சங்க இலக்கியச் செல்வம்
புலவர் குழந்தைசங்க இலக்கியச் செல்வம்


1.  சங்க இலக்கியச் செல்வம்
    1.  மின்னூல் உரிமம்
    2.  மூலநூற்குறிப்பு
    3.  புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு புகழ் பூத்த வரலாறு
    4.  மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை
    5.  முன்னுரை
2.  தாய்மொழிப்பற்று
3.  வளைந்த கோல் நிமிர்ந்தது.
4.  அரசுப் பரிசு
5.  அடாது செய்தார்
6.  சங்கத் தமிழ்
7.  சிலம்புச் செல்வன்
8.  ஒளவையும் அதியனும்
9.  புள்ளின் புரவலன்
10. உணர்ச்சி ஒன்றல்

 


மூலநூற்குறிப்பு

  நூற்பெயர் : சங்க இலக்கியச் செல்வம்

  தொகுப்பு : புலவர் குழந்தை படைப்புகள் - 9

  ஆசிரியர் : புலவர் குழந்தை

  பதிப்பாளர் : இ. இனியன்

  முதல் பதிப்பு : 2008

  தாள் : 16 கி வெள்ளைத் தாள்

  அளவு : 1/8 தெம்மி

  எழுத்து : 11 புள்ளி

  பக்கம் : 16+ 392 = 408

  நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)

  விலை : உருபா. 255/-

  படிகள் : 1000

  நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.

  அட்டை வடிவமைப்பு : வ. மலர்

  அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா, ஆப்செட் பிரிண்டர்ஸ், இராயப்பேட்டை, சென்னை - 14.

  வெளியீடு : வளவன் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017., தொ.பே. 2433 9030

##ன் பதிப்புரை

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரால் அடையாளம் காட்டப்பட்டவர். திராவிட இயக்கச் சான்றோர்கள் வரிசையில் முன்னவர். 1906இல் தோன்றி 1973இல் மறைந்தார். 68 ஆண்டுகள் தமிழ் மண்ணில் வாழ்ந்தவர். பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா போன்ற பெருமக்களால் பாராட்டப்பட்டவர்.

தமிழர்கள் ஆரிய சூழ்ச்சியால் பட்ட அவலங்களை எண்ணியெண்ணி நெஞ்சம் குமுறியவர். தம் நெஞ்சத்து உணர்வுகளை எதிர்காலத் தமிழ்ச் சமுதாயத்திற்கு பதிவுகளாக எழுதி வைத்துச் சென்றவர். தமிழ் இன எழுச்சி வரலாற்றில் அளப்பரும் தொண்டாற்றியவர். இவர் எழுதிய நூல்கள் 29. இந்நூல்கள் அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்து, பொருள் வழிப் பிரித்து, கால வரிசைப்படுத்தி 1 முதல் 15 படைப்புகளாக ஒரே வீச்சில் வெளியிடுகின்றோம். பல்வேறு அணிகலன்கள் அடங்கிய முத்து மாலையாகத் தந்துள்ளோம். இவர் நூல்கள் அனைத்தும் தமிழ்மொழி இன நாட்டின் மேன்மைக்கும், வாழ்வுக்கும், வளத்துக்கும் வித்திடுபவை.

குறிப்பாக இராவண காவியம் படைப்பு திராவிட இயக்க வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல். ஆரிய எதிர்ப்பு உணர்வைக் கட்டியமைத்த இன எழுச்சிக் காவியம். தமிழ் மண்ணில் தன்மானக் கொள்கைகள் நிலைத்து நிற்பதற்கு செயற்கரிய செயல்களைத் தமிழ் இளைஞர்கள் செய்வதற்கு முன் வரவேண்டும் எனும் இன உணர்வோடு எழுதிய படைப்புகள் அனைத்தையும் ஒரே வீச்சில் வெளியிடு கின்றோம். இப்படைப்புகள் வெளிவரப் பல்லாற்றானும் துணை நின்ற தமிழ்ப் பெருமக்களுக்கும், இந்நூல்களுக்கு அறிமுகவுரை தந்துதவிய பெரும்புலவர் இரா. வடிவேலன் அவர்களுக்கும், எம் பதிப்பக ஊழியர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பயன் கொள்ளும் வகையில் பிழையற்ற பதிப்பக வெளிவருகின்றது. வாங்கிப் பயனடையுங்கள்.

(இராவண காவியம் நூலுக்கு மிகச்சிறந்த தெளிவுரை எழுதப்பட்டு வருவதால் இப்படைப்பு வரிசையில் சேர்க்க முடியவில்லை. விரைவில் வெளிவரும்.)

கோ. இளவழகன்


புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு புகழ் பூத்த வரலாறு

இராவண காவியம் படைத்த புலவர் குழந்தை அவர்கள் கொங்கு நாட்டில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ‘ஓலவலசு’ என்னும் சிற்றூரில், பண்ணையக்காரர் என்னும் பழங்குடியில், முத்துசாமிக் கவுண்டர் - சின்னம்மையாருக்கு 1-7-1906இல் பிறந்தார். இவர்தம் பெற்றோருக்கு ஒரே மகனாக வளர்ந்தார்.

தாம் பிறந்த சிற்றூரில் திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார்; தொடர்ந்து படிக்காமல் இடையிடையே விட்டு விட்டுப் படித்தார். மொத்தத்தில் எட்டு மாதங்களே திண்ணைப் பள்ளியில் பயின்றார். கருவிலே திருவுடையவராகிய இவர் பத்தாம் ஆண்டில் இளம் பருவத்திலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றிருந்தார். யாரேனும் ஒருவர் ஒரு பாட்டைப் பாடக் கேட்டால் உடனே இவர் அப்பாட்டின் ஓசையில் புதுப்பாட்டு ஒன்றினைப் பாடுவார். எப்போதும் ஏதேனும் ஒருபாட்டை எழுதிக் கொண்டே இருப்பார். பாட்டு எழுதுவது இவருக்குக் கைவந்த கலையாக அமைந்து விட்டது.

இவர் காலத்தில் இவர் வாழ்ந்த பகுதியில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை. ஆகவே தானாகவே முயன்று படித்துக் கவிபாடும் திறம் பெற்றிருந்தார். இவர் முதன் முதலில் இசைப்பாடல்களைப் பாடினார். இவர்தம் கல்லாமல் பாடும் கவித்திறனையும், பாடல்களின் சிறப்பினையும் கண்டு வியந்த அறிஞர்கள் சிலர், தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படிக்குமாறு தூண்டினர்; ஊக்குவித்தனர். தாம் பிறந்த ஓலவலசிலோ, அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலோ தமிழ்ப் புலவர்கள் எவரும் அக்காலத்தில் இல்லை. ஆகவே இவர் ஆசிரியர் துணையின்றித் தாமாகவே முயன்று இலக்கிய இலக்கணங்களைப் படித்துத் தமிழில் சிறந்த புலமை பெற்றார். மேலும் இவர் ஆசிரியர் உதவியின்றித் தாமாகவே படித்து 1934ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தனித் தேர்வராகத் தேர்வு எழுதிப் புலவர் பட்டயம் பெற்றார்.

இவர் பவானியில் மாவட்டக் கழகப் பள்ளியில் 1924ஆம் ஆண்டில் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். 1940வரை தமிழாசிரியராகத் தொண்டாற்றினார். 1941 முதல் 1962ஆம் ஆண்டுவரை தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். மாணவர்கள் வியந்து பாராட்டும்வகையில் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். ஆசிரியர் பணியினின்று ஓய்வு பெற்ற பின்பும் எழுத்துப் பணியினின்று ஓய்வு பெறவில்லை. வாழ்நாள் முழுமையும் தமிழுக்காகத் தொண்டாற்றினார்; பல நூல்களைப் படைத்தார்; தமது கவிதைகள் வாயிலாகச் சமுதாய உணர்வை - பகுத்தறிவை மக்களிடையே பரப்பினார்.

இவருக்கு முன் ஓலவலசில் படித்தவர் எவருமில்லை. அவ்வூரில் உள்ளவர் களுக்குக் கையொப்பம் இடவும் தெரியாது. இளமைப் பருவத்திலேயே பொதுத் தொண்டில் -குமுகாயத் தொண்டில் ஆர்வமுடையவராக இருந்தார். தாமாகத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படித்துக் கொண்டிருந்த காலத்தில், தம் ஊரிலிருந்த தம்மையொத்த அகவையுடைய இளைஞர்களுக்குக் கல்வி கற்பித்தார். அவர்கள் மூலமாகப் பெரியவர்களுக்குக் கையொப்பம் போடப் பயிற்சியளிக்கச் செய்தார்; கை நாட்டு போடுவதை அறவே ஒழித்தார். அக்காலத்தில் இவரைவிட மூத்தவர் பலர் இவரிடம் கல்வி கற்றனர். ஓலவலசில் கல்லாமை இருளைப் போக்கினார்.

வேளாளஇன மக்களிடையே இருந்த பலபிரிவினரையும் ஒன்று சேர்ப்பதற் காகவும், அவ்வின இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்காகவும் 1946 முதல் 1950வரை ‘வேளாளன்’ என்னும் திங்களிதழை நடத்தினார். அவ்விதழில் இவர் எழுதிய கட்டுரைகள் அவ்வின இளைஞர்களிடையே புத்துணர்ச்சியை வளர்த்தது. விதவை மணம், கலப்புத் திருமணம், சீர்த்திருத்த மணம் முதலியன செய்யவும் அம்மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார்.

வேளாள சமூகத் தலைவரான திரு. வி.சி. வெள்ளியங்கிரி கவுண்டர் தலைமையில், தகடூர் (தருமபுரி) மாவட்டத்திலுள்ள அரூரில் வேளாள மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் புலவர் குழந்தை அவர்கள் ‘விதவை மணம்’ தீர்மானங் கொண்டு வந்தார்; ஒருமனமாக நிறைவேறச் செய்தார். அதன்படி நூற்றுக்கணக்கான விதவை மணங்களைச் செய்து வைத்தார். இச்செயல்கள் இவர்தம் சமூகத் தொண்டிற்குச் சிறந்த சான்றுகளாகும்.

இவர், யாப்பிலக்கணம் படிப்பதற்கு முன்னே 1918இல் ‘கன்னியம்மன் சிந்து’ என்னும் கவிதை நூலை வெளியிட்டார். இவர் பாடிய அச்சாகாத பாடல்களும் நூல்களும் பல உள்ளன; சில நூல்கள் அச்சாகி வெளியிடப்பட்டன. யாப்பிலக்கணம் கற்பதற்கு முன்பு பாடிய பாடல்கள் யாப்பிலக்கணப்படி அமைந்துள்ளன.

இவர் இதுவரை எழுதியுள்ள நூல்கள் : இராவண காவியம் உள்படச் செய்யுள் நூல்கள்-7, உரைநூல்கள் - 3, இலக்கண நூல்கள் -3, உரைநடை நூல்கள் -16 ஆகமொத்தம் 29 நூல்கள் படைத்துள்ளார். தீரன் சின்னமலை நாடகம் இன்னும் அச்சாகவில்லை.

‘விருத்தம் என்னும் வெண்பாவிற்கு உயர்கம்பன்’ என இதுவரையில் போற்றப்பட்டு வரும் புகழுரைக்கு ஈடாகப் புலவர் குழந்தை அவர்கள் இராவண காவியம் பாடிப் புகழ்பெற்றார். ‘காமஞ்சரி’ என்னும் செய்யுள் நாடக நூல், பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்களின் மனோன்மணீயம் என்னும் நூலுக்குப் பிறகு எழுதப்பட்ட சிறந்த நாடக நூலாகும். ‘நெருஞ்சிப் பழம்’ என்னும் நூல் தமிழில் இதுவரை வெளிவராத கற்பனைக் கருவூலமான காதல் கதையாகும்.

புலவர் குழந்தை அவர்கள் பெருங்கவிஞர் மட்டுமல்லர். சிறந்த எழுத்தாளர்; கேட்போர் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் பேசும் பெரும் பேச்சாளர். இவருடைய எழுத்துகள் உறுதியும் அஞ்சாமையும் ஆய்வும் செறிந்த புரட்சிக் கனல் தெறிக்கும் இயல்புடையவை. இவருடைய செய்யுள் நடையும் உரைநடையும் எளிய இனிய தனித்தமிழில் அமைந்தவை. இவர் படைத்த நூல்களெல்லாம் தமிழுக்கும் தமிழர்க்கும் ஆக்கம் தரும் வகையில் அமைந்துள்ளன.

தந்தை பெரியார் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். இவர் அவ்வியக்கத்தில் சேர்ந்தார்; பெரியாரின் அணுக்கத் தொண்டரானார். அன்று முதல் சுயமரியாதை இயக்கம் அதன் மறு பதிப்பான திராவிடர் கழகம், அதன் மறுமலர்ச்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுள் இணைந்து தொண்டாற்றியவர். பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதனையும் செய்யாதவர். பள்ளித் தமிழாசிரியராக இருந்துகொண்டே, அத்தொழிலுக்குச் சிறிதும் இடையூறு இல்லாமல், ‘பெரியார் சீடர்’, ‘கருப்புச் சட்டைக்காரர்’ என்று பொது மக்கள் கூறும்படி கட்சித் தொண்டாற்றியவர். இவரது சுயமரியாதை உணர்ச்சிப் பிழம்பே இராவண காவியம் படைக்கத் தூண்டியது; இவருக்குப் புகழைச் சேர்த்தது.

1948இல் சென்னையில் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் திருக்குறளுக்குப் பகுத்தறிவிற்கு ஏற்ப உரை எழுதுவதற்குத் தந்தை பெரியார், நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் ஐவர் கொண்ட குழுவை அமைத்தார். அக்குழுவில் புலவர் குழந்தையும் ஒருவர். இவரே தனிஒருவராக இருந்து திருக்குறளுக்கு உரை எழுதி ‘திருக்குறள்-குழந்தையுரை’ என்று வெளியிட்டார். அவ்வுரையை 28 நாட்களில் எழுதி முடித்த பெருமைக்குரியர்.

அறிஞர் அண்ணா அவர்கள் ஈரோட்டில் ‘விடுதலை’ ஆசிரியராக இருந்தபோது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றார். காங்கிரசு ஆட்சிக்காலத்தில் தடை செய்யப்பட்ட இவர்தம் இராவண காவியத்திந்ழு, தமிழக அரசால், தமிழ் வாழத் தாம் வாழும் தமிழவேள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் 17-5-1971இல் தடை நீக்கப்பட்டது. அதைக்கண்டு தமிழகமே அகமிக மகிழ்ந்தது; தமிழவேள் கலைஞரை உளமார வாழ்த்தியது.

புலவர் குழந்தை ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கொண்டவர். இவர் ஒரு புரட்சிப் புலவரே எனினும் அமைதியும் அடக்கமும் உடையவர்; ஆடம்பரமின்றி எளிய வாழ்வு வாழ்ந்தவர்; பழகுவதற்கு இனிய பண்பாளர்; கடமை தவறாதவர்; எதிர்க் கட்சியானாலும், மாற்றுக் கருத்து உடையவராலும் நன்கு மதிக்கத் தக்கவர்.

புலவர் குழந்தை அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் முத்தம்மையார். கல்வியறிவு பெற வாய்ப்பில்லாதவராயினும் பொது அறிவு நிரம்பப் பெற்றவர்; தன்மானக் கொள்கையுடையவர்; தம் கணவரின் கொள்கைக்கேற்ப இல்லறத்தை இனிது நடத்தியவர். இவ்விணையருக்குச் சமத்துவம், சமரசம் என்னும் இரு பெண்மக்கள் உள்ளனர். தமிழுக்குத் தொண்டு செய்து வந்த புலவர் பெருந்தகை தமது 68ஆம் அகவையில் 24-9-1973இல் இயற்கை அடைந்தார். மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் புலவர் குழந்தையிடம் அன்பும் மதிப்பும் உடையவர். அவர் மறைந்த பிறகு, அவர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய நூல்கள் 8-7-2006 அன்று அரசுடைமை ஆக்கப்பட்டதாக அறிவித்தார். குழந்தை அவர்களின் மகள்கள் இருவருக்கும் தலா ரூ.5 இலட்சம் பரிவுத் தொகை வழங்கினார்.

நன்றி : நித்திலக் குவியல் (திபி 2037 - டிசம்பர் 2006)


மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை

பெரும் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாளன்று தேனினும் இனிய ஆற்றினை நம் காதில் பொழியச் செய்தது மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு.

புலவர் குழந்தை அவர்களால் எழுதப்பட்ட 29 நூல்களையும் அரசுடைமை யாக்கிப் பரிவுத் தொகையாக ரூபாய் 10 இலட்சத்தையும் அளித்துள்ளது.

பணம் என்பது ஒரு பொருட்டன்று; அதே நேரத்தில் பெரும் புலவரின் நூல்களை அரசுடைமை ஆக்கியதன் மூலம் அவருக்குச் சிறப்பானதோர் அங்கீகாரத்தை அளித்துள்ளது - அதுதான் குறிப்பிடத்தக்கது.

தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப் பட்டவர்; தன்மான இயக்கத்தில் தன்னை ஒப்படைத்தவர் - திராவிடர் கழகத்தில் கருஞ்சட்டை வீரராக வீர உலா வந்தவர்.

அவர் இயற்றிய “இராவண காவியம்” - இனவரலாற்றில் - இயக்க வரலாற்றில் ஈடு இணையில்லாதது.

4.9.1971 அன்று விழுப்புரத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களுக்கு நடத்தப்பட்ட விழாவில் தந்தை பெரியார் பங்கு கொண்டு புலவர் குழந்தை அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டுரையும் புகன்றார்.

அவ்விழாவில் பகுத்தறிவாளர் கழக மாநிலப் புரவலர் என்கிற முறையில் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களும் பங்கேற்றுப் பாராட்டுரை புகன்றார்.

அவ்விழாவில் பங்கேற்றுப் புலவர் குழந்தை அவர்கள் ‘இராவண காவியம் எழுதியது ஏன்?” என்பது குறித்துத் தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

“இராமன் கடவுளல்ல என்கின்ற உணர்ச்சியினைத் தமிழக மக்களிடையே ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக இராவண காவியத்தை எழுதினேன். எனக்குத் துணிவினைத் தந்தவர் தந்தை பெரியாரவர்களே ஆவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் (‘விடுதலை’ 29.9.1971 பக்கம் 3).

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆனாலும், புலவர் குழந்தை யானாலும் தொடக்கத்தில் பக்திப் பாட்டெழுதிக் கிடந்தவர்கள்தாம். தந்தை பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பின்பே பகுத்தறிவுக் கருவை கவிதையின் மையமாக வைத்துப் பாட்டெழுதினார்கள் என்பது அடிக்கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும்.

விழுப்புரம் பாராட்டு விழாவில் தந்தை பெரியார் கூறினார்.

“புலவர் குழந்தையவர்கள் இராவண காவியம் எழுதி இருக்கின்றார், அது ஒரு இராமாயணம் போன்றதே! எத்தனையோ இராமாயணங்கள் இருக்கின்றன என்றாலும் நம் நாட்டிலிருப்பது பார்ப்பன இராமாயணமாகும். இந்த இராமாயணத்தின் தத்துவம் நம்மை இழிவுபடுத்துவதேயாகும். நம்மை அடக்கி ஒடுக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை வாய்த்தவரை செய்ய வேண்டியது; பார்ப்பான் தர்மத்தை நிலை நிறுத்த தன் மனைவியை விட்டுக் கொடுத்து, அதன் மூலம் அவனை ஒழிக்கலாம் என்பதை உணர்த்துவதற்காக எழுதப்பட்டதேயாகும்.

நமது புலவர்கள் மகா மோசமானவர்கள்; பார்ப்பான் எழுதியதைக் கண்டிக்காது, காது, மூக்கு வைத்துப் பெருமைப்படுகிறார்களே தவிர, அதனைக் கண்டித்து எழுதப் புலவர் குழந்தைபோல் எவரும் முன்வரவில்லை. முதன்முதல் நண்பர் பாரதிதாசன் அவர்கள்தான் துணிந்து பார்ப்பானைக் கண்டித்தார்.

புலவர் குழந்தை அவர்கள் பார்ப்பனர்களின் அயோக்கியத்தனங்களையெல்லாம் காவிய நடையில் எழுதியுள்ளார். அதுவும் இலக்கணப்படி எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தை நீங்களெல்லாம் வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டும். பார்ப்பான் தன் இனத்திற்காக பிரச்சாரம் செய்கின்ற காலிகளையெல்லாம் சாமியாக்குகின்றான். அதுபோல நமக்காகப் பாடுபடுகின்றவர்களை, தொண்டு செய்கிறவர்களை, எழுதுகிறவர்களைப் பெருமைப் படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் துணிந்து முன்வருவார்கள்” (விடுதலை 29.9.1971 பக்கம் 3) என்று தந்தை பெரியார் பாராட்டுதலுடன் ஆழமான கருத்தினை எடுத் துரைத்தார்கள்.

சேலம் பேரணியில் முன்வரிசையில் புலவர் குழந்தை

1971 (சனவரி 21) அன்று திராவிடர் கழகம் நடத்திய சேலம் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் கருப்புடை அணிந்து புலவர் குழந்தை அவர்கள் வீறுநடைபோட்ட காட்சி கண் கொள்ளாதது.

1938, 1948 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் முக்கிய பங்கெடுத்துக் கொண்டவரும் கூட!

எந்த இடத்திலும் தாம் ஏற்றுக் கொண்ட தன்மான இயக்க பகுத்தறிவுக் கருத்துக்களைக் கம்பீரமாகச் சொல்லத் தயங்காதவர்.

வெள்ளக்கோயில் தீத்தாம்பாளையத்தில் 1930இல், “ஞானசூரியன்” நூல் ஆசிரியரான சாமி சிவானந்த சரஸ்வதியுடன் ‘கடவுள் இல்லை’ என நான்கு நாள் நடத்திய சொற்போரில் புலவர் குழந்தை அவர்கள் வெற்றி பெற்றார் என்பதிலிருந்து, அவரின் விவாதத்திறன் பளிச்சிடுகிறது.

இரா. பி. சேதுப்பிள்ளையின் பாராட்டு!

கம்பன் கவிநயத்தை லயித்து, சப்புக் கொட்டிப் பேசும் சொல்லின் செல்வர் என்று போற்றப்பட்ட இரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள்கூட புலவர் குழந்தையின் இராவண காவியத்தில் சொக்கிப் போயிருக்கிறார்.

“தேனினும் இனிய செந்தமிழ்க் குழந்தை!”

நான் கம்பராமாயணக் கவிச் சுவையில் கட்டுண்டு கிடந்தனன். தங்கள் இராவண காவியம் அக்கட்டை அவிழ்த்து விட்டது. கருத்து மாறுபாடு வேறு” என்று குறிப்பிட்டதிலிருந்து புலவர் அவர்களின் புலமைத் திறன் குன்றின் மேல் ஒளிர்கிறது.

கம்ப இராமாயண அன்பரான புலவர் அய்யன் பெருமாள்கோனார் ஒருபடி மேலே தாவிப் பாடினார்.

“ இனியொரு கம்பனும் வருவானோ?
இப்படி யும்கவி தருவானோ?
கம்பனே வந்தான்;
அப்படிக் கவிதையும் தந்தான்
ஆனால்,
கருத்துதான் மாறுபட்டது”

என்று கவியால் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார்.

இத்தகைய தமிழ்ப் புலவர் பெருமகனாருக்குத்தான் தமிழக அரசு உரிய சிறப்பினைச் செய்திருக்கிறது.

கம்பனைப் போல் காட்டிக் கொடுத்து காவியம் புனைந்திருந்தால் இவருக்கு இமயப்புகழ் கிடைத்திருக்கும். என்றாலும் காலங் கடந்தாவது ஒரு அரசின் அங்கீகாரம் கிடைத்தது என்பது வரவேற்கத் தகுந்ததாகும்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், அதன் துணை அமைப்பான பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் மூலம், மறைக்கப்படும் தமிழினப் பெரு மக்களைத் (இலக்கியவாதிகளை) தம் தோளில் தூக்கிக் கொண்டாடத் தவறவில்லை.

தமிழ்நாட்டிலேயே இராவண காவியத் தொடர் சொற்பொழிவை அரங்கேற்றிய பெருமை அதற்குண்டு. சிலம்பொலி செல்லப்பனார் அவர்களைக் கொண்டு 29.9.1978-ல் தொடங்கி 7.12.1979வரை 21 சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. அதே போல் பேராசிரியர் அறிவரசன் அவர்கள் 29.9.1998 முதல் 13.11.1999வரை 15 சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

முனைவர் மறைமலை இலக்குவனார் 1.7.2004 முதல் 15.6.2006 வரை 23 தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

இராவண காவிய மாநாடு

இரண்டு இராவண காவிய மாநாடுகள் நடத்தப்பட்டன; முதல் மாநாடு 5.7.1986 அன்று காலை முதல் இரவுவரை சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது. இரண்டாவது இராவண காவிய மாநாடு 1.7.1989 அன்று (புலவர் குழந்தை அவர்களின் 83-ஆம் ஆண்டு பிறந்த நாள் அன்று) சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது.

இவையன்றி, தனித்தனிச் சிறப்புக் கூட்டங்களும் நடத்தப்பட்டதுண்டு. இத்திசை யில் மொத்தம் 77 நிகழ்ச்சிகள் நடத்திய சாதனை பெரியார் நூலக வாசகர் வட்டத்துக்கு உண்டு.

தீர்மானங்கள்

28.6.2005 அன்று சென்னை பெரியார் திடலில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விழாவில் நிறைவுரையாற்றினார். அவ்விழாவில் முக்கிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானம் தமிழக அரசு புலவர் குழந்தையின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என்பதாகும்.

இரண்டாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களின் நூல்களை நாட்டுடமை ஆக்க வேண்டும் என்பதாகும்.

மூன்றாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களைப் போற்றும் வண்ணம் அவர்தம் அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என்பதாகும்.

இந்தத் தீர்மானங்களை இணைத்து, அவற்றைச் செயல்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து அன்றைய தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் கடிதம் ஒன்றை எழுதினார். (15.7.2005)

அந்தக் கடிதம் இன்னும் கோப்பில் குறட்டை விட்டுக் கொண்டுதானிருக்கிறது. காரணம் அந்த அரசுக்குத் தமிழ் உணர்வு இல்லாததுதான்.

மத்திய அரசு தொலை தொடர்பு மற்றும் தொழிற் நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு தயாநிதிமாறனுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் கி. சத்தியநாராயணன் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதினார். புலவர் குழந்தை அவர்களை நினைவுகூரும் வகையில் அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது. (12.8.2005).

தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் 24.8.2005 அன்று ஒரு கடிதம் எழுதினார். வாசகர் வட்டம் நிறைவேற்றிய தீர்மானங்களை இணைத்து அவற்றைச் செயலாக்கம் செய்ய அதில் வேண்டுகோள் விடப்பட்டு இருந்தது.

கலைஞரின் சாதனை!

இப்படி இடை விடாத தொடர் முயற்சிகளைக் கழகம் மேற்கொண்டதற்கு தி.மு.க. ஆட்சியில், மாண்புமிகு மானமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக முதல் அமைச்சர் ஆகியுள்ள நிலையில் வெற்றி கிடைத்திருக்கிறது.

இந்த அரும்செயலைச் செய்த முதல் அமைச்சரைப் பாராட்டி, தமிழக அரசைப் பாராட்டி, சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற புலவர் குழந்தை நூற்றாண்டு நிறைவு விழாவில் (29.6.2006) நன்றியைத் தெரிவித்துப் பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அஞ்சல்தலை வெளியிடுவது மட்டும் நிலுவையில் உள்ளது. அதனையும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றுவார் என்பதில் அய்யமில்லை. புலவர் குழந்தை அவர்கள் மறைந்தாலும் காலத்தை வென்று நம்மிடையே வாழ்கிறார்.

வாழ்க அப்பெருமகனார்!


முன்னுரை

கதை படிப்பதில் பொதுவாகச் சிறுவர்களுக்கு ஆர்வம் அதிகம். அதிலும், தமிழ் இலக்கியக் கதைகள் என்றால், தமிழ்ச் சிறுவர்கள் மிகவும் விரும்பிப் படிப்பார்கள். தமிழ்ச் சிறுவர் களின் அத்தகைய இயல்புக் கேற்பச் சங்க இலக்கியங்களில் உள்ள வரலாற்றுக் கதைகளே இந்நூலில் இடம்பெற் றுள்ளன.

தமிழ்ச் சிறுவர்கள் கதை படிப்பதோடு, தங்கள் முன்னோரின் வாழ்க்கை முறைகளையும் ஒருவாறு தெரிந்து கொள்ளுதல், ‘தமிழ் இலக்கியங்கள் படிக்க வேண்டும்’ என்னும் ஆர்வத்தை அவர்கட்கு உண்டாக்குமாதலால், அத்தகு ஆர்வத்தை உண்டாக்கும் முறையில் எளிய இனிய தமிழ் நடையில் இந்நூல் எழுதப் பட்டுள்ளது.

இந்நுலைத் தமிழ்ச் சிறுவர்கட்குப் பயன் படும்படி செய்து, அன்னாரின் தமிழ் மொழி அறிவையும், ‘சங்க இலக்கியங்கள் படிக்கவேண்டும்’ என்னும் ஆர்வத்தையும் வளர்ப்பது, பெரி யோர்களின் கடமையாகும்.

  பவானி
  25-8-’66

  அன்புள்ள

  குழந்தை

தாய்மொழிப்பற்று


தமிழ் நாட்டின் வளத்துக்கும் சிறப்புக்கும் காரணமாய் இருப்பது காவிரியாறு. அது சோழ நாட்டை நீர்வள முடைய தாகச் செய்கிறது. ‘சோழ வளநாடு சோறுடைத்து’ என்னும் சிறப்புக்குக் காவிரியாறே காரணமாகும். ஒரு சோழ மன்னனை, ‘காவிரிபுரக்கும் நாடுகிழவோனே’ - காவிரியாற்றினால் வளஞ் செய்யப்படும் நாட்டுக்கு உரியவனே - என்கின்றார் ஒரு சங்க காலப் புலவர்.

காவிரியாறு முன்னர் மலையிலிருந்து நிறையப் பொற் பொடியை அடித்துக்கொண்டு வந்தது. அதனால், அது பொன்னி என்றும் பெயர் பெற்றது. பொன்னியாறு பாய்வதால், சோழ நாடு, பொன்னி வளநாடு எனப்பட்டது. அதனால், சோழ மன்னர்கள் பொன்னித்துறைவர் என்று அழைக்கப் பெற்றனர்.

காவிரியாற்றின் பெருமையைப் பாராட்டாத பழந்தமிழ் நூல்கள் ஒன்றுமே இல்லை எனலாம். ‘காவிரிப்பாவை, தமிழ்ப் பாவை, சோழர் குலக்கொடி’ என்று சிறப்பிக்கின்றது மணி மேகலை. சிலப்பதிகாரத்துக் கானல்வரி என்னும் காதையில், ஆற்றுவரி என்னும் பாடல்களால், காவிரியின் பெருமை விளக்கமாக விரித்துக் கூறப்பட்டுள்ளது.

