திருக்குறள் தெளிவு
ஒளவை துரைசாமி
1. திருக்குறள் தெளிவு
2. பதிப்புரை
3. பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்!
4. நுழைவாயில்
5. வள்ளுவர் காட்டும் சமயக்கருத்துகள்
6. திருவள்ளுவரது வரலாற்று ஆராய்ச்சி
7. ஏட்டிற் கண்ட குறிப்பு
8. ஊழ்வினை
9. உரையனுபவம்
10.இறைமாட்சி
11.கல்வி
12.அறிவுடைமை
13.தன்குறை நீக்குதல்
14.தகுந்த துணை
15.செயல்முறை
16.தொழில் நுணுக்கம்
17.தலைமைச் சிறப்பு
18.சுற்றமும் பணிவும்
19.நீதிமுறை
20.இரக்கம்
21.பிறர் மனம் அறிதல்
22.ஊக்கம்
23.வள்ளுவர் கண்ட இன்பம்
24.முயற்சி


திருக்குறள் தெளிவு

 

ஒளவை துரைசாமி

 

நூற் குறிப்பு
  நூற்பெயர் : திருக்குறள் தெளிவு (கட்டுரைகள்)
  தொகுப்பு : உரைவேந்தர்தமிழ்த்தொகை - 23
  ஆசிரியர் : ஒளவை துரைசாமி
  பதிப்பாளர் : இ. தமிழமுது
  பதிப்பு : 2009
  தாள் : 16 கி வெள்ளைத்தாள்
  அளவு : 1/8 தெம்மி
  எழுத்து : 11 புள்ளி
  பக்கம் : 24 + 280 = 304
  நூல் கட்டமைப்பு: இயல்பு (சாதாரணம்)
  விலை : உருபா.190/-
  படிகள் : 1000
  நூலாக்கம் : பாவாணர் கணினி
  தி.நகர், சென்னை - 7.
  அட்டை ஓவியம்: ஓவியர் மருது
  அட்டை வடிவமைப்பு: வ. மலர்
  அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா
  ஆப்செட் பிரிண்டர்சு
  இராயப்பேட்டை, சென்னை - 14.

பதிப்புரை


ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை
தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார்.

வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.

இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராகவும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந்தராகவும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந்தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை.

“ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு .துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும்,

“இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து
வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான்
தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே
முன்கடன் என்றுரைக்கும் ஏறு”

என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம்.

அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம்.

இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.

தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின்
107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள்.
நன்றி
பதிப்பாளர்

பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்!


பொற்புதையல் - மணிக்குவியல்
“ நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன்
மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள்
உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன்
அள்ளக் குறையாத ஆறு”

என்று பாவேந்தரும்,

“பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே
 பரணர்தான், பரணர்தான் தாங்கள்! வாக்கு
நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே
 நக்கீரர்தான் தாங்கள் இந்த நாளில்
கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல்
 காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும்
தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே
 தாங்கள்அவ்-ஒளவைதான்! ஒளவை யேதான்!”

என்று புகழ்ந்ததோடு,

“அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால்
 அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே
 புதியதாய்ஓர் ஆண்ஒளவை எனவி யப்பான்”

எனக் கண்ணீர் மல்கக் கல்லறை முன் கவியரசர் மீரா உருகியதையும் நாடு நன்கறியும்.

பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறைபுலமையும் செறிந்த சிந்தனை வளமும் பெற்றவர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள். தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து
வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித் தமிழ்ப்பண்பு ஒளவையின் அறிவாண்மைக்குக் கட்டியங் கூறும். எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரைவிளக்கம் செய்தார். இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக் குறிப்பும் கல்வெட்டுக் குறிப்பும் மண்டிக் கிடக்கின்றன. ஐங்குறு நூற்றுச் செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல் விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறன் பக்கந்தோறும் பளிச்சிடக் காணலாம். உரை எழுதுவதற்கு முன், ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெரிந்து வரம்பு செய்துகோடல் இவர்தம் உரையொழுங்காகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரைகண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஒளவை துரைசாமி ஆவார். இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப் பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று. பரந்த சமயவறிவும் நுண்ணிய சைவ சித்தாந்தத் தெளிவும் உடையவராதலின் சிவஞானபோதத்துக்கும் ஞானாமிர்தத்துக்கும் மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்பணி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி ‘சித்தாந்த கலாநிதி’ என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச் செய்தவர். மதுரைக் குமரனார், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக்காட்சிகள், நந்தாவிளக்கு, ஒளவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன.

உரைவேந்தர் உரை வரையும் முறை ஓரு தனிச்சிறப்பு வாய்ந்தது. பொருள் கூறும்போது ஆசிரியர் வரலாற்றையும், அவர் பாடுதற்கு அமைந்த சூழ்நிலையையும், அப்பாட்டின் வாயிலாக அவர் உரைக்கக் கருதும் உட்கோளையும் ஒவ்வொரு பாட்டின் உரையிலும் முன்கூட்டி எடுத்துரைக்கின்றார்.

பாண்டியன் அறிவுடைநம்பியின் பாட்டுக்கு உரை கூறுங்கால், அவன் வரலாற்றையும், அவனது பாட்டின் சூழ்நிலையையும் விரியக் கூறி, முடிவில், “இக்கூற்று அறக்கழிவுடையதாயினும் பொருட்பயன்பட வரும் சிறப்புடைத்தாதலைக் கண்ட பாண்டியன் அறிவுடை நம்பி, தன் இயல்புக்கு ஒத்தியல்வது தேர்ந்து, அதனை இப்பாட்டிடைப் பெய்து கூறுகின்றான் என்று முன்மொழிந்து, பின்பு பாட்டைத் தருகின்றார். பிறிதோரிடத்தே கபிலர் பாட்டுக்குப் பொருளான நிகழ்ச்சியை விளக்கிக் காட்டி, “நெஞ்சுக்குத் தான் அடிமையாகாது தனக்கு அஃது அடிமையாய்த் தன் ஆணைக்கு அடங்கி நடக்குமாறு செய்யும் தலைவனிடத்தே விளங்கும் பெருமையும் உரனும் கண்ட கபிலர் இப்பாட்டின்கண் உள்ளுறுத்துப் பாடுகின்றார்” என்று இயம்புகின்றார். இவ்வாறு பாட்டின் முன்னுரை அமைவதால், படிப்போர் உள்ளத்தில் அப்பாட்டைப் படித்து மகிழ வேண்டும் என்ற அவா எழுந்து தூண்டுகிறது. பாட்டுக்களம் இனிது படிப்பதற்கேற்ற உரிய இடத்தில் சொற்களைப் பிரித்து அச்சிட்டிருப்பது இக்காலத்து ஒத்த முறையாகும். அதனால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணையின் அருமைப்பாடு ஓரளவு எளிமை எய்துகிறது.

கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைகாண்பது போலப் பாட்டைத் தொடர்தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது பழைய உரைகாரர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறையாகும். அம்முறையிலேயே இவ்வுரைகள் அமைந்திருப்பதால், படிக்கும்போது பல இடங்கள், உரைவேந்தர் உரையோ பரிமேலழகர் முதலியோர் உரையோ எனப் பன்முறையும் நம்மை மருட்டுகின்றன.

“இலக்கணநூற் பெரும்பரப்பும் இலக்கியநூற்
 பெருங்கடலும் எல்லாம் ஆய்ந்து,
கலக்கமறத் துறைபோகக் கற்றுணர்ந்த
 பெரும்புலமைக் கல்வி யாளர்!
விலக்ககலாத் தருக்கநூல், மெய்ப்பொருள்நூல்,
 வடமொழிநூல், மேற்பால் நூல்கள்
நலக்கமிகத் தெளிந்துணர்ந்து நாடுய்ய
 நற்றமிழ் தழைக்க வந்தார்!”

என்று பாராட்டப் பெறும் பெரும் புலமையாளராகிய அரும்பெறல் ஒளவையின் நூலடங்கலை அங்கிங்கெல்லாம் தேடியலைந்து திட்பமும் நுட்பமும் விளங்கப் பதித்த பாடு நனிபெரிதாகும்.

கலைப்பொலிவும், கருத்துத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர், வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ்செல்வம். இஃது தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணா அருட்செல்வமாகும். நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க் கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் புகழுரையை நினைந்து அவர் நூல்களை நம்முதல்வர் கலைஞர் நாட்டுடைமை ஆக்கியதன் பயனாகத் இப்புதையலைத் இனியமுது பதிப்பகம் வெளியிடுகின்றது. இனியமுது பதிப்பக உரிமையாளர், தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.இளவழகனாரின் அருந்தவப்புதல்வி இ.தமிழமுது ஆவார்.

ஈடரிய தமிழார்வப் பிழம்பாகவும், வீறுடைய தமிழ்ப்பதிப்பு வேந்தராகவும் விளங்கும் நண்பர் இளவழகன் தாம் பெற்ற பெருஞ்செல்வம் முழுவதையும் தமிழினத் தணல் தணியலாகாதென நறுநெய்யூட்டி வளர்ப்பவர். தமிழ்மண் பதிப்பகம் அவர்தம் நெஞ்சக் கனலுக்கு வழிகோலுவதாகும். அவரின் செல்வமகளார் அவர் வழியில் நடந்து இனியமுது பதிப்பகம் வழி, முதல் வெளியீடாக என்தந்தையாரின் அனைத்து ஆக்கங்களையும் (திருவருட்பா தவிர) பயன்பெறும் வகையில் வெளியிடுகிறார். இப்பதிப்புப் புதையலை - பொற்குவியலை தமிழுலகம் இரு கையேந்தி வரவேற்கும் என்றே கருதுகிறோம்.

ஒளவை நடராசன்

நுழைவாயில்


செம்மொழித் தமிழின் செவ்வியல் இலக்கியப் பனுவல்களுக்கு உரைவழங்கிய சான்றோர்களுள் தலைமகனாய் நிற்கும் செம்மல்உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்களாவார். பத்துப்பாட்டிற்கும், கலித்தொகைக்கும் சீவகசிந்தாமணிக்கும் நல்லுரை தந்த நச்சினார்க்கினியருக்குப் பின், ஆறு நூற்றாண்டுகள் கழித்து, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, யசோதர காவியம் ஆகிய நூல்களுக்கு உரையெழுதிய பெருமை ஒளவை அவர்களையே சாரும். சங்க நூல்களுக்குச் செம்மையான உரை தீட்டிய முதல் ‘தமிழர்’ இவர் என்று பெருமிதம் கொள்ளலாம்.

எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க ஒளவை 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றி, 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் புகழுடம்பு எய்தியவர். தமிழும் சைவமும் தம் இருகண்களாகக் கொண்டு இறுதிவரை செயற்பட்டவர். சிந்தை சிவபெருமானைச் சிந்திக்க, செந்நா ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்ப, திருநீறு நெற்றியில் திகழ, உருத்திராக்கம் மார்பினில் உருளத் தன் முன்னர் இருக்கும் சிறு சாய்மேசையில் தாள்களைக் கொண்டு, உருண்டு திரண்ட எழுதுகோலைத் திறந்து எழுதத் தொடங்கினாரானால் மணிக்கணக்கில் உண்டி முதலானவை மறந்து கட்டுரைகளையும், கனிந்த உரைகளையும் எழுதிக்கொண்டே இருப்பார். செந்தமிழ் அவர் எழுதட்டும் என்று காத்திருப்பதுபோல் அருவியெனக் கொட்டும். நினைவாற்றலில் வல்லவராதலால் எழுந்து சென்று வேறு நூல்களைப் பக்கம் புரட்டி பார்க்க வேண்டும் என்னும் நிலை அவருக்கிருந்ததில்லை.

எந்தெந்த நூல்களுக்குச் செம்மையான உரையில்லையோ அவற்றிற்கே உரையெழுதுவது என்னும் கொள்கை உடையவர் அவர். அதனால் அதுவரை சீரிய உரை காணப்பெறாத ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றிற்கும், முழுமையான உரையைப் பெற்றிராத புறநானூற்றுக்கும் ஒளவை உரை வரைந்தார். பின்னர் நற்றிணைக்குப் புத்துரை தேவைப்படுவதை அறிந்து, முன்னைய பதிப்புகளில் இருந்த பிழைகளை நீக்கிப் புதிய பாடங்களைத் தேர்ந்து விரிவான உரையினை எழுதி இரு தொகுதிகளாக வெளியிட்டார்.

சித்தாந்த கலாநிதி என்னும் பெருமை பெற்ற ஒளவை, சிவஞானபோதச் சிற்றுரை விளக்கத்தை எழுதியதோடு, ‘இரும்புக்கடலை’ எனக் கருதப்பெற்ற ஞானாமிர்த நூலுக்கும் உரை தீட்டினார். சைவ மாநாடுகளுக்குத் தலைமை தாங்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தம் உரைகள் பலவற்றைக் கட்டுரைகள் ஆக்கினார். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், குமரகுருபரன், சித்தாந்தம் முதலான பல இதழ்களுக்குக் கட்டுரைகளை வழங்கினார்.

பெருந்தகைப் பெண்டிர், மதுரைக் குமரனார், ஒளவைத் தமிழ், பரணர் முதலான கட்டுரை நூல்களை எழுதினார். அவர் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாக விளங்கும் நூல் ‘பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு’ என்னும் ஆய்வு நூலாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒளவை பணியாற்றியபோது ஆராய்ந்தெழுதிய ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ அத்துறையில் இணையற்றதாக இன்றும் விளங்குகிறது.

சங்க நூல்களுக்கு ஒளவை வரைந்த உரை கற்றோர் அனைவருடைய நெஞ்சையும் கவர்ந்ததாகும். ஒவ்வொரு பாட்டையும் அலசி ஆராயும் பண்புடையவர் அவர். முன்னைய உரையாசிரியர்கள் பிழைபட்டிருப்பின் தயங்காது மறுப்புரை தருவர். தக்க பாட வேறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து மூலத்தைச் செம்மைப்படுத்துவதில் அவருக்கு இணையானவர் எவருமிலர். ‘உழுதசால் வழியே உழும் இழுதை நெஞ்சினர்’ அல்லர். பெரும்பாலும் பழமைக்கு அமைதி காண்பார். அதே நேரத்தில் புதுமைக்கும் வழி செய்வார்.

தமிழோடு ஆங்கிலம், வடமொழி, பாலி முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தவர் அவர். மணிமேகலையின் இறுதிப் பகுதிக்கு உரையெழுதிய நிலை வந்தபோது அவர் முனைந்து பாலிமொழியைக் கற்றுணர்ந்து அதன் பின்னரே அந்த உரையினைச் செய்தார் என்றால் அவரது ஈடுபாட்டுணர்வை நன்கு உணரலாம். எப்போதும் ஏதேனும் ஆங்கில நூலைப் படிக்கும் இயல்புடையவர் ஒளவை அவர்கள். திருக்குறள் பற்றிய ஒளவையின் ஆங்கிலச் சொற்பொழிவு நூலாக அச்சில் வந்தபோது பலரால் பாராட்டப் பெற்றமை அவர்தம் ஆங்கிலப் புலமைக்குச் சான்று பகர்வதாகும். சமய நூல்களுக்கு உரையெழுதுங்கால் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவதும், கருத்துகளை விளக்குவதும் அவர் இயல்பு. அதுமட்டுமன்றி, ஒளவை அவர்கள் சட்டநூல் நுணுக்கங்களையும் கற்றறிந்த புலமைச் செல்வர்.

ஒளவை அவர்கள் கட்டுரை புனையும் வன்மை பெற்றவர். கலைபயில் தெளிவு அவர்பாலுண்டு. நுண்மாண் நுழைபுலத்தோடு அவர் தீட்டிய கட்டுரைகள் எண்ணில. அவை சங்க இலக்கியப் பொருள் பற்றியன ஆயினும், சமயச் சான்றோர் பற்றியன ஆயினும் புதிய செய்திகள் அவற்றில் அலைபோல் புரண்டு வரும். ஒளவை நடை தனிநடை. அறிவு நுட்பத்தையும் கருத்தாழத்தையும் அந்தச் செம்மாந்த நடையில் அவர் கொண்டுவந்து தரும்போது கற்பார் உள்ளம் எவ்வாறு இருப்பாரோ, அதைப்போன்றே அவர் தமிழ்நடையும் சிந்தனைப் போக்கும் அமைந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று.

ஒளவை ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளுள் தலையாயது பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரைகளை வகுத்துத் தந்தமையே ஆகும். எதனையும் காய்தல் உவத்தலின்றி சீர்தூக்கிப் பார்க்கும் நடுநிலைப் போக்கு அவரிடம் ஊன்றியிருந்த ஒரு பண்பு. அவர் உரை சிறந்தமைந்ததற்கான காரணம் இரண்டு. முதலாவது, வைணவ உரைகளில் காணப்பெற்ற ‘பதசாரம்’ கூறும் முறை. தாம் உரையெழுதிய அனைத்துப் பனுவல்களிலும் காணப்பெற்ற சொற்றொடர்களை இந்தப் பதசார முறையிலே அணுகி அரிய செய்திகளை அளித்துள்ளார். இரண்டாவது, சட்ட நுணுக்கங்களைத் தெரிவிக்கும் நூல்களிலமைந்த ஆய்வுரைகளும் தீர்ப்புரைகளும் அவர்தம் தமிழ் ஆய்வுக்குத் துணை நின்ற திறம். ‘ஜூரிஸ்புரூடன்ஸ்’ ‘லா ஆஃப் டார்ட்ஸ்’ முதலானவை பற்றிய ஆங்கில நூல்களைத் தாம் படித்ததோடு என்னைப் போன்றவர்களையும் படிக்க வைத்தார். வடமொழித் தருக்கமும் வேறுபிற அளவை நூல்களும் பல்வகைச் சமய அறிவும் அவர் உரையின் செம்மைக்குத் துணை
நின்றன. அனைத்திற்கும் மேலாக வரலாற்றுணர்வு இல்லாத இலக்கிய அறிவு பயனற்றது, இலக்கியப் பயிற்சி இல்லாத வரலாற்றாய்வு வீணானது என்னும் கருத்துடையவர் அவர். ஆதலால் எண்ணற்ற வரலாற்று நூல்களையும், ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளையும் ஆழ்ந்து படித்து, மனத்திலிருத்தித் தாம் இலக்கியத்திற்கு உரைவரைந்தபோது நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவோத்தூர்த் தேவாரத் திருப்பதிகத்திற்கு முதன்முதலாக உரையெழுதத் தொடங்கிய காலந்தொட்டு இறுதியாக வடலூர் வள்ளலின் திருவருட்பாவிற்குப் பேருரை எழுதி முடிக்கும் வரையிலும், வரலாறு, கல்வெட்டு, தருக்கம், இலக்கணம் முதலானவற்றின் அடிப்படையிலேயே உரைகளை எழுதினார். தேவைப்படும்பொழுது உயிரியல், பயிரியல், உளவியல் துறை நூல்களிலிருந்தும் விளக்கங்களை அளிக்கத் தவறவில்லை. இவற்றை அவர்தம் ஐங்குறுநூற்று விரிவுரை தெளிவுபடுத்தும்.

ஒளவை அவர்களின் நுட்ப உரைக்கு ஒரு சான்று காட்டலாம். அவருடைய நற்றிணைப் பதிப்பு வெளிவரும்வரை அதில் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்த ‘மாநிலஞ் சேவடி யாக’ என்னும் பாடலைத் திருமாற்கு உரியதாகவே அனைவரும் கருதினர். பின்னத்தூரார் தம் உரையில் அவ்வாறே எழுதி இருந்தார். இந்தப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவரே வேறு சில சங்கத்தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து இயற்றியவர். அவற்றிலெல்லாம் சிவனைப் பாடியவர் நற்றிணையில் மட்டும் வேறு இறைவனைப் பாடுவரோ என்று சிந்தித்த ஒளவை, முழுப்பாடலுக்கும் சிவநெறியிலேயே உரையை எழுதினார்.

ஒளவை உரை அமைக்கும் பாங்கே தனித்தன்மையானது. முதலில் பாடலைப் பாடிய ஆசிரியர் பெயர் பற்றியும் அவர்தம் ஊர்பற்றியும் விளக்கம் தருவர். தேவைப்பட்டால் கல்வெட்டு முதலானவற்றின் துணைகொண்டு பெயர்களைச் செம்மைப் படுத்துவர். தும்பி சொகினனார் இவர் ஆய்வால் ‘தும்பைச் சொகினனார்’ ஆனார். நெடுங்கழுத்துப் பரணர் ஒளவையால் ‘நெடுங்களத்துப் பரணர்’ என்றானார். பழைய மாற்பித்தியார் ஒளவை உரையில் ‘மாரிப் பித்தியார்’ ஆக மாறினார். வெறிபாடிய காமக்கண்ணியார் ஒளவையின் கரம்பட்டுத் தூய்மையாகி ‘வெறிபாடிய காமக்காணியார்’ ஆனார். இவ்வாறு எத்தனையோ சங்கப் பெயர்கள் இவரால் செம்மை அடைந்துள்ளன.

அடுத்த நிலையில், பாடற் பின்னணிச் சூழலை நயம்பட உரையாடற் போக்கில் எழுதுவர். அதன் பின் பாடல் முழுதும் சீர்பிரித்துத் தரப்படும். அடுத்து, பாடல் தொடர்களுக்குப் பதவுரைப் போக்கில் விளக்கம் அமையும். பின்னர் ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுகளாலும் சொற்றொடர்ப் பொருள்களை விளக்கி எழுதுவர். தேவைப்படும் இடங்களில் தக்க இலக்கணக் குறிப்புகளையும் மேற்கோள்களையும் தவறாது வழங்குவர். உள்ளுறைப் பொருள் ஏதேனும் பாடலில் இருக்குமானால் அவற்றைத் தெளிவுபடுத்துவர். முன்பின் வரும் பாடல் தொடர்களை நன்காய்ந்து ‘வினைமுடிபு’ தருவது அவர் வழக்கம். இறுதியாகப் பாடலின்கண் அமைந்த மெய்ப்பாடு ஈதென்றும், பயன் ஈதென்றும் தெளிவுபடுத்துவர்.

ஒளவையின் உரைநுட்பத்திற்கு ஒரு சான்று. ‘பகைவர் புல் ஆர்க’ என்பது ஐங்குறுநூற்று நான்காம் பாடலில் வரும் ஒரு தொடர். மனிதர் புல் ஆர்தல் உண்டோ என்னும் வினா எழுகிறது. எனவே, உரையில் ‘பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறுண்க’ என விளக்கம் தருவர். இக்கருத்தே கொண்டு, சேனாவரையரும் ‘புற்றின்றல் உயர்திணைக்கு இயைபின்று எனப்படாது’ என்றார் என மேற்கோள் காட்டுவர். மற்றொரு பாட்டில் ‘முதலைப் போத்து முழுமீன் ஆரும்’ என வருகிறது. இதில் முழுமீன் என்பதற்கு ‘முழு மீனையும்’ என்று பொருள் எழுதாது, ‘இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன்” என்று உரையெழுதிய திறம் அறியத்தக்கது.

ஒளவை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலான பழைய உரையாசிரியர்களையும் மறுக்கும் ஆற்றல் உடையவர். சான்றாக, ‘மனைநடு வயலை’ (ஐங்.11) என்னும் பாடலை இளம்பூரணர் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமருள் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டுவர். ஆனால், ஒளவை அதை மறுத்து, “மற்று, இப்பாட்டு, அலமருள் பெருகிய காமத்து மிகுதிக்கண் நிகழும் கூற்றாகாது தலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்ந்து ஒருமருங்கு அமைதலும், அவன் பிரிவாற்றாமையைத் தோள்மேல் ஏற்றி அமையாமைக்கு ஏது காட்டுதலும் சுட்டி நிற்றலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக” என்று இனிமையாக எடுத்துரைப்பர்.

“தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை” என்னும் பாடல் தலைவனையும் வாயில்களையும் இகழ்ந்து தலைவி கூறுவதாகும். ஆனால், இதனைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் தத்தம் தொல்காப்பிய உரைகளில் தோழி கூற்று என்று தெரிவித்துள்ளனர். ஒளவை இவற்றை நயம்பட மறுத்து விளக்கம் கூறித் ‘தோழி கூற்றென்றல் நிரம்பாமை அறிக’ என்று தெளிவுறுத்துவர். இவ்வாறு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் உள்ளிட்ட அனைவரையும் தக்க சான்றுகளோடு மறுத்துரைக்கும் திறம் கருதியும் உரைவிளக்கச் செம்மை கருதியும் இக்காலச் சான்றோர் அனைவரும் ஒளவையை ‘உரைவேந்தர்’ எனப் போற்றினர்.

ஒளவை ஒவ்வொரு நூலுக்கும் எழுதிய உரைகளின் மாண்புகளை எடுத்துரைப்பின் பெருநூலாக விரியும். தொகுத்துக் கூற விரும்பினாலோ எஞ்சி நிற்கும். கற்போர் தாமே விரும்பி நுகர்ந்து துய்ப்பின் உரைத் திறன்களைக் கண்டுணர்ந்து வியந்து நிற்பர் என்பது திண்ணம்.

ஒளவையின் அனைத்து உரைநூல்களையும், கட்டுரை நூல்களையும், இலக்கிய வரலாற்று நூல்களையும், பேருரைகளையும், கவின்மிகு தனிக் கட்டுரைகளையும், பிறவற்றையும் பகுத்தும் தொகுத்தும் கொண்டுவருதல் என்பது மேருமலையைக் கைக்குள் அடக்கும் பெரும்பணி. தமிழீழம் தொடங்கி அயல்நாடுகள் பலவற்றிலும், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் ஆக, எங்கெங்கோ சிதறிக்கிடந்த அரிய கட்டுரைகளையெல்லாம் தேடித்திரட்டித் தக்க வகையில் பதிப்பிக்கும் பணியில் இனியமுது பதிப்பகம் முயன்று வெற்றி பெற்றுள்ளது. ஒளவை நூல்களைத் தொகுப்பதோடு நில்லாமல் முற்றிலும் படித்துணர்ந்து துய்த்து மகிழ்ந்து தொகுதி தொகுதிகளாகப் பகுத்து வெளியிடும் இனியமுது பதிப்பகம் நம் அனைவருடைய மதிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியது. இப்பதிப்பகத்தின் உரிமையாளர் செல்வி இ.தமிழமுது தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரின் மகள் ஆவார். வாழ்க அவர்தம் தமிழ்ப்பணி. வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு. உலகெங்கும் மலர்க தமிழாட்சி. வளம்பெறுக. இத்தொகுப்புகள் உரைவேந்தர் தமிழ்த்தொகை எனும் தலைப்பில் ‘இனியமுது’ பதிப்பகத்தின் வழியாக வெளிவருவதை வரவேற்று தமிழுலகம் தாங்கிப் பிடிக்கட்டும். தூக்கி நிறுத்தட்டும் என்று நெஞ்சார வாழ்த்து கிறேன்.
முனைவர் இரா.குமரவேலன்

திருக்குறள் தெளிவு(கட்டுரைகள்)

வள்ளுவர் காட்டும் சமயக்கருத்துகள்


ஆசிரியர் குறிப்பு
இவர் பிறந்த ஊர் ஒளவையார் குப்பம். பிறந்த ஆண்டு 1903. முறையாகத் தமிழ் பயின்ற இவர் தமிழ்மொழி, வரலாறு இரண்டிலும் பேரறிவு படைத்தவர். தற்பொழுது மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். மொழிப் புலமையோடு சைவ சமயப் புலமையும் வல்லார். எழுத்தாற்ற லோடு நாநலமும் மிக்கார். இவருக்கு ‘உரை வேந்தர்’ என்ற பட்டம் சூட்டப்பெற்றுள்ளது. இவர் பல அரிய உரைநடை நூல்களும் தமிழக வரலாற்று நூல்களும் எழுதியுள்ளார். சைவத் திருமுறை களிலும் நல்ல பயிற்சி யுடைய இவர் அதன் கருத்துக் களைக் கேட்பார் பிணிக்கும் தகையவாய் எடுத்துக் கூறும் வலிமை பெற்றவராதலால் ‘சித்தாந்த கலாநிதி’ என்ற பட்டமும் பெற்றவர், திருக்குறளையே துணையாகக்கொண்டு திருவள்ளுவரின் வரலாறு காணும் உண்மை நெறியைப் பின்பற்றி இவர் ‘தெய்வப் புலவர் திருவள்ளுவர்’ என்ற நூல் இயற்றியுள்ளார்.

திருவள்ளுவர் அருளியுள்ள திருக்குறளைக் கற்றுணர்ந்த பழம்பெருஞ் சான்றோர்களுள் கல்லாடனார் ஒருவர். அவர் சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய திருவிளையாடல்களில் மிகவும் ஈடுபாடு கொண்டு அவற்றுள் சிலவற்றைத் தேர்ந்து ஒவ்வொன்றையும் ஒவ்வோர் அகவற்பாவில் வைத்துக் கல்லாடம் என்ற பெயரால் ஒருநூல் செய்தவர். அவற்றுள் அவர் சிவனையும் அவனுடைய அருட் செயல்களையும் குறிக்கும் சொற்களையும் சொற்றொடர்களையும் நோக்கின், அவர் புலம் பழுத்த சிவநெறிச் செல்வர் என்பது தெற்றென விளங்கும். அப்பெற்றியரான கல்லாடர், ஓரிடத்தில் திருவள்ளுவரைக் குறிக்கும்போது, “சமயக் கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப் பொருள் இது என்ற வள்ளுவன்” என்று உரைக்கின்றார். திருவள்ளுவ மாலையில் காணப்படும் சான்றோர்களில் கல்லாடர் என ஒருவர் காணப்படு கின்றார். அவர் கருத்தும் இக்கல்லாடனார் கருத்தோடு ஒத்து, “சமய நூல்கள் ஒன்றோடொன்று வேறுபட்டும் மறுத்தும் இயலுவன; திருக்குறளை எல்லாச் சமயத்தவரும் ஏற்று ஒன்றி இயைவர்” என்ற கருத்துப்பட,

" ஒன்றே பொருள்எனின் வேறுஎன்ப; வேறுஎனின்
அன்றென்ப ஆறு சமயத்தார்- நன்றென
எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி"

என்று இயம்புகின்றார். இவ்வண்ணம் திருக்குறள் வகையில் ஒத்த கருத்துக் கொண்ட கல்லாடர் இருவரும் ஒருவரா, வேறு வேறா என்பதைக் காண்பது இங்கே பொருளன்று; திருவள்ளுவருடைய திருக்குறள் சமயம் கடந்த தனிப் பொதுநூல் என்பதை இவ்விருவர் உரைகளும் வற்புறுத்துகின்றன என்பது.

இன்று நமது நாட்டில் நிலவும் சமயங்கள் இந்திய மண்ணில் தோன்றி நிலவுவனவும் வேற்று நாடுகளில் பிறந்து இங்கே புகுந்து நிலவுவனவும் என இருதிறத்தனவாகும். அவற்றுள், இசுலாம், கிறித்துவம் என்ற இரண்டும் பிற்கூறிய திறத்தன; ஏனைச் சைவம், வைணவம், வைதிகம், பவுத்தம், சயினம் முதலியன முற்கூறிய திறத்தன.இவற்றைப் பொதுப்பட நோக்குவோமாயின், உலகிற்கும், உலகிடை வாழும் உயிர்கட்கும் வேறாய் ஒரு பரம்பொருள் உண்டு என்பது எல்லாவற்றிற்கும் ஒப்ப முடிந்த உண்மையாகத் தோன்றும். உயிர்கட்கு மறுபிறப்பும் வினையும் உண்டென்பதை இசுலாம், கிறித்துவம் என்ற இரண்டும் உடன்படுவதில்லை. இந்திய சமயங்கள் அனைத்தும் இவ்விரண்டையும் இன்றியமையாச் சமயவுண்மையாகக் கொண்டுள்ளன. இருக்கு முதலிய வேதநூல்களில் வினையுணர்வு நன்கு வெளிப்படாது நிற்பினும், அந்நூல்களை மேற்கொண்டு எழுந்து விரிந்த பிற்றை நூல்களில் அவைகள் பெரிதும் இடம் பெற்றுள்ளன. வேதநூல் ஆராய்ச்சியாளர் சிலர், வினையுணர்வு வேதகால மக்கட்கு இல்லை; அவர்கள் இந்த நாட்டுட் புகுந்தபின் இங்கே வாழ்ந்த மக்களிடையே இருந்த இக்கொள்கையைத் தாமும் மேற்கொண்டனர் என்று உரைக்கின்றார்கள்.

தமிழகத்தின் முந்து நூல்கள் எல்லாவற்றிலும் வினையுணர்வும் மறுபிறப்புக் கொள்கையும் நிலைபெற்றுள்ளன. அவை எக்காலத்தில் யாவரால் காணப்பட்டன என்பது வரலாறு காணாத ஒன்று. திருவள்ளுவர் இவ்விருகொள்கைகளையும் உடன்பட்டு ஏற்ற இடங்களில் எடுத்துக் காட்டுகின்றார்.
வினையென்பது மனத்தால் நினைப்பதும் வாயாற் பேசுவதும் உடம்பால் செயல் புரிவதும் ஆகிய யாவற்றையும் குறிக்கும். சமயநூல்கள் மனம், மொழி, மெய் என்ற மூன்றின் அசைவும், அசைவின்மையும் வினை என்று கூறும். எனவே மக்கள் செய்யும் ஓவ்வொரு செய்கையும் வினையாம் என்று அறியலாம். வினைகளில் நன்மை விளைவிப்பவை நல்வினை என்றும், தீமை விளைவிப்பவை தீவினை என்றும் கூறப்படும். இவ்விரண்டாலும் முறையே உண்டாகும் இன்பமும் துன்பமும் வினைப்பயன் எனப்படும்.

ஒருவினை தொடங்கும் போதே செயப்படு பொருளும் பயனும் உடன் தோன்றி, முடியுங்கால் அவ்விரண்டும் உருவாகும். செயப்படு பொருளோடு பயனும் உடன் தோன்றுமாயினும், அப்பயனது நுகர்ச்சி காலம் தாழ்ந்தும் தாழாமலும் நிகழும். வினையால் உருப்பட்டு நுகரப்படாது நிற்கும் பயன் ஊழ்வினை என்றும் ஊழ் என்றும் வழங்கும். திருவள்ளுவனார், நன்மை பயக்கும் நல்வினையையும், தீமை விளைவிக்கும் தீவினையையும், முறையே ஆகூழ் என்றும் போகூழ் என்றும் வினைப்பயனாய் நுகர நிற்கும் வினைக்கூற்றை ஊழ்வினை என்றும் தனித்தனி நிறுத்தி விளக்குகின்றார். நலம் பயக்கும் நல்வினை யாவும் அறவினை என்றும், அறம் என்றும் அதுவே செய்தற்குரியது என்ற கருத்துத் தோன்றச் “செயற்பாலது ஒரும் அறனே” என்பதனால் திருவள்ளுவர் வற்புறுத்துகின்றார்.

தீவினையால் விளைவது தீமை; அதன் பயன் துன்பம். வினைப்பயன் அவ்வினையைச் செய்தார்க்கே உரியது; அதனை அவர் ஒரு காலும் நுகராமல் கழிக்க முடியாது. “எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை, வீயாது பின் சென்று அடும்” என்றும், நுகர்ந்து கழியுமளவும் அஃது அவர் நிழல்போல் நிற்கும் என்பார், “தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை, வீயாது அடியுறைந் தற்று” என்றும் உரைக்கின்றார்.

வினையால் உண்டாகும் செயப்படு பொருள் பொறிபுலன் கட்குப் புலப்படுவதுபோல, அவ்வினைப் பயனான இன்பமும் துன்பமும் வினையைச் செய்பவனுக்குப் புலனாவதில்லை. அதனால், அவன் தானே சென்று வினைப்பயனை எடுத்துக் கொள்ள முடியாது; வினைப்பயனோ, உயிர்போல அறிவுடைய தன்று; ஆனால், அதுதானே வினை செய்தவனை அடையமாட்டாது. ஆதலால், வினை முதல் வினைப்பயனை நுகர்தற்குப் பிறிதொன்று இடைநின்று அதனைக் கூட்டல் வேண்டும். பிறிதொன்று என்ற அதுதான், உயிர்க்கும் உயிரில் பொருட்கும் வேறாய் இரண்டையும் கூட்டி வாழ்விக்கும் பரம்பொருள்; அது பற்றியே அதனைத் தொல்காப்பியர் “பால் வரை தெய்வம்” என்று குறிக்கின்றார்.

வினையைப் பற்றிக் கூறுமிடத்து, வினை “வீயாது பின்சென்று அடும்” என்றும், “மற்றொன்று சூழினும் தான் முந்துறும்” என்றும், “அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு” என்றும் கூறுவனவற்றைக் காணும் போது, வினை தானே நன்மையும் தீமையும் செய்யும் போலும் என்ற எண்ணம் தோன்றும். அவ்வாறே சில சமயத்தவரும் கருதுகின்றனர். ஆனால் உண்மையை நோக்கின் உணர்வில்லாத ஒன்றாகிய வினை, ஒருவன் செய்யத் தோன்றலும், செய்தானொடு கூட்டக் கூடலும் உடையது என்பது தெளிய விளங்கும். வினை விடாது தொடரும் என்றும் வினைவந்து சேரும் என்றும் கூறுவது, எழுத எழுதும் பேனாவை எழுதுகிறது என்றும், செலுத்தச் செல்லும் வண்டியைச் செல்லுகிறது என்றும் வழக்கில் உரைப்பது போலவாம். “இருள் சேர் இருவினையும் சேரா இறைவன், பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு” என்ற விடத்து இருவினையும் சேரா என்பதற்கு இருவினைப் பயனும் சேர்க்கப்படா என்பது பொருள்.

வினைகள், மனம் மொழி மெய்களால் பிறப்பன என்று முன்பே கண்டோம். மன முதலிய மூன்றும் சேர்ந்தது உடம்பு. ஆகவே உடம்பு உள்ளளவும் வினை பிறந்து கொண்டேயிருக்கும்; வினை பெருகப் பெருகப் பெருகி இருந்து கொண்டே இருக்கும்.

வினைப்பயனையும் வினை வழியாகவே நுகர்கின்றோம்; வினை செய்தற்கும் உடம்பே கருவி; ஆயினும், வினையை இடையறாது செய்வதால் உடம்பும் மூத்து முதிர்ந்து ஓய்ந்து மாய்ந்து போகிறது. அப்போது நுகரவேண்டிய பயன் நுகரப்படாது எஞ்சி விடுகிறது. அதுதானும் நுகர்ந்தே கழிக்க வேண்டியிருப்பதால், அது தீர்தற் பொருட்டு வினை செய்தற்கேற்ற புத்துடம்பு வேண்டப் படுகிறது. அதனால் மறுபிறப்புக் கொள்கை எய்துவதாயிற்று. ஆகவே, வினை காரணமாகப் பிறப்பதும் பிறப்பு வாயிலாக வினை செய்வதும் மாறிமாறி நிகழ்கின்றனவாம். இதனை நன்கு எண்ணு மிடத்து, பிறப்பில்லையாமாறு செய்வதுதான் வினையினின்று விடுதலை பெறும் வழி என்று அறியலாம். அது பற்றியே திருவள்ளுவர் “மற்றும் தொடர்ப் பாடு எவன்கொல் பிறப்பறுக்கல், உற்றார்க்கு உடம்பும் மிகை” என்று உரைக்கின்றார்.

இப் பிறப்புக்கள் எழுவகைப்படும் என்று திருவள்ளுவர் தெரிவிக்கின்றார்; “எழுபிறப்பும் தீயவை தீண்டா” என்றும், “எழுமையும் ஏமாப்புடைத்து” என்றும், “எழுமை எழுபிறப்பும் உள்ளுவர்” என்றும் வரும் திருக்குறள்கள் இதற்குச் சான்றாகும்.

இங்கே காட்டிய எழுபிறப்பும் பிறந்து வினை செய்து பயன் நுகர்வதால் உயிர்எய்தும் பயன் யாது? வினை செய்தற்கண் உடம்பும் உள்ளமும் ஒன்றிநின்று அவ்வினையை முடிக்குங்கால், உயிர்க்கு உவட்டாத இன்பம் உண்டாகிறது. தன் காதலியின் இனிமைப்பண்பை எடுத்து உரைக்கும் தலைமகன் “உள்ளிய வினை முடித்தன்ன இனியோள்” என்று கூறுவதை நற்றிணையில் காணலாம், இதனால், உள்ளிய வினை முடிவில் இன்பம் பயக்குமென்பது தெரிகிறதன்றோ? இவ்வாறே திருவள்ளுவர், வினை இன்பம் பயக்கும் என்பாராய், “துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி, இன்பம் பயக்கும் வினைதுணிவாற்றிச் செய்க” எனப் பொருள் கூறுகின்றார். அவ்வாறின்றி, “துன்பம் உறவரினும் துணிவாற்றிச் செய்க, வினை இன்பம் பயக்கும்” என இயைத்துரைப்பது நேரிது.

வினை இன்பமேயன்றி அறிவு விளக்கமும் நல்குவது. பொருள் கருவி காலம் வினை இடம் ஆகிய ஐந்து கூறுகளையும் நன்கு ஆய்ந்து செய்யுமிடத்து, புதிய புதிய உணர்வுகளும் செயல்முறை களும் தோன்றிச் செய்வோனது அறிவுக்கு விளக்கமும் ஆக்கமும் பயக்கும். “வினை நலம் வேண்டிய எல்லாம் தரும்” என்பது திருக்குறள். உலகியலில் ஒருவன் பவ்லாண்டு வாழ்ந்து பெற்ற அறிவு, நல்ல கல்வி கற்றிருக்கும் இளையோள் ஒருவனது அறிவினும் விளக்க மிக்கிருப்பது நாம் பெரிதும் காண நிற்கிறது. இதனால் உலகவாழ்வே ஒருவனது அறிவு விளக்கம் எய்தத் துணையாவது என்றும் உயிர் மக்களுடம்பொடு கூடிப்பிறந்து வினை செய்து பயன் நுகர்வது அறிவு விளக்கம் பெறுதற்கே என்றும் தெளியலாம்.

உலகில் பிறக்கும் ஒவ்வொருவனும் தொடக்கத்தில் அறியாமை யிருள் சூழ்ந்து இருக்கிறான். அதனால் அவனுடைய கண் முதலிய புறக் கருவிகளும் அகக் கருவியாகிய மனமும், உலக வாழ்வில், காண்பன கண்டு, செய்வன செய்து, நினைவன நினைந்து, அறிவு விளக்கம் செய்கின்றன. இவை யாவும் வினையாகும். இருள் நீக்கம் காரணமாக வினை நிகழ்வதால், திருவள்ளுவர், “இருள் சேர் இருவினை” என வினைகளைக் குறிக்கின்றார். வினைவழியாக அறிவு இருள் நீக்கம் பெறுகிறது எனினும், விளக்கேந்திச் செல்பவனது போல அறியாமை தோன்றுகிறது. “அறிதோறு அறியாமை கண்டற்று” என்று குறள் கூறுகிறது.

பிறந்தும் வினைசெய்தும் வாழ்ந்து இயலும் உயிர்க்கும், வாழ்தற்கு இடமளிக்கும் உடம்பு உலகுகட்கும் வேறாகவும் ஒன்றாகவும் உடனாகவும் நிற்கும் பரம்பொருளை உணர்வது அறிவின் கடமை என்று வற்புறுத்துகிறது திருக்குறள். அப் பரம் பொருளைத் திருவள்ளுவர் செம்பொருள் என்றும், அஃது உயிர் உலகு என்ற இரண்டினும் சிறப்புடையது என்றும் காட்டுதற்குச் “சிறப்பு என்னும் செம்பொருள்” என்றும் உரைக்கின்றார். அதனை உணர்ந்த வழி, இதுகாறும் அறிவை மறைத்திருந்த இருள் நீங்கும் எனவும், என்றும் குன்றாத இன்பம் எய்தும் எனவும் செம்பொருள் உணர்வின் பயன் கூறப்படும். இருள் நீங்கியவழிப் பிறப்பு வேண்டா மையால் “பிறப்பென்னும் பேதைமை நீங்கும்” என்கிறார்.

