பதிற்றுப்பத்து உரை
ந.சி. கந்தையா 


1.  பதிற்றுப்பத்து உரை
2.  தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3.  அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5.  கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6.  பதிப்புரை
7.  பதிற்றுப்பத்து உரை

 


பதிற்றுப்பத்து உரை

 

ந.சி. கந்தையா

 

 

நூற்குறிப்பு
  நூற்பெயர் : பதிற்றுப்பத்து உரை
  ஆசிரியர் : ந.சி. கந்தையா
  பதிப்பாளர் : இ. இனியன்
  முதல் பதிப்பு : 2003
  தாள் : 16.0 கி. மேப்லித்தோ
  அளவு : 1/8 தெம்மி
  எழுத்து : 11 புள்ளி
  பக்கம் : 20 + 164 = 184
  படிகள் : 2000
  விலை : உரு. 80
  நூலாக்கம் : பாவாணர் கணினி
  2, சிங்காரவேலர் தெரு,
  தியாகராயர் நகர், சென்னை - 17.
  அட்டை வடிவமைப்பு : பிரேம்
  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
  20 அஜீஸ் முல்க் 5வது தெரு
  ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
  கட்டமைப்பு : இயல்பு
  வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
  328/10 திவான்சாகிப் தோட்டம்,
  டி.டி.கே. சாலை,

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)


தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.

‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’

என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.

அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.

இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.

பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.

தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.

திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-

திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.

பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.

“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”

வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.

அன்பன்

கோ. தேவராசன்

அகம் நுதலுதல்


உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.

உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.

தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.

தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.

எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.

இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.

எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.

வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.

உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.

இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.

சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.

அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.

உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.

நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.

அன்பன்

புலவர் த. ஆறுமுகன்

நூலறிமுகவுரை


திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.

இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.

திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.

இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.

ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:

சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்

58, 37ஆவது ஒழுங்கை,

கார்த்திகேசு சிவத்தம்பி

வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்

கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.

கருவிநூல் தந்த ந.சி. கந்தையா


தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.

தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.

தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.

உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.

மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.

நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.

தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.

பேரா. கு. அரசேந்திரன்

பதிப்புரை


வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.

இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.

ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.

தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.

தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.

தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.

நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.

வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.

ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?

தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.

மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.

இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதிப்பகத்தார்

பதிற்றுப்பத்து உரை


முகவுரை
சங்கத் தொகை நூல்களுள் ஒன்றாகிய பதிற்றுப் பத்துச் சேர அரசரின் கீர்த்திப் பிரதாபங்களைக் கூறுகின்றது. சேர அரசர் பலரின் சரித்திரங்களை அறிதற்கு இந்நூல் துணைபுரிகின்றது. இந்நூலைக் கற்பதினால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் தமிழ் நாடு எவ்வகையான நாகரீகம் அடைந்திருந்த தென்பதைப் பட்டப்பகல் போல அறிந்து கொள்ளுதல் கூடும். உள்ளதை உள்ளவாறே கூறும் மெய்ம்மொழிப் புலவர்கள், ஆறு மலை சோலை காடு முதலியவற்றின் வளங்களும், மக்களின் நடை உடை பாவனைகளும், வேந்தரின் மாட மாளிகை கூடகோபுரம், நாடு நகரம், முடி கொடி குடை ஆல வட்டம், தேர் யானை குதிரை காலாள், போர்க்களம் பாசறை ஆதியனவும் பிறவும் நமது மனக் கண்ணுக்கு இனிது புலப்படுமாறு, தமது பாடல்களாகிய திரையில், அழகுபெறச் சித்திரித்திருக்கின்றனர். நமது பழைய தமிழகத்தின் ஒரு பகுதியாகிய சேரர் உலகம் பண்டு இருந்த தன்மையை இன்று நம் மனக் கண்களாற்கண்டு களிகூர்தல் எவ்வளவு மகிழ்ச்சிக்குரிய தாகின்றது.

பதிற்றுப்பத்திற் பலவழக்கு வீழ்ந்த சொற்கள் காணப்படுதலின் அந்நூலை எளிதிற் பொருள் விளங்கிப் பயில்தல் அரிதாகின்றது. 1இந்நூல், உயர்தரப் பரீட்சைகளுக்குப் பாடமாக வைக்கப்பெற்று வருகின்றமையின் இதனைப் பயில்வோர் மிகச்சிரமம் உறுகின்றனர். இந்நூல், பரீட்சைக்குப் பயில்வோர் செய்யுட்களைப் பயில்வதற்குத் துணையாயிருக்கும் பொருட்டு மூலத்திலுள்ள ஒரு சொல்லேனும் விடுபடாமல் வசனமாக எழுதப்பெற்ற தொன்றாதலின், வசனங்களைக் குறுக்குவது இயலாதாயிற்று. ஆயினும் இதனைப் பயில்வோர் பதிற்றுப் பத்திற் கூறும் செய்திகளை அறிந்து மகிழ்வாரென்பதில் ஐயமில்லை.

“குணநாடிக் குற்றமும்நாடி அவற்றின்
மிகைநாடி மிக்க கொளல்.”

ந.சி. கந்தையா.

தமிழ் நிலையம்

நவாலியூர்

1-8-1937

ஆராய்ச்சி உரை
சங்கத் தொகைநூல் எட்டனுள் பதிற்றுப்பத்து நான்காவதாயுள்ளது. இந்நூலின் முதற்பத்தும் இறுதிப் பத்தும் கிடைத்தில. கிடைத்துள்ள எட்டுப் பத்துகளும் எட்டுப் புலவர்களால் வெவ்வேறு எட்டுச் சேர அரசரின் வீரம் கொடை ஆகியவற்றைப் புகழ்ந்து பாடப்பட்டனவாகும். இப்பாடல்களைப் பாடிய புலவர்களுக்கு அச் சேர மன்னர் மிகுந்த பொன்னையும் நாடுகளை யும் பரிசிலாக வழங்கினர். பதிற்றுப் பத்தைப் பாடிய புலவர்கள் கி. பி. இரண் டாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் விளங்கினார்கள். தமிழ் இலக்கண நூவார் குறிப்பிடுவதுபோலச் சேர நாடு கொடுந்தமிழ் நாடுகளுள் ஒன்று. இந்நூலகத்து இக்காலம் வழக்கு வீழ்ந்த சொற்களும், சொல் வழக்கும், பழைய இலக்கண முடிபுகளும் தற்கால மலையாளரின் முன்னோராகிய மேற்குக் கரைத் தமிழரின் பழக்க வழக்கங்களும் காணப்படுகின்றன.

குமட்டூர்க் கண்ணனார், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மீது இந்நூலின் இரண்டாம் பத்தைப் பாடினார். இவ் வரசன் உதியன் சேரலாதற்கு வேள்மான் நல்லினியிடம் பிறந்தான். இவன் கடுஞ்சொல்லுடைய யவனரைவென்றான். இவன் இலங்கை வேந்தனாகிய முதலாம் கயவாகுவின் கி. பி. (169-191) காலத்தவனும் செங்குட்டுவனின் தந்தையுமாவன். இவன் 58 ஆண்டு அரசாண்டான். இந்தச் சேர அரசனும் கண்ணனார் என்னும் புலவரும் 2ஆம் நூற்றாண்டின், மத்திய காலத்தவர்களாவர். இவன் வெண்ணிப் பறந்தலையில் கரிகாலனோடு போர் செய்து புண்ணுற்று, (அகம் 55.) நாணித் தான்கொண்ட வாளோடு வடக்கிருந்தான். இவன் கடலிற்சென்று பகைவரது கடம்பினை அறுத்து அதனால் வீர முரசம் செய்தான். மற்றொருமுறை வடநாடு சென்று ஆரியரை அலறத்தாக்கி, அவர் அரசரைச் சிறைசெய்து இமயவரையில் தனது விற்பொறியைப் பொறித்தான். இச்சிறந்த வீரன் பகைவர்பால் சிறந்த பொன்னாபரணங்களையும் வயிரம் முதலிய இரத்தினங் களையும் எண்ணிறந்த அளவு திறையாகப்பெற்றதோடு, ஒரு பொற்பாவை யையும் பெற்றானெனத் தெரிகிறது (அகம் 127). இவற்றை இவன் மாந்தை முற்றத்திற் குவித்து விட்டுப் புண்ணுக்கு நாணித் துறவு பூண்டு வடக் கிருந்தான் (அகம் 127).

மூன்றாம் பத்தால் பாலைக் கௌதமனார் பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாடினார். இப்புலவரை இளங்கோவடிகள் ‘தண்டமிழ் மறையோன்’ எனக்கூறுவர். இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் தெய்வ பக்தி நிறைந்தவனாதலின் இருபத்தைந் தாண்டு ஆட்சி புரிந்தபின் துறவு பூண்டான். இவன் கௌதமனார் பொருட்டு நெடும்பாரதாய னார் என்னும் புரோகிதர் வாயிலாக பத்து வேள்விகள் வேட்டான். பத்து வேள்வியின் பின் கௌதமனார் மனைவியுடன் மறைந்து தேவருலகம் எய்தினர் என்று சொல்லப்படுகின்றது. சிலப்பதிகாரமும் இச்சம்பவத்தைக் கூறும். அயிரைமலையிலுள்ள குலதெய்வத்தை அவன் அலங்கரித்தான் என்றுஞ் சொல்லப்படுகின்றது.

நாலாம் பத்தால் காப்பியாற்றுக் காப்பியனார் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலைப் பாடினார். இச்சேரன் நெடுஞ்சேரலாதற்கு வேளாவிக் கோமான் மகள் பதுமன் தேவியிடம் பிறந்தவன். இவன் பூழி நாட்டை வென்று நன்னனைத் தோற்கடித்தான். இவன் சேரலாதனுக்குப் பின் சிம்மாசன மேறினான். இவனுக்குரிய இயற்பெயர் விளங்கவில்லை. இவன் சூடுதற்குரிய முடியைப் பகைவர் கவர்ந்தமையின் கழங்காயாலும் நாராலும் செய்த முடியைச் சூடினான்; அக்காரணத்தால் கழங்காய்க்கண்ணி நார் முடிச்சேரல் என்னும் பெயர் பெற்றான். இவன் 25 ஆண்டு அரசு வீற்றிருந்தான்.

ஐந்தாம் பத்துப் பாடியவர் பரணர். இப்பத்துக்குரியவன் செங்குட்டுவன். இவன் இலங்கை அரசனாகிய முதலாம் கயவாகுவின் காலத்தவன். அக்காலத்திருந்த சோழ அரசர் உருவப் பஃறேர்இளஞ்சேட்சென்னியும் வேற் பஃறடக்கைப் பெருநற்கிள்ளியும்; பாண்டிய அரசர்: நெடுமாறனும் வெற்றிவேற் செழியனும். இவன் ஆரிய அரசராகிய கன்ன விசயரைக் கங்கையின் வடகரையில் வென்றான்; ஒன்பது சோழ அரசரை உறையூருக்கு அணித்திலுள்ள நேரிவாயிலில் தோற்கடித்தான்; மோகூர் மன்னனாகிய பழையனைப் பணிவித்தான். இவன் இளங்கோவடிகளின் தமையனும் சிலப்பதிகாரத்துள்ள வஞ்சிக் காண்டத்தின் கதாநாயகனுமாவன். இவன் 55 ஆண்டு அரசு வீற்றிருந்தான். இவன் காலம் கி. பி. 150-225.

ஆறாம் பத்தால் காக்கை பாடினியார் நச்செள்ளையார் ஆடு கோட்பாட்டுச் சேரலாதனைப் பாடினார். இவன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலின் தம்பியாகிய குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கு வேளாவிக்கோமகன் மகள் பதுமன் தேவியிடம் பிறந்தவன். இவன், தண்டாரணியத்திலுள்ளவர் களாற் கவரப்பட்ட பசு நிரைகளை மீட்டு தொண்டியில் கொணர்ந்து சேர்ப்பித் தமை பற்றி இப்பெயர் பெற்றான். இவன் அந்தணருக்கு பசுக்களையும் நிலங்களையும் தானஞ்செய்தான். இவனுக்குத் தலை நகரம் தொண்டி. இவன் காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். இவன் 38 ஆண்டு அரசு வீற்றிருந்தான் என்ப.

ஏழாம் பத்தால் கபிலர் செல்வக் கடுங்கோவாழி ஆதனைச் சிறப்பித்தார். இவன் அந்துவஞ்சேரலிரும் பொறைக்கு ஒரு தந்தை ஈன்ற மகளாகிய பெருந்தேவியிடத்திற் பிறந்தவன். யானைக்கட்சேய் என்பது இவனுக்கு மறு பெயர். இவன் பெருங்கொடையாலும் அருங்குணங்களாலும் பெயர் பெற்றவன்; திருமால் பத்தியிற் சிறந்து விளங்கியோன். கபிலர் தம் உயிர்த்துணைவனாக விளங்கிய வேள்பாரி உயிர் நீத்ததும், அப்பாரியின் உத்தமகுணங்கள் பலவும் இச்செல்வக்கடுங்கோவிடம் உள்ளனவாகக் கேள்வியுற்று இவனைக் காணச்சென்று ஏழாம் பத்தை இச் சேரன் முன் பாடினர். அவர் பாடலைக்கேட்ட செல்வக்கடுங்கோ, அவ் வந்தணப் பெரியார்க்கு நூறாயிரம் காணம் அளித்ததோடு நற்றா என்னுங் குன்றில் தானும் அவரும் ஏறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டி அப்புலவர்க்கு அளித்தான். இவன் மனைவி நெடுஞ்சேரலாதற்கு மகட் கொடுத்த வேளாவிக்கோமானுடைய மற்றொரு மகளாவள். ஆகவே நெடுஞ்சேரலாதனும் செல்வக் கடுங்கோவும் சகலமுறையினர். இவ்வேந்தர் பிரான் இருபத்தைந்தாண்டு வீற்றிருந்தான். இவன் சிக்கற்பள்ளி என்னு மிடத்திற் துஞ்சினான்.

கபிலர் பாண்டியநாட்டில் திருவாதவூரில் பிறந்த அந்தணன். தான் பிறந்த நாட்டுக்குரிய பாண்டிய ரெவரையாவது இவர் பாடவில்லை. இவர் இளமையிலேயே பாண்டிய தேசம் விட்டுச் சேரநாட்டிற் சென்று வாழ்ந்ததே இதற்குக் காரணமாயிருக்கலாம். இவர் பெரும்பாலும் மலைவளங்களையும் மலைநாட்டு அரசர்களையுமே சிறப்பித்திருக்கின்றனர். இவர் செய்த நூல்கள்: ஐங்குறு நூற்றில் ஒரு நூறு, குறிஞ்சிப்பாட்டு, இன்னா நாற்பது, நற்றிணை குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு முதலியவற்றிற் சில செய்யுட்கள் ஆதியனவாகும் இவர் பலதேவன் விஷ்ணு சிவன் முதலிய கடவுளரைத் தமது பாடல்களிற் சிறப்பித்திருக்கின்றனர். பதினோராந்திருமுறையிற் காணப்படும் பாடல்கள் பிறிதொருவர் செய்தனவாயிருக்கலாம். இவர் காலத்தைய புலவர்கள் இவரைப் ‘பொய்யாநாவிற் கபிலன்’ என்று சிறப்பித் திருக்கின்றனர்.

எட்டாம் பத்தால் அரிசில்கிழார் பெருஞ் சேரலிரும்பொறையைச் சிறப்பித்தார். இவன் செல்வக்கடுங்கோவுக்கு வேளாவிக் கோமான் மகள் 1பதுமன் தேவியிடம் பிறந்த மகன். இவன் அதிகமானது தகடூர் மேற்படை யெடுத்துச் சென்று பெரும்போர் புரிந்து, அவ்வூரையும் அதிகமானையும் அழித்தனன். இப்போர்ச் செயலே தகடூர் யாத்திரை என்னும் பண்டைநூலிற் சிறப்பித்துக் கூறப்படுவது. இவ் வெற்றி பற்றி ‘தகடூ ரெறிந்த’ என்னும் அடையுடன் இவன் வழங்கப்படுவன். அரிசில் கிழார் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த இச்சேரன், தானும் தன் மனைவியும் வெளியே வந்து நின்று, தன் கோயிலிலுள்ள வெல்லாம் கொள்க என்று ஒன்பது நூறாயிரம் காணத்தோடு தன் அரசு கட்டிலையும் புலவர்க்குக் கொடுப்ப, அவன், ‘யானிரப்ப நீயாள்க’, என்று அவற்றைத் திரும்பக் கொடுத்து அவ்வரசனுக்கு அமைச்சுப்பூண்டார். இச்சேரன் பதினேழாண்டு வீற்றிருந்தான். இப் பெருஞ் சேரர்க்கு மனைவி அத்துவஞ்செள்ளை. இவன் உக்கிரபாண்டியன் காலத்தவன்.

ஒன்பதாம் பத்தால் பெருங்குன்றூர் கிழார் இளஞ்சேரலிரும் பொறையைச் சிறப்பித்தார். இவன் குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழான் வேண்மாளந்துவஞ் செள்ளையிடம் பிறந்தவன். இவன் கடல் அடங்கவேலோட்டியவரும், அயிரைமலைத்தெய்வத்தை அலங்கரித்தவரு மாகியவர்களின் சந்ததியில் வந்தவன் என்று சொல்லப்படுகின்றது.

சங்க நூல்கள் தொகுத்து முடிந்தது கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை யில் என்று கருதப்படுகின்றது. இறையனாரகப் பொருளுரையில் தொகை நூல்களைக் குறிப்பிடுமிடத்துப் பதிற்றுப்பத்தும் காணப்படுகின்றது. ஆகவே இறையனாரகப் பொருளுரை எழுதப்படுவதன் முன் பழந்தமிழ்ச் செய்யுட்கள் தொகுக்கப்பட்டுள்ளன வென்பது தேற்றம். இறையனாரகப் பொருள் நீலகண்டனாரால் கி. பி. ஆறாம் நூற்றாண்டு வரையில் எழுதப்பட்டிருக்க வேண்டுமென்பது பல்லோர் கருத்து.

இந் நூல் தொகுத்தவராலேயே பதிகங்களும் பாடப்பட்டிருத்தல் வேண்டும். ஆசிரியர் நச்சினார்க்கினியர் அடியார்க்கு நல்லார் முதலிய உரையாசிரியர்கள் இப் பதிகங்களைத் தமது உரைகளில் எடுத்தாண்டிருக் கின்றனர். இவர்களின் காலம் கி. பி. 12ஆம் நூற்றாண்டு வரையில்.

இனிச் சேர அரசர் கபிலர், பரணர், பாலைக் கௌதமனார் பெருங்குன் றூர்கிழார் அரிசில்கிழார் முதலிய புலவர்களதும் காலத்தை ஆராய்வோம். பதிற்றுப் பத்திலுள்ள அரசர்களின் பரம்பரை இருவகைப்படும்.

இவ்வரசர்களுக்கும் தலைநகரம் தொண்டி.

இவ்வரசர்களுள் செங்குட்டுவன் காலம் மாத்திரம் தீர்மானமாகக் கணிக்கப்பட்டுள்ளது. அது கி. பி. 175-225 ஆகும். ஆகவே சிலப்பதிகாரம் இயற்றப்பட்ட காலம் கி. பி. 200க்கும் 225-க்குமிடையில் இருக்கலாம். மேலே குறிக்கப்பட்ட 1ஆம் அட்டவணையின் 1ஆம் 2ஆம் 3ஆம் அரசர்களதும் 2ஆம் அட்டவணையிற் குறிக்கப்பட்ட 3ஆம் அரசனதும் கீர்த்திப்பிரதாபங் களைச் சிலப்பதிகாரங் கூறுகின்றது. ஆகவே இவ்விரண்டு பரம்பரைகளிலு முள்ள அரசர்கள் செங்குட்டுவனுக்கு முற்பட்ட காலத்தவர்களாக வேண்டும். பரணர், (4) செங்குட்டுவனையும் (1) சேரலாதனையும் பாடியிருக்கின்றார். இன்னும் புகாரிலிருந்த உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி (கரிகாலனின் தந்தை) உறையூரிலிருந்த வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி முதலியோரை யும் பாடினர். 1ஆம் அட்டவணையிற் காட்டப்பட்ட 1 முதல் 4 வரையுமுள்ள அரசர்களின் ஆட்சிக் காலத்தைக் கணக்கிடின் ஒரு நூற்றாண்டுக்கு மேலாகின்றது. இது ஒருபோதும் பரணருடைய வயதாயிருக்கமுடியாது. ஆகவே ஒவ்வொரு அரசரின் ஆட்சிக் காலமென்றது முடிசூடுவதன்முன் சேர நாட்டின் சில பகுதிகளுக்கு அதிபதிகளா(Viceroys)யிருந்து அவர்கள் ஆட்சிபுரிந்த காலமும் சேர்ந்ததேயாகுமென்க. இந்த இரண்டு அட்டவணை யிலும் காட்டிய அரசர்கள் கி.பி. 125-க்கும் 225-க்கும் இடையில் ஆண்டவர்க ளாதல் வேண்டும்.

சிலப்பதிகாரத்தில் ஈரிடங்களில் கயவாகுவின் பெயர்வந்துள்ளது. சிலப்பதிகாரத்திலுள்ள வஞ்சிக்காண்டத்தின் பாட்டுடைத்தலைவன் செங்குட்டுவன். ஆகவே செங்குட்டுவன் கயவாகுவின் காலத்தவன் என்பது தடையின்றித் துணியப்படும். இம்முடிபினையே டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் முதலிய ஆராய்ச்சியாளர் கைக்கொண்டனர். இங்கிலீஷ் மொழியில் ‘தமிழர் சரித்திரம்’ என நூல் எழுதிய பி.தி. ஸ்ரீனிவாச ஐயங்கார வர்கள் இக்கொள்கையை உதறித்தள்ளி சிலப்பதிகாரம் கயவாகு காலத்துக்குப் பிற்பட்டதெனச் சாதிக்க முயன்று கயவாகு என்பது எழுதுவோரால் பிழை யாக எழுதப்பட்டிருக்கலாமெனக் கூறினர். கால ஆராய்ச்சியைப் பற்றிய அக்கறை ஏற்படாத காலத்து ஏட்டுப் பிரதிகளைப் பிரதி செய்யும் போது ‘கயவாகு’ என்னும் பெயரை யாராவது வேண்டுமென்று நூலிற் புகுத்தி யிருப்பார்களா? அப்படிப் புகுத்தினும் பேரா. சுந்தரம்பிள்ளை அவர் காலத்து அல்லது அதற்குப் பின் இது நிகழ்ந்திருக்கவேண்டும். வான்மீகி இராமா யணம் தென்னிந்தியாவைக் குறிப்பிடும் பகுதி இடைச் செருகல் எனக் கூறுவதன் முடிபும் இப்படியே. தமிழ் நூல்களுக்குக் கூடிய வயதைக் கொடுக்கக்கூடாதென்பது சில சரித்திரகாரர் கோட்பாடு. ஆகவே அவர்கள் தங்கள் கொள்கைக்கேற்ப நியாயங்களைக் கண்டு பிடிப்பதில் தலையை உடைக்கின்றனர்.

பதிற்றுப்பத்து வசனம்
இரண்டாம் பத்து
11 சிவந்த வாயுடைய அம்பு பகைவரின் உடலைப் போழ்ந்து திறந்த புண் களினின்றும் இரத்தம் கொப்பளிக்கும். அதனால் பெரிய அகழிலுள்ள பளிங்கு போன்ற நீர் குங்குமக் கலவை போற்சிவக்கும். இவ்வாறு (பகைவர்) அரணை அழித்து மிகுந்த வலிமையையும் உயர்ந்த சிறப்பையும் ஊக்கத்தையும் எய்திய வேந்தே!

பலர் மொய்த்து நின்று காத்த பூங்கொத்துகளுடைய கடம்பை வெட்டிப் பெற்ற வெற்றிக் கறிகுறியாக முழங்கும் (வீர) முரசினை (அக்கடம்பினால்) செய்தவனும், தான் வெல்கின்ற போரும், பன்னாடையால் வடிக்கப்படும் தேன் ஒழுகுகின்ற பூமாலை அசையும் மார்பும், போர் விரும்பும் தானையு முடையவனுமாகிய சேரலாத!

பிரகாசிக்கின்ற நிறைந்த நீருடையதும், காற்று மோதுதலால் மலைபோன்ற திரைகள் வானில் துளிகளைச் சிதறுகின்றதுமாகிய குளிர்ந்த கடலிடத்தே (மாவடிவாக) நின்ற, அச்சந்தரும் அவுணர் காவல்புரியும் சூரபன்மாவை அழித்தற்பொருட்டு முருகக் கடவுள் களிறூர்ந்தார். அத் தோற்றத்தை ஒப்ப, மார்பிடத்தே பொலிகின்ற பசிய பூ மாலையும் நெற்றிப் பட்டமும் உயர்ந்த மருப்புமுடைய யானையின் மத்தகத்தில் வீற்றிருத்தலால் பலராலும் புகழப்படும் நின்செல்வத்தை யாம் கண்டேம்.

12 வீரர் பொருது வீழ்கின்ற வாட்போரிற் கலந்து பெரிய சுற்றமுடைய அரசர் தலை நடுங்கக் கடம்பை வெட்டிய கடிய கோபத்தினையும், தாரணிந்த எருத்தினையு முடைய வேந்தே!

