கம்பராமாயணம் (உரைநடை)
டாக்டர் ரா. சீனிவாசன்கம்பராமாயணம்

பேராசிரியர்

டாக்டர் ரா.சீனிவாசன்

எம்.ஏ., எம்.லிட்.,பி.எச்.டி.,

அணியகம்

நூல் விளக்கம்

முதற்பதிப்பு: 1992

இராண்டாவது பதிப்பு: 1998

மூன்றாவது பதிப்பு: 2000

நூலின் பெயர்: கம்பராமாயணம்

ஆசிரியர்: ரா. சீனிவாசன்

பொருள்: இலக்கியம்

பதிப்பகம்: அணியகம், 5, செல்லம்மாள் தெரு, செனாய் நகர், சென்னை-30.

தொலைபேசி: 6479772.

தாள் மேப்லித்தோ: 13.6 Kg.

அளவு: Crown 1/8

எழுத்து: 10 புள்ளி

விலை: ரூ. 90

அச்சகம்: மைக்ரோ அச்சகம் சென்னை - 29.


முன்னுரை

விமர்சனம்

இறை

பால காண்டம்

அயோத்தியா காண்டம்

ஆரண்ய காண்டம்

கிட்கிந்தா காண்டம்

சுந்தர காண்டம்

யுத்த காண்டம்


முன்னுரை

கம்பர் வடமொழிக் காவியத்தைத் தென் தமிழ் மொழியில் கவிதைச் சொற்களைக் கொண்டு காவியம் படைத்துத்தந்திருக்கிறார். கம்பர் காவியத்துக்கே அவர் எடுத்தாளும் சொற்கள் தனிச் சிறப்பைத் தருகின்றன.

“செஞ் சொற் கவி இன்பம்” அவர் ஊட்டியது. அவ்வின்பம் சிறிதும் குறையாது உரைநடையில் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.

கம்ப ராமாயணக் கதை மட்டும் எடுத்துக் கூறுவது இவ்வுரைநடை நூல். கதைக் கோவை கெடாமல் நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கிறது இந்நூல்; உரைநடை இதற்குத் தனிச்சிறப்புத் தருகிறது.

சில பதிப்புகளைக் கண்ட இந்நூல் அழகாக அச்சிடப்பட வேண்டும் என்ற முயற்சி எடுத்துக் கொள்ளப்பட்டது. ஒளி அச்சில் தக்கதாளில் இந்நூல் வெளிவருகிறது.

இந்நூல் தரம் மிக்கதாக அமைய எல்லா முயற்சிகளும் எடுத்துக் கொள்ளப்பட்டன.

எம் வெளியீடுகள் சில இலக்கியப் பின்புலம் கொண்டவை; அவை நிலைபேறு பெறத்தக்கவை என்பதால் மறுபதிப்புக் காண்கின்றன.

ரா.சீனிவாசன்

விமரிசனம்

கம்பராமாயணம்

ராசீ

அமரகவி பாரதியாரால் பாராட்டப் பெற்ற கம்பனின் காவியமான கம்பராமாயணம் இன்றைய உரைநடை உலகத்தில் புதிய உருவெடுத்து ‘உரை நடை’ நூலாக வெளி வந்துள்ளது.

சிலபேர் உரை நடையைக் கவிதையாக்கிக் கொண்டிருக்கிற இக்கால கட்டத்தில் உரைநடை ஆசிரியர் கவித்துவமான வரிகளை உரைநடையின் பெயரில் காவியச் சுவை குன்றாமல் செறிவான வரிகளுடன், நளினமான வார்த்தைக் கோப்புகளுடன் வளமையான தமிழில் வழங்கியுள்ளார் இலக்கிய சோதனைக்காரர் ‘பேராசிரியர் ராசீ’.

இவரின் புதுமுயற்சி வெற்றிபெற்றுள்ளது என்று தான் கூற வேண்டும். தெளிவான சிறந்த சொல்லாட்சி ஆசிரியரின் வெற்றிக்கு அடிப்படைக் காரணமாகும்.

இன்றியமையாத தருணங்களில் மட்டுமே ‘கவிதை வரிகள்’ கண் சிமிட்டுகின்றன. மற்றபடி நூலெங்கும் உரைநடை ராஜ நடை போடுகிறது. பண்டித தமிழிலன்றிப் பழகு தமிழில், சுவைபட எழுதப்பட்டுள்ளதால் நூலின் பக்கங்கள், நம் விரல் 8

துடுப்புகளில் விரைந்து தள்ளப்படுகின்றன. தொய்வில்லாத ஆற்றொழுக்கான உரைநடை.

காட்சிகள் கண் முன்னே உயிர்பெற்று உலவும் அதிசயத்தை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்; இதனை மிகச் சிறந்த உலக அளவிலான நாடக நூல் என்று அறுதியிட்டுக் கூறலாம். பாராட்டு கம்பனுக்கு மட்டுமல்ல; போராசியர் ராசீக்கும் தான். உரையின் சிறப்புக்குச் சான்று:-

இதோ:-அனுமனிடம் சீதை கூறியது

“தாரம் அல்லள் என்று சொல்லி என்னை ஒரம் கட்டலாம். அதற்காகத்தன் வீரம் காட்டாமல் இருப்பது அவன் ஆண்மைக்கு இழுக்கு என்பதை நினைவுறுத்து.....” என்றாள்.

“வாழ்வதா, வீழ்வதா என்பதுதான் என் வாழ்க்கைப் பிரச்சனை” என்றாள்.

மொத்தத்தில் அனைவருக்கும் பயனளிக்கும் நூல்; சிறந்த முயற்சி; பாராட்டுக்கள்.

எம்.எஸ். தியாகராஜன்

சீரை சுற்றித் திருமகள் முன் செல

முரிவிற்கை இளையவன் பின் செலக்

காரை யொத்தவன் போம்படி கண்ட அவ்

ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்னுமோ

இறை வணக்கம்

உலகம் யாவையும்தாம் உள ஆக்கலும்

நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகு இலா விளையாட்டு உடையார் அவர்

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.

படைத்தலும், காத்தலும், அழித்தலும் இறைவனுக்குத் தொடர்ந்த விளையாட்டுகளாகும். அவர் எம் தலைவர் ஆவார். அன்னவர்க்கே நாங்கள் அடைக்கலம். இறைவன் எம்மைக் காப்பானாக.

கம்பராமாயணம்

பால காண்டம்

கோசல நாடு

மானுடத்தின் வெற்றியை உலகுக்கு உணர்த்திய முதல் தெய்வ மகன் இராமன்; அவன் அவதரித்த அழகிய திருநாடு கோசல நாடு. அது பழம் பெருமைமிக்கது; அதைச் சத்திய விரதன் ஆகிய தசரதன், சக்கரவர்த்தி என்ற பெருமையோடு ஆண்டு வந்தான். அவன் உதித்த குலம் சூரிய குலம் என்பர்.

மனு என்பவனும் இக் குலத்தில் பிறந்தவனே. மக்களை நன்னெறிப்படுத்த நீதிநெறிகளை வகுத்துக் கொடுத்தவன் இவன். மழைவளம் குன்றி, மண்வளம் குறைந்த மகிதலத்துக்கு விண்ணுலகினின்று கங்கையை வரவழைத்த பகீரதனும் இக்குலத்தில் தோன்றியவனே. அவனுடைய விடாமுயற்சியை மாநிலம் போற்றுகிறது. அரிதின் முயன்று ஆற்றும் செயலுக்குப் “பகீரதப் பிரயத்தனம்” என்ற தொடர் இன்றும் வழங்குகிறது.

இச்சுவாகு என்ற அரசனின் மெச்சத்தக்க புகழ் இன்றும் பேசப்படுகிறது. அவனால் இக்குலம் “இச்சுவாகு குலம்” என்று நச்சி உலகம் போற்றுகிறது. காகுத்தன் என்பவன் தேவர்களின் ஆகுலங்களைத் தீர்த்தவன்; அவர்கள் குறை கேட்டு அசுரர்களோடு போராடி அவர்கள் வாழ்வை மலரச் செய்தவன். பெருமைமிக்க இக் குலத்தில் பிறந்ததால் இவனைக் “காகுத்தன்” என்றும் அழைத்தனர். ரகு என்ற அரசனும் இக்குலத்திற்குப் பெருமை சேர்த்தவர்களுள் ஒருவன்; அதனால் இராமனை, “இரகுராமன்” என்றும், “இரகுகுல திலகன்” என்றும் அழைத்து வந்தனர். நீதியும் நேர்மையும் வீரமும் பேராற்றலும்மிக்க மன்னர் இராமனின் குல முதல்வர்களாய்த் திகழ்ந்தனர். இராமன் பிறந்ததால் இக்குலமும், உயர்வு பெற்றது; இக்குலத்தின் பெருமையால் இராமனும் உயர்வு பெற்றான்.

நாட்டு வளம்

மழை வளம் கரந்தால் நாட்டின் வளம் மறைந்து விடும். கோசல நாட்டில் பருவ மழை தவறாது பெய்தது. வெள்ளிப் பனிமலை மீது உலவிய கரிய மேகங்கள் அள்ளிப் பொழிந்த மழைநீர் வெள்ளமாகப் பெருக் கெடுத்தது; அது சரயூநதியாகப் பாய்ந்தது. மலைபடு பொருள்களாகிய மணியும், பொன்னும், முத்தும், சந்தனமும், அகிலும், தேக்கும் அவ்வெள்ளம் அடித்து வர அலைபடு பொருள்கள் ஆயின. வணிக மக்களைப்போல அந்நதி இப் பொருள்களை வாரி அடித்துக் கொண்டு வந்தது. நீள்நதி அந்த மலையின் உச்சியையும் அகலத்தை யும் தழுவி வந்ததால் அது கணிகை மகளை ஒத்திருந்தது. அலைக் கரத்தில் மலைப் பொருள்களை ஏந்தி வந்து அடி வாரத்தில் குவித்தது.

சரயூநதி, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐவகை நிலங்களில் பாய்ந்தது; அந் நாட்டை வளப்படுத்தியது. மலைக் கற்களிடையே தோன்றி வெள்ளம், கானாறாய்ப் பெருகிப் பாய்ந்து குளம், குட்டை, ஏரி, கால்வாய்களில் பரவி, வயல்களையும் சோலைகளையும், பசுமையுறச் செய்தது. மூலப் பொருள் ஒன்று எனினும் ஞாலம் அதைப் பல்வேறு பெயர்களைக் கொண்டு அழைக்கிறது. அதேபோல் கடல் நீர், மேகம், மழை, அருவி, வெள்ளம், வாய்க்கால், ஏரி, குளம், ஆறு, தடாகம் என்னும் பல வடிவங்களைக் கொண்டு விளங்கியது.

கல்வியும் செல்வமும்

ஏட்டையும் தொடுவது தீமை என்று கூறி, நாட்டைக் கெடுத்தவர்கள் அக்காலத்தில் இல்லை. பெண் கல்வி நாட்டு முன்னேற்றத்திற்கு நலம் விளைவிக்கும் என்பதை நன்கு உணர்ந்திருந்தனர். பொருட் செல்வம் இயற்கை தருவது; கல்வி மானுடர் தேடிப் பெறுவது. செல்வக் குடியிற் பிறந்த செல்வியர் கல்வி கற்றுக் கவின் பெற்றுச் சிறப்பு அடைந்தனர். கலைமகளும், திருமகளும் அவர்களை அடைந்து கொலுவீற்றிருந்தனர். கற்ற இப்பெண்களால் உற்ற நல் அறங்கள் சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்தன. இவர்கள் வறியவர்க்கு இல்லை என்னாமல் வாரி வழங்கினர்; விருந்தினர் வந்தால் விழைந்து வரவேற்றனர்; இன்முகம் காட்டி நல்லுரை பேசி உணவும் உறையுளும் தந்து சிறப்புச் செய்தனர். மாதரார்தம் செயலால் மாட்சி மிக்க அறங்கள் தழைத்து ஓங்கின.

அன்ன சத்திரங்கள் ஆயிரக்கணக்கில் செயல் பட்டன. அங்கே சோறு வடித்த கஞ்சி ஆறு போலப்

பெருகியது. அது கால்வாய்களாகக் கிளைத்துச் சோலைகளிலும், வயல் நிலங்களிலும் பாய்ந்து வளம் பெருக்கியது; தேர் ஒடுவதால் தெருக்களில் துகள் கிளம்பியது. யானையின் மதநீர்பட்டு அது தெருவினைச் சேறு ஆக்கியது; அதில் யானைகள் வழுக்கி விழுந்தன. மகளிர் குழை எறிந்து கோழி எறியும் செல்வ வாழ்க்கையைப் பெற்றிருந்தனர். சிறுமியர் சிற்றில் இழைத்துச் சிறுசோறு சமைத்தனர். முத்துகளை அவர்கள் சிறுசோறாக அமைத்தனர்; அம் முத்துகளை இளம் விளையாட்டுச் சிறுவர்கள் தம் காலில் இடறிச் சிதைத்தனர். அவை அவர்கள் திரட்டி எடுத்துப் போடும் குப்பைகளாகக் குவிந்து கிடந்தன; அவை ஒளி செய்தன.

மருத நிலத்துச் சோலைகளில் மயில்கள் தோகை விரித்து ஆடின; குயில்கள் கூவின; தாமரை முகைகள் விளக்குகள்போல் ஒளி வீசின; முகில்கள் இடித்து முழவாக் ஒலி செய்தன; நீர் அலைகள் அழகிய திரைச்சீலைகள் ஆயின. குவளைகள் கண்விழித்து நோக்கின. இவ்வாறு மருத நிலம், நாட்டிய அரங்காகப் பொலிவு பெற்று அழகு செய்தது. அன்னப் பறவைகள் தாமரை மலர்களை அடைந்து துயில் கொண்டன; தம் அருகே தம் இளங்குஞ்சுகளை உறங்கச் செய்தன.

சேற்று நிலத்தில் கால் வைத்த எருமைகள், தம் கொட்டிவில் உள்ள கன்றுகளை நினைத்துக் கொண்டு ஊற்று எனச் சுரந்த பாலை இச் சின்னப் பறவைகள் வாய்வைத்து மடுத்தன. தேரைகள் எனப்படும் பசுமை நிறத் தவளைகள் தாலாட்டுப் பாடின. அவை அதனைக் கேட்டு மயங்கித் துயின்றன.

சேற்று நிலத்தில் எருமைகள் பாலைச் சொரிந்ததால் நாற்று நடும் வயல்கள் வளம் காட்டின. நெற்பயிர்கள் செழித்தன.

அரங்குகளில் அரிவையர், ஆடலும் பாடலும் நிகழ்த்தினர். யாழும் குழலும் இணைந்து இசை அரங்குகளில் இனிமை கூட்டின. சதங்கை ஒலிகள், பதங்களுடன் சேர்ந்து, நாட்டிய நங்கையருக்கு நளினம் சேர்த்தன. இசையும் நாட்டியமும் வசையில் கலைச் செல்வங்களாய்க் கவின் செய்தன. காவியக் கதைகளில் தேர்ச்சி மிக்கவர் சொரியும் கவி அமுதம் செவிநுகர் கனிகள் ஆயின.

நகர் வளம்

இந்நாட்டின் தலைநகர் அயோத்தி என்னும் மாநகர் ஆகும். செல்வச் சிறப்பால் அளகை நகரையும், இன்பச் சிறப்பால் பொன்னகராம் அமராவதியையும் இது ஒத்து இருந்தது. எழில்மிக்க இந் நகரைப் பொழில் சூழ்ந்த மதில்களும், குழிகள்மிக்க அகழிகளும் சூழ்ந்திருந்தன. மதில்கள் விண்ணைத் தொட்டன. அகழிகள் மண்ணின் அடித்தலத்தை அழுத்தின.

காவல்மிக்க இக் கடிநகரை நால்வகைப் படைகள் காத்துப் போற்றின. மக்கள் தம் உயிர் என மன்னனை மதித்தனர். அவனும் மக்களைக் கண்களை இமை காப்பது போல் காத்துவந்தான். ஏழையின் கந்தல், உழைப்பாளியின் ஒரே நிலம் அவர்களின் உடைமைகள்; அவற்றைப் போல அரசன் நாட்டைக் காத்தது, அவன் கடமை ஆயிற்று. பகைவர் காட்டிய பகை, அவன் முன் எரிமுன் வைத்த பஞ்சு ஆகியது. அவர்கள் அஞ்சிப் புறமுது

கிட்டனர். மக்கள் பசியும், பிணியும் நீங்க, வளனும் வாழ்வும் பெற்று, அவன் குடை நிழலில் குளிர்ந்தனர். உட்பூசலும் வெளித்தாக்கலும் இன்றி நாட்டில் அமைதி நிலவியது; ஆக்கம் தழைத்தது; ஊக்கம் நிலவியது; செம்மைகள் நிலைத்தன. மாதரார்தம் கற்பின் திறத்தால் நாட்டின் பொற்பு உயர்ந்தது. அறத்தின் ஆக்கத்தால் துறக்கமும் தோற்றது. ஆடவர் தம் மறச் செயலால் வீரம் செறிந்தது; புகழ்மிக்க நாடு எனத் திகழ்ந்தது. கொடைச் சிறப்பால் வறுமை நீங்கியது: வள்ளல்கள் என்று ஒரு சிலர் புகழ் பெற முடியாமல் அனைவரும் பிறர் துன்பத்தைக் களைந்தனர். பிறர் கை ஏந்தாமல் பீடும் பெருமையும் பெற்று, மக்கள் வாழ்க்கை நடத்தினர். செல்வம், தனி உடைமை என்று கூற முடியாமல் அனைவர்க்கும் உரியதாய் இருந்தது. கல்வியும் மக்கள் உடைமையாக இருந்தது. கற்றவர் கல்லாதவர் என்ற பேதம் இன்றி, அனைவரும் கல்வி கற்று அறிவிற் சிறந்தவராய்த் திகழ்ந்தனர்.

மகவு வேள்வி

புறச் செல்வத்திலோ, அற வாழ்க்கையிலோ குறை காணாத மன்னன், தன் அக வாழ்வில் நிறைவு காணாத வனாய் வாழ்ந்தான். மக்கட்செல்வம் அவனிடம் வந்து அவனை மகிழச் செய்யவில்லை. யாழும் குழலும் அவனுக்குத் திகட்டிவிட்டன. அமுதமொழி பேசும் குழந்தைகளின் மழலைமொழி கேட்டு மகிழ விரும்பினான். கோடி இருந்தும் என்ன பயன்? நாடித் தன்மடியில் தவழும் நன்மக்களை அவன் பெறவில்லையே.

“ஒருத்திக்கு மூவர், அவனுக்கு மனைவியர்; எனினும் கருத்தரித்துக் காதல் நன்மகனைப் பெற்றுத் தரவில்லை” என்ற குறை அவனை அரித்தது. “சூரிய குலம் அவனோடு அத்தமித்து விடுமோ?” என்ற அச்சம் உண்டாகியது. அவனுக்குப் பின் யார் அந்த நாட்டை ஆள்வது? வாரிசு இல்லாமல் வறுமை உற்றுக் கிடந்தது அவன் வாழ்வு. இன்பம் சேர்ப்பதற்கு ஏந்திழையர் பலர் இருந்தனர்; துன்பம் துடைப்பதற்கு ஒரு மகவு இல்லையே என்ற ஏக்கம் அவனைத் தாக்கியது.

வயித்தியனைக் கேட்டான்; வழிவகை அவனால் கூற இயலவில்லை. ஆசிரியனை அணுகினான். வசிட்டர் அவன் குலகுரு; அரசியல் ஆசான்; வாழ்க்கை வழிகாட்டி: சாத்திரம் அறிந்தவர். அவரை அடைந்து தன் குறையை வெளியிட்டான்.

“பொருட் செல்வமும் கல்விச் செல்வமும் மாந்தர்தம் முயற்சியால் பெருகுவன; அவை ஈட்டத் தக்கன; மக்கட் செல்வம் பெறத் தெய்வ அருள் தேவைப்படுகிறது. அதற்கு மறை கற்ற மாமறையோன் நீர் தாம் வழி காட்ட வேண்டும்” என்றான்.

மழை இல்லாவிட்டால் மறையவர் வேள்விகள் இயற்றுகின்றனர்; மற்றையோர் இசை பொழிவித்து இறைவனை வேண்டுதலும் உண்டு. இந்த மரபுகளை ஒட்டி மகவு இல்லை என்றால் யாகம் எழுப்பித்தல் அக்கால மரபாகக் கொண்டிருந்தனர். அதற்குப் புத்திர காமேட்டி யாகம் என்று பெயரிட்டனர்.

“மகவினை நல்கும் மகிமை இந்தப் புத்திர காமேட்டி யாகத்துக்கு உள்ளது என்றும், தக்கவரைத் தலைமையாகக்

கொண்டு இதை நடத்துக” என்றும் வசிட்டர் அறிவுரை தந்தார். தெய்வ அருளால் பிறக்கும் மகன் ஆற்றல் மிக்கவனாய் விளங்குவான் என்ற நம்பிக்கையும் சேர்ந்து கொண்டது.

அக்கால வழக்கப்படி இம்மகவு வேள்வி இயற்றுதற்குமுன் மற்றோர் வேள்வி இயற்ற வேண்டும் என்ற மரபு இருந்தது. இதற்கு அசுவமேதயாகம் என்று பெயரிட்டனர். மாபெரும் மன்னர், தம் வெற்றிச் சிறப்பைத் திக்கு எட்டும் அறியச் செய்ய விரும்பினர். அடக்க முடியாத குதிரை ஒன்றினை முன் அனுப்பி அதனை மடக்குபவரை எதிர்க்கப் படைகள் பின் தொடர்ந்தன. அதனைக் கட்டி வைப்பவர் மாவீரன் என்ற புகழ் பெறுவர்; அவர்களை எதிர்த்து வெற்றி பெற்றுத் திறை பெற்றுத் தம் இறையிடம் சேர்த்தனர். சிற்றரசர்கள் அடி பணிந்து பேரரசனின் ஆணையை ஏற்றனர். அரசன் மாமன்னன் என்று புகழப்பட்டான். தசரதனும் இப்பரிவேள்வியைச் செய்து முடித்துவிட்டுப் பின் இம்மகவு நல்கும் நல்வேள்வி நடத்தினான்.

தெய்வங்கள் புகழ்ச்சிக்கும் வழிபாட்டுக்கும் மகிழ்ந்து கேட்ட வரங்களைக் கொடுத்து வந்தன. தவம் செய்வோர்க்கு ஆற்றலையும், ஆயுளையும் தந்தன. அசுரர்களும் அமரர்களும் மாறிமாறித் தவங்கள் செய்து சிவனிடமும் பிரமணிடமும் வேண்டிய வரங்களைப் பெற்றனர். வரங்களைப் பெற்றதும் தம் தரங்களை மறந்து, உரம் கொண்டு முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் இடையூறு விளைவித்தனர்.

அரக்கர்களை எதிர்க்கும் ஆற்றல் இல்லாத தேவர்களும், மாமுனிவர்களும் தெய்வங்களை அடைந்து தம்மைக் காக்கும்படி வேண்டினர். வரம் கொடுத்த தெய்வங்களே வழி தெரியாமல் திகைத்தன. பிரமனும் சிவனும் பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த பரமனிடம் சென்று முறையிட்டனர்; அவர்களோடு இந்திரனும் சென்றான்.

திருவுறை மார்பன் ஆகிய திருமால் அருள் செய்ய வந்து, அவர்களுக்கு ஆறுதல் உரை கூறினார். தெய்வங்கள் தந்த வரத்தை மானுடனே மாற்ற முடியும் என்று கருதித் தான் மானுட வடிவம் எடுத்துத் தசரதன் மகனாய்ப் பிறந்து, அந்தக் கொடியவரை வேர் அறுப்பதாய் வாக்களித்தார். அங்கு முறையிட வந்த வானவர்கள், தாமும் மண்ணில் வானரராகப் பிறந்து உதவுவதாய் உறுதி அளித்தனர். அவனுக்கு “வண்ணப் படுக்கையாய் இருந்த ஆதி சேடன், இலக்குவனாகப் பிறக்க” என்று ஆணையிடப் பட்டது; “தம் கைகளில் தங்கி இருந்த சங்கு சக்கரங்கள் பரத சத்தருக்கனர்களாகப் பிறக்க” என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.

தெய்வங்கள் நேரிடையாகக் களத்தில் இறங்கத் தயங்கினர். அவர்கள் குரங்களுக்குத் தலைமை தாங்கினர். இந்திரனின் கூறு, வாலியாகவும், அங்கதனாகவும் செயல்பட்டது; காற்றின் மைந்தனாக ஆற்றல் மிக்க அனுமன் பிறந்தான். பிரமனின் கூறாகச் சாம்பவான் ஏற்கனவே பிறந்திருந்தான் என்பது அறிவிக்கப்பட்டது. “அனுமன் காற்றின் மைந்தன்; எனினும், சிவனின்

சீற்றமும், ஆற்றலும் விரச் செயலும் அனுமன்பால் அமையும்” என்று அறிவிக்கப்பட்டது.

தெய்வ நகர்களில் தேவர்களும், தெய்வங்கள் மூவரும் முன் பேசிய பேச்சுரைகள் இப்பொழுது செயற்படும் காலம் வந்துவிட்டது என்பதை வசிட்டர் உணர்ந்தார். திருமால் தசரதன் மகனாய்ப் பிறப்பார் என்பதை அறிந்து செயல்பட்டார்; மகனை நல்கும் வேள்வி செய்விக்க வழி வகைகளைக் கூறினார்.

“வேள்விக்குரிய ஆசான் யார்? அவர் எங்கு இருக்கிறார்? எப்படி அவரை அழைத்து வருவது” என்ற முறைகளைக் கேட்டுத் தசரதன் செயல்பட்டான். “வேள்வி ஆசான் அதற்குத் தகுதி, கலைக்கோட்டு மாமுனிவர்க்குத் தான் உளது” என்று வசிட்டர் அறிவித்தார். அவரை ருசிய சிருங்கர் என்றும் கூறுவர். அவர் அங்க நாட்டில் தங்கி இருக்கிறார் எனவும், உரோம பாதர் அந்நாட்டு அரசன் எனவும், அவர் தம்மகளை இம் முனிவருக்கு மணம் முடித்துத் தம் அரண்மனையில் மருகனாய் இருக்க வைத்திருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டன.

“அங்க நாட்டிற்கு அக் கலைகோட்டு மாமுனிவர் செல்லக் காரணம் யாது?” என்று தசரதன் வினவினான்.

கலைக்கோட்டு மாமுனிவர் வரலாறும் அழைப்பும்

அங்க நாட்டில் தொடர்ந்து மழை பெய்யாமல் பொய்த்துவிட்டது. பஞ்சமும் பசியும் மக்களை அஞ்ச வைத்தன. ‘நல்லார் ஒருவர் இருந்தால் அவர் பொருட்டு மழை எல்லார்க்கும் பெய்யும்’ என்று கூறுவார்கள்.

எனவே நன்மை மிக்க அம்முனிவர் இருக்கும் இடம்நாடி அவரைத் தம் மண்ணை மிதிக்க வைத்தனர்.

கலைக்கோட்டு மாமுனிவர் விபாண்டன் என்னும் தவ முனிவரின் ஒரே மகன்; அவர் வெளியுலகப் பாதிப்புகள் இல்லாமல் வளர்க்கப்பட்டார்,‘காமம்’ என்பதன் நாமமே அறிய முடியாதபடி அவர் வளர்ந்தார்; காட்டில் திரியும் மான்! அதற்குக் கொம்பு உண்டு. மகளிர்க்கு வம்பு செய்யும் வனப்பு உண்டு; அவரைப் பொறுத்தவரை மானுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடே இல்லை; கச்சணிந்த மாது ஆயினும், இச்சையைத் துண்ட இயலாதபடி அவர்களிடமிருந்து ஒதுக்கி அவர் வளர்க்கப்பட்டார். காட்டுச் சூழலில் தவசிகள் மத்தியில் வாழ்ந்ததால் நகர மாந்தர்தம் ஆசைகள் அவருக்கு அமையவில்லை. “சுத்தம் பிரமம்” என்று சொல்லத்தக்க நிலையில் ஞானியாய் வாழ்ந்து வந்தார். அவரை மயக்கி நகருக்கு அழைத்து வர அந்த நாட்டு நங்கையர் சிலர் முன்வந்தனர்.

அவர்கள் அரசன் உரோமபாதரிடம் “கலைக் கோட்டு முனிவனைத் தம்மால் அழைத்து வரமுடியும்” என்று உறுதி தந்திருந்தனர்; அவர்கள் ஆடல் பாடலில் வல்ல அழகியர். அரசனும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டான்; கட்டற்ற செல்வத்தை அவர்களுக்கு வாரி வழங்கினான்; ஆடை அணிகள் தந்து, அவர்களைச் சிறப்பித்தான்.

நாட்டைவிட்டுக் காட்டை அடைந்த அக் காரிகையர், தூரிகையில் எழுதிய சித்திரங்கள்போல் அவன்முன் நின்றனர். முல்லை சூடிய அம் முறுவலினர் அவர் தங்கியிருந்த தவச் சாலையை மகளிர் சாலையாக்கினர்; காயும் கனியும் கொண்டு சென்று மருளும் மான்போல அவரை அணுகினர். புத்தம் புதிய மாதராய அவர்களை முதற்கண் நித்தம் தவம் புரியும் தவசியர் என்றே நினைத்தார். அழகும், இளமையும் அவரை ஈர்த்தன; அவர்கள் தந்த பழங்களைச் சுவை பார்த்தார். “தம்மோடு வருக” என்று அவர்கள் அழைத்தனர்; விழிகளால் அவருக்கு வழிகாட்டித் தம் பின்னால் வரச் செய்தனர்; வேல்விழி மாதரார் காட்டிய சாலை வழியே சென்று நாட்டு மண்ணை மிதித்தார் அம் மாமுனிவர்; காலடி பட்டதும் வறண்ட நிலங்கள் எல்லாம் வான் மழை நீரால் நிரம்பி ஆனந்தக் கண்ணிர் சொரிந்தன. வற்றி உலர்ந்திருந்த மரங்கள் எல்லாம் பசும் தழைகளைப் போர்த்தன. மயில்கள் எல்லாம் களிநடம் செய்தன. சாய்ந்து கிடந்த நெற்பயிர்கள் தழைத்துக் கதிர் மணிகளை விரித்து, முகம் காட்டின.

உரோமபாதர், “கலைக்கோட்டு மாமுனிவர் வருகையால்தான் மழை பெய்தது” என்பதை உணர்ந்தார்; ஒடோடி வந்து அவர் மலரடிகளில் விழுந்து வணங்கினர்; நங்கையர் சிலர் தவசிகள்போல வந்து மயக்கியமையை மன்னிக்கும்படி வேண்டினர்; ‘எல்லாம் நன்மைக்கே’ என்று அம் மாமுனிவர் நயம்படக்கூறி, அவர் அச்சத்தைப் போக்கினார். காவி உடை அணிந்து காயத்திரி தேவியைச் செபம் செய்து வந்து தவசி, சாவித்திரி ஒருத்தியைக் கைப் பிடிக்க அரசன் வழி வகுத்தான். தன் ஒரே மகள் சாந்தை என்பாளை அவருக்கு மணம் முடித்து உயர்பேறு பெற்றான். சுத்த பிரம்மம் ஆக இருந்த ஞானி மாயையின் பிடியில் அகப்பட்டு உலகக் குடிமகனாக மாறினார். எனினும், ஒழுக்கசீலர் என்பதால் விழுப்பம் உடையவர் என மதிக்கப்பட்டார். உரோமபாதரின் மருமகனாக இருந்த கலைக்கோட்டு மாமுனிவரை அழைத்து வரத் தசரதன் சென்றான்.

அவர் தலைமையில் மகவு நல்கும் வேள்வி நடத்த இருப்பதாயும், அவரை அனுப்பி வைக்கும்படியும் அழைப்பு விடுத்தான். மாமன்னன் வேண்டு கோளை மறுக்க முடியாமல் மாமுனிவராகிய கலைக் கோட்டா சானை அவரிடம் அனுப்பி வைத்தார் உரோம பாதர். வந்தவருக்கு வரவேற்பும், வாழ்த்தும் கூறிச் சிறப்புகள் செய்தான் தசரதன்.

வேள்வி தொடங்குதல்

கலைக்கோட்டு ஆசான் வேள்வித் தலைவராய் இருந்து சடங்குகளையும், முறைபாடுகளையும் செம்மை யாய்ச் செய்வித்து அவ்வேள்வியை நடத்தி வைத்தார்.

வேள்விக் குழிகளில் வெந்தி எழுப்பி மகப் பேற்றுக்கு உரிய அவிசுப் பொருள்களை அதில் இட்டு வேத மந்திரங்களை விளம்பித் தேவர்களுக்கு இட அவர்கள் மகிழ்ந்து அருள் செய்தனர்; ஒமக் குழியில் இருந்து பூதம் ஒன்று வெளிப்பட்டது; தட்டு ஒன்று தாங்கி வந்து அதைக் கலைக்கோட்டு ஆசானிடம் தந்து விட்டு மறைந்துவிட்டது. பொன்னொளி வீசிய பொற்புடைய தட்டில் அற்புதமான அமுதப் பிண்டம் இருந்தது. அந்தப் பிண்டத்தை அவர் அரசனுக்குத் தந்து நல் ஆசி கூறினார்.

தட்டில் இருந்த அமுதத்தைக் கட்டிய மனைவியர் மூவர்க்கும் பகிர்ந்து அளித்தான். தசரதன் எஞ்சியிருந்த மிச்சத்தை மீண்டும் இளையவள் சுமித்திரைக்குத் தந்து, அவளை இரட்டையர்க்குத் தாயாக்கினான். இலக்குவன் சத்துருக்கனன் சுமித்திரைக்குப் பிறந்தனர். கோசலைக்குக் கரிய செம்மலாகிய இராமனும், கைகேயிக்கு அரிய பண்பினன் ஆகிய பரதனும் பிறந்தனர். தசரதன் வாழ்வு மலர்ந்தது. எல்லாச் செல்வமும் அவனை வந்து அடைந்து மகிழவைத்தன. மக்கட் செல்வம் அவனை மிக்கோன் ஆக்கியது.

கல்வியும் பயிற்சியும்

கட்டிளங்காளையர் நால்வரும் கலை பயில் தெளிவும், மலை நிகர்த்த ஆற்றலும், போர்ப் பயிற்சியும் பெற்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்தனர். வசிட்டர் அவர்களுக்கு வேத சாத்திரங்களைப் பயிற்றுவித்தார். நூலறிவும் போர்ப் பயிற்சியும் மிக்கவர்களாய் வளர்ந்தனர். நாட்டாட்சி முறை கற்க, அவர்கள் மக்களோடு பழகினர்; அவர்கள் குறைகளை நேரில் கேட்டு அறிந்தனர்.

மாலை வேளைகளில் சாலை நிலைகளில் ஊர்ப் புறம் சென்று மக்களைச் சந்தித்தனர். உதய சூரியன் உதித்ததுபோல அவர்கள் அவனை மதித்துப் போற்றினர். செல்லும் இடம் எல்லாம் வெல்லும் திறனுடைய இளவல் இலக்குவன், இராமனைத் தொடர்ந்தான். அவ்வாறே பரதனைச் சத்துருக்கனன் நிழல்போல் தொடர்ந்தான். “தம்பி உள்ளான் படைக்கு அஞ்சான்” என்று கூறும்படி இலக்குவன் இராமனுக்கு அரணாக விளங்கினான். “உடன் பிறப்பு’ என்பதற்கு இலக்கணம், இந்நால்வர் உறவில் விளக்க முற அமைந்திருந்தது. பாசம் அவர்களைப் பிணித்தது; மூத்தவன் இராமன் என்பதால் மற்றவர் அவனிடம் யாத்த அன்பும் பாசமும் காட்டி மதித்தனர். தலைமை இராமனிடம் இயல்பாக அமைந்து கிடந்தது. மக்களும் அவனை மற்றையவர்களைவிட மிகுதியாய் நேசித்தனர்.

விசுவாமித்திரர் வருகை

ஆற்றுவரியாக இயங்கிய தசரதன் வாழ்க்கை புயலையும் இடியையும் சந்திக்க நேர்ந்தது. மக்களைப் பெற்று மனைநலம் பெற்றிருந்த மன்னன், அவர்களைப் பிரியும் சூழல் உருவாகியது.

விசுவாமித்திரர் “ராஜரிஷி” என்று பாராட்டப் படுபவர்; அவர் அரசராய் இருந்தவர்; அவர் தம் அரச பதவியை விலக்கிக் கொண்டு, தவ வேள்விகளைச் செய்து, உயர்பேறுகளைப் பெற்று வந்தார். வேகமும், விவேகமும் அவர் உடன்பிறப்புகள். சினமும் சீற்றமும் அவர் நாடித் துடிப்புகள், அவர் வருகையைக் கண்டாலே மாநில அரசர்கள் நடுங்கினர்; அடுத்து என்ன நேருமோ என்று அஞ்சினர்.

பீடுநடை நடந்து ஏற்றமும் தோற்றமும் தோன்றத் தன் அவைக் களம் அணுகிய அம் முனிவரைத் தசரதன் தக்க வழிபாடுகள் கூறி வரவேற்று அமர வைத்தான். “தாங்கள் எழுந்தருளியதற்கு நாங்கள் மிக்க தவம் செய்தோம்” என்று அடக்கமாய்ப் பேசி, அன்புடன் வரவேற்றான். இருகை வேழம் என விளங்கிய தசரதன்,

“தருகை எது வாயினும் தயங்கேன்” என்று கூறினான். கேட்பது எதையும் தருவதாய் வாக்கும் அளித்தான்.

“யான் கேட்பது பொன்னும் பொருளும் அல்ல; பூவும் வழிபாடும் அல்ல; உன் நன்மகன் இராமன்! அவனை என்னுடன் அனுப்புக” என்றார் முனிவர்.

கேட்டதை அரசனால் மறுக்க முடியவில்லை. அதே சமயத்தில் மகனைவிட்டுப் பிரியவும் அவனால் இயலவில்லை.

“அதைத் தவிர வேறு ஏதேனும் கேட்டால் உவப்பேன்” என்றான்

“வந்ததே அவனுக்காகத்தான்; தருவேன் என்று கூறியபின் மறுப்பு ஏன்?” என்றார் முனிவர்.

“துறவிக்கு இவன் எவ்வகையில் உதவுவான்; இவனை மறப்பதற்கு வழி தேடின் நலமாகும்” என்றான் வேந்தன்.

“நான் துறவிதான்; அறம் தழைக்க அவனை அழைக்கின்றேன். இழைக்கும் வேள்விகளை அழிக்கும் அரக்கரை ஒழிக்கும் வகைக்கு அவன் வந்து உதவ வேண்டும்” என்றார் முனிவர்.

“போர்ப் படை காணாத பச்சிளம் பாலகன் என் மகன்; தேர்ப்படை கொண்டு உமக்குத் துணையாக நானே வருகிறேன்” என்றான் வேந்தன்.

“கேட்டது தருவேன் என்றாய்; வேட்டது தருவாய் என்று கேட்டேன்; வாய்மை தவறாத மன்னன் நீ;

இப்பொழுது வாய் தவறுகின்றாய்; பாசமும், பந்தமும், உன் மகன்பால் வைத்த நேசமும் உன்னை இழுத்துப் பிடிக்கின்றன; இருதலைக் கொள்ளி எறும்புபோல் உன் நிலைமை ஆகிவிட்டது. மறுத்தலைச் சொல்லும் உன் மாற்றம் வியப்புக்கு உரியது” என்றார் முனிவர்.

நீரினின்று எடுத்துப் போட்ட மீனின் நிலைமையை மன்னவன் அடைந்தான்; எதிர்பாராத சூழ்நிலையில் எது பேசுவது என்பது தெரியாமல் தவித்தான்; “தவிர்க” என்றும் சொல்ல இயலவில்லை; “செல்க” என்று வாழ்த்தி அனுப்பவும் முடிய வில்லை; “முடியாது” என்று முடிவு கூறவும் இயலாமல் தவித்தான்.

வசிட்டர் தசரதனைப் பார்த்து, “உம் பாசம் போற்றத்தக்கது தான்; அதனால் உன் மகனுக்கு நாசம் விளைவித்துக் கொள்கிறாய்; குடத்து விளக்குப்போல் உன் மகனை வளர்க்கிறாய்; அவனைத் தடத்தில் விட்டுத் தழைக்கச் செய்ய வழி விடுக; காற்று வரும்போது தூற்றிக் கொள்வது ஏற்றம் தரும். கல்வி கரையற்றது; கற்க வேண்டியவை இன்னும் உள; படைக் கலம் பயின்ற மாமுனிவன், உன் மகன் கரை ஏறக் கிடைத்த மரக்கலம் என அறிக, ஆசானாக வந்த அறிஞர் அவர்; அவருடன் அனுப்புக; அரச முனிவர் ஆதலின் விரசுபடைக் கலன்கள் பல அவரிடம் உள்ளன; அவற்றைத் தக்கவர்க்குத் தரக் காத்து இருக்கிறார்; “'உன் மகன் வீரம்மிக்கவன்” என்று தெரிந்தால் அவற்றை அவனுக்கு அளிப்பது அவர் உறுதி; வாய்ப்புகள் வந்துகொண்டே இருப்பதில்லை; அதைத் தவறவிட்டால் வழுக்கி விழ வேண்டுவதுதான். நீர் அவருக்கு உதவுவது எளிது; அதைவிட அந்த வாய்ப்பை

உம் மகனுக்குத் தருவது வலிது. அதனால் அவனுக்குப் புதுப் பயிற்சிகள், முயற்சிகள், வெற்றிகள் காத்துக் கிடக்கின்றன. அவனை அனுப்பி விட்டு மறுவேலை பார்; அவனைத் தடுக்க நீர் யார்?” என்று நன்மைகளை எடுத்துக்கூறிச் செல்வதன் நன்மையை அறிவுறுத்தினார்.

இருள் அகன்றது; ஒளி தெரிந்தது, பாசத் திரை தன் பார்வையை மறைத்திருந்தது. அதை விலக்கிவிட்டு, விழி பெற்றவனாகத் தசரதன் நடந்து கொண்டான்; வழி தவறியதற்கு வருந்தினான்; குருடனாக நடந்துகொண்ட அவன், புத்தொளி பெற்று, மகனை முனிவனுடன் அனுப்பி வைத்தான்.

விசுவாமித்திரர் இராமனைத்தான் கேட்டார்; இலக்குவன் வருவதைத் தடுக்கவில்லை. நிஜத்தை விட்டுப் பிரியாத நிழலாக இளையவன் இலக்குவன், அழைக் காமலே அண்ணன் இராமனைப் பின் தொடர்ந்தான்; முனிவன் முன்னே நடக்க, அவன் பின்னே இவ் விளையவர் இருவரும் தொடர்ந்து நடந்தனர்.

உடன்போதல்

கூட்டை விட்டுப் பறவைகள் வெளியே பறந்து செல்வதுபோல, நாட்டை விட்டுக் காட்டு வழியே முனிவனுடன் சென்றனர்; மாட மாளிகைகளும், கூடகோபுரங்களும், அசையும் கொடிச் சீலைகளும், அவர்களை வழி அனுப்பின. வானவில்லின் வண்ண நிறங்களும், பிரபஞ்சத்தின் பேரொளியும் அவர்கள் கண்ணைக் கவர்ந்து மகிழ்வு ஊட்டின. காந்தத்தின் பின்

தொடரும் இருப்பு ஊசிபோலக் கறுப்புநிறச் செம்மலும் இளவலும் தவ முனிவன்பின் சென்றனர்; அறிவு நிரம்பிய ஆசானின் அணைப்பில் அவர்கள் பெருமிதம் கொண்டனர்; புதிய இடங்களுக்குச் சென்று மனதில் பதியும் புதிய காட்சிகளைக் கண்டனர்; அவற்றைக் கண்டு வியப்பும் அறிவும் பெற்றனர்; ஆறுகளையும், சோலைகளையும் கடந்து, வேறுபட்ட சூழல்களைக் கண்டனர். அந்தப்புரங்களையும், ஆடல் அரங்குகளையும் கண்டவர் எளிமையும், எழிலும், ஞானப் பொலிவும் நிரம்பிய முனிவர்களின் ஒலைக் குடிசைகளைக் கண்டனர்.

ஆசிரமங்கள் அவர்களுக்குப் பசும்புல் விரிப்புகளைப் பரப்பி, வரவேற்புச் செய்தன; காட்டு மரங்கள் காற்றில் அசைந்து அவர்களோடு கவிதைகள் பேசின; மனிதர்களைப் போலவே தாவரங்கள், மரம், செடி, கொடிகள் அவர்களிடத்தில் பாசமும், பரிவும் காட்டின; விலங்குகளும் தத்தமக்கு உரிய நெறிகளின் படி உலவிச் செயல்பட்டுத் திரிவதைக் கண்டனர். தேவைக்கு மேல் அவை உயிர்களைக் கொன்று தின்பதில்லை; தேடித் திரிவதுமில்லை; மனிதன் தேவைக்கு மேல் பொருள் திரட்டுவதைக் கண்டு பழகிய அவர்களுக்கு அம்மிருகங்கள் மதிக்கத்தக்கவையாக விளங்கின. மாந்தர்விடும் மூச்சில் கலந்துள்ள அசுத்தங்களைத் தாம் வாங்கிக் கொண்டு காற்றைத் துய்மைப்படுத்தி உதவும் தாவரங்களின் உயர்வை அறிய முடிந்தது. தீமை செய்பவர்க்கும் தாம் உள்ள அளவும் நன்மை செய்யும் நல்லியல்பு அவற்றிடம் காண முடிந்தது. தம்மை வெட்டிக் கீழே சாய்க்கும் முரடனுக்கும் காயும், கனியும் நறுநிழலும் தந்து உதவும்

அவற்றின் உயர்வைக் காணமுடிந்தது. பூத்துக் குலுங்கும் பூவையரின் எழிலையும் பொலிவையும் செடி கொடிகளிடம் முழுமையாகக் காண முடிந்தது.

காமாசிரமம்

சரயூநதிக் கரையில் சஞ்சரித்த அவர்கள், பசுமையான சோலை ஒன்றனைக் கண்டனர். அதில் தவசியர் வசிக்கும் குடில்கள் மிக்கு இருந்தன. அம் முனிவர் இவர்களைக் கண்டதும் பேருவகை அடைந்தனர்; வரவேற்பும், உண்டியும், இடமும் தந்து உபசரித்தனர்; எழில்மிக்க பொழில்கள் சூழ்ந்த ஆசிரமத்தில் இரவுப் பொழுதைக் கழித்தனர்.

பொழுது புலர்ந்தது; அந்த ஆசிரமம் அவர்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. அதன் ஆதி அந்தத்தைக் கேட்டு அறிய அவாவினர். அதன் பெயரே புதுமையாய் இருந்தது. “காமாசிரமம்” என அது வழங்கப்பட்டது. காமத்தை ஒழித்து, ஏமநெறி காணும் முனிவர்கள், தாம் வாழும் இடத்துக்கு இப் பெயர் சூட்டியுள்ளமை வியப்பைத் தந்தது. “இதற்கு ஏதேனும் தக்க காரணம் இருக்க வேண்டும்” எனக் கருதினர். ஆரண வேதியனை அணுகி, “இப்பெயர் இதற்கு அமையக் காரணம் யாது?” என்று வினவினர்.

“மலரம்புகளை விட்டு மற்றவரை எரிக்கும் காமன் இங்கே எரிபட்டான்; அதனால், இந்த இடம் “காமாசிரமம்” என வழங்கலாயிற்று” என்றார்.

“'காமன் கூடவா தவம் செய்ய இங்கு வந்தான்?'</p?

“செய்கிற தவத்தைக் கெடுக்க அவன் அம்புகளைத் தொடுக்க, அது சிவன் மேல்பட, அவர் சினந்து எரிக்க, அவன் சாம்பல் ஆனான்” என்று கூறினார்.

“மதன் மதம் அழிந்து, அவன் அதம் தீர்ந்து, அழிந்து ஒழிந்தான்” என்பதைக் கேட்ட இவர்கள், “ஆழம் தெரியாமல் காலைவிட்டால் இந்தக் கதிதான் நேரும்” என்று பேசிக் கொண்டார்கள்.

“மன்மதன் எரிந்து விட்டானா?” என்று இளையவன் கேட்டான்.

“எரிந்தாலும் அவன் இன்னும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறான்” என்று முனிவர் விடை தந்தனர்.

இந்தக் கதை கேட்பதற்குச் சுவையாக இருந்தது. காணும் இடம் எல்லாம் அது கதைகளைப் பெற்றிருந்தது. முனிவர்களின் அற்புதங்கள் சொற்பதங்களாகப் பேசப்பட்டன. இதைப் போலவே காணும் காட்சிகள், செல்லும் இடங்கள், கடக்கும் ஆறுகள், தங்கும் சோலைகள் இவற்றின் பெயர்களையும் வரலாறுகளையும் கேட்டு அறிந்தனர்; நடை வருத்தம் மறந்தனர்.

அவர்கள் கடக்கும் வழியில் வெப்பம்மிக்க பாலை நிலம் ஒன்று குறுக்கிட்டது. அறம் சாராதவர் மூப்புப் போல் அது அழிவைப் பெற்று இருந்தது. குடிக்க நீரும், உண்ண உணவும், தங்க நிழலும் கிடைக்காத கொடிய காடாக இருந்தது. காட்டு விலங்குகளும் அந்த மேட்டு நிலத்தில் நடப்பதைத் தவிர்த்தன. அதன் வெப்பம் தாங்க

வொண்ணததாய் இருந்தது. அதை நீக்கும் செப்பம் தேவைப்பட்டது. மாமுனிவன் உபதேசித்த மந்திரங்களைச் சொல்லி, இவர்கள் பசியும் நீர் வேட்கையும் நீங்கினர். சுற்றுப்புறம் வெம்மை நீங்கித் தண்மை அளித்தது. “அம் மந்திரம் பிரம்ம தேவனால் விசுவாமித்திரருக்கு அளிக்கப்பட்டது” என்பதைக் கேட்டு அறிந்தனர்.

பாலை நிலம்

இதுவரை நடந்து வந்த வழிகளில் எல்லாம் பசுஞ்சோலைகளைக் கண்டவர், இங்கு மட்டும் ஒரு பாலை நிலம் இருப்பது வியப்பைத் தந்தது. செடிகள், கொடிகள், மரங்கள் பிடுங்கி எறியப் பெற்றுச் சருகுகளாக உலர்ந்து கிடந்தன. யாளிகளும், யானைகளும், மானும், மாடுகளும் உலவித் திரிந்த இடம் அது; அவற்றின் வற்றி உலர்ந்த எலும்புக் கூடுகள் அவற்றின் சரிதத்தைச் சொல்லிக் கொண்டு இருந்தன; சிங்கமும் புலியும் ஒன்று இரண்டு ஒதுங்கித் திரிந்து கொண்டிருந்தன. அவையும் சினம் அடங்கிச் சிறுமை உற்று இருந்தன. அங்கே வாழ்ந்த உயிரினங்கள் என்ன ஆயின? களப்பலி கொள்ளும் காளி கோயில் முற்றம்போல் இரத்தம் புலர்ந்த தரைகளும், எலும்பின் சிதைவுகளும் புலால் நாற்றம் வீசிக் கொண்டிருந்தன. அழிவுச் சின்னங்கள் அலங்கோலப் பின்னங்கள் அவற்றின் வரலாற்றைக் கேட்க ஆர்வத்தைத் துண்டின.

“இவை அரக்கர்களின் அழிவுச் செயலாகத்தான் இருக்க வேண்டும்; இதற்குக் காரணம் யார்?” என்று இளைஞர் வினவினர். மாமுனிவருக்குப் பேச ஒரு

வாய்ப்புக் கிடைத்தது. எதைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாரோ அதைச் சொல்லத் தக்கதொரு வாய்ப்புக் கிடைத்தது.

“'தாடகை என்னும் தையலாள்தான் காரணம்” என்றார்.

“அரக்கி அவள்; இரக்கமில்லாதவள்; இந்தத் தண்டகாருணிய வனமே அவள் கொடுமைக்கு ஆளாகி விட்டது. சிங்கமும் புலியும்கூட அவளைக் கண்டால் அஞ்சி நடுங்கி விடும்; உயிர்களைக் கண்டால் அவள் செயிர் கொண்டு அழிப்பாள்; அவற்றின் குருதியைக் குடிப்பாள்; எலும்புகளை முறிப்பாள், ஆலகால விஷம் போலச் சுற்றுப் புறத்தைச் சுட்டு எரிப்பாள். அவள் இங்கு உலவித் திரிகிறாள்” என்று அவளைப் பற்றிய செய்திகள் அறிவித்துக் கொண்டு இருந்தார்.

தாடகை வருகை

அதற்குள் எதிர்பாரத விதமாகக் கோர வடிவம் உடைய அவ்வரக்கி அவர்கள்முன் வந்து நின்றாள். மனித வாடை, அவளை அங்குக் கொண்டுவந்து சேர்த்தது.

இடியின் ஒலியை இதுவரை வானின் மடியில் தான் கேட்டிருந்தார்கள். இப்பொழுது முதன்முறையாகப் பெண்ணின் குரலில் இடி பேசுவதைக் கேட்டார்கள்; மின்னல் என்பதை மழை மேகத்தில்தான் கண்டிருக்கிறார்கள்; அதைப் பின்னிய சடையுடைய அவ்வரக்கியின் கோரச் சிரிப்பில் காண முடிந்தது. அவள் மலை ஒன்று அசைந்து வருவதைப் போல அவர்கள்முன் நடந்து

வருவதைக் கண்டனர்; பருவதம் அசையும்” என்பதை அவள் வருகையில் கண்டனர். வானில் கண்ட மதிப்பிறையை அவர்கள், அவள் கூனல் பற்களின் வளைவில் கண்டனர். வேள்வித் தீயில் காணும் தீப்பொறிகளை அவள் வேள்விக் குறிகளில் காண முடிந்தது. கண்கள் சிவந்து கிடந்தன. பசி என்பதற்கு எரிமலையின் வடிவம் உண்டு என்பதை நெறி தவறிய அவள் இரைச்சலில் கண்டனர்.

தாக்கும் போக்கில் அவர்களை நோக்கி நடந்தாள். “உங்கள் சடைமுடி என்னை ஏமாற்றாது; நீங்கள் மணிமுடி தரிக்கும் மன்னவனின் சிறுவர்கள் என்பது எனக்குத் தெரியும்; வற்றி உலர்ந்த தவசிகளைப் பற்றித் தின்று என் பற்கள் கூர் மழுங்கிவிட்டன. செங்காயாகச் சிவந்து கிடக்கும் கனிகள் நீங்கள்; சுவை மிக்கவர்கள், நவை அற்றவர்கள்; நெய்யும் சோறும் நித்தம் தின்று கொழு கொழுத்து உள்ள மழலைகள் நீங்கள்; காத்திருந்த எனக்கு வாய்த்த நல் உணவாக அமைகிறீர்கள்” என்று சொல்லிக் கொண்டு சூலப்படை எடுத்து அந்த மூலப்பொருளை நோக்கி எறிந்தாள். வில் ஏந்திய வீரன் இராமன் தன் விறலைக் காட்ட அம்பு ஒன்று ஏவினான். அது அவள் ஏவிய சூலத்தை இருகூறு ஆக்கியது; சூலம் தாங்கிய அவள், அதை இழந்து ஒலம் இட்டாள். மறுபடியும் அவள் போர்க் கோலம் கொண்டாள்.

பெண் என்பதால் அவளைக் கொல்லத் தயங்கினான். அவள் பேயாக மாறிவிட்டதால் அவளை அடக்க வேண்டியது அவன் கடமையாகியது. மெல்லியல் என்ற சொல்லியலுக்கு அவளிடம் எந்த நல்லியலும்

காணப்படவில்லை. அவள் அடங்கி இருந்தால் இவன் முடங்கி இருப்பான்; அவள் போர் தொடங்குவதால் இவன் செயல்பட வேண்டியது ஆயிற்று.

“சேலை கட்டியவள்; அவள்மீது வேலை எறிவது தகாது” என்று எண்ணினான். அடித்துத் துரத்துவது என்று ஆரம்பத்தில் எண்ணினான். அதற்கு முனிவனின் அனுமதி கிடைக்கவில்லை. தம்மோடு தங்கை பிறவாத வெறுமை அவளிடம் அன்பு காட்டச் செய்தது. பெண் கொலை புரிதல் பெரும்பழி உண்டாக்கும் என்று தயங்கினான். ஆவும், ஆனியல் பார்ப்பனரும், பெண்டிரும், மகவு பெறாதவரும் களத்தில் அனுமதிக்கப்படுவது இல்லை; களத்தில் எந்தப் பெண்ணும் நின்று போராடியது இல்லை; இவன் கற்ற கல்வி, அவளைக் கொல்லத் தடையாக நின்றது.

“கொலையிற் கொடியரைக் களைதல் களை பிடுங்குதற்குச் சமமாகும். அது நாட்டு அரசனின் கடமையாகும். தீயவரை ஒழித்தால்தான் உலகில் நன்மை நிலைத்திருக்கும். அறம் நோக்கி அழிவு செய்வது ஆளுநரின் கடமையாகும்.

“நீ தனிப்பட்ட மனிதன் என்றால் தயங்கலாம்; நீ அரச மகன்; உனக்குத் தீயோரை ஒறுத்தல் கடமை யாகும்; இது உன் தந்தை செய்ய வேண்டிய கடமை; அதை அவர் இதுவரை செய்யாமல் தாமதித்தது பெருந் தவறு; நீ அவளை இரக்கம் காட்டி, விட்டுவிட்டால், “'நீ அஞ்சி அகன்றாய்” என்று உலகம் பேசும்; “கோழை” என்று ஏழையர் பலர் கூறுவர்; தருமத்தின் முன்னால் ஆண்

பெண் பேதம் பார்ப்பது ஏதம் தரும்; வேதமும், பெண் ஆயினும் அவள் தவறு செய்தால் ஒறுப்பதை அனுமதிக்கிறது. ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என்று பேசிப் பேதம் காட்டுவது அரச நெறியாகாது”.

“மேலும் அவள் தாக்க வந்தவள்; அவள் உயிர் போக்குவது ஆக்கமான செயலே. “கொடியவள் ஒருத்தியை வீழ்த்தினாய்” என்று உன் புகழை உலகம் பேசும்” என்றார்; முன்னோர் பலர் தவறு செய்த பெண்களைத் தீர்த்துக்கட்டிய சான்றுகளை அவன் முன் வைத்தார்.

இராமன் அவர் கூறியவற்றைப் பொறுமையாய்க் கேட்டான்; இனித் தாமதித்துப் பயனில்லை.

“விசுவாமித்திரர் வாக்குதான் வேதவாக்கு; அதற்குமேல் சான்றுகள் தேவை இல்லை” என்பதை உணர்ந்தான்; அதற்குமேல் வாதங்கள் தொடரவில்லை.

அம்பு துளைத்தல்

இராமன் ஏவிய முதல் அம்பு, அவள் சூலத்தை முறித்தது; அடுத்து விட்ட அம்பு அவள் மார்பகத்தைத் துளைத்து முதுகு புறம் வெளியேறியது. கல்லாத மடையர்களுக்குச் சொல்லும் நல்லுரைகள் அவர்கள் வாங்கிக் கொள்வது இல்லை; உடனே அவர்கள் அதைவிட்டு விடுவார்கள். அதுபோல அவ் அம்பு அவள் மார்பில் நிற்காமல் வெளியேறிவிட்டது.

குருதி கொப்பளித்தது; அதில் அவள் நீராடினாள். செக்கர் வானம் தரையில் சாய்ந்ததைப் போல அவள்

தரையில் விழுந்தாள். மை வண்ண அரக்கி, செவ் வண்ணச் சிலையாக நிலை மாறினாள். கறுப்பி என்று பேசப் பட்டவள் செவ்வலரி மலரானாள். மண் சிவந்தது; அதில் அவள் கண் சிவந்து துடித்துக் கதறினாள்; அந்த ஒலி யானையின் பிளிறல்போல் நாற்புறமும் சிதறியது. இராவணனது கொடிக் கம்பம் சாய்ந்ததைப் போல இந்தக் கொடிய கம்பம் கீழே விழுந்தது. இராவணன் அழிவை முன் கூட்டி அறிவிப்பதுபோல் இந்தச் சாய்வு காணப் பட்டது.

மக்கள் புரட்சி முன் கொடுங்கோல் மன்னன், ஆட்சி இழந்து வீழ்ச்சி உற்று அலங்கோலம் அடைவதைப் போல இக்கோர அரக்கி பிணக்கோலம் கொண்டாள்; இதைக் கண்ட வானவர் ஆரவாரித்தனர்; மகிழ்ச்சி அடைந்தனர். தீமை அழியவும், அறம் தழைக்கவும் இராமன் சரம் செயல்பட்டதை அறிந்து அவர்கள் ஆசி கூறினர்.

“மாவீரன்” இவன் என்று தேவேந்திரன் பாராட்டினான். தேவர்கள் தெய்வப் படைக் கருவிகள் சிலவற்றை ஏற்கெனவே விசுவாமித்திர முனிவரிடம் ஒப்படைத்து இருந்தனர்; அவற்றைத் தக்கவனிடம் சேர்க்கச் சொல்லி அறிவித்திருந்தனர்; “தக்கோன் இவனே” என்று சொல்லி மிக்கோன் ஆகிய முனிவரிடம் “அப்படைகளை இராமனிடம் தருக” என்று அறிவித்தனர்.

மாமுனிவனும் தேவர்களின் ஏவல் கேட்டுக் காவல் மன்னன் ஆகிய இராமனுக்குப் படைக் கருவிகளைத் தந்தான்; அவற்றோடு எய்யும் ஆற்றையும் கற்பித்தான். அரிய படைப்பயிற்சி அவனுக்குக் கிடைத்தது. ஆற்றல்மிக்க படைக் கருவிகள் அவனை அடைந்தன. தவவேள்வி

தாடகை தரையில் பட இராமன் வில்லை வளைத்தான்; இது அவனுக்கு வெற்றியைத் தந்தது; அவன் வீரம் பாராட்டப்பட்டது; எனினும், “அவன் ஒரு பெண்ணைக் கொலை செய்தான்” என்ற பெரும் பழியும் அவனைச் சூழ்ந்தது.

இதைக் கூனி கைகேயிடம் உரையாடலில் குறிப்பிடுகிறாள். இராமன் பெருமையை உலகம் பேச, அவன் சிறுமையைக் கூனி ஏசக் காண்கிறோம். “தாடகை என்னும் தையலாள் படக் கோடிய வரி சிலை இராமன்” என்று வன்பழிக் கூறி கைகேயிக்கு அவன்பால் உள்ள அன்பை அழிக்கிறாள் கூனி.

தாடகையின் வீழ்ச்சி, அரக்கர்களின் தாழ்ச்சிக்கு ஆரம்பநிலை; அவர்கள் அழிவுக்குப் பிள்ளையார் சுழி, இனி அடுத்து அவள் மைந்தர்கள் சுபாகுவும் மாரீசனும் இராமனை எதிர்க்கின்றனர். அதற்கு உரிய சூழல் உருவாகியது.

வேள்வி காத்தமை

கடமையை முடித்துக் கொண்டு காகுத்தன், அந்த இடத்தை விட்டுச் சில யோசனை தூரம் நடந்து சென்றான். மூவரும் அழகிய பசுஞ்சோலை ஒன்றனைக் கண்டனர். அதன் பழைய வரலாறு மாமுனிவன் கூற, இருவரும் செவிமடுத்தனர். “அந்த இடத்தில் திருமால் இருந்து தவம் செய்தார்” என்ற கதை பேசப்பட்டது.

அதே இடத்தில்தான் மாவலி என்ற மன்னனும் ஆண்டு வந்தான் என்பதும் அறிவிக்கப்பட்டது. வள்ளல் ஒருவன் அழிந்தான் என்பது கேட்கப் புதுமையால் இருந்தது. தீயவர்கள் அழிவதும் நல்லோர்கள் வாழ்வதும் அறத்தின் ஆக்கம் என்று கூறுவர். கொடை வள்ளலாக வளர்ந்தவன்; புகழின் எல்லையில் நின்றவன்; அவனை ஏன் திருமால் காலால் மிதித்து மாய்க்க வேண்டும்?

நல்லது செய்தாலும் ஆணவம் கூடாது; அடக்கம் காட்டி இருக்க வேண்டும். ஈகை என்பது மற்றவர்கள் தேவை அறிந்து அவர்கள் குறையைப் போக்குவது. உடையவர்கள் இல்லாதவர்களுக்கு உதவுதல், அவர்கள் கடமையாகும். மேகம் மழை பெய்கிறது என்றால், மக்கள் தன்னைப் புகழ வேண்டும் என்று அது எதிர்பார்ப்பது இல்லை; அது தன் கடமையைச் செய்கிறது. “மாரி அன்ன வண்கை” என்றுதான் புலவர்கள் வள்ளல்களைப் பாராட்டினார்கள். ஊரில் நீர்நிலை இருந்தால், அது தனி ஒருவனுக்கு மட்டும் உரியது அன்று; அதேபோலத் தான் செல்வர்களின் செல்வமும் பயன்படவேண்டும். ஈயார் தேடிய பொருளைத் தீயார் கொள்வர்; ஈட்டும் செல்வம் நாட்டுக்குப் பயன்பட வேண்டும்.

மாவலி தந்தது புகழ் கருதி மட்டும் அன்று; இதனை ஒரு யாகமாகக் கொண்டான்; அதனால் புண்ணியம் கிடைக்கிறது; அதன் விளைவு இந்திரப் பதவி என்று திட்டம் தீட்டினான்; அவன் செயலில் கண்ணியம் இல்லை; புண்ணியம்தான் இருந்தது.

தேவர்கள் வந்து திருமாலிடம் முறையிட்டனர். “இவன் புகழ் மிக்கவனாக வளர்ந்தால் விரைவில் இந்திரப் பதவியை அடைவான்; இவனை அடக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர். “ஆணவம் மிக்க அவனை அவன் சொல்லாலேயே அழிக்க வேண்டும்” என்று திட்டமிட்டு, வாமனனாய் அவதரித்து, மூன்று அடி மண் கேட்டு, விண்ணையும் மண்ணையும் அளந்து, மூன்றாம் அடியை அவன் தலைமேல் வைத்து, அவனைப் பாதளத்தில் அழுத்தினார். இந்தக் கதையை அவ் இளம் சிறுவர்க்கு வளம்மிக்க தவம் உடைய முனிவர் எடுத்து உரைத்தார்.

மாவலி ஆண்ட மண் அது; அவன் மாண்டதும் அதே மண்தான்; அதனால் அந்த இடம் பெருமை பெற்றது என்பதைவிட வாமனனாய் வந்து, நெடு மாலாய் நிமிர்ந்து நின்ற இடம் அது; அதனால் அது சிறப்புப் பெற்றது. திருமாலின் திருவடி தீண்டப் பெற்றதால் அந்த இடம் ‘திவ்வியத் தலம்’ ஆயிற்று. அந்த இடத்துக்குச் ‘சித்தாசிரமம்’ என்ற பெயர் வழங்கலாயிற்று. “நினைத்த பொருள் கைகூடும் இயல்பினது” என்ற பொருளில் இந்த இடத்துக்கு இப் பெயர் அமைந்தது.

வேதம் கற்ற அந்தணர், வேள்விகள் இயற்றுவதைத் தம் தொழிலாகக் கொண்டிருந்தனர். தீ வளர்த்து, அவிசு சொரிந்து, தேவர்களுக்கு உணவு தந்தனர்; அவர்கள் புகழ்மிக்க இந்தத் திருத்தலத்தைத் தாம் யாகம் செய்யும் பூமியாகத் தேர்ந்து எடுத்தனர்; அதனால், அங்கே ஆசிரமங்கள் அமைத்துக் கொண்டு வேதம் ஓதுவதும் வேள்விகள் இயற்றுவதும் தம் தொழிலாகக் கொண்டனர்; விசுவாமித்திரரும் தாம் மேற்கொண்ட தவத்துக்குரிய இடமாக அந்த இடத்தைத் தேர்ந்து எடுத்தார்; அங்கு வந்திருந்த ஏனைய வேதியர்களும் முனிவர்களும் அவர் தலைமையை ஏற்று அடிபணிந்தனர். வந்தவர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, இவ் வாலிபர்கள் தசரதன் நன்மக்கள் என்பதை எடுத்து உரைத்தார். இவர்கள் காவல் இருக்கத் தாம் கண்ணிய வேள்விகளைப் பண்ணி முடிக்கலாம் என்று உரைத்தார்.

வேள்வி தொடங்கியது; கேள்வி மிக்க முனிவர் அங்கு வந்து கூடினர்; “இனி அரக்கர் வந்து அழிவு செய்ய முடியாது” என்பதால் அச்சமும் அவலமும் நீங்கி, உவகை பெற்றுச் செயல்பட்டனர். தீயை வளர்த்து, உலகத்துத் தீமைகளை அழிக்க முயன்றனர். விசுவாமித்தரர் யோக நிலையில் அமர்ந்து, தம் வேகம் எல்லாம் ஒடுக்கி, மவுன விரதம் மேற்கொண்டார். ஆறு நாள்கள் இந்த வேள்வி தொடர்ந்தது; வேறு அரக்கர் வந்து தொடர்ந்து வேள்விக் குழிகளைக் குருதிச் சேறு ஆக்காமல் இவ்விருவரும் ஊண் உறக்கம் இன்றி, வில் ஏந்திய கையராய்க் காவல் காத்து நின்றனர்.

அரக்கருடன் போர்

தாடகை பட்டதும் அந்த அதிர்ச்சிமிக்க செய்தி அரக்கர்களைச் சுட்டது; அது காடு முழுவதும் எட்டி எதிர் ஒலித்தது. அவள் மாரீசன் சுபாகு என்பவனின் தாய்; அரக்கர்களின் தலைவி, அக்கிரமங்களின் உறைவிடம்; “அவள் வீழ்ந்தாள்” என்றதும் அரக்கர்கள் துயரில் ஆழ்ந்தனர்; கொதித்தனர்; திக்கெட்டும் முரசுகள் அதிர்த்தனர்; வான் எங்கும் குழுமினர்; அவர்கள் கொக்கரித்து இடி முழக்கம் இட்டனர். வானத்தில் கரிய மேகங்கள் சூழ்ந்திருப்பது போல் இவ்வரக்கர்கள் ஒருங்கு திரண்டனர்; “தலைவியை வீழ்த்திய அந்தத் தறுகணாளர்களை அழிப்பது” என்று உறுதி கொண்டனர்; வேள்விப் புகை கிளம்பியது; அதைப் பற்றிக் கேள்விப்பட்டனர்; “இந்த முனிவர்களுக்கு என்ன துணிச்சல்?” அதை நினைத்து அவர்களுக்கு ஒரே எரிச்சல்.

மாமிசத் துண்டங்களை அந்த வேள்விக் குண்டங்களை நோக்கி வீசினர்; குருதிப் புனலை அக் குழிகளில் கொட்டி நெருப்பை அவிப்பதில் உறுதியாய் இருந்தனர். யாக மேடையைக் களப்பலி மேடை போலப் புலால் நாற்றம் வீசச் செய்தனர். கைவில்லை ஏந்தி நாண் ஏற்றி, அவர்கள் மீது அம்பு செலுத்தித் தொல்லைப் படுத்தினர். படைக்கலங்களை வீசி, அவர்கள் நெய்க் குடங்களை உடைத்தனர். விண்ணில் இருந்து அவர்கள், இவற்றை வீசுவது இராமன் கண்ணில் பட்டது. “அவ்வரக்கர்களைச் சுட்டிக் காட்டி இரக்கம் சிறிதும் காட்டாமல் வீழ்த்துக” என்று இலக்கு வனுக்கு அறிவித்தான். இலக்குவன் அவர்கள் மீது அம்பு செலுத்தி, அலற வைத் தான். இராமன் சரக்கூடம் அமைத்து, வேள்விச் சாலையை அவர்கள் தாக்குதலினின்று தடுத்துக் காத்தருளினான்.

அரக்கர்களின் ஆரவாரத்தைக் கண்டு, அருந்தவ முனிவர் அஞ்சி, இராமனை அணுகி முறையிட்டனர்.

“அவர்கள் குறைகளைத் தீர்த்து அருள்வதாக அபயம் அளித்தான்; “'அஞ்சற்க” என்று கூறி அரக்கர் களைத் துஞ்ச வைத்தற்கு அம்புகளைச் செலுத்தினான். எதிர்க்க வந்த மாரீசன் அதிர்ச்சி அடைந்து, உயிர் தப்பி ஓடி விட்டான். சுபாகு என்பவன் மரணப் பிடியில் அகப்பட்டு அதிலிருந்த தப்ப முடியாமல் மடிந்து தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டான். “அரக்கர் தலைவர் இருவரும் களம் விட்டு மறையவே, மற்றவர் எதிர்த்துப் பயனில்லை” என்பதால் உயிர்மேல் விருப்புக் கொண்டு அந்த இடத்தை விட்டு ஒட்டம் பிடித்தனர். செத்தவர் சிலர்; சிதைந்தவர் பலர் ஆயினர்.

அரக்கர்களின் கூட்டு எதிர்ப்பு வரட்டுக் கூச்சலாய் எழுந்து, ஓங்கி, அடங்கிவிட்டது. விசுவாமித்திரர் தம் யாக வேள்வியை இனிது முடித்து மன நிறைவு கண்டார். மற்றைய முனிவர்களும் பனிப்படலம் நீங்கியது போல மன ஆறுதல் பெற்றுத் தத்தம் வேள்விப் பணிகளைச் செய்து முடித்தனர். அரக்கர்களின் அரட்டலும் மருட்டலும் அதோடு முடிந்தன. இராமன் விசுவாமித்திரருக்குத் துணையாய் இருந்து அவர் இட்ட பணிகளை இனிது முடித்துத் தந்து, அவர்தம் நன்மதிப்பைப் பெற்றான்.

மிதிலை ஏகல்

கடமையை முடித்துக் கவலை நீங்கி இருந்தனர். ‘அடுத்துச் செய்யத்தக்கது யாது?’ என்று முனிவன் கட்டளையை எதிர்நோக்கி நின்றனர்.

“அடுத்த பயணம் எங்கே”என்று இராமன் நயனம் வினவியது.

“சனகன் என்ற பெயருடைய மாமன்னன் ஒரு பெரு வேள்வி நடத்த இருக்கிறான்; வேள்வி காண அவன் ஊராகிய மிதிலைக்குச் செல்கிறோம். அங்கு உனக்கு ஒரு வீர விளையாட்டுக் காத்துக் கிடக்கிறது”.

“மேரு போன்ற வில் ஒன்று வளைப்பார் அற்று வாளாக் கிடக்கிறது; அதனை எடுத்து, வளைத்து, நாண் ஏற்றி, உன் வீரத்தைக் காட்டு; நீ மாவீரன் என்பதற்கு அஃது ஒர் எடுத்துக்காட்டு; அதனை வெளிப்படுத்த இவ்வாய்ப்புகள் காத்துக் கிடக்கின்றன” என்று கூறினார்.