உடம்பொடு கூடி உலகில் இருந்தே செம்பொருளை உணர வேண்டும். இருக்கும் போதோ வினைசெய்தே தீரவேண்டும். வினையால் மேன்மேலும் பிறப்பு எய்துமன்றோ என ஓர் ஐயம், இங்கே எழுகிறது. உடம்பையும் உலகையும் சார்பாகக் கொண்டு வாழும் உயிர் செம்பொருளை உணர்ந்த வழி அதுவே உண்மைச் சார்பு என உணரும்; அவ்வுயர்வால் அதனைச் சார்ந்து தோன்றும் வினைச்சார்பு உயிரைப் பற்றுதற்கு ஆகாமையின் பற்றுக்கோடின்றிக் கெடும். இக்கருத்தைச் “சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரும் நோய்” என்கிறார் வள்ளுவர்.

வினைதோன்றுதற்கு உடம்பு உலகுகளின் மேல் உண்டாகும் பற்றே காரணம்; அப்பற்றை விடுவதுதான் செம்பொருளைச் சார்தற்கு வழி. பல்வேறு பற்றுக்களிடையே வாழும் உயிர், ஒன்றைப் பற்றுவதும் ஒன்றைவிடுவதுமாக இருக்கும். விடும்போதும், ஒன்றைப் பற்றியல்லது உள்ள பற்றைவிடுவது உயிர்க்கு இயல்பன்று; அதனை நன்குகண்ட வள்ளுவர், “பற்றுக பற்றற்றான் பற்றினை” என்றும் “அப்பற்றைப் பற்றுக (ஏனைய) பற்றுவிடற்கு” என்றும் ஓர் அரிய நெறியும் கூறுகின்றார்.

இனி, அச்செம்பொருளின் இயல்பைக்கடவுள் வாழ்த்து என்ற பகுதியில் விளங்க உரைக்கின்றார். செம்பொருளை ஆதிபகவன் என்றும், அவன் உலகமெல்லாவற்றிற்கும் முதற் பொருள் என்றும் குறிப்பதற்கு “ஆதிபகவன் முதற்றே உலகு” என்றும் எடுத்துரைக் கின்றார். செம்பொருள் உயர்திணையா அஃறிணையா என ஆராய்ந்து இன்னதிணை என வரையறுத்துக் கூறலாகாதது. எனினும், உலகுயிர் களில் உயர்ந்துநிற்பது மக்களுயிராதலால், மக்களில் ஆண் பெண் என இருகூறு உண்டெனினும், உலகில் இதுகாறும் தோன்றிய சான்றோர் அனைவரும் ஆண்மக்கட்கே முதலிடம் தந்து பேசுவது மரபு. அதுபற்றியே செம்பொருளை ஆண்பால் ஒருமையில் வைத்து உரைப்பது இயற்கையாயிற்று. அதனால் செம்பொருளாகிய முதற்பொருளை ஆதிபகவன் என ஆண்பாலில் வைத்து உரைக் கின்றார். அவன் அறிவே உருவானவன் என்றற்கு “வாலறிவன்” என்றும், அவனது அறிவுருவம் மனத்தின்கண் நிகழும் சிந்தனை யொளியில் தோன்றுவது என்றற்கு “மலர்மிசை ஏகினான்” என்றும், அவன் எப்பொருளிடத்தும் பற்றில்லாதவன் என்று காட்டற்கு “வேண்டுதல் வேண்டாமை இலான்” என்றும், அவன் எங்கும் எப்பொருளிலும் தங்கி முறைசெய்பவன் என்றற்கு “இறைவன்” என்றும் ஐம்பொறிகள் வாயிலாக எழும் அவாக்கள் இல்லாதவன்; ஒப்புவமை கூறற்கு இல்லாதவன்; அளப்பரிய கடல்போன்ற அறங்கள் அனைத்தையும் தன்வடிவாக உடையவன் என்றற்கு ‘அறவாழி அந்தணன்’ என்றும் கூறுகிறார்.

இங்ஙனம் உலகைப் படைத்தளித்து உடம்பொடு கூட்டி உயிர்கள் வினை செய்து வாழுமாற்றால் அறிவு விளக்கம் பெற்றுச் செம்பொருட் சார்பு பற்றிப் பிறவாப் பேறும், அழியா இன்பமும் பெறுமாறு உதவிபுரியும் அவனது நன்றியை “மறப்பது நன்றன்று”; “செய்ந்நன்றி கொன்றார்க்கு உய்தியில்லை;” மேலும், மக்கள் ஒருவர்க்கொருவர் செய்யும் நன்றிக்கே வானமும் வையகமுமாகிய உலக முழுதுமே ஆற்றாதாகலின், செம்பொருள் முதல்வன் செய்த நன்றிக்கு நாம் தலையால் வணங்கி வழிபடுவது தவிர வேறில்லை. அதுதானும் செய்யாவிடில், நாம் பெற்ற உடல் பயனற்றதாம் என்பார் “எண்குணத்தான் தாளை வணங்காத் தலை முதலியன குணமில” என்று தெருட்டுகின்றார்.

இவ்வகையே நோக்கின், உலகிலுள்ள மக்கள் அனைவருமே பிறவாப் பெருநிலைக்கு உரியர் என்பது தோன்றும். திருவள்ளுவர், மக்கள் அனைவருமே பிறவிப் பெருங்கடல் நீந்துதற் குரியர்; ஆனால், அவருள் இறைவன் அடிசேராதார் பிறவிப் பெருங்கடலை நீந்தார், அடிசேரும் செவ்வி எய்துங்காறும் மாறிமாறிப் பிறந்தும் இறந்தும் உழலுவர் என்று அறிவிக்கின்றார். அறைவன் என ஆண் பாலால் கூறினமையால், அவன் சார்பை அடியென்றும் தாள் என்றும் வள்ளுவர் வற்புறுத்துகின்றார். இத்துணையும் கூறியவற்றைத் தொகுத்து நோக்கின் வினையுணர்வும் மறுபிறப்பும் செம்பொருள் உண்டென்னும் கொள்கையும், வினைநீக்கத்தால் பிறவாப்பேறு பெறுவதே செயற்பாலது என்பதும், அதற்கு அச்செம்பொருள் செய்துள்ள நன்றியை நினைந்து வழிபடுவதும் பிறவும் வள்ளுவர் காட்டுஞ்சமயக் கருத்தாவது காணலாம்.
திருவள்ளுவர் விழாமலர்

அக்டோபர் - 1968

திருவள்ளுவரது வரலாற்று ஆராய்ச்சி


திருவள்ளுவரைத் தமிழ்நாடு உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டிருப்பினும் அவருடைய வரலாற்றினைத் திட்டமாக அவர் காலத்திலேயே குறித்து வைத்துக் கொள்ளவில்லை. எனவே, பின்னர் திருவள்ளுவரைப் பற்றிய கதைகளும் வரலாறுகளும் பலவாக நிலவத் தொடங்கின. உண்மை காண்பது அரிதாயிற்று. எனினும் உண்மைகாண முயல்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

புலவர் புராணமும், கேள்வி வழியும், கபிலரகவலும் நூற் சிறப்புப் பாயிரங்களும் ஒரு முகமாகத் திருவள்ளுவருடைய தந்தை பெயர் பகவன் என்றும், தாய் பெயர் ஆதி யென்றும் கூறுகின்றன. ஞானாமிருதம் என்னும் நூல்மட்டும் வள்ளுவருடைய தந்தைபெயர் யாளிதத்தன் என்பது எய்தக் கூறுகின்றது. சமணக்கதை, கரமுண்டன் என்பது தந்தை பெயரென்றும், சீமதியென்பது தாய் பெயர் என்றும் கூறுகின்றது. புலவர் புராணத்தையும், நூற்சிறப்புப் பாயிரங்களையும் நோக்க, ஞானாமிர்தம் பழைமையான நூலேயாயினும், அது கூறும் செய்தி வழக்கிற் பயிலக் காணப்படவில்லை; சமணர் கதையும் அன்னதே. கர்ண பரம்பரைச் செய்தியும் பொய் விரவிப் பலதிறத்த தாய் நிற்பதாயினும், எல்லாச் செய்தியும் பெற்றோர் பெயர் கூறும் வகையில் ஒற்றுமைப்பட்டு நிற்றலால், திருவள்ளுவரின் தந்தை பகவனார் என்பதும், தாய் ஆதியார் என்பதும் ஈண்டுக் கோடற் பாலனவேயாம். ஆடவர் ஆதன் என்னும் பெயர் பெறுதல்போலப் பண்டை மகளிர் ஆதியென்னும் பெயர் பெற்றிருந்தனர் போலும். தொகை நூல்களுள், ஆதி மந்தி எனவரும் பெண்பாற் பெயரும் இதற்கு ஒரு புடையால் சான்றாகிறது. இக் காலத்தும் மகளிர்க்கு ஆதியென்ற பெயர் வழங்குவதுண்டு.

புலவர் புராணமும் பிறவும் பகவனார் அந்தணரென்றும், ஆதியார் இழிந்த சாதி மகள் என்றும் கூறுகின்றன. ஞானாமிர்தமும் ஆதியாரை, “ஆதிப்புலைச்சி” (ஆதிப்புலைச்சிபோலும்!) என்றே கூறுகின்றது. ஆகவே இதுபோது கிடைக்கும் சான்றுகளுட் பெறும் பாலன, ஆதியார் இழிகுலப் பெண்ணென்றே கூறுவதை நோக்க, அவரை அவ்வாறே கோடல் வேண்டியிருப்பினும் திருத்தகுதெய்வத் திருவள்ளுவரைப் பெற்ற பெறலருந் திருமிக்க அவ்வம்மையார், நாம் எல்லாம் தொழுகுலமாம் தெய்வம் என்றே கோடற்குரியராவர் என்பது குறிக்கொள்ள வேண்டும்.

இனிப், புலாலுண்போர் அனைவரும் முற்காலத்தே நூலோரால் புலையர் என்று கருதப்பட்டமையின், ஆதியார் உயர் சாதியிற் பிறந்தும் புலாலுணவால் புலைச்சியாய்க் கருதப்பட்டனர் என்றும் கருதலாம். “பொல்லாப் புலாலை நுகரும் புலையரை” (திருமந். 99) எனத் திருமூலனார் கூறுதல் காண்க. பிற்காலத்தே, உணவுவகையாற் பிறக்கும் அவ்வேறுபாடு விலக்கப்பட்டமையின், உயர்சாதியிற் புலால் உண்ணும் இயல்பினர் “புலையர்” எனப் படாராயினர் என்று கோடல் வேண்டும். புலாலுண்டலின்றிச் செந்தண்மை பூண்டிருந்தமையின், பகவனார் அந்தணர் ஆகவே இருந்தனர் போலும். எனவே, பகவனாரும் ஆதியாரும் ஒருசாதிப் பிறப்பினராய், உணவொழுக்கத்தால் அந்தணரும் புலையருமா யினார் என்பது முடிபாம். பண்டையில், பார்ப்பனர் முதலிய பலரும் புலாலுணவு மேற்கொண்டிருந்தமை ஆராய்ச்சியாளர் அறிந்த செய்தியாகும்.

பகவனார்க்கும் ஆதியார்க்கும் நட்புண்டான முறை பலவேறு வகையாகக் கூறப்படுகின்றமையின், அதன் உண்மை புலப்பட வில்லை. ஆயினும், இவர்கள் ஓரிடத்தும் நிலையுறத் தங்காது நாடோடிகளாய்ச் சென்ற செய்தி ஒருமையாய்க் கூறப்படுகிறது. திருவள்ளுவரை யுள்ளிட்ட மக்கள் எழுவரை இவர்கள் பெற்று, ஆங்காங்கே அன்பின்றிக் கைவிட்டு நீங்கினர் என்பதும் ஒருமைப் பட வழங்குகிறது. இங்கே,ஆதியார் பகவனாரைப் பிரியாது தொடர்ந்தும், அவரும் இவர் கூட்டத்தை விரும்பியிருந்தும், பிரியாமைக்கும் கூட்டத்துக்குரிய விருப்பத்துக்கும் ஒப்ப, ஆதியாரும் புலாலுணவை நீக்கி, செந்தண்மை பூண்டொழுகும் அந்தணியாய் விளங்கியிருத்தல் வேண்டுமென்பது எய்துகிறது. ஆகவே, திருவள்ளுவருடைய பெற்றோர் எவ்வுயிர்க்கும் செந் தண்மை பூண்டொழுகும் *அந்தணரே என்பதும், ஆனால், அவர் களைப் பார்ப்பனர் என்று துணியமுடியாது என்பதும் கொள்ளற் பாலனவாம். ஏனெனில், அக்காலத்தே பார்ப்பனர் முதல் நான்கு வருணத்துள்ளும் புலையரும் அந்தணரும் இருந்தனர். பார்ப்பனருள் புலாலுண்போர் பார்ப்பனப் புலையர் எனவும், பிறவகுப்பினருள் புலாலுண்போர் பிறவகைப் புலையர் எனவும் நூலோர் கருதின ரென்பது உய்த்துணரப்படுகின்றது.

திருவள்ளுவரை உள்ளிட்ட உடன்பிறப்பினர் எழுவர் என்பது ஒருமைவழக்காயினும், அவர்தம் பெயர்வகை வேறுபடுகிறது. திருவள்ளுவர் குழவிப்பருவத்தே பெற்றோரால் கைவிடப்பட்டனர் என்பது ஒருமைச் செய்தியாயினும், வளர்க்கப்பட்ட செய்தி வேறுபடுகிறது. இவரது மதிநுட்பத்தையும், உலகியலறிவையும் நோக்கின், இவர் ஓர் உயரிய செல்வக் குடும்பத்தில் வளர்ந்து செந்தமிழ் வளம் சிறக்கப் பெற்றவர் என்பது துணிபாம். எல்லாச் சான்றோராலும் இவர் பெயர் வள்ளுவர் என்றே கூறப்படுவதால் இதுவே இவரது இயற்பெய ரென்றே கோடல் வேண்டும். ஆனால் இது பெற்றோரால் இடப்பட்ட தென்றாதல், வளர்த்தோரால் இடப்பட்ட தென்றாதல் துணிவதற்குக் கூடவில்லை.

இவர் வளர்ந்து சிறந்து வாழ்ந்தவிடம்திருமயிலை யென்பது பெரும்பான்மையான வழக்கு. சமணர் கதையும் மயிலையைக் குறிக்கிறது. ஆனால் திருவள்ளுவமாலை மட்டில் மதுரையைக் குறிக்கிறது. இதற்கேற்ப, திருவள்ளுவர் நூற்கு உரைகண்ட பரிமேலழ கரைக்குறித்த தொண்டை மண்டல சதகம், அம்மண்டலத்ததாகிய மயிலையில்வாழ்ந்த வள்ளுவரைக் குறித்திலது. “திருக்காஞ்சி வாழ் பரிமேலழகன் வள்ளுவனார்க்கு வழிகாட்டினான் தொண்டை மண்டலமே” (41) என்ற சதகம், வள்ளுவன் சிறந்த மயிலையைச் சிறப்பியாமை காண்க. ஆகவே, திருவள்ளுவர் வாழ்ந்த மயிலை வேறு நாட்டதாகல் வேண்டும்; இன்றேல், திருமயிலை தொண்டை மண்டலத்துப் பதியாகாமை மண்டலத்த தென்பது, அச்சதகத்து,

“கயிலையும் கச்சியும் விற்கோலமு
நற்கழுக் குன்றமும்
பயில்வலி தாயமும் பாசூரு
மச்சிறு பாக்கமும்நல்
லயிலையும் வல்லந் திருவொற்றி
யூரு மரசிலியும்
மயிலையும் ஈசன் மகிழ்ந்ததன்றோ
தொண்டை மண்டலமே”

என்று மூன்றாஞ் செய்யுள் கூறுமாற்றால் தெளியலாகும்.

திருவள்ளுவர் வாசுகி யென்பவரை மணந்து இல்லறம் புரிந்து வந்தனர் என்னும் செய்தி மேற்கூறிய கேள்வி வழி வரலாற்றிலும், ஏனைப்புராணம் முதலியவற்றிலும் ஒப்பக் கூறப்பெறுகிறது. ஆனால் ஆதியார், பகவனார் என்னும் பெயர்களை நோக்க, வாசுகி யென்னும் பெயர் ஆராய்தற்குரிய தொன்றாகிறது. வாசுகி யென்னும் வடமொழிப் பெயர், அந்நாளில் தமிழ் நாட்டில் வழங்கிய தமிழர் பெயராகத்தோன்றவில்லை. வடமொழியும், வடவரும் விரவி யிருந்த காலத்தே திருவள்ளுவர் வாழ்ந்திருந்தாராயினும், வடமொழிப் பெயருள் வாசுகி என்பது போலும் பெயர் மக்கட்கு வழங்கிற்றிலது. அதனால் திருவள்ளுவர்க்குக் கற்புடைய மனைவியார் இருந்தாராயினும், அவரது பெயர் வாசுகி என்பது மாத்திரம் நம்புதற்கு இடந்தருகின்றலது. ஆடவர் வள்ளுவன், கபிலன், பரணன் என்ற தமிழ்ப்பெயரும், மகளிர் வள்ளி, ஆதி, கண்ணகி, காமக்கண்ணி, வெள்ளி வீதி என்ற தமிழ்ப் பெயரும் புனைந்து வாழ்ந்த காலம் திருவள்ளுவர் காலமாதலின், அக்காலத்து, வாசுகி, மார்க்கசகாயன் முதலிய வடமொழிப் பெயர் உண்டெனக் கோடல் உண்மையறிவுக்குப் பொருந்துவதாகத் தோன்றவில்லை.

திருவள்ளுவர் தம் கற்புடைய மனைவியாரோடு கூடி வாழ்ந்து வருகையில் நெசவுத்தொழில் மேற்கொண்டிருந்தனர் என்பது மேற்கூறிய வரலாற்றுக் குறிப்புக்களிற் காணும் பொதுச் செய்தி யாகும். ஆனால், அத்தொழில் பற்றிய சிறு குறிப்பும் அவர் நூலிற் காணப்படவில்லை. உழவு, வாணிபம், அரசாட்சி, மறையோதல் முதலிய தொழில்களை ஆங்காங்கு விதந்து கூறியவர், தாம் விரும்பி மேற்கொண்டிருந்த தொழில், ஏனைத்தொழில் பலவற்றினும் தலையாயது என்பதை யாண்டேனும் குறித்திருப்பார். அது செய்யாமையின், அவரது தொழில் இன்னதெனத் துணிதற்கில்லை.

கற்புறு மனைவியோடு கவின் சிறந்து உறையும் நாளில், நம் வள்ளுவர், நந்தமிழ் நாடும், தமிழ் மக்களும் உய்ய, தாம் தம் நல்லறிவு கொண்டு ஆராய்ந்த நன்னூற் பொருள் அனைத்தும் நன்கு தெளிந்து, யாவர்க்கும் ஒப்பப் பயன் படத்தக்க நூலியற்ற வேண்டு மென்ற கருத்தால் உந்தப் பெற்று, தெய்வத் திருக்குறள் நூலை இயற்றினாராதல் வேண்டும்.

இவர் காலத்தே மக்கள் கூட்டத்தில் கடவுள் உண்மையும், வினைத் தொடர்பும், வீடு பேறும், நரகத்துன்ப வுணர்வும் நிலவி நின்றன. அந்தணர் மறையும், துறவியர் நெறியும் விரவி யிருந்த மையின், அவர் காலம் வடவரது வேத நெறியும். தமிழரது சைவ நெறியும் விரவிய வைதிகநெறி ஒரு மருங்கும், புத்த சமணர்களின் புதுச் சமய நெறி பிறிதொரு மருங்கும் நிலவியிருந்த காலமாகும். இரண்டன் பயிற்சியால் மக்கட்டொகுதி உலகியலில் சீரிய நாட்டம் பெறாது சீர்குலைவதாயிற்று. வைதீக நெறியினர் சாதியுயர்ச்சியையும், உலகம் பொய் அதனை உவர்த்து விடுதல் அறம் எனும் கொள்கையையும் பரப்பி, மக்களை உலகியற் பொருளை ஆராய்தற்கும் மக்களுள் ஒருமையுணர்வு கோடற்கும் ஊக்கங் கொள்ளாது ஒடுங்கி யிருக்கச் செய்தனர். புத்த சமணர் கொல்லா விரதம் ஒன்றனையே வலியுறுத்து முகத்தால் உலகியற் பொருளைச் சிறிதும் ஆராய வொட்டாது, மனை வாழ்க்கையும் வீடு பேற்றுக்கு உறுதிதராது; புதல்வராலும் மக்கட்குப் பயனில்லை யென்னும் உணர்வினை யெழுப்பி, உலகத்து மக்களை உலகத்தை நோக்க விடாது தகைந்தனர். இவ்வாறு இருதலைப்பட்டு உலகியலில் வழுவுதலை மக்கள் மேற்கொள்வது கண்ட வள்ளுவர், அவ்வுல கியற்குரிய அறத்தையும், பொருளையும், இன்பத்தையும் வகுத்துக் கூறலுறுவா ராயினர். இவ்வுண்மையினை நன்கு ஆராய்ந்து கண்டே கல்லாடனாரும், “சமயக் கணக்கர் மதிவழி கூறாது, உலகியல் கூறிப் பொருளிது வென்ற வள்ளுவன்” என்றார். ஏனைய இருதிறத்தாரும் இவ்வுலகியலைக் கருவியாகக் கொண்டு தத்தம் சமயக் கருத்தினைச் சாதிக்க முயன்றனர். வள்ளுவரோ, அவர்கள் பொதுவாகக் கொண்ட உலகியலையே நூற் பொருளாக விளக்கத் தொடங்கினார். மேலும், உலகியலை அறம், பொருள், இன்பம் என்ற மூன்று குறிக்கோளின் கண் வைத்து ஆராய்ந்த முதன்மை தொல்காப்பியர்க்கு உரித்து. அதனைப் பயன்பட வுணர்ந்து, உண்மை யுணர்வால் மக்கட்கு உணர்த்திய உயர்நிலைப் பெருமை வள்ளுவர்க்கே உரித்து. இவர் போல் உலகியற் பொருளை மூன்றாகப் பகுத்து விரித்துரைத்த அறிஞர் இப்பரந்த மண்ணுலகில் வேறு எவருமே இலர் என்பதை யாவரும் அறிவர்.

உலகில் காணப்படும் நூல்களுள் மிகப் பழைமையானதாகக் கூறப்படும் வேதமும் உலகியலை ஞானமும் கருமமும் எனப் பகுத்தோதியதாகக் கூறப்படுகிறதே யன்றி, உலகியலில் உயிர்கள் செய்தற்குரியது அறமே, அதனால் செயப்படு பொருள் பொருளே அதனால் அவ்வுயிர்க்குளதாம் பயன் இன்பமே என்று வகுத்தோதும் அறிவுடையியல்பு படைத்ததாகக் கூறப்படுவதே கிடையாது.

ஆதலால், திருவள்ளுவர் இந்நூலைச் செய்தற்குக் காரணம், உலகில் தாம் கேட்டும் கண்டும் தெளிந்த நூல்கள் பலவும் உலகில் வாழும் மக்கட்கு அவ்வுலகியலைத் தனிப்பட விதந்து வகுத்தும் விரித்தும் ஓதாமல், அதன்பால் உவர்ப்பை விளைவித்து உயிர் ஒருமைக்கண் இறுதிதோன்ற நிலவினமையே என்பது குறிக்கற் பாற்று. இத்திருக்குறள் நூல் அமைந்துள்ள முறை வேறு எம்மொழியினும் காணப்படாமையால், அது வள்ளுவர் தாமே படைத்துக் கொண்ட உண்மை முறையாகும்.

திருக்குறள் நூல் மதுரையிலிருந்த சங்கத்தில் அரங்கேற்றப் பட்ட தென்னும் செய்திக்கும் மேற்கூறிய செய்திகளே ஆதாரமாகும். சமணர் குழுவும் அதனை ஒப்புக்கொள்ளுகிறது. அதனால், இந்நூல் மதுரையிலிருந்த புலவர்களால் ஆராய்ந்து ஆதரிக்கப் பெற்ற தென்பது கோடற் பாலதாம். மற்றும், சங்கமிருந்ததென்பதே பொய் யென்பாரும் உளராதலின், அவர் கூற்று உண்மையானால், இக்கதையும் ஆதாரமிழந்துபோம். திருவள்ளுவமாலை சங்கப் புலவர்களால் இயற்றப்பெற்ற தன்றென்பது சிலர் கொள்கை. நல்லதன் நலனும் தீயதன் தீமையும் உள்ளவாறு காணும் உரவோரே புலவர் என்பபடுவ ராகலின் அவர் கூடிய அவையில், வள்ளுவர் முதற்கண் புறக்கணிக்கப்பட்டார் என்பதும், சங்கப்பலகை நிகழ்ச்சியால் தெளிந்தார் என்பதும் ஆதாரமற்றவை யாகும்.

திருக்குறட் சிறப்பால் சீரிய புகழ் பெற்ற வள்ளுவனார் ஏலேல சிங்கன் என்னும் செல்வர் தொடர்புபெற்று, மனையறம் புரிந்தனர் என்ற செய்தியே பொதுவாகக் கூறப்படுகிறது. அவன் இவர்பால் மாணவனாய் அறங்கேட்டான் என்பாரும், அவன்பால் இவர் நூல் பெற்றுத் தம் நெசவுத் தொழில் புரிந்தார் என்பாருமாகப் பல திறத்தார் உளர். இவை எத்துணை உண்மையானவை என்பது அறியக் கூடாதாயினும், இருவர்க்கும் தொடர்பிருந்த தென்பது மட்டில் கோடற் பாற்றேயாம்.

திருவள்ளுவர் மனையறம் புரிந்து வருங்காலத்து, இவர்க்கு எத்துணைமக்கள் பிறந்திருந்தனர் என்பது தெரிந்திலது. கோப் பெருஞ்சோழன் புதல்வர்போல, தம் தந்தை பெயரோடு தம் பெயரும் நிலை பெறத்தக்க புகழோடு தோன்றிய புதல்வர் அல்லர் போலும் என்றும், புதல்வர்ப் பேறே இல்லை போலும் என்றும் வள்ளுவரின் மக்கட்பேறு கருதினோர் கூறுவர்.

திருவள்ளுவர் விண்புகுவதன் முன்பே அவர் மனைவியார் தம்பூத உடம்பு நீத்தனர் என்பது தெரிந்த செய்தியாகக் கூறப்படுகிறது. அவர் பிரிவாற்றாது வள்ளுவர் வருந்திப் பாடியதாகக் கூறும் பாட்டொன்றும் காட்டப்படுகிறது. சின்னாள் கழித்து, இவரும் விண்ணுலகு நண்ணினார் என்றும், இவரது மாணவராகிய ஏலேல சிங்கரே இறுதிக் கடன் ஆற்றினார் என்றும் கூறுகின்றனர். யாதோர் ஆடம்பரமுமின்றி, மிக்க எளிய நிலையில் இவர் அடக்கம் செய்யப் பெற்றனர் என்பதே இவரது இறுதிக் காலம் பற்றிக் கூறும் கதைகளின் உண்மைக் கருத்தாகும்.இவரால் வேறு நூல்கள் இயற்றப்பட வில்லை.

திரு.வி. உலகநாத முதலியார்

அவர்களின் மணிவிழாமலர்

1941

ஏட்டிற் கண்ட குறிப்பு


தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் வடகரையிலுள்ள வள மிக்க ஊர்களில் கவித்தலம் என்ற ஊர் பெருஞ்செல்வரும், தமிழ்ப் பெரும் புலமைச் சான்றோரும் நிறைந்த ஊராகும். அவ்வூரில் சுமார் 70 ஆண்டுகட்கு முன் பொருள்வளமேயன்றி, புலமைவளம் சிறக்கப் பெற்ற மூப்பனார் பெருங்குடியில் துரைசாமி மூப்பனார் என்ற சான்றோர் வாழ்ந்தனர். அவர் கம்பரது இராமாயணத்தில் மிக்க ஈடுபாடு கொண்டு ஒவ்வொரு பாட்டிலும் புதைந்து கிடக்கும் அருங்கருத்துக்களை ஆராய்ந்துரைக்கும் வன்மை படைத்தவர். அந்நாளிலேயே அவர் கம்பராமாயண அருங்கவித்திரட்டு என்ற நூலொன்றைத் தொகுத்துப் பொருளும், விளக்கமும் எழுதி வெளி யிட்டார். மேலும், அவர் வடமொழியிலும் நிறைந்த புலமை பெற்று “ஜானகிபரிணயம்” என்ற நூலைத் தமிழில் மொழி பெயர்த்து, இலக்கியவளம் செறிந்த உரைநடையில் இனிய முறையில் எழுதி வெளியிட்டார். அதனால் 50 ஆண்டுகட்கு முன்பே அவருடைய புலமைப் புகழ் தமிழ்ச் சான்றோரிடையே பெரிதும் விளக்கமுற்று இருந்தது. அவரிடம் திருக்குறள் மூலம் மாத்திரம் எழுதிய ஏடு ஒன்று இருந்தது.

அதனை என் பழைய நண்பர்களில் ஒருவரான கதிர்வேல் மூப்பனார் முன்பொருகால் எனக்குக் காட்டக் கண்டேன். சில நாட்களுக்கு முன் நான் மாயூரத்தில் என் நண்பர் வழக்கறிஞர் திரு. இராசேந்திரன், B.A., B.L., அவர்களோடு அளவளாவி விட்டுக் கும்பகோணம் வழியாகத் திருவையாற்றுக்குச் சென்ற பொழுது வழியில் கதிர்வேல் மூப்பனாரைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. அவரிடம் இருந்த அந்தத் திருக்குறள் மூல ஏட்டுப் பிரதியைக் காணும் பேறுபெற்றேன். அதன்கண், முதல் அதிகாரத்தின் பெயர் இறைவணக்கம் என்று இருப்பதை மிக்க விருப்போடு எடுத் துரைத்தார். நானும் பார்த்து வியந்தேன். அன்றியும், அதன் இறுதிக் குறளாக, “மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார், நிலமிசை நீடுவாழ் வார்” என்பதை எழுதிக் “கடவுள் வணக்கம் முடிந்தது” என்ற குறிப்பும் கூறப்பட்டிருந்தது.

இதுபோல் வேறுபாடுகள் இவ்வேட்டில் உண்டோ என்று கேட்டபோது, “அதிகாரவைப்பு முறையில் வேறுபாடில்லை; குறட்பாக்களின் வைப்புமுறைகள் வேறுபாடுறுகின்றன; அவற்றுள் சில மணக்குடவரது வைப்புமுறையையும், பல பரிமேலழகரது வைப்புமுறையையும் ஒத்துள்ளன” என்று சொல்லி, “இவ்வேட்டில் ஒரு புதுமையும் உள்ளது” என்று உரைத்து, “முதற்குறளின் இறுதியில் முதலாக உடைமையை உடையனாகவுரைத்த முறையன்றிய கூற்றால் இறைவனாகிய ஆதிபகவனது முதன்மை காணப்படும் உலகின் மேல் வைத்து வற்புறுத்தப்பட்டது” என்ற குறிப்பொன்று காணப்படுகின்றது.

இவ்வாறே,“ஊழிற் பெருவலியாவுள” எனவரும் குறட்பாவின் இறுதியில், இஃது ஊழ்வலியின் பெருமை கூறிற்று; அழிக்கலா காமை கூறிற்றன்று; ஊழையும் உப்பக்கம் காண்ப என்பவாகலின்” என்றொரு குறிப்பும், “ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்” என்ற குறட்பாவின் இறுதியில் “பெறாமை துனிபயத்தலின் பெறின் என்றார்” என்றொரு குறிப்பும் காணப் படுகின்றன. வேறு எத்தகைய குறிப்பையும் தாம் இன்னும் காண வில்லை என்று கூறினார். இக்குறிப்புக்களின் சொன்னடையால் அவற்றை யெழுதியவர் உயரிய புலமைச் செல்வர் என்று விளங்கின மையின் அக்குறிப்புக்களை யான் ஆர்வத்தோடு எழுதிப்போந்தேன்.

முதற்குறிப்பு, “முதலாக உடைமையை உடையவனாக வுரைத்த முறையன்றிய கூற்றால் இறைவனாகிய ஆதிபகவனது முதன்மை, காணப்படும் உலகின்மேல் வைத்து வற்புறுத்தப் பட்டது” என்பது. “ஆதி பகவன் முதற்றே உலகு” என்பது உலகு ஆதிபகவன் முதற்று என உரைநடைப்பட்டு, காணப்படும் உலகம் ஆதிபகவனாகிய முதலையுடையது எனப் பொருள்படுகிறது. முருகன் இப்பொருளை யுடையன் என்றொரு தொடரை எடுத்துக் கொண்டால், அதன்கண் முருகன் உடையவன் என்றும், பொருள் அவற்கு உடைமை என்றும் காணப்படும். உடையவனாகிய முருகனை நோக்க, பொருள் உடைமையாய் அடங்கி அவனுக்கு ஏற்றம் தருகிறது. அவ்வுடைமையை வேட்டவாறு செய்யும் முதன்மையை உடையனாகிய தன்மையால் முருகன் எய்துகிறான். அதுபோல உலகம் ஆதிபகவனாகிய முதலையுடையது என்ற விடத்து, முருகனது போலும் உடையனாம் தன்மை உலகிற்கு எய்துகிறது; உடைமையின் தன்மை ஆதிபகவற்கு அமைகிறது. உலகை உடையவன் ஆதிபகவனும், உடைமை உலகுமாக வைத்துக் கூறுவதுதான் நேரியமுறை. மாறாக, உலகு ஆதிபகவனாகிய முதலையுடையது என்னும் கூற்று முறை மாறி நிற்பது பற்றி, இதனை “முறையன்றிய கூற்று” என்று குறிப்புரை உரைக்கிறது.

நூலாசிரியர்கள் நூற்புணர்ப்புக்கு மேற்கொள்ளும் தந்திரவுத் திகள் பல; அவற்றுள் முறைமாறிக் கூறுவது ஒன்று; “ஒன்றறிகிளவி தறட ஊர்ந்த, குன்றியலுகரத் திறுதியாகும்” என்ற நூற்பாவில், டதற எனக் கூறவேண்டிய முறையை மாற்றித் தொல்காப்பியர் “தறட” என்றது முறையன்றிய கூற்று என்னும் தந்திர உத்தி என்பர். முறை மாறிக் கூறுவது வேண்டாவாயினும் வேறு ஒரு கருத்தை வற்புறுத்த வேண்டி இவ்வாறு கூறுவது தகும் என்று கொண்டனர் சான்றோர். ஆசிரியர் சிலவற்றை முறையே கூறிவருங்கால், அதன்கண் இடையே ஒரு மாற்றம் தோன்றுமாயின், கேட்பவர் உள்ளத்தே அம்மாற்றம் கேட்டலிற் செல்லும் கருத்தைத் தடுத்து நிறுத்தி ஆராய்ச்சியுட் புகுத்தும் என்பது இவ்வுத்தி வகையின் குறிப்பாகும்.

இவ்வாறு, ஆதிபகவன் உலகிற்கு முதலாவன் என்று கூற வேண்டிய முறையை மாற்றி “உலகு ஆதிபகவன் முதற்று” என்று திருவள்ளுவர் கூறுவது “முறையன்றிய கூற்று” எனக் கருதப் படுகிறது. ஆதிபகவன் உலகிற்கு முதல்வன்; அவன் படைத்தலால் உலகு அவனது உடைமையென்பது, கடவுள் உண்டு என்று கருதும் சமயவாதிகள் அனைவரும் கூறுவது; இஃது எல்லாரும் நன்கு அறிந்த செய்தி. அக்கருத்தைத் திருவள்ளுவர் அம்முறையிற் கூறாமல் உலகு ஆதிபகவனை முதலாக உடையது என்று கூறுவது, படிப்பவர் கேட்பவர் உள்ளத்தில் ஏன் இவ்வாறு கூறுகிறார் என்ற தடை எழுப்பி அவரது ஆராய்ச்சியைத் தூண்டுகிறது. உலகையும் அதன் முதல்வனாகிய ஆதிபகவனையும் ஒப்பநோக்கும் ஆராய்ச்சி யறிவு, உலகு காணப்படுதலையும் ஆதியாகிய பகவன் காணப்படாமையும் நோக்கிக் காணப்படும் தன்மை கருதி “உலகு ஆதிபகவனை முதலாக வுடைத்து”என்று கூறுகின்றார் எனத் துணிகிறது. இக்குறட்பாவுக்கு விளக்கம் கூற வந்த பரிமேலழகரும், “காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் ஆதிபகவன் முதற்றே என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும் உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க” என்று கூறுகின்றார். சொன்னயம் நோக் காமையின், ஏனை மணக்குடவர் முதலாயினார் இவ்வாராய்ச்சியில் தலைப்படவில்லை.

“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும்” என்ற குறட்பாவின் இறுதியில் உள்ள குறிப்பு, “இஃது ஊழ்வலியின் பெருமை கூறிற்று; அழிக்கலாகாமை கூறிற்றன்று; ஊழையும் உப்பக்கம் காண்பர் என்பவாகலின்” என்று காணப் படுகிறது. ஊழ் என்பது ஊழ்த்தல் என்னும் வினைமுதல் நிலை. முதனிலைத் தொழிற் பெயராகிய ஊழ் ஈண்டுப் பயன் ஊழ்த்து நிற்கும் வினைமேல் நிற்கிறது; வினையொடு தொடர்ந்து ஊழ்வினை எனப்படும்போது அது ஊழ்கனி, ஊழ்முகை, ஊழ்மலர் என்றாற்போல வினைத்தொகையாய் முக்காலமும் ஏற்றவாறு தொக்குவரும். இவ்வூழ் தங்குமிடம் உயிரது அறிவு, அறிவின்கட் கிடந்து, அது செய்யும் ஆராய்ச்சி யனைத்தினும் ஊடுருவி நிற்கும் இயல்பினால் மற்றொன்று சூழினும், அது சூழ்ச்சியிற் கலந்து நன்மையோ தீமையோ ஒன்றினை விளைவிக்கிறது; அதனால் ஊழ்வினைக்கு நிகர் அதுவேயன்றிப் பெருவலி படைத்தவை வேறு எவையும் இல்லை என்பது விளங்கவே “ஊழிற் பெருவலியாவுள” என்று திருக்குறள் கூறுகிறது. ஊழாகிய வினைக்கு இடம் உயிரே என்பதைப் பரிமேலகழகர் “ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்புடைத்து” என்ற குறட்பாவுரையில், கல்வி, “வினைகள் போல உயிரின்கட் கிடந்து அது புக்குழிப் புகுவது” என்று, “நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய் செய்யார் நோயின்மை வேண்டுபவர்” என்ற குறட்பாவுரையில், “உயிர்நிலத்து வினைவித்திட்டார்க்கு விளைவும் அதுவேயாகலின் நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம் என்றார்” என்றும் கூறுகின்றார். எனவே, வினையாகிய ஊழிற்கு இடம் உயிராவது தெளிகின்றோம்.

ஊழ்போலக் கல்வியும் உயிரின்கட் கிடந்து வலிய அரண் செய்தலின், ஊழ் வலிக்குநிகர் கல்வி வலியுளதே எனின், ஊழ் அக்கல்வியறிவின்கட் புகுந்து பேதைப்படுத்தலும் விளக்கம் செய்தலுமாகிய செயல்களைப் புரிவது பற்றியே ஊழிற் பெருவலி யுடையன பிற இல்லை எனல் வேண்டிற்று.

இவ்வாறு ஊழ் நிகரற்ற பெருவலியுடையதெனினும், உயிரின்கண் இடையிற் புகுந்து இடையிற் கெடுவதாகும். வினை செய்யத் தோன்றிப் பயன் விளைய ஊழ்த்து, அப்பயன் நுகரப்பட்ட விடத்துக் கெட்டொழியும் அதன் வலியனைத்தும் பயன் நுகரு மளவே யாகும்; அஃதாவது ஊழில் வலி அதன் பயன்மேல் நிற்பதெனக் கொள்ளலாம். பயன் கழிந்த வழி ஊழ்வலி யழியும். ஊழின் தீப்பயனை நற்பயன்போல நுகருமிடத்து அதன் கொடுமை வலி தேய்ந்து போகும். அதுபற்றியே, “நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற்படுவது எவன்” என்று திருவள்ளு வர் தெளிவிக்கின்றார். நல்லவை தீயவை என வேறுபட நோக்காது ஒப்பக் கொள்பவர்க்கு ஊழ்வினை ஒரு பொருளாகாது; அவர் உள்ளம் ஊழ்வினை விளைவிக்கும் இடையூறுகட்கு உலைவுறாது; நிலைகுலையாது. இவ்வுண்மை விளங்கவே, திருக்குறள், “ஊழை யும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்” என்று எடுத்துரைக்கின்றது. ஊறு செய்யும் ஊழ்வினையை உப்பக்கம் காண்பதற்கு உலைவில்லாமை வழியென்றும், அது கைகூடுதற்கு நலந்தீங்குகளை ஒப்பக் கருதும் திண்மை வழி என்றும் அறிகின் றோம். இத்திண்மை நிலையைச் சித்தாந்த சைவ நூல்கள் “இரு வினை யொப்பு” என்று கூறுகின்றன.

“ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்” என்ற குறட்பாவின் இறுதிக் குறிப்பு, “பெறாமைதுனி பயத்தலின் பெறின்” என்றார் எனக் காணப்படுகிறது. துனி புலவி கலவி என்ற மூன்றனுள், துனியில்லாத கலவி கனிபோல் இன்பம் செய்வதென்றும், புலவியில்லாத கலவி பழுக்காத கருக்காய் போல் துவர்ப்பு விளைக்கும் என்றும், திருவள்ளுவரே கூறுவர். இதனால் துனி வேண்டப்படாதது எனவும், புலவி முயக்க இன்பத்துக்கு ஆக்கமாதலின் வேண்டத்தக்க தெனவும் பெறப்படும். அதன் சிறப்புணர்த்தவே, “காமம் புணர்தலின் ஊடல் இனிது” என்பர். புலவியும் ஊடலும் ஒரு தன்மையவே; எனினும் புலவி சொன் மேலும், ஊடல் செயன்மேலும் பெரும்பாலும் இயலுவன; பிற்காலத்தார் சொல் வேறுபாட்டின் நுணுக்கம் நோக்காது ஒருபொருட் கிளவியாகவே வழங்கலுற்றனர். அதனாற்றான் இந்நாளில் சொற்களின் நுண்ணிய வேறுபாடு நோக்கும் மனப் பான்மை குன்றி விட்டது; நிகண்டுகள் தோன்றியதும் ஒரு பொருண் மேல் நிற்கும் சொற்களின் பன்மைத் தன்மையை நுணுகியறியும் இயல்பு பெரிதும் மறைந்து போயிற்று. ஆங்கிலம் பயின்றவர்பால் காணப்படும் இவ்வித்தகம், தமிழ் பயின்றார்பால் காணப்படாமைக் குக் காரணம் இதுவேயாம். நிற்க.

செயற்பண்பின் மேனிற்கும் ஊடல், துனி பயக்கும் நீர்மை யுடையது. “ஊடலில் தோன்றும் சிறுதுனி” என்பது திருக்குறள். புலவி சொல்லிலும் மெய்ப்பாட்டிலும் நின்று வேட்கையை மிகுவிக்கும் மேன்மையுடையது. புலவி மிகுந்தவழி ஊடல் தோன்றும்; அது மிக்கவழித் துன்பம் பயக்கும் துனியாய் முதிர்ந்து முடிவில் வெறுப்பை விளைவித்துப் பிரிந்தொழியும் கொடுமையைப் பயந்து விடும். ஆதலால், ஊடல் இன்பத்துக்கு ஆக்கமாய், முயக்கத்தால் இன்ப நுகர்ச்சியை நிறைவிக்கும் இயல்பினதாகிறது. “ஊடுதல் காமத்திற் கின்பம்” என உள்ளதன் உண்மையை உள்ளவாறு கூறிய திருவள்ளுவர், கூடி முயங்கும் முயக்கம் அவ்வூடலின்பத்துக்கு நிறைவாம் என்பது உணர்த்துதற்கு “அதற்கின்பம் கூடிமுயங்கப் பெறின் (ஆம்)” என்றார். முயக்கம் பெறாவிடின் அதற்குக் காரணம் ஆராயப்படும். ஆராய்ச்சி, “ஊடலில் தோன்றிய சிறுதுனி’ பெரிதாகி வெறுப்பையும் வெகுளியையும் பயந்தமை வெளிப்படுத்தும். இதனை நுணுகி நோக்கிய குறிப்புரைகாரர், “பெறாமை துனி பயத்தலின் பெறின் என்றார்” எனக் குறிக்கின்றார். இதனால், புலவி மிகுந்த வழியுளதாகும் உவர்ப்பு ஊடலை மிகுவிக்கும் என்றும், அதன் மிகுதி வெறுப்பை விளைவித்து, “கூடிமுயங்கும் இன்பத்தைப் பெறாவாறு சிதைத்தல் பெரும்பான்மை” என்றும் உணரலாம்.