“உழவர் ஓதை மதகோதை
உடைநீர் ஓதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி.”

“வாழி யவன்றன் வளநாடு
மகவாய் வளர்க்கும் தாயாகி
ஊழி யுய்க்கும் பேருதவி
ஒழியாய் வாழி காவேரி.”

(கானல்வரி)

என்னும் சிலப்பதிகார அடிகளைப் பாடி இன்புறுக.

இத்தகைய சீருஞ்சிறப்பும் உடைய காவிரியாறு மேற்கு மலைத்தொடரில் தோன்றி, கொங்கு நாட்டிடைப் பாய்ந்து, சோழநாட்டை நன்கு வளஞ் செய்துகொண்டு கீழ்கடலில் சென்று கலக்கிறது. ஆறு கடலொடு கலக்கும் இடத்திற்குக் கழிமுகம் என்று பெயர். கழிமுகத்திற்குப் புகார் என்பது பழந்தமிழ்ப் பெயர்.

காவிரி கடலொடு கலக்கும் இடத்தில் - புகாரில் - சோழ நாட்டின் தலைநகர் அமைந்திருந்ததால் அது புகார் எனப் பட்டது. காவிரியின் பெயரொடு பொருந்த அப்பூம்புகார், காவிரிப்பூம்பட்டினம் எனவும் வழங்கிற்று.

காவிரிப்பூம்பட்டினம் சங்க இறுதிக் காலத்தே சீருஞ் சிறப்பும் பொருந்தித் திகழ்ந்தது. அது ஒரு கப்பல் துறைமுக பட்டினமாக விளங்கிற்று. வெளி நாடுகளுக்குச் சரக்குக்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களும், வெளிநாடுகளிலிருந்து வந்து சரக்குக்களை இறக்கும் கப்பல்களும் அப்புகார்த் துறைமுகத்தில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

அப்பூம்புகார் நகர் - பட்டினப் பாக்கம், மருவூர்ப் பாக்கம் என, இருபெரும் பிரிவாகப் பிரிந்திருந்தது. புகார் நகரின் சிறப்பினைப் பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய பழந்தமிழ் நூல்களில் பரக்கக் காணலாம்.

காவிரிப்பூம்பட்டினத்துப் பெருங்குடி மக்களில் வணிக மரபினர் சிறந்தவராவர். வெளி நாடுகளுடன் கடல் வாணிகம் செய்துவந்தோர் அவ்வணிக மக்களே யாவர். அன்று சாவகம், சீனம் முதலிய கீழ்நாடுகளுடனும், எகிப்து, கிரேக்கம், உரோம் முதலிய மேனாடுகளுடனும் கடல்வாணிகம் செய்து வந்தது தமிழ்நாடு.

அவ்வணிகரில் பெரும்பாலோர் பெருஞ் செல்வர்களாவர். சிலப்பதிகாரக் கதைத்தலைவர்களான கோவலனும் கண்ணகியும் அச்செல்வ வணிகர் குடியில் பிறந்தவரே யாவர். கோவலன் தந்தையான மாசாத்துவான் என்பானை, ‘சோழ மன்னனோடு ஒருங்குவைத்து எண்ணப்படுகின்ற பெருஞ் செல்வக் குடிகளில் ஒருவன்’ என்கின்றார் இளங்கோவடிகள்.

பூம்புகார்நகரில் அவ்வணிக மரபில் கோவலன் காலத்தே, சாதுவன் என்னும் செல்வன் ஒருவன் இருந்தான். இவனும் அத்தகைய செல்வர்களுள் ஒருவனே. சாதுவன் மனைவி, ஆதிரை என்பாள். சாதுவனும் ஆதிரையும் இனிது இல்லறம் நடத்தி வந்தனர். கோவலன் எங்ஙனம் தன் முன்னோர் ஈட்டிய செல்வம் முழுவதையும் தொலைத்து விட்டு, சொந்த ஊரில் வாழ முடியாத நிலையை அடைந்தனனோ அவ்வாறே, சாதுவனும் தன் செல்வ மெல்லாம் தொலைத்து ஏழையானான்.

உள்ளதைத் தொலைத்தவர்க்கு உள்ளூரில் மதிப்பில்லை. பெருஞ்செல்வ வாழ்க்கை வாழ்ந்தவர்க்கு அதே ஊரில் கூலி வேலை செய்து பிழைக்க மனம் இடந்தருமா? தம் குடிப் பெருமை அதற்குக் குறுக்கே நிற்குமல்லவா? இதனால்தானே கோவலன் இரவோடிரவாக, பெற்றோர்க்குக் கூடத் தெரியாமல், தன் மனைவி கண்ணகியுடன் சொந்த ஊரை விட்டு, வேற்று நாட்டின் ஊராகிய மதுரைக்குச் சென்றான்! இது சாதுவனுக்கு விலக் காகுமா? இவனும் செல்வாக்காக வாழ்ந்து கெட்டவன் தானே? ‘வாழ்ந்தவர் கெட்டால் வாயோட்டுக்குக்கூட உதவார்’ என்ற பழமொழிப் படி, அவன் உள்ளூரில் மதிப்பிழந்தான்.

சாதுவன், கப்பல் வணிகம் செய்து கண்ணியமாக வாழ்ந்து வந்த பெருங்குடியில் பிறந்தவன். இளமையிலிருந்து செல்வாக் காக வாழ்ந்து வந்தவன். ஆனால், அவன் தன் அறியாமையினால், ஆடம்பரமாக வீண் செலவு செய்து, மலையின் முடியில் வாழ்ந்த அவன், மடுவின் அடிக்குத் தாழ்ந்தான்; வாழ்க்கைச் செலவுக்கே பணம் இல்லை; வறுமையால் வாடினான். வறுமை அவனை வாட்டியது.

ஒரு சிலர், வரவுக்கு மீறி ஆடம்பரச் செலவு செய்து உள்ளதை யெல்லாம் தொலைத்துவிட்டு, வாழ வழியில்லாமல் மனைவிமக்கள் எல்லாரையும் தனியாகத் தவிக்க விட்டு விட்டு, ஒருவருக்குந் தெரியாமல் இலங்கை, மலேயா முதலிய வெளிநாடு களுக்குக் கப்பலேறி விடுவது போலவே, சாதுவனும் வெளியேற முடிவு செய்தான்.

அவன் தன் அருமை மனைவியைத் தனியாகத் தவிக்க விட்டு விட்டு, உற்றார் உறவினரையும் மறந்து விட்டு, வெளி நாடுகளுக்கு வாணிகத்தின் பொருட்டுப் புறப்பட்ட கப்பல் ஒன்றில் ஏறி விட்டான். கோவலனாவது, அறிவில்லாமல் கெட்ட வழியில் ஆடம்பரமாகச் செலவு செய்து செல்வமிழந்து வறுமை யுற்று, உள்ளூரில் வாழ மனமில்லாமல், தன் மனைவி யாகிய கண்ணகியை உடனழைத்துக்கொண்டு மதுரைக்குச் சென்றான். சாதுவனோ, தன் மனைவியாகிய ஆதிரையைத் தனியாகத் தவித்தேங்க விட்டு விட்டு, அவளிடம் சொல்லாமலேயே கப்பலேறி விட்டான்.

கணவன் சென்ற இடம் தெரியாத ஆதிரை மிகவும் வருந்தி னாள். யார் யாரையோ கேட்டுப் பார்த்தாள்; தன் உறவினர் ஊர்களுக்கெல்லாம் ஆள்விட்டுத் தேடினாள். அவன்தான் கப்பலேறி விட்டானே. அங்கெல்லாம் எப்படி இருப்பான்? ஆதிரை என்செய்வாள் பாவம்! உள்ளதை யெல்லாம் தொலைத்து ஓட்டாண்டியாக்கிவிட்டு வேறு சென்று விட்டான். என்னவோ, ஆறாத்துயருடன் அழுதழுது ஒவ்வொருநாளையுங் கழித்துக் கொண்டு வந்தாள் அவள்.

சாதுவன் முன்பெல்லாம் வணிகத்தின் பொருட்டுக் கப்பலேறி வெளிநாடுகளுக்குச் சென்றது போல இன்று பண மூட்டை யுடனா சென்றான்? இல்லை; வெறுங்கையுடன், எங்காவது போய்த் தொலையலாம் என்ற எண்ணத்துடன் உயிரினும் இனிய மனைவியையும், உற்றார் உறவினரையும், தாய்த்திரு நாட்டையும், சொந்த ஊரையும் விட்டுப் பிரிந்து, கடலின் நடுவில் கப்பலில் சென்று கொண்டிருந்தான்.

சாதுவன் சென்ற கப்பல், இன்றுள்ள கப்பல்கள் போல யந்திரக்கப்பல் அன்று. அது பாய்மரக்கப்பல்; காற்றினால் செல்லும் கப்பல்; காற்று அடித்த பக்கம் செல்லும் கப்பல். காற்று வீசினால் அது செல்லும்; காற்று நின்று விட்டால் அக் கப்பலும் நின்றுவிடும். அக்காலத்தே கப்பலில் செல்வது உயிருக்குத் துணிந்த ஒரு செயலாகும். அடிக்கடி சுழல் காற்றில் அகப்பட்டுக் கப்பல்கள் கவிழ்ந்து விடுவதும் உண்டு.

சாதுவன் சென்ற கப்பல் ஒரு நாள் இரவில் சென்று கொண் டிருந்த போது, பெரிய சுழல் காற்று வீசத் தொடங்கியது. அது புயல் எனப்படும். புயலினால் கப்பல் ஆடத் தொடங்கியது. கப்பலில் உள்ளவரெல்லாரும் அஞ்சி அலறினர். வரவரக் காற்று விசையாக வீசத் தொடங்கியது. கப்பலில் உள்ளவர்கள், கப்பல் கவிழ்ந்து விடும் என்பதை உறுதிசெய்து கொண்டனர். பெரும்பாலோர் தங்கள் உயிரின் மேல் வைத்திருந்த நம்பிக்கையை இழந்து விட்டனர். வரவரக் கப்பல் வெறி கொண்டவன் போல் ஆடியது. எல்லாரும் ‘கப்பல் கவிழ்ந்தது கவிழ்ந்தது’ என்று கூச்சலிட்டனர். கப்பலும் கவிழ்ந்து விட்டது!

கப்பலில் இருந்தவரில் பெரும்பாலோர் கடலுக்கிரை யாயினர். ஒரு சிலர் அலையோடு போராடிக் கொண்டிருந்தனர். நம் சாதுவனுக்கு ஒடிந்த பாய் மரத் துண்டொன்று கிடைத்தது. அவன் அதைப் பிடித்துக் கொண்டு அலையோடு போராடினான். மறுநாட்காலையில் அலை அவனை அடித்துக் கொண்டு போய், ஒரு சிறு தீவின் கரையில் தள்ளியது. சாதுவன் இரவெல்லாம் அலையோடு போராடிய களைப்பால், கரையோரத்தில் படுத்து அயர்ந்து தூங்கி விட்டான்.

அது, நாகர் என்னும் ஒருவகை மக்கள் வாழும் தீவு. நாகர் வாழ்வதால் அது, நாகத் தீவு என வழங்கியது. அந்நாகரை மக்கள் என்பதை விட, மாக்கள் என்பதே பொருந்தும். ஏனெனில், அவர்கள் பகுத்தறி வில்லாத விலங்குகள் போன்றவர். ஒரு சில விலங்குகள் தம் இன விலங்குகளையே கொன்று தின்பது போல, அந்நாகர்கள் மக்களையே கொன்று தின்பவர்கள். மேலும், மானத் திற்காக நாம் உடை உடுத்துகிறோம். அவர்கள் ஆடையில்லாமல் வாழ்பவர்கள். மணிமேகலை ஆசிரியர் இவர்களை, ‘நக்க சாரணர் நாகர்’ என்கின்றார். அதாவது, ஆடை யில்லாமல் வாழும் நாகர் என்கின்றார். ஏன்? அவர்களை மாக்கள் என்று சொல்ல லாமல்லவா?

அந்நாகர்கள், கவிழ்ந்த கப்பலிலிருந்து தப்பி அத்தீவை அடைந்தவர்களைக் கொன்றுதின்பார்கள்; கடலில் விழுந்து தவிப்போர்களையும் பிடித்துக் கொண்டு போய்த் தின்பார்கள்; கடலில் நன்கு நீந்தவல்லவர்கள்; கவிழ்ந்த கப்பலில் உள்ள பொருள்களையும் எடுத்துக் கொண்டு போவார்கள்.

அந்நாகரிற் சிலர், சாதுவன் படுத்துத் தூங்கிக் கொண் டிருக்கும் பக்கமாக வந்தனர். சாதுவன் படுத்துத் தூங்குவதைக் கண்டனர்; பெரும் புதையல் கிடைத்தது போல உள்ளும் புறமும் ஒருங்கே உவந்தனர். தேடிச் சென்றவர்களுக்கு நல்ல வேட்டை கிடைத்தால் மகிழ்ச்சி உண்டாவது இயல்புதானே? அவர்கள் தூங்குகின்ற சாதுவனைச் சுற்றி வளைத்துக் கொண்டார்கள். சூழ்ந்து நின்று, புதருக்குள் படுத்திருக்கும் முயலை எழுப்புவது போல, அவர்கள் சாதுவனை எழுப்பினர்.

சாதுவன் விழித்தெழுந்தான்; தன்னைச்சுற்றிலும் ஆடை யில்லாது ஒருவகைக் காட்டு மக்கள் நிற்பதைக் கண்டான்; அச்சங் கொண்டான். ‘மழை விட்டும் தூவானம் விடவில்லை’ என்பது போல , கப்பல் கவிழ்ந்து கடலில் வீழ்ந்து உயிருக்கு ஊசலாடிய அச்சம் நீங்கிக் கரையேறியும், இன்னும் அவனுக்கு அச்சம் நீங்கினபா டில்லை. அந்நாகர்களைப் பார்த்து, ‘நீங்கள் யார்?’ என்று கேட்டான்.

அவர்கள் என்னவோ கத்தினார்கள். அவர்களுக்குத் தமிழ்த் தெரியாது. அவர்கள் பேசுவது வேறு மொழி. ஆனால், சாதுவனுக்கு அவர்கள் பேசும் மொழி ஒருவாறு தெரியும். அவன் அந்நாகர் தாய்மொழியில் தான் இன்னான் என்பதையும், கப்பல் கவிழ மரத்துண்டைப் பிடித்துக் கொண்டு கரை யேறியதையும் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் சொன்னான்.

உடனே அந்நாகர்கள், சாதுவனைச் சுற்றி வளைத்து நின்றதை விட்டு விட்டார்கள்; அவனைக் கொல்லும் எண்ணத் தையும் மாற்றிக் கொண்டார்கள். சாதுவனிடம் அவர்கள் மிக்க அன்பும் இரக்கமும் கொண்டார்கள். சாதுவன் மிகவும் களைத் திருப்பதைக் கண்டு, பழங்கள் பறித்துக்கொண்டு வந்து கொடுத்து உண்ணும்படி வேண்டினர். சாதுவன் அப்பழங்களைத் தின்று களைப்புத் தீர்ந்தான்.

புதருக்குள் படுத்திருக்கும் முயலைச் சூழ்ந்து கொண்ட வேட்டைக்காரர்கள் அந்த முயலுக்குப் புல் பிடுங்கிக் கொடுப்பது போல, சாதுவனைக் கொன்று தின்னச் சூழ்ந்த அந்நாகர்கள், இவ்வாறு மாறியதற்குக் காரணம் என்ன? அவர்களுடைய கொடிய மனத்தை இவ்வாறு மாற்றியது எது? உயிரைக் கொல்ல எழுப்பியவர்களை அவ்வுயிர் போகாமலிருக்கப் பழம் பறித்துக் கொடுக்கும்படி செய்தது எது? அவர்கள் தாய்மொழி.

அந்நாகரின் தாய்மொழிப் பற்றே அவர்களை அவ்வாறு மாறச் செய்தது. சாதுவன் அவர்கள் தாய்மொழியில் பேசவும், அவர்கள் தாய் மொழிப் பற்று அவர்கள் மனத்தை அவ்வாறு மாற்றி விட்டது. கொன்று தின்னும் பொருளாகக் கொண்ட சாதுவன், பாதுகாக்கப்படும் பொருளாக மாறினான். அந்நாகரின் தாய்மொழிப் பற்று அவர்கள் மனத்தை அவ்வாறு மாற்றி, அவன்பால் அன்பும் இரக்கமும் கொள்ளும்படி செய்தது; தங்களுக்கு உணவாக வேண்டிய ஒருவனுக்கு, உண்ணப் பழம் பறித்துக் கொடுக்கும் நிலையை உண்டாக்கி விட்டது.

மக்களைக் கொன்றுதின்னும் அம் மாக்களுக்கே, ஆடை யின்றி விலங்குகள்போல் வாழும் அந்நாகர்களுக்கே தங்கள் தாய்மொழி மேல் அவ்வளவு பற்றிருக்கு மானால், மக்களல்லாத மாக்களுக்கே தாய்மொழிப் பற்று அத்தகைய உணர்ச்சியை உண்டாக்கு மானால், தாய் மொழிப் பற்றின் சிறப்பினை என்னென்பது!

மேலும், எழுத்தில்லாத, இலக்கிய இலக்கண மில்லாத, பண்படாத ஒரு மொழியின்மேல், மக்கட்பண்பாடே இல்லாத அந்நாகருக்கு அத்தகைய பற்று இருக்குமானால், நமது தாய்மொழி யாகிய தமிழ்மொழி போன்ற சிறந்த மொழியைத் தாய்மொழியாக உடையவர்களுக்கு எத்தகைய தாய் மொழிப் பற்று இருக்கும் என்பதை, இருக்கவேண்டும் என்பதை எண்ணிப்பாருங்கள்.

தலையாய தாய்மொழிப் பற்றுடைய அந்நாகர்கள் சாது வனைப் பார்த்து, ‘என்னவோ நல்ல வேளையாக உயிர் தப்பினீர்கள். கப்பல் கவிழ்ந்த போது எவ்வாறு துடித்தீர்களோ? அந்த மரத் துண்டு கிடைக்கா திருந்திருந்தால் இங்கு வந்திருக்க மாட்டீர்கள்; நாங்கள் கண்டிருக்க மாட்டோம். வாருங்கள் எங்கள் தலை வனிடம் போகலாம்’ என்று, சாதுவனை அவர்கள் தங்கள் தலை வனிடம் அழைத்துச் சென்றனர். சாதுவனைக் கண்ட நாகர் தலைவனும் நல்ல வேட்டை என்றெண்ணி மகிழ்ந்தான்.

நாகர் தலைவனைக் கண்டதும் சாதுவன், ‘வணக்கம்’ என்று, அந்நாகர் மொழியில் கூறினான். அவ்வளவுதான்! அந்நாகர் தலைவன் இருக்கையை விட்டு எழுந்து வந்து, மலர்ந்த முகத்துடன் இன்சொற் கூறி, இருகைகளையும் பிடித்துக் குலுக்கிச் சாதுவனை அழைத்துச் சென்று அருகில் உட்கார வைத்தான். நாகர்கள் சாதுவன் வந்த வரலாற்றைக் கூறினர். நாகர் தலைவன் சாதுவனோடு உரையாடினான். சாதுவன் தங்கள் தாய் மொழியில் பேசுவதைக் கேட்கக் கேட்க அத் தலைவன் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான்; அடிக்கடி சாதுவனைத் தன் கைகளால் தடவிக் கொடுத்தான். இடையிடையே, ’ஆஃஆ! ஆஃஆ! என்றான்.

அவன் சாதுவனுக்குக் கறியும் கள்ளும் கொண்டு வந்து கொடுக்கச் சொன்னான். சாதுவன் தான் அவற்றை உண்ப தில்லை. எனவே, பலவகையான இனிய பழங்களும் பாலும் கொடுத்து, ‘உண்ணுங்கள் உண்ணுங்கள்’ என்று வேண்டிக் கொண்டான். சாதுவன் உண்டு பசியாறினான். அவன் நாகர் தலைவனின் அன்பைப் பாராட்டினான். சாதுவன் பல நாள் நாகர்தலைவனின் விருந்தினனாக இருந்து வந்தான்.

ஒரு நாள் காவிரிப்பூம் பட்டினத்துக் கப்பல் ஒன்று அத்தீவுக்கு வந்தது. பல ஆண்டுகளாகக் கவிழ்ந்த கப்பல்களிலிருந்து எடுத்து வைத்திருந்த சந்தனக் கட்டைகள், அகிற் கட்டைகள், பலவகை யான மணப் பொருள்கள், பட்டாடைகள், பல்லாயிரக் கணக்கில் பணம் எல்லாம் கொடுத்து, சாதுவனை அக்கப்பலில் அனுப்பினான் அந்நாகர் தலைவன். சாதுவன் அந்நாகர்களிடம் பிரியாவிடை பெற்று, வெளிநாடுகளி லிருந்து சரக்கேற்றிக் கொண்டு வருகின்றவன் போலக் காவிரிப்பூம் பட்டினத்தை அடைந்தான்.

சாதுவன் வருகைகண்ட ஆதிரையின் மகிழ்ச்சிப் பெருக்குக்கு எதனை உவமை கூறுவது? ஆதிரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தாள். வெறுங்கையோடு பிரிந்து சென்ற கணவன் பெரும் பொருளோடு வரக்கண்டால் அவள் மகிழாமலா இருப்பாள்? சாதுவன் தான் அன்று அவளைவிட்டுப் பிரிந்து சென்றது முதல் வந்தது வரை நிகழ்ந்தனவெல்லாம் கூறினான். ஆதிரை அது கேட்டுத் துன்பமும் இன்பமும் அடைந்தாள். சாதுவனும் ஆதிரையும் முன்போலச் செல்வாக் குடன் வாழ்ந்து வந்தனர்.

தாய்மொழிப் பற்றின் தனிப் பெருமையைப் பார்த்தீர் களா? நீங்களும் உங்கள் தாய் மொழியாம் தமிழ்மொழி யிடத்துப் பற்றுக் கொண்டு நன்கு கற்றுக் கொள்ளுங்கள்; தாய்மொழியைத் தாயைப்போல மதித்துத் போற்றுங்கள். வாழ்க தாய்மொழிப் பற்று! வளர்க நம் நாட்டு மொழிகள்!

வளைந்த கோல் நிமிர்ந்தது.


காவிரிப்பூம் பட்டினம் என்பது சோழ நாட்டின் தலைநகர். அது காவிரி கடலொடு கலக்கும் இடத்தில் இருந்ததனால் அப்பெயர் பெற்றது. காவிரிப்பூம்பட்டினத்தில் கோவலன் என்னும் வணிகன் ஒருவன் இருந்தான். அவன் பெருஞ் செல்வன். அவன் வீண் செலவு செய்து செல்வ மெல்லாம் தொலைத்து ஏழையானான். உள்ளூரில் வாழ மனமில்லாத அவன் தன் மனைவி கண்ணகியுடன், பாண்டி நாட்டின் தலைநகரான மதுரைக்குச் சென்றான் என்று முன்பு கண்டோம். இக்கோவலனும் கண்ணகியும்தாம் சிலப்பதிகாரக் கதைத் தலைவர்கள்.

கோவலன் பெருஞ் செல்வக் குடியில் பிறந்து, செல்வமாக வளர்ந்து, செல்வமாக வாழ்ந்து வந்தான். கோவலன் தந்தையான மாசாத்துவான் என்பான், ‘சோழ மன்னனோடு ஒருங்கு எண்ணப் படும் பெருஞ் செல்வக் குடிகளில் ஒருவனான உயர்ந்தோங்கு செல்வத்தான்’ என்கிறார் இளங்கோவடிகள். கண்ணகி தந்தை யான மாநாய்கன் என்பானும் மாசாத்துவான் போன்ற பெருஞ் செல்வனே யாவன்.

கோவலனும் கண்ணகியும் இனிது இல்லறம் நடத்தி வருகையில், ‘என்னவோ பொல்லாத காலம்’ என்பார்களே அவ்வாறு, கோவலன், மாதவி என்னும் ஒரு கணிகை யிடத்துச் சென்று தங்கி, மிக்க ஆடம்பரமாக வீண் செலவு செய்து, தன் முன்னோர் தேடிய செல்வம் முழுவதும் தொலைத்து வறுமை யுற்றான்; கண்ணகி அணிந்திருந்த ஏராளமான விலையுயர்ந்த அணிகலன்களையும் வாங்கித் தொலைத்து விட்டான். வாழ்ந்து கெட்ட அவன், சொந்த ஊரில் ஏழையாக வாழ வெட்கப்பட்டு ஒருவரிடமும் சொல்லாமல், ஒருவருக்கும் தெரியாமல் கிழக்கு வெளுக்காமுன் தன் மனைவி கண்ணகியுடன், பிறந்து வளர்ந்த தாய்த்திரு நகரை விட்டுப் புறப்பட்டான்.

நகரை விட்டுப் புறப்பட்ட கோவலனும் கண்ணகியும் வழியில் எதிர்ப்பட்ட, கவுந்தியடிகள் என்னும் தவமூதாட்டி யுடன் கூடி வழி நடந்தனர். அது முதுவேனிற் காலம். கண்ணகி இதற்கு முன் என்றும் வெயிலில் நடந்தறியாதவள். அவள் கால்கள் நடக்க முடியாமல் தடுமாறின. கோவலன் தான் இதற்கு முன் எங்கு இவ்வளவு நெடுந்தொலை நடந்திருக்கின்றான் பாவம்! அவர்கள் அங்கங்கே தங்கித் தங்கிப் பலநாள் வருத்தத் துடன் நடந்து சென்று, சங்கப் புலவர்கள் இருந்து தமிழ் வளர்க்கும் தண்டமிழ் மதுரையை அடைந்தனர்.

பாண்டி நாட்டின் தலைநகரான மாடமதுரை, வையை யாற்றின் கரையில் இருந்தது. இன்றும் இருக்கின்றது. பாண்டியன் நெடுஞ்செழியன் என்பான் அப்போது மதுரையிலிருந்து, பாண்டி நாட்டை ஆண்டு வந்தான்.

மதுரையை அடைந்த கோவலன், மாதரி என்னும் இடைக் குல மூதாட்டி வீட்டினில் கண்ணகியை இருக்கச் செய்து, அவள் காற்சிலம்பிலொன்றை விற்று வரக் கடைத் தெருவை நோக்கிச் சென்றான்.

கோவலன் கடைத்தெரு வழியே செல்கின்ற போது எதிரில் ஒரு பொற்கொல்லன் வந்தான். தன் சிலம்பை விற்றுத் தரும்படி கோவலன் அப்பொற்கொல்லனைக் கேட்டான். அரண்மனைச் சிலம்பொன்றை ஏமாற்றி விட்டு, அது களவு போய்விட்ட தென்று பொய் கூறி வந்த அப் பொற்கொல்லன், கோவலனைக் காட்டிக் கொடுக்க முடிவு செய்தான். அவன், கோவலனைத் தன் வீட்டின் அருகில் இருக்கச் செய்து விட்டு, அரசனிடம் கேட்டு வருவதாக அரண்மனையை நோக்கிச் சென்றான்.

சென்றவன், அரசனை வணங்கி, ‘தென்னவர் பெரும! காணாமற் போன நம் அரண்மனைச் சிலம்பைத் திருடிய கள்வன், கையுங்களவுமாகப் பிடிபட்டான்’ என்றான்.

அது கேட்ட அரசன், காவலரை அழைத்து, ‘இவன் சொல்லுகின்றவனிடம் அரண்மனைச் சிலம்பு இருக்கின், அவனைக் கொன்று சிலம்பைக் கொண்டு வாருங்கள்’ என்று கட்டளை யிட்டான். காவலர் சென்று, கோவலன் கையில் சிலம்பு இருப்பதைக் கண்டு, கோவலனை வெட்டிக் கொன்று விட்டு, அச்சிலம்பைக் கொண்டுபோய் அரசனிடம் கொடுத்தனர்.

மாதரி வீட்டில் இருந்த கண்ணகி, கணவன் கொலை யுண்ட செய்தியைக் கேட்டுத் திடுக்கிட்டெழுந்தாள்; தலைவிரி கோலமாய், கண்ணீருங் கம்பலையுமாய்த் தனது மற்றொரு சிலம்பினைக் கையிலேந்திக் கொண்டு, கோவலன் கொலை யுண்டு கிடக்கும் இடத்தை நோக்கி ஓடினாள். கண்ணகி அழுது புலம்பிக் கொண்டு தலைவிரி கோலமாய் ஓடுவதைக் கண்ட மதுரை மகளிர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். கண்ணகி அழுது கொண்டு சும்மா ஓடவில்லை.

“இவ்வூரில் பெண்களும் இல்லையோ! இவ்வூரில் சான் றோரும் இல்லையோ! ஐயோ! நேற்றுத்தானே கணவனொடு இவ்வூர்க்கு வந்தேன்! இன்று கணவனை இழந்து கைம்பெண் ஆனேனே! அந்தோ! இனி நான் என்செய்வேன்”என்று அவள் கதறி அழுதுகொண்டோடினாள்; ஓடிப்போய்க் கொலை யுண்டு கிடக்கும் கோவலனைக் கண்டாள்.

கண்டதும், ஓவென்றழுது கொண்டோடிவிழுந்து, கணவன் உடலைத் தழுவிக் கொண்டு கதறி அழுது கொண்டு புரண்டாள்; தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண் டழுதாள். கண்ணகியின் கடுந்துயர் கண்டு பொறாதவனாய்க் கதிரவன் மறைந்தான்.

கதிரவன் மறையவே, கண்ணகி அழுகை மாறி வீர உருக் கொண்டாள்; ‘காரணம் இல்லாமல் என் கணவனைக் கொன்ற அக்கடுங்கோல் மன்னனைக் கண்டு காரணங் கேட்பேன்’ என எழுந்தாள்; அரண்மனையை நோக்கி நடந்தாள்.

கண்ணகி அரண்மனை வாயிலை அடைந்து, “அறிவை இழந்த, முறை தவறிய அரசனின் வாயில் காப்போனே! கையில் ஏந்திய ஒரு சிலம்புடன் கணவனை இழந்த ஒருத்தி இங்கு வந்திருப்பதாக உன் அரசனுக்கு அறிவிப்பாய்”என்றாள்.

