ஆதலினால் காதல் செய்வீர்
(கட்டுரை)
மாதவராஜ்


ஆதலினால் காதல் செய்வீர் (கட்டுரை)

மாதவராஜ்

 

 

 

Contents

ஆதலினால் காதல் செய்வீர்

1. ஆதலினால் காதல் செய்வீர் -முதல் அத்தியாயம்

2. ஆதலினால் காதல் செய்வீர் - 2ம் அத்தியாயம்

3. ஆதலினால் காதல் செய்வீர் - 3ம் அத்தியாயம்

4. ஆதலினால் காதல் செய்வீர் - 4ம் அத்தியாயம்

5. ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!

 

 

 

ஆதலினால் காதல் செய்வீர்

உலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்… வாருங்கள்.

மாதவராஜ்.

 

 

 

ஆதலினால் காதல் செய்வீர் -முதல் அத்தியாயம்

1.மாய வண்ணத்துப் பூச்சி

எண்ணிக்கொண்டிருக்கும் ரூபாய் நோட்டொன்றில் ‘ஐ லவ் யூ ‘ என்று யாரோ ஒரு பெண்ணுக்கு யாரோ ஒரு ஆணின் மனம் திறந்த செய்தி இருக்கிறது. மும்பையின் யானைக்குகை பாறைகளில் இருக்கும் ஆண், பெண் பெயர்கள் குற்றாலத்தில் வேறு பெயர்களாக செதுக்கப் பட்டிருக்கின்றன. ஓடுகிற டவுன் பஸ் சீட்டுக்களின் பின்புறங்களையும் இந்த ஆதாம் ஏவாள்கள் விட்டு வைக்கவில்லை.

அவர்கள் யாராகவும் இருக்கலாம். இரண்டு கண்களில் ஆரம்பித்த உறவு ஒன்று உலகமே பார்க்கட்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு ஆணின் பெயரையும், பெண்ணின் பெயரையும் இப்படி சேர்த்து எழுதினாலே காதல் என்பதாக யாரும் சொல்லாமலேயே அர்த்தம் உறைக்கிறது. அப்படியொரு தன்னிச்சையான அறிவை காலம் மனிதர்களுக்கு ஊட்டியிருக்கிறது.

இளமையின் வாசலில் காலைச்சூரியனின் முதல் ஒளிக்கீற்றாகவும், மாலைச் சூரியனின் மங்கிய ஒளியாகவும் படர்ந்து விடுகிறது. எப்படிப்பட்டவராக இருந்தாலும், முகத்தில் ஒரு களையையும், அர்த்தமுள்ள புன்னகையையும் தருவித்துவிடுகிற மாயம் அதற்கு இருக்கிறது. நிற்கிற இடத்தில் நிலம் ஊற்றெடுக்கிறது. பார்க்கிற இடத்தில் பசுமை பூத்தொடுக்கிறது. தனிமை திகட்டாமல் கனவு காணச் செய்கிறது. உலகமே அழகாய் இருக்கிறது. இதுபோன்ற அனுபவம் உலகத்தில் வேறு எந்தக் காதலருக்கும் ஏற்பட்டிராது என்று கர்வம் கொள்ள வைக்கிறது. ஆதி மனிதனின் முடிகள் அடர்ந்த தோலில் தோன்றிய அந்த சிலிர்ப்பு இன்று வரை அப்படியே ஒவ்வொருவருக்கும் புதியதாகவே தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஆணுக்கு பெண் மீதும், பெண்ணுக்கு ஆண் மீதும் சிறு வயதிலிருந்தே ஈர்ப்பு இருக்கிறது. அந்த பொறி உடல் மாற்றங்களோடு பருவம் அடைகிற போது கொழுந்து விட்டு பற்றிக் கொள்கிறது. எதையும் அறிந்து கொள்ளத் துடிக்கும் மனித சுபாவம் சுவாரஸ்யம் கொண்டு தத்தளிக்கிறது. புரிந்தும் புரியாமல் அலைபாய்கிறது. தனக்கும் எல்லாம் நேர்கிறது என்பது பாடாய் படுத்துகிறது. தன்னை தானே ரசிக்கிற குறுகுறுப்பில் பிறக்கிறது. தனது ரகசியங்களை எதிர்வினையின் மூலம் புரிந்து கொள்ள முயலும் துடிப்பில் வளர்கிறது.

இந்த புதிய உலகத்தின் திறவுகோல் ஒரு பெண்ணுக்கு ஆணின் பார்வையில் இருக்கிறது. ஒரு ஆணுக்கு பெண்ணின் பார்வையில் இருக்கிறது. திறந்துவிடும் கண்களுக்காக பூத்துக் கிடக்கிறார்கள். ரகசியங்கள் பொதிந்த பார்வைகளை பரிமாறிக் கொண்டு உடல் விசித்திரங்களில் கண்ணாமூச்சி ஆடுகிறார்கள்.ஒரு ஆணின் கண்கள் பல பெண்களின் கண்களைப் பார்க்கின்றன. ஒரு பெண்ணின் கண்கள் பல ஆண்களின் கண்களைப் பார்க்கின்றன. வாழும் சமூகமும், வாய்க்கும் சூழலும் அவரவர்களுக்குள் மூட்டி வைத்திருக்கிற பிரமைகளுக்கும், பிம்பங்களுக்கும் அருகில் நெருங்கி வருகிறவர்களை ஏற்றுக் கொள்ளத் துடிக்கிறார்கள். தங்களது கோட்டு உருவங்களுக்கு வண்ணம் பூசுகிறார்கள். அவரவர் சித்திரங்கள் மிகச் சிறப்பாக வடிவம் பெறும் என நம்புகிறார்கள். செந்தூரப்பூவே என்று ஊஞ்சல் கட்டி ஆடுகிறார்கள்.

எதிர்த்தரப்பில் சம்மதம் கிடைக்காத போது எல்லாம் தொலைத்தவர்களாய் சிதைந்து போகிறார்கள். நாட்கள் வலி கொண்டதாக நகருகின்றன. தன்னை உணர்த்தி விடவும், எதிர் மனதில் இடம் பெறவும் உன்மத்தம் பிடித்துப் போகிறது. போகிற இடங்களுக்கெல்லாம் போகிறார்கள். பார்க்கிற இடங்களெல்லாம் போய் நிற்கிறார்கள். பிடித்தமானவராய் மாறுவதற்கு வித்தைகளும், சாகசங்களும் செய்து பார்க்கிறார்கள். மலையுச்சியிலிருந்து குதிக்கப் போவதாகவும், விஷமருந்தி இரத்தம் கக்கிச் சாகப் போவதாகவும் கடைசிச் செய்தி அனுப்பி பார்க்கிறார்கள். பயமுறுத்தியோ, இரக்கத்தை உற்பத்தி செய்தோ, எப்படியோ ஒரு பெண்ணை அடைய ஆண் வெறி பிடித்து நிற்கிறான். தான் விரும்பிய பெண்ணின் மீது தாக்குதல் தொடுக்கவும், பலாத்காரம் செய்யவும் கூட சில சமயங்களில் துணிந்து விடுகிறான். நமது சினிமாக்கள் கொஞ்சங்கூட சமூகப் பொறுப்பற்று விடலைகளின் உள்ளத்தில் தீயை வைத்துக் கொண்டிருக்கின்றன.

பார்வைக்கு மறு பார்வை எதிர்த் தரப்பில் பதிலாய் கிடைக்கிற போது வானவில் தோன்றுகிறது. சக வயதொத்த பால் பேதம் கொண்டவரின் சம்மதமே பிறவிப்பயனாகிறது. உறுதி செய்து கொள்ள மீண்டும் மீண்டும் பார்வைகளில் திளைக்கிறார்கள். கால்களில் நடுக்கமும், கண்களில் படபடப்புமாய் பரிதவிக்கிறார்கள். தனக்காக ஒரு இளவரசன் வரப் போகிறான் என அவனும், இனியுள்ள காலம் முழுவதையும் அந்த ஒருத்தியோடுதான் என அவனும் கற்பனை செய்கிறார்கள்.