எடுத்த கருமம் முடித்துக் கொடுத்தமையின் அவனைச் “சான்றோன்” என்று உலகம் புகழ்ந்தது. முனிவர்கள் அவன் ஆற்றிய பணியையும், அதனால், தாம் அடைந்த பயனையும் சொல்லிப் பாராட்டி நன்றி நவின்றனர். “இவனை மாவீரன் என்று கேட்கும் தசரதன் உவகை உறுவது உறுதி” என்றனர்.

அங்கே அந்த வனத்தில் வாழும் முனிவர் வாயிலாய் அவன் முன்னோர்களின் வரலாறுகளைக் கேட்டு மகிழ்வும் பெருமையும் கொண்டனர். முந்தையோர் வீரச் செயல்களைக் கேட்கும் தோறும் அவர்கள் நெஞ்சம் இறும்பூது எய்தியது. தேன் மழையில் தாம் நனைவது போல அக்கதைகள் அவர்களுக்கு இனித்தன. தாய் பாடும் தாலாட்டுப் போல அவர்கள் நெஞ்சில் பதிந்தன; அவர்களுக்கு ஊக்கம் அளித்தன.

பகீரதன் கதை

விசுவாமித்திரர்பால் கேட்ட கதைகளுள் பகீரதன் கதையும் ஒன்றாகும்.

“கங்கை நதிக்குப் பாகீரதி என்ற பெயர் வரக் காரணம் யாது” என்று முனிவரைக் கேட்டு அறிந்தனர்.

பகீரதனின் முயற்சியால் வான் உலகில் பாய்ந்து கிடந்த நதியை மண்ணுக்குக் கொண்டு வந்தமையால் அதற்குப் பாகீரதி’ என்ற பெயர் உண்டாயிற்று என்று விளக்கம் தந்தார்.

“மலையரசனாகிய பருவதராசனுக்கு இரண்டு புதல்வியர் இருந்தனர்; இவர்களின் தாய் பெயர் “மனோரமை”. மூத்தவள் ‘கங்கை’; இளையவள் ‘பார்வதி’; சிவனார் பார்வதியை இடப்பக்கத்தில் வைத்துச் சரிபாதி இடம் கொடுத்தார். பெண்ணுக்குச் சரி உரிமை தந்த முதற்கடவுள் சிவனார்; சக்தியும் சிவனுமாய் அவர்களை மாந்தர் வழிபடுகின்றனர்.

கங்கை வானவர்க்கு அமுதமாக விளங்கிப் பரலோகவாசியாய் இருந்தாள். அவள் தேவர்களுக்கு நீராடும் புனலாக நிலவினாள்.

‘சகரன்’ என்ற பெயருடன் சூரிய குலத்து அரசன் ஒருவன், தன் புகழை எட்டுத்திக்கும் பரப்பி, ஏற்றமுடன் ஆட்சி செய்து வந்தான். தன்னிகரில்லாத வேந்தனாய் அவன் விளங்கினான்; தன் மாட்சியை உலகுக்கு அறிவிக்க அக்கால வழக்கப்படி அசுவமேத யாகம் ஒன்று நடத்தினான். அவன் அனுப்பி வைத்த குதிரை எட்டுத்திக்கும் சென்றும் அடக்குவார் இன்றிப் பாதாள உலகம் சென்றது. அங்குத் தவத்திற் சிறந்த முனிவர் ‘கபிலர்’ என்பார். அதைக் கட்டி வைத்தார். அது மேலே எழும்பி வாராமல் அங்கே அகப்பட்டுக் கொண்டது.

சனகனின் புதல்வர் பதினாறாயிரவர் மண்ணைத் தோண்டி அந்த இடத்தைக் கண்டுபிடித்தனர். சகரர் தோண்டிய இடம் கடலாக ஆனமையின் அதற்குச் சாகரம் என்ற பெயரும் வழங்குகிறது. வேல் ஏந்திய மன்னரை எதிர்க்கச் சென்றவர், நூல் அணிந்த மார்பன் ஆகிய முனிவரைச் சந்தித்தனர்; நொய்ந்த அவர் உடம்பைக் கண்டு அவர் ஆற்றலைக் குறைவாக மதிப்பிட்டனர். அனுமதி கேட்டு கட்டு அவிழ்க்க வேண்டியவர் அவரசப்பட்டுக் குதிரையை மீட்டனர்; அதற்குக் கிடைத்த வெகுமதி அவர் இட்ட சாபம்; வந்தவர் அனைவரும் சாபத்தால் வெந்து சாம்பல் ஆயினர்.

பிற்காலத்தில் சகரனின் சந்ததியார்களுள் ஒருவனான பகீரதன் என்பான் முந்தையோர் கதைகளைக் கேட்டு வேதனை அடைந்தான். ஈமக்கடனும் செய்ய முடியாமையால் அவர்கள் நாமமும் மறைந்து சாம்பலாய் மாறி அவர்கள் சரித்திரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தது. அவர்கள் சாம்பலை ஒருங்கு திரட்டிப் புண்ணிய நதியின் தீர்த்தத்தை அவற்றின் மீது தெளித்து, அவர்கள் வானுலகு நண்ண அவன் முயற்சி எடுத்துக் கொண்டான். “கங்கை நீர்தான் புனிதம் மிக்கது” என்று சாத்திரம் அறிந்தவர் சாற்றினர்; ஆனால், அது மண்ணுலகில் பாய்வதில்லை; விண்ணவரின் உடைமையாக இருக்கிறது என்பதைப் பகீரதன் அறிந்தான்.

“செத்தவர்களுக்குச் சிவலோகம் தருதற்கு மட்டும் அன்றிப் பாரத நாட்டுக்கு வளமும் வாழ்வும் தர, அந் நதி தேவை” என்பதைச் சிந்தித்து உணர்ந்தான். ‘மேலவர் என்று சொல்லும் தேவர்கள் தம் உடைமை என்று மதித்த அந்த நதியை மண்ணுக்குக் கொண்டு வர முடிவு செய்தான்.

படைப்புகளுக்கு எல்லாம் காரணம் பிரமன் என்பதால் அவனை அணுகினான்; பிரமன் சகல சாத்திரங் களையும் அறிந்தவன்; அவன் சட்ட நுணுக்கங்களை உணர்ந்தவன்; நதியை எந்த ஒரு மாநிலமும் உரிமை கொள்ள முடியாது. அது பாயும் இடம் எல்லாம் அதற்கு வழிவிட வேண்டும் என்பதை அறிந்தவனாய் இருந்தான்.

கங்கை நதி, மேலிடத்தில் வாழ்ந்த தேவர்களுக்கு மட்டும் நீராடவும், விளையாடவும் பயன்பட்டு வந்தது. பிரமன் அதனை நோக்கி, ‘நீ மானுடர்க்கும் பயன்படுக; மண்ணுலகில் மாந்தர் உம்மை எதிர்பார்க்கின்றனர்; சற்றுக் கீழேயும் பார்’ என்று ஆணையிட்டான். நிலைகுலைந்து பொங்கிய அலைகளுடன் கங்கை மண்நோக்கிப் பாய்ந்தது. “அணைக்கட்டுக்களைச் சரியாய் அமைக்காத நிலத்தவர் எப்படித் தக்கபடி பயன்படுத்த இயலும்? ஒருகை பார்த்துவிடுவது” என்று வேகமாய்ப் பாய்ந்தது.

இந்த மண்ணுலகம் அதனைத் தாங்காது என்பதை அறிந்த தேவர் சிவபெருமானிடம் சென்று முறை யிட்டனர்; “மழை பெய்யாமலும் கெடுக்கும்; பெய்தும் கெடுக்கும் என்பது உலகு அறிந்த ஒன்று; சில பகுதிகளில் மழையே பெய்வது இல்லை; அங்கே பசியும் பஞ்சமும் விஞ்சி நிற்கின்றன. சில இடங்களில் மழை மிகுதியாய்ப் பெய்து வெள்ளப் பெருக்கை விளைவித்து, ஊர்களை அழித்து விடுகிறது. அழிக்கும் ஆற்றல் நெருப்புக்கு மட்டும் இல்லை; நீருக்கும் உண்டு, “அதனை அடக்கி வேகத்தைக் குறைத்துப் பூமிக்கு அனுப்ப வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர்.

விரிசடைக் கடவுளாகிய சிவபெருமான் தம் சடையை விரித்து, அதன் வழியை மறைத்தார். பெட்டிப் பாம்பு போல அந்த நதி அவர் சடையில் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டது; ஒரு சொட்டு நீர்கூடப் பூமியில் விழவில்லை.

என் செய்வது? பகீரதன் முயற்சி வெற்றிபெற வில்லை; பிரமணிடம் கேட்டுப் பெற்ற வரம் செயல் பட்டும் அது பாதி வழியில் தடைப்பட்டு விட்டது. பரம சிவனை அண்டிக் “கருணை காட்ட வேண்டும்” என்று வேண்டிக் கொண்டாள். அவர், தம் விரிசடையால் அதன் வேகத்தைத் தடுத்து, மெதுவாய்த் தம் தலைமுடியில் இருந்து தரையில் விழுமாறு அனுப்பினார். “மங்கையை பாகத்தில் வைத்த பரமன், கங்கைக்குத் தன் சிரசை இடமாகக் கொடுத்தான்” என்று உலகம் பாராட்டியது.

எடுத்த முயற்சிக்கு மற்றோர் இடையூறு அடுத்தது; வற்புறுத்திப் பெண்ணைக் கட்டி வைத்தால், அவள் முரண்டு பீடிப்பதைப் போலக் கங்கையும், வேகம் தணியாமல் ஆணவத்தோடு பாய, உலகுக்கு அழிவு நேர இருந்தது. முரட்டுக்காளை எதையும் முட்டித் தள்ளுவது போலச் சந்நு முனிவர் அமைத்து வைத்த யாக வேள்வியைக் குலைத்து அழித்தது. இதைக் கண்டு கோபம் கொண்ட அம் முனிவர் விழுந்த நீர் முழுவதையும் வாய் வைத்துக் குடித்து வயிற்றில் அடக்கி வைத்தார். முடக்கி விட்ட நீரால் பகீரதன் முயற்சியும் அடக்கி வைக்கப் பட்டது.

பகீரதன் அம் முனிவரை அடைந்து “அதை வெளியே விடுக” என்று கேட்டுக் கொள்ள, அவர் நீரைச் செவி வழியாய் வெளியே விட்டார். அது கடலில் சேர்ந்து, அதன் அடியில் பாதளத்தில் பாய்ந்து, எரிந்தவரின் சாம்பலைப் புனிதப்படுத்தியது. அவர்கள் ஆன்மா சாந்தி அடைந்தது. அவர்கள் உயிர் துறக்கத்தை அடைந்தது. உலகம் நன்மை பெற்றது.

முந்தையோர் பெருமைகளைக் கூறிக்கொண்டு வந்த விசுவாமித்திரர், அவற்றுள் ஒன்றாக இந்தப் பகீரதனின் கதையையும் கூறினார். இக் கதைகளைச் சொல்லி அன்றைய இரவுப் பொழுதைக் கழித்தனர். மறுநாள் மிதிலை நோக்கிப் புறப்பட்டனர்.

அகலிகை கதை

இராமன் கைவண்ணத்தைத் தாடகை வதத்தில் அவன் வில் திறமையில் காண முடிந்தது. அவன் கால் வண்ணத்தைக் காணும் வாய்ப்பு இவனுக்காகக் காத்துக் கிடந்தது.

அகலிகை கதை, பெண்ணின் விமோசனத்தைப் பேசும் கதையாகும். அது தனிப்பட்ட ஒரு தவ முனிவன் பத்தினி கதை மட்டுமன்று; “தவறு செய்துவிட்டால் அதனை வைத்து அவதூறு செய்வது கூடாது” என்ற பாடத்தையும் கற்பிப்பது.

கற்பு என்பதற்கு அற்புதமான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. “அவர்கள் பிறர் நெஞ்சில் புக மாட்டார்கள்’ என்று பேசப்படுகிறது. அவர்களுக்குக் கடுமையான விதிகள் விதிக்கப்பட்டு இருந்தன.

எப்படியோ இவள், மற்றொருவன் நெஞ்சில் புகுந்து இடம் பெறாவிட்டாள். ஆசை அவன் நெஞ்சில் பஞ்சினைப்போல் பற்றிக் கொண்டது. இந்திரனுக்கு ‘போகி’ என்ற பெயரும் உண்டு. அழகியர் பலர் இருந்தும் அவன் நெஞ்சு, இவள்பால் இளகிவிட்டது. உயர்ந்த பதவியில் இருப்பவன் உடனே தாழ்ந்து போக முடியாது; வலியப் பற்றி அவளை வம்புக்கு இழுத்து இருக்கலாம்; அகலிகை கவுதமர் மனைவி; அவர் பார்வையில் பட்டால் எரிந்து சாம்பல் ஆக வேண்டுவதுதான்; முனிவருக்குத் தெரியாமல் தனிமையில் அவளை எப்படிச் சந்திப்பது? சாத்திரத்தில் சம்பிரதாயத்தில் உருண்டு புரண்டு எழுந்தவள். அவன் பேரழகனாய் இருக்கலாம்; செல்வச் சிறப்பில் அவன் மிதக்கலாம். மன்மதனே வந்து மயக்கினாலும் அவள் ‘சம்மதம்’ என்று சொல்ல மாட்டாள். கட்டுப்பாட்டில் வாழும் அவள், தன் நெறியில் தட்டுப்பாடு காட்டமாட்டாள். என் செய்வது? அவளை ஏமாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. மலரினும் மெல்லிய காதல் இன்பத்தை அவன் வலியப் பெற விழைந்தான். இதனைப் பெருந்திணை என்று பெரியோர் பேசுவர்.

“இருட்டிலே அவளை மருட்டி உறவு கொள்வது” என்று உறுதி கொண்டான். கவுதமர் எப்பொழுது வீட்டை விட்டு வெளியேறுவார்? பொழுது புலர்ந்தால்தான் கங்கைக்கு நீராடச் செல்வார்; அதற்கு முன் உள்ளே சென்றால் அவன் கள்ளத்தன்மை வெளிப்பட்டு விடும்.

பின்னிரவுப் பொழுதில் கோழி கூவுவதைப் போல இவன் குரல் கொடுத்தான். “பொழுது விடிந்து விட்டது” என்று அவர் இறைவனைத் தொழுது வழிபட உறக்கத்தினின்று எழுந்தார். தூங்குபவளைத் தட்டி எழுப்பாமல் உறங்கட்டும் என்று அவளை விட்டுவிட்டு இவர் மட்டும் கங்கைக் கரை நோக்கி அக் கங்குற் பொழுதில் நடந்தார்.

‘எப்பொழுது இந்தத் தவமுனிவர் போவாரோ’ என்று காத்திருந்த கயவன். அம் முனிவர் வேடம் கொண்டு அவள் பக்கத்தில் சென்று படுத்தான்; கரம் தொட்டான்; வண்டு தேன் உண்ண மலர் தன் இதழ்களை விரித்தது. அவள் அவனிடம் புதியதோர் இன்பம் கண்டாள். மது உண்ட நிலையில் அவள் மயங்கிவிட்டாள்.

கங்கையில் நீராடச் சென்றவர், அவர் காலடி பட்டதும் நித்திரையில் சலனமற்று இருந்து ஆறு, “என்னை ஏன் எழுப்புகிறாய்?” என்று கேட்டது. தாம் விடியும் முன் வந்துவிட்டதை அறிந்து கொண்டார் முனிவர். “கோழி கூவியது சூழ்ச்சி” என்று தெரிந்து கொண்டார். ஞானப் பார்வையால் நடப்பது என்ன? என்பதைத் தெரிந்து கொண்டு வேகமாய் வீடு திரும்பினார்.

குடிசைக்குள் ஏற்பட்ட சலசலப்பும், முனிவர் வேகமாகச் சென்ற பரபரப்பும் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டன.

கலவியில் மயங்கிக் கிடந்த காரிகை விடுதல் அறியா விருப்பில் அகப்பட்டுக் கொண்டாள். அவள் ஏமாந்து விட்டாள்” என்று கூற முடியாது. தூண்டிலில் அகப்பட்ட மீன் ஆகிவிட்டாள்.

முனிவர் விழிகள் அழலைப் பொழிந்தன. “கல்லாகுக” என்று சொல்லாடினார்; அவனையும் எரித்து இருக்கலாம்; இந்திரன், தேவர்களின் தலைவன்; அவனைப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. “நீ பெண் ஆகுக” என்று சபித்தார். “மற்றவர் கண்களுக்கு நீ உன் சொந்த உருவில் காட்சி அளிப்பாய்; உனக்கு மட்டும் நீ பெண்ணாகத்தான் தோன்றுவாய்” என்று சாபம் இட்டார். இருட்டிலே நடந்தது வெளிச்சத்துக்கு வரவே இல்லை. உலகத்துக்கு அவள் ஒரு பாடமாக விளங்கினாள்.

கல்லாகி விட்டவளுக்குப் பாவ விமோசனமே கிடையாதா? ஆண்கள் தவறு செய்தால் மன்னிக்கப் படுகின்றனர். பெண்கள் மட்டும் ஏன் ஒறுக்கப்பட வேண்டும். நெஞ்சு உரம் கொண்டவள்தான்; என்றாலும், அவள் அவனோடு மஞ்சத்தில் மெழுகுவர்த்தியாகி விட்டாள். அவள் காலம் காலமாகக் கல்லாகிக் கிடந்தாள். அந்தக் கல் இராமன் வழியில் தட்டுப்பட்டது. இராமன் திருவடி பட்டதும் அவள் உயிர் பெற்று எழுந்தாள். கல்லையும் காரிகையாக்கும் கலை, அவன் காலுக்கு இருந்தது. அவள் சாப விமோசனம் பெற்றாள்.

ஆத்திரத்தில் முனிவர் மிகைப்பட நடந்து கொண்டார். அவரே அவளை மன்னித்து இருக்கலாம்; அத்தகைய மனநிலை அவருக்கு அப்பொழுது அமைய வில்லை. இராமனைக் கண்டதும் அவர் மனம் மாறியது; விசுவாமித்திரர் வேறு அறிவுரை கூறினார். “பொறுப்பது கடன்” என்று எடுத்துக் கூறினார்; அவளை மறுபடியும் சேர்த்துக் கொள்ள வேண்டினார். கவுதமர் மறுபடியும் தம் தவ வாழ்க்கையில் ஈடுபடலாயினார். அகலிகையும் முனிபத்தினியாய் இருந்து அவருக்குப் பணிவிடை செய்தாள்; அவள் கூந்தல் மலர் மணம் பெற்றது; கல்லைப் பெண்ணாக்கிய காகுத்தன் பெருமையைப் பாராட்டினார் விசுவா மித்திரர். “தாடகை அழிவு பெற்றாள்; அகலிகை வாழ்வு பெற்றாள்; அவன் கைவண்ணம் அங்குப் புலப் பட்டது. கால்வண்ணம் இங்கே தெரிய வந்தது'என்று விசுவாமித்திரர் பாராட்டினார். “கைவண்ணம் அங்குக் கண்டேன்; கால்வண்ணம் இங்குக் கண்டேன்” என்பது அவர் சொல்.

மிதிலையில் சானகி

கருகிய மொட்டு ஆகாமல் ஒரு பெண்ணுக்கு வாழ்வளித்த இராமன், மற்றோர் பெண்ணை வாழ்க்கைத் துணைவியாக ஏற்கும் சூழ்நிலை அவனை எதிர்நோக்கி நின்றது. காடும் மேடும் கடந்தவர் நகரச் சூழலை அடைந்தனர்; மிதிலையின் மதிலையும், அகழியையும், சோலைகளையும் கடந்து நகருக்குள் புகுந்தனர்; அந்நகரத்துப் பெருவீதிகளையும், கடை வீதிகளையும், அரச வீதிகளையும் கடந்து கன்னி மாடம் இருந்த தெரு வழியே நடந்து சென்றனர். அந்தத் தெருவில் கன்னி மாடத்து மாளிகையில் எழில்மிக்க நங்கை ஒருத்தி நின்று கொண்டு, அம் மாளிகையின் கீழே முற்றத்தில் அன்னமும் அதன் துணைப் பெடையும் அன்புடன் களித்து ஆடும் அழகைக் கண்ட வண்ணம் இருந்தாள்.

முனிவர் பின் சென்ற இராமன், மாடத்துப் புறாவைக் கண்டு வியந்தாள். பொன்னை ஒத்து ஒளி பொருந்திய மேனியும், மலர்க் கூந்தலும், கண்ணைக் கவரும் அழகும் அவனைக் கவர்ந்தன. அக் கோதையாள் சனகன் மகள் சீதை என்பது அவனுக்குத் தெரியாது. அவளுக்கும் அவ் விளைஞன் யார்? என்பதும் தெரியாது; “அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்; இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்”. மாடத்தில் இருந்தவள் அவன் நெஞ்சில் குடி புகுந்தாள். முற்றத்தில் நடந்த இளைஞன் அவள் நெஞ்சில் குடி புகுந்துவிட்டாள். அவள் அவனுக்குச் செஞ்சொற்கவி இன்பமாக விளங்கினாள்.

சந்திப்பு

முனிவர், முன்னே நடந்தார். அவர்பின் இராமன் தொடர்ந்தான். திட்டமிட்டபடி மூவரும் சனகன் அரண்மனையை அடைந்தனர். அவன் விருந்தாளி களாய் மூவரும் அங்குத் தங்கினர். இராமன் நெஞ்சில் சீதையைச் சுமந்து அவள் நினைவாகவே இருந்தான்; அவளும் இராமன் நினைவே நிறைந்தவளாய் இருந்தாள். புதிய வேட்கையில் அவர்கள் நெஞ்சங்கள் பதிந்து கிடந்தன.

சனகன் ஒரு பெரு வேள்வி நடத்தினான். அதில் பங்கு கொள்ள முனிவர்களும் அந்தணர்களும் வந்து சேர்ந்தனர். மாமன்னைனை மறையோர்கள் வாழ்த்தினர். அரண்மனையில் அகலமான ஒரு பெரிய கூடத்தில் சனகன் வந்து அமர்ந்தான்; குழுமி இருந்த விழுமிய முனிவர்களோடு அளவளாவி அவர்கள் நல்லாசியைப் பெற்றான்.

விசுவாமித்திரரோடு வந்திருந்த அரசிளங்குமரர் களான இராம இலக்குவரை சனகன் கவனித்தான். பெண்ணைப் பெற்றவன் ஆயிற்றே அதனால், அவன் கண்கள் தன் மகளுக்குத் தக்க மணாளனைத் தேடியது. “முருகனைப் போன்ற அழகன் தன் மருகனாக மாட்டானா”? என்று ஏங்கினான்.

“யார் இந்தக் காளையர்? அம் முனிவரோடு ஏன் வந்தனர்?” என்று கேட்டுத் தெரிந்து கொள்ள விழைந்தான் சனகன். ஏன் அவர்களைப் பற்றி இவன் விசாரிக்க வேண்டும்? மகளைத் தருவதற்கு அவன் அடி போடுகிறான் என்பதை அறிந்து கொண்டார் விசுவா மித்திரர். இராமன் குலப் பெருமையையும், அவன் நலங்களையும் விவரித்தார். “அவர்கள் கோசல நாட்டு மன்னன் தசரதன் அரும் புதல்வர்கள்” என்று தொடங்கி அவர்கள் தமக்காக வனத்துக்கு வந்து அரக்கர்களை விரட்டியதையும், செய்த வீரச் செயல்களையும் விளக்கமாக உரைத்தார்.

திருமணம்

“குலமும் நலமும் பேரழகும் ஆற்றலும் மிக்க இராமன், சீதையை மணக்கத் தக்கவன்” என்று சனகன் முடிவு செய்தான். எனினும், அவளை மணக்க அவனே வைத்த தேர்வு அவனுக்குக் குறுக்கே நின்றது; மூலையில் மலைபோல் வில் ஒன்று கிடப்பது நினைவுக்கு வந்தது. அது ஒரு தடைக்கல் ஆக இருக்குமோ? என்று கவலையுற்றான்; அவனே சீதையைச் சுற்றி ஒரு முள்வேலியை அமைத்து விட்டான். அதனை அவனே எப்படி அகற்ற முடியும்?

“வில்லை வளைத்தே இராமன் அவளை மணக்க வேண்டும்” என்று முடிவு செய்தான். அதற்கு முன்னர்ச் சீதையின் பிறப்பு. அவள் வளர்ப்பு இவற்றைப் பற்றி அறிவிக்க விரும்பினான். அந்த வில்லின் வரலாற்றையும் தெரிவிக்க விரும்பினான். அவன் குறிப்பறிந்து செயல்படும் அவைக் களத்தில் இருந்த முனிவர் சதானந்தர், சீதை சனகனுக்குக் கிடைத்த ஆதி நிகழ்ச்சியையும், வில்லை முறிக்க வேண்டிய தேவையையும் உரைத்தார்.

சீதை சனகன் வளர்ப்பு மகள்; அவன் மன்னனாக இருந்தும் உழவர்களைப் போலத் தானே சென்று நிலத்தை உழுது வந்தான். “அவன் கலப் பையின் கொழு முனையில் தட்டுப்பட்ட செல்வக் கொழுந்து சீதை” என்பதைத் தெரிவித்தார். அவள் மண்மகள் தந்த அரிய செல்வம்; அவளைச் சனகன், ‘தன் மகள்’ என்றே வளர்த்து வந்தான். அவள் பேரழகைக் கண்டு அரசர் போர் எழுப்பித் தங்களுக்குள் மோதிக் கொண்டனர். அவனாக விரும்பி, அவளை யாருக்கும் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

அமைச்சர்களுடன் கலந்து, அடுத்துச் செய்வது யாது? என்று ஆலோசித்தான்; தன்னிடம் ஒரு காலத்தில் ஒப்படைக்கப்பட்ட சிவதனுசு ஒன்று, எடுப்பார் அற்று முடங்கிக் கிடந்தது. “அந்த வில்லை எடுத்து, அதனை வளைத்து, நாண் ஏற்றி, அம்பு செலுத்தக்கூடிய ஆடவனே அவளை மணக்கத் தக்கவன்” என்று அறிவித்தான்.

கனியைப் பறிக்கக் கல் தேவைப்பட்டது. கல்லை எடுத்தால்தான் அதைக் கொண்டு கனியை வீழ்த்த முடியும். அதே நிலைமைதான் இங்கு உருவாயிற்று. “வில்லை வளைத்தால்தான் அவளை அடைய முடியும்” என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. தேசத்து அரசர்கள் பலர் சீதைபால் நேசம் கொண்டு வில்லைத் துக்கிப் பார்த்தார்கள்: அது தந்த தொல்லையைக் கண்டு தோல்வியைத் தாங்கிய வராய் அவ்வேல் விழியாளை மறந்தனர். இம்முயற்சியைத் துறந்தனர். சீதையைத் தொடுதவதற்கு முன் இந்த வில்லின் நாணைத் தொட நேர்ந்தது. அதனால், பல்லை இழந் தவர் பலர். அந்த முல்லைக் கொடி யாளை அடைய முடியாமல் துயருற்றுத் திரும்பியவர் பலர்; சீதையின் கன்னிமைக்கு அந்த வில்லின் வல்லமை காப்பாக இருந்தது.

வில் முறிவு

சிவதனுசு சீதையைப் போலவே தக்க வீரனின் கை படாமல் காத்துக் கிடந்தது. வில்லை முறிக்கும் விழாவைக் காண நாட்டவர் வந்து குழுமினர். “புதியவன் ஒருவன் வருகை தந்திருக்கிறான்” என்ற செய்தி எங்கும் பரவியது. “இந்த முற்றிய வில்லால் கன்னியும் முதிர்ந்து போக வேண்டிய நிலை ஏற்படுமோ?” என்று பலரும் அஞ்சினர்.

‘இந்த வில்லை முறிப்பவர் முல்லைக் கொடியாளை மணக்கலாம்’ என்று முன்னுரை கூறினான் சனகன். வாய்ப்புக்காகக் காத்திருந்த வாலிபன் முனிவரைப் பார்த்தான்; அவர் இவனைப் பார்த்தார்; விழியால் குறிப்புக் காட்டி ‘அதை முறிக்க’ என அறிவிப்புச் செய்தார். அவன் வில்லை எடுக்கச் செல்பவனைப் போல அதை நோக்கி நடந்தான். “இந்த வில்லை இவன் எடுப்பானா; எடுத்தால் இதை முறிப்பானா?” என்று எதிர்பார்த்திருந்த, அவையோர் வைத்த விழி வாங்காமல் அவனையே பார்த்து இருந்தனர். “இவன் எப்படி எடுப்பான்?” எடுத்தால் வில் முறியுமா அவன் இடுப்பு முறியுமா” என்று பார்க்கக் காத்துக் கிடந்தனர். அவன் சென்ற வேகம், எடுத்த விரைவு, அதை முறித்த ஒசை எல்லாம் கண்மூடிக் கண் திறப்பதற்கு முன் தொடர் நிகழ்ச்சிகள் ஆயின. எடுத்தது கண்டவர் இற்றது கேட்டனர். ஒசைதான் முடிவை அவர்களுக்கு அறிவித்தது. அவன் வில்லை வளைத் ததையும், நாண் பூட்டியதையும், அவர்கள் காணவே இல்லை. முறிந்த ஒசையை மட்டும் கேட்டுச் செய்தி அறிந்தனர்.

அது வளைக்கும் போதே இரண்டாக முறிந்து விட்டது. அப்பேரொலி திக்கெட்டும் எட்டியது. சீதையின் செவிகளையும் எட்டியது. அவளுக்கு அது மனமுரசாக இரட்டியது. நீலமாலை என்னும் பெயருடைய பேரழகி அவள் தோழி சீதையிடம் செய்தி சொல்ல ஒடோடிச் சென்றாள்.

மக்கள் மகிழ்ச்சி

“கோமுனிவனுடன் வந்த கோமகன்; நீல நிறத்தவன்; தாமரைக்கண்ணன்; அவன்தான் அந்த வில்லை முறித்தான் என்று நீலமாலை சொல்ல அதைக் கேட்ட சானகி, அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்னும்படி ஆகியது.

தான் உப்பரிகையில் இருந்து கண்டவனே கொண்டவனாக வரப் போகிறான் என்பதில் அவள் கொண்ட மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகியது. அவள் பன்மடங்கு பொலிந்த முகத்தினன் ஆயினள்.

நாட்டு மக்கள் இராமன் நலம் கண்டு வியந்தனர்.

“நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்” என்று பாராட்டினர். “சீதையும் இராமனுக் கேற்ற துணைவி” என்று அவள் மாட்சிகளைப் பேசினர்.

இராமன் தம்பி இலக்குவனைக் கண்டு வியந்து பேசினர்; “தம்பியைப் பாருங்கள்” என்று சுட்டிக் காட்டினர்; அந்த நகருக்கு இவர்களை அழைத்து வந்த அருந்தவ முனிவராகிய விசுவாமித்திரருக்கு நன்றி நவின்றனர்.

திருமணம் உறுதி செய்யப்பட்டது. தசரதனுக்குச் செய்தி அறிவிக்கப்பட்டது. இராமன் வில்லை முறித்த வெற்றிச் செய்தியையும், அவன் வேல் விழியாளை மணக்க இருக்கும் மங்கலச் செய்தியையும் கேட்டுத் தசரதனே பெருமிதமும் மகிழ்ச்சியும் கொண்டான்; நாற்பெருஞ்சேனையும், அரும்பெரும் சுற்றமும், தம் அன்பு மனைவியரும், இராமன் பின்பிறந்த தம்பியரும் அறிவுடை அமைச்சர்களும், ஆன்றமைந்த சான்றோன் ஆகிய வசிட்டரும் புடைசூழ மிதிலை மாநகரை வந்து அடைந்தான்.

மன்னர் வீற்றிருந்த மணி மண்டபத்தில் மடமயிலை மகளாய்ப் பெற்ற மாமன்னன் சனகன் வந்து அமர்ந்தான்; கோல அழகியாகிய கோமகளை அழைத்துவரச் சேடியரை அனுப்பினான். மணக் கோலத்தில் வந்த மாணலம் மிக்க பேரழகி தந்தையின் அருகில் அமர்ந்து, அம் மண்டபத்திற்குப் பெருமை சேர்த்தாள்.

சீதையைப் பாராட்டினர்

பொன்னின் ஒளியும், பூவின் பொலிவும், தேனின் சுவையும், சந்தனத்தின் குளிர்ச்சியும், தென்றலின் மென்மையும், நிலவின் ஒளியும் ஒருங்கு பெற்ற அவள், அன்னநடையைத் தன் நடையில் காட்டினாள்; மின்னல் போல் ஒளி வீசி அவ் அரங்கினை அலங்கரித்தாள். அமுதம் போன்ற இனிமையையும் குமுதம் போன்ற இதழ்களை யும் உடைய அவ் ஆரணங்கு, அங்கிருந்தவர் கண்ணை யும் கருத்தையும் ஒருங்கு கவர்ந்தாள்.

மாடத்தில் இருந்து தான் கண்ட மாணிக்கத்தை மறுபடியும் காணும் வாய்ப்பைப் பெற அவள் விரும் பினாள். நேரில் காண அவள் நாணம் போரிட்டது; தலை நிமிர்த்திக் காண்பதைத் தவிர்த்துத் தன் கை வளையல் களைத் திருத்துவதுபோல அக் கார்வண்ணனைக் கடைக் கண்ணால் கண்டு அவன் அழகைப் பருகினாள்; மனம் உருகினாள் தன் உள்ளத்தை ஈர்த்த அத் தூயவனே அவன் என்பதை உணர்ந்தாள், “ஒவியத்தில் எழுத ஒண்ணாப் பேரழகு உடைய காவிய நாயகன் இராமன்தான் அவன்” என்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள். “நேர்மை தவறிய இடம் இது ஒன்றுதான் என்பதைஎண்ண” அவள் நாணம் அடைந்தாள். நாகரிகமாக அந்த நளினி நடந்து கொண்டதை அங்கிருந்த நங்கையர் பாராட்டினார்.

மணக்கோலத்தில் சீதையைக் கண்ட மாண்புமிக்க வசிட்டர், அங்கு சனகன் மகளைக் காணவில்லை; “திருமகள் தசரதன் மருமகள் ஆகிறாள்” என்பதை உணர்ந்தார். “தாமரை மலரில் உறையும் கமலச் செல்வியே அவள்” என்று அந்த முனிவர் பாராட்டினார்.

தசரதன் வரப்போகும் தன் மருமகளைக் கண்டதும் “அவள் தனக்குக் கிடைத்த வரப்பிரசாதம்” என்றே கருதினான். எத்தனையோ செல்வங்கள் பெற்றிருந்தும் அவை அவனுக்கு மன நிறைவைத் தர வில்லை; அவை செல்வமாகப் படவில்லை; அவளை மருமகளாக அடைந்ததையே அருந்தவம் என்று கருதினான்; “இதுவே திரு” என்று எண்ணினான். “திரு என்பதற்கு உரு” இது என்பதை அறிந்தான்.

அவைக் கண் வந்திருந்த நவையில் தவசிகளைச் சீதை முதற்கண் வணங்கினாள்; இராமனைப் பெற்ற பெரியோன் என்பதால் தசரதன் திருவடிகளைத் தொட்டு ஆசி பெற்றாள்; பின் தன் தந்தை சனகன் அருகில் வந்து, அவள் பக்கத்தில் இருந்தாள்; அங்குக் குழுமியிருந்த விழுமியோர் ஆகிய நகர மாந்தரும் நன்கலமாதரும் அவளைத் தெய்வம் என மதித்துப் போற்றினார்.

முனிவர் பாராட்டுரை

ஆசானாய் வந்த விசுவாமித்திரர், பொன்னொளிர் மகளைக் கண்டதும் பொலிவுபெற்ற மனத்தினர் ஆயினர். மேனகையைக் கண்டு அவள் அழகிற்குக் குழைந்து அவர் தம் தவத்தையே பரிசாகத் தந்தவர். மேனகையைக் கண்டது காதற்பார்வை; அழகு ரசனை அவரை விட வில்லை. “நச்சுடை வடிக்கண் மலர் நங்கை இவள் என்றால், இச் சிலை கிடக்கட்டும்; ஏழுமலையாயினும் இவளுக்காக இருக்கலாம்” என்று பாராட்டினார். “காதற் பெண் கடைப் பார்வையில் விண்ணையும் சாடலாம்” என்ற பாரதியின் வாசகம் இந்த மாமுனிவர் பேச்சில் வெளிப்பட்டது.

நாள் தள்ளிப்போட அவர்களால் முடியவில்லை. ‘அடுத்த நாளே மணநாள் என்று முடிவு செய்யப்பட்டது. இடையிட்ட அந்த ஒர் இரவும் காதலர் இருவர்களுக்கும் ஒருயுகமாகக் கழிந்தது. நாளும் கிழமையும் காட்டி, இளையவரைச் சேராதபடி தடுக்கும் முதியவர் செயலைச் சாடினர். மறுநாள் வருக்ைககாக எதிர்பார்த்து வாடினார்.

மண விழா

வசிட்டர் தலைமையில் திருமணம் நடந்தேறியது. மணத் தவிசில் மங்கை இள நங்கை சீதையும் அடல் ஏறுபோன்ற விடலையாகிய இராமனும் இருந்த காட்சியைக் கண்டவர் மனம் குளிர்ந்தது. தன் மகளை மருமகன் கையில் சனகன் ஒப்புவித்தான்; ஆசிகள் நல்கினான்.

“நீவிர் இருவீரும் வீரனும் வாளும் போலவும், கண்ணும் இமையும் போலவும், கரும்பும் சாறும் போலவும், பூவும் மணமும் போலவும், நிலவும் வானும் போலவும், அறிவும் அறமும் போலவும் இணைந்து வாழ்விராக” என வாழ்த்தினான். அவள் மெல்லிய கரங்களைப் பிடித்து இராமன் கைகளில் தந்து, சடங்கின்படி அவளை ஒப்புவித்தான். அவள் மலர்க் கரங்களைப் பற்றி இராமன் அன்றுமுதல் அவள் இன்னுயிர்த் துணைவன் ஆயினான்.

அந்தணர் ஆசி கூறினர்; சுமங்கலிகள் மங்கல வாழ்த்துப் பாடினர்; நகர மாந்தர் பூவும் அரிசியும் தூவி ஆசி கூறினர்; விண்ணவர் மலர்மாரி பொழிந்து மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்; சங்குகள் முழங்கின; முழவுகள் தழங்கின; பேரரசர் பொன்மழை பொழிந்தனர்; முத்தும் மணியும் எங்கும் இறைக்கப்பட்டன; கத்தும் குழலோசை காதிற் பட்டது; மணமிக்க மலர்கள் எங்கும் மணந்தன; புலவர்கள் பாக்கள் வாழ்த்துச் செய்திகளை யாத்து அளித்தன.

வேள்வித் தீயின்முன் செய்ய வேண்டிய சடங்குகளைச் செம்மையாய்ச் செய்தனர்; மணத் தவிசில் இருந்து பின் எழுந்து அம்மேடையை வலம் வந்தனர்; அவள் அவனோடு ஒட்டிக் கொண்டு உறவாடிப் பின் தொடர்ந்தாள். அவள் மெல்லிய கரங்களைப் பற்றிக் கொண்டு அம் மேடையைச் சுற்றி வந்தான் இராமன்; அம்மி மிதித்து அருந்ததியை அவளுக்குக் காட்ட, அவள் வணங்கினாள்; வேதங்கள் ஒலித்தன; கீதங்கள் வாழ்த்தொலி பெருக்கின; பேதங்கள் நீங்கி இருவர் மனமும் ஒன்று பட்டன.

வாழ்த்துப் பெற்றனர்

மணம் முடித்துக் கொண்ட அவர்கள், பெரியோர்களை வணங்கி வாழ்த்துரைகள் பெற்றனர்; முதற்கண் கேகயன் மக. கைகேயியை வணங்கினர்; பெற்ற தாயைவிடப் பாசம்மிக்க தாய் அவள் ஆதலின், அவளுக்கு முதன்மை தந்தான் இராமன்; அடுத்துப் பெற்ற தாய் கோசலையையும், தான் மதித்துப் போற்றிய சிற்றன்னையாகிய சுமத்திரையை யும் வணங்கினான். மாமியர் மூவரும் மருமகளை மனமார வாழ்த்தினர். அவள் பேரழகும் பெரு வனப்பும் அவர்களைப் பெரிதும் கவர்ந்தன. அவள் மாமியர் மெச்சும் மருமகள் ஆயினள், “வீட்டுக்கு வந்த திருமகள்” எனப் பாராட்டிப் பேசினார். “இராமன் கண்டெடுத்த அரிய அணிகலன் அவள்” என ஆராதித்தனர்.

தம்பியருக்கு மணம்

இராமன் தானே தேடி அவளைக் கண்டான்; மனம் ஒத்த காதல் அவர்களைப் பிணைத்தது; “அவன் தேர்வு மெச்சத்தக்கது” என உச்சியில் வைத்துப் புகழ்ந்தனர்; “இவளைத் தவிர இராமனுக்கு வேறு யாரும் மனைவியாக முடியாது” என்று அவள் தகுதியை மிகுதிப்படுத்திப் பேசினர்; “'செல்வமும் சிறப்பும் பெற்று நீடித்து வாழ்க” எனக் கோடித்து வாழ்த்தினர்.

சீதை மண்ணில் கிடைத்த மாணிக்கம்; பூமகள் தந்த புனை கோதை, அவள் சனகன் வளர்ப்பு மகள். மற்றொருத்தி பிறப்பு மகளாக அவளுக்கு வாய்த்தாள்; அவள் பெயர் ‘ஊர்மிளை’ என்பது; இலக்குவனை அவள் தன் இலக்காகக் கொண்டாள். சனகன் தம்பி மகளிர் இருவரை முறையே பரதனுக்கும் அவன் தம்பி சத்துருக் கனனுக்கும் மணம் முடித்தனர்.

மிதிலையில் பெண்தேடு படலமும், மணம் முடிக்கும் படலமும் முடிந்தன. இவற்றைப் பெரியவர்கள் முன்னிட்டுப் பின்னிட்டதால் கவிதைகளும் காவியங்களும் விவரித்துப் பேசவில்லை; சாதாரண நிகழ்ச்சிகளாய் நடந்து முடிந்தன; ஆரவாரம் இன்றி, அமைதியாய் நிகழ்ந்தன. பெண் எடுத்த இடம் ஒரே இடமாய் இருந்ததால் அதனையே மடம் ஆகக் கொண்டு சனகன் விருந்தினராய்த் தங்கினர்; உணவும் களியாட்டமும் கொண்டனர். மன்னர் தம் சுற்றமும் படைகளின் ஆட்களும் உண்டாட்டுப் படலத்தில் உறங்கி மகிழ்ந்தனர்.

நாட்கள் சில நகர்ந்தன; வந்தவர் அனைவரும் தத்தம் நாடு நோக்கித் திரும்பினர். மிதிலை மகளின் மதிலைக் கடப்பதற்குத் துணையாக இருந்த தவ முனிவர் விசுவாமித்திரரும் தம் கடமை முடிந்துவிட்டது என்று கூறி விடை பெற்று நடைகட்டினார், வடபுலத்து இருந்த இமயம் நோக்கி; இமயமலைச் சாரல் அவர் தங்கித் தவம் செய்யும் தவப் பள்ளியாயிற்று. எல்லாம் இனிமையாய் முடிந்தன.

பரசுராமர் வருகை

பண்புமிக்க பாரத நாட்டில் துன்பம் இழைக்கும் சாதிப் பிரிவுகள் இல்லாமல் இல்லை. அந்தணர் ஞானத்திலும், வேத சாத்திரம் கற்பதிலும் விற்பன்னராய்த் திகழ்ந்தனர். நூல்கள் பல கற்றதோடு நுண்ணறிவு மிக்கவராக இவர்கள் விளங்கினர். தவசிகள் என்போர் பெரும்பாலும் அந்தணரே. இவர்கள் ஞானத் தலைவர்களாய் மதிக்கப்பட்டனர்.

அரசர்கள் நாட்டு ஆட்சித் தலைவர்களாய் இருந்தனர்; இவர்களைச் சத்திரியர் என்றனர். இவர்கள் போர் செய்து, பகைவர் தொல்லைகளிலிருந்து நாட்டு எல்லைகளைக் காத்தனர். அமைதியான வாழ்வுக்கு அரணாய் விளங்கினர். வலிமை மிக்கவர்களாய் விளங்கியதால் இவர்களை மக்கள், தலைவர்களாய் ஏற்றுக் கொண்டனர். தவசிகளை ஞானத்தலைவர் என மதித்தனர். அவர்களுள்ளும் ஒரு சிலர் மாவீரர்களாய்த் திகழ்ந்தனர். அவர்களுள் ஒருவன் பரசுராமன் என்பவன்.

அவன் சமதக்கனி முனிவர் மகன்; அம் முனிவரைக் காத்த வீரியார்ச்சுனன் என்ற அரசன் கொன்றுவிட்டான். தந்தையைக் கொன்றவனைப் பழிவாங்க, அந்த அரசனை மட்டும் அன்றி அவன் வாரிசுகளையும் தீர்த்துக் கட்டினான் பரசுராமன். மன்னரே அவனுக்கு நேர் எதிரிகனாய் மாறினர். தனிப்பட்ட பகை, சாதிப் பகையாய் உருக் கொண்டது. இருபத்தொரு தலைமுறைகளாய் அவன் மன்னன் இளைஞர்களைக்களை அறுத்து வந்தான்; அவர்கள் சிந்தும் குருதியைக் குளமாக்கி, அதில் நீராடித் தந்தைக்கு ஈமக்கடன் செய்து, அவருக்கு ஏம நெறி வகுத்துத் தந்தான்; ஒருவாறு சினம் அடங்கித் தவத்தில் கருத்தைச் செலுத்தினான்; வல்லவனுக்கு வல்லவன் தோன்றாமல் இருப்பது இல்லை.

தேவர் திருமாலுக்கும் சிவனுக்கும் பகையை மூட்டி விட்டு, யார் பெரியவர்? என்று குரல் எழுப்பினர். ஆரம்பத்தில் புகழ்மொழிக்குச் செவி சாய்த்துத் தம் நிலை மறந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். “இவர்கள் வில்களில் எது ஆற்றல் உடையது?” என்று வினா எழுப்பினர். தங்களைத் துண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்” என்பதை அறிந்து கொண்டு அவர்கள் தம் கேளிக்கையை நிறுத்திக் கொண்டனர். போரைத் தவிர்த்து அமைதி காட்டினர்.

சிவதனுசு கைமாறி இறுதியில் சனகன் வசம் வந்து சேர்ந்தது; மாலின் வில் சமதக்கினி முனிவரிடம் ஒப்புவிக்கப்பட்டது; பின்பு அவர் மகன் பரசுராமன் அதற்கு வாரிசு ஆயினான். மாலின் வில் தன்னிடம் இருப்பதால் அவன் தருக்கித் திரிந்தான்.

பரசுராமன் பல மன்னர்களைப் புறமுதுகிடச் செய்தவன்; மூத்தவன்; தவத்தில் தலை சிறந்தவன்; ஆணவம் மிக்கவன்; அவன் பெயரைச் சொன்னாலே அரசர் நடுங்கினர்; அவன் முன் வராமல் ஒடுங்கினர். இராமன் வில்லை முறித்த ஒலி விண்வரை எங்கும் அதிர்ந்து சென்றது. இப்பேரொலியைக் கேட்டுப் பரசுராமன் கிளர்ந்து எழுந்தான்; சிவதனுசினை, முறித்து இராமன் அங்கு இருப்பதை உணர்ந்தான்; ‘அவனை வழியில் மடக்கி இடக்கு செய்வது, என்று முடிவுக்கு வந்தான். மணம் முடித்து அயோத்தி திரும்பும் வழியில் அவனை நிறுத்தித் தன்னோடு போருக்கு அழைப்பது என்று முடிவெடுத்தான்.

மழுப்படை ஏந்திய இராமன் பரசுராமன்; விற்படை ஏந்தியவன் கோதண்டராமன்; படைக் கருவிகளால் இவர்கள் வேறுபடுத்தி உணரப்பட்டனர். இராமன் அயோத்தி திரும்பினான். சுற்றமும் படைகளும் சூழத் தேர் ஏறி வந்து கொண்டிருந்தான், மழுப் படை ஏந்திய இராமன் வழிபறிக் கொள்ளையன் போல் குறுக்கே வந்து நின்றான்.

“இவன் யார்? ஏன் இங்கு வந்தான்?” என்பது இராமனுக்கு விளங்கவில்லை. தசரதன் முதியோன் ஆதலின், அவன் சரிதம் அறிந்தவனாய் இருந்தான். அவன் கூடித்திரியர் பகைவன்; அவர்களை வேர் அறுத்துப் போர் செய்தவன் என்பதை அறிந்தன். “அடப்பாவி! நீயா?” என்று குரல் கொடுத்து அலறிவிட்டான்; அவன்முன் தான் நிற்க முடியாது என்பதால் அலறி விழுந்தான்; நாப்புலர உயிர்ப்பிச்சை கேட்டான்.

இந்தக் கிழவனைப் பரசுராமன் ஒர் எதிரியாக ஏற்கவில்லை; மறுபடியும் சாதிவெறி அவனைத் தலைக் கொள்ளவில்லை. மதவெறி அவனை மடுத்தது; சிவதனுசா? மாலின் வில்லா? எது உய்ர்ந்தது? என்பது தலைக் கொண்டது; அற்பச் சிறுவன் சொற்பவில்லை சொகுசாக வளைத்துவிட்டான். மாலின் வில்லைக் கண்டு அவன் மலைவது உறுதி” என்று நம்பினான்.

தசரதனுக்குப் பரசுராமனை எதிர்க்கத் துணிவு இல்லை. எங்கே தன் மகனைப் பகையாக்கித் தம் வாழ்வை நகையாக்கி விடுவானோ? என்று திகைத் தான்; செயல் மறந்து நினைவு இழந்து மயக்கமுற்றுத் தரையில் விழுந்து விட்டான். இராமனைச் சந்தித்துப் பரசுராமன் தன் கை வில்லைக் காட்டி, இதை வளைப்பது இருக்கட்டும்; முறிப்பது கிடக்கட்டும், எடுத்துத் துக்க முடியுமா?” என்று கூறி அவன் வீரத்தைத் துண்டி ஊக்குவித்தான்.

“துக்கவும் முடியும்; அதைக் கொண்டு தாக்கவும் முடியும்” என்றான் இராமன்.

“முதலில் இதனைத் தூக்கி வளை” என்று அந்த இளைஞனை அழைத்தான் பரசுராமன்.

இராமன் அந்த வில்லைத் தன்கையில் வாங்கி, வளைத்துக் காட்டி, அதன் நாணையும் ஏற்றி, அம்பும் குறி வைத்தான்.

“இதற்கு இலக்கு யாது?” என்று கேட்டான்.

“வல்லவன் என்று செருக்கித் திரிந்த புல்லன் யான்; என்னை இலக்கு ஆக்குக” என்றான் பரசுராமன்.

“பகையற்ற உன்மீது மிகை அற்ற நான், அம்பு ஏவமாட்டேன்” என்றான் இராமன்.

“வம்புக்கு இழுத்தேன்; அதற்குரிய விலை தந்துதான் ஆகவேண்டும்” என்றான் பரசுராமன்.

அவன் விட்ட அம்பு அவன் ஈட்டிய தவத்தை வாரிக் கொண்டு இராமனிடம் சேர்ந்தது. முனிவன் தன் தவமும் வல்லமையும் இழந்து, அடங்கிச் சினமும் ஆணவமும் நீங்கித் திருந்தி அமைந்தான்.

பரசுராமன் அரசுராமனிடம் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு கால் சென்றவழித் தவம் செய்ய இமயமலைச் சாரலை நோக்கிச் சென்றான். இராமன் எனறால் கோதண்டராமன்தான் எனறு உலகம் பேசும்படி அவன் புகழ் பன்மடங்காகியது.

தவமுனரிவனிடம் வென்று பெற்ற வில் அப்பொழுது தேவைப்படவில்லை; அதனை வருணனி டம் தந்து பாதுகாப்பாக வைத்திருக்கும்படி இராமன் ஆணையிட்டான் அது பிற்காலத்தில் கரனோடு போர் செய்யும்போது பயன்பட்டது; அவன் சிரம் நீக்க இந்த வில்லைக் கேட்டுப் பெற்றான்; தக்க சமயத்தில் உதவியது; பரசுராமனிடம் பெற்ற பரிசு இந்த வகையில் அவனுக்குப் பயன்பட்டது. பரசுராமன் வடக்கு நோக்கி விடை பெற்றதும் அடக்கமாகத் தந்தையை அணுகித் தன் வெற்றியை விளம்பினான் இராமன். அச்சம் நீங்கித் தசரதன், நல்லுணர்வு பெற்றுக் களிப்பு என்னும் கடலுள் ஆழ்ந்தான். தீமை விலகிற்று என்பது ஒன்று; இராமன் வெற்றி பெற்றான் என்ற சிறப்பு மற்றொன்று.

துயரமும் அபூர்வும் நீங்கி அனைவரும் இனிமை யாய் அயோத்தி அடைந்தனர். மாற்றம் அல்லது ஏற்றம் ஏதுவும் இல்லாமல் தசரதன் வாழ்க்கை சென்றது. மணம் செய்து கொண்டு வந்த பரதனை அவன் பாட்டனார் அழைத்து, விருந்து வைப்பதற்கு அழைப்பு அனுப்பினார். கேகய மன்னன்விடுத்த செய்தியை இராமனின் அடுத்த தம்பியாகிய பரதனிடம் தசரதன் எடுத்துக் கூறினான்; “நீ சில நாள் சென்று தங்கிவருக” என்று சொல்லி அனுப்பனான்.

பரதனும் தசரதனிடம் விடை பெற்றுக்கொண்டு இராமனை வணங்கிப் பிரிய மனமில்லாமல் அரிதிற் பிரிந்தான். இராமனை அவன், தன் உயிரையும்விட மிக்கு நேசித்தவன் ஆதலின், பிரிவிற்கு மிகவும் வருந்தினான். செல்லும் இடம் அவனுக்குத் தேனிலவாக இல்லை; நிலவு இல்லாதவானாக இருந்தது.

இவனை அழைத்துச் செல்லத் தாய் மாமன் உதயசித்து வந்திருந்தான். அவன் ஒட்டிய தேரில் கேகய நாட்டை நோக்கிச் சென்றான். அவனோடு இளயவனான சத்துருக்கனனும் சென்றான். நாள்கள் ஏழு அவன் ஊர் செல்வதற்கு இடையிட்டன. ஏழாம் நாள் அவர்கள், தம் தாய் பிறந்த நாட்டை அடைந்தனர். தசரதனும் ஆட்சிப் பீடத்தில் தொடர்ந்து அமர்ந்து மக்களுக்குக் காட்சி தந்து தனக்கு உரிய கடமைகளைச் செம்மையாய் ஆற்றிக் கொணடிருந்தான். புயலுக்கு முன் அமைதி, அது அவன் மன நிறைவுக்குத் துணை செய்தது. எதுவுமே நிலைப்பது இல்லை; மாற்றங்கள் வரக் காத்துக் கொண்டிருந்தன.

அயோத்தியா காண்டம்

திருப்புமுனை

இராமனுடைய மணக்கோலத்தைக் கண்டு மகிழ்ந்த தசரதன், அவனை ஆட்சியில் அமர்த்தி, மணி முடிதரித்த அரசு கோலத்தில் காண விழைந்தான். அதற்குக் காரணம் என்ன? இராமன் தக்க பருவத்தை அடைந்தான். என்பது அன்று; தசரதன் முதுமையின் நுழைவாயிலில் கால் அடி எடுத்து வைத்தான் என்பதுதான். தன் தோள் சுமையை மாற்று ஆள்மீது ஏற்ற நினைத்தான்.

நரைமுடி ஒன்று அவனுக்குத் தன் முதுமையை அறிவித்தது; தான் இனி வாழ்க்கையில் கரை ஏற வேண்டும் என்று நினைத்தான். நிலைக் கண்ணாடி முன் புதிய நினைவு தோன்றிது. பெருநிலக் காவலனின் கறுத்து இருந்த மயிர்முடி ஒன்று வாழ்க்கையை வெறுத்து வெளுத்துக் காட்டியது; அவன் செவியில் வந்து மோதியது; அவன் மூப்பைப் பற்றி ஒதியது.

“ உனக்கு வயது ஆகிவிட்டது; இனி வாய்ப்புத் தர முடியாது; ஆட்சியை மாற்று; காளைப் பருவத்து ஆளை உன் மகனாய்ப் பெற்றிருக்கிறாய்; நாளையே அவனுக்கு மணிமுடி சூட்டு; நீ காட்டுக்கு நடந்து காட்டு; இம்மைக்கு வேண்டுவன தேடிக் கொண்டாய்; மறுமை வெறுமை யாய்க் கிடக்கிறது. தவம் செய்க; வாழ்நாளை அவம் ஆக்காதே; இளமைக்கு அழகு இன்புற்று இருத்தல்; முதுமைக்கு ஆக்கம் அறிவு மிக்க நோக்கம்; இங்கே இருந்தால் ஏற்படும் தேக்கம்; அமையட்டும் தவத்தில் ஊக்கம்” என்று அறிவுறுத்தியது.

“காடு வா வா என்கிறது; வீடு போபோ என்கிறது” என்னும் நிலையைத் தசரதன் அடைந்தான். அறிவுடை அமைச்சர் இருந்தனர்; செறிவு மிக்க வேள்வியர் இருந்தனர்; அவர்கள் எடுத்து உரைக்காத அறிவுரையை ஒரு மயிர்முடி தோற்றுவித்தது. அது வரலாற்றுத் திருப் பத்துக்குத் துணை செய்தது; “மாட்சிமிக்க இராவணன் வீழ்ச்சி அடைதற்கு உரிய காலம் வந்துவிட்டது” என்று அறிவிக்கும் முன்னறிவிப்புக் காட்சியாக இது விளங்கியது. அவன் ஆற்றிய தீவினைகள் இந் நரை முடி வடிவத்தில் வெளுத்து வந்து, அவனைக் கொல்லுமாறு செயல்பட்டது.

தசரதன் மனமாற்றம்

தசரதன் அமைச்சர் அவையைக் கூட்டினான்; வசிட்டரை அழைப்பித்தான்; ஆன்று அவிந்து அடங்கிய சான்றோரை அழைத்தான்; அரசியல் சட்டம் அறிந்தவர் அமைச்சர், சாத்திர சம்பிரதாயங்கள் அறிந்தவர் குலகுரு வசிட்டர்.

எந்த முடிவையும் தானே துணிந்து எடுக்கத் தசரதன் விரும்பவில்லை; வீட்டுப் பிரச்சனையாக இருந்தால் தம் மனைவியரைக் கேட்டுச் செய்யலாம்; இதனால், ஏற்படுகின்ற பாதிப்பு நாட்டு மக்களைச் சாரும்; அதனால், அமைச்சர் அவை கூட்டி ஆலோசனை நடத்தினான்.

தசரதன் அமைச்சர் எத்தகையவர்? வள்ளுவர் காட்டும் அமைச்சியல் நன்கு அறிந்தவர்; அரசியல் நுட்பம் உணர்ந்தவர்; விலை கொடுத்து வாங்க முடியாத மனநிலை பெற்றவர்கள்.

அமைச்சர் இயல்புகள்

தசரதன் அமைச்சர் குலத் தொன்மையும், கலைச் செல்வமும், கேள்வி ஞானமும், நடு நிலைமையும் உடையவராய் விளங்கினார். குலத் தொன்மை என்பது அக் காலத்தில் எதிர்பார்க்கப்பட்டது. காலம், இடம், கருவி இம் மூன்றையும் நூல் வழியும் ஒற்றர் வழியும் ஆராய்ந்து, தெய்வ அருளையும் நம்பிச் செயலாற்றினர். அரசன் சினத்துக்கு அடங்கித் தாம் சொல்ல நினைப்பதைச் சொல்லாமல் இருக்க மாட்டார்கள்; அறவழிகளினின்று என்றும் பிழை செய்ய நினைக்கமாட்டார்கள். இடித்து உரைக்கும் துணைவர் இல்லாத ஆட்சி, வீழ்ச்சியுறும் என்பதை அறிந்தவராய்ப் படித்து உரைப்பர். உறுதிகளைக் கேளாத அர னதனக்கு இறுதிகளைத் தேடிக் கொள்வான். அதனால், அவனுக்கும் நாட்டுக்கும் விளையும் நன்மை தீமைகளை ஆராய்ந்து நல்லது எது என்று முடிவு செய்யும் இயல்பினர். அவர்கள் மருத்துவர்போல் தக்க அறிவுரைகள் தரும் செருக்கினை உடையவர்; கசக்கும் என்பதால் அவன் இசையான் என்று நினைத்து அடங்கி இருக்க மாட்டார்கள். மனதில் பட்டதை மட்டும் கூறாமல் நன்கு ஆராய்ந்து காரண காரியங்களைக் காட்டித் தம் முடிவுகளுக்குச் சான்றுகள் தருவர். முன்னோர் காட்டிய வழி இது என்று அறிந்து, அதனால் ஏற்பட்ட ஆக்கமும் கேடும் கண்டு உரைப்பர்; பழம்பொருள் ஆராய்ச்சி செய்து அதனை நிலை நாட்டக் கருதாமல் வருபொருள் இது என்று முன்கூட்டி அறிவிப்பர். அரசுக்கு இவர்கள் தூண்களாக நின்று செயல்பட்டனர்.

புறத்தாக்கு எதுவும் நிகழவில்லை; அகநோக்கு எதுவும் அவன் அறிவிக்கவில்லை; கூட்டிய சூழ்நிலை ஏதும் அறியாத அவர்கள், அவன் வாய் திறந்து மொழி வதைக் கேட்க ஆவல் நிரம்பியவராய் அமர்ந்திருந்தனர்.

தசரதன் தன் மனநிலையை எடுத்து உரைத்தான்; அவர்கள் செவிமடுத்தனர்.

“சொல்வது புதுமை; அதனால், அது அதிர்ச்சியைத் தரலாம்; என்றாலும், அறிவு முதிர்ச்சி உடையவர் தக்கது என்று இதனை ஏற்றுக் கொள்வர். இதுவரை என் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தீர்; இனி என் தவமாட்சிக்குத் தடையாக நிற்க மாட்டீர் என்று நினைக்கிறேன்.”

“என் மகன் இராமன் ஆட்சி ஏற்க, நீங்கள் தக்க துணைவர்களாக இருக்க வேண்டும்; வழி நடத்தித் தரவேண்டும்” என்றான்.

அமைச்சர் தந்த மாற்றம்

வாமனனாக வந்தவன் மூன்றடி மண் கேட்டான். இதை மாவலி எதிர்பார்க்கவில்லை; மாமன்னனாகிய தசரதன் மண் வேண்டாம்; விண் வேண்டும் என்று புதிய வரத்தைக் கேட்கிறான். இது புதுமையாய் இருக்கிறது.

ஆட்சியின் சுகத்தை நுகர்ந்தவன் அவன்; அதை விட்டுக் கொடுக்கிறான் என்றால், அது புதுயுகமாகத் தான் இருக்கும். நாட்டிலே மறுமலர்ச்சி உண்டாவது கேட்டு மகிழ்ச்சி அடைந்தனர். அதே சமயத்தில் அவர்கள் பழகி வந்த பழையோன், தன் கிழமையை விடுகிறான் என்றால் அவர்களால் வருந்தாமல் இருக்க முடியவில்லை; பாசம் அவர்களை இழுத்தது.

மூத்த கன்று விலகினால்தான் இளைய கன்றுக் குட்டிக்குத் தாய்பசு பால் தரமுடியும். அந்தத் தாய்ப் பசுவின் மனநிலையை அந்த அமைச்சர் பெற்றனர்.

‘அரசன் தம்மை விட்டு விலகுகிறான்’ என்பதால் வருத்தம்; இராமன் தம்மை வந்து அணுகுவதால் மகிழ்ச்சி; இந்த இரு உணர்வுகளுக்கு இடையில் அவர்கள் தள்ளப்பட்டுத் தத்தளித்தனர்.

“பாசம் எங்களைப் பிரிகிறது; இராமன்பால் நேசம் எங்களை அழைக்கிறது. எதற்கு நாங்கள் சாய்வது என்று தெரியாமல் வேகிறோம்” என்றனர். வருவது முறையா? என்று உம்மைக் கேட்கவில்லை.

நான் போவது சரியா இராமன் அந்த முடிவை நான் ஏற்கனவே எடுத்துவிட்டேன். ‘இரு’ என்று சொன்னாலும் நான் இனி இந்த ஆட்சியை விரும்பிச் சுமக்கப் போவது இல்லை”

“நீங்கள் இனிச் சொல்ல வேண்டுவது இராமனுக்கு ஆளும் தகுதி உளதா? என்பதை மட்டும் கூறினால் போதும்; உள்ளத்தில்படும் மதிப்புகளைக் கள்ளத்தால் மறைக்காமல் வெள்ளத்துக் கவிப்பெருக்குப்போலத் தடையின்றிச் சொல்ல வேண்டுகிறேன்” என்றான்.

“நீங்கள் மாற்றத்தை ஏற்கிறீர்களா? இல்லையா? என்பது கேள்வி அன்று; இராமன் ஏற்றத்தை மட்டும் கூறி, அவனை ஏற்க இசைவு தருகிறீர்களா இல்லையா என்பதை இயம்புக” என்றான்.

“நாட்டு மக்கள் அவனை விரும்புகின்றனர்; அதனால் ஆட்சி ஏற்பதற்கு அவனுக்குத் தகுதி உள்ளது” என்று சுருக்கமாகவும் தெளிவுபடவும் அமைச்சர் உரைத்தனர்.

“அமைச்சர் ஏற்கிறார்களா? அரசன் விரும்பு கிறானா என்பன அடிப்படை அல்ல; மக்கள் விருப்பம் தான் முடிவுக்கு உதவுவது” என்று கூறிய அரசியல் கருத்துப் போற்றுவதாய் இருந்தது.

வசிட்டர் கருத்து

வசிட்டரை அணுகி அவர் கருத்து யாது? எனத் தசரதன் கேட்டான்.

“அமைச்சர் ஆமோதித்து விட்டனர்; நீயும் இதை விரும்புகிறாய்; மக்களும் இதை வரவேற்பர்; இராமனுக்கும் தகுதிஉள்ளது” என்று வசிட்டர் கூறினார்; மேலும், தொடர்ந்து இராமனைப் பற்றிய தம் கருத்துகளை விரித்து உரைத்தார்.

“இராமன் யாரோ எவரோ என்று கூறும் நிலையில் இல்லை; மாமன்னன் மகன்; அதனால் ஆட்சி உரிமைக்கு அவன் தகுதி உள்ளவன்”.

“அடுத்து அவன் மனைவி சீதைபால் பட்டத்து அரசி ஆவதற்கு வேண்டிய நல்லியல்புகள் அனைத்தும் உள்ளன; அவள் மக்களுக்கும் நற்பணிகளுக்கும் நடு நின்று தடையாய் இருக்க மாட்டாள்”.

“நாட்டு மக்கள் அவனே தலைவனாய் வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்; அவன் நல்லாட்சியில் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்; அவனும் அவர்களை மிகவும் நேசிக்கின்றான்”.

“நீ எடுத்த முடிவு இந்த நாட்டுக்கு நல்ல விடிவே யாகும்” என்று கூறினான்.

சுமந்திரன் இடையீடு

தேர் ஒட்டியாகிய சுமந்திரன் நா அடக்கம் இன்றி, நிலை கொள்ளாமல் தன் மனத்தில் பட்டதை உரைத்தான்.

“நீங்கள் ஆட்சியைத் துறப்பது தக்கதாகப்பட வில்லை; என் செய்வது? பழையன கழிகின்றன; புதியன புகுகின்றன. இது உலக இயலின் மாற்றம்; இதை யாரும் தடுக்க முடியாது.

“தோளுக்கு வந்துவிட்டவன் இராமன்; அரசு சுமை தாங்கும் ஆற்றல் அவனிடம் உள்ளது.”

“நேற்று எப்படியோ அப்படித்தான் இன்றும்; இன்று எப்படியோ அதுதான் நாளையும்; உங்களைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் இல்லை. உலகம் மாற்றம் விரும்புகிறது. அதனால் அவன் ஆட்சிக்கு வருவது மாட்சிமை உடையது. எனினும், உம்மை இழக்கின்றோம்; அது எமக்கு அதிர்ச்சியைத் தருகிறது” என்று இரங்கற்பா பாடினான்.

தேர் ஒட்டி தன் நிலை மறந்து பேசுவதை தசரதன் விரும்பவில்லை; இராமனை அழைத்து வரச் சொன்னான்.

“அப்பம் எண்ணச் சொன்னேனே தவிர அதில் எத்தனை குழிகள் உள்ளன என்று உன்னைக் கேட்கவில்லை”.

“கடமையைச் செய்; கதைகள் பேசிக் கொண்டு இங்கு உன் மடமையைக் காட்டாதே”.

“தேரைச் செலுத்து; இராமனை இங்கு அழைத்து வா” என்று ஆணையிட்டான்.

அதற்குமேல் அங்கே அவன் நிற்கவில்லை. காற்றிலும் கூடிய வேகத்தோடு காகுத்தன் அரண் மனையை அடைந்தான்.

மனையில் இராமன், தன் மனைவியோடு உரையாடிக் கொண்டிருந்தான்; மகிழ்வு நிரம்பிய சூழலில் அவன் தன் அகமுடையாளிடம் பேசிக் கொண்டிருந்தான்.

அவனிடம் என்ன சொல்வது? உண்மை சொல்வதா? மன்னன் உரைத்தை மட்டும் உரைப்பதா?

“ஆட்சி உனக்குத் தரத் தசரதன் அழைக்கின்றான் என்று கூறவில்லை. அப்படிக் கூறினால் அது மிகைப்படக் கூறுதல் ஆகும்; அதிர்ச்சியும் தருவது ஆகும். ஆசைகளைத் தூண்டிவிட்டால் அவை அணைக்க முடியாமல் போகும்; ‘செய்தி சொல்ல வந்தவன்’ என்ற தன் நிலையை மறக்காமல் செப்பினான்.

“'காவலன் உன்னைக் காண ஆவல் கொண்டுள்ளான்” என்றான். அவ்வளவுதான்; அவன் தன ஆருயிர்த் துணைவி யிடம் சொல்லிவிட்டுப் புறப்படவில்லை; ஆடை வேறு மாற்றிக் கொண்டு வருகிறேன் என்று உரை ஆற்றவில்லை; எதற்கு? ஏன்? என்ற வினாக்களைத் தொடுக்காமல் உடனே அவனோடு புறப்பட்டான்.

கரிய மேகம் சூழ்ந்ததுபோல நீல நிறத்தவன் ஆகிய அழகன் நேரில் ஏறிச் சொன்றான்.

இராமனைத் தழுவிக் கொள்ளுதல்

வந்தவனைத் தசரதன் தன் தோள்கள் ஆரத் தழுவிக் கொண்டான். அத்தழுவலில் புதிய பொருள் இருந்தது போலக் காணப்பட்டது. அத்தோள்கள் திண்மை உடையனவா? என்ற உண்மையைக் காண எடுத்துக் கொண்ட முயற்சி போல இருந்தது.

“நிலமகள் தன்னைச் சுமக்க வலிமை மிக்க தோள்களை நாடுகிறாள்; முதியவன் நான்; ஆட்சிச் சுமையால் தளர்ந்து வாடுகிறேன்; வளர்ந்துவிட்ட நீ வந்து முட்டுக் கொடுக்க வேண்டும்”.

“நொண்டிக் குதிரை எத்தனை நாளைக்கு வண்டியை இழுக்கும்; அது சண்டித்தனம் செய்வதற்கு முன் முண்டி அடித்து நீ வந்து குடை சாயாமல் தாங்க வேண்டும்.”

“மகனைப் பெறுவதற்கு எதற்காக? மலர்கள் பூக்கும் செடிகளை வளர்ப்பது போன்றது அன்று அது. மகனை மதலை என்பர் ஏன்? தாங்கும் சக்தி அவனுக்கு உண்டு என்பதால், ‘சுமை தாங்கி’ மகன் என்று கூறுவர்.

“மக்களைப் பெற்றவர் மகாராசர் என்கிறார்கள்; ஏன்? அவர்கள் ஆட்சியைத் தாங்க வந்து நிற்பதால்”

“பெற்றவர்க்குப் பெருங்கடமை செய்த பெருந்தகைகள் உன்முன்னோர், பகீரதன் கதை உனக்குத் தெரியாதா? செத்து மடிந்தவரின் சாம்பலுக்கு நித்திய பதவி தரக் கங்கையை வரவழைத்தான். அவன் அரிய முயற்சியை அகில உலகும் பாராட்டுகிறது.”

“செல்வம் என்றால் உலகப் பொருள்கள் அல்ல; அவை நிலையாது கைமாறும். மக்கட் செல்வம்தான் மதிப்பு மிக்க செல்வம்; அது மட்டும் அன்று; யார் பெருமகிழ்விற்கும் மதிப்பிற்கும் உடையவர் தெரியுமா?”

‘பதவியில் உயர்ந்தவன் இந்திரன்; சுகபோகங்களை அனுபவிப்பதில் அவன் தொடர்ந்து இன்பம் அடைகிறான்’ என்று கருதுகிறார்கள். ‘மோன நிலையில் இருந்து தவம் செய்யும் ஞானிகள் பேரின்ப நிலை அடைகிறார்கள்’ என்று பேசலாம். அது முழு உண்மையன்று, நன்மக்களைப் பெற்றவர்களே நானிலத்தில் நன்மதிப்புப் பெறுகின்றனர்”.

‘உன்னை நம்பி வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்; தோள்மேல் சுமந்து உன்னைத் துக்கி வைத்து மகிழ்ந்து இருக்கிறேன்; கல்வியும் படைப் பயிற்சியும் தந்து உன்னை மாவீரன் ஆக்கினேன்; சான்றோர் என்று உலகம் உன்னைப் புகழ்கிறது. நாட்டு மக்கள் நேசிக்கின்றனர்; சீதை கேள்வன் என்ற பெருமை உன்னைச் சார்கிறது. மணக்கோலத்தில் கண்ட நான் அரசு கோலத்தில் உன்னைக் காண விழைகின்றேன்.

“நான் காளைப் பருவத்தையும் கடக்கவில்லை; நாளை பார்த்துக் கொள்ளலாம், என்று நீ தள்ளிப் போட நினைக்கலாம். உன் சுதந்திரம் பறிபோகின்றது என்று நீ நினைக்கலாம்; சுமை மிக்க பொறுப்புகளை ஏற்பதால் சுவைமிக்க வாழ்வு நீ இழக்க நேரிடலாம் என்றும் என் வேண்டுகோளை மறுக்கலாம்; உன் விருப்பு வெறுப்பு களும் தடுக்கலாம்; நாடு உன்னை நாடுகிறது” என்றான்.