வாருகின்ற வளவிய நகமுடைய சிங்கம் சஞ்சரிக்கின்ற மலைச்சாரலில் அதனைக்கண்ட மான் கூட்டம் நெஞ்சு திடுக்கிடுதல் போல் உனது போர்முரசு முழங்குவதைக் கேட்ட பெரிய நகரிடத்துள்ள வேந்தர் துயில் கொள்ளார்; பல திசைகளிலுமுள்ளோர் நடுங்குவர். இவ்வகையான நின் செல்வமும் மறம் மிகுந்த புகழும் கேட்டற்கு இனிது.

வாடாத பசியமயிரும் பைய அசைகின்ற நடையும் இளமையுமுடைய களிற்றுயானை, கன்றோடு கூடிய பிடிக்கு வரியுடைய வண்டை மண முடைய மலை மல்லிகையால் ஓச்சுகின்ற குன்றுகள் பலவற்றைக் கடந்து நின் சுற்றத்தினர் உன்னைக் காண்டல் விருப்பால் வந்து சேர்வர். அஞ் ஞான்று அவர்களது பழைய பசிவருத்தம் நீங்கும்படி அரிவாளினால் அறுத்த வெள்ளிய நிணக் குறையையும், ஆட்டிறைச்சி கலந்த வெள்ளிய சோற்றையும் குளிர்ந்தகள்ளுடன் உண்ணும்படி கொடுப்பை; நீரிற் பட்ட பருந்தின் சிறகு போன்ற மண் தின்ற கந்தை உடைகளைக் களையும்படி செய்து பட்டாடைகளை உடுக்கும்படி செய்குவை. சுருண்டகரிய கூந்த லும் வளைந்த மெல்லிய தோளுமுடைய குற்றமில்லாத பெண்கள் அணி யும்படி பிரகாசிக்கின்ற ஆபரணங்களை நல்குவை; இவ்வாறு அணிந்து அமரும் மெய்ம்மை நிறைந்த சுற்றத்தோடு நின்பெரிய ஆரவாரத்தை யுடைய ஒலக்கத்துச் செல்கின்ற விநோத மகிழ்ச்சி அனுபவித்தற்கினிது.

13 நெருங்கிய வயல்களில் ஆரல்மீன் பிறழும்; உழவர், எருதுகள் போர் செய்து உழக்கிச் சேறாக்கிய நிலத்தை உழாது விதைகளை வித்துவர். கரும்பின் பாத்தியிற் பூத்த நெய்தலைக்கரிய கண்ணுடைய எருமைகள் மேயும்; புறத்தே சென்று இரை தேடவிடாத முதிய பசுக்கள் துணங்கை ஆடுமிடத்தில் நின்று ஆம்பலைத் தின்னும். இவ்வாறு செல்வ மிகுதலாற் பாடல் சான்ற நாட்டில், தழைத்த தென்னைகளும், புட்கள் இருந்து ஒலிக்கின்ற மருதமரங்களும், மடைத்தலையில் பூக்களுடைய பொய்கைகளும் அழகுபெற்று விளங்கும்.

நீ கோபித்தலினால், இவ்வாறு வளம் பெற்றிருந்த நாடுகள் கூற்றுவனால் கெடும்யாக்கை ஒருகாலைக் கொருகாலை நிலைகுலையுமாறு கவினழிந்தன. நீரால் அழிவ தல்லது பகைவரால் அழிக்கப்பெறாத பேரூர்களும் விரிந்த பூவுடைய கரும்பு வளரும் கழனிகளும் அழகு கெட்டன. முறுகிய காயுடைய விடர்த்தர் மரங்களிலும் கரிய உடை மரங்களிலும், பிளவுபட்ட தலை யுடைய பேய்மகள் கழுதில் ஏறித் திரிவள். நெருஞ்சி பரந்ததும், சாம்பல் பறக்கின்றதுமாகிய சுடுகாட்டின் தாதாகஉதிர்ந்த எரு மறித்துக் கிடக்கும் ஓசை அடங்கிய மன்றிற் செல்வோர் உள்ளம் அழியும்; செல்ல நினை வோர் நெஞ்சம் நடுங்கும். நின்நாட்டிற் பெருங்காடான விடங்களிற் கோயில்கள் நின்றன. சிறுகாடான இடங்களில் போர் வீரர் தம் மகளிரோடு உறைந்தனர். காடும் சிறுகாடும் அல்லாத பெருவழிகள் ஆறலைகள்வரும் பிற இடையூறுகளுமின்றி முன் சொன்ன கடவுளும் மறவரும் உறையும் இடமாயின. கூலம் விற்போர் பாதுகாவாத கீழ்க்குடிகளைப் பாதுகாக்கும் 1காணியாளரை, நீ ஓம்புவை. சூரியன் சென்ற மருங்கில் வெள்ளி ஓடாது மழை வேண்டிய நிலத்து மாரி பெய்தலின் நீ காக்கும் நாடு பசி நீங்கிப் பொலிவெய்தும்.

14 நிலம் நீர் காற்று வெளி என்னும் நான்கு பூதங்களைப் போல் நீ அளப் பரும் பெருமையுடையை. நாள், கோள், திங்கள், ஞாயிறு, சுவாலிக்கின்ற நெருப்பு முதலிய ஐந்தையும் விளக்கத்தால் ஒப்பை. போர் வலிமையில், மிகுந்த போர்த் திறமையுடைய நூற்றுவரையும், வலிய துணையையும், ஆண்மையையுமுடைய அக்குரனை ஒப்பை. தும்பை மாலைசூடிப் பொருத பகைவர் செருவின் பெருமையை அழித்த போர் விரும்பும் முதல்வ!

நின்வலிமை இருந்த தன்மையைக் கூறில் கூற்று வெகுண்டுவரில் அதனையும் ஆற்றும் வலியுடையை. அவ்வலியால் வென்ற ஏழு அரசரின் முடியாற் செய்த ஆரம் அணியும் மார்பிடத்து, வலியபெரிய கையுடைய வீரரணியும் கவசத்தை அணிந்தாய். தெய்வமகளிரின் அழகோடு மாறுபடும் வடிவும் பிரகாசிக்கின்ற ஆபரணங்களும், கரிய வண்டுகள் மொய்க்கின்ற சுருண்ட கூந்தலும் வளைந்த குழையு முடையவளது கணவ!

பலயானைக் கூட்டத்தோடு வெற்றிக்கொடி அசையும் படை ஏர் உழவ! பாடினிவேந்தே! பிரகாசிக்கின்ற மணிகள் அழுத்திய பொன்னாற் செய்த சக்கரத்தால் கடல்சூழ்ந்த நாவலந்தண் பொழில்முழுதாண்ட நின் உயர்குல முன்னோர் போலநின்று அழியாத நல்ல புகழை நிறுத்தி அவ்வுலகத் தோடுகூட நீ கெடாதொழிவாயாக.

15 களிற்று நிரையுடையதும் கூற்றுவர் குழுவொத்ததுமாகிய படை வெள்ளம் பகைவர் நாட்டிற்பல ஆண்டு தங்கி முனையிடத்து எரிபரப்பிய அளத்தற் கரிய சீற்றத்தோடு முகிலைத் தடவுகின்ற காவல்மரத்தை அழித்தது. பரப்பி ஆடும் கழற்காயால் எண்ணி அளவிடின் அவற்றின் பக்கங்களும் தேயும் மிகுந்த செல்வம் அழியும்படி கொடிபோன்று எழுகின்ற புகைசிதறக் காற்று வீசுதலால், அழல் பிடித்தபக்கங்களெல்லாம் உருத்தெரியாது கெட்டன. அழகு குன்றிய இடனகன்ற பழைய ஊர்களில் வெள்ளிய பூக்களுடைய வேளையொடு பசியபீர்க்குஞ் சுரையும் மண்டிவளர்ந்தன. பாழடைந்த நாடுகளில் நீர் நிறைந்த சால்களும் சிவந்த பூக்களுடைய காந்தட் கொடிகளும் தோற்றின. புல்லால் வேய்ந்த பாழான வீடு களுடைய குறும்புகளில் புலால் நாறும் விற்றொழிலுடைய ஆறலை கள்வர் திரிந்தனர்.

நின்வலிமையை மறந்து எதிர்த்தமையால் இவ்வாறு பாழடைந்த நின் பகைவரின் நாடுகளைக் கண்டுவந்தேன். நின்நாடு கடலாலும், மலையாலும், ஆற்றாலும் பொய்கை முதலிய வற்றாலும் நல்ல வளங்களைத்தரும். அந் நாட்டின் நடுவே உள்ள முதிய ஊர்களில் முர சொலிக்கின்ற இடையறாத விழாவின்கண் கொடிகள் நிழற்செய்யும். இவ்வகை வளமிகுந்த நகரில் வெற்றிப் புகழ் பெற்ற மிக்க மகிழ்ச்சியானே முழங்கும் முரசினையுடைய வேந்தே! பரிசிலர்க்களிக்கும் செல்வமும், போர்வன்மையும் பூண்முறித்த கொம்புமுடைய யானையும், மாலையு முடைய அழகு விளங்கும் சேரலாத! நிறைய உண்டதால் வார்த்தை மாறுபட்ட மழலைச் சொல்லுடைய கூத்தர் பொருட்டும், இவ்வுலகத்தோர் ஆக்கத்தின் பொருட்டும் நீ வாழ்வாயாக. திருந்திய நரம்புடைய யாழோடு கூத்தர் நின்னை வாழ்த்துவர்.

அதனைக் கேட்டுச் சினத்தல் அறியாது ஓங்குகின்ற வாழ்க்கையையும் வஞ்சினங் கூறிய கொள்கையை யுமுடையை. தாம் செய்த காரியங்களைப் பின் சிதையாது செய்கின்ற சுற்றத்துடன் கொண்டாற் பிழையாத்தன்மையோடு வாழ்வோரும், நரகத்திற் புகுதலை விரும்பாதோருமாகிய பலர் புகழ்கின்ற பண்பினை யும் நீ காப்பை. நீ இவ்வகையாகக் காத்தலின் நோய் நீங்கியதும் புது வருவாயுடையதுமாகிய நின் நாட்டைக் கண்டு மதி மருண்டேன். உலகத்தில் நிலை பெற்ற உயிர்களுக்குக் குறையாது கொடுத்துச் சிவந்த கைகளினால் தேவாலயங்களுக்கு உயர்ந்த ஆபரணங்களைக் கொடுப்பை. மகிழ்ச்சி தரும் விழாக்களில் கொடுத்துக் குறைவுபடாத திருமாலைப் போல் விளங்கும் மைந்த! நின்பண்புகள் பலவற்றையும் விரும்பிக் காண்பாயாக.

16 மலையைப்போல் வளைத்துக் கட்டிய புறமதிலும், நாட்டின் தோற்றம் போன்று வயலும் குளமும் உளவாக அமைக்கப்பட்ட உட்புறமும், அம்புக்கட்டும் கணையமரமும் துலாமரமும் தூங்கும் வாயிலுமுடைய (பகைவரின்) அரணின் உயர்ந்த அழகிய வாயிற் கதவுகளைப் பெயர்த்துப் பகைவரைக் கொல்லுதலால் முரிந்த வெள்ளிய கொம்பும் சொரிகின்ற மதமும், மரங்களை முரிக்கின்ற கடிய கோபமும் உடைய இளைய யானைகள் பாசறையில் நின்று முழங்கா நிற்கும். இப்பெற்றித்தாய பாசறையில் நீடித்திருந்தனை யாதலின் நின்னைக் காணவந்தேன். அறக்கற்பும், மெல்லிய சாயலும், ஊடற்காலத்தும் இனியமொழி கூறும் இயல்பும், அமிழ்தம் பொழிந்து சிவந்த வாயும், விரும்பப்படும் பார்வை யும், பிரகாசிக்கின்ற நெற்றியும், அசைகின்ற நடையுமுடைய தேவி உன்னை நினைத்தலுமுரியள்; பாயல் வருத்தத்தால் அவள் உய்வளோ! உய்யாளன்றே.

அழகிய மணிகளோடு விளங்க வலிமையில்லாத பொன்னாபரணங்கள் தம்மிடை அழுத்தின வயிரங்களோடு கலந்து ஒளிவிட (பகைவர்) ஏழு முடிகளை (ஆரமாக) அணிந்த இலக்குமி புல்லுகின்ற மார்பாகிய காதன் மகளிர்க் களிக்கின்ற துயிலின் பாயலை (வேற்றுப்புல வினையில் வழி) அவர்க்குப் பகுத்து நுகரக்கொடுத்தலும் (வினையுள்வழி) அவரினின்று வாங்கிக் கோடலும் வல்லோய்! நின்மார்பு அவளை வருத்திற்றுக்காண்; நீ அவள்பாற் கடிதெழுக.

17 பிரகாசிக்கின்ற துளிகளைச் சிதறுகின்ற பெரிய கடலிற் சென்று கடம்பை வெட்டிச் செய்த வெற்றிமுரசை தொடியணிந்த தோளுடைய வீரர் முழக்கி ஆடுவர்; மறுபடி அரியபலி தூவிப் பறை முழக்குந்தடியை நோக்குவர். சூல்கொண்ட மேகம் பெய்யும் திரண்ட மழையுடன் பெரிய காற்றடிக் கின்ற உலகில், ஞாயிற்றைப்போன்று விண்ணைத்தீண்டும் நின்வெண் கொற்றக்குடை சிறப்புடையது. அரண்காணாது கடலிற் புகும் மக்கட் கூட்டம் இந் நிழற்கண் வருகவென்று நின் வெண்கொற்றக்குடையின் அருட்சிறப்பை வீரர் புகழ்தற்குக் காரணமாய் நின்றபசிய ஆபரணங் களையுடைய மார்ப! நீ பிறரை ஓம்புதலை நினைக்குமிடத்து, பகைவர் பெரியபிழை செய்தனராயினும் அவர் பணிந்து திறை அளப்பின் கொள்ளுமியல்பினை. ஆதலின் நின்புரத்தல் ஒழிவின்று.

18 நீயிர் கள்ளுண்மின்; அதுவேயன்றி உண்டற்குச் சோறு அடுமின்; அதுவேயன்றித் தின்றற்கு இறைச்சியை அறுமின்; அதுவேயன்றித் தின்றற்குப் புழுக்கப்படுமவற்றை அடுப்பில் ஏற்றுமின்; வருவார்க்கு வரையாது பொன்வள்ளங்கள் ஒலிக்கும்படி உண்ண உதவுதற்கு, இருண்டு சுருண்டு தழைத்த புரியவிழ்ந்த ஐம்பாலினையும், ஏந்தி வளைந்த அரையையும் முகிழ்ந்த நகையையுமுடைய கூந்தல் விறலியர் அடுக. இன்னும் வருநர்க்குச் சோறிடுதலேயன்றி அவர் பால் நாம் பெற்ற பொருள்களையும் கொடுமின்; இவ்வாறு எல்லாங் கொடுத்தாலும் பின்னுக்குக் காரியத்திற்றப்பில்லை. அதற்குக் காரணம் யாதெனில் அழகிய உலகத்தைப் பல ஆண்டுகளாக வளம்படச் செய்து பாதுகாத்த குளிர்ந்த வான்பொய்த்தாலும் சேரலாதன் கொடுக்கும் விருப்பிற் பொய்யான்.

19 கொள்ளையாகிய உணவும் வேகமாகிய நடையுமுடைய ஆறலை கள்வர் (திரியும்) கல்லுடைய நீண்ட பாலைவழியை ஊடறுத்துக் கடத்தற்கு (கட்டிய) வீரம்பொறித்த அழகிய கழல் நீங்காத காலுடைய மறவர் போர் விருப்பால், புலித்தோலுறையிட்ட வாளைத் தீட்டுதற்கு எடுப்பர்; முற்றிய நிறமுடைய செந்தினையை இரத்தத்தோடு கலந்து (பலியாகத்) தூவி அழகிய முரசை இடம் பெயர்த்து வலப்புறத்துக் குறுந்தடியுடையராய் வளையணிந்த தோளை ஓச்சிமுழக்குவர்;

கைக்கவசம் களைதலறியாத சுற்றத்தோடு நீ அம்புதெரியுந் தொழிலைவிரும்புவை. போருக்குச் சென்றமையின் பகற்பொழுதில் ஒரு விநோதமுமின்றி நெடுகவருந்தி யிருந்து அருமையாகப் பெற்ற நித்திரை மகிழ்ச்சியில் நின்கனவில் உறைகின்ற, ஒடுங்கிய பெருஞ் சிறப்பும், மிகுந்த நாணும், பிரகாசிக்கின்ற நெற்றியுமுடைய அரிவைக்கு நீ யார்? நீ அவள் பாற்செல்லாமைக்குக் காரணம் யாது? நீ அழிக்க என்று எழுந்த நாடுகள் அழிந்து அற்றால் வருவல் எனில்; வாழுநர் சுற்றத்தோடு ஊரை விட்டோடவும், மண்ணில் வளர் பயிர்கள் வாடவும், உழவு தொழில் நீங்கவும் அந்நாடுகள் அழிந் தன. பண்டு போலக்குடியேறுக என்று நீ வாழ்வு கொடாத அந்நாடுகள் சோலைகடோறும் தாமரை ஆம்பலோடு மலரவும் நெற்களின் பருமை யால் கொய்யும் அரிவாட்களின் வாய்மடியவும், கருப்பஞ் சாறு பிழிகின்ற ஆலையின் பள்ளங்கள் சாறோடி நனைந்து காயவும் (ஒரு கால்) அழகு பெற்றிருந்தன வென்று கண்டார் கையுதறி வருந்த மாட்சிமைப் படாத அழகுடையனவாய் அழிந்தன. அது குறையன்று, நின்அன்பின்மையே குறை; இனி நீ அவள்பாற் கடிதெழுக.

20 நும்வேந்தன் யாரென வினவின், அவன் பெரிய கடலிடத்ததாகிய தீவகத்துள்ள பகைவர் நாட்டிற்சென்று அவர் கடம்பை வெட்டிய கடுஞ் சினத்தையும் வலியையுமுடைய சேரலாதனாவன். அவன் பூமாலை வாழ்வதாக. அவன் இயல்பு இருக்குமாறு புகலின்; மாற்றார் தேயத்து ஆடியபோரில் வெயிற்றூசி தன்மேற் படுதல் அறியான். கண்டுமகிழ்ந்து நெஞ்சு பூரித்தல் அறியாத பகைவர் தேயத்தும் கனவினும் பொய்த்தல் அறியான்; பகைவர் மாயும்படி ஓங்கி நடந்து காலாட்களைத் தேய்த்து தூங்கும்மணி ஒலிக்கும். கடாயானைக் கூட்டம் அலறும்படி அழகிய பெரிய பூமியின் பெரிய நிலத்தை வென்று ஆண்டு, புலவர் வாழ்த்த உயர்ந்த புகழ்நாட்டி, விரிந்த தலையாட்ட மயிருடைய குதிரையையும், தேரையும் கூத்தர்க்கும் பாணர்க்கும் (தனக்கெனப் பாதுகாத்து வையாது) வீசினான். காவற்காடும், ஆழ்ந்த அகழும் உயர்ந்த மதிலும், ஞாயிலும், அம்புக்கட்டும் காவலுமுள்ள அரணை அழித்து, புகை எழும்படி ஊரைச் சுடுதலால் மலர்ந்த மார்புடையவன், தன் பாணர்க்கும் பிற பாணர்க்கும் பரிசின் மாக்களல்லராயினும் கொடுத்தலைத் தவிரான். அவரின் வயிறு பசிகூர விடுவானல்லன். அதனால் அவனை ஈன்றதாயின் வயிறு விளங்குவதாக.

பதிகம்
நிலைபெற்ற பெரிய புகழையும், குற்றந் தீர்ந்த வார்த்தையையும், இன்னிசை முரசினையுமுடைய உதியஞ்சேரர்க்கு வெளியன் வேண் மாணல்லினி யீன்ற மகன், அருவியுடைய இமைய மலையில் விற் பொறித்து, ஒலிக்கின்ற கடல்வேலியாகவுள்ள தமிழகம் விளங்கத் தனது செங்கோல் நாட்டி, பெரிய சிறப்புடன் மிகுந்த புகழோங்கிய ஆரியர் வணங்கும்படி செய்தான். யவனரைப் போரில் அகப்படுத்தித் தலையில் நெய் பெய்து கையைப் பின்புறத்தே பிணித்து இழுத்து அரியவிலை பெற்ற ஆபரணங்களையும் வைரங்களையுங் கொண்டு பெரிய வெற்றியுடைய பழைய வூரிடத்திருந்து பிறர்க்கு உதவிப், பகைவரை அழித்த அச்சந்தரும் வலிய தானையுடைய இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் பத்துப் பாட்டுப் பாடினார்.

பாடிப் பெற்ற பரிசில்; உம்பற்காட்டு ஐஞ்ஞூறூர் பிரமதாயங் கொடுத்து முப்பத்தெட்டியாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகங் கொடுத் தானக்கோ.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டி யாண்டு வீற்றிருந்தான்.

மூன்றாம் பத்து
21 சொல்லிலக்கணமும் பொருளிலக்கணமும் சோதிட நூலும் வேதங்களும் புலன் வழிச்செல்லாத தூய நெஞ்சும் ஆகிய ஐந்தையும் பாதுகாத்து, அவை துணையாக உயிர்களுக்கு வருத்தஞ் செய்யாத கொள்கையும், ஆதித்தனைப் போல் எஞ்ஞான்றும் பொய்யாத மெய் மொழியும் அச்சத் தோடு கடவுளை வழிபடுங் கொள்கையுமுடைய அடியார், சுடர் விடுகின்ற தீ வளர்த்து உஞற்றுகின்ற விரும்பப்படும் மெய்பரந்த பெரும்புகழுடைய ஓமஉணவும்1 குறை வில்லாது உண்ணும்படி வருவோரை வேண்டி, விருந் தினரை இடைவிடாது உண்ணச்செய்யும் ஆட்டு வாணிகர், பட்டடையில் வைத்து வெட்டிய வெள்ளிய இறைச்சிக்கொழுங்குறையைத் தாளிக்கும் நெய்யாவுதியும் செழிய நகரின் நடுவே கடலொலிபோல் ஆர்க்கும்.

மேற்கூறிய இருவகை ஆவுதியின் நாற்றத்தால் இவ்வாறு நாமும் அறஞ்செய்யின் அழகிது என்று விண்ணுறையும் கடவுளரும் விழைவர். இவ்வாறு தேவர்களையும் விருந்தினரையும் பாதுகாத்துக் கொடுக்கக் கொடுக்கக்குறைவுறாத செல்வத்திலே நின்று பழுத்த களங்கமற்ற சிறப்பையும், மேகம்போன்ற வெறியுடைய போர்வல்ல யானையின்மீது (மயிர்க்கண்) முரசு ஒலிப்ப ஆரவாரஞ் சிறந்து நல்ல ஆபரணங்ளைத் தருகின்ற, பகைவரின்மண்படுகின்ற மார்ப! பல பசுக்களுடைய முல்லை மாலையணிந்த கோவலர் புல்லுடைய நிலத்தே பல ஆட்டுமந்தைகளைப் பரப்பிக்கற்களுடைய காட்டிலே, பிரகாசிக்கின்ற மணிகளை எடுக்கும் செருப்புமலையையுடைய பூழியர்தலைவ! குவிந்த போர்க்கண்ணி மிலைந்த வீரர்கவசமே! பல பிரயோசனந்தரும் உயர்ந்த சிகரமுடையதும், நீரற்றவழிப் பிரயாணப்படாது பாடித்தங்குகின்ற வலிய பார்வையுடைய கொக்கின் பரிவேட்புக்கு அஞ்சாத அயிரைமீனின் பெயர் பெற்றதுமாகிய இடத்தே (அயிரைமலையில்) முனைகெடும்படி போர் செய்த உயர்ந்த மலையுடைய பொருந! ஆண்டுகடோறும் பொய்யாது மழை சுரந்து மக்கட்கு நோயில்லாத ஊழியுண்டாகுக. கழுவப்படுகின்ற வாயிடத்து மணம் வீசும் கரியமலர், கமழுகின்ற தாழ்ந்த கூந்தல் நீங்கினது போல் கூம்ப, இரவுக்காலத்து மலர்ந்து, அழகிய முகத்தே சுழல்கின்ற பெரிய களிப்புள்ள மதர்த்த கண்போல் காந்தள் இலங்கி அசைகின்ற ஆற்றிடத்தே வளர்கின்ற மூங்கில்போன்ற (குளிர்ந்த) தோளையுடைய இவளோடு ஆயிர வெள்ளமாகிய பல ஆண்டுகள் வாழ்வாயாக.

22 சினம், காமம், மிகுந்த கண்ணோட்டம், பகைவருக்கு அச்சம், பொய் கூறல், பொருள்மேல் மிகுந்த அன்பு, கொலை கொடுமையோடு பிறவும் அறந் தெரிந்த ஆளுகைக்கு வழி அடைப்பாகும். தீமைகடந்து நன்மை புரிந்து, கடலும் காடும் பலபயனுதவ, பிறர் பிறரை வருத்தாமல், மற்றவர் பொருளைவிரும்பாது, குற்றந்தீர்ந்த அறிவினரை அடைந்து, தம் வருத்தம் களையாது பிறர்க்குப் பகுத்தளித்துண்டு, மக்கள் முதிர்ந்த யாக்கையோடு பிணியின்றிக் கழிய ஊழிகாலம் வாழ்ந்த அறிவுடையோர் வழியில் வந்த வேந்தே!

