கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்
பூவை. எஸ். ஆறுமுகம்கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்

பூவை எஸ். ஆறுமுகம்

தொல்காப்பியர் நூலகம்

107, கனகசபை நகர், சிதம்பரம்

முதற் பதிப்பு, மே-1964

முழு உரிமையும் நூலகத்தார்க்கு உரியது

எங்கள் கிளை அலுவலகம்:

41, பங்காரு நாயக்கன் தெரு,

சென்னை-2.

விலை ரூ.மூன்று

நூலகத்தார் முன்னுரை

ஓர் ஆசிரியன் தான் வாழும் காலத்தில் தோன்றும் இலக்கியங்களைப் பற்றி மிகத் தெளிந்தமுறையில் திறனாய்வு செய்ய முடியுமா? என்பது கேள்வி. கூட்டம், வட்டாரம், கலாசாரம், போன்ற பந்தங்களிலிருந்து விடுபட்டு, விருப்பு-வெறுப்புகளை விஞ்சி நின்று ஓர் எழுத்தாளன் தன்னுடைய காலத்து இலக்கிய பிரம்மாக்களைப் பற்றி எழுதி இதுதான் முடிவான தீர்ப்பு என்று அறுதி இட்டு நிலைநாட்டி விட முடியுமா? என்பது அடுத்த கேள்வி.

இப்படி எத்துணையோ கேள்விகட்கு இடையில் ஒரு நாவலாசிரியர் பிற நாவலாசிரியர்களைப் பற்றி விமரிசனம் செய்வது என்பது பொருத்தமானதே. ஓர் எழுத்தாளன் பிற எழுத்தாளர்களின் தொழில் நுணுக்கங்களை எளிதில் புரிந்துகொள்ள முடியும். இலக்கிய ஆக்கம், திறனாய்வு ஆகிய இரண்டும் கைவரப் பெற்றிருப்பதனால் கட்டுக்கோப்பு, கருத்தின் திண்மை, கதை அமைப்பின் நெகிழ்ச்சி, இறுக்கம் முதலியவற்றைக் கண்டறிந்து செவ்வனே எடுத்துச்சொல்ல முடியும். இந்நூலாசிரியர் பூவை எஸ். ஆறுமுகம் அவர்கள் இப்பணியைச் செவ்வனே செய்ய முயன்றுள்ளார். இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர். அறுநூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். மொத்தம் முப்பத்திரண்டு புத்தகங்களாக அவை வெளி வந்துள்ளன, 

இவருடைய முதல் கதைத் தொகுதியைக் ‘கடல் முத்து’ என்னும் பெயரில் பொன்னி ஆசிரியர் முருகு சுப்பிரமணியன் அவர்கள் 1951ல் வெளியிட்டார்கள். 1961ல் ஆனந்த விகடன் நிறுவனத்தார் இவருடைய ‘மகுடி’ என்னும் ஓரங்க நாடகத்திற்கு முதற்பரிசு கொடுத்துப் பாராட்டினர்.

பல பேட்டிக் கட்டுரைகளும், ஒன்றிரண்டு நாவல்களும் எழுதியுள்ளார்.

தமிழ் இலக்கியத்தின் செழுமையான தாய்மையையும், தமிழ் மொழியின் கட்டுக் கோப்பையும் மதித்து அவற்றை ஒர் எழுத்தாளன் அடைய முயல்வது சிறந்தது. ஆனால் இந்த நாட்டில் இன்றைய சூழ்நிலையில் தமிழைச் செவ்வனே பயின்றிருக்கிறோம் என்று சொல்வதையே இழிவு என்று கருதுகிற அளவுக்கு ஓர் எண்ணத்தைப் பரப்பித், தங்கள் அறியாமையையும் பலகீனத்தையும் மூடி மறைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்யும் போலி மறுமலர்ச்சிக் கும்பலை இந்நூலாசிரியர் பெரிதும் சாடியிருக்கிறார்.

இத்துணிவைப் பெரிதும் பாராட்டுகிறோம்; வரவேற்கிறோம். இவ்வரிசையில் இன்னும் சில நூல்கள் வெளிப்படுத்த வேண்டும் என்பது எங்கள் அவா.

தொல்காப்பியர் நூலகத்தார்

இலக்கியம் செழிப்புற

சில எழுத்தாளர்களின் செருக்குணர்ச்சியும், மிதமிஞ்சிய ஆணவமும் விமர்சனம் என்ற பெயரால் தலைகாட்டிக் கொண்டிருந்தன. இன்றும் அப்படித் தான்! இலக்கியவட்டத்தின் தலைச்சுழி இது என்றோ இலக்கிய உலகை இழுத்துச் செல்லக்கூடிய அயன் எழுத்து இது என்றோ யாரும் மயங்கிவிடக் கூடாதே என்று நான் சிலசமயம் சிறிது கவலைப்பட்டதுண்டு. அதன் விளைவாகவே இலக்கியத் திறனாய்வுத் தொடரை ‘உமா’ இதழில் தொடங்கினேன். இலக்கிய உலகத்தின் தலைவிதியை நிர்ணயிப்பதாகச் சொல்லிக் கொண்டு பெரிய ‘ஜம்பம்’ அடித்துக் கொள்ளும் இந்த வேடிக்கை மனிதர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது.

இந்த இலக்கியத் திறனாய்வுத் தொடரைப் பலர் ஆதரித்துப் பாராட்டினர். பலர் அலட்சியப் பார்வையால் தங்கள் ஆத்திரங்களைக் கொட்டித் தீர்த்தனர்.

‘பாவை விளக்கு’ பற்றிய திறனாய்வுக் கட்டுரை உமாவில் வெளிவந்தபோது திருவாளர் அகிலன் படப்பிடிப்பு காரணமாக ஆக்ராவில் இருந்தார். என்னுடைய முயற்சியைக் கண்டுகளித்துத் “தமிழில் இத்தொடர் ரொம்பவும் புதுமையானது; அவசியம் தேவை. உங்கள் புதிய பார்வையைப் பாராட்டுகிறேன்” என்று அஞ்சல் அனுப்பினார். 

இந்நிலையிலே பலர் வெளிப்படையாகவும் தொலைபேசி வாயிலாகவும் நேரிடையாகவும், என்னைப் போற்றியது போலவே வேறுபலர் என்னைத் தூற்றவும் தவறவில்லை.

இவ்விருசாராரும் இலக்கிய வளர்ச்சிக்குத் தேவைப்படுபவரே. இலக்கியத் திறனாய்வு நூல்கள் தமிழில் மிக மிகக் குறைவு. இலக்கியத் தீர்ப்பு வழங்குவதற்கு ஒரு தகுதி வேண்டும். இத்தகைய பண்பாடு-பக்குவம் கொண்டுதான் ஆய்வுத் துறையில் அடி எடுத்துவைக்க வேண்டும். ஆனால் இங்கோ தடி எடுத்தவன் எல்லாம் தண்டக்காரனாகி விடுகிறான் !

இந்நூல் வெளிவருவதில் எனக்குப் பலவகையிலும் மனப்பிடிப்பு வல்லமை பெறுகிறது. சாகித்திய அகாடமியினரின் பரிசுபெற்ற இருவரையும் சித்தரிக்கச் செய்துவிட்டேன் அல்லவா!

வாசக நண்பர்களின் தொடர்ந்த அன்பும் ஆதரவும் எனக்கு இருக்கும்போது தலைக்கிறுக்கேறிய எழுத்து வியாபாரிகளைப்பற்றி எனக்கென்ன கவலை!

‘அலை ஓசை’ ‘அறுவடை’ ‘மலை அருவி’ ஆகியவை பற்றிய திறனாய்வுக் கட்டுரைகளைப் புதியனவாக எழுதிச் சேர்த்துள்ளேன்.

தொல்காப்பியர் நூலகத்தாரின் தெளிவும் இலக்கியத் துணிவும் பெரிதும் பாராட்டத்தக்கன. இவ்வரிசையில் மேலும் வர இருக்கும் என்னுடைய நூல்களைத் தொடர்ந்து வெளியிட முன்வந்துள்ளனர். அவர்கட்கு என் உளமார்ந்த நன்றி உரியது.


பொருளடக்கம்

1. அலை ஓசை - கல்கி

2. குறிஞ்சி மலர் -⁠ ⁠நா. பார்த்தசாரதி

3. மலையருவி -  ⁠ராஜம் கிருஷ்ணன்

4. நளினி - ⁠ ⁠க. நா. சுப்பிரமணியன்

5. அறுவடை - ⁠ஆர். ஷண்முகசுந்தரம்

6. செம்பியன் செல்வி - கோவி. மணிசேகரன்

7. பாலும் பாவையும் - ⁠விந்தன்

8. வெள்ளிக்கிழமை - ⁠மு. கருணாநிதி

9. பாவை விளக்கு - அகிலன்


1. அலை ஓசை

— ‘கல்கி’ —

ராஜம்பேட்டைப் பட்டாமணியம் கிட்டாவய்யர் தம்முடைய மகள் லலிதாவுக்குத் திருமணம் செய்ய எண்ணி மணமகனைத் தேடினார். புதுடில்லியில் பெரிய வேலை பார்த்துவந்த செளந்தர ராகவன் எம். ஏ., லலிதாவைப் பெண் பார்க்க வந்த இடத்தில், பம்பாயிலிருந்து வந்திருந்த கிட்டாவய்யரின் தங்கை பெண் சீதாவைப் பார்த்து, அவளை மணக்க விழைந்தான். அவ்வாறே அவர்களுக்குத் திருமணம் நடந்தது. தேவபட்டணத்து வக்கீலின் மகன் பட்டாபிராமனுக்கு லலிதா வாழ்க்கைப்படுகின்றாள்.

லலிதாவின் சகோதரன் சூரியா காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் சேர்ந்து நாட்டுப் பணியில் ஈடுபட்டான். ஹரிபுரா காங்கிரசிலிருந்து புதுடில்லிக்குப் போனான். 

செளந்தர ராகவனும், சீதாவும், சூரியாவும் ஆக்ராவுக்குத் தாஜ்மஹால் பார்க்கச் சென்ற பொழுது அங்கே செளந்தர ராகவனின் பழைய தோழியாகிய தாரிணியின் சந்திப்பு கிட்டுகிறது. தாரிணியும் சூரியாவும் நட்புரிமை கொண்டாடுகிறர்கள். ரஜனியூர் ஏரியில் படகிலிருந்து விழுந்து தத்தளித்து, இனம் புரியாத அலை ஓசையின் மருட்சியில் ஊசலாடிய சீதாவைத் தாரிணி காப்பாற்றினாள்.

சீதா இளமையில் பம்பாயில் வாழ்ந்த காலத்தில், ரஸியா பேகம் என்னும் பெண் ஒருத்தி மர்மமாக வந்து, அவளுக்கு ஒர் இரத்தின மாலையும் பணமும் கொடுத்துவிட்டுப் போனாள். அதே பெண் புதுடில்லியில் ஓர் இரவு ரத்தம் தோய்ந்த கத்தியுடன் வந்து சீதாவின் இல்லத்தில் ஒளிந்துகொண்டாள். அவள் தான் தாரிணியின் வளர்ப்புத்தாய் என்று சீதா அறிந்தாள்.

சூரியாவும் தாரிணியும் அன்புகொண்டிருப்பது கண்டு, செளந்தர ராகவனின் மனத்திடை பொருமைத் தீ கொழுந்துவிட்டு எரிகிறது.

ராகவன் தன் காதலை தாரிணியிடம் வெளியிட்டான்; அவள் அதனை உறுதியாக மறுத்துவிலக்கினாள்.

1942ஆம் ஆண்டு ஆகஸ்டுப் புரட்சி இயக்கத்தில் சூர்யா பிணைகிறான். இரகசியப் போலீஸ் தொடர்கிறது. சூர்யாவை மாறுவேடங்கள் அணைகின்றன.

தேசிய இயக்கத்தில் காட்டிய ஈடுபாடு காரணமாக,லலிதாவின் கணவன் பட்டாபிக்குச் சிறைத்தண்டனை கிடைக்கிறது.

புதுடில்லியில், சீதாவின் இல்லற வாழ்க்கை நாளுக்கு நாள் நரகமாகிறது. இதற்குக் காரணம் தாரிணிதான் என்பதாக அவளைச் சீதா வெறுக்கிறாள்.

தொடக்க நாளிலிருந்து மனம்தொட்டுப் பழகியவர்கள் சீதாவும் லலிதாவும். இருவருக்கிடையே தூதுப்பணி புரிந்த கடிதங்கள், சீதவுக்கு ஆறுதல் தருவனவாக அமைந்தன.

ஒருநாள் இரவிலே, சீதா கைத்துப்பாக்கி கொண்டு சுட்டுக்கொண்டு சாக முயற்சி செய்த வேளையில், சூர்யா வந்து அவளைக் காப்பாற்றுகிறான். தன்னால் இனிமேல் தன் கணவனுடன் வாழ முடியாதென்றும், தன்னை எங்கேயாவது அழைத்துச் செல்லும்படியும் அவள் சூர்யாவிடம் கெஞ்சுகிறாள். அவன், அவளது பேதை நெஞ்சத்திற்குப் புத்திமதி சொல்லுகிருன்.

சூர்யாவும் சீதாவும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதன் விளைவாக, ராகவனின் மனத்தில் கோளாறு விளைகிறது! சூரியாவைச் சட்டத்தின் கைகளிலே ஒப்படைக்கக் கங்கணம் கட்டுகிறான். 

சூர்யா-தாரிணி ஆகிய இருவரும் நாட்டு விடுதலைப் பணியில் இறங்கிப் பல இன்னல்களையும் ஏமாற்றங்களையும் எதிர்கொள்கின்றனர்.

ஒரு முறை, தாரிணி என்று மயங்கி, சீதாவைக் கைப்பற்றிய முரடர்கள் சிலர், அவளைச் சுதேச மன்னர் அரண்மனை ஒன்றுக்குக் கொண்டு செல்கிறார்கள். தாரிணி ரஜனிபூர் இளவரசி என்னும் மர்மம் புலனாகிறது!

இதற்கிடையில் சீதா வேறு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ்க் கைது செய்யப்படுகின்றாள். இவள் சிறைப்பட்ட விபரம் அறிந்தும், ராகவன் அவளைப்பற்றித் துளிகூட முயற்சி எடுக்கவில்லை.

காலம் ஓடுகிறது; சுவையான நிகழ்ச்சிகள் தொடர்கின்றன!...

சீதா, ராஜம்பேட்டைக்கு வருகிறாள். பட்டாபியும் சீதாவும் வெள்ளை உள்ளத்துடன் பழகுவதைக் காண, லலிதாவின் பெண்மனம் பேதலிக்கிறது. உயிருக்குயிராக மதித்தவளை ஏசுகிறாள். பின்னர் குழப்பங்கள் மறைகின்றன.

சீமைக்குச் சென்றிருந்த ராகவன் திரும்பினான். ரஸியா பேகத்தின் வரலாறும் தாரிணியின் கதையும் விளங்குகின்றன. கங்காபாய்- ரமாமணியின் விபரங்களையும் சூர்யா கூறுகிறான் ராகவனிடம். சீதாவின் தந்தையாகிய துரைசாமியின் வேடங்களும் அம்பலமாகின்றன. 

பழிகளையும் துர்ப்பாக்கியங்களையும் சுமந்து கொண்டு சீதா கல்கத்தாவுக்குச் செல்கிறாள். பொதுநலத் தொண்டு காரணமாக ராகவன் படுத்த படுக்கையாகிறான், அவனுக்குப் பணிவிடை புரிகிறாள். கணவனும் மனைவியும் குழந்தையுமாக அவர்கள் குடும்பவாழ்வு செம்மையுற நடக்கிறது.

அப்போது, மீண்டும் தெய்வ சோதனை நிகழ்கிறது. வகுப்புக் கலவரம் தலை விரித்தாடுகிறது. மகளைக் காப்பாற்ற மெளல்வி சாகிபு உருவத்தில் துரைசாமி வந்து, அவளைக் காப்பாற்றும்போது, அவள் ஆற்றில் சாய்கிறாள். சீதா இறந்துவிட்டதாக ராகவன் நினைத்தான்.

ஆனால் சீதாவோ பிழைத்துவிடுகிறாள். தன் தந்தை மூலம் தாரிணி தன் சொந்த அக்காள் என்ற உண்மையை அறிந்ததும், அவளை ஒருமுறை காண விரும்புகிறாள். சீதா தன் வீட்டில் நுழையும் பொழுது, தாரிணியும் ராகவனும் இருப்பதை அறிகிறாள். தாரிணி முகத்திரையுடன் காட்சி தருகிறாள். தாரிணியும் ராகவனும் தம்பதிகளாக வேண்டுமென்ற சீதாவின் கனவைப்பற்றி எடுத்துச்சொல்லி, அவளது அனுமதியைக் கோருகிறான் ராகவன். ஆனால் தாரிணி பொதுப்பணி காரணமாக, கை ஒன்று வெட்டப்பட்டு, கண் ஒன்றும் பறிபோய் நின்ற கோலத்துடன் காட்சிகொடுக்கிறாள். ராகவன் தடுமாறுகிறான். அவனுக்குப் பாமா மீது இப்போது நாட்டம். சீதாவின் சோக வரலாறு முற்றுப்புள்ளி

பெறுகிறது.

சூர்யா மனத்தூய்மையுடன் தாரிணியை

மணக்க இசைகிறான். அவள் அகமகிழ்கிறாள்.

ஆனால் முடிவோ வேறு வகையாகிறது.

தாரிணியை ராகவனும், பாமாவை சூர்யா

வும் கைத்தலம் பற்றுகின்றனர்!

ஆசியின் துணை:

‘உமா’ ஏட்டில், இலக்கியத் திறனாய்வுத் தொடரைத் தொடங்கியபொழுது, முதன்முதலாகப் “பாவை விளக்கு’’ என்ற நவீனத்தைக் குறிவைத்தேன். பிள்ளையார் சுழி போட்டுவிட்டு, நான் எழுதத் தொடங்கியவேளை, ‘கல்கி துணை’ என்ற துணைப்பிரிவை அமைத்து, அதில் இவ்வாறு எழுதினேன்: “உலகப் பேரறிஞர்களுள் ஒருவராக மதிப்புப்பெற்று, தமிழ் இலக்கிய வளத்துக்கு மாண்பு தரும் அமரர் கல்கி அவர்களின் ஆத்மார்த்தமான ஆசியின் துணைகொண்டு, கொண்டுசெலுத்த இப்பகுதியை ஆரம்பித்துள்ளேன்.”

ஆம்; தமிழ்ப்பேராசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின்மீதும், அவர்களின் எழுத்துக்களிலும் எனக்கு என்றைக்குமே ஓர் ஈடுபாடு உண்டு. பக்திபூர்வமான ஈடுபாடு. அத்தகையதோர் இணக்கக் குறிப்புக்கு ஓர் இலக்காகவே இப்பொழுது என் ‘கடமை’யை மேற்கொண்டிருக்கின்றேன்.

“பெண்மை வெல்க!”

சீதை, சாவித்திரி, தமயந்தி, திரெளபதை போன்ற பெண்குலத் திலகங்களின் வழியினரான நம் பெண்கள் நம் சமூகத்தில் எப்பொழுதுமே மதித்துப் போற்றப்பட்டு வந்திருக்கிறார்கள். இடைநிலவிய இருளை மறந்து, இன்று நிலவும் ஒளியைக் காணும்பொழுது, பெண்களின் தன்மை - அவர்களது தகுதி - அவர்களுக்குரிய கடன் - அவர்கள் ஆற்றிய தொண்டு முதலிய நற்பண்புகள், அவர்களுக்கு வாய்த்த சோதனைகளாகவும், சாதனைகளாகவும் உருக்கொண்டு, அவர்களின் மட்டிலா மாண்புகளைக் கோபுர தீபங்களாக்கி வருகின்றன. இப்படிப்பட்டதொரு சமூக மறுமலர்ச்சித் திரும்பு முனைக்கு மூலாதாரமாக நிலவிய ஒரு ஜீவன், அண்ணல் காந்தியடிகள். அவர் நடத்திய நேர்மைத்திறன் அமைந்த அரசியல் சமுதாய இயக்கங்கள், பெண் சமுதாயத்தைப் புடம்போட்டுப் பண்படுத்தக் கைகொடுத்துத் தோள்கொடுத்தன. அறத்தின்பால் அமைந்த அன்பு வழியினைக் கடைப்பிடிக்க ஆடவரைவிட பெண்களே மிகுந்த தகுதியுள்ளவர்கள் என்பதை காந்தி மகான் தம்முடைய ‘சமூகத்தில் பெண்கள்’(Womans Role in Society) என்ற நூலில் அழுந்தச் சொல்லியிருக்கிறார்.

நம் கவிஞர் பாரதிக்கு, பெண்மையின் வாழ்வில் எப்போதும் ஓர் அக்கரை, கவலை; கடமை! பெண்மை வாழ்கவென்றும் பெண்மை வெல்கவென்றும் கூத்திடுவார். உணர்ச்சிமயமான கவியல்லவா?

வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா;

மானஞ்சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்;

கலியழிப்பது பெண்க ளறமடா;

கைகள் கோர்த்துக் களித்துநின் றாடுவோம்!”

வணக்கத்துக்கும் வாழ்த்துக்கும் உரிய வகையில் உலவிய பெண்மணிகளின் தடத்தை ஒட்டி நடந்தும், ஒற்றி கடக்க முயன்றும் வருகிற புதிய பரம்பரையினருக்கு அமரகவியைப்போல தூண்டுதல் கொடுத்து முடுக்கிவிட வேறுயாரால் முடியும்?

கதம்பமணம் அற்புதம்!

நோபல்பரிசு பெற்ற எழுத்தாளர், எர்னஸ்ட் ஹெமிங்வே(Ernest Hemingway). அவர் தம்முடைய நோபல்பரிசுப் பேச்சின் சமயம், குறிப்பிட்டுப் பேசிய மையச்செய்தி ஒன்று என்கருத்தை ஈர்க்கின்றது. “எழுத்துத் துறையில் இதுவரை யாரும் செய்யாததை - அல்லது, செய்ய முயற்சி செய்து தோற்ற விஷயத்தை மனத்தில் பதித்து எழுத வேண்டியதே உண்மையான - சிந்தனைமிக்க எழுத்தாளனது கடமையாகவேண்டும்!”

முதுபெரும் எழுத்தாளர் ஹெமிங்வேயை எண்ணிக்கொண்டு, நம் அருமைத் தமிழ்மண்ணை எண்ணிப் பார்க்கிறேன்.

என் கவலைக்கு வைகறையாகிறது ஒருபெயர்; என் கனவுக்கு நனவாகிறது ஒருபெயர்.

‘கல்கி’ என்ற அம்மூன்றெழுத்துப் பெயர் களிதுலங்கக் காட்சி தருகிறது.

மற்றவர்கள் செய்யாததைச் செய்துகாட்டிய பெருமையும், ஒருசிலர் செய்ய முயற்சி செய்து வெற்றி பெறாமல் போகவே அத்துறையில் உழைத்து, வெற்றி ஈன்ற பெருமிதமும் ‘கல்கி’க்கு உரியன.

நாட்டுப் பாசத்தையும் பெண்களின் மகிமையையும் வெற்றிச்சங்கம் முழக்கிச் சொல்லி, வெற்றித்தூணாக விளங்கச் செய்தவை, ‘தியாக பூமி’ - ‘சேவாசதனம்!’

இவ்விரண்டையும் விட, ஒளிச்சிறப்பும் ஒலித் தெளிவும் கொண்ட பெரிய நவீனம், அலை ஓசை!

இது சாகித்திய அகாடெமியின் (Sahitya Academy) பரிசைப் பெற்று உயர்ந்தது.

சாகித்திய அகாடெமி, இதற்குப் பரிசைக் கொடுத்து உயர்ந்தது!

சீதா அபலைதான்.

ஆனால் அவளுக்குச் சேர்ந்திருக்கிற இலக்கிய அந்தஸ்து (Literary Merit) க்கு ஈடு ஏது, எடுப்பு ஏது?

“நான் எழுதிய நூல்களிலே ஏதாவது ஒன்று ஐம்பது, நூறு வருஷங்கள் வரை நிலைத்து நிற்கும் தகுதியுடைய தென்றல், அது அலைஓசைதான் என்ற எண்ணம் எனக்கு உண்டு!” என்று தம் முன்னுரையில் வரம்பறுத்துச் சுட்டுகிறார் ஆசிரியர். “அலைஓசையை நான் எழுதியதாகவே எண்ணக்கூடவில்லை. லலிதாவும் சீதாவும், தாரிணியும் சூரியாவும், செளந்தரராகவனும் பட்டாபிராமனும் சேர்ந்து பேசிக்கொண்டு அவரவர்களுடைய அந்தரங்க ஆசாபாசங்களையும் உள்ளக் கிடக்கைகளையும் ‘அலை ஓசை’ மூலமாக வெளியிட்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அவர்கள் கற்பனை செய்யப்பட்ட பாத்திரங்கள் என்று எண்ண முடியவில்லை. நம்மைப்போலவே வளர்ந்து வாழ்க்கையின் இன்பதுன்பங்களை யெல்லாம் அனுபவித்தவர்களாகவே நிலவினார்கள்!” என்றும் நினைவுச்சரம் தொடுத்துப் பூமாலையை விரிக்கிறார்.

கதம்ப மணம் அற்புதம்!

அத்தங்காள்-அம்மங்காள்

பூவின் நினைவில் பூவை தோன்றுவா ளல்லவா?

பம்பாய்ப் பெருநகரின் ஒரு பகுதியான தாதரிலே, அடையாளங் கண்டுபிடிக்கமுடியாத சின்னஞ்சிறு வீடொன்றில் அடையாளம் கண்டு கொள்ளத்தக்க வகையில் சீதா பிறந்து வளர்ந்து, தன் ஆருயிர்த்தோழி லலிதாவுக்கு ராஜம்பேட்டைக்கு அடிக்கடி கடிதங்கள் எழுதவும் பழகியிருந்தாள். அத்துடன் எதிர்காலம் பசுமைக்கு ஒளியூட்டும் என்று தோன்றிய பாவனைகளில் கனவுகளைக் காணவும் பழகிக் கொண்டிருந்திருக்கவேண்டும்.

சீதாவின் தாய் ராஜம். அவள் தமையன் கிட்டாவய்யர். அவரிடம், “அண்ணா, இருபது வருஷமாய் உன்னை நான் ஒன்றும் தொந்தரவு செய்யவில்லை. அதற்கெல்லாம் சேர்த்து இப்போது தொந்தரவு கொடுக்கிறேன். சீதாவுக்கு நீதான் கலியாணம் செய்து வைக்க வேன்டும். ஊருக்கு அழைத்துக்கொண்டுபோய் அந்தப் பகுதியிலேயே வரன்பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டும்!” என்று இறைஞ்சுகிறாள்.

பம்பாயை ராஜம்பேட்டை கை தட்டி, கை ஏந்தி அழைக்கிறது. 

‘என் கண்ணே! இப்படியே நீயும் லலிதாவும் உங்களுடைய ஆயுள் முழுவதும் சிநேகமாயிருங்கள்!’ என்று தன் அன்னையின் ஆசியைச் சுமந்துகொண்டு சீதா புறப்பட்டு லலிதாவிடம் வருகிறாள்.

லலிதாவுக்கு ‘அத்தங்காள்’-அத்தை மகள்-முறை வேண்டும் சீதா.

சீதாவின் ‘அம்மங்காள்’-மாமன் மகள் லலிதா.

லலிதாவும் சீதாவும் தோழிகள். தோழமை என்றால், உயிரும் உயிரும் கலந்த ஒட்டுறவு போல;

சீதாவும் அவள் அம்மாவும் ரெயிலை விட்டிறங்கி, மாட்டு வண்டியில் பயணம் செய்யும் பொழுது, வண்டி குடை சாய்கிறது. “அம்மா...அம்மா!... இதோ, நான் வெள்ளத்தில் முழுகப்போகிறேன். என்மேல் அலை வந்து மோதுகிறது. யாராவது என்னேக் காப்பாற்றுங்கள்!” என்று செல்வக்குமாரி சீதா அலறுகிறாள். சாலையின் ஓரத்திருந்த நீரோடையில் விழுந்து காலையும் கையையும் அடித்துக்கொண்டு “அம்மா! அம்மா நான் முழுகிப் போகிறேன்!” என்று ஓலமிட்ட இளம்பெண்மீது சூர்யாவின் கவனம் செல்கிறது.

அன்பின் விட்டகுறை, இந்தச் சக்திப்பைத் தொடுகிறது; தொட்டகுறையாக ஆகிறது.

லலிதாவும் சீதாவும் சந்திக்கிறார்கள்.

பாசமும் பாசமும் ஆரத் தழுவிக்கொள்கின்றன.

லலிதாவைப் ‘’பெண் பார்க்க’ப் பட்டினத்துப்படித்த மாப்பிள்ளை வரப்போவதாகத் தாக்கல் வருகிறது. சீதா அவளைக் கேலி செய்யாமல் இருப்பாளா? 

லலிதா கெட்டிக்காரி. சீதாவின் அந்தரங்கத்தை அறிந்துகொண்டு அவளது எதிர்காலக் காதலனைப் பற்றியும், அவள் திருமணத்தைப் பற்றியும் அவள் வாய் மொழியாகவே சொல்லச் செய்கிறாள்.

சீதா பேசுகிறாள்: “... அம்மா சொன்னலும் சரி; அப்பா சொன்னலும் சரி; அவர்கள் விருப்பப்படி நான் கல்யாணம் பண்ணிக்கொள்ளச் சம்மதிக்கமாட்டேன். எனக்குப் பிரியம் இருந்தால்தான் சம்மதிப்பேன். என்னைக் கல்யாணம் செய்துகொள்ளுகிறேன் என்று ஒருவன் வந்தால் உடனே ‘சரி’ என்று சொல்லிவிடுவேனா? ஒரு நாளும் மாட்டேன்!...” என்று தொடங்கி முடிக்கும்போது அவள் தன் இதயக் கனவுகளை தெள்ளத்தெளிய லலிதாவுக்கு மட்டுமல்லாமல், நமக்கும் சொல்லிவிடுகிறாள். இந்தக் கட்டம் அவளது குணத்துக்கு -குணசித்திரத்துக்கு (characterisation) ஓர் ஆரம்ப அடிப்படை.

தேவதரிசனமோ?

மாப்பிள்ளளை வந்துவிட்டான்!

மணப்பெண் கோலம் ஏந்தி, கையில் வெற்றிலை பாக்குத்தட்டும் ஏந்தி, தழையத்தழையக் கட்டிய புடவையுடனும், செழிக்கச் செழிக்கக் கட்டிய மனக்கோட்டையுடனும் லலிதா வருகிறாள். அவளது வற்புறுத்தலின் பேரில், அவள் தோழி சீதாவும் அவளைப் பின்பற்றுகிறாள்.

குனிந்த தலை நிமிராமல் லலிதா வருகின்றாள். 

குனிந்த தலையை நிமிர்த்திப் பார்க்கிறாள் சீதா. ‘இனம்’ கண்டு கொண்ட மாப்பிள்ளை, தன்னை ‘இனம்’ காணத் தவிப்பதுபோல தன்னையே விழி பிசகாமல்- விதி பிசகாமல் பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததும், அவளுக்கு மயிர்ச் சிலிர்ப்பு உண்டாகிறது.

செளந்தர ராகவன் என்ற ராகவன் மாப்பிள்ளைக் கோலம் தாங்கி, கோலம் நிறை புன்னகை கோலம் வரைய நின்று, ஏன் அவன் அவ்வாறு அழகின் ஒயிலாகவும் கனவின் கனவாகவும் அவள்முன் காட்சி தந்தான்?

அவனா காட்சி தந்தான்?

ஊஹும்!

அவளல்லவா அவன் முன் தரிசனம் கொடுத்தாள். அது ‘தேவதரிசன’மோ?

இல்லையென்றால், அவன் மனம்மருகியிருப்பான? ‘தெய்வப் பெண்ணோ? மயிலோ? காதிற் குழை அணிந்த இக்கன்னி மனிதப் பெண் “தானா?” என் நெஞ்சம் மயங்குகிறதே?’ என்ற நிலை அவனது உள்ளத்தின் மடியில் தவழ, அந்தச் சுகத்தின் மடியில் தலைவைத்துச் சுகம் காண கனவு கண்டிருப்பானா?

ராகவன் புன்னகை புரிந்தான்! வானத்திலிருந்து நட்சத்திரங்கள் பொலபொலவென்று உதிர்ந்து உலகைச் சுடர் மயமாக்கின!-சீதாவின் இதயமாகிய உலகத்தைத் தான்!

மாணிக்கவாசகப் பெருமானர் தம்முடைய ‘திருக்கோவையா’ரின் கண் ஒரு நிகழ்ச்சியைப் பாவாக்குகிறார்.

“வளைபயில் கீழ்கடல் நின்றிட

மேல்கடல் வானுகத்தின்

துளைவழி நேர்கழி கோத்தெனத்

தில்லைத் தொல்லோன் கயிலைத்

கிளைவயின் நீக்கி இக் கெண்டையங்

கண்ணியைக் கொண்டுதந்த

விளைவைஅல் லால் வியவேன் நய

வேன்தெய்வம் மிக்கனவே!??”

நல்வினைப் பயனாகவும் விதிவசமாகவும் விட்டகுறை -தொட்டகுறையின் படைப்புச் சிக்கலின் விளைவாகவும் எதிர்ப்பட்டு, உள்ளம் கவர்ந்த தலைவன்-தலைவியின் பக்திநயக் காதற் பாட்டுக்கு ஓர் உதாரணமாகவும் இங்கே நாம் சீதாவையும் ராகவனையும் காண்கிறோம். ஆம்; சீதாவின் பேசும் கண்கள் ராகவனிடம் என்ன ‘அந்தரங்கம்’ செப்பினவோ? “மணந்தால் நான் சீதாவைத்தான் மனப்பேன்!” என்கிறான் ராகவன்.

அவன் தீர்ப்பு மனப்பந்தலை உருவாக்குகிறது.

கொட்டு மேளம் முழங்குகிறது.

இப்பொழுது சீதா, திருமதி ராகவன்!...

கிழக்கும் மேற்கும்

‘கிழக்கே சூரியன் மட்டும் தோன்றவில்லை. மனித நாகரிகமும் கிழக்கேதான் தோன்றிற்று.’-இதையொட்டிய மனிதகுலச் சரித்திரத்தில் மேற்கும் இடம் கண்டது. இப்படிப்பட்ட திசை மாற்றங்களும் திசைச் சந்திப்புக்களும் நமக்குப் புதிதாக இலங்கினாலும், வரலாறு காட்டுகிற ஆதி நாகரிகத்தினின்றும் முன்னேறி யுள்ள இன்றைய அணு யுகப் புது நாகரிகம் இருக்கிறது பாருங்கள், அதன் சரித்திரம் அந்தம் உடையது; அர்த்தமில்லாதது.

மோகக் கிறக்கத்தில் நாகரிகப் பித்தும் ஒன்று. இவ்வகையில் பார்க்கும்பொழுது, ராகவனுக்கு வெள்ளைக்கார நாகரிகம் என்றால் ஒரு பைத்தியம் (mania);

கிழக்கும் மேற்கும் சக்திப்பதென்பது வியப்புத் தான்!

‘இமிழ்கடல் வேலித் தமிழக’த்தில் பிறப்புக் கொண்டவன் ராகவன்.

அவன் ஒர் அதிசயப் பேர்வழி.

சென்னைப்பட்டினத்தில் பத்மாபுரம் என்றொரு பகுதி. ஊரையும் பேரையும் ஆராய்வதை விட, இப்போது, நம் தலைமைக் கதாநாயகனின் குணாதியங்களை ஆராய்வது நலம் பயக்கும்.

‘தேவிஸதனம்’ என்ற மனையில், பத்மலோசன சாஸ்திரிகளுக்கும் காமாட்சியம்மாளுக்கும் பிறந்தவன். இரண்டாவது புதல்வன். ‘ஸநாதன ஹிந்து தர்மத்தின் சுவட்டை மிதிக்க வேண்டிய பிள்ளையாண்டான், வடக்கத்திப் பெண்ணாகிய தாரிணி என்பாளைக் காதலித்தது ஒரு தனிக்கதை. நாகரிகப் பண்பாட்டில் திசை குறுக்கிடுவதில் தவறோ, தரக்குறைவோ, தகுதி மாற்றமோ இல்லையென்றால், நமக்குத் திக்குகளைப் பற்றித்தான் என்ன கவலை?

தாரிணி அழகி. விட்டகுறை-தொட்டகுறையென்னும் ‘சிருஷ்டிச்சிக்கலின் வேதாந்த ஈடுபாடு’ அவளுக்கு விருப்பமானது போலும். பிறப்புக்களின் முன்கதை— பின்கதைகளும் அவளுக்கு நிழல்தரும் தருக்களாகின்றன. அவள் கதைகூட விசித்திரமானது தானே!...

பீஹார்ப் பூகம்பத்தில் அலைக்கழிந்த ஆயிரமாயிரம் சகோதர சகோதரிகட்கு அவள் தொண்டு செய்யும் பேறு பெறுகிறாள். ‘அன்பு எதையும் கேட்காது, கொடுக்கவே செய்யும்’ என்னும் காந்திஜியின் மூதுரைப் பாடம் அவளுக்கு அத்துபடி. முஸாபர்பூரிலிருந்து தன் பழைய காதலனுக்குக் கடிதம் ஒன்று வரைகிறாள். தில்லியில் வெள்ளையர் ஆட்சியில் பொருளாதாரத் துறையில் உயர்ந்த பதவியிலிருக்கும் ராகவனுக்கு, தானும் அவனும் காதல் பூண்டு ஒழுகிய நிகழ்ச்சிகளைக் கோடிட்டுக் காட்டி, பழைய விஷயங்களையெல்லாம் கடமை ஒழுங்குடன் எழுதுகிறாள். தனக்கும் தாரிணிக்கும் ஏற்பட்ட நட்புறவு ஒரு மாயக்கனவு என்று திட்டமிட்டு, அதை எப்படியோ மறக்க முயன்றுகொண்டிருந்த அவனுக்கு, அவள் சமூகப்பணி குறித்தும் ஏதேதோ எழுதுகிறாள்!

தாரிணி நல்ல பெண். அவள் ஒருமுறை பத்மாபுரத்துக்கு வந்திருந்தபோது, காமாட்சி அம்மாள் அவளிடம் கெஞ்சிக் கதறி, தன் மகன் வாழ்வில் குறுக்கிடாமல், ஒதுங்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டாள். தாரிணி நல்ல பெண். அவ்வாறே நடந்தாள். இப்பொழுது அவள் அவனுக்கு எழுதிய கடிதம் சலனத்தை உண்டாக்குகிறது. முடிவில் அவளுக்காக ‘இதுவா உன் கதி?’ என்று அவன் அனுதாபப்பட முடிந்ததுடன், தான் அவளை விட்டு விலக நேர்ந்ததுகூட நல்ல காலத்தினால்தான் என்று அமைதியுறவும் முடிந்தது! “ஜனக குமாரி பூமிக்குள் போனது போல் நானும் போய்விட விரும்புகிறேன்!” என்று அடிக்கடி தாரிணி சொல்வாளாம்! இப்போது, பூகம்பப்பணி இயற்றிய காலை தாரிணி பூமிக்கடியில் மாண்டுவிட்டதாக ராகவனுக்கு வந்த கடிதம் அவனது அனுதாபத்தையும் அமைதியையும் பெற்றுக்கொண்டது!

“எவ்வளவுதான் தங்களை நான் மறக்க முயன்றாலும், அது கைகூடவில்லை!” என்று தாரிணி மனம் திறந்து எழுதியிருந்ததைக் கண்டதும் நெகிழ்ந்த ‘கனி மனம்’, மேற்படி கடிதத்தின் இறுதிப் பகுதியைப் படித்ததும், கல்லாயிற்று.

அரசாங்க அலுவல், பெரிய சம்பளம், செளக்கியமான பங்களா, மோட்டார், டீபார்ட்டி ஆகிய இவற்றில் இன்பம் காண்பவன் அவன். இப்படிப்பட்ட கெளரவத்தை நாடும் அவன், தன்னைப்போன்ற ஒரு புத்திசாலி இந்தியா நாட்டில் இதுவரை பிறந்ததில்லை என்று பிரமாதமாக ‘மனப்பால்’ குடித்துவந்தான். அவன் வாழ்ந்த மண் அடிமைத்தளை பூண்டிருந்த லட்சணத்தில், எவ்வளவு லட்சணமான போக்குடன் ‘வெள்ளையர் தாசனாக’ அவன் உதவி வந்தான், தெரியுமா? என்ன பேச்சு, என்ன செருக்கு...

மானுடப் பிறப்புக்கே உரிய பலமும் பலவீனமுமாக அவன் உருக்காட்டினன்!

தில்லி வெளியினில்:

‘தில்லி வெளியினில் கலந்து கொண்டவர் திரும்பியும் வருவாரோ?’ என்று கவிஞர் கேட்ட வினாவை ராகவன் அறிந்திருக்க நியாயமில்லைதான். ஒருவேளை, சீதா அறிக் திருக்கக்கூடும். ஆகவே சீதாவுக்கு டில்லிமாநகரம் அடைக்கலம் தந்தது! தவறு. அவளுக்குத் தஞ்சம் தந்தவன் அவள் மணாளன் ராகவன். ஆங்கிலமோகம் கொண்டவன் அல்லவா ராகவன்? ஆகவே, அவளை ஆங்கிலேயர் ஹோட்டல் ஒன்றில் தங்கவைத்தான். டில்லிமாநகரம் கந்தர்வ லோகமாயிற்று! பிறகு, சீமைக்குப் புறப்பட வேண்டியவனானான். சீதாவுக்குச் சென்னை நிழலாயிற்று. பதினைந்து மாதங்களுக்குப் பிறகு ராகவன் தாயகம் திரும்பியதும், சீதா கணவனிடம் திரும்புகிறாள், குழந்தை வாஸந்தியோடு. அன்னை காமாட்சியம்மாளும் சேர்த்தி!

பெண்கள் வீட்டுக்குள்ளே இருந்து வாழ்க்கை நடத்துவதுதான் நியாயம்!-இது ராகவனின் கட்சி.

மீண்டும் புதுடில்லிக்குச் சீதா வந்துசேருகிறாள். அவளுடன் தொடர்ந்து ‘உம்மைப்பழவினை’யும் வருவதை அவள் எங்ஙனம் அறிவாள், பாவம்? புதுடில்லியில் அழகழகான சதுக்கங்களிலும் இடிந்த கோட்டைகளிலும் இடியாத அரண்மனைகளிலும் தன் தர்ம பத்தினியின் கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இன்பமாகப் பொழுதைக் கழித்தான் ராகவன். முதன்முதலில் சீதா வந்த தருணம் இவை கடந்தேறின. அம்மாதிரி இம்முறையும் சென்று கழிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டாள் சீதா. இயல்பு. ஈடேறவே செய்தது.

பிறவாவரம்!

பிறப்பறுக்க வேண்டித் தவம்கிடந்தார்கள், வாழ்வைத் துறந்தவர்கள். பிறவா வரம் வேண்டினார்கள் பெம்மானிடம். 

வாழ்வைத் துறந்தவர்களுக்கு மட்டும் அல்லாமல், வாழ்வைத் துறக்காதவர்களுக்கும்கூட ‘வாழ்வு’ அமைந்து விடுகிறது. இதுவேதான் சிருஷ்டிப் புதிராகவும், சிருஷ்டியின் தத்துவமாகவும் அமைகிறது.

வாழ்க்கையை விரும்பவோ, வெறுக்கவோ மானுடப் பிறப்புக்கு உரிமை இல்லை!

காரணம், வாழ்க்கை என்பது தவிர்க்க முடியாத - தவிர்க்கக்கூடாத ஒரு விபத்தாகவும், கழித்துத் தீர்க்க வேண்டிய-கழிக்காமல் தப்பமுடியாததொரு கடனுகவும் அமைவதுதான்!

படைத்தோனின் கடன் மனிதனின் சென்னியில் விழுகிறது.

உருவாக்கியவனின் கனவு, உருவாக்கப்பட்ட மானிடத்தில் நிழலாடுகிறது.

முற்பிறவியின் சாயலை இப்பிறப்பில் மனிதப்பிறவி எட்டி ஒதுக்க முடிவதில்லை.

விளைவு, சோதித்தவனே சோதனைப் பொருளாகவும் ஆகிறான்!...

விளைகிறது வினை; தொடர்கிறது வினைப்பயன்.

ஆசைகளும் பாசங்களும், கனவுகளும் களவுகளும் காதல் சேஷ்டைகளும் காமக் குரோதங்களும் மனிதனுக்குப் புதிர்களாகி விடுகதை போடுகின்றன. அதுபோலவே மேற்குறித்த மையப்புள்ளிகளின் பின்னே இந்த அப்பாவி மனிதனும் புதிராகி, விடுகதை போடுகிறான்!

இந்தப்புதிர் விடுவிக்கப் பெறுவதற்குள்ளே நிகழும் நிகழ்ச்சிகள் ஒன்றா, இரண்டா? 

ஆகவேதான், மனிதன் தனது வல்லமையின் துணையினால் பலவீனனாகவும், தன்னுடைய பலவீனத்தின் சார்பிலே வல்லவனாகவும் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து தவித்து, ஒன்றும் அறியாப் பரம்பொருளையும் தவிக்கச் செய்து வருகிறான்.

இப்படிப்பட்ட ‘மனித’னின் நேர்சந்ததி நம் கதாநாயகன்-தலையாய நாயகன்-ராகவன். அவனுக்கென்று ஒரு வீம்பு இருந்தது. அந்த வீம்பு ஆங்கில நாட்டிலிருந்து இறக்குமதியாகியிருந்தது. ‘ஒருமுறையாவது காதலிக்காமல் இருப்பவன் பைத்தியக்காரன்!” என்கிற மேலைநாட்டவரின் கீழ்ப்புத்தி இவனையும் தொற்றிக் கொண்டதில் தவறு ஏதும் இல்லை. தவறுதலுக்குமட்டும் ‘ஏது’ உண்டு. அது ’விதியின் பிழை’ என்று தான் கம்பநாடாழ்வாரை ஒட்டி நானும் சொல்லவேண்டியிருக்கிறது.