அவளது தலைமுடியொன்றை தனது விரல்களில் சுற்றி மோதிரம் என பெருமைப் படுகிறான் அவன். அவளது பாதம்பட்ட மண்ணை கவனத்துடன் அள்ளி தனது வழி பாட்டுக்கு பாதுகாக்கிறான் அவன். அவனது அழுக்குக் கைகுட்டையை கவர்ந்து சலவை செய்து மயங்கிப் போகிறாள் அவள். அசட்டுத்தனங்களும், சினிமாத்தனங்களுமாய் சிறுத்துப் போனாலும் காதல் எல்லோரையும் தனது உள்ளங்கையில் அள்ளி வைத்துக் கொள்கிறது. வசீகரமான பயணமாக, ரகசிய அனுபவமாக உணரப்படுகிறது. எல்லைகளற்ற பெருவெளியில் மனிதர்களை சஞ்சரிக்க வைக்கிறது.

இடைவெளிகளை மேலும் மேலும் குறைக்க வேண்டும் என பித்துப் பிடித்து நிற்கிறார்கள். காதலின் சாலையில் யாவரின் பயணங்களும் அதை நோக்கியே செல்கின்றன. ஆண் பெண் உறவுகளை திருமணங்களே உறுதி செய்கின்றன. சமூகத்தின் சம்மதம் முக்கியமாகிறது. திருமணத்திற்கான ஒழுக்கத்தையும், விதிகளையும் சமூகமே கற்பித்து வைத்திருக்கின்றன. ஜாதி பார்க்கிறது. மதம் பார்க்கிறது. கல்வி பார்க்கிறது. வாழ்வதற்கான வசதி பார்க்கிறது. இவைகளை பார்க்காத காதலையும், காதலரையும் நிராகரிக்கிறது. வன்மத்தோடு எதிர்க்கிறது. எல்லாவற்றையும் மீறி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு தங்கள் சொந்தக் காலில் நிற்கிற உறுதி வேண்டியிருக்கிறது. காதலின் வெற்றி என்பது காதலர்கள் வசதியாகவும், சமூகத்தில் கௌரவமானவர்களாக வாழ்வதிலும் இருக்கிறது.

இப்படித்தான்- இவ்வளவுதான் காதல் பற்றிய நமது புரிதல்களும், உணர்வுகளுமாக தேங்கிப் போய் கிடக்கின்றன. திரைப்படங்களில் ஆட்டமாய் ஆடுவதும், சண்டையாய் போடுவதும் ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டும் கடைசிக் காட்சிக்காகவே இருக்கின்றன. அந்தி மங்கும் வானத்தின் பின்னணியில் காதலனும், காதலியும் கட்டிப் பிடித்து சேர்ந்து நடக்கும் காட்சி வந்ததும், ரசிக பெருமக்கள் அப்பாடா என்று இருக்கைகளை விட்டு எழுந்து வீடுகளுக்குச் செல்ல தயாராகி விடுகின்றனர். விரும்பிய ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்வதுதான் காதலின் வெற்றியென சொல்லி சூரியன்கள் மறைகின்றன. முதலிரவுக் காட்சிகளே காதலின் உச்சக்கட்டம் என்று விளக்குகள் அணைக்கப் படுகின்றன.

அந்த ஆணின் வாழ்க்கை அத்தோடு முடிந்து போகவில்லை. அந்த பெண்ணின் வாழ்க்கையும் அத்தோடு முடிந்து போகவில்லை. ஆனால் காதல் மட்டும் முடிந்து விடுகிறது. இருந் தாலும், இதயத்தை அம்பால் துளைப்பதாக, லிப்ஸ்டிக் உதடுகளாக, கோர்த்திருக்கும் ஆண் பெண் கைகளாக, கண்ணை மூடி முத்தம் கொடுப்பதாக கடைகளில் வாழ்த்து அட்டைகள் வண்ண வண்ணமாக தொங்கவிடப் பட்டிருக்கின்றன. தொலைக்காட்சியில் விசேஷ நிகழ்ச்சிகள் அறிவிக்கப்படுகின்றன. இணையதளங்களில் வாழ்த்துச் சொல்லவும், தொடர்பு கொள்ளவும், கொண்டாடவும் ஏராளமான ஏற்பாடுகள். மேக்ரோ மீடியா ஃபிளாஷ் விளம்பரங்கள். கல்லூரிகளில், நட்சத்திர ஓட்டல்களில் விழாக்கள். நடனங்கள். நகரத்து யுவன்களும், யுவதிகளும் காய்ச்சல் வந்து நிற்க உலகமே காதலர் தினத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. சின்னக் குழந்தைகள் சோப்பு நுரையை ஊதி நீர்க்குமிழிகளை பறக்க வைத்து ஆனந்தப்படுவதைப் போல ‘லவ்’ ‘லவ்’ என்று சகல இடங்களிலும் காதலர் தின நிகழ்ச்சிகள் தென்படுகின்றன.

வாழ்வில் காதலை அறியமுடியாமல், எதோ ஒரு தினத்தில் காதலைக் கொண்டாடுவது வேடிக்கை தான். அவஸ்தைகளோடும், பரவசங்களோடும் ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பித்தவர்கள் விரைவில் அதனைத் தொலைத்து விட்டு வெறுங்கையோடு நிற்பது பரிதாபம் தான். காதலில் தோய்ந்து தோய்ந்து விரிந்த காவியங்களையும், கவிதைகளையும் கொண்டு பூமிப்பந்தையே அந்த உருகும் மொழியால் மூடி விடலாம். அவ்வளவு பேசப்பட்டிருக்கிறது. ஆனாலும் காதல் பிடிபடாத வண்ணத்துப் பூச்சியாய் மனிதர்களுக்கு போக்குக் காட்டி பறந்து கொண்டிருப்பது விசித்திரம்தான்.

“இதெல்லாம் காதலே இல்ல…” என்று ஒருகுரல் ஒலிக்கிறது. “டீன் ஏஜ் பருவத்துல வர்ற ஒரு ஃபீலிங். அவ்வளவுதான்” இன்னொரு குரல் ஒலிக்கிறது. “காதலுக்கும் காமத்துக்கும் ஒண்ணும் வித்தியாசமில்ல” என்றும் சொல்லப்படுகிறது. காதலைப் புரிந்து கொள்ளவும், என்றென்றும் வாடாத மலராய் அதை தரிசிக்கவும் முனையாமல் இப்படியான சிந்தனைகள் சமூகப்பரப்பில் கீறிக்கொண்டிருக்கின்றன. முன்னொரு காலத்தில் இந்த உலகத்தில் காதல் இருந்ததாகவும், இப்போது அது இல்லையெனவும் கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன. ஆண் பெண் உறவுகளில் காதல் என்றென்றைக்கும் நிலைத்திருக்க முடியாமல் எது தடையாய் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் துடிப்புகளும், அறிந்து கொள்ள முடியாத ஏமாற்றங்களுமே இவைகளின் அடிநாதமாய் இருக்கின்றன.

தொடரும்…

 

2 ஆதலினால் காதல் செய்வீர் - 2ம் அத்தியாயம்

2. உதிரும் சிறகுகள்

தத்துவ மேதை பிளேட்டோ மாணவனாயிருந்த போது அவரது ஆசிரியரிடம் கேட்டாராம். “காதல் என்றால் என்ன? அதை எப்படி அறிவது?”