நுண்மாண் நுழைபுலங் கொண்டு குறட்பாக்களில் நுண்ணிய கருத்தைக் கண்டு சிறு குறிப்புக்களால் எடுத்து வழங்கிய இப்புலவர் பெருந்தகை யாவர் என்று அறிய முடியவில்லை. அவருடைய குறிப்புக்கள் பாட்டுத்தோறும் அமைந்திருக்குமாயின் எத்துணையோ புதுப்புது உண்மைகள் புலப்பட்டிருக்கும். புலமிக்க புலவர் பெருமக்கள் இருந்தும் அவர்களைப் பயன்கொள்ளும் நலம் இடைக்காலத் தமிழ் மக்கள்பால் இல்லாதொழிந்தது தமிழ் நாட்டின் தவக் குறை.
திருவள்ளுவர் ஈராயிரம்

ஆண்டு சிறப்புமலர்

19-08-1970

ஊழ்வினை


திருவள்ளுவர் வழங்கிய திருக்குறளைப் படிப்பதில் இந்நாளைய நன்மக்கட்குப் பேரீடுபாடு உண்டாகியிருக்கிறது. அரசியலறிஞர் முதல் பள்ளிச் சிறார்கள் ஈறாக அனைவரும் இந்நெறியில் ஒத்த கருத்துடையராக இருக்கின்றனர். உலகிற்கே நல்லறமுரைத்த வள்ளுவர்பால் மக்கட்கு நன்மதிப்பு உண்டாகி யிருப்பது நல்வாழ்வுக்கு அறிகுறி. நினைவு, மொழி, செயல் என்ற மூன்று துறையிலும் உரிமை திகழ மக்கள் வாழ்ந்த காலம் திருவள்ளுவர் தோன்றித் திருக்குறள் வழங்கிய காலம்; அத்தகைய காலம் இப்போது வந்திருப்பதால், மக்கட்குத் திருவள்ளுவரிடத்தே இத்துணையீடுபாடு தோன்றிய தெனலாம்.

இதற்கு முன்னெல்லாம், நம் நாட்டில் கற்றோர் எனப்படுபவர் இந்நாட்டில் வாழ்ந்தார் என்றாலும் அவருடைய எண்ணங்களும் செயலும் பிற நாட்டவர் நல்கியனவாகவே இருந்தமையால் வேற்று நாட்டவராகவே விளங்கினர். குழவிப்பருவத்தே, தாய் தான் தந்த பாலொடு உடன் ஊட்டிய தமிழ் மொழியை இகழ்ந்தனர்; தமிழ் நினைவைக் கைவிட்டனர்; தமிழ் வாழ்வைத் துறந்தனர்; தமிழ் நடையைத் தாழ்த்தினர்; தமிழுடையைமாற்றினர்; தமிழ்க் கல்வியைத் தூற்றினர்; தமிழ்ப்பண்பாட்டைக் கைவிட்டுத் தமிழ் மக்கட்குரிய சான்றாண்மையைக் கைதூவி, காலஞ் சென்ற தேசியகவி பாரதியார் கூறுவதுபோல “நாமமது தமிழரெனக் கொண்டு” உயிர் வாழ்ந்தனர். “தாய் நாட்டி லிருந்து கொண்டே வேறொரு பேய் நாட்டு மக்களாக நம்மை மாற்றி விட்டதே இந்த அந்நியமொழிக் கல்வி” யென அண்ணல் காந்தியடிகள் முதலிய சான்றோர் கழறிய சொற்கள் இன்னும் ஒலி மாறவில்லை.

இவ்வாறு உண்டாகிய மன மாசு இன்னும் நீங்கவில்லை; அடிமையுணர்வு அகலவில்லை. சென்ற இருநூறு ஆண்டுகளாக மெல்ல மெல்ல உடையைப்பற்றி, உடலைப்பற்றி, உதிரத்தைப் பற்றி, உயிரைப் பற்றிப் பிணைத்துக் கொண்ட அடிமைப் பண்பு நீங்கி விடுமா? வந்தது போல இல்லாவிடினும் ஒளிவர நீங்கும் இருள் போல விரைய நீங்காதன்றோ? உரிமை வாழ்வுபெற்று இயலும் நாம் உள்ளத்தாலும், உரையாலும், செயலாலும் இன்னும் அந்த அடிமைப் பண்பு நீங்காதேயிருக்கின்றோம். அதனால் தூய உரிமைக் கண்கொண்டு எழுதப் பெற்ற திருவள்ளுவரை நாம் அடிமைக் கண்கொண்டு காண்கின்றோம். அதுதான் இப்போது நம்மால் செய்ய முடிகிறது.
இந்த வகையில் திருவள்ளுவர் வழங்கிய திருக்குறளில் பல பகுதிகள் தெளிவாய் விளங்கவில்லை. பல ஐயங்கள் உண்டாகின்றன. பல புதிய கருத்துகளைப் புகுத்திப் பார்க்கின்றோம். உண்மைக் கருத்துகள் சிலவற்றை உண்மைக்கு மாறாகக் கொள்கின்றோம். இவை யாவும் இயல்பாக உண்டானவை. உரிமை ஞாயிறு தோன்றுங்கால் இத்தகைய கலக்கங்கள் உண்டாவது இயல்பு.

திருவள்ளுவரது திருக்குறள் ஊழ் என்றொரு பகுதியைக் கொண்டுளது. அஃது அறத்துப்பாலின் இறுதியில் பொருட்பாலுக்கு முன்னர் இருக்கிறது. அதனை அங்கே கொணர்ந்து திருவள்ளுவர் வைப்பானேன், என்பது ஒரு கேள்வி. இது நெடுங்காலமாக நின்று நிலவும் பழமையான கேள்வி. திருவள்ளுவர் இதனைக் கூறியிருப்பாரா? ஊழையும் உப்பக்கம் காண்டல் கூடும் என அறிவுறுத்தும் திருவள்ளுவர், “ஊழிற் பெருவலியாவுள” என அதற்கும் பெருமை பேசும் இப்பகுதியைக் கூறுவாரா? என்பன போன்ற சில கேள்விகள் இப்போது புதியனவாய் எழுகின்றன. நெருப்பிற் புகை தோன்றுவது போல நற்சொல் நற்செயல்களில் தீமை தோன்றுவதும், தீச்செயல்களில் நன்மை தோன்றுவதும் இயற்கை யெனப் பகவற்கீதையில் வியாசர் கூறுவதுபோல் பழமையில் தீமையும் புதுமையில் நன்மையும் உண்டாக லாமாதலால் இப் புதுக்கேள்விகளால் நன்மையும் விளையும் என்ற உறுதியால் இவற்றை மேற்கொண்டு மதித்து ஆராய்வது அறிஞர்க்குக் கடன். அதுபற்றி இச் சிற்றாராய்ச்சி இங்கே செய்யப்படுகிறது. நல்லறிஞர்கள் ஆராய்ந்து நலங் கொள்வார்களாக.

திருவள்ளுவப் பெருமான் வழங்கிய திருக்குறளின் அடிப்படையான கருத்துகள் யாவையென முதற்கண் காண்போம். நம் நாட்டு மக்கள் வாழ்வில், பேச்சில், செயலில் சில அடிப்படைக் கருத்துகள் உண்டு. இவற்றுள் சிறப்பாக மூன்றைக் காணலாம். அவை வினை, மறுபிறப்பு, மேலுலக கீழுலக வாழ்வு ஆகிய மூன்றுமாகும்.

“இருள்சேர் இருவினையுஞ் சேரா” “எனப்பகையுற்றாரும் உய்வர், வினைப்பகை வீயாது பின் சென்றடும்” என்றும், “எழு பிறப்பும் தீயவை தீண்டா” “எழுமையெழுபிறப்பும் உள்ளுவர்,” “இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேமா” என்றும், “மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று,” “ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக்கழுந்தும் அளறு” என்றும் வருவன இவ்வடிப்படைக்கருத்துகளை எடுத்தோதுகின்றன.

இம்மூன்றனுள் வினையே மறுப்பிறப்புக்கும் மேலுலக கீழுலக வாழ்வுக்கும் காரணம். நல்வினை செய்தார் மறுபிறப்பில் மேலுலக வாழ்வு பெறுவர்; தீவினை செய்தார் மறுபிறப்பிற் கீழுலகடைந்து துன்புறுவர். நலந்தீங்கு கலந்த வினை செய்தார் பிறப்புகளை யெய்துவர். இக்கருத்துகளையும் நாம் இத்திருக்குறளிலேயே காணலாம். ஆகவே, வினையால் மறுபிறப்புற்று, மேலும், கீழும், நடுவுமாகிய உலக வாழ்வுகளில் பிறந்து உழலுவதை விடுத்து வினையின் நீங்கிப் பிறப்பறுத்து வீட்டுலகம் சென்று சேர்வதே வாழ்வின் குறிக்கோளாகும். வீட்டுலகத்தைத் திருவள்ளுவர் “வானோர்க்கு உயர்ந்த உலகம்” என்றும், “வரன் என்னும் வைப்பு” என்றும், “இறைவன் அடி” என்றும் கூறுகின்றார். மேலுலகத்தைப் “புத்தேளுலகம்” “தாமரைக்கண்ணான் உலகு” “மேலுலகம்” என்று சிறப்பித்துரைப்பர். இவற்றையெல்லாம் நோக்கினால் மேல் கீழ் நடு எனப்படும் மூவகை யுலகங்களின் வாழ்வு வினை காரணமாக உண்டாவன என்பது இனிது விளங்குகிறது.

இவ்வினையுணர்வும் மறுபிறப்புணர்வும் பிறவும் திருவள்ளுவரே படைத்து மொழிவன அல்ல. அவர்க்கு முன்னிருந்த சான்றோர்களே கூறியிருக்கின்றனர். “வாழச்செய்த நல்வினையில்லது, ஆழுங்காலைப் புணை பிறிதில்லை” (புறம்) “யாம்செய் தொல்வினைக்கெவன் பேதுற்றனை” (நற்) என வினையுணர்வும், “சாதலஞ்சேன் அஞ்சுவல் சாவின் பிறப்புப் பிறிதாகுவதாயின், மறக்கு வென்கொல் என் காதலன் எனவே” (நற்) “இம்மை மாறி மறுமையாயினும், நீயாகிய ரெங்கணவனை, யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே” (குறுந்) “இம்மை யுலகத்திசையொடும் விளங்கின மறுமை யுலகமும் மறுவின் றெய்துப” (அகம்) என மறுபிறப்புணர்வும் “வாராவுலகம் புகுதலொன்றெனப் படை தொட்டனனே குரிசில்” (புறம்), “தொய்யா வுலகத்து நுகர்ச்சியும் கூடும்” (புறம்) என மேலுலக வுணர்வும் சங்கச் சான்றோர்களால் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். இவ்வாறே மிகப் பழைய தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தும் இம்மூவகையுணர்வும் குறிக்கப்பெறுகின்ன. வடநூல்களிலும் வேதங்கள் தவிர ஏனை எல்லா நூல்களிலும் இவை கூறப்படு கின்றன. உலகாயதம் ஒழிந்த ஏனையச் சமயங்கள் யாவும் இவற்றை மேற்கொண்டுள்ளன. ஆதி வைதிகம் ஒழிந்த இந்திய சமயங்கள் பலவற்றிற்கும் வினையுணர்வு அடிப்படை எனத் தெளிய உணர வேண்டும்.

வினை யென்பது யாது? மனம், வாய், உடம்பு என்ற கருவிகளின் இயக்கமும் இயக்கமில்லாமையும் வினையென்று கூறப்படும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் வினையாகும். உலகில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பயன் உண்டு. இராசராசன் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டினான் என்றால் கட்டுதல் வினையும், பெரிய கோயில் செயப்படு பொருளுமாகும். அதனால் அவன் அடைந்த பயன் இன்பமாம். இப்படியே ஒவ்வொரு வினைக்கும் செயப்படு பொருளும் பயனும் உண்டு. தொடக்கத்தில் சமய நூல்கள், செய்கையை வினையென்றும், செயப்படுபொருளைக் கன்மம் என்றும் கூறின. ஒரு செயல் செயப்பட்டபோதேயன்றிச் செயப்படாத போதும் வினையெனவே நின்றதனால் பின்வந்த சமய அறிஞர்கள், செய்யப்படும்போதும் படாதபோதும் செயப்படுபொருள் உள்ளடங்கியிருப்பது கண்டு, செயலையும் செயப்படு பொருளையும் ஒருங்கு கூட்டி வினையெனவும், கன்மமெனவும், இன்பமும் துன்பமுமாகிய பயன்களை வினைப்பயன் என்றும், கன்ம பலன் என்றும் வழங்கினர்.

ஒருவினை செயப்படுங்கால் அதனால் விளையும் பயனும் உருவாகிறது. அவ்வினை செயப்பட்டதும் பயனும் உருவாகி இன்பமோ, துன்பமோ நல்குகிறது. சில வினைகள் முடிந்தபின் சிறிது காலங்கழித்துப் பயனைத் தருகின்றன. இவையெல்லாம் நாம் உலகியல் வாழ்வில் நாளும் காணும் காட்சியாகும்.

இவ்வினைக் குறிப்பு வேதங்களில் காணப்படவிலையென அவற்றை யாராய்ந்த அறிஞர் கூறுகின்றனர். ஆயினும், அவ்வேதங்களிற் குறிக்கப்படும் மந்திரங்களைப் பிழை சிறிதுமின்றி ஓதினால் கருதிய பயன் விளையுமெனப் பிற்காலவைதிகர்கள் கூறுவர். மந்திரங்களை வாயால் பிழை சிறிதுமின்றி ஓதுவதும் வினையே யென்பது நன்கு தெளிய வேண்டியதொன்று. எனவே, தமிழ் நூன்முறைப்படி எல்லா நாட்டு எவ்வுயிரிடத்தும் வினையுணர்வு உண்டு என்பது தேற்றம்.

இனி மந்திரங்களை ஓதுங்கால் அவற்றின் பயன் அருவாய் உருவாகிறது. அம்மந்திரங்களை விதிப்படி யோதி முடித்தவழி, மந்திரப்பயன் உருவாகி ஓதுவோர் விரும்பிய பயனை நல்குகிறது. அருவாய் உருவாகும் மந்திரப்பயனை ‘அதிருஷ்டம்’ என வட நூல்கள் ஓதுகின்றன. இவ்வேதங்களைத் தொடர்ந்து நிற்கும் சங்கிதைகள் இவ்வினையியல்பை வற்புறுத்தாவிடினும் நல்வினை செய்பவன் துறக்கவுலக இன்பமும், தீவினை செய்பவன் நிரயத் துன்பமும் பெறுவர் என்று இசைக்கின்றன. இதனால் வினையுண்டென்பதும் மறு பிறப்புண்டென்பதும் பிறவும் பிற்கால வைதிகர்களுக்கும உடன்பாடானமை தெளிகின்றோம்.

செய்வினையின் முடிவில் நிற்கும் வினைப்பயன் உடனே வந்தெய்துவதும், காலங்கழித்து வந்தெய்துவதும் உண்டெனக் கண்டோம். வினை முடிவில் எய்தக்கூடிய பயன், வினை முடிந்த சிறிது காலத்திற்குப் பின்னர் வந்து எய்துவானேன்? ஏன் உடனே எய்துவதில்லை? என்பன முதலிய ஐயங்கள் எழுவதற்கு இடமுண்டு. வினை நிகழுங்கால் அருவாய் உடன் பிறக்கும் ‘அதிருஷ்டம்,’ தனக்குரிய பயனை விளைவித்தற் குரிய பக்குவம் எய்த வேண்டியிருக்கிறது. வினையைச் செய்தவர், அதற்குரிய பயனை நுகர்தற்குரிய காலம் வரும்வரையில், அதிருஷ்டம் பக்குவம் பெற்றுக் கொண்டு வரும். பக்குவமானவுடன் தன் பயனை அந்த அதிருஷ்டம் நுகர்வித்து விடும். செய்வினையின் பயனைச் செய்தவர் பெறுதற்குரிய அதிருஷ்டம் பக்குவப்படுவதைச் சார்ந்திருக்கிறது. அதிருஷ்டமும் செயப்படு பொருள் போல வினையிடத்தே தோன்றுவதால் தமிழ் நூலார் கூறும் வினைக்கண் அடங்கிநிற்கும்.

ஒருவினை (அதிருஷ்டம்) பக்குவப்படுவதற்குள் வேறுபல வினைகள் வந்து சேர்ந்துவிடும். இவற்றில் பக்குவப்பட்டவை இப்பிறப்பிலேயே பயனை நல்கும். எஞ்சியற்றை நுகர்வது குறித்து மறுபிறப்பு வந்து சேர்கிறது. வினைப்பயன்களின் கூறுபாட்டிற் கேற்ப மறுபிறப்பில் புல் முதல் தெய்வமீறாகப் பல்வகையுடம்புகள் தோன்றுகின்றன. இதனால் எடுக்கும் பிறப்புகளும் பலவாகின்றன.

பிறவிதோறும் எடுக்கும் உடம்பு கருவியாகக் கொண்டே வினைப் பயன்களை நுகரவேண்டும். நுகருந் திறம் உடம்பு தோறும் வேறுபடும். அதற்கேற்பச் சில பயிற்சிகள் உண்டாகிக்குணம் போல ஒன்றிவிடும். அவையே அவ்வுடம்புகருவியாக வினைப்பயன் நுகர்வதற்கு வாயிலாய்ச் செயற்படுகின்றன. இவற்றை வாதனை என்பர். தமிழ் நூல்கள் வாதனையை அவா என்று குறிக்கும். பக்குவமெய்தி நிற்கும் வினைப்பயன் வாதனையின் வாயிலாக உயிரை வந்து அடைகிறது. வினைகள் பக்குவப்படுவதற்குரிய காலமும் பயன்களின் அளவும் அவ்வினைகளின் வன்மைகளைச் சார்ந்திருக்கின்றன. சில வினைகள் பக்குவமுற்றுப் பயன் நல்குங்கால் வேறான சில வினைகளும் பக்குவமெய்தி நிற்கலாம். அவற்றுள் வலியதனால், மெலியது பக்குவமெய்திருப்பினும் பற்றுக் கோடாகிய வாதனை யில்லாமையால் கெட்டழியும். சீவன் முத்தன் ஒருவன், தன் உடம்பளவாய் நிற்கும் வாதனையைப் (அவாவை) பற்றி வந்து அடையும் வினைப்பயனை நுகரும்போது, பக்குவ மெய்தி யிருக்கும் ஏனை வினைகட்குப் பற்றுக்கோடாகாதபடி வாதனைகளைத் தன் பால் நிலையா வண்ணம் அறுத்து விடுகின்றான். அதனால் அவன் வினைத் தொடர்புகளின் நீங்கி வீடுபெறும் திறம் பெறுகின்றான்.

நம் நாட்டு அறிவு நெறிச் சமயங்கள் பலவும் இறைவன், உலகம், உயில், என்ற மூன்று பொருள்களையும் கண்டிருந்தன. கடவுள் என்ப தொன்றுண்டு என்பதைத் தொடக்கத்தில் வற்புறுத்தாத நையாயிகரும் சாங்கியரும் பின்னர் அதனை யுணர்ந்து மேற்கொண்டனர். பிரமப்பொருள் ஒன்றேயுளது; ஏனை உலகம் உயிர் என்பன பொய்யென்று கொண்ட பிரமவாதிகளும், விவகார மென ஒரு நிலை வகுத்து அதன்கண் இம்மூன்றும் உண்டெனக் கொண்டு சமயப்பணி புரிந்தனர். இம்மூன்றனுள் இறைவன் உயிர் என்ற இரண்டும் அறிவுடைப் பொருள் என்றும் பிறவெல்லாம் அறிவில்லா தவையென்றும் கூறுவர். வினையும், வினைப்பயனும் வாதனையும் ஆகிய யாவும் அறிவில்லாதவை.

அறிவில்லாத வினைப்பயன் அறிவில்லாதவாதனையைப் பற்றுக் கோடாகக் கொள்வதும், இன்பமும், துன்பமுமாகிய வினைப்பயன்களை உயிர்கட்கு நல்குவதும் கூடா. அறிவுடைய உயிரை அறிவில்லாத வினைப்பயன்கள் வந்து எய்துவதற்கு அறிவுடைய இறைவன் வேண்டப்படுகின்றான். அவன் உலகைப்படைத்து அவரவர் செய்த வினைப் பயன்களை அவரவரோடு கூட்டி நுகரச்செய்வதும் அந்த இறைவன் வேலை என்று கண்டனர். அது பற்றியே தொல்காப்பியரும் கடவுளைப் “பால்வரை தெய்வம்” என்றார். உலகுயிர்களைக் கடந்து நிற்கும் நிலையில் இறைவனைக் “கடவுள்” என்றும், அவற்றோடு தொடர்புற்று நிற்கும் நிலையில் “தெய்வம்” என்றும் தொல்காப்பியரை யுள்ளிட்ட தமிழ் நூலார் கூறினர்.

இனி வடநூலாருள் யோக சமயத்தார் இவ்வினைகளைச் சுக்கில கன்மம், கிருஷ்ண கன்மம், சுக்கில கிருஷ்ண கன்மம், அசுக்கில கிருஷ்ண கன்மம் என நால்வகைப்படுத்திக் கூறுவர். சுக்கில கன்மம் நல்வினை; கிருஷ்ண கன்மம் தீவினை; இரண்டு மிலாத வினை அசுக்கில கிருஷ்ண கன்மம். இறுதியிற் கூறிய அசுக்கில கிருஷ்ண கன்மத்தையே செய்பவன் வீடு பெறுபவன் என்பதும் அவன் அது செய்வதால் அவனுடைய புத்தி தத்துவத்திற் கிடந்து அவனையடைவதற்குப் பக்குவமுற்றுவரும் முன்னை வினைகள் (அவாவென்று தமிழில் கூறப்படும்) வாதனையாகிய பற்றுக்கோடு இல்லாமையால் கெட்டுப்போம் என்பதும் யோகநூலார் கொள்கை.*

ஒரு மனிதனுடைய நினைவு, சொல், செயல்களால் கன்ம மென்னும் நுண்ணிய பொருள் உண்டாகிறது. அவனுடைய விருப்பு வெறுப்புகள் பசைபோல் ஊறி அக்கன்மத்தைத் தன்பால் ஈர்த்துக்கொண்டு சீவ பதார்த்தத்தில் ஒட்டிக்கொள்ளும். இவ்வாறு, பல பிறவிகளிலும் ஈட்டப்படும் கன்மம் சீவனைச் சூழ்ந்துகொண்டு கன்ம சரீரமாகிறது. பிறப்பு மாறுங்கால் சீவன் கன்ம சரீரத்தோடே நீங்கும் இன்ப துன்பங்களை ஒப்ப நோக்கி நுகரும் மேலோர்க்கு அக்கன்மம் முதிர்ந்து உதிர்ந்தொழியும்; அல்லாதவர்பால் அக்கன்மம் பெருகி வெண்மை கருமை முதலிய “இலேசியம்” பெறும். ஐவகைச் சீலங்களிலும் சிறிதும் பிழையின்றி யொழுகும் சான்றோர் புதிய கன்மங்களைச் செய்யாமையால் முன்னைக் கன்ம பலங்கள் முற்றும் நுகர்ந்து கழிந்தபின் உடம்பின் நீங்கி உலகத்து உச்சியில் வாழும் வீடுபெற்று முத்தர்களோடு கூடி இன்புறுவர் என்று சமண நூல்கள் கூறுகின்றன. புத்த சமயம் ஆன்மா உண்டென்பதை மேற்கொள்ளா தொழியினும் வினையும், மறுபிறப்பும் பிறவும் மேற்கொண்டொழு கிறது. யோகர்கள் போலப் புத்தர்களும் வினையை நலம் பயப்பன, தீங்கு பயப்பன, இரண்டும் பயவாதன என நால்வகைப்படுத்தி இறுதியிற் கூறிய வினைவகையால் ஏனை வினைகளெல்லாம் கெடும் என்பர்* வினைகட்கெல்லாம் இச்சையே காரணம். இச்சையை நீக்கியவன், அறியாமை வெறுப்பு ஆசை முதலியவற்றைக் கெடுத்துப் பிறப்பறவுயரும் பெரியோனாவான். அவன் முன்னை வினைப்பயன்களை மட்டில் இப்பிறப்பில் நுகர்வான். அவன் வினைத் தொடர்பால் கீழ்நிலை எய்தான். அவன் அருக பதம் பெற்ற பரமேட்டி எனவுரைக்கின்றனர்.

இவ்வண்ணம் நம் நாட்டில் தோன்றிய சமயங்கள் பலவும் வினையும் மறுபிறப்பும் பிறவும் மேற்கொண்டுள்ளன வாயினும் உலோகாயதம் ஒன்றுதான் இவற்றைக் கொள்ளவில்லை. உலகாயதருள்ளும் சுசிட்சித சாருவாகர் என்போர் ஆன்மா என ஒன்று உண்டெனக்கொண்டு அதுவும் இறக்குங்கால் உடம்போட அழிந்துவிடுகிற தென்பர். ஆசீவகருள் வினையும் மறு பிறப்பும் பிறவுமாகிய கொள்கைகளை ஏற்பதிலர். இவர்களை அஜிதகேச கம்பளர் என்பர். ஆசிரியர் திருவள்ளுவர் வினையும் மறுபிறப்பும் பிறவும் மேற்கொண்டொழுகும் கொள்கையினர் என்பதை முன்பே கண்டோம்.

ஒருவருடைய நினைவு, சொல், செயல்களாகத் தோன்றும் வினைப்பயன் பழுத்து நிற்கும் நிலையில் ஊழ்வினை என்று கூறப்படுகிறது. ஊழ்த்தல் என்பது “இணர் ஊழ்த்தும் நாறாமலர் அனையர்” என்றும் “தீஞ்சுளைப் பலவின்பழம் ஊழ்க்கும்மே” (புறம்) என்றும் சான்றோர் வழங்குவதால் ஒரு வினைச் சொல்லாதலைக் காண்கிறோம். இதன் பொருள் பயனுண்டாக முதிர்தல் என்பதும் அறிகின்றோம். மலர்ந்து மணமாகிய பயன் நல்கும் பூ, ஊழ்முகை (நற். 115) என்றும், கனிந்து பயன்படும் பழத்தை ஊழுறுபழம் (அகம். 117) என்றும் சான்றோர் வழங்குகின்றனர். இதனால் ஊழ்வினை யென்பது முதிர்ந்து பயன் நல்கும் வினை என்று பொருள்படுமாறு இனிது விளங்குகிறது.

பழுத்த பழம் மரத்தில் நில்லாது என்பது உலகுரை, நன்கு முதிர்ந்த கனி தன்பால் முதிரும் விதையாகிய பயனை எவ்வண்ணமேனும் அதன் முதலிலிருந்து நீக்கி அப்புறப் படுத்திவிடுமேயன்றித் தன்னிடமே கொண்டொழியாது என்பது கருத்தாம். மரம் ஒன்று பழம் ஊழ்த்தல் விதை பயந்து தன் இனம் பெருக்கும் குறிப்பிற்றாதல்போல் வினை ஊழ்த்தல் தன்பயனைத் தன்னைச் செய்தோர்க்கு நல்கி மேலும் வினைகளாகிய தன் இனத்தைப் பெருக்கும் இயல்பிற்றாம். பழுத்த பழம் விதைப்பயனை வெளிப்படுத்தாது ஒழியாமை போல ஊழ்வினையும் தன் பயனை ஊட்டாது கழியாது என்பது விளங்குகிறது. ஊழ்கனிக்கு அஃது இயற்கையறமா தல்போல ஊழ்வினைக்குப் பயன் நல்குதல் இயற்கையறமாம். இயற்கையறம் எல்லா ஆற்றலினும் வலிமிக்கதாதலால் ஊழ்வினையின் வலிமிகப் பெரிது என்பதுபற்றி ஆசிரியர் ‘ஊழிற்பெருவலி யாவுள’ என்று அதன் வலிமிகுதியை விளக்குகின்றார்.

பழுத்து வரும் பழம் இடையே மாறுபட்ட பொருள்களால் வெம்பிப் பயன் ஊழ்க்காது போதலும் உண்டு. அதுவும் இயற்கை நிகழ்ச்சி. அதனால் ஊழ்த்துவரும் வினையும் பயன் நல்காது கெடுதற்கு வாய்ப்புண்டு என்பது பெறப்படும். கனி வகைகள் பலவும் பெரும்பாலும் ஊழ்த்துப் பயன்படுதலும் மிகச் சிலவே இடையிற் கெடுதலும் இயல்பு. அதுபோல ஊழ்வினையுள் ஒரு சில மாறுபட்ட வினைகளால் பயன் ஊழ்க்காது கெடுதற்கு இடமுண்டு என்று சான்றோர் கண்டனர். அதனை ஆராய்ந்தவர், உலையா முயற்சியால் ஊழ்வினையும் பயன் ஊழ்க்காது கெடும் என்று தெறிந்து, “ஊழையும் உப்பக்கம் காண்பர்” என்றனர். ஊழையும் ஊழ்க்காது கெடும் என அதன் வினையால் கூறாமல் ஊழையும் ஊழ்க்காவாறு இடையூறு செய்வர் என்பது தோன்ற, உப்பக்கம் காண்பர் என்று ஆசிரியர் கூறுவது நினைவு கூரத்தக்கது. பள்ளம் நோக்கி ஓடுவதை இயற்கை யறமாகக் கொண்ட தண்ணீரும் இடை நிகழ்த்தும் தடையால், நின்றுவற்றுதல்போல் ஊழ்வினையும் இடை நிகழ்த்தும் முயற்சிகளால் நின்று வற்றுவது இயல்பாதலின், ஊழை உப்பக்கம் காண்பது உயிர்கட்கு இயல்வதொன்றாயிற்று. ஆகவே, ஊழ்வினை தனக்குரிய பயனை ஊழ்த்தும் நல்குவதில் பெருவலி இயற்கையறமாக வுடையதென்பதும், எனினும், மாறுபட்ட வினையால் அவ்வலி தடையுற்று நின்று வற்றும் என்பதும் முடிவாயின. இது பற்றியே,

‘சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய்’(359)

என்ற திருக்குறளும் தோன்றுவதாயிற்று. சான்றோரும் வினை பெருவலியுடையதாயினும், வெல்லத்தக்கது; கெடுத்தற் குரியது என்றெல்லாம் பேசுவராயினர்.

(அருந்தமிழ் உரைவளங்கண்ட பெருந்தமிழ்ப் பேராசிரியர் ஒளவை அவர்கள் இற்றைக்கு முப்பது ஆண்டுகட்கு முன்னர் பன்னெறிச் சமயப் பனுவல்களில் தோய்ந்த நிலையில், மணிமேகலைக்கு உரைகண்ட திளைப்பில் திகழ்ந்தபோது இக்கட்டுரை எழுதினார். 1954-ஆம் ஆண்டு மயிலம் திருப்பெருந்திரு சிவஞான பாலய சுவாமிகள் மணி விழா மலரில் வெளிவந்த இக்கட்டுரையைப் பேராசிரியரது நான்காம் ஆண்டு நினைவாக வெளியிட்டுப் புகழ் வணக்கம் செலுத்துகின்றோம்.)

உரையனுபவம்


தமது தமிழ் மொழிக்குப் பெருமை தருகின்ற நூல்களில் தொல்காப்பியம். திருக்குறள் என்ற இரண்டு நூல்களும் தலை சிறந்தனவாகும். அவற்றுள், தொல்காப்பியம் எழுத்தும் சொல்லும் பொருளுமாகிய மூவகை நெறியில் தமிழருடைய எழுத்தும் சொல்லும் உணர்வும், ஒழுக்கமும், வாழ்வும், பண்பாடும், பிறவும் உரைக்கின்றது. திருக்குறள் தமிழரிடை நிலவிய அறமும், பொருளும், இன்பமுமாகிய நினைவும் - சொல்லும் செயலுமாகிய கூறுகளைக் குறட்பாக்களால் உரைக்கின்றது. அதற்கு உரைகண்ட ஆசிரியர் பலர். அவர்களில் நுண்மாண் நுழைபுலச் செல்வராய். தமிழ் மரபோடு வடநூல் மரபும் நன்குணர்ந்த தமிழ்ச் சான்றோராய் விளங்கியவர் பரிமேலழகர். அவர் திருக்குறளுக்கு எழுதியுள்ள உரை தனிப்பெரும் நூலாகப் பயிலத் தக்க பண்பு அமைந்தது. தமிழில் மேன்மையான நூல்கள் எனச் சிலவற்றை நானூறு, ஐந்நூறு ஆண்டுகட்கு முன் ஒரு பெரியவர் ஆராய்ந்து தொகுத்துக் கூறினார். அவர் இன்னார் என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை. ஆயினும், அவர் உரைத்தது வெண்பா வடிவில் இருக்கிறது.

“வள்ளுவர் மெய் யன்பர்மொழி வாசகம் தொல்காப்பியமே
தெள்ளு பரிமேலழகர் செய்த உரை - ஒள்ளியசீர்த்
தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும்
தண்டமிழின் மேலாம் தரம்.”

என்பது அவ்வெண்பா. இவ்வெண்பாவை நோக்குமின்; திருக்குறள், தொல்காப்பியம், தொண்டர் புராணம் எனப் பல நூற்களைத் தொகுத்த அந்தப் பெரியவர், அவற்றிற்கு ஒப்பாகப் பரிமேலழகர் உரையையும் நிறுத்தி உரைப்பது, பரிமேலழகர் உரைக்குப் பழங்காலப் புலவர் பெருமக்கள் எத்தகைய மதிப்பு வைத்திருந்தனர் என்று நமக்கு அறிவிக்கின்றது.

மேலும், பரிமேலழகர் சங்க இலக்கியங்களில் எட்டுத் தொகையுள் ஒன்றாகிய பரிபாடலுக்கு உரை எழுதியிருக்கிறார். என்றாலும், அது திருக்குறள் உரை போல வளமும், வனப்பும், திட்பமும், நுட்பமும் செறிந்தில்லை. அதனால் அந்த உரை பரிமேலழகர் உரைதானோ? என்று ஐயுறுவாரும் உண்டு. நிலைமை இப்படி இருப்பதால்தான் பரிமேலழகர் உரை என்றால் யாவரும் திருக்குறள் உரை ஒன்றையே நினைக்கிறார்கள் - இந்த வெண்பாவில் “தெள்ளு பரிமேலழகர் செய்த உரை” என்பது திருக்குறளுக்கு அவர் எழுதிய உரையையே என்று பலரும் சொல்கிறார்கள். இத்தகைய சிறப்போடு விளங்குவதால் தான் பரிமேலழகர் உரையின் அழகு காண்பதில் அறிஞர்களுக்குப் பெரும் விருப்பம் உண்டாயிற்று.

அதனை நோக்குவோம்: “செவிக் குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்” என்பது ஒரு திருக்குறள். செவிக்குணவாகிய நல்ல அறிவுடைக் கருத்துக்களைக் கேட்கும் வாய்ப்பில்லாத போது, வயிற்றுக்கு உணவு தரவேண்டும் என்பது இதன் பொருள். இதற்குப் பரிமேலழகர் செவிக் குணவாகிய கேள்வியில்லாத பொழுது வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும் என்று உரை கூறுகின்றார்.

இனி இந்த உரையிற் கருத்தைப் புகுத்திப் பரிமேலழகர் அழகு செய்வதைக் காண்போம். திருவள்ளுவர் செவிக்குணவு என்பது எதனை? செவிக் குணவாவது கேள்வி என்று சொல்லுகிறார் திருவள்ளுவர். செவிக்குணவு இல்லாதபோது வயிற்றுக்குத் தரப்படும் என்றால், செவிக்குணவு இருக்கும்போது வயிற்றுக்கு உணவு தரப்படாது என்று தெரிகிறது. உணவு எனப்படுவதால் செவிக்குணவு போல வயிற்றுணவும் யாவருக்கும் வேண்டத்தக்கது; செவிக் குணவு தந்து கொண்டே வயிற்றுணவு கொண்டாலென் எனின், வயிற்றுணவினும் செவிக்குணவு சுவைமிகுந்தது. ஆகையால், இரண்டையும் சமமாக்குவதற்குப் பரிமேலழகருக்கு விருப்பம் இல்லை. அவர் வயிற்றுணவை விடச் செவி உணவு சிறந்தது என்பாராய்ச் “சுவை மிகுதியும் பிற் பயத்தலுமுடையது கேள்வி; அது உள்ள பொழுது வயிற்றுணவு அறிஞர்களால் விரும்பப்படாது ஒழிகிறது என்று பரிமேலழகர் கண்டு, இதனால் தான் திருவள்ளுவர் செவிக்குணவு இல்லாத போது. வயிற்றுக்கு உணவு தரப்படும் என்றார்” எனக் குறிக்கின்றார். இனி, செவிக்குணவு இல்லாத போது தரப்படும் வயிற்றுணவையும் “சிறிது” ஈயப்படும். என்பது எவ்வாறு பொருந்தும் என்று ஒரு கேள்வியை மாணவன் பரிமேலழகரிடம் கேட்கிறான். அதற்கு விடை கூறும் பரிமேலழகர், வயிற்றுணவு மிகுமானால் இடையூறு உண்டாகும் என்று நினைக்கிறார். ஆகவே, அவர் வயிற்றுணவு பெரியதாய வழி - வயிற்றுணவு மிகுமானால் - அது நோயும், காமமும், விளைவித்தலின் திருவள்ளுவர் “சிறிது” என்பதுதான் பொருத்தம் என்று பரிமேலழகர் கூறுகிறார். இது கேட்ட மாணவன். “சிறிது” என்பது ஏன்? சிறிதும் இல்லையானால் நோய் முதலியன குறையும் அல்லவா? என்று வினவுகிறான் அவனுக்குப் பரிமேலழகர் விளக்கம் தருகிறார். “அது தானும் பின்னிருந்து கேட்டற் பொருட்டு” என்று சொல்லுகிறார். பின்னிருந்து கேட்டற் பொருட்டு என்பதாயின், அவ்வாறு கேட்பதற்குரிய வலிமையும், தெளிவும் தருவது வயிறு. அவ்வயிற்றிற்குத் தருகின்ற உணவை இழிந்தோர்க்குச் சொல்வது போல “ஈயப்படும்” என்று சொல்வது பொருத்தமா? என மாணவன் கேள்வி கேட்கிறான். இக் கேள்வியை நினைத்துப் பார்த்த பரிமேலழகர் அது பொருத்தம்தான் என்பாராய், “ஈதல் வயிற்றது இழிவு தோன்ற நின்றது” என்று கூறுகிறார். அது எவ்வாறு பொருந்தும் என்றால், உணவு மிகுமானால் வயிறு காமமும் நோயும் உண்டு பண்ணுவதால்தான் “ஈயப்படும்” என்று சொல்லுதல் பொருந்தும் என்கிறார்.

இவ்வாறு ஒவ்வொரு குறட்பாவுக்கும் அழகொழுகத் தருக்க நெறியில் உரை எழுதும் பரிமேலழகர் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தைச் சூழவுள்ள நாட்டில் வாழ்ந்தவர். அவர் காலத்தில் மன்றாம் இராசராசனும், மூன்றாம் இராசேந்திரனும் சோழ நாட்டை ஆண்டனர். திக்கன் என்ற விசயகண்ட கோபாலன் காஞ்சிபுரப் பகுதியில் நாடு காவல் புரிந்தான். அந்நாளில் வாழ்ந்தவர் பரிமேலழகர், திரிபுவனச் சோழனான ஆனைமேலழகர், (கல். IV 852) நச்சினார்க்கினியர், வண்டுவரைப் பெருமாளான பரிமேலழகர் (கல் IV 854) முதலிய சான்றோரின் தூய தமிழ்ப் பெயர்கள் பின்னாளில் மறைந்து வீழ்ந்தன. அவ்வீழ்ச்சி நீர்வளமும், நிலவளமும் பொருந்திய ஊர்கள் சதுர்வேதி மங்கலங்களாக மாறி, பின்னர் அனைத்தும் மறைந்த வரலாற்றோடு ஒத்த தனி வரலாறு ஆகும்.

இப் பரிமேலழகர் திருக்குறட்கு எழுதியுள்ள உரை மிகவும் சிறந்ததெனத் தமிழறிஞர் அனைவரும் ஒரு முகமாகப் பாராட்டு கின்றார்கள். பரிமேலழகருக்கு முன்னும் பின்னும் தமிழ்ப் புலவர்கள் தோன்றித் திருக்குறட்கு உரை கண்டாரேனும், பொது வகையில் நோக்கினால் பரிமேலழகர் உரைத்த உரைக்கு ஒப்பாகவோ, உயர்வாகவோ உரை எழுதினோர் இல்லை என்று கூறுவது மரபு. இதனை வற்புறுத்துவது போல், “பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ, பாரிலுள்ள நூலெல்லாம் வள்ளுவர் செய் நூலாமோ நூலில், பரித்தவுரை எல்லாம் பரிமேலழகன், தெரித்தவுரையாமோ தெளி” என்றொரு பழம் பாட்டு நாட்டில் நிலவுகிறது. அன்றியும், பரிமேலழகர் உரையைத் தழுவியும், ஒற்றியும் எழுதின உரைகளை அறிஞர்கள் மெற்கொண்டதோடு வேறுபட்டும் மாறுபட்டும் செய்த உரைகளை ஏலாது ஒழிந்தமையே ஒரு சான்றாகும்.

பழந்தமிழ் நூல்கட்கு உரை காண்பது படிப்பிப்போர், நூல்களைப் பிறர் படித்துப் பொருள் விளங்கிக் கொள்ளுமாறு செய்யும் செயல் வகையில் ஒன்று. அருஞ் சொற்களுக்கும், சொற்றொடர்களுக்கும் பொருள் உரைத்தலும், அவற்றிற்குப் பொழிப்புரைத்தலும் ஒரு வகை. அவற்றுன் முதல் வகையை அரும் பதவுரை என்றும், கண்ணழித்துரை என்றும், பதவுரை என்றும், பின்னதைப் பொழிப்புரை என்றும கூறுவர். உரைக்கப்பட்ட உரையின்கண் அடங்கிய கருத்துக்களை வினா - விடை வாயிலாக விளக்கி நூலாசிரியர் உள்ளக்கிடையை அறிவாராய்ச்சி நெறியில் தெளிய உரைத்தலும் ஒரு வகை. இன்றுள்ள, தொல்காப்பியம் முதலிய இலக்கணங்கட்கும் இலக்கியங்கட்கும் உரைகாரர் தோன்றி, உரையெழுதியது சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு உள்ளேதான் என்று கூற வேண்டும். அதற்கு முன்னே நிலவிய உரைகளைப் பற்றி ஒன்றும் அறிய முடியவில்லை. எனினும் இறையனார் களவியலுக்கு நக்கீரர் கண்ட உரை பழமை வாய்ந்தது. அதனையும் தொல்காப்பியம், திருக்குறள் முதலிய நூல் உரைகளையும் ஒப்பவைத்து நோக்கும் போது உரைகாரர் வழி வழியாக மேற்கொண்டிருந்த மரபு ஒன்று வெளிப்படுகிறது. எடுத்தோத்து, இலேசு, உத்தி என்ற மூன்று நெறிகளால் மேற்கொண்ட இலக்கண இலக்கியங்கட்கு உரை காண்பது அம்மரபு. அம்மரபு, பிற்கால நூல்களான நன்னூல். நேமிநாதம், யாப்பருங்கலம் முதலிய இலக்கண நூல் உரைகளில் மேற்கொள்ளப் பெற்றிருக்கிறதேயன்றி, இலக்கியங்கட்கு எழுதிய உரைகளில் தெளிவாகக் காணப்படுவதில்லை. பழைய உரை முறையே மறவாது கடைப்பிடித்த தொன்றே, பரிமேலழகர்க்குத் தனிச் சிறப்பையும் அவர் உரைக்கு அழகையும் தருகிறது.

