலே சிவகாமி நீக்கமற நிறைந்துவிட்டாள். அவனது அன்பு தூய்மையானது. விசுவாசமானது. சாசுவதமானது. சரவணனின் நினைவில் இருந்து சிவகாமியை இனி யாராவது பிரிக்கவே முடியாது.

11

அன்று காலையிலிருந்து மழை சோனாவாரியாகப் பெய்துகொண்டிருந்தது. மழை பெய்வதையே பார்த்துக்கொண்டிருந்தான் சரவணன். அவன் கண்கள் பூமியில் பதிகின்றன. மழை பரவலாக வெள்ளமிட்டு நிற்க அதிலே தோன்றும் நீர்க்குமிழிகளைப் பார்த்து அவன் அதரங்களில் ஒரு விரக்திப் புன்னகை மலர்கிறது. ஒருவேளை வாழ்க்கையே நீர்க்குமிழி என்று நினைத்துவிட்டானோ? அந்தத் தத்துவம் அவனுக்குப் புரிந்ததோ புரியவில்லையோ தெரியாது. ஆனால் அவனுக்குச் சற்றுத் தூரத்தில் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த கனகசுந்தரனுக்குப் புரிந்துதான் இருந்தது.

வௌ;வேறு உலகங்களில் சஞ்சரித்துக்கொண்டிருந்த இருவரது சிந்தனையையும் கலைப்பதுபோல் தெருக்கதவு திறக்கப்படும் சத்தங் கேட்கிறது. இருவரும் ஏக காலத்தில் நிமிர்ந்து பார்க்கின்றனர். அங்கே பொன்னையா ஓட்டைக் குடையொன்றில் வந்துகொண்டிருக்கிறார். இந்தக் கொட்டும் மழையில் அவர் வருவதாக இருந்தால் ஏதாவது விஷேடமான செய்தி இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு எழுந்து உட்பக்கம் செல்கிறான் கனகசுந்தரம். சரவணனின் முன்னிலையில் அவரோடு மனம்விட்டுப் பேச முடியாது என்ற பயம் அவனுக்கு.

சரவணன் எதிலுமே பற்றற்றவன்போல் ஓட்டைக் குடையில் வரும் பொன்னையாவையே பார்த்தபடி இருக்கிறான். அந்த ஓட்டைக்குடை அவன் மனதில் பழைய சம்பவம் ஒன்றைக் கிளறி விடுகிறது. அப்போதும் ஒரு நாள் இப்படித்தான் மழை கொட்டிக்கொண்டிருந்தது. அன்று முழுநாளும் சிவகாமி அவன் வீட்டுக்கு வரவில்லை. அதற்கு மேலும் அவனால் பொறுக்கமுடியவில்லை. தனது தந்தையின் ஓட்டைக் குடையை எடுத்துக்கொண்டு சிவகாமி வீட்டுக்குப் புறப்பட்டுவிடுகிறான். அவனது தாயார் அவனைப் பலமுறை அழைத்தும் அவன் திரும்பிப் பார்க்காமலே சென்றுவிடுகிறான்.

அவன் ஓட்டைக் குடையோடு தன் வீடு நோக்கி வருவதைக் கண்ட சிவகாமி கைகொட்டி அவனைக் கேலி செய்கிறாள். “ஓட்டைக் குடை ஓய்… ஓட்டைக் குடை…” அவள் போட்ட சத்தம் மழையின் சத்தத்தைவிட பலமாகக் கேட்கிறது.

“இந்த ஓட்டைக் குடையின் உதவியினாற்தான் உன்னைப் பார்க்கவந்தனான்… அதுக்குள்ள நீ என்னைக் கேலி செய்கிறாயே… உனக்கென்ன…? பணக்காரப்பிள்ளை… நாங்கள் ஏழைகள்தானே.” அவன் குரலில் ஆற்றாமை இழையோடுகிறது. உடலில் ஒரு பக்கம் நனைந்திருக்கத் தலையில் இருந்து நீர் சொட்டச் சொட்டஅவன் சிவகாமி வீட்டுத் திண்ணைப்படியில் ஏறிக்கொள்கிறான். ஓட்டைக் குடையை மடித்து ஒரு மூலையில் வைத்துவிட்டு அவன் சுற்றுப் புறத்தை ஒரு நோட்டம் விடுகிறான். அங்கே வேறு யாருமில்லையென் கண்டதும் ஒரு நாற்காலியில் அமர்ந்து சிவகாமியை முறைத்துப் பார்க்கிறான்.

“அடேயப்பா… நான் ஏதோ ஆசையோடு கேலி செய்ய உங்களுக்குக் கோபம் வந்திட்டுதாக்கும். என் ஆசை அத்தான் இல்லையா…?” கூறிக்கொண்டே அவள் அவனை அன்போடு பார்க்கிறாள். அப்போது பார்த்துக் குடை ‘படா’ ரெனக் கீழே விழுகிறது. சிவகாமி ஓடிச்சென்று விழுந்த குடையை எடுத்துவைக்கிறாள்.

“விடு சிவகாமி. ஓட்டைக் குடையை நீ தொடக்கூடாது. என்னுடைய ஓட்டைக் குடை என்னுடனேயே இருக்கட்டும்.” அவன் கோபந் தீராமல் பதிலளிக்கிறான்.

“ஓட்டைக் குடை உங்கள் உடமையென்றால் அது எனக்கும் சொந்தம்தானே. பெரிய கோபம் வந்திட்டுது என்ர குட்டி அத்தானல்ல! சிரியுங்கள்… உம்… ஒருமுறை ஒரோயொருமுறை மட்டும் சிரியுங்கள். நீங்கள் சிரிக்காட்டி நான் அழுவன்.” அவன் கூறி முடிக்கவிலலை. அவன் சிரித்து விடுகிறான். அவனுடன்கூடச் சேர்ந்து அவளும் சிரிக்க அந்த வீடே அவர்கள் சத்தத்தில் அதிர்கிறது. இந்த நினைவு சரவணனின் உள்ளத்திற் புத்துயிர் பெறுகிறது.

“தம்பி, இன்றைக்குக் காலையில் சிவகாமியைக் கண்டனான்.” பொன்னையா மிகவும் மெதுவாகக் கனகசுந்தரனுக்கு மட்டும் கேட்கும்படியாகக் கூறுகிறார். ஆனால் சரவணனும் தன் காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டு அந்த சம்பாஷைணையைத்தான் கேட்கிறான் என்பது அவருக்கோ, கனகசுந்தரனுக்கோ தெரியாது. தெரிந்திருக்க நியாயமுமில்லை.

“உண்மையாகவா!” என்று தன் கேள்வியில் ஆச்சரியந்தொனிக்கக் கேட்கிறான் கனகசுந்தரம்.

“பின்ன என்ன? பொய் சொல்றன் என்று நினைத்தாயே…? தம்பியாணா அவளைக் கண்டனான். முத்துக் குமரனைத் திருமணஞ் செய்துகொள்ள விருப்பமா? என்று கேட்டன். விருப்பமோ விருப்பமில்லையோ தன் தந்தையின் ஆணையைத் தட்டமுடியாமல் இருக்காம் என்றுகூறிக் கண்ணீர் விட்டது. அதைப்பார்தத எனக்கும் கண்ணில் ‘பொலபொல’ என்று கண்ணீர் வடியத் தொடங்கிவிட்டது. நான் பின்ன வேறொன்றும் பேசாமற் திரும்பிவிட்டன்” என்று அவர் கூறி முடித்தபோது சரவணனின் உள்ளம் கொதித்து. அந்தக் கொதிப்பு ஒரு கவிதையாக மலர்கிறது.

தந்தைதா யார் மகட்குத்

தலைவற் றெரிவரெனும்

இந்த மொழிக் கியாது ரைப்பா

யென்னிலிவர்தாம் வேண்டும்

அந்த மான் றன்னைமக

ளந்தோ விரும்பிலளேள்

தந்தைதா யார்க்கென்னாந்

தவிப்ப தவனன்றோ

சார்ந்து நீ தோகையிடஞ்

சாற்றுதியாற் பைங்கிளியே.

அதே நேரத்தில் அவன் உள்ளம் பலதையும் சிந்திக்கிறது. ஒரு ஆண்மகன் சிவகாமியைப்போல் மூடத்தனமாக நடந்துகொள்ளமாட்டான். அவனைப் பார்த்து அவனது பொற்றோர்கள் நீ இன்னாரைத்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று கூறியிருந்தால் கண்டிப்பாக அவன் திருமணஞ் செய்துகொள்ளப்போவது நானா? நீங்களா? எனக்கேட்டே இருப்பான். சிவகாமிக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு துணிவு ஏற்படமாட்டேன் என்கிறது. சிவகாமிக்கு மட்டுந்தான் இந்தத் துணிவில்லையா? அல்லது பெண்களாகப் பிறந்த அத்தனை பேருக்குமே துணிவில்லையா…? என்றெல்லாம் சிந்தித்துகொண்டேயிருக்கிறான்.

மழை இடைவிடாமற் பெய்துகொண்டே இருக்கிறது. பொன்னையா கனகசுந்தரனுடன் ஏதோ பேசிவிட்டுத் திரும்பிச் செல்கிறார். சரவணன் அவர் ஏன் வந்தார் என்று கூடக் கவனிக்காமல் தன் சிந்தனையிலேயே ஈடுபட்டிருக்கிறான். கனகசுந்தரம் அவனைக் குழப்பாமல் தன்பாட்டுக்கே போய் அமர்ந்துகொள்கிறான்.

சிவகாமியின் கோழைத்தனத்தை நினைக்க நினைக்க அவன் உள்ளங் கொதிக்கிறது. சீ! இவ்வளவு அடிமைத்தனமான வாழ்க்கை வாழ்வதைவிட இறந்துவிடுவது எவ்வளவோ தேவலை என மனதிற்குட் பொருமிக்கொள்கிறான். ‘சிவகாமி கொஞ்சந் துணிவு பெற்று உன் பெற்றோரிடம் முத்துக்குமரனைத் திருமணஞ் செய்துகொள்ள முடியாது என்று கூறிவிடு. அதனால் இருவரின் வாழ்வை மலர்வித்த பெருமை உன்னைச் சாரும்’ என்று தனக்குள்ளேயே பேசிக்கொள்கிறான். அந்த நிலையில் அதைக் கவிதையாகப் பாடவேண்டும் என்ற எண்ணம் உதிக்கிறது அவனுக்கு. நினைத்தவுடன் கவிதை பாட முடிகிறதா…? அப்படியே சிறிது நேரம் அமர்ந்திருந்து சிந்தித்துவிட்டுப் பாடத்தொடங்குகிறான்.

தந்தை யொருவன் மகற்குத்

தான் விரும்புமோர் மகளை

மைந்த மணவெனலும்

மைந்தன் வணங்கி யெழுந்

தெந்தாயான் வேண்டே

னிவளை விரும்புதியேல்

தந்தாய் மணத்தியெனச்

சாற்றினனெ; றேயுரைப்பர்

தையலிட மிக்கதை நீ

சாற்றுதியாற் பைங்கிளியே.

கவிதையைத் திருப்பித் திருப்பிப் பாடிக்கொண்டே எழுந்து உள்ளே செல்கிறான் சரவணன். அவன் உள்ளத்தில் அமைதியில்லை. சிந்தனைக்கு இடமிருக்கவில்லை. அப்போது அது வெறும் சூன்யமாகவேயிருந்தது.

12

மூன்று நாட்கள் இடைவிடாது பெய்த மழை ஒரு படி ஓய்ந்தபின் எங்கும் கதிரவனின் ஒளிக் கதிருக்காக ஏங்கி நின்ற மக்கள் கூட்டம் அதில் இன்பங்காணத் துடித்து வெளிவந்தபோது சரவணனும் மெதுவாகத் தெருவாயிலை நோக்கி நடக்கிறான். சூரியனின் செங்கதிர்கள் அவன் மேனியிற் பட்டுத் தெறித்தபோது அவனது உடலுக்கும் உள்ளத்துக்கும் அது இதமாக இருந்தது. அந்த மகிழ்ச்சியில் அவன் தன் மேனியை ஒருமுறை சிலுப்பிக்கொள்கிறான். அந்த மெல்லிய காலை வெயில் இடைவிடாது பெய்த மழைக் குளிரால் விறைத்திருந்த உடலுக்கு ஒத்தணம் போடுவதுபோன்று அமைந்திருந்தது.

அவன் வாயிலில் நின்றபோது அவனது தூரத்து உறவினர் வேலுப்பிள்ளை அவன் வாயிலைக் கடந்து சென்றார். அவன் நிற்பதைப் பார்த்துவிட்டு ஏதாவது பேசிவைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் “என்ன தம்பி எப்படி மழை?” என்று வினவினார். சரவணன் பதிலுக்குச் சிரித்துவைத்தான். “தம்பிக்கு இப்ப பேசக்கூட இயக்கமில்லை வீணா மனதைப்போட்டு அலட்டிக்கொள்ளாதே நேற்று வரை சிவகாமியோட கைகோர்த்து விளையாடித் திரிந்த உனக்கு இது பெரிய தண்டனைதான் ராசா… எண்டாலும் என்ன செய்யறது. மனதைத் தேற்றிக்கொள்.” வேலுப்பிள்ளை தன் பாட்டுக்கே பேசிக்கொண்டுபோனார். இடையில் ஏதாவது பேசித் தடுக்காவிட்டால் மனுசனிடம் இருந்த தப்பமுடியாதென்பதை உணர்ந்துகொண்ட சரவணன் “அதுசரி அண்ணே… நீங்கள் எங்க வெள்ளனயோட இந்தப்பக்கம்.” என்று கேட்டுவைத்தான்.

“யாரைத் தம்பி என்னையே கேட்கிறாய்…? என்ர மகளுக்கு ஒரு பொடியன் பிறந்தது தெரியுமல்லே. அந்தக் குழந்தைக்குத் தாய்ப்பால் போதவில்லைத் தம்பி. பரியாரியார் பசும்பால் கொடுக்கட்டாம். பசும்பால் எண்டால் கண்டவரிடத்தும் வாங்கிக் கொடுக்கலாமே தம்பி…? அது தான் எங்கேயோ அண்மையில் கன்றை ஈன்ற பசுவொன்று விலைக்கிருக்காம். ஒரு நேரத்துக்கு ஒன்றரைப் போத்தல் கறக்குமாம். பின்னத்தான் பொன்னையா அண்ணனை அழைத்துச் சென்று காட்டிப்பார்க்கலாம் என்று வந்தனான். எனக்குப் பசுவைப்பற்றி அவ்வளவு தெரியாது. காசைக்கொடுத்து வாங்கிற பொருளல்லே… தண்ணை மூடிக்கொண்டு உன்ர மாமா மருமகனை வாங்கியதுபோல வாங்கலாமே…? அதுதான் இன்றைக்கு மழை வெளிச்சிருக்கெண்டு வெள்ளனயோட வந்தனான். எனக்கும் நேரமாகுது. அப்ப வரட்டே தம்பி…?”