‘வாழ்வை நாணற்குழல்போல நேராக அமைத்துத் தா!’ என்று வேண்டிக்கொள்கிறார் வங்கக்கவி தாகூர்.

ராகவனுக்கோ தன் இல்வாழ்வைக்குறித்து துளியும் அக்கறையில்ல. அக்கரைப் பச்சைபோலத் தெரிகிற காதல் வாழ்வில்தான் குறி! சபலசித்தம் வாய்க்கப்பெற்ற இவன், சலனமனம்கொண்டு நிற்கிறான்.

ஆதலால்தான், தாஜ்மகாலில் தாரிணியை ‘உயிருடன்’ திரும்பச் சந்தித்ததும், ‘பழைய வாசனை’ அவனுக்குத் திரும்புகிறது. அவன் தாரிணியைக் கண்டவுடன் செய்வகை புலனாகமல், புலன்கள் அனைத்தும் செயலற்ற நிலையில் அப்படியே நிற்கிறான். உடன் நின்ற சீதாவையும் மறந்துபோகிறான். தாரிணி என்ற ஒரு நினைவுதான் அவனை ஆட்கொள்கிறது. ஆனால் தாரிணி ‘ஆட்கொல்லி’ யல்லள்!

தன் கணவனின் ‘மாஜிக்காதலி’ தாரிணி என்ற மர்மம் பிடிபடுகிறது சீதாவுக்கு. ‘யார் அவள்?’ என்று கேட்கிறாள், பதமாக. அவனே எரிந்து விழுகிறான். “இப்படி எரிந்து விழத்தான் உங்களுக்குத் தெரியும்! அன்பாக ஒரு சொல்கூடச் சொல்லத் தெரியாது!” என்று மெய்யுருகினாள். ‘மெய்’யும் உருகுகிறது.

‘தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும்

சேர்த்தபின் தேனாமோ ?’

இல்லறப் பிணைப்பில் ஏற்பட்டிருந்த விரிசலைக் காணும் சூர்யாவுக்கு மேற்கண்ட வரிகள் தாம் நினைவில் எழுகின்றன. அவர்களது இன்பமயமான இல்வாழ்க்கையில் துளி விஷமாகத் தோன்றுகிறாள் தாரிணி.

தாரிணி ஹரிபுரா காங்கிரஸில் பங்கு கொண்டவள். பீஹார்ப் பூகம்பத்தின்போது, பொதுநலத்தொண்டு புரிந்தவள்.

இலட்சியவாதி சூர்யாவுக்கும் தாரிணி பழக்கம்!

இறைமையின் வாழ்வு !

மனித மனத்தை வாழவும், வாழ்த்தவும் செய்யவல்ல வல்லமை-கடவுட்சக்தி எனும் மூலசக்தியிடமிருந்தே கிடைக்கிறது. இதனால் தான் அன்பு எனும் உயிர்நிலை நிலைக்கிறது; அறம் என்கிற நியதி காலூன்றுகிறது; தர்மம் வெல்கிறது. ஆகவேதான் இறைமையே வாழ்வாகவும், வாழ்வே இறைமையாகவும் சுழல்கிறது!... 

இதுவே உலகம்!...

சீதா-ராகவன்; சூர்யா-தாரிணி என்கிற நாற் கோட்டுருவத்தைச் சுற்றிவளைத்துச் செல்கிறது ‘அலை ஓசை’.

சீதாவின் தாய் ஒரு சமயம் கனவுகண்டாள். மகள் கடலில் அகப்படுவதுபோல. அதன் விளைவாக அலை ஓசை அவளை அடிக்கடி அச்சுறுத்துகிறது. இதுவே மரணபயமாகவும் அமைகிறது. இந்தத் தாய்வழிப்பயம் மகளுக்கும் ஒட்டுகிறது. சீதாவும் அலை ஓசை காரணமாக மருள்கிறாள்; மயங்குகிறாள்; துயருறுகிறாள். இந்த அலை ஓசை இருக்கிறதே இது, கதைக்கு ‘சஸ்பென்ஸ்’ ஆக இயங்காமற்போனாலும், அவளது உயிருக்கும் ஆத்மாவுக்கும் ‘சஸ்பென்ஸ்’ ஆகிறது! உடல், ஆத்மா ஆகிய இரண்டின் கட்டுப்பாடற்ற வினோதக் கலப்புத்தானே இந்த மானுடப்பிறவி?...

ஒரு கட்டம்:

ரஜினிபூர் ஏரி.

சீதா, ராகவன், தாரிணி மூவரும் வருகிறார்கள். குந்துகிறார்கள்.

சீதாவுக்கு தாரிணி என்றால்தான் எரிச்சல் ஆயிற்றே? தலைவலி என்று ஒதுங்குகிறாள்.

சீதாவின் உள்ளத்துக் கோளாறு தாரிணிக்குப் புரிகிறது. “பெண்களின் மனத்தை அறியும் சக்தி உங்களுக்கு இல்லவே இல்லையென்று தெரிகிறது. உங்கள் மனைவிக்கு உங்களுடன் தனியாகவந்து உல்லாசமாக இருந்து விட்டுப் போகவேண்டுமென்று எண்ணம்!” என்கிறாள்.

அதற்கு ராகவன், “அவளைத் தனியாக அழைத்துக் கொண்டுவந்து என்ன செய்கிறது? அவளோடு எந்த விஷயத்தைப்பற்றிப் பேசுகிறது? எங்கள் இருவருக்கும் பொதுவான விஷயம் எதுவும் இல்லை. அவளுடைய பேச்சு என் மனத்தில் ஏறவே ஏறாது. நான் பேசுகிற விஷயம் அவளுக்குப் புரியாது!” என்று பதிலிறுக்கிறான்.

“அது யாருடைய தப்பு? அவளை நீங்கள் படிப்பித்து உங்கள் நிலைக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், உங்களுடன் சமதையாகப் படிப்பில்லாதவளை மணம் செய்துகொண்டிருக்கக் கூடாது. அப்போது தவறுசெய்துவிட்டு இப்போது இப்படிப் பேசுவதில் என்ன பயன்?”-தாரிணி.

“தப்பு என் பேரில் இல்லை, தாரிணி! உங்கள் பேரில்தான்! உங்களால் வந்த வினைதான் இதெல்லாம்!” -ராகவன்.

“வெகு அழகு! இப்படியெல்லாம் பேசாதீர்கள். உங்கள் மனைவி உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு நாமும் போகலாம், வாருங்கள்! இல்லாவிட்டால், அவளுடைய ‘கோளாறு’ இன்னும் அதிகமாகிவிடும்!”-தாரிணி.

“அதிகமானால் ஆகட்டும். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை!” -ராகவன்.

ராகவன் சாமான்யமான ஆளா, என்ன? பாரதியின் பெண்மை வாழ்த்து அவனுக்குப் பிடிக்காவிட்டாலும், “தங்குவதற்குத் தாஜ்மஹால்; ஒருகூஜா திராட்சை ரசம்; ஒரு கவிதைப் புத்தகம்; என்னருகில் நீ இதைக் காட்டிலும் வேறு சொர்க்கம் உண்டோ?” என்று தாரிணியை உற்றுநோக்கி உமர்கயாமின், பாடலைக்கூற மட்டும் பிடித்திருந்தது. இந்நிலையிலே, “அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இவ்வாழ்க்கையாகும்; அதுவும், மற்றவர் பழிப்பதற்கு இடமின்றி அமைந்து விடுமாயின் அதைவிட வேறு என்ன சிறப்பு வேண்டும்” என்னும் வள்ளுவனின் அறிவுணர்வில் அவனுக்கு ஏது நாட்டம்?

ஏரியில் விழுந்து விடுகிறாள் சீதா. பழைய அலை ஒசைச் சுழிப்புக்குரல்!

உயிரில் உயிராகவும், உயிரின் உயிராகவும் ஒன்றியதாக ‘தீவலம்’ சான்று மொழிந்ததன் பேரில் அவனது உடைமை ஆகிவிட்டவள் ஏரியில் விழுந்ததும், அவன் அவளைக் காப்பாற்றக் கவலைப்பட்டானா? இல்லை, இல்லவே இல்லை! அந்தக்கவலை தாரிணிக்கு உண்டாகிறது. இதன்பயனாக, தாரிணியைப்பற்றி முரண்பாடாகக் கொண்டிருந்த சீதாவின் கவலையும் கழிகிறது. இது ரத்தபாசத் தொடர்பின் விடிவு!

ஆம்; தாரிணியும் சீதாவும் உடன்பிறப்பு!

இவ்வுண்மை தெளிவு கொள்வதற்கு முன்னும் பின்னும் தொடர்ந்த மனச் சங்கடங்கள் பலப்பல!

பெண்ணென்று பூமியில் பிறந்துவிட்டால் மிகப் பீழை இருக்கிறதென்னும் கவிமணியின் வாக்கு முற்றிலும் உண்மையே!

தாரிணியை ‘அக்கா’ என்று நேர்மையான பாசத்துடன் அழைத்து, அவளையே முழுதும் நம்பியிருப்பதாக நாணயமான நம்பிக்கையை அவள்பால் வைக்கிறாள் சீதா.

இந்த நம்பிக்கையும் பாசமும் சீதாவை முழுப்பண்பு மிக்க கதைத்தலைவியாக ஆக்குகின்றன!

தேசியப் புரட்சிக் கனல் !

தாரிணியும் சூர்யாவும் அரசியல் புரட்சி இயக்கத்தைச் சார்ந்தவர்கள். விடுதலைப் போராட்டம்!

இவர்கள் இருவரும் நெருங்கிப் பழகப்பழக, ராகவன் விலங்காகிவிடுகிறான். சூர்யா மீது அவனுக்குக் கட்டுக் கடங்காப் பகை. இம்மாதிரியான சூழலின் சுழல் உருவாகும் நிலையில், நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரின் ‘ஒத்தல்லோ’ (Othello) நாடகத்தின் உச்சக்கட்ட உறுப்பினர்களான ஒதெல்லோ, டெஸ்டமொனா, இயாகோ ஆகிய கதை உறுப்பினர்களின் கதையையும் நினைவு கூர்கிறோமே!...சூர்யா அடிக்கடி தன் வீட்டுக்கு வருவதையும் தன் மனைவியுடன் அவன் பழகுவதையும் கண்டு அநாகரிகமான முறையில் ஐயம் கொள்கிறான். சூர்யாவைப் போலிஸில் காட்டிக்கொடுக்க முனைகிறான், தனக்குத் தாரிணி கிடைக்கவேண்டுமென்று பகற்கனவு கண்டவனுக்கு, தாரிணி தன்னை மறந்துவிடும்படி எச்சரிக்கை விடுத்ததே பெரிய தோல்வியல்லவா? திரைப்படமாக இருந்திருந்தால் இங்நேரம் ராகவனுக்குப் பைத்தியம் பிடித்திருக்கும்! ஆனால், இப்பொழுது அவன் சீதாவைப் பைத்தியமாக ஆக்கிக் கொண்டிருந்தான். ஓயாமல் ‘தொலைந்துபோ! தொலைந்துபோ!’ என்று தன்னைக் கொண்டவனே சொல்லக்கேட்ட சீதா உண்மையாகவே தொலைந்துபோய் விட முடிவுசெய்து, கைத்துப்பாக்கியோடு தயாராக இருக்கையில், சூர்யா அவள் உயிரைக் காப்பாற்றி விடுகிறான். சீதாவின் அம்மாவிடம் அவன் அன்றொருநாள் கொடுத்த வாக்கின் மெய்ம்மைப்பாட்டை மறுமுறையும் மெய்ப்பித்தான். ஒரு காலத்தில் சீதாவை உள்ளத்தால் விரும்பி,உள்ளத்தில் இருத்திக் கனவுகண்ட ‘கதை’ அவன் வரை ‘விழுப்புண்’ போலத்தான்! ‘தேசத்தை நாம் காப்பாற்ற முயலுவதைவிட நமக்குத் தெரிந்த ஒருவரின் கஷ்டத்தைப் போக்கினால் கைமேல் பலன் உண்டு,’ என்னும்படியான தாரிணியின் ‘ஹிதோபதேசத்’துக்கும் மதிப்பு வாய்க்கிறது.

உணர்ச்சிபூர்வமான மற்றொரு கட்டம்.

கணவனின் தொல்லை தாளாமல் நரகவேதனைப்பட்ட சீதா தன்னை எங்காவது அழைத்துக்கொண்டு செல்லும்படி, காலில் விழாத குறையாக குர்யாவிடம் மன்றாடுகிறாள். சூர்யா அவளுக்குப் புத்தி புகட்டுகிறான்.

வாசல் வரையில் சூரியாவைக் கொண்டுபோய் விட்டு விட்டுத் திரும்புகிறாள் சீதா. ராகவன் வந்து நிற்கிறான். “அவனிடம் என்னடி ரகசியம் பேசினாய்?” என்று கேட்டு ஒரு கன்னத்தில் அறைகிறான். அதிலும் திருப்திப்படாமல், மறுகன்னத்திலும் அறைகிறான். ‘உங்களுடைய நடத்தையைப்பற்றிச் சந்தேகம்!’ என்று நாக்கில் நரம்பின்றி, பல்மேல் பல்போட்டு, உள்ளங் கூசாமல் ஏசுகிறான்.

“நான் உங்கள் பேரிலும் சந்தேகப்படுகிறேன்!” என்கிறாள் சீதா.

இந்த ஓர் எச்சரிக்கையில், சீதாவின் கெட்டதைப் பொசுக்கவல்ல நெருப்புச் சக்தி பளிச்சிடுகிறது!

‘கடவுளின் ராஜ்யம் உனக்குள்ளே!’

கடவுளின் ராஜ்யம் உனக்குள்ளே!

அற்புதமான வேதாந்தத் தத்துவம்.

 சீதைக்குக் கண்காணாத கடவுளும் கண்கண்ட காந்தியுமே இப்போது ராஜ்யமாக இருந்தன.

தனக்கு இனிக் கணவன்தான் அனைத்தும் எனச் சீதாவும், இனிமேல் தனக்கு மனைவிதான் அனைத்தும் என ராகவனும் ஒருமுறை மனம்திருந்தி, அந்த மாற்றத்துக்கு வழிபிறப்பதற்குள், கதையைத் திசைதிருப்பப் பிறந்துவிட்ட பல நிகழ்ச்சிகளையும் மறந்துவிட்டு, உச்சக் கட்டத்தை எண்ணுகிறேன்.

இப்போது, ராகவன் சமூக சேவகன்.

ஹவ்ராவில் நடந்த வகுப்புவாதக் கலவரத்தில் சிக்கித் தவித்தவர்கள் அனைவரையும் சுட்டிக்காத்தான் அவன்.

விவரம் அறிந்த சீதா பெருமகிழ்வு பூக்கிறாள்.

மறுபடி சீதா - ராகவன் குடும்பவாழ்வில் புதிய மணம். பஞ்சாப் நகரவாழ்வு சொர்க்கம்! காந்தி அடிகளின் ஆத்ம சக்தி வெல்கிறது. நாடு சுதந்திரம் அடைகிறது.

ஹொஹங்காபாத்தில் ஏற்பட்ட கலவரத்தில் சிதாவைக் காப்பாற்றிய மெளல்வி சாகிப் உருவத்தில் இருந்த தன் தந்தையின் உண்மைப் பாசம் கண்டும் தாரிணியின் பிறப்பின் ரகசியம் கண்டும் சீதா ஆனந்தக் கண்ணிர் வடித்து, அது உலர்வதற்குள், சீதாவுக்குத் தண்ணிரில் தஞ்சம் கிடைக்கிறது. அலைஓசை-மரணபயம்!...

ஆனால் அவள் பிழைத்தாள்!

ராகவனோ, சீதா செத்துவிட்டதாக நம்பிவிட்டான்! சூர்யா அரங்கேற்றிய நாடகம் இது!

ஜனவரி 31

ஜனவரி 31.

“ஹரீ! தும் ஹரோ - ஜனகீ மீரு!”

‘பகவானே! மக்களின் துன்பத்தைப் போக்குவாயாக!” என்று ஒலித்த சோக கீதத்துக்கும், ‘அஹிம்சையே எல்லாவகை ஆயுதங்களுள்ளும் மிகமிக வலிமை வாய்ந்ததென்று மண்ணில் மெய்ப்பித்துக்காட்டி விண்ஏகிச் சென்ற அண்ணலின் மரண நிழலுக்கும் ஊடே ஊடாடியபடி சீதா எப்படியோ தன் மனையை மிதிக்கிறாள். கணவனின் அன்புக்கு மிஞ்சிய பேறு ஏது?’

ராகவன் தாரிணியிடம் ‘காதல்பிச்சை’ கேட்கும் அவ வேளை அது.

தாரிணி தலையோடு கால்வரை முஸ்லீம் பந்தா போட்டிருக்கிறாள்.

சீதாவுக்கு தன்னம்பிக்கையும் மனவலிமையும் பறிபோய் எத்தனையோ காலம் ஆகிவிட்டது. ஒரு சமயம் அவள் தாரிணியிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறாள். தனக்குப்பின் தாரிணி தன் கணவனை மணந்துகொள்ள வேண்டுமென்பதே அவ்வேண்டுகோள். அதற்கு அது சமயம் அவளும் உடன்படுகிறாள்.

இப்பொழுது அந்தக் கட்டம் புத்துயிர் பெறுகிறது. "என் தங்கை சீதாவின் ஆவியாவது நிம்மதிபெற வேண்டும். நான் அவளுக்குக் கொடுத்த வாக்கை மீறப்போவதில்லை. நீங்கள் என்னக் கலியாணம் செய்து கொள்ளச் சம்மதித்தால், எனக்கும் சம்மதம், ஆனால் நீங்கள் தான் யோசித்துச் சொல்ல வேண்டும்!” என்று ‘பொடி’ தூவிப் ‘பொடி’ வைக்கிறாள் தாரிணி.

சீதா வழி விலகுகிறாள்.

மறுநாள் தாரிணி - ராகவன் சந்திப்பு.

தாரிணி - அதாவது ரஜனிபூர் இளவரசி - சீதாவின் தமக்கை தன்னுடைய எழிலார்ந்த பர்தாவை நீக்குகிறாள்!

ஆ!

தாரிணியா அவள்?

காதல் என்பது பொய்க்கனவா? அற்பமான மாயை யேதானா?

தாரிணி கோர சொரூபம் கொண்டிலங்குகிறாள். முகத்தில் நீண்ட பிளவு. ஒரு கண், ஒரு கை இல்லை. தெய்வச்சிலையை எந்த வெறியனே உடைத்துவிட்டான்!

“தாரிணி! தாரிணி!” என்று தாரிணி நாமாவளி பாடிக்கொண்டிருந்த ராகவன் மனம் இப்போது பின் வாங்குகிறது. ஆனால் இதே தாரிணியை முன்னர் இதய நிறைவுடன் காதலித்த சூர்யா, இப்போது அவளை எற்க முன்வருகிறான்.

சீதா மஞ்சள் குங்குமத்துடன், தன் கணவன் மடியில் சாய்ந்தபடி, மகளின் அருகில் இருந்தபடி, “ஒரு குறையும் இல்லாமல் மனநிம்மதியுடன் நான் போகிறேன். நான் பாக்கியசாலி அக்கா!” என்று சொல்லிக்கொண்டே நீள்துயில் வசப்படுகிறாள். அலைஓசையின் மரணபயம் இனி அவளுக்கு ஏது?

ஆஹா!...சீதா பாக்கியசாலி! 

நன்கு விரித்துக்காட்டப்பெற்றும், அழகுடன் முழுமைபெற்றும் (fully developed and finished Character) விளங்குகிற பாத்திரம் சீதாவுடையது.

பின், சீதா பாக்கியசாலி தானே?

முடிவில் :

தன் முதற்காதலுக்கு வடிவம் ஈந்த தாரிணியையே ராகவன் இறுதியில் கைத்தலம் பற்றுகிறான். தாரிணியைத் தான் திருமணம் செய்துகொண்டே தீருவேன் என்றும், அவளுடைய முகலாவண்யத்துக்காக அவளிடம் தான் பிரியம் வைக்கவில்லையென்றும் சத்தியம் செய்ததுடன், சீதாவுக்குத் தாரிணி கொடுத்த வாக்குறுதியை மீறக்கூடாதென்றும், தன்னிடமும் அதே விஷயத்தை சீதா சொல்லியிருப்பதாகவும் வற்புறுத்தியபின், தாரிணி திருமதி ராகவன் ஆகிறாள்.

இந்த ஒரு நல்ல முடிவில், ராகவன் என்ற நவநாகரிக இளைஞனின் தியாகமனத்தை நமக்குக் காட்டி, அவனது குணச்சித்திரப் படைப்புக்கு ஒரு மெருகு கொடுக்க மதிப்பிற்குரிய பேராசிரியர் கல்கி அவர்கள் என்னதான் முயற்சி செய்திருந்தாலும், அம்முடிவு ராகவனை முழுமைச் சித்திரமாக ஆக்கியதாகச் சொல்லவே முடியாது!

ராகவனின் இம்முடிவு செயற்கையாக (artificial) செருகப்பட்டதுபோல் அமைந்துவிட்டது!

பேரறிவாளன் யார்?

மனிதர்களைச் சிற்றறிவினர் என்றும் கடவுளைப் பேரறிவாளன் என்றும் நம் நாட்டுப் பெரியோர்கள் கண்டுணர்ந்து கூறுகிறார்கள். 

சிலர் மிகமிக இன்னலுற்றும் வேறுசிலர் மிகமிக இன்பமுற்றும் சாகிறார்கள்.

வேறுசிலர் குற்றங்களைச் செய்தும்கூட யாதொரு தொல்லைகளும் காணாமல் இருக்கிறார்கள்.

இன்னும்பலர் யாதொரு தீம்பும் செய்யாதிருந்தும், தொல்லை அனுபவிக்கிறார்கள்.

இப்படிப்பட்ட உலகின் பாரபட்ச நிலைகளைக் காணுகையில் நாம், “தெய்வம் என்ற ஒன்று இருக்கிறதா?” என்று ஐயப்பட வேண்டியவர்களாகின்றோம்.

இதற்கு ‘கல்கி’ அவர்கள் விளக்கம் தருகிறார்:

அன்னை ஒருத்தி. அவளுக்கு நான்கு குழந்தைகள். மூன்று குழந்தைகள் செம்மையாக இருக்கின்றன. அவற்றுக்கு நல்லஉணவு. ஒன்றுமட்டும் நோய்க்குழந்தை. இதற்கு வெறும் கஞ்சிதான் கொடுக்கிறாள். இதைக் கண்டு, தன் தாயைப் பாராபட்சமுள்ளவள் எனக்கருதினால், இது நோய்வசப்பட்ட குழந்தையின் தவறுதானே? குழந்தை சிற்றறிவு படைத்தது. தன் நிமித்தம் தன் அன்னைக்கு உள்ள அக்கறையும் அன்பும் அதற்குப் பொருள்படவில்லை.

கடவுளைப்பற்றிக் குறைகூறுபவர்களும் மேற்படி குழந்தையின் நிலையையே அடைகிறார்கள்.

கடவுளைப்பற்றி அறியும் ஆற்றலோ பக்குவமோ நமக்கு இல்லாவிட்டாலும், அல்லது அத்தகைய பண்பாடு நம்மிடையே வளரவில்லையென்றாலும், கடவுளிடம் நம்பிக்கை கொள்ள வேண்டும். இதுவே நம் மனம் அமைதியும் மகிழ்ச்சியும் பெறத்தக்க ஒரே வழியாகும்.

சீதா, ராகவன், சூர்யா ஆகிய மூவர்களுக்கும் மேற்சொன்ன தத்துவம் விளக்கமாக அமைகிறது!

விட்டகுறை - தொட்டகுறை

பன்னிரண்டு ஆண்டுகட்கு முந்தி ‘கல்கி’ அவர்களை நான் ‘பேட்டி’ கண்டபோது, அவரைச் ‘சகலகலா வல்லவர்’ என்று சுட்டியிருந்தேன்.

அவர் தொடாத பாத்திரம் இல்லை.

அவரது பாத்திரங்கள் தொடாத உள்ளம் இல்லை.

மகேந்திரர், மாமல்லர், சிவகாமி, பரஞ்சோதி, புலிகேசி, அருள்மொழி, நாகநந்தி, பார்த்திபன், விக்கிரமன் என்று வரலாற்றைப் பேசவைத்து, வரலாற்று உறுப்பினர்கட்குக் கலைநயம் நல்கி, காவியமேன்மை கொடுத்து, தமிழ் இலக்கியப் புகழ்ச் செல்வர்களாக ஆக்கிய பெருமையைப் புகழ்வதா?

திருடன் முத்தையனையும் கல்யாணியையும் புதிய கோணத்தில் பார்த்துச் சொல்லி நம்மையெல்லாம் விம்மி வெடிக்கச் செய்த விந்தையினைப் போற்றுவதா?

‘விதியின் எழுத்தைக் கிழித்தாச்சு - முன்பு

விட்டகுறை வந்து தொட்டாச்சு!’

இந்த ஒரு தத்துவமே ‘அலைஓசையின்’ உட்குரலாக அமைந்து பட்டாபி— லலிதா, மெளல்விசாகிப், கங்காபாய், ரமாமணிபாய், ரஸியாபேகம், அமரநாத், கிட்டா வய்யர், பத்மலோசன சாஸ்திரி, பங்காரு நாயுடு, சரஸ்வதி அம்மாள், துரைசாமி, ராஜம்மாள் போன்ற துணைப் பாத்திரங்களின் துணையுடன் தாரிணியும் சீதாவும் ராகவனும் சூரியாவும் நம் நெஞ்சில் நிலைத்துவிட்ட அதிசயத்தைச் சொல்லச் சொற்கள் எங்கே?

கல்கியின் தனித்துவம் பேசுகிறது!

அடிமை மண்ணில் தொடங்கிய கதை சுதந்தரக் கொடியின் சூழலில் முடிந்து, கொடிகட்டிப் பறக்கிறது.

பெண் விடுதலை, வர்ணாஸ்ரமதர்மம், ஈ. வெ. ரா.வின் நாத்திகப் பேச்சு, வேவல்துரையின் திட்டம், ஹிட்லர் முஸோலினி ஆகியவர்களின் போர்வெறி, வகுப்புவாதக் கலவரம், காந்தி அண்ணலின் ஆத்மசக்தி, நேதாஜியின் புரட்சித் திருப்பம்-இப்படி இன்னும் எவ்வளவோ விஷயங்களை மிகத் தெளிவாகச் சொல்கிறார் ஆசிரியர்.

‘அலைஓசை’யில் விரவிக்கிடக்கின்ற வரலாற்று நிகழ்வுகளுக்குக் கணக்கு வழக்கில்லை!

அவர் இன்று இருந்திருக்கவேண்டும் சூ-என்-லாயை வில்லனாக்கி பெரிய நவீனம் ஒன்றைச் சமைத்திருப்பார்! வானவெளிப்பெண் வாலண்டினாவும் அழகி கீலரும்கூட தப்பித்திருக்க மாட்டார்கள்!...

“புதினத்தின் ஆசிரியன், வாசகனைத் திருப்திப் படுத்துவதையே முக்கியமான குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.’’ என்பது ஸாமர்ஸ்ஸெட்மாமின் (Somarset Maugham) கொள்கை. 

இந்தச் சமுதாயப் பின்னணிச் சித்திரத்தில் (Social setting) புதிய பார்வையுடன் கூடிய வரலாற்றுப் பெருமை இழைந்த தேசிய விடுதலை இயக்கத்தின் கதையையே தம்முடைய கதைக்குப் பின்னணியாகக் கொண்டு தமது அதீதமான தனித் தன்மையினாலும் (Unusual individuality) ஆற்றல்மிக்க கற்பனைத்திறனாலும் (Powerful imagination) எழுதி, இந்தப் பெரிய நவீனத்துக்கு அமரத்வம் அளித்துவிட்டார் அமரர் கல்கி.

“The novelist must dramatise என்ற ஹென்றி ஜேம்ஸின் (Henry James) கொள்கையை முற்றும் பிரதிபலிக்கிறது. ‘அலை ஓசை’!

முகமூடி, பர்தா, தாடிமீசை, பாலசந்யாசி வேடம் போன்ற சாதாரணமான சாதனங்கள் ஒரு பிடிப்புடன் பயன்படுத்தப்படுகின்றன!

கல்கியின் தனித்துவம் (personality) அலாதி!

“சோலைமலை இளவரசி”யில் முற்பிறப்பு உணர்வைச் சித்திரிக்கும் ‘கல்கி’ அவர்கள் ‘அலைஓசை’யிலும் சீதா மூலம் மேற்படி தத்துவத்தைக் கையாளுகிறார்.

பிரெஞ்சு நாவலாசிரியர் அலெக்ஸாண்டர் டுமாஸ் (Alexander Dumas) அசல்— நகல் என்ற அளவிட்டு இரண்டு இரண்டு பாத்திரங்களைப் படைப்பதில் ஆர்வம் கண்டவர். ‘The man in the Iron Mask’ இதற்கு எடுத்துக்காட்டு.

இந்த ஆர்வம் நம் கல்கி அவர்களுக்கும் தழைத்தது போலும்!...‘சிவகாமியின் சபதத்’தில் நாகநந்தி-புலிகேசி! பொன்னியின் செல்வனில் மதுராந்தகன்-சேந்தனமுதன்! ‘அலைஓசையில்’ தாரிணி-சீதா!

“தமிழர்கள் நல்ல ஹாஸ்ய உணர்ச்சி உள்ளவர்கள். ‘இது ஹாஸ்யம்! இங்கே சிரிக்கவும்!’ என்று அவர்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. நுட்பமான ஹாஸ்யத்தைக்கூட இனம்கண்டு அனுபவித்துச் சிரிப்பதில் தமிழர்களுக்கு இணை யாருமில்லை!” என்கிறார் கல்கி.

நம்மைச் சிரிக்கச்செய்ய ‘அலைஓசை’யில் பற்பல உரையாடல்கள் காத்திருக்கின்றன!

வகுப்புவாதம், பிராந்தியமோகம், சாதிவெறி, மொழிவெறி போன்ற குறுகிய மனப்பான்மைகள் நம்மிடையே நிலவினால், கேடு விளையும். ஆகவே நாம் தேசீய ஒருமைப்பாட்டுணர்ச்சியுடனும் ஒன்றுபட்ட தேசிய விழிப்புணர்வுடனும் இருக்கவேண்டும்!” என்று அவ்வப்போது நேருஜி நமக்கு அறிவுறுத்தி வருகிறார் அல்லவா?

ஆம்; பாரதப்பிரதமரின் இந்த இலட்சியக் கனவுக்கு கனவின் இலட்சியத்திற்கு ‘அலைஓசை’ ஓர் உரைகல்!

 2. குறிஞ்சி மலர்

—நா. பார்த்தசாரதி—

தத்துவங்களிலே வாழும் பிறவி அரவிந்தன்; அச்சுக்கூடப் பொறுப்பாளன்; பதிப்பக அலுவலாளன்; ஆலவாய்த் திருநகரிலே, தமிழ்ப் பேராசிரியர் திருச்சிற்றம்பலத்தின் மகள் பூரணியின் கனவுக்குக் கருவாகிறான் அவன்.

ஒரு நாள் வெயிலின் வெம்மையிலே மயங்கி பசியின் வேகத்திலே துவண்டு மதுரை முச்சந்தியிலே விழுந்தாள் பூரணி! பிறந்தது கவிதை அரவிந்தனின் நெஞ்சினிலே. அந்தக் கவிதைகள் நிரம்பிய குறிப்பேடு ஒன்று அரவிந்தனுக்கு உயிர் தருகிறது. ஒட்டும் இரண்டுள்ளத்தின் மற்றோர் உயிரோ! தந்தையின் மறைவும் வறுமையின் பிடியும் புடம்போட வேலை தேடி அலைகிறாள் பூரணி. மாதர் சங்கத்து வேலை கிடைக்கிறது. மங்களத்தம்மாள் என்ற பணக்காரியின் உதவியிலே தந்தை தமிழ்ப் பேராசிரியரின் நூலை வெளியிடப் பதிப்பகம் காணும் முயற்சியிலே வலிய வருகிறான் அரவிந்தன். 

பிணக்கு ஏற்படுகிறது. நூல் வெளியிடும் உரிமை தரத் தயங்குகிறாள் பூரணி. கோபம் வருகிறது அரவிந்தனுக்கு. ‘நீங்கள் வெயிலின் வெம்மையால் கீழே விழுந்தால் அதற்காக ஊரெல்லாம் பிணை என்று எண்ணிச் சீற வேண்டியதில்லே’ என்று கூறிப் புறப்பட்டு விடுகிறான். அவன் போய்விட்ட இடத்தில், அரவிந்தன் மறந்து விட்டுச்சென்ற அவனுடைய குறிப்பேடு கிடக்கிறது. அக் குறிப்பேடு அவளைப் போலவே மற்றொருவன் இவ்வுலகில் இருக்கிறான் என்பதைக் காட்டிவிட்டது. இரு மனங்களும் ஒரு மனம் ஆவதற்கு இயற்கை பின்னணி ஒவியம் தீட்டுகிறது.

நாடும் ஏடும் போற்றும் பேச்சாளராகி விடுகிறாள் பூரணி. இலங்கை முதலான வெளிநாடுகளுக்கும் அழைப்பு வருகிறது பூரணிக்கு. அரவிந்தன் செயலில் ஈடுபடுகிறான்; சமூகச் சீர்திருத்தங்கள் செய்கிறான்.

“பூரணி! நீ மலைமேலே ஏறிக்கொண்டே போகிறாய்; நான் தொடர்ந்து வந்தபடியே இருக்கிறேன். ஆனாலும் உன்னை எட்டிப் பிடிக்காமல் பின்தங்கியே நிற்கிறேன்!” என்று சொல்லித் தன் குறைவு மனப்பான்மையைக் காட்டிக்கொள்ளுகிற அளவுக்கு இருக்கிறான் அரவிந்தன்.

திருமணம் உறுதிப்படுத்துகிறார்கள் - பூரணிக்கும் அரவிந்தனுக்கும். வெட்கத்தோடு உடன்படுகிறாள் பூரணி ஆனால், பாவம், அரவிந்தன் தன் கொள்கைகளையும் தத்துவங்களையும் எண்ணித் தன்னை மென்மையாக்கிக் கொண்டு “திருமணத்துக்கு இப்போதென்ன அவசரம்?” என்கிறான். எல்லோரும் போய் விடுகிறார்கள்.

சாதனைகளில் இறங்குகிறான் அரவிந்தன். சூழ்நிலை. ஒப்பவில்லை. ஆயினும் தொடர்ந்து சேரித் தொண்டு, சீர்திருத்தம் என்று ஓயாது அலைந்துகொண்டிருக்கிறான்.

கடும் காய்ச்சல்;சாவின் வாசலிலே நிற்கிறான் அரவிந்தன். சொற்பொழிவிற்குச் சென்றிருந்த பூரணியோ மற்றவரோ அறிய முடியாத திருப்பத்தில் - சாவின் திருப்பத்தில் நுழையப் பார்க்கிறான்; நுழைந்துவிடுகிறான்.

பூரணி, திலகவதி...!

மூன்று பொருள்கள்

இலட்சியங்கள், இலட்சியங்கள் என்று வாய்ப்புக்கிட்டும் பொழுதெல்லாம் நாம் மறக்காமல்-மறைக்காமல் முழங்கி வருகிறோம் அல்லவா?-அந்த இலட்சியங்கள் என்றால் என்ன அர்த்தம்...? அவை எங்கிருந்தாவது இறக்குமதியான அயல்நாட்டுச் சரக்கா? ஞானத்தை எல்லைக்கோடாகக் கொண்டவர்களும் சரி, ஞானத்தின் எல்லையினை அடைந்தவர்களும் சரி, இவர்கள் அனைவரையும் புள்ளி போட்டுப் பார்த்தால், மனிதப்பிறவி கொண்டவர்கள் எல்லோருமே இலட்சியமுழக்கம் செய்கிறார்களே?-அப்படியென்றால், இப்படிப்பட்ட லட்சிய பஜனை செய்பவர்கள் மட்டும்தான் மனிதர்களா?-இல்லை, மனிதர்களுள் மனிதர்களா?

ஒர் உண்மையை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

இவ் வுலகின் கண் யாருடைய கண்ணேறுக்கும் கண் சாயாமல், மிகவும் எளிதாகக் கிடைக்கக் கூடிய பொருள்களிலே தலையிடம் பெறுபவை மூன்று: ஒன்று: கேள்வி; இரண்டு: குறை சொல்லல்; மூன்று: உபதேசம்.

கேள்வி என்றால், அதன் குறிக்கோள், விடையை எதிர்பார்க்கும். ஆனால் நம் அருந்தமிழ் நாட்டிலே கேள்வி என்றால், விடை என்ற ஒன்று இருப்பதாகவோ, அல்லது இருக்கவேண்டுமென்று கருதவோ, அல்லது கருதத் துணிவுகொள்ளவோ மறுக்கிறார்கள்; அன்றி, மறந்துவிடுகிறார்கள். இந்த மகானுபாவர்கள், தாம் வாணவெளிப் பயணம் அனுப்பிய கேள்விக் கணைகளின் விண் எட்டும் பெருமையில் மட்டுமே நின்று நிலவிப் புகழ் பூத்து, புன்னகை பூத்துத் திரிய விழைகிறார்கள். இவர்களுடைய இலட்சியம், தாம் அனுப்பும் வினாக்களுக்குத் தம்மிடமிருந்து விடையை எதிர்பார்ப்பதோ, விரும்புவதோ, விரும்பத்தக்கதல்ல என்பதாகும். இந்த அப்பாவி மனிதர்களின் மனப் பலவீனங்களின் குறை என்ன தெரியுமா?-இவர்கள் கேள்விகளை மட்டுமே கேட்டுவிட்டு, தங்களைப் ‘பெரிய மனிதர்’களாக ‘வேஷம்’ போட்டுக் காண்பிக்கும் இலட்சியமற்ற, இலட்சியப் பிண்டங்கள்! இவர்கள் கோலம் இட்டுக்காட்டும் கேள்விகளின் சுற்றுவடிவத்தில் ஐயம் எங்கேனும்-எப்படியேனும் பிசிறுதட்டிக் காணப்பட்டால், விளைந்தது வினை!-பயப்பட்டு விடாதீர்கள்; காலவினை ஏதும் கிடையாது!-இந்த இலட்சிய தாசர்கள் தம்வசம் சுருட்டி வைத்திருக்கின்ற ‘குற்றம் சொல்லல்’ பட்டியலைக்கொண்டு வெறும் தத்துவங்களைச் சரமாரியாக ஒப்பிக்க-ஒப்புவிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

இந்த புண்ணியாத்மாக்கள்தாம் சகலகலா வல்லவர்களாம்!

இவர்கள் கையினால்தான் இலக்கியம் பால்-பவுடர் பால் உண்ணுகிறதாம்!

இவர்கள் அன்றிருந்து சொல்லிக்கொண்டிருக்க வில்லையா?

நாமும் இன்றுவரை கேட்டுக்கொண்டிருக்க வில்லையா ?

சிந்தனைச் சீர்திருத்தக்காரர் இந்த கோல்ரிட்ஜ், அவர் சொன்ன ‘வெள்ளை மொழி’ ஒன்று என் பேனாவின் வழியை மறிக்கிறது.

“பொதுவாக, விமரிசகர்கள் என்பவர்கள் அனைவருமே தம்மால் முடிந்திருந்தால், கவிஞர்களாகவோ, சரித்திர ஆசிரியர்களாகவோ ஆகியிருக்கக்கூடியவர்கள் தாம். அவர்கள் தங்கள் திறமைகளைப் பல்வேறு துறைகளிலும் சோதனை செய்து பார்த்துத் தோல்வி கண்டுவிட்டார்கள். எனவேதான், அவர்கள் விமரிசகர்கள் ஆகிவிடுகிருர்கள்.

‘வாலிபனும், வாலிபியும்’

க. நா. ச. அவர்களைப்பற்றி உங்கள் அனைவருக்கும் துல்லியமாகத் தெரியும் ‘குறிஞ்சிமலர்’ பற்றி அவர் ஒரு விமர்சனம் எழுதியிருக்கிறார். அதன் தொடக்கம் இவ்வாறு அமைகிறது:

“டைரி எழுதுகிற லட்சிய வாலிபனும், தெருவில் கார் மோதி மயங்கி விழுகிற லட்சிய ‘வாலிபி’யும் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்குமோ, அதுதான் நடக்கிறது ‘குறிஞ்சி மலரி’ல், காதல் பிறக்கிறது; ஆனால் இருவரும் லட்சிய ஜன்மங்கள் ஆயிற்றே! காதல் பூர்த்தியாகலாமா?”

“பூரணியையும் அரவிந்தனையும் வைத்து ‘மணி வண்ணன்’ (அல்லது நா. பார்த்தசாரதி) 560 பக்கங்கள் எழுதியிருக்கிறார், வளவளவென்று அடிக்கொருதரம் ஆச்சரியக் குறியிட்டு, பக்கத்துக்கு நாலுதரம் வாசகர்களைக் கிள்ளி அழவிட்டுக்கொண்டு, தானும் அழுது கண்ணிர் வரவழைத்துக் கொண்டு எழுதியிருக்கிறார். ஐம்பது பக்கத்தில் முடித்திருந்தால், முதல்தரமான கதையாக இல்லாவிட்டாலும், சுமாரான கதையாக இருந்திருக்கும். ஐநூறு பக்கத்தில் தமிழ் நாட்டின் சாதாரணத் தொடர்கதையாக, வாசகர்களுக்கு மிகவும் விருப்பமான தொடர்கதையாக உருவாகியிருக்கிறது.”

மதிப்புக்குகந்த க. நா. சு. நான் சொன்ன அந்த மூன்று குணநலன்களைக் கோட்டைவிட்டு விடுவாரா? மாட்டார், மாட்டவே மாட்டார்!...

பிறப்பு என்பது பொய்

பிறப்பு என்பது பொய்; இறப்பு என்பது மெய்.

இந்தப் பொய்யும் இந்த மெய்யும் பொய்ம்மையின் விளையாட்டாகவும், மெய்ம்மையின் விளையாட்டாகவும் ஆகி நிற்பதுதான் வாழ்வு. இவ்விதமான வாழ்வின் முதல் ஆட்டத்திற்குக் கதாநாயகனாக அப்பாவி மனிதனும், இறுதிக் கூத்திற்குக் கதைத் தலைவனாக அலகிலா விளையாட்டுடையானும் வேடம் புனைந்துகொண்டு நாடகம் ஆடுகின்ற காலவரையறையின் இடைப்பகுதியில் பற்பல சோதனைகளும் விளையாடத் தொடங்குகின்றன. இச்சோதனைகளைச் சாதனைகளாக்க மனிதன் கனவு காண்கிறான். இந்தக் கனவுக்குப் பல பெயர்கள் உண்டு. அவற்றுள் ஒன்றுதான், இலட்சியம். மற்ற மக்களின் கண்ணோட்டத்தில் தன்னை ‘சாதாரண மனிதன்’ என்ற கட்டத்தினின்றும் உயர்த்த வேண்டுமென்று கொள்கிறான் மனிதன். கொள்கை வெறியாகிறது; வெறி அவனுள் இலட்சியக் கோட்டையையே உருவாக்கி விடுகின்றது. ஆனால், இந்தக் கோட்டை, கொள்கை ததும்பும் அம்மனிதனைக் கட்டிக் காக்கிறதா? அதுதான் இல்லை!...

இந்த ‘இல்லை’ என்னும் விடையில்தான் வாழ்க்கையின் ‘ஆமாம்’ என்கிற முத்தாய்ப்பு இருக்கிறதோ?

இந்த இலட்சியங்கள்

ஒன்றைச் சொல்ல வேண்டும்.

வாழ்வு ஓர் இலட்சியம்; அதுவேதான் தத்துவமும் கூட. இவ்வகைப் பண்பு கொண்ட இலட்சியத் தத்துவத்தின் குறிக்கோள்கள், வளமார்ந்த இந்தத் தெய்வத் தமிழ்த் திருநாட்டிலே ‘விதை நெல்’ மணிகளாகப் போற்றப்பெற வேண்டுமென்றே அன்றைய பெரியார்கள் கனவு கண்டார்கள். அந்தக் கனவுகள் லட்சியசித்தி பெற்றனவா? ‘ஒரு சிலரை’ப்போல, நானும்தான் கேள்வி தொடுக்கிறேனே என்று முகத்தைச் சுளித்துக்கொள்கின்றீர்களா? என் கேள்விக்கு விடை சொல்ல எனக்குப் பயிற்சியுண்டு; பக்குவமும் உண்டு. -

வெறும் கண்ணாடி பீரோக்களிலே வைத்துச் சோடித்து, அழகு பார்த்து அனுபவிக்கப் பயன்படும் வார்த்தை ஜாலங்கள்தாம் இந்த இலட்சியங்கள்!...

மதுரையில் பூரணி

‘குறிஞ்சிமலர்’க்கதை சாதாரணமானது. ஏனென்றால், அது சாதாரணமான மக்களைச் சுற்றியே செல்கிறது; சொல்கிறது! அது மட்டுமா?

சாதாரண மனிதர்களென்றால், அதற்காக, அவர்களிடம் காணப்பெறும் மனங்களும் ஆசைகளும் அபிலாஷைகளும் சாதாரணமாகவேதான் இருக்க வேண்டுமென்று நியதி ஏதும் பாடம் கற்பித்துக்கொடுக்க வில்லையே?

பூரணி என்று அவளுக்குப் பெயர். அவள் மானுடப் பிறவி, மனிதப் பிறப்பெனில், சாதாரணமாகத்தான் இருந்தாக வேண்டும். ஆயினும், அவள் அசாதாரணமானவள். ஆமாம், அப்படித்தான்!