எடுத்தோத்து, இலேசு, உத்தி என்ற மூன்றாலும் பொருள் காணும் மரபு, நூலாசிரியன் உள்ளக் கருத்தை ஆழ அகழ்ந்து கண்டு, அறிவு நெறியால் ஆராய்ந்து உரைக்கும் மாண்பும், அருமையும் அமைந்ததாகும். மேற் போக்காக நுனிப்புல் மேயும் விலங்கு நோக்கம் இந்நாளில் வேற்றுமொழிப் பயிற்சியால் மக்களிடையே பெரிதும் பரவி இருக்கிறது. அன்றியும், கல்வியின் நோக்கம், அறிவும், ஒழுக்கமும் பெறுவது என்பதைக் கைவிட்டு, ஏலாதன செய்தேனும் வயிறு வளர்ப்பது என்பது கொள்கையாக மாறியதனால், இவ்விழி நிலை உண்டாயிற்று. இக்கருத்துடை யாரே வழி வழியாக வாழ்வியல் தலைவர்களாக வந்தமையால், இந் நிலைமை மேன் மேலும் ஆதரவு பெற்று வளர்ந்து வருகிறது. நூலாசிரியர் கூறும் கருத்துகளை, “ஏன்? எப்படி?” என எழும் வினா விடைகளால் நுண்ணறிவு கொண்டு தூய்மை செய்து கொள்வது உயர்நிலை மாணவர் கல்வி முறையிலேயே கைவிடப்பட்டுள்ளது. அதனால், கல்வி பயில்வோரிடையே காரண, காரிய முறையில் ஆராய்ந்து உண்மை காணும் பயிற்சி தேய்ந்து போயிற்று. பரிமேலழகர் ஒருவரே, அதனை ஓரளவு விடாது கடைப்பிடித்து உண்மை உரை காண்பதில் பெரிதும் முயன்று வெற்றி பெற்றுள்ளார். எனினும், அவர் வேற்று மொழி மரபும், தமிழ் மரபும் வேறு வேறு இயல்பின என உணர்ந்தும், வாதனை வயத்தால் சில பல குறட்பாக்களில் குழறுபடி செய்து குற்றப்படுகிறார். ஆனாலும், அது பற்றி அவரது உரை மாண்பும் அழகும் குன்றுவதில்லை.

எடுத்தோத்து என்பது எடுத்து ஓதப்படும் பாட்டும் அதன் கருத்துமாகும். இதனை எடுத்துரை என்பது வழக்கம். பொறுப்பவர்க்குப் புகழுண்டாகும்: பொறாது ஒறுப்பவர்க்கு ஒரு நாளை இன்பமேயாம் என்ற கருத்தை,

“ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.”

என்ற குறட்பா எடுத்துரைக்கின்றது அதனால், இது எடுத்தோத்து அல்லது எடுத்துரை ஆகும். இங்ஙனம் எடுத்தோதப்படும் உரையில் “ஒரு நாளை இன்பம்” என்பதும் “பொன்றுந் துணையும் புகழ்” என்பதும் விளக்கப்பட வேண்டுவன. அதனை விளக்கும் பரிமேலழகர், “ஒரு நாளை இன்பம், அந்நாள் ஒன்றினும் கருதியது முடித்தேம் எனத் தருக்கியிருக்கும் பொய்யின்பம்” என்று கூறுகிறார். “பொன்றுந் துணையும் புகழ்” என்பதில் பொன்றுதல், இறத்தல்; பொறுத்தார்க்கு இறக்கும் துணையும் புகழ் என்பது கருத்தாய்ப் பொருள் குற்றமாகிறது; புகழ் நிற்குமிடம் உலகமே தவிர புகழைச் செய்பவரல்ல: அவர் இறந்து போனாலும் புகழ் இறந்து போவதில்லை. இதனை விளக்குதற்குப் பரிமேலழகர் ஒரு சூழ்ச்சி செய்கிறார். புகழுக்கு ஆதாரம் உலகம் என்று காட்டி, “ஆதாரமாகிய உலகம் பொன்றப் புகழும் பொன்று மாகலின், ஏற்புடைய உலகம் என்னும் சொல் வருவித்துரைக்கப் பட்டது” என உரைத்து, “பொறுத்தார்க்கு உலகம் அழியும் வரைப் புகழ் நிற்கும்” எனக் குறட்பாவின் எடுத்துரையை விளக்கம் செய்கிறார். எடுத்துரை, விதியும் விலக்குமென இரண்டாகப் பிரிந்து, பொதுவும் சிறப்பும் என வகைப்பட்டு, எய்தாதது எய்துவிப்பது, எய்தியது விலக்குவது எய்தியதன் மேற் சிறப்பு விதி கூறுவது, எய்தியது விலக்கிப் பிறிது வகுப்பது. எய்தியது இகந்து படாமைக் காப்பது எனப் பல கூறுகளாகப் பிரிந்து செல்வது “விதியெல்லாம் எய்தாததனை எய்துவிப்பதும், ஒரு கால் எய்தி ஒருகால் எய்தாதா கற்பாலதனை அவ்வழியும் இகந்து படமாற் காத்து நியயமாக எய்துவிப்பதும், ஈரிடத்தும் எய்தற்பாலதனை ஒரு மருங்கு மறுப்பதும் என மூவகைப்படும்” என மாதவச் சிவஞான முனிவர் முதலாயினோர் கூறுவர்: அவற்றைக் கருத்திற் கொண்டுரைப்பது, (உரை காண்பது) உரைகாரர் மரபு: ஆயினும் அவற்றை விரித்துரைப்பதற்கு இங்கு இடம் இல்லை.

இலேசு என்பது எடுத்துரைக்கும் கூற்றில் வேண்டாத சொற்களைப் பெய்தலும், வேண்டுவதைத் தொகவைத்தலும். முறை பிறழ்ந்து உரைத்தலும் எனப் பலதிறமாக வரும். அவற்றால், பாட்டைப் பாடும் புலவற்கு உள்ளத்தில் ஒரு குறிப்பு உண்டு: அது ஆராய்ந்து காணத் தக்கது என்பது இலேசின் குறிக்கோள்.

“ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.”

என்ற குறட்பா நல்லொழுக்க முடையவர்க்குத் தீய சொற்களைச் சொல்வதென்பது ஆகாத தொன்று என உரைக்கின்றது. தீய சொற்களைச் சொல்வதைத் “தீய வாயாற் சொலல்” எனத் திருவள்ளுவர் கூறுகின்றார். “தீய சொலல்” என்றாலே தீய சொற்களை வாயினாற் சொல்லுதல் என்று பொருள்பட நிற்பதால். “வாய்” என்ற சொல் இலேசு. இந்த இலேசினால் திருவள்ளுவருடைய உள்ளக் குறிப்பு யாது? எனக் காணலுற்று “வாயாற் சொலல்” என்றால் ஏன்? எனக் கடாவிக் கொண்டு “வாய் என வேண்டாது கூறினார். நல்ல சொற்கள் பயின்றதுஎனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு” என உரைக்கின்றார். இலேசினால் பொருள் கொள்ளப்படும் இம்முறை வட மொழியிலும் உண்டு என அறிவிக்க “இதனை வட நூலார் தாற்பரியம்” என்று கூறுவர் எனப் பரிமேலழகர் உரைக் கின்றார்.
உத்தி என்பது நூல் உரைக்கும் ஆசிரியன் கைக்கொள்ளும் அறிவு நெறி. அறிவுப் பெருக்கத்துக்கும் நுண்மைக்கும் ஏற்ப அது விரிந்து செல்லும் என்று இலக்கணப் புலவர் இயம்புவர். ஊழ் என்ற பகுதியில்,

“நல்லவை யெல்லாஅம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.”

என்ற குறட்பா வருகிறது. இதனைக் கிடந்தபடியே கொள்ளின் இக்குறட்பா செல்வம் பெற முயல்பவர்க்கு நல்லவை தீயவையாம் தீயவை நல்லவையாம் என்று பொருள் பட்டுத் தெளிவில்லாமல் கெடுகிறது. இது எடுத்தோத்து, இலேசு என்ற இரண்டாலும் விளக்கம் பெறாமல் உத்தியை நாடி நிற்கிறது. “அதிகார முறை” என்ற உத்தியால் தீயூழ் வயப்பட்டார் செல்வம் செய்யுங்கால் நல்லவை யெல்லாம் தீமையாய் முடியும்: நல்லூழ் உற்ற போதில், தீயவை செயினும் நல்லவையாய்ச் செல்வம் எய்துவிக்கும் என உரை செய்யப்படுகிறது.

இவ்வாறு எடுத்துரை, இலேசு, உத்தி என்ற நெறிகளில் உத்தி வகை, இலக்கணவமைதி காட்டல், தருக்க நெறியில் விளக்கம் கூறல், வினாக்கட்கு விடை வழங்கல், கருத்துரை தருதல் என வருவன பலவற்றையும் நினைவிற் கொண்டு திருக்குறட்குப் பொருள் விளக்கம் செய்கிறார் பரிமேலழகர்.

“செய்துஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.”

என்பது குறட்பா, அதன்கண், ‘செய்து ஏமம் சாராச் சிறியவர்” என்ற தொடர் பரிமேலழகரது இலக்கண அறிவை ஈர்க்கின்றது. “ஏமம் சாரா” என்ற தொடர் சிறியவர் என்ற சொல்லோடு இயைவது பொருத்தமா? “புன்கேண்மை” என்ற சொல்லோடு இயைவது பொருத்தமா? என்று ஒரு மயக்கம் உண்டாகிறது. அதை எண்ணிய பரிமேலழகர் “ஏமம் சாராச் சிறியவர்” என்று இயைப்பது உண்டு; அது கூடாது. “சிறியவர் என்பதனைக் கொள்ளின் செய்து என்பது நின்று வற்றும்” என உரைக்கின்றார். உரை எழுதும்போது இத்தகைய குற்றம்படக் காண்பது முறையா காது. இதைக் கருத்திற் கொண்டு, “இதற்குப் பிறரெல்லாம் சொல்லிலக்கணத்தோடு மாறுகொள உரைத்தார்” என்பதொன்றே பரிமேலழகர் நன்கு எண்ணி எழுதுகிறார் என்பது விளங்கும். (817)

“மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனால் வரும்.”

என்பது வேறொரு குறட்பா. இதன்கண் இரண்டு கருத்துக்கள் கூறப்படுகின்றன. ஒன்று வெகுளியை மறத்தல் வேண்டும் என்பது. மற்றொன்று அதனால் தீயவை பிறக்குமென்பது. இவ்விரண்டிற்கும் ஒரு தொடர்பு காட்டினாலன்றி, இரண்டும் ஒரு குறட்பாவில் கூறுதற்கு ஆகா. கூறப்பட வேண்டுமாயின் இரண்டிற்கும் ஒரு தொடர்பு இருத்தல் வேண்டும். தொடர் பில்லாத இரண்டு கருத்துக்கள் ஒரு குறட்பாவில் கூறப்படா என்பது உரை மரபு. ஆனால், இரண்டிற்கும் தொடர்பு காணும் போது வெகுளியை மறவாவிடத்து தீமை உண்டாகும் என இரண்டிற்கும் காரண காரியத் தொடர்பு கண்டு, மறத்தல் வெகுளியை அதனால் வரும் என்பதை ஏதுவாகவும் நிறுத்திப் பரிமேலழகர் பொருள் உரைக்கின்றார். அது அவரது உரைக்கு ஏற்றமும் அழகும் தருகிறது.

“கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.”
“செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினு மென்:”

எனச் சில குறட்பாக்களைத் திருவள்ளுவர் வினா வடிவில் தருகின்றார். உரைகாரன் அதற்கு விடை கூறவேண்டும். அது உரை மரபு. “பயன் என்கொல்” என்பதற்கு விடை கூறும் பரிமேலழகர் “பயன் இல்லை” என்று கூறல் வேண்டும். இங்ஙனம் கூறுபவர் “என்கொல்” என்பதைப் பற்றிக் கொண்டு. இதன்கண் “எவன்” எனும் வினாப் பெயர் “என்னென்றாய் ஈண்டு (பயன்) இன்மை குறித்து நின்றது” என்கின்றார்.

“செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினு மென்.”

என்ற இக்குறளுக்கு உரை எழுதும் பரிமேலழகர் வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் பயன் இல்லை என்றல் வேண்டும். ஆனால், அவர் அதனை, “செத்தால் இழப்பதும் வாழ்ந்தால் பெறுவதும் இன்மையில் இரண்டும் ஒக்கும் என்கின்றார்.” இவ்வாறே,

“உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.”

என்ற திருக்குறள் உரையில் நட்பால் பயனும், பிரிவால் இழப்பது ஒன்றுமில்லை என்று சொல்ல வரும் பரிமேலழகர் “அவர் மாட்டு நொதுமற் றண்மையே அமையும்” என உரைக்கின்றார்.

இனித் திருவள்ளுவர் பொதுவாக உரைக்கின்ற சில கருத்துக்களைத் தெளிவுபட விளக்குவதே உரைகாரர் கடன் என்ற உண்மையைக் கடைப்பிடித்துப் பரிமேலழகர் விளக்குகின்ற திறம் இனிது தோன்றுகிறது.

“யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.”

என்ற குறளில் “யாம் மெய்யாக் கண்டவை” எனச் சிலவற்றைப் பொதுவகையாற் கூறுகின்றார் திருவள்ளுவர். அவை யாவை? எனக் கேட்கும் மாணவருக்கு விடை கூறுவது உரையாசிரியர் கடன். இக் கடமையை அறிந்தாற்றுகின்ற பரிமேலழகர், உரையின்கண் “மெய்யாக் கண்டவை, ஆகமங்கள் என உரைக்கின்றார்”. அது எங்ஙனம் எனும் வினாவிற்கு விளக்கம் எய்தும் பொருட்டு, தங்கண் மயக்க மின்மையின் பொருள்களை உள்ளவாறு உணரவல்லாராய்க் காம வெகுளி களின்மையின் அவற்றை யுணர்ந்தவாறே உரைக்கவும் வல்லாராய இறைவர் அருளான் உலகத்தார் உறுதி யெய்துதற் பொருட்டுக் கூறிய ஆகமங்கள் என்று தெரிவிக்கின்றார். ஆகமங்களை மெய்ந் நூல்கள் என விளக்கக் கருதும் பரிமேலழகர், ஆகமங்களை உரைத்த ஆசிரியர்களை, பொருள்களை உள்ளவாறு உணர வல்லவர் என்றும், உணர்ந்தவற்றை உரைக்க வல்லவர் என்றும் அவரே இறைவர் என்றும் தெரிவிக்கின்றார். ஆகமங்களை அவர் ஏன் எழுதினார் என்பதற்குக் காரணமும் காட்டுகின்றார். உலகத்து மக்கள் மேல் உண்டான அருள் உணர்வால், அவர்கள் உறுதி எய்தும் பொருட்டு இந்த ஆகமங்கள் எழுதப்பட்டன என விளக்கும் வகையில் “அருளான் உலகத்தார் உறுதி எய்துதற் பொருட்டு” என்கின்றார்.

இனி பொய்யாமை, கொல்லாமை ஆகிய இரண்டு அறங்களை வற்புறுத்துகின்ற திருவள்ளுவர்,

“ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.”

என உரைக்கின்றார். இக்குறளைக் கேட்கும் மாணவன் உள்ளத்தில், இரண்டறத்துள்ளும் யாது சிறந்தது என்ற ஐயம் எழுகிறது. திருவள்ளுவரே, முதன்மையைக் கொல்லாமைக்கு வைத்து அதற்குப்பின் பொய்யாமையை வைத்து உரைக்கின்றார் என்று சொல்வது ஒருவாற்றால் விடையாகும். அதன்கண், காரணம் காட்டப்படாமையால், காரண காரிய முறையில் வைத்து உரைப்பது உரைகாரர் கடமையாகிறது. அதனால், பரிமேலழகர் “பொய்யாமை பொய்யாமை யாற்றின்” எனவும், “யாமெய்யாக் கண்டவற்றுளில்லை” எனவும் கூறினாராகலின், இரண்டறத் துள்ளும் (கொல்லாமை, பொய்யாமை) யாது சிறந்ததென்று ஐயம் நிகழுமன்றே, அது நிகழாமைப் பொருட்டு ஈண்டு அதன் பின்சாரப் பொய்யாமை நன்றென்றார்; முற்கூறியதிற் பிற்கூறியது வலியுடைத் தாகலின், அதனைப் “பின்சார நன்றென்றது” “நன்மை பயக்கும் வழிப் பொய்யும் மெய்யாயும், தீமை பயக்கும் வழி மெய்யும் பொய்யாயும் இதனைப் பற்ற, அது திரிந்து வருதலான் என உணர்க” என எழுதுகிறார். இதனை இந்நாளைய சீர்த்த இலக்கிய விமர்சகர்கள் (Advanced literary Critics) Logical interpretation with psychological with psychological segeence என்று கூறுகின்றனர்.

இனி, “மெய்யுணர்தல்” என்ற பகுதியில் மெய்ப் பொருளுக்குச் செம்பொருள் என்ற பெயர் குறித்து,

“பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.”

எனத் திருவளுவர் கூறுகின்றார். “செம்பொருள்” என்பதை விளக்க வந்த பரிமேலழகர் “தோற்றக் கேடுகள் இன்மையின் நித்தமாய், நோன்மையால் அதனை யொன்றும் கலத்தல் இன்மையின் தூய் தாய், தான் எல்லாவற்றிலும் கலந்து நிற்கிற முதற்பொருள் என்றார்” என உரைக்கின்றார். இது ஒரு சமய சாத்திரம் படிக்கின்றோமோ என நம்மை மருட்டி இன்பம் செய்கிறது. இனி,
“வாய்மை யெனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்.”

என்ற குறட்பா உரையில், “எனப்படுவது” என்பதற்கு “என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறது” எனப் பொருள் கூறுகின்றார் பரிமேலழகர். “எனப்படுவது” என்பதற்கு, “என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது” என்று பொருள் கூறுதல் பொருத்தமா? என்று வினா எழுப்பிய மாணவனுக்கு விடை கூறுகிறார் பரிமேலழகர். வழக்கில், ஊர் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் உறையூரை எடுத்துக்காட்டி, “ஊரெனப்படுவது உறையூர்” என்றாற் போல என உரைக்கின்றார். நூல் உரை காண்பவர் இலக்கணத்தையோ, வேறு நூற்களையோ காட்டாமல் வழக்கினை எடுத்துக் காட்டுவது முறையாகுமோ? எனின்,

“வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட்டாக லான.”

என்று தொல்காப்பியம் வழக்கினைக் காட்டுவது நேரிது எனக் காரணத்தோடு கட்டுரைக்கின்றது. ஆகையால், “என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது” என்று வழங்குதல் பொருத்தமே என உய்த் துணர வைக்கின்றார் பரிமேலழகர்.

ஒரு தலைவரின் கீழ் பணிபுரிபவன் தன்னை அவர் ஐயுறத் தக்க வகையில் நடந்து கொள்ளக்கூடாது; ஐயம் பிறந்து விடுமானால், பிறகு தெளிவிக்க ஒருகாலும் ஆகாது என்ற கருத்துப்பட,

“போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.”

என்று திருவள்ளுவர் கூறுகிறார். “கடுத்தபின் (ஐயம் தோன்றிய பின்) தேற்றுதல் யார்க்கும் அரிது” என்பது எவ்வாறு பொருந்தும் என மாணவன் கேட்கின்றான். இங்ஙனம், ஐயம் தெளிவு பெற வேண்டுங்கால் உரைகாரர்கள் இலக்கணம், வழக்கு, ஏது, எடுத்துக் காட்டு என்ற நான்காலும் விளக்கம் செய்வர். இங்கே நான்கனுள் இதனை எடுத்துக்காட்டால் விளக்கம் செய்கின்றார் பரிமேலழகர், “கடன் கொண்டான் தோன்றப் பொருள் தோன்றுமாறு போலக் கண்டுழி யெல்லாம் நினைக்கப்படுதலின் தேற்றுதல் யார்க்கும் அரிது” என எடுத்துக்காட்டினால் உரைக்கின்றார்.

பரிமேலழகரது உரையிற் காணப்படும் பல்வேறு அழகுகளில் அரிய சொல்முடிவு காட்டி இலக்கண அமைதி கூறுவது ஒன்று. “கவ்வையாற் கவ்விது காமம்” என்ற குறட்பாவில் “கவ்விது” என்பது சவ்வையென்னும் சொல் அடியாக வந்தது; ஆனால், அங்ஙனம் வருதற்குத் தமிழ் இலக்கணத்தில் இடமில்லை. செய்யுளினும் வழக்கு வலியுடைத்து என்பது பற்றி, “செவ்வையுடையதனைச் செவ்விது என்றாற் போலக் கவ்வையுடையதனைக் கவ்விது என்றார்” என்று பரிமேலழகர் உரைப்பது இலக்கணப் புலவர்க்கு வியப்பும் இன்பமும் தருகிறது. காரணம் என்ன எனின், செவ்வை உடையதனைச் செவ்விது என்றல் தொல்காப்பியர் மரபு. “எவ்வயிற் பெயரும் வெளிப்படத்தோன்றி அவ்வியல் நிலையல் செவ்விது என்ப,” என்பது தொல்காப்பியம். அதை நினைவிற் கொண்டு பரிமேலழகர், “செவ்விது” என்றாற் போல என உரைக்கின்றார். இவ்வாறே ஒரு குறட்பாவில் “புலப்பாயாக” என்பது “புலத்தி” என்று வராமல் “புலத்தை” என வருகிறது. அவ்வாறு வருதற்குச் சொல்லியல் காண்கின்ற பரிமேலழகர், தமிழ் மரபு காணாது புதியதொரு சூழ்ச்சி செய்கின்றார். புலாதை என்பதன் ஈற்றெழுத்தைப் பிரித்து விகுதி என்று பெயரிட்டு. அதற்கு மேற்கோளாகக் கலித்தொகைப் பாட்டில் ஒன்றைப் பற்றிக் கொண்டு “புலத்தை என்புழி ஐகாரம். கடம் பூண்டு ஒருகால் நீவந்தை, என்புழிப் போல முன்னிலை வினை விகுதி” என உரைக்கின்றார்; விகுதி யென்று நிறுத்தி இலக்கணம் காண்பது தொல்காப்பியர் காலத்திலோ வள்ளுவர் காலத்திலோ மரபன்று. பரிமேலழகரே மேற்கொண் டுரைப்பது புது மரபு; பல்லவர் காலத்திற்குப் பின் வந்த இலக்கணப் புலவர் செயல் வகை.

வடமொழி முதலிய மொழிகளின் மரபும், தமிழ் மரபும் வேறு வேறு இயல்பின என உணர்ந்து ஆங்காங்கு அவ் வேற்றுமையை எடுத்துரைத்து மகிழ்விப்பதிலும் பரிமேலழகர் சிறப்புடையவர். தன் உயிரைக் காக்க வேண்டி வருமிடத்து, ஒருவன் மானம் கருதல் ஆகாது என்பது வடநூல் மரபு. “இன்றியமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல்” என்று திருக்குறள், வடநூல் மரபுக்கு மாறுபட நிற்பது காண்கிறார் பரிமேலழகர். ஆதலால் “இறப்ப வருவழி இளிவந்தன செய்தாயினும் உய்க” என்ற வடநூல் முறைமையை மறுத்து, “உடம்பினது நிலையின்மையையும், மானத்தினது நிலை உடைமையையும் தூக்கி, அவை செய்யற்க என்பதாம்” என உரைக்கின்றார். இவ்வாறே,

“ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை.”

என்ற திருக்குறளில் தமிழ்மரபின் தனி இயல்பை விளக்கு கின்றார்.

இனி அக்காலத்தில் ஏடும், எழுத்தாணியும் கொண்டு எழுதுவது மரபாகலின், திருக்குறள் உரையின்கண், சில இடங்களில் பரிமேலழகர் முன் எழுதியதை மறந்து தவறுதலும் செய்கின்றார்.

“நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்.”

என்பது திருக்குறள். இதற்குத் தாம் ஓர் உரை வகுத்துக் கொண்டு, பிறர் கூறும் உரையை மறுத்து ஒதுக்குகின்றார். பரிமேலழகர் இதற்குப் பிறர் கூறும் உரை, “நாள் என்பது ஒரு பொருள் போலத் தோன்றி உயிரை ஈர்வதொரு வாள்” என்பது. இதன்கண், “நாளென ஒன்று” என்பதற்கு “நாள் என்பது ஒன்று” எனப் பொருள் பிறரால் உரைக்கப்படுகிறது. இவ்விடத்து “என” என்ற சொல் என்பது எனப் பொருள்படுகிறது. (1) “என” என்பது ஓர் இடைச் சொல்லேயன்றி பெயர்ச்சொல் அன்று என்பது பரிமேலழகர் கொள்கை. அது (என) “என்பது” எனப் பொருள்படக் கூடாது. (2) ஒன்று போல் காட்டி என்பதற்கு “ஒரு பொருள் போலத் தோன்றி” என்று பொருள் உரைக்கப் பட்டிருக்கிறது. அப்படிச் சொல்வதில் பொருள் சிறப்பு இல்லை என்பது பரிமேலழகர் கொள்கை. “வாளது” என்றவிடத்து “அது” என்பது குற்றியலுகரம் அன்று. ஆகவே, பரிமேலழகர் கருத்துப்படி “அது உணர்வார்” என புனராது முறைப்பட வர வேண்டுமாயின் “அஃதுணர் வார்ப் பெறின்” என வருதல் வேண்டும். அவ்வாறு இல்லாமையால் இதற்கு பிறர் கூறுவது பொருந்தாது என்ற கருத்துப்படி “என” என்பது பெயரன்றி. இடைச்சொல் ஆகலானும், “ஒன்று போற்காட்டி” என்பதற்கு ஒரு பொருட் சிறப்பின்மையாலும், “அது” என்பது குற்றியலுகரம் அன்மையாலும், அஃது உரையன்மை அறிக என்று பரிமேலழகர் மறுக்கின்றார்.

இனி பரிமேலழகர் கருத்தை ஆராய்வோம். “என” என்னும் சொல் இடைச்சொல்லே யன்றி பெயர்ச் சொல் அன்று எனப் பரிமேலழகர் கருதுவது தொல்காப்பியத்திற்கு முரண் ஆனது. ‘என’ என்னும் இடைச்சொல் பெயர்ப் பொருளிலும் வரும் என்ற கருத்துப்பட “வினையே குறிப்பே இசையே பண்பே, எண்ணே பெயரோடு அவ்வாறு கிளவியும் கண்ணிய நிலத்தே, என என் கிளவி” (தொல். இடை - 10) என்று தொல்காப்பியம் கூறுகிறது. அடுத்து “ஒன்றுபோல் காட்டி” என்பதற்கு ஒரு பொருள் போலக் காட்டி என்றதில் பொருள் சிறப்பில்லை என்கிறார். ஆனால், அவர் இல்லை என்பதற்குத் தக்க காரணம் கூறாமையால் அவர் உரை செல்லாதாகிறது. மூன்றாவதாக “வாளது” என்பதிலுள்ள “அது” என்னும் சொல் குற்றியலுகரமன்று எனக் காட்டி மறுப்பது, அவர் பிறிதொரு இடத்தில் உரைத்த உரையையே மறுக்கிறது. அதாவது “உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன், புண்ண துணர்வார்ப் பெறின்” என்ற குறட்பாவின் உரையில் “புண்ண துணர்வார்” எனப் புணர்ந்ததற்கு, “அஃது என்னல் வேண்டும் ஆய்தம் விகாரத்தால் தொக்கது” என உரைத்தார் பரிமேலழகர். அவரே, “நாளென ஒன்று போல் காட்டி” என்ற திருக்குறள் உரையில் “வாளது” என்ற விடத்து, “அஃது என்னல் வேண்டும் ஆய்தம் விகாரத்தால் தொக்கது” என்று தானே கொள்ளவேண்டும். அவ்வாறு கொள்வது உரை முறைமையன்று.

இனி ஓரிடத்தில் எழுவாய் பயனிலையைத் தெளிய நோக்காமல் தடுமாறுகின்றார் பரிமேலழகர்.

“வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.”

என்ற திருக்குறட்கு “மிசைவான்” என்பது எழுவாயும் “வேண்டுங் கொலோ” என்பது பயனிலையும் ஆகும். அதனைத் தெளியாமல் “இடல் வேண்டும்” என்பதை எழுவாயும் பயனிலையுமாகக் கொண்டு “மிசைவான் புலம் வித்தில்லாமலே வினையும்” எனப் பொய்யுரை புகலுகின்றார். இக்குறட்பாவை உண்மை நெறியில் நின்று நோக்குவோ மாயின் விருந்தோம்பி மிச்சில் மிசைபவன் (தன் பால்) உள்ளது வித்தே ஆயினும் விருந்திற்கு இடுவதே தவிர, புலத்திற்கு இடவிரும்பான் என்பது நேரிய பொருளாம்.

இங்ஙனம் ஒரு சில தவறுகள் ஆங்காங்கே காணப்படினும் பழமையிற் புதுமையும், தருக்கத்தில் இலக்கணமும், விளக்கத்திற் சுருக்கமும். நூல் வழக்கொடு உலகியலும் புகுத்தி நுண்மையும் மாண்பும் அழகும் தெளிவும் பரிமேலழகர் உரைக்கென்றமைந்த சிறப்புக்கள் என்பது யாவரும் நினைவிற் கொள்ளத் தக்கது.

இறைமாட்சி


இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் வாழ்ந்த போது நாட்டில் பேரரசும், சிற்றரசுமாகப் பல அரசுகள் நிலவின. அவற்றுள் நல்லரசும், வல்லரசும் பொல்லா அரசுகளும் இருந்தன. அவற்றையெல்லாம் நுணுகிக் கண்டவர் திருவள்ளுவர். அவற்றின் வளர்ச்சியும், தேய்வும், உயர்ச்சியும், வீழ்ச்சியும் நோக்கினார். அவற்றிற்குரிய காரண காரியங்களை ஆராய்ந்தார். நன்மை தீமைகளைத் தெளிந்தார். உலகில் அரசுகள் யாவும் நிலைபெறத் தக்க உண்மைகளை எண்ணித் தமது திருக்குறளில் உரைக்கின்றார். முதலில் அரசுக்குத் தலைவனான மன்னனைப் பொறுத்த அளவில் அவனிடம் இருக்கவேண்டிய பண்புகளையும், செயல் வகை களையும் முறையாக உரைக்கின்றார்.

முடிசூடி நாடாளும் தலைவனைத் தமிழ் முன்னோர் அரசன், மன்னன், வேந்தன் என்று குறிப்பது வழக்கம். திருவள்ளுவரும் அரசருள் ஏறு, பண்புடை மன்னன், வேந்தர்க்கு இயல்பு என்றுதான் குறிக்கின்றார். ஆனால் மன்னவர் மாட்சி கூறும் இவ்வதிகாரத்துக்கு இறைமாட்சி என்று பெயர் குறிக்கின்றார். என்ன காரணம்? முறை செய்வதும் நாடு காவல் புரிவதும் மன்னவன் பணியாகும். அவற்றை சிறப்புறச் செய்தால் அவன் மக்கட்கு இறையாகின்றான். இதனை,

“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்”

என்று திருவள்ளுவர் கூறுகிறார். வீட்டுக்குத் தலைவன் வாழ்வாங்கு வாழ்வானாயின், அவன் தெய்வத்துள் வைக்கப்படுவான் என்றா ரல்லவா? அதுபோலவே நாட்டுக்குத் தலைவன் முறையும் காவலும் செம்மையாய்ச் செய்வானாயின், நாட்டு மக்கட்கு இறை என்று வைக்கப்படும் என்று கூறுகின்றார்.

முறை செய்தல், காப்பாற்றல் என்ற இரண்டினுள் முறை என்பது யாது? யார் மாட்டும் கண்ணோட்டம் இன்றி நடுநின்று உண்மையை ஓர்ந்து வேண்டுவதும் வேண்டா தேர்ந்து செய்வது தான் முறை என்று திருவள்ளுவரே பிறிதோர் இடத்தில் விளக்கி இருக்கிறார். நடு நின்று யார் மாட்டும் கண்ணோட்டம் இன்றி ஆராய்வதற்கு அறிவும், ஊக்கமும் , அஞ்சாமையும் உண்மை காணும் பொருட்டு ஈகைப் பண்பும் வேந்தர்க்கு வேண்டப்படு கின்றன. அதுபற்றியே,

“அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு”

என்று கூறுகின்றார்.

முறை செய்யும்போது, வேண்டுவதும் வேண்டாததும் தேர்ந்த பின், வேண்டுவதை செய்வதிலும், வேண்டாததை விலக்குவதிலும் கலக்கம் இல்லாமல் தெளிந்து செய்தற்குத் துணிவுடைமையும், செய்யுமிடத்துக் காலம் நீடிக்காமல் விரைந்து செய்யும் தன்மையும் இவைகளைக் குற்றமற நூல் முறை பிழையாமல் செய்தற்குக் கசடற்ற கல்வியும் வேண்டும். அதற்காகவே,

“தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு”

என்று கூறுகின்றார்.

முறை செய்தற்குரிய இம்மாட்சிகள் அரசன்பால் நிறைந்திருந் தாலும் முறை வேண்டியும் குறை வேண்டியும் வருகின்ற மக்களை, இனிது வரவேற்கும் நற்பண்பு உடையனாக வேண்டும். வறியவரும் வேண்டும் போது வந்து காண்பதற்கு எளியனாகவும், அவர்கள் தங்கள் முறைகளையும், குறைகளையும் ஒழுங்காகச் சொல்லும் திறமில்லாதவராயின், அவர்களைக் கடுஞ்சொல்லால் வெருட்டாமல், முக மலர்ந்து செவிசாய்த்துக் கேட்கும் செம்மையுடையனாக வேண்டும். இச் செவ்விய பண்பு இல்லையாயின் வேந்தனைப் பேய் என்று நாட்டவர் தூற்றுவர். அது நினைந்தே,

“காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்”

என்று கூறுகின்றார்.

நிலம் மீக்கூறுதலால் நிலத்தவர் புகழ்தல் இவ்வாறு முறை செய்தற்குரிய மாட்சிகளையுரைத்த திருவள்ளுவர், நாடு காவற்கு வேண்டும் மாண்புகளை உரைக்கின்றார். நாட்டின் அரசியல் அமைப்பு, படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என ஆறு கூறுபடுகிறது. நாட்டின் பாதுகாப்புக்கு வேண்டுவது படை; அதற்குரிய ஆள் தருவது குடி; படைக்கும் குடிக்கும் வன்மை தருவது கூழ், அதாவது பொருள்; இவற்றை முறையே இயக்குதற்கு ஏற்ற அறிவும் கருத்தும் நல்குவது அமைச்சு; இந்த நான்காலும் உண்டாவது தற்காப்பு; பிற நாடுகளின் துணையும் ஒரு காப்பாத லால் நட்பும், மலையும், காடும், ஆறும், கடலும் நாட்டுக்கு இயற்கைக் காப்பாகிய அரணும் நகரத்துக்குக் காப்பாகிய மதிலும், அகழியுமாகிய அரணும் என்ற இரண்டும் அடங்க அரணும் கண்டு,

“படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு”

என்று கூறுகின்றார்.

முதலாவதாகிய படையையும் குடிகளையும் ஆளுகின்ற வேந்தன்பால் அறம் பிறழாமையும் மறம் இழுக்காமையும், மனவுணர்வும் நன்கு அமைய வேண்டும். அறமாவது மனை வாழ்க்கையில் புகழ் விளைவிக்கும் நற்செயல்; மறமாவது போர் முதலிய புற வாழ்க்கையில் புகழ் விளைவிக்கும் ஆண்மைச் செயல்; மானமாவது மனைவாழ்விலும் புற வாழ்விலும் குற்றமும் பழியும் தோன்றுமாயின் உயிர் வாழாமை. இந்த அறவுணர்வும் மறப் பண்பும், மானமும் தலைவன்பால் அமையின் அவன்வழி நின்று பணி புரியும் படையும், குடியும், பிறவும் அறம் பிழையாமல், தன்மையறியாது அல்லது தோன்றுமாயின், அதனைப் பற்றறக் களைந்து, மறப்புகழ் பெற்ற மாண்புறும். அது பற்றியே,

“அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு”

என்று கூறுகின்றார்.

இங்கே வகுத்துரைத்த படையும் குடியும் நேராக ஆளப் படுவன. அமைச்சும் நட்பும் ஆட்சிக்குத் துணை. இவை இரண்டும் அரசுக்கு இன்றியமையாதவை. ஆயினும் பொருள் இல்லையாயின் இவை பயன்படா. இப்பொருளை விளைவிப்பவர் குடிகள். உழவாலும் தொழிலாலும் தான் பொருள் விளையும். இவை இரண்டுக்கும் அரசு பொருள் உதவியும், விளைவிப்போரை அன்புடை நன்மொழிகளால் ஊக்கியும், செங்கோன்மையால் அவர்களை நேர்மைவழியில் நிறுத்தியும் பகைவராலும் எதிர்பாராத இன்னல்களாலும் தளர்ந்த குடிகட்கு வேண்டுவன உதவியும் நல்வாழ்வு நிகழ்விக்கும் பண்பு மன்னவன்பால் மன்னுதல் வேண்டும். அதனைக் கருதியே திருவள்ளுவர்,

“கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி”

என்று எடுத்துரைக்கின்றார்.

இத்தகைய நன்மாட்சி ஒரு வேந்தனிடம் அமையுமாயின் ஏனை அரசரெல்லாம் அவன்வழி நின்று தாமும் புகழ் பெறுவர் என்று விளக்கவே, கொடை முதலிய நான்கும் உடையான் வேந்தர்க்கு ஒளியாம் என்று கூறுகின்றார்.

இத்தகைய கொடை, அளி முதலிய மாண்பினால் நாட்டில் பொருள் விளைவு மிகுதிப்படும். பொருட் பெருக்கம் மேலும் அப்பொருளைப் பெருக்குதற்கே உள்ளத்தை ஊக்குமாதலால், அந்நெறியில் நின்று பொருள் பெருகும் வழிமுறைகளைக் கண்டு அறிந்து அமைப்பது முதற்கண் செய்யப்பட வேண்டுவதாம். பின்னர் விளைவனவற்றை ஒருங்கு திரட்டுவதும், திரட்டியதை வீண்போகாமல் காப்பதும், காத்தவற்றை அரசியல் துறை பலவற் றிற்கும் வகுத்தலும் அரசின் கடனாகும். ஆதலால்,

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு”

என்று கூறுகின்றார்.

ஈட்டற்குச் செல்லும் உள்ளம், இயற்றலை நாடாது ஒழிவதும், காத்ததை வகுத்தலில் பிழைபடுவதும் இயல்பு. அதனால் அரசியலில் வல்லவர்க்கின்றி, இச்செயல், நலம் பரவாமல் ஒழிவது அறிந்து தக்கவாறே செய்யவல்லது எதுவோ, அதுவே நல்லரசு என்பாராய் திருவள்ளுவர் “வல்லது அரசு” என்று வற்புறுத்துகின்றார்.

இனி, இறைமைக்குரிய செயல் வகைகைள ஆய்ந்துரைக்கும், அமைச்சர் முதலிய அரசியல் அறிஞர்களோடு அவைக்கண் இருந்து ஆராய்வது அரசியல் அறமாதலால் அந்நிலையில் அரசன் பால் சில அருங் குணங்கள் அமைதல் வேண்டும். அரசியற் செயல் வகைகளில் குறையோ, குற்றமோ கண்டு எடுத்துரைக்கும்போது உரைப்பவர் உரைகளில் செவியும் நெஞ்சும் சுடத்தக்க வகையில் சொற்கள் வந்து விழும். சினம் உண்டாகக்கூடிய சிறு சொற்களும் பேசப்படும். அவற்றால் அறிவு அறை போகாமல் பொறுத்து ஆற்றும் பண்பும் வேந்தனுக்கு மிகவும் வேண்டற்பாலதாம். இல்லையாயின், அறிஞர் நீங்குவர்; அரசு அல்லற்படும். ஆதலால் தான் திருவள்ளுவர்,

“செவிகைப்பச் சொல்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு”

என்று கூறுகின்றார்.

இறுதியாக நண்பரது நட்பு, நாடு காவற்குச் சிறந்த ஆக்கம்; அதனை உணர்கின்ற அரசன், அவர்களைத் தன்னோடு பிரியாத வாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அஃது எங்ஙனம் எனில், அவர்கட்கு வேண்டுவதை அறிந்து ஈதல் வேண்டும். சில சமயங் களில் அது ஈகையோடு நின்று விடுவதுண்டு; ஆதலால் ஈவதை, இன்சொல்லும், இன்முகமும் கொண்டு செய்ய வேண்டும்; அன்றியும் அவரது நிலை இரங்கத் தக்கதாயின், மிகைபடத் தந்து அன்பால் அணைத்து அளிசெய்ய வேண்டும். இதனை,

“இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு”

என்று கூறுகின்றார்.

இப் பண்பும் சூழ்ச்சியும் வன்மையுடையார்க்கே அமைவது என்று குறிக்கவே, வல்லார்க்கு என்று உரைக்கின்றார்.

இதனால் நாடாளும் வேந்தன் முறை செய்தும், காப்பாற்றியும் மக்கட்கு இறையாகின்றான் என்றும் அவன் செய்தற்கமைத்த மாண்புகள் இவை என்றும், நாடு காத்தற்கமைந்த உறுப்புக்கள் படை முதலிய ஆறும் என்றும், அவை ஒவ்வொன்றையும் ஆளுதற் கமைந்த பண்பும் செயலும் இவையென்றும் நாம் அறிகின்றோம்.

கல்வி


கல்வியின் நோக்கம் திருவள்ளுவர் காலத்தில் அறிவு பெறு வதும், ஒழுக்கத்தைப் பெறுவதுமாக இருந்தது. இன்றைய கல்வி தொழில் நோக்கமும் வேலை தேடும் நோக்கமும் குறிக் கொண்டு நிற்கிறது. இதற்கு ஏற்ப கற்பிக்கும் முறையும் கற்பிக்கும் சாதனங் களும் மாறியிருக்கின்றன.

அரசியல் தொழில் இயக்கங்களும் கல்வி பயிலும் மாணவர் களிடையே புத்துணர்ச்சியை உண்டாக்கி அவர்கள் மனத்தை வேறு துறைகளில் மாற்றி உள்ளன. இந்நிலையில் கல்வி நெறியில் மிகப்பல கசடுகள் நிறைந்துள்ளன. அவற்றை அறவே நீக்குவது கல்வியாக இருக்கவேண்டும். கல்வி கற்கும் இளைஞர்கள், கற்கப்படும் நூல்களும், கற்பிக்கும் முறைகளும் காலந்தோறும் வேறுபடுகின்றன. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நூல்களும் 50 ஆண்டுகளுக்கு முன் தோன்றியனவும் இருக்கின்றன. இவை அவ்வக்காலச் சூழ்நிலைக்கும், சமுதாயத்தின் நோக்கத்துக்கும் ஏற்றவாறு அமைந்துள்ளன. காலச்சூழ்நிலை மாற்றத்தால் இக்காலத்தில் அக்கால வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிக்க நினைப்பது முறையாகாது. இக்காலக் கண்கொண்டு அவற்றிற்குப் பொருள் செய்து நடைமுறையில் அமையச் செய்வது வேண்டப்படுகிறது.

இறைபுரிந்து முறை செய்யும் வேந்தனுக்கு மாட்சி தருவன வற்றுள் ஒன்றாகக் கல்வியைக் கூறினராதலால் திருவள்ளுவர் இறைமாட்சியை அடுத்துக் கல்வி கேள்விகளை மூன்று அதிகாரங் களாக வகுத்துரைக்கின்றார்.

நாட்டின் நல்லரசுக்கு வேண்டிய படை, குடி, பொருள், அமைச்சு, நட்பு, அரண் என்ற ஆறனுள் பொருளை நடுவண் வைத்து, ஏனை ஐந்திற்கும் அதன் இன்றியமையாமையை உய்த்துணர வைத்தார் திருவள்ளுவர். “பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பதையும் வெளிப்படையாகப் பிறிதோரிடத்தில் விளம்பினார். அப்பொருள் ஒருவனுக்குப் பிறக்கும் போதே வருவதில்லை. அவனால் இடையிலே தேடப்படுவது; அது போல இடையிலே தேடிப் பெறுவதாகிய கல்வியைப் பொருளோடு ஒப்ப நிறுத்தி இரண்டையும் சீர்தூக்குகின்றார். செலவிட்ட இடத்துப் பொருள் குறையும். கல்வியோ பிறர்க்கு ஈயும்போது குறைபடலின்றிப் பெருகும். இந்த இயல்பைக் காண்கின்றார் திருவள்ளுவர்.