இரும்பினாற் செய்த குந்தாலியால் வலியபாறையை உடைத்துச் செய்த கிணற்றில் சில ஊற்றுகளால் ஊறுகின்ற நீரை கயிற்றிற் பிணித்த குறுகிய இறைகூடையால் நிறைய மொண்டு கொங்கர் நாடகப்படுத்தியவரும், வேல்தாங்கிய படை உடையவரும் (பகைவர்க்கு) அச்சந்தருபவருமாகிய தோன்றல்! பிடரிமயிருடையகுதிரை, அணிகளாலலங்காரம் பெற்ற யானை, அம்புபரப்பிய தேர், போர்விரும்பும் மறவர், கழுக்கோல நெருங்க நாட்டிய சுடுகாடு, உயர்ந்த விசையுடைய வில்லாலும் துளை யுருவ எய்யமுடியாத, உயர்ந்த நிலையுடைய வாயிலிடத்துக் கட்டித் தூக்கிய மிக்க கனமுடைய ஐயவித்துலாம், காவற்காடு, ஆழ்ந்த அகழ், நெடியமதிலிடத்து நிரைத்த உள் மேடைகள் முதலியவற்றையுடைய உள்அரணை வென்று சூடிய பொன்னுழிஞை மாலையும் தான் வெல்லும் போரு முடைய குட்டுவ!

போர்க்கப்பட்ட முரசை முழக்குவோர் நீரில் (எதிர்) ஒலி எழுப்புதலாலும், நீர்தரும் ஓசையுடன் நீர்விளையாடுவோர் ஓசை எழுப்புதலாலும் ஆர வாரமுடைய விழாக்கள் மிகுந்த, புதுவருவாய் மலியும் குளிர்ந்தவயல் சூழ்ந்த நாடு நீகோபித்து அருள் செய்யாமையால், வெயில் குறையாத நல்ல பகற்காலத்து துன்பந்தரும் வெண்ணரிக்கு ஊளையிடப் பயிற்றி பிதுங்கிய கண்ணுடைய கூகை குழறவும், ஆந்தையின் தாளத்துக்கு கொடிய கண்ணுடைய பேய்மகள் ஆடும்படியும் பாழாயின; இரங்கத் தக்கதாகும்.

23 வாடிய தலையுடைய உன்னத்தின் கொம்பரில் சிலவண்டுகள் இருந்து கரையும்படி வறட்சிமிகுந்து நிலம்பசுமையற்ற காலத்தும், வளைத்துக் கட்டிய வாத்தியப் பையைக் கொண்டு செல்லும் கூத்தர் மன்றத்தே சென்று தெருவின் மருங்குகளிற்பாடுவர். அவர்கள் கடியபசி நீங்கஉண்டு மகிழ்ச்சி மிகுந்து ஆட, அலங்கரிக்கப்பட்ட பொன்னாபரணங்கள் ஒலிக்கும்படி வந்து, சிறுமகிழ்ச்சி பெற்றவிடத்தும் பெரிய ஆபரணங்களை வீசுகின்ற, போர் விரும்புந்தானையும் பொன்னாபரணமுமுடைய குட்டுவ! வீரஞ் செறிந்த புகழறியாது உன்னோடு மலைந்தவேந்தர் படைகெட்டொழிந்த னர். மருது தழைத்து ஓங்கிய குளிர்ந்த பெரிய நீர்த்துறையிடத்து (விளை யாட்டு மகளிர், மலரும்தளிரும் முறியும்தாதும் கோடலிற்) சிதைந்து கிடக்கின்ற காஞ்சியோடு முருக்கும் நீருள் தாழ்ந்து அரும்பி நெருப்புப் போல் விளங்கும். அதன் கரையில் நாரையும் செவ்விரியும் குதிக்கும். கழனியின் வாயில்களிலுள்ள சோலைகள் சூழ்ந்த தோட்டத்தில் நெருப் பொத்த தாமரைமலரும். விளையாட்டு மகளிர் குறுகுதற்கு எட்டாமையால் மலர்ந்த ஆம்பலும் தோன்றும். நாடுகள் இடையறாத புதுவருவாய் பெறும். இவ்வாறு முன் ஒரு போது விளங்கிய (பகைவர் நாடு) புல் மிக வளர்ந்து பக்கங்கள் அழகு கெட்டுத்தூர்ந்து, மரையா ஏற்றுடன் புணர்ந்து வாழவும் மரங்கள் தேவருலகை முட்டவும் ஓங்கி வளர்ந்து காடாயின.

24 தூரத்துவிளங்கும் மின்னல்பரந்ததுபோல் புலித்தோல் உறையினின்று வாங்கிய, புலால் நாறும் வாயுடைய வாளை உபயோகிக்கும் மறவர் அதனை வெற்றியின் உயர்வால் ஏந்தி, காவலுடைய அரணைக்கடந்த (மாற்றார்) தார்ப்படையை வென்று பெருமை கொண்டு அணியாய் நிற்கும் பெரும்படையின் தலைவ!

ஓதல், ஓதுவித்தல், வேட்டல் வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் ஆறுதொழில்புரியும் அந்தணர் சொற்கேட்டு, உலகம் நின் ஆணைவழி ஒழுக, பாடல் சான்று விரும்பப்படும் நல்ல புகழுடையவனும், திருந்திய மொழியும் ஆபரணங்களை அணிந்தவளது கணவனுமாகிய வேந்தே! நாணேற்றுதல் ஒழியாத வில்வீர! அம்புகள் ஆராய்தற்றொழில் ஒழியாத படை இடம் பெறாது செறிந்து விளங்குகின்ற பெரிய பாசறையுடைய குரிசில்! நிலம் நீர் தீ வளி விசும்பு என்னும்ஐந்தும் அளந்துமுடிவறியினும் நின் பெருமை அளத்தற்கரிது. உனது வளம் மிகுந்த பெருமையை இனிது கண்டேன். ஒலிக்கின்ற பூண்மழுங்கிய உலக்கையாற் கிளறுந்தோறும் சேம்பின் இலை எழுந்தாடும் மிடாவில் காய்ச்சிய நெருப்புப்போற் சிவந்த இறைச்சியை யாவருங் கண்டு மதிமருளுவதும், உண்போர் மட்டின்றி நுகர்வதுமாகிய கேடில்லாதசோறு, பிரகாசிக்கும் சுடர் அவிழ்ந்து வானில் ஒளிர, புகழமைந்த வெள்ளி வடக்கே தாழ்ந்து பயன்படும் கோட்களுடன் நிற்குநாளில் நிற்க, சூற்கொண்டு காற்றினால் அலைப்புண்டு சிறுதுளிகளைப் பெய்யும் மேகம் கார்காலத்துப் பொய்த் தாலும், குறைவு படாது. ஆகவே நின்புகழ் வாழ்வதாக.

சோறு குறைவுபடாது என்பது வினைமுடிவு.

25 இடிஒத்த ஒலியுடன் பெரிய மலையினின்றும் விழும் அருவிபோலக் கொடி யசையவும் வேகமுடைய குதிரை பறக்கவும் நீ நெடிய தேரை ஒட்டிய அகன்ற பகைவர் நாடு அழிந்தவாறு சொல்லின்: நின் குதிரை சென்றவிடங்களிற் கலப்பை செல்லா: மதஞ்சொரியும் கன்னமும் கோபமு முடைய யானைக் கூட்டம் பரந்த வயல்கள் பின்செல்வம் பரத்தலை அறியா. கழுதையா லுழும்படி நின் படையாளர் சேர்ந்தமன்றம் பாழாயின பின் பகை அரசர் நகர்களிற் காவலாளர் வைக்கப்பெறார். கடியகாற்று ஒற்றுதலால் சுடர்விட்டெரிந்த சில இடங்கள் காடுதீய்ந்து ஆண்டலைப் புட்கள் வாழும் கடுநெறியாகவும் முனைகளுடைய பாழிடங்களாகவும் மாறின.

26 மனக்கொதிப்பில்லாத கூற்றுவனைப்போன்ற திருந்திய தொழிலுடைய நின் வீரர் கோபித்த (பகைவர்) நாடு (முன்) இருந்தபடி சொல்லின்; ஒருகால் தேர்பரந்த வயல் (அத்தேர் பரந்தமாத்திரையாற்) சேறாய்ப் பின்பு உழுதற்கு ஏர் பரவா; பன்றிகளுழுத கொல்லைநிலம் (அவை உழுதமாத் திரையானே) புழுதியாகிப் பின்பு கலப்பை வழங்கா; மத்து ஒலிக்கின்ற மனைகளில் மத்தின் ஒலிமிகுதியான் இனிய வாத்தியஒலிகள் இசையா. இவ்வாறு வளம் மிகுந்த நாடு இப்பொழுது மழைபெய்தலின்றி வெப்ப மெய்தி செழிப்பற்றது. கண் நிறையும்படி கண்ணீர் உகுத்து கையுதறும் மெலிந்த நெஞ்சுடையோர் சிறுமையுறும்படி பீர்க்குப் படர்ந்து பாழான மனைகள் நெருஞ்சி நிறைந்த காட்டுவழிகளாயின. பண்டு இந்நாட்டின் செழிப்பைக் கண்டவர்கள் (முந்திய வளனை) நினைப்பின் வருந்து வார்கள். யானும் வருந்துவேன்.

27 ஆண்டுகடோறும் நட்டு உண்டாக்காது தொடர்பாக உண்டாகும் குவளையை உடுத்த வழிகளில் பிரகாசிக்கின்ற வளையணிந்த பெண்கள் அலர்ந்த ஆம்பலின் உட்புறம் மடியும்படி நடந்து, சுருண்ட கூந்தலிற் சூடிய பூமாலை மீது வண்டுகள் ஒலிக்க அழகிய மருதத்துறை யிற்சென்று (மயில்கள் வயலிற் புகுந்து உழக்காது ஓப்புதற்கு) இசைப் பாட்டுப் பாடு வாராயின், இவர் இயங்களைக் கேட்ட பழக்கத்தானே தம்மைக் கடிகின்ற ஒலியையும் அவற்றின் ஒலியாகக் கருதி மயில் பழனத்துள்ள சோலை களில் ஆலும். பொய்கையின் மடைத்தலையில் நீரோடும் வாய்க்காலில் நெய்தல் இடையறாது பூக்கும். வண்டுகள் நிறைந்திருக்கின்ற வயல்களில் வலியவாயுடைய வண்டிச்சக்கரங்கள் விரைவாகச் செல்லும்படி எருதுகள் சேற்றிலே துள்ளிச் செல்கின்ற வண்டிகளை ஓட்டுவோரின் ஓசையன்றிப் போரை அறியாத புதிய வருவாயுடைய நல்ல நாட்டின் அழகு, நீ கோபித்துப் பார்த்தலின் மன்றுகளுடன் அழிந்தன.

28 கோடை நீளுகையால் குன்றில் அருவி வறண்ட பெரும் வறட்சிக் காலத்தும் தலையிடத்தே தழைகளைச் சூடிக் கோபித்து உயர்ந்து கரை யிடத்தே பொருகின்ற பேராற்று நீரின் ஆரவாரமல்லது வெப்பம் இன்றாம். பசிய கண்ணுடைய யானைக் கூட்டம் மடிய ஊக்கத்துடன் வெட்டி வேகமுடைய குதிரையின் சவாரி செய்பவரும், இரத்தக் கறை ஏறிய காலில் வீரக்கழல் அணிந்தவருமாகிய வீரர் (போரின்மையால்) விரைவாக அம்பு தொடுக்கும் தொழிலை மறக்கும்படி காவலை மறந்தனர். இவ்வகையான விளைவுமுட்டுறாததும் துன்ப மில்லாதது மாகிய கரிடத்து ஆட்சிபுரிதலின் நீ செல்வமுடையை.

29 வளையணிந்த மகளிர் அவலிடிக்கும் உலக்கையை வாழை மீது சாத்தி வள்ளைக் கொடி கொய்வதும், கதிர்க் கனத்தால் வளைந்து நெல் விளை கின்றதுமாகிய வயலிடத்துப் பரந்திருக்கும் நீண்டகாலுடைய நாரை வெருண்டோடும்படி, கொழுவிய அயிரை மீனை உண்ணுதற்கு மரங் களிற் கூட்டமாயிருக்கும் கொக்குகளை, வெள்ளிய வளையணிந்த கை யுடைய மகளிர் ஒப்புவர்; இடையறாதவிழாவில் வலிக்கட்டு இளக்காத யாழுடைய கூத்தர், மன்றத்தே சென்று மருங்குகளிற் பண்ணமைத்துப் பாடும் அகன்ற இடமுடைய நாடுகள், பல வகைக் கூலங்களோடு பரிசை களை மண்ணினால் மறைக்கும் மாக்கள் அஞ்சவும் அலறவும் பொருது காவலுடைய மதிலைக் கடக்கும் பல யானையுடைய குட்டுவனது வரம்பில்லாத தானை பரத்தலினால் அழகு கெட்டு கண்டார்க்குப் பரிசிலாக அளிக்கும் தன்மை உடையவாயின.

நாடுகள் ஆயின என்று வினைமுடிவு செய்க.

30 பெரிய துறையின் கரையிடத்து பூங்கொத்துகள் செறிந்த புலிக் கொன்றை வளரும். மணிக்கலம் போன்ற நெய்தற் பூவுமிலையுஞ்செறிந்த கழி யிடத்தே உள்ள செழித்த சோலையின் கண்ணுள்ள புன்னையின் வெள்ளிய பூங் கொத்துகளினிடையே பட்சிகள் தங்கும். உயர்ந்த மணலுடைய கரையில் அடுப்பங் கொடியோடு மலையும், கடல் கொண்டுவந்த சங்கு திரையிலே துவண்ட வருத்தத்தாலே ஈனுகைக்கு மெய்வருந்திக் கதறும். (கரையில் நின்றோரில் வளை நரலக் கேட்டோர்) அம் முத்தெடுக்க வென்று வந்து முத்தையன்றி அதனோடு பவளத்தையும் எடுப்பர். இவ் வியல்பினதாகிய குளிர்ந்த கடற்கரைப் பக்கங்களும், காந்தள் மாலை யணிந்த கொலைவில் வேட்டுவர் சிவந்த கொம்புடைய ஆமானின் ஊனோடு காட்டுயானையின் வெண் கொம்பையும் அழகிய வீதிகள் தோறும் கள்ளின் விலையாகக் கொடுக்கும் குன்றினுச்சியிலுள்ள புன்புலங்களாகிய இடங்களும், விதைகள் அறுக்கின்ற காலத்துச் செய்யப் படும் பல அழகிய விழாக்களில், தேன்பாய்கின்ற மருத மரங்களைப் பிடுங்கிக்கொண்டு பெருகி மணற் கோட்டையைச் சூழ்ந்த வெண்டலைச் செம்புனலை அணைசெய்யும் விருப்பமுடைய கூட்டம் முழவொலிக் கின்ற மூதூரிடத்து விழாக்காணச் செல்லும் செழிய பல மருத நிலத்து ஊர்களும், தினைப்புனம் உழுவோர் வரகுமீது இருத்திய குழந்தைகள் மிருதுவாகிய தினைமாவைப்பகுத்துண்ணும் புன்புலம் பொருந்திய அழகிய ஊர்களும், பல பூக்கள் மண்டிய காட்டின் அச்சம் நீங்கி செவ்வரக்குப் போன்ற நுண்ணிய மணற் கோடுகளைக் கழங்காடு மிடமாகக்கொண்ட ஒள்ளிய ஆபரணங்களணிந்த மகளிர், கழலணிந்த தலைவரோடுகூடிச் செல்லும் கடல் சார்ந்த இடங்களும் பிறவும் ஆகிய நிலத்திலுள்ள முரசுடைய வேந்தரும்வேளிரும் வஞ்சினங்கூறுவர்;

கூறிக் கடலும் காடுமாகிய அரணுடையோர் அஞ்சும்படி, வலிமிகுந்த கடியஒலி விசும்படைந்து அதிருமாறு கடுஞ்சினத்தோடு முழங்கும் மந்திரங்கூற, கரிய கண்ணுடைய பேய்கள் கையுதறி நடுங்க, முரசுறை கடவுளைப் பூசிக்கும் உயர்ந்தோன் ஏந்திய, எறும்பும் உண்ணாத ஆச்சரியமுடைய இரத்தங் கலந்த பயங்கரமான பலியை கரிய கண்ணுடைய காக்கையும் பருந்தும் இருந்து உண்ணும், (பருந்தும் காக்கையும் உண்ணல் போரில் வெற்றி உண்டாதற்குரிய நிமித்தம்). (இவ்வாறு வேளிரும் பிறரும் நிமித்தம் பாராநிற்க) குன்றாத வலியும் ஒள்ளியவீரம் பொறித்த கழற்காலும் (பகைவரின்) பெரிய போரைச்சிதைத்த வெற்றி வீரரின் இடியேறுபோன்று நிலத்தை அதிர்க்கும் குரலின் தன்மையோடு, கடுஞ் சினவேந்தே! நின்தழங்குதலுடைய முரசு (வீரர் யுத்தத்துக்குப் புறப்படும் பொருட்டு) பெருஞ்சோறளித்தற்கு முழக்கப்பட்டது.

பதிகம்
இமையவரம்பன் தம்பி உம்பற்காட்டில் தன்கோல் நிறுவி உள்மதிலைக் கைக்கொண்டு பகற்காலத்துத் தீவேட்டு, தனக்குலமுதியோரை மதியோ டொத் தவதண்ணளியோடு தழுவிக் கொண்டு அவர்க்குத் தன்னாட்டைப் பகுத்துக்கொடுத்து, கரியகண்ணுடைய யானைகளை வரிசையாக நீட்டி (மேற்கும் கிழக்குமாகிய) இருகடல் நீரையும் ஒருபகலில் ஆடி அயிரை மலையிலுள்ள தற்குல தெய்வமாகிய கொற்றவையைப்பரவி ஆற்றல் சிறந்த வலிமையோடு அகன்ற புகழும் உயர்ந்த கேள்வியுமுடைய நெடும் பாரதாயனார் தனக்குமுன்னே துறந்து காடுபோக அது கண்டு தானும் துறவுபூண்டு காட்டிலேபோன பல்யானைச் செல்கெழுகுட்டு வனைப் பாலைக் கௌதமனார் பத்துப்பாட்டுப் பாடினார்.

பாடிப்பெற்ற பரிசில்: நீர் வேண்டியது கேண்மின் என யானும், என் பார்ப்ப னியும் சுவர்க்கம் புகல்வேண்டும்’ என பார்ப்பாரிற் பெரியாரைக்கேட்டு ஒன்பது பெருவேள்வி வேட்பிக்கப் பத்தாம் பெருவேள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியையம் காணாராயினார்.

இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன் இருபத்தை யாண்டு வீற்றிருந்தான்.

நான்காம் பத்து
31 குன்றைத் தலையிற் சுமந்து கூட்டமாகிய கடலை ஆடையாக உடுத்த அழகிய உலகில் மக்கள் ஒருவரைப் போலப் பலரும் கையைத் தலையிற் கூப்பி ஆரவாரிக்கும் பேரொலி, திசைகளின் நாலு வேறுவகைப்பட்ட நடுவிடங்களிலும் ஒருங்கு எழுந்து ஒலிக்கும். தெளிந்த ஓசையுடைய மணிகளை அடிப்போர் (தீர்த்தம் ஆடுவோர் அது ஆடுதற்கு இது முகுத்தமென்று அறிந்து வருதற் பொருட்டு) அம்மணியை ஒலித்து ஆரவாரிப்பர். உண்ணாது இருந்த விரதிகள், குளிர்ந்த துறையில் மூழ்கி, வண்டூதுகின்ற பொலிந்ததாரும் சீதேவியாரும் பொருந்திய மார்பில் கண்ணை ஒத்த வட்டமாகிய நாறுகின்ற துளப மாலை அணிந்த திருமாலை வணங்கி, (வரம்பெற்று) நெஞ்சு மலிந்த உவகையராய்த் தாம் தாம் துஞ்சுபதிகளிலே பெயரும்படி இருள் அகல விரிந்து, மலை உச்சியில் கூடுகின்ற உவாமதியம் விளங்கித் தோன்றும்.

நீ அம்மதியம் வெளிப்பட்டாற் போலத் தோன்றி, நொந்த குடிகளின் துன்பத்தைப் போக்கிப் பண்ணழிந்து கிடந்த முரசின் பண்ணழிவுதீர்த்தாய். நின்கீழ் வாழ்வாரைக் காத்தற் பொருட்டு அவர்க்கு அவர்கடனெல்லாம் செய்து முடித்த உனது அழகிய மார்பு, வடக்கு தெற்காகக் குறுக்கே கிடக்கும் தண்ணிய துளிகளைப் பெய்கின்ற மேகத்தைத் தலையில் உடைய பனி ஒழுகும் மலையை ஒத்தது. கடவுள் அஞ்சி என்னும் குடியில் வந்த சிற்றரசன்வானத்தில் அமைத்த தூங் கெயிலின் கதவிற்குக் காவலாக இட்ட கணையமரம்போல் உயர்ந்த பெரிய அழகிய முழவுத் தோளுடையை; வெண்டிரையுடைய கடல் சூழ்ந்த உலகில் (தூங்கெயில் அழித்து வளவிய புகழ்நாட்டிய செல்வமுடைய வண்டனை ஒத்தனை. வண்டு மொய்க்கும் தழைத்த கூந்தலும், அறஞ்சிறந்த கற்பும், குழையை விளக்கும் ஒள்ளிய நுதலும், பொன்னாபரணங்களை விளக்கும் சுழித்த உந்தியும் உடைய வளும், தெய்வப் பெண்களுட் சிறந்த அருந்ததி அன்னளுமாவள் நின்தேவி. மண் அதிர்ந்து இரங்க ஒலிக்கும் வெற்றி முரசை முழக்கி வேல மரங்கள் சூழ்ந்த கோட்டையிற்றங்கிய, மாலையும், பொற்கழலுமணிந்த வலிய தாளுமுடைய, அடங்காத பகைவர் வலிகெடும்படி பொருத நின்படைத் தலைவர் புறங்கொடுத்தவர்களை (வேல் முதலியவற்றால்) எறியார். நின்தானை நட்பினருக்கு அரணமும் பகைவருக்கு அச்சமு மாயுள்ளது. போர் மேம் பாட்டினையுடைய வேந்தே உனது மாட்சிகள் பலவாகும்.

32 மிகுந்த போர் செய்யும் குரிசில்! முத்துக்கொம்புடைய இளம் யானைகள் பிளிற மிக எழுகின்ற வேகத்தையுடைய காலாட்படை, ஒடுங்கிய இடங் களிற்சென்று கோபம்தணியவும் பெரிய கிளைமகிழவும் பகைவரை அழித்தது. அதனால் பலதிசைகளிலும் விளங்குகின்ற புகழால் நீ மாட்சி எய்தினை. உனது பரந்த செல்வத்தினையும், தாழ்ந்த குடிகளைத் திருத்திய வலிமிகுந்த வெற்றியையும் எல்லாம் எண்ணின், (எண்ணுதற்குபயோகிக் கின்ற) கழங்குகளின் பக்கங்கள் தேயும். கொலையுடைய போரை விரும்பும் வேந்தே! நின் பல் குணத்திலும் ஒன்றைக் கொன்னே யான் வியந்தேன். அப்பலவற்றுள்ளும் வியப்பான குணம் யாதெனில்: கொடிய வலி கெட்டு அஞ்சி அழியும்படி பெரிய மலை ஒத்த யானை யொடு வயல்களை அழித்து, நீண்ட காலை உடைய நாரை இருந்து இரை கவரும் (கதிரின் கனத்தால்) வளைந்த மூங்கிலை ஒத்த நெல் பொய்யாது விளையும் கழனி களுடைய நாட்டை நீவென்று, பகைவரை அகப் படுத்திக்கொண்டு பகை வேண்டாமென்று ஒழிந்திருப்பவர் மீதும் வெகுண்டிருத்தலே தொழிலாக வுடைய பகைவர் இடத்தாயினும் நீ சினவாதொழிகின்ற பொறையேயாம்.

33 கொடித் தேருடைய வேந்தே! இது பெரிதும் இறும்பூதாயிருந்தது; யாதெனில் தெள்ளிய மணிகட்டியதும் வலிய காலுடையதுமாகிய (பட்டத்து) யானையைக் காவன் மரத்திற் கட்டினை. நீண்ட நீருடைய துறை கலங்கப்படிந்து தங்கிய, கரையுடைய கடல் போன்ற அணிவகுப்புடைய பெரும்படை வயல்கள் கெடும்படி நாட்டுள் நெரிந்து சென்றது. அப்படை, வாள் மதிலாகவும், வேல் காவற்காடாகவும், உயர்த்திய சிவந்த அல குடைய கூர்வேற் கருவிகள் வளைந்த அகழாகவும், வின்னாண் உமிழும் அம்பு கூரிய முள்ளாகவும், ஆர்எயில் போன்றது. ஆரெயில் போன்ற நின்படை திரண்டு போர் செய்யக் கருதின் போரவெதிர்த்த மன்னர் போரமாட்டாது நின்னை நீங்குவர். இஃதே அதுவாம்.

