Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3
திருக்குறள்

குன்றக்குடி அடிகளார்குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3 திருக்குறள்


                    குன்றக்குடி அடிகளார்

 

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை தொகுதி - 3

திருக்குறள்

முதன்மைப் பதிப்பாசிரியர்

தவத்திரு பொன்னம்பல அடிகளார்

விற்பனை உரிமை :

மணிவாசகர் பதிப்பகம் 31, சிங்கர்தெரு, பாரிமுனை,

சென்னை - 600108

முதல் பதிப்பு : டிசம்பர், 2000

திருவள்ளுவர் ஆண்டு : 2031

உரிமை : திருவண்ணாமலை ஆதீனம்

விலை : ரூ. 100-00

பதிப்பாசிரியர் குழு :

தமிழாகரர் தெ. முருகசாமி

நா. சுப்பிரமணியம்

குன்றக்குடி பெரியபெருமாள்

க. கதிரேசன்

மரு. பரமகுரு

செயலர் :

பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன்

கிடைக்குமிடம் :

மணிவாசகர் நூலகம்

சிதம்பரம், சென்னை, மதுரை, கோயமுத்துர், திருச்சி

தமிழ் மாமுனிவர்

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

1925 - 1995


பொருளடக்கம்

வாழ்க்கைக் குறிப்புகள்

குறள் பணிகள்

அணிந்துரை

முன்னுரை

உள்ளடக்கம்

வான் மழை

நீத்தார் பெருமை

அறன் வலியுறுத்தல்

வாழ்வாங்கு வாழ்வோம்!

வாழ்க்கைத் துணை நலம்

அறிவறிந்த மக்கட்பேறு

வளரும் தலைமுறை

அன்பு ஈனும் ஆர்வம்

அன்பு செய்க!

அன்பாற்றல்

மனிதகுல ஒருமைப்பாட்டுக்கு அடிப்படை

மோப்பக் குழையும் அனிச்சம்!

நல்வாழ்க்கையின் இரட்டை நாடிகள்

நன்றி மறவேல்

நன்றி பாராட்டுக!

சார்புநிலை கூடாது!

மற்றவர் சிந்தனைக்கு மதிப்புத் தருக!

நடுவு நிலைமை

தன்னடக்கம்

அடக்கமுடைமை ஆக்கம் தரும்

தன்னலம் அற்றலே நல்லொழுக்கம்!

நம் கடமை

ஒழுக்கமுடைமை

ஒட்ட ஒழுகல்

பொறையுடைமை

பொறுமை போற்றுக!

பொறுத்தாற்றும் பண்பு

பொறுமை ஆக்கம் தரும்!

அழுக்காறு திண்டா உள்ளம் பெறுக!

பொறாமை

பொறாமை கொள்ளற்க!

உழைத்து வாழ்க!

நடுவின்றி நன்பொருள் விரும்பற்க!

கோள் கேளற்க; சொல்லற்க!

புறம் கூறல் தீது!

நல்லன எடுத்துக் கூறி நட்பினைத் தோற்றுவிப்பீர்!

பயனுடைய சொல்லையே சொல்லுக!

தியினும், தீமை தீது!

கூட்டுறவு

ஒப்புரவு வாழ்க்கை

இரத்தல் தீது

உண்மையான தவம்

வாய்மையே பேசுக!

வேண்டாம் சினம்!

காத்துக் கொள்ளும் வழி

கோபமா? வேண்டாம்!

இன்னா செய்யாமை

எளிய வாழ்வியல் உண்மை!

நாள் எனும் வாள்!

மெய்ப்பொருள் காண்பதறிவு

ஆன்மாவின் உணவு!

அறிவு

சிறப்பு செய்தொழிலாலல்ல!

உழைத்து உண்க!

கற்புக்கடம் ஆண்ட வாழ்க்கை

நலமுற வாழ்வோம்!

முப்பால் அமைந்த திறன்

வரலாற்றுப் போக்கில் வள்ளுவம்

குறள் வாழ்வு

வாழ்வியற் கவிஞர்

திருக்குறளும் காந்தியடிகளும்

விண்ணகமாக்குவோம்!

மானிடச் சந்தையில்

மரபா? சீர்திருத்தமா?

வான்புகழ் வள்ளுவன்

வள்ளுவரின் நகைச்சுவை

திருக்குறட் கொள்கை

மனத்துக்கண் மாசிலனாதல்

வாழ்வாங்கு வாழ்க!

வன்சொல் தவிர்க்க!

வள்ளுவர் வாக்கு

வள்ளுவம் ஏன் பிறந்தது?

திருக்குறளும் ஒருமைப்பாடும்

எது தவம்?

வள்ளுவரும்-கார்ல்மார்க்சும்

வள்ளுவத்தின் வழி வாழ்க்கையை இயக்குக!

பகுத்துண்ணாமை கொலையே!

உலகம் தழீஇயது ஒட்பம்!

வாழ்வாங்கு வாழ்க

அறிவே ஆன்மாவின் அனுபவம்

அறிவின் அழகு

உழைப்பாம் வேள்வி

உழைப்பாம் வேள்வி

உழைப்பாம் வேள்வி

தமிழ்மொழிவழிக் கல்வி-2

தாய்மொழிவழிக் கல்வி-3

தாய்மொழிவழிக் கல்வி-4

தாய்மொழிவழிக் கல்வி-5

தொடரும் துன்பம்

சலத்தால் பொருள் செய்யற்க

ஒருமைப்பாட்டு உணர்வு கொள்

இகல்இன்றி இரு

பிறப்பால் இல்லை பிரிவினை

நுனிமரம் ஏறி அடிமரம் வெட்டற்க

உட்பகை உயர்வு தராது

மக்களாட்சியே மாண்புறு ஆட்சி

தக்காரைத் தேர்வு செய்

பொதுத்துறை பேணுக!

பலர் கூடிக் காண்டல் ஞானம்

இகலின்றி வாழ்தல் இனிது

பிறர்க்கென வாழ்தல் பெருவாழ்வு

அளவறிந்து ஆற்றுக

சலுகையின் எல்லை

சலுகையின் எல்லை - 2

ஆட்சிமொழிச் சிந்தனை

தேர்தல் சிந்தனை-1

தேர்தல் சிந்தனை-2

அரசுக்குப் பரிந்துரை

எல்லைக்கண் நின்றார் துறவார்

எல்லார்க்கும் எல்லாம்

ஊராட்சியும் பேராட்சியும்

எழுத்துச் சீர்திருத்தம்

பதவிக்கு அழகு பகைத்திறம் அறிதல்

எனைத்தானும் நல்லவை கேட்க!

ஜனநாயகமும் கருத்துப் பரிமாற்றமும்

காலம் அறிந்து செய்க!

வாக்காளர் கடமை

நல்லன நடப்பதாகுக!

அழுக்காறு கொள்ளற்க!

தேவரனையர் கயவர்

மறைமலைநகரும் காமராசர் இரயில் நிலையமும்

அரசின் கடமை

“நாமும் நமதும்” - வேண்டும்

ஒரே ஆன்மீக ராகம்

நடிப்புப் போலிகள்

வாழ்க, வருவாய்க்குத் தக

இட ஒதுக்கீடு

வேற்றுமையில் ஒற்றுமை

வருவாய்க்காக வழிமாறற்க!

நாடுக நடுநிலை

அமெரிக்கா எண்ணிப்பார்க்குமா?

யாரைத் தேர்ந்தெடுப்பது?

பெருமை பெருமிதம் இன்மை

நடந்தாய் வாழி காவேரி

மார்க்சியம் தோற்றுவிட்டதா?

திருவள்ளுவர் உலக மனிதர்

வேதாகமக் கல்லுரி

கூட்டுடைமைப் பொருளாதாரம்

நதிகள் இணைப்பு

இந்தியனாகச் சிந்திப்போம்

குறிக்கோள் நட்பு

கீழ்மக்கள்

மக்களாட்சி முறை

வன்முறை தவிர்ப்போம்!

நாணம் தேவை

என்புருக்கி நோய்

கவரிமான்

பொறுமையின் இலக்கணம்

இரண்டு சக்கரங்கள்

விருதுபெறும் வித்தகர்

கயமை சாடு

தோழமையைத் தேடுவோம்

தீமையை எதிர்த்து நில்

கூட்டாளி ஏன்?

வளர்ச்சி அல்ல; வீக்கம்!

குடியாண்மை

குடிசெய்வார் இயல்பு

மழைவளம் காப்போம்

டங்கல் ஒப்பந்தம்

விலை ஏற்றம்

சூது

சலுகைகள்-குடும்பங்கள் அடிப்படையில்

மக்கள் இருக்கிறார்கள்: மனிதன் இருக்கிறானா?

இட ஒதுக்கீடு

ஊழல் பிரச்சனைக்குத் தீர்வுகாண

இட ஒதுக்கீட்டுக் கொள்கை

பிளேக்-நோய்கள்

சாதிகள்-களைகள்

விருப்பங்கள்

உலகத்தோடு ஒட்டி ஒழுகுதல்

கல்விமொழியும்-தமிழ்ப்பணியும்

வாழும் மானிடத்திற்கு அழகு?

திருக்குறளும்-பெண்ணியமும்


 தமிழ்மாமுனிவர் அருள்நெறித் தந்தை

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

வாழ்க்கைக் குறிப்புகள்

ஆண்டு நிகழ்வுகள்

1925 ● தோற்றம்

● பூர்வாசிரமம் தந்தையார் : திரு. சீனிவாசம் பிள்ளை

தாயார் : திருமதி. சொர்ணத்தாச்சி

● பிள்ளைத் திருநாமம் : அரங்கநாதன்

● தோற்றம் பெற்ற ஊர் : தஞ்சை மாவட்டம் திருவாளப்புத்துர் அருகேயுள்ள நடுத்திட்டுக் கிராமம்.

1931 ● சிதம்பரம் அண்ணாமலை நகரில் வாசம்.

1936 ● 'சொல்லின் செல்வர்' ரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் நாட்டார், சுவாமி விபுலானந்தர் ஆகியோர் தொடர்பு.

1937 ● தமையனார் திரு. கோபாலகிருஷ்ண பிள்ளை விட்டில்

1942 ● கடியாபட்டியில் வாழ்தல்.

● பள்ளியிறுதித் தேர்வு எழுதுதல்.

● 1942 விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு.

● 'வினோபா பாவே படிப்பகம்' தொடங்கி நடத்துதல்.

1945 ● தருமபுரம் ஆதீனம் 25ஆவது குருமகாசந்நிதானம் - கயிலைக் குருமணி அவர்களிடம் கந்தசாமித் தம்பிரான் என தீட்சாநாமத்துடன் தம்பிரானாதல்.

● தருமபுரம் தமிழ்க் கல்லூரியில் பயிலுதல்.

1947 ● சீர்காழிக் கட்டளைத் தம்பிரான் - திருஞான சம்பந்தர்

1948 ● திருமடம் தூய்மைப் பணி, திருமுறை வகுப்பு, விழா நடத்துதல்.

1949 ● குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தின் இளவரசு பட்டம் ஏற்பு. திருநாமம் ஸ்ரீலஸ்ரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாசாரிய சுவாமிகள்.

1952 ● குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தின் 45ஆவது குருமகா சந்நிதானமாக எழுந்தருளல்.

● அருள்நெறித் திருக்கூட்டம் தோற்றம்.

● 'மணிமொழி' என்னும் பெயரில் இயக்கப் பத்திரிகை வெளியிடல்.

1953 ● ஆதீனத்தின் அருளாட்சியிலுள்ள பிரான்மலைத் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின்போது (சங்க கால வள்ளல் பாரி வாழ்ந்திருந்த மலையில்) வள்ளல் பாரி விழாத் தொடங்குதல்.

● பல்லக்கில் பட்டணப் பிரவேசம் வருதலைத் தவிர்த்தல்.

● இலங்கைப் பயணம் - இரண்டு வாரம் சுற்றுப் பயணம்.

1954 ● இராசாசி தலைமையில் தேவகோட்டையில் அருள்நெறித் திருக்கூட்ட மாநாடு.

● திராவிடர் கழகத் தலைவர் பெரியார் சந்திப்பு.

● தாய்லாந்து, இந்தோசீனர், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் (3 திங்கள்)

1955 ● அருள்நெறித் திருப்பணி மன்றம் தொடங்குதல்.

● 'தமிழ்நாடு' நாளிதழ் தவத்திரு குன்றக்குடி அடிகளார் என்ற பெயரை அறிமுகப்படுத்துதல்.

● அறிஞர் அண்ணர் குன்றக்குடி திருமடத்திற்கு வருகை.

● ஆச்சார்ய வினோபா பாவே திருமடத்திற்கு வருகை.

1958 ● குன்றக்குடியில் உயர்நிலைப்பள்ளி தொடங்குதல்.

1959 ● ஆ. தெக்கூரில் பள்ளிச் சீரமைப்பு மாநாடு நடத்துதல்; பாரதப் பிரதமர் நேரு மாநாட்டிற்கு வருகை.

1960 ● மத்திய அரசு சேமநலக் குழு உறுப்பினராதல்.

● மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயிலில் திருமுறைத் தமிழ் அருச்சனை தொடங்குதல்.

1965 ● இந்தி எதிர்ப்புப் போராட்டம், அரசு வழக்கு தொடர்தல்.

1966 ● தமிழ்நாடு தெய்வீகப் பேரவைத் தோற்றம்.

1967 ● திருப்புத்துர்த் தமிழ்ச் சங்கம் தோற்றம்.

● திருக்கோயில் கருவறைக்குள் சீலமுடைய அனைவரும் சாதி வேறுபாடின்றி திருமுறை நெறிப்படி - போதொடு நீர் சுமந்தேத்தி வழிபாடு செய்வதெனத் திருப்புத்துர்த் தமிழ்ச் சங்கம் தீர்மானம் நிறைவேற்றுதல்.

1968 ● இரண்டாம் உலகத் தமிழ்மாநாடு - 'திருக்குறள் உரைக்கோவை' நிகழ்ச்சி தொடக்கவுரை நிகழ்த்தல் - திருக்குறள் இந்திய நாட்டின் தேசிய நூலாக வேண்டுமென்று இம்மாநாட்டில் வலியுறுத்தல்.

● இலங்கைப் பயணம். இரண்டு வாரங்கள், இலங்கை யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் திருக்கோயில் நுழைவுக்காக உண்ணா நோன்பிருத்தல்.

● கீழ வெண்மணித் தீவைப்பு நடந்த இடத்தைப் பார்வையிட்டுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுதல்; புத்தாடை வழங்குதல்.

1969 ● பாபநாசம் பொதிகையடி திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரி ஏற்பு;

● கலைஞர் மு. கருணாநிதி பாரி விழாவிற்கு வருகை

● கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் விருப்பத்தின் வழி தமிழ்நாடு சட்டமன்ற மேலவை பொறுப்பேற்றல்

● தமிழ்நாடு தெய்விகப் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெறல்.

● சட்டமன்ற மேலவையில் இந்து அறநிலையத் திருத்த மசோதா சாதி வேறுபாடின்றி அனைவரையும் அர்ச்சகராக நியமனம் செய்தல் பற்றிப் பேசுதல்.

● சோவியத் பயணம்; 22 நாள் சுற்றுப் பயணம்.

1972 ● பாபநாசம் பொதிகையடி திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரி, திருவள்ளுவர் கலைக் கல்லூரியாக உருவாதல்.

● சென்னை, மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயில் திருப்பணிக்குழுத் தலைவராக நியமனம், வள்ளுவர் கோட்டம் திருப்பணித் தலைவராக நியமனம்.

● குன்றக்குடித் தருமைக் கயிலைக் குருமணி உயர்நிலைப் பள்ளிக்குப் புதிய இடத்தில் கட்டடம் கட்டித் திறத்தல்.

1973 ● திருக்குறள் பேரவைத் தோற்றம்.

● திருச்சியில் தமிழ்நாடு தெய்விகப் பேரவை இரண்டாவது மாநில மாநாடு நடத்துதல்.

● "கோயிலைத் தழுவிய குடிகளும் குடிகளைத் தழுவிய கோயிலும்" என்ற முழக்கம் நாட்டளவில் வைக்கப்பெற்றது.

● குன்றக்குடி கிராமத்தைத் தன்னிறைவுக் கிராமமாக ஆக்கும் திட்டம் உருவானது.

1975 ● நாகர்கோவிலில் தமிழ்நாடு தெய்விகப் பேரவை மூன்றாவது மாநில மாநாடு நடைபெறல்.

● சென்னைப் பல்கலைக் கழகத்தில் சொர்னம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு.

● மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஏ.பி.சி. வீரபாகு சைவசித்தாந்த அறக்கட்டளைச் சொற்பொழிவு.

● அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் சொர்ணம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு.

● இராமநாதபுரம் இனக் கலவரம் - அமைதிப்பணி.

1982 ● குமரி மாவட்டம் மண்டைக்காடு கலவரம் - அமைதிப் பணியாற்றல்.

● மண்டைக்காடு அமைதிப்பணி பற்றிச் சட்ட மன்றத்தில் முதல்வர் மாண்புமிகு எம்.ஜி.ஆர். பாராட்டுதல்.

● மலேசியா, கொரியா, ஹாங்காங், ஜப்பான், செஞ்சீனா முதலிய நாடுகளில் சுற்றுப்பயணம்.

● புளியங்குடி இனக்கலவரம் - அமைதிப்பணி.

1984 ● பாரதத் தலைமை அமைச்சர் திருமதி. இந்திராகாந்தி அவர்கள் குன்றக்குடிக் கிராமத் திட்டக்குழுவின் பணிகளைப் பாராட்டல்.

1985 ● நடுவணரசு திட்ட ஆனைக்குழுப் பிரதிநிதிகள் குன்றக்குடி வருகை, கிராம வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டுப் பாராட்டுதல்.

● பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் வளர்ச்சிப் பணிக்குத் திட்டக்குழு அமைத்தல்.

● மணிவிழா

1986 ● தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது பெறுதல்

● இந்திய அரசு திட்டக்குழு குன்றக்குடித் திட்டப்பணியைப் "Kundrakudi Pattern" என்று அறிவித்தது.

● இவர் எழுதிய 'ஆலயங்கள் சமுதாய மையங்கள்' என்னும் நூல் தமிழ்நாடு அரசின் முதற்பரிசு பெற்றது.

● அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் (D.Litt) பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

1991 ● இந்திய அரசின் அறிவியல் செய்தி பரப்பும் தேசியக்குழு, தேசிய விருது வழங்கிச் சிறப்பித்தது.

● இலண்டன், அமெரிக்கா சுற்றுப்பயணம்.

● அரபு நாடுகள் பயணம்.

1993 ● மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' விருது வழங்கிச் சிறப்பித்தது.

1995 ● இறைநிலை யடைதல்.

அடிகளாரின் குறள் பணிகள்

பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன்

தமிழ்மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழ்கூறு நல்லுலகில் சமய மறுமலர்ச்சிக்கு வழிகண்டவர். அடிகளார் பூர்வாசிரமத்தில் செட்டிநாட்டில் எங்கள் ஊராகிய இராமச்சந்திரபுரத்தில் உயர்நிலைக் கல்வி பயின்றார்கள். எங்கள் தந்தையார் குங்கிலியம் பழ. சண்முகனார் அவர்களும், அடிகளாரின் அண்ணன் அவர்களும் விநோபா பாவே வாசகசாலையைத் தொடங்கினர். அடிநாள் தொட்டு அடிகளாரை நான் நன்கறிவேன். அடிகளார் திருவண்ணாமலை ஆதீனத்தில் பொறுப்பேற்ற பின்னர் சிறந்த சொற்பொழிவாளராக விளங்கினார்கள். முதன்முதலில் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும் அடிகளார் அவர்களும் நாங்கள் நடத்திய தமிழர் திருநாள் திருக்குறள் விழாவில் ஒரே மேடையில் பேசினர். அப்பொழுது ஆத்திகமும் நாத்திகமும் ஒரே மேடையில் சந்திக்கின்றன என்ற செய்தியை வியப்புடன் நாளிதழ்கள் வெளியிட்டன. 

50, 60களில் அடிகளார் தமிழ்மேடைக்குத் தம் பேச்சால் புதிய வலிமை சேர்த்தார்கள். தமிழகம் முழுவதும் அடிக்கடி பயணம் செய்யும் நான் அடிகளாரின் நூற்றுக்கு மேற்பட்ட பொழிவுகளைச் செவிமடுக்கும் நல்வாய்ப்பைப் பெற்றேன். அடிகளார் நூல் பலவற்றைப் படிக்கும் பேறு பெற்றேன். அப்பொழுதெல்லாம் சிந்தனைகள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்துப் பார்க்க வேண்டும் என்ற வேனவா என்னுள்ளத்தில் முகிழ்த்தது. அது இன்று கைகூடுகிறது.

புகழ்மிக்க அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அடிகளார் அவர்களுக்கு டாக்டர் பட்டம் (D.Litt.) வழங்கிய போது அவர்களிடம் வாழ்த்துப்பெற்று, அடிகளார் நூல் வரிசைத் திட்டத்தை விரிவாக விளக்கினேன். “நான் நினைக்க வில்லை. நல்ல திட்டமாக இருக்கிறது” செய்யலாம் என்று சொல்லி இசைவளித்தார்கள். அடிகளார் எழுதிய 50-க்கு மேற்பட்ட நூல்களையும் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.

தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்களை நேரில் சந்தித்து ஆசிபெற்று நூல்வரிசைத் திட்ட அறிக்கையைப் பணித்தேன். மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்தி இசைவு தந்தார்கள். பதிப்புக் குழுவை உருவாக்கினார்கள். கட்டுரைகளை வகைப்படுத்தும் பணி தொடங்கிற்று.

ஒவ்வொரு தொகுதியும் 400 பக்கங்கள் கொண்ட 10 தொகுதிகளாக வெளியிடும் திட்டத்தில் ஏற்கனவே இரண்டு தொகுதிகள் வெளிவந்துள்ளன. இன்று மூன்றாவது தொகுதி வெளிவருகிறது.

திருக்குறள்

இலக்கியம்

சமயம்

சமுதாயம்

பொது

என 5 நிலைகளில் இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மறைமலை அடிகளுக்குப்பின் 1960-90களில் சைவ உலகில் அடிகளார் பெரும்புரட்சி செய்தவர். சைவ சமய மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தவர். சமயக்காழ்ப்பின்றி சைவசமயத்தின் கோட்பாடுகளை, தத்துவக் கூறுகளை பொதுமக்களும் உள்ளம் கொள்ளும்படி விளக்கியவர் தமிழ் மாமுனிவர். சைவசமயத்தை நடைமுறைச் சமயமாக்கவும், சீர்திருத்தக் கருத்துக்கள் செயற்படவும் அல்லும் பகலும் அயராது உழைத்து, புதியதொரு விடியலைக் கண்டார்கள். பெரியாரும் போற்றும் வண்ணம் பெருமிதமாக வாழ்ந்தார்கள். தமிழ்நாட்டில் பெரிய சைவத்திரு மடங்கள் 18 இருந்த போதிலும் குன்றக்குடி ஆதீனமே மக்களால் பெரிதும் அறியப்பட்டிருந்தது. தமிழ் மறுமலர்ச்சியின் ஒரு கூறாகிய சமய எழுச்சி, திருமுறை எழுச்சி, திருக்குறள் இயக்கம் முதலியவற்றின் வாயிலாக, எழுச்சி மிக்க புதிய தமிழகத்தை உருவாக்கினார்கள். அடிகளார் அவர்களை

⁠புரட்சித்துறவி

⁠சிந்தனையாளர்

⁠நூலாசிரியர்

⁠சொற்பொழிவாளர்

⁠நிறுவனர்

என ஐந்து நிலைகளில் வைத்து அடிகளாரின் பங்களிப்பை நாம் விளக்கலாம்; மதிப்பீடு செய்யலாம்.

புரட்சித்துறவி : தத்துவ தரிசனங்கள் அனைத்தையும் கற்றதோடு மார்க்சியமும் கற்றவர். சமூக இயலில் ஆழங்கால் பட்டவராதலால் தமிழ்ச் சமூக மாற்றத்திற்கு சைவ சமயம் வழியாக எவ்வாறு மேம்பாடு காணலாம் என உழைத்தார். தமிழ் வழிபாடு, ஆட்சி மொழி, பயிற்றுமொழி, இந்திஎதிர்ப்பு முதலிய அனைத்து இயக்கங்களுக்கும் தலைமையேற்று தமிழகத்திற்கு வழிகாட்டினார். அவருடைய எழுத்திலும், பேச்சிலும், புதுமைகள் பூத்துக் குலுங்கின. திருமடத் தலைவர்கள் பல்லக்கில் பவனிவந்தபோது பட்டி தொட்டிகளுக்கெல்லாம் அடிகளார் சைக்கிளில் சென்று சமயம் பரப்பினார். புரட்சித்துறவி அடிகளாரின் புரட்சிச் சிந்தனைகளை இந்த 10 தொகுதிகளிலும் நாம் காணலாம். நடைமுறைக்கு ஒத்து வராத சமயக் கருத்துக்களைத் துணிவோடு எடுத்துக்காட்டிய சமயப் புரட்சியாளர்.

சிந்தனையாளர் : தமிழ்ச் சிந்தனைக்குப் புதுவளம் சேர்த்தவர். திரு.வி.க. நெறியில் சமுதாய நோக்கில் சமயச் சிந்தனைகளை வழங்கியவர். பன்னுற் பயிற்சியும், பேரறிஞரின் நட்பும், தொடர்ந்த மேடைப்பொழிவுகளும், பட்டறிவும் அவருக்குப் பல்வேறு புதிய சிந்தனைகள் தோன்ற வாய்ப்பளித்தன. துறவியாய், தமிழறிந்த சான்றோராய் மட்டுமல்லாமல் மானுடம் மேன்மையுற வேண்டும் என்ற வேணவாவினால் எவர்க்கும் அஞ்சாமல், எதனையும் எதிர்பாராமல் புதிய சிந்தனை விதைகளைத் தூவினார்கள். அவை இன்று பூத்துக் குலுங்குகின்றன. அவரின் சிந்தனைகள் தனி நூலாகத் தொகுக்கப் பெற்றுள்ளன.

நூலாசிரியர் : பல்வேறு காலங்களில் பல்வேறு இதழ்களில் அடிகளார் எழுதிய கட்டுரைகள் நூல்வடிவம் பெற்றுள்ளன. சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் அவர் ஆற்றிய அறக் கட்டளைச் சொற்பொழிவுகள் அறிஞர் பெருமக்களால் பெரிதும் மதித்துப் போற்றப்படுகின்றன. சிறியனவும், பெரியனவுமாய் 54 நூல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அவற்றில் அடிகளாரின் சிந்தனைத் தெளிவும் விளக்கும் திறமும், விரித்துரைக்கும் வகையும் நூலாசிரியர் இயல்புகளாய் அமைந்துள்ளன. ஒவ்வொரு கட்டுரையிலும் ஒவ்வொரு நூலிலும் சமூகப் பார்வையுடன் கூடிய புதிய சிந்தனை, புதிய செய்தி ஒன்று இருக்கும்.

சொற்பொழிவாளர் : 1960-90களில் தலைசிறந்த சொற்பொழிவாளர் ஐவரைச் சுட்டினாலும், மூவரைச் சுட்டினாலும் அடிகளார் பெயர் முதல் வரிசையில் நிற்கும். புதுமைச் சிந்தனையாலும், புரட்சிக் கருத்துக்களாலும் தமிழக இளைஞர்கள் மத்தியில் பாராட்டப் பெற்றவர்.

நிறுவனர் : அருள்நெறித் திருக்கூட்டம் : அடிகளார் தொடங்கிய இந்த இயக்கம் தமிழ்ச்சைவ உலகில் புத்தார்வத்தையும், புத்துணர்ச்சியையும், புத்தெழுச்சியையும் உண்டாக்கியது. சிற்றூர்களில், பேரூர்களில் கிளைகள் முகிழ்த்தன. திருமுறைகள் வழிபாட்டில் சிறப்பிடம் பெற்றன. ஊர்தோறும், திருக்கோயில் தோறும் உழவாரப்பணி ஊக்குவிக்கப் பெற்றது. நாள்வழிபாடு ஒழுங்கு செய்யப் பெற்றது. வார வழிபாட்டுக்கூட்டம் வளர்ந்தோங்கியது.

தெய்விகப் பேரவை : தமிழ்க அரசின் இந்து அறநிலையத்துறையின் வழி தொடங்கப் பெற்ற இந்த அமைப்பு, பேரியக்கமாகப் பெருஞ்செல்வாக்குப் பெற்றிருந்தது. சமய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இறை உணர்வு நாளும் பெருக நல்லதொரு இயக்கமாக வளர்ந்தது.

திருக்குறள் பேரவை : தமிழ்மாமுனிவர் தோற்றுவித்த அமைப்புக்களில் இன்றும் இளமை குன்றாது மாநாடுகள் நடத்திவரும் பேரியக்கம் இது. தமிழறிந்தோர் எல்லோரும் திருக்குறள் அறிந்திடுதல் வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் திருக்குறள் கருத்தரங்கு நடைபெறுதல் வேண்டும். ஆண்டுதோறும் மாநில மாநாடுகள் நடத்துதல், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் திருக்குறள் மாநாடு நடத்துதல் முதலியன இதன் செயல்திட்டங்கள்.

திருக்குறளைத் தேசிய நூல் எனப் பிரகடனப்படுத்த வேண்டும் என்று அடிகளார் எழுப்பிய குரல் இன்று நாடு முழுவதும் ஒலிக்கிறது.

அணிந்துரை

தமிழண்ணல்

துணைத் தலைவர், தமிழிலக்கியச் சங்கப் பலகைக் குறள்பீடம் ஒருங்கிணைப்பாளர். தமிழ்ச் சான்றோர் பேரவை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் என்ற பெயரைத் தமிழ்கூறும் நல்லுலகம் நன்கு அறியும் அவர் மக்கள் மன்பதைக்குப் பாடுபட்டு, நெறிகாட்டிய பெருமைக்குரியவர் என்பதால் அவரைச் சமுதாய மாமுனிவர் என்றனர். தமிழ்மொழி வளம்பெற நாடனைத்தும் சென்று, தம் சிந்தனைச் செல்வத்தைப் பகிர்ந்து கொண்டதால் தமிழ் மாமுனிவர் எனவும் போற்றினர்.

பிற மடங்களும் தமிழும் சிவனியமும் வளரப் பாடுபட்டன. எனினும் ‘ஆசார அனுட்டான’த் தடைகளால், மக்கள் அணுக முடியாத, உயர்ந்த பீடங்களில் இருந்தனர். அவற்றைவிடக் குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனம் பெரியதன்று. ஆயினும் அப்பரடிகளைப்போல, திருஞானசம்பந்தரைப்போல, மக்கள் மன்றத்திற்கு வந்து அவர்களிடையே தாமும் ஒரு ‘மா மனிதராக’ விளங்கியதால், தாம் தலைமை தாங்கிய திருமடத்தின் புகழை உலகறிய உயர்த்தியவர்தான், தவத்திரு அடிகளார் ஆவார்கள்.

அவர்தம் சிந்தனைகளை, எழுதிவைத்த எண்ணங்களை மணிவாசகர் பதிப்பகம் பல பெருந் தொகுதிகளாக வெளியிடுகிறது. களஞ்சியங்கள் அனைய பெருநூல்களையே வெளியிட்டு வரும் பதிப்புச் செம்மல், தமிழவேள் ச. மெய்யப்பன் அவர்கள் அடிகளாரின் நூல்களைப் பல மடலங்களாக வெளியிடுவது அம் மாமுனிவர் தம் எண்ணங்கள் காற்றில் கரைந்துவிடாமல் காப்பாற்றும் முயற்சியாகும்.

இம் மடலம் ‘திருக்குறள்’ பற்றிய சிந்தனைத் தொகுப்பாகும் வள்ளுவம் பற்றி அவர் வெவ்வேறு காலங்களில் எழுதியன அனைத்தும் இந்நூலுள் ஒருவழித் தொகுத்துத் தரப் பெற்றுள்ளன. இவை ஒவ்வோரதிகாரத்தையும் அவ்வதிகாரத்துள் வரும் ஒன்றிரண்டு குறள்களால் தொடங்கிப் பின்பு பல்வேறு சிந்தனைத் தொடர்களாகக் கிளைவிட்டுப் படர்கின்றன.

இதில் திருவள்ளுவர் காலப் பின்னணியும் அச்சூழலின் எதிரொலியாக அவர் திருக்குறள் யாக்க நேர்ந்த நிலைமையும் விளக்கப் பெற்றுள்ளன.

திருக்குறளை அவர் வாழ்ந்த காலச் சூழ்நிலையுடன் - அதாவது இக்கால அரசியல், மன்பதையியல், பொருளியல் ஆகியவற்றுடன் இணைத்துப் பார்க்கும் முறையே, பெருமளவில் காணப்படுகிறது.

வள்ளுவத்திற்கு அவர் தரும் ‘புதிய பார்வைகள்’ பல பளிச்சிடுகின்றன. அவர் ஒரு ‘பகுத்தறிவுச் சமயவாதி’யாக வெளிப்படுகிறார். இவரை விவேகானந்தருடன் ஒப்பிடலாம். என்றாலும் மூடநம்பிக்கைகளைத் தகர்த்தெறியும் இத்தகையதொரு ஆன்மிகவாதியை நாம் காண்பதரிது.

தமிழன் தலைநிமிர வேண்டுமெனில், தந்தை பெரியாரின் பணியும் தேவை என உணர்ந்தவர் இவர். சிறந்த மார்க்சிய, லெனினியச் சிந்தனையுடைய முற்போக்காளர் இவரெனில் மிகையாகாது. மக்களுடன் மிக நெருங்கிப் பழகியதால், இவரது பார்வைகள் தெளிந்த, ஒளிவீச்சுக்களாகக் கானப்படுகின்றன.

வள்ளுவத்தை நெஞ்சார விளங்கிக் கொள்ள இந்நூல் பெருந்துணையாகுமென, ஒங்கும் குரலெடுத்து, உரக்கக் கூற விழைகின்றேன். அதற்காக இது ‘தெய்வத்தின் குரல்’ என்று கூறமாட்டேன். திருவள்ளுவர் தாம் ஒரு மனிதராக நின்றே, இந்த மன்பதை சார்ந்த மனிதர்களுக்கு ‘மனிதத்தை’, மனிதனின் மொழியில் எடுத்துரைத்தார். அதை அடிகளார் என்ற ‘மனிதர்’ நம் காலத்தில் பிறந்து, நமக்கு விளக்கியுள்ளார்.

அடிகளாரின் கருத்து நயத்திற்கும் சிந்தனைச் சிறப்புக்கும் பெருமிதப் பெருமைக்கும் எடுத்துக்காட்டுக்கள் ஒரு சிலவற்றை இங்குச் சுட்டிக்காட்ட விழைகின்றேன்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைப் போற்றிப் பாராட்டும் அதே குரலில், அம் மாண்புமிகு தமிழக முதல்வருக்கும் இவர் ‘எதிர்வைக்கும் கருத்துரைகள் ஆலோசனைகள்’ இதிலுள. பின்பாட்டுப் பாடுவது பெருமிதமன்று. அடிகளார் அரசியலில் ‘பெரியாரைத் துணைக்கோடல்’ அதிகாரத்திற்குப் பல ‘பரிமாணங்களில்’ ஒர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.

அவர் வழிவரும் இன்றைய குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளாரும் அதே நெறி முறைகளைப் பின்பற்றி வருவது தமிழர்கள் செய்த தவப்பேறேயாகும். தமிழர்கள், அவர்கள் ‘நாத்திகர்களே’ யாயினும், தங்கள் திருமடங்களைப் போற்ற வேண்டும்; வாழ்த்த வேண்டும்; பாராட்ட வேண்டும்.

பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன் அவர்கள், தமிழுணர்வு, தமிழினவுணர்வு, தமிழ்ப் பண்பாட்டுணர்வு உடையவர்களை இனங்கண்டு போற்றி, கைம்மாறு கருதாமலும் செலவு பாராமலும் ‘தமிழர்கள் பனங்கொடுத்து நூல் வாங்கும் பழக்கமற்றவர்களாயிற்றே’ என்று தயங்காமலும் அத்தகையவர்களது நூல்களை வெளியிடுகிறார். பதிப்புலகில் ‘மெய்யப்பன் தமிழாய்வகம்’ அமைத்து ஒரு புரட்சியே செய்து வருகிறார்.

‘மானுடத்தின் குறிக்கோள் அறம். அறம் செய்தலன்று; வாழ்தல்’ என்கிறார் அடிகளார் (பக். 23). நாமோ அறம் பேசவும் விளக்கவும் என்றுதான் இன்று நடந்து கொள்கிறோம். துறவியாகிய இவர், ‘இந்த மண்ணுலகிலேயே அமர வாழ்வு வாழலாம்’ என்ற வள்ளுவர் கருத்தை மனம் ஒப்பி ஏற்குமிடங்கள் பலவாகும். ‘தலைமகனுடைய ஒழுக்கத்திற்கும் செயல்திறனுக்கும் பெண்ணே பொறுப்பேற்க வேண்டும் என்பது வள்ளுவத்தின் திரண்ட கருத்தாகும்’ என்பது வள்ளுவர்தம் உள்ளத்தை உணர்ந்து எழுதியதாகும் (29). அறிவறிந்த பெற்றோர்க்கே அறிவறிந்த பிள்ளைகள் பிறப்பார்கள் என்பது இவர் காணும் புதியவுரை (30, 31) மிக நுட்பமானது. ஒழுக்கமுடைமைக்கு இவர் மிக விரிந்த பொருள் காண்கிறார் (61). ‘ஒவ்வொரு நொடியிலும் சாகின்றோம் என்று உணர்ந்தால் வாழ்நாள் வீணாகாது’ என்பது இவர் தரும் விளக்கம் (106). ‘பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பும் செய்யும் தொழிலால் வேறுபடாது; உயர்வு தாழ்வெனல் ஆகாது’ என்ற இவரது விளக்கமே, குறளுக்குப் பொருத்தமுடையதாகும். (115)

தாய்மொழி வழிக்கல்வி பற்றி இவர் எழுதியுள்ளவை இன்று, மிகுதியும் எல்லோர்க்கும் அறிவிக்க வேண்டிய செய்தியாகும் (262 - 276). இந்திய தேசிய மொழிகள், தமிழ் உட்பட இந்திய ஆட்சிமொழியின் தகுதி பெற்றால், இந்தியை நாட்டின், பொதுமொழியாக, உறவு மொழியாக ஏற்றுக் கொள்ளலாம்’ என விவாதிக்குமிடம் மிகமிகச் சிறந்த கருத்தாகும். ‘சாதி அடிப்படையில் சலுகைகள்’ என்பது பற்றிய இவரது சிந்தனைகளை அரசியல் கட்சிகள் சிந்திக்க வேண்டும். தவம் பற்றிய விளக்கம் (236), தமிழில் வழிபாடு பற்றி இவர் ஆணித்தரமாக எடுத்துரைப்பவை, திருமணத்தில் புத்தகங்களைச் சீர்கொடுக்கலாகாது என்னும் இவர்தம் கருத்து என இந்நூலுள், தேடத்தேடக் கிடைக்கும் அரிய கருத்துக்கள் மிகப் பலவாகும்.

திருக்குறளை வாழ்வியல் நோக்கில் பார்க்க, இந்நூல் மிகச் சிறந்த துணையாகும் என்பதில் ஐயமில்லை.

தமிழண்ணல்

(Upload an image to replace this placeholder.)

முன்னுரை

தவத்திரு பொன்னம்பல அடிகளார்

அருள்நெறித் தந்தை, தமிழ்மாமுனிவர் இருபதாம் நூற்றாண்டின் அப்பரடிகள், மனிதநேய மாமுனிவர், காவி உடுத்திய கார்ல் மார்க்ஸ் எனப் பலவாறு அழைக்கப்பெற்ற நம் குருமகாசந்நிதானம் அவர்கள் எழுதிய பல்வேறு நூல்கள் இன்று தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளது. திருக்குறளைப் பற்றிய பல்வேறு சிந்தனைகள் இன்று செறிவாகச் சீர்செய்யப்பட்டு, சிறப்புடன் நமது கரங்களில் தவழ்கின்றது. பேச்சே வாழ்க்கை, வாழ்க்கையே பேச்சு என்று உலக உபதேசியாக மட்டும் இராமல் பேசியதை வாழ்வில் நடை முறைப்படுத்திச் சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளியில்லாத செயற்கரிய செயல்களை ஆற்றிய அருந்தவ வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

உலக உயிர்கள் நலம்பெற உபதேசித்த அப்பர் அடிகளும், சுவாமி விவேகானந்தர் பெருமானும், வள்ளலார் பெருந்தகையும் எந்த அடைப்புக் குறிகளுக்குள்ளும் தம்மைச் சிறைவைத்துக் கொள்ளவில்லை. மடங்கள் என்ற நிறுவனங்களில் தங்களைச் சிறைவைத்துக் கொள்ளாமல் சுதந்திர வானில் சுடர்விட்டுப் பிரகாசித்தார்கள். பட்டு, பீதாம்பரங்களை அணிந்துகொண்டு பல்லக்கில் பவனிவரும் - காலத்திற்கு ஒவ்வாப் பரம்பரை மரபுகளை மறுதலித்துவிட்டு, தம் கடமைக்குரிய மரபுகளை வழுவாது நிறைவேற்றி, தம் பாதங்கள் நோகப் பாலைவனத்தில் பயணம் செய்து பாமர மனிதனின் வாழ்வை வளப்படுத்தச் சிந்தித்துச் செயலாற்றிய சமய சமுதாய உலகில் முதல் திருமடத்தின் தலைவர் நம் அருள்நெறித் தந்தையேயாவார். சுவாமி விவேகானந்தர் பெருமானும், வள்ளலார் பெருந்தகையும் மடாதிபதிகளாய் இருக்கவில்லை! திருமடத்தின் பொற்கூண்டுக்குள் மரபுகள் எனும் கத்திரிகள், சுதந்திரச் சிறகுகளை வெட்டிய பொழுதும் அதையும் தாண்டி, உலக மக்களின் ஆன்ம விடுதலைக்கு

தி.2 வித்திட்டு, வேதம் புதுமை செய்த மடாலயத் தலைவர் தாம் நம் மகாசந்நிதானம் வளர்ந்து வருகின்ற உலகில் பேச்சும் எழுத்தும் வாழ்க்கை வாணிகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பொழுது, சமுதாய மாற்றங்களுக்கு விதைக்கின்ற நாற்றங்காலாக அவற்றை மாற்றிக் காட்டினார்கள். உருவமும், கோலமும் அடையாளமும் மட்டும் அல்ல துறவு நெறி எண்ணும் எண்ணதால் நினைக்கும் உள்ளத்தால், வாழும் வாழ்க்கை முறையால் வாழ்வதுதான் உண்மைத் துறவுநெறி என்று துறவிகளிடம் மிக்க கண்டிப்பாக இருந்த திருவள்ளுவப் பெருந்தகையின் குறள்நெறியை, குவலயம் எங்கும் பட்டிதொட்டி எங்கும் பரப்பும் பணியில் ஈடுபட்டு, குறள்நெறிக்கு இயக்கம் கண்ட முதல் துறவி நம் மகாசந்நிதானமே ஆவார். குறள்நெறி பற்றிய அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், ஆய்வுச் சிந்தனைகள், வானொலிச் சொற்பொழிவுகள், கருத்தரங்கங்களில் மலர்ந்த மலர்கள் தான் இன்று திருவள்ளுவர் சிந்தனை பற்றிய நூல் தொகுப்பாக மலர்ந்து மணம் பரப்புகின்றது.

சீனத்தில் கன்பூஷியஸ், கிரேக்கத்தில் சாக்ரட்டீசு, பிரெஞ்சு தேசத்தில் ரூஸ்ஸோ, சோவியத்தில் மார்க்சியம் புரட்சியை - மாற்றத்தை விளைவித்ததைப் போலத் தமிழ் மண்ணில் தமிழ் நிலத்தில் திருவள்ளுவப் பெருமானின் சிந்தனைகள் ஏன் புரட்சியை, மாற்றத்தைத் தோற்றுவிக்கவில்லை? என்ற நியாயமான வினாவினை மகாசந்நிதானம் எழுப்புகின்றார்கள். சிந்தனையைக் கிளறும் இந்த ஆழமான வினாவிற்கு அற்புதமான விடையையும் தருகின்றார்கள். “தமிழ் நிலத்தை, தமிழ் மண்ணை ஆண்ட அரசர்கள் அருளரசர்களாக இருந்தார்கள். ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என்று புறநானூறு பாடும். 'உயிரெலாம் உறைவதோர் உடம்புமாயினான்’ என்று கம்பன் தசரதனைப் பாடுவான்! முடி ஆட்சிக் காலத்தில் மன்னன் உடம்பாகவும் மக்கள் உடம்பை இயக்குகின்ற உயிராகவும் வாழுகின்ற ஆட்சிமுறை இருந்தது. புறாவிற்காகத் தன் தசையை அறுத்த சிபிச் சக்கரவர்த்தியும், கன்றை இழந்த பசுவிற்காகத் தன் மகனைத் தேர்க் காலில் இட்ட மனுநீதிச் சோழனும், அநீதி இழைக்கப்பட்ட அபலைப் பெண்ணிற்காக உயிர்நீத்த பாண்டியன் நெடுஞ்செழியனும், கொழுகொம்பின்றி வாடிய முல்லைக்குத் தேர் ஈந்த பாரி வள்ளலும், தண்தமிழுக்குத் தலைஈந்த குமணவள்ளலும் போன்ற அருளரசர்கள் ஆண்டமையால் உயிர்க்குலம் துன்பத்தைச் சந்திக்கவில்லை! நலம் செய்யாத அரசுகள் சில வாய்த்தபோதிலும் அவை மனிதகுலத்திற்குத் தீங்கு இழைக்கவில்லை. நலம் செய்யாததோடு தீங்கிழைக்கும் அரசுகளை நோக்கித்தான் புரட்சிகள் தோன்றும். இடையிடையே இருள் கவிந்தாலும் வள்ளுவர் வழித்தோன்றியவர்கள் இலக்கிய மாணவர்களாகவே அமைந்துவிட்டோம்! பரிமேலழகர் காலம் முதல் இன்றைய உரையாசிரியர்கள் வரை பாட்டுக்குப் பொருள்வரையும் உரையாசிரியர்களாக வளர்ந்து விட்டோம். திருக்குறள் நெறிக்கு எழுத்தில் உரை கூறுகின்றோம். வாழும் வாழ்க்கையில் உரைசெய்யத் தவறிவிட்டோம்! திருவள்ளுவரை வழிபாட்டுக்குரிய பொருளாக மாற்றி விட்டோம்!” என்று அருள்நெறித் தந்தை திருக்குறள் வாழ்வியல் நூலாக வெற்றி பெறாமைக்குக் கூறும் விளக்கம் எண்ணி எண்ணிப் போற்றத்தக்கது.

பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்

தொகுத்துவற்றுள் எல்லாம் தலை

என்ற திருக்குறள், கொல்லாமை எனும் அதிகாரத்தில் ஏன் வைக்கப்பட்டுள்ளது? என்ற வினாவினை எழுப்புவார்கள்! ஈகையில் வைக்கப்பட்டிருக்கலாம், ஒப்புரவறிதலில் வைக் கப்பட்டிருக்கலாம், விருந்தோம்பலில் கூறி இருக்கலாம். கத்தி எடுத்துக் கொன்றால் மட்டும் கொல்ை என்பதன்று. பெற்ற செல்வத்தைப் பலருக்கும் பங்கிட்டுக் கொடுத்து, பலரையும் பேணி வளர்க்காமல் சோறிட்டு மருந்து முதலியன வழங்கிப் பலரையும் பேணி வளர்த்துப் பாதுகாக்காமல் சாகடித்தலும் கொலைக் குற்றமே என்பதனை உணர்த்தவே இந்தக் குறள் கொல்லாமை அதிகாரத்தில் அமைந்திருக்கின்றது என்ற அரிய விளக்கம் அருமையானது.

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்

என்னும் குறளுக்கு அறிவியல் பார்வையில் தருகின்ற விளக்கம் அற்புதமானது. ஊர் நலம் போற்றுபவனின் விளைநிலம் உரிமையால் தனி மனிதனுடையதாக இருப்பினும் நிலம் பேணப்படுவதில் பொதுவுடைமையாகப் போற்றிப் பேணப்படும். உரிமையாளர் விவசாயம் செய்ய மறந்திருந்தால்கூட ஊரார் அவருக்காக வேளாண்மை செய்து விளைச்சலை வீடு கொண்டுவந்து சேர்ப்பர் என்ற விளக்கம் பாராட்டுக்குரியது.

அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை

பொறுத்தானொ(டு) ஊர்ந்தான் இடை

என்பதற்கு, சமய ஞானியாய் இருந்துகொண்டு கூறும் விளக்கம் அடிகள் பெருமான் சமய உலகின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட புரட்சித்துறவி என்பதனைப் பறைசாற்றுகின்றது.

மரபு வழிப்பட்ட சமயவாதிகள் வறுமைக்கும் ஏழ்மைக்கும் காரணமான பழியை, பரம்பொருள் மீதும் விதி - ஊழின் மீதும் போட்டுத் தப்பித்துக் கொள்ளும் பொழுது, ‘ஊழையும் உப்பக்கம் காண்பர்' என்று வாழ்க்கை வழித்தடத்தில் உரை கூறிய வள்ளல் பெருமான்தாம் நம் அடிகள் பெருந்தகை!

அறிவு என்பது செய்திகளின் தொகுப்பு அல்ல! நூல்களின் இருப்பிடம் அல்ல. கற்றதைத் திரும்ப, கூறியது கூறும் கிளிப்பிள்ளை மொழி அல்ல! துன்ப நீக்கத்திற்குரிய மருந்து! நேற்றையத் துன்பத்தை இன்றைய இன்பமாக மாற்ற உதவும் கருவிதாம் அறிவு என்ற விளக்கம் புதுமையானது; உலகம் முழுமைக்கும் பொதுமையானது.

வள்ளுவ மருத்துவர் உயிரைத் தேடுகின்றார். வாழ்பவனை எல்லாம் அவர் உயிர் உள்ளவனாக ஏற்றுக் கொள்ளவில்லை. இடுகாட்டில் எரியும் பினங்கள்! நடுவீட்டில் நடை போடும் பிணங்கள் என்று கூறுகின்றார். சுவாசிப்பதாலும் இதயம் துடிப்பதாலும் உடல் இயங்குவதாலும் உயிர் இருப்பதாக ஒத்துக் கொள்வதில்லை. இயந்திரங்களும் தான் இயக்கினால் இயங்குகின்றன. கடிகாரமும் பெண்டுலம் அசைந்தால் ஓடுகின்றது. இயந்திர மனிதனும்தான் இன்று இயங்குகின்றான். இதயம் இல்லா மனிதனும் இயங்குகின்றான். எவன் இதயத்தில் அன்பு துடிக்கின்றதோ அவனே உயிர்த் துடிப்புடைய மனிதன் என்று வகைப்படுத்துவது இதுவரை உலகம் எண்ணிப் பாராத சிந்தனை ஆகும்.

நட்பு, காதல், ஒப்புரவில் இன்றைய இருபதாம் நூற்றாண்டின் நிறைவுப் பகுதியில் காணுகின்ற வாழ்க்கைப் போக்கோடு எண்ணிப் புதிய சிந்தனையைத் தந்திருப்பது எண்ணி எண்ணிப் போற்றத்தக்கது.

குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து

மானம் கருதக் கெடும்

என்ற குறள் நெறிக்கு, பொது வாழ்வில் - பொது நன்மைக்குப் போராடும் பொழுது மான அவமானம் பார்க்கத் தேவை இல்லை என்ற விளக்கம் சிந்திக்கத்தக்கது. இந்தக் குறளுக்கு வாழும் வாழ்க்கையால் உரை சொன்னவர் பேரறிஞர் அண்ணா என்பதைச் சுட்டிக்காட்டி இருப்பது இளைய தலைமுறைக்கு வழிகாட்டுவதாகும்.

வள்ளுவம் கடவுளை நம்புகின்றது. அது ஆனும் அல்ல; பெண்ணும் அல்ல. வள்ளுவம் காட்டும் கடவுளுக்குக் கோபுரங்கள் - கோட்டைகள் இல்லை. வள்ளுவம் காட்டும் கடவுளுக்குக் கணக்கும் இல்லை; வழக்கும் இல்லை; அது பேரறிவு! தூய்மையான அறிவு! குணங்களின் திரு உரு! இன்பத்தின் திரு உரு! அன்பின் திரு உரு! அறத்தின் திரு உரு! என்ற வரிகள் உண்மையான, போலித்தனம் இல்லாத சமய உலகை அடையாளம் காட்டுகின்றது.

திருக்குறள் ஒரு சமயத்திற்காகத் தோன்றிய நூல் அன்று! அது சமயச் சார்பற்ற நூல். ஆயினும் மனித குலத்தைச் சிந்தனையில் - அறிவியலில் - வாழ்க்கையில் வழிநடத்தும் நூல். திருக்குறள் கொள்கை சமயமாக உருப்பெறுகின்றது. அறிவின் வழிப்படும் பொழுது அன்பு கருக்கொண்டு அருள் உருப்பெறுகின்றது என்ற வைர வரிகள் சமயம் உறைந்துள்ள இடத்தை நமக்கு அடையாளம் காட்டுகின்றது.

முறை செய்து காப்பாற்றும் மன்னவனுக்குச் செவிகைப்பச் சொற் பொறுக்கும் பண்பும் அறிவுறுத்தும் நல் ஆலோசகர்களும் தேவை என்கிறார். உயிர்க்குலம் துன்புறும் போரை, விரும்பாத போக்கும் எதிர்பாராத தாக்குதலும் எதிரிகளால் ஏற்படலாம். எனவே நல்ல படை பலமும் தேவை என்கிறார்.

ஆண்டவன் வரம் கொடுத்தாலும் பணப் பெட்டியின் மீது பித்துக்கொண்ட பூசாரிப் புரோகிதர்கள் எனும் நந்திகள் சமய வாழ்க்கையைச் சடங்குத் தன்மையுடையதாக மாற்ற வல்லார்க்குச் சாமரம் வீசுகின்றனர்.

‘நியாயம் வழங்க வேண்டிய அரசியல், வாய்ப்புடையார் வாயிலில் காத்துக்கிடக்கும் சேவகத் தொழிலாக மாறிவிட்டது. எங்கு நாட்டின் நீதியியலை முறைப்படுத்தி நிர்வகிக்கின்ற அரசு தோன்றவில்லையோ அங்கு அரசை ஆட்டிப்படைக்கின்ற தனியார் நிதிக் குவியல் தோன்றும்’ என்ற சிந்தனைக்குரிய வாக்கு நினைவிற்கொள்ளத்தக்கது. திருவள்ளுவ நெறிவழி மனிதகுலத்தை மேம்படுத்துவதற்கு அக வாழ்விலும் புற வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கக் கூறுகளை ஆழமாகச் சிந்தித்து, அற்புதமாக நமது மகாசந்நிதானம் தமிழ்ச் சமுதாயத்திடம் ஒப்படைத்துள்ளார்கள். இந்தச் சிந்தனைப் பெட்டகத்தைச் செயலாக்க வேண்டியது நமது கடப்பாடு.

பல குழுக்களாக விரவிக்கிடக்கின்ற தமிழ் இனத்தை ஒருமைப்படுத்த திருவள்ளுவப் பெருமான் முயன்றதைப் போல, பல பொழிவுகளாக விரவிக்கிடந்த கருத்துப் பெட்டகங்களைத் தொகுப்பு நூலாக மாற்றும் முயற்சியில் மணிவாசகர் பதிப்பகம் வெற்றி கண்டுள்ளது. பதிப்புக் கலையில் முத்திரை பதித்த வித்தகர் மெய்யப்பன், இதிலும் முத்திரை பதித்துள்ளார்.

இந்நூல் எழுத்துக் கருக்கொண்ட நாள் முதல் இன்றுவரை அல்லும் பகலும் அயராது உழைத்த பெருமை நம் ஆதீனக் கவிஞர் மரு. பரமகுருவைச் சாரும். பல வகைகளில் இந்நூல் தொகுக்கும் களத்தில் கடமை ஆற்றிய இராமசாமி தமிழ்க் கல்லூரி முதல்வர் தெ. முருகசாமி, பேராசிரியர் நா. சுப்பிரமணியம், ஆதீனப் புலவர் க. கதிரேசன், எழுத்துச்செம்மல் பெரியபெருமாள் போன்றவர்களின் பணிகள் அளப்பரியன்; எண்ணி எண்ணிப் போற்றும் கடப்பாட்டுக்குரியன.

இந்நூலுக்கு அரியதொரு அணிந்துரை நல்கிய திரு. தமிழண்ணலுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

இவ்வரிய நூலின் கருத்துக்களை, சிந்தனைப் பெட்டகங்களைச் செயலாக்குவதற்கு மகாசந்நிதானம் திருநாமத்தைச் சிந்தித்துப் பயணம் செய்வோம்!

இந்நூலை வாசிப்பதோடு நிறுத்திவிடாது அருள்நெறித் தந்தையின் சிந்தனைகளைச் செயலாக்குவதே, இந்நூலுக்கு அணிவிக்கின்ற பொன் அணியாகும். அருள் நெறித் தந்தையின் கனவு, நனவாகக் கற்றவழியில் கடமை ஆற்றுவோம்.

உள்ளுறை

1. வாழ்க்கை நலம்

17

2. மண்ணும் விண்ணும்

123

3. முத்து மொழிகள்

185

4. திருவள்ளுவர் காட்டும் அரசியல்

190

5. சிந்தனை மலர்கள்

205

6. தமிழமுது

225

7. அடிகளார் மடல்

251

அச்சும் அமைப்பும்

தமிழவேள் ச. மெய்யப்பன்

மணிவாசகர் பதிப்பகம்

1

வாழ்க்கை நலம்

* * *

1. வான் மழை

கடவுள் எல்லையற்ற பொருள்: ஆற்றலுடைய பொருள்; ஆனால் உருவமற்றது. விஞ்ஞான அடிப்படையில் கூட ஏராளமான ஆற்றல் மிக்க பொருள்கள்-வாழ்க்கைக்குப் பயன்படும் பொருள்கள் உருவமற்றவையாகவே இருக்கின்றன, என்பதை-உலகத்தின் மிகப்பெரும் ஆற்றலாக விளங்கும் மின்சாரத்திற்கே உருவமில்லையென்பதை நினைவிற் கொள்ள வேண்டும். கட்புலனுக்கு வாராத பொருள்களின் உண்மையை அவற்றின் செயற்பாட்டின் மூலமும், பயன்பாட்டின் மூலமும் அறிய முடியும். அது போல இயற்கையில் எல்லாம் விஞ்சிய இயற்கையாக விளங்குவது வான்மழை. கடவுளைப் பற்றிப் பேசிய திருவள்ளுவர் அடுத்து உலக இயக்கத்துக்கும் நுகர் பொருள் படைப்புக்கும் கருவியாக இலங்கும் வான் மழையைச் சிறப்பித்துக் கூறுகிறார்.

வானை இடமாகக் கொண்டு நீர்த்துளிகள் மழையாகப் பொழிவதால் வான் சிறப்பு எனப்பெற்றது. வான் சிறப்பு என்று கூறினாலும் வானின் பயனாக இருக்கின்ற தண்ணிர் என்றே கொள்ள வேண்டும். தண்ணிரின்றி உலக இயக்கமில்லை; உயிர் வாழ்வன இல்லை. அதனால் திருவள்ளுவர் "நீரின்றமையாது உலகு" என்றார்.

உலகின் அனைத்துப் பொருள்களிலும் நீர் கலந்திருக்கிறது. நீர்கலவாத-நீர் இல்லாத இடமில்லை. தண்ணீர் ஊடுருவி நிற்காத பொருளுமில்லை. நம்முடைய மானிட உடம்பில்கூட 70 சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது. இந்தத் தண்ணீர் உயிர்நிலை வாழ்வுக்கு இன்றியமையாதது. அது மட்டுமல்ல. பூமண்டலத்தில் தட்பவெப்ப நிலைகளைப் பாதுகாக்கவும் தண்ணீர் பயன்படுகிறது. தண்ணீர் உணவாகவும், பிற உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் சாதனமாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் அழுக்குகளை நீக்கித் தூய்மை செய்வதற்குத் தண்ணிரே பயன்படுகிறது. இந்த உலகம் தண்ணீர் மயம்.

"நீரின்றமையாது உலகு" - என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் கூறியதை உற்று நோக்குக. ஒழுக்க நெறி நிற்பதற்கு ஏற்ற உடல் நலம் தேவை. உடல்நலம் பாதுகாப்பதற்குத் தட்ப வெப்பச் சூழ்நிலை தேவை. உடலின் கருவிகளைச் சீராக இயக்க நல்ல சமவிகித உணவு தேவை. இவ்வளவும் அமைந்தால்தான் ஒழுக்கமுள்ள ஒரு சமுதாயம் அமையும். இந்த ஒப்பற்ற சமுதாய அமைப்புக்கு அடிப்படையாக அமைவது மழையேயாம். அதனால் "வானின்று அமையாது ஒழுக்கு" என்றார் திருவள்ளுவர்.

நிலம் பசுமை போர்த்ததாக இருக்க வேண்டும். அங்ஙணம் நிலம் பசுமை தாங்கி விளங்குவது நிலத்திற்கும் நல்லது; உயிர்க் குலத்திற்கும் நல்லது. நிலமகள் பசுமைக் கோலம் பூண்டு விளங்க வேண்டுமானால் வான் நின்று மழை பொழிய வேண்டும். வான் நின்று மழை பொழியத் தவறி விடுமாயின் நிலத்தில் பசிய புல்லின் தலையைக் கூடக் காணல் அரிது என்கிறது வள்ளுவம். வளர்ந்த புல் அல்ல, முளைத்தெழும்புல் என்பதை "பசும்புல் தலை" என்றார் திருவள்ளுவர். வான் நின்று மழை பொழியத் தவறினால் நிலத்தில் பசும்புல் தலை இல்லை! ஏன்?

நிலத்தின் மேற்பரப்பிலுள்ள மண் நிலத்திற்கு இன்றியமையாதது. இந்த மேற்பரப்பு மண் தோன்றப் பல்லாயிரம் ஆண்டுகளாகின்றன. இந்த மண் காற்றினால் தூசியாகப் பறந்து போய்விடாமல் நிலத்தின் மேலேயே மழைத்துளிகளால் நனைக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது. நிலத்தின் மேலுள்ள மணற்பரப்பு மண்ணின் வளத்திற்கு உயிர் நிலையாகும். இந்த மண் பரப்பைக் காப்பது நமது கடமை.

காற்றினாலோ, தன் போக்கில் தண்ணிர் வேகமாக - ஓடுவதாலோ, கால் நடைகள் கண்டபடி மேய்வதாலோ, நிலத்தின் மேற்பரப்பு சமமாக இல்லாமல் மிக அதிகமான மேடு பள்ளமாக இருப்பதாலோ இந்த மேல் மண் பரப்பு அழிகிறது. இதை வேளாண்மைத் துறை விஞ்ஞானிகள் மண்ணிரிப்பு என்பர். இந்த மண்ணரிப்பு வராமல் நிலத்தைப் பாதுகாப்பதற்கு மழை இன்றியமையாதது.

"விசும்பின் துளிவிழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண் பரிது"

(16)

என்ற திருக்குறளைத் திரும்பத் திரும்ப படித்திடுக!

ஆதலால், தண்ணீரின் இன்றியமையாத் தன்மையை உணர்க! நமது நாட்டு வாழ்வியலில் தண்ணீரின் அருமை பலருக்குத் தெரிவதில்லை. நெறிமுறையின்றித் தாராளமாகச் செலவு செய்பவர்களை "தண்ணீர் மாதிரி செலவு செய்கிறார்கள்" என்று சொல்வதுண்டு. ஆனால் உலக வாழ்க்கையில் தண்ணீர் இன்னும் பற்றாக்குறையென்பதைப் மறந்து விடக்கூடாது. ஆதலால், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

தண்ணீருக்குக் காரணமாக இருக்கிற வான் மழையைப் பெறுவதற்கு முதல் துணையாக இருக்கிற நீர் நிலைகளைப் பேணி, நீரைத் தேக்கி வைக்க வேண்டும். நீர்த்திவலைகள் நிறைந்த மேகத்தை மழையாக மாற்றித் தரும் ஈரப்பதக் காற்றைப் பராமரித்து வரவேண்டும். இதற்கு நிறைய மரங்களை வளர்க்க வேண்டும். வீட்டிற்கு ஒருமரம் என்ற செயற்பாடு போதாது. வாழும் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு ஒரு மரம் என்ற நியதியை ஏற்றுக்கொண்டு மரம் வளர்க்க வேண்டும். மா மழை வழங்கும் தண்ணீரே இந்த உலகம், இளங்கோவடிகளும்

"மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்று வாழ்த்தினார்.

2. நீத்தார் பெருமை

மனம், மொழி, மெய்களால் தீண்ட முடியாத கடவுளுக்கு முதலில் கடவுள் வாழ்த்து! அடுத்து, அந்த ஒப்பற்ற இறைவனை நினைவிற் கொண்டுவரும் வான் மழை; வான்மழையின் உண்மை உய்த்துணர்வாருக்கே புலப்படும்; அங்ஙனம் உணரமாட்டாதவர்களுக்கு உரைகளால் உணர்த்தும் பெரியோர் தேவை! யார் நம்மைத் தமது உரைகளால் உயர் நெறியில் உய்த்துச் செலுத்த இயலும்! அத்தகு பெரியோரை இனங்காட்டும் அதிகாரமே, நீத்தார் பெருமை அதிகாரம்

பற்றுக்களினின்று முற்றாக விடுதலை பெற்றவர்கள் நீத்தார் ஆவர். ஆம்! தற்சார்பான பற்றுக்களிலிருந்து விடுதலை பெற்றவர்கள்! மானுட உலகம் இன்று துன்ப வெள்ளத்தில் அமிழ்ந்து கிடப்பதற்குக் காரணம் ஆசைகளே யாம். இயல்பாக உயிரினம்-குறிப்பாக மனித இனம் தற்சார்பு நிலையிலே மையம் கொள்ளும். அதன் காரணமாகவே வேலிகள், சட்டங்கள், அரசாட்சிகள், சிறைக் கூடங்கள் மானுட வாழ்க்கையில் இடம் பெறலாயின.

இன்று மனிதன் களிப்பை-அமைதியைத் துய்ப்பதில் வெற்றி கண்டானில்லை. மாறாக அமைதியின்மை, துக்கம் இவைகளையே அனுபவிக்கிறான். இந்த அவலம் ஏன்? உலகந் தழீஇய ஒட்பத்திற்கே விரிவு உண்டு, ஊக்கம் உண்டு. இந்த ஒட்பம்-அறிவு தனக்குரிய இயலாமையைப் பற்றி மட்டும் கவலைப்படுவதில்லை; அலட்டிக் கொள்வதில்லை.

மானிட உலகத்தின் தேவைகள் நிறைவேறாமல் நமது தேவை மட்டுமே நிறைவேறும்பொழுதுதான் தீமைகள் கால் கொள்கின்றன. கடைசியில் இவன் தேவையும் நிறைவேறுவதில்லை; ஒரோவழி நிறைவேறினாலும் துய்க்க இயல்வதில்லை. ஒரே ஒரு மாமிசத்துண்டு. இவற்றிற்குக் காத்திருக்கும் பருந்துகளின் எண்ணிக்கையோ மிகுதி. என்ன ஆகும்?

உலகம் இல்லாமையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதே சிறந்த கொள்கை-கோட்பாடு. உல்கத்தை-இந்த உலகத்தின் இயக்க அமைதிகளை அறிந்து கொண்டு இந்த உலக அமைதிகளுக்கு ஏற்றவாறு-இசைந்தவாறு ஒழுகும் உரம் நம்மிடத்தில்லை.

"சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு"

(27)

என்பது திருக்குறள்.

மானுட உடலமைப்பில் பொறிகள் ஐந்து. இவை முறையே மெய், வாய், கண், மூக்கு, செவி என்பனவாம். இவை அறிவுக் கருவிகள்; நுகர்தலுக்கு-அனுபவித்தலுக்கு உரிய கருவிகள். இவற்றை அறிவுக் கருவிகள் என்று கூறினாலும் இவை முழுமையான அறிவுக்கருவிகள் அல்ல. இவற்றை அறிவு வாயில்கள்-என்று கூறுவதே பொருந்தும். இந்தப் பொறிகளின் இயக்கத்தை அறிவார்ந்தனவாக ஆக்குபவை புலன்களேயாகும். இவை அகநிலைக் கருவிகள். புலன்களின் தகுதிப்பாடே, பொறிகளின் தகுதிப்பாட்டிற்கு அடிப்படை.

இன்று பெரும்பாலும் புலன்கள் செயலற்றுப்போய்ப் பொறிகளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றன. எதுபோல வெனில், எல்லா அதிகாரங்களையும் தமக்கே உடையராகப் பெற்றிருக்கும் மக்கள்-வாக்காளர்கள் அரசியல்வாதிக்கு அடிமைப்பட்டுக் கிடத்தல் போல! புலன்களை நெறிப் படுத்தும் இயல்பு-புலன்களின் நுகர்வுக்கு அனுபவத்திற்குரிய பொருள்களைப் பொறுத்தது.

புலன்களின் அனுபவத்திற்குரிய சுவை-ஒளி-ஊறுஒசை-நாற்றம் ஆகியவற்றின் இயல்புணர்ந்தோர் அவற்றை முறைப்படுத்திக் கொள்வன கொள்வர். இவர் உயர் அறிவினர்! இவைகளுக்கும் மூலகாரணமாக விளங்கும் பூத பெளதிகம் அறிந்து-அவற்றின் இயக்கத்துக்கு மாறுபடாமலும், முற்றாக உடன்படாமலும் தக்காங்கு ஒத்திசைந்து வாழ்தலே வாழ்க்கை! சிறப்புடைய வாழ்க்கை! இத்தகை யாரே நீத்தார்!

புலன்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தால் பொறிகள் மிகவும் ஒழுங்கும், ஒழுக்கமும் உடையனவாக அமையும். புலன்களுக்கு அழுக்கினைச் சேர்க்கும் பொறிகளைப் பக்குவப்படுத்த வேண்டும்.

"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்"

(6)

"அவித்தல்" என்றால் அழித்தல்-அடக்குதல் என்று பொருள் கொள்ளுதல் முறையன்று. அவித்தல் - பக்குவப்படுத்துதல். உண்ண முடியாத கிழங்கு முதலியவைகளை அவித்துப் பக்குவப்படுத்துதலைப்போல என்று அறிக. பொறிகள் தற்சார்பாக இயங்காமல் ஊர் உலகு என்று பொதுமையில் இயங்கினால் தூய்மையுறும்; பக்குவம் அடையும்; புலன்களும் தூய்மையாக இருக்கும்.

பற்றற்ற நிலை என்ற ஒரு சூன்ய நிலை-வாழ்க்கையில் இல்லை. பற்று இல்லாமல் இருக்கமுடியாது. பற்று எதன்மீது வைக்கிறோம் என்பதைப் பொருத்தே சீலம் அமைகிறது; நீத்தாருக்குரிய இயல்பு வந்தமைகிறது. தன்மீதும் தனக்குரிய தேவைகள் மீதும் பற்று வைப்பதற்குப் பதில், மற்றவர்களின் இன்பங்களை நாடும்பொழுது நீத்தார் தன்மை வந்தமைகிறது.

இத்தகு நீத்தார்க்குத் தற்சார்பின்மையால் விருப்பு வெறுப்புக்கள் இல்லை. விருப்பு வெறுப்பு இன்மையால் சார்பு இல்லை. சார்பு இன்மையால் சமநிலை! சார்பு இல்லையேல் நன்மையும் தீமையும் இல்லை. இத்தகையோரே அறம் இன்னதென நமக்கு உணர்த்தவும் முடியும். இத்தகு நீத்தார் பலர் இன்று தேவை.

3. அறன் வலியுறுத்தல்

இந்த உலக இயக்கம் குறிக்கோளுடையது. குறிக்கோள் இலாது இயங்கும் எதுவும் இல்லை. மானுட வாழ்க்கையும் குறிக்கோளுடையது. மானுடத்தின் குறிக்கோள் என்ன? வாழும் உயிரினம் அனைத்திற்கும் தலைமை தாங்குவது மானிடமே! மானுட வாழ்வைச் சார்ந்துதான் மற்ற உயிர்கள் வளர்கின்றன; வாழ்கின்றன. நிலம் முதலிய ஐம்பூதங்களும் கூட மானுடத்தின் மூலமே பயன்பாடுறுகின்றன. ஆதலால் மானுட வாழ்க்கை அருமையானது. மிக மிக உயர் குறிக்கோளுடையது.

மானுடத்தின் குறிக்கோள் அறம். அறம், செய்தலன்று; வாழ்தல். அறமே வாழ்வு; வாழ்வே அறம்! மனம், புத்தி சித்தம் ஆகிய அகநிலை உறுப்புக்களை அன்பில் தோயச் செய்து யார் மாட்டும் அன்புடையராக வாழ்தல் அறம். அறத்திற்குப் பகை, பகையேயாம். அதனாலன்றோ இறைவன் திருமேனியில் மாறுபட்டவைகள் பகை நீங்கி அணிகளாகத் திகழ்கின்றன. அறத்தில் சிறந்தது மனத்தில் மாசின்றி இருத்தல். மனத்திற்கு மாசு இயற்கையன்று. மனத்திற்கு மாசு கொள்முதலேயாம்.

நமது பொறிகள்-மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன தகவலைச் சேகரிக்கும் கருவிகள்-ஆன்மாவிற்குத் தகவலைத் தரும் கருவிகள். இந்தக் கருவிகள் அறியும் தன்மையுடையன. ஆனால், அறிவுடையன அல்ல. இந்தப் பொறிகள் ஆன்மாவின் அறிவோடும் புலன்களோடும் தொடர்பு கொண்டு இயங்கின் மனத்திற்குத் தீங்கு வாரா! மாசும் வாரா! .

ஆனால் பொறிகள் தன்னிச்சைப் போக்குடையன; விரைவுத் தன்மையுடையன. எல்லா இடங்களுக்கும் வரையளவுமின்றி, நெறிமுறையின்றிச் செல்லும் தன்மையன. இந்தப் பொறிகள் வாயிலாகவே மனத்திற்கு மாசு வந்தடைகிறது. ஆதலால் பொறிகள் மீது நமக்கு மேலாண்மை தனியரசாணை செலுத்த உறுதிவேண்டும். ஆக மனத்துக்கண் மாசிலராக வாழ்தல் அற வாழ்க்கை.

எந்த ஒரு நன்மைக்கும் களம் துரய்மையாக வேண்டும். அதுபோல வாழ்க்கையெனும் களத்தில் ஆடச் செய்ய அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகிய களைகள் அகற்றப்படுதல் வேண்டும். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகியன அன்பின்மையால் வருவன. மற்றவர் வாழ்தலில் நமக்கு ஆர்வமும், மன நிறைவும் மகிழ்ச்சியும் கொள்ளப் பழகினாலேயே இத் தீமைகள் அகலும். இதற்குப் பெயர்தான் அன்பு.

அறத்தின் பெயர் இன்பம். அறத்தின் பயன் அமைதி, அறத்தின் பயன் ஒருமைப்பாடு. அறத்தின் பயன் எல்லாரும் வாழ்தல்-நன்றாக வாழ்தல், இதுவே நியதி.

அறத்தின் பயன் செல்வம், சிவிகையூர்தல் என்று சொல்லப்படுவது உண்மைக்குப் புறம்பானவை. இக்கருத்துக்கள் வல்லாண்மையில் வாழ்வாருக்குத் தாளம் போடும் கருத்துக்கள்!

கடவுள், மழை, நீத்தார் ஆகியன பயன்பாடுடையன என்று நிரூபணம் செய்வதே அறம்தான். அறநெறி நிற்போம். அறநெறிச் சிந்தனையில் தோய்வோம். அறநெறி சார்ந்த அறிவினைப் பெறுவோம். அறநெறி சான்ற மனத்தினையே பெற்றுயர்வோம்! அதனாலேயே அறன் வலியுறுத்தப்படுகிறது.

4. வாழ்வாங்கு வாழ்வோம்!

வாழ்தல், அறிவியல் சார்ந்த ஒரு கலை, உளவியல், சமூகவியல், தாவரவியல், வேளாண்மையியல், கால்நடையியல், கட்டுமானவியல், தொழிலியல், பொருளியல், நிர்வாகவியல் ஆகிய அறிவியல் துறைகள் அனைத்தும் சங்கமித்த தனிச்சிறப்புடைய வாழ்க்கையே வாழ்க்கை! மானிட வாழ்வியல், விலங்குத் தன்மையுடையதல்ல.

மனிதன், மிருகமும் அல்லன்; மனிதனும் அல்ல. விலங்குத் தன்மையிலிருந்து விலகி மனிதத் தன்மையை அடையக்கூடிய படைப்பு! மனிதனாகிய பிறகு, அதி மானுடத் தன்மை அதாவது இறைமைத் தன்மை அடைய வேண்டிய படைப்பு! இந்தப் பரிணாம வளர்ச்சி, முறையாக நிகழ்ந்து நிறைவெய்துதலே வாழ்க்கையின் குறிக்கோள்; பயன்! இத்தகு மாற்றங்களும் வளர்ச்சியும் நிகழாத வாழ்க்கை, வாழ்க்கையாகாது. "வாழ்கின்றாய்! வாழாத நெஞ்சமே!” என்பது திருவாசகம்.

வாழ்க்கை என்பது தற்செயலாக ஏற்பட்டதல்ல. வாழ்வியல் திட்டமிட்டதே! அற்புதமான ஒழுங்கமைவுகளுடன் அமைந்ததேயாம். ஆதலால் சிறந்த முறையில் வாழ

தி. 3. முயற்சி செய்வதும் ஒருவகை அறிவியல் முயற்சியேயாகும். ஏன்? சீராக வாழ்ந்து-வாழ்ந்த காலத்திற்கும் தலைமுறைக்கும் ஏற்றம் தரும் வகையில் வாழ்ந்து முடித்தால், அஃது ஒர் அறிவியற்சாதனை என்று கூடப் பாராட்டலாம்.