‘பூரணி துளசிச் செடி போன்றவள். முளைக்கும் போதே மணந்தவள். துளசியைப்போல் அகமும் புறமும் தூய்மையானவள், புனிதமானவள், உள்ளும் புறமும் தமிழ்ப் பண்பு என்னும் மணம் கமழுகிறவள். துன்பங்களை வரவேற்று ஆள்கிற ஆற்றல் அவளுக்கு உண்டு. 

பிறந்த மண்: மதுரை.

திருவிளையாடற் புராணத்தில் மதுரைத் திருககரைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு பேசப்படுகிறது:

மங்கலத்தை இடையறாது பூண்ட பாண்டிய நாடாகிய பெண்ணுக்குப் புறத்திலிருக்கும் நகரங்களெல்லாம் வளையல்கள் அசைகின்ற கைகள், தோளிணைகள், பெரிய தனங்கள் முதலாகிய உறுப்புக்களாம்.பெண்ணின் அத்தன்மையுள்ள பெருமை பொருந்திய முகமாகிய நகரம் திருவாலவாய், இது இரத்தினங்களின் நடுவிலிருக்கும் பதக்கத்தின் பெரிதாகிய நாயக ரத்தினத்தை ஒப்பதாம். இந் நான்மாடக் கூடல் திருமகளுக்கு ஒரு செந்தாமரைக் கோயிலாகவும், திருமால் மருமகளான சரஸ்வதிக்கு வெண்டாமரை ஆலயமாகவும், ஞானந் தரும் சிவசக்திக்கு ஒப்பற்ற யோகபீடமாகவும், பெருமை பொருந்திய பூமி தேவிக்கு நெற்றித் திலகமாகவும் விளங்குகின்றதாம்!

இத்துணை பீடுபெற்ற மதுரையம்பதியில் தான் தமிழ் வாழ்ந்தது. வாழ்ந்த தமிழுக்கு வாழ்த்துத் தரும் வகையில் அழகிய சிற்றம்பலம், அழகிய சிற்றம்பலம் என்ற நா மணக்கும் நாமம் பூண்ட பேராசிரியர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய அன்புத் திருமகள்தான் பூரணி, காலமெனும் மணல் வெளியில் தாம் பதித்துப் பிரிந்த அடிச்சுவடிகளைச் சேமநிதியாக்கிய பெருமையுடன் அழகிய சிற்றம்பலம் புகழுடம்பெய்திவிட்டார். அவர் விடுத்துச் சென்ற பாததூளிகளிலே தமிழ் மணந்தது. அதுமட்டுமன்று தமிழ் பேசியது. அத்தகைய ‘தமிழ்’ வளர்த்த செல்வப் புதல்வி பூரணி. அவள் அறிவின் திருவுருவம். அறிவு மட்டும் இருந்தால், இந்த விண்வெளிக் கப்பல் விளயாட்டு யுகத்தில் பெண் முழுமை எய்திவிட முடியுமா, என்ன?-அழகி அவள். அவளுடைய எழில் நலம்பற்றிக் கொஞ்சம் கேட்கிறீர்களா?

‘மஞ்சள் கொன்றைப் பூவைப்போன்ற அவளுடைய அழகுக்கே வாய்த்ததோ என ஒரு நிறம். திறமையும் அழகுணர்ச்சியும் மிக்க ஓவியன் தன் இளமைப் பருவத்தில் அனுராகக் கனவுகள் மிதக்கும் மனநிலையோடு தீட்டியது போன்ற முகம். நீண்டு குறு குறுத்து மலர்ந்து அகன்று முகத்துக்கு முழுமை தரும் கண்கள்; எங்நேரமும் எங்கோ, எதையோ எட்டாது உயர்ந்த பெரிய இலட்சியத்தைத் தேடிக்கொண்டிருப்பது போல் ஏக்கமும் அழகும் கலந்ததொரு வனப்பை அந்தக் கண்களில் காணமுடியும். வாழ்க்கை முழுதும் நிறைவேற்றி முடிப்பதற்காக மகோன்னதமான பொறுப்புக்களை மனத்துக்குள் அங்கீகரித்துக் கொண்டிருப்பதுபோல் முகத்தில் ஒரு பொறுப்பின் சாயல். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, இந்த நாட்டுப் பெண்மையின் குணங்களாகப் பண்பட்ட யாவும் தெரியும் கண்ணாடிபோல் நீண்டகன்ற நளின நெற்றி. பூரணியைப்போல் பூரணியால் தான் இருக்கமுடியும் என்று நினைக்கும்படி விளங்கினாள் அவள்!...’

ஒரு நாள்:

சித்தம் ஏந்திய ஆயிரம் சிந்தனைகளுடன், சிந்தனைகள் ஏந்திய ஆயிரமாயிரம் கவலைகளுடன் பூரணி கடந்து கொண்டிருந்தாள். அது ஒரு நாற்சந்தி, ஏமாற்றம், பசி, கடமை, துயர் ஆகிய உணர்வுகளுக்கு அவள் மனமே ஒரு நாற்சந்தி. இப்படிப்பட்ட வேளை கெட்ட வேளையில்தான் அந்த முல்லைக்கொடி அறுந்து விழுந்தது. 

பெண் ஒருத்திக்குத் துன்பம் வந்தால், கவிகளுக்குப் பொறுக்காதாம்! பூரணி விபத்துக்குள்ளானதைப் படம் பிடிக்க ஒரு புகைப்பட நிபுணன் வரவேண்டாம், கடைசிப் பட்சமாக, கவிஞன் யாராவது வரக்கூடாதா?

நம்பிக்கைகள் எப்போதும் வீண் போவதில்லை.

வாழ்க்கையையே விபத்தாகக் கருதிவிடும் அளவிற்குத் துணிவு பெற்றவள் பூரணி. அவள் மயங்கி விழுந்த நேரத்தில், அவளுடைய அரவிந்த முகம் கண்டு பாட்டுப் புனய அங்கே கவி ஒருவனும் இருந்தான். அரவிந்தன் என்பார்கள். அவனும் பூரணிக்கு இணையான ஓர் இலட்சியப் பித்தன். பாட்டு மட்டுந்தான் பாடத் தெரியுமென்தில்லை; அவன் ‘மீனாட்சி அச்சகத்தின்’ உயிர்நாடி மட்டு மல்லன்; சிந்திக்கப் பழகிய புள்ளி. உயர்ந்த கோபுரங்களைக் காணும்போதெல்லாம் அவனுக்குத் தாழ்ந்த உள்ளங்களும் நினைவில் முனை காட்டும். அவனுக்குத் தன்னைப் பற்றி அக்கறை கொள்ளத் தெரியாது. ஆனால், தான் ‘அவதரித்த’ தாய்த் திருநாட்டைப்பற்றி இருபத்து நான்கு மணி நேரமும் கவலைப்படத் தெரிந்து வைத்திருந்தான். தொட்டதற்கெல்லாம் பொன்மொழிகளாகக் கொட்டித் தள்ளுவான்; தொடாதவற்றிற்கு இருக்கவே இருக்கின்றன, நாட்குறிப்புத் தாள்கள். ஆக, அவன் ஒரு தனிப்பிறவி. கபிலர் அறிவுரை அனுப்பியதற்கேற்ப ‘இளமையை மூப்பென்று’ உணரத் தலைப்பட்டானோ, என்னவோ? ஆனால் அவனைப்பற்றி ஒன்றை உறுதி செய்ய முடிகிறது. இவன் நொடிக்கு நூறு கேள்வி கேட்கிறான்; வாய்ப்பு முகமன் கூறுமிடத்தே, சமுதாயத்தின் மீது குற்றப்பத்திரிகை படிக்கிறான்; எஞ்சிய நேரத்தில், தத்துவ போதனைகளை அர்ப்பணிக்கிறான்! எமர்ஸன் வருணிக்கும் ‘காலமே செயல்; செயலே காலம்’ என்ற அடிப்படைக் கொள்கைக்கு அவன் மட்டும் உடன்படாமல் இருக்க முடியுமா? எது எப்படியிருந்தாலும், விரிந்த வானை முட்டுகிற அளவுக்கு, விரிந்த கனாக்களை விரிய விட்டான் அவன். ‘இளமைப் போதில் நாம் எவற்றை விரும்புகிறோமோ, அவை நம் முதுமைப் பிராயத்தில் நம்மை அணையும்’ என்கிறான் மேதை கோத்தே (Goethe). இவ்வுண்மை நிலை அரவிந்தனையும் சாலப் பொருத்தும், ஆனால்...பாவம், அவன்!...சரி, கதையைக் கவனிப்போம்!

பிறிதொரு நிகழ்ச்சி:

பூரணிக்கும் அப்போது ஒரே கசப்பான மனநிலை. ‘உலகத்தில் அத்தனை பேரும் ஏமாற்றுபவர்கள்; அத்தனை பேரும் பிறருக்கு உதவாதவர்கள்’ என்கிற மாதிரி விரக்தியும் வெறுப்பும் கொதித்துக் கொண்டிருந்த சமயம். புது மண்டபத்துப் புத்தக வெளியீட்டாளரின் மேலிருந்த கோபம் அவளிடமிருந்து விடைபெறாத சமயத்தில், அங்கே வந்து சேர்ந்தான் அரவிந்தன். தமிழ்ப் பேராசிரியரின் புத்தகங்களை வெளியிட வேண்டுமென்ற ஆர்வத் துடிப்புடன் வந்த அவனுக்கு பூரணி உரிய வரவேற்பைக் கொடுக்கவில்லை. கசப்பைக் கக்கவும் தவறவில்லை அவள். கன்னி மனத்தைக் கண்டறிந்த நிலையில் அவன், “இன்னொரு சமயம் வருகிறேன். நீங்கள் தெருவில் மயங்கி விழுந்து விட்டால், அதற்கு உலகமெல்லாம் புணை என்று நினைத்துச் சீறவேண்டியதில்லை,” என்று சொல்லிப் புறப்பட்டு விட்டான். அவன் அங்கிருந்து புறப்பட்டானேயொழிய, அவனுடைய நோட்டுப் புத்தகம் அவனுடன் வழி நடக்கவில்லை. அதை மட்டும் அவள் படித்திருக்காமற் போயிருந்தால், அவள் அவனைப் படித்திருக்க வாய்த் திருக்குமா? 

வாழ்க்கை என்பது உயிரும் உடலும் கொண்ட மனித பிண்டம், பார்க்கும் அல்லது காட்டும் முகக் கண்ணாடி மட்டுமன்று. உள்ளத்தின் உணர்வுகள் தலைமைப் பாத்திரங்கள் ஏற்று நிகழ்த்தும் ஒரு கூத்து. அந்தக் கூத்திற்கு இங்நிலையொத்த வாய்ப்புக்கள்தாம் சூத்திரக் கயிறுகளாக முறுக்கேறி, வாழ்க்கை எனும் ஜீவ தத்துவத்திற்கு ஊட்டமும் ஓட்டமும் அளிக்கின்றன. விட்ட குறை-தொட்ட குறையின் விளை பலன்களோ அல்லது, இவ் விளைபலன்களின் சாகசப் போக்குகளோ, அன்றி, இவற்றின் சார்புச் சூழலின் சாயல்களோதாம் வாழ்வாகவும், வாழ்வின் விதியாகவும் பரிமளிக்கின்றன.

இப்படிப்பட்ட நியதி பூரணியையும், அரவிந்தனையும் மாத்திரம் கட்டுப்படுத்தாமல் இருக்க முடியுமா? இருக்கக் கூடுமா? .

‘காரணமோ, தொடர்போ புரியாமல், அதை யடுத்தாற்போல மாலையில் தேடிவந்தானே, அந்த இளைஞனின் முகம் அவள் நினைவில் படர்ந்தது. இனிப்பு மிட்டாயை யாரும் அறியாமல் சுவைக்கும் குழந்தையைப்போல ‘அரவிந்தன்’ என்று மெல்லச் சொல்லிப் பார்த்துக்கொண்டாள் அவள். அப்படிச் சொல்லிப் பார்ப்பதில் ஒரு திருட்டு மகிழ்ச்சி இருந்தது. கள்ளக் களிப்பு இருந்தது; சொல்லித் தெரியாத, அல்லது சொல்லுள் அடங்காத சுகம் இருக்தது!’

இந்த மகிழ்ச்சி, களிப்பு, சுகம் ஆகிய இனிய உணர்வுகள் தாம் ‘குறிஞ்சி மலரின்’ வாழ்வியல் கதைக்கே மூச்சிழைகள்!

இன்பத்தின் முடிவுக்குத்தான் இன்பம் தொடங்குகிறது போலும்! 

தியாகத்தின் இட்சணமும் இலட்சியமுமே 'சுகம்' என்ற பண்பட்ட பண்பாட்டுணர்ச்சியின் பால் அமைந்த அமைக்கப்பட்ட செயலே அல்லவா? -

இல்லையென்றால், இறுதிக் கட்டத்திலே, அவள் முகத்தில்-அமரன் அரவிந்தனுக்கே உடைமையாகிவிட்ட அந்தத் தமிழ்ப் பெண் பூரணியின் வதனத்தில்-உலகமெல்லாம் தேடினும் கிடைக்காத ‘சாந்தி’ நிலவ முடியாதே!...

திருமணமாகாத விதவை

பூரணி ஆரம்பித்துவைக்கின்ற ‘குறிஞ்சி மல’ரை அரவிந்தன் முடித்துவைக்கின்றான்.

இந்தப் புதினத்தில் ஒன்றை மட்டும் தெளிய முடிகிறது. இதன் கதை சிறிது; பக்கங்கள் அதிகம்.

நாயகன்: அரவிந்தன்.

நாயகி: பூரணி.

கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். ஆனால் வாயைத் திறக்கமட்டும் மறந்துவிடலாகாது!

இவ்வளவு பக்கங்களைச் சாப்பிட்ட இக்கதையின் கதை என்ன? அது இதுதான்: 1. சந்திப்பு. 2. மனப் பிணைப்பு: 8. பிரிவு. 4. மீண்டும் மனவாழ்வு. 5. சுபம்.

பூரணி யார்?

அவள் திருமணமாகாத விதவை (The un-married widow)

அரவிந்தன் யார்? 

அவன் ஓர் இளைஞன். இளமையில் முதுமைபெற்ற மனத்தைக் கொண்டவன். இலட்சிய மணம் நுகர்ந்து லட்சிய மணத்தைப் பரப்பக் கனவு கண்டவன். மணவாழ்வு மேடை அமைக்கக் காத்திருந்தும், இணங்க மறுத்தவன். தன்னக் கீழே தள்ளிவிட்டுத் தொடரமுடியாத உயரத்துக்குப் பூரணி போய்விட்டதாகக் கற்பனை செய்து, அந்த ஒரு முடிவிலையே தன் முடிவையும் எழுதி வைத்துக் கொண்டவன் போன்று வாழ்ந்த அற்ப ஆயுள்காரன் அவன். மனித மனங்கள் உருவாக்கிக் காட்டிய பலஹீனங்களின் கூட்டுச் சுமையினை தான் ஒருவனே தாங்க வேண்டுமென்று கருதியவனுக்கு நேராக நடந்தவன்; நடக்கக் கனவு கண்டவன். கடைசியில் அவனே கனவாகிப் போய்விட்டான்!

அரவிந்தன் ஓர் இலட்சியப் பிண்டம்!

திர்ப்புக் கட்டம்:

அரவிந்தனையும் பூரணியையும் எடை போட்டுப் பார்க்கின்றேன். பூரணியின் முழு வாழ்வை நிறுவை செய்து பார்க்கும் எனக்கு அரவிந்தனை ஏறெடுத்துப் பார்க்கப் பயமாக இருக்கிறது. ஏன் தெரியுமா? அரை குறையாக நின்றுவிட்ட வளர்கதையாகிப் போன அரவிந்தனின் உயிர்க் கூட்டைத்தான் என்னால் தரிசிக்க முடிகிறது. அவனது ‘உயிர்ப் பறவை’ அவ்வளவு சடுதியில் ஏன் பறந்தது?

“அரவிந்தன் சாகவில்லை!” என்று நா.பா. அவர்கள் பரிந்து பேசுகின்றார்,

‘ஆமாம், உண்மையிலேயே அரவிந்தன் சாகடிக்கப் படாமலிருந்திருந்தால்...?’ 

‘அரவிந்தன்’ எனும் திண்மை மிக்க-குறிக்கோள் கொண்ட-கற்றுத் தேர்ந்த இந்தப் பாத்திரம்,என் முன்னே உருவாகிக் காட்டவல்ல தொரு முடிவினையும் நான் ஆராய்ந்து சிந்திக்கின்றேன். இமை வரம்புகளில் சுடுநீர் வரம்புகாட்டுகிறது. உண்மை சுடாமலிருக்காதாம்!

1925–1961

க. நா. சு. அவர்கன் இதோ, மீண்டும் திருவாய் மலர்ந்தருளத் தொடங்கிவிட்டார்:

“...1925 வாக்கிலே எழுதப்பட்டிருந்தால், தமிழிலே இதையும் ஒரு நல்ல நாவலாகச் சொல்லியிருக்கலாம். 1961ல் வெளிவருகிறதே?-என்ன செய்வது?...”

கால வித்தியாசம்

அன்பர் க.நா.சு. அவர்கள் ‘காலவித்தியாசம்’ காரணமாகத்தான், காலத்தைப்பற்றிக் கணிப்பதில் அடிக்கடி ஈடுபாடு காட்டி வருகிறார் காலம் என்பது பொற்கனவு. இன்றைய நிலையில் நின்று, நேற்றைய தினத்தைப்பற்றி நினைப்பவனின் நோக்கிற்கும் நோக்கத்திற்கும் காலம் ஒர் எழிற்கனவுதான்; அதே அளவில், இன்றைய நிலையில் லயித்திருந்து நாளையப் பொழுதைப்பற்றிச் சிந்திப்பவன், எதிர்காலத்தை கற்கனவாகச் சித்திரித்துக் கனவு காண்கிறான். கனவு காண்பது அவரவர்களின் மனத்தைப் பொறுத்தது. அதற்காக,—அதாவது அவரவர்கள் கனவுகள் அல்லது குறிக்கோள்கள், அல்லது மனக் குறிப்புக்கள் திட்டம் வகுத்துத் தாண்டும் அமைப்புக்குத் தக்கவாறு, காலம் மாறுவதற்கோ அல்லது காலத்தை மாற்றுவதற்கோ, இயற்கையின் நியதி, இவர்களின் தாலாட்டுப் பொம்மையல்ல. இதே கணிப்புக் கண்ணோட்டத்தில் இலக்கியம் ஒயிலோடு நிழலாடுகையில், ஒன்றை நாம் முடிவுகட்டத் தவறலாகாது. காலத்தைக் கடந்து நிற்கும் வல்லமைபெற்ற இலக்கியச் சிருஷ்டிகளைப் படைத்தவர்கள்-படைப்பவர்கள் அனைவருக்கும் எப்போதுமே ஓர் ‘இலக்கிய அந்தஸ்து’வாய்க்கும். இந்த மதிப்பை க. நா. சு. போன்றவர்களின் திருக்கரங்களாலோ, அல்லது, திருவாய்மூலமாகவோதான் கொடுக்கவேண்டுமென்று யாரும் ‘விதி’ அமைத்துக் கொடுக்கவில்லை. நமக்கும் அப்படிப்பட்ட ‘தலைவிதி’ ஏதும் கிடையாது.

“1925 வாக்கிலே எழுதப்பட்டிருந்தால், தமிழிலே இதையும் நல்ல நாவலாகச் சொல்லியிருக்கலாம். 1961-ல் வெளி வருகிறதே-என்ன செய்வது?” என்று நகைச் சுவைக் கூத்தோடு இலக்கியத்தின் சார்பில் ‘வக்காலத்து’ வாங்கிக்கொண்டு அங்கலாய்க்கிறார் க. நா. சு. இவரது ‘மதிப்பிற்குரிய’ கருத்துப்பிரகாரம் பார்த்தால்கூட, 1925-ல் நல்ல காவலாகச் சொல்லப்படும் ஒரு நவீனம் 1961-ல் வெளிவருவதால் ‘சோடை’ போய்விடுமா? இல்லை, போய் விடலாமா? போய்விடமுடியுமா? 1925-க்கும் 1961-க்கும் இடைப்படுகின்ற இந்தக் கால நடுவெளியில் இவர் ‘சூட்சுமம்’ வைத்துப் பேசும் அளவுக்கு ‘இலக்கிய வியவகாரம்’ தமிழ் மண்ணில் அப்படி என்ன. அவசரரீதியில் நடந்து தொலைத்திருக்கிறது? தமிழ் இலக்கிய ரசிகப்பெருமக்களிடையே ஒரு நாவல். நன்மதிப்புப் பெறுமென்றால், அது 1925-ஆம் ஆண்டானல் என்ன? 1961 ஆனால் என்ன? 

நம் க.நா.சு. இருக்கிறாரல்லவா, அவருக்கு இந்த வருஷ எண்களிலே எப்போதுமே ஒரு ‘கிறக்கம்’ உண்டு. 1945, 35 அப்படி, இப்படி என்று வருஷத்தை வரம்பறுத்து, கனகச்சிதமான எடை காட்டுமென்று விளம்பரப் படுத்திவரும் தம்முடைய இலக்கியத் தராசில் தமிழகத்தின் இலக்கியப் பிரம்மாக்களைத் தூக்கிப் பிடித்து நிறுத்தி இடைகட்டி, எடைபோட்டு, பிறகு சாங்கோ பாங்கமாகத் தம் ‘அருமை பெருமை’ மிகுந்த கருத்துரைகளை விளாசித்தள்ளுவார். இத்தகைய போக்கில்தான், முன்பொருமுறை ‘நாவல் தேக்க’த்தின் பிரதம எஞ்சினீயராகவும் இடைக்காலப் பதவியை ஏற்றார்.

இவருக்கென ஒரு ‘கூட்டம்’ (Gang) உண்டு; புகழுவார்; இவர்களை மட்டுமே, தாம் தயாரிக்கும் பட்டியில்—பட்டியலில் சேர்ப்பார். இவரது அபிமானத்தைப் பெறத் தவறினால், முடிந்தது ‘கதை’!...

தற்போதைய அமெரிக்க இலக்கியப் போக்கைப்பற்றி இ. பி. விப்பில் (E. P. Whipple) நிர்ணயம் செய்யும் பொழுது, “The science of criticism is thus in danger of becoming a kind of intellectual anatomy,” என்று தாய்ப்பிடுகிறார்.

அன்பர் க.நா.சு. வுக்கு இவ்வரிகள் ஏகப்பொருத்தம். அல்லவா?

பாவம், அரவிந்தன்!

திரு நா. பார்த்தசாரதி அவர்கள் தம்முடைய ‘குறிஞ்சிமலரி’ன் முன்னுரையில் இவ்வாறு எழுத முனைகிறார், “சைவசமயகுரவர் திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதி - கலிப்பகையார், அவர்களின் நிறைவடையாத உறவு - இவற்றைச் சற்றே நினைவுபடுத்திக்கொண்டு இந்த நாவலைப் படித்தால், இதன் இலக்கிய நயம் விளங்கமுடியும். இந்த நாவலில் பூரணி, அரவிந்தன் இருவரையும் தமிழகத்துப் பெண்மை-ஆண்மைகளுக்கு விளக்கமாகும் அழகிய தத்துவங்களாக நிலைக்கும்படி அமைத்திருக்கின்றேன். அரவிந்தனைப்போல் எளிமை விரும்பும் பண்பும், தூய தொண்டுள்ளமும் ஒவ்வொரு தமிழ் இளைஞனுக்கும் இருக்க வேண்டுமென்பது மணிவண்ணனின் அவா. பூரணியைப்போல குறிஞ்சி மலராகப் பூக்கும் பெரும் பெண்கள் பலர் தமிழ் நிலத்தே தோன்றவேண்டும் என்பது மணிவண்ணனின் கனவு.”

ஆம்; இது மணிவண்ணனின் கனவு!

நான் அடிக்கடி குறிப்பதுண்டு: ‘இலக்கியப்படைப் பாளன், தான் கொண்ட குறிக்கோள், ஆசாபாசங்களைக் கடந்ததாக இயங்கும் வண்ணம் தன்னையும் தன் இலட்சியத்தையும் பாதுகாத்துக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்!’

இந்த வரம்பில் நின்று பார்க்கும்பொழுது, நா.பா. எந்த அளவுக்குத் தம் இலக்கியப்பணி நிரக்கும் வகையில் ‘குறிஞ்சிமலரை’ப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்?

கனவுகள் எப்போதும் வாழ்வதில்லை என்பார்கள். அதனால்தானோ, என்னவோ, நா.பா. கண்ட கனவின் உட்பிரிவுச் சக்திகளான பூரணியும் அரவிந்தனும் வாழவில்லை!

உருவாக்கியவரே, உருவாக்கிய உயிர்ப்பிண்டங்களை வாழ விடவில்லை!

திலகவதி-கலிப்பகையார் வாழ்வு இவரது சித்தத்தைக் கவர்ந்திருக்கலாம். நியாயம். 

ஆனால், இவர்களது முடிவு இவருடைய சிந்தனையை ஏன் கவர்ந்தது?

திலகவதியின் கலிப்பகையாருக்கு உண்டான முடிவு தான், பூரணியின் அரவிந்தனுக்கும் முடிவாக (Finishing) வேண்டுமா? .

யார் சொன்னர்கள்?

ஒன்றைமட்டும் சொல்லுவேன்: அரவிந்தன் இவ்வளவு இளம் பிராயத்தில்-லட்சிய சித்தியின் அரைவேக்காடான பக்குவ நிலையுடன் சாகடிக்கப்படாமலிருந்தால், ‘குறிஞ்சி மல’ரின் இலக்கியத் தரம் இன்னும் உயர்ந்திருக்க முடியும்!

வெறும் கனவுகள்

தமிழ் மாநில அரசாட்சியின் புள்ளிக் கணக்குப்படி பார்த்தால், சென்னைக்கு அடுத்தபடியாகப் பெருமை பெறும் நகரம் மதுரை என்று சொல்லிவிடலாம். அப்படிப்பட்ட மதுரை நகரத்தின் நாற்சந்தி ஒன்றில் பெண். ஒருத்தி-அதிலும் கன்னிப் பெண் ஒருத்தி-அதுவும் பசித்த வயிறும் கொதித்த மனமுமாக மயங்கி விழுந்தாள்.என்றால், அதைச் சாதாரணமாக ஒதுக்கிவிட முடியுமா? ‘பலே செய்தி’ப் பகுதியில் செய்தி நிருபர்கள் பரணியை அடைத்துப் போட்டார்களோ என்னவோ? அரவிந்தன் என்ற ஓர் இளைஞன் தன் இதயத்தாளில் மேற்படி நிகழ்ச்சியைக் கவிதையாக வடித்து வைத்தான். இத்தகைய துணிகரமான செயலுக்குக் காரணம், அவன் கவியாக இருந்தான் என்று சொல்வதைக் காட்டிலும், அவன் இதயம் பெற்றவனாகவும் இளைஞனாகவும் இருந்தான் என்பதே சாலப் பொருந்தும். இயற்கையை ரசிக்கிறான் எழுத்துக் கலைஞன். அப்படி யென்றால், இயற்கையின் அனுதாபத்திற்கு அவன் இலக்காகவும் ஆகின்ற ஒரு சூழலில்தான் மனிதாபிமானம் பேசத் தலைப்படுகிறது; கவிஞனுக்குத் தலைநிமிர்ந்து நின்று நடக்கவல்ல ஒரு வாய்ப்புக் கிட்டுகிறது. ஆக, அரவிந்தனுடைய இளம் கவி மனத்தில் பூரணி சம்பந்தப்பட்ட அந்நிகழ்ச்சி ‘காவிய மகிமை’ கொண்டுவிடுகிறது.

அரவிந்தன் இளைஞன். ஆயினும், சராசரி வரிசையின் வழி நிற்கும் சாமானியப்பட்ட இளைஞனா என்ன? ஊஹூம், இல்லவே இல்லை! அவன் ஓர் இலட்சியவாதி. தனக்காகக் கவலைப்படப் பழகாத ஒரு ‘புதுமைப் பிர கிருதி,’ புதிய புதிய குறிக்கோள்களை இதயத்தில் வாஙகிக்கொண்டு, அதன் சாட்டைச் சொடுக்கினால் பக்குவம் பெற்றுத் திகழத் துடித்த இளைஞன். காதலும் கனவு மாக, ‘தான் தோன்றித்தனம்’ மாறாமல் திரியும் எண்ணிறந்த இளையர் திருக்கூட்டங்களினின்றும் விலகியும் விலக்கியும் சென்று பழகிய - பழகுவதற்கு இயன்ற அரவிந்தன் ஓர் இளைஞன்!-அதிலும், தான் ஒர் இளமைக் கவி என்பதை நிரூபிப்பதற்கு அவன் பாடிய இந்தப் பாடல் ஓர் அடையாளக் குறியாக உதவாமல் தப்ப இயலாது.

“தரளம் மிடைந்து-ஒளி

தவழக் குடைந்து-இரு

பவழம் பதித்த இதழ்

முகிலைப் பிடித்துச்-சிறு

நெளிவைக் கடைந்து-இரு

செவியில் திரிந்த குழல்

அமுதம் கடைந்து-சுவை

 அளவிற் கலந்து-மதன்

நுகரப் படைத்த எழில்...”

இவ்வாறு ஆற்றொருழுக்காக ஓடும் கவிதைச் சக்தியில் ஓர் அழகி உருவெடுத்து, அந்த அழகி ஓர் ஆதரிச வடிவமாகவும் அமைந்து விடுவதாக ‘இனம்’ காணவும் வாய்ப்புகள் அரவிந்தனுக்குக் கைகொடுக்கின்றன. மனத்தவத்தின் மாண்புமிக்க நோன்பின் வல்லமைதான் மனித மனத்திற்குக் காதலெனும் தெய்விக சக்தியைப் பக்குவப்படுத்திக் கொடுக்கவல்லது. இவ்வுரிமைக்குரிய சொந்தமும் பந்தமும் அரவிந்தனுக்குக் கிடைக்கத்தான் வேண்டும். அதனால்தான் அழகிய பூரணியின் உருவம் அவனுடைய தூய உள்ளத்தில் நிற்கும் அளவுக்குப் பதிந்துவிடுகிறது. அழகைப் பகுதி பகுதியாகப் பார்த்தும் படித்தும் உணர்ந்து அறிந்த அரவிந்தனுக்கு காலத்தின் போக்கில், அவளது ஆதரிச வடிவத்திற்கு இலக்கணம் வகுக்கக்கூட முடிகிறது. கருத்திற்குக் கனவுப் பூச்சாகப் பொலிவுதரும் நிகழ்ச்சிகள் எத்தனையோ நடக்கின்றன; அவை அவன் மனத்தில் நற்சாட்சிப் பத்திரம் வழங்கி, அவனைப் பத்திரப்படுத்தவும் துணிவு கொள்கின்றன. பூரணிக்குக் கிடைத்துவந்த புகழ்மாலைகளின் நெடியை அனுபவித்துச் சமாளித்து மகிழுகிறான். ‘உழைப்பிலும் தன்னம்பிக்கையினாலும் வளர்ந்தவன் அரவிந்தன்.’ இவனுக்கு, பூரணி என்னும் பெண் எழுத்தில் மட்டுமே இடம் பெறத்தக்க இலட்சிய பிம்பமாக மட்டுமே தோன்றுகிறாள். இல்லையென்றால், கோடைக்கானலில், அரவிந்தனிடம் அவனுக்கும் பூரணிக்கும் நடக்க வேண்டிய மணவினைப் பேச்சைப்பற்றி மங்களேசுவரி அம்மாள் பேச்செடுத்தபோது, அவன் தட்டிக் கழித்திருப்பானா? 

இயற்கையின் திருவிளையாடல்களுக்குத் தலைவணங்கிப் பழக்கப்பட்ட ‘சராசரி மனித’னினின்றும் விலகி நிற்குமாறு அரவிந்தன் நாவலாசிரியரால் பணிக்கப்படுகிறான்.

அதனால்தான் பூரணியின் வானொலிப்பேச்சில் ஒலித்த வாசகங்கள் பல அவனது அடிநெஞ்சில் 'அடி' கொடுக்கவும் செய்வதாக ஒரு சப்பைக்கட்டுக் கட்டப்பட்டிருக்கிறது. "இறையுணர்வு பெருகப் பெருக உடம்பால் வாழும் வாழ்க்கை அலுத்துப்போகிறது-இந்த ஒரு தத்துவத்தைக் கொண்டே அரவிந்தனின் கனவு வாழ்க்கையைப் பறித்துத் தூர வீசி எறியவும் ஆசிரியர் தயங்கவில்லை.

உள்ளத்தால் வாழும் வாழ்க்கை ஓர் உன்னதம்தான். அதுவும் எப்படி?-வெறும் எழுத்தளவில்தான், ஏட்டளவில்தான்! இந்த ஒரு முடிவில்தான் பூரணி-அரவிந்தன் வாழ்க்கைக் குறிக்கோள்கள் ‘வெறும் கனவுகள்’ ஆகி விணாகியிருக்கின்றன.

குத்திக்காட்டுகிறாளா?

ஒரு கட்டம்:

இடம்: கோடைக்கானல்,

நேரம்: தனிமையின் இனிமைப் பொழுது.

பாத்திரங்கள்: பூரணி-அரவிந்தன்.

எதையோ நினைத்துச் சிரிக்கின்றான் அவன்.

அவள் அவனுடைய சிரிப்புக்குக் காரணம் கேட்கிறாள்.

அவன் சொல்கிறான் “உயரத்தில் ஏறி மேற்செல்லும் இந்தப் போட்டியில் நீதான் வெற்றி பெறுவாய். நான் என்றாவது ஒரு நாள் களைப்படைந்து கீழேயே நின்றுவிடும்படி நேரிடலாம். அப்படி நேரிட்டால் அதற்காக நீ வருத்தப்படக் கூடாது!”

இந்த உரையாடலுக்குப் பின்னர்தான் அவன் பூரணியின் வானொலிச் சொற்பெருக்கையும் எடைபோட முனைகிறான் : ‘...அன்றொரு நாள் கோடைக்கானலில் பூரணியை மணந்துகொள்ளுமாறு மங்களேசுவரி அம்மாள் என்னிடம் கூறியபோது, நான் எந்தக் கருத்துக்களைச் சொல்லி மறுத்தேனோ, அதையே பூரணியும் பேசுகிறாள். ஆனால் ‘ஊன்பழித்து, உள்ளம் புகுந்து என் உணர்வு அது ஆய ஒருத்தன்’ என்று அவள் திருவாசகத்தைக் கூறும்போது, என்னுடைய மெல்லிய உணர்வுகளையும் இந்தச் சொற்களிலே புகழ்கிறாளா? அல்லது, குத்திக் காட்டுகிறாளா? ...’

பூரணி எனும் பெண்மையின் சக்தி அரவிந்தனின் உள்ளத்தின் உள்ளே சலனத்தை உண்டாக்காமல் இருந்திருக்கவே முடியாது. அந்த உணர்வுகளின் மன ஓட்டத்திற்குக்கூட ‘கட்டுப்பாடு’ விதித்து, அவனை வெறும் லட்சியப் பிண்டமாக ஆட்டிப் படைக்கத் துணிவு ஏற்ற ஆசிரியர், பூரணியின் சொற்களைப்பற்றி அரவிந்தன் ஆராயும் நிலையில் ‘குத்திக் காட்டுகிறாளா..?’ என்ற ஒரு கேள்வியை ஏன் போட்டுக் காட்டவேண்டும்?

நா.பா. அவர்களுக்கு உரித்தான ‘இலக்கிய மனச் சான்றின்’ குறிக்கோள் கற்பித்த பக்குவ நிலையையும் மீறி அரவிந்தன் கட்டறுத்துத் தளையுடைத்துச் சிந்திக்க முற்பட்டிருக்கிறான்-இந்தக் கட்டத்தில்.

உடம்பைப் புண் என்று கருதுகிறான் அரவிந்தன். ஆச்சரியம் மேலிட அவனை வாழ்த்துவோம். ஆனால், அவன் பூரணியை-ஆசாபாசங்களின் உள்ளடக்கமான பூரணியின் மனத்தைத் திருப்திப்படுத்தும் அளவுக்கு அவள் பொருட்டு ஆற்றிய கடமைகள் யாவை?

அவன் அவள் நெஞ்சில் எவ்வகையான இடத்தைப் பெற்றிருந்தான்?

அவள் மனத்தில் அவன் என்னென்ன ‘அவதாரம்’ கொண்டிருந்தான்?

கடைசியில் முடிவு என்ன?

‘கைகளில் தீபத்தை ஏந்திக்கொண்டு இருளடைந்த மனிதக் கூட்டத்தின் நடுவில் ஒளி சிதறி நடந்து செல்லுவதாக அவள் அடிக்கடி கண்ட கனவை இப்போது நனவாக்கிக் கொண்டிருந்தார்கள்’ என்று முத்தாய்ப்பிடும் இம்முடிவு ‘இயற்கைத் தன்மையுடன்’ கூடிய முடிவுதானா?

அரவிந்தனும் பூரணியும் ‘இலட்சியக் காதலர்கள்’ அல்லது ‘சமுதாயப் பணியாளர்கள்’ என்ற பருவம் கடந்து, கணவன்-மனைவியாக ஆகிவிட்டிருந்தால், ‘குறிஞ்சி மல’ரின் ‘முடிவு’ இயற்கைப் பண்புடன் ஒட்டியதாக ஒட்டி நின்று உறவாடியிருக்க முடியாதா?

புதினத்தைப் படைத்தவர் சிந்திக்க வேண்டிய வினாக்கள் இவை.

என் கேள்விகளுக்கு உரிய விடைகளைப்பற்றி இனிமேல் விளக்க வேண்டும்.

முடிவின் விதி

புது மண்டபத்துப் புத்தக வெளியீட்டாளரின்பால் கனன்றிருந்த ஏமாற்றத்தீ கொடிவிட்டு எரிந்து கொண்டிருந்த மனநிலைப்பில் பூரணியின் கண்களுக்கு உலகத்தில் உள்ள அத்தனை பேர்களும் ஏமாற்றுபவர்களாகவும், அத்தனை மனிதர்களும் மற்றவர்களுக்கு உதவாதவர்களாகவுமே பட்டது. இச்சமயத்தில், அப்பாவி அரவிந்தன் வந்து சேர்ந்தான். சூடான காப்பிக்கு வழியில்லை; சூடான மொழிகளை வாங்கிக்கொண்டு புறப்பட வேண்டியவன் ஆனான். புறப்படும்போது, “நீங்கள் தெருவில் மயங்கி விழுந்துவிட்டால், அதற்கு உலகமெல்லாம் புணை என்று நினைத்துச் சீறவேண்டியதில்லை,” என்று பக்குவமாக எடுத்துக்காட்டத் தயங்கவில்லை.

பூரணியின் நல்லுணர்வு மனம் விழித்தது.

பூரணியின் பெண்மை எழில்நலப்பண்பும் விழிப்புப் பெற்றது. ‘அரவிந்தன்’ என்று மெல்லச் சொல்லிப் பார்த்துக் கொள்வதிலே ஒரு திருட்டு மகிழ்ச்சி கிடைத்தது. தன்னைப்பற்றி அரவிந்தன் பாடிய வரிகளைப் படித்து மகிழ்வதில் வெளிப்படையான அக நிறைவு பெற்றாள் அவள். போதும் போதாதற்கு, அவன் தமிழ் நாட்டின் வயிற்றுப்பசியைக் குறித்து ஒரு பாட்டும் அழுது ஒப்பாரி வைத்திருப்பதைப் பார்த்ததும், இந்நாட்டு மக்களின் வாழ்க்கைச் சிக்கலை எண்ணித்துடிக்க ஓர் ஆண் உள்ளமும் எங்கித் தவிக்கிறதெனும் நடப்பும் பிடிபடுகிறது. அவளுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. உடனே அவனுடைய கையெழுத்தை அவள் கண்களில் ஒற்றிக் கொள்கிறாள். இப்படிப்பட்ட பக்தையின் தலையெழுத்தை எப்படித்தான் மாற்ற மனம் துணிந்தாரோ மணிவண்ணன்?

அரவிந்தனிடம், தான் முகங்கடுத்துச் சுடுமொழி உதிர்த்த தவற்றுக்கு முகம் கொடுத்து மன்னிப்பு வேண்டி யது தொட்டு, அவனது உள்ளந்தொட்டு, பிறகு உடல் தொட்டு - வெறும் உடல்தொட்டு உறவாடி மகிழ்ந்த நிகழ்ச்சிகளெல்லாம் கதை நிகழ்ச்சிகள்; அதாவது, பெருங்கதையை ஒட்ட உதவிய சிறு நிகழ்ச்சிகள். அவளுக்காக அவன் அடி உதைபட்டது, அவனுக்காக அவள் கண்ணீர் கொட்டியது, பிறகு தேர்தல் போட்டா போட்டியின் போது நடைபெற்ற தலைவலிச் சம்பவங்கள் எல்லாம் சர்வசாதாரணமானவையே.

மற்றொரு கட்டம்; திட்டம்.

பூரணியைத் தேர்தலில் நிற்கும்படி செய்வதற்கான ஓர் ஆலோசனைக்கு இடையே பூரணியின் சார்பில் வாதம் புரிகிறான் அரவிந்தன். அதாவது, அவளை அவ்வாறு உடந்தையாக்கலாகாது என்பதே வாதத்தின் வெளிப் பொருள். அப்போது அவனுக்காகப் பரிந்து பேச முற்படுகிறார் நம் நா.பா. “அவன் அவள் உள்ளத்தோடு இரண்டறக் கலந்தவன். வேறெவருக்கும் இனி என்றும் கிடைக்கமுடியாத இனிய உறவு அது. அந்த உறவை வெளிக்காட்டி விளம்பரப்படுத்திக் கொள்ள அவன் எப்போதுமே விரும்பியதில்லை!”

ஆண்-பெண் என்கிற இரு பெரும் சக்திப் பிண்டங்களினின்றும் தழுவி நழுவுகின்ற ஒரே இணக்கம் கொண்ட உணர்வுகள் உறவுகொள்வதென்பது விட்ட குறை-தொட்ட குறையின் விதி எனும் மாயத்தினால் விளைகின்ற ஒரு பயன். உள்ளத்தின் உள்ளே எண்ணி மகிழ்ந்து பரவசப்பட வேண்டியதொரு விசித்திரமான அனுபவம் இது. இதற்கு அவன் விளம்பரம் தேட வேண்டிய கட்டாயம் என்ன இருக்கிறது? ஒன்றும் இல்லை! அரவிந்தனின் குணச்சித்திரத்திற்கு விழுந்திருக்கிற கீறல் இது.

மீளவும், கோடைக்கானல். கடல் கடந்து ஆற்ற வேண்டிய சொற்பொழிவுகளை ஏற்பதா, வேண்டாமா என்னும் சிக்கலில் அகப்பட்டுத் தவிக்கிறாள் பூரணி. அது தருணம், அவள் இவ்விதமாக நினைக்கிறாள்: “அரவிந்தன்! எனக்காக நான் எதைச் சிந்தித்தாலும், அந்தச் சிந்தனையின் நடுவில் என் உடம்பிலும் நெஞ்சிலும் சரி பாதி பங்குகொண்டவர் போல இவர் ஏன் நினைவுக்கு வருகிறார்? அரவிந்தன், என்னுடைய ஊனிலும் உயிரிலும் அதனுள் நின்ற உணர்விலும் எல்லாவற்றிலும் நீங்கள் எப்போது கலந்து உறைந்தீர்கள்? எப்படிக் கலந்து உறைந்தீர்கள்?”

அரவிந்தனுக்கு வாய்த்துவிட்ட ‘முடிவின் விதி’யை எண்ணுகிறேன்; சுடு நீர் சரம் தொடுக்கிறது. முடிவுக்கு உண்டான தொடக்கத்தைப் பற்றிச் சொல்லிக்காட்ட வேண்டுமல்லவா?

நடமாடும் கவிதை

‘பூரணி ஒரு நடமாடும் கவிதை.’

ஆண்-பெண்களின் இருண்ட கூட்டத்துக்கு நடுவே கையில் தீபம் ஏந்திச்சென்று, உலகத்தில் நிலவுகின்ற பசியையும் நோயையும் அழிக்க வேண்டுமென்பது அவள் கனவு. இப்படிப்பட்ட சேவை மனப்பான்மையின் பேருணர்வே அவளுள் கனிந்து கனன்ற ‘தன்விழிப்பும்’ ஆகும். இவ்வகையில் தோன்றிய பூரணிக்கும், பொன் காட்டும் நிறமும் பூக்காட்டும் விழிகளுமாக அவனைக் கவிபாடத் தூண்டிய பூரணிக்கும் ஊடாகத் தவித்த அரவிந்தனைச் சோதனை ஒன்று நெருங்குகிறது. சோதனை மக்களேசுவரி அம்மாள் வாய்வழியே புறப்படுகிறது. அரவிந்தன்-பூரணி திருமணங் குறித்துப் பேச்சுத் தொடுக்கிறாள். “அவருக்கு விருப்பமானால், எனக்கும் விருப்பம்” என்ற பூரணியின் ஒரு வழிப்பட்ட இணக்க மொழியைக் கொண்டு அந்த ‘அவரி’டம்-அதாவது, அரவிந்தனிடம் கேட்கும்போது, அரவிந்தன் ‘வசனம்’ ஒப்புவிக்கின்றான். அந்தப் பேச்சைக் கேட்டபோது, எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கோடைக்கானலில் குறிஞ்சிப் பூக்களுக்கு மத்தியில் அவனும் அவளும் நெருங்கிப் பழகிய பந்தத்தை நான் அறியேனோ? அபலைப்பெண் பூரணியின் ஆசை மனத்தின் இனிய எழிற் கனவைப் பலிதமடையச் செய்திருக்கவாவது, அரவிந்தனிய வாழ வைத்திருக்க வேண்டாமா நா.பா...?

“நாங்கள் இரண்டு பேருமே உயரத்தில் ஏறிச் செல்கிறோம். அதற்கு இந்த வாழ்க்கைப் பிணைப்பு மட்டுமே போதும்; என்னை வற்புறுத்தாதீர்கள்!” என்றான் அரவிந்தன்.