34 ஒப்பற்ற பெரிய வேந்தே! நீண்ட கொடியுடைய தேரிலும், நெற்றிப் பட்டம் விளங்கும் புகர் நெற்றியிற் பொன்னணிந்த யானையின் வலிய கழுத் திலும், நிலையான நிலத்திலும் பொருந்திய கோபம் மாறாத வீரருடன் சிவந்த தலையாட்டமணிந்த குதிரையை யூர்ந்து செல்வை; சென்று புறங் கொடாத வீரரின்மாறுபாடு கெடமுரசு ஒலிக்கும் பெருங்களத்தே நெருங்கி ஆரவாரம் மிகவும் வேந்தர் படவும் எதிர் நின்று கொன்று வெற்றிபெறும் ஆற்றல் மிக்க குற்றந் தீர்த்த மைந்த! அவ்வாற்றலிடத்து வருங்குறைகளை நீயே பாதுகாத்தலால் குன்றாத வலியும் வீரம் பொறிந்த கழற்காலும் விரிந்த நூலாடையுமுடையவராகிய பகைவர் அஞ்சி நீங்குவர்.

35 குற்றந் தீர்ந்த வேந்தே! நின்படை அழிவுபடாமல் நீ ஒம்பு வினை செய்வை; பெரிய களிற்றி யானையின் பிரகாசிக்கின்ற பெரும் கொம் போடு நெடியதேரின் சில்லுத்தாக்கும் பெரிய களத்தே பெடையொடு கூடிய பருந்தின் சேவல்கள் கூட்டமாகப் புகுந்து (பிணங்களை) உண்ணும். உட்களத்தில் தலை வெட்டுண்டு எஞ்சி நின்ற கவந்தம் ஆடும். மாலைக் காலச் செக்கர்வானம் போன்ற உட்களத்தின் நடுவே பேய்கூத்தாடும். இவ்வாறு தான் வெல்லும் போரில் நீங்காத புது வருவாயினையுடைய வெற்றிப் பெருமைகள் உன்னிடத்தில் புகழும்படி யமைந்தன.

36 வலிய உள்ளத்தோடு புதிதாகப் பகைத்து வரும் போரை வெல்லுவை. பனை தறிக்கப்படும் தோப்பில் கையினால் ஆடிய பல துண்டுகளைப் போல யானைகள் (வெட்டுண்டு) மடிந்து கிடக்கும். இருபடைகளின் வாள்களும் தெரியாது மயங்குகின்ற முற்படைகளின் போரில் பட்ட மாவும் மக்களுமாகிய பிணங்களை (பேய்கள்) உண்ணும். அப்பேய்கள் பொறித்தது போன்ற புள்ளி உடைய கழுத்தும் புல்லிய புறமுமுடைய எருவைப் பெடையைப் புணர்ந்த சேவல் குடுமியுடைய புல்லுருவி என்னும் புள்ளுடன் இரையைக் கொண்டு பள்ளங்களிற் செல்லும். அச்சந்தரும் கூளிகள், நீண்ட இரைகள் பலவற்றைச் சுமந்து மேடுகளிலும் பள்ளங்களிலும் சென்று உண்டு மகிழ்ந்தாடும்; இரத்தமாகிய செந்நீர் ஓடும். இவ்வாறு நீ பல போர்களைச் செய்குவை. அதனால் உனது வலி கெடாதும் வளம் கேடுறாதும் இருந்தன. அதன் மேலும் இவற்றிற்கு அடியாகிய நின் போர் வளம் வாழ்வதாக.

37 வாழ்த்துவோர் நின் புகழ் கூறிவாழ்த்த பகைவர்வருந்த துன்பம் நல்குவை; நட்பினர் நுகர நல்ல ஆபரணங்களைச் சிதறுவை; இவ்வாறு அன்று விந்தடங்கிய குற்றந்தீர்ந்தசெம்மல்! வானளவு பரந்த நல்ல புகழ் உலகில் நிலைபெறத் தளர்ந்த குடிகளைச் செம்மைப்படுத்திய மென்மேலும் வலம் தருகின்ற வெற்றியுடையை. பெரிய பனைமாலையையும் வீரக்கழலையும் அணிந்து நிலைபெற்ற (பகைவர்) அரணைக்கடந்து அதில் வாழும் மறவரைப் பிடித்துக் கொள்வை; பின் பழைமையான நிலைமைச் சிறப்புடன் உனது நிழலில் வாழும் வீரர்களுக்குக் கொடுமை அறும்படி வைத்த பிறழாத கொள்கையுடைய இப்பண்புகளை நீ பெரிதுடையையாய் நின்றாய் ஆதலால் வெந்திறல் வேந்தே இவ்வுலகத்தோர் ஆக்கத்தின் பொருட்டு நின்செல்வமும் வாழ்நாளும் வாழ்வதாக.

38 பலவளம் மயங்கிய நாடு திருத்தியவனும், கழங் காய்க்கண்ணியையும் நார்முடியையு முடையவனுமாகிய சேர! மதிலின் முன்புறம் சிதையும்படி காவற் கபாடத்தை அழித்தற்கு ஏவுதலினால் காவலைக்கடக்கும் கிம்புரி யிறுக்கிய கொம்புடைய யானைகளும், சிவந்தபிடரி மயிருடைய வலிய குதிரைகளும், வள்ளன்மையும், பெரிய வீரக்கழலும் மாலையுமுடைய சேரலர் வேந்தே! பரிசிலர் வாழ்வே! பாணர் நாளவை! வாணுதல் கணவ! மன்னர் ஏறே! மாசறவிளங்கும் வடுஆழ்ந்த மார்புடைய வசையில்லாத செல்வ! வானவரம்ப! செல்வராகிய உலகத்தார் பலருக்கும் அரசே! இனிய பண்டங்களைப் பெறுமிடத்து அவற்றைத் தனித்தனி நுகர்வேம் தருக என விரும்பாத வருத்த மில்லாத நெஞ்சோடு பகுத்து உண்ணும் உணவைத் திரட்டிய ஆண்மையானே பிறர்க்கெனவாழ்வாயாக. உலகத்திலுள்ள செல்வர்கள் எல்லாருள்ளும் நின் நல்லிசை மிகும்.

39 வெவ்விய தும்பைசூடி வெகுண்ட வலிய பகைவரின் அச்சந்தரும் முனை அலற எடுத்துக் கொட்டப்படுவதும் சேனையைப் போருக்கு ஏவுதலை யுடையதுமாகிய முரசு முழங்கும். ஆர்ப்போடு செரு மிகுந்து காவலுடைய அரண்கெடும்படிசெல்லும் காலனை ஒத்த அடங்காத, கடுஞ்சின முன்ப! பொறித்ததுபோலும் புள்ளியுடைய கழுத்தும் புல்லிய புறமுமுடைய புறாக்கூட்டங்கள் கண்டு அஞ்சும், வாடிய வேல மரத்தின் உலர்ந்த கொம்பிற் சிலந்திபின்னிய அசைகின்ற வலைபோன்ற நூலாலன்றி மயிரினால் நெய்யப்பட்ட போர்வையில் அழகிய முத்துக்கள் தூக்கிப் பிரகாசிக்கின்ற மணிகளை விளிம்பிலே அழுத்தி பொற்ற கடுவைத்துச் செய்த நார் முடியுடைய சேரல்! நீ பிறர்க்கென வாழ்கின்றமையின் நின்படையினரும் நின் போர்ப்புகழ் கூறி எனக்கு இல்லையென மறார்.

இன்னிசை ஒலிக்கும் முரசைக் குறுந்தடி ஓச்சி முழக்கி ஆரவாரித்துத் தோளிற் புண்ணுடைய (மாற்றார்) வீரர் போர்முனையில் இறக்கக் கொட்டைக் கரந்தை வளரும் வயல்களில் சென்று தங்கும் நின்தானை; இனிப்பிறர் யார் களைநர்; பெரும! நின்றானை படைத் தலைவரோடு ஊர் முகத்தழியா தொழிக. எயிலின் கண்ணுள்ள வீரர் ஆரவாரமற்று அடங்க வும் பகைவர் அழியவும் வெள்ளிய இதழ் நிரைத்த பூச்சூடி அரவஞ் செய்து எழுந்த வேந்தரது அரிய வலியைக் கெடுத்து தன் படையை அவ் வேந்தர் நாட்டிற் பரப்பி வெற்றி கொள்வதற்குத் தூக்கிய கையுடையை;

பொன்னாலாய கண்ணியும் பொற் றேருமுடைய நன்னனது சுடர்விடும் வாகையை வெட்டியதார்ப் படை மிகுந்த வலியுடைய நார் முடிச் சேரல்! புல்லியதாளுடைய உன்னம், உன்னோடு போர் நினைவார்க்கு உலறிக் காட்ட, வெறிமிகும்படி பண்டங்கள் சேர்ந்த குளிர்ந்த கள்ளை (இரவ லர்க்கு) வரையாது கொடுத்தற்கு உண்ணுகின்ற, சுனை ஓடுகின்ற நேரி மலையுடையவனே! இளையர் களிப்பு மிகுந்து மழலைச்சொற்களைக் கூறி மகிழ்ச்சி மிகுந்தவர்களாய் பெரிய களத்தை வாழ்த்துவர்; மெல்லிய சாயலுடைய மகளிர் மலர்ந்த வேங்கையைப்போல் ஆபரணங்களை அணிந்து அழகிற் சிறந்து விளங்குவர்; பாணர் பசிய பூச்சூடுவர்; பூண் சேர்த்து நின்ற யானைகளைத் தோட்டி நீவாது பாகர் ஏவுதலினால் எழுந்த கோபத் தீ காடு உடைய நாடு தெரியும்படி சுடர்விடும். இவ்வாறு வலிய தொழில்உடைய யானைகள் பலவற்றைத் தருவன். ஆதலின் மேகம் போன்ற இருண்ட கூந்தலுடைய விறலி! நீ செல்வாயாக.

நான்காம் பதிகம்
நீங்காத செல்வமுடைய சேரலாதற்கு வேளாவிக் கோமான்(மகள்)பதுமன் தேவி யீன்ற மகன், முனை நடுங்கப் பல் புகழ் வளர்த்து ஊழின் ஆகிய உயர் பெருஞ்சிறப்பினால் பூழி நாட்டைப் படையெடுத்து வென்றான். வட்டமாகிய பூவுடைய கடம்பு நிற்கும் பெருவாயில் நகரிலுள்ள நன்னனை நிலையான போரில் வலி கெடுத்தான். அவனது பொன்னை ஒத்த வாகையை வெட்டி இரத்தவெள்ளம் யானையை இழுத்துச் செல்ல பல போர் செய்து கள வேள்வி வேட்டு நலிவெய்திய குடிகளைத் திருத்தி னான். இவ்வாறு செல்வமிகுந்த வெற்றியுடைய களங்காய்க் கண்ணிநார் முடிச் சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பத்துப் பாட்டுப் பாடினார். பாடிப்பெற்ற பரிசில்: நாற்பது நூறாயிரம் பொன் ஒருங்கு கொடுத்துத் தான் ஆள்வதிற் பாகங் கொடுத்தான், அக்கோ களங்காய்க்கண்ணிநார் முடிச்சேரல் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.

ஐந்தாம் பத்து
41 சேர்த்து முறுக்கப் பெற்றதும் ஓசை முதிர்ந்ததுமாகிய வளைந்த நல்ல யாழை இளையர்எடுத்துச் செல்வர். பண்ணமைந்த முழவும் ஒரு கட்பறை யும் மூக்கிற்றண்டைக் கணுவறுத்துச் செய்த (நெடுவங்கியமும்) பிறவு மாகிய ஆடற்றுறைக்கு வேண்டுவ பலவற்றையும் செறித்துக் கட்டிய பையைக் காவிச் செல்லும் (பாடற்றுறையிற்) கைதேர்ந்த இளையர் கடவுளைத் துதிப்பர். வீரமுடையகளிறு, மலையில் ஓங்கி வளர்ந்த வேங்கையின் சுடர் விடும்பூவுடைய கிளையை முறித்துப் பெரிய தலையிற் சூடும்; சூடி எறி படைகளாற் (பொரும்) மறவர் வலிய தண்டு ஏந்திப் போருக்கு எதிர்த்து (ஆர்ப்பது) போல் சுரபுன்னை நெருங்கிய காடு எதிரொலிக்கும்படி பிளிறும். மழை பெய்யாமையால் மலையிலுள்ள மூங்கில் வாடி நிற்கும். இவ்வகையான மலைகள் ஒன்றிரண்டல்ல (பல) கடந்து திண்ணிய தேருடைய வசையில்லாத பெருந்தகையைக் காணுதற்கு வந்தேன். ஒருவர் போலப் பலரும் வஞ்சினங் கூறி மாற்றார் மண்டலங்களைக் கொண்டு முடித்த வீரர், முரசு முழங்கும் போரில் எதிர் நின்று அரசரைக் கொன்று (ஆறாத) சீற்றமிகுதியால் பகைவரின் கரிய தலையை உலக்கையால் மிளகு இடிப்பதுபோல் இடித்துக்கொன்று இடையறாது ஆரவாரம் எழுப்புவர்; இவ்வாறு ஆரவாரம் எழுப்பும் கடற்பரப்பில் (பகைவரை) முறிய அடித்து, காவலுடைய அகன்ற பரப்பில் வெற்றிமிகும் புகழ் ஒருங்கமைய காற்றால் சிதறும் துளிகள் விடுபடும் திரைகளுடைய பனிக்கடலுள், கடிய கதியுடையதும் பிடரி மயிருடையதுமாகிய வெண் ணிறக் குதிரையை ஊர்ந்த நின் தாள் (ஊர்தலாகிய) வருத்தம் பொறுக்குமோ?

42 மீன் கவரும் மீன்கொத்திப் புள் குளிர்ந்த கயத்தில் மூழ்கி எழும்போது அதன் வாய் அலகை ஒத்த நெடு வெள்ளூசியாற்றைத்துத் தழும்பு பரந்தமார்பில் அம்பேறிய அடையாளங்கள் பொருந்திய தம்மோடொத்த வீரரோடல்லது வேறு போர் குறித்தார் தம்மோடு தும்பை சூடாது பொரும் மாட்சியையும், பெரிய பனை மாலையையும் பெரிய வீரக் கழலையு முடைய பெரும! நன்னுதல் கணவ! தலைமையுடைய யானையைக் கொல்லும் குட்டுவ! கூத்தர்களது பெருங்கிளை வாழவலிய நல்ல போரை வென்று, 1இஞ்சியும் பூவும் கலந்து தொடுத்த மாலையைப் பூட்டிச் சாந்தும் புறத்தே தெறித்த (தன் களிப்பு மிகுதியால் தன்னை உண்டார் உடல் போல்) இருக்கையிலிருந்து ஆடும் கட்குடத்திருந்து தீஞ்சுவை விளைந்த மகிழ்ச்சி தரும் மணி நிறக்கட்டெளிவை (உனக்கெனப்) பாதுகாத்து வையாது சுரப்பை. சுரந்து நீ கொடுத்த ஆடுகின்ற அழகிய தலையாட்ட முடைய குதிரைகளை எண்ணின், உலகம் மருள அரசரை எதிர் நின்று பொருது கொன்று வெல்லுதற் பொருட்டு, நின்தேரைச் சுற்றி மானமுடைய வீரரோடு அரசர் துதிக்கப் பிரகாசிக்கின்ற மருப்புடைய களிறு. ஊருதலால் உலகை மூடிய தெளிந்த நீருடைய மிகுந்த பெரிய திரைஉடைய கடலின் வெள்ளிய தலையுடைய துளிகள் சிதறிக் குளிர்ந்து வரும் நீரிற் பலவாகும்.

43 உரல்போற் பெரியகாலும் பிரகாசிக்கும் கொம்பும் போர் செய்யும் கையு முடைய மதயானைபுகின் அதனைச் சூழும் பிடிகளை, கவரிபோலும் கரியகூந்தலை முடிந்த கொண்டையும், ஊசலாடும் அழகிய ஆபரணங் களும் பூண்ட மகளிர் 1எண்ணின் அவை எண்ணுக்கடங்கா, எண்ணுக் கடங்காத பிடிகளுடையதும் கடவுளுக்கு இருப்பிடமாகியதுமாகிய உயர்ந்த பாறைகளுடைய நெடிய இமயமலை வடக்கும் குமரிமுனை தெற்கும் ஆக இடை இட்ட நிலத்திலுள்ள அரசரின் பலநாடுகளை, முரசுமுழங்கும் பெரிய போர்க்களம் ஆர்ப்பெழப் பழைய கவினழித்த, சமரிடத்துக் கொலைத்தொழில் புரியும் தானையுடைய குட்டுவ! பெரிய மூங்கில் வாடும்படி பெரியமழை ஒழிப்பவும், மலைகள் மிகவறளவும், சூரிய வெப்பம் மிகுதலால் வறட்சியற்ற வற்கடகாலத்தும் (நீர்மிகுதியால்) செல்லற்கரிய பேராற்று நெடுங்கரையை, அதிரும் முழக்கம் முழங்கிப் பெயல் சிறந்து ஆரவாரமுடையவானம் சொரிந்த நீர், சிறப்புடைய ஏரைப் பூட்டுவோர் கொன்றைமலையும்படி உடைக்கும். வானம்சொரிந்த நீர் பேராற்று நெடுங்கரையை உடைப்பதுபோல் (உனக்கெனப்) பாதுகாத்து வையாது அடைந்தவர்கள் உண்ணும்படி கொடுத்து,

நட்பினர்மகிழ ஆபரணங்களை மிகவும், நல்கி, ‘கின்னரப்புள்ளின் இசை எழுகின்ற சிறகினைத் தோற்பித்த இனிய குரற்பாடும் விறலியர் பல பிடிகளைப் பெறுக’ ‘மெல்லிய வாகையின் முடிவில் உழிஞை சூடும் வெற்றியுடைய அச்சம் விளைக்கும் சிறந்த கொள்ளையிடும் மறவர் கொல்யானை பெறுக’என்று கூறிப்பகை மேற்கொள்வை. ஆதலின் பகைவரும் தாங்காது மந்தகதியுடைய ஆடற்கேற்ற முழவை முழக்கிப் புகழ்ந்த தொலையாத கல்வியுடைய கள்ளோடு உண்ணற்கு நிணம் சுடும்புகை யோடு நெருப்புச் சினம் நீங்காது. நிரம்புதல் ஒழியாது கோக்காலியில் நிறைந்து நெடிது நேரம் இராதகுடத்தில் கூத்தர் உண்ணுந்தோறும் நிறைக் கப்படும் கள்ளின் கொடையுடைய வேந்தே! நின் ஆரவார மிகுதியால் நின் செல்வத்தின் பெருமையையுங் கண்டேன்.

44 மெல்லிய உழிஞைக்கொடி சூடிய தான் வெல்லும் போருடைய 1அறுகை, தூரத்தே இருந்தானாயினும் அவன் தான் எனக்கு நட்பு எனச் சொன்னாய்; சொல்லி அவன் இடம் விட்டு ஓடி மறையும் துன்பத்தினின்றும் நீங்கும்படி களையாத போரிடத்து கொலைநடந்தாற்போன்ற (அறுகையை முற்றுகை இட்ட 2மோகூர் மன்னனின் அரண்களைக் கடந்து முரசைக் கவர்ந்து, வஞ்சினம் ஒழித்து, வேம்பை வெட்டி முரசுசெய்யச் சிறுதுண்டு களாடி ஏற்றிய, பலயானைகளை அவன் மகளிரின் மயிரால் முறுக்கிய கயிற்றால் பூட்டிய வண்டியைச் செலுத்தி வானத்தைத் தடவும் வெற்றிக் கொடி தேர்மீது அசைய நிலம் பெயர்ந்தாற் போலும் ஆரவாரத்தோடு போர் வென்றனை. வென்று (அரிதிற்) பெற்ற பெரும் பொருள்களாயினும் அவற்றை உனக்கெனப் பாதுகாத்து வையாது (பரிசிலாளர்க்கு) வீசி நீயணிந்த ஆபரணங்களையும் கொடுத்தலோடு அமையாது உன் அழகையும் களைவேமென்று அதனைக் களைய அறியாத கசடில்லாத நெஞ்சமும் ஆடுநடையுமுடைய தலைவ! எல்லா வீரரும் சொல்லிப் புகழ்தற்குக் காரணமாகிய நின் திருமேனியை பாடுமகளிர் காண்பாராக. கொழுவிய பசிய இறைச்சித்துணியைப் போட்ட இடத்தைமறந்த கொண்டையுடைய கூகையை அதன் பெடையாகிய குரால் கவற்றும்3 இடுகாட்டில், முரசுடைய அரசர் பலரை ஒட்டி கடல் சூழ்ந்த உலகை ஆண்டு (நின்னோடு பொருது) இனிது மாண்ட மன்னரை இட்டுப் புதைத்த 4வன்னிமரமுடைய மன்றத்தை (ஆடுமகளிர்) காணாதொழிவாராக.

45 பொன்னிறப் பூவுடைய தும்பைபோன்ற பொறிகளுடைய அம்பறாத் தூணியில் பாம்பு புற்றில் அடங்கியிருப்பதுபோன்று ஒடுங்கியிருக்கும் அம்பும், துவளுகின்ற வில்லும் துவளாத நெஞ்சும், களிற்றை எறிந்து முரிந்த கவர்பட்டவேலுமுடைய வீரர் நெருங்கிய அகன்ற இடத்தின் நடுவே வீற்றிருக்கும் ஏழுமுடியாற் செய்த ஆரம் பூண்டசேரல்! பாதலத்தே செல்லும் அகழிகளையும் பல மதில்களையுங் கடந்து சென்று உட்புறங் களை அழித்து உண்டநாட்டின் நடுவேயுள்ள பிணங்கள் நிறைந்த கோட் டையின் மதிற்கதவங்காக்கும் திரண்டகணையமரம் போற்றிண்ணிய, நிலத்தைக்கவர எழுகின்றதோளை உயர ஓச்சித்துணங்கையாடுவை. முகில் கொள்ளக் குறைவுபடாததும் (ஆற்று) நீர்புக நிறையாததும் காற்று அடித்தலால் முழங்குகின்ற திரை எழுகின்றதும் நிறைந்த மேகம் பிரகாசிக்கின்றதுமாகிய குளிர்ந்த கடலில், பிரகாசிக்கின்ற மணி போல மின்னும் வேல் எறிந்து (கடலிற் புகுந்து ஒரு வினை செய்தற்கு அரிதென்ப தனை) மறுத்தோர் யாருளர். முள்வேலி இடுதல் அறியாத பாசறையுடைய பகைவர் வில்லின் விசையை அடக்கிய வலிய (அம்புபடின் தளராது பிறர்க்குப் பாதுகாப்பாகும்) வெண்மையாகிய (எருமைத்) தோற்கேடகம் போன்ற படையுடைய மன்னர் நின்முன்னுமில்லை (பின்னுமில்லை).

46 ஆபரணங்கள் அணிந்தோரும், குழை அணிந்தொரும் பெரிய தண்ணிய மாலை சூடினோரும், சுடர்விடும் பிரகாசம் பொருந்திய வளையணிந்த முன்கையினரும், (பிறஒளிகளிலும் மேம்பட்ட ஒளிவிடும்) திருமணி இலங்குமார்பினரும், வண்டு படுகூந்தலால் முடிபுனையுனருமாகிய மகளிர் நரம்பு அமைந்த பெரிய பாலை யாழைத்திருத்தி உயர்ந்த முறைமையின் உழிஞைப் பண்பாடுவர். அதனால் இவர்களைப் (பரிசில் கொடுத்துப்) பாதுகாப்போர்க்கு மகிழ்ச்சி சுரக்கும். பகைவரோடு பொருங் களத்தில் தேர் செல்வதற்கு அரிதாக படைகுறுக்கிட்டுநிற்கும் அரிய இடங்கள் பலவற்றிலும் செல்லும் ஒலி செய்யும் (தேர்) உருளைகள் செல்லு கின்ற வேகத்தில் யானைப்போருக்கு அஞ்சி ஓடி மடிந்தோருடைய எண்ணிறந்த தலை நொறுங்கப்பலபோர் வென்றவனும், கொல்லுகின்ற களிற்றி யானைகளையுடையவனும், ஒலிக்கின்ற கடல் கலங்கவேலிட்டு, உடைகின்ற திரைகளுடைய கடற்பரப்பில் வாழ்வோர்க்கு அரணாகிய கடலின்வலி யழித்த வெற்றிப் புகழுடையவனுமாகிய குட்டுவனைப் பாடிக் கண்டோர் செல்குவமென்னார் (நிற்கவெனக்கருதுவர்).

47 குட்டுவன் வென்று (செல்வம்) நிறைந்தான்; வெல்லுந்தோறும் பரிசிலர் களிறு பெற்று (செல்வத்தால்) நிரம்பினர். மலைமீது பாயும் அருவிபோல் அசையும் வீதியிடத்துள்ள மாடத்து, நெய்கவர்ந்து எரியும் திரிக்குழா யுடைய கால் விளக்கில் பெரிய சுடர் நின்றெரிய, ஆடல்பாடலுக்கேற்ப நூல்களிற் சொல்லப்பட்ட அழகு நிரம்பிய விறலியர் ஆடும் பழைய நகரின் எல்லைக்குள் அவன் உரை நிறைவுடையது.