வாழ்க்கையென்பது பல்வேறு பொறிகளைக் கொண்ட, புலன்களால் அமைந்த உடலைக் கருவியாக்கிக் கொண்டு வாழப்பெறுகிறது; இயக்கப் பெறுகிறது. உடம்பின் இயக்க ஆற்றலின் பாதுகாப்பு வாழ்க்கைக்கு இன்றியமையாதது. இந்த உடம்பின் அனைத்துப் பொறிகளையும் புலன்களையும் சிறப்புற இயக்கிப் பயன் கொள்வதன் மூலம் வாழ்க்கை பயனுடையதாகிறது; முழுமையாகிறது.

இத்தகைய முழு வாழ்க்கைக்குத் தொடக்கம் இல் வாழ்க்கை, காதல் ஒருத்தியுடன் கூடி வாழ்க்கையை நடத்துதல் என்பது, ஒரு கூட்டு வாழ்க்கை. இந்த வாழ்க்கையின் மூலம் தென்புலத்தார் பேணப்படுகின்றனர்; தெய்வம் பூசிக்கப் பெறுகிறது; விருந்தோம்பும் வேளாண்மை நிகழ்கிறது; துறந்தவர்களுக்குத் துய்ப்பனவும் உய்ப்பனவும் வழங்கப் பெறுகின்றன.

துய்த்து மகிழும் வாய்ப்பிழந்தார்க்கெல்லாம் துய்ப்பன வழங்கப் பெறுகின்றன. இரந்தாருக்கும், இறந்தாருக்கும் ஏற்ப உதவிகள் செய்யப் பெறுகின்றன. தனி மனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையாக சமூக வாழ்க்கையாக, நாட்டு வாழ்க்கையாக வளர்கிறது! இதுவே வாழ்க்கையின் பரிணாம வளர்ச்சி! இங்ஙனம் வாழ்தலே வாழ்க்கை!

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்”

(50)

வானத்திற்கு என்று ஒரு தனிவாழ்க்கை முறை இல்லை. இந்த வையகத்தில் வாழ்க்கையைச் சிறப்புடன் நடத்துபவர்களை நோக்கி வானகம் வந்துவிடும். வானத்தை இந்த மண்ணிலேயே காணலாம். இங்கேயே - இந்த மண்ணுலகிலேயே அமர வாழ்வு வாழலாம். வாழ்வாங்கு வாழ்தல் மூலம் மட்டுமே அமரவாழ்வு கிட்டும்! அறிவியல் சார்ந்த வாழ்க்கை வாழ்வோமாக! அறிவறிந்த ஆழ்வினை இயற்றுவோமாக! பொருள்களைச் செய்து குவித்து இன்பத்துடன் வாழ்வோமாக!

5. வாழ்க்கைத் துணை நலம்

வாழ்க்கை ஒரு நெடிய பயணம். இந்த நெடிய பயணத்தைத் தனியே நடந்து இனிதே முடித்தல் இயலாது. வழிநடைப் பயணத்துக்குத் துணை தேவை. ஆன்ம முதிர்ச்சியுடையவர்கள் கடவுளை மட்டுமே துணையாகக் கொள்வர். கடவுளை வழித்துணையாகக் கொள்ளுதலுக்கு, துறவியல் வாழ்க்கை-இல்லறவியல் வாழ்க்கை என்ற வேறுபாடு இல்லை. இவ்விரு வகையினருமே கடவுளை வாழ்க்கைத் துணைவராகக் கொண்டு பயன் பெற்றுள்ளனர்.

சுந்தரர் இல்லறத்தில் நின்று வளர்ந்தவர். ஆயினும் அவர் இறைவனையே துணையாகப்பற்றியவர். இறைவன்-சுந்தரர் தொடர்பு தோழமை வகையது. இந்த நெறி எல்லோருக்கும் இயன்று வராது.

பொதுவாக மானிட வாழ்வியலில் தேக்கம் அதிகம்; நாள்தோறும் வளர்ச்சி காண்பதரிது. நுகர்தலில் கூட ஒன்றிலேயே கழித்து மையமிட்டு நின்றுவிடுவார்கள் பலர். அதனினும் வளர்ந்து நுகர்தல் பாங்கும் இன்புறு திறனும் அடைவதில்லை ஏன்? நிறை நலமே வாழ்க்கையின் குறிக்கோள் என்று உணர்வதில்லை. "கண்டதே காட்சி! கொண்டதே கோலம்" என்ற பழமொழி இந்தச் சூழ்நிலையில் தான் பிறந்தது.

வள்ளுவம்; மனிதனின் நெடிய வாழ்க்கைப் பயணத்திற்குத் துணையாக - இல்லை, துணை நலமாகவே பெண்ணைக் கூறுகிறது. சிலர் பெண்ணைப் "பேய்" என்றும் "காதல், ஆண்டவனின் சாபம்” என்றும் கூறுவர். இல்லற வாழ்க்கையையும் துன்பம் நிறைந்த கடல் என்றும் கூறுவர். இயற்கைக்கு மாறான இந்தக் கருத்துக்களை வள்ளுவம் ஏற்பதில்லை; இந்திய தத்துவ ஞானமும் ஏற்பதில்லை. மனையறத்தைத் துறத்தல் என்ற கொள்கை, பெண்ணின்பால் ஏற்பட்ட வெறுப்பால் தோன்றியதன்று. தமது ஆற்றலை ஒரு சிறு எல்லைக்குள் முடக்கிக் கொள்ளாமல் பெரிய எல்லையில் வாழ்ந்திட எடுத்துக் கொண்ட உத்தி. ஒரு சிலர் மனையறத்தில் வாழ்ந்தாலும் சமுதாய வாழ்வின் எல்லை வரையிலும் சென்று பணிகள் செய்துள்ளனர். இஃது அவரவர்களின் மனப்பாங்கினையும் வளர்ச்சிப் போக்கினையும் ஒட்டியது.

ஆனால், வாய்க்கும் காதலி, வாழ்க்கைத் துணை நலமாக அமைய வேண்டுமே! ஒவ்வொரு பெரிய மனிதனின் வாழ்க்கையின் பின்னாலும் அந்தப் பெரிய மனிதனை உருவாக்கிய பெண் இருப்பாள் என்பது ஒர் அனுபவவாக்கு. மாமுனிவர் மார்க்சுக்கு வாய்த்த மனைவி ஜென்னியைப் போல உலகில் வாழ்க்கைத் துணை வாய்க்கப் பெற்றவர்கள் எண்ணிக்கையில் பலர் அல்லர். இது மறுக்கமுடியாத உண்மை.

ஒருவர் வாழ்க்கையில் - ஒருவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, தோழமையாக இருந்து உதவி செய்வது எளிதன்று. அதற்கு நிறையப் பயிற்சி தேவை; பொறுத்தாற்றும் பண்பு தேவை. குறை, குணங்களைக் கடந்து அன்பு பாராட்டல் வேண்டும். அது உயிர்த்துடிப்புள்ளதாக அதாவது வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் உந்து சக்தியை வழங்குவதாக அமைய வேண்டும்.

ஒரு பெண் தன் துணைவருக்கு-பரிவிலும் உணவளிப்பதிலும் தாயாகவும், தக்க ஆலோசனைகள் கூறி வழி நடத்துவதில் தமக்கையாகவும், குறை குணங்களைக் கடந்த நிலையில் அன்பு பாராட்டி எடுக்கும் காரியம் யாவினும் கை கொடுத்து நிற்பதில் தோழியாகவும், உடல் நலம் கருதிப் பேணுவதில் மருத்துவச்சியாகவும் காதலின்பத்தை அளிப்பதில் மனைவியாகவும், இடையூறு உண்டான நேரத்தில் தக்க நெறிமுறைகள் காட்டுவதில் அமைச்சராகவும் விளங்க வேண்டும் என்று ஆன்றோர் கூறுவர். இந்தக் கருத்தை வள்ளுவம்,

"தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்”

(56)

என்று மொழிகிறது.

ஒரு பெண்ணுக்குரிய முதற்கடமை தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுதல்! ஆம்; கணவனுக்குப் பின் வாழ்க்கைத் துணையல்ல. வாழ்க்கைத் துணை நலமே முதலிடம் வகிக்கிறது. அதாவது பொறுப்புக்களை எடுத்து நிறைவேற்றுவோர் நலமுடன் இருந்தால்தான் தாம் துணை நிற்பாருக்கு உரிய நலன்களைச் செய்யமுடியும், அது மட்டுமல்ல. கற்பு, அன்பு, ஒழுக்கம் ஆகியன உடற் சார்புடையன மட்டுமல்ல; உயிர்ச் சார்புடைய பண்புகள். இவற்றில் தடுமாற்றம் வருதல் கூடாது. அதனால் ‘தற்காத்து' என்றது குறள்.

அடுத்து ‘தற்கொண்டாற் பேணுதல்’ ஆதலால் தலைமகனுடைய ஒழுக்கத்திற்கும் செயல் திறனுக்கும் பெண்ணே பொறுப்பேற்க வேண்டும் என்பது வள்ளுவத்தின் திரண்ட கருத்தாகும்.

அடுத்து வாழ்க்கையின் குறிக்கோள் புகழ் பெறுதலாகும். புகழ் வேறு விளம்பரம் வேறு. விளம்பரம் வேண்டுவதன்று; புகழே வேண்டற்பாலது. அஃதாவது மற்றவர்கள் பாராட்டும் சொற்களைப் பெறுவது. பெற்ற சொற்களைப் பாதுகாப்பது; மற்றவர்கள் பழி தூற்றாமல் பார்த்துக் கொள்வது: குடும்பத்தின் செய்திகள் அயலறறியா வண்ணம் பாதுகாப்பது, கண்ணகி ‘பீடன்று’ என்று கூறிய நெறியைப் போற்றி வாழ்வது ஆகும். இத்தகு நலன்களை யுடைய வாழ்க்கைத்துணை நலம் அமையின் இன்புற்று வாழலாம்.

இத்தகு நலன்கள் பெண்ணினித்திற்கு அமைய வேண்டுமாயின் அவர்கள் கல்வி நலத்தில் சிறந்து விளங்க வேண்டும். உறுதியும் உத்தரவாதமும் உடைய வாழ்நிலை அவர்களுக்கு வழங்கப்பெறுதல் வேண்டும்.

6. அறிவறிந்த மக்கட்பேறு

மங்கலமாகியது இல்லற வாழ்க்கை. சிறந்த இல்லற வாழ்க்கையின் பயன் மக்கட்பேறு. இதனைத் திருக்குறள்,

"பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற"

(61)

என்று எடுத்துக்கூறி விளக்குகிறது. இந்த உலகில் பல்வேறு பேறுகள் உள்ளன. அவற்றுள் சில பொன், பொருள், போகம், புகழ், மக்கட்பேறு முதலியன. இவை யாவற்றுள்ளும் சிறந்தது மக்கட்பேறு. ஏன்? முன்னே சொன்ன பொன், பொருள், போகம், புகழ் ஆகியவற்றுள் ஒன்றைப் பெற்றாலும் சரி. பலவற்றைப் பெற்றாலும் சரி வாழ்க்கையும் முழுமை ஆகாது; அதோடு மானுட இயக்கத்தின் தொடர்ச்சிக்கு அரண் செய்வதாகவும் ஆகாது.

ஆதலால் இல்வாழ்வார் பெறக்கூடிய பேறுகளுள் தலையாயது மக்கட்பேறேயாம். மானுட இயக்கத்தின் வளர்ச்சிக்கும் ஆக்கத்திற்கும் துணை செய்வது மக்கட் பேறே. அதோடு தத்துவ இயல்வழி ஒரு உயிர் மானுடப் பிறப்பு எய்தினால்தான் அமரநிலை எய்துகிறது. அதனாலேயே "பெறுமவற்றுள் யாமறிவதில்லை" என்று தெளிவாகவும் உறுதியாகவும் கூறுகிறார் திருவள்ளுவர்.

"அறிவறிந்த மக்கட் பேறல்ல பிற" என்ற பகுதி, கவனமாகப் படிக்க வேண்டிய பகுதி. இந்தப் பகுதிக்கு உரை ஆசிரியர்கள் எழுதியுள்ள உரைகள் அறிவுக்கு இசைந்தனவாக இல்லை. ‘அறிவறிந்த’ என்றதனால் இறந்த காலமாகிறது. எப்படி ஒரு மகன் அல்லது மகள் பிறக்கும் பொழுதே அறிவு அறிந்த குழந்தையாக இருக்க இயலும்? முடியும்?

அப்படியானால் 'அறிவறிந்த' என்ற சொல்லை யாருக்கு அடையாகச் சேர்ப்பது? அறிவறிந்த பெற்றோர்களா? அறிவறிந்த மக்களா? பெற்றோர்களுக்குத்தான் 'அறிவறிந்த’ என்ற சொல்லை அடையாக்க வேண்டும். அறிவறிந்த பெற்றோர்களுக்கு அறிவறிந்த மக்கள் கிடைப்பார்கள். ஆம்! காதல் தூய்மையானது; அறிவார்ந்தது; உறவின் வழியது; தன்னல மறுப்புப் பண்பின் வழியது. காதல் மனை யறம் ஒரு நோன்பு. இந்த நோன்பினை அறிவார்ந்த நிலையில் இயற்றுநர் காதல் வாழ்வில் சிறக்கின்றனர். இத்தகையோரே நன்மக்களைப் பெறுகின்றனர். பெற்ற வண்ணம் வளர்த்து, உயர் நிலைக்குக் கொண்டு வருகின்றனர்.

ஆதலால் நன்மக்களை விரும்பும் பெற்றோர் "அறிவறிந்தவர்களாக” இருத்தல் வேண்டும்; வீட்டைப் பல்கலைக் கழகமாக்குபவர்களாய் இருத்தல் வேண்டும். கருவுற்ற காலம் முதல் பிறந்து வளர்ந்து தன் நிலை எய்தும் காலம் வரையில் பொறுப்போடு வளர்ப்பவர்கள் அறிந்த பெற்றோர்களாவர்.

அண்ணல் காந்தியடிகள், "சிறப்புப் பொருந்திய வீட்டுக்கு இணையான பல்கலைக்கழகம் இல்லை" என்று கூறியதை எண்ணுக. நல்ல பெற்றோர்களே குழந்தைகளுக்கு நல்ல ஆசிரியர்கள். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆதம்ஸ், தன்னுடைய கடவுள் பக்தி-அறநெறிப் பற்று அனைத்துக்கும் தன்னுடைய தாயே காரணம், என்று கூறுகின்றார். மக்களாவதும் - மாக்களாவதும் பெற்றோர்களின் பொறுப் பேயாம்.

ஆதலால், மனையறம் வாழ்வோர்-மகப்பேற்றுக்குரிய வாழ்வு வாழ்வோர் வாழ்வாங்கு வாழ வேண்டும். அறிவறிந்த பெற்றோர்களே அறிவறிந்த மக்களைத் தருகின்றனர் என்பதே வள்ளுவம்.

7. வளரும் தலைமுறை

வரலாற்று ஆசிரியன் சென்ற காலத் தலைமுறைகளை விவரித்துப் பேசுவான். ஆனால் இலக்கியப் படைப்பாளன் எதிர்வரும் தலைமுறையினரைப் பற்றிச் சிந்திப்பான்; எழுதுவான். எப்போதும் அறிஞர்களுடைய கவலை அடுத்த தலைமுறையைப் பற்றியதாகவே அமையும். திருக்குறள் ஒரு முழுதுறழ் இலக்கியம்; அறநூல்; வாழ்க்கை நூல். ஆதலால் திருக்குறள் எதிர்காலத் தலைமுறையினரைப் பற்றிப் பேசுவது வியப்பல்ல. அதுமட்டுமல்ல இன்று வாழ்பவர்களுக்கு எதிர் காலத்தைச் சிறப்புற அமையச் செய்யவேண்டிய பொறுப்பை ஏற்கும்படி வலியுறுத்துகிறது.

இன்று வாழ்வோரின் கடமை, இவர்கள் வாழ்ந்து முடிப்பது மட்டுமல்ல; அடுத்து வரும் தலைமுறையினர் சிறப்போடு வாழ்தலுக்குரிய சூழலை உருவாக்கித் தர வேண்டும் என்பது திருக்குறளின் கருத்து; முடிவும்கூட மனையற வாழ்க்கையின் மாண்பு, காதல் சிறப்பில் இல்லை; சுவைமிக்க உணவில் இல்லை; செய்து குவித்த பொருளில் இல்லை. வேறு எதில்தான் இருக்கிறது மனையறத்தின் சிறப்பு? ஆம்! அறிவறிந்த மக்களைப் பெறுவதில்தான், மனையறத்தின் மாண்பு பொருந்தியிருக்கிறது.

"பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற"

(61)

என்பது திருக்குறள். 'அறிவறிந்த’ என்ற சொல்லை மக்களுடன் சேர்த்து அறிவறிந்த மக்கள் என்பார்கள் உரையாசிரியர்கள். அறிவு, கல்வி கேள்விகளாலும், வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையிலும் தோன்றுவது. ஆதலால் மக்கள் பிறந்து வளர்ந்த பிறகுதான் அறிவறிந்த மக்களாதல் இயலும். ஆதலால் அறிவறிந்த என்ற சொல்லை மக்களின் பெற்றோர்கள்பால் சேர்த்துக் கூறுவதே பொருத்தம். ஆம்! பெற்றோர்கள் காதல் மனையற வாழ்க்கையை அறிவறிந்த நிலையில் நடத்துதல் வேண்டும். காமக்களியாட்டமாக ஆகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அறிவார்ந்த நிலையில் அன்பும் அறமும் கலந்த; ஊனை, உயிரை, உணர்வினைக் கடந்த நிலையில் கூடுதல் நிகழுமாயின் அறிவறிந்த மக்கள் தோன்றுவர். பிறப்பில் கவனமாக இருந்தால் மட்டும் போதாது. அதைப் போலவே வளர்ப்பிலும் கவனமாக இருத்தல் வேண்டும். பொதுவாக நமது நாட்டில் கிராமப் புறங்களில் குழந்தைகள் வளர்க்கப்படுவதில்லை; அவர்களாகவே வளர்கிறார்கள். அதனால்தான் நமது சமுதாயத்தில் தரம் குறைந்திருக்கிறது. குடும்பம் மனையறத்தில் சிறந்து விளங்கினால் அக்குடும்பம் மனிதகுல வரலாற்றிலேயே இடம்பெறும். ஒருவர் தமது முன்னோரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ளுதல் வளர்ச்சியின்மையைக் குறிப்பதாகும். மாறாகத் தனக்குத்தானே அறிமுகமாக விளங்கி வாழ்பவர்கள், தமது குடும்பத்திற்கும் விளக்கம் தருகிறார்கள். இவரைப் பெறுவதற்கு இவருடைய தந்தையும், தாயும் என்ன தவம் செய்தனரோ என்று வியக்கும் அளவுக்கு வாழக்கூடிய தகுதி, திறன்களுடன் மகவை வளர்க்க வேண்டும். "நல்ல தாய், நல்ல தந்தை” என்று பெயர் விளங்க வாழ்தலே சிறப்புற அமைந்த மனையற வாழ்க்கை.

"மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்லென்னுஞ் சொல்"

(70)

8. அன்பு ஈனும் ஆர்வம்

மானிட வாழ்க்கை நலமாக, இன்பமாக இயங்க அன்பு தேவை. கடவுள் மனிதனுக்கு என்று தனியே அளித்தது அன்பு ஒன்றுதான். அன்பு, உள்ளங்களை இணைக்கும் - ஆற்றலுடையது. "ஆற்றல் மிக்க அன்பு” என்பார் அப்பரடிகள். இந்த அன்பு வளருந்தன்மையுடையது. அன்பின் உணர்ச்சிக்கு எல்லை கிடையாது; நிபந்தனை கிடையாது.

இந்த அன்பு தம்முடன் பழகுவோரின் இயல்புகளை அறிவது, அவர்தம் இயல்புக்கு ஏற்றவாறு தம் பழக்கங்களை, பழகும் நெறிமுறைகளை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்வதற்காக! தம்முடன் பழகுவோரின் விருப்பங்களை அறிந்து அவர்தம் பாங்குக்கு ஒத்துப் பழகினால்தான் அன்பு வளரும்; உறவு வளரும். "ஒத்தறிவான்' என்று திருக்குறள் கூறும். மற்றவர் தம்முடன் ஒத்துப்போக வேண்டும் என்றே பலர் விரும்புவர். இவர்களின் ஆன்மாவில் ஆன்மாவின் உயிர்ப்பாகிய அன்பு இல்லை.

ஆன்மா எப்போதும் மற்றவர்களை நோக்கியே விரியும். உடல் எப்போதும் சுயநலத்தையே நாடும். ஆன்மாவின் ஆதிக்கத்தில் உடல் இயங்கினால் அன்பு, உறவு, தியாகம் எல்லாம் இருக்கும். அப்படி இல்லாது உடலின் ஆதிக்கத்தில் ஆன்மா அடங்கிக் கிடந்தால் தன்னலம் மிக்கே விளங்கும்.

தூய அன்பு விரிவடையும், தம்முடன் பழகுவோரின் இயல்பறிந்து பங்கறிந்து பழகுந்திறனில் வளரும், அவர் தம் தேவையறிந்து உதவும், அவர்தம் வாழ்வுக்காகத் தன் வாழ்வு அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று கருதும். இந்த நிலை அன்புமுதிர்ந்து ஆர்வம் என்ற நிலைக்கு உயர்ந்த நிலை.

"அன்பினை எடுத்துக் காட்ட

அளவிலா ஆர்வம் பொங்கி"

என்பது சேக்கிழார் திருவாக்கு.

ஆர்வம் என்பது முறுகி வளர்வது. அன்பு, ஆர்வத்தைத் தருகிறது. ஆர்வம் நட்பைத் தருகிறது. அன்பு நிறைந்த பழக்கத்திலே தோன்றி ஆர்வத்தினால் வளர்க்கப்பெற்று நட்பு என்ற நிலையை அடைகிறது. நட்பு நிலைக்கு இணையான வாழ்க்கை நிலை-உறவு இந்த உலகிலும் இல்லை; வேறு எந்த உலகிலும் இல்லை.

நட்புக்கு மறுபெயர் தோழமை. நட்பு இதயத் துய்மையுடையது. நட்பு எல்லையற்றது; அழிவற்றது. அதனால் திருவள்ளுவர் "சிறப்பு” என்று சிறப்பித்துக் கூறுகிறார். "சிறப்பு” என்ற சொல் உயர்வற உயர்ந்த உயர் நலத்தைக் குறிப்பதாகும். அதுவும் எத்தகைய சிறப்பு? எளிதில் நாடிப் பெறுதலுக்கு இயலாத சிறப்பு!

"அன்புஈனும் ஆர்வ முடைமை அதுஈனும்

நண்பென்னும் நாடாச் சிறப்பு”

(74)

இத்திருக்குறள் உளவியல் வாய்ப்பாட்டில் அமைந்தது. உளதாகிய அன்பு வளரும். அன்பு வளர்ந்தால் ஆர்வம் என்ற உள்நெகிழ்வைத் தரும். ஆர்வம் தன்னை மறக்கச் செய்யும். பழகுவோரின் இயல்பறிந்து அவர் தம்முடன் விருப்பத்துடன் பழகி நட்பினை அடைய வளர்த்து உயர்த்தும்.

அன்புக்கும் நட்புக்கும் இடையில் இணையாக இருப்பது ஆர்வம். ஆர்வத்தினை உளவியலார் Aptitude என்பர். தமிழிலக்கியம், பாங்கு என்று கூறும்.

9. அன்பு செய்க!

இறைவன் உயிர்க்குலத்திற்குக் கொடுத்த ஒரே ஒரு வரம் அன்புதான். அன்பே உயிர்க்குலத்தின் வளர்ச்சிக்கு ஊற்று; அன்பே உயிர்க்குலத்தின் பாதுகாப்புக் கவசம், மானுடத்தில் உயிரியல் அடிப்பண்பு விரிந்து, வளர்ந்து வாழ்வது. விரிவன எல்லாம் வாழும். சுருங்குவன எல்லாம் அழியும்.

தன்னலம் ஆக்கம் போலத் தோன்றும். தன்னலம் இன்பம் போலத் தோன்றும். ஆனால் இதனிலும் துன்பம் மற்றொன்று இல்லை. ஆதலால் அன்புடையவராக விளங்க, காண்பவர்கள் அனைவரையும் நேசித்த பிறகு கடைசியாக நம்மை நேசித்துக் கொள்ள வேண்டும். அதுவும் வாழ்தலுக்காகவேயாம். அன்பு இல்லையேல் பிறதுறைகளில் பெற்றவை அதாவது அறிவு, யோகம் முதலியன கூட பயனற்றுப் போகின்றன.

அன்பு இயற்கையாக அமைந்த ஒரு நியதி. நல் வாழ்க்கையின் வரிச்சட்டம் தாவரங்கள், விலங்குகள் இந்த அன்பு என்ற அடிப்படைச் சட்டத்தினின்று விலக இயலாமை ஒரு காரணமாகவும் இருக்கலாம். ஆனால் மானுடசாதி அன்பு என்ற வரிச்சட்டத்திலிருந்து விலகிச் செல்கிறது. இது முற்றிலும் தவறு. பகுத்தறிவு நன்மையை வளர்க்கவே; தீமையை அகற்றவேயாம். மேலும் வாழ்க்கைப் போக்கை வளர்ப்பதற்கே பகுத்தறிவு. அணு ஆயுதங்களால் உலகை அழிப்பது எங்ஙணம் பகுத்தறிவு ஆகும்?

இன்று இயற்கை உலகம் விரிந்து கிடக்கிறது. மனிதன் படைத்துள்ள கருவிகள், விரிந்த உலகை இணைக்கின்றன. ஆனால் மனிதன் சுருங்குகிறான். தன் வீடு, தன் நாடு, தன் மொழி, தன் மதம் என்று சுருங்கி விடுகின்றான். அதன் காரணமாகக் கெட்ட போரிடும் உலகமே தோன்றியுள்ளது. கெட்ட போரிடும் உலகத்தை மாற்றி அமைத்திடுதல் வேண்டும்.

வீட்டிற்கும் வீட்டிற்கும் இடையே வைத்த சுவர்களை இடித்துவிட வேண்டும்; வீதிகளுக்கு இடையே உள்ள திரைகளை அகற்ற வேண்டும்; நாட்டுக்கும் நாட்டுக்கும் இடையே உள்ள எல்லைகளை அகற்றிவிட வேண்டும்; இவர் தேவர் அவர் தேவர் என்று சண்டை போடும் உலகத்தை அறவே தவிர்த்திடுதல் வேண்டும்; ஆன்ம நேய ஒருமைப் பாட்டைக் காணல் வேண்டும்; ஒரு குலமாக வேண்டும். இதற்கு அன்பு செய்தலே வழி! ஆதலால், வையத்தீர் அன்பு செய்வீர்!

கதிரொளி பரவுகிறது. காய்கிற கதிரொளியாக மாறுகிறது. குளிர்காய்தலுக்காக வெயிலில் படுத்திருந்த புழு, காய்கிற கதிரொளியால் சுடப்பட்டு இறந்து போகிறது: அழிந்து போகிற்து. வெயிலின் வெப்பத்தை தாங்கிக் கொள்ளும் ஆற்றல் புழுக்களுக்கு இல்லை. ஏன் எலும்பு இல்லாததால்! மனிதன், எலும்பு உள்ளவன்! அதிலும் முதுகெலும்பு உள்ளவன். வலிமையான படைப்பு. ஆயினும் ஏன்? அன்பில்லாத மனிதன் அழிவான்! அறக்கடவுள் அன்பில்லாத மனிதனைச் சுடும். வாழ்வு பாழாகும்!

"என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்”

(77)

இதனால் பெறப்படுவது, மானுடத்திற்கு உண்மையான வலிமை அன்பினால் மட்டுமே என்பது. அன்பில்லையேல் மானுடம் வாழ்தல் அரிது. ஆதலால் அன்பு செய்வீர்! அன்பே இந்த உலகத்தினை இன்ப உலகமாக்க உள்ள ஒரே வழி!

10. அன்பாற்றல்

அன்பு - இஃது ஒர் உயிர்ப் பண்பு; மனிதகுல வரலாற்றை உயிர்ப்புள்ளதாக்கும். பண்பு, தீமையைத் துடைத் தெறியும் ஆற்றல் மிக்க பண்பு; படைப்பாற்றல் மிக்க பண்பு. இந்த அன்பு தற்சார்பில்லாதது; முற்றாக அயலாரை நோக்கியே செல்லும் பண்பு. இத்தகு அன்பினை உயர் பண்பாகப் பெற்ற மனிதன் வளர்வான்; வாழ்வான். இத்தகு அன்பினை அறிவியற் பார்வையில் திருக்குறள் எடுத்துக் கூறுகிறது.

உயிர்க்குலத்தில் எலும்பு உடைய உயிர்களும் உண்டு; எலும்பு இல்லாத உயிர்களும் உண்டு. எலும்பு இல்லாதன புழு வகையின. கதிரொளியின் ஆற்றலைத் தாங்கும் ஆற்றல் எலும்புள்ள உயிரினங்களுக்கு மிகுதியும் உண்டு. ஒரோ வழி தாங்கிக்கொள்ள இயலாது போனாலும் ஓடிப்போய்ப் பிழைத்தல் இயலும். எலும்புகள் அமைந்த உடல்கள் விரைந்த இயக்கத்திற்குத் துணை செய்வன. எலும்பு இல்லாத புழுக்களுக்குக் கதிரவனின் வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் இல்லை; தப்பித்துச் செல்லவும் உடலமைப்பு இடம் தராது; ஊர்ந்தே செல்ல இயலும். அதனால் எலும்பு இல்லாதவை கதிரவன் வெப்பத்தினால் அழியும் என்பது அறிவியற் சார்ந்த கருத்து.

அதுபோல மானுட வாழ்விற்கு அன்புடையராதல், எலும்புபோல் வலிமையைத் தரும். அன்புடையோர் சமுதாயத்தில் நிகழும் முறைப் பிறழ்வுகளால் அழிந்துவிட மாட்டார்கள். தாங்கி வாழ்விப்பார்கள். தாமும் வாழ்வார்கள்.

கதிரொளியில்-வெப்பத்தில் மாற்றங்கள் இல்லை. கதிரொளி காய்வதில்லை. அதனைத் தாங்கும் ஆற்றலற்றவை அழிகின்றன. அதுபோலச் சமுதாய வரலாறு, ஒரு தன்மைக்காக இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்திற்கு அடிப்படை மானுடத்திற்குரிய அறமேயாகும். அன்பின் ஆற்றலுடையவர் வாழ்கின்றனர். அன்பாற்றலற்றவர்கள் அழிகின்றனர். "ஆற்றலுடைமையே வாழும்" என்பது ஒரு உண்மை.

ஆதலால், வாழும் மானுடத்திற்கு எலும்பனைய அன்பினை அனைவரும் போற்றுமின்!

"என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்"

(77)

11. மனிதகுல ஒருமைப்பாட்டுக்கு அடிப்படை

மனிதன் விரிந்த பரந்த உலகத்தோடு பழகும்பொழுது விரிவு அடைகிறான். சுருங்குவன எல்லாம் அழியும். விரிவன எல்லாம் வளரும். சுருங்குவன எல்லாம் ஆவது போல் காட்டி அழியும். விரிவன எல்லாம் அழிவதுபோல் காட்டி சால ஆக்கம் தரும்.

மனிதன் மானுடத்தின் பரப்பெல்லை முழுதும் உறவு கொண்டு பழகுதல் நல்லது; விரும்பத்தக்கது. இத்தகு விரிந்த பரந்த உறவுக்கு - நட்பாடலுக்கு நாட்டெல்லைகள், அரசியல் எல்லைகள் தடையாக இருத்தல் கூடாது. மொழிகளும், சமய நெறிகளும் துணையாகவே அமைவன; மொழியின் பெயரால், சமய நெறிகளின் பெயரால், மனிதன் சுருங்குவது அறம் அல்ல. அதுமட்டுமல்ல, மொழியின் குறிக்கோளுக்கும் மாறுபட்டது; சமய நெறிகளின் நோக்கத்திற்கும் முரண் பட்டது.

இத்தகு விரிந்த பரந்த உலகத் தொடர்பைக் கொள்வதற்கு விஞ்ஞான வளர்ச்சி மூலம் மனிதன் ஆர்வத்துடன் முயன்றிருக்கிறான். தொன்மைக் காலத்தில் யாத்திரை என்ற பெயரில் இந்த முயற்சி அமைந்திருந்தது. ஏசுவின் யாத்திரை, முகம்மது நபியவர்களின் யாத்திரை, ஆழ்வார்கள், நாயன்மார்களின் யாத்திரை, காந்தியடிகளின் யாத்திரை ஆகியன எடுத்துக்காட்டுக்கள். மிகப் பழங்காலத்தில் நாடு விட்டு நாடு யாத்திரை-பயணம் சென்றால் உணவு முதலியன கிடைப்பதற்கு வழியில்லை. திருக்கோயில் நாகரிகம் தலையெடுத்த பிறகு இப்படிப் பயணத்தில் வருவோருக்கு உணவளிக்கும் பொறுப்பைத் திருக்கோயில்கள் ஏற்றுக்கொண்டன.

இப்பொழுது எங்கும் உணவுச் சாலைகள் வணிகத் தொழில் அடிப்படையில் அமைந்துவிட்டன. ஆனால் விழுமிய பயனைத் தரவில்லை. மிகப்பழைய காலத்தில் வீடுகளில்தான், இத்தகு பயணிகளுக்கு உணவு வழங்கப் பெற்றது. வீடுகளில் உணவு வழங்கப் பெறுதலே சிறப்பு. இங்ஙனம் இல்லத்திற்கு வருபவர்கள் 'விருந்தினர்’ என்றழைக்கப் பெற்றனர்.

இன்றோ உறவினர்களும் சுற்றத்தினரும் விருந்தினர் என்று அழைக்கப்படுகின்றனர். இது முறையன்று. முன்பின் தெரியாத அறிமுகம் இல்லாத அயலாரே விருந்தினர் எனப்படுவர். இவர்கள் இல்லங்களில் வந்து தங்கிப் போவதினாலே மொழி, கலை வழிபட்ட உறவுகளும் வளரும்; தொழில், பொருள் வழிப்பட்ட உறவுகளும்கூட வளரும். இத்தகு பயணங்களைத்தான் இன்றைய அரசு, சுற்றுலாத் துறை என்று ஒரு துறை அமைத்து வளர்த்து வருகிறது. இத்துறை பல நாடுகளுக்கு அதிகப் பொருள் ஈட்டத்தையும் தருகிறது.

மனையறம் பேசும் திருவள்ளுவர் விருந்தோம்பல் என்ற நெறியையும் எடுத்துக் கூறுகிறார். விருந்தோம்பல் அதிகாரம் முழுமையும் படித்தால் விருந்தோம்பலினும் சிறந்த அறம் இல்லை என்று தெரிய வரும். அதுமட்டுமல்ல. தமிழகத்தின் இல்லங்களில் நாள்தோறும் விருந்தினர் வந்த வண்ணம் இருந்தனர் என்று தெரிய வருகிறது. இந்த விருந்தோம்பும் பண்பைத் தமிழர்கள் பேரறமாகப் போற்றி வளர்த்ததினாலேயே தமிழ்ப் பண்பு உலகந் தழீஇய பண்பாக வளர்ந்து வந்துள்ளது. "யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்ற உயர் நெறி முகிழ்ப்பதற்கு விருந்தோம்பும் பண்பே காரணமாக அமைந்திருக்கும் என்று கருதவேண்டியிருக்கிறது.

விருந்தோம்பல் பண்பு சிறந்து விளங்கும் வீட்டுக்கும் நாட்டுக்கும், பொருள் புழக்கம் அதிகமாவதற்குரிய வாயில்கள் மிகுதி. ஒருநாடு விருந்தோம்பும் பண்பில் சிறந்து விளங்கினால் அந்த நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அந்நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்பர்; முதலீடு செய்வர்.

அதுபோல ஒரு வீட்டினர் விருந்தோம்பும் பண்பில் சிறந்து விளங்கினால் அந்த வீட்டினருடைய வளர்ச்சியில் விருந்தினர் பங்கேற்பர். ஒரு குடும்பத்தினர் விருந்தோம்புதலில் சிறந்து விளங்குகின்றனர். அவர்கள் வயலில் விதை பாவவில்லை. விதையில்லை அல்லது காலம் கிடைக்க வில்லை. வந்த விருந்தினர்கள் வாளாவிருக்க மாட்டார்கள். விருந்தினர்களும், அந்தக் குடும்பச் செல்வத்தின் பயனை நுகர்ந்தவர்களும் வாளாவிருக்க மாட்டார்கள். தாமே வலியச்சென்று அக்குடும்பத்தினரின் வயலில் விதையை விதைப்பார்கள். இஃது அறஞ்சார்ந்த வாழ்வியல் முறை. இதனைத் திருக்குறள்

"வித்துமிடல் வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்”

(85)

என்று கூறும், ஆதலால் எல்லைகளைக் கடந்து பழகுக. நட்பினைக் கொள்க; உறவாகுக; உவந்து உண்பித்துப் பழகுக. இதுவே மனிதகுல ஒருமைப்பாட்டுக்கு அடிப்படை.

12. மோப்பக் குழையும் அனிச்சம்!

மானிடர் உயிர்ப்பில் வெளிவிடும் காற்று வெப்பத் தன்மையுடையது. இந்த வெப்பத்தைத் தாங்க முடியாத நிலையில் அனிச்சம் என்ற மலர் குழைந்து கெடும். அனிச்சம் நரம்புகளின் அமைவு பெறாத மென்மையான மலர். அதனால் மோப்பக் குழைகிறது. அதனால் அனிச்சமலரை முகராமல் மூக்கிற்குச் சற்றுத் தொலைவில் வைத்து மணத்தை அனுபவிக்கலாம்; அழகை அனுபவிக்கலாம்; தன்மையை அனுபவிக்கலாம். இங்ஙணம் ஒரு மலரை அனுபவிப்பதற்குப் பதிலாக அதனை முகர்ந்து கெடுப்பதில் என்ன பயன்?

விருந்தினர் என்பவர்கள் புதியவர்கள். அதாவது முன்பின் தெரியாதவர்கள். அதாவது நாடுவிட்டு நாடு, கற்பதற்காகவும் புதிய அனுபவங்களைப் பெறுதலுக்காகவும் பயணம் செய்து வருபவர்களே விருந்தினர். (இன்று உறவினர்களை விருந்தினர் என்று அழைப்பது தவறான மரபு) இத்தகு விருந்தினர்களை, உழுவலன்புடையாரைப் போல இனிய பரிவு நிறைந்த புன்முறுவல் தாங்கிய முகத்துடன் வரவேற்க வேண்டும். அங்ஙனம் வரவேற்காது, அந்நியர் என்ற உணர்வுடன் முகத்தின் ஐயப்பாட்டுணர்வும் விருப்பமின்யுைம் புலப்பட நோக்கின், வந்த விருந்தினர் மனத் துன்பம் அடைவர்; அவர்கள் சோற்றுக்காக வந்தவர்கள் அல்லர்; உறவுக்காக வந்தவர்கள். நன்மை செய்வதற்காக வந்தவர்கள்.

"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து"

(90)

13. நல்வாழ்க்கையின் இரட்டை நாடிகள்

இன்பம் மனிதனால் உருவாக்கப் பெற்று அவனே துய்த்து மகிழும் ஒர் உணர்வு. இந்த இன்பம் என்பது அணுகும் வகையால் மனிதனுக்கு மனிதன் மாறும். ஒரு மனிதனுடைய வாழ்நாள்களிலே கூட பருவத்திற்குப் பருவம் மாறும். ஒரோ வழி சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் மாறக்கூடும். அப்படியானால் இன்பம் நிலையான ஒன்றில்லையா? இன்பம் நிலையான ஒன்றுதான். எங்கும் எப்பொழுதும் எல்லாருக்கும் இன்பமாக இருக்கின்ற ஒன்றே இன்பம். மற்றவை எல்லாம் துன்பம்.

ஆனால் மானுடம் தற்சார்பிலே பழகிப் பழகி, துன்பந்தழீஇய இன்பத்தையே இன்பம் என்று கருதுகிறது. இன்பம் போலக் காட்டித் துன்பம் தரும் இவற்றிற்காகவே மானிடர் போராடுகின்றனர். இன்பம் சமூக நலத்தில் உருவாவது; தோழமையில் வளர்வது; காதலில் நிலைப்பது. எல்லாவற்றிற்கும் அடிப்படை சமூக நலம். நம் ஒவ்வொரு வருடைய உள்ள நலமும் உடல் நலமும் கூட சமூக நலத்தினையே அடிப்படையாகக் கொள்வது.

ஆன்மாவின் உறுப்புக்களான மனம், புத்தி, சித்தம், அகத்துறுப்புக்கள், பிரிக்கப்படாத உறுப்புகள் அகத்து உறுப்புக்களே. இவைகளே அறியும் கருவிகள், அறிவுக் கருவிகளுமாம். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன உடலுக்கு வாய்த்த பொறிகள். இப்பொறிகள் செயலுக்குரியன. அறிவும் செயலும் நிகழும் களம் சமூகம், தானே! ஆதலால் சமூகத்தையும் தனது வாழ்நிலையின் உறுப்பாக எண்ணவேண்டும். உறுப்பாக மட்டுமல்ல. சமூகநலனே இன்பத்தின் ஊற்றுக்களன் என்று கருதி சமூக நலனைப் பேணி வளர்க்க வேண்டும். சமூகத்துடன் பிணக்கிலாத நிலையைப் பராமரிக்க வேண்டும்; நெஞ்சு நெகிழத்தக்க உறவு நிலைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

சமூக நலன் எப்போது கெடுகிறது? ஏன் கெடுகிறது? அன்பின்மையின் காரணமாக சமூகத்திலிருந்து தனி மனிதன் அந்நியப் படுத்தப்படுகிறான். அந்நியமான நிலை நன்றன்று. அன்பு அடக்கத்தினைத்தரும். வளர்ந்த அறிவு அடக்கத்தைத் தரும். அன்பின்மையும் அறிவின்மையும் தனி மனிதனைத் தற்சார்புடையவனாக்கி அகந்தைக்காரனாக வளர்த்து விடுகிறது. அறியாமையின் முகட்டில் வாழ்பவர்கள் அகந்தையே வடிவமாக வாழ்வர். இவர்கள் யார் மாட்டும் அடக்கத்தைப் பேணார். பணிவு என்பதே இவர்கள் வாழ்க்கை அகராதியில் இல்லை. ஆர்ப்பரவம் செய்வர். எல்லாரையும் இழித்தும் பழித்தும் பேசுவர். இத்தகு வாழ்க்கைப் போக்கு சமூக நலனைக்கெடுக்கிறது. உள்ளமும் கெட்டு உடலும் கெட்டு நாட்டின் நிலை இரங்கத் தக்க தாகிறது.

நல்வாழ்க்கைக்கு அடக்கம் தேவை, பணிவு தேவை. யார் மாட்டும் அடக்கம் தேவை, பணிவு தேவை. அடக்கமும் பணிவும் இருந்தால் இனிய சொற்களே பிறக்கும். ஒருவர் வாழ்க்கையில் அவர் வழங்கும் இனிய சொற்கள் தரும் பயன் அளப்பரியது. இனிய சொற்களால் பாராட்டுவதின் மூலமும் எண்ணற்ற காரியங்களைச் சாதிக்கலாம். மானுடத்தின் இயற்கையமைப்பு இன்சொல் வழங்குவதேயாம். ஆனால் முயன்று குருதியைச் சூடேற்றிக் கொண்டு மூச்சுக் காற்றினை நிறையச் செலவழித்துக் கடுஞ்சொற்களை - பிறருக்கும் தனக்கும் இன்னாதன விளைவிக்கும் சொற்களைக் கூறுகின்றனர்.

இனிமை பயவாத இன்னாத கடுஞ் சொற்களைக் கூறின் இரத்தக் கொதிப்பு நோய் வருகிறது; மூச்சுக் காற்று அதிகம் செலவாவதால் மூப்புத் தன்மை இளமையிலேயே வந்து விடுகிறது; மற்றவர்களுடைய பகையே வளர்கிறது; காரியக் கேட்டினைச் செய்கிறது. அது மட்டுமல்ல வன் சொல் திருட்டுத்தன்மையுடையது என்பது வள்ளுவத்தின் கருத்து. எப்படி வன்சொல் திருடு? விலங்கினத்திடமிருந்து கவர்ந்து கொண்ட விலங்கியல் தன்மையின் விளைவு வன்சொல். அதனால் வன்சொல் திருடு ஆகும். இனிய சொல் அன்பினை இருபாலும் ஊற்றெடுக்கச் செய்கிறது; தோழமையை வளர்க்கிறது. வாழ்க்கைப் பணியில் ஆற்றல் மிக்க ஒத்துழைப்பை நல்குகிறது. ஆதலால் பணிவும் இன் சொல்லும் வெற்றி பொருந்திய நல்வாழ்க்கையின் இரட்டை நாடிகள். ஒன்றின்றில் பிறிதொன்று இல்லை. இன்சொல்லை என்றும், எங்கும் வழங்கி வாழ்வித்து வாழ்வோமாக!

"பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற"

(95)

14. நன்றி மறவேல்

நன்று என்ற சொல்லின் அடிப்படையில் நன்றி என்ற சொல் பிறக்கிறது. ஒருவர், ஒருவருடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உதவி செய்ததை மறத்தல் கூடாது. நன்றை-நல்லதை மறவாதிருக்கும் பண்பினைக் குறிக்கும் சொல் நன்றி என்பது. இந்தப் பரந்த உலகத்தில் மானுடம் ஒருவருக்கு ஒருவர் கலகம் செய்து அழிந்து கொண்டே வந்திருக்கிறது. அழிந்துமிருக்கிறது.

இத்தகு உலகில் ஒருவர் பிறிதொருவருக்கு நன்மை செய்வது என்பதே ஒரு வளர்ந்த மனிதரின் நிலை. இங்ஙனம் ஒருவர் செய்த நன்மையை மறக்காது பாராட்டினால் மேலும் பல நன்மைகளைச் செய்ய அவர் முன் வருவார்; நாடு வளரும். அதோடு நன்மையை அடைந்த ஒருவர், அந்த நன்மையை மறவாதிருந்தாலே அவர் அந்த நன்மையின் - தன்மையின் பயனை அறிந்திருக்கிறார் என்று உணரப்பெறும். இங்ஙனம் தன்மையை அறிந்துணரும் நிலையில்தான் நன்மை வளரும். பலரும் பயன் பெறுவர்.

ஒருவர் செய்த நன்மையை மறந்து விட்டால், அவருக்கு யாரும் நன்மை செய்ய முன்வர மாட்டார்கள். அதனால் அவர் தம் வாழ்வில் தேக்கம் ஏற்படும். துன்பங்களும், துயரங்களும் தோன்றி அல்லற்படுவர்; அழிந்து போவர். அதனால் "நன்றி மறப்பது நன்றன்று” என்றது திருக்குறள். நன்மையை மறவாதிருத்தலே நன்மையை நிலையாகப் பாதுகாக்கவும் மேலும் பல நன்மைகளைப் பெறவும் கூடிய வழி.

நன்மை செய்தல் நல்லவர் பண்பு. நல்லவர்களாலே மட்டுமா இந்த உலகம் இயங்குகிறது. இல்லையே! இந்த உலகில் நல்லவர்கள்-நன்மை செய்யக்கூடியவர்கள் மிக மிகச் சிறுபான்மையினரேயாம்; தீமை செய்பவர்களே மிகுதி. ஆதலால் நமக்கு ஒருவர் தீமை செய்துவிட்டால் அந்தத் தீமையை அப்பொழுதே மறந்துவிட வேண்டும். ஏன்? தீமையால் விளையக்கூடிய பயன் யாதுமில்லை.

ஒருவர் செய்த தீமையை மறவாமல் நினைவில் வைப்பதால் தீமை செய்தார்மீது காழ்ப்புணர்ச்சி கால் கொள்ளும்; அவருக்குத் தீமை செய்ய வேண்டும் என்ற முனைப்புத் தோன்றும். தீமை செய்தவருக்குத் தீமை செய்ய நேரிடும். தீமையை அடைந்தவர் நாம் செய்த தீமைக்குத்தானே தீமை என்று நினைக்கமாட்டார். மீண்டும் முறுகி எழும் சினத்துடன் தீமை செய்வார். அதனால் தீமையே சுழன்று கொண்டு வரும். முடிவு அழிவே. அதனால் "நன்றல்லது அன்றே மறப்பது நன்று" என்று திருக்குறள் அறிவுறுத்துகிறது. ஆம்! தண்டனைகளால் மனித உலகம் திருந்தாது. தீமை செய்யும் அறியா மானுடர்பால் அனுதாபமும், இரக்கமும் பரிவும் காட்டித் திருத்த முயல்வதே நன்மை நாடுவோர் பணி! வையகம் வளர வாழ வழி!

"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று"

(108)

இத்திருக்குறள், மானுட வரலாறு, சமூக இயல், உளஇயல் அடிப்படையில் தோன்றியது. அற்புதமான திருக்குறள். நன்றி மறப்பதனால் தீமை வளர்ந்து விடாது. அல்லது தீமை வளராது. நன்மை குறையும், அவ்வளவுதான். ஆனால் நன்றல்லாதவற்றை மறவாதிருப்பது பெருந்தீமை பயக்கும். அதனால் அதை "அன்றே" மறந்திடுக என்று வலியுறுத்துகிறது திருக்குறள்.

15. நன்றி பாராட்டுக!

"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று"

(108)

என்பது திருக்குறள். இந்த ‘நன்றி’ என்ற சொல் இன்று உலக வழக்கில் சாதாரண வழக்கிற்கே கையாளப் பெறுகிறது. அதாவது, ஒருவர் செய்த உதவியை மறத்தல் கூடாது. உதவியைப் பெற்றவுடன் நன்றி கூறுதல் வேண்டும் என்ற வழக்கு, மேலோங்கி நிற்கிறது.

இன்று எந்த நிகழ்ச்சியானாலும் "நன்றி கூறல்" என்பது ஒரு சடங்காக இடம் பெற்றுவிட்டது. இது தவறன்று. ஆயினும், திருக்குறளின் பொருள் வழி நன்றி என்ற சொல் ஆழமான பொருள் தருவது. நன்று என்ற சொல்லிலிருந்து நன்றி என்ற சொல் பிறக்கிறது. அதாவது ‘நல்லது’ என்ற சொல்தான் நன்றி என்ற சொல்லாக வழங்கப் பெறுகிறது.

ஒருவர் ஒருவருக்குச் செய்த நல்லதை மறத்தல் கூடாது என்பது கருத்து. அந்த நல்லதைத் தொடர்ந்து சிந்தையிலும் செயலிலும் காப்பாற்றி வரவேண்டும் என்பதே கருத்து. அப்படிக் காப்பாற்றிக் கொண்டு வாழ்வதே நல்லது செய்தவருக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் தருவதாகும்.

ஒருவர், ஒருவருக்கு நல்லது செய்தல் என்பது விரிந்த அளவுடையது. சிந்தையால், சொல்லால், செயலால் நன்மை செய்யலாம். ஆனால், இன்று நன்மை என்பதைப் பொருள் அளவினதாகச் சுருக்கி விட்டார்கள்.

பொருளை விட, நல்லறிவு கொளுவுதல், நன்னடை நல்குதல் முதலியனவும் நல்லனவேயாம். இத்தகு நல்லனவற்றைப் பாராட்டி ஏற்று ஒழுகுதலே நன்றி. ஒரோ வழி நன்றல்லாதனவற்றை மறந்தால் தான் நெஞ்சிறுக்கம் கொஞ்சம் குறையும். ஆதலால், அன்றே மறப்பது நன்று என்றார்.

புறநானூறு, திருக்குறளை அறநூல் என்று பாராட்டுகிறது ஏன்? அறங்களில் சிறந்தது நன்றி மறவாமை. இந்த நன்றி மறவாமை என்ற சிறந்த பண்பின் வாயிலாகப் பல்வேறு நற்பண்புகள் தோன்றி வளர வாய்ப்புள்ளது.

ஆதலால், நற்பண்புகளுக்குள் சிறந்த பண்பு நன்றி மறவாமை. நன்றி பாராட்டுதல் ஒரு நல்லொழுக்கம். நன்றி பாராட்டுதல் ஒரு சிறந்த வாழ்க்கை நெறி.

16. சார்புநிலை கூடாது!

நடுவுநிலைமை என்பது உயர்வாழ்வின் கொள்கை, கோட்பாடு. இருவேறு நிலையினதாக இயங்குவதே உலகத்தின் பெருவழக்கு பல சமயங்களில் பன்முக நிலையில் கூட உலகியல் நிகழும். இந்த நிலைகளில் தன்னலம், சார்பு நிலைகள் கருதி ஒருபக்கம் சார்ந்து விடுதல் கூடாது.

எல்லாக் கருத்துக்களையும், எல்லா நிலைப்பாடுகளையும் அறிவார்ந்த நிலையிலும் பொதுப் பயன்பாட்டு நிலையிலும் தீர ஆய்வு செய்து, ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்றையதைத் துணிவுடன் தள்ளவேண்டும். அநீதிக்கும் நீதிக்கும் இடையில் நடுவுநிலையில் நிற்றல் என்பது கூடாது. நன்மையைச் சார்ந்து இராத நடுவு நிலைமை தீமையாகும்.

இன்றைய நமது சமுதாயத்தின் நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்கினால் அநியாயங்களே நியாயங்களாகிக் கொண்டு வருகின்றன். இன்றைய சமுதாய அமைப்பில் விருப்பு வெறுப்பு உணர்வுகள் (இராகதுவேஷங்கள்) நிறைந்துள்ளன.

நாம் தெரிந்தோ, தெரியாமலோ விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி; சமுதாயத்தில் வாழ்க்கை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இத்தகு சூழ்நிலையில் நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் அறிந்தறிய வேண்டிய ஒன்று.

ஒரு கருத்து அல்லது ஒரு நடைமுறை சரி அல்லது தவறு என்று ஆய்வில்லாமல் முடிவுக்கு வரக்கூடாது. ஆய்வு நிலையில் ஆய்வுக்குரிய செய்திகள் பாலும் ஆய்வுக்குரிய செய்திக்குரியர்பாலும் நிறை நலம் சார்ந்த நம்பிக்கை இருத்தல் வேண்டும். மதிப்புணர்வு இருத்தல் வேண்டும். அதே போழ்து எல்லை கடந்த சார்பு நிலையும் ஆகாது.

பழங்காலத்தில் வணிகர்கள் பொருளை எடை போடும் முன் எடை போடப் பயன்படும் துலாக்கோலை (தராசை) முதலில் எடுத்து துலாக்கோலின் சமநிலையைக் காட்டுவர்; பின் எடை போடுவர். அதுபோல முதலில் அனைவரும் ஒத்த கருத்தினர் என்ற சமநிலை உணர்வு தேவை. இன்று நம்முடைய வாழ்க்கையில் துறைதோறும் நடுவு நிலை, முறை பிறழ்ந்து கிடக்கிறது. அரசியலில், சொல்லும் கருத்துக்கள் ஆராயப்படாமல், நபர்கள் ஆராயப் படுகின்றனர்.

"சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி”

(118)

என்பது திருக்குறள்.

"சமன் செய்து’, என்றார் திருவள்ளுவர். அதாவது இயல்பாகச் செய்யும் மனப்போக்கு இல்லை. வாழ்வியல் இல்லை என்பது தெளிவு. இந்தப் பூவுலகை மலைகள், கடல்கள் பிரித்திருக்கும் பிரிவுகளை விடக் கோடிக்கணக் கான பிரிவுகளை மனிதன் படைத்திருக்கின்றான். மனிதன் படைத்த பேதா பேதங்கள்-பிரிவுகள் ஆகியன பெற்றெடுத்த நச்சுப் பேய்கள்தானே ‘சுவர்’ ‘காவல்’ ‘வேலி’ ஆகியன. இவற்றிலிருந்து மனிதகுலம் என்று மீளும்? சீர்தூக்கும் கோல் என்றார்.

ஆம்! ஆய்வில் கூடச் சீர்மை பார்த்தலே நோக்கம். தீமை தூக்குவது இல்லை. தீமை தெரியாது! கண்ணிற்குப் படாது! ஆதலால், ‘கோடாமை' என்றார். ஆம்! மனிதர்கள் அவசரமாகக் கட்சி கட்டிக்கொண்டு, நியாயங்களைப் பார்க்காமல் ஒரு பக்கம் சாய்ந்து விடுகிறார்கள். இது மரபன்று. எந்தக் காரணத்தை முன்னிட்டும் நியாயத்தின் பால் நிற்காமல் சாய்ந்துவிடக் கூடாது. இத்தகு வாழ்க்கையே மக்களாட்சி முறையை வளர்க்கும்; அறநெறியை வளர்க்கும்.

17. மற்றவர் சிந்தனைக்கு மதிப்புத் தருக!

நடுவு நிலைமை என்பது வாழ்வியலின் சிறந்த பண்புகளில் ஒன்று. நடுவு நிலை என்றால் எதிலும் சேராத இரண்டுங்கெட்டான் நிலை என்று பொருள் கொள்ளக் கூடாது. இறுக்கமான சார்பு நிலை நடுவு நிலைக்கு எதிரானது. அதாவது நாம் ஒரு முடிவை எடுத்துக் கொண்டு, அந்த முடிவு நிலையின் அடிப்படையிலேயே மற்றவர்களை ஆய்வது; மற்றவர்களுடைய கருத்துக்களை ஆய்வது என்பது தவறான அணுகுமுறை. அது மட்டும் அல்ல. உள்நோக்கம் ஒன்றைக் கற்பித்துக் கொண்டும் ஆய்வு செய்தல்-அணுகுதல் ஆகாது.

மனிதன் எந்த வகையிலும் சுதந்திரமுடையவனே. ஒவ்வொரு மனிதனும் அவன் நிலையில் சிந்திக்கும் உரிமை உடையவன் என்பதை மறந்துவிடக்கூடாது. அவனைச் சிந்திக்கத் தூண்டி அந்தச் சிந்தனையில் தவறு இருந்தால், மடை மாற்றம் செய்ய வேண்டுமே தவிர, சிந்திக்கிற பழக்கத்தையே முறியடித்துவிடக் கூடாது. அதுமட்டுமல்ல, மற்றவர்களின் சிந்தனையின் மதிப்பைத் தற்சார்பின் காரணமாகவோ, பாரம்பரியம் அல்லது வேறுசில காரணங்கள் அடிப்படையிலோ தரக்குறைவாக எண்ணுதல் கூடாது. அவர்களுடைய சிந்தனைக்கு மதிப்பைத் தந்து சமநிலையில் கருதி, அவர்கள் சிந்தனையை எடுத்துக் கொள்ளும் மனப் போக்கு வேண்டும்.

இங்ஙனம் சிந்தனைகள் மதிக்கப் பெற்றால்தான் அறிவு வளரும். முதலில் ஒருவர் சிந்தனையைச் சமநிலையில் மதிப்புணர்வுடன் எண்ணி ஆய்வுசெய்து ஒப்புநோக்கி நல்லதைத் துணிந்து முடிவு செய்க. அடுத்து, ஆய்வு செய்த பிறகு தம் கருத்துடனும் மற்ற கருத்துக்களுடனும் ஒப்பு நோக்கி ஆய்வு செய்யலாம். இந்த முழுநிலை ஆய்வு நடந்த பிறகு எது நன்று - அல்லது சரியானது என்ற துணிவுக்கு வரலாம். வரவேண்டும்.

எதுபோல எனில், கடைகளில் பண்டங்கள் எடை போடப் பயன்படுத்தும் தராசைத் தூக்கிச் சரிபார்த்தல் போல, தராசு நிலையில், அதாவது எடைக் கற்களும், பண்டங்களும் இல்லாமல் வெறும் நிலையில் தராசைத் தூக்கிச் சரிபார்த்து, தராசு நிலையில் பழுதில்லாமல் இருப்பதையும், சீராக எடை அளவு காட்டுகிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள முதலில் வெறுந்தராசைத் தூக்கிச் சரிபார்த்தல் முறை. அதுபோலவே தான், தக்க கருத்து அடிப்படையில்தான் முடிவெடுக்கப்படும் என்பதை உறுதிப் படுத்திக்கொள்ள உதவி செய்வது மற்றவர்களை மதித்தலாகும். அவர்தம் சிந்தனை மதிக்கப்பெறும்; நம்பிக்கையைத் தரும். எல்லோரையும் மதிக்கும் அடிப்படையிலே இது நிகழும்.

"சமன்செய்து சீர்துரக்குங் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி."

(118)

18. நடுவு நிலைமை

நடுவு நிலைமை ஓர் உயர்ந்த குணம்; பண்பு. நடுவு நிலைமை என்பது சார்புகள் காரணமாக முடிவு எடுக்காத கொள்கையாகும். எவரையும் எந்தச் சூழ்நிலையைப் பற்றியும் கவலைப்படாமல், யார் யார் சொன்னாலும் விருப்பும் வெறுப்பும் இன்றிக் கேட்டு, ஆய்வு செய்து விவாதித்து முடிவு எடுத்தலாகும்.

நடுநிலைப் பண்பு, நீதியைச் சார்ந்தது. நீதி உயிர்; நடுவு நிலைமை உடல், நடுவுநிலைக் குணம் அனைத்துக் குணங்களுக்கும் தாய் போன்ற முதல்நிலைக் குணம்.

மாந்தர் இயல்பாகச் சஞ்சலப்புத்தி உடையவர்கள். வெற்றியையும் இன்பத்தையுமே விரும்புவர்; தோல்வி, துன்பங்கள் கண்டு அஞ்சுவர். இதனால், மாந்தர் இச்சை பலவுடையவராக இருப்பர். விழிப்புணர்வு மிகமிகக் குறைவு; ஏமாறவும் செய்வர். இதனால் தற்காப்பு, தன் முனைப்பு ஆகியனவற்றின் வயப்பட்டு நடுநிலை பிறழ்வர்.

நிறுவை செய்யப் பயன்படுவது தராசு. தராசின் தட்டுக்கள் இரண்டும் சம எடையில் இருப்பதைத் துலாக் கோலை-நிறுக்கும் கருவியைத் தூக்கிச் சரிபார்த்துக் கொண்டுதான் நிறுவை செய்ய வேண்டும், நிறுவைத் தட்டுக்களில் ஏதாவது ஒன்றில் ஒரு பாக்கு அளவு புளி ஒட்டிக் கொண்டிருந்தால்கூட நிறுவை பாதிக்கும்.

அதுபோல் நாம் பலருடைய கருத்துக்களையும் கேட்க வேண்டும். கேட்பதற்குமுன் நமது மனநிலையைச் சார்புகளிலிருந்து விடுதலை செய்து கொண்டும், சொல்லுவோர் அனைவரிடத்திலும் சமநிலை மனோபாவத்துடனும் கேட்க வேண்டும். ஒரு மனிதனுடைய வார்த்தைகளைக் கேட்டு ஒரு முடிவுக்கு வரக்கூடாது. இருகட்சிகளையும்-பல கட்சிகளையும் அமைதியாய்க் கேட்க வேண்டும். கேட்கும் செய்திகளைச் சார்பின்றி விருப்பு வெறுப்பின்றிக் கேட்க வேண்டும்.

நமக்கு என்று ஒரு கருத்து இருந்தாலும் அக்கருத்தைக் காய்தல், உவத்தலின்றிக் கேட்க வேண்டும். இப்படிக் கேட்க மறுத்தால் சுதந்திரம் பறிபோகும்; சமத்துவக் கொள்கைக்கு ஊறு விளையும், நடுநிலைமை பிறழ்வதால் சமுதாயத்தில் சீர்குலைவு தோன்றும்; மாந்தர் பாதுகாப்பை இழந்து விட்டதாக உணர்வர். இது வரவேற்கத் தக்கதல்ல.

ஆதலால் மனிதர்களை, சாதிகளை, மதங்களை இவற்றை மையமாகக் கொள்ளாது மனிதம்-நன்று-தீது என்ற அடிப்படையிலேயே நடுவுநிலைமை வளர வேண்டும்.

"சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க்கு அணி"

(118)

19. தன்னடக்கம்

தன்னடக்கம் என்பது வளர்ச்சிக்குரிய மூளை, தன்னடக்கம் எனினும் பணிவு எனினும் ஒரு பொருள் தரும் என்பது பிழையாகாது. ஆயினும் நிறைவாகாது. பலர் அடக்கம் உடையோராக இருப்பர். அதன் காரணமாக அவர்கள் சமூகத்திலிருந்து ஒதுங்கிவிடுவர். சில சமயங்களில் ஒதுங்கி வாழ்தல் தன் முனைப்பு வளரவும் துணை செய்து விடுகிறது. ஆதலால், பலரோடு பழகிப் பணிவும் இன் சொலும் உடையோராக விளங்கினால் அடக்கமுடைமை முழுமை அடைகிறது. நாம் மற்றவர்களிடம் எப்படிப் பழகுகின்றோம்? இதுதான் கேள்வி. வளர்ச்சியின் ஆரம்பம் வணக்கத்தில் இருக்கிறது என்பது நியதி.

அடக்கமுள்ளவர்களிடம் பிழைகள் காண்பது அரிது. ஏன்? அடக்கமுள்ளவர்கள் பலரோடு பழகுவதால் பக்குவமும் முதிர்ச்சியும் எளிதில் கிடைக்கும்.

தன்னடக்கம் இரு பெரும் பிரிவுகள் உடையது. அவை பொறி அடக்கம்; புலன் அடக்கம் எனப்படும். பொறியடக்கமாவது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளையடக்குதல் இப்பொறிகளை இயக்கும் புலன்களை அடக்குதல் புலனடக்கம்.

இவற்றுள் நாவடக்கம் தலையாயது. நாவடக்கம் இரண்டு வகைப்படும். முதலாவது நினைத்தபடி பேசாமை, இரண்டாவது உணவடக்கம். உணவடக்கம் உடலுக்கு நலம் பயக்கும். உடல் நலமுறின் பொறியடக்கமும் புலனடக்கமும் எளிதில் சித்திக்கும். உடல் நலத்துக்கும் சீரான இயக்கத்துக்குமே உணவு; சுவைக்கல்ல. விரும்பி அளவோடு சுவைக்கத் தேவை. அவ்வளவுதான் சுவையின் பயன். அல்லது உணவு உண்ணும் ஆர்வத்தைத் துாண்ட சுவை பயன்படலாம்.

நிறைய பேச-சொல்ல ஆசைப்படக்கூடாது. அதிகமாகப் பிறரிடம் கேட்கும் மனப்பாங்கு வேண்டும். "சில சொல் பேசுதலும் பல கேட்கக் காமுறுதலும்” வளர்ச்சிக்குரிய பண்பு. அதனாலன்றோ, கேட்கும் பணிக்கு மட்டுமே இரண்டு காதுகள் உள்ளன. பேசுவது, உண்பது ஆகிய இரண்டு பணிகளுக்கு ஒரே வாய். அந்தப் பேச்சும்கூட மற்றவர்கள் கருத்தை வாங்கத்தக்க வகையில் பேசினால் மிகமிக நன்று.

இன்றைய உலகம் வாயினால் கெட்டு வருகிறது. நாட்டில் கண்டபடி உணவுச் சாலைகள், மது உட்பட உள்ளன. சந்து பொந்து, சாவடி எங்கும் கூடிக்கூடி ஊர் வம்பு பேசியே காலத்தைக் கழிக்கும் மாந்தர்களின் எண்ணிக்கை மிகுதி. இது போதாது என்று மேடை வேறு போட்டுப் பேசுகிறார்கள். சேரிப்புறத்து அணியாக இருந்த ஏச்சு, அரங்கேறியுள்ளது அவ்வளவுதான்! இது வாழ்வியலன்று. யாரிடமும் பணிவாக இருப்பது; தன் முனைப்பு அற்று இருப்பது; தேவைக்கேற்பச் சிக்கனமாகப் பேசுவது; இவையே அடக்கமுடைமை.

20. அடக்கமுடைமை ஆக்கம் தரும்

மனித வாழ்க்கைக்குச் சிறந்த அடக்கம் தேவை. பழங் காலத்தில் அடக்கம் என்ற ஒரே சொல் பல ஒழுகலாறு களையும் வற்புறுத்தியது. இன்று அடக்கம் என்ற பண்பு, விரிந்து தனித்தனியே குறியிட்டுச் சொல்கிற வகையில் அமைந்துள்ளது. பொதுவாக மற்றவர்களிடம் அகந்தையின்றி அடக்கமுடையவராக நடந்து கொள்ளும் பண்பு, ‘பணிவு' என்ற பிறிதொரு சொல்லால் உணர்த்தப்படுகிறது. திருக்குறள் படி பணிவுடைமையும் அடக்கமுடைமையிலேயே அடங்கியிருக்கிறது. அடுத்துத் தன்னடக்கம், நாவடக்கம், பொறிகள் அடக்கம், புலனடக்கம் என்றெல்லாம் சொல்லப் புெறுகின்றது.

மனிதன் அடைந்து ஒழுக வேண்டிய நற்பண்புகள் பலப்பல. அவற்றுள் தலையாயது தன்னல மறுப்பு. நீதியின் பால் வேட்கை, ஈகைக்குணம், அன்புடைமை இவையெல்லாம் சிறந்தனவாயினும் தன்னடக்கமில்லாது போனால், இந்தப் பண்புகள் சிறக்கா. ஆதலால் ஒழுக்கங்களுள் சிறந்தது - தலையாயது தன்னடக்கம், கிரேக்கச் சிந்தனையாளன் சாக்ரட்டீஸ் மனிதன் மேற்கொள்ள வேண்டிய முதல்நிலைப் பண்புகளாகத் தன்னடக்கத்தையும் புலனடக்கத்தையும் கூறினான்.

தன்னடக்கம் என்ற சிறந்த பண்பினைப்பெற வேண்டுமாயின் மற்றவர்களிடம் குறை காணும் தீமை அறவே கூடாது. ஒரோ வழி குறை கண்டாலும் அதை இரகசியமாகக் கொண்டு பிறரிடம் கூறக்கூடாது. வீணான விவாதங்கள் அறவே கூடாது. கட்சி-பிரதி கட்சிச் சுழியில் சிக்கித் தவிக்காமல் என்றும் எப்பொழுதும் பொதுநிலை வசிக்க வேண்டும். தன்னைப் பற்றிய உயர்வு நினைவுகளை விட்டொழித்து விட்டால் அடக்கப்பண்பு வந்து விடும்.

பொதுவாகத் திருக்குறள் அடக்கமுடைமையையும் அதன் பயனையும் முதல் நான்கு குறள்களில் வகுத்துக் கூறுகின்றது. அடுத்து மற்றவர்களிடத்தில் பணிவாக நடந்து கொள்ள வேண்டிய பண்பை எடுத்துக் கூறுகிறது. செல்வமுடைமை அகந்தையை வளர்க்கும். ஆதலால், செல்வம் உடையார் பணிவுடையாராகவும் இருப்பின் இரண்டு மடங்கு செல்வம் பெற்றது போன்றது என்பது திருக்குறள் கருத்து.

அடுத்து, ஐம்பொறிகள், ஐம்புலன்களின் அடக்கத்தை, எடுத்துக் கூறுகிறது; அடக்கமுடைமை என்ற பண்பின் தோற்றத்திற்குரிய ஒழுகலாற்றை எடுத்துக் காட்டுகிறது. புலன்கள், ஆசைகள் தோன்றும் களம். ஆசைகள் தோன்றி வளர்ந்தால் அடக்கமுடைமையைப் பெறுதல் இயலாது. புலன்களில் ஆசைகள் தலைப்படின் அந்த ஆசைகளை அடையப் பொறிகளை இயக்கும் ஆன்மா, அப்போது பொறிகள் மதம் பிடித்த களிறுகளைப்போல் கட்டுப் பாடின்றிச் செயற்படும். இது தவறு, பெரும்பாலும் இச்சை, பொறிவாயிலாகச் செய்திகளாக, பொருள்களாகப் புலன்களுக்குச் செல்லும். புலன்கள், தாம் பொறிவாயிலாகப் பெற்ற செய்திகளை, பொருள்களை இச்சையாக மாற்றி மீண்டும் பொறிகளைத் துரண்டும் அவற்றை அடைந்து அனுபவிப்பதற்காக! ஆதலால், பொறிகளைக் கண்டபடி சுற்றவிடாமல் பாதுகாத்தால் பொறியடக்கம் புலனடக்கம் இரண்டும் ஒருங்கே வந்தனையும். இந்த உயரிய ஒழுகலாறு அமைய வேண்டுமானால் அழகுடையன எல்லாம் ஆராதனைக்கே உரியன, அனுபவிப்பதற்கு அல்ல என்ற கருத்தும், நல்லன வெல்லாம் மற்றவர்களுக்கே என்ற எண்ணமும் தோன்றிடின் பொறியடக்கம் தானே வந்தமையும்; புலனடக்கமும் வந்தமையும். பொறிகள் அடக்கத்திற்குத் திருக்குறள் அற்புதமான ஓர் ஆலோசனை கூறுகிறது. ஆமையை உதாரணமாக வைத்துக் கூறுகிறது.

ஆமை, தனக்கு நலம் பயக்காத சூழல்களில் தனது உறுப்புகளை உள்ளே இழுத்து ஒடுக்கிக் கொள்ளும். தனது நலனுக்கே ஏற்ற சூழ்நிலையில் தனது உறுப்புக்களை வெளியே நீட்டி அனுபவிக்கும். இதுபோல நாமும் நமக்கு நலம் பயக்கக்கூடிய காட்சிகளைக் கண்டு அனுபவிக்கலாம். கேள்விகளை கேட்டு அனுபவிக்கலாம், சுவையானவைகளை உண்டு அனுபவிக்கலாம். நம்முடைய ஆன்ம நலனுக்குப் பயன் தராத செய்திகளில் நம்முடைய பொறிகளை ஈடுபட அனுமதிக்காமல் இழுத்து அப்புறப்படுத்தி விடவேண்டும். ஆமையின் பொறிகளைப் போல் மனிதனின் பொறிகள் அடக்கக்கூடியன அல்ல. பின் என்ன செய்யலாம்? நமது பொறிகளுக்கு நாமே நலம் பயக்கக்கூடிய அனுபவங்களைப் படைத்துக் கொடுக்க வேண்டும். ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்பு உடைத்து.

(126)

அடுத்து நாவடக்கம் பற்றியும் மூன்று குறள்களில் பேசுகிறது. தீய சொற்களை அறவே விலக்கும்படி திருக்குறள் ஆணையிடுகிறது. இத்தகு அடக்கமுடைமையைச் சார்ந்த பண்புகள் வாழ்க்கையில் தங்கினால் வாழ்வு அறவாழ்க்கை வளரும்.

21. தன்னலம் அற்றலே நல்லொழுக்கம்!

ஒழுங்குகள், ஒழுக்கத்திற்கு முன்னோடி, ஒழுக்கங்கள் நெறிவழிச் செயற்பட ஒழுங்குகள் தேவை. ஒழுக்கம் தன் ஆக்கத்திற்குரியது; பிறருக்குத் தீங்கு செய்யாதது. ஒழுக்கம் பல துறையின. ஒழுக்கம் என்பது விரிந்த பரந்த பொருளுடையது. ஒரு நற்குணம், நற்செயல் மட்டுமே ஒழுக்கத்திற்கு அளவு கோலாக அமையாது.

ஒழுக்கம் இரு வகையினது. ஒன்று தன்னிலை ஒழுக்கம். பிறிதொன்று சமூக ஒழுக்கம். தன்னிலை ஒழுக்கம் தலைப்பட்டு நிற்போர் பலர், சமுதாய ஒழுகலாறுகளின்றி வாழ்வர். சமுதாய ஒழுகலாறுகளில் தலைப்பட்டு நிற்போர் பலர் தன்னிலை ஒழுக்கம் திரிந்து நிற்பர். ஒன்றையன்றிப் பிறிதொன்றில்லை. ஒரோவழி இருப்பினும் பயன் தராது.

தனி நிலையில் வளரும் ஒழுகலாறுகள் உடல் நலத்திற்கு உற்ற துணை; ஆன்ம நலத்திற்கு அரண். அதனால் அறிவு நலம் சிறந்து விளங்கும். முதுமை நிலையிலும் இளமை பேணலாம். எப்போதும் செயற்படலாம். ஓயாது உழைத்திட ஒழுக்க நலம் துணை செய்யும்.

சமூக நல ஒழுக்கங்கள் சமூகத்தைச் சீரமைக்கும். சூழ்நிலை வாழ்க்கைக்கு இசைந்ததாக அமையும்; நல்லெண்ணம்

தி. 5. வளரும்; நம்பிக்கை வளரும்; என்றும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும்.

நாடு பரப்பளவில் பெரியது. பலகோடி மக்கள் வாழ்வது. இந்நாட்டில்-பலகோடி மக்கள் வாழுமிடத்தில் நல்லெண்ணம் இன்றியமையாதது. ஒருவருக்கும், பிறர் ஒருவருக்கும் இடையே நல்லுறவு வேண்டும். மொழி, சமய்ம், எல்லைகள் கடந்த நிலையில் உறவுகள் கால்கொள்ள வேண்டும். இந்த நிலையில்தான் நாடு வளரும்; நலமுறும். ஒரு நாட்டுணர்வு நிலையிலான ஒருமைப்பாட்டில் நிலை கொள்ள தேசிய ஒழுகலாறுகளை மேற்கொள்ள வேண்டும்.

தேசிய ஒழுகலாறு என்பது ஒரு நாட்டு மக்களிடையில் வழிவழியாக வளர்ந்து வந்துள்ள ஆன்மநேய ஒருமைப்பாடு, பொதுநல அடிப்படைகள் ஆகியவைகளைத் தொடர்ந்து வளர்க்க வேண்டும். பாதுகாக்க வேண்டும்.

ஒவ்வொரு நாட்டிலும் தேசிய ஒழுகலாறுகள் என்று சில, வளர்ந்து இடம்பெற்றுள்ளன. அத்தேசிய ஒழுகலாறுகள் காலத்திற்கு இசைந்த வகையில் புதுப்பொலிவுடன் பேணப் படுதல் வேண்டும். ஒழுக்க நெறிக்கு அரண் செய்து வளர்வது பொதுநலம். அதாவது பிறர் நலம் பேணுதல். தன்னலம் ஒழுக்கக் கேடு.

