நாலடியார் - செய்யுளும் செய்திகளும்

பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்


நாலடியார் - செய்யுளும் செய்திகளும்
பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்


 

நாலடியார்

செய்யுளும் செய்திகளும்

பேராசிரியர்

டாக்டர் ரா.சீனிவாசன்

எம்.ஏ.எம்.லிட்.,பி.எச்.டி.,

அணியகம்

சென்னை - 30

 நூல் விளக்கம்

முதற்பதிப்பு ⁠: நவம்பர் 2000

நூலின் பெயர் ⁠: நாலடியார் செய்யுளும் செய்திகளும்

ஆசிரியர் ⁠: ரா. சீனிவாசன்

பொருள் ⁠: இலக்கியம்

பதிப்பகம் ⁠: அணியகம்

5, செல்லம்மாள் தெரு,

செனாய் நகர், சென்னை - 30.

தொலைபேசி: 6479772

தொலைநகல் : 6449630

இ- மெயில்: aniyakam; @usa.net

தாள் ⁠: 11.6 kg. மேப் லித்தோ

அளவு ⁠: Crown 1/8

எழுத்து ⁠: 10 புள்ளி

பக்கம் ⁠: 256

விலை ⁠: ரூ. 50/

ஒளி அச்சு ⁠: லேசர் இம்ப்ரெஷன் சென்னை - 30.

அச்சகம் ⁠: மைக்ரோ அச்சகம் சென்னை - 29

முன்னுரை

“மனக் கோட்டம் தீர்ப்பது நூல்” என்று கூறுவார் நன்னூல் ஆசிரியர்.

அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது இந் நாலடியார்.

நான்கு அடிகள் கொண்ட பாவால் அமைந்தது என்பதால் இப்பெயர் பெற்றது இந்நூல்.

“செல்வம், இளமை, யாக்கை இவற்றின் நிலையாமையை எடுத்துக் கூறிச் சுகபோக வாழ்வில் திளைக்காதீர்; நல்லதோர் வீணை அதனை நலம்பெற வாழப் பயன்படுத்துங்கள்” என்று அறிவிக்கிறது.

“ஈதல் இசைபட வாழ்தல்” இதுவே வாழ்க்கையின் குறிக்கோள் என்று கண்டவர் தமிழர்கள்.

தான் உண்டு தம் மனைவி மக்கள் உண்டு என்ற சிறிய வட்டத்துள் வாழாதீர்; மானுடத்தை நேசியுங்கள் என்று கூறுகிறது இந்நூல்.

அருள் உள்ளம் பெறுவதற்குத் துறவு மனநிலை அடிப்படை என்று வற்புறுத்துகிறது. பந்த பாசங்களினின்று விடுபட்டுப் பற்றற்ற நிலை அமைந்தால்தான் மனம் மாசு நீங்கி வாழமுடியும் என்பதையும் அறிவுறுத்துகிறது.

“பசிதீர்த்தல்” இதுவே செய்யத்தக்கது என்று அறிவுறுத்துகிறது.

“தனி உடைமை” இதை ஒட்டித்தான் சமுதாயம் இயங்குகிறது.

அதனைத் தகர்த்து எறிகிறது இந்நூல். “சம உடைமைக்” கோட்பாட்டிற்கு இழுத்துச் செல்கிறது. அறம் என்பதே வறியவருக்கு வாழ்வு அளிப்பது என்பதை வற்புறுத்துகிறது.

தனிமனிதன் வாழ்க்கை செம்மை பெறவேண்டும்; அவன் செல்வம் சமுதாயத்துக்குப் பயன்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

எந்தச் சமயப் பின்னணியும் இல்லாமல் மானிட நல்வாழ்வுக்கு வழி கூறும் நூல் இது.

இதனை உரைநடையாக்கம் செய்து இதன் உள்ளடக்கத்தை வெளிப்படுத்த எடுத்துக் கொண்ட முயற்சியே இந்நூல். செய்திகள் மிகவும் உன்னதமானவை. அதனால் உரைநடையும் சிறப்புற அமைய வாய்ப்புள்ளது.

உரை நூல்கள் பல இந்நூலுக்கு வெளிவந்துள்ளன. உரை நூல் எழுதுவது இதன் நோக்கம் அன்று.

செய்திகளை எடுத்துக் கூறுவதே இந்நூலின் நோக்கம். இக்கருத்துகளை விரித்துக் கூறுவது இந்நூல்.

செய்திகளைக் கட்டுரை வடிவில் தந்துள்ளோம்; எனினும் மூல நூல் இவற்றிற்கு ஆதாரம்; அவை பொன்னே போல் போற்றத் தக்கவை. செய்யுள்கள் ஒப்பிட்டு நோக்கத் தேவைப்படுவன.

மற்றும் நாலடியார் செய்யுள்கள் அடிப்படை என்பதால் இவை பின் சேர்க்கப்பட்டுள்ளன.

மகத்தான செய்தி இது கூறுகிறது. மானிடத்தைச் சிந்திக்கத் துண்டுவது. தனி மனிதன் உயர்வுக்கும் சமுதாயத்தின் நல்வாழ்வுக்கும் இது அரிய கருத்துக்களைத் தருகிறது.

- ரா. சீனிவாசன்


உள் தலைப்புகள்

அ. அறத்துப்பால்

1. செல்வம் நிலையாமை

2. இளமை நிலையாமை

3. யாக்கை நிலையாமை

4. அறன் வலியுறுத்தல்

5. தூயது அன்மை

6. துறவு

7. சினம்

8. பொறையுடைமை

9. பிறர்மனை நயவாமை

10. ஈகை

11. பழவினை

12. மெய்ம்மை

13. தீவினையச்சம்

ஆ. பொருட்பால்

14. கல்வி

15. குடிப்பிறப்பு

16. மேன்மக்கள்

17. பெரியாரைப் பிழையாமை

18. நல்லினம் சேர்தல்

19. பெருமை

20. தாளாண்மை

21. சுற்றம் தாழஅல்

22. நட்பாராய்தல்

23. நட்பிற்பிழை பொறுத்தல்

24. கூடா நட்பு

25. அறிவுடைமை

26. அறிவின்மை

27. நன்றியில் செல்வம்

28. ஈயாமை

29. இன்மை

30. மானம்

31. இரவச்சம்

32. அவையறிதல்

33. புல்லறிவாண்மை

34. பேதமை

35. கீழ்மை

36. கயமை

37. பன்னெறி

38. பொதுமகளிர்

39. கற்புடை மகளிர்

இ. இன்பத்துப் பால்

40. காமத்துப் பால்

நாலடியார் மூலம்

அறத்துப்பால்

பொருட்பால்

காமத்துப் பால்

நாலடியார் செய்திகள்

அறத்துப்பால்

1. செல்வம் நிலையாது

(செல்வம் நிலையாமை)

அன்பு மனைவி அருகிருந்து ஊட்டுகிறாள்; சுவை ஆறு என்பதை அவன் அறிகிறான்; “உண்க அடிகள்!” என்று உணர்த்துகிறாள்; வயிறு நிறைகிறது; மனம் குளிர்கிறது; வாழ்க்கை தளிர்க்கிறது; எதுவும் இனிக்கிறது; இவை அன்று; இன்று செல்வம் அழிந்தது; அஃது அவனைவிட்டு ஒழிகிறது; ‘வறியவன்’ என்று அவனை வாழ்வோர் உரைக்கின்றனர்; கூழுக்காகக் கையேந்தி நிற்கிறான்; பிறர் வீட்டுப் படிகட்டு ஏறும்போது எல்லாம் அந்த வீட்டு மகள் அவனுக்குத் தாயாகிறாள்; “அம்மா தாயே!” என்று அழைக்கிறான்; அவள் “ஏன்யா! என்ன தேவை?” என்கிறாள். முன்பு உணவு சுவைத்தது; இன்று கைவிரல்கள் சுவைக்கின்றன. அவன் குழந்தையாகிக் கைவிரல்களைச் சுவைக்கிறான். காலம் பார்த்தாயா! எப்படி இருந்தவன், எப்படி ஆகிவிட்டான்? செல்வ வாழ்க்கை முன்பு; அல்லல் சேர்க்கை இன்று. செல்வம் நிலைக்கும் என்று செருக்குக் கொள்ளாதே; ஒரு பருக்கைச் சோற்றுக்குத் தெருத் தெருவாக அலையும் காலம் வரும். பணம்! அதனை அடக்கி ஆளவில்லை என்றால், பின்னால் வருந்துவாய்; மதம் கொண்ட யானை! அது இன்று கைவிட்டுச் சென்றுவிட்டது; நிதமும் அறம் செய்து வாழ்ந்திருந்தால், அவன் அழிந்திருக்கமாட்டான், அறம் அவனை அரவணைத்திருக்கும்; துணை நின்றிருக்கும். அறத்திற்கு இணை வேறு யாதும் இல்லை.

அறம் செய்து வாழ்ந்திருக்க வேண்டும்; நீ செய்த தவறு என்ன? நீயும் உன் மனைவியும் மட்டும் மகிழ்ந்து உண்டீர்; அரிசிச்சோறுதான்; வரிசைப்படுத்திச் சுற்றத்தவரோடு அதனை உண்க; அந்த மகிழ்ச்சி உனக்குப் புகழ்ச்சி, செல்வம் தட்டை அன்று; உருளை, அஃது உருண்டு கொண்டே செல்லும்; வண்டியின் சக்கரமாய் இடம் மாறும்; உள்ளபோது உவந்து உண்க; உறவினரோடு உண்க.

அதோ, அவன் எப்படி வாழ்ந்தான் தெரியுமா? “பட்டத்து யானைமீது பகட்டாகச் செல்பவன்; சேனைத் தலைவன்” என்று ஏனையோரை மருட்டினான்; இன்று அவன் பகைவரிடம் சிறைப்பட்டுவிட்டான். நிறையுடைய அவன் பத்தினி பகைவன் கைப்பட்டுவிட்டாள். கட்டியவளை இழந்து, ஒட்டி உறவாட உறவினரும் இன்றி, இன்று ஆடி அசைந்து நாடி தளர்ந்து உலவுகின்றான். யாராவது நம்புவார்களா? இவன் ஒரு காலத்துப் பேரரசன் என்று சொல்வார்களா? அன்று இவன் நாடாண்டான்; இன்றோ அவனை வறுமை ஆள்கிறது; அன்று காலாட்டினான்; இன்றோ காலம் அவனை ஆட்டி வைக்கிறது; காரணம் செல்வம் இழந்தான்.

“நிலைத்தது” என்று நினைத்தாய்; “அசைக்க முடியாது” என்று இசைத்தாய். நின்று நிலைத்தவை எல்லாம் கன்றி மறைந்துவிட்டன; அவை வரலாற்றுச் செய்திகள் ஆகி வருகின்றன.

அதோ, அவனைப் பார், கஞ்சப் பயல்! காசு கொடுத்து எதையும் அவன் வாங்கி உண்ண மாட்டான்; ‘எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்’ என்பான்; பில் பணம் கொடுக்கும்போது மெதுவாகக் கை கழுவச் சென்றுவிடுவான். பணம் தருவதிலிருந்து இடம் நழுவி விடுவான்.

“நாலு நல்ல காரியம் செய்ய வா” என்றால் ‘அது நமக்கு ஆகாது’ என்பான்; ‘ஒத்துக்காது’ என்பான். ஒளிதரும் செயல்களைச் செய்யமாட்டான். “புகழ் அடையச் செயல்படுக; இல்லாவிட்டால் நின் பிறப்பே தேவை இல்லை” என்று வள்ளுவர் அடித்து அடித்துக் கூறுகிறார். ‘புகழ்’ அது தேவை இல்லை! என்று இகழ்கிறான். பசிக்கு அலையும் பரதேசிகள்! வசிக்க வழியின்றி வந்து அடையும் விருந்தினர்; சுற்றத்தினர்! அவர் உற்ற துயரைக் களைய மாட்டான்; இவன் மனிதனா? “மகனே! நீ, ஏன் பிறந்தாய்? இந்த உலகத்துக்கு நீ சுமை” என்று தாய்மை வினவுகிறது.

உடுத்துகிறானா! ஒன்றையே மாற்றிமாற்றி மடுத்துகிறான்; தோய்த்துத் தோய்த்து அது காவி ஏறிவிட்டது. பளிச்சென்று அவன் வெளிச்சத்துக்கு வருவதில்லை. வெள்ளிக்கிழமை! அன்று விரதம்தான்; ஞாயிற்றுக்கிழமையையும் அவன் வெள்ளிக்கிழமையாக்கிவிடுகிறான்; அவன் வீடே ரேஷன் கடை ஆகிறது: பிறர் கையேந்தி நிற்கிறார்; கட்டி இருந்த நாய்! அதனை அவிழ்த்துவிட்டு அவர்களை விரட்டி ஓட்டுகிறான்; ‘கொடுப்பது என்பது தன்னைக் கெடுப்பது’ என்று கருதுகிறான்; சேமிப்பு என்று சேர்த்து வைத்த நிதி இழந்து நிர்க்கதியாகிறான்; செல்வம் நிலைக்காது. இவன் ஒரு தேனீ; தேடியதை இழப்பான்.

தேனி என்ன செய்கிறது; உழைத்துச் சேகரிக்கும்; தானும் உண்ணாது; பிறரையும் அண்டவிடாது; காத்திருந்த பெண்ணை நேற்று வந்தவன் அடித்துச் சென்று விடுகிறான்; கட்டிக் காத்துப் பயன் இல்லை; அவன் வாழ்க்கை வெற்று வேட்டாகிறது; இப்படித்தான் பலர் தேன் ஈயாக வாழ்கிறார்கள்; ஏன் என்று கேட்டால் அதற்கு விடை இல்லை.

2. இளமை நிலையாது

(இளமை நிலையாமை)

கறுப்பு நிறத்து அழகி; விருப்புற்று அவள் பின் அலைகிறான்; அவனுக்குச் சுருட்டைமயிர் மருட்ட அதனை வாரி முடிக்கிறான்; ‘அழகன்’ என்று தான் அவளிடம் சென்று குழைகிறான்; “அட அறிவிலி! இந்த முடி நரைக்கும்; வெளுக்கும்; மற்றவர்களைப் பார்த்துச் சிரிக்கும்.

இளமை உன் சொத்து; அதனைப் பத்திரப்படுத்து; பவித்திரமான செயல்களைச் செய்க; பாபம் பழி இவற்றை நாடி மருளாதே. இளமையிலேயே சுகங்களைத் துறக்கப் பழகு; அது உனக்கு மிகவும் நல்லது. குழவிப் பருவத்திலிருந்தே பற்றுகளை நீக்குக; துறவு! அதனொடு நீ உறவு கொள்க.

“நீ ஓர் ஆண் அழகன், செல்வன்; அதனால் உன்னைச் சுற்றிப் பெண்விழிகள் வட்டமிடுகின்றன; நண்பர்கள் சுற்றி வருகின்றனர்; அன்பு காட்டி அகமகிழ்கின்றனர். இந்த வாழ்வு என்றும் நிலைக்குமா? உன் சுருள் முடி திரை இடுகிறது; கறைபடிகிறது; முதுமைக்கு உன்னை இழுத்துச் செல்கிறது; நோய் உனக்கு நெருங்கிய நண்பன்; வைத்தியன் இடுக்கண் களைய மறுக்கிறான்; கைவிரித்து விடுகிறான்; வந்தவர் கூடி இருந்தவர், “சீசீ இந்தப் பழம் புளிக்கும்” என்று கூறும் குள்ளநரிகளாகின்றனர்; உன்னை விட்டு விலகுகின்றனர்.

சாவு வெற்றி கொள்கிறது; சங்கு முழங்குகிறது; இதுதான் உன் வாழ்வு; இப்பொழுது இளமை வளர் பிறை; பின் தேய்பிறை; முடிவு இருள்நிறை அமாவாசை.

“பள்ளிக்குச் சென்றவன் வருவான், விரைந்து கொள்ளிபோட,” என்று காத்திருக்கிறார்கள் அவன் சுற்றத்தினர்; வேகாத உடம்போடு ஏகாதே வைத்திருக்கிறார்கள். அவள் அவனுக்குத் தாய்; தாய்க்கு அவன் தலைப்பிள்ளை; அவன் என்ன சொல்கிறான்?

“இவள் எனக்குத் தாய்! இவள் எங்கே சென்றாள், தனக்குத் தாயாகிய ஒருத்தி இருக்கும் இடம் தேடிச் சென்றாள்; அவள் தாய், தன் தாயை நாடிச் சென்றாள். இப்படித் தாயர் சென்ற இடங்களுக்கு என்தாய் சென்றுவிட்டாள். அழுது பயன் இல்லை” என்று ஆறுதல் அடைகிறான். நிலையாமை எது என்று அந்த இளமை உணர்கிறது.

வெறி ஆடும் களத்திற்குச் செம்மறி ஆட்டை அந்த நெறி கெட்ட பூசாரி, கயிறு கட்டி இழுத்துச் செல்கிறான். கையில் பசுந்தழை காட்டி, அதன் பசியை மூட்டி விடுகிறான். பூசாரியை ஆடு நம்புகிறது; எதுவும் சிந்தியாமல் அவன் பின் செல்கிறது. வாலிபப் பிள்ளைகள்! இவர்களுக்கு யார் என்ன சொல்ல முடியும்? மயக்கம்! அவர்கள் காட்டுவது இல்லை தயக்கம்; விரும்புகின்றனர் மகளிர் முயக்கம்; அவர்கள் கதை? முடிவு? நாம் ஏன் சொல்வோம் அதனை மயக்குகிறாள் ஒரு மாது; அழகிறான் இந்தச் சாது; இது இவன் வாழ்க்கைக்கு ஒவ்வாது.

‘வேல் கண்ணள் இவள்’ என்று கருதி, அவள் பின் செல்கிறான்; அவள் ஒரு காலத்தில் கோல் கண்ணள் ஆவது உறுதி; கோல் ஊன்றி நடக்கப் போவது இறுதி; இஃது அவனுக்கு மறதி.

இவனும் கிழம்; முதிர்ந்துவிட்ட பழம்.

“ஏன்யா? எப்படி இருக்கிறாய்? பல் என்ன செய்கிறது?”

“பல்லவி பாடுகிறு!”

“சோறா கஞ்சியா ரொட்டியா?”

“வெறும் இட்டலிதான்”

“எழுபதா எண்பதா? இது வயதைப் பற்றியது.”

இப்படிக் கேட்ட காலம் பழைய காலம். இப்பொழுது சர்க்கரை, கொழுப்பு, இரத்தக் கொதிப்பு இவற்றிற்கு இப்பொழுது எடைகள், அறிவிப்புக் கருவிகள் திசை காட்டுகின்றன.

முதியவர்களைப் பார்த்து மற்றவர்கள் கேட்கும் வினாக்கள் இவை. அவர்களுக்கே பதில் சொல்லிச் சொல்லி அலுத்து விடுகிறது. வேறு என்ன வினவ முடியும்? பிள்ளைகள், பேரன்கள், பேர்த்திகள் என்று கேட்டு அலுத்துவிட்டனர்.

இந்த உடம்பினைத் தவிர்த்து வேறு கேள்விகளில் அவர்கள் தடம் புரள்வதில்லை; அவர்கள் நோக்கம் என்ன? ஏன் இப்படிக் கேட்கிறார்கள்? அவன் உலகுக்குச் சுமை; ஏன் இப்படி இழுபறியாக இருக்கிறான்?” என்பதுதான் வினா. இளமை நில்லாது; முதுமை விலை போகாது; யாரும் மதிக்க மாட்டார்கள், இஃது இயற்கையின் நியதி.

“சரி, வயது ஆகட்டும்; காலம் வரும்; பிறகு தருமம் செய்யலாம்; இப்பொழுது வளமாக வாழலாம்” என்று இயம்புகிறான்.

இறுமாப்பு உடைய இளைஞன் அவன்.

“தம்பி! காற்றடித்தால் பழம் மட்டும் உதிர்வது இல்லை; செங்காயும் சிதைகிறது; உதிர்கிறது; நீண்ட நாள் வாழ்வது உறுதி இல்லை; அதனால், முடிந்த, வாய்ப்புள்ள நாள்களில் எல்லாம் அறம் செய்க! அதுவே தக்கது.

“ஆள் தேடும் படலத்தில் அந்தக் கறுத்தவன் சுற்றிக் கொண்டே இருக்கிறான்; ‘மாதம் இத்தனை வழக்கு’ என்று பதிவு செய்ய வேண்டும் என்பது காவல்துறைக் கட்டளை போலும்! சும்மா இருப்பவனையும்

“வாடா நிலையத்துக்கு” என்று இழுத்துச் செல்வது பழக்கம்; அது காவல் நிலையம்; இந்தக் கறுத்தவனும் இதைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறான். “சின்னப் பையன்தான்; என்றாலும், கள்ள வோட்டுப் போடும் வயது; வா” என்று இழுத்துச் செல்கிறான். அவள் தாய் அலறுகிறாள்! “என்னை அழைத்துப் போகக் கூடாதா! என்று கத்துகிறாள்.

அதனை முன்னால் சொல்லி இருக்கலாமே; அவளுக்கு அந்த யோசனை வரவே இல்லை; பின்புத்தி, இழுத்துச் செல்பவன் காத்து நிற்கிறான்; அதனால் தம்பி! தருமம் செய்; இஃது உன் வாழ்வின் கருமம்.

3. காயமே இது பொய்யடா

(யாக்கை நிலையாமை)

சாவுக்குப் பேதம் இல்லை; இளையவன், அரசன், ஆண்டி என்று பிரித்துப் பார்ப்பது இல்லை; கியூவில் சின்னவர் பெரியவர் எல்லாரும் நிற்கின்றனர்; குடை பிடித்துக் குவலயம் ஆண்ட மாநில மன்னர் எல்லாரும் அடை மழைக் காலத்தில் அடையும் இடம் சுடுகாடு தான்; அங்கேயும் அவர்கள் சுகவாசிதான்; “ஏ.சி. இல்லை” என்று சொல்வதே இல்லை; அவர்களே குளிர்ந்துவிட்டனர். பி.சி.யில் வாழ்ந்தவர் பலர்.

பத்திரிகைச் செய்தி தேதி முத்திரை பெற்று வெளிவருகிறது. “மணமகன் பிணமகனானான்; நேற்று

அடித்தது மண முழவு; இன்று அடிப்பது பிண இழவு: எதிர்பார்க்கவில்லை; கழுத்தில் கயிறு ஏறவில்லை; அதற்குள் இந்த அதிர்ச்சி ஏற்பட்டுவிட்டது; செத்தவன் செத்தவன் தான். அவன் மனைவி பொட்டு கால் துட்டு தான்; அதனை அவள் அழிக்கவில்லை. எது எப்பொழுது நடக்கும் என்று முன் கூட்டி உரைக்க இயலாது.

மரணம் என்பது ஒன்று உண்டு; இதனை மறந்தே போகின்றனர்; அறிவிப்பு மணி தேவையாகிறது. செத்தவரை நாளை சாகின்றவன் சுமந்து செல்கின்றான். நேற்று இருந்தவன்; காற்று வாங்கச் சென்றான் இன்று காற்றோடு கலந்துவிட்டான். ‘யார் காயம் யாருக்கு நிச்சயம்?’ என்று தத்துவம் பேசுகின்றான். இவனைப் பற்றியும் மற்றவர் இப்படித்தான் பேசப் போகிறார்கள் பறை அடிப்பவன் வந்து சேர்கிறான்; வந்ததும் செத்தவனை எடுத்துப் பாடையில் வைக்கும்போது, அடிக்கிறான் ஒருமுறை; தூக்கிச் செல்லும்போது அடிக்கிறான் மறுமுறை; இறக்கி வைக்கும்போது மற்றும் ஒரு முறை. இப்படி மூன்றுமுறை ஏலம்போட்டு இந்தச் சவக் கோலத்தை அறிவிக்கிறான்; என்றாலும், இந்த ஈன ஜென்மங்களுக்கு எங்கே ஏறப்போகிறது; வாழ்வில் நேசம் வைக்கிறான். பாசம் காட்டுகிறான்; கோடி ஆசைகளை வளர்த்துக் கொண்டு அல்லல்களை விளைவிக்கிறார்கள்.

செத்த பிறகு இந்தப் பித்த மனிதன் சத்தமே செய்வது இல்லை; அவனைப் பற்றிப் பிறர் என்ன பிதற்றுகிறார்கள்? “நார் தொடுத்துக் கட்டுக” என்று அறிவிக்கின்றனர்; “நீர் மொடுத்துக் கொட்டுக” என்று பேசுகின்றனர்; “நன்கு ஆய்ந்து அடக்குக” என்று கூறி அடக்கம் செய்கின்றனர்; அவன் தான் செத்து விட்டானே; அவனைப் பற்றி ஏன் பழித்துப் பேசுகிறாய்; அவன் செவிகள் மறுத்துவிட்டன; எந்தக் கவிகளும் கேட்க அவனுக்கு இயலாது. இப்பொழுது அவன் வெறும் தோற்பை, அதனுள் இருந்த கூத்தன் ஆடி வெளியேறிவிட்டான்; நாடி அடங்கிவிட்டது; நாளும் முடிந்துவிட்டது.

“செத்தவன் என்ன ஆனான்? வாழ்வு என்பது இவ்வளவுதானா? இல்லை; அடுத்த பிறவி அவனுக்காகக் காத்துக் கிடக்கிறது! நல்லது செய்தால் உயர் பிறவி, அல்லது செய்தால் இழி பிறவி, ஆத்மாவுக்கு அழிவே இல்லை; இந்த உடம்புதான் அழிகிறது; உயிர் அழிவது இல்லை; இப்படித் தத்துவம் பேசித் தருக்கம் செய்கின்றனர்.

சுருக்கமாய்ச் சொல்வதாயின் வாழ்க்கை மழைநீர் மொக்குள், ‘இதுதான்; மழைநீரில் ஒருமுகிழ்ப்புத் தோன்றுகிறது, வெடிக்கிறது; காற்று வெளியேறுகிறது. நீரோடு நீராய் அந்தக் குமிழி மறைந்துவிடுகிறது. வாழ்வு நீரோட்டம் போன்றது; குமிழிகள் தோன்றி வெடிக்கும். தனி மனிதன் ஒரு நீர்க்குமிழி; அவன் சரித்திரமும் அதனோடு முடிகிறது. குமிழி தோற்றம், வடிவம், மாறிவிடுகிறது; நீர் நிலைத்து நிற்கிறது.

ஒருவன் போனால் இந்த உலகம் குடிமுழுகிப் போவது இல்லை. நேற்று அவன் தன் வீட்டைக் காலி செய்துவிட்டுச் சென்றான்; இன்று அடுத்த ஆள் அங்கு வந்து புதுக்குடித்தனம் நடத்துகிறான். தடி ஊன்றி நடந்த முதியவர் அடியெடுத்து வைத்து நடந்தவுடன் அங்கே ஒரு புதிய ஆத்திச்சூடி ஆரம்பமாகிறது; “தாத்தா! நீ கவலைப்படாதே! மற்றொரு ஆத்தாள் காத்திருக்கிறாள் அந்த இடத்தை நிரப்பிக் கொடுக்க”.

மலைமீது மேகம் தவழ்கிறது; காற்றில் அசைந்து ஆடுகிறது; பின் மேகம் என்ன ஆயிற்று? கலைந்துவிட்டது; படிவது போலத் தோன்றிய மேகம் மடிந்தது’ என்று கூறமுடியாது; காற்றோடு காற்றாய்க் கலந்து விட்டது இந்த ஆராய்ச்சி நமக்கு ஏன்? அது மறைந்துவிட்டது; அவ்வளவுதான்.

“நீர்க்குமிழி யாக்கை, மலைமீது ஆடும் மேகம்; இன்னும் தெளிவாகக் கூறினால், “புல்நுனிமேல் பனிநீர்” இரவில் புல்நுனிமீது பனித்துளி படிகிறது; உடனே கதிரவன் ஒளிமுன் மறைகிறது. ஒளி உமிழ்ந்த பனித்துளி எங்கே? பசும்புல்லைக் குளிர்வித்த விண்துளி எங்கே! உடலையும் இயக்கித் தானும் உலவி வந்த உயிர் மறைகிறது.

சுற்றத்தவர் கடிதம் போட்டுவிட்டா வருகிறார்கள்? கேட்டுவிட்டா வருகிறார்கள்? அவர்கள் வருவதும் தெரிவது இல்லை; போவதும் தெரிவதில்லை. வந்தபோது கல கலப்பு: செல்லும் போது சலசலப்பு: அங்கு உள்ளபோது மிதமிதப்பு; சென்றபோது பரிதவிப்பு. கேளாதே வந்து சொல்லாதே செல்லும் சுற்றம்; அதுதான் நம் வாழ்வு; யாரைக் கேட்டும் பிறப்பது இல்லை; யார் சொல்லியும் இறப்பது இல்லை. வந்தோம்; போனோம்; வந்தவழி பார்த்துக்கொண்டு போவதுதான் புத்திசாலித்தனம்.

4. நல்லன செய்க

(அறன் வலியுறுத்தல்)

“அடுத்த வீட்டு அம்புஜைத்தைப் பார்த்தீர்களா? என்று அங்கலாய்க்கிறாள் இந்த வீட்டுப் பங்கஜம்; அதற்கு அவள் அகமுடையான் சொல்கிறான். “அவள் வீட்டுக்காரர் இரவும் பகலும் உழைக்கிறார்; அதனால் தழைக்கிறாள்; பொறாமைப்படாது நாமும் உழைப்போம்; உயர்வோம்” என்று உறுதி கூறுகிறான். அறமே ஆக்கம் தரும்;

“உழைப்பவர் எப்படியும் முன்னுக்கு வருவர்; இது நியதி; இன்று பெருமையுடன் வாழ்பவர் எல்லாரும் ஒருமையுடன் உழைத்து உயர்ந்தவர்தான். அதனை அறிதல் நலம்” என்கிறான். அதனைக்கண்டு அழுக்காறு கொள்வதில் விழுக்காடு இல்லை; உழைக்காமல் யாரும் முன்னுக்கு வருதல் இல்லை.

நல்ல தொழில்; அவர் வீடு மிக்க எழில்; அவர் சுற்றித்திரிவது பொழில்; பொழுது கழிவது நறுநிழல்; அவர் மட்டும் உண்டு தின்று மகிழ்கின்றார்; மற்றவர்களைப் பற்றிக் கண்டுகொள்வதே இல்லை. என்றைக்குத் தான் கதவைத் திறக்கப்போகிறான்; காற்று வெளிசச்சம் பார்க்கப்போகிறான்; ஈனக்குரல் அவனைச்சுற்றி எழுந்தும் ‘அவர்களுக்கு உதவவேண்டும்’, என்ற ஞானவெறி அவனுக்கு ஏன் தோன்றவில்லை? கடந்த நாள்கள் போய்விட்டன; போவன போகட்டும்; இனிச் சிந்தனை செய்து, நல்லறம் உந்துதல் செய்வானாக! நானிலம் செழிக்க! அனைவரும் உழைக்க! உலகம் தழைக்க!

இன்னல்கள் வருகின்றன. இடர்ப்பாடுகள் நேர்கின்றன; இவற்றிற்கு எல்லாம் காரணங்கள் உள்ளன; காரணம் இல்லாமல் காரியம் நிகழ்வது இல்லை; கருக்கொள்ளாமல் எதுவும் உருப்பெறுவது இல்லை; நீ செய்த தீவினை அது; உன்னை இந்நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது; சிந்தித்துப்பார்; உன்னை நீ திருத்திக் கொள்; நல்லதே செய்க! நன்மையே விளையும். வினை விதைத்தவன் வினை அறுப்பான்; இதில் இருந்து யாரும் தப்ப முடியாது; அற நூல்கள் ‘கருமம்’ ‘விதி’ என்று இவற்றிற்குப் பெயர்கள் தருகின்றன; இவற்றை வெல்ல தருமமே தக்க துணை நெறியாகும்.

வாழ்க்கை அர்த்தமுள்ளது; இதனையறியாதவர் இதனை வியர்த்தமாக்கிவிட்டு வருத்தம் அடைவர். “ஏன் பிறந்தேன்?” என்று எழுப்பும் வினாவினை ஒவ்வொரு வரும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.

பிறந்தாகிவிட்ட்து. அதனைப் பற்றிய பிரச்சினையை எழுப்ப உனக்கு உரிமை இல்லை; ‘நீர்க்குமிழி’ இந்தப் பிறப்பு; அது வெடித்து மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடுகிறது; ‘சாறு எடுக்கப்பட்ட கரும்பு’; ‘வெறும் சக்கை’; அதனை எரிக்கும்போது யாரும் வருத்தப்படுவது இல்லை; மனிதனும் இனிய கரும்புதான்; அதன் சுவை அதற்கு உதவாது. அதனைக் கடித்துச் சுவைப்பார்க்கே பயன்படும்; பிறர்க்கு அவன் பயன்படுகிறான்; பிறருக்காக உழைக்கிறான்; அவர்களும் இவனை நன்கு பயன்படுத்துகின்றனர்; வாழ்க்கை இனியது; சுவைமிக்கது; சாரம் உடையது; அதன் தன்மை அறிந்து நன்மை அடைக; பிறருக்கு நன்மை சேர்க்க.

பயன்பட வாழும் வாழ்க்கை நயன் உடையதாகும்; சாவதிலும் ஒரு பெருமை உண்டு; உன்னால் ஆவது செய்து முடிக்கிறாய்; உன்னை நம்பியவரைத் தூக்கிவிடுகிறாய்; ஆல நன்னிழலாக இருந்து பிறர்க்குக் குளிர்ச்சி தருகிறாய்; உடம்பு பழுது ஆகிறது முழுதும் அது பயன்பட்டபிறகு நீ அழுது அலமரத் தேவை இல்லை; விழுது பல நீ விட்டுச் செல்கிறாய்; அவை மறுபடியும் பிறருக்குச் சுமை தாங்கியாய் நிற்கும்; கரும்பு பிழிந்த சக்கை; அதுதான் உன் பழுதுபட்ட யாக்கை; அதுபற்றி எரியட்டும்; அஃது உன் ஒளியை உலகுக்குக் காட்டும்; வெந்து சாம்பல் ஆகட்டும்; அதனை மற்றவர் நெற்றியில் இட்டு உன்னை வழிபடுவர்; வழிபடத்தக்க வாழ்வை வாழ்ந்து காட்டு; பழிபடத் தாழ்ந்து அழியாதே.

சாவுக்கு அஞ்சாதே; அஃது இன்றும் வரும் நாளையும் வரும்; என்றாவது வரட்டும்; அதனைப்பற்றி ஏன் கவலைப்படுகிறாய்? ஆனால் ஒன்று; அதற்குள் நீ நினைக்கும் நற்செயல்கள் அன்னத்தையும் செய்து முடித்துவிடு; அது உன்னால் செய்ய முடியும்; நீ பெற்ற கல்வி, கற்ற தொழில் திறன், வாய்ப்புகள் பிறர்க்கு வாய்க்கும் என்று கூறமுடியாது; தமிழில் இராமகாதை எழுத ஒரு கம்பனால்தான் முடிந்தது; அறநீதியை வள்ளுவன் ஒருவனால்தான் உணர்த்த முடிந்தது; அவர்கள் அன்று உடம்பு வளைந்து, ஏடு எடுத்து, எழுத்தாணியை அழுத்திப் பதிக்கவில்லை என்றால், அவற்றை யார் செய்து தந்திருக்க முடியும்? சில காரியங்கள் சிலரால்தான் முடியும். பொதுப்படச் செய்யும் பணிகளை யார் வேண்டுமானாலும் செய்து விடமுடியும்; உனக்கு என்று சில தகுதிகள் இருக்கின்றன; அவை உன்னிடம் மிகுதியாய் இருக்கின்றன; அவற்றைப் பகுதியாகச் செயலாற்று; அதுவே நீ பிறந்ததன் பயனாகும். நல்லதோர் வீணை! அதனை நலம் கெடப் புழுதியில் எறிந்துவிடாதே.

எடை இயந்திரம்! வீட்டு நடைபாதையிலேயே வைத்திருக்கிறான்; கூடிற்றா குறைந்ததா? இதுவே அவன் கவலை; அடுத்தது நாக்குச் சுவை! அதனைக் கட்டுப்படுத்துவதே இல்லை; ‘தின்பதில்தான் சுகம் இருக்கிறது’ என்று நினைக்கிறான்; அடுத்துத் தின்பது யாது? எந்தப் புதிய உணவகம் சுவைக்கிறது; எங்கே விருந்து? இதுவே இவன் வாழ்வும் நோக்கமாகவும் அமைகிறது. இவன் இந்த உடம்பினை வளர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறான்; இந்த உடம்பின் நினைவு மட்டும் இருக்கின்றது; தன்னை மறந்து, இவன் எந்த நல்ல காரியமும் செய்வது இல்லை. இவன் கண்ணாடி முன் நின்று தன் அழகைக் கூட்டுதற்கே தன் திறமையைக் காட்டிக் கொண்டு நிற்பான். பெண்களின் இயல்பும் இதுவே, அவர்களிடம் ஒழுங்கு, சீர்மை எதிர்பார்க்கப்படுகின்றன. பெண்களே தம்மைப்பற்றி விமரிசனம் செய்வர்; அதற்காகவாவது அவர்கள் தம்மை அழகு படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது; அதுவும் சற்றுக் கூடிவிட்டால் உள்ள அழகினைக் கெடுத்துவிடுகிறது; முகம் திட்டுத்திட்டாய்ப் பட்டை தீட்டிக் காட்டப்படுகிறது; மற்றவர் மகிழ, அவர்கள் தம்மை அணிசெய்து கொள்கின்றனர். இஃது உலகத்து எந்தப் பெண்ணுக்கும் பொருந்தும். இஃது அவள் இயல்பு வசீகரம் அவளிடம் எதிர்பார்க்கப்படுகிறது. அவள் கிழமாக இருந்தாலும் ஒரு முழம் பூ வைத்தால்தான் அவளுக்குப் பொலிவு சேர்கிறது.

இளைஞர் சிலர், முகத்துக்கு வண்ணத் துகள் பூசி, வருணனைப் பொருள் ஆக விரும்புவது சரி என்று படவில்லை. பாரதி சொன்னான், “ஆண் நன்று'” என்று; அவன் அழகன் என்பதால் பெருமை இல்லை; நல்லவன் என்பதே அவனிடம் எதிர்பார்க்கப்படுகிறது; தன்னைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டு, சட்டைக் காதினைத் தட்டிவிட்டுக் கொண்டிருப்பதைவிட்டுக் கடமைகளில் ஈடுபடுவதே அவனுக்குப் பெருமை சேர்க்கும்; “ஊன் வளர்த்தேன், உடம்பு வளர்த்தேன்” என்பதில் பெருமை இல்லை; ”அறிவு வளர்த்தேன்; ஆற்றல் மிகுத்தேன்; செயலாற்றினேன்” என்பதில்தான் பெருமை விளங்குகிறது.

ஒருவன் தூங்கிக் கொண்டிருக்கிறான்; அவனைத் தட்டி எழுப்பினால் சோம்பல் முரித்து எழுகிறான்; அப்புறம் பார்த்தால் “இவன் தானா அவன்?” என்று வியக்க மாறிவிடுகிறான்; துளி விஷம் போதும், உயிரைக் கொல்ல; அதுபோலத் துளி தூண்டுதல் போதும் கடல் ஏழையும் தாண்ட, தொடக்கம் சிறிது எனினும் அது வளர்ந்து, விவரம் நிறைந்ததாய் நிறைகிறது; வானை எட்ட விசுவரூபம் எடுக்கிறது.

ஆலம் விதை! சிறிதுதான்; அது எந்தக் காக்கை எச்சமிட்டதோ? தெரியாது; பள்ளிக் கூடத்துச் சிறுவர் போல் அது சுறுசுறுப்பாய் வளர்கிறது. ஒரு பெரிய கூடாரமே அமைக்கிறது; அம்மரத்தின் பசுங்கிளைகளில் எத்தனை நிறப் பறவைகள் வந்து கூடு கட்டுகின்றன? அவை ‘கிரீச் கிரீச்’ என்று கதவு மூடும் சப்தத்தை உண்டாக்கிக் கொண்டு இருக்கின்றன. அதன் நிழலில் யாரோ அமரும் பலகைகள் அங்கு ஒன்று இங்கு ஒன்றுமாய்ப் போட்டுள்ளனர்; அவை உடைந்து கிடக்கின்றன; அவற்றில் எத்தனை பேர் வந்து உட்காரு கன்றனர்? மாடுகள் சுற்றி வருகின்றன; படிக்காத பிள்ளைகளைப் போல அவற்றின் நிழலில் இளைப்பாறுகின்றன. அந்த இடத்தைவிட்டு அகல மறுக்கின்றன; சுண்டல் விற்கும் கிழவி, வியாபாரம் அதிகம் ஆகாவிட்டாலும் அந்த இடத்திலேயே காலம் தள்ளுகிறாள்; மண்டையையும் போடுகிறாள்.

நல்லவர், அல்லவர், சின்னவர், பெரியவர் எல்லாரும் ‘வெய்யிலுக்கு ஏற்றநிழல்’ என்று அங்கு வந்து சுகம் பெறுகின்றனர். ஆலவிதை சிறிதுதான்; அது வளர்ந்தால் பயன் பெரிதுதான். அறச்செய்கை ஆரம்பத்தில் நெல்லிக்கனிதான் வளர்ந்துவிட்டால் அது சாகாவரம் பெற்றுவிடுகிறது; அற நிறுவனங்கள் வளர்க; வளர உதவுக.

மணி அடித்தால் சோறு, மணி அடித்துக் கொண்டுதான் இருக்கிறது; சோறு கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அது சிறை வாழ்க்கை! நாளும் கிழமையும் அன்றாடம் வந்து கொண்டுதான் இருக்கின்றன; சுவரில் ஒட்டிக்கொண்டிருக்கும் சங்கு மார்க்கு நாளேடுகள் கிழிபட்டுக் கொண்டுதான் இருக்கின்றன; 365 தாள்கள் இருந்தன; இன்று எலும்பு உருக்கி நோயாளி போல் சிறுத்துக் காணப்படுகிறது; சென்ற நாள்கள் திரும்பி வரப்போவது இல்லை; அழிந்துவிட்டது; செழிக்கப் போவது இல்லை; கழித்தல் கூட்டல் ஆகாது. அறத்தைப் பெருக்கு ஈட்டிய பொருளை வகுத்துக் கொடு; உன் கணக்குச் சரியாகும்; வரவு செலவு கணக்குச் சரிபார்த்து வை; தொல்லையில்லாமல் வாழமுடியும். சிறை வாழ்க்கை ஒரு வாழ்க்கையாகாது, விடுதலைபெற்று வீறுடன் வாழ்க, அறம் செய்க. இங்கே இவனைப் பற்றி என்ன சொல்வது? அவனவன் கொடுத்துப் புகழ் பெறுகிறான்; இவன் தன்னைக் கெடுத்துக்கொண்டு இகழ்வு பெறுகிறான். மானம் கெட்ட வாழ்வு; வீட்டு முகப்புகளில் அந்த அந்த வீட்டுப் பதுமைகள் தரும் அகப்பைச் சோற்றுக்குக் கையேந்தி நிற்கிறான். “உயிர் போகிறது; பிடி சோறு” என்று கேட்கிறான். இந்த உயிரை வைத்துக் கொண்டு இவன் என்ன செய்யப் போகிறான்?

“சோம்பல் மிகவும் கெடுதி, போ உழைத்துப் பிழை, உழைக்க நிமிர்ந்து நில்; பிறர் கையேந்தி நிற்காதே; திட்டமிட்ட வாழ்க்கை அமைத்துக் கொள்க; எதிலும் அளவோடு வாழ்வது என்று உறுதி கொள்க. பிச்சை எடுக்க நேராது பிறர் உழைப்பின்றித் தருவதைத் துச்சமாக மதித்து நட. பிச்சை எடுப்பது பிசகான செயல்; அது மாபெரும் வீழ்ச்சி, மானிடத்துக்கே அது தாழ்ச்சி.”

5. இவளா அழகி யோசித்துக் கூறு

(தூயது அன்மை)

அவள் ஆடை சற்ற விலகுகிறது; அவன் அவளைச் சாடைகாட்டி அழைக்கிறான்; பெண் வாடை வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்ந்தவன்தான்; அவள் மேனி அழகு கண்டு தேனி போலச் சுற்றி வட்டமிடுகிறான்.

“என்னடா உனக்கு?”

“பக்தன் நான்” என்கிறான்.

“சித்தம் இழந்தேன்” என்று பித்தம் கொள்கிறான்.

“இங்கே வா! அவள் கையில் ரத்தம்; அதனோடு அழுகல் புண், இதைத்தானே, "மாந்தளிர் மேனி என்று கூறினாய். அவள் கையில் சொரிந்தாள்; அது எரிந்து புண் ஆகிவிட்டது. சும்மா இல்லை; அதைத் தொட்டுத் தொட்டுப் பெரிதாக்கினாள்; கையில் இப்பொழுது கட்டு ஒன்று கட்டி இருக்கிறாள்; ஈ மொய்க்கிறது. பண்டம் அன்று, முண்டம்! அது கண்டம்; ஒரு தண்டம்; இதைப் பார்த்தபின் நீ யோசித்துக் கூறு; இவளா அழகி? அது வெறும் மயக்கம்.”

“அழகு அழகு என்று பித்தம் பிடித்தவன் போல் பேசுகிறாய்; எதை அழகு என்று கூறுகிறாய்? மேல் தோலா? வாழைப் பழத்தை உரித்துக் காட்டுகிறேன். உள்ளே வழ வழப்புதான்; அங்கங்கே ஓட்டைகள்; துளைகள்; இந்த உடம்பு அதன் மீது போர்த்த போர்வை; அதைத்தான் நீ அழகு என்று கூறுகிறாய்! நான் சொல் வதை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா? அந்தத் தோலைப் புரட்டிப்பார் நீ தொடவே அருவருப்பாய். அதற்காக ஒரு பெண்ணை இழுத்து வந்து தோல் உரிக்க வேண்டும் என்பது இல்லை; சொன்னால் நீ புரிந்து கொள்வாய்; அவ்வளவுதான். அழகி என்று அழிகிறாயே! எது அழகு? நீ யோசித்துக் கூறு.”

“அவள் வாய் இதழ் சிவந்து இருக்கிறது. அதைக் கண்டு “ஆகா பவளம் அது” என்று பகல் கனவு காண்கிறாய்; அவள் போட்ட வெற்றிலை பாக்கு; அதில் சேர்த்துக் கொண்ட சுண்ணாம்புச் சரக்கு; தக்கோலம் போட்டு இவள் இந்தப் புதுக்கோலம் பூண்டிருக்கிறாள். வாய் கமழ்க்கிறது. எல்லாம் அந்தப் பாக்கு வெற்றிலை தான்; அதனோடு சேர்த்து வாசனைப் பொடிகள் கமழ்க்கின்றன. நீ ‘மகிழ்க்கலாம்’ என்று கருதுகிறாய். எல்லாம் வெறும் பூச்சு, தீய காற்று அவள் விடும் மூச்சு. ஆபாசம் அதுதான் அவள் சகவாசம்.

நீ அறச்செயல்களுக்கு முதன்மை இடம் தருக; அஃது உன்னை உயர்த்தும். தோல் அழகைக் கண்டு நீ துவண்டு போகாதே; வாலை இளங்குமரிதான் என்றாலும் அவள் தசைப் பிண்டம்; இதை மறந்து விடாதே; கொழு கொழு வென்று இருப்பதும், மிருது வான மென்மையான அவள் மருதுவான புதுமை; கவர்ச்சி, அவள் மேனி சுருங்கும்; கண்கள் ஒடுங்கும்; கைகால்கள் நடுங்கும்; வாழ்க்கை ஒருநாள் உணங்கும்.”

“என்னை வெறியன் என்கிறாய்; உளறுகிறேன் என்று கருதுகிறாய். அவள் கண்கள் நீரில் தோன்றும் குவளை, அங்கே அதன் அயல் பாய்ந்தோடும் கயல் மீன். உன்னைத் தாக்குவதால் ‘வேல்’ என்று எல்லாம் நீ என்னிடம் அளக்கின்றாய்! அதைக் கவிதை என்று கூறி உன்னையே நீ உயர்த்திப் பேசிக் கொள்கிறாய்!”

“கவிஞரே! என்னுடன் வாரும்; இடுகாட்டில் வந்து பாரும்; அங்கு இருக்கமாட்டார் யாரும். இதோ! இது மண்டை ஓடு; மயிர் முளைத்து இருந்த ஒடுதான்; இன்று வெறும் கூடு; சுட்டு எரிபட்ட மண்டை; சதை இல்லை; குழி விழுந்து கிடக்கிறது. கண் நோண்டி எடுத்து விட்டார்களா? இல்லை; அது பற்றி எரிந்து பசையற்றுவிட்டது; குழிவிழுந்த கண்; பனம் நுங்கு; நுங்கு எடுத்துவிட்ட குழி; பயங்கரமாக இல்லையா! இவளா அழகி? யோசித்துக் கூறு.”

“அவள் நகை முல்லை முகை என்பாய்! நீ கூறுவது எல்லாம் வெறும் மிகை; அதோ சிதறிக் கிடக்கிறதே எலும்புத்துண்டு. அது நீ புகழ்ந்து பேசிய அதி அற்புதப் பல்; பல் என்று நீ இப்பொழுது கூறமாட்டாய். அது வெறும் கல். இதனை அறிந்து கொள்.”

“நில்! அது வெறும் எலும்புத்துண்டு என்று சொல். நீ ஒரு ஞான சூரியன்; யாரோ சொன்னார்கள். ‘தொகுமுகை இலங்கு நகை” என்று; பிறர் சொல்லக் கேட்டுப் பேசுகிறாய். அது கவிதை, முல்லை; அது பல் என்று மாற்றிக்கூறி மகிழ்கிறார்கள். ‘பல் அழகு’ என்று சொல்லிக் கொண்டிருந்தால் அது பொய்; அது வெறும் எலும்புச்சில்; யாரோ இப்படித் தவறாகச் சொல்லிக் கொடுத்துவிட்டார்கள். பெண்ணை நீ மதிக்கலாம்; வேண்டுமானால் தெய்வம் என்று துதிக்கலாம்; விருப்பம் இல்லை என்றால் வெறுத்து ஒதுக்கலாம். ஆனால் அழகி என்று அளக்காதே.”

“செத்துவிட்டாள் ஒருவன் காதலி, வண்டி ஏறி அவள் வகைப்பட்டுவிட்டாள்; மனையில் கொண்டு சென்று மருத்துவர் அவள் சாவின் அருத்தத்தை ஆராய் கின்றனர். காதலியைத் தேடிக்கொண்டு அந்தக் காரிருளில் கனவேகத்துடன் ‘அறுப்பு மனையில்’ நுழைகிறான். வெள்ளை அங்கி அவளை மூடி இருந்ததால் அவள் முகத்தை மட்டும் காட்டினர் அஃது அவன் காதலி என்பதை அறிவிக்க. “இது முகம்; அவள் எங்கே? “அதோ அறுத்துக் கூறுபடுத்தி வேறு வேறாக வைத்திருக்கிறோம், குடல், கொழுப்பு, நரம்பு, எலும்பு, தசை, நார்கள் நன்றாகப் பார்; இவள்தான் உன் காதலி!”.

“நீ கூறும் காதலி வேறு எத்திறத்தாள்? கூட்டிக் கழித்துப் பார்; அவள் ஒரு சதைக் கட்டு, குருதிக் கொட்டு.”

“மேனி மாசற்ற பட்டு” என்று பிதற்றுவாய். அவள் பேரும் பட்டுதான். எடு கொஞ்சம் துட்டு. இங்கே அவளைக் கொண்டு வந்த அறுவடைக்காரருக்குக் கூறு போட்டுத் தரவேண்டும்; அப்பொழுதான் அவர்கள் அழகாக மூடி அவளைத் திருப்பித் தருவார்; இதை ‘மாமூல்’ என்பாய்; ‘சகஜம்’ என்போம்; அவர்கள் சுடு காட்டில்கூட விடமாட்டார்கள்; கொடுத்தாக வேண்டும்; செத்தவள் உயிர் பிழைத்து வரப்போவது இல்லை. இவளா அழகி? யோசித்துக் கூறு”.

“பட்டுத்துகில் உடுத்திப் பகட்டான தோற்றத்துடன் பட்டம்மாள் காட்சி அளிக்கிறாள்; சந்தனம் பூசிச் சவ்வாது பொட்டிட்டுக் கமக்கிறாள். மல்லிகைப்பூ மணக்கும் கூந்தல் அவ்வல்லிக் கொடிக்கு: எல்லாம் மேற்பூச்சு; இவற்றைக் கண்டா அவள் பேரழகி என்று பிதற்றுகிறாய்? ஊறுகாய் டப்பாவுக்கு பிளாஸ்டிக் மூடி போட்டால் அது பளபளக்கத்தான் செய்யும். அலங்காரம் கண்டு அது காரம் உடையது என்று பேரம் பேசுவது அறிவுடைமையாகாது; அழுகலைத்தான் ஊறுகாய் என்கின்றனர். அது புளிக்கத்தான் செய்யும். அதைத் தின்று நீ களிக்க நினைக்கிறாய். உள்ளே இருக்கும் பண்டம் எது என்று அறியாத முண்டங்கள் சிலர் “கண்டதே காட்சி கொண்டதே கோலம்” என்று எதையும் மேற்போக்காகப் பார்த்து அதுதான் மெய்ம்மை என்று கருதுவர். சேலையும் பூவும் அழகுடையவைதாம்; அவற்றைக் கண்டா அவள் அழகி என்கிறாய்? ஊறுகாய் டப்பா; அஃது உடம்புக்கு ஆகாது.”

கர்வம் பிடித்தது இந்த மண்டை ஒடு; குழிந்து ஆழ்ந்து கண்டார் அஞ்ச அது சிதைந்து கிடக்கிறது. அப்பொழுதும் அது சிரிப்பதுபோல் அதன் பற்கள் விரிந்து கிடக்கின்றன. “ஏய்! நான்தான் நீ காதலித்த கண்ணம்மா; என்னைக் கடித்துத் தின்னத் துடித்துக் கிடந்தாய்; படித்து வைத்த பழங்கவிதை, அன்று முடித்து வைத்த புகையிலை. காரம் மணம் இன்று செத்துவிட்டன. என்னைக் கண்டுதான் நீ கற்கண்டு என்றாய்; சுவைத்தாய்; மிகைத்தாய், நகைத்தாய் உன் பெற்றோர் களையும் பகைத்தாய். நான் இப்பொழுது மண்டை ஓடு, இருப்பது சுடுகாடு, நான் தனிமையில் தான் இருக்கிறேன். வந்தால் இனிமையாகப் பொழுது கழிக்கலாம், பேய் வரும் என்று அஞ்சுகிறாயா அஞ்சாதே, அதுவும் என்னைக் கண்டு ஓடிவிடும், நானா. அழகி? யோசித்துக்கூறு”

முடைநாற்றம், அடைமழை; பெடைக் கழுகு; உடன் அதன் இணைப்பறவை இவை என்ன செய்கின்றன. குத்திக் குத்திக் குருதியைச் சுவை பார்க்கின்றன; தத்தித் தத்தி ரணப்படுத்தி நிணத்தில் முழுகுகிறது. கணத்தில் அந்த உடலும் மறைகிறது, இது யார்? உன் ரசிகை; இப்பொழுது அவள் இந்தப் பறவைகளுக்கு ருசிகை.

நீ விரும்புவது இந்த உடல்; அதனைத் தழுவும் அற்ப ஆசையை நீ விடுக; நான் தெரிவிக்கும் மடல் இது;

காயம் இது பொய்; மாயம் நீ காண்பது, அறம் மெய்; அறிவு மெய்; உண்மை மெய். இம்மூன்றும் சேர்வதுதான் அழகு அறிக, ஆராய்க, மெய்ப்பொருள் காண்க.

6. கூறாமல் சந்நியாசம் கொள்

(துறவு)

இருள் உன்னைச் சூழ்ந்து கிடக்கிறது; அதை நீக்க ஒளிக்கதிர் தேடுகிறாய்; குச்சி கொண்டு கொளுத்துகிறாய்; குத்துவிளக்கு எரியவைக்கிறாய். கும்மிருட்டுக் கம்முகிறது. ஒளி வீசுகிறது. மறுபடியும் விளக்கு அணைகிறது; இருள் சூழ்கிறது; இது என்ன விளையாட்டு? சிறுவர் விளையாடும் கண்ஆம்மூச்சி; விளையாட்டா? ஒளி தவம்; இருள் மருள்.

தவம் செய்கிறான்; அவன் பாவம் நீங்குகிறது; தவம் கெடுகிறது; பாவம் வந்து சுடுகிறது. இதுதான் இந்த மின்மினி விளையாட்டு; கண்மணி பாவம் செய்யாதே; தவத்தை மேற்கொள்.

அவன் அறிவாளி; சிந்தித்துத்துப் பார்க்கிறான்; ஞானம் பெறுகிறான்; “செல்வம் நிலைக்காது; நோய் விலக்கினாலும் அவனையே இலக்காகக் கொள்ளும் நண்பன்; ஒட்டிக் கொண்டு உறவாடும் இளைஞன்; மூப்பு அவனுக்கு யாப்பு: அஃது அவனை இறுகக் கட்டி நடமாடச் செய்யாமல் அடக்கி வைக்கிறது சாக்காடு அவனை அழைக்கிறது. இந்த நான்கு செய்திகளையும் எண்ணிப் பார்க்கிறான். நண்ணுகிறது ஞானம். விளைவு அவன் இப்பொழுது துறவி.

தம் கடமை எது என்று எண்ணிச் செயல்படுகிறான். அவன் எதற்குக் கவலைப்பட வேண்டும்? கவலைக்கே அச்சம்தான் காரணம், சாத்திரங்களை நாடுவதும் கோத்திரங்களைத் தேடுவதும் துறவிக்குத் தேவை இல்லை. துறவிக்குக் கவலை ஒரு துரும்பு; எதற்கும் அவன் கவலைப்படவே மாட்டான், ஆவது ஆகட்டும், போவது போகட்டும் என்று அவன் நினைக்கிறான்; ‘நாளை’ அதனை அவன் நம்புவதில்லை; ‘நேற்று’ அது பழங்கதை; ‘இன்று’ அவன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.

கட்டி வைத்த வீடு, கடன்காரன் ஒற்றி வைத்ததற்காகப் பற்றிக் கொண்டான். இளமை இன்பம் செய்தது; ஆனால் அஃது அவனை விட்டு நாள் ஆக ஆக அகன்று செல்கிறது. எழில் மிக்கவன் என்று பொழிலில் சந்தித்த அழகி ஒரு காலத்தில் பேசினாள். வனப்புமிக்கவள் என்று கனத்த மொழியில் இவனும் சாதித்தான்; இருவரும் அது கற்பனை என்று அறிகின்றனர். ஈட்டி வைத்த புகழ் இவை எல்லாம் மெல்ல மெல்ல அவனை விட்டு நீங்குகின்றன. மறுபடியும் இந்தப் பற்றுகள்! தேவைதானா? துறவு என்ற நிலை அடைந்துவிட்டால் இந்தச் சின்ன சின்ன ஆசைகள் அவனைத் தின்னத் தொடங்குவதில்லை. அவன் வாழ்வு பின்னப்படுவதில்லை.

இன்பம் தேன் துளி; மேலே தேன் கூடு; கீழே பாழும் கிணறு, மரத்தின் விழுதுகள் அவற்றோடு பாம்பின் தொகுதிகள், சொட்டும் தேன் அவன் நாவிற்குச் சுவை தருகிறது; என்றாலும் மனம் ‘திக்கு திக்கு’ என்று அடித்துக் கொள்கிறது. எல்லாம் இந்தச் சிறு துளிக்குத்தான் அவன் செய்யும் தகிடு தத்தங்கள்; தாள மேளங்கள். எண்ணிப்பார்த்தால் இந்தப் பாசம் என்பதைக் கயிறாகக் கொண்டு தொங்கமாட்டான். கிணற்றில் வீழ்ந்து சாகமாட்டான். இவற்றை விட்டு வெறியேறிச் சுதந்திரப் பாதையில் நடப்பான்.

இனியும் தாமதித்து என்ன பயன்? இளமை விணே கழிகிறது; நோயும் மூப்பும் உடன்பிறப்புகளாக இணைந்து வந்து சேரப் போகின்றன. அவற்றின் நண்பர்கள், இருமல், பொருமல், மடித்து வைத்த மருந்துப் பொட்டலங்கள், டானிக்குகள், அவற்றை ஊற்றிக் கொடுக்க ‘வெள்ளை ரோஜாக்கள்’, இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்துத் தப்பித்துக் கொள்பவன் தான் அறிவாளி; பேசாமல் சந்தியாசம் கொள். எந்தக் கவலையும் வராது; பற்றுகள் அணுகா.

