அதிசயப் பெண்
கி. வா. ஜகந்நாதன்பொன்மலர் - 4.அதிசயப் பெண்ஆசிரியர் :

கி. வா. ஜகந்நாதன்பொன்மலர் வெளியீடுமயிலாப்பூர் : சென்னை-4

.

முதல் பதிப்பு-செப்டம்பர் ’56

உரிமை பதிவுவிலை 12 அணா* * *printed at Navabharat Press, 76, Ellis Road, Madras-2

பதிப்புரை

கலைமகள் ஆசிரியர் உயர்திரு கி. வா. ஜகந்நாதன் அவர்களைத் தமிழ் உலகம் நன்றாக அறியும். இணையற்ற ஆசிரியராக விளங்கும் அவர்கள் அவ்வப்போது குழந்தைகளுக்காக எழுதிய கதைகள் இவை. தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்களுடைய அன்புக்குகந்த மாணவராகப் பயின்ற ஆசிரியர் அவர்கள் அந்த மரபிலேயே தமிழ் மணத்தைப் பெரியவர் களுக்கு மட்டுமல்ல, இளைஞர்களுக்கும், மாணவர்களுக்குங்கூடப் பல ஆண்டுகளாகப் பரப்பி வருகிறர்கள். தித்திக்கும் இந்தக் கதைகளை வெளியிடுவதில் மிக மிகப் பெருமையடைகிறோம். குழந்தைகள் இவற்றை விருப்புடன் சுவைப்பார்கள் என்பதை நன்கு அறிவோம்.

மேலும் ஆசிரியர் அவர்களுடைய இன்னோரு தொகுப்பு விரைவில் வெளிவரும் என்ற செய்தியை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

பதிப்பாசிரியர்பொருளடக்கம் ★பக்கம்

1. அதிசயப் பெண் … 5

2. உயர்ந்த பரிசு … 11

3. ஏமாற்றம் … 15

4. டபீர் ஸ்வாமி … 19

5. இட்டிலியும் மிளகாய்ப் பொடியும் … 26

6. கனி இழந்த கரும்பு … 31

7. அரசகுமாரன் சோதனை … 36

8. இணைந்த அழகு …

9. கத்தரிக்காய் ஜுரம் … 48

அதிசயப் பெண்

வித்தியாதரர் என்ற அறிவாளிக்கு வித்தியாவதி என்ற பெண் ஒருத்தி இருந்தாள். அவர் அந்தப் பெண்ணை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார். வித்தியாவதி மிகவும் அழகுடையவள். அவளைப்போன்ற அழகுடையவள் உலகத்திலேயே இரண்டு மூன்று நபர்களே இருப்பார்கள்.

அந்த அழகியைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென்று பணக்காரப் பிள்ளைகளும், ராஜகுமாரர்களும் ஆசைப்பட்டார்கள்.

வித்தியாதரரோ சிறந்த அறிவாளி ஒருவனுக்கு அவளை மனம் செய்து வைக்க வேண்டுமென்று விரும்பினார். ஆகையால் யாராவது அவரிடம் வந்து பெண் கேட்டால், “இவளுடைய அழகைக் கண்டு ஏமாந்து போகாதீர்கள். இவளுடைய சுபாவத்தை நான் 6 - அதிசயப் பெண்

எடுத்துச் சொன்னால் நீங்கள் இவளை விரும்பமாட்டீர்கள்’’ என்று சொல்வார். தகப்பனாரே இப்படி வெளிப்படை யாகச் சொன்னால் அதைக் கேட்டவர்கள் துணிந்து எப்படிக் கல்யாணம் செய்துகொள்ள முன்வருவார்கள்.

ஒரு நாள் ஒருவன் வந்தான். பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வந்ததாகச் சொன்னான், வித்தியாதரர் வழக்கம்போல், அவள் சுபாவம் உனக்குப் பிடிக்காதே’ என்றார். “அவள் சுபாவம் என்ன? சொல்லுங்கள்’ என்றான். உடனே அவர், அதை ஏன் அப்பா கேட்கிறாய்? ஒன்றா, இரண்டா? அவளைத் சமையல் செய்யச் சொன்னால் கல்லைப் போட்டுச் சமைப்பாள். நீ அதைப் பொறுத்துக்கொள்வாயா?’’ என்று கேட்டார் வந்தவன் பேசாமல் போய்விட்டான்.

சிலநாள் கழித்து மற்றொருவன் வந்தான் அவனிடம், கல்லைப்போட்டுச் சமைப்பாள். சாப்பிட்டால் ஆதார வஸ்துவை வெளியில் எறிவாள்’ என்றார். அவனும், இவள் அதிசயப் பெண்ணாக இருப்பாள் போல் இருக்கிறது; நமக்கு உபயோகப்பட மாட்டாள்? என்று எண்ணிப் போய்விட்டான்.

மறுபடியும் ஒருவன் வந்தான். அவனிடம் முன்னே சொன்ன இரண்டோடு மற்றொன்றையும் சேர்த்துச் சொன்னார்: -

கல்லைப் போட்டுச் சமைப்பாள். சாப்பிட்டால் ஆதார வஸ்துவை வெளியிலே எறிவாள். வேகாத இலையையும் வெட்டின காயையும் வெந்த கல்லையும் கலந்துகொண்டு வந்து வைப்பாள். அதிசயப் பெண் 7.

வந்தவன் அருண்டு போனான். சே, சே! இவளும் பெண்ணா பேயா? என்று எண்ணிக் கொண்டு போய் விட்டான்.

திரும்பவும் ஒரு புதிய இளைஞன் வந்தான். வித்தியாதரர் வித்தியாவதியின் சுபாவங்களை வரிசையாக அடுக்கினார். இந்த தடவை மற்றொன்றையும் கூட்டிச் சொன்னார், வேகாத கட்டைக் குழம்பை ஊற்றுவாள் என்று சேர்த்துச் சொன்னார். பாவம்! அந்த இளைஞன் ஒன்றும் பதில் பேசாமல் போய்விட்டான்.

பின்னும் ஒருவன் வந்தபோது வித்தியாதரர், “அவள் இரண்டு மாட்டின் மேல்தான் படுத்துத் தூங்குவாள்” என்பதையும் சேர்த்துச் சொன்னர். அவனும் வந்த வழியே போனான்.

பிறகு யாராவது வந்தால், கடகடவென்று இத்தனையும் ஒருமுறை சொல்வார்.

கல்லைப் போட்டுச் சமைப்பாள். சாப்பிட்டால் ஆதார வஸ்துவை எறிந்துவிடுவாள். வேகாத இலையையும் வெட்டின காயையும் வெந்த கல்லையும் கலந்து வைப்பாள். வேகாத கட்டைக் குழம்பை ஊற்றுவாள். இரண்டு மாட்டின்மேல் படுத்துத் தூங்குவாள் என்பதை வந்தவர்களிடம் சொல்லுவார். அவர்கள் வேறு ஏதாவது கேட்டால், அவள் சுபாவம் இது! உனக்குப் பிடிக்குமானால் சொல் என்று சொல்வார். வந்தவர்கள் போய்விடுவார்கள்.

இப்படிப் பல மாதங்கள் கழிந்தன. கடைசியில் அறிவும் அழகும் உடைய ஒரு கட்டிளங்காளை வந்தான். அதிசயப் பெண்

அவன் சுகுமாரன் என்று பெயருடையவன். வித்தியாதரரிடத்தில் பேசிக்கொண் டிருந்தான். வித்தியாவதியைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை மெல்ல வெளியிட்டான். அவர் வழக்கப் படியே அவள் செய்யும் காரியங்களை அடுக்கினார். ‘இவ் வளவு அறிவாளியான இவர் மகள் ஒன்றும் தெரியாதவளாகவோ, பொல்லாதவளாகவோ இருக்கமாட்டாள். இதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது’ என்று எண்ணிய இளைஞன், “அவள் என்ன செய்தாலும் சரி; அதனால் நான் வருத்தப்பட மாட்டேன். அவளைக் கல்யாணம் செய்துகொள்ளச் சித்தமாக இருக்கிறேன்” என்றான்.

“யோசித்துச் சொல், அப்பா. பிறகு வருத்தப் படும்படி வைத்துக்கொள்ளக் கூடாது” என்று வித்தியாதரர் சொன்னார்.

“வருத்தம் உண்டாக இடம் இல்லை. என்னை உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் பெண்ணைத் தாருங்கள்; இல்லாவிட்டால் வேண்டாம்” என்றான் அவன்.

வித்தியாதரருக்குச் சுகுமாரனுடைய அழகும் குணமும் பிடித்திருந்தன. வித்தியாவதியை அவனுக்கே மணம் செய்து கொடுத்துவிட்டார்.

வித்தியாவதியும் சுகுமாரனும் மனைவியும் கணவனுமாகக் குடித்தனம் நடத்த ஆரம்பித்தார்கள். அவள் மிகவும் நன்றாகச் சமைத்தாள். சுகுமாரன் மகா புத்திசாலி. ஆகையால் நாளடைவில், தன் மாமனார் அதிசயப் பெண் 9.

சொன்ன விஷயங்களின் உண்மையைத் தெரிந்து ட கொண்டான்.

ஒரு நாள், நான் கல்லைப் போட்டுச் சமைப்பேன் என்று என் தகப்பனார் சொன்னரே, நீங்கள் என்னே எப்படி ஏற்றுக்கொண்டீர்கள்?’ என்று வித்தியாவதி தன் கணவனைக் கேட்டாள். .

சுகுமாரன், ‘உப்புக் கல்லைப் போட்டுச் சமைப்பாபய் என்று தெரிந்துகொண்டேன். உப்பில்லாமல் எப்படிச் சமைக்க முடியும்?’ என்று சிரித்துக்கொண்டே சொன்னான். -

‘சாப்பிட்டால் ஆதார வஸ்துவை எறிந்துவிடுவது உங்களுக்குச் சம்மதந்தானா?’ என்றாள் வித்தியாவதி.

காய் கறி சோறு எல்லாவற்றையும் படைக்கும் இலைதான் ஆதார வஸ்து. சாப்பிட்டால் அதை எறியாமல் என்ன செய்வது?’ என்று சுகுமாரன் சொன்னான்.

வேகாத இலையையும் வெட்டின காயையும் வெந்த கல்லையும் நான் கலந்து வைப்பதை நீங்கள் பார்த்ததுண்டோ?’ என்று அவள் கேட்டாள்.

‘தினமுந்தான் செய்கிறாய். வேகாத இலை வெற்றிலே; வெட்டின காப் அடைக்காயாகிய பாக்கு; வெந்த கல் சுண்ணாம்பு; இந்த மூன்றையும் நீ கலந்து தராவிட டால்தான் எனக்குப் பிடிக்காது’ என்று சுகுமாரன் சந்தோஷத்துடன் சொன்னான். -

“அந்தக் குழம்பைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?’’ என்று வித்தியாவதி அடுத்த கேள்வி கேட்டாள். 10 அதிசயப் பெண்

“அது சந்தனக் குழம்பு என்று எனக்குத் தெரியாதா? வேகாத கட்டை சந்தனக் கட்டை; அதன் குழம்பு சந்தனக் குழம்பு. அதனே என்மேலே ஊற்றினால் எனக்கு மகிழ்ச்சிதான் உண்டாகும்.”