மன்னன் உரைத்த உரைகள் அவனுக்கு உவகையை ஊட்டவில்லை; அதே சமயத்தில் பொறுப்புச் சேர்கிறதே என்று சோர்வும் காட்டவில்லை. சுக துக்கங்களைச் சமமாகப் பார்க்கின்ற மனநிலை அவன் தகவாக இருந்தது; இடுக்கண் அது என்று அவன் நடுக்கம் கொள்ள வில்லை. வடுக்கள் மிக்கது என்று அதனை விடுவதாகவும் இல்லை.

பதவி என்பது பிறர்க்கு உதவி செய்வதற்கு அமையும் வாய்ப்பே தவிர, அதை வைத்துக் கோடிகள் குவித்துக் கேடுகளை வளர்ப்பதற்கு அன்று; அரச பதவி என்பது மக்களுக்குத் தொண்டு செய்யும் அரிய வாய்ப்பு; மாந்தர் வாழத் தலைமை ஏற்க ஒருவருக்கு ஏற்படும் நிலைமை; அரசன் என்பதால் உலகம் புகழ்மாலை சூட்டுகிறது; அதற்காக அவன் தலை சாய்க்கவில்லை; தந்தையிட்ட கடமை; அதைத் தள்ளக் கூடாது என்பதால் ஏற்க ஒப்புக் கொண்டான்.

முடிசூட்டு விழா முடிவு செய்யப்பட்டது. அவ் விழா நடத்துதற்குமுன் உலக மன்னர்க்கு ஒலை அனுப்பி அழைப்பு விடுத்தான். அவன் பெருநில மன்னன்; மற்றைய குறுநில மன்னர்களை அழைத்து அவர்தம் கருத்தைக் கேட்டான்.

“மகன் என்ற பாசத்தால் நான் மற்றைய நலன்களைக் கருதாமல் அவசரப்பட்டு எடுத்த முடிவாக இருக்கலாம்; அது தவறாகவும் அமையலாம்; உங்கள் கருத்தை அறிவித்தால் அது பொருத்தமாய் இருந்தால் இதை நிறுத்திக் கொள்ளக் காத்திருக்கின்றேன்” என்றான்.

அரசர் கருத்துரை

அவர்கள் இராமனைப் பற்றிக் கொண்டிருந்த கருத்துகளை வரிசைப்படுத்தி உரைத்தனர்.

“தானம், தருமம், ஒழுக்கம், ஞானம், நல்ல வரைப் போற்றும் நயம், தீயவரை ஒறுக்கும் தூய்மை, பகைவரை அழிக்கும் தகைமை இவை எல்லாம் இராமனிடம் நிரம்ப உள்ளன”.

ஊர்ப் பொதுக்கிணறு பலருக்கும் பயன்படு கின்றது; பயனுள்ள மரம் பழுத்தால் நயம் உள்ளதாகப் பலருக்குப் பழங்கள் தருகின்றன. வானத்து மழை பயிர்களைப் பசுமையாக்குகிறது. கழனிகளில் நதிப்புனல் பெருகிப் பாய்ந்து நாட்டை வளப்படுத்துகிறது. இவற்றை எல்லாம் யாராலும் தடுத்து நிறுத்த முடிவதில்லை. மக்கள் இராமனை எல்லா வகையிலும் நேசிக்கின்றனர். அவனும் அவர்களிடம் அன்பும், பரிவும் காட்டுகிறான். அதனால், அவனே தக்கவன்” என்று ஒருமித்த கருத்தை உரைத்தனர்.

தான் எடுத்த முடிவு ஏற்றம் உடையது என்பதால் தசரதன் மகிழ்வு கொண்டான். “இவன் என் மகன் என்பதைவிட உங்கள் ஏற்பு மகன் என்பதில் பெருமைப் படுகிறேன். இவன் உலகக் குடிமகன்” என்று கூறிப் பெருமிதம் கொண்டான். கோசலைக்கு அறிவித்தல்

நாள் குறிக்கக் கோள்கள் அறிந்த கணக்கரை அரசன் கூட்டினான். இச் செய்தி சூறைக்காற்று போல நகர் முழுவதும் பரவியது. இராமன்பால் அன்பு கொண்ட அணங்கு அனைய நங்கையர் கோசலை பால் தலை தெறிக்க ஓடினர்.

“மன்னன், உன்மகனுக்கு மணிமுடி சூட்டுகிறான்” என்று மனம் மகிழ்ந்து உரைத்தனர். தென்றலின் சுகத்தை அச்சொற்கள் தேடித் தந்தன. அதே சமயத்தில் வாடையின் சூடும் அவளைச் சுட்டது. வடவைக் கனல் அவளைத் தீண்டியது, தசரதன் ஆட்சியை விட்டு நீங்குகிறான் என்பதால்.

“ஈன்றபொழுதிற் பெரிதுஉவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்”

என்ற குறட்பாவுக்கு அவள் விளக்கமாக மாறினாள். தன் மகன் மூத்தவன்; அறிவு முதிர்ந்தவன்; பொறுப்பு ஏற்கத் தக்கவன் என்பதால் தேர்வு சரி எனப்பட்டது. இவற்றோடு நால்வருள் இராமனைப் பெற்றதால் அவள் பேருவகை அடைந்தாள். தனக்கு நெருக்கமான சுமத்திரையை அழைத்துக்கொண்டு நாரணன் கோயிலை நண்ணிப் பூசனைகளும் வழிபாடுகளும் செய்தாள்.

வசிட்டர் அறிவுரை

அடுத்த நாளே முடிசூடும் நாள்” எனக் கணித்து உரைத்தனர். தசரதன் வசிட்டரிடம் முடிசூட்டுதற்கு முன் இராமனைச் சந்தித்து நல்லுரைகள் நல்க வேண்டினார்.

ஆட்சிக்கு வரும் இளவரசனுக்கு நல மிக்க வாசகங்களை வடித்துத் தந்தார்; பட்டம் தாங்கும் விழாவுக்கு முன் பார்வேந்தன் அறிய வேண்டியவை இவை என எடுத்து ஒதினார்.

“நாட்டுக்குக் கேடு விளைவிப்பது உட்பகையும் வெளித்தாக்குதலும் ஆகும்; பகை இல்லாவிட்டால் போர் இல்லை; போர் இல்லை எனில் அழிவு இல்லை; அமைதி நிலவினால்தான் மக்கள் ஆக்கப் பணிகளில் ஊக்கம் காட்டுவர்; செல்வம் செழிக்கும்; அறங்கள் தழைக்கும்”.

“நாட்டு ஆட்சிக்குப் பொருள்வருவாய் தேவை; தேவைக்குமேல் மக்களிடமிருந்து வரித்தொகை பெறக் கூடாது. ஈட்டும் பொருளை நாட்டு வளர்ச்சிப் பணிகளுக்கே செலவிட வேண்டும்; சொந்த சுகங்களுக்கு அவற்றைப் பயன்படுத்தக் கூடாது”.

“நீதித் துறையில் அரசன் இரு தரப்பினரையும் விசாரித்து நடுவுநிலை பிறழாமல் நீதி வழங்க வேண்டும்; கொடியவரை ஒறுப்பது களைகளை நீக்குவதற்கு நிகர் ஆகும். அப்பொழுதே ஏனைய மக்கள் அச்சமின்றி வாழ முடியும்”.

“அரசன் மிக்க ஆற்றல் உடையவன் ஆயினும் போற்றத் தகு நல்லமைச்சரைக் கேட்டுச் செயல் ஆற்ற வேண்டும்; முதிர்வு உடைய அறிஞரைக் கலக்காமல் அதிர்வு தரும் செயல்களை மேற்கொள்ளக் கூடாது”.

“மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்; அவர்களை நல்வழி இயக்குவதற்கு மன்னன் வழி காட்டியாய் இருக்க வேண்டும். மன்னன் எவ் வழி மக்கள் அவ் வழி, அறவாழவும் அருள்நெஞ்சும் அவனுக்கு இன்றியமையாதன; இன்சொல், ஈகை, எண்ணிச் செயற்படும் திறன், முயற்சி, தூய்மை, விழுமியது நினைத்தல் இவற்றை மேற்கொள்ள வேண்டும்; நீதியும் நேர்மையும் உன்னிடம் இயல்பாக உள்ளன; அவற்றோடு பரிவும் பாடு அறிந்து ஒழுகும் பண்பும் இருத்தல் வேண்டும்”.

“நாட்டு மக்களை மதிக்க வேண்டும்; அற ஒழுக்கம் தவறாத அந்தணர், தவ ஒழுக்கத்தில் தலை சிறந்த முனிவர் இவர்களை மதித்து இவர்பால் பணிவு காட்ட வேண்டும்”.

“உழுவார் உலகத்துக்கு அச்சாணி போன்றவர்; அவர்கள் கை மடங்கிவிட்டால் தவசிகளும் பட்டினிதான். சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; சோம்பித் திரியாமல் சுருசுருப்பாய்த் தொழில் செய்யும் ஏனைய தொழிலாளிகள் இவர்களை மதித்து, இவர்கள் தேவை களைக் கேட்டுத் திட்டங்கள் இயற்றிச் செயல்படுத்த வேண்டும்”.

“சோம்பலையும் மறதியையும் விட்டு ஒழிக்க வேண்டும்” என்று வசிட்டர் ஒர் ஆத்திச்சூடியை அறிவித்தார்.

“மேலும், இளைஞர் தவறும் இடங்கள் சில உள்ளன. மங்கையரின் அழகு மயக்கம் தருவதாகும்; அவர்கள் அங்கைகளைத் தொட்டுவிட்டோம் என்பதால் அவர்கள் மயக்கிய அறிவுரைகளைக் கேட்டுப் பாதை தவறக் கூடாது. கட்டிய மனைவி ஆயினும் அவளிடம் ஒட்டிய உறவு கொண்டு விட்டதால், ஆட்சியில் அவள் தூண்டும் தவறான செயல்களைச் செய்யக் கூடாது”.

“ஆடல் அழகியர் கூடலில், நாட்டின கடமையை மறந்து ஆட்சிய்ை இழந்தவர் பலர். காமக் களியாட்டம் வேண்டி அமைச்சரிடம் ஆட்சியைத் தந்து ஒதுங்கி விட்டவர் நாமம் இல்லாமல் மறைந்தது உண்டு”.

“அரச வாழ்வு சுக போக வாழ்வு அன்று; மக்களைச் சுகப்பபடுத்த எடுத்துக் கொள்ளும் சூளுரை; விருப்பு வெறுப்புக் காட்டாமல் பொறுப்பாய் ஆட்சியை நடத்த வேண்டும். கண்ணோட்டம் கண்ணுக்கு அழகுதரும்; அது பெண் நாட்டத்தில் முடியக்கூடாது. கலைகளை வளர்ப்பது வேறு; அவற்றை விலை பேசுவது வேறு. புலவர், கலைஞர் இவர்களை மதித்துப் பாராட்டிப் பரிசுகள் தந்து கலைகளை ஊக்குவிக்க வேண்டும்”.

இராமன் ஏற்பு

இவ் அறிவுரைகளை ஒரு சடங்காகமட்டும் அல்லாமல் தேவைக்காகவும் அவர் இராமனுக்கு எடுத்துக் கூறினார். வசிட்டர் கூறிய அறிவுரைகளைச் செவிமடுத்துப் “புவியாள்வது பொறுப்புமிக்கது” என்று எடுத்துக் கொண்டான்; அன்னை கோசலை தெய்வத்தை வழி பட்டதுபோல இவனும் ‘உலகுக்கு எல்லாம் ஒருதலைவன் உளன்’ என்பதை உணர்த்துபவனாகித் தெய்வ வழிபாடு செய்தான்.

விழாவுக்கு முன்னால் புண்ணியப் புதுப்புனல் கொண்டு வந்து அப்புனிதனை நீராட்டினர். நன்மைகள் அவனை வந்து அடையச் சடங்குகளைச் செய்தனர். வெள்ளை நிறப் புல்லில் கள்ளமில்லாத கார்வண்ணனை அமர வைத்தனர்; அப்புல்லிற்குத் தருப்பை புல் எனப் பெயரிட்டனர்.

மணநாளுக்கு முந்தியதினம் வழக்கமாக இயற்றும் சடங்குகளைச் செய்தனர். ஒரே நாளில் விறுவிறுப்பான நிகழ்ச்சிகள் பரபரப்பாய் நடந்து முடிந்தன. அடுத்த நாள் நடக்க இருக்கும் முடிசூட்டும் விழாவைப் பற்றிய செய்திகள் இறக்கைகள் கொண்டு பறந்தன; நாடறியச் செய்தனர் அயோத்தி மாநகர் இந்திரன் பொன்னகர் எனப் பொலிவு பெற்றது. திக்கு எட்டும் செய்தி பரவியது; திசைகள் எட்டிலும் இருந்து மக்களும் மன்னரும் வந்து குழுமினர்; வள்ளுவன் என்னும் செய்தி பரப்புவோன் யானை மீது ஏறி ஊரறியச் செய்தான்.

“இராமன் நாளையே முடி சூடுகிறான்” என்ற செய்தியைப் பரப்பினான்; மக்கள் களிப்பில் மூழ்கினர். வாழை மரங்கள் இடம்பெயர்ந்தன, கமுக மரங்கள் அழகு செய்தன; முத்துமாலைகள் ஒளி வீசின, பொற்குடங்கள் பொலிவு ஊட்டின.

மந்தரை குறுக்கீடு

ஊரே உவகையுள் ஆழ்ந்தது; மலர்ந்த பூக்களைக் காண முடிந்ததே அன்றிக் குவிந்த மலர் ஒன்றுகூட இல்லை; ஒரே ஒரு ஜீவன் மட்டும் புழுக்கத்தால் மனம் அழுங்கிக் கொண்டது. அவள் முதுகு கூனிக் குறுகி இருந்தது. அந்த ஊனம் அவள் மனத்திலும் ஏற்பட்டது. “மணிமுடி” என்றதும் “யாருக்கு?” என்ற வினாவை எழுப்பினாள்.

“இராமனுக்கு; அவன் இந்நாட்டுக் கோமகன்!” என்றனர்.

உண்டை வில்லால் இராமன் சிறுவயதில் தன் முதுகைக் குறிபார்த்து அடித்த பண்டைய நிகழ்ச்சி ஒன்று அவள் நினைவிற்கு வந்தது. “ கிறுக்கனுக்கா இந்தத் தருக்கு மிக்க வாழ்க்கை?” என்று அழுக்காறு கொண்டாள்.

கேகயன் மகள் அவளுக்கு மிகவும் வேண்டியவள்; அவள் தோழிகளில் இவள் மிகவும் நெருங்கியவள்; மனம் சுருங்கிய இவள், அவள் மருங்கு சென்றாள். காய்ச்சிய பாலில் ஒரு புரைத்துளி கலந்தால் அது தயிராகிறது; இனிப்பு புளிப்பாக மாறுகிறது. ‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’ என்பது அவளுக்குத் தெரியும். பெண் மனம் என்பது என்ன என்பதை நன்கு அறிந்தவள். ‘மகனுக்காகக் கட்டிய கணவனை உருட்டிவிடுபவள் பெண்’ என்பதை அறிந்தவள்; கணவன் துணை; மகன் அவள் உயிர்; பாசம்; கணவன் இறந்த காலம்; மகன் எதிர்காலம். பழமையை நினைத்துத் தன் கிழமையை உதறித் தள்ளமாட்டாள். தாய்மை என்பது பெண்ணின் பெருமை; ஆனால் அதுவே அவள் வீழ்ச்சிக்குத் துணைமை என்பதையும் உணர்ந்தவள். ‘பாசம்’ என்பது நெஞ்சைப் பசையற்றதாக ஆக்க வல்லது” என்பதை அவள் அறிவாள்; பாரம்பரியப் பற்று வாரிசு நியமனம் மாமேதைகளுக்கும் வீழ்ச்சியைத் தரும் என்பதை அவள் அறிவாள். பிறந்த வீட்டுப் பாசத்தைத் தூண்டிவிட்டால் அது சுடர் விளக்காக எரியும்; அவள் மனம் திரியும்; கணவனை விட்டுப் பிரிக்கும் என்பது அவளுக்குத் தெரியும். கேகயன் மகளைவிட இவள் வயதில் மூத்தவள்; அதனால், முதிர்ந்த அறிவுடையவள்; அவள் உதிர்க்கும் சொற்களை அவள் தோழி விதிர்க்கமாட்டாள்; அவள் கூரிய அறிவு நிரம்பியவளாய் இருந்தாள். சூழ்ச்சித் திறன்மிக்கவளாயும் விளங்கினாள். “கருமத்தை முடிப்பதில் தருமம் எது”? என்று சிந்திக்கமாட்டாள்.

கள்ளம் புகுந்த உள்ளம்

வானத்து நிலா வையகத்தைக் குளிர்விக்கிறது. பாற்கடலில் இருக்கும் பவளக் கொடிபோலக் கேகேயி சயனித்து இருந்தாள். உறக்கம் அவளைக் கிறங்கச் செய்தது; எனினும், அவள் அருள் உள்ளம் கொண்டவள் என்பதை அவள் அமைதியான கண்கள் காட்டின. களங்கம் அற்ற அவள் முகம் பளிங்குபோல் ஒளிவிட்டது. தாமரை மலர் போன்ற அவள் சீறடியை அந்தப் பேரிடி போன்ற கரடி வந்து தீண்டியது; இராகு கேதுக்கள் தீண்டப் பெற்ற திங்களாய் மாறினாள் கைகேயி.

ஆழ்ந்த தூக்கத்திலும் தொட்டது யார்? என்பதனை அறியும் மெல்லிய உணர்வு அவள் பெற்றிருந்தாள்; வழக்கமாகத் தொடுவது; தன்னை வருடுவது தசரதன்; இது புதிய தொடுகை; எனினும், அவள் அறிவு விழித்துப் பேசியது. தெய்வக் கற்பினள் அதனால் அது தன் கணவன் கை அன்று என்பதை அறிந்து கொண்டாள்; கவலையற்ற மன நிலை. அதனால், தன் துக்கத்தைக் கலைத்துக்கொள்ள விரும்பவில்லை.

கூனி தட்டி எழுப்பினாள்; தரையைக் கொழித்தாள்; குரலை உரப்பினாள்; “நெருப்புப் பற்றிக் கொண்டு எரிகிறது; நீ பொறுப்பு இழந்து உறங்குகிறாய்” என்று பொருமினாள்.

“இராமனைப் பெற்ற எனக்கு இடர் உளதோ?” என்று வினவினாள் கைகேயி.

“அதனால்தான் உனக்குப் படர்கிறது வேதனை” என்று உரைத்தாள்.

“கோசலை உயர்ந்தாள்; நீ தாழ்ந்தாய்” என்று அறிவித்தாள்.

“இராமன் மகளிரின் எதிரி; அவன் சீர்மை தவறிய உதிரி; அவன் ஏற்றம் கண்டு இங்கு வந்து இருக்கிறேன் பதறி” என்றாள்.

“அவன் ஏற்றத்தால் ஏற்பட்ட மாற்றம் யாது?”

“அவன் பட்டத்துக்கு உரியவன் ஆகிறான்; அதனால், கோசலையின் திட்டம் செயல் பட்டுவிட்டது”.

பட்டுபட்டு என்று பேசிய பதற்றம் கண்டு அவள் வியந்தாள்.

“கோசலைக்கு அப்படி என்ன புதுவாழ்வு புகுந்து விட்டது? பரதனை அவள் வரதனாக ஏற்று இருக்கிறாள்; விரதம் மிக்கு உடையவள்; தசரதன் அவள் கணவன்; பட்டத்து முதல்வி; இவற்றைவிட அவளுக்கு உயர்வு வேறு என்ன தேவைப்படுகிறது?” என்று கேட்டாள்.

“நாளை இராமன் முடிசூடப் போகிறான்; நாளை வாழ்வு இது; கோசலை வாழ்கிறாள்; நீ தாழ்கிறாய்” என்றாள்.

“இவ்வளவு நல்ல செய்தி சொல்ல முன்னுரை ஏன்? முகவுரை தேவை இல்லை; பதவுரையும், விளக்கவுரையும், உன்னை யார் கேட்டது? இராமன் முடிசூடுகிறான் என்பதை முன்னமே கிளந்து இருக்கலாமே. என் உள்ளம் குளிர, நீ கூறிய உரை என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது; உனக்கு என்ன பரிசு தருவது? என்று தெரியாமல் தவித்துக் கிடக்கிறேன். இது என் முத்துமாலை; இதனை ஏற்றுக்கொள்; இந் நல்ல செய்தியை நீட்டித்துச் சொல்லியது ஏன்? தோழி! நீ எனக்கு நல்லவள்; இதைவிட நல்ல செய்தி நீ வேறு என்ன சொல்ல முடியும்? கூனிலும் இந்த முத்துமாலை உனக்குப் பொலிவு சேர்க்கும்; வானினும் மிக்க பெருமை இதனால் அடைவாய்” கூறி அதனை நீட்டினாள்.

வாங்கி அதைத் தரையில் கொழித்தாள்; அவளைப் பழித்தாள்; சிவக்க விழித்தாள்.

சிந்திய முத்துகள் மாலையைத் தந்தவளைப் பார்த்துச் சிரித்தன.

மனம் கொதித்தாள்; நெஞ்சு பதைத்தாள்; நிலத்தை உதைத்தாள்; அவள் பேச்சினை வெறுத்தாள்.

“இதன் விளைவை நீ எண்ணிப்பார்; கோசலை இராமன் தாய்; தலைமை அவளுக்கு; அவல நிலைமை உனக்கு கைகட்டிப் பிழைப்பார் எல்லாரும் அவள் வீட்டு முற்றத்தில் காத்து இருப்பர்”

“விரும்பினால் நீ அவளுக்கு அடிமைப்படு அவளுக்கு உழைத்துப் பாடுபடு; என்னைவிடு; நான் அவள் தாதியர்க்கு ஆட்படுதல் செய்யேன்; இது உன் தலைவிதி; வேண்டாம் எனக்கு அந்த அவதி” என்றாள்.

“சிவந்த வாய்ச் சீதையும் கரிய செம்மலும் நிவந்த ஆசனத்தில் இருக்கப் போகின்றார். அவந்தனாய் உன் மகன் பரதன் அவர்களுக்குக் கவரி வீசி அடிமைத் தொழில் இயற்றப் போகிறான்”.

“இராமன் பதவி பெறுகிறான் என்பதைக் கேட்டு, நீ நிலைகொள்ளாமல் மகிழ்கிறாய்; அதற்கு நீ பரதனைப் பத்துமாதம் சுமந்திருக்கத் தேவை இல்லை. பெற்ற மகனுக்கு வாழ்வு தேடாமல், செல்வ மகனுக்குச் சீர்கள் தேடுகிறாய்; உன் தாய்மை உறங்குகிறது. அதை நான் தட்டி எழுப்பவேண்டி இருக்கிறது”

“இந்தக் கிழவன், நயமாகப் பேசிப் பரதனைப் பாட்டன் வீட்டுக்கு ஏன் அனுப்பி வைத்தான்? திட்டமிட்டுச் செய்த சதி இது; நீ பிறந்தது அரசவீடு; அரசர் வீட்டில் வாழ்க்கைப்பட்டாய்; நீ விரசு கோலங்கள் இழந்து விரச வாழ்க்கை மேற்கொள்ளப் போகிறாய்; நினைத்துப் பார் பின்வருவது சிந்தித்துச் செயற்படுக” என்றாள்.

வரம்பு மீறி அவள் தரம் கெட்டுப் பேசுவதைக் கைகேயியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை; விட்டால் விண்ணில் பறக்கிறாய்; எல்லை கடக்கிறாய்; அதனால், தொல்லைகளைத் தேடுகிறாய். அக்கம் பக்கத்தில் யாராவது நீ பேசுவது கேட்டு அறிந்தால், உன்னை அக்குவேறு ஆணிவேறாய்ப் பிய்த்துவிடுவர்; சூழ்ச்சி செய்கிறோம் என்று மன்னன் ஆள்கள் நம்மை வளைத்துக் கொள்வர்; அதனால், விளையும் விளைவுகளை நினைத்துப் பார்! மனம் போன போக்கில் உன் சிந்தனைகளைச் சிதறவிடுகிறாய்” என்று அறிவிப்புத் தந்தாள்.

“அஞ்சுகமே! உன் சுகம் கருதியே பேசுகிறேன்; நீ அரசன் ஆணைக்கு அஞ்சுகிறாய்; இன்னும் எதுவும் மிஞ்சிப் போகவில்லை.”

“பாவம்! பரதன் பரிதவிப்புக்கு ஆளாகிறான்; அவன் செய்த குற்றம் உன் வயிற்றில் பிறந்தமையே; அதுதான் பெரிய குற்றம்.”

“அரசன் மாள, மற்றொருவன் நாடாள முடியும்; அவன் உயிரோடு இருக்க இராமன் ஆட்சிக்கு வருதல் முறையாகாது; மூத்தவன் தசரதன் இருக்கும்போது முன்னவன் என்று கூறிக் கொண்டு இவன் முடி ஏந்துவது தவறு அல்லவா?”

“காலம் கருதித் தக்கது செய்தால், ஞாலமும் கை கூடும்; இதை நன்கு பயன்படுத்திக் கொண்டவள் கோசலை; அரசனை அவள் மயக்கிவிட்டாள்; அவனை முடுக்கிவிட்டிருக்கிறாள்; இல்லாவிட்டால் தீடீர் என்று ஏன் அவன் இந்த முடிவுக்கு அடிவைக்க வேண்டும்? நான் படித்துச் சொல்கிறேன்; நீ மனம் இடிந்து அழியப் போகிறாய்.” “நாளைக்கு இராமன் ஆட்சிக்கு வருகிறான்; நடக்கப் போகும் காட்சி என்ன?”

“பெட்டிச் சாவி கோசலை கையில்; அவள் கெட்டிக்காரியாகிறாள்; நீ கைகட்டிக் கொண்டு நிற்பாய்”

“வறியவர் வந்து வாய்திறந்து கேட்டால் சிறியவள் நீ என்ன செய்வாய்? மூத்தவளைக் கேட்க அவள் தந்தால் நீ உன் மானத்தைக் காத்துக் கொள்ள முடியும்; ஆட்சி அவள் கையில்; அடிமைத்தளை உன் தாளில்; வள்ளலாக வாழவேண்டிய நீ, எள்ளல் நிலையில் தாழப் போகிறாய் ஏழ்மை உனக்கு; மேன்மை அவளுக்கு”.

“எந்த வகையில் மூத்தவளுக்கு நீ தாழ்ந்துவிட்டாய்; மூவரில் நீ பேரழகி, அரசன் ஆசைக்கிழத்தி, இப்பொழுது அனைத்தையும் இழத்தி”.

“கெஞ்சுவது உன்னிடம்; அவன் அஞ்சுவது கோசலைக்கு; மஞ்சம் உனக்கு தஞ்சம் அவளுக்கு இது வஞ்சம் என்று நினைக்கிறது என் நெஞ்சம்” என்றாள்.

“மானே தேனே, என்று தெவிட்டாமல் பேசுவான்; பழகியதால் பால் புளித்ததோ! “கட்டிக் கரும்பே” என்று பேசியவனுக்கு நீ எட்டிக்காய் ஆகிவிட்டாயோ? பித்தம் பிடித்தவள்போல் நீ பிதற்றாமல் இருக்கிறாய்; சித்தம் அடங்கி, நித்தம் அவனோடு குலவப் போகிறாயா?”.

பூ உனக்கு எதற்கு? அதைப் பிய்த்துப் போடு; திலகம் ஏன்? அதனைக் கலைத்துக் கலகம் செய்; சடை; அது உனக்குத் தடை; அதை விரித்துவிடு; சிரிப்பான் அவன்முன் சீர் குலைந்துநில்; பட்டுப் புடவை ஏன்? பகட்டை விடு; காசுக்கு உதவாதவர் கலகலப்புக் காட்டுகிறார்கள். சுகாசினியாக இருக்க வேண்டிய நீ, விகாசினியாய் இருக்கிறாய். அந்தப் புரத்து அழகி உன்னை எந்தப் புரமும் வளராமல் தடுத்துவிட்டான்; இட்டமகிஷி என்றால் பட்டமகிஷியாக ஏன் ஆகக் கூடாது?”

“கொஞ்சிக்குலவ உன்னை வஞ்சிக்கொடி என்றான்; நீ வஞ்சித்து அவனுக்கு அது உண்மை என்பதைக் காட்டு”.

“அழகி என்கிறான்; மனம் இளகிவிட்டாய்; இளயவள் என்றான்; வளைந்து கொடுத்தாய்; தாய்மை என்றால் அது அவனுக்குச் சேய்மையாகிவிட்டது. நீ பரதன் தாய் என்பதை அவன் தட்டிக்கழித்துவிட்டான்.

“இனி உன் தாய்மை பேசட்டும்; பரதன் வாழட்டும்; உனக்கு இழைத்த அநீதி ஒழியட்டும்; சொன்ன சொல் ஆற்றட்டும்” என்றாள்.

“என்னடி உனக்கு இந்த வேகம்?” என்றாள் கைகேயி

“அது என் விவேகம்; அவனிடம் உன் பிடிவாதம் காட்டு; உன் பிடியில் அவனை மாட்டு; சிறந்த தாய் என்பதை நீ அவனுக்கு எடுத்துக் காட்டு; இது இராமனுக்கு நான் வைக்கும் அதிர்வேட்டு” என்றாள்.

“நாவை அடக்கு உன் போக்கு நீக்கு: அக்கம் பக்கம் அறிந்தால் உன்னை மொட்டை அடித்து முழுக் காட்டிவிடுவர்” என்று அச்சுறுத்தினாள்.

“அதற்கு வேறு ஆளைப்பாரு, அஞ்சுவது நான் அல்ல; உன் நலம் தான் எனக்குப் பெரிது” என்றாள். அம்மிக் கல்லும் குழவிக் கல்லால் குழைந்துவிட்டது; தேய்ந்துவிட்டது; பரதன் தாய் மனம் நெகிழ்ந்தாள்; உறுதி குலைந்தாள்; மகனுக்கு உறுதி தேடினாள்; அதனால்; விழித்து எழுந்தாள்.

“வழி யாது?” என்று வினவினாள்;

“'நான் என்ன செய்ய வேண்டும் என்கிறாய்?” என்று கேட்டாள்.

“அறிவுடையவள் நீ! இனி நீ பிழைத்துக் கொள்வாய்; தெரிந்தும் பிழை செய்வாய்” என்றாள்.

“'நீ வெல்வாய்; நான் சொல்வது செய்வாய்; கோமகன் வருவான்; கோமாளியாய்ச் செயல்படாதே; உன்னைத் தழுவ வருவான்; அந்த வாய்ப்பை நழுவவிடாதே; கடிந்து பேசு, படியவை”.

வரம் கேள்

“சம்பராசூரனோடு தசரதன் போர் செய்தான்; நீ அவனுக்குத் தேர் ஒட்டினாய்; வெற்றி உன்னால் கிடைத்தது. நெற்றிக்குமேல் வைத்து உன்னைப் புகழ்ந்து போற்றினான்; வரம் கேள் என்றான்; இரண்டு வரம் உன் கேள்வனிடம் கேட்டுப் பெற்றாய்; அவற்றை இப்பொழுது செயல்படுத்தச் சொல்” என்றாள்.

தசரதன் வருகை

கோலம் மிக்க அழகி, அவள் சீலத்தை மறந்தாள்; திலகத்தை அழித்துக் கொண்டு விதவையானாள். கூந்தலை விரித்தாள்; ஏந்தலைப் பகைத்தாள்; அணி கலன்கள் அவளுக்கு அழகு செய்தன; அவை அவள் பணிகேட்டுப் பதுங்கிக் கொண்டன! சேலை இது வரை கசங்கியது இல்லை; அது அவள் கண்களைப் போலக் கசங்கிக்காட்சி அளித்தது; கட்டிலில் புரண்ட அவள், தரையில் உருண்டாள்.

நள்ளிரவு வந்தது; கள்வர், காதல்வெறியர் உறங்காத நேரம்; யாழினும் இனிமை சேர்க்கும் குரலாள் கைகேயி; அவள் அந்தப்புரம் நோக்கி அயோத்தி மன்னன் அடலேறு போலச் சென்றான்; புதிய செய்தி சொல்லி, அவளைப் பூரிப்பு அடையச் செய்ய விரும்பினான்.

நிலைமை மாறிவிட்டது; அவள் அவல நிலை கண்டு கவலை கொண்டான் வேந்தன்; மானை எடுக்கும் யானையைப் போல அவளைத் தழுவி எடுத்தான்; அவள் நழுவி விழுந்தாள்; தரையில் தவழ்ந்தாள்; வானத்து மின்னல் தரையைத் தொட்டது; கட்டி அணைத்தான்; கொட்டிய தேளாகக் கடுகடுத்தாள் அவள்.

“'தேனே என்றான்; மானே என்றான்; தெள்ளமுதே உன்னை எள்ளியது யார்?” என்றான்.

“மங்கை உதிர்த்த கண்ணிர், அவள் கொங்கையை நனைத்தது; முத்துமாலை உதிர்ந்ததுபோல் இருந்தது; அவன், தன் அங்கை கொண்டு கண்ணிரைத் துடைத்தான்; அவள் தலையில் அடித்துக் கொண்டு பதைத்தாள்; பார் பிளந்தது போன்று ஒர் நினைவு அவனுக்குத் தோன்றியது; “யார் உமக்குத் தீமை செய்தவர்?” என்று வினவினான்.

“நீர் வாய்மை மன்னன்; வாய் தவற மாட்டீர் என்று கருதுகிறேன்” என்றாள். “விரும்பியதைக்கேள், அரும்பியதைப் போன்ற உன் திருவாயால்; உள்ளம் உலோபேன்; வள்ளல் இராமன் மீது ஆணை” என்றான்.

“'தேவர்களைச் சாட்சி வைத்தாய்; வரங்கள் இரண்டு தருவதாக மாட்சிபடக் கூறினாய்; அவற்றைத் தருக” என்றாள்.

“விளம்புக வழங்குகிறேன்” என்றான்.

“என் மகன் முடிசூட வேண்டும்; இது முதல் வரம்; இராமன் காடு ஏக வேண்டும்! இஃது அடுத்த வரம்” என்று தொடுத்துக் கூறினாள்.

நஞ்சு தீண்டியது; வேகம் அடங்கியது; யானை போலச் சுருண்டு விழுந்தான் வேந்தன்.

மருண்டு விழித்தான். மயக்கம் நீங்கினான்; தயக்கம் காட்டினான்.

“உன் சுய நினைவில் பேசுகிறாயா? மற்றவர் சொல்ல நீ கேட்கிறாயா?” என்று கேட்டான்.

“முடிந்தால் கொடு; இல்லாவிட்டால் விடு” என்றாள்.

சொற்கள் அவனுக்குத் துணை வரவில்லை, பற்களைக் கடித்துக் கொண்டான்.

அவன் தன் கைகளைப் புடைத்தான்; புழுங்கி விம்மினான்; அழுங்கி நைந்தான்; நெஞ்சு அழிந்து சோர்ந்தான்.

அவளைக் கொல்ல நினைத்தான்; அவள் சொல்லை வெறுத்தான்; “கேட்டது தருவது கேடு” என்பதை அறிந்தான்; எனினும், என் செய்வது? கொன்றால் பழி வந்து சேரும்; அதனால், அழிவுகள் மிகுதி, வேறு வழி இல்லை; ‘பணிவதுதான் பயன்தரும்’ என நினைத்தான்.

“நீ கேட்கிறாய்; நான் மறுக்கவில்லை; உன் மகன் வேட்கமாட்டான்; அரியணையை ஏற்கமாட்டான்; உலகம் அதற்கு உறுதுணை நில்லாது; ஆட்சிதானே வேண்டும்? இராமனைக் கேட்டால் தம்பிக்கு மறுப்புக் கூறமாட்டான். அவனைக் கேட்பதா என்று நீ தயங்கலாம்; மண்ணைக் கேள்; தருகிறேன்; என் கண்ணைக் கேட்காதே; அதனை மறந்து விடு. இராமனைப் பிரிந்து என்னால் உயிர்வாழ முடியாது” என்று கூறி இரந்தான்.

“வாய்மை விலகுகிறது” என்றாள்.

“சத்தியம் தலை காக்கும்; அது என் உயிரைப் போக்குகிறது” என்றான்.

“உயிர் இழக்க அஞ்சவில்லை; இளம்பயிர் அவன்; தழைத்து வாழவிடு” என்றான்.

“வாய் கொழிக்கப் பேசினாய்; வரம் தந்து மகிழ்வித்தாய்; இப்பொழுது தரம் கெட்டுப் பேசுகிறாய்”

“சிபிச் சக்கரவர்த்தி உன் முன்னோன்; வாய்மை தவறவில்லை; புறாவிற்காகத் தன் உயிரைத் தந்தான்; பின் விளைவைப்பற்றி அவன் சிந்திக்கவில்லை”.

“கொடு; இல்லாவிட்டால் என்னைச் சாகவிடு” என்று இறுதி ஆணை பிறப்பித்தாள்.

அரசன் செயல் இழந்தான்; உணர்வு ஒழிந்தான்; கீழே சவம் எனக் கிடந்தான்; காரியம் முடிந்தது; காரிகை மனநிறைவோடு அந்த இரவு கவலையின்றி உறங்கினாள்.

விழாக் கோலம்

அடுத்த நாள் திருவிழா; முடிசூட்டும் நாள். இராமனுக்காக அவ்விழா காத்துக் கிடந்தது; எங்கும் பரபரப்பு; சுருசுருப்பு: மக்கள் தேனி போல விழாவுக்கு வேண்டிய பொருள்களைக் கொண்டு வந்து சேர்த்தனர். அலங்காரங்கள் எங்கும் அழகு செய்தன.

மங்கலப் பொருள்கள் வந்து குவிந்தன. வேதபாரகர் மறைகளைச் சொல்லினர்; அவர்கள் வசிட்டரை வணங்கினர்.

கங்கை முதல் குமரிவரை உள்ள புண்ணிய நதிகளில் இருந்து குடங்களில் நீர் கொண்டு வந்து சேர்த்தனர்; அவையில் அமைச்சர்களும் பிரமுகர்களும் வந்து சேர்ந்தனர்; வசிட்டரும் வந்து அமர்ந்தார்; மன்னன் தசரதன் வந்து சேரவில்லை; அனைவரும் அவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

வசிட்டர் தசரதனை அழைத்து வரும்படி சுமந்திரனை அனுப்பிவைத்தார். அரண்மனையில் அவனைக் காணவில்லை; சேடியர் கூற அரசன் கைகேயின் அந்தப்புரத்தில் இருப்பதை அறிந்தான்; நேரே அங்குச் சென்றான்; சேடியர்பால் செய்தி அனுப்பி, அவையோர் மன்னனை எதிர்ப்பார்ப்பதாகக் கூறினான். மன்னன் அவனைச் சந்திக்கவில்லை; மன்னிதான் அவனுக்குச் செய்தி தந்தாள்.

“இராமனை அழைத்து வருக” என்று சொல்லி அனுப்பினாள் கைகேயி.

சுமந்திரன் தேரைத் திருப்பினான், இராமன் திருக்கோயிலுக்குச் சென்று செய்தி செப்பினான். இராமன் முடிசூடும்முன் அன்னையின் அடிசூட விரைந்தான்; திருமாலை வழிபட்டு வணங்கிப் பின் கேகயன் மகள் இருந்த மனை நோக்கிச் சென்றான். மாடவீதி வழியாகச் சென்றபோது மாநகர மாந்தர் அவன் கோலத்தைக் கண்டு மகிழ்ந்தனர்.

மன்னன் தங்கி இருந்த மணிமண்டபத்தை அடைந்தான்; பதும பீடத்தில் மன்னனைக் காணவில்லை; மகுடம் கையில் ஏந்தி மன்னன் காத்திருப்பான் என்று நினைத்தான்; பிள்ளையார் பிடிக்கப் பூதம் புறப்பட்டது போல் புயல் கிளம்பியது; தாய் என நினைத்து வரும் இராமனை நோக்கி, உயிர் உண்ணும் பேய் போலக் கைகேயி வந்தாள்.

“மன்னன் தன் வாயால் சொல்ல நினைப்பதை நான் கூறுகிறேன்” என்றாள்.

“தந்தை கட்டளை இடத் தாய் அதைத் தெரிவிக்க, அந்த ஆணையை ஏற்று நடத்தத் தனயன் யான் காத்துக் கிடக்கிறேன்” என்றாள்.

“கடல் சூழ்ந்த உலகத்தைப் பரதன் ஆள்வான்; நீ சடைகள் தாங்கித் தவமேற்கொண்டு காடுகளில் திரிந்து, நதிகளில் நீராடி, ஏழிரண்டு ஆண்டுகளில் திரும்பி வர வேண்டும் என்பது மன்னன்” ஆணை என்றாள்.

வியப்போ திகைப்போ அவனைத் தாக்கவில்லை; அதிர்ச்சிகள் அவனை அணுகவில்லை; தாமரை மலரை நிகர்த்த அவன் முகப் பொலிவு முன்னிலும் அதிகம் ஆனது; அதனை வென்றுவிட்டது. சுமையை ஏற்றுக் கொள்ள அமைந்தது தசரதன் ஆணை; அதற்கு மறுப்புச் சொல்லவில்லை. சமையை ஏற்க வந்தவனுக்குச் சுதந்திரம் கிடைத்தது.

தசரதன் எருதினை இழுத்து வந்து வண்டியின் நுகத்தடியில் பூட்டினான். அருள் உள்ளம் படைத்தவள் கைகேயி; அதனை அவள் அவிழ்த்துவிட்டாள்; பாரம் அவனை விட்டு நீங்கியது; அதற்காக அவளுக்கு நன்றி காட்டினான்; அவன் முகம் மும்மடங்கு பொலிவு பெற்றது.

“அரசன் பணி அது அன்று ஆயினும், தாயின் கட்டளை இது; இதை மறுக்க மாட்டேன்; என் பின்னவன் பெறும் செல்வம் நான் பெற்றதேயாகும்; இதைவிடச் சிறந்த பேறு எனக்கு உண்டோ இன்றே காடு ஏகுகின்றேள்; விடையும் கொண்டேன்” என்று கூறி வருத்தம் சிறிதும காட்டாமல் அவன் அவளை விட்டு அகன்றான்.

கோமகள் கோசலை துயர்

இராமன் வருவான் என்று கோசலை எதிர்பார்த்தாள்; பொன்முடி தரித்து வருவான் என்று நினைத்தாள்; சடைமுடி தாங்கி அவள் முன் வந்து நின்றாள்; அரசனாக வேண்டியவன் தவசியாய்க் காட்சி அளித்தான்.

சாமரம் வீசும், கொற்றக் குடை சுற்றிவரும்; மகுடம் புனைந்து மகன் வருவான் என்று அவள் காத்திருந்தாள்; தவக் கோலத்தில் வந்து காட்சி அளித்தான் அவன்.

“இம் மாற்றத்துக்குக் காரணம் என்ன?” என்று கேட்டு அவன் மாற்றத்தை எதிர்பார்த்தாள்.

“பரதன், உன் நேய மகன், மணிமுடி புனைகின்றான்” என்றான்.

“முறையன்று; எனினும், அவனிடம் எந்தக் குறையும் இன்று. உன்னைவிடப் பரதன் நல்லவன்” என்று பாராட்டினாள்.

“தவசிகள் உறையும் காட்டுக்கு அவசியம் நான் போக வேண்டும் என்பது அடுத்த கட்டளை” என்றான்.

அதிர்ச்சி அடைந்தாள்.

“ஏழிரண்டு ஆண்டுதான்” என்று கால எல்லையைக் குறிப்பிட்டான்.

“ஆணையா? தண்டனையா? என்னால் வேறுபாடு காண இயலவில்லையே. இது வஞ்சனை, நஞ்சு அணையது; இனி உயிர் வாழேன்” என்றாள்.

ஒருகையை மற்றொரு கையால் நெறித்தாள்; பெற்ற வயிற்றைப் பிசைந்தாள்; வெய்து உயிர்த்தாள்; “மன்னன் கருணை நன்று” எனக்கூறி நகைத்தாள்; தானும் இராமலோடு செல்ல நினைத்தாள்.

“அரசனுக்கு நீ என்ன பிழை செய்தாய்? அறம் எனக்கு இல்லையோ?” என்று அலறினாள். தெய்வங் களை நொந்தாள்; கன்றைப் பிரியும் தாய்ப் பசுவைப் போலக் கலங்கினாள்.

இராமன் துயருறும் அன்னையைத் தேற்ற முனைந்தான்; “மன்னவன் சொல் கேட்டு நடப்பது தானே உனக்குப் பெருமை; கணவன் சொற் காத்தல். இல் காப்பவர்க்கு உரிய கடமை அன்றோ” என்றான்.

“மகனைப் பிரிந்து தவிக்கும் அவர் துயரை அவித்து ஆற்றுவது உன் கடன் அன்றோ! சாகும் போதும், மனம் வேகும் போதும் உற்றவர் அருகிலிருப் பது கற்றவர்க்குக் கடமை அன்றோ, அவரை ஆற்றித் தேற்றித் தவநெறிக்குச் செல்ல நீ துணை இருக்க வேண்டாவோ! பத்தினிப் பெண்டிர் கணவனுக்குப் பணி செய்வதுதானே பாரத நாட்டுப் பண்பாடு! இல்லற தருமம் அதுதான்; தவித்த வாய்க்குத் தண்ணிர் தருவது மானிட தருமமும் ஆகும்” என்று கூறி விடை பெற்றான்.

செய்தி முற்றிவிட்டது என்பதை அறிந்தாள்; முதலுக்கே மோசம் வந்துவிட்டது என்று முந்தினாள். கேகயன் மகளின் தனி அறையில் கீழ்த்தரையில் புழுதியில் மன்னன் படிந்துகிடப்பதைக் கண்டு அழுது அரற்றினாள்.

“பொன்னுறு நறுமேனி புழுதிபடிந்து கிடப்பதோ?” என்று கூறிக் கதறினாள்; “சந்தனம் கமழும் மார்பு சகதியில் கிடக்கிறதே?” என்று கூறி நைந்தாள்.

வீட்டிற்கு எட்டிய செய்தி நாட்டுக்கும் பரவியது; மங்கல ஒலி மயங்கியது; மகிழ்ச்சி மக்களிடம் இருந்து நீங்கியது; அலறல் ஓங்கியது.

அந்தப்புரத்தில் வசிட்டர்

வசிட்டர் கைகேயியிடம் நீதிகள், நியதிகள், மரபுகள், வரம்புகள், அறிவுரைகள் ஆயிரம் எடுத்துச் சொல்லியும் அவை செவிட்ன் காதில் ஊதிய சங்கு ஒலியாகியது. அவள் நெஞ்சு உறுதியை அசைக்க வில்லை.

தசரதன் விழித்துப் பார்த்தான்; வேர்த்தான்; தன் உள்ளத்துக் குமுறல்களைக் கொட்டி ஆர்த்தான். அவன் செயற்கையாய்ச் செவிடன் ஆகிவிட்டான்; எதிரொலிகள் எதுவும் எடுபடவில்லை.

அழுது அயர்ந்த அரசி கோசலைக்கு அவன் தன் நிலையை விரித்து உரைத்தான்.

“தரையில் கொட்டிய பால், அதை மீட்டு எடுக்க முடியாது; தயிர் புளித்துவிட்டது; மீண்டும் அதைப் பால் ஆக்க முடியாது; தந்த வரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியாது.”

“அது மட்டும் அன்று; விதியின் செயல் இது, சாபத்தின் விளைவு இது; நான் செய்த பாபத்தின் பரிகாரம்” என்று பழைய நிகழ்ச்சி ஒன்றை அவளுக்கு எடுத்துக் கூறினான்.

“இது உனக்குத் தெரியாது; அரசன் நான்; அதனால்; காட்டு விலங்குகளைக் கட்டுப்படுத்த வேட்டையாடச் சென்றேன்; அங்கே ஒரு யானை தட்டுப்பட்டது; அதனைக் கண்ணால் காணவில்லை; யானை நீர் குடிக்கும் அரவம் கேட்டேன்; ஒலி வருவழி கொண்டு நோக்கினேன்.”

“கூர்த்த செவிப்புலன் படைத்த யான், தவறி விட்டேன்; குருடன் ஆகிவிட்டேன்; அது யானை எழுப்பிய ஒலியன்று; ஒர் இளைஞன் பானை எழுப்பியது; நீர் மொள்ளும் முடுமுடுப்பு அது. அம்பு பட்டு அவன் அலறி விழுந்தான்; அலறல் கேட்டு ஒடினேன்; அவனைத் தேடினேன்; வாடினேன்.”

“ஐயா! நான் அந்தணச் சிறுவன்; விழி இழந்தவர் என் பெற்றோர்; அவர்களுக்கு வழிகாட்டி அழைத்து வந்தேன் யான்; நீர் வேட்கையால் அவர்கள் தவித்தனர்; அதனால், இங்கு முகக்க வந்தேன்; நீ என் உயிரை முகந்துவிட்டாய்”.

“ஐயா! எனக்கு நீர் ஓர் உதவி செய்துதர வேண்டும்; இந்தத் தண்ணிர் மிடாவை அவர்களிடம் தந்து குடிக்கச் செய்; என் இறுதி அஞ்சலியை அவர்களுக்கு அறிவித்து விடு” என்றான்.

அம் முதியவருக்குப் பருக நீர் கொண்டு சென்றேன்; அவர்கள் மனம் உருக, “'மகனே வருக! நீர் தருக” என்று குழைந்து பேசினர்.

“கரம் நீட்டினேன்”

“உன் உரம் எங்கே?” என்று என்னைத் தழுவினர்.

“என் தரம் அவர்களுக்கு அறிவித்தேன்”

“இப்பொழுதே விழி இழந்தோம்” எல்லு கதறினர்.

“நான் நாட்டு மன்னன்” என்றேன்.

கேட்டு அவர்கள் மன்னிக்கவில்லை; “நீயும் எம்மைப் போல் மகனைப் பிரிந்து தவிப்பாய்” என்றனர்.

அவர்கள் சாபத்தால் எனக்கு ஒர் நன்மையும் ஏற்பட்டது. ‘மகன் எனக்குப் பிறப்பான்’ என்ற நம்பிக்கையை அந்தச் சாபம் தந்தது.

மகனைத் தேடி அவர்கள் மயானம் அடைந்தனர்.

“சிதையில் மூவர் உடலையும் வைத்து எரித்தேன்”

“அதே நிலை எனக்கு வந்துதான் தீரும்; மகனைப் பிரிந்தேன்; என் உயிர் என்னை விட்டுப் பிரியும்” என்றான்.

மன்னன் மரணத்தால் ஏற்படும் அவலம்; மகனைப் பிரிந்ததால் ஏற்படும் துயரம்; “அவன் அவலத்துக்கு அழுவதா? மகன் பிரிவுக்குப் புலம்புவதா?” என்று அவள் அழுகைக்கே அர்த்தம் தெரியவில்லை. இராமன் பிரிவு நாட்டு மக்களை அழுகையில் ஆழ்த்தியது.

தம்பி சீற்றம்

செய்தி அறிந்தான் இளைய செம்மல் இலக்குவன்; அவனுள் எழுந்த எரிமலை வெடித்தது.

“சிங்கக் குட்டிக்கு இடும் ஊனை நாய்க் குட்டிக்குத் தந்திருக்கிறார்கள்; அவர்கள் அறிவு கெட்டுவிட்டது; ஒருபெண், அவலத்துக்கே காரணம் ஆகிவிட்டாள்; பெண்களே என் எதிரி” என்றான்.

“காரணம் யார்? பெற்ற தாய் ஆயினும் அவள் எனக்குப் பெரும்பகையே” என்று கொதித்து எழுந்தான்.

“சினவாத நீ சினந்தது ஏன்?” என்று சிறு வினாவினை இராமன் எழுப்பினான்.

“தந்தை தசரதன் பரதனுக்குத் தந்த ஆட்சியை மற்றோர் தம்பி நான், மீட்டுத் தருகிறேன்; இதை யாரும் தடுக்க முடியாது” என்றான்.

“தவறு செய்தவன் நான்; இப்படி அவதூறு வரும் என்று தெரிந்திருந்தால் மூளையிலேயே களைந்திருப் பேன்; ஆட்சியை ஏற்க நான் ஒப்புக் கொண்டதே தவறு.”

“சால்புடன் நடந்து கொண்ட தந்தை சால்பு உடையவர்; பாசத்தோடு பரிந்து பேசிய தாய் பண்பு உடையவள்; அவர்கள் நம் பால் அன்பு கொண்டனர்; அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. எல்லாம் விதியின் செயல்” என்றான்.

“விதியா? இல்லை இது சதி; விதிக்கும் நான் ஒரு விதியாய் நிற்பேன்; சதிக்கு நான் ஒரு கதியாய் இருப்பேன்; என் வில்லின் முன் எவர் சொல்லும் நில்லாது” என்றான்.

“நீ கல்வி கற்றவன்; சாத்திரம் பயின்றவன்; பெற்றோரை எதிர்ப்பது பேதைமை யாகும்; சீற்றம் உன் ஏற்றத்தைக் கெடுக்கும்; என் சொல் கேட்டு நீ சினம் அடங்கு” என்றான் இராமன்.

“நன்மதியோடு விளங்க வேண்டியவன் நீ; நல் நீதிகளை மறுத்துப் பேசுகிறாய்; இனி எதையும் வீணாகக் கேட்டு உன்னை நீ அலட்டிக் கொள்ளாதே; நடக்க இருப்பவை இவை; எவற்றையும் நிறுத்த முடியாது; பரதன்தான் ஆட்சிக்கு உரியவன்; நீ எதிர்த்துப் புரட்சி செய்ய உனக்கு உரிமை இல்லை; அடங்கி இரு அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை நரகத்தில் சேர்க்கும்; நாம் காட்டுவாசிகள் அல்ல விருப்பப்படி நடக்க; பெற்றோரை மதிக்க வேண்டும்; அவர்கள் ஆணையைக் கேட்டு நடப்பதுதான் நம் கடமை” என்று கூறி இராமன் இலக்குவனை நெறிப்படுத்தினான். விவேகம் வேகத்தை அடக்கியது.

இலக்குவன் மழைநீர்பட்ட மலைக்கல் போலக் குளிர்ந்து ஆறினான். சூடு தணிந்தது; தன்னை அடக்கிக் கொண்டான்; தன் தமையன் கட்டளைக்கு அடி பணிந்தான்; அதன்பின் இராமன் நிழலாக அவன்பின் தொடர்ந்தான்; தன் தாய் சுமத்திரையைக் காணச் சென்றான்; இராமனும் அவனுடன் சென்றான்.

கைகேயி இராமனுக்காக அனுப்பி வைத்த மரவுரியை ஏற்று உடை மாற்றிக் கொண்டான், களம் நோக்கிச் செல்லும் போர் வீரனாக மாறினான்; தவக் கோலத்தில் தமையனைக் கண்ட இலக்குவன், கண் கலங்க நின்றான்; சுமத்திரை அவனைத் தட்டி எழுப்பினாள்.

“தமையனைக் கண்டு நீ கண்ணிர் விடுகிறாய்; அதனால் நீ அவனுக்கு அந்நியன் ஆகிறாய்; நீயும் புறப்படு; கோலத்தை மாற்று; வில்லை எடுத்து அவன் பின் செல்க! மரவுரி நான் தருகிறேன்; நீ உடுத்திக் கொள்; அதுதான் உனக்கு அழகு தரும்”

“இராமன் வாழும் இடம்தான் உனக்கு அயோத்தி; அவன்தான் உனக்கு இனித் தந்தை. சனகன் மகள் சீதைதான் உனக்கு இனி அன்னை, காலம் தாழ்த்தாதே; புறப்படு; இங்கு நிற்பதும் தவறு” என்றாள்.

மரிவுரி தரித்து இலக்குவனும் இராமன்பின் வந்து நின்றான்.

“இது என்ன கோலம்?” என்று வியப்புடன் கேட்டான்.

“அரச உடை அங்கு ஆகாதே” என்றான்.

“உன்னை யார் காட்டுக்கு ஏகச் சொல்லியது? வரம் எனக்குத்தானே தவிர உனக்கு அல்லவே”

“நான் உடன் வரக்கூடாது என்று அன்னையர் யாரும் வரம் வாங்கவில்லையே” என்றான்.

அவனும் தன்னுடன் வருதலை விரும்பாது, அவனைத் தடுத்து நிறுத்த முயன்றான்.

“உனக்கு இங்கே கடமைகள் மிக்கு உள்ளன; அன்னையர்க்கு ஆறுதல் கூற உன்னையன்றி யார் இருக்கிறார்கள்?”

“தந்தை நிலை கெட்டு உலைகிறார்; அவருக்கு என் இழப்பை ஈடு செய்ய நீ இருக்க வேண்டாவா?”

“பரதன் ஆட்சிக்குப் புதிது; வயதில் என்னைவிட இளைஞன், அவனுக்குத் துணையாக யார் இருப்பர்?”

“யான் இங்கிருந்து ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன; எனக்காக நீ இரு; என் வேண்டுகோளை ஏற்று நட” என்று அறிவுரை கூறினான்.

மூத்தவன் இந்த உரைகளைப் பேசுவான் என்று இலக்குவன் எதிர்பார்க்கவில்லை; இந்தக் கொடுமையான சொற்களைக் கேட்டுக் கடுந்துயரில் ஆழ்ந்தான்; விம்மி அழுதான்.

“ஏன் என்னை உன்னிடமிருந்து பிரிக்கிறாய்? உனக்கு நான் என்ன தீங்கு செய்தேன்? என்னை நான் விரும்பும் இடத்தில் வாழ விடு”

“மீனும் குவளையும் நீரில்தான் வாழும்; ஏனைய உயிர்களும் அவை அவை வாழும் இடம் இவை எனத் தேர்ந்து எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன; கட்டிய மனைவியை நீ விட்டு ஒதுங்கமுடியாது; ஒட்டிய உறவுடைய என்னையும் நீ வெட்டித் தள்ளமுடியாது; “எட்டப் போ” என்று கூறமுடியாது! நீ இல்லாமல் நான் வாழ முடியாது; அன்னை சீதையும் உன்னை விட்டுப் பிரிந்து வாழ முடியாது; இது எங்கள் நிலை”.

“ஏன் என்னை ஒதுக்குகிறாய்; உனக்குக் கொடுமை இழைத்த தசரதன் மகன் என்பதாலா? நீ எதைச் சொல்லி இதுவரை மறுத்தேன்; சினம் தணிக என்றாய்; தணிகை மலையாயினேன்; சீற்றம் கொள்ளாதே என்றாய்? அதற்கு மறுப்பு நான் கூறவில்லை; நீ எதைச் சொன்னாலும் கேட்டு நடப்பவன் நான்; ஆனால் ‘இரு’ என்ற கூறுவதை என்னால் பொறுத்துக் கொள்ளமுடியாது; இது கொடுமை மிக்கது; அரச செல்வத்தை விட்டுச் செல்லும் நீ, நானும் உன் உடைமை என்பதால் என் உறவை உடைத்து எறிகிறாயா?” என்று கேட்டான் அதற்குமேல் இராமன் பேசுவதைத் தவிர்த்தான்; அவனைத் தடுக்கவில்லை.

சீதை செய்கை

சித்திரப் பாவைபோல எந்தச் சலனமும் இல்லாமல் வாழ்ந்து வந்த சீதைக்கு இந்தப் புதிய மாற்றங்கள் வசித்திரமாய்ப் பட்டன; “என்ன நடக் கிறது?” என்று எடுத்துக் கூற யாரும் முன்வரவில்லை; அவளும் தன் நாயகன் நா, உரையாததால் நலிந்து காத்திருந்தாள்.

“எதிர்பாராதது நடக்கலாம்; ஆனால், எதிர்த்துப் பேசும் உரிமையை நீ எடுத்துக் கொள்ளாதே; எல்லாம் மிகச் சிறிய செய்திகள்தான்,” என்றான்.

“பரதன் பட்டத்துக்கு வருகிறான்; மகிழ்ச்சிமிக்க செய்தி.”

யான் காட்டுக்குப் போகவேண்டும் என்பது மன்னன் கட்டளை”

“மாமியார் மெச்சும் மருமகளாய் நீ அவர்களுக்குத் துணையாய் இங்கே இருப்பாய்” என்று அறிவித்தான்.

“நான் காட்டுக்குச் செல்லும் தவசி; நீ வீட்டு ஆட்சிக்கு அமையும் அரசி; இவற்றை நீ தெரிந்து கொள் அலசி” என்று விளக்கம் கூறினான்.

“பரிவு நீங்கிய மனத்தோடு பிரிவை எனக்குத் தருகிறாய்; ஏன் என்னை விட்டு நீ நீங்க வேண்டும்?”

“கட்டிய மனைவி கால்கட்டு, என்று வெட்டி விடத் துணிகிறாயா! மனைவி என்றால் மனைக்குத் தான் உரியவள் என்று விதிக்கிறாயா? காட்டுவழி முள் உடையது; பரல்கற்கள் சுடும் என்று கருதுகிறாயா?”

“குளிர் சாதனங்களில் பழகிய இவளுக்கு உபசாதனங்கள் அமைத்துத் தர முடியாது என்று அஞ்சுகின்றாயா?

“ஒன்றே ஒன்று கேட்கிறேன்; இதற்கு மட்டும் விடை கேட்கிறேன்; பிரினுவினும் சுடுமோ பெருங்காடு?”

“என் ஒருத்திக்குத்தான் இவ்வளவு பெரிய காட்டில் இடமில்லையா?” என்று கேட்டாள்.

“உன் இன்ப வாழ்விற்கு நான் இடையூறு என்று பட்டால் நிற்பதற்கு எனக்குத் தடையாதும் இல்லை” என்றாள்.

அன்பின் அழைப்பிற்கு அவன் அடி பணிந்தான். அதற்கு மேல் பேசுவதை நிறுத்திக் கொண்டான்.

சீரை சுற்றிய திருமகள் முன்னே நடந்தாள்; காரை ஒத்தவன் அவளைத் தொடர்ந்தான்; இவ்விருவர் பின்னான் இலக்குவன் நடந்தான்; இராமன் தாயரைக் கைகூப்பித் தொழுது இறுதி வணக்கம் செலுத்தினான்.

மகனையும் மருமகளையும் அவர்கள் வாழ்த்தி அனுப்பினர்; இலக்குவனை ஏத்திப் புகழ்ந்தனர். இராமன் தாயரை அரிதிற் பிரிந்து வசிட்டரை வணங்கிப் பின் தன் தம்பியும் சீதையுமாய்த் தேர் ஒன்றில் ஏறிச் சென்றான்.

காடு அடைதல்

இராமனைத் தொடர்ந்து நாட்டு மக்கள் பின் தொடர்ந்தனர்; இரண்டு யோசனை தூரம் நடந்தனர்; அவர்கள் வட்ட வடிவமாய் ஒரு யோசனை தூரம் இராமனைச் சூழ்ந்து கொண்டனர்.

இந்த மாபெருங்கூட்டத்தை எப்படித் திருப்புவது? என்று யோசித்தான்; இருட்பொழுது வந்தது; இராமன் சுமந்திரனைத் தனியே அழைத்தான்.

“நீ தேரை அயோத்திக்குத் திருப்பு” என்றான்.

சுமந்திரன் வியப்பு அடைந்தான்; இராமன் நாடு திரும்புகிறான் என்று நினைத்தான்.

“மக்கள் தேர்ச் சுவடு கண்டு நான் திரும்பிவிட்டதாய் நினைப்பர்; நாடு திரும்புவர்; அவர்களைத் திசை திருப்ப வேறு வழியில்லை; அவர்களைத் தடுத்து நிறுத்த இயலாது” என்று கூறினான்.

சுமந்திரன் சூழ்நிலையை அறிந்து கொண்டான்; வேறு வழி இல்லை.

சுமந்திரன் துன்பச் சுமையைச் சுமந்து நின்றான்; இராமன் திருமுகம் நோக்கினான்.

“என்ன? ஏன் தயக்கம்?” என்றான்.

மயக்கம் எனறான்.

“தசரதனை அன்னை கைகேயி கொல்லாமல் விட்டாள்; நான் கொன்று முடிப்பேன்” என்றான்.

“நின்று கொண்டு ஏதோ உளறுகிறாய்” சென்றுவா; என்றான்.

“இராமன் காடு ஏகினான் என்று நான் எப்படிச் சொல்வது? சொன்னால் அவர் வீடு சேர்தல் உறுதி” என்றான்.

“என் செய்வது? நான் திரும்புவேன் என்பது இயலாத செயல்; அதைத் தருமம் விரும்பாது, கடமை தவறினால் அது மடமையாகும்; அரசனும் வாய்மை தவறான்; அவர் சொல்லுக்கு உறுதி சேர்க்கிறேன்; அதனால் வரும் இறுதிகளைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும்; இழப்பு சிறிது; புகழ் பெரிது; இதை அறிக: நீ திரும்புக”” என்றான். “மறுமொழி கூறாமல் வேறு செய்திகள் சொல்லத்தக்கன உளவேல் செப்புக” என்று வேண்டினான்.

இராமன் அவனே செய்தியாய் அமைந்தான். சீதை வாய் திறந்தாள்.

“அரசர்க்கும் அத்தையர்க்கும் என் வணக்கத்தை இயம்புக”

“பூவையையும், கிளியையும் போற்றுக என்று எம் தங்கையர்க்குச் சாற்றுக” என்று கூறினாள்.

அடுத்து இலக்குவன் பேசினான்.

“இராமன் காட்டில் காயும், கனியும், கிழங்கும் உண்கிறான்; மன்னனை நாட்டில் சத்திய விரதன் என்று சொல்லிக் கொண்டு நித்தியம் சுவை ஆறும் கொண்ட உணவினை உண்ணச் சொல்க”

“இலக்குவன் தம்பியுடனோ, தமையனுடனோ பிறக்கவில்லை; அவன் தன் வலிமையையே துணையாகக் கொண்டு வாழ்கிறான் என்பதை எடுத்துக் கூறுக” என்றான்.

இராமன் தக்க சொல் சொல்லித் தம்பியைத் தணித்தான்; சுமந்திரனை அயோத்திக்குத் திரும்புமாறு பணித்தான் தானும், தையல்தன் கற்பும், தன் சால்பும், தம்பியும், கருணையும், நல்லுணர்வும், வாய்மையும் தன் வில்லுமே துணையாகக் கொண்டு காடு நோக்கிச் சென்றான்.

சுமந்திரன் திரும்புதல்

சுமந்திரன் தானும் தேருமாகமட்டும் திரும்பி வந்த செய்தியை அறிந்து வசிட்டரும் தசரதனும் இராமனைப் பற்றி வினவினர்.

“நம்பி சேயனோ அணியனோ?” என்று தசரதன் கேட்டான்.

“அதை நான் கவனிக்க முடியவில்லை. மூங்கில் நிறைந்த காட்டில் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும் போயினர்” என்று கூறினான்.

“சென்றவர் இனி மனம் மாறி வரப் போவதில்லை; அதே போலச் செல்லும் உயிரை நிறுத்துவதனால் விளையப்போவது யாதும் இல்லை” என்ற முடிவுக்கு வந்த மன்னன் விடைபெற்றுக் கொண்டான்; அவன் சடலத்தை மட்டும் அங்கே விட்டுச் சென்றான்.

கோசலையின் துயர்

“மன்னன் உயிர் பிரிந்தான்” என்ற நிலை கோசலையைத் துடிக்க வைத்தது. முதத்தை இழந்த அமரர்களைப் போலவும், மணியிழந்த நாகம் போலவும், இளம் குஞ்சுகளை இழந்த தாய்ப் பறவை போலவும், நீரற்ற குளத்து மீன் போலவும் பிரிவால் வாடினாள்; நிலைதடுமாறினாள்.

“காக்க வேண்டிய மகன், தந்தையின் உயிர் போக்கக் காரணமாய் இருந்தானே” என்று வருந்தினாள்.

“நண்டும், இப்பியும், வாழையும், மூங்கிலும் சந்ததிக்காகத்தான் அழிகின்றன. தசரதனும் மகனுக்காகத் தன்னை அழித்துக் கொண்டான்” என்று ஆறுதல் அடைந்தாள்.

மேகத்தில் மின்னல் புரளுவதைப் போலத் தசரதன் மார்பில் கிடந்து புரண்டாள்; சுமத்திரையும் துன்பச் சுமையால் அழுது உயிர் தளர்ந்தாள். மகனைப் பிரிந்த பிரிவும், கணவனை இழந்த துயரும் அவர்களை வாட்டின.

வசிட்ட முனிவர் ஈமக் கடனைச் செய்து முடிக்கப் பரதனை அழைத்துவர நாள் குறித்து, ஆள் போக்கி ஒலை அனுப்பினார்.

வழி அனுப்பச் சென்ற நாட்டு மாந்தர், உறக்கத் தினின்று விழித்து எழுந்தனர்; தேர்ச்சுவடு கண்டு “கார்நிறவண்ணன் ஊர் திரும்பிவிட்டான்” என்று அவர்களும் அயோத்தி திரும்பினர்.

கங்கையைக் கடத்தல்

வனம் புகு வாழ்வு, மனத்துக்கு இனிய காட்சிகளைத் தந்தது. கதிரவனின் ஒளியில் அவன் கரிய மேனி ஒளிவிட்டுத் திகழ்ந்தது. சீதையும் உடன்வரக் காட்டு வழியே நடந்தான். வழியில் களிஅன்னமும் மடஅன்னமும் உடன் ஆடுவதைக் கண்டனர். மேகமும் மின்னலும் போலவும், களிறும் பிடியும் தழுவிச் செல்லுதல் போலவும் இராமன் சீதையோடு நடந்து சென்றான்; அன்னம் தங்கும் பொழில்களை யும், சங்குகள் உறையும் எக்கர்களையும், மலாகள் சிந்தும் பொழில் களையும், பொன்னைக் கொழிக்கும் நதிகளையும் கண்டு மகிழ்ந்தனர்.

வழியில் தவசிகள் அவர்களை வரவேற்றனர்; தம் தவப் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்; அரும் புனலில் நீராடித் தீயை ஒம்பிப் பின் அமுது உண்ணும்படி வேண்டினர்.

சீதையின் கரம்பற்றி இராமன் கங்கையில் நீராடினான். அவள் இடையழக்குத் தோற்று வஞ்சிக் கொடி நீரில் முழுகியது. அன்னம் நடைக்குத் தோற்று ஒதுங்கியது. கயல் கண்ணுக்குத் தோற்றது; நீரில் பிறழ்ந்து ஒளிந்தது. கூந்தலின் நறுமணம் கங்கையை வெறி கொளச் செய்தது; அலைகளில் நுரை பொங்கி யதால் கங்கை மூத்துவிட்டது போல் நரை பெற்றது; இதுவரை தன்னில் நீராடுவர்களைப் புனிதப்படுத்தியது; சீதை நீராடியதால் அது புனிதம் அடைந்தது.

நீராடிய பின் நியதிப்படி நிமலனை வணங்கி வேள்விக் கடன்கன் செய்து முடித்தனர்; பின் அம் முனிவர் இட்ட உணவை ஏற்றனர்; “அமுதினும் இனியது” என அதனைப் பாராட்டினர்.

குகன் வருகை

அங்கே அவர்கள் இருக்கும் இடம்தேடித் தறுக்கு மிக்கவேடுவர் தலைவன் குகன் வில்லேந்தியவனாய் வந்து சேர்ந்தான்; அவன் கல்லினும் வலிய தோளினன். படகுகள் ஆயிரத்துக்கு அவன் நாயகன்; கரிய நிறத்தினன்; யானைக் கூட்டம் போன்ற அரிய சுற்றத்தினன்; சீற்றமின்றியும் தீயெழ நோக்கும் விழியினன்; கூற்றுவனும் அஞ்சும் குரலினன்; சிருங்கிபேரம் என்னும் நகர் மருங்கு வாழ்ந்துவருபவன், தேனும் மீனும் ஏந்தி, மானவன் ஆகிய இராமனைக் காண வந்தான்; அவன் தங்கியிருந்த தவப்பள்ளியின் வாயிலை அடைந்தான்.

“இறைவா! நின் கழல் சேவிக்க வந்தனன்” என்றான். இலக்குவன் அவனை மேலும் விசாரித்தான்.

மீனும் தேனும் இராமன் உண்டு பழக்கம் இல்லை; எனினும், அன்பன் கொண்டு வந்து அளித்தவை ஆதலின் அவற்றை வேண்டா என்று மறுக்கவில்லை.

“அன்புடன் படைத்தது; தின்பதற்கு இனியது” என்று கூறி ஏற்றுக்கொண்டான் “அமுதினும் இனியது” என்று பாராட்டினான்; “இதை யாம் ஏற்றுக்கொண்டோம்; அதுவே உண்டதற்குச் சமம்; நீர் மனநிறைவு கொள்ளலாம்” என்று கூறி அவற்றை அவர்களிடமே திருப்பித் தந்தான்; கண்ணப்பன் ஒப்பதோர் அன்பினை அவ்வேடன்பால் கண்டான்; காளத்தி வேடனாகக் கங்கை வேடனைக் கருதினான்.

“உன்னை இந்நிலையில் பார்த்த கண்ணைப் பிடுங்கி எறியாமல் இருக்கின்றேனே” என்று கூறி அங்கலாய்த் தான் குகன். அவன் ஆழ்ந்த அன்பு இராமனைக் கவர்ந்துவிட்டது. “யாதினும் இனிய நண்பனே என்னோடு இருப்பாயாக!” என்று குழைந்து அவனை ஏற்றுக் கொண்டான். குகன் தன் சேனையைச் சுற்றியும் காவல் செய்யுமாறு செய்து, தானும் உறங்காமல் கறங்கு போல் சுற்றி வந்து காவல் செய்தான்.

மறுநாள் பொழுது விடிந்தது; இராமன் காலைக் கடனை முடித்தான்; வேதியர் சிலர் அவனைத் தொடர்ந்து வந்தனர்; குகனைப் பார்த்து இராமன், “படகினைக் கொணர்க; “கங்கையைக் கடந்து அக் கரை போக வேண்டும்” என்றான்.

இராமன் மீது அக்கறை காட்டினான். “வனத்து வாழ்வை ஏற்றுத்தான் ஆகவேண்டுமா? இங்கே எங்களோடு கங்கைக் கரையிலேயே நங்கை சீதையோடு தங்கிவிடலாமே?”.

“காலமெல்லாம் இங்கே தங்கி வாழ்ந்து முடிக்கலாம்; இங்கே உங்களுக்கு என்ன குறை? நாங்கள் காட்டு மனிதர்தான்; எனினும், உம் பகைவர்க்கு உங்களைக் காட்டிக் கொடுக்கமாட்டோம்; உண்ண உணவு, உடுக்க உடை, தங்க உறையுள் இவற்றை அமைத்துத் தருகிறோம்.