“கேடில் விழுச்செல்வம் கல்வி; ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை”

என்று எடுத்துரைக்கின்றார். மாடு என்றால் செல்வம்.

இங்ஙனம் கொடாமையும் பெருகும் சிறப்பும் உடைய கல்வி, மக்கட்கு இரு கண்கள் போல எண்ணும் எழுத்தும் என இயலு கின்றது. அது பற்றியே,

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு”

என்று கூறுகின்றார். வலக்கண், இடக்கண் என இரண்டாயினும் கண்கள் ஒன்றையே நோக்குவது போல, எண்ணும் எழுத்துமெனக் கல்வி இரண்டாயினும் நல்லறிவு என்ற ஒன்றையே நல்குகிறது என்பதற்காகவே இவ்விரண்டும் கண்ணென்ப என்று குறிக்கின்றார்.

அவ்வறிவு எவ்வாறு கல்வியால் எய்துகிறது? கல்வி ஒரு மணற்கேணி அதாவது கிணறு போல். கேணி தோண்டத் தோண்ட நீர் சுரப்பது போலக் கல்வியும் கற்கக் கற்க அறிவு விளங்கிப் போகும்.

“தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு”

என்று கூறுகிறார்.

ஒருவனிடத்தில் இருக்கும் பொருளைப் பெற வேண்டு மானால், அவனோடு அன்பாய்ப் பணிவாய், உரையாடிப் பெற வேண்டியிருக்கிறது. வீட்டில் இருப்பதை எடுத்துக் கொடுப்பதற்கே இத்தனை அன்பும், பணிவும் வேண்டும் என்றால், ஒருவன் உள்ளத்தில் இருக்கும் நுண்ணிய கருத்தைப் பெறுவதென்றால் புறநானூறு சொல்வதுபோல் உற்றுழியுதவியும், உறுபொருள் (மிக்க பொருள்) கொடுத்தும் - அதாவது அன்பு முகமும், பணிந்த நடையும் வணங்கிய சொல்லும் உடையனாய்க் கேட்டால்தான் ஆசிரியன் உள்ளம் உவந்து அந்த நுண்ணிய கருத்தை எடுத்து உரைப்பான்.

ஆனால் ஒன்று பொன்னும் பொருளும் போல இக்கல்வி, ஒருவன் தானே கண்டு எடுத்துக் கொள்ளத் தக்கதன்று. கற்றவர் ஒருவரையடைந்து கற்றால் வருவது. வேறு எவ்வகையாலும் பெற முடியாதது.அங்ஙனமாயின் அதனை எங்ஙனம் கற்பது எனின், இல்லாதவன் செல்வமுடையாரை அடைந்து வணங்கி நின்று விரும்பிய பொருளைப் பெறுகிறான். அது போல கல்வியுடை யவன் முன் அன்பும் பணிவும் உடையவனாய் நின்றால், அவன் மனம் உவந்து கல்வியை வழங்குவான். இவ்வுண்மை விளங்கவே,

“உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்”

என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

அன்பால் வணங்கிக் கற்பவன் உயர்வான்; அவ்வாறு வணங்கி வழிபடாதவன் கல்லாதவனாய்க் கீழ்மையடைவான். அதற்குத்தான் எக்கற்றுக் கல்லாதவர் கடையரே என்று குறித்துக் காட்டுகிறார். எக்கூறுதல், வணங்குதல்.

இவற்றைக் கேட்டதும், இவ்வண்ணமே கற்பேன் என்று எழுகின்றவனைப் பார்க்கிறார் வள்ளுவர்.

“கற்க கசடற கற்பவை; கற்றபின்
நிற்க அதற்குத் தக”

என்று கூறுகிறார்.

கற்பவற்றைக் கற்பதென்றால் கசடறக் கற்க வேண்டும். கற்றல் என்னும்போது கற்பவன், கற்பிப்பவன், கற்கப்படும் நூல், அக்கல்வி யால் பயன் அடையும் மக்கள் எனப் பல கூறுகள் உள்ளன. இவை எல்லாவற்றிலும் குற்றம் குறைகள் உண்டு. அவற்றைக் கசடு என்பர். இக்கசடு நீங்கி நிறைவும் தெளிவும் உண்டாகுமாறு கற்க வேண்டும் என்பதற்காகவே, கற்க கசடு அறக் கற்பவை என்று கூறுகிறார்.

இங்ஙனம் கல்வியைக் கற்றவரேயன்றி கல்லாதவரும் இவ் வுலகில் வாழத்தானே செய்கிறார்கள். வாழும் உயிர்க்குக் கல்வி இன்றியமையா என்பது ஏன்? எனில், மக்களும் உயிர் வாழ்கின்றனர்; விலங்குகளும் உயிர் வாழ்கின்றன. அது போலக் கற்றவர்களும் கல்லாதவர்களும் வாழ்க்கை நடத்துகிறார்கள். என்றாலும் விலங்கு களோடு ஒப்பாக மக்களை எண்ணுவதில்லை. ஏனெனில் விலங்கி னிடத்து மனவுணர்வு அதாவது பகுத்துணர்வு இல்லை. அது போலக் கற்றவனிடத்து விளங்கும் தெளிவுணர்வு கல்லாதவனிடத்து இல்லை; அதனால் கற்றவனோடும் கல்லாதவன் ஒப்பாக முடியாது. அதனால்,

“விலங்கொடு மக்கள் அனையர், இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்”

என்று கூறுகிறார்.

கற்றவர்க்கு இத் தெளிவும் விளக்கமும் எவ்வாறு உணர் கின்றன? எனின், அவர்கள் கற்பவை, உயிரறிவைத் தெளிவித்து விளங்கச் செய்வன என்று கூறுவாராய் இலங்குநூல் கற்றார் என்று உரைக்கின்றார்.

கல்லதவரும் ஒட்பம் உடையவராக, அதாவது தெளிவு பெற்றவர்களாக இருககிறார்களே என்றால், அவர் தெளிவு மிகவும் நன்றாக இருப்பினும் நிலையாக நில்லாது; அவர்களால் அறிவாராய்ச்சி நெறியில் நிலை நாட்ட முடியாது. அது கருதியே,

“கல்லாதான் ஒட்பம் கழியதன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்”

என்று திருவள்ளுவர் கூறுகிறார். நீங்கள் இவ்வாறு சொல்லுகிறீர்கள்; உலகில் கல்லாதவர் சிலர் தகைசான்ற சொல்லும் சிறப்பும் உடையவர் களாக உள்ளனரே எனின் கற்றவன் ஒருவன், சென்று கண்டு, அறிவு நெறியில் சொல்லாடுவானாயின், எனின், கல்லாதவன் கொண்டு உள்ள, தகைமை எல்லாம் தவிடு பொடியாய் விடும். அதனால்தான்,

“கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்”

என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

நம்முடைய கண், காது, மூக்கு, வாய், உடம்பு ஆகிய ஐந்தும் அறிவு பெறுதற்குக் கருவிகளாகும். ஆயினும், இவற்றுள் கண்ணும் செவியும் சிறப்புடையவை. தொல்காப்பியரும்,

“கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்
உணர் வுடை மாந்தர்”

என்று கூறுகிறார்.

கண்ணால் உலகியற் பொருள்களைக் கண்டும் அவற்றின் பண்பும் செயலும் உரைக்கும் நூல்களைப் படித்தும் அறிவு பெறுவது கல்வி. நம்மாற் காணமாட்டாத பொருள்களையும் நூல்களால் காட்டப்படாத நுட்பங்களையும், அறிந்தோர் சொல்லக் கேட்பது கேள்வி. கற்பவை கற்கும்போது காணப்படும் கசடுகள் கேள்வியால் தான் எளிதில் நீங்கும். அதனால்தான் கல்வியாகிய செல்வத்திலும் கேள்விச் செல்வம் சிறப்பு உடையது என்பாராய்,

“செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம்; அச்செல்வம்
செல்வத்துள் எல்லாந் தலை”

என்கிறார் திருவள்ளுவர்.

கல்வியிலும் கேள்வி சிறந்ததாயின், கல்லாதவர் இதனைப் பெறலாமோ? எனின், கல்விக்குத்தான் கேள்வி துணை; என்றா லும் கல்வியில்லாதவனும் கேள்வியறிவு பெறலாம்; அவனுக்குச் சமயத்தில் அவ்வறிவு துணை செய்யும் என்பாராய்,

“கற்றில னாயினும் கேட்க; அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை”

என்று உரைக்கின்றார். ஊன்றுகோல் துணை செய்யும் என்பதற்கு, ஊற்றாம் துணை என்கின்றார்.

கல்வியைத்தான் சாகும் வரை கற்க வேண்டும் என்கிறீர்கள்; கேள்வி எவ்வளவில் கேட்பது என்று கேட்கலாம். அதற்குத் திருவள்ளுவர் எவ்வளவு நல்லது கேட்கிறோமோ அவ்வளவும் நமக்கு அது பெருமையே தரும் என்று சொல்கிறார்.

“எனைத்தானும் நல்லவை கேட்க; அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்”

என்பது அவரது திருக்குறள்.

கற்றறிவுடையவர் கேள்வியறிவும் உடையவர் என்பதை எங்ஙனம் அறிவது எனின், அதனை அவருடைய சொல்லால் அறியலாம். எப்படி எனில் கல்வியும் கேள்வியும் உடையவர், ஒன்றைத் தவறாக உணர்ந்து கொண்டாலும் சொல்லும்போது பேதைமைப்படச் சொல்ல மாட்டார்கள். இதனை,

“பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்”

என்று இசைக்கின்றார்.

ஒருவன் கல்வி பெறாமல் கேள்வி மாத்திரம் உடையனாயின் அவனை எப்படி அறிவது எனில், அதனையும் அவன் வாயினால் அறியலாம் என்கிறார். நுணுக்கமான பொருள்களைக் கேட்டிருப் பானாயின், அவன் வாயில் வணக்கமும் தெளிவும் உடைய சொற் களே வரும் என்பாராய்,

“நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது”

என்று கூறுகிறார்.

கல்வியுமில்லை; கேள்வியும் இல்லை; இப்படி ஒருவன் இருந் தால் என்ன செய்வது என்று ஒருகேள்வி எழுகிறது. திருவள்ளுவர்க்கு ஓரளவு ஆத்திரம் வருகிறது. அவன் இருப்பதாலும் மக்கட்கு ஒருவகை நன்மையும் இல்லை; இல்லாமல் இறப்பதாலும் ஒருவகை நட்டமும் இல்லை என்கிறார்.

“செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்”

என்று வருந்துகிறார்.

இதனை அறிந்தே இக்கால அரசுகள் நாட்டில் கல்லாதவரே இல்லாமற் செய்வதே நோக்கமாகக் கொண்டு பெரும் பொருளைச் செலவிடுகின்றன. “ஞானம் உண்டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே” என்ற திருமந்திரம் நன்கு உருவாகி வருகிறது.

உயர்ந்த பண்பாடுகள் இளைஞரிடத்தே உருக்கொண்டு வருகின்றன.

அறிவுடைமை


கல்வி கேள்விகளால் மனிதனுடைய அறிவு கூர்மையும், விளக்கமும் பெறுகிறது. அந்த அறிவு நம்மிடத்தில் எங்கே இருக்கிறது? அந்த அறிவு மனித உயிரில் உணர்வு வடிவாய் உளது; ஆயினும் அதனிடத்தே இருளொன்று தங்கி, வருவதை முன்கூட்டி அறியாமல் மறைப்பதும் கண்டறிந்ததை நினைவில் நில்லாமல் மறப்பதும் செய்கிறது. அந்த மறைப்பையும் மறதியையும் நீக்கி, அறிவை ஒளிவிட்டு விளங்கச் செய்வது தான் கல்வி கேள்வியின் பயன். அதனால் கல்வி கேள்வியால் உண்டாகும் அறிவு செயற்கை என்றும், தாமே கற்பதும் கேட்பதும் செய்யும் அறிவை இயற்கை அறிவு என்றும் கூறுவர். இவ்விரண்டும் ஒன்று சேர்ந்ததுதான் உண்மையறிவு. அந்த அறிவை உடையவரையே அறிஞர் என்றும் அறிவுடையவர் என்றும் கூறுவர்.

அவர்களை எவ்வாறு அறியலாம் எனின் அதற்கு இரண்டு வழி கூறுகிறார். தமக்கு ஆனது இது, ஆகாதது இது என்று முன்கூட்டி அறிந்து தம்மைக் காத்துக் கொள்கிறவர் அறிவுடையார்; அறிய மாட்டாமல் இடப்படுகிறவர் அறிவில்லாதவர் என்று அறியலாம்.

“அறிவுடையார் ஆவது அறிவார்; அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.”

என்பது அவரது திருக்குறள்.

அடுத்தது அவர்கள் அஞ்சவேண்டியதற்கு அஞ்சுவார்கள். அறிவில்லாதவர் அஞ்சமாட்டார்கள். இதனை,

“அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்”

என்று கூறுகிறார்.

இப்படி வருவதை அறிவதற்கும் அஞ்சத் தகுவதை அஞ்சு வதற்கும் காரணம் அறிவு என்றால், அதன் இயல்பு யாது என்று அறிந்துகொள்ள வேண்டாமா? அதைத் திருவள்ளுவர் நமக்கு வடித்துக் கூறுவதைக் கேளுங்கள்.

நாம் பார்க்குமிடந்தோறும் நல்லதும், தீயதும் இன்பமும், துன்பமும் நிறைந்துள்ளன; நம்முடைய மனமோ கண்டவிடத் தெல்லாம் கண்ட பொருளெல்லாம் நாடும் இயல்புடையது. அதனைத் தன் போக்கில் விட்டால் இன்பத்தை விடத் துன்பம்தான் மிகுதியாய்க் கிடைக்கும். ஆகையால், கண்டபடி ஓடாமல், தீயதை விலக்கி நல்லதையே நாடும்படி மனத்தை அடக்கியாள்வது அறிவு.

“சென்ற இடத்தால் செலவிடா தீதுஓரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு”

என்று கூறுகிறார். அறிவுக்கு இந்த ஆற்றல் இருப்பதால்தான் உலகில் உயர்ந்த பண்புடைய நன்மக்கள் தோன்ற இடம் இருக்கிறது. அதனால்தான் இராமலிங்க வள்ளலார் “மனம் எனும் ஓர் பேய்க் குரங்கு மடப்பயலே” என்று கடிந்துரைக்கின்றார்.

அன்றியும் நம்மைச் சூழ்ந்துள்ள மக்களில் நமக்கு நண்பரும் உண்டு, பகைவரும் உண்டு, தீயவரும் உண்டு. இவ்வாறன்றிப் பொதுவானவரும் உண்டு. இவர்களோடு பேசும்போது, நல்லதும் சொல்லுவார்கள், தீயதும் சொல்லுவார்கள். அறிவுடையவரோ சொல்வார் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், யார் எதைச் சொன்னாலும் கேட்டு அவர் சொல்லின் மெய்ம்மை யைத்தான் காண்பார்கள். ஏனெனில், எப்பொழுதும் எப்பொருளி லும் உள்ள மெய்ம்மையைக் காண்பதுதான் அறிவுக்கு இயல்பு. அதனால்தான்,

“எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும், அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”

என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

இத்தகைய அறிவுடையவர் சொல்லாடுவதே ஒரு தனி முறையாகும். தான் சொல்லும் பொருள் எவ்வளவு அருமை வாய்ந்ததாக இருந்தாலும், கேட்பவர் எளிதாக அறிந்து கொள்ளத்தக்க சொற்களினால் உரைப்பார்கள். அதே சமயத்தில் மற்றவர் சொல்லக் கேட்கும் போது, அவர்களுடைய சொல்லைப் பார்க்காமல், சொல்லப்படும் பொருள் நலத்தையே நுணுகிக் காண்பார்கள். நுணுகிச் சொல்வதுதானே இயல்பு. அதுபற்றியே,

“எண்பொருள் வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு”

என்று திருவள்ளுவர் சொல்லுகிறார்.

அறிவுக்கு நுட்பமும் வளர்ச்சியும் விளக்கமும் தருவது உலகம். அது பற்றியே உயிர்க்கு உலகத்தின் தொடர்பு உண்டாகி யிருக்கிறது. ஆதலால் உலகம் எவ்வாறு இயங்குகிறதோ அவ்வாறு இயங்கித்தான் அறிவு வளர்ச்சியும் விளக்கமும் பெறுகிறது. அதை கருத்திற்கொண்டே,

“எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு”

என்று திருக்குறள் கூறுகிறது.

உலகமோ இன்பத்தில் மகிழ்ந்து மலர்வதும், துன்பத்தில் வருந்திச் சுருங்குவதும் இயல்பாகவுடையது; அறிவுடையவரும், அறிவில்லாதவரும் கலந்தது; ஒரு தன்மையின்றிக் காலந்தோறும் மாறும் இயல்புடையது; ஆகவே இவ்வுலகத்தினின்றும் நீங்கித் தனித்து ஒழுகுவது நல்லது என்று நினைப்பவர் உண்டு. அது கூடாது. மாறுவது உலகின் தன்மையாயினும் அறிவுக்கு விளக்கம் தருவதில் மாறுதல் கிடையாது. அறிவும் மேன்மேலும் விளக்கம் பெறும் இயல்பினதே அன்றி விரிவதும் சுருங்குவதுமாகிய மாறும் தன்மை உடையதல்ல…. ஆதலால் விளக்கம் தரும் உலகத்தை விடாது தழுவிச் செல்வதுதான் அறிவுடைமை. அதனால்தான்,

“உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு”

என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

இவ்வாறு உலகத்தோடு கலந்து உறைவதாலும், அதனைத் தழுவி நடப்பதாலும் உண்டாகும் அறிவு விளக்கம் என்ன பயனைச் செய்யும் எனில், அறிவில் கலந்து நின்று மறைக்கும் இருள் நீங்கும்; நிகழ்ச்சிகளின் காரணகாரியம் விளங்கிவிடும். வரப்போவதை முன்கூட்டியறியும் திறம் உண்டாகும். அப்போது நம்மைக் காத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றுத் துன்பம் இன்றி இருக்கலாம். இது பற்றித்தான் திருவள்ளுவர்,

“எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்”

என்று கூறுகிறார்.

வருவது தெரியாமல் துன்பம் வந்து தாக்குமானால் நமது உடம்பும், உள்ளமும் அதிர்ச்சியடைந்து நடுங்கும். வருவது முன்பே தெரியுமானால், மனதில் அதிர்ச்சியோ உடம்பில் நடுக்கமோ உண்டாகாது. அதனால் தான் இல்லை அதிரவருவதோர் நோய் என்று கூறுகிறார். இனி, நடந்ததை மறந்து குற்றப்படும் நிலைமை யும் உண்டு. அந்த நிலையை “அற்றம்” என்பர். ஒரு பொருளை மறந்து விட்டோம் எனில், ஒன்றை இருட்டறையில் வைத்து விட்டது போலாம். அதை மீள எடுப்பதற்கு விளக்கொளி கருவி யாவது போல, மறந்த பொருளை அறிவு கொண்டு சிந்திப்போ மாயின் அது நினைவிற்கு வந்துவிடுகிறது. அதனால் மறந்ததை நினைவில் கொணர்வதற்கு அறிவு சிறந்ததொரு கருவியாவதைக் காணலாம்.

இவ்வாறு கருவியாகவும், மனதை அடக்கி நன்னெறிப் படுத்துவதில் தலைமைப் பொருளாகவும், மேலே வருவதை முன்கூட்டித் தெரிவிப்பதால் ஒளிப்பொருளாகவும் உணர நிற்கும் அறிவு, அன்றாட வாழ்வில் குற்றங்கள் வந்து தாக்காதபடி தடுக்கும் அரணாகவும் இருக்கிறது. அதனைத் திருவள்ளுவர்,

“அறிவுஅற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்”

என்று கூறுகிறார்.

அரண் என்னும்போதே அது பகைவர் உட்புகுந்து அழிக்காத படி தடுப்பது குறித்து அமைக்கப்படுவது என்ற கருத்து நினைவில் எழுகிறது. பகைவருக்கும் அரண்களைத் தகர்த்து உட்புகுந்து அழிப்பதே நோக்கம். அறிவை அரண் என்போமாயின் அதனைத் தாக்கும் பகைவரும், உட்புகுந்து அழிக்கும் செயலும் யாவை என்ற கேள்வி எழும். அக்கேள்விக்கு விடை கூறுவது போலத் திருவள்ளுவர் உலகியலில் அரசர் அமைக்கும் அரண் போலப் பகைவர் தாக்கி உட்புகுந்து அழிக்க முடியாத அரண் இந்த அறிவு என்பதற்காகவே, “செறுவார்க்கும் உள் அழிக்கலாகா அரண்” என்று சொல்லுகிறார். எனவே அறிவு ஒருவனது வாழ்க்கைக்கு எவற்றாலும் அழிக்க முடியாத பாதுகாப்பு என்று அறிகின்றோம்.

அறிவு சிறந்த கருவியாக இருப்பதால் எல்லாப் பொருளையும், படைத்துக் கொள்ளும் தகுதியும், அரணாக இருப்பதால் படைத்துக் கொண்ட எல்லாவற்றையும் அழிவுறாமல் காத்துக் கொள்ளும் தகுதியும் அறிவுடையோர்க்கு அமைந்துவிடுகின்றன. அதனால் அவர்கள் எல்லாவற்றையும் உடைய செல்வராகின்றார். அறிவு இல்லாதவர் எல்லாம் உடையராயினும், ஆக்கிப் பெருக்கிக் கொள்ளும் திறமையும், அழிவதைக் காத்துக் கொள்ளும் வன்மையும் இன்றி விரைவில் கெட்டு ஒன்றும் இல்லாதவராய் விடுகிறார்கள். இதையே சுருக்கமாக,

“அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்”

என்று திருக்குறள் கூறியது.

எனவே, அறிவில்லாதவன் வறுமை எய்திக் கெடுவான் அறிவுடையவன் எல்லாம் பெற்று இன்பமாக வாழ்வான் என்று அறிகின்றோம்.

தன்குறை நீக்குதல்


அறிவுடைமை பற்றிப் பேசியபோது “அறிவு அற்றம் காக்கும் கருவி” என்று திருவள்ளுவர் சொன்னார். அற்றம் என்பது மறதி; அதுதான் நம் குற்றங்கள் எல்லாவற்றிற்கும் முதற்காரணம். அதனால் நமக்குப் பலருடைய வெறுப்பும் அறவழியாகப் பகைமையும் உண்டாகின்றன. குற்றம் செய்யாமல் இருக்க முடியுமா? குற்றமே உடையவரும் குணமே நிறைந்து வரும் உலகத்தில் இல்லை அல்லவா? சிறந்த அறிவுடையவரு ஓரொரு காலத்தில் குற்றம் செய்வ தில்லையா? என்று கேட்பவர் உண்டு. மனிதன் குற்றம் செய்யக் கூடியவன்தான். என்றாலும், அறிவு பெற்றவன் குற்றத்தை அறிந்து தன்னிடத்தில் உண்டாகாமல் காத்துக்கொள்ள வேண்டும் என்பதற் காகத்தான், அறிவுடைமையை உரைத்த திருவள்ளுவர் அடுத்த படியாகக் குற்றத்தைப்பற்றிப் பேசுகிறார்.

நமக்கு இன்பம் செய்பவரை நண்பர், அன்பர் என்றும், துன்பம் செய்பவரை வேண்டாதவர், பகைவர் என்றும் சொல்லுவது உலகியல். எனவே இன்பம் தருவது நட்பு என்றும், துன்பம் தருவது பகை என்றும் நூல்கள் கூறுகின்றன. குற்றம் துன்பம் பயப்பதால் அது நமக்குப் பகையாகிறது. ஆகவே நம்மிடமுள்ள குற்றம் குறைகளே நமக்குப் பகையாய்த் துன்பம் செய்கின்றது. எனவே, அவைகளை அறிந்து நம்மிடம் உண்டாகாமல் இல்லாமல் நீக்க வேண்டியது கடமையாகிறது. அதை வற்புறுத்துவதற்கே திருவள்ளுவர்,

“குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை”

என்று கூறுகிறார். முன்னே சொன்னபடி குற்றத்தைவிட நமக்குப் பகையாய்த் துன்பம் தருவது வேறே இல்லையாதலால், அதை நீக்குவதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, குற்றமே காக்க பொருளாக என்று கூறுகிறார்.

இங்ஙனம், நம்மிடம் உண்டாகாமல் காக்க வேண்டிய குற்றங்கள் யாவை? அவை, செருக்கு, சினம் சிறுமை இவறல், மாண்பிறந்த மானம், மாணா உவகை என ஆறாகும் என்று திருக்குறள் கூறுகிறது. இவற்றில் முற்படக் குறிக்கும் செருக்கு, சினம், சிறுமை என்ற மூன்றில் சிறுமை என்பது காமம்; அதாவது ஆசை. பொருள்மேலும், பெண்ணுக்கு ஆண்மேலும், ஆணுக்குப் பெண் மேலும் உண்டாகிற ஆசை. எத்தகைய பெரியவனாயினும் இந்த ஆசைவழிச் செல்வானாயின், பொது மக்கள் எதிரில் பெருமை குன்றிச் சிறுத்துப் போவதால், அதனை ஆசையென்றோ காமம் என்றோ கூறாமல் சிறுமை என்று கூறுகிறார். தன்பால் உள்ள செல்வத்தாலும் பிறந்த பிறப்பாலும், பெற்றுள்ள பதவியாலும் பலர் மதிக்கும் கல்வியாலும் ஒருவனுக்குச் செருக்கு என்னும் குற்றம் உண்டாகிறது. சினம் அதாவது கோபம் குற்றம் என்று எல்லாரும் அறிந்தது. இம்மூன்றும் ஒருவனுடைய வாழ்வில் தன்னையறியாமல் தோன்றுபவையாதலால் இவை முதலில் எடுத்துக் கூறப்படுகின்றன.

“செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து”

என்று திருவள்ளுவர் கூறுகிறார். செருக்கில்லாதவனை மக்கள் அனைவரும் நன்கு மதிப்பர்; சினமில்லாதவனை யாவரும் பரிந்து ஆதரிப்பர். ஆசை அற்றவனை எவரும் விரும்புவர். இதனால், செருக்கும், சினமும், ஆசையும் இல்லாதவர் செல்வம், மக்கள் ஆதரவு, புகழ் முதலிய நலங்களைப் பெருக அடைவர். அப் பெருக்கம் அவர்க்கேயன்றி அவரைச் சூழ்வுள்ள மக்களுக்கும் பெருமிதம் உண்டுபண்ணுவது உறுதி. அதனால், பெருக்கம் பெருமித நீர்த்து என்கிறார்.

இனி இச்செருக்கு முதலிய மூன்று குற்றங்களையும் அடுத்து, இவறல், பொய்யான மானம், பொல்லாத களிப்பு என மூன்று குற்றங்களைத் திருவள்ளுவர் கூறுகிறார். அவற்றுள், இவறல் என்பது கடுமையான பற்றுள்ளம்! அதாவது கடுஞ்சிக்கனம். பொய்யான மானம் என்பது தாழ்ந்து ஒழுக வேண்டிய தாய், தந்தை முன்னும் பிறந்தோர் சால்புடைய பெரியோர் முதலியோரிடத்திலும் தாழாமல் தலைநிமிர்ந்து நிற்பது. இதனால் அவருக்கு மாண்போ மதிப்போ உண்டாகாது; அதனால் மாண்பு இறந்த மானம் என்று திருவள்ளுவர் உரைக்கின்றார். தன்னைத் தவிர மற்றைய எல்லாரையும் இகழ்ந்து நகையாடிக் களிப்பது சிலரிடத்தே காணப்படும் குற்றம். அதைத் திருவள்ளுவர் மாணா உவகை என்று குறிப்பர். ஆக கடுஞ்சிக்கனம், பொய்யான மானம், பொல்லாத களிப்பு என்ற மூன்றையும் தொகுத்து,

“இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு”

என்று திருக்குறள் கூறுகிறது. முறை செய்வதும் காப்பாற்றுவதும் தொழிலாகவுடைய தலைவனிடம் இந்தக் குற்றங்கள் இருக்கு மாயின், மக்கள் நன்மதிப்பும் நம்பிக்கையும் இன்றி நீங்குவர்; அவனுடைய தலைமையும் போய்விடும். அதுபற்றியே இம் மூன்றும் “ஏதம் இறைக்கு” என்று திருவள்ளுவர் கூறுகின்றார். ஏதம் என்பது குற்றம் அல்லது தீங்கு என்று பொருள்.

பொய்யான மானம் பொல்லாத எக்களிப்பு என்பவைகளைக் காட்டிலும் கடுஞ்சிக்கனம் உற்ற நண்பரையும் நெருங்கின உறவின ரையும் அருகில் சேரவிடாது பிரித்துவிடும். கடுஞ்சிக்கனம் என்ற குணமுடையவர், வயிறார உண்ணமாட்டார். கட்டாயம் செய்ய வேண்டிய கடமைகளையும் செவ்வையாகச் செய்யார்; தங்களுக் கும், தங்கள் உடைமைக்கும் பாதுகாப்பான செயல்களையும் செய்து கொள்ள நினையார்; இக்குற்றத்தால், சில நாட்களில் காப்பாக இருக்கும் மக்களும் உறவினரும் போற்றுகின்ற நண்பரும் சுற்றமும் நீங்கிவிடுவதால், கடுஞ்சிக்கனமாகத் தேடி வைக்கிற செல்வம் நிலைபெறாமல் சீரழிந்து தொலைந்து போகும். அது கண்டே,

“செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்”

என்று திருவள்ளுவர் தெரிவிக்கின்றார்.

கடுஞ்சிக்கனமாக இருக்கும் இயல்பு ஒருவனுக்கு எப்படி உண்டாகிறது என்று திருவள்ளுவர் சிந்திக்கின்றார். தனக்கு என்ன துன்பம் வந்தாலும் தனக்காகக்கூடச் செலவு செய்யவாராத மனநிலை ஒருவனிடம் காணப்படுவதற்குக் காரணம், பொருள் தேடுங்கால் அவனுக்கு அதன்மேல் உண்டாகும் ஆசையும் அது வழியாக அப்பொருளை விட்டுப் பிரியமாட்டாத பற்றுமே ஆகும் என்று தெளிந்து,

“பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப்படுவ தொன்று அன்று”

என்று கூறுகின்றார்.

இவறன்மை எனப்படும் பற்றுள்ளம் அதாவது உலோபத்தனம் என்பது தனியான குற்றம். செருக்கு, சினம் முதலிய மற்றைய குற்றங்கள் செய்கிறவனுக்கு ஓரளவும் மற்றவர்களுக்கு ஓரளவும் வருத்தம் செய்யும். பற்றுள்ளம் என்னும் இந்தக் குற்றம் செய்பவனையே கெடுத்து அழித்துவிடுவதால், குற்ற வகைகள் எதிலும் அடங்குவ தில்லை. அதனால் குற்றங்கள் எற்றுள்ளும் எண்ணப்படுவதொன் றன்று என்று கூறுகிறார்.

மக்களிடம் அமைந்து வாழ்க்கையைத் துன்பத்து உள்ளாக்கும் இக்குற்றங்கள் எவ்வாறு கெடுக்கின்றன? இதனை எண்ணுகிற திருவள்ளுவர் ஓர் உண்மையைக் கண்டு கூறுகின்றார். “அறிவுடையார் ஆவது அறிவார்” என்றாரல்லவா? இக்குற்றங்கள் ஆவதை அறியும் அந்த அறிவை மறைத்து விடுகின்றன. அதனால், அவர்கள் வருவது முன் அறிந்து காக்கும் வாய்ப்பை இழந்துவிடுகிறார்கள். மலை போன்ற செல்வம் இருப்பினும் வருவதறிந்து காவாத குற்றம், சிறு தீயால் பெரிய வைக்கோல் போர் எரிந்து சாம்பலாவது போலக் கெட்டழிந்து போம் என்கிறார்.

இதுபற்றியே அறிவுடையவர்கள் தங்கள்பால் ஒரு சிறு குற்றம் தோன்றினாலும் அதனால் வரும் பழிபாவங்களுக்கு அஞ்சி, அதனை மிகவும் பெரிதாகக் கருதுகின்றனர். அதனை,

“தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்”

என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

அங்ஙனமாயின், இக்குற்றங்கள் நம்மிடத்தில் உண்டாகாமல் தடுப்பதற்கு திருவள்ளுவர் ஏதேனும் வழி சொல்லுகிறாரா? எனின், குற்றவியல்களைக் கண்டறிந்து சொல்லுபவர், அதைச் சொல்லாமல் இருப்பாரா?

அறிவுடையவருக்கு தம்மிடத்திலும், பிறரிடத்திலும் உள்ள குற்றங்கள் நன்றாகத் தெரியும். குற்றங்களைக் கண்டால் திருத்து வதற்குத்தான் மனம் ஓடும். பிறருடைய குற்றம் கண்டு அதனை நீக்கி முறை செய்வது அரசனுக்கும், தலைவர்களுக்கும் கடனாகும். ஆனால், பிறர் குற்றத்தைக் கண்டு நீக்க முயல்பவர் தம்மிடத்தில் அத்தகைய குற்றம் இல்லாதிருக்க வேண்டும். குற்றமுடையவன் பிறர் குற்றத்தை நீக்க முடியாது. அதனால் வேந்தன் முதலில் தன் குற்றம் கண்டு நீக்கிக் கொண்டு பிறர் குற்றம் காண்பானாயின், பின்பு அவனிடத்தில் ஒரு குற்றமும் உண்டாகாது. இதனை,

“தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு?”

என்று கூறுகிறார்.

இக்குற்றங்கள் எப்படி உண்டாகின்றன எனின், ஒவ்வொரு வனுக்கு தன்னை மற்றவனைவிடத் தாழ்வாக நினைப்பதில்லை. தன்னை உயர்வாகவே மதிப்பது இயற்கை. குற்றம் தோன்றுவதற்கு அது ஒரு வழி; அடுத்தபடியாக வினையே ஆடவர்க்கு உயிர் என்பர். அவ்வினைகளில் நன்மை விளைவதும் உண்டு; தீமை விளைவதும் உண்டு. “நன்றி விளைவும் தீதொடு வரும்” என்று நற்றிணையில் ஒரு பெண் கூறுகிறாள். ஆனால் வினைகளை செய்து புகழும் இன்பமும் காணும் பழக்கத்தால், தன்னை வல்லவனாக எண்ணும் மனநிலை தோன்றும்; எதையும் செய்யலாம் என்ற எழுச்சியும் உண்டாகும். அந்நிலையில் செய்யப்படும் வினையில் குற்றம் தோன்றி தீமை விளைவித்துவிடும்; அதனால்,

“வியவற்க எஞ்ஞான்றும் தன்னை; நயவற்க
நன்றி பயவா வினை”

என்று கூறுகிறார்.

பொருள்மேல் ஆசையும், காமமும், குற்றம் வருவதற்கு வழியாகும். இவையிரண்டும் மற்றவைபோல வேரோடு களைந் தெறியக் கூடியவை அல்ல; இவற்றை நுகர்ந்தே கழிக்க வேண்டும்; அதையும் பிறர் அறியாதபடி நுகர வேண்டும்; அது மிகவும் வல்லவர்க்குத்தான் முடியும். அவர்களை எத்தனை நுண்ணிய சூழ்ச்சி படைத்த பகைவராலும் ஒன்றும் செய்ய முடியாது. இதனை,

“காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்”

எனத் திருக்குறள் கூறுகிறது.

எத்தகைய பெரியவரும் தமது விருப்பத்தையும் காதலையும் எவ்வகையாலும் பிறர் அறியாமல் நுகர்வது என்பது அருமை என்பதற்காகவே அறியாமை உய்க்கிற்பின் என்று திருவள்ளுவர் உரைக்கின்றார்.

தகுந்த துணை


தனி மனிதனுடைய அறிவு ஒரு சுருங்கிய எல்லைக்குள் அடங்குவது. அன்றியும், அது, கல்வி, கேள்விகளின் அளவையும் வாழ்க்கைச் சூழ்நிலையின் தன்மையையும் சார்ந்திருப்பது. அவன் பரந்த உலகில் பல வேறுபட்ட மக்களிடையே வாழ வேண்டி யிருப்பதால் அதற்கு வேண்டிய அறிவும் பரந்த பண்புடையதாக வேண்டும். அப்பண்பு உண்டாவதற்கு அறிவும் ஆற்றலும் உடைய பெரியோர்களின் துணை இன்றியமை யாததாகும். வாணிகம் செய்யும் ஒருவனுக்கு முதல் வேண்டியிருப்பதுபோல, நன்கு வாழ விரும்புபவனுக்குப் பெரியோர்களின் துணைதான் முதலீடு. முதல் இல்லை யானால் வாணிகமும் இல்லை; ஊதியமும் இல்லை; அது போலப் பெரியோர்களின் துணையில்லாதவனுக்கு வாழ்வும் இல்லை;நிலைபேறும் இல்லையாம். அது விளங்கவே,

“முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்புஇல்லார்க்கு இல்லை நிலை”

என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.

எதனையும் தூண் போலத் தாங்குவதால் பெரியோர்களின் துணையை மதலையாம் சார்பு என்று குறிக்கின்றார்.

இத்தகைய பெரியோர்களின் இயல்பைத் தெரிந்தால்தான் அவர்களிடையே துணையின் சிறப்பை நாம் அறிய முடியும். இப்பெரியவர்கள் பலதிறமாக இருப்பர். அறம் பலவற்றையும் உணர்ந்து உலக வாழ்வில் தோய்ந்து முதிர்ந்து பண்பட்ட பெரியோர்களும் உண்டு. அவர்களுடைய அறிவின் திறத்தை இயல்பை அறிந்து அவரது நட்பைப் பெறுதற்கேற்ற நெறியைத் தேர்ந்து அவ்வழியில் அவரது துணையைப் பெற வேண்டும். அதனை,

“அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல்”

என்று தெரிவிக்கின்றார்.

இவர்களின் துணை அறிவு வடிவாய் இருப்பது; அதனால், அறிவுடையார் கேண்மை என்று குறிக்கின்றார்.

நமக்கு இடர் வந்தபோது தாங்கி அதனை நீக்கி, மேற் கொண்டு துன்பங்கள் வராதபடி முன்னறிந்து துணைபுரியும் பெரியோர்கள் சிலர். அவரது துணைசெயல் வடிவில் இருப்பது பற்றி, அதனை விரும்பிப் பெற வேண்டும். அதற்காகவே,

“உற்றநோய் நீக்கி உறாமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்”

என்று அறிவுறுத்துகின்றார்.

வேறு சிலர், நாம் நெறிமயங்கித் தவறு செய்யும் காலத்தில் செவி சுடத்தக்க சொற்களால் இடித்துரைக்கும் இயல்புடையவ ராவர். அவருடைய துணை ஒரு காலும் ஒரு கேடும் உண்டாகாமல் காக்கும் நிலைத்த துணையாகும். ஆவது பற்றியே அப்பெரிய வர்களை இடிக்கும் துணையென்றும், அவர்களின் துணை பெற்ற நன்மக்களை ஒருவராலும் கெடுக்க முடியாது என்றும் அறுதியிட்டு,

“இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்?”

என்று கிளந்துரைக்கின்றார்.

இங்ஙனம் மூத்த அறிவும், முன்னறிந்து காக்கும் தன்மையும், இடித்துரைக்கும் இயல்பும் வாய்ந்த பெரியோர்களின் துணையும், படைபொருள் ஆகியவற்றால் தானே பயன்படும். ஆதலால், பெரியோர் துணையை விடப் படை முதலியவற்றின் வலிமை தானே பெருந்துணை என்றொரு கேள்வி எழுகிறது படைவன்மை, பொருள், வன்மை ஆகிய வன்மைகளை ஆராய்ந்து நோக்கினால் இவ்வன்மைகள் எல்லாவற்றிலும் பெரியோர்களின் துணையே தலைசிறந்த வன்மையாகும். காலமும் கருவியும் இடமும் வாய்ந்த போதுதான் படை முதலியவற்றின் வன்மை செயற்பட்டுப் பயன் படும். அப்படைக்கு ஊக்கமும் பொருட்கு ஆக்கமும் நல்குவதே இப்பெரு மக்களின் துணை. ஆதலால் பெரியோர்களின் துணை போல வேந்தனுக்கு வன்மை தருவது வேறில்லை. அதனால்,

“தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை”

என்று கூறுகிறார்.

மேலும், நாம் வாழும் உலகமே பெரியோர்களின் வழியிலே செல்வது. “உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” என்ற பழமொழியே இதற்குச் சான்று. உலக நிகழ்ச்சிகளைக் கண்டு உதிர்காலத்தின் இயல்பை உணர்ந்து மக்களுக்கு வழிகாட்டிடுவதால், உலகம் அவர்களைக் கண் போலக் கருதி ஒழுகுகிறது. அதனால் உலகம் காக்கும் வேந்தன் அவர்களது நட்பின் நலத்தை அறிஞர்களோடு ஆராய்ந்து தெளிந்து தனக்குப் பிரியாப் பெருந் துணைவராகக் கொள்வது கடனாகும். அது பற்றியே,

“சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்”

என்று திருவள்ளுவர் வற்புறுத்துகிறார்.

நாட்டில் வாழும் மக்களில் பெரியோர்களின் துணையை எடுத்துக் கூறுகின்றவர் ஏனை மக்களும் உள்ளனரே அவர்களை ஏன் ஒதுக்குகிறார் என்றொரு வினா எழுகிறது. பெரியோர்க்கு மாறாக ஒரு கூட்டம் இயக்கத்தான் செய்கிறது. அதனைச் சிற்றினம் என்று கூறுவர்.

அதனைக் கண்டாலே பெரியோர் அஞ்சி நீங்குவர். ஏனெனில், ஒட்டுவார் ஒட்டி போல அருகில் நெருங்கினால் நம்மைப் பற்றிக் கொண்டு சுற்றத்தாராய்ச் சூழ்ந்து கொள்ளும். இது பற்றியே,

“சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்”

என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

சிற்றினமும் மக்களினம்தானே; அது சுற்றமாய்ச் சூழ்ந்து கொள்வதற்காகவா அதனை வெறுப்பது எனின், எது பெரியோர் இனம் போல நன்மை செய்யாமல் துன்பத்தையே உண்டு பண்ணு கிறது. நெஞ்சில் தீய நினைவையும், செயலில் தீய செயலும் தோற்றுவித்துக் கெடுக்கிறது. அது கண்டே,

“நல்லினத்தின் ஊங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்”

என்று கூறுகிறது.

மக்கள் உயிர்க்கு அறிவு, மனம் என்ற இரண்டும் சிறந்த உட்கருவிகள். நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் உள்ளவாறு கண்டுகொள்வது அறிவு. அறிவுக்கும் உடம்பிலுள்ள கண், காது முதலிய பொறிகளுக்கும் இடையில் நின்று அறிவு வழியிலும் பொறி வழியிலும் இயங்குவது மனம். அறிவு தன்னிலையில் தூய்மை யானது; ஆனால் எதனைச் சார்கிறதோ அதன் இயல்பை அடையும் தன்மை வாய்ந்தது. அது பற்றியே, சார்ந்ததன் வண்ணமாம் தன்மையுடையது அறிவு என்பர். இதனைத் திருவள்ளுவர்,

“நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு”

என்று கூறுகிறார்.

நீர் நிலத்திலே காணப்படுவது போல, மக்களும் தத்தம் இனத்திடையே காணப்படுகின்றனர். நீருக்குத் தன்னளவில் நிறமோ சுவையோ கிடையாது. ஆயினும் அது சார்ந்துள்ள நிலத்தின் நிறத்தையும், சுவையையும் அடையும். அதுபோல மக்கள் அறிவும் சார்ந்த இனத்தின் இயல்பால் பெருமையும், சிறுமையும் வருகிறது.

ஒருவனுடைய பேச்சிலும், செயலிலும் அவனுடைய அறிவின் இயல்பைக் காண்கிறோம். பேச்சுக்கும், செயலுக்கும் நேரிய கருவி மனம்; அதனால் ஒருவனது அறிவு அவன் மனத்தில் இருப்பது போலத் தோன்றும். ஆனால் நீரின் இயல்பை நிலம் மாற்றுவது போல ஒருவனுடைய அறிவு அவன் சார்ந்துள்ள இனத்தால் மாற்றம் அடைகிறது. இதனை,

“மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு”

என்று திருவள்ளுவர் தெளிவுபடுத்துகிறார்.