“இரண்டு மாட்டின்மேல் தூங்குவதைப் பார்த் திருக்கிறீர்களா?’ என்று கடைசிக் கேள்வியைக் கேட்டாள் வித்தியாவதி.

“நான்கூடத்தான் கால்மாடு, தலைமாடு ஆகிய இரண்டு மாட்டின் மேல் துாங்குகிறேன். நீ தூங்குவது அதிசயம் அல்லவே!” என்று சு கு மாரன் சொன்ன போது, வித்தியாவதிக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

“எங்கள் தகப்பனர் எல்லாரையும் ஏமாற்றிவிட்டார். உங்களை மாத்திரம் ஏமாற்ற முடியவில்லை” என்று அவள் சொல்லிச் சிரித்தாள்.

உயர்ந்த பரிசு

ஒரு வித்தையாடி ஓர் அரசனுடைய முன்னிலையில் தன் வித்தைகளைக் காட்ட ஆரம்பித்தான். தன் உடம்பைப் பலவகையாக வளைத்தும், நிமிர்த்தியும், ஒரு பாகத்தை மாத்திரம் அசையச் செய்தும் தன் சாமர்த்தியத்தைக் காட்டினான், அவன் பல வருஷங்களாகச் செய்த அப்பியாசத்தினால் அவ்வாறு தன் உடம்பை இஷ்டம் போல் வளைக்க முடிந்தது.

கஜகர்ணம், கோகர்ணம் என்ற வித்தைகளையும் அவன் காட்டுவதாகச் சொன்னான். யானையானது நின்றபடியே தன் காதை மாத்திரம் ஆட்டும் சக்தி உடையது. பசுவும் அப்படியே செய்யும். இந்தமாதிரி ஆட்டும் வித்தையில் அவன் வல்லவனாக இருந்தான். பசுவைப்போலவே, இரண்டு கைகளையும் கீழே ஊன்றி: கொண்டு காதுகளை மட்டும் ஆட்டினான்.

பசுவைப் போலவே அவன் நடித்துக் காட்டியதோடு அங்கே இருப்பவர்கள் தன்னை எப்படி வேண்டுமானாலும் பரீட்சை செய்து பார்க்கலாமென்றும் சொன்னான், அரசன் தன் மந்திரிகளை அவ்வாறு பரீட்சை செய்யச் சொன்னான். அவர்கள் தங்கள் தங்களுக்குத் தெரிந்த படி பரிட்சை செய்து பார்த்து, “இவன் மிகவும் சாமர்த்தியசாலியே” என்று சொல்லி வியந்தார்கள். ஒவ்வொரு வித்தைக்கும் ஒவ்வொரு பரிசை அரசன் அந்த வித்தையாடிக்குத் தந்தான். அவன் அவற்றை வாங்கி வைத்துக்கொண்டான்.

கோகர்ண வித்தை செய்து காட்டியபோது அங்கே கூடியிருந்த ஜனங்களுக்குள் இடையன் ஒருவன் இருந்தான். அவன் வித்தையாடிக்குப் பக்கத்தில் வந்தான். ஒரு சிறு கல்லே எடுத்து வித்தையாடியின்மேல் போட்டு அவனைக் கவனித்தான்; உடனே அவ்விடையன் முகத்தில் பிரகாசம் உண்டாயிற்று. மிகவும் சந்தோஷத்துடன் தன் மேலே போட்டிருந்த பழைய கம்பளி ஒன்றை வித்தையாடியின்மேல் எறிந்துவிட்டுச் சென்றான்.

வித்தையாடி அந்தப் பழைய கம்பளியை எடுத்துக் கண்களில் ஒத்திக்கொண்டான்; உடனே அதைத் தன் பெட்டியில் வைத்தான். மற்றப் பரிசுகளைல்லாவற்றை யும்விட அதை மிகவும் உயர்ந்ததாக அவன் எண்ணினான்.

அவன் அவ்வாறு செய்ததைக் கண்டு அரசனுக்கு அதிகமான கோபம் உண்டாயிற்று; “நாம் கொடுத்த விலையுயர்ந்த பரிசுகளை இவன் சாதாரணமாக வாங்கிக் கொண்டான். அந்த இடையன் கொடுத்த பழைய கம்பளியை அவ்வளவு சிரத்தையோடு வாங்கிவைத்துக் கொண்டானே! நமக்கு இதனால் அவமதிப்பன்றோ உண்டாகிவிட்டது?” என்று யோசித்தான். அவன் கண்கள் சிவந்தன.

வித்தைகள் செய்து முடிந்த பிறகு கூட்டம் கலைந்தது. அரசன் வித்தையாடியைத் தனியே அழைத்து வரச் செய்தான்; “நீ நாம் கொடுத்த பரிசுகளை அலட்சியமாக வைத்துவிட்டு அந்த இடையன் கொடுத்த பொத்தல் கம்பளியை அவ்வளவு மரியாதையோடு வாங்கிக்கொண்டாயே; நம்மை இப்படி அவமதித்த குற்றத்திற்காக உனக்குத் தக்க தண்டனை அளிக்க உத்தரவிடப் போகிறோம்” என்றான்.

வித்தையாடி : மகாராஜா, தாங்கள் இந்த ஏழையின் மீது அவ்வளவு கோபம் கொள்ளக்கூடாது. நான் செய்த அபசாரத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். நான் அவ்வாறு செய்ததற்கு என்ன காரணமென்பதை மாத்திரம் மகாராஜாவுக்கு விண்ணப்பம் செய்துகொள்கிறேன்

அரசன் : என்ன காரணம்?

வித்தையாடி : நான் கோகர்ண வித்தை செய்து காட்டினபோது பலர் என்னைப் பரீட்சை செய்தார்கள். அந்த இடையனும் என்னைப் பரீட்சித்தான். என்மேல் ஒரு சிறு கல்லைப் போட்டான். நானும் அந்தக் கல் விழுந்த இடத்தை மாத்திரம் சுழித்துக்கொண்டேன். பசு வின் சுபாவம் இது. இதை நன்றாக அறிந்த இடையன் என் சாமர்த்தியத்தைத் தெரிந்துகொண்டான். அவன் செய்த பரீட்சை உயர்ந்தது. அவன் மனம் மகிழ்ந்து தந்த பரிசு எப்படி யிருந்தாலும் விஷயத்தை அறிந்து கொடுத்தது; ஆகையால் விஷயம் அறியாமல் தந்த பரிசுகளைக் காட்டிலும் அதன்பால் அச்சமயத்தில் எனக்கு அதிக மதிப்பு உண்டாயிற்று. ‘இது ராஜசபை’ என்ற ஞாபகம் எனக்கு அந்த நிமிஷத்தில் மறந்து போயிற்று.

அரசன் உண்மையை உணர்ந்தான். அவன் நல்ல அறிவாளி யாகையால் வித்தையாடி சொன்னது நியாயமே என்று தெரிந்துகொண்டான். அவனுக்குப் பின்னும் சில பரிசுகளைத் தந்தான். அவனைப் பரீட்சித்த, இடையனை வருவித்துத் தன் அரண்மனைப் பசுக்களைப் பாதுகாக்கும் உத்தியோகத்தை அளித்தான்.

ஏமாற்றம் !

பெரிய மிராசுதார் அவர்.

அவருக்கு நூற்றுக்கணக்கான காணிகள் இருந்தன. நன்செய்யும் உண்டு; புன்செய்யும் உண்டு. நெல்லும் வாழையும் விளையும் நிலங்களும், கம்பும் கடலையும் விளையும் காடுகளும் அவருக்குச் சொந்தமாக இருந்தன. அவ்வளவு பெரிய பணக்காரர், சென்னையில் பெரிய மாளிகை கட்டிக்கொண்டு நாகரிக மோஸ்தரில் வாழ ஆரம்பித்தார். நிலங்களைக் குத்தகைக் காரர்களிடமும் காரியஸ்தர்களிடமும் விட்டுவிட்டு, நகர வாழ்க்கையின் கோலாகலத்திலே நீந்தி விளையாடினர்.

அவருக்கு ஒரு பிள்ளை. அவன் காலேஜில் படித்தான்; பிறகு சீமைக்குப் படிக்கப் போனான். 

இந்தியாவில் இருந்தபோது இந்நாட்டைப் பற்றி அவன் ஒன்றும் தெரிந்துகொள்ளவில்லை. சீமைக்குப் போன பிறகு அங்கே ஏற்பட்ட நண்பர்களின் கேள்விக்குப் பதில் கூற முடியாமல் திண்டாடினான். இந்தியாவைப் பற்றிய சில புத்தகங்களைச் சீமையிலே படித்தான்

இந்தியா விவசாய நாடு என்று அந்தப் புத்தகங்களின் மூலம் தெரிந்துகொண்டான். பல காணிகளைப் படைத்த பணக்காரர்கள் சொந்த ஊரை விட்டு நகர வாழ்க்கையில் உள்ள மோகத்தால் வந்துவிடுகறார்கள். கிராமத்திலோ நிலங்களைக் கூலிக்காரர்களும் குத்தகைக் காரர்களும் பார்க்கிறார்கள். இதனால் நிலம் சீர்குன்றி வளம் மங்கிப் போகிறது” என்று யாரோ புண்ணியவான் எழுதியிருந்தார். இந்த வாக்கியம் செல்வக் கும ரன் உள்ளத்திலே தைத்தது. தன் தந்தையாரும் நகர வாழ்க்கையில் மோகம் கொண்டவரென்பதை உணர்ந்தான்.

ஒருவிதமாகச் சீமைப் படிப்பு முடிந்தது. தாய் நாட்டுக்குப் போனவுடன், முதல் வேலையாகக் கிராமம் சென்று, அங்கே சொந்தக்காரரை ஏமாற்றி வாழும் காரியஸ்தர்களின் அட்டூழியங்களைக் கண்டு பிடிப்பது என்ற உறுதியை மேற்கொண்டான். தாய்நாடு வந்தான் ஒருநாள் கிராமத்துக்குப் போனான். “ இன்று நாம் நம் நிலங்களைப் பார்க்கவேண்டும்” என்று சின்னதுரையிடமிருந்து உத்தரவு பிறந்ததைக் கண்டு காரியஸ்தர் ஆச்சரியப்பட்டுப் போனார்.

“அப்படியல்லவா இருக்கவேண்டும்?’ என்று பாராட்டினார். - சீமை சென்றுவந்த குமரன் நிலங்களைப் பார்வையிடச் சென்றான். கடலை விளைந்திருந்த தோட்டத்துக்குப் போனான். “இதோ இது கடலைத் தோட்டம். காய் விளைந்து முற்றிவிட்டது. மகசூல் எடுக்க வேண்டியது. தான்” என்றார் காரியஸ்தர்.