இவ்வகையில் அமைந்துவிட்டிருக்கின்ற சொல்லாடல் நிகழ்ச்சிகள் அரவிந்தன் எனும் குணச்சித்திரத்திற்கு எவ்வகையான சாரமும் தரமுடியாது. கொள்கைகளுக்காக மனிதன் வாழலாம்; ஆனால் கொள்கைக்காக அவன் வாழ்வை இழக்கக்கூடாது. கொள்கைகள் வாழவேண்டுமெனில், ‘கொள்கையின் மனிதன்’ வாழவேண்டும். அது மாதிரி, இங்கே அரவிந்தனும் வாழ்ந்திருக்க வேண்டும். பூரணியும் ‘வாழ்ந்திருக்க’வேண்டும். இருவர்தம் வாழ்வு நிலைகளும் வெற்றி பெற்றிருந்தால்-அவர்கள் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்திருக்கும்பட்சத்தில், அவர்களது அடிப்படை இலட்சியங்களும் மேளதாளத்தோடு வெற்றி பெற்றிருக்கக் கூடும். இதன் பயனாக, இலட்சிய இளைஞன் அரவிந்தன் முழுமை பெறுவதுடன், பூரணிக்கும் பூரணத்வம் கிட்ட நல்வாய்ப்புக் கிட்டியிருக்கும்.

அரவிந்தன் சாகவில்லையா?

பாவம்...!

திலகவதி-பூரணி!

‘செல்லரித்த பழமையெல்லாம் சீர்திருத்த முன்வந்த இலட்சியச் சித்தன்’ அரவிந்தன் தெய்வமாயிருந்தான்.

‘நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக் குறு முறுவல் பதித்த முகம்’ திலகம் இழந்தது.

திலகவதியின் கதை முடிந்தது; மீண்டும் நடந்து முடிந்தது!

திருமண ஊர்வலங்களுக்குப் பயன்தரும் வெண் புரவிச் சாரட்டு, கடைசியில் ‘அரவிந்தன் என்னும் பேரெழில் வாழ்க்கையை’ மண்ணிற் கலக்கச் செய்யப் பயன்தந்த அந்த ஒரு திருப்பத்தில், தமிழாசிரியர் நா.பா. வைவிட நாவலாசிரியர் மணிவண்ணன் கம்பீரமான பெருமையுடன் வாழ்வார்; அட்டியில்லை.

திரு க.நா. சுப்பிரமணியம் சொல்கிறார், “மனத்தில் நிற்கும்படியாக ஒரு வார்த்தை-ஒரு வாக்கியச் சேர்க்கை இந்த ஐந்நூறு பக்கங்களில் உண்டா? அதுவும் கிடையாது. அதற்கு நேர்மாறாக, நடையே தள்ளாடுகிறது!” என்று. 

“ஓரளவுக்குப் பார்த்தால், வை.மு. கோதைநாயகி அம்மாள் கையாண்ட நாவல் உத்தி முறைப்படி வந்த நாவல் இது என்று சுருக்கமாகச் சொல்லலாம்!”-இதுவும் ‘மேற்படியாரின்’ தீர்ப்பேயாகும்!

இறைவா! மதிமாறிப்பேசும் பேச்சு இது என்பதைத் தவிர, வேறென்ன சொல்ல இருக்கிறது? வேண்டா வெறுப்பில் க.நா.சு. உளறுவதெல்லாம் விமரிசனம் ஆகிவிடுமா? வேறெப்படிச் சொல்ல இருக்கிறது?

 3. மலை யருவி

—ராஜம் கிருஷ்ணன்—

ஊசிப்பாளையம் சிற்றூரிலே வாழ்ந்த சுப்பம்மாளுக்கு இரண்டு குழந்தைகள். இருவரும் ஆண்மக்கள். ஒருவன் மூத்தவன் பொன்னன்; மற்றவன் இளையவன் குமரன். மூத்தவன் படிக்காதவன்; உழைப்பாளி, வாழத்தெரிந்தவன்; நல்லவன்; வல்லவனும்கூட. இளையவன் படித்தவன்; ஊதாரி, படிப்புக்கேற்ற குறும்பும் விளையாட்டும்கூட, உலகம் புரியாதவன். வெளுத்தது எதையும் பாலென நம்பும் நல்லவன்; வல்லவன் அல்லன். வாழப்புரியாத துணிவுகொண்டவன்.

இருவருக்கும். அத்தை மகள் ஒருத்தி உண்டு. அவள் ரஞ்சிதம். துடிப்பும் அழகும் அவளுடைய உடைமைகள். மூத்தவனை “அண்ணன்” என்று அழைக்கும் அவள், இளையவன் குமரனை “அத்தான்” என்று அழைக்கிறாள். குமரனும் அவளை விரும்புகிறான்.

படிப்பில் வளர்ந்த குமரன் சிற்றூரில் நடக்கும் சாதாரண அக்கிரமங்களைப் பார்த்துக் குமுறு கிறான். பத்திரிகை ஒன்றுக்கு எழுதி, ஊராரின் வெறுப்பைப் பெறுகிறான். சங்கம் நடத்திப் பாழாகிறான். கள்ளச் சாராயம் காய்ச்சிய தன் மாமாவைக் கண்டிக்கப்போய், அவரது பகைமையையும் கண்டிப்பையும் பெறுகிறான். கொண்டைத் திருகைத் திருடிக்கொண்டு வந்த ஒருத்தியைக் கண்டுபிடித்து, தன் தாயின் குற்றத்தினை வெளிப்படுத்த முயன்ற முயற்சியில் குமரன் சிக்கிக்கொள்ளுகிறான். நகை விஷயத்திலும் பிறரிடம் குற்றம் சுமத்தப்படுகிறான் குமரன்.

ஊரையே விட்டுப்போகத் துணிந்து, தன் காதலி ரஞ்சிதத்தையும் அழைத்துக்கொண்டு ஓடிவிட வந்த குமரன், மாமனுடன் சண்டையிடும் பயங்கர நிலை ஏற்படுகிறது. சண்டையின் முடிவில் தேங்காய் மட்டைகளை உரிக்க உதவும் குத்துக்கல்லில் குடிவெறியின் காரணமாக குமரனின் மாமனர் வீழ்ந்து இறக்கிறார்.

பழிச்சொல்லுடன் ஓடிவிடுகிறான் குமரன். வழியிலே வெள்ளை மனத்துடன் பழகி, ஓர் எத்தன் கையிலே சிக்குகிறான். மீண்டும் திருகு வில்லையைத் திருடிய அந்தப் பெண்ணின் உதவியால் தப்புகிறான். நீலகிரிக்குச் சென்று இந்திரபுரி சமஸ்தானத்து வழியில்வந்த ஜீவன் என்கிற பிரபுவின் காரியதரிசி வேலையில் சேருகிறான்.

கிராமத்தில் ரஞ்சிதத்தின் தகப்பன் இறந்த பின் அவள் சுப்பம்மாளிடம் அடைக்கலம் புகுந்துவிடுகிறாள். ஆனால், சுப்பம்மாளுக்குச் சித்தம் பேதலித்துவிடுகிறது. பொன்னன் ரஞ்சிதத்தை அடைய முயற்சி செய்கிறான். ஆனால் அவள் அதை விரும்பவில்லை.

காதலை மறந்துவிட்டாள் ரஞ்சிதம் என்று குமரன் ‘மது’ அருந்தத் தொடங்குகிறான். தேவ தாஸ்பாணி!... குடிவெறியில் எசமானன் ஜீவனிடம் தாறுமாறாக நடக்க ஆரம்பிக்கிறான் குமரன். வேலையிலிருந்து தள்ளப்படுகிறான். அங்கு மீண்டும் திருகுவில்லையைத் திருடிய பெண்ணைச் சந்திக்கிறான் குமரன். அவள் ‘கெட்டுப்போனவள்!’ இருந்தும் மனித உணர்வுகளில் நல்லவை ஒன்றிரண்டு அவளைவிட்டு எடுபட்டுவிடவில்லை. அவனே அவள் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள். அவனால் அவள் திருந்துகிறாள்.

ரஞ்சிதம் குமரனுக்காகக் காத்து ஏங்குகிறாள். சுப்பம்மாளும் பொன்னனும் படுத்தும் பாட்டுக்கிடையில், அவள் காதல் உறுதியாய் நிற்கிறது. திருகுவில்லை திருடிய அப்பெண் ராணியிடம் விபசாரம் செய்வதற்குத் தங்கியுள்ளவள்போலப் பேச்சு அடிபடுகிறது, நீலகிரியிலே! ராணியைவிட்டு விலகி, பொம்மைக் கடையில் வேலைக்குச் சேருகிறான் குமரன். ராணியின் கேவல வாழ்விலிருந்து அவளைத் தப்பச்செய்ய அவனால் முடியவில்லை!

அண்ணன் பொன்னன் கடைசியில் தம்பி குமரனைத் தேடிவருகிறான். அண்ணனும் தம்பி யும் பொருதுகின்றனர். குழப்பமும் குமுறலும் விளைகின்றன.

ராணியின் பிணம் ஏரியில் மிதந்த செய்தி கேட்டுச் சொந்தஊர் நோக்கிப் பயணமாகிறான் பொன்னன். ரஞ்சிதத்தைச் சந்தித்ததும் உண்மைகள் வெளியாகின்றன.

குமரனையும் ரஞ்சிதத்தையும் இணைத்து விட்டு ஒதுங்கிச் சென்றுவிடுகிறான், மூத்தவனாகிய பொன்னன்!

பழைய கருவியே புதிய பிண்டம்

அண்ணன் தம்பி விவகாரம். மிகவும் பழைய கதைக் கரு.

‘குறிப்பிட்டதொரு வட்டத்துக்குள்ளே வாழ்வை உடைய பெண்ணொருத்தி காவல் எழுதப் புகுவது அவ்வளவு எளிதன்று. சமுதாயத்தின் பல்வேறு படிகளில் காணும் மக்களைக்கண்டு நெருங்கிப் பழகும் வாய்ப்புக்களோ, உலக அரங்கில் அகலக்கால் வைத்து பல வண்ணங்களில் கடக்கும் வாழ்க்கை நாடகங்களைப் பற்றி அறியும் வாய்ப்புக்களோ, தான் புழங்கும் வீடும் குடும்பமுமே உலக அனுபவமாகக் கொண்ட பெண்ணுக்கு இல்லை’ என்று தம் நாவலில் முன்னுரையில் திருமதி ராஜம் கிருஷ்ணன் சொல்கிறார்.

அண்ணனும் தம்பியும் ஒரே பெண்ணை விரும்புவது, பெண் இளையவனை விரும்புவது, கடைசியில் அண்ணன் தியாகியாக மாறுவது!-இந்தப் பாணியில் வரும் கதைகள் கர்ணபரம்பரைக் கதைகளிலிருந்து இன்றைய இலக்கிய வடிவங்கள் வரை எத்தனையோ பகுதியாகவும் தொகுதியாகவும் பல மொழிகளிலும் வந்துவிட்டன.

இந்த நியதிக்கு நானும் விலக்கல்லன். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னம் நான் எழுதிய ‘வாழும் காதல்’ என்ற நவீனம் இதற்குச் சாட்சி.

இதே அண்ணன் தம்பி பிரச்சினை மூலம் இந் நாவலாசிரியை, தமிழ் நவீன இலக்கியத்துக்கு ஓர் அழகிய வடிவம் கொடுக்க முற்பட்டிருக்கிறார்.

குமரன் என்கிற இளைஞனின் கதைக்குக் கிட்டியுள்ள பிடிப்புத்தான் மேற்படி பாத்திர உருவாக்கத்திற்கும் ஓர் பிடியாக அமைந்திருக்கிறது. எங்கள் வட்டத்தில் ஒரு வழக்கு உண்டு. ‘மூத்தது மோழை, இளையது காளை’ என்பார்கள். இங்கே குமரனின் அண்ணன் பொன்னன் பாத்திரமும் அப்படித்தான். சோடை!...

கதையான வாழ்வு

வாழ்க்கையே கதை என்றும் கதையே தான் வாழ்க்கை என்றும் சொல்வது இலக்கியப் பாரம்பரியப் பண்பாகவும், இலக்கிய மறுமலர்ச்சியின் மரபாகவும் நிலவி வருகிறது. இத்தகைய குறிப்புடன், குடும்பத்தைச் சூழலாகக் கொண்டு கதை பின்னிக்காட்டும் திறன் கொண்டவர்களுக்கு நம் தமிழகத்திலே மதிப்பு கூடுதல். இவ்வகையில் திருமதி ராஜம் கிருஷ்ணனின் பெயரும் இலக்கிய அந்தஸ்துப் பெறும். பெண் மனத்தின் நுணுக்கமான உணர்ச்சியின் கதைகளைக் காரியமாக்கிக் காட்டும் கலையியல் சக்தி கைவரப் பெற்றவர் ஆசிரியை. ‘குறிஞ்சித் தே’னுக்கு முன்னோடிக் கதை இது. 

வாழ்க்கையைப் புதிராக்கி அதன்பின், அந்தப்புதிரை அவிழ்த்திட அவ்வாழ்க்கையையே ஓர் உபகரணமுமாக்கி, ‘அலகிலா விளையாட்டு’க் காட்டும் நேர்மைத்திறம் கொண்ட சிந்தனை மனங்களின் அடிச்சுவட்டை ஒற்றி நடந்து, காலத்தின் கருவில் உருவான-உருவாகும் நித்திய நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டு இலக்கியப் பரிணாமக் கண்ணோட்டத்துடன் கதை எழுதவும், கதை சொல்லவும் தெரிந்த இந்த நாவலாசிரியைக்கு, இந்த அண்ணன் தம்பி சிக்கல்தானா இருந்திருந்து கிடைக்க வேண்டும்?

‘தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்

முன்னே வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்;

பின்னே வினையைப் பிடித்துப் பிசைவார்கள்;

சென்னியில் வைத்த சிவன் அருளாயே!’

திருமூலர் வாக்கே இப்படியிருக்கையில், ராஜம் கிருஷ்ணனின் விந்தையான பாத்திரத் தேர்வை எடை போடுவதைவிட, எடை போட்டுப் படைத்த பாத்திரங்களின் குணதோஷங்களை எடை போடலாமே!

“பூமியைப் பார்!”

உள்ளுணர்வுப் போராட்டங்களைப் பாலுணர்வு கூட்டிக் கதை பின்னிச் சொல்லுவதில் மாப்பஸான் (Guy De Maupasant) நிலைப்புடன் விளங்கினார். அவரது பெண்மையின் விரிவாராய்ச்சிகளைக் கோடிட்டு நினைவூட்டுவது போல இங்கு ராணி வருகிறாள் காதலில் தோற்றவள்: ஆனால், நம் அனுதாபத்தைப் பெறுவதில் வெற்றி பெற்றவள். அந்தப் பேதையின் நினைவைச் சுட்டி என் அனுதாபத்தையும் சுவீகரிக்க முயலுகிறாள் ராணி:-... ஊர் ஊராகச் சுற்றி, திருடி, மயக்கி சாகசம் செய்த இந்த ராணி...ராணியா இவள்? இவளுக்கும் வேஷம் தான்!...” என்ற நினைவை ஊட்டுகிறான் நடிக ராசா. அவன் குமரன்.

குமரனுக்கு முறைப்பெண் ரஞ்சிதம்.

ரஞ்சிதத்தை ஆசிரியை அறிமுகம் செய்யும் அழகு, ரஞ்சிதத்தின் அழகுக்கு அழகாக அமைகிறது.

சரி, ரஞ்சிதத்தைப் பாருங்கள்.

பார்வையில் பண்பு இருக்கட்டும், உஷார்!—அதோ பொன்னன்!

இதோ, ரஞ்சிதம்

மஞ்சள் பூச்சு மிளிர்ந்த மாநிற முகத்தில் களி துள்ளும் கருவிழிகள்; ஒளியிடும் வெண்பற்கள்; காதிலே வெள்ளைக் கம்மலும் கழுத்திலே சரட்டட்டிகையும் அவள் முகத்துக்குப் பெருமையுடன் எழில் காட்டின. கைகளில் குலுங்கக் குலுங்கக் கண்ணாடி வளையல்கள், கால்களிலே கொலுசு அவள் கன்னி வடிவம்! அவள் தயிர்க்காரி; ஆனாலும் அவள் தயிர் இனிக்கத்தான் செய்யும்!

இந்த ரஞ்சிதத்துக்காக நடந்த போட்டாபோட்டிகள் எத்தனை? முளைத்தெழுந்த காமக்குரோதங்கள், கரவும் கள்ளமும் எத்தனை?

குமரன் நல்லவன்; குழந்தை மனம். வாழ்வாங்கு வாழ விழைந்தான். தீமை தோயாத வாழ்வு வாழவேண்டும் எனவும் பிறரும் நல்வாழ்வு வாழ வழி காட்டவேண்டும் எனவும் இலட்சியம் வைத்திருந்தான். ஆகவே தான், பொன்னைவிட குமரன்பால் அதிக ‘வேட்கை’ கொண்டு ஒழுகினாள் ரஞ்சிதம். கடமை ஒழுங்கும் கண்ணியப் போக்கும் பூண்டு கடந்தாள்.

ஒரு கட்டம்:

சோலையம்மன் கோயிலில், ‘சாமி’ கும்பிடுகிறாள் ரஞ்சிதம். ஒளிந்திருந்து, அவள் வேண்டுதலுக்கு மனிதக் குரல் தருகிறான் குமரன். தெய்வமாகி வந்த குமரனோ? ‘தாவிப்படரக் கொழுகொம்பில்லாத தனிக்கொடி போல்’ இருந்தவளுக்கு அவன் தானே குமரன்!...

“அவங்களுக்கு நல்ல புத்தியைக் கொடு!”. என்று வேண்டினாள் அவள். ‘அவங்களுக்கு...’ என்ற உறவுச் சொல்லின் உரிமையை ‘அர்த்தம்’ காண விழைகிறது. குமரனின் அடிமனம். தன்னை நினைத்துத்தான் அவள் அவங்களுக்கு நல்ல புத்தியைக் கொடு!’ என்று ‘நேர்ந்து’ கொண்டதாக அவன் கருதினான், உண்மை நடப்பும் அதுவே!

குமரனைச் சூழ்ந்த சுற்றுச் சார்புகளும் சூழ் வினையின் சூதுமதித் திரிபுகளும் அலைக்கழித்த உண்மையை ரஞ்சிதம் எங்ஙனம் தட்டிக் கழிப்பாள்?...

துயரங்களின் தழும்புகள் காய்த்துத் தொங்கிய போக்குடன் ஊர் திரும்புகிறான் குமரன். ரஞ்சிதத்தைப் பார்க்கிறான். ‘அண்ணி’-ஆம்; அவளைத் திருமணம் செய்து கொண்டதாகப் பொன்னன் சொன்னன்!

ரஞ்சிதம் குமரனைப் பார்க்கிறாள், அவள் வழிப்புகுந்து, இதயம் சேர்ந்து அவனைப் பார்க்கின்றாள். ஆயிரமாயீரங் குற்றங்களை அவன் செய்திருந்தாலுங்கூட, அன்பும் அவன் பக்கம் மாயாதது போன்ற நோக்குடன் ரஞ்சிதம் நிற்கிறாள். 

“நான் கொலைகாரன் என்று நினைக்கிறாயா? உங்கய்யாவை நான் இரக்கமில்லாமல் தள்ளிக் கொலை செய்தேன் என்று எண்ணி நீ என்னை வெறுத்தாயா, ரஞ்சிதம்? -

அவள் அப்படி வெறுக்கவில்லை. தேற்றுகிறாள்.

அவன் நிரபராதி!

அவள் தன்னைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி ஒதுக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டதும், அவனுடைய மனம் அமைதி பெறுகிறது. மனத்தால் மன்னித்தவள்; இப்பொழுது வருவதாகக் கூறுகிறாள். மலைப்பு!

தமையன் பொன்னன் தோன்றுகிறான். “உங்க இரண்டு பேருக்கிடையே சிக்கலைப் பின்னி உங்க அன்பிலே வெட்டு உண்டாக்க எண்ணினேன். ஒரே எண்ணத்திலே, பொய்யும் சூழ்ச்சியும் மனசிலே தோண நடந்துகிட்டேன். நான் தோத்துப்போனேன் தம்பி. அத்தனை வழியிலேயும் தோத்துப்போனேன். மலை உச்சியிலிருந்து ஓடிவரும் அருவியை எத்தினி தடுத்தாலும் அதன் நோக்கிலேதான் பாயுமின்னு புரிஞ்சுகிட்டேன்!” என்று ‘பாவ மன்னிப்பு’ பெறுகிறான். அன்பால் வாழ்த்தி மனத்தால் காதலித்த ரஞ்சிதத்தை, அவளுக்கு உரிய மன்மதனிடம் அவளுக்கு உகந்த மெய்யன்பனிடம் ஒப்படைத்து விட்டு, பொன்னன் மண்ணில் இறங்கி என்றுமில்லாத அமைதியுடன் நடக்கிறான்!

“பூமியைப் பார், அது உனக்குக் கற்றுத்தரும்,” என்கிறது பைபிள்.

'நல்ல பூமி'யை ஆக்கிய நாவலாசிரியை பெர்ல்பக் (Pearls.Buck) கையாண்ட சுற்றுப்புறத்தெளிவு, இந் நவீனத்தின் வரிக்கோடாகப் பிரதிபலிப்புப் பெறுகிறது.

பிறந்த மண்வளத்தில் பொன்னன் படித்துக் கொண்ட பாடத்தில்தான், ரஞ்சிதம் என்கிற பெண்மையின் கம்பீர்யமான குறிக்கோள் இலக்கு முழுமை பெறுகிறது. முழுமைப் பண்பைத் தருபவன் குமரன். இதயங்களின் நெகிழ்ச்சியில் மலையருவியாக வெள்ளமிட்டு ஓடுகிற மனைநிலை எண்ணங்களுக்கு (Sentimental Views) வடிவம் தருகிறாள் ரஞ்சிதம். இவள் நிழலில் ஒதுங்க முனைந்து, ஓடி ஒளிந்து ஏரியில் குதித்து, இறுதியில் சிறைக் கம்பிகளை எண்ணுகிறாள். ராணி, அசட்டுப் பெண்! கொண்டவன் இருந்தும், தடம் புரண்டு. நடந்த கதை மூலம், ராணி நம் அனுதாபத்துக்கு இலக்காகிறாள்!

மேலை நாட்டு ஆசிரியையான ஜேன் ஆஸ்டின் (Jane Austin) கையாண்ட அடிவரிசைத் தளத்தின் அழுத்தம் இவ்வாசிரியைக்கு வழிகாட்டிச் செல்கிறது.

சாயல்

‘மண்பொம்மை’ என்று ஓர் ஒரியா நாவல் வெளிவந்திருக்கிறது. சாகித்ய அகாடமிப் பரிசு பெற்ற அதுவும் கூட மலையருவியை ஒட்டியதுதான். மலையருவியைப் படிக்கும்போது அந்தப் பிரதிபலிப்பு (Reflection) நினைவிற்கு வருகிறது. இருப்பினும் ‘மலையருவி’ வேறுதான், ‘மண்பொம்மை’ வேறுதான்.

குடும்ப நாவல்களில் வெற்றி பெற்று வரும் திருமதி ராஜம் கிருஷ்ணன் வெளியுலகையும் சுற்றிப்பார்த்து எழுதியிருக்கும் கோணம் இதில் நன்கு புலப்படுகிறது கோவை மாவட்டப் பேச்சுவழக்கு ஓரளவு பிடிபட்டு வந்திருக்கிறது; என்றாலும் தூய சிற்றுார்ப்புற வாடையையும் சூழலையும் அவரால் காட்ட முடியவில்லை.

வருணனை நயம்

பேய்க்காற்றும் சாரல் மழையும் போய் பகல் வெயிலும் குடல் துளைக்கும் பனியும் குளிரும் வந்தன. இலையுதிர்த்த மரங்கள் எல்லாம் தளிர்த்தன! நோய்வாய்ப்பட்டுக் கிடந்தவள் குணமாகித் தேறி வருவதுபோல் கரிந்திருந்த பசும்புல் தரையெல்லாம் வசந்தத்தை வரவேற்கச் சித்தமாகப் பசுமைபிடிக்கலாயிற்று.”

வர்ணனையில் குழைவும் உறுதியும் கலந்த போக்கு அழகு கூட்டுகின்றது. நவீனத்தில் கதைச் சூழல் (atmosphere creation) நேர்த்தி.

வாழ்த்து

‘அன்பின் வழியது உயிர்நிலை!’

இது வள்ளுவம். இந்த உயரிய மனிதப் பண்பாட்டினை எடுத்துக்காட்ட, ரத்த பாசமும் காதலும் எடுத்துக்காட்டுகளாக உலவுகின்றன. உலவும் தென்றல் போன்ற நாவலாசிரியை ராஜம் கிருஷ்ணனின் பேனா இந்நவீனத்தில் புதுத்தடத்தில் ஊன்றிப் புரட்சிப் பண்பையும் தொட்டுக்காட்டி ஊன்றிக்கொள்ள முயற்சி செய்திருக்கிறது. இந்த நல்ல நோக்கம் வாழட்டும்! - கொட்டு முழக்கத்துடன் வாழட்டும் சொற்றுணை வேதியன் அருள் புரிவான்!...

 4. நளினி

-க. நா. சுப்பிரமணியம்—

புதுமைப்பெண் அல்லள் நளினி. திருடனைக் கணவனாகக்கொள்ள முடியாமல் ஓடிவிட்ட பெண்! அவள் பாவாடைகட்டிய சிறுமியாக இருக்கும்போது, சீதாராமன் என்னும் கதாநாயகன் பருவதத்தம்மாள் என்கிற தன் மூத்த சகோதரி வீட்டுக்கு வண்டியில் வந்து இறங்குகிறான். பாவாடைகட்டிய “வளர்ந்த” பெண் நளினி, எதிர்வீட்டில் நிற்கிறாள்.

நளினி தாயை இழந்தவள்; ஒரு வகையாக வளர்ந்தவள், முரட்டுப் பிடிவாதத்துடன்! கையில் சின்னம்மாவின் குழந்தையுடன் நிற்கிறாள். “அதோ பாருடா பட்டணத்து மாமா!” என்கிறாள் குழந்தையிடம். “தேவலையே ! வாயாடிப் பெண்ணுக இருக்கும்போலிருக்கே! வளர்ந்த பெண்ணுகவும் இருக்கிறதே!” என்று - சொல்லிக்கொண்டே போகிறான் சீதாராமன், அந்தப் பட்டணத்து மாமாவையே மணந்து கொள்கிறநிலை நளினிக்கு வந்துவிடுகிறது. பெண்ணின் தகப்பனார் நல்ல உழைப்பாளி. வேலைசெய்து ஓய்கிற அனுபவம் அவருக்கு.

அன்றே சீதாராமனைப் போலீஸ் தேடிவருகிறது விஜயபுரம் அக்கிரகாரத்துக்கு தவறே செய்யாத நல்லவன்போல் போலீசாருடன் செல்கிறான் சீதாராமன், நளினியை விரும்பிய சீதாராமனும் சீதாராமனை மனத்தில் எண்ணிக் கலந்த நளினியும் சீதாராமனுக்காக வருந்திய அவன் அக்காளும் தபால் குமாஸ்தாவான நளினியின் தந்தை விஸ்வநாதய்யரும் குழம்பி நிற்கிறர்கள்.

பட்டினத்துப் பாங்கிலே இருபதினாயிரத்தைக் கொள்ளையடித்து சட்டத்தின் பிடியில் குருசாமி என்கிற எத்தனைப் பழிசாட்டி, சீதாராமன் நல்லவனாகித் தப்புகிறான். ஆனால் இருபதினாயிரத்தில் பங்குக்காகத் தன்னருகிலேயே காத்திருந்த எத்தன் குருசாமியை சீதாராமனால் உணரமுடியவில்லையே!

விஜயபுரம் வருகிறான். தன் அக்காள் வீடு பூட்டியிருக்கிறது. எதிரே நளினி நிற்கக்கண்டு திகைக்கிறான். பின்பு நளினியிடம் பேசுகிறான். நளினியின் வீட்டில் அவனுக்கு இடம் கிடைக்கிறது. ஆனால் குருசாமி திண்ணைக்கு வந்து விட்டதை அவன் அறிந்தபோது, நளினியிடம்கூடச் சொல்லாமல் - பெட்டிகூட எடுத்துக்கொள்ளாமல் ஓடிவிடுகிறன்!-நளினி நிலைக்கிறாள்! மூன்று ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் சீதாராமன் வருகிறான். நளினியை மணக்க விரும்புகிறான். நளினியின் தந்தை விஸ்வநாதய்யர் மகளிடம் உடன்பாடு கேட்கிறார். நளினியோ, “போ அப்பா...!” என்கிறாள் நாணத்தின் மென்மையுடன். ‘திருமணத்துக்கு முன் சீதாராமன் அயோக்கியனா என்று தெரிந்து கொள்ளாவிடில் ஆயுசு பூராவும்...?’என்று கலங்கினாள் நளினி. ஆனால், அதை அறிய வாய்ப்பே இல்லை! திருமணம் நடக்கிறது. மருண்ட பார்வையோடு சீதாராமனைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்த நளினியைக் கண்ட மணமகனுக்கு அமைதியே இல்லை.

மணமான உடனே நளினியை இழுத்துக் கொண்டு தஞ்சாவூருக்கு வருகிறான் சீதாராமன். இரண்டாம் வகுப்புப் பெட்டியில் பயணம், அப்போதே அவளை அவன் ஆசையோடு நெருங்கிய சமயம், அவள் பழைய குருசாமியை நினைவு படுத்தி ‘நீதான் திருடனா?’ என்று கேட்காமல் கேட்கிறாள். முதலிலே கசக்கிறது சீதாராமனுக்கு. பின் வழித்துணை கொண்டு தஞ்சையை அடைகின்றனர், அடைந்திட்ட புதுமணக் கோலம் பூண்டு!

தஞ்சை வந்த நேரம் அந்தி மாலை. “அந்தப் பழைய கதையையெல்லாம் நீயும் நானும் மறந்து விடுவதே நல்லது” என்கிறான் கதாநாயகன்! “அதெப்படி சாத்தியம்?” என்கிறாள். நளினி. கடைத்தெருவுக்குப் போய் மீண்டதும் வெளிக்கதவு தாளிடாமலே சாத்தியிருந்தது. “நளினி” என்று அழைக்கிறான் சீதாராமன்.

—“எவ்வளவு சாமர்த்தியசாலிதான் ஆனாலும், ஓர் அயோக்கியனுடன் வாழ நான் விரும்பவில்லை. திடீரென்று ஏற்பட்ட முடிவு அல்ல இது. என்னைத் தேட வேண்டாம். நான் விஜயபுரம் போகவில்லை!” என்று கடிதம் எழுதி இருந்தாள் நளினி.

அழியாக் கனவு

விஜயபுரம் என்று ஓர் ஊர், அங்கே ஓர் அக்கிரகாரம்; அங்கே பெண் ஒருத்தி; பெண் அல்ல. கன்னி. அவள் பெயர் நளினி. நளினமான பெயர்தான். அவளுக்குத் தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ‘அழியாக்கனவு’களைக் கண்டுகொண்டிருப்பதுதான் அன்றாட அலுவல், அந்த அலுவலுக்கு உயிரூட்டுகிறது சீதாராமன், சீதாராமன் என்ற இளைஞனின் வருகை. நளினியை இரண்டு முறை பார்த்து, அதன் விளைவாக அவனுக்கு விளைந்த துன்பங்கள் அதிகம். அதனால்தானோ, என்னவோ, அவளை அவன் தன் உரிமையாக்கிக் கொள்கிறான். ஆனால், அவளுக்கோ அவனது வாழ்வில் புதைந்து கிடந்த ரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டுமென்ற துடிப்பு மிஞ்சுகிறது. உள்ளத்தின் தற்காப்பு உணர்ச்சி (Self— preservative—instinct) இது. அவளால் அன்பு சொட்ட அழைக்கப்பட்ட ‘பட்டணத்து மாமா’வான சீதாராமன், “அந்தப் பழைய கதையைஎல்லாம் நீயும் நானும் மறந்து விடுவதே நல்லது!” என்று முத்தாய்ப்பு வைக்கின்றான் இறுதியில் அவளது கடிதம் அவளுடைய அழியாக் கனவுகளுக்கு முத்தாய்ப்பு அமைத்து விடுகிறது. எவ்வளவு சாமர்த்தியசாலிதான் ஆனாலும், ஓர் அயோக்கியனுடன் வாழ விரும்பவில்லை. திடீரென்று ஏற்பட்ட முடிவல்ல இது. ‘என்னைத் தேட வேண்டாம்,’ என்று எழுதி, பின் குறிப்பு ஒன்றையும் இணைத்திருந்தாள். அவள் தன் பிறந்தகத்துக்குச் செல்லவில்லையாம்!

ஒரு சிறு விஷயம்!

‘நளினி’ என்னும் மகுடம் ஏந்திக்கொண்டிருக்கும் இக்கதையை ‘நாவல்’ எனப் பெருமையுடன் தேர்ந்தெடுக்கின்றார், நளினியைப் படைத்தவர். இந்தப்படைப்பாளரை முதலில் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அவர் நம் மதிப்புக்குரியவர். பெயர் : க. நா. சுப்ரமணியம். பெரும்பாலோர் சொல்கிறார்கள் : “க. நா. சு. பெரிய இலக்கிய விமரிசகர்!” சிலருக்கு அவர் என்றால், சிம்ம சொப்பனம். அப்படிப்பட்ட ‘பயங்கர மனிதர்’, தாம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆக்கிய இந்த நளினியைப் பற்றி இப்போது முன்னுரை எழுதும்போது, ‘பேஷ்! தேவலேயே! ஒரு சிறு விஷயத்தை வெகு அழகாக எழுதி விட்டோமே?’ என்று குறிக்கிறார்; குதிக்கிறார். “நல்ல ‘பேஷ்!’ போங்கள், மிஸ்டர் கே. என். எஸ்!”

ஒரு சிறு விஷயம்! - அந்தச் சிறு விஷயமும் இல்லையென்றால், இதைப் படித்துத் தீர்க்க வேண்டுமென்று எனக்குத் தலைவிதியா, என்ன? வயதால் மட்டும் வளர்ச்சி யடையாமல், உள்ளத்தாலும் வளர்கின்ற பக்குவத்தை - மனத்திட்பத்தை - ‘நளினி’ மூலம் பரிசோதனை செய்து, பார்த்தார் க. நா. சு. விளைபலன்: தோல்வி! படுதோல்வி!

சூள்!

வாசகர்களின் மனோதர்மத்துக்குக் கதையின் முடிவைக் காணிக்கை வைத்துவிட்டு எழுத்தாளன் விலகி நிற்பது புதிய உத்திதான்; கோடிட்டு, ‘கோடி’ காட்டும் உட்குறிப்பு (subtle suggestion) இது. இத்தகைய முடிவுக்கு ஓர் தொடக்கம், வளர்ச்சி, இடைநிலை, கதைப் பிண்டத்தில் ஓர் அழுத்தம், உருவாக்கும் தலைமைக் கதாபாத்திரங்களிலே ஒரு தனித் தன்மை போன்ற பண்புகள் பொலிவு காட்ட வேண்டும். ‘நளினி’யில் நளினியைத் தவிர, மற்ற எல்லாப் பாத்திரங்களும் வெறும் அண்டா, குண்டான், குடம் வகையறாத்தான்! பத்து வயசுப் பெதும்பைப் பருவத்தில் நளினி அழகு காட்டுகிறாள். திடீரென்று பதினைந்து ஆகிறது: வயசில் சின்னம்மாவுக்கும் சாஸ்திரிகளுக்குமே தகராறு. எப்படியோ, அவளுக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. ‘போலி மனிதனாக’ ஆக்கிவிட்ட சீதாராமனிடம் எப்படித்தான் நளினியை ஒப்படைக்கத் துணிந்தாரோ நம் க.நா. சு.?

சீதாராமன் நல்லவனோ, கெட்டவனோ, நாம் அறியோம், பராபரமே! அது க. நா. சு. அவர்களின் பேனாவுக்குத்தான் வெளிச்சம். ஆனால், நளினி தன் வாயால், ‘அவர் வண்டியிலேருந்து வந்து இறங்கச்சே நான் பார்த்தேன்; நன்னாத்தான் இருந்தார்!’ என்று பரிந்து பேசுவதைப் பார்க்கையில், அவன் ஆணழகனாகத்தான் இருக்கவேண்டும். அவன்-அவர் சீதாராமன். ஆனால் இந்தச் சீதா ராமன் செய்த ‘படுத்தடிக் காரியம்’ என்ன முடிவு கண்டது? பட்டணத்து வங்கி ஒன்றிலே களவு போன இருபதினாயிர ரூபாயின் ‘தலைவிதி’ என்ன? மேற்படி பணத்தைக் கையாடினவர் குருஸ்வாமி என்ற ‘உண்மை’ நம்மை எட்டிப் பிடிக்கத் தவறவில்லை. ஆனால், சீதாராமனின் நேர்மையும் நாணயமும் கண்ட தீர்ப்பு என்ன ஆயிற்று? பிராயச் சித்தமே இல்லாத ஒரு குற்றத்தைச் செய்துவிட்டவன் போல அவன் தலை இறங்கியதற்குக் காரணம் என்ன? ‘ஒரு கத்தை நோட்டுக்கள்’ அவனுக்குக் கிடைத்தனவே, எப்படி? மறுமொழிகளை நாம்தாம் ஊகம் செய்து கொள்ளவேண்டுமாம்! ...

நளினியின் ‘குழந்தையுள்ளத்’தில் சீதாராமனைப் பற்றிய வரையில் இரண்டே இரண்டு காட்சிகள்தாம் நின்றன. ஒன்று, சீதாராமன் விஜயபுரம் வந்தபோது, அவனைப் போலீஸார் கைது செய்து அழைத்துப் போனது; இரண்டாவது, குருஸ்வாமியும் அவனும் தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து விவாதம் செய்தது.

சரி. இப்படிப்பட்ட இரண்டு காட்சிகளும் அவளுடைய மனத்தைச் சலனப்படுத்தியிருந்தால், அவனைப் பற்றி அவள் ஒரு புதுப் பாடத்தைப் படித்துக் கொண்டிருக்கமாட்டாளா? காலங்கடந்து அவள் படித்துக் கொண்டதால்தானே, அவளது ‘இறுதிக் கடிதம்’ உருவானது? ‘குழந்தை உள்ளம்’ என்று ‘சப்பைக்கட்டு’க்கட்டி நளினியை நாட்டாற்றில் அகப்படச் செய்திருக்கும் இவர் ‘சீதாராமனைப் பற்றிய வரையில், நளினிக்கு ஒரு மனோ திடமும், சிந்திப்பதற்கான ஒரு முதிர்ச்சியும் ஏற்பட்டிருந்தது வாஸ்தவமே!’ என்று வேறு ‘வக்காலத்து’வாங்கிக் கொண்டு தத்தளிக்கிறார், பாவம்! தன் வாழ்க்கைப் பிரச்சினையின் புயல் பகுதியைப் போக்கிக்கொள்ள நளினிக்கு வாய்ப்பே கிடைக்கவில்லையாம்! விந்தையாக இல்லையா?

இவர் சொல்ல நினைந்த இதே கதைக் கருவை அடி நாதமாக்கி, அற்புதம் பொருந்திய, உண்மையான, சிறப்புமிக்க நவீனத்தை என்னால் படைக்கமுடியும். ‘நளினி’ தோல்வியினை அங்கீகரித்து, இந்தப் ‘போட்டியை’ திரு க. கா. சு. ஏற்பாரேயானால், தமிழ் இலக்கியம் பிழைத்து விடும் என்று நாம் எண்ண வாய்ப்பு இருக்கிறது.

காந்திஜியும் க. நா. சு. வும்

தமிழ்ப் புதினத்தின் வளர்ச்சியில் ‘தேக்கம்’ கண்டிருப்பதாக ஏக்கம் கொண்டு ஏசி, அதற்கென ஒரு பத்து ஆண்டுகளையும் காணிக்கை வைத்துப் பேசியவர் க.நா.சு. என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். ஆனால் அவர் மட்டும் மறந்திருக்கத்தான் வேண்டும். அந்த ‘மறதி’க்கு வாழ்த்துக் கூறவேண்டும். காரணம் இல்லாமல் இல்லை. நவீனத்தின் ‘இருட்டுக்காலத்’தைப் பற்றிப் பேசவந்த இவர், தாம் படைத்த நளினியையும் மனத்தில் ஏந்தி வைத்துத்தான் அவ்வாறு பொதுமக்கள் முன்னிலையில், தம் ‘முடிவுக் கருத்துரை’களை வைத்திருக்கவேண்டும். சாதாரணமாக நடைமுறையில் சொல்வது உண்டு. தன் பலம், தனக்குத் தெரியாதாம். ஆனால் இவருக்கோ, இவர் பலம் அப்பட்டமாகத் தெரியும் என்பது இவருடைய தனித்த கருத்து. அதனால்தான், இலக்கியப்பட்டம் விசி விளையாடிவருகிறார், பட்டம் அடிக்கொரு முறை அறுந்து விடுகிறது; அல்ல, அறுத்துக் கொள்கிறது. ஏன் தெரியுமா? அவருடைய ‘கை’யில் பலமில்லை. அப்படிப்பட்ட கையில் பேனாவைப் பிடிக்கலாமோ? தம் தோல்வியை தமிழ்ப் புதின உலகின் தோல்வியாக ஆக்கிவிடுகிறார்; ஆனால் ஓர் இரகசியம்: க. கா. சு. ஒருநாளும் காந்திஜியாக முடியாது!

பாத்திர அமைப்பைப் பற்றிப் பிறருடைய நவீனங்களில் குறைகாணும் திரு க.நா.சு. தம் பெயரை அறவே மறந்து விடுகிறார். தம் சொந்தக் கருத்துக்களுக்குப் பிறர் நூல்களை மேடையாக்கி ‘அதிகப் பிரசங்கம்’ செய்கிறவர் இவர். தமிழ் நூல்களை முறையாகக் கற்றுத் தேர்ந்து தெளிந்து,இப்போது தமிழ்வளர்க்கும் தகைமையாளர்களாக நம்மிடையே திகழ்ந்து வருபவர்கள் சிலரை வம்புக்கு இழுத்திருக்கிறார்: தமிழ்ஞானம் எழுத்தாளனுக்கு அறிவைக் கொடுக்காது என்பது இவர் வாதம். இது 'முடக்கு வாதம்!' ‘நளினி’யைப படித்து மூடிக்க ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒவ்வோர் அரையணா எனக்குச்செலவு ஆயிற்று. திரு க. நா. சு-வின் தமிழ் நடையைப் படிக்கிறீர்களா?

‘...லீவு கிடைத்த சந்தர்ப்பத்திலே, தன் சகோதரியைப் பார்த்து எவ்வளவோ நாள் ஆகிறதே, பார்த்துவிட்டு, அவளுடன் இரண்டொரு நாள் தங்கிவிட்டுப் போகலாம் என்று எண்ணி வந்திருந்தான் சீதாராமன்,’

உன்னிப்பாகப் படியுங்கள். ‘விரசம்’ தட்ட வில்லையா?

இன்னும் பாருங்கள்:

‘...ஆனால் அதெல்லாம் ஏதோ காவியம் படிப்பது போல அவர்கள் உள்ளத்தைத் தொடாமல் போய் விட்டது!’

அமரர் புதுமைப்பித்தனின் ஒப்புவமை எந்த மூலை, போங்கள்! 

‘எண்ணை மில் ஒன்று!’

இலக்கியத்தில் அஷ்டாவதனம் செய்து, தெய்வப் புலவரின் தலையிலேயே கையை வைத்த அன்பரின் ‘எண்ணைமில்’ அழகாக இல்லையா? அச்சுப் பேயைக் கைகாட்டினல், அது தவறு!

‘கல்யாணத்துக்கான ஏற்பாடுகளெல்லாம் நடந்தது!’

இலக்கணம் வதைப்படவில்லையா?

‘அபிவாதையே சொல்லாத குறையாக சாஸ்திரிகள் சொன்னார்.

என்ன அர்த்தமாம்?

‘கிரோஸின் சிம்னியுடன்’ சமையல் அறை வாசற்படி யண்டை நின்றாள்!’

நல்ல தமிழிலே எழுதக்கூடாதோ?

இம்மாதிரி இன்னும் எவ்வளவோ வரிகள் புரியாதனவாகவும், ஆழ்ந்து படிக்கும்போது, சிரிப்புத் தருவனவாகவும் இருக்கின்றன. ‘தமிழறிவு’ வளம்பெற்றிருந்தால், இப்படிப்பட்ட பிழைகள் ஏற்பட்டிருக்குமா?

மொழி நடையின் தூய்மைக்கென அமைந்திருக்கும் வேலிகளான இலக்கணம், மரபு ஆகியவற்றின் தேவைகளின் இன்றியமையாத் தன்மை குறித்து திரு நா. பார்த்த சாரதி ஒருமுறை எழுதியிருந்தார்: ‘ஓட்டைக் கிண்ணத்தில் எண்ணெய் தங்குமா? ஒழுங்கும், மரபும், இலக்கணமும் இல்லாத மொழி நடையில் கருத்துக்கள் தங்குமா? தங்கத்தான் முடியுமா?’

பொய்மை கொண்ட கலி!

‘என் அகக் கண்ணில் நளினி புதுமைப் பெண் அல்ல; என்றும் இருந்து வந்திருக்கின்ற இந்தியப் பெண் மணிதான்’ என்று சொல்லுகிறார் நாவலாசிரியர். புதுமைப் பெண் என்றாலே அவளும் இந்தியப் பெண்மணிதான்; ஆனால் இவரோ புதுமைப் பெண்ணை ஏனோ துண்டுபடுத்திக் காட்டுகிறார். ‘பொய்மை கொண்ட கலிக்கு’ ஒரு விடிபொழுதெனச், சொற்களும் செய்கைகளும் ஏந்தி நிற்பவள் புதுமைப்பெண் தான்!