இதனால் அறிவு வெளிப்படுதற்கு மனம் இடமாகுமேயன்றி மனமே அறிவாவதில்லை. அறிவு தூயதானால் மனம் அதன்வழி நின்று தூய்மையுடன் இயங்கும்; பேச்சும் செய்கையும் தூய்மையாக - நல்லவையாக - இருக்கும். ஆகவே ஒருவனுடைய மனத் தூய்மைக்கும், செவியின் தூய்மைக்கும் பற்றுக்கோடு அறிவின் தூய்மை என்று அறிகிறோம். அறிவுக்குத் தூய்மை தருவது அது சார்ந்துள்ள இனம் என்பதை முன்பே கூறினார். ஆதலால்,

“மனம்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனம்தூய்மை தூவா வரும்”

என்று கூறுகிறார்.

மனம் அறிவின்வழி நிற்பதாயினும், பொறி புலன்களின்வழி நின்று உணர்வுகளைக் கொணர்ந்து ஊட்டி அறிவை வளர்க்கும் தனிச்சிறப்புடையது. அது பற்றியே திருவள்ளுவர் “மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி” என்று கூறுகிறார். ஆனால் மனம் பொறிக ளோடு கூடிச் செயல்படும் பொது அறிவு கலந்து கொண்டு தனக்குச் சார்பான இனத்தின் பெருமை சிறுமைகளைக் காட்டிவிடும். ஒருவன் அறிவுக்குப் பெரியோர் சார்பு இருக்குமானால், அவன் தக்கோன் என்று பாராட்டப்படுகிறான். சிற்றினத்தின் சார்புடைய னானால், மக்களால் கீழோனாகப் பழிக்கப்படுவான். அதுபற்றியே,

“மனத்தான்ஆம் மாந்தர்க் குணர்ச்சி, இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல்”

என்று கூறுகின்றார்.

எனினும், மனம் வழி நிற்பது போல, அறிவையடக்கித் தன்வழி நடக்கச் செய்யும் தன்மையும் மனத்துக்கு உண்டு என்றா லும், அறிவின் சார்பாகிய இனத்துக்குள்ள வலிமை மனத்துக்குக் கிடையாது. மனம் அறிவை நல்வழியில் செலுத்துமாயின், இனமும் அதற்கு ஏற்ப நலமுடையதாய் இருக்க வேண்டும்.

“மனநலம் நன்கு உடையாராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து”

என்கிறார்.
மனம் நல்லதாய்த் தன்னை இயக்கும் அறிவையும் தன்வழியில் நிற்கச் செய்வதாயின், சான்றாண்மை வந்து அமைந்துவிடும். அதனால்தான் மனநலம் மிக உடையவரைத் திருவள்ளுவர் சான்றோர் என்று சிறப்பிக்கின்றார்.

இத்தகைய மனநலமும், இனநலமும் ஒருங்கு பெறுவதுதான் மக்களுடைய நோக்கமாக இருக்கவேண்டும். மனநலம் இவ்வுலக வாழ்விற்கு வேண்டிய செல்வத்தை நல்கும்; இனநலம் எல்லாப் புகழையும் எய்துவிக்கும் என்பாராய்,

“மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்; இனநலம்
எல்லாப் புகழும் தரும்”

என்று கூறுகிறார்.

அதோடு நில்லாமல், மனநலம் உடையவர்க்கு நல்ல பேரும் புகழும் உண்டாகும்; இன நலத்தால் அவர்கள் செய்யும் செயல் அனைத்தும் நன்மையாகவே முடியும் என்று கூறுலுற்று,

“மனம்தூயார்க்கு எச்சம்நன் றாகும் இனம்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை”

என்று உரைக்கின்றார்.

செயல்முறை


உலகில் வாழ்கின்ற நாம் ஏதேனும் வேலை செய்து கொண்டே இருக்கிறோம். நினைப்பதும், பேசுவதும், செய்வதும் எல்லாம் வேலைதான். வேலை என்ற சொல்லை இலக்கண நூல்கள் வினை யென்று கூறும். சமயநூல்கள் குறிக்கும் வினையும் இந்த வேலை யைத் தான். சங்ககால இலக்கியங்களும், திருக்குறள் முதலிய அறநூல்களும் நாம் செய்யும் செயல்கள் யாவற்றையும் வினை யென்றே குறித்துள்ளன.

இந்த வினை காரணமாகத்தான் நாம் உலகில் பிறக்கிறோம். வினை செய்து வாழ்கிறோம். வினை செய்வதால்தான இறக்கின் றோம். நம் உடம்பு “வினையின் வந்தது வினைக்கு விளைவாயது” என்று மணிமேகலை கூறுவதும் இக்கருத்தை உட்கொண்டுதான்.

இப்போது உலகில் பெறுகின்ற இன்ப துன்பங்கட்குக் காரண மாய் நாம் முன்பு செய்த செயல்வகையாக உள்ளவற்றை வினை என்றும், வாழ்வதற்காக, வாழ்வில் பொருளுக்காகவும் புகழுக்காக வும் செய்கின்ற செயல்களை வேலை என்றும் வழங்குகிறோம்.

உலகில் மக்களையும் அவர்கள் செய்யும் வேலைகளையும் பார்த்தால் வேலை செய்யா ஆணோ, பெண்ணோ இல்லை. செய்யப்படும் வேலை எல்லாம் உற்று நோக்கினால், அவை யாவும் உண்ணும் உணவுக்கும், உடுக்கும் உடைக்கும், இருக்கும் இடத்துக் கும் நோய் வந்த போது மருந்துக்குமாகவே உள்ளன. வேலையால் வருகின்ற பயனை அதன் அளவை நோக்கி இவ்வேலைகள் பெரிய வேலை, சிறு வேலை என்று பேசப்படுகின்றனவே அன்றி வேறுபாடு இல்லை.

இவ்வாறு பார்க்கின் கோடிக்கணக்கில் வருவாய் தரும் வேலையும், பைசா கணக்கில் வருவாய் தரும் வேலையும் வேலை என்றுதான் ஆகிறது. ஆகவே நாடாளும் அரசனும் வேலை செய்கிறவன் தான்; அவன் அரண்மனையில் கூட்டிப் பெருக்கும் வேலைக்காரனும் வேலை செய்கிறவன்தான்.

அரசனுக்குரிய வேலையை முறை செய்தல், காப்பாற்றுதல் என்றும், இயற்றல், ஈட்டல், காத்தல், காத்தவற்றை வகுத்தல் என்றும் திருவள்ளுவரே கூறுகின்றார்.

இவ்வேலை ஒவ்வொன்றும் காலம் நோக்கியும், இடம் பற்றியும் செய்யத் தக்கதும், தகாததும் என இருவகைப்படுகின்றது. செய்யத்தக்கதைச் செய்தே தீரவேண்டும். செய்யாவிட்டால் துன்பம் உண்டாகும். செய்யுமிடத்துத் தவறான முறையில் செய்தா லும், செய்யத் தகாததைச் செய்தாலும் துன்பம் துன்பமேயாகும்.

இதுபற்றியே திருவள்ளுவர்,

“செய்தக்க அல்லதுசெயக் கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்”

என்று தெரிவிக்கிறார்.

இனி, ஒரு வேலை செய்யத்தக்கது என்று கண்டவுடனே செய்ய முற்படலாகாது. அதைப் பற்றி நன்கு சிந்தித்துச் செயலில் இறங்கவேண்டும். இறங்கின பிறகு அதற்கு வேண்டியவைகளை எண்ணிக் கொள்ளலாம் என்று சிந்திப்பதைவிட நினைப்பது தவறு. சோம்புகின்றவர்கள் உண்டு; அது குற்றம். அதனை,

“எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு”

என்று திருக்குறள் கூறுகிறது.

ஒரு வேலை செய்யத் தக்கது என்று பட்டபின் எண்ண வேண்டியவை யாவை என்ற கேள்வி எழுகிறது. ஒரு வேலையை எடுத்துக் கொண்டால் அதற்கு ஆகும் செலவு, அதனால் பெறப் படும் வரவு, செலவுபோக மிஞ்சும் ஊதியம் ஆகிய இவைகளை எண்ணிப் பார்க்க வேண்டும். உழைப்பவனுக்கு ஊதியமில்லை என்றால் அது பயனற்ற வேலையாய்விடும். அதற்காகவே,

“அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்”

என்று திருவள்ளுவர் சொல்லுகிறார்.

வேலையை மேற்கொண்டு தொடங்குதற்கு முன்பே அதற் காகும் செலவு வரவுகளை எங்ஙனம் எண்ணுவது என்று கேட்கலாம். அதுபோன்ற வேலைகளைச் செய்து பயன்கண்ட நண்பர்களைக் கலந்து ஆராய்தல் வேண்டும். ஆராய்ந்து செய்தால் எல்லாம் எளிதில் முடியும். முடியாதது ஒன்றும் இராது. இதனை,

“தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்”

என்று திருக்குறள் உரைக்கின்றது.

வேலையின் பல்வேறு பகுதிகளையும், நுட்பங்களையும் தெரிந்த உண்மையான நண்பர்களையும் சுற்றத்தாரையும் “தெரிந்த இனம்” என்று குறிக்கின்றார். அவர்களோடு கலந்து அவர்கள் கூறுவதைக் கேட்பதோடு தானும் உடனடியாக எண்ணிப் பார்க்க வேண்டும். அதற்காகத்தான் “தெரிந்த இனத்தொடு தேர்ந்து” என்பதோடு நில்லாமல் “எண்ணிச் செய்வார்க்கு” என்று குறட்பா கூறுகிறது.

ஒழுங்காய் வேலை செய்து இன்பமாக இருப்பவரைக் கண்டு மகிழ்வது இன்றைய மக்கள் சூழலில் பொதுவாகப் பெரும்பாலும் இல்லை. பொறாமையும், பகைமையும் கொண்டு குற்றம் குறை ஏற்படின் தூற்றுவதில்தான் இன்பம் காணப்படுகிறது.

ஆகையால் அரசனாயினும் வேலைக்காரனாயினும், தெரிந்த இனத்தாரோடு ஆராய்கின்றபோது, எடுத்துக்கொண்ட வேலைக்கு ஏற்ற காலம், கருவி, இடம் செலவு, வரவு முதலிய கூறுகளை வகைவகையாகக் கூறுசெய்து ஒவ்வொன்றையும் நன்றாக ஆராய்தல் வேண்டும். இல்லையானால், பகைவர் என்ற முட்செடியைப் பாத்தி கட்டி நீரூற்றி வளர்ப்பதுபோல ஆகும் என்று சொல்லுகிறார் திருவள்ளுவர்.

“வகைஅறச் சூழாது எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோர் ஆறு”

ஒழுங்குற வேலை செய்பவனுக்கு மானவுணர்வு மிகுந் திருக்கும், செய்யும் செயலில் எங்கே குற்றம் தோன்றி பிறர் இகழ்ச்சிக்கு இடமாய்விடுமோ என்று அஞ்சியவண்ணம் இருப்பர்; அதனால் அவர்கள் மேலே சொன்னபடி வகையற ஆராய்ந்து தெளியாத வேலைகளைத் தொடங்கவே மாட்டார்கள்.

ஒரு வேலை செய்யத் தக்கது என்று தெளியப் பட்டாலும், செய்பவர் தகுதிக்கும், நிலைக்கும் ஒத்ததாகவும், உலகம் நன்று என்று கொண்டு பாராட்டத் தக்கதாகவும் இருக்கவேண்டும். அதற்காகவே,

“எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும்; தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு”

என்று கூறுகிறார் வள்ளுவர்.

இனி மேற்கொண்ட வேலையின் கூறுகளையும் அவற்றின் இயல்புகளையும் தெளிவாக அறிந்திருந்தாலும் ஒவ்வொரு பகுதிக் கும் செயல்முறை வேறுபடும்; செய்பவரும் வேறு வேறாவர். ஆதலால், இவ்வேறுபாடுகட்கு ஏற்ப உரியவற்றை முறைப்படி செய்து வேலையைத் தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த ஏற்பாட்டை நேரிய வழியில் செய்யாவிடின், குற்றமும் குறையும், தோன்றி மிக்க வருத்தத்தை விளைவிக்கும். பின்பு எத்தனை பேர் வந்து தாங்கிச் செம்மை செய்தாலும் குறை குறையாகவே இருக்கும். இதற்காகவே,

“ஆற்றின் வருந்தா வருத்தம், பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்”

என்று திருக்குறள் கூறுகிறது.

இனி, மேற்கொண்ட வேலையின் ஒவ்வொரு பகுதிக்கும் நிலைக்கும் தக்க ஆட்கள் வேண்டும். அவ்வவ் வேலைகளைச் செய்து பயின்றவராயினும், தகுதியிலும், திறமையிலும் எல்லாரும் ஒரு தன்மையராக இருக்கமாட்டார்கள். ஒருவர்க்கொருவர் ஓரளவு மிக்கும் குறைந்தும் இருப்பர்; பண்பு செயல்களிலும் வேறுபடுவர். இவர் அனைவரையும் சமமாகக் கருதுவோமாயின், வேலையின் செயற்பாடு சிறப்பாக இல்லாமல் போய்விடும். அவரவரின் தகுதியும், திறமையும், பண்பாடும் தனித்தனி நன்கு கண்டு அவை கட்கு ஏற்ற வகையில் மதிப்பளித்துப் போற்ற வேண்டும்.

அதுதான் அவர்கள் மனதை வேலையை நேர்மை வழியில் செய்யுமாறு பிணிக்கவல்லதாகும். இதனைக் கருத்தில் கொள்ளாமல் எல்லார்க்கும் எத்தனை நலங்களைச் செய்தாலும் தவறுண்டாகும். இதுபற்றியே,

“நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை”

என்று திருவள்ளுவர் சுருக்கமாகக் காட்டித் தெரிவிக்கிறார். இதுதான் வேலை வாங்கும் மேலாளரிடம் இருக்கவேண்டிய மதிநுட்பம்.

இத்தகைய செயல் முறைகளில் தெளிந்த அறிவுடையார் என்று வேறு சிலர் தாம் செய்ய நினைக்கும் வேலைகளைப்பற்றி எளியன வாய், ஆய்ந்து வகுக்கும் திட்டப்படி கைகூடுவனவாகவும் மிக்க ஆக்கம் தருவனவாகவும் தோன்றும். தொடங்கி நடத்துங்கால் முதலையே விழுங்கி முன் நிற்பவர்களைப் பேதைகளாக்கி மற்றவர் இகழ்ந்து பேசும் அளவுக்கு இழிவையும் அவர்கட்கு உண்டாக்கு வதுண்டு; அத்தகைய வேலைகளை ஒருகாலும் தாமும் ஊக்கமோடு மேற்கொள்ள மாட்டார்கள். பிறரையும் செய்யுமாறு ஊக்கப்படுத்த மாட்டார்கள். அதுபற்றியே,

“ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்”

என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

முதலுக்குக் கேடில்லாமல், கால மாறுபாட்டால் ஊதியத்தின் அளவில் குறைவு தோன்றக் கண்டு சோர்வடையும்போது ஒரு முறைக்கு இருமுறை ஊக்கப்படுத்துவதுதான் அறிவுடையோர்க்குத் தகுதி. முதலுக்கே அழிவு தருவதாயின் அவ்வேலையைச் செய் வதற்கு அறிவுடையோர் தாமும் ஊக்கம் கொள்ள மாட்டார்; பிறரையும் ஊக்கமாட்டார். அதனால் தான், முதல் இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடையார் என்று மொழிகின்றார்.

தொழில் நுணுக்கம்


ஒரு நாட்டின் செல்வ வளத்துக்கு உழவும், தொழிலும் சிறந்த வருவாய்கள். நிலத்தில் பொருள் விளைவிப்பது உழவு; உழவுக்குரிய கருவிகளையும் விளையும் பயிர்க்கு வேண்டும் எரு வகைகளையும், உணவு, உடை, உறையுள், கல்வி, மருந்து, போக்குவரவு முதலியவற் றிற்கு வசதி தரும் கருவிகளையும் புதிய புதிய வகையில் செய்து தருவது தொழில். தனிக் குடும்ப அளவில் நில்லாது மக்களினம் முழுதும் பயன்படும் அளவில் உழவும், தொழிலும் பொருள்களைப் பெருத்த அளவில் படைத்துத் தரவேண்டியிருத்தலால், இத் தொழில்கள், செம்மையான முறையில் நிலைபெற அமைதற்குரியவா கின்றன. இவற்றின் அமைப்புக்கு அரசும் மக்களும் முதல்வராவர்.

ஆகவே, இத்தொழில் வகைகளைச் செய்யக் கருதுவோர், முதற்கண் தங்கள் பொருள் வலிமையையும், தொழிற்கு வேண்டும் செல்வ வலிமையையும், துணை செய்பவர் வலிமையையும், இவற்றைக் கெடுக்கக் கருதும் பகைவர் வலிமையையும் கண்டு சீர்தூக்கிச் செய்வது தலையாய கடன். இதனைத் திருவள்ளுவர்,

“வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்”

என்று கூறுகிறார். வினை என்பது தொழில்.

இங்ஙனம் வலியளவறிந்து தொழில் ஒன்றைச் செய்யத் தலைப்படுங்கால் அது தம் எல்லையில் இயலக்கூடியதா, அதற் கேற்ற அறிவு நிறைந்துளதா என்பதை ஆராய்வது அடுத்து நிற்கும் செயல். தொழிலின் இயல்பும் அது தமக்கு இயலக்கூடிய தன்மை யும் தெரிந்துகொள்வது மட்டும் போதாது; அதனை முறையே இயக்குதற்கேற்ற தொழிலறிவும், இனிது நடத்துதற்கேற்ற செயலறி வும் தம்மிடம் உண்டா என்று ஆராய்ந்து காணவேண்டும். கண்டு தெளிந்த பின் தொழிலின் கருத்தூன்றித் திண்மையோடு நிற்க வேண்டும். அதன் பெருக்கம் கண்டு மலைப்பதும், சுருக்கம் கண்டு சோர்வதும் இன்றி விடாது தொடர்ந்து செல்வதுதான் வெற்றி. இதுபற்றியே,

“ஒல்வது அறிவது அறிந்துஅதன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்”

என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

இங்ஙனம் மேற்கொண்டே தொழில் நன்கு நடைபெற்றுப் பயன் விளைவிக்குமிடத்து, உதவி நாடி வருபவர் உண்டு. ஒருவர்க் கொருவர் உதவி வாழ்வதுதான் வாழ்வு. உதவி செய்பவர் தமது அளவறிந்து அதற்கு ஒத்த நிலையில் பிறர்க்குப் பொருளை ஈதல் வேண்டும். அதுதான் பொருள் வலி குறையாமல் நின்று நிலவுதற்கு உரிய வழியாகும். இதனை எண்ணியே,

“ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி”

என்று கூறுகிறார்.

பொருள் இருப்பது ஒன்றையே நோக்கி அளவு நோக்காமல் ஒருவன் செலவும் உதவியும் செய்வானாயின், அப்பொருளும் இருப்பதுபோலத் தன்னைக்காட்டி முடிவில் இல்லையாய் வறுமையை எய்துவிக்கும். நேற்றுவரையிற் பெருஞ்செல்வராய்க் காட்சி அளித்தவர் இன்று வறியராய்த் துன்புறுதற்கு இதுவே காரணம். இதற்காகத்தான்,

“அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்”

என்று திருக்குறள் அறிவிக்கிறது.

இப்பொருளுக்கு வருவாய் தொழில்; அத்தொழில் காலத்தைச் சார்ந்தது. காலமோ எப்போதும் மாறிக் கொண்டே இருப்பது. தனக்குரிய காலம் வரும்போது தான் தொழிலும் வளம் பெறும். அதனால்தான் சில காலத்தில் நடக்கும் தொழில் வேறு காலங்களில் நடப்பதில்லை. விதைக்கும் தொழில் அறுவடைக் காலத்தில் நடவாது. மழைக் காலத்தில் நடப்பது வேனிற்காலத்தில் பயன்படாது. காலம் அறிந்து செய்யும் தொழில்தான், இடையறாமல் பொருளைத் தந்துகொண்டிருக்கும். அதுபற்றித்தான்,

“பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு.”

என்கிறது வள்ளுவம்.

செல்வ மகளான திரு, ஓரிடத்தும் நில்லாமல் நீங்கியவண்ணம் இருப்பாள்; அவளை நீங்காமல் பிணித்து ஓரிடத்தே நிறுத்தும் கயிறு காலமறிந்து செய்யும் தொழிலன்றி வேறில்லை. அதனை விளக்கவே திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு என்று கூறுகிறார்.

எதனையும் காலமறிந்து செய்யும் அறிஞர் ஒவ்வாக் காலத்தில் ஒன்றும் இல்லாதவர்போல ஒடுங்கியிருப்பர். காலம் வந்தவுடன், அவர் செயல்படுவது தெரியாது. பொருளைக் குவிப்பது தெரியாது. காலம் கழிவதற்குள் மேற்கொண்ட வேலையை முடித்து வெற்றி யோடு விளங்குவார்கள். அதனை மீன் வேட்டம் புரியும் கொக்கின் மேல் வைத்து,

“கொக்கொக்கக் கூம்பும் பருவத்து, மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து”

என்று திருவள்ளுவர் சொல்லுகிறார்.

அரிசியும் பருப்பும் உண்டானால் அடை மழையிலும் மணம் நடத்தலாம் என்பது பழமொழி. அதாவது ஆட்படையும் ஆற்றலும் இருந்தால் காலம் பார்க்க வேண்டியதில்லை என்று சிலர் கூறுவர். அவர்களுக்குக் காலத்தின் சிறப்புத் தெரியாது என்று சொல்லுகிறார் திருவள்ளுவர். கூகைகள் கூட்டமாய் வாழ்பவை; இரவில் அவற்றால் ஒன்றும் செய்ய முடியாது. அதைக் காட்டி,

“பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது”

என்று கூறுகிறார்.

பெரும்படை உடையராயினும், காக்கைக்குப் பகற்காலம் வேண்டும் என்று இதனால் விளக்குகின்றார். காலமல்லாக் காலத்தில், கடல்போன்ற படைகொண்டு சென்றாலும் வேந்தர் காக்கையின் கூட்டம் இரவில் கூகையால் கொல்லப்படுவதுபோல வெற்றி பெற மாட்டாமல் வீழ்வர் என்பது இக்குறட்பாவின் கருத்து.

ஆனால், காலம் பொருந்தாமை கண்டு ஒடுங்கியிருக்கும் போது மனதைச் செம்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறின்றி ஒடுங்கியிருக்கும் போது மனநிலையைக் கலக்கக் கூடிய எண்ணங்கள் எழுந்து பெருகிப் பெருங்கலக்கத்தை உண்டு பண்ணும். மேற்கொண்ட தொழில் சுருங்கி வலியிழந்து போன தாகவும் பொய் நினைவுகள் தோன்றி அலைக்கும். அவற்றிற் கெல்லாம் இடம் கொடுக்காமல் மேல் செய்ய வேண்டியவற்றைத் தெளிவாகச் சிந்தித்துக் காலமே நோக்கி மனத்தைத் திட்பமுடைய தாக நிறுத்த வேண்டும். அதுபற்றியே திருவள்ளுவர்,

“காலம் கருதி யிருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்”

என்று கூறுகிறார்.

ஞாலம் கருதுவதாவது, உலகில் உழைப்பால் உயர்ந்து நிலைத்த புகழ் நிறுவுவது.

தொழில் செய்வதற்கு இதுகாறும் சொல்லிய வலியும், காலமும் அறிந்தால் மாத்திரம் போதாது. அதனை நடத்துவதற்கு ஏற்ற இடம் அறிய வேண்டும். எத்தகைய தொழிலுக்கும் இடம்தான் ஆதாரம். தொழிலுக்கு முதனிலை கூற வந்த தொல்காப்பியர் உறுப்பாகிய தொழிலையும், அதனைச் செய்பவனையும் அதனால் செய்யப்படும் பொருளையும் கூறி அடுத்துத் தொழிலைச் செய்வதற்கு இன்றியமையாமை விளக்க நிலம் கருவி காலம் என்ற மூன்றையும் முறையே கூறினார். திருவள்ளுவரும் தொழிலுக்கு வேண்டிய வலியும், காலமும் தெளிந்துகொண்டாலும், இடங் கண்ட பின்பே தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

“தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க; முற்றும்
இடம்கண்ட பின்னல் லது”

என்று கூறுகிறார்.

அரசர்க்குரிய தொழில்களில் போர்த்தொழில் பெரிதாகை யால் அதற்குப் பகைவரை முற்றுகையிடும் இடம் கண்ட பின்பே, முன்னணியாக எத்தகைய செயலை யும் தொடங்க வேண்டும். அது நோக்கியே முற்றும் இடம் கண்ட பின்னலல்லது எவ்வினையும் தொடங்கற்க என்று சொல்லுகிறார்.

இவ்வண்ணம் இடம் கண்ட வேந்தன் மேற் கொண்ட போர்த் தொழிற்குரிய எல்லாக் கூறுகளையும் நன்கு எண்ணி அமைத்துக் கொண்டானாயின் போர் தொடங்குவது நல்லது.

அந்நிலையில் அவனுக்கு அஞ்சாமை என்ற ஒன்று தான் பெருந்துணை. பலவகை வன்மைகளும், காலமும் தக்கவாறு அமைந்த போதிலும் நெஞ்சில் அஞ்சும் இயல்புடையனானால் அவனுக்கு எளிதில் வெற்றி பெறக் கூடிய அருமையான இடம் கண்டு நிறுத்திய போதும் அது பயன்படாது. அதனால்,

“அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்”

என்று கூறுகிறார்.

போர் மேற்கொண்டு செல்லும் வேந்தனுக்கு போர் நிகழ்த் தற்கு அமைந்த இடம் சிறப்பாக அமைந்துவிடுமானால், பகைவர் படையினும் தன் படை சிறிதாயினும் வெற்றி உறுதியாம். அவ் விடத்தின் அருமைப்பாடு பெரும் படையுடையனானாலும் பகை மன்னனது ஊக்கத்தை அழித்துவிடும். இதனை,

“சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்”

என்று அறிவுறுத்துகிறார். போர் தொடுக்கும் வேந்தன் வேறு பல மன்னர்களை வென்று வீறு கொண்டவனாய் இருக்கலாம்; ஆயினும் சிறப்பில்லாத இடத்திற் சிக்கிக் கொள்வானாயின், மிக்க ஒரு சிற்றரசன் அவனை வென்று அழித்துவிடுவான். எங்ஙனம் எனில் வேலேந்திய வீரர் பலரைக் குத்திக் கொம்பில் கோத்து வரும் பெரிய யானை ஒன்று கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொள்ளுமானால், ஒரு சிறு குள்ளநரியும் அதனைக் கொன்றுவிடும் எனறு விளக்குகிறார்.

“கால்ஆழ் களரில் நரிபடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு”

என்பது திருக்குறள்.

இனி போர், செய்து வெற்றி பெறுவதற்கு இடம் ஒரு சிறந்த காரணமாயினும், அது பகைவர் நாட்டில் உள்ளதாயின், வென்றி காண்பது அரிதாகும். பகை மன்னன் வலிய அரண்களும் பிற சிறப்பும் இல்லாதவனாயினும் அவனது நாட்டுட் புகுந்து போர் தொடுப்பது கூடாது. அதனை வற்புறுத்தவே,

“சிறைநலனும் சீரும் இலர்எனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது”

என்று திருவள்ளுவர் உரைக்கின்றார்.

இதனை நீரில் வாழும் முதலையைக் காட்டி விளக்க முற்பட்டு, முதலை ஆழமான நீரில் இருக்குமாயின் பெரிய விலங்குகளையும் வென்று வீழ்த்திவிடும். அதுவே நீர் நிலையை விட்டு நிலத்தின் மேல் வந்து விடுமாயின் சிறு விலங்கும் அம் முதலையைக் கொன்றுவிடும்.

“நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்;புனலின்
நீங்கின் அதனைப் பிற”

என்று கூறுகிறார்.

தலைமைச் சிறப்பு


நாடாளும் அரசு பல்வேறு துறைகளை உடையது. அவை எல்லாவற்றையும் வேந்தன் ஒருவனே பார்ப்பது என்றால் முடியாது. ஆதலால் ஒவ்வொரு துறைக்கும் தக்க தலைவரைத் தேர்ந்து நிறுத்துவது முறை. அத்தலைவர்களைத் தேர்ந்தெடுப்பது ஓர் அரிய செயலாகும். ஒவ்வொரு தலைவரும் நாட்டு மக்களின் நலம் கருதி நடக்கும் அரசின் கருத்தை நெஞ்சில் அத் தகுதி ஒருவனுக்குக் குடிப்பிறப்பாலும் கல்வியாலும், சூழ்நிலையாலும் உண்டாகும். அவன் பிறந்த குடிக்கு ஏற்ப, குற்றமில்லாமல், பழிப்புக்கு அஞ்சி நாணும் தன்மையடையவனாக இருக்க வேண்டும். அதனை,

“குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் கட்டே தெளிவு”

என்கிறார் திருவள்ளுவர்.

பழிப்புண்டாகுமானால் அது புண் வடுப்போல எப்போதும் மாறாதாகையால், வடு என்று கூறுகிறார்.
நிரம்பக் கற்றிருக்கின்றான் என்பது கொண்டு ஒருவனுக்கு தலைமை தருதல் கூடாது; ஏனெனில் கற்ற வல்லவரிடத்தும் அறியாமைக் குற்றம் இல்லாமல் இருப்பதில்லை என்று கூறுகிறார்.

“அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு”

என்கிறது திருக்குறள்.

அறியாமை இங்கே வெளிறு என்று குறிக்கப்படுகிறது.

தலைமைக்குரிய அறிவுத் தகுதியில்லையாயினும் ஒருவனு டைய உறவினரும் சுற்றத்தாரும் உயர்நிலையில் அரசுக்கு வேண்டியவர் களாயிருப்பர். அந்தத் தொடர்பு பற்றி ஒருவனுக்குத் தலைமைப் பதவி அளிக்கப்படுவதுண்டு. அத் தலைவனிடம் தோன்றும் குற்றங்களாலும், குறைகளாலும், அவனைத் தலைவனாக்கிய பெரியோர்களுக்கும், அரசுக்கும் பேதைகள் என்ற பழிவந்து சேரும் என்கிறார் திருவள்ளுவர்.

“காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும்”

என்று கூறுகிறார்.

ஒருவனைத் தலைவனாகத் தேர்ந்து எடுப்பதாயின் அவனுடைய குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து காணவேண்டும். குணமே உருவாக அமைந்தவர் ஒருவரும் இல்லை. குற்றமே வடிவாக உள்ளவரும் உலகத்தில் இல்லை. இரண்டும் கலந்தவரே மக்கள். ஆகையால் குணமும் குற்றமும் நாட வேண்டியது முறை யாகும். அங்ஙனம் நாடியபோது குணம் மிகுதியாகவும் குற்றம் குறைவாகவும் இருந்தால் அவனைத் தேர்ந்துகொள்ள வேண்டும். குற்றம் மிகுதியாக உடையவனைத் தள்ள வேண்டும்.
இதனை,

“குணம் நாடிக் குறற்மும்நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்”

என்று திருக்குறள் உரைக்கின்றது.

இந்த முறையில் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதென்றால் மிகவும் கடினமாகவே இருக்கும். அதுபற்றியே தலைவர்களை ஆராயாமல் ஏற்படுத்தவும் கூடாது என்கிறது திருக்குறள். இன்ன துறைக்கு இத்தகைய தலைவர் வேண்டும் எனத் தேடுவது அருமை. மக்களில் தலைமைப் பண்புடையவர் பலர் உண்டு. முதலில் அவர்களைத் தேர்ந்து, அதன்பின் அவர்களுக்குத் தக்க துறை யாது எனத் தேர்ந்து அதற்குத் தலைவராக்க வேண்டும்.

“தேறற்க யாரையும் தேராது; தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்”

என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.

தேர்ந்தபின் எவ்வாறு தேறுவது எனின், அதற்கு அவர்கள் செய்துள்ள செயல்களே துணை புரியும். கட்டளைக் கல்லாவது உரைக்கப்படும் பொன்னின் மாற்றைக் காட்டுவது போல அவர் களுடைய செயல்களே அவரிடம் உள்ள பெருமைப் பண்பையும் சிறுமைத் தன்மையையும் காட்டி விடும் என்று சொல்லுகிறார். இதனை,

“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குத் தத்தம்
கருமமே கட்டளைக் கல்”

என்கிறார்.

மேலே சொல்லிய முறையில் தலைவர்களைத் தேர்ந்து கொள்ளும்போது, ஓர் எச்சரிக்கையையும் திருவள்ளுவர் தருகின் றார். நல்லறிவும், நற்செயலும் உடையவர் ஒருவரைக் கண்டதும் தலைமைக்குத் தக்கவர் என்ற எண்ணமுண்டாகும். அவரது வளர்ந்த சூழ்நிலை யாது? உற்றார் உறவினர் எத்தகையார் என நாடறிய வேண்டும். குடிச்சிறப்போ, உறவினர் தொடர்போ ஒன்றும் இல்லாதவரானால், அரசியல் தலைமைப் பதவிகட்குத் தக்கவரல்ல என்று விலக்கச் சொல்லுகிறார். ஒரு தொடர்பும் அற்றவர், வாழ்க்கையில் பற்றில்லாதவராவர்; மக்களின் நல்வாழ்க்கையை நாடிப் பணிபுரிவது அரசு. கருத்து முரண்படுவதால் அரசியல் தலைமைக்கு ஆகாதவரா கின்றார். இத்தகைய பற்றில்லாதவர் பழிபாவங்களுக்கு நாணவும் மாட்டார்களாம். இதனை,

“அற்றாரைத் தேறுதல் ஓம்புக; மற்றவர்
பற்றிலர், நாணார் பழி”

என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.

இவ்வகையில் தக்கவரைத் தேறியபின், அவர்களைத் தலைமை நிலையில் வைத்து ஆளும் திறமை ஒரு பெருஞ் செயலாகும். எவ்வளவு தெளிவாக ஆராய்ந்து தேர்ந்தெடுத்த போதிலும், பதவி பெற்றதும் மிகப் பலர் முன்னை நிலையிலிருந்து வேறாக மாறிவிடு கின்றார்கள். தேர்தல் நிகழும்போது பண்பும், பரிவும் தோன்ற நிற்பவர்கள் பதவியேற்றதும் வேறுபடுவதை உலகியலில் நாளும் காணலாம். அது கண்டே,

“எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்”

என்று கூறுகின்றார்.

பலரிடத்தில் இந்த மாறுதல் உண்டாவது ஏன் எனில், மேற் கொண்ட தொழிலின் தன்மைதான் காரணம் என்பதற்கே, வினை வகையால் வேறாகும் மாந்தர் என்று குறிக்கின்றார்.
இவ்வாறு வேறுபாடும், மாறுபாடும் கொள்ளாமல் செம்மை நிலையில் இருப்பவர் குணம் செயல்கள் யாவை எனின், நான்கு பண்புகளைத் திருக்குறள் எடுத்துக் கூறுகிறது.

“அன்புஅறிவு தேற்றம் அவாவின்மை நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.”

சிக்கலான நிலையிலும் தெளிந்த உள்ளம் உடையராவதற்குத் தேற்றமும் நேர்மை தவறாமல் செயல் புரிவதற்கு அவா இல்லாமை யும் வேண்டப்படுகின்றன. அதனால், தேற்றம் அவா இன்மை என்பவைகளை எடுத்து மொழிகின்றார்.

பதவிக்குரிய செயல் புரியும்போது, அவனுடைய மனம் எவ்வாறு இயங்குகிறது என்பதை ஆட்சியாளர் அறிய வேண்டும். செய்யும் செயலால் விளைவிது நன்மையாக இருக்க வேண்டும் என நினைப்பவனே அவ்வப் பதவிக்கும் தக்கவன்.

“நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்”

என்று கூறுகின்றார் திருவள்ளுவர்.

பதவியேற்பவன் அறிவு முற்றும், தான் பணிபுரியும் துறையால் நாடு வருவாய் பெருகி வளம் பெறுதற்கேற்ற செயல்முறைகளையே ஆராய்ந்த வண்ணம் இருக்க வேண்டும்.

“வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை”

என்று திருக்குறள் கூறுகின்றது.

வருவாயைப் பெருக்குவது நாட்டை வளப்படுத்துவதற்கே என்பது அரசியல் செலவைச் சுருக்கி ஊதியத்தைப் பெருக்குவது வாணிகத்தின் குறிக்கோள். சில வாணிகச் செல்வர் அரசியல் தலைமை ஏற்கும்போது நாடு வளம்படாமல் போவதற்கு இவ்வேறு பாடு அறியாமையே காரணம். அதனால்தான் வருவாய் மிகுவித்து வளம்படுத்தலையும் அதற்கு நாட்டின் நலங்களை ஆராய்வதையும் இங்கே எடுத்து வற்புறுத்துகிறார்.

செல்வத்தாலும் சுற்றம் நிறைந்த சூழ்நிலையாலும் சிறந்துள் ளான் என்பது கொண்டு ஒருவனைத் தலைமை தாங்கிப் பணிபுரியச் செய்வது கூடாது. வருவாய்க்குரிய வழி முறைகளை அறிந்து, இடைநிற்கும் தடைகளைத் தாங்கி செயற்படும் ஆற்றலுடை யவனே தலைவனாதல் வேண்டும்.

“அறிந்துஆற்றிச் செய்கிற்பார்க்கு அல்லால் வினைதான்
சிறந்தான்என்று ஏவற்பாற் றன்று”

என்று அறிவிக்கின்றார் திருவள்ளுவர்.

இங்கே தலைமை ஏற்றுச் செய்பவன் என்று சொல்லாமல், செய்கிற்பான் அதாவது செய்யும் ஆற்றலுடையவன் என்று கூறுவது ஏன் என்று கேட்கலாம். செய்தற்குரிய செயலின் இயல்பையும், அதற்குரிய காலத்தையும், நேர்நின்று செய்பவன் திறமையையும் எண்ணிச் செய்யவேண்டும். அதற்கு ஏற்ற ஆற்றல் இன்றியமை யாதது. அதனை விளக்குவதற்காகவே,

“செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்”

என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

இவ்வாறு தக்கோர் தலைமையில் அரசின் துறை பலவும் நன்றாக இயங்கினும், நாடாளும் வேந்தன் நாள் தவறாமல் மேற்பார்வை செய்தல் வேண்டும். ஏனெனில் பணிபுரிவோர் நேர்மை தவறுவாராயின் நாடு ஊழல்களும், கொடுமைகளும் மலிந்து கெடும். இதனை நினைந்தே,

“நாடோறும் நாடுக மன்னன்; வினைசெய்வான்
கோடாமை கோடாது உலகு”

என்று கூறுகிறார்.

நாடோறும் இவ்வாறு மேற்பார்வை செய்வதால் சிலவகைச் செயல்களுக்குத் தலைமை தாங்குவோர் பொருந்தாதொழிவதும், வேறு சிலர் பொருந்துவதும் காணப்படும். பலருடைய திறமை களும் தெரிந்து கொள்வதற்கு இது பயன்படுகிறது. அரசின் ஆட்சிமுறை, தலைவர்களின் தகுதி கண்டு ஏற்ற பணியும், பொறுப் பும் தந்து செயல்படச் செய்வதில்தான் சிறப்படையும், அதுபற்றி,

“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல்”

என்று திருக்குறள் கூறுகிறது.

இவ்வகையில் செயல் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் போது, செயல் அளவுக்கு ஒவ்வொருவர்க்கும் தன் உரிமை இருக்க வேண்டும். செயல்படும்போது ஒவ்வொரு நிலைமையிலும் ஏவின செய்யும் அடிமைபோல மேலவரைக் கேட்டுக் கேட்டுச் செய்வ தாயின், மேற்கொண்ட செயலும் முற்றுப்பெறாது; கருதிய பயனும் கைகூடாது. இதுபற்றியே,

“வினைக்குரிமை நாடிய பின்றை, அவனை
அதற்குரிய னாகச் செயல்”

என்கிறார் வள்ளுவர்.

இத்தகைய உரிமையோடு செயல் புரிபவர்களில் சிலர் ஒரு செயலை, வேலையை மேற்கொண்டதும், ஊன் உறக்கம் இன்றி அதன்கண் மூழ்கிக் கிடப்பர்; இரவும் பகலும் அதனையே எண்ணு வதும், பேசுவதும் ஆக இருப்பர். அவனுடைய ஊக்கமிகுதி கண்டு பாராட்டி ஓய்வின்றி உழைப்பதால் வரும் உடல்நலக் குறைவை அறிவித்து, செய்வினை சீர்பெற நடத்துவதுதான் தலைவர்களின் தலைமைக்குச் சிறப்பு. அது காணும்போது வேறு வகையாக நினைக்கும் தலைவர்கள் சிலர் உண்டு. இவ்வேலையில் இவன் இவ்வாறு அழுந்திக் கிடப்பதால் ஏதோ தனக்கென ஒரு பயன் பெறுகிறான் போலும் என்று ஐயுறுவர்; சிலர் மனம் பொறாமல் இகழ்வர். அவர்களால் மேற்கொண்ட வேலை இனிது நிறைவுறாது; பெருங்கேடுதான் விளையும். இதையும் திருவள்ளுவர் காண்கின்றார்.

“வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு”

என்று வருந்திக் கூறுகின்றார்.

சுற்றமும் பணிவும்


அரசியல் தலைமைப் பணிக்குரியவர்களைத் தேர்ந்து சென்ற அத்தியாயத்தில் கொள்ளும் திறமும் அவர்களைச் செயல் முறையில் வைத்தாளும் இயல்பும் பற்றித் திருவள்ளுவர் உரைத்தது கண்டோம்.

பல்வேறு துறைகளின் தலைவர் வேந்தனைச் சூழ இருப் பினும், தனி நிலையில் அவனுக்கு உறவினரும் அறிவுடைய நண்பரும் உண்டு. அவர்கள் அவனுடைய உடலோடும், உயிரோடும் அன்பால் பிணிப்பூண்டவர், அதனால் சுற்றம் எனப்படுகின்றார்கள்.

ஒருவனது தனி வாழ்வில், அவனைப் பிறர் வந்து சார்தற்குப் பற்றாக உள்ளவை அவனின் வேறாகவுள்ள செல்வமும் நிலையு மாகும். அவை அவனிடத்தில் நிலையாக இருப்பதில்லை. ஆதலால், அவை தொலைந்த வழி நீங்குவோர் சுற்றமாக எண்ணப்படுவ தில்லை. அதனை வேறுபடுத்திக் காட்டவே,

“பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள”

என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.

நில்லாது நீங்கும் செல்வமும் சிறப்பும் நிலைக்குமாறு அறிவும், செயலும் அவற்றிற்கு உடன் வேண்டிய உதவியும் செய்பவர் சுற்றத்தார். அவர்களால் ஒருவனுக்கு உண்டாவன ஆக்கமே. அதனை,

“விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்”

என்று கூறுகிறார்.

சுற்றத்தார் விளைவிக்கும் நலங்கள் பலவகையிற் கிளைப்பதால், அவைகளை அருப்பறா ஆக்கம் என்று வள்ளுவர் உரைக்கின்றார்.

செல்வம் பெற்றவிடத்து அதனைப் பேணிக் காப்பதற்குப் பிறர் துணை வேண்டும். துணையில்லையாயின் செல்வமே, உடையவனைக் கொன்றுவிடும். துணைவகையில் அன்புடைய சுற்றத்தாரைவிட உலகில் வேறுயாரும் இல்லை. ஆதலால் அச்சுற்றத் தார் எப்போதும் சூழ இருக்கும் நிலையும், அதற்கு ஏற்ப ஒழுகும் திறமையும் செல்வமுடையவனுக்கு மிகவும் வேண்டப்படுகின்றன. அதை வற்புறுத்தவே,

“சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்”

என்று சொல்கிறார்.

இனி, சுற்றத்தார் தன்னை நிழற்போற் சுற்றிச் சூழ்ந்திருக்கச் செய்வது எப்படி? எனின் அவர்க்கு வேண்டுவன அறிந்து கொடுப்பன ஒன்று; சொற்களைப் பேசி மகிழ்விப்பது ஒன்று. இவைகளை,

“கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தாற் சுற்றப் படும்”

என்று கூறுகிறார்.

இனிமையான சொல்லைச் சொல்வது போதாது. வேண்டு வது கொடுத்தால்தான் சுற்றம் துணை செய்யும் என்பது விளங்கவே, கொடுத்தலும், இன்சொல்லும் எடுத்து மொழிகின்றார்.

