ஐங்குறுநூறு - 2
ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 

ஐங்குறுநூறு - 2


1. ஐங்குறுநூறு - 2
2.பதிப்புரை
3. புறவுரை
4. குறிஞ்சி
    1.அன்னாய்வாழிப் பத்து.
    2. அன்னாய்ப்பத்து.
    3. அம்மவாழிப் பத்து
    4. தெய்யோப்பத்து
    5.  வெறிப்பத்து
    6.  குன்றக்குறவன் பத்து
    7. கேழற்பத்து
    8. குரக்குப்பத்து
    9. கிள்ளைப்பத்து
    10.மஞ்ஞைப்பத்து.

5. பாலை
    1. செலவழுங்குவித்த பத்து
    2.   செலவுப் பத்து
    3.  இடைச்சுரப் பத்து
    4. தலைவி இரங்குபத்து
    5. இளவேனிற் பத்து
    6. வரவுரைத்த பத்து
    7.  முன்னிலைப்பத்து
    8. மகட்போக்கியவழித் தாய் இரங்கு பத்து
    9. உடன்போக்கின்கண்
    10.மறுதரவுப் பத்து.

6.  முல்லை
    1.  செவிலி கூற்றுப்பத்து
    2.  கிழவன் பருவம்பாராட்டுப் பத்து
    3.  விரவுப்பத்து
    4.  புறவணிப் பத்து
    5. பாசறைப்பத்து
    6.  பருவங்கண்டு கிழத்தி யுரைத்த பத்து
    7. தோழி வற்புறுத்த பத்து
    8. பாணன்பத்து
    9.  தேர் வியங்கொண்ட பத்து

7.  வரவுச்சிறப்புரைத்த பத்து
8.  பத்துக்களின் அகராதி
9.  பாடல் முதற்குறிப்பு அகராதி

 


ஐங்குறுநூறு - 2

 

ஒளவை துரைசாமி

 

 

 

நூற் குறிப்பு
  நூற்பெயர் : ஐங்குறுநூறு - 2
  தொகுப்பு : உரைவேந்தர் தமிழ்த்தொகை - 19
  உரையாசிரியர் : ஒளவை துரைசாமி
  பதிப்பாளர் : இ. தமிழமுது
  பதிப்பு : 2009
  தாள் : 16 கி வெள்ளைத்தாள்
  அளவு : 1/8 தெம்மி
  எழுத்து : 11 புள்ளி
  பக்கம் : 8 + 512 = 520
  நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
  விலை : உருபா. 325/-
  படிகள் : 1000
  நூலாக்கம் : பாவாணர் கணினி
  தி.நகர், சென்னை - 17.
  அட்டை ஓவியம்: ஓவியர் மருது
  அட்டை வடிவமைப்பு : வ. மலர்
  அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா
  ஆப்செட் பிரிண்டர்சு
  இராயப்பேட்டை, சென்னை - 14.

பதிப்புரை


ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை
தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார்.

வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.

இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராகவும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந்தராகவும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந்தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை.

“ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு .துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர்
வ.சுப. மாணிக்கம் அவர்களாலும்,

“இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து
வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான்
தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே
முன்கடன் என்றுரைக்கும் ஏறு”

என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம்.
அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம்.
இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி

தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின்
107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள்.

நன்றி
** பதிப்பாளர்**

புறவுரை


மருதம் முதல் முல்லை யீறாக ஐந்து நூறு பாக்களையுடைய இவ்வைங்குறுநூறு நல்லிசைச் சான்றோர் ஐவரால் ஆக்கப் பெற்றது. இதனை,

மருதம் ஓரம்போகி நெய்தல் அம்மூவன்
கருதும் குறிஞ்சி கபிலர் - கருதிய
பாலை ஒதலாந்தை பனிமுல்லை பேயனே
நூலை ஒது ஐங்குறு நூறு.

என்ற பழைய வெண்பா தொகுத்துக் கூறுகிறது. இந்த ஐந்து நூறுகளையும் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்; தொகுப்பித்த வள்ளல் கோச்சேரமான் யானைக்கண் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்னும் சேரமன்னன்.

இவ் வைங்குறுநூற்றில் உள்ள பாட்டுக்கள் யாவும் தமிழ்க்கே சிறப்பாக வுரிய பொருளிலக்கணப் பகுதியில் காணப்படும் அகப்பொருள் நலங்களையே உரைக்கின்றன. அவை களவும் கற்பும் என்ற இருவகை ஒழுக்கங்கள் எனப்படும். ஒழுக்கமாவது மக்கள் இவ்வையத்துள் வாழ்வாங்கு வாழ்தற் பொருட்டுச் செய்வனவும் தவிர்வனவும் இவையெனச் சான்றோர்கள் கண்டு உணர்ந்து உரைத்த அறமாகும். அறங்கூறும் பெருந்தோன்றலாகிய திருவள்ளுவப் பெருந்தகை, களவு என்பது தவிரத் தகுவ தென்பது பற்றிக் கள்ளாமை என எதிர்மறைத் தலைப்பிட்டு அதன் தீமையை விரித்துரைத்தனர்; அற்றாக, அக்களவினைக் கொள்ளத்தக்க ஒழுக்கமாகப் பொருளிலக்கணம் கூறுவது யாங்ஙனம் என ஐயுறுவோரும் உண்டு. ஐயம் அறுப்பது குறித்து அகலவுரை பல வழங்கினோரும் உண்டு.

ஒருவர்க்கு உரிய பொருளை அவர் அறியாதவாறு கவர்ந்துகொள்வது களவு என்பது. வாழ்க்கைத் துணையை நாடிநிற்கும் இளமைச் செவ்விக் கண், இனம் பெருக்கும் உணர்ச்சி, உடலூழாய் நின்று, உயிரறிவைத் தன்னடிப் படுத்தி, உடலின் புறத்தே ஒளியும் அழகும் உறுவித்து நிற்பது உயிர்நூல் காட்டும் உண்மை. இப்பெற்றித் தாய இளமையில் பெண்மகள் ஒருத்தியின் உள்ளத்தை அவளையறியாமல் ஓர் ஆண்மகனும், ஓர் ஆண்மகன் உள்ளத்தை அவனை அறியாமல் ஒரு பெண்மகளும் கவர்ந்து கொள்ளும் செயல் இங்கே களவு என்று குறிக்கப்படுகிறது. நிறையிழந்த சீவகன், “வெஞ்சின வேழமுண்ட வெள்ளிலின் வெறியமாக, நெஞ்சமும் நிறையும் நீல நெடுங்கணால் கவர்ந்த கள்வி” என்பதாகத் திருத்தக்க தேவரும், “பெண்வழி நலனொடும் பிறந்த நாணொடும், எண்வழி உணர்வும் நான் எங்கும் காண்கிலேன், மண்வழி நடந்து அடிவருந்தப் போனவன், கண்வழி நுழையுமோர் கள்வனே கொலாம்” என நிறையிழந்த சீதை கூறுவதாகக் கம்பரும் உரைப்பன மேற்கூறிய பொருளை வற்புறுத்தும்.

தவிரத் தகுவதாகிய களவு, பொருளைக் கவர்ந்தார்க்கும் கவரப்பட்டார்க்கும் இடையே வெறுப்பும் பகையும் விளைத்துத் துன்பத்தைப் பயப்பது போலாது இவ்வுள்ளக் களவு இருவர்க்கும் இடையே உவப்பும் உழுவலன்பும் விளைத்து இன்பமே பயத்தலின் இக்களவு அறமாகவும் ஒழுக்கமாகவும் கருதப்படுகிறது. இக்களவை மேனிகழும் இல்லறமாகிய கற்பறத்துக்கு வழிநிலையெனப் பழந்தமிழ்ச் சான்றோர் கொண்டனர். உள்ளத்தால் காதலுறவு பூண்ட ஒருவனும் ஒருத்தியும் கற்பின்கண் உலகவர் அறியத் தமது காதலைப் புலப்படுத்தி ஒழுகுவர்; களவின்கண் அதனைத் தம்மைப் பெற்றோரும் அறியாதவாறு மறைத்து ஒழுகுதலால், அது களவொழுக்கம் எனப்படுகிறது.

களவுவழித் தோன்றும் கற்புமணம் போல வடநூலாரிடையும் ஒருவகை மணம் உண்டு; அதனைக் காந்தருவம் என்பர். ஒருவரையொருவர் தனித்துக்கண்டு காதலுறவு கொள்ளும் களவு காந்தருவம் போல்வது என்பர். காந்தருவ மணத்தார், ஒருவரையொருவர் கண்டவுடனே கருத்து ஒருமித்துக் காமம் கையிகந்து கூடி மகப் பெற்றுக் கொள்வதும் உண்டு. சுருங்கச் சொல்லின், காந்தருவத்தில் கழிகாம விலங்குணர்ச்சி வீறுகொண்டு விளங்கும். களவின்கண் அறவுணர்வு மேம்பட்டு விளங்க விலங்குணர்ச்சி ஒடுங்கிக் கிடக்கும்; அதனால் அக்காலத்தே மகப்பேற்றுக்குரிய மெய்யுறு புணர்ச்சியோ, மகப்பெறுதலோ இல்லை. மகப்பெறு கூட்டமும் மகப்பேறும் கற்பொழுக்கமாகும்; ஆகவே. களவின்கண் கற்பிற்போல அறிவும் நிறையும் மக்கட் பண்பும் முற்பட்டு நிற்றல் இன்றியமையாததாயிற்று. சகுந்தலையும் துட்யந்தனும் தனித்துக் கண்டு கழிகாமத்துக்கு இரையாகிக் கூடி மகப்பெற்றது காந்தருவத்துக்கு நேரிய எடுத்துக்காட்டு. ஆயிரக்கணக்கில் காணப்படும் பழைய தமிழ் அகப்பொருட்பாட்டுக்களில் களவின்கண் மகப்பேறு நிகழ்ந்ததாக இதுகாறும் ஒன்றேனும் கூறியதில்லை. அதற்குரிய பழைய இலக்கண நூல்களும் ஒரு சிறு குறிப்பும் காட்டவில்லை.

கற்பின்கண் பரத்தையிற் பிரிவு என்பது ஒரு நிகழ்ச்சி; ஒரு காலத்தே அப்பரத்தையர் இருப்பு ஒரு குற்றமாகக் கருதப்படாமல் இருந்தது; இது முன்னுரைக்கண் விளக்கப்பட்டுள்ளது. பொருள் வினை கல்வி ஆகியவை காரணமாகப் பிரிதல் சிறப்புடைய ஆண்மகனுக்குக் கடனாதல் போலப்பரத்தையரிற் பிரிவு கடமையன்று. ஓரொருகால் காதல் சிறப்பது குறித்துத் தலைமகன் பரத்தையரிற் பிரிந்தான் போலக் கூறும் மரபு கற்பனையுலகில் உண்டு. அக்கற்பனை தலைமகனது தலைமை மாண்புக்கு இழுக்காகாது எனக் கொள்க.

இனி இந்நூல் உரையினையும் முன்னுரையையும் நோக்குமிடத்து உரையில் இறைச்சிப்பொருள் காட்டியது வியப்புப் பயக்கும். முன்னுரைக்கண் காணப்படும் ஆராய்ச்சி, உரை முடிந்த பல்லாண்டுகட்குப் பின்பு நிகழ்ந்ததென்பது அறிஞர் உலகுக்கு இதனால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

“ஞாலம் நின்புகழே மிகவேண்டும், தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே”

“அவ்வை” காந்திநகர்

மதுரை 20-10.1958

ஒளவை சு.துரைசாமி.

ஐங்குறுநூற
மூலமும் விளக்கவுரையும்
மூன்றாவது
ஆசிரியர் : கபிலர் பாடிய

குறிஞ்சி


தமிழகத்துப் பொருள் நூல் மரபு வகுத்த நிலப் பாகுபாட்டுள் குறிஞ்சி என்பது ஒன்று; இதன்கண் மலைகளும் அவற்றைச் சார்ந்த நிலப்பகுதிகளும் அடங்கும். “சேயோன் மேய மைவரை யுலகம் 1” என ஆசிரியர் தொல்காப்பியனார் குறிப்பது இக் குறிஞ்சியே. முகில் தவழும் முடிகொண்டு விளங்கும் மலை நாடாகிய குறிஞ்சியை அவர் மைவரை யுலகம் என்று உரைக்கின்றார்.

இக்குறிஞ்சியில் வாழ்பவர் குறவர் எனப்படுவர். மலைமுகடு களிலும் சரிவுகளிலும், மலையைச் சார்ந்த பகுதிகளிலும்விளையும் ஐவனநெல்லும் மூங்கிலரிசியும் இவர் கட்குப்பண்டை நாளில் சிறந்த உணவுப் பொருள்கள். வளவிய இடங்களில் நிற்கும் சந்தனம் தேக்கு முதலிய மரங்களை வெட்டி ஆங்குள்ள காடு
களை யழித்து நிலத்தை உழுது தினைவிதைத் தலும் வள்ளி முதலிய கிழங்குகளைப் பயிர் செய்தலும் அவர்களுடைய உழவுவினை; தேன் அழித்தலும் வேட்டையாடு தலும் அவர்கள் தொழிலாதல் பற்றி அவர்கள் வேட்டுவர் என்றும் கூறப்படுவர். மலைகளிற் காணப்படும் குறிஞ்சி, சந்தனம், தேக்கு, திமிசு, வேங்கை முதலிய மரங்கள் இவர்கள் வாழ்வில் பயன்படுகின்றன. புலியும் யானையும் கரடியும் பன்றியும் பிறவும் இந்நிலப்பகுதியில் வாழும் விலங்குகள்; கிளிவகைகளும் மயில்களும் பிறவும் இங்கே தோன்றும் புள்ளினங்கள் மலைச்சுனைகளும், அருவிகளும், ஆறுகளும் மலைவாழ்பவர்க்கு நீர்நிலைகள். காந்தளும் வேங்கை
யும் சுனைக் குவளையும் பிறவும் இம்மக்கள் விரும்பும் பூக்கள். குறிஞ்சி நிலத்தவர் உறையும் இடங்களில் குறிஞ்சியாழின் இனிய இசை கேட்கப்படும்; தொண்டகம், முருகியம் முதலிய பறை
களின் முழக்கமும் உடன் நிலவுகின்றது. ஊர்கள், குன்றக்குடி, சிறுகுடி யெனவும், கல்லடைக் குறிச்சி 1, வேள்குறிச்சி 2 எனவும் பெயர் பெற்றுள்ளன. சுனைகுடைதலும் அருவியாடுதலும் இம்மக்களது நீர் விளை யாட்டு. இவர்கட்கு வழிபடுகடவுள் முருகன். அவன் இளஞாயிறு போலும் செந்நிறம் உடைய
னாகலின், அவனைச் சேயோன் என்றும், சேய் என்றும் கூறுவர்; தொல்காப்பியரும் அவ்வியல்பு தோன்றவே, “சேயோன் மேய மைவரை யுலகம்” என்று குறித்துள்ளார்.

அகப்பொருள் நெறிக்கண் புலனெறி வழக்கம் செய்த சான்றோர் இப்பகுதிக்குக் கூதிர்க்காலமாகிய பெரும் பொழுதை யும், நள்ளிரவு கொண்ட இடையாமமாகிய சிறுபொழுதையும் வகுத்துள்ளனர். “குறிஞ்சி கூதிர்யாமம் என்மனார் புலவர்” என்பது தொல்காப்பியம். கூதிர் என்றது ஐப்பசியும் கார்த்திகையு மாகிய இரு திங்களுமாகும். அன்பின் ஐந்திணை ஒழுக்கத்துள் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் ஆகிய கால
வொழுக்கம் இக்குறிஞ்சிக்குரியதென அமைத்துள்ளனர். தலைமைப் பண்பு களே உருவாக அமைந்த கட்டிளங்காளை யொருவனும், அவ்வியல்பிற் குன்றாது கற்பும் பொற்புமே வடிவாய் அமைந்த இளநங்கை ஒருத்தியும் ஒருவரை ஒருவர் தனித்துக் கண்டு காதலுறவு கொள்வது இவ்வொழுக்கத்தின் விழுப்பமாகும். இவ்வொழுக்கத்துக்குக் கூதிர்க்காலம் சிறந்
தமையை விளக்கப் புகுந்த நச்சினார்க்கினியர், “இருள் தூக்கித் துளிமிகுதலின் சேறல் அரிதாகலானும், பானாட் கங்குலில் பரந்துடன் வழங்காது மாவும் புள்ளும் துணையுடன் இன்புற்று வதிதலின் காமக்குறிப்புக் கழியப் பெருகுதலானும், காவல்மிகுதி நோக்காது வரும் தலைவனைக் குறிக்கண் எதிர்ப்பட்டுப் புணருங்
கால் இன்பம் பெருகுதலின் இந்நிலத்துக்குக் கூதிர்க்காலம் சிறந்தது எனப்படும்” என்பர்.

இக்குறிஞ்சித்திணை பொருளாக இந்நூற்கண் காணப்படும் நூறு பாட்டுக்களையும் பாடியவர் கபிலர் என்னும் புலவர் பெருமகனாவர். இவையே யன்றி, அகம், புறம், பதிற்றுப்பத்து, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களிலும், பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிலும் இவர் பாடியன உண்டு.

கபிலர், பாண்டிநாட்டு மதுரை நகர்க்குக் கிழக்கில் உள்ள வாதவூரில் பிறந்தவர் என்று வழிவழியாக ஒரு செய்தி நிலவுகிறது. இவரைப் “புலனழுக் கற்ற அந்தணாளன்” எனச் சங்ககாலச் சான்றோர் பாராட்டிக் கூறுவர். இவரே தம்மை, “யானே பரிசிலன் மன்னும் அந்தணன்” என்று தெரிவிக்கின்றார். வாத வூரை அவ்வூர்க் கல்வெட்டுக்கள், தென்பறம்பு நாட்டு வாதவூர் என்று குறிக்கின்றன. பறம்புநாடு அந்நாளில் வேள் பாரிக்கு உரியதாயிருந்தது. கபிலர் அவன்பால் நெருங்கிய நட்புற்று அவன் இறந்தபின் அவன் மக்களைத் திருக்கோவலூர்க்குக் கொண்டு சென்று, அவ்வூரிலிருந்து மலாடு என்ற பகுதியை ஆண்ட மலையமான் திருமுடிக்காரியின் மைந்தர்களுக்குத் திருமணம் செய்து கொடுத்தார். அதற்கிடையே சேரநாடு சென்று அங்கே இருந்து ஆட்சி செய்த செல்வக்கடுங்கோவாழியா தனைச் செந்தமிழால் சிறக்கப் பாடினார்; அவன் அவரது புலமை நலம் கண்டு வியந்து, “சிறுபுறம் என நூறாயிரம் காணம் பொன் கொடுத்து நன்றா என்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான்.” நன்றா என்பது பிற்காலத்தே நணா என மருவித் திருஞானசம்பந்தர் திருநணா என்று பாடும் சிறப்புற்றது; அதனைச் சூழ்ந்த பகுதி கபிலர்க்குக் கொடுக்கப்பட்ட தென்பதற்குச் சான்றாக, அங்கே கபிலக் குறிச்சி என்றோர் ஊரும் இன்றும் உளது. முடிவில், திருக்கோவ லூரில் பாரிமகளிரை மணஞ்செய்து தந்து தமது நட்புக்கடனை ஆற்றி அவ்வூரருகில் ஓடும் பெண்ணையாற்றின் துருத்தியில் வடக் கிருந்து உயிர் நீத்தார். கபிலர் அவ்விடத்தே இப்போது ஒரு பெரிய கற்பாறைதான் உளது. எஞ்சிய மரமும் செடிகளும் மண்ணும் பிறவும் ஆற்றில் கரைந்தொழிந்தன. திருக்கோவலூர்க்கல்வெட்டொன்று இச் செய்தியைச் சிறப்பித்து,

        "மொய்வைத் தியலும் முத்தமிழ் நான்மைத்  

தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன்
மூரிவண் டடக்கைப் பாரிதன் அடைக்கலப்
பெண்ணை மலையர்க் குதவிப் பெண்ணை
அலைபுன லழுவத் தந்தரிட் சம்செல
மினல்புகு விசும்பின் வீடுபே றெண்ணிக்
கனல்புகும் கபிலக் கல்லது 1"

என்று இசைக்கின்றது.

கபிலர், வேள்பாரி இறந்த பின்னர், செல்வக் கடுங்கோ வாழியாதனைச் சென்று கண்டபோது, “மலர்ந்த மார்பின் மாவண் பாரி, முழவுமண் புலர இரவலர் இனைய, வாராச் சேட்புலம் படர்ந்தான் அளிக்கென, இரக்கு வாரேன்” என்று கூறி, “ஈத்தொறும் மாவள்ளியன் என நுவலும் நின், நல்லிசை தர வந்திசினே” என்று உரைத்துள்ளனர். பாரி பிரிந்தமை ஆற்றாது இவர் வருந்திப் பாடிய பாட்டுக்களும், அவன் பெண்மக்களை மணஞ் செய்து கொடுத்தற்காக அவர் செய்த முயற்சியும் புறநானூற்றின்கண் உள்ளன. தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து தனித்தொழுகிய வையாவிக்கோப் 2 பெரும் பேகனை அவன் இருந்த ஆய்க்குடிக்கண் சென்று கண்டு அவள்பொருட்டுத் தகுவன கூறி அவன் மனத்தை அவளொடு கூடி வாழும் வாழ்க்கைக்கண் ஒன்றுபடுவித்த இக்கபிலரது சிறப்பு நினைக்குந் தோறும் இன்பம் தருவதொன்று.

சேரநாட்டு வடபகுதியான ஆரிய நாட்டின்கண் வாழ்ந்த பிரகத்தன் என்னும் ஆரியவரசன் செல்வக்கடுங்கோவின் சிறந்த துணையால் கபிலரைக் கண்டு, தமிழ் எனச் சிறப்பித்துக் கூறப் படும் அகப்பொருள் நலத்தை அறிய விழைந்தானாக, அவன் பொருட்டுக் கபிலர் குறிஞ்சிப் பாட்டு என்ற இனிய நெடும் பாட்டைப் பாடித் தமிழ் ஒழுக்கத்தின் தனிமாண்பினைப் புலப் படுத்தினார். இவருடைய வரலாறு புலமைநலம் ஆகிய இயல்பு களை விளக்கித் தனியே நூல்கள் பல எழுதப்பட்டுள்ளன வாகலின் ஈண்டு விரித்தல் வேண்டாத தொன்று. ஒளவையார் திருவள்ளுவர் முதலியோர் பெயர்களோடு இணைத்து இவரைப்பற்றி யும் பொய்க்கதைகள் பல கூறுவ துண்டு. இக்கபிலர் வேறு, பதினோராந் திருமுறையில் கூறப்படும் கபில தேவர் வேறு; இருவரையும் ஒருவராகக் கருதுபவரும் உண்டு.

இவராற் சிறப்பிக்கப் பெற்ற தலைவர்கள் பலர்; மேலே கூறிய சிலர் போக நள்ளி முதலிய பலருடைய குறிப்புக்கள் இவருடைய பாட்டுக்களிற் காணப்படும்.
கபிலர் பாடிய பாட்டுக்கள் பலவற்றுள்ளும் குறிஞ்சித் திணைப் பாட்டுக்களே பெரும்பாலன. வேறு சிலவும் குறிஞ்சியைச் சார்ந்தனவாகவே இருத்தலால் இவரைக் குறிஞ்சிப் புலவர் என்பது தவறாகாது. குறிஞ்சிக் காட்சிகளில் இவர் பேரீடுபாடு உடையவ ராதலால், அவ்வப்போது கண்ட காட்சி களைத் தாம் பாடும் பாட்டுக்களில் சொல்லோவியம் செய்து நம்மை இன்புறுத்துகின்றார். வாழையும் பலாவும் கனிந்து தேனொழுக நிற்கும் மலைச்சாரலில், தேன் நிறைந்த சுனையை அடைந்து, அது மயக்கந் தரும் என்பதை “அறியாது உண்ட கடுவன் அயலது, கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது, நறுவீ அடுக்கத்து மகிழ்ந்து (கள்மயக்கமுற்று) கண்படுக்கும் 1” என்ப தும், மலைச்சாரலில் அருவி யொலிக்க, மலர்ந்த பூக்களிடத்தே வண்டினம் பாட, மந்தியினம் பார்த்திருக்க மயிலாடுவது கண்ட கபிலர், மயிலை ஒரு விறலியாகவும், அருவி முதலியவற்றை ஆடற் கேற்ப முழங்கும் இன்னியமாகவும் தொடுத்து, “ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கின், கோடை யவ்வளி குழலிசை யாகப், பாடின் அருவிப் பனிநீர் இன்னிசை, தோடமை முழவின் துதைகுரலாகக், கணக்கலை இகுக்கும் கடுங்குரல் தூம்பொடு, மலைப்பூஞ் சாரல் வண்டுயா ழாக, இன்பல் இமிழ்இசை கேட்டுக் கலிசிறந்து, மந்தி நல்லவை மருள்வன நோக்கக், கழைவளர் அடுக்கத்து இயலி ஆடுமயில், விழவுக்கள விறலியின் தோன்றும் 1” என்பதும் படித்து இன்புறற்பாலன வாகும். இவரது குறிஞ்சிக்காட்சியில், யானையொன்று எதிரே தோன்றி, புலி யொடு பொருது அதனைக் கொன்று குருதி படிந்த கோட்டுடன் போந்து தன் பிடியொடு கூடி, வாழைகள் நிறைந்த மலைச்சாரலில் வண்டினம் பாடக் கேட்டு இனிது உறங்குகிறது2. பிறி தோரிடத்தே அருவி நீரிற் பாய்ந்த மந்தியொன்று ஆங்கு மிதந்த பலாப்பழத்தைப் புணையாகக் கொண்டு நீந்திச் சென்று துறை யடைவது கண்டு மகிழ்கின்றோம்.3

இக்குறிஞ்சி நிலத்தில் வாழ்பவர் செயலையும் நம் கபிலர் ஆங்காங்கு நமக்குக் காட்டுவதில் தவறுவதிலர். தன் குட்டியொடு கூடி யிருந்த பெண் பன்றியை வேட்டுவரும் அவருடைய நாய்களும் அணுகாதவாறு பொருது வெருட்டி விட்டு, தனது அப்பெண்பன்றியும் குட்டியும் வேறிடம் பெயர்வித்த ஆண் பன்றி, சிதைந்தோடிய வேட்டுவர் மீளத் திரும்பிவரும் குறு வழியில் நின்று கொண்டிருக்கிறது. அதனைக் கானவன் காணு கின்றான்: அதன்செயல், பகைவர் வருதற்குரிய குறுவழி யில் விலங்கி நின்று மேல்வரும் படைமறவரோடு அஞ்சாது எதிர் நின்று போருடற்றும் தன் தலைவன் செயலை ஒத்திருப்பது கண்டு வியந்து அதனைக்கொல்லாமல் விடுத்துச் செல்கின்றான்4. ஒருகால் கபிலர் கானவனொருவன் எறிந்த கவண்கல் வழியே தமது கட்பார்வையைச் செலுத்துகின்றார்.
“வன்கைக் கானவன், கடுவிசைக் கவணின் எறிந்த சிறுகல், உடுவுறு கணையிற் போகிச், சாரல் வேங்கை விரியிணர் சிதறித் தேன்சிதையூஉப் பலவின் பழத்துள் தங்கும் 5” காட்சி அவரை இன்புறுத்துகிறது. வேட்டுவர் தலைவன் தன் மார்பில் அணிந்த மாலை பூக்கள் உதிர்ந்து வெறிதே கிடந்தசைய வந்து நின்றான். அதனை நோக்கிய கபிலர், “பூச்சோர் மாலை, ஏற்றிமில் கயிற்றின் எழில்வந்து துயல்வர 1” என அக் காட்சியை நம் மனக்கிழியில் எழுதிவிடுகின்றார். இவ்வாறு சொல் நிகழுமிடமெல்லாம் இனிய குறிஞ்சிக்காட்சிகளைக் காட்டும் கபிலர், அவர்களின் நினைவும், சொல்லும், செயலும், எங்ஙனம் இயலுகின்றன என்பதை ஈடும் எடுப்பு மில்லாத இன்சொற்களால் காட்டுகின்றார். அவற்றை இனிவரும் பாட்டுக்களிற் காணலாம்.


அன்னாய்வாழிப் பத்து.

இப்பகுதிக்கண் வரும் ஒவ்வொரு பாட்டும் “அன்னாய் வாழி” யென்ற தொடராலே தொடங்கும் சிறப்புப்பற்றி இஃது இப்பெயர் பெறுவதாயிற்று.

    201.    அன்னாய் வாழிவேண் டன்னை யென்னை  

தானு மலைந்தா னெமக்குந் தழையாயின
பொன்வீ மணியரும் பினவே
என்ன மரங்கொலவர் சார லவ்வே.
இது, நொதுமலர் வரைவின்கட் செவிலி கேட்குமாற்றால் தலைமகள் தோழிக்கு அறத்தொடுநிலை குறித்துக் கூறியது.

உரை :
அன்னாய், இதனை விரும்பிக்கேள்: தலைமகனுடைய மலைச்சாரலி லுள்ளவை எத்தன்மைவாய்ந்த மரங்கள் கொல்லோ கூறுக. அவை அணிவதற் குரிய பூவையுடைமை யான், எம் தலைவனும் அணிந்து கொண்டான்; எமக்கும் அங்ஙன மாயினதோடு அமையாது தழையாகவும் உதவின; அவை பொன்போலும் பூக்களையும் நீலமணி போலும் அரும்புகளையு முடைய வாகும் என்றவாறு.

“அன்னை வாழி வேண்டு அன்னை 2” என்றாற் போல, ஈண்டு அன்னாய் வாழி வேண்டு என வந்தது. “ஐ ஆயாகும் 3” என்றதனால், அன்னை, அன்னாய் என வந்தது. இனி வரு மிடங்களிலும் இதுவே கூறிக்கொள்க. “அன்னை என்னை என்றலும் உளவே 4” என்பதனால், தலைவனை, என்னை, என் றாள்; இது சொல்லினும் எழுத்தினும் தோன்றா மரபிற்றாயினும், “தொன்னெறி முறைமை” பற்றிக் கொள்ளப்படும். என்ன மரங்கொல் என்றது வேங்கை மரத்தைக் கருதி நின்றது. வேங்கை மரம் பொன்னிறமலரும் மணிபோன்ற அரும்பும் உடைத்தாதல், “மன்ற வேங்கை மணநாட் பூத்த, மணியே ரரும்பின் பொன்வீ தாஅய் 1” என்பதனால் அறிக.

என்னை தானும் மலைந்தான் எமக்கும் தழையாயின என்றதனால் தலைவன் பூத்தரு புணர்ச்சி கொண்டதும், தழை யுதவியதும் பெற்றாம். தலைமகள் வேங்கைப் பொழிலகத்தே தலைமகனைத் தலைக்கூடினமை வெளிப்படுப்பாள் போன்று ஏத்தல் என்னும் அறத்தொடுநிலை குறிக்கின்றா ளாகலின், பொன்வீ மணியரும்பின, என்ன மரங்கொல் என்றாள். அறத்தொடுநிலைக்கண் தோற்றுவாயாகத் தலைமகனை வேறு பட நிறுத்தித் தானும் மலைந்தான் என ஒருமை வாய்ப் பாட்டாற் கூறியவள், தழையேற்பித்து உயிரொன்றிய கேள்வ னாயினமை உணர்த்தற்கு அவர் எனப் பன்மை வாய்பாட்டாற் கூறினாள்.

“நாற்றமும் தோற்றமும் 2” என்ற சூத்திரத்து “முன்னிய அறனெனப் படுதல்என்று இருவகைப், புரைதீர் கிளவித் தாயிடைப் புகுப்பினும்” என்ற விடத்து நிகழும் அறத்தொடு நிலையில், இது தழையும் கண்ணியும் தந்தான் என்பதுபடக் கூறியது என இளம்பூரணரும், “தோழி தழை தந்தான் என அறத்தொடு நின்றது 3” என நச்சினார்க்கினியரும் கூறுவர்.

    202.    அன்னாய் வாழிவேண் டன்னை நம்மூர்ப்  

பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்
குடுமித் தலைய மன்ற
நெடுமலை நாட னூர்ந்த மாவே.
இது, தலைமகன் வரைதல்வேண்டித் தானே வருகின்றமை கண்ட தோழி உவந்த உள்ளத்தளாய்த் தலைமகட்குக் காட்டிச் சொல்லியது.

** உரை :**
அன்னாய், இதனை விரும்பிக்கேள்: நம்மூர்க்கண் வாழும் பார்ப்பனச் சிறுவர்களைப் போல மலைநாடனாகிய தலைவன் ஊர்ந்து போந்த குதிரையும் குடுமி பொருந்திய தலையை யுடையன காண் என்றவாறு.
“அன்னை யென்னையென்றலும் உளவே 1” என்பதனால் தோழி தலைவியை அன்னாய் என்றது அமைவதாயிற்று. குடுமித் தலைய என்புழிக் குடுமி, குதிரையின் தலையில் இரு காது கட்கும் இடையே நெற்றியில் வீழும் உளைமயிர். “மானுளை யன்ன குடுமித், தோல்மிசைக் கிடந்த புல்லண லோனே 2” என்று பிறரும் கூறுதல் காண்க.

வரைதல் வேண்டித் தலைமகன் தானே வருகின்றதனை தோழி நேரே கண்டமை தோன்ற, நாடன் ஊர்ந்த மா என்றாள். குதிரையினது நெற்றிமயிர் சிலவாய மயிர் பொருந்திய குடுமியை யொத்தலினாலும், முன் குடுமியை யுடையராதல் பார்ப்பனமாக் கட்கு ஆசாரவிதியாகலினாலும், அதனை யுடைய பார்ப்பனக் குறுமகவை உவமித்துக் கூறினாள்.
திருக்குடந்தைச் சவையப்பநாயனை வைது பாடிய காள மேகப்புலவர், அவன் முன்குடுமி யுடையனாதலைச் சுட்டி, “சொருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா 3” என்று உரைப்பத னால், பிற்காலத்தும் இவ்வழக்காறு இருந்தமை தெளிவாம்.

    203.    அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைத்  

தேன்மயங்கு பாலினு மினிய வவர்நாட்
டுவலைக் கூவற் கீழ
மானுண் டெஞ்சிய கலுழி நீரே.
இஃது, உடன்போய் மீண்ட தலைமகள், “நீ சென்ற நாட்டு நீர் இனிய வல்ல; நீ எங்ஙனம் நுகர்ந்தாய்?” எனக் கேட்ட தோழிக்குச் சொல்லியது.

** பழைய உரை :**
மானுண்டு கழித்த கலங்கற் சின்னீர் அருந்தக் கூடா வாயினும், அருந்தினேனுக்குத் தேன் மயங்கு பாலினும் இனியவாயின என்றது, அவன் நாட்டு நீர் நலமும் அன்புடைமையும் உணர்த்தியவாறு. உவலை, தாழ்வு; கீழ்மையுமாம்.

** உரை :**
அன்னாய், இதனை விரும்பிக்கேள்: அவர் நாட்டிலுள்ள இலைகள் உதிர்ந்து மட்கிய பள்ளத்தின் அடியில் மாவினம் உண்டு கலக்கிக் கழித்த கலங்கற் சின்னீர், நம் பூந்துடவைக்கண் பெறப்படும் தேன் கலந்த பாலினும் இனிமை யுடையவாகும் காண் என்றவாறு.
தம் பொருளாகிய ஆனிரைகட்குரிய உணவுப் பொருள் களைத் தொகுத்துவைத்தற்கும், தம் உணவுக்கு வேண்டிய காய்கறிகளைப் படைத்துக் கோடற்கும் மனைப் புறத்தே அமைத் துள்ள தோட்டக்கால் படப்பை எனப்படும். இக்காலத்தும் வைக்கோற் படப்பை என வழங்குவர். படப்பை, படைப்பை என்பதன் மரூஉ. படப்பையிலுள்ள மரங்களில் கட்டப்பட்ட தேன், படப்பைத்தேன் எனப்பட்டது. மயங்குதல், கலத்தல். பண்டையோர் பாலில் கலந்துண்டது தேனேயன்றி இன்று வழங்கும் சருக்கரை யன்று; “பாலொடு தேன் கலந்தற்று 1” என்பது காண்க. உவலைக்கூவல், தாழ்வான பள்ளம். மா, எருமை முதலிய விலங்குகள். இது “னகரம் ஒற்றும் ஆவும் மாவும்2” என்பதனால் மான் என வந்தது. உண்ண என்பது உண்டு எனத் திரிந்தது. “வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய 3” என்பது காண்க. கலுழி - கலங்கல்.

ஈக்களை வாட்டியும் ஆன்களை மயக்கியும் ஈட்டிய தேனை யும் பாலையும் கலந்துண்டலினும், தம்மிடத்து உளவாகிய பொருள் சிறிதெனினும், அறவோர்க்கு அளித்தல் முதலிய நல்லறத்திற் பகுத்தளித்து எஞ்சியது உண்டல் ஏற்றமுடைத் தாகலின், தேன்மயங்கு பாலினும் இனிய என்றாள்; “உற்றார்க் குரியர் பொற்றொடி மகளிர்” என்பவாகலி னாலும், கற்புடைய மகள் “கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள் 1” என்பவாகலி னாலும், நீ கொடுக்கும் தேன் மயங்குபால் உயர்ந்ததாயினும் எனக்கு இனிதாயிற்றன்று என்றும், அவர் நாட்டில் நீர் அரிதாயினும், அவ் வரிய நீர் தானும் மானுண்டு எஞ்சிய கலுழி நீர் எனினும் உண்டற்கு இனிதெனக் குறிப்பால் உயர்த்தியும் கூறினாள். மானுண்டு எஞ்சிய கலுழி நீர் எனவே, அஃது உண்டற் கேற்றது அன்மை பெறப்படும். “வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில், குளவி மொய்த்த அழுகற் சின்னீர், வளையுடைக் கையள் எம்மொடு உணீஇயர், வருகதில் அம்ம தானே 2” எனத் தலைமகன் நினைந்துரைக்குமாறு காண்க.

“எஞ்சி யோர்க்கும் எஞ்சுதல் இலவே 3” என்பதன் உரையில், இதனைக் காட்டி, “இஃது உடன்போய் மீண்ட தலைவி. நீ சென்ற நாட்டு நீர் இனியவல்லவே, எங்ஙனம் நுகர்ந்தாய் என்ற தோழிக்குக் கூறியது” என்பர் நச்சினார்க்கினியர்.

    204.    அன்னாய் வாழிவேண் டன்னையஃ தெவன்கொல் வரையர மகளிரி னிரையுடன் குழீஇப்  

பெயர்வுழிப் பெயர்வுழித் தவிராது நோக்கி
நல்ல ணல்ல ளென்ப
தீயேன் றில்ல மலைகிழ வோற்கே.
இது வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத் தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

** பழைய உரை :**
நல்லள் நல்லள் என்பது அலர் அறிவுறீஇயது.

** உரை :**
அன்னாய், யான் கூறுகின்ற இதனை விரும்பிக் கேள்: வரையின்கண் வந்து ஆடும் சூரரமகளிரைப் போல் பிற மகளிரெல்லாம் தம்மிற் கூடிக்கொண்டு யான் இயங்குமிட மெல்லாம் ஒழியாது நோக்கி நல்லள் நல்லள் எனப் பல காலும் என்னைக் கூறாநிற்பர். அப்பெற்றியேன், மலைநாட னாகிய தலைமகற்குமட்டில் தீயேனா யிராநின்றேன்; அஃது என்னையோ, கூறுக என்றவாறு.

அஃது என்னும் சுட்டு “மகளிரால் நல்லள் எனப்படும் யான் தலைமகற்குத் தீயேனாயினேன்” என்பது குறித்து நின்றது. “முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே 1” என்பவாகலின், சுட்டு முன்னர்க் கூறப்பட்டது. பெயர்வுழி பெயர்வுழி என்றும், நல்லள் நல்லள் என்றும் நின்ற அடுக்கு ஒருசொல் பலகாலும் நிகழ்தலை உணர்த்தலின், “பொருளொடு புணர்தல்.” தன்னை நல்லள் என்போரும் மிக்க உருவும் திருவுமுடையரே என்றற்கு வரையரமகளிரின் என்றாள். மகளிர் குழீஇய விடத்துப் பெரும்பான்மையும் அலரெடுத் துரைத்தலும், புறங்கூறுதலும் நிகழு மாயினும், இவர் குழுவில் அது நிகழ்தலின்றித் தலைமகள் நலமே இயம்பப் பெற்றமை, மகளிரின் நிரையுடன் குழீஇ என்றதனாற் பெற்றாம். ஏதிலார்க்கு நல்லளாய்த் தோன்றும் யான் தலைமகற்கு அப்பெற்றிய ளல்லே னாயினேன் என்பது ஒழிய நின்றமையின், தில்ல ஒழியிசைக்கண் வந்தது.

பெயரும் இடந்தோறும் என்பாற் கிடக்கும் பெண்மைக் குணமும் பெருங்கவினும் கண்ட மகளிர், அத்துணைச் சிறப் பினைத் தாம் பெற்றிலாமை குறித்துப் பொறாது புறங்கூறற்பால ராயினும், அது செய்யாது புகழ்ந்து பாராட்டுகின்றன ரென்பாள் நல்லள் நல்லள் என்ப என்றும், அவ்வாறே என் நலம் பாராட்டும் பான்மைய னாகிய தலைமகன், அது செய்தற்கு விரைய வந்து கூடானாயினன் என்பாள், மலைகிழவோற்குத் தீயேன் தில்ல என்றும் கூறினாள். ஏனை மகளிர்க்குப் புலனாகி அவராற் சிறப்பிக்கப்படும் எனது நலம் அவற்குத் தீமையாய்த் தோன்றி அவன் என்னை மறக்கச் செய்தது என்பாள் தீயேன் என்றும், அத்தீமைக்குக் காரணம் தனக்குப் புலனாகாமையின், எவன்
கொல் என்றும் கூறுகின்றாள்.

    205.    அன்னாய் வாழிவேண் டன்னையென் றோழி  

நனிநா ணுடைய ணின்னு மஞ்சும்
ஒலிவெள் ளருவி யோங்குமலை நாடன்
மலர்ந்த மார்பிற் பாயல்
துஞ்சிய வெய்யள் நோகோ யானே.
இது, நொதுமலர் வரைவு வேண்டி விட்டுழித் தலைமகட்கு உளதாகிய வருத்தம் நோக்கி, “இவள் இவ்வாறு ஆதற்குக் காரணம் என்னை?” என்று வினவிய செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது.

** உரை :**
அன்னாய், யான் கூறுகின்ற இதனை விரும்பிக்கேள் : என் தோழியாவாள் மிக்க நாணமுடையளாய்த் தாயாகிய நின்னை யும் மிக அஞ்சும் நீர்மையளே யாயினும், மிக்குற்றொழுகும் வெண்மையான அருவிகள் நிறைந்த உயர்ந்த மலைநாட னுடைய அகன்ற மார்பின்கண் கிடந்து பெறும் இனிய உறக்கத்தைப் பெறுதற்கு விரும்பினளாகலான், யான் வருந்துத லல்லது பிறிதொன்றும் செய்யகில்லேனாயினேன் என்றவாறு.
மகளிர்க்கு இயற்கையாக அமைந்த நாணம்அச்சங்களின் அளவினும் இவள்பால் அவை மிக்குள்ளன என்பது கருத்தாதலின் நனி யென்றது பின்னும் கூட்டப்பட்டது. ஒலிவெள்ளருவி என்றவிடத்து ஒலித்தல் மிகுதிப் பொருட்டு; “ஒலிவெள் ளருவி ஒலியில் துஞ்சும் 1” என்றாற்போல. மலர்ந்த மார்பு என்புழி மலர்தல் - விரிதல். “மன்னுக பெருமநின் மலர்ந்த மார்பே 2” எனப் பிறரும் கூறுதல் காண்க. வெய்யள், வேண்டற் பொருட்டாய வெம்மை என்னும் உரிச்சொல் லடியாகப் பிறந்த வினைக் குறிப்பு முற்று. நோகோ யானே என்றது தன்பால் வேறு செயலின்மை தோன்ற நின்றது.
அவட்கு உளதாகிய வேறுபாட்டுக்குரிய காரணத்தை அவளறிய நீ என்னைக் கேட்பினும் பொறாது இறந்து படும் அத்துணைப் பெருநாணமுடையள் என்பாள், நனி நாணுடையள் என்றும், தனக்குற்ற வேறுபாட்டை நீ அறிதற்குப் பெரிதும் அஞ்சுகின்றாள் என்பாள், நின்னும் நனியஞ்சும் என்றும் தோழி கூறினாள். நற்றாயினும் களவின்கண் அருமறை அறிதற்கண் செவிலி சிறந்த தாயாயினும் அவள்பாலும் அதனைப் புலப் படுத்துதற்கு அஞ்சுகின்றாள் என்பதுபட நிற்றலின், உம்மை சிறப்பு; “ஆய்பெருஞ் சிறப்பின் அருமறை கிளத்தலின், தாயெனப் படுவோள் செவிலி யாகும் 1” என ஆசிரியர் உரைப்பது காண்க.

பஞ்சியும் மலரும் பரப்பிய மெல்லணையில் கிடப்பினும், மகளிர்க்குக் காதலன் மார்பிற் கிடந்து உறங்குதலில் வேட்கை மிக்கிருக்கு மென்பது பற்றி, மலர்ந்த மார்பிற் றுஞ்சிய வெய்யள் என்றாள். “இன்றுயில் மார்பிற் சென்ற வென் நெஞ்சே 2” என்றும், “மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ 3” என்றும் பிறரும் கூறுதல் காண்க. ஒலிவெள் ளருவி ஓங்குமலை நாடன் என்றது புனல்தரு புணர்ச்சி கூறியவாறு. ஓங்குமலை நாடன் என்பது ஏத்தல்; ஒலிவெள்ளருவி என்பது குறிப்பால் ஏதீடும், துஞ்சிய வெய்யள் என்றது வேட்கையுரைத்தலுமாம்.

நனி நாணுடைமையும், பேரச்சமுடைமையும், அவள் தான் உற்றது உரைக்க லாகாவகைத் தடுத்தலால், அவள் பொறாது கலக்குற்று வேறுபடுவது கண்டு யான் ஆற்றே னாயினேன் என்பாள், நோகோ யானே என்று தோழி கூறினாள். நொதுமலர் வரைவு வேண்டி விட்டமையின் பெருநாணும், அதனால் உளதாகும் ஏதம்பற்றி அச்சமும் உடைமையால் மேனி வருந்திக் காட்டினாள் என்று செவிலிக்கு விடையிறுத்தவாறு. நாடன் மார்பில் துஞ்ச விரும்புதலை நாணாலும் அச்சத்தாலும் பிறர்க்கு உணர்த்தலாகாமை கூறி அறத்தொடு நின்றவாறு; “நோயலைக் கலங்கிய மதனழி பொழுதின், காமஞ் செப்பல் ஆண்மகற் கமையும், யாமே, பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்க, ………. என்ன மகன்கொல் தோழி 4” எனத் தலைவி கூறுமாற்றாலும் இக்கருத்து உணரப்படும்.
“முன்னிலை அறனெனப் படுதல்என்று இருவகைப், புரைதீர் கிளவித் தாயிடைப் புகுப்பினும் 5” என்றவிடத்து நிகழும் அறத்தொடுநிலை வகையில் இது தோழி தலைவியது வேட்கை கூறியது என்பர் இளம்பூரணர்.

    206.    அன்னாய் வாழிவேண் டன்னை யுவக்காண் மாரிக் குளத்துக் காப்பா ளன்னன் தூவலி னனைந்த தொடலை யொள்வாட்  

பாசி சூழ்ந்த பெருங்கழல்
தண்பனி வைகிய வரிக்கச் சினனே.

இஃது இரவுக்குறிக்கண் தலைமகன் வந்து குறியிடத்து நின்றமை அறிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது.

** உரை :**
அன்னாய், யான் கூறுகின்ற இதனை விரும்பிக் கேள் : மழை பெய்ய நிறைந்த குளத்தின் கரைக்கண் நின்ற காவ லாளனை ஒப்பான் ஒருவன், மழைநீரால் நனைந்த தூக்கிட்ட ஒள்ளிய வாளைத் தூக்கிப் பாசிகள் சூழ்ந்த பெரிய கழ லணிந்து, தண்ணிய பனியால் இறுகிய வரிந்து கட்டப்பட்ட கச்சுடையனாய் வாராநின்றான்; உங்கே அவனைக் காண் பாயாக என்றவாறு.

உவக்காண் என்பது ஒட்டி நின்ற சுட்டிடைச்சொல் என்பர் பரிமேலழகர் 1. இடைவிடா மழையால் நீர் நிறைந்த குளம் என்றற்கு மாரிக்குளம் என்றார். கரை உடைந்து ஏதம் விளை வியாமைப் பொருட்டுப் பண்டை நாளில் குளங்கட்குக் காவலர் களை நிறுவுவது மரபு; “தொழின்மழை பொழிந்த பானாட் கங்குல், எறிதிரைத் திவலை தூஉஞ் சிறுகோட்டுப், பெருங்களங் காவலன் போல 2” என்று சான்றோர் குறித்தல் காண்க. காப்பாள், காப்பு, காவல்; “வாய் காவாது பரந்து பட்ட, வியன்பாசறைக் காப்பாள 3” எனப் பிறரும் கூறுப. தூவல் - மழைத்துளி. தூக் கிட்டுத் தோளிடைக் கோத்துப் பக்கத்தே தொங்கும் வாளைத் தொடலை வாள் என்றார். “கல்லும் மரனும் துணிக்கும் கூர்மைத் தொடலை வாளர் 4” என்று சான்றோர் கூறுவதனால் தொடலை வாளின் இயல்பு உணரப்படும். குளங்காவல் புரியுமிடத்துக் கரையிடை உடைப்புத் தோன்றின் கல்லும் மரமும் துணித்து உடனே அடைத்தற்கு ஏற்புடை மையின், தொடலை வாள் வேண்டப்பட்டது. உயிர் கொடுத்துப் புகழ்கொள்ளும் மற மாண்புடைய ஆடவர் கழல் அணிதல் மரபு.

காப்பாளன்னன், வாளைத்தூக்கி, கழல்யாத்துக் கச்சினனாய் வாராநின்றான் என ஒருசொற் பெய்து முடிக்க.

இரவுக்குறிக்கண் வருவான் வழியில் உளவாகும் ஏதங் கருதி வாளும், வினைசெய்யும் தொழிலராய ஆடவர்க் கியல்பாகலின் கழலும், செலவு மேற்கொண்டமையின் கச்சும் உடையனா கலின், அவற்றை அணிந்து தோன்றும் காப்பாளோடு உவமித்துக் காப்பாளன்னன் என்றாள். வினையில் வழி வாளை உறையிற் பெய்து தூக்கிட்டிருத்தலினாலும், மழைக்கண் நனைந்துளா னாகலினாலும், தூவலின் நனைந்த தொடலை ஒள்வாள் என்றும், நெறியிடை நின்ற நீர்க்கண் படர்ந்த பாசி வருமவன் கழலிற் பிணைந்து அறுபட்டமையின், பாசி சூழ்ந்த பெருங்கழல் என்றும் கூறினாள். மழையால் நீர்நிறைந்து நிற்கும் குளத்தின் கரையைக் காத்தற்பொருட்டுச் செல்லும் காவலனை யொப்பான் என்றதனால், இவனும் தன்பால் காதல் சிறந்திருக்கும் காதலியின் உயிர்க்காவற் பொருட்டு மழையால் நனைந்து வருகின்றான் எனத் தலைவியின் பொருட்டு வந்தமையும், அவள் அவனை இன்றி யமையாமையும் குறிப்பால் உணரக் கூறினாளாயிற்று.

இனி, மாரிக் குன்றத்துக் காப்பாளன்னன் என்றும், பாசி தூர்ந்த என்றும் பாடமுண்டு. மழையால் நனைந்த குன்றம் போலும் தோற்றத்தையுடைய காப்பாள் என்றும், பாசிகள் சூழ்ந்து அடையப்பட்ட அரும்புகளை யுடைய கழல் என்றும் முறையே பொருள் உரைத்துக் கொள்க. அதனால் சிறப்புடைய பொருட்பேறு இன்மை உணர்க. தோழி தலைவியை அன்னை என்றல் அமையும் என்றற்கு நச்சினார்க்கினியர் இதனைக் காட்டுவர். 1

    207.    அன்னாய் வாழிவேண் டன்னை நன்றும்  

உணங்குவ கொல்லோநின் றினையே யுவக்காண்
நிணம்பொதி வழுக்கிற் றோன்றுமவர்
மணிநெடுங் குன்றம் மழைதலை வைத்தே.

இது, ‘மழை யின்மையால் தினை யுணங்கும்; விளைய மாட்டா; புனங் காப்பச் சென்று அவரை எதிர்ப்படலாம்’ என்று எண்ணியிருந்த இது கூடாதாயிற்று என வெறுத்திருந்த தலை மகட்குத் தோழி சொல்லியது.

** உரை :**
அன்னாய், இதனை விரும்பிக்கேள்: அவர்தம் நீலமணி போலும் நெடிய குன்றம் மேகங்கள் தன் முடியிலே படியக் கொண்டு, நிணம் மிக்க ஊன்தடிமேல் பொதிந்து மூடிய வழுக்குப் போலத் தோன்றுதலைக் காண்பாயாக. அதனால், நின் தினை பெரிதும் உணங்கமாட்டா. “உணங்கு மாகலின் அவரை எதிர்ப்பட லாகாது’ என எண்ணி வருந்துதல் ஒழிக என்றவாறு.

** கொல்: **
அசைநிலை. ஓகாரம்: எதிர்மறை. நன்றும் உணங்குவ கொல்லோ என்றது, சிறுபான்மை உணங்கினும் மழை வந்தபின் அவை பெரிதும் தழைக்கும் என்பது உணர நின்றது. வழுக்கு - கொழுவிய ஊன்றடிமேல் வெண்ணெய் போலப் படிந்து தோன்றுவது. இதனை ஊன் என்றும் கூறுவர். மணியுடைமையே யன்றி மணியின் நிறமும் உடைமைபற்றி மணிநெடுங்குன்றம் என்றார். மணிநிற மால்வரை எனப் பிறாண்டும் 1 கூறுப. ஏனை வருமிடங்களினும் கூறிக் கொள்க.

யான் காக்கும் இத்தினை மழையின்மையால் உணங்கா நின்றன வாகலின், தினைக்காவலொழிந்து மீள மனைக்குச் சென்று செறிப்புண்டு தலைமகனை எதிர்ப்படும் திறத்தை இழப்பே மாயினோம் எனத் தலைமகள் வருந்திக் கூறியதனைக் கொண் டெடுத்து மொழிதலின், தோழி, நின் தினை உணங்குவ அல்ல என்றாள். உணங்கின போலத் தோன்றினும், அங்கே மலை முடியில் மழைமுகில் படிதலின், இனிவரும் மழையால் பெரிதும் தழைத்தல் ஒருதலை என்றற்கு நன்றும் என்று சிறப்பித் தாள். அண்மையில் தோன்றுதல் பற்றி மணிநெடுங் குன்று என்றவள், அதன் முடியில் படிந்து தோன்றும் வெண்மையும் கருமையுங் கலந்த கார் முகிலைக் காட்டி, மழைதலை வைத்துத் தோன்றும் என்று உரைத்தாள். வெயிற்படாமல் நிழலிடைப் பொதிந்து வைத்த நிணமிக்க ஊன் வெள்ளிய வழுக்குப் படிந்து தீ நாற்றம் கமழ்ந்து தோன்றுமாறு போல, மணிக்குன்று கார்முகில் படிந்து மழைக்காற்று வீசநின்றது என்றும், எனவே இனி மழை வருதல் ஒருதலை என்றும் வற்புறுத்தியவாறாயிற்று. வழுக்கினைக் கூறியது - கூதிர்க்காலத்து மழை முகில் என்றற்கு.

மழைமுகிலை முடியில் தாங்கித் தோன்றும் நெடுங் குன்றம் வழுக்குத் தோன்றிய நிணம்போலத் தோன்றினாற் போல, உணங்கித் தோன்றிய தினை, தலைமகனை எதிர்ப்படல் அருமை போல நினக்குக் காட்டிற்று என்றும், அவர் நெடுங்குன்றம் மழைமுகிலை முடிமேற்கொண்டு மழை வரவினை வற்புறுத்துவ தனால், நின் காதலர் நின்பால் நிறைந்த காதல் கொண்டு ஒழுகுவராதலின், எவ்வழியும் நீ அவரைத் தலைப்பட்டு இன் புறுதல் ஒருதலை என்றும் உள்ளுறுத் துரைத்தவாறு.
உணங்கல கொல்லோ என்றும், மழைதலை வைத் தவர் மணிநெடுங் குன்றே என்றும் பாடமுண்டு. உணங்கல கொல்லோ என்பதற்குக் கொல்லும், ஓவும், அசைநிலை எனக் கொள்க.

    208.    அன்னாய் வாழிவேண் டன்னை கானவர் கிழங்ககழ் நெடுங்குழி மல்க வேங்கைப்  

பொன்மலி புதுவீத் தாஅமவர் நாட்டு
மணிநிற மால்வரை மறைதோ
றணிமலர் நெடுங்க ணார்ந்தன பனியே.
இது, செவிலிக்கு அறத்தொடு நின்ற தோழி, அவளால் வரைவு மாட்சிமைப்பட்ட பின்பு, இவள் இவ்வாறு பட்ட வருத்தமெல்லாம் நின்னின் தீர்ந்தன என்பது குறிப்பாய்த் தோன்ற அவட்குச் சொல்லியது.

** பழைய உரை:**
கிழங்கு அகழ்குழி நிறைய வேங்கைமலர் பரக்கும் என்றது, கொள்வார்க்குப் பயன்பட்டுத் தமக்கு வந்த குறையைத் தம் புகழ் நிறைக்கும் பெருமையுடையர் என்பதாம்.

** உரை :**
அன்னாய், குறவர் கிழங்கு எடுத்தற்பொருட்டுக் கல்லிய நெடிய குழிகள் நிறைய வேங்கையின் பொன்போலும் புதிய பூக்கள் சென்று படியும் அவருடைய நாட்டின்கண் நிற்கும் நீலமணியின் நிறங்கொண்ட பெரிய மலை மறையுந்தொறும் அழகிய பூக்கள் போலும் நீண்ட கண்கள் நீர்சொரிந்தன என்றவாறு.

குறிஞ்சிநில மக்களைக் கானவர் என்பதும் வழக்கு. மலை நாட்டவர் வள்ளிக்கிழங்கு பயிர்செய்பவ ராதலின், அதற் கென்று வகுத்த குழியைக் கிழங்கு அகழ் நெடுங்குழி என்றார். வேங்கையின் பூ பொன்னிறத்தது. “வேங்கைச் சேணெடும் பொங்கர்ப் பொன்னேர் புதுமலர், வேண்டிய குறமகள் 1” என்று சான்றோர் குறிப்பது காண்க. மலை நாடுகளில் பகற்போதில் மழைமுகில் படிந்து மலைமுகடு தோன்றாதவாறு மறைப்பது இயல்பு. காதலர்க்குரிய இடமும் பொருளும் காணின், அவை அவரைக் கண்டாற் போலும் இன்பம் செய்வதுபற்றி, மறைந்த வழித் துன்பம் உண்டாவதாயிற்று என உணர்க. “உள்ளாராயினும் உளனே அவர்நாட்டு……. நெடும்பெருங் குன்றத்துப், பாடின் னருவி சூடி, வான்றோய் சிமையம் தோன்ற லானே 2” என்று பிறரும் உரைப்பது காண்க.

மணிநிற மால்வரையைக் காணுந்தோறும், அதனை உடைய தன் காதலனைக் கண்டாற்போலத் தேறி இன்புற்றாள் என்றற்கு, மால்வரை மறைதோறு, அணிமலர் நெடுங்கண் ஆர்ந்தன பனியே என்று கூறினாள். “அவர் நாட்டுக்குன்றம் நோக்கினென் தோழி, பண்டை யற்றோ கண்டிசின் நுதலே 3” என்று தலைவி கூறுதல் காண்க. துன்பத்தின் நீங்கியோர், மகிழுங்கால், அத் துன்பநிலை கூறி மகிழ்வ ராகலின், ஈண்டும் வரைவு மாட்சிமைப் பட்டமையால் மகிழ்ச்சியுறும் தோழி, அது நிகழ்வதன் முன் தலைவி வருந்திய செயலினை, மால்வரை மறைதோறு, அணிமலர் நெடுங்கண் ஆர்ந்தன பனியே என்றாள். “விரவும் பொருளும் விரவும் என்ப4” என்பதனால் நிகழ்ந்தது கூறி இன் புறுதல் கொள்க.

கானவர் கிழங்கு அகழ்தற்பொருட்டு எடுத்த குழி நிறைய வேங்கையின் மலர்கள் பரக்கும் என்றது, தலைமகனது நட்பின் பொருட்டு இவள் எய்திய வருத்தமெல்லாம் நின் முயற்சியால் வரைவு மாட்சிமைப்படுதலின் இன்பமாய் நிறைவதாயிற்று என உள்ளுறை கொள்க.

    209.    அன்னாய் வாழிவேண் டன்னை நீமற்  

றியானவர் மறத்தல் வேண்டுதி யாயின்
கொண்ட லவரைப் பூவி னன்ன
வெண்டலை மாமழை சூடித்
தோன்றலா னாதவர் மணிநெடுங் குன்றே.
இது வரைவிடை வைத்துப் பிரிவின்கண் அவனை நினைவு விடாது ஆற்றாளாகியவழி, ‘சிறிது மறந்து ஆற்ற வேண்டும்’ என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

** பழைய உரை:**
வேண்டலை மாமழை சூடித் தோன்றல் ஆனாது என்றது, மழை பெய்தற்குக் கால்வீழ்ந்த இருட்சியால் மறையப்பெறாது விளங்கித் தோன்றுதலை நோக்கி எனக் கொள்க.

** உரை :**
அன்னாய், யான் கூறுகின்ற இதனை விரும்பிக் கேள்: யான் அவரைச் சிறிது மறந்து அமைதல் வேண்டும் என்று கூறுகின்றனை யாயினும், கீழ்க்காற்று வீசுதலால் மலரும் அவரைப் பூவைப் போல வெண்மையான உச்சியினையுடைய பெரிய முகில் தவழும் முடியையுடையதாய் மணிநிறங் கொண்ட குன்றம் தோன்றுதல் அமையாது; ஆகலின், யான் அவரை மறக்குமாறு யாது? கூறுக என்றவாறு.

என்றது, நீ கூறினும், யான் மறக்கவொண்ணாதவாறு மணி நெடுங்குன்றம் தோன்றி அவர் வரவு நினைப்பித்தலின், யான் மறக்ககில்லேன் என்றவாறாம்.
கொண்டல் - கீழ்க்காற்று. அது வீசும் பனிக்காலத்தில் அவரை பூக்குமாகலின், ‘கொண்டல் அவரை’ என்றார். “பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகால், கொழுங்கொடி அவரை பூக்கும், அரும்பனி அற்சிரம் வாரா தோரே 1” என்றும், “அவரைப் பைம்பூப் பயில அகல்வயல், கதிர்வார் காய்நெல் கட்கினிது இறைஞ்சச், சிதர்சினை தூங்கும் அற்சிரம் 1” என்றும் வருதல் காண்க. அற்சிரம் - பனிக்காலம்.

செய்தற்குக் கூடாத ஒன்றினைச் செய்தல் வேண்டும் எனப் பணிக்கின்றாய் என மறுக்கும் குறிப்புத் தோன்ற, ‘அன்னாய் வாழி வேண்டு அன்னை’ எனத் தலைவி தோழிக்குக் கூறு கின்றாள். யான் அவரை மறத்தல் வேண்டும் என்று நீ கூறுவதனை உடன்படுகின் றேன் என்பாள், நீமற்று யான் அவர் மறத்தல் வேண்டுதி என்று அவள் கூறியதனையே கொண்டெடுத்து மொழிந்தாள். கூற்றவண் இன்மையின் கொண்டெடுத்து மொழி யும் கூற்றன்மையின் குறிப்பு வேறு என்பதுபட ஆயின் என்றும், அவ்வாறு மறத்தல் கைகூடுவது அவர் மணிநெடுங்குன்று தோன்றாது மறையினன்றோ? மற்று, அது மறையாது தோன்றா நிற்கின்றதுகாண் என்பாள், தோன்றல் ஆனாது என்றும், வெண்டலை மாமழை கூடி அதனை மறைத்தற்கு முயன்றும், அவர் குன்றம் தனது நெடுமையால் மறையாது என்பாள், நெடுங்குன்று என்றும் கூறினாள்; என்றது, மறத்தல் வேண்டும் என நீ எனக்கு உரைப்பது, மணிநெடுங்குன்றத்தைத் தோன்றாத வாறு மறைக்க முயல்வது போலும் என்றாளாம்.

மறுத்தல் வேண்டும் என்ற பாடத்துக்கு, யான் அவர்வரின், கொள் ளாது மறுத்தல் வேண்டும் என்பா யாயின் என்று கூறிக் கொள்க.

    210.    அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைப்  

புலவுச்சேர் துறுக லேறி யவர்நாட்டுப்
பூக்கெழு குன்ற நோக்கி நின்று
மணிபுரை வயங்கிழை நிலைபெறத்
தணிதற்கு முரித்தவ ளுற்ற நோயே.
இது, காப்புமிகுதிக்கண் தலைமகள் மெலிவுகண்டு தெய் வத்தினானாயிற் றென்று வெறியெடுப்புழித் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.

** பழைய உரை:**
புலவுச்சேர் துறுகல் என்றது, யாவும் தெய்வத்தினான் ஆயின என்று மறி முதலாயின கொன்று புலவு நாறும் நம் குன்று என்பதாம்.

** உரை :**
அன்னாய், இதனை விரும்பிக்கேள்: நம் படப்பைக்கண் மறி முதலியவற்றைக் கோறலால் புலால் கமழும் துறுகல்லின் மேல் ஏறி, அவர் நாட்டின்கண் உள்ள பூக்கள் பொருந்திய குன்றத்தை நோக்கி, நீலமணிபோல விளங்கும் இழையை யணிந்த இவள் நிற்கும் நிலை பெறின், இவளுற்ற நோய் தணிதற்கும் உரியதாகும் என்றவாறு.

என்றது, குன்றம் நோக்குந்தோறும் அது தனக்குரிய தலை வனை நினைப்பித்து அவனைக் கண்டாற் போல்வதோர் மகிழ்ச்சி எய்துவித்தலின், காப்புமிகுதியால் அது பெறாது வருந்துகின்றாள்; அவள் அக்குன்றம் நோக்குமாறு காப்பு நெகிழ்விப்பின், மெலிவு நீங்கி நோய் தணிவள் என்பதாம். எனவே, குன்றின் சாரலில் அதன் தலைவனொடு இவள் தலைப்பெய்தமை யுடைமை கூறி அறத் தொடு நின்றாளாம்.

படப்பை - தோட்டத்தின் ஒரு கூறு. படப்பைக்கண் துறுகல் உண்மை, “துறுகல் நண்ணிய கறியிவர் படப்பைக், குறியிறைக் குரம்பை நம்மனை 1” என்பதனால் அறிக. படப்பைக்கண் குன்றவர் கூடி வேலை நட்டு நெடுவேளைப் பரவுங்கால், மறி முதலாயினவற்றைத் துறுகன்மேல் நிறுத்திக் கொல்பவாதலின், புலவுச்சேர் துறுகல் என்றார். நிற்ப எனற்பாலது நின்று எனத் திரிந்தது; “வானின் றுலகம் வழங்கி வருதலால் 2” என்றாற்போல. தலைமகட்கு உண்டாகிய மெலிவைப் புலப்படுத்திய சிறப்புத் தோன்ற வயங்கிழை என்றார். மறி முதலியவற்றின் உயிர் காக்கப்படுதலே யன்றி இவளது நோய் தணிதற்கும் என நிற்றலின், உம்மை எச்சப்பொருட்டு. “மறியுயிர் வழங்கா அளவைச் சென்று யாம் செலவரத் துணிந்து 3” எனப் பிறாண்டும் தோழி கூறுமாறு காண்க.

நீ நினைக்குமாறே வெறியெடுத்தலால் இவள் உற்ற நோய் ஒருகால் தணிதலேயன்றி அவர் நாட்டுக் குன்றம் நோக்கி நிற்பினும் தணியும் என்பதுபட உம்மை நின்றது எனினுமாம். இழை மணி போல் வயங்குதல், “மணியுரு விழந்த அணியழி தோற்றம், கண்டே கடிந்தனம் செலவே 1” என்று பிறர் கூறுமாற்றானும் உணர்க.

தலைமகள் இற்செறிப்புண்டு காப்புமிகுதியால் தலை மகனை எதிர்ப்பட இயலாது வருந்துதலை உட்கொண்டு செவிலி அயிராமைப் பொருட்டு நம் படப்பை என்றும், வழிபாட்டுக்கு ஆகாது யாம் ஏறி விளையாடுதற்குரிய துறுகல் என்பாள், புலவுச்சேர் துறுகல் என்றும், ஏறி நின்று நோக்குவ தொன்றே வேண்டுவது, அது நீ எடுக்கும் வெறிக்கு இடையூறன்று என்பாள், நோக்கி நிற்ப என்றும், மணி யுரு விழந்து கையினும் தோளினும் நில்லாது இழைகள் கழன்று ஓடுமாறு மெலிவுற்ற தலைமகட்கு அது நோய்தணி மருந்தாம் என்பாள், வயங்கிழை நிலைபெறத் தணிதற்கும் உரித்து அவள் உற்ற நோய் என்றும் கூறினாள். அவர்நாட்டுப் பூக்கெழு குன்றம் என்றது, தலை மகட்குத் தலைவனொடு உளதாகிய பூத்தரு புணர்ச்சி புலப்படுத்தவாறு. இஃது ஏதீடு.

குன்றம் நோக்கி நிற்பவே, அது நோய்தணிதற்கு உரித்து என்றதனால், செவிலி தலைமக்களிடை நட்புண்மை யுணர்ந்து நற்றாய் முதலியோர்க்கு அறத்தொடு நிற்பாளாவது பயன். இது வேட்கையுரைத்தல்.


அன்னாய்ப்பத்து.

இப்பகுதிக்கண் வரும் பாட்டுக்கள் இறுதியில் அன்னாய் என்னும் சொற்கொண்டு முடிதலின் இஃது இப்பெயர்த்தாயிற்று.

முன்னது பாட்டின் முதற்கண் நின்ற தொடர்பற்றிப் பெயர் கொண்டாற்போல, இது பாட்டின் இறுதிக்கண் நின்ற சொற் பற்றிப் பெயர் கொண்டது.

அன்னை என்பது, “ஐ ஆயாகும்” என்றதனால் அன்னாய் என நின்றது.