இப்ஸன் வழி

தேம்ஸ், மிஸிஸிப்பி, நைல் போன்ற மேலைநாட்டு ஆறுகள் பாவம் செய்தவை; அதனால்தான், திரு க.நா.சு. அவர்கள் அங்கே பிறப்பெடுக்கவில்லை. தமிழ் நாட்டில் - அவதரித்தார். விட்டகுறை தொட்டகுறையின் விளைவாக ‘மேலைநாட்டு இலக்கியத்தில்’ கரை காணத்துடிக்கிறார். மதிப்புப் பெறவேண்டும். ஆனால், இப்ஸன் (Henry Ibsen) தம் நாடகம் ஒன்றில் கதவடைப்பைச் சித்திரிக்கின்றார். அதில் உயிர் இருக்கிறது. இங்கே இவர் காட்டும் ‘அடைத்த கதவு’க்குப் பின்னேதான் கதையின் முடிவே ஒளிந்து கொண்டிருக்கிறதாம், சொல்லுகிறார்! இவர் எழுதிய ‘வரவேற்பு’ என்னும் சிறு கதையிலும் கதவடைப்பு நிகழ்ச்சி வருகிறது. அது அற்புதம்!

இன்னொன்று கதவை ஓங்கிச் சாத்திவிடும் உரிமை பெண்ணுக்குக் கிடைத்திருப்பதைப் பெருமையாகப் பேசுகின்ற க. நா. சு. அவர்கள், அந்தப் பெருமையை உரிய வழியில், உரிய முறைப்படி, உரிமையாக்கத் தவறிவிட்டார்; அவருக்கு இப்பணி பிடிபடவில்லை!

தாக்கரேயை (Thackeray) கதை உறுப்பினர்கள் ஆண்டனராம். ஆனால் நம் க. நா. சு. வோ நளினியை ஆள்கிறார், ஸ்காட் (Scott) கொண்டிருந்த கொள்கைக்கு எதிரானவர் இவர். கதையில் வருகின்ற ஏழெட்டு நிகழ்ச்சிகள் காரண காரியமின்றி நுழைக்கப்பட்டிருக்கின்றன.

‘இலக்கிய விமரிசகர் என்றால், தாமே இலக்கியம் படைத்துத் தோல்வியுற்றவர் அல்லர்!’-மேலைநாட்டுச் சிந்தனே இது. இக்குறிப்பு நினைவுக்கு வரும் நேரத்தில், எனக்கு ஓர் எண்ணம் எழுவது உண்டு. க. நா. சு. இப்போது இலக்கிய விமரிசகராக ‘அவதாரம்’ எடுத்திருப்பதும் நல்லதுதான். ஏனென்றால், இவருடைய இலக்கிய வெற்றி தோல்வியைப் பற்றிய முடிவைக்கூற வாய்ப்பு உண்டாகும் வேளையில், என் போன்றவர்களை நளினி காப்பாற்றுவாள்!’

உதிரிக் கதைக் கூடாகத் (Loose Pol) தோற்றம் தருகின்ற ‘நளினி’ திரு கா. நா. சு.வுக்கு மட்டுமல்ல, தமிழ்ப் புதின இலக்கியத்துக்கே ‘ஒரு கெட்ட சோதனை.’ கடைசியில் காணப்பெறும் நளினியின் நாலுவரிக் கடிதத்தைத் தவிர, சுவைப்பதற்கோ, சிந்திப்பதற்கோ ‘தொண்ணூற்றிரண்டு பக்க நாவலில்’ வேறு எதுவுமே இல்லை.

‘தம் சொந்தக் கஜக்கோலைக்’ கொண்டு ‘இலக்கிய நியதி’யைப் பற்றி உரையாடி ‘முதல் ஐந்து தமிழ் நாவல்கள்’ என்ற ஒரு விமரிசனக் கட்டுரைத் தொடரை க.நா.சு. எழுதினார். தி. ம.பொன்னுச்சாமி பிள்ளையின் நிகழ்ச்சிக் கோவை; பி. ஆர். ராஜா ராமய்யரின் ‘குணச் சித்திர விளக்கம்; வேதநாயகம் பிள்ளையின் ‘வேகம் கெடாத நடை’; அ. மாதவய்யாவின் ‘மகிழ்வூட்டும் கதை’; பண்டித நடேச சாஸ்திரியின் ‘எழுத்துக் கவர்ச்சி, நிதானம்’ ஆகிய இலக்கியப் பண்புகளைப் போற்றும் இவர், தம் எழுத்துக்களில் மேற்கண்டவற்றை அரை குறையாகப் பற்றக்கூட முயலவில்லை!

ஒரு நாள் க. கா. சு!

‘நளினி’ என் அனுதாபத்திற்கு இலக்காகும் ஓர் அபலைப் பெண். அவளுடைய பேதை மனத்தின் நுணுக்கமான மனத்தவத்தை-அந்த உயிர்த் தத்துவத்துக்கு அடித்தளமாய் அமைந்திருந்த அவளுடைய களங்கமில்லாப் பாவனைகளை நுழைபுல நுண்மாண் அறிவுடன், மரபறிந்து, மாயை புரிந்து, மணம் எடுத்துச் சொல்வதற்கு ‘தகுந்த உள்ளம்’ அவளுக்குக் கிடைக்கவில்லை!

பட்டம்:

‘ஒரு நாள்’ என்னும் அற்புதமான நவீனத்தை எழுதிய ‘அந்த ஒரு நாள் க. நா. சு.‘ அவர்களை இனி தமிழ் எழுத்துலகம் தரிசிக்க வாய்ப்பில்லையோ, என்னவோ?

பெருங்காயம் வைத்த வெறும் பாண்டம்= க.நா. சுப்ரமணியம்...! உள்ளே பண்டமில்லை ‘கமகம’ என்ற மணம் ஏமாற்றத்தைத் தருகிறது.

அறுவடை

–ஆர். ஷண்முகசுந்தரம்–

‘கூளப்ப நாயக்கன் காத’லையோ, அல்லது ‘விறலி விடுதூ’தினையோ ஏறெடுத்தும் பார்க்காத நாகரிக மனிதரும் வயோதிக மைனருமான சின்னப்ப முதலியாருக்குப் பலபெண்களைத் தன் இன்பத்துக்குப் பயன்படுத்திக்கொண்ட பரி பக்குவத்துக்குப் பிறகு, மீண்டும் திருமண ஆசை தலையெடுக்கிறது. நண்பர் கறுப்பண்ண முதலி அதற்கு ஒத்து ஊதுகிறார். மனைவி இறந்த பின், பெண்களுடன் ஊடாடிப் பழகியே வந்துவிட்ட சின்னப்ப முதலியாருக்கு கடைசி காலத்துக்கு மனைவி வேண்டும் என்று எண்ணுவது நண்பர் கறுப்பண்ண முதலியாருக்குச் சாதகமாக இருக்கிறது. பெரும் பணக்காரராகிய சின்னப்ப முதலியின் திருமணத்துக்குப்பின் தன் அருமை மகன் கல்யாணத்தையும் சின்னப்ப முதலியாரின் பணத்திலேயே நடத்தி விடுகிற திட்டம் கறுப்பண்ண முதலிக்கு உண்டு. இத் திட்டத்தைச் செயலாக்க அப்பாவி நாச்சிமுத்து அகப்படுகிறான். 

தேவானை அழகிய பெண். நாச்சிமுத்துவின் மகள். தகப்பனை உண்மை அன்பிலே குழைத்தெடுப்பவள். ‘ஆள்’ உயரத்துக்கு வளர்ந்து, ஓங்கி நிற்கிற சின்னப்ப முதலியாரின் சோளக் காட்டுக்குள்ளேதான் சின்னப்ப முதலியாரின் பேரன் சுப்பிரமணியத்தின் பேரின்பக் காடு அமைந்திருந்தது. தேவானையுடன் சோளக் காட்டுக்குள்ளேதான் அவன் தன்னுடைய இன்ப உலகத்தைப் படைத்திருந்தான். தகப்பனும் அத்தையும் வீட்டை விட்டுப் போன பின் சுப்பிரமணியத்தைச் சந்திக்கச் சோளக் காட்டுக்குள் வந்து விடுவாள் தேவானை! அவளுக்கும் அவனுக்கும் என்றே சோளக்காடு உண்டாகியது போல் ஆகிவிட்டது.

நாச்சிமுத்து போலீசில் அகப்படுகிறான். சூதாட்டத்திலே அகப்பட்ட அவன், சின்னப்ப முதலியின் ஆசை வலையில் சிக்குகிறான். அதாவது, தன் மகள் தேவானையை அந்தக் கிழவனுக்கு மணம் செய்து தருவதற்கு ஒப்புக் கொண்டு சேவகரிடமிருந்து தப்புகிறான்.

தேவானை, சுப்பிரமணியத்தோடு நடத்தி வந்த ‘பகல் நேரக் களியாட்டம்’ நாச்சிமுத்துக்கோ, அவள் அத்தைக்கோ தெரியாது. உனக்கும் சின்னப்ப முதலிக்கும் கல்யாணம்! என்ற செய்தியைத் தன் மகளிடம் கூறத் தவிக்கிறான் நாச்சிமுத்து. அவள் ‘அறியாக் குழந்தை’ என்ற உணர்வு அவனுக்கு!-தேவானை தனக்கும் சின்னப்ப முதலிக் கிழத்துக்கும் கல்யாணம் என்றறிந்த போது ‘ஓ’வென்று அலறி அழுதாள். உடனே தன் ‘காதலனி‘டம் ஓடிப்போய் இச்செய்தியைத் துயரம் இழையோடத் தெரிவித்தாள். தந்தையின் சூதுமதியையும் விளக்கினாள்.

சுப்பிரமணியனிடம் பாலைமரத்தடியில் அனுபவித்த இன்பம், இனித் துன்பமாகிவிடப் போகிறது என்பதை மெய்ப்பிப்பது மாதிரி அவர்களிருவரும் சந்தித்துப் பேசி மகிழ்ந்து வந்த இன்ப ஊற்றின் உறைவிடமான சின்னப்ப முதலியின் அந்தச் சோளக் கொள்ளையிலே அன்று அறுவடை நடக்கிறது.

“இதுவரை சின்னப்ப முதலியார் கொண்டு வந்த பெண்கள் எல்லாம் படிதாண்டாப் பத்தினிகளா என்ன? அது போல நீயும் இரு. நமக்கும் அது நல்லது!” என்றான் சுப்பிரமணியம்.

தேவானை காரித்துப்பினாள் அவன் முகத்தில். ‘பளார்’ என்று ஒலியெழ ஓங்கி ஓர் அறையும் கொடுத்தாள். அவன் எழுமுன் வீட்டுக்கு ஓடினாள்.

சின்னப்ப முதலியார், திருமணத்தன்று, அவள் வாழ்வு உண்மையிலேயே அறுவடையாகி விட்டது. தேவானை மணப்பெண்ணின் கோலத்தோடு வீட்டு உத்திரம் ஒன்றிலே பிணமாகித் தொங்கினாள்!

அறுவடை ஆகி முதிர்ந்த கதிர் தலை சாய்த்துத் தொங்கியது! கதைக்கு ஓர் அம்சம்!

கதைச் சுருக்கத்துக்குப் பின் கதையம்சம் என்று ஒன்றினைச் சொல்லிவிட்டால், கதையின் மூலக்கூறுகள் பிடிபட்டுவிடும் அல்லவா? கொங்கு நாட்டுச் சிற்றூர் ஒன்றில். இளைஞன் ஒருவனின் காமத்துக்கு அறுவடையாகிவிடுகிறாள் ஓர் அழகி தன் வாழ்வை, புன்மை நிறைந்து வழியும் வாழ்வாக ஆக்கிக் கொள்ள விரும்பாமல், தன் வாழ்வையே அறுவடை செய்து, உளுத்துப்போன மரத்தினின்று உதிரும் கடைசிக் கனிபோல வீழ்ந்த தமிழ்ப் பெண் தேவானைதான் இந் நாவலின் கதைக்கு ஓர் ஆணிவேராக இருக்கிறாள்.

அனுதாப முக்கோணம்!

அறம்கொண்டு மறம் கண்ட கன்னிப் பெண் தேவானை.

ஒருநாள்:

ஆள் உயரத்திற்குச் சம்பாச் சோளப் பயிர் பால் பூட்டையுடன் தலைதுாக்கி நின்றது.

இந்தக் சோளக்காடுதான், வேதனையின் மனம் தொட்ட சுப்பிரமணியத்திற்கு பேரின்பக்காடு.

அதோ, தேவானை!

அவள் வந்ததும், அவனை நெருங்கினான் இளைஞன். அணைத்தான். இன்ப மெத்தையிலே இருத்தினான். கண்னொடு ‘கண் இணை’ நோக்கின. அப்படியிருந்தும், இருவரும் பேசாமல் இருந்தார்களா? அதுதான் இல்லை. பேசினார்கள். “ஐயோ! ஏன் இப்படிப் பாக்கறிங்க?” என்றாள். 

‘கருமணியிற் பாவாய்’ என அவள் ஆகிவிட்டாளா? ஊ ஹும்!

சுப்பிரமணியம் கைகாரன். ‘சும்மா பார்த்தேன்’ என்கிறான்.

பிறகு, தன்னைப் பணக்காரன் ஒருவனுக்குக் கட்டிக் கொடுக்கத் தன் தந்தை திட்டம் புனைந்திருப்பதாக விவரம் மொழிகிறாள் அவள்.

“அப்படியா? நெசமாணுமா? எனக்குத் தெரியாதே?” என்கிறான் காதலன்.

“தெரிஞ்சா என்ன பண்ணுவீங்களாம்?” என்று வினவுகிறாள் காதலி.

“என்ன பண்ணுவனா? அது எனக்கே தெரியாது!” என்று வீரத்துடன் கூறினான் சுப்பிரமணியன். அவன் வஞ்சன்! அதனால்தான் அவன் உள்ளுரச் சிரித்தானோ?

பேதை அவள் நம்பினாள். நம்பாமல் இருக்கமுடியுமா?

பேசிக்கொண்டிருப்பதில் புண்ணியம் இல்லை. என்ற ‘காரியச் சித்தக்காரன்’ சுப்பிரமணியம். காலத்தைக் காட்டி, கனவைக் கூட்டி, காதலியை ஓட்டி, காலத்தை ஓட்டினான். அவளைத் தன் இன்பக் கருவியாக ஆக்கி விட்டான்.

பேதை அவள்!

இறுதியில்:

தன்னைத், தெய்வம்போல வந்து சிறையினின்றும் மீட்ட கிழம் சின்னப்ப முதலியாருக்குத் தன் அருமைப் புதல்வி தேவானையைக் கட்டிக்கொடுக்கப் போவதாக மகளிடம் சொல்கிறான் நாச்சிமுத்து. “ஏராளமா நகை போடப் போறாரு. தம் சொத்தெல்லாம் உம் பேருக்கு எழுதிவைக்கப் போறாரு!”

தேவானை ஊமையாகி விட்டாள்.

ஊமையானவள் ஆசைக் காதலன் சுப்பிரமணியத்தைக் கண்டதும், வாய் திறந்து பேச முனைகிறாள். நிலை குறித்து விம்முகிறாள்.

அவன் என்ன பதில் விடுக்கிறான், புரிகிறதா? “எவனேயாவது கட்டிக்கிட்டு எங்காச்சும் போயிருந்தாயானால் நமக்கு எவ்வளவு கஷ்டம்? எங்க தாத்தெனக் கட்டிக்கிறது நல்லதாப் போச்சு!” என்கிறான்.

அவள் கொதிக்கிருள். பிறகு, சாத்மீகமான தொனி எடுத்து, காம சிநேகிதமா இருந்ததே ஊருக்குள்ளே எல்லார்த்தெ கிட்டெயும் சொல்லிடுங்களே?' என்று இறைஞ்சுகிருள்.

“அதுலே உனக்கு என்ன லாபம்?”

“உங்க தாத்தாவிடமிருந்து தப்பிச்சுக்குவேன்!”

“அவரு உன்னெக் கலியாணம் பண்ணிக்க மாட்டாருண்ணு நெனச்சுக்கிட்டாயா?”

“ஆமா!”

“தாத்தாக்கிட்டிருந்து தப்பிச்சுக்கிட்டாலும், வேறொருத்தனும் கட்டிக்க மாட்டானே?”

“எனக்குக் கல்யாணமே வேண்டாம்!”

“ஆனா எனக்குக் கல்யாணம் பண்ணாமெ எங்கம்மா உடமாட்டாளே! எனக்கு அப்புறம் யாரு பொண்ணு கொடுப்பாங்க?” 

“உங்களெ நம்பினதுக்கு இந்த உபகாரமாவது செய்யக் கூடாதா?”

“இதுக்கெல்லாம் எங்க காத்தா மசியமாட்டார்! இதுக்கு முன்னாலே அவரு படிதாண்டாப் பத்தினிகளைத் தான் கூட்டிக்கிட்டு வந்து வச்சிருந்தாரா? எல்லா தேவடியாள்கள் தானே?”

‘தேவடியாள்’ என்ற சொல்லைக் கொடுத்த சுப்பிரமணியத்துக்குப் ‘பளார்’ என்று கன்னத்தில் ஓர் அறை கொடுத்து அவன் முகத்தில் காறித்துப்பிவிட்டுப் பறக்கிறாள் தேவானை!

முடிவு:

மணப்பெண் கோலத்தில் கல்யாணப் பெண் கழுத்துக்குச் சுருக்கிட்டு, விட்டத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறாள்!

பாவம்! கல்யாணப் பெண் தேவானை!

க. நா. சு + ஆர். ஷண்முகசுந்தரம்

எனக்கு எப்போதுமே ஒரு கொள்கை உண்டு. ஒரு பாத்திரத்தைக் கட்டுக் கோப்புடையதாகச் செய்ய ஒரே ஒரு சம்பவமாவது உயிர்த்துடிப்புடன் விளங்கவேண்டுமென்று கருதுபவன் நான்.

தஞ்சை மாவட்டச் சூழலைப் பகைப் புலமாக்கி ‘மருதாணி நகம்’ என்ற நவீனத்தை எழுதினேன். பஞ்சவர்ணம் நாயகி. படுசுட்டி அவளது கற்பைக் களவாட நினைத்தவர்களைத் தீயாகப் பொசுக்குகிறாள். உச்சக் கட்டத்தை உருவாக்கும் புண்ணியம் தீக்குக்கிட்டுகிறது. “நெசமான அன்பும் நேசமும் இல்லாத பொய்யான ஆளுங்களுக்கு ஊடாலே, பொண்ணாப் பொறந்தவ நானு வாழ்ந்துப் புடலான்னு. நெனச்சதே குத்தமின்னு புரியிறத்துக்கு இம்மாங் காலமாயிருக்குது!” என்று அழுகிறாள்.

இந்தத் தேவானையின் கதியும் அம்மாதிரிதான்!

ஆம்; பெண்மையின் அரணாகப் பெண்மை மதிக்கப் பெற்று வாழ்த்தப்பட வேண்டும்.

இவ்வகையில் நான் படைத்த பஞ்சவர்ணத்தின் நிழலில் ஒண்டுகிறாள் தேவானை. வாழ்த்தத்தான் வேண்டும். யாரை?... பஞ்வர்ணத்தை!... ஆமாம்; பஞ்சவர்ணத்தைத் தான்!...

ஆனால், அவளை வாழ்த்த அவளது தற்காலிகக் காதலன் (Temporary lower) தயாராக இல்லை! அதனால் தான், கதைக் கருவுக்கு ஓர் பிடிப்பும், கதை உறுப்பினளான தேவானைக்கு ஓர் உயிர்த்துடிப்பும் இருக்கிறது. ஆனால் அவளது உயிர்துடிப்பைப் பறித்துக் கொண்ட குற்றத்திற்கு சுப்பிரமணியம் மட்டும் ஆளாகவில்லை. இந்த நாவலின் ஆசிரியரும் உடந்தையாகிறார்! அபலை தேவானையின் கற்பு முழுமை பெறாதது போலவே அவரது பாத்திரமும் அரைகுறையாகிறது.

அனுதாபங்கள் முக்கோண ரீதியில் பிரிவினை பெறுமாக!..

பாத்திரங்கள்-செப்பு!

பாத்திரத்தில் இருக்கும் நீர் நிரம்பி வழியவும் இல்லை. வற்றிப்போய் விடவும் இல்லை. அதில் என்ன பயன்? 

பாத்திரத்தில் நீர் இருந்தால்தான் பயன்படும்; வெற்றுப் பாத்திரமாய் இருந்தால், வெறும் பாத்திரம் என்றாவது சொல்லிக்கொள்ள முடியும்! கொஞ்சம் நீருடன் இருப்பதை என்னவென்று சொல்லமுடியும்? அப்படியொரு புது உவமை கூறும்படிதான் இருக்கிறது. ஆர்.ஷண்முகசுந்தரம் எழுதி ‘முன்னுரை’யோடு வெளி வந்துள்ள ‘அறுவடை’ என்னும் இந்த நாவல். நாவலாகவும் இல்லாமல், நாவல் என்கிற இலக்கணங்களை மீறியதாகவும் இல்லாமல், ஏதோ ஓர் ‘இரண்டுங்கெட்ட’ போக்கில் உருவாக்கப்பட்டு, க.நா.சு. மட்டும் ரசிக்கிற மாதிரி எழுதியிருக்கிறார்! ‘குருசிஷ்ய விசுவாசம்’ என்றார்களே, அப்பண்பாடு, இவ்வகைதானோ?...

நடையும் தமிழும்

மாவட்ட இலக்கியம் (Class Literature) என்று சொல்லிக் கொள்கிறவர்கள் கூட, ஊன்றிப்பார்த்தால் இப் புதினத்தில் ஏதும் இல்லை என்பதை மிக எளிதில் கண்டு கொள்வார்கள்!

“தமிழ் இலக்கியத்துக்கே தொண்டு!”என்று இதைப் பற்றி மார்தட்டிச் சொல்லிக்கொள்ளத்தக்க அளவுக்கு இதில் என்ன இருக்கிறதோ, அந்தக் கலைத்தன்மை அந்தக் க.நா.சு. வுக்கே வெளிச்சம்! க.நா.சு. வின் வாக்கு தேவ வாக்கன்று என்பதை அம்பலப்படுத்திய கடமை யாரைச் சார்ந்ததென்பதைத் தமிழ் இலக்கிய உலகம் நன்கறியும்!

“No novel is perfect” என்கிறார் சாமர்செட்மாம். “நாவல் பழையதைத்தான் சொல்கிறது; ஆனால் பழையதைப் புதியதாகச் சொல்கிறது.” என்கிறார் அவர் எந்த நாவலும் நம் விருப்பத்திற்கேற்றபடி அமைவது கிடையாதுதான். அதைக்கூறிவிட யாருக்கும் உரிமை இல்லை தான். அதற்காக ஒன்றுமில்லாத எழுத்தை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு புகழ்வதில் என்ன லாபம்? லாபமில்லாமல் என்ன? இந்தத் திருக்கூட்டத்தின் தலைவலி நம்மீது சுமத்தப்பட்டுவிடுகிறதே!...

பார்வை

கொங்கு நாட்டுத் தமிழைச் சிறப்பாகப் பயன்படுத்தி அதற்குக் கலை வடிவம் தருவதில் சிறப்பான நயம் இந்நாவலாக்கத்தாளரிடம் இருக்கிறது. இச் சிறப்பியல்பு - மட்டும்; அவரைப் பூமாலை சூட்டிக் கவுரவப்படுத்திவிட முடியாதல்லவா?

அவருடைய முதல் நாவல் ‘நாகம்மாள்’. விதவை ஒருத்தியின் “கோயில் காளை’த் தனத்தை உருவாக்கி கொங்கு நாட்டு வளப்பச் சூழலுடன் அழகுற எழுதி ஓரளவு வெற்றிபெற்று, கலைஞர். கு.ப. ராஜகோபாலன் அவர்களிடம் பாராட்டுப் பெற்றார். அதே வேகத்துடன், தன் இலக்கிய வாழ்வில் அவர் வளரவில்லை என்பதை அறிய அவருடைய சிறுகதைகளைப் படித்தாலே போதும்! -கொஞ்சநாள்-கல்கி பாணி-கொஞ்சம் க.நா.சு தடம்-கொஞ்சம் சரத்பாபுவின் வழி!-அதன்பின் இன்னும் சில சிறு கதைகள்-‘மெளனி’யைப் பின்பற்றியவை: அப்பால், மாப்பஸான். பால்ஸாக், பிளாபர்ட் போர்வை!-இப்படிக் கூடுவிட்டுக் கூடுபாய்ந்தே வளர்ந்த வளர்க்கப்பெற்ற வளர்ச்சி இது! உண்மையான அவருடைய இலக்கிய வாழ்வை-அவருடைய கலைத்தன்மையை எவ்வளவு தூரம் பாதித்து முழுமை பெறாதபடி ஆக்கியிருக்கிறது என்பதை “அறுவடை” இயம்புகிறது. போதும்! திரு க.நா.சு. வரிந்து கட்டிக்கொண்டு, “தமிழில் என்னுடைய ‘பொய்தேவு,’ ஆர். ஷண்முக சுந்தரத்தின் ‘நாகம்மாள்’ ” —என்று தமிழ் நாவல் இலக்கியத்திற்கு ஓர் எல்லைக்கோடு கிழித்து, ‘வீண் ஜம்பம்’ பேச இனி முன்போலத் துணிவு பெறார். ஏனெனில், எல்லைக் கோட்டு விஷயம் போர்க்கோலம் பூண்ட கதையை அவர் அறியமாட்டாரா என்ன?

இந்த நாவலின் கதையம்சமும் கருவும் என்ன கூறுகிறது என்பதை உற்றுப் பார்க்கும்போது, இந்தக் கதைக் கரு, ஒரு நாவலுக்குரியதாகவே அமையக் காணோம்! அவர் பிறப்பித்துள்ள கதைக் கருவும், சிருஷ்டித்துக் காட்டியுள்ள மனிதர்களும் ஒரு நாவலுக்குரியவர்களாகவே தோன்றவில்லை. ஒரு சிறு கதைக்குரிய நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு, ‘நாகம்மாள்’ எழுதிய காலத்தில் எழுதிய அதே பழைய உத்திகளோடு இன்று ‘அறுவடை’ யையும் எழுதியிருக்கிறார்.

“எதற்காக எழுதுகிறேன்” என்ற கேள்விக்கு ஆர். ஷண்முகசுந்தரம் கூறும் மறுமொழி “தனி மனிதன், குடும்பம் இவற்றின் மீது பணத்துக்கு உள்ள ஆதிக்கம் குறைந்தால், எதற்காக எழுதுகிறேன் என்ற கேள்விக்கு, நான் தரும் பதில் ஒரு தனிக் காவியமாக இருக்கும்!”

தனி மனிதன், பண ஆதிக்கம்-இவை தான் இவருடைய ஆரம்பகால நாவல்களின் அடிப்படையாக இருந்தன. முடிவு !

“எழுத்து” விமரிசனம் செய்திருக்கிறது. இந்த எழுபது பக்கத்து நவீனம் ‘சாஹித்ய அகாடெமி’ப் பரிசுக்கு எட்டக்கூடிய தகுதி பெற்றிருக்கிறதாம்.

பாவம்!...பரிதாபம்!...

நவீனத்திற்குரிய பரப்பான கட்டுக் கோப்பு, நிலையான களன், உறுதியான உறுப்பினர் அமைப்பு, உட்பொருள், தூண்டுதல், உருவம், சோதனை போன்ற இன்றியமையாப் பண்புகளைத் தொட்டுக்காட்ட விழையாமல், க.நா.சு என்கிற ஒற்றைப் பனைமர நிழலில் ஒண்டி, அந்த நிழலின் தற்காலிகமான சுகத்தின் அளவையே தன் இலக்கிய அதிர்ஷ்டத்தின் தலையெழுத்தாகவும், அந்தத் தலையெழுத்தையே தன் இலக்கிய வெற்றிக்கு உரிய ஓர் எல்லைக் கோடாகவும் தன் கருத்தில் ஏற்றிக்கொண்டு அதன் கனத்திலேயே ஆத்ம திருப்தி பூண்டு ஒழுகி வரும் அன்பர் திரு. ஆர். ஷண்முகசுந்தரம், புதிய விழிப்பும், பழைய பெயரும் பெறவேண்டுமானல், அவர் அந்த ‘அதிசய உள்ளத்’தினின்றும் விலகித் தம்முடைய ‘சொந்த வழி’யில் நடக்க வேண்டும்!... ‘சொந்த நடை’யில் நடக்கவேண்டும் அதுதான் அழகு.

ஆம்; உண்மை என்றைக்குத்தான் இனித்தது, ஐயா!...நான் சொல்வது கசப்பாக இருக்கிறதா?

 6. செம்பியன் செல்வி

—கோவி. மணிசேகரன்—

கி.பி. 1070 முதல், 1120 வரை அரசாண்டான் முதலாம் குலோத்துங்க சோழன்.

வடக்கே மகாநதி முதல், தெற்கே குமரி முனைவரை எல்லையாகக் கொண்ட சோழப் பேரரசை நிலை நாட்டக் கலிங்க அரசன் அனந்தவர்மன் திட்டம் தீட்டுகிறான். அவனுக்கு உறுதுணையாகச் சாளுக்கியன் விக்கிரமாதித்தன் அவனுடைய படைத்தலைவன் ஆனந்த பாலையன், மற்றும் பல சிற்றரசர்கள் அமைகின்றனர்.

ஒரு வலிவற்ற நாட்டை வென்று புகழ் கொள்வதில் மதிப்பில்லை என்றுணர்ந்த குலோதுங்கச் சோழன் தன்னுடைய தானைத் தலைவனையே கலிங்கம் நோக்கி அனுப்புகிறான். அவன் கொடுத்த திட்டப்படி, தானத்தலைவன் கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தில் எண்மாய்க் கோட்டை என்ற புது முறைக் கோட்டையைக் கட்டுகிறான். கருணாகரனே தனக்குத் துணையாகக் கிடைத்துவிட்டான் என்ற பெருமிதம் கலிங்கனுக்கு ஏற்பட்டது.

இந்த இடத்தில்தான் அருள் மொழி நங்கை என்ற பேரழகியைச் சந்திக்கிறான்; காதல் கொள்ளுகிறான். ஆயினும் உடல் தீண்டாக் காதலர்களாகவே அவர்கள் வாழ்கின்றனர். காரணம் சோழமாதேவி மதுராந்தகி, தன்னுடைய மகள் அம்மங்கையைக் கருணாகரனுக்கு மணமுடிக்கக் கருதுகிறாள். ஆகவே கருணாகரனுக்கு உண்மையைச் சொல்லாமல் பெண்-பற்றியதில் ஆணை பெற்றுக்கொள்கிறாள்.

மதுராந்தகி தேவியும் மறைகிறாள். கலிங்கனுக்கும் கருணாகரனின் சதித்திட்டம் புரிந்து விடுகிறது. சிறைப்படுத்த முயல்கிறான். கருணாகரனும் சோழகுமாரன் விக்கிரமனின் மூலம் தப்பி வந்துவிடுகிறான். இந்நிலையில் கருணாகரனின் தங்கை இளவேணியை விக்கிரமச் சோழன் காதலிக்கிறான்.

சக்கரவர்த்தியின் ‘மண்ணு மங்கலவிழா’வின் போது கலிங்கன் திறை செலுத்தாமல் விடுகிறான். அருள்மொழி நங்கை கருணாகரனைப் பழிவாங்கத் திறைப்பொருளாக வருகிறாள். இதனையுணர்ந்த பேரரசன் அவளை மனைவியாகக் கொண்டுவிடுகிறான்.

சூழ்ச்சிகள் பலமாக நடக்கின்றன. கருணாகரனின் அண்ணன் காலிங்கராயர் சோழப் பேரரசைப் பகைத்துக்கொண்டு பாண்டியர்பால் சேர்ந்துவிடுகிறார். 

கலிங்கப்போர் மூளுகிறது. பல இன்னல்களுக்கிடையே வெற்றிபெற்றுத் திரும்புகிறான் கருணாகரத் தொண்டைமான். அவனுக்கு அம்மங்கை மனைவியாகிறாள்.

இதுதான் கதை!

திரு தமிழ்வாணன் தங்கமானவர். அவர் உள்ளத்தில் கட்டிபாய்ந்துள்ள தங்கக் கட்டியை மாற்று உரைத்துப் பார்த்து, தங்கம் இவ்வளவு, கலப்புச் சரக்கு இவ்வளவு என்று, அவர் மாதிரி, குறி-ஜோஸ்யம் சொல்லும் தலைவிதி எனக்கு வேண்டவே வேண்டாம். அவர் பிழைப்புத் தெரிந்தவர். அதனால்தான், அவருக்குத் தம் மனத்தில் பட்டதைச் சொல்லும் பக்குவம் உருவாகியிருக்கிறது. அந்தப் பக்குவத்திற்கு மாறு பெயர் ஒன்றும் உண்டு: அதுதான்: ‘ஸ்டண்ட்’!-இல்லையென்றால், சரித்திர புருஷர். பேராசிரியர் கல்கி அவர்களின் சரித்திர நாவல்கள் தலையணையாக உபயோகப்படுத்தவே பயன்படும் என்று புறம் பேசியிருப்பாரா?-பிழைக்கத் தெரியாதவர் அவர்!

“...வாரா வாரம் என் தொடர் கதைகளைப் படித்து, வந்த பதினாராயிரக்கணக்கான தமிழ் அன்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வாசகர்களின் ஆர்வமும் ஊக்கமும் இத்தகைய மாபெரும் வரலாற்றத் தொடர்கதைகளை எழுதி முடிப்பதற்கு உறு துணையாயிருந்தன...!” என்று குறிப்புக் கொடுத்திருக்கிறார் கல்கி. பிறர்முன் எளியனாய் நிற்கும் மனப்பண்பு. அனைவருக்கும் கைகூடி வருவதில்லையே!

கோவி. மணிசேகரன், “வரலாற்றுத் தமிழ் புதின உலகின் வழிகாட்டியாக விளங்கியவர் அமரர் கல்கி அவர்கள். அவர் என்னுடைய வழிபாட்டுக்குரியவர். அன்னார் இதய அரங்கில் இதனை அரங்கேற்றிக் காணிக்கையாக்கி அஞ்சலி செய்கிறேன்,” என்று செப்பியிருக்கின்றார். பக்திக் கடன் இது!

பட்டப் பரீட்சைக்கு அமர்ந்தபோது, சோழர்களின் பொற்காலம்பற்றி ஒரு வினாவுக்கு விடை கொடுக்கும் நிலை வந்தது. படித்ததை வடித்தேன். உங்களுக்கு நினை விருக்கிறதா?-‘வரலாறு என்றால் புளுகுகளின் மூட்டை!’ என்று வாய்கொழுத்துச் சொன்னரே நெப்போலியன்? அப்படியென்றால், அவரை இன்றைய சரித்திரம் மறந்து விட்டதா? நெப்போலியனின் இதய மொழியை முன்னுரையாக்கி, அதன் பேரில், கேள்விக்கு விடைமாளிகை எழுப்பினேன்.

காலத்தின் நாட்குறிப்பு ஏடுதான் வரலாறு. அதனால் தான் ‘வரலாறு நடக்கிறது’ என்று சிலர் வியாக்கியானம் செய்கிறார்கள். வரலாறு அவ்வாறு நடைபோடுவதால் தானே, நாம் இப்படி ஓர் அற்புதமான காட்சியைக் காண முடிகிறது?

அதோ, அந்தத் தலைநகர்தான் கங்கை கொண்ட சோழபுரம். சரித்திரம் புகலும் ஊர்; சரித்திரத்தைப் புகலும் நகரம். அன்று தேர்வலத் திருநாள். கலிங்கத்தை வெற்றி கொண்ட கோலமிகு திருவிழா நாள் அது. கலிங்கம் எறிந்த கருணாகரவேளுக்குப் புகழ் பாடிடக் கொடுக்கப்பட்ட நல்வாய்ப்புத் தவநாள் அது. வெற்றிகளும், அவ்வெற்றிகளை உருவாக்கும் அரசியல் நுணுக்கப் புத்திச் செறிவுக் கற்பனைகளும் வீரர்களின் உள்ளங்கை பாவைகள் அல்லவா? வீரன் ஒருவன்; அவன் வெற்றித் திருவுடன் விளையாடினான்; வெற்றித் திருவுக்கு விளையாட்டுக் காட்டினான். அதனால்தான் அவனுக்குச் செம்பியர்குலச் செம்மலாம் குலோத்துங்கச் சோழமாதேவர் தேரோட்டியானாரா? தோல்வியில் வெற்றி நாதம் இசைத்து, வேதனையிலே உற்சாகத்தைக் கைக்கொண்ட சாதாரணமான வீரன் ஒருவனா அவன்? வீரத்திற்குப் பருவ மாற்றங்கள் ஏது? அவன் கருவிலே திரு வாய்க்கப் பெற்றவன். அதனால்தான், சோழநாட்டின் பட்டமாதேவியின் உள்ளத்தைத் தொட அவனால் முடிந்தது. தொட்ட குறையும் விட்டகுறையும் மார்பொட்டி அணைந்தன. “...இன்று முதல் கருணாகரன் தத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மகன்!...” என்று ஆணையிடுகிறாள் மதுராந்தகி தேவியார்.

வரலாற்றைத் திகழவைத்த மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமானின் வாழ்க்கைச் சரித்திரத்தின் ஏடுகள் ஒவ்வொன்றும் சொல்லாமல் சொல்லும் சித்திர விசித்திரத் கதைகளை நீங்கள் அறிய வேண்டாமா?

‘செம்பியன் செல்வி’ என்ற இந்தக் கதையிலே இதயத்தை மகிழ்விக்கும்’ வர்ணனைகள், உள்ளத்தைத் திடுக்கிட வைக்கும் போர்க்காட்சிகள், உணர்ச்சியைக் கவரும் காதல்நிகழ்ச்சிகள், சுவையோடு செல்லும் நிகழ்ச்சிக் கோவை-இவை அனைத்தும் நிரம்பியிருக்கின்றன,” என்று திரு சோமு அவர்கள் போற்றுதல் அளிக்கிறார். அவர் சொல்வளப் பேரறிஞர்.

ஒரு காட்சி: காதற் காட்சி!

அழகின் பொற்பதுமை அவள்: சோழர் குலப்பூங் கொடி. அம்மங்கை என்பது அவள் பெயர். நீறு பூசும் தந்தையான திரிபுவன சக்கரவர்த்தி பிறமதங்களுக்கு ஊறு செய்யாத பெருந்தகையாளர் அல்லவா? பெற்ற மகள் வைணவப் பற்றில் பற்றி நின்றாள். அவள் கெட்டிக்காரி. வாயில் விரல் பூட்டி அடையாளக் கோடு இட்டாள். செம்பியன் செல்வியாயிற்றே? நந்திகள் விலகின.

வளையோசை கேட்ட அளவில், கருணாகரன் ஏறிட்டு நிமிர்ந்தான். அவள் கட்டிலில் படுத்துக்கிடந்த காட்சி அவள் கண்களுக்கு உலகளந்த பெருமாளே நினைவூட்டிற்றுப் போலும்! கேட்கின்றாள்; கேலி மொழி, “உலகளந்த பெருமாளே! நான் சொன்னது உங்கள் துளசிச் செவியில் விழவில்லையா?”

ஆமாம், அவள் என்ன கேட்டாள்? அது காதல் ரகசியம். அதைப்பற்றி சாவதானமாக ஆராய்வோமா? இப்போது, மீண்டும் ஓர் ஊர்வல விழாவுக்கு அன்பர்களை அழைக்கிறேன்.

அதோ, அரசத் தேரில் மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமானும்,அழகிய மணவாளனி அம்மங்கை ஆழ்வாரும் வீற்றிருக்க, தேரோட்டியாகச் சோழக் குமாரப் பேரரசன் விக்கிரம சோழன் அமர்ந்து வெண் புரவிகளைச் செலுத்திச்செல்லும் காட்சிக்கு நிகர் எது?

ஐயகோ! என்ன, அவ்வாறு விழி பிதுங்கிச் சாகின்றீர்கள்? “வெற்றிவேல், வீரவேல்” ஒலி உங்கள் மெய்யை உலுக்கி விட்டதா? அது பழங்குரல் ஐயா, பழமைத் தொனி! அந்த முடுக்கில் உங்கள் பார்வை குறுக்கோடிச் செல்கிறதே? அந்தக் கட்டாரி உங்களை ஏதும் செய்யாது.அஞ்ச வேண்டாம்! பொய்த்தாடி, மீசை, புனைவடிவத்துக்குத் தேவையில்லையா? இவை திருமுக ஓலைகள்! ஏன் அவற்றை அப்படி வீசி எறிந்துவிட்டீர்கள்? கதைக்குக் கால் இல்லை என்கிறார்கள். சுத்தப் பொய்.இப்படிபட்ட சரக்குகள் தாமே கால்களாகத் தொண்டு புரிகின்றன?

அழிந்த காலத்துக்குப் பிரதிநிதித்வம் ஏற்று, அழிந்த காலத்தை அழியாத வகையில் விளக்கிக் காட்டுபவன் சரித ஆசிரியன், 'அனுபவத்தினின்றும் எழுதவேண்டும்' என்பது நாவலலாசிரியனுக்கு இடப்பட்டுள்ள கட்டளை. இவ்விரண்டு குறிப்புக்களையும் கூட்டிக் குழைத்தால், சரித்திர நாவலாசிரியன் உருவாகிவிட முடியுமா? முடியும். ஏன், முடியாது?

நண்பர் திரு கோவி. மணிசேகரனின் 'செம்பியன் செல்வி'யில் சரித்திர ஆசிரியரின் குரல்(tone of a historian) கேட்கிறதா?

இதற்கு மறுமொழி: ‘ஆம்.’

சரி; வரலாறு சொல்லும் இந்த வரலாற்றுப் புதினத்தில் தலைமை உறுப்பினன் எனும் நாயகன் வேடத்தை யார் ஏற்கிறார்கள்? அவ்வேடம் புனைவடிவமா? உள்ளத்துடன் உண்மையிலேயே ஒன்றி, உள்ளத்தை இயக்கும் வேடமா அது? கதைத் தலைவி யார்?

சிந்தனக்குச் சூடு தரும் வினாக்கள் தாம் இவை. ஆனால், இந்தச் சரித்திரப் பெருங்கதைக்கு ஊட்டம் அளிக்கவல்ல உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு? திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ தேவர் கலிங்கவேந்தன் அனந்தவர்மன் ஆகிய இருவேறு சக்திகளுக்கும் சொந்தமான படைஞர்களைத் தவிர்த்து இடைவெட்டிய பராக்கிரம பாண்டியன், காலிங்கராயர் போன்ற - (Characterless Characters), குணமிழந்த நபர்களையும் கழித்து, சக்கரயுத்தன் போன்ற உத்திமுறைப் பாத்திரங்களை (actors of Suspense) ஒதுக்கி நீக்கிப் பார்க்கும் பொழுது, கீழ்க்காணும் பெயர்களை நாம் மனனம் செய்து கொள்ளவேண்டியவர்கள் ஆகின்றோம்.

விசயதரன், சயதுங்கன், விருதராச பயங்கரன், கரிகாலன், இராச நாராயணன், திரிபுவனன், அபயன் போன்ற விருதுப்பெயர்கள் விரவிய குலோத்துங்கச் சோழச் சக்கரவர்த்திகள் தாம் இக்கதைக்குப் பிள்ளையார் சுழி.

அவருக்கு வாய்த்த துணைவிமார்களின் பட்டியல் நெடுங்கணக்குப் போல.

அவர்களுள் தலைவி: உலகமுழு துடையாள்-கோப்பெருந்தேவி என்று அழைக்கப்பட்ட மதுராந்தகி தேவியார்.

இவர்கள் பெற்ற பிள்ளைகளுள் கதைக்குக் கவனம் தருகிறான் குமார சோழ விக்கிரமன், இளவரசியின்பெயர் அம்மங்கை. வாயாடிப் பெண்.

நாம் அரண்மனையை விட்டு விலகி வருகிறோம். மகாராணியின் அருள் உள்ளத்தினால் உயர் பதவி பெற்ற தளபதி கருணாகரனைச் சந்திக்கிறோம். மதுராந்தகியின் மனத்தேர் வெற்றிப் பவனி வர வீரவழி சமைத்துத் தரும் வல்லமை கொண்டவன் கருணாகரன். அவனது ரத்தத் தொடர்புக்கு உரிமை பூண்ட இளவேணி நம் கண்முன் - கலாபமாகிறாள். இளவரசி அம்மங்கையை அண்ணியாக்கக் கண்ணி வீசிய கன்னி அவள்!-ஐயகோ அவள் வாழ்வு மூன்று வினாடிக் கதை!

கலிங்கன் அனந்தவர்மன் சக்தி பெற்று, அதே தருணத்தில் சக்தியிழந்த விந்தை மனிதன். அவன் இல்லை யேல், கலிங்கப் போர் ஏது? அவன் சாட்டை வீசி ஆட்டி வைத்த பம்பரமான அருள்மொழிக்கு மதிப்பு எது? திறை செலுத்தி நிறை காட்டவேண்டிய கலிங்க வேந்தனின் திறைப் பொருளாகி ‘இறை முடிச்சுக்கு இதோ ஒரு புதிர்!’ என்று விடுகதை சொல்லிவந்த அவள் ஏழிசை வல்லபியாக மாறியிருக்க முடியுமா? அவளை இளைய தேவியாக ஏற்கும் அளவுக்குச் சோழ பூபதியின் மனத்தை மாற்றிவிட்ட அவள் சாகஸக்காரி! சூதாட்டத்தின் சொக்கட்டான் காய் அவள்!

அப்புறம்: காலதேவர்-அவர் ‘சயங்கொண்ட கால தேவர்!’