குமரன் வரப்பருகில் உட்கார்ந்துகொண்டான். ஒரு கடலைச் செடியைத் தொட்டுப் பார்த்தான்; புரட்டினான். எதையோ தேடுவதைப் போல இருந்தது. “இந்த ஆசாமிகள் பட்டப்பகலில் கொள்ளேயடிப்பவர்கள் என்பது உண்மை. நாம் ஒன்றையும் கவனிக்க மாட்டோம் என்ற நினைவினால், பொய் சொல்லி ஏமாற்றுகிறான், இந்த மனுஷன். காய் விளந்துவிட்ட தாம்! செடி முழுவதும் ஒரே இலையாக இருக்கிறது. ஒரு காயைக் காணுேம். நமக்கு விஷயம் தெரியாதென்று நினைத்து விட்டானே!"-குமரன் எண்ணம் ஓடியது. கோபம் கனன்றது.

“என்ன ஐயா! ஒரே புளுகாகப் புளுகுகிறீரே. காய் விளைந்துவிட்டதென்று ஏன் பொய் சொல்லுகிறீர்?” என்று படபடப்போடு கேட்டான் சின்ன எஜமானன்.

“விளைந்து விட்டது என்பது பொய்யா? இதோ: அடுத்த வாரத்தில் வெட்டப்போகிறோமே!” .

“என்ன ஐயா! முழு மோசமாக இருக்கிறது. செடியில் ஒரு காயைக் காணோம். நீர் அளக்கிறீரே!”

காரியஸ்தருக்கு உண்மை விளங்கியது. அழுவதா சிரிப்பதா என்று அவருக்கு யோசனை வந்துவிட்டது. ‘எஜமான் செடியைப் புரட்டிப் பார்ப்பதற்குக் காரணம்

இப்போதுதான் எனக்குத் தெரிந்தது. கடலைக்காய், செடியின் மேல் இருக்காது. வேரிலேதான் இருக்கும். அதனால் வேர்க்கடலை என்று இதைச் சொல்வார்கள். இதோ பாருங்கள்” என்று விளக்கிக் கொண்டே காரியஸ்தர் ஒரு செடியைப் பிடுங்கிக் காட்டினார். வேரில் கொத்துக் கொத்தாய்க் கடலைக்காய்கள் இருந்தன. தன்னைக் காரியஸ்தர் ஏமாற்றவில்லை, கடலைச் செடிதான் ஏமாற்றிவிட்டதென்பதை, சீமைப் படிப்பில் தேர்ச்சி பெற்ற செல்வன் அப்போது தெளிந்தான் !

டபீர் ஸ்வாமி

⁠[தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாதையர் சொன்ன ஊறுகாய்க் கதைகளில் இது ஒன்று.]

கும்பகோணம் காலேஜில் ஐயரவர்கள் இருந்த போது ஆங்கிலம் முதலிய பாடங்களைக் கற்பிக்கும் பேராசிரியர்களும் அவர்களும் நெருங்கிப் பழகுவார்கள். மனங் கலந்து பேசி இனிமையாகப் பொழுது போக்குவார்கள். அங்கே ஒரு நாள் பல ஆசிரியர்கள் சேர்ந்து அமர்ந்து விநோதமாகப் பேசிக்கொண் டிருந்தார்கள். “இந்த ஊரில் டபீர் தெரு என்று ஒன்று இருக்கிறது. அதற்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? டபிரென்று அங்கே ஏதாவது வெடித்ததா? அல்லது வேறு காரணத்தால் வந்ததா?” என்று ஒருவர் கேட்டார்.

“டபீர் ஸ்வாமி என்ற ஒரு பெரியவர் இருந்தார். அவருடைய பெயரை இட்டு வழங்குகிறார்கள். அநேக 20 . அதிசயப் பெண்

மாக அவர் மகாராஷ்டிரராக இருந்திருப்பாரென்று. தோன்றுகிறது” என்று வேறு ஒர் ஆசிரியர் விடை கூறினார்.

முதலில் கேள்வி கேட்டவர் தொடர்ந்து, “அப்படி யானால், அந்தப் பெயர் அவருக்கு மாத்திரம் எப்படி வந்தது?” என்று வினவினார். -

அந்த வினாவிற்கு ஒருவரும் பதில் சொல்லவில்லை. சிறிது நேரங்கழித்து அங்கிருந்த ஆர். வி. ஸ்ரீநிவாசையர். என்ற பேராசிரியர் சிறிது கனைத்துக்கொண்டு, நான் சொல்லட்டுமா?’ என்று கேட்டார். கேட்கும்பொழுதே அவர்பால் தோன்றிய புன்னகை அவர் ஏதோ வேடிக் கையாகச் சொல்லப் போகிறார் என்பதைக் குறிப்பித்தது.

“சொல்லுங்கள், கேட்கலாம்” என்று ஆசிரியர் யாவரும் ஒரு முகமாகக் கேட்டார்கள்.

ஸ்ரீநிவாசையர் சொல்ல ஆரம்பித்தார்.

* * * *

தஞ்சாவூரில் மகாராஷ்டிர அரசர்கள் ராஜ்யபாரம் நடத்தி வந்த போது அவர்களுடைய உறவினர்கள் பலர் அந்த ஊரில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு அரண்மனையிலிருந்து ஊதியம் கிடைத்து வந்ததோடு, இயல் பாகவே பொருள் உடையவர்களாகவும் இருந்தார்கள். இவ்வாறு வாழ்ந்து வந்த மகாராஷ்டிர கனவான்களுள் ஒருவர் மிகவும் சுறு சுறுப்புடையவர். அவருடைய வாழ்க்கைக்குப் போதிய வசதிகள் இருந்தாலும் அவரது சுறுசுறுப்புக்கு ஏற்ற வேலை இல்லாமையால் அவருக்கு, உற்சாகம் குறையத் தொடங்கியது. அவருடைய மனைவியும் பிறரும் அரண்மனை உத்தியோகம் பெற்றுப் பார்க்கும்படி சொன்னார்கள். அரண்மனை வேலைக்கு ஏற்ற தகுதி அவரிடம் இல்லை. சாமானிய வேலைகளுக்குப் போகவும் அவருக்கு இஷ்டம் இல்லை.

இந்த நிலையில் அவர் திவிரமாக யோசனை செய்ய லானர். தம் கைப் பொருளைச் செலவு செய்தாவது ஏதேனும் உத்தியோகம் செய்யத்தான் வேண்டுமென்ற உறுதி அவருக்குள்ளே தோன்றியது. என்ன உத்தி யோகம் செய்வது? யோசித்து யோசித்துப் பார்த்தார். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். ஒரு நாளில் இருபத்து நாலு மணி நேரமும் வேலை செய்தாலும் செய்யும் படியான உத்தியோகம் ஒன்றைத் தாமே ஏற்படுத்திக் கொள்ள எண்ணிவிட்டார்.

அரண்மனைக்குப் போகும் சாலையில் அரண்மனைக்குச் சிறிது தூரத்தில் பரந்த வெளியாக இருந்த இடத்தில் ஒரு பகுதியை விலைக்கு வாங்கினார். அங்கே ஒரு சிறிய கட்டிடம் கட்டிக்கொண்டார். நாற்காலி, மேஜை, பேனா, பென்ஸில், மைக்கூடு, காகிதங்கள், குறிப்புப் புத்தகங்கள் முதலிய உபகரணங்களெல்லாம் தம் கைப் பொருளைச் செலவு செய்து வாங்கி நிரப்பி அதைத் தம்முடைய உத்தியோகசாலையாக ஆக்கிக்கொண்டார். நல்ல நாளில், நல்ல வேளையில் சம்பளமில்லாத அந்த உத்தியோகத்தைப் பார்க்கத் தொடங்கிவிட்டார். சம்பளம் இல்லாவிட்டால் என்ன? அவருக்குப் பணம் இல் லையா? உத்தியோகம் செய்கிறோம் என்ற உற்சாகமும்,2

சோம்பேறியாகப் பொழுதைப் போக்காமல் சுறுசுறுப்பாக இருக்கிறோம் என்ற திருப்தியுமே அவருக்கு ஊதிய மாயின.

தினந்தோறும் காலையில் எட்டு மணிக்கு அவர் நல்ல உடைகளை அணிந்துகொண்டு போய்விடுவார். உணவு கொள்ள வேண்டிய வேளைகளில் வீட்டுக்குப் போய் வருவார். இல்லையானல் அந்த இடத்திற்கே உணவை வருவித்துக் கொள்வார். இரவு எட்டு, ஒன்பது மணி வரையில் தம் உத்தியோகத்தைப் பார்ப்பார். பிறகு காரியாலயத்தைப் பூட்டிக்கொண்டு போய் விடுவார். சில நாட்கள் உற்சாக மிகுதியினால் இரவு நேரங்களிலும் அங்கே தங்கிவிடுவது உண்டு.

அது என்ன உத்தியோகம்! சரியானபடி வேலை வாங்கும் உத்தியோகந்தான். சோம்பலில்லாமல் ஒவ்வொரு நிமிஷமும் ஜாக்கிரதையாகக் கவனித்துச் செய்ய வேண்டிய காரியம். வீதி வழியாக யார் யார் போகிறார்கள், அவர்கள் உருவம், உடை, காதில் விழுந்த பேச்சு, போகும் நேரம்-இவைகளை எல்லாம் குறித்து வரும் வேலையை அவர் யாருடைய ஏவலுமின்றி, ஊதியத்தை எதிர்பாராமல் செய்துவந்தார். சாலையில் எந்த நிமிஷத்தில் யார் வருவாரென்று கண்டார்கள்? இளைய அழகிய மங்கை ஒருத்தி போவாள்; அடுத்த கணத்தில் கிழட்டு எருமை ஒன்று அந்த வழியே ஒடும். கோபத்தோடு இருவர் பேசிக்கொண்டே போவார்கள்; தொடர்ந்து கொம்மாளம் போட்டுக்கொண்டு சில சிறுவர்கள் நடப் பார்கள். எல்லாவற்றையும் ஒன்று விடாமல் குறித்துக் கொள்ளும் கைங்கரியத்தை அந்த மகாராஷ்டிர கன வான் செய்துவந்தார். தேதி வாரியாக, மணி வாரியாக நிமிஷ அடைவிலே கடிகாரத்தைப் போல அவர் உத்தியோகம் பார்த்தார். எவ்வளவு பொறுப்புள்ள வேலை!

தம்முடைய உத்தியோகசாலையின் ஜன்னல் வழியே உலகத்தைப் பார்த்து, அதன் பல வேறுபட்ட போக்கு களையும் குறிப்பெடுக்கும் ஆராய்ச்சியாளரைப் போல் அவர் வெகு சிரத்தையுடன் வேலை செய்தார். ‘கலை, கலைக்காகவே’ என்று சொல்வார்களே, அந்த மாதிரி அந்த வேலையை வேறு பயன் எதையும் கருதாமல் அவர் செய்து வந்தார்.