“தேனும் தினையும், ஊனும் மீனும் உள்ளன; திரிந்து விளையாட விரிந்த காடுகள் உள்ளன. நீந்தி விளையாட நீர்நிறைந்த கங்கை நதி இருக்கிறது. உறுதுணையாகத் தறுகண்மை மிக்க எம் வீரர் உளர்; ஏவலுக்கும் காவலுக்கும் கணக்கற்ற வீரர்கள் இங்கே காத்துக்கிடக்கின்றார்கள்” என்று அன்பு காட்டி வேண்டினான்.

“வீரனே! இங்கு வந்தது சுற்றுலாப் பயணம் செய்ய அன்று; உண்டு உறங்கிக் களித்து விளையாட அன்று; புண்ணிய நதிகள் ஆடவும், ஞான நன்னெறி நண்ணவுமேயாகும்; இதுவே என் அன்னையின் அன்புக் கட்டளை; இது எமக்கு ஏற்பட்ட கால் தளை, பதினான்கு ஆண்டுகள் விரைவில் கழிந்துவிடும். திரும்பும்போது விரும்பி உங்களைச் சந்திப்போம்; உம் விருந்து ஏற்போம்” என்று கூறினான்.

“யாம் உடன் பிறந்தவர் நால்வர்; உன்னோடும் சேர்ந்து ஐவர் ஆகிவிட்டோம்” என்று ஆறுதல் கூறினான்.

குகன் அதற்குமேல் அதிகம் பேச, அவன் அடக்கம் இடம் அளிக்கவில்லை. அவன் கடமை செய்வதில் நாட்டம் கொண்டான். ஒடம் ஒன்று வந்து நின்றது. அதில் மூவரும் ஏறிக் கங்கையைக் கடந்து அடுத்த கரை சேர்ந்தனர்.

வனம்புகு வரலாறு

இளவேனிற் காலம் அந்தக் காட்டுக்குப் பொலிவை ஊட்டியது; இராமன் வரவும் முகில்கள் பூ மழை பொழிந்தன; வெய்யில் இளநிலவைப் போலத் தண் கதிர்களை வீசியது; மரங்கள் தழைத்து நறுநிழல் தந்தன. பனித்துளிகள் சிதறின. இளந்தென்றல் மலர்களில் படிந்து மணம் அள்ளி வீசியது; மயிலினம் நடமாடின; இத்தகைய காட்டுவழியில் இராமன் இனிதாய் நடந்து சென்றான்.

மூவரும் சித்திர கூடம் நோக்கிச் சென்று கொண்டு இருந்தனர். வழியில் பரத்துவாசர் ஆசிரமம் காணப் பட்டது. முனிவர் அவர்களைச் சந்தித்தார்; இராமன் துன்பக் கதையைக் கேட்டு, அன்பு மொழி பேசி ஆதரவு காட்டினார்.

“இந்த ஆசிரமத்திலேயே தங்கி, நீங்கள் அமைதியாகத் தவம் செய்துகொண்டு இருக்கலாம்; இங்கு நீரும், மலரும், காயும், கனியும் நிரம்ப உள்ளன; இது தவம் செய்யத் தக்க சூழ்நிலை உடையது. நதிகள் மூன்றும் சங்கமிக்கும் இடம் இது; அவை கங்கை, யமுனை, சரசுவதி எனும் மூன்று நதிகளின் சங்கமம்” என்றார் முனிவர்.

“இது தவம் செய்யத்தக்க இடம்தான் என்றாலும், எம் நாடாகிய கோசலை நாட்டுக்கு ஒரு யோசனை தூரத்திலேயே இது உள்ளது. இங்கு இருப்பது அறிந்து மக்கள் தொக்கு வந்து தொல்லை தருவர்; அதனால், சேய்மையில் உள்ள சித்திரகூட மலைச் சாரலே தக்கது ஆகும்” என்று கூறி, அவர் கூற்றை மறுத்தான் இராமன்.

பரத்துவாசரிடை விடை பெற்று யமுனைக் கரையை அடைந்தனர்; அதனைக் கடத்தித் தர ஒரு குகன் அங்கே இல்லை; படகும் இல்லை; என் செய்வது? இலக்குவன் அங்கிருந்த மூங்கிற் கழிகளைக் கயிற்றால் பிணைத்துத் தெப்பம் அமைந்தான்; அவர்களை அமரச் செய்தான்; துடுப்புகள் தேவைப்படவில்லை. அவன் கைகளே துடுப்புகள் ஆயின, நீரைத் துடுப்புப் போலத் தள்ளி யமுனையைக் கடந்து அடுத்த கரை வந்து சேர்ந்தான். அந்தக் கரையைக் கடந்து சென்றபோது அவர்கள் கல்லும் முள்ளும் கலந்த பாலை நிலத்தைக் கடக்க நேரிட்டது. காலை வைத்து நடக்க முடியவில்லை. இராமன் ஆணைக்கு அஞ்சிப் பகலவனும் பால் நிலவைப் பொழிந்தான்; தணல் வீசும் இடங்கள் தண்பொழில்களாகக் குளிர்ந்தன. கற்கள் மலரென மென்மை பெற்றன. கூரிய பற்களை உடைய புலிகள் கொலைத் தொழிலை மறந்தன. அப்பாலை நிலத்தைக் கடந்து, சித்திரகூட மலையை அடைந்தனர்.

சித்திரகூட மலை

சித்திரகூட மலை எழில்மிக்கதாய் விளங்கியது. மலையடியில் ஏலக் கொடியும், பச்சிலை மரமும் தவழ்ந்தன; சாரல் பகுதியில் யானையும் மேகமும் வேறுபாடின்றிப் படர்ந்தன; மலை உச்சியில் வருடைமான் கதிரவனின் பச்சை நிறக்குதிரைபோல் பாய்ந்தது; யானைகளை விழுங்கிய மலைப் பாம்புகளின் தோல்கள், மூங்கில்களில் சிக்கிக் கொடிச் சீலைகள்போல் காட்சி அளித்தன; சிங்கம் தாக்கிய யானைகளின் தந்தங்களிலிருந்து சிந்திய முத்துகள் சிதறிக் கிடந்தன.

பாறைகளில் வேங்கைப் பூக்கள் படர்ந்தன; சந்தனச் சோலைகள் சந்திரனைத் தொட்டுக்கொண்டு இருந்தன; கொடிச்சியர் கின்னர இசை கேட்டு மகிழ்ந்தனர்; வேடுவர் கவலைக் கிழங்கை அகழ்ந்து எடுத்தனர்; குரங்குகள் நீரைச் சொரிந்து விளையாடின; கான்யாற்றில் விண்மீனைப் போல மீன்கள் துள்ளி ஒளி செய்தன; அரம்பையர் அங்கிருந்த அருவிகளில் நீராடி ஆரவாரித்தனர்.

அங்கேயே நிரந்தரமாய்த் தங்குவது என்று இராம இலக்குவனர் முடிவு செய்தனர். அவர்கள் தங்கி இருக்கப் பர்ணசாலை ஒன்று இலக்குவன் வகுத்துக் கொடுத்தான்.

மூங்கில் துண்டுகளைக் கால்களாக நிறுத்தினான்; அவற்றின்மீது நீண்ட துலத்தை வைத்து, வரிச்சில் களை ஏற்றிக் கட்டினான்; ஒலைகளைக் கொண்டு அவற்றை மூடினான்; தேக்கு இலையால் கூரையைச் சமைத்தான்; நாணல் புல்லை அதன்மீது பரப்பினான்; சுற்றிலும் மூங்கிலால் சுவரை வைத்து, மண்ணைப் பிசைந்து நீரைத் தெளித்து ஒழுங்குபடுத்தினான்.

கல்லும் முள்ளும் அடங்கிய காட்டில் சீதையின் மெல்லிய அடிகள் நடந்து பழகின. “இன்னல் வரும் போது எதையும் தாங்கும் ஆற்றல் உண்டாகிறது” என்று இராமன் கூறினான்; தம்பியின் கைகள் இப்பர்ண சாலையை அமைத்துத் தந்ததைக் கண்டு வியந்தான்; அவன் செயல்திறனைப் பாராட்டினான்.

இராமன் தம்பியை நோக்கி, “உலகில் பொருட் செல்வத்துக்கு அழிவு உண்டு; அறத்தின் அடிப்படை யில் விளையக் கூடிய இன்பத்திற்கு நிகர் எதுவும் இல்லை; ஆட்சி நிலைப்பது அன்று; தவம்தான் நிலையானது” என்று தத்துவம் போதித்தான்; தவ வாழ்க்கையில் அவர்கள் ஈடுபட்டனர்.

பரதன் வருகை

வசிட்டர் அனுப்பிய தூதர் பரதனிடம் ஒலை தந்தனர். “தசரதன் அழைக்கின்றான்” என்று மட்டும் அதில் எழுதியிருந்தது.

முடங்கல் கண்டதும் தடங்கல் இன்றிப் புறப் பட்டான் பரதன், இராமனைக் காணும் ஆர்வம் அவனை உந்தியது; இளயவன் சந்துருக்கனனும் உடன் புறப்பட்டான்.

பரதன் பயணம் ஏழுநாள் தொடர்ந்தது; எட்டாம் நாள் கோசல நாட்டை அடைந்தான்; அயோத்தியை அடைந்தான். ஆனால், அந்நாட்டை அவனால் காண முடியவில்லை. ‘கொடிச் சீலைகள் ஆடி அசைந்து அவனை வரவேற்கும்’ என்று எதிர்பார்த்தான்; அவை அரைக் கம்பத்தில் தொங்கி உயிருக்கு ஊசல் ஆடிக் கொண்டிருந்தன; “வண்ண மலர்கள் கண்ணைப் பறிக்கும்” என்று எதிர்பார்த்தான்; இவை வாடி வதங்கிச் சோககீதம் பாடிக் கொண்டிருந்தன; வயல்கள் உழுவார் அற்று ஊடல் கொண்ட பத்தினிப் பெண்டிராய் விளங்கின. பல நிறச் சேலை அணியும் உழத்தியர், நிலத்தில் புகுந்து களை பறிக்கக் கால் வைக்கவில்லை; உழவர்களின் ஏர்கள் துறவுக் கோலம் பூண்டு, மூலையில் முடங்கிக்கிடந்தன. குவளை மலர்கள் கண்திறந்து பார்க்க மறுத்துவிட்டன. தாமரை மலர்கள் தடாகங்களில் தலைகாட்டத் தவறி விட்டன; பாவையர் மொழிகளைப் பேசி, இச்சைப்படி மகிழும் பச்சைக் கிளிகள் மவுனம் சாதித்தன.

மகளிர் பூ இல் வறுந்தலையராய்க் காட்சி அளித்தனர். மாறிமாறி ஒலிக்கும் யாழும் குழலும் இசைப்பார் அற்று அசைவற்றுக் கிடந்தன; அரங்குகளில் ஆடல் மகளிர் அடியெடுத்து வைப்பதை நிறுத்திக் கொண்டனர்; நீர்நிலைகளில் வண்ண மகளிர் குடைந்து நீராடிப் பண்கள் மிழற்றுவதை நிறுத்திவிட்டனர்; பொன்னகை இழந்த மகளிர் புன்னகை யையும் இழந்தனர்; அகிற்புகை, ‘அடுப்புப் புகை, வேள்விப்புகை எல்லாம் புகைபிடிக்கக் கூடாது என்ற விளம்பரத்திற்கு அடிமையாகிவிட்டன.

தெய்வங்கள் அந்த நகரில் தங்காமல் தேசாந்திரம் சென்றுவிட்டன; கோயில் மணிகள் நாவசைந்து நாதம் எழுப்பவில்லை; பயிர்கள் பசுமையை இழந்து விட்டன; தான் இருப்பது அயோத்திதான் என்பதை அவனால் கண்டுகொள்ள முடியவில்லை.

நகரில் ஒவியத்தைக் காண முடிந்ததே அன்றி எந்தக் காவியத்தையும் காணமுடியவில்லை; சிலைகள் அசைவதை மக்கள் அசைவில் கண்டான். அவனுக்கு வரவேற்பே இல்லை. வாழ்த்துகள் மலரவில்லை; அவன் தேரைக் கண்டதும் மக்கள் ஒரம் கட்டினர்; ஒதுங்கி மறைந்தனர்; அந்நிய நாட்டில் அடியெடுத்து வைத்துவிட்டது போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது.

தசரதன் மாளிகை நோக்கிப் பரதன் தேரைச் செலுத்தினான். அரண்மனைக் கட்டடங்கள் விதவைக் கோலத்தை விரும்பி ஏற்றுக்கொண்டன. ‘தசரதனை அவன் கண்கள் துருவித்தேடின. தசரதன் கண்கள் மூடிக்கிடந்தன. இவன் வந்ததைத் தசரதன் பார்க்க இயலவில்லை. பார்வையை இழந்தான். அதற்குள் பணிப்பெண் ஒருத்தி பரதன்முன் வந்து நின்றாள்; ‘அன்னை உன்னை அழைக்கிறார்’ என்றாள்; அதற்குமேல் அவள் சொல்ல அனுமதி இல்லை.

தாயைக் காணச் சென்றான்; அங்குப் பேய் ஒன்று நின்று பேசியது.

“உன் தந்தைக்கு வானுலகத்தினின்று அழைப்பு வந்தது; மறுக்க முடியாமல் அவர் போய்விட்டார்” என்றாள்.

மங்கலமாகச் சொன்ன அச்சொற்களை அவனால் சுவைக்க முடியவில்லை.

“இது முதலில் தோன்றிய மின்னல்; அடுத்து இடி ஒலியும் கேட்டது.

“தவத்தை நாடித் தனயன் இராமன் வனத்துக்கு ஏகிவிட்டான்; பத்தினிப் பெண் ஆகையால், சீதையும் உடன் பயணம் மேற்கொண்டாள்; தம்பி யாகையால் அண்ணனை நம்பி இலக்குவனும் உடன் சென்றான்” என்றாள்.

முகத்திரை விலகியது; முழுமதியைக் காண வில்லை; பல்லவி முடிந்தது; அனுபல்லவி தொடர்ந்தது.

“உன்னை நாட்டுக்கு அரசனாக்கினேன்; என் வாழ்க்கை லட்சியம் நிறைவேறிவிட்டது” என்றாள்.

“பாலூட்டி வளர்த்தவள் பழிதந்து அழிப்பாள்” என்று அவன் எதிர்பார்க்கவில்லை; அமுது என நினைத்து ஆலகால நஞ்சை அவள் தந்திருப்பதை அறிந்தான்; “பாற்கடலில் அமுதம் அன்றி, நஞ்சும் பிறக்கும்” என்ற கதையை அவள் மெய்ப்பித்துவிட்டாள் என்பதை அறிந்தான்; பாசம் விளைவித்த நாசத்தை அறிந்தான்; தன் தாய் கொடுமை செய்வதில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள் என்பதை உணர்ந்தான்; மறுபடியும் அவள் முகத்தில் விழிக்க அவன் விழிகள் அஞ்சின; கோசலையிருக்கும் இடம் தேடி ஒடலானான்; “அரவுக்கு நஞ்சு பல்லில்; அன்னைக்கு நஞ்சு சொல்லில்” என்பதை உணர்ந்தான்.

அன்னை கோசலை அடிகளில் விழுந்து வணங் கினான்; “பரதனுக்கும் இச்சூழ்ச்சியில் பங்கு உண்டு” என்று தவறாகக் கருதினாள் அவள்; பார்வையில் அவ்வினாக்குறி அமைந்திருந்தது.

அவன் விழிகளில் வழிந்த கண்ணிர் அம் மாசினைத் துடைத்தது.

“பாசத்தால் உன்தாய் தவறு செய்துவிட்டாள்; தவறு நடந்துவிட்டது; முதலிலேயே களைந்து இருக்க வேண் டும்; இப்பொழுது முள்மரம் ஆகிவிட்டது” என்றாள்.

“சூழ்ச்சிக்கு உடந்தையாய் நான் இருந்திருந்தால் நரகத்தின் கதவு எனக்காகத் திறந்திருக்கும்; அக் கொடுமைக்கு நான் காரணம் அல்லன்; அவள் வயிற்றில் பிறந்ததுதான் கொடுமை” என்றான்.

நெஞ்சு துளைக்கப்பட்டுப் பரதன் அஞ்சி அழுது அலறுவதைக் கண்டாள்; ஆறுதல் கூறி ஆற்றினாள்; இராமனை அவன் வடிவிற்கண்டு ஆறுதல் பெற்றாள்; தன் கண்ணிரைக் கொண்டு அவனைக் குளிப் பாட்டினாள்; சத்துருக்கனன்; அவள் திருவடிகளில் விழுந்து வணங்கினான்.

“மன்னன் உயிர் நீங்கி, ஏழு நாள்கள் ஆகின்றன; இன்று நாள் எட்டு; அவனுக்கு ஈமக் கடன் செய்து முடிக்க வேண்டும்; எரி தழலில் வைத்து நெறிப்படி இறுதிக்கடன் செய்யவேண்டும்” என்றார் வசிட்டர். முனிவரோடு சென்று வாய்மை மன்னன் அறத்தின் திருஉருவைக் கண்டான்; விழுந்து அலறினான்; எண்ணெய் உண்ட எழில் மேனியைக் கண்ணிர் கொண்டு கழுவினான்.

“கருமக்கடன் செய்தல் தருமம்” என்று அவன் தொடங்கினான்; வசிட்டர் திருத்தம் கொண்டு வந்தார்.

“உனக்கு அருகதை இல்லை” என்றார்.

“அந்தச் சிறு கதை என்ன?” என்று கேட்டான்.

“நீ அவர் சடலத்தைத் தொடக்கூடாது, என்பது தசரதன் ஆணை; அவர் சாவுக்கு உன்தாய் காரணம் ஆதலின், நீ தொடக் தகாதவன் ஆகிவிட்டாய்” என்றார்.

“ஆட்சி உரிமை தந்த மன்னன் எந்த அடிப்படையில் தந்தான்? மகன் என்பதால்தானே! அதை எப்படி இப்பொழுது மறுக்க முடியும்? என்று வினவினான்.

“ஆட்சிக்கும் உரிமை இல்லை? என்பது இதனால் தெளிவாகிறது அன்றோ எனத் தெளிவுபடுத்தினான்.

“சத்துருக்கனன் எந்தத் தவற்றுக்கும் ஆளாக வில்லை; அவனே தக்கவன்” என்று வசிட்டர் கூறத் தம்பியைக் கொண்டு தணல் மூட்டித் தந்தையின் இறுதிக் கடனைப் பரதன் முடித்தான்.

நாள்கள் சில நகர்ந்தன; ஆள்கள் வந்து அவனைச் சூழ்ந்தனர்; அமைச்சர், அந்தணர், நகரமாந்தர் வசிட்டர் அவனை அணுகினர். “நாட்டுக்குத் தலைவன் இல்லை, என்றால், ஆட்சி செம்மையாய் நடைபெறாது; சட்டமும் ஒழுங்கும் கெட்டுவிடும்; மற்றைய அறங்களும் செம்மையாய் நடைபெறா; பகைவர் போர் தொடுப்பர்; நீதியும் நிலை குறையும்; உழவும் தொழிலும் ஒய்வு கொள்ளும்; ஆட்சி ஏற்று நடத்துக” என்று வேண்டினர்.

“அண்ணன் இருக்கத் தம்பி ஆட்சியை ஏற்பதில் நியாயம் இல்லை” என்றான் பரதன்.

“தெய்வம் அவனை வேறு வழியில் திருப்பி விட்டது: அறம் தழைக்க நீ ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன; இங்கு இருப்பது நீயும் உன் தம்பியும்தான்; சூரிய குலத்துக்குச் சுடர் விளக்காக இருக்கும் நீங்கள், பொறுப்பேற்று நானிலத்தை வழிநடத்த வேண்டும்; நல்லதோ கெட்டதோ அரசன் வாய்மொழி! அதற்கு நீ கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும்; நீ மன்னனாய்ப் பொறுப்பு ஏற்க வேண்டும்; மணிமுடி சூட வேண்டும்” என்பது தசரதன் கட்டளை, ‘நீ அதனைச் செயல்படுத்த வேண்டும்” என்பது, நாங்கள் பூட்டும் தளை’ என்று தெரிவித்தனர்.

“உங்கள் ஆர்வத்தை மதிக்கிறேன்; ஆனால், அவசரத்தை எதிர்க்கிறேன்; இராமன் மணி முடிதரிப்பதில் உங்களுக்குத் தடை இராது என்று நினைக்கிறேன்” என்றான்.

கிணறு வெட்டப் புதையல் கிடைத்தது போல இருந்தது; புதுமையாய் இருந்தது; உள்ளப் பூரிப்பைத் தூண்டியது; மூச்சுச் சிறிது நேரம் நின்றுவிட்டது அவன் சொற்களை ஆர்வத்தோடு எதிர்பார்த்தனர்.

“'நான் இராமனை அழைத்துவர ஏகுகிறேன்; அவன் வாராவிட்டால் தவசியர் நால்வர் ஆவோம் என்பது உறுதி; சடைமுடியைத் தரித்துச் சந்நியாசியராய் அங்கு அவனோடு காலம் கடத்துவோம்; அதற்கும் அனுமதி இல்லை என்றால், என் உயிர் என்னிடம் அனுமதி பெற்றுச் சென்றுவிடும்” என்றான்.

அவன் திண்மையைக் கண்டு நாட்டோர் திகைத் தனர்; உறுதியாய் நன்மை விளையும் என்று நம்பினர்.

“தனி ஒருவனால் இதைச் சாதிக்க முடியாது; இராமன் திரும்பி வரும்போது அரச மரியாதையோடுதான் வர வேண்டும்; அவனைப் பேரரசனாய்ப் பார்க்க வேண்டும்; நால்வகைப் படையும் அவனைத் தொடர்ந்து வர வேண்டும்” என்றான்.

நகரமாந்தரும் நல்லோர் அனைவரும் உடன் செல்லப் புறப்பட்டனர்; சுற்றத்தவரும் உடன் செல்லப் புறப்பட்டனர்; அன்னையரும் அங்கிருந்து அடையும் பயன் இல்லை ஆதலின், அவர்களும் உடன் செல்ல எழுந்தனர்; கைகேயியும் எதிர் நீச்சல் அடிக்க முடியாமல் வெள்ளத்தில் ஒருத்தியாய்க் கலந்து கொண்டாள்; அவள் எடுத்த முடிவு தோற்றுவிட்டது; குதிரையைக் குளத்திற்குக் கொண்டு போனாள்; குதிரை நீர் குடிக்க மறுத்துவிட்டது; குதிரை அவளைத் தட்டி அவளுக்குக் குழிபறித்துவிட்டது.

கூனி படைத்த கைகேயி மாய்ந்துவிட்டாள்; ‘மா கயத்தி’ என்று பேசப்பட்ட தீமை அவளிடமிருந்து நீங்கிவிட்டது; மூவரில் ஒருத்தியாய் மாறி நின்றாள்; புதிய அலைகளில் அவளும் ஒருமிதக்கும் சருகானாள்; பரதனுக்குக் கைகேயி மரவுரி எடுத்துக் கொடுக்க வர வில்லை; வற்கலையை அவனே உடுத்திக் கொண்டான்; தவக்கோலம் தாங்கி நின்றான்; முடிவில்லாத துன்பத்துக்கு உறைவிடமானான்; தம்பியும் தவக்கோலம் பூண்டு, பரதனுக்கு ஒர் இலக்குவன் ஆனான்; இராமனை அழைத்து வருவது, அல்லது உயிர்விடுவது, அல்லது தாமும் தவம் செய்வது என்ற உறுதியோடு புறப்பட்டனர்; இராமன் இருக்கும் இடம் சேய்மையாகையால் தேர் ஏறிச் சென்றனர்.

தாய்மாரும், தவத்தைச் செய்கின்ற முனிவரும், தன் தந்தை போன்ற பெருமைமிக்க அமைச்சரும், வசிட்டரும், தூய அந்தணரும், அளவற்ற சுற்றத்தினரும் பின் தொடர்ந்துவர, அயோத்தி மாநகரின் மதிலைப் பரதன் அடைந்தான்.

நொண்டிக் குதிரை ஒண்டியாகச் செல்வதைப் போல நச்சு வித்தாய் விளங்கிய கூனியும் கூட்டத்தில் ஒருத்தியாய் துரிதமாய் முன்னோக்கி நடப்பதைச் சத்துருக்கனன் பார்த்தான்; அவளைத் துக்கி எறிந்து தாக்க எழுந்தான்; பரதன் அவனைத் தடுத்து நிறுத்தினான்.

“அவள் பயணம் தொடரட்டும்; அதைத் தடுக்க நாம் யார்? மூல நெருப்பு அவள்; முண்டெழுந்த செந்தழல் என் தாய்; பாசத்தால் என் தாயை நான் கொல்லாமல்விட விரும்பவில்லை; ‘இராமன்முன் விழிக்க முடியாதே’ என்பதால்தான் விட்டுவிட்டேன்; அந்தத் தவற்றை நீயும் செய்ய வேண்டா என்று கூறித் தடுத்தான்.

இராமன் தங்கியிருந்த புல் தரைகளும், சோலைகளும் பரதனுக்குப் புண்ணிய கூேடித்திரங்கள் ஆயின; இராமன் தங்கியிருந்த சோலையில் பரதனும் தங்கினான்; கரடு முரடான பாதைகளையும், கல்லும் முள்ளும் கலந்த புல்தரைகளையும் காணும்போதெல்லாம் அவன் கண்கள் குளம் ஆயின; மலையில் கிடைக்கும் கிழங்குகளையும், பழங்களையும் உண்டு பசியைப் போக்கிக்கொண்டான்; இராமபிரான் தங்கியிருந்த புழுதியில் புல்படுக்கையில் தானும் படுத்தான்; ‘அங்கிருந்து இராமன் காலால் நடந்து சென்றான்’ என்ற காரணத்தால் தேர்களும் குதிரைகளும், யானைகளும் பின் தொடரத்தானும் காலால் நடந்து சென்றான்.

குகனைச் சந்தித்தல்

கோசலை நாட்டைக் கடந்து கங்கைக் கரையை அடைந்தான் பரதன், சேனைகள் எழுப்பிய துகள், அவன் வருகையைக் குகனுக்கு அறிவித்தது. குகன் கொதித்து எழுந்தான்; தன் படையைக் கொண்டு பரதன் எதிர்க்க அவற்றை அருகில் கூவி அழைத்தான்.

“அஞ்சன வண்ணன் என் ஆருயிர் நாயகனாகிய இராமன் ஆளாமல், வஞ்சனையால் அரசு வவ்விய மன்னர்கள் வந்திருக்கிறார்கள்; யான் விடும் அம்புகள் தீ உமிழும் தகையன; அவை அவர்கள் மார்பில் பாயாமல் போகா, அவர்கள் தப்பிப் பிழைத்துச் சென்றால் என்னைக் கேவலம் “நாய்க்குகன்” என்று உலகம் ஏசும்; ‘குரைக்கத் தெரியுமே தவிரக் கடிக்கத் தெரியாது” என்று உலகம் இகழும்.

“ஆழம் மிக்க இவ் ஆற்றை இவர்கள் எப்படி என் உதவி இல்லாமல் கடக்க முடியும்? யானைப்படை கொண்டு வந்தால் அதைக் கண்டு நடுங்கிப்போக நான் ஒரு சிற்றெலியா? “தோழமை” என்று அவர் சொல்லிய சொல் ஒன்றேபோதும்; அவர்களை எதிர்த்து உயிர்விட்டால் அதுவே எனக்குப் பெருமை; “இந்தக் கோழை வேடன் எதிர்த்து இறக்கவில்லை” என்ற பழியை நான் ஏற்க மாட்டேன்.”

“பரதனது சேனையைச் சாடி அழித்து இராமனே ஆளும்படி வேடுவர் ஆட்சியை மீட்டுத் தந்தனர்” என்ற புகழுக்கு உரிமை உடையவன் ஆவேன்; நாடு கொடுத்த என் நாயகனுக்கு இவர்கள், நாம் ஆளும் காடும் கொடுக்க மறுக்கிறார்களே! படை எடுத்து அழிக்க வருகிறார்களே!” என்று வீரர்களிடம் உரை நிகழ்த்தினான்.

இராமனுக்கு அன்பனாகிய குகன், இவ்வாறு பேசி நிற்பதைக் கண்ட பரதன், “இவன் யார்? என்று சுமந்திரனைக் கேட்டான். சுமந்திரன் அவனை அறிமுகப் படுத்தினான்.

“கங்கையின் இருகரையும் இவன் ஆட்சிக்கு உட் பட்டவை; அளவற்ற மரக்கலங்களுக்கு உரியவன்; இராமனுக்கு உயிர்த் துணைவன்; களிறு போன்ற திண்மையும், பெருமையும் உடையவன்; கடல் போன்ற படைகளை உடையவன்; “குகன்” என்பது அவன் பெயர்; உன்னைக் கண்டு வரவேற்க நிற்கின்றான்” என்று கூறினான்.

‘சுமந்திரன் கூறிய சொற்களைக் கேட்டுப் பரதன் உள்ளம் குளிர்ந்தான்; இராமனுக்கு இனிய துணை வனாய் அவன் என்னைக் காண்பதற்குமுன் நானே போய் அவனைக் காண்பேன்’ என்று சொல்லிப் புறப்பட்டான்.

மரவுரி ஆடையும், மாசடைந்த மேனியும், சிரிப்பு இழந்த முகமும், கனியும் துயரமும் உடைய பரதனைக் கண்டான் குகன், கையில் இருந்த வில் தானாகவே கீழே நெகிழ்ந்து விழுந்தது; விம்மி விம்மி அழுதான்.

‘தாயுரை கொண்டு, தந்தை உதவிய தரணியைத் ‘தீவினை’ என்று கூறித் துறந்து, சிந்தனையை முகத்தில் தேக்கிக் காட்டுகிறான் என்றால் அவனைவிடச் சிறந்த தியாகி யாரும் இருக்க முடியாது; புகழுக்கு உரியவன் ஆகிவிட்டான்; அவன் தன்மைக்கு ஆயிரம் இராமர் ஒன்று கூடினும் நிகராய் இருக்க முடியாது’ என்று கூறிப் பாராட்டினான்.

‘இராமன் எங்கே உறங்கினான்? இலக்குவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்?’ என்ற கேள்வி களைப் பரதன் கேட்டான்.

“அல்லை ஆண்டு அமைந்தமேனி அழகனும் அவளும் துஞ்ச, வில்லையூன்றியகையோடும் வெய்துயிர்ப் போடும் வரன்,

கல்லையாண்டு உயர்ந்த தோளாய்! கண்கள் நீர் சொரியக் கங்குல்

எல்லைகாண் பளவும் நின்றான்; இமைப்பிலன் நயனம் என்றான்”.

அழகனும் அவளும் துயில் கொள்ள இளவல் அவர்களுக்காகக் காவல் காத்தான்; உறக்கம் நீத்தான் என்று குகன் விவரித்தான்.

‘யான் துன்பத்துக்குக் காரணம் ஆயினேன்; இலக்குவன் அதைக் துடைக்க நின்றான்; அவன் அன்புக்கு ள்ல்லையே இல்லை; என் அடிமைத்தனம் அழகிது’ என்றான் பரதன்.

நங்கையர் நடையின் அன்ன நாவாய்கள் கங்கையில் இடமே இல்லாதபடி நிறைந்துவிட்டன; அவை வந்தவர் களைக் கரை ஏற்றின.

தன் தம்பியும், தாயர் மூவரும், சுமந்திரனும், குகனும் ஒரே படகில் ஏறிச் சென்றனர்.

குகன் கோசலையைத் தொழுது நோக்கி, “இவர் யார்?” என்று வினவினான்.

‘தசரதன் முதல்தேவி, இராமன் தாய்; அவனைப் பெற்றதால் அடைந்த செல்வத்தை யான் பிறந்ததால் இழந்த பெரியாள்’ என்றான் பரதன்.

அடுத்துச் சுமித்திரையை அறிமுகம் செய்தான்.

“இராமனுக்குப் பின்பிறந்தான் என்னும் பெருமைக் குரிய இலக்குவனைப் பெற்றெடுத்த பெருமை உடையவள் இவள் என்றான்.

அடுத்துக் கைகேயியை அறிமுகம் செய்தான்.

“இத் துன்பங்களுக்குகெல்லாம் காரணமாய் நின்றவள்; பழி வளர்க்கும் செவிலித்தாய்; இவள் குடலிலே கிடந்து பாவம் செய்தவன் நான்; இந்த உலகம் களை இழந்து, உயிர்ப்பு அடங்கி இருப்பதற்கு இவள்தான் காரணம்; இந்நிலையில் இடரே இல்லாத முகத்தினை உடையளாய் இவள் இருக்கிறாள் என்றால், இவளே என்னை “ஈன்றவள்” என்றான்.

தாய் என்பதால் இரக்கமற்ற அவளையும் குகன் கையெடுத்து வணங்கினான். தோணியை விட்டு இறங்கிய தாயர் மூவரும் சிவிகையில் ஏறினர். குகனோடு பரதன் காலால் நடந்தான். அனைவரும் பரத்துவாசர் இருப் பிடத்தை அடைந்தனர். அவர் இவர்களை இன்முகம் காட்டி வரவேற்றார்.

திருவடி சூட்டிய வரலாறு

பரத்துவாசர், ‘ஆள்வதை விட்டுக் காட்டுக்கு வந்தது ஏன்?’ என்றார்.

‘மாள்வதற்கு வழிதேடி வந்துள்ளேன்; முறை தவறி எனக்குத் தந்த ஆட்சியை நிறை மனத்தோடு இராமன் ஏற்றுக்கொள்ள வேண்டுதற்காக வந்தேன்; அவன் ஏற்றுக் கொள்ளாவிட்டால் யான் மாள்வது உறுதி’ என்றான் பரதன்.

முனிவர் மனம் குளிர்ந்தது; சேனையையும்; மற்றவர்களையும் வரவேற்று உபசரித்தார். அன்று இரவு அவர்கள் அங்குத் தங்கி இருந்தனர்; பொழுது விடிந்ததும் மறுநாள் பாலைவன வழியைக் கடந்து, அனைவரும் சித்திர கூடம் நோக்கிச் சென்றனர்.

சேய்மையிலேயே பரதன் சேனையோடு வருவதை இலக்குவன் கண்டான்; அவன்மீது ஆத்திரம் கொண்டான்; குகனைப் போலவே அவனும், பரதன் படை கொண்டு தாக்க வந்திருக்கிறான், என்று தவறாய் நினைத்தான்.

அவனை ஆற்றுவது இராமனுக்கு அரும்பாடு ஆயிற்று.

“நம் குலத்து உதித்தவர் இதுவரை தவறே செய்ததில்லை. அறம் நெகிழ்ந்தது இல்லை. பரதன் நீதி நெறியினின்று நிலை குலையான். அவன் இங்கு வருவது ஆட்சியைத் தரவே தவிர மாட்சிமை நீங்கிப் போரைத் தொடுக்க அல்ல” என்று விளக்கினான்.

படையை நிறுத்திவிட்டுப் பரதனும் தன் தம்பி சத்துருக்கனனோடு முந்திச் சென்றான்.

இறந்த தந்தையை எதிர் கண்டதுபோலப் பரதன் இராமனைச் சந்தித்தான்.

“அறத்தை நினைத்தாய் இல்லை; அருளையும் நீத்தாய்; முறைமையைத் துறந்தாய்” என்று கூறி இராமன் அடிகளில் விழுந்து வணங்கினான்.

அறத்தைத் தழுவியதுபோல இராமன் பரதனைத் தழுவினான்; அவன் புனைந்த வேடத்தைப் பன் முறை நோக்கினான்.

“துயருற்ற நிலையில் அயர்ச்சி கொண்டுள்ளாய்; தந்தை வலியனோ?” என்று கேட்டான்.

“ஐயா! நின் பிரிவு என்னும் துயரினால் மெய்யைக் காக்க வேண்டித் தன் மெய்யைவிட்டு அவன் மேல் உலகம் சென்றுவிட்டான்” என்றான் பரதன்.

“விண்ணிடை அடைந்தனன்” என்ற சொல் புண்ணிடை நுழைந்த வேல் போல் செவிபுகு முன்னர் கண்ணும், மனமும் சுழல மண்ணிடை விழுந்தான் இராமன், இடியேறு உண்ட நாகம்போல உணர்வு நீங்கினான்

இராமன் மனங்கலங்கிப் பலவாறு புலம்பினான்; “'நந்தா விளக்கனைய நாயகனே! தனியறத்தின் தாயே! அருள் நிலையே! எந்தாய்! பகை மன்னர்க்குச் சிங்க ஏறு போன்றவனே! நீ இறந்தனையே! இனி வாய்மைக்கு யார் இருக்கிறார்கள்? ஆட்சித் தலைமை இறக்கி வைத்து விட்டு நீ விரும்பிய ஒய்வு இதுதானா?! இதுதானா நீ செய்ய நினைத்த தவம்?” என்று கதறினான்.

இராமனை வசிட்டர் தேற்றத் தொடங்கினார்; பரத்துவாசரும், மற்றைய முனிவர்களும், அமைச்சர்களும், அரசர்களும், சேனைகளும் வந்து சூழ்ந்து கொண்டனர். அவர்கள் கூறிய ஆறுதல் மொழிகள் அவலத்தைத் தணித்தன. அவர்கள் இறுதிக் கடனை அவன் செய்கையால் செய்ய வேண்டினர்.

இராமன் புனலிடை மூழ்கினான்; சடங்கின்படி தருப்பண நீரை எடுத்துவிட்டான்; பின் பர்ண சாலைக்குச் சென்றான்.

உடன் சென்ற பரதன் சீதையின் கால்களில் விழுந்து அரற்றினான்; சீதை அவனை எடுத்து ஆற்றினாள். “'நாயகன் என் நெடிய பிரிவினால் துஞ்சினான்” என்று சீதைக்கு இராமன் உரைத்தான்.

அவள் நெஞ்சு திடுக்கிட்டது; நடுங்கினாள்; கண்களில் நீர் வழிந்தது; காட்டுக்குச் சென்றபோதும் துயரம் அடையாத சீதை, தசரதன் இறப்புக்கு மிகவும் வருந்தினாள். அவளை முனிபத்தினிகள் கங்கையில் முழுக வைத்துத் தேற்றித் துயரம் நீக்கி, இராமனிடம் சேர்ப்பித்தனர்.

இறுதிச் சுற்று

“தந்தை செய்த தவறும் தாய் செய்த கேடும் நீ ஆட்சி ஏற்றால் மாறும்” என்றான் பரதன்.

“முறை தவறியது என்று குறைபடாதே, குரவர் பணி இது ஆட்சி உனக்குமாட்சி தரும்; தவம் எனக்குத் தக்கது” என்றான் இராமன்.

“சட்டம் பேசுகிறாய்; பேச்சுக்கு ஒப்புக் கொள் கிறேன்; நீ பிறந்த பூமி எனக்கு ஆள உரிமை உடையது என்கிறாய்; அது என்னுடையதுதான். அதை உனக்கு வழங்குகிறேன்; மன்னா! நீ மகுடம் சூடுக” என்றான் பரதன்.

“நீ அறிவாளி; என்னை மடக்கி விட்டாய்; ஆட்சியை ஏற்கிறேன். தந்தை எனக்கு இட்ட கட்டளை, “நான் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும்” என்பது; “தாழிருஞ் சடைகள் தாங்கிக் கடும்தவம் மேற்கொண்டு பூழி வெங்கானம் நண்ணிப் புண்ணிய நதிகள் ஆடித் திரும்பி வருக” என்ற சொல் என்ன ஆகும்? பதினான்கு ஆண்டுகள் பொறுத்துக் கொள்; அதுவரை என் கட்டளை ஏற்று அரசு ஆள்வாய்! இது நான் உனக்கிடும் ஆணை; மறுக்காதே” என்றான் இராமன்.

வசிட்டர் இராமன் ஆட்சியை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தினார்; “சூரிய குலத்து மன்னர்கள் முறை பிறழ்ந்தது இல்லை. மேலும் நான் தந்தையைப்போல மதிக்கத் தக்கவன், ஆசான், ஆசான் சொல்லைத் தட்டாதே! யான் இடும் ஆணையை ஏற்று உனக்கு உரிய நாட்டைப் பாதுகாப்பாய்” என்று கூறித் தன்னைத் தாழ்த்திக் கொண்டார்.

அம் ‘முனிவனைத் தொழுது’ “அறிஞ! ஒரு செயலைச் செய்வதாக ஒப்புக் கொண்டபின் அதனைக் கைவிடுவது அறமாகுமா, தாயும் தந்தையும் இட்ட கட்டளைகளை மேற்கொள்ளாத அற்பனாக நான் வாழேன்; அவர்கள் இட்ட பணியைத் தாங்கிச் செயலாற்றும்போது வேறுவிதமாக மாற்ற முனைவது நீதியாய்ப் படவில்லை; முறை தவறி நான் ஆட்சியைக் கைவிடுகிறேன் என்று சொல்கிறீர்; நீங்கள் முறை தவறி உரை செய்வதுதான் வியப்பாக உள்ளது” என்றான் இராமன்.

முனிவன் உரைத்தும் அவன் ஏற்கவில்லை என் பதை அறிந்த பரதன், முடிவாகத் தன் கருத்தைக் கூறினான்.

“அப்படியானானல் நாட்டை ஆள்பவர் ஆளட்டும்; நான் காட்டை மேவுதல் உறுதி” என்றான்.

“அது என் உரிமை, இதை யாரும் தடுக்க முடியாது” என்ற பரதன் உறுதியாக நின்றான்.

வானவரும் “என்ன ஆகுமோ?” என்று அஞ்சினர்.

“தெய்வத் திருவுளமும், அங்கு கூடியிருந்தவர் கருத்தும் பரதன் ஆட்சியை ஏற்று நடத்துவதே தக்கது” என்ற முடிவுக்கு வந்தனர்.

மறுபடியும் இராமன் பரதனை அன்புடன் கேட்டுக் கொண்டான்.

“என் ஆணையால் பாரினை ஆள்க” என்றான்.

“குறிப்பிட்ட ஆண்டுகள் பதினான்கு முடிந்ததும் நீ அங்கு வந்து சேர வேண்டும்; ஒருநாள் தாமதம் ஆனாலும் நெருப்பில் விழுந்து உயிர் துறப்பேன்” என்றான் பரதன்.

இராமன் உறுதிமொழி தந்தான். அதற்குமேல் பேச முடியாமல் “நின் திருவடி நிலைகளை ஈக” என்று கேட்டான். இராமன் தன் பாதுகைகள் இரண்டனையும் அவனுக்குத் தந்தான்.

பரதன் அழுத வண்ணம் பாதுகை இரண்டையும் தரையில் வைத்து வணங்கினான்; மணி முடிகளாய் அவற்றைத் தலையில் தாங்கிக் கொண்டான். பரதன் அயோத்திக்கு, அடியெடுத்து வைக்க வில்லை; கங்கையைக் கடந்து, கோசல நாட்டின் தென் எல்லையில் இருந்த நந்தியம் பதியை அடைந்தான்; சிம்மாசனத்தில் இராமன் திருவடி நிலைகள் இடம் பெற்றன. அவற்றை வணங்கி வழிபட்டு இராமன் ஆட்சியைப் பரதன் அங்கு இருந்து நடத்தினான்.

சித்திர கூடத்தில் மேலும் தொடர்ந்து தங்கி இருந்தால், அயோத்தி மாந்தர், வந்து வருத்துவர் என்பதால் தானும் தம்பியும் தையலுமாகத் தென்திசை நோக்கிச் சென்றான் இராமன்.

ஆரணிய காண்டம்

அடவியை அடைந்த இராமன், அறிவும் ஆசாரமும் மிக்க தவசிகளின் விருந்தினாய்த் தங்கி வந்தான். அத்திரி முனிவர் என்பவர் அவனை இன்முகம் காட்டி, இனிதுரை வழங்கி, நல் விருந்து அளித்தார். அவர் பத்தினாயாகிய அனசூயை சீதையிடம் சொந்த மகள்போல் பந்தம் காட்டினாள்; அந்தம் இல்லாத அழகுடைய சீதைக்கு அணிகலன் சேர்த்து, ஆடையும் தந்து, தங்கப்பதுமை போல் அலங்கரித்தான்.

விண்டுரைக்க முடியாத பேரழகியாகிய சீதையைக் கண்டு விராதன் என்னும் கிராதன் அவளைத் தின்று விழுங்கக் கரம்பற்றி விண்வழியே இழுத்துச் சென்றான்.

வஞ்சனை மிக்க அவன் செயலை அஞ்சன வண்ணனாகிய இராமன் எதிர்த்து, அம்பு எய்து, அவளை விலக்கி அவனை எதிர்த்தான். படைகள் அவனைத் தொடவில்லை; படைக் கருவியால் அழிவு பெறாத வரங்களை பிரமணிடம் வாங்கி இருந்தான்.

மராமரம் ஒன்றை அவன் இராமன்மீது வீசினான். அது அவன் கைக்குச் சிக்கி வேரோடு பட்டது; கிளையோடு கெட்டது. இராமன் அம்புகளை ஒரு சேர விட்டான்; அவன் முள்ளம் பன்றிபோலக் காட்சி பெற்றான்; எனினும், விதிர் விதிர்த்து விடுதலை பெற்றான்; மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுச் சீறிய சிங்கம் எனப் பாய்ந்தான்.

வாள்கொண்டு அவன் தோள்களை வெட்டினான் இராமன்; வெட்டிய தோள்கள் மறுபடியும் ஒட்டிக் கொண்டன. அவன் தோள்கள்மீது ஏறி இருவரும் அமர்ந்தனர். அவன் அவர்களை உலகம் சுற்றும் வாலிபர்களாக்கினான். கருடன்மீது அமரும் திருமால் போல் இராமனும் இலக்குவனும் காட்சி அளித்தனர்.

வேறு வழியின்றி அவனை வெட்டிக் குழி தோண்டி மண்ணில் புதைத்தனர். விண்ணில் அவன் தேவ கந்தருவனாய்க் காட்சி அளித்தான்.

அவன் ஒரு கந்தருவன்; கலை ரசிகன், தும்புரு என்பது அவன் பெயர்; செல்வச் சிறப்புமிக்க அளகா புரியில் வாழ்ந்து வந்தவன்; அரம்பை ஒருத்தி ஆடல் நிகழ்த்த, அவளை அவன் நாடினான். கலைஞன் காமுகன் ஆனான். இதையறிந்து அளகை வேந்தனாகிய குபேரன், அவனை “அரக்கனாகுக” என்று சாபமிட்டான். தேவனாகப் பிறந்தவன் அரக்க குணம் கொண்டு அழிவுப் பாதையை அடைந்தான்.

இராமன் திருவடி தீண்டப்பட்டதால் அவனுக்குச் சாப விமோசனம் கிடைத்தது; காந்தருவனாய் மாறினான்; நன்றி நவின்றுவிட்டு விண்ணுலகில் மறைந்தான். கல்லாக இருந்தவள் காரிகையாக மாறி, விமோசனம் பெற்றதைப் போல் முரடனாக இருந்த அரக்கன், சாப விமோசனம் பெற்று காந்தருவனாக மாறினான். இதுவும் கருத்துள்ள கதையாகும். கலை உள்ளத்தோடு ரசிக்க வேண்டியவன் காமப் பார்வையோடு அவளைப் பார்த்துத் தன் நிலை கெட்டான். அது அவளை அரக்கனாக மாற்றியது. சீதை புனிதமானவள். அவளைத் தொட்டான் என்றாலும், கெட்டான் என்ற நிலை ஏற்படவில்லை. தெய்வம் அவனை மன்னித்துத் தேவனாக மாற்றியது. பள்ளத்தில் விழுந்து இருப்பவர், தெய்வ அருள் பெற்றால் ஒளி பெற்று உயர் பதவி பெறுவர் என்பதற்கு அவன் ஒர் எடுத்துக் காட்டாக அமைந்தான்.

சரவங்கன் பிறப்பு நீக்கம்

அவர்கள் சென்ற வழியில் சோலை ஒன்றில் சரவங்கன் என்னும் தவமுளிைவன் ஆசிரம் இருந்தது. அதில் அவர்கள் தங்கினர்; அங்கு ஒரு புதுமையைக் கண்டனர்.

தேவர் தலைவனாகிய இந்திரன், பிரமதேவன் ஏவற்படி அம் முனிவனை அழைத்துச் செல்ல அங்கு வந்து சேர்ந்தான். நீண்ட காலம் மாண்புமிக்க தவம் செய்த அம் முனிவருக்குப் பிரம தேவன் அழைப்பில் பிரமபதம் காத்துக் கிடந்தது.

பிறப்பை ஒழிக்க நினைத்த அம் முனிவன் அச்சிறப்புகளைப் புறக்கணித்தான்! பிறப்பு ஒழிந்து ‘பரமபதம்’ என்னும் பெருநிலையை அடையவே விரும்பினான். இந்திரன் வரம் தந்து உயர்த்த வந்த பணி நிறைவேறவில்லை. ‘வானாள வானவர்கோன் பதவி தந்தாலும் வேண்டேன்’ என்று கூறும் விறல் அம் முனிவனிடம் இருந்தது. இந்திரன் செய்த முயற்சி பயன் தரவில்லை. வந்த வழி பார்த்து அந்தரம் நோக்கி அவன் திரும்பிச் சென்றான்.

திரும்பிச் செல்வதற்குமுன் இந்திரன், இராமனது வருகையை அறிந்து, அவனை வழிபட்டு வணங்கி விடைபெற்றான். முனிபுங்கவன் தன் மனைவியோடு இராமனைச் சந்தித்து உபசரித்தான். அத்தகைய இராமன் வருகையை எதிர்நோக்கி இருந்தவனாய்க் காணப்பட்டான்.

‘தீக்குளித்தல்’ என்பது உலகத்தில் பிற பகுதி களில் நடைபெறாத நடப்பியல்; அது இந்நாட்டில் தொன்று தொட்டு நிலவி வருகிறது. தன்னை அழித்துக் கொள்தற்கு இக் காலத்தில் அரசியல் எதிர்ப்புச் சாதனமாய் உள்ளது; மாமியார் கொடுமைக்கு எதிராய் மருமகள் செய்யும் மானப் புரட்சியாய் இயங்குகிறது. ‘சதி’ என்ற பெயரால் பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட சதியாக அது இயங்கியது. சீதையின் கற்பின் பொற்பினை அறிவிக்க அனல் அவளைத் தீண்டலாயிற்று. பரமபதம் அடைய இம்முற்றும் துறந்த முனிவன், கற்ற கலையாக இத் தீக்குளித்தல் நடைபெற்றது.

இராமன் முன்னிலையில் அம் முனிவனும் அவன் மனைவியும் தீக்குளிக்க விரும்பினர். மற்றவர் நம்பிக்கைகளை இராமன் தடுத்து நிறுத்த விரும்பவில்லை. மற்றைய முனிவரும் தவசியரும் இதை ஒரு பெரு விழாவாக மதித்துப் பாராட்ட அவர்கள் முத்தி நிலை அடைய முந்திக் கொண்டனர். இராமன் தீயோரைத் தீண்டி, அவர்களுக்கு விடுதலை அளித்தைப் போலவே நல்லோர் நயப்புகளையும் கேட்டு அருள் செய்தான். சரவங்கன் தெய்வத் திருமகன்முன் உயிர்விட்டதால், பிறப்பு ஒழிந்த இறப்பு, அவனுக்குக் கிட்டியது. அவன் மனைவியும் அப் பெருநிலையை விருப்புடன் ஏற்றுக் கொண்டாள்.

தமிழ் முனிவர் அகத்தியர் சந்திப்பு

சரவங்கன் இறுதி யாத்திரை இராம இலக்குவரைத் துயரத்தில் ஆழ்த்தியது. சரவங்கனது ஆசிரமத்தைவிட்டுச் சுமை நீங்கிய உணர்வோடு மெதுவாய் அவர்கள் நடந்தனர்; விண்ணை முட்டும் மலைகளையும், பசுமை நிறைந்த மரங்களையும், கடுமையான பாறைகளையும், ஒடும் நதிகளையும், சரியும் சாரல்களையும், நீர்த் தடாகங்களையும் கடந்தனர்; வழி நெடுக அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சந்தித்தவர் தாம் அடைந்து வரும் இன்னல்களை எடுத்துரைத்தனர். அரக்கர் இழைக்கும் அநீதிகளை எடுத்துக் கூறி, அவர்களை அழித்து அறம் தழைக்கச் செய்ய வேண்டும்” என்று வேண்டினர்.

“நாட்டை விட்டுக் காட்டை அடைந்ததும் ஒரு வகையில் நல்லதாயிற்று” என்று இராமன் கருதினான். வருந்தி வாடும் அருந் தவசியர் இடையில் அவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களை மகிழ்வித்தான். எந்தவித இடையூறும் இன்றி, இனிமையாய்ப் பத்து ஆண்டுகள் அவர்களைக் கேளாமலே கழிந்து சென்றன. .

வேதம் கற்ற முனிவரிடைப் பழகிய இராமன், தமிழ் கற்ற அகத்தியரைக் காண விரும்பினான். அகத்தியர் இருக்கும் இடம்தேடி நடந்தான். கதீக்கணன் என்னும் முனிவனைச் சந்தித்து, அகத்தியர் வாழும் மலையை அறிய விரும்பினான்.

அகத்தியர் செய்த அரிய செயல்கள், கதைகளாகப் பேசப்பட்டன. அவற்றுள் இது ஒன்று. தேவர்களை எதிர்த்துத் தப்பி ஓடிய அவுணர் கடலில் புகுந்து ஒளிந்து கொண்டனர். அவர்களைத் தேடித் தரும்படி தேவர் வேண்டினர். கடலைக் குடித்து அகத்தியர் அவர்களைக் காட்டிக் கொடுத்தார் என்பது ஒரு கதை.

வாதாவி என்பவன், முனிவர்களில் வயிற்றில் ஆட்டிறைச்சியாகப் புகுந்து, அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வந்தான். அக் கொடியவனை விழுந்கி, வயிற்றின் உள்ளே உருத்தெரியாமல் சீரணித்து அழித்த கதை அடுத்த கதையாகும்.

பார்வதி திருமணத்தில் இம்ய மலையில் தேவர் குவிய வடக்கு உயர்ந்தது. தெற்கு தாழ்ந்தது. அதைச் சமன்படுத்த அகத்தியர் தென் திசை அனுப்பப்பட்டார். அது முதல் பொதிகை மலையில் அவர் தங்கினார் என்பது அடுத்த கதை.

“சிவபெருமான் வடமொழி இலக்கணத்தைப் பாணினிக்கும், தமிழ் இலக்கணத்தை அகத்தியருக்கும் அருள் செய்தார்” என்பது மற்றொரு கதை. ‘அகத்தியரே தமிழ் மொழிக்கு முதன்முதலில் இலக்கணம் வகுத்துக் கொடுத்தார்’ என்று பேசப்படுகிறது. இத்தகைய பெருமைமிக்க தமிழ் அறிஞரைச் சந்திப்பதில் இராமனுக்குப் பேரரர்வம் ஏற்பட்டது. இதனை ‘ஒரு பண்பாட்டுக் கலப்பு’ என்று கூறலாம். வடமொழி காவியத்தில் தமிழுக்குட் பெருமைதரும் செய்தியாய் இது அமைந்துள்ளது.

அகத்தியரும் இராமனது வருகையை, எதிர் நோக்கி இருந்தார்; அகம், குளிர இராமன் அகத்தியரைச் சந்தித்தான்; அவர் திருவடிகளில் விழுந்து வணங்கி அவரிடம் தான் கொண்ட மதிப்பை வெளிப் படுத்தினான்.

‘அரக்கர் செய்யும் இரக்கமற்ற செயல்களைத் தடுத்துத் தீமைகளைக் களைய வேண்டும்’ என்று அகத்தியரும் வேண்டினார். அதனோடு நில்லாமல் தான் வைத்திருந்த ஆயுதங்கள் சிலவற்றை இராமனுக்கு அளித்தார்; திருமால் வைத்திருந்த வில் ஒன்றனையும், ஒப்புயர்வற்ற வாள் ஒன்றையும், சிவபெருமான் திரிபுர மெரித்த காலத்தில் மேருவை வில்லாக வளைத்துப் பூட்டிய அம்பு ஒன்றனையும் தந்தார்.

இராமன் சீதையோடு தங்குதற்கு, உரிய இனிய சூழல் அமைந்த இடம் பஞ்சவடி என்றும், அதன் அருகில் மலைச்சாரல் ஒன்று உள்ளது என்றும், அந்தப் பஞ்சவடியில் கனிகளைத் தரும் வாழை மரங்களும் பசிய செந்நெற்கதிர்களும், தேன் சிந்தும் பொழில்களும் மிக்க கவின்மிகு நதிகளும் உள்ளன என்றும், நீர் வளமும் நில வளமும் மிக்க அந்தச் சோலை தங்கு வதற்கு ஏற்றது என்றும் அகத்தியர் கூறினார்.

மேகநிற வண்ணனாகிய இராமன் அறிவுக் கடலாய் விளங்கிய அகத்திய முனிவரிடமிருந்து பிரியா விடை பெற்றுப் பஞ்சவடி நோக்கி நடந்தான்; பாகு அனைய சொற்களைப் பேசிய பாவையாகிய சீதை யும், வீரம் காட்டிய தம்பியும் பின் தொடரப் பயணம் தொடர்ந்தது.

சடாயுவைச் சந்தித்தல்

காவதம் பல கடந்தனர்; நதிகள் மலைகள் சோலைகள் அவர்களுக்கு வழிப்பட்டன. புதிய புதிய இடங்களைக் கண்டு அவர்கள் இறும்பூது எய்தினர். எதிர்பாரமல் அங்கே கழுகின் வேந்தைக் கண்டு தொழுது வணங்கினர். அரசிளங்குமரர்களைத் தவசிகளின் கோலத்தில் காண அப்பறவை வேந்தனுக்கு வியப்பு விஞ்சியது.

“நீவிர் யாவிர்”? என்று வினவினான்.

“தசரதனின் மைந்தர்” என்று பதில் இறுத்தனர்.

தசரதன் கழுகின் வேந்தனாகிய சடாயுவின் நண்பன் ஆதலின் அவன் நலத்தைக் கேட்டு அறிய விரும்பி.

“வாய்மை மன்னன் வலியனோ” என்று கேட்டான்.

“அவன் காத்து வந்த வாய்மை அழியவில்லை; காவலன் மறைந்துவிட்டான்” என்று கூறினான் இராமன்.

நண்பனை இழந்தமை கழுகு வேந்தனுக்குத் தீராத் துயரைத் தந்தது; உணர்வு நீங்கி உயிரற்றவனாயக் காணப்பட்டான்; வெறும் சடலமாக விளங்கினான். இராமனும் இலக்குவனும் அவனைத் தடந்தோள் களால் தழுவிக் கொண்டு நழுவ விடாமல் நிறுத்தினர்.

இருவரும் தம் கண்ணிரால் அவனைக் குளி, வைத்தனர்; அவன் உயிர்ப்புப் பெற்று அயர்ப்ட நீங்கினான். தசரதன் வெற்றிச் சிறப்புகளை அடுக்கிக் கூறி அழுகையை அவன் ஒப்பாரி ஆக்கினான்.

தசரதனுக்காக ஒரு பறவை அரசன், அழுது அரற்றியது அதிசயமாக இருந்தது. அவனைப் பற்றி அறிய அவாவினர்.

“சூரியன் தேர் ஒட்டி ஆகிய அருணன் அருமைப் புதல்வன் யான்; சூரியன் சுற்றி வரும் உலகம் முற்றும் திரிந்து பறந்து வாழ்பவன்; தசரதன் என் இனிய நண்பன். தேவர்களோடு மற்றச் சாதிகளை வகைப்படுத்திய ஆதி காலத்திலேயே வந்து உதித்தவன் நான்; கழுகுகளுக்கு மன்னன்; என் உடன் பிறந்தவன் சம்பாதி; அவன் எனக்கு இளையவன்; சடாயு என்பது என் பெயர்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.

பொன்னுலகு புகுந்த பெரியோனாகிய தசரதனே உயிரோடு திரும்பி வந்ததைப் போல, அவனைக் கண்டு இராமன் களிப்பு அடைந்தான். பாசத்தோடு தன் இரண்டு இறகுகளால் அவர்களைச் சடாயு அணைத்து அன்பு காட்டினான். “என் ஆருயிர் நண்பன் என்னை விட்டு அகன்ற பிறகு யான் உயிர் வாழ்தல் சரியன்று; சுமை மிக்க வாழ்வில் யான் சுவை காண இயலாது. யானும் தீயில் விழுந்து மாயாவிட்டால் என் துன்பத்திற்கு விடிவே இல்லை” என்று அரற்றி அலறினான். அவனைத் தேற்றி அன்பு மொழி கூறி, அவனிடம் உறவு கொண்டனர்.

“எங்களுக்கு உதவ வேண்டிய எம் தந்தை, உயிர் விட்டுப் புகழைத் தேடிக் கொண்டார்; மெய்யைக் காத்து வந்தவர் தம் மெய்யைவிட்டு நீங்கினார். துன்பம் நேர்கையில் இன்பம் சேர்க்கும் உறுதி மொழிகளை எடுத்துக்கூற, உம்மைத் தவிர இன்று யார் இருக்கிறார்கள்? நெருப்பு பொறுப்பு அற்றது; உம்மைச் சுட்டு எரித்தால் அதற்குப் பிறகு குளிர் நிழலை யாம் எங்கே காண முடியும்? நிற்கின்ற நெடுஞ் சுவரே இளைப்பாற நினைத்தால் சாய்வதற்கு நிழல் ஏது? எம் விருப்பேற்று நீர் உயிர் வாழ வேண்டுகிறோம்” என்றனர்.

“தந்தை மறைந்ததும் ஆட்சிப் பொறுப்பு ஏற்க வேண்டிய நீவிர் காட்சிப் பொருளாக இங்கு வந்து சுற்றிக் கொண்டிருப்பது ஏன்?'என்று வினவினான் சடாயு.

அதற்கு விடையாக இராமன் அவர்கள் அடைந்த ன்னல்களை அடுக்கிக் கூறினான். சீதையை நோக்கி, அக்கோதையை அறிமுகப்படுத்தும்படி சடாயு வேண்டினான். தாடகையை வீழ்த்தியது முதல் வில்லை வளைத்து அக் கோமகளை மணந்தது வரை ஒன்று விடாமல் உரைத்தான் இராமன்.

“நாட்டைத் துறந்து நீங்கள் பட்ட பாட்டைக் கேட்டு மிகவும் வருந்துகிறேன். நீர் மீண்டும் திரும்பும் வரை விரும்பியபடி பொழுதுபோக்கிக் கொண்டு சீதை இங்குத் தங்கலாம்; அவளுக்கு எந்தவிதப் பங்கமும் ஏற்படாதவாறு காவல் காப்பேன்” என்று கூறினான்.

“அகத்தியர் அறிமுகப்படுத்திய கோதாவரி என்னும் ஆற்றங்கரையில் நீர்த்துறை ஒன்று உள்ளது. பஞ்சிலும் மெல்லிய அடிகள் உடைய சீதை தங்குதற்கு அந்தப் பஞ்சவடி என்னும் இடம் ஏற்றம் உடையது” என்றான் சடாயு. அதற்கு வழி காட்டினால் போதும் என்று அடக்கமாகக் கூறினான் இராமன். “மிகவும் நன்றி! அப் பெருந்துறையில் நீர் வைகி மாதவம் செய்வீர்; அதுதான் தக்கது” என்று கூறி விண்ணில் முன்னோக்கிப் பறந்து அவர்களுக்கு வழிகாட்டினான் சடாயு.

பஞ்சவடியை அறிய வழிகாட்டிய தூய சிந்தை உடைய சடாயு சென்றபின் வில்லை ஏந்திய வீரர்களாகிய இராம இலக்குவர் பஞ்சவடியை அடைந்து அங்கு உறைந்தனர். தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் தாய்ப் பறவை போலச் சடாயு அவர்களைக் காக்கும் அரிய பணியை மேற்கொண்டான்.

பஞ்சவடியில் வஞ்ச மகள்

பஞ்சவடி என்னும் பசுமையான சோலை, கோதாவரி நதிக் கரையில் இருந்தது; அது சான்றோர் படைக்கும் கவிதை போலத் தெளிவும் நிறைவும் பெற்று விளங்கியது; கண்ணைப் பறிக்கும் மணிகளை யும், மின்னல் போல் ஒளிவிடும் பொன்னையும், பெண்ணின் பற்களைப் போல் வெண்மையான முத்துக்களையும் வாரிக் கொண்டு வந்து ஐவகை நிலங்களில் குவித்தது; நீரால் அந் நிலங்களை வளப்படுத்தியது. அதன் ஒட்டம் இவர்களின் நாட்டத்தைக் கவர்ந்தது. பத்தினிப் பெண்ணோடு இராமன் அங்கு இனிமையாய்க் காலம் கழித்தான். இயற்கை அவர்களுக்கு வியப்பைத் தந்தது.

பால் நிலவைக் கண்ட சீதையும், இராமனும் தேனிலவை கண்டது இல்லை. இங்கு ஏன் என்று கேட்பார் அற்று, வண்ணப் பறவைகளையும் வனத்து விலங்கு களையும் அவற்றின் நேய உறவுகளையும் கண்டு அவற்றோடு அவளை ஒப்பிட்டு இராமன் நலம் பாராட்டினான். தாமரை மலரில் இரண்டு சக்கரவாகப் பறவைகள் தங்கி இருந்தன. அவை சீதையின் அழகிய வடிவை அவனுக்கு நினைவுப்படுத்தின. மணற்குன்றுகள் இராமன் தோள்களாக விளங்கின. அன்னப் பறவைகள் சீதையின் நடையைக் கற்றன. களிறுகள் இராமன் பெருமிதத்தைக் கண்டு ஒதுங்கின. வஞ்சிக் கொடி இடைக்குத் தோற்றது. தாமரையின் நிறம், மங்கிக் காட்சி அளித்தது. அன்புக் காட்சிகள் அவர்களுக்கு மவுன ராகமாய் இசைத்தன. அழகுக்கும் இனிமைக்கும் பங்கமில்லாது அந்தச் சோலையில் இலக்குவன் வடித்துத் தந்த குடிசையில் தங்கி இருந்தனர்.

இலங்கைக்கு அரசன் இராவணன் ஒரே தங்கை சூர்ப்பனகை அங்கு வந்து சேர்ந்தாள். அப் பருவ மங்கை இராமன் உருவில் மயங்கினாள். அரக்கியாகச் சென்றால் “கிறுக்குப் பெண் என்று நறுக்குவர் என அரம்பை வடிவில் அவன்முன் நின்றாள்; திருமகளைத் தியானிதித்து அவள் உருவைத் தான் பெற்றுக் காட்சி அளித்தாள்.

“பஞ்சுஒளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்

செஞ்செவிய கஞ்சம்நிகர் சீறடியளாகி

அஞ்சொல்இள மஞ்ஞைஎன அன்னமென மின்னும்

வஞ்சிஎன நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்”

செம்பஞ்சு பூசிய சிவந்த அடிகள், தாமரை மலரைப் போலக் காட்சி அளிக்க அன்ன நடையும், வஞ்சிக் கொடி போன்ற மின்னல் இடையும் கொண்டு நஞ்சு எனத் தகைய வஞ்ச்மகள் நடன சிங்காரியாக நளினமாக அவன் முன் வந்து நின்றாள். விண்ணவர் படைத்த அமுதம் போன்ற கண்கவர் கன்னியைக் கண்டு இராமன் வியந்தான். “காட்டு வாழ்க்கையில் மேட்டுக் குடிமகள் இவள் யார்?” என அறிய விழைந்தான்.

பதுமைபோல வந்த அப் புதியவளைப் பார்த்து, “ஆரணங்கே நீ யார்? வழி தெரியாமல் உன் விழிகள் இங்கு வந்து நோக்குகின்றனவா?” என்று பரிவுடன் வினவினான். வாய்ப்பை எதிர்பார்த்து அவள் வாய்மையை மறைத்துப் பொய்மையைப் புனைவுடன் கூறினாள்.

“நான் அளகை நகர்க் காவலன் குபேரனுக்கும் இலங்கை வேந்தன் இராவணனுக்கும் தங்கை; அழகு மிக்கவள் ஆகலின், என்னைக் ‘காமவல்லி’ என்று அழைப்பர்”.

“அரக்கர் குலத்தில் அரம்பை எப்படி அவதரிக்க முடியும்”? என்று கேட்டான் இராமன்.

“சேற்றில் முளைத்த செந்தாமரை நான்” என்றாள்.

“நிலத்தில் வந்தது ஏன்?”

“நிம்மதி இழந்ததால்; உன் சம்மதம் வேண்டி உன்னை மணக்க” என்றாள்.

“நீ மலைத்தேன்; நான் முடவன்” என்றான்.

“காதலித்தேன்; அதனால் என்னைக் குருடி என்பர்”.

“சாதி ஒரு தடை” என்றான்.

“நான் கலப்பு மகள்; இது என் பிறப்பு வரலாறு” என்றாள்.

“என் தாய் அரக்கி; தந்தை அந்தணன்” என்றாள்.

“அரக்கி நீ; மானுடன் நான்” என்றான்.

“இடைப்பட்ட நிலையில் தேவ மகளாக உன்னைச் சந்திக்கிறேன்” என்றாள்.

“நீ சீமாட்டி; நான் சீர் இழந்த நாடோடி” என்றான்.

“என்னை மணந்தால் நீ நாடாள்வாய்” என்றாள்.

“உன் பெற்றோர்” என்று தொடர்ந்தான்.

“தடை செய்ய மாட்டார்கள்; காந்தருவ மண்ம் என்று ஒன்று இருக்கிறது; அது காதலர்க்குத் தரப்பட்ட உரிமை” என்றாள்.

அளவோடு நகையாட விரும்பினான் இராமன்.

“என் தந்தையை நான் வாழ்த்துகிறேன்; அவர் என்னைக் காட்டுக்கு அனுப்பாவிட்டால் நீ எனக்கு எட்டாத கனியாக இருந்திருப்பாய்; அழகு மிக்க உன்னைச் சந்திக்கும் பேறு பெற்றேன்; நன்மை என்னை வந்து அடைந்திருக்கிறது” என்றான்.

அவன் பேசிய எள்ளல் உரையை உள்ளம் உவந்து சொன்ன ஏற்புரையாகக் கொண்டாள் அவள். “மீன் தூண்டிலில் விழுந்துவிட்டது” என்று நினைத்தாள். “விரித்த வலை வீண் போகவில்லை” என்று செருக்குக் கொண்டாள். சீதை என்னும் பெண் கொடி, அங்கு வேலியாக வந்து தடுப்பாள் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

பொன்னை நிகர்த்த சீதை, நீல நிறத்தவனான இராமனைத் தழுவிக் கொண்டு நின்றாள். மேகத்தில் மின்னல் தோன்றியது. சூர்ப்பனகையின் சொற்களில் இடி தோன்றியது. கண்களில் நீர் பொழிய மழையை யும் கொண்டு வந்து சேர்த்தாள்.

“சிவபூசையில் சிந்தனையின்றிப் புகுந்த கரடி இவள் யார்'? என்று கேட்டாள்;

“இளைஞர் இருவர் புனையும் காதல் கவிதையின் இடையில் புகுந்த போட்டிக் கவிதை யாது”? என்று வினவினாள்; இது இடைப்பிறவரல் என்று நினைத்தாள்.

“இவள் அரக்கி மகள், மானுடவடிவில் வந்து உன்னை மயக்குகிறாள்; இவளை அகற்று; அடித்துத் துரத்து” என்று ஆணையிட்டாள்.

அதிகமானால் அமுதம் நஞ்சாக மாறிவிடும் என்பதை அறிந்தான் இராமன்; விளையாட்டு வினையாக மாறுகிறது; என்பதை உணர்ந்தான்.

“இவள் என் மனைவி; வாழ்க்கைத் துணைவி” என்று சொல்லாமல் செய்கையால் அறிவுறுத்தினான்; சீதையை அழைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே பர்ணசாலையில் நுழைந்தான்.

“தம்பி நயவு காட்டமாட்டான்; என்னை நம்பி இங்கு இருக்க வேண்டா'” என்று கூறிவிட்டு அவளை விட்டு அகன்றான்.

“இன்று போய் நாளை வருகிறேன்” என்று கூறி விட்டு அவ் அரக்கி அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.

பொழுது சாய்ந்தது. உள்ளத்தில் வெறுமை நிறைந்தது. இரவு நீண்டதாக அவளுக்கு இருந்தது. பொழுது விடிவில் தன் விடிவைக் காணக் காத்துக் கிடந்தாள். எப்படியாவது அவனை அடைவது என்று உறுதி கொண்டாள். இருள் அவளுக்கு மருளினைத் தந்தது. விரகவேதனையால் நரகவேதனையை அடைந்தாள்.

உறக்கம் நீங்கிய இராமன் காலையில் தன் கடனை முடிக்கக் கோதாவரிக் கரையை அடைந்தான். நித்தியக் கடனை முடித்து இறைவனை வழிபட்டு நிறை உள்ளத்தோடு வீடு திரும்பினான். அவன் புத்தம் புதுப் பொலிவோடு விளங்குவது அவள் பெருவிருப்பைத் தூண்டியது. சீதை குறுக்கிட்டதால் அந்தப் பேதை தன்னைத் துறந்தான் என்று தவறாகக் கணக்குப் போட்டாள். அவள் வாழ்க்கை, ஒருதலை ராகமாக மாறியது; அவள் ஒரு தறுதலையாக மாறினாள்.

சீதை அவளுக்கு நந்தியாகக் காணப்பட்டாள். மந்தி போன்ற அவள் நந்தியாகிய சீதைமீது பாய்ந்து மறைத்து விடுவது என்று துணிந்தாள்.

காவல் செய்து காத்துக் கிடந்த காகுந்தன் தம்பியை அவள் கவனிக்கவில்லை; ‘தனித்து இருக்கிறாள்’ என்று துணிந்து அவளைப் பற்றி இழுக்க முயன்றாள். மெய்ப்படைக் காவலன்போல இருந்த இலக்குவன் அவள் செய்கை பொய்ப்படும்படி அவள் மயிர் முடியைக் கரத்தால் பற்றி அவளைக் ‘கரகர’ என்று இழுத்து வெளியேவிட்டான். ‘முதலுக்கு மோசம் வந்துவிட்டது' என்று கூறும்படி இலக்குவனையே அவள் கைப்பற்றி அந்தரத்தில் இழுத்துச் செல்லப் பார்த்தாள். அந்த்ச் சுந்தரத் தோளனுக்கு அவளை அழித்து ஒழிப்பதைத் தவிர வேறு வழி தோன்றவில்லை. “பெண் கொலை புரிந்தால் மண்ணுலகம் அவனைப் பழிக்கும்” என்பதால் தயக்கம் காட்டினான்; உயிரைப் பிரிக்க விரும்பவில்லை. அவளுக்குத் தக்க பாடம் கற்றுத்தர விரும்பினான்.