    211.    நெய்யொடு மயக்கிய வுழுந்துதூற் றன்ன  

வயலையஞ் சிலம்பின் றலையது
செயலையம் பகைத்தழை வாடு மன்னாய்.
இது, தலைமகன் ஆற்றாமை கண்டு கையுறை ஏற்ற தோழி தலைமகள் தழை ஏற்க வேண்டிக் கூறியது.

** உரை :**
அன்னாய், நெய்பெய்து துவைக்கப்பட்ட உழுந்தின் மணிபோன்ற வயலைக்கொடி படர்ந்த மலைமுடியின்கண் தழைத்த அசோகின் தளிரால் தொடுக்கப்பட்ட பகைத்தழை இனி வாடுமாகலின், ஏற்றருள்க என்றவாறு.

உழுந்துதூறு என்றது - உழுந்தின் காயை உலர்த்தித் துவைத்து எடுத்து தூற்றப்பட்டது. தூறப்பட்டது தூறு, மணியினை நெய் பெய்து மயக்கியவழி நிறமும் ஒளியும் பெறுதலின், நெய்யொடு மயக்கிய உழுந்து தூறு என்றும், வயலை படர்ந்த நிலம் நெய்யொடு மயக்கிய உழுந்தினைப் பரப்பியது போறலின், நெய்யொடு மயக்கிய உழுந்துதூற் றன்ன என்றும் கூறினார். வயலைக்கொடி செந்நிறத்த தாகலின், செறிந்து விளங்கும் அதன் கரிய இலைகளும் வெள்ளிய பூக்களும் கொள்ளப்படும். இவை தம்மில் விரவிப் படர்ந்து தோன்றும் காட்சிக்கு நெய் பெய்து பரப்பிய உழுந்தின் தூறு உவமமாயிற்று.

வயலைக்கொடி படர்ந்த சிலம்பின் உச்சியின்கண்ணதாய செயலைத்தழை நாம் பெறற் கரிதாயினும், பெற்றவழி அணியாது விடின், அது வாடிப் பயனின்றாம் ஆதலால் ஏற்றருள்க என்பாள், செயலையம் பகைத்தழை வாடும் என்றாள். பகைத்தழை என்றற்கு மேலே கூறினாம் 1. சிலம்பின் தலையிடத்த தாய்ப் பெறுதற்கு அரிதுமாய தழையை எளிதிற் பெறத் தந்தமை யால், இஃது ஏற்கற்பால தென்றாளுமாம். அரிதிற் பெறற்பாற்றாய தழையை யாம் தேடி வருந்தாவகையில் தானே எளிதில் தந்தான் என்றதனால், வரைவு வேண்டியவழித் தமர் மறுத்தல் முதலிய அருமைசெய்து அலைப்பினும், வென்றி பெற முயன்று வரைந்து கொள்ளும் தாளாண்மையன் என்று தலைவனது உரனுடைமை சுட்டியவாறு. அன்றியும், வயலைச் சிலம்பின் தலையதாகிய செயலைத்தழை என்றதனால், நாம் பேணி வளர்க்கும் வயலை, தன் அடிக்கண் வளர நின்றமையின் செயலையின் தழையை வாடவிடுதல் நமக்கு அறமன்று எனத் தோழி கூறினாளாயிற்று.

மறைந்தவ ளருகத், “தன்னொடும் அவளொடும் முன்னமுன் தளைஇப், பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கின் 1” என்பதற்கு இதனை எடுத்துக்காட்டுவர் இளம்பூரணர்.

உழுந்து தூற்றன்ன என்ற பாடத்துக்கு உழுந்தினது தூறு போன்ற வயலைக்கொடியின் தூறுகள் நிறைந்த சிலம்பு என்றுரைப்பினும், நெய்யொடு மயக்கிய என்பது இயையாமை காண்க.

    212.    சாந்த மரத்த பூழி லெழுபுகை  

கூட்டுவிரை கமழு நாடன்
அறவற் கெவனோ நாமகல் வன்னாய்.
இது, வரைவு எதிர்கொள்ளார் தமர் அவண் மறுத்த வழித் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.

** பழைய உரை :**
சாந்தமரத்தின் இடை நிலத்து உளவாகிய அகில் சுடுபுகை அச் சந்தனப்பூ நாற்றத்தோடு கமழும் நாடன் என்றது, தனக்கு வந்த வருத்தம் பாராது தனக்குத் துணையாயினார் நலத்தொடுங் கூடி எல்லார்க்கும் பயன்பட ஒழுகும் ஒழுக்கத்தை உடையான் என்பதாம்.

** உரை:**
அன்னாய், சந்தனமரத்தின் இடைநிலத் துளவாகிய அகிலைச் சுடுதலால் எழும் புகை அச் சந்தனப் பூவின் நாற்றத் தோடு கூடி மணம் கமழும் நாடன் அறவோனாகலின், நாம் அவன் பொருட்டு மகட்கொடை மறுத்தல் என்னையோ? கூறுக என்றவாறு.

பூழில் - அகில். “சாந்தம் பூழிலொடு பொங்குநிரை சுமந்து 2” என வருதல் காண்க. அறவன் - வாய்மை ஆகிய நல்லற முடையன். “ஒண்செங் காந்தள் அவிழும் நாடன், அறவ னாயினும் 3” என்றார் பிறரும். அகல்வு - ஈண்டு மறுத்தற்கண் வந்தது.

நாடன் தங்கட்கு உண்டாய இடையூறுகளைக் களைந்து தனது நட்பினைத் தந்தனன் எனக் குறிப்பால் ஏதீடு கூறி அறத் தொடு நிற்கின்றானாகலின், தோழி தலைவனை அறவன் என்றும், அறவோர்க்கு அளித்தல் முறைமையாக, மறுத்தல் முறையன்று என்பாள் நாம் அகல்வு எவனோ என்றும் கூறினாள்.

சந்தனச் சோலையிடையே எரிக்கப்பட்ட அகிற்புகை சந்தனத்தின் மணம் கலந்து கமழும் நாடன் என்றது, மலைச் சாரலில் மதக்களிறு வென்று வந்தவன் அது கண்டு வெருவிய எம்மைத் தலையளித்த உரவோனாவன் என உள்ளுறையால் ஏதீடு கூறினாள் என்றவாறு.

    213.    நறுவடி மாஅத்து மூக்கிறு புதிர்ந்த  

ஈர்ந்தண் பெருவடுப் பாலையிற் குறவர்
உறைவீ ழாலியிற் றொகுக்குஞ் சாரல்
மீமிசை நன்னாட் டவர்வரின்
யானுயிர் வாழ்தல் கூடு மன்னாய்.
இது, வரைவொடு வருதலைத் துணிந்தான் என்பது தோழி கூறக்கேட்ட தலைமகள் சொல்லியது.

** பழைய உரை :**
மாவின் மூக்கிற்று உதிர்ந்த வடுக்களை ஆலி போலத் தொகுக்கும் நாட்டையுடையார் என்றது, விரும்புவன வற்றுக்குத் தாமாக முயலாது பெற்றுழிப் பேணும் இயல்புடையார் என்றவாறு.

** உரை :**
அன்னாய், நறிய வடுக்கள் நிறைந்த மாமரத்தின் காம்பு அற்று உதிர்ந்த, மிகக் குளிர்ந்த, பெரிய வடுக்களைப் பாலை நிலத்து இயங்கும் குறவர் மழையொடு வீழும் ஆலிபோலத் தொகுக்கும் சாரலையுடைய மிக உயர்ந்த நல்ல நாட்டினை யுடையவர் வரைவொடு வருதல் துணிந்தாலன்றி யான் உயிர்வாழ்தல் கூடாது என்றவாறு.

மாவின் வடு, மாவின் முற்றாத காய். இது வடுயென்றும் வழங்கும். “நறுவடி மாஅத்து விளைந்துகு தீம்பழம் 1” என்பது காண்க. மூக்கு - காம்பு; “பெண்ணைத் தேனுடை யழிபழம்…… மூக்கிறுபு, அள்ளல் இருஞ்சேற் றாழப் பட்டென 2” எனப் பிறரும் கூறுதல் காண்க. மீமிசை, “ஒருபொரு ளிருசொற் பிரிவில வரையார் 1” என்பதனால் அமைந்தது. பாலையாவது முல்லை யும் குறிஞ்சியும் காலத்தால் இயல்பழிந்து வேறுபட்ட நிலம்; “முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து, நல்லியல் பழிந்து நடுங்குதுய ருறுத்துப், பாலை யென்பதோர் படிவம் கொள்ளும் 2” என்பது காண்க. நன்னாட்டவர் வரின், யான் உயிர்வாழ்தல் கூடும் என்றது, தலைமகன் வரைவொடு வருதல் அறிந்தமை உணர நின்றது.

உள்ளுறையால் தலைவனது காதல் மாண்பினைக் கூறுகின்றா ளாதலின், அவன் வரைவு துணிந்தமை கேட்டு யான் உயிர் வாழ்தல் கூடும் என்றாள்.
மாவினின்றும் தாமாக உதிர்ந்த மாவடுக்களைக் குறவர் ஆலிபோலத் தொகுத்துக்கொள்ளும் நாட்டவராதலின், என்னின் நீங்கித் தானாகச் சென்று வீழ்ந்த நெஞ்சினைப் பெரும்பேறாக ஏற்றுக்கொள்வர் என்பது உள்ளுறை.

    214.    சாரற் பலவின் கொழுந்துணர் நறும்பழம்  

இருங்கல் விடரளை வீழ்ந்தென வெற்பிற்
பெருந்தே னிறாஅல் கீறு நாடன்
பேரமர் மழைக்கண் கலிழத்தன்
சீருடை நன்னாட்டுச் செல்லு மன்னாய்.
இது, தலைமகன் ஒருவழித் தணப்பல் என்று கூறியவதனை அவன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.

** பழைய உரை :**
பலவின்பழம் பிறர்க்குப் பயன்படாது கல்லளையில் வீழ் கின்றுழி அவ்விடத்து உளதாகிய தேனிறாலினையும் சிதைக்கும் என்றது, தன்னாற் பெற்ற நலம் எங்கள் இயற்கை நலத்தினையும் சிதைக்கின்றது என்பதாம். இது கேட்டுக் கடிதின் வரைவானாவது பயன்.

** உரை :**
அன்னாய், மலைச்சாரலில் நின்ற பலாமரத்தினது கொழு விய துணர்களின் இடையே பழுத்த நறிய பழம் பெரிய கற்களின் பிளப்பிடை உளதாகிய அளையின்கண் வீழ்ந்த தாகப் பாறையிற் கட்டப்பட்ட தேனடை சிதைந்து தேன் சொரியும் நாடன், பெரியவாய் மதர்த்துக் குளிர்ந்த நின் னுடைய கண்கள் நீர் சொரியத் தன் விழுப்பம் அமைந்த நல்ல நாட்டுக்குச் செல்லுவானாயினன் என்றவாறு.

சாரலிடத்தே கொழுவிய துணரிடையே விளைந்த நறுவிய பழம் யார்க்கும் பயன்படாவகையில் ஒழிந்தமை உணர்த் தற்கு இருங்கல் விடரளை வீழ்ந்தென என்றார். “மாச்சினைச் சிறந்த கோண்முதிர் நறும்பழம், விடரளை வீழ்ந்துக் காங்குச் சேணும் சென்றுக் கன்றே 1” எனப் பிறரும் கூறுதல் காண்க. ஏனை மரங்களிற் காணப்படும் தேனடையினும் மலைத் தேனடையில் தேன் மிக்கிருத்தல் பற்றிப் பெருந்தேன் எனப் பட்டது. பேரமர்க்கண் - மழைக்கண் என இயையும். மதர்த்துக் காதிற் குழையொடு பொரும் கண் என்பது பற்றிப் பேரமர்க் கண் என்றார் என்றலும் ஒன்று. சீர் - செல்வத்தால் உளதாகும் விழுப்பம்.

தலைமகன் சிறைப்புறத்தான் ஆயினமை அறிந்து அவன் கேட்குமாறு கூறுதலின், கவவிய கை சிறிது நெகிழினும் ஆற்றாத பெருமென்மையளாகிய நீ, கண்கள் நீர்சொரியப் பிரிவது நன்றன்று என்பாள், பேரமர் மழைக்கண் கலிழ என்றும், தான் உள்வழித் தன் உயிர் போல் உடனிருத்தற்குரிய நின்னைப் பிரிந்து தன்னூர்க்குச் செல்கின்றான் என்றற்குத் தன் சீருடை நன் னாட்டுக்குச் செல்லும் என்றும் கூறினாள். தலைவன் செல்லும் ஊரைச் சீருடை நன்னாடு என்று சிறப்பித்தாள், அவன் பிரிவால் தலைவி பசப்பும் மெலிவும் எய்திச் சீரும் நன்மையும் இழந்து வருந்துவள் என்பதை உள்ளுறைக்கண் கூறுதலின். பலவின் நறும்பழம் விடரளையில் வீழ்வது தேன் இறாலைச் சிதைக்கும் என்றதனால், தலைமகன் பிரிவு தலைமகளது மேனிநலம் சிதை விக்கும் என உள்ளுறை கொள்க. பழைய வுரைகாரர்க்கும் இதுவே கருத்தாதல் அறிக.

    215.    கட்டளை யன்ன மணிநிறத் தும்பி  

இட்டிய குயின்ற துறைவயிற் செலீஇயர்
தட்டைத் தண்ணுமைப் பின்ன ரியவர்
தீங்குழ லாம்பலி னினிய விமிரும்
புதன்மலர் மாலையும் பிரிவோர்
அதனினும் கொடிய செய்குவ ரன்னாய்.
இஃது இரவுக்குறி நயந்த தலைமகள் பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லியது.

** உரை :**
அன்னாய், தட்டையும் தண்ணுமையுமாகிய கருவிகளின் பின் வாச்சியக்காரர் இசைக்கும் தீவிய குழலாகிய ஆம்ப லினும் இனியவாய்ப் பொன்னுரை கல்போலும் நீல மணி யின் நிறத்தையுடைய தும்பிகள் ஒலிக்கும் புதல்கள் மலரும் மாலைக்காலத்திற் பிரியாமையைக் கருதாது பிரிவோர் அம்மாலையினும் வருத்துவனவற்றைச் செய்வாராகலின், சிறியவாய் நெருங்கிய துறைக்கண் நீ செல்வாயாக என்றவாறு.
பொன் உரைத்த கட்டளைக்கல் போல வரிகள் கிடந்த சிறகுகளை உடையவாதல் பற்றித் தும்பியைக் கட்டளை யன்ன தும்பி யென்றும், அக்கட்டளைக்கல்லின் நிறத்தினும் தும்பியின் நிறம் நீலம் கலந்துள்ளமை பற்றிக், கட்டளை யன்ன என்றதோடு ஒழியாது மணிநிறத் தும்பி என்றும் கூறினார். “அம்ம வாழியோ மணிச்சிறைத் தும்பி 1” என்றும், “நறுந்தா தாடிய தும்பி பசுங் கேழ்ப், பொன்னுரை கல்லின் நன்னிறம் பெறூஉம் 2” என்றும், “காந்த ளூதிய மணிநிறத் தும்பி 3” என்றும் கூறுப பிறரும். “முதலும் சினையுமென் றாயிரு பொருட்கும், நுதலிய மரபின் உரியவை யுரிய 4” என்றதனால், கட்டளையுவமை தும்பிக்கும், மணியுவமை நிறத்துக்கும் உரிய வாக்கிக் கொள்க. தட்டை யாவது “மூங்கிலைக் கணுக்கண் உள்ளாக நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசைஉண்டாக ஒன்றிலே தட்டுவதோர் கருவி”5 இட்டிய என்றது சிறுமை உணர்த்தும் சொல்; “ஆகாறு அளவு இட்டிது ஆயினும் 6” என்றாற் போல.

புணர்ந்தோர் பூ மகிழ்ந்தணியப் பிரிந்தோர் வருந்த வருத்தும் இயல்பிற்றாகலின், மாலைப்போது பிரிவுக்கு ஆகாமை தோன்ற, மாலையும் பிரிவோர் என்றும், நாம் நயந்து குறித்த இரவுக்குறி ஒழித்துப் பகற்குறி வேண்டி வந்துழி, நாம் கூடேமாயின், இரவின்கண் உறக்கமின்மை முதலியவற்றைச் செய்து வருத்துவர் என்பாள், அதனினும் கொடிய செய்குவர் என்றும் கூறினாள். தும்பி இமிரும் புதன்மலர் மாலையும் பிரிவோர் என்றது இன்பத்தை வெறுத்தல்.

    216.    குறுங்கை யிரும்புலிக் கோள்வ லேற்றை  

நெடும்புதற் கானத்து மடப்பிடி யீன்ற
நடுங்குநடைக் குழவி கொளீஇய பலவின்
பழந்தூங்கு கொழுநிழ லொளிக்கும் நாடற்குக்
கொய்திடு தளிரின் வாடிநின்
மெய்பிறி தாத லெவன்கொ லன்னாய்.
இது, வரைவு நீட ஆற்றாளாகிய தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி கூறியது.

** பழைய உரை :**
புலியேற்றை பிடி யீன்ற குழவியைக் கொள்ள வேண்டிக் காலம் பார்த்து மறைந்திருக்கும் நாடன் என்றது, தன் வஞ்சனை யாலே நின் பெண்மையை வௌவுகின்றான் என்பதாம்.

** உரை :**
அன்னாய், குறுகிய முன்கால்களையுடைய பெரிய புலி யின் கொலைத்தொழிலில் வல்ல ஆண், நெடிய புதர்கள் நிறைந்த கானத்தில் மடப்பம் பொருந்திய பிடியானை யீன்ற அசைந்த நடையினையுடைய கன்றினைக் கோடற்பொருட்டுப் பலாமரத்தின் பழங்கள் நாலுகின்ற கொழுவிய நிழலில் ஒளித்திருக்கும் நாடன்பொருட்டு, நீ கொய்திடப்பட்ட தளிர் போல் வாட்டமுற்று மேனி வேறுபடுதல் என்னையோ? கூறுக என்றவாறு.

புலியின் ஆணை ஏற்றை என்றார்; “ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற் கெல்லாம், ஏற்றைக் கிளவி யுரித்தென மொழிப 1”, “குறுங்கை யிரும்புலிக் கோள்வல் ஏற்றை, பூநுத லிரும்பிடி புலம்பத் தாக்கித், தாழ்நீர் நனந்தலைப் பெருங்களி றடூஉம் 1” என வருதல் காண்க. பின்கால்களினும் முன்கால் குறுகி யிருத்தல் பற்றிக் குறுங்கை எனப்பட்டது. “குறுங்கை யிரும்புலி பொரூஉம் நாட 2” எனப் பிறாண்டும் கூறுப. இளம்பிடியின் கன்று உடல் வளவிதாதலின், மடிப்பிடி யீன்ற குழவி என்று சிறப்பித்தார். யானையினத்துக்கு இயல்பாதல் தோன்ற நடுங்குநடைக் குழவி என்றார். நடுங்குதல் - அசைதல். பலவின் பழம் கருதி மடப்பிடி கன்றொடு வருமென எண்ணி அப்பலாவின் கொழுவிய நீழற்கண் புலி ஒடுங்குமென அறிக.

கொய்திட்ட தளிர் மரத்திற் பிரிக்கப்பட்டமையால் பசை குன்றி வாடுதல் போல, தமரிற் பிரித்துத் தானும் வரையாது நீட்டித்துத் தங்குகின்றான் எனச் சிறைப்புறத்தானான தலைமகன் கேட்க உரைத்தலின், கொய்திடு தளிரின் வாடி என்றும், மெய் வேறுபட்டவழிப் பிறர் அலர் கூறிப் பழிப்ப ரென்பது தோன்ற மெய் பிறிதாதல் என்றும் தோழி கூறினாள்.

மெய்பிறிதாதல் என்றது உண்டியிற் குறைதல், உடம்புநனி சுருங்கல் முதலியனவாம். தான் வரைவு நீட்டித்தலால் நீ மெய் வேறுபட்டு வருந்துதலை அறிந்து விரைந்து போந்து வரை யானாய்த் தனக்கு வேண்டிய நலமே விரும்பி யொழுகுவான் ஒரு நன்மையும் புரியானாகலின், அவனை நினைந்து நிற்றலிற் பயனின்று என்பாள் எவன்கொல் என்றாள்.

புலியேற்றை மடப்பிடியின் கன்றினைக் கோடற்குப் பல வின் கொழுநிழற்கண் ஒளித்திருக்கும் என்றதனால், தலைமகன் நின் பெண்மைநலம் கவர்தலைக் கருதிக் களவே விரும்பி யொழுகுகின்றான் என உள்ளுறுத்து உரைத்தா ளாயிற்று. இது உவம மருங்கில் தோன்றும் துனியுறு கிளவி. பழைய வுரை காரர்க்கும் இதுவே கருத்தாதல் அறிக.

“நாற்றமுந் தோற்றமும் 3” என்ற சூத்திரத்து, “செங்கடு மொழியாற் சிதைவுடைத் தாயினும், என்புநெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ, அன்புதலை அடுத்த வன்புறைக் கண்ணும், என்புழி,”அன்புதலை அடுத்த வன்புறையாவது தலைவன் இன்றியமையான் என ஆற்றுவித்தல்" என்று கூறி, அதற்கு இதனை மேற்கோளாகக் காட்டுவர் இளம்பூரணர்.

    217.    பெருவரை வேங்கைப் பொன்மருள் நறுவீ  

மானினப் பெருங்கிளை மேய லாரும்
கானக நாடன் வரவுமிவண்
மேனி பசப்ப தெவன்கொ லன்னாய்.

இது, வரைவிடைவைத்துப் பிரிந்த தலைமகன் மீட்சி உணர்ந்த தோழி ஆற்றாளாகிய தலைமகட்குச் சொல்லியது.

** பழைய உரை :**
இவண் என்றது இவ்விடத்து என்றவாறு. வேங்கைப் பூவை மானினம் ஆரும் என்றது. அவன் மனைப் பெருஞ்செல்வம் நின் கிளையாகிய நாங்களும் நின்னோடு நுகர்வேம் என்பதாம்.

** உரை :**
அன்னாய், பெரிய மலைக்கண் நின்ற வேங்கை மரத்தின் பொன்போலும் நறுவிய பூக்களை மானினங்களின் பெரிய சுற்றம் பலவும் மேய்ந்துண்ணும் கானத்தை யுடைய நாடன் இவ்விடத்து வந்தானாகவும், நீ நின் மேனி பசலை பாய்ந்து நிற்றல் என்னை? என்றவாறு.

பொன்மருள் நறுவீ என்றவிடத்து மருள் உவமஉருபு. “வேங்கைப் பொன்மருள் நறுவீ கல்மிசைத் தாஅம் 1” எனப் பிறரும் கூறுதல் காண்க. மானினம் என்றதனோடு பெருங்கிளை யென மிகுத்தது, மான்திரளே யன்றி ஏனை அதன் இனமாய விலங்குகளையும் அகப்படுத்து நின்றது. “பசித்த ஆயத்துப் பயனிரை தருமார், பூவாட் கோவலர் கொய்துகட் டழித்த வேங்கை 2” என்பது காண்க. மேயலாரும் என்றது ஒரு சொல் லாய் மேயும் என்பது பட வந்தது. வரவும்: உம்மீற்று விரைவுப் பொருட்கண் வந்த வினையெச்சம். இவண் என்னாது, இவள் என்று கொள்ளின், தோழி செவிலிக்கு உரைப்பதாய் அகப் பொருள் நெறிக்கு மாறுபடும் என அறிக.

நாடன் வரின் மகிழ்ந்து உவக்கும் பான்மையை ஆகிய நீ பசந்து மெலிதல் ஆகாது என்பாள், மேனி பசப்பது எவன் கொல் என்றாள். இதனால் தலைவி ஆற்றாளாயினமையும், கானக நாடன் வரவும், இவண் என்றதனால் தலைவன் வந்தமையும் கூறினாளாம். மேனி பசப்பதெவன் என்றது பசலைபாய்தல். வரவும் என்றது அவன் வாராத காலத்தின் நீட்டம் உணர நின்றது.

வேங்கையின் பொன் மருள் பூவினை மானினத்தின் பெருங் கிளை மேயும் என்றது, தலைமகன் வரவால் வரைவு மாட்சிமைப் படுதல் கண்டு நின் கிளையேமாகிய யாங்கள் இன்புறாநின்றேம் எனத் தோழி கூறியவாறு. இஃது இனிதுறு கிளவி.

    218.    நுண்ணேர் புருவத்த கண்ணு மாடும்  

மயிர்வார் முன்கை வளையுஞ் செறூஉம்
களிறுகோட் பிழைத்த கதஞ்சிறந் தெழுபுலி
எழுதரு மழையிற் குழுமும்
பெருங்கன் னாடன் வருங்கொ லன்னாய்.

இது, தலைமகன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அது கேட்டு, “இஃது என்னாங் கொல்” என்று ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி தனக்கு நற்குறி செய்யக் கண்டு “கடிதின் வந்து வரைவான்” எனச் சொல்லியது.

** பழைய உரை :**
தன்னாற் கொள்ளப்பட்ட களிறு தப்பினதற்குப் புலி கதம் சிறந்து குழுமும் என்றது, நினைத்தவற்றிற்குக் குறை வரின் அதற்கு வெகுண்டு முடிப்பான் என்றவாறு.

** உரை :**
அன்னாய், நுண்ணியவாய் அழகு பொருந்திய என் புருவத்தையுடைய கண் துடித்தலினாலும், மயிர் ஒழுகிய முன்கைக்கண் அணிந்த வளைகள் நெகிழாது செறிதலி னாலும், களிற்றினைக் கொள்ளுமிடத்து வழுவியவதனால் சினம் மிக்கு எழுந்த புலி, எழுகின்ற மேகங்களைப் போல முழங்கும் பெரிய மலைநாடன் வருவா னாகலின், நீ வருந்துதல் ஒழிவாயாக என்றவாறு.
மகளிர்க்கு இடக்கண் துடித்தல் நன்னிமித்த மாகலின், கண்ணும் ஆடும் என்றார்; “பல்லியும் பாங்கொத்து இசைத்தன, நல்லெழி லுண்கணும் ஆடுமா லிடனே 1” என்றும், “பூங்கண் இடமாடுங் கனவுந் திருந்தின, ஓங்கிய குன்றம் இறந்தாரை யாம் நினைப்ப, வீங்கிய மென்றோள் கவினிப் பிணிதீரப், பாங்கத்துப் பல்லி படும் 2” என்றும் சான்றோர் கூறுதல் காண்க. கண்ணு றுப்புப் புருவத்தையும் உளப்படுத்தி நிற்றலின் புருவத்த கண் என்றார். கண்ணாடுதலாவது, புருவம் துடித்தல். வளைசெறிதலும் நன்னிமித்தமே யாம்; “சுரிவளை பொலிந்த தோளும் செற்றும், வருவர்கொல் வாழி தோழி 3” எனச் சான்றோர் உரைப்பது காண்க. வருங்கொல் என்புழிக் கொல் என்பது அசைநிலை.

களிறு கோடலிற் பிழைபட்ட புலி சினஞ்சிறந்து முழங்கும் என்பது, “களிற்றிரை பிழைத்தலின் கயவாய் வேங்கை, காய்சினம் சிறந்து குழுமலின் வெரீஇ, இரும் பிடி யிரியும் 4” என்பதனாலும் அறிக. தமர் வரைவு மறுத்தமை அறிந்து கண் கலுழ்ந்து மேனி மெலிந்து ஆற்றாளாகிய தலைமகட்கு, உள்ளுறையால் தலைவ னது ஆண்மை நலம் கூறி ஆற்றுவிக்கின்ற தோழி, தன் கண் துடித்துக் காட்டினமையும், வளை செறிந்தமையும் ஆகிய நன் நிமித்தம் தோன்றுவது கூறுவாள், கண்ணும் ஆடும், வளையும் செறூஉம் என்றும், இவ்வாற்றால் தலைமகன் போந்து வரைந்து கோடல் ஒருதலை என்பாள் பெருங்கல் நாடன் வரும் என்றும் கூறினாள்.

இனி, “நாற்றமும் தோற்றமும் 5” என்ற சூத்திரத்து, “அவன் வரைவு மறுப்பினும்” என்புழி இதனைக் காட்டி, இது தமர் வரைவு மறுத்துழி ஆற்றாத தலைவிக்குத் தோழி தீய குறி நீங்கித் தனக்கு நற்குறி செய்யக் கண்டு ‘கடிதின் வரைவர்’ எனக் கூறியது என்பர் நச்சினார்க்கினியர்.

    219.    கருங்கால் வேங்கை மாத்தகட் டொள்வீ  

இருங்கல் வியலறை வரிப்பத் தாஅம்
நன்மலை நாடன் பிரிந்தென
ஒண்ணுதல் பசப்ப தெவன்கொ லன்னாய்.
இது, வரைவிடைப் பிரிந்த அணுமைக்கண்ணே ஆற்றா ளாகிய தலைமகட்குத் தோழி கூறியது.

** பழைய உரை :**
வேங்கைமலர் அகலறையிலே பரக்கும் நாடன் என்றது, நம் பொல்லா ஒழுக்கம் மறைய நல்லொழுக்கம் நமக்கு உதவும் நன்மையை யுடையான் என்பதாம்.

** உரை :**
அன்னாய், கரிய காலினையுடைய வேங்கையின் கரிய புறவிதழையுடைய ஒள்ளிய பூக்கள் பெரிய மலையின் அகன்ற பக்கமலையின்கண் உதிர்ந்து பரந்து அழகு செய்யும் நல்ல மலைநாட்டினையுடையவன் பிரிந்தானாக, பிரிந்த அணிமைக் கண்ணே நீ ஒள்ளிய நுதல் பசந்து காட்டுதல் என்னையோ? கூறுக என்றவாறு.
வேங்கைமரத்தைக் கருங்கால் வேங்கை என்பது பெரு வழக்கு, “சுரும்புண விரிந்த கருங்கால் வேங்கை 1” என்பர். தகடு, இதழ்; “கருந்தகட்டு உளைப்பூ மருது 2” என்பதனால் அறிக. “அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை, மாத்தகட்டு ஒள்வீ 3” எனப் பிறாண்டும் இவரே கூறுதல் காண்க. வியலறை, அகன்ற கற்பாறை.

வரைவிடைவைத்துப் பிரிந்தோன் தன் செய்வினை முற்றி வருதற்குள், அவன் தெளித்த சொல்லைத் தேறி இராது பிரிவுள்ளி மேனி வேறுபடுதல் நன்றன்று என்பாள், ஒண்ணுதல் பசப்பது எவன்கொல் என்றாள். நன்று, புறத்தார்க்குப் புலனாகி அல ராகாமை. நுதல் பசப்ப என்றது, பசலைபாய்தல்.

வேங்கையின் மலர் வியலறைக்கண் பரக்கும் என்றது, நீ பசப்பது புறத்தார்க்குப் புலனாகி ஊரெங்கும் அலராய் விடும் எனத் தோழி உள்ளுறுத்து உரைத்தவாறு காண்க. பழைய வுரைகாரர், இவ்வுள்ளுறையைத் தலைமகன் மேலேற்றி, வேங்கையின் ஒள்வீ வியலறைக்கண் பரப்பது போலத் தான் நின்னை வரையுமாற்றால் தன் பெருமை நலம் ஊரறியச் செய்வன் என்ற கருத்துப்பட உரைத்தார்.
இது வரைவிடை வைத்துப் பிரிந்துழித் தலைவி ஆற்றாமை கண்டு தோழி கூறியது; இது குறிஞ்சியுட் பாலை என்பர் நச்சினார்க்கினியர் 1.

    220.    அலங்குமழை பொழிந்த வகன்க ணருவி  

ஆடுகழை யடுக்கத் திழிதரு நாடன்
பெருவரை யன்ன திருவிறல் வியன்மார்பு
முயங்காது கழிந்த நாளிவள்
மயங்கிதழ் மழைக்கண் கலிழு மன்னாய்.
இது நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத் தொடு நின்றது.

** பழைய உரை :**
அலங்குமழை பொழிந்த அகன்கண் அருவி ஆடுகழை அடுக்கத்து இழிதரும் நாடன் என்றது, இவள்மேல் வைத்த தண்ணளி நம்மிடத்தும் வந்து இடையறாது ஒழுகும் என்றவாறு.

** உரை :**
அன்னாய், அசைகின்ற மழை பொழிய வந்த அகன்ற இடத்தையுடைய அருவி, ஒலிக்கின்ற மூங்கில் வளர்ந்த மலைப் பக்கத்தே ஒழுகும் நாடனுடைய பெரிய மலைபோன்ற, திரு வீற்றிருந்த வெற்றி பொருந்திய அகன்ற மார்பை முயங்காது கழிந்த நாள்களில் அதனையே நினைந்து இவள் இணை யொத்த மலரிதழ் போலும் குளிர்ந்த கண்கள் நீர் சொரியா நிற்கும்காண் என்றவாறு.

மழைமுகில் காற்றில் மிதந்து வருவதாகலின், அலங்குமழை எனப்பட்டது. பொழிந்த என்னும் பெயரெஞ்சு கிளவி காரியத் தின் மேனின்றது. பெருவரை யன்ன மார்பு, திருவிறல் மார்பு, வியன்மார்பு என இயையும். உயர்வு, அகலம், திண்மை, முதலிய பேரியல்புகளால் சிறந்த மலைகளை விறன்மலை 2, விறல் வரை 3 என்பது பற்றி, அவ்வியல்புகளால் ஒத்த தலைமகன் மார்பினைப் பெருவரை யன்ன திருவிறல் வியன்மார்பு என்று சிறப்பித்தார்; தலைமக்கள் மார்பு திருவீற்றிருக்கும் சிறப்புக் கருதி இவ்வாறு கூறினார் என்றலும் ஒன்று. திருத்தக்கதேவர், “திருவீற் றிருந்த மார்பன் சேவடி சேர்ந்த யாங்கள் 1” என்பது காண்க. மயங் கிதழ், இணையொத்த மலர்இதழ் போன்ற கண்ணிமை மேற்று. “மயங்கிதழ் மழைக்கண் பயந்த தூதே 2” என்று பிற சான்றோரும் கூறுவர்.

தலைமகனோடு தொடர்புண்டாய திறத்தைச் சுட்டி, அகன் கண் அருவி இழிதரும் நாடன் என்றும், அவற்கே தலைவி உரியளாய்க் களவொழுக்கம் பூண்டமை விளங்க, முயங்காது கழிந்த நாள் இவள் கண் கலிழும் என்றும் கூறினாள். முயங்குந்தோறும் புத்தின்பம் பயந்து, பாயலாய்ப் பயன் நல்கிய சாயல் மார்பாகலின், வியன்மார்பு என்றாள். நாடனது வியன் மார்பு முயங்காது கழியும் நாள் பேதுற்றுக் கண் கலுழும் இவள், நொதுமலர் வரைந்தவழி உயிர் வாழாள் என்பதுபட நிற்றலின், இஃது உண்மை செப்பல்.

மழைபொழியத் தோன்றிய அகன்ற அருவிகள் அடுக்கத் திடை இழியும் நாடன் என்றது, தலைவன் புரிந்த தலையளியால் உயிர் வாழ்கின்றாள் என்றும், எனவே நொதுமலர்க்கு வரைவுடன் படின் உயிர்வாழாள் என்றும் உள்ளுறுத்தவாறு.

இஃது, எளித்தல் ஏத்தல் என்ற அறத்தொடுநிலைப் பகுதி களுள் உண்மைசெப்பலாம் என்பர் இளம்பூரணர். 3 “நாற்றமும் தோற்றமும்” என்ற சூத்திரத்து “அவன் வரைவு மறுப்பினும் 4” என்றதற்கு இதனைக் காட்டுவர் நச்சினார்க்கினியர்.


அம்மவாழிப் பத்து

இதன்கண் வரும் பாட்டுக்கள் பத்தும் “அம்ம வாழி” என்று தொடங்கும் சிறப்பு நோக்கி, இஃது இப்பெயர்த்தாயிற்று.

    221.அம்ம வாழி தோழி காதலர்  

பாவை யன்னவென் னாய்கவின் தொலைய
நன்மா மேனி பசப்பச்
செல்வ லென்பதம் மலைகெழு நாட்டே.
இஃது, ஒருவழித் தணந்து வரைதற்கு வேண்டுவன முடித்து வருவல் என்று தலைமகன் கூறக் கேட்ட தலைமகள் அவன் சிறைப் புறத்தானாய்க் கேட்பத் தோழிக்குச் சொல்லியது.

** பழைய உரை :**
கடிதின் வரைதல் பயன்.

** உரை :**
தோழி, கேட்பாயாக: பாவை போலும் என் அழகு கெடவும், நல்ல மாமைநிறம் கொண்ட என் மேனி பசலை பாயவும், காதலர் தம் மலை பொருந்திய நாட்டிற்குச் செல் வேன் என்று கூறுகின்றனர்; ஆகலின் யாம் செயற்பாலது என் என்றவாறு.

அம்ம வாழி தோழி யென்றது, தலைவியது ஆற்றாமை தோன்ற நின்றது. பாவை யன்ன என் ஆய்கவின் என்பது மகளிர் உருநலம் பற்றி வழங்கும் வழக்கு.

தன் கவினையும் மேனியையும் விதந்தோதியது, அவற்றின் தொலைவு குறித்து வருந்துகின்றமையின், மாயாத என் ஆய்கவின் மாய்ந்து கெடவும், கெடாத என் மேனி பசலை பாய்ந்து கெடவும் பிரியத் துணிந்தார் என்பாள், பாவை யன்ன என் ஆய்கவின் தொலைய என்றாள். பாவையின் இயல்பினைக் “கால்பொருது இடிப்பினும் கதழுறை கடுகினும், உருமுடன்று எறியினும் ஊறுபல தோன்றினும், பெருநிலம் கிளரினும் திருநல வுருவின், மாயா இயற்கைப் பாவை 1” என்பதனால் அறிக. காதலர் தம்மால் அன்பு செய்யப்பட்டார். வருந்துவனவற்றைச் செய்யாராக, இவர் செய்யத் துணிந்தார் என்பாள், காதலர் என்று பன்மையிலும் செல்வல் என்ப என்று ஒருமையிலும், சென்ற விடத்துக் கவின் தொலைதலும் மேனி பசத்தலும் ஒருதலையாகலின், யான் ஆற்றகில்லேன் என்றும் கூறினாள்.

“இட்டுப் பிரிவிரங்கினும் 2” என்பதற்கு இதனை எடுத்துக் காட்டுவர் இளம்பூரணர்.

    222.    அம்ம வாழி தோழி நம்மூர்  

நளிந்துவந் துறையு நறுந்தண் மார்பன்
இன்னினி வாரா மாறுகொல்
சின்னிரை யோதியென் னுதல்பசப் பதுவே
இது, குறி இரண்டன்கண்ணும் வந்து ஒழுகும் தலைமகன் இடையிட்டு வந்து சிறைப்புறத்து நின்றுழி நின் நுதல் பசத்தற்குக் காரணம் என்னை என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

** உரை :**
தோழி, கேட்பாயாக: நம்மூர்க்கண் செறிந்து வந்துறையும் நறிய குளிர்ந்த மார்பினையுடைய தலைமகன் இப்பொழுது வாராமையால், சிலவாய் நிரையுற்ற கூந்தலையுடைய என் நுதல் பசலை பாய்வதாயிற்று என்றவாறு.

நளிந்து, செறிவுப் பொருளில் வரும் உரிச்சொல் அடியாகப் பிறந்த வினையெச்சம். “நளிந்துபலர் வழங்காச் செப்பம் துணியின் 1” என்றும், “நளிந்தனை வருதல் உடன்றன ளாகி 2” என்றும் வழங்குவர்.

இனி: காலப்பெயர்; “இனியணி யென்னும் காலையும் இடனும் 3” என்று ஆசிரியர் குறிப்பது காண்க. இன்னினி என்பது “தம்மியல் கிளப்பின் தம்முன் தாம் வரூஉம் எண்ணின் தொகுதி 4” போல்வதோர் மரூஉ முடிபு. இனி இனி என்பது, “வல்லெழுத்து மிகினு மான மில்லை, ஒல்வழி யறிதல் வழக்கத் தான 5” என்பதனுள், “வழக்கத்தான” என்றதனால் இகரம் கெடுத்து, “குறியதன் முன்னர்த் தன்னுருபு இரட்டல் 6” என்ற தனால் இன்னினி என முடித்துக் காட்டலும் ஒன்று. மாறு: ஏதுப் பொருள் படுவதோர் இடைச்சொல் என்பர் 7.

இருவகைக் குறிக்கண்ணும் வந்து கூடி இன்பம் துய்ப்பித் தானாகலின், நளிந்து வந்து உறையும் நறுந்தண் மார்பன் என்றும், இப்பெற்றியோன் இடையிட்டு வருதலோடு இது போழ்து போந்து சிறைப்புறத்தா னாதலை அறிந்து அவற்குத் தன் ஆற்றாமை உணர்த்துவாள், இன்னினி வாரா மாறுகொல் என்றும் கூறினாள். சின்னிரை யோதி என்பதனை விளியாக் கினுமாம். நுதல் பசப்பது என்றது பசலைபாய்தல்.

    223.    அம்ம வாழி தோழி நம்மலை  

வரையா மிழியக் கோட னீடக்
காதலர்ப் பிரிந்தோர் கையற நலியும்
தண்பனி வடந்தை யற்சிரம்
முந்துவந் தனர்நங் காத லோரே.

இது, வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் குறித்த பருவத் திற்கு முன்னே வருகின்றமை அறிந்த தோழி தலைமகட்கு மகிழ்ந்து சொல்லியது.

** உரை :**
தோழி, கேட்பாயாக: நம் மலைப்பக்கத்தே நீர் மிக்கு ஒழுக, செங்காந்தளின் நீண்ட இதழ்கள் மலர, காதலரைப் பிரிந்த மகளிரும் ஆடவரும் செயலற்று வருந்தப் போந்து வருத்தும் மிக்க குளிர்ச்சியினையுடைய வாடைக்காற்று அலைக்கும் முன்பனிப்பருவம் வருதற்கு முன்பே நம் காதலர் வந்தனர்; ஆகலின், யாம் அவ்வாடையால் துன்பம் எய்துவே மல்லேம் என்றவாறு.

ஆம், நீர். கோடல், செங்காந்தள். வடந்தை, வாடைக்காற்று; “வடந்தை தூக்கும் வருபனி யற்சிரம் 1” என்று பிறரும் கூறுதல் காண்க. அற்சிரம் - முன்பனி. இஃது அச்சிரம் எனவும் வழங்கும்; “அரிதின் தோன்றும் அச்சிரக் காலையும் 2” எனவரும். அக்காலத்தில் காதலர்ப் பிரிந்த மகளிர் கையற்று வருந்துவர் என்பது, “அகன்றுறை மகளிர் அணிதுறந்து நடுங்க, அற்சிரம் வந்தன்று 3” என்பதனால் அறிக. வடந்தை அற்சிரம் செய்யும் வருத்தம் தலைமகட்கு எய்தாது என்பாள், முந்து வந்தனர் நம் காதலோரே என்றாள்.

இனி, “நாற்றமும் தோற்றமும் 4” என்ற சூத்திரத்துப் “பாங்குற வந்த நாலெட்டு வகையும்” என்றவிடத்து “வகை” யாற் கொள் வன எனக் கொண்டு “இது வரைவிடைப் பிரிந்தோன் குறித்த பருவத்திற்கு முன் வருகின்றமை அறிந்த தோழி தலைவிக்குக் கூறியது” என்பர் நச்சினார்க்கினியர்.

    224.    அம்ம வாழி தோழி நம்மலை  

மணிநிறங் கொண்ட மாமலை வெற்பின்
துணிநீ ரருவி நம்மோ டாடல்
எளிய மன்னா லவர்க்கினி
அரிய வாகுதன் மருண்டனென் யானே.
இஃது, இச்செறிப்புணர்ந்த தலைமகள் ஆற்றாளாய்த் தலை மகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லியது.

** உரை :**
தோழி! கேட்பாயாக: நம்முடைய மலையாகிய நீலமணி யின் நிறத்தையுடைய பக்கமலையின்கண் ஒழுகும் தெளிந்த நீரினையுடைய அருவியில் பண்டெல்லாம் நம்மோடு கூடி யாடுதல் அவர்க்கு எளிதாயிருந்தது; இப்பொழுது அஃது அரிதாகுதல் குறித்து யான் மறுகுகின்றேன் என்றவாறு.

இனி என்றதற் கேற்பப் பண்டெல்லாம் என்பது வருவிக்கப் பட்டது. துணிநீர் - தெளிந்தநீர்; “துணிநீர் இலஞ்சி 1” என்றாற் போல. அருவியாடுதல் எளிதாயிருந்தது ஒழிந்து அரிதாயிற்று என்பதுபட நிற்றலின், மன் ஒழியிசை. “ஆர்கலி வெற்பன் மார்பு புணையாகக், கோடுயர் நெடுவரைக் கவாஅன் பகலே, பாடின் னருவி ஆடுதல் இனிதே 2” எனப் பிறரும் அருவியாடல் விருப்ப முணர்த்தியவாறு அறிக.

அருவியாடல் முதலிய செயல்களால் தம் ஒழுக்கம் தமரால் உணரப்பட்டமையும், அதனால் அவர் இற்செறித்தமையும் குறிப்பா லுணர்த்துவாள், இனி அரிய வாகுதல் மருண்டனென் யானே என்று கூறினாள். தலைமகன் சிறைப்புறத்தா னாகலின், ஆடல் எளியமன்னால் அவர்க்கு என்றாள். இது முட்டுவயிற் கழறல்.

    225.    அம்ம வாழி தோழி பைஞ்சுனைப்  

பாசடை நிவந்த பனிமலர்க் குவளை
உள்ளகங் கமழுங் கூந்தன் மெல்லியல்
ஏர்திக ழொண்ணுதல் பசத்தல்
ஓரார் கொல்லோ காத லோரே.
இது, மெலிவு கூறி வரைவுகடாவக் கேட்ட தலைமகன் தான் வரைதற்பொருட்டால் ஒருவழித் தணந்து நீட்டித்தானாக, ஆற்றா ளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.

** உரை :**
தோழி! கேட்பாயாக: பசிய சுனைக்கண் பசுமையான இலைகளினிடையே உயர்ந்து விளங்கும் குளிர்ந்த மலராகிய குவளையின் மணம் உள்ளே கமழும் கூந்தலும் மெல்லிய இயலுமுடைய நினது அழகு திகழும் ஒள்ளிய நுதல் பசலை பாய்ந்து ஒளி கெடுதலை நம் காதலர் அறியார்கொல்லோ? நன்கு அறிவாராகலின் நீட்டியாது விரையவருவர் காண் என்றவாறு.

மகளிர் கூந்தலினுள் மணம் எழும் என்றும், அது குவளைப் பூவின் மணம் போல்வதென்றும் கூறுவர். “குடவரைச் சுனைய மாயிதழ்க் குவளை, வண்டுபடு வான்போது கமழும், அஞ்சி லோதி 1” எனவும், “குவளைக் குறுந்தாள் நாண்மலர் நாறும், நறு மென் கூந்தல் 2” எனவும் சான்றோர் ஓதுமாறு காண்க. மெல் லியல்: விளி. கொல்: அசைநிலை. ஓகாரம்: எதிர்மறை.

தலைவன் வரைவு நீட்டித்தமை கண்டு ஆற்றாமையால் தலைவி கூந்தல் அவிழ்ந்து உடம்பு நனிசுருங்கி மெலிந்து காட்டினமை தோன்ற, குவளை உள்ளகம் கமழும் கூந்தல் மெல்லியல் என்றும், ஒளி திகழும் நுதல் பசந்தமைக்கு வருந்து வாளாய், ஏர்திகழ் ஒண்ணுதல் பசத்தல் என்றும், நினது ஆற்றாமை மிக்க இந்நிலையினைத் தலைவர் அறியாரல்லர், நன்கு அறிவர் என்பாள், ஓரார்கொல்லோ என்றும், அறிவராகலின் அவர் சிறிதும் தாழாது வருவர், அத்துணைப் பெருங்காத லுடையார் என்பாள், காதலோர் என்றும் தோழி கூறினாள். மெல்லியல் என்றது உடம்பு நனி சுருங்கல். ஒண்ணுதல் பசத்தல் என்றது பசலை பாய்தல்.

ஓரார் கொன்னங் காதலோர் என்ற பாடத்துக்கு அறியார் போலும், அறிவராயின் நீட்டியாது வருவர்காண் நம் காதலர் என வுரைக்க. அதனால் தலைமகன்பால் தோழி அறியாமை காட்டி வழுப்படுமாறு அறிக.

226.     அம்ம வாழி தோழி நம்மலை  

    நறுந்தண் சிலம்பின் நாறுகுலைக் காந்தள்
    கொங்குண் வண்டிற் பெயர்புபுற மாறிநின்
    வன்புடை விறற்கவின் கொண்ட
    அன்பி லாளன் வந்தன னினியே.

இது, வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் நீட்டித்து வந்துழித் தோழி தலைமகட்குச் சொல்லியது.

** உரை :**
தோழி, கேட்பாயாக: நம்முடைய மலையிடத்து நறிய குளிர்ந்த பக்க மலையில் மண நாறும் பூவின் குலைகளை யுடைய காந்தளின் தேனை யுண்ணும் வண்டைப் போல் நம்மின் நீங்கி நின் வலிமையினையுடைய மிக்குற்ற அழகினைக் கவர்ந்து கொண்ட அன்பிலியாகிய தலைமகன் இப்பொழுது வந்தனன், காண்பாயாக என்றவாறு.

சிலம்பு - மலை : ஈண்டு மலைச்சிலம்பு என்றதனால், ஒரு மலையை யடுத்துச் சேர இருக்கும் பக்கமலை யெனக் கொள்க. காந்தள், மலைநிலத்துக்குச் சிறப்பாக உரியதாகலின் சிலம்பின் நாறு குலைக்காந்தள் என்றார். காந்தட்பூ குலைகுலையாக இருப்பது பற்றிக் குலைக்காந்தள் என்பது பெருவழக்கு. “சிலம் புடன் கமழும் அலங்குகுலைக் காந்தள் 1” “காந்தள், கமழ்குலை யவிழ்ந்த நயவருஞ் சாரல் 2” என வருவன காண்க. பூவில் தேனை உண்டபின் வேறு பூத்தேர்ந்து நீங்குதல் வண்டின் இயல்பு 3 விறற்கவின் - ஈண்டு மிகுதிப்பொருட்டு.

குலைகளாகிய பூவினையுடைய காந்தளின் தேனை உண்ட வண்டைப் போலத் தலைவனும் நாணம் சாயல் முதலிய பெண்மைக் குணங்களையுடைய தலைவியின் நலனை நுகர்ந்து, கொங்குண்டபின் அவ்வண்டு அக்காந்தளைப் பிரிந்து புறமாறு தல் போல் அவளைப் பிரிந்து நீட்டித்தான் என நிரனிறையாகக் கொள்க. புறம் மாறுதல் - இடம் பெயர்தல். புறமாறி என்றது, தலைவன்பாற் பரத்தமைபட உரைத்தவாறு. தலைவன் பிரிந்த விடத்துத் தலைவி தன் ஆற்றாமை ஏதுவாக உடம்பு மெலிந்து மேனிநலம் இழந்தாளாகலின், அதுபற்றி இரங்குவாள், வன்புடை விறற்கவின் என்றும், தலைமகன் அதனைக் கருதாது பிரிந்தும் நீட்டித்தும் வந்தமையின் அவனை அன்பிலாளன் என்றும் கூறினாள். “ஒன்றித் தோன்றும் தோழி மேன” என்றத னால், இது தோழி அழிவில் கூட்டத்து முனிவு மெய்ந்நிறுத்தல்.

    227.    அம்ம வாழி தோழி நாளும்  

நன்னுதல் பசப்பவு நறுந்தோண் ஞெகிழவும்
ஆற்றலம் யாமென மதிப்பக் கூறி
நப்பிரிந் துறைந்தோர் மன்றநீ
விட்டனை யோவவ ருற்ற சூளே.
இஃது, ஒருவழித் தணந்து வந்த தலைமகன் சிறைப் புறத் தானாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.

** உரை :**
தோழி, கேட்பாயாக: நும்மைப் பிரிந்து தனித்துறைதல் யாம் ஆற்றேம் என நம் மனங்கொளச் சொல்லிப் பின்னர் நாடோறும் நம்முடைய நல்ல நுதல் பசப்பெய்தவும், நறிய தோள் மெலிவெய்தவும் நம்மைப் பிரிந்து நீட்டித்து வந்தோர் தெளிவாக அன்பில ராதலின், அவர் நம்மோடு உற்ற சூளினை நீ கொள்ளாதொழிந்தனையோ? கூறுக என்றவாறு.

என்றது, அச்சூள் கொள்ளற்பால தன்று என்பதாம்.
பிரிவாற்றாமையால் உளவாகும் மெலிவினைப் புலப் படுத்தற்கண் நுதலும் தோளும் சிறந்து நிற்றலின் அவற்றை எடுத்தோதினார். “மென்றோள் நெகிழவும் திருநுதல் பசப்பவும், பொன்போல் விறற்கவின் தொலைத்த, குன்ற நாடன் 1” எனப் பிறாண்டும் உரைத்தல் காண்க. பசப்பவும் ஞெகிழவும் என அடுக்கிநின்ற எச்சவினைகள் பிரிந்து என்பதனோடு முடிந்தன. மதிப்பக் கூறல், மனங்கொளச் சொல்லுதல். ஆற்றலம் யாம் என்றது, தலைமகன் கூற்றினைக் கொண்டெடுத்து மொழிந்தது. இனி, ஆற்றலம் யாம் என்ற இதனைத் தோழி கூற்றாக வைத்துத் தமது கூற்றினையே எடுத்தோதியதாகக் கொள்ளலும் ஒன்று. அப்பொருட்குத் தொக்கு நின்ற சிறப்பும்மையை விரித்துக் கொள்க.

தலைவன் பிரிந்தவிடத்துத் தலைமகள் வேறுபடுதல், “நன்னு தல் பசப்பவும், பெருந்தோள் நெகிழவும், உண்ணா வுயக்கமொடு உயிர்செலச் சாஅய், இன்ன மாகவும் இங்குநத் துறந்தோர், அறவ ரல்லர் 1” எனப் பிறரும் கூறுமாற்றா னறிக. தம்மாட்டு அன்பு செய்தார்க் குளவாகும் பசப்பும் மெலிவுங் கருதாது பிரிவோர் அறவரல்லர் என்பாள், குறிப்பால் மன்ற என்றும், அப்பெற்றி யோர் தெளித்த சூளினைத் தேறி யிருத்தலில் பயனின்று ஆகலின், விட்டனையோ அவர் உற்ற சூளே என்றும் கூறினாள். “நீவிர் வருந்த யாம் பிரியேம், பிரியின் ஆற்றேம்” என்று கூறிப் பின்னர்ப் பிரிந்து சென்றதே யன்றிப் பிரிவாற்றி உறைந்தோர் பொய்யர் ஆகலின், அவர் செய்யும் சூளுறவும் மெய் யெனக் கோடற்பாற்று அன்று என்றற்கு மன்ற விட்டனையோ என்றாள்.

    228.    அம்ம வாழி தோழி நம்மூர்  

நிரந்திலங் கருவிய நெடுமலை நாடன்
இரந்து குறையுறாஅன் பெயரின்
என்னா வதுகொனம் மின்னுயிர் நிலையே.
இது, தலைமகன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி அவர் கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி அறத்தொடு நின்றது.

** பழைய உரை :**
நிரந்து இலங்கு அருவிய நெடுமலை நாடன் என்றது, சேர்ந் தாருடன் இடையறாத நட்பையுடையன் என்றவாறு.

** உரை :**
தோழி, கேட்பாயாக: இடையறவு படாது ஒழுகும் அருவிகளையுடைய நெடிய மலைநாடன் நம்மூர்க்கண் வந்து நம் தமர்பால் வேண்டிய குறை பெறானாய் மீள்வானாயின், நம்முடைய இனிய உயிர் நிலைபெறுவது எவ்வாறாம் என்ற வாறு.

நிரந்திலங்குதல் - இடையறாது ஒழுகுதல்; “நிரந்து இனிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் 1” என்றாற்போல. அருவிக்கு இலங்குதல் நீர் ஒழுக்கம் என அறிக. “இலங்கு வெள்ளருவி 2” எனவும், “வாளிலங் கருவி தாஅய் 3” எனவும் வரும். அருவிய, பெயரெச்சக்குறிப்பு. குறை, இன்றி அமையாத காரியம். உறுதல் - ஈண்டுப் பெறுதல் என்னும் பொருட்டு.

நம் இனிய உயிர் நிற்றற்குக் காரணம் மலை நாடனது நட்பாகலின், அவன் நம்மைப் பெறாது பெயரின் அவன் நட்பை யிழந்து நாம் உயிர் வாழ்தல் கூடாது என்பாள், என்னாவதுகொல் நம் இன்னுயிர்நிலை என்றாள். இவ்வாறு வருத்தம் மிக்க வழித் தலைவி, “இன்னும் வாரா ராயின், என்னாம் தோழிநம் இன்னுயிர் நிலையே 4” என்பது உண்மையின், ஈண்டுத் தோழி கூறினாள்.

உடம்பின்கண் உயிர் வேற்றுமையின்றி அதன்வழி நின்று அதனால் வரும் துன்பங்களை நுகர்ந்தவிடத்தும் வெறாது உடனிருந்து இன்பம் நல்கும் பண்பு நோக்கி இன்னுயிர் என்றாள். “துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர் 5” என்று சான்றோர் கூறுதல் காண்க.

நிரந்து என்பதற்கு மேவி என்ற பொருள் கொள்ளின், நம்மூர்க்கண் மேவி விளங்கும் அருவிகளையுடைய நெடுமலை நாடன் என்பது பொருளாம். ஆகவே, நின்மேல் வைத்த தண்ணளி யால் இவ்வூர்க்கட் போந்து ஒழுகிய தலைமகன் என அவனைக் குறிப்பாற் சிறப்பித்தாளாம். நிரந்து, மேவியென்னும் பொருட் டாதல், “விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் 1” என்பதற்கு ஆசிரியர் மணக் குடவர் கூறிய உரையான் அறிக.

    229.    அம்ம வாழி தோழி நாமழப்  

பன்னாள் பிரிந்த வறனி லாளன்
வந்தன னோமற் றிரவிற்
பொன்போல் விறற்கவின் கொள்ளுநின் னுதலே.
இது, வரைவிடைவைத்துப் பிரிந்த தலைமகன் மீண்டான் என்பது கேட்டுத் தலைமகட்கு எய்திய கவினைத் தோழி தான் அறியாதாள் போன்று அவளை வினாயது.

** உரை :**
தோழி, இதனைக் கேட்பாயாக: நாம் புலம்பி அழ அதனை நினையாது பன்னாட்காறும் பிரிந்துறைந்த அற னில்லா னாகிய தலைமகன் வந்தான்கொல்லோ, நின் நுதல் இராக்காலத்தே பொன்போலச் செறிந்த அழகினைக் கொள்ளுவதாயிற் றாகலான் என்றவாறு.

அறனிலாளன் - அறனின்மையை ஆள்பவன். அறவோர்பாற் காணப்படும் செந்தண்மைக் குரிய சொல்லும் செயலும் இல் லாரை அறனிலாளர் என்ப. களவின்கண் “திருநுதற் குறுமகள்” ஒருத்தியின் “அணிநலம் வௌவிய” ஒருவன், பின்பு, அவளைக் கைவிட்டு யான் அறியேன் என்று சூள்செய்து கெட்டானாக, அவனைச் சான்றோர், “அறனிலாளன் 2” என்று வெறுத்துக் கூறியது காண்க. அகப்பொருள் நெறிக்கண், ஒரோவழிச் செவிலி யும் தோழியும் தலைமகளும் தலைவனை அறனிலாளன் எனப் பழித்தல் உண்டு. உடன்போக்கின்கண், தலைமகளை வளர்த் தெடுத்த தன்னை அறியாது தலைமகன் கொண்டு சென்றது அறனின்மை என்பது பற்றி, “அறனி லாள னொடு இறந்தனள் 3” என்றும், “அறனி லாளன் தோண்ட 4” என்றும் செவிலி கூறுவள். களவினால் தன்னை இன்றி அமையாளாகிய தலைவி வருந்தப் பிரிந்தமை குறித்து “அறனிலாளர் கண்ட பொழுதின் 5” என்றும், “அறனிலாளன் புகழ் 6” என்றும் கூறுப. ஓகாரம் வினா.

தன்னைக் காதலித்தார் புலம்புற்று வருந்தப் பிரிதலும், பிரிந்து நீட்டித்தலும் காதலர்க்கு அறமாகா வாகலின், அவற்றைச் செய்தமை குறித்துத் தலைமகனை அறனிலாளன் என்றாள். “வருதும் என்ற நாளும் பொய்த்தன, வரியே ருண்கண் நீரும் நில்லா, தண்கார்க் கீன்ற பைங்கொடி முல்லை, வைவாய் வான்முகை யவிழ்ந்த கோதை, பெய்வனப் பிழந்த கதுப்பு முள்ளார், அருள்கண் மாறலோ மாறுக வந்தில், அறனஞ் சலரே யாயிழை நமரெனச், சிறிய சொல்லிப் பெரிய புலம்பினும் 1” என்றார் பிறரும். புணர்ந்த மகளிர்பால் மெய்ப்பட்டுத் தோன்றும் நுதற் கவின் தலைமகள்பால் நிகழக் கண்டமையான், வந்த னனோ என்று வினவினாள்.

தன்னை இன்றியமையேமாகிய நாம் ஆற்றாது அழஅழப் பிரிந்து சென்றதேயன்றி ஆங்கே நீட்டித்துத் தங்கினமை தலை மகற்கு அறமாகாது என்பாள், நாமழப் பன்னாள் பிரிந்த அறனிலாளன் என்றும், நின் நுதல் கொள்ளும் கவின் தலைமகன் வரவைத் தெரிவித்தலின், வந்தனன் என்பது அறிவேனாயினும், நின்னிற் பிரியாது உறையும் யான் அறியாதொழிந்தமையான் இரவுப்போதில் வந்திருத்தல் வேண்டுமெனக் கருதுகின்றேன் என்பாள், வந்தனனோ மற்று இரவின் என்றும் தோழி கூறி னாள். ஈண்டுத் தலைமகன் அருள் கண்மாறி அறனிலனா யினான் எனத் தோழி கூறல் வழுவாயினும், “மங்கல மொழியும் வைஇய மொழியும், மாறி லாண்மையிற் சொல்லிய மொழியும், கூறியன் மருங்கிற் கொள்ளு மென்ப 2” என்பதனால் அமைந்தது.

    230.    அம்ம வாழி தோழி நம்மொடு  

சிறுதினைக் காவல னாகிப் பெரிதுநின்
மென்றோ ணெகிழவுந் திருநுதல் பசப்பவும்
பொன்போல் விறற்கவின் றொலைத்த
குன்ற நாடற் கயவர்நன் மணனே.

இது, தலைமகன் வரைவு வேண்டித் தமரை விடுத்துழி மறுப் பர்கொல்லோ என்று அச்சமுறுகின்ற தலைவிக்குத் தோழி சொல்லியது.

** உரை :**
தோழி, கேட்பாயாக : பண்டு நாம் தினைக்காவற்குச் சென்றவிடத்தும் நம்மோடு கூடிச் சிறிய தினையைக் காவல் செய்வானாகிக் கூட்டம் பெற்றும், பின் வரைதற்பொருட்டு நின் மெல்லிய தோள் மெலிந்து வளை நெகிழவும், அழகிய நுதல் பசப்பெய்தவும் பிரிந்து சென்று, அதனாற் பொன்போற் செறிந்த அழகினைத் தொலைத் தழித்த குன்றினையுடைய நாடற்கு நமர் நல்ல மணத்தைச் செய்வராகலின், நீ நம் தமர் மறுப்பர்கொல்லோ என்று அஞ்சுதல் ஒழிக என்றவாறு.

மென்றோள் நெகிழவும் என்புழி இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மே னின்றது. ‘மறையோர் தேஎத்து மன்ற லெட்டனுள்,’ “இன்பமும் பொருளும் அறனு மென்றாங்கு, அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற், காமக் கூட்டம்” எனச் சிறப்பிக்கப்பெறும் களவுவழிப் பிறந்து, “கரணமொடு புணரக், கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக், கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வ” தாகலின், நன்மணன் என்றார். இல்லிருந்து நல்லறம் புரிந்து “சிறந்தது பயிற்றும்” சிறப்பிற் றாதலின், நன்மணன் என்றா ரெனினுமாம்.

இயற்கைப் புணர்ச்சி பெற்ற தலைமகன் தோழியை மதி யுடம்படுப்பான் ஊரும் பேரும் கெடுதியும் வினாய் வந்த போது அன்றித் தோழி அவனை அறியாளாகலின், அறிந்த காலத்தை நினைவுறுத்துவாள் போன்று, சிறுதினைக் காவலனாகி என்றும், பின்னர் அவன் அவளால் வரைவு முடுக்கப்பட்டுப் பிரிந்தவழித் தலைவி ஆற்றா ளாயினமையால் மென்றோள் நெகிழவும் திருநுதல் பசப்பவும் என்றும், வரைவு இடை வைத்துப் பிரிந்தோன் குறித்த பொழுதின்கண் வாராது நீட்டித்தலால் தலைவி உடம்பு சுருங்கி மேனி வேறுபட்டுக் காட்டினமையின், பொன்போல் விறற்கவின் தொலைத்த குன்ற நாடன் என்றும் கூறினாள். இதனாற் பயன், தலைவி தமரால் மணன் அயர்தற் குரியவன், தன்னைக் களவிற் கூடி மகிழ்வித்தும், ஒருவழித் தணந்து உளம் நெகிழ்வித்தும் ஒழுகின குன்றநாடனே என்று தேறி அச்சம் நீங்குவள் என்பதாம்.

இதன்கண், சிறுதினைக் காவலனாகி என்றது தோழியிற் புணர்வு. மென்றோள் நெகிழவுந் திருநுதல் பசப்பவும், பொன் போல் விறற்கவின் தொலைத்த குன்றநாடன் என்றது வரைவிடை வைத்த பிரிவு. இதனை, “வெளிப்படை தானே கற்பினோ டொப்பினும், ஞாங்கர்க் கிளந்த மூன்று பொருளாக, வரையாது பிரிதல் கிழவோற் கில்லை 1”என்ற சூத்திரத்துள், “மூன்றுமென முற்றும்மை கொடாது கூறினமையின் ஏனைப் பிரிவுகளின் வரையாது பிரியப் பெறும்” என்று கொண்டு, “அவை வரைதற்குப் பொருள்வயிற் பிரிதலும், வேந்தற் குற்றுழிப் பிரிதலும், காவற்குப் பிரிதலு மென மூன்றுமாம்” என்றும் கூறி அடக்குக.

“நாற்றமும் தோற்றமும் 2” என்ற சூத்திரத்து, “ஆங்கதன் தன்மையின் வன்புறை” என்பதற்கு இதனை மேற்கோளாக்குவர் இளம்பூரணர்.


தெய்யோப்பத்து

இஃது ஒவ்வொரு பாட்டிலும் ஈற்றில் தெய்யோ என்னும் இடைச்சொல் வரத் தொடுத்த பகுதியாகலின், இப்பெயர்த் தாயிற்று.

தெய்ய என்னும் இடைச்சொல் தொல்காப்பியத்துட் காணப் படாதாயினும், பின் வந்த தொகைநூல்களிற் காணப் படுவது பற்றித் தொல்காப்பிய வுரைகாரர்களால், “கிளந்த வல்ல வேறுபிற தோன்றினும் கிளந்தவற்றியலான் உணர்ந்தனர் கொளலே 3” என்ற விதியின்கீழ்க் காட்டப்படுகின்றது. “உதுக் காண் தெய்ய உள்ளல் வேண்டும் 4” “தங்கினி ராயின் தவறோ தெய்ய 5” “ஒண்டொடி ஞெமுக்கா தீமோ தெய்ய 6” “அம்பல் வாய்த்த தெய்ய 7” “பண்டும் இற்றே கண்டிசின் தெய்ய 8” “தங்கின் எவனோ தெய்ய9” எனத் தொகைநூல்களில் வருவது காண்க. இத் தெய்ய என்பது சிறுபான்மை தெய்யோ என இப்பத்தின்கண் வரும் பாட்டுத் தோறும் வருகிறது. வேறு தொகைநூல்களில் இவ்வாறு வாராமை குறித்து, இப்பத்துத் தெய்யோப்பத்து எனப்பட்டது போலும்.

    231.    யாங்குவல் லுநையோ வோங்கல் வெற்ப  

இரும்பல் கூந்தற் றிருந்திழை யரிவை
திதலை மாமை தேயப்
பசலை பாயப் பிரிவே தெய்யோ.
இஃது ஒருவழித் தணந்து வந்த தலைமகற்குத் தோழி கூறியது.

** உரை :**
உயர்ந்த மலையையுடையாய், கரிய பலவாகிய கூந்தலை யும் திருந்திய இழைகளையு முடைய அரிவை யாவாள் தேமலோடு கூடிய மாமைநிறம் தேய, அவ்விடத்துப் பசலை இடையீடின்றிப் பரவப் பிரிதல் எவ்வாறு வல்லையா யினையோ? கூறுக என்றவாறு.

மகளிரின் கரிதாய்த் திரண்ட கூந்தலை இரும்பல் கூந்தல் என்பது வழக்கு; “இரும்பல் கூந்தல் கொடிச்சி 1” என இந் நூலுள்ளும், “இரும்பல் கூந்தற் சேயிழை மடந்தை 2” எனப் பிறநூலுள்ளும் வருதல் காண்க. இதுவே, “இரும்பல் ஒலிவருங் கூந்தல் 3” என்றும், “பல்லிருங் கூந்தல் 4” என்றும் வழங்கும். திதலை - தேமல்; இது மகளிர் மார்பு வயிறு அல்குல் ஆகிய இடங்களிற் படர்வது. “திதலை மென்முலை 5” எனவும், “திதலை யவ்வயிறு 6” எனவும், “திதலை யல்குல் 7” எனவும் சான்றோர் குறிப்பர். மாமை - மாந்தளிர் நிறத்தின் தன்மை. நோயின் றியன்ற இளமகளிர் மாமைநிறமும் திதலையும் கொண்டிருப்பர்; “நோயின்றி யன்ற யாக்கையர் மாவின், அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும், பொன்னுரை கடுக்கும் திதலையர் 8” என்பதனால் திதலையும் மாமையும் சேர்ந்து இலகும் சிறப்பு விளங்கும். பசலை தோன்ற மாமை கெடுவது, “பசலை யுணீ இயர் வேண்டும் திதலை யல்குலென் மாமைக்கவினே 9” என்பதனாலும் அறியப்படும். தெய்யோ என்பது, “தம்மீறு திரிதலும் 10” என்ப தனால் திரிந்து வந்த தெய்ய என்னும் இடைச்சொல்; அசை நிலை.