"உலகம் வேண்டுவது ஒழுக்கமே!

சுயநலம் தீயஒழுக்கம்!

சுயநலம் அற்றதே நல்லொழுக்கம்!”

என்றார் விவேகானந்தர்.

வாழ்தல் என்பது இன்பமான ஒன்று. இன்ப வாழ்க்கையே இயற்கை. இன்ப நலன்களுக்காகவே உயிருடன் வாழ்கின்றோம். ஒழுக்க நலன்களே அச்சத்தை நீக்கும். இன்புறுந் திறனளிக்கும்; அமைதி வழங்கும். அதனால் உயிருடன் வாழ்தல் பயனுடையதாகிறது. உயிர் இன்றியமை யாததுதான்! ஆனால், அதனினும் நல்லது ஒழுக்கம்.

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஒம்பப் படும்."

(131)

22. நம் கடமை

ஒழுகுதல், ஒழுக்கம் என்று பாராட்டப் பெறுகிறது. அதாவது ஒருவருடைய வாழ்க்கை நடைமுறைகள் ஒழுக்கம் என்று கணிக்கப்பெறும். ஒருவர் தனக்கும் தன்னோடு வாழும் மற்றவர்களுக்கும் கேடுகள் வாராது வாழ்வது ஒழுக்கமுடைய வாழ்வாகும்.

இப்பிறப்பு, சிறப்புடைய ஒன்று. இதற்கு இணையானது எதுவும் இல்லை. இதுவும் ஒரே ஒரு தடவைதான். தேர்வுகள் பல தடவை எழுதுவது போல, வாழ்க்கைத் தேர்வு பல் தடவை எழுத இயலாது; எழுத முடியாது. ஆதலால் வாய்த்த இந்தப் பிறப்பைப் பயனுறுவகையில் வாழ்ந்து, வாழ்க்கையின் பயன் காணவேண்டும்.

ஒழுக்க நிலையில், தற்சார்பான ஒழுக்கம் முதல் நிலையினது. அதாவது ஒருமனிதன் தன்னைத் தான் கொண்டொழுகுதல்; தன்னுடைய சுவைப் புலன்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ளல். உலகின் எல்லாவித நோய்களுக்கும், துன்பங்களுக்கும், தீமைகளுக்கும் அடிப்படைக் காரணம், சுவைநுகர்வின் பாற்பட்ட இழிவுத் தன்மையே! வளர்ந்து வரும் மருத்துவ மனைகள், காவல் நிலையங்கள் ஆகியன மானிடரின் சுவைப் புலன்கள் கெட்டவழித் தோன்றும் நோய்களிலிருந்தும் தீமைகளிலிருந்தும் மானுடத்தை மீட்கவேயாம். மானிடர் புலன்களின் மீது கவனம் செலுத்தித்துய்மை காக்க வேண்டும். புலன்கள் தூய்மைக்குத் துணை செய்வது ஆசைகளிலிருந்து தப்பிப்பது. தேவையை அடைய நினைப்பது ஆசையல்ல. அளவற்று வெறி பிடித்த நிலையில் அடைய நினைப்பதே வெறுக்கத் தக்க ஆசை.

புலன்களில் தூய்மை காத்தால், தாமே பொறிகளில் தூய்மை காணப்பெறும், பொறிகள் மீது தனி ஆணை செலுத்தி நெறிப்படுத்திக் கொள்ளவேண்டும். நமது வாழ்க்கை என்ற தேர் பத்துக் குதிரைகள் பூட்டிய தேர் ஆகும். இந்தப் பத்துக் குதிரைகள் புலன்களும் பொறிகளுமாகும். இவைகளின் பிடி நமது கையில் இருப்பதே ஒழுக்கம் நிறைந்த வாழ்வு. ஒழுக்கமுடையார் என்றும் நலமுடன் வாழ்வர்; வெற்றிகளுடன் வாழ்வர்; பலருக்கும் பயன்பட வாழ்வர். வாழ்க்கையின் பெரும்பகுதி ஒழுக்கத்தால் சிறப்பது. வாழ்க்கைப் பயணத்தின் நெடிய வரலாறு ஒழுக்கத்தாலேயே எழுதப் பெறுகிறது.

அடுத்து ஒழுக்கத்தின் இரண்டாவது நிலை, சமுதாய ஒழுக்கம் எனப்படும். அதாவது பலருடன் ஒத்திசைந்து வாழ்தல். விதண்டா வாதங்களும், பிணககும், பகையும் சமூகத்தை அரித்து அழிக்கும் கரையான்களாகும். சமுதாயமே தனிமனிதனை உருவாக்கும் பட்டறை, ஆதலால், சமுதாய ஒழுகலாறுகள் கண்டிப்பாகப் பின்பற்றத் தக்கன. சமுதாயத்தின் மதிப்பைக் கெளரவித்தலில் தனிமனித ஒழுகலாறு சிறப்படைய வழி உண்டு. மதிப்பீட்டுப் பொறுப்புள்ள சமுதாய அமைப்பு, சமுதாய ஒழுக்கம் சீர்கெடின் தனிமனித ஒழுகலாறும் சிறக்க இயலாது. ஆக ஒழுக்கமுடையராக வாழ்தலே வாழ்க்கை.

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்."

(131)

என்பது ஒரு சிறந்த குறள். ஆம்! ஒவ்வொருவருக்கும் அவர்தம் உயிர்பெரியது; எல்லாவற்றிலும் பெரியது. சாக யாரும் விரும்புவதில்லை. அதனால்தான் ஓரறிவுயிர் முதல் ஆறறிவு உயிராகிய மானிடன் வரையில் எல்லா உயிர்களும் உயிர்காப்பு முயற்சியில் முன்னணியில் நிற்கின்றன. உயிர் காப்பு முயற்சியின் அளவுக்கு ஒழுக்கப் பாதுகாப்பு முயற்சி கால்கொள்ளவில்லை. உயிரோடு வாழ்தல், வாழ்தலின் பயன் காண! அதாவது வையகம் பயனுற வாழ்ந்து நிலத்திடை நீள்புகழ்பெற. இதற்கு ஒழுக்கம் துணை செய்யும். உயிரோடு வாழ்ந்தும் ஒழுக்கமிலாமையால் நோய்களுக்கு இரையாகியும், சமுதாய ஒழுகலாறு இன்மையால் ஊரவர் பழி துற்றவும் வாழ்ந்து பயன் என்ன? இத்தகையோர் வாழாமையே கோடி தரும்.

குடிமை-குடிமைப்பண்பு- Citizenship என்பது புதிய நாகரிகத்தின் வடிவம். ஆனால் திருக்குறள் குடிமைப் பண்பு பற்றிப் பேசுகிறது.

"ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்.”

(133)

அதாவது, நாடு தழுவிய நிலையில், ஒத்தது அறிந்து ஒழுகுதலே குடிமைப் பண்பு. நமது நாட்டுக்கு என்று சில நாட்டு ஒழுகலாறுகள் தேவை. முதலாவது நாட்டு ஒழுக்கம் சமயச் சார்பற்ற (secular) ஒழுக்கம். இரண்டாவது பல மொழிகளைக் கற்றல். மூன்றாவது சுதந்திரத்தை - ஜனநாயக மரபுகளைப் பாதுகாத்தல். இவைகளைத் தேசீய ஒழுக்கங்கள்-என்று கூறலாம். இந்த ஒழுக்கங்களை மேற்கொண்டு ஒழுகுவது இந்தியக் குடியுரிமை பெற்ற ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

23. ஒழுக்கமுடைமை

மனிதனை வளர்ப்பது ஒழுக்கம். மனிதனை உயர்த்துவது ஒழுக்கம். ஒழுக்கம் என்றசொல் மக்கள் மன்றத்தில் பரவலாகப் பேசப் பெறுவதே. தீய பழக்கங்கள் வேறு; ஒழுக்கம் வேறு. தீய பழக்கங்களை ஒழுக்கத்திற்குள் அடக்கலாம். ஆனால் ஒழுக்கத்திற்குள் தீய பழக்கம் வராது. கள்ளுண்ணல் முதலிய குற்றங்கள் தீயபழக்கங்கள். இந்தக் குற்றங்கள் ஒழுக்கக் கேடுகள் அல்ல.

ஒழுக்கம்-ஒழுகுதல், மற்றவர்களுடன் மோதாமல் மற்றவர்களுக்குத் தீங்கு நேராமல் நடப்பது-வாழ்வது ஒழுக்க முடைமை. "உலகத்தோடு ஒட்ட ஒழுகல்" ஒழுக்கம் என்றும் திருக்குறள் கூறுகிறது. மனிதன் ஒரு சமூகப் பிராணி, மனித வாழ்வு ஒரு சமூக வாழ்வு. மனிதனின் சமூக வாழ்வுக்குத் தீங்கு செய்வனவெல்லாம் தீய பழக்கம். ஒழுக்கக்கேடு தவிர்க்கத்தக்கது. மனிதனைச் சமூக வாழ்வில் நிலைபெறச் செய்வனவெல்லாம் ஒழுக்கமுடைமை.

"உலகம் வேண்டுவது ஒழுக்கமே!

சுயநலம் தீய ஒழுக்கம்!

சுயநலம் அற்றதே நல்லொழுக்கம்!”

என்றார் விவேகானந்தர். சுயநலம் தீய ஒழுக்கம். பொது நலத்திற்கு எதிரான சுயநலம் தீய ஒழுக்கம், சமூக வாழ்வைச் சிதைக்கும் சுயநலம் தீய ஒழுக்கம்.

நாம் தமிழர்கள், நாம் இந்தியர்கள், நாம் மனிதர்கள் என்ற நியதிக்கேற்ப ஒழுகத் தவறுதல் கூடாது. நாம் தமிழர்களாகவும் இந்தியர்களாகவும் மனிதர்களாகவும் வாழ்வதே நல்லொழுக்கம்.

நாடுகள் சுதந்திரம் பெற்றபின் "குடிமைப் பயிற்சி” என்பது மலிந்து வருகிறது. குடிமைப் பண்பு என்றால் என்ன? ஒருவர் வாழும் ஊரோடு ஒத்திசைந்து வாழ்தல் குடிமைப் பண்பு. இனம், மொழி, சாதி, மதச் சண்டைகள் போடுதல் தீயொழுக்கமாகும். எல்லாரும் ஒரு குலம்; எல்லாரும் ஒர் இனம் என்று எண்ணுதல் நல்லொழுக்கமாகும்.

நல்லொழுக்கம் நாட்டின் குடிகளைத் தழீஇயதாக விளங்கும். நல்லொழுக்கத்தை ஒருமைப்பாடு என்று கூறினாலும் கூறலாம். மனிதகுல ஒருமைப்பாடே நல்லொழுக்கம். எல்லா உயிர்களிடத்திலும் எத்துணையும் பேதமுறாது, மகவென ஒக்கப் பார்த்து ஒழுகுதலே ஒழுக்கம்.

குடிமைப் பண்பிலாதார், ஒருமைப்பாட்டுணர்வு இலாதார், உலகந்தழீஇய செந்தண்மை இலாதார் ஒரு நாட்டின் குடிமக்களாதல் இயலாது. ஏன்? அவர்கள் மனிதக் கணக்கில்கூட வரமாட்டார்கள். அவர்களை இழிந்த பிறப்பு என்று ஏசுகிறார் திருவள்ளுவர்.

ஒன்றே குலம் - எல்லாரும் ஒருகுலம் - எல்லாரும் ஓர் இனம். ஒப்புரவுடன் ஒத்திசைந்து வாழ்தல். உலகம் உண்ண உண்ணல், உலகம் உடுத்த உடுத்தல், வாழ்வித்து வாழ்தல் - இதுவே ஒழுக்கம்.

இந்த ஒழுக்கம் வளர, உழைத்து உண்ணுதல், உண்பித்து உண்ணுதல் என்ற நடைமுறை துணை செய்யும்.

இந்த நல்லொழுக்கத்திற்குப் பகையான ‘பிறர் பங்கைத் திருடுதல்’, பிறர் வருந்த வாழ்தல் ஆகியன தவிர்க்கப் பெறுதல் வேண்டும்.

ஒழுக்கமே மானுடத்தின் விழுப்பம்; சிறப்பு. ஒழுக்கமுடைய உலகம் வளரும்! வாழும்!

24. ஒட்ட ஒழுகல்

ஒழுக்கம் உடையராதல் அரிது. ஆயினும் ஒழுக்கம் உடையராக வாழ்தலே வாழ்தல். "ஒழுக்கம்" என்ற சொல் பலராலும் கேட்கப் பெறும் சொல் ஆயினும் ஒழுக்கம் என்ற சொல்லுக்கு மக்கள் மன்றத்தில் கற்பிக்கப் பெற்றுள்ள பொருள். மிகச் சுருங்கியது. அதாவது ஆண் பெண் உறவுகளில் குற்றம் ஏற்படாமல் வாழ்வதே ஒழுக்கமுடைமையாகும் என்பது வலிமை சான்ற ஒரு கருத்து. இதில் தவறில்லை; உண்மை இருக்கிறது. ஆயினும் பெண் வழி நேரிடும் பிழைகளைத் தவிர்த்தல் மட்டுமே ஒழுக்கமுடைமையாகாது. இது ஒழுக்கமுடைமையின் ஒரு கூறு.

மேலும் கள்ளுண்ணல், கவறாடல் முதலியன செய்யாமை ஒழுக்கம் என்று கூறுவாரும் உளர். இதிலும் உண்மை இருக்கிறது. ஆயினும் கள்ளுண்ணாதிருத்தல், கவறாடாதிருத்தல் மட்டும் ஒழுக்கமுடைமையாகாது. இவையும் ஒழுக்கத்தின் கூறுகளே! இந்த அளவில் மட்டும் தான் ஒழுக்கம்பற்றி நமது நாட்டு மக்கள் அறிந்திருக்கின்றனர். கள்ளுண்ணாதிருத்தல் கவறு (சூது) ஆடாதிருத்தல், முறை தவறான பால் ஒழுக்கங்கள் மேற்கொள்ளாதிருத்தல் மட்டும் உடையவரே ஒழுக்கமுடையவர் என்று கருதும் கருத்து நமது சமுதாய அளவில் மேம்பட்டிருக்கிறது. இவைகள் ஒழுக்கத்தின் கூறுபாடுகளே. ஆனால் நிறை நலம் மிக்க ஒழுக்கம் எது?

நாம் இந்த உலகத்தில் வாழ்கின்றோம். இந்த உலக சமுதாயம் நம் கண்முன்னே இயங்கிக் கொண்டிருக்கிறது; வளர்ந்து கொண்டிருக்கிறது; நாம் இந்த மானுட சமுதாயத்துக்குள் சங்கமமாக வேண்டும். மானுட சமுதாயத்தின் நடைமுறைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப ஒழுகி வெற்றி பெறுதல் வேண்டும். உலக நடைமுறை தீயதாக இருக்கலாம். அத்தீய ஒழுக்கமும் ஏற்புக்குரியதா என்ற கேள்வி தோன்றும். இல்லை. இல்லை. தீயஒழுக்கத்தை ஏற்றுக்கொள்ளல் இல்லை! உலகத்தைப் புரிந்து கொண்டு அதற்குத்தக ஒழுகுதல் என்பதே பொருள். உலக இயலுக்குத் தக்கவாறு என்றால் ஒத்து ஒழுகுதல் என்று மட்டுமே பொருள் கொள்ளுதல் வேண்டா. உலக நடையினைப் புரிந்துகொண்டு அதனோடு மோதாமல் ஒத்துப் போகக் கூடியதாயின் ஒத்து ஒழுகுதல் வேண்டும். ஒத்து ஒழுக இயலாதது எனில் அதனை நாம் விரும்பும் நிலைக்கு மாற்ற முயலுதல் வேண்டும். இங்ஙனமின்றி முரண்பட்டு நின்றும், கலகங்களை வளர்த்தும் வாழ்தல் கூடாது.

இந்த உலகில் எல்லாவற்றுக்கும் மேலானது மனித நேயமே. ஆதலால் உலக மாந்தர்க்கு நல்லது செய்யும் வழியில் வாழ்தலே ஒழுக்கமுடைய வாழ்க்கை. உலக மானுட சமுதாயத்துடன் ஒத்து, உடன் நின்று வாழ்தலே ஒழுக்கமுடைமை.

"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்”

(140)

25. பொறையுடைமை

பொறுமை-பொறுத்தாற்றுதல், பொறுமை பலவகை. துன்பம் வந்துற்றபோது பொறுத்துக் கொள்ளல், நோய் வந்த போது பொறுத்துக் கொள்ளல், பிறர் கூறும் பழிச் சொற்களைப் பொறுத்துக் கொள்ளல். பிறர் செய்யும் ஊறினைத் தாங்கிப் பொறுத்துக் கொள்ளல் என்று பல வகையாகப் பிரித்துணரலாம். ஆயினும் பொறுத்தாற்றுதல் என்பது ஒரே பண்புதான். தன்னைச் சார்ந்து தன்னாலேயே உருவாக்கிக் கொள்ளப் பெற்ற துன்பங்களுக்கு காரணம் அவரவரே. இதனை அவர்கள் தாங்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இந்த இடங்களில் பொறுமை இயற்கை. ஆனால் இந்த இடங்களில் கோபம் வந்தால் கூட ஒரே வழி வரவேற்கலாம். இங்கே தங்களுடைய துன்பங்களுக்குக் காரணமான தவறுகளை - அறியாமை, வறுமை முதலியவற்றை நினைந்து அவற்றினோடு போராடத் துணியலாம். இந்த வகை வரவேற்கத் தக்கதேயாம்.

ஆனால் பிறர் தன்னை இழித்துப் பேசியபொழுது, பிறர் தமக்குக் கொடிய துன்பங்களைச் செய்த பொழுது - உடலுக்கு ஊறு முதலியன செய்த பொழுது பொறுமையை மேற்கொள்ளல் அரிது. இந்த மாதிரித் தருணங்களில் பொறுமை காட்டலே பொறுமை எனப்படும். போற்றுவதற்குப் பதிலாகத் தூற்றுபவர்களிடம் பொறுமையாக இருத்தலே பொறையுடைமை. "பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்” என்றது கலித்தொகை. நாடவர் பழித்துரையைப் பூணாக ஏற்றுக் கொண்டாலே உய்தி பெறலாம் என்பது திருவாசகக் கருத்து. பண்புகளில் சிறந்தது பொறையுடைமை. அதே போழ்து பொறையுடைமைப் பண்பு ஆளுமையைச் சார்ந்து விளங்க வேண்டும். ஆளுமை இல்லாதவர்களிடம் உள்ள பொறையுடைமைப் பண்பு ஆகாது. இதற்குப் பெயர் கோழைத்தனம். நாட்டு மக்கள் பொறையுடைமையின் பெயரால் கோழைகளாகக் கூடாது. ஆளுமைப்பண்பு தழுவிய பொறையுடையவராய் இருத்தல் வேண்டும். இதுவே திருக்குறளின் கருத்து.

ஆடாது, அசையாது - கற்களாக உடைத்தாலும் பொறுமையாக இருக்கும் மலையைப் பொறுமைக்குச் சான்றாகத் திருக்குறள் கூறவில்லை. திருக்குறள் பொறையுடைமைக்கு எடுத்துக் காட்டாக நிலத்தைக் கூறுகிறது. ஏன்? நிலம் உழப்படுகிறது. உழுவதன்மூலம் நிலத்திற்கு ஊறு செய்யப்படுகிறது. நிலம் மண்வெட்டி கொண்டு கொத்தப் படுகிறது; வெட்டப்படுகிறது. நிலத்தின் பரப்பில் கீறல்கள், வெட்டுப் பள்ளங்கள் தோன்றுகின்றன. ஆயினும் நிலம் இத்துன்பங்கள் செய்தாரைச் சினப்பதில்லை; அவருக்குத் தீமை செய்வதில்லை. மாறாகத் தனக்குச் செய்யும் ஊறுகளையே ஆக்கமாக எடுத்துக் கொண்டு நிலம் செழுமையை அடைகிறது; வளம் கொழிக்கிறது. அந்த வளத்தினைத் தனக்குத் தீமை செய்த மனித குலத்திற்கே திரும்பத் தந்து விடுகிறது. அவர்கள் வாழ்க்கையை வளமாக்குகிறது; உயர்த்துகிறது. மலைக்கு இந்த இயல்பில்லை. மற்றவர்கள் மலையைக் குடைந்து கல் உடைத்து எடுத்தால் மலை பொறுத்துக் கொள்வது உண்மை; ஆனால் தன்னை அழித்துக் கொள்கிறது; கல் உடைப்பவனுக்கும் நெடிய பயன் தருவதில்லை. ஆனால் உழப்பெறும்-கொத்தப்பெறும் நிலம் அழிவதில்லை. தனக்கு ஏற்பட்ட அழிவையே ஆக்கமாக மாற்றிக் கொண்டு வளம் கொழிக்கிறது; வாழ்விக்கிறது; நிலையாக வாழ்விக்கிறது. அதுபோல் பொறுமைப் பண்பின் மூலம் ஒரு மனிதன் அல்லது ஒரு இனம் அழிந்துவிடக் கூடாது; வளர வேண்டும். பொறுத்தல் என்ற பண்பு ஆக்கத்தின் பாற்பட்டது. "பொறுமையும் சாந்தமும் ஒருவனுக்கு ஆற்றலைக் கொடுப்பன” என்றார் லேஹண்ட்

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை"

(151)

26. பொறுமை போற்றுக!

இந்த உலகில் எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்; நியதியும்கூட! ஆனால் அப்படி எல்லாம் நடப்பதில்லையே! என்ன செய்வது? நாம் விரும்பாதன பல நடக்கின்றன! நன்மைகளைப்போலக் காட்டித் தீமைகள் செயல்படுகின்றன. பொய்யர்களின் மெய் அரங்கேறுகிறது. பழிதுாற்றும் படலமே ஓதப் பெறுகிறது.

நண்பர்கள் பகைவர்களாகின்றனர்! மலடிகள் மகப் பேறு மருத்துவ ஆலோசனைகள் கூறுகின்றனர். அதுவும் கருவுயிர்க்கும் அறையில் அல்ல; அரங்கில்! என்ன செய்வது? ஆத்திரப்படுவதில் பயனில்லை. பொறுமையாக இருத்தல் வேண்டும்!

பயன்படு வாழ்க்கைக்கு வாயில் பொறுமையே! மற்றவர்கள் தீயையே அள்ளிக் கொட்டினாலும் பொறையுடைய வாழ்க்கையை அது ஒன்றும் செய்யாது! கூளம், குப்பையாக இருந்தால் பற்றி எரியும்! இல்லையானால் தீ அவியும். இதுவே நடைமுறை!

பொறுமைக்கும் எல்லையுண்டு என்பர் சிலர்! இது தவறு. பொறுமைக்கு எல்லையே இல்லை! அப்படியே எல்லை உண்டு என்று கருதினாலும் அந்த எல்லை, "தீங்கு செய்பவன் திருந்தி நலம் செய்பவனாக மாறுவதே பொறுமையின் எல்லை" என்றார் முகமதுநபி.

நிலம் பயன்பாடுடையது. பயன்படு பொருள்கள் பலப் பல தருவது. நிலமின்றேல் வாழ்வு இல்லை. இந்த நிலத்தையே நாம் அகழ்ந்தும் துன்புறுத்துகின்றோம். ஆயினும் நிலம் அகழ்வாருக்குத் தீங்கு தருவதில்லை. மாறாகப் பயன்களையே தந்து வாழ்விக்கிறது.

அதுபோல் நாம் நம்மை இகழ்வார் மேல் கோபம் கொள்ளக் கூடாது. முடிந்தால் குற்றங்களைத் திருத்த வேண்டும் அல்லது பொறுக்க வேண்டும். பொறுத்தாற்றும் பண்பு ஒரு வலிமை; வெற்றிகளைத் தருவது; இன்பம் தருவது.

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை"

(151)

27. பொறுத்தாற்றும் பண்பு

பொறுத்தாற்றல், பண்புகள் அனைத்திற்கும் மேம்பட்ட பண்பாகும். பொறுத்தாற்றல் பண்பால் பகைமை தடுக்கப்படுகிறது; திருத்தங்கள் காண்பதற்குரிய வாயில்கள் தோன்றுகின்றன; வலிமையும் தகுதியும் வளர்கின்றன. மகிழ்ச்சியின் திறவுகோலாகப் பொறுத்தாற்றும் பண்பு விளங்குகிறது.

உணர்ச்சிவசப்படுதல், அளவுக்கும் அதிகமான தன் மானம், பெருமை ஆகியன பற்றிக் கவலைப்படுதல், தேவையில்லா ஒரு மதிப்புணர்ச்சியைத் தமக்குத் தாமே உருவாக்கிக் கொள்ளுதல் ஆகியன பொறுத்தாற்றும் பண்புக்குத் தடையானவை. சில நாள் பொறுத்திருந்தாலே பல சாதனைகள் செய்யலாம். காலம் கருதிக் காத்திருப்பின் சல்லடையில்கூடத் தண்னணீர் எடுத்துச்செல்ல இயலும். ஆம்! தண்ணணீர் பணிக்கட்டியாக உறையும்வரை காத்திருக்க வேண்டும்.

வாழ்க்கையின் இயல்பே கூடிச்சேர்ந்து வாழ்தல்தான். அதுவே மானுட சாதியினுடைய படைப்பின் நோக்கம். கூடி வாழ்தல் எளிதான செயலா? அம்மம்மா! உயிர்க்குலம் அனைத்தினோடும் கூடக் கூடி வாழ்தல் இயலும், பாம்பினைப் பழக்கிவிடலாம். ஆனால், மனிதர்களுடன் சேர்ந்து வாழ்வது எளிமையான காரியமன்று!

மானுட ஜாதி தன் பயணத்தைத் தொடங்கிய நாளிலிருந்தே சண்டை போடுதலைத் தொடங்கிவிட்டது. ஆம்! கலகங்களையும் சண்டைகளையும் நேரிடும் அவமானங்களையும் கண்டு வருந்துதல் கூடாது. திருத்தங்கள் காண முயல வேண்டும். குற்றங்களுக்குத் திருத்தம் காணும் முயற்சியிலேயே கூட்டுறவு வெற்றிபெற இயலும். திருத்தம் காண இயலாது போனால், பொறுமையாக இருந்தாக வேண்டும். சண்டைபோட்டுக் கொள்வதும் பிரிவதும் விரும்பத்தக்கனவல்ல.

பொறுத்தாற்றும் பண்பை வளர்த்து உறுதிப்படுத்துவது நம்மை வளர்த்துக் கொள்வதேயாகும். வலிமை, தூய்மை யாரிடம் இருக்கிறதோ அவர்களை எந்த இழிவும் சென்றடையாது. அவதூறுகள் நெருப்பிடை வீழ்ந்த உமியெனக் கருகிப்போம். சிலர் கோழை என்றுகூறி ஆறுதல் பெறுவர். அதனால் நமக்கென்ன குறை?

குப்பை கூளம் இல்லாத இடத்தில் நெருப்புப் பற்றி எரியுமா என்ன? ஆதலால் பொறுத்தாற்றும் பண்பைப் பெற வலிமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்; தூய்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தகுதிகள் பலவற்றையும் முயன்று அடைய வேண்டும்.

இப்படி வளர்ந்த நிலையில் காட்டும் பொறுமைதான் பொறுமை; வலிமை சார்ந்த பொறுமை. தகுதி மிகுதியும் உடையோரின் பொறுமையே வாழ்வளிக்கும், வையகத்தின் வரலாற்றை இயக்கும் திருக்குறள், "மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியான் வென்று விடல்."

(158)

என்று கூறி வழி நடத்துகிறது.

ஆம்! மற்றவர் பழிதூற்றினால் அதனால் உண்மையில் விளைவது; தகுதியில்லாதவராக இருந்தால் சினம், பகை, கலகம்; தகுதிமிகுதியும் உடையோராக இருந்தால் திருத்தம் காண முயற்சி செய்வர்; பழிதூற்றுவாரையும் வாழ்த்துவர்.

பரபரக்க வேண்டாம்; உணர்ச்சி வேண்டாம்; தேர்ந்து தெளிக! குப்பைகள் அகற்றப்பட வேண்டியவையே! குப்பைகள் உடைய இடங்கள் அகற்றப்படுவன அல்ல; அகற்றவும் இயலாது. குற்றங்களைத் திருத்துக. பயன் கொள்ள முயலுக. இவ்வழி பொறுத்தாற்றும் பண்பு வளரும்; நாளும் குற்றங்களிலிருந்து விடுதலை பெறுக; வளர்க; வலிமை பெற்றுயர்ந்திடுக; தகுதிகள் பலவும் பெற்று உயர்ந்திடுக. எல்லாரும் அணைவர். கூடி வாழ்ந்திடலாம். கோடி நன்மை பெறலாம்.

28. பொறுமை ஆக்கம் தரும்!

நிலம் கொத்துதல், உழுதல், தோண்டுதல் ஆகிய செயல்களின் வழி, துன்புறுத்தப்படுவது, உலகில் மாந்தர் வாழ்வியலுக்குரிய செயற்பாடு. ஆனால், நிலம் கொத்தப் பட்டும், வெட்டப்பட்டும் துன்புறுத்தப் படுவதனால்தான் நிலம், நிலத்தின் தன்மையை இழக்காமல் பாதுகாத்துக் கொள்கிறது.

கொத்தி உழப்பெறாத நிலம் மண் அரிப்பு நோய்க்கு இரையாகும். அது மட்டுமின்றி நிலம் உழப்பெற்றாலே வான் மழையின் நீரை-வாங்கித் தன் மடியில் வைத்துக் கொள்ளும் ஆற்றலைப் பெறுகிறது; பசுமைப் புரட்சி செய்யும் ஆற்றலைப் பெறுகிறது.

உலகுயிர்க்கெல்லாம் உணவு அளித்துக் காப்பாற்றும் வேள்வியை நிலம் செய்ய முடிகிறது. நிலம் தன்னை அகழ்ந்து தரும் துன்பத்தினையே தனக்கு ஆக்கமாக மாற்றிக் கொள்கிறது; உழுவாரையும் வாழ்விக்கிறது. நிலத்தின் பொறுமை, ஆக்கமாகிறது; உயிர்க் குலத்தின் வாழ்வாகிறது.

மனிதனும் பொறுத்தாற்றும் பண்பு காத்தல் வேண்டும் பொறுத்தாற்றுவோரை, அறியாதார் கோழை என்று ஏளனம் செய்வர். அதனால் என்ன? தீமை வராது; நன்மையே பெருகி வளரும்! கூளம் குப்பைதான் தீக்கு ஆக்கம் - தீமையுடையார் தான் தீமைக்கு ஆக்கம். பொறை யுடையோர் முன் தீமை அழியும். நம்மில் வலியோர் தூற்றினால் பொறுத்துக் கொள்வது போலவே நம்மில் கீழோர் தூற்றினாலும் பொறுத்துக் கொள்வதே உண்மையான பொறையுடைமை; பொறுத்தாற்றும் பண்பு.

பிரார்த்தனைக்கு ஈடானது பொறுத்தாற்றும் பண்பு. எல்லை கடந்த நிலையில் நமக்குப் பிறர் இன்னாதன செய்யும் பொழுது காட்டப்படுவதே பொறுத்தாற்றும் பண்பு - ஏன்? பொறுத்தாற்றும் நெறியின் வழி, விதியைக் கூட வெல்லலாம். தீமைக்கும் தீவினைக்கும் வாயில் சினமே!

சினம் தவிர்த்துப் பொறுமை மேற்கொண்டொழுகின் தீயவினையையும் அதாவது போகூழையும் ஆகூழாக மாற்றலாம். பொறுத்தாற்றும் பண்பு வெற்றிகளைத் தரும். நிலத்தினைப் பார்ப்போம். நிலத்தின் பொறுத்தாற்றும் பண்பை நமது அணியாக ஏற்போம்! நமக்கு இன்னாதன செய்வோரையும் ஏற்போம்! வாழ்விப்போம்!

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை."

(151)

29. அழுக்காறு திண்டா உள்ளம் பெறுக!

மனிதன் வெற்றி பெறுவது குணநலன்களினாலே யாம். குணநலன்களுடன் ஊக்கமும், திறனும் அமையின் மேலும் புகழ்மிக்க வாழ்க்கை கிடைக்கும். தீய குணங்கள் தாமே விலகா. நற்குணங்களைப் பயில்வதன் மூலமே தீய குணங்கள் அகலும். நற்குணங்கள் வளர்க்கப்பெறுவன. தீய குணங்கள் தாமே வளர்வன. மனத்தைக் கெடுக்கும் தீய குணங்களுள் தலையாயது அழுக்காறு. அதாவது மற்றவர் பெறும் பெருஞ் சிறப்புக்களைக் கண்டு மகிழ இயலாத உள்ளம் பெறுதல்; மற்றவர் பெறும் பேறுகளைப் பாராட்டும் உணர்வின்மை; மற்றவர் பெற்றுள்ள பெருஞ் சிறப்புக்களை அங்கீகரிக்க மனம் இல்லாமல் குற்றங் குறைகளைக் கூறுதல். இவையெல்லாம் அழுக்காற்றின் இயல்புகள். அழுக்காறுடையான், தான் ஒன்றைப்பெற முயல மாட்டான். மற்றர்கள் பெற்றிருப்பவைகளுக்குக் களங்கம் கற்பிக்கவே முயற்சி செய்வான். அதனால், தான் நலம் பெறும் முயற்சிகளில் அவனுடைய மனம் தலைப்படாது. கல்வி போன்றவற்றில் அழுக்காறு கொள்ளலாம் என்று சிலர் அறியாமல் கூறுவர். இது தவறு. ஒரு பொழுதும் அழுக்காறுடையார் நன் முயற்சியில் ஈடுபடார். நன்னெறியில் நிற்க ஒருப்படார். அழுக்காற்றினைப் “பாவி” என்று கூறியது திருக்குறள்.

அழுக்காறு என்ற தீயகுணம் நம்மைத் தீண்டாமல் இருக்க வேண்டுமானால் மற்றவர்கள் பெற்றுள்ள தனித் திறன்களைக் கண்டு உளமாரப் பாராட்டக் கற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் பெற்றுள்ள செல்வம் முதலியன நியாயமானவையே என்ற எண்ணம் தேவை. இது மட்டும் போதாது. மற்றவர்களுடைய குற்றங் குறைகளைக் கண்டு எக்காரணத்தைக் கொண்டும் மகிழக் கூடாது. அதற்கு மாறாக இரக்கம் கொள்ளுதல் வேண்டும். இங்ஙனம் வாழ்ந்து பழகின் அழுக்காறு எனும் தீய குணம் மனத்தைத் தீண்டாமல் காக்க இயலும்.

அழுக்காறு - பொறாமைக் குணம் உடையவர் உள்ளம் ஊக்கத்தை இழத்தல் இயற்கை. ஊக்கத்தை இழந்த பின் ஏது ஆக்கம்? ஆதலால், அழுக்காற்றுக் குணமுடையவர்கள் ஒரு பொழுதும் வளரமாட்டார்கள்; வளமுடையவராக மாட்டார்கள். இந்த நியதிக்கு மாறாக அழுக்காறே பிறவிக் குணமாக உடையவர்கள் செல்வம் பெற்றிருந்தால் அந்தச் செல்வம் நியாயத்தின் பாற்பட்டதல்ல; நீதியொடு தொடர் புடையதல்ல. அழுக்காறுடையாரிடம் உள்ள செல்வம். களவால் ஆகிய செல்வமாக இருக்கலாம்; இருக்க வேண்டும். தேர்ந்து தெளிக! அது போலவே, அழுக்காறிலாது தூய மனப்பான்மையுடன் வாழும் மனிதர்கள் வறியவர்களாக வாழ்தலும் நெறியன்று; முறையுமன்று. இதிலும் முறை பிறழ்வுகள் உள்ளன! தேர்ந்து தெளிதலே முறை!

அறிவியல் வளர்ச்சி, ஊக்கம் நிறைந்த உள்ளம், நன்மையைப் பாராட்டி மகிழும் இயல்பு, பிறர் பெறும் பெருஞ் சிறப்புக்களை மதித்துப் போற்றும் பண்பு ஆகியன அழுக்காறு தீண்டா உள்ளம் பெற வேண்டிய பழக்கங்கள்; வழக்கங்கள்!

30. பொறாமை

பிறருடைய செல்வம், புகழ் முதலியன கண்டு மகிழ முடியாத குணம் பொறாமை எனப்பெறும். பொறாமையைத் திருக்குறள் அழுக்காறு என்று கூறுகிறது. அதாவது அழுக்கு நிறைந்த வழி. நமது நாட்டில் அறிந்தும் அறியாமலும் நல்லவைகளின் அடிப்படையில் அழுக்காறு கொள்ளலாம் என்று கூறுகின்றனர்.

ஆயினும் அழுக்காறு கொள்ளுதல் எந்த நிலையிலும் தீதே. அழுக்காறு ஒரு பொழுதும் நன்மை பயக்காது. அழுக்காற்று நெஞ்சமுடையார் நல்லவைகளையும் கூடத் தாம் பெற முயற்சி செய்ய மாட்டார்கள். நல்லவைகளைப் பெற்றிருப்பவர்கள் மாட்டு அழுக்காறு கொண்டு அவர்களுக்குக் குற்றங் குறைகளைக் கற்பித்துப் புழுக்கங் கொள்வர்! பழி துாற்றுவர்.

அதனால் அழுக்காறுடையார் மாட்டு உயர்வு தோன்றவும் இயலாது. உலக மகாகவி ஷேக்ஸ்பியர் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்! எதற்கு? அழுக் காற்றிடம் சிக்கிச் சீரழியாமல் பாதுகாப்பாக இருப்பதற்காக!

“O Beware My Lord of Jealousy" என்று கூறுகிறார். "அழுக்காறு நெஞ்சம் பெறுதல் சாதலுக்கு நேரானது" என்பார் காட்டன். ‘Envy will sting itself to death’ என்பது அவர் கூற்று. அழுக்காறு உடையார் தன்னை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்வதில்லை. சான்றாக ஒரு முடவன் (நொண்டி) தன்னுடைய காலைப் பழுது நீக்கிச் சீரமைத்துக் கொள்ள விரும்புவதில்லை; முயற்சி செய்வதில்லை. அடுத்தவன் கால் முடமாகி விட்டால், தான் நடக்க இயலும் என்று நினைப்பான். இதற்கே அழுக்காறு என்று பெயர்.

தமிழ் நாட்டில் ஒரு பழமொழி உண்டு. "தனக்கு மூக்குப்போனாலும் பரவாயில்லை; அடுத்தவனுக்கு அபச குனமாக வேண்டும் என்று நினைத்துத் தன் மூக்கையே அறுத்துக் கொண்டானாம்” என்பர். இத்தகைய அழுக்காறு தீமைகளின் பிறப்பிடம்.

நற்குணம் இம்மியும் இல்லாத இழி பிறவிகளே அழுக்காறுடையராய் இருப்பர். அழுக்காற்றினைத் திருக்குறள் ‘பாவி’ என்றே திட்டுகிறது. இன்று எங்கும் பரவிக் கிடப்பது அழுக்காறேயாம்.

அழுக்காறில்லாத நெஞ்சம் பெறுதல் நல்லொழுக்கத்தின் இயல்பாகும். அழுக்காற்றினை எங்ஙனம் அகற்றுவது? அழுக்காறு வந்தபின் அகற்றுவது கடினம். அழுக்காறு வராமல் பாதுகாத்துக் கொள்வதே நல்லது. வருமுன் பாதுகாப்பு வேண்டும்.

பிறருடைய செல்வத்தை, செல்வாக்கைக் கண்டால், கேட்டால் மகிழும் இயல்பினைப் பெறுதல் வேண்டும். மகிழ்ந்தால் மட்டும் போதாது. அவர்களுடைய செல்வம், செல்வாக்கைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ள நாம் துணையாக இருக்க வேண்டும்.

“அறனாக்கும் வேண்டாதான் என்பான் பிறனாக்கும்

பேணாது அழுக்கறுப் பான்”

(163)

அதாவது, மற்றவர்களுடைய செல்வம், செல்வாக்குகளைக் கண்டபொழுது மகிழ்ச்சியடையும் உள்ளத்தினைப் பெறுதல் வேண்டும். பாராட்டுகின்ற குணம் பெற்றிருத்தல் வேண்டும். அப்போதுதான் அழுக்காறு நம்மைத் தீண்டாமல் பாதுகாத்துக் கொள்ள இயலும்.

எப்போதும் செல்வம், செல்வாக்கில் தம்மில் உயர்ந்திருப்பாரை நோக்கி அண்ணாந்து பார்க்கக் கூடாது. அதற்கு மாறாகத் தம்மில் கீழிருப்பாரை எண்ணி அமைதி பெறும் இயல்பினை வளர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய பழக்கங்களில் அழுக்காறு வந்து பற்றாது.

அழுக்காறு தீது! அழுக்காற்றினின்று விலகுக! முற்றிலும் விலகுக! பிறர் வாழ்வு நலன்கள் கண்டு மகிழ்க! ஊன் உருக உளம் உருகப் பாராட்டுக! அவற்றை இழக்காது துய்க்கும் வண்ணம் பாதுகாத்திடுக. பெறாததைப் பெற முயலுக! பெற்றவர்மீது புழுக்கம் கொள்ளற்க! உளம் குளிரப் பாராட்டுக! வளரும் வழி இது! அழுக்காறு இல்லாத வாழ்வே சிறப்புடைய வாழ்வு.

31. பொறாமை கொள்ளற்க!

அழுக்காறு - அழுக்கு நிறைந்த வழி. அதாவது நன்மையும் இன்பமும் இல்லாத வழி. இத்தகு அழுக்கு வழியில் வாழ்தல் வளர்ச்சிக்குத் துணை செய்யாது. இனியவை கூறல் பற்றிப் பல குறட்பாக்கள் இயற்றிய திருவள்ளுவர். "அழுக்காறு என ஒருபாவி” என்று அழுக்காற்றினைத் திட்டுகிறார்.

ஆம்! அழுக்காறு ஒரு பொழுதும் நன்மை பயக்காது. மாறாகத் தீமையைத் தரும். இந்த அழுக்காறு தான் மக்கள் மத்தியில் "பொறாமை" என்று பேசப்படுகிறது. அதாவது மற்றவர்களின் ஆக்கத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமை பொறுத்துப் போற்ற முடியாமை அழுக்காறு ஆகும்!

ஆனால் இன்று பலர் நல்லவைகளில் - கல்வியில் பொறாமைப்படலாம். தீமையன்று என்று அறியாமல் கூறுகின்றனர். இது தவறு. ஒருவர் நன்மை செய்வதில் அழுக்காறு கொள்பவன், நன்மை செய்ய முனைப்புக் கொள்ள மாட்டான். அழுக்காறு நிறைந்த உள்ளத்தியல்பும், நன்மை செய்வதில் ஊக்கம் காட்டாது என்றே திருக்குறள் கூறுகிறது.

நஞ்சு, அமுதாவது ஏது? சாக்கடை நன்னீராவது ஏது! அதுபோலவே தான் நல்ல மதிப்பெண் வாங்கும் மாணவனைப் பார்த்து குறைந்த மதிப்பெண் வாங்குபவன் அழுக்காறு கொண்டால் கூடுதல் மதிப்பெண் வாங்கும் முயற்சியில் ஈடுபடமாட்டான். அதற்கு மாறாக அதிக மதிப்பெண் வாங்கியவன்மீது குற்றங்களை, குறைகளைக் கற்பித்துக் கூறுவான். ஏன், ‘காப்பியடித்து’ விட்டான் என்றே கூறுவான். மேலும் ‘மோசமாகி’ ஆசிரியர், கையூட்டுப் பெற்று விட்டார் என்று கூடக் கூறுவான். ஆதலால், எந்த வகையிலும் அழுக்காறு தீதே.

அழுக்காற்றை அகற்றும் வழி, நல்லவர்களை - வாழ்பவர்களைப் பாராட்டி மகிழ்வது தான். அதோடு பெற்றவைகளைக் கொண்டு மகிழும் மனம் வேண்டும். பெறாதவைகளைப் பெறும் முயற்சியும் வேண்டும். உப்பரிகைகளைப் பார்த்துப் புழுங்குதலைத் தவிர்த்து குடிசைகளில் வாழ்பவரை நோக்கி இரக்கங் கொள்ளுதல் வேண்டும். இத்தகு மனப்பான்மை வாழ்க்கைக்கு ஆக்கம் தரும்.

எப்போதும் நல்லனவற்றையே நாடுதல்,நல்லனவற்றைப் பற்றியே பேசுதல் அழுக்காற்றிலிருந்து தப்பும் ஒரு வழி. எங்கும் எதிலும் எவரிடத்திலும் குற்றம் - குறைகள் இருக்கும். எல்லாரும் கடவுளா என்ன? நாம் அவர்களிடத்தில் உள்ள குணங்களையே எடுத்துக் கொள்ள வேண்டும்; நல்லவைகளைப் பாராட்ட வேண்டும். நாம் ரோசாச் செடியில் முட்களை எடுக்கக் கூடாது; மலர்களையே எடுக்க வேண்டும்.

அழுக்காறு என்ற தீய குணத்தினாலேயே மனித குலம் ஒன்றுபட்டு வாழ முடியவில்லை; பகையில் சிக்கித் தவிக்கிறார்கள். அழுக்காறு தனித்தும் நிற்காது. அழுக்காற்றின் படை அவா. வெகுளி இன்னாத சொல்லல், கலகம் எல்லாமேயாம்.

ஆதலால் அழுக்காறு கொண்ட மனிதன் வளர்தல் அரிது; வாழ்தல் அரிது; அதனாலேயே ‘திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும்’ என்றது திருக்குறள். தேளின் கொடுக்கு, நஞ்சாம் தன்மைபோல அழுக்காறுடையார் உள்ளம் நஞ்சாகும்.

அழுக்காறு கொள்ளற்க! மற்றவர் வாழ்வதைக் கண்டு மகிழ்க! நீயும் வாழ முயலுக! நல்லனவற்றையே காண்க! நல்லனவற்றையே பேசுக. மற்றவர்கள் ஆற்றலை, அறிவைப் பாராட்டி மகிழ்க! எவரோடும் பழகுக! தோழமை கொள்க! மறந்தும் மற்றவர்களைப் பற்றிப் புழுக்கம் கொள்ளற்க!

32. உழைத்து வாழ்க!

"நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்"

(71)

இந்தத் திருக்குறள் சொற்பொருள் நிறைந்தது. பொருளில் தத்துவமும் அறநெறிக் கோட்பாடும் பொதிந்த திருக்குறள் இது!

‘நடுவுநிலை’ என்பது ஒர் உயர்ந்த வாழ்வியல் தத்துவம்; கொள்கை; கோட்பாடு! நியாயம்-அநியாயம், நீதி-அநீதி ஆகியவற்றுக்கிடையில் யார் பக்கமும் சாராது நிற்றல் என்பது பொருளல்ல. இங்கனம் நிற்றல், அதாவது அநீதிக்கும் நீதிக்கும் இடையே நடுநிலையாக நிற்றல் என்பது அறியாமை; கோழைத்தனம்! இல்லை, அநீதிக்கே துணை போவது போலத்தான்!

ஆதலால் அநீதி-நீதி இவற்றுக்கிடையே மோதல் வந்தால் தற்சார்பு, அச்சம், அவா ஆகியவற்றின் காரணமாக எது நீதியெனத் தெரிந்து கூறாது. சார்ந்து நில்லாது விடுதல் நடுவுநிலையன்று. அதுபோலவே பொருள், உழைப்பால் படைக்கப்படுவது; உரிமையால் பேணப்படுவது உழைப்பவர் படைத்த பொருளை உழைக்காமல் அடைய நினைப்பது, உரிமை கொண்டாடுவது நடுவு நிலைமையுடைய சார்பல்ல. உழைப்பவர்க்கே பொருள் உரிமை! உண்ணும் உரிமை!

"நன்பொருள்" - பரிசுச் சீட்டில் கிடைத்த பொருளல்ல; பிறர் பங்குப் பொருள் அல்ல; சலத்தால் செய்த பொருளும் அல்ல. உழைப்பில் உருவாய பொருள். அதனால் 'நன்பொருள்’ என்றார்.

ஒருவருடைய உழைப்பின் பொருளை, ஒருவர் திருடிக் கொண்டால் அந்தக் குடும்பம் வளர்ந்து விடாது. ஏன்; பொருளைவிடப் பொருளைப் படைக்கும் உழைப்பாற்றல் விலை மதிப்புடையது; மாறாத் தன்மையுடையது: ஊற்று வளம் நிகர்த்தது. சுரண்டுதல் மூலம் பிறர் பொருள்கிடைப்பின் வாழ்க்கையின் தேவைக்குக் கிடைத்து விடுவதால் உழைக்கும் உணர்வு தலையெடுக்காது.

அதனால் உழைப்பாற்றல் மிக்க புலன்கள், பொறிகள் காலப்போக்கில் தம்முடைய உழைக்கும் தகுதியை இழக்கும். நோய் கொள்முதல் ஆகும்! ஏமாற்றப்படுபவன் விழித்துக் கொண்டால் சுரண்டவும் இயலாமல் போய் விடும்! அப்புறம்?

வாழ்க்கை திண்டாட்டம்தான்! அதனால், வாழ்வு கெடும்! உழைக்கும் இயல்பின்மையால் குற்றங்கள் செய்து வாழும் நிலை உருவாகும். அதனால் திறமை, ஒழுக்கம், பண்பாடு வளர உழைப்பு தேவை! உழைத்துப் பொருளீட்டி வாழ்தலே வாழ்வு! உழைக்கும் வாழ்வே அறவாழ்வு! நலவாழ்வு!

33. நடுவின்றி நன்பொருள் விரும்பற்க!

வெஃகல்-பிறர் பொருளுக்கு ஆசைப்படுதல் அதாவது தனககு உரியன வல்லாதனவற்றிற்கு ஆசைப்படுதல் என்பது பொருள்! ஆம்! ஒருவர் மற்றவருடைய பொருளை விரும்புதல் களவுக்குச் சமம்! இதனால் வாழ்க்கை நிலைகளும் மாறிக் களவு, காவல் என்ற இழிநிலைகள் தோன்றும். பூட்டுக்கள் பெருகலாம். ஆனாலும் களவு நின்ற பாடில்லை. ஏன்? பொருள் என்பது உழைப்பின் பயன். உழைப்பாலன்றிப் பொருள் ஈட்ட விரும்புபவன் அறநெறி நிற்பவன் அல்லன். அதுமட்டுமின்றிப் பிறர் பொருளை விரும்புபவன் தனது அறிவை இழக்கின்றான்; ஆற்றலை இழக்கின்றான்; காலப்போக்கில் மானத்தையும், பெருமையையும் இழக்கின்றான்; பழியைத் தேடிக் கொள்கின்றான்.

உழைத்துப் பொருள் ஈட்டாது பிறன் பொருளை விரும்புபவர்கள் பொருளுடையாரைத் துன்புறுத்தவும் செய்வர்; ஈரநெஞ்சினை அறவே இழந்து வெறித்தனமாக நடந்து கொள்வர். அன்பும் அருளும் இவர்களுடைய பண்புகளாக அமைந்து விளங்கா.

இங்ஙனம் பிறன் பொருளுக்கு ஆசைப்படுபவர்கள் அதனால் அடையும் துன்பங்களும் பலப்பல. யாருடைய பொருளை விரும்புகிறார்களோ, அவரிடமிருந்தும் துன்பம் வரும், பிறர் கைப்பொருளை நம்பி வாழ்ந்தமையால், தாம் பொருளீட்டும் முயற்சியின்மையின் காரணமாக அவலம் வளரும், ஆதலால் பிறர் பொருள் மாட்டு உள்ள விருப்பம் இன்பத்தைத் தருவது இல்லை; மாறாகத் துன்பம் தருகிறது.

பொருளியல் நியதிகளைச் சார்ந்தே ஒழுக்கங்கள் வளர்கின்றன; அறிவு, ஆற்றல்கள் வளர்கின்றன; சமுதாயத்தினரிடையில் நம்பிக்கையும், நல்லெண்ணமும் வளர்கின்றன. ஆதலால் உழைத்து வாழ்தலே வாழ்வு. பிறர் பொருளை எடுத்துக்கொள்ள விரும்புதல், உதவியாகப் பெறுதல், இனாமாகப் பெறுதல் ஆகியனவும்கூட வெறுக்கத் தக்கனவேயாம்.

பிறர் பொருள் ஒரே வழி நம் கையகப்படினும் கூடச் சிறிது பொழுதே இன்பந்தரும். அந்த இன்பத்தினைத் தொடர்ந்து பெருந்துன்பம் வரும் என்பதறிக. நல்வாழ்வின் முன் இன்மை என்பது ஒரு பெரிய குற்றமன்று. இன்மையும் கூட மன்னிக்கப்பெறும். ஆனால் நடுவின்றிப் பொருள் வெஃகுதல் தாம் பிறந்த குடியையே அழிக்கும். மேலும் பல குற்றங்களையும் தரும்.

ஆதலால், பிறர் பொருளை எந்த வகையிலும் அடைய விரும்பற்க! உழைத்துப் பொருளீட்டி வாழ்தலையே விரும்புக.

"நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்”

(171)

34. கோள் கேளற்க; சொல்லற்க!

மானுடம் உறவுகளால் ஆயது; உறவுகளால் வளர்வது, உறவுகளுக்காகவே மானுடம் அமைந்தது. சமூக அமைப்பு மானுடத்தினிடையில் வளரும் உறவுகளால் அமைந்தது; வளர்ந்து இயங்குவது; வாழ்வது.

உறவுக்கு எதிரான பகை, தீயது: "யாரொடும் பகை கொள்ளற்க” என்பது இராம காதை தரும் அறிவுரை. உறவு முறிந்து பகை வளர வாயில்கள் பல உண்டு. சொத்துரிமையின் காரணமாக உறவுகள் முறியக்கூடும். இஃது அருகிய வழக்கே!

நம்பிக்கையின்மை காரணமாக உறவுகள் முறியும். இந்த வகையில் பிரிவும் பெரும்பான்மையல்ல. ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையில் இருக்கும் உறவு, பகையாக மாறுவது மூன்றாவது மனிதரின் தலையிட்டால் அதுவும் கோள் சொல்லுதல் மூலம் தலையீட்டால்.

கைகேயி உத்தமத்தாய். ஆனால், கூனியின் தலை யீட்டால் அந்தத் தூய அன்பு திரிந்தது. அதனால் ஒருவரைப் பற்றி அவர் இல்லாதபோது நமக்கு ஆயிரம் நலம் பயக்கும் செய்திகளை முன்னுரையாகக் கூறி, உடன் அந்த மூன்றாம் மனிதரைப் பற்றிச் சொல்லும் செய்திகளைக் கேளற்க! ஒரோவழி கேட்டாலும் பொருளாகக் கொள்ளற்க.

காற்றுப் புகாத நெருக்கமிக்க உறவுகளுக்கிடையிலும் கோள் சொல்லுவோர் புகுந்து விளையாடுவர்; பிரித்து விடுவர். நமக்கு நன்மைபோலச் சொல்வர்! நீதிச் சார்புடையன போலச் சொல்லுவர்! நயத்தக்க நாகரிகம் என்பர்! ஆன்றோர், சான்றோர் நெறி என்பர்! அவ்வளவும் பச்சைப் பொய். தாம் கூறும் கோள் விலை போக இவ்வளவு நடிப்பு! கவனமாக இருக்க வேண்டும்; விழிப்பாக இருக்க வேண்டும்.

மற்றவர்களைப்பற்றி ஒருவரிடம் கோள் பேசாதே; எதுவும் கூறாதே; கோள் சொல்லுதல் தீது. ஆதலால் நாம் யாதொரு கோளும் யாரைப் பற்றியும் கூறக் கூடாது. பிறர் சொல்லும் கோளைக் கேட்கவும் கூடாது.

கோள் தற்சார்பு இனிப்பு மூடிய கொடிய நஞ்சு, இதய வலிமையுடையோரைக் கூட எளிதில் வீழ்த்தும் இயல்பு கோளுக்கு உண்டு. ஒரு நன்மையே விளையுமென்றாலும், கோள் வாயிலாக அந்த நன்மை விளைய வேண்டாம்.

கோளுக்கு உடன் வரும் தோழமைச் சொல் முகமன் (முகஸ்துதி). இதையும் தவிர்த்து விடுக. கோள் சொல்லுபவன் நச்சுத்தேன். கோள் சொல்வோர் உறவே வேண்டாம். ஒவ்வொரு நாளும் உறவுகளைக் காண்க; வளர்த்துக் கொள்க: வையகத்தில் வாழ்வாங்கு வாழ்க!

35. புறம் கூறல் தீது!

புறங் கூறல்-அதாவது ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிய குற்றம் குறைகளைப் பேசுதல், மேலும் அவர் முன்னே முகமனாகப் பாராட்டுதல்; புகழ்தல்; அந்த நபரை அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிய பழிகளை மட்டும் கூறுதல் புறங்கூறுதலாகும்.

சிலர் புறங்கூறுதல் என்ற தீமையை, நன்மை கருதிச் சொல்வதாகக் கூறுவர். ஆனால் புறங்கூறித்தான் நன்மையைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. எல்லாரும் நேரிடையாக நன்மையை எடுத்துச் சொன்னால் மறுப்பார் யார்? அறம் சொல்லுவார்போல் நடித்துப் புறம் சொல்லுதல் தீயபழக்கம்.

சிலர் வாயிலிருந்து சொற்கள் வருவதில்லை. "எரியும் நெருப்புக் கனலே வீசுகிறது" என்று ஒரு பழமொழி உண்டு. நன்மையையே சொன்னாலும் புறத்தே சொல்லுதலை நன்மையென எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இதனால் பகையே வளரும், மானம்-அவமானச் சிக்கல்கள் தோன்றும். புறஞ்சொல்லுதல் ஒரு பயனையும் தராததால் புன்மை என்றார் திருவள்ளுவர். "குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும்” என்று திருமுறை கூறும்.

ஒருவர் இல்லாத இடத்தில் அவர்தம் நற்குணங்களைப் பற்றி மட்டுமே கூறவேண்டும். அவர் முன்னே குற்றங்களை எடுத்துக் கூறலாம். புறங்கூறுதலால் பிணக்கும் பகையும் வளர்ந்து பிரிவினைகள் உருவாகும். இதனால் புறம் பேசுதலில் ஒரு நன்மையும் இல்லை; தீமை மட்டுமே உண்டு.

குற்றங்களையே எண்ணிப் பேசுதலால் காலப் போக்கில் குற்றங்கள் நம் மீதே சாரும் என்பதையும் அறிக! குற்றங்களைப் பொறுத்தாற்றும் உணர்வோடு ஏற்றுக் கொண்டு பழகும் அனுபவம் இருந்தால் குற்றங்கள் தொடரா.

நல்லனவற்றை நேரில் கூறுக. புறங்கூறுதல் அளவிறந்த தீமை தரும். அதனால் 'புன்மை’ என்று ஏளனம் செய்யப் பெறுகிறது.

புறங்கூறும் பழக்கமுடையவர்களுக்கு மற்றவர்களின் குணங்களும் அருமைப்பாடும் தெரியாது, குற்றங்குறைகளையே காண்பர்; விமர்சிப்பர்; ஏசுவர்; பழிதூற்றுவர். இதனால் பகை வளரும். ஆதலால் புறங்கூறுதல் தீது. நன்மையை நோக்கிக்கூடப் புறங்கூறக் கூடாது.

"அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்

புன்மையாற் காணப் படும்."

(185)

36. நல்லன எடுத்துக் கூறி நட்பினைத் தோற்றுவிப்பீர்!

இயற்கையின் நியதி ஒன்றாக வாழ்தல்; ஒருமை நலத்துடன் வாழ்தல். வேறுபட்டவெல்லாம் ஒன்றுபட்ட நிலையிலேயே உலகம் இயங்குகிறது. உலகியற்கையில் காணப் பெறும் வேறுபாடுகள் ஒருமை நிலைக்கு ஈர்க்கும் ஆற்றலுக்கு இசைந்த வேறுபாடுகளேயாம்.

மானுடம் கூடிவாழப் பிறந்தது. ஆனால் அது கூடி வாழ்ந்த காலம் எது? எங்கே என்ற விவரம் அறியப்புகின் விடை எளிதில் கிடைக்காது. இந்த உலகில் மானுடம் சேர்ந்து வாழ்ந்ததை விடக் கலகப்போர் செய்து கொண்டு அழிந்த செய்திகளே வரலாற்றுப் புத்தக ஏட்டில் ஆயிரக்கணக்கான பக்கங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. ஏன் இந்த அவலம்? மொழி, சமயம் பெற்றுங்கூட ஒருமையைக் கட்டிக் காப்பாற்ற முடியவில்லை.

ஒருவரிடம் ஒருவர், இல்லாத ஒருவரைப் பற்றிக் குற்றங் குறைகளைக் கூறுதல், வெறுப்பை வளர்க்கும்; பகைமையை வளர்க்கும்; பிரிவை உண்டாக்கும். "மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் வாய் திறந்தால் நீ உன் காதைப் பொத்திக்கொள்; கேட்காதே!" என்றார் குவாரல்ஸ்.

”Scandal breeds hatred; hatred begets division"

- Quarales.

ஒருவர் ஒருவருக்குச் செய்யக்கூடிய உதவி என்பது அவர் பலரோடு நட்பாக இருப்பதற்குரிய வாயில்களை அமைத்துத் தருவதேயாம். இருவருக்கிடையில் நட்பை உருவாக்கும் பணிக்கு ஈடான அறம் வேறொன்றும் இல்லை. சிவபெருமான், சேரமான் பெருமாளுக்கும், சுந்தரருக்கும் நட்புண்டாக்கிய வரலாற்றை அறிக. ஒருவருடைய சிறந்த அம்சங்களை எடுத்துக் கூறி அறிமுகப்படுத்தப் பழகுவதற்குரிய வாயில்களை உருவாக்கவேண்டும். நல்ல நட்பைத் தேடிக் கொடுத்துவிட்டால்கூட, திருந்த வேண்டியவர் இயல்பாகவே திருந்திவிடுவர்.

ஆதலால், மகிழ்ச்சி நிறைந்த நட்புறவை உண்டாக்கி வளர்த்தலே அறம். இந்த இனிய அறத்தை அறிந்து செய்ய இயலாதார் குற்றங் குறைகளை எடுத்துக்கூறி நண்பர்களைப் பிரிப்பர்; சமூகத்தில் பிரிவினைகளை உண்டாக்குவர். இத்தகையோர் நம்மை நாடி வந்து வாய் திறந்தால் நமது காதைப் பொத்திக் கொள்வது நல்லது. புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்பவர்கள் வல்லவர்கள், நமக்கு நல்லன செய்வது போலக் கூறுவார்கள்; சாத்திர ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுவர். காற்று இடைப்புகாது பழகிய நட்பு உடையாரைக் கூடப் பிரித்து விடுவர். எனவே விழிப்புடன் இருத்தல் வேண்டும்.

உலகில் உயர்ந்தது நட்பே! உலகில் உயர்ந்த அறம் ஒன்றி நின்று பழகுதலே! ஒன்றுதலுக்கு ஈடான அறம் இல்லை! இந்த அறம் நிகழ்ந்தாலே சமுதாயத்தில் திருத்தங்களும் கூடத் தோன்றும்; தீமைகள் சாயும்; நன்மைகள் பெருகும்.

ஆதலால், ஒருவரைப்பற்றி நன்றாக மட்டும் பேசக் கற்றுக் கொள்க! ஒருவரைப் பற்றிப் பிறிதொருவரிடம் நல்லன எடுத்துக்கூறி நட்பினைத் தோற்றுவித்து வளர்க்க முயல்வீர்! இதுவே வாழும் வழி!

"பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்வி

நட்பாடல் தேற்றா தவர்”

(187)

37. பயனுடைய சொல்லையே சொல்லுக!

இந்த உலகப் படைப்புகளெல்லாம் பயனை மையமாகக் கொண்டனவேயாம். பயன்படுத்தப்படாதன கழிகின்றன. தவறாகப் பயன்படுத்தப்படுவன தீமையை விளைவிக்கின்றன. இந்த உலகில் ஆற்றல் வாய்ந்தவைகளில் "சொல்” தலையாயது. சொல்லப்படுவது சொல். அறிந்து ஆராய்ந்து சொல்லப்பெறும் சொற்கள் பயனைத் தரும்.

பயனுடைய சொற்களே சொல். பயனற்றவைகள் 'சொல்’ என்ற கணக்கில் எடுத்துக்கொள்ளப் பெறுதல் இல்லை. வறுமை, பொருள் சார்ந்தது மட்டுமல்ல. சொற்களிலும் வறுமை உண்டு என்பது இளங்கோவடிகள் கருத்து. "வறுமொழியாளர்" என்று சிலம்பு கூறுகிறது. பயன் மிகுதியும் இல்லாத சொற்கள் என்பது சிலம்பின் கருத்து. "வெற்றெனத் தொடுத்தல்" என்று இலக்கணம் கூறும்.

தீய சொற்கள் அவற்றைச் சொல்வோருக்குத் தீமை விளைவிப்பதும் உண்டு. திருக்குறள், சொற்களில் அதிகக் கவனம் செலுத்துகிறது. இனியவை கூறல், புறங்கூராமை போன்ற அதிகாரங்கள் மூலம் விளக்கியுள்ளது. இவை போக "பயனில் சொல்லாமை” என்று தனியே விரித்தும் கூறியது, பயனில்லாத சொற்களையும் சொல்லக்கூடாது என்பதற்கே யாகும்.

வாழ்க்கை, பயனைக் குறிக்கோளாக உடையது. வாழ்க்கையின் குறிக்கோளை அடைதற்குரிய கருவிகளில் ஒன்று சமூகம். சமூக அமைப்பும் உறவும் சொற்களால் இயக்குவிக்கப்படுகின்றன. சமூகத்தில் இயங்கி நம்முடைய வாழ்க்கைக்கும் ஆக்கம் தரும் நெறிகளைப் பற்றி அறிவது "அரும் பயன்” ஆகும்.

அற்ப மகிழ்ச்சி, சிறுபொழுது இன்பக் கிளர்ச்சிகளுக்காகச் சொற்களைப் பயன்படுத்தக்கூடாது. நீண்ட நெடிய பயன் வேண்டும். அரிய பயனாக இருந்தால் மட்டும் போதாது. திருவள்ளுவருக்குக் கொள்ளை ஆசை! பெரும் பயன் வேண்டும் என்கிறார்.

வாழ்க்கையின் அருமைக்குரிய பயன்களை ஆராய்ந்து அறிக! அந்த, அரிய பயன்களைத் தரக்கூடிய சொற்களைத் தேர்வு செய்க. அச்சொற்களையே சொல்லுக.

"அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்

பெரும்பய னில்லாத சொல்"

(198)

38. தியினும், தீமை தீது!

நல் வாழ்க்கை அமைய, தீமை தரும் செயல்களைச் செய்யாதிருத்தல் வேண்டும். நல்லன செய்தல் வாழ்க்கையின் குறிக்கோள். நல்லன செய்தல் நன்று.

நல்லன செய்வது ஒருபுறம் இருக்கட்டும். தீமையைச் செய்யாது இருத்தல் வேண்டும். தீமையாவன வெறுப்பு, அகங்காரம், பொறாமை, பகைமை, பயம், தூற்றுதல் முதலியன.

இத் தீமைகளிலிருந்து வாழ்க்கை முற்றாக விலக வேண்டும். யாரொருவரையும் வெறுத்தல் கூடாது. நான் என்ற அகங்கார உணர்வு மேலிடுதல் கூடாது. யார் மாட்டும் எவர் மாட்டும் அழுக்காறு கொள்ளுதல் ஆகாது. யாரொடும் பகை கொள்ளுதல் கூடாது. பயம், அதாவது அச்சம் அறவே ஆகாது! மற்றவர்களுடைய சிறுமையை, குற்றங்களைத் துாற்றக்கூடாது. இவை தீமைகள். இவை தம்மைச் சார்ந்தாரை அழிக்கும்.

தீயைவிடத் தீமை கொடிது. தீ சார்ந்ததை மட்டும் எரித்து அழிக்கும், அது தீமை தோன்றும் இடத்தையும் அழிக்கும். சேரும் இடத்தையும் அழிக்கும். தீ, ஒரோ வழி பயன்படும்; தீமை பயன்படாது. அது அறவே தீது; முற்றிலும் தீது. ஆதலால், தீயன சொல்லற்க. தீயன செய்யற்க. தீமை செய்தலைக் தவிர்த்திட ஒரே வழி நல்லன செய்தலேயாம்.

“தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.”

(202)

39. கூட்டுறவு

‘உலகத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றமெல்லாம் கூட்டுறவின் அடிப்படையில் தோன்றியனவாகும். தோல்விகள் எல்லாம், வாழ்க்கையையும் நடவடிக்கையையும் உண்டாக்கும் பொருள்களிடையே கூட்டுறவு காணப்படாததால் நேர்ந்தவைகளாகும்’ என்றார்-எஸ்.கே.டே "கூட்டுறவு இயக்கம் மிக முக்கியத்துவம் ஆகிவிட்டதை எல்லாரும் புரிந்து கொண்டதாகச் சொல்வதற்கில்லை" என்றார் மாமேதை லெனின்.

கூட்டுறவு, மக்கள் இயக்கமாக விளங்க வேண்டும். கூட்டுறவு அமைப்புகளில் அரசியல் கட்சிகள் தலையீடும், அரசின் அதிகாரங்களும் ஊடுருவுதல் கூடாது; கூடவே கூடாது. இதனால் அரசின் தொடர்போ, - மேற்பார்வையோ, தணிக்கையோ கூடாது என்பதல்ல. அரசின் அணுகு முறைகள் கூட்டுறவைப் பொருத்தவரையில் குடியரசின் அடிப்படையான குடிமக்களின் நல்லிணக்க வாழ்க்கைக்கும், கூட்டுறவுப் பொருளாதார வளர்ச்சித் துறைக்கும், நிர்வாகத் துறைக்கும் பயிற்றுவித்து வழிகாட்டக் கூடியதாக அமைய வேண்டும்.

எந்தக் காரணத்தை முன்னிட்டும் கூட்டுறவு அமைப்புகளின் நிர்வாகக் குழுவைக் கலைத்தல் - தனி அலுவலர் நியமித்தல் போன்றவற்றைச் செய்யக்கூடாது. இங்ஙனம் செய்வது மனித உரிமைகள் அடிப்படையிலும், அறநெறி அடிப்படையிலும் முற்றிலும் தவறானது.

ஏனெனில் கூட்டுறவில் அதன் உறுப்பினர்கள் தங்களுடைய நிதி ஆதாரங்களைப் பங்குகளாக இட்டு வைத்துள்ளார்கள். அவர்களுடைய பொருளாதார வளர்ச்சியை அந்தக் கூட்டுறவு அமைப்பு உறுதி செய்துள்ளது. இந்நிலையில் கூட்டுறவு அங்கத்தினர்களை-கூட்டுறவு நிர்வாகிகளை விலக்குவது மரபல்ல.

மக்களும் கூட்டுறவை தங்களுடையதாகவும் பொது நலத்திற்க்கு உரியதாகவும் கொண்டு ஒத்திசைந்து வாழ்தல் வேண்டும். கூட்டுறவில் தனி நிலத்திற்கும் பொது நலத்திற்கும் இடையே மோதல் ஏற்படும்போது, பொது நலத்திற்கே முதன்மை இடம் வழங்கப் பெறுதல் வேண்டும். ஏனெனில் தன்னலத்தில் பொது நலம் அடங்காது. பொது நலத்தில் தனி மனித நலம் அடங்கும். மேலும் பத்திரமாகவும் இருக்கலாம்.

"ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்."

(214)

40. ஒப்புரவு வாழ்க்கை

சமுதாய அமைப்பில் ஒவ்வொருவரும் மற்றவர்களைச் சார்ந்து வாழ்கின்றனர். ஆதலால் ஒவ்வொருவரும் பிறிதொருவருக்குச் சமுதாயத்தில் பலருக்குக் கடமைப்ப்ட்டிருக்கின்றனர். இந்தக் கடமைப்பாட்டினை அறிந்து கொண்டு ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் இசைந்து கூடி நட்புறவுப்பாங்கில் வாழ்தல் வேண்டும்.

தம்தம் நிலையை வற்புறுத்தாமல் மற்றவர்கள் நிலையறிந்து அவர்களுடன் கூடி வாழ்தல் ஒத்ததறிந்து வாழ்தல். பூத பெளதிக மாற்றங்களால் உடல் நலம் கேடுறாது பார்த்துக் கொள்வதுபோல நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களால் நமது உணர்வு, ஒழுங்கு, ஒழுக்கங்களுக்குப் பாதிப்பு ஏற்படாமலும் மற்றவர்களுடைய நலனுக்குப் பாதிப்பு ஏற்படாமலும் வாழ்தல் ஒத்தறிந்து வாழும் வாழ்க்கை, ஒப்புரவு வாழ்க்கை, அது தீமை பயக்கும் வாயில்களை அடைத்துவிடும்; நல்வாழ்க்கைக்குரிய இயல்புகளை குணங்களைத் தந்து ஊக்குவிக்கும்.

ஊருணி ஊராருக்கு உண்ணும் தண்ணீர் தருவதால் "ஊருணி” என்று பெயர் பெற்றது. ஊரார் ஊருணித் தண்ணீரை அள்ளிக் குடிப்பதால் “ஊருணி” என்று புகழ் பெற்றது.

பல ஊருணிகளில் ஊற்று வளம் இருப்பதில்லை. அதுபோல் அறிவுடையானிடம் செல்வம் இருப்பின் அச்செல்வம் ஊராருக்குப் பயன்படும். ஆயினும் அறிவறிந்த ஆளுமை இன்மையால் செல்வம் அவனிடம் ஊற்றுப் போலப் பெருகி வளராது. இருக்கும் வரையில் கொடுப்பான். பின் அவனும் ஓர் இரவலனாகி விடுவான். அதனால்தான் நம் நாட்டில் வாழ்ந்த புலவர்கள் வறுமையில் வாழ்ந்தார்கள் போலும்!

ஊருணியை ஊர் பயன்படுத்தாது போனால் ஊருணி கெடும். அதுபோல அறிவுடையோனின் செல்வம் வழங்கப் பெறாது போனால் அழிந்துபோகும். ஆதலால், ஊருணி நீரைப்போல இழந்து போகாமல் மேலும் செல்வ வளம் பெற உழைப்பு வேண்டும். அறிவறிந்த ஆள்வினைதான் செல்வத்தை வளர்க்கும்; பாதுகாக்கும்! மற்றவர்க்கு வழங்கி வாழ்வதில் உலகந்தழீஇய புகழ் கிடைக்கும்.

இந்த உலகத்தில் எல்லாரும் உண்டு உடுத்து மகிழ்ந்து வாழ இயலும். ஆனால் நம் ஒவ்வொருவருடைய பேராசையின் காரணமாக இருந்து வரும் இல்லாத நிலை ஏன்? பேராசைதான் காரணம்! பேராசை இழப்பில்தான், மகிழ்ச்சி தொடங்குகிறது. ஆதலால், எல்லாரும் வாழ உரிமை உடையவர்கள் என்ற கருத்து முதலில் ஏற்கப் பெறுதல் வேண்டும். பாவேந்தன் பாரதிதாசன் சொன்ன,

உலகம் உண்ண உண்! உடுத்த உடுத்து!

என்ற பெருநெறியே, ஒப்புரவு நெறி!

இந்த ஒப்புரவு நெறி சார்ந்த வாழ்க்கைக்கு ஈடாக ஒரு வாழ்க்கை நெறி இந்த உலகத்திலும் இல்லை! தேவர் உலகத்திலும் இல்லை! ஆம்! ஒருவரை ஒருவர் சார்ந்தும் இணைந்தும் உறவு கொண்டாடி வாழ்தலே ஒப்புரவு வாழ்க்கை!

41. இரத்தல் தீது

நமது வாழ்க்கையில் நாம் ஒன்றைச் செய்யும்போது அச்செயலைச் சார்ந்து சில பண்புகளும் திறன்களும் வளர்கின்றன. அதுபோலவே செய்யத்தகாதனவற்றைச் செய்யும் பொழுதும் திறமைக் குறைவுகளும் தீய குணங்களும் வந்தடைகின்றன. சான்றாக நமது வாழ்வு நுகர் பொருள்களைச் சார்ந்து அமைகின்றது. அப்பொருள்களை வழங்கும் பண வசதி, அடிப்படை இன்றியமையாதது ஆகிறது.

நாம் ஒவ்வொருவரும் உழைத்துப் பொருளீட்டி நுகர்ந்து வாழ்தலே முறையான வாழ்க்கை. உழைத்துப் பொருளீட்டி வாழும் வாழ்வியலில், சார்பின்றித் தனித்து வாழும் பேறு கிடைக்கும். நாமே பொருளீட்டி வாழும் வளமான வாழ்வு தொடர் வரலாறாக நீடிக்கும்.

உழைப்பின் வழி அறிவறிந்த ஆள்வினை, செயல் திறன் கைகூடும், அறிவு வளரும்; ஆற்றல் பெருகி வளரும். ஆதலால், உழைத்துப் பொருளீட்டி உண்டு வாழ்தலே வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை.

அங்ஙணமின்றி நமக்குத் தேவையானவைகளை மற்றவர்களிடம் வாங்கி வாழும் இரத்தலால் வாழ்வு வளராது. தன்னம்பிக்கையுடையதாக விளங்காது. உழைப்பாற்றல் வற்றிச் சோம்பலில் வாழும் வாழ்க்கை அறிமுகமாகும்! அறிவும் வளராது. ஆதலால், "இரத்தலும் நல்லதே” என்றால் வாழ்வு வளராது; பயனுடையதாக அமையாது.

"நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்

இல்லெனினும் ஈதலே நன்று."

(222)

42. உண்மையான தவம்

இந்த உலகத்தில் இயற்கை, ஒருவருக்கொருவர் உதவி என்ற நியதியில்தான் இயங்குகின்றது. வாழ்க்கையின் நோக்கமே உதவி செய்வதுதான். ஒருவருடைய வாழ்க்கை முழுமை அடைவதும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுதுதான். ஏன் உயிரியக்கத்தின் நோக்கம் உதவி செய்தல் தான்!