ஆசிரியர் எதிரே வளமாய் இருந்த கோதுமை வயலைக்காட்டி “அதில் மிக அற்புதமான, நேர்த்தியான தண்டு ஒன்றை நீ கொண்டு வா. காதலை அறிந்து கொள்ளலாம். ஆனால் பின்னால் திரும்பிப் பார்க்கக் கூடாது. ஒன்றே ஒன்றுதான் கொண்டு வரவேண்டும்” என்றாராம். பிளேட்டோ கோதுமை வயல் முழுவதும் அலைந்து நீண்ட நேரம் கழித்து வெறுங்கையோடு வந்தாராம்.

ஆசிரியர் கேட்டாராம். “ஏன் ஒன்றும் பிடுங்கி வரவில்லை?’ அதற்கு பிளேட்டோ சொல்லியிருக்கிறார்.” அற்புதமான தண்டுகளை பார்த்தேன். அதைவிடவும் பிரமாதமானது முன்னால் இருக்கும் எனத் தோன்றியது. முன்னால் செல்ல செல்ல அவ்வளவு நல்ல தண்டுகளை காண முடியவில்லை. பின்னாலும் திரும்பி வர முடியாது. இப்படியே கழிந்து விட்டது”

“இதுதான் காதல்” என்றாராம் ஆசிரியர்.

சிறிதுநாள் கழித்து பிளேட்டோ ஆசிரியரிடம் “திருமணம் என்றால் என்ன” என்றாராம்.

ஆசிரியர் “அதோ அடர்ந்த கானகம் இருக்கிறது. அதில் ஒரே ஒரு மரத்தை வெட்ட வேண்டும். பின்னால் திரும்பிப் பார்க்கக் கூடாது. நீ வெட்டியதுதான் மிக உயரமான மரம் என்றால் திருமணத்தை புரிந்து கொள்வாய்” என்றாராம்.

பிளேட்டோ கொஞ்ச நேரத்தில் ஒரு சாதாரண மரத்தை வெட்டிக்கொண்டு வந்தாராம். “ஏன் இத்தனை சாதாரண மரத்தை வெட்டினாய்” என்று ஆசிரியர் கேட்டிருக்கிறார். “என்னுடைய முந்தைய அனுபவத்தால் இந்த முடிவுக்கு வந்தேன். முதலில் இது நல்ல மரமாகவே தோன்றியது. இதை கடந்து போய் இதைவிடவும் மோசமான மரமே எதிர்ப்பட்டால், இதையும் இழக்க வேண்டியிருக்குமே என்று வெட்டிவிட்டேன்” என்று பிளேட்டோ சொல்லியிருக்கிறார்.

“இதுதான் திருமணம் என்பது என் மகனே. காதல் என்பது மனிதனுக்கு நேர்கிற அற்புதமான அனுபவம். கையில் கிடைப்பதை விட கோதுமை வயலில் தவறி விடும்போதுதான் அதன் மகத்துவம் தெரிய வருகிறது. திருமணம் என்பது வெட்டிய மரம் போன்றது. சமரசம் செய்து கொள்கிறாய்” என்று ஆசிரியர் விளக்கினாராம். காதல் என்பது கைகளில் கிடைக்காத கற்பனைப் பறவையாகவே இருக்கிறது. திருமணம் என்பது நிஜ வாழ்வின் ஏமாற்றத்தை புரியவைக்கிறது. வானமெல்லாம் பறந்தவர்கள் தங்கள் சிறகுகளை உதிர்த்துக் கொண்டு கோழிகளாகி அங்கே குப்பையைக் கிளற ஆரம்பிக்கிறார்கள்.

காதலிக்கும்போது இருவரும் உள்ளங்களில் ஒன்றாய் ஏற்றி வைத்திருந்த அகல்விளக்கை அணைத்துவிட்டு, திருமணத்திற்குப் பிறகு ஆளுக்கொரு டார்ச்லைட்டை வைத்துக் கொள்கிறார்கள். டார்ச்லைட்டால் தேவைப்பட்ட நேரத்தில் தேவைப்பட்ட இடத்தில் மட்டும் வெளிச்சத்தை செலுத்திட முடிகிறது. அடுத்தவர் முகங்களை மட்டுமே பார்க்க முடிகிறது. முக்கியமாக தங்களை இருட்டில் வைத்துக்கொள்ள முடிகிறது. அப்படியே தங்கள் முகங்களில் அடித்துப் பார்த்தால் பேய் பிசாசாய் பயமுறுத்துகிறது.

காதலர்கள் நிஜவாழ்வின் கணவன் மனைவியாக மாறுகிறபோது முதலில் அந்த வசீகரமான புன்னகைகள களைந்து விடுகிறார்கள். திருமணம் அவரவர் சுயரூபங்களை அடுத்தவர்களுக்கு தோலுரித்து காட்டி விடுகிறது. தான் காதலித்த ஆண் இவனல்ல என்பது அவளுக்கும், தான் காதலித்த பெண் இவளல்ல என்பது அவனுக்கும் வெகு சீக்கிரத்தில் தெரிய வருகிறது. சிலருக்கு எதாவது ஒரு கணத்தில் முகத்தில் அறைகிற மாதிரி உறைக்கிறது. ஏமாந்து விட்டோம் என்பதைக் காட்டிலும் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதே வாழ்வு முழுவதும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டு இருக்கிறது. உடைந்து போகிறார்கள். விதியே என ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பிக்கிறார்கள். வாழ முடியாதவர்கள் பிரிந்துவிட தீர்மானிக்கிறார்கள். காதலித்த காலங்களும், ரகசியமாய் பரிமாறிய பார்வைகளும் மட்டுமே நிலைத்திருக்கும் ஒரு உலகத்திற்குள் தனிமைகளில் சென்று வருகிறார்கள். எந்த முதுமையிலும் அவர்கள் அங்கு மட்டுமே இளமையாக இருக்கிறார்கள்.

ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் புரிந்தவர்களுக்கும், காதலிக்காமல் திருமணம் புரிந்தவர்களுக்கும் வித்தியாசமில்லை. சின்னச் சின்னச் சண்டைகளும், சமயங்களில் பெரிய சண்டைகளும் நடக்கின்றன. பேசுவதற்கு சில வார்த்தைகள் மட்டுமே வைத்திருக்கிறார்கள். இருட்டில் மௌனமாக ஓருடல் ஈருயிராகி குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள். காலையில் மீண்டும் பழைய மனிதர்களாகிப் போகிறார்கள். தொலைத்துவிட்ட வாழ்வின் அர்த்தம் குழந்தைகளிடம் ஒட்டிக்கொண்டிருப்பதாக தெரிகிறது. ‘நிலவைப் போல, வானத்தைப் போல நம் காதலும் மாறாது’ என்று ஒலித்த வசனங்கள் வீடுகளிலிருந்து பெருக்கி வெளியே தள்ளப்படுகின்றன.

கண்களின் சம்மதம் பெற்று காதலை வளர்த்து, சமூகத்தின் சம்மதம் பெற்று காதலை நிறைவேற்றினாலும், பிறகு காதல் மேகங்கள் தானாகவே கலைந்து போய்விடுகின்றன. மோகத்தின் ஆயுள் முப்பது நாளாகவும், ஆசையின் ஆயுள் அறுபது நாளாகவும் இருக்கலாம். காதலின் ஆயுளும் அப்படியா இருக்க முடியும்? ஜாதி, மதம், வசதி, கல்வி என பல புறத்தடைகளையும் தாண்டி காதலர்கள் ஒன்று சேர்வதே இங்கு பெரிய விஷயமாயிருக்கிறது. அப்படி சேர்ந்த காதலர்கள் திருமணத்திற்குப் பிறகு ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முடியாமல், வெறுமையும், விரக்தியும் அடியாழத்தில் மண்டிக் கிடக்க வாழ்ந்து கொண்டிருக்கிற கொடுமைதான் குடும்பங்களுக்குள் காணப்படுகிறது.