“அழகு காட்டி தன் அங்கங்களால் மயக்க முற்படுகின்றவளின் அழகைக் குலைப்பதே செய்யத் தக்கது” என்ற முடிவுக்கு வந்தான். மூக்கும் செவியும் முகத்துக்கு அழகு தருவன. வளம் மிக்க இளமையைக் காட்டும் நகில் அவளுக்கு ஆணவத்தை உண்டாக்கி இருக்கிறது. மூக்கையும் செவியையும் முன அறுத்தால் அது அவள் நாக்கை அடக்கும் என்று உறுதி கொண்டான். “வலிதிற் பற்றும் வாலிப மங்கையாகிய அவள் அங்க இலக்கணம் பங்கம் அடைதல் தக்கது” என்று மூக்கையும் செவியையும் மூளி ஆக்கினான்; குருதி கொட்டியது; அருவி வடியும் மலைபோலக் காட்சி அளித்தாள்; அரக்க வடிவம் அவளைக் காட்டிக் கொடுத்தது.

கருப்பு நிறக்காரிகை விருப்பு மிகச் சிவப்பு நிறம் பெற்றாள்; செக்கர் வானம் படிந்த செம்மலையானாள்; செம்மலை அடையச் சிவந்த அவ்வடிவம் பயன்படும் என்று கருதினாள்.

நதி நீராடி இறைவழிபாடு செய்து நிறை மனத்தோடு வீடு திரும்பிய இராமன் குறையுற்ற இந் நங்கையைக் கண்டான். அவளும் சூரியனைக் கண்ட தாமரை போல் உவகை கொண்டாள். அவள் அவன் கண்ணில் பட்டாள். நடந்ததை அவள் போக்கிலேயே அவன் தெரிந்து கொண்டான்; இது தம்பியின் சித்திர வேலைப்பாடு என்பதை அறிந்து கொண்டான்.

உறுப்பிழந்த நிலையிலும் அவள் உள்ளம் குலையவில்லை. “விருப்புற்றுக் கேட்கிறேன்; என்னை ஏற்றுக் கொள்” என்றாள்; “பொறுப்பற்ற உன் சொல் உன்னை அரைகுறை அழகி ஆக்கிவிட்டது. அறுவைச் சிகிச்சை நடந்தும் அறிவு பெறாத வளாய் இருக்கிறாய்; தீயவளே விலகு என்றான்.

அவள் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி மீண்டும் மீண்டும் வேண்டினாள்.

“இராவணன் பொல்லாதவன்; அவன் தங்கை நான்; அங்கம் அறுத்த உங்களை உயிரோடு தங்க வைக்க மாட்டான்; இது உறுதி”.

“நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டால் அரக்கர் அழிவிற்குத் துணையாய் நான் இருப்பேன்”.

“நீ ஏற்கனவே மணமானவன்; அதனால் என்னை ஏற்க மறுக்கலாம்; உன் தம்பிக்கு என்னை ஏற்றுக் கொள்ளச் சொல்”.

“எனது மூக்கை அறுத்துவிட்டீர்; என்னை நீர் ஏற்றுக் கொண்டால் மூக்கை மறுபடியும் உண்டாக்கிக் கொள்வேன்; முழு அழகையும் பெறுவேன்; அதிக மான நெடிய மூக்கும் மடந்தையர்க்கு மிகைதானே”.

“பெண்ணுக்கு மிகைப்பட அழகும் பகையாய் முடியும்; குடும்பப் பெண்ணுக்குக் கொண்டானை மகிழ்விக்கும் உரு இருந்தால் போதாதோ!”

“மூக்கு அழகு என்பதால் பிறர் என்னை நோக்கு வர்; அது விருப்பை ஊக்குவிக்குமல்லவா? என்மீது கொண்டுள்ள பிரியத்தால் மூக்கு அறுத்தீர் ஆதலின், உம்மிடம் என் அன்பு இருமடங்கு ஆகிறது”.

“அறுபட்ட மூக்கு உடையவளோடு எப்படி வாழ்வது? என்று உன் தம்பி திகைக்கலாம்; நீ விடுபட்ட இடையை உடைய மெல்லியலோடு சேர்ந்து வாழ வில்லையா? இராவணனை அழிப்பதில் உங்களுக்கு உற்ற துணையாவேன்; என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று தொடர்ந்து தொல்லைகள் தந்தாள். அதற்கு ஒர் எல்லை காண விரும்பினர். அதனால் வில்லை வளைத்து அம்பு தொடுக்க இளயவன் இராமன் ஆணையை எதிர் நோக்கி நின்றான். “இனி இங்கிருந்து பல்லைக் காட்ட முடியாது” என்று உணர்ந்த சூர்ப்பனகை பழி தீர்க்கும் படலத்துக்குச் சென்றான்.

கரன்வதை கதை

செக்கர் வானம் மேல்தழுவிய கரிய மேகம்போல் அவள் காட்சி அளித்தாள், வெம்மையான தீயில் புழுங்கும் பாம்பு எனப் புரண்டாள்; கரன் இராவணன் உடன் பிறந்த தம்பி, அவன் அந்த எல்லைக்குக் காவலனாக இருந்தான்; அவனிடத்தில் சென்று தன்துயரத்தை வெளியிட்டாள்; மூக்கு அறுத்தவரை வேர் அறுக்கும்படி வேண்டினாள்.

கரன் போருக்குப் புறப்பட்டான்; அவன் படை வீரர் பதினான்குபேர் அவனைத் தடுத்து நிறுத்தித் தாமே களம் நோக்கிச் சென்றனர்; அவர்கள் முதற்பலி ஆயினர்.

கரனின் அரக்கர்சேனை கடலெனத் திரண்டு இலக்குவனை எதிர்க்க வந்தது; இலக்குவன் போர் செய்யத் துடித்தான்; தன்னை அனுப்புமாறு வேண்டினான்.

“தவம் செய்யும் முனிவர் அரக்கர்களை அழிக்கும் பணியைத் தன்னிடம் ஒப்புவித்துள்ளனர். அதனைத் தானே செய்து முடிக்க வேண்டும்” என்று கூறி வில்லேந்திய வண்ணம் இராமன் பகைவர்களைச் சந்தித்தான்; சிங்கத்தைச் சூழ்ந்த யானைக் கூட்டம் போலக் கரன்படைகள் இராமனைச் சூழ்ந்தன. அவர்களுக்குத் திரிசிரா (முத்தலையன்) என்பவன் தலைமை தாங்கினான். அவனுடைய மூன்று தலைகளும் மூலைக்கு ஒன்றாகச் சென்று உருண்டன. படைவீரர் அச்சம்கொண்டு சிதறி ஒடினர். துடணன் என்பவன் அடுத்துத் தலைமை தாங்கினான். அவன் கரன் தம்பி; அவனும் போர்க்களத்தில் மடிந்தான்.

பிறகு கரனே களம்நோக்கித் தேரைச் செலுத்தினான்.

இராமனுக்கும் இராவணனுக்கும் நடக்க இருக்கும் போருக்கு முன்னிகழ்வாகக் கரனோடு நடந்த போர் அமைந்தது. இராமன் ஒன்பது அம்புகளை ஒருசேரக் கரன் மீது ஏவினான். அவற்றிற்கு எதிராக அம்புகளைச் செலுத்திக் கரன் அவற்றை அறுத்து அழித்தான்; அம்பு மழையினால் இராமனது உருவம் முழுவதையும் மறைத்து விட்டான். அதைக் கண்டு தேவர் நடுங்கினர். இராமன் வீராவேசம் கொண்டு வில்லை வேகமாக வளைத்தான்; அது முறிந்து விட்டது.

வில்லிழந்து இராமன், நிராயுத பாணியாக ஆகி விட்டான். அடுத்து என்னை நடக்குமோ? என்று அஞ்சும் சூழ்நிலை ஏற்பட்டது. பரசுராமனிடமிருந்து பெற்ற மாபெரும் வில்லை வருணனிடம் கொடுத்திருந்தான்; அதற்காகக் கைநீட்டினான்; வருணன் கொண்டுவந்து சேர்த்தான்; அந்த வில் அவனுக்குக் கைகொடுத்தது: அதனால் ஏவிய அம்பு, கரனின் உயிரைக் குடித்தது.

சூர்ப்பனகை செயலிழந்து வயிற்றிலும் வாயி லும் அடித்துக்கொண்டாள்; மூக்கோடு தான் முடிந் திருக்கலாம்; வாக்கினால் கரன் உயிர் குடித்தமைக்கு வருந்தினாள்; எனினும், அந்தத் துன்பம் நீடித்திருக்கவில்லை; இராமனை அடைய வேண்டுமென்ற ஆசை அவளை வெறி கொள்ளச் செய்தது; “இராவணனிடம் சென்று இராமனைப் பிடித்துத்தரும்படி கேட்கலாம்” என்று நினைத்த வண்ணம் இலங்கை நோக்கி விரைந்தாள்.

இராவணன் தன் அத்தாணி மண்டபத்தில் கொலு வீற்றிருந்தான், ஊர்வசி, திலோத்தமை முதலிய தெய்வ மகளிர் நடனமாடினர். அவன் செல்வக் களிப்பிலும் காமக் களிப்பினும் தன்னை மறந்து தருக்கோடு வீற்றிருந்தான். தன்னை வெல்வாரும் கொல்வாரும் இன்றித் தரணியை ஆண்ட காவலன் அவன்.

இலங்கை நகரின் வடக்கு வாயிலில் மூக்கிலும் செவியிலும் குருதி கொட்டச் சூர்ப்பனகை முறையிட்டுக் கொண்டே வந்தாள். அந்நகர் அரக்க மகளிர் இதைக் கண்டு வயிற்றில் அடித்துக் கொண்டு இரங்கி அழுதனர். இராவணன் தங்கை மூக்கு அற்றுத் துணையின்றிப் போக்கற்று வந்திருப்பதை அவர்கள் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இலங்கை அரசன் கால்களில் விழுந்து புரண்டாள்; வேந்தன் இதைக் கண்டு. அதிர்ச்சியும் ஆவேசமும் கொண்டான், இடியொலிபோல் பேரார வாரம் செய்து, “யாவர் செயல்?” என்று கேட்டான்.

“கானிடை அடைந்து காவல் புரிகின்ற வீரர் இருவர், மன்மதனைப் போன்ற அழகு உடையவர்; அவர்கள் மானிடர்தான் எனினும் மாஇடர் செய் துள்ளனர்; வாள் உருவித் தடிந்தனர்” என்றாள்.

“மானிடருக்கு இத் துணிவு வாராது; நீ ஏதோ பெரிய தவறு செய்திருக்கிறாய்; அதனால்தான் அவர்கள் பொறுக்க முடியவில்லை இந்த எல்லைக்குச் சென்று இருக்கிறார்கள்; நடந்ததை அச்சமின்றிச் சொல்” என்று கேட்டான்.

“உருவிலே மன்மதனை ஒப்பர்; தோள் வலிமை யில் மேருமலையை நிகர்ப்பர்; முனிவர் வாழ்வில் அவர்கள் அக்கறை கொண்டவர்; வில்லாற்றலும் வீரமும் உடைய அவர்கள் உன்னைத் துரசாக மதிக்கின்றனர்; அரக்கரை வேரோடு அழிக்க உறுதி பூண்டுள்ளனர்; அவர்கள் தசரதன் புதல்வர்; இராமன் இலக்குவன் என்பன அவர்கள் பெயர்கள்” என்றாள்.

“அங்கிருந்த நம் இனத்தவர் அவர்களை எப்படி விட்டு வைத்தனர்?” என்று கேட்டான்.

“கரனும் தூஷணனும் என் குறையைக் கேட்டனர். பின் அவர்களை எதிர்த்து மாண்டுவிட்டனர்” என்றாள்;

“நீ செய்த தவறு என்ன? மூக்கும் செவியும் அறுக்க நீ செய்த பிழை யாது?” என்று கேட்டான்.

“பெண்ணால் வந்த பெரும்பிழை” என்றாள்.

“யார் அவள்?”

“கொடி போன்ற மென்மை உடைய அப் பேரழகியின் பாதம் தீண்ட இந்தப் பார் பாக்கியம் செய்தது; அவள் பேர் சீதை” என்று கூறி அவள் வடிவினை எல்லாம் பாராட்டத் தொடங்கினாள்.

“அவள் சொற்கள் காமரம் என்னும் பண்ணிலே இசைக்கும் பாடலாகும்; திருமகளும் அவளுக்குப் பணிப் பெண் ஆகும் தகுதியைப் பெறமாட்டாள்; அவள் கூந்தல் மேகத்தைப் போன்றது; பாதங்கள் செம்பஞ்சு போன்றவை; விரல்கள் பவளத்தைப் போன்றவை; வதனம் தாமரை மலரைப் போன்றது; கண்கள் கடலைப் போன்றன; “ஈசனார் கண்ணால் அநங்கன் எரிந்து அழிந்தான்” என்பது பொய்யுரை, வாசம் நாறும் கூந்தலாளைக் கண்டு அவளை அடைய முடியாமல் அவன் வெந்து தேய்ந்தான் என்பதுதான் உண்மை”.

“வேலினையும் வாளினையும் வெற்றி கொண்ட கண்ணை உடைய அழகியை ஒவியத்திலும் எழுத முடியாது; இவளைப் போன்ற பேரழகியைத் தேவர் உலகத்திலும் காண முடியாது; நாகர் உலகத்திலும் காண முடியாது; இந்த மண்ணுலகத்திலும் பார்க்க முடியாது. இம்மூவுலகத்திலும் காண முடியாத பேரழகி அவள்”.

“அவள் தோள் அழகை எடுத்துச் சொல்லு வேனோ? அவள் முகத்தில் உலவுகின்ற கண் அழகைச் சொல்லுவேனோ! மற்றைய அங்கங்களில் அழகை வருணிப்பேனோ! அவள் அழகைத் தனித்தனியே சொல்லும் ஆற்றல் எனக்கு இல்லை; நாளையே நீ பார்க்கப் போகிறாய்; அதனால் யான் எடுத்துச் சொல்லத் தேவை இல்லை”.

“வில்லைப் போன்றது நெற்றி என்றாலும், வேல் போன்றது விழிஎன்றாலும், முத்துப் போன்றது பல் என்றாலும் சொல்ல அழகாக இருக்குமேயன்றி உண்மையை உரைத்தது ஆகாது. புல்லைப் போன்றது நெல் என்று கூறினால் எப்படி இருக்குமோ அதனைப் போன்றதுதான் இவ் உவமைகள்.”

“இந்திரன், இந்திராணியைப் பெற்றான். ஈசன் உமையைப் பெற்றான். தாமரைச் செங்கணான் செந்திருவைப் பெற்றான்; சீதையை நீ பெறறால் நீ தான் அவர்களைவிட மேன்மை பெற்றவன் ஆவா

“பார்வதியை இடப் பாகத்தில் ஒருவன வைத்தான்; தாமரையில் வாழும் திருமகளை மார்பகத்தில் ஒருவன் வைத்தான்; பிரமன் நாவில் வைத்தான்; மின்னல் போன்ற இடையாளாகிய சீதையை வீரனே! நீ பெற்றால் எப்படி வைத்து வாழப் போகிறாய்?"

“மழலை மொழி மகிழப் பேசும் அழகியைப் பெற்ற பின் கொள்னை மாநிதிகளை அவளுக்கே கொடுப்பாய்; சீதையை நீ பெறுமாறு செய்வதால் நான் உனக்கு நல்லவள் ஆகின்றேன்; ஆனால், கிள்ளைபோல் மொழி பேசும் உன் விருப்ப மாதர்க்கு எல்லாம் கேடு சூழ்கின்றேன் அல்லவா?”

“அவள் தெய்வ மகளும் அல்லள்; தாய் வயிற்றில் பிறந்த மானுட மகளும் அல்லள், மண்மகள் தந்த மாமகள் ஆவாள்; சிற்றிடையாளாகிய சீதை என்னும் மானை நீ பெற்றுக் கொண்டு இராமன் என்னும் யானையை வளைத்துப் பிடித்து எனக்கு விளையாடத் தந்துவிடு.”

“அன்னவள் தன்னை உன்னிடம் சேர்க்கவே அவளை அணுகினேன்; அவ் இராமன் தம்பி என்னை இடையிலே புகுந்து மூக்கு அரிந்துவிட்டான் அப்பொழுதே என் வாழ்வினை முடித்துக் கொண்டு இருப்பேன்; உன்னிடம்; சொல்லிவிட்டு உயிரைவிடத் துணிந்தேன்” என்று சொல்லி முடித்தாள்.

அவள் பற்றவைத்த நெருப்பு அவனைச் சுட்டெரித்தது. சீதையின்பால் சிந்தை இழந்த அவன் அவள் நினைவாக மாறிவிட்டான், இராமனால் உயிரிழந்த தன் தம்பி கரனையும் மறந்தான்; தன் தங்கையின் மூக்கைத் தடிந்த இலக்குவன் மீது கொண்ட பகையையும் மறந்தான்; அதனால், தனக்கு நேர்ந்த பழியையும் மறந்தான்; தான் பெற்றிருந்த வரங்களை எல்லாம் மறந்தான்; சூர்ப்பனகை சொல்லிக் கேட்ட மங்கையை மட்டும் அவனால் மறக்க முடியவில்லை.

சீதையின் நினைவு ஒருபக்கம்; மானம் ஒரு பக்கம் இரண்டில் சீதையின் நினைவே வெற்றி கொண்டது. மயிலுடைச் சாயலாளை வஞ்சித்து எயிலுடைய இலங்கையில் சிறை வைப்பதற்குமுன் தன் இதய மாகிய சிறையில் வைத்தான்; வெயிலிடை வைத்த மெழுகுபோல் அவன் உள்ளம் மென்மை உற்றது; காமநோயால் பீடிக்கப்பட்டு விரக வேதனையால் வெந்து அழிந்தான்; சீதையை அடைந்தால் தவிரத் தன் துன்பம் தீராது என்ற முடிவுக்கு வந்தான்; அமைச்சர்களை அழைத்து அவர்களுடன் கலந்து பேசினான். பின்பு ஒரு முடிவுக்கு வந்தான், தனியனாக விமானம் ஏறி ஐம்புலன்களை அடக்கித் தவ நிலையில் இருந்த மாரீசன் இருந்த இடத்தை அடைந்தான்.

மாரீசன் வதை

இராவணன் வந்து அடைந்ததும் என்னவோ என்று அச்சம் கொண்டான் மாரீசன். கரியமலை போன்ற இராவணனை எதிர் கொண்டு வரவேற்று உபசாரங்கள் செய்து “இந்த வனத்துக்கு என் இருக்கை நோக்கி வந்த கருத்து யாது?” என்று கேட்டான்.

“என்னால் இயன்ற அளவு என் உயிரைத் தாங்கிக் கொள்ள முயன்றேன். இப்போது அதுவும் முடியாமல் மனத் தளர்ச்சி கொண்டேன், என் அழகும் பெருமையும் புகழும் ஒருசேர அழிகின்றன. இதற்குக் காரணம் யாது? சொன்னால் வெட்கக் கேடுதான்.”

“வன்மை மிக்கவர் மானிடர் ஆகிவிட்டனர். உன்மருகி நாசி இழக்கும் நிலையை உண்டாக்கினர்; இதைவிட நம் மரபுக்கு ஒர் இழிவு உண்டோ? கரனும் துஷணனும் உயிர் இழந்தனர் என்றால் இதைவிட அவமானம் வேறு என்ன இருக்கிறது? இருகை சுமந்தாய்!’ இனிதின் இருந்தாய்! கேட்டால் ‘தவம் செய்கிறேன்’ என்கிறாய்; ஒருவன் கட்டமைந்த வில்லால் இருவர் உயிரைப் பருகினான்; வெம்பிய மனத்தோடு வேகின்றேன், அவர்கள் எனக்கு ஒப்பிலார், என்பதால் போர் செய்யத் தயங்குகிறேன். பவழம் போன்ற செவ்வாய் வஞ்சியை வவ்வ உன் துணை நாடுகிறேன்; இப்பழியை நீதான் தீர்த்துத் தரவேண்டும்” என்றான்.

எரியும் நெருப்பிலே அரக்கை உருக்கிச் செவியில் கொட்டியதுபோல் இச் இச்சொற்கள் கடுமையாக இருந்தன; காதுகளைப் பொத்திக் கொண்டு அச்சம் நீங்கிச் சினத்தோடு சீரிய உரைகள் பேசினான் மாரீசன்.

“மன்னர், நீ நின் வாழ்வை முடித்தாய்; மதி அற்றாய், நீ தேடிக் கொண்ட அழிவு அன்று இது. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டுகிறது; செவிக்கு இன்னா எனினும், உனக்கு இதம் வேண்டி இவை சொல்கிறேன்.

“நீ தவம் செய்து பெற்ற செல்வ மெல்லாம் அவமே அழிக்கிறாய், இழந்தவை மீட்க முடியுமா? அறவழியில் ஈட்டிய செல்வத்தை அநீதிக்கு அழிக்கிறாய், பிறன் மனைவியைக் கவர்வது உன் பேராண்மைக்கு இழுக்காகும்; பாவமும் பழியும் சேரும், உன் கூட்டமே அழியும்;

“கரன் உன்னைவிட அதிகம் ஆற்றல் மிக்க சேனை கொண்டவன்; அவனை எதிர்க்க முடியாமல் தேரோடு மாண்டான்; விராதன் என்பவனைவிட வலிமை உடையவர் யார் இருக்கிறார்கள்? அவன்கதி என்ன ஆயிற்று? என் தம்பியான சுபாகுவும் என் தாயாகிய தாடகையும் இராமன் அம்புக்கு ஆற்ற முடியாமல் உயிர் விட்டனர். அவன் முன்நின்று போர் செய்ய முடியாமல் நான் உயிர் பிழைத்து ஓடிவந்து விட்டேன்; நினைத்தாலே நெஞ்சு நடுங்குகிறது; ஆற்றல்மிக்க அந்த இராமனோடு நீ மோதிக் கொள்கிறாய் என்று நினைக்கும்போது அச்சம் மிகுகிறது; அற்ப சுகங்களுக்கு ஆசைப்பட்டு உன் ஆயுளை இழக்காதே!” என்று அறிவுரை கூறினான்.

“சீதையைக் கடத்திச் செல்வதில் யான் பின் வாங்க வில்லை; உன் குலத்தின் நலத்தைக் கருதித்தான் இவ்வளவும் சொல்கிறேன்; காமத்தால் கண்ணிழந்து நீ கருதியதை அடைய விரும்புகிறாய்; உன் ஆசைக்கு நான் குறுக்கே நிற்கவில்லை; உன் அழிவுக்குத் தடை போடுகிறேன்” என்றான்.

“நீ அறிவுரை கூற அமைச்சன் அல்லை; நான் இடும் கட்டளையை ஏற்று நீ நடந்து கொள்ள வேண்டும்; நீ ஒரு வீரன், தலைமையிடும் கட்டளையைத் தலைமேல் தாங்க வேண்டுமே தவிர, மற்றைய நிலைமைகளை எல்லாம் நீ பேசக்கூடாது; உயிருக்கு அஞ்சி நீ ஏதேதோ உளறுகிறாய்”.

“என் அழிவுக்காக யான் சிறிதும் கவலைப்படவில்லை; மூத்தவன் என்பதால் மூதுரை வழங்குகிறேன்; கட்டளையிடு; ஏற்கிறேன்” என்றான்.

“மன்மதன் என்னைத் துளைக்கிறான்; அந்த அம்புக்கு ஆற்றாமல் உயிர் விடுவதைவிட இராமனை எதிர்த்து உயிர் விடுவது புகழைத் தரும்; சீதைதான் என் துயருக்கு மருந்து; என் வாழ்வுக்கு விருந்து; அவளை என்னிடம் சேர்ப்பிக்க வேண்டும்” என்றான்.

“ஏற்கனவே இராமன் தாடகையைக் கொன்றதற்குப் பழிதீர்க்க, மான் வடிவத்தில் தண்டக வனத்தில் இரண்டு அரக்கர்களோடு சென்றிருக்கிறேன். அந்த இருவரும் அவன் அம்புக்கு இரையானார்கள். நான் தப்பித்து வந்து விட்டேன்” என்றான்.

“வஞ்சனையால்தான் அவனை வெல்ல வேண்டும்; மாயமான் வடிவத்தில் சென்று, அப்பெண் மானை மயக்கு; பெண்ணாகிய அவளுக்குப் பொன்னிறம் மிகவும் பிடிக்கும்; நீ பொன்மானாய் உருவெடு; அவள்முன் பாய்ந்து ஒடு; அவள் இம்மானைப் பிடித்துத் தருக என்பாள்; அதை இராமனால் மீற முடியாது; அவனுக்கு ஒட்டம் காட்டு; அவன் உன்மீது அம்புவிட்டால், ‘இலக்குமணா’ ‘சீதா’ என்று அவன் குரலில் ஒலமிடு; இலக்குவன் காவல் நீங்கும்; என் ஆவல் ஒங்கும்” என்றான்.

மாரீசன் தன்னைப் பற்றிக் கவலைப்பட்டான்; மறுத்தால் இராவணன் கொன்று விடுவான்; இராமனை எதிர்த்தால் அவன் அம்புக்கு இரையாக வேண்டுவது தான்; மரணம் என்பது அவனைக் கூவி அழைப்பதை உணர்ந்தான். நச்சுப் பொய்கையில் அகப்பட்ட மீன் தப்ப முடியாது; அந்தக் குளத்தில் இருந்தாலும் சாவு, கரையில் குதித்தாலும் சாவு; இருதலைக் கொள்ளி எறும்பு ஆனான்.

“வீரமரணம் அடைய முடியாமல் போயிற்றே” என்று வருந்தினான். ‘இராமன் அம்புக்கு இரையாவது தனக்கு உயர்வு தரும்’ என்று அமைதி கொண்டான்; வேறு வழி இல்லை; பொன்மான் உருக் கொண்டான்; அந்த நன் மானாகிய சீதைமுன் சென்றான்.

மானைக் கண்ட சீதை அதனைப் பிடித்து விளையாட விரும்பினாள்; பொன்னாலான மேனியும்; மரகத்தால் ஆகிய கால்களும் செவிகளும் புதுமையாய் இருந்தன. இலக்குவன் அதன் பொய்மையைக் கூறி விலக்கினான்; சீதை அந்த மானைப் பிடித்துத் தரும்படி இராமனிடம் வேண்டினாள்.

இராமன் மனைவியின் வேண்டுகோளை மதித்தான்; “இப்படியும் ஜீவன்கள் இருக்கலாம்; இவை அபூர்வப் பிறவிகள்” என்று விவாதித்தான்; “மானைக் காட்டுக” என்று சீதையிடம் இராமன் கூறினான்; இலக்குவனும் பின் சென்றான்; ஆசைபெற அந்த மான் விழித்தது.

இராமன் அதன் அழகைக் கண்டு வியந்தான்; “அதனால் நமக்கு என்ன ஆக வேண்டியுள்ளது” என்று இலக்குவன் கூறி மறுத்தான்; “இந்த மாய மானின் பின்னே அரக்கர் ஒளிந்து இருப்பர்” என்றும் சொல்லிப் பார்த்தான்.

இயற்கை மானாக இருந்தால் இதனைப் பிடிப்பதும், மாயமானாக இருந்தால் இதனை மடிப்பதும் என் செயல் என்று இராமன் கூறினான். இராமன் தானே சென்று பிடித்துத் தருவதாயும் பர்ணசாலையில் சீதைக்குக் காவலாய் இலக்குவனை இருக்குமாறு கூறி வில்லும் அம்பும் ஏந்தி, அதன்பின் சென்றான்; அது ஒட்டம்காட்டியது; கிட்டுவது போலக் காட்டி, எட்டி எட்டிச் சென்றது.

அது மாயமான் என்பதை இராமன் உணரத் தொடங்கினான்; இலக்குவன் முன்கூட்டி உரைத்தது குறித்து வியந்தான்; அவனைப் பாராட்டினான்.

மாரீசனும் இராமனை நெடுந்துரம் விலக்கி விட்ட தால், தன் கடமை முடிந்துவிட்டது என்று உணர்ந்தான்; ‘இனி அவன் அம்புக்குத் தப்பமுடியாது’ என்பதால் தப்பித்துக் கொள்ள நினைத்தான்; அதனால் வானை நோக்கிப் பாய்ந்தான்; அவனுக்கு முடிவு கட்டத் தன்கூரிய அம்பினை இராமன் செலுத்தினான்.

மாயமான் மாய்ந்தது; மாரீசன் அதினின்று வெளிப்பட்டு விழுந்தான்; இராவணன் சொல்லிக் கொடுத்தபடி இராமன் குரலில் “ஆ! சீதா இலக்குமணா” என்று அபயக் குரல் கொடுத்து அழைத்துப் பின் உயிர் விட்டான்.

இராமனுக்கு அவன் சூழ்ச்சி விளங்கியது; “கூப்பிட்ட குரலில் ஏதோ சூழ்ச்சி இருக்க வேண்டும்” என்பதை உணர்ந்தான்; விரைவில் பர்ணசாலை நோக்கி விரைந்தான்; இலக்குவன் விழிப்போடு காவல் புரிவான் என்ற நம்பிக்கையோடு இருந்தான்; எனினும் சூழ்ச்சி உருவெடுப்பதற்குமுன் திரும்புவதில் வேகம் காட்டினான்.

சடாயு உயிர் நீத்தல்

மாரீசன் கூவல் சீதையின் செவியில் பட்டது; ‘இராமனுக்கு ஏதோ கேடு நிகழ்ந்து விட்டது, என்று தவறாய் நினைத்தாள்.

‘மானைப் பிடித்துக்கொடு, என்று சொன்னது எவ்வளவு அறிவீனமான செயல்’ என்பதை எண்ணி நொந்து கொண்டாள்; வெளியில் நின்று கொண்டிருந்த இளயவனை நோக்கி ‘அண்ணன் அலறல் கேட்டு நீ இங்கே நின்று கொண்டிருக்கிறாயே! தகுமா?” என்று கண்டித்தாள்.

‘இராமனை எதிர்த்து வெல்வார் எவரும் இல்லை என்பது எனக்குத் தெரியும்; அவனுக்கு ஒன்றும் ஆகாது’ என்று உறுதியாகச் சொன்னான்.

“ஒருநாள் பழகினும் உயிர்விடும் பெரியோர் உளர்; பலநாள் பழகிய நீ, உடன் பிறப்பு என்ற உரிமையுடைய நீ சிறிதும் பதறாமல் அஞ்சாமல் நிற்கிறாயே! இங்கே நீ செயலற்று இருந்தால் நெருப்பில் விழுந்து, என் உயிரை யான் விடுவது உறுதி” என்றாள்.

அதற்குமேல் அவனால் அங்கு நிற்க முடியவில்லை; இருந்தாலும் இழிவு; நீங்கினாலும் இழவு என்ன செய்வது? என்று தெரியாமல் திகைத்தான்; “கழுகின் வேந்தன் காவல் இருக்கிறது” என்ற நம்பிக்கையில் குரல்வந்த திசை நோக்கி ஓடினான்.

இராவணன் வருகை

இலக்குவன் இடம் பெயர்தலை எதிர்நோக்கி இருந்த இராவணன், தவ வேடம் தாங்கிச் சாம வேதத்தை வீணையில் இசைத்துப் பாடினான்; முதிய வேடம் அவனுக்கு முகமூடியைத் தந்தது; அருந்ததி போன்ற கற்புடைய சீதை இருந்த பர்ணசாலையை அடைந்தான்.

“இந்தப் பர்ணசாலை உள் இருப்பது யார்?” என்று கேட்டான், பவளக்கொம்பு போன்ற சீதை, “உள்ளே வாருங்கள்” என்று வரவேற்றாள்; அவனும் அவள் தந்த இருக்கையில் அமர்ந்தான்.

“இந்த சாலை யாருடையது? இங்கு உறையும் அருந்தவன் யாவன்? நீவிர் யாவிர்?” என்று கேட்டான்.

“புதியவர்போல இருக்கிறது”” என்று அவனிடம் பரிவு காட்டிப் பேசினாள்.

“இராமனும் யானும் அவன் தம்பியோடு இங்குத் தங்கி இருக்கிறோம்; அன்னை சொற்கேட்டு இங்கு வந்திருக்கிறோம். அவர் பெயரினை நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர் என்று நினைகிறேன்” என்றாள்.

“உம்முடைய பெற்றோர் யார்?” என்று கேட்டான்.

“சனகன் மகள்; என் பெயர் சானகி என்றாள்.

“முதியவரே நீர் எங்கிருந்து வருகிறீர்?”

“இராவணன் திருநகரில் இருந்து வந்திருக்கிறேன்; அவனுக்கு எந்தக் குறையும் இல்லை; எனினும், அவன் ஒரு மங்கையைத் தேடிக் கொண்டிருக்கிறான்” என்றான்.

“அரக்கர் நகரில் அருந்தவ முனிவராகிய நீர் எப்படித் தங்கி இருந்தீர்” என்று கேட்டாள்.

“நீ கருதுவதுபோல அரக்கர் தீயவர் அல்லர்” என்றான்.

“தீயவர்களோடு சேர்கிறவர்கள் நல்லவர்களாய் இருக்க முடியாதே”

“வல்லமை உடையவர் அரக்கர்; அவர்களை அனுசரித்து வாழ்வதுதான் அறிவுடைமை” என்றான்.

“அரக்கரை அடியோடு ஒழிக்க இராமன் காத்திருக்கிறான்; அவர்கள் அழிந்தபின்னரே உலகம் சீர்படும்” என்றாள்.

“மனிதர் வலியவரான அரக்கரை அழிப்பார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது; யானைக் கூட்டத்தை ஒருசிறு முயல் வெல்லாது; ஆண் சிங்கத்தை ஒரு மான் குட்டி எப்படி வெல்லும்?” என்று கேட்டான்.

“இராமன் விராதனையும் சூர்ப்பனகையையும், கரன் முதலானவரையும் கொன்றது உமக்குத் தெரியாது போலும்! ஆண் சிங்கம் என்பது இராமன்தான்; அரக்கர்தாம் மான் கூட்டம்” என்றாள்.

“இராவணன் ஆற்றல் மிக்கவன்; அது தெரியாமல் நீ பேசுகிறாய்” என்றான்.

“பரசுராமனை வென்றவன் இராமன்; அவன் ஆற்றலை நீ அறியாமல் பேசுவது வியப்பாக இருக்கிறது” என்றாள்.

அவன் பெருஞ்சினம் கொண்டான்; அதனால், அவன் மாயவேடமும் மறைந்தது; தன் முன்னால் இருப்பவன் இராவணன் என்பதைச் சீதை அறிந்தாள்; அவனிடமிருந்து தப்பிச் செல்ல வழியறியாமல் தவித்தாள்.

“தேவர் எனக்கு ஏவல் செய்கிறார்கள்; புழுக்களைப் போல வாழும் மானிடர் அரக்கனாகிய என்னிலும் வலியவர்” என்று பேசுகிறாய்; உன்னைப் பிசைந்து தின்று விடுவேன்; அதன்பின் நீ இல்லாமல் நான் வாழ முடியாது என்பதால்தான் தயங்குகிறேன்” என்றான்.

“நீ கவலைப்படாதே; என் செல்வச் சிறப்பில் நீ மகிழ்ச்சியோடு இருக்கலாம்” என்று தொடர்ந்தான்.

“நான் இராமன் மனைவி; நீ நாயினும் கேடானவன்; இராமனது கொடிய அம்பு பாய்வதன்முன் தப்பி ஒடிவிடு!” என்று கூறினாள்.

“அந்த அம்பு என்னை ஒன்றும் செய்யாது. அது மலராக எனக்குப்படும், நீ என் விருப்பத்தை நிறைவேற்றி எனக்கு உயிர்ப் பிச்சை கொடு” என்று இரந்து அவள் கால்களில் விழுந்து வனங்கினான். அவள் இராமனையும் இலக்குவனையும் ‘இறைவா இளையாங்னே’ என்று கூவிஅழைத்தாள். அவனுக்கு பிரம்மனால் ஏற்பட்டிருந்த சாபத்தால் அவளைத் தொட அஞ்சினான். அவளைத் தொடாமல் தரையோடு பர்ண சாலையைப்பெயர்த்து எடுத்து விமானத்தில் வைத்து விண்ணில் பறந்தான். மேகத்திலிருந்து நிலத்தில் விழும் மின்னலைப்போல அவள் மயங்கி விழுந்தாள். மயக்கம் நீங்கி ‘ஒ’ என்று கதறினாள்.

“நீ ஒரு கோழை; அதனால்தான் இந்த வஞ்சகச் செயலை மேற்கொண்டாய்” என்று விளம்பினாள்.

“மனிதரிடம் போர் செய்தால் அது என் வீரத்துக்கு இழுக்கு; வஞ்சனைதான் வெற்றி தரும்” என்றான்.

“சித்திரப்பாவை நிகர்த்த சீதை அவன் கூறுவதை எள்ளி நகையாடினாள். கற்புடைய பெண்களை வஞ்சிப்பது குற்றமில்லையா?” என்று கேட்டாள்.

சீதையின் குரல் கேட்டுக் கழுகின் வேந்தன் சடாயு என்பான் வந்து இடை மறித்தான்.

“அடே! எங்கே போகிறாய்? நில், நில்”” என்று கூவிக்கொண்டு சடாயு வழி மறித்தான்.

“நீ அழிவைப் பெறப்போகிறாய். உன் சுற்றத்தாரையும் அழிக்கிறாய். இராமன் முன் உன் ஆற்றல் நிற்காது. ஏன் வீணே அழிவைத் தேடிக் கொள்கிறாய்; சீதையை விட்டுவிடு” என்றான்.

“பழுக்கக் காய்ச்சிய இரும்பில் தூவிய நீர் மீண்டும் வராது. அதே போலத்தான் சீதையின் நிலையும். அவளை உன்னால் மீட்க முடியாது” என்றான்.

சடாயுவும் இராவணனும் மோதிக் கொண்டனர். இராவணனைச் சடாயு தேரோடு கீழே சாய்த்தான். இனி இராவணன் பிழைக்க மாட்டான் என்ற நிலைமை உருவாகியது. அவனிடம் வேறு ஆயுதங்கள் இல்லை. தன் உறையில் “சந்திரகாசம்” என்னும் வாள் இருந்தது. அது அவனுக்குச் சிவபெருமான் அளித்தது. அதைக் கொண்டு சடாயுவின் சிறகுகளைக் கொய்தான். அவனும் சிறகு அறுபட்டுக் கீழே சாய்ந்தான்.

சீதை சடாயுவை நினைத்துப் புலம்பினாள். அவளை அந்தப் பர்னசாலையோடு தன் தோளில் வைத்துக் கொண்டு இராவணன் ஆகாய வழியாக இலங்கையை அடைந்தான். அங்கே சீதையை அசோக வனத்தில் அசோக மரத்தின் நிழிலில் சிறை வைத்தான். அரக்கியர் அவளைக் காவல் செய்தனர்.

இலக்குவன் சீதையைத் தனியே விட்டு வந்தோமே என்ற வருத்தம், இராமனைக் காண வில்லையே என்ற கவலை இரண்டிலும் அகப்பட்டுத் துடித்தான்.

இராமனைக் கண்டான்; அளவிலா மகிழ்ச்சி கொண்டான். இராமன் தன் தம்பியை அன்பால் தழுவிக் கொண்டான்.

“நீ ஏன் இங்கு வந்தாய்?” என்று கேட்டான்.

இலக்குவன் நடந்ததைச் சொன்னான்; தான் அங்கு வரவில்லை என்றால் சீதை நெருப்பில் விழுந்து இறந்திருப்பாள் என்பதை விளக்கினான்.

இலக்குவன் தடுத்தும் தான் மான்பின் சென்றது தவறு என்பதை இராமன் ஒப்புக் கொண்டு அதற்காக வருந்தினான். விரைவில் பர்ணசாலை திரும்புதல் வேண்டும் என்று கூறி இருவரும் வேகமாக நடந்தனர். பர்ணசாலையை அடைந்தனர்.

பஞ்சவடியில் சீதையைக் காணவில்லை. தேடி வைத்த செல்வம் வைத்த இடத்தில் இல்லாவிட்டால் எத்தகைய துன்பம் அடைவார்களோ அத்தகைய துன்பத்தை இராமன் அடைந்தான். அவன் மனம் சுழன்றது. உலகமே சுழன்று திரிவதைப்போல அவனுக்குக் காணப்பட்டது. அவன் கோபத்தால் கண்கள் சிவந்தன. தருமத்தின் மீதும், சீதையைக் காக்காத தேவர்களின் மீதும் அவன் கோபம் பாய்ந்தது. தேரினுடைய சக்கரங்கள் பூமியில் பதிந்து இருப்பதைப் பார்த்தார்கள். சீதையைத் தொடுவதற்கு அஞ்சி அவள் இருந்த நிலத்தை அடியோடு பெயர்த்துக் கொண்டு போனதையும் அறிந்தார்கள். “சீதையைக் கவர்ந்தவன். வெகுதூரம் செல்வதற்கு முன்பு அவனைத் தொடர்ந்து செல்வோம்” என்று இராமன் கூறினான். தேர்ச்சுவடுகள் வழிச் சென்றனர். ஓர் இடத்தில் அச்சுவடுகள் நின்றுவிட்டன. அவன் ஆகாய வழியே சென்னறிருக்க வேண்டும் என்பதை அறிந்தனர்.

அம்பு தாக்க முடியாத தூரத்திற்குச் செ ைறிருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். இரண்டு யோசனை தூரம் நடந்து சென்றனர். வீணையின் சித்திரம் வரையப் பெற்ற துகில் கொடி ஒன்று நிலத்தின் மீது கிடப்பதைக் கண்டனர். அந்தக் கொடி சடாயுவின் மூக்கால்தான் அறுபட்டு இருக்க வேண்டும் என்று உணர்ந்தனர். மேலும் தொடர்ந்து சென்றனர். வலிமையான ஒரு வில்லைக் கண்டனர். இதுவும் சடாயுவால் கடிக்கப்பட்டிருக்கிறது என்று முடிவு செய்தனர். பெரிய சூலம் ஒன்றையும் அம்பறாத் துணிகள் இரண்டையும் கண்டனர். இராவணன் மார்பிலிருந்து சடாயு பறித்த கவசம் சிதைந்து கிடந்ததைக் கண்டனர். குதிரைகள் விழுந்து கிடந்ததையும் தேர்ப் பாகன் மடிந்து கிடந்ததையும் கண்டனர். தோளில் அணியும் ஆபரணங்களையும் கவச குண்டலங்களையும் மணிகள் பதித்த மகுடங்களையும் கண்டனர். சடாயுவுடன் போரிட்டவன் சிங்கம் போன்ற ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும் என்று கணித்தனர்.

கடலில் மத்தாக வைக்கப்பட்ட மந்தர மலையைப் போல இரத்த வெள்ளத்தில் இராமன் சடாயுவைப் பார்த்தான்; அவன் மீது இராமன் விழுந்து கதறி அழுதான்.

“தந்தையை நாட்டில் இழந்தேன்; மற்றொரு தந்தையைக் காட்டில் இழந்தேன். என்னைப் போல அபாக்கியவான் வேறு யாரும் இருக்க முடியாது”.

“'சீதைக்கும் உனக்கும் நேர்ந்த தீமைகளைத் தடுக்க முடியாத நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்? தவசிகளின் வேண்டுகோளை ஏற்று அரக்கரை அழிப்பதாக வாக்குறுதி அளித்தேன், அதனால்தான் வாழ்கிறேன். உன்னைக் கொன்ற பகைவன் உயிரோடு இருக்கிறான் என்று தெரிந்தும் போர் மேற்கொள்ளா மல் இங்கே மரம்போல் நிற்கிறேன்” என்று கூறிக் கதறினான்.

சடாயு இறக்கவில்லை; ஒரளவு உணர்ச்சி இருந்ததை அறிந்தான். சீதையை இராவணன் வலிதிற் கடத்திச் சென்றான் என்று சடாயு கூறினான்.

“மலரணிந்த வார் கூந்தலாளை இராவணன் மண்ணினோடும் எடுத்தான். ஏகுவானை எதிர்த்து நின்று ஆற்றல் கொண்டு தடுத்தனன்; என்ன செய்வது? சங்கரன் தந்த வாளால் என் சிறகுகளை வெட்டினான். இங்கு விழுந்து கிடக்கிறேன்; இது இங்கு நடந்தது” என்றான்.

இராமன் சினமும் சீற்றமும் கொண்டான். “சீதையைக் கடத்திய கொடுமையன் எங்கே சென்றான்?” என்று கேட்டான். அதற்கு அவனால் விடை கூற முடியவில்லை; அவன் மூச்சு அடங்கியது.

“தம்பி! நம் தந்தைக்கு நாம் செய்ய வேண்டிய இறுதிக் கடன்களைச் செய்வோம்” என்றான்.

விறகுகள் கொண்டு வந்து தீ மூட்டி சடாயுவைக் கிடத்தி இராமன் எரியூட்டினான். மற்றும் ஈமச் சடங்குகள் அனைத்தும் செய்து முடித்தனர்.

அந்திப்பொழுது வந்து அணுகியது; இராமனும் இலக்குவனும் சடாயு உயிர் நீத்த இடத்தைவிட்டு நீங்கிச் செக்கர் வானம் நிறைந்த மேகம் தவழும் ஒரு மலையில் தங்கினர். இருள் மிகுந்தது; பிரிவு என்னும் துயர் இராமனை வாட்டியது. மனைவியை மாற்றான் கொண்டு சென்றதால் ஏற்பட்ட மானமும், இராவணன் மீது கொண்ட சினமும், தந்தை போன்றவனாகிய சடாயுவின் மரணத்தால் ஏற்பட்ட துயரமும் இவர்களை வாட்டின; இவற்றை மெல்ல மறந்து வாழ வேண்டும் என்ற ஞானமும், தாங்க முடியாத துயரும் மனப் போராட்டமாக உருக்கொண்டன; இரவுப் பொழுதெல்லாம் தூங்காது பலவாறாக எண்ணித் துயருற்றனர்.

இளைய வீரனான இலக்குவன் இராமனிடம் அடக்கமாக “பொன் போன்ற சீதையைத் தேடாமல் ஈண்டு இருத்தல் தகுதியோ” என்று கேட்டான். புகழ்மிக்க இராமனும், அரக்கன் இருக்கும் இடம் துருவி அறிவோம் என்று கூறி மலைத் தொடரில் வெய்யில் மிகுந்த காட்டுக்குள் தேடிச் சென்றான். குன்றுகளையும் ஆறு களையும் கடந்து பதினெட்டு யோசனை தூரம் நடந்து சென்றனர். பறவைகள் தங்குகின்ற குளர்ச்சிமிக்க சோலை ஒன்றில் புகுந்தனர். மாலைப்பொழுது மறைந்து இருட்பொழுது வந்து சேர்ந்தது. அங்கு ஒரு பளிக்கறை மண்டபத்தில் இருவரும் தங்கினர். “வீரனே! குடிப்பதற்கு நீர் வேண்டும் கொண்டு வருக” என்றான். இராமனை விட்டு இலக்குவன் தனியே சென்றான்.

மற்றுமொரு சூர்ப்பனகை

எங்குத் தேடினும் நீர் கிடைக்கவில்லை. சிங்கம்போல் காட்டில் அவன் திரிந்து கொண்டிருந்தான். அங்கு அவ்வனத்தில் இரும்பு போன்ற முகத்தை உடைய அயோமுகி என்னும் அரக்கி இவனைக் கண்டாள்; கண்டதும் இவன் மீது விருப்பம் கொண்டாள். இவன் “மன்மதனாக இருக்கிறான்” என்று நினைத்தாள்; தன் செருக்கையும் கொடுமையையும் தணித்துக் கொண்டாள்.

“இவனை அணைத்துக் கொள்வேன்; மறுத்தால் அடித்துக் கொல்வேன்” என்று முடிவுக்கு வந்தாள்.

அவன் தன்னை ஏற்க மறுத்தால் அவனைத் துக்கிச் செல்வது என்ற முடிவுக்கு வந்தாள். இலக்குவனைச் சந்தித்தாள், நெருங்கி அணைந்தாள்.

“இருட்டில் முரட்டுத் தனமாக மருட்டும் நீ யார்?” என்று கேட்டான்.

“நான் உன்னைத் தழுவ விருப்பம் கொண்டேன்; உன்னை அடையாவிட்டால் நான் உயிர்விடுவது உறுதி” என்றாள்.

இவளும் ஒரு சூர்ப்பனகை என்பதை அறிந்தான். “நின்றால் உன் மூக்கும் செவியும் அறுபடும்” என்று அதட்டிப் பேசினான்.

அவள் அஞ்சவில்லை; கோபமும் கொள்ள வில்லை. இலக்குவனை வாரி எடுத்துக் கொண்டு வான்வழியே சென்றாள். தன் குகையில் அவனை வைத்து அவன் சினம் தணிந்ததும் அவனைத் தழுவி இன்பம் அடையலாள் என்று நினைத்தாள். இலக்குவன் சீற்றம் மிகக் கொண்டான். அவளிடமிருந்து விடுபடுவது எப்படி என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

இலக்குவனைப் பிரிந்த இராமனின் துயர் இரு மடங்காயிற்று. சீதையைப் பிரிந்த துயர் ஒருபுறம், இக்குவனை இப்பொழுது பிரிந்த துயர் மற்றொரு புறம். நீரைக் கொண்டு வரச் சென்றவனை யாரோ ஆபத்தில் சிக்க வைத்து இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.

“சீதையைக் கவர்ந்து சென்ற இராவணன் இவனையும் கடத்திச் சென்று விட்டானோ, அன்றிக் கொன்று தீர்ந்தானோ, சீதையைக் காவல் செய்வதில் நெகிழ்ச்சி பெற்றமைக்கு வருந்தித் தானே உயிர் துறந்தானோ” என்று பலவாறு நினைத்தான்.

கண்ணை இழந்தவன்போல் கதறி அழுதான் “உயிர் போன்று இருந்தாய். என்னைத் தவிக்கவிட்டுச் சென்றது பொருத்தமா?” என்று பிரலாபித்தான். “அரசு துறந்த போதும் தனி ஒருவனாக நீ என்னைப் பின் தொடர்ந்தாய்; என் துக்கத்தில் பங்கு கொண்டு என்னோடு வந்தாய். அத்தகைய நீ என்னை விட்டுப்பிரிந்து போதல் தகுமா?” என்று கூறி வருந்தினான்.

“அறத்தின் செயல் இதுவாக இருக்குமானால் அடுத்த பிறவியில் உனக்கு நான் தம்பியாகப் பிறப்பது என் கடமை ஆயிற்று” என்று கூறித் தன் உயிரைப் போக்கிக் கொள்ள முடிவு செய்தான்.

அரக்கி அயோமுகியின் மாயையில் அகப் பட்டிருந்த இலக்குவன் அம்மாயையின்று விடுபட்டுத் தெளிவு பெற்றான். அவள் மூக்கை அறுத்து அங்கக் குறைவினை ஏற்படுத்தினான். அவள் இட்ட கூக்குரல் அக்காடு முழுவதும் எதிரொலித்தது. அது இராமன் செவிக்கும் எட்டியது. இது ஒர் அரக்கியின் குரலாகத்தான் இருக்க முடியும்” என்று இராமன் ஓரளவு அநுமானித்தான்.

அங்கையில் அக்கினி அத்திரம் எடுத்துக் கொண்டு ஒலி வரும் திக்கு நோக்கிப் புறப்பட்டான்.

புயற் காற்றைவிட வேகமாய் இலக்குவன் இருக்குமிடத்தை அடைந்தான். இலக்குவன் இராமனைப் பார்த்து “வள்ளலே! வருந்தற்க” என்று கூறினான். இழந்த கண்ணொளியை மீண்டும் பெற்றது போல் இராமன் மகிழ்ச்சி அடைந்தான். பிரிந்த கன்றை அடைந்த பசுவாய் விளங்கினான்.

“சென்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சிகள் யாவை?” என்று கேட்டான் இராமன்.

“அயோமுகி என்னும் அரக்கியின் மூக்கையும், செவியையும், உதடுகளையும் அறுத்து முடித்தேன்; அவள் கூக்குரல் இட்டாள்; தப்ப விட்டேன்” என்றான்.

“உயிரைப் போக்காமல் விட்டது உத்தமம், அதுதான் அறநெறி” என்று அறிவித்தான்.

துன்பம் நீங்கி அமைதி பெற்று வருணனை நினைத்து மந்திரம் கூறினான் இராமன். அவன் மழை நீரைத் தர அதனைக் குடித்து இருவரும் நீர் வேட்கை தணித்தனர். அந்த மலையில் மணல் பரப்பில் இலக்குவன் அமைத்துக் கொடுத்த மரப் படுக்கையில் இராமன் படுத்துக் கொண்டான்; உணவும், உறக்கமும் இன்றி வேதனைப் பட்டான், சீதையின் நினைவு அவனை வாட்டித் துயில் இழக்கச் செய்தது.

கவந்தன் வதை

சீதையைத் தேடி இருவரும் விடியற்காலையில் விரைவாய்ச் சென்றனர். கவந்தன் ஒரு தனிப்பிறவி யாய் இருந்தான். இருந்த இடத்தில் இருந்தே எவ் உயிரையும் எட்டி வளைத்துப் பிடிக்கும் கரங்களை உடையவன் அவன், எறும்பு முதல் யானை ஈறாக எல்லா உயிர்களும் அவன் கையில் அகப்பட்டன. காட்டில் வாழும் உயிர்ப் பிராணிகள் அனைத்தும் அஞ்சி நடுங்கின. திக்குகள் அனைத்தையும் தன் கையில் அகப்படுத்திய நீண்ட கரங்களுக்கு இடையே இராமனும் இலக்குவனும் அகப்பட்டுக் கொண்டனர்.

இது அவர்களுக்குப் புதுமையாய் இருந்தது. “இது அரக்கர் செயலாய்த்தான் இருக்க வேண்டும். அதனால், சீதை மிக அண்மையில்தான் இருக்க வேண்டும்” என்று இராமன் கூறினான்.

“அரக்கர் செயலாய் இருந்தால் அவர்கள் முரசும் சங்கும் முழங்க வேண்டுமே என்று கூறி மறுத்தான் இலக்குவன்.

“நம்மைப் பிணித் திருப்பவை மந்தர மலையைச் சுற்றிய வாசுகி என்ற பாம்பாகத்தான் இருக்க வேண்டும்” என்று இலக்குவன் கூறினான். இருவருமே இரண்டு யோசனை தூரம் நெருங்கிச் சென்று அவ்வரக்கனை நேருக்குநேர் சந்தித்தனர். “இவனிடமிருந்து உயிர் தப்ப முடியாது” என்று இராமன் முடிவு செய்தான்; அதற்குத் தன்னை ஆளாக்கிக் கொண்டான்; இலக்குவனை மட்டும் தப்பித்துச் செல்லும்படி வேண்டினான்.

“சீதையைப் பிரிந்தேன்; சடாயுவை இழந்தேன்; கொடும்பழிக்கு உள்ளாகிவிட்டேன்; இனியும் உயிர் வாழ்வது தக்கதன்று; இந்தப் பூதத்துக்கு உணவு ஆவதுதான் உத்தமம்; எந்த முகத்தை வைத்துக் கொண்டு சனகன் முகத்தைப் பார்க்கமுடியும்? அயோத்திக்குத் திரும்பச் சென்றால் ஆட்சியைப் பிடித்து அரசாள ஆசையுடையவன் என்று பேசுவர்”.

“மனைவியைக் காக்கத் திறனில்லாத இவன், வாழ்ந்து என்ன பயன்? மானங்கெட்டவன்; என்று பேசுதற்கு முன் உயிர்விட்டால் என் பழி தீரும்” என்று கூறினான்; இலக்குவன் அதை மறுத்து ஆறுதல் கூறினான்.

“துயரத்தில் உன்னைத் துவளவிட்டு நான் மட்டும் எப்படித் திரும்புவேன்? என் அன்னை சுமத்திரை, ‘முன்னம் முடி; இறப்பை ஏற்றுக்கொள்’ என்று சொல்லி என்னை அனுப்பினாள்; அவள் முகத்தில் நான் எப்படி விழிக்க முடியும்?”

“போருக்கு அஞ்சி உயிர் விட்டாய், என்ற பெரும்பழி உன்னைச் சாராதா? இந்த பூதம் என்ன? இதைவிட அஞ்சத்தக்க விலங்கு வந்தாலும் நம் வாள் முன் எம்மாத்திரம்? துணிந்து எதிர்த்தால் இது செத்து மடிவது உறுதி என்று கூறிய வண்ணம் இலக்குவன் முன்னேறினான். இராமனுக்குப் புதிய உற்சாகம் தோன்றியது; விண்ணை முட்டும் அதன் தோள்களை வாள் கொண்டு வெட்டினர், அருவி பொழியும் மலைபோல் குருதி கொட்ட நின்றது.

அவ்வரக்கவடிவு ஆற்றல் இழந்து, செயல் இழந்து இராமன் பெருமையை உணர்ந்து பலவாறு துதித்தது. அடக்கமாய் இராமனை வழிபட்டது. சீதையைக் காணும் சீரிய முயற்சிக்கு உதவ எண்ணியது.

அது அரக்க உருவம் நீங்கிக் கந்தருவனாக மாறிற்று.

“நீ யார்?” என்று இலக்குவன் கேட்டான்.

“தனு என்னும் நாமம் உடையவன் நான்; ஒரு முனிவன் சாபத்தால் இக் கடைப்பட்ட அரக்கப் பிறவியை எடுத்தேன்; உங்கள் மலர்க்கை தீண்டப் பழைய வடிவம் பெற்றேன்”.

“புணை இல்லாமல் வெள்ளத்தைக் கடக்க இலயாது; அது போலத் துணையில்லாமல் நீர் உம் பகையை அடக்க முடியாது. சிவனும் போற்றத் தக்க ஆற்றல் மிக்க பூதகணங்களை இராவணன் பெற்றுள்ளான்; அதுபோல நீங்களும் துணைபெற்று எடுத்த பணியை முடிக்க வேண்டும். அதற்குத் தக்கவன் சுக்கிரீவனும் அவன் வானர சேனைகளுமே ஆவர்” என்றான்; அவ்வாறே செய்வதாகக் கூறி மதங்க முனிவனது மலையைச் சேர்ந்தனர்.

மதங்க முனிவனது தவப்பள்ளி, கற்பக மரம் என்று சொல்லத் தக்க வளங்களைப் பெற்று விளங்கியது. அந்த ஆசிரமத்தில் நீண்டகாலமாய்த் தவம் செய்து கொண்டிருந்த முதியவள் சவரியைச் சந்தித்து அவள் நலம் விசாரித்தனர். அவள் இவர்களை இன்முகம் காட்டி இனிய கூறி வரவேற்றாள்; சுவைமிக்க காய்கனிகளைத் தந்து விருந்து படைத்தாள்.

“என் தந்தை போன்ற தலைவ! உன் வருகைக்காகத் தான் காத்திருந்தேன். என் தவம் பலித்தது” என்று கூறினாள்.

“தாயே! வழி நடை வருத்தம் தீர, வகை வகையான உணவு தந்து உபசரித்தீர். நீர் வாழ்க!” என்றான் இராமன்

சுக்கீரிவன் தங்கி இருக்கும் ருசிய முக பருவதத்துக்குச் செல்லும் வழிகளை நினைவு கூர்ந்து, அவற்றை அவனிடம் கூறினாள்; பின்னர் அவள் முத்தி அடைந்தாள்.

கிட்கிந்தா காண்டம்

கிட்கிந்தையில் இராமன்

வானத்தைப் போன்ற பரப்பும், நீல நிறமும் பம்பைப் பொய்கை பெற்றிருந்தது, அப்பொய்கையின் பூக்களும் அதில் படியும் அன்னப் பறவைகளும் சீதையின் நினைவை இராமனுக்கு மிகுதிப்படுத்தின, கயல் பிறழ்ச்சி சீதையின் கண்களை அவன் கண்முன் நிறுத்தியது; அன்னப் பறவை மின்னல் இடையாளான சீதையின் நடையைக் காட்டியது; குவளை விழித்துப் பார்த்தது; ஆம்பல் வாய் திறந்து பேசியது; களிறும், பிடியும் நீராடித் தழுவிக் கொண்டு அவர்கள் பழைய அன்பு வாழ்க்கையை நினைவுகளாகக் கொண்டு வந்து நிறுத்தின. பிடிக்கு முதலில் நீர் ஊட்டிப் பின் உண்ணும் களிற்றின் அன்புச் செயல் அவன் எதையோ இழந்துவிட்டதை எடுத்துக் காட்டியது. பிரிவுத் துயரில் அப்பொய்கைக் காட்சி அவனை ஆழ்த்திவிட்டது. நீடு நினைந்தான்; நீள்கனவுகளில் மிதந்தான். காரிகை தவிர வேறு எதுவும் அவன் கண்முன் நிற்க மறுத்துவிட்டது. தூரிகை கொண்டு எழுதாத அச்சித்திரம் அவனைச் சித்திரவதை செய்தது.

இலக்குவன் இராமனை நோக்கினான்; அவன் துன்பக் கனவுகளைக் கலைத்தான்; “பொழுதும் சாய்ந்தது. “நெடியோய்! நீராடி நிமலனை வழிபடு; நடந்ததை மறந்து, நடப்பதனை எண்ணிச் செயல்படுவோம்” என்று மென்மையாய்ச் சொல்லி, அவனைச் செயல்படுத்தினான், அவனும் மாலை மயக்கம் தீர்ந்து, இறைவழிபாடு செய்தான். முனிவர்தங்கியிருந்த சோலையில் ஒரு புறத்தே அவர்கள் உறைவாராயினர். மாலைக் கதிரவனும் வானத்தை இருளில் ஆழ்த்திவிட்டு மேலைக் கடலுள் ஒளிந்து கொண்டான்.

இரவு இராமனுக்குத் தனிமையைத் தந்தது; வான் உறங்கியது; வையகம் உறங்கியது; பூ ஒடுங்கின; புள் ஒடுங்கின; உயிர்கள் அனைத்தும் அயர்ந்து உறங்கின; அரவுகளும் கரவு நீங்கி அடங்கி ஒடுங்கின; விலங்குகளும் ஒய்வு கொண்டன; இராமன்மட்டும் உறங்க வில்லை; வைகல் விடிவதை எதிர்நோக்கி இருவரும் விழித்தே இருந்தனர்; விடிந்ததும் சீதையைத் தேடி மலைப் பாதைகளையும், காட்டு வழிகளையும் கடந்து சென்றனர்.

சபரி காட்டிய வழியில் அவர்கள் கால்கள் சென்றன; ருசிய முகம் என்னும் மலையை அடைந்தனர்; குரங்குகளுக்கு அரசனாகிய சுக்கிரீவன் அவர்களைக் கண்டு அஞ்சினான். மருண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயாகத் தென்பட்டன. பகைவர் எனக் கருதிக் குகைகளில் ஒளிய முற்பட்டன; அனுமனை அழைத்துத் தான் கொண்ட அனுமானத்தை உரைத்தான்; வாலியின் ஏவலை ஏற்று வரிவில் ஏந்தி வந்த வாலிபர்களாய் இவர்கள் தென்படுகிறார்கள், துறவுக் கோலத்தில் துயர் விளைவிக்க வந்திருக்கிறார்” என்று கூறி ‘நீ சென்று ஆராய்ந்து உண்மை தெரிந்து திரும்பிவா’ என்று ஆணையிட்டான்.

பாற்கடலில் எழுந்த நஞ்சைக் கண்ட அமரர்களைப் போல வானரர் அச்சம் கொண்டனர். அவர்கள் அச்சத்தைப் போக்கி அமைதியாக இருக்குமாறு அனுமன் கூறினான்; அஞ்சனை மகனாகிய அவன், அளுசன வண்ணனாகிய இராமனை மறைவில் இருந்து கவனித்தான்.

‘மூவர் கடவுளர்; இருவரே வந்துள்ளனர்; அதனால் இவர்கள் கடவுளர் அல்லர், வில்லேந்திய நிலையில் எதையோ தேடுபவராய் உள்ளனர்; சோகம் இவர்களை அணைந்திருக்கிறது; அன்பின் திருஉருவாய்க் காணப்படுகின்றனர்’, என்பதை அறிந்தான். பிரியம் கொள்ளத் தக்க மனிதராய்க் காணப்பட்டனர். அதனால் அஞ்சாமல் அவர்களை அணுகினான் அநுமன். அவர்கள் பார்வைக்கு அவன் விருந்தாயினான்.

“நீ யார்? எங்கிருந்து வந்தாய்? வந்தது ஏன்? என்ற வினாக்களைத் தொடுத்தனர்.

“காற்றின் வேந்தனுக்கு அஞ்சனை வயிற்றில் பிறந்தேன்; நாமமும் அனுமன் என்பேன்” என்று விரிவாய்ச் சொன்னான் அநுமன்.

“இம் மலையில் இருந்து வாழும் வேந்தன் சுக்கிரீவன்; அவனுக்கு யான் ஏவல் செய்வேன்; தேவரீர்! நின்வரவு நல்வரவாகுக; நும்மை நோக்கி விரைவில் வந்தேன்; “அனையவன் ஏவலினாலே உம்மை அறிய வந்தேன்” என்று மேலும் தொடர்ந்தான்.

“அனுமன் அறிவும், ஆற்றலும், கல்வியும், ஞானமும் நிரம்பியவன்” என்பதை அவன் சொல்லால் இராமன் தெரிந்துகொண்டான்.

“தான் கல்லாத கலையும் அறியாத வேதங்களும் இல்லை என்று கூறும்படி இவன் பேசுகின்றான்; யார் கொல் இச்சொல்லின் செல்வன்?” என்று வியந்தான்; “அவன் அந்தண வடிவத்தில் வந்தான் என்றாலும், சொந்த வடிவம் வேறு இருக்கவேண்டும்” என்பதை இராமன் உணர்ந்தான்.

“நீ கூறும் தலைவன் சுக்கிரீவனைத்தான் தேடி வந்தோம்; அவன் இருக்குமிடம் அறிவி” என்றான் இராமன்.

வாய்ப்பை எதிர்நோக்கி இருந்த அனுமன், அங்குச் சுக்கிரீவன் வந்த வரலாற்றை விளக்கினான்; ருசியமுகப் பருவதத்தில் உயிருக்கு அஞ்சி ஓடிவந்து ஒளிந்து கொண்டிருப்பதை உரைத்தான்; இந்திரன் மகனாகிய வாலி, கதிரவன் காவ்முளையாகிய சுக்கிரீவனைத் துரத்திக் கொண்டு வந்ததையும், சுக்கிரீவன் அங்கு வந்து ஒளிந்ததையும் கூறினான்; சுக்கிரீவன் வானரத் துணையோடு தங்கி இருக்கிறான்” என்று விளக்கினான். அவ்வாறே இராமனும்தான் அடைந்த துயரினை அனுமனுக்குச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான்.

அனுமன், தான் அந்தணன் அல்லன் என்றும், வானர இனத்தினன் என்றும் தெரிவித்துத் தன் சுயஉருவை அவர்களுக்குக் காட்ட, வானும் மண்ணு மாய் நின்ற அவன் நெடிய வடிவத்தைக் கண்டு, வியந்தான் இராமன்; அவனை ‘மாவீரன்’ என்று கூறிப் பாராட்டினான்!

அப்பொழுதே சுக்கிரீவனைத்தான் அழைத்து வருவதாய்க்கூறி விடைபெற்று நடை காட்டினான் அனுமன்.

சுக்கிரீவனோடு நட்பு

அனுமன் சுக்கிரீவனை அடைந்து இராம இலக்கு வரைப் பற்றிய செய்திகளை எல்லாம் விரிவாய்க் கூறினான்; “'இராமன் தன் மனைவி சீதையைப் பிடித்து துயருறுகிறான்; இராவணன் அவளைச் சிறைப் பிரித்து, மறைத்து வைத்து இருக்கிறான், சீதை சிறை வைக்கப் பட்டுள்ள இடம் தேட உன் இன்துணையை நாடி வந்துள்ளான்; உன் நட்பை விரும்புகிறான்; அவன் இங்கு வந்தது உனக்கும் நல்லது; துன்பம் விடிவுபெற அவன் உனக்கு உதவுவான்” என்று அனுமன் சுக்கிரீவனிடம் தெரிவித்தான்.

செய்தி கேட்டுத் தன் வாழ்வு உய்தி பெறும் என்ற நம்பிக்கையை அடைந்தான் சுக்கிரீவன். வானரத் தலைவனாகிய அவன் மானுடர் தலைவனாகிய இராமனை அடைந்து அடைக்கலம் பெற்றான். இருவரும் இன்னுரையாடி நல்லுறவு கொண்டு, நட்பு உடன்படிக்கை யும் செய்து கொண்டனர். குகனோடு ஐவராய் விளங்கிய தசரதன் மக்கள், சுக்கிரீவனோடு அறுவராயினர்.

“கடந்தது போகட்டும்; இனி நாம் நடப்பதைக் கவனிப்போம்; சுகதுக்கங்களில் இருவரும் பங்கு பெறுவோம்; உனக்கு வரும் கெடுதி எனக்கு உரியதாய் ஏற்பேன்; எனக்கு வரும் துன்பம் உனக்கு வந்தது ஆகும்; உன்னுடைய பகைவர் எனக்கும் பகைவர்; என் பகைவர் உன்பகைவர்; என் நண்பர் உனக்கு நண்பர்; உன்னுடைய நண்பர் எனக்கு நண்பர்” என்று இராமன் அறிவித்தான். இருவரும் உள்ளம் கலந்து, இனிய நண்பர் ஆயினர்; வானரர் ஆரவாரம் செய்து வாழ்த்துக் கூறினர் அனுமன் மகிழ்ச்சியின் எல்லையை அடைந்தான். சுக்கிரீவன் இராமன் இலக்குவரை விருந்துண்ண அழைத்தான்; காயும் கனியும் கிழங்கும் கொண்டு வந்து வைத்தான்; அவற்றை உண்டு அளவளாவினர்.

“நீயும் நின் மனையும் சுகமா?” என்று கேட்டான் இராமன்.

மூடியிருந்த கதவுகள் திறந்தன. அடக்கி வைத்த வேதனை வெளிப்பட்டது; கடந்த காலச் செய்திகளை நடந்தவாறு உரைத்தான்.

“வாலியும் யானும் உடன் பிறந்தவர்; அண்ணனிடம் அளவில்லாத பாசமும் மதிப்பும் காட்டினேன்; இராவணனும் அவன் வலிமைக்கு அஞ்சி அடங்கி இருந்தான். போரில் மாற்றான் வலிமையும் அவனை வந்துசேரும்; அத்தகைய வரவலிமையும் உரமும் பெற்றிருந்தான்; சிவபக்தனாய் இருந்தான்; சீலம் மிக்க வனாயும் விளங்கினான்.

“மாயாவி என்ற அசுரன், இவனிடம் வலியப் போருக்கு வந்தான்; வாலிக்கு அஞ்சிய அவன், ஒடி ஒரு பிலத்துள் நுழைந்து ஒளிந்தான்; அவனைத் தேடி வாலி பின்தொடர்ந்தான்; வாலி என்னைப் பார்த்து, “அவன் தப்பி ஓடிவிடக் கூடும்; உன்னை நம்பி நான் உள்ளே செல்கிறேன்; நீ அவனைத் தடுத்து நிறுத்தக் காவல் செய்; இத என் ஏவல்” என்று கூறி அப்பிலத்துள் நுழைந்தான்.

“திங்கள் இருபதும் எட்டும் சென்றன; வாலி குகையை விட்டு வெளியேறிய பாடில்லை; “மாயாவி அவனைக் கொன்று தின்று முடித்து இருப்பான்” என்ற முடிவுக்கு வந்தோம்; என்னுடைய அமைச்சர் என்னை நாட்டாட்சியை ஏற்குமாறு வேண்டினர்; எனினும் நான் அதற்கு இசையவில்லை; பிலத்துள் யானும் நுழைந்து அசுரனை அழித்து வருவதாய்க் கூறிச் செயல்பட்டேன்; அமைச்சர் என்னைத் தடுத்து நிறுத்தினர்; “கடமையை விட்டு மடமையாய் நடப்பது தகாது” என்று அறிவித்தனர்; நாட்டுக்கு நல்லரசு தேவை என்பதை வற்புறுத்தினர்; வாலி வரமாட்டான்; வந்தாலும், விவரம் சொல்லி அவன் மன்னிப்பைப் பெறமுடியும்” என்று அறிவுரை கூறினர். வேறு வழியில்லாமல் கோல்ஏந்தும் வேந்தனாய் மாறினேன்; ஆட்சி பீடத்தில் அமர்ந்தேன்; மாயாவி வெளியே வாராதபடி அப்பிலத்துள் வழியைக் கற்கள் கொண்டு கதவிட்டேன்; எதிர் பார்க்கவில்லை; வாலி மாயாவியைக் கொன்று, பிலத்துக் கற்களை விலக்கி வெளியே வந்தான்; “யான் அவனை அடைத்து வைத்து ஆட்சியைப்பற்றினேன்” என்று தவறாய் நினைத்தான்.

“என் தமையன் கால்களில் விழுந்து, தவறு செய்யவில்லை” என்று கூறி மன்னிப்பை வேண்டி னேன்; அவன் அதை நம்புவதாய் இல்லை; சினம் அடங்கவில்லை; சீறிப்பாய்ந்தான்; என்னைப் பிடித்து உடலைப் பிளக்க முற்பட்டான்; பிடியினின்று விடுபட்டு உயிருக்கு அஞ்சி ஒடினேன்; ஒடினேன்; ஒடினேன்; வாழ்க்கையின் கரை ஒரத்துக்கே ஒடினேன்; ருசியமுக பருவத்திற்கு ஓடி வந்து, அங்கு அடைக்கலம் பெற்றேன்; வாலி அந்த மலைக்கு வந்தால் அவன் தலை சுக்கு நூறாகச் சிதையும் என்ற சாபம் இருந்தது; அதை அறிந்திருந்ததால் நான் இங்குச் சேர்ந்தேன்; சாபம் எனக்குப் பாதுகாப்புத் தந்தது; எனக்குத் துணையாக அனுமனும் வானரத் துணைவரும் வந்துசேர்ந்தனர்” என்ற தன் கதையை எடுத்துச் சொன்னான் சுக்கிரீவன்.

“சுக்கிரீவன் மனைவி உருமை என்பவள் உருவ அழகி, அவளையும் வாலி தன் சுகத்துக்குத் துணையாக்கிக் கொண்டான்; சுக்கிரீவன் நாட்டையும் துறந்தான்; மனைவி யையும் இழந்தான்; அக வாழ்வும், ஆட்சியும் அவனை விட்டு நீங்கின; பாதுகாவல் தேடி அவன் இங்கு வந்து சேர்ந்தான்.” என்று இக்கதை அங்குப் பேசப்பட்டது.