விளக்கற்றம் பார்க்கும் இருள்போலத் தலைவன் பிரிவற்றம் பார்த்துப் பசலை பாய்தலின் பசலை பாயப் பிரிவு என்றும், ஒளிமுன் நின்ற பொருள் அது நீங்கியவழித் தன் பொலிவழிதல் போலத் தலைவன் பிரிந்த விடத்துத் தலைவியின் மாமையொளி தேய்தல் பற்றித் திதலை மாமை தேய என்றும் கூறினாள். தேய்தல், “அல்லவை தேய அறம் பெருகும் 1” என்புழிப் போலத் தன் பகையாய பசலை பாய்தலின் தனக்கு நிலையின்றி மெலிதல் என்க. ஒத்த அன்புடையார் இருவருள் ஒருவர் பிரிந்தவழி மற்றவர் ஆற்றாராய் வருந்த, அப்பிரிந்தவர்தாமும் ஆற்றாராய் மீளுத லன்றி மேலும் பிரிந்து சேறல் செய்யாராக, நீ அதனைச் செய்தமை யானும், பண்டெல்லாம், இது செய்யாமை தோன்ற ஒழுகினமை யானும், இச் செயற்கு வேண்டும் வன்மை நீ பிறிதோரிடத்துப் பிறிதோராற்றாற் பெற்றாயாதல் வேண்டு மென்பாள், யாங்கு வல்லுநையோ என்றாள். இது பொருட் பயன்பட வந்த அறக்கழிவுடைய வழக்கு. “ஈங்குவளை நெகிழப் பிரிதல், யாங்கு வல்லுநையோ ஈங்கிவட் டுறந்தே 2” எனப் பிறாண்டும் வருதல் காண்க. திதலை மாமை தேய என்றது உடம்பு நனி சுருங்கல். பசலை பாய என்றது பசலை பாய்தல். பிரிவு யாங்கு வல்லுநையோ என்றது, அழிவில் கூட்டத்து அவன் பிரி வாற்றாமை.

    232.    போதார் கூந்த லியலணி யழுங்க  

ஏதி லாளனை நீபிரிந் ததற்கே
அழலவிர் மணிப்பூ ணனையப்
பெயலா னாவென் கண்ணே தெய்யோ.
இஃது ஒருவழித் தணந்து வந்த தலைமகன், “நான் பிரிந்த நாட்கண் நீவிர் என்செய்தீர்?” எனக் கேட்கத் தோழி கூறியது.

** உரை :**
பூக்கள் நிறைந்த கூந்தலையுடைய என் தோழியின் இயலும் அணியும் வருந்த, ஏதிலாளனாகிய நீ பிரிந்ததன் பொருட்டு, என் கண்கள், அழல் போல் விளங்கும் மணிபதித்த மார்பின் அணிகள் நனையுமாறு நீர் உகுத்தலை அமையா வாயின என்றவாறு.

போதார் கூந்தல் என்றது தலைமகளை. இயலணி, உம்மைத்தொகை. அன்பிலனாய்ப் பிரிந்தான் எனத் தலைவனை ஏதிலாளன் என்றது, அவன்வயிற் பரத்தைமையும் தன்வயின் உரிமையும் தோன்றுதற்கு. “ஏதி லாளர் இவண்வரின் போதிற், பொம்ம லோதியும் புனையல், எம்மும் தொடாஅல் என்குவ மன்னே 1” என்று பிறாண்டுத் தலைவி கூறுதல் காண்க. ஐ: சாரியை. சிவந்த மணிகள் இழைத்த பூண்க ளாதலின், அவற்றின் ஒளியை விதந்து அழலவிர் மணிப்பூண் என்றார்; “அழலவிர் வயங்கிழை 2” என்றார் பிறரும். அழுங்க, நனையப் பெயலானா என இயைத்தலும் ஒன்று.

தலைமகள் இயலும் அணியும் இழந்து வருந்த, அது கண்டு ஆற்றாத யான் கண்ணீர் சொரிய, நீ அன்பில்லாது அகன்றனை என்பாள் ஏதிலாளனை நீ பிரிந்ததற்கே என்றாள். இயல் அழுங்குதலாவது, “புறஞ்செயச் சிதைத்தல், புலம்பித் தோன்றல், கலங்கி மொழிதல், கையற வுரைத்தல் 3” முதலியனவும், கண்டு யில் மறுத்தலும், கனவொடு மயங்கலும் பிறவும் செய்தொழு குதல். அணி யழுங்குதலாவது பூவும் சாந்தும் பூணும் துகிலும் வெறுத்தலும், தொடியும் வளையும் நெகிழ நிற்றலும், பிறவும் செய்தொழுகுதல். இயலணி என்றது தலைவியை எனக் கருது வாருமுளர்.

ஏதி லாட்டியை நீ பிரிந்ததற்கே என்ற பாடத்துக்கு, காதலி யெனக் கருதாது ஏதிலாட்டியாகக் கருதி நீ பிரிந்ததன் பொருட்டு என்று உரைக்க.

    233.    வருவை யல்லை வாடைநனி கொடிதே  

அருவரை மருங்கி னாய்மணி வரன்றி
ஒல்லென விழிதரு மருவிநின்
கல்லுடை நாட்டுச் செல்லல் தெய்யோ.

இஃது ஒருவழித் தணந்து வரைய வேண்டும் என்ற தலை மகற்குத் தோழி சொல்லியது.

** பழைய உரை :**
ஆய்மணி வரன்றி ஒல்லென இழிதரும் அருவி நின் கல்லுடை நாட்டு என்றது, செல்லின் வரைதற்கு வேண்டுவன கொண்டு வருவாயாக என்று உணர்த்தியவாறு.

** உரை :**
அரிய மலைப்பக்கத்தே நுண்ணிய மணிகளைக் கவர்ந்து கொண்டு, ஒல்லென்னும் ஓசையிட்டு இழியும் அருவிகளை யுடைய நின் மலைநாட்டிற்குச் செல்லுதல் ஒழிக ; சென்றவழி நீ விரைந்து வருவாயல்லை; அதனால் முன்பனிப் பருவத்தைச் செய்யும் வாடைக் காற்றுப் போந்து தனித்தாரைப் பனிப்பித்து வருத்துமாகலான் என்றவாறு.

அருவரை - உயரிய மலை. வருவையல்லை யென்பது, விரைய வரைகுவல் எனத் தலைவன் கூறியதனை எடுத்து மறுத் துரைக்குமாறு தோன்ற நின்றது. ஆய்மணி -அழகிய மணிவகை. “ஆய்மணி பொதியவிழ்ந் தாங்கு 1” என்ப. மணிகள் கல்லிடைப் பிறப்பன வாகலின் கல்லுடை நாடு என்றார். “கற்பா லுமிழ்ந்த மணி 2” என்று தேவரும் கூறுவர்.

“வருவை யல்லை” என்றவள் நின் வாராமையே யன்றி, முன்பனிப்பருவம் எய்தித் தனித்தாரை வருத்துமாக அவ் வருத் தத்தை இவள் ஆற்றாள் என்பாள், வாடை நனிகொடிதே என்றும், எனவே இந்நிலையில் நீ பிரிதல் ஆகாது என்பாள் செல்லல் என்றும் தோழி கூறினாள்.

கல்லுடை நாட்டுச் செல்லல் என மறுக்கும் தோழி, ஆய்மணி வரன்றி ஒல்லென இழிதரும் அருவி என்றது, இதனின் மேலும் தலைமகன் பிரிவானேல், அவனை “நீ செல்லின் வரை தற்கு வேண்டுவன கொண்டு வருவாயாக” என்றற்கு. பழைய வுரைகாரர்க்கும் இது கருத்தாதல் அறிக.

    234.    மின்னவிர் வயங்கிழை ஞெகிழச் சாஅய்  

நன்னுதல் பசத்த லாவது துன்னிக்
கனவிற் காணு மிவளே
நனவிற் காணாணின் மார்பே தெய்யோ.

இஃது, இடைவிடாது வந்து ஒழுகாநின்றே களவு நீடாமல் வரைதற்கு முயல்கின்ற தலைமகன், தலைமகள் வேறுபாடு கண்டு இதற்குக் காரணம் என் னென்று வினாவியவழி, நின்னைக் கனவிற் கண்டு விழித்துக் காணாளாய் வந்தது எனத் தோழி சொல்லி வரைவு முடுக்கியது.

** உரை :**
மின்போல் ஒளியிட்டு விளங்கும் இழைகள் நெகிழுமாறு மெலிந்து நல்ல நுதலும் பசந்து காட்டுதற்குக் காரணமாவது, கனவின்கண் நின் மார்பினை நெருங்கி முயங்கிக் கண்டவள் துயிலுணர்ந்து நனவில் அது காணாளாயினமையே என்ற வாறு.
நாளும் தலைப்பெய்து ஒழுகுமிடத்துத் தலைவிபால் மெலிவு தோன்றி மெய்ப்பட்டமை கண்டு இதற்குக் காரணம் என்னை எனத் தலைமகன் வினாவினா னாகலின், வயங்கிழை ஞெகிழச் சாஅய் நன்னுதல் பசந்தாள் என்றும், அதற்குக் காரணம், நனவிற் காணாள் நின் மார்பு என்றும் கூறினாள். பசத்தல் ஈண்டுக் காரணத்தின் மேற்று.

கனவிற் கண்டது நனவின் எய்துதல், தேவர்க் காயினும் இசைதல் செல்லா தெனினும், அதனை அறியாத இவள் நனவிற் காணாமையே காரணமாக உடல் மெலிந்து நுதல் பசந்து வேறுபட்டாள் என்பதாம். வயங்கிழை நெகிழச் சாஅய் என்றது உடம்பு நனிசுருங்கல். நன்னுதல் பசத்த லாவது என்றது பசலை பாய்தல். கனவிற் காணும் இவளே என்றது கனவொடு மயங்கல். நனவிற் காணாள் என்றது கண்துயில் மறுத்தல். நெகிழ்ந்து நீங்கும் இழைகள் பொருட்டும், பசந்து ஒளிமழுங்கும் நுதலின் பொருட்டும் இரங்குவாள், மின்னவிர் வயங்கிழை என்றும், நன்னுதல் என்றும் கூறினாள். “கேட்டிசின் வாழி தோழி யல்கற், பொய்வ லாளன் மெய்யுற மரீஇ, வாய்த் தகைப் பொய்க்கனா மருட்டற் றெழுந்து, அமளி தைவந் தனனே1” எனத் தலைமகள் கன வொடு மயங்கி நனவின் அரற்றிய வாறு காண்க.

வேறுபாட்டுக்குத் தோழி காரணம் கூறவே, நனவினும் பிரிவின்றிக் கூட்டம் பெறுமாறு வரைவாயாக என்றாளாதலும் பெறப்பட்டது.

    235.    கையற வீழ்ந்த மையில் வானமொடு  

அரிதே காதலர்ப் பொழுதே யதனால்
தெரியிழை தெளிர்ப்ப முயங்கிப்
பிரியல மென்கமோ வெழுகமோ தெய்யோ.

இஃது உடன்போக்கு நேர்வித்த பின்பு, தலைமகன் உடன் கொண்டு போவான் இடையாமத்து வந்துழித் தலைமகட்குத் தோழி சொல்லியது.

** உரை :**
ஒரு பக்கத்தே முற்றவும் சென்று ஒடுங்கினமையால், முகிலினமே யில்லாத வானமும், காதலரைக் கூடும் பொழு தும் பெறல் அரிதாகலின், இவை எய்தப்பெற்ற இப்பொழுதின் கண் ஆய்ந்த இழைகள் ஒலிக்கக் காதலரை முயங்கி, இனி யாம் நின்னைப் பிரியேம் என்று கூறுவேமோ?. அது பற்றி உடன் போவதற்கு எழுவேமோ? கூறுக என்றவாறு.

கை - பக்கம், அற வீழ்தல், முற்றவும் திரண்டு சென்று ஒடுங்குதல். மை, முகில்; “மையற விளங்கிய மணிநிற விசும்பில் 1” என்று பிறரும் கூறுப. எஞ்ஞான்றும் இயங்கா நிற்கும் காற்றின் வழிப்படுவதனால், வானம் முகிலின்றிக் காணப்படுவது அருமை யாகலின் அரிது என்றார். காதலர்ப் பொழுது, காதலரைக் கூடற்கு வாய்க்கும் பொழுது. அரிது காதலர்ப் பொழுது என்றது, அப் பொழுது வாய்த்துழித் தாழாது பயன்கோடல் அறிவுடைமை என்றவாறு.

வானம் முகிலின மின்றி யிருத்தலும், களவின்கண் புறத் தார்க்குப் புலனாகி அலராதற்கு அஞ்சித் தலைமகன் பிரிந்து ஒழுகுவதால் இடையீடின்றிய கூட்டமும் ஓரொருகா லன்றி அரியவாகலின், வானமொடு அரிதே காதலர்ப் பொழுதே என்றாள். உடன்போக்குத் துணிந்தார்க்கு மையுறைவானம் ஆகாமையின், மையில் வானமொடு என்றாள். தலைமகள் தான் உடன் கொண்டு போவான் வந்தானொடு செல்லின் இடையறாக் கூட்டம் பெற்று மகிழலாம் என்றும், ஈண்டை இருப்பின் பிரியாத காலமும் முயக்கமும் பெறல் அரி தென்றும் கூறுவாள், பிரியலம் என்கமோ என்றும், பிரியலம் என்றவழி, தலைமகன் உடன் போக்குத் துணியின், தாமும் அதற்கு உடம்பட வேண்டுதலின் எழுகமோ என்றும் கூறினாள். மையில் வானமும், காதலர்ப் பொழுதும் பெறல் அரிது எனக் கூறி தலைமகளைப் போக் குடன்படுத்து தலான், இது “தலைவரு விழுமநிலை யெடுத்து 1” உரைத்தல்.

    236.    அன்னையு மறிந்தன ளலரு மாயின்று  

நன்மனை நெடுநகர் புலம்புகொள வறுதரும்
இன்னா வாடையு மலையும்
நும்மூர்ச் செல்க மெழுகமோ தெய்யோ.
இது களவொழுக்கம் வெளிப்பட்டமையும் தம் மெலிவும் உணர்த்தித் தோழி உடன்போக்கு நயந்தாள் போன்று வரைவு கடாயது.

** உரை :**
நாம் கொண்டுள்ள களவொழுக்கத்தினை அன்னையும் அறிந்தனள்; அயலாரும் அறிந்து அலர் தூற்றுவாராயினர்; நல்ல மனைக்கண் நின்ற நெடிய இல்லின்கண் தனித்து வருந்தப் போதரும் கொடிய வாடைக் காற்றும் அலைப்பதாயிற்று; அதனால் யாம் இவற்றை எய்தாவகை நும்மூர்க்குச் செல்வேமாய் எழுவேமோ? கூறுக என்றவாறு.

காப்பு மிகுதியும் அலரும் காட்டி, இனி வரைவல்லது வேறு செய்தி யில்லை யென்பது படத் தலைவற்கு உரைக்கலுறுகின்ற மையின், அன்னை யறிவும் அலரும் எடுத்தோதப்பட்டன. ஊர் நடுவே காப்பமைந்த இடத்தே அமைந்த பேரில்லம் என்பது பற்றி, நன்மனை நெடுநகர் என்றார்; “நன்மனை நெடுநகர்க் காவல ரறியாமை 2” எனப் பிறரும் குறிப்பது காண்க. உறுதரல் - மெய்யைத் தீண்டுதல்; “வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப்படும் 3” என்றாற் போல. தனித்து உறையும் மகளிர்க்கு வெம்மை மிகுத்தலின் இன்னா வாடை என்றார். உடன்போக்குக்கு ஒவ்வாத நிலையில் அதனை ஒருப்படுமாறு தோன்றக் கூறியது நகையாடிக் கூறுவது என்க.

அன்னை யறிவும் அலரும் இற்செறிப்பிற்குக் காரணமாத லாற் பின்னை யாம் நின்னைக் கூடல் அரிதாம்; கூட்டம் இன்றித் தனித்து உறையின், வாடைக்காற்றுப் போந்து ஆற்றொணாத் துன்பம் பயக்கும். இங்கு, இற்செறிப்பும் வாடையின் பனிப்பும் பெற்றுக் கூட்ட மின்றி வருந்துதலினும் நின்னொடு கூடிக் கடத்தற்கரிய சுரம் பல கடந்தேனும் நும்மூர்க் கேகுதல் நன்று என்பாள், நும்மூர்ச் செல்கம் எழுகமோ என்றாள். எனவே, போக்கொருப்படுப்பாள் போன்று கூறினும், அன்னை யறிவும், அயலவர் அலர் கூறலும், நெடுநகர் புலம்புகொள என்று தனிமை கூறுமுகத்தால் மேனி மெலிவும் கூறினமையால், வரைவு கடாவுவதே கருத்தென அறிக. இவை, “பொழுதும் ஆறும் 1” என்ற சூத்திரத்துப் “புரைபட வந்த அன்னவை பிறவும், வரைதல் வேட்கைப் பொருள என்ப” என்றதனாற் கொள்ளப்படும். அன்னையும் அறிந்தனள் அலரும் ஆயின்று என்றது முட்டு வயிற் கழறல். நன்மனை நெடுநகர் புலம்பு கொள இருத்தல் அவன் புணர்வு மறுத்தல்; என்னை? தமரையும் அலரையு மஞ்சி, வரைவுகடாதற் கருத்தால், அவன்புணர்ச்சியை விலக்கி எழுந்த உள்ளத்தளா யிருக்கின்றா ளாகலின். இன்னா வாடை யும் அலையும் என்றது துன்பத்துப் புலம்மல். இவை தோழி குறிப்பாயினும், “ஒன்றித் தோன்றும் தோழி மேன 2” என்னும் இலக்கணத்தால் தலைமகள் குறிப்பெனவே கொள்க.

“நாற்றமும் தோற்றமும் 3” என்ற சூத்திரத்து “எண்ணரும் பன்னகை கண்ணிய வகையினும்” நிகழும் கூற்றுக்கு இதனை மேற்கோளாகக் காட்டுவர் இளம்பூரணர். தோழி தானே படைத்து மொழியும் பகுதிகளுள் “நல்வகை யுடைய நயத்திற் கூறிப் படைக்கவும் பெறுமே 4” என்றதற்கு இதனை எடுத் தோதுவர் நச்சினார்க்கினியர்.

    237.    காமங் கடவ வுள்ள மினைப்ப  

யாம்வந்து காண்பதோர் பருவ மாயின்
ஓங்கித் தோன்று முயர்வரைக்
கியாங்கெனப் படுவது நும்மூர் தெய்யோ.
இஃது அல்ல குறிப்பட்டு நீங்கிய தலைமகனை வந்திலனாகக் கொண்டு அவன் பின்பு வந்துழி அவற்குத் தோழி சொல்லியது.

** உரை :**
எம்மிடை யெழுந்த காதல் செலுத்துதலால் மனம் வருந்தி யாமே போந்து நின்னைக் காண்பதோர் காலமும் எய்து மாயின், பிழைப்பின்றிச் சேறற்பொருட்டு இஃதோ உயர்ந்து தோன்றும் மலைக்கு நும்மூர் எவ்விடத்ததோ? கூறுக என்ற வாறு.

விகாரத்தால் தொக்க ஏயும் உம்மையும் தலைமகள் தானே சென்று தலைமகனைச் சேர்தல் இலக்கணம் அன்று என்பது உணர நின்றன; என்னை, “உடம்பு முயிரும் வாடியக் காலும், என்னுற் றனகொல் இவையெனின் அல்லது, கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை 1” என்றார்ஆகலின். கடவல் - செலுத்தல். இனைதல் - வருந்துதல். “ஓங்கித் தோன்றும் உயர்வரை” என்புழி ஒருபொருட் கண் வந்த இருசொற்கள், “ஒருபொருள் இருசொற் பிரிவில வரையார் 2” என்ற சூத்திரத்து “வரையார்” என்றதனால் பிரிந்து நிற்றல் கொள்க. “சேணிடை, ஓங்கித் தோன்றும் உயர்வரை, வான்றோய் வெற்பன் 3” எனப் பிறரும் கூறுதல் காண்க. இதற்குப் பிறவாறும் உரைப்பர்.

இயற்கைப் புணர்ச்சி பெற்ற தலைமகன் வரைவு மேற் கொள்ளாது காமக்காதல் சிறத்தற் பொருட்டுக் குறிவழி ஒழுகு வானாக, தலைவி காமம் சிறந்து நிற்குமாறு தோன்ற, காமம் கடவ என்றும், காமக்கூட்டம்தானும் இடையறாது நிகழ் தலின்றிப் பிரிவால் இடையீடுபடுதலின் உள்ளம் இனைப்ப என்றும், யாம் காமம் சிறந்தும், நின் பிரிவாலும், ஆற்றிடை யுளவாகும் ஏதங்களை ஆய்தலாலும் மனம் வருந்தியும் நிற்ப, நீ அவற்றை ஓராது அன்பின்றி வாராதொழிந்தனை; ஆயினும், நின்னை இன்றியமையாமையின் யாம் ஆற்றுமாறு பிறிதில்லே மாகலின் என்பாள் யாம் வந்து காண்பதோர் பருவ மாயின் என்றும் கூறினாள். “அருங்கடி யன்னை காவ னீவிப், பெருங்கடை யிறந்து மன்றம் போகிப், பகலே பலருங் காண வாய்விட்டு அகல் வயற் படப்பை யவனூர் வினவிச், சென்மோ வாழி தோழி 1” எனப் பிறாண்டும் வருதல் காண்க. ஈண்டுக் காட்டிய நற்றிணைப் பாட்டு, “ஒருசிறை நெஞ்சமொடு உசாவுங் காலை, உரிய தாகலு முண்டென மொழிப 2” என்ற சூத்திரத்து உம்மையால் தோழி யொடு உசாவுங் காலத்து உண்டென அமைந்தது.

வரைக்கண்ண தாயின் பிறரை வினவாது நேரே நெறிபற்றி வருதல் கூடுமாயினும், வருவ லென்றவன் வாராது பொய்த் தமையால் தெருளாதாள் போன்று, வரைக்கு யாங்கு எனப்படு வது நும்மூர் என்றும், சொல் திறம்பினோர் வாழுமூர் யாவரா னும் இழித்துக் கூறப்படும் இயல்பு நோக்கி, யாங்கு எனப் படுவது என்றும் வினவினாள். பலரறிய ஓங்கித் தோன்றுதலின் வரைக்கு என்றாள் என்க. காமம் கடவ என்றது காதல் கைம்மிகல்; உள்ளம் இனைப்ப என்றது ஏதம் ஆய்தல்.
“நாற்றமும் தோற்றமும் 3” என்ற சூத்திரத்து “நாடும் ஊரும் இல்லும் குடியும், பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி, அவன் வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ, அனைநிலை வகை யான் வரைதல் வேண்டினும் 4” என்ற விடத்து, இதனைக் காட்டி, இஃது ஊர்பற்றி வந்தது என்பர் இளம்பூரணர். இனி நச்சினார்க் கினியர் இஃது ஊரை இறப்பக் கூறியது என்பர்.

    238.    வார்கோட்டு வயத்தகர் வாராது மாறினுங்  

குரூஉமயிர்ப் புருவை யாசையி னல்கும்
மாஅ லருவித் தண்பெருஞ் சிலம்ப
நீயிவண் வரூஉங் காலை
மேவரு மாதோவிவ ணலனே தெய்யோ.

இது வரையாது வந்தொழுகும் தலைமகனுக்கு “இவள் கவின் நீ வந்த காலத்து வருதலால் நீ போன காலத்து அதன் தொலைவு உனக்கு அறியப்படாது எனத் தோழி சொல்லி வரைவுகடாயது.

** உரை :**
நீண்ட கொம்பும் வலியுமுடைய ஆட்டுக் கிடாய் வாராது பொய்ப்பினும் நல்ல நிறமுற்ற மயிரினையுடைய பெண்யாடு பின்னரேனும் அது வருதல் கூடும் என்னும் ஆசையாலே தங்கும் பெரிய அருவிகளையுடைய குளிர்ந்த பெரிய சிலம்பினை யுடையாய், இவளது கவின் நீ இங்கு வருங்காலை வருதலால், நீ செல்லுங்காலத்து அது கெடுதலை அறியாயாயினை என்றவாறு.

நீ செல்லுங்காலத்து முதலியன குறிப்பெச்சம். புருவை - ஆடு. இஃது இன்றும் பாண்டி நாட்டு மக்கள்வழக்கில் இருக் கிறது. “செந்நிலப் புறவின் புன்மயிர்ப் புருவை. பாடின் தெண் மணித் தோடுதலைப் பெயர 1” என்றார் பிறரும்; “புருவைப் பன்றி வருதிற நோக்கி 2” எனவரும் பாட்டிற்குப் பழைய வுரைகாரர் இளமை யென்று கூறுதலால், இதற்கு, நிறமுற்ற மயிரினையுடைய இளமை பொருந்திய ஆடு அது வரும் திசையை ஆர்வத்துடன் நோக்கி நிற்கும் என்று உரைப்பினுமாம். அது பொருளாயின், ஆசை என்பது திசையென்னும் பொருட்டு. ஆயினும், விருப்பம் என்ற பொருளே தொல்காப்பியர் காலமுதலே “காட்சி யாசையிற் களம்புக்குக் கலங்கி 3” எனப் பயில வழங்கி வருதலின், முன்னதே சிறப்புடைத்து எனக் கொள்க. தலைவியது நலம் தலைமகன் வர வருதலும் பிரியப் பிரிதலு முடைய தென்பது, “வந்தன னோமற்று இரவில், பொன்போல் விறற்கவின் கொள்ளுநின் நுதலே 4” என உடன்பாட்டாலும், “பசலைநம் காதலர், தொடுவுழித் தொடுவுழி நீங்கி, விடுவுழி விடுவுழிப் பரத்த லானே 5” என மறைமுகத்தாலும் சான்றோர் புலப்படுத்துவது காண்க.

தலைவியது நலம் தொலைவது கூறித் தலைவனை வரைவு கடாவும் கருத்தினளான தோழி, தலைவன் தலைமகளது நலம் பாராட்டக் கேட்டு, இந்நலம் நீ போந்து காணும் போது சிறந்து தோன்றுமாயினும், பிரிந்தவழித் தானும் தொலைந்து போகிறது என்பாள், நீ இவண் வரூஉங்காலை மேவரு மாதோ இவள் நலன் என்றாள். எனவே, வாராக் காலை இவள் நலம் தொலைந்து காட்டும் என்று கூறி, அதனை அயலார் அறியின் ஏதமா மாகலின், நீ வரைந்து கோடலே தக்கது என வரைவு கடாயவாறாம்.

வார்கோட்டு வயத்தகர் வாராது மாறினும் பின் அது வரக்கூடு மென்னும் ஆசையாலே புருவை தங்கும் என்றது, “நீ நின் வரவுகளில் குறித்த வண்ணமே வாராது மாறி நீட்டித் தாலும், நின்னைக் காணலாம் என்னும் ஆசையாலே இவள் உயிர் வாழா நின்றாள்” என உள்ளுறுத்து உரைத்தவாறு உணர்க. இஃது இன்றியமையாமை கூறி வரைவு கடாதல். நீ யவண் வரூஉங் காலை என்பது பாடமாயின், நீ அக்குறியிடத்து வருங்கால் என உரைக்க.

    239.    சுரும்புணக் களித்த புகர்முக வேழம்  

இரும்பிணர்த் துறுகற் பிடிசெத்துத் தழூஉநின்
குன்றுகெழு நன்னாட்டுச் சென்ற பின்றை
நேரிறைப் பணைத்தோ ணெகிழ
வாரா யாயின் வாழேந் தெய்யோ.

இது வரைவிடை வைத்துப் பிரிவல் என்ற தலைமகற்குத் தோழி கூறியது.

** பழைய உரை :**
மதவேழம் துறுகல்லைப் பிடி யென்று தழுவும் நாட னாதலால் நினக்குத் தகுதியில்லாதாள் ஒருத்தியைத் தகுதியுடையா ளென்று நீ வரையவும் கூடும் என நகையாடிக் கூறியது.

** உரை :**
சுரும்புண்ணுமாறு பெருகும் மதக்களிப்பினையும் புள்ளி யுற்ற பட்டம் அணிந்த முகத்தினையுமுடைய யானை, கரிய சருச்சரை பொருந்திய துறுகல்லைப் பிடியானை எனக் கருதிச் சென்று தழுவும் குன்று பொருந்திய நின் நல்ல நாட்டுக்குச் சென்றபின் இவளுடைய நேரியவாய் இறை பொருந்திய தொடி பெரிய தோள்களிலிருந்து நெகிழுமாறு நீ வாரா யாயின் யாம் உயிர் வாழேம் என்றவாறு.

யானைகள் பொழியும் மதநீரை வண்டுகள் உண்டல் இயல் பாகலின், சுரும்புணக் களித்த என்றார்; “வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடாஅத்துப், பொறிநுதற் பொலிந்த வயக்களிற் றொருத்தல் 1” என்றார் பிறரும். “சுரும்புணக் களித்த” என்ற விடத்து உண என்றதனைப் பெயராக்கி, “சுரும்புகள் தாம் பலவகை உணவும் உள்வழி அவ்வக் காலத்து ஆண்டுச் சென்று ஏறியும் இழிந்தும் சுழன்றும் மெய் வருந்தாது அவையெல்லாம் ஒருகாலத்தே ஒருவழி உண்ணும் உணவு 2” கிடைக்க உண்டு களித்த என உரைத்தலும் ஒன்று. துறுகல் பிடியானை போலத் தோன்றுதலின், வேழம் இரும்பிணர்த் துறுகல் பிடிசெத்துத் தழூஉம் என்றார். “உதுக்காண், பிடிதுஞ்சு வன்ன அறைமேல நுங்கின், தடிகண் புரையுங் குறுஞ்சுனை 3” எனப் பிறரும் கூறுதல் காண்க. துறுகல் பிணருடைமை, “இரும்பிணர்த் துறுகல் 4” எனப் பிறர் கூறலாலும் அறிக. இறை - ஆகுபெயர். இஃது இப் பொருட்டாதல், “வீங்கிறை வடுக்கொள வீழுநர்ப் புணர்ந்தவர் 5” என்பதன் உரையால் உணர்க.

வரைவிடை வைத்துப் பிரிவல் என்ற தலைமகற்குப் பிரிவு உடன்படுவாள், நீ சென்று விரைந்து வாராயாயின் என்றாள். சென்றவிடத்தும், விரைந்து வாராவிடத்து மாகிய ஈரிடத்தும் தலைமகள், அவன் பிரிவுள்ளி உடல் மெலிதல் ஒருதலை யாகலின், சென்ற பின்றை, நேரிறைப் பணைத்தோள் நெகிழ, வாரா யாயின் என்றாள். வாரா தொழிதற் குரிய ஏதுவினை உள்ளுறுத்து உரைத்தலின், வாரா யாயின் வாழேம் என்றது, விரைந்து வரைவொடு வருதல் வேண்டும் எனத் தலைமகனை முடுக்கியவாறு.
மதவேழம் தகுதியில்லாத துறுகல்லை இரும்பிணருடைமை பற்றிப் பிடியெனக் கருதித் தழுவும் நாடனாதலின், நின் தலை மைக்குத் தகுதியில்லாத வேறு ஒருத்தியைப் பெண்மை நல முடைமை பற்றிக் கருதி நீ வரையவும் கூடும் என உள்ளுறை கொள்க. பழையவுரையும் இதுவே கூறிற்று. நேரிறைப் பணைத்தோள் நெகிழ என்றது உடம்பு நனிசுருங்கல்.

வேழத்தின் மதநீர், சுரும்பினம் வருத்தமின்றிப் பல வகை உணவும் ஒருகாலத்து ஒருவழிப் பெற்றுண்ணும் உணவாகும் என்றதனால், நின்பாலுள்ள பொருள் சுற்றத்தார் பலரும் ஒருங் கிருந்து உவந்துண்ணும் அளவிற்றாகவும் நீ வரைவு இடை வைத்துப் பொருள்வயிற் பிரிகின்றவாறு என்னை என இறைச்சி தோன்றுமாறு காண்க.

    240.    அறியே மல்லே மறிந்தன மாதோ  

பொறிவரிச் சிறைய வண்டின மொய்ப்பச்
சாந்த நாறு நறியோள்
கூந்த னாறுநின் மார்பே தெய்யோ.

இது, தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதானமை அறிந்து தலைமகள் புலந்தவழி, அவன் அதனை இல்லை என்று மறைத் தானாக, தோழி சொல்லியது.

** உரை :**
பொறியும் வரியும் பொருந்திய சிறகுகளையுடைய வண்டின் கூட்டங்கள் மொய்ப்பச் சந்தனத்தின் மணம் வீசும் நறியவளது கூந்தலின் மணத்தை நின் மார்பு கமழுதலால் நினக்குப் புறத்தொழுக்கம் உண்மையை யாம் அறியே மென எண்ணற்க, நன்கறிவேம் என்றவாறு.

தன்பால் புறத்தொழுக்கம் இல்லை யெனத் தலைமகன் கூறினானாக, அவன் கூற்றை மறுத்து அவ்வொழுக்கம் அவன் பால் உண்மையினை எடுத்துக் கூறுதலின், அறியே மல்லேம் என்று ஒழியாது, அறிந்தனம் என்றும், அதற்கு ஏது இஃது என்பாள், நறியோள் கூந்தல் நாறும் நின் மார்பு என்றும் கூறினாள். “பிறர்கூந்தல் மலர்நாறும் மார்பினை ஈங்கு எம்மில் வருவதை 1” என்று பிறரும் உரைப்பது காண்க. நின்னைக் கூடிய பரத்தை நின் மார்பில் இன்றுயில் பெறுதலின், அவளது கூந்தல் மார்பிற் படிதலால் நின் மார்பு நறுமணம் கமழ்வதாயிற்று என்றற்கு, நறியோளுடைய கூந்தல் மணம் நின்மார்பு நாறுகின்றது என்றாள்.

பொறிவரிச் சிறைய வண்டினம் மொய்ப்பச் சாந்தம் நாறும் நறியோள் எனப் பரத்தையைக் கூறியது, ஆடவராகிய வண்டினம் சூழ்வரத் தன்னை மிகவும் வியந்து பாணரும் பிறரும் புகழ்ந்து பாடும் நலமுடையாள் எனப் புகழ்வாள் போல் இகழ்ந்து கூறியவாறு. “பரத்தையை ஏத்தினும்,”உள்ளத்து ஊடல் உண் டென மொழிப 1" ஆகலின், இதுவும் புலவியென உணர்க.

“திணைமயக் குறுதலும் கடிநிலை யிலவே 2” என்ற சூத்திர வுரையில் இப்பாட்டுக் குறிஞ்சிக்கண் மருதம் மயங்கிற்றெனக் கொண்டு, “இது புறத்தொழுக்கம் இன்று என்றாற்குத் தோழி கூறியது” என்றும், “இரந்து குறையுற்ற கிழவனை 3” என்ற விடத்து, “வாய்மை கூறலும்” என்றதற்கு இதனைக் காட்டி, இது வாய்மை கூறியது என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர்.


வெறிப்பத்து

வெறி பொருளாக வரும் பாட்டுக்கள் பத்துக் கொண்ட பகுதியாகலின், இது வெறிப்பத்து என்னும் பெயர் பெறுவ தாயிற்று.

வெறி யென்பது மணம் என்னும் பொருள்படுவதொரு பழந்தமிழ்ச் சொல். வெறிமலர், வெறிகமழ் பொழில், என்றெல் லாம் சான்றோர் செய்யுட்களில் இச்சொல் பெரிதும் வழங்கும். சொல்வடிவே நோக்கின், இது மிகுதிப்பொருளில், வெறுக்கை, வெறுத்த கேள்வி எனவரும் பெயரும் வினையுமாகிய சொற்களின் முதனிலையாகிய வெறு என்னும் உரிச்சொல் லடியாகப் பிறந் தமை தோன்றும். ஆகவே, அழகும் ஒளியும் இளமை நலமும் திகழும் செடிகொடிகளின் பூக்களிடைச் சிறந்து நிற்கும் மிகுமணம் வெறி யென்ற சொல்லால் வழங்கப்படுவதாயிற்று.

கருமுகில் தவழும் மலையகத்தே இரவுப்போதில் இருளும் குளிரும் செய்யும் இன்னல் பொறாது ஒடுங்கி உறையும் தனக்கு நாட்காலையில் அழகிய ஒளி செய்து போதரும் ஞாயிற்றால் இருள் நீக்கமும் உள்ளக்கிளர்ச்சியும் உடலூக்கமும் கிளர்ந் தெழுவது கண்டு அதனையே முழுமுதற் பொருளாகப் பரவினான் தமிழ் முதன்மகன். ஞாயிறு தோன்றும் நாட்காலையில் மலை யணைந்த காடுகள் இளமைத்தளிர் பரப்பிப் பூக்கள் மலர்ந்து எங்கும் இன்ப மணம் திகழ்வதும், மாவும் புள்ளும் தத்தம் தொழில் புரிவதும், மக்கள் அறிவு விளக்கமும் தெளிவும் பெறு வதும் ஓர்ந்து, இவற்றிற்கு உள்ளீடு இளமை, அழகு, மணம், அறிவு முதலிய நலங்களே என்பதைக் கண்டான்; ஞாயிறு, காலையில் தோன்றுவதும், மாலையில் மாய்வதும் கண்டு, தோற்றமும் ஈறும் இன்றி என்றும் ஒருபடித்தாய் நிலவுவதாய், ஞாயிற்றுக்கும் அதற்கு இடமாகிய வானத்துக்கும் கடலுக்கும் கடல் சூழ்ந்த நிலவுலகத்துக்கும் எல்லாவற்றிற்கும் முழு முதலாய் உள்ளதொரு பொருள் உண்டு எனத் தெளிந்தான்; தனக்கும் தான் பெறும் நலங்கட்கும் முதல் அதுவே யெனக் கொண்டு, செல்வக் காலை அல்லற்காலை யாகிய இருபோதினும் அதனை நினைந்து வழிபடலானான்.

அழகு திகழும் தளிரிடத்துத் தோன்றும் இளமையும், மலர்களிடையே தோன்றும் மணமும், மாவும் புள்ளுமாகிய பிறவுயிர்களிடத்தே தோன்றும் கிளர்ச்சியும், நாட்காலையில் நெடுங்கடலும் வானும் தொடுமிடத்தே எழும் ஞாயிற்றின் எழுச்சியில் விளங்கும் ஒளியும் அழகும் அம்முதற்பொருளால் அருளப்படுவன என்பது அவற்குப் புலனாயிற்று. அப்புலனெறியே கண்டபோது அழகும் இளமையும் மணமும் ஒளியும் தெளிவும் “நன்பக லமையமும் இரவும் போல, வேறுவேறு இயல வாகி” நிலவுவது விளங்கவே, இவற்றிற்கு முழுமுதலாகும் முதற்பொருள், மாறா அழகும், மாறா இளமையும், மாறாத மணமும், மாறாத ஒளியும், தெளிவு முடைய தென்பது தெரிந்தது. மாறாத அழகு முதலிய நலங்களெல்லாவற்றையும் ஒருங்கே ஒருசேரத் தொகுத்து உணர்த்தவல்லதொரு சொல்லைத் தேர்ந்தான். அது, முருகு என்னும் சொல்லாகும். அதனால் அம் முழுமுதற்பொருளை முருகு என்று பெயரிட்டு வழிபடலானான். இம்முருகினைக் காண்டற்கு “மாக்கடல் நிவந்தெழுதரு செஞ்ஞாயிறு” முதற் பொரு ளாயினமையின், முருகின் நிறமும் செஞ்ஞாயிற்றின் செம்மைநிறம் எனக் கொண்டு, அதனைச் சேயோன் என வழங்கினான். சேயோன் - செம்மை நிற முடையவன்.

நிலவுலகின் உயர்நிலையாகிய மலைமுடியில் வாழ்ந்த முன்னோனாகிய முதன்மகன் சேயோனாகிய முருகினை முழு முதற்பொருளாகக் கண்டு வழிபடத் தொடங்கவே, மலை யுறையும் குறிஞ்சி நிலமக்கட்கு அவனே வழிபடுகடவுளானான். இது தொல்காப்பியர் காலத்துக்குப் பல்லாயிர மாண்டுகட்கு முன்பே நிலவிய கொள்கை யாதலின், இதனை உணர்த்தப் புகுந்த போது அவர் “சேயோன் மேய மைவரை யுலகம்” என்று தெரிவித்தார். தொடக்கத்தில் முருகினது உண்மை காட்டிய செஞ்ஞாயிற்றின் தீவிய ஒளியில் இளந்தளிரும் மணமலரும் மலர்த்தேனும் சிறந்து தோன்றி முதன்மகன் உள்ளத்தை முருகன் கண் தோய்விக்கவே அவற்றையே அம்முருகிற்கு முதற்கண் கையுறையாகப் பெய்து வணங்கினான். அக் கையுறைக்குப் பலி யென்பது பெயர். தளிரைத் தளிர்ப்பலி எனவும், பூவைப் பூப்பலி எனவும் பண்டையோர் வழங்கினார். பின்னர்த் தன்பால் இளமை யும் வளமையும் ஒளியும் தெளிவும் உண்டாக்கிய பூவும் தேனும் உண்பொருளும் பிறவும் முருகிற்குப் பலியாகப் படைக்கப் பட்டன. ஊனுணவும் ஒருவகையில் தன் உடற்கு ஆக்கம் தருவது கண்டு அதனையும் பலியிடலானான். அஃது உயிர்ப்பலி என வழங்கிற்று.

முருகனை வழிபடும் இடத்தே நறுமணம் மிக்க பூவும், தளிரும், புகையும் மிக்கு, எங்கும் இனிய மணமே நிலவும்; ஆகலின் அதனை வெறிக்களம் என முன்னோர் வழங்கினர். இவ்வழிபாடு வெறி என்றும், வெறியயர்தல் என்றும் பெயர் பெறுவதாயிற்று. வெறிக்களத்தே வழிபடப்பெறும் முருகினை யும் ஒரோவழி வெறி என்றும் சான்றோர் குறிப்பர். “வேலன் வேண்ட வெறிமனை வந்தோய் 1” என்பதனால், வெறிக்களம் வெறிமனை என்றும் குறிக்கப்படுவதை அறிகின்றோம். “சால்வ தலைவ எனப் பேஎ விழவினுள், வேலன் ஏத்தும் வெறியும் உளவே 2” என்று கூறுவதனால், வெறி முருகவேள் வழிபாட்டுக்குப் பெயரா தல் தெளியப்படும்.

முருகனை நோக்கி வெறியயரும் இடத்தில் மக்கள் பலரும் ஒருங்கு கூடி வழிபடுவராதலின், அவ்வழிபாடு ஒழுங்காக நிகழ்தற்கு ஒருவன் முன்னணியில் நிற்பன். அவன் முருகனது வேற் படையைக் கையிலேந்தி யிருப்பது மரபு. அதனால் அவனை வேலன் என்றும், அவன் வெறி அயரும் முறை முற்றும் அறிந் திருப்பது பற்றி, “வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் 1” என்றும் ஆசிரியர் குறித்துரைக்கின்றார்.

பருந்து ஒன்று வானத்திற் பறக்க எழுங்கால் அதன் எழுச்சியை, “நெடுவிளிப் பருந்தின் வெறி 2” எனச் சான்றோர் கூறுவர்; அதுவே வெறிக்களத்துக்கும் பெயராகக் கூறப்படுதலின், வெறியயர்களமும் பருந்தின் வட்டம் போல முழு வட்டமாக இருக்குமெனக் கருதலாம். களத்தின் நடுவே வேற்படையை நட்டு அதனைச் சுற்றி வட்டமாக அமைத்த இடத்தை வெறிமனை யெனக் கூறுவதும் உண்டு. வெறியயர் களமெல்லாம் வழிகள் சில வந்து கூடும் சந்திகட்கு அருகில் அமைக்கப்படுகின்றன; அவ் விடத்தை நூலோர் “செல்லாற்றுக் கவலை 3” என்பர்.
வெறியயரக் கருதுவோர் முதற்கண் அதனை வேலற்கு உணர்த்துவர். அவன் மேலே குறித்த “செல்லாற்றுக் கவலையில்” இடம் கண்டு, வெறிக்களம் அமைப்பன். நன்கு அமைந்த களத் தின் கண் “வேலை நடுவிற் கொண்ட வெறிமனையில் புதுமணல் பரப்பிச் செந்நெல்லின் வெண்பொரியும் 4” பல்வகைப் பூக்களும் சொரிந்து அழகுறுத்துவன். மேலே பந்தர் அமைத்துப் “பசுந்தழை யும் கடம்பின் மலரும் 5” வேறுபல “நறுமணங் கமழும் பூக்களும் 6” கொண்டு இனிய காட்சியமையச் செய்து, மறி யறுத்து அதன் குருதி கலந்த செந்தினையை வெறிமனையில் தூவி, பல்வேறு இயங்கள் இயம்ப மணி இயக்கி நறும்புகை எடுத்துப் பூப்பலி இடுவன். மகளிரும் பிறரும் குறிஞ்சிப்பண்ணிற் பாட்டுக்கள் பாடுவர்.

இவ்வெறியின் வேறாக முருகவேட்குக் குன்றவர் கூடி விழா அயர்தலும், அக்காலையில் அவர்கள் தம்மிற் கூடிக் குரவைக் கூத்து ஆடுவதும் உண்டு. இவ்விழவும் குரவையும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் குறமகளிர் முன்னணியில் நிற்பர். இவை மழை வேண்டும் போதினும் வேண்டாப் போதினும் குன்றவர்களால் நிகழ்த்தப் பெறுகின்றன. இக்காலத்தும் மேற்கு மலையில் வாழும் தொல்குடி மக்களிடையே இவ்விழாவும் குரவையும் நடைபெறு கின்றன. காலக்கழிவால் சில நிகழ்ச்சிகள் வேறுபட்டன வாயினும், பல கூறுகள் பழந்தமிழ் நூல்கள் காட்டும் முறையில் அமைந் துள்ளன. அவற்றைத் திரு. நாகமையர், தரிஸ்டர், கோபாலன் நாயர் முதலியோர் எழுதிய பழங்குடிமக்கள் இயல்பு கூறும் நூல்களிற் காணலாம்.

வெறியயர்வது மாத்திரம் பெரும்பாலும் வேலனாலே நிகழ்கின்றது. இளமையும் வனப்புமுடைய மகளிர் உடல் நலம் குன்றுவராயின், அது நீங்குதற் பொருட்டு அவர்களுடைய பெற்றோர் வேலனைக் கொண்டு வெறி அயர்வர். மருந்தாலும் பிறவற்றாலும் நீங்காத நோய் இவ்வெறியால் நீங்கும் என்பது கொள்கை. இளநங்கை யொருத்தி நலம் குறைந்தா ளெனின், அவளுடைய தாய் கட்டும் கழங்கும் கொண்டு அவள் நலக் குறைவுக் குரிய காரணத்தை ஆராய்வள். அவற்றை ஆராய்ந்து கூறுவோர் பெரும்பாலும் முதுமகளிரே யாவர். வேலனும் சிறுபான்மை கழங்குகொண்டு நோய்க்காரணம் அறிதல் உண்டு. “அணங்குறு கழங்கின் முதுவாய் வேலன், கிளவியின் தணியின் நன்றுமன் 1” எனச் சான்றோர் கூறுவது காண்க. வேலனைக் கொண்டு மகளுற்ற மெலிவுக்குக் காரணம் ஆராயின், அவன் “வெறியயர்தலால் இந்நோய் தீரும்” என்பான். அவ் வெறியயர் களத்தில் வேலன் முருகன்பெயரை வாழ்த்தித் தன் மேல் முருக வேள் வந்துற்றதாக ஆடுவன்; ஆடுதற் கேற்பப் பல்வகை இயங் களும் இயம்பும். வெறியயருமிடத்துக் கூடியிருக்கும் குன்றவர் களுள் ஆடவரும் மகளிரும் சேர்ந்து முருகன் புகழைப் பாடிக் குரவைக் கூத்தும் ஆடுவர்; இவ்வண்ணம் வெறியயர்தல் கொட்டும் பாட்டும் கூத்தும் கலந்து நிகழ்வது பற்றி, இதனை வெறியாடல் என்றும் சான்றோர் குறிக்கின்றனர்.

வெறியாடும் வேலன் மகட்குண்டாகிய நோய் முருகனால் உண்டாயிற் றென்று உரைத்து நோய்க்கு மருந்தாக முருகனுக் குரிய பூக்களைத் தந்து அவள் கூந்தலில் முடிக்கச் செய்வன். “வேலன் வந்தெனப், பின்னுவிடு முச்சி அளிப்பா னாதே 2” என வருதல் காண்க.

உடல்நலங் குன்றி மேனி வேறுபடும் இளமகளிர் பொருட்டு வெறியாடுமிடத்து, அவர்களை நீராட்டி ஒப்பனைசெய்து வெறியயர்களத்தே நிறுத்தி வேலன் முருகனை வழிபட்டுப் பல்வகை இயங்கள் இயம்ப, பறை முழங்க, முருகனது வேலைக் கையிலேந்திக் களத்தில் ஆடுவன். அக்காலை அங்கே நிற்கும் மகளிர் சிலர் உடல் நடுங்கி மருண்டு ஆடுவதும் செய்வர். அதனை “வெறியுறு நுடக்கம் 1” என்பர். மகளிர் எய்தும் மேனி வேறுபாடு வெறியாட்டால் தீரும் என்ற கருத்தில், “வெறியென உணர்ந்த உள்ளமொடு மறியறுத்து, அன்னை அயரும் முருகு 2” “வெறியென உயங்கும் அரியள் அன்னையை 3” “அறியா தயர்ந்த அன்னைக்கு வெறியென, வேலன் உரைக்கும் என்ப 4” “வெறி யென வுணர்ந்த வேலன் 5” என்று சான்றோர் கூறுவது பெரும் பான்மை.

இவ்வெறியாட்டின்கண் வேலன் செய்யும் வழிபாடு காந்தள் என்றும் வழங்கியுளது. இதனை ஆசிரியர் “வெறியாட் டயர்ந்த காந்தள் 6” என்பது காண்க. இக்காந்தள் என்னும் சொல் பிற்காலத்தில் கந்தழி யெனத் தவறாக ஏடெழுதினோரால் எழுதப்பட்டுவிட்ட தென்றும், அதனை ஆராய்ந்து காணாது உரைகாரர்கள் கந்தழி யென்றே கொண்டு தத்தமக்குத் தோன்றிய வாறு உரைத்தன ரென்றும் நன்கு பொருந்துமாறு பேரா சிரியர் நாவலர், ச. சோமசுந்தர பாரதியவர்கள் கூறுகின்றார்.

இவ்வெறியே பொருளாக அழகிய பாட்டுக்கள் பாடியது பற்றிச் சங்ககாலச் சான்றோர் ஒருவர் வெறி பாடிய காமக் காணியார் என்று சிறப்பித் துரைக்கப்பெறுகின்றார். அம் முறையே, இங்கே தொகுக்கப்பட்டுள்ள பாட்டுக்களில் வெறியே சிறப்பாகப் பாடப்பெறுவதைக் காணலாம்.

    241.    நாமுறு துயர நோக்கி யன்னை  

வேலற் றந்தா ளாயினவ் வேலன்
வெறிகமழ் நாடன் கேண்மை
அறியுமோ தில்ல செறியெயிற் றோயே.

இஃது, இற்செறித்தவழித் தலைமகட்கு எய்திய மெலிவு கண்டு இஃது எற்றினா னாயிற்று என்று வேலனைக் கேட்பத் துணிந்துழி, அறத்தொடுநிலை துணிந்த தோழி செவிலி கேட்கு மாற்றால் தலைமகட்குச் சொல்லியது.

** உரை :**
நெருங்கிய பற்களையுடையோய், நாம் எய்தியுள்ள துயரத்தை நம் அன்னை கண்டு, அதற்குக் காரணம் அறிவாளாய் வெறியெடுத்தற்கு வேலனைத் தருவித்துள்ளாள்; ஆயினும், அவ்வேலன், மணம் கமழும் நாடனொடு நம்மிடை உளதாகிய நட்பினை அறிவான்கொல்லோ? அறியான்கொல்லோ? என்றவாறு.
தலைமகட் குளதாகிய உடல்மெலிவு வேறு காரணங்களால் தோன்றிய தன்று என்பது தோன்ற நாமுறு துயரம் எனல் வேண்டிற்று. மெலிவுக்கு ஏதுவாகியது பற்றித் துயரம் என்றார். அவ்வேலன் என்ற சுட்டு, வேலன் எல்லாவற்றிற்கும் வெறியல்லது வேறே காரணமுண்மை அறியாதவன் என்பது பட நின்றது. தில்ல - அசைநிலை. செறியெயிற்றோய் என்றது செவிலியை.

தலைமகனோடு பயின்று ஒழுகாவாறு இற்செறிக்கப் பட்டமையால், தான் அவனொடு தலைப்பெயல் ஆகாமையின், கண்படையின்றியும், உடம்பு நனிசுருங்கியும் மேனி வேறுபட்டுக் காட்டினமையின், நாம் உறுதுயரம் நோக்கி என்றும், அது கண்ட தாய், “கையறு நெஞ்சினள் வினவலின் முதுவாய்ப், பொய்வல் பெண்டிர் பிரப்புளர் பிரீஇ, முருகன் ஆரணங் கென்றலின் அதுசெத்து, ஓவத்தன்ன வினைபுனை நல்லிற், பாவை யன்ன பலராய் மாண்கவின், பண்டையிற் சிறக்கவென் மகட்கு எனப் பரைஇக், கூடுகொள் இன்னியம் கறங்கக் களன்இழைத்து, ஆடணி நயந்த அகன்பெரும் பந்தர், வெண்போழ் கடம்பொடு சூடி இன்சீர், ஐதமை பாணி யிரீஇக் கைபெயராச், செல்வன் பெரும்பெயர் ஏத்தி வேலன் 1” வெறியயர்கின்றான் என்பாள், வேலன் தந்தா ளாயினும் என்றும் கூறினாள். அவ்வேலன் நமக்கும் நாடற்கு முள்ள கேண்மையை அறிந்து பலரும் அறிய உரைப்பனேல், அஃது அலராய் நம்மை வருத்தும் என்று அறி யாது, “அறிவர் உறுவிய அல்லல்கண்டு அருளி, வெறிகமழ் நெடுவேள் நல்குவன் எனினே, செறிதொடி உற்ற செல்லலும் பிறிதுஎனக், கான்கெழு நாடன் கேட்பின் 1” தலைமகள் உயிர் வாழ்தல் அதனினும் அரிது என்று கூறுவாள், நாடன் கேண்மை அறியுமோ என்று மொழிந்தாள். வேலன் அறிந்து உரைப்பினும் அறியாது உரைப்பினும் இருவழியும் நம் துயரம் நீங்குமா றில்லை என்றாளாம்.

“மறைந்தவற் காண்டல் 2” என்ற சூத்திரத்து “வெறியாட் டிடத்து வெருவின் கண்ணும்” தலைவிக்குக் கூற்று நிகழும் என்பதற்கு இதனைக் காட்டுவர் இளம்பூரணர்.

    242.    அறியா மையின் வெறியென மயங்கி  

அன்னையு மருந்துய ருழந்தன ளதனால்
எய்யாது விடுதலோ கொடிதே நிரையிதழ்
ஆய்மல ருண்கண் பசப்பச்
சேய்மலை நாடன் செய்த நோயே.

இது, தலைமகள் அறத்தொடுநிலை நயப்ப வேண்டித் தோழி அவட்குச் சொல்லியது.

** உரை :**
நிரல்பட நின்ற இதழ்களையுடைய மலர்கள் பலவற் றுள்ளும் ஆய்ந்து கொண்ட மலர்போலும் மையுண்ட கண்கள் பசப்பெய்துமாறு சேய்மைக்கண் தோன்றும் மலை யினையுடைய நாடன் தன் பிரிவாற் செய்த நோயினை, அறியாமையால், வெறியயர்ந்து தீர்ப்பான் முயன்று, அன்னை யும் மிக்க துயருழந்து வருந்தினாள்.
ஆகலின், அவன் செய்த நோயினை அவள் அறியாதொழிதல் நன்றன் றாகலான், அதனை அறிவித்தல் வேண்டும் என்றவாறு.

அறிதற்குரிய கேண்மையைப் பின்னர்க் கூறலின் அறி யாமையின் என்றும், வெறி அயர்ந்தவழித் தீர்தற்குரிய நோயினை வெறி என்றும் கூறினார். அறத்தொடுநிலை வகை யால் அறிவித்தாலன்றி அறிதற்கு அருமைபற்றி அன்னை எய்திய துயர் அருந்துய ராயிற்று. “எய்யாமை அறியாமை 1” ஈண்டுப் பிறவினை மேல் நின்றது. நன்று அல்லது கொடிதாகலின், கொடிது என்றார். சேய்மலை நாடனாகிய தலைமகன் கூடிப் பிரிந்தமையால் உண்டாதல் பற்றி நாடன் செய்த நோய் எனல் வேண்டிற்று, “அரிமத ருண்கண் பசப்பநோய் செய்யும், பெருமான் 2” எனப் பிறாண்டும் கூறுவது காண்க.

சேய்மலை நாடன் பிரிந்ததனால் தலைமகள் கண்கள் பசந்து மேனி வேறுபட்டா ளாகலின், ஆய்மலர் உண்கண் பசப்ப என்றும், அது நாடன் காரணமாக உண்டாயிற்று என்று அறி வாளேல் வெறி விரும்பா ளென்பாள், அறியாமையின் வெறி யென மயங்கி என்றும், ஆராய்கின்றவர் உண்மை யறிந்தாலன்றி அதனைப் பயனுடைய செயல் எனக் கொள்ளா ராகலின், அவள், கட்டினும் கழங்கினும் வெறியினும் பிறவற்றினும் முயன்றது வாளா முயற்சித் துன்பமே தந்தமையின், அன்னையும் அருந் துயர் உழந்தனள் என்றும், இனி நாமேயாதல் அறத்தொடுநிலை வகையால் உணர்த்தாவிடின், அவள் அத்துயரத்தைப் பொறாள் என்பாள், எய்யாது விடுதலோ கொடிதே என்றும் கூறினாள். வெறி முதலியவற்றால் உண்மை அறிய முயன்றவள், அதனை அறியாமையால் மயங்கினளாகலின், அன்னையும் அருந்துயர் உழந்தனள் என்றா ளென்றும், முன்னர் அறியாமையினால் அருந்துயர் உழந்தவள், பின்னரும் அறியாமையினால் வருந்தல் நன்றன் றாகலின், கொடிது என்றாள் என்றுமாம்.

ஆகவே, நாம் அறிவித்தலே கடன் என்பது குறிப்பெச்சம்; “அன்னைக்கு, அறிவிப் பேங்கொல் அறியலங் கொல்லென, இருபாற் பட்ட சூழ்ச்சி யொருபாற், சேர்தல் நன்று 3” ஆகலின். அன்னை அறியாமையின் வெறியென மயங்கி அருந்துயருழத் தலை, “சிறந்திவள், பசந்தனள் என்ப துணராய் பன்னாள், எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி, வருந்தல் வாழிவேண்டு அன்னை 4” என்பதனால் உணர்க.
அதனால் அறியாது விடுதலோ கொடிதே என்றும் பாடமுண்டு.

“களவல ராயினும் 1” என்ற சூத்திரத்துக் “கட்டினும் கழங் கினும் வெறியென இருவரும், ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்” என்பதற்கு இதனைக் காட்டி, “இது வெறியென அன்னை மயங்கினமை கூறிற்று” என்பர் நச்சினார்க்கினியர்.

    243.    கறிவளர் சிலம்பிற் கடவுட் பேணி  

அறியா வேலன் வெறியெனக் கூறும்
அதுமனங் கொள்குவை யனையிவள்
புதுமலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே.

இது, தாயுழை அறியாமை கூறித் தோழி வெறி விலக்கியது.

** பழைய உரை :**
அறியா வேலன் யாது கேட்பினும் வெறியெனக் கூறும்; அவனை இதற்கும் கேட்க மனங்கொள்ளா நின்றாய் என்றவாறு.

** உரை :**
அன்னாய், இவளுடைய புதுமலர் போலும் குளிர்ந்த கண்கள் தனிமையுற்றுக் கலுழ்தற் கேதுவாகிய நோய்க்குக் காரணம், மிளகு வளரும் மலையின்கண் உறையும் கடவுளைப் பரவி வெறியயர்த லல்லது பிறிதியாதும் அறியாத வேலனைக் கேட்டு, அவன் வெறி யென்று கூறும் இயல்பின னாகலின், வெறியெடுத்தல் வேண்டும் என்றானாக, நீ அவன் சொல் வதையே மனத்திற் கொள்ளாநின்றாய். இவள் உற்ற நோய்க்கு மருந்து வெறியன்று எனத் தெளிவாயாக என்றவாறு.

கறி - மிளகு. கறிவளர் சிலம்பிற் கடவுள், முருகவேள். கழங்கின்கண் கடவுளைப் பரவி இவட்கு உற்ற நோய் முருகனா லாயது என்றும், அது வெறியெடுத்தால் நீங்கும் என்றும் கூறுவ னாகலின், கடவுட் பேணி வேலன் வெறியெனக் கூறும் என்றார். “அறியா தயர்ந்த அன்னைக்கு வெறியென, வேலன் உரைக்கும் என்ப 2” எனப் பிறரும் கூறுதல் காண்க. அது, வெறி. அது மனங்கொள்குவை என்றது குறிப்பால், அது கொள்ளற்கு உரித்தன்று என்பது தோன்ற நின்றது. “அன்னையும் அதுவென உணரும் 3” எனப் பிறரும் கூறுதல் காண்க.
வேலனைப் படிமத்தான் என்று கூறி, “செவ்வேள் வேலைத் தான் ஏந்தி நிற்றலின் வேலன் என்றார்” என்பர் நச்சினார்க் கினியர்.

வேலன், வெறியெனக் கூறுத லொழிய, அதனால் இவட்கு உண்டாய நோய் தீர்க்கும் மருந்து அறியான் என்பாள், அறியா வேலன் என்றும், அவன் தன் கூற்றைப் பிறர் ஏற்க வேண்டும் என்பதற்காகவே முதற்கண் கடவுளைப் பரவுகின்றான் என்றற்குக் கடவுட் பேணி என்றும் கூறினாள். அவன் மருந்தறியான் என்பது, “வெறியென உணர்ந்த வேலன் நோய்மருந்து, அறியான் ஆகுதல் அன்னை காணிய 1” என வருதலால் அறியப்படும். யாது வினவினும் அது முருகனால் விளைந்தது எனக் கூறுவ தொன்றை யன்றி வேலன் இவள் நோய் தீரும் மருந்துவகை அறியானாக, அதனை அறியாது நீ இவள் நோயையும் அவனிடம் கூறி அவன் கூறுமாறு வெறியயரக் கருதுகின்றனை; அதனாற் பயன் யாதும் இல்லை என்று தோழி வெறி விலக்கியவாறாம்.

வெறியெனக் கூறுமது மனங்கொள்குவை எனவே, யாம் குறிப்பாலும் வெளிப்படையாலும் உணர்த்துவனவற்றையாதல், அறிவிலார்பால் ஒன்று கேட்டறிதல் அறிவுடைமை அன்றென் பதையாதல் நின் மனத்துட் கொள்ளாயாயினை யெனச் செவிலி மேல் அறியாமை கூறியவாறு அறிக. மழைக்கண் புலம்பிய நோய்க்கு என்பது இன்பத்தை வெறுத்தலும், பசலை பாய்தலுமாம்.

எளித்தல், ஏத்தல் என்ற அறத்தொடுநிலைப் பகுதிகளுள் இது வேட்கையுரைத்தல் என்பர் இளம்பூரணர். வேட்கை யுரைத்த லாவது “தலைவியைத் தலைவற்குக் கொடுக்க வேண்டும் என்பதுபடக் கூறுதல்”2 என்பர். “நாற்றமும் தோற்றமும்” என்ற சூத்திரத்துக் “களம்பெறக் காட்டினும் 3” என்புழி இதனைக் காட்டி இது தாயறியாமை கூறி வெறி விலக்கியது என்பர் நச்சினார்க்கினியர்.

    244.    அம்ம வாழி தோழி பன்மலர்  

நறுந்தண் சோலை நாடுகெழு நெடுந்தகை
குன்றம் பாடா னாயின்
எவன்பயஞ் செய்யுமோ வேலற்கவ் வெறியே.
இது, வெறியாடல் துணிந்துழி விலக்க லுறும் தோழி செவிலி கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லியது.

** உரை :**
தோழி, கேட்பாயாக: வெறியாட லுறும் வேலனுக்கு அவ்வெறி என்ன பயனைச் செய்வதாகும், பலவாகிய மலர்கள் பொருந்திய நறுவிய குளிர்ந்த சோலைகள் நிறைந்த நாடுகளை யுடைய நெடிய புகழோனாகிய தலைமகனது குன்றத்தைப் பாடாதொழிவானாயின்? என்றவாறு.

குன்றம் பாடுதலாவது, “கொடிச்சியர் கூப்பி வரைதொழு கைபோல், எடுத்த நறவின் குலையலங் காந்தள், தொடுத்ததேன் சோரத் தயங்குந்தன் னுற்றார், இடுக்கண் தவிர்ப்பான் மலை 1” என்று பாடுவது போல்வது. வெறியாட்டினும் குரவைக் கூத்தினும் குன்றவர் தம்முடைய தலைவனுடைய குன்றத்தைப் பாடுவது வாழ்த்துவகை யாகலின், குன்றம் பாடானாயின் என்றார்.

வேலன் வெறியயருங்கால் முதற்கண் தலைமகனது குன் றத்தைப் பாடுதலால், தான் கூறுவன வாயாதல் பெறுகின்றான் என்றும், அது செய்யானாயின், அவன் கூற்றுப் பொய்யாகி ஒரு பயனையும் எனக்கேயுமன்றி அவற்கும் செய்யாதொழியும் என்றும் கூறுவாள், குன்றம் பாடானாயின், எவன் பயஞ் செய்யுமோ என்றாள். தனக்குப் பயன்படுதல், தலைமகன் உறுபெயர் கேட்டு மகிழ்வெய்துதல்; வேலற்குப் பயன், வெறி யாடல் வாய்த்தமை குறித்து மகிழ்வும் பொருளும் பெறுதல். இஃது உறுபெயர் கேட்டல்.

“நாற்றமும் தோற்றமும் 2” என்ற சூத்திரத்துக் “களம்பெறக் காட்டினும்” என்புழித் தலைவியை முன்னிலையாக்கிக் கூறு தற்கு இதனையே இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் காட்டினர்.

    245.    பொய்யா மரபி னூர்முது வேலன்  

கழங்குமெய்ப் படுத்துக் கன்னந் தூக்கி
முருகென மொழியு மாயின்
கெழுதகை கொல்லிவ ளணங்கி யோற்கே.

இது தலைமகன் சிறைப்புறத்தானாக வெறி அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது.

** பழைய உரை :**
கன்னம் என்பது நோய் தணித்தற்குப் பண்ணிக் கொடுக்கும் படிமம். கெழுதகை என்பது உரிமை. இவளை அணங்கியோற்கு வெறியாட்டு உரிமையன்று என்பதாம்.

** உரை :**
பொய்த்தல் இல்லாத மரபினையும் ஊர்க்கண் வாழும் முதுமையுமுடைய வேலன், கழங்கு நிறுத்தி, அதன்கண் தான் வழிபடுதெய்வம் வரப் பண்ணிப் பின்னர் அதற்குக் கன்னத்தை அணிந்து, வெறி யாடி இவளை அணங்கியோன் முருகனா வான் என்று மொழிவானாயின், இவளை மெய்யாற் கூடித் தன் ஒழுக்கத்தால் மெலியச் செய்த தலைமகற்கு அவ்வெறி யாட்டு உரித்தாங்கொல்லோ? கூறுக என்றவாறு.

வேலன் வெறியாடிக் கூறுவன உண்மை என்ப வாகலின், பொய்யா மரபின் என்றும், அவன் ஊருக்கு ஒருவனாய் முதுகுடியில் தோன்றி வருபவனாகலின், ஊர் முதுவேலன் என்றும் கூறினார். கழங்கு - கழற்காய். இவற்றைக் கொண்டு வேலன் குறிகூறுமாறு: தன் தலையில் ஆடை கட்டி, சிறிய பைகள் நாலவிட்ட பல கிளைகளை உடைய வளைந்த கொம்பொன்றி னால், கழற்காய்களை முருகன் முன்வைத்து அள்ளி யெடுக் குங்கால் கண்டு கூறும் ஒருவகைக் குறி. இதனை, “அறுவை தோயும் ஒருபெருங் குடுமிச், சிறுபை நாற்றிய பஃறலைக் கொடுங்கோல்ஆகுவ தறியும் முதுவாய் வேல, கூறுக மாதோநின் கழங்கின் திட்பம் 1” என்பதனால் அறிக. முருகு, முருகன். கன்னம் என்பது - நோய் தணிதற்குப் பண்ணிக் கொடுக்கும் மந்திரத்தகடு உள்ளே வைத்துக் கட்டிய தாயத்தை 2; இது பொன்னாலும் செய்யப்படும் என்பது, “பொன்செய் கன்னம் பொலிய 1” என்பதனாலும் அறியலாம். கழங்கு மெய்ப்படுத்த லாவது இது தெய்வத்தா னாயிற்றோ பிறிதொன்றினா னாயிற்றோ எனத் தெய்வம் பராவி அக்கழற்காய்களை எண்ணிப் பார்த்தல் என்றும், கழற்காய்களைத் தொகுத்து அவற்றிற்கு மஞ்சட் காப்புக் கட்டி, “இம் மையல் தீருங்காறும் இக்காப்பினை அணிந்திருக்க” எனக் கட்டுவது கன்னம் என்றும் கூறுப. கெழுதகை, உரிமை. “யாமெம் தாங்கவும் தாந்தம், கெழுதகை மையின் அழுதன தோழி 2” என்பதனாலும் அறிக.

அன்னை வேண்ட வேலன் அயரும் வெறியாட்டின்கண் நம் குடிக்கு அலரும், தலைமகற்குப் பழியும் எய்தக் கூறுவனோ என்று அஞ்சின ளாகலின், பொய்யா மரபின் ஊர்முது வேலன் என்றும், அவன் முருகென மொழிவனாயின், அஃது அவனது பொய்யா மரபினொடு மாறுபடுதலின், கெழுதகைகொல் இவள் அணங்கி யோற்கே என்றும் கூறினாள். மொழியு மாயின் என்றது மொழியாமையும் உணர நின்றது. எதிர்மறை ஓகாரம் விகாரத்தால் தொக்கது. இது கூறியதாற் பயன், அன்னை வேண்ட வெறியாடலுறும் வேலன், பொய்யா மரபின னாகலின், தான் கழங்கு மெய்ப்படுத்தும் கன்னம் தூக்கியும் வெறி எடுத்து இவள் அணங்கியோன் இன்னானென உண்மை கூறிவிடின், அது நினக்குப் பழியும் எங்குடிக்கு ஏதமும் பயக்கு மாகலின் நீ விரைந்து வரைந்து கொள்வாயாக எனச் சிறைப்புறம் நின்ற தலைமகன் கேட்ப வரைவு கடாயவாறாம்.