இந்த வேதனையை எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் தனது ‘வாளின் தனிமை’ சிறுகதை தொகுப்பில் சோதனைகளாய் செய்து சொல்லியிருப்பார். காதலித்தவர்கள் பிரிந்து விடுவார்கள். வேறு வேறு துணைகளோடு திருமணம் செய்து கொள்வார்கள். சந்தோஷமாய் இருக்க மாட்டார்கள். காதலித்தவர்களே ஒருவரையொருவர் திருமணமும் செய்து கொள்வார்கள். அவர்களும் சந்தோசமாய் இருக்க மாட்டார்கள். காதலிக்காத இருவர் திருமணம் செய்து கொள்வார்கள். சந்தோஷமாய் இருக்க மாட்டார்கள். காதல் என்பது சந்தோஷம் இல்லையா. காதலிக்கும்போது கனவாயிருக்கிறது திருமணம். திருமணத்திற்கு பிறகு காதலே கனவாகி விடுகிறது. இதைத்தான் “ஆஹா…காதல் என்பது எதுவரை? கல்யாண காலம் வரும் வரை.” என கேள்வியும் பதிலுமாய் தமிழ்ச் சினிமாப் பாட்டு ஒலிக்கிறது. முன்பெல்லாம் திருமணம் என்பது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் பந்தமாக இருந்தது. வரதட்சனைக் கொடுமை, சித்ரவதை, ஆண்மையின்மை, மலட்டுத்தன்மை, இரண்டாம் தாரம் போன்ற பிரச்சினைகளுக்கு விவாகரத்து தீர்வாக கருதப்பட்டது. இன்று சிறிய அளவில் ஒத்துப்போக வில்லையென்றாலும் உடனடித் தீர்வாக விவாகரத்து முன்வைக்கப்படுகிறது.

காதலின் மைதானத்தில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மட்டுமே விளையாட முடியும். இருவருமே வெற்றி பெற முடியும். ஆனால் இங்கு இருவருமே தோற்றுப் போய் நிற்கிறார்கள். காதலில் வீழ்ந்து விடுவதாகவே (fall in love) மொழிகளின் வார்த்தைகள் இருக்கின்றன.

எது நமது காதலர்களை தோற்கடித்துக்கொண்டே இருக்கிறது? எழுத்திலும், கலைகளிலும் வாழ்வின் அற்புத அனுபவமாக அறியப்படுகிற காதலை சொந்த வாழ்க்கையில் மனிதர்கள் ஏன் தொலைத்து விட்டு நிற்கிறார்கள்? சிலிர்ப்பையும், கனவுகளையும் ஒரு காலத்தில் அள்ளி அள்ளித் தந்த இந்தக் காதல் தன்னுடைய பரப்பை வாழ்க்கை முழுவதும் விரித்து வைக்க முடியாமல் ஏன் ஒரு குறிப்பிட்ட பருவத்தின் உணர்வாய் மட்டும் சுருங்கி விடுகிறது? காதலிக்கும்போது ஒருவருக்கொருவர் பிடித்தமானவர்களாகவும், அழகானவர்களாகவும் இருந்த காதலர்கள் திருமணத்திற்குப் பிறகு ஏன் அந்நியமாகவும், சலித்தும் போகிறார்கள்?

இதற்கான விடைகளையறிய, காதலை நாம் மனித குலத்தின் மிக நீண்ட வரலாற்றிலிருந்து எடுத்து வந்து வாசிக்க வேண்டியிருக்கிறது. அப்போது தான் காலத்தின் தொப்புள் கொடியிலிருந்து உயிர்த்து வந்திருக்கிற ஆண் பெண் உறவுகளையும் அதிலிருந்து கிளைத்து வந்திருக்கும் இந்தக் காதலையும் நாம் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

காதல் வயப்படுகிற இந்த நவீன காலத்தின் ஆண்களும், பெண்களும் தாங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தனர் என்று பின்னோக்கி பார்க்கும் போது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கலாம்.

தொடரும்…

 

3 ஆதலினால் காதல் செய்வீர் - 3ம் அத்தியாயம்

3. ஆதிக் காதலும், காவியக் காதலும்

அவள் ஒடுகிறாள். அவன் துரத்துகிறான். ஒரு மரத்தின் அருகில் போய் மூச்சு வாங்க நிற்கிறார்கள். விரல்கள் மெல்ல மெல்ல நெருங்குகின்றன. பார்வைகள்

மயங்குகின்றன. விரல் நுனிகள் தொடுகின்றன. தீண்டுகின்றன. கோர்க்கின்றன. கடல் அலைகள் நுரை பொங்க கரையில் மோதுகின்றன. ஆயிரமாயிரம் புறாக்கள் எழும்பி சடசடவென்று பறக்கின்றன. தந்தனம் தந்தனம் என வெள்ளையுடை தேவதைகள் சேர்ந்திசைக்கிறார்கள்.

இவை எதுவும் அப்போது நிகழவில்லை. விலங்குகளின் உணர்வுகள் மட்டுமே மனிதர்களிடம் இருந்தன. எதையும் மறைத்துக் கொள்ளாத காட்டுமிராண்டிகளாயிருந்தனர். விதைகளையும், வேர்களையும், கனிகளையும் உண்டு மரங்களில் வசித்து வந்தனர். குடும்ப உறவுகளற்ற வெளியில் வானத்தின் கீழ் எல்லா ஆண்களும், எல்லா பெண்களும் ஒருவரோடு ஒருவர் தங்கள் உடல்களை பகிர்ந்து கொண்டனர். இனப்பெருக்கத்தின் உந்துவிசையான உடல் இச்சை தவிர எந்த கண்களிலும் ரகசியங்கள் இருக்கவில்லை. பெண்களே குழுக்களில் தீர்மானிப்பவர்களாகவும், நிர்மாணிப்பவர்களாகவும் இருந்தனர். தங்கள் தேவைக்கதிகமாக அல்லது பராமரிப்புகளுக்கு அதிகமாக மனிதர்கள் எதையும் உற்பத்தி செய்யவில்லை. குடும்பங்கள் தாய் வழியிலும், சந்ததிகள் தாய் மூலமுமே நிச்சயிக்கப்பட்டனர். பெண் சக்தி மிக்கவளாய் உயர்ந்திருந்தாள். வாழ்வின் அர்த்தங்களும், மாயங்களும், உயிர்ப்பும் அவளே கொண்டிருந்ததாய் கருதப்பட்டாள். இயற்கையின் ரகசியங்கள் புதைந்தவளாய் தோன்றினாள். படைப்பாற்றல் கொண்ட அவளது ரத்தம் சிந்தும் உடலின் கூறுகளை அறிய முடியாமல் ஆண்கள் பெண்களை போற்றி வந்தனர். அடங்காத வேட்கை கொண்டவளாகவும், புனிதமானவளாகவும், கடவுளாகவும் பெண் சித்தரிக்கப்பட்டாள். பெண் தெய்வங்களுக்கு பல காதலர்கள் இருந்தனர். அவள் மட்டும் நிலைத்திருக்க காதலர்கள் மரணமடைந்து போனார்கள்.