வாயிலோன் சென்று மன்னனிடம் கூற, மன்னன் இங்கு அழைத்து வருக என, வாயிலோன் வந்து அழைத்துப் போனான். கண்ணகி கண்ணீர் ஒழுகுங் கண்ணுடன் சென்று பாண்டியனைக் கண்டாள். பாண்டியன் நெடுஞ் செழியன், “கண்ணீர் ஒழுகுகின்ற கண்ணுடன் இங்கு வந்த நீ யார்?”என்றான்

“ஆராய்ச்சி யில்லாத அரசனே! ஒரு புறாவுக்காகத் தன்னையே தராசுத் தட்டில் வைத்து நிறுத்து, அப் புறாவைக் கொல்ல வந்த பருந்துக்குக் கொடுக்கத் துணிந்த பெரியோனும், தானே வந்து தேர்க்காலில் விழுந்திறந்த ஒரு மாட்டுக் கன்றுக்காகத் தன் மகனை, தேரூர்ந்து அத்தேர்க்காலினால் கொன்ற நல்லோனும் ஆண்ட சோழ நாட்டின் தலைநகரான புகார் எனது ஊர். அவ்வூரில், அரசனைப் போன்ற பெருஞ் செல்வனான மாசாத்து வான் மகன் என் கணவன். வாழ்வதற்காக உன் மாநகரான மதுரைக்கு வந்து, என் காற்சிலம்பை விற்க வந்து உன்னால் கொல்லப்பட்ட கோவலன் மனைவி நான்; கண்ணகி என்பது என் பெயர்”என்றாள் கண்ணகி.

“பெண்மணி! கள்வனைக் கொல்லுதல் எப்படிக் கொடுமை யாகும்?”

“அறநெறி தவறிய அரசனே! என் கணவன் கள்வன் அல்லன்; அது என் காற்சிலம்பு; என் சிலம்பின் பரல் மாணிக்கம்; உடைத்துப் பாரும்.”

“உன் சிலம்பின் பரல் மாணிக்கமா! எமது சிலம்பின் பரல் முத்து”என்று, அரண்மனையில் உள்ள கண்ணகி காற் சிலம்பைக் கொண்டு வரச் செய்து, கண்ணகியிடம் கொடுத்தான் பாண்டியன். கண்ணகி அச்சிலம்பை வாங்கி உடைத்தாள். அச்சிலம்பு உடைந்து, அதனுள் இருந்த மாணிக்கப் பரல்கள் செழியன் முகத்தில் தெறித்தன.

மணி கண்ட மன்னன் திடுக்கிட்டான்; உளம் நடுங்கினான், உரை குழறினான், உணர்வு கலங்கினான், உயிர் நலங்கினான். "என் கொற்றக் குடை தாழ்ந்தது, என் செங்கோல் வளைந்தது; அந்தோ! ஒரு பொற்கொல்லன் சொல்லைக் கேட்டு, நேரில் விசாரியாமல் ஒருவனைக் கொன்ற யானோ அரசன்? இல்லை இல்லை, யானே கள்வன்! ஆம், நான்தான் கள்வன். என்று தோன்றியதோ அன்று முதல் இன்று வரை தவறாத பாண்டியர் ஆட்சி முறை இன்று என்னால் தவறிவிட்டது. ஐயோ! பாண்டியர் செங்கோலை நான் வளைத்து விட்டேன். ஆம். வலிதில் வளைத்துக் கொடுங்கோல் ஆக்கிவிட்டேன்.

அம்மணி! உன் கணவன் கள்வன் அல்லன். கோவலன் கள்வனா? இல்லை. அவன் கள்வன் அல்லன் யானே கள்வன்; ஆம், யானே கள்வன். போதும் நான் உயிர் வாழ்ந்தது. என் உயிர் ஒழிக; ஒழிக என் உயிர்!"என்று சொல்லிக் கொண்டே பாண்டியன் மயங்கி வீழ்ந்தான். அவன் உயிர் பிரிந்து விட்டது. பிரிந்த அவ்வுயிர், பாண்டியன் வளைத்த கொடுங்கோலை நிமிர்த்துச் செங்கோலாக்கியது.

என்னே பாண்டியன் நெடுஞ்செழியனின் செங்கோன்மை! ‘கோல் அஞ்சி வாழும் குடி’ என்பதற்கு நேர் மாறாக வல்லவோ இருக்கிறது இம்மாறனின் செயல்? கோலஞ்சி, கொடுங்கோலுக் கஞ்சி உயிரையே யல்லவா விட்டு விட்டான்? தான் ஆராய்ந்து பாராமல், நேரில் விசாரியாமல் கோவலனைக் கொன்று வளைத்த கொடுங்கோலைத் தன் உயிரை விட்டல்லவா நிமிர்த்துச் செங்கோலாக்கி விட்டான்! உயிர் நீத்து முறை காத்த இவனன் றோ அரசன்! இவனன்றோ மக்களின் காவலன்! தமிழர் செங் கோன்மை - ஆட்சிமுறை - எத்தகையது என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டி, தமிழர் பெருமையைக் கல்மேல் எழுத்துப் போல் நிலைநாட்டிய பெருமை இவனை யன்றோ சாரும்? கொடுங்கோலுக்கு அஞ்சி உயிர் விட்ட இச் செயற்கருஞ் செயலின் அறிகுறியாகத் தமிழ் மக்கள் இவனை, அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன் என்று அழைத்தனர்.

உண்மை தெரிந்ததும், கண்ணகி காற்சிலம்பின் பரல் மாணிக்கம் என்பதைக் கண்டதும், ‘யானே கள்வன்’ என்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்ட செழியனின் செம்மைதான் என்னவோ! ‘யானோ அரசன்? யானே கள்வன்’ இச்சொற்கள் நெடுஞ்செழியன் நேரில் சொல்வது போலல்லவோ உள்ளன? இச் சொற்கள் அல்லவோ அவன் உயிரை விரட்டி அடித்தன?

பாண்டியன் நெடுஞ்செழியன், தான் முறை தவறியதற் காக, தன்னை உலகம் பழிக்கும் என்பதற்காகக் கூட அஞ்ச வில்லை. ‘பாண்டியர் முறைதவறி விட்டனர்’ என்று தன் மரபுக்கே இழுக்கு நேரும், தன் மரபையே உலகம் பழிக்கும் என்பதற்காகவே அஞ்சினான். ‘அந்தோ! நமது மரபுக்கே பழியை உண்டாக்கி விட்டோமே! பாண்டியர் மரபு பழம் பெரு மரபு! அத்தகைய மரபின் பழமையை அழித்து விட்டோமே’ என்றே அஞ்சினான்; அலறினான். அவன் உயிர் பிரிந்து விட்டது. உயிரை விட்டு அவன் மரபுக்கு ஏற்பட்ட மாசைத் துடைத்து விட்டான்; தனது பழம் பெரு மரபுக்குத் தன்னால் ஏற்பட்ட மாசைத் தன்னுயிர் கொண்டே துடைத்துத் தூய்மை யாக்கிவிட்டான்.

கவரிமான் என்பது ஒருவகை மான். அது அடர்ந்து நீண்ட மயிரை யுடையது. அதன் மயிர் எளிதில் உதிராது. மகளிர் தலைக்கு வைத்த முடியும் கவரி (சவரி) என்பது இந்த மானின் மயிர்தான். அம் மான், தன் மயிரில் ஒன்று எப்படியாவது உதிர்ந்து விட்டால் உடனே தன் உயிரை விட்டு விடுமாம். அது போல, மானம் உடையவர், மானம் கெடும்படியான செயல் ஏதாவது ஏற்பட்டால் தம் உயிரையே விட்டு விடுவர்; உயிரை விட்டு மானத்தைக் காப்பர், என்கின்றார் வள்ளுவர்.

“மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்”

என்பதே அக் குறள். இக் குறளுக்கு அப்படியே எடுத்துக் காட்டாக வன்றோ விளங்குகின்றான் நம் நெடுஞ்செழியன்?

இவர் அவ்வாறு, ‘யானே கள்வன்’ என்று தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளாமல் இருந்திருந்தால், ஒப்புக் கொண்டு உயிர் விடா திருந்திருந்தால், இன்று உலகம் இவனைக் ‘கொடுங் கோலன்’ என்றல்லவா பழிக்கும்? உலகப் பழிக்கு நாணி உயிர் விட்டுப் புகழ்பெற்ற, தன் இனப் பெருமையை நிலை நாட்டிய, தமிழர் பெருமையை உலகறியச் செய்த நெடுஞ்செழியனின் இச்செயற்கருஞ் செயலை நினைக்க நினைக்க நம் நெஞ்சு வெடித்து விடும்போ லன்றோ இருக்கிறது? இவனன்றோ அரசன்! இவன் இயல்பை, பெருமையை, மானத்தை உள்ளபடி எடுத் துரைக்க யாரால் இயலும்!

ஒருவன் தான் செய்த குற்றம் மிகவும் கொடியது என்று உணர்ந்தாலோ, அக் குற்றத்தைப் பொறுக்க முடியா விட்டா லோ, ஆறு குளம், கிணறு குட்டையில் விழுந்தோ, நஞ்சுண் டோ, மற்றும் ஏதாவது பிறவழிகளிலோ தற்கொலை செய்து கொள்ளுதல் உலக நடப்பு. உண்ணா நோன்பிருந்து உயிர் விடுதல் பண்டைய வழக்கம். அப்பண்டைய வழக்கம் வாள்வடக் கிருத்தல் என வழங்கிற்று.

ஆனால், தான் செய்தது தவறு என்று கண்டதும், தான் செய்த குற்றம் தனக்கே யன்றித் தன் மரபுக்கே, தமிழினத்துக்கே இழுக்குடையது என்று கண்டதும், ‘என் உயிர் ஒழிக’ என்று கூறி உயிர்விடுவதென்பது, எல்லாராலும் எளிதில் இயலக் கூடிய தொன்றா? இது, செயற்கரிய செயலினும் செயற்கரிய செய லாகவன்றோ உளது? ‘செயற்கரிய செய்வார் பெரியர்’ என்ற வள்ளுவர் குறளுக்குச் செழியனின் இச்செயல் அப்படியே எடுத்துக்காட்டாகுமன்றோ?

நோய்நொடி இல்லாமல், நல்ல நிலையில் இருந்த ஒருவனது உயிர், திடீரென்று உடலை விட்டுப் பிரிய வேண்டுமானால், தான் செய்த குற்றத்தை அவன் எவ்வாறு எண்ணியிருக்க வேண்டும்? எவ்வாறு எண்ணி யெண்ணி மனம் புண்ணாகி யிருக்க வேண்டும்? எவ்வாறு உள்ளம் நொந்து வெந்து உருகியிருக்க வேண்டும்? உயிர் இருப்பதற்கு முடியா மலன்றோ உடலை விட்டுச் சென்றிருக் கிறது? பாண்டியன் நெடுஞ்செழியன் தான் செய்த தவற்றைப் பற்றி எண்ணிய எண்ணத்திற்கு எதனை உவமை கூறுவது? வாழ்க நெடுஞ்செழியன் வண்புகழ்!

தீராத கொடிய நோயினால் பல மாதங்கள் கட்டிலுக் கிரையாய்க் கிடந்தாலும் போகாத உயிர் அடியடி யென்று அடித்தாலும் போகாத உயிர் தான் செய்தது தவறு என்பதை அறிந்ததும் போன தென்றால், நம் நெடுஞ்செழியனைப் பற்றி என்ன நினைப்பது? இவனைப் போல் மானமுடைய ஒருவன், உலக மக்களில் இதுநாள் காறும் பிறந்ததே இல்லை; இனியும் என்றும் பிறக்கப் போவது மில்லை!

செழியனின் இச் செயற்கருஞ் செயலினைத் தமிழ் மக்கள் அன்றே மனமாரப் பாராட்டினர். வாயார அவனை வாழ்த்தினர். இவன் காலத்தே சேர நாட்டை ஆண்டவன் சேரன் செங்குட்டுவன் என்பான். இவன்தான் இமயத்தில் கல்லெடுத்து வந்து, கண்ணகிக்குக் கோயில் எடுத்து வழிபாடு செய்தவன். இவன் தம்பிதான் சிலப்பதி காரம் செய்த இளங்கோவடிகள்.

பாண்டியன் நெடுஞ்செழியன் அரசு கட்டிலில் துஞ்சிய செய்தியை, அரியணையில் இருந்த படியே இறந்த செய்தியை, சாத்தனார் என்னும் புலவர் செங்குட்டுவனிடம் கூறினார். அதுகேட்ட செங்குட்டுவன் பாண்டியனை மனமாரப் பாராட்டி னான். எங்ஙனம்?

“பாண்டியன் நெடுஞ்செழியன் முறை தவறி விட்டான்; வளையாத செங்கோலை வளைத்து விட்டான்; தமிழரச மரபுக்கே, தமிழினத்துக்கே இழுக்கைத் தேடி விட்டான்; ஆராய்ந்து பாராமல், நேரில் கேட்டறியாமல், ஒருவன் சொன்ன சொல்லை நம்பிக் கோவலனைக் கொன்று விட்டான் என்னும் பழிச்சொல், எம் போன்ற அரசர்களின் செவியில் வந்து புகுவதற்கு முன்னே, பாண்டியன் ஆராயாது கோவலனைக் கொன்ற செய்தியை நாங்கள் கேட்குமுன்னே, ‘தான் செய்தது தவறு என்பதை அறிந்ததும் நெடுஞ்செழியன் உயிர் விட்டு விட்டான்; அவன் வளைத்த செங்கோலை, அவன் உடம்பிலிருந்து பிரிந்து சென்ற அவன் உயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது. அதாவது தன் உயிரை விட்டு அப் பழியைத் துடைத்து விட்டான்’ என்னும் புகழ்ச்சொல் புகுக என்று பாண்டியன் உயிர் விட்டான்”என்கின்றான்.

முறை தவறிவிட்டான் என்னும் சொல்லை விட, இறந்து விட்டான் என்னும் சொல்தானே நாட்டில் முதலில் பரவும்? ‘பாண்டியன் ஆராயாது கோவலனைக் கொன்று விட்டான்’ என்ற பழிச்சொல் தம்போன்ற அரசர்கள் செவியில் புகுமுன், ‘உயிர் விட்டு முறை காத்தான்’ என்ற புகழ்ச் சொல் புகுக என்று, பாண்டியன் உயிர் விட்டானாம்!

ஆம், செங்குட்டுவன் சொல்வது முற்றிலும் உண்மையே. இல்லையென்றால் பாண்டியன் உயிர் விட்டிருப்பானா? பழந்தமிழ் வேந்தர்கள், ‘அரசர் முறை தவறினார்’ என்று குடி மக்கள் சொல்வதை - குடி பழி தூற்றுவதை - எவ்வளவு அழுத்தமாக வெறுத்து வந்தனர் என்பதற்குச் செங்குட்டுவன் சொல்லே சான்றாகு மல்லவா?

செங்குட்டுவனைப் போலவே, சோழ மன்னனும், தமிழக வேளிரும் நெடுஞ்செழியனைப் பாராட்டியிருப்பர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நமது பாண்டியன் நெடுஞ் செழியனைப் போன்ற மானமும் நேர்மையும் கொடுங்கோலுக் கஞ்சும் குணமும் உடையோரே ஆள்வோராகத் தகுதியுடைய வராவர். அத்தகைய ஆள்வோரை, ஆட்சித்தலைவரை உலக நாடுக ளெல்லாம் பெறுவதாக.

கண்ணகி வழக்குரைத்த போது, பாண்டியன் மனைவியான கோப்பெருந்தேவியும் அங்கு இருந்தாள். அவள் பாண்டிய னுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். கண்ணகி என் சிலம்பின் பரல் மாணிக்கம் என்றதும், பாண்டிமாதேவி மனம் மருண்டாள். கண்ணகி சிலம்பை வாங்கி உடைத்தாள்; தேவி மனம் உடைந்தாள். மணி கண்ட மன்னன், ‘யானோ அரசன்! யானே கள்வன்! கெடுக என் ஆயுள்’ என மயங்கி வீழ்ந்தது கண்ட அவள், ஆ! என்றெழுந் தாள்; உள்ளம் குலைந்தாள், உடல் நடுங்கினாள், ஓ! வென்று கதறினாள், தரையில் விழுந்தாள். அவ்வளவுதான்! தன் உயிர் கொண்டு அவன் உயிர் தேடுவாள் போல, உடனுயிர் விட்டாள்!

அரசுப் பரிசு


தமிழ் மொழி நமது தாய்மொழி. நாம் பேசுவது தமிழ் மொழி. நாம் தமிழ் பேசுவதால் தமிழர் எனப் பெயர் பெற்றோம். தமிழ் வழங்குவதால் அதாவது தமிழ் பேசப்படுவதால் நம் நாடு தமிழ்நாடு எனப் பெயர் பெற்றது. தமிழர் வாழ்வதால் தமிழ்நாடு எனப் பெயர்பெற்றது எனவும் கூறலாம்.

தமிழ் நாட்டின் மேற்கில் உள்ளது மலையாள நாடு. மலையாள நாட்டில் வாழும் மக்கள் மலையாளம் என்னும் மொழி பேசுகின்றனர். மலையாள மொழி பேசுவதால் அவர்கள் மலையாளிகள் எனப் பெயர் பெற்றனர் எனினுமாம். மலைஞாலர் என்பது, மலையாளர் எனத் திரிந்த தென்பர்.

மலையாள நாடு ஒரு காலத்தே தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது; அதாவது தமிழ் நாடாக இருந்தது. அங்கும் தமிழ்மொழிதான் பேசப்பட்டது. அங்கும் தமிழர்கள் தாம் வாழ்ந்தனர் என்றால் கேட்பவர்க்கு வியப்பாக இருக்கும் அல்லவா! ஆம், வியப்பைத்தரும் செய்திதான் இது. தமிழர்கள் தாம் மலையாளிகளாக மாறி விட்டனர். தமிழ் மொழி தான் மலையாள மொழியாக மாறிவிட்டது. பழைய தமிழ்நாடு தான் இன்று மலையாள நாடு எனப் பெயர் பெற்றுவிட்டது. பழந் தமிழர் வழி வந்தவர்தாம் இன்று மலையாளிகளாகி விட்டனர். இது வியப்பைத் தரும் செய்திதானே!

சேர நாடு, சோழ நாடு, பாண்டி நாடு எனப் பழந்தமிழ் நாடு மூன்றாகப் பிரிந்திருந்தது. சேர நாட்டைச் சேர மன்னரும், சோழ நாட்டைச் சோழ மன்னரும், பாண்டி நாட்டைப் பாண்டிய மன்னரும் ஆண்டு வந்தனர். சேர சோழ பாண்டியர் என்னும் இம்மூவரசர் மரபும், தமிழ் நாட்டில் ஆட்சி முறை என்று ஏற் பட்டதோ அன்றிருந்து தமிழ் நாட்டை ஆண்டு வரும் அரசமரபு களாகும். இம் மூவரும், ‘முடியுடை மூவேந்தர்’ என்று சிறப்பிக்கப் பெறுவர். மூவரசர் என்றால், சேர சோழ பாண்டியர் என்னும் இம் மூவரையுமே குறிக்கும். அத்தகு பழமையும் பெருமையும் உடையவர் இம்மூவரசரும்.

இன்றைய மலையாள நாடுதான் அன்றைய சேர நாடு. பழந்தமிழகத்தின் ஒரு பிரிவான சேர நாடு தான் இன்று மலையாள நாடு என வழங்குகிறது. சேரலர் என்பதே, கேரளர் எனத் திரிந்து வழங்குகிறது. பழந்தமிழ் மொழிதான் அயல் மொழிக் கலப்பால் திரிந்து மலையாள மொழி ஆகிவிட்டது. பழந்தமிழ் மொழிதான் இன்று தமிழர்க்குத் தெரியாத ஒரு புது மொழி ஆகிவிட்டது; தமிழர்க்கு அயல் மொழி ஆகிவிட்டது.

சிலப்பதிகாரம் ஒரு செந்தமிழ்க் காப்பியம். சிலப்பதிகாரம் செய்த இளங்கோவடிகள் ஒரு சேர இளவரசர்; சேரன் செங்குட்டுவன் தம்பி. செந்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரம் செய்த இளங்கோவடிகள் வழி வந்தோர்தாம் இன்று மலையாளிகள் என வேறு இனமாயினர். இளங்கோ வடிகள் பேசிய தமிழ் மொழி தான் இன்று மலையாள மொழியாகி விட்டது. பழந்தமிழர் வழி வந்தவர்தாம் இன்று தங்களைத் தமிழர் வழி வந்தவர் என அறியாதவராகி விட்டனர்.

எட்டுத்தொகை என்னும் பழந்தமிழ் நூல்கள் எட்டனுள், பதிற்றுப்பத்து என்பது ஒன்று. அது பத்துச் சேர மன்னர்கள் மீது பாடப்பட்ட ஒரு பழந்தமிழ் நூல். ஒரு சேர மன்னன் மீது பத்துப் பாட்டுக்களாக, பத்துச் சேர மன்னர்கள் மீது, பத்துப் பழந் தமிழ்ப்புலவர்கள் பாடிய நூறு பாட்டுக்களையுடையது அந்நூல். பழந்தமிழ் மன்னர்களாகிய பத்துச் சேர வேந்தர்களின் சிறப்பினைக் கூறுவது பதிற்றுப்பத்து.

தம்மீது பத்துப் பாட்டுக்களைப் பாடிய புலவர்க்கு அச்சேர மன்னர்கள் கொடுத்த பரிசினைக் கேட்கின் நீங்கள் பெருவியப் புறுவீர்கள். நீங்களென்ன? கேட்பவர் யாருமே வியப்புறுவர் என்பதில் ஐயமில்லை. இதோ ஒரு சேர மன்னனின் தமிழ்ப் பற்றினையும் கொடைக் குணத்தினையும் பாருங்கள்.

பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னன் சேர நாட்டை ஆண்டு வந்தான். இவன் சங்க இறுதிக் காலத்தவன். இவன் தமிழரசர்க்குரிய வீரம், கொடை, புகழ் என்னும் மூன்றிலும் மேம்பட்டு விளங்கினான்; குடிமக்களிடம் பேரன் புடையவனாக இருந்தான்; குடிமக்களை யாதொரு குறையும் இல்லாமல் காப்பதே தனது கடமையெனக் கொண்டவன்; தன் தாய்மொழி யாம் தமிழ் மொழியிடத்து அளவு கடந்த அன்புடையவன்; தமிழ் மொழியைத் தன் உயிரினும் மேலாக மதித்துப் போற்றி வந்தான்; தமிழ்மொழி வளர்ப்பதைத் தன் கடமைகளுள் முதற்கடமை யாகக் கொண்டவன். தமிழ்ப் புலவர்களுக்கு வாரிவாரி வழங்கித் தமிழ் வளர்த்து வந்தான் அம்மன்னன்.

இவ் விரும்பொறையின் தமிழ்ப் பற்றுக்குச் சிறு எடுத்துக் காட் டொன்றைக் கேளுங்கள். மோசிகீரனார் என்னும் புலவர் இப்பெருஞ் சேரலைக் காணச் சென்றார்; சேரன் அரண் மனையை அடைந்தார்; வெயிலில் நடந்து வந்த களைப்பால், அரண் மனையின் ஒரு பக்கத்தே இருந்த முரசு கட்டிலில் படுத்துத் தூங்கிவிட்டார்.

அங்கு வந்த பெருஞ்சேர லிரும்பொறை, முரசு வைக்கும் இடத்தில் - முரசு கட்டிலில் - யாரோ ஒருவர் படுத்திருப்பதைக் கண்டான். முரசு கட்டிலில் யாரும் உட்காரவோ, படுக்கவோ கூடாது. அங்ஙனம் செய்வது கொலைக் குற்றத்திற்கு ஒப்பாகும்.

எனவே, இரும்பொறை உடைவாளை உருவிக் கொண்டு சென்றான். அருகில் சென்றதும், படுத்துத் தூங்குபவர் ஒரு செந் தமிழ்ப்புலவர் என்பதை அறிந்தான். அவன் கை அவ்வாளை எறிந்தது. ஒரு கவரி கொண்டுவரச் சொல்லி, வாள்பிடித்த கையால் அக்கவரியைப் பிடித்துப் புலவர் விழித்து எழுகிறவரை வீசினான். ’கவரிவீசிய காவலன்’என்று புலவர்கள் அவனைப் புகழ்ந்தனர். அத்தகு தமிழ்ப்பற் றுடையவன் பெருஞ்சேரலிரும் பொறை.

இவ்விரும்பொறை காலத்தே, அரிசில்கிழார் என்னும் புலவர் ஒருவர் இருந்தார். அவர் சோழ நாட்டில் உள்ள அரிசில் என்னும் ஊரினர். கிழார் - உரியவர். அவர் அரிசில் என்னும் ஊரினர் ஆதலால், அரிசில்கிழார் என்று அழைக்கப் பட்டார். இவர் ஒரு சிறந்த தமிழ்ப் புலவர்; கவிபாடுவதில் வல்லவர். இவர் இனிய செந்தமிழ்ப் பாடல்கள் பாடி, தமிழ்ச் செல்வர்களிடமும், தமிழ் மன்னர்களிடமும் பரிசு பெற்று வாழ்ந்து வந்தார்.

அரிசில் கிழார், நம் பெருஞ்சேர லிரும்பொறையின் தமிழ்ப் பற்றையும் கொடைத்திறத்தையும் கேள்வியுற்றார்; இரும்பொறையைப் பாடிப் பரிசில் பெற எண்ணினார். சேர நாட்டின் தலைநகரான வஞ்சியை நோக்கி நடந்தார்; சேரநாட்டின் வளத்தையும், இயற்கைக் காட்சிகளையும் கண்டுகளித்துக் கொண்டே அரண்மனையை அடைந்தார்.

பெருஞ்சேர லிரும்பொறை, புலவரை அன்போடு வர வேற்றான்; தாயைக் கண்ட சேயைப் போல மனமகிழ்ந்தான்; இன்சொற்கூறி இனிது அளவளாவினான். புலவர், இரும்பொறை மீது பத்துச் செந்தமிழ்ப் பாட்டுக்கள் பாடிச் சென்றிருந்தார்; அப்பத்துப் பாட்டுக்களையும் படித்துப் பொருள் கூறினார். அப்பாட்டுக்கள் பத்தும், பதிற்றுப் பத்தில் எட்டாம்பத் தாகும். அப்பாடல்களின் பொருளைக் கேட்ட இரும்பொறை பெருமகிழ் வுற்றான்.

தன்மீது எட்டாம் பத்தைப் பாடிய அரிசில் கிழார் என்னும் புலவர் பெருமானுக்கு இரும்பொறை தந்த பரிசில் என்ன? பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் அச்சேர மன்னன் கொடுத்த பரிசிலை நினைத்தால், அவனை இத்தகையவன் என்று சொல்வ தற்கே இடமில்லாமல் இருக்கிறது. இத்தகைய தமிழ்ப்பற் றுடைய ஒரு தமிழனும், ஒரு தமிழ்ப் பேரரசனும் தமிழ் நாட்டில் ஒரு காலத்தே இருந்தானா? இருந்திருப்பானா? ‘ஆம் இருந்தான்’ என்கின்றது எட்டாம் பத்து.

அத்தகைய தமிழ்ப்பற்றுடைய தமிழ்மகன் இருந்து ஆண்டு வந்த, தமிழ் வளர்த்து வந்த அப்பழந்தமிழ்ச் சேரநாடு, அத்தமிழ் மன்னன் வழிவந்த அவன் நாட்டுத் தமிழ்க் குடிமக்கள் வழிவந்த தமிழர் மரபு, இன்று தான் இன்னார் என்பதை அறியாது, தமிழர் வேறு, தாம் வேறு என்று எண்ணி வாழ்ந்து வருகின்றது; தம் இனத்தவரான தமிழரை அயலாரென எண்ணி, அவ்வாறே நடந்தும் வருகின்றது. ‘தமிழ்’ என்னும் தன் பழம் பெயரை விட்டுத் தன் பெயரை ‘மலையாளி’ என மாற்றிக் கொண்டு விட்டது; தன் தாய் மொழியாம் தமிழ் மொழியை, அயல் மொழி எனக் கொண்டுள்ளது. தன் தாய்த்திரு நாட்டை அயல் நாடென எண்ணி வருகிறது.

ஆ! எம் அருமைத் தமிழகமே! செந்தமிழ்ப் பெருங் காப்பிய மான சிலப்பதிகாரந்தந்த பழந்தமிழ்ச் சேரநாடே! நீ ஏன் இந்நிலையை அடந்தனை? மாறுபா டென்றால் இப்படியா தலைகீழ் மாறுபாடு! தமது இனத்தை, தமது தாய் மொழியை, தமது தாய்நாட்டை - வேறு இனம், வேறுமொழி வேறுநாடு என்று எண்ணும் இத்தகு மாறுபாடா!

அரிசில்கிழார் என்னும் புலவர் பெருந்தகைக்கு, தன்மீது பாடிய எட்டாம் பத்துக்கு, பெருஞ்சேர லிரும்பொறை கொடுத்த அத்தகு பெரும்பரிசு என்ன? எத்தனை நூறாயிரம்! ஒரு பாட்டுக்கு ஒரு நூறாயிரமா? இல்லை, இரு நூறாயிரமா? எவ்வளவு?

புலவர் பாட்டுக்களைப் படித்துப் பொருள் கூறினார்; இரும்பொறையின் வீரச் சிறப்பினை எடுத்து விளம்பினார்; வெற்றிச் சிறப்பினை எடுத்து விளக்கினார்; கொடைச் சிறப்பினை எடுத்துக் கூறினார். புகழ்ச்சிறப்பினை எடுத்துப் புகன்றார். அச்செந்தமிழ்ச் செய்யுட்களின் சொல் நயத்தையும் பொருள் நயத்தையும் தொடை நயத்தையும் நடை நயத்தையும் சுவைத்து மகிழ்ந்துகொண்டிருந்தான் மன்னன். புலவர் பத்துப் பாட்டையும் படித்துப் பொருள் கூறி முடித்தார். அவ்வளவு தான்! இரும் பொறை ஒன்றும் பேசாமல் எழுந்து உள்ளே சென்றான். நெடு நேரம் அவன் வெளியே வரவில்லை.

புலவர்க்கு ஒன்றுமே தோன்ற வில்லை. அவ்வாறு அன்போடு தம்மை வரவேற்று அழைத்து வந்த அரசன், வாயினிக்கப் பேசி மனமினிக்கச் செய்த மன்னன், தமது பாட்டைக் கேட்டு உள்ளும் புறமும் உவந்த உதியன், ஒவ்வொரு பாட்டையும் தனித்தனி பாராட்டிய அத் தகைமிகு செம்மல் பாட்டின் பொருளறிந்து இன்புற்ற அப்பொறையன், பாட்டுக்கள் பத்தும் படித்து முடிந்ததும் ஒன்றும் பேசாமல் எழுந்து உள்ளே சென்றான் என்றால், புலவர் அவனைப் பற்றி என்ன எண்ண முடியும்? அப்பாட்டுக்களை அவன் விரும்பவில்லை யானால், பத்துப் பாட்டும் படித்துப் பொருள் கூறி முடியும் வரை அவ்வளவு ஆர்வத்தோடும் அன்போடும் அமைதியாகக் கேட்டுக் கொண்டி ருக்க மாட்டானல்லவா? அவனைப் பற்றிப் புலவர்கள் புகழ்ந்து கூறியதற்கு மாறாக வன்றோ உள்ளது அவன் செயல்! இந்நிலையில் புலவர் ஒன்றுந் தோன்றாமல் இருத்தல் அன்றி வேறு என்ன செய்வார் பாவம்! தன்னந் தனியே விடப்பட்ட சின்னஞ் சிறு குழந்தை போல, என்னென்னவோ எண்ணாத வெல்லாம் எண்ணியவராய் ஏக்கத் துடன் இருந்தார் அப் புலவர் பெருந்தகை.