    246.    வெறிசெறித் தனனே வேலன் கறிய  

கன்முகை வயப்புலி கழங்குமெய்ப் படூஉப்
புன்புலம் வித்திய புனவர் புணர்த்த3
மெய்ம்மை யன்ன பெண்பாற் புணர்ந்து
மன்றிற் பையு டீரும்
குன்ற நாட னுறீஇய நோயே.

இது வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத் தானாய் நின்றுழி, அவன் கேட்குமாற்றால் வெறி நிகழாநின்றமை தோழி தலைமகட்குச் சொல்லியது.

** பழைய உரை :**
பயிர் விளைப்பார் விலங்குகள் நலியாமைக்குக் கழலைக் கண்ணாக வுறுத்திப் பொய்ம்மை வகையாற் பண்ணி வைத்த பெண்பாற் புலியைப் புணர்ந்து புலிப்போத்துப் படப்பை நடுவே துயரம் தீருமென்றது, வரைந்து கொள நினையாது இக்களவிற் புணர்கின்ற மாயப்புணர்ச்சியானே இன்பம் முடிய நுகர்கின்றான் என்பதாம்.

** உரை :**
மலையிடத்தே புன்செய்க் கொல்லையில் தினைப் பயிரை விதைத்த குறவர் விலங்குகள் போந்து அழிக்காதவாறு கழங் கினைக் கண்ணாகப் பொருத்தி மெய்யான பெண் புலி போலச் செய்தமைத்த பொய்ப்புலியை, மிளகுக் கொடி படரும் கல்முழைஞ்சினுள் வாழும் வலிய புலியின் ஏறு போந்து கூடிப் புனத்திடையே அமைத்த மன்றிற் கிடந்து தன் வருத்தம் நீங்கும் குன்றத்தையுடைய நாடனாகிய தலைமகனால் உண்டாகிய நோயின்பொருட்டு வேலன் வெறி அயர்தற்கு உரியவற்றை ஒழுங்காகச் செய்யலுற்றான். இஃது என்னாகுமோ? என்றவாறு.

கறி - மிளகுக்கொடி. கழங்கு - கழற்காய். மெய்யென்னா ராயினும் மெய்ம்மைத் தோற்றத்தைத் தருதற்குக் கண் சிறந் தமையின், கண்ணே கொள்ளப்பட்டது. புன்புலம், ஈண்டுத் தினைவித்திய புன்செய்; “புன்புல மயக்கத்து விளைந்தன தினையே 1” என்பது காண்க. புனவர் - குன்றவர். “இதைமுயல் புனவன் 2” என வழங்குவ தறிக. பொய்யாகப் புணர்த்தமை அறியாமையின் வயப்புலி எய்திய வருத்தம் பையுள் எனப் பட்டது. புலத்தின் இடையே பரண் நிறுத்துதற் பொருட்டும் விளைந்தவிடத்துத் தினைக்கதிர்களைத் தொகுத்தற்பொருட்டும் விடப்பட்ட நடுவிடம் மன்று என உணர்க. நோய் என்ற விடத்துப் பொருட்டுப் பொருளதாகிய குவ்வுருபு தொக்கது.

தலைமகன் சிறைப்புறத்தா னானமை அறிந்து அவன் கேட்பக் கூறுகின்றா ளாதலின், குன்ற நாடன் உறீஇய நோய் என்றும், நோயால் விளைந்த மேனி மெலிவு கண்டு ஆராய்ந்து வெறி யெடுத்தற்கு அன்னை ஆவன செய்யுமாறு உணர்த்துவாள், வேலன் மேலேற்றி வெறி செறித்தனனே வேலன் என்றும் கூறினாள். பிறாண்டு, “அணங்கறி கழங்கின் கோட்டம் காட்டி, வெறியென வுணர்ந்த உள்ளமொடு மறியறுத்து, அன்னை அயரும் முருகு 1” என்று பிறரும் கூறுதல் காண்க.

உள்ளுறையால் தலைமகன் வரைதலை மேற்கொள்ளாது களவின்கண் பெறும் இன்பத்தையே நயந்தொழுகுதலை உணர்த் தினமையின், வேறு தன்னால் செயற்பாலது இன்மை தோன்ற, இஃது என்னாகுமோ என்பது குறிப்பிற் பெற மொழிந்தாள்.

கன்முகையில் வாழும் வயப்புலி புனவர் பொய்யாகப் புணர்த்த பெண்புலியைக் கூடிப் பையுள் தீரும் என்றதனால், உயர்குடி மகனாகிய தலைமகன் களவின்கண் தலைப்பெய்து பெறும் இன்பமொன்றே நுகர்ந்து அமைகின்றான் என்றாளாம். பழையவுரைகாரர்க்கும் இதுவே கருத்தாதல் காண்க.

கழங்குகட்படூஉ என்றும், உறீஇய நோய்க்கே என்றும் பாடமுண்டு.

    247.    அன்னை தந்த தாகுவ தறிவென்  

பொன்னகர் வரைப்பிற் கன்னந் தூக்கி
முருகென மொழியு மாயின்
அருவரை நாடன் பெயர்கொலோ வதுவே.

இது, வெறி விலக்கலுறும் தோழி தமர்கேட்பத் தலைமகளை விளவுவாளாய்ச் சொல்லியது.

** உரை :**
அன்னை வெறியயர்தற்பொருட்டு வேலனைக் கொணர்ந் தமையும், அவன் எடுக்கும் வெறியால் விளையும் பயனையும் யான் நன்கு அறிவேனாகலின், அழகிய மனையிடத்தே வெறி யாடிக் கன்னத்தை அணிந்து “இவளை அணங்கியோன் முருகன்” என அவ்வேலன் கூறுவானாயின், அம் முருகு என்னும் பெயர் அரிய மலைநாடனது பெயர் ஆகுமோ? கூறுக என்றவாறு.

எனவே, அஃது அருவரைநாடன் பெயரன்றாகலின், அவ் வெறியாட்டுப் பயனில் செயலாம் என வெறிவிலக்கிய வாறாம்.

தந்தது - வேலனைத் தருவித்தது. ஆகுவது - வெறியயர்தல்; “நன்னுதல் பசந்த படர்மலி அருநோய், அணங்கென உணரக் கூறி வேலன், இன்னியம் கறங்கப் பாடி, பன்மலர் சிதறிப் 1” பரவுவதனை ஆகுவது என்றார் எனினுமாம்.

வெறியயரும் வேலன், “எம்மிறை அணங்கலின் வந்தன்று இந்நோய் 2” என்பது ஒருதலையாகலின், முருகென மொழியு மாயின் என்றும், இவட்கு இந்நோய் செய்தான் அருவரை நாட னாகலின், அவனை முருகு எனல் பொருந்தாதென்பாள், அது அருவரை நாடன் பெயர் கொலோ என்றும் கூறினாள்.

தமர் கேட்பின் இவட்கு இம்மெலிவு தெய்வத்தானா யிற்றன்று என வெறிவிலக்குதல் பயன்.

    248.    பெய்ம்மணன் முற்றங் கவின்பெற வியற்றி  

மலைவான் கொண்ட சினைஇய வேலன்
கழங்கினா னறிகுவ தென்றால்
நன்றா லம்ம நின்றவிவ ணலனே.

இது, தலைமகள் வேறுபாடு கழங்கினால் தெரியும் என்று வேலன் கூறியவழி, அதனைப் பொய்யென இகழ்ந்த தோழி வெறிவிலக்கிச் செவிலிக்கு அறத்தொடு நின்றது.

** உரை :**
மலையையும் வானையும் வென்றுகொண்ட சினத்தை யுடைய முருகனது வேலை ஏந்திய வேலன் புதுமணல் இடப் பட்ட முற்றம் அழகுபெற அமைத்துக் கழங்கு மெய்ப்படுத்துக் காணவல்ல தொன்று என்றால், இவள்பால் நின்ற கற்புநலம் நன்றுகாண். என்றது, இவளது கற்பின் மாண்பு கழங்கினால் அளத்தற் குரியதன்று என்றவாறு.

ஏகாரம், தேற்றம். சிறப்பும் தெய்வவழிபாடும் நிகழுங் காலங்களில் பழமணல் மாற்றிப் புதுமணல் பெய்து அழகு செய்தல் மரபாதலின், பெய்ம்மணன் முற்றம் கவின்பெற என்றார்; “பெய்ம்மணல் முற்றம் கடிகொண்டு, மெய்ம்மலி கழங்கின் வேலற் றந்தே 1” என்பது காண்க. சிறப்புக் குறித்துச் செய்யப்படுதலின், இயற்றி என்றும், வேலன் ஏந்திய வேல் செவ்வேளினது வேலாகலின், மலைவான் கொண்ட சினைஇய வேல் என்றும் கூறப்பட்டன. மலை என்றது குருகு பெயர்க் குன்றம். வான் என்றது வானவர் தலைவனாகிய இந்திரன் முதலியோரை; ஆகுபெயர். “நாவலந் தண்பொழில் வடபொழில் ஆயிடைக், குருகொடு பெயர்பெற்ற மால்வரை யுடைத்து, மலையாற்றுப் படுத்த மூவிரு கயந்தலை 2” என்றும், “ஓங்குவிறற் சேஎய், ஆரா வுடம்பின்நீ யமர்ந்து விளையாடிய, போரால் வறுங்கைக்குப் புரந்தர னுடைய, அல்லலி னனலன்றன் மெய்யிற் பிரித்துச், செல்வ வாரணங் கொடுத்தோன் வானத்து, வளங்கெழு செல்வன்றன் மெய்யிற் பிரித்துத், திகழ்பொறிப் பீலி யணிமயில் கொடுத்தோன், திருந்துகோன் ஞமன்றன் மெய்யிற் பிரிவித், திருங்கண் வெள்யாட் டெழின்மறி கொடுத்தோன் 3” என்றும் வருவனவற்றால் உணர்க. “மலைவான் கொள்கென உயர்பலி தூஉய் 4” என்புழிப்போல, மேகங்கள் சூழ்ந்துகொண்ட மலையைச் சினந்தழித்த வேல் என்றுமாம். மலைவான் என்பதை வானீற்று வினையெச்சமாகக் கொண்டு உரைகூறுவது முண்டு. அறிகுவது என்பது, அறிந்து செய்யும் மறியறுத்தல் வெறியாடல் முதலிய வற்றால் தலைவி மேனிவேறுபாடு நீங்குவது குறித்து நின்றது. ஆல்: அசை; அம்ம: உரையசை. நலன், குறிப்புமொழி யாய்த் தலைமகளது வேறுபாடு தோற்றுவித்தது.

வேலன் தாங்கி நிற்கும் வேல் மலையைக் கிழித்து வானத் துக்குக் காப்பு வழங்கும் அத்துணை வன்மையும் வினைத்திறமும் உடையதாயினும், இவளது கற்பின் திண்மைமுன் செல்லாது என்பாள், மலைவான் கொண்ட சினைஇய வேலன் என்றாள். இவட்குற்ற வேறுபாட்டை வேலன் எடுக்கும் கழங்கும் வெறியும் தீர்க்கும் வன்மையும் தகுதியு முடையவல்ல என்பது தோன்றக் கழங்கினான் அறிகுவது என்றால் என்றும், இவற்றாலெல்லாம் நீங்காமல் இவளது மெய்ப்பட்டு நிற்கும் வேறுபாடு, தலை மகன்பால் கொண்ட தொடர்புவழித் தோன்றித் திகழும் கற்பறம் என்றற்கு நின்ற இவள் நலம் என்றும், எனவே, இவற்றைக் கைவிட்டுத் தலைமகன் வரின் அவற்கு மகட் கொடை நேர்வது நன்று என்றும் தோழி உரைத்தவாறாம். நன்றால் என்றும் அம்ம என்றும் கூறியது வெறிமுதலியவற்றின் பயனின்மையைச் சுட்டி நின்றது.

“களவல ராயினும் 1” என்ற சூத்திரத்துக் “கட்டினும் கழங் கினும் வெறியென இருவரும், ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்” என்பதற்கு இதனைக் காட்டி, இது வேலன் கழங்குபார்த்தமை கூறிற்று என்பர் நச்சினார்க்கினியர்.

    249.    பெய்ம்மணல் வரைப்பிற் கழங்குபடுத் தன்னைக்கு  

முருகென மொழியும் வேலன் மற்றவன்
வாழிய விலங்கு மருவிச்
சூர்மலை நாடனை யறியா தோனே.

இது, வேலன் கூறிய மாற்றத்தை மெய்யெனக் கொண்ட தாய் கேட்பத் தலைமகட்குத் தோழி கூறியது.

** உரை :**
விளங்குகின்ற அருவிகளையுடைய அச்சம் பொருந்திய மலைநாடனை அறியானாய், புதுமணல் பரப்பிய விடத்தே கழங்கு வைத்து, “இவட்கு உண்டாய மெலிவின் காரணம் முருகன்” என வேலன் அன்னைக்கு மொழிந்தானாக, அன்னை யும் அதனை மெய்யெனக் கொண்டு அமைந்தாளாகலின், அவ்வேலன் வாழ்வானாக என்றவாறு.

வெறியெடுத்தற்கு முன்னர் நிகழ்த்தும் ஆராய்ச்சியாய கழங்கு வைத்துக் காண்டல் மனைக்கண் நிகழ்தலின், அது பற்றி ஒப்பனை செய்யப்பட்ட மனையகம் என்றற்கு, பெய்ம்மணல் வரைப்பு என்றார்; “முன்னர்ப் பெய்ம்மணல் முற்றம் 2” என்றதும் இக்கருத்துப் பற்றியே என்க. முருகென மொழிதல் வேலற்கு இயல்பு என்பது தோன்ற, மொழியும் என்றார். மொழியும் என்றது, “முந்நிலைக் காலமும்…. நிகழுங் காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொல் 1” லாகலின் இறந்த காலம் கொள்ளப்பட்டது. சூர் - அச்சம். சூர்மலைநாடன் என்பதற்கு அச்சம் தரும் தெய்வத்தையுடைய மலைநாடன் எனினுமாம். “வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும், சூர்மலை நாடன் 2” என்றார் பிறரும்.

வேலன் இவட்கு நோய்செய்த மலைநாடனை யறியாது அறிவான் போலக் கழங்குபடுத்து முருகு என மொழிந்தானாக, அன்னை அதனை மெய்யெனக் கொண்டாள்; இஃதன்றோ அவள் அறியாமை இருந்தவாறு எனத் தாயுழை அறியாமையும் வேலனது பொய்ம்மையும் கூறி இகழ்ந்தவாறு. நாடன் செய்த நோயினை அவனது மலைக்கண் உறையும் அச்சந்தரும் தெய்வம் தந்ததாகப் பிறழ உணர்ந்துகொண்டு வேலன் உரைத்தனன் என்றுமாம். சூர்மலை நாடனைக் கூறித் தலைமகள் குடிக்குப் பழியும் அலரும் விளையாவகை முருகு என மொழிந்தா னாகலின், அவன் வாழிய என்றாள். நோய் செய்தானை விடுத்து, அது செய்யாத முருகனைக் கூறிய குற்றத்திற்கு இரங்குவாள், அவன் வாழிய என்றாள் எனினுமாம். இலங்கும் அருவிச் சூர்மலை நாடன் என்றது அறத்தொடுநிலைப் பகுதியாய ஏதீடு உணர்த்தியவாறாம்.

    250.    பொய்படு பறியாக் கழங்கே மெய்யே  

மணிவரைக் கட்சி மடமயி லாலுநம்
மலர்ந்த வள்ளியங் கானங் கிழவோன்
ஆண்டகை விறல்வே ளல்லனிவள்
பூண்டாங் கிளமுலை யணங்கி யோனே.
இது தலைமகட்கு வந்த நோய் முருகனால் வந்தமை இக் கழங்கு கூறிற்றென்று வேலன் சொன்னான் என்பது கேட்ட தோழி அக்கழங் கிற்கு உரைப்பாளாய்ச் செவிலி கேட்குமாற்றால் அறத்தொடுநிலை குறித்துச் சொல்லியது.

** உரை :**
பொய்ம்மையிற்பட்டு மெய்ம்மையை அறியமாட்டா தொழிந்த கழங்கே, இவளுடைய பூணாரம் தாங்கிய இள முலை வருந்தப் புல்லி நட்புற்றவன், மணிகள் நிறைந்த மலைச் சாரற் காட்டின்கண் மடப்பம் பொருந்திய மயில்கள் மகிழ்ந்து ஆலும், விரிந்த வள்ளிக்கொடிகள் நிறைந்த கானத்துக்கு உரியனாகிய ஓர் ஆண்டகையாகும்; வெற்றி யினையுடைய கடவுளாகிய செவ்வேள் அல்லன் என அறிவாயாக என்றவாறு.

கழங்கே, அணங்கியோன், கிழவோனாகிய ஆண்டகை, வேளல்லன் என அறிக எனச் சில சொற்பெய்து முடிக்க. அணங்கி யோன் வேள் அல்லன், கிழவோனாகிய ஆண்டகை என முடிப் பினுமாம். கட்சி - காடு; “வேங்கை வீயுகும் ஓங்குமலைக் கட்சி, மயிலறி பறியா மன்னோ 1” “நனவுறு கட்சியின் நன்மயி லால, மலையுடன் வெரூஉம் மாக்கல் வெற்பன் 2” எனச் சான் றோர் வழங்குதல் காண்க. வள்ளியங்கானம், வள்ளிக்கொடிகள் காடுபோல் படர்ந்துள்ளமை பற்றி இவ்வாறு கூறப்பட்டது; “வாடா வள்ளியங்காடு படர்ந் தோரே 3” என்றார் பிறரும். இனி, வள்ளிமலையைச் சார்ந்த காடு என்றுமாம். இப்பகுதி முதல் இராசராசன் காலத்தும் அவற்கு முன்பும் “சயங்கொண்ட சோழமண்டலத்துப் பெரும்பாணப்பாடி நாட்டுத் துய்ய நாட்டு, வள்ளிமலைப் பற்று 4” என்று கல்வெட்டுக்களில் வழங்கி வந்துள்ளது.

வேலனைப் பொய்யா வாய்மையன் என்று கருதி அவனைத் தருவித்து அவன் கழங்கு கொண்டு உரைப்பனவற்றை மதித்துப் பேணுவது மரபாதலின், ஈண்டு அவனது கழங்குரை பொய்த்தமை கண்டு வியந்து கூறுவாளாய்ப் பொய்படுபு அறியாக் கழங்கே என்றும், கழங்கினால் அறிந்து கட்டுரைத்தற்குப் பொருளாவோன் இன்னான் என்பாள், மணிவரைக் கட்சி மடமயில் ஆலும் மலர்ந்த வள்ளியங் கானங்கிழவோன் என்றும், அவனே தலமகளைக் களவிற் கூடி நட்புச் செய்து இப்போது இவட்கு இம்மெலிவை எய்துவித்தவன் என்பாள், பூண்தாங்கு இளமுலை அணங்கியோன் என்றும், அவன் மக்களினத்தில் உள்ள ஆடவன் என்றற்கு ஆண்டகை என்றும், அவனைத் தெய்வமாகிய முருக வேள் என்பது குற்றம் என மறுப்பாளாய், விறல் வேள் அல்லன் என்றும் உரைத்தாள். வேலன் அதனைத் தன் கூற்றாக மொழியாது கழங்கு கூறுவதாக மொழிதலின், கழங்கினை நோக்கித் தோழி இது கூறினாள் என்க. மணிவரைக் கட்சியில் மயிலாடுவது கண்டு தலைமகளைத் தலைமகன் எதிர்ப்பட்டுக் கூடி நட்புச் செய்தான் என்பது குறிப்பாய்த் தோன்ற மணிவரைக் கட்சி மடமயி லாலும் என்றாள்; இஃது உண்மை செப்பல் என்னும் அறத் தொடு நிலை.

“நாற்றமும் தோற்றமும் 1” என்ற சூத்திரத்து “அவள் விலங் குறினும் களம்பெறக் காட்டினும்” என்ற விடத்துக் களம் பெறக் காட்டியவழிக் கழங்கினை முன்னிலையாகக் கூறுவதற்கு இதனைக் காட்டுவர் இளம்பூரணர்; கழங்கு பார்த்துழிக் கூறியது என்பர் நச்சினார்க்கினியர் 2

மடமயிலாயம் என்றும், வரைதரு வள்ளியங் கானம் என்றும் பாடமுண்டு.


குன்றக்குறவன் பத்து

இதன்கண் வரும் பாட்டுக்கள் பத்தும் குன்றக் குறவன் என்ற தொடரால் தொடங்கி நடத்தலின், அச்சிறப்புக் குறித்து இஃது இப்பெயர்த்தாயிற்று.

    251.    குன்றக் குறவ னார்ப்பி னெழிலி  

நுண்ப லழிதுளி பொழியு நாட
நெடுவரைப் படப்பை நும்மூர்க்
கடுவர லருவி காணினு மழுமே.

இது வரையாது வந்தொழுகும் தலைமகற்கு வரைவு வேட்ட தோழி கூறியது.

** பழைய உரை :**
நும்மூர்க் கடுவரல் அருவி காணினும் அழும் என்றது, அது நின் மலையினின்றும் வீழ்கின்ற அருவி என்றுகொண்டு அதற்கு நின் கொடுமை கூறி இவள் அழும் என்றவாறு.

குறவன் உழவு முதலாகிய வினைக்கு ஆர்ப்பின் அதற்கு இன்றியமையாத நீரை நுண்மழை பொழியும் நாடனாகிவைத்தும் எம் வேட்கை அறிந்து அதற்குத் தக ஒழுகுகின்றிலை என்பதாம்.

** உரை :**
குன்றத்துக்கண் வாழும் குறவன் தன் தமர்உடன் சூழ, மழைவேண்டிக் கடவுளைப் பரவுங்கால் ஆரவாரிப் பானா யின், அம் மழை நுண்ணிய பலவாகிய மிக்க பெயலைப் பொழியும் நாடனே, நெடிய வரையைச் சார்ந்த தோட்டங் களையுடைய நும்மூர்க்கட் செல்லும் விரைந்த செலவினை யுடைய அருவியைக் காணினும், அது நின் மலையினின்றும் வீழ்கின்ற அருவி யென்றுகொண்டு அழாநிற்பள் என்றவாறு.

மழை வேண்டுங்காலத்துப் பெய்வித்தற்கும் வேண்டாக் காலத்து ஒழித்தற்கும் குறவர் கடவுளைப் பேணுதல் மரபென்பது, “மலைவான் கொள்கென வுயர்பலி தூஉய், மாரி யான்று மழைமேக் குயர்கெனக், கடவுட் பேணிய குறவர் மாக்கள் 1” என்ற இவரது புறச்செய்யுளான் அறிக. அழிதுளி என்பது, ஈண்டு, “அழிபசி 2” என்புழிப் போல மிக்க பெயல் என்னும் பொருட்டு. விளைபுலங்களில் மழைநீர் நிரம்புதற்பொருட்டுச் செய்துவைத்த காலும் வரம்பும் விளைபயனும் கெடப் பொழிதலின், அழிதுளி என்றார் என்க. “அகலிரு விசும்பகம் புதையப் பாஅய்ப், பக லுடன் கரந்த பல்கதிர் வானம், இருங்களிற் றினநிரை குளிர்ப்ப வீசிப், பெரும்பெயல் அழிதுளி பொழித லானாது 3” எனச் சான்றோர் கூறுதலானும் உணர்க. கடுவரல், விரைந்த செலவு; “கடுவரற் கான்யாறு 4” என்றாற் போல.

இடையறா நீரொழுக்க முடைய அருவிகளையுடைய மலைநாடனாயினும் என்மாட்டுத் தன் தண்ணளியை இடை யறாது செய்வானல்லன் என வருந்துகின்றாள் என்பாள், கடுவரல் அருவி காணினும் அழுமே என்றாள்.
குறவன் தனக்கு இன்றியமையாத தினை நீரின்மையால் வாடுதல் கண்டு, அவ்வாட்டங்கெடக் கடவுட் பேணி ஆர்த்த விடத்து, எழிலி நுண்பல் அழிதுளி பெய்வது போல, நினக்குத் துப்பாகிய இவள் நலம், அலர் முதலியவற்றால் வாடுதல் கண்டு யாம் நின்னை வேண்டியவிடத்து, நீ அவ்வலர் கூறுவார் வாயடங்க வரைந்துகொள்க என உள்ளுறுத்து உரைத்தவாறு உணர்க. நின்மலையிற் குறவன் ஆர்ப்பினைச் செய்து வேண்டும் மழை பெற்றுத் தன் விளைபயனை நுகர்தல் போல, இவளும் தன் நலங்கெடாது நின் அருளைப்பெற்று இடையறா இன்பம் நுகர் வாளாதல் வேண்டும் என்ப தொரு நயமும் தோன்றியவாறு காண்க. காணினும் அழுமே என்றது துன்பத்துப் புலம்பல்.

    252.    குன்றக் குறவன் புல்வேய் குரம்பை  

மஞ்சா டிளமழை மறைக்கு நாடன்
புரையோன் வாழி தோழி விரைபெயல்
அரும்பனி யளைஇய கூதிர்ப்
பெருந்தண் வாடையின் முந்துவந் தனனே.

இது வரைவிடைவைத்துப் பிரிந்த தலைமகன் குறித்த பருவத் திற்கு முன்னே வந்தானாக உவந்த தோழி தலைமகட்குச் சொல்லியது.

** பழைய உரை :**
குறவனது புல்வேய் குரம்பைப் பொல்லாங்கினை இளமழை மறைக்கும் நாடன் என்றது, பிரிவின்கண் தங்கட்கு வந்த துன்பத்தை இவன் மறைத்தது நோக்கிக் கூறியவாறு.

** உரை :**
தோழி, குன்றத்துக்கண் வாழும் குறவனுடைய புல்லால் வேயப்பட்ட வீட்டினைப் புகைமுகிலாய் அசையும் இளமழை தாழ்ந்து கண்ணுக்குத் தோன்றாவகை மறைக்கும் நாடன், விரைந்த மழையையும், பொறுத்தற் கரிய பனியையும் கலந்து வீசும் கூதிர்ப்பருவத்துப் பெரிய தண்ணிய வாடைக்காற்று வருவதன்முன்னே தான் வந்தா னாகலின், அவன் உயர்ந் தோனாய் வாழ்வானாக என்றவாறு.

புல்வேய் குரம்பை, புல்லைக் கூரையாக வேய்ந்த வீடு. புல்லென்றது, மலைகளில் நீண்டு வளர்ந்திருக்கும் பைஞ் சாய்க் கோரைப்புல்; இது மஞ்சம்புல் என்றும் எருவைப் புல்லென்றும் வழங்கும். “எருவை நீடிய பெருவரைச் சிறுகுடி 1” என்பதனால் அறிக. பனை தெங்கு முதலியனவும் புல்லென்னும் இனத்தைச் சேர்ந்தவையாகலின், அவற்றின் ஓலை வேய்ந்த வீடும் புல்வேய் குரம்பை எனப்படும். செல்வ ரல்லாத மிக்க எளியராகிய மக்கள் புல்வேய் குரம்பையில் வாழ்வர்; அது பற்றியே சான்றோர், “படலைப் பந்தர்ப் புல்வேய் குரம்பை, நல்கூர் சீறூர் 2” என்றும், “சிறப்பும் சீரு மின்றிச் சீறூர், நல்கூர் பெண்டின் புல்வேய் குரம்பை3” என்றும் உரைப்பது காண்க. புகைபோல் திரண்டு செல்லும் வெண்முகில் மஞ்சு எனவும், கரும்புகைபோல் பரந்து சிறுசிறு மழைத்துளியைச் சிதறிச் செல்லும் மழைமுகில் இள மழை எனவும் வழக்கிலும் நூல்களிலும் காணப்படும். இவை மழைக்காலத் திறுதியில் தோன்றிப் பனிப்பருவத்திற் பெருகிப் பரவி நிற்கும். “புகைபுரை அம்மஞ் சூர 4” என்றும், “ஆடியல் இளமழைப் பின்றை, வாடையும் கண்டிரோ வந்துநின் றதுவே5” என்றும் வருவன காண்க. காற்றில் மிக நொய் தாய் மிதந்து அசைந்து செல்லுதல் பற்றி, இதனை ஆடியல் இளமழை என்று கூறுவர். “ஆடியல் இளமழை சூடித் தோன்றும், பழந்தூங்கு விடரகம் 6” என்றார் பிறரும் “இளவாடை 7” என வழங்குவ துண்மை யின், “பெருந்தண்வாடை” என்றார்; தட்பமிகுதி தோன்ற. நாடன் வந்தனன் ஆகலின், புரையோன், வாழி எனக் கூட்டி முடிக்க.

“பனியெதிர் பருவமும் உரித்தென மொழிப 8” என்ற விடத்து, “உரித்து என்றதனால் கூதிர் பெற்ற யாமமும் முன்பனி பெற்று வரும் எனக் கொள்க.” எனவே, பனியும் கூறப்பட்டது. கூதிர்க்கண், “இருள் தூங்கித் துளி மிகுதலில் சேறல் அரிதாக லானும், பானாட் கங்குலிற் பரந்துடன் வழங்காது, மாவும் புள்ளும் துணையுடன் இன்புற்று வதிதலின் காமக் குறிப்புக் கழியவே பெருகுதலானும் 9” முந்து வந்தனன் என்றும், இவ் வாறு காலத்தின் சிறப்பும், காதலியாகிய நினக்குத் தான் வாரா தொழியின் உளதாகிய வருத்தமும் ஒப்ப நோக்கிப் போந்தவன் பெரிதும் நயனுடையான் ஆகலின், புரையோன் என்றும், வாழி என்றும் கூறினாள். “புரைய மன்ற புரையோர் கேண்மை 1” என்பது காண்க.

குறவனுடைய புல் வேய்ந்த குரம்பையின் புன்மை புலனாகா வாறு இளமழை மறைக்கும் நாடன் என்றது, தன் பிரிவின்கண் தலைமகட்கு உண்டாகிய மெலிவு பிறர்க்குப் புலனாகாவாறு குறித்த பருவம் வருமுன்பே வந்து தலைமகன் மறைத்த சிறப்பு நோக்கி என்க. இஃது அறனளித் துரைத்தல்.

மன்றாடு இனமழை என்றும் பாடமுண்டு. “கிழவோட்கு உவமம் ஈரிடத்து உரித்தே 2” என்பதன் உரையில் இதனைக் காட்டி, “இக் குறிஞ்சிப் பாட்டினுள் வறுமை கூர்ந்த புல்வேய் குரம்பையை மழை புறமறைத்தாற்போல வாடை செய்யும் நோயைத் தீர்க்க வந்தா னென்று உள்ளுறை உவமம் செய்தவாறு கண்டுகொள்க” என்பர் பேராசிரியர். மேலும், அவர் இதன் கண், பெருந்தண் வாடையின் முந்து வந்தோன் என்பது பிரிவன்றாகலின் ஈரிடம் என்ற (பாடம் கோட)லே வலிதென்பது என்பர்.

    253.    குன்றக் குறவன் சாந்த நறும்புகை  

தேங்கமழ் சிலம்பின் வரையகங் கமழும்
கானக நாடன் வரையின்
மன்றலு முடையள்கொ றோழி யாயே.

இது வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வரைவொடு புகுதராநின்றான் என்பது தோழி கூறக் கேட்ட தலைமகள் அவட்குச் சொல்லியது.

** பழைய உரை :**
தேன் நாறுகின்ற மலைக்கண்ணே குறவன் சாந்த நறும்புகை கமழும் என்றது, நம் மனைக்கண்ணே செய்கின்ற சிறப்புக்கு மேலே மணவினையால் அவர் செய்யும் சிறப்பு மிகும்…… வண்ணம் விளைப்பாள்கொல் என்றவாறு.

** உரை :**
தோழி, குன்றத்துக்கண் வாழும் குறவன் எழுப்பிய சந்தனக்கட்டையின் நறிய புகை தேன் நாறுகின்ற சிலம்பின் பக்கமலையகத்தே மணம் வீசுங் காடுகளையுடைய நாடன் போந்து வரைந்துகொள்வானாயின், நம் அன்னை தன் மனை யின் கண்ணும் ஒரு வதுவைச்சிறப்புச் செய்தலை உடைய ளாவளோ? கூறுக என்றவாறு.

என்றது, கானகநாடன் போந்து நம்மை வரைந்துகொள்ளுங் கால், நம் அன்னை வேறும் ஒரு மணவினையால் அவர் செய்யுஞ் சிறப்பினும் மிக்க சிறப்புச் செய்தலை உடைய ளாவளோ? அன்றி, தன் மனைக்கட் செய்யும் சிறப்பினால் அவர் சிறப்பு மிகுமாறு செய்வளோ? யாதோ? யான் அறியேன் என்பதாம்.

சாந்த நறும்புகை, சந்தனக் கட்டைகளை எரித்தலால் எழும் புகை. பாரியது பறம்பைப் பாடுங்கால், இந்நூலாசிரியர், இக்கருத்தே தோன்ற, “குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி, ஆர மாதலின் அம்புகை யயலது, சாரல் வேங்கைப் பூஞ்சினை கமழும், பறம்பு 1” என்பது காண்க.

தலைமகன் வரைவொடு வந்தமை தோழி கூறக்கேட்டு மகிழ்ந்த உள்ளத்தளாய்த் தலைவி கூறுதலின், கானக நாடன் வரையின் என்றும், வரைவுக்கு உடன்படுதலோடு அமையாது மணநிகழ்ச்சியை இங்கே நிகழ்த்துதற்கும் விருப்ப முடைய ளாவள் என்பது தோன்ற, மன்றலும் உடையள்கொல் என்றும் கூறினாள்.

நம் அன்னை எனக்கு வதுவை நன்மணம் தன் அகத்தே நடைபெறுவித்தலை, விரும்பி, கானகநாடன் வரைந்து கொண்ட காலையும், அவனின் மிக்க சிறப்புச் செய்யும் கருத்தின ளாயினள் என்பாள், மன்றலும் உடையள்கொல் தோழி யாயே என்றாள். “எம்மனை முந்துறத் தருமோ, தன்மனை உய்க்குமோ யாதவன் குறிப்பே 2” என்றும், “நும்மனைச் சிலம்பு கழீஇ யயரினும், எம்மனை வதுவை நன்மணம் கழிகெனச், சொல்லின் எவனோ 1” என்றும் வருவனவற்றால், நற்றாய் தன் மகட்கு வதுவைச் சிறப்புத் தன்னகத்தே நிகழ்த்தும் விருப்ப முடை யளாதல் பெறப்படும்.

தேங்கமழ் சிலம்பின் வரையக மெல்லாம் குறவன் சுட வெழுந்த சந்தனநறும்புகையின் மணம் கமழும் நாடனாதலால், நம் மனைக்கட் செய்யப்படும் சிறப்புக்களினும், மணவினையால் தான் செய்யும் சிறப்பு மிகச் செய்வன் என்றவாறாம்.

    254.    குன்றக் குறவ னார மறுத்தென நறும்புகை சூழ்ந்து காந்த ணாறும்  

வண்டிமிர் சுடர்நுதற் குறுமகள்
கொண்டனர் செல்வர்தங் குன்றுகெழு நாட்டே.

இஃது உடன்போக்கு உடன்பட வேண்டிய தோழி தலை மகட்குச் சொல்லியது.

** உரை :**
குன்றத்துக்கண் வாழும் குறவன் சந்தன மரத்தை அறுத்துச் சுட்டானாக, அதனுடைய நறுவிய புகை சூழ்ந்து காந்தள்மலர்களோடு மணம் கமழும், வண்டுகள் ஒலிக்கும் ஒளி பொருந்திய நுதலினையுடைய இளையமகளே, நின்னைத் தம் குன்றுகள் பொருந்திய நாட்டிற்கு உடன்கொண்டு செல்லத் துணிந்தன ராகலின், நீ நாணாது அதற்கு உடன்பட்டு எழுவாயாக என்றவாறு.

சந்தனத்தின் புகையும் காந்தள் மலரின் மணமும் ஒருங்கு கமழ்தல் தோன்ற நறும்புகை சூழ்ந்து காந்தள் நாறும் என்றார். நறும்புகை சூழ்ந்து நாறும், காந்தள் நாறும் என இயைக்க. இனி, சூழ்ந்து என்பதனைச் சூழ என்பதன் திரிபு எனக் கொண்டு, நறும்புகை சூழ, காந்தள் நாறும் நுதல் என இயைத்தலும் ஒன்று. நுதல் காந்தள் நாறும் என்பதைப் பிறரும், “காந்தள் மென்பிணி முகையவிழ்ந் தலர்ந்த, தண்கமழ் புதுமலர் நாறும்நறு நுதற்கே 2” என்பது காண்க. மலரின் மணம் கமழும் நுதலாதலின், அதனை வண்டு மொய்த்து அரற்றுவதாயிற்று என்பார், வண்டிமிர் சுடர்நுதல் என்றும், இயற்கை யறிவின் செவ்விய ஒளி திகழ் வதுபற்றிச் சுடர் நுதல் என்றும் கூறினர். “அறிவும் அருமையும் பெண்பா லான 1” என்பர் ஆசிரியர்.

உடன்போக்குத் துணிந்தவன் செல்லுதல் ஒருதலையாகலின் செல்வர் என்றாள். நின் தமர் மகட்கொடை மறுத்தமையின், வேறே செயல்வகை இன்மையான் காதலர் தம்மோடு கொண்டு தலைக்கழிதலைத் துணிந்து வந்தன ரென்பதற்கு, கொண்டனர் செல்வர்தம் குன்றுகெழு நாட்டே என்றாள். உள்ளுறையால் விளைவு கூறித் தேற்றுகின்றா ளாகலின், நாணழிவு நினைந்து வருந்தற்க என்பது குறிப்பாற் பெறவைத்தாள்.

குன்றக்குறவன் சந்தன மரத்தை அறுத்துக் கொணர்ந்து சுடுதலால் எழுந்த புகை காந்தளின் மணத்தை நாற வண்டுகள் ஆரவாரிக்கும் என்றது, தலைமகன் நின்னை இவணின்று உடன் கொண்டு சென்று தன் மனைக்கண் வதுவை நன்மணம் அயரும் சிறப்பைத் தமர் கேட்டு மகிழ்வரென உடன்படுத்தியவாறாம்.

    255.    குன்றக் குறவன் காதன் மடமகள்  

வரையர மகளிர்ப் புரையுஞ் சாயலள்
ஐய ளரும்பிய முலையள்
செய்ய வாயினண் மார்பினள் சுணங்கே.

இது நின்னாற் காணப்பட்டவள் எத்தன்மையள் என்ற பாங் கற்குத் தலைமகன் சொல்லியது.

** உரை :**
குன்றத்துக்கண் வாழும் குறவனுடைய அன்புடைய மகள், வரைக்கட் போந்தாடும் அரமகளிர் போலும் சாயலும், அழகும், மலரரும்பு போலும் முலையும். சிவந்த வாயும், தேமல் படர்ந்த மார்பும் உடையள்; ஆகலின், நீ அவளைக் காணின் என்னைக் கழறி யுரையாய் என்றவாறு.

குடிப்பிறப்பும் தலைமையும் தோன்றக் குன்றக் குறவன் காதல் மடமகள் என்றார். மடமகள், சாயலள், ஐயள், முலையள், வாயினள், மார்பினள் ஆவள் என முடிக்க. ஐ - அழகு. ஏனை மகளிர் கண்டு வியக்கத்தக்க அழகுடைமை பற்றி ஐயள் என்றார். காமச்செவ்வி எய்திய மகளிர்க்கு மார்பின்கண் பரந்து தோன்றும் தேமல் சுணங்கு எனப் பட்டது. அரும்பு போல்வதனை அதன் வினைப்படுத்து அரும்பிய முளையள் என்றார். ஆகலின் முதலியன குறிப்பெச்சம்.

குன்றக் குறவன் மகள் தன்னால் காதலிக்கப்படும் மடப்பமும் காமச்செவ்வியு முடையள் என்பது தோன்றக் காதல் மடமகள் என்றும், இயற்கைப் புணர்ச்சி பெற்ற விடத்து, அவள் தன் ஆயவெள்ளம் வழிபடச் சென்று சேரக் கண்டு அவளுடைய அருமையையும், ஆயவெள்ளத்தின் மிகுதியையும் நோக்கிப் பெறலரியள் என எண்ணி மயங்கினா னாகலின் வரையர மகளிர்ப் புரையும் சாயலள் என்றும் கூறினான்.

அருமைக்கு வரையர மகளிரைக் கூறுதல் மரபு. பிறரும், “கெடாஅ நல்லிசைத் தென்னன் தொடாஅ, நீரிழி மருங்கிற் கல்லளைக் கலந்த அவ் வரையர மகளிரின் அரியள் 1” என்பது காண்க. சாயற்கு மயிலைக் கூறாமையும் இக்கருத்தே பற்றி யென அறிக.

முலையும் வாயும் மார்பும் கூறியது, தன் பெருவேட்கையை உணர்த்தற்கு. வரையர மகளிர் போலும் சாயலள் என்றது வரையரமகளிர் விளையாட்டயரும் மலைப்பக்கமென இடமும், அரும்பிய முலையள், செய்ய வாயினள், மார்பினள் சுணங்கே என்றது இயலும் கூறியவாறு. இயற்கைப்புணர்ச்சி எதிர்ப் பாட்டின்கண், தான் அவளை மக்களினத்து மகளோ, தெய்வமகளோ என ஐயுற்றுத் தெளிந்தா னாகலின், முதற்கண் குறவன் காதன் மடமகள் என்றும், தெய்வமகளோ என மயங்குதற்குக் காரணமாயிருந்த சாயலைப் பின்னர், வரையர மகளிர்ப் புரையுஞ் சாயலள் என்றும் கூறினான் எனக் கொள்க.

256.     குன்றக் குறவன் காதன் மடமகள்  

    வண்டுபடு கூந்தற் றண்டழைக் கொடிச்சி
    வளையண் முளைவா ளெயிற்றள்
    இளைய ளாயினு மாரணங் கினளே.

இது நீ கூறுகின்றவள் நின்னை வருத்தும் பருவத்தளல்லள் என்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது.

** உரை :**
குன்றத்துக்கண் வாழும் குறவனுடைய அன்புடைய மடப்பம் பொருந்திய மகள் வண்டுகள் மொய்க்கும் கூந்தலை யும் குளிர்ந்த தழையையு முடைய கொடிச்சியாவாள்; அவள் வளை அணிந்து முளைபோல் ஒளிவிடும் பற்களையுடைய இளையவ ளாயினும் கண்டார்க்குத் தடுத்தற்கரிய வருத் தத்தைச் செய்யும் அணங்கேயாவள் என்றவாறு.

கொடிச்சி - குறிஞ்சிநிலத்து மகளிர்க்குப் பெயர்; “தேனாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை 1” என்றும், “குறவர் மகளிரேம் குன்றுகெழு கொடிச்சியேம் 2” என்றும் கூறுதல் காண்க. முளை வாள் எயிற்றள் என்றவிடத்து, முளை கூர்மையும்; வாள் ஒளியும் குறித்தன. வளையும் எயிறும் இளமை விளங்க நின்றன. அணங்குபோல் கண்டார்க்கு வருத்தம் செய்வதுபற்றி அணங் கினள் என்றார். “ஆயும் அறிவின ரல்லார்க்கு அணங்கு என்ப 3” என்பதனால் இது பொருளாதல் தெளிக. உம்மை, தெரிநிலை; ஏகாரம்: தேற்றம்.

கூந்தல் முடித்தல், தழையறிந் தணிதல், மொழி நிரம்புதல் முதலியன இல்லாத இளம்பருவத்தள் எனத் தலைமகளது இளமை கூறித் தன்னை மறுத்த தோழிக்கு, “நன்மல ராய்ந்தணியுங் கூந்தலும், மேதக்க தழையணியும் மதுகையும் உடையளாயி னாளை” வருத்தும் பருவத்த ளல்லள் எனல் ஆகா தென்பான், வண்டுபடு கூந்தல் தண்டழைக் கொடிச்சி என்றான். மேலும், முளைவாள் எயிறும், இளமையுமுடையள் என்று தோழி கூறிய தனையே கொண்டு, அப்பெற்றிய ளாயினும், தனக்கு உரித்தல்லாத அணங்குதற் றன்மை மிக்குடையளாய்த் தன்னாற் காணப்பட்டாரை வருத்துமாறு வல்லளாயினாள் என்பான், இளைய ளாயினும் ஆரணங்கினளே என்றான்.

இது வருத்தும் பருவத்தளல்லள் என்ற தோழிக்குக் கூறியது என்பர் நச்சினார்க்கினியர்.4 இனி, இளம்பூரணர். “பண்பிற் பெயர்ப்பினும் 5” என்பதற்கு இதனைக் காட்டினாராக, “இஃது இளையள் எனப் பெயர்த்துழித் தலைவன் கூறியது 1” என்றார் நச்சினார்க்கினியர்.

    257.    குன்றக் குறவன் கடவுட் பேணி  

இரந்தனன் பெற்ற வெல்வளைக் குறுமகள்
சேயரி நெடுங்கண் கலிழச்
சேயதாற் றெய்யநீ பிரியு நாடே.

இது வரைவிடை வைத்துப் பிரிவல் என்ற தலைமகற்குத் தோழி உடன்படாது கூறியது.

** உரை :**
குன்றத்து வாழும் குறவன் தான் கடவுளை இரந்து வழி பட்டுப் பெற்ற, விளங்குகின்ற வளை அணிந்த இளையவ ளாகிய இவளுடைய சிவந்த அரி பரந்த நீண்ட கண்கள் நீர் சொரியுமாறு, நீ பிரிந்து செல்லும் நாடு சேய்மைக்கண்ண தாகலின், இவள் நின் பிரிவை ஆற்றாள் என்பதறிக என்றவாறு.

குறவரிடையே பெண்மக்கட் பேறு அரிதாகலின், அவ் வருமை தோன்றக் கடவுட் பேணி இரந்தனன் பெற்ற குறுமகள் என்றார். ஆடவருள் ஆண்மை வளம் மிக்குற்றார்க்குப் பெண்மகப்பேறு அரிதாம் என்பது இன்றைய விஞ்ஞான நெறி யில்2 கண்டது. பிரிவின்கண் ஆற்றாமையை முற்படக் காட்டு தலின், நெடுங்கண் கலிழ என்று எடுத்துரைத்தார். வரைவிடை வைத்த பிரிவு சேய்மைக்கண் செல்லும் செலவின் மேலதாதல் அறமன்மையின், சேயதென அதனை ஏதுவாக்கிக் கூறினார். தெய்ய: அசைநிலை.

தந்தை தவம் செய்து பெற்றுத் துன்ப மறியாமை வளர்த்தான் என்பாள், குன்றக் குறவன் கடவுட் பேணி, இரந்தனன் பெற்ற எல்வளைக் குறுமகள் என்றும், எனவே, அவள் சிறிது துன்பம் எய்தினும் பொறாள் என்றற்குச் சேயரி நெடுங்கண் கலிழ என்றும், நீ பிரிந்து செல்லின் விரைவின் மீளுதல் ஆகா தாகலின் இவள் ஆற்றாது இறந்து படுவாள் என்பாள், சேயதால் தெய்ய நீ பிரியும் நாடே என்றும் கூறினாள். சேயரி நெடுங்கண் கலிழ என்றது துன்பத்துப் புலம்பல்.

ஆயரி நெடுங்கண் என்றும் பாடமுண்டு.
258. குன்றக் குறவன் காதன் மடமகள்
அணிமயி லன்ன வசைநடைக் கொடிச்சியைப்
பெருவரை நாடன் வரையு மாயின்
கொடுத்தனெ மாயினோ நன்றே
கெடுத லானாது நன்னுத றுயரே.

இது வரைவு வேண்டிவிட மறுத்துழித் தோழி தமர்க்குரைப் பாளாய்ச் சொல்லியது; வரையாது வந்தொழுகும் தலைமகற்குத் தோழி அவன் மலைகாண்டலே பற்றாகத் தாங்கள் உயிர் வாழ்கின்றமை தோன்றச் சொல்லிய தூஉமாம் 1.

** உரை :**
குன்றக் குறவனுடைய அன்புடைய மடமகளாகிய அழகிய மயில் போன்ற, அசைந்த நடையினையுடைய கொடிச்சியைப் பெரிய மலைநாடன் வரைந்து கொள்வா னாயின், அவற்கு நாம் மகட்கொடை நேர்ந்தேமாயின் நன்றாம்; இன்றேல், நல்ல நெற்றியையுடைய இவளுடைய துயர் கெடாது மிகுமாகலான் என்றவாறு.

கொடி போலும் மகளிர்க்கு நடையில் அசைவு இயல்பாய் அமைந்து அழகு செய்தலால், அசைநடைக் கொடிச்சி என்றார். “அஞ்சி லோதி அசையியற் கொடிச்சி 2” என்று பிறரும் கூறுதல் காண்க. ஓகாரம் அசைநிலை.
காதல் மாட்சிமைப்படுவது குறித்துத் தலைமகன் களவே விரும்பி வரையாது ஒழுகினானாக, தலைமகள் நுதல் பசந்து மேனி வேறுபட்டு எய்திய துயரத்தை நன்னுதல் துயர் என்றும், தலைமகனது பெருமையும் தகுதியும் தோன்ற, பெருவரை நாடன் வரையும் ஆயின் என்றும், அவன் வரைவு வேண்டி விட்டவழி அவனது பெருமையும் இவளது துயரும் நோக்காது தமர் மகட்கொடை மறுப்பது நன்றன்று என்பாள், கொடுத்தனெ மாயினோ நன்று என்றும், மறுப்பின், இவள் துயர் கெடுவதின்றி இவட்கு இறந்துபாடு எய்துவிப்பது ஒருதலை என்பாள் கெடுதல் ஆனாது என்றும் கூறினாள். “சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது, வான்றோய் வன்ன குடிமையும் நோக்கித், திருமணி வரன்றும் குன்றங் கொண்டுஇவள், வருமுலை யாகம் வழங்கினோ நன்றே 1” என்று பிறரும் கூறுவது காண்க.

இரண்டாவதாய் நிற்கும் துறை பொருளாயின், தலைமகன் விரைந்து வரைதல் வேண்டும் என்றற்கு வரையுமாயின் என்றும், தமர் மகட்கொடை மறாது நேர்வர் என்பது தோன்றக் கொடுத் தனெ மாயினோ நன்று என்றும், வரைவு நீட்டித்தலால் தலைவியது துயர் கெடாது மிகுவதாயிற்று என்றற்குக் கெடுத லானாது நன்னுதல் துயர் என்றும் கூறியவாறாகக் கொள்க. வரையாதொழுகும் தலைவனைப் பெருவரை நாடன் எனச் சிறப்பித்தது, நாடனது வரை தன் பெருமையால் தலைவிக்குக் காட்சி தந்து அதுவே பற்றுக்கோடாக வாழச்செய்த மாண்பு பாராட்டி என்க.

இன்னு மாறாது நன்னுதல் துயரே என்றும் பாடமுண்டு. தலைமகன் வரைவுவேண்டி விட்டமை கண்ட பின்னும் துயர் அமையாது என்றும், மாறாது என்ற பாடத்துக்குத் துயர் நீங்காதாயிற்று என்றும் உரைக்க.
இனி, “நாற்றமும் தோற்றமும் 2” என்ற சூத்திரத்து “அவன் வரைவு மறுப்பினும்” என்புழி நிகழும் கூற்றுக்கு இதனைக் காட்டு வர் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும்.

    259.    குன்றக் குறவன் காதன் மடமகள்  

மன்ற வேங்கை மலர்சில கொண்டு
மலையுறை கடவுட் குலமுதல் வழுத்தித்
தேம்பலிச் செய்த வீர்நறுங் கையள்
மலர்ந்த காந்த ணாறிக்
கலிழ்ந்த கண்ணளெம் மணங்கி யோளே.

இது வரையத் துணிந்த தலைமகன், வரைவு முடித்தற்குத் தலைமகள் வருந்துகின்ற வருத்தம் தோழி காட்டக் கண்டு இனி அது கடிதின் முடியுமென உவந்த உள்ளத்தனாய்த் தன்னுள்ளே சொல்லியது.

** உரை :**
குன்றக் குறவனுடைய அன்புற்ற மடமகள் மன்றத்து நின்ற வேங்கைமலருட் சிலவற்றைக் கொண்டு மலையின்கண் உறையும் கடவுட்கு எடுத்த கோயிலில் எழுந்தருளும் முதற்பொருளாகிய இறைவனை வழிபட்டு இனிய பலியிட்டுக் குளிர்ந்த நறிய கையினையும், மலர்ந்த காந்தளின் மணம் வீசும் நீர் சொரிந்த கண்ணையு முடையளாய் எம்மை வேட்கை மிக்கு வருந்தச் செய்தாள்; ஆகலின் இவளை இனி விரைவில் வரைந்து கோடல் இயலும் காண் என்றவாறு.

மடமகள் வழுத்திக் கையளாய்க் கண்களால் அணங்கினாள் என இயைக்க. ஊர்நடுவே அமைந்த மன்றத்தின்கண் நிற்பதுபற்றி வேங்கை மரத்தை மன்ற வேங்கை என்றார். கடவுட்குலம், கோயில். இது தேவகுலம் எனவும் வழங்கும்; “ஊரானோர் தேவகுலம்” என்றாற்போல. முதல் என்றது கோயிலின்கண் எழுந்தருளும் முதற்பொருளாகிய மலைக்கடவுள் தேனாகிய பலி தேம்பலி எனப்பட்டது. வேங்கைப்பூ. பூப்பலியும் குறவர் ஈட்டிய தேன் தேம்பலியு மாயின. தேன் சொரிந்து பூவிட்டு வழிபட்ட மையின், கையை ஈர்நறுங்கை என்றார். கூந்தற்குக் காந்தள் மணம் இயற்கை; “காந்தள் நாறும் குறுமகள் 1” என்றமை காண்க.

மனமுருகி வழிபட்டமையின், கண்கள் நீர் சொரிந்தமை பற்றிக் கலிழ்ந்த கண்ணள் என்றார்.

குறவரது கடவுள் மலையில் உறையும் என்பது, “அணங் கொடு நின்றது மலைவான் கொள்கெனக், கடவுள் ஓங்குவரை பேண்மார் 2” என்பதனாலும் அறிக.
பிரியேன் எனச் சூளுறவு செய்தவன், பிரிந்து தன்னை ஆற்றாமையால் மெலியச் செய்தமையான், அவற்குத் தீங்குவருமென்று அஞ்சிக் கடவுளைப் பரவுகின்றா ளாகலின், கடவுட் குலமுதல் வழுத்தித், தேம்பலிச் செய்த ஈர்நறுங் கையள், மலர்ந்த காந்தள் நாறிக், கலிழ்ந்த கண்ணள் என்றாள். கற்புடைய மகளிர் பிற தெய்வம் தொழும் கடப்பாட்டின ரல்லராயினும், பிரியேன் என்றவன் பிரிந்த கொடுமை பற்றி “மன்ற மராஅத்த பேமுதிர் கடவுள், கொடியோர்த் தெறூஉ மென்ப யாவதுங், கொடிய ரல்லர்எங் குன்றுகெழு நாடர் 1” என வேண்டுதலின் அமைந்ததாம். அன்றி, வரையாது வைத்துப் பிரிந்தவன் குறித்த காலத்தில் வந்தெய்தி விரைவில் வரைதல் வேண்டுமெனக் கடவுட்குப் பலியிட்டுப் பரவினள் எனினு மாம். “யாமும், வல்லே வருக வரைந்த நாளென, நல்லிறை மெல்விரல் கூப்பி, இல்லுறை கடவுட் கோக்குதும் பலியே 2” என்றார் பிறரும். தலைப்பெய்த விடத்தன்றி மற்றைய போதுகளில், அவள் நினைவு தன் மனத்தே தோன்றி வேட்கை மிகுவித்து வருத்துதலின், அணங்கியோள் என்றும், என்பொருட்டு இயன்ற காதலால் கடவுட் குலமுதல் வழுத்தி வழிபடும் அவள் உடன்போக்கு வலிப்பினும் உடன்படுவா ளென்றும், அதனால் தான் அவளை வரைதல் விரைவின் முடியு மென்றும் மகிழ்கின்றான் என்பதாம்.

    260.    குன்றக் குறவன் காதன் மடமகள்  

மென்றோட் கொடிச்சியைப் பெறற்கரிது தில்ல
பைம்புறப் படுகிளி யோப்பலள்
புன்புல மயக்கத்து விளைந்தன தினையே.

இது பகற்குறிக்கண் வந்த தலைமகனைத் தோழி இனிப் புனம் காவற்கு வாரேம் எனக் கூறி வரைவு கடாயது.

** பழைய உரை :**
விளைந்தன என்றது முற்றின என்றவாறு. 3

** உரை :**
புன்செய்க்கண் உழுது புழுதி செய்யப்பட்ட நிலத்து வித்திய தினை முற்றினமையான், அதனை அறுத்து மனைக்கட் சேர்ப்ப ராகலின், பசிய புறத்தையுடைய கிளிகளை ஒப்புதல் செய்யாள்; ஆகவே, குன்றக் குறவனுடைய அன்பு மிக்க மடமகளாகிய, மெல்லிய தோள்களையுடைய கொடிச்சியை இனிப் பெறுதற்கு அரிது காண் என்றவாறு.

தினை விளைந்தன; கிளி ஓப்பலள்; ஆகலின், பெறற் கரிது தில்ல எனக் கூட்டி வினைமுடிவு செய்க. புன்புல மயக்கம், காடு கெடுத்து நிலங்கண்டு புழுதியுற உழுது பண்படுத்திய புன்செய் நிலம்; “கானவர், கரிபுன மயக்கிய அகன்கட் கொல்லை 1” என்பது காண்க. பசுமை நிறம் உடைமை பற்றிக் கிளியைப் பைம்புறப் படுகிளி என்றார். படுதல் - ஈண்டுத் தினைப்புனத்தே தோன்றிக் கதிர்களை மேய்தல். தில்ல: அசைநிலை: இதுகாறும் பெற்றுப் போந்த கூட்டம் இனிக் கழிந்தது என்பது பட நிற்றலின், ஒழியிசையுமாம்.

தினை விளைந்து முற்றாதவழி யாம் கிளி கடிவேமாய் நின்னைத் தலைப்பெய்வேமாக, நீயும் அவளைப் பெற்று மகிழ் வாயாயினை; அவள் இனி இப்புனம் வாராள் என்பாள், பைம் புறப் படுகிளி யோப்பலள், புன்புல மயக்கத்து விளைந்தன தினையே என்றாள், எனவே குறிப்பால் யாம் கிளி கடிந்து பேணிய தினை முற்றிப் பயன் தந்தாங்கு, நீ இவளைத் தலை பெய்து கொண்ட நின்நட்பு வரைவால் சிறப் பெய்துதல் வேண்டும் என்று கூறினாளாம். தினை விளைவினால் தலைமகன் பெறுதற்கு அரிதா யொழிந்த கூட்டத்திற்கு இரங்குவாள், மென்றோள் கொடிச்சி என்றாள்.

“நாற்றமும் தோற்றமும் 2” என்ற சூத்திரத்துக் “காதல்மிகுதி யுளப்படப் பிறவும்” என்புழிப் பிறவும் என்ற இலேசினால் இதனை அதன்கண் அமைப்பர் இளம்பூரணர். “இது, புனங் காவல் இனி இன்று என்பது” என்பர் நச்சினார்க்கினியர்.


கேழற்பத்து

கேழல் என்பது காட்டுப்பன்றி. குறிஞ்சி நிலத்தில் வாழும் விலங்குகளுள் இது பொருளாக இப்பகுதிக்கண் வரும் பாட்டுக்கள் அமைந்திருப்பது பற்றி இப்பத்து இப்பெயரினைப் பெறுவதாயிற்று. மக்கள் வாழும் இடங்களில் ஒருசிலரால் வளர்க்கப்பெறும் பன்றியினத்தைச் சேர்ந்தது கேழல்.

ஒருகாலத்தில் இப்பன்றிகள் யாவும் காடுகளில் வாழ்ந்து வந்தன. 5000 ஆண்டுகட்கு முன்பே மக்கள் பன்றிகளைப் பிடித்து வளர்க்கும் பழக்கம் சீனாவில் உண்டாகியிருக்கிறது. மேனாட்ட வர்க்கு கி.மு. 1500 ஆண்டு அளவில் பன்றியாகிய இவ்விலங் குண்மையே தெரிய வந்தது.

பன்றியினத்திற் பல்வேறு வகைகள் இருந்துள்ளன. அவை பெரும்பாலும் மக்களால் அழிப்புண்டு ஒழிந்தன. இப்போது இருவகைப் பன்றிகளே நிலவுலகில் வாழ்கின்றன. நம் நாடுகளில் வாழ்ந்தனவும் வாழ்வனவும் ஒரு வகை1. அமெரிக்கப் பன்றி வெள்வாய்2 என்றும் மிடற்றணி3 என்றும் இருவகையாகும். இவை இரண்டனுள் வெள்வாய்ப் பன்றி கொடுமையுடையது; மிகக் கூரிய கோடுகொண்டு மக்களுக்குப் பெருந்தீங்கு செய்ய வல்லது. சில போதுகளில் இவை வேட்டை நாய்களையே தாக்கி நார் நாராய்க் கிழித்தெறிந்து விடுவதும் உண்டு. ஏனை மிடற்றுப் பன்றி அத்துணைக் கொடுமையுடையதன்று. இருவகையும், பழவகை களையும் கிழங்குகளையும் தின்று உயிர் வாழ்வன. பிற விலங்கு கள் செய்துள்ள வளைகளிலும் மரப்பொந்துகளிலும் இவை உறைகின்றன.

அமெரிக்கப் பன்றியின் இனமல்லாத ஏனைப்பன்றிகள் அமெரிக்க நாடுகளின் வேறான ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆத்திரேலியா என்ற இந்த நாடுகளில் வாழ்கின்றன. நம் நாட்டுக் கேழல் இந்த இனத்தைச் சேர்ந்தவை. இவை நம் நாட்டுக் காடுகளிலும் காணப்படுகின்றன. கிழக்கிந்தியத் தீவுகளில் ஒரு வகைப் பன்றிகள் உண்டு. அவற்றிற்கு நான்கு கோடுகள் கலைமான் கொம்பு போல் வளைந்து தோன்றுகின்றன; அவற்றின் காலும் மெல்லியவாய் நீண்டிருக்கும் ஆணுக்கு நான்கு கோடு உண்டு. அதனால் அவற்றைக் கலைப்பன்றி 4 என வழங்குகின்றனர். அவை நன்கு நீந்தவும் வல்லன; ஒரு தீவுக்கும் மற்றொரு தீவுக்கும் இடையில் உள்ள கடற் பகுதியை மிக எளிதில் அவை நீந்திச் செல்கின்றன.

ஆப்பிரிக்காவில் சகாராவின் தென்பகுதியில் சில கேழற் பன்றிகள் வாழ்கின்றன. அவற்றுள் சில மிக நல்லனவாகும். ஒருசில கொடியனவும் உண்டு. நீண்ட வாலும் பருத்த உடலும் உடைய அவை பெரிய பெரிய கோடுகளைக் கொண்டுள்ளன. பிற விலங்குகள் குடைந்து விட்டுச் சென்ற மண்ணளைகளில் இப்பன்றிகள் புகுந்து வாழும். இந்தப் பன்றி மண்ணளைக்குள் புகும்போது தன் முகத்தை வாயிற் புறமாக வைத்துப் பின்புற மாகவே அளைக்குள் செல்லும்; அவ்வாறு செய்வது, பகையுயிர் ஏதேனும் தன்னைத் தொடர்ந்து வரின் அதனை எளிதில் தாக்குதற் காகவேயாம். சென்ற 1904-ஆம் ஆண்டு இத்தகைய பன்றி யினத்தில் மிகப் பெரிய ஒன்று ஆப்பிரிக்காவில் காணப்பட்டது.

மேனாடுகளின் சில பகுதிகளில் இக் கேழலினம் மறைந்து போயின. பிரிட்டன் தீவுகளில் இவை நானூறு ஆண்டுகட்கு முன்பே மறைந்து போயின. ஐரோப்பாவில் சதுப்புநிலப் பகுதி களில் ஒருசில அருமையாய்க் காணப்படுகின்றன.

ஒரு காலத்தில் பிரிட்டன் தீவுகளில் கேழல்களை வேட்டை யாடும் உரிமை ஒருசிலர்க்கே இருந்தது. பன்றி வேட்டை யாடுதலைப் பாராட்டி மேனாட்டுப் பாவலர் பாட்டுக்கள் பல பாடியுள்ளனர். கிறித்துவ விழாவில் பன்றியின் தலைக்கு நன் மதிப்பு உண்டு; அவ்விழாவில் பன்றியின் தலைவன் பொருளாகப் பெருமிதமான செயற் சிறப்பும் பாராட்டும் நடைபெறுமாம். போர்வீரர் மறத்துக்குப் பன்றி நல்ல எடுத்துக்காட்டாதலு முண்டு. கேழல் வேட்டம் புரிவோர் குதிரை யூர்ந்தும் வேட்டை நாய் களைத் துணைகொண்டும் செல்வர். இனி நம் நாட்டுக் கேழற் பன்றிகளைக் காண்போம்.

நம்நாட்டு மலைக்காடுகளில் இக்கேழல் தன் னிச்சையில் வளர்ந்து கொழுத்து உடல் வளத்திலும் மெய்வன்மையிலும் உருவமைப்பிலும் சிறிது வேறுபட்டுள்ளது. அதன் கீழ்வாயில் முன்னே இருபற்கள் கோடுபோல் மேல்வாய்க்குமேல் வெளியே நீண்டு மிக்க கூர்மையும் பெருவன்மையும் கொண்டுள்ளன. அதன் உடல்மயிர் கரியநிறமும் வன்மையும் உடையது. பிடரி மயிர், ஏனை உடற் பகுதிகளில் உள்ளவற்றினும் வலி மிகுந்து இருப் பூசிபோல் நிமிர்ந்து நிற்கும்.

ஊர்ப்புறங்களில் வாழும் பன்றிகளினும் காட்டுப் பன்றி யாகிய கேழல்கள் உடல் வன்மையிலும் விரைந்த செலவிலும் மேன்மையும் சிறப்பும் உடையவை. மூன்றடி உயரமும் நாலரை யடி நீளமும் உடையனவும் இவற்றுள் உண்டு. இவை எருமை போலச் சேற்றுநிலத்திலும் புல்லும் புதலும் நிறைந்த நீர்ப் பாங்குகளிலும் வாழும் இயல்பின. பகற்போதில் ஞாயிற்றின் வெம்மையை விரும்பாது இருட்செறிவுகளில் வீழ்ந்து கிடந்து இருட்போதுகளில் இரை தேடி யுண்பது இவற்றின் மாண்பு. இவற்றுள் முதுமையுற்றவை மட்டில் தனித்து உறையும்; ஏனை யவை கூட்டத்தில் இருக்கும்.

பன்றியின் பெண் ஒருகாலத்தில் ஆறுமுதல் பத்துக் குட்டி களை ஈனும் என்ப. பெண்ணினும் ஆணே கொடுமை மிகுந்த தெனினும், புனிறு தீராக் காலையில் பெண்பன்றியின் வெம்மை யும் கொடுமையும் சிறந்து தோன்றுகின்றன. கேழற்குட்டிகள் மிக்க மென்மையுடையவை யாதலின், அவற்றை நாடி உண்டற்கு பகையுயிர்கள் பல வேட்டையாடுகின்றன. ஒரு பன்றி பல குட்டிகளை ஈன்றதாயினும் முடிவில் எஞ்சி நிற்பன ஒன்று இரண்டே. பன்றிக்குருளையின் உடலில் மெல்லிய வரிகள் பல காணப்படும்.

நம் தமிழகத்தில் கேழல்கள் குறிஞ்சி முல்லையாகிய இரு பகுதிகளிலும் மிகுதியாக இருந்துள்ளன. பாலைப் பகுதியில் மிக அருமையாக உளது. இதன் கரிய நிறமும் பிடரிமயிரும் கண்ட சான்றோர் “இரும்பிணர் எருத்தின் இருள்துணிந் தன்ன, ஏனம் 1” என்று குறிக்கின்றார். இது பெரும்பாலும் இரவுப்போதில் இரைதேடித் திரிவதாகலின், இதன் கட்பார்வையை வியந்து “கடுங்கட் கேழல் 2” என்றும், இதனுடைய வளைந்த பல் யானைக் கோடு போலத் தோன்றுவது பற்றி மருப்பு என்றும் கூறுவர்; “வளைமருப்பு ஏனம் 3” என்றும் “கேழல் வளை மருப்பு 4” என்றும் “வளை வெண் மருப்பின் கேழல் 5” என்றும் பண்டையோர் வழங்குவது காண்க. கேழற் பன்றியின் கரிய முகத்தில் வெண் ணிறம் கொண்டு வளைந்து தோன்றும் மருப்பை, அகத்திப் பூவோடும் இளம்பிறையோடும் உவமஞ்செய்து இன்புறுவது தமிழ்ப்புலமைச்செல்வத்தின் செயல்வகையுள் ஒன்று : “புகழா வாகைப் பூவின் அன்ன, வளைமருப் பேனம் 1” எனவும் “இளம் பிறை யன்ன கோட்ட கேழல் 2” எனவும் வருவனவற்றால் அறிக.

குறிஞ்சி நிலத்தில் வாழும் புனவர்கட்கு இக்கேழல்கள் ஒருவகையில் உதவியாகவும் பல வழிகளில் பகையாகவும் இருந்துள்ளன. தினைப்புனங்கள் தினை விதைப்பதற்குமுன் கரம்புபட்டுக் காந்தளும் கோரைப்புல்லும் செறிந்திருக்கும். புதுப்பெயல் பொழிந்ததும், இக்கேழல் அப்புனத்துள் புகுந்து காந்தள் முதலியவற்றின் கிழங்குகளை அகழ்ந்து உண்ணும்; அதனால் புனக்கொல்லை முழுதும் நன்கு உழுததுபோல் புழுதி யாய்விடும்; அது காணும் புனவர், வேர் அறுந்து வாடிக் கிடக்கும் காந்தள் முதலியவற்றைக் களைந்து விட்டுத் தினை விதைத்தற் குரிய காலம் எய்தியதும் உழாமலேயே அத் தினையை விதைத்து விடுவர்; தினையும் அவ்வழியே நன்க வளர்ந்து விளைந்து சிறக்கும். “மலர்ந்த காந்தள், கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு, கடுங்கட் கேழல் உழுத பூழி, நன்னாள் வருபதம் நோக்கிக் குறவர், உழாது வித்திய சிறுதினை 3” என்றும், “கிழங்ககழ் கேழல் உழுத சிலம்பில், தலைவிளை கானவர் கொய்தனர் பெயரும் 4” என்றும் அறிஞர் அறிவிப்பது காண்க.