இப்படிப்பட்ட நறுக்குத் பெயர்களை நறுக்குத் தாள்களில் கிறுக்கிச் சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்க்கிறேன். இரண்டு பேர்கள் என் கவனத்திற்குத் தலைவணங்குகின்றனர். அவர்கள், குலோத்துங்க சோழதேவரும், அவர் தம் மனையாட்டித் தலைவி மதுராந்தகியும் ஆவர். ‘செம்பியன் செல்வி’ கதை ஓடுகிறது-இவர்களைச் சுற்றி. சோழமாதேவியின் மனத்தேர் - அதாவது, அவரது மனக்கனவு புறப்பட்டிருக்கவில்லை யென்றால், இந்தக் கதையே புறப்பட்டிருக்காது. தேவியின் கனவுகளை நனவாக்கித் தர, இராசேந்திரர் தம் மகன் கையாலேயே அறைபடவும் தயாராகிறார். அவருடைய வீரதீர பராக்கிரமங்களுக்கும், அரசியல் சூதுவாதுச் சூழல்களின் சூழ்ச்சிக் கூத்துக்களுக்கும் ஒதுங்கி-அல்லது இணைந்து, இடம் கொடுத்து அல்லது இடம் பிடித்துக் கொள்ளும் ஓர் உயிரும் உண்டு என்பதையும் நான் மறந்து விடவில்லை.

அந்த உயிர் கருணாகரன். 

‘தெய்வப் பரணி’ என்று ஏற்றிப் போற்றப் பெற்ற ‘கலிங்கத்துப் பரணி’யின் உயிரோட்டத்திற்கு ஓர் அடையாள உருவமாக நிற்கிறான் கருணாகரன். உயிரில் உணர்வு ஏந்தி-உள்ளத்தில் கடமை பூண்டு-பற்றில் பாசம் பிணைத்து-காதலில் கருத்து வைத்துத் திரியும் ஒரு மனிதப் பிண்டம் இந்தக் கருணாகரன். தொடக்கத்தில் நாம் அவனைச் சக்திக்கும் நிலையில், படையில் சேரவும் அனுமதியிழந்து, ஏமாற்றத்தின் முதற்படியில் காலூன்றி நிற்கிறான். சந்தர்ப்பங்கள்தாம் சரித்திரத்தை வாழ வைக்கின்றன. இதற்குக் கருணாகரனே உதாரணம். தன் உயிரைத் திரணமாக மதித்து, சோணாட்டின் பட்டமா தேவியின் தாயின் உயிரைத் தெய்வத்திற்கு நிகராக ஒம்பியிராவிட்டால், அவனுக்கு அந்த ஏரியில் குதிக்கத் தெம்பு பிறந்திருக்காது! “என் வளர்ப்புமகன் கருணாகரனும், பிறப்பு மகன் விக்கிரமனும் கருத்தொருமித்து, வள்ளுவப் பெருந்தகையார் கண்ட நட்பிலக்கணமாக என்று வாழ்கிறார்களோ, அன்றுதான் கலிங்கப்போர் நிகழவேண்டும்!...‘காலத்தால் நிகழ்ந்த போர்க்களம் இது ஒன்றே’ என்று தமிழ்மக்கள் பெருமைப்படுவர்!...தில்லைச் சிற்றம்பல நாதர் அருளால் கலிங்கப்போர் வெற்றியாகவே முடியும்...அந்த வெற்றிக்குப் பிறகு...?” என்று முடிக்காமல் தயங்கிய தேவியின் சொற்களைச் சக்கரவர்த்தி முடிக்கும் காரணமாய்ச் சொல்லுகின்றார்: ‘கருணாகரனுக்குப் பட்டமும் பதவிகளும் வழங்கும்போது நம்முடைய செல்வக்குமரி அம்மங்கையையும் ஒப்படைக்க வேண்டும். அப்படித்தானே பட்டமானதேவி?” என்று கூறிச் சிரிக்கிறார்.

மதுராந்தி தேவியார்க்குத் தன் மனத்தவம் பலித்ததாக உள்ள ஓர் உள்ள மகிழ்வு உண்டாகிறது. 

சரித்திரம் என்பது காலத்தின் முத்திரைப் பதிவுத் தொகுப்பு. நவீனம் என்பது சமுதாயத்திற்காகப் பரிந்து பேச முயலும் கற்பனை மனத்தின் குரல் பதிவு. வரலாறும் புதினமும் ஒன்று சேரும்போது, சரித்திரத்தின் பங்கும், நவீனத்தின் கைவரிசையும் விகிதாசார நிர்ப்பந்தந்தில் கூடுதல்-குறைச்சலாகத் தெரியலாம். ஆக, வரலாற்றுப் புதினத்தைப் பொறுத்த அளவில், வரலாறு என்னும் மூக்கணாங் கயிற்றைப் பிடித்து இழுத்துக்கொண்டால் தான், நாவல் எனும் தேர் சரளமாக ஓட முடியும்.

‘கலிங்கத்துப் பரணி’யில் வாழ்கிறான் கருணாகரன்.

‘முருகிச் சிவந்த கழுநீரும் முதிரா இளைஞர் ஆருயிரும்

திருகிச் செருகும் குழன்மடவீர் செம்பொற் கபாடம் திறமினோ!’

‘கடை திறப்பு’க்குப் பின் ‘களம் பாடியது!’...

காவிய நாயகனும் கருணாகரனைச் சார்ந்தோடும் கதையில்தான் சுவை இருக்கிறது.

கி. பி. 1070. குலோத்துங்கர் பொன்னி சூழ் சோழ வள நாட்டின் தலைவரானர்.

கலிங்கன் அனந்தவர்மன் தவறாமல் கப்பம் கட்டி வந்தான். இருமுறை மறுத்துவிட்டான். பரணிக்கு அமைந்த கரு இங்கேயும் தொடர்கிறது. காலதேவப் புலவர், தம்மை இகழ்ந்த கலிங்கவேந்தனுக்குப் பாடம் கற்பிக்க விழைந்தார். அவரது விழைவும் அறிஞர் தம்பிரானின் ஆத்திரமும் தேவியாரின் மனக்கனவும் முக்கூட்டு ஒப்பந்தம் அமைக்கின்றன. கருணாகரனை ஏவுகின்றார் குலோத்துங்கனர். கலிங்கத்தில் எண்வாய்க் கோட்டை சமைக்கிறான் (கருணாகரனது வாய்மொழியை நம்பி அவ்வளவு சுளுவாக எதிரியின் கூடாரத்தில் அவனுக்கு எப்படி இடம் கிடைத்தது போன்ற குறுக்குக் கேள்விகளை அனுமதிப்பதற்கில்லை.) அருள்மொழி கிடைக்கிறாள். பூபதியின் ஓலை மாற்று விளையாட்டுக்குப் பிறகு, கருணாகரன் தப்புகின்றான் அருள்மொழி தானே திறைப்பொருளாகி இசைமன்னனிடம் வருகிறாள். அவரது இசையாகிறாள். மீண்டும் சூழ்ச்சிகள். புனைவடிவங்களும், சுரங்கப் பாதைகளும் இருட்டில் மறையும் கரிய உருவங்களும் ஏராளம்...! கடைசியில், செம்பியர் செம்மலின் கருத்துப்படியே கலிங்கனைத் தேர்க்காலில் கட்டி இழுத்துவருகிறான் கருணாகரன். மாதண்டநாயகருக்குச் செம்பியன் செல்வி கிட்டுகிறாள்.

சோழப் பேரரசருள் முதல் இராஜ இராஜனே (கி. பி. 985-1014) சிறந்த அரசியல் பேரறிஞனாகத் திகழ்ந்தான். இக்கால அரசியலுக்குப் பொருந்தியும் உயர்ந்தும் விளங்குகின்ற வகையில் அவன் அரசியல் மேதையாகத் திகழ்ந்தான் என்பதற்கு திரு மா. இராச மாணிக்கனார், திரு பண்டாரத்தார் ஆகியோரின் ஆராய்ச்சிகள் சான்று பகருகின்றன. அவனது வாழ்வும் ஆட்சியுமே சோழமண்டலத்திற்கு வாய்த்த ஒரு பொற்காலமாகும். அவனது ஆட்சித் திறன், அவனுக்குப் பின்னர் ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகள்வரை ஆண்ட சோழர்களுக்கு அடித்தளமாக அமைந்திருந்ததென்பதையும் திரு. சாஸ்திரியார் அழுத்தமாய்க் கூறியுள்ளார்.

இராஜ ராஜ சோழன். அவனுக்குப் பின், முதலாம் இராஜேந்திரன் (1013-104). இவன் வடவேந்தர்களை முறியடித்து, கங்கை ஆறு வரை சென்று போர்த் திறன் விளக்கி, கங்கை கொண்டு மீண்டும் அமைத்த நகரம் தான் கங்கை கொண்ட சோழபுரம். இதுவே முதல் குலோத்துங்கனுக்கு இதயத் துடிப்பு.

‘செம்பியன் செல்வி’யைப் படிக்கும் பேறு பெற்றவர்கள் இரண்டொரு நிமிஷங்கள்வரை மயக்கம் போட்டு விழாமல் இருப்பார்களென்று நம்புகிறேன்.

காரணம் இதுவே:

இந்த வரலாற்றுப் புதினத்திற்கு நான் தேர்ந்தெடுக்கும் கதாநாயகன் கருணாகரத் தொண்டைமான் என்று தானே நீங்கள் கருதுகிறீர்கள்?

அப்படித்தான் ஆசிரியர் கருதுகிறார்.

கருணாகரத் தொண்டைமானைக் கதைநாயகனாகக் கொள்வதற்கு உரிய காரணங்கள் யாவை? சோழ மாதாவைக் காப்பாற்றினானே, அதற்காக அவன் நாயகனாகி விடமுடியுமா? அது, அவனது மனிதத் தன்மையில் எழுந்த கடமை சூழ்ச்சியின் சூத்திரக் கயிறாக இயக்கப்பட்டு நாடகமாடினனே அவன்?-சோழ மண்ணில் பிறந்த நாட்டுப்பற்றின் தூண்டுதல் அது. இளவரசியின் இதயத்தில் அவன் இடம்பெற்றானே?-முன்னைப்பழ வினையின் பின்னே வழிப்பயன் ஆயிற்றே அது?

செம்பியர்க் கோமான் ‘விரிபுகழ்க் காவிரி நாட்டு’க் கோமான் அல்லவா? அவரைத்தான் இந் நவீனத்தின் நாயகனாக நான் கருதுகிறேன். ‘கலிங்கம் எறிந்த கருணாகரன்றன் களப்போர்’ நிகழ்ச்சிகளுக்கு வழிவகை அமைத்துக் கொடுக்கிறாரே, அதற்காகவா?-அல்ல!... ‘உறுபகை ஊக்கம் அழிப்பது அரண்’ என்ற தமிழ்மறை வரிக்கு வாழ்வு தர எண்ணி, அங்கே கோட்டை அமைக்கும் முறையையும் சொல்லிக் கொடுத்துச் சாகசம் பல புரிந்தாரே, அதற்காகவா?-அல்ல!

‘போக்கிரி ஒருவனின் கடைசிப் பட்சமான அடைக்கலம் அரசியலாகும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஓலை, இலச்சினை, போர்க்கொடி, தாடி மீசை, சிறை, கள்ளவிழி கள்ளவழி-இப்படியான உபாயங்கள் ராஜாராணிக் கதைகளுக்குச் சொந்தம். இதற்கு எந்தப் பட்டயமும் கல்வெட்டும், மெய்க்கீர்த்தியும் உரிமை தரவேண்டு மென்பது இல்லை! -

‘ஆனால், என் இலக்கியத்திறனாய்வுக் கண்னோட்டத்தில் குலோத்துங்கன் கதைத்தலைவனாக ‘இலக்கிய அந்தஸ்து’ பெறுகிறானென்றால், அதற்கு அவனது அழுத்தமான குணச்சித்திரமே காரணமாகும்.

“A historical romance must engender reflection and provoke thought!...The mental pictures it create must be indelible”-சரித்திரப் பேராசிரியர் திரு கே. வி. ரங்கசாமி ஐயங்கார் ‘சிவகாமியின் சபத’த்தில் வரம்பறுத்துள்ள குறிப்புக்கள் இவை.

ஓர் அற்புதமான கட்டம்:

கலிங்கன் அனந்தவர்மனின் திறைப்பொருள் செலுத்தும் பணியை பூவை ஒருத்தி ஏற்று வந்து நிற்கிறாள். பிறகு “புதுமையான முறையில் என்னைத் திறைப்பொருளாக அனுப்பி வைத்திருக்கிறார், புவனேஸ்வரா!” என்கிறாள்,

திறைப் பொருளுக்குத் தனித்த பெருமை ஏதேனும் இருக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பது இயல்பு. மன்னர் சோதனை செய்கிறார் சோதனையில் வெற்றியடைகிறாள் அந்தப்பாவை. 

ஏழிசையின் சங்கமத் தூண்டுதலினால் மெய்ம்மறந்த இசைமன்னன், “திரிபுவனேசுவரா, தாங்கள்தான் என் குருநாதர்! தாங்கள் வகுத்த இசையைப் பயின்றே நான் வாணி ஆனேன்!” என்று கூறியதைக் கேட்டு மேலும் பூரிப்படைகிறார். கருணாகரன்-அருள்மொழி காதலைப் பற்றி அறிவார் அவர். ஆனால் அவர்களது காதல் வளர்ந்தால், கருணாகரனால் பூர்த்திபெறவேண்டிய தேவியின் மனத்தேர் அச்சுமுறிந்து போய்விடுமென்பதையும் அறிவார் அவர். அது மட்டுமல்ல; தம் ராணியின் மனக் குறிக்கோளின்படி, கருணாகரனுக்கு உரியவள் அம்மங்கை என்பதையும் அவர் மறந்திட மாட்டார்! மேலும், வந்தவள் ‘சூது’ என்பதும் அவர் அறியாப் புதிரன்று. இருந்தும், அவரே சூதாக மாறி, தம்மையே அவள்பால் இழக்கின்றார். ஏழிசை வல்லபிக்கு இளைய தேவியாகும் அதிர்ஷ்டம் கிடைக்கிறது. அந்த அதிர்ஷ்டத்தின் நல்ல பயன்தானோ என்னவோ, சோழர்பிரான் நாயக பிரானகிறார். தமிழ்ச் சரித்திரப் புதின உலகிற்கு ஒரே ஒரு வழிகாட்டியாகத் திகழும் பொற்புமிகுந்த கல்கி அவர்களின் மாமல்லச் சக்கரவர்த்தி, புலிகேசி, பொன்னியின் செல்வன் ஆகியோரின் குணச்சித்திரப் பிடிப்புக்கு ஈடுகொடுத்து நிற்க குலோத்துங்கனாலும் முடியுமென்பதற்குச் சாட்சியமாக அமைந்துள்ள கட்டமும் இதுவேதான்!

கதைக்குத் தலைவி ஒருத்தி வேண்டும். அந்த வாய்ப்பு இளவரசி அழகிய மணவாளனி அம்மங்கைக்குக் கிடைத்திருக்க வேண்டும். இளவரசியை வைத்துக்கொண்டு. அற்புதங்கள் செய்திருக்கலாம். ஆனால் ஆசிரியர் தவறி விட்டார். பதவி மறந்து, பண்பு அறிந்து காதலிக்க பரிபக்குவம் பெற்ற அம்மங்கையின் ஓவியம் நீர்பட்ட 

மூவர்ணச் சித்திரமாகிவிட்டது. பெரிதாகக் காதல் ரகசியம் பேசுவதாக எண்ணி நான் ஏமாந்துவிட்டேன்! தலைவிப் பதவி மதுராந்தகி தேவியாருக்கே கிடைக்க வேண்டும். “இன்றுமுதல் கருணாகரன் என்னால் தத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மகன்!” என்று கூறும் அந்த ஒரு வாய் மொழியில் வாழ்கிறாள் அந்தத் தாய். தியாகத்தில் பிறந்த தியாகமன்றோ அது!

அருமைமிகு நண்பர் திரு கோவி. மணிசேகரன் சரித்திரத்தில் வாழ்பவர்.

மறைவுச் சூழ்ச்சிகள், தாமாகவே உருப்பெறல் வேண்டும். இங்கே, ஆசிரியர் பக்கத்திற்குப் பக்கம் சொந்தக் குரல் கொடுத்திருக்கிறார்!

முதற் குலோத்துங்கன் சோழமா காவியத்தில் சக்கவர்த்தியாக வாழ்கிறான்; புலவரேறு செயங்கொண்டார் நாக்கினில் அறிஞர் என வாழ்கிறான்; ‘செம்பியன் செல்வி’யில் கடிகமணியாக வாழ்கின்றான்!

 7. பாலும் பாவையும்

—‘விந்தன்’—

சென்னையில், கந்தசாமி கோயில் பகுதியில் ஒரு புத்தகக் கடையில் கனகலிங்கம் அலுவல் பார்த்தான். மாதத்திற்கு முப்பது நாட்கள் தானே? ஆகவே அவனுக்குச் சம்பளமும் முப்பதுதான்! சமுதாயத்தில் அவ்வப்போது பெரிய மனம் காட்டிக் கை நீட்டிய ‘துட்டு’ பல வடிவத்தில் அவனுக்குக் கை கொடுத்தது என்னவோ நூற்றுக்கு நூறு உண்மைதான். அவன் உடல் கறுப்பு என்றாலும், உள்ளம் மாத்திரம் வெள்ளை. அதனால் அவன் கடையைத் தேடி வந்த எழுத்தாளரிடம், “இங்கே செத்துப்போன நூலாசிரியர்களின் நூல்களைத்தான் வெளியிடுவது வழக்கம்..” என்று தன் முதலாளியின் அருமைக் குணத்தைப்பற்றி அப்பட்டமாகச் சொல்கிறான்.

கலைஞானபுரம் என்ற ஊரிலே, தமிழ் வளர்த்த அகத்தியனுக்கு - குடமுனிக்கு விழாவென்று , கனகலிங்கம் புறப்பட்டான். நளவிலாஸம் புகல் தந்தது. இரவு உணவு கொண்டு, துயில் கொள்ளும் பொழுது, பெண்மணி ஒருத்தியின் விம்மல் ஒலி அவன் காதில் விழுந்தது.

இனி, கதை சூடுபிடிக்கக் கேட்கவா வேண்டும்?

அந்தப் பெண் நல்ல அழகி. ஏழ்மையின் இரங்கத் தக்க அழகல்ல; செல்வத்தின் செருக்கு மிக்க அழகு. அவள் திடுதிப்பென்று அப்பாவி கனகலிங்கத்தை நெருங்கி, “ஐயா...இனி... நீங்கள்தான்...எனக்குத்துணை!” என்று ஒரு போடு போட்டுவிடுகிறாள். அப்பாவி திணறக் கேட்பானேன்? அந்தோ, பரிதாபம்!...

அகல்யா என்ற அந்தப் பெண் இந்திரன் என்ற இளைஞனால் ஏமாற்றப்பட்ட கதையை அறிகிறான் கனகலிங்கம். ஆயினும், அவள்பால் அவனுக்குச் சபலம் தட்டாமல் இல்லை. பாலுணர்வு அவன் மனக் கதவைத் தட்டாமலும் இல்லை! ஒரு இரகசியம். “பெண்மையை இழந்துவிட்ட அவளுக்காக, நான் ஆண்மையை இழந்து விடுவதா? முடியாது; முடியவே முடியாது!” என்று உட்குரல் எடுத்துப் பேசவும் துணிகிறான் அவன்.

அகல்யாவும் கனகலிங்கமும் துணிந்து, சென்னைக்குப் புறப்பட்டார்கள். அங்கே கனகலிங்கத்தின் அருமையான வேலை-உத்தியோகம் பெருமையாகப் போய்விடுகிறது. பழைய பாணியில் புதுக் காதலர்கள் அலைகிறார்கள். 

“உன்னைக் காதலிக்காமல் கொல்வதைவிட காதலித்தே கொன்றுவிடுகிறேன்!” என்று சொன்ன கனகலிங்கம், கடைசியில் ஒரு நாள் கொலை செய்யப்படுகிறான். பாவம் அகல்யா அனாதையாகிறாள்! இளைஞர்கள் பலரின் முச்சந்தியாகிறாள் பேதைப் பாவை! தசரத குமாரின் திருப்பார்வைக்குக் குறியாகிறாள். “எங்கேயாவது கெட்ட பால் நல்ல பாலாகுமா, ஸார்?” என்று வேலைக்காரன் கேட்ட வினா, அவன் ஞானக் கண்ணைக் திறந்து வைக்கிறது.

அபலை அகல்யாவுக்கு ஆழி இடம் அளிக்கிறது!... ஆனால் அவள் வலிந்து ஏற்றுக் கொண்ட பழியை அதனால் மாய்க்க முடியுமா, என்ன?...

மதிப்புக்கு உகந்த விந்தன் அவர்களுக்கு,

இதயம் தோய்ந்த அஞ்சலிகள்.

உங்களுடைய முதல் நவீனம் ‘பாலும் பாவையும். அதைப் படித்துமுடித்த சகோதரி சரளா உங்கள் முன்னே முகம் காட்டத் துணிவு கொள்ளாவிட்டாலும், அகம் காட்டி, அதில் ‘புறத்தை’யும் காட்டி உங்களுக்குக் கடிதம் எழுதத் துணிந்திருக்கிறாள். அந்தச் சகோதரியின் துணிச்சலை எந்த அப்பாவியும் பாராட்டாமல் இருக்கமாட்டான். சரளாவின் திருமுகம் கிடைக்கப் பெற்ற நீங்கள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறீர்கள். மரபை ஒட்டிய பண்பாடு. நன்றியும் கூறியிருக்கிறீர்கள். உங்களுடைய நாவலை மனத்திண்மை மாறாமல், பெண் ஒருத்தி படிப்பதென்பதோ , படித்த பிறகு உங்களுக்குத் தன் கருத்தை வெளியிடுவதென்பதோ லேசுப்பட்ட காரியமா, என்ன? ஒரு முறை என்ன, ஓராயிரம் தடவை வேண்டுமானலும் நீங்கள் நன்றி சொல்லலாமே?

‘பெண்குலத்தை மாசுபடுத்துவதற்காகத் தாங்கள் இப்புதினத்தைத் தயாரித்திருக்கிறீர்கள்!’ - சரளாவின் கட்சி இது. கட்சி என்று எழுதுவதைவிட, குற்றச் சாட்டு என்றே எழுதிவிடுவதுதான் பொருத்தம்.

“இல்லை. இல்லை. பெண் குலத்தைத் தூய்மைப்படுத்தவே நான் இக்கதையை எழுதியிருக்கிறேன்!” பெண்ணுடன் போட்டி போட்டுக்கொண்டு நீங்கள் 'கச்சை' கட்டிப் பேசியிருக்கிறீர்கள். உங்கள் பேச்சிலே ‘பயம்’ தொனிக்கிறது, நீங்கள் உணர்வீர்களோ, என்னவோ? நான் உணருகிறேன். உங்களுடைய அந்தப்‘பயம்’ வாழட்டும்! ஏனெனில், அந்தப் பயம்தான் உங்களுக்கு அகல்யாவைப்பற்றி-அதாவது இருபதாம் நூற்றாண்டைச் சார்ந்த ‘பதில்வெட்டு அகல்யா’வைப்பற்றி எழுத உங்களுக்குத் ‘துணிச்சலை’ வழங்கியிருக்கிறது. அந்தத் ‘துணிச்சலையும்’ வாழ்த்தத்தான் வேண்டும். .

அகல்யா!-சிரிப்புக்குரிய ஒர் அபலை. காதலை நம்பி, வாழ்க்கையைக் கைநழுவவிட்ட பைத்தியக்காரி!

கனகலிங்கம்!-அனுதாபத்துக்குரிய ஓர் அப்பாவி! வாழ்க்கையை நம்பி உயிரைக் கைநழுவ விட்டவன்!

‘உறங்குவது போலும் சாக்காடு’ என்கிறார்கள் அனுபவசாலிகள். அந்தத் தூக்கத்தில் அகல்யாவையும் கனகலிங்கத்தையும் கட்டுண்டிருக்கச் செய்துவிட்டீர்கள். உங்களுக்கு எவ்வளோ வேலை மிச்சம். ‘நல்லவர்கள் வாழ்வதில்லை!’ என்ற அபாய அறிவிப்பு வரிகளுடன் நீங்களும் 'கோழித்தூக்கம்' போட ஆரம்பித்துவிட்டீர்கள். உங்களது இந்தத் தூக்கம்தான் எனக்கு விழிப்புச் சக்தியைக் கொடுத்திருக்கிறது. வாழ்க. உங்கள் உறக்கம்!

சந்தேகமே இல்லை. கனகலிங்கம் அப்பாவி தான். முப்பது நட்களுக்குக் கிட்டும் முப்பது ரூபாய்ச் சம்பளத்தினால் ஆறுதல் கனியாவிட்டாலும், அந்தப் புத்தகத் கடையில் தான் விரும்பியதை இனாமாகப் படிக்க முடிந்ததில் அவன் பெரிதும் தேறுதல் பெற்றான். காதலைக் கட்டுக் கதை என்றும், அதைக் கதைகளிலும் காவியங்களிலும் படித்து அனுபவிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டுமென்றும் உணரக்கூடிய அளவுக்கு அவனுக்குப் பரிபக்குவம் அளித்திருக்கிறீர்கள். இந்த லட்சணத்தில் அவனுக்கு இதயம் வேறு இருந்து தொலைத்தது. உள்ளமோ வெள்ளை. அதனால்தான், வாழ்க்கைக்குக் காதலை உயிர் நாடியென மதித்த அகல்யா, காதலை இழந்ததுடன் நிற்காமல், கற்பையும் இழந்து, ‘என்னைப் போன்றவர்களை உங்களைப்போன்ற இதயமுள்ளவர்கள்தான் ஆதரிக்க வேண்டும்’ என்று பீடிகை போடத் துணிகின்றாள் போலும்! நப்பாசையின் தோள்களை நைந்த ஆசை பற்றுவதற்கு முன்னமேயே அவர்களுக்குள் காதல் மறுபிறவி எடுத்துவிடுகிறது. காதல் எனும் பசியை அடக்கித் தூங்கவைக்கக் காசு பணம் குவிக்க வேண்டுமென்று தவம் இருக்கிறான் கனகலிங்கம். ஒன்றியாகப் போனவன், கலைஞானபுரத்திலிருந்து திரும்பு கையில், ஒன்றில் ஒன்றாகித் திரும்புகிறான் ரெயிலடியில், அவனுடன் அகல்யாவைக் கண்ட அவளது. முதலாளி அவனைத் தவறுபடக் கருதிவிடுகிறார். வந்தது ஆபத்து! அவனே தன் தமையனாரின் மகளைக் கெடுத்தவன் என்று தீர்மானித்து, அவனை வேலையைவிட்டு நீக்கியதோடு திருப்திகொள்ளாமல், அவனை ஆள்வைத்துக் கொன்று உலகத்தைவிட்டே நீக்கி விடுகிறார். அகல்யாவைக் கெடுத்தவனோ இந்திரன்! ஆனால், ஆள் மாறாட்டம் உம்மைப் பழவினையின் உருவத்தில் வந்து சிரிக்கிறது. பாலும் பாவையும் கெட்டுவிட்டால் பயனில்லை என்ற சமுதாயத் தத்துவம் சமையற்காரன் மூலம் அவள் காதுகளில் ஒலிக்கிறது. உடனே அவளது கண்கள் திறக்கின்றன. எளிய முறையிலே அவளைச் சாகடித்து விட்டீர்கள். எழுத்தாளர்களின் தலைவலியை மிக எளிதில் போக்கவல்லது ஆயிற்றே ஆழி? “செத்துத்தான் சமூகத்தின் அனுதாபத்தைப் பெறவேண்டுமானல் அந்தப் பாழும் அனுதாபம் எனக்கு வேண்டவே வேண்டாம்!” என்று வீரம் பொழிந்த அகல்யாவை நீங்கள் ஏன் அவ்வளவு துரிதப்பட்டுக் கொன்று போட்டீர்கள்? உங்களுக்குக்கூட அவள்பால் இரக்கம் பிறக்கவில்லையா? “நான் உன்னைக் காதலிக்காமல் கொல்லுவதைவிடக் காதலித்தே கொன்றுவிடலாமென்று நினைக்கிறேன்!” என்று உங்கள் கனகலிங்கத்தைப் பேச வைத்தீர்களே, அதன் நிமித்தம்தான் அவளுக்கு வாழ்விலிருந்து ‘விடை’ கொடுத்தீர்களா?

என் ஆழ்ந்த அனுதாபங்கள் அகல்யாவுக்கு உரியனவாகுக. ஏன் தெரியுமா? அவள் செத்துப் போனாளே என்பதற்காகவா?-அன்று. அவள் அருமை மிகுந்த இந்தத் தமிழ் மண்ணில் பிறந்தாளே என்பதற்காக!

“ஒரு காலத்தில் சொர்க்கத்திற்கு இருந்த மதிப்பு காதலுக்கு இருக்கிறது. இரண்டும் கற்பனையே என்றாலும், காதலைக் கைவிட நம்மால் முடிவதில்லை!” 

‘அமிர்தம்’ என்ற என்னுடைய சிறு கதைத் தொகுப்பிற்கு தாங்கள் அருளிய முன்னுரையின் இடையிலே தலைகாட்டும் வாசகம் இது.

காதலை எழிற்கனவுக்கு அடிக்கடி நான் ஒப்பிட்டுப் பார்ப்பது வழக்கம். நம் இருவருடைய காதல் விளக்கங்களும் ஏறக்குறைய ஒரே குரலில்தான் ஒலிகாட்ட முடியும் சொர்க்கத்திற்கும் கனவுக்கும் நடுவில் அகப்பட்ட அகல்யா, இந்திரனிடம் அகப்பட்டு ஏமாந்து, அப்பால் கனகலிங்கத்தினிடம் அகப்பட்டு அனுதாபப் பொருளாகிறாள்.

இந்த அனுதாபமே கதைக்குக் கருப்பிண்டம் என்பது என் எண்ணம்.

இந்த அனுதாபம் தான் கதையின் பிரதான பாத்திரம்! அனுதாபத்தின் இருவேறு கிளைகள்தாம் அகல்யாவும் கனகலிங்கமும்.

அகல்யாவின் துயரக் கதையைக் கேட்டு வருந்தும் கனகலிங்கம் அவள் பேரில் அனுதாபம் கொண்டு, அதன் விளைபயனாக, நம்முடைய அனுதாபத்தையும் சுவீகரித்துக்கொள்ள முயன்றான். அவன் ‘உத்தமன்!’

கற்பனை மெருகிழந்த தன் துயரப் பெருங்கதையைச் சொன்ன அகல்யாவுக்கு வாழ ஆசை துடிக்கிறது. எனவே கனகலிங்கத்தையே தன்னுடைய உயிர்ப் பிடிப்பாகப் பற்றக் கனவு காண்கிறாள். அதுவே சொர்க்கமெனவும் மகிழ்கிறாள். சமுதாயத்தின் அனுதாபத்தை அடைய வேண்டு மென்பதற்காகச் சாக விரும்பாத அவள் தசரத குமாரனாலும் கைவிடப்பட்டு நடுத்தெருவிலே நிற்கும் நிலையில், ‘அட கடவுளே! பாலும் பாவையும் ஒன்றென்று எண்ணியா நீ என்னைப் படைத்தாய்?’ என்று நெட்டுயிர்க்கின்றாள். அடுத்த கணம், ‘யார் இடம் அளிக்கவிட்டாலும், இந்த உலகத்தைவிட இரண்டு பங்கு பெரிதான கடல்கூடவா நமக்கு இடமளிக்காது?’ என்ற 'ஞானம்' அவள் உள்ளத்தில் பளிச்சிடுகிறது. ஒரு முறை இந்திரனுடைய அன்புக்குப் பாத்திரமான அகல்யா, இப்போது கடலின் அன்புக்கும் பாத்திரமாகிவிடுகிறாள்.

கதை மிகச் சிறிது, ஆனால் உலகமோ மிகப் பெரிது. அதனால்தான் இந்தப் பரந்த உலகிலே இந்தச் சின்னக் கதை பலருடைய நினைவுப் பொருளாக இன்னமும் காட்சி கொடுத்துக்கொண்டு வருகிறது. நன்றாக நடந்து வந்த ஒருத்தி வழுக்கி விழுந்து விடுகிறாள். இந்திரன் நல்லவன் அல்லன் என்றாலும், கெட்டிக்காரன். ஊரைச் சுற்றுவதற்கு உதவும் ‘லைசென்ஸாக’வும் ‘பர்மிட்’டாகவும் தரிசனம் தர அவள் கழுத்தில் தாலியைக் கட்டினான்; குறிக்கோளை முடித்துக்கொண்டான். ஆனால் அப்போது 'தடம் புரண்ட குறிக்கோளுடன்' அபலை ஒருத்தி தவிப்பதைப் பற்றி அவனால் கவலைப்பட முடியவில்லை. அவனுக்குத் திருமணம் நடைபெறுகிறது. அவனுடைய அவளுக்காக இரங்குகிறாள் அகல்யா. கனகலிங்கத்தின் உதவி ஒத்தாசைக்கும் சோதனை வந்தவுடன், குறுக்கிட்டு நின்ற பழைய தசரத குமாரன் அவளுக்கு அடைக்கலம் தருவதாகக் கையடித்துச் சொல்லுகிறான். கடைசியில், சமையற்காரன் ஒருவன் பாலையும் பாவையையும் ஒன்றாக்கி உவமை பேசப்போக, அவள் அக்கணமே கைவிடப்பட்டு, கடலிடைச் சங்கமம் ஆகின்றாள். இதுதான் கதை அல்லவா?

உங்களை ஒரு கேள்வி கேட்கப்போகிறேன். அகல்யா கனகலிங்கம் ஆகிய இவ்விருவரில் உங்கள் மனத்தை நிறைக்கும் உருவம் யாருடையது? என்ன, யோசிக்கிறீர்களே? இவ்விருவரையும் ‘மேலே’ அனுப்பிவிட்டதன் மூலம், உங்களுடைய அனுதாபத்துக்கு இவர்கள் இருவருமே இலக்காகவில்லையென்று ஏன் கருதமுடியாது? நான் அப்படித்தான் கருதுகிறேன்!

மனித மனம் சலனம் நிறைந்தது. சபலம் நிரம்பியது. காதல் என்னும் போர்வை மூலமாகத் திரிந்த அகல் அகல்யாவுக்குக் காமமே மிஞ்சியிருந்திருக்க வேண்டும். கெட்டவள் என்று தெரிந்தும், தன் இடத்தில் தங்கப் புகலளித்து, பிறகு, நெஞ்சிலும் இடம் கொடுக்க எண்ணியிருந்த கனகலிங்கத்தின் எதிர்பாராத மரணத்தின் சூழ்ச்சியைப்பற்றி ஏற்கெனவே ஊகித்ததாக எண்ணும் அவள், முன்கூட்டியே அந்த விபத்தைக் தடுத்திருக்கக் கூடுமே? “நான் அப்பொழுதே நினைத்தேன், நீங்கள் தான் அந்தக் கொலைகாரனை அனுப்பியிருப்பீர்களென்று! நீங்கள் நாசமாய்ப் போக!” என்று ‘நாகரிகமான சாபம்’ கொடுத்ததுடன் அவள் கனகலிங்கத்தின் உயிரின் மீதும் உள்ளத்தின் மேலும் வைத்த காதலின் கதை சுபம் பெற்றுவிடுகிறதா? இதயம் பெற்றிருந்தவனை இழந்த கோலம் மாறுவதற்குள்ளாகவே, அவள் தசரத குமாரனப் பின்தொடர் வேண்டியவள் ஆகிறாளே? அகல்யாவிடம் நமக்குக் கனியும் பச்சாதாபம், பரிவு, பாசம் போன்ற சகல உணர்ச்சிகளும் இந்த இடத்தில் தான் நம்மைவிட்டுப் பிரிகின்றன. பிரிந்து அகல்யாவின் கழலடிகளில் தஞ்சம் புகுகின்றனவா? அன்று. கடலில் குதித்துத் தற்கொலை செய்து கொள்ளுகின்றன!

‘வாழ்வுக்கு உதவிகேட்ட’ இந்தக் ‘காதல் பைத்தியம்’ பெண்களின் பெயரால் வற்புறுத்தப்படும் கற்பின் பெயரால் சாக விரும்பாதவளென நீங்கள் வரம்பு வகுத்து, இறுதியில் தெய்வத்துக்குப் பதிலாக நீங்களே ‘சூத்திரதாரி’யாக ‘ஆக்ட்’ பண்ணி அவளைக் கொன்றிருக்கிறீர்கள்! பாவம், அகல்யா!

“எல்லாவற்றையும் வேடிக்கையாகக் கருதுவதால் தான் என்னால் உயிர் வாழ முடிகிறது,” என்கிறான் கனகலிங்கம். காதலினால் சாண்வயிற்றைத் திருப்திப்படுத்த முடியாதென்று இந்திரனால் பாடம் படித்துக்கொடுக்கப் பட்ட அகல்யாவின் கதையைக் கேட்ட பிறகே அவன் இவ்வாறு சொல்கிறான். நெருங்கி வந்தவளிட மிருந்து விலகும் கனகலிங்கம், ‘வேண்டாம்! பசி தீர்ந்துவிட்டால், நானும் இந்திரனைப்போல் ஓட்டம் பிடித்தலும் பிடித்துவிடுவேன்!” என்றும் அறிவிக்கிறான். அவள் ஒட்டி ஒட்டி வரும்போது, அவனோ எட்டி எட்டிப் போகிறான். சிறு சலசலப்பு. ‘ஐயோ, பாவம்! உலகம் தெரியாத அபலை. அவள் காதலை உண்மையென்று நம்பினாள். அந்தக் காதலுக்காகத் தன்னை ஒருவனுக்கு அர்ப்பணித்தாள். அவன் அவளைக் கைவிட்டான். அதற்காக அவள் செத்துப்போக விரும்பவில்லை. வாழ விரும்புகிறாள். ஆண்களுக்கு மட்டும் அந்த உரிமையை அளிக்கும் சமூகம் பெண்களுக்கு அளிக்க மறுக்கிறது —இது அக்கிரமந்தானே?’ என்ற கணநேர மெளனச் சிந்தனை அவனது தயாள சிந்தையின் கதவுகளைத் திறந்து விடுகிறது. “அகல்யா, அகல்யா’ நான் உன்னுடைய மனத்தைப் புண்படுத்திவிட்டேனா? என்ன? சொல்லு, அகல்யாசொல்லு!” என்று அவன் குழைகிறான் இந்நிலை சலனத்தின் விளைவா? அன்புப்பண்பின் பணியா? 

தடம்புரண்டவள் அகல்யா. ஆனாலும், அவள் இதயத்தை அடியோடு இழந்து விடவில்லை. 'ஆம்; அன்று நீங்கள் தான் என்னைக் காதலித்துக் கொல்வதாகச் சொன்னீர்கள். ஆனால் இன்றோ, நான் உங்களைக் காதலித்துக் கொன்றுவிட்டேன்!. என்று அவள் தன்னுள் சொல்லிக்கொள்ளும்போது, அவள் என் இதயத்தைத் தொட்டுவிட்டாள்.

ஆனால்...?

‘ஐயோ! ஆண்களுக்கு ஒரு நீதி. பெண்களுக்கு இன்னொரு நீதியா? இந்த அக்கிரமத்துக்கு இன்னும் என்னைப் போல் எத்தனைப் பெண்கள் பலியாகவேண்டும்? உங்களுடைய இதயத்தில் ஈரம் இல்லையா? அந்த ஈரமற்ற இதயத்தை எங்களுடைய கண்ணிராவது நனைக்கவில்லையா?—சீர்திருத்தம், சீர்திருத்தம் என்று வாய் ஓயாமல் அடித்துக் கொள்ளும் இளைஞர் உலகம் இந்தக் கொடுமையை இன்னும் எத்தனை நாட்களுக்குச் சகித்துக்கொண்டிருக்கப் போகிறது?...

உச்சக் கட்டத்தில் ‘பகுத்தறிவுப் பாணி’யில் அவள் பேசும் ‘செயற்கைத் தன்மை’யுடைய இந்த வசனம், அவள் நெஞ்சறிந்து ஏற்றுக் கொண்ட பழியைத் துடைக்கவல்லதா? ஊஹூம்!

'கெட்டவளுக்கு’ அடைக்கலம் கொடுப்பதன் மூலமே ஒருவன் ‘நல்லவன்’ ஆகிறான். இது அண்ணலின் கருத்து. இந்நிலையிலே கனகலிங்கத்தை நீங்கள் ஏன் அதற்குள் சாகடித்தீர்கள்? நுண்ணிய கட்புலம் அமைத்து எண்ணிப் பார்க்குங்கால், கனகலிங்கம் ஒரு மின்னலெனவே தோன்றி மறைகிறான் இறந்தும் உயிர் வாழும் பாத்திரப் படைப்பாக்கவா கனகலிங்கத்தை நீங்கள் இவ்வாறு ஆக்கியிருக்கிறீர்கள்? ‘நல்லவர்கள் வாழ்வதில்லை-நானிலத்தின் தீர்ப்பு!’ என்ற வாசகத்தை மெய்யாக்க வேண்டியே நீங்கள் இவ்விருவருக்கும் விண்ணுலக யாத்திரைக்கு டிக்கெட் வாங்கிக்கொடுத்திருக்க வேண்டும்! அதனால்தான், முடிவுகூட முன்னைய இலக்கியமரபை ஒட்டிப் பழைமைப் பாணியிலேயே அமைந்து ‘சப்’ பென்று போய்விட்டது! உங்கள் கொள்கைகளுக்கு உகந்த ரீதியில் பாத்திரங்களை உருவாக்கி, அவர்கள் வாய்வழியே சமுதாயச் சிக்கல்களை அலசிப்பார்க்க முயன்ற நீங்கள், முடிவில் அகல்யாவின் இறந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் ஊடாக சிக்கலைத் தீர்த்துவைக்கும் வகையில் உங்கள் பணியை ஏற்று, அகல்யாவின் ‘எஞ்சிய வாழ்வை’க் கனகலிங்கத்தின் அன்புக் கரங்களில் ஒப்படைத்திருக்கும் பட்சத்தில், இவ்விருவரது குணச்சித்திர அமைப்புக்களும் முழுமை யடைந்திருக்கக் கூடும்! நீதிதேவனின் மயக்கம் தெளிந்து, நீதியுள்ள சமுதாயச் சித்திரமும் உருவாகியிருக்கும்! பெண் குலத்தைத் தூய்மைப்படுத்துவதற்காகவே நீங்கள் இதை எழுதியதாக வாதம் புரியும் உங்கள் பேச்சிலும் தர்க்க ரீதியான நியாயம் இருந்திருக்கும்! அன்புப் புரட்சியின் உண்மைக் குரலையும், வீரம் செறிந்த காதல் தத்துவத்தின் மனக் கனவையும் நான் உய்ந்துணர்ந்து அனுபவிக்க முடிந்திருக்கும்! சமுதாய ரீதியையும், (Social justice) சமுதாயச் சீர்திருத்தத்தையும் (Social reform) வழங்கிய பெருமை உங்களை வந்தணைந்திருக்கும்! வாழ்க்கைக்கு உரித்தான பொருளுக்கு ஓர் உரைகல்லாக அகல்யாவும் கனகலிங்கமும் அமைந்திருப்பதாக நீங்கள் திருப்திப்படுவீர்களானல், அகல்யா- கனகலிங்கத்தின் கதை அரைகுறைக் கதை தான்! ஆமாம், அரைகுறைக் கதையேதான்! காரணம் இதுதான்: அவர்களின் ‘கனவு’ நிறைவு பெருமல் நிற்பதைப் போலவே, உங்களுடைய அருமையான கதையும் நிறைவு பெறாமல் நிற்கிறது!

கடைசியாகச் சில வரிகள்:

‘பாலும் பாவையும்’ கதையில், உங்களுடைய ‘கிண்டல் பாவமும்’ நம்பிக்கை வறட்சி’யும் தோய்ந்த எழுத்து நடையை நான் மனம் பிணைத்து அனுபவித்தேன். சமுதாயத்தின் சித்திரம், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், கடவுளின் பெயரால் செய்யப்பெறும் மோசடிகள், இலக்கியக் கலையுலகின் நடைமுறைப் போக்கு-இப்படிப்பட்ட சூழல்களிலே உங்கள் ‘பேனா’ சுழலும்போது, உங்கள் ‘தனித்தன்மை’யைப் புரிந்து கொள்கிறேன். ஆனால் உங்களுக்கே உரித்தான ‘குறிக்கோள் தன்மை’யை (Ideal Self) இந்த நெடுங்கதையில் இனம் காணவே இயலாமற் போய்விட்டது! இன்னும் ஒரு பிழை. அகல்யாவிலிருந்து சமையற்காரன் வரை எல்லோருக்குமே நீங்கள் இரவல் குரல்’ கொடுத்திருக்கிறீர்கள்!

உங்கள் நோக்கு புதிது. போக்கு, பழசு! உங்கள் கரு அற்புதம்; உரு, குறைப் பிரசவம்! ஆத்ம விசாரம் இருக்கும் அளவுக்கு ஆத்ம விசாரணை இல்லையே..!

‘வையம் பேதைமையற்றுத் திகழவேண்டுமென்று எதிர்பார்த்து, பெண்களின் அறிவை வளர்க்க இக்கதையை ஒரு கருவியாகப் பயன்படுத்த நினைத்து நீங்கள் இவ்வளவு பக்கங்களை எழுதியிருக்கிறீர்களென்றே வைத்துக்கொள்வோம். நம் தமிழ்ச் சமுதாயம் இப்படித்தான் அமைந்திருக்கிறதென்பதை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், நம் சமூகம் இப்படி இப்படி அமைந்தால் தான், இத்தகைய தவறுகளிலிருந்து அகல்யாவைப்போன்ற அபலைகள் விடிவுகண்டு வாழ வழி பெறுவார்கள் என்ற ஓர் ஊகத்துக்குரிய தார்மீக அடிப்படையாவது நீங்கள் காட்டியிருக்க வேண்டாமா?

‘விந்தன்’ என்ற பெயரைக் குறிப்பிடும்போது, ‘ஓ! பாலும் பாவையும் விந்தனா?’ என்று இன்றும் நண்பர்கள் பலர் கேட்பதை நான் கேட்டிருக்கிறேன். அதனால்தான், நான் காணும் ‘பாலும் பாவையும் விந்தன்’ அவர்களை அந்த நண்பர்களுக்கு இக்கடிதத்தின் வழியே அறிமுகம் செய்ய வேண்டியவன் ஆனேன்!