கூறிவிட்டுச் செல்லும் வேலுப்பிள்ளையையே பார்த்துக்கொண்டிருக்கிறான் சரவணன். அவர் கூறியதும் நியாயமாகவே பட்டது அவனுக்கு. ஆயினும் அவர் பேசிய விதம் அவனுக்குப் பிடிக்கவில்லை. சிவகாமியின் பெறுமதியைவிடப் பசுவின் பெறுமதி உயர்ந்துவிட்டதுபோற் தோற்றுகிறது அவனுக்கு. சிவகாமியிடம் அவனுக்கு ஒரு ஆழ்ந்த அனுதாபம் தோற்றுகிறது. கடந்த பிறப்பில் அவள் என்ன கொடுமை செய்தாளோ என்று மனம் உருகுகிறான்.

முத்துக்குமரனைப்பற்றிப் பலரும் பலவிதமாகப் பேசியதில் இருந்து அவருடன் சிவகாமி சந்தோஷமாக வாழ முடியாது என்ற முடிவுக்கு அவன் எப்போதோ வந்துவிட்டான். வீட்டுக்குத் தேவையான ஒரு பசுவை வாங்குவதற்கே மனிதர்கள் பிறரது உதவியை நாடுகிறார்களென்றால் ஒரு பெண்ணுக்குத் தேவையான கணவனைத் தேர்ந்தெடுக்கும் போது நாலுபேரைக் கலந்தாலோசிக்க வேண்டாமா? சிவகாமியின் திருமணம் அவனுக்குப் பெரும் புதிராகவேயிருந்தது. சின்னக் குழந்தைகள் வீடுகளில் செய்து விளையாடும் பொம்மைக்கலியாணம் போன்றதுதான் அது என நினைக்கிறான். குழந்தைகளும் அப்படித்தான் திடீர் என ஒரு எண்ணம் பிறந்தால் பொம்மைக் கல்யாணம் வைத்துவிடுவார்கள். சிவகாமிக்கும் அப்படித்தான் ஒன்று நடக்கப் போகிறது. ஆகையால் அவளும் பொம்மையாகிவிட்டாளா? அல்லது பொம்மை ஆக்கப்பட்டுவிட்டாளா? என்ற கேள்வியில் எழுகிறது ஒரு கவி.

தம்மனைக்கோர் பசு வேண்டிற்

றாம் பலகாற் பார்த்திருந்தும்

பின்னுந் துணிவிலராய்ப் பேதுறுதன் மாந்தர் குணம்

என்னே மணவினையே விமைப்

பொழுதி லேமுடிப்பார்

சின்னப் பதிமைகொடு

சிறார் செய்மணம் போலுமரோ

தெரிவையவட் கிம்மாற்றஞ் சீர்க்கிளியே கூறுதியால்.

சிவகாமிமேல் ஒருபுறம் ஆத்திரம் இருந்தாலும் மறுபுறம் அவனுக்கு அனுதாபம் பிறக்கிறது. சிவகாமி தனக்குக் கிடைக்கவில்லையே என்ற துன்பத்தைவிட சிவகாமிக்குக் கிடைக்கப்போகும் கணவன் அவளுக்கு ஏற்றவனில்லையே என்பதுதான் அவன் கவலை. முத்துக்குமரனுக்கும் அவளுக்கும் உள்ள வயது வித்தியாசத்தை நினைத்துப் பார்க்கிறான். ஒன்று இரண்டு வயதல்ல. பதினாறு, பதினேழு வயதுக்கு மூத்தவனான ஒருவனைச் சிவகாமி மணந்து கொள்ளப்போகிறாள் என்பதே புற்றுநோய்போல அவனை வாட்டுகிறது. ஆண் என்னும் உருவத்தில் ஒரு அரசாங்க உத்தியோகமும் வகித்துகொண்டால் அதை இந்தப் பெண்கள் ஒரு தராதரமாகக் கருதிக்கொள்கிறார்களோ தெரியாது. முத்துக்குமரனுக்கும் அந்த இரண்டு தராதரத்தையும்விட வேறு எந்தத் தராதரமும் கிடையாது சிவகாமியைக் கைப்பற்ற.

சிவகாமியையும் முத்துக்குமரனையும் சரவணன் மனதில் ஒப்பிட்டுப்பார்க்கிறான். அப்போது அவர்களது சிறுபராயத்தில் நடந்த சம்பவம் ஒன்று அவனுக்கு ஞாபகம் வருகிறது. சரவணனும் கனகசுந்தரமும் பாடசாலையில் சிறார்களாகப் படித்துக்கொண்டிருந்த காலம் அது. அப்போது பாடசாலை நாடகத்தில் அவர்கள் இருவரும் முக்கிய பங்கெடுத்து நடிக்கவேண்டி ஏற்பட்டது. சரவணன் தசரதனாகவும், கனகசுந்தரன் கைகேயியாகவும் நடித்தனர். கனகசுந்தரம் சரவணனைவிடச் சிறிது குட்டையாகவும் பெண்மைத்தன்மை உள்ளவனாகவும் இருந்ததால் அவன் பெண் பாகமேற்கவேண்டி ஏற்பட்டது. அவர்களது நடிப்பைப் புகழாதவர்களே இல்லையெனலாம்.

உலகத்தில் உள்ள அத்தனை பேர் புகழ்ந்தாலும் சிவகாமியின் வாயிலிருந்து வரும் ஒரு புகழுரைக்கீடாகுமா அவையெல்லாம்? ஆகவே சரவணன் தன் நாடக பாத்திர வேடத்தைக் களையாமலே தன் தாயாருக்குக் காட்டும் சாட்டுடன் வீட்டுக்குச் சென்றான். அங்கே சிவகாமியும் அவனது வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தான். தம்பி முத்துப்பிள்ளையும் அவரது பாரியாரும் தங்களது புத்திரச் செல்வங்களுக்கு எங்கே திருஷ்டிப்பட்டுவிட்டுவிடுமோ எனப்பயந்து திருஷ்டிகழித்தனர். சிவகாமி மட்டும் மௌனமாக இருந்தாள். அதனால் சரவணனே அவளிடஞ் சென்று “எப்படி என் வேடம்?” என்று வினாவியதற்று. “ஐயே… இந்தக் கிழட்டு வேடத்தில் உங்களைப் பார்க்க எனக்குப் பிடிக்கவேயில்லை” என்று கூறியது அவன் இதயத்தில் ஒலிக்கிறது.

கிழட்டு வேடத்தையே விரும்பாத அவள் இப்போது ஒரு கிழவனுக்கே மாலைசூடவேண்டி ஏற்பட்டது யாருடைய துரதிர்ஷ்டமோ என நினைத்துப் பாடுகிறான் ஒரு கவிதை.

ஆணாய்ப் பிறந்த லவசியம்

வேறோர் குணமும்

பேணார்த மின்னுயிராம்

பெண்ணைக் கொடுத்திடுவார்

நாணார் மதியார்

நகைத்தே களித்திடுவார்

வாணாள் பசுங்கிளியே

மடலாக கழித்திவரே

வாள்விழியென் மங்கையிடம்

மருங்கிளியே கூறுதியால்.

கவிதையைப் பாடி முடித்த சரவணனின் கண்கள் கலங்குகின்றன. சிவகாமியை நினைத்து அவன் இதயங் குமுறுகிறது.

13

சரவணன் இப்போதெல்லாம் நடைப்பிணமாகிவிட்டான். அவனால் எதிலுமே ஈடுபடமுடிவதில்லை. அவனது நிலையைப் பார்த்த அவர்கள் வீட்டு நாய் அவன் அருகில் அமர்ந்து அவனது காலை நக்கிக்கொண்டிருக்கிறது. அதன் தலையை வருடிக்கொடுத்தபடி அதன் அன்பொழுகும் கண்ணை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறான் சரவணன். அந்த நாய் சிவகாமியை விட அதிக விசுவாச முள்ளதாகப் பட்டிருக்கவேண்டும் அவனுக்கு. அந்த நாய் அவன் காலையே சுற்றிக்கொண்டிருப்பதை அவதானித்த தம்பிமுத்து அதைச் சத்தமிட்டு அழைக்கிறார். அவர் குரலைக் கேட்டவுடன் அது வாலைக் குழைத்துக்கொண்டு ஓடிவருகிறது. அதைப் பிடித்துச் சங்கிலியில் பிணைத்து அது படுப்பதற்காக ஒரு விரிப்பையும் போட்டுவிட்டு அப்பால் நகருகிறார் தம்பிமுத்து. ஆனால் நாயோ படுக்கை விரிப்பைத் தன் காலால் மறுபுறந் தட்டிவிட்டு வெறு நிலத்தில் உடலைக் குறுகிப் படுத்துக்கொள்கிறது.

அதைப் பார்த்த சரவணன் தனக்குள்ளேயே சிரித்துக்கொள்கிறான். காட்டில்கூட இப்படித்தான். குளிர்ச்சி பொருந்திய சோலைக் காட்டை விட்டுச் சில யானைகள் பாலைவனத்தை நோக்கிப் படையெடுத்து அங்கு சென்ற பின் அந்தச் சூட்டைத் தாங்கமுடியாமல் அவதிப்படுமாம். இப்படி அவன் சிறுவயதாக இருக்கும்போது யாரோ சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறான். அது எவ்வளவு உண்மையான தத்துவம் என்பதைத் தற்போது அநுபவரீதியாக உணர்ந்துகொண்டான்.

திருமணம் என்றால் என்ன? தன்னைத்தானே பலமுறை கேட்டுக்கொள்கிறான் சரவணன். திருமணஞ் செய்து கொள்வதால் ஏற்படுவது இன்பமாக இருந்தால் அது எப்படியான இன்பமாக இருக்கவேண்டும் என்று சிந்திக்கிறான். சிறு வயதில் படித்த ஒரு பாடல் அவனுக்குக் கைகொடுக்கிறது.

‘காதலர் இருவர் கருத்தொருமித்து

ஆதரவுபட்டதே யின்பம்’

அந்த இரண்டு அடிகளும் சிவகாமியையும், அவனையும் நினைவூட்டுகின்றன. அவர்கள்தான் எவ்வளவு அன்பாகப் பழகினார்கள். சின்னக் குழந்தைகளாக இருக்கும்போதே அம்மா – அப்பா விளையாடி அதை நிஜவாழ்க்கையிலும் நிரூபித்துக்காட்டக் கஷ்டப்பட்டவர்கள். மனம் ஒத்த இவர்கள் இருவரையும் பிரிப்பதால் எவருக்கும் எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை என்பது சரவணனுக்குத் தெரியும் ஆயினும் தனக்குத் தெரிந்ததை அவன் யாருக்கு எடுத்துக்கூற முடியும்? அவன் கூறுவதை யார் காது கொடுத்துக் கேட்கப் போகிறார்கள்?

அவன் நிதமுங் கண்கலங்குவதைப் பார்த்து அவனது சகோதரனும் தந்தையுந்தான் துன்பப்படுகிறார்கள். அவனுக்காக அனுதாபப்பட வேறு யார் இருக்கிறார்கள்? ஒரு வேளை சிவகாமி வீட்டில் இருந்தபடி யாருக்குந் தெரியாமல் அவனுக்காக அனுதாபப்படலாம். இன்னும் எதிர்வீட்டுப் பொன்னையா போன்றவர்கள் இரண்டு ஆறுதல் வார்த்தை கூறலாம். ஏனையோர் அவனுக்காக அனுதாபப் பட்டாலும் அது அவர்கள் நெஞ்சின் ஆழத்தின் இருந்து வருகிறதா என்பது சந்தேகத்திற்குரியது.

இங்கே சரவணன் அழுதுகொண்டிருக்கும் அதேவேளையில் அங்கு சிவகாமி கண்ணீர் சிந்திக் கதறிக்கொண்டிருப்பாள். பிள்ளை யொருபக்கமும் பெண் மறுபக்கமுமாக அழுதுகொண்டிருக்கும் இந்த வேளையில் ஒரு திருமணம்…! இந்தத் திருமணத்தால் யார் என்ன சுகத்தை அநுபவிக்கப் போகிறார்களோ…?

வண்ணவிளம் பைங்கிளியே

வையகத்து மணமினிதேற்

பெண்ணொருபால் விம்மியழப்

பிள்ளையொரு பாலலறத்

தண்ணறு பூஞ்சோலை விட்டுத்

தாங்கரிய வெஞ்சுரமே

நண்ணிய வெங்கரியதுபோல்

நாயகன் துன் புறுவதெனை

நாரியர்பா லிம்மாற்ற

நவில்வாய் பசுங்கிளியே!

சிந்தனையில் அவனகத்தே கவிதை உருவெடுக்கிறது.

திடீர் எனத் தபால் என்ற குரல் அவன் சிந்தனையைக் குலைக்கிறது. அவன் மெதுவாக எழுந்து சென்று காகிதத்தைப் பெற்றுக்கொள்கிறான். அது அவன் அப்பாவின் முகவரிக்கு வந்துள்ள கடிதம். அதில் பூசப்பட்டிருக்கும் மஞ்சம் அது ஒரு திருமண அழைப்பிதழ் என்பதை அவனுக்கு நினைவூட்டுகிறது. பிரித்துப் படித்துவிடலாமா என்ற சபலம் தோன்றியபோதும் தந்தைக்கு முகவரியிடப் பட்டிருக்கும் ஒரு கடிதத்தைப் பிரிப்பது நாகரீகமல்ல என்ற எண்ணத்தில் அதைத் தன் தந்தையாரிடம் கொண்டு நீட்டுகிறான். அவன் முன்னிலையிலேயே அதைப் பிரித்துப் படித்த அவன் தந்தை தன் நண்பன் சுப்பிரமணியத்தின் மகளுக்குத் திருமணமென்பதைக் கூறுகிறார்.