அறிமுகம் ஆனவன்தான்; அதனால் தேடி வந்து அழைப்பிதழ் தருகின்றான். மணவிழாவிற்கு வருக என்று. “தனியாக இருந்து நீ இனித் துணையாக ஒருத்தியைத் தேடுகிறாய். இதன் அணையாக நீ எதைச் சாதிப்பாய்?” என்று கேட்கிறேன். “நன்மகனைப் பெற்று நானிலம் வாழ்விப்பேன்” என்கிறான். “அவள் மலடி ஆகிவிட்டால்” என்று வினா எழுப்புகிறேன். “என் செய்வது?” என்று கேட்கின்றான் “பொன் செய்வது” என்று புன்முறுவல் பூக்கின்றேன். அடுத்துத் தக்க வருவாய் இல்லை என்றால் எப்படி வாழ்வாய்?’ என்று கேட்கிறேன்.” 'இந்தச் சிக்கலில் அகப்படாமல் விலக வழி யாது?” என்கிறான். “பேசாமல் சந்நியாசம் கொள்! இது தான் நாலடி சொல்கின்ற ஓரடி”.

“மலை குலைந்தாலும் தன் நிலைகுலையாத மாண்பு உடையவரே தவத்தை மேற்கொள்வர். நெஞ்சு உறுதி இல்லை என்றால் தவத்தைப் பற்றிக் கிஞ்சித்தும் எண்ணமாட்டார். இல்வாழ்க்கையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று எண்ணற்க, துறவும் கடினமானதே; நல்லொழுக்கம் காத்துத் துறவுபேண வேண்டும். மேனகையைக் கண்டு நீ நகைக்கத் துவங்கினால் உன் வாழ்வு பிறர் ஏளனத்துக்கு ஆளாக அமையும்.”

ஒருகன்னத்தில் உன்னை அறைந்தால் மறு கன்னத்தை அவனுக்குக் காட்டு. “இறைவா! அவனை மன்னித்துவிடு” என்று பாவமன்னிப்புக் கேள். அவன் பண்பு கொள்ளுவான்; பணிவுபெறுவான்; திருவள்ளுவன் ஆவான்.

அருள் உள்ளம் கொண்டு அனைவரிடமும் பழகுதல் சிறந்த துறவறமாகும். கண் பார்க்கத் துடிக்கிறது; செவி கேட்கத் துடிக்கிறது; முக்கு நுகர்கிறது. மெய் பொய்யை நாடுகிறது. ஐந்து புலன்களும் உன் கட்டுக்கு அடங்காமல் காட்டு எருமையாகத் திரிகின்றன. இவற்றை நல்வழிப்படுத்திப் புன்மை அகற்றினால் நிச்சயம் நீ வீடு பெறுவாய்.

மனம் காத்தல் தூய்மைக்குவழி; அதுவே துறவுக்குத் திறவுகோல்.

இன்பம் இழுத்துப் பிடிக்கிறது; அது உன் வழியைத் தடுத்து நிறுத்துகிறது. நீ செல்லும் பாதை நேர்வழி, இன்பம் உன்னைத் தடுக்கும் பேர்வழி: அதனைப் பொருட்படுத்தாமல் கடமையை மேற்கொள்க. அது கடவுள் நெறி.

நாவின் சுவைக்கு அடிமையாவர் அவர் வெறியர்; பூவின் சுவைக்குப் பின்போவார் அவர் பூஜ்ஜியர்; நாதம் அஃது ஏதம்; உலக ஆசைகள் உன்னை விழுங்கும் பூதம். ஏணிப்படிகள் ஏறிச் சொர்க்கம் அடைய வேண்டும்; நீ ஏன் இப்படிப் பாம்பின் வாயில் அகப்படுகிறாய். துறவு கொள்க; அஃது உன்னை உயர்த்தும்.

7. மதங்கொண்ட யானை

(சினம்)

சினம் என்பது மதங்கொண்ட யானை; அதை அடக்கி ஆண்டால் அது பணிந்து நீ உயர ஏற வழிவகுக்கும். யானை மீது பவனி வர இந்த உலகம் உன்னைக் கண்டு பணியும்; பிறர் பகை தணியும். சினத்தை எப்படி அடக்குவது? கொசு தொல்லைதான். அதற்காக நீ வீட்டையே கொளுத்த முடியுமா? ஈ உன் கையில் உட்காருகிறது; அதற்காக அதனைத் துரத்த நீ உன் கையை வெட்டிக் கொள்ள முடியுமா? பிறர் தரும் தொல்லைகள் அதற்காகக் கடக்க வேண்டும் சினத்தின் எல்லைகள். சினம் நல்லது அன்று.

வீட்டில் பற்றாக்குறை; வெளியே தொடர்ந்து வரும் தொல்லைகள்; அவற்றிற்கு இல்லை எல்லை; சுமை தாங்கித் தாங்கி முதுகு வளைந்து விட்டது. “படமுடியாது இனித் துயரம், பட்டதெல்லாம் போதும்” என்று உயிர்விடத் துணிவது அவசரம், ஆவேசம், இது வாழ்க்கையைச் சினப்பது; அறிவுடையவர்கள் எதையும் சீர் தூக்கிப்பார்ப்பர். துன்பம் உலக இயற்கை; அதற்காகப் பொறுமையை இழக்காமல் யார் மீதும் சினக்காமல் தன் கடமை மீது கருத்து ஊன்றுவர்.

“யாகாவாராயினும் நாகாக்க” என்று சோ காக்கும் வழி கூறினார் வள்ளுவர். சோ காக்க என்று கூறுவதால் அவரையும் “சோ” என்று கூறலாம். இவர் அறிவாளி; கோமாளி அல்லர், பிறரை வருத்தும் சொற்களை அறிவுடையார் என்றும் கூறார், காய்தல் அகற்றுக; உவத்தல் கொள்க; வாழ்க்கை சாய்வது இல்லை.

காசுக்கு உதவாத கம்மியர்கள் கண்டபடி பேசுவார். அதற்காக நீ விம்மிப் பொருமுதல் வீண் செயலாகும். அவற்றை ஒரு பொருட்டாக எண்ணி அவர்களைத் தெருட்டுவது கருதி அறிவுரை கூறவேண்டாம். அவர் மீது சினந்து பயனில்லை. மேன்மக்கள் பொறுமையைக் காட்டுவர். கீழ் மக்கள் சிறு சொல் கூடப் பொறுக்கமாட்டார்கள். அடக்கம் என்பது யாது? முடங்கிக் கிடந்து ஒடுக்கம் கண்ட முதியவர் கொள்ளும் நடுக்கம்; அஃது அடக்கம் அன்று.

கோடிக்கணக்கில் குவித்த அவன் தன்னைத் தேடி வருவோர்க்கு ஜோடிப் புடவை தருகிறான் என்றால் அது கொடை அன்று; ஊர்ப் பெருந்தனக்காரன்; செருக்கு மிக்கவன்; அவன் காந்தி சீடன் ஆகினால் அஃது உண்மையில் வியப்புச் செய்திதான். வலிவுள்ளவன் மெலிவு காட்டுவது பாராட்டத்தக்கது. இல்லாதவன் கொடை மதிக்கத்தக்கது.

குடிப்பெருமை உடையவர் என்றும் கண்ணியமும் கட்டும் கொண்டு நடப்பர். நற்குடிப் பிறந்த நயத்தால் நாகமெனச் சீறுபவன் வேகம் அடங்கி விரும்பத்தக்கவன் ஆகின்றான். மந்திரத்துக்கு நாகம் கட்டுப்படுகிறது. குடிப்பெருமைக்குத் தனிமனிதன் விட்டுக் கொடுக்கிறான். உயர்குடிப் பிறந்தவர்கள் சினம் காட்டுவது இல்லை.

“வெற்றிக்கு வழியாது? அதனைக் கற்றுத் தருகிறது நாலடியார். எதிரி அவன் கண்டபடி பேசினாலும் நீ பதறி அவனை எதிர்க்காதே. தீமைகளைக் கண்டும் காணாமலும் விட்டுவிடு; இஃது உனக்கு ஏற்றம் தரும்; இது நாலடியார் சொல்லும் மாற்றம்.”

“உன் நண்பன்தான்; நீ சொன்ன சொற்களை அவன் சுடுசொற்களாக ஏற்கிறான்; தீயினால் சுட்டபுண்; அதன்வடு மாறவில்லை. வெந்நீர் தணிந்தால் தண்ணீர் ஆகிறது. பெரியோர் சினம் வெந்நீர், அஃது ஆறாமல் இருக்காது; விரைவில் குளிர்ந்துவிடும்.”

“நன்றி ஒருவர் செய்தக்கால் அந்நன்றியை மறவாமை நயப்புடையதாகும். அடுக்கிய இடுக்கண்கள் பல செய்திருந்தாலும் அவற்றை வடுக்களாகக் கொள்ளார் மேலோர். நாய் கடிக்கிறது என்றால் அதனைத் திருப்பிக் கடிக்கவா முடியும்? கீழ் மகன் தடித்துப் பேசுவான். அதற்காக மடித்துத் திருப்பித் தாக்கத் தேவை இல்லை. அவன் உன்னை மடையன் என்று கூறிவிட்டால் அதற்காக அவனைக் கடையன் என்று கழறாதே. அவசரப்பட்டு ஆராயாமல் சொல்லி இருக்கிறான். அவன் தெளிவு பெற்றால் தவறு உணர்வான். திருப்பித் தாக்கி விட்டால் அவன் கூற்று மெய்யாகிவிடும்; அதற்கு நீ துணை செய்யாதே; சால்பு கெடும்; சினத்தை விடுக.”

8. பொறுத்தவர் பூமி ஆள்வார்

(பொறை உடைமை)

அற்ப சகவாசம் உயிர்க்கு இறுதி விளைவிக்கும்; பிராணசங்கடம். யாவரோடு பேசுவது யாவரோடு பழகுவது என்பதைச் சிந்தித்துப்பார். சின்னவர்களோடு சிநேகம் கொண்டால் அவர்கள் தம் பின்ன புத்தியைக் காட்டுவர். தொடர்ந்து இன்னல்களைத் தந்து கொண்டே இருப்பார்கள்; அதனால் உனக்குக் கொதிப்பு வரும்; மதிப்புக் குறையும். அவர்களைவிட்டு விலகு.

சிறியோர் பிழை செய்வர்; அறிவுடைய பெரியோர் அவற்றை அழிவு தரும் என்று கொள்ளார். அவன் கல்லெடுத்து அடித்தால் நீ சொல்லெடுத்துத் தடுப்பது நல்லது; நீ வில்லெடுத்து விறல் காட்டக் கூடாது. சின்னக் கல்லால் மலம் தொட்டால் அது பிசுபிசுக்கும்; கசகசக்கும். பதிலுக்குப் பதில் என்பது மிருக நிலை; உதைக்கு உதை என்பது பழைய கதை. அவன் உன் பல்லை உடைத்தால் உடனே அவன் பல்லைக் கழற்ற முயற்சி செய்யத் தேவை இல்லை. அவன் வெட்டுகிறான்; நீ அக் கத்தியைத் தட்டிப் பறிக்க வேண்டுமே தவிர அவனை நீயும் வெட்டக்கூடாது; இருவருக்கும் பின் கட்டுப் போட வேண்டி வரும். மருத்துவச் செலவு; அருத்தமே இல்லை.

பெற்று வளர்த்த தாய் சற்றுக் கடுஞ்சொல் சொன்னால் அது சுடு சொல் என்று எடுக்காதே; அவள் அடிமனம் உன்னை அடிக்க அன்று; அனைத்துத் திருத்த, அன்புடைய மனைவி ஆவேசப்படுவாள். தட்டு முட்டு எடுத்துக் கட்டு மீறி வீசுவாள்; அவை ஒன்று இரண்டு பழுதுபடும்; அழுது தொலைப்பாள். உடனே நீ மல்யுத்த வீரனாக மாறி, அவளை மாறிக் குத்த முனையாதே; அது சுத்த முட்டாள்தனம்; அவள் உன்னை அடிக்கும் ஆற்றல் இல்லை; உனக்கு ஊறு நிகழ்த்திப் பேரு எடுக்க விரும்பவில்லை. அதனால் அவள் தன் சினத்தைச் சிறுசுகளிடம் காட்டுகிறாள்.

உன் உயிர் நண்பன் செயிர்த்துப் பேசுவான். அதற்கு உட்கிடக்கை இருக்கும். அவனை வெறும் குடுக்கை’ என்று கருதித் துறக்காதே. பகைவன் சிரிக்கப் பேசுவான். அவன் விரிக்கப் பார்ப்பது சூழ்ச்சி வலை; அதில் ஆழ்ச்சிபடாமல் எழுச்சி கொள்க. புறஉரை வேறு; அகநிலை வேறு; இதனை அறிந்து பழகுக.

ஆண்டுகள் பல ஆகின்றன; எனினும் நரையற்று இருக்கின்றான். அவலம் இல்லாமல் அகமகிழ்வுடன் இருக்கின்றான். காரணம் என்ன?

விழித்து வாழ்கிறான்; சுற்றுப்புறத்தை அறிகிறான். அறிவது அறிந்து அடங்கி வாழ்கிறான், இயன்றவரை இல்லாதவர்க்கு நல்குகிறான்; பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்பி வகுத்துவிட்டு எஞ்சிய ஈவு கொண்டு இன்புற்று வாழ்கிறான் நூற்றுக்கு நூறு அவன் வாழ்க்கையில் வாங்கும் மதிப்பெண். தானும் நிம்மதியாக வாழ்கிறான்; மற்றவர்களையும் வாழ விடுகிறான். உலகம் மகிழ, அம்மகிழ்வில் அவன் புகழ்வு காண்கிறான். நிறைவு அவன் மனம்; அதனால் அவனுக்கு இல்லை யாதும் குறைவு.

பாலும் தேனும் கலந்தால் இனிக்கும் என்பார் வள்ளுவர்; இப்படிச் செறுகிக் கிடந்தது நட்பு; இடையில் சிறிது விரிசல்; அந்தக் குரிசல் செய்வது தவறு; எனினும் நீ அதைத் துற்றித் திரியாதே. நட்பின் பரிசில் என்று அதனைப் பொறுமையுடன் ஏற்றுக் கொள்; மறுபடியும் பழக இயலவில்லை என்றால் சொல்லாமல் கொள்ளாமல் விலகி விடு.

கண்ணாடி சன்னல் நட்பு; உள்ளிருந்து கொண்டு கல் எறிந்தால் இருவர்மீதும் படும். வெளியே வந்துவிடு; கண்ணாடி உடைப்பானேன்? கல்லெடுத்து அடிப்பானேன்? மெல்ல அவனை விட்டு விலகிவிடு; கசப்புக் காட்டாமல் மெல்லக் கழற்றிக் கொள்; நட்பு நிலைக்கும்.

“பேயோடு உறவு கொண்டாலும் பிரிவு அரிது.” என்பர். அதனை விட்டு விலகப் பிடிக்காது; விலங்குகளும் பழகிவிட்டால் ‘காய்’ விட்டுக் கசந்து கழலுதல் செய்யாது; இசைந்தவர் பிரிதல் என்பது கசந்தது ஆகும். நண்பனிடம் கூடிவிட்டுப் பின் குறை கண்டு அவனை விட்டு ஓடிவிடுவது நாடத்தக்கது அன்று. ஒட்டி உறவாடிய பின் வெட்டி ஒதுங்குதல் கெட்டித்தனம் ஆகாது. பிரிந்தவர் பின் கூடினால் பேசவும் முடியாது; அதனால் பிரிவே கூடாது என்பதை மனதில் கொள்க. பொறுமை தரும்.”

பெரியவர்கள் பெரியவர்கள்தான்; தவறுகள் என்பதே தெரிந்து செய்வன அல்ல; தப்பித் தவறிச் செய்தாலும் ஒப்புக் கொண்டு மன்னிக்கும் மாண்பு இவர்களிடம் இருப்பதால் பழகிய பின் யாரும் இவர்களை விட்டுப் பிரிவது இல்லை.

“நச்சு நச்சு என்று செய்யும் தவறுகளை எல்லாம் சுட்டிக் காட்டி அச்சுறுத்திக் கொண்டிருந்தால் யாருமே ஒட்டி நிலைக்க மாட்டார்கள். நண்பர்கள் மட்டும் அன்று; நம்மை நாடி வரும் தொழிலாளர்கள் கூட, கண்டித்துக் கொண்டே இருந்தால் அவர்கள் சண்டை போட்டு விட்டு உன்னை ஒண்டிக் கட்டையாக்கி விட்டுப் போய் விடு வார்கள். ஆறுதல் தந்து ஆதரிப்பதுதான் அறிவுடைய ஆன்றோர் தம் செய்கை, கடன்; உட்கை; எல்லாம்.”

“சுட்டாலும் பால் சுவை குறையாது; சங்கு சுட்டாலும் வெண்மை தரும். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே. வயிறு சுட்டாலும் தாம் கெட்டுவிட்ட நிலையைப் பறை எடுத்து அறைந்து கொண்டிருக்கமாட்டார்கள். கண்டவரிடம் உன் கடுமையை எடுத்துக் கூறினால் அவர்கள் உன்னை விடுவிக்கவா போகிறார்கள்? கீழோரிடம் எதையும் சொல்லி நீ தாழ்ந்து போகாதே. யாரிடமும் சொல்லாமல் இருக்க முடியாது; உன் துயரம் தீர்ப்பவர் ஒரு சிலரை நீ சந்திக்கக் கூடும். அவர்கள் செவி சாய்த்துக் கேட்பார்கள்; வழி காட்டி வகைப்படுத்துவார்கள்; ஒளி கூட்டி உன்னை உயர்த்துவார்கள். தக்கவர்களிடம் சொல்லிக் கொள். தகாதவரிடம் விலகிக் கொள்; அவர்கள் ஆற்றப் போவதும் இல்லை; தீர்க்கப்போவதும் இல்லை; எதற்காக எடுத்துக் கூறுகிறாய்? விடு;விடு; விடு.”

“இன்பம் ஒரு போதை; அதன் வேட்கை தீர்க்க இயலாது; தொடர்ந்து அதன்பின் சென்று கொண்டு இருக்கிறாய்; நிழலைத் தேடுகிறாய்; அது நீண்டு கொண்டே போகிறது. நிழலின் நிஜம் இருட்டுதான். அதில் இருக்கும் வரை அது குருட்டுத்தனம். வெளிச்சத்திற்கு வா; பழி தரும் செயல்களைச் செய்து இன்பத்துக்கு வழி தேடாதே; போதைமருந்து இன்பம் தரும்; ஆனால் அது போதமன்று; ஏனைய இன்பங்களும் மயக்கம்; அதில் ஈடுபடத் தயக்கம் காட்டு, அதுவே உனக்குப் புகழ் தரும்.

“ஏன் வால் அறுத்துக் கொண்டாய்?” என்று கேட்டால் “வைகுந்தம் பார்க்க முடிகிறது” என்கிறது குள்ள நரி. தான் கெட்டது; மற்றவர்களையும் கெடுக்கிறது. இது நரிக்குணம்; மதங்கொண்ட யானை அது கீழ்மையைக் கருதாது. அது கரிக்குணம்.

“நல்லோர் தாம் கெட்டுவிட்டாலும் மற்றவர்கள் கெட்டுப் போக வழி கூறமாட்டார்கள். அழிந்து போக நினைக்கமாட்டார்கள். பசி என்பதற்காகப் பரதேசிப் பயல்களிடம் கை நீட்டமாட்டார்கள். கீழ் மக்களை அண்டிப் பாழ்பட்டுப் போகமாட்டார்கள். வானமும் வையகமும் தாமே வந்து காலடியில் விழுவதாயினும் பொய்கலந்த சொல் அவர்கள் பேசமாட்டார்கள்.”

9. பிற மாதரைச் சிந்தையாலும் தொடேன்

(பிறர் மனை நயவாமை)

பக்கத்து வீட்டுக்காரி, புதுச்சேலை உடுத்தி அதிகாலையில் நிற்கிறாள். அவள் அங்கு வருகிறாள் என்பதைத் தெரிகிறான்; பூச்சூடி அன்று மாலை அவன் கண்ணில் படுகிறாள்; ‘புதுச் சரக்கு வந்து இறங்கி இருக்கிறது’ என்பது அறிகிறான்.

இவள் யார்? புதிதாக வந்தவள். அடுத்தவன் மனைவி; சொந்த வீட்டுச் சமையல் சுவைக்காது; அடுத்த வீடு தான் சுவைக்கும். இவன் மதம் கொண்ட யானை, களிப்பு மிக்கவன்; கரும்பு வயலை மிதித்து அதனை விரும்பி உண்ண நினைக்கிறான். எப்படியோ அந்தப் புதியவள் இவன் வலையில் வீழ்ந்துவிட்டாள்.

இனி அடுத்து அவள் கைப்பிடிப்பது தான் விருப்பம். அதனை விட்டுவிட்டால் தருமம்; கவர்ந்தது அவள் சருமம். ஊசி இடம் கொடுத்தால் நூல் நுழைய வழி கிடைக்கிறது. என்றாலும் பார்த்து நுழைய வேண்டும்; வழி சிறிது; இருட்டு வேளை? வெளிச்சம்; அவன் கண்கள் கூகின்றன.

கதவைத் திறந்து வைத்தாள்; கணவன் வெளியேறிச் சென்றான்; அவன் வருவது எப்பொழுது? அது தெரியாது. அதற்குள் முடித்துக் கொள்ளலாம். ஏன் உடல் நடுங்குகிறது. வைத்தியரிடம் காட்டினால். ‘இது மன நடுக்கம்’ என்பான். இத்தனை இடுக்கு வழியே நடுக்கத்தோடு ஏன் செல்கிறான்? படுக்கை இன்பம் கிடைக்கிறது என்பதால்தான். இன்பம் சிறிது; அதற்கு அடையும் துன்பம் பெரிது; அவன் முயற்சி வறிது.

அவன் நிலை என்ன ஆயிற்று? அறம் கெட்டது; புகழ் தேய்ந்தது; உறவு முறிந்தது; பெருமை சிறுத்தது; நன்மைகள் அழிந்தன. பகை தொடர்ந்தது; பழி கூடியது; பாவம் அதற்கு மன்னிப்பு இன்றி மனம் உளைந்தது.

அவன் வாழ்க்கை அச்சமே ஆசாரம் ஆயிற்று. அவன் செய்கை அவனுக்கு விசாரம் ஆயிற்று. புகும்போதும் அச்சம்; அவளோடு நகும் போதும் அச்சம். காமம் மிகும்போதும் அச்சம்; எப்போதும் அச்சம். மறைப்பது எப்படி? அதுவும் அச்சம். அகர முதலாக னகர இறுவாய் நரகமே அவனுக்கு வாய்க்கிறது; இவை அச்சத்தின் விளைவு.

பிறர் கண்டால் இவனை மட்டும் பழிக்கமாட்டார்கள்; பிறப்பைப் பற்றியும் ஆராய்வார்கள். “இவன் தாய் ஒருவனுக்கு என்று விரிக்கவில்லை முந்தானை” என்பர். இவன் தாயின் முந்தானை இவர்கள் ஆய்வுக்கு உள்ளாகிறது. அகப்பட்டுக் கொண்டால் கைகால் குறையும். பேடித்தனம் அவன் செய்கை, கல்வி கற்று அறிஞனாக இருக்க வேண்டியவன் விபச்சாரன் என்றும் துச்சாரி என்றும் தூவிக்கப்படுகிறான்.

இவன் கெட்டுச் சீரழியக் காரணம் என்ன? இவன் செட்டாகச் சேரும் சிற்றினம்தான்; கொழுந்தி அழகிய வடிவினள், அவளிடம் அழுத்தமான உறவு; தொடர்ந்து அவளை மருவிக் கெடுவது இந்த ஆள், இவன் ஒரு நாளைக்கு ‘அலி’ என்னும் சொல்லுக்குப் பலியாவது உறுதி.

பக்கத்து வீட்டுப் பத்தினியோடு இவன் செய்யும் சல்லாபம் அதனை எப்படிக் கழுத்தை நீட்டியவள் பொறுத்துக் கொள்வாள்? “பத்துப் பேர் அறியப் பந்தக் கால் எழுப்பி அவளை மனைவி என்று ஏற்ற நீ இந்தக் கந்தல் துணியை எப்படி நாடலாம்? உன் மனைவி மெல்லிய மனம் மல்லிகைப்பூ; அது வாடாதா! இது துரோகம்; அதன் காரணம் பிறன் மனையாள்பால் நீ கொண்ட மோகம்.”

“அரவு அழகாகத்தான் இருக்கிறது; அது நஞ்சு: கரவு என்பது அறிய மாட்டாய்; படம் எடுத்து ஆடுகிறது; அதனை நடம் என்று நயக்கிறாய்; நச்சு உடையது அது; அஃது உன்னை நக்கத் தேவை இல்லை; நீயே அது நஞ்சு உக்க அதன்பால் செல்கிறாய். இது பிள்ளைமை விளையாட்டு அன்று, கள்ளம் அமை உயிர் ஆட்டு; மரணத்தோடு விளையாடும் புதுக்கூட்டு.”

நீதிகள் எடுத்து ஓதி உரைத்தாலும் அவன் அவற்றை ஒரு சேதி என்று ஏற்க மறுக்கிறான்; காரணம் மீதூர்ந்த காமம்; அஃது உடல் இயற்கைதான்; என்றாலும் அதனை அடுதல் அறிவின் செய்கைதான்; அறிவுடையவர் காமம் கரை மீறாது கட்டுக்குள் அடக்கி வாழ்வர்; இயற்கை என்று மிகைக்கை செய்து அறிவாளி இத்தவறு செய்யமாட்டான்.

பிறன் மனை நயத்தல் இளமை செய்யும் குறும்பு; அது காமத்தின் அரும்பு; அது கொடிது; கடிது; வெவ்விது; எதனாலும் அடக்க இயலாது; அம்பும், நெருப்பும், காய் கதிரும் புறத்தைச் சுடும்! காமம் அகத்தைச் சுடும் ஆற்றல் மிக்கது. அதனால் நெருப் பினும் காம விருப்பு மிகுதியும் அஞ்சத்தக்கது ஆகும்.

ஊரே பற்றி எரிகிறது; எரிந்தால் என்ன? ஏரி குளம் உண்டு; அங்குப் பதுங்கிக் குளிர் பெறலாம். காமம் கட்டுக்கு அடங்காது. அஃது எரிந்தால் தப்பித்துக் கொள்ள ஏமமே இல்லை.

10. கைக்கு அழகு தருவது ஈகை

(ஈகை)

ஈவது தான் கை கைக்கு அழகு தருவது கொடைப் பண்பு; வற்றிவிட்ட பிறகு ஊற்றாக வரும் நீர்ப் பெருக்கு; அது பிறர் வேட்கை தீர்க்கும்; தாகம் எடுப்பவர்க்கு அது உதவுவது; நன்கொடை, கைப்பொருள் அற்ற நிலையில் பையைத் தேடித் துழவித் தருகிறானே அதுதான் பெருமை. உற்றவன் கொடுக்கிறான் என்றால் அது வெறுமை; உலகப் புகழ்மை; அது காட்டாது மெய்ம்மை. கொடையோடு பட்ட குணன் உடைய வர்க்குச் சுவர்க்கத்தின் கதவு அடையாது. சுவர்க்க வாசல் புகுமுன் அங்கே உள் நுழைவதற்கு ‘விசா’ வேண்டும்; அஃது அவன் கொடுத்துச் சிவந்த கைகள்; அவற்றைக் காட்டினாலே அனுமதி, அவனுக்கு வெகுமதி.

“வயது உனக்கு என்ன?” “அறுபத்தி ஆறு”; “மூப்பு உன்னை அடைகிறது; நோய் இன்னும் அதற்குப் பெயர் தரவில்லை; நாளும் புதிய படைப்புகள்; வழி இல்லை துடைப்புகள்; அவை இன்று நடப்புகள்; அடங்கி இரு ஆரவாரம் ஏன்? செயல்களைக் குறைத்துக் கொள்; தூக்கம் இழக்கிறாய்; காரணம் பற்றுகள் உன்னைப் பிய்த்துத் தின்னுகின்றன. மற்று இனிச் செய்வது யாது? பகுத்து உண்க; பல்லுயிர் ஓம்புக; காசு இருக்கும்போது வேசிபோல் பற்றிக் கொள்ளாதே. ஆசு நீங்கி அருளுக; மாசு நீங்கி வாழ்க, ஈத்துப் புகழ் பெறுக.”

“நெருப்பிலும் தூங்க முடியும்; நிரப்பினுள் கண்படுத்தல் இயலாது” என்பது வள்ளுவர் வாக்கு; வறுமை ஒருவனை நடுங்க வைக்கும்; நிம்மதியாக இருக்க விடாது; அதனால் வறியவர் வேறு அரண் இன்றி இவனைச் சரண் அடைகின்றனர். இங்கே கொட்டியா வைத்திருக்கிறது?’ என்று கெட்டியாகக் கூறி மறுத்து விடுகிறான்; அவர்களைத் துரத்தியும் விடுகிறான். போகின்றவன் மனம் வேகின்றான். “எத்தனை நாளைக்கு உன் வாழ்வு? நீயும் ஒரு நாளைக்கு நடுத்தெருவுக்கு வராமல் இருக்கப் போவதில்லை” என்று சாபம் கொடுக்கிறான்; பாபம் அவன் எரிச்சல் வயிறு.

கொடுத்தால் ஒன்றும் குறைந்துவிடாது; பிறர்க்கும் கொடுத்துத் தானும் உண்டால் செல்வம் செழிக்கும்; அவன் புகழ் கொழிக்கும்; தீமைகள் அழியும், துன்பங்கள் ஒழியும். “நீ இறுகிப் பிடித்தாலும் பணம் உன்னை விட்டுப்போகாமல் இருக்காது; கெட்ட காலம் வந்தால் அஃது உனக்கு விடுதலை தந்து கெடுதலை விளைவிக்கும். ஆக்கமும் அழிவும் வினைப் பகுதியின் செயல்கள்; இவ்வுண்மை அறிக; வறியவர்க்கு ஈக; அதோ நடுத்தெருவுக்கு வந்து ‘நாராயணா’ என்று பாராயணம் செய்கிறானே; அவன் எப்படி இவ்வாறு வேறாயினான்? சென்ற பிறவியில் அவன் செய்த கருமம்; செய்யாத தருமம்; இப்பிறவியில் அவனைத் தாக்கி இருக்கின்றன.

பேசும் முன் சிலர் பொடி போட்டால்தான் உற்சாகமாகப் பேசுவார்கள்; நெடியாகத்தான் இருக்கும்; என்றாலும் இது சிலருக்குப் பழக்கம் ஆகிவிட்டது. நீ சோறு தட்டில் இட்டு உண்பதற்கு முன் வெளியே எட்டிப் பார்; காத்திருப்பான் ஒரு பரம ஏழை; அவனுக்கு இம்மி அளவு; அது கம்மிதான். ஒரு பிடி அரிசி தானம் இடு; சிரமமாகத்தான் இருக்கும். என்றாலும் இதை மறக்காதே.”

வறியவன் வந்து நிற்கிறான்; அவனைப் பார்த்துக் கேட்கிறான். “முகவரி கெட்டா இங்கே வந்து நிற்கிறாய்? வள்ளல் பாரி என்றா என் வீட்டு முன்னால் எழுதி ஒட்டி இருக்கிறேன்? ‘காரி’ என்பவன் யார் தெரியுமா? அவனும் ஒரு உபகாரி, அவர்கள் கொடுத்துக் கெட்டவர்கள்; வள்ளல் என்று பெயர் எடுத்தவர்கள் எல்லாம் வறுமைப் பள்ளத்தில் உழல்கிறார்கள். நமக்கு ஏன் வள்ளல் பட்டப் பெயர்? கொடுப்பதும் இல்லை கெடுவதும் இல்லை” என்று கம்பீரமாகப் பேசுகிறான்; இவன் நடுநிலைமைவாதி.

ஒழுங்காகத்தான் வாழ்கிறான்; மாதம் முப்பது; இருபதில் கெடுபிடி; வீட்டில் அடிதடி, இல்லை அரிசி ஒருபடி என் செய்வது? கேட்டு வாழத்தான் வேண்டும். இரவல்; இரத்தல் என்பதுதான் இரவல் ஆயிற்று. எப்படியாவது நிரவல் செய்ய இதுதான் வழி; சே! மானம் கெட்ட பிழைப்பு: தானம் தராவிட்டாலும் பரவாயில்லை. பிறரைக் கேட்டு வாழ நினையாதே; எந்த இக்கட்டு வந்தாலும் பிறர் படிகட்டு ஏறாதே. மானம் உயிரினும் மதிக்கத்தக்கது. ஒருமுறை கேட்கத் தொடங்கினால் அதன்புறம் நீ மாறமாட்டாய்; தேறமாட்டாய்.

ஊர் நடுவே மரம் பழுத்தது போன்றது என்பர் உபகாரியின் செயல்; குடிநீர் பொதுக் கிணறு. மருந்துச் செடி இவையும் பலருக்கும் பயன்படுகின்றன. இவற்றைப் போன்றவர் உபகாரிகள் என்று உயர்த்திப் பேசினார் வள்ளுவர்; இன்னொரு புது உவமை பலரும் பறித்துச் செல்லும் பனை மரம் ஊர் நடுவே உள்ளது. இஃது உபகாரி உயர்வு; சுடுகாட்டில் காய்க்காத ஆண் பனை அபகாரியின் தாழ்வு. இஃது எப்படி? வள்ளுவர் உவமைக்குத் தோற்கவில்லை நாலடிப் பெருமை.

உபகாரிகள் அவர்கள் வீட்டுக் காவல் இல்லை; துரத்துவதற்கு ஏவல் இல்லை; கத்தி மறைத்து வைத்துச் சுற்றிலும் காவலாளி இல்லை. அடையாத நெடுங் கதவு; அவர்கள் மனம் தூய திறந்தவெளி.

இவர்களுக்கு மாறுபட்டவர்கள் அபகாரிகள்; சுற்றிலும் மதிற்சுவர்கள். ‘நாய் கடிக்கும்’ இது அறிவிப்புப் பலகை. இரும்புக் கதவு உள்ளே எட்டிப் பார்ப்பதைத் தடுக்க முழு கதவடைப்பு; துணிந்து “பிச்சைக்காரர்கள் அனுமதிப்பது இல்லை” என்றும் எழுதியும் வைக்கமாட்டார்கள்; அப்படி எழுதி வைத்தாலும் தொல்லை இல்லை. தம் கஞ்சதனத்தை ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள். இப்படியும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வாழ்க்கை பயனற்றது; இயற்கை நியதிக்கு மாறுபட்டது. மனிதன் ஒதுங்கி வாழ இயலாது; வாழக் கூடாது. ஈகை இல்லை என்றால் அந்த வாழ்க்கை சோகைதான்.

மழை உதவுகிறது; அஃது என்ன எதிர்பார்க்கிறது? கைம்மாறு கருதாத செய்கை அதன்பால் உள்ளது. அஃது உலக அபிமானம்; இந்த உலகம் வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம். மனிதன் பிறர்க்கு ஈவது; தருவது மனித அபிமானம்.

இன்று நாம் உதவினால் மற்றொரு நாள் அவன் திருப்பித் தருவான் என்று நினைப்பது கீழ்மை; சுருக்கமாகச் சொன்னால் வட்டி வியாபாரம்; கூடுதலாகக் கிடைக்கும் என்று நாடுதல் ஆகும்.

நீ தருவது மிகச் சிறியதாக இருக்கலாம்; இன்று இயன்றது அதுதான். இதைப் போல நாளும் செய்துவா! மொத்தத்தில் கணக்குப் போடு; சிறு துளி பெரு வெள்ளம். கேட்பவனும் வீடு வீடு செல்கிறான். ‘ஒரு பிடி சோறு’ என்று தான் கேட்கிறான். அவன் பிச்சைப் பாத்திரம் மணிமேகலையின் அட்சய பாத்திரம் ஆகி விடுகிறது; நிறைந்து விடுகிறது. சிறு பிடிதான்; அது பல படியாகிறது; அதுபோல நீ இடுவது சிறுதுளிதான்; தொடர்ந்து அளித்தால் அது பெருவெள்ளம் ஆகிறது.

கடிப்பு அடிக்கும் முரசின் துடிப்பு; அதன் ஓசை அந்த ஊர் எல்லை வரை மட்டும்தான் எட்டும்; வானத்து இடி அதன் ஓசை மலைகளையும் முட்டும்; நடுங்கச் செய்யும்; அலையோசை போல் அதிரும். நீ கொடுத்து அதனால் எழும் புகழ் ஓசை மூவுலகும் கேட்கும்; எந்த ஓசை மிகவும் பெரிது? யோசித்துப் பேசு; ஈக; அதனால் புகழ் சேர்க்க.

11. ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும்

(பழ வினை)

அவரவர் செய்யும் நல்வினைகள் தீவினைகள் எவையும் அவரை விட்டுப் போவது இல்லை “தினை விதைத்தவன் தினை அறுக்கிறான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்” இது பழமொழி. உன் பழைய வினைகள் உன்னைத் தேடி வந்து அடையும்; தப்பித்துக் கொள்ள முடியாது. பசுவின் கூட்டத்தில் நல்ல ஓட்டமுடைய கன்றுக் குட்டியை விட்டால் அதன் நாட்டம் அதன் தாய்ப் பசுவை நாடித்தான் செல்லும்; அந்தக் கூட்டத்தில் தன் தாய் யார் என்று கண்டு கெள்ளும்; அதே போலத்தான் நீ தோற்றுவித்த பழவினை நீ எங்குச் சென்றாலும் விடாது. சோழ நாட்டை விட்டு மதுரை சென்றாலும் அது பின் தொடராமல் இல்லை; கண்ணகியைப் போலவே தொடர்ந்து சென்ற ஊழ்வினை கோவலன் வாழ்வினைப் பாழ்படுத்தியது. அவன் சாவுக்குக் காரணம் பழவினை என்றுதான் இளம் அடிகள் அளந்து கூறுகின்றார். காவியம் உணர்த்தும் உண்மைகளில் இஃது ஒன்று.

அறம் என்பது யாது? பிறர்க்கு உதவுவதே நல்லறம் ஆகும்; அம்மனப்பாங்கு ஏற்பட வாழ்வின் நிலையாமையை உணர்ந்துதான் ஆக வேண்டும்.

“என்றும் செல்வம் நிலைக்கும்; இளமை கொழிக்கும்; அதிகாரம் நிலைக்கும்; அழகு சுவர்க்கும்; என்று நினைக்க முடியாது; அவை தேய்ந்து போகுபவை.

கூரையைப் பிய்த்துத் தெய்வம் கொட்டுகிறது என்றால் குடைபிடித்துத் தடுக்கமாட்டார்கள். பை பிடித்து நிரப்புவார். செல்வம் வந்தால் வேண்டாம் என்று ‘டாம்’ போட்டுப் பேசார்; ‘ஆம்’ வேண்டும் என்றுதான் கூறுவர்; எங்கே வந்து கொட்டுகிறது? லாட்டரிச் சீட்டுகள் வீட்டுக்குப்பை ஆகின்றன. அவற்றைப் பெருக்கும் கூட்டாளி அவன் மனைவி, இவனை ஒரு ஏமாளி என்று வருணிக்கிறாள்; ‘உங்களுக்கு எல்லாம் வராது’ என்று அடித்துப் பேசுவாள்; படித்துச் சொல்வாள். ‘நாய்க்கு வால் அளந்துதான் வைக்கப்படுகிறது; யார் யாருக்கு இவ்வளவு என்பது முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டுள்ளது” என்பாள்; விளங்கனியைத் திரட்டியதும் இல்லை; உருட்டியதும் இல்லை; களங்கனிக்கு நிறம் கருப்பு, இஃது யார் படைத்த படைப்பு? வரப்போகும் வெள்ளத்தைத் தடுப்பது அரிது; அணைகட்டினாலும் அதுவும் தடுத்து நிறுத்தி விடாது; தரப்போகும் செல்வத்தை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. துன்பமும் இன்பமும் யாருக்கு? எப்படி? எப்பொழுது வரும்? என்று முன்கூட்டி உரைக்க முடியாது; வந்தாலும் அவற்றை அனுபவித்துத்தான் தீரவேண்டும். பருவ மழை தவறிவிட்டால் அதைக் கண்டித்துக் கூட்டமா போட முடியும்? மழை மிக்குப் பெய்து உலகைத் தழைக்கச் செய்தால் அதற்கு நன்றி கூறலாமே அன்றித் தொடர்ந்து பெய்விக்க ஆணையா இடமுடியும்? மழை பொழிவதும் பொழியாமல் ஒழிவதும் இயற்கை நியதி; மானிட வாழ்வு அத்தகையதே.

‘ஒகோ’ என்று உயர வளர்ந்தான்; ‘ஆகா’ அவன் எப்படி வாழ்கிறான்!” என்று உலகம் வியந்தது. நாலு தலைமுறைக்கு என்று அவன் செல்வத்தைக் கட்டுப்படுத்த முடியாதபடி நீள் செல்வம் பெற்றவன். அவன் அதை நன்கு வைத்து வாழ்ந்தானா? முரண்படும் மனைவியைப் போல அஃது அவனைவிட்டு விலகிவிடுகிறது. செல்வமும் உரிமையுடன் நடந்து கொள்கிறது. சற்று ஏறுமாறானால் கூறாமல் சந்நியாசம் கொள்கிறது. காரணம் என்ன? அவன் பூர்வ ஜென்மத் தீவினைகள்; விவாகரத்து ஏற்படும் என்று யார் எதிர்பார்த்தார்கள்.

நாய் வண்டியில் நாய்களைப் பிடித்துச் செல்லும் ‘நாயகனைப்’ பார்த்து, ‘ஏன்’யா? ‘வெறி பிடித்த நாயை விட்டுவிட்டுக் கறிபிடித்துக் கொழுத்த நாயைக் கட்டி இழுத்துச் செல்கிறாய்?’ என்று கேட்டால் அவன் என்ன சொல்கிறான்?

“இந்த வெறிபிடித்த நாயைப் பிடித்துச் சென்றால் இதை மீட்க யாரும் வரமாட்டார்கள். வெறும் சக்கை; இதற்கு மதிப்புக் கிடையாது. நல்ல கொழுத்த நாய் செல்வர்களுடையது. அதனால் எங்களுக்கு நன்மை உண்டாகும். அவர்கள் எங்களை மதிப்பார்கள்; எமக்குக் காசு கொடுப்பார்கள்” என்கிறான்.

“ஏன்யா” நல்லவர்களை மட்டும் விரைவில் நீ வந்து அழைத்துச் செல்கிறாய்? தீயவர்களை விட்டுச் செல்கிறாய்” என்று எமனைக் கேட்டால் எமன் என்ன சொல்கிறான்? “தீயவர்கள் வெறும் சக்கை; அவர்கள் இந்த உலகத்துக்கே நன்மை இல்லை என்றால் அவர்களை இழுத்துச் சென்று நான் என்ன செய்வது?” என்று பதில் கூறுகிறான்; உயிர் பறிப்பவன். நல்லவர்கள் தாழ்வதும் அல்லவர்கள் உயர்வதும் நியாயம் என்று கூற முடியாது. என்றாலும் உலக நியதி அப்படி அமைந்துவிட்டது. அதைத்தான் ‘விதி’ என்று கூறுகிறோம்.

இந்தப் பரதேசிப் பயல்கள் இவர்கள் அணி அணியாக வீடுகள் நோக்கித் தம் கேடுகளைச் சொல்லிக் கையேந்தி நிற்கிறார்களே இப்படி இவர்கள் வறுமை உறுவதற்குக் காரணம் என்ன? இளமையில் தக்க கல்வி கல்லாமை; தொழில் செய்யத் தம்மைத் தகுதியாக்கிக் கொள்ளாமை; வருவாய் வந்தபோது வகையாகப் பிடித்து வைக்காமை; என்று பதில் கூறப்படுகிறது. ஏன் இத்தவறுகள் இவர்கள் செய்ய வேண்டும். விதி அவர்களுக்கு வழி காட்டவில்லை; அவர் மதி கெட்டுவிட்டது.

கல்வி கற்றவன்; ஒழுக்கம் மிக்கவன்; பண்பு உடையவன்; அறிவாளி; இவனும் மிகப் பெரிய தவறு செய்கிறான் என்றால் அதை நம்மால் நம்பவே முடிவதில்லை. ‘யானைக்கும் அடி சறுக்கும்’ என்பது பழமொழி. எப்பேர்பட்டவனும் தப்பேதும் செய்யாதிருக்க முடியாது. இதற்கு எல்லாம் காரணம் வினையின் ஆற்றல். “அவன் புத்தி தடுமாற வேண்டும் என்று இருக்கிறது” என்றுதான் கூறவேண்டும். சபலத்துக்கு இரையாகி விட்டான். யாரும் அதிலிருந்து தப்ப முடியாது. நடுநிலைமை கெட்டுவிட்டான்; அவன் நன்மதியால் பொருள் கை நீட்டி வாங்குவதில்லை என்று உறுதியோடு வாழ்ந்தவன்தான்; மாசுமரு அற்ற வாழ்க்கை; அன்று அவன் கெட்ட காலம். ‘யார் அறியப் போகிறார்கள்? கொடுத்தவன் சொல்லப் போவது இல்லை; வருவது வேண்டாம் என்று எப்படித் தள்ளுவது?” என்ற சிறு சபலம்; அடுத்த வினாடி, அவனுக்குக் கைவிலங்கு. தொண்ணூற்று ஒன்பது நாள் அவன் பத்தினி, உலகம் மன்னிக்காது எல்லாம் விதியின் செயல்; மற்றொருவன் யார் ஜோலிக்கும் போகான்; தான் உண்டு; தன் வீடு உண்டு என்று வாழ்ந்து வரும் மண்டு; நன்மையையும் தேடுவது இல்லை; தீமையையும் நாடுவது இல்லை. அவன் வீட்டில் அன்று திருடன் புகுந்து அவனை அடித்துப் போட்டு விட்டு உள்ளதைச் சுருட்டி எடுத்துக் கொண்டு போய்விட்டான். இது செய்தி, அவன் யாருக்கும் ஒரு தீங்கும் செய்தது இல்லை; அப்பாவிதான்; எந்தப் பாவியோ அவனை அடித்துப் போட்டான். காரணம் விதி; அதனால் ஏற்பட்டது இந்தக் கதி.

முருகா! உனக்கு வந்த செல்வம் சிறுகாது; பெருமை அருகாது; முறைகெட்டுத் தாரார். வருவது வந்து தீரும்; போவது போய்த்தான் தீரும். இன்னாருக்கு இன்னது என்று முன்னாளே அவன் எழுதிவிட்டான்; அவன் எழுதியதை யாரும் மாற்ற முடியாது. அரசியல் சட்டம் அன்று தேவைக்கு ஏற்ப மாற்றுவதற்கு; எனவே அந்த எழுத்து நன்கு அமைய வேண்டுமானால் உன் காரியங்களும் நன்மையில் அமைய வேண்டும். அப்பொழுதுதான் மூல ஆசிரியன் முதல் மதிப்பெண் தருவான்; சரியாகப் படிக்காவிட்டால், தேர்வு எழுதாவிட்டால் வட்டம்தான்; அதனால் வாட்டம்தான்.

12. எது உண்மை? நீயே முடிவு செய்க

(மெய்ம்மை)

அவன் மக்கள் தலைவன்; அப்படி அவன் சொல்லிக் கொள்கிறான். எப்படி அவன் இத்தலைமையைப் பெற்றான்? ‘நன்கொடை’ தருவதாகக் கூட்டத்தில் கூறுவான்; அதை உடனே மறந்துவிடுவான். கைதட்டிய வரும் தொடர்ந்து கேட்டு அலுத்துவிடுவர் வேறு வழி இன்றி.

நல்லவன் என்று சொன்னார்கள். ஊரில் அனாதை இல்லம் கட்ட நன்கொடை கேட்கச் சென்றோம். தொகை ஐயாயிரம் என்று ‘செக்’ எழுதித் தந்தான் தொல்லை பொறுக்க முடியாமல், அதற்குப் பணம் வங்கியில் இல்லவே இல்லை. அவன் கண்ணியத்தை வங்கி மதிக்க மறுத்துவிட்டது; அவன் நல்லவன் தான்.

கஷ்ட காலம் உடனே உதவ வந்தான்; “முதல் தேதி வந்து பாரு” என்றான்; ஆளே வீட்டில் இல்லை; விசாரித்ததில் ‘இன்று முதல் தேதி, அவர் வெளியே போய்விடுவார்” என்று பதில் வருகிறது. அடுத்த நாள் சென்றோம். அவன் ‘இன்று இரண்டு தேதி’ என்கிறான்.

மகளை மணக்க வரதட்சணை தரமாட்டேன் என்று சொல்லி இருக்கலாம். கட்டிக் கொடுத்துவிட்டார். கேட்டால், ‘வரதட்சணை கேட்பு சட்டத்துக்குப் புறம்பு’ என்று சாதுரியமாகப் பேசுகிறான். இவர்கள் செய்வது ஒன்று; சொல்வது ஒன்று. இந்த முரண்பாடுகள் மதிக்கத் தக்கவையா? நீயே முடிவு செய்க!

பிரகலாதன் கதை தெரியுமா? அவன் நாரணன் பக்தன்; இரணியன் அவனை எவ்வளவோ மாற்ற முனைந்தான். ஆசிரியர்கள் அவனைப் பலமுறை திருத்த முயன்றனர். மாற்றவே முடியவில்லை. நன்மையைத் தீயதாக மாற்ற முடியாது. கரும்பைக் கசக்கச் செய்ய இயலாது. அதே போல வேம்பை இனிக்கச் செய்யவும் முடியாது. இராவணனை மாற்ற முனைந்தவர் பலர்; தம்பியர் இருவர்; துணைவி ஒருத்தி மண்டோதரி; இவ்வளவு பேரும் தோற்றுவிட்டனர்.

இறுதிவரை சீதையை மறக்கவே இல்லை. மூடர்களை மாற்ற முடியாது; கல்வி கற்பதும் பயன் இல்லை. காந்தி மகான் கதையும் மாற்றாது. நாய் வாலை நிமிர்த்த முடியாது. இவை வாழ்க்கை உண்மைகள். உம்முடைய கருத்து என்ன?

இந்த வீட்டில் ஏன் திடீர் கூட்டம்? அவனுக்கு லாட்டரி சீட்டில் லட்சம் பத்து விழுந்ததாம்.

அதற்காக ஏன் இவர்கள் வந்து சேர்ந்தார்கள்.

அந்தக் காற்றில் குளிர்காய விரும்புகிறார்கள்.

நடிகை நட்சத்திரமாகிவிட்டாள்; அவள் ஒரு காலத்தில் அவள் தாய் அவளை வீட்டை விட்டுத் துரத்தினாள் இவள் எதற்கும் உதவாதவள் என்று. இன்று அவள் தாய் காரியதரிசி அவள் பிரியதரிசினி.

தேர்தலில், வெற்றி பெற்றுவிட்டான்; எம்.எல்.ஏ; அமைச்சர் பதவி; வோட்டுப் போடதவர்கள் எல்லாம் வாழ்த்துக் கூறுகிறார்கள். ‘அவர் நம்ம தலைவர்’ என்று பேசுகிறார்கள். மேடையில் வசைமாறி பொழிந்தவர்கள் ஏன் இப்படி இவர்கள் திசை மாறிவிட்டார்கள்?

பையன் எதுக்கும் உதவமாட்டான் என்று அப்பா அடித்துத் துரத்திவிட்டார். அவன் துபாய் சென்று ஏகப்பட்ட பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறான். அவன் ‘திறமைசாலி’ என்று அப்பா பாராட்டுகிறார்;

இந்த மாற்றங்கள் எப்படி ஏற்படுகின்றன? நீயே யோசித்து முடிவு செய்க; பொருள் உள்ளபோது உறவு காட்டுவர்; இல்லாதபோது எங்கும் குறைகளை அறைகுவர்.

பையனைப் பெண் பார்த்தாள்; பெண்ணைப் பையன் பார்த்தான். அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். இருவருடைய உள்ளப்போக்கை அறியப் பெரியவர்கள் வினவுகிறார்கள்.

“பையனைப் பெண்ணுக்குப் பிடித்துவிட்டது; பெண்ணைப் பையனுக்குப் பிடித்துவிட்டது” என்று மற்றவர்கள் முடிவு செய்துவிட்டனர்.

பெண் என்ன சொல்கிறாள்? “அப்பா விருப்பம்; அதுதான் என் முடிவு” என்கிறாள். பையனைக் கேட்டால் அவனும் அப்படியே சொல்கிறான். தன் தந்தை விருப்பம் தான் தன் முடிவு என்கிறான்.

அப்பாக்களைக் கேட்டால் இருவரும் சொத்து மதிப்புகளை எடை போட்டு விட்டுத் “தீர்மானமாக எங்களுக்குப் பிடித்துவிட்டது” என்று ஏகோபித்துச் கூறுகிறார்கள். பையனும் பெண்ணும் மறுப்புக் கூறவே இல்லை. காரணம் என்ன? சரியான பதில் தருவோருக்குப் பரிசு பத்தாயிரம்! விளம்பரதாரர் தருவர்; அதை இளம் தம்பதிகள் பெறுவர்.

நாயகன் படம் பார்த்தாயா? நீ எங்கே பார்க்கப் போகிறாய்! உனக்குப் படம் பார்க்கவே பிடிக்காதே. அதில் ஒரு முக்கியமான காட்சி அமைச்சர் மகன் காவல்துறை அதிகாரியின் மகளை வம்புக்கு இழுத்து அவளைக் கெடுக்க முயல்கிறான்; நீதித்துறை செயல் இழந்துவிட்டது. அதன்மீது நம்பிக்கை இல்லை காவல்துறை அதிகாரிக்கு. அவர் துறையிலேயே அவருக்கு நம்பிக்கை இல்லை; முரடர் தலைவனிடம் வந்து முறையிடுகிறார்.

“நீர் காவல் துறை அதிகாரி. நீரே தண்டித்து இருக்கலாமே” என்று கேட்கிறான் முரடர் தலைவன்.

“அமைச்சர் மகனை எதிர்த்து நான் ஒன்றும் செய்ய முடியாது” என்று தன் இயலாமையைக் கூறுகிறார். ஏன் அந்தக் காவல் அதிகாரி கோழையாகிவிட்டார்? நீதி ஏன் தோற்றுவிட்டது? சரியான பதில் எழுதி அனுப்புங்கள். விடை புதிதாக இருக்க வேண்டும். நீரே சிந்தித்து முடிவு செய்க. “சாதிப் பசு; அதற்கு மதிப்பு அதிகம். நீதி தோற்றுவிடுகிறது” என்று பதில் வருகிறது.

“பழகிவிட்ட பிறகு அவர்கள் பழமையைப் பாராட்டுக” என்கிறார் வள்ளுவர்.

“பிறர் தீமை செய்தாலும் மன்னித்துவிடு; வெட்கப்படும்படி நன்மை செய்க” என்றும் கூறுகிறார்.

“மதியதார் வாசல் மிதிக்க வேண்டாம்; துஷ்டனைக் கண்டால் தூர விலகி விடு”, “தீயவரைக் காண்பதுவும் தீதே, தீயார் சொல் கேட்பதுவும் தீதே” - இப்படிப் பல பழமொழிகள் உள்ளன.

ஒரே குழப்பமாக இருக்கிறது; “தீமை செய்தாலும் திரும்ப நன்மையே செய்க” இது வள்ளுவர் வாக்கு; ஏசுநாதர் அறிவுரையும் ஆகும். “தீயவனை விட்டு விலகி விடு. அவனை நீ மதிக்காதே; அவனுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது பெருந்தவறு” இது நாலடியார் கூற்று.

இந்த இரண்டில் எது சரி! முடிவு செய்து மூன்று நாளில் விடை தருவோருக்கு முந்நூறு பரிசு வழங்கப்படும். இஃது இன்றைய டி.வி. விளம்பரம்.

“கரை இல்லாத வேட்டியே இல்லை; குறை இல்லாத மனிதனே கிடையாது. மான் குட்டிக்கு எத்தனை புள்ளிகள்! அந்தப் புள்ளிகளுக்காக அதன் தோலைப் புறக்கணிப்பது இல்லை. தபால் சேவகன் காசு கேட்கிறான் என்பதால் அவன் தரும் கடிதத்தைப் பிரித்துப் படிக்காமல் இல்லை; மாமூல் கேட்கிறான் என்றால் அவனை வேலை விட்டு நீக்குக என்று யாரும் கூறுவது இல்லை; கொள்ளை அடிக்கிறார்கள் அரசியல் கட்சிக்காரர்கள் என்றால் அவர்களை அணுகாமல் இருக்க முடிவதில்லை; குறையில்லாத மனிதர்களே இல்லை; குறையுடைய மனிதர்களிடையேதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நன்கொடை கேட்கிறார்கள் என்பதால் பையனைப் படிக்க வைப்பதை நிறுத்த முடியுமா? குறைகளைத் திருத்துவது வேறு; அவர்களை அடியோடு புறக்கணிப்பது வேறு; நாம் மனிதர்கள்; எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்கமாட்டார்கள். சற்று ஏறக்குறைய பார்த்தும் பாராமல் பழகுவது நல்லது”. நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? இதற்குப் பரிசு கிடையாது.

“வான் வரை என் ஆணை செல்லும்” என்று ஆணவத்தோடு பேசியவர் எல்லாம் பதவி விட்டுக் கீழே தள்ளப்பட்டு விடுகின்றனர். “மக்கள் என்றும் மடையராக இருப்பர்; யானே ஆட்சியைக் காலமெல்லாம் கைப்பற்றுவேன்” என்று ‘கட் அவுட்’ எழுப்பியவர் எல்லாம் ‘கட் அவுட்’ ஆகிவிடுகின்றனர். மக்கள் சாய்த்து வீழ்த்தி விடுகின்றனர். ‘ஜனநாயகம்’ என்பது ஆற்றல் மிக்கது; அக்கிரமக்காரர்களை நீடிக்கவிடாது.

பதவியிலிருந்து கீழே தள்ள முடியாது என்று பகற்கனவு காணாதே. தவறான ஒரு அடிபோதும் சறுக்கி விழ; பதவியிலும், ஆட்சியிலும், அதிகாரத்திலும் உள்ளவர் மக்கள் நலம் காப்பது அவர்கள் பொறுப்பு; அதனைச் செம்மையாக நடத்துவது நீதியின் விருப்பு. அடக்கம் உன்னை உயர்த்தும். அடங்காமை ஆரிருளில் உய்த்துவிடும். இப்படி அறிஞர்கள் அவ்வப்பொழுது அறிவிக்கின்றனர். எது உண்மை? நீ ஆராய்ந்து கூறு; அறம் வெல்லுமா? வெல்லுகிறதா ஆராய்க. இஃது ஐய வினா.

அறநூல் கூறுகிறவர் அனைவரும் இந்த மூன்று செய்திகளை உரைக்கின்றனர். “இளமை நிலைக்காது; யாக்கை நிலைக்காது. செல்வம் நிலைக்காது. அதனால் நிலைத்த தருமங்களைச் செய்க” என்கிறார்கள்.

வாழ்க்கையில் நீ பொருள் ஈட்டுகிறாய். கடினமான உழைப்பு உனது. “ஈக பிறர்க்கு உதவுக” என்கிறார்கள். “அதுவே புகழ் தரும்” என்கிறார்கள். நீ என்ன நினைக்கிறாய்? பொருளை இறுகப் பிடித்துக் கொள்வது நல்லதா? நல்ல செயல்களுக்குப் பயன்படுத்துவது நல்லதா?

“இன்பம் இந்த உலகம் அள்ளித் தருகிறது; துள்ளும் இளமை உனது; இன்பத்தில் தோய்ந்து மகிழ்ந்து கிட அதுதான் தக்கது” இப்படிக் கூறுகின்றவர். பலர்; “நீ கொள்கைகளில் உறுதியாக இரு. இன்பம், பொருள் இவற்றை நாடுவதில் நாட்டம் காட்டாதே. அறமே வாழ்வின் நியதி; குறிக்கோள். அதற்காக வாழ்ந்தால் வீடுபேறு கிடைக்கும்” என்கின்றனர் சிலர். நீ எதை விரும்புகிறாய்? உண்மை எது? எழுதிச் சில வரிகளில் விடை தருக; மதிப்பெண்தான் தர முடியும். ஆசிரியர்கள் கையில் அதுதான் இருக்கிறது வாரி வழங்க.

13. தீயவை செய்ய அஞ்சுக

(தீவினை அச்சம்)

வாயில்லாத ஜீவன்கள்; எதிர்த்துப் பேச இயலாத உயிர்கள்; அவற்றை வதைத்து வயிற்றில் அடக்குகிறீர்கள்; உங்கள் வயிறு என்ன சுடுகடா? இல்லை புதைகாடு.

செத்துவிட்டவர்களை ஊருக்குள் புதைத்து அவர்களை அடக்கம் செய்ய அஞ்சுகிறீர்கள். ஏன்? அது முடை நாற்றம் வீசும் என்பதால், ஆடு, கோழி இவற்றை அடித்துக்கொன்று அவற்றைப் புதைத்து வைக்க உங்கள் வயிற்றைத் தேடுகிறீர்களே! உங்கள் வயிறு அழுகல் அடுக்கும் குப்பை மேடா?