வேட்டையாடிக் கொண்டிருந்தவர்கள் மாடுகள், பன்றிகள், ஆடுகள், கழுதைகள், ஒட்டகங்களை மேய்த்தார்கள். கால்நடைகள் மெல்ல மெல்ல ஆண்களின் சொத்துக்களாய் மாறின. புல்வெளிகளைத் தேடி நதிகளின் கரைகளில் வந்து நின்றார்கள். விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள். பல்லாயிரம் ஆண்டுகள் பிடித்த இந்த வளர்ச்சிப் போக்கில்தான் குடும்பங்களும் உறவுகளும் தோன்ற ஆரம்பித்தன. ஆண்கள் குடும்பத்தின் தலைவர்களானார்கள். பெண்கள் வீடுகளுக்குள் நிலைக்கப் பெற்றார்கள். ஒரு பெண் கருவுறுவதற்கு ஒரு ஆண் போதும் என்பதை ஆண் அறிந்து விட்டிருந்தான். தனது சொத்துக்களுக்கு வாரிசுகளை நியமிக்க ஆண் தனக்குப் பிறந்தவனை அடையாளம் காண வேண்டியிருந்தது. தந்தை வழி சமூகத்தின் இந்த தோற்றுவாயில்தான் ஒரு வலிமையான உறவு குழந்தைகளுக்கும், தந்தைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது. ஒருத்திக்கு ஒருவன் என்னும் கற்புநெறியாக, பெண்களின் பிறவி ஒழுக்கமாக நிலைநிறுத்தப்பட்டது. நாகரீகத்தின் அடுத்த வளர்ச்சியாக இதனை உயர்த்திடாமல், மதங்களும், கடவுள்களும் முழுக்க முழுக்க ஆண்களின் பக்கம் நின்று பெண்களின் வீழ்ச்சியாக இதனை நிச்சயம் செய்யவே கட்டளைகளையும், விதிகளையும் பிறப்பித்தன. பல்லாயிரம் ஆண்டுகளாய் நீடித்திருந்த தனது வரலாற்றைத் தொலைத்து, பெண் தலைகுப்புற வீழ்ந்த இடம் இதுதான்.

“அவன் ஒரு அம்பை விடுவித்தான்.

அது அவள் வயிற்றைக் கிழித்தது.

அவளுடைய உள் அவயங்களை ஊடுருவினான்.

அவளுடைய உடலை கீழே வீழ்த்தினான்.

வெற்றிக் களிப்பில் அதன் மீது காலை வைத்தான்”.

கி.மு இரண்டாயிரத்தில் பாபிலோனியாவின் படைப்புக் காவியத்தில் ஆணின் அதிகார மாற்றம் இப்படி குறித்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆணே இனப்பெருக்கத்தின் பிரதான பாத்திரத்தை ஆற்றுபவனாகவும், பெண் முனைப்பற்ற முறையில் அவனுடைய விதையை அடைகாக்கும் கருவியாக மட்டுமே ஆனாள். வீடுகளுக்குள்ளூம், பர்தாக்களுக்குள்ளும், அந்தப்புரங்களுக்குள்ளும் பெண்கள் மறைந்து போனார்கள். அவர்களின் அற்புதங்களும், அதிசயங்களும் இப்போது அழுக்காகவும், அசிங்கமாகவும்

பேசப்பட்டது. கணவனையும், குழந்தையையும் பராமரிப்பது அவர்களின் வாழ்வின் அர்த்தமாகி விட்டிருந்தது. பெண்களின் சொர்க்கம் ஆண்களின் காலடியில் கிடந்தது. தனிமை அவளின் பொழுதாகவும், மௌனம் அவளின் மொழியாகவும் ஆனது. கனவுகள், கவலைகள் எல்லாமே பிரத்யேகமாகிப் போக முற்றிலும் ஆண்களிலிருந்து வேறுபட்ட உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.

வரலாற்றின் இந்தப் பிழையை அப்படியே ஏற்றுக் கொள்வதில் தனிப்பட்ட ஆண்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தியது ஒன்றே ஒன்று தான். காதல் என்னும் அந்த நெருப்பு பற்றிக் கொண்ட போது ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் புனிதமானவர்களாகவும், மேன்மையானவர்களாகவும் தோன்றினார்கள். சமூகத்தின் தளைகளுக்கு கீழ்ப்படிந்து போகாமல் இருவரும் சேர்ந்து வேறு உலகத்தில் உலவ ஆரம்பித்தார்கள். ஒப்புக்கொள்ள முடியாத அந்த பழைய காலம் காதலை அழகானதாகவும், ஆபத்தானதாகவும் ஆண்களிடம் திரும்ப திரும்ப எச்சரித்துக் கொண்டிருந்தது. பெர்ஷியன், ஐரோப்பியச் சிந்தனைகளில் காதல் வயப்படுவது என்பது ஒரு நோயாகவே கருதப்பட்டு இருக்கிறது. “சைத்தானின் கண்கள்’ என்றெல்லாம் சாபமிட்டிருக்கிறது.

அழகான பெண்களை பார்த்த மாத்திரத்தில் பிடித்துப் போகும் ஆண்கள் காதல்வயப்பட்டு தங்களை இழந்து நின்ற காட்சிகளை பார்க்க முடிகிறது. “ரோம் டைபர் நதியில் உருகிப் போகட்டும். விரிந்து பரந்த இந்த சாம்ராஜ்ஜியம் வீழ்ந்து நொறுங்கட்டும். எனக்கான இடம் இதோ இருக்கிறது” என்று கிளியோபாட்ராவைப் பார்த்து அரற்றுகிறான் அந்தோணி. “என் சாம்ராஜ்ஜியத்தை எடுத்துக் கொள். நீ எனக்கு வேண்டும்” என்று காட்டிற்குள் சகுந்தலையை முதன் முதலில் பார்த்த உடனேயே துஷ்யந்தன் சொல்கிறான்.

காதல் ஆண்களையும், பெண்களையும் ஆக்கிரமித்துக் கொண்டே இருந்தது. தனக்கான ஒருவன் என அவளும், தனக்கான ஒருத்தி என அவனும் சகலத்தையும் எதிர்கொள்ள ஆரம்பித்தார்கள். பால் கசக்க ஆரம்பித்தது. படுக்கை நோக ஆரம்பித்தது. மேகங்களையும், புறாக்களையும் தூது விட்டார்கள். மரணத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்தார்கள். பருகியிருந்த விஷத்தின் துளிகள் ஒட்டி இருந்த ரோமியோவின் உதடுகளிலிருந்து அதைக் குடிக்க முற்படுகிறாள் ஜூலியட். உறங்கிக் கொண்டிருக்கும் டெஸ்டிமோனாவின் கடைசி படுக்கையருகே கையில் ஒற்றை ரோஜாவோடு வந்து நிற்கிறான் ஒத்தல்லோ. லைலாவும், மஜ்னுவும் பாலவன மணல் வெளிகளில் காலடிகளை நிரப்பிச் செல்கிறார்கள். அனார்கலியின் கல்லறையில் சலீம் தலையால் மோதி கதறுகிறான். அம்பிகாபதி இறந்ததும் அமராவதியும் தன்னை மாய்த்துக் கொள்கிறாள். “காதல் மரணத்தைப் போல வலிமையானது” என்று பாடல்களின் பாடல் என்னும் கிரேக்கப் பாடலில் வரும் வரிகள் காதலின் அமரத்துவத்தை சொல்லிக் கொண்டு இருந்தன.

அருவருப்பாக சித்திரம் தீட்டப்பட்ட பெண்கள் இந்தக் காதலால் அழகானவர்களாகவும், மென்மையானவர்களாகவும் காவியங்களில் சித்தரிக்கப்பட ஆரம்பித்தார்கள். ஆண்கள் அவர்களின் அருகில் போய் தோளில் கை போட்டு நின்ற காட்சிகள் தெரிகின்றன. காதலின் மாயமாய் எல்லாம் புரிகிறது. ஆணும், பெண்ணும் ஒருவரை யொருவர் நேசிப்பது இருக்கும் வரை பெண்களின் மீதான பாலியல் தன்மை மீதான தாக்குதல்கள் ஒரு போதும் முற்றாக வெற்றியடைந்து விட முடியாது” என்று வரலாற்றாசிரியர் ரோஸலிண்ட் மைல்ஸ் கூறுவது உண்மையாகிறது.

இன்னும் ஒரு உண்மை மீதமிருக்கிறது. அது வேதனையானது. இந்த காவியக் காதல்களில் வரும் ஆண்களும், பெண்களும் சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்த மாந்தர்களாய் இல்லை. சீதை ராமனிடமிருந்து பிரிந்து காட்டில் வசிக்க வேண்டி இருந்தது. துஷ்யந்தனின் மோதிரமும், குழந்தையும் மட்டுமே வாழ்ந்த காலத்தின் மிச்சமாகிப் போகிறது சகுந்தலைக்கு. பெண்களின் சோகங்கள் தீர்ந்திடவில்லை. காதல் அவர்களின் இருண்ட உலகத்தின் சன்னல்களைத் திறந்து விட்டிருந்தாலும் கதவுகள் மூடியபடியே இருந்தன. அவர்களின் உலகம் வேறாகவே இருந்தது. வரலாற்றின் இருட்டில் அது புதைந்து போயிருந்தது.