சுப்பிரமணியத்தின் மகள் கமலாவை அவனுக்கு நன்கு தெரியும். அவளுக்கும் அவனுக்கும் ஒரே வயதுதான் இருக்கும். அவளும் அவன் மைத்துனனைத்தான் சிறுவயதிலிருந்தே விரும்பியும் வந்தாள். சிவகாமியையும் அவனையும் போலவே அவர்களும் மணல் வீடு கட்டி விளையாடி இப்போது நிஜமாகவே வீடு கட்டி வாழப்போகிறார்கள். அவர்களை நினைக்க அவனுக்குப் பெருமையாக இருந்தாலும் அவர்களுடன் சிவகாமியையும் தன்னையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவனுக்கு மனம் நிறைந்த வேதனையாக இருந்தது.

தங்களது காதலும் இப்படி மலர்ந்திருந்தால் இன்று அவனது அப்பாகூடப் பெருமையோடு அவர்களுக்கு ஒரு திருமண அழைப்பிதழ் அனுப்பியிருக்கலாமே என்று சிந்திக்கின்றான் - அவர்களது காதல் நிறைவேறமுடியாது என்பது தெரிந்தும் அதையிட்டு அவனால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. உலகிற் பிறந்த ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்துக் கருத்தொருமித்துத் திருமணஞ் செய்துகொள்ள முடியாவிட்டால் அதைவிடப் பெரிய துன்பம் வேறு என்னதான் இருக்கமுடியும்? மண்ணிற் பிறந்து உண்மையான இன்பத்தை நுகராமல் வாழ்வது அத்தனை பெரிய துரதிர்ஷ்டம் என ஏங்குகிறான். உள்ளத்தால் ஒன்றுபட்ட இருவர் செய்துகொள்ளும் திருமணமே உண்மையான இன்பம். உலகத்திலுள்ள துன்பங்கள் அனைத்தையும் களைந்தெறியக்கூடிய சக்தி அதற்கு மட்டுந்தான் உண்டு என எண்ணிப் பாடுகிறான்.

மண்ணுலகில் யாம்பிறந்து

வாழ்வதினா லாம்பயனென்

எண்ணரும் வெந்துயர்நோக்கி

யின்பஞ் சுகியேமேல்

பெண்ணா ணிருவருமே

பேரன் பொடு வாழின்

நண்ணாது வெந்துயரம்

நற்கிளியே கூறுதியால்

நணுகுமா லின்பமெலாம்

நற்கிளியே கூறுதியால்.

“பெண்ணாணிருவருமே பேரன் பொடு வாழின் நுண்ணாது வெந்துயரம்” இந்த அடிகள் அவன் உதடுகளில் திருப்பித்திருப்பி அசை போடுகின்றன. ஒரு பெண்ணும் ஆணும் மனமொருமித்து இல்லறத்தில் ஈடுபட்டால் அவர்களை எந்தவித துன்பமும் அணுகமுடியாது. அவர்கள் இன்பத்துக்கு எந்தவிதமான சுகத்தையும் நிகராகக் கூறவும் முடியாது. அப்படியான அமைதி நிறைந்த இன்ப வாழ்வு கிடைப்பது மிகவும் அரிது. கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை என்று கூறுவார்கள். அதே நிலைதான் சரவணனுக்கும் வந்துள்ளது. தனக்குரியவள்தான் சிவகாமி எனக் கனவு கண்டுகொண்டிருந்தவனுக்கு இப்படியொரு பேரிடி வந்திருக்கவேண்டாம். இப்படியெல்லாம் சிந்திக்கின்றான் சரவணன்.

14

சரவணனது நிலை வரவர மோசமாகிக்கொண்டே வந்தது. இப்போது மற்றவர்களுடன் பேசுவதைக்கூட அவன் சிறுகச் சிறுகக் குறைத்துக்கொண்டான். யாராவது வலிந்து பேசினாற்கூட ஒரு வார்த்தை அல்லது இருவார்த்தையிற் பதில் கூறப் பழகியிருந்தான். அவ்வளவுக்கு அவன் உள்ளம் விரக்தியடைந்திருந்தது. அவனது நிலை மற்றவர்களைக் கவலைக்குள்ளாக்கியது. தன் அருமந்த மகன், குடும்பத்தின் தலைப்பிள்ளை, செல்லமாக வளர்ந்த பையன் இப்படி நடைப்பிணமாகிவிட்டானே என்று நினைக்க நினைக்க தம்பிமுத்துப்பிள்ளையில் - வயோதிப இதயம் வேதனையாற் சாம்பியது.

சரவணனோடு பேசுவதிற் பலனில்லை என்பது அவருக்குப் புரிந்ததால் அவர் அவனுக்கு ஆறுதல் கூறுவதைக் கூட நிறுத்திக்கொண்டார். நடப்பது நடக்கட்டும் என்ற அலட்சிய மனப்பான்மை அவரை வாய்மூடி மௌனியாக்கியது. தள்ளாத வயதில் அவருக்கு இந்தச் சோதனைமிகுந்த வேதனையாகவே இருந்தது. எதையும் தாங்கக் கூடிய சக்தியை அவர் இதயம் எப்போதோ இழந்துவிட்டிருந்தது. அதனால் அவரும் ஒரு முதிர்ந்த நோயாளியைப் போன்று தன் பொழுதையெல்லாம் படுக்கையிலேயே கழிக்கத் தொடங்கினார்.

மலையே வந்தாலும் தலையே சுமக்கக்கூடிய வலிமையான வாலிப இதயத்தோடு இருந்த கனகசுந்தரனுக்கும் இவர்களப் பார்க்கப் பார்க்க தன்னிடம் இருக்கும் சிறு தென்புகூட விடைபெற்றுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. அவனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. எங்காவது கண் காணாத இடத்திற்குப் போய்விட்டாற் தேவலைப்போல இருந்தது. அவன் யாருக்கு ஆறுதல் கூறமுடியும்? தம்பிமுத்துப்பிள்ளையைப் பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும் அவன் இதயம் பாகாய் உருகியது. இந்த வயோதிபப் பருவத்தில் அவருக்கு இப்படி ஒரு பேரிடி வந்திருக்கவே வேண்டாம் என ஏங்கியது உள்ளம்.

மனவருத்தம் அவர் உயிரைக் குடித்துவிடுமோ என் அஞ்சினான் சரவணன். அப்படியான அசம்பாவிதங்கள் அவனாற் தாங்க முடியாது. தாங்கவே முடியாது. மனிதன் பிறக்கும்போதே இறப்பு என்ற ஒன்று நிச்சயம் என்பதை அவன் உணர்ந்துதான் இருந்தான். அதற்காக நிம்மதியின்றி இப்படி நடைப்பிணமாக நாளாந்தம் அணுஅணுவாகத் தன் தந்தையின் உயிர் பிரிவதை அவன் விரும்பவில்லை. தள்ளாத வயதில் பெற்றோர் நிம்மதியாகச், சந்தோசமாக தம் வாழ்நாளைக் கழிக்க உதவி செய்வது தனயரின் தலையாய கடன் மட்டுமல்ல, அது கடமையுங் கூட என்பதில் அசையாத நம்பிக்கை வைத்திருப்பவன் அவன். இதுவரை தன்னையும், சிவகாமியையும்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தவன் இப்போது தம்பிமுத்துப்பிள்ளையைப்பற்றியும் தீர்க்கமாகச் சிந்திக்கத் தொடங்கினான்.

ஆயினும் சிவகாமியின் நினைவு அவனைவிட்டு அகல்வதாக இல்லை. எவ்வளவுக்கெவ்வளவு அவளை மறக்க அவன் முயற்சித்தானோ அதைவிட அதிகமாக அவளது நினைவு அவனை; கொன்றுகொண்டே வந்தது. தன் மனதுக்கு எவ்வளவு ஆறுதல் கூற முயன்றாலும் அது அவன் பேச்சு எதையுமே சட்டை செய்ய விரும்பவில்லை. சிவகாமியின் தாமரை வதனத்தைக் காணாது வாழமுடியாது என்று திட்டவட்டமாக நம்பினான். இந்நிலையில் அவன் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்தான். அந்தத் துடிப்பிலுங்கூட அழகா கவிதை ஒன்று பிறக்கிறது.

அன்ன நடை மைவிழியா

ளம்பொன் மலர்க் கொம்பனையாள்

என்னிதய தாமரைக்கோ

ரிலக்குமியாம் பெண்ணரசி

கன்னல் மொழி கேளாது

கஞ்சமுக நோக்காது

மண்ணிலத்து வாழேன்

மடிந்திடுவன் மங்கையர்க்கு

மற்றிப்பழி சேருமென

மாழ்குவேன் பைங்கிளியே.

முன்னொருநாள் சிவகாமியின் முகத்தைத் தாமரைக்கும், குரலைக் கற்கண்டுக்கும் உவமித்துக் குறும்பு செய்தது ஞாபகத்திற்கு வரவே சரவணன் இப்படி உவமித்துப் பாடினான். தன்னைத் தாமரையாகவும், சிவகாமி அதில் வதியும் இலக்குமியாகவும் உருவகித்துப் பாடியதில் அவனுக்கொரு திருப்தி. அவளது பிரிவின் வேதனையைத் தாங்க முடியாமல் அவன் மரணமடைய நேரிட்டால் அந்தப் பழி அவளையே சாரும் என்ற கருத்துப் படவே அவன் அப்படிப் பாடினான்.

அவனுக்கு இறைவன் அளித்த இயற்கை வளத்தால் பாடல்கள் மலர்ந்துகொண்டேயிருந்தன. ஆயினும் அதனால் அவனுக்கு எந்தவித ஆத்ம திருப்தியும் ஏற்பட்டதாக இல்லை. அவனது இதயத்தைச் சிவகாமி ஆக்கிரமித்துக்கொண்டிருந்தாள். அதனால் திரும்பத் திரும்ப அவளைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தான் அவன். பெண்கள் சாந்தமான குணம் படைத்தவர்கள். மென்மையான இதயம் உள்ளவர்கள் என்றெல்லாம் அவன் கேள்விப்பட்டிருக்கிறான். அதைச் சிவகாமியிடம் கண்டுமிருக்கிறான். ஆயின் அந்த மென்மையான பண்பு இப்போது எங்கே போய்விட்டது…? ஒருவேளை சிவகாமி வேண்டுமென்றே தன் இதயத்தைக் கல்லாக்கிக்கொண்டாளா?

இதுகாலவரை கொடுத்த வாக்கை ஆண்கள் மீறியதாகத்தான் அவன் கேள்விப்பட்டிருந்தான். வரலாறுகள் காதற் காவியங்கள் எல்லாங்கூட அப்படித்தான் கூறியும் இருக்கின்றன. ஆண்கள் பச்சோந்தி போன்றவர்கள். சேறுகண்ட இடத்தில் மிதித்துத் தண்ணீர் கண்ட இடத்திற் கழுவுவது அவர்களுக்குச் சர்வ சாதாரணமான ஒன்று எனப் பலர் பேசுவதை அவன் கேள்விப்பட்டிருக்கிறான். அதை ஏற்றுக்கொள்ளவும் அவன் தயாராக இருந்தான். ஆனால் ஒரு பெண் தன் காதலனை ஏமாற்றினாள் என அவன் கேட்டதுமில்லை படித்ததுமில்லை. பெண்கள் சமூகத்திற்கே சிவகாமியால் இழுக்கு ஏற்பட்டுவிட்டது என எண்ணிப் புழுங்கினான். அதற்காகச் சிவகாமியை அவனால் மன்னிக்க முடியாது! மன்னிக்கவே முடியாது!!

சிவகாமியின் மனதில் ஈவிரக்கமில்லையா? அல்லது சிறுவயது முதற்கொண்டே தன் உள்ளத்தில் நிரம்பியிருந்த இரக்க சிந்தையைக் கொன்றுவிட்டாளா…? அவள் செய்கை கொடுமை நிறைந்ததாகப் புலப்பட்டது அவனுக்கு. சில வேளை தான் செய்வது கொடுமை நிறைந்த செயல் என்பதை அவன் உணரவில்லையோ? சிவகாமி நீ எனக்குச் செய்தது கொடுமை. அதை நான் உன்னிடம் கூறமாட்டேன் - கூறமுடியாது. ஆயினும் என் உள்ளத்து உணர்ச்சிகளை எல்லாம் கவிதைமூலம் உனக்கு எடுத்துச்சொல்கிறேன் கேள். ஓ… அதைக் கேட்கமுடியாத தூரத்தில் அல்லவா நீ அகப்பட்டுவிட்டாய். என் உணர்ச்சிகளையெல்லாம் எப்படி நான் உனக்கு எடுத்துச் சொல்வது? இதோ என் பைங்கிளிமூலம் உனக்குத் தூதனுப்புகிறேன்.

என்னிதயந் தனதாக்கி

என்னுயிருந் தானேயாய்

என்னையிவண் வருத்துதனா

னிவட்கழகோ பைங்கிளியே

மன்னிதுவோ பெண்கள் குண

மாற்றா ரினியரன்றே

என்னே யிரங்கா

ளிரங்காள் பசுங்கிளியே

ஈது கொடி தீதுகொடி

திசையாய் பசுங்கிளியே.

சரவணன் தன்னை மறந்த பைத்தியக்காரனைப்போற் பாடுகிறான்.

15

காலம் என்ற வாடாமலரில் இருந்து நாட்கள் என்ற நறும் இதழ்கள் யாருக்கும் கவலைப்படாமல் உதிர்ந்து கொண்டேயிருந்தன. சரவணன் தன் தலையில் விழுந்த பேரிடியில் இருந்து மீட்சி பெற்றதாகத் தெரியவில்லை. சவரம் செய்யப்படாமல் தன் இச்சைக்கு நீண்டு வளர்ந்த தாடியுடன், கலைந்த கேசத்துடனும் திண்ணைக் குந்தில் அமர்ந்திருக்கிறான் சரவணன். அவன் இருந்த இடத்தில் இருந்து பார்க்கும்போது அடுத்த வீட்டு ஈரப்பலா மிகவும் நன்றாகத் தெரியும். பாலர்களாக இருந்தபோது சிவகாமியும் அவனும் விளையாடிய காட்சிகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அவன் நினைவுக்கு வருகின்றன. நினைவுக்கு வராதவற்றைக்கூட அவன் வலிந்து நினைவுபடுத்திக்கொண்டான். அவற்றைத் திரும்பத் திரும்பத் தன் உள்ளத்திரையிற் பதித்துப் பார்த்து அந்த நினைவில் இன்பமடைவதில் ஒரு தனிப் பிரியம் அவனுக்கு.