தூய உடம்பை வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மாய்ந்த சடலங்களைத் திணிப்பதைத் தவிருங்கள். தீவினைகள் என்பவை கொள்ளை, கொலை, கள்ளம் இவை மட்டும் அல்ல; உயிர்க் கொலையும் தீவினை தான். ‘புலால் மறுத்தல்’ நல்வினைகளுள் நயத்தக்கதாகும். இஃது அருளறத்தின் அடிப்படையாகும்.

கொலைத் தொழிலை விலைத் தொழிலாக மாற்றி உயிர்களை அலைத்துத் துன்புறத்துவது கொடிது; இவற்றோடு வயலில் வலைவிரித்துப் பல்வகைப் பறவைகளைப் பிடித்து, அவற்றின் தோலை உரித்து, வதைத்து, உயிர்க் கொலை செய்து, ‘சுவைக்கிறது’ என்று தின்று மகிழ்கின்றனர். வானத்து வண்ணப் பறவைகள் அவற்றின் சிறகுகளை உடைத்து முடமாக்குகின்றனர். பறவைகளை வாட்டும் வேட்டுவனைச் சிறைப்பிடித்து விலங்கிட்டு இழுத்துச் சென்றால் அவன் இன்னல் எத்தகையதாக இருக்கும்? எண்ணிப் பார்க்கிறானா? வாயற்றவை; எடுத்து உரைக்கத் தெரியாது. நீ மானிடன்; கத்திக் கதறிக் கொடுமை என்று புலம்புவாய்; சட்டம் உன்னை விடுவிக்கும். நீ மட்டும் உன் கொலைத் திட்டத்தை விட்டு விலகமாட்டாய். நியாயந்தானா? உன் செயலை நிறுவி அது தக்கது என்று தோற்றுவிப்பாய்.

கோழிப்பண்ணைகள்; அவை விற்பனைத் திண்ணைகள்; அவற்றுள் ஒன்றைப் பிடித்து அடித்துக் கொன்று தோல் வேறு உடல் வேறு என்று பிரித்துப் கொன்று தோல் வேறு உடல் வேறு என்று பிரித்துப் பார்க்கின்றனர். அதன் அங்கம் தொழுநோயாளியைப் போல் காட்சி அளித்து அச்சுறுத்தவில்லையா? அடுத்த பிறவியில் சங்குபோல் வெளுத்துக் கைவிரல்கள் உளுத்து அவர்கள் தொழுநோயாளியாக மாட்டார்கள் என்று எப்படிக் கூற முடியும்? அறிவாளிகள் இந்தக் கொடுமையைச் சிந்தித்துப் பார்ப்பார்களா? உயிர்க் கொலை தீவினை; அதனைச் செய்வதற்கு அஞ்சுக; பாவ வேட்டையைச் சுமக்க எண்ணுபவர் இத்தீவினை ஆற்றுவர். கொல்லான் புலால் மறுத்தவனை இந்த உயிர்கள் எல்லாம் தெய்வமாகத் தொழும். அவற்றை வாழவிடுக! அவற்றிற்கும் இவ்வுலகில் வாழ உரிமை உண்டு.

அடுத்தது தீயவர் நட்புக்கு அச்சம் காட்டுதல் தேவைப்படுகிறது; பால் போல் வெளுத்து இருந்தான் முன்பு, இப்பொழுது அவன் புளித்துத் தயிராகிவிட்டான். காரணம் புரைமோர் பட்டதும் பால்திரிந்து தயிராகி விடுகிறது. நெய் குளிர்ச்சி உடையதுதான். அது சூடான நெருப்பில் பட்டால் அதுவும் சூடு ஆகிறது; தொட முடிவது இல்லை. நல்லவர் கெட்டவர்களோடு சேரும் போது அவர் புளித்த தயிராகவும், சுட்ட நெய்யாகவும் மாறி விடுகின்றனர். இதை வைத்து அவர்கள் இன்னார் என்று குறிப்பிடுகின்றனர். நிலத்தியல்பால் நீர் திரிகிறது. தீயவர்களோடு நல்லவர்கள் சேர்ந்தால் நல்லவர்களும் தீயவர் ஆகிவிடுகின்றனர்.

“சேரிடமறிந்து சேர்” என்பது பழமொழி; பெருமை உடையவர்களுடன் சேர்வது பெருமை தரும்; அஃது அவனை உயர்த்தும்; வளர்ச்சிக்கும் வழி வகுக்கும்; ஒளி பெற்றுத் திகழ்வான்; அந்த நட்பு வளர்பிறை போன்றது; தீயவரோடு நட்பு தேய்பிறை போன்றது;‘வர வர மாமியார் கழுதைபோல் ஆனாள்’ இது பழமொழி. நட்பும் அத்தகையது; அது திருப்பி எட்டி உதைத்தாலும் வியப்பதற்கு இல்லை.

யாரையும் முழுவதும் நம்புவதற்கு இல்லை; விழிப்பாக இருக்க வேண்டி இருக்கிறது? நல்லவர்களைத் தேடுகிறோம்; சான்றோர் என்று மதிக்கிறோம்; சேய்மையில் இருந்து பார்க்கும்போது அவர்கள் தூய்மை நிறைந்தவர் என்று தோன்றுகிறது. நெருங்கிப் பழகினால் அவர்கள் சுருங்கிய உள்ளம் கண்களில் படுகின்றது. சந்தனம் உள்ளே இருக்கும் என்று கருதி அந்தப் பெட்டி யைத் திறந்து பார்த்தால் பாம்பு அங்கே படுத்துக் கிடக்கிறது. அதிர்ச்சி ஏற்படுகிறது; ஏமாற்றம் காணப்படுகிறது. யாரையும் புறத்தோற்றம் கண்டு மதிப்பதற்கு இல்லை.

யாரும் ஒருவர் உள்ளத்தை மற்றவர்கள் ஆராயும் திறன் படைத்தவர் அல்லர் காண்பது ஒன்று; அவர்கள் உள்ளம் வேறு! பேசுவது ஒன்று நடந்து கொள்வது வேறு ஆக இருக்கிறது. மனம் வேறு; செயல் வேறு என்று பலர் உலகில் நடந்து கொள்கின்றனர். எனவே தக்க நட்பினர் யார் என்று தேடிக் காண்பது எளிது அன்று.

உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் பச்சோந்திகள் அவர்களை நம்ப வேண்டாம். சமயத்தில் கழுத்து அறுத்து விடுவார்கள்; எனவே பொன்னை உரை கல்லில் வைத்துப் பார்ப்பதுபோலக் கொஞ்சம் தேய்த்துப் பார்த்தே நட்பினைத் தேர்ந்துகொள்க. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்; ஒன்று இரண்டு சொற்களில் அவர்கள் நடிப்பு வெளிப்பட்டு விடும். தீயவர் நட்பைத் தீவினை என்று அஞ்சுக; அவர்களை விட்டு விலகுக.

கத்தி கையில் இருந்தால் அது தற்காப்புக்கு உதவும் என்று கருதுகிறாய்; தீயவர் தொடர்பு சமயத்துக்கு நன்மை என்று கருதலாம்; அடியாட்களை வைத்துக் கொண்டு கடினமான செயல்களைச் சாதிக்கலாம் என்று கணக்குப் போடலாம்; மடியில் கனம் இருந்தால் வழியில் தனம் பறி போகும். உன் கைவசம் உள்ள கத்தியே பகைவர் கைக்குக் கூர்வாள் ஆகிவிடும். அதை வைத்து உன்னைக் குத்த வாய்ப்பை நீயே ஏற்படுத்தித் தருகிறாய். அற்பர்கள் உறவு கைக் கத்தி போன்றது. அவர்களை விட்டு விலகு, உனக்கு அபாயம் நேராது.

என்னப்பா இளைத்திருக்கிறாய்? என்றால் அவன் என்ன சொல்கிறான். சுமக்க முடியாத குடும்பச் சுமை; மனைவி மக்கள் மேல் பாசம்; அவள் கேட்ட வரம் தந்து ஆக வேண்டும். மகன் கண்ணில் பட்ட பொருள் வாங்கித் தர வேண்டும். அவர்கள் வசதிக்கு இவன் வணக்கம் செலுத்துகிறான். விட்டு விடுதலையாகி உயிர்க்கு ஆக்கம் தேடுக; பற்றுகள் நீங்குக, அளவுக்கு மீறிய பாசம் உன் உயிர்க்கு நாசம்; பாசம் என்றாலே கயிறு: அஃது எப்படியும் செல்லாமல் இழுத்துப் பிடிக்கும். உன் கழுத்துக்குச் சுருக்கு அதனால் அதை முற்றிலும் விலக்கு, பாசமுள்ள மாந்தர்கள் மிகுதி, அவையும் உனக்குக் கெடுதி, இதுவும் தீவினை என்று அஞ்சுக.

பொருட்பால்

14. கல்வி கரை இல

(கல்வி)

கல்வி என்பது யாது? நடுவு நிலைமை கெடாமல் ஒழுகும் நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது; அதுதான் கல்வி; மகளிர் தலைவாரிப் பூச்சூடி புனைந்து கொள்வதும்; விலைமிக்க பல நிறத்துக் கரை போட்ட சேலை உடுத்திக் கொள்வதும், ஆடவர் நெஞ்சம் கவர முகத்துக்கு மஞ்சள் பூசிக் கொள்வதும் அழகு என்று பேசலாம்; அவை புறத்துக்கு அழகு செய்வன ஆடை அணிகள் உள்ள அழகைக் கூட்டுமேயன்றிப் புது அழகை ஊட்டாது; கல்வி அக அழகைத் தோற்றுவிக்கும். அறிவு ஒளிவிட, நீதி மிக, நடுவு நிலை பெருக, அவர்கள் நல்லவர்கள் என்று நாலு பேர் நவிலக் கல்வி அழகே அழகு.

இந்த உலக வாழ்வுக்குக் கல்வி கண் போன்றது; எதையும் சாதிக்கும் அரிய கருவியாகும்; இருட்டைப் போக்கும்; ஒளியாக்கும்; எல்லா நன்மைகளையும் தரும்; ஈயக் குறையாது; அதைப் பிறர்க்குக் கற்பிக்க அது மேலும் பெருகுமே தவிரச் சிறுகாது; பிறருக்குச் சொல்லும்போது அவர்கள் எழுப்பும் ஐயம்; அதை மையமாகக் கொண்டு எழும் வினாக்கள்; அவற்றிற்குக் காணும் விடைகள்; அவன் மறுத்துச் சொல்லும் தடைகள் இவை உள்ளொளி பெருக்கி உயர்வு அளிக்கும். உன்னையே நீ அறியச் செய்யும். இதைத்தான் ஞான நன்னெறி என்பர். கல்வி உன்னை மெய்ஞ்ஞானியாக ஆக்கும்; கற்ற கல்விக்குக் கேடு இல்லை. என்றும் நீ இதை மறக்க முடியாது. ‘பாடை ஏறினாலும் ஏடு அதைக் கைவிடக் கூடாது’ என்பர். ‘பாடை’ என்பது மொழி: மொழி நன்கு கற்றுக் கொண்டாலும் கல்வி கற்பதினின்று விட்டு விலகக் கூடாது என்பதே இதன் கருத்தாகும். கல்வியில் ஆர்வலர் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அவர்கள் ஏட்டைக் கைவிடுவது இல்லை; கல்விதான் துயர் தீர்க்கும் மருந்து என்று கொள்வர். கல்வியால் விஞ்ஞானம் பெருகுகிறது; அதனால் புது இயந்திரக் கருவிகள் பெருகுகின்றன. அரிய படைப்புகள் உலகத்தில் மிகுந்த வாழ்வுக்கு வளம் தேடித் தருகின்றன.

களர் நிலத்தில் உப்பு விளைகிறது; அது பிறக்கும் இடம் மட்டமானதுதான்; காலடி எடுத்து வைக்கவும் பின்வாங்குவர்; உப்பளம்; அங்கே மீன் உணங்கல் நாற்றம் வீசும்; கடற்கரை உடற்கு ஒவ்வாது என்றும் கூறுவர். என்றாலும் அந்த உப்பு இல்லை என்றால் எந்தப் பண்டம் எடுபடும்? “உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே” என்பர்; நல்ல விலை கொடுத்து இந்த உப்பை வாங்குவர், களர் நிலம் என்று யாராவது களைவார்களா?

பிறக்கும் இடம் எதுவாயினும் அது சிறக்கும் வகையே மதிக்கப்படும்; சாதிகள் இந்த நாட்டில் நீதிகளைக் கெடுத்துவிட்டன. தாழ்ந்தவன் என்பவன் உழைப்பாளி, உயர்ந்தவன் என்பவன் நூலாளி; படிப்பாளி, சாதிபேதம் என்பதே இந்தப் படிப்பால்தான் உண்டாகிவிட்டது.

ஒரு சிலர் மட்டும் படித்து இனம் இனமாக முன்னேறிவிட்டனர். அவர்களைக் கோயில் குருக்கள் என்றும், கணக்குப் பிள்ளைகள் என்றும், கல்வி ஆசான்கள் என்றும், கவிஞர்கள் என்றும் இந்தப் புவிஞர்கள் வேறுபடுத்தினர். இன்று உள்ள பிரச்சனை கீழ் மட்டத்து மக்கள் கல்வி கற்கவேண்டும்; அவர்கள் உயர்வதற்கு அதுதான் வழி. கல்விச் செல்வம் எல்லா இனத்தவரும் அடைய முடியும்; அதனால் அவர்கள் உயர்வு பெறுவர். சாதிபேதமும் சமூக அநீதிகளும் மறையக் கல்வி வாய்ப்பு அனைவர்க்கும் தரப்பட வேண்டும். கல்வி கற்றவன் எந்தச் சாதியாயினும் அவனைச் சமூகம் வரவேற்கிறது; பாராட்டுகிறது. உயர்த்துகிறது.

சொத்து வைக்க எண்ணுகிறாய்; லட்சங்கள் சேர்த்து வைக்கிறாய். அடுத்த தலைமுறை; அது தானும் அழிகிறது; உடையவனையும் அழிக்கிறது; பொருள் அவனைக் கெடுக்கிறது; செல்வச் செருக்கர்ல் அவன் கல்விப் பெருக்கைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. அறிவு குறைந்தால் ஏனைய நிறைவுகள் அமைவது இல்லை. இவனைவிடக் கற்றவன் திறமையாகச் செயல்படுகிறான். தொழில்களில் அவன் வெற்றி காண்கிறான்; இவன் தோல்வி பற்றுகிறான். எனவே சொத்து என்று மக்களுக்கு வைக்க நினைத்தால் கல்விச் செல்வமே உயர்ந்தது; நிலைத்தது; அழியாதது; ஆக்கம் தருவது; ஏற்றம் உண்டாக்குவது.

பொருட் செல்வம் சேர்த்து வைத்தால் நேர்த்தியாகப் பிறர் கொள்ளை அடித்துக் குறைத்துவிடுவர். ஒரே நாள் மலை மடு ஆகிவிடும்; பொன்னன் என்று பேசப்பட்டவன் நன்னன் ஆகிவிடுவான். சிறு பொறி போதும்; அது மிகுந்தால் மலை போன்ற குவிவுகளையும் அழித்து விடும். நெருப்புக்கு எதுவும் முன் நிற்காது. அழிவுக்கு அரசன் தீ தான்; கல்வியை அழல் ஒன்றும் தொடமுடியாது; கல்வி நிரந்தரமானது; ஊற்றுப் பெருக்கு அதனைத் தடுத்து நிறுத்த முடியாது.

இந்த அரிய கல்வி அதற்கு அளவு உண்டா? கரை இல்லை. கற்பவருக்கு நாள்கள் போதா, மெல்ல நினைத்துப் பார்த்தால் அதற்குள் நோய்கள் பல; அதனால் கண்டதைக் கற்றுப் பண்டிதன் ஆகலாம் என்ற நினைப்பை அகற்று. தேடிப் படி; நல்ல நூல்கள் உயர்வுக்கு மாடிப்படி:அன்னப்பறவை நீரும் பாலும் கலந்து வைத்தால் நீரை ஒதுக்கிப் பாலை மட்டும்தான் குடிக்கும். அதுபோல நல்ல நூல்களைத் தேர்ந்து எடு; குப்பைக் கூளம் அதனை நாடாதே; முத்துக் குவியலைத் தேடு, கத்தும் குயில் ஓசை இனிது; சத்தம் செய்யும் திரை இசைப் பாட்டு எல்லாம் கேட்டு உன் ரசனையைப் பாழ்படுத்திக் கொள்ளாதே, சுவை, ஒளி, ஓசை, ஊறு, நாற்றம் இதன் வகை தெரிந்து அறிவு பெறுபவன் உலகில் உயர்வான். கலைமகள் அவள் என்றும் கற்றுக் கொண்டே இருக்கிறாள் கேட்டர்ல் என்ன கூறுகிறாள்? “கற்றது கை மண்ணளவு. கல்லாதது உலகு அளவு” என்று ஒதுகிறாள். கல்விக்குக் கரை இல்லை; அதில் அக்கரை காட்டு; வாழ்வில் கரை ஏறலாம்; கறை நீங்கி வாழலாம்.

தோணி ஓட்டும் படகுக்காரன் அவன் குகன்தான்; அவனிடம் நட்புப் பாராட்டினான் இராமன், ஏன்? அவன் அன்பினன், கறையற்ற காதலன். சாதி இருவர் இடை நின்று பேதிக்கவில்லை. படகோட்டி தொழிலால் கடத்தல்காரன்; அவன் ஒடத்தைச் செலுத்திப் பிறரைக் கரை ஏற்றுகிறான். ஞான குருக்களும் அத்தகையவரே. யார் ஆசிரியன் என்று பேதம் பாராட்டத் தேவை இல்லை; கரை ஏற்றும் ஆற்றல், தொண்டு, பணி, திறமை இவை இருந்தால் அவனை ஆசிரியனாகக் கொள்வர். கல்வி ஆசான் சாதி பற்றி மதிக்கப்படுவது இல்லை; கற்ற கல்விபற்றிப் போற்றப்படுகிறான்.

தேவர் உலகத்தில் அவர்கள் என்ன செய்கிறார்கள்? கேளிக்கைக் கூத்தில் அவர்கள் களிப்புக் காண்கின்றனர். அரம்பையும் ஊர்வசியும் ஆடிக்கொண்டே இருக்கின்றனர்; அவர்கள் பேரழகினர்; கலைநுட்பம் வாய்ந்தவர்கள்; அங்கே அழகுச் சுவை இருக்கலாம்; அறிவு ஒளி அங்கு எங்கே இருக்கிறது? இதைக் காட்டித்தானே தேவர் உலகம் சிறந்தது என்பர். இங்கே பட்டி மன்றங்கள், இலக்கியச் சொற்பொழிவுகள், ஆய்வுக் கழகங்கள், அறிவு ஆராய்ச்சிகள் இவை சொல் விருந்துகள்; கற்ற புலவர்கள் உரையாடல் கவின் உடையது; சுவைபடப் பேசுவது இனிமை தருகிறது. இரட்டுற மொழிந்து சொல் நயம் விளைவிப்பர்; கவிநயம் காட்டிக் களிப்புறச் செய்வர். கவிஞர்கள் பாடி வைத்த பழம் புதையல்களை நாடி எடுத்துப் பொருள் கண்டு, தகைகண்டு, சொல்நயம், பொருள் பயன், அணி நலம் இவற்றைப் புலவர்கள் காட்டுவர். இவர்கள் கூடிப் பேசிப் பிரிந்த பிறகும் அவர்கள் பேச்சுகள் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன. மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்து மகிழ வைக்கின்றனர். கவிதை கற்கண்டு; அதன் சுவை கண்டு மலரை நாடும் வண்டு எனச் சுழல வைக்கின்றனர். அவர்கள் எந்தக் களங்கமும் இன்றிக் கலந்து உரையாடி அக மலர்ந்து சிரிக்கும் சிரிப்புக்கு நிகராக எந்த இன்பத்தையும் இணை கூறமுடியாது. அதற்கு ‘செஞ்சொற் கவி இன்பம்’ என்றும், ‘செவி நுகர் கனிகள்’ என்றும் பெயர் கொடுத்து மகிழலாம்.

சோற்றைக் கொட்டினால் வாரி வாரித் தின்கிறான் பசித்துக் களைத்து அலுத்தவன்; ‘பசி ருசி அறியாது’ என்பர். நட்பு நுட்பமானது; பழகி மகிழக் கூடியது; நிலைத்த பயன் பெறுவது. அது சென்று தேய்ந்து இறுவது அன்று. நாளொரு மேனியும் பொழுது ஒரு வண்ணமுமாக மலர்வது. பட்டினத்தார் கரும்பைச் சுவைத்தாராம்; அடிப்பகுதியிலிருந்து தொடங்கிக் கடித்துச் சுவைத்து வந்தார். நுனிப்பகுதி வந்ததும் கசந்துவிட்டதாம். அந்த இடத்திலேயே அவர் சமாதி ஆகி விட்டார் என்று கதை பேசுகிறது. கரும்பு தின்பதில் ஒரு வரன்முறை உண்டு. அடிப்பகுதி சுவைக்கும்; நுனிப் பகுதி சுவையற்று வெறுமை பெற்றிருக்கும் கற்றவர் நட்பு, தொடக்கத்தில் வெறுமையாகத்தான் காணப்படும்; போகப் போகப் பெருமைதரத் தக்கதாக அமையும். கீழோருடன் தொடர்பு தொடக்கத்தில் “ஆகா என்னே செறிவு!” என்று இருக்கும்; பிறகு வரவரச் சரிவுதான் மிகுக்கும்.

பாதிரிப் பூவை மண் குடத்தில் போட்டு அதில் குளிர் நீர் ஊற்றினால் அது மணக்கிறது; நீர் குடிக்க இனிக்கிறது. கல்லாதவர் கற்றவரைச் சார்ந்து ஒழுகினால் அவர்கள் அறிவு மணம் பெற்று வாழ்வில் ஒளி பெற்றுத் திகழ்வர். கற்க முடியவில்லை என்று அதற்காக மனச்சோர்வு கொள்ளத் தேவை இல்லை. எல்லாரும் பிற எல்லாச் செல்வமும் பெற்றுத் திகழ முடியும். ஒரு சிலரே கல்வி வல்லவராகத் திகழ்வர். அதற்கு நுண்மாண் நுழைபுலம் என்பர். அவர்கள் கல்வி கற்றதோடு நில்லாமல் நுட்பமான அறிவு படைத்தவராகத் திகழ்வர். மற்றவர்களையும் பேச வைத்து, அல்லது எழுத வைத்து நூல்களைப் படைக்க வைத்துக் கற்றவர்கள் ஊக்குவிக்க வேண்டும். அறிவு மிக்க எழுத்தை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். “நாரும் மலரைச் சார்ந்து மணம் பெறும்” என்பர். மலரைப் பிணித்துக் கட்டி வைக்கும் நார் தானும் மணம் பெறுகிறது. மலர்களைச் சிதறாமல் சேர்த்துக் கட்டுகிறது. மாலை கவின் பெறுகிறு. கல்லாதவரைச் சார்ந்து ஆள்க; அவர்களும் கல்வி அறிவு பெற்றுத் திகழ்வர்.

‘நூல் பல கல்’ என்றால் அவன் திரைப் பாடல்களை மனப்பாடம் செய்கிறான்; காதல் போதை தரும் கவிதை களை அறிவு நூல் என்று வேதம்போல் பயில்கிறான். மன அழுக்குப் போக வள்ளுவம் கற்றால் பயன் உண்டு. ‘ஓடிப் போனவள்’ என்பவளின் ஓட்டத்தில் நாட்டம் வைத்தால் பயனில்லை. அறிவு வாணர்கள் என்று சொல்லிக் கொண்டு அற்ப விஷயங்களை எழுதுகிறார்கள்; அவ் எழுத்துக்களைப் படைப்பு நூல் என்று பறை சாற்றுகின்றனர். இவை எல்லாம் எழுத்து ஆகா. தினவுக்குச் சொரிந்து கொடுப்பதாகும். சிந்தனையைத் தூண்டும் சீரிய எழுத்துக்களைப் படித்தால் பயன் உண்டாகும். அவை காலத்தை வென்று ஞாலத்துக்கு ஒளி தந்து கொண்டே இருக்கும். காக்கை கத்தல் கர கரப்பு ஆகுமே தவிர அது ‘கர கரப்பு ராகம்’ ஆகாது. திரை இசைப் பாடல்கள் ‘கிலுகிலுப்பை’ என்று தான் கூறமுடியும்; நூல் சில கற்றாலும் நுண்ணறிவு தரக்கூடிய பண்ணமைப்பு அவற்றினுள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

15. குடிப்பெருமை போற்றுக

(குடிப் பிறப்பு)

பசி தன்னைப் புசிக்கிறது என்றாலும் சிங்கம் கொடிப் புல்லைக் கடித்துக் கூடப் பார்க்காது உடுக்க உடையின்றி, கிடக்க இடமின்றி, உண்ணச் சோறும் இன்றி வறுமை உற்றபோதும் நல்ல குடியில் பிறந்தவர் தாழ்ந்து போகமாட்டார்கள்; பிறர் கையேந்தி நிற்கமாட்டார்கள், ஈக என்று கேட்டு உண்ணமாட்டார்கள்; பெருமை குன்றும் செயல்களைச் செய்யமாட்டார்கள்; தவறான வழிகளில் சென்று பொருள் ஈட்டமாட்டார்கள்; அவை தம் குடிக்கு இழுக்கு என்று வழுக்கியும் தவறு செய்ய மாட்டார்கள். தான் பிறந்த குடும்பத்தின் பெயர் கெடும்படி நடந்து கொள்ளமாட்டார்கள்; நாட்டை அன்னியரிடம் காட்டிக் கொடுக்கமாட்டார்கள்; குடிக்கு ஊறு நிகழத் தக்க அழிசெயல்களில் ஆழ மாட்டார்கள்.

கட்டிய வீடு காலப் பழமையினால் ஒட்டி உறைவதற்குத் தகுதி அற்றதாகிவிட்டாலும் அதனால் அதனை விட்டு விலகி ஓடி வெளியே சென்று ஒதுங்கமாட்டார்கள்; அந்த வீட்டிலேயே ஒரு மூலை கிடைக்காமல் போகாது; ஒதுங்கி இருந்து வாழ்க்கை நடத்த முடியும்; என்னதான் இடிந்து பழுதுபட்டாலும் அது முற்றிலும் ஒதுக்கக்கூடியது என்று கூற முடியாது. நற்குடிப் பிறந்தவர் வறுமையால் நொடிந்துவிட்டாலும் அவர்கள் வெறுமையில் மடிந்து போகமாட்டார்கள். தம் சால்பு குன்ற நடந்து கொள்ளமாட்டார்கள். பசி என்று அவர்களை நாடிச் சென்றால் புசி என்று ஏதாவது கொடுத்துதான் உதவுவார்கள்.

அடுக்கு மூன்று என்று வீடு மிடுக்காக இருக்கலாம். அங்குச் சென்றால் தம் நடுக்கம் தீரும் என்று அங்குச் சென்றால் அது அவர்கள் குற்றமே. வீடு அழகாக இருக்கலாம்; உள்ளம் அழுகலாக இருந்தால் ‘சாக்கடை’ நாற்றம்தான் வீசும். சான்றாண்மை, மென்மைத் தன்மை யாகிய இரக்கப்பண்பு, நல்லொழுக்கம் இம்மூன்றும் நற்குடிப் பிறந்தவர்க்கே அமையுமே அன்றிப் பொருள் மட்டும் படைத்த செல்வர்க்கு அமையும் என்று கூறமுடியாது.

நற்குடிப் பிறந்தவர் அவர்கள் நடத்தையே தனித்தன்மை வாய்ந்தது ஆகும்; புதியவர்கள் வந்தால் உடனே எழுந்து நின்று அவர்களை அமரச் செய்ய அஞ்சலி செய்வர்; எதிர் சென்று வரவேற்பர்; வந்தபின் அவர்களை அமர வைத்து இன்னுரையாடி இனிமை கூட்டுவர்; அன்பு காட்டுவர்; விருந்து நல்குவர்; பின் அவர்கள் விடைபெற்றுச் செல்லும்போது அவர்களுடன் சில அடிகள் நடந்து ‘சென்று வருக’ என்று விடை தந்து அனுப்புவர். இவை எல்லாம் அவர்தம் நல் நடத்தைகள் ஆகும்.

இன்னார் இன்ன வீட்டார் என்றால் அவர்களிடம் சில எதிர்பார்ப்புகளைப் பிறர் காண்பர். அவர்கள் அடுக்கிய நன்மைகள் செய்யலாம்; அதை மற்றவர்கள் எடுத்துப் பேசிப் புகழ்வார் என்று கூற முடியாது. அஃது அக்குடிக்கு இயல்பு என்று நவில்வர். வாய்விட்டுப் புகழ மாட்டார்கள். அதே சமயம் சில தவறுகள் நிகழ்ந்து விட்டால் அது அந்தக் குடும்பத்துக்குத் தகாது என்று பழி துற்றுவர்; இழித்துப் பேசுவர். நல்லதுக்குப் புகழ்ச்சி இல்லை; தவறுகள் நடந்துவிட்டால் அதை மிகைப் படுத்திப் பேசுவர். உலகம் அப்படித்தான். நிலவு தரும் சந்திரன் அதன் ஒளியைப் புகழ்ந்து பேசுவதைவிட அதில் உள்ள களங்கத்தைத்தான் கவிஞர்கள் சுட்டிக் காட்டுவர். பதவிகள் வகிப்பவர் நூறு நன்மைகள் செய்தாலும் ஒரு தீமை செய்துவிட்டால் அவர்களை உலகம் பழித்துக் கூறும்; அந்தப் பதவிக்கு அவர்கள் தகுதி இல்லை என்று கூறிவிடும். முகவரி இல்லாத முனியன் தவறு செய்தால் அதைச் ‘சனியன்’ தெரியாது செய்துவிட்டான் என்று ஒதுக்கி விடுவர்! தனிப்பட்டவர் தவறுகள் மன்னிக்கப்படும்; தகுதி மிக்க பதவிகளில் இருப்பவர் மிகுதிகள் செய்துவிட்டால் உலகம் ஒப்புக் கொள்ளாது; எனவே குடிப்பெருமை உடையவர் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டிய நிர்பந்தம் உள்ளது என்பதை அறிக.

மாட்சி மிக்க குடியில் பிறந்தவரிடம் சில நற்செயல்களை மற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த வீட்டுப் பிள்ளை படிக்காமல் திரிந்தால் மற்றவர்கள் துடித்துப் போவார்கள்; கடிந்து பேசுவார்கள். நயன்மிக்க செயல்களைச் செய்யாமல் கயமை மிக்க கீழ்த்தரமான செயல்களில் இறங்கிவிட்டால் அவற்றைச் சுட்டிக் காட்டாமல் இருக்க மாட்டார்கள். “கெட்டுக் குட்டிச்சுவர் ஆகிறானே” என்று திட்டிக்கொண்டு இருப்பார்கள்; பேசும் சொற்களில் கூசும் இழி சொற்கள் கலந்து விட்டால் அவன் நாசம் அடைந்துவிட்டதாக மற்றவர்கள் துவேஷிப்பார்கள். “இவன் வாயில் இந்த மாதிரி சொற்கள் வருவது தகாது என்பர்”. ‘சேரிடமறியாமல் சேர்ந்து ‘சேரி’ மொழி அவனிடம் ஏறிவிட்டது” என்று வருந்துவார்கள். கேட்டு இல்லை என்றால் அந்தக் குடும்பத்தைப் பழித்துப் பேசுவார்கள். அவன் வைத்துக் கொண்டே இல்லை என்று சொல்லுவதாகக் கூறுவார்கள். ‘போகும்போது இவன் என்ன எடுத்துக் கெண்டு போகப் போகிறான்?’ என்று ஆராய்ச்சியில் இறங்கிவிடுவார்கள். “யாருக்கு வைத்துவிட்டுப் போகப் போகிறான்” என்று கேட்பார் “பிள்ளையா குட்டியா இவனுக்கு என்ன கேடு?” என்று அவன் சொந்த வாழ்க்கையைத் தேடி உண்மை காண முயல்வார்கள். மாண்குடிப் பிறந்தவர்க்கு இப்பழிச் சொற்கள் வந்து சேரும். அக்குதொக்கு இல்லாமல் யாரோ எவரோ எதுவும் பேசமாட்டார்கள். அவன் தனிக்காட்டு அரசன், கடலில் மரக்கலத்தில் செல்லும் வலைஞன்; அவன் உண்டு; அவன் கை வலை உண்டு; யார் அவனைப் பற்றி விமரிசிப்பார்கள்? நாலு பேர் நடுவே வாழும் மனிதர்கள் நற்பண்புகளுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உலகம் எதிர்பார்க்கிறது.

“ஏன்’யா? உன்னை யார் அடித்தது? எதற்காக ஊர் வம்பு?” என்று கேட்பாரும் உளர். “அது எப்படி ஒதுங்கி வாழ முடியும்? என் குடிப் பெருமைக்கு ஒவ்வாது” என்று விடை கூறுவர். “நம்மவர்களுக்கு நாம் செய்யாவிட்டால் பின் யார் செய்வார்கள்? இனி நன்மை அதைக் கருதித்தான் ஆக வேண்டும்” என்பர்; வாய் திறந்து வணக்கம் என்று சொல்லாமல் தன் வழி பார்த்து விழி வைப்பாரும் உளர். “வணக்கம் என்று சொன்னால் குறைந்தா போய்விடுவான்” என்று பேசுவார். இன்சொல் இதை மற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள். “வாரிக் கொடுத்துவிட வேண்டாம். எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டால் என்ன? வாய் முத்தம் உதிர்ந்தா விடும்?” என்று கேட்பார். அவர்கள் செயலில் நன்மை எதிர்பார்ப்பது போல அவர்களிடம் மன நன்மையும் எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் மனம் எப்பொழுதும் நல்ல நிலையில் நின்று செயல்பட வேண்டும்; நன்மை கருதும் செயல்களையே அவர்கள் எண்ணிக் கொண்டிருக்க வேண்டும்.

தனக்கு நூறு கஷ்டம் இருக்கலாம்; அவற்றை எல்லாம் நற்குடிப் பிறந்தவன் கவனித்துக் கொண்டு இருக்கமாட்டான். தனக்குள்ள இடர்களை எல்லாம் மடித்து வைக்கும் பழைய துணிகளைப் போல எடுத்து வைத்து விட்டு ஊருக்கு உறும் இடையூறுகளை எண்ணிச் செயல்படுவான். உச்சிமீது வான் இடிந்து விழுந்தபோதும் அச்சம் இல்லை என்று இறுமாந்து பேசும் தறுமாப்பு அவனிடம் அமைகிறது. பிடுங்கல்கள் நூறு இருந்தாலும் அவற்றைப் பற்றியே பேசிக்கொண்டு ஒடுங்கி இருக்க மாட்டான். தனக்குத் தலைவலி என்றாலும் மனவலி காட்டிப் பிறர் வலியைத் தீர்க்கத் தயங்கான். தொல்லைகள் தனக்குப் பல இருந்தாலும் அவையே வாழ்வின் எல்லை என்று அடங்கி விடமாட்டான்.

ஒரு பக்கம் பாம்பு கவ்வுகிறது. அதற்காக வானத்துத் திங்கள் ஒளிவிடாமல் மறைந்துவிடுவதில்லை. தன் துயரைப் பொருட்படுத்துவது இல்லை; உலகுக்கு ஒளி தருகிறது. குடிப்பிறந்தவரும் துயரில் மடிந்து கிடப்பது இல்லை; பிறர் துயரைக் கடிந்து நீக்கி வாழ முற்பட்டுச் செயலாற்றுவர்.

மான்குட்டி மான்குட்டிதான்; அதற்குச் சேணம் பூட்டினாலும் அது குதிரையாகாது. புல்லைத் தின்பதில் இரண்டுக்கும் வேறுபாடு இல்லை; போர் என்று முனைந்து அவசரத்துக்கு மானைத் தேரில் பூட்டினால் அது ஏன் என்று கேட்காது; தின்னத்தான் தெரியுமே தவிர வேறு எதையும் பண்ணவே தெரியாது. சப்பாணிகள் பலர் இருக்கிறார்கள்; பணம் படைத்தவர்கள் பலர் உள்ளனர்; குணம் படைக்க வேண்டாமா? அவர்களை அடைந்து ஓர் உபகாரம் என்று கேட்டால் ‘வேறு இடம் பார்’ என்று கைவிரித்து நிற்பார்கள். உபகாரிகள் பை விரித்துத் தருவார்கள். இதுவே நற்குடி பிறந்தவரின் நற்செயல் ஆகும்.

கோடையில் ஆற்றுநீர் வற்றிவிட்டால் மணல் ஊற்றில் கை வைத்தால் நீர் வேட்கை தீரும். அடிசுடும் அந்நாளிலும் நீர் ஊற்றுப் பொய்க்காது; அதுபோல் வறுமை உற்று அவர்கள் வாழ்வு நொடிந்து விட்டாலும் ‘இல்லை’ என்று சொல்லிக் கதவு அடைக்கமாட்டார்கள். உள்ளதைத் தந்து அதற்குமேல் தர இயலவில்லையே என்று வருந்தி விடை தருவார்கள்.

16. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

(மேன் மக்கள்)

அழகிய வானத்தில் விளங்கி ஒளிவீசும் நிலவும், இளகிய மனமுடைய சான்றோரும் உலகுக்கு ஒளி தருவதில் ஒப்புமை பெறுவர். மாசு மறுவற்றது திங்கள் என்று கூற இயலாது; அதற்குக் களங்கம் உண்டு என்று அதன்கண் துளங்கு இருளால் உலகம் சாற்றுகிறது. அந்தச் சிறுமாசும் தமக்கு ஏற்பட்டால் மேன்மக்கள் தாங்கிக் கொள்ளமாட்டார்கள். தம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்வர்; செயலாலும் நினைப்பாலும் தீமை கருதமாட்டார்கள். பழி விளைவிக்கும் வழிகளில் விழிகள் நாட்டம் செலுத்தமாட்டார்கள். இவ்வகையில் நிலவைவிட நிறைகுணம் படைத்த சான்றோர் மேன்மை மிக்கவர் ஆவர்.

நல்லது தீயது இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்தே ஒரு காரியத்தில் இறங்குவர் மேன் மக்கள்; உள்ளுவது எல்லாம் உயர்வையே நினைப்பர். “காட்டு முயலை வேட்டையாடி அதைப் பிடித்துக் கொண்டு வந்து குறி தப்பவில்லை என்று அறிவித்தால் யாரும் அவனைப் பாராட்டமாட்டார்கள். யானையைக் குறி வைத்து அம்பு எய்து அது தப்பினாலும் அவரைப் பாராட்டுவர்” என்பார் வள்ளுவர்; நரியைக் குறி வைப்பதை விடக் கரியைக் குறி வைப்பதே பெருமை தருவதாகும். கரி என்பது கருப்பு நிறத்தை உடைய யானை; பிறர் தவறுகளைக் கண்டு அறையலாம் போலத் தோன்றலாம்; என்றாலும் அவனை அதற்காக மேன்மக்கள் வருத்த மாட்டார்கள். மற்றவர்கள் அவர்களை இகழக் கூடுமே என்று அவர்களுக்காக இரக்கம் காட்டுவர். பெரியோர் என்பவர் சிறியோர் செய்யும் பிழைகளைப் பொறுப்பது அவர்தம் கடமை ஆகக் கொள்வர். அதுவே அவர்களுக்குப் பெருமை தருவதாகும்.

கரும்பு கடித்தாலும் சுவைக்கும். பிழிந்து பருகினாலும் சுவைக்கும். அதனைச் சாறாகப் பிழிய நூறாகத் துண்டித்தாலும் அது தன் இன்சுவையில் சிறிதும் குறையாது. மேன் மக்களை நீ திட்டு; பேசு, வாட்டு அவர்கள் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள். “அஃது அவன் கருத்து, அதைப் பற்றிக் கவலை கொள்வது தவறு; நமக்கு நாம் உயர்ந்தவர்கள் என்று மதித்துக் கொள்ள உரிமை உண்டு; அந்த மதிப்பீடுகளை அவன் உதைத்துத் தள்ளலாம்; அதற்காக நாம் நம் மனப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்பது இல்லை என்பர். அப்பொழுதும் மேன்மக்கள் எதிரிகளுக்கும் தம்மாலான நன்மைகளைச் செய்து கொண்டேதான் இருப்பர்.

மேன்மக்கள் என்று சொல்லிக் கொள்ள அவர்களிடம் என்ன தகுதிகள் இருக்கின்றன? அவர்களிடம் எதிர்பார்க்கும் நற்பண்புகளை நவில இயலுமா? ‘களவு’ என்பது அவர்களிடம் காண முடியாது; மறைவாகப் பிறர் பொருளைக் கவ்வுதல் என்ற நினைவு தோன்றாது. அகப்பட்டவரையில் சுருட்டிக் கொள்வது என்ற ஆக்கிரமிப்பு அவர்களிடம் இருக்காது. ‘குடி’ அந்தப் பேச்சே அங்கே பேசக்கூடாது; கீழ் மக்கள் தாழ் மதுக்களைப் பருகி மகிழ்வர்; உயர் மட்டம் அவர்களுள்ளும் குடிப்பார் உளர்; கொஞ்சம் பணம் கை வந்து விட்டாலே பான வகைகள் வந்து சேர்ந்துவிடுகின்றன. ‘வசதி இருக்கிறது குடிக்கிறேன்; அதனால் என்ன தவறு’ என்று வினவுவர். கொலு பொம்மைபோல் நிற்பது வாழ்க்கை அன்று; வாழ்க்கை அனுபவிப்பதற்கு என்று சித்தாந்தம் பேசுவர். வெளிநாட்டுச் சரக்கு அவற்றை அவர்கள் உள்ளே இறக்குமதி செய்து பெருமைப்படுத்துகிறார்கள். இவர்கள் பணக்காரர்கள் ஆவர். பண்பாளர் அன்று; மேன்மக்கள் எந்த வகை மயக்கம் தரும் குடி வகைகளையும் தொடமாட்டார்கள். புகை பிடிப்பதையும், வரைவு இல்லாமல் மகளிரை நாடுதல் முதலிய தீய பழக்கங்களையும் அவர்களிடம் காண முடியாது. பிறரை மனமறிந்து எள்ளிப் பேசமாட்டார்கள்; இகழ்ந்து உரைத்தலால் புகழ் அமையாது என்பதை நன்கு அறிவர். எந்த நிலையிலும் வாய் பொய் பேசாது. வாய் என்றாலே வாய்மை என்பதை உணர்ந்தவர். வாய் என்ற பெயரே அது பொய் பேசாது என்பதைக் காட்டுகிறது. வாய்மை ‘பொய்’ பேசாது இது சொல் விளக்கம்; அதற்குப் ‘பொய்’ என்று யாரும் பெயரிடவில்லை. மனம், வாக்கு, செயல் இம்மூன்றிலும் மாசு மறுவற்றவராய்த் திகழ்வர்; நிலை மாறினாலும் தம் உளம் மாறாத உத்தமர்கள் அவர்கள் தம் நிலையில் வாழ்ந்து எதையும் தாங்கும் மன இயல்போடு வாழ்வர். இவை எல்லாம் மேன்மக்களின் நற்குணங்கள்; செயல்கள் ஆகும்.

இதுதான் அறநெறி என்று எடுத்துரைக்கத் தேவை இல்லை; இந்த மூன்று நன்னெறிகளை ஒருவன் பின்பற்றினால் அதுபோதும். அவனை உயர்த்துவதற்கு; இவனை மற்றவர்கள் செவிடன் என்று பேசும் அளவிற்கு மற்றவர்களின் வாழ்க்கையை விமரிச்சிக்கக் கேட்க வேண்டாம்.

பக்கத்து வீட்டுக்காரன் தன் மனைவியைத் தினம் அடித்துத் துன்புறுத்துகிறான்; ‘அடி தடி’ காதில் போட்டுக் கொள்ளாதே. அவனைச் சந்திக்கும்போது கேட்டுவிடாதே. கேட்டால் அவன் என்ன கூறுவான்? “உன் மனைவியை நீ அடித்துக் கொள்; நான் கேட்கவில்லை” என்பான். “அவள் என் உடைமை; அவளை அடிப்பதற்கு எனக்கு அதில் ஒரு மகிழ்ச்சி, உன்னை அடித்தால் வந்து கேள்” என்பான்; கல்லை அறைவானேன் கைநோவு என்று கூறுவானேன். மற்றான் மனைவி அவளை உற்றுப் பார்ப்பதைத் தவிர்க. இந்த வகையில் நீ குருடனாய்ச் செயல்படுக; அவளைப் பார்த்தால் என்ன பயன்? அவள் பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிடுவாள். “எதிர் வீட்டுக்காரர் நான் சேலை அழகாகக் கட்டிச் சென்றால் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை; உறுத்து உறுத்துப் பார்க்கிறார்” என்று தன் கணவனிடம் முறையிடுவாள். அவன் உடனே ரோஷம் பொத்துக் கொண்டு வெளியே வந்துவிடுவான். “என் மனைவியை நீ ஏன் முறைத்துப் பார்த்தாய்?” என்று கேட்டான். “அழகாக இருக்கிறாள்; அதனால் அவள் என்னைக் கவர்ந்தாள்” என்றால் அவன் கேட்பானா? பக்கத்து வீட்டுக்காரி எப்படி இருந்தால் உனக்கு என்ன? குருடாக இருந்துவிடு; பிரச்சனையே வராது; உன் வீட்டுக்காரியும் சும்மா இருக்க மாட்டாள். “என்னைவிட அவள் எந்த வகையில் அழகு?” என்று வினாத் தொடுப்பாள். இதற்கெல்லாம் விடை தேடிக் கொண்டிருக்க முடியாது. மற்றொன்று புறங்கூறிப் பொய்த்து நகை செய்யாதே. நண்பன் இருக்கும்போது நகைபடப் பேசிவிட்டு அவன் சற்று மறைந்ததும் அவன் குறைகளை மிகைபடப் பேசுவது இழிவு ஆகும். அதைவிட நாக்கைப் பிடுங்கிக் கொண்டு யாக்கையை விட்டு விடலாம். வாழவே தேவை இல்லை. புறங்கூறுவது கெட்ட பழக்கம். அதனால் அந்த வகையில் ஊமையாகச் செயல்படுக; மற்றவர்கள் வாயைக் கிளறுவார்கள்; நீ ஏதாவது உளறுவாய். ஐம்புலன்களை இறைவன் அளித்தாலும் சிலவற்றைச் செயல்படாமல் வைத்துக் கொள்வது நல்லது; செவி, நாக்கு, வாய் இந்த மூன்றும் ஒலிக்கருவிகள்; இவற்றைக் கட்டுப்படுத்து; இரைச்சல் செய்யாமல் பார்த்துக் கொள்; இனிமையான பண்ணிசை கூட்டு; இந்த இழி இசை தள்ளிவிடு; இதுவே உயர்வதற்கு வழியாகும்.

சிலபேரைச் சில நேரம் மட்டும் பார்த்தால் போதும்; அடிக்கடி வந்தால் அவன் ஏதோ உதவிக்கு வருகிறான் என்று இகழ்ந்து பார்ப்பார். மேலோர் எத்தனை முறை சென்றாலும் முகம் இனிக்க வைத்து அகம் நகைக்க வைத்து உறவாடுவார். அவர்களைப் பார்த்து அணுகுதல் செய்க; மதியாதார் வாசல் மிதிக்கவேண்டாம் என்பது தொல் மொழி; அதை மதித்து நடந்து கொள்க.

கோடிக் கணக்கில் பணம் குவித்துவிட்டான்; அவனை அடைந்தால் கேடு இல்லை என்று கருதலாம். அவன் சமூக விரோதி, பிறர் அடைய வேண்டிய பொருளை ஒருவனே குவிக்கிறான். அவன் மனம் உவந்து பிறர்க்கு எந்த உதவியும் செய்யமாட்டான். வசதி உடையவன் என்பதால் உன் அசதிகளை அகற்றுவான் என்று கருதிவிடாதே.

சான்றோர் உறவு அத்தகையது அன்று; உடனே கேட்ட அந்த அளவே விரும்பியது கிடைக்ககும் என்று கூற முடியாது. அது தங்கச் சுரங்கம்; உள்ளே பொதிந்து கிடக்கின்றன. நிரந்தரமாக நன்மை செய்வர். அவர்கள் நன்மைகள் கண்ணுக்குப் புலப்படா; ஆனால் தொடர்ந்து துயர் தீர்ப்பர்; மேன்மக்கள் தொடர்பு நிலைத்தது; தொடர்ந்து உதவுவது; பயன் உடையது நம்பியவரை அவர்கள் என்றும் கைவிடமாட்டார்கள்.

17. பெரியவர்களை மதிக்கக் கற்றுக் கொள்

(பெரியாரைப் பிழையாமை)

குணம் என்னும் குன்று ஏறி நின்றவர்கள் பெரியவர்கள்; அவர்களை அவமதித்தால் அவர்களை அடக்கி வைக்க முடியாது; ‘சாது மருண்டால் காடு கொள்ளாது’ என்பது பழமொழி. சாது என்பது இந்தச் சான்றோர்களைத் தான் குறிக்கும். ‘என்ன சொன்னாலும் இவர்கள் பொறுத்துக் கொள்வார்கள்’ என்று தப்புக் கணக்குபோடக் கூடாது. அவர்கள் வெறுக்கத்தக்க அளவு அவமதிக்கத் தொடங்கினால் அது திருப்பி அடிக்கும். அவர்கள் சீறிப் பொங்கினால் உன் நிலை மாறி விடும். ஆறி அடங்குவார்கள் என்று எதிர்பார்க்காதே. பொன்னைப் பெற்றாலும் பெற முடியும். பெரியோர்களின் நன்மதிப்பைப் பெறுவது எளிது அன்று. அவர்களை நல்ல வகையில் பயன்படுத்திக் கொண்டு நன்மைகள் பெறலாம். அவர்கள் செயற்கரிய செய்யும் இயல்பினர்; பல நற்காரியங்களை அவர்களைக் கொண்டு சாதித்துக் கொள்ளலாம். அவர் தெரியும் இவர் தெரியும் என்று பறை அறைந்து கொண்டிருந்தால் என்ன நிறைவு அடைய முடியும். கற்ற பெரியவர்களிடம் பல நற்செய்திகளை அறிந்து கொள்ளலாம். உற்ற செல்வர்களாக இருந்தால் பொருள் உதவி பெற்று முன்னேறலாம். பதவியில் மேலோர் ஆயினும் சலுகைகள் பெற்று உயர இயலும்; கல்வி, சால்பு, செல்வம், பதவி மதிப்பு, உயர் நிலை இவை உள்ளவர்கள் பெரியவர்கள்; நம்மை விட வயதிலும் பெரியவர்கள்; அவர்களை மதித்தால் நீ உயர முடியும்.

பெரியோர்கள் அறிவு உடையவர்கள்; அவர்களைப் போற்றியோ தூற்றியோ ஏமாற்றிவிட முடியாது; இவற்றால் அவர்கள் மகிழ்வது இல்லை; கசிவதும் இல்லை; அசைவதும் இல்லை; இழிந்தவர் பழித்தும் அழித்தும் பேசி அவர்கள் மதிப்பைக் குறைக்க முயல்வர்; அவற்றை அவர்கள் பொருட்படுத்துவது இல்லை. எது உண்மை? எது பொய்மை? எது நன்மை? எது தீமை என்று நுட்பமாக அறிந்து கொள்ளும் இயல்பினர் அவர்கள்; அவர்களிடம் நன்மை பாராட்டினால் சீர்மை பெறமுடியும். சிறப்பு அடைய முடியும்.

நஞ்சு உடைய நாகம் கொடிது; அதைக் கண்டு மற்றவர்கள் அஞ்சுவர். அது மலைக் கல்லில் பதுங்கி மறைந்து இருந்தாலும் இடி இடித்தால் ஒதுங்கி அஞ்சும் இயல்புடையது. நடுங்கும்; ஒடுங்கும்; தீயவர்கள் “தம்மைப் பெரியவர்கள் கண்டு கொள்ளமாட்டார்கள். அவர்கள் அப்பாவிகள்; என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டு இருப்பர்” என்று எதிர்பார்த்தால் அது பேதமை ஆகும். பெருமை மிக்க நிலையில் உள்ளவர் சீற்றம் கொண்டால் அதை நீ ஆற்ற முடியாது; போற்றும் காவல் உள்ள இடத்தில் பொதிந்து மறைந்து கொண்டாலும் அவர்கள் காற்றும் புகாத இடத்தில் ஆதிக்கம் செலுத்தி உன்னை அடக்கிவிடுவர். பெரியோரை அவமதிக்காதே.

முளைத்து இலை மூன்று விடவில்லை; அதற்குள் களைத்த சொற்களைக் கொண்டு வளைத்துப் பெரியோர்களைத் தாக்குகிறாய். அறிவில் ஆற்றலில் நம்மைவிட யாரும் உயர்ந்தவர்கள் இல்லை என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறாய்! அவசரப்படுகிறாய்; ஆவேசமும் கொள்கிறாய். அறம் அறியும் அறிஞர்கள் அவர்கள் தன்னடக்கம் உடையவர்கள். தம்மைத்தான் புகழ்ந்து பேசிக் கொண்டு இருக்கமாட்டார்கள். ஆறி அடங்கி இருப்பர். அவர்களை மதித்து அவர்கள் தகுதி அறிந்து போற்றுவது சிறந்த கோட்பாடு ஆகும்.

சிறியவர் நட்புத் தொடக்கத்தில் சீறி எழும்; காலையில் தோன்றும் நிழல் பெரிதாகக் காணப்படும். வர வர மாமியாராகி விடும்; தேய்ந்துவிடும். பெரியவர் நட்புத் தொடக்கத்தில் சிறிதாகக் காணப்படும். வரவரப் பெருகும்; மாலை நிழல் போல் அது நீண்டு கொண்டே இருக்கும். அது குளிர்ச்சியும் தரும்; மகிழ்ச்சியும் தரும். சிறியோர் தொடர்பைக் குறைத்துக் கொள்; பெரியோர் மதிப்பைத் தேடிக் கொள்.

அரசர் தம் செல்வம் அவர்களை அணுகுபவரே அடைவர்; அனுபவிப்பர்; எல்லாச் சலுகைகளையும் பெறுவர்; பெண் கூட அவளை அணுகினால்தான் அவள் இன்பம் தருவாள், எதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பெரியவர்களும் அத்தகை யவரே. “அவரை நாம் ஏன் மதிக்க வேண்டும்?” “வயது மிக்கவர்கள்; வாலிபம் இழந்தவர்; நரை திரை இவற்றால் நலிவுற்றவர்கள்; கோல் கண்ணாகக் கொண்டு நடைபோடுகிற்வர்கள்” என்ற எடை போட்டு “இந்தக் கிழங்கள் முதிர்ந்த பழங்கள். இவர்கள் நமக்குச் சுமை; இவர்கள் உறவு நமக்குத் தேவை இல்லை” என்று ஒதுங்கி வாழும் இளைய தலைமுறை பல நன்மைகளை இழந்து விடுகின்றனர். அனுபவமும் அறிவும் சான்ற அப்பெரியவர்கள் விலை மதிப்பற்ற செல்வம். இவர்களைப் புறக்கணித்து ஒதுக்கினால் முன்னுக்கு வர முடியாது; ஆண்டியாகவும் அழகிகளை அனுபவிக்க இயலாத அலிகளாவும் தான் வாழ வேண்டி வரும்.

நூல் பல கற்ற ஞான நன்னெறி உடைய பெரியோர்களிடம் கொள்ளும் தொடர்பு தூயது; ஏனைய முரடர்களிடம் கொள்ளும் உறவு தீயது; முரடர்கள் அவர்கள் திருடர்கள்; உன் உழைப்பை வருடிக்கொண்டு சமயம் வரும்போது இடறி விழச் செய்வர்; விட்டுப் பிரிந்தால் சுட்டும் கொன்று விடுவர். சேரிடம் அறிந்து சேர்க; நல்லவர் சேர்க்கை நன்மை தரும்; பிடிக்காவிட்டால் விலகிவிடலாம். தீயவரை விட்டு விலக முடியாது; விலகவிடமாட்டார்கள். ஆப்பு முளையில் அகப்பட்ட குரங்கின் கதையாகத்தான் முடியும்.

ஏடு எடுத்து ஏதாவது படித்துக் கொண்டிருந்தால் அஃது உனக்குப் பீடும் பெருமையும் தருகிறது. நாடிய கல்வி கை கூடுகிறது. நூல் எடுத்துப் பிரித்துப் பார்க்காத அந்த நாள் வீணாளாகும். பத்திரிகை படிக்காவிட்டால் உன் சுற்றுப்புறம் அறியமாட்டாய்; நூல்களைக் கற்றுக் கொண்டே இரு; புரட்டிக்கொண்டே இரு; திரட்டிக் கொண்டே இரு கல்வி ஞானம். அது பயன் உடையது. அதே போலப் பெரியவர்களைச் சாராத நாளும் வீணானதே; பெரிய இழப்பு என்றுதான் கூறமுடியும்; நம்மால் இயன்றது பிறர்க்குக் கொடுக்காமல் கழிந்த நாளும் பயனற்றதாகும். பண்புமிக்கவர்கள் இந்த மூன்று நல்ல பழக்கங்களையும் விடமாட்டார்கள். நாளும் ஏடுகளைப் படித்தல், பெரியவர்களைச் சந்தித்துப் பழகுதல், வறியவர்க்கு ஏதாவது ஈதல் இம்மூன்றும் பண்புமிக்க செயல்கள் ஆகும்.

சிலர் பண்பால் உயர்வு பெற்றவர் ஆவர்; ஞானத்தால் உயர்ந்தவர் ஆவர். அவர்கள் பெருமை மிக்கவர்; என்றாலும் பெருமை சிறுமை பாராட்டாமல் தம்மை அடையும் இளைஞர்களை ஆதரிப்பது, அறிவு கூறுவது, அன்பு காட்டுவது அவர்தம் கடமையாகும். சிலர் செல்வத்தால் செழிப்பு உடையவர் ஆவர். அவர்கள் ஏழை எளியவரிடத்துப் பழகி அவர்களைக் களிப்புறச் செய்தால் அவர்களும் மதிக்கத் தக்கவர் ஆவர்.

18. சேர் இடம் அறிந்து சேர்க

(நல்லினம் சேர்தல்)

அறியாப் பருவத்தில் இருந்து ஊர் முரட்டுக் காளைகளுடன் பழகிப் பாழாகிப் போன சிறுவர்கள் கூடத் திருந்த முடியும்; புல் நுனிமேல் தங்கும் பனித்துளி காய் கதிர்ச் செல்வன் கரம்பட்டதும் மறைந்துவிடுகிறது. அதே போலத்தான் தீயவரோடு பழகித் தீயவராக இருப்பவரும் நல்லவரோடு சேர்ந்து வல்லவராக மாறக் கூடும்; சேரும் இடம் அறிந்து சேர்வது உயர்வு தரும்.

நல்லவன் என்று பெயர் எடுக்கச் சில அடிப்படைச் செயற்பாடுகள் தேவைப்படுகின்றன. முதற்கண் ‘அறநெறி யாது?’ என்று அறிந்து கொள்ள வேண்டும். அடுத்தது நாமே கொடிகட்டிப் பறக்க முடியும்’ என்று முடிவு செய்யக்கூடாது. எந்த நேரத்தில் எந்த அழிவு வரும் என்று முன்கூட்டி உரைக்க அல்லது அறிவிக்க இயலாது. நாம் பலரோடு பழகுகிறோம்; அவர்கள் நம்மைத் தாக்கிப் பேசக்கூடும்; கடுஞ்சொல் கேட்டுச் சுடு சொல் கூறத் தேவை இல்லை. அவர்களை மன்னிக்கும் மாண்பு நம்மிடம் அமைய வேண்டும்; அதனோடு அவர்கள் அவ்வாறு கூறக் காரணம் என்ன? நம்மிடம் உள்ள குறை யாது என்று ஆராய்ந்து அவற்றைக் களைய முற்பட வேண்டும். பிறரை ஏய்த்து வாழ வேண்டும் என்று சிறிதும் நினைக்க வேண்டாம். தீய செயல்களை மேற்கொள்வாரை வெறுத்து ஒதுக்கவும்; பெரியவர் கூறும் வாய்மை மிக்க சொற்களைப் போற்றிக் கொள்ளவும்; இந்த நல்ல பழக்கங்கள் சேர்ந்தால் நல்லவன் என்று மதிப்புப் பெற வாய்ப்பு உள்ளது.

இந்த உலகத்தில் நம்மை அடையும் துன்பங்கள் மூன்று; ஒன்று நம் நெருங்கிய உறவினைரைப் பிரிந்து வாழ்தல்; மற்றொன்று தீராப்பிணி, மூன்றாவது கேடுகள். கேடுகள் எவை என்று கூறமுடியாது; இழப்புகளைத் தான் கெடுதிகள் என்று கூறுகிறோம். ‘அவனுக்கு என்ன கேடு என்றால் அவனுக்கு என்ன இழப்பு’ என்பதுதான் கருத்து. இந்த மூன்று துன்பங்களும் அணுகும்போது அவற்றைத் தாங்கவும் போக்கவும் பெரியவர்களின் துணை தேவைப்படுகிறது. நல்லவர்கள் இணக்கத்தை நாடவேண்டி உள்ளது. கற்றறிந்த கல்வியாளரின் தொடர்பு இவற்றை நீக்க வல்லது ஆகும்.