இங்ஙனம் உதவி செய்யும் முறையில் வாழ்வியல் அமையாது போனால் வாழ்க்கை துன்பச் சுமையாக தோன்றும். "ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதற்காகவே, நாம் வாழ்கின்றோம். வேறு எதற்காகவும் இல்லை” என்றார் எலியட்.

ஒருவர் நம்மை நாடி வந்து கேட்டபிறகு செய்வது சிறந்த உதவியாகாது. நாமாகவே தேடிச் சென்று செய்யும் உதவியே உதவி. அபிதாவூது என்ற பெரியார், "நீ பிறருக்காகச் செலவு செய்தால் நான் உனக்காக செய்து கொண்டிருப்பேன்" என்று அல்லா அருளியுள்ளதாகக் கூறியுள்ளார்.

உதவி என்ற அச்சில் உலகியல் இயங்குகிறது. அது மட்டுமின்றிப் பிறருக்குத் தன்முனைப்பின்றி, விளம்பரமின்றி உதவி செய்வதில் இதயம் அன்பால் நிறைகிறது; அடக்கம் வந்தடைகிறது. பலர், சுற்றமாகச் சூழ்வர்.

இன்றைய உலகில் சமய நோன்புகளை நோற்பது பெருமையாகப் பேசப்படுகிறது. அதாவது உண்ணாமல் நோற்பது பலர் உண்ணாமல் நோற்கின்றனர். அதனால் பெயரும் புகழும் அடைகின்றனர். வரலாற்று நிகழ்வில் உண்ணா நோன்பை அறிமுகப்படுத்தியவர் அப்பரடிகள் ஆவார். பின் அரசியல் போராட்டங்களுக்கு அண்ணல் காந்தியடிகள் உண்ணா நோன்பைக் கருவியாகக் கையாண்டார்.

இன்று மிகச் சாதாரணமான ஒரு நிகழ்ச்சியாக உண்ணா நோன்பு வந்துவிட்டது. பசியைத் தாங்கிக் கொள்வது, உண்ணாது நோற்பது ஆற்றல் மிக்க தவம் என்று சமய நூல்கள் கூறும். ஆனால் திருவள்ளுவர் பசியைப் பொறுத்துக் கொள்பவரின் ஆற்றலைவிட மற்றவர். பசியை உணவளித்து அகற்றுவார் ஆற்றல் பெரிதென்று கூறுகின்றார்.

தமக்குற்ற பசியைத் தாங்கி, பொறுத்துக் கொண்டு தவம் செய்வது ஒரு வகையில் ஆற்றல்தான். ஆயினும், மற்றவர் பசியை மாற்றுவார் ஆற்றலை நிகர்த்த ஆற்றல் அல்ல அது என்று கருதுகிறார் திருவள்ளுவர். ஏன்? தமக்குற்ற பசியைத் தாங்கிக் கொள்வது, தொடக்க காலத்தில் இடர்ப் பாடாக இருப்பினும் பழகிய நிலையில் பசி வருத்தாது. துன்பம் செய்யாது.

மற்றவர்களுடைய பசியை மாற்ற வேண்டுமாயின் உழைப்பு தேவை. மெய்வருந்த உழைத்துப் பொருளீட்டினால் தான் மற்றவர்க்கு உதவ இயலும். உழைத்துப் பொருளீட்டிய நிலையில், பொருளிடத்துப் பற்று வருதல் இயற்கை. உழைத்து ஈட்டிய பொருளிடத்துப் பற்று மிகாது, மற்றவர் பசி நீக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுதல் அருமையிலும் அருமையாகும். தன் பசி தாங்குவதில் தாங்கும் திறன் மட்டுமே காணப்படுகிறது. அதுவும், பழகிப் போனால் திறனாகாது.

மற்றவர் பசியை மாற்றும் பணியில் உதவி செய்யும் வகையில் கைவருந்தி உழைக்கும் உழைப்பு அமைகிறது: பொருட் பற்றுடன் பொருளீட்டி, பின் பொருட்பற்று விட்டு உதவி செய்யும் குணநல ஆக்க மாற்றங்களாக அமைகின்றது. தன் பசி தாங்கலில் துறவியல் பண்பு முகிழ்ப்பதற்கு வாய்ப்பு இல்லை.

வறுமையாளர் கூடப் பசியை தாங்கிக் கொள்ளவே செய்கின்றனர், வேறு வழியில்லாமல்! மற்றவர் பசியை மாற்றுதற்குரிய உதவியைச் செய்கிறவர்கள் பொருட்பற்றினின்று நீங்கியே உதவி செய்கின்றனர்.

பசியைப் பொறுத்தலினும்-மற்றவர் பசியை மாற்றும் ஆற்றலே ஆற்றல்! இத்தகைய ஆற்றலைப் பெருக்கி வளரும் நாடு என்றும் வளரும்; வாழும்.

"ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின்."

(225)

45. வாய்மையே பேசுக!

சத்தியம், உண்மை என்ற சொற்களால் உணர்த்தப் பெறும் ஒன்றைத் திருக்குறள் ‘வாய்மை’ என்று கூறுகிறது. ‘சத்' என்ற சொல்லுக்குப் பொருள் ‘உள்ளது’ என்பது. உள்ளது என்ற சொல் உண்மை என்ற பொருளை மட்டும் தரும்.

உண்மை கூறுதல் என்பது உள்ளது உள்ளவாறே (The Principle of Sincearly) என்ற பொருளில் வழங்கப் பெறுகிறது. கடவுள் தமது இரண்டு கரங்களில் ஒன்றில் உண்மையையும் பிறிதொன்றில் உண்மையைத் தேடும் ஆர்வத்தையும் தாங்கியிருக்கிறான் என்ற அனுபவ உரை ஒன்று உண்டு.

எனவேதான் "சத்தியமே கடவுள்" என்ற கொள்கையுடைய அண்ணல் காந்தியடிகள் சத்தியத்தைத் தேடுவதிலும், சத்தியத்தைத் தமது வாழ்க்கையில் சோதிப்பதிலும் செல வழித்தார்.

உண்மை கூறுதல் என்ற அடிப்படையில் உள்ளதை உள்ளவாறு கூறலாமா? அங்ஙணம் கூறுவது மனித குலத்திற்கு நலம்பயக்குமா? பல சமயங்களில் உள்ளதை உள்ளவாறு கூறுதல் நலம் பயப்பதில்லை என்பதே வாழ்வியல் உண்மை. மாறாக எதிர் விளைவுகளையே உருவாக்கி வந்துள்ளன.

உள்ளதை உள்ளவாறே கூறுதல் பற்றி, மகாவீரர், ‘நீ உண்மை பேசுவதினால் ஒருவர் மனம் நோகும். உன் பேச்சு ஒருவனுக்குப் பிடிக்காது பிற உயிர்களுக்குத் துன்பம் நேரும் என்றால் அதைப் பேசாதிருத்தல் நலம். அது உண்மையாக இருந்தாலும் உனக்குப் பாவமே நல்கும்" என்று கூறுவதை அறிக.

ஆதலால், உண்மையை உள்ளவாறே கூறுதல் நலம் பயப்பதில்லை என்பதையறிந்த திருவள்ளுவர், திருக்குறளில், சத்தியம், உண்மை என்ற சொற்களைப் பயன்படுத்தாமல் "வாய்மை" என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

வாழ்க்கையின் நோக்கு, தீமைகளைப் புறங்கண்டு நலங்காண்பதேயாகும். தீமை கொடிது, எந்த ஒன்றையும் விடத் தீமைக் கொடிது. ஆதலால் உள்ளதை உள்ளவாறே கூறுகிறோம் என்று, தொற்றுநோய் பரப்பும் கிருமிகளைப் போலச் செய்திகளை, வதந்திகளைப் பரப்பும் மனிதர்கள் காலராவை விடக் கொடியவர்கள்.

ஒருவர் பிறிதொருவரைப் பற்றித் தகாதன சொன்னாலும் அதை அப்படியே மற்றவரிடம் சொல்லிக் கோபத்தையும், கலகத்தையும் வளர்ப்பது உண்மையன்று; பொய்; சின்னத்தனம். எனவே, திருக்குறள்,

"வாய்மை யெனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை யிலாத சொலல்"

(291)

என்று கூறுகிறது.

வாய்மை என்று கூறப்படுவது யாது? எவ்வுயிர்க்கும் எந்தவிதத் தீமையையும் செய்யாததே வாய்மை. எவ்வுயிர்க்கும் தீமையைத் தராததே வாய்மை. வாய்மையல்லாதன கூறுபவர்களையும் நல்லன பல சொல்லித் தேற்றுவோம்.

நம் செவிக்கு வரும் செய்திகளில் உள்ள வாய்மையைத் தேறித் தெளியவேண்டும். செவிப்புலனுக்கு வரும் செய்திகளில் வாய்மையினைக் கண்டுணராமல் கோபித்தலும் பகை கொள்ளலும் நட்பு. பாராட்டலும் நன்றல்ல. ஆதலால் எவ்வுயிர்க்கும் நல்லன தருவதே வாய்மை.

வாய்மையே பேசுக. எந்தச் சொல்லிலும் பொருளை மட்டும் நாடாமல் வாய்மையை நாடுக. நமக்கும் பிறருக்கும் ஒரு தீங்கும் இல்லாத நலம்தரும் சொற்களையே கூறுக.

44. வேண்டாம் சினம்!

சினம்-கோபம் தீமையுள் தீமை. கோபத்தால் விளையும் தீமை பலப்பல. கோபத்தால் இரத்த நாளங்கள் சூடேறி உடலைக் கெடுக்கிறது. ஏன் கோபம் வருகிறது? எதனால் கோபம் வருகிறது? கோபம் தோன்றும் களங்கள் எவை எவை? விருப்பு வெறுப்புக்களால் தாக்கப் பெற்றுள்ள மனித மனத்தில் தான் கோபம் எழும்!

காலம் காட்டும் கருவியை-கடிகாரத்தை உற்று நோக்குங்கள்! ஒயாது. ஒடிக்கொண்டிருக்கிறது. எந்தச் சூழ்நிலையிலும் தொடர்ந்து ஒடிக்கொண்டிருக்கிறது. கடிகாரங்களைச் சூழ்நிலை பாதிப்பதில்லை. அதுபோல நமது வாழ்க்கையும் ஓர் இயக்கம்.

எந்தச் சூழ்நிலையிலும் திகைப்பும் அச்சமும் கொள்ளாமல் தொடர்ந்து செயல் செய்தல் வேண்டும். கோப்த்தினால் இழப்பேயாம், ஒருபொழுதும் ஆக்கம் இல்லை. ஆக்கப்பணிக்கு அடக்கி வைக்கப்பெற்ற வெப்பம் எரிசக்தியாக மாறுவதைப்போல, அடக்கி வைக்கப்பட்ட கோபம் ஆக்கத்தைத் தரும்.

பணிகள் தொடர் நிலைத் தன்மையுடையன. படிப்படியாக வளரும் தன்மையதே மனிதவியல் திறன். முதலில் செய்ய இயன்றதைச் செய்க! அதன் தொடர்ச்சியாகச் செய்ய முடியாததையும் செய்யும் திறன் உருவாகும்.

திருவள்ளுவர் வெகுளாமை என்று பத்துக் குறள்களை ஓதுகிறார். வெகுளி, மனிதனின் நகையைக் கொல்லும்; வகையைக் கெடுக்கும்; இனத்தை சுட்டெரிக்கும்; தோழமையைக் கெடுத்துப் பிரிக்கும் என்றெல்லாம் வெகுளியினால் வரும் கேட்டினை விவரிக்கின்றார். திருவள்ளுவர் வெகுளியை மறந்துவிட வேண்டும் என்று கூறுகின்றார்.

ஆம்! வெகுளியை மறந்துவிட வேண்டும். தன்னைச் சேர்ந்தாரைக் கொல்லும் வெகுளி என்றும் கூறுகின்றார். வெகுளியை மறந்து விடுக! வெகுளியை யார் மாட்டும் மறந்து விடுக! யார் மாட்டும் வெகுளி வேண்டாம்.

வெகுளியை மறந்தால் எண்ணியவைகளையெல்லாம் அடையலாம்! கால தாமதமில்லாமல் உடனடியாக உன் விருப்பத்தை அடையலாம்! எப்போதும் அடையலாம். உள்ளத்தில் உள்ளியதை அடையலாம். ஆதலால் வேண்டாம். வெகுளி; விடுமின் வெகுளி!

மறத்தல் வெகுளியை யாமாட்டும் தீய

பிறத்தல் அதனான் வரும்.

(303)

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்

உள்ளான் வெகுளி யெனின்.

(309)

45. காத்துக் கொள்ளும் வழி

வாழும் மனிதர்களில் யாருக்குத்தான் தற்காப்பு உணர்வு இல்லை! நூற்றுக்கு நூறு பாதுகாப்பையும் அமைதியையும் விரும்புபவர்கள் நாம்! ஆனால் வாழ்வியலறிவு பெறாததால் பலர் பாதுகாப்பு என்ற பெயரில் பாதுகாப்பின்மையையே பெறுகிறார்கள்.

பலர் எவற்றைப் பாதுகாப்பு என்று கருதுகிறார்களோ அவையே அவர்களுக்குப் பாதுகாப்பின்மையைத் தோற்றவித்து விடுவதை வாழ்க்கைப் போக்கில் காணலாம். சொத்து, பெருமை, புகழ் ஆகியன பாதுகாப்பு என்று தேடினாலும், அவைகளுக்கு ஆபத்து ஏற்படும்போது அவை பாதுகாப்பு தருவதில்லை.

தான் நினைத்தவாறு நடக்காதபோது மனிதனுக்குக் கோபம் வருகிறது. கோபம் வெகுளி என்றும் கூறப்படும். கோபம் வந்தால் இதயத் துடிப்பு கூடுகிறது; இரத்த ஒட்டம் கூடுகிறது. அது மட்டுமின்றி இரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது. இதனால் இதயப் பாதிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது; உடல் நலம்கெடுகிறது. உடல்நலக் கேட்டின் வழி மனநலம் கெடுகிறது.

உடலும் மனமும் கெட்டால் அறிவு வேலை செய்யுமா? ஒரு போதும் செய்யாது. ஆதலால் கோபம் எதையோ காப்பாற்றிக் கொண்டு பாதுகாத்துக் கொள்ளத் தோன்றுவது போலத் தெரிகிறது. ஆனால் அது உண்மையன்று. கோபத்தினால் இழப்பே ஏற்படுகிறது.

கோபப்படுவதற்கு மாறாகத் திகைப்பும் படபடப்பும் அச்சமும் இல்லாமலிருந்தால் ஒன்றும் கெட்டுவிடாது. எல்லாம் நன்றாக நடக்கும்; பாதுகாப்பும் இருக்கும். அடக்கப் பட்ட கோபம் ஆற்றலாக மாறும்! பொறுப்புணர்ச்சியைக் கூட்டும்! வேலைகள் அதிகம் செய்யலாம். ஏமாற்றங்களும் ஏற்படா, உடலுக்கும் பாதுகாப்பு, பணிக்கும் பாதுகாப்பு! அதைவிட நம்மைச் சார்ந்தவர்களிடத்தில் மனக்கசப்பு ஏற்படாததால் அவர்களிடமிருந்தும் பாதுகாப்பு!

சில நிமிடக் கோபம் பல நாசங்களைச் செய்கின்றன. பொறுத்தாற்றும் பண்பு, எண்ணற்ற நலன்களைச் செய்கின்றது. பல ஆண்டுகள் வாழலாம்; நலத்துடன் வாழலாம்! வாழ்வாங்கு வாழலாம்!

இனிமேலாவது கோபப்படாமல் வாழக் கற்றுக் கொள்வோம். ஆனால் கோபத்தை அடக்குதல் எளிதன்று! கடுமையான பயிற்சி தேவை. கோபம் வரும் பொழுதெல்லாம் கவனித்தல் வேண்டும். எதைக் கவனிக்க வேண்டும்? கோபத்தின் காரணங்கள் மாறக் கவனித்துக் காத்திருக்க வேண்டும்.

கோபத்தினை மடைமாற்றம் செய்யப் பிரார்த்தனை செய்ய வேண்டும். இது அண்ணல் காந்தியடிகள் காட்டிய வழி! ஏன் காலதாமதம்? கோபத்தை விட்டுவிட வேண்டியது தான்! பிளேட்டோவைப்போல் கோபம் வரும் பொழுது பேசாமல் மெளனமாக இருக்கக் கற்றுக்கொள்வோம்! கோபத்தை வென்று விடலாம்.

"தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம்"

(305)

தன்னைக் காத்துக் கொள்ளும் விருப்பம் உண்டா? தன்னையே கொல்லும் சினத்திலிருந்து காத்துக் கொள்க. அப்படிச் சினத்திலிருந்து தன்னைத் தானே காத்துக் கொள்ளத் தவறினால் அந்தச் சினமே கொன்று விடும் என்பது திருக்குறள் கருத்து! மரணம் அல்லது சாவு வேண்டாம் என்றால் சினத்தைத் தவிர்த்திடுக!

46. கோபமா? வேண்டாம்!

வெகுளி, சினம், கோபம் ஆகியன ஒரு பொருட்சொற்கள். எல்லா அறநூல்களுமே வெகுளியை அறவே விலக்குகின்றன. வெகுளி, பல தீய செயல்களுக்கு வழி வகுத்துவிடுகிறது. சினந்து எழுவதற்குரிய சூழ்நிலைகளை வாழ்க்கையில் சந்திக்காமல் வாழ இயலாது.

ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் வெகுளாமல் இருப்பதே நல்லது. அதுவே நன்னெறி சார்ந்த வாழ்வு. கோபம் ஏன் வருகிறது? எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது போனால் கோபம் வரும்; பேராசையின் காரணமாகக் கோபம் வரும். வேறு சிலருக்கு இயலாமை ஏற்படும் பொழுதும் கோபம் தோன்றும். கோபம் வெறும் உணர்ச்சி மட்டுமே. கோபத்திற்கு வலிமை கிடையாது.

இந்த உலகில் அனைவருமே தங்கள்மீது அதிக ஆசை காட்டுகிறவர்கள். அவரவர்களும் அவரவர்களுடைய வாழ்க்கை மீது தனிக் கவனம் செலுத்துவது இயற்கை! பெருவழக்கும்கூட! உங்கள்மீது உங்களுக்குப் பெருவிருப்பம் உண்டா? தற்காப்புணர்வு இருக்கிறதா? அப்படியானால் கோபப்படாதீர்கள்!

ஆம்! நீண்டநாள்கள் வாழவேண்டுமா? அறிவில் சிறந்து விளங்க வேண்டுமா? ஆம் எனில் கோபப்படாதீர்கள்! கோபம் மரணத்தின் வாயில்! அதனால் இதயத்துடிப்பு கூடும்! குருதி கொதிப்பேறும்; இதயம் பாதிக்கும்! மரணம் வந்து சேரும்!

ஆதலால் மரணத்தைத் தவிர்க்கவும், நீண்டநாள் வாழவும் வேண்டுமானால் கோபப்படாதீர்கள்! கோபம் நிதானத்தை இழக்கச் செய்யும்! அவ்வழி சிந்தனைப் புலன் சிதறும். அறிவு கையிகந்து போகும்! கோபத்தின் விளைவால், மனிதன் மிருகமாகிறான். ஏன் இந்த அவலம்? கோபம் வேண்டாம்! வேண்டவே வேண்டாம்!

மனித சக்தி அளப்பரிய ஆற்றல் உடையது. படைப்பாற்றல் மிக்கது. இத்தகு அற்புதமான மனித ஆற்றலை ஒன்றுக்கும் பயன்படாத கோபத்தில் பாழாக்கலாமா? அடக்கி வைத்த உஷ்ணம் சக்தியாக மாறுகிறது. அதுபோலக் கோபம் வரும்போது அக்கோபத்தை உள்ளடக்கி ஆற்றலாக்குக! அந்த ஆற்றல் ஆக்கநிலையில் அற்புதங்கள் செய்யும்! யார்மீது உங்களுக்குக் கோபம்? அவர்களையே நட்பாக்கிக் கொள்ளலாம். தீமை நன்மையாக வளரும்!

"எது நடந்தாலும் எப்படி நடந்தாலும் அமைதி இழக்காதவர்கள் பொறுமைசாலிகள்" என்றார் லூயிஸ் டீவென்சன்! அவர் மேலும் விளக்குகிறார். கடிகார்ம் எந்தச் சூழ்நிலையிலும் டிக்டிக் என்று ஒரே மாதிரி அடிப்பதைப் போல எந்தச் சூழ்நிலையிலும் ஒரேமாதிரி இதயத் துடிப்பு உடையவராக விளங்கவேண்டும் என்று கூறுகிறார்.

ஆதலால், நற்பண்புகளுக்கு எதிரிடையான கோபம் வேண்டாம்! வேண்டாம்! கோழைகளின் இயல்பே கோபம்! ஆண்மையும் தைரியமும் உடையவர்கள் கோபப்பட மாட்டார்கள்! கோபத்துடன் தொடர்பு கொண்டு இழப்பை அடைவதில் என்ன பயன்?

47. இன்னா செய்யாமை

திருக்குறள் ஓர் அறிவியல் நூல்; உளவியலைச் சார்ந்த அறிவியல் நூல். நெருப்பை அள்ளி அடுத்தவர் வீட்டின் மீது கொட்டினால் கை சுடாமலா போகும்? அது போல் நாம் மற்றவர்களுக்குக் கொடுமை செய்தால் நாம் கெடாமலேயா மற்றவர்களுக்குக் கொடுமை செய்ய முடியும்? அல்லது இயலும்?

நமது சிந்தனையும் அறிவும் உணர்வும் புலன்களும் கெட்ட பிறகுதான் மற்றவர்களுக்குக் கேடு செய்ய முடியும் ஆதலால், யார் ஒருவருக்கும் தீங்கு செய்தல் கூடாது; நமக்குத் தீங்கு செய்தாருக்குங்கூட நாம் திரும்பச் செய்யகூடாது. இப்படித் தீமைக்குத் தீமை என்னும் சித்தாந்தம் தீமையின் தொடர் வரலாறாகி விடும்; தலைமுறைத் தலைமுறைக்குத் தீமை தொடரும், இது விரும்பத் தக்கதன்று.

எந்தச் சூழ்நிலையிலும் பொறுத்தாற்றும் பண்பே விரும்பத்தக்கது. அது மட்டும் அல்ல, பொறுத்துப் போதல் எளிமையானது. பொறுத்துப் போதல் ஆக்கத்திற்குத் துணை செய்யும். அதற்கு மாறாகச் செய்யும் பழிவாங்கும் முயற்சி கடினமானது; அதற்கு நிறைய விலை கொடுக்க வேண்டிவரும்; இன்பமும் அமைதியும் குலையும்.

பழிவாங்கும் மனப்போக்கில் பழி பாவங்களுக்குரிய அச்சம் இருக்காது. ஏன் அறிவேகட வேலை செய்யாது. ஆத்திரம் மட்டுமே வேலை செய்யும்; புத்தி முடங்கிப் போகும். பழிவாங்கும் படலம் துன்பத்தின் தொடர் வரலாறாகிவிடும். எப்போதும் அச்சம். சட்டங்களின் (அறத்தின்-அரசின்) அச்சுறுத்தல் முதலியன ஒருங்குகூடி வாழ்க்கையை நரகமாக்கிவிடும். பழிவாங்கும் இயல்புடையோனிடம் மனித நேயம் இருக்காது. அவன் கல்நெஞ்சனாக இருப்பான். கடினசித்தம் அவனுடைய சித்தம்! கொடுமைகளின் ஒட்டுமொத்தமான உருவமாக விளங்குபவனே பழிவாங்குவான்; தீமை செய்வான்.

ஆனால், மனித நேயமுடையவர்கள், சிந்திப்பவர்கள், வாழ்வாங்கு வாழ விரும்புபவர்கள், யார் ஒருவருக்கும், எவ்வுயிர்க்கும் கொடுமை இழைக்கமாட்டார்கள். மாறாக மறப்பார்கள்; மன்னிப்பார்கள்; பகைமை பாராட்ட மாட்டார்கள்; பண்பு நலஞ்சார்ந்து உறவு கொள்வார்கள். "நமக்குத் தீங்கு செய்த ஒருவரைப் பழிவாங்க வேண்டுமா? அவருக்கு நன்மையைச் செய்வதன் மூலமே பழிவாங்குக" என்று திருக்குறள் நெறி ஆற்றுப்படுத்துகிறது.

பழிவாங்கும், கொடுமை இழைக்கும் மனமுடையோருடைய நெஞ்சு கொதித்து நிற்கும்; அறவுரை-அறிவுரைகள் யாதொன்றும் அவர்கள் காதில் ஏறாது. ஆதலால் முதலில் இவனுடைய சினத்தைத் தணிக்க வேண்டும். அவன் சினந் தணிந்த நிலையில் கேட்கத் தகுதியுடையவன் ஆவான்; சிந்திக்க முயற்சி செய்வான். ஆதலால், எந்தச் சூழ்நிலையிலும் முதற்பணி சினந்தனிக்கும் பணியே.

எப்போதும் கெட்டவர்களைத் திருத்துவதற்குரிய ஆற்றொனாச் சினத்தில் மூழ்கி இருப்போரைத் திருத்துவதற்குரிய முதல்விதி அவர்களை மறுக்காமல்முதலில் அவர்களுடன் கொஞ்சம் உடன்பட்டு நிற்றல் வேண்டும் என்பது. இஃது உளவியல் அடிப்படையின் வாய்ப்பாடு. முதலில் கெட்டவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். அதன் பிறகுதான் அவர்கள் நாம் சொல்வதைக் கேட்பார்கள்; திருந்துவார்கள். வாழ்க்கையும் பயனுடைய தாகும்.

"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்”

(314)

என்ற திருக்குறளை நோக்குக. இந்தத் திருக்குறளில் "ஒறுத்தல்” "அவர்நாண" என்ற சொற்கள் உடன் பாட்டுச் சொற்கள். இந்தச் சொற்களைக் கையாள்வதன் மூலம் பழிவாங்கும் உச்சாணிக் கொம்பிலிருப்பவன் இறங்கி வருவான்.

அவனுடைய சினம் தணியும், பழிவாங்கும் மனப் போக்கிலும் மறு ஆய்வு தலைகாட்டும். இந்த இதமான-இங்கிதமான சூழ்நிலையில் அவனுக்கு ஒரு நன்மை செய்தால் மகிழ்வான்; மாறுவான்; என்றும் நல்லவனாக இருப்பான்.

48. எளிய வாழ்வியல் உண்மை!

ஒருவர் நமக்குத் தீமை செய்தால் நாம் திரும்ப அவருக்குத் தீமை செய்தல் என்பது பழி வாங்குதல் ஆகும். இந்தப் பழிவாங்கும் உணர்வு இயல்பாகவே மாந்தரிடம் அமைந்துள்ளது. ஆயினும், நல்லொழுக்கம், பண்பாடு என்பது பழிவாங்காமையேயாகும். ஏனெனில், உணர்ச்சி வசப்படுதல் என்பது இயல்பு ஆயினும் பழிவாங்குதலிலும், பொறுத்துக் கொள்ளுதல் கடினமான காரியம்.

பழிவாங்கும் நிகழ்வு சங்கிலித்தொடர் போலத் தொடரும். ஆனால் பொறுத்தாற்றும் பண்பு தீமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடும். அற்ப மனமுடையவர்கள் பழிவாங்குவர்.

திருக்குறள் பழிவாங்குதலை வெறுக்கிறது; வெறுத்து ஒதுக்குகிறது. ஆயினும் உயர்ந்த பண்புகளை எளிதில் எடுத்துக்கொள்ளும் இயல்பறியா மாந்தரிடத்தில் பழி வாங்குதல் தீது என்ற அறிவு எளிதில் வராது. ஆதலால் திருவள்ளுவர் உளவியல் அறிவியல் நியதியில் பழிவாங்கும் உணர்ச்சிவசப்பட்டு நிற்கும் மனிதனை அணுகுகிறார்.

ஆம்! எடுத்த எடுப்பில் யாரிடமும் அறிவுரைகள்- உப தேசங்கள் விலைபோகா. முதலில் அவருடைய நம்பிக்கையைப் பெறவேண்டும். உணர்ச்சி வெள்ளம் வடிவதற்குரிய காலம் எடுத்துக்கொள்ளவேண்டும். அவர் உணர்ச்சியிலிருந்து விடுதலை பெற்றுச் சமநிலைக்கு வந்த பின்னரே எத்தகைய அறிவுரையையும் கூறவேண்டும். அப்போதுதான் அறிவுரைகள் எடுக்கும்.

இன்னாசெய் தாரை ஒறத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்.

(316)

என்பது குறள்.

பழிவாங்கும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நிற்பவன் ஞானம் இல்லாதவன்; அற்ப அறிவு உடையவன். ஆதலால் முதல் நிலையில் பழிவாங்கும் உணர்ச்சியின் உச்சியில் நிற்பவனுக்கு உடன்பட்டே பேசியாக வேண்டும்; இல்லையெனில் திருவள்ளுவரையுமே அவன் மறுத்து விடுவான்.

ஆதலால் திருவள்ளுவர் "இன்னாசெய்தாரை ஒறுத்தல்" என்று தொடங்குகின்றார். தமக்குத் துன்பம் செய்தாருக்குத் தாம் ஒறுத்தல் செய்ய வேண்டும்; கட்டாயம் ஒறுத்தல் செய்ய வேண்டும். இந்த அறிவுரை தொடக்க திலையிலேயே வெகுளியின் உச்சக்கட்டத்தில் நிற்பவனுக்கு ஆறுதலாக இருக்கிறது. அதனால் சினம் தணிகிறது; உணர்ச்சி வடிகிறது. மனிதன் மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கு இறங்கி வருகின்றான். தன்னுடைய கொள்கைக்கு உடன்பட்டு நிற்கும் அவனுக்குத் திருவள்ளுவர் மீதும் நம்பிக்கை பிறக்கிறது.

இந்தச் சூழ்நிலையைத் திருவள்ளுவர் பயன்படுத்திக் கொண்டு தம் நிலைக்கு அந்த மனிதனை அழைக்கின்றார்; உயர்த்துகின்றார். ஆம்! பழிவாங்க வேண்டும். ஆனால் எப்படி? "தவறு செய்தவன் வெட்கப்படும்படியாக நன்மை செய்துவிடு!" என்று வள்ளுவர் கூறுகின்றார்.

"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்"

(316)

என்பது திருக்குறள்.

"இன்னாசெய்தாரை ஒறுத்தல்" - என்ற சொற்றொடர் உடன்பாட்டுச் சொற்றொடர். "அவர் நாண நன்மை செய்துவிடுதல் என்பது" பொறுத்தாற்றும் நெறியில் ஆற்றுப் படுத்துதலாகும். இந்தக் குறள் சிறந்த உளவியல் அறிவியலைச் சார்ந்த குறள்.

"எவருடனும் முதல் நிலையில் உடன்பட்டுநில்; அவருடைய நம்பிக்கையைப் பெறு; பின் அவர்களை உன் நெறிக்கு அழைத்துக் கொள்”. இது எளிய வாழ்வியல் உண்மை.

49. நாள் எனும் வாள்!

ஒன்றின் தொகுதி தரும் உணர்வினை, படிப்பினையைப் பகுதி தருவதில்லை. பகுதிகள் அற்பமாகக் கருதப் பெறுவது இயல்பாக இருக்கிறது. பல பகுதிகள் தொகுதியாகிறது என்ற உண்மையையும்; பகுதி, தொகுதியிலிருந்து பிரிக்கப்படாதது என்பதையும் நம்மனோர் உணர்வதில்லை. ஏன் தொகுதிகளுக்கு மதிப்புயர்கிறது?

கடற்பரப்பின் தண்ணீர் கணக்கற்ற தண்ணீர்த் திவலைகளின் தொகுப்பேயாகும். அக்கடற்பரப்பிலிருந்து ஒரு திவலை பிரியுமானால் அந்தத் திவலை தன் வடிவத்தைதன்னை இழந்து விடுகிறது. அதுபோலத்தான் பகுதிகளுக்கு மதிப்பீடும் மிக மிகக் குறைவு! ஆயுளும் அற்பமே!

மானுடத்தின் விலை மதிக்க முடியாத தொகுதி, வாழ்க்கை. வாழ்க்கை காலத்தினால் ஆயது. வாழ்க்கையென்பது நூறாண்டாகவும் அமையலாம். கூடுதல், குறைவாகவும் அமையலாம். வயது என்பதும் நம்மீது திணிக்கப்படுகிறது. நாம் விரும்பினாலும் சரி. விரும்பாது போனாலும் சரி வயதுகள் வருதலும் வளர்தலும் தவிர்க்க இயலாதது.

ஆனால், வாழ்க்கை என்ற தொகுதிக்குரிய விபத்தாகிய மரணம் வரும்போது எல்லாரும் பயப்படுகின்றனர்; அழுகின்றனர்; புலம்புகின்றனர். சாவிலிருந்து தப்பிக்க முயல்கின்றனர். ஆனால், இந்த வாழ்க்கை என்ற தொகுதியின் பகுதியாகிய ஒரு வினாடி கடந்து செல்லும்போது யாரும் துணுக்குறுவதில்லை; கவலைப்படுவதில்லை. ஏன்? சாவு என்பது ஒருநாளில் வருவதில்லை. நாள்தோறும் சாவு வருகிறது. நொடி தோறும் சாவு வருகிறது. சாவை நோக்கி மெல்ல மெல்ல நகர்கின்றோம்.

ஆனால், இந்த உணர்வு சாகின்றவர்களுக்கும் வருவதில்லை. சுற்றிலும் இருப்போருக்கும் வருவதில்லை. ஒரு மரம் வாளால் அறுக்கப்படுகிறது. நூல் நூலாகத்தான் அறுக்கப்படுகிறது. அதுபோலத்தான் வாழ்நாளும்! இன்று, நாளை என்று நாள்கள் ஒடுகின்றன. நொடி தோறும், வாழும் பொழுது வாழ்நாள் சுருங்குகிறது. ஆக மொத்தத்தில் சாவு வத்துவிடுகிறது.

ஆனால், வாழ்க்கைப் பயணத்தில் நொடிப் பொழுதுகள் எல்லாம் வாழ்க்கைக்குரியவை. ஒவ்வொரு நொடியும் வாழ்வே! ஒவ்வொரு நொடியிலும் சாகின்றோம் எனறு உணர்ந்தால் வாழ்நாள் வீணாகாது. வாழ்நாள் முழுமையும், பயன்படுத்தலாம்; புகழ்பட வாழலாம். ஆனால் சிலரது உள்ளம் நொடிதோறும் சாகும் சாவிற்குக் கவலைப் படுவதில்லை. இஃது ஒரு வினோதமான உளப்போக்கு!

"நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின்"

(334)

50. “மெய்ப்பொருள் காண்பதறிவு”

இந்த உலகம் பொருள்களால் ஆயது. பொருள்கள் தம்முள் வேறுபட்ட தனித்தன்மைகள் உடையன. சில பொருள்கள் வேறுபட்டு விளங்கினாலும் பிறிதொரு பொருளுடன் ஒன்றும் இயல்புடையன. சில தனித் தன்மை பெற்றே விளங்குவன.

மாந்தர் வாழ்க்கை பொருள்களுடன் தொடர்புடையது. வாழ்வின் துறைதோறும், வாழ்வு முழுவதும் பொருள்களுடன் யாதானும் ஒரு உறவு இல்லாமல் வாழ்க்கை அமைவதில்லை; அமையாது; அமைதல் முடியாது. அதனால் தான் திருக்குறள், ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்றது.

பொருள்களால் ஆயது வாழ்க்கை. இந்தப் பொருள்களை, பொருளின் தன்மைகளை உள்ளவாறறிந்து அப்பொருள் தன்மைக்கு ஏற்பவும் வாழ்க்கைக்குரிய வகையிலும் பயன்படுத்த அறிந்து கொள்ளவேண்டும். பொருள்களின் தன்மையறிதலுக்குத் தனித்திறனும் பயிற்சியும், அறிவும் வேண்டும். பல பொருள்கள் தோற்றமான நிலையிலேயே தொடர்ந்து இருப்பதில்லை. மாறும் தன்மை உடையன உண்டு.

சில பொருள்கள் நிலையாயின போலத் தோன்றும்; பெயர் பெற்று விளங்கும். ஆனால் நிலையில்லாதனவாகிப் போதலும் உண்டு. சில நன்மை தருவது போலக் காட்டி துன்பம் தரும். சில துன்பம் தருவது போலக் காட்டி இன்பம் தரும். சான்றாக நமது உடலுக்கு "மெய்” என்று பெயர். ஆனால், இது உண்மையல்ல. காலத்தால் கேடுறுதலாம். சர்க்கரை இனிமையானது. சர்க்கரையால் விளைவது பெருந்துன்பம். வெந்தயம் கசப்பான பொருள். ஆனால் வாழ்க்கைக்கு நலம் தருவது; இன்பம் தருவது.

குளிர்ச்சியானவையாக இருப்பவை சூட்டையே தருகின்றன. சூடாக இருப்பவை குளிர்ச்சியையே தருகின்றன. ஆதலால் பொருளின் தோற்றம் பார்க்காமல் பொருளின் தன்மை, அப்பொருளால் விளையும் பயன் ஆகியன தெரிந்து அதற்கேற்பப் பயன்படுத்தல் வேண்டும். இத்தகு அறிவு, சராசரி மனிதர்களுக்குக் கிடைப்பதில்லை. ஞானிகளுக்கே உண்டு.

சாதாரண மக்கள் தோற்றத்தால் கவர்ச்சிக்கப்படுவர், தற்காலிகமானவையாக இருப்பினும் உடனடியாகப் பலன்களை எதிர்பார்ப்பர். எப்பொருளையும் ஆழ்ந்து நோக்குவதில்லை. வேளாண்மைக்குப் பயன்படும் இரசாயன உரங்கள் உரமே இல்லை.

ரசாயன உரங்கள் ஒருவகைத்தூண்டு சக்தியேயாகும். ஆனால் நமது மக்கள் இவைகளை உரம் என்று நம்பினார்கள்; இந்த உரத்தையே நம்பி, குப்பை உரம் தயாரிப்பதை மறந்தார்கள். இதனால் நிலத்தின் பூசாரம் குறைந்தது தான் மிச்சம். அறியாமை அறிவாக ஏற்றுக் கொள்ளப்படுதல் இன்றைய பெரு வழக்கு. இதற்கு அப்பரடிகள் ஒரு கதை கூறி விளக்கினார்.

ஆமை சாப்பிடும் மக்கள், ஆமையை உலைப் பானையில் இட்டு வேக வைத்தார்கள். உலைப்பானையில் தண்ணீர் இளஞ்சூடாக இருக்கும் பொழுது ஆமை இன்ப போதையில் துள்ளி விளையாடும். ஆனால் அந்தச் சூடு இன்பமாக இருக்கும் பொழுது, நீடிக்கப் போவதில்லை. விரைவில் கொதி நிலை மாறும்; ஆமை அழியும்; இதனை உணரும்சக்தி ஆமைக்கு இல்லை. ஆமைக்கு மட்டுந்தானா? மனிதர்களிலும் பலர் இப்படித்தான் வாழ்கின்றனர்.

பெரும்பான்மையான மக்கள் காலப்போக்கில் துன்பம் விளைப்பனவற்றையே இன்பமெனக் கருதி வாழ்ந்து ஏமாற்றத்திற்கு ஆளாகின்றனர். இதனைத் திருவள்ளுவர்

"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு”

(355)

என்றார்.

51. ஆன்மாவின் உணவு!

மனிதன் பிறப்பதில்லை; மனிதன் உருவாக்கப்படுகின்றான். இதுவே அறிவியல் உண்மை. மனிதனை உருவாக்குவதில் கல்வி வகிக்கும் பாத்திரம் மிகமிகப் பெரியது. கல்வியின் இலட்சியமே மனிதனை உருவாக்குவதுதான்! அதனால் மனிதனை உருவாக்கும் கல்வியிலும் விழுமியது இல்லை.

மனிதனின் பொறி, புலன்களைப் பயனுடையனவாக்கி வாழ்க்கையை வளர்த்து விளக்கமுறச் செய்வது கல்வியே! மனிதன் அளப்பரிய ஆற்றலுடையவன். மனிதனின் ஆற்றல் கல்வியின் மூலமே இனங்காணப் பெற்றுச் செயலாக்கத்திற்குப் பயன்படு நிலைக்குக் கொணரப் படுகிறது! ஏன் கல்வியே ஆன்மாவின் சிறந்த உணவு.

திருக்குறள் ‘கற்க!' என்று பேசுகிறது. ஆம்! கல்வி கற்பது மனிதர்களின் பழக்கமும் வழக்கமும் ஆகவேண்டும். கற்றல் பலவகை. அவற்றுள் எளிமையானது, முதன்மையானது தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தைக் கூர்ந்து நோக்குவதன் மூலம் கற்பது.

"கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆவான்" என்பது பழமொழி. கண்டது=கண்ணால் கண்ட இயற்கைக் காட்சி களையே கற்பது. இங்ஙனம் கற்ற பாடங்களிலேயே ஐசக் நியூட்டனின் ‘புவி ஈர்ப்பு ஆற்றல்’ கண்டுணரப் பெற்றது என்பதறிக.

அடுத்து அவரவர் சொந்த வாழ்க்கையின் பட்டறிவு வழி பெறும் கல்வி அறிவு. இந்தக் கல்வி தனி முயற்சியில்லாமல் வாழ்க்கையின் வழியிலேயே கற்கப் பெறுவது வாழ்க்கையில் ஏற்படும் வெற்றிதோல்விகள் நம்பிக்கையுடனும் நல்லெண்ணத்துடனும் ஒட்டி உறவாடி வாழ வேண்டிய இடத்தில் முரண்பாடுகள் தோன்றுதல், நம்பிக்கையின்மை வளர்தல் ஆகியன வாழ்வியலுக்கு நல்லவையல்ல.

மனிதர்களிடையில் மன முறிவுகள் தோன்றுவதும் அவ்வழி மனித உறவுகள் பாதிக்கப்படுவதும் ஏற்க இயலாத ஒன்று. அன்றாடம் வாழ்ந்த வாழ்க்கைப் பாங்கைத் திறனாய்வு செய்து திறனாய்வு வழி வாழ்நிலைகளை அறிந்து கடைப்பிடித்தல் சிறந்த கல்வி.

மூன்றாவது, நூல்களைக் கற்பதன் மூலம் பெறும் அறிவு. இந்தக் கல்வி முறை தான் இன்று பரவலாகப் பின்பற்றப்படுகிறது. மக்கள் மத்தியில் நடைமுறையில் இருப்பதும் இந்தக் கல்வியே! இந்தக் கல்வியை மக்கள் பெறுவதற்காக நாடு செலவழிக்கும் காலமும் பணமும் அளவிடற்கரியது.

ஆயினும் போதிய பயன் இல்லை; ஏன்? கல்வி முறையே காரணம். இன்றைய கல்வியில் சிந்தனைக்கு வாய்ப்பில்லை; செயலுக்குரிய வாய்ப்பு மிக மிகக் குறைவு. கல்வி கற்றதனால் எந்த ஒரு தனித்தகுதியும் வந்தடைந்ததாக இல்லை. ஏன்? கற்கும் ஆர்வம் கூட இல்லை.

திருக்குறள் ‘கற்க’ என்று கூறுகின்றது. ஆம்! கற்பது - இடையீடில்லாது தொடர்ந்து கற்பது மனிதனின் கடமை. ஏன் கற்க வேண்டும்? மனிதன் அளப்பரிய ஆற்றலுடையவன். அவன் எண்ணிய செயல்களைச் செய்ய முடியும். ஆயினும் அவனுடைய அகநிலைக் குற்றங்களாகிய அச்சத்திலிருந்து விடுதலை பெற்றால்தான் கற்கும் கல்வி பயன்தரும். “கசடறக் கற்பவை கற்க” (391) என்றது திருக்குறள். “கசடு"- மனக்குற்றங்கள். மனக்குற்றங்களை நீக்கும் மருந்து கருத்துக்கள் தாம். கருத்துக்கள் பெரும்பாலும் நூல்கள் வாயிலாகவே கிடைக்கும். கற்க வேண்டிய நூல்களைத் தேடிக்கற்ற பிறகு அக்கருத்துக்கள் வழி நடந்து அக்கருத்துக்களுக்கு உரிமை புடையராதல் வேண்டும்.

52. அறிவு

அறிவு, மானுட வாழ்க்கையை இயக்கும் ஒரு சிறந்த கருவி. இன்று பலர் கருதுவது போல அறிவு என்பது தகவல்கள் அல்ல. செய்திகள் அல்ல. அறிவு ஒரு கருவி (instrument). துன்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் கருவி. செவி வழிக்கேட்கும் செய்திகளை, அவற்றில் உள்ள நன்மை, தீமைகளை ஆய்வு செய்வது அறிவு. ஏற்றுக் கொள்ளக் கூடிய நன்மைகளை மட்டும் ஏற்பது அறிவுடைமை.

அதுபோல, இந்த உலகில் உள்ள பொருள்களைச் சார்ந்தது தான் வாழ்க்கை, சில பொருள்கள் நல்லன போலத் தோன்றும்! ஆயினும் தீமையே பயக்கும்!

காட்சியில் வேறாகவும் அனுபவத்தில் வேறாகவும் காணப்படும் பொருள்களின் தன்மையை ஆராய்ந்து எடுத்துக் கொள்ளுதலே அறிவுடைமை. அறிவு பல்வகைப் பிரிவாக வளர்ந்து இந்த உலகின் துறைகள் அனைத்தையும் செழிக்கச் செய்கின்றது. இது பகுத்தறிவு; முதன்மையானது.

பகுத்தறிவு மாந்தர் அனைவருக்கும் உரியது. ஆனால், பலர் பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை. அறிவு வளர்ந்தே ஞானம் தருகிறது. ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கைக்கு அறிவே மூலதனம். இந்த உலகில் பெறக்கூடிய பேறுகள் யாவற்றிலும் சிறந்தது அறிவுடைமையேயாம். அறிவுடையார் எல்லாச் செல்வங்களும் உடையவர்.

"அறிவுடையார் எல்லாம் உடையார்” (480) என்றது திருக்குறள். அறிவு கல்வியால் பெற இயலும்! ஆனால், கல்வி கற்றவர் எல்லாம் அறிவுடையராவர் என்று எண்ணற்க கற்றவர்களிலும் அறிவில்லாதவர் உண்டு. கற்ற கல்வி - கருத்து வாழ்க்கையில் சோதனைப்படுத்தப்படும் பொழுது தான் அறிவு உருவாகிறது. அறிவு - பகுத்தறிவே இந்த உலகைப்புரிந்து கொள்ளவும் இந்த உலகில் சிறப்புற வாழ்ந்திடவும் துணை செய்கிறது.

அறிவு, முற்காப்புக் கருவியாகவும் தொழிற்படுகிறது. அதாவது, துன்பம் வந்து தாக்காமல் நெறியில் உய்த்துச் செலுத்துவது அறிவு. இனி எதிர்வரும் காலத்திலும் துன்பம் வந்தணையாமல் காப்பதும் அறிவுதான்! வாழ்க்கை ஒரு அரியகொடை; வைப்பு; இந்த வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்புற்றிட அறிவு தேவை. அறிவு காட்டும் வழியில் வாழ்தலே வாழ்வு. "மேலான சக்தி” களை நம்புவதில் பயனில்லை.

அறிவு ஒரு போதும் தீமை செய்யாது. அறிவுக்குக் கொடுக்கும் விலை சிறந்த மூலதனம். அறிவுடையார்கள் பலவீனர்களாக இருக்கமாட்டார்கள். அதனால், சூழ்நிலைகளால் பாதிக்கப்பட மாட்டார்கள். சூழ்நிலைகளைக் கடந்தும் சூழ்நிலைகளை உண்டாக்கிக் கொண்டும் வளரும் தன்மை அறிவுடையவர்களுக்கு உண்டு.

இயற்கை அறிவுக்கு ஆக்கம் சேர்ப்பது நூலறிவு. நூலறிவுக்கு ஆக்கம் சேர்ப்பது ஆய்வியல் சார்ந்த அறிவு. ஆராய்ந்து அறிந்த அறிவுக்கு பெயர் நுண்ணறிவு, நுண்ணறிவுக்கு ஆக்கம் சேர்ப்பது பட்டறிவு. இங்ஙனம் வாழ்க்கையின் வாயில்கள் தோறும் வளர்ந்து செழுமைப்படுவது அறிவு.

53. சிறப்பு செய்தொழிலாலல்ல!

இன்று ‘மானுடம் உலகமாக உலகளாவிய நிலை’யில் வளர்ந்து வந்திருக்கிறது; வளர்ந்து கொண்டிருக்கிறது. இனிமேலும் வளரும். இன்று மனிதம்; குடும்பம், சமூகம், சமுதாயம் ஆகிய பரிணாம வளர்ச்சியின் எல்லைகளைக் கடந்து மானுடம் ‘ஓருலகம்’ என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

ஆதிகாலத்தில் மனிதக் கூட்டம்தான் இருந்தது; இந்த மனிதக் கூட்டந்தான் காலப்போக்கில் ஒருவருக்கொருவர் தொடர்புள்ளவர்களாக வளர்ந்தது. ஏன்? சார்ந்து வாழும் பண்புகள் வளர்ந்தன. ஒருவருக்கொருவர் தேவைப்பட்டவர்களாக, ஒருவரையின்றி மற்றொருவர் இல்லை என்கிற அளவுக்கு வாழ்நிலை அமைந்தது. இந்த நிலையில்தான் சமூக அமைப்பு வடிவம் பெறுகிறது.

மக்களிடையில் ஏற்பட்ட பல்வேறு வகைத் தொடர்புகளால் சமூக அமைப்பு தோன்றுகிறது. சமூகம் இயற்கையாகப் பரிணாம வளர்ச்சியில் தோன்றுவது. தனி மனிதர்களே சமூகத்தைத் தோற்றுவிக்க முடியாது.

ஆனால் சமூக அமைப்பினால் உரிமைகளையும் பாதுகாப்பையும் பெறுபவர்கள் சமூகத்தை ஆதரித்துப் பாது காக்கின்றார்கள்.

இங்ஙகனம் இருந்த சமூக அமைப்பில் வகுப்பு, சாதி, குடும்பம் ஆகியன எதுவும் தொடக்கத்தில் இல்லை. காலப்போக்கில் விவசாயத் தொழில் தோன்றிய நிலையில் சமூகம் இரண்டாகப் பிரிந்தது. ஒரு பிரிவு நிலச் சொந்தக்காரர்கள் மற்றொரு பிரிவு நிலத்தில் விவசாயம் செய்யும் தொழிலாளிகள். இதனால் பண்ணையாட்கள்-அடிமை முறை தோன்றியது.

தி.9.

இந்தக் காலக் கட்டத்தில்தான் ஒருவர் அல்லது சிலர் பிறிதொருவருக்காகக் கூலி அடிப்படையில் வாழ்தல் என்னும் நடைமுறைத் தோன்றியது. இந்த நடைமுறை தோன்றிப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு வேளாண்மை அடிப்படையிலான பல தொழில்கள் தோன்றின. அதே போழ்து வாழ்நிலையினால் ஏற்பட்ட மாற்றங்கள் வளர்ச்சியின் காரணமாகவும் பல தொழில்கள் தோன்றின.

தொழில்கள் தோற்றத்தின் அடிப்படையில் வகுப்புக்கள் தோன்றின. வகுப்புக்கள் தோன்றிய நிலையில் வகுப்புக்களுக்கிடையில், செய்யும் தொழில் அடிப்படையில் தகுதி, அந்தஸ்து, பெருமை முதலியன தோன்றின.

இங்ஙணம் தொழில்கள், வகுப்புக்கள் அடிப்படையில் பெருமை சிறுமைகள் தோன்றிய நிலையை, திருக்குறள் அறுதியிட்டு எடுத்துக்காட்டுகிறது. எடுத்துக்காட்டுவதுடன் மட்டு மல்ல. மாந்தருள் பெருமை கோரிப் பெறும் உரிமையையும் மறுக்கிறது.

மாந்தர் எவரும் பிறப்பில் தொழில் செய்பவராகவோ, பெருமைக்குரியவராகவோ பிறப்பதில்லை. பிறப்பிலேயே உயர்வுடையவர்கள் என்பது புகழ்ச்சியேயாம். அறிவியல் சார்ந்த உண்மையல்ல. பிறப்பில் அனைவரும் ஒன்றும் அறியா குழந்தைகளே என்பதை அக்பர் சோதனையின் மூலம் நிரூபணம் செய்த வரலாற்றை ஒர்க. அதனால் தானே ததீசி முனிவரின் பத்தினி மும்மூர்த்திகளையும் குழந்தைகள் ஆக்கினார் போலும்.

பிறப்பில் அனைவரும் சமம். மொழி இல்லை, மதம் இல்லை; உடமை இல்லை; தொழில் இல்லை; பெருமை இல்லை; சிறுமை இல்லை; வளர்ச்சியின் காரணமாகச் சில பெறலாம். ஆயினும் மானிடத்தின் அடிநிலைக் கொள்கையான சமம், சமத்துவம் ஆகியனவற்றை இழந்து விடக்கூடாது.

சமூகத்தின் இயக்கத்துக்குப் பல தொழில்கள் தேவை. தொழில்கள் சில உயர்வான அறிவு சார்ந்த உழைப்பாக இருக்கலாம். பல உடல் சார்ந்த உழைப்பாகவும் இருக்கலாம். ஆயினும், தொழிலின்கண் உள்ள வேறுபாடுகள் தொழிலை செய்பவர்களிடம் வந்துவிடக்கூடாது. வந்தால் சமூக மோதல்கள் ஏற்படக்கூடும் என்ற சமூகவியல் அறிவியலை

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்”

(972)

என்ற திருக்குறள் வாயிலாகத் திருவள்ளுவர் உணர்த்துகின்றார்.

பிறப்பின் அடிப்படையில் உள்ள சமம், சமத்துவம் சமூகத்தின் அடிநிலைக் கொள்கையாக விளங்க வேண்டும். வாய்ப்புக்கள் காரணமாக அமையும் தொழிலின் காரணமாக எந்த ஒரு சிறப்பு உரிமையையும் தகுதியையும் சமூகத்தில் பெறக்கூடாது; அடையக்கூடாது. கோயில் சிலையைப் பூசிப்பவனும் சந்தி பெருக்குபவனும் செய்யும் தொழிலால் வேறுபடலாம். அதனால் கோயிற்பூசை செய்வோர் உயர் நிலையினராகவும் சந்தி பெருக்குவோர் இழி நிலையினராகவும் சமூகத்தில் ஆகக்கூடாது.

சமூகத்தில் எந்த இரு பிரிவினரும் ஒத்த சமூகத் தகுதி உறவுகள் பெறுவதே சமூக நீதி. அப்படி இருந்தால்தான் சமூகத்திற்குத் தேவையான பல்வேறு தொழில்களையும் செய்ய முன் வருவர். அதனால் செய்யும் தொழில் காரணமாகச் சிறப்புரிமைகள் கோரிப் பெறுவதை-அடைவதை "சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்" என்று மறுக்கிறது திருக்குறள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சிக்கல்கள் வராத சமூக அமைப்புக்கு, திருக்குறள் வழி காட்டியுள்ளது.

54. உழைத்து உண்க!

இந்த உலகு உழைப்பினால் ஆயது. இந்த உலகு உழைப்பினால் இயங்குவது. இந்த உலகை இயக்கும் ஆற்றல் உழைப்பு. உலகின் முதற்பொருளாகிய கடவுள் தமது படைப்பில் உழைப்பில்லாமல் வருவன எவற்றையும் கண்டிலன்; படைத்திலன்.

இயற்கையும் உழைப்புத் தன்மையுடையதே. மலர்களும் காய்களும் கனிகளும் உழைப்பின் விளைவேயாம். உழைப்புக்குரிய பிறப்பு, மானுடப் பிறப்பு. மானுடம் பெற்றுள்ள உடம்பின் அமைப்பு உழைப்பைக் குறிக்கோளாகக் கொண்டதேயாம். உழைப்பு உடம்பின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் இன்றியமையாதது.

துறவு நெறியில் சென்ற புத்தர் பெருமுயற்சியுடன் வாழ்வதை வாழ்வு என்றார். மானுடத்தின் புலன்களில், பொறிகளில் கலந்திருப்பது உழைப்பு. உழைத்தால் பொறிகளின் ஆற்றல் வளரும்; புலன்களின் ஆற்றல் வளரும். உழைப்பு இல்லையேல், உழைப்பில் பயன்படுத்தாத இரும்பு துருப்பிடித்து அழிவதைப்போல உடம்பு அழியும்.

மனித வாழ்வு உணவால் இயங்குகிறது. ‘உண்டி முதற்றே உலகு’ என்பது பெரியோர் வாக்கு. உணவை உழைத்துப் பெறுவதற்கு என்றே கால்களும் கைகளும் கொடுக்கப்பட்டன. உணவு, உழைப்பின்றிக் கிடைக்காது. ஒரோ வழி பிறர் உழைப்பால் உருவாகும் உணவை "உழைக்காமல் உண்பவர்கள் திருடர்கள்” என்றார் அண்ணல் காந்தியடிகள்.

நெற்றியில் வியர்வைத் துளிகள் காணும் அளவுக்குக் கடுமையாக உழைத்தால் உண்ணும் உணவு சுவையாக இருக்கும். அங்ஙனம் உழைத்து உண்பதே நலம் பொருந்திய வாழ்க்கை.

“A in the sweet of the fere shalt than cat Bread” என்ற அனுபவ வார்த்தை அறிக. உழைப்பில் சிந்தும் வியர்வையே உண்ணும் ரொட்டிக்கு விலை. உழைத்து உண்பதே ஒழுக்கம்; நீதி சார்ந்த வாழ்வியல். சுவையுடைய உணவு வேண்டாம்! உணவுக்குச் சுவையிருப்பினும் வாழ்க்கைக்குப் பயன்படாது. தண்ணீர்போல அமைந்த கூழாயினும் உழைப்பால் வந்ததாயின் அந்தக் கூழே இனியது. ஆதலால் சிலவாம் இனாம் வேண்டாம்.

“Nothing is free” என்ற வாழ்க்கையை நியதியாக்குவோம். உழைப்பு-படைப்பாற்றல் தன்மை வாய்ந்தது. உழைப்பு, உழைப்பு! - நேர்மையான உழைப்பு ஒன்றுதான் மனித சமுதாயத்திற்குச் சிறப்பான மருந்து.

தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது

உண்ணலின் ஊங்கினியது இல்.

(1065)

55. கற்புக்கடம் ஆண்ட வாழ்க்கை

காதற் கடமை பூண்ட வாழ்வியலிலும் அறிவியல் உண்டு. உளவியல் ஒரு சிறந்த அறிவியல். இன்று நடைபெறும் சமூகத் தீங்குகள் பலவற்றிற்கும் காரணம் உளவியல் அறியாமை. ஏன், வாழ்க்கையையே அறிவியலடிப்படையில் இயக்கினால் எண்ணற்ற இன்பங்கள் கிடைக்கும். இதனைத் தமிழ் மக்கள் பண்டே உணர்ந்து வாழ்வியலுக்கும் அகத்திணை இலக்கணம் செய்தனர்.

காதல் மலரினும் மெல்லியது; அதன் செவ்வி உணர்ந்தார் சிலரே என்பது வள்ளுவத்தின் முடிவு. காதல் மனையறத்தில், நம்பிக்கையும் நல்லெண்ணங்களும் ஊற்றுக் கண்களாகும். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளுதலும், ஒத்துழைத்தலும் இன்றியமையாக் கடமை; மனையறத்தின் இணைகள், மாண்புகளை ஒருவருக்கொருவர் சேர்க்கும் இணைகளாகும். ஆதலால், நமது அறத்தில் மனை வாழ்க்கை, பிரிவினைக்குரியது அல்ல. இஃதோர் ஒப்பந்த அளவில் அமைந்ததும் அல்ல. இஃதொரு தியாக வேள்வி.

செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க்கு உரை.

(1151)

என்பது வள்ளுவம்.

ஆதலால், காதல் மனைவாழ்க்கையின்பம் ஆன்ம இன்பம்; ஆன்ம அனுபவம். ஆதலால் கற்புக்கடம் பூண்ட பெண்ணே வாழ்க்கைக்குத் துணை நிற்கமுடியும்; மற்றவர்களால் இயலாது. ஒருவர், இருவருக்குச் சேவை செய்ய இயலாது. இங்ஙனம் விரும்புதல் புலால் சுவையேயாம். இது கொடிதினும் கொடிது. இத்தகு தவறுகள் செய்யாத வாழ்க்கையையே, பேராண்மை நிறைந்தது என்றும், கற்பெனும் திண்மை கொண்ட வாழ்க்கை என்றும் வள்ளுவம் போற்றுகிறது.

56. நலமுற வாழ்வோம்!

உடல் ஒரு அற்புதமான கருவி. உடம்பில் உயிர் இயங்குகிறது. உடற்கருவி வாய்க்காது போனால் உயிர் இயக்கம் இல்லை. நுகர்வு இல்லை. அறிவு இல்லை. உயிர் வாய்ப்பாக அமையாது போனால் உடல் பயனற்றது. உடல் உயிருடன் இணைந்திருக்கும் பொழுதுதான் பெயர். உடலை விட்டு உயிர் பிரிந்துவிட்டால் பெயர் போய்விடுகிறது. பிணம் என்ற புதுப்பெயர் வருகிறது.

வாழ்வதற்கு இந்த வாழ்க்கையை நன்றாகப் பயன்படுத்த வேண்டும். வாழ்வாங்கு வாழ வேண்டும். முழுமையாக வாழ்தல் வேண்டும். உடல்-உயிர் சார்ந்த வாழ்க்கைக்குப் புலன்கள் முதன்மையானவை.

புலன்கள் மூளையின் சார்புடையன. மூளையின் இருப்பு தலை, "எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்" என்பர். உடலுக்கு வாய்த்துள்ள கருவிகள் இரு வகையின. ஒன்று அறிவுக்கருவிகள், இவை மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியன. பிறிதொன்று செய் கருவிகள். இவை மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன.

மனம் ஆற்றல் வாய்ந்த கருவி. காற்றைவிட வேகமாகச் செல்லும் தன்மையது. ஆனால், எங்கு, ஏன் போகிறோம் என்று அதற்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் ஆசைப் படுவதில்லை. இந்தப் பணியை புத்திதான் செய்கிறது. மனம் பற்றும் செய்திகளை ஆய்வு செய்து எடுத்துக் கொள்வதுதான் புத்தியின் வேலை. ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர், புத்தி அளவுக்கு வளர்வதில்லை. மனத்தளவிலேயே நின்று விடுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் உணர்ச்சிவசப் படுவார்கள்; வாழத் தெரியாதவர்கள்.

சித்தம் சிந்திப்பது. சிந்தனை மனிதரின் சிறந்த அகநிலைத் தொழிற்பாடு! சித்தம் மிக மிக நுண்மையான பகுதியைக்கூட ஆய்வு செய்து, உண்மைகளைக் கண்டு பிடிக்கும்; ஆழமான உண்மைகளைக் கண்டு பிடிக்கும். அகங்காரம் என்பது முடிவு செய்யும் உறுப்பு. எடுக்கப்பெறும் முடிவுகள் மெய், வாய், கண், மூக்கு, செவிகள் வாயிலாகச் செயற்பாடுறும். இது உடலியக்கம்.

உடலியக்கத்திற்கு உடலோடு கூடி வாழ்தலுக்கு இயற்கை, கால எல்லை நியதி செய்திருக்கிறது. மிகப் பெரிய சாதனைகள் செய்யக்கூடிய ஆற்றல் உடையது இந்த வாழ்க்கை. இந்த வாழ்க்கையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். மானுட வாழ்க்கையின் காலம், ஆற்றல் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

புத்தி, ஆழமான உண்மைகளைக் காணுதல் வேண்டும். கண்கள் அறிவார்ந்த நெடிய தொலைநோக்குப் பார்வை பெறவேண்டும். கைகள் உழைக்கும் கரங்களாக விளங்க வேண்டும். இந்த உடல் நோய்களால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப் பெற வேண்டும். கதிரொளியில் தோய்தலும், காற்றில் உலாவுதலும் உடலுக்கு நல்லது.

உடல், ஒரு உழைப்புச் சாதனம்-கருவி. இந்த உடலுக்குப் போதிய உழைப்புத் தராது போனாலும் நோய் வரும். உடல், உழைப்பில் ஈடுபடுத்தப் பெறுதல் வேண்டும். உடலுக்கு இசைந்த உழைக்கும் ஆற்றலைத் தரக்கூடிய நல்ல உணவு தேவை. இவையெல்லாவற்றுக்கும் மேலாக நல்ல எண்ணங்கள் வேண்டும். நல்ல எண்ணங்கள் - நல்ல நினைவுகள் இல்லாத வாழ்க்கை நச்சுத்தன்மை அடைந்து விடும்.

மேலும் சிறப்பாக உயிருக்கு உயிராக விளங்கும் கடவுளிடம் பேசி மகிழ வேண்டும். இவையெல்லாம் அமைந்து நலமுற வாழ்தல் அறிவியல் சார்ந்த வாழ்க்கை. வாழ்வாங்கு வாழ்வோம்! வையகத்திற்கு அணியாக வாழ்வோம்!

57. முப்பால் அமைந்த திறன்

திருவள்ளுவர் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்று முப்பாலாக வகுத்துச் செய்தது ஏன்? இந்த வினாவுக்குப் பலர் விடையளித்துள்ளனர். பெரும்பாலோர் மரபுவழிச் சிந்தனை. பழக்க வழிப்பட்ட சிந்தனை (Conventional thinking-Habitual thinking) நோக்கிலேயே காரணங்கள் காட்டியுள்ளனர். ஆனால், அவை அறிவியல் ஆய்வின் முன்னிற்குமா என்பது ஐயம்.

திருவள்ளுவர் நூல் செய்யத் தொடங்கும் பொழுது எல்லாரையும் போலத்தான் நினைத்து அறத்துப்பாலை மட்டுமே செய்ய எண்ணினார். அறத்துப்பாலை இயற்றி முடிக்கும் பொழுது நூல் ‘ஊழிய’லில் வந்து முடிந்தது. ஊழியல் முடிந்தவுடன் திருவள்ளுவர் சிந்திக்கின்றார்; ஆழமாகச் சிந்திக்கின்றார்; வாழவேண்டிய மானுடத்தை ஊழைக்காரணங் காட்டி நடுத்தெருவில் - முட்டுச் சந்தியில் நிறுத்தி விட்டுப் போகத் திருவள்ளுவர் விரும்பவில்லை.

ஆதலால் ஊழை எதிர்த்துப் போராடும் ஆற்றலுடையதாக மானுடத்தை ஆக்க விரும்புகின்றார். ஊழை எதிர்த்துப் போராடுதல் எளிது அன்று. அதற்குரிய கருவி, காரணங்களை மானுடம் பெற்றாக வேண்டும். இந்த நோக்கத்தில்தான் பொருட்பாலைத் திருவள்ளுவர் இயற்றுகின்றார்.

ஊழை எதிர்த்துப் போராடும் ஆற்றலை, கல்வி, கேள்வி, அறிவறிந்த ஆள்வினையுடைமை முதலிய கருவிகளை நாம் பெறத்தக்க வகையில் பொருட்பால் இயங்குகிறது. மேலும் ஊழை எதிர்த்துப் போராடும் களத்தில் போராடத் தக்க உறவினர்களையும் துணைகளையும் கூட்டுவிக்க முயற்சி செய்கிறார்; பொருட்பாலை இயக்கிச் செல்லும் திருவள்ளுவர் சமுதாயத்தில் முரண்பாடுகளையே சந்திக்கின்றார்! பெரியோரைத் தேடிப்போகின்றார்! சிறியோரே வந்து சேர்கின்றனர். நல்நட்பை நாடிச் செல்கின்றார்! ஆனால், கிடைத்ததோ தீ நட்பு: செங்கோன்மையைத் தேடிப்போகின்றார்! கிடைத்ததோ கொடுங்கோன்மை! இந்த அவல நிலை திருவள்ளுவரைக் கடுமையாகப் பாதித்துள்ளது. அதனால் பொருட்பால் முடிவில் ஆற்றாமை மீதூர மானுடத்தைத் திட்டுகிறார்.

"ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

போஒம் அளவும்ஓர் நோய்"

(848)

"சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோற்

கொல்லப் பயன்படும் கீழ்”

(1078)

என்றெல்லாம் கடிந்து பேசுகின்றார்! ஆதலால், திருவள்ளுவருக்கு அன்று வாழ்ந்த மானுடத்தின்மீது கட்டுக் கடங்காத கோபம்! மீண்டும் திருவள்ளுவர் ஆழமாகச் சிந்திக்கின்றார்!

அந்த ஆழ்ந்த சிந்தனையின் வடிவு, இன்பத்துப்பால். செய்ய முற்பட்டது! இன்பத்துப்பாலின் நிகழ்வுகளை இல்லறவியலிலும் திருவள்ளுவர் கூறியிருந்தும் மீண்டும் இன்பத்துப் பால் செய்யமுற்பட்டதேன்? இல்லறவியல் கூறியவை இல்லற வாழ்வின் செயல் முறைகள்! கோட்பாடுகள்! காமத்துப் பாலில் சொல்வது காதலின் சிறப்பு-காதலர்களின் அகநிலை, புறநிலைக் கடமைகள் ஆகியனவாம்! காமம் சார்ந்த வாழ்க்கை அருமையானது! பொறுப்புகள் மிகுதியும் உடையது! காதல் வாழ்க்கையில் எல்லாரும் சிறப்படைய முடியாது, சிலரே வெற்றிபெற இயலும்!

"மலரினும் மெல்லிது காமம் சிலரதன்

செவ்வி தலைப்படு வார்”

(1289)

என்பது திருக்குறள். பொருளும் அறமும் சிறக்க நன்மக்கள் தேவை. நன்மக்களைத் தருவது இல்லறந்தானே! அதனால் நாட்டின் வரலாற்றைச் சீராக இயக்கக்கூடிய இல்லறத்திற்கு அடிப்படையாக இரண்டு பகுதிகளாக இயக்கினார்.

2

மண்ணும் விண்ணும்

* * *

1. வரலாற்றுப் போக்கில் வள்ளுவம்

இன்றையச் சமுதாய அமைப்பைப் பொறுத்த வரையிலே ‘வரலாற்றுப் போக்கில் வள்ளுவர்’ என்ன கருதுகிறார். நீண்ட நெடுங்காலமாக இந்த நாட்டில் உள்ள பல்வேறு சமயத்தினரும், இங்குள்ள எல்லா அரசியல் தரப்பினரும், பல்வேறு கொள்கைகளையும் தத்துவங்களையும் கொண்டவர்களும் ஏற்றுப் போற்றும் ஒரு பொது நூலாகத் திருக்குறள் திகழ்ந்தாலும் அது எல்லோருக்கும் வழக்கறிஞராக விளங்க முடியுமா? என்பதுதான் ஒரு பெரிய கேள்வி.

தூற்றுகிறவனும் திருக்குறளை ஏற்றுக் கொள்ளுகிறான்-போற்றுகிறவனும் திருக்குறளை ஏற்றுக்கொள்ளுகிறான். சமுதாயத்திற்கு நலன் செய்கிறவனும் திருக்குறளை ஏற்றுக் கொள்ளுகிறான்-தீமை செய்கிறவனும் திருக்குறளை ஏற்றுக் கொள்ளுகிறான் என்று சொன்னால், இருதரப்பினருக்குமே திருவள்ளுவர் நல்ல பிள்ளையாக நடந்து கொள்ளுகிறார் என்று கூறிவிட முடியுமா? ஒருபோதும் சொல்ல முடியாது.

மனித சமுதாயத்தில் ஏதோ ஒரு தவறு நடந்து கொண்டிருக்கிறது. எங்கோ ஒரு மூலையில்-சிந்தனையில் தொடர்ந்து தவறு நடந்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளுகிற பலவீனமான மனோபாவம் பலரிடம் அமைந்திருக்கிறது. அத்தகையவர்கள் மிகச்சிறந்த நூலாக-மக்கட் குலத்தை வாழ்வாங்கு வாழவைக்கும் மறையாக விளங்கும் திருக்குறளைத் தங்கட்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள முயல்கிறார்கள் - மாற்றிக் கொள்ளுகிறார்கள். அது நீதியுமாகாது-நேர்மையு மாகாது என்று காட்டுவது நமது பொறுப்பும் கடமையுமாகும்.

வரலாற்றுப் போக்கில் வள்ளுவம் என்று நாம் சொல்லுகின்றபோது, நிறையக் கருத்துக்களைக் கூற முடியும். ஒரு கவிஞன் அல்லது ஒரு புலவன், அல்லது ஒர் எழுத்தாளன் சிந்தித்து ஒரு சிந்தனையைப் படைக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்படுகிறது என்பதை நாம் முதலில் ஆராய வேண்டும். வெறும் புலமையினாலே மட்டும் ஓர் இலக்கியம் தோன்றினால் அதை வியந்து போற்ற முடியாது. வெறும் பக்தியினாலே-பாசத்தினாலே ஓர் இலக்கியம் தோன்றினாலும் அதை வியந்து பாராட்ட முடியாது. கவிதை படைக்கும் ஆற்றலினால் மட்டும் ஓர் இலக்கியம் தோன்றுமானால் அதையும் நாம் கையேந்தி வரவேற்க முடியாது. அந்தப் புலவன்-பக்தன்-கவிஞன்-எழுத்தாளன் வாழ்ந்த காலச் சமுதாயத்தில் நடை முறைகளை ஆழமாக-தெளிவாகப் புரிந்துகொண்டு அந்தச் சமுதாயத்திலே-நடைமுறையில் இருந்த தவறுகளை குறைகளை எண்ணிப்பார்த்து அந்தத் தவறுகளை மாற்றி குறைகளைக் குறைத்து நிறையுடைய செழுமையை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதற்குப் பயன்படும் அவன் பயன்படுத்தும் சாதனமே இலக்கியம் என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது.

நடைமுறையில் இருப்பதை எடுத்துக் காட்டுவதினால் மட்டும் இலக்கியம் சிறந்துவிடாது. கண்முன்னே காண்பனவற்றைக் கோவையாக எடுத்து விளக்குவது நிறைவான இலக்கியமன்று. வெறும்பொழுது போக்கிற்காகப் புல்லிய உணர்ச்சிகளையும்-ஆசாபாசங்களையும் வளர்ப் பதற்காகப் படைக்கப் பெறுவனவற்றை இலக்கியங்களாக ஏற்றுக் கொள்வதற்கில்லை. தான் வாழும் தலைமுறையில், மனித சமுதாயம் எந்த முறையில் வாழ்கிறது-அந்தச் சமுதாயத்தின் உணர்ச்சிகளும் போக்குகளும் எப்படி இருக்கின்றன? அவற்றில் உள்ள குறை என்ன? நிறை என்ன? என்பனவற்றை யெல்லாம் தெளிவாகப் புரிந்துகொண்டு இலக்கியங்களைப் படைப்பவனே இலக்கிய கர்த்தா-எழுத்தாளன்-கவிஞன். அவன் அவற்றைப் புரிந்து கொள்வது மட்டும் போதாது-அவ்வாறு சிந்தித்து உணர்ந்ததை-புரிந்து கொண்டதை மனித உலகமே கூடி எதிர்த்தாலும் குறையைச் சுட்டிக்காட்டி குறை நீங்கி மனித சமுதாயம் நிறைவை நோக்கி நடைபோடுவதற்கான வழிமுறைகளை அஞ்சாமல் எடுத்துக் காட்டுபவனே சிறந்த கவிஞன்-சிறந்த இலக்கியப் படைப்பாளன். இவற்றை நினைவில் வைத்துக்கொண்டு வரலாற்றுப் போக்கில் வள்ளுவம் என்கிறபோது, திருவள்ளுவர் வாழ்ந்த காலம்-அவருக்கு முன்னர் வாழ்ந்த மூத்த தலைமுறை-அன்றையச் சமுதாயம் எப்படியிருந்தது என்ற பின்னணிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை நான் திருக்குறளை-வள்ளுவத்தை ஓர் உயர்ந்த ஒழுக்க நூலாகமட்டும் பார்க்க வில்லை. திருவள்ளுவர் தான் வாழ்ந்த காலத்துச் சமுதாய அமைப்பையும், தனக்கு முந்திய காலத்துச் சமுதாய அமைப்பையும், அந்தச் சமுதாயத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு களையும், மேடுபள்ளங்களையும் நன்றாகப் புரிந்துகொண்டு, தாழ்வுகளை நீக்கி ஏற்றங்காணவும், பள்ளங்களை நிரப்பி மேடுகளாக்கவும் திட்டமிட்டுத்தான் திருக்குறளைச் செய்தார். இதிலே நான் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறேன். வள்ளுவர் வாழ்ந்த காலத்திய மனித சமுதாயம் மேடு பள்ளங்களையுடையதாகவே இருந்தது. ஆம், மேடுகள் குறைவாகவும், பள்ளங்கள் சற்று அதிகமாகவும் இருந்தன. அந்தப் பள்ளங்களை நிரப்பி, மனித ஒழுக்க நெறியில் அந்தச் சமுதாயத்தை ஈடேற்ற வேண்டும்-வழி நடத்திச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் திருவள்ளுவர் திருக்குறளைச் செய்தார்.

திருவள்ளுவர் மனித சமுதாய வரலாற்றில் ஏற்பட்டிருந்த குறையை-வீழ்ச்சியை-ஒழுக்கக் கேடுகளைக் கண்டுபிடித்து, அவற்றை மாற்றியமைத்து ஏற்றமும் எழுச்சியும் உண்டாக்கிச் சமுதாயத்தை நல்வழியில் வழிநடத்திச் செல்ல வேண்டும் என்ற தூய நன்னோக்கத்தோடு வள்ளுவத்தைச் செய்தார்-மனிதகுலச் சிந்தனையாளனாக-ஒழுக்க நெறியாளனாக-இவற்றிற்கெல்லாம் மேலாக, சமுதாயத் தலைமைக்குத் தகுதியுடையவனாகத் தன்னை ஆக்கிக் கொண்டு திருவள்ளுவர் திருக்குறளைச் செய்தார் என்ற உண்மையை- முன்னுரையை நாம் இங்கே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு-அந்த முன்னுரையிலிருந்து நாம் சில செய்திகளைக் காணலாம்.