அன்றும் அப்படித்தான் அவன் எண்ணம் என்ற இரையை அசைபோட்டுக்கொண்டிருந்தான். சிறிது தள்ளிப் படுக்கையில் தன் உடலுக்கு மட்டும் சிறிது ஆறுதலைக் கொடுத்து உள்ளத்தை ஆறுதற்படுத்த முடியாத நிலையில் அவனையே உற்றுப்பார்த்தபடி படுத்திருந்தார் தம்பிமுத்துப்பிள்ளை. தெரு வாயிலில் நின்று கனகசுந்தரம் மட்டும் புதினம் பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது திடீர் எனச் சரவணனின் பார்வை சுவரின் மேற்பாகத்திற் பதிகிறது. அங்கே மாட்டப்பட்டிருந்த படங்களில் ஒன்று அவன் கவனத்தை ஈர்க்கிறது.

அந்தப் படத்தில் இருப்பது சிவகாமியும் அவனுந்தான். அவள் கூந்தலில் இருந்து இடதுபுறத்தோள் வழியாகத் தவழ்ந்துகொண்டிருக்கிறது அவன் தன் கைபடப் பொறுக்கிக் கோர்த்துக் கொடுத்த மல்லிகைச்சரம். அந்தப் படத்தை அவர்கள் இருவரின் தலையிடி தாங்க முடியாமல் தம்பிமுத்துப்பிள்ளை யாரிடமோ வாங்கிவந்த புகைப்படக் கருவியால் எடுத்திருந்தார். அதே படம் ஒன்று சிவகாமி வீட்டுச் சுவரிற்கூடத் தொங்கிக்கொண்டிருக்கும். அவளும் அவனும் இந்தப் படத்தின் கீழ் நின்று தங்கள் எதிர்கால வாழ்வைப்பற்றி எப்படியெல்லாமோ கற்பனை செய்திருக்கிறார்கள். இன்று அது கற்பனையாகவே முடிவடைந்துவிட்டது.

சிவகாமி…! படத்தில் இருந்த அவளை அவன் மானசீகமாக அழைத்தான். நீ என்னை மறந்துவிட்டாயா சிவகாமி? உன்னால் என்னை எப்படி மறக்க முடிந்தது? அப்படி என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. நம்பவுந்தான் முடியவில்லை. உன்னால் என்னை மறக்க முடியாது சிவகாமி. என்னைப் பார்க்கமுடியாமல் என்னுடன் பேச முடியாமல் நீ வலோத்காரமாகத் தடை செய்யப்பட்டுள்ளாய். அதற்குக் காரணம் உன் பெற்றோராக இருந்தாலும் தனிப்பட்டவர்களை மட்டும் குற்றஞ்சாட்ட முடியாது. ஆயிரமிருந்தாலும் உன் சம்மதமின்றி இந்தத் திருமணம் நிச்சயமாக முடிவாகியிருக்க முடியாது. இருக்கவே முடியாது. ஆகவேதான் எனக்கு நீ துரோகஞ் செய்கிறாய் என்று என் மனங் குமுறுகிறது. ஏன்? என் அண்ணாவும் அப்பாவும்கூட உள்ளம் குமுறுகிறார்கள். நானும் அப்படித்தான் நினைக்கிறேனே தவிர என்னால் அதை நம்ப முடியவில்லை. பொருளில்லை என்ற ஒரேயொரு காரணத்திற்காக அறியபாப் பருவத்தில் இருந்து அன்பு காட்டி வந்த என்னை வெறுத்து ஒதுக்கிவிட்டாயா…? முத்துக்குமாரனுடன் நீ இன்பமாக வாழமுடியாது சிவகாமி…? வாழமுடியுமா?

சரவணன் மனப்போராட்டத்தின் மத்தியில் துயரைத் தாங்கமுடியாது தலையை மடியிற் புதைத்தபோது ‘படார்’ என ஒரு சத்தங் கேட்டது.

அவன் ஆச்சரியத்தோடு தன் தலையை நிமிர்த்திப் பார்த்தபோது கனகசுந்தரனும் தம்பிமுத்துப்பிள்ளையும் நிலத்தில் எதையோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவனும் அவர்கள் பார்த்த திசையில் தன் கண்ணோட்டத்தைச் செலுத்தினான். அடுத்த கணம் அவன் கண்கள் சுவரின் மேற்புறத்தை அண்ணாந்து பார்த்தது. அங்கே படம் இருந்த இடம் வெறுமையாக இருக்கக் கண்ணாடிச் சட்டமிடப்பட்டிருந்த அந்தப் படம் அவன் உள்ளத்தைப்போல் நிலத்தில் சுக்குநூறாகிக் கிடந்தது. அவன் எழுந்து சென்று தரையில் சுக்குநூறாகக் கிடந்த அந்தப் படத்தை எடுத்துப் பார்த்தான்.

“சிவகாமி! உன் மென்மையான இதயம் இதைத் தாங்கிக்கொள்ளாது என்பது தெரிந்தும் உன்னைத் திட்டிவிட்டேன். உன் மனம் நோகக்கூடாது. நீ மட்டும் என்னுடன் வாழச் சம்மதித்தால் இந்த உலகத்தில் வேறு எந்தத் துன்பமும் என்னை வாட்டாது. அவன் கண்கள் கலங்க வாய்விட்டுக் கதறுவதைக் கண்ட தம்பிமுத்துப்பிள்ளை அவ்விடத்தைவிட்டு மெதுவாக அகன்றார்.

கனகசுந்தரமும் தம்பியின் துயரைப் பார்த்துச் சகிக் முடியாமல் வெளிப்பக்கஞ் சென்றான். சரவணன் மட்டும் தனியாக அந்தப் படத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டேயிருந்தான்.

அப்போது அவன் உள்ளத்துத் துன்பமெல்லாம் கவிதையாக உருவெடுக்கிறது.

அந்தோ தவறுதவ றறியா

துரைத்தனன் யான்

பைந்தார்ப் பசுங்குழலாள்

பாவமறியாள் கிளியே

தந்தைதா யாரிலரேற்

றரியாளென் பாங்கருடன்

வந்தாள் மகிழ்ந்தாள்

வதிந்தாள் பசுங்கிளியே

வானுலகி லின்பமெலாம்

வந்தனவாற் பைங்கிளியே.

சிவகாமி மட்டும் சரவணனுக்கு கிடைத்துவிட்டால் இந்த உலகத்தில் வேறு எதையுமே அவன் விரும்பமாட்டான். உலகத்திலுள்ள சகல பொருட்களுக்கும் நிகராக அவன் சிவகாமியை நேசித்தான்@ அதனால் அவள் இல்லாமல் அவன் வாழமாட்டான். வாழவும் முடியாது.

அதனால் சிவகாமியின் உள்ளத்தை, அவள் விருப்பத்தை அறிய அவன் துடிதுடித்தான். சிவகாமியின் வாயினால் அவள் விருப்பத்தை அறிந்துகொண்டால் அவளை அவள் பாட்டுக்கே விட்டுவிடலாம் என்பது அவன் நினைவு. ஆனால் அவளை எப்படிச் சந்திப்பது? எங்கே சந்திப்பது? என்பது இன்னுங் கேள்விக்குறியாகவே இருந்தது. அவனைப் பொறுத்தவரை அவளிடம் செல்ல அவன் தயாராக இல்லை. இந்த நிலையில் அவனுக்கு வேறு வழி எதுவுமே புலப்படவில்லை.

அப்போது திடீர் என அவன் கண்கள் மரத்திற் பதிகின்றன. அன்றொரு நாள் அவன் கண்ட அதே பைங்கிளி மரக்கொம்பரில் இருந்து அவனைப் பார்த்தபடியே இருந்தது. ஏன் இந்தப் பைங்கிளியைச் சிவகாமியிடந் தூதனுப்பக்கூடாது? சிந்தித்துப் பார்க்கிறான். அது கவிதையாகவே பிறக்கிறது.

பெண்மணியை யான் பெறுநாட்

பெற்றனளாற் செல்வமெலாம்

மண்ணிதனுட் பிறிதொர் பொருள்

மதியேன் மதியேனால்

ஒண்ணுமறன் னுடனேயா

னோருயிர் ருடலாகி

மண்ணுலகின் மகிழ்ச்சியுடன்

வாழ்வேன் பசுங்கிளியே

மங்கையவள் மனமறிந்து

வருவாய் பசுங்கிளியே.

16

விரும்பிய ஒரு பொருள் கிடைக்காதபோதுதான் கவலையும், துன்பமும் அதிகமாகின்றது. கிடைத்துவிட்டாலோ அதன் அருமை சில நாட்களில் அருகி அது வேண்டாத பொருளாகிய நிலைமையே எதிர்மாறாய்விடுகிறது. ஒன்று கிடைக்காதபோது உயிரைப் பணயம் வைத்தாவது அதைப் பெற்றுவிடவேண்டும் என்று துடிக்கும் உள்ளத்தைக் கட்டுப்படுத்தவே முடிவதில்லை அந்த நிலைக்குத்தான் வந்திருந்தான் சரவணன்.

கீழே விழுந்த கண்ணாடி சிதறிய நிலையில் தேடுவாரற்றுக்கிடந்த அந்தப் புகைப்படத்தைச் சரவணன் உற்றுப் பாhத்தபடியிருந்தான். அந்தப் பார்வை அவளது ஒவ்வொரு அங்கத்தையும் அவன் பரிசீலனை செய்வதுபோலிருந்தது. அவளது உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால்வரை அவன் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான். அவனது நிலை பார்ப்பதற்குப் பரிதாபமாகப்பட்டது.

அவனையே நீண்ட நேரமாக மறைந்து நின்று பார்த்துக்கொண்டிருந்த கனகசுந்தரனின் கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வழிந்தோடி நிலத்திற் பட்டுத் தெறித்தது. அந்த நீர்த்துளியில் சரவணனும், சிவகாமியும் சேர்ந்து அப்படத்தை எடுத்துக்கொண்ட நாள் அவன் கண்முன்னே காட்சியளிக்கிறது. சிவகாமியை அவள் அப்பா இராஜவரோதயந்தான் அவர்கள் வீட்டுக்கு அழைத்துவந்திருந்தார். அவள் அவர்கள் வீட்டு வாயிலில் நுழைந்ததுமே அவள் தன் தந்தையி;ன கைப்பிடியில் இருந்து நழுவிச் சரவணனைத் தேடி உள்ளே சென்றாள்.

அப்போது அவளது அப்பா சரவணனின் தாயாரைப் பார்த்து “என்ன வள்ளி, என் மகள் உன் வீட்டு மருமகளாக வருமுன்பே இப்படி என்னை உதறிவிட்டு ஓடுவதைப் பார்த்தால் உன் வீட்டு மருமகளாகியபின் என்னைக் கவனிப்பாளோ என்பது சந்தேகமாயிருக்கிறது.” என்ற வார்த்தைகள் இன்னும் பசுமையாக அவன் மனதில் பதிந்துவிட்டிருந்தது. அப்போது அவனும் கனகசுந்தரனும் சிறுவர்கள். அவன் தாய் மரணதேவதையின் வாயில் அகப்பட்டுப் பிழைத்தெழுந்திருந்த சமயம் என்று சாடையான ஞாபகம். அவனது தயாரின் உடல் நோய்வாய்ப்பட்டு மிகவும் நலிந்திருந்ததால் அவள் மரணத்தை எந்நேரமும் எதிர்பார்த்திருந்தாள் என்றுகூடச் சொல்லலாம். ஆயினும் சிவகாமி சரவணனின் திருமணத்தைப் பார்த்தபின்பே சாகவேண்டும் என்றொரு சிறு சபலம் அவள் உள்ளத்திற் தேங்கியிருந்தது. ஆனால் அதுவரை உயிரோடு இருக்கமுடிகிறதோ என்றொரு அவநம்பிக்கை. இவையெல்லாம் சேர்ந்துதான் அன்று அந்தப் புகைப்படத்தை எடுத்துவைத்தது.

சரவணனையும், சிவகாமிiயும் உண்மையான மணமக்கள்போல அலங்கரித்து அழகுபார்த்தாள். சரவணன் காலையில் கோர்த்து வைத்திருந்த முல்லை மல்லிகை மாலையை அவளாகவே எடுத்துவந்து சிவகாமியின் தலையிற் சூட்டியும் விட்டாள். அப்போது, அவள் தன் மகன் சரவணனைப் பெருமையோடு பார்த்த பார்வை சரவணனின் நெஞ்சைவிட்டு அகலவேயில்லை.

அதே நேரத்தில் அந்த நினைவுகள் சரவணனின் உள்ளத்திலும் ஊற்றெடுக்கின்றதென்பதை அவன் முகபாவங்காட்டுகிறது. அவனுக்குத் திடீரெனரத் தன் தாயாரின் நினைவு வந்திருக்கவேண்டும். ‘அம்மா நீ ஒரு தீர்க்கதரிசியோ…? உன் மகன் சரவணனுக்குச் சிவகாமி கிடைக்க மாட்டாள் என்று நினைத்துத்தான் எங்களைப் படத்தில் ஒன்றாக்கி இப்போது ஏற்பட்டிருக்கும் பிரிவு நிலையைப் பார்க்கச் சகியாமற்தான் அப்போதே எம்மிடம் இருந்து நிரந்தர விடைபெற்றுச் சென்றாயோ…? இவற்றையெல்லாம் சிவகாமியும் அவள் பெற்றோரும் எப்படியம்மா மறந்தார்கள்? அவர்கள் மறந்தாலும் நிச்சயமாக இந்தப் படம் அவர்களுக்கு அதை நினைவூட்டாமல் இருக்கமுடியாது’ என்று தனக்குத்தானே கூறிவிட்டுப் பாடுகிறான்.

கன்னல் மொழிக் காரிகையாள்

கமலவிழி யான் மறவேன்

கன்னத் தொளி மறவேன்

கனி வா யிதழ் மறவேன்

பின்னற் சடை மறவேன்

பிடரி னெழின் மறவேன்

பன்னற் கருநகையும்

மறவேன் பசுங்கிளியே

பாவையுரு வென் மனத்தே

பதிந்துளதாற் பைங்கிளியே.

பாடிவிட்டும் அவன் அந்தப் படத்தையே பார்க்கிறான். நிச்சயமாக அவன் சிவகாமியை மறக்கப்போவதில்லை. அவளது நடை, உடை, பாவனை, இனிய பேச்சு, கனிய பார்வை எதையுமே அவனால் மறக்கமுடியாது. அவன் மட்டுமென்ன…? சிவகாமியைப் பார்க்கும் எவருமே அவளை மறக்கமுடியாது. அவ்வளவு அழகுவாய்ந்தவள் அவள். திருகோணமலையில் அழகி என்று பலராலும் போற்றப்பட்டவள். அத்துடன் பவளம் போன்ற சிவந்த மேனியால். அவள் சிரிக்கும்போது அவள் சிவந்த கன்னங்களைப் பார்க்கும் எந்தக் கவிஞனாலும் அவளைப் பாடாமல் இருக்க முடியாது. அவளைச் சிரிக்கவிட்டு அந்த அழகை நாள் முழுதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதனாற்தான் சிவகாமியின் அப்பா இராஜவரோதயத்திற்கு அப்படி ஒரு கர்வம் என நினைத்துக்கொண்டான் சரவணன்.