இவ்வாறு புலவர் இருக்கும் போது, உள்ளே ஒருவனாகச் சென்ற சேரலர் பெருந்தகை, தன் தேவியுடன் வெளியே வந்தான். வந்தவன் புலவரை வணங்கி, “தண்டமிழ்ப் பெரியீர்! நான் தங்கள் தமிழுக்கு, தமிழ்ப் பாட்டுக்களுக்கு ஏற்ற பரிசு கொடுக்கும் தகுதியுடையவனாக இல்லை. நான் அன்போடு கொடுப்பதைத் தாங்கள் மறுக்காமல் ஏற்றருளல் வேண்டும். கோயிலில் உள்ள எல்லாப் பொருளையும் தாங்கள் அன்போடு எடுத்துக் கொள்ளுங்கள். அவை தங்களுக்கு உரியவை. இக்கோயிலும் (அரண்மனை) தங்கள் உடைமையே. அதோடு, நான் மனமுவந்து கையாரக் கொடுக்கும் இதையும் மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்”என்று, ஒன்பது நூறாயிரம் (900000) பொற் காசுகள் கொண்ட முடிப் பொன்றை நம் புலவரிடம் கொடுத்தான்.

அவன் அத்துடன் நின்றானா? இல்லை. வழி வழியாகச் சேர அரசமரபுக்கு உரிமை உடையதாக உள்ள அரசு கட்டிலையும் நம் புலவர் பெருமானுக்குப் பரிசாகக் கொடுத்தான்.

இதன் பொருளென்ன? தான் இருந்து அரசு புரியும் அந்த அரியணையைக் கொடுத்தான் என்றால், புலவர்க்குத் தன் அரசையே பாட்டின் பரிசாகக் கொடுத்தான் என்பது தானே பொருள்? அரசையே கொடுத்தான் என்றால், அவ்வரசுக் குரிய நாடு, நகர், வீடு, பொருள் எல்லாம் கொடுத்ததாகு மன்றோ? ஆம், ஒரு பத்துப்பாட்டுக்குப் பரிசாக அவ்வளவுங் கொடுத்தான் அக்கோ.

அப்பத்துப் பாட்டும் 181 அடிகளே (வரி) உடையன. பொற்காசே அடி யொன்றுக்கு 4972 ஆகிறது. என்னே இரும் பொறையின் பெருந்தமிழ்ப் பற்று! நூற்றெண்பத்தோ ரடிகட்கா ஒன்பது நூறாயிரம் பொற்காசும், ஒரு நாடும், அதன் அரசும் பரிசு!

பத்துப் பாட்டுக்கும் பொருள் கூறி முடித்ததும், இரும் பொறை ஒன்றும் பேசாமல் எழுந்து உள்ளே சென்றபோது புலவர் ஒன்றும் தோன்றாமல் இருந்தது போலவே, இப்போதும் இரும் பொறையின் செயல் அவருக்கு ஒன்றுந் தோன்றாத தாகவே இருந்தது. ஆனால், புலவர் பெருந்தகை என்ன செய்தார்? சேர மன்னன் உவந்தளித்த அரசுகட்டிலில் இனிதமர்ந்து, சேர நாட்டை அரசாளத் தொடங்கினரா என்ன? அத்தகைய பண்புடையவரா அப் பழந்தமிழ்ப் புலவர்பெருந்தகை! “மன்னர் பெருமான்! மகிழ்ந்தேன்; உன் தாய்மொழிப் பற்றினை, தமிழ்ப் பற்றினை மெச்சுகிறேன்; மனமாரப் பாராட்டுகிறேன்; வளர்கநின் வண்மை! வாழ்க நின் தமிழுள்ளம்! என் பாட்டுக்களுக்காக நீ கொடுத்த பரிசுகள் அனைத்தையும் நான் அன்போடு மனமுவந்து ஏற்றுக் கொண்டேன். இப்போது நான் இந்நாட்டின் மன்னன். நீ எனது குடிமகன்; என் கட்டளைப்படி நடக்க வேண்டியவன். இந்தா எனது அரசை நான் உனக்குக் கொடுக்கிறேன். எதற்கு? உன் தாய்மொழிப் பற்றுக்காக. நீ அதை ஏற்று நன்கு ஆட்சிபுரிந்து வருவாயாக”என்று, பழையபடி அரசனை அரசனாக்கினார் புலவர்.

பெருஞ்சேரலிரும்பொறை, புலவர் சொல்லை மறுக்க முடியாதவனாய், அவர் விருப்பப் படியே அரசை ஏற்றுக் கொண்டான். ஆனால் ,அவன் அரசைப் பெற்றுக் கொண்டு புலவரை வந்த வழியே செல்லுங்கள் என்று அனுப்பிவிட வில்லை. பின் என்செய்தான் அச் சேரர் பெருந்தகை? புலவர் திருப்பிக் கொடுத்த அரசை ஏற்றுக்கொண்டு, வேண்டிய அளவு பரிசில் கொடுத்துச் சென்று வாருங்கள் எனப் புலவரை அனுப்பி விட்டனனா என்ன? அதுதானே முறையும்? ஆனால், நம் இரும் பொறை அவ்வாறு செய்ய வில்லை. பின் என்ன செய்தான்?

புலவர் அன்புடன் உவந்தளித்த அரசை ஏற்றுக் கொண்ட தும் பெருஞ்சேரலிரும்பொறை புலவரை வணங்கி, “பெரியீர்! தமிழர் வாழத் தாம் வாழும் தண்டமிழ்ப் பெருந்தகையீராகிய தாங்கள் எனது தாழ்மையான வேண்டுகோளை மறுக்காமல் ஏற்றருளல் வேண்டும். அது தங்களது நீங்காக் கடமையும் ஆகும். தாங்கள் உளமுவந்து அளித்த அரசை நான் இனிது நடத்தத் தாங்கள் எனக்குத் துணைபுரிதல் வேண்டும். இதுவே எனது வேண்டுகோளாகும்”என்று வேண்டிக் கொண்டான். அரிசில் கிழார், பெருஞ்சேரலின் வேண்டுகோட் கிணங்கி அவனுக்கு அமைச்சுரிமை பூண்டிருந்தார்.

இத்தகைய தலைவரையும் புலவரையும் நம் நாடு ஒருகால் பெற்று இன்புறுதலுங் கூடுமோ!

தமிழ்ப் பாட்டுக்குத் தன் அரசையே பரிசாகக் கொடுத்த சேரமன்னன் ஆண்ட தமிழ்நாடுதான் இன்று தமிழரைத் தம் இனமென அறியாத மக்கள் வாழும் நாடாக இருந்துவருகிறது. என்னே காலச்சுழல்!

#குலவித்தை

சோழநாட்டின் தலைநகர் காவிரிப்பூம்பட்டினம் என்று முன்பு கண்டோம். இது கடற்கரைப்பட்டினம். உறையூர் என்பது சோழநாட்டின் உள்நாட்டுத் தலைநகர். இதுவே சோழநாட்டின் பழைய தலைநகராகும். ‘ஊரெனப் படுவது உறையூர்’ என்னும் சிறப்பினையுடையது உறையூர். இது உறந்தை எனவும் வழங்கிற்று. உறையூர் இன்று, திருச்சிராப்பள்ளி நகரின் ஒரு பகுதியாக உள்ளது. காவிரிப்பூம் பட்டினம் கடலில் மூழ்கிவிட்டது,

சோழமன்னர்களில் சீரும் சிறப்பும் உடையவன் இரண்டாம் கரிகாலன் என்னும் சோழ மன்னன் ஆவான். கரிகால்வளவன், கரிகாற் பெருவளத்தான் எனவும் இவன் அழைக்கப்படுவான். இவன், உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி என்னும் சோழன் மகன். காவிரிப்பூம் பட்டினத்தைச் சிறப்புடைய அழகிய பெரு நகராக்கியவன் இக்கரிகாலனே யாவன்.

கரிகாலன் தன் தாய்மொழியாம் தமிழ்மொழியிடத்து அளவுகடந்த அன்புடையவன்; தமிழ்ப் புலவர்கட்கு வாரி வாரி வழங்கித் தமிழ் வளர்த்து வந்தான். சங்க இலக்கியங்களான பத்துப் பாட்டைச் சேர்ந்த பட்டினப் பாலை, பொருநராற்றுப்படை என்னும் பழந்தமிழ் நூல்களின் பாட்டுடைத் தலைவன் இவனே. தன்மீது பட்டினப் பாலையைப் பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர் பெருமானுக்குப் பதினாறு நூறாயிரம் (1600000) பொன்னோடு, உறையூர் அரண்மனையுள் இருந்த பதினாறுகால் மண்டபத்தையும் பரிசாகத் தந்து அவரைப் பெருமைப்படுத்தினான் கரிகாலன்.

கரிகால்வளவன், இத்தகைய தாய்மொழிப் பற்றும் கொடைக் குணமும் உடைமையோடு சிறந்த வீரனாகவும் விளங்கினான்; தமிழரின் வீரச் சிறப்பிற்கோர் எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தான். சங்ககாலச் சோழமன்னர்களில் பேராற்றலும் பெரும் புகழும் உடையவன் இவனே.

இவன் வடக்கே இமயம்வரைப் படையெடுத்துச் சென்று எதிர்த்த அரசர்களெல்லாரையும் வென்றான். இவன் அத்துடன் அமையவில்லை. இமயத்தையும் கடந்து சென்ற போது, பனி யுறைந்து மேலும் செல்ல முடியாது தடுத்தமை யால், இமய நெற்றியில் சோழ அரச முத்திரையான புலியைப் பொறித்து மீண்டான். இன்றும் திபேத்துக்கும் சிக்கிமுக்கும் இடையிலுள்ள மலைத்தொடருக்கு, சோழன் மலைத்தொடர் என்றும், அங்குள்ள கணவாய்க்கு, சோழன் கணவாய் என்றும் பெயர்கள் காணப் படுகின்றனவாம்.

இமயத்தில் புலிபொறித்து மீண்டுவரும் போது நம் சோழர் பெருந்தகைக்கு, வச்சிரநாட்டு வேந்தன் கொற்றப் பந்தரும், மகத நாட்டு மன்னன் பட்டிமண்டபமும், அவந்திநாட்டரசன் தோரணவாயிலும் காணிக்கையாகக் கொடுத்தனர். இவை பொன்னாலும் மணியாலும் நுண்ணிய வேலைப் பாட்டுடன் செய்யப் பட்டவை; அழகுக்காக வைக்கத் தக்கவை. கரிகாலன் அவ்வெற்றி வரிசைகளுடன் சோழநாட்டை அடைந்தான்.

காவிரியாறு, அன்று வெள்ளப் பெருக்குக் காலத்தே இருபக்கமும் உள்ள வயல்களில் சென்று பயிரை அழித்து வந்தது. காவிரியாற்றின் இரு பக்கமும் கரை கட்டி, அவ்வாறு வயலுக்குள் வெள்ளம் செல்லாமல் செய்தவன் இக்கரிகாலனே யாவன். அதனால் இவன், ‘காவிரிக்குக் கரை கண்ட சோழன்’ எனப் புலவர்களால் பாராட்டப் பெற்றான்.

இன்று தமிழ் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் வேலையில்லாத் திண்டாட்டம் என்கின்றனர். சிலர் தாய் நாடாம் தமிழ்நாட்டில் வேலை இல்லாமல், இங்கு வாழவழியின்றி இலங்கையில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அன்று கரிகாலன் காவிரிக்குக் கரைகட்ட இங்கு ஆளில்லாமல், இலங்கையிலிருந்து ஆயிரக்கணக்கான பேர்களை அழைத்து வந்து காவிரிக்குக் கரைகள் கட்டினான். ஆற்றில் அணைகள் கட்டியும், ஆற்றிற்குக் கரைகள் கட்டியும் சோழநாட்டை வளப்படுத்தியவன், ‘சோழவளநாடு சோறு டைத்து’ என்னும் பெருமைக்குரிய தாக்கியவன் நம் கரிகாலனே யாவன்.

கரிகாலனது இளமைப்பருவ வரலாறு, சிறுவர்களாகிய நீங்கள் படித்து இன்புறத்தக்கதாக உள்ளதோடு, உங்கள் எதிர்கால வாழ்வுக்கு ஓர் எடுத்துக் காட்டாகவும் விளங்குகிறது.

கரிகாலன் தன்தாய்வயிற்றில் இருக்கும்போதே தன் தந்தையை இழந்துவிட்டான். அதனால், ‘இவன் பிறக்கும் போதே அரசுரிமை எய்திப் பிறந்தவன்’ என்று புலவர்கள் இவனைப் பாராட்டு கின்றனர். இவ்வாறு இவன் தாய்வயிற்றி லிருக்கும் போதே அரசுரிமை எய்திப் பிறந்ததால், இவன் பங்காளிகள் சோழ நாட்டு ஆட்சியைக் கைப்பற்ற விரும்பினர். அதனால், அவர்கள் ஒன்று கூடி, இவன் இளமையாக இருக்கும் போது வஞ்சனையாக இவனைப் பிடித்துக்கொண்டு போய் வேறோர் ஊரில் சிறை வைத்தனர். கரிகாலன் சில ஆண்டுகள் சிறையிலிருந்து வருந்தினான்.

புலிக்குட்டி கூண்டில் அடைக்கப்பட்டு வளர்ந்து வருவது போல, இவன் சிறையில் அடைக்கப்பட்டு வளர்ந்துவந்தான். இவன் வளரவளர வலிமையும் வீரமும் மானமும் ஒருங்கே வளர்ந்து வந்தன. சிறையைவிட்டு வெளியேறுங் காலத்தை இவன் எதிர்நோக்கிக்கொண்டிருந்தான்.

இவ்வாறு கரிகாலன் சிறையைவிட்டு வெளியேற முயல்வதை அறிந்த பகைவர்கள், அவனைக் கொன்றுவிடவே முடிவு செய்து, அவனிருந்த சிறைச்சாலைக்குத் தீ வைத்தனர். கரிகாலன் தன் வலியினாலும் முயற்சியினாலும் மதிலேறிக் குதித்து வெளியேறி, அந்த இளமைப் பருவத்திலேயே எதிர்த்த பகைவரை வென்று உறையூரை அடைந்தான். கரிகாலன் சிறையினின்று தப்புவதற்கு இவனது தாய்மாமனும், தமிழ்ப்பெரும் புலவருமான இரும் பிடர்த்தலையார் என்பார் பெருந்துணையாக இருந்தார்.

பகைவரை வென்று சிறை மீண்ட கரிகாலன், அவ்விளமைப் பருவத்திலேயே சோழப் பேரரசனாக முடிசூட்டப் பெற்றான். அரசன் இல்லாது ஏங்கிய சோழநாட்டுப் பெருங்குடிமக்கள், மிக்க இளமையிலேயே பெருவீரனாக விளங்கிய தங்கள் இளவரசனது பேராண்மையைக் கண்டு வியந்து அவனைத் தங்கள் அரசனாக முடிசூட்டி அரியணையிலமர்த்தினர். அரியணை ஏறிய அவனும் திறம்பட ஆட்சிபுரிந்து செங்கோல் வேந்தனாகத் திகழ்ந்தான்.

‘குலவித்தை கல்லாமல் பாகம் படும்’ என்பது ஒரு பழமொழி. அதாவது, பெற்றோர் தொழில், செய்து பழகாம லேயே அவர்தம் மக்களுக்குச் சரிபாதி தானாகவே அமையும் என்பதாம். பாகம் - சரிபாதி. இதற்கு நம் கரிகாலன் சிறந்த எடுத்துக்காட்டாக இலங்கினான்.

பெற்றோர் செய்யும் தொழிலை அடிக்கடி நேரில் பார்ப்பதால் பிள்ளைகளுக்கு அத்தொழிற் பழக்கம் உண்டாவது இயல்பே. தந்தை ஆட்சிபுரியும்போது, அரசியல் அலுவல் பார்க்கும் போது, கூட இருந்து பழகுவதால் அரசகுமாரர்க்கு ஆட்சித் தொழிற் பழக்கம் உண்டாவது இயற்கையே. ஆனால், நம் கரிகாலனோ தாய்வயிற்றி லிருக்கும்போதே தந்தையை இழந்து விட்டான்; சில ஆண்டுகளைச் சிறையில் கழித்தான். ஆட்சி செய்வது எப்படி என்பதை ஒருநாட்கூடக் கண்டறி யாதவன் அவன். அப்படி யிருந்தும், பல ஆண்டுகள் தந்தையின் கீழ் இளவரசனாக இருந்து அரசியல் முறையைப் பழகியவன் போல, நாட்டுமக்கள் மகிழும் படி நல்லாட்சி புரிந்தான் என்றால், அது கரிகாலனது தனிப்பட்ட திறமையாகும் அல்லவா? ஆம், அத்தகு தனித்திறமையுடையவனே நம் கரிகாலன்.

உறந்தைப்பேரவை என்பது உறையூரில் இருந்த அறங் கூறவையம் ஆகும். அறங்கூறவையம் - நீதி மன்றம். அது பழந்தமிழ்ப் புலவர்களால் சிறப்பித்துப் பாடும் அத்தகு சிறப்பு டையதாகும். சோழ மன்னரின் செங்கோன்மைக்கு, ஆட்சித் திறமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது அப்பேரவை.

ஒருநாள் அப்பேரவை கூடிற்று. அதற்கு இளைஞனாகிய நம் கரிகாலன் தலைமை தாங்கினான். அவ்வறங்கூற வையத்தில் தங்கள் வழக்கை உரைக்க முதியோர் இருவர் வந்திருந்தனர். மிக்க இளைமைப் பருவத்தானாகிய கரிகாலன் அப்பேரவைத் தலை வனாக வீற்றிருப்பதைக் கண்ட அம்முதியோர், மிகச் சிக்கலான தங்கள் வழக்கை அவ்விளைஞனால் தீர்க்க முடியாதென எண்ணினார். தாங்கள் இருவரும் கூறுவதைக் கேட்டு, நடுவு நிலைமையாகத் தீர்ப்புக் கூறத்தக்க அறிவும் ஆற்றலும் அவ்விளை ஞனுக்கு இரா என்று அவர்கள் கருதினர். அதனால், அவர்கள் தங்களுக்குள் என்னவோ மறைமுகமாகப் பேசிக் கொண்டனர்.

அதுகண்ட கரிகாலன், அம்முதியோர் இருவரையும் பார்த்து, “முதியீர்! நீங்கள் இருவரும் உங்களுக்குள் என்ன பேசிக் கொள்கிறீர்கள்? உங்களுக்கு உண்டான ஐயப் பாட்டை வாய் விட்டே கூறுங்கள். இது அறங்கூறவையம். இங்கு யார்க்கும் தங்கள் கருத்தைக் கூற உரிமை உண்டு. உங்கள் ஐயப்பாடென்ன? உங்களுக்கு என்ன வேண்டும்? என்ன செய்யவேண்டும்? உங்கள் குறைபாடென்ன? உள்ளதை ஒளியாமல் சொல்லுங்கள்”என்றான்.

அதுகேட்ட அம்முதியோர், “அரசே! உறந்தைப் பேரவை என்பது தனிச்சிறப்புடையது; நீதிக்கும் நேர்மைக்கும் இருப்பிட மானது. தமிழகத்தில் இது போன்ற ஓர் அறங் கூறவையம் இல்லை என்பது புலவர்கள் கண்ட முடிவு. இதுகாறும், ஆண்டிலும் அறிவிலும் பழக்கத்திலும் மூத்த முதியோரே தலைமை தாங்கி, எத்தகைய சிக்கலான வழக்குக்களையும் எளிதில் தீர்த்து இப்பேர வைக்குப் பெருமை உண்டாக்கி வந்தனர். ஆனால், தாங்களோ மிகவும் இளைஞர். இத்தகைய அறங்கூற வைக்குத் தலைமை தாங்கும் தகுதியில்லாதவர். எங்கள் வழக்கோ மிகவும் சிக்கலானது; மிகுந்த பழக்கமுடையவருக்கே மலைப்பைத் தரக்கூடியது. இளைஞராகிய தங்களால் எவ்வாறு அவ்வழக்கைத் தீர்க்க முடியும் என்பது பற்றியே பேசிக் கொண்டோம்”என்றனர்.

அம்முதியோர் கூற்றைக் கேட்ட கரிகாலன், “பெரியீர்! நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. அவ்வாறு எண்ணிய தில் தப்பொன்றும் இல்லை. நீங்கள் இருவரும் இன்று போய் நாளை வாருங்கள். ஆண்டிலும் அறிவிலும் பழக்கத்திலும் பண் பாட்டிலும் முதிர்ந்த தகுதியான ஒருவரைக் கொண்டு உங்கள் வழக்கைத் தீர்த்து வைக்கிறேன். இப்பேரவையின் பெருமையைக் குறைக்க நானும் விரும்ப வில்லை.”என்றான். அம்முதியோர் இருவரும் ‘சரி’ என்று சென்றனர். அத்துடன் அவையைக் கலைத்துவிட்டான் கரிகாலன்.

அறங்கூறவையிலிருந்து சென்றதும் கரிகாலன் பலவாறு எண்ணினான்.

“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்ப திழுக்கு”

என்றார் வள்ளுவர். சிறிதும் எண்ணிப் பாராமல் அம் முதியோர் களிடம் அவ்வாறு கூறிவிட்டேன். அத்தகைய தகுதியுடைய நடுவர் ஒருவரை எங்கு தேடுவது? அதுவும் ஒருநாளில். மிகச் சிக்கலான வழக்கு என்று வேறு அவர்கள் சொன்னார்கள். நாம் ஒருவரைத் தலைமை தாங்கச் சொல்லி, அவ்விருவர் சொல்லையுங் கேட்டு அவர் சரியாகத் தீர்ப்புக் கூறாவிட்டால் நம் பெயர் கெடுவதோடு, நம் அறங்கூறவையின் பெயருமல்லவோ கெடும்? தொடங்கிய நாள் முதல் சீருஞ்சிறப்புடன் நடந்து வந்த இவ்வுறந்தைப் பேரவையின் பெயரை, பெருமையைக் கரிகாலன் கெடுத்துவிட்டான் என்னும் பழிச்சொல்லுக் கல்லவோ ஆளாக நேரிடும்?"என்று பலவாறு எண்ணினான். முடிவில் அவனுக்கு ஓர் எண்ணந் தோன்றியது. அவ்வாறே செய்வதென முடிவு செய்தான்.

இயல், இசை, நாடகம் எனத் தமிழ் மூன்று வகைப்படும். இயற்றமிழை வளர்த்துவந்தவர் புலவர்கள். இசை நாடகத் தமிழை வளர்த்து வந்தவர் பாணர், கூத்தர், பொருநர் என்போராவர். இவர்களில் பாணர் - இசைபாடுவர். கூத்தர் - கூத்தாடுபவர். கூத்து - நாடகம். பொருநர் - நாடகத்தில் வரும் நாடக உறுப்பினர் போல் கோலம் பூண்டு நடிப்பவர். கோலம் - வேடம். இளமைப் பருவமுள்ள அப்பொருநர், கிழவர் போல் கோலம் பூண்டு நடிப்பதைக் கண்டுகளித்தவ னல்லவா நம் கரிகாலன்! தானும் அப்பொருநர்போல் நடிக்க முடிவு செய்தான்.

அவ்வாறே, ஒரு பொருநனை வரவழைத்தான். குடுகுடு கிழவன் போலத் தன்னை ஆக்கிவிடுமாறு கூறினான். அப் பொருநன், தூய வெள்ளை நிறமுடைய நரைமயிரைக் கொண்டு தாடி, மீசை, தலைமயிர் எல்லாம் வைத்து ஒட்டிக் கட்டி, முகத்தில் சுருக்கங்கள் உண்டாகும் படியான பூச்சைப் பூசி, இளைஞனாகிய கரிகாலனைக் குடுகுடுகிழவன் ஆக்கினான். கரிகாலன் நிலைக்கண்ணாடியில் பார்த்தான். அவனாலேயே அக் கிழ உருவத்தைத் தானென்று கண்டு கொள்ள முடிய வில்லை; மிக்க மகிழ்ச்சி யடைந்தான். அக் கிழக்கோலத்தைக் களைந்து வைத்து விட்டு அமைதியாகத் தூங்கினான்.

மறுநாள் அறங்கூறவையங் கூடிற்று. அம்முதியோர் இருவரும் அங்கு வந்தனர். தங்களைவிட நரைத்துப்பழுத்த முதியோர் ஒருவர் அவைத்தலைவராக வீற்றிருப்பதைக் கண்டனர்; பெரு மகிழ்ச்சி கொண்டனர்; தங்கள் வழக்கைத் தீர்ப்பதற்குத் தகுதி யானவர் இவரே என எண்ணினர். அவ்வழக்காளிகள் இருவரும் தங்கள் வழக்கை எடுத் துரைத்தனர்.

அவைத் தலைவர், அவ்விருவர்தம் சொல்லையும் நன்கு கேட்டனர்; பலமுறை திருப்பித் திருப்பிக் கேட்டனர்; இருவர் சொல்லையும் சீர்தூக்கிப் பார்த்துத் தீர்ப்புக் கூறினர். அம் முதியோர் இருவரும் அத்தீர்ப்பைச் சரியென்று ஒப்புக்கொண்டனர். சரியாகத் தங்கள் வழக்கைக் கேட்டு நல்ல தீர்ப்புக் கூறியதற்காக அந்த அவைத் தலைவரைப் பாராட்டினர்; நன்றியுங் கூறினர்.

அவைத் தலைவர் தம் நரைமுடியை எடுத்தனர். முதல் நாள் அவைத்தலைமை தாங்கிய தங்கள் அரசனே அம்முது பெரு நடுவர் என்பதை அறிந்த அம்முதியோர் இருவரும் அக மிக மகிழ்ந்தனர். தங்கள் அரசனது அறிவுத் திறனையும் அரசியலறி வையும் பலபடப் பாராட்டினர்; சோழ நாட்டு மக்களுக்குக் கிடைத்துள்ள பெரும்பேற்றை எண்ணி யெண்ணி உவந்தனர்; ‘குலவித்தை கல்லாமல் பாகம் படும்’ என்பதை இன்று நேரில் கண்டறிந்தோம் என்று புகழ்ந்து, அரசனிடம் விடை பெற்றுச் சென்றனர்.

’நரைமுடித்து முறைசெய்தான் கரிகாலன்’எனப் புலவர்கள் புகழ்ந்தனர். பார்த்தீர்களா கரிகாலனது இளமைப் பருவ வரலாற்றினை? குலவித்தையை! அக்கரிகாலனைப் போன்ற கூரிய அறிவுடைய இளைஞர்கள் நம் நாட்டுக்கு மிகப்பலர் தேவை!

அடாது செய்தார்


தமிழகத்தில் என்று ஆட்சிமுறை ஏற்பட்டதோ அன்று முதல் தமிழகம், சேர சோழ பாண்டியர் என்னும் முடியுடை மூவேந்தர்களால் முறைதிறம்பாது ஆளப்பட்டு வந்தது. அதனால் பழந்தமிழகம் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என முப்பெரும் பிரிவாகப் பிரிந்திருந்தது.

அப்பழந்தமிழ் நாடுகள் மூன்றனுள் ஒன்றான சேரநாடு என்பது, இன்றைய மலையாள நாடேயாகும். அது மேற்கு மலைத் தொடருக்கும் மேல் கடலுக்கும் இடைப்பட்ட தாகும். சேரநாடு மிக்க வளம் பொருந்திய நாடு. அங்கு மழை மிகுதியாகப் பெய்யும். அது காண்போர் கண்ணைக் கவரும் இயற்கைக்காட்சி நிறைந்த நாடு.

சேரநாட்டின் தலைநகர் வஞ்சி என்பது. இவ்வஞ்சிமா நகர்க்கு, கருவூர் என்ற பெயரும் உண்டு. சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினம் காவிரியாற்றின் கரையில், காவிரியாறு கடலொடு கலக்கும் இடத்தில் இருந்த தென்பதை முன்பு கண்டோம். அதுபோலவே, சேரநாட்டின் தலைநகரான வஞ்சி என்பது, பேரியாற்றின் கரையில் இருந்தது. ஆனால் இது, பேரியாறு கடலொடு கலக்கும் இடத்தில் இல்லை; சிறிது உள்ளே தள்ளி உள்நாட்டு நகராக இருந்தது. முசிறி என்பது புகார் போல, பேரியாறு கடலொடு கலக்கும் இடத்தில் இருந்தது. முசிறி, வஞ்சிமா நகரின் ஒரு பகுதியே யாகும்.

காவிரியாறு, மேற்குமலைத் தொடரில் தோன்றிச் சோழ நாட்டை வளஞ்செய்து கொண்டு கீழ்கடலில் கலக்கிறது. அங்ஙனமே, பேரியாறும் மேற்குமலைத் தொடரில் தோன்றிச் சேரநாட்டை வளஞ்செய்து கொண்டு மேல்கடலில் கலக்கிறது. இது பெரியாறு எனவும் வழங்கும். பொருநையாறு என்பது, இதன் மறுபெயர்.

வஞ்சியின் ஒரு பகுதியாகிய முசிறி, சேர நாட்டின் சிறந்த துறைமுகபட்டினம் ஆகும். சேர நாட்டில் இன்னும் சில துறைமுக பட்டினங்கள் இருந்தன. முசிறியின் வடக்கில் தொண்டி, மாந்தை, நறவு என்ற துறைமுகப் பட்டினங்களும், முசிறியின் தெற்கில் காந்தளூர், விழிஞம் என்ற துறைமுகப் பட்டினங்களும் இருந்தன.

இத் துறைமுகங்களி லிருந்தே அக்காலத்தே எகிப்து, கிரேக்கம், உரோம், பாபிலோன், அரேபியா முதலிய மேனாடுகளுடன் சேரர்கள் கடல்வாணிகம் செய்துவந்தனர். இத்துறைமுகப் பட்டினங்கள் அன்றுபெருஞ்செல்வக் கருவூலங் களாக விளங்கின.

வஞ்சிமா நகரிலிருந்து சேரநாட்டினைச் சீருஞ் சிறப்புடன் ஆண்டுவந்த சேரமன்னர்களுள், இமயவரம்பன், நெடுஞ் சேரலாதன் என்பவன் ஒருவன். இவன் வடக்கே இமயமலை வரை வென்று ஆண்டு வந்தான். அதனாலேயே இவன், இமய வரம்பன் என்ற சிறப்புப்பெயர் பெற்றான். இமயவரம்பன் - இமயமலையைத் தன் ஆட்சியின் வடஎல்லையாக உடையவன் என்பது பொருள். வரம்பு - எல்லை. இவனைக் ‘குமரியொடு வட இமயத் தொருமொழிவைத் துலகாண்ட சேரன்’ என்கின்றது, சிலப்பதிகாரம். தெற்கே குமரியாற்றிலிருந்து வடக்கே இமயமலைவரை ஆணை செலுத்தினவன் என்பதாம். இவன், இமயத்தில் சேர அரச முத்திரையான வில்லைப் பொறித்த வெற்றிவீரன் ஆவான்.