தம்பிக்கு ஆட்சி தந்து, பாசத்தால் உயர்ந்த இராமனால் இந்த நாசத்தை ஏற்க இயலவில்லை; ம்ற்றும் தம்பியின் தாரத்தைக் கவர்ந்து அவளை ஆரத் தழுவிச் செய்த கொடுமையை அவனால் மன்னிக்க இயலவில்லை; தம்பியைக் கொல்ல முயன்றதும் பின் தாரத்தைக் கவ்வியதும் இரக்கமற்ற செயல்கள் என்பதை அறிந்து, அவன் சினம் இருமடங்கு ஆகியது.

சுக்கிரீவனிடம் “அஞ்சற்க; வாலியைக் கொன்று, உன் மனைவியை உன்னிடம் சேர்ப்பேன்; ஆட்சியும் உன் கைக்கு வரும் மாட்சியைப் பெறுவாய்” என்று உறுதி கூறினான் இராமன். அனுமன் இதைக்கேட்டு அகம் மிக மகிழ்ந்தான்.

எனினும், சுக்கிரீவனுக்கு ஒர் ஐயம் எழுந்தது; அடி பட்ட நாகம் அவன்; பிடிபட்டுத் தப்பியவன்; இடியொத்த அண்ணன் வலியை நன்கு அறிந்தவன்; “மேரு மலையை எதிர்க்கும் ஆற்றல் பெருங்காற்றுக்கு ஏது?” என்று ஐயப்பட்டான்; பாற்கடலைக் கடைந்த பராக்கிரமம் நிறைந்தவன் வாலி, அண்டத்தை அளாவும் வேகம் கொண்டவன்; அத்தகையவனை இராமன் எதிர்க்க முடியும் என்பதில் அவனுக்கு உறுதி ஏற்படவில்லை; அனுமனைத் தனியே அழைத்து, இராமன் ஆற்றலுக்கு எடுத்துக் காட்டுக் கேட்டான்.

அனுமன் அவன் ஐயத்தை அறிந்து, தெளிவு படுத்தினான்; “வாலியைக் கொல்லும் ஆற்றல் இராமனிடம் உண்டு” என்று கூறினான்; வேண்டு மனால் அவன் ஆற்றலை அறிய வாய்ப்பினைப் பெறலாம் என்றும் அறிவித்தான்; மராமரங்கள் ஏழையும் ஒரே அம்பால் துளைக்கும் வல்லமை அவனிடம் உண்டு என்பதைக் கூறித் தெளிவுபடுத்தினான்.

சுக்கிரீவனும் “அதுவே தக்கவழி என்று சிந்தித்த வனாய் மகிழ்ச்சி கொண்டான்; இராமனை அணுகித் தன் கருத்தை அடக்கமாய் அறிவித்தான்.

“உன்னுடைய வில்லின் ஆற்றலையும் அம்பின் வேகத்தையும் உன் விரத்தையும் எம் வானரர் காண விழைகின்றனர்; இந்த மராமரம் ஏழனுள் ஒன்றைத் துளைத்துக் காட்டினால் எங்களுக்கு ஊக்கமாக இருக்கும்” என்று தெரிவித்தான்.

இராமன் அவன் ஏக்கத்தை அறிந்து செயல்பட்டான்; “ஒரு மரம் என்ன ஏழு மரமும் என் ஒரே அம்பால் துளைபடும்” என்று கூறினான். மராமரங்கள் ஏழும் ஒன்றன்பின் ஒன்றாய் வரிசையாய் நின்று கொண்டிருந்தன. இராமன் வில்லை வளைத்து, நாண் ஏற்றி அம்பு தொடுத்தான் அவ் ஒலி ஏழ் உலகும் கேட்டது; அனைவரும் நடுங்கினர்; அவ் அம்பு ஏழு மராமரங்களையும் துளைத்து முடித்து அவனிடம் வந்து சேர்ந்தது; ‘ஏழு’ என்ற எண்ணிக்கை உடைய பொருள்களும் உயிர்களும் “அது தம்மையும் தாக்குமோ?” என்று அஞ்சின.

இராமன் வில்லாற்றலைக் கண்டு சுக்கிரீவன் சொல்லொணா மகிழ்வும் நம்பிக்கையும் கொண்டான்; அதற்குமேல் அவர்கள் சிறிதும் தூரம் நடந்து சென்றனர்; வழியில் துந்துபி என்ற அசுரனது எலும்புக் கூடு மலை போல் படிந்து கிடந்தது; அதனைக் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

வற்றி உலர்ந்த அந்த எலும்புக்கூடு வழிமறித்தது. இராமன் தன் தம்பியிடம் அதை அகற்றுமாறு குறிப்புக் காட்டினான். இலக்குவன் தன் கால் நகத்தால் அதை உதைத்துத் துக்கி எறிந்தான். அது சென்ற இடம் தெரியாமல் நெடுந்தொலைவில் விழுந்து மறைந்தது. இலக்குவன் ஆற்றலை அறிய, இது சுக்கிரீவனுக்கு ஒரு வாய்ப்பாய் அமைந்தது.

“இது என்ன?” என்று இராமன் கேட்டான்.

“துந்துபி என்பவன் போர்த்தினவு கொண்டு வாலியொடு மோதினான்; வெற்றி தோல்வி இன்றி இருவரும் கட்டிப் புரண்டனர். இறுதியில் வாலி அவனைக்குத்திக் கொன்று தரையில் வீழ்த்தினான். அவன் தசைப் புண்களைக் கழுகும் நரிகளும் தின்று ஒழித்தன; அவன் எலும்பு மட்டும் அசையாமல் இங்குக் கிடந்தது” என்று கூறினான்.

“துந்துபியின் மாமிசப்பிண்டம் இந்த ருசியமுக பருவதத்தில் வாலியினால் தூக்கி எறியப்பட்டது; இங்கு மதங்க முனிவர் தங்கி இருந்தார். அவர் இதைக்கண்டு அருவெறுப்புக் கொண்டார். “இதை எறிந்தவன் இங்குவந்தால் அவன் தலை சுக்கு நூறாகுக” என்று சாபம் இட்டார்; அந்தச் சாபம்தான் எங்களுக்குப் புகலிடம் தந்தது” என்று விளக்கினான்.

சீதை சிந்திய கலன்கள்

அப்பொழுது வானரக்குலம், இடியும் அஞ்சும்படி வாய் திறந்து ஆரவாரித்தது. தூய நற்சோலையில் இராமனும் சுக்கிரீவனும் அமர்ந்து இன்னுரையாடினான்.

“நாயக! நான் உணர்த்துவது ஒன்று உண்டு” என்று சுக்கிரீவன் உரையாடினான்.

“இவ்வழி யாம் இருந்தபோது விண்வழியாய் இராவணன் கையகப்பட்ட அபலை ஒருத்தி, அழுத கண்ணிரோடு தான் முடித்து வைத்திருந்த அணிகலன் களைக் கீழே போட்டுச் சென்றாள்; அவற்றைப் பாதுகாத்து வைத்துள்ளோம்” என்று கூறி அவற்றை அவன்முன் வைத்தான்.

அணிகலன் அவனுக்கு உயிர் தரும் அமுதமாய்க் காட்சி அளித்தது; அணிகலன் கண்களினின்று மறைந்தது அதற்கு உரிய அணங்கின் தோற்றம் கண்முன்வந்து நின்றது; அணிகளைக் கண்டதால் மகிழ்ச்சியும், அணிக்கு உரியவள் அருகில் இல்லாததால், அயர்ச்சியும் அடைந்தான். இராமன் தன்னிலை கெட்டுச் சோர்ந்து மயங்கி விழுந்தான்; தான் உயிரோடு இருக்கும்போதே அணிகளைக் களையும் அவலநிலை ஏற்பட்டதே! என்று வருந்தினான். அருகிலிருந்த சுக்கிரீவன் ஆறுதலாய் நல்லுரைகள் தந்து மீண்டும் உணர்வுபெறச் செய்தான். “'கண்டது சீதையின் அணி கலன்களை; கொண்டவன் அரக்கன் இராவணன்” என்பது முடிவு செய்யப்பட்டது; அவன் எங்கிருந் தாலும் அவனைக் கண்டு தெளிந்து, கொண்டுவருவது தன்கடமை என்று சுக்கிரீவன் கூறினான்.

வாலி வதை

“இனி முதலில் வாலியைக் கொன்று, பின் சுக்கிரீவனுக்கு முடிசூட்டு; அவன் அரசனாவான்; அவன் ஆணை பிறப்பித்ததும் எழுபது வெள்ளம் எண்ணிக்கை யுள்ள வானரர் ஒன்று சேர்வர்; அவர்களை ஒவ்வொரு இடமாய் அனுப்பினா. காலம் நீட்டிக்கும். ஒரே இடத்துக்குப் பலரையும் அனுப்பி வைப்பது மிகைப்பட்ட முயற்சியாகும். அனைவரையும் ஒரே சமயத்தில் நாலா திக்குகளுக்கும் அனுப்பி வைப்பதுதான் தக்கது; அவ்வாறே இனிச் செயல்பட வேண்டும்” என்று அனுமன் இராமனிடம் கூறினான்.

இராமனும் “அவன் சொல்வது சரி” என்று ஏற்றுக் கொண்டான். அனுமன் தன் துணை அமைச்சர்களான தாரன், நீலன், நளன் ஆகியவர்களோடு இராம இலக்குவருக்கு வழிகாட்டச் சுக்கிரீவன் வாலியின் இருப்பிடத்தை நாடிச் சென்றான்.

சுக்கிரீவனும் அவன் அமைச்சர் நால்வரும் இராம இலக்குவரைத் தொடர்ந்து மலைச்சாரல் இடையே சென்றனர். “தான் செய்யத் தக்கது யாது?” என்று சுக்கிரீவன் இராமனை நோக்கிக் கேட்டான்.

“நீ வாலியைப் போருக்கு அழை; நீங்கள் இருவரும் போர் செய்யும்போது மறைவிடத்தில் இருந்து அம்பு ஒன்றினால் வாலியைக் கொல்வேன்” என்று வழி வகையைக் கூறினான் இராமன்.

சுக்கிரீவனுக்கு அச்சம் நீங்கியது; வாலியை அழிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது; ஒர் உயரமான இடத்தில் இருந்து கொண்டு வாலியைப் போருக்கு வருமாறு கூவி அழைத்தான்; யானையின் பிளிறல் கேட்டு எழும் சிங்கம் போல வாலி, சுக்கிரீவனின் அறைகூவலைக் கேட்டு வியந்தான்; போருக்கு அஞ்சிப் புறமுதுகிட்டவன், வலியவந்து அழைத்தது அவனுக்கு வியப்பை அளித்தது. வாலியின் தாரமாகிய தாரை, அவன் போருக்குச் செல்வதைத் தடுத்தாள், “இதில் ஏதோ சூது இருக்கிறது; போக வேண்டா” என்று கூறினாள்; கண்ணிர் வடித்தாள்.

“அவனே வலிய வந்து வகையாய் மாட்டிக் கொள்ளும்போது நாம் என்ன செய்ய முடியும்? அவனுக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்” என்று கூறி எழுந்தான் வாலி. “அவன் தன் வலிமையை நம்பி வந்தவன் அல்லன், இராமன் அவனுக்குத் துணையாய் வந்திருக்கிறான்; அதனால்தான் அவனுக்கு இவ்வளவு அஞ்சாமை’ என்று தாரை எடுத்து உரைத்தாள்.

வாலி கடுங்கோபம் கொண்டான்; இராமன் திருப்பெயருக்கு மாசு கற்பிப்பதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. “தம்பியரை நேசிப்பவன் இராமன் உடன்பிறந்த சகோதரர்களிடையே அவன் பகையை மூட்ட மாட்டான்; தன்னிகரற்ற வீரனான இராமன், ‘ஒருகுரங்கோடு நட்புக் கொண்டு அவனுக்காகப் பரிந்து துணைக்கு வருவான்’ என்று சொல்வது நம்பத்தக்கது அன்று” என்று கூறித் தாரை தடுத்தும் தயங்காது போருக்குச் சென்றான்.

இராமன், வாலியின் தோற்றத்தைக் கண்டு இலக்குவனிடம் அவனைப் பற்றிப் பெருமையாய்ப் பேசினான். இலக்குவன், ‘சுக்கிரீவன் நம்பத்தகுந்தவன் அல்லன்’ என்று எடுத்து உரைத்தான். அண்ணனையே கொல்வதற்கு நம்மை அவன் துணை தேடுகிறான் என்றால், அது துரோகம் அல்லவா? அவனை நம்புவது மண் குதிரையை நம்பி நட்டாற்றைக் கடப்பது போலத் தான் ஆகும்” என்றான்.

“தம்பியர் எல்லாம் பரதன் ஆகமுடியுமா? ஒருசில குறைகள் இருக்கத்தான் செய்யும்; அதற்காக நாம் அவனை வெறுக்க முடியாது; அவன் எப்படிப் பட்டவன் என்ற ஆராய்ச்சியா நமக்கு முக்கியம்? யார் பக்கம் நியாயம் இருக்கிறது? என்பதை வைத்துத்தான் ஒரு காரியத்தில் இறங்க வேண்டும்.

“வாலி, சுக்கிரீவனுக்கு உரிய ஆட்சியை எடுத்துக் கொண்டான்; தவறு இல்லை; அவன் மனைவியை ஏன் அவன் கைப்பற்ற வேண்டும்? எந்தத் தவறும் செய்யாத தம்பியை அவன் ஏன் விரட்டி அடிக்க வேண்டும்? வாலி தவறு உடையவன்; அவனை அழிப்பதுதான் அறம்” என்று கூறித் தெளிவுபடுத்தினான் இராமன்.

போர் மும்முரமாய் நடந்தது; சுக்கிரீவனை வாலி பந்தாடுவது போலத் துக்கி எறிந்தான். அவன் தாக்குதலுக்கு ஆற்றாமல் சுக்கிரீவன் துவண்டுவிட்டான்; இராமன் மறைந்திருந்த பக்கம் வந்து மெல்லிய குரலில் தன்னைக் காக்குமாறு வேண்டினான் இராமன். “உங்கள் இருவருக்கும் வேறுபாடு காண முடியவில்லை; நீ கொடிப் பூ அணிந்து செல்; அடையாளம் தெரிந்து கொள்கிறேன்; என்று அவன் செவிவில் படுமாறு மெதுவாய் உரைத்தான்.

ஊக்கம் மிகுந்தவனாக வாலியோடு சுக்கிரீவன் போரில் இறங்கினான். அவனை விண்ணில் எறிய வாலி தயாராய் இருந்தான். அந்த நிலையில் இராமன் அம்பு அவன் மார்பில் தொளைக்க, அவன் பிடி நெகிழ்ந் தவனாய்க் கீழே சாய்ந்தான்; மார்பில் பாய்ந்த அம்பைப் பிடுங்கி, “அதனை யார் எய்தது” என்று அறிய விரும்பினான்; அவனால் இயலவில்லை, இறுதியில் தன் வலிமை முழுவதும் பயன்படுத்தி, அதை இழுத்துப் பறித்தான்; “இராம” என்னும் திருப்பெயரைக் கண்டான்; இராமன் தன்மீது அம்பு எய்தியமைக்காக வருந்தவில்லை; சான்றோன் ஒருவன், தன் சால்பு குன்றிய நிலையில் நடந்து கொண்டான் என்பதற்காக வருந்தினான்; “அறம் வளைந்து விட்டதே” எனக்குமுறினான்.

“பரதனுக்குத் தமையனாய் விளங்கியவன், சகோதர பாசத்துக்கு இடையூறு செய்யலாமா?” என்று கேட்டான்.

“ஒவியத்தில் எழுத ஒண்ணா உருவத்தாய்! காவிய நாயகனாகிய நீ நடுநிலைமை தடுமாறலாமா? சீதையைப் பிரிந்துவிட்டதால் மனம் தடுமாறி இந்தத் தவறைச் செய்துவிட்டாயா? உலகநெறி என்பது உயர்ந்தவர் செய்கையில் தானே அமைந்து கிடக்கிறது? தலைவன் நீ! தவறு செய்யலாமா? உலகமே உன் செயல், பேச்சு, இவற்றைக் கவனிக்கிறது; அம்பு எய்ய நினைத்திருக்கலாம் அது உன்சொந்த விருப்பு வெறுப்புப் பற்றியது; ஆனால், மறைந்திருந்து அம்பு எய்தியது உன்வீரத்துக்கு இழுக்கல்லவா?” என்று கேட்டான்.

அதற்கு இராமன் விடை தரவில்லை; இலக்குவன் இடைமறித்து.

“சுக்கிரீவன் முதலில் வந்து இராமனைச் சந்தித்தான்; தனக்கு உதவுமாறு வேண்டினான்; அவனுக்கு உதவுவதாகக் கூறிவிட்டு, உன் முன்னால் வந்தால் நீயும் ‘அடைக்கலம்’ என்று கேட்டால் என்ன செய்வது? அதைத் தவிர்ப்பதற்குத்தான் மறைந்து இருந்து அம்பு செலுத்த வேண்டி நேர்ந்தது” என்று பதில் கூறினான்.

“இராவணனைக் கொல்வதற்கு உறுதுணை தேடி இருக்கலாம்; சிங்கத்தைத் துணையாகக் கொள்வதை விடுத்துச் சிறுமுயலை நம்பிச் செயல்பட்டு இருக்கிறாய்; “உன்னிடம் அறமும் இல்லை; அறிவும் இல்லை” என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது” என்று இராமனிடம் கூறினான்.

“நீ சொல்வதுபோல் என் தேவைக்காக உன்னைக் கொன்றேன் என்று சொல்வதை ஏற்க முடியாது; தீமையைக் கண்டவிடத்து அதை ஒழிப்பது அரசு நீதியாகும்; நீ எந்தத் தவறும் செய்யாத உன் தம்பியை அலற வைத்தாய்; துரத்தித் துரத்தி அடித்தாய்; தீர விசாரித்து உண்மை காணாது அவனைக் கொல்வதிலேயே நாட்டம் கொண்டாய்; தம்பியை அழிக்க நினைத்திடும் நீ, எனக்குச் சகோதர பாசத்தைப்பற்றிய பாடம் கற்றுத் தருகிறாய்.

“தம்பியின் தாரத்தைத் தங்கையாக மதிக்க வேண்டிய நீ, அவளைத் துணைவியாக ஆக்கிக் கொண்டாய்; பிறர் மனைவியை விரும்பும் அற்பத் தனம் உன்னிடம் அமைந்துள்ளது; நீ உயிர் வாழத் தக்கவன் அல்லன், பற்களைக் குத்தித் துய்மைப் படுத்தச் சிறுதுரும்பு போதும்; உலக்கை தேவை இல்லை; இராவணனை அழிக்க எனக்கு உன் தம்பிபோதும்; நீ தேவை இல்லை” என்று கூறினான்.

“ஒழுக்கம் என்பது மானிடர்க்கு விதிக்கப்பட்ட வரையறை, நாங்கள் விலங்குகள்; விலங்குகளுக்குள் கணவன் மனைவி என்ற உரிமை கொண்டாட முடியாது. “கற்பு” என்ற கட்டுத்திட்டத்துக்கு இங்கே இடமே கிடையாது; மேல் மட்டத்தில் நீங்கள் வலிய அமைத்துக் கொண்ட கட்டுப்பாடு அது; எங்களுக்கு இருக்கிற ஒரே வாய்ப்பு விரும்பியவாறு வாழலாம் என்பதே”.

“வல்லவன் எதையும் செய்யலாம்; வலிமைதான் நியாய ஒழுங்குக்கு வரையறை; இது எங்களிடை நிலவும் விதி; எங்களிடம் அறநெறியை எதிர்பார்க்க முடியாது; நாங்கள் இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டு வாழ்ப வர்கள்; மனிதருக்குச் சொல்லப்பட்ட அளவுகோல்களை வைத்து, எங்களை அளப்பதில் நியாயம் இல்லை” என்று வாலி கூறினான்.

“மிருகம், மனிதன், என்பது உடலைப் பற்றியது அன்று; மனத்தைப் பற்றியது; மனிதனுக்குரிய அறிவும் ஆற்றலும் சிந்தனையும் உன்னிடம் உள்ளன; விலங்கு என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளமுடியாது” என்று இராமன் அவனைத் திருத்தினான்; வாலி மனம் மாறினான்.

அதற்குப் பின் “இராமன் தவறு செய்யமாட்டான்; நீரில் நெருப்புத் தோன்றாது; தவறு தன்னுடையதுதான் என்று உணர்ந்து அடங்கிவிட்டான் வாலி.

“தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடு” என்று பெருமிதத்தோடு கூறினான்; “நான் கேட்கும் வரம் ஒன்று உள்ளது; அதைத் தரவேண்டும்” என்று கேட்டான்.

“என் தம்பி மது உண்டு, அம் மயக்கத்தில் கடமை செய்வதில் தவறக்கூடும்; அதைப் பெரிதாகக் கொள்ளாது அவனை மன்னித்துவிடு; என்மீது செலுத்திய அம்பை அவன்மீது செலுத்த வேண்டா, அதைத் தாங்கும் ஆற்றல் அவனுக்கு இல்லை” என்று தம்பியின் மீது கொண்ட பாசம் வெளிப்படும்படி இவ்வரத்தைக் கேட்டான். வாலி சிறியன சிந்தியாதான் என்பதை இராமன் இதனால் அறிய முடிந்தது.

“மற்றொரு வரம் வேண்டுகிறேன்; என் தம்பியை உன் தம்பிமார்களுள் யாராவது தமையனைக் கொன் றவன், என்று கூறி இகழ்வாராயின், அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான்.

வாலி இராமன் மதிப்பில் மிக உயர்ந்து நின்றான்.

“அனுமனை உன் வில்லைப்போல வலிமையுள்ள துணைவனாய் ஏற்றுக்கொள்; சுக்கிரீவனை உன் தம்பி இலக்குவனைப்போல ஏற்றுப் பாசமும் பரிவும் காட்டுக; இவர்கள் துணைகொண்டு சீதையைத் தேடி அடை வாயாக” என்று இறுதியில் கூறினான்.

தன் தம்பியைப் பார்த்து அவனுக்கு அறிவுரைகள் சில கூறினான்.

“இராமனுக்கு ஏவல் செய்யும் பேறு பெற்றிருக் கிறாய்; நீ உன் கடமைகளினின்று தவறக் கூடாது; பெரியவர்கள் சவகாசம் நெருப்புப் போன்றது; நீங்கினால் குளிர் காயமுடியாது; நெருங்கினால் சுட்டு எரித்துவிடும்; “மேல் மட்டத்து வாசிகள் அடிமைகள் செய்யும் தவறுகளை மன்னிப்பார், என்று நினையாதே; அவர்களுக்குப் பயன்படாவிட்டால் தூக்கி எறிந்துவிடுவர்; மன்னர்கள் அடிமைகளை மன்னிக்கமாட்டார்கள்; பெரிய இடத்து உறவு கத்தி முனையில் நடப்பது போன்றது; கவனமாய் நடந்துகொள்” என்பது அவன் அறிவுரை.

வாலி மைந்தனான அங்கதன், தன் தந்தை மரண மறிந்து விரைந்துவந்தான்; சாகும் தருவாயில் இருந்த வாலியைப் பார்த்துப் பலவாறு கூறிப் புலம்பினான்.

“என் தந்தையே! எமன் வருதற்கு அஞ்சும் உன்னை மரணம் எப்படித் தழுவியது? இனி இராவணன் உன்னைப் பற்றிய அச்சம் நீங்கி நிம்மதியாய் வாழப் போகிறான்; இதுஉறுதி, பாற்கடலைக் கடையத் தேவர்க்கு உன்னைத் தவிர உதவ யார் இருக்கிறார்கள்? அமுதத்தைத் தேவர்களுக்கு ஈந்து, மரணத்தை நீ ஏற்கிறாய் என்றால், உன்னைவிடக் கொடையாளி யார் இருக்க முடியும்?” அங்கதனைத் தழுவிக் கொண்டு “நீ இனி அயர வேண்டா; நாயகன் இராமன் செய்த நல்வினைப்பயன் இது” என்றான் வாலி.

இராமனிடம் அங்கதனை அடைக்கலமாய் ஏற்று ஆதரிக்குமாறு வேண்டிக்கொண்டான் வாலி; இராமனும் அங்கதனுக்குத் தன் உடைவாளைத் தந்து அவனைப் பெருமைப் படுத்தினான்.

வாலி தன் மார்பில் பதிந்திருந்த அம்பினைப் பிடுங்கி வெளியே எடுத்தவுடன் இரத்தம் பீறிட்டுக் கொண்டு வந்தது; அவன் உயிரும் அவனிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றது; தாரை உயிரற்ற அவன் உடல்மீது விழுந்தாள்; புரண்டாள்; அழுதாள்; அரற்றினாள்.

“உன் தோளில் துயிலும் நான் இன்று, தரையில் விழுந்து துடிக்கிறேன்; உயிரும் உடம்புமாக இருந்த நாம் இனி எப்படித் தனித்துச் சாக முடியும்?'இந்த வெறும் உடம்பு, நீ இல்லாமல் எப்படி வாழும்? காலையும் மாலையும் சென்று நீ முக்கண்ணனை வழிபடுவாயே! இப்பொழுது நீ என்ன செய்வாய்? எப்படி உன்னால் வாளா இருக்க முடிகிறது? என் மெல்லிய ஆடைமீது சாயும் நீ, எப்படி வன்மையான தரையில் கிடக்கிறாய்? பொய் புகலாத புண்ணியனே! நீ என் உயிர்” என்று புகழ்ந்து பேசுவாயே! உயிரைவிட்டு உயிர் எப்படிப் போக முடியும்? அது பொய்யுரையாகி விட்டதே; உன் உள்ளத்தில் நான் உறைந்தேன் என்பது உண்மையாய் இருந்தால் இந்த அம்பு என்னையும் தாக்கி, என் உயிரையும் போக்கி இருக்க வேண்டுமல்லவா? அமுதத்தைத் தந்த உனக்குத் தேவர், பாராட்டுரை வழங்க, எதிர்கொண்டு அழைத்து உபசரித்தார்களோ? “உன் தம்பிக்கு வாழ்வு தா” என்று இராமன் வாய் திறந்து கேட்டிருந்தால் வள்ளல் ஆகிய நீ, மறுத்துப் பேசி இருப்பாயா? போருக்குச் சென்றபோதே தடுத்தேனே, இராமன் சுக்கீரவனுக்குத் துணையாய் வந்திருக்கிறான் என்று சொன்னேனே, நீ கேட்கவில்லையே! சாவை விரும்பி ஏற்றுக் கொண்டாயே! “அம்பு ஒன்றால் உன் மார்பைப் பிளக்க முடியும்” என்று இதுவரை நான் நம்பிய தில்லை; இது புதுமையாய் இருக்கிறது” என்று புலம்பினாள்.

தன் மகனை விளித்து, “தம்பியும் தமையனும் உறவு கொண்டிருந்தபோது உயர்ந்திருந்தனர். பகை புகுந்தபோது எவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்டுவிட்டது பார்த்தாயா? அறச் செல்வனாகிய இராமனும் அறம் திறம்ப முடியும் என்பதை நீ எண்ணிப் பார்த்ததுண்டா?” என்று கடுமையாய் விமரிசித்தாள்; அதற்குமேல் தொடரவிடாது. அனுமன் இடைநின்று தடுத்துச் தாரையை அந்தப் புரத்துக்கு அனுப்பி வைத்தான்; அங்கதனைக் கொண்டு ஈமக்கடன் செய்வித்தனர்; நடக்க வேண்டியதில் நாட்டம் கொண்டனர்.

முடிபுனை விழா

தம்பி இலக்குவனிடம் சுக்கிரீவனுக்கு அவன் கையால் முடி சூட்டும்படி கட்டளை இட்டான் இராமன்.

சுக்கிரீவனுக்கு முடி சூட்டப்பட்டது; இராமன் பின் வருமாறு அறிவுரை கூறினான்.

“நீயும் அங்கதனொடு ஒற்றுமையாய் இருந்து நல்லரசு நடத்துவாயாக; அமைச்சரையும், படைத் தலைவரையும் தக்க வகையில் பயன்படுத்திக் கடமை களைச் செய்துமுடிப்பது அறிவுடைமை ஆகும். நூல் அறிவோடு நல்லது கெட்டது அறியும் பகுத்தறிவு கொண்டு தெளிந்து, ஆட்சி செய்ய வேண்டும்; செல்வத்தைக் காத்து தக்க வழியில் செலவு செய்யச் சிந்தனை செலுத்துவாயாக! நண்பர் யார்? பகைவர் யார்? பொது நிலையில் உள்ளவர் யார்? என்று பகுத்தறிந்து செயல்பட வேண்டும்; யாரிடத்தில் எப்படிப் பேச வேண்டுமோ? அந்தப் பாங்கு அறிந்து, அவை அறிந்து பேச வேண்டும்; எளியர் என்று சொல்லி ஒருவரை இகழ்ந்தால், அதனாலும் தீமைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு; கூனியால் யான் அடைந்த தீமைகள், எனக்கு ஒரு பாடமாய் அமைந்துவிட்டன; பெண்டிரால் நன்மையும் உண்டு; தீமையும் உண்டு; வாலியின் இறப்ப்ைப் பார்த்தாய்: எங்களுடைய வாழ்வில் ஏற்பட்ட சரிவுகளும் பெண்களால் ஏற்பட்டவையே; நாட்டு மக்களிடத்துத் தாயினும் அன்பு செலுத்து; கண்ணோட்டம் வேண்டும். அதேசமயம் தீமை செய்பவர்களைக் களை நீக்குவதுபோலத் தண்டிப் பதற்குத் தயங்கக் கூடாது; பிறப்பும் இறப்பும் நல்வினை தீவினைகளை ஒட்டி அமைவன; எனினும், மாந்தர்க்குச் ‘சிறப்பு’ என்பது அவர்கள் சிந்தனையை ஒட்டி அமை வதாகும்; உலகைப் படைத்த பிரம்மாவாய் இருந்தாலும், அறன் அல்லதைச் செய்துவிட்டுத் தப்பித்துக் கொள்ள முடியாது; செல்வமும் வறுமையும்கூட அவரவர் முயற்சிகளை ஒட்டியன ஆகும். முயற்சி திருவினை ஆக்கும்; முயற்சி இன்மை வுறுமைக்குக் காரணம் ஆகிவிடும். என் அறிவுரையினை ஏற்று ஆட்சியை இனிது நடத்து வாயாக; மழைக்காலம் கழிந்த பின்பு கடல் போன்ற நின் சேனையுடன் இங்கு வந்து சேர்வாயாக” என்று சொல்லி அனுப்பினான்.

சுக்கிரீவன் சில நாள்கள் தங்களோடு தங்கும்படி இராமனைக் கேட்டுக் கொண்டான்.

“தவ வாழ்க்கையை மேற்கொண்ட நாங்கள் அரண்மனையில் சுகவாசிகளாய் மாறக்கூடாது மேலும் நாங்கள் உங்களோடு இருந்தால், எங்களைக் கவனிப்பதிலேயே உங்கள் காலம் கழிந்துவிடும், உங்களால் கடமைகளைச் செய்யமுடியாது” என்று கூறினான் இராமன்.

மேலும் தன் மனக் கருத்தை விரித்துரைத்தான்.

“சீதை இன்றித் தனித்து நான் அடையும் இன்பம் எதுவாய் இருக்கும்? “பெண்டாட்டியைப் பறி கொடுத்து, அரண்மனையில் களித்து இருக்கிறான்” என்று உலகம் பேசாதா? யான் துறவிகளைப்போல நோன்பு நோற்றுத் தனித்து வாழ்வதுதான் தக்கது” என்று கூறினான்.

சுக்கிரீவன் இராமன் திருவடிகளை வணங்கிக் கண்ணிர் மல்க விடைபெற்றுக் கிட்கிந்தை நோக்கிச் சென்றான். அங்கதனை அழைத்துச் சுக்கரீவனைச் சிறிய தந்தை’ என்று நினைக்காது, பெற்ற தந்தையாய் மதித்து, அவன் ஏவலை ஏற்று, நன்மகனாய் நடந்துகொள்” என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தான் இராமன். சேனைகளைத் திரட்டுதல்

கார்காலம் கடந்தது, எனினும், குறிப்பட்டபடி குரங்கினத் தலைவனாகிய சுக்கிரீவன் படைகளோடு வந்து சேரவில்லை. அதனால், வெகுண்டு எழுந்த இராமன் இலக்குவனிடம், “சுக்கிரீவன் காலம் தாழ்த்து வது ஏன்? கடமையை மறந்து கள்ளுண்டு மயங்கிக் கிடக்கின்றான் போலும் சொன்ன சொல் தவறியவனைத் தவறாமல் தண்டிப்பது கடமையும் ஆகும்”.

“பெறுவதற்கு அரிய அரச செல்வம் பெற்றபின் அரசபோகத்தில் ஆழ்ந்து, செய்நன்றி மறந்துவிட்டான், போகட்டும்; நம் வீரம் அவனுக்கு நினைவில் இருக்க வேண்டுமே! சத்தியம் தவறியவனைக் கொன்று அழிப்பது தவறு அன்று, எதற்கும் நீ சென்று அவன் கருத்தினை அறிந்துவா” என்றான்.

“அறத்தை நிறுவக் கையில் வில்லுண்டு; வில்லில் தொடுப்பதற்கு விறல்மிக்க அம்பு உண்டு; அவன் உயிரைக் கவர, நம்பால் வீரம் உண்டு என்பதைச் சொல்லிவிட்டுவா; அவன் சாவை விரும்பி ஏற்கிறான் என்பது தெரிகிறது”.

“சீதையைத் தேடுவதற்காக உடனே புறப்பட்டு வரட்டும்; இல்லை என்றால், அவனும் அவ் வானரக்குடியும் அழியும் என்பதை அறிவித்துவிட்டு வா”.

“அவசரப்பட்டு உன் ஆவேசத்தைக் காட்டாமல் அவன் சொல்லும் பதிலைத் தெரிந்துவா” என்ற சொல்லி அனுப்பினான் இராமன்.

இராமன் இட்ட கட்டளையைச் சிரமேற்கொண்டு கிட்கிந்தை நோக்கிப் புறப்பட்டான் இலக்குவன்; மலைகளையும் குன்றுகளையும் கடந்து, குறுக்கு வழியில் கிட்கிந்தையை அடைந்தான்; இலக்குவன் சீற்றத்தோடு வருவதைக் கண்ட அங்கதன், அதிர்ச்சி அடைந்தான்; நேரே சுக்கிரீவன் தங்கியிருந்த அரண்மனையை அடைந்தான்.

தன் சிற்றப்பன் அற்பத்தனமாய்க் குடித்து மயங்கி ஆழ்ந்த துயிலில் கிடப்பதைப் பார்த்தான். தாழ்ந்த கூந்தலும் மேலாடை நெகிழ்ந்த நிலையும் உடைய இளம் பெண்கள், அவன் கால்களை வருடிக்கொண்டு இருக்க, மென்மையான சுகத்தோடு அவன் மோகத்தில் ஆழ்ந் திருப்பதை அறிந்தான்.

உள்ளே நுழைந்து, உரத்த குரலில் இலக்ககுவன் வருகையை அறிவித்தான் இடி இடித்தாலும் அசையாத வனாய் அவன் மயக்கத்தில் கிடந்தான். இவன் சொல்வதை அவன் வாங்கிக்கொள்ளும் மனநிலையில் இல்லை; குடி போதையில எந்த போதமும் ஏற வில்லை; “கடமையைப் பற்றிப் பேசினால் கடலை ஒருபடி விலை என்ன?” என்று கேட்பதுபோல அவன் முணுமுணுப்பு இருந்தது.

அங்கதன் அனுமனை அடைந்து, அடுத்து நடப்பது குறித்து ஆலோசனை செய்தான். அன்னை தாரையை அணுகி, நிலைமையைத் தெரிவியுங்கள் என்று அனுமன் அறிவுரை கூறினான்.

வெள்ளம் பெருக்கெடுத்து வந்துவிட்டது; அணை போடவேண்டிய பொறுப்புத் தாரைக்கே உரியது; அனுமன் அறிவுரையின்படி தாரை, தாரகை போன்ற அழகிகள் சூழ்ந்துவர, இலக்குவன் வரும் வழியில் குறுக்கே எதிர்நோக்கிச் சென்றாள்; அவன் வழியை மறித்தாள்; இலக்குவன் தன்னைப் பெரிய சேனை ஒன்று எதிர்க்கும் என்று எண்ணினானே தவிர, பெண்கள் புடைசூழ வந்து தன்னை மறிப்பர் என்று எதிர்பார்க்கவில்லை.

தன்மனைவியைத் தவிர, வேறு எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்த்து அறியாதவன் அவன். சிரித்த முகமும், விரித்த கூந்தலும், இனித்த சொல்லும் கனிந்த பார்வையும் கொண்ட மகளிரைக் கண்டு இலக்குவன் நாணினான்.

அமைதியாய்த் தான் சொல்ல வந்த கருத்தை அடைக்கமாய்க் கூறினான்; “இராமன் சீதையைப் பிரிந்த துயரத்தில் ஆழ்ந்துகிடக்கிறான்; சுக்கிரீவன் சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை; காலம் தாழ்த்திவிட்டான். அதற்குக் காரணம் அறிந்துவர இராமன் என்னை அனுப்பி இருக்கிறான்” என்று சொன்னான் இலக்குவன்.

“அவன் காலம் தாழ்த்தவில்லை; தக்க காலம் பார்த்துக்கொண்டு இருக்கிறான்; கடமையில் அவன், அதில் முழுக்கருத்தையும் செலுத்தி இருக்கிறான்; சீதை இருக்கும் இடம் தேட, இங்கு உள்ள வானரப்படைகள் போதா என்பதால் உலகின் எல்லாத் திக்குகளுக்கும் செய்தி அனுப்பி, வீரர்களைத் திரட்டிவர ஆள்களை அனுப்பி இருக்கிறான்; படைகள் வந்து குவியக் கால தாமதம் ஆகிறது. அதனால்தான் இன்னும் அவன் புறப் படவில்லை. சுக்கிரீவன் சொன்ன சொல் தவறமாட்டான்; செய்வதைத் திருந்தச் செய்யும் இயல்பினன்; இராமனுக் காக அவன், தன் உயிரையும் பணயம் வைப்பான்; ‘சீதையை முதலில் கண்டு செய்தி கொண்டு வந்து தருவதே தன் முதல் கடமை’ என்று எந்நேரமும் அதே சிந்தனையில் ஆழ்ந்துகிடக்கிறான்; அவனுக்கு உறக்கமே இல்லை; ‘கடமை கடமை கடமை’ என்று எந்நேரமும் உச்சரித்துக் கொண்டிருக்கிறான்” என்று நயம்படப் பேசி அவன் மனத்தை மாற்றினாள். அனுமனும் தாரை உடன் இருந்து தக்க சொற்களை எடுத்துக் கூறி அவன் சினத்தைத் தணிவித்தான்.

அங்கதன் இலக்குவனைக் கண்டு வணங்கி அடி பணிந்தான்; சினம் ஆறிய இலக்குவன், அங்கதனிடம் தன் வருகையைச் சுக்கிரீவனிடம் தெரிவிக்குமாறு சொல்லி அனுப்பினான்.

அங்கதன் சுக்கிரீவனை அடைந்து, இலக்குவன் கொண்ட சீற்றத்தையும் தாரையின் கூற்றினால் அவன் அடைந்த மாற்றத்தையும் எடுத்துக் கூறி இலக்குவனைப் போற்றி வரவேற்க அழைத்தான்.

“ஏன் இலக்குவன் வருகையைத் தன்னிடம் தெரிவிக்கவில்லை” என்று மயக்கம் நீங்கிய நிலையில் வினவினான். அங்கதன், நடந்த செய்தியைச் சொல்லி, இனிக் காலம் தாழ்த்தாமல் இலக்குவனை வந்து காண்க என்று வேண்டினான் சினம் தணிந்த நிலையில் இருந்த இலக்குவனைச் சுக்கிரீவன் தோள்கள் ஆரத் தழுவிக் கொண்டான்; அவனைத் தக்க தவிசு ஒன்றில் அமருமாறு வேண்டினான்.

“புல்தரையில் இராமன் படுத்திருக்க, நான் இங்கே பொன் தவிசில் எப்படி அமர்வேன்; அவன் கீரை உணவு உண்ண நான் இங்கே சோறும் கறியும் எப்படி அருந்துவேன்? நான் போய்த்தான் அந்தக் கீரை உணவும் சமைக்கவேண்டும்; அதனால், விரைவில் புறப்படுக” என்றான்; அவன் உபசாரங்களை இலக்குவன் ஏற்றுக்கொள்ளவில்லை.

சுக்கிரீவன் அனுமனிடம் “எஞ்சிய படைகளைத் திட்டிக் கொண்டு உடன் வருக” என்று கூறிவிட்டு இலக்குவனோடு சென்று, உள்ள படைகளை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.

இராமனை அடைந்து, அவன் திருவடிகளை வணங்கிக் கால தாமதத்துக்கும், தான் இன்பத்துள் வைகிக் கடமையில் காலம் கடத்தியமைக்கும் சுக்கிரீவன் மன்னிப்பு வேண்டினான்; அவனைத் தன் தம்பி பரதனாகவே மதித்து அவனிடம் இன்னுரை பேசி, அனுமனைப் பற்றி விசாரித்தான்.

அனுமன் பெரும்படையுடன் பின் தொடர்ந்து வருவதாகக் கூறி அவனை மகிழ வைத்தான். இராமனும் அவனை அன்புடன் வரவேற்று ஒருநாள் ஒய்வெடுத்துக் கொண்டு மறுநாள் வந்து சேருமாறு சொல்லி அனுப்பினான்.

இராமன் அனைவரும் நீங்கியபின் தானும் தன் தம்பியுமாய்ப் பிரிந்த சீதையின் நினைவோடு கவலை நிரம்பியவனாய் அன்றைய பொழுதைக் கழித்தான்.

சேனைகள் வருகை

சேனைகள் வருகைக்காக இராமனும் இலக்கு வனும் காத்து இருந்தனர். சதவலி, சுசேடணன், தாரன், கேசரி, துமிரன், காவட்சன், பணசன், நீலன், தரீமுகன், கயன், சாம்பவன், துன்முகன், துமிந்தன், குமுதன், பதுமுகன், இடபன், தீர்க்கபாதன், வினதன், சரபன் முதலிய படைத் தலைவர் பல திசை களிலிருந்தும் வானர சேனைகளைக் கொண்டு வந்து குவித்தனர். அப் படைகளைச் சுக்கீரிவன் இராமனுக்குக் காட்டினான். “இனிச் சீதை இருக்கும் இடத்தைக் காண்பதற்குக் கால தாமதம் செய்யக் கூடாது” என்று இலக்குவன் கூறினான்.

நான்கு திசைகளுக்கும் தக்க தலைவர்களின்கீழ் சேனைகளை அனுப்பி வைத்தனர். சுக்கீரிவன் தென் திசை நோக்கிச் செல்லும் வீரர்களுக்குச் செல்ல வேண்டிய வழி வகைகளைக் கூறினான்; “'முதலில் விந்திய மலையை அடைதல் வேண்டும்; அதனைக் கடந்து சென்றால் நருமதை ஆறு வரும்; அதனைக் கடந்தால், ஏமகூடம் என்னும் மலை வரும்; அதனைக் கடந்து சென்றால், பெண்ணை ஆற்றங்கரை வரும்; விதர்ப்ப நாட்டைக் கடந்தால், தண்ட காரணியம் வந்து சேரும்; அங்கே முண்டகத்துறை என்ற ஒன்று உள்ளது. அதனைக் கடந்து சென்றால், பாண்டுமலை என்ற மலை ஒன்று உள்ளது; அங்கே கோதாவரி என்னும் நதி உள்ளது. அதனைக் கடந்து சுவணம் என்னும் ஆற்றைத் தாண்டிய பிறகு கொங்கண நாட்டையும் குலிந்த நாட்டையும் காணலாம்; அதன் பின் அருந்ததி மலையை அடையலாம்; ஆற்றை எல்லாம் கடந்து சென்றால் தமிழ் நாட்டின் வட எல்லை யாகிய திருவேங்கட மலையை அடையலாம். தமிழ் நாட்டில் காவிரி யாற்றினனக் கடந்தால், மலை நாடும் பாண்டிய நாடும் வரும்; அவற்றை எல்லாம் கடந்தால் ‘மயேந்திரம்’ என்னும் மலை தென்கருங்கடலை அடுத்து வரும்; அங்கிருந்து இலங்கைக்குச் சென்று விடலாம்” என்று வழி கூறினான்.

இராமன், சீதையின் அங்க அடையாளங்களைத் தக்க உவமைகள் கொண்டு அனுமனுக்கு விளக்கினான்; பாதாதி கேசம்வரை அவள் அழகினைப் விவரித்துக் கூறத் தொடங்கினான்.

“அவள் காலடிகள் தாமரையை ஒக்கும் என்றால், புறவழகு ஆமை போன்றது; கனைக்கால்களுக்கு வரால் மீனும், அம்பறாத் துணியும், சூல்கொண்ட நெற் பயிரும் உவமையாகும்; தொடைகள் வாழைகளைப் போன்றன; சீதையின் இடை வெளிப்படாதது; அதற்கு உவமை கூற இயலாது, வயிற்றுக்கு உவமை ஆலிலை; உந்திச்சுழி கங்கையாற்றின் நீர்ச்சுழி போன்றது; கைகள் காந்தள்மலர் போன்றன; தோளுக்கு மூங்கிலையும் கரும்பையும் கழுத்துக்குப் பாக்கு மரத்தினையும் உவமை கூறலாம்; சங்கும் உவமை யாகலாம்; பச்சோந்தி, எள் பூ, குமிழமலர் அவள் மூக்குக்குச் சரியான உவமைகள் ஆகும். செவிக்கு வள்ளைக் கொடி கண்களுக்குக் கடல்; புருவங்களுக்கு வாள்; நெற்றிற்குப் பிறைச்சந்திரன், ஒரளவு முகத்துக்குத் தாமரை, கூந்தலுக்கு மேகம்; நிறத்துக்குப் பொன் உவமை களாகும். இவ்வாறு அவள் அழகைப் புனைந்துரைத்து, எல்லா வகையிலும் அழகிற் சிறந்த நங்கை ஒருத்தி தென்பட்டால் அவளைச் சீதை என்று தீர்மானிக்கலாம் என்று தெரிவித்தான். மேலும் அடையாளத்துக்காக இந்தச் செய்திகளையும் சொல்லி அனுப்பினான்.

“விசுவாமித்திரரோடு மிதிலையை அடந்தபோது, கன்னிமாடத்தில் அன்னம் ஆடும் முற்றத்தில் அருகில் அவளைக் கண்டதையும், ‘வில்லை முறித்தவன் முனிவரோடு வந்த வீரனாக இல்லை என்றால் உயிரை விடுவேனே’ என்று அவள் தன்னைப் பார்த்த செய்தியையும், காட்டுக்குப் புறப்பட்டபோது ‘பிரிவினும் சுடுமோ பெருங்காடு’ என்று அவள் கேட்டதையும், “யான் அலாதன எல்லாம் உனக்கு இனியவோ” என்று கேட்டதையும், அயோத்தியை விட்டு நீங்கு தற்கு முன், “காடு வந்துவிட்டதோ” என்று அவள் கேட்டதையும், மற்றைய செய்திகளையும் சொல்லி அனுப்பினான்.

சாம்பவான், அனுமன் முதலிய படைத்தலைவர் களோடு, பெரும்படையோடும் அங்கதன் தென்திசை நோக்கிச் சென்றான்.

பிலம்புகுந்து வெளிவந்த கதை

விந்தன் என்பவன் ஏனைய திசைகளை நோக்கிச் செல்லும் படைகளுக்குத் தலைமை தாங்கினான். வளமான தமிழ் பேசும் தென்திசை சென்றவர், முதன் முதலில் விந்தமலையை அடைந்தனர்; நருமதை ஆற்றையும், ஏமகூட மலையையும், கடந்து, ஒரு பாலைவனத்தைக் கண்டனர்; அப்பாலையின் வெப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ள ஒருபிலத்தின் உள்ளே சென்றனர்; “பாலையில் நடந்தால் மடிவது உறுதி; அதனால், பிலத்து வழியே அது காட்டும் புதிய பாதையில் செல்லலாம்” என்று முடிவு செய்தனர்.

இருட்டு வழியில் அவர்கள் குருட்டு மனிதர் ஆகி விட்டனர். அனுமன் பேருருக் கொண்டான்; அவன் வாலைப் பிடித்துக்கொண்டு மற்றவர் பின் தொடர்ந்தனர். அனுமன் கையால் தடவிக்கொண்டு விரைந்து நடந்து சென்றான். அந்தப் பிலத்துள் அழகிய நகர் ஒன்றனைக் கண்டனர். அது ஒளி பெற்றுத் திகழ்ந்தது; கவர்ச்சி மிக்கதாய் இருந்தது; அங்கு உண்ண உணவும் தின்னப் பலவகைக் கனிகளும் இருந்தன; குயிலும் மயிலும் ஏனைய வண்ணப் பறவைகளும் இருந்தன; பெண்கள் அழகாய்த் தோற்றமளித்தனர். ஆனால் அவற்றிற்கு உயிர் ஒட்டம் என்பதே காணப் படவில்லை; அனைத்தும் ஒவிய வடிவங்களாய் இருந்தன.

அது மயன் என்னும் அசுரத் தச்சனால் நிருமணிக்கப் பட்ட இடம்; அதிலிருந்து தப்பி வெளி யேற முடியாமல் திகைத்தனர்; அனுமன் அவர்களுக்கு ஆறுதல் கூறி எப்படி யும் வெளியேற்றுவதாக உறுதி தந்தான். அப்பொழுது உயிர் ஒட்டம் உடைய அழகிய நங்கை ஒருத்தி, அழகிய சடையுடன் ஒளி பெற்ற உருவத்தோடு காணப்பட்டாள்; அவள் ஒரு மாபெரும் தவசியாய்த் திகழ்ந்தாள்; அவள் பெயர் சுயம்பிரபை என்று அறிந்தனர்.

அவள், விசித்திரமான கதை ஒன்றைச் சொன்னாள்.

“மயன் என்னும் அசுரத் தச்சனுக்கு இந்நகர் பிரமனால் அளிக்கப்பட்டது. அவன் தேவப் பெண் களுள் ஒருத்தியைக் காதலித்தான். அந்தப் பெண் இந்தச் சுயம்பிரபை என்பவளின் உயிர்த் தோழி யாவாள். அந்தத் தெய்வத் தச்சன் தன் காதலியொடு இந்நகருக்கு வந்தான்.

அன்றில் பறவை என இணைந்து இன்பம் அடைந்த காதலர் அங்கேயே நிலைத்து வாழ்ந்தனர். இவளும் அவர்களோடு தங்கிவிட்டாள். இந்திரன் அந்தத் தெய்வப் பெண் இருக்குமிடம் தேடி, அங்கு வந்து அந்த அசுரனைக் கொன்று அப்பெண்ணை மீட்டுச் சென்றான்.

அவர்களுக்குத் துணையாய் இருந்த சுயம்பிரபை என்பவளை அந்நகரத்துக்குக் காவலாய் இருக்கும்படி ஆணையிட்டு இந்திரன் அந்த இடத்தைவிட்டு நீங்கினான். விமோசனம் அறியாமல் வேதனையில் உழன்ற அவளுக்கு இராமன் தூதுவராய் அனுமன் முதலிய வானரர் வரும் போது வழிபிறக்கும் என்று இந்திரன் சாபவிமோசன் தந்தான்.

சுயம்பிரபை இராமன் துதுவனாய் அனுமன் வந்தான், என்பதனால் எல்லையற்ற மகிழ்ச்சியை அடைந்தாள், எனினும், அவளும் அங்கிருந்து வெளியேற வழி தெரியாமல் தடுமாறினான்.

அனைவரும் அனுமன் உதவியை நாடினர். ‘அஞ்சற்க’ என்று சொன்ன அஞ்சனை மைந்தன் அனுமன், விண்ணுயர வளர்ந்து பேருருவம் கொண்டான்; மேலே திறந்து வெளியே வந்தான்; திருமால் வராக அவதாரம் எடுத்ததுபோலப் பிலத்தைப் பிளந்து மேலே வந்தான். சுயம்பிரபை விடுதலை பெற்றவளாய் விண்ணுலகம் போய்ச் சேர்ந்தாள். வானவர், அனுமன் அளவற்ற ஆற்றலை வியந்து பாராட்டினார்.

வழிப் பயணம்

அங்கிருந்து தொலை தூரம் நடந்து சென்று, குளிர்ந்த பொய்கைக் கரை ஒன்றினை அடைந்தனர். சூரியன் அஸ்தமித்தான். அப்பொய்கையில் குளிர்ந்த நீரைக் கையால் வாரிப் பருகி நீர்வேட்கை தீர்ந்தனர். தேனும் பழமும் அவர்களுக்குத் தெவிட்டாத உணவுகளாயின. பொய்கைக் கரை ஓரம் குளிர்ந்த காற்று வீசியதும் அவர்கள் மெய் மறந்து உறக்கம் கொண்டனர்.

அந்தப் பொய்கையைக் காத்து வந்த அசுரன், அதற்கு உரிமை கொண்டாடினான்; நீரைக் குடித்த வானரரைத் தாக்க நினைத்தான்; அங்கதன் மார்பில் ஒரு குத்து விட்டான்; அங்கதன் விழித்து எழுந்து பதிலுக்குத் தாக்கி, அந்த அசுரன் உயிரைப் போக்கினான்.

‘அவன் யாராக இருக்கக்கூடும்?’ என்று யோசித் தனர். கரடிகளுக்குத் தலைவனான சாம்பவான், “வேற் படையைத் தாங்கிய அவ் அசுரன், துமிரன் என்பவன் ஆவான்; அவன் அப் பொய்கைக்கு உரிமை உடையவன்; இவனைப் போல அசுரர் பலர் ஆங்காங்கே இருப்பர்” என்று கூறினான்.

பிறகு அவர்கள் சீதையைத் தேடிச் சென்று பெண்ணை நதியை அடைந்தனர்; தசநவம், உசநவம் என்னும் பெயர்களை உடைய நாடுகளைக் கடந்து விதர்ப்ப நாட்டை அடைந்தனர்; அதற்குப் பிறகு தண்ட காரண்யம், முண்டகத்துறை. பாண்டுமலை, கோதாவரி நதி, சுவணகம் நதி, குலிங்க தேசம், அருந்ததி மலை, மரகத மலை ஆகியவற்றை எல்லாம் கடந்து வேங்கடமலையை அடைந்தனர்; அங்குத் தவம் செய்து கொண்டிருந்த அருந்தவ முனிவர் திருவடிகளை வணங்கிப் பின், சான்றோர் நிறைந்த தொண்டை நாட்டை அடைந்தனர். அதன்பின் செந்நெல்லும், பாக்குமரமும். கரும்பும் நிறைந்த காவிரி நாட்டை அடைந்தனர்; அதன்பின் முத்தமிழ் வளர்க்கும் தென் தமிழ் நாடாகிய பாண்டிய நாட்டை அடைந்தனர். அதனையும் கடந்து சுக்கிரீவன் குறிப்பிட்ட மகேந்திர மலையைச் சேர்ந்தனர்.

சம்பாதியைச் சந்தித்தல்

அங்கதன் தலைமையில் தென்திசை நோக்கி நாலாப்பக்கமும் அனுப்பிய சேனைகளும் அந்த மயேந்திர மலையை அடைந்தன. கால் கடுக்க நடந்தும் அவை கண்டது, கலக்கமே தவிரக் கொண்ட இலக்கு அன்று; சீதையைக் காண முடியாதவர்களாய் மனம் நொந்து, வேதனையால் வெந்து, வெதும்பி உள்ளம் சோர்ந்தனர்.

“'சீதையைத் தேடி மண்முழுவதும் சுற்றினோம். சுக்கிரீவன் விதித்த காலம் திங்கள் ஒன்றும் கடந்துவிட்டது திரும்பிச் சென்று, இயலாமையை இயம்பினால் சுக்கிரீவன் இறப்பான், இராமனும் உயிர் துறப்பான்; அதனால் அங்குத் திரும்பிப் போவதில் பயனில்லை; தோல்வியை ஏற்றுக் கொண்டு இங்கேயே தவம் செய்து காலத்தைக் கழிக்கலாம்; அதுவும் சுமை எனத் தோன்றினால் நஞ்சினை உண்டு உயிர் விடுவோம்” என்று கருத்துத் தெரிவித்தனர்.

அங்கதன், சாம்பவன், அனுமன் மூவரும் ‘அடுத்துச் செய்வது யாது?’ என்று யோசித்தனர். உயிர் விடுவதே மேல் என்ற கருத்தை மற்றவர் சொல்ல, அனுமன் அதற்கு இசையவில்லை. “சடாயுவைப் போலப் போராடி. உயிர் துறப்பதுதான் ஆண்மைக்கு அழகு; செயலற்றுத் தற்கொலை செய்து கொள்வது கோழமைச் செயலாகும்; வீரச் செயலை வேண்டி நின்றவர் வேறு ஒன்றையும் எண்ணிப்பார்ப்பரோ? எலி தவளைகள் தான் குழிகளின் பதுங்கிக் கொள்ளும்; புலிகளும் யானைகளும் போன்ற நாம், போரிட்டு வீரமரணம் அடைதல்தான் புகழ் மிக்க செயலாகும்” என்று கூறினான்.

இராவணனை எதிர்த்துக் கழுகின் வேந்தனான சடாயு உயிர் விட்டான் என்ற செய்தி அவர்கள் பேச்சில் அடிபட்டது. அதைக் கேட்ட சம்பாதி என்னும் கழுகுக்கு அரசன், அவர்களை அடைந்து, சடாயுவின் மரணத்தைக் குறித்து விரித்து உரைக்குமாறு கேட்டுக் கொண்டான்.

இராவணன், தன்வாள் கொண்டு சடாயுவின் இறக்கைகளை வெட்டி வீழ்த்திய செய்தியை விவரமாக அனுமன் எடுத்துக் கூறினான். சம்பாதி சடாயுவின் தமை யனாவான். இச்செய்தி அவனைச் சோகத்தில் ஆழ்த்தியது.

தான் சடாயுவின் தமையன் என்பதை வானரர்களுக்குத் தெளிவுபடுத்தினான். ‘இராமனுக் காகச் சடாயு உயிர் விட்டான்’ என்ற செய்தி அவனுக்குப் பெருமையைத் தந்தது. பேருவகை அடைந்தான்; சம்பாதி இறக்கைகள் தீய்ந்து கருகிப் பறப்பதற்கு இயலாமல் மெதுவாய் நடந்து வந்தான். அவன் தன் இறகுகளை இழந்த சிறுமையை அவர்களுக்கு எடுத்து உரைத்தான்; தானும் தன் தம்பியும் விண்ணவர் நாடு அடைய, விண்ணுயரப் பறப்பதில் போட்டி போட்டுக் கொண்டு சென்றதாகவும், சூரியனின் வெப்பம் தாங்காமல் சடாயு இறக்கைகள் தீய உடல் காய வேதனைப்பட்டதாக வும், அவனைக் காப்பதற்காக அவனுக்கு மேலே தான் பறந்து, தன் சிறகுகளை விரித்து, அவனுக்கு நிழல் உண்டாக்கி யதாகவும் தெரிவித்தான். கதிரவன் வெம்மையால் சிறகுகள் தீய்ந்து தரையில் விழுந்தான் என்பதையும் “இராமன் தூதுவனான அனுமனொடு வானரப் படைகள் இராமன் திருப்பெயரைச் சொல்லும் அப்பொழுது சிறகுகள் தளிர்க்கும்” என்று சூரியன் சொல்லி இருந்தான் என்பதை யும் தெரிவித்தான். அதன்படி வானரரை இராமன் திருப் பெயரைக் கூட்டமாகக்கூடி விளிக்குமாறு சம்பாதி வேண்டினான். அவ்வாறே அவர்கள் வாயினிக்க, இராமன் திருப்பெயரைச் சொல்லச் சம்பாதியின் சிறகுகள் தழைத்து வளர்ந்தன. சம்பாதி இழந்த வலிமையை மீண்டும் பெற்றான்; கழுகுகளுக்குத் தலைவனாய் மீண்டும் அவனால் செயல்பட முடிந்தது.

“எதற்காக அவர்கள் அங்கே வந்தனர்?” என்ற செய்தியைக் கேட்டறிந்தான். அவர்கள் சீதையைத் தேடித் தென்திசை வந்ததாகத் தெரிவித்தனர்.

சீதையை இராவணன்தான் எடுத்துச் சென்றான், என்பதையும், தென்னிலங்கையில் அசோக வனத்தில் அவனைச் சிறை வைத்திருக்கிறான் என்பதையும் சம்பாதி உறுதியாய்ச் சொன்னான். தான் அதை உயரே இருந்து காண முடிகிறது என்பதையும் கூறினான்.

“இலங்கைக்கு அனைவரும் செல்வது இயலாது” என்றும், ‘அவர்களுள் ஆற்றல் மிக்க ஒருவன் மட்டும் சென்று சீதையிடம் பேசி ஆறுதல் கூறி அவள் தரும் செய்திகளைக் கேட்டறிந்து வரலாம் என்றும், அதுவும் முடியாவிட்டாலும் யாருமே போகாவிட்டாலும் தான் சொன்ன செய்தியை மட்டும் உறுதியாகக் கொண்டு இராமனிடம் அறிவித்தால் போதும் என்றும் கூறினான். காவல் மிக்கது இலங்கை; அதன் மதிலைக் கடந்து உள்ளே போவது எளிய செயலன்று; நான் சொன்னதைப் போலச் செய்யுங்கள்’ என்று கூறினான்.

“சடாயு தான் அரசனாய் இருந்து கழுகுகளை வழி நடத்தி வந்தான். அவன் மறைந்ததும் சிறகு இழந்து நான் செயலற்றுக் கிடந்தேன்; இப்பொழுது சிறகுகள் முளைத்து விட்டன; பழைய ஆற்றல் என்னிடம் வந்துவிட்டது; நான் அப்பறவைகளை வழிநடத்திச் செல்லுகிறேன்” என்று கூறி விடை பெற்றுச் சென்றான் சம்பாதி.

மகேந்திர மலையில் அனுமன்

“புள்ளரசன் சம்பாதி பொய்யுரை பேசான்; உள்ளங்கை நெல்லிக் கணிபோலத் தெள்ளத் தெளிய உள்ளதை எடுத்து உரைத்தான். இனி, நாம் உயிர்விடத் தேவை இல்லை; செய்ய வேண்டுவனவற்றைத் திறம்படச் செய்வதே தக்கது” என்று வானரர் தம் கருத்தைத் தெரிவித்தனர்.

“சூரியன் மகனாகிய சுக்கிரீவனையும் சுடர் விற்கை இராமனையும் தொழுது, உற்றது அறைந்தால் நம் கடமை முற்றுப்பெறும்; எனினும், நாமே ஆராய்தல் தெளிவான செயலாகும் என்ற முடிவிற்கு வந்து “நம்மால் கடலைக் கடக்க முடியுமா?” என்று ஆராய்ந்தனர். அவரவர் தம் ஆற்றலையும் திறமையையும் விரித்துரைக்க முயன்றனர்.

நீலன், “என்னால் கடலைக் கடக்க இயலாது” என்று தெளிவுபடக் கூறினான். அங்கதன் “அக் கரைக்குச் செல்லும் ஆற்றல் எனக்கு உண்டு; திரும்ப இக்கரைக்கு வர முடியும் என்று கூற என்னால் முடியாது” என்றான்.

சாம்பவானும் தனக்கு ஆற்றல் இன்மையை வெளிப்படுத்தினான்; மேருமலை இடறத் தன்கால் முடம் பட்டுவிட்டது; அனுமனே ஆற்றல் மிக்கவன், செல்லத் தக்கவன் அவனே என அவன் விரித்துக் கூறினான்.

“அனுமனுக்கு நீண்ட வாழ் நாள் வரம் உள்ளது; அதனால், அவனை யாரும் அழிக்க இயலாது; சாத்திர நூல்களின் நுட்பங்களை அவன் அறிந்தவன்; திறமை யாய்ப் பேசும் சொல்வன்மை உடையவன்; எமனும் அஞ்சும் சினமும், உடல் வலிமையும், சிவனைப் போலக் கடும்போர் செய்யும் திறமும் படைத்தவன்; கடல் கடந்து திரும்பும் ஆற்றலும் அனுமனுக்குத்தான் உண்டு, இராமனும் அனுமனிடமே மிக்க நம்பிக்கை வைத்திருக்கிறான்;

“எண்ணிச் செயல்படும் நுண்ணறிவும், எதையும் சாதிக்கும் திண்மையும் அனுமனிடமே உள்ளன வயதாலும் சாம்பவானை விட மிகவும் இளஞன் பேருருவம் எடுத்து மண்ணும் விண்ணும் வியாபிக்குப் பேராற்றல் அவனிடமே உள்ளது; அமைச்சனுக்கு உரிய அறிவும், படைத் தலைவனுக்கு உரிய வீரமும், அறிஞர்க்கு உரிய சிந்தனையும், சிங்கம் போன்ற சீற்றமும், அஞ்சாமையும் உள்ளமையால் செல்லத் தக்கவன் அனுமனே” என்று சாம்பவான் கூறினான்.

இவ்வாறு சாம்பவான் புகழ்ந்து கூறி முடித்ததும் அறிவிற் சிறந்த அனுமன் சம்மதித்தான்; உறுதியான நெஞ்சோடு தன் உள்ளக் கருத்தை உரைத்தான்.

“இலங்கையைத் தோண்டி எடுத்து வேரோடு இவ்விடம் கொண்டு வருக என்றாலும், அரக்கரை அழித்து அணங்கனைய சீதையைக் கொண்டு வருக என்றாலும் செய்து முடிப்பேன்; கலங்க வேண்டா; இது உறுதி” என்று கூறினான்.

“கடலை மிக எளிதில் கடப்பேன்” என்று சொல்லி அனுமன் பேருருவில் நின்றான். திருமாலின் திருவடி உலகளக்கத் தாவியது போல, அநுமன் கடலைக் கடக்கத்தானேயாகி நின்றான்; மகேந்திரமலை மேல் நின்ற அனுமன், கூர்மமாகிய ஆமைமேல் நின்றமந்திரமலை போல் காட்சி அளித்தான்.

அனுமன் விண்ணளாவ நின்றான்; மின்னலை உடைய மேகங்கள் அவன் காலில் படிந்து, அவன் காலுக்குக் கட்டிய வீரக் கழல்களைப் போல ஒளி செய்தன. அவன் ஏறி நின்ற மகேந்திரமலை அண்டங்களைத் தாங்கும் பொன்மயமான துணின் அடியில் இட்ட கல்லைப் போலக் காணப்பட்டது.

சுந்தர காண்டம்

அனுமன் கடலைக் கடத்தல்

கடலைக் கடப்பதற்கு அனுமன் தன் உடம்பைப் பெருக்க வேண்டுவதாயிற்று. மண்ணும் விண்ணும் நிறைந்த பேருருவம் எடுத்தான். அவன் தலை விண்ணை முட்டியது; அங்கே மண்ணவர் வியக்கும் துறக்க நாடு இருந்தது; சீதை அங்கு வாழ விரும்புபவள் அல்லள்; அதனால், அங்கு இருக்க அவளுக்கு வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தான்.

அவன் ஏறி நின்றது மகேந்திர மலை; விண்ணை முட்டும் அம் மலையில் இருந்த அவனுக்குப் பொன்னை நிகர்த்த இலங்கை கண்ணில் பட்டது. “செல்லும் இடம் அதுதான் என்ற தெளிவு ஏற்பட்டது. அதனால், எல்லை யில்லா மகிழ்ச்சி அவனைத் தழுவியது.

அங்கிருந்து அ வன் இலங்கை நோக்கிப் பாய்ந்தான்; கால்களை அழுத்தமாக அம் மலையில் ஊன்றினான்; வானரனாக இருந்தவன் வானவர்போல் அந்தரத்தில் பறந்தான், பறவை போலத் தன்னை மாற்றிக் கொண்டான்; வாலை உயர்த்தினான்; கால்களை மடக்கினான்; கழுத்தை உள் அடக்கினான்; காற்றிலும் வேகமாகத் தன் ஆற்றல் தோன்ற விண்ணில் பறந்தான். அவன் செல்லும் வேகத்தால் கல்லும் முள்ளும் மரமும் செடியும், கொடியும் அவனுடன் தோழமை கொண்டன; உடன் பயணம் செய்தன. கடல் நீரைப் பார்த்தான்; அதன் அடியைக் கண்டான்; நாகர் உலகம் ஒளிவிட்டது; கடல் மீன்கள் அவனால் எழுந்த காற்றால் துடித்து இறந்தன; திக்கு யானைகள் எட்டும் திசை தடுமாறி நிலை குலைந்தன; அண்டங்கள் நடுங்கின; அண்டர் வியந்தனர்.

மலை குறுக்கிட்டது

விண்ணில் பறந்தபோது எதுவும் கண்ணில் படவில்லை; கொண்ட கொள்கை அண்ட முகட்டைத் தாவ உதவியது. கடலிலிருந்து மலை ஒன்று முளைத்தது; அது கண்டு அவன் மலைத்துப் போனான்; அவனோடு போட்டி போட்டிக் கொண்டு அஃது உயர உயர நிமிர்ந்தது; இவன் கால்பட்டு அதன் தலை சிதறியது; அது தலை கீழாய் உருண்டது; அசுரன் தலையில் கால் வைக்கும் காளிபோல் அதன்மீது நின்று, காளி நர்த்தனம் ஆடினான்; அது தன் உச்சியை அடக்கிக் கொண்டது; மானுடவடிவம் கொண்டு அவனிடம் வந்து மண்டியிட்டது. அதனை அண்ட ஒட்டாமல் அவன் அகலச் சொன்றான்.

“நீ யார்? ஏன் தொடர்கின்றாய்?” என்று வினவினான்

“நன்றி உடையேன்; அதனால், உன்னை நயக்கின்றேன்” என்றது.

“வெற்றியுடைய செய்தி இருந்தால் சொல்; வேகமாகப் போக வேண்டும்” என்றான்.

“மைந்நாகம் என்பது என் பெயர்; சிறகுகள் பெற்றிருந்தேன்; என் சிறகுகளை அறுக்க இந்திரன் என்னைத் தொடர்ந்தான்; நான் வேகமாய்ப் பறந்து செல்ல உன் தந்தை உதவினான்” என்றது.

காற்றில் மிதக்கும் கவிதையாய் இருந்தது அந்த சொற்கள் அவனுக்கு.

“நான் காற்றுக்குச் செய்யும் வந்தனை இது; நீ அதன் மைந்தன், இங்கு இருந்து உண்டு களைப்பாறிச் செல்க” என்றது.

“தான் காற்றின் மைந்தன் என்பதால் தன்னை உபசரிக்கக் கடலுள் மறைந்திருந்த மைந்நாக மலை மேல் எழுந்தது” என்பதை அறிந்தான் அனுமன்.

“நன்றி; நான் உல்லாசப் பயணம் மேற்கொண்டு உலகம் சுற்றச் செல்லவில்லை; கடமை எனக்குக் காத்திருக்கிறது; கடலைக் கடந்து காகுத்தன் துணைவி யைக் காண வேண்டும்; வேகமாகச் செல்கிறேன்; வழிவிடு” என்றான்.

அதன் வேண்டுகோளை ஏற்றுத் திரும்பி வரும்பொழுது தங்குவதாய்த் தெரிவித்தான். நந்தனுக்கு வழிவிட்ட நந்தியாய் அது வழிவிட்டுக் கடலுள் ஆழ்ந்தது.

சுரசை தடுத்தல்

அனுமன் ஆரணங்கினைக் கண்டு அறியக் கடலைக் கடக்கும் ஆற்றலும், அரக்கரை எதிர்க்கும் வீரமும் உள்ளனவா? என்று அறிய விண்ணிடை வாழும் தேவர் விரும்பினர். அதற்காகச் சுரசை என்ற அரமகள் ஒருத்தியை அரக்கி வடிவில் அவன்முன் அனுப்பி வைத்தனர். அவள் கடற்புயலை முன்நின்று தடுக்கும் பெருமலை போலக் குறுக்கே நின்றான்.

“அஞ்சனை மகனே! அரக்கி மகள் நான்; கோரப் பசியால் சோர்வுற்று இருக்கிறேன்; உன்னைத் தின்று சுவை காண விழைகிறேன்” என்றாள்.

பேருருவம் கொண்டு இடைமறித்த அவள், அங்காந்து நிற்க அவள் வாயில் புகுந்து வெளியேறினான்; உருவத்தைச் சுருக்கி, வாயுள்ளே புகுந்து வெளியே வந்து பிறகு உடம்பைப் பெருக்கிக் கொண் டான்; பேருருவம் படைத்த அவன், சிற்றுருவம் படைக்கவும் வல்லன் என்பதைக் காட்டினான்.

அங்கார தாரகை

அடுத்து அவனைத் தடுத்து நிறுத்தினாள் அங்கார தாரகை என்னும் அரக்கி ஒருத்தி; அவளைக் கண்டு அவன் இரக்கம் காட்டவில்லை; அவன் வாயுள் புகுந்து வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தான்; அவன் பறக்கும் காற்றாடியானான்; அவனைத் தொடர்ந்து நூலாக அவள் குடல் பின் தொடர்ந்தது.

தடைகள் மூன்றும் அவனிடம் விடைபெற்றுக் கொண்டன. கடலைக் கடந்த அவன் கால்கள் பவழ மலையில் பதிவு செய்தன; அம் மலை இலங்கையின் எல்லையில் இருந்தது.

காவல் தெய்வம்

காவல் தெய்வம் ஒருத்தி இரவணன் ஏவலை ஏற்று அங்கு நின்று தடுத்தாள்.

“பொழில் சூழ்ந்த கடலை உடைய இலங்கை யில் உனக்கு என்ன வேலை?” என்று கேட்டான்.

“காலை மாலை இங்கு நீ காவல் நிற்பது ஏன்?”” என்று கேட்டான்.

“அது என் கடமை; நான் காவல் தெய்வம்; நீ இதைக் கடக்க முடியாது” என்றாள். இருவரும் கை கலந்தனர். அவன் அவள் தாக்க அவள் அழகிய பெண்ணாய் அவன் முன் நின்றாள்

“கண்ணைப் பறிக்கும் அழகுடைய பெண்ணே நீ யார்?” என்றான்.

“எழில் கொஞ்சம் நகரைப் படைத்த நாளில் நான்முகன் என்னைக் காவலுக்கு வைத்தான்; அவன் ஏவலுக்குப் பணிந்து உன்னை எதிர்த்து நின்றேன்; அஞ்சனை மகனே! உன் அங்கைபட்டதும் என் கடமையை முடித்துக் கொண்டேன்; கொடுமை நீங்கி அறம் தழைக்கும்; இனித் தீமைகள் ஒழியும் காலம் அணுகிவிட்டது. இச் சித்தரநகர், இனிச் சிதைவடையும்” என்று கூறி வழி விட்டு, விடுதலை பெற்றாள்.