அன்பிற்கு உகந்த பூவை.”

 8. வெள்ளிக்கிழமை

—மு. கருணாநிதி—

பெண்களுக்கு மங்கல அணியும், மஞ்சள் குங்குமமும் எவ்வளவு புனிதமானதோ அவ்வளவு புனிதமானது வெள்ளிக்கிழமை!

வைதிகப் பெருமகனார் சிவநேசனின் திருமகள் சிந்தாமணி. அவளைப் பெண் பார்க்கப் பெங்களுரிலிருந்து அழகப்பன் என்னும் நிதிமிகு செல்வப் பிள்ளை வருகிறான்.

இச்செய்தி கேட்டு, சிந்தாமணியின் மாமன், மகன் ராமகிருட்டிணன் வெகுண்டெழுகிறான். ராமகிருட்டிணனுக்கு ‘டைகர்’ என்று ஒரு பட்டப்பெயர். அவன், பண்பியல்பாலும் புலிதான்!

ஒருநாள், சிந்தாமணி நீராடித் திரும்ப முனையும் நேரத்தில் டைகர் குறிபார்த்து வீசிய கல் தப்பாமல் தவறாமல் சிந்தாமணியின் தோள் பட்டையில் விழ அவ்வதிர்ச்சியின் விளைவாக, அவள் குளத்தில் வழுக்கி விழுகிறாள். தந்தை சிவநேசரும் தாய் சிவகாமியும் சிந்தாமணியை டாக்டர் ஆனந்தியிடம் அழைத்துச் சென்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

பால கங்காதரத் தேவர் என்றொரு பணக்காரப் போக்கிரி. அவன் வலையில் மோசம் போனவள் இந்த ஆனந்தி. ஆனந்தியின் கற்பு சூறையாடப்பட்ட மர்மம் டைகருக்குத் தெரியும்.

இதற்கிடையில், மைனர் அழகப்பன் தன் உற்ற தோழனான நயினாவுடன் பெண்பார்க்க வருகிறான். மணப்பெண் மருத்துவமனையில் இருப்பதை அறிந்து அங்கு செல்கிறார்கள். சென்ற விடத்தில், நச்சுப்போன்ற தகவல் கிடைக்கிறது. சிந்தாமணி ஈன்றெடுத்த களைப்புடன் இருப்பதாக நர்ஸ் மூலம் செய்தி கிடைக்கிறது. அழகப்பன் மருள்கிறான்.

இதன் காரணமாகப் புயல் மூளுவது இயல்பே அல்லவா?

சூழ்ச்சி, வளை பின்னுகிறது.

சூழ்ச்சிக்கு வடிவமான டைகர். அழகப்பனைக் கோழையாக்கிக் குற்றவாளியாக்கிவிட்ட பெருமையுடன், டைகர் முன் வந்து சிந்தாமணியை மணப்பதாக உறுதி சொல்கிறான்.

இப்பொழுது, டாக்டர் ஆனந்தியை மணக்கக் கனவு காணும் உத்தியோகம் அழகப்பனுக்கு வாய்க்கிறது. ஆனால், பாவம், தன் தோழன் நயினாவும் தன்னைப் போலவே கனவு காணும் அந்தரங்கத்தை அறியான்! 

ஆனந்திக்குக் கற்புப் பங்கம் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் தொடர்கின்றன.

சிந்தாமணியை இன்பம் துய்க்கத் தொடர்கிறது டைகரின் மோகக் கிறக்கம். இரத்தம், துப்பாக்கி, மாறுவேடம், நாத்திகப் பிரசாரம் போன்ற பஞ்சமா பாதகங்களுக்குப் பஞ்சமில்லை!

சிந்தாமணியோ, தன்மீது சார்ந்த பழியென்னும் கறையினைத் துடைக்கக் கங்கணம் பூண்டு துயரக் கரைகள் பலவற்றை மோதிச் சாடுகிறாள்.

முடிவில், அபலை சிந்தாமணியின் சோக முடிவும் நிகழ்கிறது. புனிதம் மண்டிய அதே வெள்ளிக்கிழமையிலே!

நாவுக்கரசர் பாடுகின்றார், ‘நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதீர்’ என்று. இப்பாடலில் வேண்டுதல் பண்பைக் காட்டிலும், ஆணையின் குரலே அடிநாதம் பரப்புகிறது. அன்றைக்குத் தாம் கண்ட வாழ்வின் நடைமுறைச் சோதனைகள் அனைத்தையும் சாதனையாக்கி, அதன் விளைபயனாகக் கிடைத்த பக்குவத்தின் துணை கொண்டு புறப்பட்ட ஆணையை நாற்றிசை நெடுகிலும் ஒலிபரப்புகின்றார். ஆணையில் நல்லெண்ணம் இருக்கிறது; அன்பு உருக்காட்டுகிறது; உலகம் வாழ வழியும் கிடைக்கிறது. அதனால்தான் நாம் இப்பாட்டைத் திரும்பவும் நினைவுபடுத்திக் கொள்கின்றோம். இன்றளவில், இது பயனுள்ள பாடல் வரியேயல்லவா?

சரி. 

இலக்கியம் என்றால் என்ன? வாழ்க்கையோடு பொருந்தியதே இலக்கியம்; வாழ்க்கையோடு பொருத்தப் பட்டதும் இலக்கியம். பொருந்தியும் பொருத்தப்பட்டும் உருவாகின்ற-உருவாக்கப்படுகின்ற - உருவாகிக்கொள்ளுகின்ற ஒரு குறிக்கோள், குணம், பண்பு ஆகியவற்றின் முதிர்ச்சியை, சிந்தனை வடிவு கொண்ட எழுத்துக்களிலே நாம் காணும் நிலையில் இலக்கியம் பிறக்கிறது. இலக்கியத்தின் ஊனும் உயிருமான சதைப் பிண்டங்கள் உயிர் கொண்டு எழுகின்றார்கள்; உலகத்தைப் புத்தம் புதிய உணர்வுடனும் அனுபவத்துடனும் தரிசிக்கிறார்கள். உலகம் அவர்களை வியப்பு விரிய நோக்குகிறது; நோக்கியதுடன் மட்டும் நின்று விடுகிறதா? அம்மனிதர்ளை எடை போடவும் செய்கிறது. உடற்பருமனுக்கு எடை சொல்ல இயந்திரம் இருக்கிறது. மனித மனங்களை எடை போட்டுச் சொல்ல இயந்திரம் ஏது? ஏன் இல்லை? உலகமே ஓர் இயந்திரம், இல்லையா? இறைமை ஆற்றலுக்கு எடை போடத் தெரியாதா?

போகட்டும்.

வெள்ளிக்கிழமையைப்பற்றி உங்கள் கருத்து யாது?

‘புனிதமான நாள்!’

‘புண்ணியம் நிறைந்த தினம்!’

‘மங்கலமான நாள்!’

‘தெய்வ ஒளி பொருந்தியது!’

மூத்தகுடி நம்முடைய தமிழ்க்குடி. தமிழ்ச் சமுதாயத்தின் வரலாறு விரிந்தது; சாத்திரம் பார்க்கும் மக்களுக்கு வெள்ளிக்கிழமை இன்றியமையாத நாள்தான். அட்டியில்லை. ஏன் தெரியுமா? சிந்தாமணிக்கு இந்த வெள்ளிக்கிழமை என்றால், நிரம்பவும் ஈடுபாடு. காரணம்: வரைந்த கனவுகளுக்கும், வளர்த்த ஆசைகளுக்கும் வடிவு கண்டு, வடிவு கொடுத்து, வடிவு காட்டப்போகும் திருப் பொழுது இது.

ஆமாம்: இந்தச் சிந்தாமணி யார்?

பெண். தமிழ்ச் சாதிப் பட்டியலில் இடம் பெற்ற வாலைக்குமரி.

அவளை இனம் காண விருப்பமா?

பொறுங்கள்.

கனிச்சாறு கோத்த பழமுதிர் சோலை எனலாமா?

வண்டு மொய்த்து ‘டூயட்’ பாடும் பூங்கா என்று புகலலாமா?

குமிழ் பறித்து விளையாடும் அழகி என்று கூறட்டுமா?

சிந்தாமணியின் அழகுக்குப் பதவுரை, பொழிப்புரை எதற்கு? அவள் தமிழ்க்குமரி. போதாதா?

இன்னுமோர் உண்மையையும் கூறவேண்டும். அவள் பகுத்தறிவுக் குமரி.

ஆமாம், பகுத்தறிவு என்றால் என்னவாம்?

தோழிமார் தலைவியைத் துயில் எழுப்ப வருகிறார்கள்; தலைவியோ துயில் காணாமல் புரண்டு கொண்டிருக்கின்றாள். வெள்ளிக்கிழமையின் மகத்துவத்தைப்பற்றி பூகோளம், சரித்திரம், நாடோடிப்பாடல் ஆகியவற்றின் துணையுடன் பொது அறிவுக் கண்கொண்டு அலசித் தீர்த்துக் கொண்டிருக்கிறாள். அப்போது, ஒருத்தி ஆண்டாள் திருப்பாவையை உரைக்கிறாள். பெரியாழ்வாரின் திருப்புதல்வி ஆண்டாள் ஆழிமழைக்கண்ணனை நோக்கிப் பாடி, பக்தி சேர்த்த பாவனையைப் பாட்டின்மூலம் வெளிப்படுத்திக்கொண்ட கனிச்சாறு இது.

“குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்

வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய்திறவாய்!”

“ஆண்டாள், இது என்ன விகாரமான பாட்டு? நிறுத்து, நிறுத்து...” என உத்தரவு போடுகிறாள் சிந்தாഥணி.

சபாஷ்!

சிந்தாமணி கெட்டிக்காரி!

***

சிந்தாமணி கெட்டிக்காரியா? யார் சொன்னர்கள்? நான்தான் சொன்னேன். ஏன்? அவள் விகாரமான பாட்டைப் பகுத்து அறிந்த பக்குவத்தைக் கண்டு மகிழ்ந்து கெட்டிக்காரி என்று சொன்னேன்.

ஆனால் நடந்தது என்ன?

நடந்தது ஒன்று.

நினைத்தது ஒன்று.

இந்த ‘ஒன்றும் ஒன்றும்’ ஒட்டுறவு சேர்க்கும் கதை இருக்கட்டும். முதலில் கதையைத் திருவாய் மலர்ந்தருளலாமா?

ஆகா!

சிந்தாமணியின் புகைப்படத்தைக் கண்டதுமே ‘பூந்தோட்டம் கண்ட பொன்வண்டானான்’ அழகப்பன். இவன் பெங்களூர் மாப்பிள்ளை. பெண்பார்க்க வரும் உளவு அறிந்து துடிக்கிறான் ஒருவன். அவனுக்குப் பெயர்: ‘டைகர்’. விலங்கல்ல; அசல் பகுத்தறிவு மனிதனே! டைகருக்கு முறைமைப் பெண் சிந்தாமணி. தான் மணம் நுகர வேண்டிய மலர் மாற்றானுக்கு உடந்தையாவதா என்று கொதிக்கிறான். சதி உருவாகிறது. ‘ஈரப் புடவையில் விளைந்த புதிய அழகுடன்’ குளத்தினின்றும் வெளியேறும் சிந்தாமணி டைகரின் கல்வீச்சுக்கு இலக்காகிறாள். துடிக்கிறாள். மருத்துவமனையில் டாக்டர் ஆனந்தி புகலளிக்கின்றாள். அவளும் தனக்கு அடைக்கலம் நல்க வேண்டுமென மனப்பால் குடிக்கிறான் டைகர். மாற்றான் தோட்டத்து மல்லிகையாகப் போகிற செய்தி அறிந்ததும், சிந்தாமணியின் வாழ்வில் விளையாடுகிறான் டைகர். சிந்தாமணி கள்ள வழியில் கருவுற்று மகவைப் பெற்றிருக்கிறாள் என்னும் பழி ஆனந்தியின் துணையினால் கிளப்பிவிடப் படுகிறது. மாப்பிள்ளை அழகப்பனும் மாப்பிள்ளைத் தோழன் நயினாவும் அதிர்ச்சியடைகிறார்கள். இடைவழியில் டாக்டர் ஆனந்தி, அவர்களது காரில் மோதி விழுகின்றாள். அவள் மீது மாப்பிள்ளைக்கும் மாப்பிள்ளைத் தோழனுக்கும் மையல். அந்தத் தையல்: சாறு சுவைக்கப்பட்ட நீலம். ஆக, விளைவு: மும்முனைப் போராட்டம். உதிரிச் சூழ்ச்சிகள் தலைவிரித்தாடுகின்றன. தான் ஒரு மாசற்ற மணிவிளக்கென உலகுக்கு உணர்த்த வேண்டுமென்று முடிவு செய்கிறாள் சிந்தாமணி. கனவு பலிக்கிறது. வாழ்வின் தொடக்கம் அழகப்பனின் கைத்தலத்தில் இணைய வேண்டிய நேரத்தில், அவன் அவளிடம் ஓடிவந்து மன்னிப்புக்கோரும் பரிபக்குவ நிலையில், ‘விதி’-தவறு, கதை விளையாடுகிறது. உம்மைவினை-அன்று, பகுத்தறிவு ‘சடுகுடு’ ஆடுகிறது!

“இப்போதாவது என்னை நம்புகிறீர்களா?” என்று கேட்டாள் சிந்தாமணி அவள் குரல் தழுதழுத்தது.

“நம்புகிறேன் சிந்தாமணி, என்னை மன்னித்துவிடு!” என்று அழுதான் அழகு-அமுகப்பன்.

“அப்படியானால், இப்போதே நமது திருமணம் நடை பெற்றாக வேண்டும்!”-சிந்தாமணி தேம்பியவாறு கூறினாள்.

அழகு தன் மோதிரத்தைக் கழற்றி அவள் கையில் அணிவித்தான். இருவரும் ஒருவரையொருவர் புன்னகை தவழப் பார்த்தனர். .

அழகப்பன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் தடாலெனத் தரையில் சாய்ந்தாள்.

“ஒரு நாள். வெள்ளிக்கிழமை...உங்களுடைய வருகையை ஆவலோடு எதிர்பார்த்தேன். இன்றுகூட வெள்ளிக்கிழமைதான். அந்த ஆவல் பூர்த்தியாயிற்று!” என்றபடி அவன் முகத்தில் ஒரு முத்தம் இட்டாள் சிந்தாமணி. பிறகு அவள் கண்விழிக்கவில்லை.

நஞ்சை உண்ணக் கொடுத்து விட்டார்கள்!

பாவம் அந்தோ, பரிதாபம்!

சிந்தாமணி, உன்னைக் கெட்டிக்காரி என்று நினைத்தேனே? பகுத்தறியும் பண்புகொண்டவள் என்று எண்ணமிட்டேனே? ஆண்டாளின் திருப்பாவைப் பாட்டை முழுமையாகப் படித்து உட்பொருளை மனத்தில் வாங்கிக்கொள்ளாமல், ‘கொங்கை’ என்ற ஒரு சொல்லை வைத்து விகாரமான பாட்டென்று முடிவுகட்டியபோதே நினைத்தேன், நீ அவசரக்காரி என்று. நீ நெஞ்சுரத்தை வளர்த்துக்கொண்டிருந்தால், தொடக்கத்திலேயே நொடிப்பொழுதில் உன் துயர்களையெல்லாம் துடைத் தெறிந்து, ‘தமிழச்சி’யாக ஆகியிருக்கலாமே? பேதை நீ. உன் பேதைமை சூது ஆடிவிட்டது. உன் பெண்மையை பகடைக்காயாக்கிச் சூது ஆடி விட்டார்கள், சூதாடப் பழகியவர்கள்! நடப்பு வாழ்க்கையின் உண்மை நிலையை மெய்ம்மை நிலையை உய்த்துணராமல், நீ ஏமாந்துவிட்டாய் சிந்தாமணி, ஏமாந்துவிட்டாய்!...உன் ஆன்மா சாந்தியடைவதாகுக!...ஆன்மாவாவது, மண்ணாவது!...நீ இயற்கை எய்தியவள் ஆயிற்றே?

வெள்ளிக்கிழமையே!...நீ வீழ்க!

வெள்ளிக்கிழமை!...ஒழிக!

❖❖❖

'வெள்ளிக்ழமை' என்னும் புதினத்தில் நடமாடுகின்ற கதை உறுப்பினர்கள் யார், யார்?

அழகப்பன்: நாயகன்.

சிந்தாமணி: நாயகி.

டைகர்: தியோன்.

டாக்டர் ஆனந்தி, புலிக்கு உடந்தையாகி ஆடும் பதுமை

நயினா: அழகப்பனுக்குத் தோழன். ‘காம்ரேட்’ அல்லன்.

சிவநேசர்: சிந்தாமணியைப் பெற்றவர்— அன்று; தங்கை.

சிவசாமி: தில்லைக் கூத்தாடியின் மனையாட்டியா?

ஊஹீம், சிவநேசர் கோபித்துக் கொள்வார்! துணைப் பாத்திரங்கள் :

ஆண்டாள்

கிருஷ்ணபரமாத்மா

காரைக்கால் அம்மை

தசரதன்

சிவபெருமான்

சிறுத்தொண்டர்

இராவணன்

தேவேந்திரன்

அபலை சிங்தாமணி, லேடி டாக்டர் ஆனந்தி போன்றோர் உங்களுக்குப் புதியவர்கள். எனக்கோ, இவர்கள் மிக மிகப் பழையவர்கள். வாழமுடியாதவர்களாக, வழுக்கி விழுந்தவர்களாக, தூக்கு மேடையிலோ, அல்லது பராசக்தியின் திருச்சங்கிதானத்திலேயோ நான் இதற்கு முன்னம் பலமுறை கண்டது உண்டு. டைகர்!-பெயர் தான் புதிது. என்றாலும், பச்சைத் தமிழன், இரத்த வெறியன்! கதையை ஆட்டிப்படைக்கிறான், திரைப் படத்தில் வந்து மறையும் ‘வில்லன்’; ஆனால் ஆண்டவனல்லன்!

வாழ்க்கைக்கும் இலக்கியத்திற்கும் இவர்களால் ஏதாவது பயன் இருக்கிறதா? ஊஹூம்...!

காரணம்: இதோ...! எழுதும் உள்ளத்தைச் சொன்னால், எழுதப்படும் கதையைச் சொல்லிவிட முடியும். இது ஒன்றும் கம்பசித்திரம் அன்று; இதை அறிய பஞ்சாங்கம் புரட்டி ஆரூடம் கணிக்கவேண்டிய நிர்ப்பந்தமோ, நியதியோ கிடையாது. இந்தப் பொய்ப் புதினத்தின் மகுடத்தைப் படித்தேன். மணிமகுடம்தான். மெய்யான செய்தி. புத்தகத்தை மூடிவிட்டேன். கதை உருவாயிற்று. எண்ணியது பொய்க்கவில்லை. எண்பத்தைந்து சதவிகித வெற்றி எனக்குக் கிட்டியது. ஏனென்றால், ‘வெள்ளிக்கிழமை’யை அறிமுகம் செய்து வைத்திருக்கும் பேனாவை நான் ஆண்டு பலவாக அறிந்தவன்; அறிந்து வருபவன்.

※※※

வாழ்க்கையை வாழ்க்கைக்காகவும், கலையை கலைக்காகவும், கட்சியை கட்சிக்காகவும், பிரசாரத்தை பிரசாரத்துக்காகவுமே பயன்படுத்தவேண்டும். இது என்னுடைய நினைவு.

தமிழ் இலக்கியச் சந்தையில் ‘வெள்ளிக்கிழமை’க்கு உரிய இடம் யாது? நவீனங்களின் பட்டியலில் இடம் பெறும் இந்நூல் கொண்டிருக்கக் கூடிய தனித்தன்மை, சிறப்பியல்பு, போற்றற்குகந்த பகுதிகள் யாவை? கதை உறுப்பினர்கள் என் இலக்கிய மனத்தில் ஒவ்வொருவராகத் தோன்றி மறையும்போது, அவரவர்களுக்கு நான் கொடுக்கும் மதிப்பீடு எத்தகையது?

கதையை மீண்டும் நினைவு கூர்ந்து நோக்குகிறேன். ஆழமற்ற கருவையும் அர்த்தமிழந்த நிகழ்ச்சிகளையும், ஒருதலைப்பக்கமான பிரசாரப் போக்கினையும் கொண்ட ‘நட்சத்திர மதிப்பு’ வாய்ந்த ‘பெரிய’ தமிழ்த்திரைப் படத்தைப் பார்த்து, உடனடியாக மறந்துவிட்டாம் போலிருக்கிறது.

※※※

அழகப்பன் கதைத்தலைவன். ‘அவன் எதையுமே ஆழ்ந்து சிந்திப்பவன்.’ மெய்யாகவே, அவன் சிந்திக்கத் தெரிந்தவன்தானா? யாரோ கிளப்பிவிட்ட அபவாதத்தை உண்மையென நம்பி, சிந்தாமணியைக் குற்றவாளிக் கூண்டிலே ஏன் நிறுத்தினான்?

‘செப்புச் சிலையே, செந்தமிழே!’ என்றெல்லாம் பாடக்கேட்டு வளர்ந்த பாவை சிந்தாமணி. ஆனால், மகளை ஐயுறுகின்றனர் பெற்றோர். நோய் தீர்க்கும் மருத்துவமனையில், கன்னிப்பெண் சிந்தாமணி தாயாகக் காட்சியளிக்கிறாளென்று அயலவர் சொன்னால், அதைக் கேட்டு நம்பவேண்டுமென்று ‘நூற்றி நாற்பத்து நான்கு’ உத்தரவுக்குக் கீழ்ப்பட்ட அழகப்பன் நம்பட்டும். அதற்காக, சிந்தாமணியின் தங்தை சிவநேசர் அந்த ஏச்சையும் பேச்சையும் நம்பவேண்டுமா? ஆம்; நம்பவேண்டும். இது நாவலாசிரியரின் ஆணை. ஏனென்றால், சிவநேசரை ஆட்டிப் படைக்கின்றார் ஆசிரியர். இல்லையென்றால், சிவபக்தரான சிவநேசர் இவ்வாறு சொற்பொழிவு செய்திருக்கக் கூடுமா?

“நாள், நட்சத்திரம், சாமி, கோயில், ஜெபம், தபம் இப்படி யெல்லாம் நம்பிக் கடைசியில் கெட்டுப்போனேன். நான் நம்பிய நாளோ, நட்சத்திரமோ, கோயிலோ, தெய்வமோ எதுவுமே என்னையும் என் குடும்பத்தையும் கெளரவமாக வாழ விடவில்லை. என் மகள் எப்படி விபசாரியானாள்? எப்படி கள்ள அபின் கடத்தும் கைகாரியானாள்? தெய்வம் ஊமையாகிவிட்டது! நான் உயிரோடிருந்தால், இந்தக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே மனத்தை அலட்டிக் கொண்டிருப்பேன். இந்தக் கேள்விகளிலிருந்து என் உள்ளத்தையும் தெய்வத்தையும் விடுவிப்பதற்காகவே பிணமாகிவிடுகிறேன். சிந்தாமணி மாசற்றவள் என்று எப்போதாவது உண்மையிலேயே நிரூபிக்கப்பட்டால், அவள் அழகான கரங்களால் என் சமாதிக்கு மலர் தூவட்டும். இது ஒரு வெறுங் கனவு என்பது எனக்குத் தெரியும். அவளாவது அழுக்கற்றவள் என்று நிரூபிக்கப் படவாவது! பாவி, பாதகி, என் குடும்பத்தைக் கெடுத்த குடிகேடி!’

தந்தைக்கும் மகளுக்கும் ‘பண்புப் பாலம்’ அமைத்துக் கொடுத்து வேடிக்கை பார்க்கும் இக்கோலத்திற்குப் பெயர் என்ன சூட்டலாம்?

❖❖❖

பெண்கள் வெறும் போகப் பொருள்களாகக் கூடாது; புது உலகை உருவாக்கும் சக்தி பெற்றவர்களாகவும் இயங்க வேண்டும்; இலங்க வேண்டும். மேதைகளின் வழி மிதிப்பவர் ஒவ்வொருவரும் காணும் நற்கனவு இது. இந்தக் கனவை ‘வெள்ளிக்கிழமை’ பலிக்கச் செய்ததா? வெள்ளிக்கிழமை என்னும் தலைப்புச் சூட்டப் பெறாமலிருந்திருந்தால், ஒருவேளை அக்கனவு ஓரளவாவது வெற்றி கண்டிருக்கக் கூடும் போலும்!

தண்ணிரில் கலந்த எண்ணெய் போன்று உருவாகியுள்ள நிகழ்ச்சித் துணுக்குகள், இப்புதினத்தின் உறுப்பினர்களிலே ஒருவரையேனும் காப்பாற்ற வலுவின்றி நிற்கின்றன.

அழகப்பனும், சிந்தாமணியும் பாத்திர அமைப்பின் பண்பிழந்த பாத்திரங்களாகவே (Characterless characters) பிறப்பிக்கப்பட்டிருக்கிறார்கள்.

‘...தனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம் வரவேண்டும் என்று சிந்தாமணியால் விடை காண முடியவில்லை. பூர்வ ஜன்ம பூஜாபலன் என்பார்கள் புத்தியைத் திட்ட மறுப்பவர்கள். சிந்தாமணி அந்த வேதாந்தக் கருத்துக்களால் சாந்தியடைய மார்க்கமில்லை!...”

சிந்தாமணிக்காக ‘வக்காலத்து’ வாங்கிக் கொண்டு ‘சொந்தக் குரலில்’ (own voice) பேசுகிறார் ஆசிரியர். அபலை சிந்தாமணியின் கற்பின் மீது கற்பிக்கப்பட்ட மாசைத் துடைக்க ஆசிரியரின் ‘தமிழ்ப் பற்று’ இடங் கொடுக்காமல் நழுவி விடுகிறது!

புதினத்தைப் படைக்கும் ஆசிரியனுக்கு இருக்க வேண்டிய அலுவல் என்ன?

அவன் பாத்திரங்களை ஆளக்கூடாது.

‘வெள்ளிக்கிழமை’யில் கதாசிரியர் பாத்திரங்களை மேளதாளத்துடன்... ஆளுகிறார்.

நாவலாசிரியன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு தான் படைக்கும் பாத்திரங்களைப் பயன்படுத்துவானேயாயின், வாழ்க்கையின் விதிமுறையும் நவீனத்தின் விதி வழியும் காடுமாறிப்போய்விடுவது இயல்பு. அப்பால், கதைப்பாத்திரங்களை ‘ஓட்டை உடைசல் பாத்திரக்கடை’யில் தான் ‘பேட்டி’ காணவேண்டும்!

❖❖❖

சமுதாயத்தின் குறைபாடுகளை (social evils) அம்பலப்படுத்தக் கருதும் முயற்சியை யாவரும் பாராட்டுவர். ஆனால், வெறும் நாத்திகப் பிரசங்கத்தைப் பேச்சாளன் பாணியில் நின்று ‘ஒப்பாரி’ வைக்கும்போது, காது புளித்துப் போய்விடுகிறதல்லவா? தெய்வத்தை ‘நைத்தியம்’ செய்ய வேண்டுமென்றால், ‘கடவுள் இல்லாக் கொள்கை’யை (atheism) நிலைநிறுத்த விழைந்தால் ஒரு திராவிடத் தமிழனை உண்டாக்கி, அவனுக்குள்ளே கூடுவிட்டுக் கூடு பாய்ந்து, கருத்துரைகளைப் பாய்ச்சி, இலக்கிய உலகத்தின் ஒப்புயர்வற்ற ‘இரண்டாவது இங்கர்சாலாக’ அறிமுகமாயிருக்கக் கூடுமே?...கெடுத்து விட்டார்கள்!

நாடகமுறை அமைப்புகளுடன் (dramatic method) நடமாடுகின்ற டைகர், நயினா, சிந்தாமணி, அழகப்பன், சிவநேசர் போன்றோர் இயல்பு பிறழ்ந்த இயல்புடைய (abnormal characters) உறுப்பினர்கள் போல மயக்கம் தருகின்றனர்; ‘வாழ்க்கை துன்பமயம்’ என்ற புத்தமக் கொள்கைதான் இறுதியில் எஞ்சுகிறது. இவர்கள் மூலமாக, நம் திருநாடு பயனுற, நம் மனம் விரிவுபெற, நம் வாழ்வு வளம் அடைய வழி உண்டா?

மேதை ஆர்னால்டு சொல்லுகிறார்: ‘உயிர் வாழ்வுக்கு வேண்டிய நல்லொழுக்கத்திற்கு மாறாக எழும் எந்த எழுத்தும் இலக்கியமாகாது!’

அறிவுக்குப் பொருத்தமற்ற நிகழ்ச்சிகளை (irrational elements) இந்நவீனத்தில் படிக்கும்போது, ‘நல்லது செய்தல் ஆற்றீராயினும், அல்லது செய்தல் ஒம்புமின்!’ என்ற ‘புறம்’தான் நினைவில் தோன்றுகிறது. .

‘வெள்ளிக்கிழமை’ முடிவுகட்டிச் சொல்லும் ‘படிப்பினைத் தீர்ப்பு’ (moral judgement) என்ன?

மறுமொழி: மெளனம்!

மனச்சான்று இழந்த ‘வெள்ளிக்கிழமை’க்கு தமிழ்ப் புதின இலக்கிய வரலாற்றில் கொடுக்கட வேண்டிய ‘இலக்கிய அந்தஸ்து’ யாது? -

மறுமொழி: மெளனம்! 

இவ்விரு ‘மெளனங்க’ளுக்குப் பொருள் கை விரிப்பும் எள்ளிய நகையும்தான்!

❖❖❖

தமிழ் இலக்கியத்தில் ‘புரட்சி’ செய்தவர்கள் ‘விந்தன்’ போன்றோர் ஓரிருவர் இருக்கிறார்கள். அவர்களைப் படிக்க வேண்டும்; படித்து முடித்துச் சிந்திக்க வேண்டும். உண்மையான சமுதாயப் புதினங்கள் எழுதும் ஆற்றல் வளரும் சொந்த விருப்புவெறுப்புக்கள் குடியிருக்கும் மனித மனம், புனிதமான இலக்கிய மனத்திற்குக் கூடுவிட்டுக் கூடுபாயப் பழகிக் கொண்டால்தான்,உண்மையான ஆத்ம ஞானம் பெற வாய்ப்புக் கிட்டும். பார்த்தவர்களையும் பழகியவர்களையும் படித்தவர்களையும் சிறு பொழுதேனும் பிரிந்தால், தமிழ் எழுத்துக்களில் வாழக் கனவு காணலாம். அப்போதுதான் தமிழ்ப் புதின இலக்கியத்தின் நிறமும் கறுப்பு அன்று என்ற ‘உண்மை புலனாகும்!

9. பாவை விளக்கு

—அகிலன்—

கனவு காணும் எழுத்தாளன் தணிகாசலம். படிப்புக்காகத் தன் தொலைதூர உறவினர்களின் வீட்டில் தங்கிப் படிக்கிறான். அங்கே ஒரு விதவை. அவள் பெயர் தேவகி. ‘அக்கா’என்று பாசம் காட்டுகிறான் தணிகாசலம். ஆனால், தேவகியோ, “அக்கா என்று அழைக்காதே” என்று துடிக்கிறாள்.

‘என்னைப் புரிந்து கொள்!’ என்று புரியவைக்க முயலுகிறாள் தேவகி. அவனது தூய்மை அவளைக் கூச வைக்கிறது. கடைசியில், தமிழ்ப் பெண்ணின் பண்பாடு உடைப்பெடுத்து அவளைத் தூய்மையாக்கி விடுகிறது.

படிப்பு முடிந்ததும் உலகத்தைக் காணும் எழுத்தாளன் மனம் குமுறுகிறது. பாவத்தை —ஏழ்மையை-அக்கிரமங்களை நீக்கிவிடத் துடிக்கிறது உள்ளம். சிற்றூரிலே கணக்கு வேலை. எழுத்துக்கள் பத்திரிக்கைகளைத் தேடி ஓடுகின்றன. 

ஆடலழகி செங்கமலத்தின் கடைக்கண்ணில் எழுத்தாளன் மனம் சிக்குண்டு சொக்கித் துடிக்கிறது. அவளே ஒடி வருகிறாள்! எழுத்தாளன் தணிகாசலம் தன்னை மறக்கிறான்! ஆனால் ஊரும் உலகமும் செங்கமலத்தின் தாயும் மறந்துவிடவில்லை. செங்கமலம் ஜமீன்தார் ஒருவருக்கு மாலையிடுகிறாள் எழுத்தாளன் மனம் உடைந்து கசிகிறது. ஆம்; அவன் இன்னும் குழந்தைதான்!

தன் சிற்றுருக்கு வருகிறான் தணிகாசலம், வேலை போன பின்பு. அத்தை மகள் கெளரி ‘அத்தான்’ என்கிறாள்! அவளுடைய காதலின் வேகம் அவனைத் திகைப்புறச் செய்கிறது. தேவகி அக்காளின் உதவியுடன், மேளம் முழங்க எழுத்தாளன் தாலியைக் கட்டுகிறான்.

பல சிக்கல்களில் அல்லாடுகிறான் எழுத்தாளன்! உலகம் தன் போக்கிலேயே போய்க் கொண்டிருக்கிறது! குற்றாலம் போகிறான். எழுத்தறிஞர் ஒருவரைக் காண! அங்கு ரசிகை ஒருத்தியைச் சந்திக்கிறான். அவள் கனவின் கனவு! எழிலின் எழில்! அவள்தான் நாயகி-உமா!

இப்பொழுது கற்பனையாளன் தணிகாசலத்தின் ஈடுபாடு உமாவிடம் திரும்புகிறது. உமா அவனில் சுழன்றாள். ‘மாமா’ என்று அழைத்தாள். அந்த அழைப்பில் அவள் உயிர் சிலு சிலுத்தது.

ஆண்டவன் விளையாடுகிறான். உமாவின் குடும்பத்தார் தணிகாசலத்தைத் ‘துரோகி’ என்கின்றனர்! தணிகாசலம் தன் மனைவியுடனும் குழந்தையோடும் பிரிகிறான். அதற்கு முன் உமா சுருண்டு விழுகிறாள். —உமாவுக்குத் திருமணம் ஏற்பாடு ஆகின்றது; ஆனால் உமா எங்கோ மறைந்து விடுகிறாள்.

உமாவைத் தேடிக்கண்டுபிடிக்க ஒடுகிறான் தணிகாசலம். தன் மகளைப் பறிகொடுத்த நேரத்தில்தான் உமாவைத் தேடி எங்கெல்லாமோ அவன் ஓடினான். ஓடியவன் கண்டது உமாவையல்ல! பம்பாயிலே கணிகையாக உலவிய செங்கமலத்தைக் காண்கிறான்! ஊழிக் கூத்து மீண்டும் நடக்கிறது. அத்துடன் முடிந்து விடுகிறது செங்கமலத்தின் கூத்தும்!

தேவகி வீட்டுக்கு ஓடி வருகிறான் தணிகாசலம். சாகக் கிடந்த உமாவைக் காண்கிறான். கண்ணீர் வடிக்கிறான். உமா தன் காவிய நாயகனைக் குழந்தை தணிகாசலத்துக்குக் காட்டுகிறாள். தணிகாசலத்தின் மகள் கல்யாணியின் மீது வைத்திருந்த பாசம் உமாவை உருக்குகிறது. தணிகாசலத்தின் மீது உமா கொண்டிருந்த பாசம் உமாவை உருக்குகிறது. தணிகாசலத்தின் மீது உமா கொண்டிருந்த தூய்மை மண்டிய-தெய்வீகக் காதல் அவளைமட்டு மன்று; அவனையும் திணறச் செய்கிறது!

உமா எழுதிய காவியம் தாஜ்மகால் அவனைப் பார்த்துச் சிரிக்கிறது-உமா தணிகாசலத்தை மணக்கிறாள்! ஆம்; கெளரி தன் கணவனுக்கு உமாவை மனம் செய்து வைக்கிறாள். இரவு வந்தது. பாவை விளக்கு சுடர் விட்டது. அணையப் போகும் உமா சுடர் விட்டாள்! அவன் மார்பில் துயின்ற உமா தூய சுடராகப் பொலிவுற்றாள்!!

கண் மயங்கிய நேரம். உமாவின் உயிரும் பாவை விளக்கும் சேர்ந்து அணைந்தன. தாஜ்மகால் சிதறியது!தணிகாசலம் கூவினான், அலறினான். “எல்லாம் ஆன ஒருவனே! எங்களால் தாங்க முடியாத துயரத்தை எங்களுக்குத் தராதே!” என்று கூவினான். இப்படிக் கூவத்தான் அவனால் முடிந்தது!...

என்னுள் அகிலன்

பாவை விளக்கை இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். எனக்குத் தணிகாசலத்தின் உருவம் மட்டும் தட்டுப்பட மறுக்கிறது. ஆனால், அவனுடைய இதயக் குரலை மாத்திரம் என்னால் வாங்கிக் கொள்ள முடிந்தது.

‘எங்கும் நிறைந்த ஆண்டவனே! எல்லாம் ஆன. ஒருவனே! எங்களால் எந்தச் சுமையைத் தாங்க முடியாதோ, அந்தச் சுமையை எங்களுக்குத் தராதே! நாங்கள் வலுவிழந்த மனிதர்கள்!’ தணிகாசலத்தை நான் திரும்பவும் ஏறிட்டு நோக்குகிறேன்.தணிகாசலத்தில் உமாவையே காண்கிறேன். அகலையும் சுடரையும் சேர்த்துத் தாங்கி நிற்கின்றாள் உமா ‘உருவமில்லாப் பூங்குயில்’ அல்லவா அவள்...? 

திரு அகிலன் அவர்கள் என்னுள்-அதாவது, என் இலக்கிய மனத்துள் சன்னக் குரலெடுத்துக் கூறுகிறார்; அந்தக் குரலை என்னுடைய மனக்கண் படிக்கிறது. “உமா வாழப் பிறந்தவள்!”

நான் உமாவை மீண்டும் எடை போட முயற்சி செய்கிறேன். பாவை விளக்கின் உயிர் ஒளி இழை இழையாகப் பரவத் தொடங்குகிறது. என்ன நானே எண்ணி நிறுவை செய்து கொள்ளவும் அந்த ஒளி கைகொடுக்கிறது.

பொதுக் குரல்கள் சில என் காதுகளில் வந்து விழுகின்றன: “பாவை விளக்கு மிக அற்புதம்! ... படமாகிறது!... அகிலனை சிரஞ்சீவியாக்குவது இது ஒன்றுதான்! உமாவை என்னால் மறக்கவே முடியவில்லை...!”

பேராசிரியர் திரு அ. ச. ஞானசம்பந்தன் அவர்கள் ‘திரு அகிலன் இத்தகைய அழியாப் படைப்புகள் பலவற்றைப் படைத்து உலவவிட இறைவன் அருள் புரிவானாக!’ என்று வாழ்துகிறார்.

இலக்கிய ஆடுகளம் சிந்திக்கத் தலைப்படுகிறது;

இதோ, கண்ணபுரம்!

கண்ணபுரத்தை உங்களுக்குத் தெரியுமா?...என்ன, அப்படி விழித்துப் பார்க்கிறீர்களே?...ஐயா, தயவு செய்து உங்கள் கையிலுள்ள நாட்டுப் படத்தைத் தார வைத்து விடுங்கள். ஏனென்றால், உங்கள் ஊனக் கண்களுக்கு அந்த ஊர் புலப்படாது. எனக்கு மட்டும் அவ்வூர் காட்சியளித்து விட்டதா என்று சிந்திக்கின்றீர்களா? ஆம்; தெரிந்தது, புதுக்கோட்டை என்னும் ‘தனியரசு’ தெரிந்தது; அந்தப் புதுக்கோட்டையில்தான் இப் பொழுது கண்ணபுரம் நிழலாடுகிறது. வேடிக்கையாகத் தோன்றுகிறதல்லவா?

வேடிக்கைதான்!

மேலைநாட்டு இலக்கிய மேதை ஸாமர்ஸ்ட் மாம் (Somerset Maugham) ஓர் இலக்கியத் திறனாய்வு நூலை வெளியிட்டிருக்கிறார். உலகத்துச் சிறந்த நவீனங்களை ஓரிடத்தில் சந்திக்க வைத்தார்; பிறகு தம்முடைய இலக்கிய மனம் தீர்ப்பளித்த பத்தே பத்து நவீனங்களை மட்டும் பொறுக்கியெடுத்து, விரிவான ஆராய்ச்சி நடத்துகிறார். அத்தகைய புதுமை நோக்கைத்தான் நாம் மேற்கண்ட நூலில் காண்கிறோம். கதை நிகழுகின்ற இடம், காலம், சூழல் ஆகிய அமைப்பு முறைகளைப் பற்றி (Novel Setting) அழுந்தக் கூறுகிறார். பெருங்கதைக்குப் பொறுக்கியெடுக்கும் ஊர், நகரங்களை முதன் முதலில் நேரில் போய்ப் பார்த்து அப்படி அப்படியே குறிப்பெடுத்துக் கொள்வாராம் அவர். இதுவே மேலை நாடுகளின் இலக்கிய மேதைகளிடையே பரவிவரும் பரம்பரைப் பழக்கமாகும். ஏன், நம்முடைய தவச் செல்வர் திரு கல்கி அவர்கள் சரித்திரப் பிரசித்திபெற்ற எல்லாப் பகுதிகளுக்கும் நேரில் சென்று, அதன்பின் சரித்திரத்தைப் பேச வைக்கவில்லையா? இதே முறை, சமுதாய அடிப்படை கொண்ட புதினங்களுக்கும் விலக்கல்லவே!

‘ஆக, ‘பாவை விளக்கு’ சம்பந்தப்பட்ட மட்டில், கண்ணபுரம் என்பது சமஸ்தானம்; அதாவது, தனியரசு. அது எப்படிக் கற்பனைப் பெயரோ அதுபோலவேதான், பொன் வயலும், புதுப்பட்டியும் கற்பனையில் வாழும் இடங்கள் ஆகும். ஆனால், மையத்தில் குறுக்கிடும். 'திருச்சிச் சந்திப்பு' மட்டும் உண்மைப் பெயர் மறந்துவிடப் போகிறீர்கள்!

இந்தக் கண்ணபுரத்தில் தணிகாசலம் வாழ்கிறான். நீங்கள்தான் ஆசிரியருடன் கண்ணபுரத்துக்குச் சென்று திரும்பியவர்கள் ஆயிற்றே!

விந்தை மனிதன்!

இரண்டாவது உலக மகா யுத்தத்தை தணிகாசலம் ஒருபோதும் மறக்கமாட்டான். ஏனென்றால், அன்றையச் சூழலில் அவன்தான் அவனுக்கு நாயகன்; இந்நாவலின் ஆசிரியருக்குக் கதாநாயகன். கெளரிக்கும் உமாவிக்கும் கணவன். இங்கேயும் ஒரு விந்தையைப் பார்க்கிறோம். வேடிக்கையான மனிதன் இந்தத் தணிகாசலம். இல்லையென்றால், தேவகியும் செங்கமலமும் இந்த ‘அறியாப் பிள்ளை’யை இப்படி ஆட்டிப் படைத்திருப்பார்களா? ஆன்மீக வளர்ச்சிக்குப் பரிபக்குவமடைய 'வெறும் ஏடுகளை' நம்பின இவனது மனித மனத்தில் அறிவுக்கும் உணர்ச்சிக்கும் போராட்டங்கள் மூண்டிருக்க முடியுமா? நிதரிசனமான வாழ்வுக்கும் கனவு நிலை கொண்ட தர்க்கத் துக்கும் வாதப் பிரதிவாதங்கள் தாம் முளைத்திருக்குமா?

சரி; யார் இந்தத் தேவகி போகட்டும்; செங்கமலம் யார்?

பேனா!

இன்றைக்குப் புகழ் பெற்ற எழுத்தாளர் ஒருவரின் நிழற்படத்தை வார ஏடொன்றில் பார்த்தேன். அன்றொரு நாள் எனக்கு ஏற்பட்ட ஒரு ‘விபத்’தும் கூடவே நினைவைச் சொடுக்கியது. புகைப்படம் எடுக்கச் சென்றேன். என்னை எழுத்தாளராகக் கண்டு பழகியவர் படம் பிடிப்பவர். ஆகவே, என் கையில் பேனா ஒன்றைக் கொடுத்தார். மேஜைக்கு முன்னே தலையணப் புத்தகங்களையும் விசிறிப் போட்டார். என் ‘விசிறி’ அவர், மனத்தில் காற்றோட்டம் இருந்தது. எடுக்கப்பட்ட படத்தில் ‘என்னை’விட, என் கையில் இருந்த பேனாவும் எதிரிலிருந்த ஊர் பேர் தெரியாத புத்தகங்களுமே துலாம்பரமாக விளங்கின. போதுமே! ஓர் எழுத்தாளனுக்கு இவைதாமே ‘வியாபாரக் குறியீடு’கள்?

இன்று நான் தணிகாசலத்தைச் சந்திக்கிறேன்; முதற் சந்திப்பு என்று சொல்ல முடியாது. ஆனால், திரு அகிலன் சந்தித்ததற்குப் பின்னர் எனக்கு அறிமுகமான பெயர் தான் தணிகாசலம் தொடக்கத்திலும் ஒரு பேனா; அது அவனுடைய சொந்தப் பேனா. முடிவிலும் ஒரு பேனா. இது உமா கொடுத்த அன்புப் பரிசு விலை மதிப்பில்லாதது!

ஓர் ஐயம்: நாவலாசிரியர் காணத் துடித்த, காண முயன்ற கண்ட அந்தத் தணிகாசலத்தைத் தான் நான் கண்டிருக்கிறேனா?