தான் கிழங்கு அகழ்ந்து செய்த பூழியில் புனவர் வித்தி விளைக்கும் தினையைக் காணும்போது தனக்கு அதனை உண் டற்கு உரிமையுண்டு என்று கருதினாற் போல, இரவுப்போதில் அது தன் கிளை சூழ வந்து தினையை மேய்ந்தழிப்பது உண்டு; “மென்றினை மேய்ந்த தறுகட் பன்றி 5” “நன்பொன் னன்ன புனிறுதீர் ஏனல், கேழல் மாந்தும் 6” எனச் சான்றோர் குறிப்பன காண்க. இவ்வாறு தாம் விளைக்கும் தினைக்கு ஊறுசெய்து அழிப்பது பற்றிக் கானவர் இப்பன்றியை வேட்டம் புரிந்து கொல்லுதலை மேற்கொண்டனர். தொகை நூல்களில் பன்றியை உணவு குறித்து வேட்டை யாடுவது அருகியே உளது. பன்றியை வீழ்த்தற்குப் பெருங்கற்களின் இடையே பொறி யமைத்து வைப்பதும் உண்டு. இதனை “விளைபுனம், நிழத்தல் அஞ்சிப் புழைதொறும் மாட்டிய, இருங்கல் அரும்பொறி உடைய ஆறே1” என்றும் “தினையுண் கேழல் இரியப் புனவன், சிறுபொறி மாட்டிய பெருங்கல் அடாஅர் 2” என்றும் வருவனவற்றால் அறியலாம். காட்டுயானை களைப் பிடிப்பதற்குச் செய்வது போல், இவற்றையும் வரும் வழியில் குழிகள் அமைத்து அவற்றுள் வீழ்வித்துக் கொல்வது பண்டு குறவர் கொண்டிருந்ததொரு நெறி. “சேணோன் அகழ்ந்த மடிவாய்ப் பயம்பின், வீழ்முகக் கேழல் அட்ட பூசல் 3” என மாங்குடி மருதனார் குறிக்கின்றார். நீர் நிலைகட்கு நீர் அருந்த வருங்கால் ஆங்கே ஒளித்திருந்து இவற்றைத் தாக்கியும் கொல்வதுண்டு; “வான்மடி பொழுதில் நீர்நசைஇக் குழித்த, அகழ்சூழ் பயம்பின் அகத்தொளித் தொடுங்கிப், புகழா வாகைப் பூவின் அன்ன, வளைமருப் பேனம் வரவுபார்த் திருக்கும், அரைநாள் வேட்டம் 4” என்பதனால் இது தெளியப்படும்.

இக்கேழல்களைச் செந்நாய்க்கூட்டமும் புலியும் மிகவும் விரும்பிக் கொன்று தின்கின்றன. “செந்நாய் கேழலைக் கொன்று குருதி சொரிய ஈர்த்தேகும் எனவும் அக்குருதியைக் கழுகினம் இருந்து அருந்து மெனவும் 5” புலியேறு கேழலைத் தாக்கி வீழ்த்துங்கால் அது வலத்தில் வீழாது இடப்பக்கத்தே விழு மாயின், “புலி அன்ற உண்ணாது கழியு மெனவும் 6” “செந்நாய் தன் பிணவின் பொருட்டு இக்கேழலை வேட்டம் புரியுமெனவும் 7” சான்றோர் பலவகையில் பாடியுள்ளனர். இப்போது கேழற் பன்றியின் ஊனை மக்களிற் பலர் உண்கின்றனர்.
உலகிலுள்ள கொடிய விலங்குகளில் நம்நாட்டுக் கேழற் பன்றியே தலையாயது என்று உயிர் நூலறிஞர் உரைக்கின்றனர். பகையினத்தால் மிகப்பெரும் புண்பட்ட போதிலும் வாய்த்த விடத்து மக்களையும் குதிரைகளையும் பெரிய களிற்றியானை களையும் ஒரு சிறிதும் தயக்க மின்றித் தாக்கும் தறுகண்மையால் இக்கேழல்கள் சிறந்து விளங்குகின்றன. பெருங்குதிரை யொன்று சிக்கிக் கொள்ளின் அதனை ஒரே குத்தில் இரண்டாய்ப் பிளந் தெறிந்துவிடும் இப்பன்றி விரைவாக ஓடக் கூடியதே; ஆயினும் நெடுந்தொலைவு இதனால் ஓட இயலுவதில்லை.

200 ஆண்டுகட்குமுன் ஐரோப்பியர் நம்நாட்டில் வந்து இடம்பெற்ற போது இக்கேழற்பன்றியை வேட்டையாடத் தொடங்கினர். தொடக்கத்தில் கரடிகளை வேட்டையாடி வந்தோர், அவற்றின் தொகை குறைந்து போகவே இப்பன்றிகளை வேட்டையாடத் தொடங்கினர். மேனாட்டார் குதிரை யூர்ந்து வேட்டைநாய்கள் துணை செய்ய இக்கேழல்களை வேட்டை யாடுவர். அவர்கள் எறியூசி கொண்டு முதலில் வேட்டையா டினர்; அதன் பின் ஐந்தடி நீளமுடைய எறிவேல் கொண்டு வேட்டையாடுவாராயினர். பிரிட்டன் நாட்டில் நடக்கும் நரி வேட்டை போலவே இவர்கள் இவ்வேட்டையாடலைச் செய் தனர். இப்பன்றி வேட்டைக்கெனக் கழகங்கள் நிறுவிப் போட்டிப் பந்தயங்கள் நடத்தினர். அவற்றுள் 1869-ஆம் ஆண்டு நடந்த பன்றிவேட்டையே சிறந்ததாகப் பாராட்டிக் கூறுகின்றனர்.

1800 ஆண்டுகட்குமுன் கானவன் ஒருவன் பன்றி வேட்டம் புரியச் சென்றவன், அப்பன்றியின் மறமாண்பு கண்டு வியந்த திறத்தை இந்நூலாசிரியரான கபிலர் கூறுவது ஈண்டு நினைவு கூர்வது நன்று; அதனை இக் குறிஞ்சிப்பகுதி முன்னுரைக்கண் காண்க. இனி இக்கேழற்பன்றி பொருளாக இப்பகுதிக்கண் வரும் பாட்டுக்களைக் காண்போம்.

    261.    மென்றினை மேய்ந்த தறுகட் பன்றி  

வன்க லடுக்கத்துத் துஞ்சு நாடன்
எந்தை யறித லஞ்சிக்கொல்
அதுவே தெய்ய வாரா மையே.

இஃது, அல்லகுறிப் பட்டுத் தலைமகன் நீங்கினமை அறியாதாள் போன்று தோழி பிற்றைஞான்று அவன் சிறைப் புறத்தானாய் நிற்பத் தலைமகட்குச் சொல்லியது.

** பழைய உரை :**
தினைமேய்ந்த பன்றி கல்லடுக்கத்துத் துஞ்சும் நாடன் என்றது, தான் வேண்டின இன்பம் நுகர்ந்து இனிது கண்படுவதல்லது வரைதற்கு வேண்டுவன முயலாதான் என்றவாறு.

** உரை :**
மெல்லிய தினையை மேய்ந்த மறம் பொருந்திய பன்றி, வலிய கற்கள் நிறைந்த மலைப்பக்கத்தே உறங்கும் நாட னாகிய தலைமகன் வாரானானது, நம் தந்தை அறிவன் என்று அஞ்சியே போலும்; பிறிது காரணம் இன்மையின், அதுவே யாம் என்றவாறு.

தினையின் தாளும் விளையும் செவ்வியிலுள்ள தினையும் மிக்க மென்மையுடைமை பற்றி மென்றினை என்றும், மக்க ளுடைய ஆரவாரத்துக்கும் அச்சுறுத்தலுக்கும் பின்னிடாது கருதியதைச் செய்தே முடிக்கும் உறைப்புக் கேழலின் சிறந்த பண்பாதலின், தறுகட்பன்றி என்றும் சிறப்பித்தார். நாடன் வாராமை அஞ்சிக்கொல் என முன்னும் கூட்டிக் கொள்க. வாராமை அதுவே என்றது துணிந்துரைத்தல். கொல்: ஐயம். தெய்ய: அசைநிலை. கேழல் தினைமேய்தலை, “தினையுண் கேழல் இரிய 1” எனப் பிறர் கூறுதலானும் அறிக.

தலைமகன் சிறைப்புறத்தானாதலை அறிந்து அவன் கேட்ப உரைக்கின்றமையின், அவன் வாராமைக்குக் காரணம் ஆராய் வாள் போன்று, தந்தையின் வலியும் கொடுமையும் அறிந்து, வரின் தனக்கு ஏதமாம் என்று உணர்ந்து அஞ்சியே தலைமகன் வாரானாயினான் எனப் படைத்து மொழிவாள், எந்தை அறிதல் அஞ்சிக்கொல் என்றவள், மேலும் அதுவே தெய்ய வாரா மையே என்று கூறினாள். இவ்வாறு ஒரு காரணம் படைத்துக் கொண்டு கூறுதலால், அஃது உண்மை யென வற்புறுத்துவாள் போன்று, ஐயமும் தெளிவும் முறையே தொடுத்துக் கூறினாள். அல்ல குறிப்பட்டுத் தலைமகன் நீங்கினான் என்பதனை அறிந்து வைத்தும், அறியாதாள் போன்று, வரைவு கடாவும் கருத் தினளாய்க் கூறுதலின், அதுவே தெய்ய என்றாள். அறிந்தது ஒன்றனை அறியாதாள் போன்று தோழி கூறுதல் வழுவாயினும், வரைவுகடாதற்கண் அமையும் என்க; என்னை : “இரந்து குறையுற்ற கிழவனைத் தோழி, நிரம்ப நீக்கி நிறுத்த லன்றியும், வாய்மை கூறலும் பொய்தலைப் பெய்தலும், நல்வகை யுடைய நயத்திற் கூறியும், பல்வகை யானும் படைக்கவும் பெறுமே 1” என்ப வாகலின். இது வந்த கிழவனை மாயஞ் செப்பியது.

புனங்காப்போர்க்கு அஞ்சாது தான் கருதிய மென் றினையைத் தன் தறுகண்மையால் வயிறார மேய்ந்த பன்றி வன்கல் லடுக்கத்து இனிது உறங்கும் நாட னாயினும், நின் தந்தைக்கு அஞ்சிய அச்சத்தால் கருதிய கூட்டமும் பெறாது தன் மனைக்கண் ஒடுங்கினான் என உள்ளுறைக் கண் துனியுறு கிளவி தோன்றக் கூறுமாறு காண்க. பழைய வுரைகாரர்க்கும் இதுவே கருத் தாதல் அறிக.

அதுவே மன்ற என்றும் பாடம். வாராமைக்கு ஏது அச்சம் என்று தோழி கூறுவது படைத்து மொழியே யன்றி உண்மையன்று ஆதலின், தெய்ய என்ற பாடமே சிறப்புடைத்தாதல் அறிக. மன்ற என்பது தேற்றப் பொருட்டு.

“மறைந்தவற் காண்டல்” என்ற சூத்திரத்து “அச்சம் நீடினும்” என்பதற்கு இதனை உதாரணமாக்குவர் தொல்காப்பிய உரை காரர் 2

    262.    சிறுதினை மேய்ந்த தறுகட் பன்றி  

துறுக லடுக்கத்துத் துணையொடு வதியும்
இலங்குமலை நாடன் வரூஉம்
மருந்து மறியுங்கொ றோழியவன் விருப்பே.

இது, வரைந்துகொள்ள நினைக்கிலன் என வேறுபட்ட தலை மகள், “அவன் நின்மேல் விருப்பமுடையன், நீ நோகின்றது என்னை?” என்ற தோழிக்குச் சொல்லியது.

** பழைய உரை :**
சிறுதினை மேய்ந்த தறுகட்பன்றி துறுகல் அடுக்கத்துத் துணை யொடு வதியும் நாடன் என்றது, களவொழுக்கத்தான் வரும் சிற்றின்ப மின்றியே வரைந்துகொண்டு நின்னொடு ஒழுகுவன் எனத் தோழி கூறியவதனைத் தலைமகள் கொண்டு கூறிற்று எனக் கொள்க.

** உரை :**
தோழி, சிறியவாகிய தினையை மேய்ந்த தறுகண்மையை யுடைய பன்றி, நெருங்கிய கற்கள் நிறைந்த மலைப்பக்கத்தில் தன் துணைப்பன்றியொடு தங்கும் விளங்குகின்ற மலைநாடன் வருதற்குக் காரண மாகிய அவனது அருள், யானுற்ற நோய்க்கு மருந்தாகலின், அத்தன்மையை அவனது அருளுள்ளம் அறியுங் கொல்லோ என்றவாறு.

பன்றி துணையொடு வதியும் மலை, இலங்கும் மலை என இயையும். தினை மேய்ந்த. பன்றி அடுக்கத்து வதிதல், “சிறுகட் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல், துறுகட் கண்ணிக் கானவர் உழுத, குலவுக்குரல் ஏனல் மாந்தி ஞாங்கர், விடரளைப் பள்ளி வேங்கை யஞ்சாது, கழைவளர் சாரல் துஞ்சும் நாடன் 1” என்பதனாலும் அறியப்படும்.

வரூஉம் மருந்து என்பது “நின்முகம் காணும் மருந்தினேன் என்னுமால் 2” என்புழிப் போலக் காரணகாரியப் பொருள் தந்து வினைப்பெயர் கொண்டது. விருப்பு ஆகுபெயர். காரண காரியங்கள் தம்முள் வேறல்ல வாகலின் “காட்சியை மருந் தென்றான்” என்பர் சேனாவரையர். அங்ஙனமே வரவினை மருந்தென்றார் எனினும் ஒக்கும் என்க. மருந்து ஈண்டு மருந்தாந் தன்மை. “வறிதால் இகுளையென் யாக்கை, இனி, அவர் வரினும் நோய்மருந் தல்லர், வாராது அவண ராகுக காதலர் 3” என்புழியும் வரவு மருந்தென வழங்கப்படுமாறு உணர்க.

அவன் வாராமை குறித்து மெலிந்து வருந்துகின்றவள், தோழி “நின்மேல் அன்புடையனாகலின் நீ மெலிகின்றது என்னை?” என அவன் விருப்பமுடைமை உணர வுரைத்த சொற்களான் மகிழ் கின்றா ளாகலின், மருந்தும் அறியுங்கொல் என்றும், அவன் விருப்பம் உணர்த்தும் நின் சொற்கள் யான் ஆற்றியிருத்தற்கு மருந்தானாற் போல அவன் வரைந்து கொள்ளுதலையும் செய்யு மாயின் நன்றென்பாள், வரூஉம் மருந்தும் அறியுங்கொல் என்றும், அவள் வந்தாலன்றித் தன்மெலிவு தீராது என்பாள் அவன் வரவினையே மருந்து என்றும் கூறினாள். அவனது விருப்ப முடைமை தன் வரைப்பட்ட என்னைத் தன் வாராமையால் வருத்துதலின் நோயாதலே யன்றி, வரலால் அது தீரும் மருந்து மாதலை அறியுங்கொல்லோ என்பதுபட நிற்றலின், உம்மை எச்சப்பொருட்டு.

“மறைந்தவற் காண்டல் 1” என்பதன் உரையில், பிரிந்தவழிக் கலங்கியதற்குச் செய்யுள் காட்டலுற்றவர், “உறங்காமையும் உண்ணாமையும் கோலஞ் செய்யாமையும் சொல்லுதல்” என வுரைத்து, “இவ்வழி நீ வருந்தாதி, நின்மாட்டு அன்பு பெரி
துடையன்” எனத் தோழி ஆற்றுவித்தவழி ஆற்றாமையால் தலைவி கூறியதற்கு இதனைக் காட்டுவர் இளம்பூரணர்.

    263.    நன்பொ னன்ன புனிறுதீ ரேனல்  

கட்டளை யன்ன கேழன் மாந்தும்
குன்றுகெழு நாடன் றானும்
வந்தனன் வந்தன்று தோழியென் னலனே.

இது, வரைவிடைவைத்துப் பிரிந்த தலைமகன் மீண்டமை அறிந்த தலைமகள், “நீ தொலைந்த நலம் இன்று எய்திய காரணம் என்னை?” என்ற தோழிக்குச் சொல்லியது.

** பழைய உரை :**
பொன் போன்ற தினையைக் கேழல் மாந்தும் நாடன் என்றது, தன் நாட்டு வாழும் விலங்குகளும் தமக்கு வேண்டுவன குறை வின்றிப் பெற்று இன்பம் நுகரும் நாடன் என்றவாறு.

** உரை :**
தோழி, நல்ல பொன்னை யொத்த ஈன்றணிமை தீர்ந்த தினையைப் பொன்னுரை காணுங் கட்டளைக் கற்போலும் நிறமுடைய பன்றி மேய்ந்து உண்ணும் குன்றுகள் பொருந்திய நாடனும் வந்தா னாகலின் என் நலனும் வந்து எய்துவதாயிற்று என்றவாறு.

பொன்னுக்கு நன்மை ஓடுதலின்மை. புனிறுதீர் ஏனல் என்றது முற்றின தினையை. “புனிறுதீர் பெருங்குரல் நற்கோட் சிறுதினை 1” எனப் பிறாண்டும் கூறுப. பழுத்து முதிர்ந்த தினையை நன்பொன் அன்ன ஏனல் என்றதற் கேற்ப அதனிடைப் புகுந்த கரிய நிறத்தையுடைய கேழலைக் கட்டளை யன்ன கேழல் என்றார். பொன்னும் கட்டளையும் நிறம்பற்றி வந்த உவமம். “புனவன் துடவைப் பொன்போற் சிறுதினை 2” என்றும், “பரூஉமயிர்ப் பன்றி, பொன்னுரை கட்டளை கடுப்பக் காண் ரக், கிளையமல் சிறுதினை விளைகுரல் மேய்ந்து, கண்ணினிது படுக்கும் நன்மலை நாடன் 3” என்றும் சான்றோர் கூறுதல் அறிக.

நாடன் தானும் என்றது படுத்தலோசையால், தலைமகன் பிரிந்து நீட்டித்தமையும் தலைமகளது ஆற்றாமை மிகுதியும் உணர்த்திற்று; என்னை, நெஞ்சின் மிக்கது வாய் சோர்ந்து சொல்லாய் நிகழு மாகலின். எண்ணும்மை விகாரத்தால் தொக் கது. அவன் வர வருதலும் பிரியத் தொலைதலும் என் நலத்துக்கு இயல்பென்பாள், நாடன் தானும் வந்தனன், வந்தன்று தோழி என் நலனே என்றாள். “நீ இவண் வருஉங்காலை, மேவரு மாதோ இவள் நலனே தெய்யோ 4” என்று முன்னரும் கூறியவாறு காண்க.

    264.    இளம்பிறை யன்ன கோட்டட கேழல்  

களங்கனி யன்ன பெண்பாற் புணரும்
அயந்திகழ் சிலம்ப கண்டிகும்
பயந்தன மாதோநீ நயந்தோள் கண்ணே.

இது வரையாது வந்தொழுகும் தலைமகனைப் பகற் குறிக் கண்ணே எதிர்ப்பட்டுத் தோழி வரைவுகடாயது.
பழைய உரை :
கேழல் பிணவைப் புணரும் என்றது……. அறிவில்லாதன ஒழுகும் ஒழுக்கமும் நின்மாட்டுக் கண்டிலேம் என்றவாறு.

** உரை :**
கலை முதிராத பிறைத்திங்கள்போல் வளைந்த மருப் பினையுடைய பன்றி களங்கனிபோற் கரிய பெண் பன்றியோடு கூடிச் சென்று அருந்தும் நீர் மிக்க சிலம்பினையுடையாய், நீ விரும்பும் இவளுடைய கண்கள் பசலை பூத்திருத்தலைக் காண்பாயாக என்றவாறு.

பன்றியின் கோடு இளம்பிறை போலும் வடிவும் நிறமும் உடைமை பற்றி இளம்பிறை யன்ன கோட்ட கேழல் என்றார். “பிறையுறழ் மருப்பின் கருங்கட் பன்றி 1” எனப் பிறரும் கூறுதல் காண்க. களங்கனி - களாவின்பழம்; இது கருநிறமுடையது; “களங்கனியைக் காரெனச் செய்தாரும் இல் 2” என்ப. அயம் - நீர். “அருவி ஆர்க்கும் அயந்திகழ் சிலம்பு 3” என்பதனாலும் அறிக. புணர்ந்து சென்று அருந்தும் அயம் எனற்பாலது, புணரும் அயம் என நின்றது. எதுகை நோக்கிப் பசந்தன என்றபாலது பயந்தன என்றாயிற்று.

நீ வரைந்துகொள்ளாது குறிவழி யெய்திக் கூட்டம் தரு குவை; ஆயினும் நின் பிரிவு நினைந்து இரங்கியும் ஏதம் ஆய்ந்து மேனி மெலிந்து வேறுபட்டுக் கண் பசந்தும் தலைமகள் வருந்து கின்றா ளாகலின், பயந்தன மாதோ நீ நயந்தோள் கண்ணே என்றும், நின்னால் விரும்பப்பட்டாள் இவ்வேறுபாடு எய்த, அதனை நீ அறியாதிருத்தல் ஆகாது என்பாள், நீ நயந் தோள் கண்ணே என்றும் கூறினாள். இது தலைவனைப் பேதைமை யூட்டியது. பயந்தன மாதோ என்றது பசலைபாய்தல். இனி, இவ் வேறுபாடு தமர் அறியின் இவளை இற்செறிப்பா ராகலின் நீ வரைந்துகொள்வதே கடன் என வரைவு கடாயவாறாம்.

கேழற்பன்றி வேண்டுவதாகிய நீரைத் தன் பெண் பன்றி யோடு கூடிச் சென்று அருந்துவது போல, நீயும் நினக்கு வேண்டுவ தாகிய இன்பத்தை நின் காதலியை வதுவையிற் கூடி நுகர்தல் வேண்டும் எனத் தோழி குறிப்பால் வரைவு கடாயினா ளாயிற்று. இவ்வுள்ளுறைப் பொருள் பழைய வுரையில் சிதைந்துவிட்டது.

    265.    புலிகொல் பெண்பாற் பூவரிக் குருளை  

வளைவெண் மருப்பிற் கேழற் புரக்கும்
குன்று கெழு நாடன் மறந்தனன்
பொன்போற் புதல்வனோ டென்னீத் தோனே.
இது, பரத்தை யிடத்தானாகத் தலைமகன் விடுத்த வாயின் மாக்கட்குத் தலைமகள் சொல்லியது.

பழைய உரை :
புலியாற் கொல்லப்பட்ட தன் பிணவின் குட்டியைத் தந்தை யாகிய கேழல் புரக்கும் நாடன் என்றது, பரத்தையர் காரணமாக யான் இறந்தால் தன் புதல்வனைத் தானே வளர்க்கத் துணிந்து என்னை நீத்தான் என்பதாம்.

உரை :
புலியாற் கொல்லப்பட்ட பெண்பன்றியின் அழகிய வரிகள் பொருந்திய குட்டியை வளைந்த வெண்மையான கோட்டினையுடைய ஆண்பன்றி காக்கும் குன்றுகள் பொருந் திய நாடன் எம்மிடை வருதலை மறந்து பொன் போலும் மகனையும் அவற்குத் தாயாகிய என்னையும் நீத்தொழிந்தா னாகலின் அவன்பொருட்டு நீவிர் வாயில் வேண்டுவது என்னை? என்றவாறு.

புலிகொல் பெண்பால் என்னும் தடுமாறு தொழிற்பெயர் பூவரிக் குருளை கேழல் புரக்கும் என்ற “மெய்யறி பனுவலின் வேற்றுமை தெரியப்பட்டது. 1” மறந்தனன், முற்றெச்சம். பெறற் கருமை பற்றிப் புதல்வனைப் பொன்னோடு உவமித்தல் பண்டை யோர் மரபு. “தென்புல வாழ்நர்க் கருங்கடன் இறுக்கும், பொன் போற் புதல்வன் 2” என்று பிறரும் கூறுவர். பொன் பெறற்கருமை குறித்து வருதலை “வாடிய மேனியர் பொன்நிறை சுருங்கார் 3” என்ற விடத்துப் பொன்னிறை என்றதற்குப் பெறுதற்கரிய நிறை என்று நச்சினார்க்கினியர் உரை கூறுவதனால் அறிக.

மறந்தில னாயின், புதன்வனையும் தன்னையும் நீத்தொழு கான்; ஆகலின், மறந்தனன் என்றும், உடற்கு நன்கலனாய் அணிசெய்யும் பொன்போல் மனைமாட்சிக்கு நன்கலனாய் விளங்குதலின் மகனைப் பொன்போற் புதல்வன் என்றும், தன் குலம் விளக்கும் சால்புடைய மகன் தன்னினும் உயர்ந்தோ னாதல் பற்றிப் புதல்வனோடு என்றும், தன் பிரிவால் மிக்க துன்ப முற்று வருந்தும் என் வருத்தமும் நோக்கிற்றிலன் என்பாள், என் நீந்தோனே என்றும் கூறினாள். இது களவுக்காலத்துப்போல் அன்றிக் கற்புக்காலத்துப் பிரிவாதலின், புறத்தார்க்குப் புல னாகாமை மறைக்கப்படா தாகலான், ஆற்றாது வாயில்கட்குக் கூறுவாளாயினாள். இஃது அழிவில் கூட்டத்து அவன் பிரி வாற்றாமை. புலியால் கொல்லப்பட்ட பெண்பாற் பன்றி யிடத்துக் கொண்ட காதலால் கேழல் அஃது ஈன்ற குட்டிகளைப் புரக்கும் நாடனாயினும், தலைமகன் தன் பரத்தைமையால் வீழ்த்தப்பட்ட என்பால் அன்பிலனாதலோடு யான் ஈன்ற என் மகன்பாலும் அன்பிலனாய்ப் பிரிந்தேகினான் எனத் துனியுறு கிளவியைத் தலைவி உள்ளுறுத் துரைத்தாள்.

இது வாயில்களுக்குத் தலைவி கூறியது என்பர் நச்சினார்க் கினியர்.

புலிகொள் பெண்பால் என்ற பாடத்துக்குப் புலியாற் கொன்று கொண்டுபோகப்பட்ட பெண்பன்றி என உரைக்க.

    266.    சிறுக்கட் பன்றிப் பெருஞ்சின வொருத்தலொடு  

குறுக்கை யிரும்புலி பொரூஉ நாட
நனிநா ணுடைய மன்ற
பனிப்பயந் தனநீ நயந்தோள் கண்ணே.

இது, நொதுமலர் வரைவு பிறந்துழித் தலைமகட்கு உளதாகிய வேறுபாடு தோழி கூறித் தலைமகனை வரைவு கடாயது.

** பழைய உரை :**
பன்றியொருத்தலொடு புலி பொரும் என்றது, நினக்கு நிகரல் லாதார் வந்து தலைப்படவும் அதனை நீக்காது இடங்கொடுத்து ஒழுகா நின்றாய் என்பதாம்.

** உரை :**
சிறிய கண்களையுடைய பன்றியின் மிக்க சினம் பொருந் திய ஆணோடு குறுகிய முன்கால்களையுடைய பெரிய புலி பொருகின்ற நாடனே, நீ விரும்பிய இவளுடைய கண்கள் தெளிவாக மிக்க நாணுடையவை யாகலின், பசந்து நீர் சொரிவனவாயின என்றவாறு.

சிறுக்கண், குறுக்கை என்பன வலிக்கும்வழி வலித்தல். இப்பண்புதொகுமொழிகள் “புணரியல் நிலையிடை உணரத் தோன்றா” வாயினும், தொடைநோக்கி வலித்தமை கொள்க. “வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் 1” என்ற புற னடையால் அமைத்தலும் ஒன்று. ஒருத்தல், ஆண்பாற் பெயர். “ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும்……. யாத்த ஆண்பாற் பெயரென மொழிப 2” என ஆசிரியர் கூறுதல் காண்க. பன்றியிற் புலி சிறந்ததாயினும், ஈண்டுப் பன்றியின் வன்மை தோன்றப் பெருஞ்சின வொருத்தல் என்றும், புலியின்பால் அது சிறவாமை தோன்றக் குறுக்கை யிரும்புலி யென்றும் கூறினார்.

நீ நயந்தோள் நொதுமலர் வரைவு பிறந்தமையினாலும், தன்னுறு வேட்கையைத் தானே கூறலாகாமையினாலும், நாண மிகுதியால் ஆற்றாளாயினள் என்பாள், அதனைக் கண்மே லேற்றி, நனி நாணுடைய மன்ற, பனிப் பயந்தன நீ நயந்தோள் கண்ணே என்று கூறினாள். “தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல், எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லை, பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப், பெய்ந்நீர் போலும் உணர்விற் றென்ப 3” என்பதனால் அதனைத் தோழி யுணர்ந்து கூறினாள். நொதுமலர் வரைவு பிறந்தமை கண்டு ஆற்றாது கண் கலுழ்ந்து வேறு படுதலைக் கண்டும் நீ வரையாதொழுகுதல் நாணுடைமையன்று என்பாள், குறிப்பால் நாணுடைய என்றும், மேனி வேறுபாடு நோக்கி அயலார் கூறுவனவற்றால் நாணி வருந்துகின்ற தலைமகள் வேற்றுவரைவு முற்று மாயின் உயிர்வாழாள் என்றற்கு நனி நாணுடைய மன்ற என்றும் கூறினாள் என்க. தலைமகளின் நாணுடைமையை விதந்து கூறியது, நாண்கெட வரின் உயிர் வாழாள் என்றற்கு. இவ்வாறு நாணுடைமையும், மேனிவேறு பாடும் கூறித் தோழி வரைவுகடாதல், “புரைபுட வந்த அன்னவை4” என்புழி யடங்கும்.

எளிதில் தன்னால் வீழ்த்தப்படுதற்குரிய பன்றி யொருத்த லொடு இரும்புலி நாணாது பொரும் என்றது, வேற்றுவரைவு வருதல் கண்டும் நாணாது களவே விரும்பி ஒழுகுவாயாயினை எனத் தோழி உள்ளுறுத்தவாறு. பழைய வுரைகாரர்க்கும் இதுவே கருத்தாதல் அறிக. பனிப் பயந்தன என்றது பசலைபாய்தல்.

நனிநாணுடையை என்று பாடமாயின் அஃது எதிர்மறைக் குறிப்புமொழியாய் மிகவும் நாணுடையையல்லை என்பது பட நின்றதாம். நனிநாணுடைமையம் என்றும் நனிநாணுடையம் என்றும் பாடமுண்டு.

    267.    சிறுகட் பன்றிப் பெருஞ்சின வொருத்தல்  

துறுக லடுக்கத்து வில்லோர் மாற்றி
ஐவனங் கவருங் குன்ற நாடன்
வண்டுபடு கூந்தலைப் பேணிப்
பண்பில சொல்லும் தேறுதல் செத்தே.

இது, தலைமகளைத் தலைவன் வரைவலெனத் தெளித்தான் என்று அவள் கூறக் கேட்ட தோழி அவன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது.

** பழைய உரை :**
பண்பில சொல்லும் என்றது, பொய்ம்மொழிகளைச் சொல்லும் என்றவாறு. தேறுதல் செத்தே என்றது, தான் சொன்ன சொற்களை இவள் மெய்யாகக் கொள்ளும் என்பது கருதி என்றவாறு.

பன்றி யொருத்தல் காவலரை யோட்டி ஐவனநெல் கவரும் என்றது, களவினிற் காவலரை வென்று பெறும் இன்பமே விரும்பு வான் என்றவாறு.

** உரை :**
சிறிய கண்களையுடைய பன்றியின் மிக்க சினத்தையுடைய ஆண், துறுகற்கள் நிறைந்த மலைப் பக்கத்து வில்லேந்தும் குறவரை வெருட்டி, அவராற் காக்கப்படும் ஐவனநெல்லைக் கவரும் குன்றுகளையுடைய நாடன், வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய இவளை விரும்பி, இவள், தான் கூறுவன வற்றைப் பண்புடையவை எனத் தெளிந்து கொள்வாள் என்பது கருதிப் பண்பிலவாய சொற்களைச் சொல்லுவா னாயினன் என்றவாறு.

துறுகல் அடுக்கத்து மேலும் இடையிலும் ஒளித்திருந்து நெல் கவர வரும் கேழலைத் தாக்குவது பற்றி, துறுகல் அடுக்கத்தை விதந்தோதினார். வில்லோர் அம்புக்கு இலக்காகாது விலகுதலால் அவர் தளர்ந்தொழியச் செய்வதனை ஈண்டு மாற்றுதல் என்றார். ஐவனம், ஒரு வகை நெல்; இதனை வெதிர்நெல் என்பதும் வழக்கு. மலைச்சாரற் காடுகளைத் தீயிட்டுக் கொளுத்திச் செய்த புன் செய்க் கொல்லையில் “ஐவனநெல் கானவர்களால் விளைவிக்கப் பெறுகிறது1” அவர்கட்கு இந்த “ஐவனமும் உணவுப்பொருளாகும்.2” ஐவனம் விளையுங்கால் கானவர் இரவில் காட்டுவிலங்குகள் வந்து அழிக்காவண்ணம் காவல்புரிவர்; அப்போது “இரவுமுற்றும் தீ எரிக்கப்படும். 3”

பண்பு, மெய்ம்மைப் பண்பு; அஃதாவது சொல்லும் செய லும் ஒத்தொழுகும் பண்பாடு. வரைவல் என்று சொல்லி வரை யாது ஒழுகுகின்றா னாகலின், அவனைப் பண்பில சொல்லும் என்றும், தலைமகளும் அவன்மேற் கொண்ட ஆராக் காதலால், “அவன் வரம்பிறத்தல் அறம் தனக்கு இன்மையின் 4” அவன் கூறியவற்றை ஆராய்தலின்றி ஏற்று ஒழுகும் இயல்பினள் என் பதைத் தலைமகன் நன்குணர்ந்துளான் என்பாள், தேறுதல் செத்தே என்றும் கூறினாள். பொய் கூறாரெனத் தம்மைத் தெளிந்தார்மாட்டுத் தலைமகன் அதனைக் கூறி யொழுகுதல் அறனன்று என்றாளாம். இதனாற் பயன் தலைமகன் தெருண்டு வரைவானாவது.

பன்றியொருத்தல் காவலரை மாற்றி ஐவனநெல்லைக் கவரும் நாடனாகலின் தலைமகன் தலைமகள்பால் இனிய சொற்களைச் சொல்லி மாற்றி அவள் நலன் நுகர்ந் தொழுகுதலைச் செய்கின்றானே யன்றி வரைந்துகோடலை நினைக்கின்றிலன் எனத் தோழி குறிப்பாய் வரைவுகடாயினாள் எனக் கொள்க.

    268.    தாஅ யிழந்த தழுவரிக் குருளையொடு  

வளமலி சிறுதினை யுணீஇய கானவர்
வரையோங் குயர்சிமைக் கேழ லுறங்கும்
நன்மலை நாடன் பிரிதல்
என்பயக் கும்மோ நம்விட்டுத் துறந்தே.

இஃது, “அவன் குறிப்பிருந்தவாற்றால் நம்மைப் பிரிந்து வந்தல்லது வரையமாட்டான் போன்றிருந்தது” என்று தலைமகள் கூறக் கேட்ட தோழி தலைமகன் சிறைப்புறத்தானாக அவட்குச் சொல்லியது.

** பழைய உரை :**
தாயிழந்த குருளையோடே தினையை உண்டு கேழல் உறங்கு கின்ற இத்தன்மையையுடைய நாடனாதலால் இவ்வாறு நிகழ்தல் கூடாது என்பதாம்.

** உரை :**
தாயை இழந்த பருத்த வரிகளையுடைய பன்றிக்குட்டி யுடன் வளம்மிக விளைந்த சிறுதினையை உண்ணக் கருதிக் கானவர் வாழும் மலையினது உயர்ந்த உச்சிக்கண் பகற் போதில் ஆண்பன்றி உறங்கும் நல்ல மலைநாடன் நம்மைத் துறந்து செல்லுவானாயின், அஃது அவற்கு எப்பயனைத் தருமோ? அறியேன் என்றவாறு.

தழுவரி - நெருங்கிய வரிகள். குருளை - குட்டி; “நாயே பன்றி புலி முயல் நான்கும், ஆயுங் காலைக் குருளை என்ப 1” என ஆசிரியர் கூறுதல் காண்க. கேழல், குருளையொடு, உணீஇய, உறங்கும் என இயையும். நாடன் நம் விட்டுத் துறந்து பிரிதல் என்பயக்கும்மோ எனக் கூட்டி இயைக்க. விடுதல் - தனிப்ப விடுதல். துறத்தல் - உள்ளத்தே பிரிதற்குரிய துணிவு கொளல். பிரிதல் - மெய்யால் நீங்குதல். ஓகாரம், எதிர்மறை. கேழல் இரவுப்போதில் இரைதேடி மேயும் இயல்பிற் றாகலின், உறங்கு தற்குரிய பகற்போது வருவிக்கப்பட்டது.

தழுவரிக் குருளை யென்றற்குத் தாயை யிழந்தமையால் தந்தையைத் தழுவிச் செல்லும் வரி பொருந்திய குருளை யெனினு மாம். நம்மைத் துறந்து நன்மலை நாடன் பிரிதல் என்றது, “அவன் குறிப்பிருந்தவாற்றால் நம்மைப் பிரிந்தல்லது வரைய மாட்டான் போன்று இருந்தது” எனத் தலைமகள் கூறியதனைக் கொண்டு கூறியதாம். தன்னை யின்றியமையாத நம்மைத் துறந்து பிரிதலால், அவன் பெறலாகும் பயன் ஒன்றும் இல்லை என்பாள், என் பயக்கும்மோ என்றாள்.

வளம் மலிந்த தினையைக் குருளையுடன் உண்ணக் கருதிக் கேழல் உயர்சிமைக்கண் உறங்கும் என்றது, நலம் முதிர்ந்த நின்னை வரைந்துகோடலை எண்ணி நின்பாற் பிறந்த காதலுடன் பிரிந்துறைதலைத் தலைமகன் கருதுகின்றான் என்று தோழி கூறியவாறு. இவ்வண்ணம் பிரிந்தானாயின், நாம் நலம் துறந்து கெடுவதன்றி வேற பயன் இன்று என்பாள் என் பயக்குமோ என்றாள். இனிக் கேழல் குருளையைத் தன் உடன்கொண்டு சென்று தினையுண்பான் உறங்கும் நாடனாகவும், நின்னையும் தன் உடன்கொண்டு வரைந்துகோடலை எண்ணாது இவண் விடுத்துப் பிரிதலைக் கருதுவது என்னை என்றற்கு என் பயக்கும்மோ என்றாள் என்றுமாம். பழையவுரைகாரர், சிறுதினை யுணீஇக் கேழல் உறங்கும் என்று பாடங்கொண்ட மையின், “தினையையுண்டு கேழல் உறங்குகின்ற இத்தன்மையை யுடைய நாடனாதலால் இவ்வாறு நிகழ்தல் கூடாதென்பதாம்” என்பாராயினர்.

வளமலை சிறுதினை உணீஇ யுறங்கும் என்றும் பாடம் உண்டு. உணீஇய வுயங்கும் என்ற பாடத்துக்கு, ஒருபால் பிணவின் பிரிவு வருத்த ஒருபால் கானவர்காவல் வருத்தக் கேழல் குருளையொடு தினையுண்டற்கு வருந்தும் என்றது, ஒருபால் நலந்தொலைவும் ஒருபால் இற்செறிப்பும் வருத்த இடையே தலைவி தலைவன் தந்த காதலொடு அழிவில் கூட்டம் பெறுதற்கு வருந்தியுறைகின்றாள் எனத் தோழி சிறைப்புறத்தானாகிய தலைமகனைக் குறிப்பால் வரைவு முடுகியவாறாகக் கொள்க.

கேழல் தன் குருளையை உடன்கொண்டு சென்று தினை யுண்பான் உயர்சிமைக்கண் உறங்கும் நாடனாகலின் நின்னை உடன்கொண்டு சென்று வரைந்து கொள்வான் எண்ணாது, அவன் பிரிதலைக் கருதுவது பயனின் றென்றாள் என்றுமாம்.

269. கேழ லுழுதெனக் கிளர்ந்த வெருவை  

    விளைந்த செறுவிற் றோன்று நாடன்
    வாரா தவணுறை நீடி னேர்வளை
    இணையீ ரோதி நீயழத்
    துணைநனி யிழக்குவென் மடமை யானே.

இது, குறைநயப்பக் கூறித் தலைமகளைக் காட்டிய தோழி, அவன் இடையிட்டு வந்து சிறைப்புறத்து நின்றுழித் தலைமகட்குச் சொல்லியது.

** பழைய உரை:**
துணைநனி இழக்குவென் மடமையான் என்றது, நீ எனக்குத் துணையாதலை இழப்பேன் யான், அவனைத் தேறி முன் செய்த மடமையான் என்றவாறு. இறந்துபடுவேன் என்பதாம். நீ அழவாராது அவண் உறை நீடின் எனக் கூட்டுக.

கேழல் உழுததாக எருவை நெல் விளைந்த செறுப் போலத் தோன்றும் என்றது, வேட்கை நலியத் தனக்கு வந்த வருத்தத்தானே தலைசாய்ந்து நல்லாரைப் போல ஒழுகிய துணையே யுள்ளது என்பதாம்.

** உரை :**
பன்றி யுழுததாக ஓங்கி யெழுந்த கோரை நெல்விளை வயல்போலப் பொலிந்து தோன்றும் நாட்டினை யுடையோன், அழகிய வளையும், கடையொத்த நெய்ப்பினை யுடைய கூந்தலு முடையாய், நீ புலம்பியழ. இவண் வாராது அவன் பிரிந்துறைதலையே நீட்டிப்பா னாயின், அவன் குறைநயப்பக் கூறியவற்றைத் தெளியாது நின்னை அவனாடு தலைக்கூட்டிய யான் என் மடமையால் நினக்குத் துணையாதலை இழப் பேனாவேன் என்றவாறு.

எருவை, பஞ்சாய்க் கோரை. “எருவை நறும்பூ நீடிய பெருவரை 1” என்றார் பிறரும். நீ, யழ, அவணுறை, நீடின் எனக் கூட்டுக. பன்றிகள், காந்தள் வள்ளி முதலியவற்றின் கிழங்குகளை உண்டற்பொருட்டுக் கிளைத்தமண் நன்கு உழுதது போறலின், கேழல் உழுதென என்றும், அதனால் புழுதி படிந்து எருவைக் கோரை வளம்பட வளர்தல் கண்டு, கிளர்ந்த எருவை என்றும் கூறினார். விளைந்த செறு - விளைந்த நெல்வயல். உறை - உறைதல்; முதனிலைத் தொழிற்பெயர். ஓதி, நாடன் நீடின் நீ அழ, மடமையான் துணை நனி இழக்குவென் என முடிக்க. துணை - துணையாந்தன்மை. துணையாந்தன்மை இழத்தலாவது துணையா யிருக்கும் திறமின்றி இறந்துபடுவேன் என்றவாறு.

அவன் பிரிவாற்றாது, தலைமகள் வளைநெகிழ்ந்து, கூந்தல் சரிந்து வேறுபட்டமையால் அவளை நேர்வளை, இணையீரோதி என்றாள். நாடன் வாராது அவணுறைதல் நீடுமாயின், உடம்புநனி சுருங்கி வேறுபட்டு நீ ஆற்றாமையாற் பிறிதுபடுதற் காற்றாது யான் உயிர் இறப்பேன் என்பாள், துணைநனி யிழக்குவென் என்றாள். தோழியிற் கூட்டத்துக் குறை நயந்தபோது அவன் கூறியவற்றை நன்கு ஆராயாது அவனொடு தலைக்கூட்டிய கேண்மை, தோழி யாகிய தான் ஆய்ந்தாய்ந்து கொள்ளாத தொன்றாய்த் தான் “சாம் துயரந் தருவதாயிற் றாகலின்1” அச்செயற்குக் காரணமாய தன் அறியாமைக்கு இரங்கித் துணைநனி இழக்குவென் மடமை யானே என்றாள்.

இனி, கேழல் உழுததனால் கிளர்ந்தெழுந்த எருவைப் புல் விளைந்த நெல்லைப்போலத் தோன்றும் நாடன் என்றதனால், தலைவனொடு உளதாகிய தொடர்பினால் தலைவி மேனிக்கண் தோன்றிய வேறுபாட்டை இளமைக்கதிர்ப்புப் போலும் எனத் தோழி மறைத்து ஒழுகியவாறு கூறினாளாம். ஆகவே, தலைமகன் பிரிந்து உறைதற்கண் நீட்டித்தால் தலைவியது வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகிக் களவை வெளிப்படுத்தும் எனவும், அதனால் தான் இறந்துபடுதல் ஒருதலை யெனவும் கூறுவாள், நீயழத் துணைநனி இழக்குவென் என்றும், இவ்வளவிற்கும் காரணம் இது வென்பாள் மடமையானே என்றும் கூறினாள் எனினும் அமையும்.

    270.    கிழங்ககழ் கேழ லுழுத சிலம்பில்  

தலைவிளை கானவர் கொய்தனர் பெயரும்
புல்லென் குன்றத்துப் பலம்புகொள் நெடுவரை
காணினுங் கலிழுநோய் செத்துத்
தாம்வந் தனர்நங் காத லோரே.

இது, வரைவு காரணமாக நெட்டிடை கழிந்து பொருள் வயிற் போகிய தலைமகன் வந்தமை அறிந்த தோழி உவந்த உள்ளத் தளாய்த் தலைமகட்குச் சொல்லியது.

** பழைய உரை :**
கிழங்ககழ் கேழல் உழுத புழுதிக்கண்ணே வித்த விளைந்த பயிர் கானவர் கொய்யும் சிறப்புடையதேனும், அவன் அவ்விடத்து உறையாமையின் தனக்குப் புல்லென்று தோன்றுதலால் புல்லென் குன்றம் எனவும், புலம்புகொள் நெடுவரை எனவும் இழித்துக் கூறப்பட்டதெனக் கொள்க.

** உரை :**
கிழங்குகளை அகழ்ந்து எடுக்கும் பன்றிகள் தம் கோடு களால் உழுத புழுதி நிறைந்த சிலம்பில், கானவர் விதைப்ப விளைந்த முதல்விளைவினைக் கொய்துகொண்டு நீங்குதலால் புல்லென்று தோன்றும் குன்றத்து, அன்னோர் கூட்டத்தை யின்றித் தனித்த தோற்றத்தைக் கொண்ட நெடிய பக்கமலையைக் கண்டாலும் கலுழ்தற்குக் காரணமான நோயைக் கருதி நம் காதலர் தாம் மேற்கொண்ட வினைமுடித்து வந்தன ராகலின் நீ மகிழ்வாயாக என்றவாறு.

காந்தள், வள்ளி, கோரை முதலியவற்றின் கிழங்குகளை அகழ்ந்துண்டல் கேழல்கட்கு இயல்பாகலின், மலைப்பக்கம், கிழங்ககழ் கேழல் உழுத சிலம்பு எனப்பட்டது. கிழங்கு ஈண்டு இஞ்சிக்கிழங்கு என்பாரும் உளர். அதனைக் கேழல்கள் அகழ்ந் துண்டல் மரபன்மை யறிக. தலைவிளைவு - முதல் விளைச்சல். விளைவின் முன்னர்ச் சிலம்பின்கண் வித்திய தினைப்பைங்கூழ் பச்செனத் தோன்றிக் காண்பார்க்கு அழகுசெய்தலாற் பொலிந்து தோன்றும் குன்றம், அது முற்றியதனால் கானவர் கொய்து பெயர்ந்த பின் அப்பொலிவு குன்றுதலின், புல்லென் குன்ற மென்றும், விளைவு முற்றாதவிடத்து அதனைக் கவர்வான் வரும் விலங்கு களாலும், புட்களாலும், அவற்றைக் கடிதற்குப் போந்து காவல் செய்யும் கானவர் குழுவானும் விளங்கிய குன்றம், அவ்விளக்க மின்மையின், புலம்புகொள் நெடுவரை என்றும் கூறப்பட்டது. கலிழும் நோய், கலிழ்தற்குக் காரணமாகிய நோய்.

தினைவிளைவும் மாவும் புள்ளும் மக்கட் கூட்டமும் கொண்டு இனிய காட்சி வழங்கிற் றாயினும், தலைமகன் பிரிவின்கண், குன்றமும் நெடுவரையும் தலைமகள் நினைவில் தலைவன் நினைவை யெழுப்பி வருத்தினமை பற்றிப் புல்லென் குன்றம் என்றும், புலம்புகொள் நெடுவரை என்றும் தோழி கூறினாள். அதனைக் காணுங்கால், பண்டு தான் மேற் கொண் டிருந்த புனங்காவலும், தலைமகனை எதிர்ப்பட்டு நட்புற்றமை யும், புணர்வின் இன்பமும், பிரிவுத்துன்பமும் ஒன்றன்பின் ஒன்றாய்த் தோன்றித் தலைவி யுள்ளத்தை அலைத்தமை குறித்து, காணினும் கலிழும் என்றும், அத்துன்பம் தனது வரவானன்றித் தீராமை உணர்ந்து தலைமகன் வந்தனன் என்றற்கு, நோய் செத்துத் தாம் வந்தனர் என்றும், ஈண்டு யாம் உற்ற துன்பத்தை ஆண்டு அவர்தாம் உணர்தற்கு ஏது, அவர்பால் நம்மிடை யுளதாகிய காதல் என்பாள், நம் காதலோர் என்றும் கூறினாள். இது, துன்பத்துப் புலம்பல். உள்ளுறையால் தலை மகனது வரவு வரைவு கண்ணிய தென்று குறித்தமையின், வாளாது வந்தனர் என்றா ளென்க.

சிலம்பில் விளைந்த தலைவிளைவைக் கானவர் கொய்து கொண்டு பெயர்வர் என்றது, தலைமகனைத் தலைப்பட்டுக் கூடியதன் தலைவிளைவாகிய வரைவினை நீ தலைமகன் வரவால் பெறுவா யாயினை என்றவாறு. பின் விளைவன மணமும் மனையறமும் மகப்பேறும் முதலாயினவாம்.


குரக்குப்பத்து

பாட்டுத்தோறும் குரங்காகிய கருப்பொருளே சிறந்து வரத் தொகுக்கப் பெற்றமையின், குரக்குப்பத்து என்னும் பெயர்த் தாயிற்று.

உலகிலுள்ள உயிர்வகைகளுள் மக்களுயிர் உயர்ந்து விளங்கு வதுபோல அஃறிணை உயிர்வகைகளில், முகத்திற் கண் கொண்டு பொருள்களை நேரே முற்ற நோக்கும் பெற்றிமையால் உயர்ந்தது குரங்கு. “புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி” மேன்மையுற்று வளர்ந்து போந்த உயிரினத்துள் மக்களுயிர், குரங்குயிராய் இருந்தே இந்நிலை யெய்திற்று என்பது ஒருசார் ஆராய்ச்சியாளர் கொள்கை.

குரக்கினத்துள் ஆண் கடுவன் என்றும், பெண் மந்தி என்றும், குட்டி பறழ் என்றும் பார்ப்பென்றும் தமிழ்நூல்களில் வழங்கும். குரக்கினத்துள் பலவகை யுண்டு. இவை பொதுவாக வாலுடையன வாலில்லாதன என இருவகையாம். வாலில்லாதன கொரில்லா, சிம்பஞ்சி என வகைப்படும், அவற்றுள் சிம்பஞ்சி ஆப்பிரிக்காவின் மேலைப்பகுதியிலும் நடுப்பகுதியிலும் வாழ்கிறது; நன்கு வளர்ந்த கடுவன் ஐந்தடி உயரம் இருக்கும். பழங்கள் விதைக்கொட்டைகள் பசுந்தழைகள் இதற்கு உணவு. கொரில்லா ஆறடி உயரம் வளரும். இஃது ஆப்பிரிக்காவின் வெப்பமான பகுதியிலுள்ள காடுகளில் உளது; உணவுக்காக அடிக்கடி இடம்விட்டு இடஞ்செல்லும் இயல்புடையது; நடக்கும்போது கைகளை ஊன்றி நான்குகால் விலங்கு போலவே செல்லும்; ஆயினும் கையை முடக்கிப் புறங்கையை ஊன்றிச் செல்லுகிறது. கொரில்லாக்கள் மரத்தில் ஏறாமல் தரையிலேயே வாழ்கின்றன. ஓராங்குட்டான், சுமத்திரை, போரணியோ தீவுகளில் சதுப்புநிலக் காடுகளில் உளது. ஒராங்குட்டான் என்னும் மலேயாமொழிக்குக் காட்டுமனிதன் என்பது பொருள். ஏனையவற்றைப் போலின்றி இவற்றின் கைகால்கள் காட்டு மரங்களில் வாழ்தற் கேற்ப அமைந்துள்ளன. ஒராங் குட்டான் முப்பதாண்டுகள் வாழ்கிறது. கிப்பன் குரங்குகள் கிழக் காசியக் காடுகளில் உள்ளன; வாலில்லாத இனத்துள் இவை உருவில் சிறியவை. நன்கு வளர்ந்தது மூன்றடி உயர மிருக்கிறது. இவை பறவைகளையும், பழவகை, தழை, வகைகளையும் உண்கின்றன.

ஏனைய பலவும் வாலுடையனவே. நிலவுலகில் வெம்மை யான நிலப்பகுதிகளில்தான் குரக்கினம் காணப்படுகிறது. சில வகைக் குரங்குகள் மிக்க குளிரையும் தாங்கி உயிர்வாழக் கூடியனவாகும். அவை இமயமலைப் பகுதியிலும், திபேத்து, சீனநாட்டு வடமேற்குப் பகுதி ஆகிய இடங்களிலும் வாழ் கின்றன. ஐரோப்பாவில் சிபிரால்டர் பகுதியில் ஒருவகைக் குரக்கினம் உண்டு. ஆத்திரேலியாவில் குரங்கே கிடையாது. மடகாசிகர், நியூகினியா, மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய இப்பகுதி களிலும் குரக்கினம் இல்லை.

குரங்குகள் யாவும் மரஞ்செறிந்த காடுகளில் மரங்களையே இடமாகக் கொண்டு வாழ்வன என்பது நாடறிந்த செய்தி. “குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பில்லை” என்பது பழமொழி; ஆயினும், ஆப்பிரிக்காவில் பாபூன் என்னும் ஒருவகைக் குரங் கினம் இவ்விதிக்கு விலக்காக உளது. மருதம் நெய்தல் பாலை என்ற இந்த நிலப்பகுதிகளில் இவை கூட்டம் கூட்டமாய் வாழ் கின்றன. தரையிலேயே இவற்றின் வாழ்வுமுழுதும் பெரும்பாலும் கழிகிறது. குரங்குகளின் வாய்க்குள் இருமருங்கிலும் இரு பைகள் உண்டு. உண்ணும் உணவை முதலில் விரைவாக எடுத்துக் கடித்துப் பைக்குள் அடக்கிக்கொண்டு பின்னர் ஓரிடத்தே ஆர அமர்ந்து உண்பது அவற்றிற்கு வழக்கம். ஒருசிலவற்றிற்கு இப்பைகள் இருப்பதில்லை, அமெரிக்கநாட்டுக் குரங்குகட்கு இப்பைகள் அறவே கிடையா. மேலும் அமெரிக்கக் குரங்குகட்கு வேறொரு சிறப்பியல்பும் உண்டு. குரங்குகளின் வாலின்கீழ் எருவாய்ப் பகுதியில் சிவந்த உறுதியான இரு தோற்பட்டை யுண்டு; அதனால் அவை எவ்விடத்திலும் நன்கு உட்கார இயலுகிறது. இப்பட்டை அமெரிக்கக் குரங்குகட்கு இல்லை. அன்றியும் தென்னமெரிக்காவிலுள்ள ஒருவகைக் குரங்குகள் தம் வாலைக் கைபோல் பயன்படுத்துகின்றன. வாலினால் மரக் கிளையைப் பற்றிக்கொண்டு கைகால்களைத் தொடங்கவிட்டு ஊசலாடும் இயல்பு அவற்றிற்கு நன்கு வாய்த்துள்ளது; சிறு கிளைகளை ஈர்த்துக் கிழிப்பதும், வேரூன்றிய செடிகளை வேரோடுபற்றிப் பிடுங்குவதும் இவற்றிற்கு வாலினாலே ஆகின் றன. அமெரிக்கக்குரங்குகளின் மூக்குத் துளைகட்கு இடைவெளி ஏனை எந்நாட்டுக் குரங்குகட்கும் இல்லாத அளவில் அகன் றுள்ளது.

அமெரிக்கநாட்டுப் பிரேசில்பகுதியில் தான் பல்வேறு வகைக் குரக்கினங்கள் உள்ளன. இவை வடக்கே மெக்சிகோ நாடுவரையிலும் காணப்படும். அதற்குமேல் குளிர்மிகுதலின் குரங்குகள் இருப்பதில்லை. இவ்வினங்களில் சிலம்பிக்குரங்கு வகை ஒன்று. அஃது அமைதியாகவும் எளிதில் மக்களோடு பழகுவதாகவும் உளது; குளிர்மிக்க நாடுகளில் வாழக் கூடிய வாய்ப்பும் அதற்கு இயல்பாக அமைந்திருக்கிறது. பூனைக்குரங்கு என்ற இனம், தசை செறிந்த வட்டமான முகமும் அகன்ற கண்ணும் மயிர் அடர்ந்து பருத்து நீண்ட வாலும் உடையது. இக்குரங்கு இரவுப்போதுகளில் வெளிப்பட்டுச் சிறு சிறு பூச்சி களையும் பறவைகளையும் தேடி யுண்டு, பகற் போதுகளில் பெருமரப் பொந்துகளில் ஒடுங்கி உறையும். இவற்றின் வேறாக நரிபோல் ஊளையிடும் நரிக்குரங்குகளும், பறவைபோல் கூவும் சிறுகுரங்குகளும், கைகால்களில் அணில்போல் கூரிய விரல் படைத்த அணிற் குரங்குகளும் தென்னமெரிக்காவில் உண்டு.

வெம்மை நிலங்களில் வாழ்வதற்குரிய குரக்கினம் குளிர் நாடாகிய ஐரோப்பாவைச் சேர்ந்த சிபிரால்டரில் வாழ்வது ஆராய்ச்சியாளர்க்கு வியப்புத் தருகிறது. ஒரு காலத்தில் ஆப்பிரிக்காவும் ஐரோப்பாவும் கடலாற் பிரிக்கப்படாமல் நிலமாகவே தொடர்புற்றிருந்தன வாகலான், அக்காலத்தில் இக்குரக்கினம் இங்கே போந்து தங்கியிருக்கலாம் என்பது ஒருசார் ஆசிரியர் கொள்கை. பண்டை நாளைய சுபானியர்களில் எவ ரேனும் இதனை அண்மையிலுள்ள ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வந்திருக்கலாம் என்பது வேறொரு சாரார் கொள்கை. இக்குரங்குகள் இப்பகுதியிலிருந்து எப்போது வேரோடு தொலைந்து மறைகின்றனவோ, அப்போது பிரித்தானியர் இப்பகுதியினின்றும் போய்விடுவர் என்ற கொள்கை அங்கே இன்றைய மக்களிடையே நிலவுகிறது. பிரித்தானியருக்கும் இப்பகுதியிலுள்ள குரக்கினத்துக்கும் யாது தொடர்போ!

நம் நாடு வெம்மை செம்மையுற அமைந்த நாடாகலின், இங்கே குரங்குகள் பல்கி யிருப்பதில் வியப்பில்லை. குரக் கினத்தைச் சிறப்பித்தே சீர்த்த காவியம் பாடிக் களிக்கின்ற நாடு நமது. இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போரை உரைக்கும் இக்காவியத்தில் அனுமனும் அனுமனைச் சேர்ந்த குரக்கினமும் இல்லையாயின், காவியமேது? நம்நாட்டுக் குரங்கு களில் செங்குரங்கு கருங்குரங்கு என இருவகை உண்டு. முகஞ் சிவந்தது செங்குரங்கு, கரியது கருங்குரங்கு. கருங்குரங்கினை முசுக்கலை எனவும், ஊக மெனவும் வழங்குவர். செங்குரங்கைக் குரங்கென்றே பொதுவாக வழங்குவது இயல்பு.

இக்குரங்குகள் ஒன்றோடொன்று அன்பு செய்து கலந்து வாழும் திறம் அறிஞர்கள் நன்கு அறிந்தது. அதனால் இவை எப்போதும் கூட்டமாய் வாழ்கின்றன. தாம் வாழும் இடத்தில் போதிய உணவு கிடையாதாயின் இவை வேறு இடங்கட்குத் திரண்டு செல்லும். அங்ஙனம் செல்லுங்கால் முதிர்ந்த குரங்கு இவற்றிற்குத் தலைமை தாங்கி முன்னே செல்லும். இளங்குரங்கு களில் எவையேனும் ஒழுங்கு தவறிச் சிதறிச் செல்லுமாயின், உடனே குரக்குத் தலைவன் அவற்றைச் சீறித் தாவிப் பற்றிக் கடித்தோ அடித்தோ தக்காங்கு ஒறுத்துச் செம்மை நெறியில் நிற்கச் செய்யும். வேறு பகையினம் போந்து இக்கூட்டத்தைத் தாக்குமாயின், பெண்குரங்குகளையும் குட்டிகளையும் ஆண் குரங்குகள் சூழ்ந்து காத்து நின்று பகையினத்தோடு கடும்போர் உடற்றும். அவற்றுள் ஒன்று இறந்துவிடின் ஏனையாவும் ஒன்று கூடி அதன்பொருட்டுப் புலம்பி வருந்துவது காண்போர் மனத்தை உருக்கும்? தன்மைத்து. அதுபற்றியே கானவரும் வேட்டுவரும் குரக்கினத்தைக் கொல்ல நினைப்பதில்லை; கொல்லுவதும் இல்லை.

குட்டி ஈன்று அவைகளைப் பேணி வளர்ப்பதிலும், அன்பு செய்வதிலும், அவற்றிற்குத் தீங்குண்டாகாதவாறு காப்பதிலும் குரக்கினம் சிறந்து விளங்குகிறது. குரங்கின்பாற் காணப்படும் தாய்மைப்பண்பு பெரிதும் மதிக்கத் தகுவதொன்று. தான் ஈன்ற குட்டி தன் முதுகின்மேல் ஏறிக் குதிரைவாதுவன் போல் தன்னைச் செலுத்தத் தான் அதன் குறிப்பின்படி குதிரைபோல் நடந்து அதற்கு இன்ப மூட்டும் தாய்மந்தியின் செயல் காண்போர்க்கு மிக்க இன்பம் தருவதொன்று. குட்டியொன்று இறந்துபடின், சில மந்திகள் ஓரிரு நாள்கள் அதனைத் தம் மெய்யில் தழுவிக் கொண்டே கிடந்து வருந்தும்; இவ்வாறு ஒருதாய்க்குரங்கு உயிர் நீத்த தன்குட்டியை ஆறுநாள்கள் வரைத் தானே சுமந்து வருந் தினதை உயிர்நூலறிஞர் கண்டிருக்கின்றனர். இவ்வாறு வருந்தும் நாள்களில் அது நீர்குடியாமலும் உணவு கொள்ளா மலும் ஏனையவற்றோடு கூடி விளையாடாமலும் இருக்கும். அதன் துயரைப் போக்குதற்கு அதன் கடுவனும் ஏனைக் குரங்குகளும் எத்துணையோ நன்முயற்சிகளைச் செய்கின்றன. தம் குட்டி இறந்துவிடின், அதனை எறிந்துவிட்டுவேறொன்றின் குட்டியைத் திருடிக்கொண்டு தமது போல அன்பு செய்து ஒழுகும் மந்திகளும் உண்டு.
தினையை உணக்கிய மகளிர் சுனையில் நீராடச் சென்ற செவ்வி நோக்கி “ஒருமந்தி போந்து தினையைக் கவர்ந்துண்பதும் 1” அருவியிற் பாய்ந்த குரங்கொன்று அங்கே வீழ்ந்து மிதந்த “பலாக்கனியைப் புணையாகக் கொண்டு நீந்துவதும் 2” சங்க நூல்களில் காணப்படுகின்றன. மகவுடை மந்திகள் கீழே இருப்பக் கடுவன் பழமரங்களில் ஏறிப் பழங்களை உதிர்ப்ப, அவற்றுள் ஏற்பனவற்றை எடுத்துக் குட்டிக்குத் தந்து தாமும் உண்ணும் அழகிய காட்சி1 சான்றோர் செய்யுட்களிலும் பிரேசில்நாட்டுக் குறிப்புகளிலும் காட்சி தருகிறது.

பலாவின் முதுகனி யொன்றைப் பெற்ற கடுவன் அதனை உண்பது குறித்துத் தன் “காதல் மந்தியைக் கையிட் டழைப்பதும் 2” தினைக்கொல்லையுட் சென்று தினைக்கதிர் கொய்த கடுவனும் மந்தியும் மலைப்பக்கத்துத் துறுகல் மேல் இருந்து “ஞெமிடித் தின்பதும், 3” காட்டுப் பசுவொன்று கன்றூட்டி யுறங்குவது கண்ட மந்தி தன் சுற்றத்தை வாயடக்கி மெல்லக் குறுகி அதன்மடியைப் பற்றித் தன் பார்ப்பின் கையில் பால்பிழிவதும் 4" இனிய இலக் கியக் காட்சிகளாகும்.

ஒருமந்தியின் கணவன் இறந்ததாக அதன் பிரிவாற்றாது தன் குட்டியை இனத்திடம் தந்து, அது வரையேறிப் பாய்ந்து உயிர் செகுத்துக்கொண்ட காட்சியைக் கருந்தோட் கரவீரன் என்பார்5 குறிக்கின்றார். தன் கண்ணுக்கு இனிய காதலனாகிய கடுவ னொடு கூடிய இளமந்தி, தன் செயலை ஏனைக் குரக்கினம் அறிதற்கு நாணிச் சுனைநீரில் தன் நிழலை நோக்கித் தலை மயிரைத் திருத்திக் கொள்ளுவதை 6 மருதன் இளநாகனார் வரைந்து காட்டுகின்றார். இவை பொருளாக இந்நூற்கண் வரும் பாட்டுக்களை இனிக் காண்போம்.

    271.    அவரை யருந்த மந்தி பகர்வர்  

பக்கிற் றோன்று நாடன் வேண்டிற்
பல்பசுப் பெண்டிரும் பெறுகுவன்
தொல்கே ளாகலி னல்குமா லிவட்கே.

இது, தலைமகன் வரைவுவேண்டிவிடத் தமர் மறுத்துழிச் செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது.

** பழைய உரை :**
அவரையை நிறையத் தின்ற மந்தி பண்ட வாணிகர் பைபோலப் தோன்றும் நாடன் என்றது, ஆண்டு வாழ்வனவும் மேலாம் உணவு களில் குறைவின்றி வாழும் நாடன் என்றவாறு.

பல் பசுப் பெண்டிரும் என்றது, வரைவெதிர் கொள்ளார் தமர் மறுத்த தீங்கினைத் தங்கள் மேலேற்றி இத்தீங்கு செய்யாது தான் நினைத்தவழி ஒழுகும் குணமுடைய பெண்டிர் பலரையும் பெறுகு வன் அவனே வேண்டின் எனக் கொள்க. பசுப்போற் பெண்டிரும் என்று பாடமோதுவாரு முளர்.

** உரை :**
அவரையை நிறைய உண்ட மந்திகள் பண்டம் பகரும் வணிகருடைய பைபோலத் தோன்றும் நாடன் மகட்கொடை வேண்டுவானாயின், பல பசுப் போலும் இயல்பினையுடைய பெண்டிர் பலரைப் பெற்றோர் மறாது தரப்பெறுவனாயினும், அவ்விடத்து, அவன் தானும் பழைமையான உறவினையுடைய னாகலின் இவள் பொருட்டு அவரெல்லார்க்கும் தரற்குரிய வற்றை ஒருங்கே நல்குவன் என்றவாறு.

அவரை - வரைக்கொடி; ஈண்டு ஆகுபெயரால் அதன் காய்மேல் நின்றது. இது குறிஞ்சி முல்லை யாகிய நிலங்களில் வாழ்வார்க்கு உணவுப்பொருள்; “கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே, சிறுகொடிக் கொள்ளே பொறிகிள ரவரையொடு, இந்நான் கல்லது உணாவும் இல்லை 1” என்பது காண்க. அவரை முல்லைநிலத்துப் புதல்களிலும், குறிஞ்சியின் தினைப்புனத்து இருவியிலும் படர்ந்து வளரும்; “புதல பூங்கொடி அவரை 2” எனவும் “சிறுதினை மறுகால், கொழுங்கொடி யவரை பூக்கும் 3” எனவும் சான்றோர் கூறுப. அவரையின் இலை மும்மூன்றாக இருக்கும்; இலையும் கொடியும் கொழுவியன; “கோழிலை அவரைக் கொழுமுகை 4” என்பர். இது முல்லை மலரும் கார் காலத்தே பூப்பது. அவரையின் பூ புறம் சிவந்து பவழம் போல் வது; “பைந்நனை அவரை பவழங் கோப்ப 5” எனவரும். இதன் இதழ் வெளிதாதலின், “அவரைப், பூவின் அன்ன வேண்டலை மாமழை 1” என உவமம் செய்ப. அவரையின் சிவந்த பூ வளைந்து தோன்றுவதுபற்றிக் கிளியின் வாய்க்கு உவமையாக, “பைங்கொடி யவரை கிளிவா யொப்பின் பன்மலர் 2” என்று சான்றோர் கூறுவர். இதன் காய் வளைந்திருப்பதனால், “இருவிதொறும், குளிர்புரை கொடுங்காய் கொண்டன அவரை 3” என்றனர். இக்காயை மக்களே யன்றிக் கிளிகளும் படிந்துண்பது வழக்கம். “காய்த்த அவரைப் படுகிளி 4” என்பது காண்க. ஈண்டு, இதனைக் குரங்கின் மந்தி தின்று வாயின் இரு மருங்கினும் அடக்கிக் கொண்டிருப்பது கூறப்படுகிறது. ஆர்ந்த என்பது அருந்த என நின்றது. பகர்தல் விற்றல் ஆகலின், விற்பனை செய்யும் வணிகரைப் பகர்வர் என்றார். பக்கு, பை. “பக்கழித்துக் கொண்டீ 5” எனவரும்.