ஊர் தேடுதல்

பெண்ணை ஒதுக்கி வாழ்ந்தவன், பெண்ணைத் தேடும் பணியில் அமர்ந்தான். இது ஒரு புதுமையாய் இருந்தது. இராமன் உரைத்த அடையாளம் அவனுக்கு வரைபடமாய் விளங்கியது. சீதை என்னும் கோதை, எழில் மிகு ஒவியமாய் அவன் மனத்தில் பதிந்திருந்தாள். வழியில் காணும் பெண்களை அவன் விழிகள் சந்தித்தன. அழகு என்பதற்கு அடையாளம் எதுவும் அவன் கண்ணில் படவில்லை. அரக்கியர் இடையே அணங்கனைய மகளாகிய சீதையைக் காண முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

தப்பித் தவறி நங்கையர் இளமையோடும் எழிலோடும் தென்பட்டால் தான் எழுதி வைத்த சித்திரம் கொண்டு அவர்களை விசித்திரமாய்ப் பார்த்து வந்தான்.

உறங்குகின்ற கும்பகருணன்

அநுமன் பார்வை கும்பகருணன் மாளிகைப் பக்கம் சென்றது. மலை ஒன்று உருண்டு கிடப்பதைப் பார்த்தான்; அதன் தோற்றத்தைக் கண்டு வியந்தான்; பேருருவம் படைத்த அது நின்றால் எப்படி இருக்கும்? என்று நினைத்தான். மலையின் உருவை அவன் உருவில் வைத்துப் பார்த்தான்; தின்பதற்கே பிறந்தவன் அவன், என்பதை அறிந்தான். ஊனும் கள்ளும் உண்டபின் அவன் உறக்கம் கொண்டவனாய்க் காணப்பட்டான். அவன் குறட்டை விட்டுக்கொண்டு உறங்குவதைப் பார்த்தான். ‘பேரரசன் ஒருவன் இப்படிப் பெருந்துயில் பெற்றிருக்க முடியாது’ என்பதால் அவன் இராவணனாய் இருக்க முடியாது என்று தெளிந்தான்.

வீடணன் இருக்கை

அடுத்து அவன் இளவல் வீடணன் மாளிகையை அடைந்தான்; வனப்பும் அழகும் அந்த மாளிகை பெற்றிருந்தது; அங்கே அரக்க வடிவில் ஒரு அசோகனைக் கண்டான்; கறுப்பு நிறத்தில் வெள்ளை உள்ளம் குடி கொண்டிருப்பதைக் காண முடிந்தது; நீதியும் அறமும் அவனிடம் இடம் வேண்டிக் குடிகொண்டிருந்ததைக் காண முடிந்தது; ‘பகை நடுவே உறவு கொள்ள ஒருவன் உளன்’ என்பதை அறிந்தான். ‘இவன் தப்பிப் பிறந்தவன்’ என்ற முடிவுக்கு வந்தான்; கும்பகருணன் தம்பி வீடணனாகத் தான் இருக்க வேண்டும் என்று அறிந்தான்; அவன் மீது இவன் கண்ணோட்டம் சென்றது; ‘இவன் பயன்படத் தக்கவன், என்று மதிப்பீடு செய்து கொண்டான்.

இந்திரசித்தன் மாளிகை

அடுத்து, இந்திரசித்தின் அரண்மனையை அடைந்தான்; ‘இவன் இந்திரனைச் சிறையிட்டவன்’ என்பதை முன்பே கேட்டு அறிந்திருக்கிறான்; அரக்கர் குலத்தில் அழகு உடைய இளைஞன் இருந்தது அவனுக்கு வியப்பை ஊட்டியது; அவனை முருகனாய்ப் பார்த்தான். ‘இவனோடு நீண்ட போர் நிகழ்ந்த வேண்டிவரும்’ என்று மதித்தான்; “இவன் ஒரு மாவீரனாய் இருக்க வேண்டும்” என்று கண்டான்; இவனைப் போன்ற வீரர் இருப்பதால்தான் இராவணன் வலிமை மிக்கவனாய் இருக்கிறான், என முடிவு செய்தான்.

மண்டோதரியைக் கண்டான்

வித்தியாதர மகளிர் உறையும் தெருக்களைக் கடந்தான், மண்டோதரி தங்கி இருந்த மண்டபத்தை அடைந்தான்; ‘சீதையிடம் இருக்கத் தக்க வனப்பும் எழிலும் அவளிடம் இருப்பதைக் கண்டு, அங்கு அவளைக் காண முடியும்’ என்று நம்பிக்கை கொண்டான்; அங்கே மண்டோதரி கண் அயர்ந்து உறங்கிக் கிடந்தாள்; மயன் மகளாகிய மண்டோதரியைச் ‘சனகன் மகள்’ என்று தவறாய் நினைத்தான்; ‘சுகபோக சுந்தரியாக மாறி விட்டாளோ?’ என்று மயங்கினான்; சோர்ந்த குழலும், கலைந்த துயிலும், அயர்ந்த முகமும், ஜீவனற்ற முகப் பொலிவும் அவள் மண்டோதரி என்பதை உணர்த்தின. ‘நலம் மிக்க நங்கை ஒருத்தி மனைவியாய் இருக்க, மற்றொருத்தியை இவன் நாடுகிறானே’ என்று வியந்தான்.

இராவணன் மாளிகை

அடுத்தது அவன் அடைந்தது இராவணன் மாளிகை; அரம்பையர் அவன் அடிகளை வருடிக் கொண்டிருந்தனர். உறக்கம் கலைந்த நிலையில் அவன் காணப்பட்டான். நெருப்பை மடியில் கட்டிக்கொண்டு, அவனால் எப்படி அமைதியாய் உறங்கமுடியும்? சீதையை நெஞ்சில் வைத்தவன், நெருப்பு வைத்த பஞ்சாய் எரிந்து அழிந்துகொண்டிருந்தான்.

அரக்கனைக் கண்ட அனுமன் பதைபதைத்தான்; அவன் பத்துத் தலைகளையும் கிள்ளி எறிந்து, பந்தாட விரும்பினான்; ‘அவனை வென்று சீதையை மீட்பதை விடக் கொன்று முடிப்பதேமேல்’ என்று நினைத்தான்; நின்று நிதானமாய் நினைத்துப் பார்த்தான்; ‘கண்டு வரச் சொல்லி அனுப்பப்பட்டவனே தவிரக் கொண்டு வரச் சொல்லப்பட்டேன் இல்லை’ என்பதை நினைந்தான். ‘எல்லை மீறிய தொல்லைகளை விளைவிப்பது நல்லது அன்று’ என்ற முடிவுக்கு வந்தான்; “இராமன் வீரத்துக்கு விளைநிலம் வேண்டும்” என்பதற்காக அவனை விட்டு வைத்து எட்டிச் சென்றான்.

‘கட்டிய கட்டிடங்களில் சீதை கால்அடி வைக்க வில்லை; என்பதை அறிந்தான்; அவன் சுற்றாத இடமே இல்லை; எட்டிப்பாராத மாளிகை இல்லை; அவனுக்கே அலுப்பு ஏற்பட்டுவிட்டது; ‘சலிப்பதால் பயனில்லை’ என்று பயணத்தை மேலும் தொடர்ந்தான்.

கழுகின் வேந்தனாகிய தொழத் தக்க சம்பாதி என்பான் சொன்ன உறுதிமொழி அவனுக்கு நம்பிக்கை அளித்தது. ‘இலங்கையில்தான் அந்த ஏந்திழையாள் சிறைவைக்கப் பட்டிருக்கிறாள்’ என்று கூறியதில் தவறு இருக்காது, என்ற முடிவுக்கு வந்தான்.

பாய்ந்து ஒடும் அவன் கால்கள் மரங்களையும் மாட மாளிகைகளையும் தாவின. புள்ளினம் பறந்து திரிவதும் பூக்கள் நிறைந்ததும்ாகிய சோலை ஒன்று காணப்பட்டது. காக்கை திரியும் தோற்றம் கண்டு, அவன் சோகம் தீர்க்கும் அசோகவனத்தைக் கண்டான்.

சீதையைக் காணல்

இருளிடை ஒளிவிடும் மின் என, அரக்கியர் சூழ்ந் திருந்த இடத்தில் கவலையில் ஆழ்ந்த நங்கையைக் கண்டான். அதனைக் கண்டு தேவர் ஆரவாரித்தனர். வெற்றி வாசல் வழிதிறந்து காட்டியது. இராமன் அறிவித்த பேரழகு முழுவதும் எங்கும் பெயராது அங்குக் குடியிருந் தமையைக் கண்டான். சித்திரத்தில் தீட்டிய அழகு வடி வத்தைச் சிந்தனை முகத்தில் தேக்கிய வடிவத்தில் கண் டான். புகையுண்ட ஒவியமாக அவள் காணப்பட்டாள்.

‘ஆவியந்துகில் புனைவது ஒன்று அன்றி வேறு அறியாள்;

தூவி அன்னமென் புனலிடைத் தோய்கிலா மெய்யாள்;

தேவு தெண்கடல் அமிழ்துகொண்டு அனங்கவேள் செய்த

ஒவியம் புகைஉண்டதே ஒதுக்கின்ற உருவாள்'

அரக்கியர் மத்தியில் அவள் நொடிந்து இருந்தது, கற்களிடையே உணங்கிய மருந்துச்செடி போல இருந்தது.

“வன்மருங்குல்வாள் அரக்கியர் நெருக்க அங்கு இருந்தாள்;

கல்மருங்கெழுந்து என்றும் ஒர்துளிவரக் காணா

நன் மருந்துபோல் நலனற உணங்கிய நங்கை,

மென்மருங்குல்போல்வேறுளஅங்கமும் மெலிந்தாள்”.

புலிக் கூட்டத்திடையே துள்ளி ஓடாத மானைக் கண்டான்; சிந்தனை முகத்தில் தேக்கித் தன்வாழ்வை எண்ணி நிந்தனை செய்து கொண்டிருந்த சீதையைக் கண்டான். அவள் நினைவுகள் பழமைக்குச் சென்று, ஊர்ந்துகொண்டிருந்தன.

சீதையின் நினைவுகள்

“ஆட்சி இல்லை” என்றபோது நிலை கலந்காத அவனது பேராண்மை அவளுக்குப் பெருமிதம் தந்தது.

“மெய்த்திருப்பதம் மேவுஎன்ற போதினும்

இத்திருத்துறந் ‘து’ ஏகென்ற போதினும்

சித்திரத்தின் அலர்ந்தசெந் தாமரை

ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்.”

“வில்லை முறித்து வீரம் விளைவித்துத் தன்னை மணந்து கொண்ட வெற்றியை” நினைவில் கொண்டு வந்து நிறுத்தினாள்.

அந்நியரிடமும் அன்பு காட்டி, உறவு கொண்டாடிய உயர்வை எண்ணிப்பார்த்தாள்; ஏழைமை வேடுவன்” என்றும் பாராது, அவனோடு தோழமை கொண்ட உயர் நட்பை நினைத்து மகிழ்ந்தாள்; நட்புக் கொள்ளும் இராமனது ஒப்புயர் வற்ற மனநிலை, அவள் மனக்கண் முன் வந்தது.

நகைச்சுவை நிரம்பிய நிகழ்ச்சி ஒன்று அவளைப் பார்த்துச் சிரித்தது; அந்தணன் ஒருவன், பேராசைக் காரன்; வீடு பற்றி எரியும்போது அடுப்புக்கு நெருப்புக் கேட்பது போல நாடிழந்து காடு நோக்கிச் சென்றபோது இராமனிடம் அவன்தானம் கேட்ட நிகழ்ச்சி ஏற்படுத்திய சிரிப்பை நினைவுபடுத்திக் கொண்டாள்.

மழுப்படை ஏந்தி வந்த பரசுராமனைக் கோதண்ட ராமனாக இருந்து அடக்கி ஆணவம் நீக்கியதை நினைத்துப் பார்த்தாள்.

சயந்தன் காக்கை வடிவம்கொண்டு அவர்கள் இடையே புகுந்து அற்ப ஆசையால் அவள் மார்பைக் குத்தி மகிழ்ந்தபோது தருப்பைப்புல் ஒன்று கொண்டே அவனை விரட்ட அவன் கண்ஒன்றனைக் குருடு ஆக்கியது; அச் சோகச் செய்கை அவள்கண் முன்நின்றது.

கரம்பற்றி வானிடை எடுத்துச் சென்ற கிராதகனை வாள்கொண்டு வெட்டிய வீரச் செய்கையை எண்ணிப் பார்த்தாள்.

பெருமைமிக்க இராமன் செயல்கள் அவளுக்கு ஊக்கம் தந்தன. இடர்சிறிதும் நேராமல் காத்த வீரன், தன்னை மீட்கவராதது அவளுக்கு வியப்பாய் இருந்தது; அதற்குக் காரணம் யாதாய் இருக்கும்?

“இலக்குவன் கிழித்த கோட்டை அழித்து விட்டேன்; அதற்காக என்னைத் தன் மனத்தில் அழித்து விட்டானா?”

“கொண்டு சென்ற அரக்கன் உண்டு முடித்திருப்பான் என்று அயர்ந்து ஒய்ந்து விட்டானா?”

“பாதுகையை ஏந்திச் சென்ற பரதன், விரதத்தைக் காக்க முடியாமல் வரதனிடம், வந்து திரும்ப அழைத்துச் சென்றுவிட்டானா?”

“இரக்கமற்ற இராவணன் இலங்கை நகரில் என்னைச் சிறை வைத்திருப்பான் என்பதை அறியாமல் திகைத்திருப்பானா?”

இத்தகைய வினாக்கள் வினாடிக்கு வினாடி மாறி மாறி அவள் மனத்தில் எழுந்தன.

“அழுத கண்ணோடு அவனையே நினைந்து காத்துக் கொண்டு இருக்கிறாள்” என்ற செய்தியை யார் அவனுக்குச் சொல்லப் போகிறார்கள் என்ற ஏக்கம் அவளை வாட்டியது.

திரிசடையின் ஆறுதல் மொழிகள்

உறக்கம் இழந்த நிலையில் அவளுக்கு உதவியாய்த் திரிசடை என்பவள் பேச்சுத் துணையாய் இருந்தாள்; அவள் வீடணன் மகள்; தன் இடக்கண்ணும் புருவமும் துடிப்பதை அத் தூய சீதை வீடணன் மகளிடம் எடுத்து உரைத்தாள்.

‘அது நன்மைக்கு அறிகுறி’ என்று நாலும் தெரிந்தவள் போல் அந் நங்கை சீதைக்கு விளக்கி உரைத்தாள்; அரை உறக்கத்தில் நிறைவு பெறாத தான் கண்ட கனவினையும் திரிசடை சீதைக்கு உரைத்தாள்.

பேயும் கழுதையும் இழுத்துச் சென்ற தேரில் இரத்த ஆடையனாய் இராவணன் தென்திசை நோக்கி இறுதி யாத்திரை செய்வதைக் கனவில் அவள் கண்டாள்.

அரிமா இரண்டு, புலிகளோடு வந்து யானைகளை அடித்துக் கொன்ற கனவும் கருத்துள்ளதாய் இருந்தது. இராமனும் இலக்குவனும் அனுமனோடு வந்து இலங்கை வேந்தனை வெல்லும் நிகழ்ச்சி, இதில் உருவகப்படுத்தப் பட்டுள்ளது. காட்டில் சிறைப் பட்டிருந்த தோகை மயில், விடுதலை பெற்று, விண்ணில் பறந்து சென்றது என்றும் கூறினாள். சோகத்தில் அகப்பட்டிருந்த சீதைக்கு விரைவில் விடுதலை கிடைக்கும் என்பதை அது தெரிவித்தது.

நம்பிக்கை ஊட்டும் திரிசடை கனவுகள், அவள் விரும்பிக் கேட்பவையாய் அமைந்தன.

திருமகள், திருவிளக்கு ஒன்றனை ஏந்தி இராவணன் மனையிலிருந்து வெளிப்பட்டு வீடணன் கோயிலில் அடி எடுத்து வைத்தாள்.

ஆட்சி மாறும் இராவணன் வீழ்ச்சியை இக் கனவு உணர்த்தியது.

அக் கனவுகளைத் தொடர்ந்து விருப்புற்றுக் கேட்டு மறுபடியும் திரிசடையைக் கண்ணுறங்க வேண்டினாள் சீதை.

சீதை இருக்குமிடம் அடைந்த அனுமன் கண்ட காட்சி, அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது; நம்பிக்கை நட்சத்திரமாய் அவள் ஒளிவிடுவதைக் கண்டான்; செல்வச் சிறப்பும், இன்பக் களிப்பும், அதிகார ஆதிக்கமும் மிக்க இராவணன் ஆதிக்கத்தில் அவள் ஒளிதரும் சுடர் விளக்கமாக இருப்பதை அறிந்தாள்.

‘அறம் அழியவில்லை’ என்று அகம் மகிழ்ந்தான்; “கற்பின் மாட்சியால் அவள் பாராட்டும் சிறப்பினை உடையவள்” என்பதை அறிந்தான்; பிறந்த மனைக்கும் புகுந்த வீட்டுக்கும் பெருமை தேடித் தந்திருக்கிறாள்” என்று பாராட்டினான்; மாசுபடியாத மாணிக்கத்தைக் கண்டெடுத்த மனநிறைவு அவனை அடைந்தது; ‘இழந்த வாழ்வு மீண்டும் இராமன் பெறுகிறான்’ என்பது அவனை மகிழ்ச்சியில் ஆட்டிப்படைத்தது.

“கல்லைப் பெண்ணாக்கிய இராமன் மனைவி யின் நெஞ்சு, “கல்லைப் போன்றது” என்று கண்டு கொண்டான்; பெண்மைக்குப் பெருமை சேர்க்கும் திண்மை அவளிடத்தில் இருந்ததைக் கண்டான்.

இராவணன் நேர் உரை

எதிர்பாராதவாறு இலங்கை வேந்தன் இராவணன், ஆடை அங்காரத்தோடும், அரம்பை மகளிரும் பணிப் பெண்களும் அவனைச் சூழ்ந்து வரவும் சீதையிருக்கும் இடம் நாடி வந்தான்; அரக்கியரையும் அரம்பையரையும் விலகச் சொல்லித் தான் மட்டும் தனியனாய்ச் சீதையை நெருங்கினான்; அவள் கடும்புலிக்கு நடுங்கும் இளமான் ஆனாள்; ஆசை வெட்கம் அறிவதில்லை; நாக்கூசாமல் தன் ஆசைகளை வாய்விட்டுப் பேசினான்; தன்னை அவள் அடைவதால் அவளுக்கு உண்டாகும் நன்மைகளை எடுத்து உரைத்தான்.

“செல்வச் சிறப்பும் ஆட்சிப் பொறுப்பும் உடைய என்னை மதிக்காமல், காட்டில் திரியும் அற்ப மனிதனாகிய இராமனைக் கற்பு என்னும் பேரால் நினைத்துக் கொண்டிருப்பது அறியாமை; வாழத் தெரியாமை” என்று அறிவித்தான்.

அவளை அடையாமல் அவதிப்படும் தன் மன வேதனையைப் பலவாறு எடுத்துக் கூறினான்; “'அருள் இல்லாமல் தன்னை இருளில் விட்டுக் கஞ்சத் தனமாய் நடந்து கொள்ளும் வஞ்சிக்கொடி, என அவளைச் சாடினான்; தன்னை அவள் கூடாவிட்டால், தான் அவளை அடையாவிட்டால், உயிர் விடுவது உறுதி” என்று இயம்பினான்.

அவன் அடுக்கு மொழிகளைத் தடுத்து நிறுத்த விரும்பினாள். “இனி இதைப் பொறுப்பதில்லை” என்று சீறிச் சினந்தாள்.

அவன் செய்த தவறுகளை எடுத்துக் கூறி, அவன் கொடுமைகளைச் சாடினாள்; ‘வஞ்சனையால் மான் ஒன்றனை ஏவித் தன்னை வலையில் சிக்க வைத்தது அவனது கோழைத்தனம் என்று சுட்டிக்காட்டினாள், ‘சடாயுவைக் கொன்றது அநீதி, என்று எடுத்து உரைத் தாள்; இராமனை அற்ப மனிதன் என்று சொன்னதற்கு எதிராக அவன் வீரத்தையும், வெற்றிகளையும் விவரமாகக் கூறினாள்.

அரச மகன் என்பதால் இராமனைத் தான் மணக்க வில்லை; ஆற்றல் மிக்க வீரமகன் என்பதால் தான் மணந்து கொண்டதாய்க் கூறினாள்; “வில்லை வளைக்க முடியாமல் பேரரசர் பின்வாங்கிய நிலையில், அதனை வளைத்து அவ்வெற்றியையே தனக்கு மண மாலையாகச் சூட்டினான்” என்பதைச் சுட்டிக்காட்டினாள்.

“செல்வத்தைக் காட்டிச் செருக்கோடு பேசுவது மடமையாகும், என்றாள்; அதனால் தன்னை மருட்டுதல் பயன்தாராது என்றாள்; அறிவு குறைந்தவள் என்று சொல்லித் தன்னை ‘ஏழை’ என்று அவன் சுட்டியதற்கு எதிர்ப்பாய் அவன்தான் ஏழை என்பதனை எடுத்துக் காட்டினாள்.

“அறிவின்மை, வஞ்சகச் செயல், வீரமின்மை, கோழைத்தன்மை இவைதான் ஏழைமையின் சின்னங்கள்; நீதான் ஏழை” என்று ஏழ்மைக்குப் புதுவிளக்கம் தந்தாள்; “செல்வமின்மை ஏழ்மையன்று; அறிவின்மைதான் ஏழ்மை” என்று அறிவித்தாள்.

“தெய்வங்கள் வரம் தருகின்றன என்றால் தவத்துக்கும் ஆற்றலுக்கும் தரப்படுகின்ற மதிப்பு என்று அதனைக் கொள்ள வேண்டும். ‘ஆற்றல் உள்ளவர்க்கு வரம் அளிப்பதால் அவர்கள் உலகுக்கு நன்மை ஆற்றுவர்; உலகு நன்மை கருதிதான் பதவிகள் தரப்படுகின்றன; வரம் கொடுக்கும் தெய்வங்கள் தவறு செய்ததில்லை; தரம் கெட நடந்துகொள்ளும் நீ தான் தவறு செய்கிறாய்; அதனால் தருக்கும், செருக்கும் கொண்டு உலகை ஆட்டிப் படைக்கிறாய்; பொதுவாழ்வையும் கெடுக்கிறாய்; உன்னையும் நீ நாசப்படுத்திக் கொள்கிறாய்; பதவிகளும் பாராட்டு களும் ஆக்க வழியில் மனிதரை ஊக்குவிப் பதற்காக; அழிவுப் பாதையில் அவற்றைப் பயன்படுத்த அன்று” என்று அறிவுரை கூறினாள்.

உன் போர்க்களத்து வீரத்தைக் காட்டிப் பெருமைப் படுகிறாய்; வாழ்க்கைக் களத்தில் அப் பேராண்மை இருக்க வேண்டாவா? பிறன்மனை நோக்காத பேராண்மை உனக்குப் பீடு நடையும் பெருமையும் தருமே! ஒழுக்கம் விழுப்பம் தருமே! ஒழுக்கம் இன்மை கேடு தருமே! என்று தொடர்ந்து கூறினாள்.

நேராய் அவனொடு முகம் கொடுத்துப் பேசி, அவனைப் பெருமைப்படுத்த அவள் விரும்பவில்லை; அப்பார்வையும் அவனுக்கு வெறியை உண்டாக்கிக் கெடுத்துவிடும்; அதனால் ஒருதுரும்பை எடுத்துப் போட்டு, அதனைப் பார்த்து விளித்து, இக்கருத்து களைக் கூறினாள்; “அற்ப மனிதன், என்று கூறிய அவனை அவள் ஒர் அற்பப் புழுவாகக்கூட அவள் மதிக்கவில்லை; ஜீவனுள்ள பொருளாய் மதிக்க விரும்பவில்லை.

கிள்ளை மொழி போலப் பேசுவதாய் அவன் அவற்றை எடுத்துக்கொண்டான். அவள் பேச்சு ஒவ்வொன்றும், அவன் ஏக்கத்தால் விடும் பெரு மூச்சுக்குக் காரணமாய் அமைந்தன; “நீ இல்லாமல் நான் இல்லை” என்று சோக கீதம் பாடினான்; ‘நோய்க்கு அவள்தான் மருந்து’ என்று வற்புறுத்திக் கூறினான்; தானாய்ப் பழுக்காத பழத்தை அடித்துப் பழுக்க வைக்க நினைத்தான்; அது பழுது ஆகிவிட்டது; அச்சுறுத்தினால் அவள் நிச்சயம் பணிவாள்; நயப்புரை பேசினால் தன்னை நாடுவாள் என்று எதிர்பார்த்தான்; இரண்டிலும் தோல்வி அடைந்தான். “இன்னும் இரண்டு மாதம் தவணை தருகிறேன்” என்று தெரிவித்தான். “காலில் விழுந்து வணங்கிக் கேட்கிறேன். மறுத்தால் என் வாளில் விழுந்து நீ மடிய வேண்டுவது தான்” என்று இறுதி உரை கூறி எச்சரித்தான்.

ஆதிக்க வெறி அவனை ஆட்கொண்டது; அதிகாரத் தால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்தான்; சீதைக்குக் காவலாய் நின்ற அரக்கியருக்கு அவளைப் பணிய வைக்கும்படி ஏவல் இட்டான். “இன்னுரை கூறியாவது வன்முறைச் செயலாலாவது அவளைப் படியவைக்க வேண்டும், என்று முடிவாகக் கூறிச் சென்றான்.

அரக்கியர் ஆவேசம் கொண்டனர். “கொல்லுமின்; தின்னுமின்” என்றுகூறி, அவளைச் சுற்றி வட்டமிட்டனர்; பேய்க் கூட்டமாய் மாறிக் கூத்திட்டு அச்சுறுத்தினர்; அருவருப்பான அக்காட்சி சீதைக்கு வெறுப்பு ஊட்டியது; வேதனையைத் தந்தது; இராவணனை எதிர்க்க முடிந்தது; இப்பேய்க் கூட்டத்தை ஒட்ட முடியவில்லை; திரிசடை இடை மறித்தாள். ‘ஆட்சி நிலைக்கும் என்று ஆரவாரம் செய்கிறீர்; நாளை ஆட்சி மாறினால் அதிகாரிகளின் நிலை யைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்’ என்று குறிப்பாய் அறிவுறுத்தினாள்; அடிமைகள் அவர்கள்; அதனால். அடங்கி நின்றனர்; அரசனின் ஆணைக்கு அஞ்சிப் புறக்காவல் மட்டும் மேற்கொண்டு ஒதுங்கினர்.

அனுமன் அறிமுகம்

சீதைக்கு வாழ்க்கை கசந்துவிட்டது; துன்பத்துக் கும் ஒர் எல்லை உண்டு; உயிர் அவளுக்குச் சுமையாய் விளங்கியது; உயிருக்கும் உணர்வுக்கும் மதிப்புத் தாராமல் தன் உடலை இராவணன் விரும்புவதை அவள் வெறுத்தாள்; அழகு தனக்கு எதிராகப் போரிடுவதை அறிந்தாள்; “மானம் இழந்த பின் வாழாமை இனியது” என்ற முடிவுக்கு வந்தாள்.

உயிர் விடுதற்குத் துணிந்தாள்; அருகில் இருந்த குருக்கத்திச் செடி அவளுக்கு உதவியாய் நின்றது. அதனைச் சுருக்குக் கயிறாய் மாற்ற நினைத்தாள்; வாழ்க்கையின் கரை ஓரத்தைக் கண்டாள். மயிர் இழையில் அவள் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது; தடுத்து நிறுத்த வேண்டும்; என்ன செய்வது? அவள் நோய்க்கு மருந்து யாது?

அனுமன் நடந்த இந் நிகழ்ச்சிகளை நாடகம்போல் கவனித்து வந்தான். சோகத்தின் எல்லையில் இருப்பவளை வேகமாகக் காத்தல் வேண்டும்; அதற்கு மருந்து? ‘இராமன்’ என்ற திருப்பெயர்தான்; ‘இராமன் வாழ்க’ என்று குரல் கொடுத்தான்.

அப்பெயர் அவளுக்கு உயிரைத் தந்தது; புத்தொளியைக் கண்டாள்; அவள் பார்வை, ஒலி வந்த திக்கை நோக்கிற்று. “வீரனே நீ யார்?” என்று கேட்டாள்.

“இராமன் அனுப்பிய தூதுவன்; பெயர் அனுமன்” என்றான்.

காட்டுக் கூச்சல் கேட்டுப் பழகிய அவளுக்குத் தெய்வ கீதம் கேட்பதுபோல் இருந்தது; அவள் உள்ளம் உருகியது; இராமன் பெயரைக் கேட்டதும் அவளுக்கு வாழ்க்கை வாயில் தென்பட்டது; வேதங்கள் மறையவில்லை; அவற்றின் நாதங்களை அவளால் கேட்க முடிந்தது; நீதியும் அறமும் அழிய வில்லை; நேர்மைகள் தழைக்கின்றன என்பதை உணர்ந்தாள்; “இராமன் தன்னைக் கைவிடவில்லை; உயிர்க் காவலனாய் இருக்கிறான்” என்பதை அறிந்தாள்.

அரக்கர் வாழும் இடத்துக்குக் குரங்கினம் வந்தமை அவளுக்கு வியப்பைத் தந்தது.

“நீ எப்படி இங்கு வந்தாய்?” என்று கேட்டாள்.

அங்கதன் தலைமையில் தென்திசை நோக்கி அனுப்பப்பட்ட படை வீரர்களுள் தான் ஒருவன் என்பதையும் தான் இலங்கை மாநகரில் சீதையைக் கண்டதையும் விளம்பினான். இங்குதான் இருப்பது அவனுக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டாள். “காட்டிடை நீவிர் இட்ட மற்றைய அணிகலன்கள்தான் உம் மங்கல அணியைக் காத்தன” என்று கூறினான்.

செய்தி கேட்டதும் ‘உய்தி உண்டு’ என்று நம்பினாள்; அவன் சொன்னவற்றிற்கு ஆதாரம் காட்ட முடியுமா? என்று கேட்டாள். இராமனிடமிருந்து தான் வந்ததையும் அவன்தான் அனுப்பி வைத்தான் என்பதை யும் கூறி இராமன் திருமேனி அழகைக் கூறினான்; அப்போது அவன் தான் ஒரு சொல்லின் செல்வன் என்பதை நிறுவினான்; கவிஞனாகவும் காட்சி அளித்தான்.

“இராமன் திருவடிகள் தாமரை போன்றும் பவழத்தைப் போன்றும் உள்ளன; கால் விரல்கள் இளஞ்சூரியனைப் போன்றன; நகங்கள் வைரத்தினும் அழகியன கணுக்கள் அம்பறாத் துணியைப் போன்றன; தொடைகள் கருடனின் கழுத்தைப் போன்றன; உந்தி மகிழ மலருக்கு ஒப்பாகும்; மார்பு திருமகன் உறையும் இடமாகும்; கைகள் ஐராவதம் என்னும் யானையின் துதிக்கை போன்றது; கை நகங்கள் அரும்பு போலக் கூர்மையன; தோள்கள் மலை போன்றன; கழுத்து திருமாலின் கரத்தில் உள்ள சங்கு போன்றது. முகமும் கண்களும் தாமரை மலர்கள் போன்றன; பல்லுக்கு முத்தும் நிலவின் துண்டும் உவமைகள்; குனித்த புருவம் வளைந்த வில் போன்றது; நெற்றி எட்டாம்நாள் சந்திரன் போன்றது; நடைக்கு எருதும் யானையும் உவமை” என்றான்.

இராமன் உருவை இவ்வருணைனைகளால் அனுமன் காட்டினான்.

அவனுடைய ஒவ்வொரு சொல்லும் அமுதத் துளிகளாய் அவள் செவிகளில் நிறைந்தன; தேன் துளிகளாய் இனித்தன.

“உன் அமுத மொழிகள் என் மனத்தை வருக்கி விட்டன. என் உயிரைத் தளிர்ப்பச் செய்து விட்டாய்; வாழ்க நீ” என்று வாழ்த்தினாள்.

“காட்சிக்குச் சான்று தந்த நீ சாட்சி வேறு யாதாவது கூற முடியுமா” என்று கேட்டாள்.

இராமனுக்கும் சீதைக்கும் மட்டுமே தெரிந்த சுவை யான அனுபவங்கள் சில அனுமனிடம் தெரிவிக்கப் பட்டன. அவற்றுள் இரண்டனை அவன் எடுத்துரைத்தான்.

நாட்டைவிட்டுக் காட்டுக்குச் சென்றபோது, அயோத்தியின் மதிலைக் கடக்கும் முன்பு, “காட்டை அடைந்து விட்டோமா?” என்று கேட்ட சீதையின் குழந்தைத்தனத்தை நினைவுப்படுத்தினான்.

சுமந்திரனிடம் பூவையையும் கிள்ளையையும். கவனித்துக் கொள்ளும்படி தங்கையர்க்குச் சொல்லி அனுப்பிய அன்புச் செய்தியை அறிவித்தான்.

கூற்றுகளால் அவளை நம்ப வைத்த அனுமன், உறுதி தரும் அடையாளம் ஒன்றனையும் அவள் முன் நீட்டினான். இராமன் கை விரலை அழகுபடுத்திய மோதிரமாய் அது இருத்தலைக் கண்டாள்; அதை அன்புடன் வாங்கிக் கொண்டாள்; வஞ்சகர் நாட்டுக்கு வந்ததால் அது மாசு பட்டுவிட்டதே என்று கூறி கண்ணிரால் அதனைக் குளிப்பாட்டினாள்.

அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை; செத்தவர் உயிர் பெற்றது போலவும், இழந்த மாணிக்கத்தைப் பெற்ற நாகத்தைப் போலவும், விழி பெற்ற குருடனைப் போலவும், பிள்ளையப் பெற்ற மலடியைப் போலவும் அவள் விளங்கினாள். “என் உயிரைத் தந்த உத்தமன் நீ” என்று அனுமனை அவள் பாராட்டினாள்.

சூடாமணியைத் தருதல்

உள்ளத்தால் இருவரையும் ஒன்று படுத்திய அனுமன், “கள்ளத்தால் அவளை இராமனிடம் சேர்க்க முடியும்” என்று நினைத்தான்; அதற்கு அவள் இசை வினை எதிர்பார்த்தான்.

அவன் பிள்ளைமதியைக் கண்டு அவள், எள்ளி நகையாடினாள்.

“கடலிடை அரக்கர் வந்து எதிர்த்தால், உன் நிலைமை என்ன ஆகும்? கைப் பிள்ளையை இடுப்பில் வைத்துக் கொண்டு போராடும் தாயாகத்தான் நீ இயங்க முடியும்; குழந்தையையும் கீழே வைக்க முடியாது; பகையையும் புறங்கொடுக்கச் செய்ய முடியாது” என்று உணர்த்தினாள்.

“நீ ஐம்புலன் அடக்கியவன்; என்றாலும், ஆடவன் ஆடவன்தான்; உன் தோள்மீது அமர்வது என் பெண்மைக்கு இழுக்கு” என்று சுட்டிக் காட்டினாள்.

“கோழை ஒருவன், தான் தாழ என்னைச் சிறை எடுத்தான்; கள்வனைப் போல சிறை எடுத்த அவனுக்கும் இறைமை உடைய உனக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்; நீ நல்லது செய்ய நினைக்கலாம்; அல்லதாய் உன் செயல்முடியும்; இதைச் சிந்தித்துப் பார்”.

இராமன் அன்புக்கு அவனை இரையாக்குவது தன் மானத்துக்குப் பெருமை; பெண்மை வீறிட்டு எழுந்தால் தீமைகள் அழியும்; இராமனுக்கு இழுக்கு எனக் கருதி அதற்கு அவள் வாய்ப்புக் கொடுக்கவில்லை; “இராமனின் வீரத்துக்கு மாசு கற்பிக்கிறாய்” என்றாள்.

‘தப்பித்துச் செல்ல நினைப்பதைவிட உயிர் விடுவதே மேல்’ என்பதைச் சுட்டிக் காட்டினாள்.

காவிய நாயகி கடுஞ்சொற்கள் அவனை அடக்கி வைத்தன; வீர மறக்குலத்தில் பிறந்த பாரதப் பெண் மணியைக் கண்டான்; “வாழ்க்கை கிடைக்கிறது” என்பதற்காக அவள் தாழ்ந்து போக விரும்பவில்லை; வீர சுதந்ததிரம் வேண்டி நிற்கும் பேராண்மை அவளிடம் காணப்பட்டது.

இராமனிடம் சொல்ல வேண்டிய செய்திகளைக் கனிந்த மொழிகளால் அனுமனிடம் அவள் சொல்லி அனுப்பினாள்.

“சிறந்த என் மாமியர்க்குச் “சீதை இறக்கும்போது உங்களைத் தொழுதாள் என்ற செய்தியை இராமன் என்பால் அருள் இல்லாத காரணத்தால் மறந்தாலும் நீ சொல்ல மறக்க வேண்டாம்”.

“அரசனாய்ப் பிறந்ததால் உரிமை கொண்டு மற்றொரு தாரத்தை அவன் மணக்க நேரிடலாம்; அதனைத் தடுக்க முடியாது, என்றாலும், மறுதாரம் மனித இயல்படி குற்றம் என்பதை அவனுக்குச் சாற்று. எழுதாத சட்டம் அவனைத் தடுத்து நிறுத்தும்; அதில் எனக்கு நம்பிக்கை உண்டு; அவன் அதீத ஆடவன் என்பதை என்னால் மறக்க முடியாது”.

“என்னைக் கரம் பிடித்து மணந்த நாளில் “இந்த இப்பிறவியில் இருமாதரைச் சிந்தையாலும் தொடேன்” என்று எனக்குத் தந்த வரத்தை எடுத்துச் சொல்க” என்று கூறி, இராமன் ஓர் இலட்சிய புருஷன் என்பதை வற்புறுத்தி அறிவுறுத்தினாள்.

“அரசு இருந்து ஆளவும், வீரசு கோலங்கள் பூண்டு அவனோடு உடன் வீற்றிருக்கவும் யான் கொடுத்து வைக்கவில்லை; விதி என்னைச் சதி செய்து விட்டது” என்று கழிவிரக்கமாய் உருகி உரைத்தாள்.

துதுவன் என்ற எல்லையை மீறித் தான் ஒதிய கருத்தை நினைத்து அனுமன் வருந்தினான்; பெண்மை பேசும் நல்லுரைகள் அவன் நெஞ்சைக் குளிர்வித்தன.

“இராமனிடம் சொல்ல நினைக்கும் செய்திகள் உளவோ?” என்று அடக்கமாய்க் கேட்டான்.

“தாரம் அல்லள் என்று சொல்லி என்னை ஒரம் கட்டலாம்; அதற்காகத் தன் வீரம் காட்டாமல் இருப்பது அவன் ஆண்மைக்கு இழுக்கு” என்பதை நினைவுறுத்துக” என்றாள்.

“வாழ்வதா வீழ்வதா? என்பதுதான் என் வாழ்க்கைப் பிரச்சினை” என்றாள்.

“நம்பிக்கை என்னை வாழ வைக்கலாம்; அதற்கும் ஒர் வரையறை உண்டு; திங்கள் ஒன்று இங்கு இருப்பேன்; அது தீர்ந்தால் என் உயிரை மாய்ப்பேன்” என்று உறுதியாய்க் கூறினாள். “'என்னைப் பற்றியே நான் பேசுவதும், அதனால் அவரை ஏசுவதும் தவறுதான்; அவரை நம்பி நான் ஒருத்திதானா உயிர் வாழ்கிறேன்?”

“பட்டம் கட்டிக் கொண்டு அவர் பாரினை ஆள உலகம் அவரை எதிர்நோக்குகிறது; தாய்ப் பாசம் அவரை இழுக்கிறது. பரதன் அழுகை அவரை அழைக்கிறது; அவர் யாருக்காக வாழ்வது? கரை கடந்து தவிக்கும் என் துயருக்குக் கறை காண முடியாது; கரையைக் கரைக்க அவருக்கு அக்கறை பிறக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.”

“உற்ற கணவன் என்னைத் துறந்து கைவிட்டாலும் பெற்ற தந்தை. என்னை நினைந்து அழாமல் இருக்க மாட்டார்; அவருக்கு என் இறுதி வணக்கத்தை இயம்புக”

“உன் தலைவன் சுக்கிரீவனுக்கு இந்தச் செய்தியைச் சொல்லுக! சுந்தரத் தோழனுக்கு மணிமுடி சூட்டி அழகு பார்க்கச் சொல்; மாலை சூட்டி மகிழச் சொல்” என்று கண்களில் நீர் மல்கத் தன் இறுதிச் செய்தியைச் சொல்லி அனுப்பினாள்.

அவள் நெஞ்ச அவலத்தை அஞ்சனை மகன் அறிந்து வருந்தினான்; அதைத் துடைக்க ஆறுதல் மொழிகளைக் கூறினான்.

‘நீர் செப்புவது அனைத்தையும் ஒப்புக் கொள்ள முடியாது; மரணத்தைப் பற்றிச் சிந்திக்க இது தருணம் அன்று; திங்கள் ஒன்று நீங்கள் இங்குத் தங்கி இருக்கத் தேவை இல்லை; ஊண் உறக்கமின்றித் தவிக்கும் புவிக்கு நாயகன், நீர் இருக்கும் இடம் அறியாக் குறையே தவிரப் படை எடுக்கத் தடை ஏதும் இல்லை” என்று ஆறுதல் கூறினான்.

“நறுக்கென்று சொல்லத்தக்க நினைவுகளைச் சொன்னால் யான் உங்களைச் சந்தித்தமைக்குச் சிறந்த சான்றுகளாய் அமையும்” என்று கூறினான்.

“இந்திரன் மகன் சயந்தன், எங்கள் ஏகாந்தத்தின் இடை புகுந்து, காக்கை வடிவில் என் யாக்கையைத் தொட்டான்; புல் ஒன்று கொண்டு அப்புள்ளினை விரட்டினான் இராமன்; இந்தச் செய்தியைச் சொல்லுக” என்றாள்.

“காக்கை ஒன்று தொட்டதற்கே அவன் பொறுமை காட்டவில்லை; அரக்கன் ஒருவன் சிறை வைத்திருப்பதை அவனால் எப்படிப் பொறுத்திருக்க முடியும்?” என்ற கருத்தை உண்டாக்க இந்தச் செய்தியை நினைவுப் படுத்தினாள்.

“எல்லாம் விதியின் செயல்” என்று எண்ணிப் பெரு மூச்சு விடும் அவள், இத் துன்பங்களுக்கெல்லாம் காரணம் யார்? என்று எண்ணிப் பார்த்தாள்.

“மாமியார் செய்த கொடுமை” என்பதைச் சொல்லாமல் சொல்லி அனுப்புகிறாள்.

“அன்பாக வளர்த்து வந்த தன் கிளிக்கு யார் பெயர் இடுவது?” என்று இராமனைக் கேட்க, அவன், தான் நேசித்து வந்த மதிப்புமிக்க அன்னை கேகயன் மகள் பெயரை வைக்கும்படி கூறியதை நினைவுப்படுத்தினாள்.

அர்த்தமுள்ள நிகழ்ச்சியாக இது இருந்ததால் அதனை எடுத்து உரைத்தாள்.

“எந்தத் தாயை அவன் உயிரினும் மேலாக நேசித்தானோ அவளே அவன் வாழ்வுக்கு உலை வைத் தாள்” என்பதை நாகரிகமாய்ச் சுட்டிக் காட்டினாள்.

கணையாழியைக் கொடுத்த இராமனுக்கு அதற்கு இணையாய்த் தன் தலையில் குடியிருந்த சூடாமணியை எடுத்து அவனிடம் தந்தாள்.

“இது எங்கள் மணநாளை நினைவுபடுத்தும் அடையாளம்” என்றாள்.

துகிலில் முடித்து வைத்திருந்த அந்நகையை அவனிடம் தந்து, விடை தந்து அனுப்பி வைத்தாள்.

அனுமன் சீற்றம்

நெருப்போடு விளையாடிய இராவணுனுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினான்; ‘மானிடர் இருவர், என்று மதித்து இடர்விளைவித்த இராவணன், அவர்தம் ஆற்றலை அறியவேண்டும், என்று விரும்பினான் அனுமன்.

‘சீதை இருந்த சோலை அது அவளுக்கு நிழலைத் தந்தாலும், அது சிறையாக இருப்பதை வெறுத்தான்; அப்பொழிலில் இருந்த மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தான். அவற்றை விண்ணில் எறிந்து வீடுகளில் விழச் செய்தான்.

ஊருக்குள் நுழைந்தான்; விண்ணை முட்டும் மாடங்களை எரியிட்டுக் கொளுத்தினான்; யானை, குதிரை, தேர் இப் படைகள் இருந்த கொட்டில்களை எட்டி உதைத்து, அழிவு செய்தான்; வேள்வி மண்டபங்கள் வேதியர் இல்லாமலேயே நெருப்பு களைக் கக்கின. யார் இது செய்தது? என்ற கேள்விகள் எழும்படி அரக்கர் அழிவுகளைச் சந்தித்தனர். சீதைக்குச் சோகம் விளைவித்த அசோகவனம், எரிதழலுள் வைகியது; அதனைக் காவல் செய்த பருவத் தேவர் உருக்குலைந்து ஓடினர்; சித்திர நகரின் எழில் சிதைந்து போனது; அரக்கர் அழிவு கண்டு ஒலமிட்டனர்; இராவணனிடம் சென்று முறையிட்டனர்.

கிங்கரர் வளைத்தல்

செய்தி அறிந்து, செல்வக் கோமான் இராவணன், கிங்கரரை அழைத்து அவனை வளைக்குமாறு ஏவினான். தோரண வாயிலில் இருந்த கணைய மரத்தைக் கொண்டு கிங்கரரைத் தாக்கினான்; அவர்கள் உயிரைப் போக்கினான்.

சம்புமாலி என்ற படைவீரன் அனுமனை அணுகினான்; அவன் படையுடன் அழிந்து இடம் தெரியாமல் மறைந்தான்; “பஞ்ச சேனாதிபதியர்” என்ற படைத்தலைவர் அவனிடம் மோதிப் பஞ்சாய்ப் பறந்தனர். இராவணன் இளைய மகன், அக்ககுமரன் களம் நோக்கிக் கால் வைத்தான்; அவன் படைகள் அக்கு வேறு ஆணி வேறாய்ச் சிதைந்தன; அனுமன் அவனைக் காலால் தரையொடு தரையாய்த் தேய்த்தான். அவனும் வீரமரணம் அடைந்தான்.

அக்ககுமரன் இறந்த செய்தி மண்டோதரியைக் கையறு நிலை பாட வைத்தது; ஒப்பாரி வைத்து அழவைத்தது, இராவணன் கடுஞ்சினம் கொண்டான்; தம்பி இறந்த செய்தி கேட்டு இந்திரசித்து, மிக்க சீற்றம் கொண்டான்; போர்மேற் சென்றான்; அவன் தேர் தரையோடு தரையாயிற்று; படைகள் இழந்து பார் வேந்தன் மகன் தன் கையில் இருந்த மந்திர வலிமை வாய்ந்த பிரமாத்திரத்தை ஏவினான்; அதன் மந்திர சக்திக்கு ஆட்பட்டு அனுமன், அடங்கிக் கட்டுண்டான்; கட்டுண்டான் என்பதை விடக் கட்டுப்பட்டான் என்பதே பொருத்தம்; அடங்கியவன் போல் நடித்தான்.

நடிப்பு வெற்றி தந்தது; நாலு தெருக்கள் வழியே அவனை இழுத்துச் சென்றனர். “அவனைக் கொல்லாமல் இழுத்து வருக” என்று இராவணன் ஆணையிட்டான்.

இராவணனை அவன் அத்தாணி மண்டபத்தில் நேருக்கு நேர் சந்தித்தான்; அநுமன் அவனைக் காணும் வாய்ப்புக்கு அகமகிழ்ந்தான்; அவனைக் கொல்வதற்கும் வெல்வதற்கும் இராமன் ஒருவனால்தான் முடியும் என்பதைக் கண்டான்; விரைவில் விடுபட்டு இராமனுக்குச் செய்தி சொல்ல விரும்பினான்; அத் திரத்தை முறித்துக் கொண்டு வெளிவருவது வேத விதிக்கு முரணாகும்; அதனால் பொறுத்திருந்தான்;

“கட்டுண்டோம் காலம் வரும்” என்று காத்திருந்தான்.

“தூதுவனாய் வந்த நீ துயர்விளைவிக்கும் அழிவினை ஏன் செய்தாய்?” என்று இலங்கையர் கோன் கேட்டான்.

“கட்டுக் காவல் மிக்க உன்னைச் சந்திக்க, இதுதான் வழி எனக் கண்டேன்; அரச மரியாதையுடன் உன் ஊர்ப் பெருமக்கள் ஊர்வலம் நடத்தி என்னை உன்னிடம் அழைத்து வந்தனர்” என்றான்.

அவன் ஆணவப் பேச்சைக் கேட்ட அரசன், அவனைக் கொல்லுமாறு ஆணையிட்டான்.

பாரதக் கதையில் துரியோதனன் அருகில் துச்சாதனன் இருந்தான்; வேடிக்கை பார்க்கும் வீரண் கர்ணன் இருந்தான்; தடுத்துப் பேச ஒரு விதுரன் தான் அங்கு இருக்க முடிந்தது.

இங்கே வீடணன் விதுரனாய்ச் செயல்பட்டான்.

“மாதரையும் துதுவரையும் கொல்வது அரச நீதியாகாது” என்று சாத்திரம் அறிந்த அவன், நீதியை எடுத்து உரைத்தான்.

இந்திரசித்து, பிரம்மாத்திரத்தால் கட்டுண்டவன், வெட்டுண்பது வேத நெறி ஆகாது; அதனால் வேறு கயிறுகளைக் கொண்டு கட்டுமாறு கட்டளையிட்டான் இராவணன்.

அவனைக் கொல்வதைவிட அவன் வாலை ஒட்ட நறுக்குவதே தக்கது என்றான்.

நம் வீரத்தை மாற்றாரிடம் விளம்ப அவனைத் திரும்ப அனுப்புவதேமேல் என்று விளக்கம் கூறினான்.

தங்கையை இராமலக்குவர் அங்கபங்கப்படுத்தியது போல, இவன் வாலுக்கு நெருப்பு வைப்பதே உகந்தது என்று கூறினான்.

மந்திரத்தின் கட்டு அவனைவிட்டு நீங்கியது. மாந்தரின்கட்டு அவனைக் கட்டியது; வீதிதோறும் அவன் இழுத்துச் செல்லப்பட்டான்; அப் பொன்ன கரின் எழிலும் பரப்பும் அவன் காண முடிந்தது.

நகரத்தின் நடுப்பகுதியில் அவனை நிற்க வைத்தனர், அவன் வாலுக்குத் துணிசுற்றி அதில் நெருப்பு வைத்தனர்.

சீதைக்கு இச்செய்தி எட்டியது; அவள் அங்கியங் கடவுளை அவனிடம் தணிந்து நடக்குமாறு வேண்டினாள்; அவன் அதற்குப் பணிந்து அவனுக்கு ஊறு விளைவிக்கவில்லை; அனுமன் ஊருக்குத் தீ வைத்தான்; இலங்கை பற்றி எரிந்தது.

“சுட்டது குரங்கு, கெட்டது “கடிநகர் என்ற செய்தி எங்கும் பரவியது; பற்றுதிர்; அவனை எற்றுதிர் என்று இராவணன் இட்ட ஏவலால் அவனை வீரர் தொடர்ந்தனர்.

சீதை தங்கி இருந்த இடத்துக்கு நெருப்புச் செல்லவில்லை; கற்பின் பொற்பு அவளுக்கு அரணாய் அமைந்தது; “அநுமன் குறையின்றிச் சேர வேண்டுமே, என்று தெய்வங்களிடம் முறையிட்டாள். பவழமலை யிலிருந்து சென்று மைந்நாக மலைக்குத் தாவினான்; அங்கு அதன் விருந்தினனாய்க் களைப்பு ஆறினான். அங்கிருந்து மகேந்திர மலைக்குத் தாவினான்.

செய்தி சொல்லல்

அனுமனைக் கண்ட வானர வீரர், உவகை கொண்டனர்; ஆரவாரம் செய்து, கடல் ஒலியைக் கரையில் எழுப்பினர். அவன் வாய் திறந்து பேசவில்லை; அவன் தோற்றமே அவன் ஏற்றத்தை உணர்த்தியது.

“ஞான நாயகன் தேவி கூறினாள் நன்மை” என்றான்; அதனால் சீதையை அவன் கண்டு வந்ததை அறிந்தனர்.

“அவன் உடல் வடுக்கள், அவன் வீரச் செயல்களை விளம்புகின்றன; வானில் எழுந்த புகை, அவன் இலங்கைக்குத் தீ மூட்டியதைக் காட்டுகிறது; சீதை அவனுடன் திரும்பவில்லை; அது பகைவரின் படை வலிமையைக் காட்டுகிறது” என்று வாலி மைந்தன் அங்கதனும், கரடி வேந்தன் சாம்பவனும் உரைத்தனர்.

“கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்

தெண்திரை அலைகடல் இலங்கைத் தென்னகர்

அண்டர் நாயக! இனித் தவிர்தி ஐயமும்

பண்டுளதுயரும்என்று அனுமன் பன்னினான்.”

“அவள், தன் பொறுமையாலும் சீலத்தாலும் தன் கற்பின் திறத்தை நிலைநாட்டிவிட்டாள்” என்று கூறினான்; “அதனால் பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும் பெருமை தேடித் தந்திருக்கிறாள்; எனக்கும் அதனால் பெருமை உண்டாகி இருக்கிறது; தன்னைத் தனிமை செய்த இராவணன் வன்குல, தைக் கூற்றுக்குத் தர இருக்கிறாள்; வானரர் குலத்தை வாழ்வித்தாள்” என்று சொல்லி, அவள் இருந்த காட்சியை அநுமன் இராமனிடம் தெரிவித்தான்.

காவியத்தின் நீதியைத் தொடக்கூடிய நிலையில் அனுமன் கூற்று அமைந்தது. “'சீதை மண்மகள் தந்த மாமகள்; அவள் விண்மகளிரையும் உயர்த்திவிட்டாள்” என்றான். ‘பெண்ணினத்துக்கே அவளால் பெருமை சேர்ந்துவிட்டது’ என்று கூறினான்.

“சோகத்தாளாய நங்கை கற்பினாள் தொழுதற்குஒத்த மாகத்தார் தேவிமாரும் வான்சிறப்பு உற்றார்; மற்றைப் பாகத்தாள் அல்லள் ஈசன், மகுடத்தாள்; பதுமத்தாளும் ஆகத்தாள் அல்லள்; மாயன் ஆயிரம் மோலி மேலாள்”

என்று கூறினான்.

கணையாழி கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு அவள் உள்ளம் குளிர்ந்ததை எடுத்துக் கூறினான்; அவ்வாறே அவள் தந்து அனுப்பிய சூடாமணியை இராமன் கையில் தந்தான்;

“விற்பெரும் தடந்தோள் வர!

வங்கு நீர் இலங்கை வெற்பில்

நற்பெரும் தவத்தள் ஆய

நங்கையைக் கண்டேன் அல்லேன்;

இற்பிறப்பு என்பது ஒன்றும்

இரும்பொறை என்பது ஒன்றும்

கற்புஎனும் பெயரது ஒன்றும்

களிநடம் புரியக் கண்டேன்”

என்றான்.

இராமன் உள்ளம் பூரித்தான்; உவகைக்கு எல்லை இல்லை; அந்த மகிழ்ச்சியில் அவன் ஆழ்ந்து போகாமல் சுக்கிரீவன் செயல்பாட்டுக்குத் துண்டிவிட்டான். “ஐயனே! கேள்; தலைவியை நாம் எளிதில் மீட்க முடியும் என்று அறிந்த பின்பும் அடங்கி இருப்பது தக்கது அன்று; பேர்ருக்குப் புறப்படச் செயல் படுவோம்” என்று உரைத்தான்.

“எழுக வெம்படை” என்றான். “ஏய் என்னும் அளவில் கடல்போன்ற சேனை தென்திசை நோக்கிப் புறப்பட்டது.

யுத்த காண்டம்

வீடணன் அடைக்கலம்

பற்றி எரிந்த நகரை மயன் என்னும் தெய்வத் தச்சன் பொலிவுடைய மாநகராக ஆக்கிப் புதுப்பித் தான்; மாணிக்கத் துண்கள் அமைந்த மணிமண்டபத் தில் சிம்மாசனத்தில் இராவணன் கொலு வீற்றிருந்தான்.

வரம்பறு சுற்றமும், மந்திரத் தொழில் நிரம்பிய அமைச்சரும், சேனைத் தலைவரும் அவன் அவைக் கண் அமர்ந்தனர். அரம்பை மாதர் கவரி வீசி அவனைச் சுகப்படுத்தினர். அடுத்து நடக்க வேண்டியதைத் தொடுத்துச் சிந்திப்பதற்குச் சற்று அயலானவரை வெளிப்படுத்தி, நெருங்கிய சுற்றத்தினரையும், அமைச்சரையும், உடன் பிறந்த தம்பியரையும் மட்டுமே நிறுத்திக் கொண்டான்.

“சுட்டது குரங்கு, கெட்டது கடி நகர்; பட்டனர் சுற்றமும் நட்பும்; கிட்டியது இழிவும் பழியும்; அழிவு செய்த அனுமன், சென்றவழி தெரியாமல் தப்பி விட்டான். இனிச் செய்யத் தக்கது யாது; “” என்ற வினாவை எழுப்பினான் இராவணன்.

“கரன் சிரத்தை இழந்தான்; சூர்ப்பனகை செவியையும் மூக்கையும் இழந்தாள்; வீரர் மனைவியர் தாலியை இழந்தனர்; சித்திர நகர் எழிலை இழந்தது; நாம் மானத்தையும் புகழையும் இழந்தோம்” என்று இழப்புகளை அடுக்கிக் கூறினான்.

மகேந்திரன், துன்முகன், பிசாசன் முதலிய படைத் தலைவர் நாடக வசனம் பேசினர்: “படை எழுப்பி எதிரிகளைத் துடைப்பதுதான் செய்யத் தக்கது” என்ற கருத்தைச் சொல்லினர்.

உடன் பிறந்த தம்பியாகிய கும்பகருணன் மட்டும் அதற்கு உடன்படவில்லை; திடமுடன் தான் கருதியதை எடுத்து உரைத்தான்; அடிப்படைத் தவற்றை எடுத்துக் கூறினான்; ‘சீதையைச் சிறை பிடித்தது இராவணன் செய்த தவறு’ என்றான்; ‘இராமனை அடைந்து மன்னிப்புக் கேட்பதுதான் பெருமை’ என்றான்; தொட்ட இடத்தில் அவளைக் கொண்டு விடுவித்தால் அது தூய செயலாகும்; அன்றி, வீரம் பேசினால் அதனையும் திறம்படச் செய்ய வேண்டும்; படை எல்லாம் கூட்டி, ஒரு சேரச் சென்று தாக்குதலே நடைமுறைக்கு ஏற்றது” என்று கூறினான்.

வயதால் இளைஞன், வாலிபப் பருவத்தினன்; இராவணன் வீரமகன் இந்திரசித்து மூத்தோர் வார்த்தை களை எதிர்த்துப் பேசினான்; “முள்ளைக் களை வதற்குக் கைநகம்போதும்; கோடரி தேவை இல்லை” என்றான்; “தான் ஒருவனே தக்க படை கொண்டு அவர்களைத் தாக்கிப் பாடம் கற்பிக்க முடியும்” என்றான்.

அறச் செல்வனாகிய வீடணன், அறிவு நிரம்பிய கருத்துகளைச் சொல்லினான். “சுட்டது கூன் உடைய குரங்கு அன்று; மிதிலை வந்த சனகன் மகள்” என்றான்; “சீதை கற்பு” எரிமலையாகும்; நெறி திறம்பியவரை அது சுட்டு எரிக்கவல்லது” என்று கூறினான்.

“ஆணவத்தால் அறிவு இழந்த இரணியன் எப்படி அழிந்தான்? யாரால் ஒழிந்தான்? பெற்ற மகனே அவனுக்குப் பெரும்பகைஞன் ஆனான்; “உன்னோடு உடன் பிறந்தவன் என்பதால் நீ செய்யும் கொடுமை களுக்கு எல்லாம் நான் துணைபோக வேண்டும், என்று எதிர் பார்த்தால் அது கற்பனை ஆகும்”.

“தவற்றைத் திருத்திக்கொள். பைந்தொடியாள் சீதை அவளை விட்டுவிடு; பெண்பாவம் பொல்லாதது; வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டு நீ வேதனைப்படுவதில் பொருளே இல்லை”.

“இரணியனைக் கொன்றது யார் தெரியுமா? பாற்கடலில் துயிலும் பரமன்தான்; அவன் துயில் எழுந்து துரயோர் துயர்துடைக்கப் பிறந்துள்ளான்; பகை பெரிது; மானுடரால் நீ சாகப் போகிறாய்; நீ கேட்ட வரத்தில் செய்த பிழை இது; மனிதனை மறந்து விட்டாய்; மானுடத்தின் வெற்றியை நிலைநாட்டப் பிறந்தவன் அவன்” என்றான்.

வீடணன் கூறியது, வீண்உரை என்று கருதினான் இராவணன். அரக்கர் குலத்தில் பிறந்த அவன், பெண்ணுக்காக இரக்கம் காட்டுவதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. “இனப்பற்று இல்லாத துரோகி நீ; தப்பிப் பிறந்து விட்டாய்; இனி நீ தப்பிச் சென்றால்தான் பிழைப்பாய்; பிரகலாதர் தோன்றிக் கொண்டே இருக்கின்றனர். நீ விதி விலக்கில்லை” என்றான்.

வீடணன் திருத்த முயன்றான்; திருத்துதல் தீராதாயின் பொறுத்துற வேண்டும்; இவன் கும்ப கருணன் அல்லன்; கடமை என்பது எது? என்று முடிவு செய்வதில் வேறுபாடு இருந்தது; “உடன் பிறந்தவனுக் காக உயிர் விடுவது கடமை” என்று கருதினான் கும்பகருணன், உடன் பிறந்த கொள்கைக்காக எதையும் இழப்பது என்பது வீடணன் கொள்கையாய் இருந்தது; முன்னவன் கடமை வீரன்; இவனோ அறச் செல்வன்; “தனிமனிதனுக்காகத் தன்னை இழப்பதை விட உலகப் பொது அறத்திற்காகத் தான் பணி செய்வதே செய்யத் தக்கது” என்ற கொள்கை இவனிடம் நிலவியது.

அறம் என்பது ஒன்று; அதோடு அவன் ஞானநெறியில் நம்பிக்கை உள்ளவன்; பிறப்பு என்பது பந்த பாசங்களைக் கொண்டது; இறப்பு என்பது முடிந்த முடிவு அன்று; பிறப்பு இறப்பற்ற பேரின்ப வாழ்வு. அடைதலே பிறப்பின் அடிப்படை’ என்று கருதினான்; சமயக் கோட்பாடுகள் இவனைப் பண்படுத்தி இருந்தன. “இராமனை அடைந்தால் பிறப்புக்கு விடுதலை கிடைக்கும்; பேரின்ப வீடு கிடைக்கும்” என்ற நம்பிக்கை யும் இவனுக்கு இருந்தது. இந்த இரண்டு காரணங்களால் இவன் இராவணனை விட்டு விலக முடிவு செய்தான். இவனுக்கு நெருங்கிய நேசமுடைய அமைச்சர்கள் நால்வரோடு கலந்து கட்சி மாறுதல் தேவை'” என்பதை உணர்ந்தான். பாசத்தை விட நேசம் இவனுக்குப் பெரிதாகப்பட்டது.

கடலைக் கடந்து கார் வண்ணன் இருக்குமிடம் சேர்ந்தான்; வீடணன் தமிழ்மண்ணில் கால்வைத்தான். அது இலங்கைவாசிக்குப் புகலிடம் தந்தது; ‘முன்பின் அறியாத முதல்வனாகிய இராமனை எப்படிச் சந்திப்பது? எப்படி அறிமுகம் செய்துகொள்வது? ஏற்புடைய கருத்துகளை எப்படி எடுத்துச் சொல்வது? பகைக் களத்திலிருந்து வந்தவனுக்குப் புகல் இடம் எப்படிக் கிடைக்கும்? அஞ்சி அஞ்சி அவனை அணுகினான்.

குரக்கினத் தலைவர் சிலர் வீடணனைக் கண்டனர்; ‘அவன் தீய எண்ணத்தோடுதான் வந்திருக்க வேண்டும்’ என்று எண்ணினர்; ‘அவனை இழுத்துப் பிடித்துக் கழுத்தை நெரித்துக் கொல்வதே ‘தக்கது’ என்று முடிவு செய்தனர்.

மயிந்தன், துமிந்தன் என்னும் பெயருடைய வானரத் தலைவர் வேறுவிதமாய் நினைத்தனர்; அங்க அழகு இலக்கணங்களை அவர்கள் அறிந்தவராய் விளங்கியதால், ‘அவன் அரக்ககுணம் அற்றவன்’ என்று முடிவு செய்தனர்; அறவாழ்க்கையும் நீதியின் பால் நெஞ்சமும் உடையவன்; ராவணன் வஞ்சகத்தை எதிர்த்து வந்திருக்கிறான்” என் இராமனிடம் உரைத்தனர்.

இராமன் அவசரப்பட்டு எதையும் முடிவு செய்ய விரும்ப வில்லை; அவன் அரசமகன்; மற்றவரைப் பேசவிட்டுத் தன் இருப்பிடத்தை ஒர் ஆலோசனை மண்டபம் ஆக்கினான்; சுருசுருப்பாய்ச் சுக்கிரீவன் தன் கருத்தை உரைத்தான்.

“வந்தவன் ஒரு சந்தர்ப்பவாதியாகத்தான் இருக்க வேண்டும்; அவனுக்கு அடிப்படையில் நாட்டுப்பற்று இல்லை; அவன் பற்று வேறு: “நாட்டை உம்மிடம் கேட்டுப் பெற்று ஆட்சி செய்ய வேண்டும்” என்று விரும்புகிறான். இராவணனோடு இதற்குமுன் மாறுபட்டவன் அல்லன்; இன்று அவன் வேறுபடுகிறான் என்றால், அவன் ஒரு துரோகியே” என்றான்.

சாம்பவான் வயதில் மூத்தவன்; அனுபவசாலி, ஆர அமர எதையும் சிந்தித்துப் பேசக் கூடியவன். அவன் பழமைவாதி, சாதிப்பற்று மிக்கவனாய்க் காணப்பட்டான்.

“வந்தவனோ, அரக்க சாதி, நீதியால் வேறுபட்டு, இவன், இங்கு வந்து சேர்கிறான்; ஒருமுறை இவனை ஏற்றுக் கொண்டால் பிறகு அவனை வெளியேற்ற முடியாது. தஞ்சம் அடைந்தவனை எக்காரணத்தைக் கொண்டும் வஞ்சகன் என்று தள்ள முடியாது; மாரீசன் பொன்மானாய் வந்து நம்மை மயக்கினான்; இவன் நன்மகனாக வந்து நயக்கிறான். இருவருக்கும் வேறுபாடு கிடையாது” என்றான் சாம்பவான்.

“தெருவிலே போகிற வம்பை யாரும் விலைக்கு வாங்கமாட்டார்கள். தொடக்கத்தில் இவன் நல்லவனாக நடிப்பான்; ஏமாறும்போது இவன், தன் பாடத்தைப் படிப்பான்; இவன் ஒரு ஒட்டைப்படகு இவனைக் கொண்டு நாம் கரையேற முடியாது; நட்டாற்றில் தள்ளி விட்டுத் தன் நாயகனிடம் போய்ச் சேர்ந்துவிடுவான்” என்று நீலன் ஒலமிட்டான்.

இராமன் மாருதியை அழைத்தான்; மாற்றுக் கருத்து இருந்தால் உரையாற்றலாம், என்றான்.

அரசியல் அறிந்த அனுமன், “இவனைத் தூயவன் என்றோ, தீயவன் என்றோ அவசரப்பட்டு முடிவு செய்ய இயலாது; இவனுக்கு ஏதோ ஒர் உட்கருத்து இருக்க வேண்டும்.”

“நாட்டிலே பரதனுக்கும், காட்டிலே என் தலைவனுக்கும் ஆட்சி தந்திருக்கிறாய்; இங்கே தக்க சமயத் தில் வந்து முந்திக் கொண்டான் இவன்; இலங்கை தனது ஆகும் என்ற ஆசையால் வந்திருக்கலாம். ஆட்சி காரணமாய் வந்திருக்கலாம்; ஆசை யாரை விட்டது?”

“இவன் நல்லவனா? கெட்டவனா? என்பதை அறிவது, அறிய விரும்புவது தேவை இல்லை; அது பள்ளியாசிரியர்தான் சான்றிதழில் எழுத வேண்டும்; இது பகைப்புலம்; அதனால், நமக்கு நன்மையா தீமையா? என்று முடிவு செய்வதுதான் நல்லது” என்றான்.

“நாமாக விரும்பி அவனை நயக்கவில்லை; அவனாக வந்தால் அவனை பயன்படுத்துவதில் தவறு இல்லை.”

“இவன் எந்தக் கட்சி? யாருக்கு இவன் எதிர்க் கட்சி? இவன் முன்சரித்திரம் என்ன? இவற்றை அறிந்து கூறுகிறேன்”.

“இவனை இலங்கையில் கண்டு இருக்கிறேன்; கள்ள அரக்கர் மத்தியில் வெள்ளை உள்ளம் படைத் தவன்; அரசநீதி அறிந்தவன்; தூதுவனாகச் சென்ற எனக்குத் துயர் விளைவிக்கவிடாமல் தடுத்தவன். அந்த நாட்டில் அச்சடித்த நீதி நூலில் ஊன் உண்ணாமையும், மது மறுத்தலும் தடை செய்யப்பட்டவை; இவனோ விதி விலக்கு: சைவ உணவு தவிர மற்றவற்றைச் சுவையாதவன்; கோயில் குருக்களாகப் பிறக்கவேண்டியவன்; அரக்க குலத்தில் பிறந்துவிட்டான்.”

“இவன்தான் இப்படி அவன் மகள் எப்படி? அந்தப் பெண் அங்கு இல்லாவிட்டால்; சிறை வாசத்தைச் சீதைக்கு சுகவாசமாய் மாற்றி இருக்க முடியாது. இராவணன் மருட்டியபோது எல்லாம், “அவன் கட்டுண்ட பட நாகம்; வெற்று வேட்டு; அவனால் சீதையைத் தொட முடியாது; தொட்டால் அவன்தலை சுக்கு நூறாகும்” என்ற சாபத்தை எடுத்துச் சொன்னவள் அவள்தான். சீதைக்காக நம்பிக்கைக் கனவுகளைக் கண்டு சொல்லியதும் அவள்தான்; அந்தக் குடும்பமே நமக்குத் துணையாக இருந்து வருகிறது; பகை நடுவே பண்புமிக்க நண்பர் அவர்கள்; இது அவர்கள் மனித இயல், அரசியல் வேறு”.

“இவன் பகை மண்ணில் பிறந்தவன்; போர் மறைகளை அறிந்தவன்; யார்? எது? என்பனவற்றை அறிந்து தெரிந்தவன். இராவணன் பெற்ற வரமோ, அவன் படையின் தரமோ நமக்குத் தெரியாது; ‘உடன் பிறந்தே கொல்லும் வியாதி’ என்பது பழமொழி; அவனை அழிப்பதற்கு இவன் தேவைப்படுவான்; இவனை நாம் சேர்த்துக் கொள்வது அரசியல்”.

அரசியலில் கட்சி மாறுவது இயற்கை; அதற்கு உரிமை உண்டு; அதற்குத் தக்க தடுப்புச் சட்டம் எதுவும் உருவாக வில்லை; இவன் சமையலுக்கு வேண்டிய கரிவேப்பிலைதான்; தேவை இல்லை என்றால் நம்மால் இவனைத் துக்கி எறிய முடியும்; அரக்கர் சேனையை அஞ்சாத நாம், இந்தக் கடுவ்ன் பூனையைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும். வெள்ளத்தில் இவன் ஒரு நீர்க்குமிழி; அதுதானே கரைந்து விடும்; வெடித்துவிடும். நம் ஆற்றலில் நமக்கு நம்பிக்கை உண்டு” என்று அனுமன் கூறினான்.

பகைவன் என்பதால் சுக்கிரீவன் அஞ்சினான்; சாம்பவான் சாதியைப் பற்றிப் பேசினான்; நீலன் ஒட்டைப் படகு என்றான்; அனுமன் ஒரு கரிவேப்பிலை என்றான்; எரிந்த கட்சி எரியாத கட்சியாய் வாதம் இட்டனர்.

பட்டிமன்றப் பேச்சு கேட்டு நடுநிலை வகித்துக் கருத்தைக் கூறும் தலைவர்களைப் போல, மாருதி சொன்ன கருத்தை, இராமன் ஏற்றுக் கொண்டான்; ஆனால், சிறிது வேறுபட்டுப் பேசி இரு கட்சியினரும் பேசியது சரியே” என்று ஒப்புக் கொண்டு மேலும் புதியது பேசினான்.

“நன்மையோ, தீமையோ அதைப் பற்றி நாம் சிந்திக்கத் தேவை இல்லை; அடைக்கலம் என்று வந்தவனுக்கு ஆதரவு தருவது அரிய பண்பாடு; அதை நாம் ஏற்க வேண்டும்”.

“அதுவே அறம்; ஆண்மையும், மேன்மையும் ஆகும்” என்றான்.

இராமன் தெளிவான உரைக்கு எதிர் சொல்ல முடியாமல் போய்விட்டது; அதனை ஆணையாக ஏற்றுச் செயல்பட்டனர். சுக்கீரீவன், தானே வீடணனைச் சார்ந்தான்; அவனை வாழவைக்க வரவேற்று அழைத்துச் சென்றான்.

இராமன் அவனை ஏற்றுக்கொண்டான்; “இலங்கைச் செல்வம் உனது; நீண்ட காலம் சிறப்புற ஆண்டு நிலைத்து வாழ்க” என்று வரமும், வாழ்த்தும் கூறினான். ஆட்சி கிடைத்ததற்கு வீடணன், அகம் மகிழ்ந்தான்; மாட்சிமை நிரம்பிய இராமன் திருவடி களில் விழுந்து தொழுது அவன் நல்லாசிகளைப் பெற்றான்.