“நான் உயரே பறக்க விரும்புகிறேன்.

ஆனால் என்னுடைய துணை எப்போதும் கூட்டினிலே ஓய்வெடுத்துக் கொள்ள விரும்புகிறேன்” என்றது கழுகு.

“என்னால் பறக்க முடியாது. அவ்வாறு முயற்சி செய்யவும் எனக்கு விருப்பமில்லை. ஆனால் என்னுடைய துணை வானில் உயரே உயரே பறப்பதைக் காண நான் பரவசமடைகிறேன்.” என்றது பெட்டைக்கோழி.

அவர்கள் மணம் புரிந்து கொண்டனர்.

“ஆ.. இதுதான் காதல், என் அன்பே” கூவினர்.

கோழி அமர்ந்தது. கழுகு உயரேப் பறந்தது ஒற்றையாக.”

மண வாழ்க்கையின் பேரின்பம் என்று சார்லெட் பெர்கின்ஸ் எழுதிய இந்தக் கவிதையில் அன்றையக் காதல் உலகத்தின் விதிகள் மிகத் தெளிவாக சொல்லப்படுகின்றன. பெண் மௌனமாக எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டிருக்கும் வரை இந்தக் காதலின் புனிதங்கள் போற்றப்பட்டிருந்தன. அவள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும்வரை ஆண்களின் உலகம் காதலைக் கொண்டாடிக் கொண்டு இருந்தது.

ஆனால் பெண் இப்போது பேச ஆரம்பித்து விட்டாள். ஆதிக்காதலும், காவியக்காதலும் அவள் மீது படிந்து படிந்து அவைகளின் சாயலாக மாறுவதில் சம்மதமில்லை அவளுக்கு. எல்லாவற்றையும் உதறிவிட்டு எழுந்து நிற்கிறாள். இந்தப் புதுவெள்ளத்தில்தான் கலங்கி நிற்கிறது இன்றைய காதல்.

தொடரும்...

 

4 ஆதலினால் காதல் செய்வீர் - 4ம் அத்தியாயம்

4. பெண் ஒரு கிரகம், ஆண் ஒரு கிரகம்.

“நீங்கள் என்னை வெளியே கூட்டிச் செல்வதே இல்லை” “என்ன இப்படிச் சொல்கிறாய். போன வாரம் சித்தப்பாப்பொண்ணு கல்யாணத்திற்குச் சென்றோமே”

அவளுக்கு தான் சொன்னதை அவன் புரிந்து கொள்ளவில்லையே என்று ஏக்கம் இன்னும் தொடருகிறது. பெண் தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறாள். ஆண் அதில் உள்ள வார்த்தைகளின் அகராதி அர்த்தம் பற்றியே யோசிக்கிறான். தன்னை பிரத்யேகமாக கவனித்து வெளிகளில் அழைத்துச் செல்ல அவன் முனைப்பில்லாமல் இருக்கிறான் என்பதுதான் அவள் சொல்ல நினைத்தது. இரண்டு பேரும் ஒரே மொழியில் பேசினாலும் அர்த்தம் வேறு வேறாக தொனிக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே அடைபட்டு இருந்தவள் அவள் என்பதையும், வெளியே செல்வதற்கு தாகம் இருக்கும் என்பதும் ஆண்களுக்கு புரிவதில்லை. அவன் சதா காலமும் வெளியில் அலைந்து கொண்டிருந்து விட்டு வீட்டுக்கு வருகிறான். மீண்டும் அவளோடு வெளியே செல்ல சலிப்பு வருகிறது. வீடுகளின் அகமும், புறமுமான இந்த இரு உலகங்களுக்குள் அவர்கள் தனித்தனியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். டீக்கடை பெஞ்சுகளில் ஆண்கள் பேசுகிற விஷயங்களுக்கும், வீட்டுத்திண்ணைகளில் பெண்கள் பேசுகிற விஷயங்களுக்கும் சம்பந்தமே இருப்பதில்லை.

பெண் யாருடனாவது அல்லது தன்னோடாவது பேசிக்கொண்டே இருக்கிறாள். யுகம் யுகமாய் தனிமையில் வெந்து வெந்து போயிருக்கும் அவள் தன்னை வெளிப்படுத்துவதற்கும், உலகத்தை கிரகித்துக் கொள்ளவும் பேசிக் கொண்டே இருக்கிறாள். சோர்வான சமயங்களில் தன்னையே உற்சாகப்படுத்திக் கொள்ள, கூண்டுக்குள் இருக்கும் மிருகங்களும், பறவைகளும் சத்தம் போடுவதைப் போல அவள் பேசிக்கொண்டிருக்கிறாள். ஆண்களுக்கு இந்தப் பேச்சுக்கள் அர்த்தமற்ற தாகவும், எரிச்சலூட்டுவதாகவும் இருக்கின்றன. அவன் மௌனமாக இருக்கிறான். வெளியுலகப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை யோசிக்கவும், தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவும் அவனுக்கு வீட்டிற்குள் மௌனமே தேவைப்படுகிறது. ஆண் தன்னை சக்தி வாய்ந்தவனாகவும், இலட்சியங்கள் கொண்டவனாகவும் எப்போதும் கருதிக் கொள்கிறான். வீட்டைத் தாண்டியே அவன் அறிவு வேலை செய்கிறது. அவன் பெண்களிடம் தன்னுடைய பிரச்சினைகளை எப்போதாவதுதான் கூறுகிறான். பிரச்சினைகளை தன்னால் சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பெண்களுக்கும் அவைகளுக்கும் சம்பந்தமில்லை எனவும், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என சர்வ நிச்சயம் கொள்கிறான். பெண் புத்திமதி சொன்னால் தனக்கு இழுக்கு என்பது ஆண்களில் நரம்புகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

பெண்கள் அன்பானவர்களாக, பொறுமையானவர்களாக சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். அடுத்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுதான் கடமையாக இருக்கிறது. அதை அவள் செய்து கொண்டே இருக்கிறாள். உணவு என்பது ஆணுக்கு உடல் தேவையாக மட்டுமே இருக்க, பெண்ணுக்கோ அது உறவை பலப்படுத்துவதாகவும், பராமரிப்பதாகவும் இருக்கிறது. தோசைகளை சுட்டுக் கொண்டே இருக்கிறாள். சோறு பொங்கிக் கொண்டே இருக்கிறாள். இத்தனை செய்தாலும் ஆண் தன்னை கவனிப்பதில்லை என்பது அவளது வருத்தமாகவும், வேதனையாகவும் ஒலிக்கிறது. எப்போதும் கொடுத்துக் கொண்டே இருக்கும் தனக்கு எதுவும் தரப்படுவதில்லை என்னும் உணர்வு அவளுக்குள் ஓளிந்திருக்கிறது.

ஆணோ, பெண் தன்னை மாற்ற முயல்கிறாள் என்று குற்றஞ்சாட்டுகிறான். அவனுக்குள் கடந்த காலங்களின் பயம் இன்னும் தொற்றிக்கொண்டு இருக்கிறது. அவள் விஸ்வரூபம் எடுத்து நின்ற போது ஆண் அடையாளமற்று இருந்தது அவனது மரபணுவில் அதிர்ச்சியாய் உறைந்திருக்கிறது. அவள் எதைச் செய்தாலும், சொன்னாலும் அதில் தான் வீழ்த்தப்படும் தந்திரம் இருப்பதாகவே அவனுக்கு அசீரீரி ஒலிக்கிறது.