இவ்வாறு சுற்றம் சூழ வாழ்பவர் குறையாத நலம் பல உடையராவர் என்பதை ஒரு எடுத்துக்காட்டால் விளக்குகிறார். காக்கைகளில் ஒன்று ஏதேனும் இரை கிடைக்குமாயின் தான் தனித்து உண்பதில்லை. தன் இனமான காக்கைகளைக் கூவி அழைத்து உடன் இருந்து உண்ணும்; அந்த இயல்புடைய செல்வர்களுக்கே ஆக்கம் மேன்மேலும் உண்டாகும் என்பாராய்,

“காக்கை கரவா கரைந்துண்ணும்; ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள”

என்று கூறுகிறார்.

இனி இச் சுற்றத்தார் நீங்காமல் எப்போதும் சூழ்ந்திருக்க வேண்டுமே என்றால், அதற்கு வழி கொடுப்பதை மிகுதியாகக் கொடுப்பதும், அவர்களிடம் தவறு உண்டானாலும் சினம் கொள் ளாமல் பொறுத்துத் தழுவிச் செல்வதும் வேண்டும்.

“பெருங்கொடையான் பேணான் வெகுளி, அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்”

என்று மொழிகின்றார். மருங்கு என்பது சுற்றம்.

இச் சுற்றத்தாரின் உறவினரின் பேறாய் அறிவும் ஆற்றலும் கொண்ட சான்றோர் சுற்றம் மிகவும் சிறந்ததாகும். அவர்களோடு அளவளாவுவது எப்போதும் வேண்டியதொன்று. அரசன் “ஏரி நிறைந்தனைய செல்வனாக” இருக்கலாம்; அளவளாவுவது அந்த ஏரியின் கரையை வலிமைப்படுத்துவதாகும். இல்லையானால், கரையில்லாமல் ஏரியைக் குளத்தை நீரால் நிறைக்க முயன்றால் நீரனைத்தும் நில்லாது போய்விடுவதுபோல் எய்தும் செல்வ மெல்லாம் இல்லாமல் கெட்டொழியும். இதனை,

“அளவளா வில்லாதான் வாழ்க்கை, குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று”

என்று கூறுகிறார். குளவளா என்பது குளம் அல்லது ஏரி; கோடு என்பது கரை.

இச்சான்றோர் சுற்றம் ஏனைய உறவினர் போல்வதன்று. கொடுத்தலும் இன்சொல்லும் மட்டும் இச்சான்றோர் சுற்றத்தை ஈர்க்கவோ, கட்டிப் பிடிக்கவோ போதாது. சுற்றத்தார் என்ற வகையில் பொதுப்படி நோக்காமல் அவரவர் சிறப்பறிந்து அதற் கேற்ப ஒழுகவேண்டும். சான்றோருள் பலர் அச்சிறப்புக்கென்றே உயிர் வாழ்பவர். இதனை,

“பொதுநோக்கான் வேந்தன், வரிசையா நோக்கின்,
அதுநோக்கி வாழ்வார் பலர்”

என்று கூறுகிறார்.

“பொது நோக்கு ஒழிமதி புலவர்மாட்டே” என்று சங்கச் சான்றோரும் கூறுவர்.

மேலும், சுற்றத்தாரைத் தழுவி ஒழுகும்போது சிலர் வேறு பட்டு நீங்கிவிடுவர். நீங்கினால் வேந்தனது வன்மையும், செல்வமும் குறைதற்கு வழி உண்டாகும். அதனால் நீங்கினதற்குக் காரணம் யாது என்று ஆராய்ந்து அறிந்து அதற்கு ஒத்தது செய்து பிரிந்தவரைச் சேர்த்துப் பிணித்துக்கொள்ள வேண்டும். பிரிந்தவர் தாமாகவே வந்தாலும், காரணத்தை நன்கறிந்து ஏற்பதுதான் முறை என்பர்.

“உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்”

என்பர்.

இவ்வாறு உறவினர், உயர்ந்த சான்றோர், உண்மை நண்பர் ஆகிய சுற்றம் என்றும் நீக்காதபடி பிணித்து ஒழுகினாலும், சிலர் பிரிந்து போவதும் உண்டென்றால், அதற்குள்ள காரணங்களில் வேந்தனுடைய மனநிலையும் ஒன்று. அரசனும் மனிதனாகையால் அவனுக்கும், மறதியும் சோர்வும் ஆகாதவையே. இம்மறதி சோர்வுகளை ஒரு சொல்லில் அடக்கிப் பொச்சாப்பு என்கிறார் திருவள்ளுவர்.

பொச்சாப்பு எப்பொழுது தோன்றும் எனில், மகிழ்ச்சியும், கிளர்ச்சியும் தோன்றி ஒருவனை உவகைக் கடலில் அழுத்தும்போது இப்பொச்சாப்பு என்ற குற்றம் தோன்றுகிறது. அதனால் விளைகிற தீமை அளவிறந்த சினத்தினால் உண்டாவதைவிடப் பெரிது என்று சொல்லுகிறார்.

“இறந்த வெகுளியின் தீதே, சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு”

என்பது திருக்குறள்.

இப் பொச்சாப்பு, உள்ளத்தில் நிலவுகிறபோது அறிவு மழுங்கி விடும். அதனால் வருவதை முன் அறிந்து காக்கும் திறம் இழந்து விடுகிறான். அதனால் பின்னே துன்பம் வந்து தாக்கும்போது பெரிதும் வருந்துகின்றான். இதனை,

“முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்ஊறு இரங்கி விடும்”

என்று கூறுகிறார்.

முன்னறிந்து காத்துக் கொள்ளாமை ஒருபுறம் இருக்க, எந்த எந்தச் செயல்களை நல்லவை என்று சான்றோர் புகழ்கின்றார்களோ அச் செயல்களை இகழ்ந்து செய்யாது ஒழிகின்றான். அதனால் பொச்சாப்புடையவன் இவ்வொரு பிறப்போடு நில்லாமல் எழுபிறப் பும் துன்பத்துக்குள்ளாகின்றான் என்று திருவள்ளுவர் வருந்துகிறார்.

“புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்”

சோர்வும், மறதியும் இன்றி யாரிடத்தும் தெளிந்த மனதுடன் எப்போதும் இருக்கின்ற தன்மை ஒருவனிடத்தில் தவறாமல் அமைந்துவிடுமாயின் அதற்கு நிகரான நல்லியல்பு இல்லை என்று கண்ட திருவள்ளுவர்,

“இழுக்காமை யார்மாட்டும் என்றும், வழுக்காமை
வாயின் அஃதுஒப்பது இல்”

என்று கூறுகிறார்.

ஒருவனுக்கு வறுமை வந்துவிடுமாயின், அது அவனுடைய அறிவையே கெடுத்து விடுகிறது. அது போலப் பொச்சாப்புடை யவர்க்குப் புகழ்பெறும் தன்மை இல்லாதொழியும் என்று கூறுகிறார் வள்ளுவர்.
“பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுவுலகத்
தெப்பால்நூ லோர்க்கும் துணிவு”

என்று உரைக்கின்றார்.

மறதி என்ற இப்பொச்சாப்பு ஒருவனிடம் உண்டாகாதபடி அவ்வப்போது ஒவ்வொன்றையும் நினைவு கூர்ந்து செய்வானாயின், முடியாது என்று சொல்லக்கூடிய செயல் ஒன்றுமே இல்லையாம் என்று கூறுவாராய்,

“அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்”

என்று கூறுகிறார். நினைப்பும், மறதியும், மனத்தில் நிகழ்வதால் அதனைப் பொச்சாவாக் கருவி என்று புகழ்கின்றார்.

மனதில் கருதிய கருத்துக்களை மறவாமல், மறதிக்கும் சோர்வுக்கும் இடம் கொடாமல், நினைத்த வண்ணம் இருக்க வேண்டும். நினைந்து கொண்டே இருப்பவன் நினைத்ததை நினைத்தபடியே முடிப்பான்; பயனும் நினைந்த அளவே எளிதில் வந்து சேரும் என்று கூறுகிறார்.

“உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்
உள்ளியது உள்ளப் பெறின்”

எவ்வளவு விழிப்பாகவும், சோர்வு படாமலும் இருந்தாலும் மறதி புகுந்து விடுகிறதே என்று கேட்டால், எப்பொழுது என்று கேட்கிறார். சோர்வில்லாமல் மகிழ்ச்சியோடு இருக்கும்போதே மறதி வந்துவிடுகிறதே என்று விடை வருகிறது. மகிழ்ச்சி தோன்றும் போது அறிவு மயங்கும்; அந்நிலையில், இத்தகைய மகிழ்ச்சிக் காலத்தில் தான் செய்ய வேண்டியதை இகழ்ந்து கெட்டவர்களை நினைக்க வேண்டும். சோர்வு வரும்போது சோர்வினால் அழிந்தவரை நினைக்க வேண்டும். அப்படிச் செய்தால் மறதியும் சோர்வுமாகிய பொச்சாப்பு தலை காட்டாது, நீயும் புகழ் பெறுவாய் என்று அறிவுறுத்துகிறார்.

“இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக, தாம்தம்
மகிழ்ச்சியில் மைந்துறும் போழ்து”

என்பது அத் திருக்குறள்.

நீதிமுறை


நாடாளும் வேந்தன் மறதியும் சோர்வுமாகிய பொச்சாப்பு என்னும் குற்றம் கல்லாதவனாயின் அவனது ஆட்சியில் உண்டாகும் நன்மைகள் பல. அவற்றில் நீதிமுறை தலைசிறந்ததாகும். உலகில் வாழும் உயிர்வகை அனைத்தும் மழையை எதிர்நோக்கும். ஆனால் மனவுணர்வுடைய மக்களினம் மழைக்குக் காரணம் ஆட்சி புரியும் மன்னனது நீதிமுறை என்று அறிந்து அதையே நோக்கி வாழ்கிறது. இது பற்றியே.

“வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்,
கோல்நோக்கி வாழும் குடி”

என்று கூறுகிறார்.

மக்களினம் குடும்பம் குடும்பமாக வாழ்வது. குடும்பம் என்பது கணவன், மனைவி என்ற இருவர் சேர்ந்தது; இதைக் குடி என்று கூறுவர். அதனால் தான் மக்கள் என்று கூறாமல் குடி என்று குறிக்கின்றார். குடும்ப வாழ்வுக்கு நீதியும், முறையும், பாதுகாப்பும் இனறியமையாதவை. அதனால் மன்னவன் செய்யும் நீதிமுறையை மக்கள் நோக்குகின்றார்கள்.

நீதிமுறை என்பது மன்னவனால் எங்ஙனம் செய்யப்படுகிறது? மக்களிடம் குணமும், குற்றமும் கலந்திருப்பதால் மன்னவன் நடுவுநிலையுடையவனாக வேண்டும். வேண்டியவர், வேண்டாதவர், நண்பர், பகைவர் செல்வர், வறியவர், கற்றவர், கல்லாதவர், பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடின்றி யாரையும் ஒப்பக் கருதி நன்மதிப்பும், இரக்கமும் கொண்டு யார்பக்கமும் சாயாமல் நடு நிற்பது இறை எனப்படும். இறை புரிந்து உண்மையை ஓர்ந்து உணர்வது நீதி வழங்குதற்கு அடிப்படைக் குற்றம் எனக் கண்ட போது, தக்க முறையில் தண்டிப்பது நீதி வழங்குவதாகும்.
இதை,

“ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை”

என்று திருக்குறள் கூறுகிறது. இதை செங்கோன்மை என்று நூல்கள் குறிக்கும்.

இவ்வாறு மன்னவன் மேற்கொள்ளும் இறைமைச் செயல் தான் நாட்டுமக்களின் நல்வாழ்வுக்குச் சிறந்த பாதுகாப்பாகிறது.

இந்த மன்னவனுக்குப் பாதுகாப்பு யாது எனின், மக்களுக்கு நேர்மை கெடாமல் அவன் வழங்கும் நீதியேயாகும். ஆதலால்தான்,

“இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்”

என்று திருவள்ளுவர் செப்புகின்றார்.

உலக நாடுகள் எல்லாவற்றிற்கும் இது பொதுவுண்மை. ஆதலால் வையகம் எல்லாம் இறை காக்கும் என்று குறிக்கின்றார்.

இறைபுரிந்து முறை செய்வதைத்தான் செங்கோல் செலுத்துதல் என்று கூறுவர். இதனைச் செய்யுங்கால் வேந்தன் குடிகளின் வேறு பட்டவனாய்த் தனிமகனாய் இருத்தல் கூடாது. அரசு இருப்பதே குடிகளுக்காக ஆதலால், எதனையும் அவன் குடிகளைத் தழுவியே செய்தல் வேண்டும். அப்போதுதான் குடிகள் அவன்பால் அன்பு கொண்டு அவனைச் சூழ்ந்து நின்று வாழ்வார்கள்.

“குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு”

என்று கூறுகிறார்.

இடைக் காலத்தவர், நாட்டு மக்களினின்றும் வேந்தனைப் பிரித்து வேறுபடுத்தி தனியினமாக அமைத்தனர்; அதனால் குடிதழுவி இயங்க வேண்டிய அரசு முறை பிறழ்ந்தது; மன்னர்கள் மறைந்தனர். மக்களாட்சி மலர்ந்தது.

எல்லா மக்களையும் அன்புடன் தழுவிச் செல்வது வேந்தர்கள் நிலைபெறுவதற்குக் காரணமாயின், குற்றம் செய்தவர்களை வேந்தன் சிறை செய்து வருத்துவதும், கொல்லுவதும் முறையாகுமா என்று கேட்கலாம். உணவுக்கென நெற்பயிரை வளர்க்கிறோம். அதனிடையே களை தோன்றுவது போல, இன்பம் பெறுவதே நோக்கமாக நடத்தப்படும் மக்கள் வாழ்வில் குற்றம் செய்யும் சிலர் களைபோலத் தோன்றுகின்றனர். அவர்களுக்குக் கொலைத் தண்டனை அளிப்பது களை எடுப்பது போல்வதாம். அதுகுறித்தே,

“கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்”

என்று கூறுகிறார். சிறை செய்வது ஏனெனின் குற்றவாளிகள் தாம் செய்த குற்றத்தை உணர்ந்து திருந்துவதற்காகும்.

மக்களினத்தில் ஒதுக்கப்படும் வறுமையில் கிடந்து வருந்தும் குடிகளில் குற்றப் பண்புமிகுந்து கொடியவர் தோன்றுவதுபோல, மக்களிடையே வேடுக உயர்த்தப்பட்டுச் செல்வக் களிப்பில் மகிழும் வேந்தர் குடியில் கொடியவர் தோன்றுவர். அவர் அரசு புரிவா ராயின் கொடுங்கோன்மை தலைவிரித்தாடும். மக்களாட்சியிலும் நேர்மையறிவில்லாதார் பெரும்பாலராயின் நாடு துன்பத்துக் குள்ளாகும்.

நீதிமுறை பிறழ்ந்து நல்லவர்களைக் கலந்து ஆராயாமல் வேந்தனது அரசு இயங்குமானால், நாட்டில் குடிகளின் தொகை குறையும்; பொருள் வளமும் சுருங்கிவிடும்.

“கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு”

என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

செங்கோன்மையின்றிச் சான்றோரது துணையும் இல்லாத போது, ஆள்வலியும் பொருள்வலியும் தேய்ந்து அரசு கவிழ்ந்து விடும்; அரசன் நிலையின்றிக் கொலையுண்டு மடிந்து போவான். அதனால்தான்,

“மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை; அஃது இன்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி”

என்று கூறுகிறார்.

செங்கோல் செலுத்தும் அரசன், கொடுத்தலும் அருள்புரிவதும், குடிகளைத் தழுவி ஒழுகுவதும் இயல்பாகவுடையவனாவன். ஆதலால் அவனுக்கு ஆள் வலியும், படைவலியும், துணைவலியும் மிகுந்து விடுவதால் அவனுக்குக் கேடு செய்யும் செயல்களோ, பகைவர்களோ தோன்றுதற்கு இடமில்லையாம். அவன் புகழும் உலகமுழுதும் பரவி ஒளி செய்யும். அரசின்பால் கொடுங் கோன்மை யும் அரசனிடம் கொடுமைப் பண்பும் இருக்குமானால் சிறிது காலத்திற்குள்ளே நாட்டில் அகப் பகையும், புறப்பகையும் தோன்றி அரசனை ஒழித்துவிடும். அதனால்தான் மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை என்று திருக்குறள் கூறுகிறது. முன்பே கொடை யாளி செங்கோல் குடியோம்பல் என்ற நான்கும் உடையான் வேந்தர்க்கு ஒளியாம் என்று கூறினாராதலால் இங்கே ஒளிமன்னா வாம் என்கிறார்.

அரசு கொடுமையுடையதாயின் ஏழை எளியவர் தான் துன்பப்படுவார்கள். செல்வர்கள் தங்கள் செல்வத்தால் தம்மைக் காத்துக் கொள்வார்கள் அல்லவா? அங்ஙனம் இருக்க கொடுங்கோல் வேந்தன் ஆட்சியில் நாட்டவர் அனைவரும் நாடோறும் துன்புற்றுத் தேய்ந்து கெடுவர் என்பது எங்ஙனம்? என்று கேட்கலாம். எளியவர் துன்பத்திலே ஆழ்ந்து கிடப்பதால் அவர்களுக்கு அரசின் கொடுமை தெரியாது. செல்வர்களுக்குத் துன்பம் மிகுதியாக இருக்கும். அந்த அரசில் முறையோ, பாதுகாப்போ இல்லாமையால் அரசேயன்றி வலியுள்ளவர் பலரும் செல்வர்களின் செல்வத்தைப் பல வகையில் துன்புறுத்திப் பறித்துக் கொள்வர். இரவும் பகலும், அச்சமும் அவலமும் செல்வர்களை அலைத்த வண்ணம் இருக்கும். அது பற்றியே,

“இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்”

என்று கூறுகிறார். வறுமையால் எளிமையுற்றவரின் துன்பத்தை விடச் செல்வர்களுக்குச் செல்வத்தால் உண்டாகும் துன்பம் பெரிதாகும் என்பதை விளக்குவதற்காக, இன்மையின் இன்னாது உடைமை என்று திருக்குறள் கூறுகிறது.

கொடுங்கோல் மன்னன் குடிகளிடத்தில் வரி வாங்குவதே தனிமுறை, வழிப்பறி செய்யும் கள்வர், கையில் வாளும், வேலும் காட்டி உள்ள பொருளைக் கொடுக்கிறாயா? கொல்லட்டுமா? என்று கேட்பதுபோலத் தான் கொடுங்கோலரசும் குடிகளை வேலும், வாளும் கொண்டு அச்சுறுத்திப் பொருள் பறிக்கும். இதனை,

“வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலோடு நின்றான் இரவு”

என்று திருவள்ளுவர் தெரிவிக்கின்றார்.

இத்தகைய அரசில் மக்கள் என்ன வருமா என்ற அச்சத் தாலும் பொறுக்கமாட்டாத துன்பத்தாலும் கண்ணீர் சொறிந்த வண்ணம் இருப்பர். ஏழை அழுத கண்ணீர் சும்மா விடுமா? கொடுங்கோல் அரசின் வாழ்வும் கொடுமை செய்பவர் செல்வமும் நெடுநாள் இருக்காது என்று ஆறுதல் கூறுகிறார் திருவள்ளுவர்.

“அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை”

என்பது அவரது அருளுரை.

செங்கோல் வேந்தன் நாட்டிலும் மக்களுக்கு முறை செய்யும் போது குற்றத்துக்குத் தண்டனை உண்டல்லவா? தண்டனை என்றால் அச்சந்தானே என்று கேட்கலாம். செய்யப்பட்ட குற்றத் தைத் தக்க முறையில் தேர்ந்து நீதி நெறியில் ஆராய்ந்து, மீளவும் அத்தகைய குற்றம் செய்யாதபடி உலகியலுக்கு ஒத்த அளவில் ஒறுப்பது செங்கோல் அரசின் செயல். அதனால் குற்றம் செய்பவன் தன் குற்றத்தை உணர்ந்து தண்டனையை அச்சமின்றி ஏற்றுக் கொள்ளுகிறான். இதனை விளக்குதற்கே,

“தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து”

என்று கூறுகிறார்.

தண்டனை அளிக்கும்போது அச்சுறுத்துவது போலக் காட்டிக் குற்றவாளியின் அறிவு கலங்காதபடி மென்மை குன்றாமல் ஒறுப்பர், நல்லரசர். அதனால் நாட்டில் நலம் பலவும் பெருகும் என்பர். இதனை,

“கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்”

என்று கூறுகின்றார்.

செங்கோல் செலுத்தும் வேந்தன் வந்து காண்பதற்கு எளிய வனாகவும், கடுஞ்சொல் இல்லாமல் இனிமையாகப் பேசும் இயல் பினனாகவும் இருப்பதால், அவனைக் காண்பது தெய்வத்தைக் காண்பதுபோல மக்கள் கருதி மகிழ்வர். கொடுங்கோல் மன்னனைக் காண்பதே அரிது. காண நேரின், முகம் கறுத்து, ‘ஏன்தான் இவனைப் பார்த்தோமோ?’ என்று மக்கள் வருத்தத்தோடு பேயைக் கண்டவர் போலத் துன்பப்படுவர் என்பது விளங்கத் திருக்குறள்,

“அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்ன துடைத்து”

என்று கேட்கின்றது.

இங்ஙனம், கண்டார்க்கு அச்சமும், வாழ்வார்க்குத் துன்பமும் செய்யும் வேந்தனுக்கு எல்லாரும் பகையாவர்; அதனால் காலமும் இடமும் வாய்க்கும்போது அவனைக் கட்டாயம் கொன்றுவிடுவர்; இது யாவரும் அறிந்தது. அதனால்,

“வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்”

என்று திருவள்ளுவர் உரைக்கின்றார்.

மேலும், அவனைச் சூழ்ந்து நல்லோர் ஒருவரும் இரார்; கல்லாக் கீழ்மக்களே அவனைச் சுற்றியிருப்பர். அவர்களுக்கு வருவதும் தெரியாது. கேடு வந்தால் காத்துக்கொள்ளவும் தெரியாது. அவன் தன் சுற்றத்துடன் ஒருங்கே அழிவான். அவ்வுண்மை விளங்கவே வெங்கோலன் ஒருவந்தம் ஒல்லை கெடும் என்று ஓதுகின்றார். அத்தகைய வேந்தன் இருப்பது நிலத்துக்கே சுமை என்று நல்லோர் கருதுதலால் அவன் கெட்டழிவதற்கு ஒருவரும் மனம் இரங்கார்.

இரக்கம்


மக்களினம் எக்காலத்தும், எவ்விடத்தும் தம்மில் கூடி வாழும் இயல்புடையது. அதற்குக் காரணம் அவர்களை அறியாமலே ஒருவகைத் தொடர்பு அவர்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. இத் தொடர்பு சில விலங்குகளிடத்தும் பறவைகளிடத்தும் எறும்பு முதலிய சிற்றுயிர்களிடத்தும் உண்டு என்றாலும், மக்களிடத்திற் போல வெளிப்படையாய் விளங்குவதில்லை. தம்மவரையும் தம்மினும் தாழ்ந்தவரையும் கண்டால் மனம் நெகிழ்ந்து மதிப்பும், பரிவும், இரக்கமுமாக மக்களிடையே வெளிப்படுகிறது. இப்பண்பும், செய்கையும் ஒருவரையொருவர் கண்ணால் கண்டபோது வெளியா வதால், பரிவும் - இரக்கமுமாகிய இவைகளை ஒருசேரத் தொகுத்துக் கண்ணோட்டம் என்று திருவள்ளுவரும் அவர்க்கு முன்னோரும் பெயரிட்டுக் குறித்திருக்கிறார்கள்.

இக்கண்ணோட்டம் உடையவர்கள், தம்மைச் சேர்ந்தவர் களையோ, நண்பர்களையோ, தம்மினும் தாழ்ந்தவர்களையோ கண்டபோது வேண்டுவதை உதவுவார்கள்; சொல்வதை மறுக்க மாட்டார்கள். இந்தப் பண்புதான் சமுதாய வாழ்வில் ஊடுருவி நிற்கும் உயிர்நாடி. இவ்வுயிர்நாடி இல்லையாயின் சமுதாயம் அதாவது உலகியல் வாழ்வு சீர்குலைந்து போகும். இதுபற்றியே திருவள்ளுவர்,

“கண்ணோட்ட மென்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.

என்று கூறுகிறார். கண்ணோட்டம் என்னும் இந்த இரக்கப் பண்பு மக்கள் ஒவ்வொருவருக்கும் அழகு தருவது. அரசர், செல்வர் முதலிய உயர்ந்தோரிடத்தில் இருக்குமாயின், மிக்க அழகும் விளக்கமும தருவதால் கண்ணோட்டமென்னும் கழிபெருங் காரிகை என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

இக்கண்ணோட்டமாகிய இரக்கப்பண்பு ஒவ்வொருவரிடத் திலும் இருந்தால்தான் இவ்வுலகியல் வாழ்வு நிலைபெறும்; இப்பண்பு இல்லாமல் ஒருவன் இருப்பானாயின், அவன் நிலத்துக்குச் சுமை என்று எண்ணி,

“கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை”

என்று உரைக்கின்றார்.

உளத்தில் இடம் பெற்றிருக்கும் பரிவும், இரக்கமுமாகிய நற்பண்புகளைத் தட்டி எழுப்பும் கருவி அவரவர் முகத்திலும் உள்ள கண்களாகும். கண்களுக்கும், இரக்கப் பண்புக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இத்தொடர்பு பாட்டுக்கும், இசைக்கும் உள்ளது போன்றதாகும். பாட்டோடு தொடர்பு இல்லையானால் பண்ணா கிய இசை பயன்படாது. அதுபோலவே கண்ணும் இரக்கமென் னும் கண்ணோட்டத்தோடு தொடர்பு படாதாயின் பயனில்லை என்பாராய்,

“பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்”

என்று கூறுகிறார்.

இசையால் பாட்டுக்குப் பெருமையும் அழகும் உண்டா கின்றன. இழுக்குடைய பாட்டாயினும் நல்ல இசை பொருந்து மானால் அப்பாட்டு எல்லாராலும் போற்றப்படுகிறது. அவ்வாறே கண்ணோட்டம் என்ற பண்பு ஒருவனுடைய கண்ணுக்கு அழகு தருகிறது. அந்த அழகு அமையவில்லையாயின் கண் காண்கின்ற தனக்கும் காணப்படுகிற மக்களுக்கும் தொடர்பில்லாமல் போவ துடன், மனநோயை விளைவிக்கிறது. அது கண்டே,

“கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்”

என்று கூறுகிறார்.

இத்தகைய கண்ணோட்டம் இல்லாதவர் உலகில் இருக்கத் தானே செய்கிறார்கள், அவர்களும் சமுதாயத்தில் மக்களாக உலவுகின்றார்களல்லவா? என்கிற கேள்வி எழுகிறது. உலகில் கிளை விட்டுத் தழைத்த மரங்கள் இருக்கின்றன. அவைகளில் கணு என்ற கண்கள் உள்ளன. அக்கண் பார்ப்பதும் கண்ணோட்டம் செய்வதும் இல்லை. அக்கண்களுக்கும் கண்ணோட்டமில்லாத மக்கள் கண் களுக்கும் வேறுபாடு ஒன்றுமில்லை. ஆகவே, மண்ணிடை நிற்கும் மரமும், அதன்மேல் கண்ணோட்டமில்லாமல் இயங்கும் மக்களும் ஒன்றே என்று விளக்குகின்றார்.

“மண்ணோடு இயைந்த மரத்தனையர், கண்ணோடு
இயைந்துகண் ணோடா தவர்”

என்கிறார் திருவள்ளுவர்.

அன்றியும், மரத்தின் கண்ணுக்குப் பார்வையில்லை; மக்கள் கண்ணுக்குப் பார்வையுண்டு. பார்வையில்லாதவர் குருடராவர்; கண் பார்க்கும் என்றால் காணப்பட்ட உயிர்களின் மேல் கண்ணோட்டம் உண்டாகாமல் போகாது. ஆதலால், கண்ணோட்ட மில்லாதவரைக் கண்ணிருந்தும் பார்வை இல்லாத குருடர் என்றே கூற வேண்டும். அதனை,

“கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்”

என்று கூறுகிறார்.

பார்க்கப்படுகின்ற மக்களிடத்தில் மதிப்பும் பரிவும் இரக்க மும் ஒருவன் கொள்வானானால், அதாவது கண்ணோட்டம் செய்வானானால், இருக்கிற பொருளெல்லாம் இழந்து நாளடைவில் வறியனாகத்தானே வேண்டும்? பரிவும், இரக்கமும் வாயளவில் இருப்பது போதாது. பரிவால் இரக்கத்தால் ஏதேனும் பொருளுதவி செய்யவேண்டும்; இதைச் செய்து கொண்டே போனால் வேலை செய்பவர் ஒழுங்காக வேலை செய்ய மாட்டார்கள்; வேலை கெடுமானால் பொருள் வருவாய் குறைந்து போம்; பொருளில்லை யானால் உலகியல் வாழ்வு இல்லாமற் போகுமே என்று மனத்தல் சிந்தனை எழுகிறது. இதனைத் திருவள்ளுவர் எண்ணாமல் இல்லை.

கண்ணோட்டம் என்பது கண்ணை மூடிக்கொண்டு செய்வ தில்லை. கண்ணால் பார்த்துச் செய்வது. பார்க்கும்போது, காணப் பட்ட மக்களைப் பற்றிப் பரிவும், இரக்கமும் கொள்ளும்போது பார்ப்பவர் மனதில் தம்மிடத்தில் உள்ள பொருள் அளவையும் பார்ப்பர். கண்ணோட்டத்தைச் செய்யும்போது அந்த அளவைப் பார்க்காமல் செய்யமாட்டார். இரக்கத்தையும், பரிவையும் தட்டி எழுப்புகிற கண், அவருடைய தகுதியின் அளவையும் காட்டும். அதைக் காட்டாத கண்பயன்படாது; அளவை அறியாமல் செய்வது கண்ணோட்டமுமாகாது. அதுபற்றியே,

“உளபோல் முகத்துஎவன் செய்யும், அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்?”

என்று கூறுகிறார்.

கண்ணோட்டம் செய்பவர் தமது பொருள் பெருக்கும் ஆற்றல் முதலியவற்றின் அளவறிந்து செய்யவேண்டும். அளவறி யாமல் செய்யும் கண்ணோட்டம் கழிகண்ணோட்டம் என்றும், அது குற்றம் என்றும் சான்றோர் கூறுவர். இக் கழிகண்ணோட்டம், “அறம் தெரி திகிரிக்கு வழியடையாகும் தீது” என்று சங்கச் சான்றோரும் கூறுகின்றார்கள். அதுபற்றியே அளவினால் கண்ணோட்டமில்லாத கண் பயனில்லை என்று கூறுகிறார்.

கண்ணோட்டம் செய்யப்படுபவர், அதாவது இரங்கத் தக்கவர், உதவி பெறத் தக்கவர் என்று பார்த்தால் மட்டும் போதுமா? உழைத்து வாழத்தக்க தகுதியுடையவர் சிலர், காண்பவர் தம்மைக் கண்டு பரிவும் இரக்கமும் கொள்ளுமாறு நடிக்கிறார்களே; அவர்கள்பால் கண்ணோடுவது பொருட்கேடும், உழைக்காமல் ஏய்க்கின்றவர் கூட்டத்தைப் பெருக்குவதும் செய்து சமுதாயத்தின் சிறப்பைச் சீரழிக்குமல்லவா? என்று ஒரு கேள்வி எழுகிறது. இதற்கும் திருவள்ளுவர் விடை கூறுகிறார். வையத்தார் உள்ளுவ வெல்லாம் உள்ளுபவர் அல்லவா?

கண்ணோட்டம் உடைய அரசரும் செல்வரும், தாம் காட்டும் பரிவாலும், இரக்கத்தாலும் தமது வேலையோ, தொழிலோ கெடாமல் பார்க்க வேண்டும். வேலையை ஒழுங்காகச் செய்யாதவர், வேலைக்கு இடையூறும் கேடும் செய்பவராவர். அவர்பால் கண்ணோடுவது குற்றம். அது பற்றியே முறை செய்து நீதி வழங்கு கிறவர் கண்ணோடுதல் கூடாது.

“ஓர்ந்துகண் ணேடா திறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை”

என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.

வேலையை ஒழுங்காகச் செய்யாமலும் தவறாகச் செய்தும் குற்றம் புரிபவர்களை ஒறுப்பது செய்தக்க செய்யும் செயல் முறையாகும். ஆயினும் குற்றத்தின் இயல்புக்கு ஏற்பத் தண்டனை யும் குறைந்த அளவும் மிகுந்த அளவுமாக இருக்கும். குற்றத்தைக் காணும் போது கண்ணோடுவது கூடாதே தவிர, ஒறுக்கும்போது கண்ணோடிப் பரிவும் இரக்கமும் ஓரளவு வேண்டும்; இல்லை யானால், “கையிகந்த தண்டமாய்க்” கொடுங்கோன்மையாகிவிடும் அது பற்றியே,

“ஒறுத்துஆற்றும் பண்பினார் கண்ணும் கண்ணோடிப்
பொறுத்துஆற்றும் பண்பே தலை”

என்கிறது திருக்குறள்.

மேலும், பரிவும், இரக்கமும் கொண்டு கண்ணோடுவது வேலை செய்வோர் வேலையை ஒழுங்காகச் செய்வதற்கே ஆகும். வேலை செய்வோரும் தமக்குக் காட்டப்படும் பரிவையும், இரக்கத் தையும் கண்டு ஊக்கம் மிகுந்து ஒழுங்காகவும், அன்பாகவும் செய்வர்; அதனால் பொருள் பெருகும்; உலகியல் வாழ்வு இன்பம் செய்யும். சுருங்கச் சொன்னால், கண்ணோட்டம் உடையவர்க்குத் தான் வேலை தந்து பொருள் பெருக்கி வாழ்வை வளம்படுத்தும் வல்லமையும், உரிமையும் உண்டு. இது கண்டே,

“கருமம் சிதையாமல் கண்ணோட வல்லோர்க்கு
உரிமை யுடைத்துஇவ் வுலகு”

என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.

கண்ணோட்டம்தான் நாகரிகம் என்று சங்ககால மக்கள் கருதினர். அன்பும், பரிவும், இரக்கமும் கொண்டு ஒழுகுபவரையே நாகரிகர் என்றனர். இரக்கமற்ற தன்மையும், விலையுயர்ந்த உடை யுடுப்பதும், இவை போன்ற பிறவும் நாகரிகம் என்று இந்நாளில் கருதப்படுகிறது. நாகரிகம் அரக்கப் பண்புக்கு வழி செய்வதால், இதனை விரும்பத்தக்க நாகரிகமாக எண்ணுதற்கில்லை. இரக்கமும், பரிவும் உடைய பண்பாடுதான் விரும்பத்தக்கது; யாவர்க்கும் வேண்டப்படுவது; திருவள்ளுவர் கூறுவது போல நயத்தக்க நாகரிகமாகும். இந்த நாகரிகப் பண்பாட்டுக்குத் திருவள்ளுவர் எல்லையொன்றையும் கூறுகிறார். தமக்கு வேண்டியவர் ஒருவர், கண் முன்னே நஞ்சு கலந்து கொடுத்தாலும் மறுக்காமல் உண்பது நயத்தக்க நாகரிகமாம். அதனை,

“பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்”

என்று உரைக்கின்றார். வேண்டியவர் ஒருகாலும் நஞ்சுதரமாட்டார். கண் முன்னே கலக்கவும் மாட்டார். கண்முன்னே நஞ்சு கலந்து தருவற்கு ஒரு நல்ல காரணம் இருக்க வேண்டும் என்று எண்ணி, அதனை மறுக்காமல் உண்பதோடு, தமது கண்ணோட்டப் பண் பாட்டுக்கு மாறாக அவர்பால் வெறுப்புக் கொள்ளமாட்டார்கள். அக்கருத்து விளங்கவே, நஞ்சு பெயக்கண்டும் உண்டு அமைவர் என்று கூறுகிறார். இப்பண்பாடுதான் பெரிய நாகரிகம் என்பது புலப்படச் சங்கச் சான்றோர்,

“முந்தையிலிருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்”

என்று கூறுகின்றார்.

பிறர் மனம் அறிதல்


நமது வாழ்வில் நாம் பலரோடு கூடிப் பேசிச் செய்வதைச் செய்கிறோம். அப்பலருள் நம்மில் உயர்ந்த வரும், ஒத்தவரும், தாழ்ந்தவரும், வேண்டியவரும், வேண்டாதவரும் எனப் பல வேறு வகையினர் உண்டு. நம்மிடையே அரசியல் தலைவர்களும், செல்வர் களும் உள்ளனர். அவர்களை நாடிச் சூழ்ந்திருப்பவரும் பலர். அவரவர் மனம் அறிந்து நடப்பதில்தான் தலைவர்களின் தலைமை யும், செல்வர்களின் செல்வமும் சிறப்படைகின்றன. ஆதலால் பிறருடைய மனக்கருத்தையும் செயல் வகையையும் நேரிற் கண்டும் பிறர் வாயிலாகக் கேட்டும் அறிந்துகொள்வது பொதுவாக எல்லார்க் கும் நல்லது. எனினும் சிறப்பாக நாடு காக்கும் வேந்தர்க்கு மிகவும் இன்றியமையாதது.

மற்றவர்களின் நினைவு செயல்களைப் பிறர் வாயிலாக அறிந்துகொள்வது ஒற்றாடல் என்று நூல்கள் கூறுகின்றன. பிறர் பேசுவதையும், செய்வதையும் அவர்கள் அறியாதபடி தெரிந்து கொள்வது ஒற்று, நாட்டு மக்களிடையிலும் மறைந்திருந்து கேட்பதை ஒற்றுக்கேட்டல் என்று கூறுகிறார்கள்.

நாட்டில் வாழும் மக்களில் நல்லவரும், தீயவரும், பகைவரும் எனப் பல திறத்தினர் உள்ளனர். நாட்டின் இயல்பு கூறவந்த திருவள்ளுவர் பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும் கொல் குறும்பும் உண்டு. ஆனால் அவர்கள் இல்லாமல் இருப்பது நாட்டுக்கு நலம் என்று கூறுகிறார். அவர்கள் தங்களுடைய தீச் செயல்களை மிகவும் மறைவாகவே செய்வர். பொதுமக்களுக்கு அவர்கள் இருப்பது ஓரளவு தெரிந்தாலும் அவர்களுடைய தீமைக்கு அஞ்சி வெளிப்படுத்தமாட்டார்கள். தெரிந்து கொள்பவர் ஏழை எளியவராய் இருந்தால், அவர்களுக்கு வேண்டிய பொருள்களைக் கொடுத்து வாயை அடக்கி விடுவர். ஓரளவு செல்வமும், சிறப்பும் உடையவராயின், இரக்கமின்றி அவர்ளைக் கொன்று விடுவர். இந்நிலையில் அக்கொடியவர்களைக் கண்டறிந்து உடனடியாக அவர்கள் செயலுக்கு முடிவு காணவேண்டும்; சிறிது சுணங்கி னாலும், புறக்கணித்தாலும் சிறு நெருப்புப் போலப் பையப் பெருகிப் பரவி நாட்டின் நல்லரசையும் கவிழ்த்துவிடும்; பகையரசு புகுந்து கேடு செய்வதற்கு இடம் அளிக்கும். நாட்டவரின் நல்வாழ்வுக்கு இடையூறு செய்யும் இக் குழுக்களையும், குறும்பர்களையும் உடனுக்குடன் கண்டறிந்து ஒடுக்குவது பெரிய பாதுகாப்பாவதால், ஒற்றறிவது அரசுக்கு உரிமைத் தொழிலாகும். இதைச் செய்யும் ஒற்றர் தன் நாட்டார் பிற நாட்டார் என்றும் நல்லவர் தீயவர் என்றும், நண்பர் பகைவர் என்றும், உற்றார் உறவினர் என்றும் வேறுபாடு நோக்காமல் எல்லாருடைய செயலையும் ஆராய்ந் தறிவர்; அன்றியும், இரவு பகலென்று பாராமல் எக்காலத்திலும் செய்தவண்ணமே இருப்பர். செல்வக் காலம், வறுமைக்காலம், அமைதியான காலம், அல்லலான காலம் என வரும் எல்லாக் காலங்களிலும் ஒற்றறியும் தொழில் நடக்க வேண்டும். இதுபற்றியே,

“எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை, எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்”

என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

அரசுக்கு மாறு நினைப்பவர் வேறு நாடுகளில் மாத்திரமின்றி உள்நாட்டிலும், அரசனை நெருக்கமாகச் சூழ்ந்திருக்கும் சுற்றத்தாரி லும் அரசியல் அலுவலர் சூழலிலும் இருப்பர். அவர்கள் செய்கை களையும் அரசனுக்கு வேண்டாதார் செயல் வகைகளையும் ஒற்றர்கள் விடாமல் சூழ்ந்து அறிந்து அரசுக்கு அறிவிப்பர்.

“வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று”

என்று கூறுகிறார்.

இவ்வொற்றர்கள் எத்தகையவர் எனின், அரசனிடத்தில் அசைக்க முடியாத அன்பும், கண்டறிந்ததை எவர்க்கும் உரைக்காத மனவுரமும் படைத்தவர். எவர்க்கும் எதற்கும் எவ்விடத்தும் அஞ்சாத நெஞ்சினர். அவர்களைக் காண்பவர் எவராலும் இவர் ஒற்றர் என்று அறிய முடியாது. இவர்களின் இயல்பை,

“கடா வுருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாமை வல்லதே ஒற்று”

என்று உரைக்கின்றார்.

தப்பித்தவறி இவர்கள் ஒற்றர் என்று கண்டு பிடிக்கப்பட்டால், எவ்வளவு சிறப்புச் செய்து மகிழ்வித்தாலும், எத்தனைக் கொடுமை புரிந்து துன்புறுத்தினாலும் தாம் கண்டறிந்ததைத் தம்முடைய மன்னனுக்கன்றி ஒருக்காலும் பிறர்க்கு வெளியிட மாட்டார்கள். அதுபற்றித்தான் இக்குறட்பாவில், “யாண்டும் உகாமை வல்லது ஒற்று” என்று கூறுகின்றார்.

இடத்துக்கும், காலத்துக்கும் ஏற்ப மாறு வேடம் கொள்வதிலும் வல்லவர் இவ்வொற்றர்கள். தவச்சிறந்த துறவிகள் போலவும், மிகவுயர்ந்த விரதியர் போலவும் வேடம் தாங்கி ஞானநூற் கருத்துக் களையும் விரதங்களின் நலங்களையும் விரித்துரைத்து ஆங்காங்கு நிகழ்வதை நுணுக்கமாக அறிந்து கொள்வர். எவரும் புகமுடியாத இடங்களிலெல்லாம் இவ்வொற்றர்கள் புகுந்து நடப்பவை, பேசு பவை யாவற்றையும் தெரிந்து கொள்வர். ஒற்றறியும்போது அகப்பட்டுக் கொண்டாலும் பற்றினவர் என்ன தீங்குகளை எப்படிச் செய்தாலும் மறந்தும் வாய்தவறியும் தாங்கள் அறிந்ததை வெளியிட மாட்டார்கள். இவர்களை நன்கு அறிந்தவரானதால் திருவள்ளுவர்,

“துறந்தார் படிவத்தார் ஆகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்வுஇலது ஒற்று”

என்று வடித்துரைக்கின்றார்.

இவ்வொற்றர்களை அறியாமல் சில இடங்களில் சில செயல் கள் நிகழும். என்றாலும், எவ்வகையிலேனும் அச்செயல்களை அறிந்த மக்களையோ, அவர்களைச் சார்ந்தவர்களையோ அறிந்து கேட்டுத் தெரிந்துகொள்வர். கேட்கின்றபோதும் அதில் தொடர்பு இல்லாதவர் போல நடிப்பர். கேட்டவைகளையும் மறுபடியும் ஆராய்வதற்கு இடமில்லாதபடி ஐயமறத் தெளிந்து கொள்வர். இதை,
“மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று”

என்று கூறுகிறார்.