மரணம் என்பது ஒன்று உண்டு என்பதால் இந்தப் பிறவி நிலையற்றது என்று களைய முற்படார். பிறப்பு வெறுக்கத் தக்கது அன்று; அதனைச் சிறப்புற்றுச் செய்வதில்தான் நம் பெருமை அடங்கி இருக்கிறது. பண்புமிக்க நண்பினர்கள் வாய்த்தால் வாழ்க்கை ஒண்பு உடையது ஆகிறது. அஃது ஒளி பெறுகிறது; எனவே வாழ்க்கை வாழ்வதற்கு என்ற நிலை தக்க பண்பினர் நமக்கு அன்பினராக உள்ளனர் என்ற நிலை ஏற்படுவதால்தான்.

ஊரில் உள்ள கழிவுநீர் அதனைச் சாய்க்கடை என்பர்; அஃது ஆற்றோடு சங்கமிக்கும்போது அதன் உவர்த் தன்மையும் கழிவுத் தன்மையும் பேராற்றில் கலந்துவிடுகின்றன. இரண்டும் கலக்கும்போது சிறுமை பெருமை பெறுகிறது. அந்தப் பழமை அதனை விட்டு நீங்குகிறது. அதனையும் அந்த ஆற்றின் கிளை என்றே கருதுவர். அது தூய்மை பெறுகிறது. உயர்வும் அடைகிறது. அதே போலக் கீழ்த்தரம் மிக்க பாழ்பட்ட வாழ்க்கை உடையவரும் மேல் தரம் உள்ள மேன் மக்களோடு சங்கமித்தால் அவர்களும் பழைமை, அழுகல், உளைவுகள், வளைவுகள், நெளிவுகள் அனைத்தும் நீங்கிச் செம்மை அடைகின்றனர்; சீர் பெறுகின்றனர்; சிறப்பு அடைகின்றனர்.

ஒளி வீசும் தண் மதியததை முயல் என்ற கறை சேர்கிறது; அது மதிக்கத்தக்கது அன்று எனினும் வான் நிலவை வையகத்தார் வணங்கும்போதும் தொழும் போதும் இந்த முயலும் மதிக்கப்படுகிறது; அதுவும் வணங்குதற்கு உரிய பொருள் ஆகிறது. சிறியவர்களும் பெரியவர்களோடு சேரும்போது சீர்மை பெறுகின்றனர். அவர்களும் மதிக்கப்படுகின்றனர்.

பாலில் நீர் கலந்தால் பால் நீராகாது; நீர்தான் பால் நிறம் பெறுகிறது; பால் என்றே பருகப்படுகிறது. சிறியவர்கள் பெரியவர்களோடு ஒன்றி உறவாடி நட்புக் கொண்டால் அவர்களும் மதிக்கப்படுகின்றனர். அந்தப் பெரியவர்களைக் கொண்டுதான் இவர்கள் அடையாளம் காட்டப்படுகின்றனர்.

உழவர்கள் ஏர்க் கலப்பை புல் எங்கிருந்தாலும் அதைத் துக்கி எறிந்து சமன் படுத்திவிடும்; என்றாலும் உயரமான இடத்தில் கற்கள் பொதிந்த மரத்தின் அடிப்பகுதியில் முளைத்துக் கிடந்தால் கலப்பை அதனைத் தொடாது. அதே போலச் சார்பு உணர்ந்து அவர்கள் சேர்ந்த இடம் அறிந்து பகைவர்கள் சிறியவர்களைத் தொடமாட்டார்கள். பெரிய இடத்துச் சார்பு இருக்கிறது என்றால் அவர்களைத் தொட அவர்களோடு போரிடப் பின்வாங்குவர். பெரியவர்களின் தொடர்பு சிறந்த தற்காப்பைத் தருவது ஆகும்.

நிலத்தின் தன்மையை ஒட்டி அதன் புலத்தில் விதைக்கும் நெல் நலம் பெறுகிறது, சிறப்பும் பெறுகிறது. நீர் வளமும் நிலவளமும் நெல்லின் செழிப்புக்குக் காரணம் ஆகின்றன. அதே போலக் குடிப் பிறப்புச் சான்றாண்மைக்கு வித்தாகிறது, சத்தாகிறது; உரம் சேர்க்கிறது; உறுதி பயக்கிறது. நற்குடியில் பிறந்த நல்லோர் ஆயினும் அவர்களுக்குத் தீயவர் சேர்க்கையால் சாய்வுகள் ஏற்படுவது உண்டு, மரக்கலம் உறுதி உடையதுதான் என்றாலும் சூறைக் காற்று வீசினால் அது கவிழ்ந்து விடாமல் இருப்பது இல்லை; தீயவர்கள் இணக்கம் சூறாவளி போன்றது. திடீர் என்று அவர்கள் வந்து சேர்வதால் அவர்கள் தாக்குதலினால் நல்லவர் தம் சீர்மையும் கெட வாய்ப்புள்ளது. எனவே உறுதி உடைய பெரியோர்கள் கூடத் தம்மிடம் சேர்பவர் யார் என்றும் கவனிக்க வேண்டும்; கண்டவரோடு உண்டு மகிழ விருப்புக் கொள்ளக்கூடாது. அற்பர் நட்பு உயிருக்குச் சேதம் விளைவிக்கும். மனத்தால் மாசு அற்றவர் என்றாலும் இனத்தால் ஆசு ஏற்பட வழியாகிறது; இனம் கொண்டு அவர் இகழ்ப்படுவர்; காட்டிலே தீப்பற்றிக் கொண்டால் மேட்டிலே உள்ள சந்தனமும் வேங்கையும் வேகாமல் போகாது; உயர் மரங்களும் பற்றி எரியும். கோரைப் புல்லில் பற்றிய தீ ஏனைய மரங்களின் வேரையும் அழிக்கும். சிற்றினம் கூடாது; சேர் இடம் அறிந்து சேர்க.

19. பேருண்மைகள்

(பெருமை)

எது உண்மை? நன்மை தருவது உண்மை; அதுவே மெய்ப்பொருள் ஆகும். இந்த வாழ்க்கைக்கு என்ன பொருள்? பிறர்க்கு ஈய முடிவதில்லை; அதற்கு வேண்டிய உள்ளம் குறைகிறது; பொருளும் அருகுகிறது. வாரி வழங்கக்கூடிய வழி இல்லை. எதற்காக வாழ்வது? இளமை நாம் பார்த்துக் கொண்டு இருக்கும்போதே நம்மை விட்டு அகல்கிறது இளமை இன்பம் தருவது. ஆனால் அதை நம்ப முடிவதில்லை; காதலித்துக் கூடிய காரிகையரும் பேதலித்து விட்டு விலகுகின்றனர். தாய்மை அவர்களை ஈர்ப்பதால் கட்டியவனோடு தொடர்ந்து உறவாடுவது இல்லை; அவர்களும் ஏதோ பேருண்மை காண்பதில் நாட்டம் கொண்டு இயங்குகின்றனர். காதல் மக்களும் முற்றிய முதுமையில் நம்மை விட்டு விலகிவிடுகின்றனர்; ஊன்று கோலாக இருப்பவர் என்று எண்ணியது தவறு ஆகி விடுகின்றது. பாசம் வைத்த மக்கள் நேசம் மறந்து தனித்துப் போய்விடுகின்றனர். அதனால் இந்த உலக வாழ்வில் பற்றுக் கொள்ளுதலும் அதற்காக நம்மை நாம் விற்றுக் கொள்ளுதலும் அறியாமை ஆகும். பற்றுகள் நீக்கில் அடுத்தது யாது? மெய்ப் பொருள் என்று காண்பதற்கு அடிப்படை துறவுள்ளம்; அந்தத் துறவோடு உறவு கொள்வதே உறுதிபயப்பதாகும்.

இல்வாழ்க்கைதான் நல்வாழ்க்கை என்று அதில் அகப்பட்டு உழல்கின்றோம். அதுதான் காப்பு; இங்கு அதுதரும் இன்பமும் சுகமும் எதுவும் தராது என்று எப்பொழுதும் அந்தச் சிறு உலகத்தைச் சுற்றியே நம் கற்பனைகள் சென்று வருகின்றன. என் வீடு, என் மனைவி, என் மக்கள் என்று எண்ணி எண்ணி அதற்காகவே அல்லும் பகலும் உழைத்து வருகிறோம். என்ன சுகம் காண்கிறோம்? சிக்கல் நிறைந்தது இல்வாழ்க்கை; எப்பொழுதும் ஏதாவது ஒரு பிரச்சனை உருவாகி வருகிறது! என்றுமே ஏதாவது தொல்லைகள் நம் எல்லைகள் என அமைகின்றன. எனக்கு என்ன குறை? வசதிகளைப் பற்றிப் பேசி இவைதாம் வாழ்வியல் என்று கருதி உயர் உண்மைகளை நம் கட்டுக்குள் மறந்து வாழ். எதுவும் நிலைப்பது இல்லை, நம் கட்டுக்குள் அடங்குவது இல்லை; இவ்வளவும் தெரிந்தும் அதே சேற்றில்தான் உழல்கிறோமே தவிரக் காற்று வாங்கிச் சுகப்பட விரும்புவதில்லை. வெட்ட வெளிதனை மெய் என்று கருதித் தூய வெளிச்சம், காற்று இவற்றையும் சுவாசிக்க முயற்சி செய்வோமாக, மேலான பொருள்களைப் பற்றியும் சிந்தித்து உண்மை காண்போமாக.

வாழ்க்கை ஒரு தொடர்கதை; எங்கேயும் முடிக்க முடிவது போல அமைவது இல்லை. ஏதாவது ஒரு புதிய பிரச்சனை உருவாகிக் கொண்டுதான் வருகின்றது. இளைஞன் “மணமாகிவிட்டால் எல்லாம் சரியாகிப் போய்விடும்; எந்தக் குறையும் இருக்காது. கைப்பிடித்தவள் பானை பிடிப்பாள், அவள் வந்த பாக்கியம் எல்லாம் சிலாக்கியமாக முடியும்” என்று கனவு காண்கின்றான். வந்தபின் எத்தனை போராட்டங்கள்? அமைதி எங்கே? எந்த மூலை முடுக்குகளில் தேடிப்பார்க்கிலும் கிடைக்கவில்லை. புதிதாக வந்தவள் இந்தக் குடும்பத்துப் பிரஜை களை நேசிப்பது இல்லை; பெற்ற தாயும் தந்தையும் அந்நியப்படுத்தப்படுகின்றனர் பின்பு குழந்தைகள் படிப்பு: அவர்களை நிலைநிறுத்துவது; அப்பப்பா முடிவே இல்லை. இவற்றைக் கண்டு மயங்கி இதுதான் இன்ப சுகம் என்று ஆழ்ந்துவிடாதே. இதைவிட மேலான இன்ப சுகம் இல்லை என்று ஆழ்ந்துவிடாதே. இதைவிட மேலான வாழ்வு அமைத்துக் கொள்ள முடியும். சிந்தித்துப்பார். அறிவு உலகம் அழைக்கிறது. மெய்ப்பொருள் காண முயல்க.

மழை பெய்கிறது; பருக நீராக அமைகிறது. ஆனால் மழை எப்பொழுதும் பெய்துகொண்டே இருப்பது இல்லை; கிணற்று நீர் ஊற்றுகள் இருந்து சுரந்து கொண்டே இருக்கிறது. அதுபோல மேன்மக்கள் வருவாய் குறைந்துவிட்டாலும் தாம் சேர்த்து வைத்து செல்வம் கொண்டு பிறர்க்கு உதவிக்கொண்டே இருப்பர். அவர்கள் நன்மை செய்வதிலிருந்து பின்வாங்குவது இல்லை. கீழ்மக்கள் தாழ்நிலையில் இருந்தே செயல்படுவர். செல்வம் மிக்கு இருந்தாலும் பிறர் அல்லல் தீர்க்க முன்வர மாட்டார்கள். பேருண்மை கண்டு பெருமிதத் தோடு வாழ்வதே வாழ்க்கையாகும். உள்ளம் உயர்ந்து பிறர் துன்பத்தைக் குறைக்க முயல்வதே வாழ்வின் மெய்ம்மையாகும்; மெய்யறிவு என்பதும் அதுவே ஆகும்.

ஆற்றுப் பெருக்கு நீர்ப்பெருக்கால் நிலம் செழிக்கச் செய்து பயிர் வளர்க்கும்; உணவு பெருக வழி செய்கிறது. மக்கள் உயிர் வாழ்வுக்கு அடிப்படையாக விளங்குகிறது. மழை இன்மையால் நீர்ப் பெருக்கு இல்லாவிட்டாலும் ஊற்றுநீர்க் கொண்டு மக்கள் நீர் வேட்கையைத் தீர்க்கிறது; குடிக்க நீராகிறது. மேன்மக்கள் இருக்கும் காலத்தில் வாரி இறைப்பர்; இல்லாத காலத்தும் உதவிக் கொண்டே இருப்பர். பசையற்ற நெஞ்சோடு அவர்கள் வாழ்வது இல்லை. உயிர்களிடத்து நசைவுற்ற வாஞ்சையோடு வாழ்வர்; மக்களை எப்பொழுதும் நேசிப்பர்; இதுவும் வாழ்வின் மெய்ம்மையாகும்.

வெள்ளெருதுமேல் சூடுபோட்டால் அது பளிச்சென்று பலர் கண்ணிலும் படும்; “பாவிகள் எருதுக்குச் சூடு போட்டுவிட்டார்களே” என்று பழி பேசுவர். சான்றோர் சிறு தவறு செய்தாலும் அதைப் பறை சாற்றி இகழ்வர்; பெரிதுபடுத்துப் பேசுவர். அதுவே கீழ்மக்கள் எருதைக் கொன்று புசித்துவிடுவர். யாரும் அதைப்பற்றி ஏதும் எடுத்துப் பேசமாட்டார்கள். வெளுத்த துணிமேல் கறை பளிச்சென்று காட்டிவிடும். அதனால் சான்றோர் தவறு செய்வது தவிர்ப்பது நல்லது.

நகைச் சுவை என்பது மென்மையானது. நுட்பமானது; அதைச் சுவைக்க மனஇயல்பு நன்றாக இருக்க வேண்டும். எள்ளிப் பேசுவது மனத்துள்ளலால் விளைவது; பிறரை மகிழ்விப்பது; ரசனையே இல்லாத மண்டுகளிடம் சிரிப்புவரப் பேச முயன்றால் அவர்கள் தம்மை இழிவுபடுத்துவதற்காகவே இவ்வாறு பேசிவிட்டார் என்று சீற்றம் காட்டுவார். அறிவு நிரம்பிய சான்றோர் சலனமற்று வாழ்வர்; அவர்களிடம் குத்தலாகப் பேசினாலும் அவர்கள் குறையாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்; பெருமை பெருமைதான்; சிறுமை சிறுமைதான்.

யாரிடம் எப்படிப் பேசவேண்டும்? எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். புதிதாக மணந்து கொண்டவளிடம் அவள் மகிழப் பேசவேண்டும். “உன் முக்கு என்ன சப்பையாக இருக்கிறதே; நெற்றி மேடாக இருக்கிறதே” என்று விவரித்தால் அவள் உன்னைக் கேடாக நினைப்பாள். “அதி சுந்தரி நீ; வனிதாமணி” என்றால் அவள் உன் உறவுக்கு உடனே படிவாள்; தடித்தனமாக அவளிடம் நடந்துகொள்ளக் கூடாது.

பயில்வானிடம் சண்டைபோடச் செல்கிறாய்; அங்கே அவனிடம் மெல்ல வருடிக் கொண்டு இருக்க முடியாது; தூக்கி எறிய முனையவேண்டும்; முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். வஞ்சகரை நயமாகப் பேசி அவர்களை வெற்றி கொள்ள வேண்டும். நல்லவர்களிடம் நன்மை தோன்ற நடந்து கொள்ள வேண்டும். எங்கே யாரிடம் பேசுகிறோம் என்பது அறிந்து பேசுவது வாழ்க்கையில் வெற்றி தரும்.

முடுக்கிக் கசப்பான வார்த்தைகளைச் சொல்லி இடுக்கிவிட விரும்புகிறான் ஒருவன். கோள் சொல்லி நல்லவனாக நடிக்க விரும்புகிறான். இல்லாதது பொல்லாதது சேர்த்துக் கூட்டிப் பேசுகிறான். நமக்கு நன்மை செய்வது போல் காட்டி அவன் நம் நண்பர்களைப் பிரித்து வைக்க முற்படுவான். அப்பொழுது தலை அசைக்கலாம். ஆனால் நிலைகெடக் கூடாது; ஒளிவிடும் விளக்குப் போல் தம் நிலைமாறாமல் அவன் கூறுவதை எடுத்துக்கொள்ளாமல் அவனை அனுப்பிவிடுவதே தக்கது ஆகும். யார் எது சொன்னாலும் சீர்தூக்கி ஆராய்வது பெருமை தரும்.

உண்பதற்கு முன் அவர்கள் கண் நான்கு பக்கம் பார்க்க வேண்டும். முதற்பிடியை மற்றவர்க்கு என்று எடுத்து வைத்துவிட்டு மற்றபடி உண்ணத் தொடங்க வேண்டும். பிறர் பசித்திருக்கத் தான் உண்பவன் நற்கதியைச் சாரான்; அவன் மனம் அழுக்குப் படிந்ததாக விளங்கும். மனம் மாசு பெற்று மங்கிவிடுவான்.20. உழைப்பே உயர்வு தரும்

(தாளாண்மை)

ஏரியில் நீர்வளம் இருப்பதால் அடுத்துக் கழனிகளில் பயிர்கள் செழித்து வளர்கின்றன. பயிர்கள் பச்சைப் பசேல் என்று இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் ஏரியில் நீர் நிறைந்திருக்கிறது என்பதாகும். அவை செழித்து வளர்வதற்கு நீர் கொழித்துப் பாய்கிறது. சுற்றமும், உறவினரும், மக்களும் மனைவியும் சுகமாக இருக்கின்றனர் என்றால் அக்குடும்பத் தலைவன் உழைப்பதால்தான். தளராத உழைப்பு மற்றவர்கள் பிழைப்புக்குக் காரணம் ஆகிறது. நாட்டியப் பெண் பாட்டியலுக்கு ஏற்ப ஆடுகிறாள். அவள் கண்கள் வாள்போல் சுழன்று சுறுசுறுப்பைக் காட்டுகிறது. அவள் கண்களின் சுழற்சிபோல உழற்சி காட்டும் உழைப்பாளியின் சுறுசுறுப்பும், பரபரப்பும், பொருள் ஈட்டும் நல்முயற்சிகளும் அந்தக் குடும்பத்தை வாழ்விக்கின்றன. முயற்சி திருவினை ஆக்குகிறது; அயர்ச்சி தாழ்வினைத் தருகிறது.

நேற்று மெலிந்து கிடந்தான்; இவன் வலிந்து செயல் செய்ய முற்பட்டான்; சிறு தொழிலாகத் தொடங்கினான்; இன்று பெருந்தொழில் முதலாளி ஆகிவிட்டான். எப்படி? விடாமுயற்சிதான்; ஆடிக்கொண்டிருந்த அவன் ஆரம்ப வாழ்வு காழ்ப்பு ஏறிக் கடுமைகளைத் தாங்கிச் செழுமை பெற்றுவிடுகிறது. காற்றுக்கு அசைந்து துவண்ட மெல்லிய தளிர்களைக் கொண்ட செடி கூட நாளடைவில் காழ்த்து வலிவு பெற்றுக் கட்டுத் தறியாகிறது. அது காற்றுக்குத் துவண்டு வெறும் கீற்றாகச் சாய்ந்து விட்டிருந்தால் போற்றத்தக்க இந்தப் பெருமையை அடைந்திருக்க முடியாது. காற்றுக்கும் மழைக்கும் ஈடுகொடுத்து நிமிர்ந்து நின்று திமிர்ந்து மரமாகி அது வைரம் பாய்ந்து அசைக்க முடியாத நிலை பெற்றுவிடுகிறது, இஃது உழைப்பாளிக்கு ஒரு ஆசான். அதைப் பார்த்து இவன் விடாப்பிடியாகத் தொடர்ந்து உழைத்தால் முன்னுக்கு வருவான்; கட்டுத்தறியில் யானையைக் கட்டி வைக்க முடியும்; இவன் பல பேர் சுற்றத்தினர் நாடி இடம் அளிக்கும் செல்வனாகத் திகழ்வான்.

வலிமைமிக்க புலி பசித்தால் அது பட்டினி கிடக்காது; சிறு தவளை கிடைத்தால் அதைப் பிடித்து அந்நேரத்திற்கு உயிர்வாழ முற்படும். அதுபோலக் கால் தொழிலாக இருந்தாலும் அது மேலான தொழில் என்று அதைத் தொடங்குக. பிறகு மெல்ல மெல்ல முன்னேறலாம். தொடங்கும்போதே பெரிய அளவில் தான் தொடங்குவேன் என்று அடம் பிடித்தால் தடம் புரள்வது ஆகும். அரிய செயல் என்று அசதி காட்டினால் அஃது ஆண்மைக்கு இழுக்கு; பூ முடித்துப் புனைவுகள் செய்கிறேன் என்று கூறிக் கொண்டிருந்தால் அதனைப் பெண் ஒருத்தியே செய்துவிடுவாள். செயற்கரிய செயலைச் செய்வதுதான் பெருமைக்கு அழகு, “இது நம்மால் முடியுமா?” என்று திகைப்புக் காட்டத் தேவை இல்லை; முடியும்; முயல்க; வெற்றி காண்க.

குலம் பேசி உயர்வு காண முயல்வர் நலம் பேசி நன்னிலை அடைய முடியாதவர்; உயர்வு தாழ்வு என்பது பிறப்பால் அமைவது அன்று. அவரவர் செய்யும் தொழில் சிறப்பால் அடைவது ஆகும். மிக்க பொருள் ஈட்டுக; அஃது உன்னை உயர்த்திக் காட்டும். தவம் கல்வி இவற்றோடு ஆள்வினை கூடினால் எதுதான் சாதிக்க முடியாது; தவம் என்பது விடாமுயற்சி, கல்வி என்பது செய்யும் தொழிலைப் பற்றிய நுட்ப அறிவு. ஆள்வினை என்பது செயலாற்றும் திறன்; அடுத்தது சோர்வு இன்மை; இந்த நால்வகைப் பொருளால்தான் மனிதருக்குச் சிறப்பு உண்டாகும். பிறப்பு அனைவர்க்கும் பொது; அதை வைத்துச் சிறப்புக் கொண்டாடுவதில் பயன் இல்லை; அவரவர் செய்யும் தொழிலால் தான் மதிக்கப்படுவர்.

ஒரு காரியத்தை மேற்கொண்டு அதை முடிக்கும் வரையும் அதைப் பற்றி அளவளாவுதல் வெற்றிக்குத் தடையாகும். செய்யும் தொழில் செம்மையுற நடைபெற வேண்டும் என்றால் வீண் பெருமைக்காக அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கக் கூடாது; அதை மற்றவர்கள் அறிந்தால் அவர்கள் முந்திக் கொள்வார்கள். அது எப்படிச் செய்வது? அதனால் உண்டாகும் நன்மைகள் யாவை? இவை எல்லாம் ரகசியமாகவே வைத்துக் கொள்ள வேண்டும். முடிந்தபின் அறியட்டுமே! அதுவரை அடங்கி இருப்பது தக்கது ஆகும். மற்றும் பிறர் என்ன செய்கிறார்கள்? அவர்கள் நமக்கு எப்படிப் போட்டியாக வரக்கூடும் என்பது எல்லாம் கூர்ந்து கவனித்து வரவேண்டும். அவர்கள் செய்வது எப்படி என்பதை அறிந்து தம் தொழிலுக்கு அவ் அறிவினைப் பயன்படுத்த வேண்டும். பிறர் தொடர்பைத் தக்க வழியில் பயன்படுத்துவது அறிவுடைமையாகும். எனவே தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் மற்றவர்களைக் கவனித்துக் கொண்டும் செயலாற்றுவது வெற்றி தரும்.

சிதல் அரிக்கப்பட்ட ஆலமரம் அஃது அழிந்துவிடாமல் காப்பது அவைவிடும் விழுதுகள்; அவை அம் மரத்தைத் தாங்கிப் பிடிக்கின்றன. மக்களும் தந்தை தொடங்கிவிட்ட தொழிலைத் தொடர்ந்து காப்பது அவர்தம் கடமையாகும்.

மதங்கொண்ட யானையை அதன் கதம் அடக்கும் வலிமை உடைய வள்ளுகிர் உடைய சிங்கம் போன்ற ஆற்றல் உடையவர்கள் வீழ்நிலை உற்றபோதும் தாழ்வுறும் செயல்களில் முயலார்; சிறுதொழில் செய்து ஜீவிக்கலாம் என்று மனம் சோர்வு பெறமாட்டார்.

கரும்பின் பூக்கள் குதிரையின் பிடரிபோல் காண்பதற்குக் கவர்ச்சியாக இருக்கும். மணம் என்பது அதன் குணம் அன்று; நறுமணம் தராது. அதே போலக் குடிப்பிறப்பு மட்டும் ஒருவனை உயர்த்திவிடும் என்று கூற முடியாது. படிப்பும், பண்பும், விடாத உழைப்பும், செயலும் மட்டுமே அவனை உயர்த்திக் காட்டும்.

சோற்றுப் பிண்டங்களாய்த் தண்டசோறு தின்று கொண்டு தரித்திரராய் வீட்டில் எடுபிடிகளாகச் செயல்பட்டு ஏற்றமின்றி வாழ்வார்; அவர்கள் சோம்பேறிகள், கூழைக் குடித்தாலும் தன்மானத்தோடு வாழ்ந்து விடாத உழைப்பால் உயர்வு பெற்று ஒளிபெற்றுத் திகழ்வார்; அவர்கள் உழைப்பாளிகள். உழைப்பே உயர்வு தரும்; அண்டிப் பிழைப்பது அடிமைத்தனம் ஆகும்.

21. செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்

(சுற்றம் தழாஅல்)

சுமைதாங்கி என்ற நிலையில் மகனை வயிற்றில் தாங்கி அவள் பெற்றவை நோய்கள், மசக்கைகள் இவை எல்லாம் மகனைப் பெறும் நாள் மறுக்கிறாள். அவை இன்ப நினைவுகளாய் நிற்கின்றன. பட்ட சுமை எல்லாம் ஒரு கணத்தில் மறக்கிறாள் மகனைப் பெற்ற மகிழ்ச்சியில். அதேபோலத் தாளாற்றிப் பொருள் தேடுகிறான்; பின்பு காலாற்றிச் சுற்றத்தோடு சூழ இருந்து உண்கிறான். அவர்களோடு பகிர்ந்து உண்டு, அளவளாவுகின்றான். அவர்கள் பசியைப் போக்கிய பெருமிதம் அவனை ஆட்கொள்கிறது. காதலியின் கடைக்கண் பார்வையில் விண்ணையும் சாடுவர் இளைஞர்கள்; பிறர் வருத்தம் தீர்கிறது என்றால் விண்ணையும் வளைத்து மண்ணையும் அளந்து அல்லும் பகலும் பாடுபட யாரும் முனைவர். சுற்றத்தினரைத் தழுவிக் கொண்டு அவர்கள் துயர் தீர்ப்பதே செல்வம் பெற்றதனால் ஏற்படும் பயன் ஆகும். நல்ல ஆண் மகனுக்குக் கடமைகள் சில உள்ளன. ஆளுமை உடையவன் என்று நாளும் அவனைப் பாராட்டுவர். கோடையிலே இளைப்பாறும் குளிர் மரநிழல் என்று சொல்லும்படிப் பிறர் வாடையிலே அவர்க்கு ஆறுதல் தருபவனே சிறந்த தலைமகன் ஆவான். அது மட்டுமன்று; பழுத்தமரம் உள்ளுரில் பொது இடத்தில் இருக்கிறது. அது பலர் பசியைத் தீர்க்கிறது; சுவையை அளிக்கிறது. பலரும் பயன் பெறுகின்றனர். சுற்றத்தினர் வந்து நற்பயன்கள் பெற அவன் கற்றுண்போல் அவர்கள் சார நிற்கின்றான்; சுற்றம் போற்றுதல் நற்செல்வம் உடையவரின் கடமையும் ஆகும். அஃது அவர்கள் தாளாண்மையை அறிவிக்கும்.

செடிக்குக் காய் சுமை அன்று; காய்கள் அடுக்கடுக்காகக் காய்த்தாலும் மரம் அவற்றைத் தாங்குவதற்குத் தயங்குவது இல்லை; பழுத்துக் காய்த்துப் பயன்தரும் மரங்களே மதிப்புப் பெறுகின்றன. வெடிக்கும் துயரத்தோடு இவன் படிகட்டு ஏறி மாறி மாறி வந்து இருந்து விருந்துண்டு செல்லும் சுற்றம்கண்டு உழைப் பாளி துவண்டு போகமாட்டான். வருவிருந்து வைகலும் ஓம்புவதில் அவன் மனம் மாழ்குவது இல்லை. சுமை அவனுக்குச் சுவை, மிகை அவனுக்கு உவகை; அவர்கள் வருகை உள்ளத்துக்குத் தரும் மகிழ்மை;

சிரித்துப் பேசிச் சிருங்காரம் விளைவிக்கும் சிற்றினத்தவர் உறவு கனத்துக் காணப்பட்டாலும் அவை நாட்கள் நீடிப்பது இல்லை; வெறுத்து ஒதுங்கிவிடுவர்; மிகுத்துப் பழகி நம் துயர் வருத்த அவற்றைத் தீர்க்கும் தகையாளர் நம் சுற்றத்தினர். அவர் மிகையாளர் எனினும் நம் துயர் தீர்க்கும் மருந்தாளர் ஆவர். நண்பர்கள் நீடித்து இருக்க விரும்புவர்; சுற்றத்தவர் துயர் தீர்க்க எப்பொழுதும் ஒட்டி உறவாடுவர். நண்பர் உறவினர் நமக்குத் தேவையே எனினும் உறவுக்கு உள்ள உறுதி நட்புக்கு இருக்க வாய்ப்பு இல்லை.

நம்மை அண்டவரும் மண்டை ஓடுகள் அவர்கள் யாராக இருந்தால் என்ன? அவர்கள் தம் தலையெழுத்தை எடுத்துச் சொல்லி ஆறுதல் கூறி விலை மதிப்பு இல்லா உறவு பாராட்டினால் அவர்கள் மகிழ்வர்: ‘நீ யார்?’ எப்படி உனக்கு உறவு? உனக்கு நன்மை செய்தால் எனக்கு என்ன மேன்மை?" என்று கேள்வி கேட்டு அவர்களைப் புறக்கணித்தால் அவர் வருந்துவர். விருந்தாகிய வேள்வி செய்யாமல் இருப்பவர் கீழ்மக்கள் ஆவர். தராதரம் பாராமல் பராவரும் பண்பினர் யாவராயினும் அவர்களைச் சுற்றமாகக் கொள்பவரே ஏற்றம்மிகு மேன்மக்கள் ஆவர்.

பொன் தட்டில் புலி நகம் போன்ற புழுங்கல் சோறு, கறிகாய், வடை வகை இவற்றை அயலான் அழைக்க அருவிருந்து என அவற்றை வாரிக் கொட்டிக் கொள்வதைவிட நம் வீட்டில் இருந்து கொண்டு நம் உழைப்பில் ஈட்டிய பொருளைக் கொண்டு உப்பு இல்லாத வெறுஞ்சோறு ஆயினும் நம் சுற்றத்தவரோடு அமர்ந்து உண்பதே எக்காலத்தும் இனியது ஆகும். அதற்கு இணையான இன்பம் எதுவுமே இவ்வுலகில் இல்லை.

அவசரம், ஆவேசம், பசி, இவற்றோடு சுவைமிக்க உணவு, நடுப்பகலுக்கு முன்பே சுடச்சுடப் படைத்து உண்ண அழைக்கின்றார்; ஆனால் அவர்கள் முன்பின் பழகாத அறியாத புதியவர்கள்; அயலார்; “அய்யா! கொஞ்சம் பொறு! நேரம் ஆனாலும் ஆகட்டும்; சாயுங்காலம் வரை காத்திருக்க வேண்டுமா? பொறுத்திரு. அது ஆறிய கஞ்சியாக இருக்கலாம்; அஃது அமுதினும் இனியது ஆகும். அயலார் இடுவது கருணைக் கிழங்கு பொறியல் ஆயினும் அது வேப்பங்காய்தான். சுவை என்பது பொருளை ஒட்டியது மட்டும் அன்று. அது தருவாரது மன அருளையும் ஒட்டியும் ஆகும்.

கொல்லன் உலைக்களத்தைப் பார்; அதில் சுட்டுக் காய்ச்சப்படும் இரும்பும் அதைப் பிடிக்கும் சூட்டுக் கோலும் இணைபிரிவது இல்லை; காய் எரி புகுந்து கனத்த சூட்டில் இரண்டும் பதன்படுகின்றன. சூட்டைக் கண்டு ஒன்றை விட்டு ஒன்று விலக முற்படுவதில்லை; ஆனால் அதைப்பிடிக்கும் குறடும் அடிக்கும் சம்மட்டியும் பிரிந்து விடுகின்றன. நெருங்கிய சுற்றத்தினர் வளம் சுருங்கிய காலத்தில் ஒட்டி உறவாடுவர்; பதுங்கும் பண்பினை உடைய நண்பினர் சமயம் வரும்போது நெகிழ்ந்து தப்பித்துச் சென்றுவிடுவர். பழகுகிறவர் எல்லாம் பண்பினர் என்று கொள்ளுவதற்கு இல்லை; இளகுகிறவர் நம்மோடு இணையும் சுற்றத்தினரே ஆவர்.

இறுதிவரை நம்மோடு இணைந்து உறுதியாக உதவுவார் என்று நம்பி ஒருசிலரை நயக்கின்றாய்; மறுமைக்கும் அவர்கள் பெருமை தேடித் தருவர் என்று கருதுகிறாய். வாழும்போது நம் இன்பத்தில் பங்கு கொள்கின்றனர். ஆனால் துன்பத்தில் நெகிழ்ந்து விடுகின்றனர். மண் குதிரை; இவர்களை நம்பி வேகமாகச் செல்லும் வெள்ளத்தில் பயணம் செய்ய இயலாது. பங்குச் சந்தை சரிந்துவிட்டால் அங்குப் போடும் பணம் அரோகராதான். தங்கும் இன்பம் நிலைக்கத்தக்க சுற்றத்தினரை நயக்க; அவர்கள் பயன்படுவர்.

இருந்து முகம் திருத்தி ஈர்க்குக் கொண்டு பேன் வாங்கி விருந்து வந்திருக்கிறது என்று சொன்ன அளவில் அவள் பேயாடுகிறாள்; அத்தகைய வீட்டில் ஏதோ புத்தி தடுமாறி அழைப்புத் தந்து கொழுக்கட்டை போட்டுக் காய்கறிப் பொறியல் வைத்து “அடிகளே அமுதம் உண்க” என்று படி இறங்கி அழைத்தால் நீ உள்ளே நுழைந்தால் நெய் கமழ்க்கும். தின்றால் அந்த உணவும் கசக்கும்; வேம்பாக சுவைக்கும். ‘வந்தால் போதும்’ என்று வருகைக்கு மகிழ்ந்து ஆதனம் தந்து அமர வைத்து ஊறுகாயும் இல்லாத பழஞ்சோறு உண்ணத் தந்தால் அஃது அமிழ்தம் ஆகும். தேவரும் இந்த உணவைத் தேடி மண் உலகில் அடி எடுத்து வருவர். அன்பு என்பையும் குளிரச் செய்துவிடுகிறது.

22. நீரைப் பிரித்து அறிக

(நட்பு ஆராய்தல்)

கரும்பைக் கடித்துத் தின்ன நீ பாடம் படித்திருக்கிறாயா? நுனிக்கரும்பு அது தொடக்கம்; இனிப்பு அதன் ஆரம்பம்; மெல்ல மெல்லக் கடித்து அடிக் கரும்புக்கு வா; தொடக்கத்தில் சுவை அதற்கு அமையாது; மெல்ல மெல்ல அது சுவைக் கட்டி, சாறு சுவைக்கும். உயர்ந்தவர் நட்பு பழகப் பழக இனிக்கும். தீயவர்பால் நட்பு செல்லச் செல்லப் புளிக்கும். அடிக்கரும்பு ஆரம்பம்; நுனிக்கரும்பு முடிவு சென்று தேய்ந்து குறையும்.

ஆள் அடி உயரம் அவன் செல்வத்தின் அளவு. இவற்றைக் கொண்டு அமையாது நட்பின் ஆழம். பண்புமிக்கவரின் பழம்பெருமை குடிப்பிறப்பு. இதனை நீ அறிந்து கொள்வது முதற்படிப்பு. அவர்கள் நடுநிலைமை பிறழாத பீடும் பெருமையும் கொண்டவர். அத்தகையவரோடு நீ கொள்வது நட்பின் நன் முடிப்பு.

பருத்துக் கொழுத்த யானை அது பாகனையே கழுத்தை முறித்துக் கொல்லும். உருவுகொண்டு அவனிடம் நட்பு மருவினால் அது யானையின் உறவாக முறியும். நாய்; அலைந்து திரிவதுதான்; குலைத்துக் குலைத்துக் குமைவதுதான். அது நன்றி. கெடாது; நாயகனைக் கடிக்கத் தொடாது. நாயனைய நயத்தவரை நீ நட்பாகக் கொள்க; அது ஒட்பமாக அமையும்.

பக்கத்து வீட்டுக்காரன்; ஆனால் அவன் துக்கத்துக்குத் துணையாகமாட்டான்; எக்களித்து மகிழ்வான்; அவன் நட்பு நயக்காதே. இடத்தால் அகன்று எங்கோ வாழ்ந்தாலும் உள்ளத்தில் உண்மை உறவு கொண்டவர் பள்ளத்தில் விழும்போது படுதா இட்டுக் கொண்டு மறைந்து வாழார். கண்ணன் காரிகைக்குத் தரும் அபயமாக உபயம் செய்ய வருவர்.

கோட்டுப் பூச் சூடிக் கொள்ள அதனைக் கேட்டுப்பெற விழைவர்; மலர்ந்தால் அது கருகாது; கயத்து நீர்ப்பூ நீரை விட்டு எடுத்தாலே கள் நீர் (கண்ணீர்) விடும்; கலுழும்; கசங்கிவிடும். மலர்களுள் இத்தனை வேறு பாடா? மாந்தர் தம்முள் இந்த வேறுபாடு இருக்கும்போது மலர்கள் மட்டும் மங்கியா கிடக்கும். ஒருமுறை பழகிவிட்டால் நீங்காத நட்பு மேலோரிடம் உள்ளது. பலமுறையும் பழகியும் கசங்கி கசந்து கலுழ வைப்பர் கீழோர். அவர்கள் நட்பு. கயத்து மலர் ஆகும்.

பாக்கு மரம்; வீட்டுக்கு அழகு தருகிறது; காய்க்கிறது; பயனும் தருகிறது; ஆனால் அதை வளர்ப்பது அருமை; நீரும் சேறும் நிதமும் அமைத்தால் தான் அது பாக்கு மரம். இல்லையென்றால் அது வெறும் பார்க்கும் மரம்தான் காய்க்காது. அல்சேஷன் நாய்போல் அதனை அடிக்கடி கவனிக்க வேண்டும். கடை மக்கள் நட்பு பாக்கு மரம்; அவ்வப்பொழுது அவர்களுக்கு ஊக்கத் தொகை தந்து நட்பு ஆக்க வேண்டும்.

தென்னை மரம் ஒருமுறை நீர் ஊற்றினால் அஃது உன்னை மறக்காது; நெடுக வளர்ந்தாலும் அதன் புத்தி குறுகவே குறுகாது. காய் தரும். இடைப்பட்டவர் ஒரு முறை தரும் உதவிக்கு வாழ்நாள் வரை நன்றி காட்டுவர்.

பனை மரம் தானே வளரும்; தானே காய்க்கும் தானே தரும்; பிறர் உதவிக்கு அது கை நீட்டுவதில்லை. வள்ளல் சாதி அது. அத்தகைய நட்பை உள்ளுக; இவர்களே தலையாய நட்பினர்.

அரிசி களைந்த கழுநீர்; அதுதான் அப்பொழுது கிடைத்தது; நல்லநீர் கொண்டுவர அவள் நாலுகாதம் செல்ல வேண்டி இருக்கிறது; கறிகாய் அதைப் பறி என்றால் அதனை அறியேன் என்கிறாள். பசிக்குச்சோறு; புசிக்க வேறு தேவைப்படுகிறது. கொல்லைப் புறத்துக் கீரை அதனைப் புளியும் உப்பும் சேர்த்து அரைகுறை யாக வேக வைத்து ‘உண்க அடிகளே’ என்று அமுத மொழி பேசிப் பரிமாறுகிறாள். சூடாக இருக்கிறது உணவு, குளிர்கிறது அவள் வார்த்தைகள். அமுதம் என்று கூறி அக மகிழ்வோடு உண்கின்றனர் வந்த விருந்தினர்; அகம் நக ஒளிவிடும் நட்பு இது.

தடபுடலான வரவேற்பு; புடலங்காய்க் கூட்டு; எல்லாம் வெத்து வேட்டு, நீளம் அடி நான்கு தலைவாழை இலை; பரபரப்பு; சுறுசுறுப்பு, சலசலப்பு. எல்லாம் அடுக்கி வைக்கப்படுகின்றன. எடுத்து இட ஆள் இல்லை; நட்சத்திர உணவகம்தான்; அலுத்து விடுகிறது. இதுவல்ல நட்பு; இது வெறும் நடிப்பு.

நாய்க்கால் சிறுவிரல்களை எப்பொழுதாவது கவனித்தது உண்டா? அவை சேர்ந்தே இருக்கும். பிரிக்கவே முடியாது. அழகான உவமை. அதுபோல் சேர்ந்தே இருப்பர்; அவர் நட்பர். ஆனால் ஈய்க்கால் அளவு உதவ வாய்க்கால் அங்கே சிறிதும் ஏற்படாது. பேய்க்கால் அவர்கள் உறவு; நிலைத்து ஊன்றி நிற்காது. சேண் தூரம் இருந்துதான் கொண்டு வரவேண்டும் வாய்க்கால் நீர்; அது வயலில் விளைக்கும் செந்நெல்; வாழ்வு அளிக்கும். அத்தகையவர் உயர் நட்பினர் ஆவர்.

நல்லது நான்கு நவின்றால் நீ செவி கொடுத்துக் கேட்பாயா? கேள். தெளிவில்லாத முரடர் அவர் நட்பைவிட அவர்கள்பால் கொள்ளும் பகைமை தகைமை, நோய்வாய்ப்பட்டு நொந்து நித்தம் நித்தம் சத்தம் இட்டுக் கொண்டிருப்பதைவிட மொத்தமாக உயிர்விடுவது உயர்வு ஆகும். பண்பட்ட நண்பரைப் புண்பட்ட சொற்களில் தாக்குவதைவிட அவரை அடித்துக் கொன்றுவிடு; இல்லாததைச் சொல்லி நல்லவர் இவர் என்று நற்சொல் கூறி மேலுக்குப் புகழ்வதைவிட வசைச் சொற்கள் நான்கு பேசிக் கற்கள் வீசுவதைப் போலக் கடிந்து உரைப்பது கவின்மிக்க செயலாகும்.

நட்பைத் தேடும்போது நாள்பல ஆயினும் நயத்தக்கவரை நாடி நட்டாகக் கொள்க. பாம்போடு உறவு கொண்டாலும் பிரியும்போது அது வேம்பாக அமையும். பிரிய மனம் வராது; அதனால் தீயவர் நட்பு தவிர்க. அவர்களைப் பின் விட்டு விலக இயலாது.

23. ஒருவர் பொறை இருவர் நட்பு

(நட்பிற் பிழை பொறுத்தல்)

உமி உண்டு என்பதால் நெல்லை நெகிழ்ப்பார் இல்லை; நுரை உண்டு என்பதற்காக நீரைக் குறை கூறி ஒதுக்கமாட்டார்கள். புல்லிதழ் அதன் புறத்தைச் சுற்றிக் கொண்டு அதன் நிறத்தைக் கெடுக்கிறது என்பதால் நறுமலரை வீசி எறியமாட்டார்கள்; அவைபோல நண்பனின் பழமை பாராட்டி அவன் கிழமையில் எந்தக் குறையும் காணாதே.

கரையை உடைத்துக் கொண்டு நீர் வயலில் பாய்கிறது; கரையை உடைத்துவிட்டது என்பதால் அதன் மீது சினம் கொண்டு அதனை கண்டபடி ஓடவிட்டால் அஃது பயிரை அழிக்கும். வயலுக்கு நீர் தருவார் யார்? நீரோடு நீர் ஊடல் கொண்டால் பயிர் வாடல்தான் மிச்சம். நீரைக் கட்டுப்படுத்தி அதனை மீண்டும் பாய விடுக! பழகிவிட்ட நண்பர் உரிமை பற்றித் தவறுகள் மிகையாகச் செய்துவிட்டாலும் பகையாகக் கொள்ளாது நகையாகக் கொள்வதுதான் தகையாகும்.

சரிதான்; அளவுக்கு மீறித் தவறு செய்துவிட்டான். யார் அவன்? உன் நண்பன்; பலகாலம் பழகியவன்; அந்தப் பழமையைப் பார்க்க வேண்டாமா? உடனே நீ சீறிச் சினந்தால் அவன் உன்னை விட்டு விலகி விடுவான். ஒருவர் காட்டும் பொறுமை இருவர் தம்முள் உள்ள நட்பை நிலைநிறுத்தும். “ஒருவர் பொறை இருவர் நட்பு” இத்திருவாசகத்தை நாளும் கடைப்பிடிக்க நட்புக் கெடாது,

பழகிவிட்ட பிறகு அவர்களை ‘அழகன்று’ என்று அவர்களை விலக்குதற்கு முயன்றாலும் அவர்கள் மழகன்று போல் உன்னையே சுற்றி வருவர். நெஞ்சில் மூட்டும் தீபோல அவர்கள் எரிச்சலை ஊட்டுவர் என்றாலும் அவர்கள் பிழையைப் பொறுப்பது நமைச்சலைத் தாங்கிக் கொள்வதுபோல் ஆகும்.

நல்லது செய்தல் ஆற்றார் எனினும் அவனை விட்டுவிட முடியாது. நட்புக்கொண்டவன், நயத்தக்க நாகரிகம் உடையவன், அவனை எப்படி விட்டுவிட முடியும்? நெருப்பு சுடத்தான் செய்கிறது; பொலிவுமிக்க வீட்டினையும் எரிக்கவல்லது. நெருப்பு இப்படிப் பேரழிவுகள் செய்கிறது. அதற்காக நெருப்பே மூட்டமாட்டோம் என்றால் அடுப்பு எரியாது; வயிறு கடுப்புத்தணியாது. யாரும் நெருப்பு இன்றி வாழ முடியாது. பருப்பில்லாமல் கலியாணம் இல்லை; பகுப்பு இல்லாமல் வகுப்பு அமையாது. தொகுப்பு என்ற நிலையில் பார்த்தால் உன் நண்பனை வெறுப்புக் கொண்டு ஒதுக்க இயலாது.

செறிவு கொண்டு பழகியபின் அறிவு கொண்டு அணைத்துக் கொள்பவரே சான்றோர் ஆவர். பிழைகள் சில கண்டு அவன் உடன் பழகுதல் தவிர்ப்பது அழகு அன்று: கண்ணைக் குத்திவிட்டது என்பதால் ஒருவன் தன் கையை வெட்டிக் களைந்துவிட முடியுமா? அவர்களிடத்து உள்ள குறைகளை எடுத்து அறைபறை செய்தால் அவர்கள் நீசர் ஆவர்.

பகைவர் அவர்கள் நமக்கு மிகைவன செய்வர் எனினும் அவற்றை மிகைப்படுத்தி வருந்தற்க; அறியாமை அவர்களை ஆட்கொண்டுள்ளது என்று அவர்களை மன்னித்துவிடு; தூயவர் ஆகிய நல்லோர் தவறுகள் செய்துவிட்டார் என்றாலும் அவர்கள் தெரிந்து செய்தவை என்று கொள்வது தவறு ஆகும். நண்பனோ, பகைவனோ, யாவனோ எவனாயினும் என்ன? நட்பின் வகை அறிந்து அவர்கள் தகைமையைப் போற்றிப் பழகி வாழ்வதே சிறப்பு ஆகும்.

ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டு அது சேறு என்று கூறினால் அது யார் தவறு? குறை நிறைகளை ஆய்ந்தே நிறை உடையவர் என்று கண்டபின்பே நண்பனைத் தேர்ந்து எடுக்க வேண்டும். தாலி கட்டிக் கொண்ட பிறகு வேலிபோட்டுக்கொண்டு விவாகரத்துக் கோருவது விவேகமன்று. ஏறக்குறைய நல்லது பொல்லது பார்த்து அறுத்துக் கொள்ளாமல் பொறுத்துக் கொள்வது நட்பிற்கு அழகாகும். செறிவுமிக்க நட்பு என்றால் பிரிவு அதனைத் தாக்காது.

24. கழுத்தறுப்புகள்

(கூடாநட்பு)

இருக்கும் வீடு ஓலையிட்ட கூரை, அது கிழிச்சல்; சுவர்கள் கசிவு; நீர் அதனைக் குளிர்சாதன அறை ஆக்குகிறது; தரை சேறு, சறுக்கி விளையாடலாம்; வெள்ளம் அணை தேடிக் கதவை முட்டுகிறது. நீர்ப்பஞ்சம் இனி இருக்காது; ஏன் வீடே அடித்துச் சென்றுவிடும். என் செய்வான் பாவம்! நீரை எறித்துக் கரை ஏற்றுகிறான். பெட்டி படுக்கை தட்டு முட்டு ஒட்டை உடைச்சல் இவை தாக்கப்படுகின்றன. அவை காக்கப்படுகின்றன; அந்த வீட்டை விட்டு ஏன் வெளியேற மறுக்கிறான்? அது அவமானம்; பலஹீனம், சுகஈனமும் ஆகிவிடும். நூறு குறையிருந்தாலும் அதைவிட்டு வேறு இடம் பார்ப்பது இல்லை. பொறுத்தே செயலாற்ற வேண்டும். அங்கு வாழவே முடியாது என்றால் அதை விட்டு விலகத்தான் வேண்டும். நட்பும் அப்படித்தான்; பழகியவன் பெருச்சாளி; அடித்து விரட்ட முடியாது. பொறுத்துக் கொண்டு மெல்ல அவனிடம் இருந்து வெளியேறுவதுதான் புத்திசாலித்தனம்.

சீர்மிக்க நல்லோர் நட்பு கார் காலத்து மழை போன்றது; வாழ்வுக்கு உதவுவது. பேர்கெட்ட தீயோர் நட்பு வற்றிய வறற்காலம் போன்றது.

சுவர்க்கம், நரகம் இவை நாம் தேடிக்கொள்வன; நுண்ணுணர்வு மிக்க கண்ணியவான்களின் தொடர்பு சுவர்க்கம்; அறிவு என்பதன் அகராதி இல்லாத முகராசிகளுடன் தொடர்பு சுவர்க்க நீக்கம்; நரகம், இவை நாம் படைத்துக் கொள்வன.

பந்தமோ பாசமே இல்லாது வந்து சேர்ந்த நட்பினர் தொடர்பு காட்டுத் தீ போலப் பற்றும்; வைக்கோற் போர் போல் வானை முட்டும்; பிறகு நெருப்பு இருந்த இடம் கூடத் தெரியாமல் மறைந்துவிடும். மிக்க ஒளிவிட்ட நட்பு தோன்றிய கணத்தில் மறைந்துவிடுகிறது. இது கூடா நட்பு.

நண்பன் என்று அவனை நாடுகிறாய்; வானத்தை வளைத்துக் கயிறாக ஆக்கித் தருகிறேன் என்கிறான்.

8 நிதானமாகச் செய்யத்தக்க காரியங்களையும் செய்யாது ஏய்க்கிறான் “இதோ இன்று; அதோ அன்று” என்று என்றும் பேசிக் காலம் கழிக்கும் குன்று.அவன். அவனைச் சுற்றிக் கொண்டிருப்பது நன்று அன்று; நட்புதான் ஆனால் அதுகூடாத ஒன்று; பயனற்றது.

தொட்டகுளம் ஒன்றுதான்; வெட்ட வெறிச்சம்; அதில் கழுநீர்ப்பூவும் ஆம்பலும் பக்கத்துப் பக்கத்துக் குடி வாசிகள்தாம்; கழுநீர் வழுவுடையது; ஆம்பல் விழுப்பம் மிக்கது; வாசனைகள் வேறு; இது அது ஆகாது. அது இது ஆகாது. கீழோர் கீழ் மக்கள் தாம்; மேலோர் மேவ்மக்கள் தாம். பிறப்புக்குணம் அவரவர் களை விட்டுவிலகாது; அத்தகையவர் உறவு உனக்கு ஆகாது.

குட்டிக் குரங்குதான்; அது தன் நெட்டைத் தந்தையுடன் ஒட்டி உறவாட மறுக்கிறது.தந்தைக் குரங்கு கையகத்துப் பலாவைத் தட்டிப் பறித்துச் செல்கிறது. அப்பனுக்கும் மகனுககும் எவ்வளவு நெருங்கிய ஒற்றுமை; மட்டு மரியாதை மறந்துவிட்டால் இனி அப்பன் என்ன சுப்பன் என்ன? உறவு ஒட்டவில்லை என்றால் எட்டிப் போவது நல்லது.

ஆபத்துக்கு உதவாத அவன் பாவத்திற்கும் அஞ்சமாட்டான். உயிரையும் தந்து காப்பதாக உறுதி கொடுத்த தோழன் பெயரையும் கூறாமல், “வந்தது சொல்ல வேண்டாம்” என்று இவன் படுக்கையில் கிடந்தாலும் நெகிழ்ந்து விடுகிறான். “இவன் எல்லாம் உன் தோழன்” என்று ஆழமான நட்பைக் காட்டினாயே அவன் உன்னைக் குழி தோண்டிப் புதைக்கும்போது விழிகளில் நீர்மல்க வந்து அழுது நடிப்பான்; துடிப்பான்; பழம் நட்புப் பேசிப் படிப்பான்; கவலைப்படாதே! அழுவதற்கு ஒரு ஆள் இருக்கிறான்.

நன்மை கருதும் நண்பனைக் கைவிட்டு விட்டு நயமாகப் பேசி நடிக்கும் புன்மையனை நயப்பது நெய் ஊற்றும் கிண்ணத்தில் அதை நீக்கிவிட்டு வேம்பு அதன் நெய் நிரப்புவது போல் ஆகும். இனிமை கெடுகிறலு: கசப்புப்படுகிறது. தீய நட்பு நீக்குக; கட்டுவிரியன் காட்சிக்கு அழகு தருவது; அதனோடு பிணை இணைகிறது; இறுதியில் ஆண் நாகம் அதனை அறவே விட்டு விலகுகிறது. நண்பர்கள் நயமாக உரையாடுவர்; கவர்ச்சிமிக்கவராகக் காணப்படுவர். புகழ்ச்சிக்கு உரியவர் போல் தோற்றம் அளிப்பர். ஆனால் எந்த அளவும் நன்மை செய்யமாட்டார்கள். இவர்கள் கட்டு விரியன்கள்; நாமே தேடிக் கொள்ளும் சனியன்கள். குடிக்கும் பால் என்று நினைத்தால் அவர்கள் வெறும் கலப்படம்தான்; தண்ணீர்தான் புலப்படும்.

25. அறிவே ஆக்கம் தரும்

(அறிவுடைமை)

அறிவு என்பது அறிந்து செயல்படுதல்; எப்பொழுது எது செய்தால் அது நன்மை தருமோ அப்பொழுது அதனைச் செய்வது அறிவுடைமையாகும். முளையிலே களைந்துவிடலாம் என்று பகைவன் மெலிந்திருக்கும் நிலையில் அவனைத் தாக்குவது தற்காலிக வெற்றி தரலாம். “நொந்து கிடப்பவனை இவன் நோகடித்தான்” என்று இந்த உலகம் பழிதூற்றும்; எதிரி தலை நிமிர்ந்து வாழும்போது நல்லது கெட்டது காண அவனோடு மோதினால் அஃது ஆண்மை; அந்த வெற்றி நிலைத்து நிற்கும்; குறுக்கு வழி சறுக்கிவிடும். திங்கள் பிறை வடிவில் இருக்கும்போது இராகு கேது இவை அதனைப் பற்றா, முற்றி வளர்ந்த நிலையிலேயே அவை அதனைச் சுற்றும்;; அதுவே அதற்குப் பெருமை: கடன்பாக்கி கேட்பதாக இருந்தால் அவன் கையில் காசு உள்ளதா என்று கவனிக்க வேண்டும்; சட்டி பானை தெருவில் எறிகிறேன் என்றால் அது குன்று முட்டும் குருவியின் செயல் ஆகும்.

ஏழைகள் என்றும் அடங்கி இருப்பது அவர்களுக்கு ஏற்றம் தரும்; நிறை குடம் தளும்பாது; குறை குடம் நீர் தளும்பினால் உள்ளதும் வெளிப்படும். அடக்கம் இல்லை என்றால் அவனை மற்றவர்கள் முடக்கிவிடுவர். அவனைப் பற்றி ஆதியோடு அந்தமாக நீதிகேட்டு விமரிசிப்பர். தப்பிப் பிறந்தவன் என்று அவன் பிறப்பில் தப்புக் காண முற்படுவர். உலகம் அவனை ஒப்புக் கொள்ளாது. அடக்கம் உயர்வு தரும்; அதுவே பிழைக்கும் வழி; அடங்காமை நிறை வறுமையுள் ஆழ்த்தி விடும். இல்லாதவர்கள் அவசரப்படக்கூடாது. வாய்க் கொழுப்பால் மண்ணைத் தலையில் வாரிக் கொட்டிக் கொள்ளக்கூடாது.

எட்டிக்காய் எட்டிக் காய்தான்; அதனை எந்த நிலத்திலும் விதைத்தாலும் அது தென்னையாக மாறவே மாறாது. அனைவரும் உயர்வுதரும் சுவர்க்கம் புகுவர் என்று கூறமுடியாது; ஒரு சிலர்க்கே அந்த வாய்ப்பு அமைகிறது. அதற்காக அங்கலாய்ப்புப்பட்டால் பயன் இல்லை.

வேப்பம் இலை நடுவே வாழை பழுக்கிறது என்றாலும் வாழை தன் இனிமையை இழக்காது. மோப்பம் பிடிக்கும் நாய் போன்ற இழிந்த இனத்தவர் ஒரு சிலர் ஒருவனைச் சுற்றிக் கொண்டாலும் அவன் சுய அறிவு இயல்பாக உடையான் தன்சால்பு குறையான்.

சொந்த புத்தி கெடாமல் இருக்கும்போது ஒருவன் யாரோடு சேர்ந்தால் என்ன? பழகினால் என்ன? அவன் மனம் உறுதியாக இருக்கும்போது அவனை மடத்தனம் வந்து ஒன்றும் செய்யாது; கடற்கரைதான்; நீர்தோண்டிப் பார்த்தால் நல்ல குடி தண்ணணீர் ஊறுகிறது; மலைப்பகுதி தான்; அங்கே உப்புத் தண்ணீர் சில சமயம் சுரக்கிறது; வியப்பாக இல்லையா? நிலத்தியல்பால் நீர் திரியும் என்பார் வள்ளுவர். நீர் தன் நிலை கெடாமல் இருக்க வாய்ப்பு உள்ளது என்று நாலடியார் கூறுகிறது; புதிய கருத்து. இரண்டும் இரு கண்ணோட்டங்களில் உண்மையானதுதான்; கெடுவதற்கு வாய்ப்பு உண்டு; கெட வேண்டும் என்பது நியதி இல்லை; மாறுபட வாய்ப்பு உண்டு; கெட வேண்டும் என்பது நியதி இல்லை; மாறுபட்ட கருத்துக்கள் அல்ல; துணை நிற்பன இவை.

நட்பு என்பது பூப்போன்றது; அது மலர்ந்து இருந்தால் தான் மணம் வீசும்; பூ வாடிவிட்டால் அதனை யாரும் நாடார். நட்பு அஃது ஒட்பு உடையது; எடபொழுதும் ஒரே தன்மையது; கூம்பலும் மலர்தலும் இல்லாமல் ஒரு பூ இருந்தால் அதனைச் சிநேகிதத்திற்கு உவமை கூறலாம். எப்பொழுதும் ஒரே நிலையில் எப்பொழுதும் ஒரே நிலையில் பழகுபவரே பண்புடைய நண்பினர் ஆவர்.