பசுப்பெண்டிர் பசுவைப் போலும் இயல்புடைய பெண்டிர். பசு தன்னால் அன்பு செய்யப்பட்ட கன்றின்வழி நின்றொழுகுதல் போலத் தம்மாற்காதலிக்கப்பட்டோர் நினைவுவழி யொழுகும் மகளிரைப் பசுப்பெண்டிர் என்றார். “மூத்தார் இளையார் பசுப் பெண்டிர் 6” “பார்ப்பார் அறவோர் பசுப்பத்தினிப் பெண்டிர். 7” எனவருதல் காண்க.

பசுப்போலும் அறப்பண்புடைய மகளிர் அரியராகலின், அவரைப் பசுப்போல் பெண்டிர் என்றும், அப்பெண்டிரும் பலருளர் என்றற்குப் பன்மைவாய்பாட்டிலும் கூறினாள். நாடன் வேண்டின் என்றது, தலைமகளை யன்றிப் பிறபெண்டிரைத் தலைமகன் வேண்டாமை யுணர நின்றமையின், இது வேட்கை யுரைத்தல். பெண்டிரும் என்புழி நின்ற உம்மையால், தலை மகன்பால் “பிறப்பே குடிமை ஆண்மை யாண்டோடு, உருவு நிறுத்த காமவாயில், நிறையே யருளே யுணர்வொடு திருவென, முறையுறக் கிளந்த ஒப்பினது வகை 8” யாவும் அமைந்தமை கூறியவாறாயிற்று. இதனாற் பயன், தமர்கேட்டு மகட்கொடை நேர்தற்குரிய தகுதியுடைமை கண்டு உடன் படுவாராவது; என்னை? “நிரல்அல் லோர்க்குத் தரலோ இல் 1” என்னும் கொள்கையின ராகலின். கழிந்த பிறப்பில் தொடர்ந்த கேண்மை யால் இப்பிறப்பில் களவுவழி வந்த கேண்மையன் என்பாள் தொல் கேள் என்றும், இவள்பொருட்டு நீவிர் வேண்டுவன முற்றும் தரவல்ல திருவினன் என்றற்கு நல்குமால் இவட்கே என்றும் கூறினாள். இஃது உண்மை செப்பல். தொல்கேள் இப்பொருட்டாதல், “பழங்கேண்மை கண்டறியா தேன்போல் கரக்கிற்பென் மற்கொலோ 2” என்பதனால் அறிக.

இனி, நாடன் வேண்டின் பெண்டிரும் பெறுகுவன் என்றது, தலைமகள் அவனையல்லது பிறரை வேண்டாள் என்றும், இவள் பொருட்டு அவன் யாவும் நல்கும் என்றது, அவனையன்றிப் பிறர்க்கெனின் உயிர் வாழாள் என்றும் குறிப்பால் தோழி கூறி னாளாம். இதற்குப் பிறவாறும் உரைப்ப.

அவரையை யுண்ட மந்தி வணிகரது பக்குப் போலத் தோன்றும் நாட னாகலின், தமர் அவனது கேண்மைச் சிறப்பை அறியாது ஏனோர் போலக் கருதி மகட்கொடை மறுத்தார் எனத் தோழி உள்ளுறுத் துரைத்தவாறு அறிக.

பசுப்போற் பெண்டிரும் பெறுகுவன் என்ற பாடத்துக்குப் பசுத்திரளைப் பெறுவது போலப் பெண்டிர்பலரைத் தன் ஆண்மையால் பெறுகுவன் என வுரைக்க. இதனாற் பொருள் சிறவாமை யறிக.

272.     கருவிரன் மந்திக் கல்லா வன்பறழ்  

    அருவரைத் தீந்தே னெடுப்பி யயல
    துருகெழு நெடுஞ்சிமைப் பாயு நாடன்
    இரவின் வருத லறியான்
    வரும்வரு மென்ப டோழி யாயே.

இஃது, அல்லகுறிப்பட்டு நீங்கும் தலைமகன் சிறைப்புறத் தானாக முன்னைநாள் நிகழ்ந்தனைத் தோழிக்குச் சொல்லுவாள் போன்று தலைமகள் சொல்லியது.

** பழைய உரை :**
மந்திக்கு ஒருமகவாகிய பார்ப்பு மலைக்கண் பெருந்தேன் இறாலைக் கிளர்ந்து எழுப்பி ஈக்கு வெருவி அதன் அயற் சிகரத் திலே பாயும் என்றது, தான் நுகரக் கருதி வந்து நம்மை உணர்த்திச் சுற்றத்தார் பலரும் உணர்ந்த அதற்கு வெருவிப் பெயர்வான் என்றவாறு.

** உரை :**
தோழி, கரிய விரலையுடைய மந்தியின் நல்லறிவில்லாத வலிய குட்டி, ஏறுதற்கரிய வரையிடத்துத் தீவிய தேனை அழிப்பான் தேனீக்களை எழுப்பி, அவை கொட்டுதற் கஞ்சி அயலதாகிய உட்குப் பொருந்திய நெடிய உச்சிக் கண் பாய்ந் தோடும் நாடன் இரவுக்குறிக்கண் வருதலை அறியானாக, அவனை வருகின்றான் வருகின்றான் என யாய் பன்முறையும் கூறாநிற்பள் காண் என்றவாறு.

முகம் போலாது மந்தியின் விரல் கறுத்திருத்தலின், கருவிரல் மந்தி எனப்பட்டது. இது செய்யின் இது விளையும் என்னும் நல்லுணர்வு பெறாத இளமைச் செவ்வி தோன்றக் கல்லா வன்பறழ் என்றார்; கல்வியின் பயன் அதுவாகலின். “கல்லா வன்பார்ப்பு1” எனப் பிறாண்டும் கூறுப. குரங்கிற் குரிய தொழிலை அறியாமை பற்றி இவ்வாறு கூறினா ரென்றலு மொன்று; ஆயினும் கல்லாமையைக் குரங்கினத்துக்கே பொது வாகப் கூறுதல் மரபு. “கல்லாக் கடுவன்2” என்றும், “கல்லா மந்தி3” என்றும் நூலோர் நுவல்வது நோக்குக. பறழ், குட்டி. தாயா கிய மந்தி விலக்கவும் விலகாது தேனை அழித்தற்கு ஓடும் பேதைமைத்தடிப் புடைமைபற்றி வன்பறழ் என்றார் என்க. ஏறுதற் கருமையின் அருவரை எனப்பட்டது. தேனீக்கள் அடை வைக்கும் இடமும் அதுவே என அறிக உரு, உட்கு. நெடுஞ்சிமை யின் உருவுடைமை நோக்காது பாயும் எனவே, ஈக்கள் கொட்டு தற்கு அஞ்சினமை பெறப்படும். வாரான் என்னாது வருதல் அறியான் என்றது, வருவதிலன், ஒருகால் வரினும் பிறர் அறியா வகை வருமாறு தெரிந்திலன் என்பதுபட நின்றது.

முன்னை யிரவில் தான் அல்லகுறிப்பட்டு உழந்த அல்லலைக் குறிப்பாலுணர்த்துவாள், இரவின் வருத லறியான் என்றும், வாராதானை வந்தான் என்று யாய் மருண்டு கூறுகின்றாள் என்பாள், வரும் வரும் என்பள் யாய் என்றும் கூறினாள். அடுக்கு வன்புறை குறித்து நின்றது.

மந்தி விலக்குவது இரவுக்குறி விலக்கிய குறிப்பாகவும், வன்பறழ் தலைவனாகவும், தேனீ சுற்றத்தாராகவும், பறழ் நெடுஞ்சிமையிற் பாய்ந்தது தலைவன் பெயர்ந்து சென்றதாகவும் உள்ளுறையுவமம் கொள்க. யாய் வரும்வரும் என்பள் என்றது தாய் அறிந்தமை கூறி இரவுக்குறி மறுத்து வரைவு கடாவியவாறு.

நெடுஞ்சினை என்பது பாடமாயின், மலையின் சிமையம் அதற்குச் சினையாகும் இயைபு குறித்துச் சினை எனப்பட்டது என்க.

    273.    அத்தச் செயலைத் துப்புற ழொண்டளிர்  

புன்றலை மந்தி வன்பற ழாரும்
நன்மலை நாட நீசெலின்
நின்னயந் துறைவி யென்னினுங் கலிழ்மே.

இது, வரைவிடைவைத்துப் பிரியும் தலைமகன் நின் துணை வியை உடம்படுவித்தேன்; இனி நீயே இதற்கு உடன் படாது கலிழ்கின்றாய் என்றாற்குத் தோழி கூறியது.

** பழைய உரை :**
பிரிவு உடம்பட்டாளே யாயினும் நீ பிரிந்துழி ஆற்றாள் என்பதாம்.

அசோகந்தளிரை மந்திப்பார்ப்பு அருந்தும் என்றது, இளமை கழிவதற்கு முன்னே வரைதல் வேண்டும் என்பதாம்.

** உரை :**
வழிக்கண்நின்ற அசோகினது பவளம் போலும் ஒள்ளிய தளிர்களைப் புல்லிய தலையினையுடைய மந்தியின் வலிய குட்டி உண்ணும் நல்ல மலைநாடனே, நீ பிரிந்து செல்லின் நின்னை விரும்பி நின் பிரிவுடன்பட்டு ஈண்டு உறைபவள் பின்னர் ஆற்றாது என்னினும் மிகக் கலுழ்ந்து வருந்துவள், காண் என்றவாறு.

பெருவழிகளில் நெல்லி மரங்களை வழிக்கரையில் நிரல்பட வளர்ப்பது பண்டைத்தமிழர் மரபு. வழிக்கரையில் நிற்பதுபற்றிச் செயலை, அத்தச்செயலை எனப்பட்டது; “அத்த நெல்லி 1” எனவும், “அத்தப் பலவு 2” எனவும் சான்றோர் உரைப்பது காண்க. செயலையின் தளிர் செந்நிறத்ததாதலின், துப்புறழ் ஒண்டளிர் என்றார்; பிறரும், “ஊட்டி யன்ன ஒண்டளிர்ச் செயலை 3” “அழலேர் செயலை 4” என்று கூறுவர். இளந் தளிர்களை உண்டல் குரங்குகட்கு இயல்பு; “முறிமேய் கடுவன் 5” “குளவி மேய்ந்த மந்தி 6” எனப் பின்னரும் கூறுப. மந்தியின் தலைமயிர் சிலிர்த்துத் துய் போறலின், புன்றலை மந்தி என்றார்; எனைச் சான்றோரும் “புன்றலை மந்தி 7” “துய்த்தலை மந்தி 8” என்று குறிப்பர். உறைவி - உறைபவள்; “உவர்நீங்கு கற்பின்எம் உயிர்உடம்படுவி 9” என்றாற் போல.

தலைமகள் நின் பிரிவுடன்பட்டா ளாயினும், நீ பிரிந்துழி ஆற்றா ளென்பதாம். நின்னைச் சிறிது பிரியினும், ஆற்றாது நின்னையே நினைந்து வாய்வெருவி வருந்துமவள் நீ பிரிதற்கு உடன்படாள்; மற்று நின் வரம்பிகத்தல் தன் கடனன்று என்னும் கற்புடைமையால் உடம்பட்டாளாதல் வேண்டு மென்பாள், நின்னயந்துறைவி என்றும், தன் இளமையால் என்னினும் விரைந்து உடன்பட்டாளாகலான், பிரிவின்கண் என்னினும் ஆற்றாளாவள் என்றற்கு என்னினும் கலிழ்மே என்றும் கூறி னாள்.

மந்தியின் வன்பறழ் செயலையின் தளிர் முற்றி நிறம் மாறு முன்பே உண்டாற் போல, நீயும் இவள் இளமை கழிந்து காமச் செவ்வி மாறுமுன்பே வரைந்து கோடல் வேண்டும் என்பது உள்ளுறை. “இளமை கழிந்த பின்றை வளமை, காமம் தருதலும் இன்றே 10” என்று சான்றோர் கூறுதல் காண்க.

    274.    மந்திக் கணவன் கல்லாக் கடுவன்  

ஒண்கேழ் வயப்புலி குழுமலின் விரைந்துடன்
குன்றுய ரடுக்கங் கொள்ளும் நாடன்
சென்றனன் வாழி தோழியென்
மென்றோட் கவினும் பாயலுங் கொண்டே.

இது, வரைவிடை வைத்துப் பிரிந்துழி ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

** பழைய உரை :**
மந்திக் கணவனாகிய கல்லாக் கடுவன் புலி முழக்கிற்கு அஞ்சி வரையகத்துப் பாயும் நாடன் என்றது, நமக்கு உரியனாய் ஒழுகு கின்றவன் யாம் எம்மைப் பாதுகாத்து உரைக்கின்ற உரைக்கு அஞ்சிச் சென்றான் என்பதாம்.

** உரை :**
தோழி, மந்திக்குக் கணவனாய் மேல் விளைவ தறியும் கல்வி யில்லாத கடுவன், ஒள்ளிய நிறம் பொருந்திய வலி யுடைய புலி முழங்குதலால் வெருவி யோடிக் குன்றின் கண் உயர்ந்த மலைப்பக்கத்தை அடையும் நாடன், என் மெல்லிய தோளழகும், அதனைச் செறிய எய்தும் உறக்கமும் என் னிடத்தே இலவாகச் செய்து, தான் என்னைப் பிரிந்து சென்றான்; அவன் வாழ்வானாக என்றவாறு.

குழுமல் - முழக்குதல், “கயவாய் வேங்கை காய்சினம் சிறந்து, குழுமலின் வெரீஇ 1” என்றும், “கொடுவரிச் செங்கண் இரும்புலி குழுமுஞ் சாரல்” என்றும் வருவனவற்றாலுணர்க. பாயல் - உறக்கம்.

தலைமகன் பிரிவினால் வருந்துபவள், புறத்தார்க்குப் புலப் படுத்தும் தோள்மெலிவும், அதற்குக் காரணமாய ஆற்றாமையும் கண்டு அஞ்சி யிரங்குவாள், மென்றோட் கவினும் பாயலும் கொண்டே என்றும், தன்னை யின்றி அமையாத இவள் தோள் மெலிந்து கண்ணுறக்கம் இன்றி வருந்திநிற்கத் தான் சென்று இனிதிருக்கின்றான் என்பாள் சென்றனன் என்றும், தன் பொருட்டுப் பிறர் வருந்தாநிற்ப அது காணாது இன்புறுவோர்க்கு எய்தும் பழி அவற்கு வாராமை குறித்து வாழி என்றும் கூறினாள்.

கல்லாக் கடுவன் புலி குழுமல் கேட்டு அஞ்சிக் குன்றுயர் அடுக்கம் கொள்ளும் என்றது, வேற்றுவரைவு வருமென யாம் படைத்து மொழிந்தமை கேட்டு அஞ்சி வரைபொருட்குச் சென்றான் எனத் தலைமகன், செலவுக்குரிய காரணத்தை உள்ளுறுத்து உரைத்தவாறு.
அவன் கவினும் பாயலும் கொண்டு சென்றானாயினும் வரைபொருள் முற்றி விரைந்து வருவானாக என்னும் விழைவு தோன்ற வாழி என்றாள் என்றுமாம்.

    275.    குரங்கின் றலைவன் குரூஉமயிர்க் கடுவன்  

சூரலஞ் சிறுகோற் கொண்டு வியலறை
மாரி மொக்குள் புடைக்கு நாட
யாநின் னயந்தன மெனினுமெம்
ஆய்நலம் வாடுமோ வருளுதி யெனினே.

இது, வரையாது வந்தொழுகும் தலைமகன் இடையிட்டு வரு தலால் எதிர்ப்பாடு பெறாத தோழி குறியிடத்து எதிர்ப்பட்டு அவன் கொடுமை கூறி நெருங்கிச் சொல்லியது.

** பழைய உரை :**
நின் நயந்த எம் நலம் வாடுதல் ஒருதலை யன்றே? அங்ஙன மாயினும் நின்னை யாங்கள் நயந்ததனை வெருளாது அருளப் பெறின் எம் நலம் வாடுமோ? என்றவாறு.

குரங்கின் தலைவனாகிய கடுவன் சூரற்கோலைக் கொண்டு தானே அழிகின்ற மாரிமொக்குளைப் புடைத்து அழிக்கும் நாட என்றது, நின்னை நயந்த எங்கள் நலம் நீ வரையாமலே அழிகின்றது; இதனை நீ இவ்விடையிட்ட ஒழுக்கத்தாலே அழியாநின்றாய் என்பதாம்.

** உரை :**
குரங்கின் தலைவனாகிய நிறம் பொருந்திய மயிரினை யுடைய கடுவன் சூரலின் சிறிய கோலைக்கொண்டு அகன்ற மலைப்பக்கத்தே யுள்ள மழைநீரா னாய மொக்குளைப் புடைக்கும் நாடனே, யாம் நின்னை விரும்பினேமாகலின், நலந்தொலைவு எய்தக்கடவே மாயினும் இடையறா ஒழுக்கத் தான் நீ எமக்கு அருளுவையாயின், எங்கள் அழகிய நலம் வாடாதன்றோ? என்றவாறு.

தன்னை நயந்தாரைத் தான் நயத்து தலையளி செய்தல் தலைமகனுக்குக் கடனாக, நீ அது செய்யாதொழிந்தனை என்பாள், யாம் நின் நயந்தனம் என்றும், அந்நயப்பால் யாம் நலம் வாடக் கடவேம் என்பது ஒருதலை யன்று என்பாள், எனினும் என்றும் கூறினாள். கூறவே, அவள் நலம் வாடுதற்குக் காரணம் அவனது அருளாமை என்றும், அவ் வாட்டந்தானும் அழிவில் கூட்டத்தால் அருளுவையாயின் இன்றாம் என்றற்கு, ஆய்நலம் வாடுமோ அருளுதி யெனின் என்றும் கூறினா ளாயிற்று. நயந்தனம் எனத் தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தைமையும் படத்தோழி கூறுதலின், அருளுதி யெனின் என அவள் நெருங்கி யுரைப்பது அமையும் என அறிக. யாம் நின் நயந்தன மெனினும் என்றது தன்னை யழிதல்; ஆய்நலம் வாடுமோ என்றது, வாட்டம் புறத்தார்க்குப் புலனாகி அலர் விளைக்கும் என நலத்தின் மேல் வைத்துத் தீமை கூறல். இவை புரைபட வந்தன வாயினும் வரைதல் வேட்கைப் பொருள வாகலின் அமைந்தன.

    276.    மந்திக் காதலன் முறிமேய் கடுவன்  

தண்கமழ் நறைக்கொடி கொண்டு வியலறைப்
பொங்க லிளமழை புடைக்கு நாட
நயவா யாயினும் வரைந்தனை சென்மோ
கன்முகை வேங்கை மலரும்
நன்மலை நாடன் பெண்டெனப் படுத்தே.

இது, வரையாது வந்தொழுகும் தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லியது.

** பழைய உரை :**
மேல் கருக்கொண்டு முற்றிப் பயன்படுவதாய இளமுகிலைக் கடுவன் நறைக்கொடிகொண்டு புடைக்கும் நாட என்றது, வரைந்து மகப்பெறுதற்கு உரியளாகிய இவளை இம் மறைந்த ஒழுக்கத்தாலே கொலை சூழ்கின்றாய் என்பதாம்.

கல்முகை வேங்கை மலரும் நாட என்றதனால் வரைதற்குரிய பருவமும் கூறியவா றாயிற்று.

** உரை :**
மந்தியின் காதலனாய்த் தளிர்களையுண்ணும் கடுவன் தண்ணிதாய் மணம் கமழும் நறைக்கொடி கொண்டு அகன்ற மலைப்பக்கத்துப் படியும் இளமுகிலைப் புடைக்கும் நாடனே, கல்லிடையே அரும்பிய முகைகளையுடைய வேங்கை மலரும் நல்ல மலைநாடனுக்குரிய பெண்டு எனப்படுமாறு வரைந்து கொண்டு செல்வாயாக என்றவாறு.

நறைக்கொடி நறவங்கொடி என்றும் வழங்கும். முறியெனப் பொதுப்படக் கூறியதனால், செயலை, குளவி முதலிய தளிர் களைக் கொள்க. “கறிவளர் அடுக்கத் தாங்கண் முறியருந்து, குரங்கு ஒருங் கிருக்கும் 1” என்ப. பொங்கல் என்பது மிகுதிப் பொருட்டாயினும், ஈண்டுத் திரள்திரளாய் எழுதலை யுணர்த் திற்று; “பெய்து புலந்திறந்த பொங்கல் வெண்மழை 2” எனப் பிறருங் கூறுதல் காண்க. கன்முகை வேங்கை மலரும் யென்ப தற்குக் கல்முழைஞ்சினுள் நின்ற வேங்கை மலரும் எனினுமாம். முகை - முழைஞ்சு. “கன்முகை வயப்புலி 3” எனப் பிறாண்டுங் கூறியவாற்றா னறிக. பெண்டு - மனைவி. “ஊரார் பெண்டென மொழிய என்னை 4” என்றார் பிறரும்.

நின்னை யின்றியமையாது விரும்பும் இவளைத் தலைவ னாகிய நீ வரைந்து கோடலைச் செய்யாது நீட்டிக்கின்றா யாகலின், நயவா யாயினும் என்றும், நின் முயக்கின்பம் இன்றேனும், நின் பெண்டு எனப்படுதல் பெறின், இவள் இறந்து படாது உயிர் வாழ்வாள் என்பாள், நன்மலை நாடன் பெண்டு எனப்படுத்தே என்றும் கூறினாள்.

மேன்மேற் படிந்து குளிர்ந்து மழைபெயற் குரிய இள முகிலைக் கடுவன் நறைக்கொடி கொண்டு அலைக்கும் நாட என்றது, வரைந்து கூடி மகப்பெறுதற் குரியளாகிய இவளைக் களவையே நீட்டித்து அலைக்கின்றாய் என்பதாம்.

    277.    குறவர் முன்றின் மாதீண்டு துறுகற்  

கல்லா மந்தி கடுவனொ டுகளும்
குன்ற நாட நின் மொழிவ லென்றும்
பயப்ப நீத்த லென்னிவள்
கயத்துவளர் குவளையி னமர்த்த கண்ணே.

இது, வரையாது வந்தொழுகும் தலைமகன் புணர்ந்து நீங்குழி எதிர்ப்பட்ட தோழி வரைவுகடாயது.

** பழைய உரை :**
குறவர் முன்றிலில் மா தீண்டு துறுகற்கண்ணே நாணாது மந்தி கடுவனோடு உகளும் நாட என்றது, சுற்றத்தார் நடுவே இவ் வொழுக்கம் புலனாகிய ஞான்று விளையும் ஏதத்திற்கு நாணாதோய் என்பதாம்.

** உரை :**
குறவர் இன்முன் நிறுத்திய மாதீண்டு துறுகல்லில் கல்லா மந்தி தன் கடுவனோடு தாவியாடும் குன்றங்களையுடைய நாடனே, நின்னை ஒன்று வினவுவல்: குளங்களில் வளரும் குவளை மலரைப் போல அமர்த்த இவளுடைய கண்கள் பசலை பாயும்படி இன்றை இல்லையாயினும் என்றேனும் பிரிந்துசேறல் யாது கருதியோ? கூறுக என்றவாறு.

மாதீண்டு துறுகல், ஆதீண்டு குற்றி போல மாவினம் தினவு தீர்த்துக்கோடற்பொருட்டு நிறுத்தப்படுவது. மந்தி கடுவனோடு உகளுதலை விதந்து “அள்ளிலைப் பலவின் கனிகவர் கைய, கல்லா மந்தி கடுவனோ டுகளும், கடுந்திற லணங்கின் நெடும்பெருங் குன்றம் 1” எனப் பிறரும் கூறுதல் காண்க. பயத்தல் - பசத்தல். அமர்த்தல் - மாறுபடுதல். மேவற் பொருட்டாகிய அமர்தல், அமர்த்தலென நின்றது எனவும் கூறுப.

நாடோறும் தலைமகளைக் குறியிடத்தே எதிர்ப்பட்டுக் கூடுதலும் பின்னர்ப் பிரிதலும் செய்தொழுகும் இக்களவினை விலக்கி, வரைந்துகொண்டு, என்றும் பிரிவறியாத பேரின்பத்தில் திளைக்க வேண்டும் என்னும் விழைவினால் தலைமகனை வரைவுகடாவுவான் சொல்லாடுகின்றாளாகலின், நின் மொழி வல் என்று முகம்புகுந்தாள். நாடோறும் குறியிடத் தெய்திக் கூடுதலின் ஒழியாத பெருங்காதல் உடையை என்றற்கு என்றும் என்றும், இவ்வண்ணம் இடையறவு இன்றிக் கூடுதலை விரும்பும் நீ, கூடியபின் பிரிவது கூடாது என்பாள் நீத்தல் என் என்றும், நின் பிரிவால் இவள் கண் பசந்து வேறுபடுதலை அறிதல் வேண்டும் என்றற்கு, பயப்ப நீத்தல் என் என்றும் கூறினாள். இருதலையும் காதற்காமம் சிறப்பது குறித்துத் தலைமகன் புணர்வும் பிரிவும் நிகழ்த்தி யொழுகுகின்றான் என்பதைத் தோழி அறிந்துளா ளாயினும், தலைமகள்பால் அது சிறந்தமை யுணர்த்தி வரைவு கடாவும் கருத்தின ளாகலின் என் என்று கடாவினாள் என அறிக. கயத்துவளர் குவளை என்றது, குவளைக்குக் கயம் இன்றி யமையாதவாறு போல நீ இவட்கு இன்றியமையா யாயினை எனக் காதற்சிறப்பும், கயத்தின் நீங்கியவழிக் குவளை பசந்து சாம்புவது போல நின்னின் நீங்கியவழி இவள் கண் பசந்து வேறுபடுவளெனப் பயப்பதற்கு ஏதுவும் சுட்டி நின்றது.

பசலை பாய்ந்து மேனி வேறுபட்டா ளாயின் அதனைத் தமர் அறிந்து இற்செறிப்பு முதலிய இடையீடு செய்வராகலின், பயப்ப நீத்தல் என் என வெளிப்படையாலும் இடையூறு கூறி வரைவு கடாயவாறும் கொள்க. குறவர் முன்றிலில் கல்லா மந்தி ஏதம் நினையாது கடுவனோடு உகளும் என்றது, மனையின் அகத்தும் புறத்தும் அமைந்த குறியிடத்தே கூட்டத்துக்கு உண்டாகும் ஏதம் நினையாது இன்றியமையாக் காதலால் கூடி யொழுகுகின்றாள் என உள்ளுறையால் இருவகைக் குறியையும் விலக்கிக் குறிப்பால் வரைவுகடாவிய வாறு. இரவுக்குறி இல்லகத்ததெனவும் பகற்குறி புறம் எனவும் ஆசிரியர் கூறுப. 1

    278.    சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல்  

குரங்கின் வன்பறழ் பாய்ந்தென விலஞ்சி
மீனெறி தூண்டிலி னிவக்கு நாடன்
உற்றோர் மறவா நோய்தந்து
கண்டோர் தண்டா நலங்கொண் டனனே.

இது, வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத் தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

** பழைய உரை:**
குரங்கு தன்மேல் இருந்துழி வளைந்து, அது பாய்ந்து போவுழி நிமிர்கின்ற மூங்கிற்கோல் மீனெறி தூண்டில் போல ஓங்கும் நாடன் என்றது, தன் நெஞ்சத்து அன்புளதாகிய காலத்து வளைத்து வளைத் தொழுகி அன்பற்ற காலத்துப் பணிவின்றித் தலைமை செய்து நம் நலம் கொண்ட தன் கொடுமை தோன்ற ஒழுகுகின்றான் என்பதாம்.

** உரை :**
மலைக்கண்ணுள்ள மூங்கிலின் கணுவிடத்தெழுந்த கோலின் மேலிருந்து குரங்கினது வலிய குட்டி பாய்ந்ததாக, அக்கோல் குளத்தின்கண் மீன் பிடிப்பதற்கு வைத்த தூண் டிலைப் போலத் தாழ்ந்திருந்து நிமிரும் நாடன் தன்னைச் சார்ந்தோர்க்கு என்றும் மறக்கலாகாத நோய் தந்து, கண் கொள்ளாக் கவின்மிக்க அவரது நலத்தைக் கவர்ந்து கொண் டனன்; அவர்தாமும் தம் நலமிழந்து வருந்துவா ராயினர்காண் என்றவாறு.

வெதிர், வெதிரம் என நின்றது. இலஞ்சி - நீர்நிலை. மீனெறி தூண்டில் - மீனைக் கரையிடத்துத் தூக்கி யெறியும் கழைக்கோல். தாழ்ந்திருந்த மூங்கில் நிமிர்வதனை மீனெறி தூண்டிற் குவமித்தல், “ஏனல் காவலர் கவணொலி வெரீஇக், கான யானை கைவிடு பசுங்கழை, மீனெறி தூண்டிலின் நிவக்கும், கானக நாட 1” எனப் பிறரும் கூறுதல் காண்க.

தன்னைக் கூடிய காதலன் பிரிவு இடை வைத்து வரையாது ஒழுகுதலின், தலைமகள் அவனையே நினைந்து வருந்து கின்றா ளாகலின், உற்றோர் மறவா நோய் தந்து என்றும், அதனால் அவள் தன் மேனி வேறுபட்டு, நலம் கெடுதற் கிரங்கி, கண்டோர் தண்டா நலம் கொண்டனன் என்றும் கூறினாள். தண்டா நலம் என்றது, கழிந்ததற்கு இரங்கிக் கூறியது. நலங்கொண்டு நோய் தருதல் காதலர்க்கு அறமன்று எனத் தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தைமையும் தோன்றக் கூறியது, நோய் பயக்கும் நலக்கேடு கூட்டத்துக்கு இடையூறு பயக்குமெனக் குறிப்பால் வரைவுகடாயது.

வெதிரத்துக் கோல் மீனெறி தூண்டிலின் நிவக்கு மாயினும் அது தூண்டில் போல் பிறவுயிர்க்குத் தீங்கு செய்யாதாக, தலை மகன் வரையா தொழுகும் ஒழுக்கம் எனக்குத் தீங்காயினவாறு என்னை என இறைச்சி தோன்றுதல் காண்க. “இறைச்சி தானே பொருட்புறத்ததுவே” என்றும் “இறைச்சியிற் பிறக்கும் பொருளு மாருளவே 1” என்றும் ஆசிரியர் கூறுப.

    279.    கல்லிவ ரிற்றி புல்லுவன வேறிக்  

குளவி மேய்ந்த மந்தி துணையொடு
வரைமிசை யுகளு நாட நீவரிற்
கல்லகத் ததுவெம் மூரே
அம்பற் சேரி யலராங் கட்டே.

இது, இரவுக்குறி வேண்டும் தலைமகனைத் தோழி வர வருமை கூறி மறுத்தது.

** பழைய உரை :**
எம்மூர் என்றது, சூழ்ந்த மலைகளின் நடுவகத்தது எம்மூர் என்றவாறு.

இற்றிமேற் படர்ந்த குளுவித்தளிரை மேய்ந்து வரையகத்திலே மத்தி கடுவனோடு உகளும் நாடனாதலான் இதற்கு முன்பு இவள் நின்னொடு நுகர்ந்ததே கொண்டு இனி இவள் நின் பதிக்கண் வாழ்தல் வேண்டும் என்பதாம்.

** உரை :**
கற்களின் மேலோடும் இற்றிமரத்தின் வேரையும், வேறு பற்றுவனவற்றையும் பற்றிச் சென்று, அவ்விற்றிமேற் படர்ந்த குளவித்தளிரை மேய்ந்த மந்தி, தன் துணைக்குரங்கோடு கூடி மலையின்மேல் தாவி யாடுகின்ற நாடனே, கற்கள் சூழ்ந்த மலைகளின் நடுவகத்த தாகிய எமது ஊர், அம்பல் மொழியும் சேரியும் அலர்விளைப்பார் உறையும் இடமும் உடையது; ஆகவே நி வருதல் நன்றன்று என்றவாறு.

இற்றி - ஒருவகை மரம். இக்காலத்தார் இதனை இத்தி என வழங்குப. இதன்வேர் கற்களின்மேற் பரவியிருத்தலின், அதனைப் பற்றி யேறிச் சென்று மந்தி குளவித்தளிரை மேய்ந்ததெனக் கொள்க. “புல்வீழிற்றிக் கல்லிவர் வெள்வேர், வரையிழி யருவியிற் றோன்றும் நாடன் 1” எனப் பிறாண்டும் இவரே கூறுமாறு உணர்க. குளவி - காட்டுமல்லிகை. குளவி - மிக்க மணமுடைய பூவையுடையது. இது புதல் புதலாக அரிய இடங்களில் வளர்ந் திருக்கும். “குளவித் தண்புதல் 2” என்றும், “நீரிழி மருங்கின் ஆரிடத் தமன்ற, குளவி 3” என்றும் சான்றோர் கண்டுரைப்பது காண்க. எளிதில் சென்ற டைதற்குரிய இடத்தில் இருத்தலின், மந்தி இற்றிவேரைப் பற்றிச் சென்று குளவியை மேய்வதாயிற் றென அறிக. ஊர்க்குப்புறமாய்ச் சேர இருப்பது சேரி. ஊரகம் அலரும், புறமாய சேரி அம்பலும் உடைய என்பது கருத்து.

நீவரின் என்றது, நீ வாராதொழிதல் நன்றென்பது பட நின்றது. எம்மூர் மலைகள் சூழ்ந்த நடுவகத்த தாகலின், செவ்விய நெறியின்றிக் கொடிய விலங்குகள் இயங்கும் படுவழிகளை யுடைத் தென்பாள், கல்லகத்தது எம்மூரே என்றும், எம்மூரி லுள்ளார் இயல்பாகவே அம்பலும் அலரும் கூறுவராகலின், நீ வரின், அது பெருங் கௌவையாம் என்பாள், அம்பற் சேரி யலராங் கட்டே என்றும் கூறினாள். இவை ஏதமாய்தல். “அம்ப லென்பது சொல் நிகழாதே முகிழ்முகிழ்த்துச் சொல்வது; இன்ன தின் கண்ண தென்பது அயலறிய லாகா தென்பது. அலரென்பது இன்னானொடு இன்னாளிடையது போலும் பட்டது என விளங்கச் சொல்லி நிற்பது. அம்பலென்பது பெரும் போதாய்ச் சிறிது நிற்க அலருமென நிற்பது; அலரென்பது அப்பெரும்போது தாதும் அல்லியும் வெளிப்பட மலர்ந்தாற் போல நிற்கும் நிலைமை 4” என்பர். இற்றியின் வேரையும் வீழ்தையும் பற்றி ஏறிய மந்தியும் கடுவனும் ஆண்டுப்படர்ந்த குளவியின் தளிரை மேய்ந்து இன்புறும் என்றது, களவு நெறி பற்றிக் காதலன்பு வாழ்வில் தலைப்பட்ட நீவிர் இருவரும் இனிக் கற்புவழி மணந்து இல்லிருந்து நுகரும் நல்லின் பத்தை எய்துதல் வேண்டும் எனக் குறிப்பாய் வரைவு கடாவியவாறு.

    280.    கருவிரன் மந்திக் கல்லா விளம்பார்ப்  

பிருவெதி ரீர்ங்கழை யேறிச் சிறுகோல்
மதிபுடைப் பதுபோற் றோன்று நாட
வரைந்தனை நீயெனக் கேட்டியான்
உரைத்தனெ னல்லேனோ வஃதென் யாய்க்கே.

இது, புணர்ந்துடன் போகிய தலைமகன் தலைமகளைக் கரண வகையான் வரைந்தானாக, எதிர்சென்ற தோழிக்கு “இனி யான் இவளை வரைந்தமை நுமர்க்கு உணர்த்த வேண்டும்” என்றானாக அவள் சொல்லியது.

** பழைய உரை :**
குரங்கின் இளம்பார்ப்பு இருவெதிர்ங்கழை ஏறி மதிபுடைப்பது போல் தோன்றும் நாட என்றது, தீங்குசெய்வாயைப் போலத் தோன்றுவ தல்லது உண்மைவகையாற் செய்யாய் என்பதாம்.

** உரை :**
கரிய விரலையுடைய மந்தியின் கல்லாத இளைய குட்டி பெரிய மூங்கிலின் பசிய கழைமே லேறிச் சிறுகோலைக் கொண்டு மதியத்தைப் புடைப்பது போலும் தோற்றத்தைச் செய்யும் நாடனே, நீ இவளைக் கரண வகையான் வரைந்தனை யெனக் கேட்ட யான் விரைந்து அதனை யாய்க்கு உரைத்தேன் காண். என்றவாறு.
மந்தியின் குட்டியைப் பறழ் என்பதே யன்றிப் பார்ப்பு என்பதும் உண்டு; “மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும், அவையும் அன்ன அப்பாலா1” என ஆசிரியர் கூறுவர். வெதிர்- மூங்கில்வகை. இதன் நுனிப்பகுதி ஈண்டுக் கோல் எனக் குறிக்கப்படுகிறது. நெடிதுயர்ந்து தோன்றும் வெதிர்ங்கோல் வானத்தைத் தொடுவது போலத் தோன்றுதலின், அதன் நுனிக் கண் தங்கிய பார்ப்பு, வானத்திற் காணப்படும் மதியைப் புடைப் பதுபோலக் காட்சி தருவது பற்றி, மதி புடைப்பது போல் தோன்றும் என்றார்.

நீ வரைந்தனை என்றது பிறர் கூறிய கூற்றைக் கொண் டெடுத்து மொழிந்தது. தலைமகன் தன் வாய்மை குன்றாது தலைவியைக் கரணவகையால் மணந்தான் என்று பிறர் கூறக் கேட்டேன் என்பாள் கேட்டு என்றவள், தன் உள்ளம் நிறைந் தெழுந்த உவகையால் மேலே சொல்லாடாது கண்ணினும் முகத்தினும் விளங்கக் காட்டினாளாகலான், பின்னர்த் தான் தலைமகற்கு விடை யிறுக்கும் வாயிலாக, அவன் வரைந்த செய்தியை அஃது என்றும், அதனை விளங்க உரைத்தமை தோன்ற உரைத்தனெனல் லெனோ என்றும் கூறினாள்.

இருவெதிர் ஈர்ங்கழை யேறி அதன்மிசை இனிதிருக்கும் குரங்கின் பார்ப்பு, மதியைப் புடைத்து வருத்துவது போலத் தோன்றும் நாடன் என்றது, களவுவழி யொழுகி உடன்போக்கின் முடிவில் கரணவகையால் மணந்து இன்புறும் நீ, மதிபோல் உயர்ந்த எம் குடிக்குத் தீங்கு செய்வாய் போல என் யாய்க்குத் தோன்றாநின்றனை எனத் தாயர் முதலியோர் கொண்ட கருத் தினைத் தோழி உள்ளுத்து உரைத்தவாறு.

இனி, “தலைவரும் விழுமநிலை 1” என்ற சூத்திரத்து “இயல் புற நாடின்” என்றதனால், “தலைவன் கரணவகையால் வரைந் தானாக எதிர்சென்ற தோழிக்கு யான் வரைந்தமை நுமர்க்கு உணர்த்தல் வேண்டும் என்றாற்கு அவள் உணர்த்தினேன் என்றது என்பர் நச்சினார்க்கினியர்.


கிள்ளைப்பத்து

கிள்ளை பொருளாக வரும் பாட்டுக்கள் பத்தின் தொகுதி யாகலின் இது கிள்ளைப்பத்து எனப்பட்டது.
புள்ளினத்துள் கிள்ளையினம் பெரிது. இது வகையால் ஆறாகப் பிரியினும் விரித்து நோக்குங்கால் ஐஞ்ஞூறு இனமாகக் காணப்படுகிறது. வெம்மை நிலப் பகுதிகளிலும் அவற்றைச் சார்ந்த நிலங்களிலும் கிள்ளைகள் வாழ்கின்றன. மலேயா, ஆத்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இவை மிக்கிருப்பினும் ஏனை எல்லாவற்றினும் தென்னமெரிக்காவில் தான் மிகுதியும் பல்கி யிருக்கின்றன. நம் நாட்டில் கிள்ளையினம் குறைவே; ஆப்பிரிக்காவில் நம் நாட்டினும் மிகக் குறைவு. ஐரோப்பாவில் கிள்ளையினமே கிடையாது. வட அமெரிக்கா வின் தென்பகுதியில் சில இடங்களில் ஒருவகைக் கிள்ளை வாழ்கின்றது. கிள்ளைகள் அறுபது முதல் எண்பது ஆண்டுகள் உயிர் வாழும் உரன் படைத்தவை.

கிள்ளைகள் யாவும் பொதுவாக மரங்களில் வாழ்வன. ஆதலான் அதற் கேற்பவே அவற்றிற்குக் கால்களும் வாயல குகளும் அமைந்துள்ளன. கால்கள் ஒருவகை உறுதியான செதிள் களால் மூடப்பட்டிருக்கின்றன. சில கிள்ளைகட்குக் கால்கள் குறுகியும் சிலவற்றிற்கு நீண்டும் இருப்ப துண்டு. கிளியின் வாயலகு சிறியது; ஆயினும் வன்மை வாய்ந்து நுனி வளைந்திருக்கும். சில கிள்ளைகளின் மேலலகு நெளிக்கவும் விரிக்கவும் தக்க வகையில் உளது. கிளிகள் மரமேறுங்கால் அவற்றின் கால்களினும் வாயலகே பெரிதும் பயன்படும். நம் நாட்டில் காணப்படுவன பலவும் சிறுகிளியினம். பெருங்கிளி யினமும் கிள்ளையினத்துள் உண்டு. அவற்றின் வாயலகு வியக்கத்தக்க பெருவன்மை யுடையது. இப்பெருங்கிளிகள் பிரேசில் நாட்டில் மாக்கா1 என்ற பெயரால் வாழ்கின்றன. ஒருவன் சம்மட்டி கொண்டு உடைக்கக் கூடிய சில கொட்டைகளைப் பெருங்கிளியின் அலகு மிக எளிதில் உடைத்து மாவாக்கி விடுகிறது. பெருமரங்களைத் துளைத்துக் கூடமைப்பது அவற்றின் இயல்பு. அத்தொழிற்கு அவற்றின் வாயலகு பெருங் கருவியா யுளது. அவற்றின் முட்டைகள் வெண்மை நிறமுடை யன. பெருங்கிளியினம் இரண்டு மூன்று முட்டைகட்குமேல் இடுவதில்லை. தாயும் தந்தையுமாகிய இரண்டுமே ஒன்று மாற்றி ஒன்றிருந்து அம்முட்டைகளை அடைகாக்கும்.

கிளிகள் யாவும் பழவகைகளையும் கொட்டைகளையும் உணவாகக் கொள்கின்றன. தாம் உண்ட வுணவில் செரித்தும் செரிக் காமலும் இருக்கும் உணவை வெளிக் கொணர்ந்து பார்ப்புக் கட்கு அளிப்பது கிள்ளையினத்தின் சிறப்புப் பண்பாகும்.

கிளிகள் பலவும் கூட்டம் கூட்டமாக ஆரவாரம் செய்து கொண்டு வாழும். வெள்ளிடைகளிலும் வெயில் பரந்த தோட்டங்களிலும் இவை விருப்பத்தோடு தங்கும். நியூசிலந்தில் ஒருவகைக் கிளியினம் ஆடுகளின் குண்டிக்காயைச் சூழ்ந்துள்ள நிணத்தைக்குடைந்து உண்கின்றன என்றும், அதனால் அந்நாட்டிற் பல ஆடுகள் இறந்தொழிகின்றன என்றும், அந்நாட்டிற்கு ஆடுகள் வந்து சேர்ந்தபின்பே அக்கிளிகட்கு அக்கொடிய பழக்கம் உண்டாயிற்றென்றும் அந்நாட்டவர் உரைக்கின்றனர். அவை ஏனைக் கிள்ளையினம் போலாது இடைப்பனிக்காலத்தே பனிமூடிய மலைமுடியிலும் பனிப்பாறை களிலும் கூடமைக்கின்றன; அதனால் அவ்வினத்தை மலைக் கிள்ளை என்று பெயர் குறிக்கின்றனர்.

நியூகினியாவில் வாழும் கிளிகள் இரண்டரையடி நீள முள்ளன. அமெரிக்காவில் வாழ்வன பொதுவாக மூன்றடி நீளமாகும். இடைஅமெரிக்காவில் உள்ளவை மூன்றடி நீள மிருப்பினும், அவற்றின் வால்மட்டில் இரண்டடி நீளம் உளது. அங்கே காணப்படும் பச்சைக் கிளியும் நீலக்கிளியும் ஆப்பிரிக்கா வில் வாழும் காதற் கிளியும்1 ஐந்து அங்குல நீளமே யுள்ளன. நியூகினியாவில் குறுங்கிள்ளை 2 என்றோர் இனமுண்டு. அஃது இரண்டு அங்குல நீளமேயாகும்.

ஆப்பிரிக்காவில் சாம்பல்நிற முடைய கிளிகள் வாழ் கின்றன. அவற்றின் வால் நீண்டு சிவந்துள்ளது. பொதுவாகக் கிள்ளையினம் யாவும் பசுமைநிற முடையவே; எனினும், பொன்மை, நீலம், சிவப்பு, வெண்மை, கருமை ஆகிய நிற முடையனவும் உள்ளன. அமெரிக்காவிலுள்ள மாக்காக்கிளி 3 பெருவனப் புடையதாகக் கருதப்படுகிறது. வனப்பிலே யன்றி ஆரவாரம் செய்வதிலும் பெருமை அவற்றிற்கே யாகும். ஆத்தி ரேலியப் பகுதியிலுள்ள கிள்ளை செம்மை கலந்த நீலநிறமான தலையும், நீலமும் பசுமையும் பொருந்திய இறகும், சிவந்த குஞ்சியும் 4 கொண்டுள்ளன. இவற்றின் வேறாகக் கொண்டை யுடைய கிளிகளும் அங்கே வாழ்கின்றன. அவற்றின் காலும் அலகும் மிகவும் குறுகி யிருக்கின்றன. இவை பெரும்பாலும் வெண்மைநிற முடையவை யெனினும் முதுகிலும் வாலிலும் செந்நிறமோ பொன் நிறமோ பொருந்தியிருக்கின்றன. சில கிள்ளையினத்துக்கு வயிற்றுப்பகுதி சிவந்தும் முதுகு சாம்பல்நிறம் பெற்று முள்ளன. சில தலைமட்டில் சிவந்து உடல் முழுதும் சாம்பல்நிறமே பரவி யிருப்பது உண்டு. சில கிளிகள் உடல் முழுதும் கருமைநிறம் பெற்று வாற்பகுதி சிவந்து தோன்றும். கருங்கிள்ளைகளுட் சில வெண்கருமை நிறம் கொண்டு இருகன்னமும் சிவந்துள்ளன. கிள்ளைகளுள் இந்த இனமே உடல் பருத்தவையாகும்; அலகின் வன்மையிலும் சிறந்தவை. ஆத்திரேலியாவின் தென்பகுதியில் வாழும் வெள்ளைக்கிளிகள் மிக்க அழகுடையன. அவை அலகின் கீழும் மார்பிலும் இறகடி யிலும் சிவந்து விளங்கும். அந்நாட்டிலே ஐவண்ணக் கிளிகள் சிறந்து உள்ளன. அக்கிள்ளையின் மேனியில் பசுமை, நீலம், வெண்மஞ்சள், கருமை ஆகிய வண்ணங்கள் விரவி யிருக்கின்றன. அதன் உடல் நீளத்தில் வால் செம்பாதி; அஃது ஏழரை அங்குலம்.

கிளிவகை பலவும் பிடித்துப் பழக்குதற் கேற்ற பண்பாடுடை யவை. பச்சைக்கிளி, சாம்பற்கிளி, மாக்காக்கிளி எனவரும் இக்கிள்ளைகள் பேசப்பழகும் இயல்புடைமையால் பன் னூறாண்டுகட்கு முன்பே மக்கள் இவற்றைப் பிடித்துக் கூட்டில் வைத்துப் பேச்சுக் கற்றுக்கொடுத்து அவை மிழற்றும் மழலை கேட்டு இன்புற்றனர். வேள்பாரியின் பறம்பினைத் தமிழ்வேந்தர் முற்றிக்கொண்டபோது அங்குள்ள கிளிகள் வேற்றுப் புலங்கட்குச் சென்று நெற்கதிர்களைக் கொணர்ந்தன என ஒளவையாரும், நக்கீரனாரும் கூறுகின்றனர். பண்டைத் தமிழ் நன்மக்களோடு நெருங்கிப் பழகியதனால், உரோமானியர் இக்கிளிகளைக் கொண்டு சென்று வளர்த்தனர். அந்நாளை யவனப் பெண்கள், “வெல்க சீசர்” என்று சொல்லுமாறு பயிற்றி யிருந்தார்களென வரலாறு கூறுகிறது. எய்தன் 1 என்னும் ஒரு பாண்பெருமகன் பேணி வளர்த்த கிளி அவன் பாடிய பாட்டைப் பாடுமாம். விவிலிய நூலில் உள்ள 104ஆம் சங்கீதத்தை 1802 ஆம் ஆண்டில் ஒரு கிளி பாடிற்றென மேனாட்டார் குறித்துள்ளனர். இதை நோக்க, “பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோதும் ஓசை கேட்டு, வேரிமலி பொழிற் கிள்ளை வேதங்கள் பொருட் சொல்லும் மிழலை யாமே 2 எனத் திருஞான சம்பந்தர் சொல்வது எத்துணை இன்பமாக வுளது காண்மின். இக்கிள்ளை பொருளாக வைத்துப் பிற்காலப் புலவர் கிள்ளைவிடு தூது பாடித் தாம் இன்புறுவதுடன் உலகு இன்புறக் கண்டு உவகை மீதூர்ந்தனர்.

    281.    வெள்ள வரம்பி னூழி போகியும்  

கிள்ளை வாழிய பலவே யொள்ளிழை
இரும்பல் கூந்தற் கொடிச்சி
பெருந்தோட் காவல் காட்டி யவ்வே.

இஃது, ஆயத்தோடு விளையாட்டு விருப்பினாற் பொழி லகம் புகுந்த தலைவியை எதிர்ப்பட்டு ஒழுகுகின்ற தலைமகன் அவள் புனங்காவற் குரியளாய் நின்றது கண்டு மகிழ்ந்து சொல்லியது.

** உரை :**
ஒள்ளிய இழையினையும் கரிய பலவாகிய கூந்தலையு முடைய கொடிச்சி பெரிய தோளாற் புரியும் புனங்காவலை மேற்கொண்டாள் என்பதைக் காட்டினவாகலின், பலவாய் வந்து படியுங் கிளிகள் வெள்ளமென்னும் பேரெண்ணை வரம்பாக வுடைய ஊழியாகிய காலம் முடியினும் முடியாது நெடிது வாழுமாக என்றவாறு.

வெள்ளம் - நூறாயிரம் என்னும் பேரெண்ணுக்கு மேலே கூறப்படும்; தாமரை, வெள்ளம் ஆம்பல் எனப்படும் கழிபே ரெண்களுள் இடையாயது. “ஐயம் பல்லென வரூஉம் இறுதி 1” யையுடைய எண்ணுப்பெயர் அவை. ஊழிபோகியும் போகாது வாழ்க என்றற்குப் போகியும் என்றார். கிள்ளைகள் இனிது பேணப்படின் 60 முதல் 80 ஆண்டுகள் வாழ்கின்றன என உயிர் நூலறிஞர் கூறுவர். காலத்துக்கு எஞ்ஞான்றும் கழிவது தொழிலே யன்றி நிற்பதன்மையின் போகியும் எனல் வேண் டிற்று. மகளிர்க்குத் தோள் பெருத்தல் இலக்கணமாகலின், பெருந் தோள் என்றும், தட்டை யொலித்தற்கும் கவண் எறிதற்கும் தோளாற்றல் சிறப்ப வேண்டியிருத்தலின், அது கொண்டு செய்யும் காவற்றொழிலைப் பெருந்தோட் காவல் என்றும் சிறப்பித்தார். காட்டிய, அன்பெறாது வந்த அகரவீற்றுப் பலவறி முற்றுச் சொல்.

கவணும் தட்டையும் கொண்டு புனத்திற் படியும் கிளிகளை ஓப்புங்காலத்து, அவை கதுமென எழுதலால், அவள் புனங்காவற் குரியளாய் நின்றது உணர்ந்து ஆண்டுச் சென்று அவளைக் கண்டானாகலின், பெருந்தோட் காவல் காட்டியவ்வே யென்றும், கருவியால் ஓப்பினாளாயினும், மொழியால் இன மெனக் காட்டுதலின், கிளிகள் மீட்டும் போந்து படிந்து அவள் புகழ்விளக்குதலின், கிள்ளை வாழிய பலவே என்றும், அது குறித்து அக்கிளிகட்குத் தன் நன்றியை அறிவிக்குமுகத்தால் வாழ்த்துதலால், வெள்ள வரம்பின் ஊழி போகியும் என்றும் கூறினான். “நன்றே செய்த உதவி 1” எனப் பிறாண்டும் கூறுதல் காண்க. வாழிய பலவே என்பதற்குப் பல்லூழி’ காலம் வாழ்க எனினுமாம். தான் எதிர்ப்பட்டுக் கூடுதற்கண், தனக்கு இன்பம் தந்து மகிழ்வித்த பெருமை நோக்கி, பெருந்தோள் என்று விதந்தோதினான் என்றலும் ஒன்று.

“மெய்தொட்டுப் பயிறல் 2” என்ற சூத்திரத்துச் “சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி” என்புழிச் சொல்லிய என்றதனால் அமையும் கிள்ளை வாழ்த்துக்கு இதனைக் காட்டினர் நச்சினார்க் கினியர்.

    282.    சாரற் புனத்த பெருங்குரற் சிறுதினைப் பேரமர் மழைகட் கொடிச்சி கடியவும்  

சோலைச் சிறுகிளி யுண்ணும் நாட
ஆரிருள் பெருகின வாரல்
கோட்டுமா வழங்குங் காட்டக நெறியே.

இஃது, இரவுக்குறி நேர்ந்த தோழி தலைமகன் வந்து புணர்ந்து நீங்குழி அவனை எதிர்ப்பட்டுச் சொல்லியது.

** பழைய உரை :**
கொடிச்சி கடியவும் சோலைச் சிறுகிளி தினையை உண்ணும் நாட என்றது, காவலர் காத்தொழுகவும் களவொழுக்கத்தையே விரும்பா நின்றாய் என்பதாம் என்றவாறு.

** உரை :**
மலைச்சாரலில் அமைந்த புனத்தகத்தே விதைக்கப் பட்டனவாகிய பெரிய கதிர்களையுடைய சிறுதினையைப் பெரிய மதர்த்த கண்களையுடைய கொடிச்சியாகிய குறமகள் கடியவும், சோலைகளில் வாழும் சிறிய கிளிகள் ஓவாமல் அத்தினையை யுண்டலைச் செய்யும் நாடனே, நிறைந்த இருள் பெருகின வாகலினாலும், நீ வரும் வழிகளும் கோட்டினை யுடைய மாவாகிய யானை முதலிய கொடிய விலங்குகள் இயங்கும் காட்டிடத்தன வாகலினாலும் நீ வாராதொழி வாயாக என்றவாறு.

கொடிச்சி கடியவும், சிறுகிளி தினை உண்ணும் நாட என இயைக்க. சாரற்புனம் - சாரலிடத்தே யுள்ள புனக்கொல்லை. குரல் - கதிர். சிறுதினை என்றவிடத்துச் சிறுமை, தினை யரிசியைச் சிறப்பித்தது. உண்ணும் - உண்ணுதலைச் செய்யும். தட்டையும் கவணும் கொண்டு ஓப்பிய வழியும் சோலைக் கிளிகள் தம் சிறுமையால் ஓவாமல் உண்ணுதலையே விடாது செய்கின்றன என்றற்குச் சிறுகிளி உண்ணும் என்றார். வாரல் - அல்லீற்று எதிர்மறை வியங்கோள்முற்று.

பெருமையும் குளிர்ச்சியு முடைய வாயினும் நோய் செய்யும் தன்மையு முடைமையான் மாறுபடுதலின், பேரமர் மழைக்கண் எனப்பட்டது. கோட்டுமா, கோடுகளையுடைய மாக்கட்குப் பொதுவாயினும், தலைமையும் பெருமையும் பற்றிக் களிற்றின் மேல் நின்றது.

உள்ளுறையால், தான் பகற்குறி மறுத்து வரைவு கடாவின மையும் தலைமகன் அதனைத் தெருளாது இரவுக்குறி வருகென்ற தாகக் கொண்டு வந்தமையும் குறிக்கின்றா ளாகலின், வெளிப் படையாக வாரல் எனத் தோழி கூறினாள். ஆரிருள் என்றது இரவின்கண் வருதலின் அருமையும், கோட்டுமா என்றது விலங்குகளின் கொடுமையும், காட்டக நெறி யென்றது நெறி யின் இன்னாமையும் சிறப்பித்து நின்றன. எனவே இஃது இருள் பெருகியதோடு நெறியும் கோட்டுமா வழங்கும் காட்டகத்தது என்றது இரவுக்குறி யருமையும், நெறியது ஏதமும் கூறி மறுத்த வாறு. ஆகவே, “பொழுதும் ஆறும் காப்பும் என்றிவற்றின், வழுவினாகிய குற்றங் காட்டலின்,” இது வரைதல் வேட்கைப் பொருட்டே என அறிக.

கொடிச்சி கடியவும் கடியாது சிறுகிளி சிறுதினை உண்ணும் நாட னாதலின், யான் பகற்குறி விலக்கவும் விலகாது இரவுக் குறிக்கண் வந்து கூடுதலை விரும்புகின்றாய் என உள்ளுறை காண்க.

இனி, “நாற்றமும் தோற்றமும் 1” என்ற சூத்திரத்து “ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்” என்றதற்கு இதனைக் காட்டி இஃது ஆறின்னாமை கூறியது என்பர் இளம்பூரணர்.

சாரற் புறத்த என்றும், உன்னும் என்றும் பாடமுண்டு.

    283.    வன்கட் கானவன் மென்சொன் மடமகள்  

புன்புல மயக்கத் துழுத வேனல்
பைம்புறச் சிறுகிளி கடியு நாட
பெரிய கூறி நீப்பினும்
பொய்வலைப் படூஉம் பெண்டுதவப் பலவே.

இது, தோழி வாயின்மறுக்கவும், தலைமகன் ஆற்றாமை கண்டு தலைமகள் வாயில்நேர, அவன் பள்ளியிடத்தானாயிருந் துழிப் புக்க தோழி கூறியது.

** பழைய உரை :**
பெரிய கூறி நீப்பினும் பொய்வலைப்படூஉம் பெண்டு தவப் பலவே என்றது, தம் தமராயுள்ளார் நின் குறை பலவும் கூறி நீப்பினும், நின் பொய்வலைப்படூஉம் பெண்டிர் பலர் என்றவாறு. இவளும் அவருள் ஒருத்தி என்பதாம்.

தினைப்புனத்துப் பலவாய்ப் படிகின்ற கிளிகளை ஒருத்தி தன்னாற் காக்க முடியா தாயினும் அவற்றை அவள் கடிய முயலும் நாட என்றது, நின்னோடு இன்பநுகர்ச்சி விரும்பும் மகளிரை யாங்கள் விலக்க முயல்கின்றது முடியா தென்பதாம்.

** உரை :**
வன்கண்மை மிக்க கானவன் புன்செய் நிலத்தே உழுது வித்திய ஏனலின்கட் படியும் பசிய புறத்தையுடைய சிறுகிளி களை, அவனுடைய மெல்லிய சொல்லும் மடமையுமுடைய மகள் ஒப்பும் நாடனே, தமராயினார் நின்மாட்டுப் பெருங் குறைகள் கண்டு பலபடக்கூறி விலக்கினும் விலகாது, நின் பொய்ம்மொழியாகிய வலையின்கட் படும் பெண்டிர் மிகப் பலர் என்றவாறு.

உழுத ஏனல் - உழுது வித்தி விளைத்த ஏனல். ஏனல் - தினை. தினை விளையுங் காலத்தை ஏனற்பருவம் என இக்காலத்தும் கொண்கான நாட்டவர் வழங்குவர். “புன்புல மயக்கம் 1” காண்க. பெரிய கூறி என்புழிப் பெரிய என்றது பொறுத்தற் கரிய பெரிய குற்றங்கள் என்பதுபட நின்றது இனி, பலவாய குற்றங்களை விரியக் கூறி நீப்பினும் என்றுமாம். “பெரிய வோதினும் சிறிய வுணரா… பாடின் மன்னர் 1” எனப் பிறரும் கூறுதல் காண்க. பொய்புனைந்துரைக்கும் இன்சொல்லை, பொய்வலை என்றார். பெண்டு என்பது, வேந்து, அரசு என்றாற்போல உயர்திணைப் பொருண்மைக்கண் வந்த அஃறிணைச் சொல்லா தலின், தவப்பலவே என அஃறிணை முடிபு பெற்றது; “துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே 2” என்றாற்போல. தவ - உரிச்சொல். கானவன் உழுத ஏனற்கண், மடமகள் கிளிகடியும் நாட, தமர் கூறி நீப்பினும், வலைப்படும் பெண்டு தவப்பல என இயையும்.

கேட்போர் மனத்தில் ஒரு சிறிதும் அன்பு தோன்றாத வகையில் பொறுத்தற்கரிய பெரிய குற்றங்களைப் படைத்து மொழிந்து நீக்கினும் என்பாள், பெரிய கூறி நீப்பினும் என்றும், பின்னர் நீ போந்து பொய்யே சொல்லினும், அச்சொல்லைக் கேட்டு மறுத்து நீங்கும் வன்மையுடைய மகளிர் எவரும் இலர் என்பாள், பொய்வலைப் படூஉம் பெண்டு தவப்பலவே என்றும் கூறினாள். கூறுதலாவது ஈண்டுத் தலைவனது புறத் தொழுக்கத்தை இடத்தொடும் காலத்தொடும் படுத்துச் சான்று காட்டிக் கூறிட்டு மொழிதல்: அஃதாவது இன்ன இடத்தில் இன்ன காலத்தில் இன்னார் அறிய இவ்வண்ணம் நிகழ்ந்ததென மொழிதல்.

பைம்புறச் சிறுகிளி - பசுமையான நிறம் பொருந்திய சிறிய கிளி. “பயில்குரல் கவரும் பைம்புறக் கிளியே 3” என்றார் பிறாண்டும்.

தந்தை உழுத ஏனற்கண் படியும் கிளைகளை அவன் மட மகள் கடியவும், அவளது சொல்லின் மென்மை நயந்து கிளிகள் படிதலால் அவள் மாட்டாளாயினவாறு போல, யாங்கள் நின்னை மறுத்தேமாயினும், நின் மார்பு தரும் இன்பம் நயந்து கூடும் மகளிரை விலக்கும் வன்மையிலே மாயினேம் எனத் தோழி உள்ளுறுத்துரைத்தாள் எனக் கொள்க.

“பெரிய கூறி நீப்பினும்” “எள்ளின் இளிவாமென்றெண்ணி” அவன்திறமே உள்ளி உறைகின்றா ளாகலின், தலைவி வாயில் நேர்ந்து கூடினாள் என்பதாம். இது புரையறம் தெளிதல்.

இனி, பெரிய கூறி நீ நீப்பினும் என்று பாடம் கொண்டு அதற்கேற்பப் பொருள் உரைப்பது முண்டு. அது பொருளாயின், பிரிவென்பதே இனி நிகழாதெனத் துணியுமளவு பெரிய சூளுறவு களைச் சொல்லிப் பின் அவை பொய்ப்ப நீ பிரிந்தா யாயினும் என்பாள், பெரிய கூறி நீ நீப்பினும் என்றாள் என்றும், நீ போந்து கூறும் இன்சொல் வலையில் அகப்படாது நீங்கும் மகளிர் இலர் என்றற்குப் பொய் வலைப்படூஉம் மகளிர் பலர் என்றாள் என்றும் உரைக்க. “இல்வழங்கு மடமயில் பிணிக்கும், சொல் வலை வேட்டுவ னாயினன் முன்னே 1” என்பது காண்க. இது தலைவன் ஆற்றாமை வாயிலாகப் புணர்ந்துழிப் பள்ளியிடத்துச் சென்ற தோழி சொல்லியது என்பர் நச்சினார்க்கினியர்.2

284. அளிய தாமே செவ்வாய்ப் பைங்கிளி குன்றக் குறவர் கொய்தினைப் பைங்கால்  

    இருவி நீள்புனங் கண்டும்
    பிரிதல் தேற்றாப் பேரன் பினவே.

இது தினையரிந்துழிக் கிளியை நோக்கிக் கூறுவாள் போற் சிறைப்புறமாக ஓம்படுத்தது.

** உரை :**
குன்றத்தின்கண் வாழும் குறவர் வித்திய கொய்யப்படும் தினையின் பசிய தாளாகிய இருவி நிற்கும் நீண்ட தினைப் புனத்தைக் கண்டு சிவந்த வாயையுடைய பசிய கிளிகள் அப்புனத்தைப் பிரிதலைத் தெளியாத மிக்க அன்பினை யுடைய வாகலான், அவை அளிக்கத்தக்கனவாம் என்றவாறு.

இருவி - தினையை அரிந்து கொண்டவழி நிலத்தில் நிற்கும் அரிதாள். தினைப்புனம் முழுதும் இருவியே நின்று காட்சி தருதலின் இருவி நீள்புனம் என்றார். பண்டு தினையுதவியது பற்றிப் புனத்தின்பால் உண்டான அன்பு இப்பொழுது அத்தினை யில்லையாயினும் பிரியாவாறு பிணித்தலின், பிரிதல் தேற்றாப் பேரன்பின என்றார். உறின் நட்டு அறின் ஒருவுவது அன்புடை யார் செயலன் றென்பது பற்றிப் பேரன்பு கூறப்பட்டது. பிரிதல் தேற்றா என்பது, “உய்த்தல் தேற்றானாயின் 3” என்றாற் போல்வது.

வறும்புனங் கண்டு ஆற்றாது மிழற்றித் திரிவது பற்றி, செவ்வாய்ப் பைங்கிளி என்றும், அதற் கெய்திய வருத்தம் கண்டு உள்ளம் இரங்குதலின், அளிய தாமே என்றும், வேறு புனங் கட்குச் செல்லாது அலமருவதுபற்றி இருவி நீள்புனம் கண்டும் பிரிதல் தேற்றா என்றும், அதற்கு ஏது இது வென்பாள், பேரன்பின என்றும் கூறினாள்.

தாம் பண்டு போந்து உணவுண்டு இனிது வாழ்தற்கேதுவா யிருந்த தினை இதுபோது இல்லையாயினும், கிள்ளை அதன் இருவி கண்டு பிரியாப் பேரன்புடைய வாதல் போலப் பண்டு இவண் போந்து கூடி இன்ப நுகர்தற் கேதுவாயிருந்த இவள் இளமை நலம் புதல்வர்ப் பயந்து முதுமை யெய்துதலாற் குறை யினும், பிரியாப் பேரன்புடையையாய் வாழ்வாயாக என ஓம்படுத்தவாறறிக. சுட்டென்னும் உள்ளுறை யுவமம்.

285. பின்னிருங் கூந்த னன்னுதற் குறமகள்  

    மென்றினை நுவணை யுண்டு தட்டையின்
    ஐவனச் சிறுகிளி கடியு நாட
    வீங்குவளை நெகிழப் பிரிதல்
    யாங்குவல் லுநையோ வீங்கிவட் டுறந்தே.

இஃது, ஒருவழித் தணந்து வந்த தலைமகற்குத் தோழி கூறியது.

** பழைய உரை :**
குறமகள் தினைப்பிண்டியை யுண்டு ஐவனச் சிறுகிளி கடியும் நாட என்றது, நின்னோடு இக்காலத்து இன்பம் நுகர்ந்து பின்பு நின் மனைச் செல்வமும் பிறமகளி ரொழியத் தானே நுகரும் வேட்கை யுடையாளைப் பிரிந்து ஒழுகுகின்றாய் என்பதாம்.

** உரை :**
பின்னப்படும் கரிய கூந்தலையும், நல்ல நெற்றியையு முடைய குறமகள், மெல்லிய தினையின் மாவை யுண்டு, தட்டையினால் ஐவன நெல்லின்கட் படியும் சிறுகிளிகளை யோப்பும் நாடனே, இங்கு இவளுடைய பெரிய வளைகள் நெகிழ்ந்தோடும்படி இவளைத் துறந்து பிரிதலைச்செய்ய நீ எவ்வாறு வல்லையாயினையோ? அறியேன் என்றவாறு.

நுவணை - தினைமா; “மென்றினை நுவணை முறைமுறை பகுக்கும் 1” என்ப பிறரும். ஐவனத்தின் கதிர் கவரும் கிளியை ஐவனச் சிறுகிளி யென்றார். ஐவனம் - மலைநெல். தட்டை - கிளிகடியும் கருவி. துறந்து பிரிதல் யாங்கு வல்லுநை யாயினையோ என ஆக்கங்கொடுத்து முடிக்க. வினையினெச்சம் வினைப் பெயரொடு முடிதல், “வினையெஞ்சு கிளவிக்கு வினையுங் குறிப்பும், நினையத் தோன்றிய முடிபாகும்மே, ஆவயிற் குறிப்பே யாக்கமொடு வருமே 2” என்புழி, “நினையத் தோன்றிய” என்றதனால் அமையும். செய்யுளாகலின் ஆக்கம் எஞ்சி நின்றது.

பிரிந்தவழி இவள் ஆற்றாமையால் மிக்க துன்புறுவாளாக, அத்துன்ப மெய்த இவளைப் பிரிதல் மிக்க வன்கண்மை யுடை யார்க் கன்றிக் கூடாத செயலென்பாள், யாங்கு வல்லுநையோ என்றாள். “வீங்குவளை நெகிழப் பிரிதல்” என்றது உடம்பு நனிசுருங்கல். எனவே, இவளை ஆற்றுவிக்கும் திறமும் திண்மையு மின்றி யான் பெரிதும் வருந்தாநின்றேன் என்றாளாயிற்று.

ஒருவழித் தணத்தல் என்பது காதல்வாழ்வின் இடையே கடமை காரணமாக நிகழும் பிரிவு. காதற்காமம் தோன்றிய விடத்து அது கணந்தோறும் கடல்போற் பெருகி, அறிவு நிறை பொறை முதலிய ஆண்மைநலம் அனைத்தையும் அடிப்படுத்தித் தான் ஓங்கிநிற்கும்; “வான்தோய் வற்றே காமம் 3” “இன்பம் கடல்மற்றுக் காமம் 4” எனவும், “பொறையென் வரைத்தன்றிப் பூநுதல் ஈத்த, நிறையழி காமநோய் நீந்தி-அறையுற்ற, உப்பியல் பாவை உறையுற்றது போல, உக்குவிடும் என் உயிர் 5” எனவு;ம் சான்றோர் உரைப்பது காண்க. இத்துணை ஆற்றல் இதற்கு இலதாயின் உலகில் உயிர்வாழ்க்கை நிலைபெறாது என்பதும் அறிக. இப்பெற்றித்தாய காதற்காமம் தோன்றிப் பெருகுங்கால் கடமையுணர்வு கெடாது நிலவல் வேண்டுதலின் இரண்டற்கும் இடையற வின்றிப் போர் நிகழும்; அப்போரில் காமத்தை அடிப்படுத்திக் கடமை வெற்றிபெறத் திகழும் காளையர் மக்கட் பண்பால் உயர்ந்து தலைமக்களாவர்: களவின்கண் வரைவிடை வைத்து நிகழும் பிரிவுகள் யாவும் காமத்தை அடக்கி அறநெறிப்படுத்தி மேம்படும் கட்டாண்மைக் கடமை யுணர்வுகளின் வெற்றிச்செயல்கள் என விளங்க உணர்தல் வேண்டும் என்பது அகப்பொருளுரைக்கும் அறம்.