அவருக்குத் தாம் செய்து வந்த உத்தியோகத்தினால் ஏற்பட்ட உற்சாகம் கிடக்கட்டும்! அவர் வீட்டாருக்கோ அவர் ஏதோ பொறுப்புள்ள அரண்மனை உத்தி யோகத்தை ஏற்றுக்கொண்டிருக்கறார் என்ற கெளரவ புத்தி உண்டாயிற்று. இவர் என்ன செய்கிறார்? என்று அறிய எண்ணிய யாரோ சிலர் அவர் ஏகாக்கிர சித்தத்தோடு வேலை செய்வதைப் பார்த்து, இடையிட விரும்பாமல் போய்விட்டார்கள். அவர் உத்தியோகம் யாதொரு தடையுமின்றி இவ்வாறு நடைபெற்று வந்தது.

ஒரு நாள் அரண்மனையில் ஒரு தங்கப் பாத்திரம் காணாமற் போயிற்று. எங்கெங்கோ தேடிப் பார்த்தார்கள்; கிடைக்கவில்லை. யார் திருடினார்கள் என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. பலவகையில் ஆராய்ச்சி செய்து விசாரித்தபோது அன்று மாலையில் அதை யாரோ ஒருவன் எடுத்துப் போயிருக்கிறான் என்று தெரியவந்தது. அரண்மனைக்கு அடிக்கடி வந்து போகும்

பழக்கமுடைய அவனைச் சந்தேகித்துச் சோதனை போட்டார்கள், பண்டம் அகப்படவில்லை.

யாரோ ஒருவர், “இந்தத் துப்புத் துலங்க வேண்டு மானால் கடைசியாக ஒரு வழி இருக்கிறது. இதோ இந்தச் சாலையில் ஒரு மகாராஷ்டிரர் இருக்கிறார். அவர் ஒரு பைத்தியக்கார உத்தியோகம் பார்த்து வருகிறார். அவரிடமுள்ள குறிப்புகளைப் பார்த்தால் நமக்கு ஏதாவது உளவு கிடைக்கலாம்” என்று சொன்னார். அரண்மனை உத்தியோகஸ்தர்கள் அதையும் பார்த்துவிடலாம் என்று எண்ணி அந்த மகாராஷ்டிர கனவானுடைய உத்தி

யோகசாலைக்கு வந்தார்கள். -

அவர்களை அந்தக் கனவான் வரவேற்றார், பிறகு அவர்கள் விரும்பியபடி தம்முடைய தினக் குறிப்புக்களைக் காட்டினார். ‘ஒரு பிரயோஜனமும் இல்லாமல் வேலையற்றுப் போய் இந்த மனிதன் இப்படி எழுதிக் குவித்திருக் கிறானே!’ என்று அவர்கள் எண்ணி நகைத்தனர். பிறகு தங்கப் பாத்திரம் களவு போன நாளில் எழுதியவற்றைப் பார்த்தார்கள். அன்று காலேயிலிருந்து இரவு வரையில் அந்தச் சாலையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் இருந்தன; பின் வரும் குறிப்பு அவர்கள் கண்களில் பட்டது:

“மாலை ஆறரை மணி. ஒரு குட்டையான மனிதன் தன் மேல் வேஷ்டியில் எதையோ ம்றைத்தபடியே வந்தான் அரண்மனை யிலிருந்து வந்திருக்கலாம். எதிரே உள்ள் சாக்கடைக்கு அருகில் உட்கார்ந்தான். உடனே டபீர் என்ற சத்தம் கேட்டது; அடுத்த நிமிஷம் அவன்

எழுந்து போய்விட்டான்.’’இதை வாசித்தவுடன் அரண்மனையிலிருந்து வந்தவர்கள் சாக்கடைப் பக்கம் போய் அதற்குள் ‘டபீர்’ என்று விழுந்த வஸ்து எதுவாயிருக்கலாமென்று தேடினார்கள்.

என்ன ஆச்சரியம்! அவர்கள் எதைத் தேடி அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்தார்களோ, அந்தப் பண்டமே அதற்குள் இருந்தது. ‘அரண்மனையிலிருந்து திருடிக் கொண்டு வந்தவன் அப்போதைக்கு இங்கே போட்டு வைத்திருக்கலாம். திருட்டு விசாரணை நடந்து ஓய்ந்த பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணிப் போட்டிருக்கிறான்’ என்று ஊகித்துக்கொண்டார்கள்.

‘டபீர் என்ற சத்தம் கேட்டது’ என்ற குறிப்பு இல்லா விட்டால் திருட்டுப்போன பண்டம் கிடைத்திருக்காது என்பதை எண்ணியபோது, அந்தச் சம்பளமில்லாத உததியோகஸ்தரிடத்தில் அவர்களுக்கு அபார மதிப்பு ஏற்பட்டுவிட்டது.

அவரை அரசரிடம் உபசாரத்தோடு அழைத்துச் சென்று, திருட்டுப் போன பாத்திரம் அவரால்தான் கிடைத்தது என்று சொல்லி அவர் உத்தியோகச் சிறப்பையும் எடுத்துரைத்தார்கள். டபீர் என்ற சத்தத்தைக் கவனித்துக் குறிப்பு எழுதிய அந்தக் கனவானுக்கு ‘டபீர் ஸ்வாமி’ என்ற பட்டமும், ராஜ சன்மானமும் கிடைத்தன.

*⁠*⁠*கதையைச் சொல்லிவிட்டு, “டபீர் ஸ்வாமியின் வரலாறு பொருத்தமாக இருக்கிறதா?” என்றார் ஸ்ரீநீவாசையர்.

இட்டிலியும் மிளகாய்ப் பொடியும்

ஒரு காக்கை வீதி வழியே பறந்து வந்துகொண்டிருந்தது. வீதியின் ஒரத்தில், ஒரு கிழவி இட்டிலி விற்றுக்கொண்டிருந்தாள். கூடைக்குள்ளே சில இட்டிலிகளும், மேலே இருந்த தட்டில் ஐந்தாறு இட்டிலிகளும் இருந்தன. காக்கை அந்த இட்டிலிகளைப் பார்த்தது. அதன் வாயில் நீர் ஊறியது.

கிழவி எங்கேயோ கவனம் இன்றிப் பார்த்துக் கொண்டிருந்த சமயம் பார்த்து அந்தக் காக்கை ஓர் இட்டிலியைக் கவ்வியது; உடனே வேகமாகப் பறந்து போயிற்று. பாவம்! கிழவி உரக்கக் கத்தினாள் எந்த பயனும் இல்லை.

இட்டிலியைக் கவ்விக்கொண்டு வந்த காக்கை, ஊருக்கு வெளியே ஒரு மரத்தின்மேல் போய் உட்கார்ந்தது. அது வாயில் ஒர் இட்டிலியுடன் வருவதை நரி கவனித்துப் பார்த்தது. எப்படியாவது அந்த இட்டிலியை ருசி பார்க்க வேண்டும் என்ற ஆசை அதற்கும் உண்டாயிற்று.

அந்த மரத்தடிக்கு நரி விரைவாக வந்தது. மேலே உள்ள காக்கையைப் பார்த்து,"தம்பி, இந்த இட்டிலியை நீ எப்படி எடுத்துக்கொண்டு வந்தாய்? உன் சாமர்த்தியமே சாமர்த்தியம்!” என்று புகழ்ந்து பேசியது. காக்கை வாயில் கவ்விய இட்டிலியுடன் மரத்தின் மேலேயே இருந்தது.

நரி, இனிமேல் நேரே கெஞ்சிக் கேட்டுத்தான் இட்டிலியில் கொஞ்சம் வாங்கவேண்டும் என்று தெரிந்து கொண்டது. ஆகவே, “தம்பி, எனக்கு வெகு நாட்களாக இட்டிலி திண்ணவேண்டும் என்று ஆசையாக இருந்தது. நான் ஊருக்குள்ளே போய் ஒன்றும் திருட முடியாதே. நண்டையும் தவளையையும் திண்று திண்று சலித்துப் போய்விட்டது. நீதான் பாக்கியசாலி. மனிதர் தின்னும் தின்பண்டங்களை எல்லாம் உனக்குக் கிடைக்கின்றன” என்று நயமாகச் சொல்லத் தொடங்கியது.

அதைக் கேட்டுக்கொண்டிருந்த காக்கை தன் வாயிலிருந்த இட்டிலியை மரத்தில் இருந்த சிறிய பொந்தில் வைத்துவிட்டு, ‘கா கா’ என்று கூவியது. நரி மறுபடியும் காக்கையைப் பார்த்து, தம்பி, நீ பிறருக்குக் கொடுக்காமல் எதையும் உண்ணாதவன். இந்த இட்டிலியைத் திண்ண உன் உறவினர்களைக் ‘கா கா’ என்று அழைக்கிறாயே, நான் இருக்கிறேன்."என்னையும் உன் சொந்தக்காரனாக எண்ணி எனக்கு ஒரு துண்டாவது கொடு” என்று கெஞ்சிக் கேட்டது.

காக்கைக்குக் கொஞ்சம் மனசு இரங்கியது. அந்த இட்டிலியை மறுபடியும் கவ்விக்கொண்டு கீழே இருந்த ஒரு கல்லின்மேல் உட்கார்ந்துகொண்டது.

அதற்குள் நரி என்னவோ நினைத்துக்கொண்டது; தம்பி, ஒரு விஷயம் சொல்கிறேன்; கேட்கிறாயா? இந்த இட்டிலி, வெறும் இட்டிலியாக இருக்கிறது. மனிதர்கள், மிளகாய்ப் பொடி என்றும், சட்டினி என்றும் சில பதார்த்தங்களை இதற்கு உபயோகிப்பார்களாம். நாமும் அந்தமாதிரி ஒன்றோடு இட்டிலியைச் சாப்பிடலாம் என்று தோன்றுகிறது. உனக்குச் சம்மதமாக இருந்தால் அப்படிச் செய்யலாம்’ என்றது.

காக்கை, “இப்போது மிளகாய்ப்பொடிக்கு எங்கே போவது?” என்று கேட்டது.

இதுதான பிரமாதம்? இட்டிலி எப்படிக் கிடைத்ததோ, அது மாதிரி மிளகாய்ப் பொடியும் கிடைக்கும்மே

மனசு வைத்தால் எதுதான் கிடைக்காது? நீ இப்போதே ஊருக்குள் போய் மிளகாய்ப்பொடியையும் சம்பாதித்துக்கொண்டு வந்துவிடு. அதுவரையில் நான் இதைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறேன்’ என்று தந்திரமாகச் சொல்லியது. இட்டிலியும் மிளகாய்ப் பொடியும் 29

காக்கை அந்த வார்த்தைகளை உண்மையாக நம்பி, மறுபடியும் ஊரை நோக்கிப் புறப்பட்டது.