சொன்னால் புரிந்து கொள்ளத் தேவை இல்லை; உணர்த்தினாலேயே உணரும் உயர்வு உள்ளவரே உயர்ந்த நண்பர் ஆவர்; பன்னிப் பன்னிப் பலமுறை எடுத்துப் பகர்ந்தாலும் செவியில் சேர்க்காத முரடர்கள் அவர்கள் தொடர்பினை அறுத்துக் கொள்வதுதான் ஆக்கம் தரும்; துன்பத்தினின்று விடுதலை கிடைக்கும். உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும். மெல்லிய உணர்வுகள் துல்லியமாக அறிபவரே நல்லியல் உடையவர் ஆவர்.

உன்னை நீதான் உயர்த்திக் கொள்ள வேண்டும்; யாரோ வந்து கைதுக்கி விடுவார்கள் என்று பைதுக்கிச் செல்ல வேண்டாம். தன்னை உயர்த்துபவனும் தான் தான்; தாழ்த்திக் கொள்பவனும் தானே தான். நிலையில் இருந்து படிப்படியாக வளர்பவனும் அவனேதான். எல்லாம் அவரவர் கைகளில்தான் இருக்கிறது; அழித்துக் கொள்ளலாம்; விழித்துக் கொள்ளலாம்; எப்படியும் வாழலாம்.

கப்பல் கரை சேர்கிறது என்றால் கலத்தின் மாலுமிக்குப் பாராட்டு; அவன் தன் கடமையில் கருத்துன்றினான் என்பது அதன் விருத்தம்; எடுத்த கருமத்தைத் தொடுத்து முடிக்கவும்; தெய்வம் கொடுத்த பொருளைக் கொண்டு இன்பம் துய்க்கவும்; மகிழ்ந்து உண்க. அதற்கு மேல் ஒருபடி, அதை நீபடி ஆன்றோர் சொற்படி தருமத்துக்குக் கீழ்ப்படி. இயன்றவரை தருமவினை கடைப்பிடி; இவையே வாழ்க்கைப் படிகள்: இம்மூன்றையும் விடாப்பிடியாகக் கொண்டு நடந்து கொள்க. வாதம் விடுக; தருமத்தில் பிடிவாதம் காட்டுக.

26. படித்துக்கொண்டே இரு

(அறிவின்மை)

நுட்பமான அறிவு இல்லை என்றால் அவர் வறியவருக்கு நிகராவார்; ஒட்பமான அறிவு உடையவர் பெருஞ் செல்வருக்கு நிகராவர்; பேடிகள் பெண்மை அவாவுகின்றனர். பெண்களைப் போல் தம்மை அலங்கரித்துக் கொள்பவர். பயன்? அவர் பெண் ஆக முடியாது. அத போல ‘கலகல’ என்று தன்னை மிகைப்படுத்திக் கொள்பவர் கல்லாதவர், ‘பொல பொல’ என அறிவுடையவராகத் திகழ்வது அவர்களால் இயலாது.

இதனை நினைத்துப் பார்த்தாலே வியப்பாக உள்ளது; நூல் பல கற்றவர்; அவர் வீட்டு அடுப்பில் பூனை தூங்குகிறது. கேட்டால் “இனிமேல்தான் கடைக்குப் போக வேண்டும்” என்று கதைக்கிறாள் அந்தக் கற்றவர் மனைவி; “என்னய்யா நீ பல நூல் கற்று எல்லாம் தெரிந்தவராக இருக்கிறாய்; பஞ்சப் பாட்டுப் பாடுகிறாயே” என்று கேட்டால் அவர் தன் வீட்டில் மாட்டி வைத்திருக்கும் சரசுவதியின் படத்தைக் காட்டுகிறார். “இரண்டு படத்துக்கு இங்கு இடமில்லை” என்கிறார். “திருவேறு தெள்ளியராதல் வேறு, இந்த உலகத்தின் இயற்கை இது” என்று கூறுகிறார். “கலைமகள் இங்கு இருப்பு; மலர்மகள் உள்ளே வர மறுக்கிறாள்” என்று நகைத்துக் கொண்டே விடை தருகின்றார். கல்வியே பெருமை தருவது என்பது உணர்த்தப்படுகிறது. “பள்ளிக்குச் செல்லு” என்று படித்துப் படித்துக் கூறினார் பையனின் தந்தை; துள்ளிக் குதிக்கும் பருவம்; எள்ளி நகையாடினான் அன்று. அடித்தும் பார்த்தார். படியாத மாடாகிவிட்டான். ‘கல்’ என்று சொன்னால் அவன் அது 'தக்க சொல்' என்று எடுத்துக் கொள்ள வில்லை. இன்று அவன் நிலைமை என்ன? பலபேர் கூடியிருக்கும் அவையில் நீட்டோலை வாசிக்க முடியாத நெடுமரமாக நிற்கிறான். ‘ஏடு அறியேன் எழுத்து அறியேன்’ என்று நாடோடிப் பாடல் பாடுகிறான். அவன் அங்கே நிற்க முடியாமல் நாணி அந்த இடத்தை விட்டு ஓடோடி வந்து சேர்கிறான். கல்லாதவன் நிலை இதற்கு மேல் எப்படிச் சொல்ல முடியும். அன்று அடித்துத் திருத்தியபோது படித்துத் தொலைக்காதவன் இன்றுபடும் வேதனை இது.

இரும்பு அடிக்கின்ற இடத்தில் ஈயிற்கு என்ன வேலை? அந்தச் சூடு அது தாங்காது. கற்றவர் அவையில் கல்லாதவன் செல்வது அவனுக்கு எந்தப் பயனும் விளையாது. அவன் வாயைத் திறந்தால் நாய் குரைக்கிறது என்பர். அவன் எதுவும் உரையாமல் இருந்தாலும் நாய் கிடக்கிறது என்பர். கத்தினாலும் தப்பு; சத்தமில்லாமல் சுத்தமாக இருந்தாலும் அஃது ஏற்கப்படுவது இல்லை.

படித்தவன்தான்; பட்டம் பெற்றவன்தான். ஆனால் முழுவதும் கல்லாதவன்; அவன் வாயைத் திறக்கிறான். சும்மா இருந்தால் சுகம்; தன் கல்வித் திறனைக் காட்ட உளறுகிறான். ஆழப்படிப்பு இல்லை; புதிதாகத் தெரிந்து கொள்ளும் ஆவலும் இல்லை. அவர்கள் கற்றவர்கள் என்று கருத முடியாது. மேலும் கற்பதே கல்வி என்று கருதப்படும். தொடர்ந்து நூல்களைக் கல்லாமை அறிவு விளக்கத்திற்குத் தடையாகும்.

அவனைப் பார்த்தால் படித்தவன்போல் தெரியவில்லையே என்று ஒருசிலர் பேச ஆரம்பிக்கின்றனர். ஏன் அவையின்கண் அடங்கி இருக்கத் தெரியவில்லை. அவசரப்படுகிறான்; அடித்துப் பேசுகிறான்; அவன் படித்தும் பேதை என்பதைக் காட்டிக் கொள்கிறான்.

தட்டிக் கேட்க ஆள் இல்லை என்றால் தம்பி சண்டப் பிரசன்டன் என்பார். பனை ஒலை சலசலக்கிறது; அதில் பசுமை இல்லை; பச்சையோலை சல சலப்பு செய்வது இல்லை; அது ஈரம் தாங்கி நிற்கிறது; கற்ற அறிவாளிகள் அடக்கம் காட்டுவர்; அருமையாக ஒருசில பேசினாலும் அவை பெருமை காட்டக் கூடியவை; ஆய்வுக் கருத்துகள் மிகச் சிலவாகத்தான் இருக்கும்; அதை உலகம் வியந்து வரவேற்கிறது. நுட்பமாகப் பேசுபவர் மிகுதியாகப் பேசிக் கொண்டிருக்கமாட்டார்கள். கத்திப் பேசினால் கற்றவன் என்று மதித்துவிடமாட்டார்கள்.

பன்றிக்குக் கூழ் ஊற்றும் தொட்டில் அதில் மாம்பழச்சாறு ஊற்றினால் அந்தப் பன்றிக்கு அதன் அருமை தெரியப்போவது இல்லை. பாறைக் கல்லிலே முளைக்குச்சி அடித்தால் அது பிளவுபடப் போவது இல்லை; செவிடன் காதில் சங்கு ஊதினால் அது மற்றவர்களைத்தான் செவிடாக்கும். அரிய கருத்துகளை அறிந்து பயன்படுத்திக் கொள்வார் முன்பே அவற்றைக் கூற வேண்டும்; பல்லில்லாத கிழவிக்குக் கல்முறுக்குத் தந்தால் அவள் என்ன செய்ய முடியும்? முறுக்கு கல் என்பாள்; கல்வி கடுமை என்பான் கல்லாதவன்.

கரித்துண்டு அதை வெளுத்துக் கட்டுவது என்று ஒருவன் பாலில் கழுவி அதை உலர்த்துகிறான்; அது உளுத்துப் போகுமே அன்றி நிறம் மாறாது கருப்பு நாயை எவ்வளவுதான் தேய்த்துக் குளிப்பாட்டினாலும் அது வெள்ளை நிறம் பெறாது. முரடன் படிக்க மனம் இல்லாதவன் அடித்து அடித்துப் படிக்க வைத்தாலும் அவன் மண்டையில் ஏறப் போவது இல்லை; இந்த மாட்டு ஜென்மங்கள் சில இருக்கத்தான் செய்கின்றன. என் செய்வது?

நறுமலர் பூத்த நந்தவனம்தான்; அங்கே தேனீ கழன்று திரியும்; தேனருந்தும்; பயன்பெறும். கழிசடையில் மேயும் ஈ அதனைப் ‘பூந்தோட்டத்துக்குப் போ’ என்றால் அதற்கு “ஆவல் தனக்கு இல்லை” என்று குப்பைக் கூளம் தேடித்தான் சல்லும்; அது அதன் வாழ்வு முறை. அறிவு தரும் நூல் நிலையம் சென்று ஏடுகளைப் புரட்டிப் பார்க்க விரும்பாதவர் பகல் காட்சிக்கு வெய்யிலில் கியூ வரிசையில் நிற்பர். மட்டமான படங்களைப் பார்க்கச் செல்வரே அன்றித் திட்டமிட்ட கல்வியை நாடமாட்டர்கள் சிலர்.

கற்றவர் கூறும் கசடு அற்ற ஞானம் அஃது அவனைக் கவரவில்லை; ஈர்க்கவில்லை; ‘அறுவை’ என்று சொல்லிவிட்டுக் கேளிக்கை விரும்பும் வேடிக்கை மனிதரோடு உல்லாசப் பேச்சுப் பேச அவர்கள் சகவாசத்தை நாடிச் செல்வர். கல்விமேல் நாட்டம் செலுத்தமாட்டார்கள்.

27. பணம் படைத்தும் என்ன பயன்?

(நன்றியில் செல்வம்)

விளாமரம் பக்கத்திலேயே காய்க்கிறது. அதன் மணம் மூக்கையும் துளைக்கிறது. வவ்வால் அருகிருந்தும் அதைத் தின்னச் செல்வது இல்லை. அது அதற்குப் பயன்படாது.

செல்வர்கள் மிக அருகில்தான் இருப்பார்கள் என்றாலும் மானம்மிக்க நல்லோர் அவரிடம் சென்று உதவிக்குக் கேட்கமாட்டார்கள். அச்செல்வம் பயன்படாத ஒன்று யாருக்கும் பயன்படாது. அவர்களே வைத்துப் பூஜிக்கிறார்கள். என்செய்வது?

அள்ளிக்கொள்ளத் தக்கவகையில் கள்ளிப் பூக்கள் பூத்துக் கிடக்கின்றன. அவற்றை யாரும் தலையில் சூடிக் கொள்வது இல்லை; சென்று பறிப்பதும் இல்லை. கீழ் மக்கள் செல்வம் மிக்கு வைத்திருந்தாலும் அறிவுடையவர் அவர்களைத் தேடிச் செல்லார்.

அடுத்த வீட்டு ஆசாமி, கொடுத்துப் பழக்கமில்லாத கருமி, அவனிடம் அவசரத்துக்கு என்று கேட்டால் சராசரி மனிதனாகக் “கொடுப்பது இல்லை” என்று கைவிரிப்பான். அவன் 'கடல் நீர். உவர்க்கும்; யார்க்கும் குடிக்கப் பயன்படாது. கிணறு சிறிதுதான்; அதன் தண்ணிர் பருகப் பயன்படும். செல்வம் படைத்தவர்கள் நல்ல உள்ளம் படைத்தவராக இருப்பது இல்லை. ஏழைகளே ஒரளவு அவசரத்துக்கு ஆறுதல் காட்டுவர் என்று கருதப்படுகிறது. இதில் ஏழை பணக்காரன் என்ற பேதம் இல்லை. கஞ்சத்தனம் இருசாராரிடமும் உள்ளது. நல்லவர்கள் எங்கோ ஒரு சிலர் நன்மை செய்து கொண்டு இருப்பார்கள். அவர்களைத்தான் வறியவர் நாடுவர்; தேவைப்பட்டவர் தேடிச் செல்வர்; நாடிய பொருள் அங்குக் கைக்கூடும்.

கரிமுள்ளிச் செடியும், கண்டங்கத்திரியும் யாருக்குமே பயன்படுவது இல்லை. இவற்றைப்போல ஒரு சிலர் செல்வம் பிறர்க்குப் பயன்படாமல் சீரழிகிறது. என் செய்வது; தேவை உடையவரைச் செல்வம் நாடுவது இல்லை. தேவை அற்றவரிடம் அது சேர்ந்து பதுங்கிக் கொள்கிறது.

நல்லவர்கள் செல்வம் பயன்படுபவை; பலர் இருக்கிறார்கள் கஞ்சத்தனம் உடைய கீழ்மக்கள்; அவர்களிடம் செல்வம் தஞ்சம் புகுந்து கொண்டு வெளிவர மறுக்கிறது. என் செய்வது?

நற்குணம் மிக்க பொற்புடையாரிடத்து வறுமை அடைக்கலம் புகுகிறது; பலாப் பிசின் போல ஈயாத கஞ்சன்பால் செல்வம் ஒட்டிக் கொள்கிறது. இது வியப்புக்கு உரியது; இந்த நிலை மாறவேண்டும். உடையவர் இல்லாதவர் என்ற பேதம் நீங்கினால்தான் சமுதாயம் சீர்படும்.

தாமரை மலரில் தாள் வைக்கும் பொன்மகளே நன்மக்களை விட்டு விட்டுப் புன் மக்களைக் காக்கிறாள்; ஏன்? சிந்தித்துப் பார்க்க வேண்டிய சீர்கேடு இது, பணம் எங்கும் முடங்கிக் கிடக்கக் கூடாது. அது பொருளாதாரச் சீர்கேடு; இது மாதிரிதான் வாழ்க்கை இன்பமும்.

சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று எங்கே அழைப்புக் கிடைத்தாலும் நுழைப்புக்குப் பின் வாங்கமாட்டார்கள் அற்பர்கள்; மானம் மிக்கவர் எவ்வளவு தூரம் நடக்க வேண்டி இருந்தாலும் உள்ளது சோறும் நீரும் போதும் என்ற எளிய உணவு உண்டு அமைதி காண்பர். அலைச்சல் என்பது அவர்கள் உளைச்சலில் காணமுடியாது. அலைகிறவர்கள் வாழ்க்கையின் நன்மையைத் தொலைத்தவர் ஆவார்.

நெற்கதிர்கள் நீர் இல்லாமல் வாடுகின்றன. அவற்றை வாழ வைக்கும் பொறுப்பை மேற்கொள்ளா மல் மழை நீர் கடலுள் பெய்கிறது. இதைப் போல் அறிவற்றவர் கைப்பட்ட செல்வம் செறிவு அற்ற செயல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். வீண் விரயம் ஆக்குகின்றனர். ஏன் என்று கேட்க ஆள் இல்லை; இன்னும் இந்தச் சமூகம் விழிக்கவில்லை.

நுண்ணுணர்வு அற்ற பேதைகள் நூல் பல படித்தாலும் அவர்கள் அறிவு பெருக்கிக் கொள்வது இல்லை. அதுபோல பேதையரிடத்துப் படும் செல்வம் மேதகு செயல்களுக்குப் பயன்படுவது இல்லை. செல்வம் இருந்தும் செல்வம் ஒழுங்குபடுத்தப்படுவதில்லை; சிந்தித்துப் பார்க்க வேண்டிய செய்தி இதுவாகும்.

28. ஈயாத உலோபிகள்

(ஈயாமை)

நண்பனோ அந்நியனோ பசி அனைவருக்கும் உடைமை; அங்கே நட்பு பகை என்று பார்க்காதே; பசித்தவன் அவன் பசியைப் போக்குவதற்குப் பின் வாங்காதே; அவன் வாழ்த்தட்டும்; வையட்டும்; அஃது அவன்போக்கு. கதவு திறப்பது காற்று வருவதற்கு; பசித்தவர் தடையின்றி நுழைவதற்கு ஒரு சிலர் கதவு அடைத்துக் கொண்டு தாம் மட்டும் உண்டு மகிழ்வர்; அவர்கள் உள்ளம் மிகவும் குறுகியது. சுவர்க்கக் கதவுகள் அவர்களுக்குத் திறக்காது; ஒளி அவர்கள் வாழ்வில் காணமாட்டார்கள். அந்த வீடு இருண்ட வீடு என்றுதான் கூற முடியும்.

உதவுதல் என்பது உபரிப் பணம் உடையவரால் தான் முடியும் என்று கூறுதல் பொருந்தாது; கூலிக்கு வேலை செய்பவன்கூட ‘டீக் கடைக்குச் செல்கிறான்; அவன் தோழன் அவனோடு செல்லும்போது, “நீ நில்; நான் ‘டீ’ குடித்து விட்டு வருகிறேன்” என்று நிறுத்தி வைக்கமாட்டான். உடன் அழைத்துச் செல்வான்; இதுதான் பண்பாடு. பெரிய வீடு; கூர்க்கா காவல்; மேல்நாட்டு நாய். மனிதர்களுள் சாதி ஒழிந்தாலும் நாயினத்தில் ஒழியவில்லை. இவ்வளவும் மீறி உள்ளே செல்ல முடியுமா? சென்றால் இன்முகம் காட்டி நல் விருந்தா தரப்போகிறார்கள்? சலசலத்த புடவையுடன், கலகலத்த பேச்சில், மலமலத்து இருக்கப் போகிறார்கள்; நீ வெலவெலத்து வெளியேற வேண்டியது தான். உள்ளம் உவந்து தருபவரே கள்ளம் தவிர்ந்தவர் ஆவர்.

பொருளை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்கிறான்? பொம்மலாட்டம் ஆடுகிறான்; தானும் மனம் வந்து உண்ணான். வயிறுக்கு வாய்தா போடுவான்! துறவிகள் பாவம் உறவு யாரும் இல்லாதவர். சோறு ஒன்றுதான் அவர்கள் உலகத்துப் பற்று. பசி ஒன்றுதான் அவர்களை வசிக்கச் செய்கிறது. அவர்கள் மதுவோ மங்கையோ வேட்டு மகிழ விரும்புவதில்லை. சோறு கைப்பிடிச் சோறு; அதற்கும் கெடுபிடி, அவன் நாலு வீடு நடந்தால்தான் அவன் அட்சய பாத்திரம் நிச்சய பாத்திரம் ஆகிறது. அவர்கள் இல்வாழ்க்கை நடத்தும் நல்லோரை நம்பித்தான் வாழ்கின்றனர். அவர்களையும் கவனிக்காமல் சேர்த்து வைத்துச் செத்துப் போனால் பின் அந்தச் செல்வமே அவனைப் பார்த்துச் சிரிக்கும். இந்த உலகம் அவனை எள்ளி நகையாடும்; அதனால் செல்வர் பலருக்கும் பயன்பட வாழ்ந்து அதில் மகிழ்வு காண்க.

இடுக்கண் தீர்க்காது ஒடுக்கி வைத்த செல்வம் அவனா அனுபவிக்கப் போகிறான்? அஃது மகனுக்கு அவன் போற்றி வளர்க்கும் மகளுக்கு ஆகிறது. மகள் வளர்க்கத் தக்கவள்; கன்னிப் பருவம் வந்ததும் அந்நியன் அவளை இழுத்துச் சென்று கழுத்தை நீட்டு என்று தாலி கட்டி வேலி இடுவான். அனுபவிக்கத் தெரியாதவர்; அதற்கு என்று ஒருவன் வந்து அள்ளிக் கொண்டு போகப் போகிறான்; இவர் வாயைப் பிளந்து கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.

கடற்கரையில் காற்று வாங்கச் செல்கிறான், ஊற்று நீர்தான் அவன் தாகத்தைத் தீர்க்கிறதே தவிரப் பரந்த கடல் பயன்படுவது இல்லை. அஃது உவர்ப்பு: செல்வம் படைத்தவன் கண்ணுக்குத் தெரியலாம்; அவனிடம் சென்று கைநீட்ட இயலாது. இவனைப் போன்ற மாத வருவாயக்காரன்தான் உதவி செய்ய முன்வருவான்.

அதோ அவன்பொருள் சேர்த்துச் சேமித்து வைத்திருக்கிறான்; அவன் ‘எனது’ என்று சொல்லிப் பெருமைப் படுகிறான்; அவன் அதை அனுபவிப்பது இல்லை. நானும் அதை எனது என்று சொல்கிறேன்; நானும் எடுத்து அதனை அனுபவிக்கப் போவது இல்லை. அவனுக்கும் எனக்கும் வேறுபாடே இல்லை.

அடுக்கிய செல்வம் முடக்கி வைத்து அதனைக் காத்துப் பூதம் போல் விழித்துக் கிடக்கிறானே அவனை விட எந்தக் காசும் இல்லாமல், தூசு தட்டத்தேவை இல்லாமல் நிம்மதியாக இருக்கிறானே அவன் வாழ்க்கை நிம்மதி, அவன் யாருக்கும் கைக் கட்டிக் கொண்டு பதில் சொல்லத்தேவையில்லை. உழைப்பு இல்லை; அதனால் ஏற்படும் உளைச்சலும் இல்லை. செல்வனும் எதுவும் துய்க்கப் போவது இல்லை; இவனும் எதுவும் கொண்டு மகிழப் போவதில்லை. அவன் பணம் படைத்தவன்; இவன் குணம் படைத்தவன்.

சேர்த்து வைத்தது கோடி ஐந்து; என்றாலும் ஓடி எடுத்து விளையாட முடியாது; சொந்தம் என்று கூறிக் கொள்ளலாமே தவிர அதில் எந்த பந்தமும் காட்ட முடியாது. அசையாத சொத்து, ஐந்து பத்தாகிறது. அவன் செத்து மடிந்தான்; பாகத்தர் வந்து அதனை எடுத்துப் பாதுகாக்கின்றனர். அவர்களாவது எடுத்துச் செலவு செய்கிறார்களோ! பூர்வீக சொத்து என்று தார்மீகம் பேசு கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் பேரன் கொள்ளுப் பேரன் இப்படிப் பேர் கொண்டவர்களுக்கே உரிமை சேர்கிறது. அவனாவது துணிந்து எடுத்துத் தருகிறானா? பணிந்து பேசுகிறான்; “முன்னோர் பொருள்; அதைப் போற்றிக் காப்பது தன் சீரிய கடமை” என்கிறான். சென்றவர்கள் வந்து தட்டிக் கேட்கப் போவது இல்லை. இவன் யாருக்கு அஞ்சுகிறான்? சஞ்சலப் பயல்!

கன்றுக்குப் பசி என்றால் தாய்ப் பசு அதனை அணைத்துக் கொள்கிறது; மடி சுரக்கிறது; பால் அது குடிக்கிறது; கன்று சென்று அதனிடம் முறையிடுவது இல்லை. குறையுற்றுக் கெஞ்சுவது இல்லை; தாயே விரும்பிப் பால் தருகிறது. கன்று முந்துகிறதா, பசு முந்துகிறதா எது எப்படி என்று கூற முடியாது. இதுதான் ஈவோர்க்கும் இரப்போர்க்கும் உள்ள உறவு முறை. இரப்போர் தாழ்வு மனம் கொள்ளக் கூடாது. அது அவர்களுக்கு அமைந்த உரிமை; ஈவோர் தருவது அவர்களுக்குப் பெருமை; வற்புறுத்தி வாங்குவதும் அதற்கு அஞ்சி ஈவதும் அற்பர்கள் செயலாகும்.

மாடு மேய்த்துவிட்டுக் கோலை தூக்கிப் போட்டு விட்டுக் கால்மேல் கால் வைத்துக் காட்டு வழியும் மேட்டு வழியும் திரிகிறானே கண்ணனின் கதைக்கு வாரிசு கொண்டாடும் மேய்ச்சல் தொழிலன்; மாடு மேய்க்கும் கோன். அவனுக்கு எந்தக் கவலையும் இல்லை. இப்படிப் பலர் செய் தொழில் செய்துவிட்டு எய்தும் பொருளைக் கொண்டு கூட்டல் கழித்தல் சரி செய்து கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள். துண்டு விழும் பேரம்

9 அவர்களிடம் இருப்பது இல்லை; இதோ தேனி போலச் சுறுசுறுப்பாக வேலை செய்கிறானே அவன் நிலை என்ன? ‘ஒய்வு இல்லை; ஒழிச்சல் இல்லை’ என்கிறான். பொருள் ஈட்டுவதும் துன்பம்; ஈட்டியதைக் காத்து வைப்பதும் துன்பம். பணக்காரானாகப் பிறப்பது பாபமான தொழில். அரசர் குடியில் பிறந்தால் பெருஞ்சுமை என்கிறான் சேரன் செங்குட்டுவன்; “மழை வளம் கரந்தால் வான்பேர் அச்சம்; நாட்டு மக்கள் தவறுசெய்தால் அதைவிட அச்சம்” என்கிறான். பொருள் அதிகாரமே பொறுப்புடைய ஒன்று; அளவாக ஈட்டி அதைச் சேர்த்து வைத்து வளமாக வாழ்வதே அறிவுடைமை; முடிந்தால் பிறர் துன்பத்தையும் போக்குக. இதுவே அறன் எனப்படுவது ஆகும்.

29. இல்லானை இல்லாளும் வேண்டாள்

(இன்மை)

காவி உடை உடுத்தி இந்தப் பாவ உலகினின்று விடுதலை பெற்றவன் ஆயினும் அவனும் நாலு காசு வைத்திருந்தால்தான் நாலு பேர் சுற்றி வருவார்கள். சாதிக்காரர்தான் எதையும் சாதித்துவிடலாம் என்று நினைக்கலாம்; என்றாலும் குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே என்பதை மறந்து விட முடியாது.

நீர் அதைவிட நெய் நுண்மையது; அதைவிடப் புகை நுழைய முடியாத இடமே இல்லை என்பர். அந்தப் புகையும் நுழைய முடியாத இடத்தில் வாழ வகை அறியாத வறிஞன் நுழைந்து விடுவான்; அவர்கள் பிழைக்க வழிதேடி எங்கும் வட்டமிடுவர். காரணம்? இல்லாத கொடுமைதான்.

காசு நாலு இல்லை என்றால் சுற்றமும் சூழார்; சொந்தம் பந்தம் எல்லாம் தலைகாட்டாது. பண்டம் இல்லை என்றால் வீடு சுத்தமாக இருக்கும்; ஈமொய்க் காது. வரப்போக யாருமே இல்லை; காரணம் பருக நீரும் கிடைக்காது என்பதால் அருகே வரமாட்டார்கள். தரித்திரம் எந்தச் சரித்திரமும் படைக்காது.

காசு இருக்கும்போது காக்காய்க் கும்பல் நம் வீட்டைச் சுற்றி வட்டமிடும்; திட்டமிடும். இல்லாத நோயைப் பற்றித் துருவித் துருவிப் பேசி நலன் விசாரிப்பர். “அப்பா சுகமா? அம்மா நலமா?” என்று கேட்பார்கள். காசு இல்லை என்றால் தூசு துடைக்கவும் ஆள் வரமாட்டார்கள். “கால் தூசும் பெறமாட்டான்” என்று அந்தப் பக்கம் திரும்பியும் பார்க்கமாட்டார்கள்.

“வண்டாய்ப் பறந்து வாழ வழி அறியாமல் வாடினால் கண்டு கொள்ளவே யாரும் வரமாட்டார்கள். அதிகாரமும் அப்படித்தான். நேற்று அவன் அரசு அதிகாரி. இன்று கோயில் பூசாரி. பொழுது போகவில்லை; கோயிலைச் சுற்றி வருகிறான். குங்குமப் பொட்டு அவன் நெற்றியில் ஓலமிடுகின்றது. அந்த வீடு வெறிச்சிடுகிறது. எல்லாம் இருந்தால்தான் விருந்தினரும் சுற்றத்தாரும்.

இல்லாமை என்ற நிலை ஏற்பட்டால் பிறந்த குலப்பெருமை மாயும்; பேராண்மையும் சாயும்; கல்வியும் ஒயும். எதுவுமே ஒளிவிடாது; யாருமே அவனைப் புகழ்ந்து பேசார். எல்லாம் மங்கிக் கிடந்து செயலிழந்து தன்னை மறந்து வாழ வேண்டியதுதான்.

வறுமை உற்றபோது இவன் வாடி வதங்குகிறான்; அது தெரியாமல் பழகிய சுற்றத்தவர் அவன் வீடு தேடி வந்து விடுகின்றனர். இவன் குரல் கொடுத்துக் ‘குடிக்க’ என்று மனைவியை அழைக்க, அவள், “பிழைக்க வழி இல்லாத நிலையில் இந்த ஜம்பம் எதற்கு?” என்று கேட்க இந்தச் சிக்கல்கள் எழுகின்றன. உள்ளூரில் இருந்து கொண்டு உதவ முடியாமல் இருப்பதைவிட எங்காவது கண்காணாத தேசம் வெளியூர் சென்று பிழைப்பது தக்கது ஆகும். அங்கே யாரும் வந்து இவன் பெயரையும் சொல்லி அழைக்கமாட்டார்கள். வீட்டுக்கு வெளியே அழைப்பு மணி அழுத்தம் இருக்காது.

வறுமையில் சிக்கியவர்கள் வாழ வகையின்றித் தவிக்கும்போது அவர்களிடம் நற்குணங்களை எதிர்பார்க்க முடியாது. ‘வா’ என்று வரவேற்கும் பண்பும் ‘இரு’ என்று சொல்லும் இன்பும் எதிர்பார்க்க இயலாது. பெற்ற குணம் விலகும். கற்ற கல்வி தலை எடுக்காது. அறிவு விளக்கமும் அவனை அணுகாது. அன்றாடம் அடுப்பு எரிய வேண்டும். அதைப் பற்றிக் கவலை; மற்றைய ஒளி அவன் காணத் தயாராக இருக்காது.

ஒரு குறிப்பிட்ட வீட்டுக்குச் சென்றால் அந்த ‘மகாலட்சுமி’ சோறு போடுவாள் என்று யாரோ சொல்லக் கேட்டு, அவன் அந்த ‘வீடு’ திருமகள் இல்லம்’ என்று நுழைகிறான். அந்த வீட்டு மருமகள் சொல்கிறாள். “இன்று போய் நாளை வா” என்கிறாள். உடனே சற்று நேரத்திற்குள் மாமியார் வருகிறாள். “அவள் என்ன சொன்னாள்? என்று கேட்கிறாள். “நாளை வா என்றார்கள்” என்கிறான் வந்தவன். "இந்த வீட்டில் அவளுக்கு என்ன அதிகாரம்? நான் சொல்கிறேன். இந்தப் பக்கம் எப்பொழுதும் வராதே” என்று திருத்தமாகக் கூறுகிறாள்.

உள்ளுரில் இருந்து வேதனைப்படுவதை விட வெளியூர் சென்று நாலு வீடு கேட்டு வயிற்றுப் பசி தீர்த்துக் கொள்வது வகையான வாழ்வாகும். அங்குப் பகை இல்லை; உறவு இல்லை; இந்த நகை இல்லை. பூ இழந்த கொடியை எந்த வண்டும் நாடாது.

பொருளிழந்த வறியவனை எந்தச் சுற்றமும் சூழ மாட்டார்கள். அவர்கள் தனித்து வாழ வேண்டியதுதான்; சுற்றம் என்று சொல்லிக் கொள்ளத் தேவை இல்லை. அற்றபோது சற்று விலகி வாழ்வதே மேலாகும்.

30. தம் நிலையில் தாழாமை

(மானம்)

பணம் படைத்துவிட்டாய்; அது உன் உழைப்பால் வந்தது. ஒப்புக் கொள்கிறோம். அதனால் மற்றவர்களைத் தாழ்த்திப் பேச நினைக்கக் கூடாது. மற்றவர்களை வருத்தக் கூடாது. அப்படி வருத்தினால் அது பிறர் மனதைச் சுடும்; காட்டுத் தீப்போல் படும். மானம் உள்ளவர் அதனை நிதானமாக எடுத்துக் கொள்ளமாட்டார். அவர்கள் எரிமலையாக மாற இந்தக் கொடுமையாளர்தாம் காரணம்.

தோலும் எலும்புமாகத் தோன்றி வறுமையிலே வாடினாலும் நல்லியல்பு இல்லாதவரிடத்துத் தம் குறைபாடு எடுத்து உரைக்கார். உரைத்தாலும் அவர்கள் என்ன குறைக்கவா போகிறார்கள். குறிப்பறிந்து உதவும் நிறைமனம் உடையவரிடத்துத் தம் குறைகளைக் கூறினால் தவறு இல்லை; அவர்கள் தீர்த்து வைப்பர்; நீ உன் நிலையில் தாழத் தேவை இல்லை.

நீண்ட நாள் பழகியவள்; “அவன் வேண்ட உடனே அழைத்துச் சென்று சோறும் நீரும் தந்து அவனை மகிழ்விப்போம்; அவன் மிடிமை தீர்ப்போம். அவனும் நம் வீட்டாரோடு பேசி நலன் விசாரிக்கட்டும்; உள்ளம் கலந்து உறவாடுவோம்” என்று இருக்க வேண்டும். செல்வன் ஒருவனைக் காண்கிறான் பழைய நண்பன் “செல்வோம் உம் வீட்டுக்கு” என்றால் “நில்லாய் முற்றத்தின்கண்” என்று சொல்லித் தன் கைப்பட அவன் தட்டுச் சோறு வைத்து “உண்க” என்பான். நாயினும் கீழாக நடத்தும் முறை இது. உள்ளே அழைத்துச் சென்றால் கள்ளே அனைய காரிகை அவன் மனைவியைக் காமுறுவான் என அஞ்சுகிறான். தன் மனைவி மீதே அவனுக்கு நம்பிக்கை இல்லை. வீட்டுக்கு அழைக்காமல் வீதியிலே நிறுத்தி நீதிகள் பேசுகிறான். மனித அபிமானம் நேசம் இவை பசையற்றுவிட்டன. கீழ்மகன் அவன்; அத்தகையவனை நாடிச் செல்வது கீழ்மையாகும்.

“ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு அஃது இழிவு ஆகும்” என்று மானத்தோடு வாழ்பவன் என்றும் மதிப்பு இழப்பது இல்லை. கை நீட்டி அவன் பிறரிடம் கடன் கேட்பது இல்லை. “நன்கொடை தருக” என்று நவின்றது இல்லை. உப்புக்கும் மிளகுக்கும் 'அப்பு' என்று அடுத்த வீட்டை அணுகியது இல்லை. கடிகாரம் நேரம் பார்க்கவும் மற்றவர் கை காட்டு என்று கேட்டதில்லை. எழுதித் தருகிறேன் என்று பிறர் எழுதுகோல் அவரசரத் துக்கும் அங்கீகரித்தது இல்லை. இவன் இப் பிறவியில் இன்பம் பெறுகிறான்; மறுபிறவியிலும் நல் வாழ்வு அடைகிறான்; “யாமார்க்கும் கடன் அல்லோம்” என்ற இறுமாப்பு: அஃது அவனுக்குச் செம்மாப்பு.

குறுக்கு வழியிற் சென்று செருக்கோடு வாழத் தருக்கு உடையவர் நினைக்க மாட்டார்கள். பாவமும் பழியும்தரும் என்றால் அந்த வழிநோக்கிச் செல்லார். அதைவிட ஒரு முழம் கயிறு, மூட்டைப் பூச்சி கொல்லி, இன்னும் இத்தகைய வகையறாக்கள் அவற்றைத் துணை தேடுவர். சாவு ஒரு நாள் நிகழ்ச்சி. அதற்குப் பிறகு நிலையான புகழ்ச்சி, மானத்தோடு வாழ்ந்தான் என்று எங்கும் தொடர்ந்த பேச்சு. பழி அது என்றும் நிற்கும். நினைத்து நினைத்து மனம் அழிய வேண்டியதுதான்; இன்பம் என்று மகிழ்ந்து பிறர்க்கு இடையூறு செய்து வாழ்கின்ற மடையர்கள் என்றும் கடையரே.

வளம் மிக்க இந்நில உலகில் கோடிக் கணக்கில் குவித்து வைத்து அதனால் அவன் ஈசுவரன் என்று பாராட்டப்படுகிறான். நாடி வரும் ஏழையரைக் கண்டால் அவன் கை முடங்குகிறது; குறைகிறது. அழுங்குகிறது. அவன் ஒரு நோயாளி ஆகிறான். இவனா செல்வன்! தரித்திரம் படைத்தவன்; நித்திய தரித்திரன்; பணம் படைத்த பரம ஏழை; இவன் கோடியில் ஒதுங்கிக் கிடக்க வேண்டியது தான். அதே நாலு முழம் வேட்டி; உண்பது நாழி, அவன் ஏழைதான். இல்லாதவன்தான், அவனிடம் குறை கூறினால் அவன் நிறை செய்கிறான். பிறர் துயர் களைகிறான்; இவன்தான் செல்வன்; இந்த நந்நிலம் இவனைப் பெற்றதால் பெருமை பெறுகிறது. நிலம் என்னும் அந்நல்லாள் மகிழ்கிறாள். இவர்கள் தரித்திரர்தாம். எனினும் நற்சரித்திரம் படைக்கின்றனர்.

இல்லாத கொடுமை. அதனால் இந்தச் செல்வனிடம் வந்து நின்று தாம் நிலையில் தாழ்ந்து விட்டதை எடுத்துக் கூறுகிறான்; செல்வன் அவனிடம் பரிவு காட்டுவதுபோல் நடிக்கிறான். “ஐயோ பாவம் நல்லவர்களுக்கே காலம் இல்லை; நீ யாருக்கும் எந்தக் கொடுமையும் செய்தது இல்லை; உனக்கா இந்தத் தாழ்நிலை. உள்ளபோது கேட்டவர்களுக்கு எல்லாம் அள்ளி அள்ளிக் கொடுத்தாயே! உனக்கா இந்தத் தாழ்வு? பாவம்! கிழிந்த வேட்டி; குழிந்த வயிறு; மெலிந்த தேகம் இந்தத் தரித்திரம் மிகவும் கொடுமை; வறுமை மிகவும் கொடியது. நெருப்பிலும் தூங்க முடியும்; இந்த வறுமையில் நிம்மதி இழக்க வேண்டியதுதான்” என்று நீலிக் கண்ணிர் வடிக்கிறான். இந்தப் போலிகளை நினைத்தால் நெஞ்சம் குமுறத்தான் செய்கிறது. கொல்லன் உலைக்களத் தீபோலப் பற்றி எரிகிறது. இந்தப் பச்சோந்தி கள் பகல் வேடக்காரர்கள்; இவர்கள் செல்வர்கள்; வெட்கம்; வெட்கம்; வெட்கம்.

அவன் கேட்கிறான்; கொடுக்க முடியவில்லை. அதற்காக வெட்கப்படத் தேவை இல்லை; பிறரை ஏமாற்றிப் பிழைக்கிறாய்; அஃது உன் தொழிலாகி விட்டது. ஊர் பழிக்கிறது; அதற்கும் அஞ்சவில்லை. எதற்காகவும் வெட்கப்படுவது இல்லை. மொத்தத்தில் தன் குடிப் பெருமை கெடக் கூடிய நிலைக்குத் தாழ்ந்து போவது இழிவாகும். கீழ்த்தரமான வாழ்க்கை வாழ்ந்து மேல்தரமான புகழை அழித்து வாழ்வது வெட்கப்பட வேண்டியதாகும்; ஒரு சில குறைகள் இருக்கலாம்; மொத்தமே ஒட்டை என்றால் அந்த வாழ்வு மதிக்கத்தக்கது அன்று. அடியோடு ஆட்டம் கொடுத்தால் அதை உலகம் மன்னிக்காது. மானம் கெட்டவன் என்று தான் முடிவு செய்யும். அங்கு ஒன்று இங்கு ஒன்று கிழிச்சல் என்றால் அது கந்தல் துணி என்பர். அதுவும் மானத்தைக் காக்கும்; மொத்தமே கழிச்சல், உதவாது என்றால் அதைத் தூக்கி எறிவது தவிர வேறு வழியில்லை; அவர்களை மானம் உடையவர் என்று கூற இயலாது.

மதம் மிக்க யானை அதனைக் காட்டு வேங்கைப் புலி அடித்து வீழ்த்துகிறது; அஃது இடப்பக்கம் விழுந்தால் வேங்கை தன் வலிமைக்கு இழுக்கு என்று அதன் இறைச்சியைத் தொடாது; பசி எடுத்தாலும் அதனைச் சுவைக்காது; செத்து மடியுமேயன்றிச் சத்து அற்ற அந்தச் செத்தையைக் கருதாது. சுவை குன்றிய உணவாக அது மதிக்கப்படும்; “வீரம் குறைந்தது தோல்விக்குத் துவண்டது” என்று அந்த யானை கருதப்படும்.

யானை மிகப் பருத்த ஒன்றுதான்; அதை மிச்சம் வைத்து உண்டாலும் நாலு வாரம் தின்னலாம்; எனினும் அதைத் துச்சமாக மதிக்கிறது வேகம் உடைய வேங்கை அதே போல மானம் உடையவர் விமானம் மீது ஏறி இந்த உலகத்தையே வளைப்பதாயினும் தம் நிலையில் தாழ்ந்து அதனைப் பெறார். வானமே தம் காலில் வந்து விழுந்தாலும் அதனைத் தானமாகப் பெறார்; ஞானவான் களாக வாழ்வர்; நிதானம் தவறமாட்டார்கள்.

31. இரவலரின் அவலம்

(இரவச்சம்)

இரத்தல் இழிவுதான்; என்றாலும் அதுவும் தேவையாகிறது. ஆனால் அவர்கள்படும் இன்னல் மன உளைச்சல் அதற்கு இல்லை குறைச்சல்.

ஆணவம் பிடித்தவர்கள் பணத்தை ஆளுபவர்கள்; “இந்தப் பிச்சைக்காரர்கள் நம்மால்தான் பிழைக்கிறார்கள். துப்புக் கெட்டவர்கள்; அதனால் இவர்கள் துயரத்துக்கு ஆளாகின்றனர். உள்ளவர் கை மடங்கினால் இல்லை என்பார்க்கு இல்லை வாழ்வு நிலை” என்று ஆணவத்தோடு அறை கூவல் விடுப்பவர் உளர். செல்வத் திமிர்; அதனால் அவர்கள் இப்படிச் செருக்கோடு பேசுகிறார்கள். மருண்ட மனம் உடையவர்கள், இவர்களிடம் தெருண்ட மனம் உடையவர் செல்லுதலைத் தவிர்ப்பர். உலகம் பரந்தது; உள்ளவருள் உயர்ந்தவரும் இருப்பர்; அவர்கள் உதவாமல் இரார்.

இரப்பதற்கு அஞ்சி இழிவான செயல்களில் இறங்குவர்; பழிதரும் பாவங்களையும் துணிவர்; உயிர் வாழ்க்கை உயர்ந்ததுதான்; தவிர்க்க இயலாததுதான்! அதற்காக மனிதன் தாழ்ந்தாபோக வேண்டும். சாவு என்ன கசக்கும் எட்டிக் காயா? “உறங்குவது போன்றது இறப்பு: உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு” என்பது வள்ளுவன் வாக்கு; பிறப்பும் இறப்பும் அதிசய விளைவுகள் அல்ல; அவை மனிதனுக்கு ஏற்படுகின்ற சிறு விபத்துக்கள்; அவற்றைத் துக்கி எறியத் துணிவு இருந்தால் இரந்தும் உயிர் வாழத் தேவை இல்லை. மறந்தும் அவர் இழிதொழில்களை ஏற்கத்தேவை இல்லை. மானம் பெரிது; உழைத்து வாழ முடியும்; நம்பிக்கை தேவை. உள்ளம் உறுதியாக இருந்தால் தலை நிமிர்ந்து வாழ முடியும். பிச்சை எடுக்கத் தேவை இல்லை.

இரக்கின்ற இழிவோடு அரிக்கின்ற வறுமையால், “அன்பு சுரக்கின்ற இல்லம்” என நினைத்து அவன் அடி எடுத்து வைக்கிறான். “ஏன்”டா, தடி கடா மாதிரி இருக்கிறாய்! எங்காவது வேலை செய்து பிழைக்கக் கூடாதா?” என்று எக்களிப்பால் கேட்கிறான் எழுபது லட்சத்துக்கு முதலாளி; வேலை கிடைத்தால் அவன் ஏன் உன் வீடு தேடி வருகிறான். அவன் வந்தது அறிவுரை கேட்க அன்று; பரிவுரை; பங்கீடு பெற அன்று; பண உதவி; அதுதான் எதிர்பார்க்கின்றான். கடிந்து பேசுவது மடத்தனம்; படிந்து பரிவு காட்டுதல் பெருந்தனம்; மதியாதார் வாசல் மிதிப்பது மிகவும் வேதனைக்குரிய செயல் ஆகும். இடன் அறிந்து கேட்க வேண்டும். வந்த பிறகு கடன் அறிந்து உதவ வேண்டும். இதுவே மனித இயல்; பண்பாடு; உடன்பாடு; அதற்கப்புறம் அவர்கள் பாடு.

திருமகள் செல்வச் செருக்கு உடையவள். அவள் எந்த இடத்திலும் நிலைத்து இருக்க மாட்டாள்; அறிவாளி, உழைப்பாளி; சேர்ப்பாளி. இவர்களிடம்தான் தங்கிக் கலகலப்பாள்; சோர்வு இருந்தால், சோம்பல் காட்டினால் அவள் சொகுசாக அவனை விட்டு நீங்கிவிடுவாள். பணத்தை வைத்துக் காப்பாற்ற முயலவேண்டும். பொருள் கைவிட்டுச் சென்றபின் கையறவு பாடினால் பயன் இல்லை. அவன் என்னவோ திட்டமிட்டே செலவு செய்தான். கஷ்டப்பட்டே வாழ்க்கை நடத்தினான். தெய்வம் கை கொடுக்கவில்லை. அது இவனைக் கைவிட்டுவிட்டது. இந்த இரண்டு காரணங்களால்தான் வறுமை வரவேற்புச் செய்கிறது. விரும்பியா ஒருவன் இரக்க வருகிறான். இரக்கமற்றவர் அதனை எண்ணிப்பாரார். எந்த நிலையிலும் பிறர் கையேந்தி வாழாமையே மேன்மைக்கு வழியாகும். ஊக்கம் அதனைக் கைவிடக்கூடாது; வறுமைக்குத் தாக்குப் பிடிப்பது வளர்ச்சியைத் தரும்.

கேட்டால் மறுக்கமாட்டார்கள்; கேட்டு இல்லை என்று சொன்னது இல்லை. திண்ணிய அன்பினர்; கண்ணியம் மிக்கவர் என்றாலும் பூவைக் கசக்கி முகர்ந்தால் பூவும் தன் மணம் கெடும். அதனை விலகி இருந்தே ரசிக்க வேண்டும். வேறு வழியில்லை; அவர்களை அணுகித்தான் அவசியத்தை ஈடு செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் உள்ளம் வேதனை அடையாமல் இருப்பது இல்லை. மனம் உருகுகிறது; வேகிறது; வேதனைப்படுகிறது. முன்பின் பழகாத ஒருவனிடம் சென்று துணிந்து கேட்டுப் பெறுவார் நிலை எண்ணிப் பார்க்கவே அச்சமாகிறது. அந்த அப்பாவிகள் எவ்வளவு துன்பப்படுவார்கள்; எண்ணிப் பார்க்க வேண்டியது. இரத்தல் அச்சம் தருவது; இது கொடியது; வாட்டம் தருவது.

அவசரப்பட்டுப் பிறர் கையேந்தும் நிலைக்குச் சிலர் சென்றுவிடுகின்றனர். கடன் கேட்கத் துணிகின்றனர். நன்கொடை என்று நவில்கின்றனர். பிறரிடம் கை நீட்டிப் பெற்று அப்படி என்ன உனக்கு ஆடம்பர வாழ்க்கை கேட்கிறது? கேட்டால் என்ன சொல்கிறான். “காருக்கு பெட்ரோல் தேவை; டி.வி. இல்லாமல் பொழுது போகாது. பட்டுப்புடவை இல்லை என்றால் பத்துக் கல்யாணத்துக்குப் போக முடியாது. நகை இல்லை என்றால் புன்னகை எதிர் ஒலிக்காது” என்று பேசுகிறார்கள். சிக்கனமாக வாழ்க, சீராக வாழ்க, இந்த இன்பத் துணைகள் இல்லாமல் வாழ முடியும். இன்பம் சுமையாகக் கூடாது. சில சமயம் துன்பங்கள் சுகத்தைத் தரும். சில தேவைகளை மறுத்து வாழ்ந்தால் மகானுபவனாக வாழமுடியும். கவலை நீங்கும். பற்றுகளே பற்றர்க்குறைக்குக் காரணம் ஆகின்றன.

மானிடர் புதிதாகப் பிறந்து கொண்டே இருக்கின்றனர். பிறப்பில் புதுமை இருக்கிறது. பழையன மறைகின்றன. புதியன தோன்றுகின்றன. மனிதன் புதியவன்; ஆனால் அவன் பண்பில் செயலில் எந்த வகையிலும் மாறாமல் இருக்கிறான். கஞ்சத்தனம் என்பது அவனோடு தோன்றுகிறது; மனித நேயம் அதனை அவன் மறந்துவிடுகிறான்; பிறர் துன்பம் கண்டு துடிக்கும் தாய்மை அவனிடம் அமைவது இல்லை. மனிதன் மனிதனாகவே இருக்கிறான். வானம் மாறிவிட்டது. ஆனால் மனிதன் மாறிப் பிறக்கக் கூடாதா? மேன்மைக் குணம் பெறக் கூடாதா? “மனிதன் இவன்” என்ற பாராட்டுக்கு உரியவன் பிறக்காமல் போகமாட்டான். ஒருவன் ‘தருக’ என்று கேட்க வருகிறான் என்றால் ‘பெறுக’ என்று தருவது இல்லை; அவன் மனம் கருகக் கடிந்து பேசிவிடுகிறார்கள்.

ஏன் வருகிறான்? எதனால் வருகிறான்? எப்படி வருகிறான்? எவ்வாறு வருகிறான்? சிந்தித்துப் பார்க்க வேண்டியது. அதைச் சிந்தித்துப் பார்க்கச் சீர்மை இல்லை. இது ஒரு விஞ்ஞான உண்மை; சில உந்துதல்கள் காரணம் ஆகின்றன. “இல்லாமை” அவனை வந்து நெருக்குகிறது. என் செய்வான்? படித்தவன்தான், பண்பாளன்தான், அறிந்தவன்தான், வேறு வழி இல்லை தாழ்ந்து விடுகிறான். கூனிக் குறுகி அவன் உன்முன் வந்து நிற்கிறான். ஒவ்வோர் அடி எடுத்து வைக்கும் போதும் அவன் மனம் இடித்து உரைக்காமல் இல்லை. இதை உணராமல், ‘இல்லை’ என்று ஒரே சொல்லில் அவனை அனுப்ப நினைக்கிறார்கள்! என் செய்வான்? அவன் எப்படி வாழ்வான்? உயிர் அதனைப் போக்கும் சுருக்குக் கயிறு; அந்த மறுப்புச் சொல் பொறுப்பற்ற செயல்; கொலைஞர்கள் இவர்கள்.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதை தெரியுமா? ஒருவன் முந்திக் கொண்டான். தங்க நாணயங்கள் சேர்த்துக் குவித்துக் கொண்டான். அடுத்த வீட்டுக்காரன் அவன் பிந்திச் சென்றான். கால் கை பிடிபட்டு உதைபட்டான். அவரவர் அதிருஷ்டம் அது. வாய்ப்புகள் சிலரை வாழ வைக்கின்றன. சிலரைத் தாழ்த்துக்கின்றன. ஏழையும் வாழ்கிறான். செல்வனும் வாழ்கிறான். ஏறக்குறைய ஒருவனுக்கு ஒருவர் உதவி செய்து கொண்டுதான் வாழ வேண்டும். இல்லாதவர் இருப்பவனைக் கேட்டுப் பெறுவது தவறாகாது. அவசியம்; இதில் ஆவேசப்படத் தேவை இல்லை. அவசரத்திற்கு உள்ளவனைக் கேட்பது இழிவு அன்று: ஆனால் அந்த மடையன் அதை உணர்வது இல்லை; ‘ஈக’ என்று கேட்டுவிட்டாலே ஈனமாகப் பார்க்கிறான். செல்வச் செருக்கு அவன் ஆணவத்தைத் தூண்டுகிறது; அவன் நல்ல குணங்கள் மறைகின்றன. அடுத்த வீட்டுக்காரனாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கல் தவிர்ப்பது நல்லது; உறவு கெடாது. ஏதோ பகை வெறுப்பு இல்லாமல் வாழ முடியும். கேட்பது தவறு அன்று. தராதவன் அவன் கருமி, அதனால் விலகி நிற்பது நல்லது.

வைர அட்டிகை கதை தெரியுமா? திருமணத்துக்குச் செல்லப் பக்கத்து வீட்டுக்காரியிடம் ‘வைரச் சரடு’ இரவல் கேட்டாள். அங்கே அதைத் தொலைத்துவிட்டாள். என் செய்வாள்? கடன் உடன் வாங்கிப் புதிய வைரச்சரடு வாங்கி எதுவும் விளக்காமல் பக்கத்து வீட்டுக்காரியிடம் திருப்பிக் கொடுத்துவிட்டாள். இந்தக் கடனுக்காகக் காலமெல்லாம் உழைத்தாள். ஓடாய்த் தேய்ந்தாள். பக்கத்து வீட்டுக்காரி கேட்டாள். "நீ பேரழகியாக இருந்தாய். இன்று சீர் கெட்டு விட்டாயே ஏன்?” என்று விசாரிக்கிறாள். “எல்லாம் வைரச் சரடுதான்” என்று விளக்கம் கூறுகிறாள்.

“அடிப்பாவி அது வைரம் அன்று; வெறும் போலிக் கல்” என்றாள். அதிர்ச்சி ஏற்பட்டது. “இரவல் வாங்குவது எவ்வளவு தீது” என்ற பாடத்தைக் கற்றுக் கொண்டாள். பக்கத்து வீட்டுக்காரி அந்த வைர அட்டிகையைத் திருப்பித் தந்தாள்; அஃது அவளுக்கு அழகு சேர்க்கவே இல்லை. ஒரு சிலர் கொடுத்தும் கெடுத்தும் விடுகின்றனர். இயன்றவரை பிறரைக் கேட்காமல் இருப்பது நல்லது; உறவுகள் நீடிக்கும். இல்லை என்று மறுத்தாலும் அவர்கள் வேதனைப்படுவர். என் செய்வது?

32. அவை அறிந்து பேசுக

(அவை அறிதல்)

அறிவு மிக்கவர் அங்கு ஆய்வு நடத்துகின்றனர். கூட்டம் அது என்று நாட்டம் கொண்டு கண்டவர் நுழைகின்றனர். நுணுக்கமான செய்திகளை அவர்கள் கூரிய அறிவு கொண்டு அலசி விவாதிக்கின்றனர். “முட்டை முதலா? கோழி முதலா?” என்று தேவையற்ற கேள்வியைக் கேட்டு அதற்கு ஒரு பக்கம் நின்று வாதாடுகின்றான். இதைப் பற்றி யாருமே முடிவு கண்டதில்லை. வீண் தருக்கம் அடுத்த கேள்வி “பெண் தொடக்கமா? ஆண் ஆரம்பாமா?” இவை நம் அறிவுக்கு அப்பாற்பட்டவை; “கடவுள் எப்பொழுது தோன்றினார்?” இது குறுக்குக் கேள்வி. அவையில் கூடிய புலவர்கள் நவையற்ற செய்திகளைப் பேசுகிறார்கள். இவர்கள் கவைக்கு உதவாதவற்றைப் பேசி அவலத்தை உண்டாக்குகிறார்கள். கூட்டம் கலவரத்தில் முடிகிறது. அவைக்கண் கற்றோர் தேவையற்றவரை அனுமதிப்பது அமைதியைக் கெடுக்கும். அசதியை உண்டாக்கும் பெரிய விஷயங்களைச் சிறியவர் முன் பேசுதல் கூடாது.

கூட்டம் இருவகைப்படும். ஒன்று சிறப்புக் கூட்டம்; மற்றொன்று பொதுக் கூட்டம். எதிலும் சில வரைமுறைகள் உண்டு; தலைவர், பேச்சாளர் என்ற பாகுபாடு உண்டு. நன்றி நவில நல்லவர் ஒருவர் நாலு வார்த்தை பேசி முடிப்பர். தலைவர் முன்னுரை பேசி முடிவுரை தருவர். பேச்சாளர் அவர் தான் தலைப்பை ஒட்டித் தலையைச் சுற்ற வைப்பார்; அவையில் அமர்வோர் அடக்கமாக அமர்ந்து சொல்வன கேட்டு அறிய முற்படவேண்டும். புரியாமல் இருந்தால் வெளியே செல்வது கண்ணியம்; அயராது அசையாது அமர்வது நாகரிகம்; வாயைத் திறக்காமல் இருப்பது அவை அறிந்து செயல்படுவது ஆகும்.

பள்ளியிலேயும் பட்டி மண்டபங்களிலேயும் சிலர் செய்யுட்களை மனப்பாடம் செய்து கடல் மடை திறந்ததுபோலக் கனத்த சொற்களில் அடித்துப் பேசுவர். கம்பனைக் கரைத்துக் குடித்துவிட்டவர்போல் இரைத்துப் பேசுவர். இவர்களைக் கல்விக் கடல் என மதித்துக் கரகோஷம் செய்து ஆரவாரித்துப் பாராட்டுவர்.

பட்டிமன்றத்துக்கு என்றே சில படைகள் திரண்டு எங்கும் வெட்டிப் பேச்சு பேசுவதையே புலமை என்று காட்டி வருகின்றனர். இவர்களில் பலர் பதிவுத் தட்டுகள், ஆழ்ந்த புலமை உடையவர் என்று கூற முடியாது. ஆனால் சொல் விற்பன்னர்; சுகமாய்ப் பேசுவர். அதற்கு இப்பொழுது கூட்டம் மிகுதியாகக் கூடுகிறது. அறிவுக்கு விருந்தாகின்றது. வரவேற்கத்தக்க வளர்ச்சி என்றே கூற வேண்டும்.

கல்வி கற்றவர் ஆறி அடங்கி ஒரு சில சொற்களே பேசுவர்; ஓசை எழுப்பி மக்களை மகிழ்விக்கத் தெரியாதவர்கள் இவர்கள்; இவர்களே சான்றோர் என மதிக்கப்படுவர். இவர்கள் பேசக் கூட்டம் கூடாது. நாட்டமும் செலுத்தார். ஆரவாரம் மிக்கது இந்த உலகம்; அறிவு நாடி அணைதல் மிகவும் குறைவு. தப்பித் தவறி முரடர்கள் மேடை ஏறிவிட்டால் கரடுமுரடாகப் பேசிக் கூட்டத்தைக் கெடுத்துவிடுவர். அவையை அடக்கி அமைதி காத்து அழகாகப் பேச வழிவகுப்பதே கற்றோர் அவை; எனவே அவை அறிந்து நாடுக அறிவு தேடுக.

எந்த அவையாக இருந்தாலும் யாரும் பேசிவிட முடியாது. பஞ்சாயத்துக் கூட்டம் என்றாலும் வரன்முறை உண்டு; பண்ணையார் பேசுகிறார் என்றால், மற்றவர்கள் திண்ணையராக அமர்ந்திருக்கமாட்டார்கள். கேள்விகள் தொடுப்பார்கள். பிறரைப் பேசவிட்டுக் கருத்துக்களைத் திரட்டி எதிர் புதிர்களை எடுத்துக்காட்டித் தீர்ப்புகள் செய்வது தக்கது ஆகும். ஊருக்கு வேண்டிய நன்மைகளை நயமுடன் பேசித் தீர்மானங்கள் முடிக்க வேண்டும். கூட்டத்தில் குழப்பம் விளைவித்துத் தம் பண வலிமை. ஆள் வலிமை காட்ட முனைவாரும் உளர்; அவர்களை அங்குப் பேச இடம் தரக்கூடாது. இவை நடைமுறையில் கொள்ளத்தக்கன.