குறமகள் தினைமாவை யுண்டு தட்டையினால் ஐவன நெல்லைக் கவரும் கிளிகளைக் கடிவள் என்றதனால் நின்னால் துறக்கப்பட்ட இவள், நின் பிரிவுத்துன்பத்தை உட்கொண்டு, தன் நிறையினால் பிறரறியாவண்ணம் தன் மறையினைக் காத்தொழு கினாள் என உள்ளுறையால் தலைமகள் ஆற்றியிருந்தமை கூறிய வாறு.

286.     சிறுதினை கொய்த விருவி வெண்காற்  

    காய்த்த வவரைப் படுகிளி கடியும்
    யாண ராகிய நன்மலை நாடன்
    புகரின்று நயந்தனன் போலும்
    கவருந் தோழியென் மாமைக் கவினே.

இஃது, உடன்போக்குத் துணிந்த தலைமகன் அஃதொழிந்து தானே வரைவிடைவைத்துப் பிரிய நினைந்ததனைக் குறிப் பினான் உணர்ந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தலைமகன் வரைவிடைவைத்துப் பிரிவல் என்றவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉமாம்.

** பழைய உரை :**
புகர் என்றது உடன்போதலை. தினையிற் கடிந்த கிளியைத் தினை யரிகாற்கண் விளைந்த அவரைக்கண்ணும் கடியும் நாடன் என்றது, வரையாது ஒழுகுதலன்றி உடன்போதலையும் நம்மை விலக்கா நின்றான் என்பதாம்.

** உரை :**
தோழி, சிறுதினைகள் கொய்யப்பட்ட அரிதாளாகிய வெள்ளிய காலில் வளர்ந்து காய்த்த அவரையின்கட் படியும் கிளிகளை ஓப்பும் புதுவருவாயினையுடைய நல்ல மலைநாடன் இன்று புகரை விரும்பினான் போலும், என் மாமைக்கவின் விளர்ப்பதும் தளிர்ப்பதுமாய்த் தடுமாறுமாகலான் என்ற வாறு.

தினை யரிந்தபின் அதன் தாள் நின்ற நிலத்தை உழாது அதனிடையே அவரையை விதைப்பது மரபு; கொய்வார் நடந்த நடையே உழவாகவும், ஆங்கு நிலத்திடை நின்ற ஈரமே நீர் வளமாகவும் கொண்டு அவரை வேரூன்றி வளர்ந்து பயன் தரும். “சிறுதினை மறுகால் கொழுங்கொடி அவரை பூக்கும் 1” என்றும், “இருவிதொறும், குளிர்புரை கொடுங்காய் கொண்டன அவரை 2” என்றும் சான்றோர் கூறுவது காண்க. இவ்வண்ணமே மருத நிலத்தவர், நெல்லரிதாளில், உழுந்து பயறு முதலியவற்றை வித்திப் பயன்பெறுவர் என அறிக. யாணர்- புதுமை; ஈண்டுப் புது வருவாய் மேற்று. கவர்த்தல் - ஈண்டு ஒருபாற்படாது தடு மாறுதல்: “பல்வேறு கவர்பொருள் நாட்டத் தானும் 3” என்றாற் போல. மாமைக் கவின் - மாந்தளிர் போலும் நிறம் திகழும் அழகு. புகர் என்பது குற்றம்; “புகரறு சிறப்பு 4” என்றாற்போல. களவொழுக்கத்தின்கண் தலைமகன் வரைதற் பொருட்டுத் தன் தலைமைப்பண்பினின்றும் தலைப்பிரியாத நெறியிற் செய்யும் வினைவகைகளுள் உடன்போக்கு அடங்காமைபற்றி இது புகர்நெறியாம் என்ற கருத்தால் இவ்வாறு ஆசிரியர் கபிலர் கூறுகின்றார் போலும். பெரும் பாலும் மகட் கொடை மறுத்த வழித் தலைமகளது தலையாய கற்பினைக் காத்தற்பொருட்டாய இது, தலைமக்கள் தகுதிக்குப் புகராயினும் அறமாதலின் அமையும் எனக் கொண்டு மேற் கோடலால், பண்டைத் தமிழ்ச்சான்றோர் பொருணெறிக்கண் இதனையும் அன்பொழுக்கத்து அறநெறியாக இலக்கணம் அமைத்திருப்பது ஈண்டு நினைவுகூர்தற்பாலது. “ஒருதலை யுரிமை வேண்டியும் மகடூஉப், பிரிதல் அச்சம் உண்மை யானும், அம்பலும் அலரும் களவுவெளிப் படுக்கும் என்று, அஞ்ச வந்த ஆங்கிரு வகையினும், நோக்கொடு வந்த இடையூறு பொருளினும், போக்கும் வரைவும் மனைவிக்கண் தோன்றும் 5” என ஆசிரியர் உரைப்பது காண்க.

புகரென்றது உடன்போதலை யென்பது பழையவுரை, இடையிட்டொழுகுங் களவே விரும்பாது உடன்போக்கினைத் துணிந்தான் என்பாள் புகர் இன்று நயந்தனன் என்றும், அது துணிந்தவன் பின்னர் அதனை ஒழிந்து வரைவிடை வைத்த பிரிவு நினைந்தமையின், நயந்தனன் போலும் எனக் குறிப்பால் நய வாமை யுணரவும், பிரிந்தவழித் தன் மாமைக்கவின் பசலை பாய்ந்து வேறுபடு மென்பாள், கவரும் தோழி என் மாமைக்கவினே என்றும் கூறினாள். உடன் போக்குத் துணியக் கேட்டவழி மகிழ்ச்சியால் நுதலொளியும் மாமைக்கவினும் சிறக்கப் பெற்றவள், அவன் பிரிய நினைந்தமை யுணர்ந்தவழிக் கெடுதல் குறித்துத் தன் மாமைக்கவினை விதந்து கூறினாள். இனி, அவன் உடன்போக்குத் துணிந்தவழித் தந்த மாமைக்கவினை, அஃது ஒழிந்தவிடத்துக் கவர்ந்துகொள்வா னெனக் கூறினா ளெனவு மாம். என் மாமைக்கவின் உடலெங்கும் பரவி விளங்குகின்றமை யின், அது கெடும்வகைப் பிரிவாகிய குற்றம் செய்ய விரும்பினன் போலும் என்றுமாம். உரை இரண்டற்கும் ஒக்கும்.

புகரின் றுய்ந்தனன் என்ற பாடத்துக்கு வரையா தொழுகுத லால் வரும் ஏதத்தின் நீங்குவான் உடன்போக்குத் துணிந்தனன் போலும் என்றும், வரைதற்பொருட்டுப் பிரியத் துணிந்தனன் போலும் என்றும் உரைக்க.
“நாற்றமும் தோற்றமும் 1” என்ற சூத்திரத்து “காதன் மிகுதி யுளப்படப் பிறவும்” என்புழிப் பிறவும் என்றதனான் தலைவனைப் பழித்தலுங் கொள்க என்று கூறி அதற்கு இது தலைவனைப் பழித்ததாகக் கூறுவர் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும்.

    287.    நெடுவரை மிசையது குறுங்கால் வருடை  

தினைபாய் கிள்ளை வெரூஉ நாட
வல்லை மன்ற பொய்த்தல்
வல்லாய் மன்றநீ யல்லது செயலே.

இஃது, இன்ன நாளில் வரைவல் எனக்கூறி அந்நாளில் வரையாது பின் அவ்வாறு கூறும் தலைமகற்குத் தோழி கூறியது.

** பழைய உரை :**
தமக்கு ஓர் இடையூறும் செய்யாத, நெடுவரைக்கண்ணே வாழும் வருடையைத் தினைமேய்கின்ற கிள்ளை வெரூஉம் நாட என்றது, நீ சொன்ன போழ்தே எம் சுற்றத்தார் வரைவிற்கு இடையூறு செய்யார் என்பது அறியாது வெருவுகின்றாய் என்பதாம்.

** உரை :**
நெடிய மலைமேல் வாழ்வதாய குறுங்கால்களை யுடைய வருடைமானைக் கண்டு தினையை யுண்கின்ற கிளிகள் அஞ்சி யோடும் நாடனே, நன்றல்லது செய்தல் வல்லுவை யல்லை யாயினும் பொய் கூறுதலின் நீ தெளிவாக வல்லை யாயுள்ளா யாகலின், யாம் நினக்குக் கூறுவ தென்னை என்றவாறு.

வருடை - ஒருவகை மான். “செவ்வரைச் செச்சை வருடை மான்மறி, சுரைபொழி தீம்பால் ஆர மாந்திப், பெருவரை நீழல் உகளும் நாடன் 1” என்று பிறாண்டுங் கூறுவர்.

கூட்டமாய்ப் போந்து தினைப்புனத்திற்குட் படிந்து உண்பது பற்றி, தினைபாய் கிள்ளை யென்றார். மன்ற - தெளிவுப்பொருட் டாய இடைச்சொல். வல்லாய் என்பது வல்லையல்லை யென எதிர்மறைக்கண் வந்தது “யாவதும் வல்லா கொல்லோ தாமே 2” என்றாற் போல.

இன்ன நாளிற் போந்து வரைவல் எனக் கூறிச் சென்றவன், பின்பு அது செய்யாது நீட்டித்தமையின், வல்லைமன்ற பொய்த்தல் என்றும், பொய்ம்மையில் வல்லுந ராயினார்க்கு அறமல்லது யாதும் எளிதின் இயலுவதாக, நீ அதனையும் செய்யாது இவண் போந்து இவளை அருளுவதாகிய அறத்தைச் செய்கின்றாய் என்பாளாய், வல்லாய் மன்ற நீ அல்லது செயலே என்றும் கூறினாள். அல்லது வரையாமையாற் கொலை சூழ்தல்; அதனை யொழியப் பொய்ம்மையின் மிக்கது பிறி தில்லை யாகலின், அல்லது என்றாள்.

இன்ன நாளில் வரைவல் எனக் கூறிய தலைமகன் நாளுற வரையாதொழிவதே யன்றி வாராமையும் செய்யின், தலைமகள் இறந்துபடுவதன்றி வேறு செய்திறம் இலள் என்பது உணர்ந்து அஞ்சி வந்தமையான், அவனை நீ அல்லது செய்தற்கு வல்லுவை யல்லை என்றாள். இங்ஙனம் தலைமகன் கொண்ட அச்சத்தைப் பிறிதொன்றாகத் திரித்து உள்ளுறையில் குறிப்பாய்ப் பழித்தாளா கலின், இதனால் நீ வரைதலும் செய்யாது, வாராமையால் எம்மை இறந்துபா டெய்தவும் விடாது, வறிதே துன்பத்துள் ஆழ்ந்து வருந்தச் செய்வது நன்றன்று என, வெளிப்படையாய்த் தலைவன் எய்தக்கடவ இன்பம் உயர்தற்பொருட்டுத் தோழி உறழ்ந்து கூறியது காண்க. இஃது “உயர்மொழிக் குரிய வுறழுங் கிளவி, ஐயக் கிளவி யாடூஉவிற் குரித்தே 1” என்புழி “உறழுங் கிளவி” எனப் பொதுப்படக் கூறினமையாற் கொள்ளப்படும்.

“நாற்றமும் தோற்றமும் 2” என்ற சூத்திரத்துக் “காதல் மிகுதி யுளப்படப் பிறவும்” என்றவிடத்துப் பிறவும் என்ற இலேசினால், இது தலைவனைப் பழித்தது என இளம்பூரணரும் நச்சினார்க் கினியரும் 3 கொள்வர்.

    288.    நன்றே செய்த வுதவி நன்றுதெரிந்  

தியாமெவன் செய்குவ நெஞ்சே காமர்
மெல்லியற் கொடிச்சி காப்பப்
பல்குர லேனற் பாத்தருங் கிளியே.

இது, கிளிகள் புனத்தின்கட் படியாநின்றன என்று தலைவியைக் காக்க ஏவியவழி, அதனை யறிந்த தலைமகன் உவந்து தன்னெஞ் சிற்குச் சொல்லியது.

உரை :
நெஞ்சே, அழகிய மெல்லிய இயல்பினையுடைய குற மகள் காவல் செய்ய, பலவாகிய கதிர்களையுடைய தினைப் புனத்தே பரவிப் படியும் கிளிகள் செய்த உதவி நன்றாகலான், அந்நன்றியினைத் தெளிந்து நாம் செய்யத்தகும் செயல் யாதோ? கூறுக என்றவாறு.

கிளி உதவி நன்று செய்த என முடிப்பினும் அமையும். அதுவெனச் சுட்டியொழியாது நன்று எனப் பெயர்த்தும் கூறியது, செய்யாமற் செய்த பெருநன்றி என்பது யாப்புறுத்தற்கு. பாத்தரல் - பரந்துவருதல்.

கிளிகள் ஏனற்கதிர்களைக் கவரும் விருப்பால் புனம் நோக்கிப் பாத்தருதலான், தினை கதிர் கொண்டமையும், தலைமகள் கிளி கடிவாள் அப்புனம் மேவிக் காவல்புரிதலும் சேய்மைக் கண்ணேயே அறிந்தா னாகலின், அதனை உணர்த்திய கிளிமே லேற்றி, நன்றே செய்த உதவி என்றும், அந் நன்றிதானும் பின்னர்த் தெளிந்தவிடத்துச் செய்யாமற் செய்த வுதவியாய், படிதற்கு வையகமும் பறத்தற்கு வானகமும் அக்கிளிகட்குக் கொடுப்பினும் ஆற்றாச் சிறப்பிற்றாய் விளங்குதலின், யாம் எவன் செய்குவம் என்றும் கூறினான்.

“பண்பிற் பெயர்ப்பினும் 1” என்ற சூத்திரத்து “அவட்பெற்று மலியினும்” என்பதனை இரட்டுற மொழிதல் என்பதனால் இதற்கமைத்து, இது பகற்குறிக்கண் கிளி புனத்தின்கண் படிகின்ற தென்று தலைவியைக் காக்க ஏவியதனை அறிந்த தலைவன் அவளைப் பெற்றேம் என மகிழ்ந்து கூறியது என்பர் நச்சினார்க் கினியர்.

    289.    கொடிச்சி யின்குரற் கிளிசெத் தடுக்கத்துப்  

பைங்குர லேனற் படர்தருங் கிளியெனக்
காவலுங் கடியுநர் போல்வர்
மால்வரை நாட வரைந்தனை கொண்மே.

இஃது, இற்செறித்த பின்னர்த் தோழி வரைவுகடாவுழி முதிர்ந்த தினைப்புனம் இவள் காத்தொழிந்தால் வரைவல் என்றாற்கு அவள் சொல்லியது.

** உரை :**
பெரிய மலைநாடனே, கொடிச்சியாகிய தலைமகளின் இனிய குரலோசையைக் கிளியோசை யெனக் கருதி மலை யடுக்கத்து வளர்ந்த பசிய கதிர்களையுடைய தினைப் புனத் தினை யுள்ளிக் கிளிகள் போதரும் என எண்ணித் தமர் இவளை விடுத்துத் தினைப்புனக் காவல் செய்தலையும் நீக்குவார் போன்றுளா ராகலின், நீ விரைய வரைந்து கோடலே தக்கது என்றவாறு.

கிளி - ஆகுபெயர். இன்குரல் கிளிசெத்து ஏனற் படர் தருமெனக் காவலுங் கடியுநர் போல்வர் என இயைக்க. உள்ளுதற் பொருட்டாய படர்தரும் என்றது உள்ளிப் போதரு மென நின்றது. காவலும் என்புழி உம்மை சிறப்பு; எச்சவும்மையாகக் கொண்டு, தலைமகளைப் புனத்திற்கு ஏவாமையே யன்றிக் காவலும் நீக்குவார் போன்று உள்ளார் என்றுமாம். தலைமகளைத் தினைக்கட் படியும் கிளி கடியுமாறு ஏவுதல், “வளைவாய்ச் சிறுகிளி விளைதினை கடியச், செல்கென் றோளே யன்னை 1” என வருதலாலறிக. முதிர்ந்த தினைப்புனம் இவள் காத்தொழிந்தால் வரைவல் என்ற தலைமகற்கு, இவளை ஏவியவழி, இவள் குரலைக் கேட்டுக் கிளிகள் தம் இனமெனக் கருதித் திரண்டு போந்து புனத்தின்கட் படிதல் கண்டு இவள்காவலை நீக்குவராராயின ரென்பாள், காவலுங் கடியுநர் போல்வர் என்றும், அது நோக்கித் தாழ்க்காது விரைந்து வரைதலே செயல் வேண்டுவது என்றற்கு வரைந்தனை கொண்மே என்றும் கூறினாள். தினை காவல் செய்யுமாறு ஏவாவழி, தினைக்கதிர்களைக் கிளிகள் கவர்ந்து கொள்ளு மென்ற அச்சமும், ஏவியவழியும் அவை போந்து அது செய்தல் குறித்து அவலமும் தோன்றித் தமர் மனத்தை அலைத்தலின், புனவர் காவல் கடிவாராயினர் என்ற வாறு. கொடிச்சியின் இனிய ஓசையைத் தம் ஓசையெனக் கருதி மலையடுக்கத்து விளைந்த பசிய கதிர்களையுடைய தினைப் புனத்துப் படருங் கிளிகளை ஓப்பிக் காவல் செய்தலையும் விடுத்தார் போன்றுளர் தமர் என்று உரைப்பின், எனவென் இடைச்சொல் நின்றுவற்றுதல் காண்க. மலைந்தனை கொண்மோ என்ற பாடத்துக்கு, கரணவகையான் வதுவை சூடிக்கொள் வாயாக என்றுரைக்க. மகளிர்க்கு மாலை என்றும் பெயராகலின், அதற்கேற்ப மலைந்தனை கொண்மோ என்றாளென்க. “பூப்புனை மாலை புனையு மாதரும், தோற்புனை வின்னாண் டொடர்கைக் கட்டியும், கோச்சேரன் பெயருங் கோதையென் றாகும் 2” என்பதனால் மகளிர்க்கு மாலை யென்பதும் பெயரா யிற்று.

“நாற்றமும் தோற்றமும் 3” என்ற சூத்திரத்து “காதல் மிகுதி யுளப்படப் பிறவும்” என்புழி வரும் பிறவும் என்ற இலேசினால் இதனை அமைப்பர் இளம்பூரணர். “வேட்கை மறுத்துக் கிளந்தாங் குரைத்தல், மரீஇய மருங்கின் உரித்தென மொழிப 4” என்பதனுள் அடக்குவர் நச்சினார்க்கினியர்.

    290.    அறம்புரி செங்கோன் மன்னனிற் றானனி  

சிறந்தனள் போலுங் கிள்ளை பிறங்கிய
பூக்கமழ் கூந்தற் கொடிச்சி
நோக்கவும் படுமவ ளோப்பவும் படுமே.

இது, காவல்மிகுதியான் இரவுக்குறி மறுக்கப்பட்டு நீங்கிய தலைமகன் வந்துழி, அவன் கேட்டு வெறுப்புத் தீர்தற் பொருட்டால் தினைப்புனம் காவல் தொடங்காநின்றாள் என்பது தோன்றத் தோழி கூறியது.

** உரை :**
அறத்தைச் செய்கின்ற செங்கோன்மையையுடைய மன்னனைப் போலப் பூக்களின் மணம்கமழும் கூந்தலை யுடைய கொடிச்சியாகிய தலைமகள் மிகவுயர்ந்தாள்; கிள்ளை களும் உயர்ந்தன, அவளால் உவந்து நோக்கப்படுதலே யன்றி விரைந்து கடியவும் படுமாகலான் என்றவாறு.

செவ்விய கோல் போறலின் அரசன்நீதி செங்கோல் எனப்படுவது மரபு. அஃது அளியும் தெறலும் என இருவகையின் இயன்ற அறப்பயன் விளைத்தலின் அறம் புரி செங்கோல் எனப்படுவதாயிற்று. நல்லது செய்வோரை நயந்து அருள் செய்வது அளி; அல்லது செய்வோரைக் கடிந்து ஒறுப்பது தெறல். போலும்: உரையசை. பிறங்குதல் - உயர்தல். சிறந்தனள் பிறங்கிய என்பன துணிவும் விரைவும் பற்றி இறந்தகாலத்து வந்தன. அவளென்புழி ஆலுருபு தொக்கது. தான் - அசை. மன்னனின் கொடிச்சி நனிசிறந்தனள்; கிள்ளை பிறங்கிய, அவள் நோக்கவும் ஓப்பவும் படுமாகலான் என இயையும்.
அறம் புரிதற்கண் செங்கோன்மை நல்லது செய்தலினும் அல்லது தோன்றின் அதனை விரையாது மடியாது ஆராய்ந்து கடிதல் முறையாகலின், புனத்துக்கு அல்லது செய்யும் கிள்ளையை விரைந்து கடியும் செயல்முறை பற்றித் தலைவியை நனி சிறந் தனள் என்றாள். “அல்லது கடியுமிடத்தும் அது செய்தாரைக் கடிதோச்சி மெல்ல எறிதல் செங்கோன்மை யாயினும் 1” கடிதோச்சுமிடத்துக் கண் சிவந்து அச்சம் விளைத்தல் போலாது தலைவியால் உவந்து நோக்கப்படுமாறு தோன்ற, கிள்ளை அவள் நோக்கவும் படும் என்றும், அதனால் செய்தற்குரியது செய்யப்படாது கழிதலின்று என்றற்கு ஓப்பவும்படும் என்றும், இவ்வாறு தெறுமிடத்தும் அகத்தாலேயன்றி முகத்தாலும் அளியுற நோக்கப்படுதல் செங்கோன் மன்னன் குடைநிழல் வாழ்வார்க்கும் இல்லாத சிறப்பாதலின் கிள்ளை பிறங்கிய என்றும் கூறினாள். தலைவியால் கடியப்படும் கிள்ளையும் அவள் புனங்காவல் புரியுங்கால் பிறங்குகின்றன எனின், தலைமகன் கூட்டம் பெறுதல் ஒருதலை யென்பது தானே பெறப்பட்டது.

தாநனி என்றும், சிறந்தன என்றும் பாடமுண்டு. “மன்ன னென்றது தலைமகனை” யென்ற பழையவுரைக் குறிப்புச் சில ஏடுகளில் இல்லை.


மஞ்ஞைப்பத்து.

இதன்கண் வரும் பத்துப்பாட்டுக்களினும் மயிலாகிய கருப்பொருளே சிறந்து வருதலின், இப்பகுதி இப்பெயர்த் தாயிற்று.

மஞ்ஞை என்பது மயில்களைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல். இம்மயில்கள் காட்டில் வாழும் கோழியினத்தைச் சேர்ந்தவை. ஆயினும், ஏனைக் கோழிகட்கு இல்லாத நெடிய தோகை இருப்பதுதான் இம்மயிற்குச் சிறப்பு. மயிலின் ஆணைச் சேவல் எனவும், பெண்ணைப் பெடை பேடை எனவும் இக்காலத்தே வழங்குகின்றனர். மயிற்சேவலைப் போத்து என வழங்குதலும் உண்டு என்பர் ஆசிரியர் தொல்காப்பியனார். 1 அவர் காலத்தில் ஆண்மயிலைச் சேவல் என்னும் வழக்காறு கிடையாது. அது பற்றியே அவர், “சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவணும், மாயிருந் தூவி மயிலலங் கடையே 2” என்று ஓதுவாராயினர்.

மயிற்போத்துக்குத் தோகை யுண்டு. அதனை அது விசிறி போல் விரித்தலும் சுருக்குதலும் செய்யும். மயிற்றோகையில் இடையிடையே கண்போல் அழகிய பொறியுண்டு. கண் போறலின் அவற்றைக் கண்ணென்றே எல்லா நாட்டாரும் குறிக்கின்றனர். மயிலின் ஆணுக்குத் தான் நீண்ட தோகையும் தலையில் சிறு விசிறிபோன்ற மெல்லிய கொண்டையும் உண்டு. ஒரு மயிற்போத்துக் குரிய தோகை முழுவளர்ச்சி பெற மூன்று ஆண்டுகளாகும்.

மயில்கள் இந்திய நாடு முதல் கிழக்கே யுள்ள கிழக்கிந்தியத் தீவுகள் முடிய வுள்ள நிலப்பகுதியில் காடுகளில் பெருகி வாழ் கின்றன. நாட்டிலேயன்றி உயரிய மலைகளிலும் இம்மயில்கள் காணப்படும். மழைக்காலத்தில் மலைமுகடுகளி லிருந்து கீழ் நிலத்துக்கு இறங்கிவிடுவது மயில்களின் இயல்பு. காட்டில் விளைந்து உதிரும் புல் மணிகளும் கிழங்குவகைகளும் சிறுசிறு பழங்களும் புழு பூச்சிகளும் இவற்றிற்கு உணவாவன.

நம் நாட்டுப் பண்டைய உயிர்நூல் அறிஞர்களுள் அமிச தேவர் என்பார், மயில்களை அறுவகையாக வகுத்து அவற்றை மயூரம், பாரி, நீலகண்டி, பாம்புணி, சிகாவளம், கேகயம் என்று எடுத்தோதுகின்றார். இவற்றுள், மயூரம் பசுமைநிறமும் நீண்ட கழுத்தும் கால்களும் உடையவை; பாரி வகை, மிக்க உயரமும் அகன்ற கொண்டையும் கொண்டுள்ளன; மேனிமுழுதும் பன்னிறம் பரந்திருக்கும். கருநீனிறக் கழுத்தோடு உடல் சிறுத்தும் கால்குறுகியும் இருப்பன நீலகண்டி; இவை ஆடும் போது ஒருகாலை யூன்றிச் சுழன்றுசுழன்று குதித்தாடுவது சிறப்பு. பாம்புகளைத் துரத்திக் கொன்று தின்பவை பாம்புணிமயில் என்று பெயர் பெறுவன; இவை மக்களைக் கண்டால் சினங்கொண்டு குத்தும். சிகாவளம் நீண்ட கழுத்தும் நெடிய அலகும் உடையவை. பெண்கள் ஆடும் நடனத்தைக் கண்டால் தானும் அவ்வாறே ஆடும் இயல்புடையது இச் சிகாவளம். கேகயம் “கே” “கா” என்று அகவுவதால் இப்பெயர் பெறுகிறது. வெயில் வெம்மையைத் தாங்கும் வன்மையில்லாமை யால் இவை எப்போதும் நீர்நிலைகளின் கரைகளிலும் இருண்டு குளிர்ந்திருக்கும் புதர்களிலும் விரும்பியுறைகின்றன. இவ்வினத் துள் பெடைக்கும் ஓரளவு தோகையுண்டு; ஆனால் கொண்டை மட்டும் கிடையாது; பிறந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகட்குப் பின்பே இவை சினையீனும் செவ்வியைப் பெறுகின்றன என அமிசதேவர் கூறுகின்றார்.

இந்தோசீனாவில் ஒருவகை மயில் உண்டு. அதன் தோகை ஏழடி நீளமாகும். அஃது இருள்படச் செறிந்த பெருங்காடுகளில் தான் காணப்படுகிறது. ஏனை மயில்களை விட அது மிகவும் பெரியது. பெருங்காடுகளின் நடுவே சமநிலம் கண்டு ஒரு பகுதியை வரைந்து கொண்டு, அதன்கண் கல்லும் முள்ளும் சிறிதும் இல்லாதவாறு தூய்மை செய்து அவ்விடத்தே நின்று தன் நீண்ட தோகையை விரித்து ஆடும். இளவேனிற் காலத்தில் பூம்புதல்களும் மரங்களும் புதுத்தளிரும் பசுந்தழையும் கொண்டு இனிய காட்சி வழங்கும்போது, வானத்தில் வெயில் வெம்மையைத் தணிப்பது குறித்து இளமழை தவழுங்கால் இம்மயில்களின் கூத்துக் காணப்படுகிறது. அக்காலை அதன் ஆட்டத்திலும் தோகை விரிப்பின் தோற்றத்திலும் ஈடுபட்டுப் பெடைமயில் வேட்கை மிக்கு அதனை நெருங்கும். தன் பெடை யின் மனத்தைக் கவர்தற்பொருட்டுத் தோகையை விரித்து ஆடும் இதன் காட்சி காண்பார் கண்கட்குப் பெருவிருந்தாய் இன்பம் செய்யும்.

பெடையின்பொருட்டு மயிற்போத்துக்கள் பிற மயில் களோடு போர் செய்வதும் இயல்பு. அக்காலை மயிர் சிலிர்த்துக் கொண்டு தன் அலகாலும் கால் விரலாலும் ஒன்றையொன்று தாக்கிக் கடும்போர் செய்யும். பெடைமயில் பத்து முதல் பதினான்குவரை முட்டையிடும். முட்டையின் உள்ளிருக்கும் நீர் பன்னிற வண்ணங் கொண்டு உளது. அந்நிறங்களே பின்னர் அதன் மேனியில் விரிந்து காட்சிதரும். மயிற்குஞ்சுகள் இளமையில் தோற்றத்தால் ஆண்பெண் வேற்றுமை தெரியாதவாறு மென் சிறை மூடிக் கிடக்கின்றன.

மிகப்பழங் காலத்தேயே மக்கள் மயில்களைப் பிடித்து மனைகளில் வைத்து வளர்க்கலுற்றனர். இம்மயில்களிடத்தே யவனர்களுக்குப் பேரீடுபாடு உண்டு. அவர்கள் பண்டைநாளில் அழகுக்காகவும் உணவுக்காகவும் இம்மயில்களை நம்நாட்டி னின்று கொண்டு போயினர். பின்னர் அவர்கள் அவற்றை ஐரோப்பாவுக்குக் கொண்டு சென்றனர். அதற்குமுன் ஐரோப்பி யருக்கு இம்மயில் தெரியாது.

நம் நாட்டிலும் இலங்கை மலேசியா கிழக்கிந்தியத் தீவுகள் ஆகிய இந்நாடுகளிலும் நீர்வள மிக்க பகுதியில் உள்ள காடுகளில் ஒருவகைப் புள்ளினம் மயில்போல் காட்சி தருகின்றது. ஆயினும் மயில்போல் மக்கள் மனம் விரும்பத்தக்க மாண்பும் வனப்பும் அவற்றின்பால் இல்லை.

இம்மயில்களை நம் பண்டைத் தமிழ்ச்சான்றோர் நன்கு ஆராய்ந்துள்ளனர்; இவற்றை இந்நாளைய உயிர்நூல் அறிஞர் போலவே கோழியினத்தோடு சேர்த்தே எண்ணினர். மலைக் காடுகளில் இவை காணப்படும் இயைபு கண்டுரைக்கும் அறிஞர், “பொறிப்புற மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக், கோழி வயப்பெடை இரிய 1” எனக் கோழிகளிடையே வைத்துக் கூறுவதுகொண்டு அறியலாம். மயிலினங்கள் பெரும்பாலும் மலையும் மலையடுக்கங்களுமாகிய குறிஞ்சிநிலக் காடுகளிலும் கற்பாறைகளிலும் காட்சி வழங்குகின்றன. “மலையமயில் அகவ மலைமாசு கழியக், கதழும் அருவி யிழியும் 2”, “மால்வரைச் சிலம்பின் மகிழ்சிறந் தாலும், பீலி மஞ்ஞை 3” “கலைதாய உயர்சிமையத்து மயில் அகவும் மலிபொங்கர் 4” “கன்மிசை மயி லால 5” என வருவன பலவும் இதற்கு ஏற்ற சான்றாகும்.

மலைகளிலே சிறப்ப வாழ்வனவாயினும் ஏனை முல்லை மருதம் முதலிய நிலப்பகுதிகளிலும் மயில்கள் காணப்படுகின்றன. “கான மஞ்ஞைக் கணம் 6” “கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப் பெடை, அயிரியாற் றடைகரை வயிரின் நரலும் 7” என்று சான் றோர் குறிப்பர். மருதவயற்புறத்து நிற்கும் சோலைகளும் மயில் கட்குச் சீர்த்த இடமாகின்றன. “செந்நெல் உண்ட பைந் தோட்டு மஞ்ஞை, செறிவளை மகளிர் ஓப்பலின் பறந்தெழுந்து, துறைநணி மருதத் திறுக்கும் 8” “கழனி யுழவர் தண்ணுமை இசைப்பின், பழன மஞ்ஞை மழைசெத்து ஆலும் 9” என்பன காண்க.

இங்ஙனம், குறிஞ்சி முல்லை மருதம் என்ற நிலப்பகுதிகளில் காணக் கூடிய மஞ்ஞையினம் நீண்ட தோகையும் குறுகிய சிறகுகளு முடையவை; ஆதலால் இவை நெடுந்தொலைவு பறந்து செல்லும் இயல்பினவல்ல. கோழிபோல் பெரும்பாலும் நடையில் சிறந்தன எனினும், இவை பெருமரங்களில் எப்போதும் காட்சி தருகின்றன. குறிஞ்சி முல்லைக் காடுகளிலும் மருதப் பூம்பொழில் களிலும் இவை பெருமரங்களில் வைத்தே குறிக்கப் படுவதைப் பார்க்கலாம். மலைகளில் பெருங்கற்களின் முகட்டில் காணப் படும் மயில்கள், வேங்கை, மராஅம், குருந்து, காஞ்சி, மருது முதலிய மரங்களிலே உள்ளன. “வேங்கையின் சினையில் வீற்றிருக்கும் மயில் அதன்கண் ஏறிப் பூக்கொய்யும் மகளிர் போலத் தோன்று கிறது. 1” “மலைவேங்கையில் இருந்த மயில் மராமரத்தின் உச்சியில் தங்குவதும் 2” “குருந்தமரத்தில் இருந்து குலவுவதும் 3” மருதவயற் புறம் வந்த மயில்கள் காஞ்சி யிலும் மருதமரத்திலும் இருந்து இனிய காட்சி வழங்குவது முண்டு, “முடக்காஞ்சிச் செம்மருதின் மடக்கண்ண மயில்ஆல 4” எனச் சான்றோர் உரைப்பது காண்க.

மயில்கள் கோழிகளைப் போலவே “வைகறைப் போதிலும் அந்திமாலையிலும் 5” கூவும். மயிற் கூவலை அகவுதல் என்பது வழக்கு. அதன்குரல் அரித்த ஓசையுடைமை பற்றி, “ஆடுசீர் மஞ்ஞை அரிகுரல் 6” எனப்படும். இசைத் தமிழ்த்துறையில் காணப்படும் திறவகையில் இதுவும் ஒன்றாகப் பரிபாடல் குறிக்கின்றது. எனவே, மயில் எடுக்கும் ஓசையிலும் இசைக்குரிய இனிமைப்பண்பு கண்டுளது பண்டைய இசைப்புலமை என்பது காண்க. எனினும், இயற்றமிழ்ச் சான்றோர் குயிலோசையிற் போல மயிலோசையிலும் அன்பின் ஐந்திணைக்குரிய நெறியில் பொருள் நலங் கண்டு, “தோகை ஆர்குரல் மணந்து தணந்தோரை, நீடன்மின் வாரும் என்பவர்சொற் போன்றனவே 7” என்று வியந்து பாடுகின்றனர்.

இனி, மயிலின் தலையில் அழகிய சிறு கொண்டை உளது அன்றோ! அது வாகையின் பூப்போல இருப்பது நோக்கி, “குமரி வாகைக் கோலுடை நறுவீ, மடமாத் தோகைக் குடுமியின் தோன்றும் 1”, “வாகை யொண்பூப் புரையும் முச்சிய தோகை 2” என வருவன காண்க. மயிலின் கழுத்துக் காயாம்பூவின் நிற முடையது. “புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை, மென் மயில் எருத்தின் தோன்றும் 3” என ஒளவையார் குறிக் கின்றார். நொச்சி இலையின் கொத்துப் போல்வது மயிலின் காலடி என்பது யாவரும் நன்கறிந்த தொன்று. இதனையே சான்றோர் விதந்து, “மயிலடி இலைய மாக்குரல் நொச்சி 4” எனப் பாடினர்.

மயிலுக்குள்ள சிறப்பெல்லாம் அதனுடைய அழகிய கண் பொருந்திய நீண்ட தோகையேயாகும். தோகை என்னும் சொல் பொதுவாக நெல்லின் தோட்டுக்கும் 5 நாய் வாலுக்கும் 6 வழங்குமாயினும் சிறப்பாக மயிலுக்கே உரியதாகும்; ஆதலால், மயிலைத் தோகை யென்றே பண்டையோர் பெரிதும் வழங் கினர். பண்டு தமிழகத்துக்கும் மேலை யவனநாட்டுக்கும் நடந்த வணிகப்பொருள்களுள் ஒன்றாகிய மயில் யவனர்களால் தொகி7 என்றே அவர்கள் குறிப்பில் எழுதப்பட்டுள்ளது. வானமாமலையி லிருந்து மேலைக் கடற்கரைப்பகுதியில் வீழ்ந்தோடும் வானி யாற்றின் கரைமருங்கு நின்ற சோலைகளில் மயில்கள் மிக வாழ்ந்தமைபற்றி அங்கிருந்த பேரூர் தோகைக் கா 8 என்று பெயர்பெற்று விளங்கிற்று. வானியாறு இப்போது சிராவதி யென்றும்; தோகைக்கா ஜோக் 9 என்றும் வழங்குகின்றன.

இத்தோகையை மயில் விரிக்கவும் சுருக்கவும் கூடும். மயிலின் வனப்பு அது தன் தோகையை விரித்துக் கொண்டு ஆடும்போது தான் விளங்கித் தோன்றும். “மிசைபடு சாந்தாற்றி போல எழிலி, இசைபடு பக்கம் இருபாலும் கோலி, விடுபொறி மஞ்ஞை பெயர்புடன் ஆட, விரல்செறி தூம்பின் விடுதுளைக் கேற்ப, முரல்குரல் தும்பி அவிழ்மலர் ஊத, யாணர் வண்டினம் யாழிசை பிறக்கப், பாணி முழவிசை அருவிநீர் ததும்ப, ஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும், இரங்கும் முரசினான் குன்று1” என்று நல்லச்சுதனார் பரிந்து பாடுவது காண்க.
மயில்கள் தோகையை விரித்துக்கொண்டு அங்கு மிங்கும் அசைந்து நடந்து இயலும் இக்காட்சி காண்பார்க்கு மிக்க இன்பம் தருவதொன்று. நின்றாங்கு நில்லாது நடந்து கொண்டே யிருப்பது மயில் ஆடுவது போலத் தோன்றலின், யாவரும் “மயில் ஆடுகிறது” என்றே கூறுவர். வானத்தில் மழைமுகில் எழுந்து பரக்கும்போதும், மழை பொழிந்த பின்னரும் மயில்களுக்கு ஆடற்கண் விருப்பமுண்டாகிறது. ஒரோவழித் தன் காதற் பெடையின் கருத்தை ஈர்ப்பதற்கு இந்தக் களியாட்டத்தை மயிற்போத்து மேற்கொள்ளுகிறது; “வான்தளி பொழிந்த காண் பின் காலை, அணிகிளர் கலாவம் ஐதுவிரித் தியலும், மணிபுரை எருத்தின் மஞ்ஞை 2” எனச் சான்றோர் கூறுவது காண்க.

நீண்ட தோகையைத் தாங்கிக்கொண்டு மயில் அசைந்த நடையிட்டு செல்வது நல்லியல்பு படைத்த இளமங்கையரின் இனிய நடையொத்திருக்கும். இது பற்றியே, “கல்வ மஞ்ஞையிற் காண்வர இயலி 3” “மயில்கண் டன்ன மடநடை மகளிர் 4” “மடமயி லன்னஎன் நடைமெலி பேதை 5” என அறிஞர் பலரும் அறிந்துரைக்கின்றனர்.

இம்மயில்களைக் கானவர் வலைவைத்துப் பிடிப்பர். அக் காலை அதனைக் காண்பார்க்கு மிக்க வருத்தம் உண்டாகும். “ஓரி முருங்கப் பீலி சாய, மயில் வலைப்படுவதை 6” முன்னை யோர் நன்கு கூறியுள்ளனர். மயில்கள் பாம்புகளைக் காணில் விடாது தொடர்ந்து சென்று கொல்லும்; அவற்றுள்ளும் கொடு நஞ்சு படைத்த நாகத்தைக் காணின், “அதனைப் படம்விரிக்கப் பண்ணிக் குத்திக் கொல்வதில் மயில் பெருங்கிளர்ச்சி கொள் கிறது7” “பாகற்கொடியில் பழுத்திருக்கும் சிவந்த கனிகளை யுண்பதில் அவற்றிற்கு விருப்பம் மிகுதியுமுண்டு 8” என்பர். செல்வர் மனைகளில் இம்மயில்களை வளர்ப்பது பெருவழக்காக இருந்தது. இப்போது இவற்றின் தொகை குறைந்து வருவது யாவரும் அறிந்த தொன்று.

    291.    மயில்க ளாலக் குடிஞை யிரட்டும்  

துறுகல் லடுக்கத் ததுவே பணைத்தோள்
ஆய்தழை நுடங்கு மல்குற்
காதலி யுறையு நனிநல் லூரே.

இது, வரைவிடைவைத்துப் பிரிந்து மீள்கின்ற தலைமகன் சொல்லியது.

** பழைய உரை :**
மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும் என்றது, தான் அயரும் வதுவைச் சிறப்புக் கூறியவாறு.

** உரை :**
பருத்த தோள்களையும் மெல்லிய தழையணிந்து நுடங்கும் அல்குலையு முடைய எம் காதலி உறையும் மிக்க நன்மை பொருந்திய ஊர், மயில்கள் ஆடக் குடிஞைப் புள்ளாகிய பேராந்தை முதலியவைகள் ஒலி செய்யும் துறுகற்கள் நிறைந்த மலைப்பக்கத்தது காண் என்றவாறு.

ஆலுதல் - ஆடுதல். குடிஞை - பேராந்தை; மக்கள் வழங் குதல் அரிதாகவுள்ள மலைப்பாறைகளிலும் பாலை நிலங்களிலும் வாழ்வது. இதன் குரல் குறுந்தடி கொண்டு அறையப்படும் சிறுபறை யோசை போல் இருப்பதுபற்றி, “உருள்துடி மகுளியிற் பொருள்தெரிந் திசைக்கும், கடுங்குரற் குடிஞை 1” என்றும், “விரலூன்று படுகண் ஆகுளி கடுப்பக், குடிஞை யிரட்டும் நெடுமலை யடுக்கத்து 2” என்றும் சான்றோர் கூறுப. இதனால், மயிலினது ஆடற் கேற்பக் குடிஞையின் குரல் சிறுபறை கொட்டு வது போல இசைக்கும் என்பதாயிற்று. நல்லூர் துறுகல் அடுக் கத்தது என இயையும்.

பிரிந்து மீள்கின்ற தலைமகற்குச் சேய்மைக்கண் தோன்றுவது துறுகல் லடுக்க மாகலின், அதனையே எடுத்து ஓதலுற்றவன், மயில்கள் ஆலுவது கண்டு பின்னர்க் குடிஞை இரட்டுவது கேட்டலின், அம்முறையே மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும் என்றான். ஒலியினும் ஒளி விரைந்து செல்வதாகலின், இது முறையாயிற் றென அறிக.

பிரிந்த காலையில் தலைமகளை இரவுக்குறிக்கண் தலைப் பெய்து கண்டமை நினைவுக்கு வருதலால், கருமுகில் பரந்த இருவிசும்பின்கண் மீனும் மதியமும் தோன்றா வகையிற் பேரிருள் நிறைந்த நள்ளிரவில், வேல் கோலாக, பேராந்தைகள் அலறக் கல்லதர் கடந்து சென்று குறியிடத் தெதிர்ப்பட்டுத் தலைமகளைக் கூடிய செய்தியை மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும் துறுகல் அடுக்கத் ததுவே என்றும், கூடியவழித் தன்னை ஆர்வத்தோடு தழுவி வரவேற்ற அவள் தோளைச் சிறப்பித்துப் பணைத்தோள் என்றும் கூறினான். களவின்கண் இன்பம் மிகுமாறு ஒழுகிய ஞான்று, தன்மேற் கொண்ட காதலால் தன் குறிப்பின்வழி ஒழுகியவள் உறையும் ஊராகலின், நல்லூர் என்றும், அன்னவள் இனிக் கற்பின்வழி நின்று இல்லிலிருந்து புரியும் நல்லறத்திற்குத் துணையாகும் மிகுநலம் குறித்து, நனிநல்லூர் என்றும் கூறினானாம். இனித் தன் காதலி யுறையும் ஊராகலின், நல்லூர் என்றும், அவளைத் தன் வாழ்க்கைத் துணையாக வரைந்து இன்புறும் வேட்கை மிகுதலால், நனிநல்லூர் என்றும் கூறினான் எனினுமாம்.

    292.    மயில்க ளாலப் பெருந்தே னிமிரத்  

தண்மழை தலைஇய மாமலை நாட
நின்னினுஞ் சிறந்தன ளெமக்கே நீநயந்து
நன்மனை யருங்கடி யயர
எந்நலஞ் சிறப்பயா மினிப்பெற் றோளே.

இது, பின்முறை யாக்கிய பெரும்பொருள் வதுவை முடித்தவளை இல்லத்துக் கொண்டு புகுந்துழித் தலைமகள் உவந்து சொல்லியது.

** பழைய உரை :**
மழைப்பருவம் வேண்டி யிருக்கின்ற மயில்கள் ஆலத் தேன்கள் இமிர மழை பெய்யும் நாட என்றது யாங்கள் கருதி யிருக்கின்ற பெரும்பொருளை உவப்ப முடித்தனை என்றவாறு.

** உரை :**
மயில்கள் ஆலப் பெரிய வண்டினம் ஒலி செய்யக் குளிர்ந்த மேகங்கள் மழைபெய்யப்பட்ட பெரிய மலை நாடனே, நீ விரும்பி நம் நன்மனைக்கட் கொணர்ந்து பெறுதற்கரிய பெரும்பொருள் வதுவை செய்தலால் எமது நலமும் மிகு தலின், இப்போழ்து யாம் தங்கையாகப் பெற்ற இவள் எமக்கு நின்னினும் சிறப்புடைய ளாயினள் என்றவாறு.

பெருந்தேன் - பெரிய வண்டினம். தேனென்னும் சொல் தேனுண்ணும் வண்டிற்கும் பொதுவாகிய பெயராகலின், ஈண்டு இமிர என்னும் முடிக்குஞ் சொல்லால் பொதுமை நீங்கினமை அறிக. “பெருந்தேன் இழைக்கும் நாடன் 1” என இச்சொல் தேனைக் குறிப்பது காண்க. அருங்கடி, ஈண்டுப் பின்முறை ஆக்கிய பெரும்பொருள் வதுவை. பெற்றோள், “செயப்படுபொருளைச் செய்தது போல 2” உரைக்கும் வாய்ப்பாடு; “இல்வாழ்வான் என்பான் 3” என்றாற்போல.

“பின்முறை யாக்கிய பெரும்பொருள் வதுவை” என்பது, முன்னர் எய்திய வதுவைமனைவிக்குப் பின்னர் உலகியல் அமைதி குறித்தும், மகப்பேறு குறித்தும் முறையாற் செய்துகொள்ளப்படும் பெரிய பொருளாகிய வதுவையாகும்; அஃதாவது இரண்டாம் மனைவி.

உலகியலில், மக்கள், இளமையில் பெற்றோரைச் சார்ந்தும், முதுமையில் மக்களைச் சார்ந்தும் வாழும் திறத்தால் ஏனை உயிரினங்களினும் வேறுபடும் சிறப்புடையர். ஏனை உயிரினங் கள் யாவும் இளமை கழிந்ததும் பெற்ற உயிரோடு ஒருபற்று மின்றி மீளாப் பிரிவுற்று நீங்கும். இவ்வகையில் முதுமைக் காலத்துப் பற்றுக்கோடாம் வகையில், மக்கட்பேறு பொருட் பேறு போல் இன்றியமையாதாயிற்று. திருவள்ளுவரும் “தம் பொருள் என்ப தம் மக்கள் 4” என்றும், முதுமைக்கண் தம்மைப் பெற்றோர்க்குத் தாம் பற்றுக்கோடாதல் கடன் என்பது அறிந் தொழுகும் மக்கட் பேற்றின் மாண்பினை, “பெறுமவற்றுள் யாம் அறிவதில்லை அறிவறிந்த, மக்கட்பேறு அல்ல பிற 1” என்றும் உரைத்தருளுவது காண்க. தன் வாழ்க்கைத்துணையாகிய தலைமகள்பால் மக்கட்பேறு இல்லையாயின், அது குறித்து வேறொருத்தியைப் பின் முறையாக வதுவை செய்து கோடல் உலகியல் அமைதியாயிற்று. மக்கட்பேறெய்தியபின் வேறொருத்தி மனையாட்டியாதல் தமிழ்மரபன்று; பிறர் உளராயின், அவர் அனைவரும் இற்பரத்தையர் எனப்படுவர். அவர் பெறும் மக்கள் முதுமைப் பற்றுக்கோடாம் கடப்பாடுடைய ரல்லர் என்பது தமிழ்நூன் முடிபு. இற்பரத்தையர் பொதுமகளிராகாது ஒருவற்கே உரிமையானவர் என்பது பற்றிப் பிற்காலத்தார் அவர்களை உரிமை மகளிர் என்று குறிப்பாராயினர்.

நல்லறம் புரியும் இல்ல மாகலின், நன்மனை என்றும், பெரும்பொருளாகிய மக்கட்பேறு கருதியதும், பயில நிகழாது மிக அருகியது மாகிய வதுவையாகலின். அருங்கடி என்றும், இப் பின்முறை வதுவை பெருங்குலக் கிழத்தியுடன் தானும் ஓருயிர்க் கீருடம்பாய் ஒன்றுபட்டு ஒழுகுதலால் எய்த லாகும் சிறப்பு நோக்கி, எம்நலம் சிறப்ப என்றும், பிரிதலும் கூடுதலும் பொருந்திய நின் கேண்மையினும், என்றும் பிரிதலில்லாத கேண்மையுடையளாவாள் இவள் என்பாள், நின்னினும் சிறந் தனள் எமக்கே என்றும் கூறினாள். இதனாற் பயன் தலைவன் இப்பெற்றியாளைக் கைவிட்டுப் பரத்தைமை செய் தொழுகுவது நினைந்து, பரத்தைமையைக் கையொழித்துப் பிரியாக் காதல னாவது. இது “பின்முறை யாக்கிய பெரும் பொருள் வதுவைத், தொன்முறை மனைவி எதிர்பாட 2” டின்கண் நிகழ்த்தும் கூற்று. அஃதாவது, அப் புதுமணமகளைத் தொன்முறை மனைவி விளக்கு முதலிய மங்கலங்களைக் கொண்டு எதிரேற்றுக் கொள்வாள் மகிழ்ந்து கூறுவதாம்.

மயில் ஆலுவதும், தேன் இமிருவதும், மழை பெய்வதும், என்னுமிவை, பெரும்பொருள் வதுவைக் காலத்து மக்கள் மகிழ்ச்சி மிக்குக் குரவையாடலும், இன்னியம் பல இசைத்தலும், பெரும்பொருள் வதுவை கொண்ட மகட்கும் பிறர்க்கும் தலை மகள் அருள் செய்வதும் சுட்டி நின்றன.

நின்னினும் சிறந்தனள் எமக்கே என்றது, பிரிவாற்றாமை. அருங்கடி யயர, எந்நலம் சிறப்ப என்றது, அருண்மிக வுடைமை.

    293.    சிலம்புகமழ் காந்த ணறுங்குலை யன்ன  

நலம்பெறு கையினென் கண்புதைத் தோயே
பாய லின்றுணை யாகிய பணைத்தோள்
தோகை மாட்சிய மடந்தை
நீயல துளரோவென் னெஞ்சமர்ந் தோரே.

இது, பகற்குறியிடம் புக்க தலைமகன் தலைவி பின்னாக மறையவந்து கண்புதைத்துழிச் சொல்லியது.

** பழைய உரை :**
நீயலது உளரோ என் நெஞ்சமர்ந் தோரே என்றது, நீ யல்லது பிறர் உளராயினன்றே நான் கூறுவது அறிதல் வேண்டிக் கண் புதைக்கற்பாலது? அஃது இல்லாதவழிப் புதைப்பது என்? என்று அவள் பேதைமை யுணர்த்தியதாம்.

** உரை :**
சிலம்பின்கண் மணம் வீசுகின்ற காந்தளினது நறிய பூங்குலை போலும் அழகுபெற்ற கைகளால் என் கண்களைப் புதைத்தோய், உறக்கத்திற்கு இனிய துணைவியாகிய பருத்த தோள்களையும் மயில்போலும் மாட்சிமையுமுடைய மடந்தை யாகிய நின்னைத் தவிர என் னெஞ்சத் தமர்ந்த காதலர் வேறுளரோ? இலரன்றே என்றவாறு.

காந்தள் குறிஞ்சிநிலப் பூவாகலின், சிலம்பு கமழ் காந்தள் எனப்பட்டது. “நறுந்தண் சிலம்பின் நாறுகுலைக் காந்தள் 1” என்பது காண்க. காந்தள் எனப் பொதுப்படக் கூறியவதனால், சிறப்புடைய செங்காந்தட்பூக் கொள்ளப்பட்டது. இதன் பூக்கள் குலைகுலையாய்த் தோன்று மென்பது, “குருதிப்பூவின் குலைக் காந் தட்டே 2” என்றும், “மலைச் செங்காந்தள் 3” என்றும் சான்றோர் குறிப்பது காண்க.

காதலர் இருவர் ஒருவரை யொருவர் எதிர்நோக்கி நின்று கூடுமிடத்து, அவ் வெதிர்நோக்கி நின்றாரைப் போதந்து கூடு வோர் அவரறியாமைப் போந்து கண்புதைத்துக் கூடி மகிழ்தலை, “நின்றோ ளெய்திக், கைகவியாச் சென்று கண்புதை யாக் குறுகிப், பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித், தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ 1” எனப் பிறரும் கூறுதல் காண்க.

மகளிர் கைக்குக் காந்தளை உவமை கூறல் மரபு; “கைபோற் பூத்த கமழ்குலைக் காந்தள் 2” என்று சான்றோர் உரைப்பர். பாயல் இன்றுணை, உடன்கிடந்து உறங்குதற்கு இனிய துணை; “இவள் பழன வூரன் பாயல்இன் றுணையே 3” எனப் பிறரும் கூறுவர். காதலன் தன் கூந்தலிற் கிடந்து உறங்குதலை மகளிரும் விரும்பு வர்; “பயிலிருங் கதுப்பின் பாயலும் உள்ளார் 4” எனப் பிரிவிடை வருந்தும் ஒருத்தி கூறுதல் காண்க. மாட்சி - சாயல்; தோகைக்கு மாட்சி அதுவாகலின். தனக்குப் பின்னே போந்து தன் இரு கைகளாலும் கண்ணைப் புதைத்தவுடன், அவற்றை மெல்ல நீக்கித் தன் கையில் பற்றிக் கொண்டு பேசுதலின், காந்தள் நறுங்குலை யன்ன கை என்றும், அதனால் தனக்கு மிக்க இன்ப முண்டா தலின், நலம்பெறு கை என்றும், ஏனை அறிவு ஆண்மை வினைகட்குத் துணையாவாரின் நீக்குதற்குப் பாயல் இன் துணை என்றும், கண்ணகத்தேயன்றி என் நெஞ்சகத்தும் நின்னை யன்றிப் பிறர் எவரும் இலராதலை அறிந்திலைபோலும் என்றற்கு நீயலது உளரோ என் நெஞ்சமர்ந்தோர் என்றும், களவின்கண் தலைமகனிடத்தே பரத்தமை ஒழுக்கம் நிகழ்வதின்மையின் கண்புதைத்தோய் என்று எடுத்து மொழிந்து, வன்புறை தோன்ற நீயலது உளரோ என்றும் கூறினான்.

“வேளா ணெதிரும் விருப்பின்கண் 5” நிகழும் கூற்று. குறிவழிக் கண்டு கூறுதல் என்று கூறி, அவ்வழித் தலைவிக்குக் கூறியதாக இதனைக் காட்டி, இது தலைவி கண் புதைத்தவழித் தலைவன் கூறியது என்பர் இளம்பூரணர்.

“கரணத்தின் அமைந்து முடிந்த காலை 6” என்னும் சூத்திரத்து “எண்ணருஞ் சிறப்பின் கிழவோன் மேன” என்புழிச் “சிறப்பின்” என்றதனால் இதனைக்காட்டி யமைப்பர் நச்சினார்க்கினியர்.

    294.    எரிமருள் வேங்கை யிருந்த தோகை  

இழையணி மடந்தையிற் றோன்று நாட
இனிதுசெய் தனையா லெந்தை வாழியர்
நன்மனை வதுவை யயரவிவள்
பின்னிருங் கூந்தன் மலரணிந் தோயே.

இது, வதுவை செல்லாநின்றுழித் தலைமகற்குத் தோழி சொல்லியது.

** பழைய உரை :**
இனிது செய்தனையால் என்றது, வதுவையில் தலைவிக்கு மலரணியக் கண்ட தோழி “இவ்வாறு ஆம்படி அன்றே சூட்டினை” எனச் சொல்லியவாறாம்.

மலர்ந்த வேங்கைக்கண் இருந்த தோகை இழையணி மடந்தை யின் தோன்றும் நாட என்றது, நீ வரையா தொழுகுகின்ற ஞான்றும் நின் தமர் பொன்னணிந்த இன்று போலச் சிறப்ப ஒழுகினாய் என்பதாம்.

** உரை :**
நெருப்புப் போலும் மலர்களையுடைய வேங்கை மரத்தின் கண் இருந்த மயில் கலன்களை யணிந்த மகளிர் போலத் தோன்றும் நாடனே, நன்மனைக்கண் வதுவை நிகழும் இப் பொழுது இவளுடைய பின்ன லுற்ற கரிய கூந்தற்கண் மலரை யணிந்தனை; இதனைப் பண்டே செய்தனை யாயினும் இப் பொழுது இனிதே செய்தனையாகலின், எந்தையே நீ நெடிது வாழ்க என்றவாறு.

வேங்கையின்பூ நெருப்புப் போலும் நிறமுடைமை பற்றி எரிமருள் வேங்கை என்றார்; பிறரும் “எரியகைந் தன்ன வீததை யிணர, வேங்கையம் படுசினை 1” என்றும், “அழற்சினை வேங்கை 2” என்றும் கூறுதல் காண்க. உயரிய மரஞ்செடிகள் அடர்ந்த பெருமலைகளில் வாழும் இயல்பின வாதலின், அங்கே பருத்து உயர்ந்து நிற்கும் வேங்கைமரங்களில் மயில்கள் காணப்படுவது கொண்டு, வேங்கைக்கண் இருக்கும் மயிலை விதந்து கூறினார். பிறாண்டும் “விரிந்த வேங்கைப் பெருஞ்சினைத் தோகை 3” என்றும், பிறரும், “நன்னாள் பூத்த நாகிள வேங்கை, நறுவீ யாடிய பொறிவரி மஞ்ஞை 1” என்றும் கூறுவர். அந்நிலையில் அம்மயில் களின் தோற்றம் வயங்கிழை அணிந்த மகளிர் போல இருக்கும் என்பார், தோகை இழையணி மடந்தையின் தோன்றும் என்றார். பிறிதோர் இடத்தும், “வேங்கைப் பெருஞ்சினைத் தோகை, பூக்கொய் மகளிரின் தோன்றும் 2” என்பது காண்க. நாட, அணிந் தோய், இனிது செய்தனை; நுந்தை வாழியர் என இயைக்க.

“பெற்றோற் பெட்கும் பிணையை யாகென” முதுமகளிர் வாழ்த்த, “பேரிற் கிழத்தி ஆகுக எனத் தமர்தர 3” அவரும் பிறரும் அறியத் தலைமகன் தலைமகள் கூந்தலில் மலர் சூட்டித் தன் பெண்டெனப்படுத்தல் கண்டு மகிழ்பவள், பின்னிருங் கூந்தல் மலரணிந்தோய் என்றும், பண்டு களவின்கண் இது செய்தா யாயினும் ஆண்டு அது நினக்கும் இவட்கும் இனிது; ஈண்டு நுமக்கே யன்றித் தமர்க்கும் பிறர்க்கும் இனிதாயிற் றென்பாள், இனிது செய்தனையால் என்றும், இவ்வகையால் இங்கே கால் கொள்ளும் அன்பும் அறமும் நும் வாழ்க்கையின் பண்பும் பயனுமாய் நெடிது வாழ்க என்றற்கு எந்தை வாழியர் என்றும் கூறினாள். அன்பானும் அறத்தானும் சிறந்த தலைமகனது அருள் நிழலில் வாழ்பவ ளாதலின், வழிபாட்டு முறைபற்றி எந்தை என்றாள். “இனிது செய்தனையால் எந்தை வாழிய, பனிவார் கண்ணள் பலபுலந் துறையும், ஆய்தொடி யரிவை கூந்தற், போதுகுர லணிய வேய்தந் தோயே 4” எனப் பிறாண்டும் தோழி கூறுவது காண்க.

“பெறற்கரும் பெரும்பொருள் முடிந்தபின் 5” என்ற சூத்தி ரத்து, “அற்றமழி வுரைப்பினும்” என்புழி நிகழும் கூற்றுக்கு இதனை உதாரணமாக்குவர் இளம்பூரணரும் நச்சினார்க் கினியரும்.

நுந்தை வாழியர் என்றும் பாடமுண்டு; அதற்குத் தலை மகனைத் தலைக்கூடிய ஞான்று தோன்றிய அன்பிற் குன்றாது அறத்தாற்றின்கண் ஒழுகிய தலைமகனது சான்றாண்மை கண்டு வியக்கின்றவள், அதற்கு ஏதுவாகிய அவன் தந்தையை விதந்து நுந்தை வாழியர் என்றாள் எனக் கொள்க.

    295.    வருவது கொல்லோ தானே வாரா  

தவணுறை மேவலி னமைவது கொல்லோ
புனவர் கொள்ளியிற் புகல்வரு மஞ்ஞை
இருவி யிருந்த குருவி வருந்துறப்
பந்தாடு மகளிரிற் படர்தரும்
குன்றுகெழு நாடனொடு சென்றவென் னெஞ்சே.

இது, தலைமகன் வரைவிடை வைத்துப் பிரிந்து நீட்டித்துழி, உடன்சென்ற நெஞ்சினைத் தலைமகள் நினைந்து கூறியது.

** பழைய உரை :**
புனவர் கொள்ளிக்கு அஞ்சித் தன் புகலிலே செல்லும் மயில் புனம் கொய்த பின்பு அரிதாளிலே இருந்த குருவி எழுவது விழுவதாய் வருந்துறச் சிறகை விரித்து ஆடிச் செல்லும் நாடன் என்றது, பின்பு வரைந்து கொள்ளக் கருதாதே அலரஞ்சித் தன் மனைவயிற் சென்றவன் இக்காலத்து யானும் என் ஆயத்தாரும் வருந்துறப் பிரிந்தான் என்பதாம்.

** உரை :**
புனத்தில் வாழ்வாரது நெருப்புக் கொள்ளிக்கு அஞ்சித் தனக்குரிய புகலிடம் நோக்கிச் செல்லும் மயில், புனங்கொய்த பின்பு அரிதாளிலே இருந்த குருவி வருந்தச் சிறகை விரித்துப் பந்தாடும் மகளிரைப் போல, அசைந்தாடிச் செல்லுங் குன்றுகள் பொருந்திய நாடனொடு சென்ற எனது நெஞ்சம் வருவதாகுமோ, அன்றி வாராது அவ்விடத்தே உறைதலை விரும்பி அமையுமோ? யாதோ? அறிகிலேன் என்றவாறு.

உறை - உறைதல்; முதனிலைத் தொழிற்பெயர். மேவல்- விரும்புதல். வரற்பாலது வாராதாயின் அதற்கு ஏது வேண்டுத லின், அவணுறை மேவலின் என்பா ராயினர். புனவர்-தினைப் புன முடையோர்; மருதநிலத்துக் காணியாளர் போல. புகல்- புகலிடம். நாடன் இன்னுயிர்க் காதல னாகலின், ஒருவினை ஒடு உயர்பின் வழித்தாயிற்று. புனவர் கொள்ளியாவது புன்புலத்தை மயக்கித் தினை முதலிய வித்திப் பயன்பெறுதற்பொருட்டுப் புலத்தில் நின்ற காட்டைக் குறவர் தீயிட்டுக் கொளுத் தும் நெருப்பு. புகல் - விரும்பி யுறையுமிடம். தினையரிதாளில் தழைத்த பயிரின்கண் தோன்றும் புல்லிய கதிர்களையும் புழு பூச்சிகளையும் மேய்ந்துண்ணும் சிறுபுள்ளினத்தை, இருவி யிருந்த குருவி என்றார். துள்ளியும் தொடர்ந்தும் ஓடும் பந்தின் வழி அதனை யாடும் மகளிர் அசைந்தோடி ஆடுதலின், தன் புகலிடம் நோக்கி நீண்ட தோகை அசைந்து செல்லும் இயைபு நோக்கி, பந்தாடு மகளிரின் என்றார். தானே என்றது கட்டுரைச் சுவைபட வந்தது.

தலைமகளும் “ஆயமொடு கெழீஇப், பந்துவழிப் படர்குவ1” ளாகலின், பந்தாடு மகளிரைக் கூறினாள், தான் பந்தாடும் பான்மைய ளாயினும் அஃதொழிந்து நெஞ்சழிந்து நின்றமையின். வருவது கொல்லோ, வாராது அவணுறை மேவலின் அமைவது கொல்லோ என்றது, ஆங்கு நெஞ்சழிதல். வருவது கொல்லோ என எண்ணினவள், வாராமைக்குரிய ஏதுக்கள் யாவையென ஆராய்ந்து, ஒருகால் தலைவர் அருளாமை யால் இவண் வந்து என் வேறுபாடு நோக்கி மருண்டு அவர்பாலே சென்று சேர்ந்ததோ, அன்றி, அவர்பால் என் உயிரையும் உடன் கொண்டு சேறற் குரிய நெறி ஆராய்கின்றதோ என எண்ணி, அவற்றை மறுத்து, “குன்ற நாடன், குடிநன் குடையன் கூடுநர்ப் பிரியலன், கெடுநா மொழியலன் அன்பினன் 2” எனத் துணிந்து அவன்பாலே இருந்து அவன் மேவனசெய்து இன்புறுகின்ற தாகல் வேண்டும் என்பாள், அவணுறை மேவலின் வாராது அமைவது கொல்லோ என்றாள். “தொன்னன் இழந்தவென் பொன்னிற நோக்கி, யேதி லாட்டி யிவளெனப், போயின்று கொல்லோ 3” என வேறுபாடு நோக்கி மருண்டமையும், “நாணினை நீக்கி உயிரோடு உடன்சென்று, காணப் புணர்ப்பதுகொல் நெஞ்சு 4” என உயிர்கொண்டு போதலைச் சூழ்ந்தமையும் தலைவி நினைக்குமாறு காண்க. இது, “கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை” என்றமையான், தன்னெஞ்சம் சென்று சேர்தல், “ஒரு சிறை நெஞ்சமொடு சாவுங்காலை, யுரிய தாகலும் உண்டென மொழிப 1” என்பதனால் அமையும்.
“மறைந்தவற் காண்டல் 2” என்ற சூத்திரத்துப் “பிரிந்தவழிக் கலங்கினும்” என்றதற்கு இதனைக் காட்டுவர் இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும்.

    296.    கொடிச்சி காக்கும் பெருங்குர லேனல்  

அடுக்கன் மஞ்ஞை கவரு நாட
நடுநாட் கங்குலும் வருதி
கடுமா தாக்கி னறியேன் யானே.

இஃது, இரவுக்குறி வருகின்ற தலைமகற்குத் தோழி ஆற்றருமை கூறி மறுத்தது.

** பழைய உரை :**
அறியேன் யான் என்றது, இதனால் விளைவன யான் அறியேன் என்பதாம்.

குறத்தி காக்கும் தினையை மஞ்ஞை கவரும் நாட என்றது, நின் நாட்டுக்குத் தக்க களவின் நுகர்ச்சியே விரும்புகின்றாய் என்பதாம்.

** உரை :**
கொடிச்சி யாகிய தலைமகள் காக்கும் பெரிய கதிர்களை யுடைய தினையை மலைப்பக்கத்தே வாழும் மயில்கள் கவரும் நாடனே, கங்குல் நடுநாளாகிய நள்ளிரவில் வருகின்றனை யாகலின், வரும் நெறியின்கண் அச்சம் பொருந்திய விலங்குகள் நின்னைத் தாக்கின், யாது விளையுமோ அறிகிலே னாகலின், இனி இரவுக்குறி வருதலைத் தவிர்க என்றவாறு.

கடுத்தல், அச்சப் பொருட்டாய கடியென்னும் உரிச் சொல்லடியாகப் பிறந்த வினை. கடுமா - யானை புலி முதலியன. தினைக்கதிரை மயிலுண்டல், “புனவன் துடவைப் பொன்போற் சிறுதினைக், கடியுண் கடவுட் கிட்ட சில்குரல், அறியா துண்ட மஞ்ஞை 3” என்பதனாலும் அறிக. உம்மை, பகற்குறிக்கண் வந்தமையும் தழுவி நிற்றலின் எச்சப்பொருட்டு; வரவருமை யுணர்த்தலின் சிறப்பும்மையுமாம்.

இரவுக்குறி வந்தானை அன்புடன் தழீஇக்கொண்டு இனி வாராவகை விலக்குகின்றாளாகலின், நடுநாட் கங்குலும் வருதி யென்றும், வரும்நெறி கடுமா வழங்கும் கொடுமை யுடையதெனத் தான் ஏதம் ஆய்ந்து வருந்துமாறு தோன்ற, கடுமா தாக்கின் என்றும், உடனே இறந்து படுதலை யன்றி வேறு செய்திறம் அறியேம் என்றற்கு அறியேன் யான் என்றும் கூறினாள். கடுமா தாக்கின் என்றது ஏதமாய்தல். அறியேன் யான் என்றது கலக்கம். இனி, கடுமா தாக்கின் அதனை நீ கொன்று வேறல் ஒருதலை யாயினும், அது செய்யும் முழக்கத்தால் தமர் நின் வரவறிவரேல் பெருந்தீங்கு விளையும்; “தாம் செத்து உலகாள்வார் இல்லை, அதுபோல இவ்வொழுக்கம் ஒழுகற்பாலீரல்லீர்” எனத் தோழி மறுத்தா ளென்றுமாம்.