நரி சிறிது நேரம் சும்மா இருந்தது. அதனுடைய துஷ்ட குணம் அதைச் சும்மா இருக்க விடவில்லே. அந்த இட்டிலிக்குப் பக்கத்தில் உட்கார்ந்த நரி அதைத் தொட்டுக்கொண்டே இருக்க ஆரம்பித்தது. பின்னும் கொஞ்ச நேரம் ஆயிற்று. நரியினால் ஆசையை அடக்க முடிய வில்லை. இட்டிலியைக் கையிலேயே எடுத்து வைத்துக் கொண்டது. இதை இப்படியே வாயில் போட்டுக் கொண்டு ஓடிவிடலாமே!’ என்று எண்ணம் உண் டாயிற்று. ஆனாலும் அதற்குத் தைரியம் ஏற்படவில்லை.

‘இதைக் கொஞ்சம் நாக்கில் வைத்துப் பார்க்கலாம்’ என்ற எண்ணம் அடுத்தபடியாகத் தோன்றியது. மெதுவாக நாக்கினல் அதை கக்கிப் பார்த்தது. அப்போது நரிக்கு இட்டிலியை ஒரே விழுங்காக விழுங்கிவிட வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. காக்கை வந்தால்...? என்று எண்ணியது. வந்தால் என்ன செய்யும்? நாம் ஒடிப் போய்விடலாம் என்று அடுத்தபடி ஓர்

உடனே, துணிந்து இட்டிலியின் ஒரு பாகத்தைக் கடித்துத் தின்றது. அந்தச் சமயத்தில், காக்கை திரும்பி வந்துவிட்டது. வாயில் ஒரு சிறு கிண்ணத்தோடு பறந்து வந்தது. அந்தக் கிண்ணம் நிறைய மிளகாய்ப்பொடி இருந்தது. வரும்போதே அந்தக் காக்கை நரியைப் பார்த்தது. நரி இட்டிலியின் ஒரு பாகத்தைக் கடித்துக் கொண்டிருந்தது. நரி முழுவதையும் விழுங்கி விடப் 30 அதிசயப் பெண்

போகிறது என்றே அது எண்ணியது. உடனே இரைந்த

குரலில், “ நரி அண்ணா, அவசரப்படாதே. அந்த இட்டி

லியை நீயே தின்னலாம்; இந்த மிளகாய்ப்பொடியை

யும் போட்டுக்கொண்டு தின்னலாம். எனக்கு வேண்

டாம். பாவம்! இவ்வளவு நேரம் காத்துக்கொண்டிருந்

தாயே. எனக்கு வேறு இட்டிலி கிடைக்கும்” என்று.

சொல்லிக்கொண்டே பக்கத்தில் வந்தது.

நரிக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. இட்டிலி

முழுவதையும் தானே சாப்பிட வேண்டும் என்ற

பேராசை அதற்கு இருந்தது. ஆனாலும், காக்கை இப்

படிச் சொல்லும் என்று அது எதிர்பார்க்கவில்லை.

“என்ன தம்பி சொல்கிறாய்?” என்று சொல்லிக் கையில்

இருந்த இட்டிலியை நரி கீழே வைத்தது. வைத்ததுதான்

தாமதம்; மறு கணத்தில் காக்கை தன் வாயில் பிடித்

திருந்த கிண்ணத்திலிருந்த மிளகாய்ப்பொடியை அப்

படியே நரியின் கண்மேல் கொட்டிவிட்டு, அது கண்ணைத்

துடைப்பதற்குள் இட்டிலியைக் கவ்விக்கொண்டு பழைய

மரத்தின்மேல் உட்கார்ந்துகொண்டது.

நரியோ மிளகாய்ப்பொடி விழுந்ததனால் கண்ணைத்

திறக்க முடியாமல் கஷ்டப்பட்டது; எரிச்சல் தாங்க முடிய

வில்லை “ஐயோ ஐயோ!” என்று கதறியது.

காக்கை, “நரியண்ணா, மிளகாய்ப்பொடி எப்படி

இருக்கிறது? இட்டிலியினால் உன்னுடைய நாக்கில் நீர்

சுரந்தது. இப்போது மிளகாய்ப்பொடியினால் கண்

ணிலே நீர் சுரக்கிறது. நல்ல வேளை! இவ்வளவு நேரத்

தில் இட்டிலியை விழுங்காமல் இருந்தாயே! உனக்கு

வந்தனம்” என்று சொல்லிவிட்டு, இட்டிலியைத் தின்றது.கனி இழந்த கரும்பு

தம்பி, கரும்புக்குப் பூ உண்டு, பார்த்திருக்கிறாயா? அது பூத்தால் உடனே வெட்டிவிடுவார்கள். பூ, காய், பழம் என்று மற்றச் செடிகளைப்போலக் கரும்பில் இல்லை. அது பூப்பதோடு நின்றுவிடும். இந்தக் காலத்தில் கரும்புக்குப் பழம் இல்லை. மிக மிகப் பழங்காலத்தில் கரும்புக்குக்கூடப் பழம் இருந்ததாம். கரும்பே இவ்வளவு இனிப்பாக இருக்கும்போது அதன் பழம் எவ்வளவு இனிப்பாக இருந்திருக்கும்! இப்போது அந்தப் பழம் எங்கே போயிற்று என்றால், அது ஒரு கதை. அதைச் சொல்லுகிறேன்; கேள்!

எத்தனையோ காலத்துக்கு முன்பு கரும்பு பூத்துக் காய்த்துப் பழமும் பழுத்ததாம். உலகத்தில் உள்ள எல்லாப் பழத்தையும்விடக் கரும்பின் பழம் அதிகமாகத் தித்திப்பாக இருந்ததாம். கரும்புப் பழத்தைத் தின்றவர்களுக்கு வேறு எந்தப் பழமும் பிடிக்காது. அதோடு கரும்பையும் தின்று மனிதர்கள் இன்பம் அடைந்தார்கள். கரும்பை வெட்டித் தின்னும்போது நடுநடுவில் கணு இருக்கிறதே, அதை வெட்டி எறிந்துவிடுவார்கள். அப்போதெல்லாம் கணு இன்னும் பெரிதாக இருக்கும். அந்தக் கணுவைக் கண்டால் மக்களுக்குப் பிடிப்பதில்லை. சோம்பேறிகள் அதற்காகப் பயந்துகொண்டு கரும்பையே தின்பதில்லை. கரும்புப் பழத்தை மாத்திரம் தின்றார்கள். சோம்பேறிகள் உலகத்தில் அதிகமாகிப் போகவே கரும்பின் பழத்தை மாத்திரம் தின்றுவிட்டுக் கணு இருப்பதனால் கருப்பங் கழியை எறிந்துவிட்டார்கள்.

வரவர இனங்கள் தன் பழத்தை மாத்திரம் சாப்பிடு வதையும் கழியை மதிக்காமல் போட்டுவிடுவதையும் பார்த்த கரும்புக்கு மனசில் மிகவும் வருத்தம் உண்டாயிற்று. பழையபடி எல்லோரும் கழியையும் விரும்பும்படி என்ன செய்யலாம் என்று யோசித்தது. அதற்கு ஒரு வழியும் தோன்றவில்லை. கடைசியில் அது தன்னைப் படைத்த கடவுளிடம் போயிற்று.

“கரும்பே, கரும்பே! எங்கே வந்தாய்?” என்று கடவுள் கேட்டார்.

“உங்களிடம் ஒரு வரம் கேட்க வந்தேன்!” என்று கரும்பு சொல்லியது. அப்படிச் சொல்லும்போதே அதற்குக் கண்ணில் நீர் ததும்பியது.

“ஏன் வருத்தப்படுகிறாய்? உனக்கு என்ன வருத்தம் வந்தது? உன்னுடைய வம்சம் வளர்ந்துகொண்டிருக்கிறதல்லவா?” என்று கடவுள் அன்புடன் விசாரித்தார்.

“வம்சம் வளர்ந்து என்ன பிரயோஜனம்? ஜனங்கள் மதிக்கவில்லையே!”

“ஏன்? உன் பழத்தையும் கழியையும் தின்று இனிப்பாயிருக்கின்றன என்று பாராட்டவில்லையா?” என்றார் கடவுள்.

“பழத்தைத் தின்கிறார்கள். அதில் உள்ள விதையை முளைக்கப் போடுகிறார்கள். அதனால் என் வம்சம் வளர்கிறது. ஆனால் என் கழியைச் சீண்டுவதில்லை; விறகாகக்கூட எரிப்பதில்லை” என்று கரும்பு தன் குறையை எடுத்துச் சொல்லி முறையிட்டது.

“ஏன் கழியை விரும்புவதில்லே?”

“அதில் கணு இருக்கிறதாம்? அதற்காகக் கழியைத்தொடுவதில்லை.”

“அட, சோம்பேறி மனிதர்களா!” என்று படைத்த பெருமான் சொல்லிச் சிரித்தார். பிறகு, “இப்போது என்ன செய்யவேண்டும் என்கிறாய்?” என்று கேட்டார்.

“என்னிடமிருந்து கணுவை நீக்கிவிடுங்கள்’’ என்றது கரும்பு.

“அப்படியானால் நீ நிமிர்ந்து நிற்க முடியாதே!”

“வாழை நிற்கவில்லையா?” என்று கேட்டது கரும்பு.

“வாழை மரத்துக்கு உனக்குள்ள சுவை எது? உனக்குக் கணுத்தான் பூணாக உதவுகிறது” என்று சொன்னார் கடவுள்.

கரும்பு ஒருமுறை தன் உடம்பைப் பார்த்துக்கொண்டது. “அப்படியானால், இந்தக் கணுவை இனங்கள் விரும்பும்படி ஏதாவது வழி செய்யுங்கள்” என்று பணிவுடன் விண்ணப்பித்துக் கொண்டது.

கடவுள் சிறிது நேரம் யோசனை செய்தார். பிறகு திருவாய் மலர்ந்தருளினார்.

“ஏ கரும்பே! நீ இனி வருந்தாதே. உனக்குப் பகை உன்னுடைய பழமே ஒழிய, கணு அல்ல. ஆகையால், உனக்குப் பழமே வேண்டாம்” என்றார் கடவுள்.

“அப்படியானால் நான் என்ன ஆவது?” என்று பட படப்புடன் கரும்பு கேட்டது.

“பயப்படாதே. உன் கழிக்கு இன்னும் அதிகச் சுவை உண்டாகும். மனிதர்கள் உன்னே அதிகமாக விரும்புவார்கள்.”

“கணு இருக்கும் அல்லவா?”

“இருக்கும். ஆனால் இவ்வளவு பெரிதாக இராது.”

“பழம் இல்லாவிட்டால், விதை இராதே; அப்படியானால் என் வம்சம் எப்படி வளரும்?” என்று மறுபடியும், கவலைகொண்ட கரும்பு கேட்டது.