48 பசிய பொற்றாமரை பாணர்க்குச் சூட்டியும், ஒள்ளிய நெற்றியுடைய விறலியர்க்கு மணிவடம் பூட்டியும், கெடாத பல புகழை நாட்டியவனும், நீரிற்புகுந்து கடலோடு பயின்றவனுமாகிய குளிர்ந்த துறையுடைய பரதவ! கடலிடத்துப் போர்செய்து அரிதிற்பெற்ற பொருளை, மனங்கொள்ளாப் பாடலையுடையதரம் போதாதார்க்கும் எளிதாகக் கொடுக்கும் பேதை இவனென இழித்துக் கூறற்கேற்பக், கைவல் இளையர் அடைவே தத்தம் கையைச் சுட்டி நிரைக்கும்படி, இரவலரிடத்து வணங்கிய மென்மையை யும், பகைவரை (வணங்காத) ஆண்மையையும், பகைப்புலத்து ஒலியுடன் எரிகின்ற நெருப்புச் சுவாலித்தலின், பெரிதும் இதழ் அழகு அழிந்த மாலையோடு சாந்து புலர்ந்த பல பொறிகளையுமுடைய மார்ப! நின்புகழ், நின்மலையிற் பிறந்து நின்கடலில் நிறையும் ஆறு மலியும் புனலில் இனிதாகக் கலக்கின்ற இனிய புது நீரில், விழாக்காலத்தே வேனிற்காலத்து மனையில் வைகாது பொழில்களிலே வதியும் பெரிய செல்வம், அழ குடைய இல் வாழ்க்கையில் மேலான சுற்றத்தோடு உண்டு1 இனிது நுகரும் புனலாடற்கு வந்ததிரள் தங்கும் காஞ்சிமரங்களுடைய பெருந்துறை மணலிலும் பலவாக வாழ்வதாக.

புகழ், நீரில் புனலாடற்கு வந்த திரள்தங்கும் துறை மணலிலும் பலவாக வாழ்வதாக என வினை முடிவு செய்க.

49 களிறு பரந்து செல்லவும், கதியுடைய குதிரையை வீரர் வேண்டியளவிற் செலுத்தவும், பிரகாசிக்கின்ற கொடியசையும் தேர் சுழன்று திரியவும், மாற்றார் படையில் வகுத்து நிறுத்தின கைகளைச் சென்று கவரும் கடிய தூசிப்படையும், தாம் வெல்கின்ற போரையும் உடையராகிய வேந்த ரும் வேளிரும் ஒருவர் போல பலரும் வஞ்சினங் கூறி (மோகூருக்குத் துணை யாவர்). அங்ஙனம் பெற்ற வலியாகிய செல்வத்தாற் செருக்கி மொய்த்து வரும் மோகூரின் வெற்றிதரும் படைத்திரள் நிலைகுலையும் படி நெருங்கி இரத்தந் தொட்ட2 சிவந்த கையுடைய மறவரின் செங்குருதி, மழைக்கால வெள்ளம்போல நிலத்திற் பரந்து செல்லவும், படுபிணங்கள் குவியும்படி பல இடங்களைப் பாழ்செய்து கொடிய கண்ணுடைய முர சொலிக்கவும், செல்வம் அறும்படி கொள்ளை அடித்தும், வாழுநர் பலர் இறக்கவும், கரிய வேம்பறுத்த பெரிய சினமுடைய குட்டுவனைக்கண்டு வருதற்கு யாம் செல்கின்றோம். அசைகின்ற கூந்தலும் ஒள்ளிய சாயலு முடைய விறலியீர்! நீயிரும் வம்மின், யாமும் செல்வேம். இசைப்பாட்டில் வல்ல வாழ்க்கையுடைய நும் சுற்றம் இனிது உண்ணும்.

50 பெரிய மலையிடத்து முழக்கமென்று மான்கூட்டம் அஞ்சும்படி மிக உறைந்த ஆலாங்கட்டி காற்றோடு கலந்து சிதறுதலால், கரும்பு வளரும் கழனியுடைய நாடுகள் செல்வம் பொழியும். (இவ்வகைச்) சிறப்பமைந்த உலகைக்காத்து சிவந்த கிழக்குத் திசையாகப் பாயும் காவிரி, அன்றியும் பூமியிற் பரக்கும் ஆன்பொருநை, குடவனாறு ஆகியமூன்றுஞ் சேரக் கூடிய கூட்டம் அனையை. பெரும! கொல்களிறாகிய வலிய வில் (உமிழும் அம்புகளாகிய) நீர்த்துளியைச் சிந்த, பெரியபழைய உலகில் வேலாகிய மீன் பிரகாசிக்க, பரந்த பணையாகிய முழவோசையைக் கேட்ட (தம்பகையை வெருவி, உன்னுடன் நட்பாகிய) வேந்தர்க்கு அஞ்சத்தக்க புனலாகிய தார்ப்படை அரணாகும். மலையிடத்தவும், கடலிடத்தவும் பிற இடத்தவுமாகிய அரண்அமைந்த போரைக்கடந்து, கோபித்த வீரர் மலிந்த பக்கத்தே உள்ள நாட்டை அகப்படுத்தலால், நல்ல புகழமைந்த அகன்ற இடத்தை விட்டோடிய பகைவரின் கோபமறும்படி தார்ப்படையை நிரப்பினை. ஆதலின், யான் நின்னை ஒன்று கேட்கின்றேன்;

சாந்து புலர்ந்தபின் தொய்யில் எழுதி (பல) வகை வனப்புற்ற மார்பாற் பிணிப்புண்ட, (நீ) தேனீ ஒலிக்கும் மெல்லிய கூந்தலுடைய மகளிரின் மெல்லிய அணையில் வதிவை; வதிந்து கொல்கின்ற வருத்தங்களைந்த மார்பைக் கவர்கின்ற முயக்கத்தாலே இராப்பொழுதைப் பயன்கொண்ட மெல்லிய உறக்கம் கொள்வை; பகையின் வெப்பத்தால் பாசறையில் இருந்து வருந்தி அரிதிற் பெற்ற சிறுதுயில் பொருந்தாத, வாத்தியங்களி னிடையே சங்கு முழங்குகின்ற செல்வத்தையுடைய நின்கண்கள், விரிய எவ்வளவு காலஞ் செல்லுமோ?

ஐந்தாம் பதிகம்
வடவர் அஞ்சும் வான்தோயும் வெற்றிக்கொடியுடைய குடநாட்டார் அரசனாகிய நெடுஞ்சேரலாதற்கு சோழன்1 மணக்கிள்ளி ஈன்ற மகன். பத்தினிக் கடவுளுக்குக் கற்கொள்ளவேண்டி, காற்றடிக்கின்ற காட்டுக் கூடாக அம்பைப் போற்சென்று, ஆரிய அரசரை வீழ்த்தி, பல அருவிகள் விழுகின்ற கங்கையில் மூழ்கி, பசுக்களைக்கன்றோடு கொண்டு, வில் அம்பு சொரிதல் மாறாத இடும்பிலில் தங்கி, புலிகளைப்போன்ற வீரரைக் கொன்று, நெய்தல் பூத்துள்ள வியலூரை அழித்து, அக்கரை அடைந்து கொடுகூரை வென்று பழையன் காக்கும் கருஞ்சினையுடைய வேம்பின் அடியை வெட்டி, பிரகாசிக்கின்ற ஆபரணங்களைக் களைந்த பெண் களின் பலகரியகூந்தலாற்றிரித்த கயிற்றால் யானையை வண்டியிற்பூட்டி; (நேரி) வாயிலில் தங்கி, சோழர்குடியிலுள்ள ஒன்பது இளவரசரைக் கொன்று, நிலையாகிய போரின் ஆற்றலை அறுத்துக் கெடுதற்கரிய தானையோடு, கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் கூத்தின் விகற்பங்களை அறிந்த காசறு செய்யுட் பரணர் பத்துப் பாட்டுப் பாடினார். பாடிப் பெற்றபரிசில்: உம்பற்காட்டு வாரியையும், தன் மகன் குட்டுவன் சேரலையும் கொடுத் தானக்கோ கடல்பிறக்கோட்டிய செங்குட்வன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான். பிறக்கோட்டுதல்-பின்னுக்குச்செல்லும் படி ஓட்டுதல்.

ஆறாம் பத்து
51 நீ, அசைகின்ற அகன்ற நீர்ப்பரப்புக் கலங்கும்படி காற்று அடிக்க, விளங்கும் பெரிய திரை இடிபோல் முழங்கும் கடற்கரைச் சோலை யுடைய (உன் நகருக்கு) மேற்குப் புறத்துச் சென்று, கூவலிற்படியும் விசாலித்த தாளுடைய நாரை, குவிந்த பூங்கொத்துகளுடைய கோங்கின் கிளை களிற் றங்குவதும், வண்டுகள் தங்கி உறைவதும், அடுப்பங்கொடி நெருங்கிக் கரையில் அடைகின்றதும், நண்டு ஆடியவடுவை காற்று நுண்ணிய மணலை அடித்துமாற்றுவதுமாகிய வலிய கரிய பனை களுடைய பொழிலில்தங்கி, ஒப்பனையாற் பொலிவு பெற்று, உலாவி அசைந்து ஆடுகின்ற மெல்லியசாயலுடைய விறலியரின் தெய்வமேறிய விகாரத்தால் ஏற்பட்ட நுடக்கம் போல் தோன்றி, இடங்கள் தோறும் அரிய மணியுடைய பாம்பு திரியும் இமயமலையும், சங்கு குமுறும் பனிக்கடலும்1 கிழக்கும் மேற்கும் கடலும் ஆகிய இடத்தே உள்ள அரசரும் பிறரும் சேவித்தற்குப் பொருந்தின பந்தரைவேய்ந்தாற்போல் முறுக்கவிழ்ந்த வளவிய நெய்தற் பூவாற்றொடுத்த மாலைகளை ஈரமாகிய தேன் நாறும் படி தூக்கி, சுடர்நுதலும், மெல்லிய சாயலும், வாள் நகையும், பிரகாசிக் கின்ற பற்களும், அமிழ்தம் பொழிந்து சிவந்த வாயும், அசைகின்ற நடையுமுடைய விறலியர் பாடல் மிழற்ற புறத்து வினையின்மையின் வினோதத்திலே கூடி உறைந்தனை. நீ அவ்வினோதத்திலே நீடி உறைதல் அறியாது ‘பிரகாசிக்கின்ற வேலுடைய அண்ணல் மெல்லியன் போலும்’ என நின் பெருமை உணராதோர் எண்ணுவரோ? நீதான் கோபமுடைய அரவோடொக்கும் பகைவரைக் கடுக அழிக்க வேண்டும் நிலைமையில், மழை தவழும்பெருங் குன்றத்து அவ் வரவிவினை அழிக்கும் உரு மேற்றினை ஒப்பை (அவ்வாறு விரையச் செய்யும் நிலைமைக்கண் நினக் கேற்ப) நின் படைவழி வாழ்நரும் காலாட்கள் மேற் செல்ல எதிர்க்கநேரின் யானைகளது கோடுகளை வெட்டும் வாளுடைய வலியர்களாயிருப்பர்.

அவ்வாறு நீ அழியாது மாறுபாடாற்றிப் பொருதழிக்கும்வழி நீ புனைந்த வீரம்பொருந்திய வெள்ளிய பனை மாலை உதிரம் தெறித்து நிறம் பெயர்தலின் அதனைப் பருந்து கவர்தற்கு விரும்பி வட்டமிடும்; வட்டமிட, நின்முன்னர் ஒலிக்கும் பெரிய கண்ணுடைய தண்ணுமையின் கண்ணை நின்னெதிர்நின்று மாற்றார் எய்த அம்பு கிழித்தலால்; தண்ணுமை கொட்டும் இளைஞர் தண்ணுமை கொட்டா தொழிவர்; தடுத்தற்கரிய சீற்றமுடைய பெரிய கூற்றம் வலை விரித்தாற் போல களத்தில் எதிர்த்த மாற்றார் படையை யெல்லாம் ஒன்றாகக் கொல்லக் கருதி நோக்கின் நோக்கினையுடையை. நெடுந்த காய்! செருவகத்து நீ அவ்வாறு கடியுந் தன்மையுடையை.

52 அரிய பண்டங்களைக் கொண்டு வருவோர் நீரிடத்தே மிதக்கவிட்ட பெரிய ஆரவாரமுடைய வங்கம் திசைகளிற் றிரிவதுபோல், கொடி அசை யும்படி நிற்கும் கொல்கின்ற யானைகள் நெருங்கிச் செல்ல, தெள்ளிய ஓசையுடைய மணிகள் அசையும் நெடிய தேரைப் பகைப்புலத்தே பரப்பி, மைபூசிய மிகப் பெரிய பரிசைகளையும், கவசத்தையும் மதியாது வாள் வேல் முதலியவற்றைத் தாங்கிப் போருக்கு முன்னணியிற் செல்லும் கொடிய கண்ணுடைய வீரர், பகைவர் ஓய்வின்றிப் போர் செய்தலின் வீர சுவர்க்கம் அடைவர். இவ்வாறு பலர்பட நல்லபோர்வென்ற இடியோ டொத்த விசாலித்த நின்கை இரப்போர்க்குக் கவிதலல்லது இரத்தற்குக் கவிதல் அறியா எனக்கேள்வியுற்றோம். அசைகின்ற மாலையும், பரந்த தேமலும், குளிர்ந்த இமையும், மழைக்கண்ணும் பேரழகு முடையள் நின்தேவி. சுடர்விடுகின்றதும், செல்வம் விளங்கு கின்றதுமாகிய பாண்டில் விளக்கு எரிய, முழா ஒலிக்குந் துணங்கைக் கூத்துக்கு, முக்காரமிடும் வலிய ஏற்றைப்போலத் துணையாகத் தழுவித் தன்னைச் சேவிக்கும் மகளிரொடு கைகோத்து நீ குரவையாடிச் செறிதலைக்கண்டு, நின்தேவி வருந்துவள். வருந்திப்பிரகாசிக்கின்ற பூவிதழை ஒத்த சிறிய அடியிடத்தன வாகிய கிண்கிணிகள் சிறிய பரட்டை அலைப்ப, கொல்கின்ற புனலிலுள்ள தளிர்போல நடுங்கி நின்று நின்னை எறிய ஓங்கிய சிறிய செங்கு வளையைத்தா என நீ இரப்பவும் ஈயாளாய் அதனைக்கொண்டு, நீ எமக்கு யார்? எனக் கூறிப் பெயர்வாள் அவ்வாறு இரந்து நீ பெறாது, அவளைச் சடுதியிற் கோபித்த நோக்கத்தோடு, அதை அவள் பானின்றும் பிரித்துக் கொள்ளமாட்டாயாயினை. அவ்வாறு அதனைக் கொள்ளமாட்டாத நீ, அகன்ற பெரிய வானில் பகற்பொழுதிற் செல்வோரைச் சுடும் கதிர்விடும் கோபமுடைய ஞாயிற்றைப்போன்ற நிறமுடைய வான்றோய் வெண் குடை வேந்தர் தம் எயிலைப் பகுத்துக் கோடல்யாங்கு வல்லையாயினாய். நின் கண்ணி வாழ்வதாக.

53 நீ வென்று (எங்களுக்கு) ஆபரணங்களைத் தருதற்கு, விரும்பிய இடத்தே தங்கியபோது (தோற்ற) வேந்தர் ‘எமக்கும் போதியளவு கொடுத்தனை’ எனக்கூறிச் சோராத வருவாயுடைய நாடுகளைத் திறையாகக் கொடுப்பர். அதனைப் பெற்ற நீ அவர்க்கு அருள்புரிவை. சினம் பொருந்திய தலைவ! உயர்ந்த மலைகளுடைய உலகில் கடலாற்சூழப்பட்ட பழைய புகழமைந்த நின் மூதூரிடத்தே செல்குவையாயின் (செல்லும் நெறியின்) வளைந்த வழி யாற் செல்வாயாக அப்படிச் செல்லுதற்குக் காரணம் யாதெனில், கணையமரம் புறத்தே சேர்க்கப்பட்டதும் இரும்புத்தகடுகளாற் பிணிக்கப் பட்டதுமாகிய கூட்டமாகிய மரங்களை நிறுத்திச் செய்யப்பட்ட நிலையின் வாயிற் கதவுகளைக் காணின், மதம்பாயும் சுவடுடையதும், வலிய கையைத் தூக்கி வேங்கையைவென்றதுமாகிய நின்களிறு பொறியுடைய புகர் நெற்றியில்உயர்ந்த கையைச் சுருட்டித் தோட்டியை விலக்கி, உயர்ந்த வெற்றிக் 1கொடி அசையத்தாங்க மாட்டாது. தாங்கவேண்டுவதேல் சிவந்த புள்ளிகளிட்ட சிலம்போடு அழகிய தழைகள் தூங்கும் ஏந்திர அமைப் புடைய அம்புக்கட்டுகள் தூங்கும்வாயிலும் கொலைத் தொழிலுடைய வலியமுதலை திரியும் ஆழ்ந்த அகழும், வானத்தை முட்டும் வளைந்த அழகிய மதிலுமுடைய, பொருந்தாத பகைவர் முனைகெடப் பொருது நின்னாற் கொண்டு பிறர்க்குக் கொடுக்கப்பட்ட அரசர் எயில் முகத்து (அவ்யானைகளைச் செலுத்துவதல்லது) நின்முன்னோர் ஓம்பிய எயில் முகத்துச் செலுத்துதல் எதற்கு?

54 பெரிய பாசறையின் நடுவில் கறங்கும் ஒலிக்கின்ற கண்களையுடைய முரசின் ஓசை பாசறை எங்கும் படர்ந்து படையை ஏவி ஒலிப்ப, தண்டா யுதத்தையுடைய புகழமைந்த வலியோர் இளையர்களை அணிவகுப்புக்கு ஏவித் தாமும் ஏவல் செய்யும் பகைவரது2 யானப்படையைக் காணின் நில்லாததானையுடைய தலைமையை உடையோய்! நின்னை வள்ளிய னென்று யாவரும் கூறுதலானே நின்னைக் காணவந்தேன். யான் வள்ளிய தனை நீ முடிப்பாயாகவேண்டும். நின் கண்ணி வாழ்வதாக. வீங்கிய கணுவுடைய பெருத்த மூங்கில் போன்ற பெரிய தோளும், உயர்ந்த அழகிய குளிர்ந்த கண்ணும், பூந்தொழிலமைந்த துகிலுடுத்திய அரையும், தேனாறுகின்ற கூந்தலும், பிரகாசிக்கின்ற ஆபரணமுமுடைய விறலியர் நின் வீரத்தைப் பாடவும், இரவலர் வருத்தம் நீங்கவும் நாள்தோறும் சிறந்த நல்ல ஆபரணங்களை வரைவில்லாது வீசுவை. நீ அத்தன்மையை ஆகலான், என்போலும் இரவலரது ஆக்கத்தின் பொருட்டுச் சிறிது காலமும் இவ்வுலகத்தினின்று உயர் நிலை உலகத்திற் செல்லாதே இவ்விரு நிலமருங்கிலே நெடுங்காலம் நிலைபெறுவாயாக.

55 பெருமை தங்கியவளது கணவ! புலவர்களது வேந்தே! நின்னை விரும்பி வந்தேன்; கொல்கின்ற போரை விரும்பும் கொற்றவ! இனிய ஓசையுடைய திரை ஒலிக்கும் கடலிடத்து வந்த நல்ல பண்டங்களாகிய செல்வம் கிடக் கும் பண்டசாலைகளில் தாழை கமழும் கரையையும், பெரிய துறையை யும், தண்ணிய கடற்கரைத் தோட்டங்களையு முடைய நல்ல நாட்டின் அரச! அரைத்துக்கரைத்த மையால் தன்னிற்புக்க செவ்வூன்தோன்றாத அவரை துவரை முதலியவற்றின் சுவையையும், வெண்ணிற ஊனையும் சோற்றுக்குப்பதில் உண்ணும் மறவர் கவசமே.! குடநாட்டவர் கோவே! கொடித் தேரண்ணால்.! இரவலர் வராராயினும் தேரைப் போக்கி அவரை அதில் வரப்பண்ணி அவர்க்கு உணவு நல்கும், விருப்பம் மிகுந்த வார்த்தையையும், புகழையுமுடைய தோன்றல்! பெரும! தினந்தினம் அகன்ற இடத்திலுள்ளார் தார்ப்படை அழிந்து அலற நீண்டமலை அடுக்கு களையுடைய நாடுகளைக் கைக்கொண்டு பொருது சினந்தணிந்த போர் அறைகூவும் ஆண்மையும், எதிர்த்தவர்களைச் சிதைத்த ஒள்ளிய வாளும் உடைய உற்சாகம் பொருந்திய குரிசில்! நின் வாழ்நாள், பல ஆண்டுகளாக வேண்டிய காலத்துப்பெய்து உலகைக் காக்கும் முகிலை ஒத்து, எஃகின பஞ்சுபோல வெளுத்துப் பொங்கி மேலெழுந்து வானைச் சேர்ந்த (வெண்) முகிலை ஒவ்வாது ஒழிவதாக.

56 வெற்றி முரசம் ஆரவாரிப்ப உயர்த்தியவாளும், இலங்கும் பூணும், பொன்னுழிஞையும் உடையனாய், அறியாமை மிகுதியாற் பகைத்துப் போக்கெழுந்த மாற்று வேந்தர் தமதுமெய்மறந்த வெற்றிச் செல்வம் மாய்ந்து ஒழியும் போர்க்களத்து ஆடுங்கோ, விழாக்கொண்டாடும் பெரிய நகரிடத்து கூத்தர் முழவின்முன் ஆடவல்லானல்லன். அவன் கண்ணி வாழ்வதாக.

57 இளைய புதல்வர் அளித்த வளம் பொருந்திய சிலம்பும், அடங்கிய கொள் கையும், ஆன்ற அறிவும், தோன்றிய நல்ல புகழும் உடைய ஒண்ணுதன் மகளிரது அழுத கண்ணினும் இரவலர் வருத்தத்தை அஞ்சும் காத்தற் றொழிலை எதிர்கொள்வோனை, 1சிலவளைகளை அணிந்த விறலி, பாணர்கையிலுள்ள இசையமைந்த பாலைப் பேரியாழின் நரம்பைத் திருத்தி தழிஞ்சிப் பாடல்களை இன்னிசையாற்பாடி வரக்கண்டோம். மெல்லிய வழியிற் சிறிய அடிகளை ஒதுக்கிச் செல்வோமோ. அப் பாதுகாப்பை எதிர் கொள்வோனாகிய துணங்கையாடிய வலம்படு கோமான் (இப்போதுதான் அவ்வெதிர் கோட்டிற்கேற்ப) வருவாயினை யுடைய குறைவுபடாத வலியுடைய மறவர் வலிசாயபெரிய பனைமாலை யொடு பெரிய கழல் சிவப்பக் குருதிபனிக்கும் புலால் நிறைந்த களத் தோனாயிருக்கின்றான்; காண்பாயாக.

58 வெள்ளியபனந் தோட்டின்மேல் அழகிய குவளைப்பூக்களை அணிந் தோரும் வாளின்வாய் உண்டாக்கிய மாட்சிமைப்பட்ட வரியாகிய தழும்பு உடையருமாகிய மறவர், கொலைபுரியும் படைக்கலங்களைத் தாங்குவர். தாங்கி ‘இன்று இனிது உண்டனமாயின் நாளை மண்ணினாற் செய்த வளைந்த மதிலைக் கடந்து உட்புகுந்தல்லதுஉண்ணமாட்டோ மென்று (தாங்கள் சூடிய) பொற் கண்ணிக்கேற்ற வினைபுரியும் வீரர் பெருமகனே! பொய் பேசுதல் அறியாத பிரகாசிக்கின்ற நாவும், எயிலை எறியும் வலிய வில்லும், அம்பும், கவசமும் விளங்குகின்ற உயர்ந்த அழகிய மார்புமுடைய சான்றோனாகிய வானவரம்பனை, கானகத்து, காற்றாடியின் ஓசை போல் சிள்வண்டுகள் இருந்து ஒலிக்கும் பொருக்குடைய அரையும் சிறிய இலையுமுடைய பெரிய வேல மரங்கள் வளரும் புல்லிய புலங்களை வித்தும் வலிய கையுடைய வினைஞர் தம் கலப்பை சென்ற கொழுவழி மருங்கில் அசைகின்ற கதிருடைய மணிகளைப் பெறும் அகன்ற இட முடைய நாட்டையுடையான் என்று சொல்லுவார்கள். (அவன் அவ்வாறு செல்வக்குறையிலனாதலால், அத்தரத்திற் கேற்ப நமக்கு வேண்டுவன தருதலிற் குறைவுடையனல்லன்; வந்தமைக்கேற்ப) விறலியீர் ஆடலைக்குறையறச் செலுத்துமின்; பரிசிலராயுள்ளீர் நீயிரும் அரும் கவிகளைப் பாடிக் கைவரப்பண்ணுமின்.