உள்ளீடு இல்லாதவர்கள்; சுயசிந்தனை இல்லாதவர்கள் தம் அறிவால் விளக்கம் தர முடியாதவர்கள் தம் ஆசிரியர்களின் பெருமையைப் பேசி அந்த ஒளியில் குளிர் காய்கிறார்கள். இவர்கள் பட்டம் வாங்கியவராக இருக்கலாம். ஆனால், சுய சிந்தனை, சுய அறிவு எதுவுமே இல்லாதவர்கள். ஒரு சிலர் திருக்குறளை ஒப்புவிப்பார்கள். நூல் பல கற்றவர் என்பது விளங்கலாம். ஆனால் அவர்களை நுண்ணறிவு உடையவர் என்று கூற இயலாது. இவர்கள் கற்றவர்கள் என்று கூறிக் கொள்ளலாம்; அறிவாளிகள் ஆகார்.

சட்டசபைகள் ஜனநாயக அமைப்பால் உருவானவை. மக்களால் மதிக்கத்தக்கவர்கள் இவர்கள் என்று தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள். அவைக்கு ஒரு தலைவர் உண்டு; அமைதி நிலைநாட்டவே அவர் அமர்ந்திருக்கிறார்; என்றாலும் ‘அமளிகுமளி’ என்று ஒரு சில செய்திகள் வருகின்றன. “மைக்குகள் கைக்கு வந்தபடி தாக்கும் கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன; சட்டைகளைக் கிழித்துக் கொண்டு எதிர்க் கட்சிக்காரர்களும் புதிர்க் கட்சிக்காரர்களும் வெளியேறுகின்றனர். காக்கிச் சட்டை அணிந்த காவல் நிலையத்தார் “ஹாக்கி விளையாடினர்” என்று இப்படித் தாக்கிச் செய்திகள் வராமல் இருப்பது இல்லை. அவை நடைமுறை எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு விடை தருவன ஆகும். எப்பொழுதோ சில சமயம் இவ்வாறு நடைபெறுகின்றன என்றாலும் அவை சரித்திரத்தில் இடம்பெற்று விடுகின்றன.

கற்றோர் அவை இதுபோன்ற நிலைக்கு மாறக்கூடாது. கற்றவர் அறிவின் பிரதிநிதிகள்; ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டும். இதையே ‘அவை அறிதல்’ என்று உணர்த்தப்படுகிறது.

கல்லாத மூடர் சிலர் அழகுபடப் பேச முடிகிறது என்பதற்காக அவர்களும் கவி அரங்கு ஏறி விடுகிறார்கள். அந்தக் கவிதைகள் தனி மனிதர் புகழ்ச்சிகளாக அமைகின்றன. அதனால் அவை சிறப்புப் பெறுவது இல்லை. மானுடம் பாடுபவனே மகாகவி; தனிமனிதர் துதிபாடுபலர் பழங்கால அரசு அவைக் கவிஞர்; மக்கள் கவிஞர் அல்லர். புகழ்ச்சிக்கே கவிதை என்ற நிலை மாறிப் புதுமைக்குக் கவிதை என்ற நிலைபெற வேண்டும். உணர்வுக்கு முதன்மை தருவது. உள்ளத்துக்கு உலகை ஊட்டுவது; பள்ளத்தில் கிடப்பவரைத் துள்ளி எழச் செய்வது. இந்த அடிப்படையில் இவர்கள் எழுத்து எழுச்சி அமைந்தால் பாராட்டப்படுவர். வெறும் சொல்லடுக்குகள் கவிதை ஆகாது; இவர்கள் அவை ஏறுவதால் அறிஞர்கள் அங்கு இடம்பெறுவது இல்லை. கற்றவர்கள், சிந்தனைமிக்கவர்கள்; கற்பனை உள்ளவர்; இவர்களே அவை ஏறிக் கவிதை அரங்கேறத் தகுதி படைத்தவர் ஆவர்.

வெறும் சொல்லடுக்குகள் வேசியர் தம் புனைவு ஆகும். கற்ற அறிஞர் சொற்கள் கருத்து ஆழம் மிக்கவை; காசுக்கு என்று கவிதை பாடி ஓசைகளை எழுப்பித் தம்மைக் கவிஞர்கள் என்று பேட்டி அளித்துக் கொண்டு இருக்கின்றனர். இன்று ஒசைதான் கவிதை என்று மோசமான நிலையை அடைந்து விட்டது. விளக்கமாகக் கூறட்டுமா? திரைப் பாடல்கள் வெறும் இரைச்சல், கவர்ச்சிக் கன்னிகள் இவர்களை வைத்து ஆடவைத்து ஆபாசத்தை விற்பனை செய்கின்றனர். இப்படி எழுதுகிற திரைப்பட விமர்சனங்கள்; கவிதை ஒன்று இரண்டு சில கருத்துக் கொண்டவை. பல ஆட்டுக்கு ஏற்ற ஓசைத் தாளங்கள்; ஒரே கூளங்கள், இவை பாடல்கள்; மறுக்கவில்லை; கவிதைகள் ஆகா.

விளக்க உரை செய்தால் அதற்கு விருத்தி உரை என்று பெயர். தொல்காப்பியப் பாயிரத்துக்கு என்றே ஒரு விருத்தி உரை உள்ளது. இவ்வளவும் கூறவல்லவன் தமிழ்ப் புலவன். புலமை பெற்று உயர்பவனே அவை அறிந்து பேச வல்லவன் ஆகிறான்.

நூல்பல கற்றவராக இருக்கலாம். நுண்ணறிவு படைத்தவராக இருக்கலாம். அவர்கள் நிறைகுடமாக இருக்க வேண்டும். வாதங்கள், பிரதிவாதங்கள் அவையின்கண் நடைபெறலாம். அவற்றிற்கு அஞ்சாமல் தக்க விடை தரும் தகவு அமைய வேண்டும்.

ஆசிரியத் தொழில் செய்வோர் மாணவர் தரமறிந்து நிலை அறிந்து அவர்கள் வினா அறிந்து விடை தரல் வேண்டும். 'சுட்டுப் போட்டாலும் படிப்பு வராது. குட்டிச் சுவராகப் போ” என்று சாபம் கொடுப்பவர் ஆசிரியர் ஆகார்.

கல்வித் தகுதி மட்டும் போதாது; பண்பாடு கூட்டல் தேவை. கல்வி மனப் பழக்கம்; பண்பாடு செயற்பழக்கம் அது சில சமயம் ‘குடி’ப் பழக்கத்தாலும் அமைவது. அதாவது பிறந்த குடியின் பின்னணி, சார்பு, வளர்ப்பு இவையும் கற்றவனை மதிக்கத்தக்கவனாக ஆக்குகிறது. எனவே கல்வியோடு பண்பும் கலந்தால் அவையின்கண் அவனை அனைவரும் பாராட்டுவர். கல்வி கற்றவர் என்று கருதுவர்.

33. அறிவு குறைந்தவர் அவதி

(புல்லறிவாண்மை)

நூல் பல கற்கிறாய்; நுண்ணறிவு பெறுகிறாய் என்று கூற முடியாது. நூல் ஒரு பாற்கடல்; அதனைக் கடைந்து எடுக்கும் அமுதம் அறிஞர்களின் அனுபவ மொழிகள். அருள் அறமும் மனிதநேயமும் மாண்பும் உடையவர்கள் சிந்தித்துக் கூறும் சிந்தனைகள். அவர்கள் வாயில் வரும் சில சொற்கள் அவை திருக்குறள் போன்றவை. அரிய கருத்துக்கள்; இவற்றை நல்லறிவுடையவர் கேட்டு அறிந்து பயன்படுவர். அறிவு குறைந்தவர் அவை செறிவு மிக்கன என்பதால் அவற்றை வாங்கும் ஆற்றல் அற்று அவை தமக்கு ஏலா என்று புறக்கணிப்பர். அமுத மொழிகளை அறிவதை விட்டுக் குமுத ஏடுகளைப் புரட்டிக் கொண்டு, “இப்படத்தில் எத்தனை சன்னல்கள் இருக்கின்றன?” என்ற கேள்விக்கு விடை கண்டு கொண்டு இருப்பர். இன்று வினா விடைகள் நடிகையின் நயனங்களைப் பற்றியும் நளினங்களைப் பற்றியுமே அமைகின்றன. அறிவு குறைந்த சாமானியர்களைக் கவர அவர்கள் எடுத்தாளும் உத்திகள் இவை. இதில் பங்கு கொள்பவர் நிறை அறிவுடையவர் அல்லர்.

அறிவு குறைந்தவர்களுக்கு ஆழ்ந்த சிந்தனைகளில் பிடிப்பு ஏற்பட வாய்ப்புக் கிடையாது. அறிஞர்களிடம் பழகுவார்கள். ஆனால் அவ்வறிவில் நாட்டம் காட்ட மாட்டார்கள். குழம்பைத் துழவும் அகப்பைக்கு "அதன் சுவை எப்படி?" என்றால் "அஃது எத்தனை படி?" என்றுதான் கேட்கும். நல்லது கேட்க நயம் அறியும் நுட்பம் தேவைப்படுகிறது.

அறிவு விவாதங்கள் தொலைக் காட்சியில் வைத்தால் உடனே அவற்றை மாற்றி வைத்து விட்டு அநாகரிக ஆட்டங்களை நாடுவர் பலர்; அவளை அவன் பிடிக்க எடுக்கும் ஓட்டம் அது அவனை ஈர்க்கிறது. அறிவின் நாட்டம் அவனை இழுக்க மறுக்கிறது. எலும்புத் துண்டைக் கடித்து வாயைப் புண்ணாக்கிக் கொள்ளும் நாய்க்குப் பால் ஊற்றிய சோறு போட்டால் அதில் அக்கிரகார வாசனை வீசுவதால் அகன்று போய்விடுகிறது. சாக்கடை மொழி பழகிய அதன் செவிகள் வேறுவிதமாகக் குரைக்கப் பழகியது இல்லை.

அறக்கருத்துகள் ஆயிரத்துக்கு மேல் அறிவித்தார் வள்ளுவர். அதற்கு மேலும் முந்நூற்று முப்பது தேவைப்பட்டது. ஏன் இந்தக் கூட்டல்? ஆயிரம் அது அழகான எண்; திருக்குறள் எத்தனை என்று கேட்டால் யாருமே இன்று சரியாகச் சொல்ல முடிவது இல்லை. சிறிது அவர் குறைத்துக்கொண்டு இருக்கலாம் என்பார். ஏன் ஒரு குறளைக் கூடப் படிக்கத் திரு அருளாளர் வரமறுக்கிறார். குறள் வகுப்பு என்றால் ஒதுக்கிவிடுகிறான். நல்லது கேட்பது அதற்கு அவன் அஞ்ச வில்லை. கேட்டுவிட்டு அதனால் அறம் வழுவாமல் வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. குறளைப் படிக்கலாம்; உரை காணலாம். ஆனால் அதன்படி நடக்க இயலாது. அதனால் இஃது அவன் புறக்கணிப்புக்கு உள்ளாகிறது. அறத்தின் திசையையே பார்க்க மறுக்கும் மறக்குடி மாக்கள் இவர்கள். எக்கேடு கெட்டால் என்ன? வாழ்ந்தால் என்ன? செத்தால் என்ன? வாக்குரிமை பெற்று விட்டுச் சாவடிக்கு நடக்கத் தயங்கும் சோம்பேறிகள் இவர்களுக்குக் குடி உரிமை வழங்குவது தேவை இல்லை; அதற்கு அவர்கள் அருகதை அற்றவர்கள்.

தாடி வளர்த்துவிட்டான்; கேட்டால் “நாடி தளர்ந்துவிட்டது” என்கிறான். வீட்டில் குழந்தைகள் சத்தம் போட்டால் இவன் கத்தி அடக்குகிறான். குப்பை கிழித்துப் போட்டால் சுத்தம் சோறு போடும் என்கிறான். சிரித்துப் பேசினால் சீரழிந்து போவாய் என்கிறான். புகையிலை விரித்தால் போச்சு பெண் சிரித்தால் போச்சு என்று கட்டுப்படுத்துகிறான். விடுமுறைவிட்டால் கூடப் பாடம் படி என்று பையனை வற்புறுத்துகிறான். சிரிக்கவே அந்த வீட்டில் இடம் இல்லை. முகத்தை மூஞ்செலியாக்கி வைத்துக் கொள்கிறான். கேட்டால், “வம்பு தும்புக்குப் போகமாட்டேன். நான் உண்டு; என் வேலை உண்டு; பெண்டு உண்டு; பிள்ளை உண்டு; அவர்கள் எனக்குக் கற்கண்டு; வேறு எதையும் நான் கண்டு கொள்வதில்லை” என்கிறான். ஓட்டைக் கார் அதை ஓராயிரம் முறை துடைத்துக் கொண்டு இருக்கிறான். நாலு சுவர் அதன் நடுவில் இவன் நாயகன். தனிமனிதன் சே! கொஞ்சம் சிரிக்க மாட்டான்; விடு அவனை; வேறு பேச்சைத் தொடு.

வாலிபமுறுக்கு; பணச் செறுக்கு; அதிகாரம் எல்லாம் இருக்கு; இப்பொழுதுதான் நீ நினைத்ததை முடிக்க முடியும். ஆனால் நினைப்பது யாது? செய்யத் தக்கது யாது? இன்று பொது வாழ்வில் எத்தனையோ தேவைகள் இருக்கின்றன. ஆட்சியாளரை நம்பி அங்குமிங்கும் பொருள் திரட்டிச் சில நன்மைகள் கருதித் திரட்டிய நிதி; அஃது அதோகதி; படித்தவன் அதற்குப் பிறகு முடித்த பிறகு, “ஏன் படித்தாய் மகனே! இருந்த பணம் இருந்திருந்தால் விருந்துடன் நன்றாகச் சாப்பிடலாமே” என்று வருந்தும் இளைஞர் ஏராளம்; பெண்ணைப் பெற்று வளர்த்து அவளைக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல காசு குறைவாகக் கேட்பவனுக்குக் கட்டிக் கொடுத்துவிட்டு அவள் கட்டுக் கழுத்தியாக வீடு வந்து சேர்கிறாள். ‘வாழா வெட்டி’ என்று அவள் எட்டி உதைக்கப்படுகிறாள். அவள் வாழ்வு எட்டிக்காய் ஆகிறது. எவ்வளவோ அறங்கள் செய்யலாம். அதற்கு நீ சிந்தை செலுத்து; என்ன செய்வது? பொழுது கழியவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கிறாய் வேலையா இல்லை; வேண்டியது இருக்கிறது. விவரம் அறிந்து செய்துமுடி; இந்த வயதில் நீ நல்லதை நாடாவிட்டால் முதுமையிலா நாடப்போகிறாய்? எட்டி அடி எடுத்து வைக்க நீ தட்டுத் தடுமாறும் காலம்; நீ கட்டியவளும் கருதாள் ஒட்டி உறவாடிய சின்ன வீட்டாளும் சீண்டாள். யாருமே வேண்டார். இளமையில் கல்; வளமையில் அறத்தோடு வாழ்க! உயர்க.

பிடித்து வைத்த பிள்ளையார் என்று அசையாமல் எதற்கும் இசையாமல் இருக்கும் இந்தப் பிள்ளை யார்? கொட்டாப் புளிபோல இருக்கிறான். கொடுக்காப்புள்ளிக் காய் போல் கரிக்கிறான். எப்பொழுதாவது சிரிக்கிறானா என்றால் சிரிப்பது இல்லை. வசதி இருந்தும் வாழ மறுக்கிறான். அவனாக இன்பம் அடையமாட்டான். சரி இல்லாதவன் அவனுக்குக் கூழுக்கு உப்பு இல்லை என்கிறான்; மகளுக்கு மனம் முடிக்க அதுவே அன்றாடம் அவன் வீட்டுப்பட்டி மன்றப் பேச்சாக அமைகிறது. அவசரத்துக்கு ரூபாய் ஐந்து என்று கேட்டால் அதை எடுத்துவிட்டால் திருப்பிப்போடுவது எப்படி? அப்படியே போய்விடும் என்று அஞ்சுகிறான். காசு என்றால் வேசியர்கள் கெட்டார்கள் அலைகிறான்.

நல்ல வழிகளில் அவர்கள் நடத்தை இயங்காது. ‘குட்டி’ என்கிறான்; ‘புட்டி’ என்று தேடுகிறான். ‘வட்டி’ என்று அதில் வாழ்கிறான். 'கட்டி' என்று பொன்னைத் திரட்டி வைக்கிறான். மொத்தத்தில் அவன் ஒரு மட்டியாகச் செயல்படுகிறான். சும்மா இரு சொல்லற என்றால் அது தன்னால் இயலாது’ என்கிறான். ஒயாப் பேச்சு; அவன் விடும் மூச்சு ஆசைத் தீயாக இருக்கிறது. வேலை இருக்காது; ஆனால் வீணாகத் திரிவான்; பொய் சொல்வது அவனுக்குப் பொழுதுபோக்கு. கேட்டால் நான் கவிஞன் என்கிறான். ‘கவிதைக்குப் பொய் அழகு, என்று புதுக் கவிஞன் ஒருவன் பாடிவிட்டான், அதனை இவன் சான்றாகக் காட்டுகிறான் பொய் சொல்வதற்கு.

காசு மிகுந்துவிட்டால் அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாது. பேரன் பேர்த்தி எடுத்துவிட்டான்; பேரமைச்சன் என்ற நிலையையும் எட்டிப் பிடித்தான் என்றாலும் அவன் அடங்கிக் கிடக்கவில்லை. பேரழகியைக் கைப்பிடித்தான். அஃது இந்த நாட்டுப் பெரியவர்கள் விவகாரம். அப்படி வாழ்ந்த முதியவன் ஒருவன் கன்னி ஒருத்தியைக் கைக்கு அடக்கமாக இருக்கட்டும் என்று கலியாணமும் செய்து கொண்டான். இது ஓர் இலக்கியச் செய்தி.

அவள் அதிர்ஷ்டக்காரி, மூப்பு வந்து அவனைக் கிடத்திவிடுகிறது. செல்வத்துக்கு எல்லாம் அவள்தான் வாரிசு; அதற்குத் தேவையில்லை யார் சிபாரிசும். வயித்தியன் சொல்லிவிட்டான். வேண்டியவர்களுக்குச் சொல்லி அனுப்புக என்று. அதற்குப் பொருள் தேவைப் பட்டவர்களை வரச் சொல்லி அனுப்பி வைத்தாள். காணார், கேளார், கால் முடப்பட்டோர் இந்த வரிசைக் காரர்கள் அந்த வீட்டை நோக்கி முற்றுகையிட்டனர். சேர்த்து வைத்த பொன்கட்டி அது வைத்திருந்த கைப் பெட்டி ‘புதுசுவிடம்’ தந்திருந்தான். அவள்பால் ‘மவுசு’ குறைந்தது; “தருமம் செய்தால்தான் அந்தப் புண்ணியம் கூட வரும்” என்று தம்பூராக்காரர்கள் தம்பட்டம் அடுத்துப் பேசியதைக் கேட்டிருந்தான். புண்ணியத்தை ஈட்ட அவன் அந்தப் பொன்னைக் காட்ட அவள் அறிந்து கொண்டாள். “இந்தக் கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டேன் இளமையை அவனுக்கு அடகு வைத்தேன்.” என்று குமுறுகிறாள்.

அவன் படகு “திசை மாறுகிறது” என்பதை - அறிகிறாள். அவன் பரிபாஷை அவளுக்கு மட்டும்தான் புரிந்தது. மற்றவர்கள் அதை அறிய முடியாமல் ஆர்வம் காட்டுகின்றனர். “ஐயா விளாம் பழமா கேட்கின்றீர்; அஃது உடம்புக்கு ஆகாதே” என்று அன்புடையாளைப் போலப் பேசி அவன் பேச்சை மாற்றுகிறாள். அவர் மறுபடியும் கையை உருட்டுகிறார்; அவள் “கடலை உருண்டையா? அஃது உடலுக்கு ஆகாதே” என்கிறாள். அவர் “எள்ளுருண்டை” என்று எரிச்சலோடு சொல்லி வினவுகிறார். “இது நள்ளிரவு; எங்கே போவது?” என்று மழுப்புகிறாள். இழுப்பு வருகிறது; திரை மூடப்படுகிறது. அவனால் நினைத்ததை முடிக்கவில்லை. வாலிப வயதில் வாய்தா கேட்காமல் எந்த நல்ல காரியத்தையும் செய்து முடிப்பதுதான் அறிவு; அதுவே வாழ்க்கையின் விரிவு.

34. “செம்மாக்கும் கீழ்”

(பேதைமை)

கரை ஏறக் கருதாது கறைபடிந்த வாழ்வில் நிறைவு காண்கிறாய்; ‘கதகதப்பும்’ ‘மிதமிதப்பும்’ சூடு பிடிக்கின்றன. இன்ப வாழ்வில் நீந்தி விளையாடுகின்றாய்; அலைகள் எழுச்சியும் வீழ்ச்சியும் தருகின்றன. இன்பம் ஒரு மயக்கம்; அவை நிலைக்கும் என்பது அறியாமை; ஆமையை வெந்நீரில் போடுகிறார்கள்; குளிப்பாட்ட அன்று; மகிழ்வூட்ட அன்று. அது செந்நீரில் வெந்து சாக. அந்த நீர் மிதமான சூட்டில் இதமான இன்பம் அனுபவிக்கிறது அந்த ஆமை, வெதவெதப்பு அதற்கு மிதமிதப்புத் தருகிறது. இன்பம் நிலைத்தது என்று இறும்பூது அடைகிறது. அய்யோ பாவம்; சூடு மிகுகிறது; துடிக்கிறது; உயிர் வெடிக்கிறது. தன்னை இழக்கிறது, அழிவு பெற்றுவிட்டது. இதுபோல உன்நிலைமை ஆகக்கூடாது. பதமாக இருக்கும் போதே ஒருவிதமாகக் கரை ஏறுக. கறை மாறுக; விடுதலை பெறுக இன்பக் கேளிக்கைகளில் ஆழ்ந்து அழிந்து போகாதே.

கடமைகள் காத்துக் கிடக்கின்றன. உடமைகளை இப்பொழுது விடமுடியாது. பெரியவனுக்கு மணம் முடித்தேன்; மகளுக்கு மாப்பிள்ளை; பேரனுக்கு புதுப்பள்ளி; வீடுகட்டியாக வேண்டும் எல்லாம் அரை குறையாக இருக்கிறது. இன்னும் செய்ய வேண்டியவை பாக்கிகள் நிறைய இருக்கு. எப்படி இதனை விட்டுவிட முடியும்? பந்த பாசங்கள் வாழ்க்கையின் நேசங்கள். அறம் துறவு கருணை அருள் இவை எல்லாம் தள்ளிப் போடுகிறான். “என் தாய்க்கு நான் கொள்ளிப் போடவேண்டி இருக்கிறது” என்று சாக்குப் போக்குக் கூறுகிறான். இவன் செய்கை எப்படி இருக்கிறது?

கடலிலே ஒருவன் முழுகி நீராடச் சென்றானாம். “அலைகள் ஓயவில்லை; அலைகள் அடங்கட்டும், நீரில் இறங்குகிறேன்” என்றானாம். அலையும் ஓயப்போவது இல்லை. இவன் நீரில் இறங்கப் போவதும் இல்லை. இல்லில் அகப்பட்டுக் குடும்பச் சுமையை விடமுடியாது. கடமைகளும் தீராது. இவன் அறவாழ்வில் அடிஎடுத்து வைக்க முடியாது. இவர்கள் எல்லாம் சமுசார பந்தத்தினின்று விடுபட முடியாது.

“உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவு இலார்” என்பர் வள்ளுவர். கல்வி நூல் பல கற்றவர்; உயர்குடியில் பிறந்தவர்; தவஒழுக்கம் கொண்டவர். அறிவு முதிர்ச்சி உடையவர் இவ்வளவு இருந்தும் நடைமுறை உலகை அறிந்து வாழ வழி அறியமாட்டார். வீட்டில் மனைவி மக்களோடு போராட்டம். அவர்களை அடக்கி ஆள நினைத்தான். தன் போக்கின்படித்தான் அவர்கள் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். தொழில் துறையில் எல்லாம் தனக்குத்தான் தெரியும் மற்றவர்கள் கற்றுக் குட்டிகள் என்று கூறி அவர்களை அடக்கி வைக்கிறான். பிறர் உரிமைகளை மதிக்க மறுக்கிறான். இவன் வாழ்வு தோல்வியுறுகிறது; மனம் உளைகிறான் களைப்புதான் ஏற்படுகிறது. உலக நடை இது என்று அறிந்து செயல்படுபவர் அறிவு குறைந்தவராயினும் அவர் வெற்றி பெறுவார். அவரால் மற்றவர்களுக்கு இல்லை தொல்லை. விட்டுக் கொடுத்து வாழ்ந்தால்தான் எதையும் சாதிக்க முடியும். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சாதித்தால் அது சாதனை ஆகாது; மற்றவர்களுக்கு அது வேதனையாகும்.

“கல்லாதவரே மிகவும் நல்லவர். ஏன் எனில் அவர்கள் மிகையாகச் சொல்லாதவர்கள்” என்று கூறுவது வழக்கம். இவை எல்லாம் புகழ் மொழிகள் அல்ல; இகழ் மொழிகளே. அதற்கு மாறுபட்டு நாலடியார் நாலு வார்த்தைகள் பேசுகின்றன. கல்லாதவரை இவ்வாறு கூறி ஏசுகின்றன. கல் கல்லாதவரைவிட மேலானது. அது இருக்க கிடக்க, நடக்க, வீடுகட்ட எல்லாவற்றிற்கும் உதவுகிறது என்று கூறுகிறது. இதற்கு ‘மலைப்பிஞ்சு’ என்று அழகான சொல்லும் உள்ளது. கூட்டத்தைக் கலைக்க எதிரிகளைத் தாக்க இந்தப் பிஞ்சுகள் பயன்படுகின்றன. கல் சடப்பொருள், திடப்பொருள் அது ஒருவகையில் பயன்படுகிறது. அறிவு ஜீவியாக இருக்க வேண்டிய மனிதன் கல்லாதவனாகக் கிடந்தால் அவனுக்கும் கல்லுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? அவன் மானிடனாகப் பிறந்தும் உயர்வு பெறத் தகுதியற்றவனாகிவிடுகிறான். அறிவு அற்ற நிலையில் அவன் கல்லைவிடத் தாழ்ந்தவன் ஆகின்றான்.

நாவிற்கு நரம்பு இல்லை என்றால் அது ஒரு வரம்புக்கு உட்படாது; தம்மினும் எளியவர் தம்மிடம் வேலைக்கு அமர்ந்தால் ‘இடு எடு’ என்று ‘கெடு பிடி’ காட்டுவது இன்று நடைமுறை. ‘ஆகாத பெண்டாட்டி அவள் கால்பட்டால் குற்றம், கைபட்டால் குற்றம்’ என்பது பழமொழி. தாம் இட்ட பணிகளைச் சற்றுப் பிசகாசச் செய்து விட்டால் அவர்களை நோக்கிக் கெடு பிடி; திட்டு வசவு. ‘நா காக்க’ என்று கூறியது இவர்களையும் நோக்கியே. பணி செய்பவர் அவர்கள் அடிமைகள் அல்லர், மிடிமைக்காக அவர்கள் பணி செய்கின்றனர். ஆட்களைக் கனிவாக நடத்துவது கண்ணியம் ஆகும்; அது நன்மை தரும்.

சில முரடர்கள்; கல்லாத கசடர்கள்; அவர்கள் தீமை செய்தே பழகிவிட்டவர்கள்; அவர்களைத் திருத்தலாம் என்று திருக்குறள் கொண்டு சொல்கிறாய்; அதை நீ தான் படித்துக் கொண்டிருக்க முடியும். அவனுக்குப் பொருள் விளங்காது. தனி மனிதன் மட்டும் அன்று. இனித் திருக்குறளைப் படித்தால் பயன் இல்லை என்று சமூகம் பேசி வருகிறது. ஆட்சியில் உள்ளவர்கள் இன்று ஊழலில் உழல்கிறார்கள் என்று உலகம் பேசுகிறது. துணிந்து எதிர்க்க முடியுமா? நீ தோல்வி தான் காண்பாய். சில அநீதிகள் கால் ஊன்றிவிட அவற்றையே மூலதனமாக வைத்து இன்று நிறுவனங்கள் நடைபெறுகின்றன. எதையுமே மாற்ற முடியாது என்ற நிலைக்கு வந்து ஆகிவிட்டது. கல் பாறையை அகற்ற நீ கை கொடுத்தால் உன் கைதான் நசுங்கும்; பாறை அசங்காது. அதை அகற்றக் கடப்பாறை தேவைப்படும் அதைவிட இயந்திரத் துக்கி தேவைப்படும். ஒரு பிரளயம் வந்தால் தவிர இந்தக் குப்பைகளை ஒழிக்க முடியாது அதனைப் புரட்சி என்று பேசுகிறார்கள். அதிலும் இன்று நம்பிக்கை அற்றுவிட்டது. நக்சலைட்டுகள் பயங்கரவாதிகள் இவர்கள் உருவாகிவிட்டனர். இன்று இவர்கள் புதுப் பிரச்சனைகள் ஆகிவிட்டனர்.

அதோ அது யார் வீடு, ‘அமைச்சர் இல்லம்’ என்று அழகு தமிழில் அறிவிக்கின்றனர். அங்கே ஒரே கூட்டம் ஏன்? மனு நீதிச் சோழனிடம் சென்று நீதி கேட்க அன்று; அநீதியை விலைக்கு வாங்க; தவறான வழிகளில் சலுகைகளைப் பெற. நியாயத்துக்கே அங்கு விலை பேசப்படுகிறது. அது நிதித்தலம் என்று பேசிக் கொள்கிறார்கள். போன காரியம் வெற்றியா? இல்லை என்று வெறுங்கை காட்டுகிறார்கள். அங்கே நெருங்கிக் குழுமி இருக்கின்றனர். நல்லதும் அங்கே நடைபெறு வதும் இல்லை கெடுதலும் இல்லை; ஏன் அங்குச் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள்? அதற்கு விடை நாலடியார் கூறுகிறது. நெய் இருக்கும் பாத்திரம்; மூடி இறுகத்தான் உள்ளது; எதுவும் கிடைக்காது என்றாலும் அதைச் சுற்றி எறும்புகள் ஏறிக் கொண்டும் இறங்கிக் கொண்டும் இருக்கின்றன. இந்த எறும்புகள் நிலைதான் அதிகாரமும் பணமும் உடையவர்கள் இல்லமும் அதைச் சுற்றி வரும் கூட்டமும்.

எல்லாம் இருக்கிறது என்றாலும் எதுவும் இல்லாதவனாக வாழ்கிறான். வசதிகள் எது இல்லை? இன்றைய மின் அணு இயந்திரங்கள் எல்லாம் நிறைந்துவிட்டன. அரைக்க, வெளுக்க, துடைக்க, எடுக்க, பிடிக்க இவற்றிற்கு எந்திரங்கள் அல்லது எடுபிடி ஆட்கள். அவர் மனைவி ஊதிவிட்டாள். எடை கூடிக் கொண்டே இருக்கிறது. அவள் நடை அதன் இயக்கமும் தடை. பிள்ளைகள் செல்வம் கொடுத்துச் செழிப்பில் கெட்டுவிடுகிறார்கள். என்று பேசிக்கொள்கிறார்கள். சொன்ன பேச்சுக் கேட்பதில்லை. பணியாட்கள் நாடகக் குழுவில் இருந்து வந்தவர்கள் போல் நடந்து கொள்கிறார்கள். எங்கும் எதிலும் உண்மை இல்லை; அதைவிட அவனிடமே எந்த நன்மையும் இல்லை. நல்லதே செய்து அறியமாட்டான். நாலு பேர் வாழ வழிவகை செய்யமாட்டான். எச்சில் கையாலும் காக்கையை ஒட்ட மாட்டான். மிச்சம் மீதி எதுவும் பணியாட்களுக்கும் தரமாட்டான். ‘இல்லை’ என்ற சொல்தான் அங்கு எதிரொலிக்கிறது. அவன் மனத்திலும் மகிழ்வு இல்லை; அதற்கு யார் பொறுப்பு? அவனே தான். மற்றவர்களை மகிழ்விக்க நினைக்காதவன் அவன் மட்டும் எப்படி மகிழ்வோடு இருக்க முடியும்? அலுப்புத்தான் அவர்கள் நிலுவையாக நிற்கும்.

விரும்பி உன்னிடம் வருகிறார்கள்; உன் சிறப்புகளைப் பேசிப் பாராட்டுகிறார்கள். நீ நடிகனாக இருந்தால் அவர்கள் ரசிகர்கள்; எழுத்தாளனாக இருந்தால் வாசகர்கள்; ஆசிரியனாக இருந்தால் அவர்கள் மாணவர்கள்; தலைவனாக இருந்தால் அவர்கள் தொண்டர்கள். மதிக்க வந்தவர்கள் அவர்களை அவமதித்து அனுப்பிவிடுகிறாய்; பிறகு நீ தனிமையில் வாடுகிறாய். காரணம் நீ பிறரை மதிக்காமைதான். நீ உண்மையில் மகாமேதாவி என்று கர்வப்படுகிறாய். தலைக்கணம்; அதனால் உனக்குத் தலைவலி ஏற்படுகிறது; தவிர்க்க முடியாது.

தகுதி என்பது உன் மதிப்பீட்டால் வருவது அன்று; மற்றவர்கள் பாராட்டால் பெறுவது. நீ எந்தத் துறையில் இருந்தாலும் உன்னைப் பாராட்டிப் பேச நண்பர்கள் தேவை; ரசிகர்கள் வேண்டும்; விமரிசகர்களும் தேவை. விமரிசனம் கண்டு எதிர்த்து வீரவசனம் பேசுகிறாய்; அதற்குப் பொது வாழ்வில் கால் வைக்கக் கூடாது.

குறைகளும் நிறைகளும் உரையில் எடுத்துக் காட்டுவர். நடுநிலைமையில் இருந்து அவற்றை ஆய்ந்து உன்னை நீ வளர்த்துக் கொள். கலைத்துறைக்கே இது மிகவும் அடிப்படை.

கவிதை ஒன்று எழுதிவிட்டால் தன்னைக் கண்ணதாசன் என்று கூறித் தலை கனக்கின்றான். கதை ஒன்று எழுதிவிட்டால் காண்டேகர் வாரிசு தான் என்று அளக்கிறான். நாடகம் ஒன்று எழுதிவிட்டால் தன்னைப் பம்மல் என்று விம்மிதத்தோடு பறை சாற்றுகிறான். அழகிய உரைநடை எழுதிவிட்டால் தன்னைப் புதுமைப் பித்தன் என்று பிதற்றுகிறான். இப்படி ஒவ்வொரு துறையிலும் தனக்கு விஞ்சியவர் இல்லை என்ற தறுக்குபவர் பலர். இவை வீண்செருக்கு; பாராட்டு என்பது பிறரிடமிருந்து பெறுவது. உன்னையே நீ உயர்த்திப் பேசுவது தற்புகழ்ச்சி என்று கூறுவர். இப்படியே உன்னை நீ புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தால் உன்னைப் பாக்கத்து மருத்துவமனைக்குத் தள்ளிச் சென்றுவிடுவர். பத்துப்பேர் வந்து மருத்துவம் பார்த் தாலும் உன் பித்த நிலையை மாற்ற முடியாது. எதுவும் மிகையாகக் கொண்டால் அது பிறர் நகையாக மாறிவிடும். உனக்கும் தகுதி இருக்கிறது; மேலும் உழைத்து உயர்வு அடைக. நீயே உன்னைப் பற்றிப் பேசாதே. அஃது உனக்குக் கேடாக முடியும்; போட்டிகள் பெருகும். உன்னை வீழ்த்த மற்றவர்கள் முயல்வர். அடக்கம் அழகு தரும்.

35. தாழ்ச்சி நீக்குக

(கீழ்மை)

தட்டு ஒன்று தேடி அரிசியும் பொட்டும் வைத்து ஊட்டினாலும் கோழி குப்பையைத் தேடிச் சீக்கி அதைக் கிளறிப் புழுவும் பூச்சியும் தின் பதிலேயே நாட்டம் செலுத்தும், நாயைக் குளிப்பாட்டி நடுவிட்டில் வைத்தாலும் அது வாலைக் குழைத்துக் கொண்டு புழைக் கடைக்குத்தான் போகும். பிச்சைக்காரி அவளை வீட்டுக்கு அழைத்துத் தட்டு நிறைய சோறு போட்டாலும் அவள் மாடத்தில் அங்கங்கே ஒர் உருண்டை வைத்துவிட்டு “அம்மா தாயே” என்று கேட்டு மறுபடியும் ஒன்று சேர்த்துத்தான் சாப்பிடுவாள். இப்படி ஒரு பழைய கதை. எவ்வளவு நல்ல நூல்களைத் தந்து ‘படி’ என்று கொடுத்தாலும் கீழ்மக்கள் அவற்றைப் புரட்டிப் பார்க்கமாட்டார்கள் குப்பைக் கூளங்களையே அற்ப காசுக்கு வாங்கி மனத்தை அழுக்காக்கிக் கொள்ளுவர்; மாதம் ஒரு நாவல் இவற்றையே விரும்புவர். கொலை, கொள்ளை விறுவிறுப்பாகப் படித்துச் சுறுசுறுப்பாகப் படிப்பதில் ஆர்வம் காட்டுவர். ‘ஆபாசம்’ அவர்களை இழுத்துப் பிடிக்கிறது. இஃது இன்று இளைஞர் மனம் கெடுவதற்குத் துணை செய்கின்றது. மட்டமான உணர்வுகளைத் துண்டும் காதற் கதைகளைப் படித்துக் காம உணர்வுக்குத் தீனி போடுவர். இன்று சிந்தனையைத் தூண்டும் எழுத்துத் தேவைப்படுகிறது; அந்தப் பக்கம் இவர்கள் திரும்புவது இல்லை.

அருமையான நூல்; அதை விவரித்து அதில் உள்ள விழுமிய கருத்துகளை எடுத்து உரைக்கக் கற்றவர் அழைத்தால் மற்று அதனைச் செவி மடுக்க அஞ்சுகிறான். கருத்துள்ள செய்திகளை எடுத்துச் சொன்னால், “அவை தேவை இல்லை” என்கிறான். “தூக்கம் வருகிறது என்னை விட்டு விடுங்கள்” என்று கூறித் தப்பித்துக் கொள்கிறான். அதிகமாகப் பேசினால் அவன் வம்புக்கு இழுத்து வாதங்கள் புரிகிறான்; “மேலோர் கூறிய கருத்துக்கள் எல்லாம் தீயவை” என்று கூறுகிறான். “மக்களை அடிமைப்படுத்த மடையர்கள் எழுதியவை” என்று வாதாடுகிறான். “வேலை வெட்டி இல்லாத புலவர்கள் எழுத்தாணி கொண்டு எழுதியவை எல்லாம் இன்று நூல்கள் என்று படிக்கிறார்கள். இவர்கள் எழுத்து மகிழ்ச்சியை மட்டுப்படுத்துவன; இன்பமாக வாழவழி கூறாதவை” என்று வாதிடுகிறான். “காம சாத்திரம் தந்தால் அதைத் தான் படிக்கத் தயார்” என்று கூறுகிறான். தனக்கு அத்தகைய நூல்களே பிடிக்கும் என்று கூறுகிறான். வாயைத் திறந்தாலே உப்பங்கழி நாற்றம் வீசுகிறது. என் செய்வது?

சில சமயம் எதிர்பாராத வகையில் எங்கிருந்தோ செல்வம் வந்து குவிந்துவிடுகிறது. அதனால் வாழ்க்கைத் தரம் மாறிவிடுகிறது. நேற்றுவரை கலகலப்பாகப் பழகியவன் இன்று சலசலப்புக் காட்டுகிறான் பேசுவதற்கு நேரம் இல்லை ‘நேரம் இல்லை’ என்று சொல்லிவிட்டுப் போகிறான்; மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள், “புதுப் பணக்காரன் அப்படித்தான் இருப்பான்” என்று விமரிசிப்பதைப் பார்க்கிறோம். பணக்காரர்களில் இருவகை உண்டு என்று தெரிகிறது. பழையவர் பண்புடையவராக இருப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாம் வெறும் தோற்றம்தான். பணத்துக்கும் குணத்துக்கும் தொடர்பே இருப்பது இல்லை பண்பட்டவர் செல்வம் பெற்றாலும் தம் இயல்பில் மாறுவது இல்லை; பழகியவரிடம் அன்பும் நண்பும் பாராட்டுவர்; பண்படாத கீழ்மையோர் ஒசி டிக்குச் சுற்றிய நாளில் காசில்லாமல் இருந்தபோது எப்படிப் பிறர் கையேந்தி வாழ்ந்தார்களோ அப்படித்தான் செல்வம் வந்தபோதும் பிறரைச் சுரண்டியே வாழ்கின்றனர். அவர்களிடமிருந்து எந்த நன்மையும் வெளிப்படுவது இல்லை.

பொன் தட்டிலே சோறு போட்டு ஊட்டினாலும் சொரிநாய் அஃது ஊர் சுற்றி எச்சில் இலைக்குத் தாவிச் செல்லும். எங்காவது விருந்து உண்டு அவர்கள் போடுகின்ற எச்சில் இலைக்குப்பை அங்கே மிச்சிலை நோக்கி வெறிபிடித்துச் செல்லும். அதுபோல ஒரு சிலருக்கு நல்வாழ்வு அமைத்துக் கொடுத்தாலும் அவர்கள் அந்தப் பழைய கும்பலை விட்டு வரமாட்டார்கள். சூதாடும் களம், மாது ஆடும் களம் இப்படிக் களம் காணும் வீரராகவே செயல்படுவர்; உளங்காணும் முறையில் உவகை பெறவே விழைவர்.

அடுக்கிய கோடி தன்னை வந்து மிடுக்கினாலும் தகைமை சான்றவர் அதனை வெளிக்குக் காட்டார். அவர்கள் தம் செல்வச் செருக்கால் தலைக் கிறுக்கு அடைவதில்லை.

ஒன்றும் இல்லாதவன் முன்னையை விடக் கொஞ்சம் கூடுதலாகச் சம்பாதித்துவிட்டால் அவனுக்குத் தலை கால் தெரிவது இல்லை. வீட்டில் மனைவியை அதிகாரம் செய்வான்; வெளியே அளவுக்கு மீறிய ஆடம்பரம் தலைகாட்டும்; அவனைப் பிடிக்கவே முடியாது.

ஒருவன் காலுக்குச் செருப்பு வாங்கச் செல்கிறான்; அவன் நடக்காத கடை இல்லை, பார்க்காத செருப்பு இல்லை; ஒன்று கூட அவனுக்குப் பிடிக்கவில்லை. எவ்வளவு விலை உயர்ந்த செருப்பாக இருந்தாலும் என்ன? அதைக் காலில்தான் போட்டுக் கொள்ளப்போகிறான். கண்ட இடத்தில் நடக்கப் போகிறான். தேவைக்கு மேல் ஆடம்பரம் விரும்புபவர் பலர் உள்ளனர். இன்று அது நாகரிகம் ஆகிவிட்டது. பணம் கொஞ்சம் வந்துவிட்டால் இப்படி வீண் ஆடம்பரத்துக்குச் செலவு செய்கின்றனர். இவர்கள் மேன்மை என்று இவற்றைக் கருதுகின்றனர்; இது தாழ்மை என்றே கருதப்படும்.

ஒரு சிலர் ‘சிடு சிடு’ என்று சீற்றம் காட்டுவர்; அவர்களுக்கு அமைதியாக நடந்து கொள்ளவே தெரியாது. எரிச்சல், எதிலும் உளைச்சல்; அதுமட்டும் அன்று; கருணை காட்டமாட்டார்கள். பிறர் துன்பப்பட்டால் அதைக் கண்டு மகிழ்வர். எடுத்ததற்கு எல்லாம் சினம் கொள்வர்; இவர்கள் கீழ்மைக் குணம் படைத்தவர் ஆவர்.

பழமை பாராட்டும் பண்பு சான்றோர்பால் காணப்படும்; சிறுவயதிலிருந்து தெரியும். நல்ல பழக்கம்: அதனால் சில நன்மைகள் தேடி இவரிடம் வந்தால் தம்மாலான உதவிகளைச் செய்வர். இவர்கள் சால்பு உடையவர்; கீழ்மக்கள் எரிந்து விழுவர்! உன்னை யார் இங்கு வரச் சொன்னது?” என்று கேட்பர். பழமையைக் கிளறுவதை அவர்கள் ‘உளறுவதை இவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. மேன்மக்கள் பழமை பாராட்டுவர். கீழ்மக்கள் அதனை மறப்பர்; நண்பரைத் துறப்பர்.

புல்லைக் கொண்டு வந்து போட்டுக் கொழுக்க வளர்த்தாலும் எருது எருதுதான். அதனைத் தேரில் பூட்ட இயலாது; ஏர் உழத்தான் பயன்படும். கீழ் மகனை எவ்வளவு தூரம் மேலுக்குக் கொண்டு வந்தாலும் அவன் அந்த இடத்துக்குப் பயன்படமாட்டான். உயர்வுக்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ளமாட்டான். யார்யாரை எங்கு வைக்கவேண்டுமோ அங்கு வைத்தால்தான் அவர்கள் செயல்படுவர்.

36. கசடு அற வாழ்க

(கயமை)

கசப்பான செயல்களைச் செய்பவர் கயவர் எனப்படுவர். யார் யார் எத்தகைய கசப்புகளைச் செய்கின்றனர். நாலடியார் கூறுவன இவை; மகன் இளையன்; என்றாலும் இன்பத்துக்கு வளையான்; கட்டியவளோடு ஒட்டி உறவாடுகிறான். வாழ்க்கை அன்பில் சுழல்கிறது அமைதி தவழ்கிறது. பிரச்சனையே இல்லை. தந்தை முதியர்; என்றாலும் புது தாரம் வேண்டும் என்கிறார் மனைவி புனிதவதியாகிவிட்டாள். இவர் இச்சைக்கு அவள் பச்சைக் கொடி காட்ட மறுக்கிறாள். பணத்திமிர் ‘துரு துரு’ என்று அவரைத் தவறான செயலுக்குத் துண்டுகிறது. இது கேட்பதற்குக் கசப்பாகத்தான் இருக்கிறது. அதனால் இது கயமை எனப்படும்.

தவளை நீரிலேயே கிடக்கிறது; என்றாலும் அதன் சொரித் தன்மை நீங்குவது இல்லை. அழுக்கு அகல்வது இல்லை. நூல் பல கற்றவராயினும் பால் விருப்பு அவர்களை விடுவது இல்லை. பெண்பால் அவர் கண்பார்வை சென்று அவளை வம்புக்கு இழுக்க அது விசாரணைக்குரிய செய்தியாக மாறுகிறது. இதுவும் கசப்பான செய்திதான்; ஆகவே இது கயமை ஆகும்.

“கொடிறு உடைக்கும் கூன் கையர்க்கு அல்லால் படிறு உடையவர் படியமாட்டார். ஈர்ங்கை விதிரார்” “அடித்தால் தான் அம்மியும் நகரும்”, “அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவார்” என்பவை பழமொழிகள். பச்சை மரமானாலும் உளிகொண்டு செதுக்கினால்தான் அது நெகிழ்வு தரும். வன்மை உடையவர் அன்புக்குப் பணியார் அச்சுறுத்துதலுக்கே பணிவார். இஃது அவர்கள் கீழ்மையாகும். கசப்பான செய்தி. அதனால் இது கயமையாகும்.

மலை நலம் நினைப்பான் குறவன்; நிலம் நலம் நினைப்பான் உழவன்; செய்த நல்வினை நினைத்து நன்றி பாராட்டுவர் சான்றோர்; கீழ்மகன் குறைகளையே பேசி இழிவுபடுத்துவான். அவனுக்கு நல்லதே தெரியாது இதுவும் கசப்பான செயல்; கயமையாகும்.

“புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்வதைவிட உயிர்விடுவது அறம் கூறும் ஆக்கம்” என்பார் வள்ளுவர். நேரே பார்க்கும்போது “இந்திரன்” என்றும் “சந்திரன்” என்றும் பேசிவிட்டுச் சற்று மறைந்ததும் அவர்களை இழித்தும் பழித்தும் கூறுபவர் உளர். அதை விட நேரே; ‘டேய்! நீ அயோக்கியன், கீழ்மகன்’ என்று கூறிவிடலாம். நீ ஒரு கோழை; அது மட்டும் அன்று அறிவிலி; விண் பெருமை மற்றவர்களைக் குறைவாகப் பேசுவதால் நீ மிக உயர்ந்தவன் என்பது உன் கணிப்பு; உன் சொல் கசப்பு; அதனால் நீ கயவன் ஆகிறாய்.

கவர்ச்சியாக உடை உடுத்தி அதை வைத்துத் தொழில் நடத்துவது பெண்மைக்கு இழுக்கு. மகளிர் அழகாக இருப்பது பிறரைக் கவர அன்று. பிறர் நேசிக்க; அழகு மகிழ்ச்சியை ஊட்டலாம். அஃது என்றும் இன்பம் தருவது; கவர்ச்சி விபச்சார நோக்கு உடையது. பிறரைக் கெடுக்க முயல்வது; அதனால் கசப்பானது; கயமையும் ஆகும்.

“நூறு பிழை செய்தாலும் மன்னிக்க” என்று கேட்டுக் கொண்டாள் சிசுபாலனின்தாய்; அதுவரை கண்ணன் பொறுத்தான். அதற்கு மேல் சென்றபோது தான் ஒறுத்தான். பிழைகள் நூறு செய்தாலும் சான்றோர் பொறுப்பர். ஒரு நன்மை செய்திருந்தால் அதைப் பாராட்டித் தீமைகளை மன்னிப்பர். கீழோர் எழுநூறு நன்மைகள் செய்து ஒரு சில தவறுகள் செய்துவிட்டால் அவற்றையே எடுத்துப் பேசுவர். இது கீழ்மையாகும்; கசப்பான செய்தி; எனவே கயமையாகும்.

காட்டு யானை அதன் தந்தம் அழகு உடையது; கூர்மைமிக்கது; வலிவுடையது; வீட்டுப் பன்றி அதனை ஏன் காட்டு யானைபோல ஆக்கக்கூடாது என்று ஒரு அறிவாளி நினைத்தானாம். அவன் என்ன செய்தான்? வைரக் கற்களைப் பதித்து ஒரு பூண் செய்து அதற்கு மாட்டினான். அப்பொழுதும் அது யானைபோல் ஆக முடியவில்லை. அதன் கம்பீரம் இதற்கு எப்படி வரும்? இது சகதியைத் தேடிக்கீழ்மையில் வாழ்கிறது; மட்டமான மனிதர்களை எவ்வளவு கூர்மைப்படுத்தினாலும் அவர்கள் தம் திட்டங்களில் இருந்து மாறுவது இல்லை. தம் இட்டமான செயல்களையே செய்து சீர் அழிவர்; பேர் கெடுவர். ஊரார் இகழ்வர். இவர்கள் வாழ்வு கசப்புமிக்கது. கயமை உடையது ஆகிறது.

தாமரை இலை நீருக்குள்ளும் அமிழாது, தன் எல்லைக்கு மேலும் நீளாது. ‘நீரளவே ஆகுமாம் நீராம்பல்’ என்பது பழைய பாட்டு; இந்தத் தாமரை ஒரு நிலையில் நிற்காது. தளர்ந்து கொண்டே இருக்கும். தண்டு ஊன்றி நிலைபெறவும் செய்யாது. அப்படியே அழிந்துபோக வேண்டியதுதான். ஒரு சிலர் இப்படிப் பகற்கனவு கண்டு கொண்டே வாழ்க்கையை நடத்துவர். “இப்படிச் செய்தால் லட்சங்கள் வரும்; அப்படிச் செய்தால் லட்சியங்கள் நிறைவேறும்” என்பர். இருந்த இடத்தில் இருந்து கொண்டே கோட்டை கட்டுவர். ஒரு சிறு துரும்புகூட எடுத்துப் போடமாட்டார்கள். இதைப் போலவே காலமெல்லாம் பேசிக்கொண்டு எந்த அளவும் உயரமாட்டார்கள். உள்ள நிலையிலேயே இருந்து தேய்ந்துவிடுவர். கசப்புமிக்க வாழ்வு; பிறரை ஏமாற்றிக் கொண்டே காலம் ஓட்டுவர். லட்சங்கள் வரும் என்று சொல்லிக்கொண்டே தாம் பிறர் மதிக்க வாழ்வர். இவர்களும் கயவர்களே.

நெட்டி இருக்கிறதே அது கெட்டியான பொருள் அன்று. ‘தக்கை’ என்று கூறுவர். அது நீரில் வளர்வதுதான்; மேற்பகுதி கூடப் பசுமை பெற்று இருக்கும். அடிப்பகுதி பசையற்று வறட்சியாக இருக்கும். அதுபோலப் பலர் ஈவு இரக்கம் காட்டாமல் கல்நெஞ்சு உடையவராக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். வசதிகளுக்குக் குறைவு இல்லை. நினைத்தால் மற்றவர்களுக்கு உதவலாம். ஆனால் உதவமாட்டார்கள். கேட்டால் அவர்கள் தங்களுக்கு உள்ள கஷ்டங்களை விவரித்துக் கூறுவர். ஊதாரித்தனமான செலவுகள் செய்வர். தன் சொந்த நலனுக்கு எது வேண்டுமானாலும் செய்து கொள்வர். மனைவியையும், வீட்டையும் அலங்கரிப்பர். மற்றவை அவர்களுக்குப் பொருட்டு அல்ல. கடின சிந்தையர்; கயவர் இவர்.

37. கதம்பப் பூக்கள்

(பன்னெறி)

அழகான வீடு; தோட்டம்; எடுபிடி ஆட்கள் எல்லாம் இருக்கின்றன. என்றாலும் அது ஏன் அந்த வீடு சோகக் காட்சி அளிக்கிறது? இஃது என்ன சுடுகாடா? மனித வாசனையே இல்லை, இந்த வீட்டு மகாலட்சுமி எங்கே? எல்லாம் இருக்கிறது; வீட்டைப் பராமரிக்க ஒரு கிருக லட்சுமி இல்லை; மனைவி இல்லாத வீடு அது அரண்மனையாக இருந்தாலும் அது வெறிச்சிடத்தான் செய்யும். நண்பர்கள் மட்டும் இருந்தால் அது சகவாசம். மனைவி இருந்தால்தான் அது சுகவாசகம்.

“மகளிர் நிறையைக் காத்துக் கொள்ளவில்லை என்றால் சிறைகாக்கும் காப்பு என்ன செய்யும்?” என்றார் வள்ளுவர். அது முற்றிலும் உண்மை; காவல் எவ்வளவு வைத்தாலும் ஒருத்தியின் ஆவலைக் கட்டுப்படுத்த இயலாது. அவள் நினைத்தால், எவ்வளவு காவல் இருந்தாலும் அதை மீறித் தன் விருப்பை நிறைவேற்றிக் கொள்வாள். தவறியவள் திருந்துவது கடினம். அவரவர் மனக்காப்பே தக்க காப்பு ஆகும்.

மனைவி நல்லவளாக வாய்ப்பது அதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்; “சற்று ஏறுமாறாக நடந்து கொண்டால் கூறாமல் சந்நியாசம் கொள்” என்றார் அவ்வைாயர். ஏன்? யாரைப் பார்த்து இவ்வாறு கூறினார். ‘எறி’ என்று கூறி எதிர் நிற்பாள். கணவனை எதிர்த்து அவன் சீற்றத்தைத் தூண்டுவாள்; இவளை ‘எமன்’ என்று தான் கூற வேண்டும். இது முதல் ரகம்; வேளைக்குச் சோறு சமைக்கமாட்டாள். கேட்டால், “நான் ஏன் சமைக்க வேண்டும்? அடுப்பு ஊதவா? என்று கேள்விகள் தொடுப்பாள்” இவள் இரண்டாவது ரகம்; இவளை என்ன என்று கூறுவது? ‘தீராத நோய்’ என்று தான் இயம்ப வேண்டும். சமைத்து வைப்பாள்; இதைப் போட்டுச் சோறு போடமாட்டாள். கேட்டால் “அதுகூட நீ போட்டுக் கொள்ளக் கூடாதா?” என்று அடம் பிடிப்பாள். இவளைப் ‘பேய்’ என்றுதான் கூற முடியும். இந்த மூவரும் கொண்டவனைக் கொல்லும் படையாவர்.

ஒருத்தியை மணந்தான் அவள் அழகி என்பதால்; அவளை அணைந்தான்; அவள் இவனை விட அழகனைத் தேர்ந்து ஓடிப் போய்விட்டாள். மற்றொருத்தியை உடனே மணந்தான். அவள் நோயாளி; இவனுக்குச் செலவு வைத்துவிட்டுச் சென்று மறைந்தாள். நாள் சிலகூட ஆகவில்லை. ‘மண மேடை’ என்ற விளம்பரத்தைப் புரட்டிக் கொண்டு இருக்கிறான். இவனைப் போல அறிவிலி யாரும் இருக்க மாட்டார்கள். இனிப் பணக்காரி என்று ஒருத்தியைத் தேடுவான்; அவளுக்கு இவன் ‘எடுபிடி’ ஆவான். கடைசிவரை இப்படிப் பட்டவர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டுதான். இருப்பார்கள். பெண்டாட்டி இல்லாமல் இவர்கள் வாழமாட்டார்கள். கேட்டால் “ஒன்டிக் கட்டையாக எப்படி வாழ்வது?” என்பார்கள், படட்டும் துயரம். இவர்களைத் திருத்தவே முடியாது. தவம் செய்து அறிவு தேடித் தனித்து இருந்து அமைதியாக வாழ்வது மிக உயர்ந்த வாழ்க்கை. இது தலையாய வாழ்வு. அடுத்தது மனைவி. பின் மக்கள் இந்த வட்டத்துள் அகப்பட்டு உழல்வது. இரண்டாம் தரமான வாழ்க்கை.இதற்கு இல்லறம் என்று பெயர் கொடுத்துச் சிறப்பிக்கின்றனர். மூன்றாவது உழைப்பு இன்றித் தன்மானம் விட்டு யார் பின்னாலாவது சென்று அடிபணிந்து அடிமையாக வாழ்தல்; இது கடைநிலை வாழ்க்கை.

விதை ஒன்று போட்டால் கரை ஒன்று காய்க்காது. இதுவும் இதற்கு நிகரான ஓர் உவமை. மற்றொன்றையும் சொல்லி முடிக்கிறோம். நெல்விதை போட்டால் அதே ரகம்தான். நெல்லூர் அரிசி என்றால் அது வேலூரில் விளையாது. அதுபோல் ‘தந்தை அறிவு மகன் அறிவு’ என்று நாலடியார் கூறுகிறது. எனவே மகன் அறிவாளியாக இருக்க அவன் தந்தையும் ஒரு காரணம் என்பது தெரிகிறது. இது வருணாசிர தருமத்தின் ஒரு பக்கம்; தந்தை சிற்பியாக இருந்தால் மகன் கையில் சிற்றுளி பிடிப்பான்; வித்தியாசம் காலம். சில சில வேறுபாடுகள் இருக்கலாம். அடிப்படையில் அப்பனைத் தோல் உரித்து போட்டது போல அவன் மகன் இருக்கிறான் என்று பேசக் கேட்கிறோம். இஃது எப்படி? சிந்தித்துப் பார்க்கவும்.

யார் எப்படி என்று கேட்டால் உருப்படியான பதில் கூற, முடியாது. இன்று வாழ்கின்றவர் நாளை தாழ்வோர்; சொல்ல முடியாது. இன்று கோடிக்கு உரியவர் நாளை அவர் ஊர் தெருக்கோடிக்குப் போவதும் சகஜம்தான். ‘அறிவு மேதை’ என்றாலும் ஏதாவது அவசரப்பட்டுச் சில உண்மைகளைத் தெரிவிக்கிறான். உலகம் தாங்காது; அவன் தலைக்கு விலை பேசுவது இன்றைய வெறியாட்டு. யார் எப்படி ஆவார்கள் என்று கூற முடியாது. குபேரன் குசேலனாக மாறலாம்; குசேலன் குபேரனாக மாறலாம் என்று கூறுகிறார்கள். எதுவும் தலைகீழாக மாற வாய்ப்பு உள்ளது. இதை வைத்துத்தான் இன்றைக்கு இருப்பார் நாளைக்கு இல்லை என்று பட்டின்த்து அடிகள் ‘யாரையோ நினைவில் நிறுத்தி இவ்வாறு கூறி இருக்கிறார். எல்லாம் தலைகீழாக மாற வாய்ப்பு உள்ளது. நிலவரம் அப்படி; பங்குச் சந்தை விவரம் இப்படி.