ஒருநாள் பகல் பத்துமணி இருக்கும். வானளாவிய அழகிய மாடங்களையுடைய வஞ்சிமா நகரின் தெருவில் ஓர் ஊர்வலம் சென்றது. இடியென வெற்றி முரசு முழங்கிற்று. சேரஅரசமரபுக் கொடியான விற்கொடிகள் பறவைகள் போல உயரத்தே பறந்து சென்றன. வாளேந்திய தமிழ்மறவர்கள், அவ்வூர்வலத்தின் முன்னும் பின்னும் அணி வகுத்துச் சென்றனர்.

‘வஞ்சி வேந்தன் வாழ்க! வானவர் தோன்றல்
வாழ்க! பொருநைத் துறைவன் வாழ்க! சேரலர்
பெருமான் வாழ்க! இமயவரம்பன்
நெடுஞ்சேரலாதன் வாழ்க! வாழ்க!’

என்னும் வாழ்த்தொலி, வான்முகடு பிளவு படும்படி ஒலித்தது.

‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமினி இல்லையே’

என்ற ஒலி, அவ்வாழ்த்தொலியை முந்தியது.

‘வெற்றி வெற்றி! நமதே வெற்றி!’

என்ற ஒலி, அதனையும் முந்தியது.

ஊர்வலத்தின் ஒலிகேட்டுத் தெருவின் இருபுறமும் உள்ள வீடுகளிலிருந்து மகளிர் வெளியே வந்து கூடினர். தங்கள் அரசன் நெடுஞ்சேரலாதன் ஊர்வலம் செல்கின்றான். அவ்வூர்வலக் காட்சியைக் கண்டுகளிக்கலா மென்று அவ்வஞ்சி மகளிர் வீட்டுக் குள்ளிருந்து வெளியே வந்தனர். ஆனால், அவ்வூர் வலத்தில் சேரமன்னன் செல்லவில்லை. ஆடல் பாடல் இல்லை. பின்னர், அவ்வஞ்சி மகளிர் கண்ட காட்சி என்ன?

ஓர் அயல் நாட்டு அரசனும், நூற்றுக்கணக்கான அயல் நாட்டு வீரர்களும் ஊர்வலமாகச் செல்வதைக் கண்டனர். அவர்கள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். எவ்வாறு அவர்கள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப் பட்டனர்?

அவர்களுடைய இரண்டு கைகளும் பின்கட்டாகக் கட்டப் பட்டிருந்தன. மழையில் நனைந்தவரின் தலையிலிருந்து மழைநீர் முகத்தில் வடிவது போல, அவர்கள் தலையிலிருந்து தண்ணீர் போல என்னவோ முகத்தில் வடிந்துகொண் டிருந்தது. அவ்வரசன் என்ன அவ்வாறு தேரின்மேலா சென்றான்? இல்லை, தெருவில் நடந்து சென்றான். அவன் தலையில் மணி முடியில்லை; மார்பில் மலர்மாலை யில்லை. அவ்வீரர்கள் கையில் வாளோ வேலோ இல்லை. அவ்வரசனும் வீரரும் தமிழ் மறவர்களால் அவ்வாறு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் இன்னார் என்பதை அறிந்த அவ்வஞ்சி மகளிர்,

“அழிந்து போக; இவர்கள் செய்த கொடுமை என்ன கொஞ்சமா நஞ்சமா! இந்தப் பதர்களுக்கு இப்படித்தான் வேண்டும்; இன்னமும் வேண்டும். குழியிலே போட; விழிக்கிறதைப்பாரு ஆந்தைகள் போல! ‘அடாது செய்தார் படாது படுவர்’ என்று, சும்மாவா சொல்லி வைத்தார்கள் பெரியவர்கள்?”

“அடேயப்பா! எவ்வளவு அட்டூழியம்! அடிமாண்டு போக. எங்கு பார்த்தாலும் கொள்ளை கொலை! இதே தொல்லை! நம்ம பாட்டில் நாம் சும்மா இருக்க விட்டார்களா என்ன?”

“ஆடு மாடுகளைக்கூடத் தனியாக மேய விடுவதற் கில்லை; திருடர்கள்! காட்டில் மேய்ந்த எங்கள் மாடுகளை யெல்லாம் இந்தக் கள்வர்கள் அன்றோ பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள்? எங்கள் பண்ணையத்தையே முடக்கி விட்டார்கள் படுபாவிகள்!”

“ஏன், ஒண்டி ஒருத்தி தனியாக எங்காவது போக முடிந்ததா என்ன? தொலைந்தது இன்றோடு நம்மைப் பிடித்த தொல்லை!”

“அன்று மாந்தைத் துறைமுகத்தை நோக்கி வந்து கொண் டிருந்த நமது கப்பலிற் புகுந்து கொள்ளையடித்தது இக் கொடிய வர்கள்தாமே?”

“அந்தக் கடம்பர் பேச்சைக்கேட்டு இவர்கள் கெட்டார்கள். இவர்களை ஏவி விட்டுவிட்டு அவர்கள் தப்பித்துக் கொண்டார்கள். ‘கேட்டார் பேச்சைக் கேட்டால் நாட்டார் பின்னே போக வேண்டியதுதான்’ என்று சும்மாவா பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள்?”

என்று, ஒருத்திக் கொருத்தி பேசிக்கொண்டனர். அவ் வஞ்சியரின் அத்தகு ஏச்சையும் பேச்சையும் கேட்டுக் கொண்டே அவ்வயல் நாடர்கள் தெருவில் நடந்து சென்றனர்.

ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அவ்வரசன் யார்? சேரமன்னனால் அழைக்கப்பட்டுச் சேரநாட்டைச் சுற்றிப்பார்க்க வந்த அயல் நாட்டரசனா? அப்படித் தங்கள் அரசனால் அழைக்கப் பட்டு அவன் வந்திருந்தால், ஊர்மகளிர் எதற்காக அவ்வாறு என்னென்னவோ சொல்லி ஏசுகின்றனர்? கண்டபடி பேசு கின்றனர்?

அவ்வரசன் அவ்வாறு சேரமன்னனால் அழைக்கப்பட்டு வந்த சேரநாட்டு நட்பரசன் அல்லன். அவன் தமிழ் நாட்டின் பகையரசன். அவ்வரசனும் மறவரும் அடிக்கடி சேர நாட்டில் புகுந்து கொள்ளையடித்து வந்த கொடியவர்கள்! உண்மையில் அவன் அரசன் அல்லன்; அக்கொள்ளையர் கூட்டத்தின் தலைவன். யார் அவர்கள்? அவர்கள் யவனர்கள். யவனர் என்பார் யார்?

எகிப்து, கிரேக்கம், உரோம், பாபிலோன், பாரசீகம், அரேபியா முதலிய மேனாடுகளுடன் சங்ககாலத் தமிழர் கடல் வாணிகம் செய்துவந்தனர். ஆனால், எகிப்தியர், கிரேக்கர், உரோமர் முதலிய அம்மேனாட்டினர் பெயர் சங்க நூல்களிற் காணப்படவில்லை. காரணம், அக்காலத் தமிழர்கள், அம்மேல் நாட்டினர் எல்லாரையும் பொதுவாக, யவனர் என்று அழைத்து வந்தமையேயாகும். யவனர் என்பது, மேல்நாட்டினர் எல்லாரையும் குறிக்கும் பொதுப் பெயர் ஆகும். யவனர் - மேனாட்டினர். யவனம் என்பது அம் மேல் நாடுகளுள் ஒன்றெனவும் கூறுவர்.

யவனர்கள் தமிழ் நாட்டுடன் வாணிகஞ் செய்யத் தொடங்கிய அக்காலந்தொட்டே, யவனர் பலர் தமிழ் நாட்டில் குடியேறிப் பல தொழில்கள் செய்து வாழ்ந்து வந்தனர்.

தமிழரசர்களின் அரண்மனை வாயிற் காவலராகவும், படைவீரராகவும், மற்றும் பலவகையான தொழில்கள் செய்து கொண்டும் தமிழ் நாட்டில் இருந்து வந்தனர். அந்த யவனர்கள் செய்து வந்த தொழில்களில் தச்சு, கொல், நகைசெய்தல், சிற்பம், ஓவியம் என்பன முதன்மையான தொழில்களாகும்.

இன்று தமிழ்நாட்டுத் தச்சுத்தொழிலை மலையாளத் தச்சர்கள் கைக்கொண்டுள்ளது போலவே, அன்று யவனத் தச்சர்கள் கைக் கொண்டிருந்தனர். யவனர் செய்த பாவை விளக்கு, ஓதிம விளக்கு என்பன தனிச்சிறப் புடையவை. ஓதிமம் - அன்னம். சங்க இலக்கியங்களில், தமிழ் நாட்டில் யவனர்கள் செய்து வந்த தொழில்களைப் பற்றிய குறிப்புக்கள் நிரம்ப உள்ளன.

அந்த யவனர்கள், தமிழ்நாட்டுப் பேரூர் தோறும் தங்கித் தச்சு முதலிய தொழில்கள் செய்து வாழ்ந்து வந்ததோடு, வஞ்சி, மதுரை, உறையூர், புகார் முதலிய தலைநகர்களில் மிகுதியாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் பெரிய நகர்களில் தனியாகவே வாழ்ந்து வந்தனர். யவனர்கள் வாழ்ந்து வந்த இடம், யவனப்பாடி என வழங்கி வந்தது.

யவனமகளிர் ஆடல் பாடல் மகளிராகவும், தமிழரசியரின் ஆயமகளிராகவும் இருந்து வந்தனர் எனவும் தெரிகிறது.

பழந்தமிழ் மக்கள் அந்த யவனர்களை அன்போடு போற்றி வந்தனர். அவர்கள் யாதொரு குறையும் இன்றித் தமிழ் நாட்டில் வாழ்ந்து வந்தனர். யவன வணிகர்களும் பெரும்பாலும் இங்கு தங்கி வாழ்ந்து வந்தனர். இங்ஙன மிருக்க,

அன்று சேர நாட்டின் வடபால் மேல்கடலோரப் பகுதியில் கடம்பர் என்னும் ஒருவகையினர் வாழ்ந்து வந்தனர். அவர்களிற் பலர், சேரநாட்டை அடுத்து மேல்கடலில் உள்ள ஒரு சிறு தீவினில் சென்று தங்கியிருந்து, அவ்வழியாகச் செல்லும் கப்பல் களில் புகுந்து கொள்ளையிட்டு வந்தனர். அதோடு, அடிக்கடி சேர நாட்டின் கரையோரப் பகுதியில் புகுந்தும் கொள்ளையிட்டு வந்தனர்.

அதனால், சேர நாட்டின் சிறந்த துறைமுகங்களான தொண்டி, மாந்தை, நறவு ஆகிய துறைமுகங்களுக்கு யவனக் கப்பல்கள் வர அஞ்சின. கரையோரப்பகுதி மக்கள் அங்கிருக்கவே அஞ்சி நடுங்கினர். குடிமக்களேயன்றி, யவனவணிகரும் அரசனிடம் முறை யிட்டனர்.

நெடுஞ்சேரலாதன், பெரிய கப்பற்படையுடன் சென்று, அத்தீவில் இருந்த கடம்பர்களை வென்று துரத்தி மீண்டான். அதன்பின் கப்பல்கள் அச்சமின்றி வந்து போயின. கரையோர மக்கள் அமைதியாக வாழ்ந்து வந்தனர்.

தோற்றோடிய கடம்பர்கள் அத்துடன் சும்மா இருக்கவில்லை; தங்களால் இயன்ற அளவு உதவுவதாகச் சில யவன வீரர்களைத் தூண்டினர். அந்த யவனர்கள் மேலும் பல யவன வீரர்களைச் சேர்த்துக் கொண்டு சென்று, அத்தீவில் தங்கியிருந்து கொண்டு, தமிழர் கப்பல்களை மட்டும் கொள்ளை யிட்டு வந்ததோடு, அடிக்கடி சேர நாட்டு ஊர்களிற் புகுந்து கொள்ளையடித்து வந்தனர். அந்த யவனர்களால் சேரநாட்டு மக்கள் பட்டபாடு கொஞ்சநஞ்ச மல்ல. இழந்த பொருள்களோ அளவி லடங்கா. தமிழ் மறவர்கள் அக்கொடிய யவனர்களைப் பிடித்து எச்சரிக்கை செய்து அனுப்பியும் பயனில்லை. அவர்கள் மறுபடியும் மறுபடியும் வந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தனர்.

குடிமக்கள் படும்பாட்டைக்கண்ட சேரலாதன், பலமுறை எச்சரிக்கை செய்தும் அந்த யவனர்கள் தங்கள் கெடுபிடியை விட்டபா டில்லை. அது கண்ட நெடுஞ்சேரலாதன், ஒரு பெரிய கப்பற்படையோடு அத்தீவுக்குச் சென்று, அந்த யவனரோடு பொருது வென்று, அவர்களெல்லாரையும் சிறைபிடித்து வந்தான்.

அந்த யவனர் செய்த கொடுமையால் மனம் புண்பட்டுள்ள தமிழ் மக்கள், அக்கொடியரை நேரில் கண்டு மனப்புண் ஆறும் பொருட்டே, நொந்த மனம் அமைதியுறும் பொருட்டே, கைகளைப் பின்கட்டாகக் கட்டி, அப் புல்லரை வஞ்சி நகர்த்தெருவின் வழியே ஊர்வலமாக அழைத்துச் செல்லும்படி கட்டளையிட்டான் சேரலாதன்.

அந்த யவனர் தலையிலிருந்து மழைநீர் போல முகத்தில் வடிந்தது மழைத்தண்ணீரன்று, நெய். குற்றவாளிகளின் கைகளைப் பின்கட்டாகக் கட்டி, நெய்யைத் தலையில் ஊற்றி, அவர்களை ஊர்வலமாக அழைத்துச் செல்லுதல் அக்கால வழக்கம். அவ்வழக்கப் படியே அந்த யவனத் தலைவனும் வீரரும் அவ்வாறு ஊர்வலமாக அழைத்துச் செல்லப் பட்டனர்.

அந்த ஊர்வலம் இருவகையில் சென்றது. ஒன்று, நெடுஞ் சேரலாதன் யவனரை வென்ற வெற்றி ஊர்வலம். மற்றொன்று யவனரின் குற்ற ஊர்வலம். தமிழ் மறவர்கள் சேர மன்னனை வாழ்த்தியது, வெற்றி குறித்தேயாகும்.

அந்த ஊர்வலம் வஞ்சிமா நகரின் எல்லாப் பெருந் தெருக்கள் வழியாகவும் சென்றது. எல்லாத் தெருவிலும் அந்த யவனர்க்கு அவ்வாறே ஏச்சும் பேச்சும் கிடைத்தன! முடிவாக அந்த ஊர்வலம் சிறைச்சாலையைச் சென்றடைந்தது. அவர்கள் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவ்வாறு சிறையி லடைக்கப்பட்ட யவனர்களைச் சேர மன்னன் என்ன செய்தான்? சிறையிலடைத்து அவர்களைத் துன் புறுத்தினனா என்ன?அதுதான் தமிழர் பண்பாடல்லவே. பின் என்ன செய்தான்? அந்த யவனர் தலைவன் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டான். அவன் கைகள் இப்போது பின் கட்டாகக் கட்டப்பட்டிருக்கவில்லை. அவன் வந்து சேரலா தனை வணங்கி நின்றான். சேரன் அவனை இருக்கையில் அமரச் செய்தான். அவன் உட்கார்ந்து தலைகுனிந்தபடியே இருந்தான்.

சேரலாதன் அவனைப் பார்த்து, " யவனர் தலைவ! நெடுங் காலமாகத் தமிழகமும் யவனமும் நட்புறவாக இருந்து வந்தன. இன்றும் அந்நிலை அப்படியேதான் இருந்து வருகின்றது. இன்றும் யவனக் கப்பல்கள் சில வஞ்சித் துறை முகத்தில் தங்கி யுள்ளன. யவன மக்கள் இங்கு பல்லாயிரக் கணக்கில் வாழ்ந்து வருகின்றனர். நீங்கள் எங்கள் மக்களுக்கு இவ்வளவு கொடுமைகள் செய்தும் உங்கள் இனத்தவர்கள் இந்த வஞ்சியிலும் நலமாகவே இருந்து வருகின்றனர். யவனத் தெரு உங்களுக்குக் கொடுத்த மதிப்பே இதற்குச் சான்றாகும். நீங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காததால் நான் இந்த முடிவுக்கு வர நேர்ந்தது. இனியேனும் நீங்கள் திருந்துவீர் களென்று நம்புகிறேன்"என்றான்.

யவனத் தலைவன் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டான்; தங்களை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டான். சேரலாதன் அவ்வாறே மன்னித்து, அந்த யவனர்களிட மிருந்து பறித்து வந்த அணிகலன்களையும் வைரங்களையும் திருப்பிக் கொடுத்து, அவர்களை அவர்கள் நாட்டிற் கனுப்பும்படி படைத் தலைவனுக்குக் கட்டளையிட்டான்.

யவனத்தலைவன், நெடுஞ்சேரலாதனின் பெருந் தன்மையைப் பாராட்டி, அப்பொருள்களைக் காணிக்கையாக வைத்துக் கொள்ளும்படி வேண்டிக்கொண்டான். சேரன் அதற்கிசைந்தான். படைத்தலைவன் அந்த யவனர்களை விடுதலை செய்து அனுப்பி னான். பதிற்றுப்பத்து என்னும் சங்க நூல் நெடுஞ்சேரலாதனின் இவ்வீரச் செயலைப் பாராட்டுகின்றது.

சங்கத் தமிழ்


‘சங்கத் தமிழ்மூன்றுந் தா’ என்றார் ஒளவையார். ஆம், ஒவ்வொரு தமிழனும் ‘தா’ என்று கேட்க வேண்டியதுதான் இது. சங்கத்தமிழ் மூன்றையும் கற்றுணர வேண்டும் என்பது இதன் கருத்து.

தமிழ் மூன்று - இயல், இசை, நாடகம் என்பன. இயற்றமிழ் - இயல்பான தமிழ். செய்யுளும் உரை நடையும் - இயற்றமிழ் எனப்படும். இயற்றமிழ்ப் பாடல்களை இசையோடு பாடுதல் - இசைத்தமிழ் எனப்படும். அப்பாட்டுக்களை இசையுடன் பாடிக் கொண்டு, கேட்போர்க்கு அப்பாடல்களின் பொருள் எளிதில் விளங்கும்படி, மெய்ப்பாடு தோன்ற நடிப்பது - நாடகத் தமிழ் எனப்படும். நாடகம் - கூத்து எனவும் வழங்கும். இதனால் தமிழ், முத்தமிழ் எனப்பட்டது. இத்தகைய பெயர் வேறு எம்மொழிக்கும் இல்லை. இத்தகைய மொழிச் சிறப்பு, தமிழர் நாகரிக மேம் பாட்டுக்கு ஒரு சான்றாக உள்ளது. ‘மோனை முத்தமிழ் மும் மதமும் பொழி யானை’ என, ஒட்டக்கூத்தர் தம்மைப் பெருமை யோடு கூறிக் கொண்டனர்.

இனி, ‘சங்கத்தமிழ்’ என்பது என்ன? சங்கம் என்பது - கூட்டம். அதாவது, புலவர் கூட்டம். அப்புலவர் சங்கப்புலவர் எனப்படுவர். புலவர் கூட்டத்தால் ஆராயப்பட்ட தமிழ் -சங்கத் தமிழ் எனப்பட்டது. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்னும் பழந்தமிழ் நூல்கள், சங்க மருவிய நூல்கள் எனப்படும். சங்கம் மருவிய நூல்கள், சங்கத்தாரால் தேர்ந்தெடுக்கப் பட்ட நூல்கள்.

இத்தமிழகம் முழுதும் உள்ள புலவர்கள், தாங்கள் பாடிய பாட்டுக்களை, ஒரு குறிப்பிட்ட நாட்களில் அச்சங்கத்தார் முன் படித்துப் பொருள் கூறுவர்; சங்கத்தார் கூறும் குற்றங் குறை களைத் திருத்திக் கொள்வர். இவ்வாறு செய்வது, கவியரங் கேற்றுதல் எனப்படும். சங்கப் புலவர்களால் ஒப்புக்கொள்ளப் பட்ட, அரங்கேறிய பாட்டுக்களே, சங்க மருவிய பாட்டுக்கள் எனப்படும். இவ்வாறு கவியரங்கேற்றித் தமிழாய்ந்து, தமிழ் வளர்த்து வந்தது அத்தமிழ்ச்சங்கம்.

முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என அச் சங்கம் மூன்று வகைப்படும். அது, முச்சங்கம் என வழங்கும். முதல், இடை, கடை என்னும் அம் மூன்று சங்கங்களையும், முடியுடை மூவேந்தருள் ஒருவரான பாண்டிய மன்னர்கள் நடத்தி வந்தனர். அம்மூன்று சங்கங்களும் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் நடந்து வந்தன. இனைத்தென வரையறுத்துக் கூற இயலாத காலந்தொட்டுப் பாண்டிய மன்னர்களால் நடத்தப் பட்டு வந்த அத்தமிழ்ச் சங்கம், கி. பி.மூன்றாம் நூற்றாண்டில் முடிவுற்றது.

இம்முச்சங்க வரலாற்றினை நீங்கள் ஒருவாறு அறிந்து கொள்ளுதல் நல்லது. அது உங்களுக்குத் தாய் மொழிப் பற்றையும், தமிழ் கற்பதில் ஆர்வத்தையும் உண்டாக்கும். நம் முன்னோர் இத்தகு தாய் மொழிப்பற் றுடையவராக இருந்தனரா? தமிழ் அரசர்கள் சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்து வந்தனரா? அன்னார் ஆட்சியில் தமிழ் எத்தகைய மேம்பாட்டுடன் இருந்திருக்கும்? நமது தாய்மொழி முச்சங்கப் புலவர்களால் முறையாக வளர்க்கப்பட்டு வந்த மொழியா? நமது தாய் மொழி, பல்லாயிரக்கணக்கான ஆண்டுப் பழமை யுடைய மொழியா? இவ்வாறு சங்கம் நிறுவித் தாய்மொழி வளர்த்து வந்த நாடு, உலகில் வேறொன்று இருந்ததாகக் கேள்விப்பட்ட தில்லையே! பத்துப்பாட்டு, எட்டுத் தொகை முதலிய பழந்தமிழ் நூல்கள் அவ்வாறு கவியரங் கேற்றப் பட்ட நூல்களா? என்பன போன்ற உணர்ச்சி உங்களுக்கு உண்டாகும் அல்லவா? அவ் வுணர்ச்சி, உங்கள் தாய்மொழியாம் தமிழ் மொழியைக் கருத்துடன் கற்றுக் கொள்ள உங்களைத் தூண்டும் அல்லவா? ஆம் கட்டாயம் தூண்டும். அத்தூண்டுதல் உங்களைச் சிறந்த கல்வியறிவுடையவ ராக்கும்.

வடக்கே வேங்கட மலையையும், மற்ற மூன்று திசையினும் கடலையும் எல்லையாக உடையது பழந்தமிழகம். தெற்கே குமரியாற்றை எல்லையாகக் கொண்டிருந்த காலமும் உண்டு. ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்’ என்பது, தொல்காப்பியப் பாயிரம். தமிழ் கூறு உலகம் - தமிழ் வழங்கும் இடம் - தமிழ்நாடு.

வடவேங்கட மலைத்தொடர், வடக்கே வட பெண்ணை யாற்றங் கரைவரைத் தொடர்ந்து, தமிழகத்திற்கு வடக்கெல்லை யாய் நிற்பது. வட பெண்ணையாறே தமிழகத்தின் வடக் கெல்லை யாகும். வட பெண்ணையாற்று நேர், நேர் மேற்காக, மேல் கடல் வரை ஒரு கோடிழுத்தால், அது கொண்கானத்தின் வடக்கில் செல்லும். அக்கோடே பழந்தமிழகத்தின் வடக் கெல்லை யாகும்.

ஆனால், தமிழ்மக்களின் பயக்குறையால், ‘வடக்கே வேங்கட மலையை எல்லையாக உடைத்தாயிருந்தது தமிழ்நாடு’ என, இறந்த காலத்தால் கூறி இரங்கும்படி, இன்று தமிழ்நாடு, வடக்கும் மேற்கும் முறையே ஆந்திர கன்னட மலையாள நாடு களை எல்லைகளாகக் கூறிக் கொள்ளும் நிலையை அடைந்து விட்டது.

நனிமிகு பழங்காலத்தே தமிழர், பனிமலை காறும் பரவி வாழ்ந்து வந்தனர் என்பது, சிந்து வெளியிற் கண்ட புதைபொரு ளாராய்ச்சியால் தெற்றென விளங்குகிறது. பனிமலை காறும் பழந்தமிழராட்சி நடந்துவந்த தென்பதற்குச் சங்க இலக்கியங் களில் நிரம்பச் சான்றுகள் உள்ளன.

இனி, தமிழ்நாட்டின் தெற்கெல்லையான தென்பெருங் கடல், நிலமாக இருந்த காலமும் உண்டு. பன்முறை ஏற்பட்ட கடல் கோளால் அப்பெரு நிலப் பரப்பு, இன்றுள்ள தென்கடற் கரையின் தெற்கில், அதாவது தமிழ்நாட்டின் தெற்கில், 2400 கி.மீட்டருக்கு மேல் (1500கல்) பரவியிருந்தது. ஆப்பிரிக்காக் கண்டத்தின் தென் கீழ்ப் பக்கமுள்ள மடகாஸ்கர் என்னும் தீவையும், கிழக்கே சாவகம் முதலிய கிழக்கிந்தியத் தீவுகளையும் அது தன்னுள் அடக்கியதாக இருந்தது. இலங்கை அன்று தனித்தீ வாக இல்லை.

அப்பெருநிலப் பரப்பு - குமரிமலை, மணிமலை, பன்மலைத் தொடர் முதலிய பல பெரிய உயர்ந்தோங்கிய மலைகளும்; குமரியாறு, பஃறுளியாறு முதலிய வற்றாத பல பேராறுகளும் வளஞ்செய்ய, ‘நீர்மலி வான்’ என, நீர்வளமும் நிலவளமும் பிற வளங்களும் உடையதாய், மக்கள் நல்வாழ்வுக்கேற்ற நன்னாடாக விளங்கியது.

இன்றுள்ள குமரி முனைக்கு 320கி.மீ. (200கல்) தெற்கில், குமரிமலையில் தோன்றிக் கிழக்கு நோக்கிப் பாய்ந்தது குமரி யாறு. குமரியாற்றுக்குச் சுமார் 1120கி.மீ. (700கல்) தெற்கில், பன்மலைத்தொடரில் தோன்றிப் பஃறுளியாறு என்னும் பேராறு பாய்ந்தது. அது பன்மலைத் தொடரில் தோன்றிய பல சிறு அருவிகள் பெருகி ஆறுகளாகி ஒன்று கூடிய பேராறாகும். பல்+துளி - பஃறுளி. ‘துளி’ என்பது சிற்றாறுகளைக் குறிக்கும். துளி - சிறிது என்னும் பொருளுடையது. இவ்விரண்டு பேராறு கட்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு - பெருவளநாடு எனப்படும். இதன் பெயரே இது மிக்க வளம் பொருந்திய நாடு என்பதற்குச் சான்றாகும்.

_“பஃறுளி என்னும் ஆற்றுக்கும், குமரி என்னும் ஆற்றுக்கும் இடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலிவான் என மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரைநாடும், ஏழ்முன் பாலைநாடும், ஏழ்பின் பாலை நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குணகரை நாடும், ஏழ்குறும் பகை நாடும் என்னும் இந்த நாற்பத் தொன்பது நாடும்; குமரி, கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும், நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின் காறும் கடல்கொண் டொழிதலான்.”(சிலப்-8)_

என்னும் அடியார்க்கு நல்லார் கூற்றால், அப்பெருவள நாடு எழுவகைப் பட்ட ஏழேழு நாற்பத்தொன்பது உள்நாடுகளாகப் பிரிவுபட்டிருந்ததென்பதும், அதையடுத்து அதன் வடமேற்கில் குமரி, கொல்லம் முதலிய பல மலைநாடுகள் இருந்தன என்பதும் பெறப்படுகிறது. ‘தடநீர்க்குமரி’ என்பதால், அக் குமரிமலை, பன்மலைத் தொடர் போல மிக்க நீர்வளம் பொருந்திய தென்பதும் விளங்குகிறது. குமரிமலைத் தொடர், பன்மலைத் தொடர் முதலாக அப்பெருவள நாட்டின் மேற்கிலிருந்த மலைகளெல்லாம் மேற்குமலைத் தொடரின் தொடர்ச்சி யேயாகும். நீலகிரியின் மீதுள்ள நீலகிரி மாவட்டம் போன்றவையே குமரி, கொல்லம் முதலிய அம்மலை நாடுகள். மலையாள நாட்டில் உள்ள கொல்லம் என்பது நினைவுகூரத் தக்கது. ‘நதியும் பதியும்’ என்பதால், குமரி பஃறுளி யல்லாத வேறு பல ஆறுகளும் அப்பெருவள நாட்டில் பாய்ந்தன என்பது பெறப்படுகிறது.

பஃறுளியாற்றின் தென்பால், தென்கடல் வரை ஏறத்தாழ 800 கி.மீ. (500கல்) பரப்புடைய நிலம் இருந்தது. அது தென்பாலி நாடு எனப்படும். பஃறுளியாற்றின் தென்பால் இருந்தமையால் அது அப்பெயர் பெற்றது. அஃதும் பல உள்நாடுகளாகப் பிரிவு பட்டிருந்திருக்கலாம்.

‘அக்காலத்து, அவர்நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வட வெல்லை யாகிய பஃறுளி என்னும் யாற்றிற்கும்’ (சிலப் 1) என்னும் அடியார்க்கு நல்லார் உரை இதற்குச் சான்றாகும். தென்பால் உள்ளது, தென்பாலி. ‘அவர் நாட்டுத் தென்பாலி’ என்பதால், அப்பெருவளநாடும் தென்பாலிநாடும் ஓராட்சியின் கீழ் இருந்து வந்தன என்பது பெறப்படும்.

பஃறுளியாறு கடல்கொள்ளாமுன் அப்பெருவள நாட்டினை ஆண்டு வந்த நெடியோன் வழிவந்த முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய மன்னனை, நெட்டிமையார் என்னும் புலவர்,

"எங்கோ வாழிய குடுமி! தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே."

(புறம்-9)

என வாழ்த்துதலும்,

"அன்னச் சேவல் அன்னச் சேவல்
குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை யாயின்"

(புறம்-67)

என்னும் பிசிராந்தையார் கூற்றும், பஃறுளியாறும் குமரியாறும் இருந்தமைக்கு நேர்முகச் சான்றுகளாகும். இப்புலவர்கள் அக்காலத்தே வாழ்ந்தவர்கள். முதுகுடுமிப் பெருவழுதியும், பஃறுளியாறு கடல் கொள்ளாமுன் அங்கிருந் தாண்டவனே யாவன்.