திருவள்ளுவர் காலத்தில் வாழ்ந்த மனித சமுதாயத்தில் எண்ணத் தொலையாத-ஏராளமான பிரிவினைகள் இருந்திருக்கின்றன. அந்தப் பிரிவினைகளின் காரணமாக-வேற்றுமைகளின் காரணமாக மனிதனே மனிதனைப் பகைக்கின்ற மிகக்கொடிய சூழல் வளர்ந்துவிட்டது. ஒருவருக்கொருவர் சிரித்துப்பேசி மகிழப் பிறந்த மனித குலம், குளிர்ந்த பார்வையால் ஒருவரோடொருவர் கூடி உறவாடப் பிறந்த மனிதகுலம் தனக்குள் பல்வேறு வேற்றுமைச் சுவர்களை எழுப்பிக் கொண்டது. மனித சமுதாயத்தில் இல்லாத பல்வேறு கற்பனைகளை உருவாக்கிக் கொண்டு எழுப்பிய பிரிவினையுணர்வினைத் திருவள்ளுவர் பார்த்தார். "பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்” என்றார். மனித குலத்தில் எத்துணை வேற்றுமையுணர்வுகள் இருந்தாலும், எவ்வளவு பிரிவினை யுணர்வுகளைத் தோற்றுவித்தாலும் பிறப்பிலும் இறப்பிலும் வேறுபாடுண்டா? அப்படி வேறுபாடில்லாத, உலகத்தை நீ ஏன் வேறுபடுத்துகிறாய்?-நீ ஏன் வேறு பாட்டுணர்வுகளை வளர்க்கிறாய்? என்று கேட்டது போலத் திருவள்ளுவர் பேசுகிறார்.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாச்

செய்தொழில் வேற்றுமை யான்."

என்று குறிப்பிடுகிறார். இதைச் சொன்னதோடு திருவள்ளுவர் அமைந்துவிடவில்லை-அமைதிகொள்ள அவரால் முடிய வில்லை. ஒழுக்கத்தைச் சார்பாக வைத்துக்கொண்டு இன்னாருக்கு இன்ன ஒழுக்கம்-இந்த ஒழுக்கமுடையவர் இன்ன சாதியினர் என்று கூறி அகத்தின் வழிப்பட்ட ஒழுக்கத்தை வரையறுத்துக் கொள்ளாமல் வெறும் புறச்சார்பான ஒழுக்கத்தையே பெரிதெனக் கருதி, வெளிநடை முறைகளை-புறச் செயல்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அவற்றின் வழி நால்வகைச் சாதிகளை உருவாக்கி வளர்த்து வைத்திருந்த சமுதாயப் போக்கையும் திருவள்ளுவர் பார்த்தார். அவ்வாறு, நால்வகைச் சாதிகளுக்குள் பெருஞ்சுவர் எழுப்பிக்கொண்டு மனிதகுலம் வாழ்ந்த கொடுமையைப் பார்த்தார். சாதிமுறைகளை ஏன் ஒழிக்க முடியாது என்று கேட்டார்.

"ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்"

என்றார். ஆம், நீ யார் வீட்டிலே பிறந்தாய் என்பது முக்கியமன்று-நீ எந்தத் தெருவிலே வளர்ந்தாய் என்பது முக்கியமன்று-நீ எந்தத் தொழில் செய்யும் பரம்பரையில் தோன்றினாய் என்பது முக்கியமன்று-உன்னிடத்து மனித குலத்தை வாழ்விக்கின்ற-அணைத்து மகிழ்கின்ற அக வொழுக்கம் இருக்கிறதா? அந்த அகவொழுக்கத்தைப் பெற்றவனே பெருங்குடிமகனாவான்-‘ஒழுக்கமுடைமை குடிமை’ என்று சொன்னார். உயர்குடிப்பிறப்பை அளக்கும் அளவுகோலே ஒழுக்கந்தான். பிறந்த வீடும், பேசும் மொழியும், கும்பிடும் கோயிலும், ஓதுகிற வேதமும் உயர்குடிப்பிறப்பை அளக்கும் அளவுகோல்கள் அல்ல என்று கருதினார். இவற்றையே அளவு கோலாகக் கருதிப் பெருமையும் சிறுமையும் பேசிய-கற்பித்த பேதைமையைச் சாடினார். மனித குலத்திலிருந்த சாதி இனவேற்றுமைகளை ஒழித்து மனிதகுலத்தை ஒருகுலமாக்குவதற்கென்றே திருவள்ளுவர் வள்ளுவத்தைச் செய்தார். திருவள்ளுவர் விரும்பிய வண்ணம் சாதி இன வேறுபாடுகளை ஒழித்துக்கட்டி, மனிதகுலத்தை ஒருகுலமாக்க திருவள்ளுவர் வலியுறுத்துவதுபோல நாம் ஒழுக்கத்தை வளர்க்க வேண்டும்.

ஒழுக்கத்தைத் தூண்டி வளர்ப்பன கல்வி, அறிவு, சிந்தனை ஆகியன. இந்த உண்மையையும் திருவள்ளுவர் மிகத்தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தார். தமது தவறான பழக்க வழக்கங்களைக்கூட நியாயமானவை என்று பிடிவாதம் பிடிக்கின்றவர் பலர் இருக்கின்றனர் என்பதையும் திருவள்ளுவர் நன்றாக உணர்ந்து கொண்டிருந்தார். மனிதனின் அகக்கண் குருடாகிப் போனதாலேயே அவன் தன்னுடைய வாழ்வியலைப்பற்றி-ஒழுக்க இயலைப்பற்றி - பழக்க வழக்கங்களைப் பற்றித் தானாகச் சிந்தித்துத் தன்னைச் செழுமைப் படுத்திக்கொள்ள முடியவில்லை. செழுமைப்படுத்திக் கொள்ளுகின்ற அளவிற்குக் கல்வியறிவு இல்லை என்பதைக் கண்டார். எனவே, சமுதாயம் முழுமைக்குமாகக் கல்வி கொடுக்கவேண்டும். சமுதாயத்தையே படிப்பிக்க வேண்டும் என்றார். ‘எல்லாரும் படியுங்கள்! எல்லாரும் சிந்தனை செய்யுங்கள்’ என்றார். கல்வியின் இன்றியமையாமையை - கல்வியின் சிறப்பை மிகத் தெளிவாக எடுத்துக் கூறி வலியுறுத்துகிறார்.

இவ்வாறு, கல்வியின் இன்றியமையாமையை-அதன் சிறப்பை வலியுறுத்துகிற திருவள்ளுவர், ‘கற்றிலனாயினும் கேட்க’ என்கிறார். நீ நேரடியாகப் படித்துச் செய்திகளைத் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமற் போனாலும் உன்னை வாழ்விக்கின்ற - உன்னைச் செழுமைப்படுத்துகின்ற - உன்னை உருவாக்குகின்ற-உன்னுடைய வாழ்க்கையைத் தூய்மைப்படுத்துகின்ற சிறந்த செய்திகளையும், சிந்தனைகளையும் படித்தவர் வாயிலாகக் கேட்டாவது தெரிந்துகொள் - அப்படிக் கேட்டுத் தெரிந்து கொள்வதின் மூலம் உன்னுடைய அகவாழ்வில் புத்தம்புதிய மாறுதலை உண்டாக்கிக்கொண்டு-ஒழுக்கப்பண்புகளை வளர்த்துக் கொண்டு உயர்குடி வரிசையில் நீ உன்னைச் சேர்த்துக் கொள்ள முயற்சி செய் என்கிறார்.

அடுத்து நாடு, மொழி, இனம், மதம் இவற்றிற்கிடையேயுள்ள வேற்றுமைகளைக்கூட ஒழித்துவிட வேண்டும் என்று சொல்கிறார். இதற்கு எல்லா மக்களும் கல்வி அறிவு பெற வேண்டும். கல்வி அறிவு என்று சொல்லுகின்ற பொழுது, மொழியின் மூலமாகப் பெறும் அறிவை மட்டும் சொல்ல வில்லை. மொழியின் மூலமாக மட்டும் பெறுகிற அறிவு பிரிவினைகளை வளர்க்குமே தவிர அவற்றைத் தடுக்காது-குறைக்காது. எனவே மொழியின் மூலமாக மட்டும் பெறும் அறிவை முழுமையான அறிவு என்று ஒத்துக்கொள்ள முடியாது. அறிவு மொழிகளைக் கடந்தது-சமயம் என்பது சடங்குகளைக் கடந்தது-எல்லைக் கோடுகளைக் கடந்தது.

வேறுபடு சமயங்கள் புகுந்து பார்க்கின்

விளங்குபரம் பொருளேநின் விளையாட் டல்லால்

என்றார் தாயுமானவர்.

பொதுவாக மனிதனுடைய உணர்ச்சிகளை வளர்ப்பதற்காக - அவனுடைய வளர்ச்சி வட்டங்களுக் கேற்றவாறு அவ்வப்போது எல்லைக்கோடுகள் வகுத்துக்

தி.10. கொள்வது இயல்பு. எனினும், அந்த எல்லைக் கோடுகளுக்குள்ளேயே நின்று விடுதல் கூடாது. அதுபோல, அன்பைத் தூண்டி வளர்ப்பதற்கு மொழி ஒரு கருவி. எனினும், மொழியின் எல்லைக் கோட்டுக்குள்ளேயே நின்றுகொண்டு பேசுவது மட்டும் அறிவாகிவிடாது. மனித குலத்தை நேசிக்கின்ற உணர்வும், மனித உலகத்தை வாழ்வித்து வாழும் உணர்வுமே அறிவு எனப்பெறும். திருவள்ளுவர் கூட கல்வி வேறு-அறிவுடைமை வேறு என்றுதான் கருதினார். கல்வியே அறிவு என்று அவர் ஒத்துக்கொண்டிருப்பாரானால், ‘கல்வி’ என்று ஒர் அதிகாரமும் ‘அறிவுடைமை’ என்று இன்னோரதிகாரமும் வைத்திருக்கமாட்டார். கல்வி என்பது அறிவைப் பெறுவதற்குத் துணை செய்யும் ஒரு கருவி-அது மனிதனை அறிவுலகத்திற்கு அழைத்துச் செல்லும். அவ்வளவு தானே தவிரப் படித்தவர்கள் எல்லாம் அறிவுடையவர்கள் என்று ஒத்துக் கொள்ள முடியாது. படித்தவர்கள் எனப்படுவோரில் ‘படிக்காதவர்’களும் இருக்கிறார்கள்-படிக்காதவர்கள் எனப் படுவோரில் 'படித்தவர்’களும் இருக்கிறார்கள். கல்விவேறு - அறிவுவேறு என்ற உண்மையைத்தான் இது நமக்குக் காட்டுகிறது.

இன்று நாம் சாதி, இனம், மொழி, நாடு ஆகிய எல்லாவகையான எல்லைக்கோடுகளையும் வேற்றுமைகளையும் கடந்த ஒரு புதிய சமுதாயத்தை-உலக மனித சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். எனவே, மொழியைப் படிப்பதோடு அறிவியல், பொருளியல், தொழிலியல், சமூக இயல் ஆகிய பல்வேறு துறைகளிலும் அறிவைப் பெற்று நம்மை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அன்று, திருவள்ளுவர், பரந்துபட்ட அறிவியலைத் தூண்டிவிட்டு-பரந்துபட்ட சிந்தனையைத் தூண்டிவிட்டு, மனித சமுதாயத்தில் பரந்துகிடந்த வேற்றுமைகளைக் களைய வேண்டும் என்ற நோக்கிலேயே திருக்குறளைச் செய்தார்.

பலர் படிக்கிறார்கள்-சிந்திக்கிறார்கள். ஆனாலும் சிந்தனை முழுவதுமே துாய்மையானது என்று கருதிவிடுவதற்கில்லை. ஏனெனில் பலரின் சிந்தனைக்கும்-புறச் சூழலுக்கும் தொடர்பிருக்கிறது. சிலருடைய சிந்தனை முதலில் அவர்களுடைய தவறான பழக்க வழக்கங்களில்தான் சென்று படரும். அந்தத் தவறான பழக்க வழக்கங்களை நியாயப் படுத்திக் காட்டவும் அவர்களின் அறிவு முயற்சிக்கும். அதனால்தான், 'உன்னுடைய மனச்சாட்சி மட்டும்-உன்னுடைய சிந்தனை மட்டும் பெரிதல்ல-சமுதாயத்தின் மனச்சாட்சியோடு உன்னுடைய மனச்சாட்சியையும் ஒத்துப் பார்’-என்றான், மாவீரன், மாஜினி. பல தவறுகளுக்கு -பல அநியாயங்களுக்குக் கூட ‘நான் என் மனச்சாட்சியறியப் பொய் சொல்லவில்லை’ என்று சொல்லத் தோன்றும். 'அவனுடைய மனச்சாட்சிப்படி’ தவறில்லைதான். அவன் மனச்சாட்சி அவன் பார்த்த பார்வையிலேதான் சென்று கொண்டிருக்கிறது. பாரமேற்றிய வண்டியை இழுத்துச் செல்லும் எருதுகள் நள்ளிரவில் தூங்கிக்கொண்டே நடந்து செல்லும். அது, அதற்குப் பழக்கத்தால் ஏற்பட்ட பயிற்சி. அதுபோலவே மனிதனும் பழக்கத்தின் அடிச்சுவட்டில் செல்லுவதில் எளிதாய் பயிற்சி பெற்றவன். 'படித்தவர்கள்’ எனப்படுவோர் பலர், ‘பழக்கம்’ என்ற உழுசாலில் செல்லுவதற்கே முயல்கிறார்கள்; தங்களை மாற்றிக்கொள்ள - புதுமைப்படுத்திக்கொள்ள வெட்கப்படுகிறார்கள் - கூச்சப்படுகிறார்கள்-பயப்படுகிறார்கள். தவறு என்று தெரிந்தும்கூட அதைவிட்டு விலகுவதற்கு அஞ்சுகிறார்கள். இந்த நூற்றாண்டில்கூட, உலகின் சமாதானத்திற்கு எந்தயுகம் அணுகுண்டைத் தோற்றுவித்ததோ-அந்த யுகம், அதைத் தடுக்கின்ற வலிமையான கரங்களையும் தோற்றுவித்தது. ஆனால் அப்பாவி உலகம் மீண்டும் அணுகுண்டைத் தடுத்து நிறுத்துகிறவனின் கரத்தை, வெட்டி வீழ்த்தி விட்டது! குண்டை வைத்திருக்கும் கரத்தை என்ன பண்ணப் போகிறதோ தெரியவில்லை. இந்த நிலைமையை நாம் எண்ணிப்பார்க்கின்றபொழுது, மனிதன் பகுத்தறிவில்லாதவனா? அவன் மொழிகளில் உலக இலக்கியங்கள் தோன்றவில்லையா? அதில் புத்தம் புதிய சாத்திரங்கள் தோன்றவில்லையா? அவனுடைய பிரார்த்தனையுலகில் செழுமை படரவில்லையா? எல்லாம் இருந்தும்கூடப் பலர் ‘சிரங்குசொறி பிடித்தவர்கள்போல’ திரும்பத் திரும்பத் தவறுகளைச் செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்! எது வளரவில்லை. நம்மைப்புறச் சூழலில் வளர்க்கின்ற சமயம் வளரவில்லை என்று கூற முடியுமா? உலகிலேயே அமெரிக்க நாட்டில்தான் கடந்த பத்தாண்டுகளில் வழிபாட்டில் அதிக நம்பிக்கையுடையவர்கள் பெருகியிருக்கிறார்கள். இந்தப் பத்தாண்டுகளில் அங்கு ஏராளமான மாதாகோவில்கள் தோன்றி யிருக்கின்றன, பைபிளை அதிகமாக ஓதுகிறவர்களை அங்குதான் பார்க்கிறோம். ஆனாலும், அங்கு ஏசுவின் மதம்-கிறித்தவம் கல்லறைக்குப் போய் விட்டது என்பதை மறுக்கமுடியுமா? இந்த உண்மைகளையெல்லாம் நன்றாகத் தெரிந்து கொண்டுதான் திருவள்ளுவர் பேசுகிறார். 'மனித வாழ்க்கையில் அன்பும் அமைதியும் வேண்டும்’ என்றார். அன்பும் அமைதியும் வேண்டுமென்று சொன்னால், உன்னுடைய அறிவுமட்டும் போதாது. நீ எதைக் கேட்கின்றாயோ-எதைச் சார்ந்திருக்கின்றாயோ அந்த அறிவு-மெய்யறிவாக-மெய்ப்பொருளாக இருக்கிறதா என்று பார் என்று சொல்லுகிறார். ‘எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்கிறார். நாம் வாழுகிற மனித சமுதாயத்தில் எல்லாவகையான ஆதிக்கக் காரர்களும் உண்டு. ஆட்சியில் வீற்றிருப்பவர்கள் மட்டும் ஆதிக்கக்காரர்கள் அல்லர். பொருளாதாரத்தைத் தங்களிடத்தே குவித்து வைத்துக்கொண்டிருப்பவர்கள் மட்டும் ஆதிக்கக்காரர்கள் அல்லர். அறிவுலகத்திலும் ஆதிக்கக் காரர்கள் உண்டு. அவர்கள், மற்றவர்களுக்கு அறிவு வளர்ந்துவிடக் கூடாது என்று கருதுகிற ஆதிக்க உணர்வுடையவர்கள். இத்தகைய, ஆதிக்க உணர்ச்சி பல்வேறு கோலங்களில், எல்லாக் காலங்களிலும் உலவியது. என்றைக்குச் சமய உலகில் ஆதிக்க உணர்ச்சி தோன்றியதோ அன்றே, சமயச் சண்டைகளும், பல்வேறு சமயப் பூசல்களும் முளைத்தன. சமயம் சமயமாகவே இருந்தால் அது பெளத்த மாயினும் சரி, இஸ்லாமாயினும் சரி, சமணமாயினும் சரி, கிறித்தவமாயினும் சரி, சைவ வைணவமாயினும் சரி சமயச் சண்டைகள் தோன்ற மாட்டா.

உலகில் பொதுவாக, சமய உணர்ச்சியைக் கருவியாகக் கொண்டு, ஆதிக்க உணர்ச்சி தோன்றுகின்றபோதுதான் கரும்பே கசப்பதுபோல-சர்க்கரையே புளிப்பதுபோல குளமே சேறாகிவிடுவதுபோல ஆபத்துக்கள் உருவாகின்றன. உடம்பைத் தூய்மைப்படுத்த வேண்டிய தண்ணீரே அழுக்குச் சேர்ந்தாகிவிட்டால் என்னென்ன கொடுமைகள் ஏற்படும்? . வாழ்க்கையை வளமுடையதாக்க- தூய்மையுடைய தாக்கத் தோன்றிய சமயங்களில் ஆதிக்க உணர்ச்சி தலையெடுத்து - அது சமயச் காழ்ப்பாக மாறிச் சமயச் சண்டைகள் தோன்றி மனித குலத்தையே ஆட்டி அலைக்கழிக்கின்ற பல நிகழ்ச்சிகளை நாம் பார்க்கிறோம். இவற்றையெல்லாம் தெளிவாகப் புரிந்து கொண்டே திருவள்ளுவர் ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்’ என்றார். யார் யார் வாய் கேட்பினும் என்றால் என்ன? இங்கு தலைமை வகித்திருக்கும் நண்பர் மணலி கந்தசாமி அவர்களே பேசுகிறார்கள் என்றாலும் அவர்களை பொதுவுடைமைக் கட்சிக்காரர் என்ற பார்வையில் அவரைப் பார்க்காதீர்கள். அவர் என்ன சொல்லுகிறார்-அவர் சொல்லுகின்ற கருத்து இந்த நாட்டுக்கும் இந்த நாட்டு மக்கட்கும் நன்மை பயப்பதாக இருந்தால் தைரியமாக-துணிவாக அதை ஏற்றுக்கொள்ளுங்கள். நன்மை பயப்பதாக இல்லையானால் அதைத் தைரியமாக எதிர்த்து நில்லுங்கள். இந்த இரண்டிலும் கோழைத்தனம் வேண்டாம்-முதலில் கருத்துச் சரியா தவறா என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்தக் கருத்திலேதான் திருவள்ளுவர் பேசுகின்றார்.

திருவள்ளுவர் காலத்திலே தமிழ்நாட்டிலே நிறையப் பேர் கருத்துக் கடை விரித்தார்கள். தமிழகத்திற்குச் சமணர்கள் வந்தார்கள் - பெளத்தர்கள் - மாயாவாதிகள் வந்தார்கள். இந்தப் பல்வேறு சமயவாதிகளும் இந்த நாட்டில் கருத்துக் கடைகளை விரித்துத் தமிழர்களைத் தங்கள் வலையில் இழுக்க முயன்றார்கள். இதைப் பார்த்துத்தான் திருவள்ளுவர், கடை யாருடையது என்றோ, கடையில் யார் வியாபாரம் செய்கிறார்கள் என்றோ கவலைப்படாதீர்கள் - கடையில் விற்கப்பெறும் சரக்கின் தரத்தைப் பாருங்கள் என்றார். சொல்லுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சொல்லுகிற கருத்திலே மெய்ப்பொருள் தன்மை இருக்கிறதா என்று பாருங்கள். உங்கட்கும், உங்கள் நாட்டுக்கும், உங்கள் சமுதாயத்திற்கும், பாரம்பரியத்திற்கும், உலகுக்கும் நன்மை வருமா என்று பாருங்கள்-அதுதான் அறிவு.

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு”

என்று சொன்னார்.

பொதுவாக, ஒரு செய்தியைச் சொல்லுபவர்கள் யார் என்பதை வைத்துக் கொண்டே அச்செய்தியைப் பற்றிய முடிவெடுக்கிற ஒரு பரிதாப நிலையை-அவல நிலையை இன்று நாம் சமுதாயத்தில் காண்கிறோம். செய்தியைப்பற்றி ஒரு முடிவெடுப்பதற்கு அச்செய்தியைச் சொல்லுகிறவர்களை ஒர் அளவு கோலாகக் கொள்ளலாமே தவிர, முழுமையாகக் கொள்ள முடியாது. அவர்கள் சொல்லுகிற கருத்து எத்தகையது என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொண்டு பார்க்க வேண்டும்.

அடுத்து, திருவள்ளுவர் காலத்திற்கு முந்திய தமிழகம், ‘வள்ளல்’களைப் போற்றிப் பாராட்டிய பாரம்பரியம் உடையதாக இருந்தது. முல்லைக்குத் தேர்கொடுத்தான்-மயிலுக்குப் போர்வை கொடுத்தான்-பொன்னும் மணியும் இன்னபிறவும் வாரிக் கொடுத்தான்-பொற்பூ சூட்டினான் என்றெல்லாம் பலவாறாக ‘வள்ளல்’களைப் பாராட்டி மகிழ்ந்தார்கள். இந்த ‘வள்ளல்’ பரம்பரையைப் பாராட்ட திருவள்ளுவருக்கு மனம் வரவில்லை. நாம் எந்தப் புறநானூற்றுக் காலத்தில் வள்ளல்களைப் பார்க்கிறோமோ, அந்தப் புறநானூற்றுக் காலத்திலேயே வெம்பசியால் வாடியவர்கள் வயிற்றுச் சோற்றுக்காகப் ‘பசிப்பிணி மருத்துவன்’ இல்லத்தை நோக்கி எறும்புகளைப்போலச் சாரை சாரையாகச் சென்று கையேந்திய கழிவிரக்க நிலை இருந்ததென்பதையும் பார்க்கிறோம். அப்படியானால், எங்கிருந்து வள்ளல் தன்மை தோன்றுகிறது? பொதுவாக ஒருவர் வாரிக்கொடுக்க வேண்டும் என்றால் அவரிடத்து எஞ்சிய பொருள் நிறைய இருக்கவேண்டும். அவனிடம் அந்தப் பொருள் எப்படி வந்தது? எவ்வாறு குவிந்தது? என்று திருவள்ளுவர் கேட்டாரோ இல்லையோ அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். ‘எஞ்சிய செல்வத்தை இன்னொரு வருக்குக் கொடுப்பதில் உனக்கு என்ன பெருமை இருக்கிறது?’ என்று கேட்கிறார். உன்னிடம் செல்வம் எஞ்சிக் கிடக்கிறது. எஞ்சியதை இன்னொருவருக்கு - தேவைப் படுகிறவருக்குக் கொடுப்பதுதானே கடமை? அதுதானே தொண்டு? இதில் உனக்கென்ன சிறப்பான வரவேற்புப் பத்திரம் வேண்டியிருக்கிறது?-இப்படித்தான் திருவள்ளுவரின் கருத்துச் செல்லுகிறது. இதனை ‘ஒப்பரவு’ என்ற ஓர் அதிகாரத்தில் அழகாகப் பேசுகிறார். செல்வம் உடையவர்கள் இல்லாதவர்கள் இதனை ‘ஒப்பரவு' என்ற ஓர் அதிகாரத்தில் அழகாகப் பேசுகிறார். செல்வம் உடையவர்களிடமிருந்து இல்லாதவர்கள் அதனைப் பெறுவது உரிமை. இந்தக் கடமை உரிமை உணர்வுகளுக்கிடையே ஈகை, கருணை, இரக்கம் என்ற சொற்கள் ஏன்? இல்லத்தலைவன் தன் இல்லத் தலைவிக்குத் துணி வாங்கிக் கொடுப்பதைக் கடமையாகக் கருதுகிறானே தவிர அதற்கொரு பாராட்டுப் பத்திரமும், வாழ்த்துரையுமா எதிர்பார்க்கிறான்? நிலத்தின் சொந்தக்காரன் அந்நிலத்தைப் பேணிக்காப்பது கடமை. அதுபோல, செல்வம் உடையவர் எஞ்சிய செல்வத்தை இல்லாதவர்க்கு உதவுவது கடமை. இதனை உணர்த்துகிறார் திருவள்ளுவர். இந்த ஒப்புரவுக் கொள்கையை மூன்று சிறப்பு உவமைகள் மூலம்-மூன்று சிறந்த எடுத்துக்காட்டுக்கள் மூலம் தெளிவாக விளக்குகிறார்.

'ஊருணி நீர் நிறைந்தற்றே’ என்று ஒரு குறள். இந்தக் குறட்பா, வள்ளலையும் ‘வள்ளல் தன்மை’ யையும் பாராட்டுவதாகக் கருதிக்கொண்டே இன்னும் பலர் பேசிக்கொண்டு வருகிறார்கள். உரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு வள்ளலையும், வள்ளல் தன்மையையும் பாராட்டுகிற குறளாக இக்குறட்பா எனக்குத் தோன்றவில்லை. ஊருணி இருக்கிறது-ஊரினர் பலர் அதிலே தண்ணீர் எடுத்துக் குடிக்கிறார்கள். நாள்தோறும் அக்குளத்தைப் பயன்படுத்துகிறார்கள். அந்த ஊருணி இந்த ஊருக்கும் உலகுக்கும் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற உணர்வோடு கொடுக்கிறதா? அந்த ஊருணியில் அந்த ஊர்மக்கள் தண்ணீர் எடுக்கவில்லையானால் ஊருணி என்னாகும்? அந்த ஊருணி பாசி பிடித்து, ஊற்றுவளம் கெட்டுப் புழு நெளியும் குட்டையாகி அந்நகரின் நகராட்சி மன்றம் அதைத் துர்த்துவிடத் திட்டம் போடுகிற நிலைமை ஏற்பட்டு விடாதா? அந்த ஊருணி ஊர் மக்களுக்குத் தண்ணீர் கொடுப்பது கொடைபோலத் தோன்றினாலும் அது மறைமுகமாகத் தன்னுடைய ஊற்றுவளத்தை-ஊருணி என்ற பெயரை இவற்றிற்கெல்லாம் மேலாகத் தன் தூய்மையைக் காப்பாற்றிக் கொள்ளுகிறது. அதுபோலவே அறிஞன் கொடுப்பான். "ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகுவாம்

பேரறி வாளன் திரு”

என்றார். அறிவு கொஞ்சம் திட்டவட்டமாகக் கணக்குப் போடும். ஒன்றைச் செய்தால் அது எப்படித் திரும்பிவரும் - இதனால் என்ன இலாபம் என்று கணக்குப் போட்டுப் பார்த்துத்தான் பேரறிவாளன் ஒன்றைச் செய்வான். ஆனால், சமுதாயத்தோடு-சமுதாய உணர்ச்சியோடு-அன்போடு-அருளோடு-அற உணர்வோடு கலக்காத வெற்றறிவு எப்படிக் கணக்குப் போட்டுப் பார்க்கும்? பேரறிவாளன், தன்னை நம்பிக் கொண்டு, தனக்காக-தன்னுடைய நலனுக்காகவே கொடுப்பான், குறி எதிர்ப்பைக் கொண்ட இந்தக் கொடையையே திருவள்ளுவர் 'ஊருணியோடு ஒப்பிட்டார்.

மனித உலகம் மேலும் வளர்ச்சியுற வேண்டும். அது தனக்காக-தன்னுடைய நன்மைக்காக அல்லாமல் தன்னை மறந்து கொடுக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கு மருந்து மரத்தை உவமையாக-எடுத்துக் காட்டாகக் கொண்டு விளக்குகிறார்.

"பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கட் படின்"

என்றார். நயனுடையான் என்றால் நெஞ்சுடையவன் என்று பொருள். நெஞ்சுடையவனுக்கு மூளை மேலோங்கி நிற்கவில்லை-இதயம் வேலை செய்கிறது. இவன் எந்த இனத்தைச் சேர்ந்தவன்-இவன் எந்த நாட்டைச் சேர்ந்தவன் - இவன் எந்த மொழியைப் பேசுபவன் - இவனுக்கு - இவனுடைய ஏழைமைக்குக் கொடுப்போமா? வேண்டாமா? என்றெல்லாம் மூளையால் ஆராய்வதில்லை. இதயம் அவனது ஏழைமையைப் பார்த்து-துன்பத்தைப் பார்த்து உதவ முந்துகிறது. உள்ளூருக்குள்ளே, கனிகளைத்தரும் பயன்மரம் பழுத்துக் கனிந்திருக்கிறது. அது, கனிந்த கனிகளைக் கிழே உதிர்க்கும்போது இது யாருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணிப் பார்ப்பதில்லை. வேலிவைத்துப் பாதுகாத்து வளர்த்தவனின் வீட்டுத் தோட்டத்துக்குள்ளேகூடப் பழம் முழுவதும் விழுவதில்லை. வேறு இடத்திலும் விழலாம். அது, இன்னார் இனி யார் என்று பார்ப்பதில்லை-இவர் உதவினார்-இவர் உதவி செய்தார் என்றுகூடப் பார்ப்ப தில்லை. தன்னுடைய கனிகளைச் சமுதாயத்திற்குக் கொடுப்பது என்ற கடமையுணர்வோடு மட்டுமே கணிகளை உதிர்க்கிறது. இவ்வாறு நட்டவனுக்கா எருவிட்டவனுக்கா, நீர்பாய்ச்சியவனுக்கா, வேலியிட்டவனுக்கா, பட்டாக் காரனுக்கா என்று பாராமல், கனிந்த கனிகளைச் சமுதாயத்திற்குக் கொடுப்பது தன்னுடைய கடமை என்று கடமையுணர்ச்சியோடு மட்டும் கனிகளை உதிர்ப்பதுபோல, நெஞ்சுடையவன் தன்னை மறந்து, மறந்து எதைப்பற்றியும் சிந்தனை செய்யாமல், யாருக்குக் கொடுக்கிறோம் என்பதைப் பற்றிக்கூடக் கவலைப் படாமல் கொடுப்பான். இஃது இரண்டாவது வளர்ச்சி.

திருவள்ளுவர் இன்னும் ஒருபடி மேலே செல்லுகிறார் - மூன்றாவது உலகத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். அந்த உலகந்தான் மனித குலத்தை வாழ்விக்கும் என்று சொல்லுகிறார். அது எந்த உலகம்? அது மருந்து மரத்தோடொத்த பெருந்தகையார் உலகம். மருந்து மரம் இருக்கிறதே அது பல்லாற்றானும் நமக்கு உதவுகிறது. அதனுடைய பட்டை வெட்டப்பெறுகிறது-இலைகள் பறிக்கப் பெறுகின்றன. பூக்கள் கொய்யப்பெறுகின்றன. வேர் வெட்டப் பெறுகிறது. இவ்வாறாக மருந்து மரத்தின் எல்லா உறுப்புக்களையும் எடுத்துப் பயன் படுத்துகிறோம். எனினும் அந்த மரம் ஆடாமல்-அசையாமல் உலகிற்கு இன்பந்தந்து வாழ்விக்கிறது. அது தன்னை நினையாது மட்டுமன்று தன்னை மறந்து மட்டுமன்று-தனக்கு இழைக்கப் பெறுகிற தீங்குகளையும் பொறுத்துக்கொண்டு சமுதாயத்திற்கு உதவுகிறது. மருந்து மரம் போன்ற பெருந்தகையார் பலர் வாழும் சமுதாயத்தையே திருவள்ளுவர் விரும்பினார். ‘பிரிய பெருந்தகை’ என்று திருஞானசம்பந்தரைச் சேக்கிழார் பெருமான் பாராட்டுகிறார். பெருந்தகை என்றால் மிகச் சிறந்த பெரிய மனிதர் என்று பொருள். மருந்து மரத்தை எடுத்துக்காட்டாகக் காட்டும் இக்குறட்பாவில் திருவள்ளுவர் பெருந்தகையான் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

திருவள்ளுவர் காலத்தில் வள்ளல் மனோபாவம் தோன்றி, ஒருவர்க்கு ஒன்று உதவினால் பதவிவேண்டும் - பாராட்டு வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. பாராட்டு உலகத்திற்கும் செல்வ உலகத்திற்கும் மட்டும் தொடர்பிருந்தது. பாராட்டத் தெரியாதவனுக்கும் பேசத் தெரியாதவனுக்கும், அப்பாவிகளுக்கும் ஒன்றும் கிடைக்க வில்லை. இந்த நிலையைப் பார்த்துத்தான் திருவள்ளுவர் 'கொடுப்பது கடமை’ என்று கருதும் புதிய சமுதாயத்தைத் தோற்றுவிக்க விரும்பினார். வள்ளுவர் காலத்தில் கொடுப்பவன் பெரிய மனிதன் என்று பாராட்டப் பெற்றதை நாம் வரலாற்று ரீதியாகப் பார்க்கிறோம். அந்த நிலை மாறவே, கொடுப்பது உன்னுடைய கடமை-உனக்கு வருகிற தீங்கையும் பொறுத்துக் கொண்டு கொடுப்பது பெருந்தகைமை-இந்தப் பெருந்தகைமையை உறுதிப்படுத்திக்கொள்’ என்று வள்ளுவர் கூறுகிறார்.

அடுத்து, திருவள்ளுவர்காலம் பெளத்தம், சமணம், மாயாவாதம் மூன்றும் தலைமயங்கிய காலம். அந்தக் காலத்தில்தான் வாழ்க்கை நிலையில்லாதது-யாக்கை நிலையில்லாதது. பொன் நிலையில்லாதது-பொருள் நிலையில்லாதது என்ற ‘நிலையாமை’த் தத்துவம் அதிகமாகப் பேசப்பெற்றது. இந்தத் தத்துவம் மேலோங்கி நின்றமையாலேயே இடையிலே இந்த நாடு பெரும் அளவிற்கு ஏழைமையில் அமிழ்ந்து போனதைப் பார்க்கிறோம். தீமையைத் தடுத்து நிறுத்துவதற்குச் சக்தியில்லாமல் அவதியுற்றவர்களைப் பார்க்கிறோம். இவ்வாறு எதைப்பார்த் தாலும் நிலையில்லாதது-நிலையில்லாதது என்று சொல்லி மனிதன் உழைக்கும் சக்தியைப் பெருக்குவதையே விட்டு விட்டான். முயற்சி செய்வதையும் விட்டுவிட்டான். எதிலுமே அவனுக்கு ஒரு வறண்ட மனோபாவம் ஏற்பட்டது. எனவேதான் தஞ்சைப் பெருங் கோயிலையும், தில்லை நடராசர் திருக்கோயிலையும் எழுப்பிய பரம்பரை இன்றைக்கு ஓர் ஓராசிரியர் பள்ளியைக் கட்டக்கூட வேறு யாரையாவது எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நமது வரலாற்றில் ஏற்பட்ட வீழ்ச்சியைத் திருவள்ளுவர் மிக நன்றாகப் புரிந்து கொண்டார். ‘இந்த உலகத்தில் நீ இன்பம் பெற வேண்டும் என்றால்-இறைவனின் திருவருளைப் பெறவேண்டும் என்றால் நீ முதலில் இந்த உலகத்தில் வாழக் கற்றுக்கொள்’ என்றார். இந்த உலகத்தில் வாழ்கிற வாழ்க்கை ஒன்றும் பெரிதல்ல-இங்கு எப்படி வாழ்ந்தாலும் மறு உலகத்தில் இடம் பிடித்து விடலாம் என்ற போலி நம்பிக்கை மக்களிடத்தில் மிகுந்திருந்தது. இந்த உலகில், சேற்றைப் பூசிக்கொண்டு வாழ்ந்தால், மறு உலகத்தில் சந்தனப் பூச்சுக் கிடைக்கும் என்று நம்புகிற அளவிற்குத் தத்துவம் பரவிக்கிடந்தது. இந்த உலகில் பட்டினி கிடந்தால் மறு உலகில் தேவாமிர்தம் சாப்பிடலாம் என்ற நம்பிக்கை வளர்ந்து கிடந்தது. இந்தப் போலி உணர்வுகளின் காரணமாக, பரந்துபட்ட சமுதாயம் காலப்போக்கில் கூனிக்குறுகி, அலுத்துச் சலித்து இளைத்து வறுமைத் துன்பத்திற் சிக்கி அவதிப்படுமே என்று கவலைப்பட்டார் திருவள்ளுவர். எனவே, அவர் 'நீ மறு உலகத்திற்குப் போவதைப்பற்றி இப்போது கவலைப்படாதே! நீ இந்த உலகில் வாழ்வாங்கு வாழு; வீட்டின்பத்தை இறைவனே பார்த்து உனக்குக் கொடுப்பான் என்றார். தவறுதலாக இப்பொழுது யாரோ சிலர் குறளுக்கும் குறளைக்கும் வேறுபாடு தெரியாமல் பேசியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது நாம் வருத்தப்படுகிறோம். இவ்வாறு குறளுக்கும் குறளைக்கும் வேறுபாடு தெரியாமல் பேசியவர்கள், அவ்வாறு குறிப்பிட்டதில் ஒரளவு உண்மை இருக்கிறது என்பதை நாம் முற்றிலும் மறுக்கவில்லை. அறம் பொருள் இன்பம் என்ற மூன்று மட்டுமே திருக்குறளில் சொல்லியிருக்கிறது-இறுதி இலட்சியமான ‘புருஷார்த்தம்' என்ற ‘வீடுபேறு’ பற்றித் திருக்குறள் பேசாமையினாலே அந்த நூல் முழுமை பெற்ற நூல் அன்று’ என்று சொன்னார்கள். உண்மைதான். தமிழனின் பாரம்பரியம் கடமை செய்தலைப் பெருமையாகக் கருதியதே தவிர, பலனை எதிர்பார்த்த தில்லை. அது அந்த சாதிக்கே இல்லாத ஒன்று, மேலும், அறமும் பொருளும் இன்பமும் கூடிய நல்வாழ்வு இயைந்து விடுமானால் இறைவனே பார்த்து நமக்குக் கொடுக்க வேண்டிய வீடு பேற்றைக் கொடுப்பான். நம்மிடமுள்ள தகுதி-நம்மிடமுள்ள யோக்கியதை-நம்மிடமுள்ள வாய்ப்பு அனைத்தும் அறத்தோடும் பொருளோடும் இன்பத்தோடும் சேர்ந்த மனித உலகிற்கு நலன் தருகிற செழுமையான வாழ்க்கையை நம்மிடத்து அமைத்து விடுமானால், இறைவன் தானே இறங்கி வந்து வீடுபேற்றை-மோட்சத்தைக் கொடுக்கத் தவறமாட்டான் என்பது தமிழ்ப் பாரம் பரியத்தின் கருத்து. எனவேதான் திருவள்ளுவர் தனியாக வீடுபேற்றைப் பற்றிப் பேசவில்லை. பலனை எதிர்பார்த்துப் பணி செய்வது மாற்றார் கருத்து. ‘ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வை' என்பது வேற்றவர் கொள்கை. நாம் இன்னும் கோயில்களிலே பார்க்கிறோம். தட்சிணை எங்கே என்று கேட்டுக்கொண்ட பிறகுதான் அருச்சனை உலகம் வருகிறது. தட்சினையை மையமாக வைத்து அருச்சனை உலகம் வருவதனாலேதான் சமயம் தனது உள்ளீட்டை இழந்துவிட்டது போலத் தோன்றுகிறது. எந்த உலகம் கணக்கு வழக்குகளைக் கடந்து - தன்னலத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டுமோ அந்த உலகிலேயே தவறு நிகழ்வதைப் பார்க்கிறோம். குட்டை குழப்பப் பெற்றுச் சேறாகிக் கிடப்பதைப் பார்க்கிறோம்.

‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் அறம்' என்பது திருவள்ளுவரின் கருத்து. மனிதன் அறமுடையவனாக-அற உணர்வுடையவனாகிப் பொருளைப் போற்றி இன்பியல் வாழ்க்கை வாழ்ந்தால் இறைவன் வீடுபேற்றைத் தருவான் என்று திருவள்ளுவர் கருதினார். ‘வாழ்க்கை ஒறுத்துச் சாவதற்கே’ என்று இந்நாட்டு மக்களிடையே நிலவிய கருத்தை மாற்றி வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற கருத்தை வலியுறுத்த எண்ணினார். எனவே,

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்."

என்றார்.

அடுத்து, ஊழைப் பற்றித் திருவள்ளுவர் கூறிய கருத்துக்கள் மிக உயர்ந்தன-சிறந்தன. திருவள்ளுவருக்கு முந்திய காலத்துத் தமிழகத்தில், ஊழ் வலியது-மாற்ற முடியாதது என்ற கருத்து வேரூன்றியிருந்தது. இன்றும் ஊழின் வலிமையைப் பற்றிப் பேசுகிற-எழுதுகிற இலக்கியப் பேச்சாளர்கள் - எழுத்தாளர்கள் - பேராசிரியர்கள் - இலக்கிய கர்த்தாக்கள் எல்லோருமே ஊழின் வலிமையைச் சிறப்பித்தே பேசுகிறார்கள். அவர்கள் இதற்குச் சான்றாக கீழ்க்கண்ட புறநானூற்றுப் பாடல் ஒன்றைக் காட்டுவார்கள்.

‘ஒரு பேராறு-அதிலே வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. அந்த வெள்ளத்திலே ஒரு படகு, அந்தப் படகு எங்கே போகும்? வெள்ளம் போகிற போக்கில்தானே போய்ச் சேரும்? இதுதான் அவர்கள் எடுத்துக்காட்டும் உவமை.

சிந்தித்துப் பாருங்கள். படகு உயிரற்றது-அதற்குப் பகுத்தறிவுண்டா? சிந்தனை யுண்டா ? எதுவுண்டு? உயிரும், பகுத்தறிவும், சிந்தனையும் தன்னாற்றலும்-செயல் திறனும் இல்லாத அந்தப் படகு வெள்ளத்தின் போக்கிலே போவது தவிர வேறுவழி என்ன? மனிதனும் அந்தப் படகும் ஒன்றா? மனிதன் உயிரற்றவனா? செயல்திறனற்றவனா? சிந்தனையும் பகுத்தறிவும் இல்லாதவனா? எனவே இந்த உவமையை எங்ஙணம் ஒப்பமுடியும்? அந்தப் படகிலே சிந்தனையும் செயல் திறனும், பகுத்தறிவும் உடைய ஒரு மனிதன் இருந்து படகை இயக்கினால் படகு வெள்ளத்தை எதிர்த்துப் போகுமா? வெள்ளத்தின் போக்கிலேயே போகுமா? எண்ணிப் பாருங்கள். இந்தக் கருத்திலேதான் திருவள்ளுவர், 'கூற்றம் குதித்தலும் கைகூடும்’ என்று குறிப்பிடுகிறார். ஆம், எதிர்நோக்கி வருகிற எமனையும்கூட எதிர்த்து நிற்கமுடியும்.

‘நாளென்செயும்? வினை

தான் என் செயும்?

எனே நாடி வந்த

கோளென் செயும்? கொடுங்

கூற்றென் செயும்?

என்று கேட்டார் அருணகிரியார். மார்க்கண்டேயர் வரலாறு நமக்கு எதையுணர்த்துகிறது? பதினாறாண்டிலே ஒருவன் மரணமடைவான் என்றால்-அதுதான் விதி என்றால் அந்த மரணத்தையும் வெல்ல முடியும் என்பதை யுணர்த்த அந்தக் காலத்துச் சமுதாய அமைப்பிற்கேற்றவாறு-‘பெளராணிக’ முறையிலே தோற்றுவிக்கப் பெற்றது மார்க்கண்டேயர் வரலாறு. ஊழினால் சாகத்தான் வேண்டுமென்றால், அந்த விதியை எப்படி இறைவன் மாற்றினான்? ஆளுக்கு ஏற்றாற் போல் இறைவன் விதியை மாற்றுவானா? அப்படி ஆளுக் கேற்ற வண்ணம் இறைவன் நீதியை மாற்றக் கூடியவனானால் அவனுக்கு, நீதி என்ற பெயர் எப்படிப் பொருந்தும்? ‘நடுவுநிலையாளன்' என்ற பெயர் எப்படிப் பொருந்தும்? 'ஆதியும் நடுவும் அந்தமும் ஆனான்’ என்பது எப்படிப் பொருந்தும்? விதியின் ஆற்றலை-ஊழின் வலிமையை வலியுறுத்த,

"பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று

வல்லதாம் தாய்நாடிக் கோடலைத்-தொல்லைப்

பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த

கிழவனை நாடிக் கொளற்கு.

என்ற ‘நாலடியார்’ பாடலொன்றை எடுத்துக்காட்டுவார்கள். அதுவும் அவர்கள் காட்டும் புறநானூற்றுப் பாடல் போன்றதுதான்.

‘ஒரு பெரிய பசுமந்தை அதற்குள் ஒரு கன்றை அவிழ்த்துவிட்டால் அது போய்த் தன் தாய்ப் பசுவைப் பிடித்துக் கொள்வதுபோல, ஊழும் இந்த மனிதசமுதாயத்தில் தனக்கு உரியதனை வந்து பற்றிக்கொள்ளும்’ என்பது நாலடியார் பாடலின் கருத்து. கன்றுக்குப் பகுத்தறிவும் சிந்தனையும் உண்டா? ஊழின் வலிமையை வலியுறுத்துவதற்கு பகுத்தறிவும் சிந்தனையும், செயலாற்றலும் இல்லாத வற்றையே எடுத்துக் காட்டி வந்திருக்கிறார்கள்.

இனி, ஊழைப் பற்றித் திருவள்ளுவர் கொண்ட கருத்தென்ன? ஊழை அவர் முழுக்க முழுக்க மறுத்தாரா? முற்றிலும் முரண்பட்டாரா? என்றால் இல்லை. ஊழில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. ஆனாலும் மனிதன் அதனை எதிர்த்து எதிர் நீச்சல் போட வேண்டும் என்றார்.

'ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தான்முந் துறும்'

என்கிறார். ஆற்று வெள்ளம் வேகமாகத்தான் போகிறது-மிகக் கடுமையாகத்தான் செல்லுகிறது. மணிக்கு 100 மைல் வேகத்தில்தான் போகிறது. ஆனாலும், படகிலிருந்து துடுப்புப் போடுகிறவன் நல்ல திறமைசாலியாக இருப்பானானால்-ஆற்றலுடையவனாக இருப்பானானால் அவன் ஆற்றின் வேகத்தைத் தடுத்து எதிர் திசையிலேயே செல்ல முடியாதா? ஆற்றின் வேகம் அதிகம் என்றால், அதிலே எதிர்த்துப் போகிறவனின் சக்தி பெரிதில்லையா?

பொதுவாக, மண்ணிலிருந்து விண்ணோக்கிச் செல்லுகிற பொருளெல்லாம் மீண்டும் மண்ணுக்கே இழுத்தெறியப் படும் என்பது ஈர்ப்பாற்றல் விதி ‘ஆகர்ஷண தத்துவம்’ ஆனாலும், மண்ணின் ஈர்ப்பாற்றலைத் தடுத்து நிறுத்தி, மனிதன் விண்ணில் மிதக்கிக் கற்றுக் கொள்ள வில்லையா? வானில் பறக்கவில்லையா? ‘ஈர்ப்பாற்றல்’ ஓர் ஒழுங்குதான்- சக்திதான். ஆனாலும், மனிதன் தன் சக்தி கொண்டு அதனை வெற்றி கண்டு விடுகிறானே! அதுபோல, ஊழ், மனிதனின் நெடுநாளையத் தவறான பழக்கவழக்கங்கள் அவனைத் தவறான பாதைக்கு இழுத்துச் செல்ல முயலும். மனிதனுடைய சிந்தனை-செயற்பாடு முயற்சி ஆகியன ஒழுங்காக இருக்குமானால் நேற்றைப் பழக்க வழக்கங்களை இன்று மாற்றிக் கொண்டு விடுவான். ஊழ் என்பதென்ன? நேற்றைக்கு முந்தின செயலின் விளைவு நெடுநாளைக்கு முந்தின காரியத்தின் விளைவு, சிந்தனைத் திறனும் செயலாற்றலும் இருக்கும்ானால், அவ்வினையின் விளைவை-புதிய சிந்தனை-செயல்களின் மூலம் மாற்றிக் கொள்ளமுடியும். ஊழினால் வருகிற உணர்வை-ஊழினால் வருகிற பழக்கத்தை மனிதன் மாற்றிக் கொள்ள முடியும். எனவே, ஊழை எண்ணிக் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டிருந்து அழிந்து போகாதே என்று திருவள்ளுவர் பேசுகிறார்.

ஊழிற் பெருவலி யாவுள? மற்றொன்று

சூழினும் தான்முந் துறும்

என்னும் ஒரு குறட்பா ஊழ் என்ற அதிகாரத்தில் வருகிறது. இதில் வருகிற ‘முந்துறும்’ என்ற சொல்லை ஆராய்ந்தால் அதில் ஒர் உறுதிப்பாடு-திண்மை ஒலிக்கவில்லை. ‘முன்வந்து நிற்கும்’ என்று தான் கூறுகிறார். ஆனால் முயற்சியைப் பற்றிச்

தி.11. சொல்லும்போது அப்படி யல்ல. மனிதன் என்ன முயற்சி பண்ணினாலும் ஊழ் முன்வந்து நிற்கும். ஆனால், முயற்சியால் அதனை வென்று விடலாம் என்கிறார்.

"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழா துளுற்று பவர்"

"தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய் வருந்தக் கூலிதரும்"

என்று முயற்சியின் வலிமையை-முயற்சியால் ஊழை வெற்றி காண முடியும் என்ற உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்துகிறார். அப்படியானால் 'ஊழிற் பெருவலியாவுள?' என்று வள்ளுவர் ஏன் குறிப்பிட வேண்டும் என்று கேட்கலாம். 'ஊழை நீ அழித் தொழிக்க வேண்டுமானால் உன்னுடைய ஆற்றல் மிகப் பெரிதாக இருக்க வேண்டும்’ என்ற உணர்வை எழுப்புவதற்காகத்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மாற்றான் படையைப் பெருமைப்படுத்திக் கூறினால் அது தன் படையை இழித்துக் குறைத்துக் கூறியதாக ஆகாது. தன்படை வீரர்கள் திறமையாகப் போர் புரியவேண்டும் என்பதற்காக மாற்றான் படையினைப் பெருமைப்படுத்தித் தன் படை வீரர்களுக்குக் கூறியனுப்புவது இயல்பு-மரபு. அதுபோல, ‘ஊழிற் பெருவலி யாவுள?' என்று திருவள்ளுவர் கேட்டது ஊழைப் பெரிது படுத்துவதற்காக அல்ல-நீ எதிரியை-மாற்றானை ஆற்றலற்றவன்-பலவீனன் என்று கருதிப் போய் தோற்றுவிடாதே-என்று உணர்த்துவதற்காகத் தான். ‘ஊழ் பெருவலிவுடையதாக இருக்கலாம்-அது முன்வந்து நிற்கும்-ஆனாலும், உன் முயற்சி, நாணயம், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றால் நீ அதை வெற்றி பெற முடியும் என்று அவர் மனித சமுதாயத்திற்கு நம்பிக்கை யூட்டுகிறார். வள்ளுவர் காலத்தில், மக்களிடையே அதிகப்படியான ஊழ் நம்பிக்கை பரவிக்கிடந்தது. மனிதன் ஏழையாகப் போவதற்கு ஊழ் காரணம்-மனிதன் கெட்டவனாகப் போவதற்கு ஊழ்காரணம்-மனிதன் கொலைகாரனாகப் போவதற்கும் ஊழ்தான் காரணம்! இப்படிச் சமுதாயத்தில் யார் எந்தக் கொடுமையை-தீமையைச் செய்தாலும் ஊழைக் காரணமாகக் காட்டிவிட்டுத் தப்பித்துக் கொள்ளலாம் போலத் தோன்றியது. இப்படியே கொலைகாரர்களும் தப்பித்துக் கொள்ள ஊழைக் காரணமாகக் காட்டிய காலத்தில் திருவள்ளுவர் ஊழைப் பெரிது படுத்துவது போலத் தோற்றத்திற்குக் காட்டினாரேயொழிய உண்மையிலேயே அவர் ஊழைப் பெரிது படுத்தவில்லை. மனிதனுடைய அறிவு-சிந்தனை-முயற்சி ஆகியவற்றைப் பெரிதுபடுத்தவே அவர் நூல் செய்தார். அதனால்தான் இந்தச் சமுதாயம் அழிந்து படாமல் இந்த அளவிற்காவது வாழ முடிந்தது. இன்று ஓரளவு மனித முயற்சிகள் தோன்றி வளர்ந்திருப்பதற்குக் காரணம் வள்ளுவர் இட்ட வித்து. வள்ளுவர் இந்த வித்தை இட்டிருக்காவிட்டால், மனிதன் தன்னுடைய சிந்தனை-அறிவு-முயற்சி நடவடிக்கைகள் அத்தனையையும் பற்றிக் கவலைப்படாமல், ஊழின்மீது சுமையைப் போட்டு விட்டுக் கையைக் கட்டிக் கொண்டிருந்து முழுச் சோம்பேறியாகப் போயிருப்பான். இந்த நிலையை நாம் எண்ணிப் பார்க்கிறபொழுது தான் அந்தக் காலத்தில் வரலாற்றில் ஏற்பட்டிருந்த தளர்ச்சியைப் பார்த்துச் சமுதாயம் அழிந்து படுமே என்றஞ்சி, சமுதாயத்திற்குச் சிந்தனை தேவை - செயல் தேவை - முயற்சி தேவை என்பதையுணர்ந்து அவற்றைக் கொடுப்பதற்கே திருவள்ளுவர் திருக்குறளைச் செய்தார் என்று நமக்குத் தோன்றுகிறது.

திருவள்ளுவர் காலத்தில் இன்னொரு பெருங்குறை நிலவியது. சமுதாயத்தில் சாதிப் பிரிவுகளும், வேற்றுமை யுணர்வுகளும் பெருகிக்கிடந்ததைவிட நாட்டுக்கு நாடு வேற்றுமை பெருகிக் காணப்பட்டது. வீட்டுக்குள் வேற்றுமையுணர்விருந்தாலும், நாட்டுக்குள் வேற்றுமையுணர் விருந்தாலும், அது தவறுதான். எனக்கு என்னுடைய மொழி பெரிதுதான். ஆனாலும் என்னுடைய மொழிப்பற்று மனித குலத்திற்குப் பகையாகப் போகுமானால் அதை அனுமதிக்க முடியுமா? என்னுடைய சமயம் எனக்குப் பெரிதுதான். அந்த உணர்வு தேவையானதுதான். ஆனாலும், என்னுடைய சமயப்பற்று மனித குலத்திற்குப் பகையாக மாறிவிடக்கூடாது. என்னுடைய நாடு எனக்குப் பெரிதுதான். ஆனாலும் என்னுடைய நாட்டுப்பற்று, இன்னொரு நாட்டோடு போய் மோதுவதை அனுமதிக்கலாமா? ஒரு மனிதன் இன்னொரு மனிதனை ஆக்கிரமிப்பது-ஒருவன் இன்னொருவனோடு மோதுவது ஒழுக்கத்திற்கு அப்பாற்பட்டது.

பொதுவாக, சேரநாட்டில் பிறந்தவன் சேரநாட்டின் பெருமையைத்தான் சிறப்பித்துப் பேசுவான்-பாண்டிய நாட்டில் பிறந்தவன் பாண்டிய நாட்டின் பெருமையைத்தான் சிறப்பித்துப் பேசுவான்-சோழநாட்டில் பிறந்தவன் சோழ நாட்டின் பெருமையைத்தான் சிறப்பித்துப் பேசுவான். இந்தக் கூனிக்குறுகிய-தரித்திர புத்தியைத் திருவள்ளுவர் பார்த்தார். இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்று விரும்பினார். எனவே, அவர் தமது திருக்குறளில் உலகம், உலகம், உலகம் என்றே முழங்குகிறார் இன்றைக்கு இருப்பதைப்போல வானொலியும் தொலைபேசியும் இல்லாத காலத்தில் இவ்வளவு அதிகமாக உலகத்தைப்பற்றித் திருவள்ளுவர் பேசியதையும், உலகக் கண்ணோட்டத்தோடு பாடியதையும் நாம் பார்க்கிறோம். கள்ளுண்ணாமை, புலாலுண்ணாமை ஆகியவற்றை ஒழுக்கமென வலியுறுத்தும் வள்ளுவர் அந்த ஒழுக்கங்களையெல்லாம் நீ போற்றாவிட்டாலும் பரவாயில்லை-உலகத்தோடு ஒட்ட ஒழுகல் சிறந்த-பெரிய ஒழுக்கம், அந்தப் பெரிய ஒழுக்கத்தை நீ காப்பாற்று என்கிறார்.

நாம் பல்வேறு நாட்டினரைப் பார்க்கிறோம். அவர்களிடத்து அவர்களுடைய நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிகுந்திருப்பதைப் பார்க்கிறோம். சமயப்பற்றும், இன உணர்ச்சியும் மிகுந்திருப்பதைப் பார்க்கிறோம். எனினும், திருவள்ளுவர் எந்த இனத்தைச் சார்ந்தவர்-எந்த நாட்டைச் சார்ந்தவர்-எந்த மொழியைச் சார்ந்தவர்-எந்தச் சமயத்தைச் சார்ந்தவர் என்று இனம் தெரிந்துகொள்ள இயலாத வண்ணம் திருக்குறளைச் செய்திருக்கிறார். இவ்வாறு உலகக் குடிமகனாத் திகழுதற்குரிய ஒரு நூலைச் செய்த பெருமை திருவள்ளுவருக்கே உண்டு. .

'உன்னுடைய சமயத்தை நீ கால்கொள்ளுகிற இடமாகப் பயன்படுத்திக்கொள்-எனினும், உன்னுடைய அறிவும் ஒழுக்கமும், சிந்தனையும், இதயமும் உன்னுடைய பழைய பழக்க வழக்கமும் உலகத்தைத் தழுவட்டும்’ என்று கூறுவதுபோல உலகத்தோடு ஒட்ட ஒழுகல் சிறந்த கல்வி என்கிறார். எவ்வதுறைவது உலகம் அவ்வதுறைவது அறிவு. உலகம் எங்கே தங்குகிறதோ அங்கே நீ தங்குவது அறிவு என்கிறார். இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதைச் சொன்னார். ‘சாதிகளில்-சமயச் சந்தடிகளில் மதிமயங்கிய நாடு. உலகை நோக்கிப் போகாமல் ஒதுங்கிப் போய்விட்டது. நீ ஒதுங்கி விடாதே! உலகம் தழுவிய வாழ்க்கை வாழு’ என்று கூறிய அந்தப் பெருமகனாரின் வானார்ந்த நெறியை நாம் பார்க்க வேண்டும். கவிஞர்கள் தாம் பிறந்த நாட்டையும் பேசும் மொழியையும், தமது நாட்டு மக்களையும், தங்கள் நாட்டு மன்னர்களையுமே பாடிவந்த நிலையில் திருவள்ளுவர் அந்தக் கவிஞர் உலகத்திற்கு ஒரு பேரிடியாகவே வந்தார். நாட்டை, மொழியை, சமயத்தை மறந்து ‘மனிதாபிமானம்' என்ற ஒன்றை மட்டும் கருவியாக வைத்துக்கொண்டு உலகம் முழுவதுக்குமாக ஒரு நூல் செய்தார்.

திருவள்ளுவருக்குச் சமய நம்பிக்கை கிடையாதா? உண்டு ஆனாலும், அவர் எந்தக் கடவுளைக் கும்பிட்டார் என்று கண்டுபிடிக்க முடியாது. அவர் எந்தக் கடவுளையாவது பாராட்டிப் பேசியிருப்பாரானால் மதக்காழ்ப்பும், மதச் சண்டையும் வந்திருக்கும். ‘நீ எல்லாவற்றிற்கும் அப்பால் இருக்கிற கடவுளை வாழ்த்து’ என்றுதான் திருவள்ளுவர் பேசுகிறார். திருவள்ளுவர் காலத்திற்கு முந்தியும் பிந்தியும் எவ்வளவு சமயச் சண்டைகள்! எவ்வளவு சமயக்காழ்ப்புக்கள்! சமயத்தை-சமய நெறியைக் கடைப்பிடித்தொழுகாதவன் கூட சமயத்தின் பேரால் சண்டைபோடுகிற காலம்! அத்தகைய 'சமயவாதி’யே சமயத்திற்காகப் பரிந்து பேசிப் போராடவும் வந்தான்! காரணம், அன்று அது அவனுக்குத் தொழிலாக இருந்தது. இந்த நிலையைத் திருவள்ளுவர் தெளிவாகப் புரிந்துகொண்டார். எனவே, உலகப்பொதுச் சமயத்தை நோக்கியே அவர் பேசினார்.

திருவள்ளுவப் பெருந்தகை, ‘அறக்கடவுள்’ என்று குறித்தாரே தவிர, சிவனென்றோ, திருமால் என்றோ, முருகன் என்றோ, சக்தி என்றோ பிரித்துச் சொல்லவில்லை. காரணம், மனிதகுல ஒருமைப்பாடே திருவள்ளுவருக்கு இலட்சியமாக இருந்தது. அந்த இலட்சிய உலகை நாம் நோக்கிப் பார்க்கிறபோதுதான், மிகச் சிறந்த உலகப் பொதுச் சமுதாயத்தை-உலக மனித சமுதாயத்தைக் கண்டு பிடிப்பதற் காகத் திருவள்ளுவர் அரிதின் முயன்று இந்நூலைச் செய்தார் என்ற உண்மை நமக்குப் புலப்படுகிறது. அவர் அரிதின் முயன்று அந்நூலைச் செய்த பிறகும்கூட, நமது நாட்டில் சாதி, இன, சமய, மொழி வேறுபாடுகளைப் பெரிதுபடக் காட்டி நாம் சண்டையிட்டுக் கொண்டுதான் வாழ்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கும்போது பெரிதும் வேதனையாக இருக்கிறது. நம்முடையதிலே நமக்குப் பற்றிருக்க வேண்டும் -ஆனால் மற்றவர்களுடையதிலே வெறுப்பு இருக்கக்கூடாது. இந்த பொது ஒழுக்கத்தை நாம் வள்ளுவர் வாயிலாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

இனி, அரசியலைப் பற்றி திருவள்ளுவர் என்ன கருதினார்-வள்ளுவரின் அரசியல் சித்தாந்தங்கள் என்ன என்பதையும் நாம் சிறிது காணலாம்.

திருவள்ளுவருக்கு முன்பிருந்த அரசியல் யுகத்தில் அவருக்கு அவ்வளவு பிடிப்பில்லை. அவர் ஒரு புதிய அரசியல் சித்தாந்தத்தை நாட்டுக்குக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய நமது இலக்கியங்களைப் பார்த்தால், ‘மன்னன் உயிர்த்தே மலர் தலையுலகம்' என்ற கொள்கைதான் நிலவியது. கோடானுகோடி மக்கள் வாழ்ந்து வளரும் உலகம் இது, ஆனால், அதற்கு ஒரேயொரு உயிர்-ஒரேயொரு ஆன்மா, அரசன்தான்! நாம் உடுப்பதுவும், உண்பதுவும், பூசுவதும் உடம்புக்காகவா? உடம்பிலிருந்து உயிர் பிரிந்தபிறகு இந்த உடம்பிற்குப் பூசுவதும், மற்றவையும் ஏதோ உபசாரத்திற்காகவேயன்றி வேறெதற்கு? அப்படியானால், உயிர் பெரிதா? உடல் பெரிதா? உயிர்தானே? அந்த உயிர் பிரிந்தபிறகு பூசுவதும் பிறவும் செய்கிறோம் என்றால் கடைசிக்காலத்தில் ஏதோ உபசாரத்திற்காகச் செய்கிறோம். அவ்வளவுதான்! திருவள்ளுவருக்கு முந்திய யுகம், 'மக்களெல்லாம் உடம்பு-மன்னன் உயிர்’ என்று சொன்னது. மன்னன் என்ற உயிர், நலன் பெறத்தான் மக்கள் வாழுகிறார்கள் என்ற அரசியல் தத்துவம் நிலவியது! மன்னனைப் பார்த்தால் மகேஸ்வரனைப் பார்த்தது போலக் கருதினார்கள். இந்த நிலையைத் திருவள்ளுவர் பார்த்தார்.

அரசனின் ஆதிக்கத்தைத் தடுத்துக் கேட்கக் கூடாது என்று ஐரோப்பிய நாட்டிலே ஒரு சித்தாந்தம் வளர்ந்து வந்திருக்கிறது-ஆம். அரசன் தவறு செய்யமாட்டான் என்ற ஒரு நம்பிக்கை. எனவே, ‘அரசனின் உரிமை தெய்வீக உரிமை. அதை யாரும் தட்டிக் கேட்கக் கூடாது' என்பன போன்ற கருத்துக்கள் பரவியிருந்த உலகில், ‘அரசன் குடி தழீஇக் கோலோச்ச வேண்டும்’ என்று வலியுறுத்திக் கூறியவர் திருவள்ளுவர்தான். ‘மன்னவனே! நீ குடிகளைத் தழுவிக் கோலோச்சத் தெரிந்துகொள்! நீ பிறப்புரிமை உடையவனல்லன்! இந்த அரசுரிமை உனக்குத் தெய்வத்தால் வந்தது என்று நீ நினைத்து விடாதே! மக்களால் உனக்கு வழங்கப் பெறுவது! எனவே, நீ குடிகளைத் தழுவி வாழ்க்கை நடத்த வேண்டும்’ என்ற அரசியல் சித்தாந்தத்தை - மாற்றத்தை உலகில் ‘ஜனநாயகம்’ பிறப்பதற்கு முன்னால் - மக்களாட்சிக்கொள்கை மலர்வதற்கு முன்னால் சொன்ன பெருமை திருவள்ளுவருக்கு உண்டு. அது மட்டுமா? அப்படி நீ குடிதழீஇக் கோலோச்ச வில்லையானால், 'கூழும் குடியும் ஒருங்கிழப்பாய்! நாட்டையும் இழப்பாய்! என்றார். நீ இழந்துவிடுவாய் என்பதுகூடப் பொருளல்ல-நீ குடிதழீஇக் கோலோச்சவில்லையானால், குடிமக்கள் உன்னைப் பதவியிலிருந்து இறக்கிவிடுவார்கள்’ என்ற கருத்துப்பட எச்சரிக்கையும் விடுக்கிறார். திருவள்ளுவருக்கு முன்பு இப்படி ஒரு பாடல் உண்டா? ஒரு பாடல் உண்டு. 'அரசன் தவறு செய்துவிட்டால் புலவர்கள் அவனைப் பாடமாட்டார்கள்’ அதுதான் பெரிய தண்டனை.

'கூழும் குடியும் ஒருங்கிழப்பாய்’ என்று திருவள்ளுவர் மிக அடக்கமாகப் பேசுகிறார். ‘ஒருங்கிழந்து விடுவாய்’ என்பதைச் சற்று ஆத்திர ரீதியான வார்த்தைகளில் போட்டால், ‘மன்னவனே நீ மக்களைத் தழுவி ஆட்சி நடத்த வில்லையானால் உன்னை இறக்கிவிடுவோம்’ என்றாகும். இந்நிகழ்ச்சி இங்கிலாந்து நாட்டு வரலாற்றில் ஏற்பட வில்லையா? மன்னவனை அரசு கட்டிலிலிருந்து இறக்கிவிட வில்லையா? அவன் தானாகவே இறங்கிக் கொல்லைப்புற, வழியாக ஓடிவிடவில்லையா; இதற்கெல்லாம் கால்கோள் செய்வதுபோல வள்ளுவர் பேசியிருக்கிறார். திருவள்ளுவருக்கு முன்பு, அரசனுக்கு அறநெறி சொன்னவர்கள்-நீதி சொன்னவர்கள் நிறையப் பேர் உண்டு. ஆனாலும்கூட இப்படி இடித்துக் கூறியவர்களைக் காணமுடியாது. ‘இப்படி செய்தால் நல்லது-உன் அரசு வாழும்-உனக்குப் புகழ் இருக்கும்’ என்று ஒரு மாதிரியாக-நாகரிகமாகப் பேசியிருக்கிறார்கள். நம் நாட்டின் நீண்டகால பாரம்பரியத்தாலேயே அவர்களெல்லாம் அப்படிப் பேசியிருக்கிறார்கள். ‘அரசனை இடித்துக் கேட்கிற அமைச்சன் வேண்டும்.’

இடிப்பாரை இல்லா ஏமறா மன்னன்

கெடுப்பார் இலானுங் கெடும்.

என்ற முறையில் வள்ளுவர்தான் பேசியிருக்கிறார். வரலாற்றில் மன்னனின் எதேச்சாதிகாரம் பெருகி, அரசன் எண்ணியபடியெல்லாம் செய்கின்ற தன்மை வளர்ந்தது. அப்போதுதான், ‘மன்னவா! இடித்துச் சொல்லும் அமைச்சனை அருகில் வைத்துக்கொள். ஒத்தூதுகிற ஆட்களாகப் பார்த்துப் பக்கத்தில் வைத்துக்கொள்ளாதே’ என்று சொல்லுவதுபோலப் பேசுகிறார். அதுமட்டுமா? உனக்குச் சாதகமாகப் பேசுகிறவன்தான் உனது நண்பன் என்று எண்ணி ஏமாந்து விடாதே என்றும் எச்சரிக்கிறார். இடித்துச் சொல்லுகிற அமைச்சனையும் ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மை உன்னிடம் அதிகரித்திருக்குமானால், உன் அரசு நெடுநாள் வாழும் என்று உணர்த்துகிறார்.

திருவள்ளுவருடைய காலத்தில்-சமுதாயத்தில் பல வேறுவிதமான தரக் குறைவுகளும் தகுதிக் குறைவுகளும் நிறைந்திருக்கின்றன. திருவள்ளுவர், சென்றகாலப் பழக்க வழக்கங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை நீக்கி, நிறைவு படுத்துவதற்குரிய முயற்சியில் ஈடுபட்டு ஒரு மாபெரும் கருத்துப் புரட்சியையே தோற்றினார். சிந்தனைப் புரட்சியைத் தோற்றுவித்து குறையுடையதாக இருந்த சமுதாயத்தை நிறையுடையதாக ஆக்க முயன்ற ஒரு சிறந்த எழுத்தாளர் திருவள்ளுவர். அவர் ஒரு சிறந்த கவிஞர். ஒப்புயர்வற்ற வரலாற்றுச் சிற்பி. அந்தப் பெருமகனாரின் நூல் வெறும் இலக்கியப் புலமைச் செறிவோடு மட்டும் தோன்றியதன்று. அது மனிதனின் உணர்ச்சிகளுக்கும் ஆசைகளுக்கும் இரையாக இல்லாமல் வெறும் பொழுதுபோக்குக்குப் பயன்படும் நூலாக இல்லாமல், சமுதாயத்தின் அடி மனத்தைத் தொட்டுச் செழுமைப் படுத்தக்கூடிய ஒரு பெரு நூலாகத் திகழ்கிறது.

வரலாற்றுப் போக்கில் நாம் வள்ளுவத்தைப் பார்க்கிறபோது, அரசியல் துறையில்-சமுதாயத் துறையில்-அறிவுத்துறையில் ஏற்பட்டிருக்கிற குறைகளை நீக்கி, நிறைசெய்யத் தோன்றிய நூலாகவே தோன்றும். சமுதாயத்தில் நிலவும் குறைகளைக் களைந்து நிறைவுடைய வாழ்வு வாழ்வதே திருவள்ளுவருக்கு நாம் செய்கிற கைம்மாறு, நாம் செய்யத்தக்க கடமையுங்கூட.

2. குறள் வாழ்வு

தமிழகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றி இன்றும் வழக்கில் உள்ளது-போற்றிப் பாராட்டப் பெறுகிறது என்பது திருக்குறளுக்குரிய சிறப்பாகும். இந்நூல் உண்மையிலேயே சிறப்புடையதா? அல்லது, காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு என்ற பழமொழியின்படி நாம் அதைச் சிறப்பிக்கிறோமா என்பதை ஆராய வேண்டும்.

திருக்குறளின் கருத்து காலஎல்லைக்கு உட்பட்டதல்ல. காலங்கடந்த தத்துவங்களையுடையது அந்நூல். திருக்குறள் சாதி, இன, மொழி, நாடு வரையறைகளைக் கடந்து உலகம் தழீஇய பொதுநூல். அது மனித குலத்தின் நீதி நூல்.

வள்ளுவத்தில் அதிசயங்கள் அற்புதங்கள் கிடையாது. அன்று வள்ளுவர் சொன்னதை நாம் இன்று கையாள முடியவில்லையென்றால், அது நூலின் பிழையன்று; நாம் மனித தன்மையிலிருந்து-மனிதப் பண்பிலிருந்து நெடுந்தூரம் விலகிச் சென்றிருப்பதே காரணமாகும். கல்விக்கும் வாழ்க்கைக்கும் இன்றுள்ள உறவு அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் உள்ள உறவைப்போல் இருக்கிறது. நமது வாழ்க்கைப் போக்கில் வள்ளுவத்தின் நிழல் படியவில்லை. மனிதர்களின் வாழ்க்கையை அகத்தாலும் புறத்தாலும் வளப்படுத்துவதே கல்வி. சராசரி மனிதனால் நடை பயிலக்கூடிய அறநெறியையே கூறினார் அவர். வாழ்க்கை முறை பற்றிச் சமுதாயத்தின் சாதாரணப் படியில் உள்ள சராசரி மனிதனுக்குச் சொல்ல விரும்பியே அளவில் சுருக்கமாக-தனித்தனியே-உரிய முறையில் கூறினார்.

வாழ்க்கையின் பல்வேறு அனுபவங்களையும் அவர் பேசுகின்றார். அனைத்தும் அனுபவித்த ஒருவர் கூறுவது போலவே பேசுகின்றார். திருக்குறளே அனுபவ விளக்கமாகக் காட்சியளிக்கிறது. திருவள்ளுவர் சமுதாயத்தின் பல்வேறிடங்கட்கும் சென்று பல்வேறு தரப்பினரையும் பார்த்து, நாட்டில் பலர் பேசிய-வழக்கில் இருந்த பல்வேறு செய்திகளையும் கருத்துக்களையும்கூட நினைவில் வைத்துக்கொண்டு நூல் செய்திருக்கிறார். மிகச் சிறந்த பொற்கொல்லர் போல, வள்ளுவர் சொற்களுக்கு மெருகேற்றி யிருக்கிறார். அவர் ஒரு கைவந்த சொல்தச்சராகவே விளங்குகிறார்.

இன்று, அள்ளித் தெளித்த தெல்லாம் கோலம் என்பது போல பலர் வாழ்க்கை நடத்துகின்றனர். வரலாற்றைப் படிப்பதிலே நாம் அவ்வளவு அக்கறை காட்டவேண்டிய தில்லை. நாம் ஒரு புதிய வரலாற்றை உருவாக்க முயற்சிக்க வேண்டும். நமக்கு முன் வாழ்ந்தவர்கள் செய்த தவறுகளை நாமும் செய்து வீழ்ச்சியடையக் கூடாது.

தொடக்கத்தில் மனிதன் கண்களால்தான் பேசியிருக்கிறான். உள் உணர்வுகளுக்குத் தக்கபடி கண் ஆடும். மனிதன் கண்களைக் கட்டுப்படுத்தி வாழ முடியாது. இதனால்தான், இறைத் தோற்றத்தில்கூட அப்பரடிகள் முதன் முதலில் குனித்த புருவத்தைப் பற்றிப் பேசுகிறார்.

வள்ளுவர் காலத்தில் நம் மக்களிற் பலர் எண்ண-சிந்திக்க விரும்பாமலேயே வாழ்ந்தார்கள். எனவே வள்ளுவர் எண்ண வேண்டும்-சிந்திக்க வேண்டும் என்று வற்புறுத்தினார், எண்ணிச் சிந்தித்துச் செயற்படுவதன் மூலமே உலகத்தை வெற்றி பெறமுடியும்.

புறத்துறையில் புரட்சி செய்தவர்கள் ஏராளம்; ஆனால் அகப்புரட்சி செய்தவர்கள் மிகச் சிலரேயாவர். அந்த அகப்புரட்சியும்கூட ஆற்றொழுக்காக இல்லாமல் இடையிடையே தடைப்பட்டுத் தளர்வுற்று வந்திருக்கிறது. மனிதன் அகவளர்ச்சியில் தேய்ந்து கொண்டே வந்திருக்கிறான். மனிதன் வாழத்தானே புதிய புதிய சாதனங்கள் எல்லாம் என்பதை, அவன் எண்ணிப் பார்க்கக்கூட மறந்து விட்டான்.

குடிப்பிறப்புச் சிறப்பு மனிதனுக்கு இன்றியமையாதது. திருவள்ளுவர், அப்பரடிகள் ஆகியோரின் குடிப்பிறப்பு சிறப்பு இன்று நம்மிடம் இருக்கிறதா?

'நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்

குலத்தின்கண் ஐயப் படும்'

என்று, வீட்டுக்குள்ளே அடங்கிக் கிடப்பவனைப் பார்த்து குடும்ப வாழ்க்கையில் செழுமை யில்லாதிருப்பவனைப் பார்த்துப் பேசினார்.

'உலகத்தோடு ஒத்து வாழு; ஒதுங்கி வாழாதே’ என்று பேசுகிறார் திருவள்ளுவர். நீ சென்று குடியேறிய நாட்டை உன் நாடாக எண்ணிப் போற்று; அதனை உன் நாடாக ஆக்கிக்கொள். அதற்கு அந்நாட்டு மொழிகளையெல்லாம் கற்றுக்கொள் என்கிறார். உலகத்தை உன்னிடத்தே இழுக்க முயற்சிக்காதே; உலகம் தங்கும் இடத்தில் நீ தங்கிவிடு' என்கிறார். வள்ளுவம் அருமையானதொரு வாழ்க்கை இலக்கியம்.

இன்று உலகச் சந்தையில் அந்நியர் கருத்துக்கள் வந்து மலிந்து கிடக்கின்றன. அவற்றின் தோற்றத்தையோ, கவர்ச்சியையோ கண்டு ஏமாறாமல், மெய்ப் பொருளைக் கண்டு பயன்பெற வேண்டும்.

‘எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு'

'எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பெருள் காண்ப தறிவு'

என்றும் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்.

இலட்சம் செங்கல் கொட்டிக்கிடந்தாலும் அது கட்டிடமாவதில்லை. அவற்றை அடுக்கிச் சந்து பதிந்துதான் சுவரை எழுப்ப வேண்டும். உடைந்த செங்கலையும் முழுச் செங்கலையும் இணைத்து இடைவெளி ஏற்பட்ட இடத்தில் முழுச் செங்கலையும் கூட உடைத்துப் போட்டுச் சந்து நிரப்புவது போல, மனிதனும் தனது சொந்த மதிப்பையும் சுகத்தையும் குறைத்துக் கொண்டாவது சமுதாயச் சுவரை எழுப்ப முற்படவேண்டும். உடைந்த செங்கலையும் முழுச் செங்கலையும் இணைத்துச் சுவரை எழுப்புபவர் கொத்தனார்; சமுதாயத்தில் உள்ள வலிமையுடையவனையும் வலிமையற்றவனையும் இணைத்து ஒருசேர அழைத்துச் செல்லுபவரே சமுதாயத் தலைவராவார்.

சோஷியல் (Social) என்ற ஆங்கிலப் பதமே விருப்பு வெறுப்புக்களைக் கடந்து உள்ளம் ஒன்றிப் பழகும் பண்பைக் குறிப்பது. இதைத்தான் திருவள்ளுவர் ‘ஒப்புரவு' என்று குறிப்பிடுகிறார். மற்றவர்களோடு சேர்ந்து பழகும்போது அப்படிச் சேர்ந்து பழகுவதனால் ஏதேனும் கேடுகள் விளையுமானால் அவற்றையும் பொறுமையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். ‘ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்’ என்கிறார் வள்ளுவர். ஒத்தது அறிதல் என்பதற்குப் பொருள், மற்றவர்களுக்கும் ஒத்ததறிந்து என்பதேயாகும். அப்படி மற்றவர்க்கும் ஒத்ததறிந்து வாழ்பவனே உயிர் வாழ்பவன்.

பழகிய நண்பரிடத்துக் குற்றம் கண்டவிடத்தும் பொறுத்துக்கொள் என்கிறார் திருவள்ளுவர். மனிதனையும் மாமனிதனையும் இணைத்துச் சமுதாயக் கட்டிடத்தை எழுப்ப இந்தப் பொறுமைப் பண்பு இன்றியமையாதது.

சமயம், கடவுள் நம்பிக்கை ஆகியவற்றில் மிக தெளிவான கருத்துடையவர் திருவள்ளுவர். வீடுபற்றி அவர் பேசிய அளவிற்கு வேறு யாரும் பேசியதில்லை.

'புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்

துச்சில் இருந்த உயிர்க்கு.

என்ற குறட்பாவின்மூலம் திருவள்ளுவர் வீடுபேற்றின் மேன்மையை விளக்கி யிருக்கிறார்.

நாகரிகம் என்பதற்கே புதியதொரு விளக்கம் தந்தவர் திருவள்ளுவர். நண்பர். ஒருவர் நஞ்சு கலந்த பாலைக் கொடுத்தாலும் அதை வாங்கிக் குடித்து விடு-நஞ்சு கலந்தது என்று நினைக்காமல் குடித்துவிடு என்று கூறுகிறார். நஞ்சு கலந்தது என்று நாம் நினைத்தால் நமது முகத்தில் மரணக்குறி படரும்; நஞ்சு கலந்தது என்பதை நாம் அறிந்து கொண்டோம் என்பதை அந்த நஞ்சு வைத்த நண்பர் உணர்ந்தால் அவர் வருந்துவார். அந்த வருத்தத்தைக் கூட அவருக்குக் கொடுக்கக்கூடாது என்கிறார். நஞ்சு என்று நினைக்காமல் குடித்தால் அது நம்மைக் கொன்றுவிடாது. நஞ்சையும் மாற்றும் வல்லமை தூய செங்குருதிக்கு உண்டு. சாக்கிரடீசுக்கு நஞ்சு கொடுத்தார்கள். அவர் நஞ்சு என்று தெரிந்து-நஞ்சைச் சாப்பிடுகிறோம் என்று அறிந்து அதைச் சாப்பிட்டார்; செத்துப் போனார். அப்பரடிகளுக்கும் நஞ்சு கொடுக்கப்பட்டது. அந்த நஞ்சை அப்பரடிகள் உண்டும் சாகவில்லை. 'பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்'

என்று நயத்தக்க நாகரிகம் பேசிய வள்ளுவர் பிறந்த நாடு அன்றோ நமது நாடு? குறள்வழி, நஞ்சினையுண்டும் வாழ்ந்தார் நமது ஞானத் தலைவர் அப்பரடிகள்.

மனிதன் ஒரு சொரிசிறங்கு பிடித்தவன்போல; அரிப்பு ஏற்பட்டபோது சொரிந்து கொள்வான்; சொரியும்போது சுகமாக இருக்கும். பின்னர் எரிச்சல் ஏற்படும்; அவ்வாறு எரிவெடுத்ததும் இனிமேல் சொரியக்கூடாது என்று தனக்குள் எண்ணிக்கொள்வான். பின்னர் ஊரல் ஏற்படும்போது அதை மறந்து சொரிய ஆரம்பித்து விடுவான். அதுபோலவே பலர் அன்பு, அருள் என்று படிக்கும்போது அன்பும் அருளும் காக்க வேண்டும் என்று எண்ணிக்கொள்வார்கள்; அடுத்த நேரமே அவற்றை மறந்துவிடுவார்கள். இத்தகைய பண்பு, வாழும் மனித சமுதாயத்திற்கு நல்லதல்ல. நாம் கற்க வேண்டும்; கற்றநெறியில் நிற்க வேண்டும். வாழ்க்கையில் வழுக்கலும், இழுக்கலும் ஏற்படும்போது ஊன்றுகோல் போல நின்று உதவுவது திருக்குறள். வீட்டிலும், நாட்டிலும் குறள் மணம் கமழ வேண்டும்; குறள் வாழ்வு மிளிர வேண்டும்.

3. வாழ்வியற் கவிஞர்

நூறுமைல் தொலைவைக் கடந்து செல்ல, ஒவ்வோரங் குலத்தையும் கடந்து செல்வது போல, மனிதனின் உள்ளுணர்ச்சிகள் வளர வளர அவன் தனது சிறு குறை நிறைகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டு நிறைவு படுத்திக் கொள்வது சிறந்த வாழ்க்கை முறை. பொதுவாக நமது நாட்டில் பலர் வாழ்க்கையைப் பற்றிய துறைகளில் அக்கறை கொள்வதில்லை-ஆர்வம் காட்டுவதில்லை. வாழ்க்கைக் கலை நுண்ணியது. ஆழமானது. வாழ்க்கையைப் பூரணமாகப் பயன்படுத்தி வளர வேண்டும்.

வாழ்க்கையில் மனிதன் வெற்றி பெறுவது விண்ணுலகுக்குப் பறந்து சென்று சந்திர மண்டலத்தைக் காண்பது போலத்தான். எனினும், இன்று, 100க்கு 70 பேர் அலுத்துச் சலித்து, சாவு வராதா என்று ஏங்கி இளைத்து மிதந்தவாறாகப் போலி வாழ்க்கை வாழ்கின்றார்கள்.

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்”

என்று பேசுகிறார் வள்ளுவப் பெருந்தகை. திருவள்ளுவர் கற்பனைக் கவிஞரல்ல-அவர் ஒரு சிறந்த வாழ்வியல் கவிஞர். அவருடைய இலக்கியத்தில் பொய்யும், புனைந்துரையும் இல்லை. அவர் சமுதாய வாழ்க்கையின் தெருப்புறத்தையும் பார்த்தார்; கொல்லைப்புறத்தையும் பார்த்தார். திருவள்ளுவர், மாணிக்கவாசகர், அப்பரடிகள் இவர்கள் எல்லோருமே சமுதாயத்திற்கு வாழ்வு நெறிகாட்டி வழி நடத்திச் செல்லத் தோன்றிய அறிவியல் ஞானிகள். அவர்கள் காட்டிய பாதையில் செல்ல வேண்டிய தமிழ்ச் சமுதாயத்தைத் திசைமாற்றி விட்டவை, இடைக்காலத்தே தோன்றிய மடல்கள், உலாக்கள், பிரபந்தங்கள் ஆகியனவே என்று நான் கருதுகிறேன்.

வள்ளுவர் பிற்போக்கான கொல்லைப் புறத்தைப் பார்த்து ஆத்திரப்பட்டுப் பாடியதுதான் திருக்குறளில் உள்ள 'கயமை’ என்ற அதிகாரம். வள்ளுவர் உயர்ந்த-மிகச் சிறந்த நகைச்சுவையாளர். வள்ளுவர் பேசுவது சிரிப்பாகத் தெரிகிறது. சமுதாயத்தைப் பார்த்து அவர் சிரிக்கிறார். ‘அதோ போகிறாரே, அவர் யார்?’ என்று ஒருவர் வள்ளுவரைக் கேட்கிறார். போய்க் கொண்டிருப்பவரை ஒருமுறை நன்றாகப் பார்த்துவிட்டு ‘மனிதன் மாதிரி இருக்கிறது என்கிறார்; ‘மக்களே போல்வர்’ என்கிறார், இத்தகைய நகைச்சுவையை நாம் ஆங்கில நாவலாசிரியரான டிக்கன்சனின் நாவல்களில்கூடக் காணமுடியாதே. திருவள்ளுவர் மக்கட் சமுதாயத்தை உள்ளது உள்ளபடி பார்த்தார். மனிதனைப் பார்த்து, உறுப்பாலே மனிதனாகி விடுவதில்லை... உயர்ந்த பண்பாலே மனிதனாக வேண்டும்; உடலாலே மனிதனாகிவிடுவதில்லை - உள்ளத்தால் மனிதனாகவேண்டும்’ என்கிறார்.

பொதுவாக ஆடுகளையும் மாடுகளையும் தொழுக்களில் கட்டி வைப்பார்கள்; மனிதர்களை அப்படிக் கட்டி வைப்பதில்லை. அவர்கள் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். பகுத்தறிவு, மனச்சாட்சி இவற்றை வைத்துத் தம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொள்ளவேண்டும். அறிவில்லாத விலங்குகள்கூட வேலிக்கும் சுவருக்கும் விலகி ஒதுங்கிப் போகின்றன. மனிதனோ அவற்றை உதைத்துத் தள்ளிவிட்டுப் போகிறான்.

வானம், காற்று இவைபோல, அறிவும் மாசு மருவற்றதாக இருக்க வேண்டும். அந்த அறிவைத்தான் சமய உலகில் ஞானம் என்கிறோம்; வள்ளுவர் ‘வாலறிவன்’ என்கிறார். இந்த உலகை-உலகமக்களை நேசிக்கக் கற்றுக் கொடுக்கும் தூய அறிவையே வள்ளுவர் போற்றுகிறார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு-பலருக்குக் கல்வி பெற வாய்ப்பும் வசதியும் இல்லாமலிருந்த அந்தக் காலத்தில் கல்வியுரிமை மறுக்கப்பெற்ற காலத்தில் - படித்தறிய வாய்ப்பும் வசதியும் இல்லாமற் போனாலும் படித்தவரிடம் சென்று கேட்டறிந்து அறிவை வளர்த்துக்கொள் என்று வலியுறுத்தினார். ஒரு பெரும் கல்விப் புரட்சியையே உண்டாக்கினார். எல்லாருக்கும் கல்வி கொடுப்பது சமுதாயத்தின் கடமையும் பொறுப்பும் ஆகும். 'அறிவினால் ஆராய்ந்து பார்’ என்ற பெரும் புரட்சியைச் செய்தவர்களில் தலையாயவர் திருவள்ளுவர்.

பெளத்த ஆரிய எதிர்ப்புக்களையெல்லாம் மோதிச் சமாளித்துத் தமிழ் நாகரிகத்தையும் தமிழர் பண்பையும்

தி.12. செழுமைப்படுத்தி யிருக்கிறார் வள்ளுவர். இப்படி நாம் கூறும்போது சாதி இனப்பிரச்னைகளைக் கணக்கில் வைத்துக் கொண்டு பார்க்கக்கூடாது.

மனிதன் புற உலகத்தில் வளர்ந்திருக்கிற அளவிற்கு அகஉலகில் வளர்ச்சியடையவில்லை. உலகம் அவனது காலடியில் வீழ்ந்து கிடக்கிறது. புயலை, வெள்ளத்தை, நோயையெல்லாம் அடக்கியாளக் கற்றுக் கொண்டிருக்கிற மனிதன் பக்கத்து வீட்டுக்காரனோடு கூடிக் குலாவி அன்டோடும் பண்போடும் வாழக் கற்றுக்கொள்ளவில்லை.

மனிதன் உள் அமைப்பால் வளர வேண்டும். உடம்பை மருத்துவரிடம் காட்டிப் பரிசோதனை செய்துக் கொள்வது போல, உள்ளத்தால் உணர்வால் வளர்ந்திருக்கிறோமா என்று நமது செயல் முறைகளை எண்ணிக் கணக்கிட்டுப் பார்க்க வேண்டாமா? மனிதனைப் பார்த்து மனிதன் என்று கூற இன்னொரு மனிதன் இல்லையென்றால் மனிதன் என்ற பெயர் எப்படியிருக்கும்? எனவேதான், மனிதனுக்கு அறம் கூற வந்த திருவள்ளுவர்,

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்:

ஆகுல நீர பிற"

என்றார். செயலால் குற்றமற்றவனாக வாழ்ந்து விடுதல் எளிது. சிந்தையால் குற்றமற்றவனாக வாழ்வதுதான் அரிது. பல பக்தர்கள் நெற்றியிலே திருநீறு பூசியிருப்பர்; சரிதான், சிறந்த பக்தர் போலிருக்கிறது என்று கருதுவோம். அருகில் போனால், அவரிடம் கொஞ்சம்கூட மனிதவாடையே இருக்காது. இவர்களைப் பார்த்துத்தான் திருவள்ளுவர் ‘மனத்துக்கண் மாசிலனாக இரு’ என்று வற்புறுத்தினார்.

இன்று, நமது நாட்டைப் பொறுத்தவரை அறம், நீதி, ஒழுக்கம் என்பன யாவும் எல்லோரும் விளையாடும் பொது விளையாட்டுத் திடலாகி விட்டது. அந்தப் பொய்யான ஒழுக்க நெறியிலிருந்து மனிதனை விடுதலை செய்யவேண்டும் என்று வள்ளுவர் விரும்பினார். எனவேதான் அவர், சத்திரமும் சாவடியும் கட்டுவதை அறம் என்று கூறாமல் 'மனத்துக் கண் மாசிலனாதல் அறம்' என்றார்.

உயிர் சிலருக்குப் பொருளாக-சிலருக்கு நீதியாக - வேறு சிலருக்கு அன்பின் வடிவமாக மாறும். ‘அன்பின் வழியது உயர்நிலை’ என்றார் திருவள்ளுவர். ஆனால், இன்று உலகியலில் அழிக்கும் சக்தி வளர்ந்திருப்பதுபோல, அன்பு காட்டும் முறை வளரவில்லை. அன்பும் வாழ்க்கையும் என்பும் தசையும்போல.

வெகுளாமையை வலியுறுத்திய வள்ளுவருக்கும் வெகுளி வருகிறது. அப்படி வெகுண்டெழுந்து,

‘செத்தாருள் வைக்கப்படும்,’ ‘அவியினும் வாழினும் என்? என்றெல்லாம் பேசுகிறார். வெகுளியை வெறுத்தொதுக்க வேண்டும் என்று கூறிய வள்ளுவருக்கு வெகுளி தோன்றியது நியாயமா? என்று கேட்கலாம். தன்னலத்திற்கு ஊறு செய்யும்பொழுது வெகுளி கூடாதுதான்; சமுதாயத்தின் பொது ஒழுக்கத்திற்கு ஒருவன் ஊறு செய்தால் வெகுண்டெழுந்து தீப்போலக் காய்வதில் தவறில்லை.

வள்ளுவர் பல்வேறு கோணங்களில் அருமையான தொரு ஒழுக்கக் கட்டிடத்தை எழுப்பியிருக்கிறார்; பல்வேறு சாளரங்களையுடைய ஒரு சுகாதாரமான நல்ல வீடு அது. ஒழுங்காக ஒவ்வொரு கல்லாக வைத்து அடுக்கி அந்தக் கட்டிடத்தை அவர் எழுப்பினார். வள்ளுவர் கூறும் ஒழுக்க நெறிகளை ஒவ்வொன்றாக மேற்கொண்டு வாழ உறுதி கொண்டால் பத்து ஆண்டுகளில் நாம் ஒப்புயர்வற்ற ஒரு மனிதனாக வாழ முடியும்.

இனி வள்ளுவருக்கு விளம்பரம் தேவையில்லை. வள்ளுவரின் வாழ்க்கை முத்திரை வீட்டிலும் நாட்டிலும் பதிக்கப்பெற வேண்டும். அதற்கு முயற்சி செய்யுங்கள்! வள்ளுவர் காட்டிய ஒழுக்கச் சமுதாயத்தைக் காண முயற்சி செய்யுங்கள்! வள்ளுவத்தைத் தமிழகத்தின் வாழ்க்கை நெறியாக-ஒழுக்க நெறியாகக் கொண்டுவரப் பாடுபடுங்கள்!

4. திருக்குறளும் காந்தியடிகளும்

சராசரி வாழ்க்கையைக் கடந்தவர்களின் வாழ்க்கையோடு திருக்குறள் கருத்துக்கள் பொருந்துவது இயல்பு. மனிதனால் செய்யக்கூடிய காரியங்களைப் பற்றித்தான் திருக்குறள் பேசும். எனவே நமது தேசத்தந்தை காந்தியடிகளின் வாழ்க்கையோடு திருக்குறள் பொருந்தி வருவது சாலப் பொருத்தமானதாகும்.

திருக்குறள் "கடவுள் போல", நாடு இன மொழி வேறுபாடுகளைக் கடந்து விளங்கும் நூல். நாத்திகர்களும் கூடத் திருக்குறளைத் தங்கள் நூல் என்று போற்றுகிறார்கள். காந்தியடிகள் எவரின் ஆதிக்கத்தை எதிர்த்தாரோ, அந்த ஆதிக்கத்தினரும் அவரை மதித்துப் போற்றினார்கள்.

திருக்குறட் கடவுள் வாழ்த்தினை வள்ளுவர்தான் செய்தாரோ? அவர் கடவுள் வாழ்த்துச் செய்திருப்பாரா? என்று சிலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். நிச்சயமாகத் திருக்குறட் கடவுள் வாழ்த்து திருவள்ளுவர் செய்ததுதான்.

திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து, அறிவுக்கும் அனுபவத்திற்கும் மிக ஒத்தது. திருவள்ளுவர் புனைந்துரையாக எழுதவில்லை.

கடவுளை நம்பிச் சிந்தித்து வாழ்த்த, நாம் என்ற உயிர் ஒன்று உண்டு என்று உணர வேண்டும். ‘உயிர்’ இல்லை என்பார் சிலர்; உயிரும் கடவுளும் ஒன்று என்பார் சிலர். 'உயிர் தனியானது’ என்பதை ‘நீடுவாழ்வார்’ என்ற சொற்றொடர் மூலம் ஒத்துக் கொண்டிருக்கிறார் திருவள்ளுவர். உயிரின் இயல்புகளைப் பற்றி வள்ளுவர் அழகாகப் பேசுகின்றார். ‘மன்னுயிர்’ என்கிறார். ‘மன்’ என்றால் நிலைபெற்றது என்பது பொருள். இப்படி அவர் கூறியதன் மூலம், ‘உயிர் என்றும் உள்ளது; அது என்றைக்கும் வாழும்; அது தோன்றியது மில்லை அழிவதுமில்லை’ என்ற நமது சித்தாந்தத்தைத் திருவள்ளுவர் ஒத்துக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது. உயிர்கள் வினைகளின் வழிப்பட்டபயனை அனுபவிப்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார். ‘இருள் சேர் இருவினை’ என்று பேசுகின்றார். இருவினைப் பயன்கள் மன மொழி மெய்யால் செய்யப்படுகிற செயல்களால் விளைவன.

ஒலிப்பதிவு நாடாவில்-டேப் ரிக்கார்டரில் நாம் ஒலிப்பதிவு செய்ததையே மீண்டும் கேட்கிறோம். புதிதாகக் கேட்க முடிவதில்லை. அப்படிப் புதியது கேட்க விரும்புவோமானால் அழித்து விட்டுப் புதுப்பதிவு செய்யவேண்டும். அது போல நம் உயிரின் ஒலிப் பெட்டியில் நாம் எண்ணியனவும் சிந்தித்தனவுமே பதிகின்றன. அவையே நம்மை நிழல்போல் தொடர்கின்றன. நாம் ஒன்றைச் செய்யும்போது, ‘நான் செய்கின்றேன்’ என்ற எண்ணத்தோடு செய்யக்கூடாது. தான் செய்வதாகக் கருதும் தன்முனைப்புக் கூடாது என்பது திருவள்ளுவர் கருத்து.

நமது காந்தியடிகள் ‘நான் சொல்லுகிறேன்' என்று என்றுமே சொல்லியதில்லை. என்னுடைய அந்தராத்துமா சொல்லுகிறது என்றுதான் எப்பொழுதும் கூறினார். அவர் கொஞ்சமும் தன் முனைப்பு இல்லாதவராக வாழ்ந்தார். அவர் பகைவனிடத்தும்கூடக் காழ்ப்புக் கொண்டதில்லை. எனவே அவர் இருள் சேர் இருவினையும் தன்னைப் பற்றாமல் காத்துக் கொண்டார்.

பிறவியுண்மை நமது சமயத்திற்கு மிகவும் முக்கியமானது. இன்றைய உழைப்பின் பயனை நாளை அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தால்தான் உயிர்நலத்தில் நாட்டம் ஏற்படும். பிறவிப் பெருங்கடலை நீந்த வேண்டும் என்று திருவள்ளுவர் விரும்பினார். காந்தியடிகளும் பிறவித்தளை நீங்க வேண்டும் என்று விரும்பினார்.

இருவினைகளிலிருந்தும் விடுதலை பெற, பொய்தீர் ஒழுக்கநெறி நிற்க வேண்டும். காந்தியடிகள் மிக எளிய உணவையே உண்டுவந்தார்-மிக்கெளிய தோற்றம் உடையவராகத் திகழ்ந்தார்-மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார். அவர் திறந்த மேனியராக வாழ்ந்தது போலவே, திறந்த உள்ளத்தினராகவும் வாழ்ந்தார். எனவே காந்தியடிகள் ஐம்பொறிகளையும் அடக்கி வாழ்ந்தார் என்பதைக் காட்டிலும், ஐம்பொறிகளும் தாமே அடங்கின என்பது சாலப் பொருந்தும். அவர் வாழ்க்கையில் இரகசியம் என்பதே கிடையாது. அவர் தம்மால் முடிந்ததை ஒழுக்கமாக ஏற்றுக் கொண்டார். இடையே தொய்வே ஏற்படாமல் பாதுகாத்து வாழ்ந்தார்-பொய்தீர் ஒழுக்கநெறி நின்றார்.

"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடு வாழ்வார்”

என்றார் திருவள்ளுவர். அதன்படி காந்தியடிகள் வாழ்ந்தார். எனவே கர்ந்தியடிகள் அன்று வாழ்ந்தார்-இன்று வாழ்கிறார் - என்றுமே வாழ்வார்.

காணப்பட்ட உலகத்தின் மூலமாகக் காணப்படாத இறைவனைக் காட்டுகிறார் திருவள்ளுவர். ‘அகரமுதல எழுத் தெல்லாம்’-என்பது குறட்பா. இறைவனைக் காட்டுகின்ற மிகப்பெரிய புத்தகம் இயற்கை ‘கடவுள் பிரார்த்தனை இல்லாமற்போனால் நான் செத்துப் போவேன்’ என்கிறார் காந்தியடிகள். ‘என்னுளே உயிர்ப்பாய்ப் புறம்போந்து இயங்கினான்’ என்று அப்பரடிகள் பேசுகிறார்.

'கடவுள் உண்டு என்பதை நீங்கள் நம்புகிறீர்களா' என்று காந்தியடிகளைக் கேட்டபோது, ‘நீங்களும் நானும் இருப்பது உண்மையானால், நமது பெற்றோர்கள் வாழ்ந்தது உண்மையானால், நமது பிள்ளைகள் இருக்கப்போவது உண்மையானால் கடவுளும் உண்டு’ என்று அவர் கூறினார். அவர் குண்டடிபட்டு விழுந்த போதும்கூட ‘ராம்ராம்’ என்றுதான் கூறினார். இராமனே அவரது உயிர்நிலையாக விளங்கியமையை உணர்கிறோம். எனவே காந்தியடிகளின் கடவுள் நம்பிக்கை மாசற்றது-உறுதியானது.

திருவள்ளுவர் கடவுளை மிக எளிய முறையிலே பார்த்தார். யார் யார் எந்த வடிவோடு நினைக்கிறார்களோ அந்த வடிவில் அவர்கள் உள்ளத்தில் இறைவன் வந்து சேர்வான் என்பது திருவள்ளுவர் கருத்து. காந்தியடிகள் ஏழை மக்களுக்கும், ஒதுக்கப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் சேவை செய்வதில் கடவுட் காட்சியைக் கண்டார்.

திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து வேறு. காந்தியடிகளின் வாழ்க்கை வேறு அல்ல. எனவே, காந்தியடிகள் காட்டிய அன்பு நெறியை-அறநெறியை-கடவுள் நெறியை நாம் கடைப்பிடித்து வாழ்வோமாக!

5. விண்ணகமாக்குவோம்!

மனிதகுலத்துக்கு ஒரு கவிஞராக-மனிதகுலம் வாழ் வாங்கு வாழ வழிகாட்ட வந்த ஒரு கலங்கரை விளக்காக-மனிதனை மனிதனாக வாழச் செய்யும் மாபெரும் கவிஞராக வாழ்ந்தவர் வள்ளுவப் பெருந்தகை.

நமது நாட்டைப் பொறுத்தவரை படிப்புப் பெருகிய அளவிற்குப் பண்பாடு பெருகவில்லை. நாட்டில் படிப்பிற்குப் பஞ்சமில்லை. பண்பாட்டிற்குத்தான் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது.

வேறு எந்த நாட்டையும்விட இந்த நாட்டில்தான் பக்தி அதிகம். எனினும், எது பக்தி என்பதிலே ஒரு தெளிவான கருத்து இல்லை. எனவே, இந்த நாட்டில் வளர்கின்ற பக்தி, பொட்டல் காட்டில் மழைபெய்வதுபோல ஆகி விடுகிறது. அங்கயற்கண்ணியும் அண்ணல் சோமசுந்தரப் பெருமானும் எப்படி இருந்தார்களோ அந்த வாழ்க்கை அனுபவம் இன்று நம்மிடை இல்லை. அன்று, பன்றிக் குட்டி ஒன்று பால் இன்றிப் பசியால் கதறியது. அந்தக் கதறல் அண்ணல் சோமசுந்தரப் பெருமான் திருச் செவிக்கு எட்டியது. அண்ணலே தாய்ப்பன்றியாக வந்து பாலூட்டிக் காப்பாற்றினார். இன்று, மதுரைமா நகரிலே கதறியழும் மனிதனுக்குச் சோறு கொடுக்க யார் முன் வருகிறார்கள்?

ஒரு கல்யாணம் என்றால் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு அண்டாவும் சட்டிகளும் வாங்கிக் கொடுக்கிறார்களே, ஒரு நூறு ரூபாய்க்காவது புத்தகம் வாங்கிக் கொடுக்கின்றவர்களைப் பார்க்கிறோமா? தமிழர்கள் தமது வீட்டை அடுப்பங்கரையாக்கியது போதாதென்று கோயில்களில் மடப்பள்ளிகள் கட்டி, அவற்றையும் அடுப்பங்கரையாக்கி விட்டார்களே! இங்கு வயிறு வளர்ந்துள்ள அளவிற்கு அறிவு வளர்ந்திருக்கிறதா? வயிற்றை வளர்க்க எடுத்துக் கொள்ளும் முயற்சியில் கால் பங்காவது அறிவை-உணர்வை வளர்ப்பதற்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்களா? நாட்டில் அறிவுப் புரட்சியும் கருத்துப் புரட்சியும் ஏற்பட வேண்டாமா? இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் இந்த நாட்டில் வள்ளுவர் தோன்றி வாழ்ந்து இலக்கியம் செய்தார் என்பதற்குரிய அடிச்சுவடு-இலக்கிய மணம் தனி மனித வாழ்க்கையில்-சமுதாயத்தில்-நாட்டில் காணப்படுகிறதா?

நம்முடைய நாட்டில் தத்துவத்திற்கும் கொள்கைக்கும் குறைவில்லை. ஆனால் அவை செய்முறையில் வரவில்லை. கொஞ்சமாகப் படித்தாலும், படித்ததை வாழ்க்கையில் நடை முறைப்படுத்துங்கள்! படிப்புக்கும் வாழ்க்கைக்கும் இடையே இருக்கிற இடைவெளியைக் குறையுங்கள். சாப்பிடுவதைக் கடமையாகக் கொள்வது போலப் படிப்பதையும் கடமையாகக் கொள்ளுங்கள்.

இருபது ஆண்டுகட்குமுன் விற்ற கண்ணாடிகளைவிட இன்று ஏராளமான கண்ணாடிகள் விற்பனையாகின்றன. அடிக்கடி கண்ணாடியைப் பார்த்து முகத்தை அழகு படுத்திக் கொள்கிறோமே அதுபோல, நாள்தோறும் திருக்குறளில் நமது நெஞ்சைப் பார்த்து, உள்ளத்திலுள்ள மேடு பள்ளங்களைத் திருத்திச் சரி செய்து கொள்ள வேண்டாமா?

மனிதனுக்குத் துன்பமும் தொல்லையும் மற்றவர்களிடமிருந்து வருவதில்லை. அறியாமையின் காரணமாக நம்மிற் பலர் இந்த உண்மையை ஒப்புக்கொள்வதில்லை. இதனை, ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்று புறநானூறு உணர்த்துகிறது.

துன்பம் வரும்போது நாம் அதைப் பார்த்துச் சிரிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். துன்பத்திற்குக் காரணம் என்ன என்று எண்ணிப்பார்க்க வேண்டும். நம்மை ந்ாமே எண்ணிப் பார்த்துச் சிரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நம்மை எண்ணிப் பார்த்து நாம் விமர்சனம் செய்து சிரிக்க மறந்து விட்டால், நம்மைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள். துன்பம் வரும்போது, அந்தத் துன்பத்திற்குக் காரணம் நமது அறியாமையும் முட்டாள்தனமும்தான் என்று உணர்ந்து சிரிக்க வேண்டும்.

வள்ளுவம், ராஜா ராணியைப் பற்றிப் பாடிய நூல் அல்ல. இங்கு நடமாடுகின்ற சாதாரண சராசரி மனிதனைப் பற்றிச் சராசரி மனிதனுக்காகப் பாடப்பெற்ற வாழ்க்கை நூல் அது.

மனிதன் தனது கடமைகளைச் செவ்வனே செய்வதன் மூலம் கடவுள் வழிபாடு செய்யக் கற்றுக் கொள்ளவேண்டும். இன்று உலகெங்கும் வாழ்கின்ற 300 கோடி மக்களில் 10-ல் ஒரு பகுதியினர் சோற்றுக்கின்றித் துன்பப்படுகிறார்கள் என்றால், மனித சமுதாயத்திற்கே இது ஒரு அறை கூவல் இல்லையா? மனிதன் உழைப்பு உடையவனாக-உலையாத முயற்சியுடையவனாக இருந்து மனித சமுதாயத்தை வாழ்வித்து வாழவேண்டும் என்பதுதான் இறைவனின் திருவுள்ளம்.

தேவலோகத்திற்குப் போய்த் தெய்வத்தைத் தேடுவதை விட உன்னையே நீ தெய்வமாக்கிக் கொள்ளலாம் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. அதற்கு உண்டால் மட்டும் போதாது-வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் வேண்டும்., கை கால்களும், தலையும், உடலும் இருப்பதால் மட்டும் ஒருவன் மனிதனாகி விடுவதில்லை. மனிதனுக்குரிய மனச்சாட்சியோடு வாழ்பவன்தான் மனிதன். இதை நன்றாகப் புரிந்து கொண்டுதான் ‘வாழ்வாங்கு வாழு’ என்று பேசினார் திருவள்ளுவர்.

மனிதன் எண்னக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதே திருவள்ளுவர் செய்த முதற் புரட்சி. ‘எண்ணிய எண்ணியாங் கெய்துப’ என்றார். கிறித்தவ மதத்தலைவர்கள் மனித சமுதாயத்தை எண்ணிச் சிந்தித்து, அந்த மனித சமுதாயத்தின் நல்வாழ்வில் அக்கறை கொண்டதுபோல இங்குப் பல இலட்சக்கணக்கான வெண்பொற்காசுகளையும் ஆயிரக்கணக்கான வேலி நிலங்களையும் வைத்துக் கொண்டிருக்கிற நமது சைவ சமயத் தலைவர்கள்-காவி வேட்டி ஜமீன்தார்கள் மக்களைப் பற்றி எண்ணிப்பார்க்கவில்லை.

அகமும் புறமும் ஒத்த வாழ்க்கை தேவை மனத்தது மாசாகக் கூடாது. மன மாசைக் கழுவித் தூய்மைப் படுத்தத்தான் வழிபாடு, கடவுள், மத நம்பிக்கை எல்லாம். இன்றோ, குளம் சாக்கடையாக மாறியதுபோல மதம், கடவுள் நம்பிக்கை யாவும் வெறும் சடங்குகளால் நிறைந்து விட்டன.

தமிழகத்துத் திருக்கோயில்களில் தேவாரம், திருவாசகம் முதலியவற்றை ஓதி வழிபட வேண்டும் என்று நான் கூறியபோது, பலர் என்னைக் கருப்புச் சட்டை என்று கூறினார்கள். எனக்கு மொழி, இன சாதி வேறுபாடுகள் கிடையாது. வழிபாடு என்ற குளத்தில் மனம் குளிக்க வேண்டும்; அதன் மூலம் மனவெப்பம் கழிய வேண்டும். இந்த மனோதத்துவ அடிப்படையில்தான் நான் தாய்மொழியில் வழிபாடு செய்யவேண்டும் என்று கூறினேன். நமது குறைகளைச் சொல்லி அழுது, மனம் திருந்த நமக்குக் கிடைத்திருக்கிற ஒரே இடம் கோயில்தானே! மனிதன் கைகால்களால்-வாயால் தூய்மையாக இருந்துவிட முடியும். அது எளிது; மனத்தால் தூய்மையாக இருப்பதுதான் அரிது. மனிதன், மனத்தை அடக்கியாளக் கற்றுக்கொண்டால் - அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ளப் பழகிக் கொண்டால் அவன் உயர்நிலை எய்துகிறான். எனவேதான் திருவள்ளுவர் மனப்புரட்சி செய்தார்.

அன்று, பாண்டிய மன்னன் ஒருவனின் உயிர்நிலை அரச நீதியில் தங்கியிருந்தது. பாண்டியன் மாண்டான்-அவன் பத்தினியும் மடிந்தாள். அவள் உயிர்நிலை கற்பிலே தங்கி இருந்தது.

இன்று பலர் உயிர்நிலை பணத்திலேதான் தங்கியிருக்கிறது. உயிர்நிலையை அன்பில் வைத்திரு என்கிறார். அது மட்டுமா? அன்பைப் பார்க்க முடியும் என்றும் அவர் கூறுகிறார். இன்னொருவர்க்கு உற்ற துன்பத்தைக்கண்டு, இரங்கி வருந்தி அழும்போது சிந்துகின்ற கண்ணீர் அன்பைக் காட்டிவிடும் என்கிறார்.

மூச்சுக் காற்றும், சோறும், தண்ணீரும்போல இந்த நாட்டு மக்களுக்கு வள்ளுவம் இன்றியமையாததாகும். அது நாம் நாள்தோறும் உண்ண வேண்டிய கருத்துணவு. அதை உண்டால் மட்டும் போதாது; சீரணித்துக் கொள்ள வேண்டும்.

கவிதையைப் பாராட்டுவதின் மூலம் அதைப் பாடிய கவிஞனைத் திருப்திப்படுத்துவதுபோல, ஓவியனைத் திருப்திப்படுத்த முடியும் என்பதே எனது இலட்சியம். இதுதான் அருள் நெறிக் கொள்கை. வள்ளுவத்தின் வழி வாழ்ந்து, இந்த வையகத்தில் வாழுகின்ற எல்லா மக்கட்கும் சோறும் துணியும் தருவதன்மூலம் மண்ணகத்தை விண்ணகமாக்கி, இறைவனை மீண்டும் இங்கே கொணர்வோமாக!

6. மானிடச் சந்தையில்

மானிடச் சந்தையில் பல்வேறுவிதமான மனிதர்கள் இருந்திருக்கிறார்கள்; கோவலன் இருந்திருக்கிறான்; இராமன் இருந்திருக்கிறான்; இராவணனும் இருந்திருக்கிறான். மானிடச் சந்தையில் இணைத்துக் கட்டப்படாமலேயே மனிதர்கள் கூடிநிற்பார்கள்.

மனிதன் எதையும் எண்ணிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்; அந்த எண்ணத்தின் வழியாக-சிந்தனையின் வழியாக பல்வேறு கேள்விகளை எழுப்ப வேண்டும்; நமது பழந்தமிழர்கள் எதையும் எண்ணித்துணிவார்கள்; துணிந்த பின் எண்ணமாட்டார்கள். அதுமட்டுமல்ல துணிந்தபின் எண்ணுவது இழுக்கு என்றுகூடக் கருதுவார்கள். எனவே, அவர்களது அகத்துறையிலும் புறத்துறையிலும் தகுதி இருந்தது, தரம் இருந்தது. இன்று, எண்ணிச் சிந்திப்பதற்கு அக்கறை குறைந்து விட்டது. கேள்விக்குச் சரியான விடையிறுப்பதென்பதும் அரிதாகிவிட்டது.

தமிழர்களில் பலர் நேற்று நேற்று என்றே கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்; நேற்றைய நிகழ்ச்சிகளைக் கனவு கண்டு கொண்டிருப்பதால் எத்தகைய உருப்படியான பயனும் ஏற்படப் போவதில்லை-நாளை நாளை என்று கனவு கண்டாலாவது இன்றில்லா விட்டாலும் நாளை, நாளை இல்லா விட்டாலும் நாளை மறுநாள் விடிவெள்ளி முளைக்கலாம்.

மனிதன் எண்ணுபவனாக எண்ணித் துணிபவனாக ஆளுபவனாக-ஆளப்படும் நேரத்தில் உறுதியுடையவனாக இருப்பது மானிடச் சந்தைக்கு இன்றியமையாத பண்பாகும்.

'மனிதர்கள் இயற்கையில் மிக நல்லவர்கள்: சமுதாயத்தால் கெடுகிறார்கள்’ என்பது காந்தியடிகளின் கருத்து. மாக்ஸ் வெல்லியன் கருத்து இதற்கு முற்றிலும் மாறானது. 'மனிதன் அயோக்கியனாகப் பிறக்கின்றான்; சமுதாயத்திற்குப் பயந்தே நல்லவனாக வாழ முயற்சிக்கிறான்' என்பது மாக்ஸ் வெல்லியின் சித்தாந்தம்.

'மனிதன் ஒளியுடையவன்; ஒளிபடைத்தவன்; ஒளியுடையவனாக வாழ முடியும். ஆனால், அவன் அறிவை வளர்த்துக் கொள்வதில்லை’ என்கிறார் சாக்ரடீஸ். நீண்ட காலமாக மனிதசமுதாயம் தனது பகுத்தறிவைப் பயன்படுத்தத் தவறிவிட்டது. தந்தையின் அறிவைவிட மகனறிவு தூயதாக இருக்கக்கூடும் என்பதை நம்பவேண்டும். நம்மிலே பலர் யார் சொல்லுகிறார் என்பதைத்தான் பார்ப்போமேயொழிய, என்ன சொல்லுகிறார் என்பதை ஆராய்வதில்லை. எனவேதான்

"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு”

என்றார் திருவள்ளுவர். ‘பகுத்தறிவால் ஆராய்ந்து பார்' என்றார் சாக்ரடீஸ், ‘ஏன்’ என்று கேட்பது பாவம் என்று கருதிய மானிடச் சந்தையைப் பார்த்து. மனிதன் தன்னைப் பற்றியே எண்ணிச் சிந்தித்து, ‘ஏன்’ என்று கேள்வி கேட்கத் துணிய வேண்டும் என்று கூறினார் சாக்ரடீஸ்.

பொதுவாக, பணத்தோடும் பதவியோடும் தொடர்பு கொண்டவர்களைச் சட்டத்தாலேயே மாற்றமுடியும் என்பது ஒரு சித்தாந்தம். மனிதன் உயர்ந்தவன்; அவனது வெற்றிக்கும் தோல்விக்கும் காரணம் உள் உணர்வுதான். இன்று, மானிடச் சந்தைக்கு வருகிறவர்களிற் பலர் தங்கட்குப் பிடித்தமான வற்றை எடுத்துச் செல்லாமல், பிடிக்காதவற்றைப் பற்றியே பேசிப்பேசி மானிடச் சந்தையைக் கலகக்காடாகவே ஆக்கி வருகிறார்கள். மானிடச் சந்தை கலகக்காடாகவே மாறிக் கொண்டும் வருகிறது. பொதுவாக, இன்று மானிடச் சந்தையிலே 95 விழுக்காடு நல்லவர்களாக இருந்தாலும், கெட்டவர்களாக இருக்கின்ற 5 விழுக்காட்டினரின் ஆற்றல் எஞ்சிய 95 விழுக்காட்டினரையும் ஆட்டிப் படைக்கிறது. எனவேதான் மானிடச் சந்தையில் நல்லவர்களாக மட்டும் இருப்பது போதாது-நல்லவர்கள் வல்லவர்களாகவும் இருக்க வேண்டுவது இன்றியமையாதது என்று நான் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு.

கிரேக்க நாட்டின் தலைநகரம்; பல்லாயிரக் கணக்கான மக்கள் நடமாடும் முச்சந்தி. பட்டப்பகல் நேரம் ஒரு பெரியவர் கையிலே தீவட்டியை ஏந்திக்கொண்டு எதையோ தேடிக்கொண்டு வருவது போல வருகிறார்.

‘என்ன தேடுகிறீர்கள்?' என்று கேட்டார் ஒருவர். அந்தப் பெரியவர் சாவதானமாக,

'மனிதனைத் தேடுகிறேன்’ என்று பதில் கூறினாராம். இந்தப் பதில் முதலில் நமக்குச் சற்று வியப்பாகவும் புதிராகவும்தான் இருக்கும்.

'விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு

நூல் கற்றாரோ டேனை யவர்'

என்று பேசுகிறார் திருவள்ளுவர். இன்று, மானிடச் சந்தை புறத்தே போர்த்திக்கொண்டு வாழ்கிறதே தவிர, அகப்போர்வையை இழந்துவிட்டது. இந்த நிலைமையால் மானிடச் சந்தை அழுகிப்போனது போலத் தோற்றம் அளிக்கிறது. இன்றைய மனிதன் வெள்ளத்தை விலங்கை பேயை பெருந்துன்பந்தரும் நோயைக் கண்டுகூட அஞ்சவில்லை. தன்னையொத்த மனிதனைக் கண்டே அஞ்சும் நிலைக்கு வந்துவிட்டான். அவ்வளவு தூரத்திற்கு வாழ்க்கைப் போக்கு நசித்திருக்கிறது. ஆணவமும், ஆதிக்க சக்தியும் மனிதனைப் பிடித்து ஆட்டுகின்றன. மனிதன் இவற்றிலிருந்து விடுதலை பெற வேண்டாமா? மற்றவர்களையும் மகிழவைக்க வேண்டாமா? மானிடச் சந்தையின் தரம் உயர வேண்டுமானால், சிந்தனையால்-செயலால் இன்ன பிறவற்றால் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியூட்ட வேண்டும்; கருத்து வேற்றுமைகளுக்கு மதிப்புக் கொடுக்காமல் வேற்றுமைகளை உள்ளடக்கி விழுமிய ஒருமைப்பாட்டைக் காண வேண்டும். கருத்து வேற்றுமைகளால் புதிய காட்சிகளைத் தோற்றுவிக்கக் கூடாது. எறும்பு, தேனீ, கறையான் இவற்றைப் போல ஒருமைப்பாட்டோடு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒப்புரவுக் கொள்கை மானிடச் சந்தைக்கு மிகமிக இன்றியமையாததாகும். மானிடச் சந்தையில் மனிதர்கள் ஒருவரோடொருவர் மனங்கலந்து பழக வேண்டும். புதிய கருத்துக்களையும் புதிய சித்தாந்தங்களையும் கண்டு, அவற்றைச் செழிப்புடையனவாக வளர்க்க வேண்டும். மானிடச் சந்தையைக் கருத்துப் புரட்சியுடையதாக ஆக்க வேண்டும்.

வாழ்க்கையில் போட்டி இன்றியமையாததுதான். போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகத் தவறு செய்யக்கூடாது. திறந்த வெளியில் திறந்த மனத்தோடு வாழ்ந்து வெற்றிபெற வேண்டும். மானிடச் சந்தையைத் தரம் உடையதாக-தகுதி உடையதாக-நாணயம் உடையதாக ஆக்குங்கள். அன்பும் அறமும் மானிடச் சந்தையில் இடம் பெறுமாறு செய்யுங்கள்!

7. மரபா? சீர்திருத்தமா?

மரபை வலியுறுத்த வந்தவர்கள் மரபு என்பதற்கு என்ன வரையறை வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி அவர்களே குறிப்பிடவில்லை. எது மரபு? பொதுவாக நேற்றையச் சீர்திருத்த்ம் இன்று மரபாகி விடுகிறது. இன்றையச் சீர்த்திருத்தம் நாளை மரபாகிவிடும். இது வளரும் உலகத்தின் இயற்கை. இந்தத் திருக்குறள் விழாவை நடத்துகிறவர்கள் நான்கு ஆண்டுகட்கு முன்பு இவ்விழாவை ஆரம்பித்தபோது அது புதுமை. அடுத்த ஆண்டு முதல் வழக்கம்போல் என்று மரபின் வழிச்சேர்த்து வழங்குகிறோம்.

இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் எப்படி வாழவேண்டும் என்று தனிப்பெரும் நூல் செய்த திருவள்ளுவரின் கருத்து இன்று நமக்கு மரபாகி இருக்கிறது. பொதுவாக, பொருளுடைமையில் ஆசையிருப்பதென்பது மரபு. ஆனால், பொருள் வருவதற்குரிய வழியைக் கண்டுபிடி-அவ்வழிப் பொருளைப் பெருக்கு என்ற வள்ளுவர் கருத்து மரபல்ல.

திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடியிருக்கிறார். அவர் கடவுள் வாழ்த்தோடு நூலைத், தொடங்கியதாலேயே அது மரபு என்றாகிவிடாது. விவசாயத்துறையில் சீர்திருத்தம் அரசியல் துறையில் சீர்திருத்தம் என்றால், நிலமே இல்லாமலோ அரசியலே இல்லாமலோ சீர்திருத்தம் செய்வதில்லை. நிலம், அரசியல் என்ற அடிப்படையை வைத்துக் கொண்டுதான் காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற திருத்தங்களைச் செய்யவேண்டும். இதைத்தான் வள்ளுவர் செய்திருக்கிறார். திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடியிருக்கிறார் என்றாலும், தொல்காப்பியம் குறிப்பிடுவது போல, நால்வகை நிலங்களையும் அந்தந்த நிலங்கட்குரிய தனித்தனி நான்கு கடவுள்களையும் திருக்குறள் பேசவில்லை. திருவள்ளுவர் பொருள் குறிப்பிலே, குணக்குறிப்பிலேதான் கடவுளைக் குறிக்கிறார். நாட்டில் வேறுபாடற்ற-ஒருமித்த கடவுள் உணர்ச்சி வேண்டும் என்று விரும்பி வலியுறுத்தினார். வழிபாடுபற்றி அவர் குறிக்க நேர்ந்தபோதும் வெறும்-ஆரவாரமான சடங்குகளைப் பற்றிப் பேசவில்லை. நினைத்தலையும், சிந்தித்தலையும் அதன் மூலமாகத் தன்னை வழிப்படுத்திக் கொள்ளுதலையுமே வள்ளுவர் குறிக்கிறார். இறைவன் தூய ஒளிபொருந்திய அறிவாக விளங்குபவன் என்ற அடிப்படையை மனத்தகத்தேகொண்டு ‘வாலறிவன்’ என்று பேசுகின்றார் வள்ளுவர். வள்ளுவத்துக்கு முன் எழுந்த நூல்களில் இதனைக் காண முடியுமா?

அடுத்து, பலாப்பழத்தைத் திருத்துவது என்கிறோம். அப்படியானால், பலாப்பழத்தில் உள்ள சுவையற்ற பகுதிகளை உண்ணுதற்கு ஒவ்வாதனவற்றை நீக்கிப் பலாச் சுளையை எடுப்பதுதான். அதுபோல, சீர்திருத்தம் என்றால், நடைமுறைக்கு ஒவ்வாதனவற்றை நீக்கிவிட்டு, நாட்டுக்கும் வாழ்க்கைக்கும், நடைமுறைக்கும் ஏற்றவற்றை ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளுதலேயாகும்.

"மரபு நூல்கள்” எனப்படுவன தமிழகத்தின் எல்லையைத் தாண்டவில்லை. ‘முன்னோர் சொல்லைப் பொன்னே போல் போற்றுதும்’ என்பது மரபு. "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்று வள்ளுவர் பேசுகிறாரே இது சீர்திருத்தமா இல்லையா? ‘சொன்னதை ஆராய்ந்துபார்’ என்பதே சீர்திருத்தம்தானே? எண்ணிய எண்ணியாங்கெய்துப எண்ணியர் திண்ணியார் ஆகப் பெறின்’ என்று கூறுவதன் மூலம், திருவள்ளுவர் எண்ணத்திற்கு வலிமையுண்டு என்று வலியுறுத்துகிறாரே, அது சீர்திருத்தம்தானே? எண்ணினால், எண்ணத்திற்குத் திண்மை ஏற்பட்டால் கை கால்களுக்கு வலிவு வந்துவிடும்; "நீ எண்ணிய எண்ணியங்கு எய்துவாய்?" என்பது சீர்திருத்தம்தானே? திருவள்ளுவர், வாழ்க்கையில் உள்ள மாசுகளை நீக்கி, வையகம் வாழ்வாங்கு வாழவேண்டுமென்று விரும்பித் திருக்குறளைச் செய்தார்; எனவே திருவள்ளுவர் வற்புறுத்தியது சீர்திருத்தமே என்று உறுதியாகக் கூறலாம்.

திருவள்ளுவர்க்கு முன்தோன்றி நூல் செய்த தொல்காப்பியர் நாட்டில் இருந்த நிலைமையை உள்ளவாறு

தி.13. கூறினார். இப்படியிருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறினார். அதுவே சீர்திருத்தம்தான். மேலும் நூல் முறையிலேயே வள்ளுவர்தான் சீர்திருத்தம் செய்தார். திருக்குறளுக்கு முன்பு, ஒழுக்க இயலுக்காக முறையான ஒழுக்க நூல்-நீதி நூல் எதுவும் எழுந்ததில்லை. எனவே, ஒழுக்கம் இயல் கூற முதன் முதல் திருக்குறள் எழுந்ததே சீர்திருத்தம்தான். திருவள்ளுவர் நேரடியாக வந்து உன் வாழ்க்கை வளமுற இன்ன இன்ன கொள்கையைக் கடைப்பிடி என்று கூறுகிறார். அவர் மிக எளிமையாகவும், சுருக்கமாகவும் குறட்பாக்களை ஆக்கியிருக்கிறார்.

கள்ளுண்ணல், புலால் உண்ணல் ஆகிய தமிழ் மரபை வள்ளுவர் கடுமையாகச் சாடுகிறார்.

"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று"

என்கிறார் திருவள்ளுவர். இதிலே, “அவிசொரிந்து ஆயிரம் வேட்டல்" என்பது மரபு. அதாவது வேள்வி செய்தல் மரபு, ஆனால், "ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை" என்பது சீர்திருத்தம்.

வீட்டிற்குள்ளே பெண்ணைப் பூட்டிவைத்துக் கற்பைக் காப்பதுதான் இங்கு மரபாக இருந்திருக்கிறது. இதனையே "இற்செறித்தல்" என்று குறித்துள்ளனர், பழம்புலவர்கள். திருவள்ளுவரோ, இந்தச் செயல்முறையை வன்மையாக எதிர்க்கிறார். "சிறைகாக்கும் காப்பு எவன் செயும்?" என்று கேட்கிறார். "நிறை காக்கும் காப்பே தலை" என்று வலியுறுத்துவதன் மூலம் சீர்திருத்தம் செய்கிறார்.

அடுத்து, வாய்மை என்பதற்கு நாட்டில் இருந்த வழக்கு "உள்ளதை உள்ளவாறே சொல்லுதல்" என்பதுதான். வள்ளுவர் இந்த மரபை வலியுறுத்தவில்லை. உள்ளதை உள்ளவாறே சொல்லித் தீமை விளைவிப்பதைவிட, பிறருக்குத் தீமை விளைவிக்காத-நன்மை விளைவிக்கின்ற பொய்யையும் வள்ளுவர் வாய்மையின்பாற் பட்டதாக ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார். எனவே, அவர் தீமை விளைவிக்காத சொல்தான் "வாய்மை" என்கிறார். இது சீர்திருத்தமா இல்லையா?

ஈதல், விருந்தோம்பல் முதலிய அடிப்படைப் பண்புகளை மரபை வள்ளுவர் ஒத்துக்கொண்டு, ‘ஒப்புரவறிதல்’ என்ற புதிய-சீர்திருத்த்தைச் சொல்லி, அதன்மூலம் தலைசிறந்த மனிதப்பண்பைக் காட்டுகிறார். பலரோடு கூடிவாழு-ஒத்ததறிந்து வாழு-ஒத்ததறிதல் என்றால் நமக்கு மட்டும் ஒத்ததறிதல் அல்ல-மற்றவர்களுக்கும் ஒத்ததறிதல் என்பதுதான். இந்த ஒப்புரவுப் பண்பு உலகப் பேரிலக்கியங்களால் மிகமிகப் பாராட்டப்படக்கூடிய பண்பு. அது உலகந்தழுவிய வாழ்க்கையையே குறிக்கும்.

பெண்ணின் கடமைபற்றிப் பேசப் புகுந்த வள்ளுவர்,

"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை"

என்று பேசுகிறார். வள்ளுவர் காலத்தில் குடும்ப மகளிரிடம் தெய்வம் தொழுகின்ற உணர்ச்சி மிக்கோங்கி வளர்ந்து, குடும்பப் பொறுப்புக்களில் அக்கறை குறைந்து குடும்ப நலன்கள் பாதிக்கப்படுகிற ஒரு நிலை இருந்திருக்க வேண்டும். அந்நிலையை மாற்றியமைத்துக் குடும்பம் பெண்களுக்கு அவர்களின் கடமையை உணர்த்தவும், குடும்ப நலன்கள் பாதிக்கப்படாமல் காக்கவும் விரும்பியே வள்ளுவர் ‘கொழுநனே தெய்வம்' என்ற சீர்திருத்தத்தை உண்டாக்கினார் என்று கூறலாம் அல்லவா?

அடுத்து,

"தேவர் அனையர் கயவர் அவரும்

மேவன செய்தொழுக லான்”

என்ற குறட்பாவில் திருவள்ளுவர் தேவர் என்ற மரபை ஒத்துக்கொண்டு, மனப்போக்குப்படிச் செயல் செய்கிறவர்களைக் கயவர்களாக்கி, அவர்களைத் தேவர்களோடு ஒப்பிட்டுப் பேசியது சீர்திருத்தம். ஊழ் மரபு, அதனை வள்ளுவர் ஒத்துக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள் மரபுக்கட்சியினர். ஊழை எந்த அளவில் வள்ளுவர் ஒத்துக்கொண்டிருக்கிறார்?

"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தான்முந் துறும்"

என்று வள்ளுவர் கூறுகிறார். இதிலும் ‘முந்துறும்’ என்கிறாரே தவிர ‘ஊழே வெல்லும்’ என்ற உறுதிப்பாட்டை அவர் உணர்த்தவில்லை. மேலும்,

'ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்'

என்ற குறட்பா மூலம், தளர்வுறாமல் முயற்சி செய்தால் ஊழையும் வென்றுவிட முடியும் என்று எடுத்துக் கூறுகிறார். ஊழ் என்ற மரபை ஒத்துக்கொண்டு, தளராத முயற்சியால் அதை வென்று விடலாம் என்ற சீர்திருத்தக் கருத்தையே வள்ளுவர் வற்புறுத்தியிருக்கிறார். நிலத்தையும், வீட்டையும் வைத்துக்கொண்டு தேவையான திருத்தங்களைச் செய்வது தான் சீர்திருத்தம். இதைத்தான் திருவள்ளுவர் செய்தார்.

8. வான்புகழ் வள்ளுவன்

தேசீயக் கவிஞன் பாரதி. பல இலக்கிய மேதைகளைப் பாராட்டித் தமது கவிதைகளில் புகழ்மாலை சூட்டியுள்ளார். பலரைப் பாராட்டியிருந்தாலும் திருவள்ளுவரைப் பாரதி பாராட்டிய முறை தனிச்சிறப்புடையது. பாரதி, திருவள்ளுவருக்குச் சூட்டிய புகழ்மாலை. "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு" என்பது. பாரதி தமிழ் நாட்டையே பாராட்டுகிறான். காரணம் திருவள்ளுவரை ஈன்று அவர் வழி உலகு திருக்குறளைப் பெறக் காரணமாக இருந்ததுதான். உலக அரங்கில் ஒரு கவிஞரால் நாடு உலகப் புகழ் பெறுதல் என்பது அருமையிலும் அருமை. திருவள்ளுவர் உலகு புகழ் கவிஞர். இவர் அருளிய திருக்குறள் உலகப் பொதுமறை. அதனாலன்றோ பாரதியார் "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து” என்று மனங்குளிரப் பாடுகின்றார். திருவள்ளுவரைப் பெற்றமையால் தமிழ்நாடு பெற்றபுகழ் வான்புகழ். வான்புகழ் என்றால் இலக்கண மரபுப்படி மிகச் சிறந்த புகழ் என்று பொருள் கூறுவர். எனினும், நிலமனைத்தும் வானால் சூழப்பெற்றுள்ளது. வான் புகழ் என்றால், வானகம் பரவியுள்ள நிலவுலகமனைத்திலும் நின்று நிலவும் புகழ் என்றும் கொள்ளலாம். மேலும், வானுலகம் போற்றும் புகழ் என்றும் பொருள் கொள்ளலாம். இத்தகு சிறந்த புகழ் திருக்குறளுக்கு எப்படி வந்தது?

இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, திருக்குறள் தோன்றயது. திருக்குறள் தோன்றிய ஆண்டிலும் அதற்கு முன்பும் உலக மொழிகளில் திருக்குறள் போன்ற சிறந்த நூல் ஒன்றும் தோன்றவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாதி, இன, மொழி, சமய வேறுபாடுகளைக் கடந்த ஒரு பொது நூல், காணும் ஆற்றல் தமிழகத்திற்கே இருந்தது. உலகில் மக்களாகப் பிறந்தோர் பேசும் வேறு எம்மொழியிலும் இத்தகையதொரு நூல், திருக்குறள் தோன்றுவதற்கு முன்பு தோன்றியதில்லை. ஏன்? அதற்குப் பின்பும் இதுவரையிலும் கூட திருக்குறளுக்கு இணையான ஒரு நூல் தோன்றவில்லை.

நூல் தோன்றிய காலத்தின் தொன்மைமட்டும் நூலின் சிறப்புக்கு முற்றிலும் காரணமாகமாட்டா. நூல் நுதலும் கருத்துக்களும், சிறப்புடையனவாக இருத்தல் வேண்டும். இரட்டுற மொழிதலும், மயக்க நிலையின் பாற்பட்டனவும் கூட இல்லாமையும் வேண்டும். திருக்குறளில் இரட்டுற மொழிதலும், பயனில் சொற் கூறுதலும், ஒழுக்கக் கேடுகள் எனக் குறிப்பிடப் பெறுகின்றது. திருக்குறள் காட்டும் ஒழுக்க நெறிகளை வாழ்க்கையில் கடைப்பிடித்தல் மிகவும் எளிதேயாகும். திருக்குறள் வாழ்க்கை முறையை திருக்குறள் காட்டும் ஒழுக்க நெறி முறைகளை ஏற்றுக் கொள்ளுதல் சாத்தியமான ஒன்றேயாகும்! திருக்குறள் கூறும் ஒழுக்க நெறிகள் கால எல்லைகளுக்குக் கட்டுப்பட்டனவல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காட்டிய நெறிமுறைகளே யாயினும் இன்னும் கடைப்பிடிக்கக்கூடியனவாக உள்ளன. மேலும், திருக்குறள் ஒழுக்க நெறிகள், சாதி, இனம், பால், சமயம், மொழி, பருவம் ஆகியனவற்றால் மாறுபடக் கூடியனவல்ல. ஒரே மாதிரி ஒழுக்க நெறியை எடுத்துக் கூறப் பெற்றுள்ளது. திருக்குறள் ஒழுக்க நெறி உலகப் பொதுநெறி. மனிதகுலத்தின் வாழ்க்கை நெறி.

திருக்குறள் காட்டும் ஒழுக்க நெறிகள் கற்பனையில் தோன்றியனவல்ல. நடைமுறைப்படுத்த முடியாத அளவு அருமையுடையனவல்ல. மிகமிக எள்ளிய ஒழுக்க நெறிகளேயாம். உலகியலுக்கும், உடலியலுக்கும், உயிரியலுக்கும், மாறுபட்ட எந்த ஒன்றையும் திருவள்ளுவர் ஒழுக்க நெறியாக வலியுறுத்தவில்லை. திருக்குறள் ஒழுக்க நெறிகளை நடை முறைப்படுத்த முடியவில்லை என்றால், மனிதர்களின் தரம் வீழ்ந்திருக்கிறது என்பது கருத்தேயொழிய அது வலியுறுத்தும் நெறி கடுமையானதல்ல. மேலும், திருக்குறள் ஒழுக்க நெறிகளை எடுத்துக்காட்டும் பொழுதும் இயைந்தவாறு காட்டுவதானால், சிறந்து விளங்குகிறது. நடைமுறைப்படுத்த முடியாத ஒழுக்க நெறிகள் எந்த ஒன்றினையும் திருவள்ளுவர் ஏற்றுக் கொள்ளவில்லை. கற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தவும் இல்லை. அதனாலும் திருக்குறளின் புகழ் சிறந்து விளங்குகிறது. மேலும், ஒழுக்க நெறிகளைக் காட்டும்பொழுதும் இயைந்தவாறு, ஒன்றுக்கொன்று தொடர்பாக முறைப் படுத்திக் கூறியிருப்பது அறிந்தின்புறத்தக்கது. அதுமட்டுமல்ல, உலகியலில் நோய்பற்றிக் கூறுவோர் பலருண்டு. நோயாளி கூட கூறிவிடுவான். ஆனால் நோயின் காரணத்தைக் கண்டறிந்து சொல்லுபவர் இல்லை. அப்படியே ஒரு சிலர் கண்டறிந்து சொன்னாலும் நோய் நீக்கத்திற்குரிய மருந்தினைத் தெளிவாக, அறிவியல் அடிப்படையில் காட்டுவதில்லை. திருவள்ளுவர் நோய் கண்டு காட்டினார். நோயின் காரணத்தையும் கண்டு காட்டினார். நோய் நீக்கத்திற்குரிய வழிமுறைகளையும் கண்டு காட்டினார். ஐயந்திரிபரக் காட்டி யுள்ளார். மனிதன் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகிறான். இதற்குக் காரணம் அவனுடைய மனமே. மனத்தில் தூய்மை இருந்தால் அதுவே அறம்-பேரறம், மருவுலகில் பல்வேறு அறங்களைச் செய்வதைவிட மனத் தூய்மையைப் போற்றி வளர்த்தால் சிறந்த அறம் என்று குறிப்பிடுகின்றார். அதுமட்டுமின்றி மனத்துாய்மையின்றிச் செய்யப்பெறும் வேறு பல அறங்களை வெறும் ஆரவாரத்தன்மையன என்றும் மறைமுகமாகக் கண்டிக்கின்றார். இந்த மனத்தூய்மையை அறிவாலும், அன்பினாலும் பெறமுடியும் என்று திருக்குறள் வழி காட்டுகின்றது.

திருக்குறள் ஓர் அறிவுநூல். நம்பிக்கையின் அடிப்படையில் திருவள்ளுவர் எந்த ஒன்றையும் வற்புறுத்தவில்லை. கடவுள் வழிபாட்டதிகாரத்திலும்கூட உலக இயக்கத்தின் பாற்பட்ட அறிவுணர்வின் அடிப்படையிலேயே திருக்குறள் கடவுள் வாழ்த்து தோன்றியுள்ளது. திருக்குறள் காட்டும் அறிவு வெறும் நூலறிவு அல்ல. ஆனாலும், கற்றல் கேட்டலின் மூலம் பெறும் அறிவைத் திருக்குறள் மறுக்கவில்லை. திருக்குறள் அறிவு என்று இறுதியாக எடுத்துக்கொள்வது. வாழ்க்கையின் அனுபவத்தையொட்டிய உணர்வுகளேயாகும். தீமையினின்றும் விலகி நன்மையின்பால் செலுத்துகின்ற அறிவையே அறிவு என்று திருக்குறள் போற்றுகின்றது. தீமைகளுக்குப் பிறப்பிடமாகிய அன்பின்மையை திருக்குறள் கண்டிக்கிறது. ஏன்? அறிவின் பயனே அன்பு காட்டுதல். அன்பினால் வளர்தலும் வளர்த்தலுமே அறிவினது ஆக்கம் என்று திருக்குறள் பேசுகின்றது.

"சென்றவிடத்துச் செலவிடா தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்பது அறிவு."

"அறிவினால் ஆகுவதுண்டோ பிரிதின் நோய்

தன்னோய்போல் போற்றாக் கடை"

என்ற குறட்பாக்கள் நினைந்தின்புறத்தக்கன. தமிழக சமய நெறி இவ்விரு சிந்தனைகளின் அடிப்படையிலேயே தோன்றி வளர்ந்தது. "நன்றின்பால் உய்ப்பது அறிவு" என்ற திருக்குறள் அடியின் "நன்றுடையானை தீயதிலானை' என்ற திருஞான சம்பந்தர் அருள்வாக்கு ஒப்புநோக்கி உணரத்தக்கது. "அறிவினால் ஆகுவதுண்டோ" என்ற திருக்குறளும் "அன்பே சிவம்" என்ற திருமூலர் வாக்கும் ஒப்புநோக்கி இன்புறத்தக்கன. இன்றைய தமிழர் சமய வாழ்வில் இந்த அன்பும், நன்றும் மீதுர்ந்து வளரவில்லை என்பது வருத்தத்திற்குரியது. திருக்குறள் ஓர் அறிவு நூல். முழுதுரிழ் அறநூல். உலகப் பொதுமறை. நேற்றும் இன்றும் என்றும் வாழ்க்கைக்குப் பயன்படும் பொதுமறை. அதன் புகழ் வான்புகழ்.

3

முத்துமொழிகள்

* * *

1. வள்ளுவரின் நகைச்சுவை

உயிரினம் இன்பத்தை நாடி ஏங்குகிறது. பெரும் சிற்றின்பங்களை அனுபவித்து இன்பப்படுவதில் நிறைவு பெறுகின்றது. இன்பம் என்று கருதி அனுபவிக்கும் சிலவற்றால் துன்பம் நேரிடுவதுமுண்டு. எதிர்வரும் துன்பத்தைப்பற்றி எண்ணிப் பார்க்க உயிரினங்கள் நினைப்பதில்லை. எண்ணாமல் செயல் நடைபெறுகின்றது. சிற்றின்ப வேட்கை பெருந்துயரில் கொண்டு போய் நிறுத்துகின்றது. மனிதன் மற்றெல்லா உயிரினங்களிலும் பார்க்க உயர்ந்தவனாக மதிக்கப்படுகிறான். உடைமையைப் பொறுத்தே உணர்ச்சியுள்ளது. பணப்பெருக்குடையவர்களும், கல்விச் சிறப்புடையவர்களும் செல்வாக்குச் சிறப்புடையவர்களும் பதவியுயர்வுடையவர்களும் உயர்த்திப் பேசப்படுவதை நாம் உலகியலில் காணமுடிகிறது.

பொதுவாக-மனித இனம் சிறப்பாக மதிக்கப்படுவதற்கு அதன் சிந்தனா சக்திதான் காரணம். பகுத்தறிந்து, பண்புடன் வாழத் தெரிந்த இனம் மனிதஇனம். தீயதை விலக்கி நல்லதை நாடி-அறத்தைப் போற்றி-மறத்தைக் கடிந்து- அன்பை நாடி-பண்பை அழித்து-அறிவைப் பேணி மடமையை அழித்து- துன்பம் நீக்கி-இன்பமளித்து வாழ மனிதனுக்கு நெறி காட்டுவது அவனது சிந்தனைச் சிறப்புத்தான்.

சிந்தனைச் சிறப்புமிக்க மனித குலத்தில் பண்டு முதலே கற்றோரும்-மற்றோரும் போற்றுமளவுக்கு வாழ்ந்து, வாழ்க்கை நெறிகண்ட இனம் நமது தமிழினம். மனிதன் கண்ட கண்டபடி புலனைச் செலுத்திச் சீரழிந்து கொண்டிருந்த காலத்தில் வாழ்வைப் பற்றிச் சிந்தித்துச் சிறப்பு மிகுந்த தத்துவங்களை வாரி வழங்கிய இனம் தமிழினம். காலத்தாலும் கருத்தாலும் மூத்த உலக வரலாற்றில் தனக்கென ஒர் இடத்தைப் புனிதமான ஒரு நிலையைப் பெற்ற பெரும்பேறு நமக்கு உண்டு. ஆனால் இத்தகு தகைமையை நினைந்து இறும்பூ தடைவதில் காலத்தைப் போக்கியதாலே தான் இன்றுள்ள இழிநிலை நமக்கு வந்துள்ளது. முந்தையத் தமிழன் வாழ்க்கையைப்பற்றிச் சிந்தித்தான்; இன்றுள்ள நாம் வாழச் சிந்திக்கின்றோம். எப்படியாவது வாழ்ந்து இந்த வாழ்க்கையை முடித்து விடுவோம் என்று நினைக்கிறோமே தவிர எப்படி வாழவேண்டும் என்று நினைக்கின்றோமில்லை. குறிக்கோள்களோடும், கொள்கைகளோடும் வாழ்வை வரையறுத்து வையத்துள் வாழ்வாங்கு வாழ எண்ணுகிறோம், இல்லை, இவ்வாறு எண்ணிய இனத்தின் வழித்தோன்றல்கள் - எப்படி யாவது வாழ-எண்ணாது வாழ முனைவது வருத்தத்தைத் தருகிறது. எண்ணிச் சிந்தித்து வாழும் சமுதாயத்தை உருவாக்க அவாவுறவேண்டும். நமது மொழிவழி வந்த நாகரிகத்தைப் பேணிக்காக்க விரும்புதல் வேண்டும். பேரின்ப நிலைபெற உழைக்கும் உயர்ந்த உள்ளங்களை உருவாக்க வேண்டும். எங்கும் எல்லா உயிர்களிடத்தும் எப்போதும் அன்பு செலுத்தி, அறத்தால் வருவதே இன்பம் என்று கருதி அருள் வாழ்வு வாழவேண்டும்.

எங்கும் அன்பைச் செலுத்த மனத்திற்குப் பக்குவம் வேண்டும். மனோபக்குவம் இல்லாது அன்பை செலுத்துவதென்பது முடியாத காரியம். அப்படி அன்பு செலுத்துவதாக இருந்தாலும் அது வெறும் நடிப்பாகவே முடியும். நிறைந்த நடிப்பு வாழ்க்கை வாழ்வதிலும் குறைந்த நல்ல வாழ்க்கை வாழ்வது சிறப்பு. மனத்தைப் பக்குவப்படுத்துவதற்கு மனத்தில் உள்ள குழப்பங்கள் குறையவேண்டும். சினம், பொறாமை, பொச்சரிப்பு, சந்தேகம், சபலம் முதலியன நீங்கத் தொடங்கினால் மனோபக்குவத்திற்கு வேண்டிய அடித்தளம் அரும்ப ஆரம்பிக்கும். மனோபக்குவ அடித்தளத்தைப் பெற ஒரேயொரு வழிதான் உண்டு-அதுவே வழிபாடு. வழிபாடு மனத்தை நல்வழியில் ஆற்றுப்படுத்த எழுந்த சாதனம். இலட்சியமற்று இங்குமங்கும் அலைந் தலைந்து அல்லலுறும் ஆன்மாவை உருக்கிக் கசியவைத்து நன்னெறிப்படவைக்கும் பேராற்றல் வழிபாட்டிற்குண்டு.

இறைவழிபாடு இன்பங்கள் எல்லாவற்றிற்கும் மேலான இன்பத்தை-பேரின்பத்தை நல்குகின்றது. கவலை தோய்ந்த கருத்தைக் களிப்படைய வைக்கிறது. பைத்திய நிலையைப் பக்குவப்படுத்திப் பயனடையச் செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக சிரித்துவாழவும்-கொடுத்து மகிழவும் போதிக்கிறது. சிரிப்பதற்காக மனிதன் பலதுறைகளை நாடியோடித் திரிகிறான். நாடகத்திலும் திரைப்படத்திலும் கால்கடுக்க நின்று ஒன்றேகால் ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிச் சிரிப்பை அனுபவிக்கிறான். சினிமாவிலே டணால் தங்கவேலுவின் சிரிப்பை, இராதாவின் சிரிப்பைக் கண்டு ஆனந்திக்க மழையிலும் வெய்யிலிலும் நின்று உழல்பவர்கள் எத்தனைப் பேர்! காசில்லாமல்-செலவில்லாமல் கருத்தைக் கனிய வைத்துச் சிரிப்பிலாழ்த்திப் பேரின்பத்தை நல்கும் வழிபாட்டு நெறியினைப் பின்பற்ற மனிதராகிய நாம் நினைக்க வேண்டும்.

உலகியலிலே சிரிப்பதற்கு எவ்வளவோ நிகழ்ச்சிகள் உண்டு. நாள்தோறும் நடைபெறும் சம்பவங்கள் நம்மைக் கைகொட்டி நகையாட வைக்கின்றன. நம்மிற் சிலர் உலகத்தைப் பார்த்துச் சிரிக்கத் தெரியாதிருக்கிறோம். தலைசிறந்த தத்துவப் பேராசிரியர்கள் உலகவாழ்க்கையிலிருந்தே சிரிப்புக்கிடமானவைகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அவர்கள் காட்டிய சிரிப்புக்கிடமான நிகழ்ச்சிகள் சிந்தனைக்கும் விருந்தளிக்கின்றன். வாழ்வைப் பார்த்து-வாழ்க்கையைப் பார்த்துச் சிந்தித்த வள்ளுவப் பெருந்தகை ஒரு தத்துவக் குயில். அவரொரு நிகழ்ச்சியை நமக்குக் காட்டி நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்வதைப் பாருங்கள்.

ஒரு கடைவீதியிலே ஒருவன் நடந்து சென்று கொண்டிருக்கிறான். தேநீர்க்கடை ஒன்று குறுக்கிடுகிறது. வைத்திருந்த பணத்துக்கு ஏதோ பலகாரம் வாங்குகிறான். வழிநெடுக அதைக் கொறித்துத் தின்று கொண்டே போகிறான். இடையில் வள்ளுவர் எதிர்ப்படுகிறார். அவர் அவனை மறித்து "தம்பீ! உனக்கு உயிர் இருக்கிறதா?” என்று கேட்டார். அவன் திகைத்து - வெலவெலத்து - வேர்த்துக் கொட்ட விழித்தபடி நின்றான். சற்று நேரம் பொறுத்து "என்ன ஐயா கேள்வி இது? நான் நடக்கிறேன், மூச்சு விடுகிறேன். முறுக்குத் தின்கிறேன் என்னைப் பார்த்து - உனக்கு உயிர் உண்டா? என்று கேட்கிறீர்களே" என்றான். "சரியப்பா, நீ அந்தக் கடையிலே முறுக்கு வாங்கியபொழுது, இரண்டு வேளையாகச் சாப்பிடாமல் வாடிய வதங்கிய நிலையில் நின்றானே ஒரு ஏழை! நின்றதோடல்லாமல் பசிக்கிறது என்று கெஞ்சிக்கேட்டானே! நீ வைத்திருந்த முறுக்கில் பாதித் துண்டையாவது அவனுக்குக் கொடுத் திருக்கக்கூடாதா? நீ அப்படிக் கொடுக்காது வந்ததுதான் என்னைச் சந்தேகிக்க வைத்தது" என்றார் வள்ளுவர். இதிலுள்ள நகைச்சுவையையும் பகுத்துண்டு பல்லுயி ரோம்பும் பண்பையும் நாம் நினைத்துச் சிரிப்பதோடு சிந்திக்கவும் வேண்டும்.