அவன் செஞ்சிக் கோட்டை வாலிபன். இவன் வஞ்சிக் கோட்டை இளையவன். இருவரும் ஒரு சாலை மாணாக்கர். ஒரே தட்டில் சோறு, கட்டில் மட்டும் வேறுபட்டன. காரணம் சொல்லத் தேவை இல்லை. காலம் அவர்களைப் பிரிக்கிறது. பிரிந்துவிட்டார்கள். ஒருவன் கோட்டையில் அமைச்சர் பதவி; மற்றவன் எல்லாம் நஷ்டப்பட்டு ஒன்றும் இல்லாமல் படம் எடுத்து 'போண்டி' ஆனவன்; ஆண்டியாகிவிட்டான். அமைச்சன் இவனுக்கு நண்பன். அமைச்சனைப் பார்த்து உதவி கேட்கச்செல்கிறான். அங்கே ஒரு பி.ஏ.; பட்டதாரி அல்ல; P.A என்பதைத் தமிழில் இப்படித்தான் சொல்கிறார்கள். “ஐயாவைப் பார்க்க இயலாது. அதற்கு முன் அனுமதி தேவை” என்கிறான். இவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. “நண்பன் நடராசன் என்று போய்ச் சொல்” என்று அனுப்புகிறான். “பார்க்க முடியாது” என்று பதில் சொல்கிறான். அன்று ஓசியில் சிகரெட்டுப் பிடித்த இந்தக் காசி விசுவநாதன் இன்று அமைச்சன்; இவன் மனம் நொந்து வீடு திரும்புகிறான். மனைவி கேட்கிறாள் “வெட்கமில்லையா? நண்பன் என்று அலட்டிக் கொண்டாயே” என்று அவள் நையாண்டி செய்கிறாள். அந்த அமைச்சு நடந்து கொண்டது சரியாகபடவில்லை. இவர்களை மாற்றவே முடியாது. பதவியில் உயர்ந்தவர் உதவி செய்யாமல் இருப்பது அவர்களுக்குச் சிறுமை; சீர்கேடு என்று நாலடி நவில்கிறது.

பூச்சூடி வந்த பூவை; அவள் ஊர் புதுவை; அவள் செய்து கொண்டாள் சிலரை வதுவை; அவள் இப்பொழுது விதவை. அவள் திறந்து வைக்கிறாள் கதவை. இன்று அவள் யாருக்கும் உரிமை இல்லை. அவளுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அவள் அழகில் மயங்குகிறான்; உள்ளதை இழக்கிறான்; பொருள் வற்றிவிட்டது; அவள் புதுவெள்ளம்; அதில் அவன் அடித்து செல்லப்படுகிறான். பொது மகளிர் உறவும் புது வெள்ளத்தில் வரவும் ஏறக்குறைய ஒன்றுதான். அவை நீடித்து நிற்பவை அல்ல; எனவே பூவையரைக் கண்டு மயங்காதே; புதுமை கண்டு மருளாதே.

38. விலைக்கு எளியர்

(பொது மகளிர்)

விளக்கு எரிய நெய் தேவை; அணையாமல் இருக்க அவ்வப்பொழுது அது வார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். விலைக்கு உரிய மகளிர் அவர் உறவுக்கு அவ்வப்பொழுது பணம் தேவை. காசு அது இல்லை என்றால் அவள் கால் துசுக்கும் மதிக்கமாட்டாள். அவள் வேசி; அதைப் பற்றிப் பேசிப் பின் ஏசி எதுவும் பயன் இல்லை. அவள் நேசம்; அது காசு.

காசு இருந்தது; அவள் உறவுமாக அற்று விளங்கியது. உயிரினும் இனியன் தான் என்றாள். “மலை உச்சியா கவலை இல்லை. அதையும் நச்சி ஏறி வருவேன்” என்றாள். “செங்கோடு எனினும் அதனோடு உயர்வேன்” என்றாள். காசு அழிந்தது; தொட்டுப் பார்த்தாள்; அது ஒலிக்கவில்லை; “மலை உச்சி” என்கிறான். 'அய்யோ என் கால் வலிக்கும்” என்கிறாள். “நடக்க இயலவில்லை; முடக்கு வலி” என்கிறாள். அடக்கமான பதில். “அடிப்பாவி நீ உருப்படவேமாட்டாய்”.

“அங்கண் விசும்பில் தேவர்கள் தொழும் செங்கண்மால்” என்று வந்து செப்புகின்றனர். அவள் ஒப்புக் கொள்ளவில்லை. “யாராயிருந்தாலும் இங்கே நுழைவுச் சீட்டு நோட்டுக் கட்டு; அதைக் கேட்டுப் பின் வந்தவருக்கு வழி காட்டு” என்கிறாள்.

கட்டிப் பொன் இல்லை என்றால் அவளைக் கட்டித் தழுவ அவள் இடம் தரமாட்டாள்; பட்டு உடை உடுத்திப் பகட்டாக வாழ்ந்தவள். அவன் இன்று தாழ்ந்துவிட்டான் என்றாலும் அவனுக்கு அங்கு இடமில்லை. அழகன்தான் என்றாலும் அவள் சிறிதும் இளகாள். செக்கிழுத்த சிதம்பரம் என்றாலும் மதிப்பில்லை. ‘செக்குக்கு வங்கியில் பணம் இருக்கிறது என்றால் அவன் மக்காக இருந்தாலும் அந்த ‘சக்கு’ என்ற அந்தப் பெண் பக்குவமாய் அவனிடம் பழகிப் பணம் பறிப்பாள். அது அவள் குணம்.

பாம்புக்குத் தலை காட்டும்; மீனுக்கு வால்காட்டும்; அது விலாங்கு மீன்; வந்தவரை நாளைக்கு என்று நாள் சொல்லி அனுப்பமாட்டாள். முடிவெட்ட அழைத்து உட்கார வைத்துப் படி என்று கொடுப்பாள் அங்கே பழைய நாளிதழ். அவனை மொட்டை அடித்து விட்டு அனுப்பி கீயூ வரிசையில் யார் ‘வியூ’ என்று அழைத்து அவர்களை அமர்த்துவாள்; சமர்த்து; சாதுரியம் மிக்கவள்; ஆளுக்கு ஏற்றபடி அவள் தளுக்கு; குலுக்கு; அவற்றைக் கொண்டு அவர்களை மகிழச் செய்வாள். அவள் மகிழம்பூ; அது அவரவர் மனப்போக்குக்கு ஏற்ப வீசும் மணம் என்பர்.

“பொன்னிற் பதித்த கல் நான்; உன்னை விட்டுப் பிரியேன்” என்றாள். அவளுக்கு அந்த உவமைக்காகவே சரடு ஒன்று வாங்கித் தந்தான். “அன்றில் பறவை நான்; பிரியேன்” என்றாள். இப்படி அவள் பேசிய காதல் உரைகள் பலவற்றில் மயங்கிவிட்டான். ‘அவள் உயிர்; நான் உடல்’ என்று அயர்ந்தான். இப்படி அவள் புதுப்புது உவமைகள் எழுதித் தந்தாள்; அன்று அவள் கவிதை; இன்று அரளி விதை; ஆட்டுக் கிடாய்போல்

12 முறுக்குக் காட்டுகிறாள். இந்தக் கிறுக்கு அவளிடம் காண்கிறான். அதற்குக் காரணம் அவள் செல்வச் செறுக்கு அழகுத் தருக்கு தொழில் மிடுக்கு.

காட்டுப் பசுபோலக் குழைந்தாள்; பழகினாள்; அழகினாள்; கேட்டுப் பொருள் பெற்றுவிட்டாள். இன்று பச்சைக் கொடி காட்ட அவனிடம் பசுந்தழை இல்லை; அவள் இச்சைப்படி இருந்த மிச்சமெல்லாம் கொட்டி அழுதுவிட்டான். அவன் வாழ்வு பழுது ஆகிவிட்டது. இந்த ஊரார் அவனைத் தொழுது வாழ்ந்தவர் இன்று புழுதி என்று அவனைத் துாற்றிப் பேசுவர். அவன் வாழ்வு பழுது ஆகிவிட்டது; பாழ்பட்டது அவன் வாழ்வு.

சின்ன மனுஷன் அவன் சீரழிந்து விட்டான்; அவன் வாழ்வு பின்னப்பட்டுவிட்டது. கன்னிப் பெண் என்று கருத்து இழந்தான்; கவிதைப் பெண் என்று அவள் ரசிகையானான். இன்று பிறர் கைகொட்டிச் சிரிக்கும் அளவுக்கு அவள் கைக்கு எட்டியவரை அளந்து கொடுத்தான்; பெருமை இழந்தான்; சிறியவன் ஆனான்.

உள்ளத்தில் கள்ளம்; உதட்டில் அன்பு மொழி வெள்ளம்; இப்படி இருவேறு நிலை. பிறரை மயக்குவது அவர்கள் கலை; அவர்களுக்குப் கொடுப்பது அதிக விலை; பேசுவது மானம்; நடத்துவது இழி தொழில்; ஏசுவது பிறர் செயலை; காசுவது தம் உடலை; அதை அடைய விரும்புகிறான் இந்த விடலை; அந்த உடல் சிறிது நேரத்துக்குக் காட்சி; விரும்பினால் அஃது ஆட்சி; பலருக்கும் பகிர்ந்து அளிப்பது அவள் மாட்சி, இவள் மனம் பல வகைப்பட்டது. இதற்குத் தேவை இல்லை சாட்சி.

39. வாழ்க்கைத் துணை நலம்

(கற்புடைய மகளிர்)

கற்பின் பெருமை

எண்ணிப் பத்துக் காசு இட்டால் இந்திரன் மனைவியும் வெண்ணெய் உருகுவது போல அந்தக் காசு வீசும் கண்ணியவானிடம் செல்வாள் என்று சொல்வார்கள். பிறன் ஆடவன் எவனையும் நோக்காத சீரிய பெண்மை உடையவள் பத்தினி எனப்படுவாள். அத்தகையவளே மாட்சிமை நிரம்பியவள். அவளே மனைவி என்பதற்குத் தகுதி பெறுகிறாள். வாழ்க்கைத் துணைவி என்று கூறிக் கொள்ள அவளுக்கு அருகதை உண்டு. மற்றையவர்கள் ஏதோ ஒட்டி உறவாடுவார்கள் என்றுதான் மதிக்கப்படும். கற்பே பெண்ணுக்குப் பெருமை சேர்க்கிறது. அத்திண்மை வாய்க்கப் பெறின் பெண்களுள் அவளைவிடச் சிறந்தவள் வேறு ஒருத்தி உளர் என்று உரைக்க இயலாது.

சிக்கனம்

குடத்து அளவு நீர் மட்டும் இருப்பில் உள்ள வறுமை உற்ற காலத்தும் கடலே புரண்டு வருவது போலக் கிளைஞர்கள் சுற்றத்தினர் விருந்து என்று வந்தால் அவர்களை அருந்த வைக்கும் மனத் துணிவும் செயற்பாடும் மிக்கவள் மனைவி அவள் மதிக்கப்படுவாள்.

வீட்டுக்குச் சுவர் வைத்தான்; அது வீண் என்று இடிந்து விழுகிறது. இலைகளை வைத்துக் கூரை வேய்ந் தான். அவை வலைகளாகக் கிழிபட்டுச் சிதறிவிட்டன. ஒழுகல் கூரை அழுகல் சுவர்கள்; வழுக்கல் தரை, இதில் எங்கே படுப்பது; எப்படி உடுப்பது சமைப்பது எப்படி? எப்படி நடத்துவது குடித்தனம்; இங்கு இருப் பது மடத்தனம் என்று தன் துரைத் தனத்தைக் காட்டாமல் சாமர்த்தியமாக ஒன்றி வாழ்வது அது மனை வாழ்வு; ஒட்டை சட்டிதான்; கொழுக்கட்டை வேகும் என்று கொழுநனிடம் உரைப்பவளே பழமுதிர்சோலை; மற்றவர்கள் பாலைவனச்சாலை ஆவர்.

மாண்புகள்

அவன் எப்படி அவளைத் தேர்ந்து எடுத்தான்? அவள் தகுதிகள் யாவை? பார்க்க லட்சணமாக இருக்கிறாள்; அவள் கணவனை மகிழ்விக்கவே உடுத்துகிறாள். அச்சம், நாணம் இவை அவளிடம் பிச்சை கேட்டு இடம் பெறுகின்றன; ஊரார் மெச்ச அவள் வாழ்க்கை அமைத்துக் காட்டுகிறாள். வெட்கம் அவளைப் பிடுங்கித் தின்ன அவனிடம் வேடிக்கையாகப் பேசுகிறாள்; ஊடலும் கொள்கிறாள்; உப்புக்கரிக்காமல் பின் உபகாரியாக மாறுகிறாள். கொஞ்சிப் பேசி குலவ இடம் அளிக்கிறாள்; காதல் செய்கிறாள். இவள்தான் அவன் தேர்ந்தெடுத்த பெண்; அவள் அன்று மணப்பெண்; இன்று குணப் பெண். வீட்டு மனைவி.

மனைவியின் கூற்று

‘என்றைக்கும் என் கணவர் எனக்குப் புதியவர்தான்; பழகியவர் என்பதால் உடனே குழைந்து அவர் அழைப்புக்கு இழைவது இல்லை. 'வெட்கம்' அது என்னைவிட்டுக் கெடுவது இல்லை. நாணம் அஃது என்னை விட்டு விலகுவது இல்லை. ஐயா இந்தப் பரத்தையர் இவர்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவுமே இல்லை. கண்டவுடன் கருத்து இழப்பர். பொறுத்துப் பழகார். இழுப்புக்கு இழைவார். அவர் அழைப்புக்கு அலைவார். வெட்கக்கேடு இல்லை இவர்களுக்கு மானம் சூடு.

கணவனின் கூற்று

நாணம் மிக்கவள் அவள்; என் நா அவள் நலம் எடுத்துரைக்கிறது. உள்ளத்தில் காதல் உணர்வு உடையவள்; நூல் கற்ற அறிஞர்களின் பேரறிவாக அவள் திகழ்கிறாள். வள்ளல்கள் வாரி இறைக்கும் ஒண்பொருளாக உயர்கிறாள். இன்பத்தை அள்ளித் தருகிறாள். வீரனின் கை வாளாகக் கூர்மைமிக்கவள்; எதையும் திறம்படச் செயலாற்றுகிறாள்.

பாணனும் தலைவியும் உரையாடுதல்

பாணன் ஒருவன் தலைவியை நாடிச் சமாதானம் செய்விக்க வருகிறான். அவன் பாணன்; பண்ணொடு பாடவல்லவன்; இயையாதவரை இயையும்படிச் செய்வது அவன் தொழில். ஊடல் தணிக்க அவன் தூதுவன்; தலைவன் வேண்டுகோளுக்கு தலைவியை இயையும்படிப் பேசி அசைய வைக்க முயல்கிறான். அதற்குத் தலைவி கூறுகிறாள்.

“ஐயா திறமைசாலி, கறுப்புக் கொள்; சிவப்புக் கொள்; அவற்றின் நிற பேதம் பார்க்காமல் இரண்டையும் சமவிலைக்குப் பேசி வாங்கிக் கொண்டு வந்து விட்டதாக ஒருவன் பெருமை பேசினால் இவன் வியாபாரம் செய்யத் தக்கவன் என்று யார் மதிப்பார்கள்?”

“கொள் சிவப்பாக இருக்கிறதே என்று அதனையும் கொள்முதல் செய்துவிட்டேன்” என்கிறான். பரத்தையையும், சிரத்தையையும் ஒன்றாக மதிக்கிறார் உம் தலைவர். சிரத்தையோடு வாழ்க்கை நடத்தும் எனக்குத் தரும் மதிப்பையே அவளுக்கும் தருகிறார். இவர் புத்தி அந்த வியாபாரியின் புத்தி என்றுதான் கூற முடியும். நிறம் இவரை மயக்கி விட்டது. கறுப்புக்கொள் விருப்பத்திற்கு உரியது. சிகப்புக் கொள் தூர ஏறிய வேண்டியது. இந்தப் பேதம்கூட அறியாத வேதம் உம் தலைவரது. இந்த நாதம் நம்மிடம் இசையாது; அசையாது என் மனம்.

“பாணனே நீ வீணன்தான்; அளக்கின்றாய்; வளமான வார்த்தைகள் கொண்டு, ‘அவள் காட்சிக்கு இனியள், யான் மாட்சிக்கு உரியள்’ என்றெல்லாம் பேச்சுக்குச் சொல்கிறாய். உடுக்கை அதற்கு இரு கை; இடக்கை, வலக்கை; வலக்கைதான் ஓசை பெறுகிறது. தட்டுவது அங்கே முட்டுவது இங்கே, உறவாடுவது அங்கே. ஒட்டுவது இங்கே. பாணனே! தேவாரம் பாடி மகிழ்வது அங்கே. வீட்டுத் தாழ்வாரம் தேடுகிறார் இங்கே. நிறுத்து உன் ஆரவாரம்; சென்று வருகிறார் அங்கு வாரா வாரம்; அதை மறுத்துப் பலனில்லை. நிறுத்து உன் துது; இதை அவரிடம் ஒது.

“வளம் மிக்க வயல்களை உடைய ஊரன் அவன் என் தலைவன். ஈ வந்து அவனைத் தொட்டாலும் உடனே அதை ஓட்டி விட்டு மறு வேலை பார்ப்பேன். இன்று தீ பறப்பது போல் வெம்முலையால் அவள் அதுதான் அந்தப் பரத்தை அவரை தழுவிக் கொண்டு இருக்கிறாள். இதை எப்படி நான் தட்டிக் கேட்காமல் இருக்க இயலும்? பாணனே அவள் தோள் தழுவிய என் கோனைக் ‘கேள்’ என்று எப்படிக் கொள்வேன். இது முறையா? அவரைக் கேள்.

“வண்டு மொய்க்கும் மலரினான்; அவன் என்னைக் கண்டு கொள்வதே இல்லை. அவன் எனக்கு அருளும் என்று கூறுகிறாய். அது வெறும் மருளே. இன்று நான் அவனுக்கு நுனிக் கரும்பு. பரத்தை அடிக் கரும்பு. அவள் அடியை அவன் விரும்புகிறான். அவள் அவன் மடியைப் பிடித்துவிட்டாள். இனி நீ இடை வந்து இணைக்க வந்தால் அமையும் உனக்கே வசை. வெல்க பாண செல்க அவரிடம் சென்று இசை. இவை தலைவி கூற்று.

40. காதல் பாட்டு

(காமத்துப் பால்)

பசலை; அது என் நிறத்தை மாற்றும். என் விசனத்தை எடுத்துக் காட்டும். விளர்த்துவிட்டேன் என்பதைக் கிளர்த்திவிடு. அவர் என்னைத் தழுவுவார்; சிறிது நழுவி விட்டால் உடனே இந்தப் பசலை என்னை இறுகப் பிடித்துக் கொள்ளும். முயங்காத இடத்து இந்தப் பசலை வந்து பாயும். அவரோடு கூடுவது; அதனோடு நிற்பது சுவை தருவது இல்லை. ஊடுவதும் தேவைப்படுகிறது. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே; ஊடல் இல்லாத கூடல் அதில் நயம் இல்லை. அழகு இல்லை; அறிவுச் சுவை இல்லை. ஊடி விடுகிறேன் அது நீடித்துவிடுகிறது. கூடுவதற்கு நேரம் கிடைப்பது இல்லை. வாள்போல் வைகறை வந்து தோள் தோய் காதலரைப் பிரித்துவிடுகிறது.

பொருள் தேடிச் சென்ற காதலர் மழைக்காலம் வரும்முன் விழைந்து வருவதாகச் சொற்கள் இழைத்தார். நாள் ஒற்றி என் விரல்கள் தேய்ந்துவிட்டன. வழி பார்த்து விழிகள் பொலிவிழந்துவிட்டன. எங்கள் மண நாள் முரசு போல வானத்து இடி முழக்கம் கேட்கிறது. மழை வருகிறது என்பதால் ஊரவர் மகிழ்கின்றனர். நான் மட்டும் ஏன் மகிழ முடியவில்லை. மழை நீர் என் கண்ணீராக மாறுகிறது. பிரிவு அரிது; சாப்பறை போல அது எனக்கு விளங்குகிறது. நெய்தல் பறை இரக்க உணர்வைக் கிளறுகிறுது. அதுபோல இந்த மழை பெய்தல். என் அழுகைக் குரலை அதிகப்படுத்துகிறது. காரோ வந்தது; அவர் தேரோ வரவில்லை; யாரோ என் துயர் அவருக்கு அறிவிப்பர்?

கம்மியத் தொழில் செய்யும் கருமகன்கள் தம் கருவிகளை ஒடுக்கிக் கட்டி வைத்துவிட்டனர். உலைக்களத் தீ அணைந்து விட்டது. அவர்கள் ஒய்வு எடுத்துக் கொள்ள வீடு திரும்புகின்றனர். மாலைப் பொழுது பூமாலை தொடுக்கிறாள் தலைவி, மாலை மாலையாகக் கண்ணீர் வடிக்கிறாள். பொன்மாலைப் பொழுதாகக் கழியவேண்டிய அது புன்மாலையாகி விட்டது. தன் துணைவர் அவளோடு இல்லை. இணையில்லாத இன்ப வாழ்வு அவளை விட்டு இரிந்துவிட்டது. கனவுகள் முறிந்துவிட்டன. இன்பப் பொழுது சரிந்து விட்டது. மாலை மயக்கத்தில் அவள் உழன்று வருந்தி அலமருகின்றாள். என் செய்வது? ஆற்றுவது என்பது இயலாத ஒன்று; அவர் வருகைதான் மாற்றம் செய்ய இயலும் அதுவரை? இப்படித்தான் மாலைப் பொழுதுகள் மாலை தந்து அந்த மாலாவை அழச் செய்து கொண்டுதான் இருக்கும். அவள் மட்டுமா? கன்னிப் பெண்கள் கதைகளைக் காவியத்தில் தீட்டினால் இந்த அழுகை என்பது அழியாத அத்தியாயம். பிரிவு அது பாலை; அவர் வந்து சேர அவள் காத்திருக்கிறாள் அதனால் அது முல்லை; வேறு வழியே இல்லை;

தலைவன் தலைவியின் பிரிவுக்கு வருந்துதல்

காலையரும்பிப் பகல் எல்லாம் போதாகி மாலை மலரும் மங்கையின் காதல் நோய்; கதிரவன் கால் சாய்க்கின்றான். அதிரவரும் மாலைப் பொழுது கண்டு அவள் கண்கள் நீர் நிறைகின்றன. அவள் தன் மெல்லிய விரலால் அதனைச் சிதற அடித்துத் தனிமையில் பதறுகின்றாள். மோனம் அங்குக் குடி கொள்கிறது. விம்முகிறாள்; அவள் குரல் கம்முகிறது. கும்மிருட்டு வந்து குவிகிறது. இதற்கு எல்லாம் காரணம் என்ன? வருகிறேன் என்று குறித்த நாளில் யான் அங்குச் செல்ல இயலவில்லை. அவள் தோள்மேல் தன் கை வைத்து உறக்க மின்றி இரவு கண் விழித்து என் குற்றத்தையே அவள் எண்ணுவாளோ என் செய்வது? வினை முடிந்ததும் வீடு திரும்ப விழைகின்றேன். நான் வரும் நாள் எண்ணி விரலைச் சுவரில் தேய்த்து நாட்குறி வைக்கிறாள். அவள்விரல் தேய்கிறது. என்னை எதிர்பார்த்துப் பார்த்து அவள் விழிகள் ஒளி இழக்கின்றன.

தலைவன் தலைவியின் நலம் பாராட்டுதல்

கயல் ஒத்தன அவள் கண்கள்; அவற்றைக் கயல் மீன் என்று கருதிச் சிரல் பறவை அவற்றைக் கொத்திக் கவர அருகில் தத்திச் செல்கின்றன. அந்தோ! அங்கே வில்லின் வளைவை அவள் புருவத்தில் காண்கிறது அப்பறவை. களம் கண்ட வீரன் உளம் அஞ்சிப் பின் வாங்குகிறான். அதுபோல் இந்தச் சிரல் பறவையாகிய மீன்கொத்தி அஞ்சிப் பின் வாங்குகிறது. அவள் விழிகள் கயல்மீன்கள் என்றால் புருவங்கள் வில்லின் வளைவு.

தலைவன் பின் சென்ற தலைவி குறித்துத் தாய் வருந்துதல்

அரக்குப் போன்று சிவந்த ஆம்பல் இதழ்கள் உடையவள்; பருக்கைக் கற்களை உடைய தெருக்களில் அவள் எப்படித்தான் நடந்தாளோ? இதற்கு முன் காலுக்குச் சிவப்பு ஊட்டச் செம்பஞ்சுக் குழம்பு பூச அவள் ‘பைய பைய’ என்று வருந்திக் கூறுவாள். பஞ்சு கொண்டு மெல்ல பூசினும் அஞ்சும் அவள் மெல்லடிகள். அந்தப் பரற்காட்டை எப்படித்தான் கடந்து செல்கின்றனவோ! தலைவன் உடன் போவதில் காடும் அவளுக்குக் கரடுமுரடு என்று படவில்லை. அது வியப்புதான்.

தலைவியின் பிரிவுத் துயர்

ஓலைக் கணக்கர் அவர்களும் தம் பணிகளை முடித்து வைத்துவிட்டு, மாலைப் பொழுதில் ஓய்வு கொள்கின்றனர். அத்தகைய புன் மாலைப் பொழுதில் வானத்தைப் பார்க்கிறாள். சிவந்த வானம் அதுவும் கருகப் போகிறு. அந்நேரத்தில் தன்னை மணந்தவன் இப்பொழுது தணந்து தன்னை விட்டுப் பொருள் தேடப் புது இடும் தேடிச் சென்று விட்டான். அவன் வருகைக்கு ஏங்கும் இவ்வறியவள் சூடிய மாலையை அறுத்து எறிந்துவிட்டு அழுகிறாள். முலை வனப்பு? அதன்மீது பூசிய சாந்தத்தை ஏசியவளாய்க் கலைத்து மனம் குலைகிறாள். மாலை வருவார் என்று வழி பார்த்தாள். பூப் புனைந்தாள், பூசிய சந்தனம் பூவைக்கு வெறுப்பைத் தந்தது. அலங்கரித்துக் கொண்டிருந்த அவள் கலங்கியவளாய்க் கலுழ்கின்றாள்.

தோழியுடன் தலைவி உரையாடல்

“காளை ஒருவன் வழி நடத்த நாளை அவன் பின் எப்படி நடப்பாய் என்று வினவுகின்றாய்! குதிரை ஒருவன் பெறுகிறான்; முன்பின் ஏறியது இல்லை. அதற்காக அந்தக் குதிரையை அவன் அவிழ்த்தா விட்டு விடுவான். அதில் ஏறிச் செல்ல அவன் தானாகக் கற்றுக் கொள்கிறான். ‘ஏய் எப்படி முடிந்தது’ என்றா அவனைக் கேட்டுக் கொண்டிருப்பர். அப்பொழுதே வரும் வேகம்; அதற்கு ஏற்ற விவேகத்துடன்” என்கிறாள் தலைவி.

பிரிந்த பின் தாய் மகள் செயலை எண்ணிப் பார்த்தாள்

“நேற்று என்னை வந்து என் மகள் மார்போடு கட்டி அணைத்து எனக்கு முத்தமிட்டாள்; புல்லினாள்; தழுவினாள்; விம்மினாள்; எனக்கு வியப்பு ஏற்பட்டது; அதற்கு அப்பொழுது அறிகுறி யாது என்பதை அறியேன். என்ன! இவள் திடீர் என்று சிறு குழந்தையாகிவிட்டாளே என்று வியந்தேன். முகத்தில் அவள் வியர்வை முத்து எனத் தெரிந்தது. அவள் என்னைச் சேர்த்து அணைத்துக் கொண்டது ஏன்? காளை அவனோடு மறு நாளை அவள் செல்லத் துணிந்தது அறியேன். வேங்கை கண்டு வேகமாக ஓடும் மான் கூட்டம் நிறைந்த காட்டுவழியே அவள் செல்லத் துணிந்துவிட்டாள் என்பதை இப்பொழுதே கேட்டு அறிகிறேன். அவன் வேட்டது அது; அதற்கு அவள் காட்டியது அது.

பிரிந்த தலைவியின் கூற்று

“கண்மூன்று உடையவன் சிவன். அவன் பார்வைக்கு எப்படி இந்தக் காமன் தப்பிப் பிழைத்தான்? அவன் எரிபட்டு இருந்தால் என்னை வெறிகொள்ளச் செய்யமாட்டான். இந்த அரவு இந்த இரவு ஏன் இந்த நிலவை விழுங்காமல் விட்டு வைத்திருக்கிறது. அரவே நீ எனக்குப் பகையாகின்றாய்! இந்தக் காக்கை அதற்கு என்ன கேடு? பொழுது விடிவதற்கு அது வந்து ஏன் கரையாமல் இருக்கிறது? இந்த இரவு நீள்கிறது. அதனை மாளச் செய்வதற்கு ஏன் இன்னும் இந்தக் காக்கை எழவில்லை; என் அன்னை எனக்குக் காவல். அவள் அடக்குகிறாள் என் ஆவல். என் தலைவன் வர இயலாமைக்கு அவள் ஒரு தடை இல்லாவிட்டால் நான் எழுந்து நடப்பேன் நடை எனக்கு அவள் முடை” என்கிறாள் தலைவி.

★⁠★⁠★

அறத்துப்பால்

1. செல்வம் நிலையாமை

அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட

மறுசிகை நீக்கியுண் டாரும் வறிஞராய்ச்

சென்றிரப்பர் ஒரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன்

றுண்டாக வைக்கற்பாற் றன்று. ⁠1

துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டு

பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;

அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்

சகடக்கால் போல வரும்.⁠2

யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச்

சேனைத் தலைவராய்ச் சென்றோரும்ஏனை

வினைஉவப்ப வேறாகி வழ்வர்தாம் கொண்ட

மனையாளை மாற்றார் கொள.⁠3

நின்றன நின்றன நில்லா எனவுணர்ந்து

ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;

சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்

வந்தது வந்தது கூற்று. ⁠4

என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்

பின்னாவ தென்று பிடித்திரா முன்னே

கொடுத்தார் உயப்போவர் கோடில்திக் கூற்றம்

தொடுத்தாறு செல்லும் சுரம். ⁠5

இழைத்தநாள் எல்லை இகவா; பிழைத்தொரீஇக்

கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை;-ஆற்றப்

பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின், நாளைத்

தமீஇம் தழிஇம் தண்ணம் படும். ⁠6

தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்

கூற்றம் அளந்துதும் நாளுண்ணும்; ஆற்ற

அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின்; யாரும்

பிறந்தும் பிறவாதா ரில். ⁠7

செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத

புல்லறி வாளர் பெருஞ்செல்வம் எல்லில்

கருங்கொண்மு வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி

மருங்கறக் கெட்டு விடும். ⁠8

உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்

துன்னருங் கேளிர் துயர்களையான்-கொன்னே

வழங்கான் பொருள்காத் திருப்பானேல், அஆ

இழந்தான் என் றெண்ணப் படும். ⁠9

உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்

கெடாஅது நல்லறமும் செய்யார்-கொடாஅது

வைத்தீட்டி னார்இழப்பர்; வான்தோய் மலைநாட!

உய்த்தீட்டும் தேனீக் கரி. ⁠10

2. இளமை நிலையாமை

நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்

குழவி யிடத்தே துறந்தார்; - புரைதீரா

மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி

இன்னாங் கெழுந்திருப் பார். ⁠11

நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்

அற்புத் தளையும் அவிழ்ந்தன; உட்காணாய்;

வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே

ஆழ்கலத் தன்ன கலி. ⁠12

சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்

பல்கழன்று பண்டம் பழிகாறும்-இல்செறிந்து

காம நெறிபடருங் கண்ணினார்க் கில்லையே

ஏம நெறிபடரு மாறு. ⁠13

தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டுன்றா

வீழா இறக்கும் இவள்மாட்டும்-காழ்இலா

மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகும் தன்கைக்கோல்

அம்மனைக்கோல் ஆகிய ஞான்று. ⁠14

எனக்குத்தாய் ஆகியாள் என்னைஈங் கிட்டுத்

தனக்குத்தாய் நாடியே சென்றாள்;-தனக்குத்தாய்

ஆகி யவளும் அதுவானால் தாய்த்தாய்க்கொண்

டேகும் அளித்திவ் வுலகு. ⁠15

வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி

முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க

மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி

அறிவுடை யாளர்கண் இல். ⁠16

பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்

கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை-நனிபெரிதும்

வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்

கோல்கண்ண ளாகும் குனிந்து ⁠17

பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை

இருசிகையும் உண்டீரோ என்றுவரிசையால்

உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள்

எண்ணார் அறிவுடை யார். ⁠18

மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது

கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்மின்;

முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால்

நற்காய் உதிர்தலும் உண்டு ⁠19

ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால்

தோட்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின் பீட்பிதுக்கிப்

பிள்ளையைத் தாய்அலறக் கோடலான் மற்றதன்

கள்ளம் கடைப்பிடித்தல் நன்று. ⁠20

3. யாக்கை நிலையாமை

மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்

தலைமிசைக் கொண்ட குடையர்-நிலமிசைத் துஞ்சினார்

என்றெடுத்துத் துற்றப்பட் டாரல்லால்

எஞ்சினார் இவ்வுலகத் தில். ⁠21

வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம்

வீழ்நாள் படாஅ தெழுதலால்-வாழ்நாள்

உலவாமுன் ஒப்புர வாற்றுமின்; யாரும்

நிலவார் நிலமிசை மேல். ⁠22

மன்றம் கறங்க மணப்பறை யாயின

அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் - பின்றை

ஒலித்தலும் உண்டாமென் றுய்ந்துபோம் ஆறே

வலிக்குமாம் மாண்டார் மனம். ⁠23

சென்றே எறிப ஒருகால்; சிறுவரை

நின்றே எறிப பறையினை-நன்றேகாண்

முக்காலைக் கொட்டினுள் முடித்தீக் கொண்டுஎழுவர்

செத்தாரைச் சாவார் சுமந்து. ⁠24

கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்

பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் மணங்கொண்டீண்

டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே

டொண்டொண்டொ டென்னும் பறை. ⁠25

நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென்

பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;

தோற்பையுள் நின்று தொழிலறச் செய்துட்டும்

கூத்தன் புறப்பட்டக் கால். ⁠26

படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக்

கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித்-தடுமாற்றம்

தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை

நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல். ⁠27

யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற

யாக்கையா லாய பயன்கொள்க;-யாக்கை

மலையாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே

நிலையாது நீத்து விடும். ⁠28

புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி

இன்னினியே செய்க அறவினை;-இன்னினியே

நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்

சென்றான் எனப்படுத லால். ⁠29

கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி

வாளாதே போவரால் மாந்தர்கள்-வாளாதே

சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல

யாக்கை தமர்க்கொழிய நீத்து. ⁠30

4.அறன் வலியுறுத்தல்

அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப்

புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி

மிகத்தாம் வருந்தி இருப்பாரே மேலைத்

தவத்தால் தவஞ்செய்யா தார். ⁠31

ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ, அறமறந்து

போவாம்நாம் என்னாப் புலைநெஞ்சே-ஓவாது

தின்றுளுற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாள்கள்

சென்றன செய்வ துரை. ⁠32

வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா

மனத்தின் அழியுமாம் பேதை-நினைத்ததனைத்

தொல்லைய தென்றுணர் வாரே தடுமாற்றத்

தெல்லை இகந்தொருவு வார். ⁠33

அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்

பெரும்பயனும் ஆற்றவே கொள்க;-கரும்பூர்ந்த

சாறுபோல் சாலவும் பின் உதவி மற்றதன்

கோதுபோல் போகும் உடம்பு. ⁠34

கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்

துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார்;

வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்

வருங்கால் பரிவ திலர். ⁠35

இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது

பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி

ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்

மருவுமின் மாண்டார் அறம்.⁠36

மக்களா லாய பெரும்பயனும் ஆயுங்கால்

எத்துணையும் ஆற்றப் பலவானால்-தொக்க

உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகா தும்பர்க்

கிடந்துண்ணப் பண்ணப்படும். ⁠37

உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி

இறப்ப நிழற்பயந் தாஅங்-கறப்பயனும்

தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்

வான்சிறிதாப் போர்த்து விடும். ⁠38

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்

வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்

வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்

வைகலை வைத்துணரா தார். ⁠39

மான அருங்கலம் நீக்கி இரவென்னும்

ஈன இளிவினால் வாழ்வேன்மன்-ஈனத்தால்

ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந் திவ்வுடம்பு

நீட்டித்து நிற்கும் எனின். ⁠40

5.தூயதன்மை

மாக்கேழ் மடநல்லாய் என்றரற்றும் சான்றவர்

நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை-யாக்கைக்கோர்

ஈச்சிற கன்னதோர் தோல்ஆறினும் வேண்டுமே

காக்கை கடிவதோர் கோல். ⁠41

தோல்போர்வை மேலும் தொளைபலவாய்ப் பொய்ம்மறைக்கும்

மீப்போர்வை மாட்சித் துடம்பானால்-மீப்போர்வை

பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப்

பைம்மறியாப் பார்க்கப் படும். ⁠42

தக்கோலம் தின்று தலைநிறையப் பூச்சூடி

பொய்க்கோலம் செய்ய ஒழியுமே-எக்காலும்

உண்டு வினையுள் உறைக்கும் எனப்பெரியோர்

கண்டுகை விட்ட மயல். ⁠43

தெண்ணீர்க் குவளை பொருகயல் வேலென்று

கண்ணில்புன் மாக்கள் கவற்ற-விடுவெனோ

உண்ணீர் களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்ன

கண்ணீர்மை கண்டொழுகு வேன். ⁠44

முல்லை முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றும்

கல்லாப்புன் மாக்கள் கவற்ற-விடுவெனோ

எல்லாரும் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க

பல்லென்பு கண்டொழுகு வேன். ⁠45

குடருங் கொழுவுங் குருதியும் என்பும்

தொடரும் நரம்பொடு தோலும்-இடையிடையே

வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்

எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள். ⁠46

ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புலனும்

கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைப்-பேதை

பெருந்தோளி பெய்வளாய் என்னுமீப் போர்த்த

கருத்தோலால் கண்விளக்கப் பட்டு. ⁠47

 பண்டம் அறியார் படுசார்ந்தும் கோதையும்

கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல்-மண்டிப்

பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தும்

முடைச்சாகா டச்சிற் றுழி. ⁠48

கழிந்தார் இடுதலை கண்டார்நெஞ் சுட்கக்

குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி-ஒழிந்தாரைப்

போற்றி நெறிநின்மின் இற்றிதன் பண்பென்று

சாற்றுங்கொல் சாலச் சிரித்து. ⁠49

உயிர்போயார் வெண்டலை உட்கச் சிரித்துச்

செயிர்தீர்க்குஞ் செம்மாப் பவரைச்-செயிர்தீர்ந்தார்

கண்டிற் றிதன்வண்ண மென்பதனால் தம்மையோர்

பண்டத்துள் வைப்ப திலர். ⁠50

6. துறவு

விளக்குப் புகஇருள் மாய்ந்தாங் கொருவன்

தவத்தின்முன் நில்லாதாம் பாவம்-விளக்குநெய்

தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை

தீர்விடத்து நிற்குமாம் தீது.⁠51

நிலையாமை நோய்முப்புச் சாக்காடென் றெண்ணித்

தலையாயார் தங்கருமம் செய்வார்-தொலைவில்லாச்

சத்தமும் சோதிடமும் என்றாங் கிவைபிதற்றும்

பித்தரின் பேதையார் இல்.⁠52

இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றம்

செல்வம் வலிஎன் றிவையெல்லாம்-மெல்ல

நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்

தலையாயார் தாம்உய்யக் கொண்டு.⁠53

துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை

இன்பமே காமுறுவர் ஏழையார்-இன்பம்

இடைதெரிந் தின்னாமை நோக்கி மனையா

றடைவொழிந்தார் ஆன்றமைந் தார். ⁠54

கொன்னே கழிந்தன் றிளமையும் இன்னே

பிணியொடு முப்பும் வருமால்-துணிவொன்றி

என்னொடு சூழா தெழுநெஞ்சே போதியோ

நன்னெறி சேர நமக்கு. ⁠55

மாண்ட குணத்தோடு மக்கட்பே றில்லெனினும்

பூண்டான் கழித்தற் கருமையால்-பூண்ட

மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக் கண்ணே

கடியென்றார் கற்றறிந் தார். ⁠56

ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத்

தாக்கருந் துன்பங்கள் தாந்தலை-வந்தக்கால்

நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம்

காக்கும் திருவத் தவர். ⁠57

தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்

றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால்-உம்மை

எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று

பரிவது உம் சான்றோர் கடன். ⁠58

மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற

ஐவாய வேட்கை அவாவினைக்-கைவாய்

கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்

விலங்காது வீடு பெறும். ⁠59

துன்பமே மீதுாரக் கண்டும் துறவுள்ளார்

இன்பமே காமுறுவர் ஏழையார்-இன்பம்

இசைதொறும் மற்றதன் இன்னாமை நோக்கிப்

பசைதல் பரியாதாம் மேல். ⁠60

7. சினமின்மை

மதித்திறப் பாரும் இறக்க மதியா

மிதித்திறப் பாரும் இறக்க-மிதித்தேறி

ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்

காயும் கதமின்மை நன்று. ⁠61

தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தாங்காது

கண்டுழி யெல்லாம் துறப்பவோ-மண்டி

அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின்

முடிகிற்கும் உள்ளத் தவர். ⁠62

காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்

ஒவாதே தன்னைச் சுடுதலால்-ஓவாதே

ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்

காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து. ⁠63

நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால்

வேர்த்து வெகுளார் விழுமியோர்-ஓர்த்ததனை

உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத்

துள்ளித்துண் முட்டுமாம் கீழ். ⁠64

இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்

இல்லான் கொடையே கொடைப்பயன் -எல்லாம்

ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்

பொறுக்கும் பொறையே பொறை ⁠65

கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்

எல்லாருங் காணப் பொறுத்துய்ப்பர்-ஒல்லை

இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம்

குடிமையான் வாதிக்கப் பட்டு. ⁠66

மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க் கேலாமை

ஆற்றாமை என்னார் அறிவுடையார்-ஆற்றாமை

நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம்அவரைப்

பேர்த்தின்னா செய்யாமை நன்று. ⁠67

நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி

கெடுங்காலம் இன்றிப் பரக்கும்-அடுங்காலை

நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே

சீர்கொண்ட சான்றோர் சினம். ⁠68

உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்

அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம்

தாம்செய்வ தல்லால் தவற்றினால் தீங்கூக்கல்

வான்தோய் குடிப்பிறந்தார்க் கில். ⁠69

கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயாற்

பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை-நீர்த்தன்றிக்

கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ

மேன்மக்கள் தம்வாயால் மீட்டு. ⁠70

8. பொறையுடமை

கோதை யருவிக் குளிர்வரை நன்னாட

பேதையோ டியாதும் உரையற்க-பேதை

உரைப்பிற் சிதைந் துரைக்கும் வகையான்

வழுக்கிக் கழிதலே நன்று. ⁠71

நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது

தாரித் திருத்தல் தகுதிமற்-றோரும்

புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்

சமழ்மையாக் கொண்டு விடும். ⁠72

காதலாற் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும்

ஏதிலார் இன்சொலின் தீதாமோ-போதெலாம்

மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப!

ஆவ தறிவார்ப் பெறின். ⁠73

அறிவ தறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சி

உறுவ துலகுவப்பச் செய்து-பெறுவதனால்

இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்

துன்புற்று வாழ்தல் அரிது. ⁠74

வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்

தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண்-உண்டாயின்

ஆற்றுந் துணையும் பொறுக்க பொறானாயின்

தூற்றாதே தூர விடல் ⁠75

இன்னா செயினும் இனிய ஒழிகென்று

தன்னையே தான்நோவின் அல்லது-துன்னிக்

கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட!

விலங்கிற்கும் விள்ளல் அரிது. ⁠76

பெரியார் பெருநட்புக் கோடல்தாம் செய்த

அரிய பொறுப்பஎன் றன்றோ-அரியரோ

ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட!

நல்லசெய் வார்க்குத் தமர். ⁠77

வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு

அற்றம் அறிய உரையற்க-அற்றம்

மறைக்குந் துணையார்க்கு உரைப்பவே தம்மைத்

துறக்குந் துணிவிலா தார். ⁠78

இன்பம் பயந்தாங் கிழிவு தலைவரினும்

இன்பத்தின் பக்கம் இருந்தைக்கு இன்பம்

ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட!

பழியாகா ஆறே தலை. ⁠79

தான்கெடினும் தக்கார்கே டெண்ணற்க தன்உடம்பின்

ஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க-வான்கவிந்த

வையக மெல்லாம் பெறினும் உரையற்க

பொய்யோ டிடைமிடைந்த சொல். ⁠80

9. பிறர்மனை நயவாமை

அச்சம் பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால்

நிச்சம் நினையுங்காற் கோக்கொலையால்-நிச்சலும்

கும்பிக்கே கூர்ந்த வினையால் பிறன்தாரம்

நம்பற்க நாணுடை யார். ⁠81

அறம்புகழ் கேண்மை பெருமைஇந் நான்கும்

பிறன்தாரம் நச்சுவார்ச் சேரா-பிறன்தாரம்

நச்சுவார்ச் சேரும் பகைபழி-பாவம்என்று

அச்சத்தோ டிந்நாற் பொருள். ⁠82

புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்

துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமற் காப்பச்சம்

எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ

உட்கான் பிறன்இல் புகல். ⁠83

காணின் குடிப்பழியாம், கையுறின் கால்குறையும்

ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம்; நீள்நிரயத்

துன்பம் பயக்குமால், துச்சாரி நீகண்ட

இன்பம் எனக்கெனைத்தால் கூறு. ⁠84

செம்மையொன் றின்றிச் சிறியா ரினத்தராய்க்

கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ உம்மை

வலியாற் பிறர்மணைமேற் சென்றாரே, இம்மை

அலியாகி ஆடிஉண் பார். ⁠85

பல்லா ரறியப் பறையறைந்து நாள்கேட்டுக்

கல்யாணஞ் செய்து கடிப்புக்க-மெல்லியற்

காதன் மனையாளும் இல்லாளா என்ஒருவன்

ஏதின் மனையாளை நோக்கு. ⁠86

அம்பல் அயல்எடுப்ப அஞ்சித் தமர்பரீஇ

வம்பலன் பெண்மரீஇ மைந்துற்று நம்பும்

நிலைமைஇல் நெஞ்சத்தான் துப்புரவு; பாம்பின்

தலைநக்கி யன்ன துடைத்து. ⁠87

பரவா, வெளிப்படா, பல்லோர்கண் தங்கா;

உரவோர்கண் காமநோய் ஓ!ஒ! கொடிதே;

விரவாருள் நாணுப் படல்அஞ்சி யாதும்

உரையாது.உள் ஆறி விடும். ⁠88

அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும்

வெம்பிச் சுடினும் புறஞ்சுடும்;-வெம்பிக்

கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம்

அவற்றினும் அஞ்சப் படும். ⁠89

ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு

நீருள் குளித்தும் உயலாகும்;-நீருள்

குளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறி

ஒளிப்பினும் காமம் சுடும். ⁠90

10. ஈகை

இல்லா விடத்தும் இயைந்த அளவினால்

உள்ள விடம்போற் பெரிதுவந்து-மெல்லக்

கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்(கு)

அடையாவாம் ஆண்டைக் கதவு. ⁠91

முன்னரே சாம்நாள் முனிதக்க முப்புள

பின்னரும் பீடழிக்கும் நோயுள;-கொன்னே

பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதுங்

கரவன்மின் கைத்துண்டாம் போழ்து. ⁠92

நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார்;

கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்

இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்

விடுக்கும் வினையுலந்தக் கால். ⁠93

இம்மி யரிசித் துணையானும் வைகலும்

நும்மில் இயைவ கொடுத்துண்மின்-உம்மைக்

கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்(து)

அடாஅ அடுப்பி னவர். ⁠94

மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு

உறுமா றியைவ கொடுத்தல்-வறுமையால்

ஈதல் இசையா தெனினும் இரவாமை

ஈதல் இரட்டி யுறும். ⁠95

நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட் புக்க

படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்;

குடிகொழுத்தக் கண்ணுங் கொடுதத்துண்ணா மாக்கள்

இடுகாட்டுள் ஏற்றைப் பனை. ⁠96

பெயற்பால் மழைபெய்யாக் கண்ணும் உலகம்

செயற்பால செய்யா விடினும்-கயற்புலால்

புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப!

என்னை உலகுய்யு மாறு. ⁠97

ஏற்றகைம் மாற்றாமை என்னானுந் தாம்வரையா

தாற்றாதார்க் கீவதாம் ஆண்கடன்-ஆற்றின்

மலிகடல் தண்சேர்ப்ப மாறிவார்க் கீதல்

பொலிகடன் என்னும் பெயர்த்து ⁠98

இறப்பச் சிறிதென்னா தில்லென்னா தென்றும்

அறப்பயன் யார்மாட்டுஞ் செய்க-முறைப்புதவின்

ஐயம் புகூஉந் தவசி கடிஞைபோல்

பைய நிறைத்து விடும். ⁠99

கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்

இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்

அடுக்கிய மூவுலகும் கேட்குமே சான்றோர்

கொடுத்தார் எனப்படுஞ் சொல். ⁠100

11. பழவினை

பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று

வல்லதாம் தாய்நாடிக் கோடலைத்-தொல்லைப்

பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த

கிழவனை நாடிக் கொளற்கு. ⁠101

உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும்

ஒருவழி நில்லாமை கண்டும்-ஒருவழி

ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்(பு) இட்டு

நின்றுவழ்ந் தக்க(து) உடைத்து ⁠102

வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை,

அளந்தன போகம் அவர்அவர் ஆற்றால்

விளங்காய் திரட்டினார் இல்லை, களங்கனியைக்

காரெனச் செய்தாரும் இல். ⁠103

உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா,

பெறற்பா லனையவும் அன்னவாம்; மாரி

வறப்பின் தருவாரும் இல்லை, அதனைச்

சிறப்பின் தணிப்பாரும் இல். ⁠104

தினைத்துணைய ராகிதத்தந் தேசுள் ளடக்கிப்

பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்,

நினைப்பக் கிடந்த தெவனுண்டாம் மேலை

வினைப்பய னல்லாற் பிற. ⁠105

பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்

கல்லாதார் வாழ்வ தறிதிரேல்-கல்லாதார்!

சேதனம் என்னுமச் சேறகத் தின்மையால்

கோதென்று கொள்ளாதாம் கூற்று. ⁠106

இடும்பைசுடர் நெஞ்சத்தார் எல்லாருங் காண

நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம்-அடம்பப்பூ

அன்னங் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப

முன்னை வினையாய் விடும். ⁠107

அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும்

பழியோடு பட்டவை செய்தல்-வளியோடி

நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப!

செய்த வினையான் வரும். ⁠108

ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும் எத்துணையும்

வேண்டார்மன் தீய; விழைபயன் நல்லவை;

வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால

தீண்டா விடுத லரிது. ⁠109

சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா

உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே யாகும்

சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்

இறுகாலத் தென்னை பரிவு. ⁠110

12. மெய்ம்மை

இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்

வசையன்று வையத் தியற்கை-நசையழுங்க

நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ! செய்ந்நன்றி

கொன்றாரின் குற்ற முடைத்து. ⁠111

தக்காரும் தக்கவ ரல்லாரும் தந்நீர்மை

எக்காலுங் குன்றல் இலராவர்: அக்காரம்

யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம்

தேவரே தின்னினும் வேம்பு. ⁠112

காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து

மேலாடு மீனின் பலராவர்; ஏலா

இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட!

தொடர்புடையேம் என்பார் சிலர். ⁠113

வடுவிலா வையத்து மன்னிய முன்றில்

நடுவண தெய்த இருதலையும் எய்தும்

நடுவண தெய்தாதான் எய்தும் உலைப்பெய்

தடுவது போலுந் துயர். ⁠114

நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறுஉம்

கல்லாரே யாயினும் செல்வர்வாய்ச் சொற்செல்லும்

புல்லிரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச்

செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல். ⁠115

இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினும் என்றும்

அடங்காதார் என்றும் அடங்கார்;-தடங்கண்ணாய்!

உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினும்

கைப்பறா பேய்ச்சுரையின் காய். ⁠114

தம்மை இகழ்வாரைத் தாமவரின் முன்னிகழ்க;

என்னை அவரொடு பட்டது?-புன்னை

விறற்பூங் கமழ்கானல் வங்குநீர்ச் சேர்ப்ப

உறற்பால யார்க்கும் உறும். ⁠117

ஆவே றுருவின வாயினும், ஆபயந்த

பால்வே றுருவின வல்லவாம்;-பால்போல்

ஒருதன்மைத் தாகும் அறநெறி, ஆபோல்

உருவு பலகொளல் ஈங்கு. ⁠118

யாஅர் உலகத்தோர் சொல்லில்லார்? தேருங்கால்

யாஅர் உபாயத்தின் வாழாதார்?-யாஅர்

இடையாக இன்னாத தெய்தாதார்? யாஅர்

கடைபோகச் செல்வம்உய்த் தார்? ⁠119

தாஞ்செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்

றியாங்கணும் தேரின் பிறிதில்லை;-ஆங்குத்தாம்

போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே.

கூற்றங்கொண் டோடும் பொழுது. ⁠120

13. தீவினையச்சம்

துக்கத்துள் தூங்கித் துறவின்கட் சேர்கலா

மக்கள் பிணத்த சுடுகாடு-தொக்க

விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட

புல்லறி வாளர் வயிறு. ⁠121

இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க் காளாய்க்

கரும்பார் கழனியுட் சேர்வர்-சுரும்பார்க்கும்

காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூழும்

கூட்டுளாய்க் கொண்டுவைப் பார். ⁠122

அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித்

துக்கத் தொழுநோய் எழுபவே-அக்கால்

அலவனைக் காதலித்துக் கான்முரித்துத் தின்ற

பழவினை வந்தடைந்தக் கால் ⁠123

நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்

எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும்-பரப்பக்

கொடுவினைய ராகுவர் கோடாருங் கோடிக்

கடுவினைய ராகியார்ச் சார்ந்து ⁠124

பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்

வரிசை வரிசையா நந்தும்-வரிசையால்

வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே

தானே சிறியார் தொடர்பு. ⁠125

சான்றோ ரெண்மதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்

சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தாய்கேள்

சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்

பாம்பகத்துக் கண்ட துடைத்து ⁠126

யாஅர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்

தேருந் துணைமை யுடையவர்-சாரல்

கனமணி நின்றிமைக்கும் நாட!கேள்; மக்கள்

மனம்வேறு செய்கையும் வேறு. ⁠127

உள்ளத்தான் நள்ளா துறுதித் தொழிலராய்க்

கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை-தெள்ளிப்

புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட!

மனத்துக்கண் மாசாய் விடும். ⁠128

ஓக்கிய ஒள்வாள்தான் ஒன்னார்கைப் பட்டக்கால்

ஊக்கம் அழிப்பது உம் மெய்யாகும்-ஆக்கம்

இருமையுஞ் சென்று சுடுதலால் நல்ல

கருமமே கல்லார்கண் தீர்வு. ⁠129

மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென் றேங்கி

எனைத்துழி வாழ்தியோ நெஞ்சே-எனைத்தும்

சிறுவரையே யாயினும் செய்தநன் றல்லால்

உறுபயனோ இல்லை உயிர்க்கு. ⁠130

பொருட்பால்

14. கல்வி

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல-நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு. ⁠131

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்

தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்

எம்மை யுலகத்தும் யாங்காணேம் கல்விபோல்

மம்மர் அறுக்கும் மருந்து. ⁠132

களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர்

விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்;

கடைநிலத்தோ ராயினுங் கற்றறிந் தோரைத்

தலைநிலைத்து வைக்கப் படும். ⁠133

வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை;

மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்;

எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன

விச்சைமற் றல்ல பிற. ⁠134

கல்வி கரையில; கற்பவர் நாள்சில;

மெல்ல நினைக்கின் பிணிபல;-தெள்ளிதின்

ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்

பாலுண் குருகின் தெரிந்து. ⁠135

தோணி யியக்குவான் தொல்லை வருணத்துக்

காணிற் கடைப்பட்டான் என்றிகழார்-காணாய்

அவன்துணையா ஆறுபோ யற்றேநூல் கற்ற

மகன்துணையா நல்ல கொளல். ⁠136

தவலருந் தொல்கேள்வித் தன்மையு டையார்

இகலிலர் எஃகுடையார் தம்முட் குழீஇ

நகலின் இனிதாயிற் காண்பாம் அகல்வானத்(து)

உம்ப ருறைவார் பதி. ⁠137

கனைகடல் தண்சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மை

நுனியின் கரும்புதின் றற்றே நுனிநீக்கித்

தூரின்தின் றன்ன தகைத்தரோ பண்பிலா

ஈரமி லாளர் தொடர்பு. ⁠138

கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்

நல்லறிவு நாளுந் தலைப்படுவர்-தொல்சிறப்பின்

ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு

தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு. ⁠139

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா(து)

உலகநூ லோதுவ தெல்லாங்-கலகல

கூஉந் துணையல்லாற் கொண்டு தடுமாற்றம்

போஒந் துணையறிவா ரில். ⁠140

15. குடிப்பிறப்பு

உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணுங்

குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்;

இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா

கொடிப்புற் கறிக்குமோ மற்று. ⁠141

சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவைமுன்றும்

வான்றோய் குடிப்பிறந்தார்க் கல்லது-வான்றோயும்

மைதவழ் வெற்ப! படாஅ பெருஞ்செல்வம்

எய்தியக் கண்ணும் பிறர்க்கு. ⁠142

இருக்கை யெழலும் எதிர்செலவும் ஏனை

விடுப்ப ஒழிதலோ டின்ன-குடிப்பிறந்தார்

குன்றா வொழுக்கமாக் கொண்டார் கயவரோ

டொன்றா வுணரற்பாற் றன்று. ⁠143

நல்லவை செய்யின் இயல்பாகும் தீயவை

பல்லவர் தூற்றும் பழியாகும்;-எல்லாம்

உணருங் குடிப்பிறப்பின் ஊதிய மென்னோ

புணரும் ஒருவர்க் கெனின்? ⁠144

கல்லாமை அச்சம், கயவர் தொழிலச்சம்,

சொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்சம்;-எல்லாம்

இரப்பார்க்கொன் றியாமை அச்சம்; மரத்தாரிம்

மாணாக் குடிப்பிறந் தார். ⁠145

இனநன்மை இன்சொல்ஒன் றீதல்மற் றேனை

மனநன்மை என்றிவை யெல்லாம்-கனமணி

முத்தோ டிமைக்கு முழங்குவரித் தண்சேர்ப்ப!