“என்ன சரவணா? அந்தப் படத்தை எவ்வளவு நேரமாகத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறாய். எங்கே படத்தை இப்படி என்னிடந் தா. உன்மேல் அன்பில்லாதவளிடம் நீ மட்டும் எதற்காக அளவுக்குமீறி அன்பு செலுத்தவேண்டும். உன் உள்ளத்தை நீ வீணாக அலட்டிக்கொள்கிறாய். சிவகாமியை இனிமேலாவது மறந்துவிடு. அப்போதுதான் நீ வாழமுடியும்” என்ற குரல் கேட்டுத் திரும்புகிறான் சரவணன். அங்கே தம்பிமுத்துப்பிள்ளை தள்ளாடியபடியே நின்று கொண்டிருக்கிறார்.

“அப்பா கூறியது கேட்டதா சரவணா…? சிவகாமியை மறந்துவிடு” என்கிறான் கனகசுந்தரன்.

“மறப்பதா…? அதுவும் என் சிவகாமியை… முடியுமா அண்ணா? அவளை நீ காண நேர்ந்தால் என் நிலையை எடுத்துக்கூறு. உன்னைக் காதலித்து, உன் நினைவால் என் தம்பி நாளாந்தம் செத்துக்கொண்டே இருக்கிறான் என்று சொல்லு” என்ற வார்த்தைகளைக் கேட்ட கனகசுந்தரம் கண்ணீர் மல்க வெளியேறுகிறான். அவன் செல்வதைப் பார்த்த சரவணன் விரக்தியோடு பாடுகிறான்.

அன்ன மெனு மென்னடையு

மஞ்சிறைய மயிலொயிலுஞ்

சின்னக் கொடியிடையுஞ்

செவ்வாய்க் கிளிமொழியுஞ்

சன்னச் சிலம்பொலியுந்

தளவ னறுமணமும்

நன்னர்ப் பசுங்கிளியே

நானோ மறவேனால்

நங்கைவடி வங்கிளியே

நானோ மறவேனால்

கொங்கலர் பூஞ் சோலைவளர்

மாங்கிளியே கோதையிடம்

நங்காய் நீற் காதலித்தே

நலிவான் மெலிவானால்

தங்காதுயிரென்றான் தானின்

சரணென்றாள்

நங்காயிரங் கெனவே

நவில்வாய் பசுங்கிளியே

நாரியர் பா லென்னிலையை

நவில்வாய் பசுங்கிளியே

அவன் பாடலைக் கேட்ட கனகசுந்தரம் கண்ணீர் வடித்தான். தம்பிமுத்துப்பிள்ளை தன் மகனின் கவித்திறமையை நினைத்து வியந்துகொண்டார். சரவணன் இவ்வளவு சிறப்பாகக் கவி இயற்றுவான் என்று அவர் எண்ணிப்பார்க்கவேயில்லை. யாரையும் இலட்சியம் செய்யாமல் சரவணன் பாடிக்கொண்டேயிருக்கிறான். அதில் ஒரு ஆத்ம திருப்தி அவனுக்கு.

படித்தவன், பட்டம் பெற்றவன், பா இயற்றும் ஆற்றல் படைத்தவ்ன. ஆயினும் எல்லா வரப்பிரசாதங்களும் இருந்தும் என்ன…? பணம் ஒன்று இல்லாத குறை இந்த நிறைகளையெல்லாம் திரைபோட்டு மூடிவிட்டது. இந்தக் குறையை நிவர்த்திக்க எவராலும் முடியவில்லை. தனக்காக வளர்க்கப்பட்ட பைங்கிளி பறந்துபோய்விட்ட பிரமையில் அவன் மனம் வெதும்பினான். அம்பிகாவதி, அமராவதி, லைலா மஜ்னு, றோமியோ ஜூலியட் இவர்கள் கூடத்தான் காதலிற் தோல்வி கண்டார்கள். ஆனால் அந்தத் தோல்விதான் அவர்கள் சரிதையை உலகம் போற்றும் உன்னத காதற் காவியங்களாக வாழ்ந்துகொண்டிருக்கச் செய்கிறது. எங்கள் காதலும் படுதோல்வியிற்தான் முடிந்து விட்டது. எங்கள் வாழ்வு இத்துடன் முடிவுறக்கூடாது. எங்கள் காதலும் காவியமாக வேண்டும். சிவகாமியின் காதலைப் பற்றி இந்த உலகம் படிக்கவேண்டும். எனக்காக அல்லாவிட்டாலும் அவளுக்காக ஓரிரு சொட்டுக் கண்ணீராவது சிந்தவேண்டும். அப்போதுதான் என் காதல் அமரத்துவம் அடையும்.

‘மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனிற் கற்றோன் சிறப்புடையான்’

என்ற பாடல்கூடத்தான் என்னளவிற் பொய்த்துவிட்டது. அப்பாவுக்கு இது நேரத்துடனேயே தெரிந்திருந்தால் தன்னிடம் உள்ள பணத்தையெல்லாங் கொட்டி என்னைப் படிக்க வைத்திருக்கமாட்டார். அவர் மனக்கோட்iடெயல்லாம் தவிடுபொடியாகிவிட்டது. அந்தத் தாக்கத்திலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள வழி தெரியாத அப்பா அப்படியே படுக்கையிற் தஞ்சம் புகுந்துவிட்டார். அவருக்கு எப்போது நிம்மதி கிடைக்கப்போகிறது…? எதுவுமே புரியாத நிலையில் அவன் கண்ணயர்கிறான்.

-முற்றும்-

உள்ளத்தில் ஒரு உறுத்தல்

அன்று ஒரு சனிக்கிழமை. திருக்கோணமலைத் திரேசம்மாள் மடத்தில் வழக்கத்திற்கு மாறாக அன்று அமைதி நிலவுகின்றது. எங்கும் ஒரே நிசப்தம். மடத்திற் தங்கியிருக்கும் அநாதைக் குழந்தைகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழமையாகப் போடும் சத்தமும், கலகலப்பும் அந்த மடத்திற்கே ஒரு தனி மெருகூட்டும். ஆயின் இன்று அந்த மடத்தில் இப்படி நிசப்தம் நிலவுவதற்கு என்னதான் நடந்துவிட்டது?

மடத்தில் தாயார் மாகிறெற்றைச் சந்திக்க வரும் விருந்தினர்கள் தங்கிப் பேசும் அறையான ‘பாலரில்’ தாயார் மாகிறெற் அமர்ந்து ஏதோ கடிதங்களைப் பரிசீலனை செய்துகொண்டிருக்கிறார். பக்கத்தில் சகோதரி றோசலீனா, வேறோர் ஆசனத்தில் அமர்ந்துகொண்டிருக்கின்றார். ‘பாலர்’ அறைக்கு வெளியே மரியம்மாள் அழுது சிவந்த கண்களுடனும், சிந்திய மூக்குடனும், உடல் பதற, உள்ளம் விம்ம அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற பீதியுடன் கைக்கூண்டில் தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கும் ஒரு குற்றவாளியைப்போல் நின்றுகொண்டிருக்கின்றாள். சற்றுத் தூரத்தில் ஏனைய மாணவியர் கூட்டங்கூட்டமாக நின்று விளையாடும் பாவனையில் ஏதோ குசுகுசுத்துக் கொள்கின்றார்கள். ஆயினும் அவர்கள் முகத்தில் ஏதோ ஒரு சோகம் நிலவியது. அவர்கள் பேச்சும். சிந்தனையும் மரியம்மாளைச் சுற்றியே வட்டமிடுகின்றன.

அந்த மடத்தின் தலைவியான தாயார் மாகிரெற் தொடக்கம் அங்கு கூலிவேலை செய்யும் தோட்டி வரையில் உள்ள சகலருக்கும் மரியம்மாள் என்றால் உயிர். அவள் நடந்துகொண்ட விதத்தில் அவர்கள் அவளிடம் அப்படியொரு தனியன்பைக் காட்டிவந்தனர். மடத்தின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக நடந்து சகலரின் அன்புக்கும் பாத்திரமான அப்பெண் துறவு பூண்டு கன்னியாஸ்திரியாக சேவை செய்வாள் என்றுதான் எல்லோரும் எண்ணியிருந்தார்கள். அவளை அடுத்த வருடம் கன்னியாஸ்திரி மடத்திற்கு அனுப்புவதற்கான சகல ஒழுங்கையும் தாயார் மாகிறெற் திட்டம் போட்டு செயற்படுத்தி வை;திருந்தாள். ஆனால் மரியம்மாளோ இப்போது எல்லோர் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டாள். உண்மையில் எது நடக்கக் கூடாது என்று விரும்பினார்களோ அது நடந்து விட்டது.

இந்நிலையில் ‘பாலருக்கு’ வெளியே பதற்றத்துடன் நின்ற மரியம்மாளின் மனதில் ஓராயிரம் எண்ணக் குவியல் ஓடி மறைந்தன. அவள்கூடத் தான் மனதார விரும்பி கன்னியாஸ்திரியாக வரவேண்டும் என்றொரு எண்ணத்தை மனதில் வளர்த்து வந்தாள். ஆனால் அந்த எண்ணம் கடந்த ஆறு மாத காலத்துள் அவள் மனதில் ஒரு சபலத்தை உண்டாக்கி விட்டிருந்தது. சுருங்கச் சொன்னால் அந்த எண்ணம் அவள் மனதைவிட்டு அடியோடு அற்றுவிடும் நிலைக்கு வந்திருந்தது. அது எப்படி நிகழ்ந்தது என்று அவளுக்கே தெரியாது. ஆயினும் நிச்சயமாகத் தன் மனம் மாறிவிட்டதென்பதை மட்டும் அவளால் உணர முடிந்தது.

அதற்குக் காரணம்…? ஆமாம், காரணம் ஜோர்ஜ் என்று மட்டும் கூற அவள் விரும்பவில்லை. ஒரு கையை மட்டும் அடித்துச் சத்தத்தை உண்டாக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள முடியாத குழந்தையல்ல அவள். ‘ஜோர்ஜ்’, அவன் அறிமுகமானதே ஒரு கதைதான். மடத்தில் வருடாந்த நவீன விற்பனை நடந்துகொண்டிருந்தபோதுதான் ஜோர்ஜ் அவளுக்கு முதன்முதலில் அறிமுகமானான். மடத்திற்கு வந்து விற்பனை சம்பந்தமான சகல விடயங்களிலும் கலந்துகொண்டு அதை வெற்றிகரமாக நடாத்த உதவியவனே அவன்தான். மரியம்மாள் தையல் நிலையத்தின் பொறுப்பாக நின்றாள். அதற்குப் பக்கத்தில் இருந்த ‘ஐஸ்கிறீம்’ விற்பனை நிலையத்தின் பொறுப்பாக ஜோர்ஜ் நியமிக்கப்பட்டிருந்தான்.

இருவருக்கும் இடையில் சாதாரணமாக ஆரம்பித்த பேச்சுப்பழக்கம் இரண்டு, மூன்று நாட்களில் ஏதோ பல காலம் பழகியது போன்றதோர் உறவை அவர்களிடையே வளர்த்துவிட்டது. இப்படி ஆரம்பித்த சாதாரண இந்த உறவு வைரம் பாய்ந்த தன் மடத்து வாழ்க்கையைப் பொசுக்கிவிடும் என்று மரியம்மாள் எதிர்பார்க்கவேயில்லை.

விற்பனை நினைத்ததைவிட நல்லபடியாக முடிந்ததும் இரண்டு நாட்கள் இரவுபகல் என்றில்லாமல் சகல பொருட்களையும் உரிய இடத்திற் சேர்க்கும் பொறுப்பையும் ஜோர்ஜ் முன்னின்று செய்து முடித்தான். அவனுக்கு உதவியாக இரண்டொரு பெண்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்தி மரியம்மாள். அவள்மேல் தாயார் மாகிறெற் வைத்திருந்த பூரண நம்பிக்கைதான் அவளை ஜோர்ஜ் உடன் இரவுபகலாக நின்று உதவி செய்ய வழிவகுத்தது என்று கூறினால் மிகையாகாது. அந்த நம்பிக்கையால் இப்படியான அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறும் என்று தாயார் மாகிறெற் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

மேலே சுழன்றுகொண்டிருந்த மின்விசிறியின் காற்றுக்குப் படபடத்து காகிதங்களை தாயார் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த சில சம்பவங்கள் அவருக்கு அருவருப்பாக இருந்திருக்கவேண்டும் என்பதை அவருடைய முகச்சுழிப்புக் காட்டியது. இந்தக் கடிதங்களைத் தொடுவதற்கே வெறுப்புற்றவர்போல் அவற்றை இரண்டு விரல்களால் பிடித்து மேசைமேல் விட்டெறிந்தார். ஒருபடியாகக் கடிதப் பரிசீலனை முடிந்தது. தாயார் மாகிறெற் இப்போது சகோதரி றோசலினாவின் முகத்தை அர்த்தபுஷ்டியுடன் பார்க்கின்றார்.

அவரது பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாதவர்போல் சகோதரி றோசலினா தலைகுனிந்து கொள்கின்றாள். ‘சிஸ்டர்’ மரியம்மாளைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? அவளுக்கு இப்போது நாம் கொடுக்கக்கூடிய சரியான தண்டனை என்ன?”

சிஸ்டர் றோசலினாவுக்கு தாயாரின் கேள்விகள் சற்றுத் துணிவை ஏற்படுத்திவிடுகின்றன.

“மரியம்மாளைப்பற்றி நாங்கள் வைத்திருந்த உயர்ந்த அபிப்பிராயம் தவிடுபொடியாகிவிட்டது. அவள் இப்படிக் கீழ்த்தரமாக நடந்துகொள்வாள் என நாங்கள் எதிர் பார்க்கவேயில்லை. இப்போ நாங்கள் செய்யக்கூடிய ஒன்று அவளை உடனடியாகக் கன்னியாஸ்திரி மடத்திற்கு அனுப்பி விடுவதுதான். இனி உங்கள் விருப்பம் தாயார்.” சிஸ்டர் றோசலினா தன் அபிப்பிராயத்தை கூறிவிட்டு ‘பாலரை’ விட்டு வெளியேறினான்.