இத்தனைக் கூர்த்த மதியும் சீர்த்த செய்கையும் உடையராயினும் இவ்வொற்றர்களை ஆள்கின்ற அரசியல் தலைவர்கள் இவர்கட்கு ஒப்பாகவோ உயர்ந்த வகையிலோ இருக்க வேண்டும். இவர்களில் ஒருவர் கூறுவதை மாத்திரம் ஏற்றல் கூடாது. வேறு ஒற்றர்களை விடுத்து இருதிறத்தார் கூறுவனவற்றையும் ஒப்பநோக்கித் தெளிய வேண்டும். இதுதான் ஒற்றரை ஆளும் முறை. இதனை,

“ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றும்ஓர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்”

என்று உரைப்பர்.

ஒருவர் ஒற்றி வந்ததை வேறோர் ஒற்றரை விடுத்து அறிய முற்பட்டால், இருவரும் தம்மில் கலந்து வந்து தானே உரைப் பார்கள்; அதனால் என்ன பயன்? எனின் ஒற்றரை ஆள்பவர், எப்பொழுதும் ஒருவருக்கொருவர் அறியாமலே விருப்பர். உண்மை தெளிவதற்காக எத்தனை ஒற்றர்களை விடுக்கலாம் என்றால் சில சமயங்களில் ஒருவர் இருவரை விடுவது போதாது. இருவர் இடைப்பட்ட மறைபொருள் பிறர் அறியாதபடி புதைந்துவிடும். இருவர்க்கு மேற்படின், எந்த மறுபொருளும் எப்படியும் வெளிப் பட்டுவிடும். அதை எண்ணியே ஒரு பொருள் பற்றி ஒற்றறிய விரும்புகிற அரசர், மூன்று பேரை ஒருவரை ஒருவர் அறியாமல் விடுவர். மூவரும் ஒருமுகமாக உரைப்பாராயின் அதனையே உண்மையென்று தெளிய வேண்டும்.

“ஒற்றுஒற்று உணராமை ஆள்க உடன்மூவர்
சொல்தொக்க தேறப் படும்”

என்று திருவள்ளுவர் தெரிவிக்கின்றார்.

இங்ஙனம் நாட்டின் நல்வாழ்வுக்கும், அரசனுக்கும் ஊறு செய்யும் தீயவைகளை தானே நேரில் சென்று கண்டறிவது போல இவ்வொற்றர்கள் அறிந்து வந்து சொல்வதால், அவர்களை வேந்த னுக்குக் கண் என்று அரசியற் சான்றோர் உரைக்கின்றனர். முறை செய்யும்போதும், நீதி ஆராயும் போதும் நாட்டின் நிலைமை அறிந்து செய்வன செய்யும்போதும், அறிவு நிறைந்த சான்றோர் எழுதி வைத்த நூல்கள், அறிவுக்கு எட்டாத நுட்பங்களை உரைக் கின்றன. ஆதலால் அவற்றையும் கண்ணென்பர். அந்த நூல்களைப் போலவே, நேரே சென்று காணக்கூடாத செயல்களைக் கண்டறிந்து வந்து உரைப்பதால் ஒற்றர்களின் செய்கையும் சான்றோர் நூலின் செய்கையும் ஒத்திருப்பதால் இரண்டையும் சேர்த்து, இவை அரசுக்குக் கண்கள் என்று தெளியவேண்டும் என்று திருவள்ளுவர் தெரிவிக்கின்றார்.

“ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்”

என்பது திருக்குறள். இனிக் காலந்தோறும் மக்களுடைய எண்ணமும் செய்கையும் மாறுபடும். இவ்வாறு மாறுவது உலக வாழ்வின் இயல்பு. அதை ஒருவரும் தடுக்கவோ, ஒடுக்கவோ முடியாது. மாறும் இயல்பினால் எண்ணங்கள் விரியும்; அவற்றிற்கு ஏற்ப மக்களின் செயல்களும், செய்முறைகளும் மாற்றமடையும். இவற்றிற்கென அவ்வப்போது நூல்களை எழுதுவது எனின், அது எல்லையின்றிப் பெருகும். இதனை உட்கொண்டே, நூல் வகுக்கும் சான்றோர் விதிமுறைகள் காலத்துக்கும், நடைமுறைக்கும் ஏற்ப விரிந்து கொடுக்குமாறு சொற்களை அமைத்து எழுதுவர். அவை ஒரு காலத்தே தோன்றினவாயினும் காலத்துக்கேற்ப உரைகாரர்கள் அவற்றின் விதிகளை இலக்கண வரம்பு கடவாமல் உரை கூறி அமைத்துக் காட்டுவர். அது பற்றியே அரசர்க்குக் கண்போல் அறிவு விளக்கும் நூல்களை உரைசான்ற நூல் என்று திருவள்ளுவர் உரைக்கின்றார்.

இனி, நாடாளுமிடத்து வேந்தர், தீயவரின் தீங்குகளை அறிந்து போக்குவது போல நல்லவரின் நன்மைகளைப் போற்றிச் சிறப்பிப் பதும் அரசு முறைக்கு அறமும் மாண்புமாகும். அதுபோல ஒற்றரது ஒற்றும் நாட்டுக்கு ஆக்கமும் அரணும் ஆதலால், ஒத்தவகையில் ஒற்றர்களுக்குச் சிறப்புச் செய்வது முறையாகும்; அதனைப் பெறுவது அவர்கட்கு உரிமையுமாகும். ஆயினும் இச் சிறப்புக் களைச் செய்வதில் வேறுபாடு உண்டு.

அரசறிய நலம் புரியும் நன்மக்களுக்கு வேந்தர் நாடறியச் சிறப்புச் செய்யவேண்டும். அது நாட்டில் வாழும் பிறரையும் நல்லது செய்தற்கு எழுச்சியும், ஊக்கமும் அளிக்கும். ஆனால் ஒற்றர் களுக்குச் செய்யும் சிறப்பு மிகவும் மறைவாக நடத்தல் வேண்டும். வெளிப்படையாக நிகழுமாயின், அச்செயல் ஒற்றர்களை வெளிப் படுத்திவிடும். அதனால் கேடு நினைக்கும் பல் குழுவும் கொல் குறும்பும் தம்மைக் காத்துக்கொள்ளும்; தீமைகள் தோன்றுதற்கு இடம் உண்டாகும். ஆகையால் நாட்டின் நல்வாழ்வுக்கும், பாதுகாப்புக்கும் ஊறு விளையும். இதனைக் கருத்திற் கொண்டே,

“சிறப்புஅறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தா னாகும் மறை”

என்று திருவள்ளுவர் அறிவுறுத்துகின்றார்.

ஊக்கம்


நாட்டில் வாழ்கின்ற மக்களில் உயர்ந்தவரும், தாழ்ந்தவரும் எங்கும் உள்ளனர். உயர்ந்தவர் வரலாற்றைக் கேட்டால் அவர்கள் எளியவராய் இருந்து உயர்ந்த கதையையே சொல்கிறார்கள். அதைக் கேட்டால் அவர்களுடைய உயர்வுக்கு ஊக்கமும், உழைப்பும் காரண மாவதை அறியலாம். ஊக்கம் முந்தியதா, உழைப்பு முந்தியதா என்று நோக்கினால் உழைப்புச் சிலரிடத்திலும், ஏக்கம் சிலரிடத்திலும் முந்தியிருப்பது தெரிகிறது. உழைப்பு என்பது சிறுவரிடத்திலும் பெரியவரிடத்திலும் உண்டு. என்றாலும் உழைப்பினால் வரும் பொருளும், சிறப்பும் இன்பம் தருவதைக் கண்டு மேன்மேலும் மனம் கிளர்ச்சியுற்று மிகவும் உழைத்து பொருள் மிகுந்து உயர்கின் றார்கள். அவ்வாறு உயர்பவர்களைப் பார்த்து மற்றவரும் மன எழுச்சி கொண்டு உழைத்து உயர்வு பெறுகின்றார்கள். இங்ஙனம் உழைக்குமாறு தூண்டும் கிளர்ச்சியும், எழுச்சியும், ஊக்கம் என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன. உழைப்பின் பயனாக வரும் பொருளையும், இன்பங்களையும் அறிவில் கொள்ளாதவர் உழைப்பை புறக்கணிக்கின்றார்கள்; அதை விரும்பாமல் கைவிடுகிறார்கள். இச்செயலை மடிமை அல்லது சோம்பல் என்று பெரியோர் குறிப்பர். இதனால் ஊக்கத்துக்கு எதிர் மறுமொழி சோம்பல் என்று அறிகின் றோம். இவ்வாறு பகுத்து அறிவதால் ஓர் உண்மை தெரிகிறது. ஊக்கமுடையவர் பொருள் உடையவராய் உயர்கின்றார்கள். இல்லாதவர் உள்ள பொருளையும் இழந்து தாழ்ந்து போகின்றார்கள். இது கண்டே,

“உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதுஇல்லார்
உடையது உடையவரோ மற்று?”

என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.

இந்த ஊக்கம் இருக்கும் இடம் ஒருவனுடைய உள்ளமாகை யால், ஊக்கத்தை உள்ளம் என்றும் கூறுவர். ஊக்கத்தையும், அதனால் வரும் பொருளையும் திருவள்ளுவர் சீர்தூக்கினார். பொருளோ நிலையில்லாமல் நீங்கிவிடும் இயல்புடையது; ஊக்கம் எப்போதும் உள்ளத்தில் இருப்பது. அதனால் பொருளைவிட ஏக்கம் குன்றாமல் இருப்பதுதான் பொருள்உடையவராய் வாழ் வதற்குக் காரணம் என்று காண்கிறார். அதனால்,

“உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்”

என்று கூறுகிறார்.

பொருளை நோக்காமல் ஊக்கம் மாத்திரம் இருப்பது போதுமா எனின் ஊக்கம் இருக்குமானால், விளக்கு எரிந்தால் ஒளி நிலவுவது போல உழைப்பு நடந்து கொண்டே இருக்கும். உழைப்புத்தான் பொருளுக்கு வருவாய். பள்ளமிருந்தால் நீர்ஓடி நிறைவதுபோல், உழைப்பவரிடம் பொருள் வந்து சேரும். அது பற்றியே,

“ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை”

என்று கூறுகின்றார்.

என்ன இடையூறும் சோர்வும் வந்தாலும் தளராத ஊக்க முடையவர் எங்கே உள்ளானோ, அவனிடம் பொருளும், உயர்வும் வழி கேட்டுக்கொண்டு வரும்; அதாவது வேலையும் அது வழியாகச் செல்வமும் தானாகவே வந்து சேரும். அதை வற்புறுத்தவே, இக்குறட்பாவின், ஊக்கமுடையவனை நாடி ஆக்கம் அதர் அதாவது வழிவினாய்ச் செல்லும் என்று திருவள்ளுவர் உரைக்கின்றார்.

ஊக்கம் இத்தகைய சிறப்புடையதானால் இதற்கு ஏதேனும் அளவு உண்டோ? ஆசைக்கும் ஓர் அளவு வேண்டும் என்று சொல்கிறார்கள் அல்லவா? அதுபோல ஊக்கத்துக்கும் ஓர் அளவு இருக்கவேண்டுமே என்றால் உண்டு என்று கூறுகிறது திருக்குறள். யாவரும் உயர்வையே விரும்புவார்கள். அவரவர் விரும்பும் உயர்வு எவ்வளவோ அவ்வளவுதான் ஊக்கத்துக்கும் அளவு. ஒரு தாமரைக் குளம் இருக்கிறது. அக்குளத்தில் தண்ணீர் எத்தனை அடி இருக் கிறதோ, அதற்கேற்பத் தாமரையின் நீளம் இருக்கிறது. பத்தடி நீர் என்றால் கொடியும் பத்தடி நீள்கிறது; ஐந்தடி என்றால் கொடியும் ஐந்தடி அளவில் இருக்கிறது. அதுபோல ஊக்கத்தின் அளவே உயர்வாகும் என்று விளக்குகிறார் திருவள்ளுவர்.

“வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.”

ஒருவனுக்கு ஊக்கம் மலைபோல உயர்ந்தும் கடல் போல விரிந்தும் இருக்கிறது. அதை மனத்திற் கொண்டே உழைக்கின்றான். ஆனால் அந்த ஊக்கத்தளவு உயர்வு வரவில்லையே என்று கேட்கலாம். இக் கேள்வியைத் திருவள்ளுவரும் நினைக்கின்றார். ஊக்கம் மிகுதியாக இருக்கிறது. உழைப்பிலும் குறைவில்லை எனின், உயர்வு கட்டாயம் வந்தே தீரும். ஊக்கத்தை விடக்கூடாது. உழைப் பாகிலும் காலம், இடம், கருவி, உடல்வலி ஆகியவற்றைச் சார்ந்திருக் கிறது. இச்சார்புகள் தவறுவதற்கு இடமுண்டு; அதனால், கருதிய பொருளும், உயர்வும் நினைந்த அளவு வராமல் போகலாம். அதனை எண்ணி ஊக்கம் குறையக்கூடாது. ஒரு காலத்தில் குறையினும் பிறிதொரு காலத்திலேனும் வந்தே தீரும் என்று சொல்லுகிறார்.

“உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து”

இந்நிலையில், உயர்வு பெற்ற பெருமக்களின் வாழ்க்கை வரலாறுகளைப் பார்ப்போமானால் திருவள்ளுவர் கூறுவது முழுதும் உண்மையாவதைக் காணலாம். அரசியல் விடுதலை என்ற உயர் வையே எண்ணி நம் நாட்டுக் காந்தியடிகள் போன்றவர்கள் உழைத்தார்கள்; எத்தனையோ சமயங்களில் உழைப்புக்கு இடை யூறுகள் தோன்றி அலைத்தன. ஆனால் ஊக்கம் குறையவில்லை; அதை அவர்கள் கைவிடவும் இல்லை… முடிவு என்னாயிற்று? இன்று நாம் விடுதலை வாழ்வு பெற்று, உலக நாடுகள் நன்கு மதிக்கும் அளவுக்கு உயர்வு பெற்றிருக்கிறோம்.

இந்த ஊக்கத்துக்கு இத்தனை ஆற்றல் எப்படி அமைந்தது? இதையும் திருவள்ளுவர் சிந்திக்கிறார். காடுகளில் புலியும் உண்டு… யானைகளும் உண்டு. பருத்த உடம்பும் கூர்மையான கொம்பும் உடையது யானை. புலிக்கு உடம்பும் சிறியது; கொம்பும் கிடையாது. ஊக்கமும், வலிமையுமே அதனிடம் உள்ளன. ஆனால் புலி தாக்கு மாயின் பெரிய யானையும் எதிர் நிற்கமாட்டாமல் தோற்றுப் போகும். அதுபோலவே ஊக்கத்துக்கு எதிராக எந்த வகையான தடையும் நிற்கமாட்டாது. இதனை,

“பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்”

என்று விளக்குகின்றார்.

இந்த ஊக்கத்துக்கு மாறான தன்மை மடி அல்லது சோம்பல் என்று முன்னமே கூறினேன். மாசு மறுவில்லாத ஆடையில் மாசு படிவதுபோல, ஊக்கம் நிறைந்த உள்ளத்தில் இந்த மடியென்னும் சோம்பல் பையப் படிந்துவிடும். இதற்கு இடம் கொடுக்கக் கூடாது, என்பதற்காகவே, ஊக்கத்தை அடுத்து மடியைப் பற்றி திருவள்ளுவர் உரைக்கின்றார்.

உழைக்கின்ற மக்களைக் கெடுத்து வறுமைக்கு உள்ளாக்கும் தீய தன்மைகளில் சோம்பல் முதன்மைவாய்ந்தது. இதற்கு இனமாக மறதி, தூக்கம், எதனையும் காலம் நீட்டித்துச் செய்யும் தன்மைகள் உடன்வந்து சேர்கின்றன. இந்த நான்கு விரும்பத்தக்கவை போலத் தம்மைக் காட்டும். மேற்கொண்டவுடன், துன்பத்தில் கொண்டு சேர்க்கும். இவ்வியல்பு பற்றியே இவைகளைக் காமக் கலன் என்று பெயர் குறித்து,

“நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்”

என்று கூறுகின்றார்.

மடியென்னும் சோம்பல் மாசுபோல, வருவது தெரியாமல் வந்து படிவது நன்றாக உழைத்துத் தனது குடும்பத்தை விளக்கமுறச் செய்யும் நன்மைகளை இச்சோம்பல் என்னும் மடி வந்து அடையு மானால், அவனுடைய குடும்பமாகிய விளக்கு அவிந்துபோகும்.

“குடியென்னும் குன்றா விளக்கம் மடிஎன்னும்
மாசூர மாய்ந்து கெடும்”

என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

இக்கொடிய சோம்பல் ஒருவனிடம் பொருந்துமாயின், அவனுடைய இயல்பான மானவுணர்ச்சியே கெட்டுப் போகிறது. எவர் இகழ்ந்தாலும் பொறுத்துக் கொள்வான்; நெஞ்சு சுடுவது போலும் கடுஞ்சொற்களைப் பேசினாலும் அவன் காதில் ஏறாது. வெறும் புன்சிரிப்பே அவன் பாழ் முகத்தில் காணப்படும். அதனால், மாண்புதரும் செயல்கள் எவற்றையும் அவனால் செய்யமுடியாது. அதுபற்றியே,

“இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்”

என்று கூறுகின்றார்.

இம் மடி என்னும் சோம்பல், காலத்தில் செய்ய வேண்டிய தைச் செய்யாமல் நீடித்து, உறக்கத்தில் வீழ்த்துகிறது. அதனால் தன் குடிக்கு எத்தகைய பாதுகாப்பையும் அவன் செய்துகொள்ள மாட்டான். பகைவர் எளிதில் அவனைக் கைப்பற்றி அடிமை யாக்கிக் கொள்வர். அரசனாயினும் சோம்பலுற்றவன், பின்பு தன்னுரிமை யிழந்து துன்பப்படுவான்.

“மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்”

என்று கூறுகிறார்.

சோம்பலுக்கு இரையாகி மடிந்து ஒடுங்குகின்றவன் குடும்பம் தன் செல்வப் பொலிவை இழக்கும்; அதனோடு, பல்வேறு குற்றங்கள் தோன்றிப் பெருகுதற்கு இடமாகிவிடும்.

“குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு”

என்று உரைக்கின்றார்.

மக்களாகப் பிறந்தவர் மாண்புடைய செயல்களையே செய்தல் வேண்டும். சோம்பல் கொண்டு மடிந்து கிடப்பவர் அச்செயல் களைச் செய்யமாட்டாதவராவர் என்பதற்காகவே, அவர்களை மாண்ட உஞற்றிலவர்
என்று திருக்குறள் பல முறையும் கூறுகிறது.

மழுங்குகின்ற விளக்கத்தை தூண்டுவது போலத் தக்கவர் துணையாகி நின்று சோம்பலைப் போக்கி ஊக்கமுறச் செய்யலாம் அல்லவா? எனின், சோம்பேறிக்கு அவர்கள் துணையிருந்து தூண்டினாலும் பயன்படாது. இதனை,

“படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது”

என்று கூறுகிறார்.

நினைத்தால் நிலமுழுதும் தான் ஆணைவழி நிறுத்தக் கூடிய ஆற்றலுடையோர் பக்கம் இருந்து ஊக்கினாலும், சோம்பல் உடையவர், அவர் சிறிது நீங்கினவுடன், சோம்பல் அற்று வீழ்ந்து போவதால்,அவரால் பெரும் பயன் உள்ள செயலைச் செய்ய முடிகிறதில்லை என்று வற்புறுத்தவே, படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் என்று கூறுகின்றார்.

இவர்கள் கடைத்தேற வழி இல்லையா? உண்டு; அவன் தன்னைப் பற்றியிருக்கும் சோம்பலை மாற்ற வேண்டும். மாற்ற, தனக்கும், தன் குடும்பத்துக்கும் வந்த குற்றம் நீங்கி வாழ்வு பெறுவான்.

“குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்”

என்று தெரிவித்துத் தடித்த சோம்பேறியும் வாழ்வு பெறுவதற்கு வழி வகுக்கின்றார்.

வள்ளுவர் கண்ட இன்பம்


இன்பம் என்பது எல்லா வுயிர்களுக்கும் இயல்பிலே ஊறி நிற்கும் விருப்பம் என்பர் தொல்காப்பியர். “எல்லா வுயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும்” என்பது தொல்காப்பியம். இன்பத்தை விரும்பாத உயிர் எங்கும் கிடையாது; இன்பம் நாடுவது உயிர் வாழ்வின் பண்பு.

உயிர்கள் நினைப்பதும் செய்வதும். யாவும் வினை யெனப்படும். வினையால் விளைவது பொருள் என்றும், அப் பொருளால் உண்டாகும் பயன் இன்பம் என்றும் யாவரும் அறிவர். வினையும் அறமாதலால், அறத்தாற் பொருளாதலால், அறம் பொருள் இரண்டாலும் இன்பம் உண்டாகிறது என்று திருவள்ளுவர் உரைக் கின்றார். “அறத்தால் வருவதே இன்பம்” (39) என்றும், “அறன் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்” (754) என்றும் திருவள்ளுவர் கூறுவதனால் அறிகின்றோம்.

ஒருவர்க்கு இன்பமாக இருப்பது மற்றொருவருக்குத் துன்பமாகத் தோன்றுவதுண்டு. அதனால் இன்னது தான் இன்பம், இன்னது துன்பம் என்று வரையறை செய்வது அரிது. இன்பம் என்பது உணர்பவர் உணர்வு வகைக்கு ஏற்ப அமைவது. உணர்வுடையவர் துன்பத்தையும் இன்பமாக உணர்வர் என்பாராய், “இன்னாமை இன்பம் எனக் கொளின் ஆகும்தன் ஒன்னார் விழையும் சிறப்பு” (630) என்று கூறுகின்றார். “ஈத்துவக்கும் இன்பம் (228) என்றார் போல வரும் திருக்குறளையும் பிறவற்றையும் நோக்குமிடத்து, உணர்ச்சி வடிவாய், ஒய்வின்றி அலைந்து கொண்டிருக்கும் மனத்தை அசையாமல் நிறுத்தி அமைதி பெறச் செய்வதே இன்பம் என்ற முடிபுக்கு வருகின்றோம். இதுவே “தான் அமர்ந்து வரூஉம் மேவற்று” என்ற தொல்காப்பியக் கருத்துக்கும் ஒத்து நிற்கின்றது.

“அறத்தால் வருவதே இன்பம்” என்ற குறள், இந்த இன்பம் வரும் வழியைக் குறிக்கின்றது. அறம் என்பது செய்கை. எனவே, ஒருவன் ஒரு செய்கையைச் செய்வதற் குரிய வழிகள் எவையோ அவையே இன்பம் தோன்றுவதற்கு வழியாம். உடம்பு, உள்ளம், அறிவு முதலியன செய்கைக்கு இன்றியமையாத வாயில்களாகும். “மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு” (65) என்பதனால் இன்பத் தோற்றத்துக்கு உடம்பு கருவி யாவது பெறப்படும். “சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்” (98) என்பது வாயாற் பேசும் சொல்லும் இன்பத்துக்கு வாயிலாவதைக் காட்டுகிறது. ஒருவனுடைய உள்ளமும் இன்பம் பெறுதற்குக் காரணம் என்பதற்காகத் திருவள்ளுவர் உள்ளத்தில் எழும் அவாவை ஏதுவாகக் கொண்டு, “இன்பம் இடையறாது ஈண்டும் அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின்” (369) என்று இயம்புகின்றார். “இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சியவர்க்கு” (35) என்ற திருக்குறளால், தெளிந்த அறிவும் ஒருவர் இன்பம் பெறுவதற்குரிய காரணமாக இருப்பது இனிது தெரிகிறது.

இவ்வாறு பெறப்படும் இன்பத்தில் உயிர்களுக்கு ஈடுபாடு உண்டாவதால் அந்த இன்பத்தைப் பெருக்கிக் கொள்வது உயிர்களின் முயற்சியாக இருக்கிறது. “துன்பம் உறவரினும் துணிவாற்றிச் செய்க, இன்பம் பயக்கும் வினை” (669) என்பது இதற்குச் சான்றாகும். இன்பம் பயக்கும் வினையை மிகுதியாகச் செய்யின், அதனால் பெறப்படும் இன்பம் பெரியதாகிறது. “சிற்றின்பம் வெஃகித் திறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டுபவர்” (173) என்ற குறள், இன்பம் சிறிதும் பெரிதுமாக வகைப்படுவதைக் காட்டுகிறதன்றோ! சிற்றின்பம் என்பது சிறிதுகால மிருந்து மறைந்து போவது; நெடிதிருந்து மகிழ்விப்பது இன்பத்துக்குப் பெருமை.

உலகில் வாழும் மக்களுக்கு இன்பம் ஒன்றே வேண்டப்படுவ தாகையால், அதைப் பெறுவதிலும் அதற்கு மறுதலையாய்த் துன்பம் தருபவைகளைப் போக்கி விலக்குவதிலுமே கண்ணுங் கருத்துமாக உள்ளனர். துன்பத்தை வென்று இன்பத்தைப் பெறுவதே வாழ்க்கை; அது குறித்துச்செய்யும் செய்கை வாழ்க்கைப் போராட்டம் எனப்படுகின்றது இன்பத்துக்கு மாறாகிய துன்பத்தையும் அதனை உண்டாக்கும் காரணங்களையும் நன்கு அறிந்து அவற்றைக் களைவது தான் இன்பம் வேண்டுவோர் செய்யத் தக்கது. துன்பத்துக் குரிய காரணங்களில் இகல் என்பது ஒன்று. அதாவது, எதற்கும் பிறரோடு மாறுபடுத்தி முரணுவதாகிய செய்கை. இதனால் துன்பம் எளிதில் புகுந்து விடுவது கண்டே வள்ளுவனார், “இகல் என்னும் துன்பத்துள் இன்பம் கெடின், இன்பத்துள் இன்பம் பயக்கும்” (854) என்று உரைக்கின்றார்.

ஒருவர் ஒரு செயலை மேற்கொண்டு செய்யலுற்றால், அதனால் அவர் கருதிய பொருள் கருதியவாறே கை கூடும்போது அவருக்கு இன்பம் உண்டாகிறது. இச் செயல் வகைகளில் மிகவும் கடினமான செயலாகத் திருவள்ளுவர் கருதுவது ஒருவரிடம் சென்று இன்றை வேண்டி இரப்பது. ரத்தலின் இன்னாது மன்ற (229) “இரவு உள்ள உள்ளம் உருகும்” (1069) என்ற திருக்குறள்கள் திருவள்ளுவர் உள்ளத்தை நன்கு தெளிவுபடுத்திக் காட்டுகின்றன. இவ்வண்ணம் நினைத்தாலும் நெஞ்சுக்கு வேதனையும் துன்பமும் தரும் இரத்தல் என்ற தொழிலையும், ஒருவன் துணிந்து மேற்கொண்டு சென்று ஒருவரிடம் சாணுடம்பும் ஒருசாணாய்ச் சுருங்கி இரக்கும் போது, ஒரு துன்பமும் இன்றி இரந்த பொருள் அவனுக்கு ஈயப்பட்டால் அவனுக்கு அது இன்பத்தைத் தருகிறது. இதனை “இன்பம் ஒருவற்கு இரத்தல், இரந்தவை துன்பம் உறாஅ வரின்” (1052) என்று வள்ளுவர் வடித்துக் கூறுகின்றார்.

வாய்க்கும் மனத்துக்கும் இனிமை தரும் பொருள் கிடைப்பின் அதனை உண்பதில் துன்பமுண்டாகியது. ஆயினும் அந்த இன்பத்தைப் பெருகப்பெற வேண்டுமென்று வேட்கை எழுவது இன்பம் நாட்ட முடைய உயிர்க்கு இயல்பு. வேட்கை வயப்படாமல் கொள்ளும் அய்வறிந்து உண்பதுதான், அதனால் பெறப்படும் இன்பத்தை நுகரும் வழியாம். அவ்வாறின்றி மிக்கஅளவில் உண்ணக் கருதினால், கருதிய இன்பம் பெருகாமல் நோய் புகுந்து துன்பமும் செய்யும் என்பாராய், “இழிவறிந்து உண்பான்கண் இன்பம் போல், கழி பேரிரையான்கண் நோய்நிற்கும்” (946) என்று இசைக்கின்றார். இன்ப நுகர்ச்சி பற்றி மேலும் ஒரு கருத்தைத் திருவள்ளுவர் வற்புறுத்துகின்றார். ஒருவர் தாம் பெற்ற இன்பத்தை நுகருங்கால் அதனையே விரும்பி அதன் கண்ணே அழுந்திவிடுவது கூடாது; அஃது இன்பத்தைத் தாராது துன்பத்துள் மிக்க துன்பத்தை விளைவிக்கும் என்று வற்புறுத்தி, “இன்பத்துள் இன்பம் விழையர் தான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்” (629) என்று உரைக்கின்றார். இவ்வாறு ஒழுகுவதுதான் இன்பத்தை நன்முறையில் பயன்கொண்டு பிறர்க்கும் தனக்கும் பயன்பட வாழும் நன்வாழ்க்கையாகும். “இன்பம் விழையான் வினைவிழைவான் தன் கேளிர் துன்பம் துடைத் தூன்றும் தூண்.” (615) என்றும், இன்பமே நினைந்து துன்பம் வரின் அதற்கு அஞ்சிச் செயலற்று மடிபவன் இன்பத்தைப் பெற முடியாது; துன்பம் வரின் அதனை இயல்பாக வரும் தடையாக எண்ணி அதனை மதியாமல் தனக்கு உரிய அறத்தைச் செய்பவன் இன்பத்திலே சிறந்து விளங்குவான் என்பதை “இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான் துன்பம் உறுதல் இலன்” (628) என்றும் திருவள்ளுவர் தெளிய உரைக்கின்றார்.

இன்பத்தைப் பெறும் வாயில்களில் நாம் மேலே கண்டவற்றில் வேறாக ஒருவனும் ஒருத்தியும் ஒருவர்க் கொருவரை வாழ்க்கைத் துணையாகக் கொண்டு வாழ்வதையும் ஆசிரியர் திருவள்ளுவர் எடுத்துரைக்கின்றார். இல்வாழ்க்கை மேற்கொண்ட ஒருவன் ஒருத்தியாகிய இருவர் உள்ளத்திலும் ஒத்த காதலுணர்ச்சி அமைந்தால் அது இன்பத்துக்கு சிறந்த வாயிலாகும். காதல்வழிப் பிறக்கும் இன்பம் கடல் போன்ற பெருமை யுடையது என்றும், காதல் நோய் மிக்க விடத்து அதனால் விளையும் துன்பம் கடலினும் மிகப் பெரிதாம் என்றும் கூறுகின்றார்.

காதலால் களிப்புண்ட இருவர் தம்மில் விளையாட்டாகப் பிணங்கும் போது இன்பம் பெருகுகிறது என்றும், அப் பிணக்கு நீங்கி இருவரும் கூடும்போது அவ் வின்பம் மிகச் சிறந்து விளங்குகிற தென்றும் காதலின்பத்தை நுகரும் முறையை அழகுறக் கூறுகின்றார். சுவைத்து உண்ணப்படும் பொருளுக்கு அதனுடைய சுவை மிகுமாறு சுவையில்லாத உப்புப் போடுவது போல்வது காதல் வாழ்வில் அதற்கு மாறான சிறு பிணக்குகள் உண்டாவது என்று கூறி அப் பிணக்குகளால் இன்பம் உண்டாவது கண்டு நுகர்வோர்,அந்த இன்பம் பெருகுமென்று நினைத்துப் பிணக்குகளை மிகுதிப்படுத் தினால், உப்பு மிக்கவிடத்து, பொருளின் சுவை கெட்டழிவது போல் காதல் வாழ்வு இன்பமாகாது சீரழியும் என்பதை, “உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீளவிடல்” என அறிவுறுத்து கின்றார்.

இதுகாறும் கூறியதனால், இன்பம் என்பது எல்லா வுயிராலும் விரும்பப்படுவதொரு நல்உணர்ச்சி என்றும், அஃது அறம் பொருள் என்ற இரண்டாலும் விளைவது என்றும், இந்த இரண்டிலும் மெய், வாய், மனம், அறிவு முதலியன வாயிலாக இன்பம் வருகிறது என்றும், இன்பம் பெற்ற உயிர் அதனைப் பெருக்கிப் கொள்வதில் ஈடுபடுவதால் சிற்றின்பம், பெரிய இன்பம் என இன்பம் வகைப் படுகிற தென்றும், இன்பத்தைப் போற்றுவோர் இகல்என்னும் குற்றத்தையும் ஏனைத் துன்பச் செயல்களையும் வாராமல் தடுக்க வேண்டும் என்றும், இன்பத்தை நுகருமிடத்து அதனுள் அழுந்தி அதன் வயப்படாமல் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டு மென்றும், அதுவே பிறர்க்கும் நமக்கும் பயன்பட வாழும் வாழ்க்கைமுறை யென்றும், வாழ்க்கைத் துணையாகிய இருவர் உள்ளத்தையும் பிணித்து நிறுத்தும் காதலும் இன்பத்துக்கு வாயிலாம் என்றும், அங்கே அவ்வின்பம் சிறு பிணக்குகளால் சிறிது பெருகித் தோன்றிப் பிணக்கு நீங்கிக் கூடுவதால் சிறப்பு எய்துகின்றது என்றும் திருவள்ளுவர் கண்ட இன்பத்தின் இயல்பு ஒருவாறு விளக்கப் பெற்றது.

முயற்சி


“வினையே ஆடவர்க்கு உயிர்” என்பர் சங்கச் சான்றோர். வினை என்பது உழைப்பு. உழைப்பு என்றால் எடுத்த வேலையைச் சோர்வு படாமல் செய்வது. வேலையை வினையென்றும், அதனை முடித்தற்காகச் செய்யும் உழைப்பை வினையாளுதல் என்றும் இலக்கியங்கள் கூறுகின்றன. வினையாளுதற்கு வேண்டிய மனவுறுதி யினை முயற்சி என்றும் ஆள்வினையுடைமை என்றும் கூறுவதுண்டு. அதனால், சோம்பலின்றி ஊக்கத்தோடு செயலாற்றும் உழைப்பாளி யிடத்தில் காணப்படும் முயற்சியை ஆள்வினையுடைமை என்று அழகிய பெயரிட்டுத் திருவள்ளுவர் உரைக்கின்றார்.

உண்மையோடு உழைக்கும்போது கருதிய அளவு பயன் கிடைக்காமல் போவதுண்டு. அதற்குக் காரணம் ஊழ்வினை என்று சொல்லுவரே தவிர உழைப்பாளியை, யாரும் குறை கூறிப் பழிப்ப தில்லை. எடுத்த வேலைக்கு வேண்டிய கூறுகளை நன்கு அறிந்து உண்மையாக முயன்று செய்யாதவனைப் பழிப்பார்கள். அவன் ஊழ்வினை என்று சொல்வானானால் அதைவிட மானக்கேடு வேறில்லை. இதனை,

“பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி”

என்று திருவள்ளுவர் கூறுகிறார். இக்குறட்பாவின் பொறி என்பது ஊழ்வினை. ஊழ்வினை என்றால் என்னவெனில் நம்மால் முன்பு செய்யப்பட்ட வினையின் பயன். அது இன்பவடிவிலோ, துன்ப வடிவிலோ இருக்கும் அது நமக்குத் தெரிவதில்லை யாதலால், அதை நாம் எடுத்துக் கொள்ள முடியாது. வினைப் பயனும் அறிவில்லாதது; ஆதலால் அதுவும் தானாக நம்மை வந்து அடைய முடியாது. தெய்வத்துக்குத் தெரிவதால், வினைப்பயனைத் தெய்வம் நம்மிடம் சேர்த்து நுகரப் பண்ணுகிறது. அதனால் ஊழ்வினையை தெய்வம் என்று கூறுவதுண்டு. ஊழ்வினைப் பயன் நாம் செய்யும் வினையில் விளைவதாகையால், நாம் இப்போது செய்யும் வினை வழியாக, முன்னை வினைப் பயனைத் தெய்வம் ஊட்டுகிறது. ஊழ்வினைப் பயன் நல்லதாயின், நாம் செய்யும் வினைவழியாக, மிக்க நன்மை விளைவிக்கிறது; துன்பமாயின் செய்யும் வினைகள் தவறுமிடத்து, உடன் கலந்து மிக்க துன்பம் உண்டாக்குகிறது. இந் நிலையில் நாம் ஒரு வேலையில் முயலும்போது அறிவு மயங்கியோ, முயற்சிக்குரிய கருவியும், துணையும் குறைவுபட்டோ, தவறுண் டாகும் காலத்தில் தெய்வம் ஊழ்வினையைப் புகுத்தி எடுத்த வேலையைக் கெடுத்துவிடுகிறது. இவ்வாறு ஊழ்வினை புகுந் தாலும், நம் முயற்சியின் முழுப்பயனையும் கெடுக்காது; இன்றைய நமது முயற்சியளவுக்குரிய பயன் நமக்கு வந்தே தீரும். அதுபற்றியே,

“தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்”

என்று கூறுகிறார். ஊதியம் ஊழ்வினையால் கெட்டாலும் தக்க வகையில் முயற்சி செய்பவர்க்கு முதல் கெடாது என்று உரைக் கின்றார். மேலும், உண்மையூக்கத்தோடு செய்யும் முயற்சிக்கு, ஊழ்வினையையும் எதிர்த்து, ஓரளவு பயன் அடையக் கூடிய ஆற்றல் உண்டு என்று இதனால் தெரிகிறதல்லவா?

இந்த ஊழ்வினையும் நம்மால் செய்யப்பட்ட வினையே; முயற்சியும் நாம் செய்யும் வினையே. ஊழ்வினை ஒரு குறிப்பிட்ட காலத்தைச் சார்ந்திருப்பது; காலமோ நிலையின்றி ஓடிக்கொண்டே யிருப்பது. ஊழ்வினைக்குரிய காலம் குறைவாகையால் அவ்வூழ் வினையைப் பொருளாக எண்ணாமல் நமது முயற்சியை விடாப் பிடியாய்த் தொடர்ந்து செய்வோமாயின், ஊழ்வினைவலி குன்றி மெலிந்துபோகும். இதுபற்றியே,

“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்”

என்று அறிவிக்கின்றார். நம் முயற்சிக்கிடையே ஊழ்வினை புகுந்து இடுக்கண் செய்தாலும், ஊக்கம் குன்றி மனச் சோர்வு கொள்ளாமல், தொடர்ந்து விடாது முயல வேண்டும் என்பதற்காகவே, உலைவின்றித் தாழாது உஞற்றுதல் வேண்டும் என்று கூறுகின்றார்.

முயற்சிக்குச் சிந்தனை ஆற்றலுண்டோ எனின், முயற்சியும் நம்மால் செய்யப்படுவது; முன்னை வினையென்ற ஊழும் நம்மால் செய்யப்பட்டது. நம்மால் செய்யப்பட்டதை நம்மால் அழிக்க முடியாதா? மேலும் ஊழ்வினை செயலின்றிக் கிடப்பது; முயற்சி யாகிய செய்வினையோ, தொடர்ந்து செல்லும் வலியுடையது. ஊழ்வினை இன்ப வடிவாகவும், துன்ப வடிவாகவும் இருக்கும் குறையுடையது; முயற்சியோ இன்பமே வடிவாக இருப்பது. அதுபற்றி,

“முயற்சி திருவினையாக்கும் முயற்சி யின்மை
இன்மை புகுத்தி விடும்”

என்று கூறுகிறார். செல்வத்தைத் தந்து இன்பம் பெறுவிக்கும் என்பதைத் திருவினையாக்கும் என்கிறார்.
இங்ஙனமாயின் ஒருவன் முயற்சியுடையவனாவதற்கு என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி எழுகிறது. முதலாவது இன்பம் என்று சொல்லப்படுபவைகளை அவன் விரும்பமாட்டான்; மேன் மேலும் வேலை செய்வதையே விரும்புவான். தனக்கு இன்பம் வேண்டானாயினும் தனக்கு வேண்டியவர்க்குத் துன்பம் வரக் கண்டால் விரைந்து சென்று அத் துன்பத்தைப் போக்கி மேலும் துன்பம் நேராதபடி தூண்போல் நின்று காப்பான். இதனை,

“இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்”

என்று கூறுகின்றார்.

இவ்வாறு இன்பத்தை வேண்டாமல், வேலைகளையே விரும்புவது நல்லதுதான். பிறர் துன்பம் துடைக்க முற்படுவது ஏன் என்று திருவள்ளுவரைக் கேட்டால், குடும்ப வாழ்வு நடத்துவதே பிறர்க்கு உதவி செய்வதற்கே யாதலால், முயற்சியுடையவன் அதனைச் செய்யாமல் இருக்கமாட்டான் என்பதற்காகத்தான் “தன் கேளிர் துன்பம் துடைத்துத் தூண் போல் தாங்குகிறான்” என்று கூறுகிறார்.

இங்ஙனம் பிறர்க்கு உதவி வாழ்வதுதான் வேளாண்மை. அதுதான் ஒருவனுக்குப் பெருந்தன்மை. அதனைச் சார்ந்துதான் அவனுக்கு மேம்பாடு உண்டாகிறது. இதற்கெல்லாம் அடிப்படை அவனது முயற்சி.

“தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு”

என்று கூறுகிறார். இக்குறளில் முயற்சியைத் தாளாண்மை என்றும், பிறர்க்கு உதவி செய்வதை வேளாண்மை என்றும் குறிக்கின்றார். இந்நாளில் வேளாண்மை என்பது பயிர்த்தொழிலுக்குப் பெயராய் விட்டது. வேளாளர் என்பது புலால் உண்ணாத ஒரு சாதியைக் குறிப்பதாயிற்று. இது காலத்தால் வந்த கோளாறு.

பிறர்க்கு உதவி செய்வதைக் குறிக்கும் வேளாண்மை, முயற்சி செய்பவனுக்கே உரியது என்று திருவள்ளுவரே கூறுகின்றாரே, முயற்சியில்லாதவரும் பிறர்க்கு உதவி செய்கிறார்களே, அவர் களுக்கு மேன்மை வராதோ என்று கேட்கலாம். முயற்சியில்லாதவன் வேளாண்மை செய்வானானால் ஒரு சில நாட்களில் உள்ள பொருளை யிழந்து தனக்கே கேடு செய்து கொள்வான். அவனை அதைச் செய்யச் சொல்வதே குற்றம். முயற்சியில்லாதவன் பேடி; அவனைப் பிறர்க்கு உதவும் வேளாண்மை என்னும் பெருமை வாய்ந்த செயலைச் செய்யவிடுவது. பேடியின் கையில் கூரியவாளைக் கொடுத்துப்போர்க்கு விடுவதுபோல் ஆகும். ஆதலால்தான்,

“தாளாண்மை இல்லாதான் வேளாண்மை, பேடிகை
வாளாண்மை போலக் கெடும்”

என்று கூறுகிறார்.

முயற்சியை விரும்பாமல் சோம்பியிருக்கும் செல்வர்களும் உலகில் உண்டு. தம்மை அனைவரும் பாராட்டவேண்டியும் போலிப் புகழ் வேண்டியும் வருபவர் அனைவர்க்கும் வேண்டிய உதவியைச் செய்வர். அது சுரக்காத கிணற்றில் உள்ள தண்ணீரை மேன்மேலும் இறைப்பதுபோலாகும். முடிவில் முயற்சியில்லாதவன் செல்வ மெல்லாம் இழந்து வறுமைக்கு இரையாகிக் கெடுவான்.*

-   அந்தணர் என்னும் சொல் முற்றத் துறந்த முனிவர்க்கே உரியதென்பது திருவள்ளுவர் கருத்து; சாதிப் பெயரன்று என்பது அவர் நூலகத்தே விளங்கும். நச்சினார்க்கினியர் உரையும் இக்கருத்தை வலியுறுத்துகின்றது.

-   வியாசபாடியமும் தத்துவ வைசாரதியும் IV - II

-   அத்த சாலினி பக். 89

-   பச்சையப்பர் கல்லூரிப் பேராசிரியரும் மறைமலையாரின் மாணவருமான மணி. திருநாவுக்கரசரின் தம்பி மணி. கோடீசுவரரன். வேலூர் மகந்தை உயிர்நிலைப்பள்ளித் தலையாசிரியர். ஆங்கிலத்தில் சிறந்த பேச்சாளர்.

1.  இதிகாசங்கள் என்ற தலைப்பில், இதன் சுருக்கம், திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தால் ஒலிபரப்பப்பட்டது.

-   இக் கட்டுரையின் தொடர்ச்சி கிடைக்கவில்லை.