‘எங்கோ வாழிய’ என்னும் புறப்பாட்டு, முதுகுடுமிப் பெருவழுதியின் முன்னோனாகிய நெடியோன் என்னும் பாண்டிய மன்னன், அப்பெருவள நாடு கடல் கொள்ளா முன் அதனை ஆண்டு வந்தவன் எனவும் கூறுதலான், அப்பெருவள நாட்டை ஆண்டவர் பாண்டிய மன்னர் மரபினர் என்பதற்கு அது சான்றாகும். அத்தென் பாலி, பெருவள நாடுகள் அமைந்த அப்பெருநிலப் பரப்பு, குமரிக்கண்டம் எனப்படும்.

பஃறுளியாற்றங் கரையிலிருந்த மதுரை என்பது அந் நாட்டின் தலைநகராகும். மதுரம் - இனிமை. மதுரை - இனிய நகர்; மக்கள் வாழ்வதற் கேற்ற இனிய நகர்.

அத் தொன்மதுரையி லிருந்து, அத்தொல்பழந்தமிழ் நாட்டினை ஆண்டு வந்தவர் பாண்டியர் ஆவர் என்பதை முன்பு கண்டோம். அப்பாண்டியர் தம் தலைநகரில் சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்து வந்தனர். அத் தொன்மதுரையில் நடந்து வந்ததே முதற்சங்கம் ஆகும். அச்சங்கம் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து நடந்து வந்தது. அன்று ஏற்பட்ட பெயரே நம் தங்கத் தமிழ் மொழிக்குச் சங்கத் தமிழ் என்னும் பெயர்.

ஒரு பெரிய கடல்கோளால் அத்தென்பாலி நாடும் பெருவள நாட்டின் பெரும் பகுதியும் கடலுக்கிரையாயின. பஃறுளியாற்றையும் கடல் குடித்து ஏப்பம் விட்டது. அதன் பின்னர், அக்கடல்கோள் நிகழ்ந்த காலத்திருந்த பாண்டிய மன்னன் வடக்கே வந்து, குமரியாற்றங் கரையில் புதிதாக ஒரு நகர் கண்டு அதில் குடியேறி னான்; இந்நகர்க்கும் மதுரை என்று அப்பழைய நகரின் பெயரையே வைத்தனன். இம் மதுரை அலைவாய் எனவும் வழங்கிற்று. அப்பாண்டியன் பழையபடியே இங்கும் சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்து வந்தான். இம் மதுரையில் நடைபெற்ற சங்கமே இரண்டாம் சங்கம், அல்லது இடைச்சங்கம் எனப் படும். இவ்விடைச் சங்கத்தேதான் தொல்காப்பியம் அரங் கேற்றப்பட்டது.

அதன் பின்னர் ஏற்பட்ட ஒரு கடல் கோள், குமரியாற்றின் பெரும் பகுதியையும், அதைச் சூழ்ந்த நிலப்பரப்பையும் விழுங்கவே, அப்போதிருந்த பாண்டியன் வடக்கே வந்து, சில ஆண்டு மணலூர் என்னும் இடத்தில் தங்கி, பின்னர் வையை யாற்றங் கரையில் இன்றுள்ள மதுரையை அமைத்து அங்குக் குடியேறி னான். இம்மூன்றாம் மதுரையில் குடியேறிய பாண்டியன் பழைய படியே சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்து வந்தனன். இதுவே மூன்றாம் சங்கம், அல்லது கடைச் சங்கம் ஆகும்.

இம்மூன்று சங்கங்களும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து நடந்து வந்தன. இதுவே முச்சங்க வரலாறாகும். இடமாற்றமே முதல் இடை கடை என்னும் மூன்று சங்கங்களின் பெயர்க் காரணமாகும். பஃறுளியாற்றங் கரையில் நடந்தது முதற் சங்கம். குமரியாற்றங் கரையில் நடந்தது இடைச்சங்கம். வையை யாற்றங் கரையில் நடந்தது கடைச்சங்கம் எனக் கொள்க.

முதல் இடை கடை என்னும் இம் முச்சங்கத்தினும் நூற்றுக் கணக்கான புலவர்கள் உறுப்பினராக இருந்து வந்தனர். அன்னார் சங்கப் புலவர் எனப்படுவர். அச்சங்கப் புலவர்கள், தமிழக முழுவதும் உள்ள புலவர் பெருமக்கள் பாடிய பாட்டுக்களையும், செய்த நூல்களையும் அரங்கேற்றித் தமிழ் வளர்த்து வந்ததோடு, தாமும் பாட்டுக்கள் பாடியும், நூல்கள் செய்தும் வண்டமிழ் மொழியை வளமுற வளர்த்து வந்தனர்.

அம்முச்சங்கத்தினும் அரங்கேறிய நூல்கள் பன்னூற்றுக் கணக்கினவாம். அவற்றுள், இப்போது நமக்குக் கிடைத்துள்ள சங்க மருவிய நூல்கள்- தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்பனவே. திருக்குறள், பதினெண் கீழ்க்கணக்கைச் சேர்ந்த சங்க மருவிய நூலாகும்.

நமக்குக் கிடைக்கப் பெறாத சங்கமருவிய பழந்தமிழ் நூல்கள் - முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை, கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை, மாபுராணம், பூதபுராணம், இசை நுணுக்கம், குணநூல், செயிற்றியம், சயந்தம், கூத்து, வரி, பேரிசை, சிற்றிசை என்பனவாம்.

முச்சங்க வரலாற்றினை ஒருவாறு கண்டோம். அம் முச்சங்கமும் நடந்த காலத்தே தமிழ் நாடு, சேர சோழ பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர்களால் சிறப்புற ஆளப்பட்டு வந்தது. இன்று தமிழ்நாடு இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாக உள்ளது. தமிழ் மக்களாகிய நாம் இந்தியக் குடிமக்களாக உள்ளோம். இந்தியா நமது தாய் நாடு.

நம் இந்தியப் பெருநாட்டில் நூற்றுக் கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றுள், தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளி முதலிய பதினான்கு மொழிகள் இந்தியத் தேசீய மொழியாகக் கொள்ளப்பட் டுள்ளன. இப் பதினான்கு தேசீய மொழிகளையும் ஒருநிகராக வளம்பெற வளர்த்தல், இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஏற்புடைத்தாகும். பாண்டிய மன்னர்கள் நடத்தி வந்த பழைய தமிழ்ச் சங்கம் போல, இத்தேசீய மொழிகள் பதினான்கிற்கும் தனித்தனிச் சங்கம் நிறுவி அவற்றை வளம்பெற வளர்த்தல் இந்தியப் பேரரசின் பொறுப்பும் கடமையும் ஆகும். வாழ்க தாய் மொழி! வளர்க இந்தியத் தேசீய மொழிகள்!

சிலம்புச் செல்வன்


"வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு; - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
ஆரம் படைத்த தமிழ்நாடு."

என்ற, பாரதியார் பாடலை நீங்கள் படித்திருக்கிறீர்கள் அல்லவா? இப்பாடலைப் பலமுறை இசையோடு பாடி மகிழ்ந்திருக்கிறீர்கள் அல்லவா? தமிழ் நாட்டின் சிறப்பினைக் கூறும் இப் பாடலைத் தமிழ்ச் சிறுவர்களாகிய நீங்கள் படியாமலா இருப்பீர்கள்? தமிழ் நாட்டின் சிறப்புக்கு வள்ளுவர் குறளையும், சிலப்பதிகாரத்தையும் காரணமாகக் கூறுகிறார் பாரதியார். ஆம், தமிழ்நாட்டின் சிறப்புக்குக் காரண மானவைதாம் திருக்குறளும் சிலப்பதி காரமும்!

சிலப்பதிகாரம் ஒரு செந்தமிழ்க் காப்பியம். சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐம்பெருங் காப்பியங்களில் தலையாயது சிலப்பதிகாரம்; கற்போர் நெஞ்சைக் கவரும் தன்மையது. இது பற்றியே பாரதியார், ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்றார். இது செந்தமிழ்க் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், சிலம்புச் செல்வம், சிலம்பு என்றெல்லாம் வழங்கப்பெறும்.

சிலப்பதிகாரம், கண்ணகி கோவலன் கதை கூறும் நூல்; கண்ணகியின் வீரவரலாற்றுக் காப்பியம். இது கண்ணகியின் வீரச்செயலை விளக்குவதோடு மட்டும் நிற்கவில்லை. கண்ணகி, சோழ நாட்டின் தலைநகரான புகாரில் பிறந்து வளர்ந்து, பாண்டி நாட்டின் தலைநகரான மதுரையில் தன் கணவனை இழந்து ஆறாத்துயருற்று, சேரநாடு சென்று உயிர்நீத்தாள். அதனால், கண்ணகி வீரவரலாற்றில் சோழநாடு, பாண்டி நாடு, சேரநாடு ஆகிய தமிழகத்தின் முப்பெரு நாடுகளும் இடம் பெறுகின்றன. எனவே, சிலப்பதிகாரம் அம்முந்நாடுகளின் சிறப்பினைக் கூறும் ஒரு முத்தமிழ் நூலாகும். அந் நாட்டு மக்களின் வாழ்க்கை முறை கூறுகிறது சிலப்பதிகாரம்.

இன்னும் அம்மூன்று நாடுகளையும் முறைபுரந்த சேர சோழ பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர்களின் சிறப்பினையும், அன்னாரின் ஆட்சித் திறனையும் கூறுகிறது சிலப்பதிகாரம். வஞ்சி, புகார், மதுரை என்னும் சேர சோழ பாண்டிய நாடுகளின் தலைநகரங்களின் சிறப்பினைப் பரக்கக் காணலாம் சிலப் பதிகாரத்தில்.

எனவே, பழந்தமிழகத்தின் பெருமையினைக் காட்டும் காலக் கண்ணாடிபோல் விளங்குகிறது சிலப்பதிகாரம். இயல், இசை, நாடகம் எனத் தமிழ் மூன்று வகைப்படுமல்லவா? சிலப்பதி காரம் அம்மூன்று தமிழுங் கூறுகின்ற ஒரு முத்தமிழ்ப் பெருங் காப்பியமாகும்.

மேலும், அருந்தமிழ் ஆற்றல் அறியாது, தமிழ் பழித்த கனகவிசயரை வென்றடக்கிய தமிழரின் வெற்றிக்காப்பிய மாகவும் சிலப்பதிகாரம் திகழ்கின்றது.

இத்தகைய சீரும் சிறப்பும் ஒருங்கு வாய்ந்த செந்தமிழ்க் காப்பியம் ஆகிய சிலப்பதிகாரத்தைச் செய்தவர், இளங்கோ வடிகள் ஆவர்.

"யாமறிந்த புலவரிலே . . .
இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே
பிறந்ததில்லை உண்மைவெறும்
புகழ்ச்சி யில்லை"

எனப் பாரதியார் பாராட்டும் அத்தகு சிறப்பினையுடையவர் இளங்கோவடிகள். இவர் இளங்கோ ஆக இருந்து, இளங்கோ அடிகள் ஆனது ஒரு வியத்தகு நிகழ்ச்சி யாகும். அது, படிப்போர் உள்ளத்தை உருக்கும் தன்மையதாகும். இதோ அது:

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் சேரமன்னனின் வரலாற்றினை முன்பு கண்டோம். நெடுஞ்சேரலாதனின் கோப் பெருந்தேவி, நற்சோணை. இவ்விரு பெற்றோரின் இளைய மகனே நம் இளங்கோ. மூத்தவன், செங்குட்டுவன்.

செங்குட்டுவனும் இளங்கோவும் கற்கவேண்டியன வெல்லாம் கசடறக் கற்றுத் தெளிந்தனர்; தமிழ் இலக்கிய இலக்கணங்களை நன்கு கற்றறிந்தனர்; திருக்குறள் கூறும் அரசியல் இலக்கணங்களை ஐயந்திரிபின்றி ஆராய்ந்து கற்றுத் தேர்ந்தனர்; வில், வாள், வேல் முதலிய படைக்கலப் பயிற்சியிலும் நல்ல தேர்ச்சி பெற்றனர். மக்கள் இருவரும் கல்வி கேள்விகளிலும் படைக்கலப் பயிற்சி யிலும் சிறந்து விளங்குவது கண்ட நெடுஞ்சேரலாதன் அகமிக மகிழ்ந்தான். அன்னாரின் அன்னை, அவர்களை ஈன்ற பொழு தினும் பெரிதுவந்தனள்.

செங்குட்டுவன், தந்தைக்குப்பின் சேரநாட்டுப் பேரரசன் ஆவோன் ஆதலால், இளவரசுப் பட்டங்கட்டப் பெற்று அரசியற் பயிற்சி பெற்று வந்தான். அவன் தன் தந்தைக்குத் துணையாக அரசியல் அலுவல்களைக் கவனித்து வந்தான். குடிமக்களிடத்தும், அரசியல் அதிகாரிகளிடத்தும் அவன் நெருங்கிப் பழகி வந்தான். குடிமக்களும் அதிகாரிகளும் இளவரசனிடம் மிக்க அன்புடைய ராக நடந்து கொண்டனர்.

இளங்கோ, அரசியல் அதிகாரிகள் எல்லார்க்கும் தலைமை அதிகாரியான பெருநம்பி என்னும் பொறுப் பேற்று, தந்தைக்கு ஆட்சித் துணைவனாக இருந்து வந்தான். அண்ணனைப் போலவே இளங்கோவும் எல்லாரிடத்தும் அன்பாகப் பழகிவந்தான். செங்குட்டுவனும் இளங்கோவும், தமிழும் இனிமையும் போல ஒரு மனப்பட்டு இருந்து வந்தனர்.

மேல் கடல் தீவில் இருந்துகொண்டு, அடிக்கடி சேர நாட்டு மக்களுக்குத் தொல்லை கொடுத்துவந்த யவனரை, நெடுஞ் சேரலாதன் வென்றடக்கியதை முன்பு கண்டோம். அதில், இளவரசன் செங்குட்டுவனுக்கும் பங்குண்டு. யவனரை வென்று சிறைபிடித்தவன் செங்குட்டுவனே யாவன் எனலாம்.

ஒருநாள், சேரநாட்டின் தலைநகரான வஞ்சிமா நகரின் அரண்மனைக் கொலுமண்டபத்தில் அமைச்சர்கள், படைத் தலைவர்கள், ஒற்றர்கள், தூதுவர்கள், மற்றபெரிய அதிகாரிகள், நகரப் பெருமக்கள் முதலியோர் கூடியிருந்தனர். அவர்கள் மன்னனது வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

நெடுஞ்சேரலாதன், விண்மணி போன்ற செங்குட்டுவன், இளங்கோ என்னும் தன் இரு கண்மணிகளுடன் அக் கொலு மண்டபத்திற்கு வந்தான். அவையோர் எழுந்து வணக்கம் செலுத்தினர். அரசன் அரியணையில் அமர்ந்தான். செங்குட்டுவன் இளவரசனுக்குரிய இருக்கையிலமர்ந்தான். இளங்கோ அண்ணனுக்கு அருகில் அமர்ந்தான்.

அவைக்களப் புலவர், நெடுஞ்சேரலாதனின் யவனப் போர் வெற்றியைப் புகழ்ந்து பாடினர். அரசன் புலவர்க்குப் பரிசு கொடுத்துப் பெருமைப் படுத்தினான். பின்னர், அவன் அவை யோரைப் பார்த்து,

“அன்பிற்குரிய அவைப் பெருமக்களே! உங்கள் இளவரச னாகிய செங்குட்டுவன் ஆட்சித் துறையில் நன்கு பயிற்சி பெற்று ள்ளான். வீரத்திலும் அவன் மிக்கு விளங்குவதை யவனப் போரில் கண்டோம். அவனை அரியணையில் அமர்த்திவிட்டு நான் ஆட்சிப் பொறுப்பிலிருந்து விடுதலை பெற்றுக் கொள்ள விரும்பு கின்றேன்”என்றான்.

அவையினர் எல்லாரும் ஒருமுகமாக, ‘தங்கள் விருப்பமே எங்கள் விருப்பம்’ என்றனர்.

நெடு : மகிழ்ச்சி, எல்லாரும் மனமொத்துச் செய்யுஞ் செயலேஏற்ற செயலாகும். என் விருப்பம் போல் உங்கள் விருப்பமும் இருப்பது பற்றி மிக்க மகிழ்ச்சி. இளங்கோ! நீ அண்ணனுக்குத் துணையாக இருந்து, நீங்கள் இருவரும் நல்லாட்சி புரிவதைக் கண்டுகளிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

இளங்: எந்தையே! தங்கள் விருப்பப்படியே நடந்துகொள்கின்றேன். அது இளவலாகிய எனது கடமை
யாகு மன்றோ? அரச மரபில் பிறந்த எனக்குக் குடிமக்கள் நலத்திற்கு உழைப்பதைவிட வேறு என்ன இருக்கிறது? மேலும், தந்தையின் விருப்பப்படிநடப்பதுதானே மைந்தனின் கடமை.

இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போது, வாயில் காவலன் வந்து அரசனை வணங்கி, கணிவன் (சோதிடன்) ஒருவன் வந்திருப்பதாகச் சொன்னான். அரசன் அவனை அழைத்து வரும்படி கூறினான். வாயிலோன் சென்று, அக் கணிவனை அழைத்துவந்தான்.

கணி: குமரியொடு வட இமயத்து ஒரு மொழி வைத்து உலகாளும் இமயவரம்ப! நெடுஞ்சேரலாத! வணக்கம். வாழ்க நின் கொற்றம்!

நெடுஞ் சேரலாதன் அக்கணிவனை அன்புடன் வரவேற்று, இருக்கை தந்து இன்மொழி கூறினான். அக்கணிவன் சிறிது நேரம் அரசனையும், அரசகுமரர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான். இளங்கோவை அடிமுதல் முடிவரை நெடுநேரம் உற்றுப் பார்த்தான். பின் எழுந்து நின்று,

கணி: சேரர் பெரும! நான் கணிதநூற்படி ஒன்று சொல்ல விரும்புகிறேன். அது எதிர்காலம் பற்றிய செய்தி
யாகும். வஞ்சி மூதூர் மன்னர் மன்னவ! நான் உண்மையைக் கூறுகின்றேன், பொறுத்தருள வேண்டும்.

நெடு: என்ன அது? உண்மையும் பொறையுந்தாமே தமிழறம்? கூற விரும்புவதை ஒளியாமற் கூறுக.

கணி: சேரலர் பெரும! நான் உடற்கூற்றிலக்கணம் நன்கு அறிவேன். உடலமைப்பின் குறிப்பைக் கொண்டு பலன் சொல்வதே எனது தொழில். அதன்படியே கூறுகிறேன். இதுவரையில் என்சொ பொய்த்ததே இல்லை.

நெடு: அப்படியா! சரி, என்ன கூறப்போகிறீர்? கூறுக.

கணி: வஞ்சி வேந்தே! உடலமைப்பின்படி நும் இளையமைந்தர்க்கு அரச இலக்கணம் நன்கு அமைந்திருக்கிறது. நான் சொல்லவில்லை, உடற்கூற்றிலக்கண நூல் சொல்கிறது. அந்நூலில் உள்ளபடியே நான்
சொல்கிறேன். நும் மக்கள் இருவருள், இளையவரே நுமக்குப்பின் இந்நாட்டின் அரசராவர்.

கணிவன் சொல்லைக் கேட்ட சேரலாதன் திடுக்கிட்டான். அவன் உள்ளம் துடித்தது, உடல் நடுங்கியது, முகம் வியர்த்தது, வாய் வறண்டது. அந்நிலைமையில் அவன் செங்குட்டுவனைப் பார்த்தான். செங்குட்டுவன் கவலை தோய்ந்த முகத்துடன் இளங்கோவைப் பார்த்தான். அவன் இளங்கோவைப் பார்த்த படியே இருந்தான். அவையோர் அம்மூவரையும் பார்த்த படியே இருந்தனர்.

எங்கு எதை எவ்வாறு சொல்ல வேண்டும் என்பதை அறியாத அக்கணிவன் கூற்று, அந்த அவையினையே அவ்வாறு கலங்கச் செய்தது. அக்கணிவன் அச்சத்துடன் நின்று கொண் டிருந்தான். இந்நிலையில் இளங்கோ என்ன செய்தான்? தான் தந்தைக்குப்பின் அரசனாகப் போவதை எண்ணி உள்ளம் உவக்க வீற்றிருந்தானா? இல்லை. பின் அவன் என்ன செய்தான்? அவன் இருக்கையை விட்டு எழுந்து அக்கணிவனைப் பார்த்து,

இளங்: ஏ கணிவரே! என்ன சொன்னீர்? எம் தந்தைக்குப் பின் நான்இந்நாட்டின் மன்னன் ஆவேனா? உண்மையாகவா? இந் நாட்டின் இளவரசர்! ஏ கணிவரே! நும்கூற்றில் உண்மை சிறிதும் இல்லை. நீர் வேண்டு மென்றே பொய் கூறுகிறீர். மூத்தவன் இருக்க இளையவன் முடிசூட்டிக் கொள்வதா? இது முறையாகுமா?
அண்ணன் இருக்கத் தம்பி அரசன் ஆவதா?இது அறமாகுமா? தம்பி இந்நாட்டின் அரசன் ஆனால், அண்ணனுக்கு இங்கு வேறு என்ன வேலை இருக்கிறது? இளையவன்அரியணையின்மேல் இருக்க, மூத்தவன் கீழ் இருப்பதா?

கணி : என்னவோ, உள்ளதைச் சொன்னேன்.

இளங்: இதுதான் உள்ளதா? அண்ணன் இருக்கத் தம்பி அரசனாவது! எதில் உள்ளது இது? இது நும் கணித
நூலில் உள்ளது தானே?நுமது கூற்றில் சிறிதும் உண்மை இல்லை. கணிவரே! என் அண்ணன் வீரமே உருவானவர்; இளவரசராக இருந்து ஆட்சி முறையை நன்கு அறிந்தவர்; குடிமக்களால் பெரிதும் விரும்பப்படுபவர். அவர் அரசர் ஆவதை இந்நாட்டுக் குடிமக்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். அத்தகைய அவர் இருக்கவா நான் அரசனாவது? தங்கள் அரசனிருக்க நான் அரசனாவதை இந்நாட்டு மக்கள் விரும்புவார்களா என்ன? தமிழ் அரசமரபில் இதுவரை இத்தகைய முறைகேடான செயல் நடந்ததே இல்லை. அவ்வாறு நடந்ததாக எந்த ஒரு தமிழ் நூலிலும் இல்லை. இதோ, நும் சொல்லைப் பொய்யாக்குகிறேன்.

என்று, தன் அணிகலன்களைக் கழற்றினான் இளங்கோ. அவையோர் ஒன்றுந் தோன்றாமல் திகைத்தனர். நெடுஞ் சேரலாதன் தன்னை மறந்து மரப்பாவை போல அப்படியே அசைவற்று உட்கார்ந்திருந்தான்.

செங்:தம்பி! என்ன இது? கணிவன் சொன்னபடியே நடந்தாலும் அதில் குற்றம் என்ன? ஆட்சி என்பது ஒரு தொழில். மக்களாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழில் செய்து வருகிறார்கள். அது போலவே, ஆட்சித் தொழிலையும் ஒருவர் செய்ய வேண்டியதே. அதை அண்ணன் செய்தாலென்ன? தம்பிசெய்தா லென்ன? தம்பி! வேண்டாம், அணிகலன்களைக் கழற்றாதே.

இளங்: அண்ணா! தடுக்காதீர். தாங்கள் என் மீது வைத்துள்ள அத்தகு அன்பினால் இவ்வாறு சொல்கிறீர். இக்கணிவன் சொன்னபடியே நடப்பதைத் தாங்கள் விரும்பினாலும் இந்த நாடு விரும்பாது; இந்த நாட்டு மக்கள் விரும்ப மாட்டார்கள். இதோ, இந்த அவையோர் நிலைமையைப் பாருங்கள். அண்ணா! நமது முதலமைச்சர் அழும்பில்வேளின் முகத்தைப் பாருங்கள்.நமது படைத்தலைவர் வில்லவன் கோதையின் வீரமுகம் அடைந்துள்ள நிலையைக் கவனியுங்கள். அதோ, அங்கு அமர்ந்திருக்கும் இவ்வூர்ப் பெருங்குடி மக்கள் கல்லுருவம் போல் காட்சி யளிப்பதன் காரணம் என்ன? கணிவன் கூற்றை அவர்கள்விரும்பினால் மலர்ந்த முகத்துட னன்றோ இருப்பர்?

அண்ணா! அவர்கள் இருக்கட்டும். இதோ நம் தந்தையின் நிலைமையைப் பாருங்கள். அவர் ஏன் இப்படித் தன்னை மறந்து இருக்கிறார்? அவருக்கு என்ன பேசவா தெரியாது? அவர் வாய்பேசாமல் இருப்பதன் காரணம் என்ன?

அண்ணா! இவர்களெல்லாரும் இங்ஙனம் கவலையே வடிவாக மாறியதன் பொருள் என்ன? இவர்களில் எவரும் இந்தக் கணிவன் சொல்லை விரும்பவில்லை என்பதுதானே பொருள்?

அண்ணா! தந்தை விரும்பாததை, இந்நாட்டு அரசர் விரும்பா ததை, அமைச்சர் விரும்பாததை, படைத் தலைவர் விரும்பாததை, ஒற்றர் விரும்பாததை, இவ்வூர்ப் பெருங்குடி மக்கள் விரும்பா ததை நான் மட்டும் எங்ஙனம் விரும்புவேன்? நானும் இந்த நாட்டைச் சேர்ந்தவன்தானே? அவர்களில் ஒருவன் தானே? இதோ, நான் துறவுபூண்டு குணவாயிற் கோட்டத்தை அடை கிறேன்.

செங்: தம்பி! வேண்டாம். இக்கணிவன் சொற்படி ஒன்றும் நடக்கப் போவதில்லை. என்னவோ அவன் தெரியாத் தனமாக அவ்வாறு உளறி விட்டான். அணிகளைக் கழற்ற வேண்டாம்.

நெடு: கணிவா! இடமறியாது பேசி இந் நிலைமையை உண்டாக்கி விட்டனையே. இளங்கோ! வேண்டாம்.

இளங்: எந்தையே! வருந்தாதீர். அண்ணன் அரியணையில் அமர்ந்து இந்நாட்டு மக்கட்குத் தொண்டு செய்யட்டும். நான் தமிழன்னைக்குத் தொண்டு செய்கிறேன். வேண்டும்போது அண்ணனுக்கு உதவுகிறேன். அண்ணனுக்கு இடையூறாக இனி நான் இங்கு இருப்பது முறையன்று.

செங்: தம்பி! வேண்டாம். நீ இங்கு இருப்பதால் எனக் கொன்றும் இடையூறு இல்லை. என்னைத் தனியாக விட்டுப் பிரிந்து செல்லத் துணிவதுதான் எனக்கு இடையூறாகும். வாழப்பிறந்தநீ, இந்த இளமைப் பருவத்திலே வாழ்வை வெறுக்கத் துணிவதா? அதுவும் எனக்காக. ‘செங்குட்டுவனுக்காக இளங்கோதுறவு பூண்டான்; தன் வாழ்வை வெறுத்தான்’ என்ற பழிச்சொல்லை என்மேல் சுமத்தலாமா? இளங்கோ! வேண்டாம்.

இளங்: அண்ணா! தடுக்காதீர். காலச்சுழல் எப்படி இருக்கும் என்பது எவருக்கும் தெரியாது. மக்கள் மனம் மாறும் இயல்புடையது. ‘எண்ணித் துணிக’ என்கின்றார் வள்ளுவர். பின்னர் வருந்துவதால் பயன் என்ன? நான் எங்கு போகிறேன்? இங்குதானே இருக்கப் போகிறேன். நான் தங்களோடு வாழ்விலிருந்து
சற்றுவிலகிக் கொள்கிறேனே யல்லாமல், இருப்பது பக்கத்திலேயே தானே!

என்று இளங்கோ அணிகலன்களையும், அரச உடையினை யும் களைந்து, காவி உடுத்து, குணவாயிற் கோட்டம் புக்கார். அங்குள்ள பெரியோர்கள், ‘வருக வருக! இளங்கோவடிகளே வருக!’ என்று, வரவேற்றனர்.

ஒளவையும் அதியனும்


சங்ககாலப் புலவர் பெருமக்களுள் பெண்பாற் புலவர் களும் பலர் இருந்தனர். அவர்களுள் ஒளவையார் ஒருவராவர். ஒளவையாரைப் பற்றித் தெரியாத தமிழ்மக்கள் எவரும் இருக்க மாட்டார்கள். கற்றவர், கல்லாதவர் எல்லார்க்கும் தெரிந்த புலவர் அவர் ஒருவரே எனலாம். தமிழ் மக்களுக்கு அவ்வளவு அறிமுக மானவர் ஒளவையார்; அவ்வளவு பேரும் புகழும் பெற்றவர் எனலாம்.

ஒளவையார் செய்த - ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம், நல்வழி முதலிய நூல்களை நீங்கள் படித் திருப்பீர்கள். ஒளவையாரைப் பற்றி வழங்கும் பல கதைகளையும் அறிந்திருப்பீர்கள். தமிழ்மக்களால் தமிழ்த் தாய் என்றே மதித்துப் போற்றப்பட்டு வந்தவர் ஒளவையார். ஒளவையார் என்னும் பெயருள்ள புலவர் இருவர் இருந்திருக்கின்றனர். சங்ககால ஒளவையார் வேறு, ஆத்திசூடி முதலிய நூல்கள் செய்த ஒளவையார் வேறாவர். இவர் பிற்காலத்தவர். நாம் இங்கு சங்ககால ஒளவை யாரின் வரலாற்றினையே காண்போம்.

ஒளவையார் தமிழ்நாடு முழுவதும் சுற்றித் தமிழ் மக்களுக்கு நல்லறிவு புகட்டுவதையே, தமிழ் மக்களை நல்வழியில் நடக்கச் செய்வதையே தம் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர். தமிழ் மக்கள் எவரும் ஒளவையார் சொல்லைத் தட்டி நடவார்கள். தமிழ் மக்களுக்கு அவ்வளவு வேண்டியவர் ஒளவையார். ‘ஒளவை அமிழ்த மொழி’ என, அவர் சொல்லைச் சிறப்பித்து மேற்கொண்டு அதன் படி நடந்து வந்தனர் தமிழ்மக்கள். ஒளவையார் சொல்லில் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தனர் தமிழ் மக்கள்.

ஏதாவ தொன்றுபற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது ஒருவர், ‘முடியாது,’ அல்லது ‘ஆகாது’ என்றால், ‘என்ன அவச் சொல் சொல்கிறாய்?’ என்னும் வழக்கமே, ஒளவையார் சொல்லில் தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கைக்குச் சான்றாகும். ‘ஒளவை சொல்’ என்பதே, ‘அவச்சொல், அவைச் சொல்’ எனத் திரிந்து வழங்குகிறது. ஆண்பாற் புலவர்களைப் போலவே, ஒளவை யாரும் பாடிப் பிழைக்கும் பரிசில்வாழ்க்கையே நடத்தி வந்தனர்.