இதனாலேயே ஆண் தன்னிடம் பெண் நெருங்கி வரும்போது விலகுகிறான். ஆமை ஓட்டுக்குள் மறைவதைப்போல உள் இழுத்துக் கொள்கிறான். பெண் அவளாக எதையும், பாலியல் தேவையாக இருந்தாலும், முன் வைத்தால் ஆண் முகம் சுளிக்கிறான். குடும்பத்தில் பெண்ணுக்கு அந்த சுதந்திரம் இல்லை. ஆண் முன்மொழிபவனாகவும், பெண் வழிமொழிபவளாகவுமே இருக்க முடிகிறது அங்கு.

எல்லா வீடுகளும் ஆண்களின் வீடுகளாகவே இருக்கின்றன. இந்த சமூகத்தில் திருமணம் ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணின் மீது முழு ஆதிக்கம் செலுத்துவதற்கு உரிமையைத் தந்து விடுகிறது. ஆதிக்கம் செலுத்தும் மனதில் அன்புக்கு இடமிருப்பதிலை. தான் என்ன செய்தாலும் அதனை தாங்கிக்கொள்கிறவளாய் அவள் இருக்க வேண்டும் என்று எண்ணம் அவனுக்கு இருக்கிறது. அவளுக்கென்று சுயமான சிந்தனைகளும், செயல்களும் இல்லாமலே இருக்கின்றன. தவறி எதாவது இருந்தாலும் அலட்சியப்படுத்தப்படுகின்றன. காதலின் உணர்வுகளால் உந்தப்பெற்று அவள் எதாவது செய்தால் ரசிக்கப்படுவதில்லை. காதலித்த காலங்களை அவள் நினைவுபடுத்தினாலும் அவனுக்கு சுகமாய் இருப்பதில்லை. அவன் முற்றிலும் வேறொருவனாய் இருக்கிறான். “ஆண் சூரியனிலிருந்து வந்தவன். பெண் பூமியிலிருந்து வந்தவள். இருவரும் காதல் வயப்பட்டு உலவும் இடம் சந்திரனாக இருக்கிறது” என்று அரிஸ்டாட்டிலின் வார்த்தைகளுக்கு இப்போது அர்த்தம் இப்படியாகத்தான் தெரிகிறது. மனிதகுல வரலாறு உருவாக்கி வைத்திருக்கும் இந்த முரண்பாடுகளை அறியாமல், ஆண் பெண் உறவுகளின் சிக்கல்களை புரியாமல், காதலை பேசுவது என்பது அர்த்தமற்றதாகவே இருக்கும். நவீன காலத்தில், காதலின் பிரச்சினைகள் இங்குதான் வேர்கொண்டு இருக்கின்றன.

காதலிக்கும்போது தாங்கள் கற்பனை செய்து வைத்திருந்த உருவத்திற்குச் சம்பந்தமில்லாமல் இப்படி முரண்பாடுகளாய் இருப்பதை அறியும்போதுதான் அதிர்ச்சியடைகிறார்கள். பெண்களுக்கு, வில்லை ஒடித்து கை பிடித்த இராமராய் காட்சியளித்த ஆண்களே, திருமணத்திற்குப் பிறகு தூக்கிச் சென்ற இராவணர்களாய் தெரிய ஆரம்பிக்கிறார்கள். ஆண்களுக்கோ சீதைகள் சூர்ப்பனகைகளாய்த் தெரிய மூக்கை அறுத்துக் கொண்டே இருக்கிறார்கள். முன்பெல்லாம் இவை சின்னச் சின்ன எரிச்சல்களாகவும், தற்காலிக இடைவெளியாகவும் வெளிப்பட்டன. இன்று விவாகரத்துக்கு போகுமளவுக்கு வளர்ந்து விடுகிறது. அண்ணல் நோக்கியது, அவள் நோக்கியது எல்லாம் அக்கினிப் பிரவேசத்தில் பொசுங்கிப் போன கதைகளாகின்றன. பெண் தன்னை வெளிப்படுத்த துணிந்து விடுகிறாள். அது கலகமொழியாக வீடுகளிலிருந்து வருகின்றன. கல்லறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் காவியக் காதல்களின் விழி பிதுங்குகின்றன. பிரமைகள் உடைபடுகின்றன.

கடந்த நூற்றாண்டு பெண்கள் தங்கள் அவலத்தை உணர ஆரம்பித்து அதை உடைத்தெறிய ஆரம்பித்த காலமாயிருக்கிறது. பெண்களுக்கு விதிக்கப்பட்ட ஒழுக்கம் ஏன் ஆணுக்கு மட்டும் இல்லை என்று கேள்விகள் எழுப்பப்பட்டு முன்னுக்கு வருகிறது. நவீன தொழில் நுட்பமும், தொழில் மயமாக்கலும் பெண்களை வெளியே வரச் செய்திருக்கின்றன. குடும்பத்தின் உற்பத்திகளில் மட்டுமே ஈடுபட்டிருந்த பெண் இப்போது தானும் சமூக உற்பத்தியில் பங்கு பெறுகிறவளாக அங்கங்கு சில தடைகளை தாண்டியிருக்கிறாள். ஆண்களின் உலகம் இதனை எதிர்கொள்ள முடியாமல் எங்கே தனது காலம் அபகரிக்கப்படுமோ என அச்சம் கொள்கிறது. பெண் களின் உலகமோ எங்கே தனது காலம் இப்படியே கழிந்து விடுமோ என்று மீறலுக்கு தயாராகிறது. அதுதான் காதலிக்கும் போது இனிக்கிற காதல் சேர்ந்து வாழும் திருமணத்திற்குப் பிறகு கசக்க ஆரம்பிக்கிறது.

(அடுத்த பதிவில் முடியும்)

 

5 ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!

சமத்துவமற்ற உலகில் எல்லோரும் எல்லோரிடமும் உண்மையான அன்பு செலுத்திட முடியாது. ஆணும் பெண்ணும் இங்கே சமமானவர்களாய் இல்லை. எனவே காதலும் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கும். அன்றைக்கு புழுவினும் அடிமையாயிருந்த பெண் தனக்கென ஒரு அடையாளம் பெற்ற போது அங்கே காதல் மலர ஆரம்பித்தது. பிறகு ஆண்களால் துய்க்கப்படுவதற்கான போகமாய் மட்டும் இருந்தவள் மெல்ல சுவாசிக்க ஆரம்பித்த போது காதல் தன் மணத்தை பரப்பியது. இன்றைக்கு சந்தை உலகத்தில் விற்பனைப் பொருளாய் கருதப்படும் பெண் அதிலிருந்து மீள முயற்சிக்கும் போது காதல் அதற்கான விடுதலை கீதத்தை இசைக்கிறது.

இதிலிருந்துதான் ஆணுக்கும் பெண்ணுக்குமான முரண்பாடுகள் கூர்மையடைகின்றன. இந்த முரண்பாடுகளை சரி செய்யவோ, இணக்கங்களை உருவாக்கவோ விரும்பாத சமூகம் காதலை உலகத்திலிருந்து தள்ளி வைக்கவும், கொச்சைப்படுத்தவும் முயலுகிறது. இதனை அறிவுபூர்வமாக ஆணும், பெண்ணும் புரிந்து கொண்டு, உணர்வு பூர்வமாக உறவுகளை செழுமைப்படுத்திட முயற்சிக்க வேண்டும்.