இற்பிறந்தார் கண்ணே யுள. ⁠146

செய்கை யழிந்து சிதல்மண்டிற் றாயினும்

பொய்யா ஒருசிறை பேரில் உடைத்தாகும்;

எவ்வ முழந்தக் கடைத்துங் குடிப்பிறந்தார்

செய்வர் செயற்பா லவை. ⁠147

ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை

அங்கண்மா ஞாலம் விளக்குறுஉந்-திங்கள்போல்

செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்

கொல்கார் குடிப்பிறந் தார். ⁠148

செல்லா விடத்துங் குடிப்பிறந்தார் செய்வன

செல்லிடத்துஞ் செய்யார் சிறியவர்;-புல்வாய்

பருமம் பொறுப்பினும் பாய்பரி மாபோல்

பொருமுரண் ஆற்றுதல் இன்று. ⁠149

எற்றொன்றும் இல்லா இடத்துங் குடிப்பிறந்தார்

அற்றுத்தற் சேர்ந்தார்க் கசைவிடத் தூற்றாவர்;

அற்றக் கடைத்தும் அகல்யா றகழ்ந்தக்கால்

தெற்றெனத் தெண்ணீர் படும். ⁠150

16. மேன்மக்கள்

அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்குந்

திங்களுஞ் சான்றோரும் ஒப்பர்மன்-திங்கள்

மறுவாற்றும், சான்றோரஃ தாற்றார் தெருமந்து

தேய்வர் ஒருமா சுறின். ⁠151

இசையும் எனினும் இசையா தெனினும்

வசைதீர எண்ணுவர் சான்றோர்! விசையின்

நரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ,

அரிமாப் பிழைப்பெய்த கோல்? ⁠152

நரம்பெழுந்து நல்கூர்ந்தா ராயினுஞ் சான்றோர்

குரம்பெழுந்து குற்றங்கொண்டேறார்;-உரங்கவறா

உள்ளமெனும் நாரினாற் கட்டி உளவரையாற்

செய்வர் செயற்பா லவை. ⁠153

செல்வுழிக் கண்ணொருநாட் காணினுஞ் சான்றவர்

தொல்வழிக் கேண்மையிற் றோன்றப் புரிந்தியாப்பர்;

நல்வரை நாட! சிலநாள் அடிப்படின்

கல்வரையும் உண்டாம் நெறி. ⁠154

புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி

கல்லா ஒருவன் உரைப்பவுங் கண்ணோடி

நல்லார் வருந்தியுங் கேட்பரே, மற்றவன்

பல்லாருள் நாணல் பரிந்து. ⁠155

கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி

இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்;

வடுப்பட வைதிறந்தக் கண்ணுங் குடிப்பிறந்தார்

கூறார்தம் வாயிற் சிதைந்து. ⁠156

கள்ளார்,கள்ளுண்ணார், கடிவ கடிந்தொரீஇ,

எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார்,-தள்ளியும்

வாயிற்பொய் கூறார், வடுவறு காட்சியார்

சாயிற் பரிவ திலர். ⁠157

பிறர்மறை யின்கட் செவிடாய்த திறனறிந்

தேதிலா ரிற்கட் குருடனாய்த் தீய புறங்கூற்றின்

முகையாய் நிற்பானேல், யாதும்

அறங்கூற வேண்டா அவற்கு. ⁠158

பன்னாளுஞ் சென்றக்கால் பண்பிலார் தம்முழை

என்னானும் வேண்டுப என்றிகழ்ப;-என்னானும்

வேண்டினும் நன்றுமற் றென்று விழுமியோர்

காண்டொறுஞ் செய்வர் சிறப்பு. ⁠159

உடையா ரிவரென் றொருதலையாப் பற்றிக்

கடையாயார் பின்சென்று வாழ்வர்;-உடைய

பிலந்தலைப் பட்டது போலாதே, நல்ல

குலந்தலைப் பட்ட விடத்து. ⁠160

17. பெரியாரைப் பிழையாமை

பொறுப்பரென் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்

வெறுப்பன செய்யாமை வேண்டும்;-வெறுத்தபின்

ஆர்க்கும் அருவி யணிமலை நன்னாட!

பேர்க்குதல் யார்க்கும் அரிது. ⁠161

பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக்

கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும்-அன்னோ

பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல

நயமில் அறிவி னவர். ⁠162

அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்

மிகைமக்க ளான் மதிக்கற் பால,-நயமுணராக்

கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்

வையார் வடித்தநூ லார். ⁠163

விரிநிற நாகம் விடருள தேனும்

உருமின் கடுஞ்சினஞ் சேணின்றும் உட்கும்;

அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்

பெருமை யுடையார் செறின். ⁠164

எம்மை யறிந்திலிர் எம்போல்வார் இல்லென்று

தம்மைத்தாம் கொள்வது கோளன்று;-தம்மை

அரியரா நோக்கி அறனறியுஞ் சான்றோர்

பெரியராக் கொள்வது கோள். ⁠165

நளிகடல் தண்சேர்ப்ப! நாணிழற் போல

விளியுஞ் சிறியவர் கேண்மை;-விளிவின்றி

அல்கு நிழற்போல் அகன்றகன் றோடுமே

தொல்புக ழாளர் தொடர்பு ⁠166

மன்னர் திருவும் மகளிர் எழினலமும்

துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா-துன்னிக்

குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம்

உழைதங்கட் சென்றார்க் கொருங்கு ⁠167

தெரியத் தெரியுந் தெரிவிலார் கண்ணும்

பிரியப் பெரும்படர்நோய் செய்யும்;-பெரிய

உலவா இருங்கழிச் சேர்ப்ப யார்மட்டும்

கலவாமை கோடி யுறும். ⁠168

கல்லாது போகிய நாளும், பெரியவர்கண்

செல்லாது வைகிய வைகலும்;-ஒல்வ

கொடாஅ தொழிந்த பகலும், உரைப்பின்

படாஅவாம் பண்புடையார் கண். ⁠169

பெரியார் பெருமை சிறுதகைமை; ஒன்றிற்

குரியா ருரிமை யடக்கம்;-தெரியுங்கால்;

செல்வ முடையாருஞ் செல்வரே, தற்சேர்ந்தார்

அல்லல் களைப வெனின் ⁠170

18. நல்லினம் சேர்தல்

அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி

நெறியல்ல செய்தொழுகி யவ்வும்-நெறியறிந்த

நற்சார்வு சாரக் கெடுமே வெயின்முறுகப்

புற்பணிப் பற்றுவிட் டாங்கு ⁠171

அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்;

பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்

வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்

பெறுமின் பெரியார்வாய்ச் சொல். ⁠173

அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்

உடங்குடம்பு கொண்டார்க் குறலால்-தொடங்கிப்

பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை

உறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு ⁠173

இறப்ப நினையுங்கால் இன்னா தெனினும்

பிறப்பினை யாரும் முனியார்;-பிறப்பினுள்

பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோ டெஞ்ஞான்றும்

நண்பாற்றி நட்கப் பெறின். ⁠174

ஊரங் கனநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்

பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்;-ஒருங்

குலமாட்சி யில்லாரும் குன்றுபோல் நிற்பர்

நலமாட்சி நல்லாரைச் சார்ந்து ⁠175

ஒண்கதிர் வான்மதியும் சேர்தலால் ஒங்கிய

அங்கண் விசும்பின் முயலும் தொழப்படுஉம்;

குன்றிய சீர்மைய ராயினும் சீர்பெறுவர்,

குன்றன்னார் கேண்மை கொளின். ⁠176

பாலோ டளாயநீர் பாலாகு மல்லது

நீராய் நிறந்தெரிந்து தோன்றாதாம்;-தேரின்

சிறியார் சிறுமையும் தோன்றாதாம், நலல

பெரியார் பெருமையைச் சார்ந்து. ⁠177

கொல்லை யிரும்புனத்துக் குற்றி யடைந்தபுல்

ஒல்காவே யாகும் உழவ ருழுபடைக்கு

மெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார்மேற்

செல்லாவாம் செற்றார் சினம். ⁠178

நிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தங்

குலநலத்தால் ஆகுவர் சான்றோர்;-கலநலத்தைத்

தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை

தீயினஞ் சேரக் கெடும். ⁠179

மனத்தான் மறுவில ரேனுந்தாஞ் சேர்ந்த

இனத்தால் இகழப் படுவர்;-புனத்து

வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே

எறிபுனந் தீப்பட்டக் கால். ⁠180

19. பெருமை

ஈத லிசையா திளமைசே ணீங்குதலால்

காத லவருங் கருத்தல்லர்;-காதலித்து

ஆதுநா மென்னு மவாவினைக் கைவிட்டுப்

போவதே போலும் பொருள். ⁠181

இற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைந்தேம் என்றெண்ணிப்

பொச்சாந் தொழுகுவர் பேதையார்;-அச்சார்வு

நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார்

என்றும் பரிவ திலர். ⁠182

மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து

சிறுமைக்குப் படாதேநீர் வாழ்மின்-அறிஞராய்

நின்றுழி நின்றே நிறம்வேறாங் காரணம்

இன்றிப் பலவு முள. ⁠183

உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி

இறைத்துணினும் ஊராற்றும் என்பர்; கொடைக்கடனும்

சாஅயக் கண்ணும் பெரியார்போல் மற்றையார்

ஆஅயக் கண்ணும் அரிது. ⁠184

உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும்

கல்லூற் றுழியூறும் ஆறேபோல-செல்வம்

பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றி

செய்வர் செயற்பா லவை. ⁠185

பெருவரை நாட! பெரியோர்கண் தீமை

கருநரைமேற் சூடேபோற் றோன்றும்;-கருநரையைக்

கொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல்

ஒன்றானும் தோன்றாக் கெடும். ⁠186

இசைந்த சிறுமை யியல்பிலா தார்கட்

பசைந்த துணையும் பரிவாம்-அசைந்த

நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்

பகையேயும் பாடு பெறும். ⁠187

மெல்லிய நல்லாருள் மென்மை; அதுவிறந்(து)

ஒன்னாருட் கூற்றுட்கும் உட்குடைமை; எல்லாம்

சலவருட் சாலச் சலமே, நலவருள்

நன்மை வரம்பாய் விடல். ⁠188

கடுக்கி யொருவன் கடுஞ்குறளை பேசி

மயக்கி விடினும் மனப்பிரிப்பொன் றின்றித்

துளக்க மிலாதவர் தூய மனத்தார்;

விளக்கினுள் ஒண்சுடரே போன்று. ⁠189

முற்றுற்றுந் துற்றினை நாளும் அறஞ்செய்து

பிற்றுற்றுத் துற்றுவர் சான்றவர்;-அத்துற்று

முக்குற்றம் நீக்கி முடியும் அளவெல்லாம்

துக்கத்துள் நீக்கி விடும். ⁠190

20. தாளாண்மை

கோளாற்றக் கொள்ளாக் குளத்தின்கீழ்ப் பைங்கூழ்போற்

கேளிவ துண்டு கிளைகளோ துஞ்சுப;

வாளாடு கூத்தியர் கண்போற் றடுமாறுந்

தாளர்க் குண்டோ தவறு; ⁠191

ஆடுகோ டாகி அதரிடை நின்றதூஉம்

காழ்கொண்ட கண்ணே களிறணைக்குங் கந்தாகும்,

வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்றான்

தாழ்வின்றித் தன்னைச் செயின் ⁠192

உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள்

சிறுதேரை பற்றியுந் தின்னும்;-அறிவினால்

காற்றொழில் என்று கருதற்க கையினால்

மேற்றொழிலும் ஆங்கே மிகும். ⁠193

இசையா தெனினும் இயற்றியோ ராற்றால்

அசையாது நிற்பதாம் ஆண்மை-இசையுங்கால்

கண்டல் திரையலைக்குங் கானலந் தண்சேர்ப்ப!

பெண்டிரும் வாழாரோ மற்று. ⁠194

நல்ல குலமென்றும் தீய குலமென்றும்

சொல்லள வல்லாற் பொருளில்லை;-தொல்சிறப்பின்

ஒண்பொரு ளொன்றோ தவங்கல்வி யாள்வினை

என்றிவற்றான் ஆகும் குலம். ⁠195

ஆற்றுந் துணையும் அறிவினை உள்ளடக்கி

ஊக்கம் உரையார் உணர்வுடையார்-ஊக்கம்

உறுப்பினால் ஆராயும் ஒண்மை யுடையார்

குறிப்பின்கீழ்ப் பட்ட துலகு. ⁠196

சிதலை தினப்பட்ட ஆல மரத்தை

மதலையாய் மற்றதன் விழுன்றி யாங்குக்

குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற

புதல்வன் மறைப்பக் கெடும். ⁠197

ஈனமாய் இல்லிருந் தின்றி விளியினும்

மானந் தலைவருவ செய்பவோ?-யானை

வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்

அரிமா மதுகை யவர். ⁠198

தீங்கரும் பீன்ற திரள்கால் உளையலரி

தேங்கமழ் நாற்றம் இழந்தாஅங்கு-ஓங்கும்

உயர்குடி யுட்பிறப்பின் என்னாம் பெயர்பொறிக்கு

பேராண்மை இல்லாக் கடை. ⁠199

பெருமுத் தரையர் பெரிதுவந் தீயுங்

கருணைச்சோ றார்வர் கயவர்;-கருனையைப்

பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை

நீரும் அமிழ்தாய் விடும். ⁠200

21. சுற்றந்தழால்

வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்

கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்கு

அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்

கேளிரைக் காணக் கெடும். ⁠201

அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்

நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப்-பழுமரம்போல்

பல்லார் பயன்றுய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே

நல்லாண் மகற்குக் கடன். ⁠202

அடுக்கன் மலைநாட! தற்சேர்ந் தவரை

எடுக்கல மென்னார் பெரியோர்;-அடுத்தடுத்து

வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே,

தன்காய் பொறுக்கலாக் கொம்பு ⁠203

உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா

சிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை;-நிலைதிரியா

நிற்கும் பெரியோர் நெறியடைய நின்றனைத்தால்

ஒற்கமி லாளர் தொடர்பு. ⁠204

இன்னர் இனையர் எமர்பிறர் என்னுஞ்சொல்

என்னும் இலராம் இயல்பினால்-துன்னித்

தொலைமக்கள் துன்பந்தீர்ப் பாரேயார் மாட்டும்

தலைமக்க ளாகற்பா லார். ⁠205

பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல்

அக்காரம் பாலோ டமரார்கைத் துண்டலின்

உப்பிலிப் புற்கை உயிர்போன்ற கிளைஞர்மாட்டு

எக்கலத் தானு மினிது. ⁠206

நாள்வாய்ப் பெறினுந்தந் நள்ளாதா ரில்லத்து

வேளாண்மை வெங்கருனை வேம்பாகும்;-கேளாய்,

அபராணப் போழ்தின் அடகிடுவ ரேனுந்

தமராயார் மாட்டே இனிது. ⁠207

முட்டிகை போல முனியாது வைகலுங்

கொட்டியுண் பாரும் குறடுபோற் கைவிடுவர்;

சுட்டுக்கோல் போல எரியும் புகுவரே

நட்டா ரெனப்படு வார். ⁠208

நறுமலர்த் தண்கோதாய்! நட்டார்க்கு நட்டார்

மறுமையுஞ் செய்வதொன் றுண்டோ இறுமளவும்

இன்புறுவ இன்புற் றெழிஇ அவரோடு

துன்புறுவ துன்புறாக் கால். ⁠209

விருப்பிலா ரில்லத்து வேறிருந்து உண்ணும்

வெருக்குக்கண் வெங்கருனை வேம்பாம்; விருப்புடைத்

தன்போல்வா ரில்லுள் தயங்குநீர்த் தண்புற்கை

என்போ டியைந்த அமிழ்து. ⁠210

22. நட்பாராய்தல்

கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மையெஞ் ஞான்றுங்

குருத்திற் கரும்புதின் றற்றே;-குருத்திற்

கெதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும்

மதுர மிலாளர் தொடர்பு. ⁠211

இற்பிறப் பெண்ணி இடைதிரியா ரென்பதோர்

நற்புடை கொண்டமை யல்லது;-பொற்கேழ்

புனலொழுகப் புள்ளிரியும் பூங்குன்ற நாட!

மனமறியப் பட்டதொன் றன்று. ⁠212

யானை யானையவர் நண்பொரீஇ நாயனையார்

கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்;-யானை

அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்

மெய்யதா வால்குழைக்கும் நாய். ⁠213

பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில்

சிலநாளும் ஒட்டாரோ டொட்டார்;-பலநாளும்

நீத்தா ரெனக்கை விடலுண்டோ, தந்நெஞ்சத்

தியாத்தாரோ டியாத்த தொடர்பு. ⁠214

கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது

வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி;-தோட்ட

கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை

நயப்பாரும் நட்பாரும் இல். ⁠215

கடையாயார் நட்பிற் கமுகனையர்; ஏனை

இடையாயார் தெங்கி னனையர்;-தலையாயார்

எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே,

தொன்மை யுடையார் தொடர்பு. ⁠216

கழுநீருட் காரட கேனும் ஒருவன்

விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம்;-விழுமிய

குய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார்

கைத்துண்டல் காஞ்சிரங் காய். ⁠217

நாய்க்காற் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்

ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?

சேய்த்தானுஞ் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்

வாய்க்கா லனையார் தொடர்பு. ⁠218

தெளிவிலார் நட்பின் பகைநன்று; சாதல்

விளியா அருநோயின் நன்றால்-அளிய

இகழ்தலின் கோறல் இனிதேமற் றில்ல

புகழ்தலின் வைதலே நன்று. ⁠219

மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப்

பொரீஇப் பொருட்டக்கார்க் கோடலே வேண்டும்

பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா

மரீஇஇப் பின்னைப் பிரிவு. ⁠220

23. நட்பிற் பிழை பொறுத்தல்

நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்

நெல்லுக்கு உமியுண்டு; நீர்க்கு நுரையுண்டு

புல்லிதழ் பூவிற்கு உண்டு ⁠221

செறுத்தோறுடைப்பினுஞ் செம்புனலோ டுடார்,

மறுத்துஞ் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர்

வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே

தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு ⁠222

இறப்பவே தீய செயினுந்தந் நட்டார்

பொறுத்தல் தகுவதொன் றன்றோ;-நிறக்கோங்கு

உருவவண் டார்க்கும் உயர்வரை நாட!

ஒருவர் பொறையிருவர் நட்பு ⁠223

மடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தங்

கடுவிசை நாவாய் கரையலைக்குஞ் சேர்ப்ப!

விடுதற் கரியா ரியல்பிலரேல் நெஞ்சஞ்

சுடுதற்கு முட்டிய தீ ⁠224

இன்னா செயினும் விடற்பால ரல்லாரைப்

பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும் பொன்னோடு

நல்லிற் சிதைத்ததி நாடொறும் நாடித்தம்

இல்லத்தில் ஆக்குத லால் ⁠225

இன்னா செயினும் விடுதற் கரியாரைத்

துன்னாத் துறத்தல் தகுவதோ-துன்னருஞ்சீர்

விண்குத்து நீள்வரை வெற்ப! களைபவோ

கண்குத்திற் றென்றுதங்கை ⁠226

இலங்குநீர்த் தண்சேர்ப்ப! இன்னா செயினும்

கலந்து பழிகாணார் சான்றோர்; கலந்தபின்

தீமை எடுத்துரைக்குந் திண்ணறி வில்லாதார்

தாமும் அவரிற் கடை ⁠227

ஏதிலார் செய்த திறப்பவே தீதெனினும்

நோதக்க தென்னுண்டாம் நோக்குங்கால்:காதல்

கழுமியார் செய்த கறங்கருவி நாட!

விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று ⁠228

தமரென்று தாங்கொள்ளப் பட்டவர் தம்மைத்

தமரன்மை தாமறிந்தா ராயின், அவரைத்

தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை

தம்முள் அடக்கிக் கொளல் ⁠229

குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை

நட்டபின் நாடித் திரிவேனேல்-நட்டான்

மறைகாவா விட்டவன் செல்வுழிச் செல்க

அறைகடல்சூழ் வையம் நக ⁠230

24. கூடா நட்பு

செறிப்பில் பழங்கூரை சேறனை யாக

இறைத்துநீர் ஏற்றும் கிடப்பர்;-கறைக்குன்றம்

பொங்கருவி தாமும் புனல்வரை நன்னாட!

தங்கரும முற்றுந் துணை ⁠231

சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்

மாரிபோல் மாண்ட பயத்ததாம்-மாரி

வறந்தக்காற் போலுமே வாலருவி நாட!

சிறந்தக்காற் சீரிலார் நட்பு ⁠232

நுண்ணுணர்வி னாரொடு கூடி நுகர்வுடைமை

விண்ணுலகே யொக்கும் விழைவிற்றால்-நுண்ணூல்

உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப்

புணர்தல் நிரயத்துள் ஒன்று ⁠233

பெருகுவது போலத் தோன்றிவைத் தீப்போல்

ஒருபொழுதுஞ் செல்லாதே நந்தும்-அருகெல்லாம்

சந்தன நீள்சோலைச் சாரன் மலைநாட!

பந்தமி லாளர் தொடர்பு ⁠234

செய்யாத செய்துநாம் என்றலும் செய்வதனைச்

செய்யாது தாழ்த்துக் கொண் டோட்டலும்-மெய்யாக

இன்புறுஉம் பெற்றி யிகழ்ந்தார்க்கும் அந்நிலையே

துன்புறுஉம் பெற்றி தரும். ⁠235

ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்

விரிநீர் குவளையை ஆம்பலொக் கல்லா

பெருநீரார் கேண்மை கொளினுநீ ரல்லார்

கருமங்கள் வேறுபடும் ⁠236

முற்றற் சிறுமந்தி முற்பட்ட தந்தையை

நெற்றுக்கண் டன்ன விரலான் ஞெமிர்த்திட்டுக்

குற்றிப் பறிக்கும் மலைநாட! இன்னாதே

ஒற்றுமை கொள்ளாதார் நட்பு ⁠237

முட்டுற்ற போழ்தின் முடுகியென் னாருயிரை

நட்டா னொருவன்கை நீட்டேனேல்-நட்டான்

கடிமனை கட்டழித்தான் செல்வுழிச் செல்க

நெடுமொழி வையம் நக ⁠238

ஆன்படு நெய்பெய் கலனுள் அதுகளைந்து

வேம்படு நெய்பெய் தனைத்தரோ;-தேம்படு

நல்வரை நாட! நயமுணர்வார் நண்பொரீஇப்

புல்லறிவி னாரொடு நட்பு ⁠239

உருவிற் கமைந்தான்கண் ஊராண்மை யின்மை

பருகற் கமைந்தபால் நீரளா யற்றே

தெரிவுடையார் தீயினத்தா ராகுதல் நாகம்

விரிபெடையோ டாடிவிட் டற்று ⁠240

25. அறிவுடைமை

பகைவர் பணிவிடம் நோக்கித் தகவுடையார்

தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய்

இளம்பிறை யாயக்கால் திங்களைச் சேராது

அணங்கருந் துப்பின் அரா ⁠241

நளிகடற் றண்சேர்ப்ப நல்கூர்ந்த மக்கட்

கணிகல மாவ தடக்கம்-பணிவில் சீர்

மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமுர்

கோத்திரங் கூறப் படும் ⁠242

எந்நிலத்து வித்திடினுங் காஞ்சிரங்காழ் தெங்காகாது

எந்நாட் டவருஞ் சுவர்க்கம் புகுதலால்;

தன்னாற்றா னாகும் மறுமை; வடதிசையுங்

கொன்னாளர் சாலப் பலர் ⁠243

வேம்பின் இலையுட் கனியினும் வாழைதன்

தீஞ்சுவை யாதுந் திரியாதாம்; ஆங்கே

இனந்தீ தெனினும் இயல்புட்ையார் கேண்மை

மனந்தீதாம் பக்கம் அரிது ⁠244

கடல் சார்ந்தும் இன்னிர் பிறக்கும் மலைசார்ந்தும்

உப்பீண் டுவரி பிறத்தலால்; தத்தம்

இனத்தனைய ரல்லர் எறிகடற்றண் சேர்ப்ப

மனத்தனையர் மக்களென் பார் ⁠245

பரா அரைப் புன்னை படுகடற் றண்சேர்ப்ப!

ஒராஅலும் ஒட்டலுஞ் செய்பவோ? நல்ல

மரு உச்செய் தியார்மாட்டுந் தங்கு மனத்தார்

விராஅஅய்ச் செய்யாமை நன்று ⁠246

உணர உணரும் உணர்வுடை யாரைப்

புனரிற் புணருமாம் இன்பம்;-புணரின்;

தெரியத் தெரியுந் தெரிவிலா தாரைப்

பிரியப் பிரியும் நோய் ⁠247

நன்னிலைக்கண் தன்னை நிறப்பானும், தன்னை

நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்

மேன்மே லுயர்த்து நிறுப்பானும் தன்னைத்

தலையாகச் செய்வானும் தான் ⁠248

கரும வரிசையாற் கல்லாதார் பின்னும்

பெருமை யுடையாருஞ் சேறல்-அருமரபின்

ஒதம் அரற்றும் ஒலிகடற் றண்சேர்ப்ப!

பேதைமை யன்ற தறிவு ⁠249

கருமமு முட்படாப் போகமுந் துவ்வாத்

தருமமுந் தக்கார்க்கே செய்யா-ஒரு நிலையே

முட்டின்றி முன்று முடியுமேல் அஃதென்ப

பட்டினம் பெற்ற கலம் ⁠250

26. அறிவின்மை

நுண்ணுணர் வின்மை வறுமை அஃதுடைமை

பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்;-எண்ணுங்கால்

பெண்ணவாய் ஆணிழந்த பேடி யணியாளோ,

கண்ணவாத் தக்க கலம் ⁠251

பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்து

அல்ல லுழப்ப தறிதிரேல்-தொல்சிறப்பின்

நாவின் கிழத்தி யுறைதலாற் சேராளே,

பூவின் கிழத்தி புலந்து ⁠252

கல்லென்று தந்தை கழற அதனையோர்

சொல்லென்று கொள்ளா திகழ்ந்தவன்-மெல்ல

எழுத்தோலை பல்லார்முன் நீட்டவிளியா

வழுக்கோலைக் கொண்டு விடும் ⁠253

கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து

நல்லறி வாள ரிடைப்புக்கு-மெல்ல

இருப்பினும் நாயிருந் தற்றே, இராஅது

உரைப்பினும் நாய்குரைத் தற்று ⁠254

புல்லாப்புன் கோட்டிப் புலவ ரிடைப்புக்குக்

கல்லாத சொல்லுங் கடையெல்லாம்-கற்ற

கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருண்மேல்

படாஅ விடுபாக் கறிந்து ⁠255

கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி

மற்றைய ராவார் பகர்வர்-பனையின்மேல்

வற்றிய ஒல கலகலக்கும் எஞ்ஞான்றும்

பச்சோலைக் கில்லை யொலி ⁠256

பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்;

நன்றறியா மாந்தர்க் கறத்தாறுரைக்குங்கால்;

குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைநகர்ந்து

சென்றிசையா வாகுஞ் செவிக்கு ⁠257

பாலாற் கழீஇப் பலநாள் உணக்கினும்

வாலிதாம் பக்கம் இருந்தைக் கிருந்தன்று!

கோலாற் கடாஅய்க் குறினும் புகலொல்லா

நோலா உடம்பிற் கறிவு ⁠258

பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லாது

இழிந்தவை காமுறுஉம் ஈப்போல், இழிந்தவை

தாங்கலந்த நெஞ்சினார்க் கென்னாரும், தக்கார்வாய்த்

தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு ⁠259

கற்றா ருரைக்குங் கசடறு நுண்கேள்வி

பற்றாது தன்னெஞ் சுதைத்தலால்-மற்றுமோர்

தன்போ லொருவன் முகநோக்கித் தானுமோர்

புன்கோட்டி கொள்ளுமாம் கீழ் ⁠260

27. நன்றியில் செல்வம்

அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்

பொரிதாள் விளைவினை வாவல் குறுகா;

பெரிதணிய ராயினும் பீடிவார் செல்வம்

கருதுங் கடப்பாட்ட தன்று ⁠261

அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்

கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால்

செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை

நள்ளார் அறிவுடை யார் ⁠262

மல்கு திரைய கடற்கோட் டிருப்பினும்,

வல்லுற் றுவரில் கிணற்றின்கட் சென்றுண்பர்;

செல்வம் பெரிதுடைய ராயினும், சேட்சென்றும்

நல்குவார் கட்டே நசை ⁠263

புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே;

உணர்வ துடைய ரிருப்ப - உணர்விலா

வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே,

பட்டும் துகிலும் உடுத்து ⁠264

நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்

கல்லார்க்கொன் றாகிய காரணம் - தொல்லை

வினைப்பய னல்லது வேனெடுங் கண்ணாய்!

நினைப்ப வருவதொன் றில். ⁠265

நாறாத் தகடேபோல் நன்மலர்மேற் பொற்பாவாய்!

நீறாய் நிலத்து விளியரோ - வேறாய

புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ பொன்போலும்

நன்மக்கள் பக்கம் துறந்து ⁠266

நயவார்கண் நல்குரவு நாணின்று கொல்லோ;

பயவார்கட் செல்வம் பரம்பப் பயின்கொல்;

வியவாய்காண் வேற்கண்ணாய் இவ்விரண்டும் ஆங்கே

நயவாது நிற்கு நிலை. ⁠267

வலவைக ளல்லாதார் காலாறு சென்று

கலவைகள் உண்டு கழிப்பர்-வலவைகள்

காலாறுஞ் செல்லார் கருணையால் துய்ப்பவே

மேலாறு பாய விருந்து ⁠268

பொன்னிறச் செந்நெற் பொதியொடு பீள்வா

மின்னொளிர் வானங் கடலுள்ளுங் கான்றுகுக்கும்;

வெண்மை யுடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்

வண்மையும் அன்ன தகைத்து ⁠269

ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்

ஓதி யனையார் உணர்வுடையார்;-தூய்தாக

நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார்; செல்வரும்

நல்கூர்ந்தார் ஈயா ரெனின் ⁠270

28. ஈயாமை

நட்டார்க்கும் நள்ளாதவர்க்கும் உளவரையால்

அட்டது பாத்துண்டல் அட்டுண்டல்;-அட்டது

அடைந்திருந் துண்டொழுகும் ஆவதின் மாக்கட்கு

அடைக்குமாம் ஆண்டைக் கதவு ⁠271

எத்துணை யானும் இயைந்த அளவினால்

சிற்றஞ் செய்தார் தலைப்படுவர்;-மற்றைப்

பெருஞ்ச்செல்வம் எய்தியக்கால் பின்னறிதும்

என்பார் அழிந்தார் பழிகடலத் துள் ⁠272

துய்த்துக் கழியான் துறவோர்க்கொன்றி கலான்

வைத்துக் கழியும் மடவோனை-வைத்த

பொருளும் அவனை நகுமே உலகத்து

அருளும் அவனை நகும் ⁠273

கொடுத்தலுந் துய்த்தலுந் தேற்றா இடுக்குடை

உள்ளத்தான் பெற்ற பெருஞ்ச்செல்வம் இல்லத்து

உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்

ஏதிலான் துய்க்கப் படும் ⁠274

எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்

அறுநீர்ச் சிறுகிணற்றுாறல் பார்த் துண்பர்

மறுமை யறியாதா ராக்கத்தின் சான்றோர்

கழிநல் குரவே தலை. ⁠275

எனதென தென்றிருக்கும் ஏழை பொருளை

எனதென தென்றிருப்பன் யானும்;-தனதாயின்

தானும் அதனை வழங்கான்; பயன்துவ்வான்;

யானும் அதனை அது. ⁠276

வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார்;

இழந்தா ரெனப்படுதல் உய்ந்தார்-உழந்ததனைக்

காப்புய்ந்தார் கல்லுதலும் உய்த்தார்தங் கைந்நோவ

யாப்புய்ந்தார் உய்ந்த பல ⁠277

தனதாகத் தான்கொடான்; தாயத் தவருந்

தமதாய போழ்தே கொடாஅர்;-தனதாக

முன்னே கொடுப்பின் அவர்கடியார், தான்கடியான்

பின்னே அவர்கொடுக்கும் போழ்து ⁠278

இரவலர் கன்றாக ஈவார்ஆ வாக

விரகிற் சுரப்பதாம் வண்மை-விரகின்றி

வல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய்வைத்துக்

கொல்லச் சுரப்பதாங் கீழ் ⁠279

ஈட்டலுந் துன்பமற் றீட்டிய வொண்பொருளைக்

காத்தலும் ஆங்கே கடுந்துன்பம்-காத்தல்

குறைபடில் துன்பம், கெடில்துன்பம் துன்பக்கு

உறைபதி மற்றைப் பொருள் ⁠280

29. இன்மை

அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்

பத்தெட் டுடைமை பலருள்ளும் பாடெய்தும்

ஒத்த குடிப்பிறந்தக் கண்னுமொன் றில்லாதார்

செத்த பிணத்திற் கடை ⁠281

நீரினும் நுண்ணிது நெய்யென்பார், நெய்யினும்

யாரும் அறிவர் புகைநுட்பம்;-தேரின்

நிரப்பிடும்பை யாளன் புகுமே, புகையும்

புகற்கரிய பூழை நுழைந்து ⁠282

கல்லோங் குயர்வரைமேற் காந்தள் மலராக்கால்

செல்லாவாம் செம்பொறி வண்டினம்;-கொல்லைக்

கலாஅற் கிளிகடியுங் கானக நாட!

இலாஅஅர்க் கில்லை தமர் ⁠283

உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல்

தொண்டா யிரவர் தொகுபவே;-வண்டாய்த்

திரிதருங் காலத்துத் தீதிலிரோ என்பார்

ஒருவரும் இவ்வுலகத் தில் ⁠284

பிறந்த குலமாயும்; பேராண்மை மாயும்;

சிறந்ததங் கல்வியும் மாயும் - கறங்குருவி

கன்மேற் கழுஉங் கணமலை நன்னாட!

இன்மை தழுவப்பட் டார்க்கு ⁠285

உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு

உள்ளு ரிருந்துமொன் றாற்றாதான்;-உள்ளூர்

இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்

விருந்தின னாதலே நன்று ⁠286

நீர்மையே யன்றி நிரம்ப எழுந்ததங்

கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர்;-கூர்மையின்

முல்லை அலைக்கும் எயிற்றாய்!நிரப்பென்னும்

அல்லல் அடையப்பட் டார் ⁠287

இட்டாற்றுப் பட்டொன் றிரந்தவர்க் காற்றாது

முட்டாற்றுப் பட்டும் முயன்றுள்ளுர் வாழ்தலின்

நெட்டாற்றுச் சென்று நிரைமனையிற் கைந்நீட்டுங்

கெட்டாற்று வாழ்க்கையே நன்று ⁠288

கடகஞ் செறிந்ததங் கைகளால் வாங்கி

அடகு பறித்துக்கொண் டட்டுக்-குடைகலனா

உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே

துப்பரவு சென்றுலந்தக் கால் ⁠289

ஆர்த்த பொறி அணிகிளர் வண்டினம்

பூத்தொழி கொம்பின்மேற் செல்லாவம்;-நீர்த்தருவி

தாழா உயர்சிறப்பின் தண்குன்ற நன்னாட!

வாழாதார்க் கில்லை தமர் ⁠290

30. மானம்

திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்

பெருமிதங் கண்டக் கடைத்தும்-எரிமண்டிக்

கானத் தலைப்பட்ட தீப்போற் கனலுமே

மான முடையார் மனம் ⁠291

என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று

தம்பா டுரைப்பரோ தம்முடையார்;~தம்பாடு

உரையாமை முன்னுணரும் ஒண்மை யுடையார்க்கு

உரையாரோ தாமுற்ற நோய் ⁠292

யாமாயின் எம்மில்லங் காட்டுதும் தாமாயின்

காணவே கற்பழியும் என்பார்போல்-நாணிப்

புறங்கடை வைத்தீவர் சோறும் அதனால்

மறந்திடுக செல்வர் தொடர்பு ⁠293

இம்மையும் நன்றாம் இயல்நெறியுங் கைவிடாது

உம்மையும் நல்ல பயத்தலால்;-செம்மையின்

நானம் கமழுங் கதுப்பினாய்! நன்றேகாண்

மான முடையார் மதிப்பு ⁠294

பாவமும் ஏனைப் பழியும் படவருவ

சாயினும் சான்றவர் செய்கலார்;-சாதல்

ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல்

அருநவை ஆற்றுதல் இன்று ⁠295

மல்லன்மா ஞாலத்து வாழ்பவ ருள்ளெல்லாம்

செல்வரெனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்;

நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே

செல்வரைச் சென்றிரவா தார் ⁠296

கடையெலாம் காய்பசி அஞ்சமற் றேனை

இடையெலாம் இன்னாமை அஞ்சும்-புடைபரந்த

விற்புருவ வேனெடுங் கண்ணாய்! தலையெல்லாம்

சொற்பழி அஞ்சி விடும் ⁠297

நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச்

செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால்-கொல்லன்

உலையூதுந் தியேபோல் உள்கனலுங் கொல்லோ,

தலையாய சான்றோர் மனம் ⁠298

நச்சியார்க் கீயாமை நாணன்று, நாணாளும்

அச்சத்தால் நாணுதல் நாணன்றாம்; எச்சத்தின்

மெல்லிய ராகித்தம் மேலாயார் செய்தது

சொல்லா திருப்பது நாண் ⁠299

கடமா தொலைச்சிய கானுறை வேங்கை

இடம்வழ்ந்த துண்ணா திறக்கும்;-இடமுடைய

வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்,

மானம் மழுங்க வரின் ⁠300

31. இரவச்சம்

நம்மாலே யாவரிந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றுந்

தம்மாலாம் ஆக்கம் இலரென்று-தம்மை

மருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும்

தெருண்ட அறிவி னவர் ⁠301

இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்

பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ?

விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன்

அழித்துப் பிறக்கும் பிறப்பு ⁠302

இல்லாமை கந்தா இரவு துணிந்தொருவர்

செல்லாரும் அல்லர் சிறுநெறி-புல்லா

அகம்புகுமின் உண்ணுமின் என்பவர்மாட்

டல்லான் முகம்புகுதல் ஆற்றுமோ மேல்? ⁠303

திருதன்னை நீப்பினும் தெய்வம் செறினும்

உருத்த மனத்தோ டுயர்வுள்ளி னல்லால்

அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின்சென்

றெருத்திறைஞ்சி நில்லாதா மேல் ⁠304

கரவாத திண்ணன்பின் கண்ணன்னார் கண்ணும்

இரவாது வாழ்வதாம் வாழ்க்கை-இரவினை

உள்ளுங்கால் உள்ளம் உருகுமால், என்கொலோ

கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு ⁠305

இன்னா இயைக இனிய ஒழிகென்று

தன்னையே தானிரப்பத் தீர்வதற்-கென்னைகொல்

காதல் கவற்றும் மனத்தினாற் கண்பாழ்பட்

டேதி லவரை இரவு ⁠306

என்றும் புதியார் பிறப்பினும் இவ்வுலகத்

தென்று மவனே பிறக்கலான்-குன்றின்

பரப்பெலாம் பொன்னொழுகும் பாயருவி நாட!

இரப்பாரை எள்ளா மகன் ⁠307

புறத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன்

நன்ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை

ஈயாய் எனக்கென் றிரப்பானேல் அந்நிலையே

மாயானோ மாற்றி விடின் ⁠308

ஒருவ ரொருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றி

வழிபடுதல் வல்லுத லல்லால்;-பரிசழிந்து

செய்யீரோ என்னானும் என்னுஞ்சொற் கின்னாதே

பையத்தான் செல்லும் நெறி? ⁠309

பழமைகந் தாகப் பசைந்த வழியே

கிழமைதான் யாதானுஞ் செய்க; கிழமை

பொறார் அவரென்னின் பொத்தித்தம் நெஞ்சத்

தறாஅச் சுடுவதோர் தீ ⁠310

32. அவை அறிதல்

மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழிவிட் டாங்கோர்

அஞ்ஞானந் தந்திட் டதுவாங் கறத்துழாய்க்

கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறி வாளர்முன்

சொன்ஞானஞ் சோர விடல் ⁠311

நாப்பாடஞ் சொல்லி நயமுணர்வார் போற்செறிக்குந்

தீப்புலவற் சேரார் செறிவுடையார்;-தீப்புலவன்

கோட்டியுட் குன்றக் குடிப்பழிக்கும் அல்லாக்கால்

தோட்புடைக் கொள்ளா எழும் ⁠312

சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர்

கற்றாற்றல் வன்மையுந் தாந்தேறார்;-கற்ற

செலவுரைக்கும் ஆறறியார் தோற்ப தறியார்,

பலவுரைக்கும் மாந்தர் பலர் ⁠313

கற்றதூஉ மின்றிக் கணக்காயர் பாடத்தால்

பெற்றதாம் பேதையோர் சூத்திரம்-மற்றதனை

நல்லா ரிடைப்புக்கு நாணாது சொல்லித்தன்

புல்லறிவு காட்டிவிடும் ⁠314

வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார்

கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோ-டொன்றி

உரைவித் தகமெழுவார் காண்பவே, கையுள்

கரைவித்துப் போலுந்தம் பல் ⁠315

பாடமே ஓதிப் பயன்றெரிதல் தேற்றாத

முடர் முனிதக்க சொல்லுங்கால்-கேடருஞ்சீர்ச்

சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரை

ஈன்றாட் கிறப்பப் பரிந்து ⁠316

பெறுவது கொள்பவர் தோள்போல் நெறிப்பட்டுக்

கற்பவர்க் கெல்லாம் எளியநூல்; மற்றும்

முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும்

அறிதற் கரிய பொருள் ⁠317

புத்தகமே சாலத் தொகுத்தும் பொருடெரியார்

உய்த்தக மெல்லா நிறைப்பினும்-மற்றவற்றைப்

போற்றும் புலவரும் வேறே, பொருடெரிந்து

தேற்றும் புலவரும் வேறு ⁠318

பொழிப்பகல நுட்பநூ லெச்சமிந் நான்கின்

கொழித்தகலங் காட்டாதார் சொற்கள்-பழிப்பில்

நிரையாமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட்!

உரையாமோ நூலிற்கு நன்கு? ⁠319

இற்பிறப் பில்லா ரெனைத்துநூல் கற்பினும்

சொற்பிறரைக் காக்குங் கருவியரோ?-இற்பிறந்த

நல்லறி வாளர் நவின்றநூல் தேற்றாதார்

புல்லறிவு தாமறிவ தில். ⁠320

33. புல்லறிவாண்மை

அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்

பொருளாகக் கொள்வர் புலவர்;-பொருளல்லா

ஏழை அதனை இகழந்துரைக்கும் பாற்கூழை

முழை சுவையுணரா தாங்கு ⁠321

அவ்வியம் இல்லார் அறத்தா றுரைக்குங்கால்

செவ்விய ரல்லார் செவிகொடுத்துங் கேட்கலார்;

கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றில்

செவ்விய கொளல்தேற்றா தாங்கு ⁠322

இமைக்கும் அளவில்தம் இன்னுயிர்போம் மார்க்கம்

எனைத்தானும் தாங்கண் டிருந்தும்-தினைத்துணையும்

நன்றி புரிகல்லா நாணின் மடமாக்கள்

பொன்றிலென் பொன்றாக்கா லென்? ⁠323

உளநாள் சிலவால் உயிர்க்கேமம் இன்றால்,

பலர்மன்னுந் தூற்றும் பழியால்;-பலருள்ளும்

கண்டாரோ டெல்லாம் நகாஅ தெவனொருவன்

தண்டித் தனிப்பகை கோள் ⁠324

எய்தி யிருந்த அவைமுன்னர்ச் சென்றெள்ளி

வைதான் ஒருவன் ஒருவனை;-வைய

வயப்பட்டான் வாளா இருப்பானேல், வைதான்

வியத்தக்கான் வாழும் எனின் ⁠325

முப்புமேல் வாராமை முன்னே அறவினையை

ஊக்கி அதன்கண் முயலாதான்-நூக்கிப்

புறத்திரு போகென்னும் இன்னாச்சொல் இல்லுள்

தொழுத்தையாற் கூறப் படும் ⁠326

தாமேயும் இன்புறார், தக்கார்க்கு நன்றாற்றார்

ஏமஞ்சார் நன்னெறியுஞ் சேர்கலார்-தாமயங்கி

ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப்

போக்குவார் புல்லறிவி னார் ⁠327

சிறுகாலை யேதமக்குச் செல்வுழி வல்சி

இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப்

பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்

பொன்னும் புளிவிளங்கா யாம் ⁠328

வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போழ்தும்

மறுமை மனத்தாரே யாகி;-மறுமையை

ஐந்தை யனைத்தானும் ஆற்றிய காலத்துச்

சிந்தியார் சிற்றறிவி னார் ⁠329

என்னேமற் றிவ்வுடம்பு பெற்றும் அறம்நினையார்

கொன்னே கழிப்பர்தம் வாழ்நாளை;-அன்னோ

அளவிறந்த காதல்தம் ஆருயி ரன்னார்க்

கொளஇழைக்கும் கூற்றமுங் கண்டு ⁠330

34. பேதமை

கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை

நிலையறியா தந்நீர் படிந்தாடி யற்றே,

கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை

வலையகத்து செம்மாப்பார் மாண்பு ⁠331

பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்

ஒசை அவிந்தபின் ஆடுது மென்றற்றால்

இற்செய் குறைவினை நீக்கி அறவினை

மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு ⁠332

குலந்தவங் கல்வி குடிமைமுப் பைந்தும்

விலங்காமல் எய்தியக் கண்ணும்-நலஞ்சான்ற

மையறுதொல்சீர் உலகம் அறியாமை

நெய்யிலாப் பாற்சோற்றின் நேர் ⁠333

கன்னணி நல்ல கடையாய மாக்களின்;

சொன்னனி தாமுணர வாயினும்-இன்னினியே

நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதலென்

றுற்றவர்க்குத் தாமுதவ லான் ⁠334

பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக்

கறுவுகொண்டேலாதிார் மாட்டும்-கறுவினால்

கோத்தின்னா கூறி உரையாக்கால் பேதைக்கு

நாத்தின்னும் நல்ல சுனைத்து ⁠335

தங்கண் மரபில்லார் பின்சென்று தாமவரை

எங்கண் வணக்குதும் என்பவர்-புன்கேண்மை

நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப!

கற்கிள்ளிக் கையிழந் தற்று ⁠336

ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்

போகா தெறும்பு, புறுஞ்சுற்றும்;-யாதுங்

கொடாஅ ரெனினும் உடையாரைப் பற்றி

விடாஅர் உலகத் தவர் ⁠337

நல்லவை நாடொறும் எய்தார், அறஞ்செய்யார்

இல்லாதார்க் கியாதொன்றும் ஈகலார்;-எல்லாம்

இனியார்தோள் சேரார், இசைப்பட வாழார்

முனியார்கொல் தாம்வாழும் நாள் ⁠338

விழைந்தொருவர் தம்மை வியப்ப ஒருவர்

விழைந்திலேம் என்றிருக்குங் கேண்மை-தழங்குகுரல்

பாய்திரைசூழ் வையம் பயப்பினும் இன்னாதே

ஆய்நலம் இல்லாதார் மாட்டு ⁠339

கற்றளவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்

பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும் தானுரைப்பின்

மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத

பித்தனென் றெள்ளப் படும் ⁠340

35. கீழ்மை

கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்

குப்பை கிளைப்போவாக் கோழிபோல்;-மிக்க

கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்

மனம்புரிந்த வாறே மிகும் ⁠341

காழாய கொண்டு கசடற்றார் தஞ்சாரல்

தாழாது போவாம் என உரைப்பின்-கீழ்தான்

உறங்குவோம் என்றெழுந்து போமாம், அஃதன்றி

மறங்குமாம் மற்றொன்று உரைத்து ⁠342

பெருநடைதாம்பெறினும் பெற்றி பிழையா

தொருநடைய ராகுவர் சான்றோர்;-பெருநடை

பெற்றக் கடைத்தும் பிறங்கருவி நன்னாட!

வற்றாம் ஒருநடை கீழ் ⁠343

தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால்

பனையனைத்தா உள்ளுவர் சான்றோர்;-பனையனைத்

தென்றுஞ் செயினும் இலங்கருவி நன்னாட!

நன்றில நன்றறியார் மாட்டு. ⁠344

பொற்கலத் துட்டிப் புறந்தரினும் நாய்பிறர்

எச்சிற் கிமையாது பார்த்திருக்கும்;-அச்சீர்

பெருமை யுடைத்தாகக் கொளினுங்கீழ் செய்யுங்

கருமங்கள் வேறுபடும் ⁠345

சக்கர்ரச் செல்வம் பெறினும் விழுமியோர்

எக்காலுஞ் சொல்லார் மிகுதிச்சொல்;-எக்காலும்

முந்திரிமேற் காணி மிகுவதேற் கீழ்தன்னை

இந்திரனா எண்ணி விடும் ⁠346

மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்

செய்த தெனினுஞ் செருப்புத்தன் காற்கேயாம்;

எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்

செய்தொழிலாற் காணப்படும் ⁠347

கடுக்கெனச் சொல்வற்றாம், கண்ணோட்டம் இன்றாம்

இடுக்கண் பிறர்மாட் டுவக்கும், அடுத்தடுத்து

வேகம் உடைத்தாம், விறன்மலை நன்னாட!

ஏகுமாம் எள்ளுமாம் கீழ் ⁠348

பழைய ரிவரென்று பன்னாட்பின் நிற்பின்

உழையினிய ராகுவர் சான்றோர்; விழையாதே

கள்ளுயிர்க்கும் நெய்தற் கனைகடல் தண்சேர்ப்ப!

எள்ளுவர் கீழா யவர் ⁠349

கொய்புல் கொடுத்துக் குறைத்தென்றுந் தீற்றினும்

வையம்பூண் கல்லா சிறுகுண்டை;-ஐயகேள்

எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்

செய்தொழிலாற் காணப்படும் ⁠350

36. கயமை

ஆர்த்த அறிவினர் ஆண்டிளைய ராயினுங்

காத்தோம்பித் தம்மை அடக்குப;-முத்தொறூஉம்

தீத்தொழிலே கன்றித் திரிதந் தெருவைபோல்

போத்தறார் புல்லறிவி னார். ⁠351

செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்

வழும்பறுக்க கில்லாவாந் தேரை;-வழும்பில்சீர்

நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன் றில்லாதார்

தேர்கிற்கும் பெற்றி அரிது ⁠352

கணமலை நன்னாட! கண்ணின் றொருவர்

குணனேயுங் கூறற் கரிதால், குணனழுங்கக்

குற்றம் உழைநின்று கூறுஞ் சிறியவர்கட்

கெற்றா லியன்றதோ நா. ⁠353

கோடேந் தகலல்குற் பெண்டிர்தம் பெண்ணீர்மை

சேடியர் போலச் செயல்தேற்றார்; கூடிப்

புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணிர்மை காட்டி

மதித்திறப்பர் மற்றையவர் ⁠354

தளிர்மேலே நிற்பினுந் தட்டாமற் செல்லா

உளநீரார் மாதோ கயவர்; அளிநீரார்க்

கென்னானுஞ் செய்யார் எனைத்தானுஞ் செய்பவே

இன்னாங்கு செய்வார்ப் பெறின் ⁠355

மலைநலம் உள்ளும் குறவன்; பயந்த

விளைநிலம் உள்ளும் உழவன்; சிறந்தொருவர்

செய்தநன்றுள்ளுவர் சான்றோர்; கயந்தன்னை

வைததை உள்ளி விடும் ⁠356

ஒருநன்றி செய்தவர்க் கொன்றி யெழுந்த

பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்; கயவர்க்

கெழுநூறு நன்றிசெய் தொன்றுதி தாயின்

எழுநூறுந் தீதாய் விடும். ⁠357

ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன

மோட்டிடத்துஞ் செய்யார் முழுமக்கள்;-கோட்டை

வயிரஞ் செறிப்பினும் வாட்கண்ணாய்! பன்றி

செயிர்வேழ மாகுத லின்று ⁠358

இன்றாதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிது

நின்றாதும் என்று நினைத்திருந்-தொன்றி

உரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே றாகி

மரையிலையின் மாய்ந்தார் பலர் ⁠359

நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும்

ஈரங் கிடையகத் தில்லாகும்;-ஓரும்

நிறைப்பெருஞ்ச் செல்வத்து நின்றக் கடைத்தும்

அறைப்பெருங்கல் லன்னா ருடைத்து ⁠360

37. பன்னெறி

மழைதிளைக்கு மாடமாய் மாண்பமைந்த காப்பாய்

இழைவிளக்கு நின்றிமைப்பின் என்னாம்?-விழைதக்க

மாண்ட மனையாளை யில்லாதான் இல்லகம்

காண்டற் கரியதோர் காடு ⁠361

வழுக்கெனைத்து மில்லாத வாள்வாய்க் கிடந்தும்

இழுக்கினைத் தாம்பெறுவ ராயின், இழுக்கெனைத்துஞ்

செய்குறாப் பாணி சிறிதே; அச் சின்மொழியார்

கையுறாப் பாணி பெரிது ⁠362

எறியென் றெதிர்நிற்பாள் கூற்றம்;-சிறுகாலை

அட்டில் புகாதான் அரும்பிணி-அட்டதனை

உண்டி யுதவாதாள் இல்வாழ்பேய்;-இம்முவர்

கொண்டானைக் கொல்லும் படை ⁠363

கடியெனக் கேட்டுக் கடியான், வெடிபட

ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான்;-பேர்த்துமோர்

இற்கொண் டினிதிருஉம் ஏமுறுதல் என்பவே,

கற்கொண் டெறியுந் தவறு ⁠364

தலையே தவமுயன்று வாழ்தல், ஒருவர்க்

கிடையே இனியார்கட் டங்கல்; கடையே

புணராதென் றெண்ணிப் பொருள்நசையால் தம்மை

உணரார்பின் சென்று நிலை ⁠365

கல்லாக் கழிப்பர் தலையாயர்,நல்லவை

துவ்வாக் கழிப்பர் இடைகள்,கடைகள்

இனிதுண்ணேம் ஆரப் பெறேமியாம் என்னும்

முனிவினாற் கண்பா டிலர் ⁠366

செந்நெல்லா லாய செழுமுளை மற்றுமச்

செந்நெல்லே யாகி விளைதலால்-அந்நெல்

வயனிறையக் காய்க்கும் வளவய லூரா!

மகனறிவு தந்தை யறிவு ⁠367

உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்

புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக்

கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால்போற்

கீழ்மேலாய் நிற்கும் உலகு ⁠368

இனியார்தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய்

தணியாத உள்ளம் உடையார்;-மணிவரன்றி

வீழும் அருவி விறன்மலை நன்னாட!

வாழ்வின் வரைபாய்தல் நன்று ⁠369

புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்

விதுப்புற நாடின்வே றல்ல;-புதுப்புனலும்

மாரி அறவே அறுமே, அவரன்பும்

வாரி, அறவே அறும் ⁠370

38. பொதுமகளிர்

விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும்

துளக்கற நாடின்வே றல்ல;-விளக்கொளியும்

நெய்யற்ற கண்ணே அறுமே, அவரன்பும்

கையற்ற கண்ணே அறும் ⁠371

அங்கோட் டகலல்குல் ஆயிழையால் நம்மோடு

செங்கோடு பாய்துமே என்றாள்மன்;-செங்கோட்டின்

மேற்காணம் இன்மையான் மேவா தொழிந்தாளே

காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து ⁠372

அங்கண் விசும்பின் அமரர் தொழப்படுஞ்

செங்கண்மா லாயினும் ஆகமன்;-தங்கைக்

கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளி ரன்னார்

விடுப்பர்தங் கையாற் றொழுது ⁠373

ஆணமில் நெஞ்சத் தணிநீலக் கண்ணார்க்குக்

காணமி லாதார் கடுவனையர்;-காணவே

செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார்

அக்காரம் அன்னார் அவர்க்கு ⁠374

பாம்பிற் கொருதலை காட்டி ஒருதலை

தேம்படு தெண்கயத்து மீன்காட்டும்-ஆங்கு

மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார்

விலங்கன்ன வெள்ளறிவி னார் ⁠375

பொத்தகநூற் கல்லும் புணர்பிரியா அன்றிலும்போல்

நித்தலும் நம்மைப் பிரியலம் என்றுரைத்த - பொற்றொடியும்

போர்தகர்க்கோ டாயினாள்; நன்னெஞ்சே!

நிற்றியோ போதியோ நீ? ⁠376

ஆமாபோல் நக்கி அவர்கைப் பொருள் கொண்டு

சேமாபோல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை

ஏமாந்து எமதென்று இருந்தார் பெறுபவே

தாமாம் பலரால் நகை ⁠377

ஏமாந்த போழ்தின் இனியார்போன்று இன்னாராய்த்

தாம் ஆர்ந்த போதே தகர்க்கோடாம் - மான்நோக்கில்

தம்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே

செந்நெறிச் சேர்தும்என் பார் ⁠378

ஊறுசெய் நெஞ்சம்தம் உள்ளடக்கி ஒண்ணுதலார்

தேறமொழிந்த மொழிகேட்டுத் - தேறி

எமரென்று கொள்வாரும் கொள்பவே யார்க்கும்

தமரல்லர் தம் உடம்பினார் ⁠379

உள்ளம் ஒருவன் உழையதா வொண்ணுதலார்

கள்ளத்தால் செய்யும் கருத்தெல்லாம் - தெள்ளி

அறிந்த இடத்தும் அறியாராம் பாவம்

செறிந்த வுடம்பி னார் ⁠380

39. கற்புடை மகளிர்

அரும்பெறற் கற்பின் அயிராணி யன்ன

பெரும்பெயர்ப் பெண்டி ரெனினும், விரும்பிப்

பெறுநசையாற் பின்னிற்பா ரின்மையே பேணும்

நறுநுதலாள் நன்மைத் துணை ⁠381

குடநீரட் டுண்ணும் இடுக்கண் பொழுதுங்

கடனீ ரறவுண்ணுங் கேளிர் வரினும்

கடனீர்மை கையாறாக் கொள்ளு மடமொழி

மாதர் மனைமாட்சி யாள் ⁠382

நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும்

மேலாறு மேலுறை சோரினும்-மேலாய

வல்லாளாய் வாழும்ஊர் தற்புகழு மாண்கற்பின்

இல்லாள் அமர்ந்ததே இல் ⁠383

கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள்,

உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள், உட்கி

இடனறிந் தூடி இனிதின் உணரும்

மடமொழி மாதாரள் பெண் ⁠384

எஞ்ஞான்றும் எங்கணவர் எந்தோள்மேற் சேர்ந்தெழினும்

அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்; எஞ்ஞான்றும்

என்னை கெழீஇயினர் கொல்லோ பொருள்நசையாற்

பன்மார்பு சேர்ந்தொழுகு வார் ⁠385

உள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலற்றால்

வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்; தெள்ளிய

ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ

நானுடையாள் பெற்ற நலம் ⁠386

கருங்கொள்ளுஞ் செங்கொள்ளுந் தூணிப் பதக்கென்று

ஒருங்கொப்பக் கொண்டாறாம் ஊரன்; ஒருங்கொவ்வா

நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது

என்னையுந் தோய வரும் ⁠387

கொடியவை கூறாதி பாண! நீ கூறின்

அடிபைய இட்டொதுங்கிச் சென்று-துடியின்

இடக்கண் அனையம்யாம் ஊரற் கதனால்

வலக்கண் அனையார்க் குரை ⁠388

சாய்பறிக்க நீர்திகழுந் தண்வய லூரன்மீது

ஈப்பறக்க நொந்தேனும் யானேமன்;தீப்பறக்கத்

தாக்கி முலைபொருத தண்சாந் தணியகலம்

நோக்கி யிருந்தேனும் யான் ⁠389

அரும்பவிழ் தாரினான் எம் அருளும் என்று

பெரும்பொய் உரையாதி, பாண, கரும்பின்

கடைக்கண் அனையம்நாம் ஊரற் கதனால்

இடைக்கண் அனையார்க் குரை ⁠390

காமத்துப் பால்

40 காமநுதலியல்

முயங்காக்காற் பாயும் பசலைமற் றுடி

உயங்காக்கால் உப்பின்றாம் காமம்; வயந்கோதம்

நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!

புல்லாப் புலப்பதோர் ஆறு ⁠391

தம்மவர் காதலர் தார்சூழ் அணியகலம்

விம்ம முயங்குந் துணையில்லார்க்-கிம்மெனப்

பெய்ய எழிலி முழங்குந் திசையெல்லாம்

நெய்தல் அறைந்தன்ன நீர்த்து ⁠392

கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய

மம்மார்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்

கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள், துணையில்லார்க்கு

இம்மாலை என்செய்வ தென்று ⁠393

செல்சுடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்ட நீர்

மெல்விரல் ஊழ்தெறியா விம்மித்தன்-மெல்விரலின்

நாள் வைத்து நங்குற்றம் எண்ணுங்கொல், அந்தோதன்

தோள்வைத் தணைமேற் கிடந்து ⁠394

கண்கயல் என்னுங் கருத்தினால் காதலி

பின்சென்றது அம்ம சிறுசிரல்-பின்சென்றும்

ஊக்கி யெழுந்தும் எறிகல்லா ஒண்புருவங்

கோட்டிய வில்வாக் கறிந்து ⁠395

அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற் கன்னோ

பரற்கானம் ஆற்றின கொல்லோ;-அரக்கார்ந்த

பஞ்சிகொண் டுட்டினும் பையெனப் பையெனவென்(று)

அஞ்சிப்பின் வாங்கும் அடி ⁠396

ஒலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்

மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி

மாலை பரிந்திட் டழுதாள் வனமுலைமேற்

கோலுஞ்செய் சாந்தந் திமிர்ந்து ⁠397

கடக்கருங் கானத்துக் காளையின் நாளை

நடக்கவும் வல்லையோ என்றி; சுடர்த்தொடீஇ!

பெற்றானொருவன் பெருங்குதிரை அந்நிலையே

கற்றான் அஃதுறும் ஆறு ⁠398

முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்

இலக்கணம் யாதும் அறியேன் கலைக்கணம்

வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும்என்

தீம்பாவை செய்த குறி ⁠399

கண்முன் றுடையானும் காக்கையும் பையரவும்

என்னீன்ற யாயும் பிழைத்ததென்-பொன்னீன்ற

கோங்கரும் பன்ன முலையாய் பொருள்வயிற்

பாங்கனார் சென்ற நெறி ⁠400

★ ★ ★

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.