தொண்டை நாடு, சோழ நாடு, பாண்டி நாடு, சேரநாடு களின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, கொங்கு நாட்டுச் சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார் ஒளவையார்; கொங்கு நாட்டுச் செல்வர்கள் பலரைப் பாடிப் பரிசுபெற்றார். பின் தகடூரை நோக்கிச் சென்றார் ஒளவையார். கொங்கு நாடு என்பது எது? தகடூர் எங்கே உளது?

கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி மாவட்டங்களும்; மதுரை மாவட்டத்துத் திண்டுக்கல், பழனி வட்டங்களும், திருச்சி மாவட்டத்துக் கரூர், குளித்தலை வட்டங்களும், வடக்கில் கொள்ளேகால் வட்டமும் - கொங்கு நாடு ஆகும். தமிழகத்தில், சேர சோழ பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர் ஆட்சி என்று ஏற்பட்டதோ அன்று தொட்டே, கொங்கு நாடு தனியாட்சி நாடாகவே இருந்து வந்தது. அது, வேளிர் என்னும் குறுநில மன்னர் பலரால் ஆளப்பட்டு வந்தது.

சங்ககால வள்ளல்களி லொருவனான அதியமான் என்பான், தகடூரில் இருந்து தகடூர் நாட்டை ஆண்டு வந்தான். இன்றையத் தருமபுரி மாவட்டமே, அதாவது தருமபுரி வட்டம், அரூர் வட்டம், ஒசூர், கிருஷ்ணகிரி வட்டங்களின் தென்பகுதி இவையே - தகடூர் நாடு ஆகும். தருமபுரி மாவட்டத்தின் தலைநகரான தருமபுரியே, தகடூர் நாட்டின் தலைநகரான தகடூர் ஆகும். தருமபுரிக்குத் தெற்கில் உள்ள அதமன் கோட்டை என்பது, அதியமான் கோட்டை என்பதன் சிதைவாகும்.

சங்ககாலந் தொட்டு, கி.பி. 13 ஆம் நூற்றாண்டு வரை, தகடூர் நாட்டை இவ்வதியமான் மரபினர் ஆண்டு வந்தனர். ஒளவையார் காலத்தே தகடூரில் இருந்தாண்ட அதியமான் முழுப்பெயர் - அதியமான் நெடுமான் அஞ்சி என்பது. அந் நெடுமான் அஞ்சியைக் காணவே, ஒளவையார் தகடூரை நோக்கிச் சென்றார்.

அதியமான், ஒளவையாரை அன்புடன் வரவேற்றான்; மலர்ந்த முகத்துடன் இன்சொல் கூறி அளவளாவினான். ஒளவை யாரிடத்து அஞ்சி அளவு கடந்த அன்புடையவன்; ஒளவை யாரைத் தமிழ்த்தாயெனவே மதித்துப் போற்றினான். ஒளவை யார், அதியமானைப் பல பாடல்களால் சிறப்பித்துப் பாடிப் பெருமைப் படுத்தினார். அதியமான் மனைவியார், நாகையார் என்பவர். அவர் ஒரு சங்ககாலப் பெண்பாற் புலவராவர். அவர் ஓளவையாரை அன்னையெனக் கொண்டு போற்றி வந்தனர்.

அதியமான் ஒருநாள், சேலத்திற்கு மேற்கில் 9. கி.மீ. அளவில் உள்ள கஞ்சமலைக்குச் சென்றான். இக்கஞ்சமலை பல்வகை மூலிகைச் செடி கொடிகளையுடையது; இரும்புத் தாதினை நிரம்ப வுடையது. இதை இரும்பு மலையென்றே கூடச் சொல்லலாம். இக்கஞ்சமலையின் பக்கத்திலேதான் சேலம் உருக்காலை ஏற்படுத்தத் தமிழ்நாட்டு அரசினர் முடிவுசெய் துள்ளனர். இம்மலையில் பொற்றாதும் உண்டு. இம்மலையில் தோன்றி வரும் பொன்னியாறு என்னும் ஆற்று மணலைக் காய்ச்சி முன்பெல்லாம் பொன் எடுத்தார்களாம். அப்பொன்கொண்டே ஆதித்தசோழன் என்பான், சிதம்பரத்துச் சிற்றம்பலத்தைப் பொன்னம் பலம் ஆக்கினானாம். அத்தகு சிறப்புடையது கஞ்சமலை.

கஞ்சமலைக்குச் சென்ற அதியமான், அங்கு அணுகுதற் கரிய உயர்ந்த ஒரு பாறைப் பிளவின் உச்சியில் இருந்த நெல்லிக் கனி ஒன்றை அரிதின் முயன்று பறித்தான். அக்கனி, உண் போர்க்கு உறுதியான உடல் நலத்தையும் நீண்ட வாழ் நாளையும் தரவல்லது. அரிய மூலிகைப்பொருட் களஞ்சிய மல்லவா கஞ்சமலை? அக்கனியைத் தான் உண்பதினும், தமிழ்த்தொண் டாற்றி வரும் ஒளவையார் உண்பதே மேலெனக் கருதிய அதியமான், அதன் பயனை உரையாது, அதை ஒளவையார்க்குக் கொடுத்துப் பொன்றாப்புகழை அடைந்தான். என்னே அஞ்சியின் தாய்மொழிப் பற்று! இத்தகைய வள்ளல்களாலல்லவோ அன்று தமிழ்மொழி, அவ்வளவு சீருஞ்சிறப்புமுற் றிருந்தது!

உண்டபின், அக்கனியின் பயனை அறிந்த ஒளவையார்,

"மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத் தடக்கிச்
சாதல் நீங்க எமக்கீத் தனையே."

என, தனக்கென வாழா அத்தமிழ்த் தலைவனின் அவ்வரும் பெருங் குணத்தினை மனமாரப் பாராட்டினார். விடர் - பிளவு. அருமிசை - அணுகுதற்கரிய அவ்வளவு உயரத்தில். மிசை - மேலே. குறியாது - பயனை உரையாது. ஆதல் - பயன். சாதல் நீங்க - நீண்டகாலம் வாழ. இங்ஙனம் அக்கனியை எனக்குக் கொடுத்த பெரும! நீ மன்னுக - நிலைபெற்று வாழ்வாயாக. ஒளவையார் பால் அதியமானுக்கும், அதியமான் பால் ஒளவை யாருக்கும் இருந்த அன்பின் பெருக்கை என்னென்பது!

அதியமான் காலத்தே தொண்டை நாட்டைத் தொண்டை மான் என்னும் அரசன் ஆண்டுவந்தான். காஞ்சி (காஞ்சீபுரம்) என்பது, தொண்டை நாட்டின் தலைநகர். அக் காஞ்சித் தொண்டை மான், தகடூர் நாட்டின் வளத்தைக் கண்டு, அதை வென்று கைக்கொள்ள விருப்பங் கொண்டான். அதற்காகத் தன் படையைப் பெருக்கிக்கொண்டே வந்தான்.

தொண்டை நாட்டுக்கும் கொங்கு நாட்டுக்கும் இடையில் நடுநாடு என்ற நாடு இருந்தது. தென்பெண்ணை யாற்றங் கரையில் உள்ள திருக்கோவலூர் அந்நாட்டின் தலைநகர். சங்ககால வள்ளல்களிலொருவனான மலையமான் திருமுடிக் காரி என்பவன், திருக்கோவலூரில் இருந்து அந்நடு நாட்டை ஆண்டு வந்தான். அவனொரு பெருவீரன்; பெரும் படைவலி யுடையவன். பேரரசர்கட்குப் போர்த்துணை யாவதையே அவன் பெரும்பான்மைத் தொழிலாகக் கொண் டிருந்தான். அவன் யார் பக்கம் உள்ளானோ அவ்வரசன் பக்கமே வெற்றி பெறும் என்பது அக்கால மன்னர்கள் நம்பிக்கை. அவ்வளவு பேராற்றல் உடையவன் ஆவான் அவன்.

அக்காரி, அதியமானுடன் நட்புடையவனாக இல்லை என்பது தெரிந்தே, தொண்டைமான் அங்ஙனம் விருப்பங் கொண்டு தன் படையைப் பெருக்கி வந்தான். பெரும்படை யுடையவன் பக்கந்தானே ஒருவன் சேருவான்?

மேலும், சேல மாவட்டத்து நாமக்கல் வட்டத்தில் உள்ளது கொல்லிமலை என்பது. அது மிக்க பரப்பும் வளமும் பொருந்திய ஒரு மலைநாடு. கொல்லிமலைத் தேன், இலக்கியச் சிறப்பு டையது. அங்கு விளையும் கருவாழைப் பழமும் அத்தகு சிறப்பு டையதே. அம்மலையில் அன்றிருந்த கொல்லிப்பாவை என்பது, சங்கப் புலவர் பலரால் சிறப் பித்துப் பாடப் பெற்றதாகும்.

அக்கொல்லிமலை நாட்டை, வல்வில் ஓரி என்பவன் ஆண்டுவந்தான். அவனும் சங்ககால வள்ளல்களில் ஒருவனே. அதியமான், காரி ஆகிய இருவருடனும் ஒருங்கெண்ணப் படுபவனே அவ்வல்வில் ஓரி. அவனும் ஒரு பெரு வீரனே. அவன் பெயரே அவனது வீரத்துக்குச் சான்று பகரும். ஓரி ஒருநாள் ஒரு யானைமேல் எய்த அம்பு, அந்த யானையைக் கொன்றதோடு, அங்கிருந்த ஒரு புலி, ஒரு மான், ஒரு காட்டுப்பன்றி, புற்றின் கண் இருந்த ஓர் உடும்பு ஆகிய இத்தனையையும் கொன்றதாம். அத்தகு வில்வீரன் அவன்; பெரும் படையும் உடையவன்.

ஓரி அதியமானுக்கு மிக்க நண்பன். அதியமானும் ஓரியும் உற்ற நண்பர்களாக இருந்து வந்தனர். அதியமானிடம் பகை பாராட்டி வந்த திருக்கோவலூர்க் காரி அதியமான் அஞ்சியின் உற்ற நண்பனும், தன் நாட்டின் அடுத்த நாட்டினனும் ஆகிய ஓரியிடமும் பகை பாராட்டி வந்தான். இதனை அறிந்த தனாலேயே தொண்டைமான் அவ்வாறு தகடூர் நாட்டைக் கைக் கொள்ள விரும்பினான். காரியைத்துணைக் கொண்டு அதியனை யும், ஓரியையும் வென்றால், காரிக்கு அவன் பக்கத்து நாடான கொல்லிமலை நாட்டைக் கொடுத்து விட்டு, தான் தகடூர் நாட்டை வைத்துக் கொள்ளலாம் என்பது தொண்டைமானின் எண்ணம். தொண்டைமானின் எண்ணத்தை ஒற்றரால் அறிந்த பெருவீர னாகிய அஞ்சி, எதிரியின் பெரும் படைகண்டஞ்சி நெஞ்சழிய வில்லை. போர் உண்டானால் நாட்டில் உண்டாகும் பேரழிவை எண்ணி நெஞ்சழிந்தான். எப்படியாவது போர் நேராவண்ணம் செய்ய எண்ணினான். அதற்காகத் தொண்டைமான்பால் ஒளவை யாரைத் தூது விட்டான்.

இதனால், பகைவேந்தர்பால் பெண்டிர் தூது செல்லும் வழக்கமும் பழந்தமிழரிடை உண்டென்பது பெறப்படுகின்றது.

பகையரசர்பால் தூது செல்வதென்பது அவ்வளவு எளிதான செயலொன்றன்று. பெருவீரர்களே அத்தொழில் செய்து வந்தனர். பாட்டுப் பாடுவதைத் தொழிலாகக் கொண்ட ஒளவையார் - ஒரு பெண் - அத்தொழிலுக்கு எங்ஙனம் தகுதி யுடையராவர் என்று எண்ணலாம். தன் ஒரே ஒரு மகனை வாள்கை கொடுத்து வாழ்த்திப் போர்க்கு அனுப்பிய மடமங்கையும், புறப்புண்பட்டு இறந்து கிடக்கிறான் உன் மகன் என்பது கேட்டு, ‘அங்ஙனம் செய்திருந்தால், அவன் பாலுண்ட மார்பை அறுத்தெறிவேன்’ என வாளுடன் போர்க்களம் நோக்கிச் சென்ற நரை மூதாட்டியும் ஆகிய மறக்குடி மகளிரின் வழிவந்தவ ரல்லரோ ஒளவையார்! ஒளவையாரின் புறநானூற்றுப் பாடல்களைப் பார்த்தால், அவர் எத்தகு வீரமுடையவர் என்பது விளங்கும்.

அதியமானின் தூதுவராக ஒளவையார் காஞ்சிமாநகர் சென்றார். தொண்டைமான் அவரை அன்புடன் வரவேற்றான். ஒளவையார் தான் எதற்காக வந்துள்ளேன் என்பதை எடுத் துரைத்தார். தொண்டைமான் ஒளவையாரை அழைத்துச் சென்று தன் படைக்கலக் கொட்டிலைக் காட்டினான்.

தொண்டைமானின் கருத்தை அறிந்த ஒளவையார், “இவை யெல்லாம் முனைமழுங்காது, நெய் பூசப்பட்டு, பீலியணிந்து படைக்கலக் கொட்டிலில் உள்ளன. ஆனால், அதியமானின் வாள், வேல் முதலிய படைக்கலங்களோ, பகைவரை வெட்டியும் குத்தியும் கங்கும் முனையும் போய்ப் பழுதுபார்ப்பதற்காகக் கொல்லன் உலைக்கூடத்தில் உள்ளன”என்று, அதியமானின் வீரத்தையும் பேராற்றலையும் புலப்படுத்தினார். தொண்டைமான் தான் எண்ணிய எண்ணத்தைக் கைவிட்டு, அதியமானிடம் நட்புறவு கொண்டான்.

எனினும், காரி அதியமானிடம் கொண்ட பகையை விட வில்லை. அவன், பெருஞ்சேரலிரும்பொறை என்னும் சேர மன்னனைத் தகடூர் நாட்டின் மேல் படையெடுக்கும்படி தூண்டினான். காரியின் படைத்துணையுடன் சேரன் தகடூர் நாட்டின் மேல் படையெடுத்தான். அதியமான் அச்சேரப் படையை எதிர்த்து வீரத்துடன் போர் புரிந்து மறப்புகழ் எய்தினான். அதியன் இறந்தது கண்ட ஒளவையார், அடங்காத் துயருடன் பாடி அழுதனர். அப்பாடல்கள் புறநானூறு என்னும் சங்க நூலில் உள்ளன. கருங்கல் போன்ற கடிய மனத்தையும் கரைந்துருகும்படி செய்யும் தன்மை வாய்ந்தவை அப்பாடல்கள். அப்பாடல்களால், ஒளவையார் அதியமான் நெடுமான் அஞ்சியின்பால் கொண்டிருந்த அன்பின் பெருக்குத் தெற்றென விளங்கும். ஒளவை மூதாட்டியாரின் அருளுள்ளத்தின் றெழுந்த அப்பாடல்களை நீங்கள் படித்துப் பாருங்கள். ஒளவையாரின் அளப்பருஞ் சிறப்பும், புறநானூற்றின் பெருமையும் இனிது விளங்கும்.

அதியமானுக்குப் பின்னர், அவன் மகன் பொகுட் டெழினி என்பான் தகடூர் மன்னன் ஆனான். அவனும் ஒளவையார்பால் பேரன்புடையவனாக இருந்து வந்தான். அப்பொகுட்டெழினி யையும் ஒளவையார் சிறப்பித்துப் பாடியுள்ளார். அதியர் மரபுக்கும் ஒளவையார்க்கும் உள்ள இடையறாத் தொடர்பினை என்னென்பது!

புள்ளின் புரவலன்


பேகன் என்னும் சங்ககாலத் தமிழ் வள்ளல், மழையால் நனைந்த ஒரு மயிலைக் கண்டு, அதற்குக் குளிரும் எனக் கொண்டு, தான் போர்த்திருந்த போர்வையை அம்மயிலுக்குப் போர்த்துப் பொன்றாப் புகழ் கொண்டான்.

பாரி என்னும் வள்ளல், பற்றிப் படரக் கொழுகொம்பு இல்லாது வருந்திய ஒரு முல்லைக் கொடியைக் கண்டு, இரக்கங் கொண்டு, தான் ஏறிச் சென்ற தேரை அக்கொடிக்குக் கொடுத்துக் குன்றாப் புகழ் கொணடான்.

ஆய் என்னும் வள்ளல், ஒரு நாட் காலை ஓர் ஆலமரத் தடியில் இருந்த ஒரு சிவக்குறியைக் (சிவலிங்கம்) கண்டு, அது பின்பனிக் காலமாதலால், அக்கற்சிலை பனியால் நடுங்கு மெனக் கொண்டு, தான் போர்த்திருந்த விலையுயர்ந்த அழகிய நீலப் பட்டாடையை அச்சிலைக்குப் போர்த்து அழியாப் புகழ் கொண்டான்.

முல்லையும் மயிலும் சிலையும், தேரும் போர்வையும் கேட்டனவா? இல்லை. பேகன், பாரி, ஆய் என்னும் மூவரும், கேளாமலே கொடுக்கும் கொடைமடம் பட்ட பழந்தமிழ்ச் செல்வர்களாவர். இன்னும் அப்பழங்காலத்தே - கடைசங்க காலத்தே - காரி, ஓரி, நள்ளி, அதியன், எவ்வி, பண்ணன், புல்லி, குமணன் முதலிய எத்தனையோ கொடை மடம் பட்ட தமிழ்ச் செல்வர்கள் இருந்தனர்.

இவர்கள் எல்லாரும், இல்லை யென்று இரப்போர்க்கு இல்லை என்று உரையாது கொடுத்து வந்த வள்ளல்களாவர். யானைக்கொடை, குதிரைக்கொடை, தேர்க்கொடை, ஊர்க் கொடை, உயிர்க்கொடை என, இவ் வள்ளல்கள் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு கொடையில் சிறந்து விளங்கினர். அன்று தமிழ் வளர்த்த பெருமை பெரும்பாலும் இவ்வள்ளல்களையே சாரும். இவ்வள்ளல்களைப் போலவே அக்காலத்தே, பறவை களுக்காகத் தன் உயிரையே கொடுத்த வள்ளலும் ஒருவன் இருந்தான். ஆய் எயினன் என்பது, அவன் பெயர்.

ஆய் எயினன் என்பான், வேளிர் மரபைச் சேர்ந்தவன். வேளிர் என்பவர், சேர சோழ பாண்டியர்களாகிய முடியுடை மூவேந்தரின் கீழும், தனித்தும் சிற்றரசர்களாக இருந்து, பழந் தமிழகத்தைச் சீருஞ்சிறப்புடன் ஆண்டு வந்ததோடு, வரையாது கொடுத்துத் தமிழ் வளர்த்து வள்ளல்களாகவும் விளங்கிய செல்வர் களாவர். பள்ளிமாணவர்களாகிய நீங்கள் எல்லாரும் - சேரரணி, சோழரணி, பாண்டியரணி, வேளிரணி என நான் கணிகளாகப் பிரிந்து, பள்ளிப் பொதுநலப்பணி புரிந்து வருகிறீர்களல்லவா? அவ்வணிகள் நான்கனுள், ‘வேளிர் அணி’ என்பது, பழந்தமிழ்க் குறுநில மன்னர்களாகிய அவ்வேளிரின் நினைவுக்குறியே யாகும்.

வீரம், கொடை, புகழ் என்னும் மூன்றையும் அணிகல னாகக் கொண்டவர் அவ்வேளிர்கள். அவ்வேளிர் மரபில் வந்த நம் ஆய் எயினன், வீரம் முதலிய அம் முப்பண்பினும் மேம்பட்டு விளங்கினான்.

இவன் தமிழ்மொழி யிடத்து அளவுகடந்த அன்புடையவன்; பாடும் தமிழ்ப் புலவர்களுக்கு யானைக்கொடை கொடுக்கும் அத்தகு பெருங்கொடை வள்ளல். ‘நள்ளிரவில் வந்து, ஆயின் அரண்மனை வாயிலில் நின்று, அவனது மலைவளத்தைப் பாடினால், பாடும் பாணர்க்கு, அந்நடு இரவிலும் பெரிய ஆண்யானைகளைக் கொடுக்கும் ஆய்எயினன்’ என்று, புலவர் களால் புகழ்ந்து பாடப்பெற்றவன். இவ்வாறு இரவுபகல் எந்நேரமும் வாரி வாரி வழங்கித் தமிழ் வளர்த்து வந்தான் நம் ஆய் எயினன். ஆயின் நாடு, புன்னாடு என்பது.

சேரநாடு, தெற்கிலிருந்து - வேணாடு, குட்டநாடு, பொறை நாடு, குடநாடு, கொண்கான நாடு என்னும் உள் நாடுகளையுடையதாயிருந்தது. கொண்கானத்தின் மேல் கடலோரப் பகுதி, துளுநாடு எனப்படும். கொண் கானத்தின் தென் கீழ்ப்பகுதி - புன்னாடு எனப்படும். இவ்விரண்டும் கொண்கானத்தின் உள்நாடு களாகும்.

வெளியம் என்பது, புன்னாட்டின் தலைநகர். அது சீரும் சிறப்பும் உடைய ஒரு செல்வ நகர். வெளியன் வேண்மான் என்பது, ஆயின் தந்தை பெயர். அதனால், ஆய் அவன் தந்தை பெயரோடு சேர்த்து, வெளியன் வேண்மான் ஆய் எயினன் என்று அழைக்கப்பட்டு வந்தான். வெளியன் வேள்- வெளியம் என்னும் ஊரையுடைய வேள்.

புன்னாடு சிறந்த மலைவளம் செறிந்த நாடு. அந்நாட்டிற் பல ஆறுகள் வளஞ் செய்தன. புன்னாட்டிற் பெரிய காடு ஒன்று இருந்தது. அந்நாட்டின் சிறப்புக்கு அக்காடே காரணம் எனலாம். அக்காட்டில் - சந்தனம், அகில், தேக்கு, ஈட்டி, கருங்காலி, மருது, வேங்கை, கோங்கு, மூங்கில் முதலிய பலவகை மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. மா, பலா, வாழை முதலிய பலவகைப் பழமரங் களும் நிறைந்திருந்தன. மல்லிகை, முல்லை, இருவாட்சி முதலிய பூங்கொடிகள் பூத்துப் பொலிந்தன. பல்வகையான செடிகொடி கள் அடர்ந்திருந்தன. காண்போர் கண்ணையும் கருத்தையும் ஒருங்குகவரும் அத்தகு அழகியது அக்காடு.

இயல்பாகவே அக்காட்டில் - மயில், குயில், கிளி, பூவை, காகம், கழுகு, பருந்து, மாடப்புறா, மணிப்புறா, தவிட்டுப்புறா, பச்சைப்புறா, செம்புறா, மரங்கொத்தி, வௌவால், ஆந்தை, கூகை, செம்போத்து, ஊர்க்குருவி, கரிக்குருவி, சிட்டுக்குருவி, தூக்கணங்குருவி, வக்கா, கொக்கு, நாரை, தாரா, ஆக்காட்டி, காடை, கவுதாரி, கான்கோழி, வான்கோழி, வானம்பாடி முதலிய வகைவகையான புள்ளினங்கள் ஏராளமாக வாழ்ந்து வந்தன. பறவை இனங்கள் அத்தனையும் அக்காட்டில் உண்டு எனலாம். இதனால்தான் அந்நாட்டுக்குப் புள்+நாடு - புண்ணாடு என்று பெயர் ஏற்பட்டு வழங்கி வந்து, பின்னர் அது புன்னாடு எனத் திரிந்ததோ என, எண்ணவும் இடம் ஏற்படுகிறது.

ஆய் அப்புட்களிடம் அளவு கடந்த அன்புடையவனாய் இருந்தான். அக்காட்டின் இடையே சென்ற ஆற்றில் நெடுகப் பல கால்வாய்கள் வெட்டினான். அங்கங்கே குளங்கள் வெட்டியும் ஏரிகள் கட்டியும் அக்கால்வாய்களில் நீரைத் தேக்கி நிறுத்தி னான். அப்பறவைகள் உண்டு வாழப் பல வகையான பழ மரம் செடி கொடிகளை வைத்து வளர்த்து வந்தான். அக்காட்டில் சென்று யாரும் அப்புட்களை வேட்டையாடா திருக்கும்படி கட்டளையிட்டான். அப்புட்களைப் பாதுகாத்து வரும்படி வீரர்களைக் காவல் வைத்தான்.

ஆய் அடிக்கடி அக்காட்டிற்குச் சென்று அப்புள்ளினங் களைக் கண்டு களிப்பான். அப்புட்கள் ஆயினிடம் அளவற்ற அன்புடையனவாய் இருந்து வந்தன. ஆய் அங்கு சென்றால் எல்லாப் பறவைகளும் வந்து அவனைச் சூழ்ந்து கொள்ளும்; வாலையும் தலையையும் ஆட்டி, எயினன்பால் தங்களுக்குள்ள அன்பைக் காட்டிக் கொள்ளும்; ஆடியும் பாடியும் அவனுக்கு இன்பூட்டும். எந்தப் பறவையும் அவனைக் கண்டு அஞ்சாமல் அருகில் வரும். ஆய் அப்பறவைகளை அன்புடன் தடவிக் கொடுத்து மகிழ்வான்; அவற்றை மகிழ்விப்பான்.

‘ஓருயிரையும் கொல்லாமலும், புலால் உண்ணாமலும் இருப்பவனை எல்லா உயிரும் கைகூப்பித் தொழும்’ என்கிறார் வள்ளுவர். அதாவது, உயிர்களிடத்து அருளுள்ளம் கொண்ட வனிடத்து, இரக்கம் உள்ளவனிடத்து அவ்வுயிர்கள் அன்பு கொள்ளும்; அவனைக் கண்டு அச்சம் கொள்ளா என்பதாம். நாம் வளர்த்து வருகின்ற புறா முதலிய பறவைகள் நம்மைக்கண்டு அஞ்சுவ தில்லையல்லவா?

" கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்."

என்பதே அக்குறள். வள்ளுவர் குறளுக்கு ஆய் எடுத்துக் காட்டாக விளங்கினான்.

அப்பறவைகளுக்குக் குறைவற்ற உணவையும் நீரையும் ஆய் அங்கே உண்டாக்கி வைத்துள்ளமையால், அப் பறவைகள் அக்காட்டை விட்டு வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே நிலையாக இருந்து வாழ்ந்து வந்தன. ஆனால், புதிய புட்கள் அங்கு அடிக்கடி வந்து தங்கிப் போகும். அப் புதுப் புட்களும் ஆயைக் கண்டு அஞ்சாமல் அருகில் வரும். ஆய் விருந்தினர் களை வரவேற்பது போல அப் புதுப்புட்களை வரவேற்றுத் தடவிக் கொடுப்பான். என்னே ஆயின் அன்பும் அருளும்!

" புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும்பெயர்
வெள்ளத் தானை எயினன்."

என்கின்றார், பரணர் என்னும் பழந்தமிழ்ப் புலவர். ஏமம் - பாதுகாப்பு. பெயர் - புகழ்.

அந் நாட்டில் எப்போதும் புட்கள் மிகுதியாக வாழ்ந்து வந்ததால், அந் நாட்டிற்கு, புண்ணாடு என்று பெயர் ஏற்பட் டிருக்கலாம் என்பதை முன்பு கண்டோம். ஆய் எயினனால் அந் நாடு விளக்க முற்றது. அந் நாட்டின் புகழ், ஆயின் புகழோடு தமிழக மெங்கும் பரவியது. இதனால் ஆயை, ‘புள்ளின் புரவலன்’ என்று, புலவர்கள் புகழ்ந்து பாடினர்.

புன்னாட்டின் அண்டை நாடான துளுநாட்டை, நன்னன் என்னும் வேளிர் குடியினன் ஆண்டு வந்தான். அவனும் வீரம் கொடை புகழ் என்னும் மூன்றும் ஒருங்கு அமையப் பெற்றவனே. புன்னாட்டில் வாழும் புட்களின் பெருக்கத்தைக் கேள்வியுற்ற நன்னன், அப்புட்களை வேட்டையாடி வரும்படி வீரர் சிலரை அனுப்பினான்.

அவ் வீரர்கள், புட்கள் வாழும் அக் காட்டை அடைந்து, ஆய் தன் உயிர்போல விரும்பிப் பாதுகாத்து வளர்த்து வரும் அப்பறவைகளை வேட்டையாடினர். அக் காட்டைக் காத்து வரும் காவலர் கண்டு, அப்பறவைகளை வேட்டையாடக் கூடாதென அவ் வீரர்களை விரட்டி யடித்தனர்.

இது, புறத்திணை ஏழனுள் ஒன்றும், போர்த்தொடக்கமும் ஆன, நிரை கவர்தலும் நிரை மீட்டலும் ஆகிய வெட்சித் திணை போன்றதாகும்.

அவ் வீரர்கள் போய் நன்னனிடம் கூறினர். நன்னன் சினங் கொண்டான் “அப்படியா! ஆயின் ஆட்கள் நன்னன் ஆட்களை அடித்துத் துரத்தினர். அவர்கள் அஞ்சி ஓடி வந்தனர். சோம்பேறி காள்! போய்ப் படுத்துத் தூங்குங்கள்”என்று கடிந்து கூறி அவர்களை அனுப்பி விட்டு, அங்கிருந்த ஒரு படைத் தலைவனிடம், “நீ சில வீரருடன் சென்று அப்புட்களை வேட்டையாடு. அக் காவலர் தடுத்தால் அடித்துத் துரத்தி விட்டு, வேண்டிய மட்டும் அப்புட்களை வேட்டையாடிக் கொண்டுவா”என்று கூறி யனுப்பினான். அவன் அவ்வாறே சில வீரர்களுடன் புறப் பட்டான்.

அவ்வீரர்கள் அக்காட்டையடைந்து, பறவைகளை வேட்டை யாடினர். காவலர் வந்து தடுக்கவே, அவர்களை அடித்துத் துரத்திவிட்டு, கண்டபடி பறவைகளைக் கொன்றனர். பறவைகள் அஞ்சியலறின. சில பறவைகள் சென்று, ஆயின் அரண்மனை மேல் வட்ட மிட்டன. அவற்றைக் கண்ட ஆய், “இவை ஏன் இவ்வாறு வந்து வட்டமிடுகின்றன?”என்று, எண்ணிக் கொண் டிருக்கையில், காவலாட்கள் ஓடிப்போய் நடந்ததைக் கூறினர்.

உடனே ஆய், சில வீரர்களுடன் சென்று, அத் துளு நாட்டு, வீரரை விரட்டி யடித்துவிட்டு, “அன்பிற்குரிய என் ஆருயிர்ப் புள்ளினங்காள்! அஞ்சாதீர்கள். பகைவர் படையெடுத்து வரினும் என் உயிரைக் கொடுத்து உங்களைக் காப்பாற்றுகிறேன்”என, அப்புள்ளினங்கட்கு ஆறுதல் கூறிச் சென்று, பகைவர்கள் அக் காட்டை அணுகாமல் பார்த்துக் கொள்ளும்படி வீரர்களைக் காவல் வைத்தான்.