மனிதமனம் ஒரு ரசாயனக் கூடம். ஏனென்றால், உள்ளும் புறமும் மனத்தின் இரு துருவமாக இலங்குவது உண்டு; இரு மனம் கலந்த ஒரு மனமாகக் காட்சியளிப்பதும் இயல்பு. இந்த ஒரு மனத்தை பெளதிக மாற்றம் என்று குறிப்பிடலாம். விஞ்ஞானத்தில் இந்தத் தலைவலி, வரிகளை உங்களில் பலர் படித்திருப்பீர்கள். இரண்டு ரசாயனப் பொருள்கள் சேரும்போது புதிய பொருள் ஒன்று உண்டாகிறது. தற்காலிகமான இம் மாறுதலைத்தான் பெளதிக மாற்றம் (Physical change) என்கிறார்கள். இப்படிப்பட்ட பெளதிக மாற்றம் நம் தணிகாசலத்துக்கு ஒரு முறையல்ல, ஒன்பதாயிரம் முறைகள் ஏற்படுகிறது. ஆனால், பெண் ஒருத்தி தணிகாசலம் முகம் நோக்கி முகம் அமைத்துச் சொல்கிறாள்: “...அறியப் பிள்ளை என்ற ஒருவனும் அறிந்த மனிதன் என்ற மற்றொருவனும் ஆக இரண்டு பேர் சேர்ந்தவன் நீ!”

யார் இப்படிச் சொன்னார்கள்? சொன்ன உருவம் உங்களுக்குப் பழக்கப்பட்டதுதான். ஆனால் அந்த ‘உள்ளம்’ அன்று காட்சி கொடுத்ததைவிட இன்று அதிகமான எழிலுடன் எனக்குக் காட்சி தருகின்றது. அந்த உள்ளமும் உருவமும் யாருக்குச் சொந்தம்? அது: தேவகி. அவள் தேவகி. அவை: தேவகி!

புதிர் எனும் தேவகி

தேவகி...!’

தமிழ்ச் சாதிக்குக் கறையாக அமையாமல், கரையாக அமைந்து, பாலம் கட்டி நிற்கும் பெண்கள் பலர் வரலாற்றில் வாழ்கிறார்கள்; ஒத்த காலத்தில் வாழ்ந்துகொண்டும் இருக்கிறார்கள். இத்தகைய பட்டியலுக்குப் பயன் தர முடியாவிட்டாலும், பலம் தரக்கூடிய பெண் தேவகி கற்பனைப் பெண், அதாவது, கற்பனையில் வாழ்பவள்: இதயத்தால் வாழத் தெரிந்தவள். புருவமையம், நெற்றிமேடு, நேர்வகிடு ஆகிய இம்மூன்றும் தணிகாசலத்திற்கு மூன்று புள்ளிகள் உருவாக்கிக் கொடுத்த வட்டம் தேவகிக்கு மட்டுமல்ல, தணிகாசலத்திற்கும் சொந்தம். இந்த உரிமை யின் சரிபாதியை ‘அறியாப் பிள்ளை’ தணிகாசலத்திடம் சேர்ப்பது நலம் பயக்கும். எஞ்சும் பகுதியில் உறவு கொள்ள உரிமை பூண்டவள் தேவகி. கொண்டவன் அவளது திலகத்தைப் பறித்துக்கொண்டான். பறி போன திலகம் விதியைக் கண்டு சிரிக்கிறது; விதியோ தணிகாசலத்தைப் பார்த்துக் கள்ள நகை புரிகிறது; தணிகாசலமோ விதியை நம்பாமல், தேவகியை நம்பி, அவளுடன் மனம் விட்டுப் பேசவேண்டிய கட்டத்திற்கு உருவாக்கப் படுகிறான்; ஆனால் உண்மையாக மனம்விட்டுப் பேசியவள் தேவகி!

நடுச் சாமத்தில் தேவகி வருகிறாள்; தணிகாசலத்திடம் வருகிறாள். ‘உலகத்தின் சோகம் முழுவதும் அந்தக் கண்களில் நன்றாய்த் திரண்டு முத்து முத்தாகப் புறப்படுகிறது.' திடீரென்று கீழே சரிந்து விழுந்து தணிகாசலத்தின் கால்களைப் பற்றிக்கொண்டு தேம்புகிறாள். அவனது கால்களைத் தொட்டுக் கை தொழ அவளுக்குச் சொந்தம் வேண்டுமாம்...!

“நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள நினைப்பது நியாயந்தானா?” என்கிறாள் தேவகி.

“நியாயந்தான்!...” என்று சொல்கிறான் தணிகாலம். அதைத் தொடர்ந்து ஒரு ‘ஆனால்’ என்னும் முட்டுக் கட்டை புறப்படுகிறது. அதைக் குறுக்குக் கோடாக வைத்து எல்லை சொல்வதற்கு அவள் போதுமான காலவேளை கொடுத்தாள். எதற்கும் ‘வேளை’ வரவேண்டும், பாருங்கள். தணிகாசலத்துக்கோ, எட்டி நின்று பார்க்கும் வேளையில் மட்டுமேதான் தேவகி. அவன் மனத்தோடு ஒட்டுகிறாள்: ‘காத’லும் உறவு கொள்கிறது. பக்கத்தில் நின்று பார்க்கும்போது, அவளுடைய ‘அழகு’ அவனுக்குப் புலகை மறுக்கிறது. அவளைக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகின்றதாம் அவனுக்கு!

‘எனக்கு உன்னைத்தவிர வேறு வழியில்லை!’ என்று எல்லாவற்றையும் துறந்து பேசினாள் ‘எல்லாம் முடிந்து பட்ட’ தேவகி.

தணிகாசலத்தின் கண்ணீரைத் துடைக்கும் பேறு பெற்றாள் தேவகி. அவனுடைய திறந்த மனத்தினின்றும் அவனுக்குரிய கள்ளமிகு சபலமனம் வெளியேறியது! அவள் என் ‘பார்வை’க்குத் தமிழ்ப் பெண்; தணிகாசலத்திற்கு தேவகி அக்காள்.

நாயக-நாயகி

“பாவை விளக்கில் நீங்கள் யாரைக் கதாநாயகியாக மதிக்கிறீர்கள்?”

எண்ணிப் பார்க்கிறேன். தாமஸ் ஹார்டி படைத்த பாத்திரங்களிலே என்னைக் கவர்ந்த பெண் மேரி. காதலில் தோற்றவள். ஆனால் அவள் மடிந்த கல்லறையின் உள்ளே அவளுடைய காதல் தூங்கிக் கொண்டிருக்கிறது. கல்லூரி வாழ்வு கழிந்தும் கூட அவளைப்பற்றிய நினைவை என்னால் துறக்கக் கூடவில்லை. இந்நினைவு கிளர்ந்தெழும் நிலையில், எனக்கு வேறொரு மதிப்பீடும் நெஞ்சில் இழை யோடுகிறது. ‘சிநேகிதி’ என்பது பாலாம்; அந்தப் பாலில் தண்ணீரைக் கொட்டிக் கலந்ததாம் ‘பாவை விளக்கு.’ வேறு யார் இப்படி எழுதப் போகிறார்கள்? ‘அவர்’தான் எழுதியிருக்கிறார்!

கதாநாயகிக் குழப்பத்துக்கு விடிவு காண வேண்டும். தணிகாசலத்தைக் காட்டிலும், ஏன், திரு அகிலனைப் பார்க்கிலும், உங்கள் எல்லோரையும் விட நான்தான் மிகுதியாகக் குழப்பமடைகிறேன். “சொல்லுங்கள், மாமா! நானும் ஆண்டாளும் ஒன்றுதானே?” என்ற உமாவின் வினா, மழையையும் இடியையும் எழுப்புகிறது. தணிகாசலத்தின் எழுத்துத் துறையில் உமா கொண்டு வந்த சீதனமான பாவை விளக்கு சுடர் விடுகிறது; கண்ணீர்மடை திறக்கிறது. “என் உயிர் வெறுங் காற்றுடன் கலக்கக் கூடாது. அது உங்கள் உயிர்க் காற்றுடன் கலக்க வேண்டும்!” என்ற உமாவின் வேண்டுகோள் எதிரொலிக்கக் கேட்கிறேன். அவனுக்கு ஒளி கொடுத்தவள் இருளில் தடுமாறுகிறாளே?...அவனுடைய மனப்பசிக்கு அவளது உயிர்ப்பசி உள்ளடங்க வேண்டுமென்பது என்ன நியதி?

ஆமாம்; கதாநாயகி யார்?

உமாவா?

பிறந்த கண்ணிர் களி துலங்கச் சிரிக்கிறது; காண்கிறேன். அந்தக் கண்ணீர்ச் சிரிப்பில் ஒரு முகம் தெரிகிறது. அந்த முகத்திற்குத் திலகம் தந்தவன் சென்னைக் கடலில் ஐக்கியமாகி விட்டானாம்! மீண்டும் பார்க்கிறேன். பார்த்த முகத்தில் பழைய ‘வெறுமை’யே விளையாடுகிறது. இப்போது நாவலாசிரியர் திரு அகிலனை என்னால் போற்ற முடிகிறதா?... யோசிப்போம்!

தேவகிதான் நான் தேர்ந்தெடுக்கும் கதாநாயகி!

நான் தணிகாசலத்தைக் கூர்த்தமதி பதித்து நோக்குகின்றேன். சந்தனமென்று நீங்கள் நினைத்த சிறு துரும்பு தன் ஆத்மாவையும் மரணத்தையும் இந்த வரிகளில் வடித்துவிட்டது. இனிமேல் நான் மணமற்ற மரத்துண்டு. என்னுடைய தோல்விக்கு மட்டும் நீங்கள் காரணமென்று நினைக்காதீர்கள். என் லட்சிய சித்தியான இந்தக் காதல் கவிதைகளின் தலைவர் நீங்கள் தாமே?...’ அவனுடைய விழி வெள்ளத்தின் கரை உடைபடுகிறது. ஏன்? உமாவின் தோல்விக்கு அவன்தான் மெய்யாகவே காரண கர்த்தாவா?

‘எனதுயிர் மன்னவனே!’ என்று உமா தன் கவிதைகளில் கூவி யழைத்தது அவனைத்தானா? ‘என்னிடம் நேரில் சொன்னையே, அது போல் நீ வேறு யாரையும் மனத்தால் கூட நினைக்காமல் இருந்தால் போதும்’ என்று செங்கமலத்துக்கு அனுப்பிய கடிதம் அவன் நினைவில் தோன்றிவிட்டதா, என்ன?

பெருமூச்சுத் தப்பிப் பிழைக்கிறது. என்னுடைய கைப் பேனா மைவழி ஓடுகிறது:

“தணிகாசலம் முழுமையடையாத ஓர் அரைகுறைப் பாத்திரம்!”

அடுக்கு மல்லிகை

உமா தன்னுள் எண்ணிப் பார்க்கின்றாள்:

‘அவர் என்னத் தவறன கண்கொண்டு நோக்கவில்லை. அவர் என்னை இழிந்த குணமுள்ளவளாக மதிக்கவில்லை. கண்ணியக் குறைவாக அவர் ஒருபோதும் நடந்து கொண்டதில்லை. அப்படி ஏதும் நான் அவரிடம் குறை கண்டிருந்தால், என்றைக்கோ அவரை விட்டு விலகியிருப்பேன். பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பார்கள். இவர் உயர்ந்து கொண்டே போகிறாரே? இவரிடம் என்ன தனித்தன்மை இருக்கிறது?’ 

மனத்தை ஒரு சோதனைச் சாலைக்கு உவமை காட்டிச் சொல்வது எனக்கு நிரம்பப்பிடிக்கும். ஆனால் இங்கே உலகத்தையே சோதனைக் கூடமாக்கி, மனத்தைச் சோதனைப் பொருளாக்கி விட்டாள் உமா. வாழ்க்கையை கேலியாக - வம்பாக - பரிகாசமாக - வீம்பாக ஆக்கிக் கொண்ட அவள் ‘அவர், அவர்’ என்கிறாளே, அந்த அவர் யாரென்றுதான் உங்களுக்குப் புரிந்திருக்குமே?

அவர்: ஸ்ரீமான் தணிகாசலம்.

அகம், புறம் ஆகிய இரண்டு பகுதிகளிலும் சூழ்நிலையால் பாதிக்கப்படும் தன்மை வாய்ந்தவன் தணிகாசலம். ஆகவே, அவன் காணும் கனவுகளில், எண்ணும் கற்பனைகளில், சிந்திக்கின்ற எண்ணங்களில், எதிர்பார்க்கின்ற லட்சியங்களில், உருவாக்கிக் கொள்கிற ஆசாபாசங்களில், அழித்துக் கொள்கின்ற நப்பாசைகளில் அவன் அவனாகவே காட்சியளிக்கிறான். அவன் மனிதன். கடவுளைப் படைக்கும் வல்லமை பெற்ற மனிதன். ஆனால் கடவுளால் படைக்கப்படும் துர்ப்பாக்கியம் பெற்றவன். ‘இவரிடம் என்ன தனித்தன்மை இருக்கிறது?’ என்று பூப்போன்ற புனிதம் கொண்ட, பூப்போன்ற மென்மை வாய்ந்த ‘அடுக்கு மல்லிகை’யான உமாவின் பெண் இதயத்தை ஆராய்ச்சி செய்ய வைக்கத் தெரிந்தவன். ஆனால் அவன் அவளைப் புரிந்துகொண்டானா? இல்லை! தன்னைப் பற்றித் தான் அவன் தெரிந்துகொண்டானா? அதுவும் இல்லை! ஒரு வேளை, இந்த ஒரு விந்தைப்பண்புதான் அவனுடைய தனித் தன்மையோ? பட்டும் படாத இத்தகையதொரு ‘கோழைத்தனம்’ அவனது வெற்றியா? அந்த வெற்றி தான் உமாவின் தோல்வியாக அமைந்ததா? இந்த வெற்றிதோல்விகளுக்கு யார் பொறுப்பாளி உமாவா? தணிகாசலமா? ஆண்டவனா? யாரும் இல்லை; யாரும் காரணமாக இருக்க முடியாது. இருக்கவும் தேவையில்லை. ஆனால் ஒரே ஒருவர் மீது மட்டும்தான் நான் ‘குற்றப்பத்திரிகை’ படிக்கிறேன். அந்த ஒருவர்: திரு ‘அகிலன்!’

ஆண்டாள்தான் உமா!

ஆண்டாள் பாத்திரம் என்றால், எனக்கு என்றுமே ஓர் ஈடுபாடு. அது என் குறையென்று மதித்து நிர்ணயிக்கும் ‘பரிபக்குவம்’ உங்களுக்கு வளர்ந்திருந்தால், அதுவே என் வெற்றியெனக் கொள்வேன். என்னுள் இருக்கக்கூடிய குறையையே நிறையாகக் கண்டு அதையே வெற்றியாகக் கைக்கொண்டு உலவுகின்ற என்னைப் போலவேதான் ஆண்டாளும் இருந்தாள்; மண்ணில் இருந்துகொண்டே விண்ணுக்குத் தாவிப் பழகினாள். பேதை மனம் தெய்வத்தைக் காதலித்தது. அவளுடைய குறையை அவள் அறிந்திருந்தாள். அந்தக் குறைபாடு தான் கடைசியில் அவளிடம் கண்ணபிரானக் கொணர்ந்தது. இங்கேயும் குறை வெற்றி கொள்ளும் நிலை உருவாகியிருக்கிறதே? உங்களால் உணர முடிகிறதா? இல்லையா...?

ஆண்டாள் தெய்வத்தைக் காதலித்தாள். ஆமாம், ‘காதல்’ என்றால் என்ன அர்த்தம்? பலங் கெட்ட மனத்தின் இழிவான உணர்ச்சி என்கிறார்கள். காதல் என்பது தெய்வீகமானது என்று திரையில் 'நல்ல' கதாநாயகர்கள் சொல்லுகிறார்கள். ‘காதலிக்காமல் என்னால் ஒரு நாள் கூட வாழ முடியாது!’ என்று உளறிக்கொட்டிய மேலை நாட்டுப் பித்துக்குளியைப் பற்றியும் நீங்கள் அறிவீர்கள். இத்தகைய மாயப் பிரபஞ்ச வாழ்வில்தான், ஆண்டாளால் கண்ணனைக் காதலிக்க முடிந்தது. காதலிக்கத் தெரிந்தது. அவள் பாக்கியவதி. சூடிக் கொடுத்த நாச்சியாரானாள்.

உமா தெய்வப் பெண் அல்லள்; என்றாலும் அவளும் ஆண்டாள் மாதிரி ஒரு தெய்வத்தின் மீது காதல் கொண்டாள். ஆனால் இந்தத் தெய்வம் ஓர் ‘அப்பாவித் தெய்வம்.’ உமாவின் சிறிய தாயாரான சந்திரலேகாவிடம் தணிகாசலம் விழிப்பதைப் பாருங்களேன்!

“உமாவின் பேச்சும் சிரிப்பும் பார்வையும் உங்கள் கற்பனைகளைத் தூண்டவில்லையா? அவளை அடைய வேண்டுமென்று-உங்களுக்கு அவளைச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென்று நீங்கள் ஆசைப்பட்ட தில்லையா?”

“ஆசையில் பல விதங்களுண்டு. எளிதில் கிடைக்கக்கூடிய பொருள்களுக்கு நான் அவ்வளாக ஆசைப்படுவதில்லை. எனக்கு எளிதில் கிடைக்கக்கூடிய பொருளாக இருந்தாலும், உமா மிக உயர்ந்த பொருளாக இருந்தாள்.”

உமா சாதாரணப் பெண்தானே என்று வினவுகிறாள் சந்திரலேகா.

“அவள் சந்தன மரமென்பது எனக்குத் தெரியும், தெய்வமென்று என்னை நம்பி, அவளுக்காக என்னைத் தெய்வமாகவே நடிக்கச் செய்துவிட்டாள். எனக்குள்ளே இருந்த சிறுமையும் வெறியும் வெளிப்பட்டிருந்தால், என்றைக்கோ அவள் என்னைக் காறி உமிழ்ந்துவிட்டு ஓடியிருப்பாள்!” என்று பதில் கொடுக்கிறான் தணிகாசலம். இவனை ஓர் ‘அப்பாவித் தெய்வம்’ என்றேனே, சரிதான்; சரிதான்! அவனுக்குள்ளே இருந்த அந்தச் ‘சிறுமை’க்கும் ‘வெறி’க்கும் உதாரணம் வேண்டாமா? எளிதில் கிடைக்கக்கூடிய பொருள்களில் ஆசை வைக்காத தணிகாசலம், அன்றைய சூழலில் எளிதில் கிடைக்கக்கூடிய பொருளாக நிலவிய செங்கமலத்திடம் பழகிய எண்ணத்தை நெஞ்சில் சுமந்துதான் அவன் தனக்குத் தானே பழி சுமத்திக் கொண்டானா? தேவகிக்கும் தணிகாசலத்துக்கும் நடைபெற்று முடிந்து ஓய்ந்த புயலுக்குப் பின், அன்றிரவு மூன்று மணிக்கு தேவகியை நாடிச் செல்லும் அளவுக்கு தன்னுடைய மனம் பலங் கெட்டுப் போனதை ‘வெறி’ என்று குறிப்பிடாமல், வேறு எச் சொல்லால் சுட்டிக் காட்டுவான்?

தணிகாசலம் யார்? சர்வ சாதாரணமான ஒரு மனிதப் பிராணி. பேனா பிடிக்கும் நேரத்தில் மட்டுமே அவன் ஒரு மனிதன். மனிதன் என்றால், மிக மிகச் சாதாரணப் புள்ளி. மனிதனுக்கு இம்மாதிரி குணங்கள் தாம் இருக்க வேண்டுமென்று எல்லைக் கோடு எழுதி வைத்திருக்கின்ற இயற்கையின் நியதிப் போக்குக்கு, யதார்த்தமாக அமையும் மனித வாழ்வுக்கு, உருவான காதல் லீலைகளுக்கு, உருவாக்கிக் கண்ட தாம்பத்தியத்திற்கு அனுசரணையாக, அனுமானமாக, உதாரணப் பிரதிநிதியாக அவன் தன்னை, அமைத்துக் கொண்டான். அவன் அமைந்தான? அவன் அமைந்திருந்தால், அவனுக்கு அபலைப் பெண் கெளரி மாத்திரம் தானே கிட்டியிருக்க வேண்டும் பரபரப்பையூட்டும் அழகு வாய்ந்த தேவகியோ, தியானத்தில் அமரும் கன்னித் தெய்வமெனத் தோன்றிய உமாவோ அவன் வாழ்வில் குறுக்கிட யார் காரணம்? அவன்தான்! இந்த நிலைக்களன் தான் தணிகாசலத்தை அரைகுறைப் படைப்பாகவும் நிறைபெறாத மனிதனாகவும் (undeveloped and unfinished character) ஆக்கித் தொலைத்திருக்கிறது. ‘என் இருதயம் இலக்கியத்துக்கு; என் உடல் தாய்த் திருநாட்டுக்கு!” என்று இந்தக் ‘குயில்’ கூவியது. நடிப்பு...!

வட்டிச் சோறு

இலக்கியத் திறனாய்வுக் கலையில் வல்லமையும் வளப்பமும் கொண்டவர் திரு அ. ச. ஞா. அவர்கள். அவர் தம் முகவுரையில், “தணிகாசலத்தின் மனைவி கெளரி ஒரு தனிச் சிறப்புடன் விளங்குகிறாள். வட்டிச் சோற்றைப் பங்கிட்டாலும், வாழ்க்கையைப் பங்கிட மாட்டாள் பெண் என்பது பழமொழி. எனினும், கெளரி மனம் ஒப்பித் தன் வாழ்க்கையைப் பங்கிட முனைகிறாள்!” என்று எடுத்துரைக்கிறார். பொதுமை நோக்கில் பெண் ஆணுக்கெனத் தமிழ் மண்ணில் பெருமைகள் பல சொல்லப் பட்டிருக்கின்றன. ஆனால், புதுமை நோக்கில் அவற்றை அழித்தெழுத முயற்சிகள் பல நடைபெற்று வருகின்றன. இவ்விரண்டு வரம்புகளுக்கும் ஊடாக நின்று கெளரியைச் சக்தித்து, அறிமுகம் ஆகி, அவளும் அவள் கணவன் தணிகாசலமும் நடத்தி வந்த இல்லறத்தைப் பார்த்துக் கொண்டே வந்த எனக்கு கெளரி புதுமை காட்டித் திகழ்ந்தாளே தவிர, புதுமைப் பெண்ணாக என் முன் தோற்றம் தரவில்லை. உமா கொடுத்த படத்திலிருந்த வள்ளி-தெய்வயானையின் வாழ்வு வல்லவேல் முருகனுக்குப் பங்கிடப்பட்டிருக்கலாம். விந்தை ஏதும் காத்திருப்பதற்கில்லை. ஏனெனில், அவர்கள் மானிடர்களின் நெஞ்சங்களில் மட்டிலுமே வாழ்ந்தவர்கள். தன் வாழ்க்கையைக் கூறுபோட்டுப் பகிர்ந்தளித்தாள் கெளரி. பண்பு, பரிபக்குவம்,துணிச்சல், தியாகம்-இத்தகைய விலையுயர்ந்த குணநலன்களுக்கு உள்ளே கெளரி கூடாரம் அமைத்துக் கொடுக்கப் படுகின்றாள். அவள் கூடாரத்தை விட்டு விலகி வெளியே தலை நீட்டும்போது, அவளிடம் எந்தத் தனித்தன்மையை நான் காண முடிந்தது? நெடுமூச்சுத் தான் வருகிறது. காரணம், கெளரியை இதய பூர்வமாகவோ, விரிந்த அளவிலோ, அன்றி, சாங்கோபாங்கமாகவோ என்னால் படிக்கமுடியவில்லை. ஏன், தணிகாசலமாவது அவளை முழுமையாகப் படித்து வைத்திருக்தானா? என்னால் நம்ப முடியவில்லை.

நம் தணிகாசலம் பெயர் பெற்று விளங்கிய எழுத்தாளனாக இருந்துங்கூட, அவனால் அவனேயே உணரக் கொடுத்து வைக்கவில்லை. கிடைத்த அறிவு நூல்களின் இடைவெளியிலே ‘குடியிருந்த’ அவனுள்ளே நிலவிய ‘இரண்டு மனிதர்கள்’ என்றாவது ஒரு நாள் சந்தித்துப் போராட்டம் நடத்தியிருக்கிறார்களா? ஊஹூம்!

‘நானும் கண்ணனும் ஒன்றாக முடியுமா?’ என்று திணறியவனுக்கு உமா ‘இரண்டாவது மனைவி’யாகிறாள். பயப்படாதீர்கள். இருதாரச் சட்டம் அப்போது அமலில் இல்லை!

‘நீ என்னைக் காதலிக்கிறாயா?’ என்று தணிகாசலத்கைக் கேள்விக் கேட்கத் தூண்டிய பெருமை கார்த்திகை மைந்தனுக்கே உரிமை. ‘நான் உங்களைக் காதலிக்கிறேன்!’ என்று சொல்லாமல் சொல்லிவந்த மாற்றம் மேதை பிளாட்டோவுக்குத்தான் சொந்தம். ‘நீங்கள் என்னைக் காதலிக்கிறீர்களா?’ என்று நூதனமான வினாவைச் சொடுக்கிய பெருமை உமாவின் ‘கன்னி மனம்’ அடையத்தக்க பெருமை. “ஏசுநாதரை நினைப்பதற்கு முன்னால் நீ என்ன மறக்கக் கற்றுக்கொள்!” என்று உபதேசம் செய்த ‘குருநாதரே’ பின்னர் ஒரு நாளிலே “நான் உன் னைக் காதலிக்கிறேன்!” என்று மெய்ம்மறந்து பேசும் ‘பவித்திரப் பண்பு’ தணிகாசலத்துக்கே ‘உரிமை பதிவு பெற்றது’ ஆகும்!

உழைப்பை, பாசத்தை, அன்பை எடுத்துக்கொண்ட உமாவை நடைப் பிணமாக்கிய பிறகு தணிகாசலம் தன்னுடைய ‘அனுபவிக்கப்பட்ட வாழ்வை’ப் பகிர்ந்து கொடுக்கிறான். அவனை மூன்று சந்தர்ப்பங்களில் தொட்ட தணிகாசலம், நான்காம் முறையாகவும் தொட்டான்!

“உமா தன்னுடைய மனத்துக்குள் உங்களை வைத்துப் பூசைசெய்து கொண்டிருக்கிறாள். இனிமேல் வேறு ஒருவருடன் எப்படி அவளால் வாழமுடியும்? அவள் தன்னையும் என்னையும் ஒன்றாகவே நினைத்துப் பேசுகிருள்!” என்று ‘ஆறுதல்’ மொழிந்தாள் வாயில்லாப் பூச்சியான கெளரி. இந்த ஆறுதல்தான் தணிகாசலத்துக்குத் தென்பை ஊட்டியிருக்க வேண்டுமோ, என்னவோ..?

“ஏன் மாமா, நான் உங்களுடைய மனைவிதானே?” என்று தணிகாசலத்தின் ‘புதுமனைவி’ உமா கேட்கிறாள். இந்த ஒரு கேள்வி என் கண்களைக் கலங்கச் செய்தது. எனக்குத் தணிகாசலத்தின் பேரில் ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. ‘நீங்கள் என்னைக் காதலிக்கிறீர்களா?’ என்று ‘புறம்’ தோற்றுவித்த பாணியில் உமா எதிர்க் கேள்வி கேட்டதற்கப்பால்தான், அவன் தன் உள்ளத்தை வெளித்திறந்து காட்டுகிறான்! காலங்கடந்த ‘அவதாரம்’ இது. அவனுக்கு ஏற்பட்ட மனமாற்றம் இயற்கையுடன் ஒன்றவில்லை. அதனால்தான். அவனுடன் வாழ விழையாமல் அந்தப் பஞ்சவர்ணக் கிளி பறந்துவிட்டதா? 

உமா!...என் போன்ற வாசகர்களின் மனங்களிலே நீ என்றென்றும் வாழ்வாய், அம்மா...!

பிறந்த விட்டுச் சீதனம்

உமாவின் பிறந்த வீட்டுச் சீதனம் அந்தப் பாவை விளக்கு.

இனம்புரியாத இயற்கையின் உள்ளுணர்வுச் சக்தியுடன், மனோதத்துவப் பின்னணியில் அன்புக் குரலெடுத்துப், பாசத்தையும் பக்தியையும் பண்பையும் குழைத்துச் ‘சாகாத குரல்’ கொடுத்துக் கூவிக் கொண்டிருக்கும் ‘பச்சைக் குழந்தை’யின் இதய ஒலியைத் தான் தணிகாசலம் செவிமடுத்துக் கொண்டிருக்கிறானா?’ “என் குழந்தை கல்யாணி! கல்யாணி என்னுடைய குழந்தை!” என்று அறிவறியாப் பெண்போல உரிமையிழந்திருந்த நேரத்தில் அலறித் துடித்த உமா, இப்போது தன்னுடைய உரிமையை நிலைப்படுத்திக்கொண்டு முடிந்ததும், தன் குழந்தையை உண்மையிலேயே தேடிக்கொண்டு போய் விட்டாளே!

‘என்னை அறவே மறந்துவிட்டு நீங்கள் எழுதுங்கள்!’ என்று மிக எளிதாக உமா தணிகாசலத்திடம் வேண்டினாள். அவனை மறந்துவிடத்தான் அப்படிக் கண்ணீர் வடிக்கிறானா அவன்? ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்!’ என்று ஒருவரி மறுமொழி அளித்திருந்தால் உமா அழிந்து பட்டிருக்கமாட்டாளே என்கின்ற மனச்சான்று அவனை அக்கக்காகப் பிய்த்தெடுத்து குதறிக்கொண்டிருக்கிறதா? அவள் கொடுத்து வைத்தவள்; அவளுடைய லட்சியப் புள்ளியான தணிகாசலத்தின் இதயத்தின் இதயத்தைப்பறித்தெடுத்துக் கொண்டு, தெய்வ மங்கையாகிவிட்டாள்! அவன், சாதாரணமான ஜடம்! பாவம், வெறும் ஐடம்!

பூவை விளக்கு

உயர்திரு அகிலன் அவர்கள் சந்தித்த பின் தணிகாசலத்தை நான் பழக்கப்படுத்திக் கொண்டேன். வழிந்த கண்ணீரை வழித்துவிட உரிமை பூண்ட கெளரி கல்லாய்ச் சமைந்து நின்றாள்; அந்த உரிமையின் மறுபாதியாகி, அவரது இனிய பாதியாகி ‘தற்காலிகப் பதவி’ தாங்கிய உமா பாவை விளக்கானாள். பாவை விளக்கையும் பூவை விளக்கையும் மாறி மாறிப் பார்த்து முடிந்ததும், ஆயிரத்தெட்டாவது தடவையாக தணிகாசலத்தைப் பார்வையிட்டேன். திரு. அகிலன் அவர்களின் பூரணமான ‘கருணை’க்கு இலக்கான கெளரி அவரது பரிபூரணமான அனுதாபத்துக்கு ஆளாகவில்லை. உமாவுக்குப் பின் கெளரியின் தியாகத்தின் விளைவாக, தணிகாசலம்-கெளரியின் தாம்பத்தியப் பிணைப்பில் ‘இறுக்கம்’ காட்ட புதியதொரு ஏடு காத்திருக்கிறதே? கெளரியின் அன்பு மனத்தை இன்னும் தெளிவாக உணர்ந்தறிந்து, அதன் மூலமாகக் கெளரிக்கு தணிகாசலத்தின் நெஞ்சில் நிரந்தரமான இடம் அருள மனமிரங்கியிருக்கலாகாதா? இந்த ஓர் இடைவெளி நிறைவு பெற்றிருந்தால், தணிகாசலத்தின் பாத்திரப் படைப்பு கட்டாயம் முழுமை பெற்றிருக்கும்

ஆசையின் பிழையாம்...!

ஆயிரக் கணக்கான வாசகர்களின் நாடியைப் பிடித்துப் பார்த்து கதை சொல்லப் பழகியவர் நாவலாசிரியர் அகிலன். வாசகர்களுக்காக அவரால் படைக்கப்பட்ட பாத்திரங்கள் உமாவும் செங்கமலமும், அவர் தமக்காகப் படைத்துக் கொண்ட உருவம் தணிகாசலம். எனக்காக உருவான குணச் சித்திரம் தேவகி.

தேவகி தணிகாசலத்திற்கு ஒளி காட்டிய தெய்வமாகவே ஆகிவிட்டாள். மனித மனத்தின் பலங்கெட்ட உணர்ச்சித் தாக்குதல்கள் விளையாட முயற்சி செய்யும் தருணம். இளம் விதவையான தேவகியின் அறியாத் தனம் தணிகாசலத்தின் சலனம் கொண்ட உள்ளத்துடன் மோதுகிறது. உடலுறவு எட்டாத நிலையில் விதவைக் கோலம் ஏந்தும் விதி வாய்த்த தேவகிக்கு தணிகாசலம் சலனம் விளைவித்தது இயற்கை. ‘நான் உன்னைக் கல்யாணம் செய்துகொள்ள நினைப்பது நியாயந்தானா?’ என்று கேட்கும் தேவகியின் ‘இயற்கையான ஆசை’யை- ‘ஆசையின் பிழை’யைக் கேட்க எனக்குச் சுவையாக இருந்தது: அவனுடைய மனத்தைத் திறந்து பார்த்த தேவகி அங்கு கெளரியைக் கண்டதும், அவனது முழங்காலில் முகத்தைப் புதைத்துக்கொள்ளும் துணிவு பெற்றிருந்ததால் விலகிக்கொள்கிருள். “என்னுடைய குறையையெல்லாம் போக்கிவிட்டாய். என் வாழ்க்கையில் இவ்வளவு சந்தோஷமாக நான் என்றைக்குமே இருந்ததில்லை!” என்று உணர்ந்து பேசுகிறாள். அவள் கனவும் கதையும் இத்துடன் முடிவடைகின்றன.

ஆனால், ‘குழந்தைத்தனம்’ கொண்டவன் தணிகாசலம் அடங்கிக் கிடந்த இனக் கவர்ச்சி நினைவுகள் தூண்டிவிடப்பட்டிருந்த நிலையிலே தணிகாசலம் விலங்காக முயன்று, முடியாமல், பிறகு மனிதனாகி விடுகிறான். வெறும் ஏடுகளை நம்பி ‘பகுத்தறிவு வாதத்தை’ கைப்பிடியில் பற்றியிருந்த அவனிடம் தேவகியை ஒப்படைக்க வேண்டுமென்கிறார்கள் பலர். இப்போது வரும் கதைகளில் இது ஒரு நாகரிகம். அகிலன் அன்புப்புரட்சி செய்பவர். தேவகியைக் காப்பாற்றிவிட்டார். அவர் தணிகாசலத்தின் பிற்கால வாழ்வை தீர்க்கதரிசனக் கண் கொண்டு வரையறுத்திருக்க வேண்டும். ‘கடன்’பட்ட தேவகி தன் கடனை தணிகாசலம் உணர வேண்டுமென்று எதிர்பார்த்திருந்தாள். தேவகியை நாவலாசிரியர் வஞ்சித்து விட்டார்!

ஆத்மாவுக்காக...!

தாமஸ் ஹார்டியின் ‘The woodlanders’ என்னும் நவீனத்தில் வரும் மேரியில் உமாவை என்ணால் தரிசிக்க முடிகிறது. தோன்றி மறையும் மின்னல் அவள். ஆத்மாவுக்காகவே ஆத்மா கொள்கிற ஆத்மீகக்காதலை (platonic love) படிப்படியாக வருணித்து, மன ஆழத்தின் விந்தை உணர்ச்சிகளையும் மனிதத் தன்மையின் இயந்திர கதியின் விளக்கத்தையும் ஒரு நிலைப்படுத்தி, நவீனத்தின் பிறப்புக்குக் (purpose of the novel) உமாவையே ஓர் உதாரணமாக்கி, அவளைப் பள்ளியறைப் பதுமையாக்குவதற்குச் ‘சட்டம்’இன்றி, சரியான நேரத்தில் (correct juncture) நாசூக்காகச் சாகடித்து அவளை அற்புதப் படைப்பாக்கி விட்டிருக்கிறார் திரு அகிலன்.

அந்தப்புர அந்தரங்கங்கள் பண்டை வரலாறுகளுக்கு மட்டுமே உரியவை என்று நினைத்திருந்தேன்.மேற்குறிப்பிட்ட உள் வாழ்வின் வெளிவிளையாட்டுக்கள் தணிகாசலத்திடமும் இருக்கக் கண்டபோது, வருத்தம் தான் எஞ்சியது. அதுவே அவனது பலத்தைப் போக்கடித்து விட்டது. வெறும் புத்தகப் பூச்சியாக மட்டுமே இயங்க முடிந்த தணிகாசலத்தை எழுத்தாளனக்கியிருக்கிறாள் ஆடலழகி செங்கமலம். அவள் அவனுக்கு ஏமாற்றத்தை மட்டுமன்று, ஒரு கதையையும் அளித்திருக்கிறாள். இம்முடிவு நம்முடைய நடைமுறை வாழ்வுக்கு ஒட்டி வருமானல், நூறாயிரம் தணிகாசலங்களை எழுத்தாளர்களாகக் கண்டிருக்குமே இந்தத் தமிழ் கூறும் கல்லுலகம்? புதுப்பட்டிச் சலனம் சின்னத் தனமான அற்ப நிலை கொண்ட காதல் லீலைகள் (silly romances) அல்லவா? நல்ல வேளை, அந்நாளில் ‘மஞ்சள் பத்திரிகை’ ஏதும் பிறக்கவில்லை.

தன் தலையெழுத்தை நிர்ணயிக்கத் தெரிந்து கொண்டிராத ‘இரண்டாவது பிரம்மா’ இவன். ஒருமுறை சொல்லும் செயலும் ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்கிறான். ஆனால், அவனிடமோ ‘வேறு மனிதர்களை’யே சந்திக்க நேர்கிறது. ‘தோல்வியை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்!’ என்றான். ஆனால் அவனை கொண்ட காதலில், பிழைத்த பிழைப்பில் தோல்வி யடைந்தான். ‘தலைவிதியாவது, மண்ணுங்கட்டியாவது’ என்று பிதற்றுகிறான். கடைசியில் அவன் நம்பிய அதே தலைவிதியினால் அவனுடைய உமா மண்ணுங்கட்டியாகவே ஆகிவிட்டாள்!

உமாவுக்குத் தணிகாசலம் எழுத்தாளனாக் காட்சி கொடுத்தபடியினால்தான் அவன் அவளது தெய்வமாகக் கோயில் கொள்ள முடிந்தது. ஆனால் அதே எழுத்தாளனைச் செங்கமலத்தின் காலடியில் கிடக்கக்கண்டபோதும், கடைசியில், பம்பாயில் செங்கமலத்தின் இல்லத்தை அடைந்து, அவளை ஆடவைக்க வேண்டுமென்ற ‘வெறி யுணர்வு’ கிளர்ந்தெழ, அவளுடைய கரத்தைப் பற்றித் ‘தொட்டு’ இழுக்கப் போனபோதும் என் மனம் எழுப்பிய ஒரே கேள்வி இது: ‘தணிகாசலம் ஏன் எழுத்தாளன் ஆனான்?’

க. கா. சு - கல்கண்டு

ஓவியனுக்கும், நாவலாசிரியனுக்கும் ஓர் உடன்பாடு உண்டு. திரு அகிலன் அவர்களிடம் ஓவியனுக்கு இருக்க வேண்டிய ஆழ்ந்த புறநோக்கும், நாவலாசிரியனிடம் நாம் எதிர்பார்க்கும் பண்பட்ட இலக்கிய மனமும் இருக்கின்றன. அதனால்தான் ‘பாவை விளக்கு’ நல்லதொரு குணச்சித்திரமாக (nove of character) உருவாயிருக்கிறது.

எதிர்பாராத நிகழ்ச்சிகளை வாழ்க்கைப் பாதையின் எதிர்பார்த்த விபத்துகள் என்று சொல்ல வேண்டும். தேவகியும் கெளரியும் ‘எதிர்பார்த்த விபத்து’கள் என்பது என் கருத்து. செங்கமலமும் உமாவும் எதிர்பாராத சம்பவங்கள். காதலை முக்கோண வடிவில் வரைந்து பழக்கப்பட்டவர்களுக்கு தேவகி, உமா, செங்கமலம், கெளரி ஆகிய நான்கு புள்ளிகளை வைத்து நாற்கோட்டுருவம் சமைத்து அதனுள் தணிகாசலத்தைத் தள்ளி, உணர்ச்சியையும் அறிவையும் ஈந்து, போதாக் குறைக்கு அவனை எழுத்தாளனாகவும் ஆக்கி, ஆசைகளின் விபரிதச் சுழற்சி (fantacy of desires) திண்டாடித் திணற வடித்திருக்கும் முறை ஓர் ஆறுதலாக இருக்கலாம்!

‘சிநேகிதி,’ ‘வாழ்வு எங்கே?’ ஆகியவை திரு அகிலனின் நவினங்கள். ‘சிநேகிதி’ என்ற மூலப் பாலிலிருந்து நீர்க்கலவை செய்யப்பட்ட தண்ணீர் தான் ‘பாவை விளக்கு’ என்பது திரு க. கா. சு.வின் வாதம் ‘வாழ்வு எங்கே?’யும் ‘பாவை விளக்’கும் ஒன்றென ‘பிராய்ட் தேற்றம்’ போன்று ஒருமுறை பதிலிறுத்திருக்கிறார் ‘கல் கண்டு’ ஆசிரியர். இவ்விருவரும் அகிலனைக் குழப்பவில்லை; தங்களைத் தாங்களே தைரியமாகக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். காரணம், அவர்கள் எழுத்தாளன் என்ற தணிகாசலத்தை அடித்தளமாக்கிக்கொண்டு குழம்பியிருக்கிறார்கள். ஏன் தெரியுமா? ‘சிநேகிதி’யில் ஓர் எழுத்தாளனும் ‘வாழ்வு எங்கே?’யில் ஓர் எழுத்து ஆசிரியனும் வருகிறார்கள்...!

அ. ச. ஞா. மறுக்கிறார்!

தணிகாசலத்தைக் கை குலுக்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் நம்பத்தகாத விதத்தில் அமைந்து இருப்பினும், நம்பத்தக்க சம்பவங்களாகவே (make-believe incident) ஆசிரியர் தமது நுணுகிய கட்புலனாலும் தேர்ந்த சொல் வளத்தாலும் எடுத்துக்காட்டுகிறார். அத்தகைய நிகழ்ச்சிகளில் போர்த்தியிருக்கின்ற ‘இயற்கையற்ற நிலை’யை நம் கண்களினின்றும் மறைத்துவிட்டுத் தப்பித்துக்கொண்டு கல்மூச்செறியும் சாகஸத்தையும். கற்றுக்கொண்டிருக்கிறார். மேற்படி சம்பவங்களின் செயல்பற்றிய வாதப் பிரதிவாதத்தில் (logic of action) அவர் வெல்லவும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொள்ளத் தவறவில்லை. பதச்சோறு: ஓடும் ரெயில் வண்டியில் உமாவின் பூங்கரம் பற்றி இழுத்துக் காப்பாற்றிய தணிகாசலத்தின் கெட்டிக்காரத்தனம். ஸ்பரிச உணர்வு தான் மன வுணர்ச்சிகளின் கூத்துக்கு முதற்காரணம் என்பது உளநூல் வல்லாரின் கருத்து:

சமூகத்தின் சித்திரம் (picture of society) சுவைபூண்டது. ஆனால் சமூகத்தொண்டனாக, புரட்சியாளனாகத் தணிகாசலம் அடிக்கடி மாறி அறிவு, கலை, காட்டுத்தொண்டு என்று என்னவெல்லாமோ பேசுகிறான்! ஆழ்ந்த கருத்துக்களை மெல்லிய நகைச்சுவை உரையாடல்களின் வாயிலாக வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போலப் பேசுகிறார் திரு அகிலன். அற்புதம்! தேவை தான். திரு ரகுநாதனுக்கும் திரு க. கா. சு. வுக்கும்கூட இஷ்டம்தான்! ஆனால், திரு அ. சா. ஞா. -மறுக்கிறார்கள்.

நெஞ்சின் அலைகள்

தணிகாசலத்தை-சராசரி மனிதனின் (average man) குறைநிறைகளின் பொலிவுடன் விளங்கும் தணிகாசலத்தைக் கண் விலக்கி, கண்ணீர் விலக்கி, இதயம் விலக்கி, இனிய நினைவு விலக்கிப் பார்க்கிறேன்; நுணுகி நுணுகிப் பார்க்கிறேன். தணிகாசலம் என்ற ‘உணர்ச்சிப் பிண்ட’த்திலிருந்து, அவனது உள்ளொளியைச் சுட்டிய தேவகி எழும்புகிறாள்; அந்த உள்ளொளியைத் தூண்டிய செங்கமலம் பிரிகிறாள்; அதற்கு அகலாக அமைந்த கெளரி நிற்கிறாள்; அகலையும் சுடரையும் சேர்த்து ஏந்திய உமா நிலைக்கிறாள். தணிகாசலத்தின் பலமிழந்த ஆசாபாசங்ளைக் கொண்டு பிறந்து, வளர்ந்து, வாழக் கனவுகண்டு, கண்ட கனவு கனவாகிப் போராடியவர்கள் இவர்கள்! இறுதியில், இயற்கையும் இருதயமுமே வெற்றி பெற்றன! கெளரியை வாழ்வின் துணைகலமாகக் கொண்ட தணிகாசலம் பேறுபெற்றவன்!

‘நெஞ்சின் அலைகளில்’ அறிமுகமாகிய புஷ்பாவில் உமாவும், கனகத்தில் கெளரியும் நிழலாடுகிருர்கள்.

நானூறு பக்கங்களிலே உருவாகி அழிந்த உமாவைக் காட்டிலும், நாலு பக்கங்களில் தோன்றி நிலைத்த தேவகி முழுமை பெற்ற தமிழ்ப்பெண்! ஆம்; இந்தக் கம்பசித்திரம் தீர்ந்த சிந்தனை கயமும், ஆழந்த கற்பனை வளமும், துண்ணிய அன்பு மனமும் கொண்ட குணச்சித்திரப் புதின வேந்தன் திரு அகிலன் அவர்களுக்கே ஆகிவந்த மாபெரும் வெற்றியாகும்.