தாயார் மாகிறெட் கன்னத்திற் கையை வைத்துச் சிந்திப்படி அப்படியே சில நிமிட நேரம் அமர்ந்திருந்தாள். அவள் முன் பரந்து காற்றில் படபடத்த கடிதங்கள் அவளைப் பார்த்துச் சிரிப்பது போன்ற பிரமையேற்பட்டது. அவள் தன் வாழ்க்கையை இருபது வருடங்கள் பின்னோக்கிப் பார்த்தாள்.

அப்போது அவளும் மரியம்மாளின் வயதை ஒட்டித் தான் இருந்திருப்பாள். ஆனால் படிப்பில் விவேகியாக இருந்தாள். மரியம்மாள் இப்போது பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கிறாள். இந்த வயதில் றோஸி என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்பட்ட தாயார் மாகிறெற் பத்தாம் வகுப்பில் திறமைச்சித்தி பெற்று க.பொ.த. உயர்தரம் வகுப்பில் காலடி எடுத்து வைத்திருந்தாள். ஆயினும் அவளது எதிர்காலம்பற்றிய எந்த முடிவும் உறுதியாக எடுக்கப்படவில்லை. மேற்கொண்டு படிக்கவேண்டும் என றோஸி விரும்பியபோதும் வீட்டில் உள்ளவர்கள் அவள் துறவு வாழ்க்கையில் ஈடுபட்டு கன்னியாஸ்திரியாக வேண்டுமென்றே விரும்பினர். றோஸிக்குப் படிக்கவேண்டும் என்ற ஆசையிருந்தாலும் கன்னியாஸ்திரி ஆவதற்கு அவள் எந்தவித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. ஆயினும் ஏனோ சில நாட்களாக அவள் மனதில் ஏற்பட்ட ஒரு சிறு சபலம் அவள் மனதைக் குழப்பி சிறிது சங்கடப் படுத்தியது. அவளுக்குத் தூரத்து உறவுமுறையான பையன் டேவிட் சில நாட்களாக அவளைப் பின்தொடர்ந்து அவள் மனதைக் குழப்பிவிட்டிருந்தான். அவன்மீது அவளுக்கு எந்தவித வெறுப்பும் ஏற்படவில்லை. அதேசமயம் அவனை அவள் விரும்பவில்லை என்று கூறித் தன்னை ஏமாற்றிக் கொள்ளவும் தயாராகவில்லை. ஏதோ ஒரு பாசம் இருவரையும் இணைத்தது உண்மை. ஆனால் திடீர் என டேவிட்டிடம் இருந்து வந்த ஒரு கடிதம் அவள் மனதில் ஒரு அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியது. அவள் அதற்குப் பதில் எழுதவில்லை.

ஆயின் டேவிட் ஒருநாள் அவளைப் பின்தொடர்ந்து அக்கடிதம்பற்றி கேட்டபோது அது கிடைத்ததை அவள் ஒப்புக்கொள்ளவே செய்தாள். அது பற்றிச் சிந்திப்பதற்குத் தனக்கு சில நாள் அவகாசம் தரும்படியும் வேண்டினாள். அதன் பின்புகும் டேவிட் அவளை வழிமறித்துத் தன் காதலை வெளியிட்டிருந்தான். ஆனால் றோஸி எந்தவித உறுதிமொழியும் அவனுக்கு கொடுக்கவில்லை. றோஸியின் மனம் எந்தவித முடிவும் எடுக்கமுடியாமல் தத்தளித்தது. டேவிட்டோ றோஸி தன்னைக் காதலிப்பதாகக் கோட்டை கட்டினான்.

இந்நிலையில் கூடிய விரைவில் றோஸி கன்னியாஸ்திரி ஆக மடத்திற்குச் செல்வதென வீட்டில் முடிவெடுக்கப்பட்டது. றோஸி தன் பெற்றோரின் ஆசைக்குக் குறுக்கே நிற்கவில்லை. அவள் போவதற்கு ஆயத்தமானாள். ஆயினும் அவள் அடிமனதில் ஒரு போராட்டம்.

றோஸி கன்னியாஸ்திரி வாழ்க்கையை மேற்கொள்ள கொன்வெற் செல்லப்போகின்றாள் என்பதை அறிந்த டேவிட் அவள் தினமும் அதிகாலையில் கோயிலுக்குச் செல்லும் வழியில் அவளுக்காகக் காவல் நின்றான்.

றோஸி, அவன் நின்ற இடத்தை அண்மித்ததும் அவன் அவளைப் பார்த்துத் தான் கேள்விப்பட்டது உண்மையா என்று கேட்டதை அவளால் மறக்கமுடியாது. அந்த வினா எத்தனை வருடங்கள் பின்பும் அவள் மனதை உறுத்திக் கொண்டேயிருந்தது. “ஆம் டேவிட் கடவுளுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய என் வாழ்க்கையை அர்ப்பணிக்கத் தீர்மானித்துவிட்டேன்.” என்றாள் அவள்.

“றோஸி கடவுளுக்கும், மக்களுக்கும் சேவைசெய்ய உன்னைப்போல் ஆயிரமாயிரம் பேர் வருவார்கள். ஆனால் எனக்கு? ஆமாம், றோஸி எனக்கு நீ ஒருத்திதான் வாழ்வளிக்க முடியும். என்று அவன் பரிதாபமாகக் கேட்டது அவள் நெஞ்சை வருடியது. ஆயினும் தன் மன வைராக்கியம் குலைந்துவிடாமல், “என்னை மன்னித்துவிடுங்கள் டேவிட். நான் எடுத்த முடிவு மாற்றமுடியாதது” கூறிவிட்டு விறுக்கென அவள் நடந்து சென்றுவிட்டாள். அன்று நடந்த சாதாரண சம்பவம் அவள் இந்தப் புனிதமான வாழ்க்கையில் இத்தனை வருடங்கள் ஊறித்திளைத்த பின்னரும்கூட மாறாக வடுவாக அவள் உள்ளத்தை உறுத்திக்கொண்டிருந்தது.

அவள் டேவிட்டை மறந்து பல வருடங்களாகிவிட்டன. ஆயினும் இப்படியான சந்தர்ப்பங்களின்போது அது அவளை அறியாமலே அவள் உள்ளத்தை உறுத்த ஆரம்பித்துவிடும். டேவிட்டின் கடிதத்தை உடனேயே அவள் ஏற்றுக்கொள்ளாமல் திருப்பியனுப்பியிருந்தால் அவள் மனதில் இப்படி ஒரு உறுத்தல் ஏற்பட்டிருக்கமுடியாது என்பதை அவள் உணர்ந்தாள். திடீர் என அவள் சிந்தனை அறுபட அவள் தன் கன்னத்தில் இருந்த கையை அகற்றி விட்டு “மரியம்மாள்” என்று சற்றுக் கண்டிப்புடன் அழைத்தாள்.

தாயாரின் ‘கணீர்’ என்று குரல் கேட்டதும் மரியம்மாள் ஏதோ பிரளயம் நடக்கப் போகிறது என்ற பயத்துடன் தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்தாள். அவள் உடல் பதறியது.

“இப்படி என் அருகில் வந்து நில்” மீண்டும் அதே கண்டிப்பு.

மரியம்மாள் தாயாருக்கு அண்மையில் சென்று நின்றாள்.

“இத்தனை கடிதங்களுக்கும் நீ பதில் எழுதினாயா…?”

மரியம்மாள் நடுங்கினாள். அவள் உதடுகள் பயத்தினால் இறுக மூடிக்கொண்டன.

“நான் கேட்டதற்குப் பதில் சொல்…” நீ திருப்பிப் பதில் எழுதினாயா…?

“ஆம் தாயார்”, “அப்போ நீ ஜோர்ஜைக் காதலிக்கின்றாய்…”

“……………………..”

“மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று எண்ணுகின்றேன். நீ இப்போது போகலாம்.”

இடியும், மின்னலும் சேர்ந்து புயலாக உருவெடுக்கப் போகின்றது என்று எண்ணிப் போன மரியம்மாளுக்கு தாயாரின் விசாரணை ஒரேயொரு வினாவுடன் முடிவடைந்தது வெறும் மழைத் தூற்றல்போலிருந்தது. தப்பினேன் பிழைத்தேன் என்று தெய்வத்துக்கு நன்றி சொல்லியபடியே அவள் மெதுவாக வெளியே சென்றாள்.

ஆனால் அன்றுடன் ‘ஜோர்ஜை‘ மறந்துவிட்டு கன்னியாஸ்திரி வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டிய சகல முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும் என அவள் மனம் உறுதிபூண்டது.

ஆயின் இரண்டு வாரங்களின் பின் அவள் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் திருகோணமலை புனித சூசையப்பர் தேவாலயத்தில் அவளுக்கும், ஜோர்ஜுக்கும் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமணம் முடிந்து தன்னிடம் ஆசி பெறவந்த மணமக்களைத் தாயார் மாகிறெட் ஆனந்தக் கண்ணீருடன் ஆசீர்வதித்தாள்.

தாயாரின் இந்த செயலுக்கு அர்த்தம் புரியாத சிலர் அவளைப் போற்றியபோதும் ஒரு சிலர் அவளைத் தூற்றவும் செய்தனர். ஆனால் தாயார் மாகிறெற்றின் மனதில் பல வருடங்களாக இருந்த உறுத்தல் மறைந்து ஒரு நிம்மதி ஏற்பட்டது.

தேடிக்கொண்டிருக்கிறேன்

அன்று ஒரே புழுக்கம். என் உள்ளத்தில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டிருந்த உள்ளப் புழுக்கத்துடன் உடற் புழுக்கமும் சேரவே அதைத் தணிப்பதற்காக நான் பின்கட்டில் சற்றுக் காற்று வாங்க நின்றேன். மணி பன்னிரெண்டைத் தாண்டிவிட்டதால் என் மனைவி என்னை உணவுக்காக அழைத்துக் களைத்த நிலையில் தனது உணவுத் தட்டுடன் வந்து என் பக்கத்தில் அமர்ந்துகொள்கிறாள். அவளது அவசரத்தைப் பார்த்துவிட்டு மேலும் அவளைத் தவிக்கவிடக்கூடாதென்ற எண்ணத்தில் நானும் உள்ளே சென்று எனது உணவுத் தட்டை எடுத்துவந்து அவள் பக்கத்தே அமர்ந்துகொள்கிறேன்.

முதல் வாயை நான் உள்ளே வைக்க இருந்த வேளையில் எதிரே சுவரில் இருந்த நாட்குறிப்பேடு என் கண்களிலே படுகிறது. அது காட்டிய தேதியைப் பார்த்தவுடன் என் வாய்க்குள் திணிக்கப்பட்ட உணவை மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் நான் திண்டாடுகிறேன்.

என் கண்களை நீர் திரையிட்டு மறைக்கிறது. என் நிலையை மனைவி கவனித்துவிடக் கூடாதென்பதற்காக நான் வாயை மெல்வதுபோற் பாவனை செய்துகொள்கிறேன்.

என் மனத்திரையில் ஆறு மாதங்களுக்கு முன் இதே தேதியில் நடைபெற்ற சம்பவம் நிழற்படம்போல் ஓடுகிறது.

ஆமாம், அன்றும் இப்படித்தான். நான் மதிய உணவிற் கை வைக்கப்போன வேளை என் மருமகன் தiலைதெறிக்க ஓடோடி வந்து என் முன்னே நிற்கிறான்.

அவன் முகம் பேயறைந்ததுபோற் காட்சியளிக்கிறது. அவன் பேசும் திராணியற்று என் முகத்தைப் பார்த்த படியே நிற்கிறான். அவன் விழிகளில் கரைகட்டிய நீர் எனக்கு அவன் நிலையை விளக்கியதோடு ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டது என்பதையும் புரியவைக்கிறது.

என்னடா பாலு… என்ன நடந்தது… ஏன் இப்படிப் பேச்சு மூச்சற்று நிற்கிறாய்… என்று கேட்டதுதான் தாமதம் அவன் தன் துன்பத்தைக் கூறமுடியாதவனாய் ‘ஓ’ வெனக் கத்தி ‘நேற்று மதியம் வெளியே சென்ற பெரிய மாமா இன்னும் வீடு திரும்பவில்லை’ என்று முடித்து விம்முகிறான்.

என் கரங்கள் நடுங்க என் உணவுத்தட்டு என் கைப்பிடியில் இருந்து நழுவிக் கீழே விழுகிறது. என் நெஞ்சு வரண்டு என் நாவில் உள்ள உமிழ்நீர் வற்றிய நிலையில் பேசும் சக்தியற்று அவனையே பார்த்தபடி நிற்கிறேன். இதுவரை ஊராருக்கு ஆறுதல் கூறிய என்போன்றவர்கள் எமது உணர்ச்சிகளை வெளிக்காட்ட உரிமையற்றவர்கள் தானே.

அவரது நேர்மையான போக்குக்கு இப்படியான ஒன்று நடக்கும் என அவரது உறவினர் வட்டத்தில் பலபேர் மனதுக்குள் நினைத்துக்கொண்டிருந்தனர். அவர்மேல் அதிகம் பற்று வைத்த சிலர் தீர்க்கதரிசிகள்போல் இதை நேரே அவரிடம் கூறியும் இருந்தனர். ஆனால் இப்படியொரு கேவலம்! இப்படிக் கோழைத்தனமாக நடைபெறும் என்பதைத்தான் எவரும் எதிர்பார்க்கவில்லை! எதிர்பார்க்கவேயில்லை. நேருக்கு நேர் பகிரங்கமாகப் பலரது முன்னிலையிலும் என்றோ ஒருநாள் நடக்கும் என்பதை உறவினர்கள் மட்டுமல்ல அந்த மனிதர்கூட எதிர்பார்த்திருந்தார். அவர் தன்னுடன் பழகிய மனிதர்கள் மத்தியில் ஒரு யூதோ இருக்கக்கூடும் என்பதையும் தெளிவாக அறிந்திருந்தார்.

ஆயினும் அதற்கு நேர்மாறான முறையில் ஒரு சம்பவம் நடந்துவிட்டதை அறிந்தபோது என் இதயம் குமுறியது. அவருக்கு நேர்ந்ததை எண்ணுந்தோறும் மகாபாரதத்தில் தர்மத்தைச் சிறப்பிக்க வரும் கர்ணன் பாத்திரம் பொய்யானதா…? ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்ற பழந்தமிழ் இலக்கியப் பாடலின் அடிகூடப் பொய்த்து விட்டதா…? என்றெல்லாம் என் உள்ளத்திலே எத்தனையோ கேள்விக்குறிகள்!