நமது சிந்தனை அருளார்ந்த சிந்தனையாக-அன்புவழிச் சிந்தனையாக மிளிர வேண்டும். அப்பொழுதுதான் நமது அகத்திலேயுள்ள ஆத்திரம் கொதிப்புப் போன்றவை அடங்கி-ஆன்மீக வாழ்வு பெற வழி ஏற்படும். அகத்தின் ஆத்திரமும், பொறாமை, எரிச்சல் போன்ற தீய உணர்வுகளும் களையப்பட வேண்டும். உலையிலே வெந்து கொண்டிருக்கும் அரிசி பொங்கினால், ஒரு கரண்டி மூலம் கிண்டிக் கிளறிவிட்டால் அவ்வரிசி நன்றாக நின்று வேகும். இன்றேல் அரிசி வேகஉதவும் நீர் வெளியாவதோடு, சோறாக்க உதவிய நெருப்பையும் அவித்துவிடும். அதேபோல மனிதனின் ஆத்திர உணர்ச்சி பொங்கி வராதபடி தடுக்கப்படல் வேண்டும். இன்றேல் ஆத்திரத்தால் அறிவு மங்க-செயலாற்றத் தகுந்த ஆற்றலும் அழிந்து-காரிய சாதனைக்குரிய அடிப் படைச் சூழலும் கெட்டுவிடும்.

ஆகவே! இனங்களில் உயர்ந்து சிறந்து போற்று தலுக்குள்ளாகி யிருக்கும் மனித இனம் எண்ணிச் சிந்தித்து அருளார்ந்த வாழ்வுவாழ வேட்கைகொள்ள வேண்டும். அன்பு வாழ்வுக்கும் அறவாழ்வுக்கும் வழி வகுத்துத் தர வழிபாடு சாலச் சிறந்தது. வழிபாட்டின் மூலம் அமைதியையும் பேரின்பப் பேற்றையும் பெற்று மனிதரில் மாணிக்கங்களாகத் திகழ முடியும். உலக உத்தமர் காந்தியடிகள் கூட வழிபாட்டினாலும் வழிபாட்டை ஒட்டிய சிந்தனைகளினாலும் சிறப்புற்றார்.

உலகியலில் சிந்தனைக்கு வித்திடக்கூடிய சிரிப்பை அனுபவித்து ஆன்ம நேயத் தொண்டுகளைச் செய்ய முனைய வேண்டும். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பு நம் தமிழினத்துக்குப் பழமையானது-அது தொன்றுதொட்டு வழிவழிவந்த ஒரு தன்னிகரற்ற தத்துவம். அந்தத் தத்துவத்துக்கு மதிப்பளித்து - என்றும் அன்பாய் வாழ வேண்டும்.

4

திருவள்ளுவர் காட்டும் அரசியல்

* * *

1. திருக்குறட் கொள்கை

தமிழின் சிறப்பு

தமிழ் காலத்தால் மூத்தது; கருத்தாலும் மூத்தது, தமிழ் வாழ்க்கையோடு இயைந்து வளர்ந்த மொழி. வாழ்க்கையை வளர்த்த மொழி. தமிழினம் உலகின் வரலாற்றுக் காலந்தொட்டே சீருடனும் சிறப்புடனும் வாழ்ந்து வந்திருக்கிறது. தமிழினத்தின் கருத்துக்கள் நம்பிக்கை, நல்வாழ்க்கை இவைகளுக்கு இயைபுற அமைந்தன. வரட்சித்தன்மையுடைய கற்பனைகளோ, இசைவான நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டவைகளோ, தன்னிச்சையான மனப் போக்குகளின் படைப்புகளோ தமிழில் இல்லை.

தமிழ், மொழியாக மட்டும் வளரவில்லை. நாகரிகம், பண்பாடு, சமயம் ஆகியவற்றையும் தழுவி வளர்ந்திருக்கிறது. தமிழ் வாழ்க்கையை ஏனோ தானோவென்று கணிக்கவில்லை. வாழ்க்கையை வாழ்க்கையாகவே பார்க்கிறது. ஏன்.? வையத்துள் வாழ்வாங்கு, வாழ்தல் தமிழ்தந்த பாடம். இன்றா? நேற்றா? இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயாம். உலகமொழி என்று பாராட்டப்படுகின்ற ஆங்கிலத்திலும் மொழி பேசும் மக்களின் வாழ்க்கைக்கு இலக்கணமில்லை. இந்திய நாட்டின் இணைப்பு மொழியாக செயற்கைக் கோலம் தாங்கும் இந்தியிலும் வாழ்க்கைக்கு இலக்கணமில்லை. ஏன்? இந்திய நாட்டின் சமயத்திற்குரிய மொழி என்றும், பாசம் ஒன்றின் காரணமாகவே சிலரால் பாராட்டப்பெறும் சமஸ்கிருதத்தில் கூட வாழ்க்கைக்கென்று முறையான இலக்கணமில்லை. தமிழில் எழுத்து, சொல், பொருள் என்ற அமைப்பில் இலக்கணத்தை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் இயற்றித் தந்துள்ளார். தமிழிலக்கிய வழக்கில் பொருள் என்றால் பயன் என்றே கொள்ளப் பெறும். மொழியின் பயன் நல்வாழ்க்கையேயாம். ஆதலால் தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் தனிமனிதன், வாழ்க்கைத் துணையுடன் கூடி வாழும் மனையற வாழ்க்கைக்குரிய நெறிமுறைகளை அகத்திணை இயலிலும், அவனே சமுதாயத்துடன் தொடர்பு கொண்டு வாழ்வதற்குரிய நெறிமுறைகளை புறத்திணை இயலிலும் இலக்கணமாக வகுத்துச் செய்துள்ளார். இத்தகு சிறப்புடை மரபில் உலகுபுகழ் திருக்குறள் தோன்றிற்று.

திருக்குறளின் சிறப்பு

திருக்குறள் பயில் தொறும் இன்பந்தரும் நூல். ஒரு முழுதுறழ் அறநூல். இனிய தமிழ், எளிய நடை, மனம் கொளத்தக்க குறுகிய அளவு. இருபொருள் படாத தெளிந்த நடை. ஐயத்தின் நீங்கிய துணிபு, இனம், மொழி, மதம் சார்பற்ற தன்மை, காலவெள்ளத்தில் அழியாத நீதி, ஓரின ஒழுக்கம் பேசாமல் உலக ஒழுக்கம் பேசிய ஒட்பம், வீட்டையும், நாட்டையும் பிணைத்த பெட்பு, இருவகைக் காதலையும் எடுத்துக் காட்டிய இனிய சால்பு. குற்றங் காட்டுதல்-குற்றம் கடிதல், நன்றின்பால் உய்த்தல் ஆகியன நிகழ்த்தும் ஆற்றல், இப்படி எத்தனை எத்தனையோ சிறப்புகள், விரிப்பின் பெருகும்; தொகுப்பின் எஞ்சும்.

திருக்குறள் வளர்க்கும் முறை

தனிமனிதன் குடும்பம் சமூகம் சமுதாயம் உலகு என்ற முறைவைப்பை வரலாற்றுப் போக்கு காட்டுகிறது. இந்த முறைவைப்பின் பல்வேறு படிகளில் உள்ள பாத்திரங்களை முறைப்படி வளர்த்து, ஒன்றுக்கும் பிறிதொன்றுக்கும் இடையில் தொய்வில்லாமல், ஒன்று பிறிதொன்றின் நலனுக்கு இடையூறு இல்லாமல் வளர்த்து வழி நடத்தும் பெருமை திறக்குறளுக்கே உரியது. திருக்குறள் தனிமனிதனை நம்புகிறது; முற்றிலும் முழுதும் நம்புகிறது. அவனே மனித சமுதாயத்தை வரலாற்றை இடையீடின்றி எழுதும் பாத்திரம் என்று நம்புகிறது. அவனை அகத்தாலும் புறத்தாலும் வளர்த்து உறுதிப்படுத்த-நிலைநிறுத்த திருவள்ளுவர் முயற்சி செய்கின்றார்.

சிற்பிக்குச் சிலை வடிப்பதே நோக்கம். உழவனுக்குக் காடுகளைக் கழனியாக்குவதே நோக்கம். திருவள்ளுவருக்கு மனிதனை-மனித சமுதாயத்தை வளர்ப்பதே நோக்கம். திருக்குறளில் இலக்கிய இன்பம் உண்டு கவிதை நலமுண்டு; எதுகை மோனைகள் ஏராளம்; அணியின்பங்கள் ஆயிரமாயிரம். எனினும் இவை யனைத்தும் மனிதனை முழுமைப்படுத்துகின்ற குறிக்கோளுக்குத் துணையேதவிர அவையே மேம்பட்டு விளங்கவில்லை. மனிதனை வளர்க்கும் நோக்கமே திருக்குறளில் நிறைவுற்று வெளிப்பட்டுக் காட்சி அளிக்கிறது. தனிமனிதனைத் தம்நிலை ஒழுக்கத்தில் ஈடுபடுத்தி, வளர்த்து, துணையுடன் கூட்டி, அவ்வழி உலகுடன் இணைத்து, அவ்வழி இறையின்பத்துடன் இணைத்துப் புகழ் உண்டாக்குகிறது.

உயிர்க்குறுதி

தமிழ்மரபு உயிர் உண்மையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இன்று வரையில் பிறமொழி இலக்கியங்கள் உயிரைப்பற்றித் தெளிவாக விளக்க முடியாமல் அல்லற்படுகின்றன. திருக்குறள் உயிர் உண்மையை ஒத்துக் கொள்கிறது. உயிர் தோற்றமும், அழிவும் இல்லாத நிலையான ஒன்று என்பது திருக்குறள் முடிபு. இதனை “மன் உயிர்" என்னும் சொல்லாட்சியால் உணரலாம், இதனை மேலும் அரண் செய்ய எழுபிறப்பு உண்மை துணை செய்கிறது. அது துன்பத் தொடக்கிலிருந்து விடுதலை பெற்று நல்லின்ப வாழ்க்கை பெறுதற்குறியதென்று காட்டுகிறது. உயிர் அறிவுப் பொருள் என்றும் நம்புகிறது. ஆனால் இயல்பான அறிவன்று. உயிர் அறிவுபெற்று விளங்குதற்குரிய பொருள். அறிவே உயிர்க்கு முதல்துணை என்பது திருக்குறள் முடிபு. அதனால் "அறிவுடையார் எல்லாம் உடையார்” என்று பேசுகிறது. இந்த அறிவினைப் பெறுதற்குரிய வழி வகைகளையும் ஐயத்திற்கு இடமின்றி அறிவுறுத்தலோடு ஆணையாகவும் கூறுகிறது.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

என்பது குறள். இத் திருக்குறள் திறனாய்வுக்குறிய நிறைந்த செய்திகளைக் கொண்டது. உடல் நலமில்லார் மருத்துவரிடம் காட்டுவர். மருத்துவர் உடலினைச் சோதனை செய்து உடலில் நலம் விளைவித்தற்குரிய இன்னின்ன உயிர்ச்சத்துக்கள் இல்லை என்று எடுத்துக் கூறுவர். நலம்பெற விரும்புவோர் தம் உடலில் இல்லாத உயிர்ச்சத்துக்களைப் பெறுதற்குரிய உணவுப் பொருள்களையும் மருந்துகளையும் தேடி உண்பர். நலம்பெறும்வரை உண்பர். அதுபோல ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே சில உயிர்க்குறைகள் (குணக்குறைகள்) உண்டு. இந்த உயிர்க்குறைகளை இன்னவை எனத் தெளிந்து அக்குறைகளை நீக்கி நலந்தரக் கூடிய நல்ல நூல்களைக் கற்க வேண்டும். அக்குற்றங்கள் நீங்கி நலம் பெறும் வரை கற்க வேண்டும். இக்கருத்தினைக் “கசடறக் கற்பவை" என்ற சொற்களின் மூலம் விளக்குகின்றார்.

மனிதன் புறத்துறுப்பால் காணப்படுபவன் மட்டுமல்லன் புறத்துறுப்பால் மட்டும் மக்கள் போல் தோற்றம் அளிப்பவர்களை "மக்களே போல்வர்" என்று கிண்டலும் கேலியும் செய்கிறது. இந்த இரு சொற்களில் திருவள்ளுவர் வெளிப்படுத்தும், வேதனை கலந்த போலி மனிதனை விமர்சனம் செய்யும் உணர்வு வால்டேர், இங்கர்சால் போன்றவர்களின் உணர்வைவிட விஞ்சி நிற்கிறது என்பதை மறுக்க முடியாது.

"புறத்துறுப்பெல்லாம் எவன் செய்யும்?" என்பது திருக்குறளின் வினா. புறத்துறுப்புக்களைப் பொருளுக்கு உரியனவாகவும் புகழுக்குறியனவாகவும் ஆக்குதல் அகத்தியல் வளமையேயாம். உடல் வளத்திற்கு அடிப்படை உணவு, செரித்தல், வலிமை ஆதல்; அகத்தியல் வளத்திற்கு அடிப்படைக் கருத்து அனுபவமும், ஒழுக்கமுமாம்.

அன்புடைமை

அறிவைத் திருவள்ளுவர் கருவியாகவே கருதுகிறார். "அறிவு அற்றங் காக்கும் கருவி" என்பது குறள், அறிவின் உயிர்ப்பும் பயனும் அன்பேயாகும்.

அறிவினா லாகுவ துண்டோ பிறிதின்நோய்

தன்னோய்போல் போற்றாக் கடை

என்பது குறள். திருவள்ளுவர் உயிரை எல்லாவற்றிலும் சிறந்ததாகக் கருதுகிறார். "உயிரினும்" என்று குறிப்பிடுவதே இதற்குச் சான்று. இந்த உயிர் தங்கியிருந்து இயங்குவது உடலிலேயாம். இதனை "உடம்போடுயிரிடை நட்பு" என்று கூறும். ஆயினும் உயிர் அமைப்பாலும் தோற்றத்தாலும் உடம்பிடைத் தங்கி இருந்தாலும் அன்பினில் உயிர் நிலையைப் பொருத்திக் கொள்ளுமாறு வள்ளுவம் வழி நடத்துகிறது. உடலிடை மட்டும் உயிர் தங்கிக் கிடக்க வாழ்தல் விலங்கியல் வாழ்க்கை. அன்பினில், குறிக்கோளில், சால்பில் உயிரை நிறுத்தி வாழ்தல் வாழ்வாங்கு வாழும் வாழ்க்கையாகும்.

அரசியல் நீதியில் உயிரை நிறுத்தி வாழ்ந்த பாண்டியன் நெடுஞ்செழியனும், தெய்வக் கற்பில் உயிரை நிறுத்தி வாழ்ந்த பாண்டிமாதேவியும், இன்ப நட்பில் உயிரை நிறுத்தி வாழ்ந்த பிசிராந்தையாரும், கொடையில் உயிரை நிறுத்தி வாழ்ந்த குமணனும் தமிழன நாகரிகத்தின் காப்பில் உயிரை நிறுத்தி வாழ்ந்த அப்பரடிகளும் எண்ணத்தக்கவர்கள். ஆதலால், உயிருடைமைக்கும் இன்மைக்கும் அடையாளம் உண்ணலும் ஓடித்திரிதலும் அன்று.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு

என்பது திருக்குறள், எலும்பு போர்த்த உடம்பு யாதொன்றிற்கும் பயன்படாது. அதுமட்டுமின்றி நாற்றத்தால் மற்றவர்க்கும் கேடு செய்யும். ஏன்? தோற்றத்தாலேயே கண்டாரை வெருட்டும். அதுபோல அன்பில்லாத மனிதர்களால் அவர்களுக்கும் மனித உலகத்திற்கும் பயனில்லை. பயனில்லாத தோடன்றித் தீமையும் விளைவிக்கும்.

உடைமையியல்

இன்றைய மனித சமுதாயத்தில் உடைமை உணர்வு மிகுதியும் மேலோங்கி நிற்கிறது. அதாவது நிலம், பொன், பொருள் ஆகியவைகளைத் தனிமனிதர்கள் தத்தம் உடைமையாக்கிக் கொள்ளப் போரிடுகின்றனர். வெற்றி பெற்ற பின்பு உழைப்பின் வழி வாழாமல் உடைமைகளையே சார்ந்து வாழத் தலைப்படுகின்றனர். மனிதனுக்கு ஏவல் செய்ய வேண்டியன உடைமைகள். ஆனால் உடைமை களுக்கே மனிதர்கள் அடிமைகளாகி விடுகின்றனர். இங்ஙனம் மனிதகுலத்தின் ஆற்றலை, பண்பை அரித்து அழிக்கும் உடைமைகள் மீது சான்றோர்களுக்கு வெறுப்பு ஏற்படுவது இயற்கை. இந்தவகையில் கார்ல் மாக்ஸ் மாமுனிவரின் சிந்தனை ஏற்றுக்கொள்ளத் தக்கது. பாராட்டத்தக்கது. அவர் "உழைக்காதவனுக்கு உண்ணவும் உரிமையில்லை" என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றார். ஆனால் இதே கருத்தினை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருக்குறள் கூறியது என்று எண்ணி மகிழ்வாரில்லை.

உடைய ரெனப்படுவது ஊக்கம் அஃதிலார்

உடையார் உடையரோ மற்று.

உள்ள முடைமை உடைமை பொருளுடைமை

நில்லாது நீங்கி விடும்.

என்பன போன்ற திருக்குறள்கள் புதுமையும் புரட்சியும் நிறைந்த கருத்துக்களைத் தாங்கி நிற்கின்றன.

பொருளியல்

உலகியல், பொருளியல் வலையில் பின்னப் பெற்றுச் சுற்றி சுழன்று வருகிறது. உலகியலே பொருளியல், ஏன்? பொருளியலே உலகியலும்கூட "பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை" என்ற பிறிதொரு கருத்துக்கு இடமின்றித் தெளிவாகத் திருக்குறள் பேசுகிறது. ஆனால் எது பொருள் என்பதில் கருத்து வேறுபாடு உண்டு. இன்றையச் சூழலில் பலர் பொருள் என்றால் நேரிடையாக நுகர்வதற்குப் பயன்படாமல் நாணயமாக, பொன்னாக, மணியாக இருப்பனவற்றையே பொருள் என்று கருதுகின்றனர். நுகர்வதற்குரியவை அல்லாதவை எங்ஙணம் பொருளாக முடியும்? துய்த்தற்குரியவையே பொருளாகும். "யாஅம் இரப்பவை பொன்னும் பொருளும் போகமும் அல்ல" என்ற பரிபாடல் அடி பொன்னையும் பொருளையும் பிரித்து உணர்த்துவது உணரத்தக்கது. தீ ஏதாவது ஒரு பொருளை பற்றுக்கோடாகக் கொண்டே இயங்குகிறது. அதுபோல உயிர் யாதானும் ஓர் உடம்பினைப் பற்றுக் கோடாகக் கொண்டே இயங்கும். உடலினுக்கு எரிபொருள்களாக உணவு முதலிய பண்டங்கள் தேவை. அஃதின்றேல் உடலியக்கம் ஒடுங்கும். இதனைப் "பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை” என்று தெளிவாகத் திருக்குறள் எடுத்துக் கூறுகிறது. இப்பொருள்களை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுவதாலும், கால வெள்ளத்தில் அழியாமல் பொருள்களின் மதிப்பைத் தாங்கித் திரும்ப அப்பொருள்களைப் பெறுதற்குக் கருவியாக இருப்பதாலும் உபசார வழக்கில் பொன்னையும் பொருளெனப் போற்றினார்கள்.

இத்தகு வாழ்க்கைக்குப் பயன்படும் பொருளியலைப் பற்றித் திருக்குறள் தெளிவான கருத்தை மேற்கொண்டிருக்கிறது. இன்றைய பொருளியல் சாத்திரங்கள் பக்கம் பக்கமாக விரித்துரைக்கும் பொருளியல் சித்தாந்தங்களைத் திருக்குறள் மிக எளிமையாக நான்கைந்து சீர்களில் விளக்குவதில் வெற்றிபெற்று நிற்கிறது.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு

இந்த ஒரு திருக்குறள் பொருளியல் தத்துவத்தின் சிறந்த விளக்கமாக அமைந்திருக்கிறது. உலகம் வளர்ந்து கொண்டிருக்கிறது. மனித எண்ணிக்கையால் மட்டுமன்று. தேவைகளின் பட்டியல்களும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. வளரும் தேவைகளை ஒரு வழித்துறையில் முற்றிலும் அடைய முடியாது. ஆதலால் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காகப் புதிய புதிய பொருள் நுட்பத்திற்குரிய புதிய வழிகளைக் காணவேண்டும். இதனை "இயற்றலும்" என்ற சொல் மூலம் காட்டுகிறார் திருவள்ளுவர். அதாவது திட்டமிட்டுத் தொழில் புரட்சிகளைச் செய்து புதிய வருவாய்த் துறைகளைக் காணுதல் என்பதாகும். இயற்றலைத் தொடர்ந்து ஈட்டுதல், பின் பொருள் சிறு திவலைகளாகச் சிதறிக் கிடக்குமாயின், அங்ஙனம் சிதறிக்கிடக்கும் பொருள் மீண்டும் பொருள் உற்பத்திக்குப் பயன்படும் ஆற்றலை, தகுதியை இழந்து விடுகிறது. ஆதலால், ஈட்டப்படுகின்ற பொருள்கள் மூலதனமாக வளர்ச்சியடைகின்ற வரையில் காக்கப் பெறுதல் வேண்டும், பின் முறையான பங்கீடு அல்லது விநியோக முறை வேண்டும். இன்றைய நம்முடைய பொருளாதாரத்தில் உள்ள சிக்கல் பெரும்பாலும் முறையான பங்கீடு இன்மையே யாகும். இவ்வளவு தெளிவாகப் பொருளியலைக் கண்டுணர்த்திய திருக்குறளின் பெருமைக்கு ஈடுண்டோ!

சமுதாய உறவு

திருக்குறள் தனி மனிதனைச் சமுதாயப் பொது மனிதனாக வளர்ப்பதில் நிறைய அக்கறை காட்டுகிறது, அவனுடைய சமுதாய உறவுகளை வளர்ப்பதிலும் பக்குவப்படுத்துவதிலும் திருக்குறள் முழுக்கவனம் செலுத்துகிறது. தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இருக்க வேண்டிய நல்லுறவைத் தடுத்துக் கெடுக்கும் தடைகளைப் பற்றியும் தெளிவாக வரையறுத்துக் காட்டுகிறது. இந்த உறவினை வளர்த்துக் கட்டிக் காப்பதற்காகப் பற்பல குறள்களைத் திருவள்ளுவர் இயற்றியுள்ளார். மற்றவர்களைச் சார்ந்து நலம் செய்து வாழ்வதால் கேடுவருமாயினும் ஏற்றுக்கொள் என்று ஆணையிடுகிறார்.

ஒப்புரவி னால் வரும் கேடெனின் அஃதொருவன்

விற்றுக்கோள் தக்க துடைத்து

என்பது திருக்குறள்.

மனித உறவை வளர்ப்பதில் பொறையுடைமைப் பண்பிற்குச் சிறந்த பங்குண்டு. ஆனால், பொறையுடைமை என்பதை இன்று பலர் கருதுகிற பார்வையில் திருவள்ளுவர் கருதவில்லை. கோழைத்தனத்ததினாலும் அச்சத்தினாலும் பொறுத்தாற்றுதலுக்குத் திருவள்ளுவர் உடன்படார். பொறையுடைமை என்றே ஓர் அதிகாரம் செய்துள்ளார். அதில் மிகவும் சிறந்த திருக்குறள்,

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை

பொறையுடைமைக்கு எடுத்துக் காட்டும் உவமை எண்ணி எண்ணி இன்புறத்தக்கது. மலையையும் உடைத்துக் கல் எடுக்கிறோம். அது பொறுமையாகவே இருக்கிறது. அணைகளும் மாளிகைகளும் கட்ட கற்களைத் தருகின்றது. நன்னூல் ஆசிரியர் போன்றவர்கள் நிலைதளராத முனிவர் பெருமக்களுக்கு மலையை உவமையாகக் கூறுவர். ஆனால் திருவள்ளுவர் பொறுத்தாற்றும் பண்பிற்கு நிலைத்தை எடுத்துக்காட்டாகக் கூறுவானேன்? மலை, உடைப்போரைப் பெரும்பாலும் எதிர்த்துத் தாக்குவதில்லை. ஒரே வழி எதிர்த்துத் தாக்குதலும் உண்டு. அது மட்டுமன்று; அது உடைக்க உடைக்க அழிந்து போகிறது. அதனாலேயே மலையை ஒதுக்குகிறார் திருவள்ளுவர். நிலம், உழுவோர் தரும் துன்பத்தைத் தன் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டு வளர்கிறது. நிலம் உழ உழ வளம் பெறும். பயன் பெருக்கித் தரும். உழுவோருக்கே தரும். பயன்படும் வகையால் தன் மதிப்பினை உயர்த்திக் கொள்ளும். ஆதலால் உழுபவன் நிலத்தினுடன் உரிமையும் உறவும் கொள்கிறான். அது போலவே பகைவர்கள் துன்பங்கள் தருவார்களானால் அத்துன்பங்களை உரமாக்கிக் கொண்டு வளர்தல் வேண்டும். அப்படி வளர்ந்தால் துன்புறுத்தியவர்களும் உறவும் உரிமையும் கொண்டாடுவர், என்ற மிகச் சிறந்த கருத்து எண்ணி எண்ணி இன்புறத்தக்கது. இறைநிலை

திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கை உடையவர். திருக்குறள் கடவுள் வாழ்த்துப் பாடுகிறது. ஆயினும் திருவள்ளுவர் நம்பிக்கைக்கும் நல் வாழ்க்கைக்கும் இசைவில்லாத வெற்றுச் சடங்குகளைச் சார்ந்த சமய நெறிகளில் நம்பிக்கை இல்லாதவர், தூய தெளிவான வாழ்க்கை யோடியைந்த மெய்ந்நெறியில் நம்பிக்கை யுடையவர். இவருடைய சமயம் உலகியலில் அழுந்துவது மன்று; அப்பாற்பட்டதுமன்று. இவர் வாழ்த்தும் கடவுள், கோலம் குறிகளுக்கு அப்பாற் பட்டவர்; வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர்; தனக்குவமை இல்லாத தலைவர். இத்தகு தூய "அருள்நெறியே” இந்த நூற்றாண்டிற்கும் ஏன்? இனிவரும் நூற்றாண்டுகளுக்கும் ஏற்ற நெறியாகும்.

திருக்குறளும் தமிழ் இனமும்

தமிழினம் முன்னர்க் குறிப்பிட்டது போல கடந்தகால வரலாற்றுச் சிறப்புடையதாயினும் இடைக்காலத்தில் அதற்கேற்பட்ட வீழ்ச்சி மறைக்கவோ மறுக்கவோ முடியாத ஒன்று. பிறமொழி நுழைவு தமிழின் தூய்மையைக் கெடுத்தது. ஆயினும் சிறந்த தமிழ்ச் சான்றோர்கள் தமிழின் துய்மையைக் காப்பாற்றி வந்தனர். அயலினத்தாரின் நுழைவால் ஓரினமாக வாழ்ந்த தமிழினம் பலநூறு சாதிகளாகப் பிரிக்கப் பெற்றது. தமிழினத்தையே சார்ந்த ஒரு சாதியினர் பிறிதொரு சாதியினரிடம் ஓரினம் என்ற அடிப்படையை மறந்து காழ்ப்புக் கொண்டனர்; பகை பாராட்டினர். இந்த இன்னாத சூழ்நிலையை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.

ஊக்கத்தையும் உழைப்பையும் மையமாகக் கொண்டு வளர்ந்த தமிழினம், நாளையும் கோளையும் அவ்வழிப்பட்ட அத் திட்டத்தையும் நம்பத் தலைப்பட்டது. ஊழையும் உப்பக்கம் காணும் கொள்கை கண்ட இனம் தலைவிதி என்ற தத்துவத்தின் காலடியில் சிக்கிச் சீரழிந்தது. உயர்ந்த திருக்குறளைப் பயிலாமல் ஒரு குலத்திற்கொரு நீதி உரைக்கும் நூலையும், நடுவாக நன்றிக்கண் தங்காமல் அநீதிக்கும் நீதிக்கும் சமரசம் செய்துவைக்கும் நெறியல்லா நெறியை நெறியெனக் காட்டிய நூலையும் பயின்று வீழ்ச்சியுற்றது. இந்த வீழ்ச்சியிலிருந்து தமிழகத்தை எடுத்து நிறுத்த இந்த நூற்றாண்டில் சிறந்த சான்றோர் அடுத்தடுத்து முயன்று வந்துள்ளனர்-வருகின்றனர்.

புறப்புற இருள்நெறி கடிந்து தமிழ் ஞாயிறு எழுகின்றது. இந்த எழுச்சி தமிழக வரலாற்றில் முன்னைப் பழமையைப் புதுப்பிக்கும். புதிய புதுமைகளைச் சேர்க்கும்.

ஒர் உலகம்

இன்று எங்கும் ஓர் உலகம் பற்றியே பேச்சு. இன்று நம்மிடையில் ஒர் உலக அமைப்பாக உலக நாடுகள் பேரவை (ஐ.நா.சபை) தோன்றியிருக்கிறது. இந்த ஓர் உலக அமைப்பு நல்லெண்ணத்துடனேயே தோன்றியிருக்கிறது. அதாவது மனித குலத்தினிடையில் கொண்டும் கொடுத்தும் கூடிக் கலந்து இன்ப அன்புடன் வாழ்கின்ற பண்பாட்டை உருவாக்குவதே இந்தப் பேரவையின் நோக்கம். பேரவை தோன்றிய நோக்கமும் பேரவையின் பயனும் போற்றுதலுக்கு உரியவையேயாம். ஆயினும் இப்பேரவையின் தோற்றத்திற்குக் காரணமாக இருந்த துன்பச் சூழலை வரலாறு மறைக்க முடியாது. இரண்டு உலகப் போர்களின் படிப்பினையாகவே உலக நாடுகளின் பேரவை தோன்றிற்று. உலக நாடுகளின் பேரவை தோற்றத்தில் அச்சமும் பங்கு பெற்றிருக்கிறது. அதனால்தான் போலும் அந்தப் பேரவையால் உலகத்தை மானிட சாதியை முற்றிலும் போர்ப் பயத்திலிருந்து விடுதலை செய்ய இயலவில்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் ஓர் உலகக் கருத்தைக் கண்டு காட்டினார். இவர்தம் நூலே ஓர் உலகக் கருத்தை மையமாகக் கொண்டு விளங்குகிறது. இவர்தம் ஓருலகக் கருத்து அச்சத்தில் விளைந்ததன்று: அன்பில் விளைந்தது. பெரும்பாலும் நூல்கள் தன் நாடு, தன் மொழி, தன் இனம், தன் சமயம் ஆகியனவற்றைச் சிறப்பித்தே எழுதப்பெறும். ஒரோ வழி தம்முடையதைச் சிறப்பித்தும், மற்றையதை இழித்தும் எழுதப்பெறுவதும் உண்டு. திருக்குறள் இந்தக் குறைகளின்று முழுதும் நீங்கிய நூல், திருக்குறளில் தமிழ் என்ற சொல் இல்லை. தமிழன் என்ற சொல்லும் இல்லை. பெயர் குறிப்பிட்ட காடு, மலை, ஆறு, நாடு ஆகியவை பற்றிய செய்திகளும் இல்லை. எந்தக் கடவுளின் பெயரும் இல்லை. எந்தச் சமயச் சின்னங்களும் இல்லை. ஆதலால், திருக்குறள் இனச் சார்பற்ற நூலாக, நாடும் எல்லையும் கடந்த நூலாக, மனித குலத்தின் பொது நெறி நூலாகத் திகழ்கிறது.

இன்றையத் தேவை மனிதகுல ஒருமைப்பாடு. இதனைச்சமயச் சான்றோர் ஆன்மநேய ஒருமைப்பாடு என்று கூறுவர். இத்தகு ஒருமைப்பாட்டைக் காணுதலும் வளர்த்தலும் அருமையான முயற்சி. ஆயினும் இன்பம் பயக்கும். ஆனால் உண்மையான ஒருமைப்பாட்டைக் காணல் வேண்டும். ஒற்றுமையே ஒருமைப்பாடென மயங்கிவிடுதல் கூடாது. ஒற்றுமை, கட்டாயம், தேவை ஆகியவை கருதியும் தோன்றலாம். கலகம் செய்வதற்கு ஆற்றல் இன்மையின் காரணமாகவும் ஒற்றுமை இருக்கலாம். இது நெடிய பயனைத் தராது. ஒருமைப்பாடு என்பது சிந்தனையினால் உணர்வினால், குறிக்கோளால், வாழ்க்கை அமைப்பால் ஒன்று கலந்து இருப்பதாகும். இத்தகு ஒருமைப்பாட்டை அரசுகளால் தோற்றுவிக்க முடியாது. அறநெறியினாலேயே முடியும். அதனாலன்றோ கார்லைல் என்ற பேராசிரியர் "மக்களை இணைத்துப் பிணைக்க வலிமை பெற்ற ஒரு தேசிய இலக்கியம் வேண்டும்" என்று குறிப்பிடுகின்றார் இன்றைய உலகத்தை இணைக்க உலகப் பேரிலக்கியமாகத் திகழ்வது திருக்குறளேயாம். பாரதியும் "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று பாடிப் பரவுகின்றார்.

இந்தியப் பேரரசு இந்திய ஒருமைப்பாட்டைப் பெரிதும் விரும்புகிறது. விரும்பி வற்புறுத்துகிறது. இந்திய ஒருமைப்பாட்டை வலிமை பொருந்திய மத்திய ஆட்சியின் அதிகாரத்தாலும் இந்தி மொழியாலும் காணமுடியும் என்று நம்புகிறது. இது வெறும் கானல் நீரே. இந்திய நாட்டின் இணையற்ற தேசீய இலக்கியமாகத் திருக்குறளை, ஏற்றுக் கொண்டு, இந்திய நாட்டு மக்கள் அனைவரையும் திருக்குறள் சிந்தனையிலும் திருக்குறள் நெறி வாழ்க்கையிலும் ஈடுபடச் செய்தால் இந்திய ஒருமைப்பாடு தானே உருவாகும். இந்திய நாட்டின் தேசிய இலக்கியமாகவும், உலகப் பேரிலக்கியமாகவும் திருக்குறள் விளங்கி அமையும் நாளே, மனித சமுதாயத்தின் இனிய வரலாறு தொடங்கும் நாள்.

கடமைகள்

திருக்குறள் இலக்கியமே. ஆயினும் அதன் நோக்கம் இலக்கிய இன்பம் தருவதன்று. வாழ்க்கையில் இருள் நீக்கி இன்பந் தருவதேயாகும். திருக்குறளை மையமாகக்கொண்டு இலக்கியத்திறனாய்வு செய்யலாம். துறைதோறும் இன்பந்தரும். பல நூற்றாண்டுகளுக்குத் திறனாய்வு செய்யலாம். ஆயினும் திருக்குறளை மனிதகுலச் சிறப்பிற்குரிய ஒழுக்கத்துறைகளில் நடை முறைப்படுத்தித் திறனாய்வு செய்வதே பாராட்டுதற்குரியது; அதுமட்டுமன்று; கடமையுமாகும்.

மனிதராய்ப் பிறந்தோர் அனைவரும் நாள்தோறும் திருக்குறள் கற்றலும் கேட்டலும் கடமையெனக் கொள்ள வேண்டும். தமிழராய்ப் பிறந்தோர் இதனைக் கடமையாக மட்டுமல்லாமல் ஒழுக்கமாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றையத் தமிழக அரசு திருக்குறளுக்கு உரிய இடத்தை மக்கள் மன்றத்திலும், அரசிலும் அளிக்க ஆர்வத்துடன் முன்வந்திருக்கிறது. இது நன்றி உணர்வுடன் என்றும் பாராட்டுதலுக்கு உரியதாகும். இந்த இனிய சூழலை முழுவதும் பயன் படுத்திக்கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பாகும். எங்கும் முத்தமிழ் முழங்கவேண்டும். திருவள்ளுவர் எழுப்பிய திருக்குறள் ஒலி நாற்புறமும் ஒலிக்கச் செய்ய வேண்டும். தமிழர் இல்லங்களைத் திருவள்ளுவர் திருவுருவம் அணிசெய்ய வேண்டும். தமிழர்தம் நெஞ்சங்களில் திருக்குறள் கருத்துக்கள் தங்கவேண்டும். தமிழினத்தின் வாழ்க்கையில் திருக்குறள் ஒழுக்கநெறி கால்கொண்டு அமையவேண்டும். இந்த உயரிய குறிக்கோளோடு நம் அனைவரும் இனிய இன்ப உலகத்தைக் காண முயற்சிப்போமாக.

5

சிந்தனை மலர்கள்

* * *

1. மனத்துக்கண் மாசிலனாதல்

மனம், மனிதனின் சிறந்த அகக்கருவி. மனிதனின் செயற்பாடுகளுக்கெல்லாம் மனமே முதல் நிலைக்கருவியாக அமைகிறது. செயல்களுக்கு அடிப்படையாக அமைகின்ற செய்திகளை, வாயிலாக இருந்து ஆன்மாவுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதும் மனமே! மனம் தூய்மையாக இருந்தால் மந்திரங்கள் செபிக்க வேண்டியதில்லை என்று கூறுவர். மனம் தூய்மையாக இருப்பது நல்வாழ்க்கைக்கு இன்றியமையாதது; நல்ல சமுதாயத்திற்கும் இன்றியமையாதது. புறத்தோற்றங்கள், மற்றும் செயல்கள் எப்படியிருப்பினும் மனம் தூய்மையாக இருந்தால் புறத்தோற்றம் கருதி யாரும் இகழமாட்டார்கள்; ஏற்றுக் கொள்வார்கள். ஆதலால், எந்தச் சூழ்நிலையிலும் மனம் தூய்மை பெறுதல் வேண்டும்.

மனத்துக்குத் துய்மைக்கேடு எப்படி வருகிறது? மனம் இரண்டு வகையில் தூய்மைக் கேடு அடைகிறது. முதலாவது ஆன்மாவினிடத்திலுள்ள அறியாமை. இரண்டாவது புறச் சூழ்நிலை. ஆன்மாவினிடத்திலுள்ள அறியாமையினாலேயே மனம் கெடுகிறது என்பது பழைய கருத்து. மனம் புறச்சூழ்நிலையாலேயே கெடுகிறது என்பது மார்க்சிய சித்தாந்தம்; அண்மைக்கால விஞ்ஞானக் கருத்து. ஆயினும் புறச்சூழ்நிலையும் சார்பும் மனித மனத்தை உருவாக்கும் காரணங்கள் என்ற கருத்து, பழந்தமிழ்க் கருத்து என்பதை மறந்துவிடுவதற்கில்லை. மனத்திற்குத் தூய்மைக்கேடு அகநிலையிலிருந்து வந்தாலும் சரி, புற நிலையிலிருந்து வந்தாலும் சரி! வந்த வழியைப் பற்றி இப்பொழுது என்ன கவலை? இரண்டு நிலைகளையுமே இப்பொழுது ஆய்வு செய்யலாம். மனம், ஒரு பொருளைச் சென்று பற்றுகிறது. அல்லது ஒரு நிகழ்வில் தோய்ந்து ஈடுபடுகிறது. அப்பொழுது மனத்தின் பங்கு ஆன்மாவின் அறியாமை என்கிற தாக்கத்தின் காரணமாக விருப்பு நிலையையோ வெறுப்பு நிலையையோ அடைகிறது. மனம், ஒன்றை விருப்புணர்வோடு அணுகினாலும் சரி, வெறுப்புணர்வோடு அணுகினாலும் சரி, நடுநிலை பிறழ்கிறது! விருப்புணர்வு அடைய வேண்டுமென்ற ஆர்வத்தையும், வெறுப்புணர்வு ஒதுக்க வேண்டுமென்ற உணர்வையும், உருவாக்கும். அவ்வழி அழுக்காறு, அவா, வெஃகல், வெகுளி, இன்னாச்சொல், பகை ஆகிய இயல்புகள் மனத்தினிடைத் தங்கித் தாம் முன்னியது முடிக்க ஆன்மாவை இழுத்துக் கொண்டு செல்லும். ஆதலால், மனத் தூய்மைக் கேட்டுக்கு முதல் நிலையாக அமைவது ஆன்மாவின் அறியாமை என்பதில் ஐயமில்லை. மனம் சென்று பற்றுகிற புற உலகில் வேற்றுமைகள் மிகுதியாக இல்லாமல், உடையார் - இல்லாதார் என்ற வேற்றுமையில்லாமல் எல்லாருக்கும் எல்லாம் எளிதில் கிடைக்கக் கூடிய பொதுமை நிலையுடைய சமுதாய அமைப்பு இருந்தால் ஆன்மாவிற்கு அல்லது மனத்திற்கு விருப்புகளும் வெறுப்புகளும் உருவாவதற்குரிய வாயில்கள் அடிபட்டுப் போகின்றன. அத்தோடு, புறத்தே பற்றுக் கோடாகக் கொள்ளும் நட்பு, சுற்றம் முதலியன நல்லன எண்ணி, நல்லன. சொல்லி, நல்லன செய்வனவாக இருந்தாலும் மனம் தூய்மைக் கேடுறாது.

ஆதலால், மனம் தூய்மையுடையாராதலே மனிதத் தன்மையின் முதல் முயற்சி. அதுவே இன்ப வாழ்க்கையைத் தரக்கூடிய சிறந்த முயற்சி. மனம் தூய்மையுடையவராக வாழ்தலே அறவாழ்க்கை. மனம் தூய்மையில்லாது மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதற்காகவும் புகழுக்காகவும் செய்யப் பெறும் செயல்கள் ஆரவாரத் தன்மையுடையன. இரைச்சல், ஒலி மட்டுமே! இரைச்சலைக் கேட்டுப் பொருள் கொள்ள முடியாது; கருத்துருவம் பெற முடியாது. அதுபோல ஆரவாரம் அன்புச்சார்பில்லாதது; இதயத்தொடர்பில்லாதது; அறமல்லாதது; ஆரவாரமான உலகத்திலிருந்து விலகி, சமுதாயம் தழுவிய அறவாழ்க்கையை மேற்கொள்ள மனத்தூய்மை பெறுவோம். சமுதாய வாழ்க்கை வாழ முயன்றாலே எளிதில் மனத்துாய்மை வரும். யார்மாட்டும் அன்பு, மற்றவர் வாழ்வு கண்டு மகிழ்தல், மற்றவர்களை வாழ்விக்க முயற்சி செய்தல், மற்றவர் வாழ்க்கைக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைத்தல் ஆகியன மனத்தூய்மை பெறுதற்குறிய வாயில்கள். மனத்தூய்மை உடைய வாழ்க்கையே அறம் சார்ந்த வாழ்க்கை.

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற”

17-2-86.

2. வாழ்வாங்கு வாழ்க!

(1)

வாழ்க்கை வெற்றி பெறவேண்டும், பயனுடையதாக வேண்டும் என்றால், அதற்குச் சில இன்றியமையாத பண்புகள் தேவை. அவற்றுள் தலையாயது பணிவு. அதாவது யார் மட்டும் பணிவாக நடந்து கொள்ளுதல். பணிவு என்பது அடக்கமுடைமையின் முதிர்ச்சியில் தோன்றுவது. பணிவு இயற்கையாக அமைதல் வேண்டும். அதற்கு வேறு பின்னணிகள் இருக்கக்கூடாது. இயலாமை காரணமாகப் பணிதல் பணிவுடைமையன்று. பணிவுடைமைக்குரிய இலக்கணத்தை எழுத்தில் எழுதிக்காட்ட இயலாது. உடல் வணக்கம் மட்டும் பணிவாகாது. உடல் வணக்கம் பணிவுடைமையில் சேராது என்றும் சொல்ல முடியாது. ஒருவரின் பணிவு அல்லது வணக்கம் பணிவின் பாற்பட்டதா அல்லது நடிப்பா என்பதை எளிதிற் பிரித்துக் காணமுடியும். உடல் வணக்கம் நாவடக்கம் ஆகியன பணிவின் பாற்சாரும்! ஏன்? மனஅடக்கமும் கூடத்தான்!

மற்றவர்களுடைய மதிப்பினைக் கருதியும் வருந்தா நிலை வேண்டியும் பணிவாக இருத்தல் வேண்டும். சில பொழுது பணிவின் காரணமாகத் தமது அறிவு, ஆற்றல் ஆகியவற்றைக்கூட முற்றாக வெளிக்காட்டாது அடங்கியிருத்தலும் பணிவின்பாற் சாரும் பணிவுடையாரிடத்தில் தான் மற்றவர்கள் எளிதில் பழகுவர்; மனம் ஒப்பிப் பழகுவர். அப்பழக்கம் பல பண்பாடுகளையும் பயன்பாடுகளையும் கொண்டுவந்து சேர்க்கும்.

பணிவு எளிதில் வாராது. பணிவு, வாழ்க்கையில் சிறந்தோருக்கே தோன்றும் உயர்ந்த இலக்கணம். முற்றிய கதிர்மணிகளுடைய செந்நெற் பயிர்கள் தாழ்ந்து தரையிற் கிடத்தல்போல, நிறைந்த அறிவும் எதிரில் ஆற்றலும் உடையவர்கள்தாம் பணிந்துபோவர். அது கோழைமையன்று. குன்றில் உயர்ந்து விளங்கும் கொள்கையின் மாட்சி! மண்ணில் தாழ்ந்து தாழ்ந்து செல்லாத வேர்களைப் பெறாத மரங்கள் விரிந்து வளர்ந்து விண்ணோக்கிச் செல்ல இயலுமா? அவை பயன்தரும் மரங்களாகத்தான் விளங்க முடியுமா? ஒருவர் நிற்க, தான் அமராமை. ஒருவரைக் கண்டுழி மலர்ந்த முகத்தோடு வரவேற்று அவரை இருக்கை யில் அமர்த்தியபிறகு அமர்தல், அவர்தம் கருத்து இன்னதென்று அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் வணங்கியவாயினராகக் கேட்டல், உடன்படாதவற்றைச் சொன்னாலும் உவப்புடன் கேட்டல், மற்றவர்கள் உவப்பக் கருத்தைத் தெரிவித்தல் ஆகியன பணிவிற்குறிய சில அடையாளங்கள். எங்கே பண்பில் முதிர்ச்சியிருக்கிறதோ அங்கே பணிவு இருக்கும். எங்கே பழுத்த மனம் இருக்கிறதோ அங்கே பணிவு இருக்கும். ஆழ்கடலில்தானே அழகான முத்து! கட்டடத்தின் வலிமை அடிப்படைக் கல்லால்தானே!

எங்கே பணிவு இருக்கிறதோ அங்கே நிச்சயம் இன்சொல் இருக்கும். கொள்கை உயர்ந்ததாக இருந்தால் போதாது! அதை மற்றவர் ஏற்றுக்கொள்ளும் வகையில் எடுத்துக்கூறும் ஆற்றல் வேண்டும். பணிவுக்கு இன்சொல் அரண். இன்சொல்லுக்குப் பணிவு அரண். இரண்டும் இரட்டைப் பண்புகள்! ஆனால் வாழ்க்கையைச் சிறப்பிப் பதில் ஒருமைநலம் சார்ந்த பண்புகள்! இவ்விரண்டு பண்புகளும் ஒருவர் வாழ்க்கைக்கு அழகூட்டுவன; மதிப்பூட்டுவன; உயர்வூட்டுவன. இவ்விரு பண்புகளையும் அணியெனப் பெற முயலவேண்டும், இவையே புகழ்மிக்க வாழ்க்கைக்கு அணிகள்! மற்றபடி கவர்ச்சியான ஆடைகள், தங்க அணிகலன்கள், வண்ணப்பூச்சுகள், வாசனைப்பூச்சுகள் முதலியனவற்றை அணியெனக் கருதி ஏமாறுதல் வேண்டா. அவற்றுக்காகப் பெரும்பொருளை இழக்கவேண்டா. அவற்றை மதிப்பார் யார்? பிணத்திற்குக் கூடப் பொன்னணி பூட்டப்படுவது உண்டு. பயன் என்ன? உயிர்ப்புள்ள, பொருளுள்ள, புகழ்மிக்க வாழ்க்கைக்கு அணி, பணிவும் இன்சொல்லுமேயாம். மக்களாட்சி நடைமுறை வாழ்க்கைக்குப் பணிவும் இன்சொல்லும் இன்றியமையாப் பண்புகள்! இந்த அணிகளை அணிவோமாக! காசின்றி எளிதில் முயன்று பெறக்கூடிய இந்த அணிகளை எவரும்

தி.15. அணிந்து கொள்ள முடியும் தேவை, உளமார்ந்த விருப்பமும் முயற்சியும் தான்!

"பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணி; அல்ல மற்றுப் பிற"

என்பது குறள். 12-9-86

வாழ்வாங்கு வாழ்க!

(2)

இனிய சொற்கள் இன்பத்தைத் தருவன. இனிய சொற்கள் சொல்வாருக்கும் இன்பம் தருவன: கேட்பாருக்கும் இன்பம் தருவன. இன்சொல் தப்பாமல் நட்பைத் தரும்; பெற்ற நட்பை வளர்க்கும்; பாதுகாக்கும். இன்சொல் குறித்த பயனைத் தவறாமல் தரும். பெரும்பான்மையான மனிதர்கள் இன்பத்தை விரும்புகிறார்கள். வளர்ந்த மனிதர்கள் சொற்களைப்பற்றிக் கவலைப்படாமல் பயன் இன்பமாக இருந்தால் சரி என்று கருதுவார்கள். இது பெருந்தகைமையின் பாற்பட்டது. ஆனால் சராசரி மனிதர்கள் பயன் எவ்வளவு இன்பமானதாக இருந்தாலும் சொல் கடுஞ்சொல்லாக இருந்துவிட்டால் மிகுந்த சங்கடப்படுகின்றனர். ஆதலால், நன்மைக்குத்தானே சொல்கிறோம் என்று கடுஞ்சொல்லால் கூறக்கூடாது. எப்பொழுதும் எந்தச் சூழ்நிலையிலும் நன்மையைக் காணவும் சரி, தீமையை அகற்றவும் சரி இனிய சொற்களையே பேசுதல் உயர்ந்த ஒழுக்கம்.

இனிய சொற்களை வழங்குவதன் மூலம் நல்ல பயன் விளையும். பகைவரையும்கூடத் தன்வயப்படுத்த முடியும். குற்றங்கள் - குறைகள் இல்லாத மானிடர் உலகில் இல்லை. இவற்றைக் கண்டுபிடித்துக் கூறுவதற்காக நமக்கு வாய் படைக்கப்படவில்லை, ஆனால் சமுதாய அளவில் நல்லன வளர வேண்டும் என்ற பெருநோக்கு இருக்குமானால் அவற்றை உரியாரிடத்திலேயே இனிய சொற்களால் பேசி நயந்த முறையில் திருத்தம் காண முயற்சி செய்யலாம். வருத்தம் தருகிற ஒரு கட்டி, உடலில் இருக்குமானால் அதை உடனே அறுக்க முடியாது. அந்தக் கட்டிக்குச் சில ராஜோபசாரம் செய்து மருந்துபூசிப் பழுக்கவைத்துப் பின்தான் அறுக்க வேண்டும். உடலில் வேண்டாத உரோமங்கள் இருப்பதை நீக்கும் முயற்சியில்கூட தண்ணீர் தடவிப் பதப்படுத்தித்தான் நீக்க வேண்டியிருக்கிறது. அது போலத்தான் குற்றமுடையாரைத் திருத்துவதற்கும் கூடச் செய்ய வேண்டும். முதலில் குற்றமுடையாரை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அன்புடன் நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். முழு அன்புடன் நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், இந்த நேசம் குற்றத்தின் இயல்புவழிச் செல்லாத மேலாண்மையுடையதாக இருக்க வேண்டும். குற்றமுடையாரை முதலில் அங்கீகரிக்க வேண்டும். மதிப்புயர் மனிதர்களாக நடத்த வேண்டும். அதன் பின்தான் நம்முடைய திருத்தப் பணிகள் கனியெனக் கனியும். ஆதலால், இன்சொல் எந்தச் சூழ்நிலையிலும் இன்பத்தைத் தரும்; வெற்றியைத் தரும்; புகழ்மையைத் தரும். எந்தச் சூழ்நிலையிலும் இன்சொல் பிழைபோகாது.

இங்ஙணமின்றி இவன் தகுதியில்லாதவன்; கீழானவன், பாடிக்கறக்கிற மாட்டைப் பாடித்தான் கறக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வன்சொல்லால் திட்டுவது பயன்தராது. பயன்தராதது மட்டுமின்றி எதிர் விளைவுகளையும் உருவாக்கும். மானுட வாழ்வின் அமைதி கெடும்; அவலம் பெருகும்; ஏன் வன்சொல் பேசுகிறீர்கள்? மற்றவர் கூறும் இனிய சொல் தனக்கு இன்பம் தருவதை அனுபவித்து அறிகின்ற ஒருவன், மற்றவரிடம் வன்சொல் சொல்வது என்ன பயன் கருதி? என்பது திருவள்ளுவர் எழுப்பும் வினா! ஆதலால் வன்சொல் வேண்டாம்! வேண்டவே வேண்டாம்! சுடுசொல் கூடாது! கூடவே கூடாது! இனிய சொற்களையே வழங்குங்கள்! மற்றவர் மனம் மகிழத்தக்க சொற்களையே சொல்லுங்கள்! இன்பத்திற்காகப் பேகங்கள்! அதுவே வாழ்க்கையின் வெற்றிக்குவழி!

"இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது”

என்பது திருக்குறள். 13.9.86

வாழ்வாங்கு வாழ்க!

(3)

மானுட வாழ்க்கை இயற்கையாய் அமைந்தது; இன்பமாய் அமைந்தது. இயற்கை வாழ்க்கையில் இன்பமே! எந்நாளும் துன்பமில்லை! இனிய சொற்களை வழங்கும் இயல்பு இயற்கையிலேயே மனிதனுக்கு உண்டு. இன்சொல் வழங்குதலே இயற்கை; இயல்பாய வாழ்க்கை. ஆதலால், நமக்கே உரிமையுடையனவாய இன்சொற்களை வழங்கிப் பழக வேண்டும். இன்சொல் இயம்பும் இயல்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இனிதாக இல்லாத சொற்கள் - அதாவது கடுஞ்சொற்கள் செயற்கைத் தன்மையன; அழுக்காற்றில் தோன்றுவன; வெகுளியில் பிறப்பன. உள்ளுறுப்புகளையும் செங்குருதியையும் சூடாக்கித் தோன்றுவன; அதிக மூச்சுக் காற்றைக் குடிப்பன; உடற்பாதிப்பைத் தருவன; கடுஞ் சொற்களைத் தொடர்ந்து கூறுபவர்கள் காலப் போக்கில் நிறம் மாறுவர்; குணம் மாறுவர்; உடல் நலப் பாதிப்புக்கு ஆளாவர்; நோய்க்கு விருந்தாவர்; சமுதாயத்தில் தனிமைப் படுத்தப்படுவர். கடைசியில் அவர்களுக்குத் திறக்கப்படும் ஒரே வாயில் நரகத்தின் வாயிலேயாம்.

சிலர், தங்களிடத்தில் உள்ளனவற்றை நுகரார்; பயன் படுத்தமாட்டார்; ஆனால் மற்றவர்களிடத்தில் இருப்பதை விரும்புவர்; காமுற்று அலைவர். தம்மிடம் உள்ளதைவிட அது தரம் குறைந்ததாக இருந்தாலும் விரும்புவர். அதைப் பெறமுடியாது போனால் களவு செய்யவும் துணிவர். ஒருவர் வீட்டுத் தோட்டத்தில் நல்ல பழுத்த கனிகள் உள்ள மாமரங்கள் நிற்கின்றன. அந்த மாமரங்களிலிருந்து கனிகள் பழுத்து உதிர்ந்துள்ளன. இக்கனிகளை அவர் எடுத்து உண்பதற்கு யாதொரு தடையுமில்லை; உரிமையாலும் தடையில்லை; சுவையாலும் தடையில்லை. ஆயினும் இந்தக் கனிகளின்மீது அவருக்கு நாட்டமில்லை. அடுத்த வீட்டுத் தோட்டத்து மாமரங்களிலுள்ள காய்களிலேயே அவருக்கு நாட்டம், வேலிக்கு அப்பாலுள்ளதிலேயே நாட்டம். அவை பிறருக்கு உரிமையுடைய காய்கள்! சுவையில்லாத காய்கள்! ஆயினும் அறியாமையின் வழித் தோன்றிய விருப்பத்தால் அக் காய்களைக் கவர்ந்துண்ண ஆசைப்படுகிறார். இப்படிக் கவரும் முயற்சி எத்தகைய இன்னல்களைத் தரும் என்பதை எண்ணிப் பார்க்கவும் முடியவில்லை. ஏன் இந்த அவலம்? இனிய சொற்களை வழங்குதல் நமது பிறப்பின் வழிப்பட்ட இயல்பு; கருவில் அமைந்த திரு. இனிய சொற்களையே வழங்குவோம்! காயினைப் போன்ற இன்னாச் சொற்களைக் கூறி மற்றவர்களைத் துன்பத்தில் ஈடுபடுத்த வேண்டாம்! அவ்வழி நாமும் துன்பத்திற்கு ஆளாக வேண்டாம்!

திருவள்ளுவர் நயம்பட,

"இனிய உளவாக இன்னாத கூறல் கன்னியிருப்பக் காய்கவர்ந் தற்று"

என்கிறார். கனி, இனிய சொல்லுக்கு உவமை. காய், கடுஞ் சொல்லுக்கு உவமை. இங்கு ‘இன்னாத’ என்றதால் சொல்லளவில் மட்டுமல்லாமல் பயனிலும் இன்னாதது என்பதை உணர்த்தினார். சொல்லிலும் பொருளிலும் ஒருசேர இன்பம் பயக்கத்தக்க சொற்களைத் தேர்ந்து சொல்வோர் சான்றோர். சொல் இனிமையாக இருந்து விளையும் பயன் இன்னாததாக இருந்தாலும் பயனில்லை. விளையும் பயன் இன்பமாக இருந்தாலும் பேசிய சொல் இன்னாததாக இருந்தால் அதனை முழுமையான பயனாகக் கருத முடியாது. ஆதலால், எல்லோருக்கும் இன்பம் வேண்டும் என்று விரும்புக, விழைவுறுக! மனம் குழைந்தால் இனிய சொற்கள் தோன்றும். எனவே மனத்தை நாள்தோறும் அன்பில் நனைத்து நனைத்துக் குழைத்துப் பக்குவப்படுத்திக் கொள்க! இனிய மனத்தில் - குழைந்த உள்ளத்தில் இனிய சொல் தோன்றும். எல்லாருக்கும் இன்பம் வேண்டும் என்ற இன்பக் குறிக்கோளை இனிய சொற்களால் எடுத்து விளம்புக! எங்கும் இன்பம்! யாண்டும் இன்பம் சூழ்க! இன்பமே சூழ்க! எல்லாரும் வாழ்க! 14-9-86

3. வன்சொல் தவிர்க்க!

வன்சொல் வேண்டாம்! வேண்டவே வேண்டாம்! ‘சொல்’ சொல்லப்படுவது அன்புப் பரிமாற்றத்திற்கே! ‘சொல்’ சொல்லப்படுவது உறவினை வளர்த்துக் கொள்வதற்கே! சொல், பயனுடையதாக அமைதல் வேண்டும். வன்சொல் என்ன பயனைத் தரும்? யாதொரு பயனும் தராது! எதிர் விளைவுகளைத்தான் உருவாக்கும். வன்சொல் தவிர்த்திடுக! இனிய சொற்களையே வழங்குக!

சொற்கள் அன்பில் கலந்தவையாக இருக்க வேண்டும். செவிக்கும் சிந்தனைக்கும் வாழ்க்கைக்கும் இன்பம் பயப்பனவாக அமைதல் வேண்டும். சில சொற்கள் செவிக்கு இனிமையாக இருக்கும். ஆனால் சிந்தனைக்கு இனிமையாக இருப்பதில்லை. வாழ்க்கைக்கும் இன்பம் பயப்பனவாக இருப்பதில்லை! ஆதலால் வாழ்க்கையை வளர்க்கும் இன்சொல் கூறுக!

குணங்களைச் சொல்ல வேண்டும். குற்றங்களைப் பேச வேண்டும். இது அப்பர் அடிகள் காட்டும் வாழ்க்கை முறை. ஒருவருடைய குணங்களை அவரில்லாத இடத்தில் எடுத்துக் கூற வேண்டும். யாதானும் குற்றமிருப்பின் அவரிடம் நேரில் பேசும்பொழுது அதை எடுத்துக் கூறல் வேண்டும். நம்மில் பலர் இந்நெறிக்கு மாறுபட்டே வாழ்கின்றனர். ஒருவரது குற்றங்களை எடுத்துக் கூறுதலே ‘சிறுமை’ என்பார் திருவள்ளுவர். ‘சிறுமைதான் குற்றமே கூறிவிடும்" என்பதறிக!

வன்சொல் வரிசையில் தூற்றுதலுக்கு அடுத்தது கோள். ஆண்டாள் நாச்சியார் ‘தீக்குறள்’ என்பார். கோள் மிகவும் கொடுமையானது; கலகம் விளைவிப்பது; அமைதியைக் கெடுப்பது. வன்சொல் வரிசையில் தவிர்க்க வேண்டியவற்றுள் கோள் தலையாயது. அடுத்து இன்சொல்போலத் தோற்றித் தீமை செய்வது முகமன். இது அமைப்பில் வன்சொல் அல்ல. பயனில் வன்சொல் என்றே கூற வேண்டும். பாராட்டுதல் வேறு; முகமன் வேறு. முகமன் மூலம் ஒருவருடைய வளர்ச்சி பாதிக்கிறது. ஆதலால் முன்னே வைத்து உரைக்கும் முகமனைத் தவிர்த்திடுக! முகமனைத் தவிர்த்திடுக!

இன்சொல், கரும்பனையது; சொல்லுவார் கேட்பார் இருபாலாருக்கும் நன்மை பயப்பது; இன்பம் பயப்பது. இன்சொல் சொல்வதற்கு அதிக உழைப்புத் தேவையில்லை. பதற்ற நிலை தேவைப்படாது. ஆதலால் இன்சொல் கூறுபவர் இளமையும் இன்பமும் பேணி நிற்பர். வன்சொல், இரும்பனையது. இரும்பைக் கடித்தால் என்னாவது! இரும்பு கடித்தல் யாதொரு பயனையும் கூட்டுவிக்காது. அது எய்ப்பினையும் களைப்பினையுமே தரும். ‘இரும்பு கடித்து எய்த்தவாறே’ என்பார் அப்பரடிகள். இனிய சொற்கள் இயல்பாய் அமைந்தன; உரிமை உடையன; எளிதில் வழங்கத் தக்கன. இன்சொல் கனி! உரிமையில் உள்ள கனிகள்! வன்சொல்லோ செயற்கை அழுக்காறு, அவா, வெகுளி ஆகிய தீமைகளைத் துணைக் கொண்டு வருவது வன்சொல். வன்சொல் உயிர்க்கு அந்நியத் தன்மையுடையது; காய் அணையது. உரிமையுடைய தன்று. வன்சொல் கவர்ந்தே கூறுதல் வேண்டும். கவர்தல் எப்போதும் நன்மையன்று.

அன்பினைக் கெடுத்து உறவினை அகற்றும் வன்சொல் தவிர்த்திடுக. அன்பு கலந்த இன்பம் விளைவித்து எல்லாருக்கும் இன்பம் பயக்கும் இன்சொற்களையே கூறுக! இனிய சொற்களே கூறத்தக்கன! கூறுக! பழகுக!

'இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது’

என்பது. வள்ளுவம். சொற்களின் பயன் ஒருவரை ஒருவர் நெருங்கச் செய்வது; ஒருமையுடையராக்குவது; அகனமர்ந்த அன்பினராக ஒழுகச் செய்வது. வன்சொல் தோன்றும் களம் தற்சார்பேயாம். தற்சார்பான தன்னலத்திற்குக் கேடுவருமோ என்று ஐயுறும் பொழுது, தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் வன்சொல் தோன்றுகிறது. அடுத்து, வன்சொல் தோன்றும் களம் ஏமாற்றங்களும் தோல்விகளுமாகும். அழுக்காற்றின் காரணமாகவும் வன்சொல் தோன்றும். இந்தக் களங்களில் தோன்றிய வன்சொற்கள் யாதொரு பயனையும் தந்ததில்லை. மாறாக எதிர்விளைவையே உண்டாக்கியுள்ளன என்பதே வரலாற்று உண்மை, அதுமட்டுமல்ல, கருத்து வளர்ச்சியும் மாற்றங்களும்கூட வன்சொல் வழங்குவதின் மூலம் தடைப் படுகின்றன. நிலம் செப்பமாக இல்லாதபோழ்து விதைத்து என்ன பயன்?. முளைக்காது. கேட்பார் மனம் செப்பமாக இருக்கத்தக்க வகையில் இன்சொற்களைக் கூறாது போனால் பயன் கிடைக்குமா? மற்றவர் கூறிய இனிய சொற்கள் இன்பம் விளைவித்திருப்பதைச் சென்ற காலவரலாற்றிலும் காணமுடிகிறது. நிகழ்கால வரலாற்றிலும் காண்கிறோம். இன்சொல் இன்பத்தைத் தருகிறது. பழகும் இனிய நட்பினைத் தரும்! இத்தகு மேம்பட்ட பயன்களை இன்சொல் அளிப்பதை அறிந்திருந்தும் ஏன் வன்சொல் வழங்குகிறீர்கள்?

வன்சொல், வாளினும் கொடிது; நாவினால் வன் சொல் கூறிச் சுடுவது தவறு. வன்சொல் இன்ப அன்பிற்குப் பகை; அறத்திற்கு முரண். வன்சொல் அமைதியைக் கெடுத் திடும். வன்சொல் வழங்கற்க! இன்சொல்லைச் சொல்லிடுக!

வன்சொல், சிறுமை பொருந்தியது. இன்சொல், பெருமையோடு தொடர்புடையது. வன்சொல் இம்மையையும் கெடுக்கும்; மறுமையையும் கெடுக்கும். நன்றைத் தரும் இன்சொல் கூறிப் பழகுக! இன்சொல்லை அணியெனப் பற்றுக! 22-3-1987

4. வள்ளுவர் வாக்கு

(1)

"யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு.”

என்பது திருக்குறள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் மொழிந்த திருக்குறள், இன்றைய நிலையில் பூத, பெளதிக உலகம் நெருங்கி வந்துள்ளது. "உலகம் ஒரு வீதி” என்று கூறும் அளவுக்கு நெருக்கமுற வந்தவிட்டது. மண்ணில் அமைந்துள்ள சாலைகளும். விண்வழிப் பயணங்களும், தொலை பேசிகளும் உலகம் நெருங்கி வரும்படி செய்துள்ள காலம். காலத்தையும் தூரத்தையும் வென்று விளங்குகின்றான் மனிதன்! இதுபோன்ற நிலை திருவள்ளுவர் காலத்தில் இல்லை! ஆனாலும், திருவள்ளுவர் ஓருலகமே கண்டார்! பிரிவினையற்ற உல்கமே திருக்குறளின் குறிக்கோள்!

எந்த நாடாக இருந்தால் என்ன? எந்த ஊராக இருந்தால் என்ன? தான் சென்று வாழும் நாட்டையும் ஊரையும் தமது நாடாக - ஊராக ஆக்கிக் கொள்ளும் கல்வியைக் கற்றுக் கொள்ளாதவன் எப்படி வாழ்க்கையில் வெற்றி கொள்ளமுடியும்? இன்று, கல்வி என்றால் ஏட்டுக் கல்வி மட்டும் நினைவுக்கு வருகிறது! ஏட்டுக்கல்வி மட்டும் கல்வியல்ல. பல்வேறு திறன்களையும் பண்பாட்டினையும் கற்றுக் கொள்வதும் கல்வியேயாம்!

ஒரு நாட்டில் சென்று வாழ்ந்தால், அந்நாட்டு மக்களுடன் கலந்து அந்நியமின்றி வாழ்ந்தால் சிறப்பாக வாழலாம். அங்ஙணம் வாழவில்லையெனில் சாதலை நிகர்த்த துன்பங்கள் விளையும்! சாகிற அளவு துன்பம் சூழினும் அவருடன் அந்நியமின்றி வாழக்கற்றுக் கொள்ளாதவர்கள் எப்படி வாழமுடியும்!

இன்றுள்ள சூழ்நிலையில் மனித குல நினைப்பே விழுமியது; இன்றியமையாதது. அதனை அடுத்துத்தான் நாட்டுவழிமக்கள்! மொழிவழி அமைந்த இனம்! சமயவழி அமைந்த சமுதாயம்! நாடு, மொழி, சமய வேறுபாடுகளைக் கடந்து "மனிதகுல” உணர்வு வளரவேண்டும்! இன்று ஆங்கிலேயர் நன்றாக வாழ்கின்றனர்! அமெரிக்காவை நோக்குங்கள்! ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த பல இனத்தவர்களும் கூடி வாழ்கின்றனர்! கூட்டரசு கண்டுள்ளனர்! அதனால், இன்று ஆங்கிலேயர் உலகத்தை இயக்கும் இனமாகத் திகழ்கின்றனர்! சீனர்களும் அப்படியேதான்!

தமிழர்கள் உலகத்தின் பல்வேறு நாடுகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்தொடங்கியே குடியேறி வாழ்கின்றனர்! ஆனால், தாம் சென்று குடியேறிய நாட்டைத் தமது நாடாக ஆக்கிக் கொள்ளும் திறனைக் கற்றார்கள் இல்லை! அந்தந்த நாட்டு மக்களுடன் இனம் கண்டு கொள்ள இயலாத நிலையில் கலந்து வாழ்ந்தார்கள் இல்லை! ஆங்கிலேயர் உலக மொழிகளுக்குத் தொண்டு செய்ததைப் போலத் தமிழர்கள் பிறமொழிகளுக்குத் தொண்டு செய்வதில்லை! ஏன்? தமது சமய - கலைஞானத்தையும் கூட, மற்றவர்களுக்கு வழங்குவ்தில்லை! ஏன் இந்த நிலை?

குடியேறி வாழும் நாடு, எந்த நாடாக இருந்தால் என்ன? எந்த ஊராக இருந்தால் என்ன? கவலற்க! அந்த நாட்டையே தாய்நாடாகக் கருதுக! அங்கேயே வாழ்க! அந்த நாட்டையே உழைத்து வளமுள்ள நாடாக ஆக்குக! அந்தந்த நாட்டு மொழிகளைக் கற்க அந்தந்த நாட்டுக் கலை ஞானங்களைக் கற்றுத் தெளிக! நம் மொழியை அந்த நாட்டு மக்களுக்குக் கற்றுத் தருக! நமது கலைஞானங்களை உலக வீதியில் வாழும் மக்களுக்குத் தருக! தமிழர் வாழ்க்கை, கொண்டும் கொடுத்தும் வாழும் வாழ்க்கை; இந்தக் கலை ஞானத்தை ஏன் மரணத்தின் வாயிலில் நிற்கும் வரையிலும் கூடக் கற்றுக் கொள்ளாமல் காலம் கழிக்கிறீர்! பக்கத்தில் உள்ள மனிதருடன் கலந்து பழகாத வாழ்க்கை, மரணத் துன்பத்திலும் கொடிய வாழ்க்கையல்லவா? வேண்டாம், இந்த மரணவேதனை! எல்லா மொழிகளையும் கற்போம்! நமது மொழிகளை மற்றவர் கற்கும்படி செய்வோம்! நாடுகள் பலவாயினும் ஒர் உலகமே! எல்லா ஊர்களும் சொந்த ஊர்களே! இதுவே வள்ளுவம் காட்டும் வாழ்க்கைமுறை.

உலக வாழ்க்கையில் இந்தத் திருக்குறள் நடைமுறைக்கு வந்துவிட்டால் உலகத்தில் போர் ஏது? மொழிச் சண்டைகள் ஏது? மதச்சண்டைகள் ஏது? இந்தத் திருக்குறளை வாழ்க்கையில் பதிக்கும் நாளிலேயே கெட்ட போரிடும் உலகம் மாயும்! ஓருலகம் தோன்றும்!

"யாதானும் நாடாமால் ஊராமல் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு."

(397)

வள்ளுவர் வாக்கு (2)

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும்

இந்தத் திருக்குறள் அருமையான செய்திகளை உடையது. தமிழர்க்கென்றே குறிப்பாய் செய்யப்பெற்ற திருக்குறளோ என்று தோன்றுகிறது. குடி என்பது ஒரே குருதிச் சார்புடைமையைக் குறிக்கும் சொல்லாகும். தமிழ் மரபில் குடி, குலம், இனம் - இவை உண்டு. பிறப்பின் வழி உயர்வு-தாழ்வு கற்பிக்கும் சாதி முறைகள் இல்லை. குடி என்பது குருதி வழி மரபு. இது இன்றைய அறிவியல் உலகத்திலும் ஏற்றுக்கொள்ளப் பெற்ற உண்மையேயாகும். ஒருவர் குறைந்த அளவு தாம் பிறந்த குடியையாவது சிறப்புற வாழச்செய்யவேண்டும் என்பது திருக்குறள் நெறி. அதனால் "குடி செயல் வகை" என்றே ஒர் அதிகாரம் அமைந்திருக்கிறது.

குடி செய்தல் என்பது, தாம் பிறந்த குடியில் உள்ள உற்றார் அனைவரையும் வளத்தோடும் மகிழ்வோடும் வாழச் செய்தலாகும். ஒவ்வொருவருக்கும் இது தவிர்க்க இயலாத கடமை. தாம் பிறந்த குடியை வளர்க்கும் பணியில் ஈடுபடுவோர், பருவகாலங்கள் நாள், கிழமைகள் பார்க்க வேண்டியதில்லை என்பது திருவள்ளுவர் கருத்து.

தமது குடிப்பிறந்தாரை நலமாக வாழ்விக்கும் முயற்சியில் ஈடுபடுவோர் பருவம், நான், கிழமை முதலியன பார்த்துக் காலத்தைக் கடத்தினால் பல்வேறு இழப்புகள் தோன்றும் என்ற கருத்தில் "பருவம் இல்லை" என்றே கூறுகிறது, வள்ளுவம். அடுத்து பருவத்தையும் நாளையும் கிழமையையும் எதிர்பார்த்து "இன்று” “நாளை” - என்று கடமைகளை ஒத்திப்போடுவது சோம்பலாகும்.

உலகில் உயிர்களுக்கு இயற்கை சுறுசுறுப்பாக இருத்தல்; சோம்பியிருப்பது செயற்கை, சோம்பியிருத்தல் கூடாது என்பதை வலியுறுத்த, "மடி செய்து" என்றார். அடுத்து "மானம் கருதக் கெடும்" என்பது மிக முக்கியமான பகுதி. மானம் என்பது பெருமை என்று பொருள்படும். மானிட சாதிக்கு மானம் பெரிது என்று "மானம்" என்ற அதிகாரத்தில் திருவள்ளுவரே வலியுறுத்தியுள்ளார். தமது உடம்பில் உள்ள ஒரு சிறு உரோமத்தை இழந்தாலும் வாழாத கவரிமானைப் போல மானமிழந்தபின் வாழக் கூடாது என்று "மானம்” என்ற அதிகாரத்தில் திருக்குறள் வலியுறுத்துகிறது.

ஆனால், இந்தக் குறிப்பிட்ட அதிகாரத்தில் மானம் கருதக் கூடாது என்று திருக்குறள் கூறுகிறது. இஃது என்ன, திருக்குறளில் முன்னுக்குப்பின் முரண் என்று எண்ணத் தோன்றுகிறதா? திருக்குறளில் ஒன்றும் முரண்பாடு இல்லை! இடம் நோக்கிப் பொருள் கொள்ளவேண்டும்.

பொதுவாக எந்த ஒரு நற்பண்பும் காலப்போக்கில் பொய்ம்மையாகப் போய்ப் பிடிவாதத்திற்கு இரையாதல் உண்டு, இந்த நிலையில் மானம் என்பது பொய்ம்மையைத் தழுவிய மானமாகி விடுகிறது! இயல்பாக உள்ள பெருமையில்லாமல் மற்றவர்கள் தன்னை மதிக்கவேண்டும் என்ற உணர்வில் ஒரு பொய்ம்மையான மான உணர்வு உறவுகளையும் பகையாக மாற்றிச் சீரழிவு செய்துவிடும்.

பெரும்பாலும் இத்தகு பொய்ம்மை மானத்தால் அழிந்த குடும்பங்கள் பல! பிரிந்த நண்பர்கள் எண்ணிலர்! நலிந்த காதலர்கள் பலர்! உடைந்த இயக்கங்கள் பலப்பல! இத்தகு பொய்ம்மை மானம்போற்றி ஒழுகின் தாம் பிறந்த குடியை வளர்க்கமுடியாது என்று திருக்குறள் ஐயத்திர்கிடமின்றிக் கூறுகிறது!

இத்திருக்குறளுக்கு அரிய இலக்கியமாக அண்மைக் காலத்தில் நம்மிடையே வாழ்ந்த தலைவர் ஒருவர் இருந்தார்! தம்மை இழித்தும் பழித்தும் பேசிப்புறக்கணித்து ஒதுக்கிய தலைவர்களிடத்திலும் குடிமைப் பண்பின் காரணமாக அயராது தனது அன்பையும், மதிப்பையும், காட்டி வாழ்ந்து, தாம் பிறந்த தமிழ்க் குடிக்கு வெற்றியைத் தேடித் தந்த அறிஞர் அண்ணாவை யார்தான் மறக்க இயலும்?

நாமும் அவ்வழியில் தமிழ்க் குடியினை வளர்க்கும் பணியில் பருவம் பார்க்காது, சோம்பலின்றி, மானம் கருதாது உழைப்போமாக!

குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து

மானம் கருதக் கெடும்

வள்ளுவர் வாக்கு (3)

"பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"

இந்தத் திருக்குறளின் பொருளை நோக்க இது விருந்தோம்பல் அதிகாரத்தில் உள்ள திருக்குறளா? ஈகை அதிகாரத்தில் உள்ள திருக்குறளா? ஒப்புரவறிதல் அதிகாரத்தில் உள்ள திருக்குறளா? அல்லது குடிசெயல்வகை அதிகாரத்தில் உள்ள திருக்குறளா? - என்றெல்லாம் சிந்தனை ஒடும்! ஆனால் இந்த அதிகாரங்களில் இந்தத் திருக்குறள் இல்லை! பின் எந்த அதிகாரத்தில் இருக்கிறது? "கொல்லாமை" அதிகாரத்தில் இந்தத் திருக்குறள் இருக்கிறது? ஏன்? என்ன இயைபு?

ஒருவனை, கருவிகள் கொண்டு கொலை செய்தல் மட்டும் கொலை என்ற கருத்து இன்று நிலவுகிறது! சமய நூல்கள், சட்டங்கள் இப்படித்தான் கூறுகின்றன! ஆனால், திருவள்ளுவர் இதில் ஒரு புதிய சிந்தனையைத் தூண்டுகிறார்! தருகிறார்! வாழப்பிறந்த உயிர்களுக்கு வாழ்வளிக்க வேண்டிய பொறுப்பு, சமுதாயத்திற்கு இருக்கிறது. அரசுக்கு இருக்கிறது! ஏன்? ஒவ்வொரு மனிதனுக்குமே இருக்கிறது! இங்ஙனம் கடமை உணர்ந்து செய்தலே அறம்! உலக மொழிகளின் மறைநூல்கள், மற்ற இலக்கியங்கள் ஆகியவற்றில் கூறப்படும் அறங்களில் எல்லாம் சிறந்தது. பகுத்துண்டு வாழ்தல் என்ற அறம். இது நூலோர் தொகுத்துக் கூறும் அறங்கள் பலவற்றிலும் சிறந்த அறம். தலையாய அறம்!

‘பகுத்துண்டல்’ என்றால் வெந்த சோற்றைப் பங்கிட்டு உண்ணுதல் என்ற அளவில் மட்டும் பொருள் கொள்ளக் கூடாது. இங்ஙனம், கொள்வதற்கு, "பல்லுயிர் ஒம்புதல்” என்ற பின் வரும் சொற்களும் அச்சொற்களின் கருத்தும் தடையாக உள்ளன. "ஓம்புதல்” என்ற சொல், அகன்ற - உயர்ந்த பொருள் நோக்குடையது. ஓம்புதல் என்ற சொல் பாதுகாத்தல், வளர்த்தல், வாழ்வித்தல் என்ற பொருள்களையும் தருகின்றது. அதாவது; உணவு, மருந்து முதலியவற்றால் பாதுகாத்தல், கல்வி - கலைஞானங்களால் வளர்த்தல், தக்காங்கு தாமே வாழும் தகுதியைப் பெறச் செய்து வாழ்வித்தல் என்றெல்லாம் பொருள் தரும். இத்தகைய கடமைகளைச் சோறு வழங்குவதால் மட்டும் இயற்ற இயலாது உயிர் வாழ்வதற்குரிய நுகர்பொருள்களை உற்பத்தி செய்யும் உற்பத்திக் களங்களைத் தனி உடைமையிலிருந்து பொதுவுடைமையாகப் பகுத்துக் கொண்டும் உறவும் உணர்வும் கலக்கக் கூடி உண்டும், வாழ்தல் வேண்டும். இத்தகு வாழ்க்கை அறவாழ்க்கை.

அறம் என்றால் கடவுளை நோக்கிச் செய்ய வேண்டும் என்பதல்ல. மனிதனை நோக்கி மனிதனுக்காகச் செய்தாலும் அறமேயாம்! இல்லை, அதுவே அறம்! இந்தத் திருக்குறள் இன்னும் வாழ்வாக மலரவில்லை! மீண்டும் மீண்டும் நமது நாட்டு மக்கள் மனித குலத்தை ஒருமைப்படுத்தி உண்பித்து வாழ்விப்பதை அறமாக ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை! ஆரவாரமான கடவுட் பூசைகள், வேள்விகள், சடங்குகளிலேயே ஈடுபடுகின்றனர். ஏன்? நமது நாட்டின் அறிஞர்களில் பலரும் கூட இத்தீமைக்கே ஆளாகி உள்ளனர். இது நன்றன்று; தீதேயாம்.

செல்வம் பொதுமையானது. பலரும்கூடி உண்டு வாழவேண்டும். எல்லா உயிர்களும் உண்டு, உடுத்து வாழ்வதற்குரிய செல்வத்தினை உழைப்பால் பெறவேண்டும். உழைப்பதற்குரிய வாய்ப்பும், உழைப்பால் உற்பத்தியாகும் செல்வம் மற்றவர்களால் கவரப் பெறாத சமுதாயப் பாதுகாப்பும் வேண்டும். சோற்றால் மட்டுமே உயிர்வாழ்வு அமைந்துவிடுவதல்ல. களிப்பும் மகிழ்ச்சியும் தேவை; கல்வியும் கலைஞானமும் தேவை; மெய்யுணர்வும் தேவை இவற்றைச் சமுதாயமும் அரசும் உயிர்க்குலத்திற்கு வழங்கவேண்டும். அப்போதுதான் சமுதாயம் வளரும்; வாழும்; இன்பஉலகு அமையும்.

"பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”

(322)

என்ற குறள்நெறி வையகத்தின் வாழ்வு நெறியாக மலர உரிய கடமைகளைச் செய்வோம்! செல்வக் குவியலைத் தவிர்ப்போம்! உடைமையாளராக வாழ்வதைவிட, பலருக்கும் உறவினராக வாழ்வதையே விரும்புவோம்! செல்வத்தைப் பொதுமை செய்வோம்! பலரோடும் கூடிப் பகுத்துக்கொண்டு, உண்பித்தும் உண்டும் மகிழ்வோம்! மகிழ்வுறுத்துவோம்! இதுவே வள்ளுவம் காட்டும் வாழ்க்கை; அன்பு வாழ்க்கை! அறவாழ்க்கை.

6

தமிழமுது

* * *

1. வள்ளுவம் ஏன் பிறந்தது?

தமிழினம் காலத்தால் மூத்த இனம்; நிலவுலகத்தை மூடியிருந்த நீர்ப்பரப்பு மறைந்து, கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி வீரத்தில் மட்டுமன்று, சிந்தனைத் திறத்திலும் சிந்தனையைச் செப்பும் மொழித் திறத்திலும், இலக்கியப் படைப்பாற்றலிலும் இலக்கியத்தின் பயனாகிய நனி நாகரிகத்திலும் சிறந்து விளங்கிய இனம், தமிழினம். செல்வச் செழிப்பும் இருந்தது. அதனால், காலப்போக்கில் மதோன்மத்தமான வாழ்க்கையை நடத்தத் தொடங்கிவிட்டனர். கள்ளும், காமமும் இடம் பெற்றன. ஐந்திணை ஒழுக்கத்திற்குப் பதில் பரத்தையர் ஒழுக்கம் கால்கொண்டது. ஓரினத்திற்குள் உயர்வு தாழ்வு மனப்பான்மைகள் தலைகாட்டத் தொடங்கின. அவ்வழி, பல்குழுத் தோற்றமும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் வளரத் தொடங்கின. பொழுது விடிந்தால் பொழுது போனாற் போலப் பண்பாட்டை வளர்க்கும் சமய நெறிகளும் பல

தி.16. வாயினமையின் காரணமாகச் சமயநெறியாளர்களுக்குப் பதில் சமயக் கணக்கர்கள் சமுதாயத்தில் தோன்றினர்.

அவர்களும் சமுதாயத்தைப் பண்பியல் வழியில்-அமைதி நெறியில் ‘இவர் தேவர் அவர் தேவர்’ என்று இரண்டாட்டுகின்ற புன்னெறியை வளர்த்தனர். இங்ஙனம் புகழ்பூத்து வாழ்ந்த தமிழனத்தில் வீழ்ச்சியுறும் நிலை தலை காட்டிய பொழுது திருவள்ளுவர் பிறந்தார். இருள் கடிந்தெழுகின்ற ஞாயிறெனத் தோன்றினார் திருவள்ளுவர். திருவள்ளுவர் என்ற ஞாயிறு கனன்ற கதிரொளியே திருக்குறள், ஓரினத்தை அழிவு வராமல் பகைப்புலத்தில் காக்கும் போர் வீரனை விட வாழ்வியல் நெறியில் நயத்தக்க நாகரிகத்தினைக் கட்டிக் காப்பாற்றிய வள்ளுவர் போற்றுதற்குரியர். ஏழேழ் பிறப்பும் போற்றுதற்குரியர்; வடபுலம் கண்டு வாகை கொண்ட ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் வெற்றியை விட செந்தமிழ்ப் பேராசான் திருவள்ளுவர் புகழ் போற்றுதலுக்குரியது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் வெற்றி ஒரு பொழுதே பகை தடுத்தது. நாவலர் வள்ளுவர் வெற்றி ஊழி ஊழிக் காலத்திற்கு வெற்றி கொண்டது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் வெற்றி பகை மட்டுமே தடுத்தது; பண்பினை வளர்க்கப் பயன்படவில்லை, திருவள்ளுவர் செய்த திருக்குறளோ நந்தமிழ் நெறியினை நஞ்சனைய நெறியின் கலப்பினின்று தடுத்துக் காப்பாற்றியது. நமது சமுதாயத்தை வாழ்வாங்கு வாழும் நெறியில் வழிநடத்தியதன் மூலம் பண்பியலையும் பேணிக் காத்து வந்திருக்கின்றது.

வள்ளுவம் வையகத்து வரலாற்றின் சந்திப்பில் பிறந்தது; வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தப் பிறந்தது; தேங்கிக் கிடந்த சமுதாயத்தில் தெளிவு காணப் பிறந்தது; நூல்கள் பல கற்பதிலும் நுண்ணிய அறிவு ஆற்றலுடையதெனக் காட்டப் பிறந்தது. கல்வி, கற்கின்ற ஆற்றல்ைப் பொறுத்ததல்ல, கசடு அறுத்தலிலேயே இருக்கிறது. என்று உணர்த்தப் பிறந்தது; மண் வழிப்பட்ட உடைமைகளிலும் உள்ளம் உடைமையே உடைமையென உணர்த்தப் பிறந்தது; ஆனதைக் கதையாக்கிக் கவலையாக்கிச் சாகாமல், தடுக்க ஆவது காட்டப் பிறந்தது. நிலத்தில் துய்மை, உடலில் துய்மை, நெற்றியில் தூய்மை இவையனைத்தும் கைகள் செய்பவை. இந்தத் துய்மை பெருகி வளர்ந்தும், பேணும் சமுதாயம் பகையினின்றும் விடுதலை பெற்றபாடில்லை. நன்செயலின் தோற்றமும் நஞ்சையிலில்லை; புன்செயலின் தோற்றமும் புஞ்சையிலில்லை. காழ்ப்பின் தோற்றம் காசுகளிலில்லை. கலகங்களின் தோற்றம் கடவுள்களிட்டதில்லை. கொலையுணர்வின் தோற்றம் கொடுவாளிடத்திலில்லை. உருக்குலைக்கும் உட்பகையின் தோற்றம் உடலின்கண் இல்லை, ஆங்கிலங்கும் நீற்றிலில்லை. பின் எங்கு? நஞ்சின் நிலைக்களம் மனமேயாம். மனத்துக் கறுப்பு வைத்து மாநிலம் முழுதும் தூய்மை செய்தாலும் பயனில்லை என்று பாங்குறக் காட்டி மனத்தின் கண் மாசறுத்து மகிழ்வூட்டப் பிறந்தது வள்ளுவம்.

மனிதன், உருவெளித் தோற்றத்தால் தனி மனிதன்; மக்கட் கணக்கெடுப்பில் தனி மனிதன், வயிற்றால் வாயால் தனி மனிதன், ஆயினும், அவன் படைத்திடும் வாழ்க்கை தனி மனித வாழ்க்கையன்று; சமுதாய வாழ்க்கை-கூட்டு வாழ்க்கை அவனிடத்தில் உருவாகித் தோன்றும் உணர்வுகள் உலகம் தந்த உணர்வுகளேயாம். ஈண்டு உலகம் என்பது மனித சாதியை நினைத்தேயாம். எனவே, இயற்கை உலகம், மனித சாதியினைப்போல எளிதில் ஒழுக்கங்களைக் கடப்பனவல்ல; முறைகளை மீறுவன அல்ல; நீதிகளை நீப்பன அல்ல. இயற்கை உலகில் மாற்றங்கள் உண்டு; ஆனால் ஏமாற்றங்கள் இல்லை. மனித சாதியிலோ முறைகளை எளிதில் கடந்த சிலச் சிதைவினையும், ஏமாற்றங்களையும் வரலாறுகளே படம் பிடித்துக் காட்டுகின்றன; இலக்கியங்கள் எடுத்துக் கூறுகின்றன. கீழே விழுந்துவிடாமல் தம்மை அடிக்கடி தூக்கி நிறுத்திக் கொண்ட மனிதசாதி கெட்டதைப் போல செடிகள் உலகம் கெடவில்லை. கொடிகள் உலகம் கெடவில்லை. விலங்குகள் உலகமும் கெடவில்லை. ஆனால் மனிதனோ தம்பட்டம் அடித்துக்கொள்கிறான். விலங்குகளுக்கு ஐந்து அறிவாம். இவனுக்கு ஆறாவது அறிவாம் ஐயகோ, மனிதர்களே! வாயும் வார்த்தைகளும் கிடைத்தமையால் ஏன் இப்படி வையகத்தை ஏமாற்றுகிறீர்கள்? எங்கேயிருக்கிறது உங்கள் ஆறாம் அறிவு? நமக்கு அறிவு இருப்பதன் அடையாளம் என்ன? அதற்கு பதில் ஆரவாரம்தானோ? விலங்குகளும் துன்பம் அனுபவிக்கின்றன. ஆனால் ஓர் அதிசயம்! விலங்குகள் அனுபவிக்கும் துன்பங்கள் பெரும்பாலும் இயற்கை வழியில் வந்த துன்பங்கள். ஒரோவழி, அறிவின்மையின் காரணமாகச் சில அவலங்களையும் அடைகின்றன. ஆயினும் மனிதச் சாதியைப்போல செயற்கை இன்பங்களும் செயற்கைத்துன்பங்களும் விலங்கினத்திற்கு கிடையா! அறிவிருப்பதைக் காட்டுதற்குரிய அன்பு பிறந்திருக்கிறதா? "மேடையில் தான் பிறக்கிறது! வணிகம்தான் நடை பெறுகிறது!” என்று இடித்துக்கேட்க- “அறிவினால் ஆகுவ துண்டோ பிறிதின் நோய் தந்நோய்போல் போற்றாக் கடை" என்று வள்ளுவம் பிறந்தது.

வாழ்க்கையென்பது, ஒன்றரையடியில் பிறந்து ஆறடிக்கு வளர்ந்து மண்ணுக்கு உரமாகவோ? நிலத்தில் விளைந்தவைகளைத் தின்று திரிந்து கதை முடிக்கவோ? உண்ட உணவின் கொழுப்புகளால் விளைந்த உடலெரிச்சலைக் கூடித் தணித்துக் கொள்ளவோ? இல்லை, இல்லை! மனிதன்-அவனே வையகத்தின் நாயகன்! கடவுளின் சாட்சியாக விளங்க வேண்டியவன்! அவன் வாழ்வாங்கு வாழ்ந்தால், வையகம் வளரும்; வானகம் மண்ணுக்கு வரும். அங்ஙனம் வாழ்தல் வாழ்க்கை என்று காட்ட, "வையத்துள் வாழ்வாங்கு வாழ்க!” என்று வள்ளுவம் பிறந்தது.

மண்ணுக்கு இயற்கையில் உயிர்ப்பாற்றல் இருக்கிறது. அந்த உயிர்ப்பாற்றலின் வழி இழுத்தெறியப் படாமல் மேலே உயர உயர ஓங்கி வளர, இயற்கை ஆற்றலும் தந்தது. விலங்குகளுக்குக் கால்களும், மரம், செடி கொடிகளுக்கு வேர்களும் கிளைகளும் அந்த நோக்கத்துடனேயே அமைந்தனவாம். அவைகள் மண்ணிடை வேர் பாவிக் கிளைகள் விட்டு அதன் உயிர்ப்பாற்றலின் சக்தியைத் தடுத்து நிறுத்தித் தன்னை இழுத்தெறியும் ஆற்றலுடைய மண்ணையே, தான் நின்று நிறுத்தி வளரும் களமாக மாற்றித் தாம் வளர்வதோடன்றிப் பூத்துக் குலுங்கிக் காய்ப்பதோடன்றி விலங்குகளுக்கும் மனித உலகத்துக்கும் கூட வாழ்வளிக்கின்றன. ஆனால் மனிதனோ, மண்ணின் ஆற்றலால் உடல் மட்டுமின்றி உள்ளத்தையும் பறிகொடுத்துத் தானும் வாழாமல் மற்றவர்களுக்கும் வாழ்வளிக்காமல் பயனின்றி நடமாடுகிறான். அதனாலேயே வாழ்வாங்கு வாழ்தலைத் தெய்வமாக்கினார். வள்ளுவர் காலத்தில் மனிதர் பூசித்தது தெய்வத்தை பூசிப்பவன் ‘சாத்தான்’. ஆனால் பூசனையால் வரும் பயனென்ன? தெய்வ மணம் கமழும் இனநலம் உடையவனே தெய்வத்தைப் பூசித்தற்குரியவன். சாத்தானின் இடம் சுடுகாடு. தெய்வங்களின் இடம் மனித இனம் நடமாடும் மலர்ச்சோலை; திருக்கோயில்கள்; ஆதலால், சாத்தானாக விளங்கும் மனிதனைத் தெய்வமாக்கவே வள்ளுவம் பிறந்தது. ‘வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வம்’ என்று வள்ளுவம் பேசுகிறது.

வள்ளுவம் ஏன் பிறந்தது? என்று இதயத்தில் பட்டதை எழுதியிருக்கிறோம். வள்ளுவம், பதவுரை, பொழிப்புரைக்காகப் பிறக்கவில்லை; பாராட்டுரைகளுக்காகப் பிறக்க வில்லை. மண் செழிக்க மழை பொழிவதுபோல, மனிதகுலம் செழிக்க-மனித உள்ளங்கள் செழிக்க-உலகு செழிக்க-உயர்கடவுள் சிரித்து மகிழ வள்ளுவம் பிறந்தது! முடிந்தால்-மனமிருந்தால் வள்ளுவம் பிறந்ததன் பயனையடைய வழி காணுங்கள். வையகம் சிறக்கும்! அல்லது வழக்கம்போல வாழ்த்துரைகளில் வாழ்நாளை வீணாக்குங்கள்! அஃது உங்கள் விருப்பம்! வள்ளுவரே, ‘ஏவவும் செய்கலான் தான் தேரான்’ என்று நொந்து கூறியுள்ள பொழுது நாம்தான் என்ன செய்ய முடியும்? வளர்க வள்ளுவம்.

2. திருக்குறளும் ஒருமைப்பாடும்

சுதந்திர பாரதத்திற்கு ஒருமைப்பாடு இன்றியமையாதது என்பது எல்லோரும் ஏற்றுக் கொண்ட முடிபு. புரட்சிக் கவிஞன் பாரதி, பாரத நாட்டின் சுதந்திரத்தை ஆங்கிலேயர்கள் பறித்து எடுத்துக் கொண்டதாகக் கூறவில்லை. அதற்கு மாறாக, சுதந்திரம் தவறிக் கெட்டுப் போய்விட்டது என்று குறிப்பிடுகிறான். "விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்றதாமோர் பாரததேசம்’ என்றே பாடுகின்றான், சுதந்திரம் தவறிக் கெட்டுப் போனதற்குரிய அடிப்படைக் காரணம் பாரத நாட்டு மக்களிடையே நிலவிய வேற்றுமைகளேயாம். பாரத நாட்டு மக்களிடையே ஒத்த உரிமையுணர்வு இல்லாது போய் பல நூற்றாண்டுகள் ஆயின. சாதி, இனம், மொழி, சமயம் ஆகிய வேறுபாடுகளால் ஒரு தாய்வயிற்றுப் பிள்ளைகளாகப் பிறந்திருந்தும் பற்றும் பாசமுமின்றிக் காழ்ப்பொடு கூடிய கலகம் விளைவித்துக் கொண்டனர். இதன் பயனாக நம்முடைய பேரரசுகள் வீழ்ந்தன.

இந்த வேற்றுமையுணர்ச்சிகளை இலக்கியத் துறையிலும் சரி, சமயத் துறையிலும் சரி எதிர்த்துப் புரட்சி செய்த சான்றோர்கள், இமயம் முதல் குமரி வரையில் பரந்து கிடக்கும் பாரத பூமியில், பலர் தோன்றினார்கள். ஆயினும் நிறைந்த பயன் கிடைக்கவில்லை. பயன் விளையாமைக்குக் காரணம் சிந்தை வேறு, சொல் வேறு, செயல் வேறு பட்ட வாழ்க்கையேயாம்.

ஒருமைப்பாடு என்பது ஒரு மிகச் சிறந்த பண்பாடு. ஒருமைப்பாடு ஒரு கலை; ஒரு நோன்பு, அகத்தில் ஒத்து, ஒத்த உரிமையினராகி எல்லோரும் இன்புற்று வாழ, வகை செய்வது ஒருமைப்பாடு. ஒருமைப்பாட்டுணர்வு மெல்ல மெல்ல வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு விழுமிய பண்பாகும். உலகியற்கையில்-இறைநலப் படைப்பில் ஒருமைப்பாடே அதிகம். அங்கு மோதலில்லை. அந்தரத்தில் தொங்கும் அண்டசராசரங்களும் கூட ஒன்றோடொன்று மோதாமல் இயங்குகிற அமைப்பில் வியத்தகு ஒருமைப் பாட்டினைப் பார்க்கிறோம். வெளித்தோற்றத்தில் முரண்பாடுகள் காணப்பட்டாலும் ஒருமைப்பாடே மிகுதியும் மேம்பட்டு விளங்குகிறது. வேற்றுமைகளுக்குள்ளும் ஒற்றுமை-ஒருமை காண்பது பாரதப் பண்பு. இந்தப் பண்பின் வழியாகப் பாரிலுள்ளோரைப் பகையின்றி வாழச் செய்யலாம்.

ஒற்றுமையும், ஒருமைப்பாட்டுணர்வும் ஒன்றல்ல ஒற்றுமையென்பது தற்காலிகமான கூட்டுச் சேர்க்கை. அது தற்காலிகமானதாகவும் இருக்கலாம். நிர்பந்தத்தின் காரணமாகவும் இருக்கலாம். ஒற்றுமையைவிட ஒருமைப்பாடு மிக மிக உயர்ந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகுக்கு ஒரு நூல் செய்த திருவள்ளுவர் ஒருமைப் பாட்டையே உயர்த்திப் பார்க்கிறார். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பது அவர் வாக்கு மேலும் அவர்,

"ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்

விற்றுக்கோள் தக்க துடைத்து"

என்றார்.

மானிட இனத்தின் சிறப்புமிக்க இயல்பு ஒழுக்க முடைமை. திருவள்ளுவர் ஒழுக்க நெறியில் பலவற்றைப் பகுத்துக் கூறினாராயினும் ‘உலகத்தொடொட்ட ஒழுகல்’ மிகச் சிறந்த ஒழுக்கமென வரையறுத்து வற்புறத்திக் கூறுகின்றார்.

இன்றைய சூழ்நிலையில் நமது பாரத நாட்டுக்கு ஒருமைப்பாடு மிகவும் தேவைப்படுகிறது. நாள்தோறும் செய்தித் தாள்களைப் புரட்டினால், ஒரு கந்தல் துணியைப் பார்ப்பது போன்ற ஒர் உணர்ச்சி நமக்கு ஏற்படுகின்றது. அதாவது இன, வகுப்புக் கலவரச் செய்திகளையும் அரசியல் காரணமாக ஏற்படும் குழுக்களில் ஏற்படும் பகைமையுணர்ச்சியால் விளைந்த மோதல்களையும் செய்தித்தாள்களில் நிறையப் படிக்கிறோம். இந்தச் செய்திகளைப் படிக்கின்ற ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் வெட்கித் தலைகுனிய வேண்டியவனாக இருக்கிறான். தென்னகத்தில் தாய்மொழிப்பற்று இயற்கையாகவே உண்டு. ஆனால், நாட்டின் ஒருமைப்பாட்டை தாய்மொழியுணர்ச்சிக்கு பின் தள்ள முடியாது. அதுபோலவே நாலைந்து மொழிகளுக்கு மேலாகப் பேசப்பெறும் நாட்டில் ஒரு மொழியின் மூலம் ஒருமைப்பாட்டை உண்டாக்க முடியாது. அது போலவே ஆட்சிமுறைச் சட்டங்களாலும் ஒருமைப்பாட்டை உருவாக்கி விடமுடியாது.

ஒருமைப்பாடு என்பது உணர்வின் பாற்பட்டது. அது ஒரு கலை; அது ஒரு தவம். ஒருமைப்பாட்டுணர்வினைப் பயிலுதல் எளிதன்று. ஒரும்ைப்பாட்டை சிந்தனை, கல்வி, வாழும் இயல்பு ஆகிய வழி வகைகளாலேயே காண முடியும். அதனாலன்றோ, "ஒரு நாட்டுமக்களை ஒத்த உரிமையுணர்வுடன் இணைக்க ஒரு சிறந்த தேசிய இலக்கியம் இருக்க வேண்டும்" என்று கார்லைல் கூறினான்.

பாரத நாடு விடுதலை பெற்று பல ஆண்டுகளாயிற்று. பாரத நாட்டின் தனி-பொது அரசியல் வாழ்க்கை விரிந்த மக்களாட்சி அடிப்படையில் அமைந்துள்ளது. எந்த ஒரு வருடைய அல்லது எந்தவொரு இனத்தினுடைய அடிப்படை உரிமைகளுக்கும் பாதுகாப்பு உண்டு, ஆயினும் பாரத நாட்டின் பொது நலனுக்கு இடையூறு செய்கின்ற தனி நலன்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கன அல்ல. ஒருவருடைய நலன் பலருடைய நலங்களுக்கு கேடுவிளைவிப்பதாயின் அது ஒரு நலனே அல்ல; தீமையேயாம். நன்மை நன்மையைத் தோற்றவிக்குமே தவிர தீமையைத் தோற்றுவிக்க முடியாது. ஆதலால் உயர்ந்த கல்வி-மறந்தும் மாறுபாடுகளைக் காட்டாத கல்வி-மூலமே ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும். ஆதலால் தான் தேசீய இலக்கியம் வேண்டுமென்று கார்லைல் கூறுகிறான்.

பாரத நாட்டு இலக்கியங்களில் பெரும்பான்மையானவை மொழி, இன, சமயச் சார்புடையனவேயாம். இவைகளின் சார்பில்லாத இலக்கியங்களில் இருப்பது அருமை. இஃது உலகியற்கை. இன்று உலகின் நெருக்கம் வளர்ந்திருப்பது போலப் பண்டு இன்மையின் காரணத்தினாலும், போர்க் கருவிகளின் ஆற்றல் பெருகி வளர்ந்திருப்பதன் காரணத்தினாலும், இன்று ஒருமைப்பாடு இன்றியமையாத் தேவையாகிறது. பாரத நாட்டு இலக்கியங்களில் திருக்குறள் ஈடு இணையற்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இனம், மொழி, சமயச் சார்பின்றி மனித உலகத்தின் நல்வாழ்க்கையை மையமாக வைத்துச் செய்யப்பெற்ற சிறந்த நூல் திருக்குறள். திருக்குறள் எடுத்துக் கூறும் ஒழுக்க நெறிகளும் கற்பனையில் தோன்றியவை அல்ல; அதீதமானவைகளுமல்ல. சாதாரணமாக ஒரு சராசரி மனிதன் நடைமுறைப்படுத்தக் கூடிய வாழ்க்கை முறைகளையே ஒழுக்கமென்று கூறியுள்ளார் திருக்குறளாசிரியர். சமுதாயத்தின் பல்வேறு தரப்பினருக்கும் ஏற்ற ஒழுக்கங்களை அவர் இந்நூலில் எடுத்துக் கூறியுள்ளார்.

மனித சமூகத்தினைச் சார்ந்த ஒழுக்க நெறிகளைப் பேணி வளர்த்துப் பாதுகாக்க வேண்டும். இதுவே திருவள்ளுவரின் இலட்சியம். இந்த ஒரே நோக்கத்தோடு செய்யப்பெற்ற நூல் திருக்குறள். திருக்குறள் ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்று வரையறுத்துக் கூறுவதால், பிறப்பின் வழிப்பட்ட வேற்றுமைகளைக் களைகிறது. ‘ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்’ என்று கூறினமையால், சமூக ஒழுக்க நெறியை எடுத்துக்காட்டுகிறது. ஒழுக்கங்களில் உயர்ந்த ஒழுக்கமாகிய ஒப்புரவினால் பொருளியல் ஏற்றத் தாழ்வுகளை மாற்ற முடியும். பொருளியல் ஏற்றத்தாழ்வு குறைந்து சமநிலைச் சமுதாயம் அமைந்தால் சமுதாயமும் ஒன்றுபடும். ஒழுக்க நிலையும் உயரும்; இன்பமும் பெருகும்.

திருவள்ளுவர் கல்வியை ஒருமைப்பாட்டுக் கல்வியாகவே கருதுகிறார். ஒருமையுணர்வினைத் தராத கல்வியை-அறிவை திருவள்ளுவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்"

என்றும்,

"எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

அவ்வது உறைவது அறிவு”

என்றும், கூறியிருப்பது அறியத் தக்கது. எல்லா நாடுகளையும், எல்லா ஊர்களையும் தமதென ஏற்றுத் தழுவி வாழுதலுக்கே கல்வி தேவையென்று கருதுகின்றார் திருவள்ளுவர். இதனை,

"யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு”

என்ற குறளால் அறியலாகும்.

ஆதலால், பாரத நாட்டு ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்றால் அதற்கு உடனடியான தேவை பாரத நாட்டு இலக்கியம். அதாவது-தேசிய இலக்கியம். நிலம், குலம், சமயம், இனம், மொழி ஆகிய எந்தச் சார்பினையும் சாராது மானிடச் சமுதாயத்தின் மேம்பாட்டினைக் கருதியே செய்யப்பெற்ற நூலை உடனடியாகப் பாரத நாட்டு இலக்கியமாக அறிவிக்கவேண்டும்.

இமயம் முதல் குமரி வரை வாழும் அனைத்து மக்களின் சிந்தனைக்கும் வாழ்க்கைக்கும் அடிப்படைச் சுருதியாகத் திருக்குறள் அமைய வேண்டும். அதுபோழ்து பாரத ஒருமைப்பாடு உருவாகும். பாரத சமுதாயமும் வளரும.

3. எது தவம்?

திருக்குறள் ஒர் ஒழுக்க நூல்-ஆயினும் விஞ்ஞானப் பார்வையில் தலைசிறந்து விளங்கும் நூல். திருக்குறள் காட்டும் ஒழுக்கநெறி அறநெறி. மனித இயல்புகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு நடைமுறைப் படுத்தக் கூடியவையாகவே கூறப் பெற்றிருப்பது எண்ணி உணரத் தக்கது. வாழ்வியலுக்கு அப்பாற்பட்ட-நடைமுறைச் சாத்தியமற்ற ஒழுக்க நெறிகளைத் திருக்குறள் கூறவில்லை-வாழ்வாங்கு வாழ்தல் என்பதையே திருக்குறள் சிறந்த அறமாகப் பாராட்டுகிறது. அங்ஙனம் வாழ்பவர்கள் தெய்வமெனப் போற்றப்படுவார்கள் என்று திருக்குறள் கூறுகிறது.

வாழ்க்கை என்பது கடமை என்ற செயற்பாட்டுக் காகவே. சிறந்த சமய நூல்களும் உயிர்கள் வாழ்க்கைக் களத்தில் கடமைகளைச் செய்வதன் மூலம் அறிவும் அனுபவமும் பெற்று இறுதியில் துன்பச் சூழலினின்றும் விடுதலை பெறுகின்றன, என்றே கூறுகின்றன. கடமைகளைச் செய்வதற்கு உயிர்கள் தமக்கு இயைபான களங்கள் அமைத்துக் கொள்கின்றன. அதற்குக் களங்களே இல்லறம், துறவறம் என்றமைகின்றன. இவையிரண்டுமே கடமைகளின் பாற்பட்டனவே. இல்வாழ்வான் கடமைகள் சற்று தன்னலச் சார்பும், குடும்பச் சார்பும் தழுவினவாக இருக்கும். இந்த வாழ்க்கைக்குச் சில விதி விலக்குகள் உண்டு. துறவற வாழ்க்கைக்குத் தன்னலச் சார்பே இல்லாத பிறர் நலம் கருதிச் செய்கின்ற கடமைகளேயுண்டு. இங்கு விதி விலக்குகள்-மிகமிகக் குறைவு. ஏன்? இல்லையென்றே கூறலாம். ஆயினும், இவ்விருவகை வாழ்க்கையின் இலட்சியமும் கடமைகளைச் செய்தலேயாகும்.துறவறம் அல்லது தவ வாழ்க்கை என்றால் கடமைகளினின்று விடுதலை பெறுதலல்ல. கதே என்று தத்துவஞானி கூறியதுபோல, ஞானிகளின் கடமை உலகத்தைத் துறந்து ஓடிவிடுவ தன்று-உலகத்தோடு ஊடுருவி உண்ணின்று அதன் இயல்பறிந்து அதனுள் விழாமல்-வீழ்பவர்களையும் காக்கப் பணிகள் செய்தலேயாகும்.

திருவள்ளுவர் துறவற இயலில் ‘தவம்’ என்றஅதிகாரத்தில்

"தவம்செய்வார் தங்கருமம் செய்வார் மற்றெல்லாம்

அவம்செய்வார் ஆசையுட் பட்டு"

என்று குறிப்பிடுகின்றார். இந்தத் திருக்குறளுக்கு உரை கண்டவர்கள், வாழ்க்கையைத் துறந்து தவம் செய்கின்றவர்கள் தம்முடைய காரியத்தைச் செய்கிறார்கள் என்பது போலப் பொருள் காண்கிறார்கள். அங்ஙணம் செய்யாதவர்கள் ஆசையுட்பட்டு பாவம் செய்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். இந்தத் திருக்குறளுக்கு இன்னும் சற்று விரிந்த நிலையில் பொருள் காண்பது நல்லது ‘தம்கருமம் செய்வார் தவம் செய்வார்’ என்று கொண்டு கூட்டிப் பொருள் காண்பது சிறப்பாக இருக்கும், மனித வாழ்வியலில் அவர்களுக்கென்று கடமைகள் அமைந்துள்ளன. அவர்களும் அவரவர் கடமைகளை உணர்ந்து செய்யாமையினால் தம்மையும் கெடுத்துக் கொள்ளுகிறார்கள். அவர்களோடு தொடர்புடையதாக இருக்கிற சமூகத்திற்கும், கேடு செய்கிறார்கள். இதன் விளைவாகச் சமூகச் சிக்கல்கள் பெருகி, அழுக்காறு அவா வெகுளி போன்ற இழி குணங்கள் பெருகி வளர்ந்து மனித சமுதாயத்தை அலைக்கழிக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாகக் கடமைகளைச் செய்வதன் மூலமே உயிர்களைப் பரிணாம வளர்ச்சியில் ஈடுபடுத்தி தகுதிப் படுத்தி ஆட்கொண்டருளும் இறைவனுடைய திருவுள்ளத்திற்கும் மாறாக வாழ்ந்து பாவத்தை விளைவித்துக் கொள்ளுகிறார்கள். ஆதலால், தமக்குரிய கடமைகளைச் செய்தலையே திருவள்ளுவர் ‘தவம்’ என்று கருதுகின்றார். இல்லறத்தாராக இருப்பாராயின் மனித சமுதாயத்தையே தழுவி, அவர்கள். நன்நெறி நின்று ஒழுகி நல்லின்பத்தோடு வாழச் சிந்தனையாலும், செயலாலும் கடமைகளைச் செய்தல் வேண்டும். இஃதன்றி உலகியலை ஒழித்த தவம் என்று பெயர் கொள்ளுதல் சிறப்புடையதன்று.

‘கடமைகளை முறையாகச் செய்தல் சிறந்த கடவுள் வழிபாட்டுக்கு ஈடு அல்லது இணையானது’ என்னும் பொருள்படச் சான்றோர் பலரும் பேசியிருக்கிறார்கள்.

"கடமையே மிகச்சிறந்த நோக்கம். ஏனெனில் அது கடவுட் கருத்தைத் தழுவியதாக இருக்கிறது" என்று லக்கார்டயரும்;

"கடமையை விருப்பத்தோடு செய்பவர்களுக்குக் கடவுள் எப்பொழுதும் உதவியாக இருக்கிறார்” என்று கெய்லரும்;

"கடமைகளைச் செய்யாமல் தட்டிக் கழித்தல் அறிவையும், மனத்தையும் பலவீனப் படுத்தித் தூய்மை தவவாழ்க்கையைப் புதைத்து விடுகிறது” என்று ட்ரயான் எட்வார்ட்ஸ் என்பாரும்;

"உயிர்கள் தம்முடையக் கடமைகளை உடனடியாகச் செய்வதாக முடிவெடுத்துக் கொள்வது கடவுள் இதயத்தின் சந்நிதி" என்று பேகனும் பேசியிருக்கிறார்கள்;

பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டச் சான்றோர்களின் வரலாற்றை நமக்கு அருளிய சேக்கிழார் பெருமானும், தவம் என்ற வாழ்க்கையை உலகியல் வாழ்க்கையோடு இணைத்துக் கூறுவதை நூல் முழுதும் பார்க்கக் காணலாம். சங்கிலியாருக்குச் சுந்தரரைச் சிவபெருமான் அறிமுகப் படுத்தும்போது, ‘மேருவரையின் மேம்பட்ட தவத்தினான்’ என்று கூறுவதாகச் சேக்கிழார் பெருமான் சித்திரித்திருப்பது அறிந்தின்புறத்தக்கது. அதனால், திருக்குறள் காட்டும் தவம் தத்தம் கடமைகளைச் செய்தல்; கடமைகளைச் செய்யா தொழித்துப் பிறவற்றைச் செய்தல் அவமாகும்.

4. வள்ளுவரும்-கார்ல்மார்க்சும்

திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மலர்ந்தது. வரலாற்றுக்கு எட்டியவரையில் வள்ளுவத்தைப் போல் செப்பமான ஒரு வாழ்வியல் விஞ்ஞான நூல், வள்ளுவம் தோன்றிய காலத்தில் எந்த மொழியிலும், தோன்றவில்லை. ஏன்? மாமுனிவர் கார்ல்மார்க்சு தந்த 'மூலதன’த்தைத் (Capital) தவிர இன்னமும் எந்த நூலும், தோன்றவில்லை. திருக்குறள் தோன்றிய பின் பல நூறாண்டுகள் கழித்து கார்ல்மார்க்சின் ‘மூலதனம்’ முகிழ்த் திருக்கிறது. சிந்தனையில் ஒருமைப்பாடு, தத்துவப் பார்வையில் ஒரு நோக்கு, திருக்குறளுக்கும், ‘மூலதன’த்துக்குமிடையே இருப்பதை அறிந்தோர் அறியலாம். ஆயினும், அவற்றுக்குள் வேறுபாடு இல்லையென்று யாரும் கருத வேண்டாம். கார்ல்மார்க்சு தந்த மூலதனத்திற்கும் முதற் பாவலர் திருவள்ளுவர் தந்த திருக்குறளுக்கும் இடையில் முரண்பாடுகள் உண்டு. ஆயினும் முரண்பாடுகளைக் கடந்த விழுமிய ஒருமைப்பாடும் உண்டு. காலத்தால் பிந்தியதால் ‘மூலதனம்’ செய்த கார்ல்மார்க்சு, வள்ளுவம் தத்துவமாக சொன்னதை விரிவாக்கி விளக்க உரை தந்துள்ளார். லெனின், அந்த ‘மூலதன’த்தையும் விரிவாக்கி விளக்கினார். காலம் வளர வளரக் கருத்து வளர்தலும், தெளிவு தெரிதலும் இயற்கை.

மார்க்சீயம்; அறிவு நிலையானது என்று கூறுவதல்ல. அறிவு, வளர்ச்சிக்குரியது. அறிவு, மேன்மேலும் வளராமல் தேக்க நிலை எய்துமானால் மனித சமுதாயம் பாழ்படும் என்பது மார்க்சீயத்தின் மெய்ஞ்ஞானம். ஆம்! ஊற்றுவளம் இல்லாத நீர்நிலை கெட்டுத்தானே போகும்? ஒடும் இயல்பில்லாத ஒன்றுக்கு ஆறு என்று பெயருண்டோ? அதுபோல வளரும் இயல்பில்லாத ஒன்றுக்கு அறிவு என்று பெயர் சொல்ல முடியாது. திருக்குறளும் ‘அறிதோறு அறியாமை’ என்றது.

மனிதன், அவன் வாழும் சூழ்நிலைகளால் உருவாக்கப் படுகின்றான். அவனுக்கென்று தனியே ஒரு குணம் இல்லை. மனிதனுடைய எண்ணம், கருத்து ஆகியவை கூட அவன் சார்ந்துள்ள புறச் சூழ்நிலைகளின் பிரதிபலிப்பேயாகும் என்பது மார்க்சீயத் தத்துவம். நமது திருவள்ளுவம் இதனையே.

"மனத்துளது போலக் காட்டி ஒருவற்கு

இனத்துள தாகும் அறிவு”

என்றது.

மார்க்சீயம், சொற்களுக்குக் காணும்பொருளே வேறு. மார்க்சீய அகராதியில் ‘பொருள்’ என்றால் தங்கம்- நாணயம் ஆகியவற்றை ஒரு பொழுதும் குறிக்காது. மனிதக் குலத்திற்குப் பயன்படும் தகுதி குறித்தே பொருளுக்கு மதிப்பு என்பது மார்க்சீயத்தின் சித்தாந்தம். திருக்குறளும் ‘பொருள்’ என்ற சொல்லுக்கும் பொருளாகக் காட்டியது; மனிதகுலம் துய்த்து மகிழ்ந்து அனுபவித்து வாழக்கூடிய, வாழவைக்கக் கூடிய பொருள்களையே. "பொருளில்லார்க்கிவ்வுலகம் இல்லை" என்ற திருக்குறளுக்கு இதுவே கருத்து. உடல்-உயிர்ப் பிணைப்பில் நடமாடும் மனித உலகம் நெடிதுநாள் வளர வாழ உண்பனவும், தின்பனவும் ஆகிய துய்ப்புப் பொருள்கள் தேவை. அத்தகைய பொருள்களே பொருள்கள் என்பது வள்ளுவத்தின் செழுமையான கருத்து.

உழைப்பாற்றலே மனிதனுக்குரிய ஒரே உடமையாக இருக்க வேண்டும், என்பது மார்க்சீயம். "உழைக்காதவனுக்கு உண்ண உரிமை இல்லை" என்றே மார்க்சீயம் ஐயத்திற்கு இடமின்றித் தெரிவிக்கிறது. நமது திருக்குறளும். "உள்ளம் உடைமை உடைமை" என்றும்

"உடைய ரெனப்படுவ துரக்க மஃதிலார்

உடைய ருடையரோ மற்று"

என்றும் கூறியுள்ளது. வள்ளுவம் உடைமை வர்க்கத்தினருக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்திருக்கிறது.

மார்க்சீயம் உழைப்பாளிகளின் பாற்பட்டது. உழைப்பாளர் உலகத்தை உயர்த்துவது. மார்க்சீய தத்துவப்படி உழைப்பவர்களுக்கே எல்லாம்! அவர்களுக்கே மரியாதை! வள்ளுவத்தின் வழி என்ன?

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்"

என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குரல் கொடுத்தது. உழுபவரே உயர்ந்தோர்! உழுபவரே வாழ்பவர்! உழுபவரே தொழத் தக்கவர்! ஆனால், வள்ளுவம் பிறந்த நாட்டில் இன்னமும் உழுவோரைத் தொழத்தக்க சூழ்நிலை உருவாகவில்லை.

மார்க்சீயத்தின் உயிரனைய கொள்கை, உழைப்புக்குத் தகுந்த ஊதியம் என்பது. உழைப்போர் செல்வத்தை, யாரும் கொள்ளை கொள்ளக் கூடாது. இதனை வள்ளுவம் மிக நாகரிகமாக எடுத்தோதிற்று; ‘தாழ்விலாச் செல்வர்’ என்று பிறரைத் தாழ்த்தாத செல்வரே தாழ்விலாச் செல்வர். அது மட்டுமா? துலாக் கோலில் எடைகாண இடப்புெறும் பொருளும், எடை காட்டும் கல்லும் சமநிலையில் இருக்க வேண்டும். துலாக்கோலில் எடைக் கல்லோடு பொருளிடும் தட்டு சமநிலையில் நிற்காமல் தாழுமானால் பொருள் அதிகமாகும். அல்லது இடைக்கல் தாழுமானாலும் அப்படியே! சில சூது வணிகர்கள் பொருளிடும் தட்டின் அடியில் புளியை ஒட்டவைத்து வஞ்சனை செய்து பொருளைக் குறைப்பர். அதுபோல ஒருவர் பெற்றிருக்கும் பொருளைக் குறைப்பர். அதுபோல ஒருவர் பெற்றிருக்கும் பொருளை அல்லது செல்வத்தை அவருடைய உழைப்பாற்றலோடு எண்ணி எடையிட்டுப் பார்க்கும் பொழுது அவர் உழைப்பும் ஆற்றலும் அவர் பெற்ற பொருளும் சமநிலையில் இருக்க வேண்டும். அங்ஙனமின்றி நியாயமில்லாத ஒன்றை நியாயமென்று சொல்லி, வளைந்த கோலைச் செங்கோல் என்று செப்பி, மற்றவர் பொருளை வஞ்சித்தெடுத்த செல்வம் தாழ்வுடைச் செல்வமாகும். தாழ்விலாச் செல்வர் என்று வள்ளுவம் வகுத்ததே, மார்க்சீய சிந்தனையினுடைய தொடக்க காலமாகும்.

வள்ளுவம், மார்க்சீயத்திற்கு முன்னே தோன்றியது. வள்ளுவம் தமிழகப் பழமையில் பூத்த புதுமைநெறி; பொதுமை நெறி. வள்ளுவத்தின் வழி பொதுமை மலருமானால் நம்முடைய மரபுகள் தடம்புரளா, அங்ஙனம் பொதுமை மலராது போனால் வரலாறு எந்தத் திசையில் திரும்பும் என்று இப்போதைக்குக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. வள்ளுவம் வையகத்தின் வாழ்க்கையாக மலரப் பணி செய்வதே இன்று நமது கடமையாகும். தலையாயப் பணியாகும்.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு...நெஞ்சை

அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி

ஆரம்படைத்த தமிழ்நாடு

- பாரதியார்

5.வள்ளுவத்தின் வழி வாழ்க்கையை இயக்குக!

தமிழ் தழீஇய தமிழர் வாக்கை

தமிழ், ஒரு வளர்ந்த மொழி. இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மொழியின் சிறப்புக்குரிய இலக்கணம் கண்ட மொழி. தமிழில் மொழிக்கு மட்டுமா இலக்கணம்! தமிழர்களின் வாழ்க்கைக்கும் இலக்கணம் உண்டு. ஆதலால், தமிழ்மொழி சிறந்த மொழி, தமிழ் தழீஇய வாழ்க்கை நாகரிக வாழ்க்கை. பண்டைத் தமிழரின் வாழ்வில் மிளிர்ந்த சிறப்பு மிக்க நாகரிகக் கூறுகள் உலகில் வேறு எங்கும் கிடைப்பதரிது. ஆயினும் என்? இன்றைய தமிழரின் நிலை என்ன? பெருங்காயம் இருந்த பாண்டம் பெருங்காய வாசனை தர இயலுமா?

தமிழக வரலாற்றில்

இரண்டாயிரம் ஆண்டு காலமாகத் தமிழக வரலாறு நகரவில்லை. இடையில் அப்பரடிகள், வள்ளலார் போன்ற சமயச் சான்றோர்களும் தலைவர் காமராசர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற அரசியல் தலைவர்களும் நகர்த்த முயன்றனர்; நகர்த்தினர். கொஞ்சம் நகரவும் செய்தது. ஆனால் அவர்களுடைய மறைவிற்குப் பின் மீண்டும் பழைய நிலைக்கே வந்து விட்டது. இல்லை, இருந்த நிலையைவிட மோசமாகிவிட்டது. அதனால் தமிழக வரலாற்றில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழர்கள் வாழ்க்கையை இருள் கவ்வி மூடிமறைத்து வருகிறது. தமிழர்கள் துன்பப்படுகின்றனர். இந்தத்துன்பச் சூழ்நிலைக்குக் காரணம் தமிழர்களேயாம். உண்மையைச் சொல்கின்றோம்; வேறு யாருமில்லை! தமிழர்களுக்குப் புத்தி வருமா? வள்ளுவத்தைப் பயில்வார்களா? வள்ளுவத்தின் வழி வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்களா?

தமிழகத்தில் "நான்” “எனது”

செருக்கு, கெட்ட குணம்; அழிக்கும் குணம். "நான்” -"எனது” என்ற சொற்கள் மானிட நாகரிகத்தையே அழிக்கும் சொற்கள்! "நான்” என்ற உணர்வு மனிதனை, மற்றவர்களோடு சேரவொட்டாமல் தடுத்துவிடுகிறது. அதனால் சமூக அமைப்பே உருவாகாமல் போய்விட்டது. சமூகத்தில் கிடைக்கக் கூடிய பல்வேறு ஆற்றல்கள் பயன்படுத்தப் பெறாமல் வறிதே பாழாகின்றன. இந்த "நான்” இன்றைய தமிழகத்தில் கம்பீரமாக நடைபோடுகிறது. "நான்" என்ற நிலையை பராமரிக்கவே கட்சிகள் தோன்றுகின்றன. ஏன், நமது சமயத் தலைவர்களையும் கூட இந்த "நான்” விட்ட பாடில்லை, "நான்" உணர்வு மிஞ்சியதால் விளம்பர வாடை வீசுகிறது. நாட்டில் பல தமிழச்சிகள் ஒற்றை சேலையுடன் வாழ்கிறார்களே! அதுவும் கூட பலருக்கு மானம் மறைக்க முடியாத நிலை! ஆயினும் நமது நாட்டுச் சுவர்கள் நாள்தோறும் புதிய வண்ணச் சேலைகளை உடுத்திக் கொண்டுள்ள பொலிவைப் பார்க்கவேண்டுமே! ஆம்; இன்றைய சுவரொட்டிகள், சுவரொட்டிகள் அல்ல! இவை; சேலைகளை விஞ்சிவிட்டன. பாடப்புத்தகத்தில் இளைத்த எழுத்துக்கள், சுவரொட்டிகளில் உப்பி ஊரைப் பார்த்துச் சிரிக்கின்றன. என்னைப் போல் உப்பலாக நீங்கள் இல்லையே! இளைத்திருக்கிறீர்களே! என்று! இந்தக் கேவலம் "நான்” என்ற அகங்காரத்தால் நடைபெறுகிறது.

வையத்துள் வாழ்வு சிறக்க!

"எனது” என்பது மனித நாகரிகத்தின் அடித்தளத்தையே கெடுத்துக் குட்டிச் சுவராக்கியுள்ளது. "எனது” என்ற சொல்லுக்கு மூலமாக உள்ள தனிஉடைமைக்குணம் செழித்து வளர்ந்துள்ளது. இன்று கணவன்-மனைவியிடையே கூடக் குடும்பம் உருவாகாமல் தனி உடைமை ஆசை கெடுத்துவிட்டது; நண்பர்கள் உருவாகாமல் செய்து விட்டது. ஏன் கையூட்டுகள், வரதட்சணைக் கொடுமைகள் ஆகிய கொடிய தீமைகளைப் பெற்றதே தனி உடைமையைச் சார்ந்த கொடுமைதானே! ஆதலால், "நான்” “எனது” என்ற சொற்களுக்குரிய தீய குணங்கள் மாறாத வரையில் தமிழ்ப்பண்பு வளராது; தமிழ் நாகரிகம் தழைக்காது; சமய வாழ்க்கையும் உருவாகாது; வள்ளுவமும் வாழ்க்கையில் இடம் பெறாது.

"யான் எனதுஎன்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும்."

(346)

என்றது திருக்குறள். வையகத்தில் வாழ்க்கை சிறக்க வேண்டுமா? ‘நான்’ ‘எனது’ என்ற சொற்களைத் தோற்றுவிக்கும் சமுதாய அடிப்படையை மாற்றுங்கள்! வையகம் சிறக்க வேண்டுமா? வள்ளுவத்தின் வழியில் வையகத்தை இயக்குங்கள்! "நான்” “எனது” என்ற சொற்கள் வழி அமைந்துள்ள சமய நெறிக்குப் புறம்பான வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்! அப்பொழுதுதான் தமிழ் வெற்றி பெறும்! தமிழ் வளரும்! தமிழ் வாழும்! தமிழர் வாழ்வு புகழ் பூத்த வாழ்வாக அமையும்.

6. பகுத்துண்ணாமை கொலையே!

திருக்குறள் அதிகார அமைப்புகளை உடையது. இந்த அதிகார அமைப்புகளைத் திருவள்ளுவரே செய்தார் என்று கருதுவோரும் உண்டு. அங்ஙணமின்றி இந்த அதிகார முறைவைப்புகள் திருவள்ளுவரால் செய்யப்பெறவில்லையென்றும்; பின் வந்த உரையாசிரியர்கள் செய்தனரென்றும் கூறுவாரும் உண்டு.

யார் செய்தால் என்ன? அதிகார அமைப்பிற்கேற்றவாறு திருவள்ளுவர் குறள்களைப் பாடிவைத்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த அதிகார அமைப்பிலும் நிறைந்த பொருளாக்கம் இருக்கிறது; பயன் இருக்கிறது. ஒரு செய்தியை ஒரு தடவைக்குப் பத்துத் தடவை திரும்பத் திரும்ப நினைந்தாலே நெஞ்சகம் அந்த நெறியில் ஈடுபடுகிறது. அதனால், ஒரு நன்னெறியினைப் பலவகைகளில்-பல கோணங்களில் பல தடவை ஆராய்ந்து உயர்தலே வாழ்க்கைக்கு உற்ற முறையென்பதால் அதிகார அமைப்புகளும் சாலச் சிறந்தனவேயாம்.

இங்ஙணம், தனித்தனி நெறிகளுக்கேற்றவாறு திருக்குறள் அதிகாரங்கள் அமைந்துள்ளன. இத்தகைய அதிகார அமைப்பில் கொல்லாமையும் ஒன்று.

உயிர்கள், உடம்பொடு தொடர்பு கொண்டு வாழ்க்கை நிகழ்த்தித் தம்மை வளர்த்து உயர்த்திக்கொள்ளும் சாதனமே வாழ்வியல். இந்த வாழ்வியலுக்கு ஏற்றவாறு இசைந்துள்ள உடம்பொடு உயிரிடை ஏற்பட்டுள்ள நட்பை-உறவைப் பாதுகாப்பது ஒரு பேரறம் ஆதலாலன்றோ, "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்றார் திருமூலர்.

உடம்பிற்கும் உயிர்க்கும் ஏற்பட்டுள்ள உறவை நீக்குதலையே ‘கொலை’ என்று கூறுகிறோம். கொல்லப் பெறுதல் உடம்பேயாயினும், உயிர்க்கொலை என்றே கூறுகிறோம். காரணம், உடம்பு இல்வழி உயிரின் இயக்கமும்-துய்த்தலும் நுகர்தலும்-வளர்ச்சியும் இல்லாது போதலினாலேயாம்.

அதுபோலவே, உயிர் தங்கி உலவும் உடலியக்கத்துக்கு எரிபொருளாகிய உணவினை வழங்குதலைப் பேரறம் என்று கூறுகிறோம். உணவு இல்வழி உடலியக்கமில்லை. உடல் இயங்காவழி உயிர்க்கும் இலாபமில்லை. அதனாலேயே உடல் உயிர் உறவு இயக்கத்தைப் பாதுகாக்கின்ற உணவு, மருந்து முதலியன வழங்கும் உடன்பாட்டு அறங்களாலும், அது போலவே உடல் உயிர் உறவை நீக்காமையைக் கொல்லாமை என்ற எதிர்மறை அறத்தாலும் மனித உலகம் போற்றுகிறது.

திருக்குறளில், கொல்லாமை என்று ஒர் அதிகார முண்டு. கொல்லுதலின் கொடுமையை வள்ளுவர் நினைந்து நினைந்து கொதித்து கண்டிக்கின்றார். இந்த அதிகாரத்தில் முதற் குறளாக கொல்லாமையை அறம் என்று பொதுவாக உணர்த்தி, அடுத்த குறளில், "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"

என்று கொல்லாமை நெறியை வற்புறுத்துகின்றார். இந்தக் குறளில் பலரோடு பங்கிட்டு உண்பதும், பல உயிர்களைப் பேணிக் காப்பதும் பேரறம் என்று குறிப்பிடுகிறார்.

இந்தக் குறளுக்கும் கொல்லாமைக்கும் என்ன தொடர்பு? இதனை, ‘விருந்தோம்ப’லில் கூறக்கூடாதா? ‘ஒப்புரவறித’லில் கூறக் கூடாதா? அல்லது ‘ஈகை’யில்தான் கூறக் கூடாதா? இங்ஙனம், அங்கெல்லாம் கூறாமல், 'கொல்லாமை’ அதிகாரத்தில் பகுத்துண்டு பல்லுயிரோம்பும் பாங்கான நெறியைக் கூறியது ஏன்? கொல்லுதலும் குற்றமே. அதைவிடக் குற்றம், உண்டி முதலியன வழங்கிக் காப்பாற்றாமல் சாகவிடுவது, அது கொலைக்குற்றமே என்பதை உணர்த்தவே இங்குக் கூறினார்.

கூடிவாழும் மனித சமுதாயத்தில் ஓர் உறுப்பினனாக விளங்கும் மனிதனுக்குச் சமுதாய ரீதியாகக் கடமைகளும் உண்டு; உரிமைகளும் உண்டு. ஒரு சமுதாயத்தில் ஓர் உறுப்பினனாகப் பிறந்த மனிதனைச் சோறு இன்றிச் சாகவிடும் சமுதாயம் கடமையுணர்வு இல்லாத சமுதாயமாகும்; அதையே ஒரு கொலைகார சமுதாயம் என்று கூறினாலும் பொருந்தும். கத்தியெடுத்துக் கொன்றால் மட்டுமே கொலை யென்பதல்ல.

பெற்ற செல்வத்தைப் பங்கிட்டுக் கொடுத்து, பலரையும் பேணி வளர்க்காமல் பலரையும் சோறிட்டும் மருந்து முதலியன வழங்கியும் பேணி வளர்த்துப் பாதுகாக்காமல் சாகடித்தலும் கொலைக் குற்றமேயாகும் என்பதனை உணர்த்தவே இந்தக்குறள் கொல்லாமை அதிகாரத்தில் அமைந்திருக்கிறது. இந்த அடிப்படையில் இன்று நம்முடைய நாட்டினை நோக்கினால் கொலைகாரர்கள் மிகுதியும் உள்ளனரோ என்று வினா எழுந்தால் மறுப்பார் யார்?

7. உலகம் தழீஇயது ஒட்பம்!

மானுடத்தின் வெற்றி பொருந்திய வாழ்க்கைக்கு தேவை அறிவு. திருக்குறள், அறிவைக் கருவியென்று இனங் காட்டுகிறது. அறிவு என்பதற்குத் தெளிவான இலக்கணத்தைத் திருக்குறள் எடுத்துக் கூறுகிறது. அறிவு, எல்லைகளைக் கடந்தது; மொழி, இனம், சமயம், நாடு முதலிய சிறைகளைக் கடந்தது! சிந்தனை சிறைப்பட்ட இடத்தில் அறிவு ஆக்கம் பெறுவதில்லை. ஆதலால், அறிவுக்கு மொழியெல்லையில்லை. அறிவு வளர்ச்சிக்கு மொழி முதலியவை தடையேயாம். பல மொழிகள் கற்பதும் பல நாடுகள் காண்பதும் உலகமாந்தருடன் கலந்துறவாடுவதும் அறிவு வளர்ச்சிக்குத் துணை செய்யும் வாயில்கள். உலகம் தழுவிய நிலையில் வாழும்போதுதான் அறிவு விரிவடைகிறது; வளர்கிறது.

"உலகம் தழீ இயது ஒட்பம் மலர்தலும்

கூம்பலும் இல்லது அறிவு”

என்பது குறள்.

"உலகம் தழீஇயது ஒட்பம்" என்பதற்கு "உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு” என்ற வாக்கின் அடிப்படையில் உயர்ந்தோர் என்று பொருள் கொண்டு அத்தகு உயர்ந்தோரிடத்தில் உறவு கொள்ளும் நல்லறிவும் அவ்வுறவில் மலர்தலும் கூம்பலும் இல்லாமல் பேணுதலும் என்று பொருள் கொள்வாரும் உளர். மானுடத்தை உயர்ந்தார் - தாழ்ந்தார் என்று பிரிவினை செய்தல் இற்றைத் தலைமுறைக்குப் பொருந்துவதல்ல. உலகத்தில் மிகப் பெரிய மானுடத்தைப் படைத்து வளர்ந்து வரும் ஜப்பான் நாடு, மனிதனை அவன் உள்ளபடியே அங்கீகரித்தல், வளர்த்தல், உயர்த்துதல் என்ற வழியிலேயே அணுகுகிறது என்பது எண்ணத்தக்கது.

வாழ்க்கை, மானிடர் அனைவர்க்கும் பொது. அது போலவே அனுபவங்களும் பொதுவேயாம். அறிவும் பொதுவேயாம். ஆதலால், மானிடப் பரப்படன் உறவு கலந்து வாழும்போதுதான் அறிவு தலைப்படுகிறது. மானிட உலகத்துடன் கொள்ளும் நட்புறவு நிலையானது. இந்த உறவில் ஏதாவது அடிப்படையில் மலர்தலும், பிறிதொரு வகையில் சுருங்குதலும் கூடாது. இன்று பலர் ஏதாவது ஒர் எல்லைக்குள் தம்மைச் சுருக்கிக் கொண்டு அல்லது சிறைப்படுத்திக் கொண்டு அதற்கு ஏற்பப் பழகுகின்றனர். இது வரவேற்க இயலாத முறை. மானிடர் அனைவரையும் முதலில் மாந்தர் என்ற நிலையில் அங்கீகாரம் செய்ய வேண்டும். எந்த ஒரு காரணமும் ஒருவரிடத்தில் உறவு கொள்ளத் தடையாக அமையக்கூடாது. உறவு கொண்டபின் விருப்பு - வெறுப்புகள் தலையெடுக்கக்கூடாது. நட்புறவு என்பது விருப்பங்களையும் வெறுப்புகளையும் கடந்தது.

இன்றைய மானுடம் இந்த நிலையில் வாழவுமில்லை; வாழ விரும்பவுமில்லை. வளர்ந்த விஞ்ஞானக் கருவிகள் மூலம் பூத பெளதிக உலகங்கள் இணைக்கப் பெற்றுள்ளன. ஆனால் மானிடரிடையில் இதயங்கலந்த நட்புறவுகள் கால்கொள்ளவில்லை. அதனால் இன்னமும் "மானுடம்” முழுமையடையாத கச்சாப் பொருளாகவே விளங்குகின்றது. இன்றைய மானுடம் பொதுமையை நாட மறுக்கிறது. அவரவரும் அவரவருடைய உணர்ச்சிகளின் வயப்பட்டே வாழ்கின்றனர். சரியான அடிப்படையில் அமையாத மானுடம் துன்புறும்; கெட்ட போரில் ஈடுபடுவோர் அழிப்பர்; அழிவர். இதுவா அறிவின் பயன்? ஆதலால், உலக மாந்தரொடு கலந்து பழகி நட்புறவினை வளர்த்துக் கொண்டு வாழ்தலே "அறிவு”. எல்லாவித எல்லைகளையும் கடந்து நேசக்கரங்களை நீட்டி வாழ்வதே அறிவு.

நாடு, மொழி, இனம், சமயம் ஆகியன வாழ்வியலில் இடம் பெற்றுள்ளன; இவை அவசியமும்கூட! ஆனால் இவற்றின் மீது காட்டும் ஆர்வம் அளவுக்குக் கட்டுப்பட்ட தாக இருக்கவேண்டும். கூவலாமை, குரை கடலாமையைக் கேட்ட கதை போல் ஆகிவிடக்கூடாது. எந்த ஒன்றும் வாழ்வுக்குரிய சாதனமேயாம். சாதனங்களையே சாத்தியங்கள் என்று நம்புவதும் அதற்காகவே வாழ்வதும் அறிவுடைமையாகாது, ஆதலால் நாட்டுப்பற்று வேண்டும். ஆனால் வெறி கூடாது. அதேபோழ்து நாட்டிற்கும் நாட்டிற்குமிடையே உள்ள எல்லைகளை எடுத்துவிட்டு உலகப் பேரரசு காணும் விழைவு வேண்டும்.

சாதிகளின் பெயரால், மதங்களின் பெயரால் இன்று எங்கும் புன்மை வளர்க்கப் பெறுகிறது. ஏன், ஓரணிக் குள்ளேயே பல அணிகள் உள்ளன. அதனாலேயே திருவள்ளுவர், மதங்கள் பற்றி பேசவில்லை; யாதொரு அதிகாரமும் இயற்ற வில்லை, திருக்குறள் நாடு, மொழி, மதம் முதலியன பற்றி யாதொன்றையும் குறிப்பிட்டுப் பேசவில்லை. திருக்குறள் பொது நூல்; ஒருமை நூல்; திருக்குறள் நெறி, உலக நெறி; பொது நெறி.

தன்னலம் விலங்கின் தன்மையது. ஒரு சரக்குப் பேருந்து சாலையில் வரும்பொழுது தாழான ஒரு பன்றிகூடத் தற்காத்துக் கொள்ள ஒடி ஒளியும். ஆனால் மற்றப் பன்றிகளைப் பாதுகாக்கும் உணர்வு அந்தப் பன்றிக்கு இருக்காது. மனிதனும் தன்னலம் சார்ந்தவனாகவே வாழ்கின்றான். தன்னலம் செறிந்த வாழ்வு, உலகந்தழீ இயதுமல்ல; ஒட்பமும் அல்ல, இந்த உலக இயக்கத்தின் நடைமுறைகளைக் கூர்ந்து கவனித்தால் இந்த உலகம் பொதுமையில் வளர்கிறது. வாழ்கிறது. உலக மாந்தர் இனம் தோன்றவேண்டும். உலகப் பேரரசு தோன்ற வேண்டும்.

இத்தகு பொது நெறி தோன்ற மானுடம் சில நெறி முறைகளைப் பின்பற்றவேண்டும். முதலாவது, பல மொழிகளைக் கற்கவேண்டும். மொழிகள் உறவுகளின் கதவுகளைச் திறந்துவிடும் இயல்பின. சொல்வன சிலவாகவும் கேட்பன பலவாகவும் இருக்கவேண்டும். மொழிகளின் வாயிலாகத் தான். கருத்துப்பரிமாற்றங்கள் நிகழமுடியும்; நிகழும் மொழிகள் வாயிலாகத்தான் கலாச்சாரப் பரிவர்த்தனைகள் நடைபெற இயலும். இன்றைய மானுடத்திற்குப் பன்மொழிப் பயிற்சிக்கு வாயில் அமைந்தால் உலகந்தழீஇய ஒட்பம் பெறும்! இந்த உலகந்தழீஇய ஒட்பத்தை மலர்தலும் கூம்பலும் இல்லாத அறிவை மானுடம் பெறுதலைப் பொருத்தே மானுடத்தின் தலைவிதி அமையும்!

7

அடிகளார் மடல்

* * *

1. வாழ்வாங்கு வாழ்க

இனிய தமிழ்ச் செல்வ! வாழ்த்துக்கள்! உனது கடிதம் கிடைத்தது. செய்திகள் அறிய வந்தன. உலக அரங்கில் இரண்டு அணியினர். ஓர் அணியினர் மானுட வாழ்க்கையை மறுப்பவர்; துன்பச் சுமையென வெறுத்து ஒதுக்குபவர். பிறிதோர் அணியினர் வாழ்க்கையை ஏற்பவர்; ஏற்று மகிழ்ந்து வாழ்தல் வேண்டும் என்ற கொள்கையினர். நாம் இரண்டாவது அணியினர். நமது கருத்து, மானுட வாழ்க்கை உயர்ந்தது. வாழ்க்கை வாழ்வதற்கே என்பது, ஆம்!

இனிய செல்வ! வாழ்க்கையை மறுக்கும் அணியினர் பேச்சை அன்புகூர்ந்து கேட்க வேண்டாம்! அந்தவழியில் செல்ல வேண்டாம்! அது நமது வழியன்று. நமது வழி, வாழ்வதே!

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்”

என்பது நமது குறள். இத்திருக்குறள் காட்டும் வழியே வழி. நில உலகில் வாழ்வதே வாழ்க்கை. வாழ்க்கை என்பது ஒருகலை; அது நுண்ணிய அருமைப்பாடுகள் உடையது. பிறந்தவர்கள் எல்லாம் வாழ்ந்து விடுவதில்லை. இம்மண்ணில் பலர் பிழைப்பையே நடத்துகின்றனர்; வாழ்கின்றார் மிகச்சிலரே. வாழ்க்கையென்பது கட்டி முடிக்கப் பெற்ற மாளிகையல்ல. ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் சிந்தனையால், எண்ணத்தால், உணர்வால், செயல்களால் தமது வாழ்க்கையைக் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். பலர் இதனையறியாமல் வறிதே பொழுது போக்குகின்றனர். வெளியே சொல்ல முடியாதவற்றையெல்லாம் எண்ணுகின்றனர். அவர்கள் எண்ணம்போல வாழ்க்கை அமைந்து விடுகிறது. இத்தகு வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக அமையும். துன்பத்தைத் தாங்க இயலாது நோகின்றனர். ஏன்? வாழ்வாங்கு வாழ்ந்திருந்தால் வாழ்க்கை முழுதும் நன்றாக அமையும்; மகிழ்வாகவே அமையும். அதுமட்டுமா? வாழ் வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வம்போல் வையகத்தில் மதிக்கப்படுவார்கள்; போற்றப்படுவார்கள்.

இனிய செல்வ! வாழ்வாங்கு வாழ வழி காட்ட வேண்டும் என்ற குறிக்கோள் நோக்கியே திருக்குறள் எழுதப் பெற்றது. நமது திருக்குறள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் நூல்; திருக்குறள் வழியே வாழும் வழி. இனிய செல்வ, திருக்குறள் வாழ்க்கையின் பருவங்கள் தோறும் வழிகாட்டி அழைத்துச் செல்லத் தக்கதாக இயற்றப் பெற்றுள்ளது. நாள் தோறும் திருக்குறள் படி! அந்தந்தச் சூழ்நிலையில் தக்க வழியை, குறள் காட்டும்! செய்ய வேண்டிய நெறிகளையும் புலப்படுத்தும், அன்றாடம் காலையில் எழுந்தவுடன் நேற்றைய வாழ்க்கையின் நிகழ்வுகளை எண்ணுக! குற்றம்-குறை-குணங்களை ஆய்வு செய்க! குற்றங்களைக் களைக! குறைகளை நீக்கிடுக! குணங்களை எடுத்துக் கொள்க! இன்று எப்படி வாழ்வது என்று எண்ணுக! திட்டமிடுக! வாழ்க! இதுவே வாழ்வாங்கு வாழும் வழி!

எந்தச் சூழ்நிலையிலும் வாழ்ந்து சேர்த்த குணங்கள் என்னும் முதலினை இழந்துவிடாதே! வாழ்க்கையை நொந்து அழாதே! விழிப்பாக இரு வாழ்வாங்கு வாழ்க! ஓயாது உழைத்திடுக! முதலில் நம்பிக்கையைப் பெற்றுக் கொள்! மகிழ்ச்சியாக இரு! வாழ ஆசைப்படு! அடுத்து எழுதுகிறோம்.

இன்ப அன்பு

அடிகளார்

2. அறிவே ஆன்மாவின் அனுபவம்

இனிய தமிழ்ச் செல்வனுக்கு,

"வள்ளுவர் வழி” வழியாகப் புத்தாண்டு வாழ்த்துகள்! திருவள்ளுவர் திருநாள் வாழ்த்துகள்! உனக்கு எழுதிப் பல திங்கள்கள் ஆயின “வள்ளுவர்வழி” நாயகர் தே.கண்ணன் அடிக்கடி கேட்பார். கடிதம் யாதொன்றும் வரவில்லையே என்று! நீண்ட இடைவெளிக் காலம் கழிந்து போனதற்காக வருந்துகின்றோம். இனி, கூடுமானவரை தொடர்ந்து எழுதுகின்றோம்.

சென்ற கடிதத்தில் "வாழ்வாங்கு வாழ்க!" என்று எழுதியிருந்தோம். ஆம்! வாழ்தலைப் பொருளும் பயனும் உடையதாக ஆக்க வேண்டும். "பிழைத்தல்" "காலம் கழித்தல்” ஆகியன உயிர்ப்புள்ள வாழ்க்கையன்று. வாழ்க்கை அறிவுச் சேகரிப்பு வழியாலும் சங்கிலித் தொடரனைய செயல்களாலும் நிரப்பப்படுதல் வேண்டும். அறிவறிந்த ஆள்வினை வாழ்க்கையின் கருவி. அறிவு எளிதில் கிடைப்பதா? அறிஞர் ஆகலாம் என்று கற்கின்றோம். ஆனால், கற்போர் எல்லாராலும் அறிஞராக முடிவதில்லை. கீறல் விழுந்த வெறும் இசைத் தட்டுகள் போலப் புலம்பித் தவிக்கின்றனர் சிலர். அறிவு, பட்டறிவின் வழி வருவது.

பட்டறிவுக்கு ஆற்றுப்படுத்துவது கல்வி. உந்துசக்தியாக அமைவது சான்றோர் வாய்கேட்ட சொல். அறிவு துன்பத்தினின்றும் பாதுகாக்கும் கருவி. அறிவு தன்மையைப் படைப்பது. இனிய தமிழ்ச் செல்வ, ஆக்கம் நிறைந்த படைப்பின் வழியின்றித் துன்பம் நீங்காது. துன்பம் இயற்கையுமன்று, செயற்கை. அஃதாவது செயற்கையின் காரணமாக வருவது துன்பம். அறிவு அற்றம் காக்கும் கருவி என்று வள்ளுவர் வழி கூறுகிறது. அறிவினாலன்றி வாழ்க்கை முழுமையாவதில்லை. பயனுடையதாகவும் அமைவதில்லை; பண்பாடுடையதாகவும் அமைவதில்லை.

இனிய தமிழ்ச் செல்வ, அறிவுக்கு வாயில் நல்ல நூல்களைக் கற்றல். கற்றல் நாள்தோறும் செய்ய வேண்டிய கடமை. கசடறக் கற்க வேண்டும். தலைமுறை தலைமுறையாக நாம் சுமந்து வந்திருக்கிற மூடநம்பிக்கைகள் என்ற கட்டுகள் ஒன்றா? இரண்டா? தலைமுறை மரபு நம்பிக்கைகள் அறிவுக்குப் பகை. அதனால் வழிவழி வந்த சில உயர்ந்த மரபுகளை இழந்துவிட வேண்டும் என்பது அவசியமில்லை. அந்தப்பழைமைகள் கூட காலத்திற்கேற்பப் புத்துருவம் பெறவேண்டும் வளர்ந்து வரும் புதுமையுடன் அடையாளமின்றிக் கலக்க வேண்டும். சமுதாய வாழ்க்கையில் பழைமை, புதுமை என்ற பிரிவினை கூடாது. எந்த ஒரு பழைமையும் பின்னைப் புதுமையை ஏற்றுக் கொள்ளத் தவறிவிட்டால் பழைமை மலடாகிவிடும். அது போலவே, வளர்ந்துவரும் புதுமை, பழைமை, உணவை எடுத்துக் கொள்ள மறுத்தாலும் புதுமை ஊட்டமில்லாத சவலையாகிவிடும். இனிய தமிழ்ச் செல்வ, "முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே! பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே" என்ற திருவாசக அடிகளை நினைந்துபார்! இன்று உலகில் வளர்ந்த நாடுகளில் சப்பானும் ஒன்று. சப்பானியர்களின் வளர்ச்சி வியப்பைத் தரக்கூடியது. அத்ற்குக் காரணம் சப்பானியர்கள் பழைமைக்கும் புதுமைக்கும் சிறந்த இணைப்பை உண்டாக்கி வாழ்க்கைக்குப் பயன்படுத்துகின்றனர். அதனால் அந்த நாடு முன்னேறியிருக்கிறது. நம்முடைய நாட்டிலோ பழைமை புத்துருக் கொள்ள மறுக்கிறது. இளமையை ஏற்க மறுக்கிறது. பழைமை கிழடுதட்டிப்போய் பிரேத ஊர்வலமாக வந்து கொண்டிருக்கிறது. புதுமை என்ற பெயரில் சிலசிந்தனைகள் வறட்சித்தன்மையுடையனவாய் ஊட்டமின்றித் தேவாங்கு போல நடமாடுகிறது. இது வளரும் தமிழகத்திற்கு நன்றன்று.

இனிய தமிழ்ச் செல்வ, நல்ல நூல்களைக் கற்க வேண்டும். புதிய உணர்வுடன் கற்க வேண்டும்; அறிவு பெற வேண்டும். அறிவு, ஆற்றல் மிக்க கருவியாக வாழ்க்கையில் செயற்பாடுறுதல் வேண்டும். கற்கின்ற நூல்களின் கருத்தை வாழ்க்கையில் சோதனை செய்தல் வேண்டும். கற்ற நூற்கருத்துக்குச் செயலுருவம் தரவேண்டும். இம்முயற்சியில் பெறுவதே அறிவு. அறிவு ஆன்மாவின் இணையற்ற கருவி, அனுபவம், செல்வம். ஆதலால் இனிய தமிழ்ச் செல்வ, "அறிவுடையார் எல்லாம் உ