“என் கட்டிக் கரும்பே! நான் அதை மறந்து விடுவேனா? கணுவுக்குப் பெருமை உண்டாக்க வேண்டுமா? அந்தக் கணுவிலிருந்து கிளம்பும் முளையிலிருந்து உன் வம்சம் விருத்தியாகும். கழியைத் தின்பவர்கள் தின்று சுவைப்பார்கள். கணுவை வெட்டிப் புதைத்து உன்னை வளர்ப்பார்கள். இப்படியாகக் கணுவுக்கு விதையைப் போன்ற பெருமை ஏற்பட்டுவிடும். நீ வருந்தாதே!” என்று கடவுள் ஆறுதல் கூறினார்.

“தங்கள் சித்தம் என் பாக்கியம்” என்று சொல்லி விட்டு, கரும்பு இறைவரிடம் விடை பெறறுக்கொண்டு வந்தது. அதுமுதல் கரும்புக்குப் பழம் இல்லாமற் போய்விட்டது.

“எங்கள் மர நூல் வாத்தியாரைக் கேட்கட்டுமா?” என்று கேட்காதே! அவருக்கு இந்த ரகசியம் தெரியாது. இந்தக் கதையை நீ மட்டும் ரகசியமாக வைத்துக்கொள்!

அரசகுமாரன் சோதனை

ஓர் அரசகுமாரன் தனக்கு ஏற்ற மனைவியைத் தானே தேடிக்கொள்ள எண்ணினான். அழகும் அறிவும் பொறுமையும் உடைய பெண் ஒருத்தியைத் தேர்ந் தெடுக்க விரும்பினான். அதற்காக அவன் சாமான்ய மனிதனைப்போல ஆடை அணிந்து, தன் தலைநகரை விட்டுப் புறப்பட்டான்.

பல இடங்களுக்குப் போய்க் கடைசியில் ஒரு சிறிய ஊர் வழியே நடந்துகொண் டிருந்தான். அப்போது ஒரு பெண் தன் தலையின்மேல் ஒரு சட்டியில், வயலில் வேலை செய்யும் தன் தந்தைக்குக் கஞ்சி எடுத்துக்கொண்டு போனாள். அவள் இயற்கையாகவே நல்ல அழகும் பலமும் உடையவளாக இருந்தாள். ‘இவள் அழகுள்ளவளாக இருக்கிறாள். இவளை யாரென்று விசாரிக்கலாம்’ என்று எண்ணிய அரச குமாரன் அவளைப் பார்த்து, “ஏ, பெண்ணே! உன் பெயர் என்ன?” என்று கேட்டான்.

அந்தப் பெண், “வெண்ணெய்!” என்றாள்.

“நவநீதமா?” என்று ராஜகுமாரன் கேட்டான். “இல்லே, சாதாரண வெண்ணெய் அல்ல. மண்ணால் பண்ணாத் சட்டியிலே, மரத்தால் பண்ணாத மத்தாலே, மட்டையால் பண்ணாத கயிற்றாலே கடைந் தெடுத்தது. அந்த வெண்ணெய் இங்கே முன்பும் இல்லை; இன்றும் இல்லை. நாளைக்கும் இராது.”

தேவலோகத்தில் பாற்கடலில் மேரு மலையை மத்தாகக் கொண்டு வாசுகியைக் கயிறாக வைத்துக் கடைந்த அமுதத்தை அவள் குறிக்கிறாள் என்று ஊகித்துக்கொண்டான் ராஜகுமாரன்.

“அமுதவல்லியா?” என்று பிறகு கேட்டான்.

“ஆம்” என்றாள் அந்தப் பெண்.

“யாருக்குக் கஞ்சி கொண்டு போகிறாய்?”

“என் முதல் தெய்வத்துக்கு.”

“உன் தகப்பனாருக்கா?”

“ஆம்.”

“அவர் என்ன செய்கிறார்?”

“ஒன்றை இரண்டாக்குகிறார்!”

“மண் கட்டியை உடைத்து உழுகிறாரோ?”

“ஆம்.”

“எந்த இடத்தில் உழுகிறார்.” போனால் வராத புன்செய்க்கு அடுத்த நன் செய்யிலே,’’

‘ஓகோ சுடுகாட்டுக்கு அடுத்த நிலத்திலா?

“ஆம், ஐயா!’ என்று மரியாதையுடன் விடையளித்தாள் அவள். கொஞ்சம் கஞ்சி சாப்பிடுகிறீர்களா?’’ என்றும் கேட்டாள். -

“சரி” என்று ஒப்புக்கொண்டான் ராஜகுமாரன். கஞ்சிச் சட்டியின்மேல் முடியிருந்த கலயத்தை அவள் எடுத்தாள். அதில் அப்படியே கஞ்சியை ஊற்று கிறாளா என்று கவனித்தான் ராஜகுமாரன். அதை முதலில் கழுவிவிட்டுப் பிறகு அதில் கஞ்சியை ஊற்றி அவனிடம் கொடுத்தாள். ராஜகுமாரனுக்குச் சந்தோஷம் உண்டாகிவிட்டது. இந்தப் பெண் நமக்கு மனைவியாக வாய்த்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்ற ஆசை அவனுக்கு அப்போது உண்டாயிற்று.

“உன் விடு எங்கே இருக்கிறது?’ என்று கேட்டான்.

‘பாலுக்கும் நூலுக்கும் நடுவிலே, சுட்ட கூரையும் சுடாத மதிலும் உள்ள வீடு, எங்கள் வீடு’ என்றாள் அவள்.

பால்காரன் வீட்டுக்கும் தறிகாரன் வீட்டுக்கும் நடுவில், ஒட்டு வில்லை வேய்ந்த வீடு இவள் வீடு. அதைச் சுற்றிச் செடி நிறைந்த வேலி இருக்கும் என்று உணர்ந்து கொண்டான் இளவரசன்.

அவன் உடனே அவள் வீட்டுக்குப் போய் அவளுடைய தாயோடு பேச்சுக் கொடுத்துக்கொண்டு இருந்தான். அவள் வீட்டில் பெண் கொள்ள வேண்டும் என்று வந்திருப்பதாகவும், தான் மிகவும் பணக்காரன் என்றும் சொன்னான். அப்படிப் பேசிக்கொண் டிருந்த போது வயலுக்குக் கஞ்சி கொண்டு போன அமுதவல்லி திரும்பி வந்துவிட்டாள்.

“மாமி, மாமி, உங்கள் பெண்ணை இன்று சமையல் செய்யச் சொல்லுங்கள். நான் பணம் தருகிறேன். வேண்டியதை வாங்கி, வேண்டியபடி செய்யச் சொல் லுங்கள். ஒரு பிள்ளைக்காரியைக் கறி பண்ணி, பாவாடைக்காரியைக் குழம்பு பண்ணி, பாண்டியன் தேவியை ரஸம் பண்ணி எனக்கு விருந்திட வேண்டும்” என்றான்.

அமுதவல்லி, “அப்படியே செய்கிறேன்” என்று சொல்லி, வேண்டிய காய்கறிகளைத் தன் தாயைக் கொண்டு வாங்கி வரச்சொன்னாள். சமையல் செய்து பரிமாறினாள்.

ஒரு தாறு மாத்திரம் போடும் வாழையின் காயைக் கறி பண்ணியிருந்தாள். கத்திரிக்காயைக் குழம்பு பண்ணினாள். பாண்டியனுக்கு மாலையிடும் வேப்பம் பூவால் ரஸ்ம் பண்ணியிருந்தாள்.

அரசகுமாரன் சாப்பிடும்போது ரஸத்தை அவள் மீது துப்பினான். அவள் கோபம் கொள்ளாமல் பரிமாறினாள். சோற்றை வாரி இறைத்தான். அவள் அப்போதும் கோபம் கொள்ளவில்லை. அவள் பொறுமைசாலி என்பதை அப்போது உணர்ந்து கொண்டான்.

“நான் போய் வருகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டுச் சென்றான் அரசகுமாரன். பிறகு சில உறவினர்களுடன் வந்து அமுதவல்லியைக் கல்யாணம் செய்து கொண்டான். அப்போதும் தான் ராஜகுமாரன் என்று அவன் சொல்லவில்லை. திருமணம் முடிந்தவுடன் அவ அங்கேயே அவளை விட்டுவிட்டுப் போனான்.

ஒரு நாள் நாலைந்து சேவகர்களை அமுதவல்லியிடம் அனுப்பி, “இந்த நாட்டு ராஜகுமாரன் உன்னைக் கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறான்” என்று சொல்லச் சொன்னான். அவள், “ நான் முன்பே கல்யாணம் ஆனவள்” என்றாள்.

“ஆனாலும் குற்றம் இல்லை; உன் அழகைக் கண்டு அவர் ஆசைப்படுகிறார், ஆடை ஆபரணம் எல்லாம் நிறையத் தருவார்” என்றார்கள்.

அவள் முதலில் சாந்தமாக மறுத்தாள். வரவர அவர்கள் அதிக ஆசை காட்டினார்கள். அவள் புலி போலச் சீறி விழுந்தாள். கடைசியில் சேவகர்கள் அவளைக் கயிற்றினால் கட்டிக்கொண்டு போனார்கள்.

ராஜகுமாரன் மாணிக்கக் கிரீடமும் பொன்னுடையும் புனைந்து சிங்காதனத்தில் வீற்றிருந்தான். எங்கும் ஒரே பிரகாசமாக இருந்தது. அவனுக்கு முன்னே அமுத வல்லியைக் கொண்டுபோப் நிறுத்தினார்கள். அவள் அவன் முகத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சிங்காதனத்தையும் அவன் அரசக் கோலத்தையும் கண்ட அவன் முகத்தை உற்றுக் கவனித்திருந்தால் அவனே தன் கணவன் என்று உணர்ந்திருப்பாள். ஆனால் கவனிக்கவில்லை. உத்தமி அல்லவா?

அவள் சற்றே புன்னகை பூத்தாள்; பிறகு அழுதாள்.

அரசகுமாரன், “இதென்ன? வெயிலும் மழையும் தொடர்ந்தாற்போல் வருகின்றனவே!” என்று தன் குரலை மாற்றிக்கொண்டு கேட்டான்.

அமுதவல்லி, “ஆம்; உம்முடைய ராஜ வைபோகத்தைக் கண்டு, நீர் முற்பிறப்பில் புண்ணியம் செய்தவர் என்று எண்ணிச் சிறிதே நகைத்தேன். ஆனால் இப் பிறப்பில் மற்றோருவன் மனைவியை விரும்பும் பாவத் தினால் அடுத்த பிறவியில் என்ன ஆவிரோ என்று அஞ்சி அழுதேன்’ என்றாள்.