படைத்தலைவன் சென்று, நன்னனிடம் கூறினான். நன்னன் கடுஞ்சினங் கொண்டான், “அவ்வளவு ஆளாகி விட்டானா அவன்? அந்தக் காட்டையே அடியோடு அழித்து விடுகிறேன். அந்த ஆய் எயினனையும் ஒழித்து விடுகிறேன்”என்று கூறி, பெரும் படைத்தலைவனான மிஞிலி என்பானைப் புன்னாட்டின் மீது படையெடுக்கும்படி கட்டளையிட்டான். மிஞிலி அவ்வாறே செய்தான். துளுநாட்டுப் படை, புன்னாட்டை நோக்கி வந்தது.

நன்னன்படை தன் நாட்டை நோக்கி வருதலை ஒற்றர் மூலம் அறிந்தான் ஆய். நன்னன் படையை நாட்டுக்குள் விட்டால், அது புட்கள் வாழும் காட்டை அழித்துவிடும். இப் படை யெடுப்பின் நோக்கமும் அது தானே? அதனால், நன்னன் படையைத் தன்னாட்டுக்குள் விடாமல் வழியிலேயே எதிர்க்க முடிவு செய்தான் ஆய்; படை திரட்டும் படி படைத்தலைவ னுக்குக் கட்டளை யிட்டான். போர்ப் பறை முழங்கிற்று. புன்னாட்டு மறவர்கள் வீறுகொண் டெழுந்தனர். புன்னாட்டுப் படை துளுநாட்டுப் படையை எதிர்க்கப் புறப்பட்டது. நன்னன் படையும் எயினன் படையும் எதிர்ப்பட்டுக் கைகலந்தன. போர் கடுமையாக நடந்தது.

நன்னன் படைத்தலைவனான மிஞிலி, புட்கள் வாழும் அக் காட்டினை அணுக முயன்றான். அது தானே ஆயின் உயிர்! அதை அணுக அவன் விடுவானா? மிஞிலி படையை அங்கு விடாமல் எதிர்த்துப் பெரு வீரத்தோடு பொருதான் ஆய்.

புன்னாட்டுப் படை புறப்பட்ட போதே உடன் புறப்பட்டு, அந்நாட்டுக் கொடிகள் போலப் பறந்து சென்ற புட்கள், போர் நடப்பதைக் கவனித்துக் கொண்டு மேலே பறந்துகொண்டிருந்தன. அக் காடு வாழ் புட்கள், அப் போர் நிகழ்ச்சியைக் காண வருவதும் போவது மாக இருந்தன. அது முது வேனிற் காலம். வெயிலின் கொடுமை பொறுக்க முடியாததாயிருந்தது. நட்ட நடுப்பகல். ஆய் வீரமே உரு வெடுத்தாற் போல் பகைவரைத் தாக்கினான். ஆய்க்கும் மிஞிலிக்கும் வாட்போர் நடந்தது. அடுத்து வேற்போர். பகல் பன்னிரண்டு மணியிருக்கும். புள்ளின் புரவலனாகிய ஆய் எயினன் மார்பில், மிஞிலி எறிந்த வேல் ஒன்று பாய்ந்தது. அந்தோ! அப்புட்களை ஏங்க விட்டுவிட்டு அருளே உருவான ஆய் மண்மேல் சாய்ந்தான்.

ஆய் இறந்ததை அறிந்த அக்காட்டிலுள்ள பறவைகளெல்லாம் போர்க்களத்துக்குப் பறந்தோடி வந்தன. அவை ஒன்றாகத் திரண்டு பறந்து, வெயிலவன் வெயில் எயினன் உடலின்மேல் படாமல் நிழல் செய்தன. அவை பந்தற் போட்டாற் போல் வட்டமாகச் சுற்றிப் பறந்து கொண்டே இருந்தன. வெளியிடங் களிலிருந்து அன்று அங்கு வந்த புட்களும் அப் பழம்புட்களோடு கூடிப் பறந்து ஆய்க்கு நிழல் செய்தன.

பறவைகளின் அவ்வன்புச் செயலைக் கண்ட பகை வீரர்கள் மதி மருண்டு நின்றனர். புள்ளின் புரவலன் உயிரைக் குடித்த மிஞிலி, நாணத்தால் தலை குனிந்து நின்றான். ஆயின் உடலின் மேல் பகலவன் வெயில் படாமல் பறவைகள் ஒன்றுகூடி வட்ட மிட்டுப் பறந்து நிழல் செய்வதைக் கண்ட நன்னன், போர்க் களத்துக்கு வந்து, தனக்கு வெற்றி தேடித்தந்த மிஞிலியைப் பாராட்டாது, தனது வெற்றியை மறந்து வெட்கத்தால் மனங் கலங்கி நின்றான். பறவைகள் பந்தற் போட்டாற்போல் அப்படியே பறந்து கொண்டே இருந்தன. ‘அன்புக்கும் உண்டோ அடைக்குந் தாழ்!’ என்பது, எவ்வளவு பொருள் பொதிந்த பொன் மொழி!

ஆய் இறந்தது கேட்ட அவன் மனைவி, தலைவிரி கோல மாய் அழுது கொண்டு போர்க்களத்தை நோக்கி ஓடி வந்தாள். வேளிர் மகளிர் அவளைப் பின்தொடர்ந்து ஓடி வந்தனர். ஆயின் மனைவி கணவன் இறந்து கிடப்பதைக் கண்டதும், ஓ வென்று கதறி அழுதுகொண் டோடிப் போய்க் கணவன் உடம்பின்மேல் விழுந்து புலம்பினாள். அவ்வேளிர் மகளிர் அவளைச் சூழ்ந்து அழுது புலம்பினர். அப் புள்ளினங்கள், அழுது புலம்புகின்ற அவர்கட்கும் நிழல் செய்தன. அப்புட் களின் அன்பின் பெருக்கு இருந்தவாறுதான் என்னே! இதைத் தான் வள்ளுவர், ‘கை கூப்பித் தொழும்’ என்றார் போலும்!

ஆய் எயினன் முன், ‘அஞ்சாதீர்கள்! என் உயிரைக் கொடுத்து உங்களைக் காப்பாற்றுகின்றேன்’ என்று சொன்ன சொல் பொய்க் காமல் தன் உயிரைக் கொடுத்து அப் பறவைகளைக் காப்பாற்றி னான். அத்துடன் போர் முடிந்தது.

வீரர்கள் ஆயின் உடலை எடுத்துச் சென்று முறைப்படி அடக்கம் செய்தனர். ஆயின் உடலை எடுத்துச் செல்லும் போதும் அப் பறவைகள் நிழல் செய்து கொண்டே பறந்து சென்றன. இனி யாரோ அப்புட்களின் புரவலர்!

உணர்ச்சி ஒன்றல்


தமிழகத்தில் ஆட்சி முறை என்று ஏற்பட்டதோ அன்று தொட்டுத் தமிழகம் சேர சோழ பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர்களால் ஆளப்பட்டு வந்தது. அதனால், பழந்தமிழகம் சேரநாடு, சோழநாடு, பாண்டிநாடு என முப்பெரும் பிரிவுகளாகப் பிரிந்திருந்தது என்பதை முன்பு கண்டோம். இன்றைய மலையாள நாடே பழந்தமிழ்ச் சேரநாடு என்பதையும் அறிந்தோம். மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங் கள் பாண்டி நாடு ஆகும். திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் சோழநாடு ஆகும். அதாவது, சிதம் பரத்திற்கு வடக்கேயுள்ள வட வெள்ளாற்றுக்கும், புதுக்கோட்டைக்குப் பக்கத்தில் உள்ள தென் வெள்ளாற்றுக்கும் இடைப்பட்டது சோழநாடு ஆகும்.

உறையூரும் புகாரும் சோழ நாட்டின் இருபெருந்தலை நகர்கள் ஆகும். உறையூர் உள் நாட்டு நகர். புகார் கடற்கரைப் பட்டினம். சோழ மன்னர்கள் இவ்விரு தலைநகரங்ளிலும் இருந்து சோழ நாட்டை இனிது ஆண்டு வந்தனர். உறையூரிலிருந் தாண்டவர் உறையூர்ச் சோழர் எனவும், புகாரிலிருந் தாண்டவர் புகார்ச் சோழர் எனவும் பெயர் பெறுவர்.

உறையூர் தமிழ்நாட்டுப் பழம்பெரு மூதூர்களில் ஒன்று. ‘ஊரெனப்படுவது உறையூர்’ என்னும் சிறப்பினையுடையது உறையூர். இது உறந்தை எனவும் வழங்கும். ‘ஊருக்கு உறந்தை நிகர் கொற்கையோ’ என்றார் ஒட்டக்கூத்தர். உறையூர் காவிரிக் கரையில் அமைந்த வளம் பொருந்திய பேரூர். இன்று திருச்சிராப் பள்ளியின் ஒரு பகுதியாக உள்ள உறையூர் என்பதே, சோழர் தலைநகராகிய அப்பழைய உறையூர் ஆகும்.

கோப்பெருஞ் சோழன் என்னும் சோழ மன்னன் உறையூரி லிருந்து சோழ நாட்டை ஆண்டு வந்தான். இவன் ஒரு சீரிய செங்கோல் வேந்தன். இவன் நேர்மையின் இருப்பிடம்; சீர்மையின் பிறப்பிடம்; தன் முன்னோர் புகழையெல்லாம் தன்புகழாக்கிக் கொண்ட தகைமிகு பெரியோன்.

இவன் அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் என்னும் இறைமைக் குணங்கள் நான்கும் எஞ்சாமல் உடையவன். சோம்பல் என்னும் கொடியோன் இவனிடம் அணுக அஞ்சு வான்; ஆண்மையே இவனது அணிகலன்; அறநெறியின் கண்ணே செல்வான்; அல்லாத நெறியில் ஒருபோதும் செல்லான். இவன் காட்சிக்கு எளியன்; நாட்டு மக்கள் எவரும் இவனை நேரில் கண்டு பேசலாம். இவன் வாய் ஒருபோதும் கடுஞ்சொல்லைக் கண்டறியாது; யாரிடமும் அது இனிமையாகவே பேசும், தமிழ் பேசிப் பழகியதல்லவா அவ்வாய்? இவன் பிறர் சொல்லும் எத்தகைய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்வான்; பொறையே உருவானவன் நம் சோழர் பெருந்தகை!

மக்களின் காவலனாகிய இவ்வளவன், பொருள் வரும் வழிகளைக் கண்டறிந்து பெரும்பொருளீட்டி, ஈட்டிய பொருளை இனிது காத்து, அதனை நாட்டு மக்களின் நலத்திற்குச் செலவிட்டு வந்தான்; குடி மக்களின் குறை கேட்டு முறை செய்து அவர்களைக் காப்பதையே இவன் தன் கடமையாகக் கொண்டிருந்தான்; மானமே உருவானவன். வள்ளுவர் இறைமாட்சி என்னும் அதிகாரத்தில் கூறும் அரச இலக்கணத்திற்கு இவன் அப்படியே இலக்கியமாக விளங்கினான்.

கோப்பெருஞ் சோழன் சிறந்த கல்வியறிவுடையவன்; கற்கவேண்டியவெல்லாம் கசடறக் கற்றுத் தெளிந்தவன்; தமிழ் முழுவதும் அறிந்தவன்; சிறந்த செய்யுளியற்றும் திறமுடையவன். இவன் புலவனாகவும் புரவலனாகவும் விளங்கினான். இவன் இயற்றிய செய்யுட்கள் குறுந்தொகையில் நான்கும், புறநானூற்றில் மூன்றும் உள்ளன. ‘கற்பவை கசடறக் கற்க கற்றபின் அதற்குத் தக நிற்க’ என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கு இவன் எடுத்துக் காட்டாக இலங்கினான். இவனை நற்குணக்குன்றம் எனல் மிகப் பொருத்த முடையதாகும். இத்தகைய குண நலச் சிறப்பினால், புலவர் பெருமக்கள் இவனிடம் பரிசுபெற விரும்புவதைவிட, இவனது நட்பைப் பெற விரும்பி அவ்வாறே பெற்று அளவளாவினர். இப்பெருங்கிள்ளி, தமிழ்வாழ, தமிழ் புலவர் வாழ ,தமிழ் மக்கள் வாழத் தான் வாழ்ந்து வந்தான்.

இவன் காலத்தே பாண்டிநாட்டில் ஆந்தையார் என்ற புலவர் ஒருவர் இருந்தார். அவர் பிசிர் என்னும் ஊரினர். ஆதலால், பிசிராந்தையார் என்று அழைக்கப் பட்டு வந்தார். பிசிராந்தையார் பெரும்புலவர்; ஒழுக்கமே உருவானவர்; முதுமையை வென்றார்; முதுமையில் இளமை கண்ட மூதறிவாளர்; கவலை என்பதைக் கனவிலும் அறியாதவர்.

“என் மனைவியும் மக்களும் மிகவும் நல்லவர்கள்; அவர்கள் என் மனம்போல நடந்து கொள்கின்றனர்; அவ்வளவு பொறுப்பும் கடமை யுணர்ச்சியும் உள்ளவர்கள் அவர்கள். எங்கள் ஊரில், ஊர் மக்களை நன்னெறிக்கண் நடத்திச் செல்லும் சான்றோர் பலர் வாழ்கின்றார்கள்; எங்கள் நாட்டு மன்னன் குடிமக்களுக்குத் தீமை ஒன்றுஞ் செய்யாது நன்மை பலவும் செய்து காத்து வருகின்றான். ஆகையால், நான் கவலை யில்லாமல் வாழ்ந்து வருகின்றேன்; அதனால், எனக்கு ஆண்டு பல ஆகியும் மயிர் நரைக்க வில்லை”(புறம்-191) என, வீடும் ஊரும் நாடும் எவ்வாறு இருக்க வேண்டும். எவ்வாறு இருந்தால் கவலை உண்டாகாது. கவலையில்லாமல் இருந்தால் நெடுநாள் இளமை நலத்துடன் வாழலாம்; கவலையே விரைவில் முதுமை அடைவதற்குக் காரணம் என்னும் உண்மை யைக் கண்டறிந்து கூறி, மக்களை வாழ்வித்த பெரியாராவர் இவர்.

புலவர் வாயிலாய், கோப்பெருஞ்சோழன் பிசிராந்தை யாரின் குணநலங்களைப் பற்றியும் பிசிராந்தையார், கோப் பெருஞ்சோழனின் குணநலங்களைப் பற்றியும் கேள்வி யுற்றனர். இருவர் குணநலன்களும் ஒத்திருந்தமையால், இருவரும் ஒருவரை யொருவர் நேரில் காணாமலே, நேரில் கண்டு பழகாமலே நட்புக்கொண்டனர். அவர்கள் இருவரும் ஒருமுறைகூட நேரிற் கண்டு பழகாவிட்டாலும் நெடுநாட் பழகின வரைவிட ஒருவரை யொருவர் விரும்பி வந்தனர். பிசிராந்தையார் தம்மைக் கோப் பெருஞ்சோழன் என்றும், கோப்பெருஞ் சோழன் தன்னைப் பிசிராந்தையார் என்றும் பெயர் மாற்றிக் கூறிக்கொள்ளும் அளவு அவர்தம் நட்பு வளரலாயிற்று, ‘தன் பெயர் கிளக்குங் காலை என்பெயர் பேதைச் சோழன் என்னும்’ (புறம்-216) என்று கூறிக் கொள்கிறான் கோப்பெருஞ்சோழன்.

பிசிராந்தையார் எப்போதும் சோழனுடைய நினை வாகவே இருப்பார்; அவனை நேரில் காண வேண்டும் என்ற ஆவலினால் தூண்டப் பெற்றவராய் எப்போதும் சோழன் சோழன் என்ற பேச்சாகவே இருப்பார்; மனைவி மக்கள் எல்லாரையும் சோழனை நண்பனாகக் கொள்ளும்படி செய்து விட்டார். அவர்களும் அவனைத் தங்கள் நண்பருள் ஒருவனாகவே கொண்டு வாழ்ந்து வந்தனர். அத்தகைய குடும்பந்தானே அவர் குடும்பம்!

ஒருநாள் மாலை பிசிராந்தையார் வெளியில் உலாவிக் கொண்டிருந்தார்; வடக்கு நோக்கிப் பறந்து செல்லும் ஓர் அன்னத்தைக் கண்டார்; அதைச் சோழன் பால் தூதுவிட எண்ணினார்; சோழன்பால் கொண்ட நட்பு அவரை அவ்வாறு எண்ணச் செய்தது. அவர் அவ் வன்னத்தைப் பார்த்து, “அன்னச் சேவலே! அன்னச்சேவலே! நீ குமரியாற்றங் கரையிலே அயிரை மீன்களைத் தின்று, வடதிசையில் உள்ள இமயமலைக்குப் போவா யாயின், செல்லும் வழியில் சோழ நாடு உள்ளது. அதன் தலைநகர் உறையூர். அவ் வுறையூரின் உயர்ந்த மாடத்தின் மேல் உன்பெடை யோடு தங்கி, வாயிலோனுக்கு அறிவியாமல் அரண்மனைக்குட் சென்று, எமது நண்பனாகிய கோப்பெருஞ் சோழனைக் கண்டு, ‘நான் பிசிர் என்னும் ஊரில் உள்ள ஆந்தையின் அடிக் கீழ் வாழ்வேன்’ என்று சொல்லுக. அது கேட்ட அவன் பெரிதும் மகிழ்ந்து நின் பெடை அணிந்து கொள்ளத்தக்க சிறந்த அணிகலம் தருவான்”(புறம்-67) என்றார். என்னே ஆந்தையாரின் நட்பின் திறம்!

இவ்வாறு நேரில் கண்டு பழகாது கொள்ளும் நட்பை, வள்ளுவர் ‘உணர்ச்சி’, என்கின்றார். அதாவது உள்ளத்து உணர்ச்சி யால் ஒருவரையொருவர் நட்புக்கொள்ளுதல். இது உணர்ச்சி ஒன்றுதல் எனப்படும். புணர்ச்சி, பழகுதல், உணர்ச்சி என நட்பின் காரணம் மூவகைப்படும். ஓரிடத்தில் பிறந்தவர் நண்பரா யிருத்தல் - புணர்ச்சி எனப்படும். அடிக்கடி பழகுவோர் நட்புக் கொள்ளுதல் - பழகுதல் எனப்படும். இவ்விரண்டினும் உணர்ச்சி யொத்தலே சிறந்த நட்பு என்பது வள்ளுவர் கொள்கை.

" புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்."

என்பது அக்குறள். இக்குறளுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கு பவர் கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் ஆவர். இவர்கட்காகத்தான் வள்ளுவர் இக்குறள் செய்தார் போலும்!

கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் இங்ஙனம் பழகா நட்பினராய் ஒருவரையொருவர் உளக்கோயிலின்கண் வைத்து அளவளாவி வந்தனர். அவர்கள் நட்பு, வளர்பிறை போல் நாளொரு வண்ணமாய் வளர்ந்து வருகையில், அந் நட்பின் முடிந்த முடிவை அறியும் காலம் ஒன்று வந்தது.

பயிர் விளையும் நல்ல நிலத்தில் ‘மிளகாய்ப் பூடு’ என்னும் நச்சுப்பூடு முளைப்பது போல, நற்குண நற்செயல் களுக்கு இருப்பிடமான கோப்பெருஞ்சோழனுக்கு, மக்கட் பண் பாட்டுக்கு முற்றிலும் மாறுபட்ட குணமுடைய மைந்தர் இருவர் பிறந்தனர். அவர்கள் வளர வளரத் தீய குணங்களும் உடன் வளர்ந்தன. தமிழினத்தின் பெருமையைக் கெடுக்கப் பிறந்த அப்பதர்கள் தாய்மொழிப் பற்றுச் சிறிதும் இல்லாதவர்; தந்தை தமிழ்ப் புலவர்களோடு அளவளாவுதலை வீண்பொழுது போக்கெனக் கருதினர்; அவர் தமிழ்ப் புலவர்க்குக் கொடுப்பதை வீண் செலவு என்று எண்ணினர். அதனால், அப்பாளைகள் தந்தையைக் கொன்று அரசைக் கைப்பற்றுவதென முடிவு செய்தனர்; அதற்காகப் பெரும் படையையும் திரட்டினர்.

மைந்தர்களின் அறிவின்மையை அறிந்து சோழன் மனம் வருந்தினான்; அக்கீழ்மக்களின் இழிதகவை எண்ணி யெண்ணி மனம் புண்ணானான்; தமிழினத்தின் தனிப் பெருமைக்குத் தீராத இழிவையுண்டாக்கத் துணிந்த அத்தறுதலைகளின் இழி செயலை உன்னியுன்னி உள்ளம் உருகினான்; முடிவில், தாய்மொழிப் பற்றுச் சிறிதும் இல்லாத அக்கயவர்களிடம் தமிழ் மக்களை ஒப்படைப்பதை விட, அப்பதடிகளை ஒழித்து விடுவதே மேல் எனப் போர்க்கோலம் பூண்டான் கோப்பெருஞ் சோழன்.

இதனை எயிற்றியனார் என்னும் புலவர் அறிந்தார். அவர் சோழனை அணுகி, “வெற்றிப்புகழ் மிக்க கொற்ற வேந்தே! உன்னோடு போர் செய்ய வந்திருப்பவர் நின் பகைவ ரல்லர்; நீ அவர்கட்குப் பகைவனும் அல்லை; நீ இவ்வுலக வாழ்வை நீப்பாயானால் இவ்வரசாட்சி அவர்களுக்கே உரியதாகும். பின் இவ்வரசாட்சியை நீ யாருக்குக் கொடுப்பாய்? மைந்தருடன் போரிட்டு வென்றான் என்னும் வசை நிற்குமேயன்றி வேறில்லை; வெற்றிதோல்வி ஒருவர் பால் இல்லை, ஒரு வேளை நீயே தோற்பாயாயின் நின் பகைவர் மகிழ்வர்; எப்படிப் பார்க்கினும் இப்போர் நிறுத்தப்பட வேண்டியதேயாகும்”(புறம்-213) என்று, உண்மையை எடுத்தியம்பினார்.

புலவரின் பொருளுரையைக் கேட்ட சோழன் போர்க் கோலத்தைக் களைந்தான்; ஆட்சியை மைந்தரிடம் ஒப்பு வித்தான்; தன் மக்கள் தன்மேற் பகைகொண்டபின், தன்னைக் கொல்லத் துணிந்தபின் அவன் உயிர்வாழ விரும்பவில்லை. மயிர் நீப்பின் வாழாக் கவரிமா வன்ன மானமுடைய அவன் உயிர்விடத் துணிந்தான்.

அக்காலத்தே ஏதாவது பற்றி உயிர்விடத் துணிந்தவர் உண்ணாநோன்பிருந்து உயிர் விடுவது வழக்கம். இது வடக் கிருத்தல் எனப்படும். ஆற்றிடைக்குறை போன்றதொரு தூய இடத்தில் வடக்குமுகமாக இருந்து நோற்கப் படுதலின் இது இப்பெயர் பெற்றது. கோப்பெருஞ்சோழனும் அவ்வாறே காவிரி யாற்றின் நடுவில் உள்ள ஒரு மணல் மேட்டில் அமர்ந்து உண்ணா நோன்பைத் தொடங்கினான். பொத்தியார் முதலிய சான் றோரும் பிறரும் அவனைப் பிரிய மனமில்லாது அவனைச் சூழ அமர்ந்தனர்.

அரசன் அவர்களை நோக்கி, “என் ஆரூயிர் நண்பர் பிசிராந்தையார் வருவார்; அவருக்கு என் அருகில் இடம் விட்டு ஒதுங்கியிருங்கள்”என்றான். அது கேட்ட சான்றோர், “அரசே! பிசிராந்தையார் உனது பெயரைக் கேட்டதன்றி நின்னை நேரில் பார்த்தவரல்லர்; நீயும் அவர் பெயரைக் கேட்ட தன்றி அவரை நேரில் பாத்ததில்லை; மேலும் அவர் நெடுந்தொலைவில் உள்ளார். நீ வடக்கிருக்கும் செய்தியை அவர் எங்ஙனம் அறிவர்?”என்றனர்.

“இல்லை, நீங்கள் நினைப்பது தவறு; அவரும் நானும் உயிரொன்றிய நண்பர்கள்; அவர் நான் அல்லலுறுங் காலத்து நிற்கமாட்டார்; நான் வடக்கிருத்தலை அறிந்தும் வாராதிரார்; இப்பொழுதே வந்துவிடுவார்; அவருக்கு இடம் ஒதுக்குங்கள்”என்றான் சோழன். அவ்வாறே இடம் விட்டிருந்தனர்.

உணவுண்ணாமையால் சோழனது உடல் தளரத் தளரப் பிசிராந்தையாரின் மனம் ஒரு வகைக் கலக்கமுடைய தாயிற்று. ஒரே கவலை; வேறொன்றிலும் மனம் செல்ல வில்லை; பசியும் இல்லை. புலவரின் ஒத்த மனவுணர்ச்சி அங்ஙனம் செய்தது.

" என் நண்பன் கோப்பெருஞ் சோழனுக்கு என்னவோ இடுக்கண் நேரிட்டுள்ளது; அவன் என்னையே நினைத்துக் கொண்டிருக்கிறான்; அதனால் உண்டானதே இம் மனக் கலக்கம்; நான் போய்ப்பார்த்து வரவேண்டும்"என்று மனைவி மக்களிடம் விடை பெற்றுக் கொண்டு சோழ நாட்டை நோக்கி நடந்தார் புலவர். அவர் சில நாளில் உறையூரை அடைந்தார். ‘இன்னே வருகுவன்; ஒதுக்குக அவர்க்கு இடம்’ என்று சோழன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிசிராந்தையார் அங்கு வந்தார். ஆந்தையாரும் சோழனும் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டனர். அப்போது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எதை உவமை சொல்வது?

ஆந்தையாரைத் தழுவிய அரசன், கண்ணீர் சோர, குழைந்த அன்போடு அவரை நோக்கி, “புலவர் பெருமானே! தங்களை நேரில் காணும் பேறு பெற்றிலேன் எனினும், புலவர் வாயிலாகத் தங்களுடைய குணநலன்களைக் கேள்வியுற்றுத் தங்களை நேரில் கண்டு அளவளாவ ஆவல் கொண்டிருந்தேன்; நான் அரியணையில் அமர்ந்திருந்தபோது நீர் வந்திலீர்; வடக்கிருக்கும் இக்காலத்தே வந்தீர். இஃதொன்றே தங்களது நட்பின் சிறப்பை விளங்கச் செய்கிறது”என்று தன் உள்ளத் துணர்ச்சியை வெளிப்படுத் தினான். சோழனது நட்புரிமைச் சொல்லைக் கேட்ட ஆந்தையார் இன்பக் கடலில் திளைத்தார்; அவனது அரும்பெருங் குணத்தை எண்ணியெண்ணிக் கண்ணீர் வடித்தார்.

எதிர்பாரா அந் நிகழ்ச்சியைக் கண்ட பொத்தியார் வியப் புற்றார்; ‘எங்கள் அரசன் அரசைத் துறந்து வடக்கிருக்கத் துணிந்ததை நினைக்க நினைக்க வியப்பைத் தருகிறது. ஆனால், வேற்று நாட்டினராகிய புலவர் பெருமான், நட்பையே துணை யாக் கொண்டு இத்தகைய துன்பக் காலத்தில் இங்கு வந்தது அதைவிட வியப்பைத் தருவதாகும். ’ஆந்தையார் இப்பொழுதே இங்கு வருவார்’ என்று துணிந்து சொல்லிய மன்னனது ஒப்பற்ற மனவுணர்ச்சியும், இவனது சொல் பழுது படாமல் வந்த சான் றோனது அத்தகு மனவுணர்ச்சியும் நினைக்க நினைக்க உண்டாகும் வியப்பு எல்லையின்றிச் செல்கிறது. தன்னாட்டில் வாழும் சான்றோர் உள்ளத்தையே யன்றி, வேற்று நாட்டில் வாழும் இவர் உள்ளத்தையும் தன்பால் ஈர்த்த இப்பேரரசனை இழந்த நாடு இனி என்ன துன்பத்தை அடையுமோ! அதுதான் இரங்கத் தக்கதாகும்’ (புறம்217)என, மனமுருகிப் பாடினார். மற்றப் புலவர்களும் அவ்விருவர் தம்நட்புரிமைச் சிறப்பினை வியந்து பாராட்டினர்.

உணர்ச்சி யொன்றுபட்ட கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் வடக்கிருந்து ஒருங்கு உயிர் விட்டு, நட்பின் பெருமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வாராயினர். ‘கோப் பெருஞ் சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் போல உணர்ச்சி யொப்பின், அது உடனுயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கும்’ என்பது பரிமேலழகரின் பயனுரை.

புணர்ச்சி, பழகுதல், உணர்ச்சி என்னும் மூன்றும் நட்பிற்குக் காரணம் என்கிறார் வள்ளுவர். ஓரூரினர் கொள்ளும் நட்புக்குக் காரணம், புணர்ச்சி எனப்படும். அடிக்கடி கண்டும் பேசியும் கொள்ளும் நட்புக்குக் காரணம், பழகுதல் எனப்படும். ஆனால், இருவர் உற்ற நண்பர்கள் ஆதற்குக் காரணம், ஒத்த உணர்ச்சி, அல்லது உணர்ச்சி ஒன்றுதலே, சிறப்புடை தாகும் என்கின்றார் வள்ளுவர். அவ்வாறு உணர்ச்சி ஒன்றிய நண்பர்களை என்றும் எவராலும் பிரிக்க முடியாது. அதனாலேதான் ஏனைய இரண்டினும் இது சிறந்ததானது.

ஆனால், நம் கோப்பெருஞ் சோழனுக்கும் பிசிராந்தை யாருக்கும் ஏற்பட்ட நட்பு ஒரு புது வகையான நட்பாகும். அவர்கள் ஒருவரை யொருவர் ஒரு நாளும் நேரில் கண்ட தில்லை. ‘அவர் இத்தகையர், இவர் அத்தகையர்’ என்று பிறர் கூறிய கூற்றைக் கொண்டு அவ்விருவரும் அத்தகைய நட்புடைய வரானார்கள் என்றால், அவ்விருவர் நட்புக்கும் எதனை உவமை கூறுவது! உண்ணாதிருத்தலால் சோழன் உயிர் வாடவாட ஆந்தையாரின் உள்ளக் கவலை மிகுந்து கொண்டே வந்ததாம். என்னே அன்னாரின் ஒன்றிய உணர்ச்சி! வாழ்க அன்னார் நட்பு!

இத்தகைய மனமொத்த நட்புரிமை மக்களிடை மலர்வதாக. இந்நாட்டின் எதிர்காலக் குடிமக்களாகிய நீங்கள் ஒருவர்க் கொருவர் உணர்ச்சி ஒன்றிய நட்புரிமை பூண்டு இந்திய ஒருமைப் பாட்டினை நிலைபெறச் செய்வீராக.