59 பகற்பொழுது நீளாது இரவு நீண்டு மாசித் தன்மை பெருகி, மாக்கள் குளிரால் உள்வளையும் மாதத்தில், குளிர்ந்த சுரவழியிற் செல்லும் பாணன் உவப்பவும், புல்லிய இருள் அகலவும், ஞாயிறு பல் கதிர் பரப்பிக் கிழக்குத் திசையிற் றோன்றியதுபோல, இரவலரது சிறு குடிகள் செல்வத்தாற் பெருக உலகம்தாங்கிய மேலான கல்வியுடைய வில்லோர் மெய்ம்மறை! செல்வர்க்குச் செல்வ! சேர்ந்தார்க்கரணம்! பல்வேறு வகைப் பட்ட அகன்ற இடத்தில் குவிந்து கிடக்கும், மலையிடத்தவும் கடலிடத்தவு மாகிய பண்டங்களைப் பகுத்து (இரவலர்க்கு) அளிக்கும் முறையில் முட்டுறாது, அறம் புரிந்தொழுகும் விருப்பாற் சிறந்த வலிய பணை ஒத்த நின் தோளுக் கேற்ப மதியாது, எதிர்த்து வலியிற் குறையுற்ற பகைவர் பணிந்து பெருமை சிறந்த ஆபரணங்களைத் திறை இடுவராயின் நின் சினம் செல்லத் தணியுமோ? நின் கண்ணி வாழ்வதாக.

60 வண்டுகள் புறத்தே மூசவும் தீஞ்சுவை மாறாததும், அரம்போழமாட்டாத தும், மரத்திற் பழுத்ததுமாகிய அழகிய சேறு அமைந்த முட்டைபோன்று பழுத்த பழங்கள் வழி செல்லும்மாக்கட்குச் செல்லுதலைத் தடுக்கும். (வழிச்செல்வோர் அப்பழங்களை ஆய்வதில் நேரத்தைப் போக்குவர் என்றவாறு). இவ்வாறு மாறாத விளைவுடைய ஆறாத புதுவருவாயுடைய அவன், அம்பு தொடுத்தெய்தலின் மடிந்த வில்லைக் களைந்த மறவர்,1 பொங்கு துளிகளுடைய திரை மங்குற் பொழுதொடு மயங்க வரும் கடலூதை பனிக்கின்ற உண்ணா நறவில் (நறவு என்னுமூரில்) மெல்லிய லுடைய பெண்களின் கூட்டத்தினன். இனித்தானை, கொலைவினை மேவிற்று ஆகலால், தான் போர்த்தொழிலை மேவலன். பாண்மகளே! நாம் அவனைக் காணுதற்குச் செல்வேமோ; செல்லின் குறைவுறாது (நமக்கு வேண்டியவற்றை) வீசுவான்.

ஆறாம் பதிகம்
குடக்கோ நெடுஞ்சேரலாதற்கு, வேளாவிக்கோமான் தேவி ஈன்ற மகன் தண்டாரணியத்தார் கவர்ந்து சென்ற காட்டாட்டைத் தோண்டியிற் கொணர்ந்து கொடுப்பித்துப், பார்ப்பார்க்குக்கபிலையோடு குடநாட்டி லுள்ள ஓரூரை ஈந்து, வானவரம்பன் என்னும் பெயர் இனிது வழங்கப் பெற்று, மற்றைய வீரரைப் போரிடத்தே ஒடுக்கி, அரசரை ஒட்டி குழந்தையைக் காப்பாற்றுந் தாய்போலக் குடிகளைப் பாதுகாத்து, விருப்பஞ் சிறந்த நல்ல நெஞ்சுடைய ஆடு கோட்பாட்டுச் சேரலாதனை, செய்யுட் பாடும் அடங்கிய கொள்கையுடைய காக்கைபாடினியார் நச் செள்ளையார் பத்துப் பாட்டுப் பாடினார்.

பாடிப் பெற்ற பரிசில்: கலனணிக வென்று அவர்க்கு ஒன்பதுகாப் பொன் னும் நூறாயிரம் காணமும் கொடுத்துத் தன் பக்கத்துக் கொண்டானக்கோ. ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் முப்பத் தெட்டியாண்டு வீற்றிருந்தான்.

ஏழாம் பத்து
61 புண்பட்ட வாய்போலப் பழுத்து விழுந்த பலாப்பழங்களினின்று மோடு கின்றதேன் நாறும் நாடும், வெற்றியுமுடையவனும், சித்திரத்தைப்போன்று அலங்கரிக்கப்பட்ட பாவையைப்போன்ற நல்லவளது கணவனும், பொன் போன்ற பூவும் சிறிய இலையும் புல்லிய அடியுமுடைய உன்னத்தை உடையவனும், பகைவர்க்கு வலியனுமானாகிய எமது தலைவனும், பூசிப் புலர்ந்தசாந்துடையவனும், புலராத ஈகையுடையவனும், மலர்ந்த மார்புடையவனுமாகிய பெரிய கொடையையுடைய பாரி, முரசம் மண்ணிடத்தே கிடந்து காயவும்இரவலர்வருந்தவும், திரும்பிவராத தொலைவிடத்தே சென்றான். ஒள்ளியவாளும், வலிய களிறும், சந்திரன் போன்று வெள்ளிய வேலுமுடைய நும் வீரர் போர்செய்து புண்பட்ட மிகுதியால் புலால் நாறுகின்றதுமாகிய பாசறையின்கண், பாடினி முழவின் தாளத்திற் கேற்பக் கையை அசைக்கின்ற விழாவை ஒத்த நின் விநோத மகிழ்ச்சி யின்கண், நீ ஈவாயாக என்று சொல்லி இரக்கவென்று வந்து சில புகழ்ந்து சொல்லுகின்றேனுமல்லேன்; அல்லது உண்மை யல்லாதன வற்றைப் புகழ்ந்து சொல்லுகின்றேனுமல்லேன். 1ஈதற்கு இரங்காதும்ஈயுந் தோறுமகிழாதும் கொடுக்கின்ற பெரிய கொடையாளி என்று உலகம் கூறும் அப்பாரி குணங்களாகிய நல்ல புகழை நின்பால் தரவந்தேன்.

62 பல அணிகளைப் புனைந்து செல்கின்ற பல யானைக் கூட்டத்தோடும், முகில் என்று அஞ்சும்படியான மிகப் பெரிய பரிசைகளோடும், கூரிய கத்தரிக்கோலால் பிடரி மயிர் மட்டஞ்செய்தகுதிரைகளோடும், மதிலின் பக்கங்கள் அழியும்படி வளைத்து வந்து புறத்தே தங்கியதானை கொளுவிய பசிய பொறிகளைச் சிந்தும் பிரகாசிக்கின்ற அழல், (உலகம் கடல் கொண்டு கிடந்த உகாந்தகாலத்து அக்கடல் நீரெல்லாம் வற்ற எறித்தற்குத் தோன்றும்) புதுமையோடு கூடி (அந்நீர் வற்றும்படி) பொல்லா மயக்கமும் பேரொலியும் செய்து திரிகின்ற வடவைத்தீயின் வண்ணத்தைக் 2கொள்ளுதற்குக் காரணமாய் நின்ற மிக்க வலிமையும், முற்றக்கற்ற படைக்கலப்பயிற்சியுமுடைய வெற்றிவேந்தே! புனல் அலை மோதுகின்ற அகழிடத்து மலைபோன்ற மதிலை அரணாகவுடைய அச்சந்தரும் விசாலித்தகையுடைய நின்பகைவர் (தம்மைக்) காக்கும்படி கூறிப் பணிந்து திறைதருவராயின், மதுவருந்துவோரும், வலியகையுடைய வரும் அருவியிடத்துள்ள ஆம்பலைச் சூடிய தலையையுடையோரு மாகிய தொழிலாளர், புல்லுடைய பெரியவெளியில்பலமாட்டு நிரை களைப் பரப்பி மேயவிட்டு வளம் பொருந்திய வயலில் விளைந்ததும், வைக்கோலுடனரிந்துபரந்துகிடப்பதும், களத்திற்கடா விடுதற்றொழி லற்றதுமாகிய பொலியை காஞ்சி மரத்தின் கீழ் பொறுக்கிச் சேர்த்து, ஆடு கின்ற சிறகுடைய தேனீக்கள் ஓட்டும் நின் அகன்ற இடத்தையுடைய நாடு புகழ் அமைந்தது.

63 நீ பார்ப்பார்க்கல்லது பணிதலை அறியாய். பணியாத உள்ளத்தோடு அழகு பொருந்திய நண்பினருக்கல்லது கண் அஞ்சுதல் அறியாய். வளைந்த வில்லாற் பொருகின்ற உனது மணங்கமழ்கின்ற மார்பை (நின்னோடு பொருவாரின்மையின்) நின்மகளிர் போகத்துக் கல்லது மலர் வித்தலை அறியாய். உலகம் மாறுபடும் காலமாயினும் சொன்ன சொற்பிழைத்தல் அறியாய். (இவை நின் இயல்பு.), இவையேயன்றி சிறிய இலையுடைய உழிஞை மாலை சூடிக் கொள்ளை அதிகப்படமாற்றாரது தமிழ்ப்படை களை யெல்லாம் இடை வெளியில்லாமற் கொன்றுபரப்பி, மலையை நிலைகுலைக்கும் இடியேற்றைப்போல் சீறி, ஒருமித்து வளைத்துச் சோழ பாண்டியரிருவரையு மோட்டிய வாட்போரில்மேம்படுகின்ற தானையை யுடைய வெல்லுகின்ற போரையுடையோய்! முன்பிறர் பால் வெற்றி பெற்று நினக்கு அழிந்த மாற்றார் நின்னோடு பகைமாறி, இன்றுமுதல் நின்னாலே படைக்கப்பட்டாற் போல் மென்று தாழ்வுகூற, அதற்கு ஏற்ப நீயும், நின்பெருமையும் கண்ணோட்டமுமாகிய நும் நுகங் கொண்டு இன்னும் வெற்றி மிகுந்தனை. (நின்குணங்கள் இவ்வாறாகிய அதனானே) செல்வக்கோவே! சேரர் மருக! வாழ்வாயாக! காற்றினால் எழும் திரைகள் முழங்கும் ஓசையுடைய (கடலை) எல்லையாக வுடைய பெரிய இடத்தை யுடைய உலகம் செய்த நன்மை உண்டெனில், பல கேடில்லாத அடை அடுத்தல் அறியாத பல ஆம்பலாகிய (எண்ணுள்ள) ஆயிரவெள்ள ஊழி வாழ்க.

64 வெற்றி முரசுடையோரும் (கூரிய) வாயுடைய வாட்போரில் வெற்றியுடை யோரும் பொன்னாபரணங்களை அணிந்தோருமாகிய வேந்தர் உலகிற் பலராவர். அவராற்பெறும் பயன் என்? அறம் கூறிப் பிரகாசமடைந்த நாவும், உயர்த்திச் சொல்லப்படும் வேள்வியை முடித்த கல்வியுமுடைய அந்தணர் அரிய ஆபரணங்களைப் பெற்றனர். நீர் படுகையினால் மிகச் சேறாடியதால் களிறு நிற்றற்கு வெறுக்கும் முற்றமுடையதும் ஆண்டு வாழ்வார்க்கல்லது பிறர்க்குப் புகுதற்கரிய ஒழுங்குடையதுமாகிய மாளிகையின் புறத்துக் கூத்தரை (நீங்கள் காணினும்) விரைவில், கூரியகத் தரிக் கோலால் மட்டஞ் செய்யப்பட்ட பிடரிமயிருடைய குதிரைகளை, அவை இழுக்கும் வண்டிகளுடன் ஆபரணங்களால் அலங்கரித்து ஈமினென்று (அங்குள்ளார்க்கு)க் கட்டளை செய்து நின் ஊரிடத்து நீங்காத ஈயும்கோட்பாடுடைய னாயிருப்பை. ஆதலால், கரியபரந்தகழியிடத்து மலர்ந்த நெய்தலின் இதழ்போன்ற அழகிய தோற்றத்தைப்போல் உயர்ந்த முகிலினும் பெரிய பயன் பொழிவாயாக. அண்ணல்! தோன்றால்! பசி யுடைய சுற்றத்தின் வருத்தங்களைந்த புகழமைந்த பாசறையிடத்தே, ஆகாயத்தில் பல மீன்களின் ஒளிகெட ஞாயிறு தோன்றியாங்கு பகை வரின் மாறுபாட்டை அழித்த நின் வலிய தாள்களை வாழ்த்தும் பொருட்டு நின்னைக் காணவந்தேன்.

65 வீழ்ந்துகிடக்கும் பிணங்களை இடறுதலால் இரத்தக் கறை பட்ட குளம்பும் வேகமுமுடைய நல்ல குதிரைகளுக்கு விரிந்ததலையாட்டமணிந்து, எதிர்த்து மலைந்தபகைவர் வீரம் கெடும்படி பொருதவரும், எப்பொழுதும் நிலையாமையை உள்ளத்திற் கொண்டிருக்கும் (அதாவது எப்பொழுதும் போரில் உயிர் விட ஆயத்தமாயிருக்கும்) பெரும! வில் வீரர்களது கவசமே! சேர்ந்தோர்க்குச் செல்வ! ஆபரணங்கள அணிந்த பெருத்த அலங்கரிக்கப்பட்ட இள முலையும், மலர்ந்த நோக்கும், மூங்கில்போன்று பணைத்து விளங்குகின்ற இறையுடைய பெருத்த தோளும், அழகிய கடவுளரும் ஆள்கின்ற கற்பும், தூரத்தே நறுமணம் வீசும் நல்ல நெற்றியும் இளமையுமுடைய ஆபரணங்களணிந்தவளது கணவ! பாணர் புரவல! பரிசிலர் செல்வம்! மார்பிடத்து புண்கள் விளங்குதலால் புகழ்சான்ற மார்ப; நின் ஓலக்க இருப்பின் சிறப்பையெல்லாம், இனியநரம் புடைய பாலை யாழை மீட்டலில் வல்லோன், பாலைப்பண்களை எல்லாம் ஒரோவொன் றாகப் பெயர்த்து வாசிக்குமாறுபோல ஒன்றோடு ஒன்று ஒவ்வாத இன்பத்தை உண்டவர்க்குக் கொடுக்கும், (நிலத்தைச்) சேறு செய்கின்ற மாரிபோலளிக்கும் விழாவின் தன்மை பொருந்திய கள்ளுவர்க்கங்களின் மகிழ்ச்சியால் இனிது கண்டேம்.

66 வளைந்த கரிய கோடுடைய இனிய ஓசைபழுத்த பெருமையுடைய பெரிய யாழிடத்தில் பாலைப்பண்ணை வாசித்துப் (பரிசில் பெறும்) நினை வுடன் செல்லும் பாடிப்படிந்த வாயுடைய இரவல! பகைவரது வலியைத் தாங்கிய அவராற் குலைத்தற்கரிய ஒழுங்குடைய படைவகுப்பினையும், பருவ மழைக்காலத்து மலையின் கொடுமுடிகளைப் போன்ற பரிசை களோடு மேலே உயர்ந்து விரிந்திலங்குகின்ற வேல்களையும் உடைய மன்னர், பூமாலைகள் அசைந்தாற் போன்ற அசைகின்ற வாட்போரிடத்துப் படுவர். அம்மறவர் அணியும் பனந்தோடுடன் வெற்றிமாதுறையும் வாகையின் பஞ்சு போன்ற மலரையும் விரவித்தொடுத்த மாலையைப் போன்று பூத்த முல்லையைச் சூழ்ந்துதிரியும் வண்டு காட்டிடத்திலுள்ள பிடவின் மாலை போன்ற பூங்கொத்தில் தங்கும். (இவ்வகையான காட்டில்) அழகிய பளிங்கைப் பரப்பினது போன்ற சிவந்த பருக்கைக் கற்களுடைய உயர்ந்த நிலத்தே கதிர்விட்டிலங்குகின்ற திருமணி கிடைக்கும் அகன்ற இடத்தையுடைய நாட்டுக்குரியோன், இடியின் ஓசையுடைய முரசத்தோடு வஞ்சினங்கூறி வேலை உடைய (பகைவர்) கூட்டத்தினர் போர் சிதையும் படி வெட்டிக் கொன்று புறங்கொடுத்தோடச் செய்த பிணம் குவிந்த களத்துப், பகைவர், திறையாகத் தந்தயானைகளோடு மரக்காலால் அளக் கப்படும் நெல்லாகிய உணவையும் பைகளிற் போட முடியாத அளவு (இரவலருக்கு நல்குவான்) என எல்லாரும் சொல்லு வார்கள். ஆதலால் (இரவல) நீ அவன் பால் ஏகு.

67 பந்தர் என்னும் பெயருடைய பெரிய புகழமைந்த மூதூர்க்கு (ஆற்றும்) கடனறிந்த மரபிலுள்ள (யாழ்மீட்டல் மத்தளங் கொட்டல்) முதலியவற்றில் வல்ல கையையுடைய பாண! (பரிசில் வழங்குவார்மீது) புகழ்ச்சி உரை களைக்கூறும் சுற்றத்தோடு நீ, கொல்லுகின்ற படைக்கலங்கள் தோன்றவும் வெற்றிக்கொடி அசையவும், பிரகாசிக்கின்ற கொம்புகளோடு வலம்புரிச் சங்கு ஆர்ப்பவும், பல யானைக் கூட்டங்கள் இடம் பெயர்ந்து திரியவும், போர் செய்யுமிடத்திற்கு இடம்போதாத பிரகாசிக்கின்ற நிணம் நிறைந்த பரப்பில் கூட்டமாகிய சிறகுடைய எருவைப் பறவைகள் இரத்தங்குடிக்க வும், தலை அறுப்புண்டு எஞ்சிய ஆண்மை நிறைந்த உடற் குறைகளோடு உருவில்லாத பேய் மகள் கண்டார்க்கு வருத்தஞ் செய்யவும், நாடு உடன் நடுங்கும்படி பலபோர்வென்று, கொன்றையின் நாறுகின்ற பூங்கொத்து களுடன் வெள்ளிய (பனந்தோடை விரவித்தொடுத்த) வரியுடைய மாலை யணிந்தவரும், வாள்முகத்தில் வெட்டிய மாட்சிமைப்பட்ட உடம்பை உடையவரும், வளைந்த பெரிய தலையும் நேரிய கொம்பும் பெரிய உடலுமுடைய எருதுபோன்ற தாழ்ந்த வலிய மடையர் இரும்புக் கம்பியிற் கோத்துப் பொரிக்கும் இறைச்சியைப்போல உடம்பு சிதைந்து வடுக் களாலே பூசின சாந்தின் அழகு மறையும் வீரர்களுமாகிய அவர்களது பெருமகனும், தெய்வத்தின் விருப்பத்துக்குரியதென அறிந்தும் மலர்ந்த காந்தளை தவறாது ஊதிய வேகமாகப் பறக்கும் வண்டு, பறைகள் (போரின்மையால் முழக்காது) பண்ணழிந்து கிடக்கும் பெருமைசான்ற உயர்ந்த பாறைகளுடைய நேரிமலைப் பொருநனுமாகிய செல்வக் கோமானைப் பாடிச் செல்வாயாக. செல்லின் தெள்ளிய கடல் முத்தோடு கொடு மணம் என்னும் ஊரை வென்றுபெற்ற நல்ல ஆபரணங்களையும், பெறுகுவை.

68 மண்ணினாற் கட்டிய உயர்ந்த வளைந்த மதிலுடைய நகரிடத்துச் சித்திரத்தை ஒத்த (தமது இல்லின்) நெடிய சுவரில், (தலைவன் வினை வழிப்பிரிந்துவராமற்) கழிந்த நாட்கள் பலவற்றையும் நித்திரையின்மை யின் பசிய ஆபரணங்கள் நெகிழும்படிகீறிக்குறித்தலால் சிவந்தவிரல்கள் சிவப்பேறிய, உள்ளிடுமணிகளையுடைய சிலம்பணிந்த தெய்வமாதர் போன்று அழகிய பெண்களைப்பிணிக்கும் மணம்கமழ்கின்றமார்ப! (நின்தாள் நிழலோர்) காற்று அடித்தலின் கடல் ஒலித்தல் போல மாற்றார் நிலத்திற் கொண்ட பாசறையின் நடுவே, கடிய ஒலியை எழுப்பும் தழங்கும் குரலுடைய முரசம் அகன்ற பெரியவானில் அதிர, அச்சந்தரும் வரிகள் இடப்பட்ட (பகைவர்) மதிலை எறிந்தல்லது உண்ணேம் என்றுகூறி ஒன்றின் பின் ஒன்றாகப் பல நாட்கள் கழியா நிற்க உற்சாகம் உடையராய், உடம்பை வாட்டும் வருத்தமுடைய பகைவர்தங்கும் அரணைத்தாம்கைப் பற்றினன்றி, இனிய கள் விற்றக்கு அடையாளமாகக் கொடிகட்டப் பட்ட வீதியிற்புகுந்து அரிய கள்ளின் விலைக்குப் பகை வேந்தன் ஊருகின்ற யானையின் வெண்கோட்டைக் கொடுத்தபின் (உண்டு) மகிழ்ந்து துன்பம் இடைவிரவாது இன்பமாகவே செல்கின்ற வாழ்க்கையையும் எப்பொழுது முடைய, வட பூமியாகிய உத்தர குருவிற் பலநாள் தங்கப் பெறுவரோ? (பெறார்). (அவர் அவ்வாறு உத்தரகுருவிற் பெறும் இன்பத்தைப்பெறி னன்றி, நின் மார்பாற் பிணிக்கப்பட்ட அரிவையரும் இனியநகை தினமும் பொருந்திய பல நாட்களைப் பெறுவதேது).

69 மலை ஒத்தயானையும் வானை முட்டும் வெற்றிக் கொடியும், மலை மீதுள்ள அருவி போல் முறை முறையே அசையவும், கடல் போன்ற தானையும், கொடியகுரலுடைய முரசமும், காற்றடிக்கும் கடல் போல் முழங்கவும், (பகைவரது) ஆராய்ந்து எடுத்த வெற்றி வீரரோடு, வெட்டிக் கூர் மழுங்கிய வாயுடைய வாளையுடைய வீரரையும், இலை போன்ற வேலையுடைய வீரரையும், தெரிந்தெடுத்த பாய்கின்ற குதிரைப் படையையும், பிணங்கள் வீழ்ந்து குவியும்படி, கொன்று (கெட்டுப் போன அப்பகைவரது) குடிகளை அந் நாட்டில் வாழும்படி அருள் செய்த வெற்றி வேந்தே! இலங்குகின்ற சுடர் விடும் சக்கரத்தையுடைய நின் முன்னோர், (நிச்சயமாக) நின்னைப் போல் அசைவில்லாத கொள்கையுடையர் ஆதலின், (பொன்னுலகமன்றி) மன்றங்களுடைய இம்மண்ணுலகம் முழுவதும் பயனைப் பொழிந்தாற் போன்றும் சூரியன் சினந்தணிந்தாற் போன்றும் தோன்ற (மாதம் மும்மாரி பெய்யவும்), வெள்ளி மழைக்கு உடலான மற்றை நாள் கோள்களுக்குச் செல்கின்ற நல்ல நாட்களிலே நிற்கவும் விசும்பிடத்தே உள்ளமழை, இவ்வுலகினையானே புரப்பே னென்று ஏற விட்டுக் கொண்டு நின்றாற் போல நிற்பவும், நாலுவேறு திசைகளும் பகையின்றி விளங்கவும் (நின்புகழெல்லாம் உளவாக) அசைவின்றி ஆண்டோராவர்.

70 களிற்றைச் செலுத்தியதாளும், குதிரையை வருத்திய பாதமும், (மாற்றார்) போரைத் தொலைத்த வேலும், மலையை அலைத்த (வலிய) தோளும், வில்லை அலைத்தவலியும் உடையவரும், வண்டு இசைபாடாத குளிர்ந்த இளம்பனையின் குவிந்த கூரிய வெள்ளிய குருத்தோடு இனிய சுனை நீரில் மலர்ந்த மலரைத் தொடுத்த மாலையை அணிந்தவரும், மதத்தினால் செருக்கியஉடைகின்ற நிலைமையினையுமுடைய (பகைவரது) போரை வென்று வீரத்தைக்கெடுத்து கடிய சினமுடைய அரசரின் செருக் கொழித்தவரும், நகைக்காயினும் பொய்கூறாத வாய்மையும் பகைவர் புறஞ் சொற்கேளாத குற்றந்தீர்ந்த புகழுடையருமாகிய, பெரிய வீரக்கழ லணிந்த வீரர் பெரும! மென்மைக்குணங்கள் சிறந்து பெரிய மடம் நிலை பெற்ற கற்புப் பொருந்திய நறுமணங்கமழும் சுடர்விடும் நெற்றியுடைய குற்றந் தீர்ந்தவளது கணவ! பூண்கள் பிரகாசிக்கின்ற மார்ப! நின்னை விட்டு நீங்காத கொள்கையுடைய சுற்றம் நின்னைச் சுற்றியிருக்க வேள்வி யில் கடவுளுக்கு ஆவுதி அளித்தாய். புத்தேளிர் நாட்டுத் தேவர்களை இன்புறுத்தினை. வணங்கிய சாயலும் (பகைவரை) வணங்காத ஆண்மை யுமுடைய இளைய வலிய புதல்வ! நின் முதியோரைப்பேணி அவர் களுக்கு இறுக்கும் பிதிர்க்கடன்களைச் செய்த வெல்லும் போருடைய தலைவ! சிகரங்கள் தோறும் நிறைந்து மாண்டோர்களுடைய உலகமுங் கேட்கும்படி இழுமென் ஓசையோடு இழிகின்ற அருவியுடைய நீண்ட அயிரைமலைபோல நின்வாழ்நாள் நீங்காதாகுக.

இப்பாடலின் மூலத்தில் (23வரி) மாடோர் என்றிருப்பதை மாண்டோ ரென்றும், இளந்துணைப் புதல்வரின் முதியர்ப்பேணி (21வரி) என்றிருப் பதை இளந்துணைப் புதல்வநின் துணைவர்ப்பேணி என்றும் பொருள் கொண்டேம். ‘ரின்’ என்பது நின் என்றிருக்க வேண்டும் போல் தெரிகிறது.