“கயிற்றை அவிழுங்கள்” என்று அரசகுமாரன் தன் இயற்கையான குரலில் சேவகர்களுக்கு உத்தரவிட்டான். அமுதவல்லி நிமிர்ந்து பார்த்தாள். என்ன பார்க்கிறாய்? உன்னைப் பலவகையிலும் சோதித்த உன் புருஷன்தான் நான்’ என்றான் அரசகுமாரன்.

அமுதவல்லி ஆசையோடு அவன் முன் சென்று அவன் திருவடிகளை வணங்கினாள்.

இணைந்த அழகு

திருவாலங்காட்டுத் தியாகராஜ சாஸ்திரிகள் என்பவர் புதுக்கோட்டைச் சம்ஸ்தானத்தில் இருந்தார். நல்ல சம்ஸ்கிருத வித்துவான். சங்கீதம் தெரிந்தவர்; தமிழ் வக்கீல். இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு இருந்தவர். புதுக்கோட்டை மகாராஜாவுக்கு மிகவும் வேண்டியவர்.

அவர் ஒரு நாள் மகாராஜாவைப் பார்த்து உரையாடிக் கொண்டிருக்கையில் மகாராஜாவிடம் எதையோ கொடுப்பதற்கு ஒருவன் வந்தான். மிகவும் குருபியான அவனைப் பார்த்தபோது சாஸ்திரிகளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் குரலில் கேட்கச் சகிக்காத கரகரப்பு ஒன்று இருந்தது. அவனுடைய உருவத்தைக் கண்டு சாஸ்திரிகள், “இவன் யார்?” என்று மகாராஜாவைக் கேட்டார்.

“இவனா? இவன் மேக்குப் பிரியமானவன்; சமையற்காரன்” என்றார் மகாராஜா.

தன்னைப்பற்றிய பேச்சு வருவதை உணர்ந்த அந்தக் குரூபி தலை நிமிர்ந்து புன்முறுவல் பூத்தான்.

“சாஸ்திரிகளுக்கு இவனைக் கண்டால் ஆச்சரியமாக இருக்கிறதோ? இந்தமாதிரி ரூபத்தை வேறு எங்கும் பார்த்திருக்க மாட்டீர்கள். காவியங்களிலே வருணித் திருக்கிறார்களே, அந்தப் புருஷர்களிலே இப்படி ஒரு பிரகிருதி அகப்படுமா?” என்று அரசர் சொன்னார்.

“இந்தமாதிரி யாரையாவது பார்த்திருந்தால் கவிகள் வர்ணித்திருப்பார்கள். அவர்கள் பாராத தோஷத்தால்தான் அத்தகைய வருணனே நமக்குக் கிடைக்க வில்லை” என்றார் சாஸ்திரிகள்.

“இப்போதுதான் இவனைப் பார்த்துப் பிரமித்து விட்டீர்களே! நீங்கள் இவனைப்பற்றி ஒரு சுலோகம் சொல்லுங்களேன்!” என்று மகாராஜா விளையாட்டாகச் சொன்னார். சாஸ்திரிகள் வேடிக்கையாகப் பேசுபவர்; நல்ல ரசிகர்; ஆசுகவி; நினைத்தால் ரஸ்மாகச் சுலோகங்களை இயற்றும் பழக்கம் உடையவர்.

“அப்படியே செய்தால் போகிறது!” என்றார் சாஸ்திரிகள்.

மகாராஜாவுக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. சாஸ்திரகளிடமிருந்து மிகவும் ரஸமான சுலோகம் ஒன்று வெளி வரப்போகிறது என்ற குதூகலம் அவருக்கு உண்டாயிற்று.

“டேய், உன்னைப்பற்றிச் சாஸ்திரிகள் ஒரு சுலோகம் சொல்லப் போகிறார்!” என்று சமையற்காரனைப் பார்த்துச் சொல்லி, சாஸ்திரிகள் வாயிலிருந்து சுலோகம் வெளி வருவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

சமையற்காரனுக்கும் உற்சாகம் உண்டாயிற்று. தன்னைப்பற்றி மகாராஜாவும் அந்த வித்துவானும் பேசிக் கொள்வதென்றால் அதுவே பெரிய காரியம் அல்லவா?

சாஸ்திரிகள் சிறிது நேரத்தில் மிகவும் அருமையான சுலோகம் ஒன்றை இயற்றிச் சொல்லி அர்த்த விசேஷத்தையும் எடுத்துரைத்தார்.

*⁠*⁠*ஓர் அழகான வேப்ப மரம்: தழைத்து அடர்ந்து பூவும் காயும் கனியும் பொதுளி யிருந்தது. அந்த வேப்ப மரத்தை நச்சி இரண்டு பிராணிகள் அடைந்தன. வேப்ப மரத்தின் இலையை மிகவும் ஊக்கத்தோடு உண்பதில் பிரியமுள்ள ஒட்டகம் ஒன்று வேப்ப மரத்தடியில் வந்து நின்றது. வேப்பம் பழத்தை அமிர்தம்போல் எண்ணி உண்ணும் காகம் ஒன்று தனக்கு இயற்கை யாகவே ஒரு பெரு விருந்து அந்த மரத்தில் இருந்தது கண்டு பரமானந்தத்தோடு அந்த மரத்துக் கிளையில் வந்து அமர்ந்தது.

அந்தப் பறவையும் விலங்கும் அதிகப் பசியோடு வந்தவை. ஆகையால் முதலில் தமக்குப் பிரியமான உணவை உண்பதிலேயே தம்முடைய முழுக் கவனத்தையும் செலுத்தின. ஒருவிதமாக முதற் பசியை ஆற்றிக்கொண்ட பிறகு மேலே இருந்த காக்கை தன் பார்வையைக் கொஞ்சம் கீழே திருப்பியது. தன்னைப் போலவே ஏகாக்கிரசித்தத்தோடு அந்தவேப்ப மரத்திலே விருந்துண்ணும் ஒட்டகத்தைப் பார்த்தபோது தன்னை அறியாமலே அதன்பால் அன்பு உண்டாயிற்று. அதனுடைய உயரமான உருவத்தை அடிமுதல் முடிவரையில் உற்று நோக்கியது. ஈசுவர சிருஷ்டியில் எவ்வளவோ பிராணிகளைக் காகம் பார்த்திருக்கிறது. இதுவரையில் அந்தமாதிரி உன்னதமான பிராணியை அது பார்த்ததே இல்லை. அதைக் காட்டிலும் உன்னதமான-உயரமான ஒரு சிருஷ்டி பிராணி யுலகத்திலே உண்டோ என்று கூட அது நினைக்கத் தொடங்கியது.

ஒட்டகத்தின் உயரம் கிடக்கட்டும். எந்தப் பிராணி யிடத்திலும் காணப்படாத ஒரு தனி விசேஷம் அதனிடம் இருந்தது. அவ்வளவு உயரமான உருவத்தில் எல்லாம் கோணல் மயம். தலை கோணல்; கழுத்துக் கோணல்; உடம்போ கோணல்கள் நிறைந்து விளங்குவது. ஓரிடமாவது நேராக இருக்க வேண்டுமே! வளைந்து வளேந்து செல்லும் அந்தக் கோணல்களை அழகின் திவலை களாகக் கண்டு பிரமித்தது காக்கை."என்ன ஆச்சரியம்!” என்று வாய் திறந்து கூறிவிட்டது. மனத்துள் தோன்றிய உணர்ச்சி அதை அறியாமலே வெளிப்பட்டபோது அதன் குரல் ஒட்டகத்தின் காதில் விழுந்தது.

வேப்பிலையை மென்று விழுங்கும் காரியத்தில் ஈடு பட்டிருந்த ஒட்டகம் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தது. ஒரு சிறிய கரிய உருவம், “கா, கா” என்று தன்னை அழைப்பதைக் கண்டது. அதைக் கண்ணாலே காணுவதற்கு முன்பே அதன் ஒலி ஒட்டகதின் உள்ளத்தைப் பிணித்துவிட்டது.

இரண்டு பிராணிகளும் தங்கள் பார்வையால் அன்பைப் பரிமாறிக்கொண்டன. காக்கை, “அண்ணா, நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்!” என்று பேச ஆரம்பித்தது.

ஒட்டகம்:-உன்னுடைய குரல் அல்லவா என்னே மயக்கிவிட்டது!.

காக்கை:- பேசும்போது உன் உதடு அசங்கும் அழகு ஒன்றே போதுமே! கீழே மடிந்து தொங்கும் அதற்கு உபமானம் சொல்ல எந்தக் கவியாலும் முடியாது.

ஒட்டகம்:-உன்னுடைய கிருஷ்ண வர்ணத்தை, இந்த உலகத்தில் எங்கே காண முடியும்?

காக்கை:-உன் முதுகுதான் எவ்வளவு அழகு! படிப்படியாக வளைந்து வளைந்து ஒரு மலையிலே சிகரம் அமைந்தது போலத் திமிலோடு மகோன்னதமாகக் காட்சி அளிக்கிறதே!

இப்படி இரண்டும் தங்களுடைய அழகை வருணித்துக்கொண்டன.

நாம் இருவரும் இவ்வாறு அழகு மயமாக இருந்து தனித் தனியே உலாவுகிறோமே! நம் இருவருடைய அழகும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? உலகமே பிரமித்துப் போகாதா?” என்றது ஒட்டகம்.

“அதற்கு ஏதாவது வழி பண்ணலாம். தெய்வ உபாசன பண்ணித் தவம் செய்து நாம் இருவரும் சேர்ந்து ஒன்றாகப் பிறக்க முயற்சி செய்வோம்” என்ற காக்கை.

அப்படியே இரண்டும் வேப்பிலேயைப் பூஷணமாக அணிந்த மகாமாரியை நோக்கித் தவம் புரிந்தன. பராசக்தி வரம் கொடுத்தாள். அந்த இரண்டு பிராணிகளும் இணைந்து வந்த அவதாரமே இந்த மூர்த்தி!

*⁠*⁠*சுலோகப் பொருளைச் சாஸ்திரிகள் சமற்காரமாக விரித்துச் சொல்லி, ‘இந்த மூர்த்தி’ என்று சமையற் காரனைச் சுட்டிக்காட்டியபோது மகாராஜாவுக்கு உண்டான ஆனந்தம் சொல்லி முடியாது. சமையற்காரனுக்குக்கூட உள்ளத்திலே மகிழ்ச்சி உண்டாயிற்று என்பதை அவன் முகத்திலே மலர்ந்த புன்னகை விளக்கியது.கத்திரிக்காய் ஜூரம்

மட்டியப்பன் என்ற குடியானவன் தன்னுடைய வீட்டுப் புறக்கடையில் நிறையக் கத்திரிச்செடி வைத்துப் பயிர் பண்ணியிருந்தான். அடிக்கடி அந்தச் செடிகளைக் கவனித்துப் பார்த்துப் பராமரித்து வந்தான். செடிகளெல்லாம் தளதளவென்று வளர்ந்து பூத்துக் காய்க்கத் தொடங்கின. நல்ல மண்ணாக இருந்தமையாலும் மட்டியப்பனுடைய கவனிப்பினாலும் ஒவ்வொரு செடியும் குலுங்கக் குலுங்கக் காய்த்தது.