என் மனதில் எத்தனையோ சிந்தனை அலைகள்… கோணேசா… நான் நினைக்கும்படி எதுவும் நடந்துவிடக் கூடாது… இதுவரை என்னைக் கைவிடாத நீ இனிமேலும் என்னைக் கைவிடமாட்டாய்… என்று மனதாரப் பிரார்த்தித்து என்னை நானே சமாதானம் செய்துகொள்கிறேன்.

அந்த மனிதனின் நேர்மையும், துணிவும், அறி;வும், அயராத உழைப்பும், பொதுநலத் தொண்டும், கடமை உணர்ச்சியும், தியாகப் பண்பும் இந்தப் பூமியில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலருக்கே இருக்கமுடியும். தனக்கென வாழாது பிறர்க்காகவே வாழ்ந்த மனித தெய்வம்.

மக்களை மாக்களாக நினைத்து அடித்து அள்ளிக் கொண்டு சென்றடைத்த வேளையிலும், எலும்பெலும்பாகத் தட்டி முறித்த காலத்திலும், பறிகொடுத்தவர்கள் தட்டிக்கேட்கத் தலைவர்கள் எவரும் எம் மத்தியில் இல்லையே என்று ஏங்கித் தவித்த நேரத்தில், அந்தத் தர்மசங்கடமான நிலையிற்கூடத் தனித்து நின்று, தவித்தோர்க்குத் தக்க துணையாகச் சென்று, தட்டிக் கேட்கவேண்டியவர்களைத் தட்டி கேட்டு, நன்றாக உண்டு, வேளைக்குத் தூங்கி வீட்டில் ஓய்வெடுக்க வசதியிருந்தும் அதைத் துச்சமெனத் தூக்கி எறிந்து ஒரு இளைஞனைவிடத் துடிப்புடன் மக்களுக்குச் சேவை செய்த ஒரு தனி மனிதன் மறைந்துவிட்டான்… இல்லை மறைக்கப்பட்டான் என்ற செய்தியை என்னால் ஜீரணிக்க முடியவில்லை! ஜீரணிக்கவே முடியவில்லை!!

எந்த இனத்தின் விமோசத்திற்காக உற்றவர்களின் சொல்லைத் தட்டி சேவை செய்ய விழைந்தாரோ அந்த இனமே அவருக்குக் கோடரிக்காம்பாக வந்த வினையை எண்ணும்போது இன்று அதே தேதியில் என் உள்ளங் குமுறுவதில் அர்த்தமில்லையா?

தர்மம் எங்கே..? தெய்வம் எங்கே…? நீதி எங்கே…? கேட்கிறேன்… கேட்கிறேன்… என் இறுதி மூச்சுவரை கேட்டுக்கொண்டேயிருப்பேன்!

என்னை மறந்து என் உதடுகளின் வழியே வெளிவந்த என் வார்த்தைகளைக் கேட்ட என் மனைவி என்னைப் பார்க்கிறாள்.

நான் தொடர்ந்தும் சாப்பிடமுடியாத நிலையில் என்கையை உதறிவிட்டுக் குழாயடிக்குச் செல்கிறேன்.

என் பின்னால் ஒரு காலடிச் சத்தம். திரும்புகிறேன். என் ஒன்பது வயதுப் பெண் என் பின்னால் நிற்கிறாள்.

அவள் கையில் பூக்கள் நிறைந்த ஒரு வெள்ளித்தட்டு.

அப்பா… இன்றாவது கோயிலுக்குப் போக வருகிறீர்களா…? பெரியப்பாவுக்கு அர்ச்சனை செய்ய…

அவள் குரலில் ஒரு குழைவு.

கோயிலுக்காம்மா… சரி நீ அம்மாவோடு போய் வா…

அப்பா நீங்கள்…

ஆண்டவன் ஒருவன் இருக்கிறானா என்ற சந்தேகம் தீர்த்து வைக்கப்படும்போது நானாகவே சென்றுகொள்வேன்.

அப்பா அதுவரை…

நான் அவனைத் தேடிக்கொண்டிருப்பேன் மகளே…

என் பதில் கேட்டு ‘எதை’ என்று கேட்டுக்கொண்டே என் அருகில் வரும் என் மனைவியின் விழிகளைச் சந்திக்கும் துணிவற்று என் வீட்டினுள்ளெ செல்கிறேன்.

நூலறுந்த காற்றாடி

என் கணவரின் உடலில் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. அவர் பக்கத்தில் அமர்ந்திருக்கும் என் கண்களில் இருந்து நீர் ஆறாய்ப் பெருகுகிறது. என் இதயமே நின்று விடுமோ என்றொரு பயம் என் உள்ளுணர்வை அச்சுறுத்திக்கொண்டிருந்த வேளையில் அவர் கேசத்தை என் கரங்கள் மெதுவாகக் கோதிவிடுகின்றன. அந்த ஸ்பரிசத்தில் அவர் கண்கள் ஒருமுறை திறந்து மூடிக்கொள்கின்றன.

மணம் பரப்பும் வெறும் சந்தனக் குச்சாய், வெளிச்சந்தந்து உருகி மடியும் மெழுகுவர்த்தியாய்க் கடந்த பதினைந்து வருடங்களும் எனக்குக் கவசமாய் இருந்து இன்று தீராத வியாதியால் வீடிக்கப்பட்டு மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் அவர் கண்மூடினால் என் நிலை…? அதுவே என் உள்ளத்தில் பெரியதோர் கேள்விக் குறியாக எழுந்து நிற்க அதற்குப் பதில் காணமுடியாமற் துடித்துத் தவிக்கும் என் நிலை அவருக்குப் புரிகிறதோ இல்லையோ… ஆனால் எனக்கு…?

அவர் போனபின் நான் யாரை நம்பி வாழ்வது… யாருக்காக வாழ்வது…?

இப்படி ஒரு கேள்வி எழும்போது ஏன் நீங்கள் மல்லிகாவிற்காக வாழ்ந்துதானே ஆகவேண்டும் என்று இந்த சமுதாயம் கூறலாம். ஆமாம்! சமுதாயத்திற்கு எதை எப்படி வேண்டுமானாலும் திரித்தும், விரித்தும் கூறக்கூடிய துணிவும், சுதந்திரமும் உண்டு எதையும் ஆராய்ந்து கூறும் பழக்கம்தான் அதனிடம் கிடையாதே.

மல்லிகா…! ஆம் அந்தப் புதுமலரின் சுகந்தத்தைத்தான் அவள் முகந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அந்த மலர் ஒரு கொழுகொம்பைத் தேடிப் படர்ந்து மணம் வீசிக் கொண்டிருப்பதாகக் கேள்வி.

மலர்! ஆமாம்… அது கசங்கிவிடாமல் உரிய இடத்தில் இருப்பது நீதியானதும், நியாயமானதுந்தான்!

மல்லிகா என் வயிற்றில் உதித்த மலர்தான். இளமையில் என்னை அழகி என்று பலர் புகழ்வார்கள். அப்படியானால், மல்லிகாவை ஒரு அப்ஸரஸ் என்று சொல்லலாமா…? அவள் பத்து வயதாக இருக்கும்போதே பதினைந்து வயது பருவ மங்கையாகத் தோற்றமளித்தாள். மல்லிகாவை அழகு ராணிப் போட்டிக்கு அனுப்பினால் நிச்சயமாக முதலாம் இடம் அவளுக்குத்தான் என்று அவள் அப்பா பெருமையுடன் அடிக்கடி கூறுவார்.

அவ்வேளைதான் அவள் அப்பா காத்திராப்பிரகாரம் யாழ்நகரில் நடந்து ஷெல் தாக்குதலுக்குள்ளாகி அவ்விடத்திலேயே துடிக்கத் துடிக்க உயிர் நீத்தார். அப்போது எனக்கு வயது இருபத்தாறு.

எதிர்பாராமல் விதியின் சதிக்கு ஆளாகிய நான் என்னையும் பாதுகாத்து மலர்ந்து மணம் பரப்பும் நிலையில் அரும்பாக இருந்த என் பத்து வயது மகளையும் பாதுகாத்து வழிநடத்தவேண்டிய ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

என் கணவரின் பென்ஷன் தொகை ஓரளவுக்கு என் ஜீவனோபாயத்துக்கு வழிசெய்ததாயினும் முற்றாக அது எம் இருவரின் செலவினத்தையும் நிரப்பப் போதுமான தாய் இருக்கவில்லை.

இந்நிலையில் ஒரு சிலர் எம் பரிதாப நிலைக்குப் பரிந்து கைகொடுக்க முன்வந்தனராயினும் அதற்குப்பதிலாக அவர்கள் எதையெல்லாமோ எம்மிடம் இருந்து எதிர்பார்த்ததாகத் தோன்றியது.

அப்படியான ஒரு சிலரில் எந்hப் பிரதிபலனும் கருதாமல் எமக்கு உதவ முன்வந்த ஒருவர்தான் வேணுதாஸ். அவரை அநேகமாக எல்லோரும் தாஸ் என்றே அழைப்பார்கள்@ அவர் என் கணவரின் மதிப்புக்குரிய நண்பருமாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் மிகவும் அன்பாகவும், கண்ணியமாகவும் பழகியதால் அவருடன் பல விடயங்களை என்னால் மனந்திறந்து பேசமுடிந்தது.

பொதுவாக இக்குறுகிய காலத்தில் நான் பெற்ற அனுபவங’களை அவருடன் மனந்திறந்து பேசி உள்ளேன். ஒரு இளம்பெண் ஒரு ஆண் துணையின்றி வாழ்வது மிகவும் கஷ்டம் என்று என் அனுபவத்தைக்கொண்டு கூறினேன்.

தங்களைக் கண்ணியவான்கள் என்று உலகுக்கு பறைசாற்றும் ஒரு சிலர் என் கற்பைப் கூலியாகப் பெறும் நோக்கத்துடன் எனக்கு உதவ முன்வந்ததைக்கூடச் சொல்லியுள்ளேன். அப்படியானவர்களில் ஒரு கயவனின் பெயரையும் வெளியிட்டேன்.

என் பரிதாப நிலைக்கு இரங்கியோ, அன்றி உண்மையான அன்பினாலோ அவர் எனக்கு மறுவாழ்வு அளிக்க என் சம்மதம் கேட்டார். ஆரம்பத்தில் அதற்குச் சம்மதம் அளிக்க மறுத்த நான் ஒரு சில வாரங்களில் அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒரு நிர்ப்பந்தத்துக்கு ஆளாக்கப்பட்டேன்.

எமது இருவர் உள்ளங்களும், பல வகைகளிலும் ஒருமித்தபோதும் இடையே மல்லிகா என்ற மலர் வாடி வதங்கிவிடாமற் பாதுகாக்கவேண்டிய பெரும் பொறுப்பும் என்னைச் சார்ந்திருந்தது.

இதுபற்றி தாஸிடமும் கலந்துரையாடினேன். மல்லிகாவிடம் மிகவும் நாசுக்காக இவ்விடயத்தைத் தானே போடுவதாக அவர் கூறினார்.

ஒரு சனிக்கிழமை! மல்லிகாவுக்கு அன:று விடுதலைநாள். அத்துடன் டியூஷனும் இல்லை. தாஸ் அன்று அதிகாலையிலேயே எங்கள் வீட்டுக்கு வந்தார்.

மல்லிகாவுக்கு மிகவும் பிடித்தமான மல்கோவா மாம்பழங்கள் சிலவற்றைக் கொண்டுவந்து அவளிடம் கொடுத்தார். அவரிடம் “ராங்ஸ் அங்கிள்” என்று கூறி அவற்றில் ஒன்றைக் கடித்துத் தின்ன அவள் ஆரம்பித்தபோது அவர் என்னிடம் கத்தி ஒன்று கேட்டு வேண்டி அப்பழத்தை அவளிடம் இருந்து பெற்றுத் தோலைச் சீவி, சிறு துண்டுடங்களாக நறுக்கி நீட்டியபடியே “மல்லிகா அப்பா இல்லாமல் நீயும் அம்மாவும் மிகவும் கஷ்டப்படுகிறீர்கள் இல்லையா…?” என்று ஆரம்பிக்க.

“ஆம் அங்கிள்@ இப்ப அப்பா இருந்தால் அவரே வெட்டிக் கொடுத்திருப்பார் இல்ல… அம்மா பாவம்… எப்பவும் அப்பாவை நினைச்சு அழுதுகொண்டே இருக்கிறாங்க…”

“ஓ! அப்ப நான் சொன்னது சரிதான்… ஆமாம் மல்லிகா… இந்தக் கவலையை நீங்கள் இருவரும் மறக்க நான் ஒரு வழி கூறட்டுமா…?”

“என்ன வழி அங்கிள்…!”

“அம்மா இன்னும் ஒரு திருமணஞ் செய்து கொண்டால்”

மல்லிகா முகத்தைச் சுழித்தபடி அவனைப் பார்த்தாள்

(…………………….)

அங்கே நிலவிய மௌத்தை நீடிக்க விடாமல் “நீ என்ன சொல்கிறாய் மல்லிகா…” என்றார் தாஸ்.

“அம்மாட்டக் கேளுங்கள் அங்கிள்”

“ஓ கே… அம்மாவைக் கூப்பிடு…”

“அம்மோவ்” அவள் அழைப்பைக்கேட்டு வாசுகி அங்கே வந்ததும்… “உங்களிடம் மல்லிகா ஒரு கேள்வி கேட்கட்டுமாம்… கேட்கட்டுமா…?” என்று அவளைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினார் அவர்… “என்ன கேட்கப்போகிறீர்கள்?” என்று வாசுகியும் ஒன்றும் நடக்காததுபோற் கேட்க “அதாவது நீங்கள் திரும்பவும் ஒரு திருமணஞ் செய்துகொண்டால் என்ன? என்று மல்லிகாவும் நானும் சிந்திக்கிறோ” என்று சிரித்துக்கொண்டே கூறினார் தாஸ்.

“நல்ல கேள்விதான்… உண்மையில் மல்லிகாவுக்கும் எனக்கும் ஒரு நல்ல துணை தேவைதான். ஆயினும் இதற்கு என் சம்மதத்தைவிட மல்லிகாவின் சம்மதம்தான் முக்கியம்” என்று கூறி வாசுகி அவளைப் பார்க்க.