காமம், அன்பு, நம்பிக்கை, சுதந்திரம் என எல்லாம் கலந்த ஆண் பெண் உறவே காதலாகிறது. அதை விட்டு விட்டு காதலை வெறும் காமம் என்றோ அல்லது காமத்தை முழுமையாக கடந்த நூறு சதவீதம் புனிதமாகவோ பார்த்திட முடியாது. உடலைத் துறந்து நினைவுகளிலேயே வாழ்வது என்பது இயற்கைக்கு புறம்பான கற்பனையே. பறவைகளுக்கு கால்கள் தேவையில்லை, சிறகுகள் மட்டும் போதும் என்பது போலத்தான் இது. உடல்களில்லாமல் நினைவுகள் இல்லை. உள்ளங்களில் மட்டுமில்லை, உள்ளங்கைளின் வெது வெதுப்பிலும் காதல் இருக்கிறது. இளமைப்பருவத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் தோன்றும் மயக்கம் முதலில் உடல் சார்ந்ததாகவே இருக்கிறது. உடல்களை அறிகிற வேகமே காதலாய் காட்சியளிக்கிறது. அதுவே முழுக்க முழுக்க உடல் சார்ந்ததாய் மாறும் போதுதான், கிறக்கம் களைந்தவுடன் காதலும் காட்சிப்பிழையாகி காணாமல் போய் விடுகிறது. “பதனீரை குடித்துவிட்டு பட்டையை தூக்கி எறிவது போல என்னையும் தூக்கி எறிந்து விடுவாய்” என்று ஒரு ஆணிடம் சங்ககாலப் பெண் சொன்ன அவநம்பிக்கை இன்னும் பெண்களிடம் இருக்கிறது.

இதனை சமூகத்தில் தக்க வைத்துக் கொண்டிருப்பது ஊடகங்களால் திணிக்கப்பட்ட உடல் குறித்த மயக்கங்களே. திரைக் கதாநாயகிகளும், கதாநாயகர்களும், விளம்பர மாடல்களும் ஆண், பெண் உருவங்களை முன்நிறுத்துகிறார்கள். அவர்களே காதல் உலகத்தின் தேவர்களாகவும், தேவதைகளாகவும் வந்து அசைந்தாடு கிறார்கள். தோற்றங்களே அழகென மயக்கம் வருகிறது. வெற்று பிம்பங்களே இளமையின் அற்புதங்களை ஆட்டுவிக்கின்றன.

பெண் என்பவள் வெறும் உடல் மட்டும் தான் என்ற சிந்தனை சமூகத்தில் இருந்து அகற்றப்படும் போதுதான் சூரியன் பெண்களுக்காகவும், காதலுக்காகவும் உதிக்கும். உடல் குறித்த பயத்தையும், பெருமிதத்தையும் பெண்ணிடமிருந்தும், பிரமைகளை ஆண்களிடமிருந்தும் பிரித்தெடுக்கும் போது எல்லோரும் அழகானவர்களாகவும், நம்பிக்கை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். காதலின் கதவுகள் அங்கு திறந்தே இருக்கும். அப்போது காதல் ஒரு சிற்றின்பமாக சிறுத்தும் போகாது. இளமைப் பருவத்தில் மட்டும் வந்து விட்டுப் போகிற உணர்வாகவும் இருக்காது.

ஆக்கிரமிக்கும் மனதில் அதிகாரமும், இழந்து கொண்டிருக்கும் மனதில் அடிமைத்தனமுமே வசிக்கின்றன. தனக்கு மட்டுமே அவன் என்றும் அல்லது அவள் என்றும் ஒருவரையொருவர் சிறைபிடிப்பது காதலாகாது. ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பைக்காட்டிலும், நம்பிக்கை முக்கியமானது. நம்பிக்கையற்ற அன்பு விபரீதமானது. இதை ‘பொஸஸிவ்’ என்று ஆங்கிலத்தில் உச்சரித்துக் கொண்டு பெருமிதம் கொள்ளும் பைத்தியங்களாய் பலர் இருக்கிறார்கள். தங்கள் துணையின் காலடிகளை சதாநேரமும் மோப்பம் பிடித்துக்கொண்டே இருப்பார்கள்.

ஒருவர் பற்றிய ஒருவரின் நினைவு எப்போதும் பரவசத்தையும், சந்தோஷத்தையும் தருவதாக இருக்க வேண்டும். காதலர்களுக்கு இடையே மனஸ்தாபங்களே வராது, வரக்கூடாது என்பதெல்லாம் அதீத கற்பனையே. அந்த நிகழ்வுகளிலிருந்து எப்படி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இணக்கம் கொள்கின்றனர் என்பதுதான் முக்கியமானது. ஒருவருக்கொருவர் எதிரிகளாக பார்க்காமல், தன் அன்பின் துணை என்னும் சிந்தனை தெளிந்திருந்தால் முரண்பாடுகளை எதிர்கொள்ளும் விதமே அலாதியானதாகவும், அற்புதமாகவும் மாறும். காதல் வாழ்க்கை ஆணுக்கும், பெண்ணுக்கும் பரிபூரண சுதந்திரத்தை கொடுப்பதாக இருக்க வேண்டும். இலக்கியத்திலும், வெளியிலும் பார்ப்பதை விட்டு காதலை தங்களுடைய வாழ்வாக அறிதல் வேண்டும். ஒரு ஆணும், ஒரு பெண்ணும் அவரவர்களுக்கான சுதந்திரத்தை எடுத்துக்கொள்வதிலும், பகிர்ந்து கொள்வதிலுமே காதலின் அர்த்தம் இருக்கிறது. கலீல் கிப்ரானின் இந்த கவிதை அதைச் சொல்கிறது. ‘ஈருடல் ஓருயிர்’, ‘காற்று கூட நம்மிடையே நுழையாது’ என்று காதல் பற்றி சொல்லப் பட்டு வந்த எல்லாவற்றையும் உடைத்து போட்டுவிட்டு உண்மையாய் ஒலிக்கிறது.

ஒருவரையொருவர் காதலியுங்கள். ஆனால் அது அடிமைத்தனமாகிவிட வேண்டாம்.

உங்கள் ஆன்மாவின் கடலோரங்களுக்கிடையில் அசைந்து கொண்டிருக்கும் கடலாயிருக்கட்டும் அது.

அடுத்தவர் கோப்பைகளை நிரப்புங்கள். அடுத்தவர் கோப்பையிலிருந்து குடிக்க வேண்டாம்.

சேர்ந்து ஆடிப்பாடி மகிழுங்கள். ஆனால் இருவரும் தனித்தே இருங்கள்.

உங்கள் இதயத்தை கொடுங்கள். ஆனால் அடுத்தவர் இதயத்தை வைத்திருக்க வேண்டாம்.

சேர்ந்தே நில்லுங்கள். ஆனால் மிக நெருக்கமாக வேண்டாம்.ஓக் மரமும், சைப்ரஸ் மரமும் ஒன்றின் நிழலில் மற்றொன்று வளராது.

கடைசி வரிகள் மிக முக்கியமானதாய் இருக்கின்றன. காதல், காதலர்களை மேலும் மேலும் வளர்த்தெடுக்க வேண்டும். இந்த வளர்ச்சி சுயநலமற்றதாகவும், சமூகம் சார்ந்ததாகவும் பரிணமிக்கும் போது காதல் மகோன்னதம் பெறும். ஆண், பெண் இருவருமே உலகம் சார்ந்த மனிதர்களாய், சமமாய் மாறும் போது இந்த அற்புதம் நிகழும். ஒருவரையொருவர் காதலித்த, சேர்ந்து உலவித் திரிந்த, பேசி மகிழ்ந்த, சண்டை போட்டு தவித்த, பிரிந்து சேர்ந்த காலங்களோடு இந்த பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த பூமியில் எல்லோரும் பார்க்கும் படியாக காதலர்கள் தங்கள் மரணங்களையும் வெறும் பெயர்களையும் எழுத வேண்டாம். தங்கள் வாழ்க்கையை எழுதட்டும்.

காதலின் சின்னங்களாக கல்லறைகள் வேண்டாம். வாழும் வீடுகளே இருக்கட்டும்.

ஆதலினால் காதல் செய்வீர்

(முற்றும்)

 

Free Tamil Ebooks -  FreeTamilEbooks.com