ஏழாம் பதிகம்
வீரத்தோடு பகைவரை அகப்படுத்தியவரும் பெரிய நுண்ணிய கல்வி யுடையவருமாகிய அந்துவனாகிய சேரனுக்கு ஒரு தந்தை ஈன்றமக ளாகிய பெருந்தேவியிடம் பிறந்தமகன், அரசனைக் கொன்று பகைவரை ஓட்டி, அச்சந்தருந்தானையைக் கொண்டு சென்று பல போர் வென்று, புகழ்தலமைந்த பெரிய வேள்வி வேட்டகாலை மற்றுமுள்ள அறத்துறை களையுஞ் செய்து முடித்து, திருமாலைத் தனது நெஞ்சில் உறைய வைத்து நெல் விளைவு நீங்காத ஓகந்தூரைத்திருமாலுக்கு அளித்து, புரோகிதனி லும் தான் அறநெறியறிந்து செழித்த உள்ளத்தோடு குற்றம் நீங்கிய செல்வ முடைய கடுங் கோவாழியாதனைக் கபிலர் பத்துப் பாட்டுப் பாடினார்.

பாடிப் பெற்ற பரிசில்; சிறு கொடை என நூறாயிரங் காணங் கொடுத்து நற்றாவெனுங் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தானக்கோ. இவன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.

எட்டாம் பத்து
71 இடையருக்குத் தலைவனான கழுவுளுடன் கோபித்து எழுந்து, உரோஞ்சி ஊரை எரிக்கும் நெருப்புப் பரக்கவும், (நெற்) போரை எரித்து மணக்கும் புகைதிசைகளை மறைக்கவும், மதிலின் வாயில் தோன்றாது அம்புகளைச் செலுத்தும் வீரர் ஆழ்ந்த அகழுடைய மதிலின் அடியில் குறுகிய தாளுள்ள ஞாயில் கிடக்கும், காவலுடைய மதிலின் கதவைக் கைப்பற்றினை; கைப் பற்றி ஏறுகளோடு கன்றுகளுடைய பசுக் கூட்டத்தைக்கவர்ந்து புலால் நாறும் வில்லுடைய இளைய வீரருக்குப் பங்கிட்டளிக்க, அவ் இளையர் அந்நிரைகளைத் தமது அழகியகைகளாற் பிறர்க்களிப்பர். (இவ்வாறு கழுவுளின்) தலைமடங்குதலும் மத்தைக் கயிற்றால் இழுத்துக் கடையும் கழிந்த பொழுதை நினைந்து இரங்கும் இடையர் பெரிய பயத்தினால் (கழுவுளை விட்டு) நினக்குத்திறை கொடாத வேறு குறும்பர் நாட்டிலே அவர் நாடு பாழாகும்படி சென்று தங்குவர். வெல்வதற்கு அரிய போரின் அரிய நிலைமையைத் தாங்கிய புகர் நெற்றியுடைய களிற்றுயானையோடு அரிய ஆபரணங்களை முன்கொடாத அவர் புதிதாகத் தேடிய பொரு ளோடு முன்னே தேடிய பொருளும் அற்றது என மெய் நடுங்க மிக்கு நின்னை அணங்கெனக் கருதிப் பலபடப் பரவுவர். பேய் தான்பற்றினாரு யிரை வெளவாது தனக்கு அவர் பலியிட்டுழி அப்பலி கொண்டு பெயரு மாறு போல நீயும் அவருயிரை வெளவாது திறைகொண்டு பெயராநின் றாய். (நீ செய்தது இது மாத்திர மல்ல) நீங்காத புது வருவாயுடைய அகன்ற இடமுடைய வயலின் நீரிலே வளரும் ஆம்பலை நெய்தலோடு அரிந்து வயலிடத்திற் பெண்கள் விளையாடும் கடா விடும் பெரியகளத்தில் பெரிய கடாக்கள் உதிர்த்த, மெல்லிய சோற்றைக் கொடுக்கும் செந்நெல்லை மரக்காலால் அளந்து பையிடத்திற் போட்டுக் குவித்தாற் போன்று, கடிதாகக் கொட்டுதலுடைய குளவியினம் திரண்டு தங்கும் கூடுகளைக் கிண்டிய சிறுவரைப் போலப், பெருமானே! வருந்தினார்கள்; இனிமேல் உள்ளத்தில் அறிவுடையோரையும் மூடரையும் அவரவர் அறிவினைத் தெரிந்து எண்ணி அவரவரிடத்திற் செய்யும் அருளறிந்து அருளாயாயின் நெடுந்தகாய்! இவண் வாழ்வார்யார்? நின்வாழ்நாள் வாழ்வதாக.

72 நின்னோடு கோபித்து எதிர்த்தோர் தம் அறியாமையின் மிகுதியால் நின் குடியிலுள்ள முன்னோராகிய அரசர் உலகத்தை ஆளுதற்கு அறிவு வலி யுறுத்தியவரும் காரியங்களை நன்றாயறிந்த உள்ளத்தையுடையருமாகிய சான்றோரை ஒத்த நின்சூழ்ச்சிப் பண்பை அறியார். நீ தான் சூழ்ச்சி உடையயை அன்றி, சினம் பொருந்திய குரிசில்! நின்னை எதிர்த் தோர்க்குப் போர் செய்யுமிடத்து, எல்லா உயிரும் இறந்துபடும் ஊழிக்கால முடிவில் நிலத்தின் பாரம் நீங்கப் பரந்து, நீர் மண்டி வருகின்ற வலிய திரைகள் உடையதும், பல்லுயிரையும் ஒருங்கு தான் கொல்லுங் கருத்துடையதுமாக கோபித்தெழுகின்றதுமாகிய வெள்ளம் எல்லையில்லாத திசைகளில் இருள் சேரப் பரக்கையாலே, அதனை மாய்க்கவேண்டி ஆதித்தர் பன்னிருவருந் தோற்றிய வடவைத்தீ அனையை; அதனை அறிகின்றனராதலால் தம்பகை மிகுதியால் அஞ்சாராய் அவர் படை எடுக்கத் துணிதல் அல்லது பலரும் தம்முடன் ஒருங்கு கூடிக்காக்கினும் தம் நாட்டைக் காக்க மாட்டார்.

73 அறிவுடையோர் எண்ணினும் மூடர் எண்ணினும் பிறர்க்கு நீ உவமை யாவதல்லது நினக்குப் பிறர் உவமையாகாத ஒப்பற்ற பெரிய வேந்தே! சிறந்த விரிந்த இடத்தையுடைய விளைந்த வயல்களிலுள்ள நாரையை ஒப்பும் மகளிர் பசிய ஆபரணங்களைக் களையாது ஒன்றுக்குப் பக்கத்தே ஒன்றாய் பல கூட்டங்களாக நின்று குரவை ஆடுவர். (இவ்வகைச் சிறப் பமைந்த) காவிரி நீரால் நிறைந்த வயல்கள் பரந்த வனப்புடைய புகார் நகரையுடைய செல்வ! பாண்டி நாட்டவர் மெய்ம்மறை! மூங்கில் பரந்து வளரும் மழை தவழ்கின்ற நெடிய சிகரமுடைய கொல்லி மலைப்பொருந! கொடியசையும் தேருடைய சேர! நின் செல்வமும் ஆண்மையும் கொடை யும் உலகத்து மக்களின் அளவைக் கடந்தன. நின்னோடு மாறுபடுவது நுமக்கு உறுதியன்றென யான் பன்னாட் சொல்லியும் (நின் பகைவர்) தேறிற்றிலர்; தேறாராயினும் உலகத்து மதிப்புடைய சான்றோர் சொல்லத் தாம் தேறுவாரோ வெனக் கருதின், அவர் சொன்னவிடத்தும் அவர்கள் மதி மருண்டது காணாநின்றேன். ஆதலால் நின்பெருமையை அவர்கட்கு எப்படி உரைப்பேனென யான் வருந்தா நின்றேன். இது என்னிடத்துள்ள குறை. இதனை அறிந்து நீ அவர்பால் அருள வேண்டுகின்றேன்.

74 இவ்வுலகத்தவர்களுக்குச் செய்யவேண்டிய அரிய கடமைகளைச் செய்து முடித்த போரில் வெற்றியுடைய முதல்வ! யாகஞ் செய்தற்குரிய விதி களைக் கேட்டு அதற்குரிய விரதங்களை விடாது தேவர்கள் உவக்கும்படி வேள்வி வேட்டனை 1என்றும், சாய்ந்து கருமணல் ஒத்துத் தாழ்ந்தகரிய கூந்தல் முதலியவற்றால் வேறுபட்ட நின் தேவி (மனைவியர் பலருள் பட்டத்துத் தேவி) நல்ல அழகிய மணிகள் அணிந்த வடிவமைந்த தோளும், கரிய சுருண்ட மயிரும் பிரகாசிக்கின்ற நெற்றியுமுடையவள். (மானின் இலக்கணங்களை) அறிந்தோர் மலை அடைந்தும் சிறு குன்றுகளை நாடியும் சென்று கொணர்ந்த சிறிய பசிய புள்ளிகளும் மரக் கிளைகளை ஒத்த கவர்பட்ட மருப்பு முடைய புள்ளிமானின் இறைச்சியை நீக்கிக் குற்றங்களைப் போக்கி வட்டமாய் வெட்டிய பிரகாசிக்கின்ற எஞ்சிய தோலின் விளிம்பிலே, கொடுமணம் என்னும் ஊரிற் கிடைத்த தொழில் மாட்சிமைப்பட்ட நல்ல ஆபரணங்களையும், பத்தர் என்னும் ஊரார் (திறையாக அளந்த) பலராலும் புகழப்படும் முத்தையும் விளிம்பிலே வைத்துக்கட்டிக் கூரிய இரும்பூசியினால் (தொழில் வல் லோன்) தோலுட்செய்யும் தொழிலெல்லாம் செய்து (தைத்த) தோலினை விசும்பிற் பறக்கும் பருந்து கவருதற்குப் பார்க்கச் சூடினமையால், கருவில் மாதம் நிரம்பிப் பெரிய அறிவைப் பெற்று, அமைதியும் தலைமை யும் உட்பட்ட பிறவுமாகிய ஆளுகைக் கமைந்த வீரம் பொருந்திய புதல்வனைப் பெற்றனை என்றும், யான் மருண்டேனல்லேன். நின்னை நல்வழியில் ஒழுகுவித்து நின்ற நரைமூதாளனை (புரோகிதனை) நின்தவ ஒழுக்கத்தானே, கொடையும் பெருமையும் செல்வமும் சந்ததியும் தெய்வமும் ஆகிய பலவும் தவமுடையோர்க் கெனக் கூறி இல்லற ஒழுக் கினை ஒழித்துத் துறவொழுக்கத்திலே செல்ல ஒழுகுவித்தனை; அவ் வாறு செய்வித்த நின் பேரொழுக்கத்தினையும் பேரறிவினையும் தெரிந்து நான் மருண்டேன்.

75 பொறைய! (=சேர) நீ பெரிய புலியைக் கொன்று களிற்றை அடும் (எதிர்த்தற்) கரிய கோபமுடைய சிங்கம் அனையை! அதனால், பல வேற்படையையும் பொன்மாலையா லலங்கரித்த யானையையும் அழகிய தேரையுமுடைய வேந்தரும் வேளிரும் பிறரும் நின் அடிக்கீழ்ப்பணிவர்; பணிந்து, நெல்லின்கண்ணே நெருங்கி வளர்ந்தமையால் அறுக்கப்பட்ட கரும்பு இடையறாது பாகு அளிப்பதும், வருவாரைக் கணக்கிட முடியாத துமாகிய வளம் பொருந்திய தமது மருத நிலங்களுடைய நாட்டை (ஆளாநிற்பர்). (முன்பணிந்ததற்கேற்ப) பின் நின்வழி ஒழுகாராயின் அரிய பறையைக்கொட்டும் தொழிலாளர் புல்லிய போர் செய்து கள்ளுவிற்கும் வீதியில் அக்கள்ளுக்கு விலையாகக் கொடுக்கும் வெள்வரகு வித்துதற்கு உழுத கொள்ளுடைய கரம்பையாகிய வலியபார் நிலத்திலே கெட்டுப் போயிருந்து (ஆண்டு விளைந்த) வெள்வரகு, உண்பதன்றித்தாம் பண் டுண்ணும் செந்நெல் உணவு உண்ணக் கிடையாதபடி வறுமைப்படுவர்! அவர் தந்நாட்டை ஆள எப்படி முடியும்?

76 முகில் படிந்து கருமைகொண்டு குளிர்ந்த துளிகளைச் சொரிதலால் பல விதைகளை உழுது வித்தும் (தொழிலாற் பெரியராயினும் குலத்தாலும் ஒழுக்கத்தாலும்) சிறிய ஏராளர், உழுது விளைவித்துக்கொள்ளலன்றி, குளிர்ந்த துறையிடத்துள்ள பகன்றைப் பூவாற்றொடுத்த மாலையை வெளுத்த ஆடைபோற் சூடிக்கொண்டுநின்று உழுத இடங்கள்தோறும் ஒளியுடைய திருமணிகளை எடுக்கும் நாட்டுக் குரியோனாவன் (நம் வேந்தன்). அவன், மன்னரது களிறுடைய போர் சிதையும்படி உயர்த்திய, பிரகாசிக்கின்ற வாளும், முரசுமுழங்கும் படையுமுடைய மன்னர் கூடிச் செறிந்த நிலைமையை அழித்து, துறையிடத்திற் போய்ப் பெரிய கடலை நீந்திய மரக்கலத்தை அழிவுறாது பாதுகாக்கும் பண்டவாணிகரைப் போலப் பெரிய படைவகுப்பிலுள்ளவர்களின் புண்ணைநீக்கி, அவரது வலிய துயரைக் களைந்து போரிடத்து வினையிலிருத்தலே விநோத மாகக் கொண்டு, இரந்தவர்க்கீந்து, பின்னுமிரப்பவர்களுக்கு மாக்களை வரையாது கொடுக்கும் மாசிதறிருக்கை (=மா+சிதறு+இருக்கை)யைக் கண்டு போக வந்தேன்.

77 வழியிடத்தே செல்லும் புதிய மக்காள்! சினந்த போரையுடைய பொறை யன், என்ன? பெரும்படையனோ என்றனிராயின், அவன், தானையிடத் துள்ள பகைகெட்டோட அரசரைக் களத்திலே உடல் ஒழிந்துகிடக்கக் கொன்று வென்று தோளோச்சித் துணங்கையாடிய வீரர் இப்பொழுது இவன் களத்திற் பட்டுக்கிடக்க அப்பிணங்கள் மேல்உருண்ட சில்லுடைய பண் அமைந்த தேரும், மாவும், மாக்களும் எண்ணற்கு அருமையின் எண்ணிற்றிலன்; கட்டுத்தறியில் நில்லாது குத்துக்கோல் பலவற்றை முறித்து, உயரப்பறக்கும் பருந்தின் நிலத்தே திரியும் நிழலைச்சாடித் தூரத்தே பரல்நிறைந்த மேட்டில் நேரிய படையுடைய கொங்கரது ஆ பரந்தாற் போற்செலவுடைய யானைகளை அவன்றானையிற் காண்பாய்.

78 சில வளைகளையுடைய விறலி! நீ செல்குவையாயின், கிளி கடிகின்ற மகளிர் (சமீபத்திலுள்ள மருத நிலத்தே சென்று) நெய்தலோடு விரிந்த இதழுடைய தாமரையை அரிந்து, பின் கிளி கடிகின்றவர்களாய் பல வள முடைய முல்லை நிலப் புனங்கடோறும் (கிளி கடி பாடலை) நுவல்வதும், பல பயன்களுடைய காடுடைய ஊரில் வெல்கின்ற போரையுடைய வீரர் வீரம் காக்கும் விற்படை தங்கும் காடுடைய தகடூரை அழித்து, (சினமிகுதி யால் மாற்றார் படையினை நேரே பாராது) எடுத்தும் படுத்தும் வளைத்தும்) பேய்போலப் பிறழநோக்கிய பல வாத்தியங்களுடைய அவரோடு உற்ற கடியபகை ஒழியச் சென்று கொடிய முனையை அழித்தபோது, குதிரை யோடு ஆபரந்தன்ன யானையையுடையோன் குன்று, உவ்வெல்லையில் அருவி, வெற்றிமுரசைப்போல் ஒலித்துப் பிரகாசத்துடன் விழும் அதுவாகும். சில்வளை விறலி!
நீ செல்குவையாயின், யானை உடையோனது குன்று உவ்வெல்லையில் உள்ள அருவிபாய்கின்ற அதுவாகும் என விறலியை ஆற்றுப் படுத்தியது இச்செய்யுள் என்க.

79 மாலை அணிந்த மார்ப! போரிடத்து உயிர்களைக் காத்தலுடையை, இரவலரின் நடுவே கொடையைப் போற்றுவை. பெரியோரைப் போற்றிச் சிறியோரை அளிப்பை; நின் எல்லாக் குணங்களும் அளத்தற்கரிய; நீ அவ்வாறொழுகுதலின் பலதிசைகளிலும்பரந்தநல்லிசையை இனிக்கன விலும் பிறர் நச்சுதற்கறியார்; அதனை அறியாமையின், பிரகாசிக்கின்ற சிவந்த நாவால் நின்னை வணங்காதவர்களை அழித்த ஆண்மையையும், வளையணிந்த பெண்களின் தோளிடத்துக் குழைந்த மாலையையு மணிந்தமார்ப! நின்னை வழிபட்டிருத்தலன்றித் தம் நிலத்திலிருந்து நின்னோடு பகைத்து, (பின்பு போர்க்களத்து நின் வலியைக் கண்டு இனி நின்வழி ஒழுகுவேம் எனச்சொல்லித் தாம்) ஏறிய யானையினின்றும் இறங்கி வில் நாண் அறுப்புண்டு நின் செங்கோல்வழி ஒழுகாத வெல் கின்ற போரையுடைய வேந்தர் முரசினை உடைத்து, அவர் அரசயானை கதறும்படி கொம்பையறுத்து நீ இணக்கிய அழகிய கட்டில்மேல் இருந்து, தும்பை சூடிய வீரரின் உடம்பு அசைந்து வருகின்ற நிறமுடைய இரத் தத்தை அன்றிப் பலி கொள்ளாத அஞ்சுந் தன்மையுடைய கொற்றவை உறைகின்ற அயிரைமலைப் பெரும! நின்புகழ்கேடிலவாக.

80 உலகமுழுமையும் நிலைபெற்ற நல்லபுகழுடைய தொலையாத கல்வி யுடையோய், அம்புடைய வலிய வீரராகிய உயர்ந்தோர், நின்பகைவ ருடைய பெரிய மருப்புடையகளிற்றியானை மலைபோற் கூட்டமாய் நிற்கவும், எடுத்துமுழக்கிய வெற்றி முரசம் கார்கால மழையிலும் கடிதுமுழங்கவும், அவற்றை ஒன்றும் மதியாது நின்னோடு, சாந்து புலர்ந்த பெரிய மார்பும் (வீர) வளை சுடர் விடுகின்ற வலியமுன் கையும், காலில் வீரக்கழலும், பிறங்கிடாத வலிய அடியும், பிரகாசிக்கின்ற வாளுமுடைய, கேடில்லாத பகைவரின் எதிர் நின்று உலாவி, ‘இவ்எதிர்த்த வேந்தனுக்குத் திறையிடுக’ எனச்சொல்லி நின்னை (அவ்உயர்ந்தோராகிய வீரர்) வாழ்த்து ம்படி நீ அதற்கேற்ற தன்மையை உடையை ஆதலால், நின் பகைப்புலத் தெல்லையில் நின்பகைவரைக் கடிய குதிரைபூட்டிய தேர்மிசைக் கொடி, சினந்தபோரைக் குறித்து எழுவதெப்படி.

நின் வீரர் நின்னோடு வலிய பகைவரின் முன்னின்று வெருவி வேந்தர்க்குத் திறைஇடுக எனக்கூறித்திறை இறுப்பித்துத் துதிக்கும் இயல் பினையாதலின் போரைக் குறித்து நின்தேர்மிசைகொடி எழுவதெப்படி என்றவாறு.

எட்டாம் பதிகம்
பொய்யில்லாத செல்வக்கடுங்கோவுக்கு வேளாவிக்கோமான் மகள் மதுமன்தேவி யீன்ற மகன் கொல்லிமலைக் கூற்றத்திலுள்ள நீர் மிக்க மலையினுச்சியில் பல வேற்படையுடைய அதிகமானோடு இரண்டு பெரிய வேந்தரையும் ஒருமித்து வென்று, அவரது முரசும் கொடியும் கலனும் கொண்டு புகழமைந்த, போர்க்களத்தே களவேள்வி செய்து குற்றந்தீர்ந்த மகளிர் இரங்கும்படி மயிரை அறுத்துத் தகடூரைவென்று அதன் மதிலைக் கைக்கொண்டு பெற்ற அரிய வலியையும் பிரகாசிக் கின்ற புகழையுமுடைய பெருஞ் சேரலிரும் பொறையை குற்றந்தீர்ந்த வார்த்தையுடைய அரிசில் கிழார் பத்துப்பாட்டுப் பாடினார்.

பாடிப்பெற்ற பரிசில்: தானும் தேவியும் புறம்போந்து நின்று கோயி லிலுள்ள வெல்லாம் கொண்மினென்று ஒன்பது நூறாயிரம் காணத்தோடு அரசுகட்டிலுங்கொடுப்ப, அவர், யான் இரப்ப இதனை ஆள்க வென்று அமைச்சுப் பூண்டார். தகடூரெறிந்த பெருஞ் சேரலிரும் பொறை பதினேழி யாண்டு வீற்றிருந்தான்.

ஒன்பதாம் பத்து
81 உலகைக்காக்கும் அழகிய சிறப்புடையதும் (கரிய) கொழுமையுடையது மாகிய (மலையிற் படிந்த) மேகங்கள், அகன்ற பெரியவானிடத்து அதிர் கின்ற கோபத்தோடு அச்சந்தரும் இடி இடித்து, எழுந்து, விசும்பை அடைந்து கார் காலத்தை அறிவிக்கும். அப்பருவத்தால் (கார்காலம் பிரிந்த தலைவர் சேர்ந்துறையும் முல்லைக்குரிய பெரும்பொழுதாக லின்) வருத்தங் கொள்ளா நிற்கக், களிறுபாய்ந்து செல்லவும், கதியுடைய குதிரை வீரரைத் தாங்கிச்செல்லவும், பிரகாசிக்கின்ற கொடி அசையத்தேர் சுழன்று திரியவும் அரசர் புறத்தே சூழ்ந்து தங்கினும் அஞ்சாதோரும், தமதுகாவ லிடங்களைப் (பகைவர்) கைப்பற்றமுடியாத வலியுடையோருமாகிய வலிய வீரர், பெரிய இருண்ட இராக்காலத்தும் சிறந்த வீரவளை பிரகாசிக்க (குளிர்மிகுதியால்) தோளைப்பிணித்த கைகளை மேலே உடையராய், நாளும் (தாம் மேற்கொண்ட போரை) வெற்றிச் சிறப்புடன் முடித்துக் கொள்ளும் வேட்கையராயும், உயர்த்துக்கூறப் படும் கெடாதநல்ல புகழைத் தங்குடிக்கு நாட்டுவோராயும், முள்வேலியிடாத பாசறையில் உலாவித்திரிவர். (இவ்வாறானபாசறையிலிருந்து) நாட்டை அகப்படுத் தினதினால் அக்காலத்து நேர்ந்த கொள்ளையை மாற்றி அழன்று செய்யும் போர்த்தொழிலை ஆறும்படிசெய்து, நின்தானைக்குத்தரங்களை (=பதவிகளை) உதவி, வேற்று நாட்டிற்தங்கிய அண்ணல்! மத்தளம் போன்ற பெரிய (பலாப்) பழத்தின் (சாறு) போன்றதும், கரிய அழகிய மூங்கிற்குழாயில் விளைந்ததும், விழாக் கொண்டாடினாலொத்ததுமாகிய இனிய மதுவைப்பருகிக், காந்தள் மாலையணிந்த செழுங்குடியிலுள்ள செல்வர்வினோதமகிழ்ச்சி எய்தி இரவலர்க்கு ஈகின்ற வண்டுகள் மூசும் சோலையும். பெரிய மழையுமுடைய கொல்லிமலையிற் பூத்த இருவாட்சி மலரோடு பச்சிலைகளைச்சூடி, மின் உமிழ்ந்தாற்போன்று சுடர்விடும் ஆபரணம் பூண்ட சேடியர்களையுடைய, வண்டு மொய்த்தலின் நிறம் காந்த சுருண்ட கரிய கூந்தலுடையவளும், பிரகாசிக்கின்ற நெற்றியுடைய வளும், வளைந்த குழைக்கு அழகுபெறப் பொருந்திய நோக்குஉடைய வளும், மாட்சிமைப்பட்ட ஆபரணங்களணிந்தவளுமாகிய (நின்) தேவி காணுதற் பொருட்டு நின் தேர் ஒரு நாள் புரவி பூணவேண்டும். அதுதான் அரிவைக்கு ஆகவேண்டுவதல்ல.