மட்டியப்பன் பிறருக்கு மனமார ஒரு பொருளைத் தர மாட்டான். அந்தக் கத்திரிக்காயைப் பறித்து, வெளியூர்ச் சந்தைக்குப் போய் விற்றுக் காசு சம்பாதித்தான். தன்னுடைய வீட்டுக்குக்கூட அதை உபயோகிக்கவில்லை.

அந்த ஊர் வைத்தியர் எல்லாருக்கும் வேண்டியவர். அவர் பேசும் வார்த்தைகளிலேயே பாதி வியாதி தீர்ந்துவிடும். வைத்தியத்திலும் அவர் திறமை பெற்றவர். நல்ல அநுபவமும் புத்திக் கூர்மையும் உடையவர். அவருடைய மகள் கர்ப்பமாக இருந்தமையால் பிரசவத்திற்காகப் பிறந்தகத்திற்கு வந்திருந்தாள். அவள் வாய்க்கு வேண்டிய உணவுகளையும் தின்பண்டங் களையும் வைத்தியர் மனைவி செய்து கொடுத்தாள். ஒரு நாள் அவள் கத்திரிக்காய் வேண்டுமென்று ஆசைப் பட்டாள். அவளுடைய தாய் வைத்தியரிடம் தெரிவித்தாள்

“நம் ஊர் மட்டியப்பன் வீட்டில் கத்திரிச்செடி பயிர் பண்ணியிருக்கிருர்களாம். நன்ருகக் காய்க்கிறதாம். கொஞ்சம் கேட்டு வாங்கிக்கொண்டு வாருங்கள்” என்று அவள் சொன்னாள்.

வைத்தியர் மட்டியப்பனிடம் போய்க் கேட்டார். மற்ற யாராக இருந்தாலும் வைத்தியர் கேட்பதைக் கொடுக்க மறுக்கவே மாட்டார்கள். மட்டியப்பனுக்கோ கத்திரிக்காய் கொடுக்க இஷ்டமில்லை. வைத்தியரிடம் விலை கேட்பதும் நன்றாக இராது.

அவன், “நேற்றுத்தான் ஒரு பிஞ்சு விடாமல் பறித்துக்கொண்டு போய்ச் சந்தையில் விற்றுவிட்டு வந்தேன்” என்று ஒரு பொய்யை எடுத்துவிட்டான்.

“இருக்கட்டும்; பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்று சொல்லி வைத்தியர் போய்விட்டார்.

மட்டியப்பனுக்கு அப்போது ஒரு யோசனை உண்டாயிற்று; இப்போதைக்கு ஒரு பொய்யைச் சொல்லி அனுப்பிவிட்டோம். நாளைக்கு வந்தால் என்ன செய்வது?’ என்று எண்ணி மிகவும் கவலைப்படலானான். கடைசியில் ஒரு தீர்மானத்துக்கு வந்தான்.

அவன் எதிர்பார்த்தபடியே அடுத்த வாரம் வைத்தியர் அவனிடம் வந்து கத்திரிக்காய் கேட்டார். மட்டியப்பன் ஒரு பதிலை முன்பே யோசித்து வைத்திருந்தான். அவன் தன் தலையைச் சொறிந்துகொண்டே, “நான் சொல்லுகிறேன் என்று கோபித்துக்கொள்ளக் கூடாது. அன்றைக்கே நான் விஷயத்தைச் சொல்லியிருப்பேன். எங்கள் வீட்டுக் கத்திரிக்காயை இந்த ஊராருக்குக் கொடுக்கக் கூடாது” என்றான்.

வைத்தியர் ஆச்சரியம் அடைந்தவராய், “என்ன காரணம்?” என்று கேட்டார்.

“எங்கள் பாட்டி செத்துப் போகும்போது கத்திரிக் காய்க் கறி வேண்டும் என்று கேட்டாளாம். அப்போது இந்த ஊரில் இரண்டு மூன்று வீடுகளில் கத்திரிச் செடி பயிரிட்டிருந்தார்களாம். என் தகப்பனர் அவர்களைக் கத்திரிக்காய் வேண்டும் என்று கேட்டபோது ஒருவராவது கொடுக்கவில்லையாம். என் பாட்டி தன் ஆசை நிறைவேறாமலே செத்துப் போய்விட்டாள். என் தகப்பனார், இனிமேல் நானே வீட்டில் கத்திரிச் செடி பயிர் பண்ணப் போகிறேன். இந்த ஊரில் யார் கேட்டாலும் கொடுக்கப் போகிறதில்லை’ என்று சபதம் செய்து கொண்டார். என்னிடம் இந்த விஷயங்களே யெல்லாம் சொல்லித் தம் சபதத்தை நானும் காப்பாற்ற வேண்டும் என்றார். அதனால்தான் நான் உங்களுக்குக் கொடுக்க முடியவில்லை” என்று சொல்லி வருத்தப்படுபவனைப் போலப் பாசாங்கு செய்தான்.

அவன் சொல்வதெல்லாம் பொய் என்பது வைத்தியருக்கா தெரியாது? அவர் பேசாமல் வந்த வழியே திரும்பி வீட்டுக்குப் போனார். போகும்போதே, இந்த மடையன் என்னை ஏமாற்றப் பார்க்கிறான்; பார்க்கலாம். எனக்கும் ஒரு காலம் வரும் என்று எண்ணிக்கொண்டார்.

இரண்டு மாதங்கள் ஆயின. ஒருநாள் மட்டியப்பன் அவசர அவசரமாக வைத்தியரிடம் ஓடிவந்தான். “ஐயா, ஐயா! என் மகளுக்குக் கடுமையான ஜூரம் அடிக்கிறது. எங்கள் வீட்டில் கைப்பழக்கமான கஷாயமெல்லாம் போட்டுக் கொடுத்தோம். ஜூரம் நிற்கவில்லை. கல்யாணமாகி ஒரு வருஷத்தான் ஆச்சு, ஐயா; நீங்கள் வந்து பார்த்துக் காப்பாற்றவேண்டும்” என்று அழாக் குறையாகச் சொன்னான்.

“அப்படியா! நீ நல்ல மனிதனாயிற்றே! உனக்குக் கஷ்டம் வரக்கூடாதே. நீ பயப்படாதே. நான் எப்படியும் சொஸ்தம் செய்துவிடுகிறேன். நான் கேட்கும் மருந்துச் சரக்குகளை மாத்திரம் விடாமல் வாங்கித் தா” என்று சொல்லி அவன் வீட்டுக்குப் போனார், நோயாளியின் கையைப் பார்த்தார். பிறகு ஒரு மாத்திரையைத் தேனில் குழைத்துக் கொடுத்துவிட்டு, “இந்த ஜூரம் மிகவும் பொல்லாதது. இதற்கு ஒரு கஷாயம் போட வேண்டும். கத்திரி வேரும் வேறு சரக்கும் சேர்த்துக் காய்ச்சி அந்தக் கஷாயத்தைத் தயார் செய்யவேண்டும்’ என்றார்.

“கத்திரி வேர்தான பிரமாதம்! நம் வீட்டுக் கொல்லையிலே இருக்கிறது” என்றான் மட்டியப்பன்.

“ஒரு மணங்கு வேர் வேண்டும். நான் வீட்டுக்குப் போய்க் கஷாயம் போட ஏற்பாடு செய்கிறேன். நீ வேரை அனுப்பு” என்று உத்தரவு செய்துவிட்டு வைத்தியர் மிடுக்காகத் தம் வீட்டுக்கு நடந்தார். மட்டியப்பன் அவசர அவசரமாகத் தன் வீட்டுப் புறக்கடைப் பக்கம் போனான். வேகமாக இருபது முப்பது கத்திரிச் செடிகளைப் பிடுங்கி வேரை வெட்டிக் கையில் எடுத்துக்கொண்டு வைத்தியர் விட்டுக்கு ஓடினான். வைத்தியருக்கு முன் அந்த வேரைப் போட்ட போது அவர், இது எந்த மூலைக்கப்பா போதும்? இதைப் போல இன்னும் பத்துப் பங்கு வேணுமே. இந்த வியாதிக்கு வழுதுணை வெப்பு என்று பேர். சரியானபடி கஷாயம் செய்து கொடுக்காவிட்டால் கேட்காதே. பாவம்! உனக்கு ஒரு மகள். அவளுக்கு இப்படியா வரவேண்டும்!” என்றார்.

“எங்கள் வீட்டுக் கொல்லையிலுள்ள செடியெல்லாம் பிடுங்கிக்கொண்டு வந்துவிடுகிறேன். எப்படியாவது என் மகள் பிழைத்தால் போதும். நீங்கள்தான் தெய்வமாக இருந்து காப்பாற்ற வேண்டும்’ என்று சொல்லி மட்டியப்பன் மறுபடியும் தன் வீட்டிற்கு ஓடினான்.

தன் வீட்டில் உள்ளவர்களையும் கூப்பிட்டு எல்லாக் கத்திரிச் செடிகளையும் பிடுங்கினான். வேரை கறுக்கிக் கட்டாகக் கட்டி வைத்தியரிடம் கொண்டுபோய்ப் போட்டான்.

“நல்ல வேளை! அகப்படக் கூடிய சரக்காக இருக்கிறதே! அது உன் அதிர்ஷ்டத்தான். மலேச்சர்க்கு ஏதாவது வேண்டுமென்றால் நாம் என்ன செய்வது? சரி. இனிமேல் நீ பயப்பட வேண்டாம். இன்னும் ஒரு வாரத்தில் உன் மகள் செளக்கியம் அடைவாள்.”

வைத்தியர் ஒரு கஷாயத்தை ஒவ்வொரு வேளையும் நோயாளிக்குக் கொடுத்து வந்தார். ஆனால், அந்தக் கஷாயத்திற்கும் கத்திரி வேருக்கும் சம்பந்தமே இல்லை. ‘வழுதுணை வெப்பு’ என்பதற்குக் கத்திரிக்காய் ஜுரம் என்று அர்த்தம். வைத்தியர் தாமாகச் சிருஷ்டித்த அந்தப் பெயரை மறைபொருளாகச் சொன்னார். மட்டியப்பன் அதைத் தெரிந்துகொள்ளவில்லை.

அவன் மகள் செளக்கியம் அடைந்தாள். அவன் மனைவி அவனைப் பார்த்து, “அன்றைக்கு வைத்தியர் நாலு கத்திரிக்காய் கேட்டார்; கொடுக்கமாட்டேன் என்று சொன்னோமே, இப்போது வேரோடு கத்திரிச் செடி எல்லாவற்றையும் தாமே பிடுங்கினோமே!” என்றாள்.

“அப்போது புத்தி இல்லை!” என்று வருத்தப்பட்டான் மட்டியப்பன்.