“இரண்டாம் தாரமாக உங்களை யார்கட்டப்போறாங்க” என்று மல்லிகா வினா எழுப்ப, “ஏன் நானே உன் அம்மாவைத் திருமணஞ் செய்துகொள்கிறேன்… அப்போ எனக்கு நீ மகள் உனக்கு நான் அப்பா… இல்லையா மல்லிக்குட்டி” என்று அவன் கூறிமுடிக்கவும்.

மல்லிகாவின் கையில் எஞ்சியிருந்த மாம்பழத் துண்டங்கள் அவன் முகத்திற்போய் விழவும் சரியாக இருந்தது.

தாஸ் திடீர் அதிர்ச்சியாற் தாக்கப்பட்டுத் திருப்பவும் தன் நிலைக்கு வந்தபோது அந்த இடத்தில் மல்லிகாவைக் காணவில்லை.

வாசுகியின் கண்களில் இருந்து நீர் ஆறாய்ப் பெருகியது. தாஸ் மட்டும் கலங்காமல் “இப்பதானே ஆரம்பம் போகப்போக எல்லாம் சரியாகிவிடும்” என்று கூறி அவ்விடத்தைவிட்டு நகர்ந்தார். அதன்பின் தாஸ் வரும்போதெல்லாம் அவருடன் பேசுவதைத் தவிர்ப்பதற்காக மல்லிகா எங்காவது ஓடி மறைந்துவிடுவாள்.

இப்பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்று வாசுகி சிந்தித்து, சிந்தித்து அழுதபடி இருக்கையில் ஒருநாள்… மல்லிகா அவள் பக்கத்தில் வந்து அவள் கழுத்தைக் கட்டிப்பிடித்தபடி “அம்மா தாஸ் அங்கிளைத் திருமணஞ் செய்து கொள்ள உங்களுக்கு விருப்பமா…?” என்று திடீர் எனக் கேட்டாள்.

வாசுகிக்கு உடலெல்லாம் நடுங்கியது. அவள் பேச முடியாதபடி உதடுகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டன.

“என்னம்மா… விருப்பமா…?” மல்லிகா சற்று அதட்டலாகக் கேட்டாள்.

“விருப்பமோ இல்லையோ… எங்களுக்கு ஒரு துணை தேவைப்படுகிறது மகள்… உனக்கே தெரியும்… நாம் தனியாக இருக்கும்போது ‘செக்கிங்’ அப்படி இப்படியென்று இராணுவ உடையில் மனிதர்கள் வரும்போது நாம் எவ்வளவு நடுங்குகிறோம் என்று… அதுதான் தாஸ் அங்கிளை…”

“ஓ… கே… அம்மா நீங்கள் தாஸ் அங்கிளைத் திருமணஞ் செய்துகொள்ளலாம்.”

வாசுகிக்குத் தன் காதுகளை நம்பவேமுடியவில்லை. “நிஜமா மனப்பூர்வமாகச் சொல்கிறாயா மல்லிகா…?”

மல்லிகாவின் பூரண சம்மதத்துடன் ஒருசில தினங்களில் வாசுகி – தாஸ் திருமணம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து மல்லிகா ஒரே பிடிவாதமாகத் தன்னை பாடசாலை ஹாஸ்டலிற் சேர்க்கும்படி வாசுகியிடம் வேண்ட வேறு வழியின்றி மல்லிகாவை ஹாஸ்டலிற் சேர்த்தாள் வாசுகி.

அதன்பின் மல்லிகா அவர்கள் வீடு ஒன்று இருப்பதையே மறந்துவிட்டமாதிரி நடந்தாள். வீட்டுப்பக்கமே அவள் வரவிரும்பவில்லை. வாசுகி தாசுடனும், சிலவேளை தனியாகவும் சென்று அவளைக் கெஞ்சிக் கேட்டும் அவள் வரவேயில்லை.

இதனால் வாசுகியின் உள்ளம் உடைந்தது. எதையோ காவந்து பண்ண எண்ணி எதையோ இழந்துவிட்ட நிலையில் நடைப்பிணமாக உலவவேண்டிய ஒரு நிர்ப்பந்தத்துக்கு ஆளானாள். வாசுகி ஒரு நாள் தனியாக மல்லிகாவைச் சந்திக்கச் சென்றபோது “ஏன் மகள் உனக்கொரு வீடு இருக்கிறதே… லீவுக்காவது நீ அங்கு வந்து எங்களை மகிழ்விக்கக் கூடாதா” என்று கேட்க.

“நீங்கள் இரண்டாம் திருமணஞ் செய்தபின் அது என்வீடாக இருக்கமுடியாது. யாரோ ஒருவரை நீங்கள் திருமணஞ் செய்துகொண்டதால் அவர் என் அப்பாவாகவும் முடியாது. சும்மா நடிப்புக்கு அவரை நான் அப்பா என்று அழைக்கலாம். அவரும் என்னை மகள் என்று அழைக்கலாம். ஆனால் அந்தப் பாசம்… இல்லை உறவு… எம்மிருவருக்குமிடையே எப்பவும் வரமுடியாது. அப்படியான ஒரு போலி உறவை நான் விரும்பவும் இல்லை… ஆகவே தயவுசெய்து என்னை வற்புறுத்தாதீர்கள்…” என்று கூறிய அந்தப் பன்னிரெண்டு வயது மகளைப் பார்த்து வாயடைத்து நின்றாள் வாசுகி. இவள் உண்மையில் பன்னிரெண்டு வயதுப் பெண்தானா… என்று சந்தேகம் அவளுக்கே ஏற்பட்டது.

அந்த சந்தர்ப்பத்தின் பின் இந்தப் பேச்சையே மல்லிகாவுடன் எடுத்ததில்லை வாசுகி. அவள் அப்பாவின் ஓய்வூதியப் பணத்தின் ஒரு பகுதியை மல்லிகாவின் ஹாஸ்டற் செலவுக்கும், மிகுதியை அவளது பெயரில் வங்கியில் போட்டும் வந்தாள்.

காலச்சக்கரம் வழமைபோல் யாருக்கும் காத்திராமல் சுழன்றுகொண்டேயிருந்தது. இடையில் ஐந்தாறு வருடங்கள் பல மாற்றங்களோடு ஓடிவிட்டன ஆயினும் மல்லிகா – வாசுகி உறவில் வியக்கத்தக்க எந்த மாற்றமும் நிகழவில்லை.

மல்லிகா தன் விருப்பத்துக்கு பாடசாலை அதிபரின் அனுமதியோடு யாரையோ திருமணம் செய்துகொண்டு வசதியாக வாழ்வதாகக் கேள்வி.

திருமணம் பதிவுத் திருமணமாக கோயிற் கிரியைகள் இன்றி நடைபெற்றது. கோயிற் கிரியை இடம்பெற்றால் அதில் தாசும் கலந்துகொள்ளவேண்டிவரும் என்ற முன்னெச்சரிக்கையாகவே அவள் நடத்தியதாகப் பின்னர் யாரோ கூறினர். அவள் கணவன் ஒரு செல்வந்தர் என அறிய முடிந்தது. அதனால் பதிவு ஒரு ஓட்டலில் நடைபெற்றது. அதற்கு மட்டும் தாசும், வாசுகியும் சென்றுவந்தனர். அத்துடன் உறவுசரி. மல்லிகா இவர்களை அழைக்கவும் இல்லை. இவர்கள் அங்கு போகவும் இல்லை.

மல்லிகாவுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகக் கேள்வி. ஆனால் குழந்தைகளின் நிழலைக்கூட இவர்கள் காணவில்லை. காண விரும்பவும் இல்லை. மல்லிகா திருமணமாகிச் சென்றதும் வாசுகி தாசின் சொந்த இடமாகிய மட்டக்களப்புக்கே வந்துவிட்டாள்.

இத்தனை நிகழ்வுகளையும் சகித்துக்கொண்டு அவளைக் கண்கலங்கவிடாமல் தன் வாழ்வையே அர்ப்பணித்து இதுவரை காலமும் அவளைக் காப்பாற்றிவிட்டான் தாஸ்.

மல்லிகாவின் செய்கை ஏற்படுத்தி தாக்கத்தினால் புண்பட்ட தாஸ் அவள் உடலைத் தீண்டாமல் உள்ளத்தினாலேயே அவளோடு வாழ்ந்தும்விட்டான்.

திடீர் என தாஸ் போட்ட சத்தம் வாசுகியின் சிந்தனையைக் கலைக்க அவள் எழுந்து அவன் மார்வைத் தடவிக்கொடுக்கிறாள். அவன் மூச்சுவிடமுடியாமற் திணறுகிறான். வாசுகி ‘ஓ…’ என ஓலமிடுகிறாள். அக்கம்பக்கத்தவர் வருமுன் தாஸின் ஆவி பிரிந்துவிடுகிறது.

வந்தவர்களால் வாசுகிக்கு ஆறுதல் மட்டுமே கூறமுடிந்தது. அவர்கள் உதவியுடன் வாசுகி அவனை மாப்பிள்ளைபோல் அலங்கரித்து வளர்த்துகிறாள்.

உள்ளே சென்ற அவள் தானும் ஆடைமாற்றி அவன் பக்கத்தில் அமர்ந்து தன் துன்பம் போகும் வரை கதறி அழுகிறாள். அவள் அழுது தன் துன்பத்தைத் தீர்க்கட்டும் என்று சிலர் கூறியதால் அவள் களைத்து ஓயும் வரை யாரம் அவளைத் தடுக்கவில்லை.

திடீர் என அவள் மயங்கிக் கீழே விழுந்தபோதுதான் பக்கத்தில் இருந்தவர்கள் அவளைத் தாங்கிப்பிடிக்க ஓடினர். அப்போது அவள் கண்கள் மயங்கி வாயில் இருந்து நுரைக்கவே “வாசுகி! வாசுகி!” என்று அவளை அழைக்குமுன் அவள் தலை சாய்ந்து அவர்கள் மடியில் வீழ்ந்தது. அவள் கைகள் விரிய அதற்குள் இருந்த ஒரு காகிதம் நிலத்தில் வீழ்ந்தது.

அதை அவர்களுள் ஒரு பெரியவர் எடுத்துப் படிக்க ஆரம்பித்தார்.

“மல்லிகா… உன் விருப்பப்படியே என் கணவருடன் அதாவது உனக்கு எதுவித உறவுமற்ற ஒருவருடன் என் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன். சுவாமிப் படத்தின் அடியில் ஒரு வங்கிப் புத்தகம் உள்ளது. அதில் உனக்கு இருந்த ஒரே உறவான உன் அப்பாவின் பென்ஷன் பணம் முழுதும் அதாவது உன்pடம் இருந்து எம் உறவு பிரிக்கப்பட்ட நாள் முதலாக உன் செலவுக்கு அளித்தது போக மிகுதிப் பணம் அத்தனையும் உன் பெயருக்கே தாஸ் அதாவது என் கணவர் போட்டுவைத்துள்ளார்.

மல்லிகா! உன் உயிர் பிரியுமுன் உன்னிடம் ஒன்றுகூற ஆசைப்படுகிறேன். நீ நினைத்தபடி அவருடன் நான் சுகித்து வாழவேண்டும் என்ற நோக்கில் அவரை நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. உனக்கும் எனக்கும் அவர் ஒரு அரணாக இருப்பார் என்ற எண்ணத்தில் உன் பூரண சம்மதத்துடன்தான் நான் அவருடன் இணைந்தேன். இவற்றைப் புரியாமல் இருக்க நீ இன்னும் குழந்தையல்ல. அதனால் நீ வெட்டிவிட்டுப்போன உறவை நானும் அவருடனேயே முடித்துக்கொள்கிறேன்.; இனியாவது இது உன் வீடு என நினைத்து இவற்றைப் பொறுப்பேற்பாய் என நம்புகிறேன்.

உன் அப்பாவுக்கும், உனக்கும் நாம் மனதாற்கூடத் துரோகஞ் செய்யவில்லை. உன் வாழ்வில் எதுவித தாக்கமும் ஏற்படக்கூடாது. உன் அப்பாவின் ஓய்வூதியம் அப்படியே உனக்கு வரவேண்டும் என்பதற்காக நாம் பதிவுத் திருமணமும் செய்துகொள்ளவில்லை. – வாசுகி தாஸ்.”

வாசுகியின் உயிரற்ற உடலும் தாஸிசின் பக்கத்தில் கிடத்தப்பட்டது.

அவ்வேளை காகிதத்தின் பின்புறமிருந்த சில வரிகள் ஒருவரின் கவனத்தை ஈர்த்தன.

“உயரப் பறந்துகொண்டிருந்த ‘தாஸ்’ என்ற காற்றாடியின் உறவை அறுப்பதற்காக நீ அந்நூலைக் கத்தரித்தாய். இன்று காற்றாடியுடன் சேர்ந்து நூலும் போய்க்கொண்டிருக்கிறது. காற்றாடியும் நூலும் எங்குபோய்ச் சேருமோ தெரியாது. அது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம். நூலைக் கத்தரித்த உன்னிடம் இருந்து எதிர்த்திசையிற்தான் சென்றுகொண்டிருக்கின்றன. காற்றாடியும் நூலும் என்பதை மட்டும் புரிந்துகொள்.”

ந. பாலேஸ்வரி

சுமார் 12 நாவல்களும், 200க்கு மேற்பட்ட சிறு கதைகளும் எழுதியவர். ஈழத்து இலக்கிய முன்னோடிகளில் ஒருவர். பெண்மையின் தனித்துவத்தன்மை பிரதிபலிக்கும் ஆக்கங்களை அளித்தவர். ஈழத்து முதலாவது பெண் நாவலாசிரியை மட்டுமல்லாது, அதிகமான நாவல்களை எழுதிய ஈழத்துப் பெண் எழுத்தாளர் என்ற பெருமையும் இவருக்குண்டு.

கணவன், மனைவி என்ற பந்தமே தமிழ்ப் பெண்ணுக்கு மகிமை அளிப்பது எனக் கருதும் இவர், திருகோணமலை மெதடித்த மகளிர் வித்தியாலயத்தில் பலவருடங்கள் பணியாற்றி இளைப்பாறியவர். பல மாணவ, மாணவிகளை உருவாக்கியவர். இவ்வாண்டு (1992) இந்து சமய, கலாசார அமைச்சு கொழும்பில் நடத்திய சாகித்திய விழாவில் “தமிழ்மணி” விருது பெற்ற ஒரேயொரு திருமலை எழுத்தாளர். திருகோணமலை மகளிர் நலன்புரி மன்றத்தினூடாகவும், திருகோணமலை தட்சிணகான சபாமூலமும் காத்திரமான, சமூக, சமய, கலாசாரப் பணிகளைப் புரிந்தவர்.

-அன்புமணி-