அதனாலே நின்னோடுபோர் செய்கையைக் கைவிட்டு நின் முன்னே வந்து வழிபட்டு நில்லாமையால், முன்பு நின் வலியோடெதிர்த்துப்பின் எதிர்க்கப்பெறாத அரசர்கள் துஞ்சவேண்டும்; நின் தோட்கு விருந்துமாகவேண்டும்; (இவ்வாறு இரண்டொரு காரியமாக இதனைச் செய்க)

82 பாடுவோர் கொள்ளக் கொள்ளக் குறையாத செல்வமும், பகைவர் கொல்லக் கொல்லக் குறையாததானையும், (புகழ்காரணமாகிய) கொடை யும், பெருமையும், அமைதியும், அறனும் ஆதியவற்றை அறிஞர் சொல்லிப் புகழ்கையால் கெடாத நல்ல புகழுடையவனும், பகைவரது நிலத்தைக் கவரும் திருவுடையவனுமாகிய நெடியோய்! பெரும! பெரிய பகை ஆதலின் (நின்பகைவர் நின்னை அஞ்சித்தாந்தாம் வழிபடும்) தெய்வத்தைத் தமக்குக் காவலென்று வழுத்தும்படி, வீரர் அஞ்சாது அரிதாகத் தங்கும் (பகைவருக்கு) அச்சந்தரும் பாசறையிடத்து, பலகொடி அசைகின்ற முன்னணியுடைய பகைவரது வலியபோரைத் தொலைத்த தும் முன்னே போர்செய்து பழகியதுமாகிய யானை, மதம் பொழிந்து கடுஞ்சினம் மூடி வண்டு மொய்க்கும் தலையுடையதாய் (போர் பெறாமை யால்) திரிய, பாகர் அதன் சினத்தை அளவு படுத்தவேண்டிப் பிடியைப் புணர்க்கப், பிடியைப் புணர்ந்தும் போர்வேட்டுத் திரியவும் வீரர், போருக்கு ஆயத்தமாகவும், (இன்னபொழுது போர் நிகழுமென்று அறியாமையின்) குதிரைப்படை சேணம் இட்டு நிற்கவும், தேர்மீது (போர் குறித்துக் கட்டிய) கொடிகள் அசையவும், பரிசைகள் முன்சொன்ன (காலாள், குதிரை, தேர்) முதலிய வற்றின் பக்கங்களிற் கிடந்து (போர் குறித்தநாளில்) ஆர்ப்பவும், காட்டிலுள்ள விறகை முறித்து தீகாயுந் தன்மையுடையதாகிய பாசறையில் நீ தங்கி உறையும் நாட்கள் பலவாயின வாதலின், நின்னைப்பாடிக் காணவந்தேன்.

83 நின்னைக்காண்பார்க்கு, கரிய முகிற்கூட்டத்தின் முன் (ஒரொருகால்) ஒழுங்குதவறி எழுந்துசெல்லும் வானிற் பறக்கும் கொக்கின் நீண்ட ஒழுங்குபோலக், கொல்லும் யானைகள் நெருங்கிய பலபரிசைக் கூட்டத் தோடு நீண்ட தேர்களில் அசைகின்ற கொடி விளங்காநிற்ப நின்படை செல்லுஞ்செலவு மிக இனிதாகுக. அவ்வாறு அன்புறுவாரை ஒழிய, அது யார்க்கு இன்பஞ் செய்யாதெனில்: நின் பல குதிரைப்படைகள் நாடுகெடும் படி அழித்து, நல்ல ஆபரணங்களைக் கொள்ளையாகப் பெறும் பொருதற் கரிய கடிய சினத்தை எதிர்த்து மாறுகொள்ளும் பகைவரது பாசறையில் தங்குவோர்க்காகும்.

84 ஓசை உயரக் குறுந்தடியாலடிக்க அதிர்கின்ற போர்க்கப்பட்ட முரசு கண் அதிர்ந்தது போன்ற கார்கால முழக்கிலும், மாற்றாது பாசறையிற் புகுந்து நெற்றிப்பட்ட மணிந்து நிற்கும் போர்க்குரிய தென்று எல்லாராலும் சொல்லப்படும் யானையைக் கட்டுத்தூணினின்றும் அவிழ்த்துச் செல்லும் பலவேற்படையுடைய பூழியர் கோவே! பொன்தேருடைய பொறைய! உலகை அழிக்கும் காற்றை ஒத்தமுதல்வ! (பகைப்) புலத்திற் கொடியசை யும் காவலுடைய எயில்கள் எண்ணின் எல்லை அறியா; பல குதிரைகள் பரந்தன; (ஆகையால் பகைப்புலம் நமக்கு வெல்லற்கு அரிய தொன் றென்று உணராய்) நீ அவ்வாறு வல்லுனை ஆனபடியை முன்பு அறியாது, இன்று போர்செய்து அறிந்தனராயினும், அவர் நின்னோடு கோபித்து எழுந்து வந்து அதனைப் பின்னுமறிவதல்லது (நின்னை) வணங்கல் அறிகின்றிலர். இனி அவர், முகில்போல் ஆர்த்துமுழங்கும் இளம் யானையின் கீழகப்பட்ட மூங்கில் முளையின் கிளை அழிவது போல அழிவதல்லது உய்யக்கருதுவது யாது?

கோபித்து எழுந்துசென்று போர்க்கப்பட்ட முரசம், ஆரவாரம் எழுந்து சண்டையை அறிவிக்கப் போர்த்தொழில் பூண்ட மாற்றாரது வேற்படை நிறைந்த பரப்பில், காலத்தாற்பெய்யும் மாரிபெய்து தனது தொழிலாற்றி ஆகாயத்திற் சென்றபுயல் நெடுங்காலம் மலையிடத்தே சென்று மழை தோன்றியவிடத்து, பலகுரலுடைய புள்ளின் ஒலி எழுந்தாற்போலப் போரறை கூவும் செருக்குடைய வில் நீங்காத வீரரோடு இடி இடிக்கும் மலைபோற் களிறு நிலத்தே உருள நிலையாமை அமைந்த பல போரைச் செய்து நின் படைக்கூட்டம் ஆரவாரித்திருக்கின்ற இருப்பினையாம் இனிது கண்டேம்.

85 (இளஞ்சேரலிரும்பொறை) பொன்னினால் ஒளிவிடும்படி வேலைப்பாடுக ளமைத்துச் செய்ததும் பிறர் பூணுதற்கரியதுமாகிய விளங்கும் பெரிய ஆபரணங்களை அணிந்த சென்னியர் பெருமானுடைய (=சோழனது) (பயன்தரும்) நல்ல மரங்கள் செறிந்த பல நாடுகளைக் கவர்ந்து எமக்குத் தந்தான்; அச்சென்னியர் பெருமானை எம் முன்னே பிடித்துக் கொண்டுவந்து தம்மினெனத் தம் படைத்தலைவரை ஏவச், சென்னியர் பெருமானின் படையாளர் பொருது தோற்றுப் போட்டு ஓடிய வெள்ளிய வேலுடைய செல்வக் கடுங்கோவாழியாதனென்பவன்,

தீஞ்சுனை களுடைய அழகிய பக்கங்களில் பல கோடுகள் பரந்ததும் (தன் மேல்) ஏறி நாடு முழுவதையும் பார்த்தற்கு ஏதுவாகியதுமாகிய மலையிடத்து கள்ளுவார்க்கப்படும்மகிழ்ச்சிக்குரிய காலை ஒலக்க இருக்கையின்கண் தன் முன்னோர்களாகிய அரசர்களைப் போல் அரசவை பணியும்படி அறத்தை நாட்டுவதற்கு மறம்புரியும் தன்மையை ஒத்த கொள்கை யுடையை! அவன் தந்தநாடுகள், பிரகாசிக்கின்ற சிவந்த நாவினால் மெய்மையாகப் பாடிய புகழுடைய கபிலன் பெற்ற நாடுகளிலும் பலவாகும்.

86 நிலத்திலே இரத்தம் பெருகிப், போர்க்களம் புலால் நாற்றம் வீசும்படி கொன்று போரைவென்ற பெரிய வலிய விசாலித்த கையில் வெல்லும் வேலுடைய பொறையன் என்று (எல்லோரும்) கூறுகையால் யான் அவனை அச்சந்தரும் கோபமுடையான் ஒரு மகனென்று (முன்பு கருதி னேன்); அவ்வெண்ணம் இப்பொழுது கழிந்தது. அப்பொறையனாகிய, நல்ல புகழ்நிலை பெற்ற பெரிய உலகில் இல்லாதவர்களின் வருத்தம் தீர நல்கும் ஆராய்ச்சி மிகுந்த அருள் உடைய நெஞ்சினனாகிய பாடுவோர் வேந்தனும், அசைந்து நடக்கின்ற தலைவனும் ஆகிய அவன், புனலிலே மகளிர் பாய்ந்து ஆட மிதந்து பொன்னாற் செய்த அழகிய குழைமீது தோன்றிய சாந்து மிதந்துவரும் வானி ஆற்று நீரினும் நிச்சயமாக இனிய குளிர்ந்த சாயலுடையன்.

87 பல வேற்படையுடைய சேரன், சந்தனமும் அகிலும், பொங்கும் நுரையிடத்துச் சுமந்து, தெளிந்த கடலிடத்தே செல்லும் வெள்ளிய தலை யுடைய சிவந்த நீரையுடைய ஆற்றின் நீர் வழிச் செலுத்தும், கரும்பாற் செய்த தெப்பத்தினும் அருள்செய்ய வல்லன்; (ஆதலால் அவன் பால்) பாடினி! செல்வாயாக; (செல்லின்) நல்ல ஆபரணங்களைப் பெறுகுவை.

88 உலகிற் பரந்த அரசரது தொழிலின் முறை தவறாது, கொற்றவையின் பெய ருடைய காட்டோடு 1(விந்தாடவி) மலைகள் உயர்ந்து கடலாற்சூழப்பட்ட அகன்ற இடத்தையுடைய உலகத்துத் தமது புகழ்பரந்த பகைவர் தேய, அலையுடைய பெரிய கடல் பிறங்கிடும்படி வேல் எறிந்தும், அழகிய கடம்பை வெட்டியும், பொரும்பொருட்டு மாறுபட்ட கழுவுளைப் புறங்கண்டும், புகழ்பெற்ற மன்னரை வெட்டிக்கொன்றும், கதியுடைய குதிரையைப் பகைவரிடம் கவர்ந்தும், சுடர்விடுகின்ற வாகையுடைய நன்னனை அழித்தும், இரத்தம் சிந்திய குவிந்த சோற்றுமலையோடு அழகிய அயிரைமலைத் தெய்வமாகிய கொற்றவையைப் பரவியும், அரசரும் வேளிரும் பின்சென்று பணிய வெற்றி கொண்டோரது மரபில் வந்தோனே! நீண்ட பிடரிமயிருடைய சிங்கம்போன்று வீரம் பொருந்திய குரிசில்! முரசு பரந்தொலிக்கின்றதும், பரிசைகள் வரிசையாக (நிறுத்தப் பெற்றது) மாகிய இடத்தில் வலிய களிற்றின்மீது வெற்றிக்கொடி அசைகின்ற பாசறையும், காவலுடைய மதிலை அழிக்கும் கற்களை இடை விடாது எறியும் கவணையும், பன்னாடையால் வடிக்கும் தேனையு முடைய கொங்கர் தலைவ! கோபித்தோரைக் கொன்ற பொன்தேருடைய குரிசில்! வளைந்த கடலுடைய தொண்டியோர் பொருந! பெரும! சொல்லப்பட்ட மாட்சிமையுடைய உத்தம இலக்கணங்களோடும், பொலிந்த சாந்தோடும் குளிர்ந்த மணம் வீசுகின்ற மாலை சூடிப்பூண் களைச் சுமப்பவளும், கரிய முகிற்கூட்டங்கள் பெரியமழை பெய்து வேங்கை பூத்துள்ள ஆகாயத்தை முட்டும் உயர்ந்த கொடுமுடிகளி லிருந்து அருவிஓடும் மலையை ஒத்தமார்புடையவளும், தூரத்தே நறுமணம் வீசப்பெறுகின்ற, நல்ல புகழமைந்த அழகிய ஆபரணங்களை உடையவளுமாகியவளது கணவ! காற்றடித்தலால் உயர்ந்து வரும் திரை அடைக்கப்பட்ட கரையை உடைக்கும் தண்ணிய கடற்கரைச் சோலை யுடைய நாடுகிழவோய்! யான் ஈண்டு நின்னைக் காணவந்தேன். நீ நீடுவாழ்வாயாக;

எல்லாராலும் புகழ்ந்து சொல்லப்பட்ட தும்பைப்போரை நினக்கு வெற்றி தரற்கு மெய்மையாக வினவும் வலியைத்தரும் கொற்றவை கூடி உறைகின்ற (அயிரை) மலையில் ஊற்றெடுத்துப் பாய் கின்ற பேராறுபோல, வரைவில்லாது வருவோர் செழித்த பல அரும் பண்டங்களைக் கொள்ளக் கொள்ளக் குறையாது, மேலும் மேலும் நின்நகர் சிறப்படையும். (இவ்வாறு செல்வமமைந்த) சித்திரம்போன்ற அழகிய நீண்ட நகரில் பாவை ஒத்த மகளிரின் நடுவே தேவருலகம் ஒளிபெற பெரிய விசும்பின் கண் உயர்ந்து செல்லும் ஞாயிற்றைப்போலப் பன்னாள் விளங்குக.

89 பல வேற்படையுடைய பெரும்பொறைய! செம்மையான வானம் பொழு தொடு விளங்க, காட்டிற் கூட்டமாகிய பெண்மான் ஆண் மானோடு சேர்ந்து திரிய, பெரிய மரக்கிளைகளில் பட்சிகளும் வண்டும் இருந்து ஆர்ப்ப பழமுங் கிழங்கும் உண்ணக் குறைவு படாதிருப்ப, பல பசு நிரை புல் அருந்தித்துள்ள, செல்வம்குறை தலறியாத வளம் பொருந்திய சிறப்புடைய பெரிய பல புதுவருவாயாகிய கூலம் நிறைய, நல்ல பல ஊழிகாலம் நடுவு நிலைமை நின்று ஒழுக, தினந்தினம் நாட்டவர் தொழுது ஏத்த, விண் உலகத்துத் தேவர்கள் ஏத்த, அரசியல் பிழையாதொழியப் போரில் மேம்பட்டுத் தோன்றி நீ, கனவிலும் நீங்காத போர்வையோடு நின்னிடத்து அடங்கிய நெஞ்சு மாசுபடுதல் அறியாது, குளிர்ந்த மயிர்ச் சாந்து பூசிய ஈரம்புலராத கூந்தலுடைய கலியாணமகளிர் சென்று நோக்கி தம் வாழ்நாளை அறியும் பிரகாசிக்கின்ற ஒளியுடைய அருந்ததியோடு ஒத்த கற்புடைய, ஒள்ளிய நெற்றியுடைய நின் அரிவையோடு காணும்படி பொலிந்து நோயில்லையாகுக.

90 வெள்ளி நிற்கும் முறைமையில் நிற்க வானம் மழை பெய்தலின், அச்சம் தீர்ந்து பாதுகாப்பாகித், துன்பந் தீர்ந்து, இன்பம் மிகவுந்தோன்றிப் (பெருக), (பார்ப்பார் முதலாயினார் தத்தமக்கு அளவான) துறை நூல்களை அஞ்சாது நிறையக்கற்க, வலியின் மிக்கோர் கோபிக்கும் கடிய வலி யினை அஞ்சாத ஒள்ளிய வெற்றிவேந்தர் யானைகளோடு ஆபரணங் களைத் தந்து, நின் பழமையைப் புகழ்ந்து ஏவியதைச் செய்ய, அகன்ற உலகத்தவர்களுக்கு நடுவு நிலைமையைச் செய்து, மாயாத பலபுகழ் வானில் பரக்க வாள்வலி புரிந்து சிறப்புப் பூண்டு, அறக்கடவுள் வாழ்த்த நன்கு ஆட்சி புரிந்த வெற்றியுடைய மாந்தரனுடைய மரபிலுள்ளோய்! அழகிய முறைமையில் அயிரைமலைத்தெய்வத்தை வழிபட்டு, கடல் அடங்க வேலெறிந்து, மலை இடத்தவும், நிலத்திடத்தவுமாகிய அரணைக் கைப்பற்றிச் சினந்த பகைவரின் வலியைச் சாய்த்துப் பெற்ற பெரும் புகழைப் பலரிடத்தினின்றும் போக்கிய வெற்றித் திறமையைப் பெற்ற உரவோர் உம்பல்! கட்டியோடுகூடிய அவரைப் பருப்புப் புழுக்கு முதலிய புழுக்கினையுடைய கொங்கர் கோவே! கள்ளுடைய குட்டுவர் ஏறே! போரில் முதுகிட்டார் மேற்செல்லாத வலியதோளுடைய பூழியர் மெய்ம்மறை! இலங்குகின்ற நீர்ப்பரப்புடைய மாந்தையோர் பொருந! வேளையின் வெள்ளிய பூவொடு சுரைப் பூ மாறித் தொடுத்தாற் போலப் பாசறையில், கலந்த (பிறபல) மொழிகளைப்பேசும் வீரரின் வேந்தே! பரந்த கடல்போன்ற தாங்குதற்கரிய தானையோடு பெரிய போர் செய்யும் வில்லை மார்பில் முட்டும்படி வளைத்தலின் நாண் உரோஞ்சுதலால் விளங்கிய, வேந்தர் திரண்டாலொத்த வலியுடைய, வார்ந்து அலங்கரிக்கப் பட்டது போன்ற விசாலித்தகையையும், நட்சத்திரங்கள் பூத்தாற்போன்று விளக்குடைய சேணமும் ஆய்ந்தமயிராற் செய்யப்பட்ட கவரியுமுடைய குதிரைமீது ஏறி, பிடியுடைய வேலைப்பிடித்து எறிந்து, பகைவரை இடும்பை செய்தலை விரும்பும் வீரரையுமுடைய பெரும! உயர்ந்த பெருஞ்சிறப்பினால் ஓங்கிய புகழோய்! குளிர்ந்த புனலிடத்து ஆடுவோரின் ஆரவாரத்தில் கலக்க வெவ்விய போர்செய்யும் மள்ளர் தெள்ளிய ஓசையுடைய கிணைப்பறையைக்கொட்ட, கூலங்களுடைய நல்லவீடுகளில் ஏறுகள் ஒன்றுக்கொன்று மாறாக ஆர்ப்ப, செழிய பலாக்கள் உடைய கொழுவிய குளிர்ந்த வயலிலிடத்துள்ள காவிரி சூழ்ந்த சோலையுடைய வயலிலுள்ள உழவர், மத்தளங்கொட்ட வயலிலுள்ள மயில்கள் மழையைக்கண்டாற் போல் ஆடும் நல்ல நாட்டைப்போல வளம்பொருந்திய, சிலம்பும் அடங்கிய குணமும், ஆறியகற்பும், தேறிய நல்ல குரலும், வண்டுகள் ஒலிக்கின்ற கூந்தலுமுடைய ஒண்டொடியின் கணவ! இடிபோல் முழங்கும் முரசும் பெரிய நல்ல யானையுமுடைய இறைகிழவோய்; ஈரம் உடைமையின் நீரில் வாழ்வோரை ஒப்பை; அளத்தற்கருமையின் பெரியவானம் அனையை; கொள்ளக்குறைவு படாமையின் கடல் அலையை; பன்மீன்களின் நடுவே திங்களைப்போல மலர்ந்த சுற்றத்தோடு பொலிந்து தோன்றுதலையுடையை; (ஆதலால்) நினக்கு அடைத்த நாட்கள் உலகத்திற் திங்கள் அனையவாகவென்றும், நின்னுடைய திங்கள் யாண்டு அனையாகவென்றும், நின்னுடைய ஆண்டு ஊழியனையவாக வென்றும், நின்யாண்டிற்கு ஒப்பாகிய அப்பல்லூழிதம் அளவிற்பட்ட பலவாய் நில்லாது வெள்ளவரம்பினவாக வென்றும் நினைந்து நின்னைக்காண்பேன் வந்தேன்.

ஒன்பதாம் பதிகம்
குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழான் மகள் வேள்மாள் அத்துவஞ் செள்ளை ஈன்ற மகன், அச்சந்தரும் தானையோடு சினந்து சென்று இரு பெருவேந்தரும் விச்சியும் வீழ அரிய காவற்காடுடைய கற்கோட்டையி னகத்து ஐந்து மதில்களை அழித்து, பொத்தியை ஆண்ட பெரிய சோழ னையும் வித்தை ஆண்ட இளம் பழையன் மாறனையும் (தான்) கூறிய வஞ்சினம் பலிக்கும்படி வென்று, வஞ்சி மூதூரிற்கைப்பற்றிய பொருள் களைப் பிறர்க்கு அளித்து, மந்திர முறைமையில் (அயிரைத்) தெய்வத்தை வழிபட்டு, தன் மந்திரியாகிய மையூர் கிழானைப் புரோகிதனினும் அறநெறி அறிவானாகப் பண்ணி, அரிய வலிய முறைமையில் நாற்சந்தியி லமர்ந்த கொடிய வலியுடைய பூதரைக் கொணர்ந்து இவ்விடத்து நிறுத்தி, தெரிந்த முறைமையிற் பூசைசெய்து, உலகத்து உயிர்களைக் காத்த குற்றந் தீர்ந்த செங்கோலும், இன்னிசை முரசு முடைய இளஞ்சேரலிரும் பொறையைப் பெருங் குன்றூர்கிழார் பத்துப் பாட்டுப் பாடினார்.

பாடிப் பெற்ற பரிசில்: மயக்கம் இல்லார்க்கு மயங்கக் கொடுக்க வென்று உவகையின் முப்பத்தீராயிரங் காணங்கொடுத்து, அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல்வரப்பரப்பி, எண்ணற்கு ஆகா அரிய பண்டங்களாகிய செல்வத்தோடு பன்னூறாயிரம் பல படக் கொடுத்து அனுப்பினான் அக்கோ. குடக்கோ இளஞ் சேரலிரும் பொறை பதினாறாண்டு வீற்றிருந்தான்.

    1. புறத்திரட்டுத் தொல்காப்பிய உரை முதலியவற்றிற் காணப் பட்ட “இருங்கண்யானை” என்னும் செய்யுள்.  

இடி இடித்து முழங்கலின் விசும்பு அதிர்வது போல கண் அதிர்ந்து முழங்கும் கடுங் குரலுடைய முரசோடும் காற்றுப்போன்று வேகமாகிய ஊர்தியோடும், காட்டுத்தீயைப்போன்ற நிறைந்த (தடுத்தற்கரிய) கோபத் தோடு, பெரிய இடமுடைய பெரிய கடலை நாடி ஓடி நிலந்திரைக்கும் ஆற்றைப் போன்ற வேகமாகிய செலவினையுடைய தானையோய்! நினக்கு.

தொல்காப்பிய உரையிற் காணப்பட்ட
“இலங்கு தொடி” என்னும் செய்யுள்

இலங்குகின்ற பூண் இறுக்கிய மருப்புடையமதம் பொழிந்துநிலம் அதிரும் படி திரியும் வெற்றியுடையகளிறும், நெருப்பு மலர்ந்தாற் போன்று விரிந்த தலையாட்டத்தைச் சூட்டியகதியுடைய குதிரையும், போர்க்களத்து கொடிகள் ஒன்றோடு ஒன்று கலக்கச் சூதாடுமிடங்களோடு ஊன்விற்பா ரிடங்களையும் ஒத்து (=கொடிகள் கலந்து அசைதலின்) உயர்ந்து அருவியைப் போன்று ஒலிக்கும் வரியுடைய அலங்கரிக்கப்பட்ட தேர்களும் வருதலைக்கண்டு, (பகைவர்) முரசங்கொட்டினர்; பெரிய திசைகள் கல்லென்று ஒலிக்கும்படி காற்றாடியைப்போற்ற ஓசையுடைய கொம்போடு வலம்புரிச் சங்கு ஆர்ப்ப நெடிய மதிலும் நிரைத்த ஞாயிலும் காவற்காடும் ஆழ்ந்த அகழும் உடைய, மேலே அகன்ற ஆரவாரிக்கும் அரண் காவலையுடையதாயிருந்தது. செஞ்சு வீரம் அழிந்து நிலை தளர்ந்து நீங்கிய பகை அரசர் நடுங்க இவ்விடம் வந்த பெரிய செலவு நன்மையை அளிப்பதாகுக.

தொல்காப்பிய உரையிற் காணப்பட்ட “வந்தனென்” என்னுஞ் செய்யுள்

மாரியென்று பாராதும், பனி எனச் சோராதும், பகைவெம்மையினால் அசையாத ஊக்கத்தை உடையோய்! பகைப் புலத்துத் தங்கிய வெற்றி யுடைய கொடிய தானையோடு பகை மாறாத மாற்றார் பகைதேய வலிமை மிகுந்த கட்டுத்தறியைப் பிளந்து கடாயானை முழங்கும் முள்வேலி இடாத பாசறை யிடத்து, யானையையும், கதியுடைய குதிரையையும் தேரோடு இரவலர்க்கு அளித்து இருக்கும் இருக்கையை! பெரும! வந்து கண்டுபோக வந்தேன்.

செங்கோடியாழ்
போர்வையாழ்
சீறியாழ்
கவைக் கடை
உந்தி யாப்பு