“தசரதன் மக்கள் நால்வர் நாங்கள்; குகனோடும் சேர்ந்து ஐவரானோம்; சுக்கிரீவனோடு அறுவர் ஆனோம்; இப்பொழுது உன்னோடு சேர்ந்து எழுவராகிறோம்” என்று தன் உடன் பிறப்பாக அவனை இராமன் ஏற்றுக் கொண்டான்.

தமையனை விட்டுப் பிரிந்தவனுக்குத் தங்க மடம் கிடைத்தது; மாற்றுத் தமையன் கிடைத்தான்; தோட்டத்துச் செடிகளைப் பிடுங்கி வேறு இடத்தில் நட்டால் சில செடிகள் பிழைத்துக் கொள்ளும்; கொடியாய் இருந்தால் அதுவும் கொழுகொம்பு தேடிப் படரும்; இதுவும் ஒரு மாற்றுச் சிகிச்சையாய் அமைந்தது அவனுக்கு; உறவை முறித்துக் கொண்ட அவனுக்குப் புது உறவு கிட்டியது; இழப்பு ஈடு செய்யப்பட்டது.

படைத் தலைமைக்கு ஏற்கனவே இருந்த சுக்கிரீவனோடு வீடணனையும் சேர்த்தான் இராமன், இராம இலக்குவராய் அவர்களை மாற்றிவிட்டான்; அவர்கள் இரட்டையர் ஆயினர்; வீடணன் படைத் தலைமை ஏற்று அவர்களை ஊக்குவித்தான், உற்சாகப்படுத்தினான்.

வாழ்த்தும் தொழிலையுடைய வானவர் சமயம் பார்த்துக் கொண்டிருந்தனர்; “வீடணன் பெற்ற வெற்றியும் பெருவாழ்வும் உலகில் யாரும் பெற்றிலர்” என்று அவனைப் பாராட்டி வாழ்த்தினர்.

கட்சிமாறும் அரசியல்வாதிகளுக்கு அவன் முன்னோடியாய் விளங்கினான்; சரித்திரப் புகழ்பெற்ற சாதனை மனிதனாய்க் காணப்பட்டான்; உறவு கொண்டவனை விட்டுக் கொள்கை கண்டவனிடம் அரண் தேடிச் சரண் அடைந்துள்ளான். “இது சரியா தவறா” என்பதற்கு இதுவரை முன்னுரை கூறினார் களே தவிர முடிவுரை கூறியதாய்த் தெரியவில்லை.

கடலைக் கடக்கும் வழிவகை

நெருப்பிடையே நிழலைக் காண்பது போலப் பகைவரிடையே ஒரு நண்பனை, வீடணனை இராமன் கண்டான். அவனிடம் இலங்கையின் இயற்கையைப் பற்றியும் இறைமாட்சியைப்பற்றியும் கேட்டு அறிந்தான். அரண்களைப் பற்றியும் முரண்களைப் பற்றியும் பேசி அறிந்தான்; இராவணன் செயல்திறனை யும் ஆற்றலையும் அவன் நீக்குப் போக்குகளையும் கேட்டு அறிந்தான்; அவன் குறைகளையும் நிறைகளையும் அவன் உரைகளால் அறிந்தான்; இலங்கையைப் பற்றி அறிய அவன் எழுதாத வரைபடமாக விளங்கினான்.

வானரப் படைகளும் அங்கதன் முதலிய படைத்தலைவர்களும் அனுமனிடம் அளவிலா மதிப்பும் கணிப்பும் வைத்திருந்தனர்; அவன் ஆற்றலிலும் செயல் திறனிலும் முழுநம்பிக்கை கொண்டிருந்தனர்; “கடலைக் கடப்பதற்கு அவன் தான் தக்க விடை சொல்ல வேண்டும்” என்று எதிர் பார்த்தனர்.

“கடலைக் கடப்பது எப்படி? வழிவகைகள் யாவை?” இவை பற்றிச் சீதை மணாளன் சிந்தித்தான்; முல்லை நிலத்துக்குக் கண்ணனும், மலைக்கு முருகனும், மருதத்துக்கு இந்திரனும், பாலைக்குக் காளியும் வழிபடு தெய்வங்களாய் இருப்பது போல, நெய்தல் நிலத்துக்கும், நீலக் கடலுக்கும் தெய்வம் வருணன் என்பது நினைவுக்கு வந்தது. அவன் பெயரால் மந்திரம் சொல்லிச் சென்று ‘கடலில் வழிதருக’ என்று விளம்பினான்; அலை ஒசையில் அவன் காதில் இராமன் சொல்லோசை விழவில்லை.

வாய்ச் சொல்லுக்குச் செவிசாய்க்காத செவிடலை! வழிக்குக் கொண்டு வரக் கைவில்லுக்கு ஆணை பிறப்பித்தான்; இராமன் நாண் ஏற்றினான்; பிரம்ம அத்திர நேத்திரத்தைத் திறந்தான்; ஏவியகணை அவன் ஆவியை வாங்க அவனை அணைந்தது. அலறி அடித்துக் கொண்டு அடக்க ஒடுக்கமாய் அண்ணல் இராமன்முன் வந்து நின்றான் வருணன். அலை அடலுக்கு அப்பால் தன் ஆணையைச் செலுத்தியதால், இப்பால் என்ன நடக்கிறது? என்பதை அவனால் கவனிக்க முடியவில்லை” எனத் தெரிவித்தான்; தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்.

கடல்நீரை அம்புகொண்டு வற்றச் செய்து விட்டால், காடுகள் இல்லாமல் போய்விடும்; மழை தன் இருப்பைச் சேர்த்து வைத்திருக்கும் வங்கிதான் கடல், வங்கி பொய்த்து விட்டால், மேகங்கள் முடமாகிவிடும்; வான்மழை பொய்த்தால் தருமம் ஏது? நீரில் வாழ் உயிர் அழியும்; நிலத்தில் பயிர் ஒழியும்; “நீரின்று அமையாது உலக வாழ்க்கை” என்ற பழந்தமிழ்ப் பாட்டைச் சொல்லி இராமன் விட்ட அம்பை அடக்கிக் கொள்ள வேண்டினான் வருணன்.

“கடல் பிழைத்தது; அதன்மேல் அணை அமைத்தால்தான் பாதையை அமைக்க முடியும்” என்றான்.

“இரகுராமனாய் விளங்கும் அவன், சேதுராமனாய் மாற வேண்டும்” என்றான்; ‘சிங்களத் தீவுக்கும் இந்தியத் துணைக் கண்டத்துக்கும் சேது அமைப்பது உறுதியாகியது. மற்றும் குரங்குகளைக் கொண்டே “கல்லையும், செடிகளையும், பட்ட மரங்களையும், பாழ்பட்ட முள்களையும் போட்டுப் பாதை அமைக்கலாம்” என்றும் கூறினான்.

குரங்குப்படை அதற்குப் பிறகு உறங்கவே இல்லை; அவை கொண்டுவந்து குவித்த கற்குப்பைகளையும், மரம் செடி கொடி வகைகளையும் நளன் என்னும் தெய்வத் தச்சன், களன் இறங்கி வலிவு மிக்க பாலம் ஒன்று கட்டுவித்தான்; சேதுவின் செய்வினை அவன் கைவினையாய் அமைந்தது. ‘அகலத்தில் பத்து யோசனை நீளத்தில் நூறு யோசனை தூரம்’ என்று அதற்குக் கல்நாட்டு விழாவில் சொல்நாட்டி வைத்தனர்; கட்டி முடிந்தது; இராமன் வந்து பார்வை இட்டான்.

போரின் முழக்கம்

இலங்கைக்குப் படை சென்றது; சென்றது நேசக் கரங்கள் அல்ல; விநாசக் குரங்குகள்; அது அணி வகுத்துத் தொடர்ந்தது; இராமனும் இலக்குவனும் முன்னோடிகளாய் நடந்தனர்; வீடணன், சுக்கிரீவன், மற்றுமுள்ள படைவீரர் அவர்களுக்குத் துணை ஆயினர்.

வெட்ட வெளியை அவர்கள் தங்குமிடமாய்க் கொண்டனர்; சுற்றிலும் மாளிகைகள்; நடுவில் ஒரு பெரிய குன்று; அதில் நின்று எதையும் பார்க்க முடியும்; நளன் என்னும் பெயருடைய தச்சன் அந்தக் குன்றில் தங்க ஒரு பாடி வீடு அமைத்துக் கொடுத்தான்; இராமனுக்கு என ஒர் உயரமான பர்னசாலை அமைத்துத் தரப்பட்டது; அங்கு அவன் தம்பியோடு தங்கினான்.

போர்க் கதை தொடக்கமாயிற்று; இராவணன் ஒற்றர் இருவர் குரங்கு வடிவத்தில் அங்கு இறக்குமதி செய்யப் பட்டனர்; சுகன், சாரன் என்ற பெயருடைய அவ்வொற்றர் தாம் கற்ற மாயையால் தம்மை மறைத்துக் கொண்டு திரிந்தனர்; தம்மைக் குரங்குகள் என்றே கருதச் செய்தனர்.

“தேவரே அனையவர் கயவர்; இருவருக்கும் வடிவத்தால் வேறுபாடு இல்லை” என்பார் வள்ளுவர்; அக் குறள்பாட்டைக் காட்டவில்லை; வீடணன் மட்டும் அவர்கள் பால் ஐயம் கொண்டான். பாம்பின்காலைப் பாம்பு அறிந்தது; அனைவர் பார்வையும் அவர்கள்மீது மையம் கொண்டது.

அவர்கள் மந்திரதந்திரம் கற்றவர்; அவற்றை அறிந்து, வீடணன் வல்லவனுக்கு வல்லவனாய் விளங்கி, அவர்கள் வேடத்தைக் கலைத்தான்; பூசி இருந்த வண்ணக் கலவை நீங்கியது: மை நிறத்து அரக்கராய் வெளிச்சத்தில் வைக்கப்பட்டனர்; அவர்கள் மெய்யைக் காட்டிய பிறகு, ‘தாம் யார்?’ என்ற மெய்யை உரைத்துவிட்டனர்; தாம் அரக்கர் என்பதை இராமனிடம் கூறி, இரக்கம் காட்டும்படி வேண்டினர்.

தூதுவர்க்கு உரிய மரியாதையை இராமன் அவர்களுக்குக் காட்ட விரும்பினான்; தீய சிந்தை யரைக் காட்டும் போது விழும் தரும அடிகள், அவர் களை அணுகவில்லை; “'மறைந்திருந்து மறைகளை அறிந்து சொல்ல வேண்டிய தேவையில்லை; நிறைந் திருந்து இங்குள்ள நிறை குறைகளை எண்ணிக்கை விடாமல் தெளிவாய் அறிவிக்கலாம்” என்றான் இராமன்.

“எங்கள் வீரத்தை எடுத்து விளம்ப எங்களுக்கு நீங்கள் தொடர்பேசியாய் இருப்பீர், என்று எதிர் பார்க்கிறேன்; அஞ்சாமல் சொல்லலாம்; நாங்கள் நேரில் சொன்னால் உம் தலைவன் நம்பமாட்டான்; அறிந்து வந்து அறிவித்தால் அதற்கு ஆதிக்கம் அதிகம்” என்று சொல்லி அனுப்பினான்.

“தப்பியது இராமபிரான் புண்ணியம்” என்று தலைகாட்டாமல் வந்தவழி நீட்டினர். செய்திகொண்டு சென்ற சேவகர் தாம் ஒற்றி அறிந்து கற்றுவந்ததை முற்றுமாக இராவணனுக்கு உரைத்தனர்; கடல் கடந்த அக்கரைச் சீமையில் போர்ப்பயிற்சி பெற்ற சேனை களைப் பற்றியும், இராமன் தோற்றத்தில் தாம் கண்ட ஏற்றத்தைப் பற்றியும், சரண் அடைந்து சாதியை மறந்து நீதிக்காகப் போராடும் வீடணன் அறப் பற்றையும், அவன் பகைவர்களின் உளவாளியாகச் செயலாற்றுவதையும், இராவணன் சந்திக்க வேண்டிய சாதனைகளைப் பற்றியும் கூட்டாமலும் கழிக்காமலும் உள்ளதை உள்ளவாறு உரைத்தனர் ஆயினர்.

ஆணவம் மிக்க இராவணன், உலகப் போர்களுக்குத் துணை போகும் சர்வாதிகளைப் போலச் சிந்தனையின்றி, கர்வம் கொண்டு ஆவேசம் காட்டினான்; தன் வரத்திலும் உரத்திலும் நம்பிக்கை வைத்திருந்தான், இடியேறு அஞ்சும் படி இராமனை எள்ளி நகையாடினான்; எதிரிகள் மடிவது என்ற உறுதியில் பிடிவாதம் காட்டினான். நாவினால் பேசுவதைவிட வாளினால் வீசுவதையே நம்பினான் சொல்லேர் உழவனாய் இருந்து விவாதிப்பதைவிட்டு வில்லேர் உழவனாகச் செயல்பட விரும்பினான்.

இராவணன் நிலை இவ்வாறு ஆக, இராமன் செயல் வேறு விதமாய் இருந்தது; இலங்கை மாநகரின் மலை உச்சியில் ஏறி நின்று. அந் நகரைக் கண்டு மலைந்தான்; பொன்னொளிர் மதில்களையும், மின் அமர் மாளிகை களையும் கண்டு வியந்தான்; நகரத்தின் எழிலையும், மக்களின் கலைத் திறனையும் இலக்குவனுக்குக் காட்டி னான்; சிற்பிகள் சிரத்தை எடுத்துச் செதுக்கிய கற்பனை களைக் கற்களில் காட்டினான்; அவன் அன்னை கைகேயி, அயோத்தியில் அடிவயிற்றில் ஊட்டிய தீ, அணையாமல் சுடர்விடுவது போல அனு மன் மூட்டிய தீ வானை முட்டிக்கொண்டு எரிந்தது.

எட்டாத கனிக்குக் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த இராவணன், சீதையை அடைய முடியாத ஏக்கத்தால் மெலிந்து விட்ட தோள்கள், போர்ச் செய்தி கேட்டுப் பூரித்து வீங்கின. அவனுக்கு இராமனை அடையாளம் காட்டத் தேவை இல்லாமல், அவன் எழில்நிறை தோற்றம், அவனை யார் என்பதை அறிவுறுத்தியது; காமனும், தானும் முறையே கரும்பு வில்லையும், இரும்பு வாளையும் எறிந்து விட்டுத் தலைகுனிய வேண்டும் என்பதை உணர்ந்தான்.

அவ்வாறே வீடணனைக் கொண்டு இலங்கைப் படை வீரர்களை இராமன் அடையாளம் கண்டான். சுக்கிரீவன் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டான். சீதையின் முடிவில்லாத் துயருக்குக் காரணம் இராவணன், அவன்தான் என்பதை அவன் கண்டு கொண்டான். நாயைக் கண்டால் கல்லெடுத்து எறிய விரும்பும் சிறுவர் போல் அவசரப்பட்டு, அவன் இராவணன்மீது பாய்ந்தான். அது நாட்டுநாய் என்று நினைத்தான்; அது வேட்டை நாய் என்பதை அவன் அறியவில்லை; அது அவனைக் கடித்துக் குதறி விட்டது; தப்பித்தால் போதும் என்று அவன் தன் தவிப்பை வெளியிட்டான்; இராமன் தான் தன் இனிய துணைவனை இவ்வளவு விரைவில் இழப்பான் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை; நண்பனை இழந்தபின் அன்புடைய மனைவியை அடைவதில் அவன் மனம் ஈடுபடவில்லை.

வாணர வேந்தன் உயிர் பிழைத்து வர வேண்டுமே என்ற கவலை அவனை வாட்டியது; இராவணன் பேராற்றல் உடையவன்; முன்பின் யோசனை செய்யாமல் நெருப்பில் கைவிடும் சிறுகுழந்தைபோல் சுக்கிரீவன் செயல்பட்டுவிட்டான் என்று வருந்தினான். இருந்தாலும் அந்த நெருப்பில் உள்ள கரித்துண்டை எடுத்து வெளியே போடும் குழந்தையைப் போல் இராவணன் முடியில் பிடிபட்ட வைரக் கற்களைப் பறித்துக் கொண்டு இராமனிடம் வேகமாக வந்து சேர்ந்தான்; தலைதப்பியது; இராவணன் முடி தப்பவில்லை; மற்றவர் முடிகள் தாம் அவன் அடிகளில் பட்டுப் பழக்கம்; இதுவரை தன் மணிமுடியில் மாற்றான் கைபட்டது இல்லை; இதை அவமானமாகக் கருதினான் இராவணன்.

அனுமன் அசோக வனத்தை அழித்தான்; அவன் தலைவன், அவன் மணிமுடியைப் பறித்தான்; இச் செய்கை இராவணனுக்கு எரிச்சல் ஊட்டியது.

அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்பதை முடிவு செய்ய, அமைச்சர் அவையை இராவணன் கூட்டினான்; போர் முயற்சிகளை மேற்கொண்டான்; போர்முரசு கொட்டச் செய்தான். வெற்றிதரும் சங்குகளை முழக்கினான்; அமைதி இலங்கையிடம் விடுமுறை பெற்று, ஒய்வு எடுத்துக் கொண்டது.

இராவணன் போருக்குப் பின்வாங்கவில்லை; இருதரத்தவரும் கைகலக்கக் காத்திருந்தனர்; எனினும், முடிந்தால் கைகுலுக்க இராமன் முயற்சி எடுத்துக் கொண்டான். இது தனிப்பட்ட ஒருவனோடு தொடுக்கும் போர் அன்று; ஒர் அரசன் மற்றொரு அரசன்மேல் எடுக்கும் படை எடுப்பு, “தூதுவன் ஒருவனை அனுப்பிச் சீதையை விடுவது பற்றிப் பேசி வெற்றி காண வேண்டும்” என்று விழைந்தான். முரசு அறைந்து உரசு போரைத் தொடரும் அறிவு அறை போகிய நெறி தவறிய காவலனுக்கு நீதி கூற விரும்பினான்; சொல்லின் செல்வன் அனுமன் வெல்லும் திறமை உடையவன் என்றாலும், அவனைத் துது அனுப்பாமல் அரசமகன் அங்கதனை அனுப்பிப் புதுமை தோற்று விக்க விரும்பினான்; “'அனுமனைத் தவிர வேறொரு ஆள் இல்லை; அவனே திரும்பி வருகிறான்; என்று பகைவர் குறைவாய் எடை போடக் கூடும்” என்பதால் ஆள்மாற்றத்தைச் செய்ய விரும்பினான்; வாலி மைந்தன் என்பதால் அவனுக்கு ஒரு தனி தகவு இருந்தது; அறிமுகமானவன் என்பதால் அதிகம் பேசத் தேவை இராது; இராவணனுடன் பேசுவதற்கும் தடைநேராது.

வருகை தந்த தூதுவனுக்கு வரவேற்புத் தரப் பட்டது; அங்கதன் தந்தையைக் கொன்றவனுக்கு வக்காலத்து வாங்க வந்திருப்பது இராவணனுக்கு வியப்பைத் தந்தது.

“தந்தையைக் கொன்றவனுக்கு ஆதரவு தேடவந்திருக்கிறாய்? இது விசித்திரமானது” என்றான்.

“வாலி ஆட்சிக்குச் சுக்கிரீவன் வேலிபோட்டுக் கொண்டான்; அதனை நீ கோலினால் உனக்கு வாங்கித் தருகிறேன்” என்றான். “சிங்கம், நாய் தரக் கொள்ளுமோ நல்லரசு? நீ தரும் ஆட்சியை நேர் என்று நான் கொள்ளேன்; நான் ஆட்சிக்கு வரவில்லை; இராமன் இல்லறமாட்சிக்கு வழிகோலவே வந்தேன்” என்றான்.

“சீதையைச் சிறைவிடு செய்; அக்கோதையை இராமனிடம் சேர்த்துவிடு; தையலை விட்டு அவன் சரணம் தாழ்க”. “இராமன் தாரத்தை விடு; அன்றிப் போர்க் களத்தில் உன் வீரத்தைக் காட்டு; ஒரம் கட்டி ஒதுங்கி நில்லாதே” என்றான்.

ஒர்ந்து பார்த்து முடிவைத் தேர்ந்து சொல்வதற்கு மாறாய் “அவனைப் பற்றிக் கொணர்க” என்று ஆணை இட்டான்; அவன் வீரர் ஏவல் கேட்டுப் பாய்தற்கு முன், அவன் காவல் நீங்கிக் காற்றின் வந்து காகுத்தனை வணங்கி நின்றான்.

முதற்போர்

அணிவகுத்துறப் படைகள் தம் பணியைச் செய்யத் தொடங்கின; பார்வேத்தர் இருவரும் களத்தில் நேருக்கு நேர் சந்தித்தனர்; வெட்டி மடியும் போரிலும் ஓர் வியப்பினைக் காண முடிந்தது; இராமன் அம்பு இராவணன் மணிமுடியைத் தட்டிப் பறித்ததுத் துார எறிந்தது; அது கடலுள் சென்று விழுந்தது; தொடை நடுங்கிய பகைப் படை வீரர் இடம் தெரியாமல் மறைந்தனர்; சிதறி ஓடினர்; பக்கத் துணையின்றி, இராமகாளைமுன் தனித்துப் போராடிக் களைத்து இராவணன் தான் வாளும் இழந்தான்; வாழ்நாள் இழக்கும் நிலையையும் அடைந்தான். படைக் கருவிகள் பட்டொழிந்தன. குறைக் காற்றுமுன் அகப்பட்ட மெல்லிய பூளைமலர் போல் இராவணன் படைகள் கெட்டொழிந்தன.

நிராயுத பாணியைத் தொட இராமன் அம்புகள் கூசின. ஒய்வு எடுத்துக் கொண்டு விரும்பும்போது ஆயுதம் தாங்கி வர “இன்று போய்ப் போர்க்கு நாளைவா” என்று கூறினான் மறத்திலும் அறம் காட்டிய இராமன். அவனுக்கு வாய்ப்பு அளித்து இராமன் வாய்ச் சொல் பேசவில்லை; அவன் வீரம் பேசியது.

⁠இராமன் அரக்கன் அல்லன், ஒரு மானுடன் எப்படி இருப்பான் என்பதை அறிய இராவணனுக்கு ஒர் வாய்ப்புக் கிடைத்தது.

“வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்

நாரத முனிவற்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்

தார் அணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்

வரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு

இலங்கை புக்கான்”

⁠இராமனை எள்ளி நகையாடியவன் இன்று அவன் வீரத்தையும் பெருமையையும் உணரத் தொடங்கினான்; தோல்வியையே காணாத அவன், மண்ணைக் கவ்வியது அவனுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்க வேண்டும்; உலகம் சிரிக்கும்; உண்மைதான். அதையும் அவன் பொருட் படுத்தவில்லை. தான் அடைய விரும்பிய சானகி நகுவாளே என்ற எண்ணம் தான் அவனைத் தலைகுனியச் செய்தது.

“வான் நகும் மண்ணும் எல்லாம் தாம் நகும்;

நெடுவயிரத் தோளான்

தான்நகும் பகைவர் எல்லாம் நகுவர்என்று

அதற்கு நாணான்

வேல்நகு நெடுங்கண் செவ்வாய் மெல்இயல்

மிதிலை வந்த

சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்பு கின்றான்’

சோர்ந்தவன் சோர்ந்தவன்தான், அவன் பாட்டன் மாலியவான் அருகில் வந்தான்; அவனுக்கு ஆறுதல் கூறினான்.

அவனிடம் இராவணன் தன் குலத்துக்கும் தனக்கும் வந்த பழியும் இழிவும் பற்றி மனம் அழிந்து கூறினான்; களத்தில் சந்தித்த இராமன் வீரத்தை ஒரு புராணமாய்ப் பாடினான்; “சீதை இராமனது பேராற்றலை. நேரில் காணும் வாய்ப்பைச் சரியாகப் பெறவில்லை; அவள் மட்டும் இதைப் பார்த்திருந்தால், காமனையும் என்னையும் நாயினும் இழிந்தவராகத் தான் கருதுவாள்; இராமன் இராமன்தான்; அவனுக்கு, நிகர் யாரையும் கூறமுடியாது; நாசம் வந்துற்றபோது நல்லதோர் பகையைப் பெற்றேன்” என்றான்; குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட்டது அவனுக்கு ஒரு பெருமை.

பாட்டன், எரிகிற கொள்ளியை ஏறவிடும் வகையில் அறிவுரை கூறினான்; பகைக்குத் ‘துபம் போட்டான்’ என்று கூறமுடியும்.

“சீதையை விட்டுவிடலாம்; அப்பொழுதும் இழந்த புகழ் திரும்பப் போவது இல்லை; வெற்றி தோல்வி மாறி வரும். தப்பித் தவறி இராமன் வெற்றி பெற்றால் சீதை உன் கையைவிட்டுப் போய்விடுவாள்; சீதையையும் விடாதே! போரையும் நிறுத்தாதே”.

“மேலும் சீதையை அனுப்பிவிட்டால் அவளை விட்டு விட்டு, உன்னால் உயிர்வாழ முடியாது; அதனால், சமாதானம் உனக்கு எந்த நன்மையும் தரப்போவது இல்லை; போரில் உயிர்விட்டாலும் உயர் புகழ் வந்து சேரும்; உன் வலிமை உனக்கே தெரியாமல் இருக்கிறாய்” என்றான்.

அடுத்து மகோதரன் என்ற படைத்தலைவன் அவனுக்குச் செயல்படும் வகை குறித்துக் கூறினான்.

“ஊனைத் தின்று உடம்பைப் பருக்க வைத்திருக்கிறான் நம் கும்பகருணன்; அவன் ஒருவன்போதுமே அத்தனை பேரையும் வானுக்கு அனுப்ப”.

“மலைபோன்ற அவன் உடலைக்கண்டு பகைவர் நிலைகுலைந்து ஒடிவிடுவர்” என்றான்; அலைபோல் வந்த புதிய கருத்தை இராவணன் மலைபோல் இறுகப் பற்றிக் கொண்டான்.

கிங்கரர் நால்வரைக் கூவிக் கும்பகருணனை அழைத்து வருமாறு ஏவினான்; அவர்களும் மல்லர்களும் இரும்புத் தடிகளை ஏந்தி.

“உறங்குகின்ற கும்ப கன்ன! உங்கள் மாய வாழ்வு எலாம்

இறங்கு கின்றது இன்றுகாண் எழுந்திராய் எழுந்திராய்

கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே

உறங்கு வாய் உறங்கு வாய்இ னிக் கிடந்து உறங்குவாய்”

என்று சொல்லி அவனை இடித்து எழுப்பினர். உறக்கம் நீங்கிய நிலையில் செறுக்குமொழி பேசும் இராவணன்முன் கும்பகருணன் வந்து நின்றான்; நின்றகுன்று, நடந்து வரும் மலையைத் தழுவுவது போல இருவரும் தழுவிக் கொண்டனர்; அன்பின் பிணைப்பு அவர்களை அணைத்தது.

சொற்கள் வேறு இடை புகாமல் கட்டளை மட்டும் கால் கொண்டது.

“வானரச் சேனையும் மானிடர் இருவரும் நகரைச் சுற்றினார்” என்றான் இராவணன்.

“ஏன்?” என்று அவன் கேள்வி எழுப்பவில்லை.

“கொற்றமும் உற்றனர்” என்று முடித்தான்.

“நான் என்ன செய்ய வேண்டும்?” என்ற வினாவை அவன் எழுப்பவில்லை; இராவணனும் காத்திருக்க வில்லை.

“அவர் இன்னுயிரை அழித்து அவர்களைப் போனகம் செய்” என்றான்.

தூக்கத்தின் இனிமையை அப்பொழுதுதான் பதின்மடங்காக உணர்ந்தான்; பார்க்கத் தகாதவற்றைப் பார்க்கத் தேவை இல்லை; கேட்கத் தகாவதற்றைக் கேட்கத் தேவை இல்லை.

“சீதை சிறைப்பட்டாள்; அவள் இன்னும் விடுதலை பெறவில்லையோ?” என்றான்.

“மூண்டதோ பெரும்போர்?” என்று அதிர்ச்சியோடு கூறினான்.

“சீதையை இன்னும் விடுதலை செய்யவில்லை” என்பது அவனுக்கு வருத்தத்தைக் தந்தது.

‘விளைவு புகழுக்கு இகழ்வு; நாட்டுக்கு அழிவு’ என்ற முடிவுக்கு வந்தான்; இரத்தினச் சுருக்கமாய்த் தன் உணர்வையும் சிந்தனையும் வெளிப்படுத்தினான்.

“சீதையை திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை இன்னுமா விடவில்லை? இது விதியின் செயல்; ஐயா, இந்த உலகத்தை அடியோடு பெயர்க்கலாம்; அதற்கு ஒரு எல்லையையும் அமைக்கலாம்; சீதையைப் புல்லலாம் என்பதும் இராமனை வெல்லலாம் என்பதும் நடவாத செயல்கள்” என்று கூறினான்.

“உன் மையலுக்குக் காரணமான தையலை விட்டுவிடு; இராமன் சரணம் தாழ்ந்து மன்னிப்புப் பெறுக; நின் தம்பியொடு அளவளாவுதல் பிழைக்கும் வழி; அவள் உன் உயிரோடு ஒன்றிவிட்டிருக்கலாம்; கற்பு, அறம் இவை அற்பம் என்று கருதுகிறாயா? அது உன் விருப்பம்; எதிலும் ஒரு செயல்திறன் வேண்டும்; அணி அணியாய்ப் படைகளை அனுப்பி, அவை அழிவைக் கண்டு அழுவது ஏன்? அது போர்த்திறனும் அன்று; நம் வலிமையை எல்லாம் ஒருங்குதிரட்டிப் போர் செய்வதே தழைக்கும் வழி”.

“இரண்டில் ஒன்றைத் தேர்ந்து எடுத்துக் கொள்” என்றான்.

“அறம் ஆற்றல் உடையது; தனி ஒருவனால் உலக நெறியை மாற்றமுடியாது; உனக்காக நீதிகளைத் திருத்தம் செய்ய முடியாது; நீதான் திருந்தி வாழ வேண்டும்” என்றான்.

“நீ அறிவுடைய அமைச்சன் என்பதால் உன்னை அழைக்கவில்லை; நன்றியுடைய வீரன் என்பதால் அழைத்தேன்; ஆனால் நீ போருக்குப் போகப் புலம்புகிறாய்; நீ மட்டும் உறங்கவில்லை; உன் வீரமும் உறங்கி விட்டது போலும்!” என்று கூறினான் இராவணன்.

“இனி நீ போருக்குப் போகவேண்டா, பொறுமை யைக் கடைப்பிடி, குடி, ஊன், உறக்கம்; இவற்றுக்குத் தான் நீ தகுதி, போர் உனக்கு மிகுதி.”

“மானிடர் இருவரை வணங்கு, கூனுடைக் குரங்கைக் கும்பிட்டு வாழ்க; வீடணன் வழி காட்டுவான்; சோற்றுப் பிண்டங்கள் நீங்கள்” என்றான்.

“தருக என் தேர்; எழுக என்படைகள்; நிகழ்க போர்; கூற்றமும் வானும் மண்ணும் அந்தச் சிறுவர்க்குத் துணையாக நிற்கட்டும்” என்று தொடர்ந்தான்.

“அச்சம் தவிர்; ஆண்மை இகழேல்; இவை அமுத வாக்குகள்; சென்று வருகிறேன்” என்றான் இராவணன்.

“அண்ணா!” என்று அலறினாள்.

“மண்ணாகப் போகும் இந்த வாழ்க்கை எனக்குப் பெரிது இல்லை, என்று கூறிச் சூலத்தைக் கையில் ஏந்தினான்.

“என்னைப்பொறுப்பாய்” என்று வேண்டினான். “வென்று இங்கே வருவேன் என்று சொல்வதற்கு இல்லை; விதி என் பிடர் பிடித்து உந்துகிறது; நான் இறப்பது உறுதி; அதுதான் என் இறுதி; அப்படி இறந்தால் நீ சிறந்து கடமை ஒன்று ஆற்ற வேண்டும்; சீதையை விட்டுவிடு; என் இறப்பு உனக்கு ஒர் அபாய அறிவிப்பு; என்னை அழிப்பவர் உன்னை ஒழிப்பது உறுதி”.

“நான் இறக்கும் இழப்புக்கு அழவில்லை; அதற்காகக் கவலைப்படவில்லை; உயிரையும் இழக்கத் துணிந்தேன்; ஆனால், ஒன்றே ஒன்று; உன் முகத்தை நான் மறுபடியும் கானும் பேறு எனக்கு வாய்க்காது”.

“அற்றதால் முகத்தினில் விழித்தல்” என்று கூறிக் கும்பகருணன் விடை பெற்றுச் சென்றான்.

போர்க்களம் நோக்கிச் சென்ற அவனோடு பெரும்படை ஒன்றும் துணையாய்ச் சென்றது.

உருவத்தால் பெரிய கும்பகருணன் வடிவம் இராமனுக்குப் பெரு வியப்பைத் தந்தது.

“உடல் வளர்ப்புப் போட்டியில் யாரும் இவனை வெல்லமுடியாது” என்று முடிவு செய்தான்.

“மலையா? மாமிசப் பிண்டமா?” என்று கேட்டான்.

“எனக்கு முன்னவன், இராவணனுக்குப் பின்னவன்; அறச்சிந்தையன்; அறிவுச் செல்வன்; கடமை வீரன்”

“களம்நோக்கி இங்கு இவன் வந்தது உள் உவந்து மேற்கொண்ட செயல் அன்று; கடமை; அதன் உடைமையாகிவிட்டான்; பலிபீடம் தேடி வந்த வலியோன்” என்றான் வீடணன்.

அமைச்சனாய் இருந்து அறிவுரை கூறும் சுக்கிரீவன், “அவனை நல்லவன் என்கிறாய்; வல்லமை அவனைப் போருக்கு இழுத்து வந்து இருக்கிறது; தடுத்து நிறுத்து; முடிந்தால் நம்மோடு அவனைச் சேர்த்துக் கொள்ளலாம்” என்றான்.

“வீடணன் இவனை நேசிக்கிறான்; பாசம் காட்டுகிறான்; இவனை வாழவிட்டால் வீடணனும் மகிழ்வான்” என்று தொடர்ந்தான்.

“சென்று இவனை அழைத்துவரத் தானே செல்கை நன்று” என்று வீடணன் விளம்பினான்.

கடற்பெரும் வானர சேனையைக் கடந்து தன் அரக்கர் பெரும்படையை வீடணன் சார்ந்தான்; உடல் பெரும் தோற்றம் உடைய கும்பகருணன் கால்களில் விழுந்து வணங்சினான்.

அவனை எழுப்பி, உச்சிமோந்து, உயிர் மூழ்க அனைத்துக் கொண்டு, ‘நீ ஒருவனாவது உயிர், தப்பிப் பிழைத்தாய்’ என்று மகிழ்வு கொண்டிருந்தேன்”.

“நீ அபயம் பெற்றாய்; அபாயம் நீங்கினாய்; உபயலோகத்தில் உள்ள சிறப்புகளை எல்லாம் பெற்றாய்; நீ கவிஞன், கற்பனை மிக்கவன்; நிலைத்த வாழ்வினன்; யான் அற்ப ஆயுள் உடையவன்; அமுதம் உண்ணச் சென்ற நீ மீண்டும் கைப்பினை நாடியது ஏன்? நஞ்சினை நயந்து வந்தது ஏன்? வாழப் பிறந்த நீ, ஏன் சாக இங்கு வந்தாய்”?

“அரக்கர் குலம் அழிந்தாலும் நம் பெயர் சொல்ல நீ ஒருவன் இருக்கின்றாய், என்று மகிழ்ந்திருதேன்; உயிர் உனக்கு நறுந்தேன்; இராமனைத் தவிர இப் பிறப்பில் வேறு மருந்தேன்? இதனை அறிந்தும் நீ இங்கு வந்தது ஏன்?” என்று கேட்டான்.

“நீ உயிர் தப்பிப் பிழைக்க வில்லை என்றால், இப்போரில் இறக்கும் அரக்கர்க்கு எள்ளும் நீரும் தந்து ஈமக்கடன் செய்யும் வாரிசினர் யார் இருக்கின்றனர்? நீ இங்கு வருவது இன்று அன்று; இழிபிறப்பினராய அரக்கர் எல்லாரும் மேல் உலகம் அடைந்த பிறகே ஆட்சிக்கு ஆள் தேவைப்படும்; உன் மீட்சியை வைத்துக்கொள்” என்றான் கும்பகருணன்.

“சொல்ல எந்தச் செய்தி உள்ளது?” என்றான் கும்பகருணன்.

“வெல்ல வந்த போரில், சொல்ல வேண்டுவது யாது?””

“இகபரசுகங்கள் இரண்டும் உனக்குக் காத்து இருக்கின்றன; எனக்கு இராமன் தந்த ஆட்சியை உன்மலரடி களில் வைத்து, நான், நீ ஏவிய பணி செய்யக் காத்துக் கிடக்கின்றேன்; எனக்குத் தந்த ஆட்சிச் செல்வத்தை உனக்குத் தந்துவிட்டேன்; இது இகத்தில் கிடைக்கும்

“பரத்தில் அடையும் பதமும் உள்ளது; உருளுறு சகட வாழ்க்கை இதனை ஒழித்து, இராமன் வீடுபேறு அருளுவான்; இதைவிட வேறு பேறுகள் என்ன கூற முடியும்? வா வந்து இராமனுடன் சேர்ந்துவிடு” என்றான்; அதற்கு

“நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப் பின்னைப்

போர்க்கோலம் செய்துவிட்டாற்கு உயிர் கொடாது அங்குப் போகேன்;

தார்க்கோல மேனிமைந்த என் துயர்தவிர்த்தியாயின்

கார்க்கோல மேனியாயனைக் கூடுதி கடிதிள்”

என்றான்.

“எனக்கு என்று கடமைகள் சில இருக்கின்றன; உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்ய எனக்குத் தெரியாது; செஞ்சோற்றுக்கடன் செய்து முடிப்பதில் நான் நாட்டமுடையவன்”.

“தேவரும் பிறரும் போற்ற ஒருவனாய் உலகினை ஆண்ட நம் அண்ணன், இராவணன் சுற்றமும் படைகளும் தனக்காக உயிர்விட்டுத் தன்னுடன் விழுந்து கிடக்கத் தம்பியருள் ஒருவரும் இன்றி மடிந்து கிடக்கலாமோ? உலகம் என் சொல்லும்?”

“வாழ்வினில் பங்கு கொண்டேன்; சாவில் பங்குகொள்ளாது அங்கு வந்தால் அது மானம் கெட்ட வாழ்வு; அதை நிதானமாய் நினைத்துப்பார்”.

“இராவணன் தவறு செய்கிறான்; சொல்லிப் பார்த்தோம்; பயனில்லை; அவன் தலைமையை ஏற்ற, நாம் முன் அவனுக்காக அவனுக்கு மடிவதே அறம்: பகைவரோடுகூடி அவனை எதிர்த்துப் போரிடுவது அன்று” என்றான்.

இதற்கு மேலும் அவனை வற்புறுத்திப் பயன் இல்லை என்பதை வீடணன் அறிந்தான். இறுதியில் கும்பகருணன், “நடப்பது நடந்துதான் தீரும். விதியைக் கடப்பது அரிது” என்று ஒரு தத்துவக் கோட்பாட்டினை உரைத்தான்.

“ஆகுவது ஆகும் காலத்து; அழிவதும் அழிந்து சீந்திப்

போகுவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம்;

சேகுஅறத் தெளிந்தோர் நின்னில் யார்உளர்? வருத்தம் செய்யாது,

ஏகுதி, எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய்”

என்று கூறி வாழ்த்தி அனுப்பினான்.

‘என்றும் உள்ளாய்’ என்பது வாழ்த்தாகவும் எள்ளும் நகையாகவும் அமையக் கூறினான் கும்ப கருணன்.

உடன்பிறப்பு என்னும் பாசத்துக்கு ஒரு முழுக்குப் போட்டுவிட்டு, இராமனை அடைந்தான் வீடணன்.

“என்ன ஆயிற்று” என்று கேட்ட வினாவுக்கு வீடணன் “'உய்திறன் உடையார்க்கு அன்றோ அறவழி ஒழுகும் உள்ளம்? அவன் குட்டையில் ஊறிய மட்டை” என்று அவனைப் பற்றி விமரிசித்து முடித்தான் வீடணன்.

படுகளத்தில் ஒப்பாரி ஏது? சேனைகள் மோதின; அங்கதன், அனுமன், இலக்குவன் எனப் பலரும் கும்ப கருணனோடு சொற்போரும், மற்போரும், விற்போரும் செய்தனர். சுக்கிரீவனுக்கும் கும்ப கருணனுக்கும் கடும்போர் நடந்தது. கும்பகருணன் சுக்கிரீவனை வான்வழியே தூக்கிச் செல்ல முனைந்தான். அவனைத் தடுக்க இராமன் அம்புகள் விட்டுச் சரகூடம் அமைத்தான்; இராமன் விட்ட அம்பு கும்ப கருணன் நெற்றியில் பாய்ந்தது; குருதி கொட்டியது; அவன் கைப்பிடி தளர்ந்தது; குருதி சுக்கிரீவன் முகத்தில் பட்டதால், அவன் மயக்கம் தீர்ந்து, கும்பகருணனின் மூக்கையும் செவியையும் கடித்து எடுத்துக்கொண்டு வந்துவிட்டான்.

தொடர்ந்து நடந்த போரில், இராமன் விட்ட அம்புகளால் கும்பகருணன் கைகளும் கால்களும் இழந்து அரை மனிதன் ஆனான். இராமன் அம்புபட்ட வேதனை யால் அவனோடு எந்த வம்பும் யாரும் வைத்துக் கொள்ள முடியாது, என்ற முடிவுக்கு வந்தான் கும்பகருணன்.

“இராமன் வில்தொழிலுக்கு ஆயிரம் இராவணர் வந்து எதிர்த்தாலும் சமம் ஆகார்; இனி இராவணன் உயிர் பிழைக்க மாட்டான்” என்ற முடிவுக்கு வந்தான்.

காலனும் அஞ்சும் கும்பகருணனுக்கு முடிவு காலம் நெருங்கியது; உயிர்விடுமுன் தம்பிக்கு அருள் செய்யுமாறு இராமனை வேண்டி நின்றான்.

“நீதியால் வந்த நெறி அல்லால் சாதியால் வந்த நெறி அவன் அறியான் என் தம்பி; அவன் உன்னை அடைக்கலமாய் அடைந்திருக்கிறான்; படைக்கலம் உடைய இராவணன் கையில் இவன் அகப்பட்டால்; “உயிர்வேறு உடல் வேறு” என்று ஆக்கிவிடுவான்; அவனைக் காப்பது உன் கடமை; இந்த வரத்தை யான் வேண்டுகிறேன்”.

“மூக்கிலா முகம்” என்று என்னை நோக்கி முனிவர்களும் தேவர்களும் இகழ்வர்; அதனால் என் தலையை உன் அம்பால் அறுத்துக் கடலில் போக்குவாய்” என்று கேட்டுக் கொண்டான்.

இராமன் அம்பு தொடுத்தான்; அவன் தலைமட்டும் தனியே அறுந்து அலை நிரம்பிய கடலுள் ஆழ்ந்து மறைந்தது; அதுவே அவனுக்குச் செய்த ஈமக் கடனும் ஆனது.

ராவணன் தீரா ஆசை

போர்க்களத்துக்குத் தம்பி கும்பகருணனை அனுப்பிய இராவணன் முடிவுக்குக் காத்திராமல் தன்காதல் நோய்க்கு விடிவு காண விழைந்தான்; போரில் இராமனை வெல்வது என்பதைவிடக் காதலில் சீதையை அடைவது தான் அவனுக்கு முக்கியமாய்ப் பட்டது. அதற்கு வழிதேடி மகோதரனை அறிவுரை கேட்டான்.

அரக்கருள் ஒருவனாகிய மருத்துவன் என்பவனை சனகனாய் உருவெடுத்து வரும்படி பணித்தான்; அவனை அடுத்து வரும்படி இராவணன் கூறிவிட்டு, அமுதின் அனைய அழகியை நாடிச் சென்றான்.

“குமுதம் போன்ற இதழ்களை உடையவளே! நீ தான் எனக்கு உயிர் தர வேண்டும்; உன் அடைக்கலம் நான்” என்று சொல்லிப் பழைய பாட்டைப் பாடினான்; தனக்கு இணங்குமாறு வேண்டினான்; அவள் துவண்டு, அவனை வெகுண்டு வெறுத்து ஒதுக்கினாள்.

நாடகம் தொடங்கியது; சனகன் வடிவில் வந்த அரக்கன் தன் உரையாடலைத் தொடங்கினான். “அன்பு மகளே! அவன் ஆசைக்கு இணங்கு; பிணங்கினால் நம் குலத்தையும் நம்மையும் அழித்து விடுவான்; நீ மனம் வைத்தால், நான் உயர் பதவிகள் பெறுவேன்; நீயும் அவனுக்குத் தேவியாவாய்; இருவர் ஆவியும் நிற்கும்; நீ சிறையிடைத் தேம்பி என்ன பயன்?” என்று அறிவுரை கூறினான்.

“மானத்தை விட்டு என்தந்தை உயிர் வாழான் ஈனச் செயலுக்கு அவன் ஒருகாலும் சம்மதியான்; முறை கெட்டு வாழும்படி உரை செய்யமாட்டான்” என்றாள் சீதை.

வாள்உருவி சனகனாய் வந்தவனைக் கொல்லக் கையோங்கினான்.

நகைத்தாள் சீதை, “நாடகம் நன்று” என்று நவின்றாள்.

“நீ என்னையும் கொல்ல மாட்டாய்; இவனையும் கொல்லப்போவது இல்லை; யாரையும் கொல்லப் போவ தில்லை; அது மட்டுமன்று; போரில் நீ வெல்லப்போவதும் இல்லை.”

“உனக்கு அழிவு நெருங்கிவிட்டது; இராமன் அம்பு நீ வரும் வழியைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது; புகழ் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது” என்றாள்.

மகோதரன் இடைநின்று, இராவணனைத் தடுத்தான்.

“அவசரப்பட்டு இவனைக் கொல்லாதே; நாளை நீ வெற்றிபெற்றால், சீதை உம்வசமாவாள்; அப்பொழுது தன் தந்தை எங்கே என்று அவள் கேட்பாள், அங்கை விரிக்க வேண்டி வரும்” என்று கூறினான்.

அந்நேரத்தில் கும்பகருணன் போரில் மடிந்த செய்தி இராவணனுக்கு எட்டியது; ஆறாத் துயரத்தில் ஆழ்ந்தான்; ‘தம்பியை இழந்தது ஈடு செய்ய முடியாத இழப்பு’ என்பதை உணர்ந்தான்; போர்க்களத்தை நோக்கி அவன் சிந்தனை சுழன்றது.

அங்கிருந்த திரிசடை சீதைக்கு ஆறுதல் கூறினாள்; வந்தவன் சனகன் அல்லன்; நடிப்பு, என்று கூறி அவளைத் தெளிவுபடுத்தினாள்; ‘அலைகள் ஒய்வதில்லை’ என்பதை அறிந்து அவள் தெளிவு பெற்றாள்.

இந்திரசித்துடன் போர்

தம்பியைக் களப்பலி யாக்கியபின் ‘அடுத்த தளபதி யார்?’ என்று நாடினான். இராவணன் இளைய மகன் துடிப்பு மிக்கவன், துயர் அறியாதவன்; கொட்டிலில் கட்டி வைத்த இளங்கன்று; அது துள்ளிக் குதித்தது. ஆம் அவன்தான் அதிகாயன்! அடுத்து அவன் அனுப்பட் பட்டான், இராமனுக்கு இளயவனைச் சந்தித்தான். அவனோடு தன்வீரத்தைக் காட்டி விளையாடினான் படுகளத்தில் உயிர் விட்டான்.

செய்தி அறிந்து இராவணன் செயலற்றான் அரக்கியர் இராவணன் அருமைமகன், இறந்தது கேட்டு அழுகையால் அதனை அம்பலப்படுத்தினர்; “முத்தவன் இருக்க இளையவன் மடிந்தது ஏன்? முறைமாறி நடந்து கொண்ட தந்தையிடம் சொல் மாரிபெய்து, “என்னை அனுப்பி வைக்காமல் தம்பியை அனுப்பி வைத்தது முறையா?” என்று கேட்டான் இந்திரசித்து.

⁠“தம்பியைக் கொன்ற கொடியவன் யார்?” என்று கேட்டு அறிந்தான்; இலக்குவனைத் தன் இலக்காகக் கொண்டு போர் தொடுத்தான் இளஞ்சிங்கங்கள் களத்தில் முழக்கம் செய்தன; இடிகள் மாறிமாறி இடித்தன; மழை பெய்யவில்லை; நேருக்கு நேர் சந்தித்தால் வேருடன்தான் அழிய வேண்டும் என்பதை இந்திரசித்து உணர்த்தான்; வீரம் வளைந்து கொடுத்தது; சூழ்ச்சி முன்னால் நின்றது; விண்ணில் பறந்து, கண்ணுக்குக் தெரியாமல் மறைந்தான்; “அவன் போர்க்களத்தை விட்டுப் புறமுதுகு இட்டான்” என்று இலக்குவன் தவறாய்க் கருதினான்; இந்திரசித்தின் தித் திட்டம் அறியாது வாளா இருந்துவிட்டான்.

⁠இராவணன் இட்ட ஆணையின்படி இலக்கு வனையும் அனுமனையும் நாகபாசம் கொண்டு பிணிக்கத் திட்டமிட்டான்; அவர்கள் சோர்வாய் இருந்த நேரத்தில் அரவக்கயிறுகள் கொண்டு இருவரையும் பிணித்து வைத்தான்; கட்டுண்டவர்கள் தப்பவழி தெரியாமல் டுமாறினர்; கயிறுகள் இறுக்கின; கழுத்தைச் சுருக்கின; இலக்குவன் திக்குமுக்கு ஆடினான்; திசை தெரியாமல் கைத்தான்; செயலற்றுத் தளர்ச்சி அடைந்தான்.

⁠செய்தி கேட்ட இராமன், களம் நோக்கி விரைந்தான்; தம்பி நிலைகண்டு, உளம் தளர்ந்தான்; “களத்தில் தம்பியைப் பறிகொடுத்து விட்டோமே என்று ரிதவித்தான். வழி காட்டும் விழியற்றான்; இருளில் உழன்றான்; யுகமுடிவில் கடல் பிரளயம் மண்ணை மூடிக் காள்வதுபோல வேதனை அவனை வயப்படுத்திக் காண்டது. தேவர் செய்வது அறியாது திகைத்தனர்.

எதிர்பாராத விதமாய் வானத்தில் கருடன் பறந்து கொண்டிருந்தது; நிதானமாய்க் கீழே நடப்பதைக் கண்டது; சிறகுகளைக் குவித்துக் கொண்டு கீழே இறங்கியது; தன் சிறகுகளை அவர்கள் மீது விரித்துக் காற்றை வீசியது. அவர்கள் மீது கருடன் காற்று பட்டது; திருடனைத் தேள் கொட்டியதைப் போல நாகங்கள் நடுங்கின; கட்டு அவிழ்ந்து நெகிழ்ந்தன; செத்தவர் உயிர் பெற்றது போல இருவரும் விடுதலை பெற்றனர்.

‘இலக்குவன் இறந்திருப்பான்’ என்ற நம்பிக்கை யில் இந்திரசித்து அரண்மனையில் தங்கிவிட்டான். நாகங்களின் பிணிப்பில் அவர்கள் அகப்படவில்லை என்ற செய்தி இராவணனுக்கு எட்டியது; மகனை அவன் அறிவீனத்துக்காகக் கடிந்து கொண்டான்.

மறுநாள் போரில் இந்திரசித்து, வேகமாய்ச் செயல் பட்டான்; இலக்குவனொடு நேருக்கு நேர் சந்தித்துப் போ செய்தான்; நாகபாசம் ஏவித் தன் ஆகத்தைக் கட்டியவனை அயன்படை கொண்டு அழிக்க இலக்குவன் விரும்பினான் இராமன் “அஃது அறமன்று” என்று கூறித் தடுத்து நிறுத்தினான்; ‘அதே அயன்படையை இலக்குவன் மீது எறிவது’ என்று தீர்மானித்து, இந்திரசித்துக் களம்விட்( வெளி யேறினான்; ‘அவன் அஞ்சி ஒடிவிட்டான்’ என்று கணக்கைத் தவறாய்ப் போட்டுவிட்டனர்; அவன் அரண் மனைக்குச் சென்று, தந்தையைச் சந்தித்துத் திட்டத்தை பற்றிக் கூறினான்.

அயன்படை, பெறுதற்கு வேள்வி செய்ய வேண் இருந்தது; அதுவரை மகோதரனைப் போருக்கு அனுப்பி இலக்குவனைக் களத்தில் மடக்கி வைத்தனர். மகோதரன் இலக்குவனுக்கு ஆற்றாமல் ஒடி விண்ணில் ஒளிந்தான்; அங்கிருந்து ஐராவதம் என்னும் யானை மீது அமர்ந்து இந்திரனைப் போல வேடம் புனைந்து, முனிவர்களையும் தேவர்களையும் வஞ்சித்து அழைத்துக் கொண்டு மண்ணுலகம் வந்து, இலக்கு வனோடு போர் தொடுத்தான்; வானவரோடு போர் செய்தலை வானரங்கள் விரும்பவில்லை; தேவர்கள் ஏன் தன்னை எதிர்க்கிறார்கள்?’ என்பது இலக்குவனுக்குப் புரியாத புதிராய் இருந்தது.

செயவிழந்த இந்நேரத்தில் அயன்படையை இந்திரசித்து ஏவினான். அப்படையினின்று அளவு மிக்க அம்புகள் வெளிப்பட்டு, வானரர்மீதும் ஏனைய படைஞர் மீதும் பாய்ந்தன. அவ் அம்புகளுக்கு ஆற்றாமல் அவர்கள் அயர்ந்து விழுந்தனர்; இலக்குவனும் மயக்கமுற்றுக் கீழே சாய்ந்தான்: மூச்சுபேச்சு அற்று விழுந்தவன் போல் காணப்பட்டான்; போர்க் களமே பிணக்களமாய்க் காட்சியளித்தது.

இந்திரசித்து தன் தந்தையிடம் சென்று, அயன் படையால் நேர்ந்த அழிவுகளைச் சொல்லி, ‘இராமன் ஒருவனைத் தவிர அனைவரும் துறக்கம் புக்கனர்’ என்றான்; இலங்கையர்கோன் உள்ளம் பூரித்தான்; ‘போர் முடிந்தது’ என்று உவந்தான்; ‘தனியனான இராமனை இனி எளிதில் சந்திக்க முடியும்’ என்று நினைத்தான்.

இராமன் போர்க்களம் சென்று களம்பட்ட வானரங் களையும், சுக்கிரீவனையும், அனுமன், சாம்பவான் முதலிய படைத்தலைவர்களையும், தம்பி இலக்குவனை யும் கண்டான்; ‘அனைவரும் மடிந்துவிட்டனர்’ என்று நம்பிவிட்டான், புலம்பி, நைந்து, செயலிழந்து மயக்கம் உற்றான்; செத்தாருள் ஒருவனாய் மதிக்கப்பட்டான்.

செய்தி அறிந்து இராவணன் வெற்றிப் படை கொட்டச் செய்து, விழாக் கொண்டாடினான். அரக்கர் பிணம் அத்துணையையும் ஆழ்ந்த கடலில் போடச் செய்து அவர்கள் சுவடு தெரியாமல் மறைத்தான். அவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்பி, அஞ்சலி செய்தற்கு அடையாளம் மட்டும் அமைத்துக் கொடுத்தான்.

சீதைக்குச் செய்தி சொல்ல வைத்து அவள் மங்கல நாண் களைதற்காக மயக்கமுற்ற இராமன்முன் கொண்டு வந்து அவளை நிறுத்தினான்.

“இப்பொழுது என்ன சொல்கிறாய்?” என்ற கேள்விக் கணையை எழுப்பிவிட்டான்.

அப்பொழுதும் அவள், அதை முழுமையாய் நம்பவில்லை; உறுதிகொண்ட நெஞ்சினளாய் விளங்கினாள்; ‘வானரப்படைகள் படுவதும், இலக்குவன் விழுவதும், இராமன் கண்கலங்கி அழுவதும், உயிர் மாய்த்துக் கொள்வதும் நிகழாதன’ என்ற நம்பிக்கை இருந்தது. இராமன் உடம்பில் அடிபட்ட தழும்பு எதுவும் இல்லை, என்பதைத் திரிசடை காட்டினாள்; ‘கொண்டது மயக்கமே யன்றி மரணம் அன்று’ என்று தெளிவித்தாள்.

கைதிகளைப் பாதுகாப்பாய்ப் பார்வையிட அழைத்ததைப் போல அழைத்து வந்த சீதை மறுபடியும் சிறைக்காப்பாய் அசோகவனத்தில் அடைக்கப்பட்டாள்.

உணவுப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த வீடணன், காற்றின் போக்கில் செய்தி அறிந்து, களம் வந்து சேர்ந்தான். வடு நீங்கிய இராமன் மேனி கண்டு, அவன் இறப்பைப் பற்றிக் கடுகு அளவு ஐயமும் அவனுக்கு எழவில்லை; அரவுக் கயிற்றால் பிணிப்புண்ட நிலையில் கருடன் வந்து காத்தது போல, அயன் அம்பால் தாக்குண்டவர் மயக்கம் தீர சஞ்சீவி மருந்துச்செடி தேவை என்பதை, உணர்ந்தான்.

அனுமன் இருக்கும் இடம்தேடி, நீர் தெளித்து அவனை மயக்கம் தெளிவித்தான்; நெடுமரமாய் நின்ற அனுமன், படுகளம் பார்த்துத் திகைத்தான்; ‘சஞ்சலம் தீர்க்க அவன் சஞ்சீவிப் பருவதத்தை அடைய வேண்டும்’ என்று வீடணன் உரைத்தான்; சாம்பவான் எழுப்பப்பட்டான்; அவன் வயதில் மூத்தவன் ஆதலால் அச்செடிகள் இருக்கும் மலைக்கு வழி அறிந்தவனாய் இருந்தான்.

“ஏமகூட மலையைக் கடந்து, மாமேரு மலையை அடைந்தால், அதற்கு அப்பால் அம்மருத்து மலை தெரியும்” என்று கூறினான் அவன் கூறியவாறே அனுமனும் அம்மலைகளைக் கடந்து அரிய மருந்து மலை இருக்கும் இடம் அடைந்தான்; அதனை வாணர மகளிர் காவல் காத்திருந்தனர்; வானரத் தலைவனாகிய அனுமனுக்கு அதைத் தந்து உதவினர்.

மறுபடியும் இருந்த இடத்திலேயே அம்மலையைக் கொண்டு வந்து வைக்குமாறு வேண்டினர்; அதற்கு இசைந்து அம்மலையை அடியோடு பெயர்த்து, ஒருகையிலேயே தாங்கிக் கொண்டு, காடும், மலையும் கடந்து, ககனமார்க்கமாய் வந்து சேர்ந்தான்.

மலைக்காற்று பட்டதும் அலைஅலையாய் வானரர் உயிர்த்து எழுந்தனர்; அனுமன் உதவியை இராமன் பெரிதும் பாராட்டினான். இருந்த இடத்தில் மறுபடியும் மலை கொண்டு சேர்க்கப்பட்டது.

போருக்குத் தூண்டிவிட்ட மாலியவானே மனம் மாறினான்; ‘போரும் அமைதியும்’ பற்றி எழுதும் எழுத்தாளனாய் மாறினான். “அனுமன் ஆற்றல் அளவிடற்கு அரியது; இராமன் வீரம் வியத்தற்கு உரியது” என்று கூறித் தனி ஒரு “சீதையை விட்டு விடு வதே கும்பிடுபோட்டுச் செய்தத்தக்கது” என்றான்.

சஞ்சீவி பருவதத்தால் வானரவீரர் உயிர் பெற்ற செய்தி அறிந்து. இறந்துவிட்ட தன் வீரரை உயிர்ப்பிக்க இராவணன் நினைத்தான்; குறி தவறிவிட்டது; மரித்து விட்ட அவர்கள் உடலை ஏற்கனவே கடலில் எறிந்து விட்டமை நினைவுக்கு வந்தது.

தரையில் தட்டிய பந்து உயர எழுவது போல மீண்டும் வீரம் பேசிப் போர்வினை ஆற்ற இராவணன் விரும்பினான். இந்திரசித்து தான் நிகும்பலை என்னும் கோயில் சென்று, வேள்விகள் இயற்றி, வேண்டிய வரங்களைப் பெற்று வருவதாய் விளம்பினான்; அவற்றால் படைக்கருவிகளும் மிக்க ஆற்றலும் சேரும்’ என்று கூறினான். ‘இதில் முந்திக் கொள்வது சிந்திக்கத் தக்கது’ என்று பேசினான்.

எதிரிகளைத் திசை திருப்ப யோசனை ஒன்று வெளியிட்டான் இந்திரசித்து; மகோதரன் மந்திர மாயையால் சனகனைப் படைத்தது போலச் சீதையின் உருவச் சிலையினை உருவாக்கி; அவர்களை வலையில் மாட்டுவது’ என்று தீர்மானித்தான்; அவ்வாறே அவ்வுருவை உருவாக்கினான். அதன் கூந்தலைப் பற்றி இழுத்து வந்து அனுமன்முன் நிறுத்தி அவனைப் பதற வைத்தான் இந்திரசித்து. “பாவி மகளே! நீ வந்துதானே அரக்கர் ஆவியை அழித்தாய், என் தந்தையை மயக்கி, அவரையும் அழிக்கத் தொடங்கினாய்” என்று கூறி அவ்வுருவத்தைத் தன்வாளால் தடிந்தான்; குருதி கொட்டியது” ‘அவள் சீதையே’ என்று தவறாய் நினைத்தான் அனுமன், துடித்து அழுதான்.

“இது முன்னுரை; பின்னுரை ஒன்று உள்ளது” என்றான் இந்திரசித்து.

“'அயோத்திக்குச் சென்று தம்பி பரதனையும் தாயர் மூவரையும் இதேபோல வெட்டி மாய்க்கப் போகிறேன்” என்று கூறி, அனுமன் காணும்படி அயோத்தி நோக்கி வடதிசை பறந்தான்.

இந்த அதிர்ச்சி தரும் செய்தியும், அஞ்சத்தக்க நிகழ்ச்சிகளும் அனுமனை அலைத்தன; அவனை நிலைகொள்ளச் செய்யவில்லை; தலைவனைக் கண்டு பேசிப் பகைவர் உயிர்களுக்கு உலைவைக்க ஓடினான்; மலை குலைந்தாலும் நிலை குலையாத மன்னன் மகன் மனக்குழப்பத்தில் ஆழ்ந்தான்; ‘இது உண்மை’ என்று கருதி இடரில் விழுந்தான். அரக்கர் மாயைகளை அறிந்த வீடணன், உண்மை அறிய, வண்டு வடிவம் கொண்டு சென்று சீதையைக் கண்டு வந்தான்.

அவளைச் சோகவடிவில் அசோக வனத்தில் முன்பு இருந்த நிலையிலேயே கண்டான்; காற்றுக்கு அசையும் இலை தழைகளைப்போல அவள் உயிர்ப்பு அசைவைக் காட்டியது; அனுமனுக்குச் செல்ல இருந்த உயிர் திரும்பி வந்தது.

‘சீதை சாகவில்லை; அவர்கள் திட்டம் வேகவில்லை’ என்பதை உணர்ந்தனர். ‘திசை திருப்பச் செய்த சூழ்ச்சி இது’ என்பதை அறிந்தனர். அரக்கன் மகன் இந்திரசித்து நிகும்பலை வேள்வி நடந்துவதை அறிந்து, குரங்குப் படைகளோடு சென்று அவனைத் தாக்கினர்; வெண்ணெய் திரளும் போது அவனுக்குத் தாழி உடைந்தது; எடுத்த வேள்வி முற்றுப் பெற வில்லை; நிறைவுரை எழுதுதற்கு முன் இலக்குவன் விட்ட அம்புகளுக்கு அவன் பதிலுரை சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

போரில் தேரை இழந்தான்; படைகள் அழிந்தன; தனித்து நின்று அவன் போர் செய்து பழக்கம் இல்லை; செல்வ மகன்; அவன் கால்கள் செருக்களத்தில் பதியா; மண்ணில் படியா; விமானம் ஏறி விண்ணில் பறந்து மன்னன் இராவணன் முன் சேர்ந்தான்.

தேர்வில் தோற்றுவிட்டுத் தேர்வாளர்களைப் பழிக்கும் மாணவரைப் போல் பகைவர்மேல் பழி போட்டு விட்டுப் பரிதாபகரமாய் நின்றான். படைகள் அழிவு பெற்ற மனக்கலக்கத்தோடு மாரதனான இந்திரசித்து, அழிவின் விளம்பைக் கண்டான்; இது வரை “மூத்தோர் வார்த்தைகள் அர்த்த மற்றவை” என்று அறிவித்த அவன், மனம்மாற்றி வயதுக்கு மீறிய அறிஞனாய்ச் செயல்பட்டான்.

“வறண்ட பாலை வனத்தில் நெற்பயிர்களைத் திரள விளைவிப்பதில் பயனில்லை” என்று கூறினான். பேரழகிற்கு இருக்கும் ஆற்றலைப் பிறழ உணர்ந்து அவர்கள் வேல்விழிக்கு வேந்தர் இரையாகிறார்கள்’ என்று ஒரு சரித்திரம் எழுதத் தொடங்கினான். அந்தச் சரித்திர பாடத்தை நரித்தனம் படைத்த தன் தந்தைக்குச் சொல்லி வைத்தான்; “'உயிர்மேல் உமக்கு ஆசை இருந்தால், இனியாவது உத்தமனாய்ச் செயல்படுக; நெருப்பாகிய அவள்மீது வைத்திருக்கும் விருப்பை விட்டுவிட்டு அவளை அவள் கணவன்பால் அகற்றுக; இதுதான் அறிவுடைய செயல் என்று அந்தச் சரித்திரத்தின் கடைசி வாசகத்தைப் படித்து முடித்தான்.

“அறம் நோக்கி அவளை விட்டுவிடுக என்றான்; நான் மீண்டும் போர்களம் செல்லவில்லையேல், மறம் நோக்கி உலகம் என்னைப் பழிக்கும்.” என்று கூறி, அவன்தன் முடிவை வீரத்தில் எழுதி வைத்து, வேறுவழி இல்லாமல் போர்க்களம் புகுந்தான்.

இந்திரசித்து, மற்றொரு கும்பகருணன் ஆகிப் போர்க்களத்தில் இலக்குவன் அம்புக்கு இரையானான்; அவன் தலையை அறுத்துத் தன்தமையன் இராமன் திருவடிகளில் காணிக்கையாய் வைத்தான் இலக்குவன். இந்திரசித்தன் தறுகண்மை படச் செயல்பட்ட ‘மாவீரன்’ என்ற புகழை நிலைநாட்டினான்; மறவர் வரிசையில் இந்திரசித்து ஒருவனாய் வைக்கப்பட்டான்.

வாய்விட்டு அழுவதற்கு மண்டோதரிக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது; சேர்த்து வைத்த துயரமெல்லாம் ஒப்பாரி வடிவம் பெற்றன. “ஒப்பு யாரும் இல்லாத அந்தச் சீதையால்தான் இந்தக் கதி வந்தது” என்று அந்த ஒப்பாரி சொல்லாமல் சொல்லியது; அவள் சொற்கள் ஈட்டிபோல் இராவணன் நெஞ்சில் பாய்ந்தன; அங்கே மறைந்திருந்த வஞ்சிக்கொடி நினைவில் அவை தைத்தன.

எஞ்சி அவளைக் கொல்ல வாளோடு புறப்பட்ட இராவணனை மகோதரன் தடுத்தான்; “கொட்டிய பாலை எடுக்க முடியாது; வெட்டிய சீதையைத் திரும்பப் பெறமுடியாது, ஒருவேளை போரில் நீ வெற்றி கண்டால் வெறுமை யைத்தான் காண்பாய்; கண்கெட்டபின் கதிரவனை வணங்க முடியாது; சித்திரத்தைச் சிதைத்து விட்டால் வெற்றுச் சுவர்தான் எஞ்சி நிற்கும்” என்று கூறிச் சாம்பல் படிந்த நெருப்பை ஊதிக் கனலச் செய்தான்; ஆசை அவனைத் தடுத்து நிறுத்தியது.

சீதையை அடையவில்லை; அதனால் வந்தது வெறுப்பு: மகனை இழந்தான்; அதனால் நேர்ந்தது பரிதவிப்பு; பகைவன் என்பதால் இராமன்பால் எழுந்தது காழ்ப்பு; அனைத்தும் ஒன்று சேர்ந்து இராவணனை மறுபடியும் போர்க்களத்தில் கொண்டுவந்து நிறுத்தின.

மூலப்படை முழுவதும் நிலைகெட்டு நிருமூலமாகி விட்டன; வானரரைக் களப்பலி இடுதற்கு மண்டோதரி மற்றொரு மகனைப் பெற்றுத்தரவில்லை; கடமை வீரன் கும்பகருணன் மறுபடியும் பிறக்கப் போவதில்லை; இனி யாரை நம்பி இராவணன் வாழ முடியும்?

வீணை வித்தகன்; மத யானைகளை எதிர்த்த½வன்; வேதம் கற்றவன்; சிவனை வணங்கிச் சீர்மைகள் பெற்றவன்; மூவர்களை நடுங்க வைத்தவன்; தேவர்களை ஏவல் கொண்டவன்; களம் பல கண்டவன்; கார் வண்ணனைக் கடும்போரில் நேருக்குநேர் சந்தித்தான்.

இராமன் கூரிய அம்புகள் கம்பன் சொற்களைப் போல, இராவணன் மார்பில் ஆழப்பதிந்தன; தேரும் கொடியும் உடன்கட்டை ஏறின; தோல்வி, முகவரி தேடி முன்வந்து நின்றது; அவதாரப் பணி நிறைவேறிற்று; அரக்கரை அழித்து, அறத்தை நிலை நாட்டினான் இராமன்.

அறம் வென்றது; பாவம் தோற்றது.

இறுதி அவலம்

இராவணன் பரு உடல், பார்மீது கிடந்தது; அவன் ஆருயிர் அனைய மனைவி மண்டோதரி, அவன் உடல்மீது விழுந்து படிந்து, புரண்டு அழுதாள்.

“எள் இருக்கும் இடமும் இன்றிச் சீதையைக் கரந்த காதல் உள்ளிருக்குமோ என்று தடவியதோ இராமன் வாளி” என்று கதறி அழுதாள்.

“வெள்எருக்கஞ் சடைமுடியான் வெற்புஎடுத்த

திருமேனி மேலும்கீழும்

எள்இருக்கும் இடன்இன்றி உயிர் இருக்கும்

இடன்நாடி இழைத்த வாறோ?

கள்இருக்கும் மலர்க்கூந்தல் சானகியை

மனச்சிறையில் கரந்த காதல்

உள்இருக்கும் எனக்கருதி உடல்புகுந்து

தடவியதோ? ஒருவன் வாளி”

என்று ஏங்கினாள்; அவன் உயிரைத் தேடித் தன் உயிரை அனுப்பினாள்; அது திரும்பவே இல்லை.

முடிவுரை

நிகழ்ச்சிகள் வேகமாய்த் தொடர்ந்தன; வீடணன் இலங்கைக்கு ஆட்சிக்கு உரியன் ஆனான்; இலக்குவனைக் கொண்டு இராமன் அவனுக்குப் பட்டம் சூட்டினான்; அனுமன் அசோகாவனத்துக்குச் சென்று, சீதைக்குச் செய்தி சொல்லி, அவள் சோகத்தை மாற்றினான்.

அழைத்துவரப்பட்ட சீதை வரவேற்பில் ஒருதடை ஏற்பட்டது; இராமன் சராசரி மனிதனாய் நடந்து கொண்டான்; சீதையை ஏற்க மறுத்தான்; “பகைவன் பிடியில் இருந்த அவளை மாசுபடிந்தவள் என்று உலகம் நினைக்க வாய்ப்புண்டு” எனக் கருதி அவளை ஏற்கத் தயங்கினான்; “இவளா என் மனைவி?” என்ற நாடகத்தை நடித்துக் காட்டினான்.

இலக்குவன் பதறிப்போனான்; வானவர் அழுது விட்டனர்; பேய்களும் சீதைக்காகக் கண்ணிர் விட்டன.

இராமன், ‘அவள் விரும்பினால் தீக்குளிக்கலாம்’ என்று கூறினான்; அவளை இராவணனே தீண்ட முடியவில்லை; தீமட்டும் எப்படி அவளைத் தீண்டும்? தேர்வில் வெற்றி கண்டாள்; அவள் தூய்மை நிறுவப் பட்டது. “அவள் கற்பில் மாசு ஏற்படவில்லை” என்பதை உலகம் அறியச் செய்தான். இராமன் அதற்கே இந்நாடகத்தை நடத்தினான். பரதன், இராமன் வருகைக்காகக் காத்து இருந்தான்; உயிர்விடுதற்குக் காலம் தாழாமல் இருக்க, நெருப்பை மூட்டி வலம் வந்தான்; உயிர் காக்கும் உறுதுணைவனாய் அனுமன் செயல்பட்டான். குறித்த நேரத்தில் இராமனும் மற்றையோரும் அங்கு வந்து சேர்ந்தனர்; அனுமன் அவசரச் செய்தியாய் முன்வந்து பரதனைச் சந்தித்தான்.

எல்லாம் இனிமையாய் முடிந்தன; அவற்றைச் சொல்லச் சொற்கள் போதா, இதோ கம்பன் கவி!

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த

பரதன்வெண் குடைக விக்க இருவரும் கவரி பற்ற

விரை செறி கமலத் தாள்சேர் வெண்ணெய்யூர்ச் சடையன் தங்கள்

மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மெளலி!

அரியணையை அனுமன் தாங்கினான்; அங்கதன் உடைவாள் ஏந்தினான்; பரதன் வெண்கொற்றக்குடை கவிழ்த்தான்; இலக்குவனும் சத்துருக்கன இளைஞனும் கவரி வீசினர்; திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் மரபில் வந்தவர் எடுத்துக் கொடுக்க, வாங்கி, வசிட்டரே இராமனுக்கு முடி சூட்டினார்.

“தீமைகள் தோன்றுதலைத் தவிர்க்க முடியாது; அவை படைப்பின் செயற்பாடு; என்றாலும் அவை என்றும் நிலைத்துநின்று வெற்றி பெறுதல் இல்லை” என்பது இக்காவியம் தரும் படிப்பினை; வாழ்க உலகெலாம்.

வண்மைஇல்லை ஒர் வறுமை இன்மையால்;

திண்மைஇல்லை நேர் செறுதர் இன்மையால்;

உண்மைஇல்லை பொய்யுரை இல்லாமையால்;

வெண்மை இல்லை பல்கேன்வி மேவலால்