கொடிச்சி காக்க விளங்கும் தினைக்குரலைப் பல இடை யீடுகட் கிடையே மஞ்ஞை கவரும் என்றதனால், தாயர் தந்தை யரது காவலில் சிறக்கும் தலைமகளது கூட்டத்தை இடை யீடின்றிப் பெறுதற்கு நீ விரைந்து வரைதல் வேண்டுமெனக் குறிப்பால் தோழி வரைவு கடாயினாள் எனக் கொள்க. பழைய வுரைகாரர்க்கும் இதுவே கருத்தாதல் அறிக.

    297.    விரிந்த வேங்கைப் பெருஞ்சினைத் தோகை  

பூக்கொய் மகளிரிற் றோன்று நாட
பிரியினும் பிரிவ தன்றே
நின்னொடு மேய மடந்தை நட்பே.

இஃது, ஒருவழித் தணந்து வரையவேண்டு மென்ற தலை மகற்குத் தோழி கூறியது.

** பழைய உரை :**
மலர்ந்த வேங்கைச் சினைக்கண் இருந்த தோகை மலர் கொய்யும் மகளிரைப் போலத் தோன்றும் நாட என்றது, நீ மனத்தால் எங்கட்கு நல்லது புரியா யெனினும் நன்மை செய்கின்றாய் போலத் தோன்றுகின்றாய் என்பதாம்.

** உரை :**
பூத்து விரிந்த மலர்களையுடைய வேங்கை மரத்தின் பெரிய கிளைகளிடத்தே தங்கிய மயில் பூக்கொய்யும் மகளிர்போலத் தோன்றும் நாடனே, நீ பிரிவாயாயினும் நின்னொடு பொருந்திய மடந்தையின் நட்புப் பிரிவென்ப தொன்று உண்டென உட்கொள்ளும் இயல்புடைய தன்று என அறிக என்றவாறு.

பூவின் விரிந்த பண்பினை வேங்கைமேல் ஏற்றி விரிந்த வேங்கை என்றார். “விரியிணர் வேங்கை 1” எனவும், “வேங்கை விரியிண ரூதி 1” எனவும் சான்றோர் உரைப்பது காண்க. வேங்கைக்கண் இருந்த மயில் பூக்கொய் மகளிர் போலத் தோன்று தலை, “அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை, மேக்கெழு பெருஞ்சினை யிருந்த தோகை, பூக்கொய் மகளிரின் தோன்றும் நாடன் 2” என வெள்ளிவீதி யார் பாட்டினும் வருதல் காண்க.

பிரிந்து சேறல் வேண்டு மென்னும் எண்ணம் நிகழ்தற்கு நின் நெஞ்சு இடம் தரினும் என்பாள், பிரியினும் என்றாள். இனிப் பிரிவது அன்றே என்புழி ஏகாரம் எதிர்மறையாகக் கொண்டு பிரிவதாம் எனவும், எனவே, மடந்தையது நட்பு நீ பிரியக் கருதினும் பிரிந்ததாகவே கொண்டு அவட்குப் பெருந்துயரைச் செய்யும் எனவும் உரைப்பினும் ஆம். நீ பிரிவா யாயினும் மடந்தையின் நட்புப் பிரிவை உட்கொள்ளும் இயல்புடைத் தன்று என்றதனால், அந் நட்புக் கந்தாக அவள் உயிர் வாழ்கின்றா ளென்றும், அப் பெற்றியாளைப் பிரிந்து உறைதல் நன்றன் றென்றும் கூறினாளாம்.

வேங்கைப் பெருஞ்சினைக்கண் தோகை வாளாது இருப் பினும் பூக்கொய்யும் மகளிர் போலத் தோன்றாநிற்கும் என்றது, நீ வரைவு கருதிப் பிரிதலை நினைந்தாய் ஆயினும் அஃது எமது உயிரைக் கொல்லும் செயல்போல எமக்குத் துயர்விளையா நிற்கிறது என உள்ளுறையால் செலவழுங்குவித்தவாறு.

பிரியா யன்றே என்பது பாடமாயின், நீ மெய்யாற் பிரியினும் மனத்தாற் பிரியாயன்றோ என்றவாறென்க.

    298.    மழைவர வறியா மஞ்ஞை யாலும் அடுக்க னல்லூ ரசைநடைக் கொடிச்சி தானெம் மருளா ளாயினும் யாந்தன் னுள்ளுபு மறந்தறி யேமே.  

இது, தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகட் குணர்த்திய வழி, அவள் நாணத்தினால் மறைத்தொழுகிய வதனைக் கூறக் கேட்ட தலைமகன் சொல்லியது.

** பழைய உரை :**
மழையினது வரவை அறிந்து மஞ்ஞை ஆலும் என்றது, யான் நின்னிடத்து வருகின்ற வரவினை யறிந்து இதற்கு அவள் மகிழா நிற்கும்; நீ கூறுகின்றது பொய் என்பதாம்.

** உரை :**
மழைவரவினை யறிந்து மயில்கள் ஆலுகின்ற மலைப் பக்கத்தாகிய நல்லூர்க்கண் வாழும் அசைந்த நடையினை யுடைய கொடிச்சியாகிய தலைமகள் எமக்குத் தன் அருளைச் செய்யா ளாயினும், யாம் அவளையே நினைந்து ஒருபோதும் மறந்தறியேம் என்றவாறு.

மழை - மழைமுகில். அறியா - செய்யா வென்னும் வாய் பாட்டு வினையெச்சம். கருமுகிற் கூட்டம் எழுந்து வானத்திற் பரந்து வருவது காணின் தோகைமயில், அதுபோது வரும் குளிர்காற்றால் உள்ளம் கிளர்ந்து தன் தோகையை விரித்து ஆடுவது இயல்பாதலால், மழை வரவறியா மஞ்ஞை ஆல என்றார். அடுக்கல் - பெருங்கற்கள் நிறைந்த குன்று.

தலைமகற்கும் தனக்கும் இயற்கைப்புணர்ச்சி வகையால் உண்டாகிய உறவினைத் தோழி அறிதற்கு நாணி வெளிப்படை யாகத் தலைவி குறைநேராளாகவே தோழி குறைமறுத்தமை பொறாது தான் எம் அருளா ளாயினும் என்றான். அருளா ளாயினும் என்றது, அருளாமைக்குரிய காரணம் யாதும் என்பால் இல்லை யென்பது பட நின்றது. அருளப்படுதற் குரிய தன் பெருங்காதலைத் தோழிக்கு உணர்த்தும் கருத்தால் யாம் தன்னுள்ளுபு மறந்தறியேம் என்றான். உள்ளுறையால் தலைவிக்கும் தனக்கும் முன்பே உளதாகிய உறவினைக் குறிப் பால் உரைத்தமையான், வெளிப் படையாக என்பால் உள்ளு தலும் மறத்தலும் இலவாயின என்றான். உள்ளுதல் - மறந்த தொன்றினை நினைவு கூர்தல். “உள்ளினே னென்றேன்மற்று என்மறந்தீர் என்று என்னைப், புல்லாள் புலத்தக்க னள் 1” என்பதனால் அறிக.

இதன்கண் முன்னது பண்பிற் பெயர்த்துழிக் கூறுதலும், பின்னது பரிவுற்று மெலிதலுமாம்; என்னை: “பண்பிற் பெயர்ப் பினும் பரிவுற்று மெலியினும், அன்புற்று நகினும் அவட்பெற்று மலியினும், ஆற்றிடை யுறுதலும் அவ்வினைக் கியல்பே 1” என்பவாகலின்.

மழைவரவு அறிந்து மயில்கள் ஆலுமாறு போல யான் வந்தன னென்பதை நின் தலைவி அறிந்தால் அருள்வந்த சொல்லும் செயலுமுடையளாவள் காண் என உள்ளுறை கூறியவாறு காண்க.

இது குறி பிழைத்தவழித் தோழிக்குச் சொல்லியது 2 என்பர். இளம்பூரணர். “பண்பிற் பெயர்ப்பினும் 3” என்ற சூத்திரத்துப் பரிவுற்று மெலி தற்கு மேற்கோளாகக் காட்டுவர் நச்சினார்க் கினியர்.

    299.    குன்ற நாடன் குன்றத்துக் கவாஅன் பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும் அஞ்சி லோதி யசைநடைக் கொடிச்சி  

கண்போன் மலர்தலு மரிதிவள்
தன்போற் சாயன் மஞ்ஞைக்கு மரிதே.

இஃது, இயற்கைப்புணர்ச்சி புணர்ந்து நீங்கிய நிலைமைக் கண் தலைமகள் ஆயவெள்ளத்தோடு கூடி நிற்கக் கண்ட தலைமகன் மகிழ்ந்த உள்ளத்தனாய்த் தன்னுள்ளே சொல்லியது.

** பழைய உரை :**
குன்றநாடன் என்றது, அந்நிலத்துக்கு உரியனாகிய முருகனை.

** உரை :**
குன்றுகளையுடைய நாடன் குன்றுகளின் சாரலி லுள்ள பசிய சுனைக்கட் பூத்த அகன்ற வாயை யுடைய குவளைமலர் தானும், அழகிய சிலவாகிய கூந்தலையும் அசைந்த நடையினையுமுடைய கொடிச்சியாகிய தலைமகளின் கண் போல மலர்தல் அரிது; இவளைப்போலும் சாயலைப் பெறு தல் மயிலுக்கும் அரிது என்றவாறு.

குன்ற நாடன் - முருகன். கவாஅன் - மலைப்பக்கம். குன்றத்துக் கவாஅன் எனப் பெயர்த்தும் கூறியதனால், குன்ற நாடன் என்றது வாளா பெயராய் நின்றது. ஏனைத் தாமரையும், ஆம்பலும் போலக் குவியாது விரிய மலர்ந்து நிற்கும் அகவிதழ் உடைமையின், பகுவாய்க் குவளை என்றார். சாயல் - மென்மை. குவளை கண்போல மலர்தலும், மயில் சாயல் பெறு தலும் பொதுவியல் பாகலின், இரண்டையும் எடுத்தோதினார். இஃது ஒரீஇக் கூறிய வெளிப்படை யுவமம். தலைமகளின் கண் களையும், சாயலையும் உயர்த்திக் கூறுவது கருத்தாகலின் பட் டாங்கு உவமம் கூறும், “உவமத் தன்மையும் உரித்தென மொழிப, பயனிலை புரிந்த வழக்கத் தான 1” என்புழி அடங்கா தாயிற்று.

குன்றுகள் நிறைந்த குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் சிறப்புற விரும்பும் குன்றம் என்றற்குக் குன்றநாடன் குன்றம் என்றும், அவன் தோன்றி வளர்தற்கு இடமாய்ச் சிறந்த சுனை என்றற்கு குன்றத்துக் கவாஅன் பைஞ்சுனை என்றும் உயர்த்துக் கூறியது, தான் வேண்டிய உயர்வு முடித்தற்கு. முருகற்குரிய சுனை யாயினும், ஆண்டுப் பூத்த குவளைதானும் இவளது கண்போல மலரு மாயினும் காதற்குறிப்பை யுணர்த்தும் கவினுடையது அன்மையின் நிகராதல் இல்லை யென்பான், கண்போல் மலர்தலும் அரிது என்றான். “காணிற் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும் மாணிழை நோக்கொவ்வேம் என்று 2” என்று சான்றோர் கூறுதல் காண்க. செவ்வேள் விரும்பி யூரும் சிறப்புப் பெற்றதாகலின், அவன் குன்றத்து வாழும் மயிற்கு இவளது சாயல் பெறுவது இயலு மாயினும், புணர்ச்சிக்குரிய மென்மை சான்ற சாயல் பெறல் அரிது என்றற்கு இவள் தன்போற் சாயல் மஞ்ஞைக்கும் அரிது என்றான். இஃது அவட் பெற்று மலிதல்.

“மெய் தொட்டுப் பயிறல் 3” என்றவிடத்து, “தோழி குறை யவட் சார்த்தி மெய்யுறக் கூறலும்” என்புழி இஃது இருவரும் உள்வழி வந்த தலைவன், தலைவியின் தன்மை கூறவே, இவள் கண்ணது இவன் வேட்கை என்று தோழி குறிப்பான் உணரக் கூறியது என்பர் நச்சினார்க்கினியர்.

    300.    கொடிச்சி கூந்தல் போலத் தோகை  

அஞ்சிறை விரிக்கும் பெருங்கல்
வந்தன னெதிர்ந்தனர் கொடையே
அந்தீங் கிளவி பொலிகநின் சிறப்பே.

இது, தலைமகன் றானே வரைவு வேண்டிவிடச் சுற்றத்தார் கொடை நேர்ந்தமை தலைமகட்குத் தோழி சொல்லியது.

** பழைய உரை :**
கொடிச்சி கூந்தல் போறல் வேண்டி மஞ்ஞை சிறகை விரிக்கும் வெற்பன் என்றது நின் மகிழ்ச்சிக்குத் தக நின் தமர் மகிழ்ச்சி கூர்ந்தார் என்பதாம்.

** உரை :**
கொடிச்சி யாகிய குறமகளின் கூந்தல் போலுமாறு மயில் தன் அழகிய சிறகுகளை விரித்து ஆடும் பெரிய கற்கள் நிறைந்த மலையையுடையனாகிய தலைமகன், தானே மகட்கொடை வேண்டி வந்தானாக, நமர் அது நேர்ந்தன ராகலின், அழகிய இனிய சொற்களையுடையாய், இனி நின் சிறப்பு மேம்படுமாக என்றவாறு.

கொடிச்சியின் சாயல் தன்னொடு நிகர்த்தல் கண்டு அமை யாது மயில் அவளது கூந்தல் போலுமாறு தன் தோகைக்கண் உள்ள சிறகை விரித்துத் தோன்றும் என்பாள், தோகை அஞ்சிறை விரிக்கும் என்றார். கொடை எதிர்ந்தனர் என்றது மகட் கொடை வேண்டி வந்த தலைமகனுக்குத் தலைமகளை நேர்ந்தார் என்பதாம். சிறப்பு, “கற்பும் காமமும் நற்பா லொழுக்கமும், பிறவு மாகிய மாண்புகள் 1”.

எதிர்ந்தனர் கொடையே என்றது தலைமகள் ஏக்கற் றிருந்தமை யுணர நின்றது. இனி, இல்லறம் புரிந்து மக்களொடு துவன்றிச் சிறந்தது பயிற்றல் சிறப்பாகலின், பொலிக நின் சிறப்பே என்றாள் என்றும், நீ அவன் பிரிவால் இழந்த நலம் பெற்று ஏனை அலர்கூறுவார் வாயடங்க வதுவை நன்மணம் பெற்று வாழ்க்கைச் சிறப்பு எய்துவாயாக என்றா ளென்றுமாம்.

ஆசிரியர் கபிலர் பாடிய குறிஞ்சி முற்றும்.
1. தொல். பொ. 51. A.R. 90 of 1907.
2. A.R. 124 of 1907.
1. S.I.I. Vol. vii. NO. 863.

2.  வையாவி என்பது ஆவியர் என்னும் குடிவகையின் ஒருகிளை. ஆவிநாடு, பழனித் தாலூகாவில் அமராவதி ஆற்றின் கீழ்க்கரையையும் திண்டுக்கல்லுக்குச் சிறிது மேற்கிலுள்ள குன்றையும் எல்லையாகக் கொண்டது; ஆவியர் வாழ்ந்த ஆவிகுடி ஆவிநன்குடி எனப்படும். ஆவி நன்குடி பிற்காலத்தே பழனி யாயிற்று; ஆவிகுடி ஆயக்குடி என மருவிவிட்டது. பழனியை வையாபுரி என்பது வையாவிபுரி என்பதன் சிதைவு. பழனியிலுள்ள சிற்றேரியை வையாவி என்று இன்றும் வழங்குகின்றனர்.
3.  அகம். 2.
4.  அகம். 82.
    2.  அகம். 332.
5.  அகம். 382.
6.  அகம். 248.
7.  அகம். 292.
8.  அகம். 248.
9.  ஐங். 101.
10. தொல்.பொ. 123.
11. தொல்.பொ. 246.
12. அகம். 232.
13. தொல்.பொ. 112.
14. தொல்.பொ. 207.
15. தொல். பொ. 246.
16. புறம். 310.

17. த.நா. ச. 217 இன்றும் சில வைதிகப் பார்ப்பனரிடத்தே இஃது இருந்து வருவதைத் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற் காவிரியின் வடகரை ஊர்களில் காணலாம்.
18. குறள். 1121.
19. தொல்.எழுத்து. 231.
20. தொல்.சொல். 457.
21. நற். 110. 2. குறுந். 56.
22. தொல்.பொ. 42.
23. தொல்.சொல். இளம். 39.
24. நற். 77.
25. அகம். 314.
26. தொல்.பொ. 124.
27. அகம். 40.
28. குறுந். 73.
29. நற். 94.
30. தொல்.பொ. 112
31. குறள். 1185.
32. அகம். 252.
33. புறம். 22.
34. மதுரை. 635-6.
35. தொல்.பொ. 246.
36. ஐங். 208.
37. அகம். 52.
38. அகம். 378.
39. குறுந். 249.
40. தொல். பொ. 45.
41. குறுந். 82.
42. அகம். 294.
43. அகம். 272.
44. குறள். 11.
45. அகம். 242.
46. அகம். 5.
47. ஐங். 187.
48. தொல்.பொ. 112.
49. பதிற். 87.
50. குறுந். 284.
51. ஐங். 61.
52. நற். 372.
53. தொல்.சொல். 460.
54. சிலப். 11 : 64 - 6.
55. நற். 116.
56. குறுந். 392.
57. நற். 25.
58. நற். 17.
59. தொல்.பொ. 281.
60. குறிஞ். 43. உரை.
61. குறள். 478.
62. தொல்.பொ. 604.
63. நற். 36.
64. ஐங். 266.
65. தொல்.பொ. 112.
66. நற். 257.
67. புறம். 224.
68. கலி. 10.
69. ஐந். எழு. 41.
70. குறுந். 260.
71. அகம். 221.
72. தொல்.பொ. 114.
73. நற். 168.
74. முருகு. 27 - 8.
75. புறம். 202.
76. தொல்.பொ. 9.
77. அகம். 382.
78. அகம். 179.
79. சீவக. 1930.
80. நற். 5.
81. தொல்.பொ. 112.
82. தொல்.பொ. 207.
83. நற். 201.
84. தொல்.பொ. 109.
85. மலைபடு. 197.
86. பதிற். 52 : 16.
87. தொல். எழுத்து. 236.
88. தொல். எழுத்து. 482.
89. தொல். எழுத்து. 246.
90. தொல். எழுத்து. 160.
91. புறம். 4 உரை.
92. அகம். 378.
    2.  சிலப். 14 : 105.
93. சிலப். 247.
94. தொல்.பொ. 114.
95. அகம். 236.
96. குறுந். 353.
97. நற். 105.
98. குறுந். 270.
99. குறுந். 239.
100. நற். 313.
101. ஐங். 99.
102. ஐங். 230.
103. அகம். 85.
104. குறள். 648.
105. நற். 257.
106. அகம். 278.
107. குறுந். 319.
108. குறள். 940
109. குறள். 648.
110. அகம். 256.
111. அகம். 219.
112. அகம். 207.
113. ஐங். 118.
114. நற். 275.1. அகம். 144.
115. தொல்.பொ. 244.
116. தொல்.பொ. 141
117. தொல்.பொ. 112.
118. தொல்.சொல். 298.
119. குறுந். 81.
120. குறுந். 345.
121. அகம். 60.
122. அகம். 100.
123. நற். 35.
124. நற். 67.1. ஐங். 281.
125. அகம். 373.
126. நற். 6.
127. குறுந். 19.
128. நற். 380.
129. அகம். 86.
130. அகம். 119.
131. முருகு. 143 - 5.
132. குறுந். 27.
133. தொல்.சொல்.இளம். 246.
134. குறள். 96.
135. ஐங். 285.
136. குறுந். 191.
137. கலி. 137.
138. தொல்.பொ. 266.
139. நற். 239. 2. சீவக. 4.
140. குறுந். 30.
141. நற். 231.
142. தொ.பொ. 231.
143. அகம். 22.
144. குறள். 665.
145. தொல்.பொ. 210.
146. தொல்.பொ. 39.
147. தொல்.பொ. 112.
148. தொல்.பொ. 237.
149. தொல். பொ. 203.
150. தொல். சொல். 460.
151. அகம். 42.
152. நற். 365.
153. தொல். பொ. 204.
154. தொல். பொ. 112.
155. தொல். பொ. 114.
156. நற். 321.
157. அகம். 88.
158. தொல்.பொ. 107.
159. ஐங். 229.
160. குறுந். 399.
161. அகம். 78.
162. சிலப். 2 : 28 அடி. உரை.
163. கலி. 108.
164. அகம். 57.
165. கலி. 66.
166. கலி. 13.
167. தொல். பொ. 233.
168. தொல். பொ. 12.
169. தொல். பொ. 237.
170. நற். 43.
171. பரி. 5 : 14 - 5.
172. தொல்.பொ. 60.
173. அகம். 299.
174. குறுந். 263.
175. தொல்.பொ. 53.
176. அகம். 98.
177. குறுந். 114.
178. நற். 282. 2. நற். 51.
179. பதிற். 51.
180. நற். 47.
181. நற். 173.
    4.  நற். 273.
182. குறுந். 360.
183. தொல். பொ. 60.
184. அகம். 98.
185. அகம். 98
186. தொல்.பொ. 109.
187. தொல்.சொல். 342.
    2.  கலி. 82.
188. அகம். 52.
    4.  நற். 351.
189. தொல்.பொ. 115.
190. நற். 273.
191. குறுந். 111.
192. குறுந். 360.
193. தொல்.பொ. 112.
194. தொல்.பொ. 114.
195. கலி. 40.
196. தொல்.பொ. 112.
197. அகம். 195.
198. Talisman.
199. அகம். 137.
200. குறுந். 241.

201. இந்த அடி. சீர்காழி திரு. கோவிந்தசாமி ரெட்டியார் கையெழுத்துப் படியில் காணப் பட்டது.
202. ஐங். 260.
203. அகம். 140.
204. நற். 47.
205. நற். 322.
206. அகம். 388.
207. நற். 268. 2. பரி. 5.
208. பரி. 5, 54 - 62.
209. புறம். 143.
210. தொல்.பொ. 115.
211. ஐங். 248.
212. தொல்.சொல். 242.
213. குறுந். 105.
214. நற். 13.
215. அகம். 392.
216. குறுந். 216.
217. A.R.No. 96 of 1921.
218. தொல்.பொ. 112.
219. தொல்.பொ. 114.
220. புறம். 143.
221. குறள். 226.
222. அகம். 214.
223. புறம். 18.
224. நற். 156.
225. அகம். 87.
226. அகம். 369.
227. அகம். 97.
228. நற். 229.
    6.  அகம். 271.
229. நற். 364.
230. தொல்.பொ. 7.
231. தொல்.பொ.
    6 உரை.
232. நற். 1.
233. தொல்.பொ. 304.
234. புறம். 108.
235. அகம். 195.
236. ஐங். 399.
237. அகம். 238.
238. தொல்.பொ. 209.
239. அகம். 342.
240. அகம். 58.
241. நற். 276.
242. குறள். 918.
243. தொல்.பொ. 21.
244. தொல்.பொ. 100.
245. தொல்.பொ. 103.

246. Dr. Mark Henry Prank : Engenics and Sex Relations for Men and Women. P. 103 - 5.

247. இது வரைவு வேண்டிவிட மறுத்துழித் தமர்க்குரைப்பாளாய் வரையாது வந்தொழுகும் தலைமகற்குத் தோழி அவன்மலைகாண்டலே பற்றாகத் தாங்கள் உயிர் வாழ்கின்றமை தோன்றச் சொல்லியது என அச்சுப்படியிற் காணப்படுகிறது.

248. குறுந். 214.
249. தொல்.பொ. 114. நச்சி. மேற்
250. தொல்.பொ. 112.
251. ஐங். 254.
252. நற். 165.
253. குறுந். 87. 2. அகம். 282.
254. இஃது அச்சுப்படியில் இல்லை.
255. புறம். 159.
256. தொல்.பொ. 114.
257. The peccaries of America.
258. White lipped.
259. Collard peccary.
260. Pig Deer.
261. மலைபடு. 246-7.
262. புறம். 190.
263. பெரும்பாண். 110.
264. அகம். 223.
265. ஐங் 265.
266. பெரும்பாண். 109-10.
267. ஐங். 264.
268. புறம். 168.
269. ஐங். 270.
270. ஐங். 261.
271. ஐங். 263.
272. மலைபடு. 193-5
273. நற். 119.
274. மதுரை. 294-5.
275. பெரும்பான். 105-11.
276. அகம். 111.
277. புறம். 190.
278. ஐங். 323.
279. நற். 119.
280. தொல்.பொ. 237.
281. குளம். தொல்.பொ. 109. நச்சி. தொல். பொ. 111.
282. நற். 386. 2. குறிஞ். கலி. 24.
283. நற். 64.
284. தொல்.பொ. 109.
285. குறிஞ்சி. 37-8.
286. குறுந். 133.
287. அக. 178.
288. ஐங். 238.
289. அகம். 322.
290. நாலடி. 103.
291. நற். 365.
292. தொல்.சொல். 56.
293. புறம். 9.
294. சீவக. 2380.
295. தொல். எழுத்து. 483.
296. தொல். பொ. 555.
297. தொல். பொ. 118.
298. தொல். பொ. 180.
299. புறம். 159.
300. நற். 373.
301. புறம். 172.
302. தொல்.பொ. 120.
303. தொல்.பொ. 561.
304. நற். 261.
305. குறள். 792.
306. குறுந். 335.
307. அகம். 382
308. குறுந். 278.
309. புறம். 158.
310. நற். 22.
311. நற். 57.
312. குறுந். 69
313. நற். 151.
314. புறம். 335.
315. அகம். 104.
316. குறுந். 82.
317. அகம். 217.
318. சிறுபாண். 164.
    1.ஐங் 209.
319. குறுந். 240.
    3.மலைபடு. 109-10.
    4.  ஐங். 286.
        5.கலி. 65.
320. ஆசா. 65.
    7.சிலப். 21 : 53.
321. தொல்.பொ. 273.
322. புறம். 345.
323. கலி. 39.
324. ஐங். 280.
325. அகம். 252.
326. அகம். 378.
327. அகம். 241.
328. ஐங். 351.
329. அகம். 68.
330. அகம். 188.
331. ஐங். 276.
332. ஐங். 279.
333. நற். 379.
334. நற். 57.
335. அகம். 136.
336. நற். 126.
337. அகம். 221.
338. குறுந். 288.
339. அகம். 217.
340. ஐங்குறு. 248.
341. ஐங்குறு. 113.
342. அகம். 388.
343. தொல். பொ. 131 - 2.
344. குறும். 54.
345. தொல்.பொ. 229 - 30
346. குறுந். 106.
347. அகம். 182.
348. அகம். 272.
349. இறை.அ.பொ.22.உரை
350. தொல்.பொ. 567.
351. தொல். பொ. 39.
352. Macaw.
353. Love birds.
354. Pigmy parrots.
355. Macaws of America.
356. Cap.
357. Hayden.
358. திருஞான. 132-1.
359. தொல்.எழுத்து. 393.
360. ஐங். 288.
361. தொல்.பொ. 102.
362. தொல். பொ. 112.
363. ஐங். 260
364. புறம். 375.
365. புறம்.
366. நற். 13.
367. புறம். 252.
368. தொல்.பொ. 12.
369. புறம்.
370. பதிற். 30.
371. தொல்.சொல். 432.
372. குறுந். 102.
373. குறள். 1166.
374. கலி. 138.
375. குறுந். 82.
376. மலைபடு. 109-10.
377. தொல். பொ. 114.
378. மதுரை. 765.
379. தொல். பொ. 225.
380. தொல். பொ. 112.
381. குறுந். 187.
382. ஐங். 333.
383. தொல். பொ. 238.
384. தொல். பொ. 112.
385. தொல். பொ. 114.
386. தொல். பொ. 103.
387. குறுந். 141.
388. திவா. கக.
389. தொல். பொ. 112.
390. தொ.பொ. 208.
391. குறள். 562.
392. மரபு. 44.
393. மரபு. 49.
394. முருகு. 309-11.
395. பரி. 6 : 6-7.
396. பெரும்பாண். 330-1.
397. மதுரை. 332-3.
398. கலி. 27.
399. புறம். 127.
400. அகம். 177.
    8.  புறம். 344.
401. பதிற். 90.
402. குறுந். 26.
403. கலி. 36.
404. அகம். 85, 242, 272, 378.
405. பொருந். 189-92.
406. மதுரை. 675 ; குறுந். 391.
407. பரி. 17 : 19.
408. பரி. 14 : 8-9.
409. குறுந். 347.
410. பரி. 14, 7-8.
411. குறுந். 183.
412. நற். 115,305 குறுந். 138.
413. அகம். 13.
414. அகம். 122
415. Togi
416. அகம். 15
417. Joag of Joag Falls
418. பரி. 20 : 30-8.
419. நற். 264.
420. புறம். 133.
421. முருகு. 205.
422. அகம். 63
423. குறுந். 244.
424. அகம். 108.
425. அகம். 177.
426. அகம். 69.
427. மலைபடு. 140 -1.
428. குறுந். 3.
429. தொல்.சொல்.
430. குறள். 41.
431. குறள். 63.
432. குறள். 61.
433. தொல். பொ. 172.
434. ஐங். 226.
435. குறுந். 1.
436. நற். 173.
437. அகம். 9
438. பரி. 19 : 76.
439. ஐங். 96
440. குறுந். 254.
441. தொல். பொ. 105.
442. தொல். பொ. 146.
443. நற். 379.
    2.  அகம். 398
444. ஐங். 297.
445. அகம். 86.
446. ஐங். 297.
447. அகம். 86.
448. அகம். 104.
449. தொல். பொ. 148.
450. அகம். 153.
451. அகம். 352.
452. நற். 56.
453. ஐந். எழு. 32.
454. தொல். பொ. 204.
455. தொ. பொ. இளம். 109. நச்சி. 111.
456. குறுந். 105.
457. அகம். 38.
458. அகம். 132.
459. குறுந். 26.
460. குறள். 1316.
461. தொல். பொ. 103.
462. இளம். தொல். பொ. 105.
463. தொல். பொ. 103.
464. தொல். பொ. 309.
465. குறள். 1114.
466. தொல். பொ. 102.
467. தொல். பொ. 152.

ஐங்குறுநூறு
மூலமும் விளக்கவுரையும்
நான்காவது
ஆசிரியர் : ஓதலாந்தையார் பாடிய

பாலை


அகனைந்திணைக்கண் வரும் திணைகளுள் பாலை என்பது ஒன்று. பாலையாவது நீர்வளமின்றி வெயில் வெம்மை மிக்கு நிலவும் நிலப்பகுதி. இச்சொல்லைக் கேட்கும்போது வட இந்தியாவிலுள்ள தார் பாலைவனமும், ஆப்பிரிக்காவிலுள்ள சகாரா பாலைவனமும் நினைவுக்கு வரும். அத்தகைய கொடுமை மிக்க நிலப்பகுதி நம் தமிழகத்தில் யாண்டும் இல்லை. இங்கே பாலை யெனப் படுவது ஏனை நிலங்களில் உள்ளது போல நீர்நில வளமின்றி, கல்லும் முள்ளும் முரம்பும் பரற்கற்களும் மணலும் பொருந்தியுள்ள நிலப்பகுதி யெனக் கொள்ளல் வேண்டும்.
இதன் இயல்பு குறிக்கப் போந்த இளங்கோவடிகள், “முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து, நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப், பாலை யென்பதோர் படிவம் கொள்ளும் 1” என்று உரைத்துள்ளனர். இதனையே, “வான மூர்ந்த வயங்கொளி மண்டிலம், நெருப்பெனச் சிவந்த உருப்பவி ரங்காட்டு, இலையில மலர்ந்த முகையில் இலவம் 2” என முல்லை முறைமை திரிந்து பாலையாயின வாறும், “சீறருங் கணிச்சியோன் சினவலின் அவ்வெயில், ஏறுபெற் றுதிர்வனபோல் வரைபிளந்து இயங்குநர், ஆறுகெட விலங்கிய அழலவிர் ஆரிடை 1” எனக் குறிஞ்சி முறைமை திரிந்து பாலையாயினவாறும் காண்க என அடியார்க்குநல்லார் விளக்கியுரைப்பது பாலையின் வரலாற்றைத் தெரிவிக்கிறது.

தமிழகத்து நிலப்பகுதியைக் குறிஞ்சி முதலாக வகுத்துக் கொண்ட பண்டைநாளைத் தமிழறிஞர் பாலைக்கு நிலம் வகுக்க வில்லை. அவர்கள் காலத்தில் குறிஞ்சியும் முல்லையும் முறைமை திரிந்து பாலைநிலத்தை உண்டாக்கவில்லை; இயற்கையாகவே பிற நாடுகளில் உள்ளது போலப் பாலைப்பகுதி இருக்கவும் இல்லை. அதனால் ஆசிரியர் தொல்காப்பியர், பொருளிலக் கணம் கூறும் போது “முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலென 2” நான்குமே உரைத்தார். ஆயினும், சான்றோர், பாலைநிலம் தோன்றுதற்குரிய இயல்புகள் ஆங்காங்கு இருந்தமை கண்டு பொதுவகையில் பாலைத்திணை யென ஒன்றை உரைத்துப் போந்தனர். அதுபற்றிப் பாலை பொதுத்திணை என்றும் வழங்குப் படுவதாயிற்று.
நடுவுநிலைத்திணை யாகிய பாலைக்கு நண்பகற்போதும் இளவேனில் முதுவேனிலாகிய இருவகை வேனிலும் உரியன வாம்; ஆயினும், பின்பனிக் காலமும் பாலைக்கு உரியதாகல் உண்டு. அதனால் ஆசிரியர், “பின்பனி தானும் உரித்தென மொழிப 3” என்றனர். இந்நிலத்திலும் எயினர் எயிற்றியர் என்னும் மக்கள் வாழ்ந்தனர். மறவர் மறத்தியர்க்கும் ஆறலைகள்வர்க்கும் பிற கொடியவர்க்கும் இப்பகுதி வாழ்நிலம் என்பர். இப்பகுதியில் விளைபொருள் இல்லாமையால் இம்மக்கள் வழிச்செல்வோரை அலைத்துப் பெறும் பொருளும் ஏனை நிலப்பகுதியிற் புகுந்து சூறையாடிக் கொணரும் பொருளும் ஆகிய இவற்றால் உண்டும் உடுத்தும் வாழ்வர். இங்குள்ள குறுங்காடுகளில் உழைமானும் பிறவும் வாழ்கின்றன. காட்டுக் கோழிகளும், பருந்து கழுகு முதலிய புள்ளினங்களும் பாலையில் காணப்படும். மராமரங் களும், ஓமை, வேல், இலவம், ஈந்து முதலிய மரங்களும் இங்கே உள்ளன. துடி முதலியன எயினர்கட்குரிய பறை; கொலையும் புலையும் ஆறலைத்தலும் சூறையாடலுமே இங்கே நிகழும் தொழில். இப்பாலைக் குரியது செங்கோட்டியாழ் என்றும், பாடுதற்குரிய பண் காந்தாரபஞ்சமம் என்றும் அடியார்க்கு நல்லார் அறிவிக்கின்றார். நீர் இல்லாமையே பாலைக்கு இயல் பாகலின் ஈண்டு உள்ளதெல்லாம் வெயிலவன் வெம்மையே யன்றி வேறில்லை. “அறுநீர்ப் பைஞ்சுனை ஆம்அறப் புலர்தலின், உகுநெல் பொரியும் வெம்மை1” எனச் சான்றோர் உரைப்பது காணலாம். கவலைக்கிழங்கும் இங்குள்ளோர்க்கு உணவாவ துண்டு. இங்கே கிடைக்கும் பூக்களில் இலவம்பூ சிறப்புடையது. இங்கே வாழும் மக்களுக்கு ஞாயிறும் கொற்றவையும் கடவு ளாகும். இப்பாலை இடமாக நிகழும் அகப்பொருள் ஒழுக்கம் பிரிவும் பிரிவு நிமித்தமு மாகும். பிரிவு எனப் பொதுப்படக் கூறியதனால், களவின்கண் தலைமகன் தலைமகளை உடன் கொண்டு செல்லும் உடன்போக்கும் இதனுள் அடங்கும். பரத்தையிற் பிரிவு தலைமகள் ஊடுதற்கு நிமித்த மாகலின் மருதத்திணைக்கு உரியது. மேலும், அப்பிரிவு சான்றோர் விதந்து பேசும் உடன்போக்குப் போலச் சீரிய ஒழுக்கமு மன்று; ஆகலான், அஃது இப்பிரிவின்கண் அடங்காது என அறிக.

பாலை பொருளாக இப்பகுதிக்கண் வரும் நூறு பாட்டுக் களையும் பாடியவர் ஓதல் ஆந்தையாராவர். இவற்றின் வேறாக அவர் பாடியன சில குறுந்தொகையில் உள்ளன.

ஓதல் ஆந்தையார் பிசிராந்தையார் போல ஓதல் என்னும் ஊரினர். இவ்வூர் ஓதலூர் என்ற பெயருடன் மேலைக் கடற் கரைப் பகுதியில் குட்ட நாட்டில் உள்ளது. இந்நாளில் மலையாள மாவட்டத்துப் பொன்னானி தாலூகாவைச் சேர்ந்த பகுதிக்கண் உளது என்பேமானால் இனிது விளங்கும். பிசிர்க்குடி பிசிர் என வழங்கினாற் போல ஓதலூர் ஓதல் எனக் குறுகி நின்றது. ஆந்தை யார் என்பது இவரது இயற்பெயர். ஆந்தை என்னும் பெயர், தொடக்கத்தில் ஆதனுக்குத் தந்தை என்ற பொருள் படத் தோன்றிப் பின்னர்ப் பலர்க்கு இயற்பெயராய் நிலவுவதாயிற்று. இவரது குட்டநாடு தெற்கிலுள்ள நாஞ்சில்நாடு போல நெல்வளம் சிறந்தது. இக் குட்ட நாட்டில் தான் முடிநாகனாரது முரஞ்சி யூரும், கோதமனாரது பாலையூரும் உள்ளன. பதிற்றுப்பத்துப் போல இத் தொகைநூலும் சேரமன்னருடைய தொடர்புடைய தாகலின், ஓதலாந்தையார் சேரர் தொடர்பு பெற்ற சான்றோருள் ஒருவர் என்பது தெளிவாகிறது.

ஆந்தையார் பாட்டுக்களில் பெரும்பாலன பாலைப் பாட்டுக்களே யாகும். ஒன்று தான் முல்லைக் குரியது. குட்ட நாட்டை அடுத்துள்ள பகுதி பாலையே; அன்றியும் அதற்குக் கிழக்கில் உள்ள பாலைக்காடும் பிறவும் பாலை நிலப் பகுதிகளாக இருத்தலின், பாலைப் பாட்டுக்களை வரைந்துகொண்டு இவர் விதந்து பாடுவது பொருத்தமேயாகும். இவர் காட்டும் பாலை நிலம் நீர்வளம் ஒன்றுதான் குறைந்திருக்கிறதே யன்றி ஏனை நிலவளமும் உயிர்வளமும் குறையவில்லை. இப்பாலைப்பகுதி மலையும் மரங்களும் பொருந்தி வெயில்வெம்மை சிறந்து தோன்றுகிறது. இப்பாலைக்காட்டில் ஓதலாந்தையார் வேனிற் காலத்துக் காட்சியில் நம்மை ஈடுபடுத்துகின்றார்.

வெள்ளோத்திரம், ஆல், அரையம், மராமரம், இலவமரம், நுணா, கோங்கு, குரா, பாதிரி, புன்கு, மா, இருப்பை, வேம்பு ஆகிய மரங்கள் பல்கியுள்ளன. களிறு வழங்கும் பகுதிகளில் இருப்பைமரங்களின் பூக்கள் உதிர்ந்து, களிற்றியானையின் காலடி தெரியாதபடி மறைத்துவிடுகின்றன. குராமரங்களின் பூவைச் சான்றோர் செய்யாப்பாவை யென்று சிறப்பித்துரைக்கின்றனர். பாதிரி மரங்களில் குயில்கள் இருந்து கூவுகின்றன. மரா மரத்தின் பூவிதழ்கள் வலம்புரி போல் சுரிந்துள்ளன.

இளமகளிர் காட்டாற்றின் கரையில் நிற்கும் பாதிரி மரத்தின் நிழலில் தங்கி அதன் பூக்களைக் கொண்டு மாலை தொடுக் கின்றனர்; சில மகளிர் பொன்னிறம் பூத்த கோங்கமும் வேங்கை யும் கலந்து ஒருசேரத் தொடுத்து அணிகின்றனர். அதிரற் பூவை அணிபவர் ஒருசிலர். வழிச்செல்வோர் வெள்ளோத்திரத்தின் பூவைச் சூடிக்கொள்வர். வேங்கைமரத்தில் ஏறிப் பூக்கொய்வோர் பஞ்சுரப் பண்ணைப் பாடுவர்.

அரையமரத்தின் இலைகள் காற்றால் அசையும் ஒலி கேட்டு அதனுடைய பழம் உண்ண வரும் புள்ளினம் அஞ்சி நீங்குகின்றன. நெடி துயர்ந்து நிற்கும் இலவமரத்தின் பூ காற்றிற் பறந்து உதிர்வது வானத்திலிருந்து இடித்து வீழும் மீன் போன்ற காட்சி தருகிறது. சில இலவமரங்கள் பூத்து விளங்கும் தோற்றம் மலைகள் தீப் பிடித்து எரிவதுபோல வுளது.

கோவலர்கள் தாம் மேய்க்கும் ஆனிரையின் பொருட்டுத் தோண்டிய பள்ளங்களை யானைகள் நீர் வேட்கை யுற்றுப் போந்து வளைத்துக்கொள்கின்றன. மூங்கில்கள் தம்மில் இழைந்து தீப்பற்றி எரிவது கண்டு புலியும் அரிமாவும் அஞ்சி ஓடுகின்றன. தன் பிணவு பசித்து வருந்துவது கண்டு ஆற்றாத செந்நாயின் ஆண், காட்டுப்பன்றிகளின் வரவு நோக்கி நிற்கிறது.

தன் பெட்டையைக் கூடி யிருந்து நீங்கும் செந்நாய் மான் பிணை யொன்று தன் மறி (கன்று) யுடன் நிற்பது கண்டு அன் புணர்வால் ஒரு தீங்கும் நினையாது போகிறது. புலிக்குத் தப்பி யோடிய ஆண்மான் தன் பிணையொடு கூடித் தன் ஆண்குரலை எடுத்து இசைக்கின்றது.

இவ்வழியே முல்லை நிலத்துக்குச் செல்வோமாயின், அங்கே கட்டிளமை நலம் கனியும் ஒருவனும் ஒருத்தியும் இல்லிருந்து நல்லறம் புரியும் பெருமனை காணப்படுகிறது. காதலன் யாதோ ஒரு கடமை குறித்து வெளியூர் சென்றுள்ளான்; கார்கால வரவில் மீண்டு வருவதாகச் சொல்லியிருக்கின்றான். கார்காலம் வந்து விட்டது; அதன் அறிகுறியாக அருகில் நின்ற கொன்றை மரம் அழகுறப் பூத்து நிற்கிறது. காடும் தழைத்துக் கார்காலக் காட்சி தருகின்றது. குறித்த பருவம் வந்தும் காதலன் வர வில்லையே, என் செய்வது என எண்ணமிட்டுத் தோழி ஏக்கமுறு கின்றாள். அது கண்ட அக் கற்புடை நங்கை, தோழியை நோக்கி, “கானம் கார் எனக் கூறினும், யானோ தேறேன். அவர் பொய்வழங்கலர் 1” என்று கூறுகின்றாள். தோழி வியந்து அவளை மகிழ்ந்து நோக்கு கிறாள்.

இன்னோரன்ன காட்சிகளை இனிவரும் இவருடைய பாட்டுக்களில் காணலாம்.


செலவழுங்குவித்த பத்து

செலவழுங்குவித்த பத்து எனப்படும் இது செலவு மேற் கொண்ட தலைவனைச் செல்லாவாறு அழுங்குவிப்பது பொரு ளாக வரும் பாட்டுக்களின் தொகுதி யாகலின், இவ்வாறு பெயர் இது பெறுவதாயிற்ற. அழுங்குதல் மனம் சோர்தல். செலவின் கண் அழுங்குவது செல்லா தொழிவதன்று; செலவின் கண் செல்லும் தலைமகனது உள்ளத்தை அதன்கண் செல்லாதவாறு தவிர்க்கும் சொற்களைச் சொல்வது. ஈண்டுச் செலவு என்பது தலைமகன் தன் மனையினின்றும் பிரிந்து செல்வது. தலைமக்கள் வாழ்வில் பிரிவு நிகழ்வது ஏன்?

களவுநெறியிற் காதலுற்றுக் கற்புநெறியில் கடி மணம் புரிந்துகொண்டு இல்லிருந்து அறம் செய்து வரும் காதலர் இருவரிடையே இன்பமே நிலவுகிறது; அவருடைய நினைவும் சொல்லும் செயலும் இன்பமாகவே இலங்குகின்றன. இவ்வின்பத் துக்குப் பொருள் அரணும் ஆக்கமுமாகும். அப்பொருளும், ஆற்றுநீர்ப் பெருக்குப்போல் வரவும் நிலைபேறும் உடையதாகல் வேண்டும். அவ்வுடைமைக்குக் காலமும் இடமும் அறிந்து செய்யும் வினை சிறந்த ஏதுவாகும். பொருளின் ஆக்கம் வினையை யின்றி அமையாது. எனவே, செல்வ வாழ்வுக்குப் பொருளும் வினையும் ஏதுவும் பயனுமாய் இயைந்துள்ளமை தெளிவாகும். இவ்விரண்டையும் செய்வது மனையறம் புரியும் மக்கட்கு நலமாம். ‘நல்லவை யெல்லாம் கடன் என்ப.’ கடமை யடிப்படையில் புகழ் நிலைபேறு கொள்கிறது. இவ்வாற்றால் புகழ் புரிந்த இல்வாழ்க்கைக்குப் பொருளும் வினையும் இன்றி யமையாதன வாகின்றன.

பொருளும் வினையும் பயக்கும் பயனை வைத்து நுகரும் இடம் மனை. பொருளும் வினையும் உள்ள இடம் மனைக்குப் புறம்பே யாகும். புகழ்பெறுதல் வேண்டி மனைவாழ்வில் இருப் போர் பொருளும் வினையும் குறித்து மனையின் நீங்கிச் செல்ல வேண்டியவ ராவர். பொருள் என்றது, உணவுப்பொருள் முதல் கல்விப்பொருள் ஈறாகப் பலவேறு வகைப் பொருளைக் குறிக்கும். வினையென்பது பொருளைச் செய்தற்குரிய தொழில் முதல் நாடுகாத்தற்குச் செய்யும் போர்த்தொழில் ஈறாக எல்லாத் தொழிலையும் உளப்படுத்தி நிற்கும். பொருளைச் செய்த லாவது, நாட்டில் விளையும் பொருளை மிகுமாறு வளப்படுத் தலும், மிக்க பொருளைக் குறைந்த நாடுகட்குக் கொண்டு சேறலும், இல் பொருளை உள்ள நாடுகளினின்று கொணர்தலும் செய்தொழுகுதல். நாட்டிடையே முறைசெய்து அறம் வளர்த் தலும் குறைகடிந்து நிறைவுசெய்தலும் இவ்வினை வகையே யாகும்.

இவை யில்வழி மனைவாழ்வும் நாட்டின் பொதுவாழ்வும் நலமெய்தாமையின், இவை குறித்து மனையின் நீங்கிச் செலவு மேற்கோடல் இளமை முதுமை யாகிய இரு காலத்தும் ஆட வர்க்குக் கடனாகும். மிக்க இளமையும் மிக்க முதுமையும் பொருள் வினைகளைச் செய்தற்கு ஆகாமையின், இடை நின்ற இளமை வளமுடையோர் இவை குறித்துப் பிரிந்தொழுகுவதே இங்கே செலவு என்று குறிக்கப்படுகிறது.

இளமை அகவளர்ச்சியினும் புறவளர்ச்சி சிறந்து அழகும் வனப்பும் கொண்டு திகழும். செடி கொடிகட்குத் தளிரும் மலரும் தோன்றும் செவ்வி போல, மக்களினத்துக்கு இளமைச் செவ்வி அமைந்துளது. மலரிடத்துத் தோன்றும் மணமும் அழகும் அதன் இனப் பெருக்கத்தைக் குறிக்கொண் டிருப்பது போல, இளமைக் கண் தோன்றும் அழகும் காமமும் மக்கள் இனப் பெருக்கத்துக்கு இன்றியமையாதனவாகும். ஏனையுயிர்கள், இனப்பெருக்கம் கருதித்தோன்றும் மணம் அழகு முதலிய வற்றைத் தம்வரை நிறுத்தி நெறிப்படுத்தும் வன்மையுடைய வல்ல; மக்களினம் ஒன்றுதான் அவ்வன்மை கைவரப் பெற்றது. அதனால் அழகு மணம் பரப்பிக் காதலின்பம் நல்கும் காமச்செவ்வி மக்கள்பால் வன்மை கொண்டு வயங்குகிறது. மக்களது அறிவு காமக்காதலைத் தன்வழி நிற்கச்செய்து ஒழுகுமிடத்து, இன்பமும் பொருளும் அறமும் பெற்றுச் சிறக்கின்றது; மாறுபட்ட விடத்துத் துன்பமும் வறுமையும் தொலையாப் பழியும் கொண்டு துயருறுகிறது.

மக்கள் அறிவைத் தன்னடிப்படுத்திக்கொள்ளும் வன்மை காதற்காமத்துக்கு இல்லையாயின் இனப்பெருக்கம் குன்றும்; ஆயினும், காதற்காமத்தின் வன்மை வணக்க வணங்கி நெறியின் இயங்கும் நீர்மையது. அதன் அவ்வன்மை யுணர்ந்து, மக்கள் அறிவுவன்மையால் அதனை வணக்கி வாழ்வதால் வாழ்வு வளம் பெறுகின்றனர்.

மக்கள்அறிவு உயிர் வளர்ச்சியையும், காதற்காமம் உடல் வளர்ச்சியையும் சார்ந்தவை. கல்வி கேள்வி சூழ்நிலைகளால் உயிர்வளர்ச்சியும் உணவு வகையால் உடல் வளர்ச்சியும் உண்டா கின்றன. உடல் வளர்ச்சியின் உயிர்வளர்ச்சி ஒத்தும் உயர்ந்தும் இருக்குமாயின், உயிரறிவு காதற்காம வுணர்ச்சியைத் தன்வரை நிறுத்தி இன்பமும் சிறப்பும் எய்துகிறது. இந்நிலையில் வளரும் அறிவுக்கும் காதற்காமத்துக்கும் இளமையுள்ளம் போர்க்கள மாகிறது. இங்கே பொருள்வினை பற்றிய கடமை யொருபாலும், காதற்காமம் தரும் உணர்ச்சி ஒருபாலும் உயிரறிவை ஈர்க்கும். கடமைவழிச் செல்லும் உயிரறிவு பெருமையும் தலைமையும் பெறுகிறது. உடல்வன்மையை நோக்க, இளமைக்கண் போதிய உலகியற் பயிற்சி யின்மையால் உயிரறிவு, கல்விகேள்விகளின் துணையின்றிக் காதற்காமத்தின் வன்மையை அடக்கி வணக்கும் திண்மையின்றிச் சாய்ந்தொழிவது பெரும்பான்மை. அதனால், இளமையை நெறிப்படச் செலுத்திப் பெருமை பெறும் சான் றோர் உலகில் மிகச் சிலரே உள்ளனர். இக் கருத்தையுட் கொண்டு திருவள்ளுவர், “செயற்கரிய செய்வார் பெரியர்” என்று தெருட்டி யுரைப்பது நினைவு கூரத்தக்கது.

மக்களுள் தலைமைப் பண்புகளெல்லாம் ஒருங்கு படைத்த ஒருவனும் ஒருத்தியுமாகிய இருவரை * நாட்டிக் கொண்டு அவர் உள்ளத்தே காதற்காமமும் கல்விகேள்விகளின் துணையை நன்கு பெற்ற உயிரறிவும் ஆற்றும் போர்வகையினை அகனைந்திணை யொழுக்கம் என்ற பெயரால் பண்டைத் தமிழாசிரியன்மார் புலனெறி வழக்கம் செய்துள்ளனர்.

தலைமைப் பண்புடைய தலைமகன் ஒருவன் மனை வாழ்க் கையில் மேலே கூறிய பொருள்வினை குறித்து மனையின் நீங்கிப் பிரிந்து செல்ல வேண்டிய கடமை யுடையனாகின்றான். அவற் றின்மேற் சென்ற உள்ளத்தைக் காதற்காமம் தாக்கி அவன் மேற்கொண்ட பிரிவைக் கையொழியுமாறு முயல்கிறது; அவ் வாறே தலைமகள் உள்ளத்தையும் தலைமகன்பிரிவுக்கு உடன் படாதவாறு செய்ய முற்படுகிறது. இருவரும் தம் தலைமைப் பண்பால் அதனை வென்று மேன்மையுறுவது பொருளாக நெஞ்சினோடும் தோழியோடும் சொல்லாடுவர். வில்வணக்கம் பகையை வீழ்த்துவது குறிப்பது போல, இருவரிடத்தும் தொடக் கத்தில் காதற்காமக் கிளர்ச்சிக்கு உயிரறிவு வணங்கியது போன்ற சொற்கள் வெளிவரும். தலைவனினும் தலைவிபால் உயிரறிவு மென்மை மிக்கது போல் நின்று ஆற்றாமை யுணர்த்தும் சொல் லும் செயலும் தோற்றுவித்துத் தலைமகன் உள்ளத்தில் எழும் காமக்கிளர்ச்சியைத் தூண்டி, செலவின் மேற்சென்ற அவனது திண்மையைச் சிதைக்க முயலும். சிதையா வுள்ளம் படைத்த அச்செம்மல், சிதைந்தான் போல் வருந்துமாறு செய்வது செல வழுங்குவித்தல் எனப்படும். இதுபற்றியே ஆசிரியர், “செலவிடை அழுங்கல் செல்லாமை யன்று” என்றும், அவன் ஆற்றத் தகுவன வற்றை நன்கு வற்புறுத்தி விட்டுச் செல்வன் என்பார், “வன்புறை குறித்தல் தவிர்ச்சி யாகும்1” என்றும் கூறுவாராயினர்.

    301.    மால்வெள் ளோத்திரத்து மையில் வாலிணர்  

அருஞ்சுரஞ் செல்வோர் சென்னிக் கூட்டும்
அவ்வரை யிறக்குவை யாயின்
மைவரை நாட வருந்துவள் பெரிதே.

இது பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகற்குச் சொல்லியது.

** பழைய உரை :**
வெள்ளிலோத்திரத்துக் குளிர்ச்சியையுடைய மலரை ஆற்றின் வெம்மை தீரச் செல்வோர் அணிந்து செல்வர் என்றுழி வெம்மை கூறியவா றாயிற்று.

** உரை :**
கருமுகில் தவழும் மலைநாடனே, பெரிய வெள்ளிய ஓத்திரத்தின் குற்றமில்லாத வெண்மையான பூங்கொத்தினைக் கடத்தற் கரிதாகிய பாலைநிலத்திற் செல்வோர் தம் தலையில் அணிந்து கொள்ளும் அழகிய மலையைக் கடந்து செல்குவை யாயின், இவள் பெரிதும் வருந்துவள்காண் என்றவாறு.

ஓத்திரம், வெள்ளிலவு என்றும், வெள்ளிலோத்திரம் என்றும் வழங்கும்; இஃது ஒருவகை மரம்; முரம்புநிலக் காடுகளில் வளர்வது. ஓத்திரமரம் வழுவழுப்பான வெண்மையான பட்டை மூடி நெடிது உயர்ந்து வளரும் மரமாதலால் மால் வெள்ளோத்
திரம் என்றார். இலவ மரத்தின் வகையாதல் பற்றிப் பிற்காலத்தார் இதனை வெள்ளிலோத்திரம் என வழங்குவா ராயினர். இதன் பூ வெண்ணிறமும் நறுமணமும் உடையது. இதன் உதிர்ந்த பூக்களை அரைத்துச் சாந்து செய்து அணிவதும், இவற்றால் தொடுக்கப் பட்ட மாலையைச் சிறப்புற அணிந்து கொள்வதும் பண்டை வழக்கு. “வாச முண்ட மாருதம் வண்டு பாட மாடவாய், வீச வெள்ளி லோத்திரப் பொதும்பர் பாய்ந்து விம்முமே 1” என்றும், “வெள்ளி லோத்திரத்தின் பூம்பொருக் கரைத்த சாந்தின், காசறு குவளைக் காம ரகவிதழ் பயில மாட்டி 2” என்றும், “வெள்ளி லோத்திரம் விளங்கும் வெண்மலர்க், கள்செய் மாலையர் 3” என்றும் வருவனவற்றா லுணர்க.

மிகவும் வெண்மையாக இருப்பது தோன்ற மையில் வாலிணர் எனப்பட்டது. இதன் பூங்கொத்துக்களை வெயில் வெம்மை தாக்காமைப் பொருட்டு வழிச்செல்வோர் தலையில் சூடிக் கொள்வது கண்டு, அருஞ்சுரம் செல்வோர் சென்னிக் கூட்டும் என்றார்.

கற்புக்காலத்தில் மனையிலிருந்து மாண்புறும் தலைமகன் பொருள் குறித்துப் பிரியும் கடமையுடையனாகித் தன் கருத்தைத் தலைமகட்குத் தெரிவிக்குமாற்றால் தோழிபால் உரைத்தானாக, அவன்பிரிவைத் தலைமகள் ஆற்றாள் என்பதுபற்றி அவனைச் செலவழுங்குவிக்கலுற்று, இம்மலை நாட்டில் வாழ்பவர் ஒரு கால் ஆண்டுத் தோன்றும் மலைக்குச் செல்வராயின், இடையில் கிடக்கும் நிலம் சுரமாதலின், அதன் வெம்மைக்கு ஆற்றாது வெள்ளோத் திரத்தைத் தலையிற் சூடிக்கொள்வர் என்பாள், வெள்ளோத்திரத்து வாலிணர் அருஞ்சுரம் செல்வோர் சென்னிக் கூட்டும் அவ்வரை என்றும், அம்மலைக்கு நீ செல்லி னும் பொறாத தலைமகள், அவ்வரையை இறந்து செல்குவை யாயின் ஆற்றாது மிகவும் வருந்துவளாதலால் நீ மேற்கொண்ட செலவினைத் தவிர்க என்பாள், அவ்வரை இறக்குவை யாயின் வருந்துவள் பெரிதே என்றும் கூறினாள். கண்ணிற் காணத் தோன்றுதலுடைமை பற்றி, அவ்வரை என்றாள் என அறிக.

நீ பிரியக் கருதும் காலம் பனிநாளை முற்கொண்டு நிற்றலின், நின் பிரிவின்கண் எய்தும் பனிநாள்களையும் அதனோடு வரும் வாடையினையும் ஆற்றாது தலைமகள் மிகவும் வருந்துவாள் என்றற்கு மைவரை நாட என்றாள். “தண்ணென ஆடிய இள மழைப் பின்றை, வாடையும் கண்டிரோ வந்துநின் றதுவே1” எனப் பிறாண்டும் தோழி செலவு அழுங்குவித்தமை காண்க.

    302.    அரும்பொருள் செய்வினை தப்பற்கு முரித்தே பெருந்தோ ளரிவை தகைத்தற்கு முரியள் செல்லா யாயினோ நன்றே மெல்லம் புலம்ப விவளழப் பிரிந்தே.  

இது பொருள்வயிற் பிரியுந் தலைமகன் பிரிவுடன்படுத்த வேண்டும் என்றானாக, அவற்குத் தோழி சொல்லியது.

** உரை :**
மெல்லம் புலம்ப. பெறுதற்கரிய பொருள் செய்தற்கு நீ செய்யும் வினை முற்றுதலின்றித் தவறுதலுமுரித்து; பெரிய தோளினையுடைய அரிவையாவாள் நின் பிரிவுக்கு உடன் படாது தடுத்தற்கு முரியள்; ஆகலான், இவள் நின் பிரிவாற் றாது வருந்த நீ பிரிந்து செல்லா தொழியின் நன்றாகும் என்றவாறு.

பொருளினது அருமையும் இன்றியமையாமையும் வற்புறுத் தற்கு அரும்பொருள் என்றும் செய்வினை என்றும் தலைவன் வற்புறுத்தினா னாகலின், அப்பெற்றித் தாயினும், அது கருதிய வாறு கைகூடாதுஒழிதற்கும் உரியதென அதனைப் பழித்து, அரும்பொருள் செய்வினை தப்பற்கும் உரித்து என்று கொண் டெடுத்து மொழிந்தாள். “ நல்லவை யெல்லாம் தீயவாம் தீயவும், நல்லவாம் செல்வம் செயற்கு 1” என்று சான்றோர் கூறுவது காண்க. பேரறிவும் பிரிவாற்றும் மதுகையும் உடையளாதலின் அவட்கு நீ தக்காங்கு உரைத்தல் வேண்டும் என்பான், பெருந் தோள் அரிவை என்றா னாகலின், அதனையே கொண்டெடுத்து, அப் பேரறிவும் மதுகையுமே கொண்டு பொருளின் நிலைபேறின்மை சுட்டி உடன்படாது மறுக்கவும் வல்லள் என்பாளாய்த் தோழி, பெருந்தோள் அரிவை தகைத்தற்கும் உரியள் என்றாள். இனி, சொல்லின் பிரிவில்லையாம் எனக் கருதிச் சொல்லாது பிரிகுவை யேல், இவள் ஆற்றாது அழுவதே பொருளாகக் கொள்வள்; இவ்வாறு இவள் அழஅழப் பிரிந்து சேறல் நினக்கு நன்றன்று என்பாள், இவள் அழப் பிரிந்து செல்லாயாயினோ நன்று என்றாள். “யாம் தமக்கு ஒல்லேம் என்ற தப்பற்குச், சொல்லா தேகல் வல்லு வோரே2” என்றதனால் சொல்லாது ஏகலும் உண்டென அறிக.

பிரிவுரைக்கும் தலைமகனை, மெல்லம் புலம்ப என்று தோழி கூறியது, சொல்லாதேகும் வன்கண்மையை மேற்கொண்டு செல்லுதல் வேண்டா எனத் தான் செலவழுங்குவிக்கும் செயலை முடித்தற்கு.

தப்பற்கும் உரியள் என்ற பாடம் பொருட்பேறின்று.

    303.    புதுக்கலத் தன்ன கனிய வாலம்3  

போகி றடுக்கும் வேனி லருஞ்சுரம்
தண்ணிய வினிய வாக
எம்மொடுஞ் சென்மோ விடலை நீயே.

இது சுரத்தருமை கூறி உடன்செலவு மறுக்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது.

** உரை :**
தலைவ, புதிய மட்கலத்தைப் போலும் நிறம் பொருந்திய பழங்களையுடைய ஆலமரம் தன்னை யடைந்த புள்ளினம் தன்னிற் பிரிந்து செல்லாவகைத் தடுக்கும் வேனிலின் வெப்பம் மிக்க அரிய காடுகள், தண்மையும் இனிமையு முடையவாக, நீ எம்மையும் உடன்கொண்டு செல்வாயாக என்றவாறு.

தண்ணிய இனியவாக எம்மொடும் சென்மோ என்றாளாயினும், எம்மொடும் செல்லின், தண்ணியவும் இனியவுமாம் என்பது கருத்தாகக் கொள்க. போகில், பறவை; “பருத்திப், பொதிவயிற் றிளங்காய் பேடை யூட்டிப், போகில் பிளந்திட்ட பொங்கர் வெண்காழ், நல்கூர் பெண்டிர் அல்கற் கூட்டும்1” என்பதனாலும், “வேனில் அரையத் திலையொலி வெரீஇப், போகில் புகாவுண் ணாது2” என்று பிறாண்டும் கூறுதலாலு மறிக. வேனில் வெப்பத்தால் உழந்த தாம் கனியும் தண்ணிய உறையுளும் பெற்றமையின் ஆலமரத்தினைப் புள்ளினம் நீங்கா துறையு மாயினும், அதற்குக் காரணமாதல் நோக்கி ஆலம் போகில் தடுக்கும் என்றார். வேனில் வெப்பத்திற் காற்றாது உயங்கிப் போதரும் புள்ளுக்குக் கனியும் நிழலும் தந்து காத்தலின், கனிய ஆலம் போகில் தடுக்கும் என்றா ரென்றுமாம். மோ: முன்னிலை யசை. விடலை: திணைப்பெயர்.
வேனில் வெம்மையும் சுரநெறிகளின் இன்னாமையும் கூறி உடன்செல்லுதல் ஆகாதெனத் தலைமகன் உரைத்தானாக, உள்ளுறையால் அவை இலவாதல் கூறலின்,அருஞ்சுரம் தண்ணிய இனிய வாக என்றும், ஆகவே தம்மையும் உடன் கொண்டு செல்லுதல் தீதன்று என்றற்கு எம்மொடும் சென்மோ என்றும் கூறினாள். எனவே, நீ இல்வழி எமக்கு இம்மனை இனிதாகாது என்றாளாயிற்று; பிறாண்டும், “பெருங்காடு இன்னா என்றி ராயின், இனியவோ பெரும தமியேற்கு மனையே 3” என வருவது காண்க.

வேனில் வெம்மைக்கு ஆற்றாது வரும் புள்ளினங்கட்கு ஆலம் தண்ணிய நிழலும் இனிய கனியும் உதவுமாறு போல, எமக்கு நின் கூட்டத்தாலும் உடனுறைவாலும் சுரம் இனியவும் தண்ணியவுமாம் என உள்ளுறை கொள்க. வெஞ்சுரத்து அரிய வழிகளைச் செல்வதற்கு மகளிர் ஆற்றா ராகலின், இதனால் தலைமகன் செலவழுங்குதல் பயனாயிற்று.

    304.    கல்லாக் கோவலர் கோலிற் றொட்ட  

ஆனீர்ப் பத்தல் யானை வௌவும்
கல்லதர்க் கவலை செல்லின் மெல்லியற்
புயனெடுங் கூந்தல் புலம்பும்
வயமான் றோன்றல் வல்லா தீமே.

இது பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது.

** பழைய உரை : **
வல்லாதீமே என்றது, எல்லாம் வல்லாயாயினும் இது மாட்டாயா தற்கு மேற்பட்ட தலைமை யில்லை என்றவாறு.

** உரை :**
வலிமிக்க குதிரையினையுடைய தலைவனே, கல்வியில் லாத கோவலர்கள் தம் கைக்கோலால் தோண்டிய ஆனீர் நிறைந்த பள்ளத்தை யானைகள் வௌவும் கற்கள் பொருந்திய கவர்த்த வழியை நீ சென்றால், மெல்லிய இயல்பினை யுடைய இவள் புலம்புற்று வருந்துவா ளாகலின் நீ செல்லுதல் வல்லை யல்லையாகுக என்றவாறு.

கல்வி, தொழிற் குரிய பயிற்சி மேற்று. ஏறுடை யின நிரைகட்கு நீர் பெறுதல் வேண்டிப் பள்ளங்கள் தோண்டுதல் கோவலர்க்கு மரபாகலின், கோவலர் கோலில் தொட்ட ஆனீர்ப்பத்தல் என்றார். ஆனீர், ஆனிரைக் குரிய நீர். பத்தல், பள்ளம். கல்லாக் கோவல ராதலின் கணிச்சி கொண்டு தோண்டற் குரிய பத்தலைக் கோல்கொண்டு தோண்டுவா ராயினர் என அறிக.

வன்னில மாதலால் எளிதில் தோண்டக் கூடாமை பற்றிக் கோவலர் நீர் வறண்ட பள்ளங்களினிடத்தே இக்குழிகளைத் தோண்டுதலின், தொட்ட பத்தல் என்றும், அதுவும் ஆனிரைகட் காக எடுத்த தென்றற்கு ஆனீர்ப் பத்தல் என்றும், வெயில் வெம்மையால் வேட்கை மிக்கு வரும் களிற்றினம் நீர் அருமை குறித்துப் பிறவினங்களை வெருட்டிவிட்டுத் தாமே சூழ்ந்திருந்து உண்டலின் யானை வௌவும் என்றும் கூறினார். “நெடுவிளிக் கோவலர் கூவல் தோண்டிய, கொடுவாய்ப் பத்தல் 1” எனவும், “பயநிரைக் கெடுத்த மணிநீர்ப் பத்தல் 2” எனவும், “ஆன்வழிப் படுநர் தோண்டிய பத்தல், யானை யினநிரை கவரும் 3” எனவும் சான்றோர் கூறுவது காண்க.

குதிரை இவர்ந்து செல்வது பற்றி வயமான் தோன்றல் என்றும், அதற்கும் செலவு அரிய வழி என்றற்கு, கல்லதர்க் கவலை என்றும், நின் செலவைத் தலைமகட்கு யான் சொல்லப் புகின் அவள் என்னைப் பார்த்தலும் செய்யாள் என்றற்கு, புயல் நெடுங் கூந்தல் என்றும், பிரிந்தால் சிறிதும் ஆற்றாது வேறுபடும் திறத்தை உள்ளுறைக்கண் கூறலின், மெல்லியல் என்றும், மெல்லியோர் புலம்ப ஒரு செயலை வல்லுநர் செய்வது வன்மை யாகாது என்பாள் வல்லாதீமே என்றும் கூறினாள்.

கோவலர் நிரைகளின் பொருட்டுத் தோண்டிய பத்தலை யானை வௌவும் என்றமையான், நீ நுகர்தற் குரித்தாய்ச் சிறந்த இவள் நலம் பசலை யுணப்பட்டுக் கழியும் என்றாளாம். “கன்றும் உண்ணாது கலத்தினும் படாது, நல்லான் தீம்பால் நிலத்துக் காங்கு, எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது, பசலை யுணீஇய வேண்டும், திதலை யல்குலெம் மாமைக் கவினே 4” என்று பிறாண்டும் வெளிப்படக் கூறப்படுவது காண்க.

கூவல் தோண்டிய என்றும் பாடமுண்டு. கல்லாக் கோவலர் என்றது நோக்க இப்பாடம் பொருட் சிறப்பெய்தாமை உணர்க.

    305.    களிறு பிடிதழீஇப் பிறபுலம் படராது  

பசிதின வருந்தும் பைதறு குன்றத்துச்
சுடர்த்தொடிக் குறுமக ளினைய
எனைப்பயஞ் செய்யுமோ விடலைநின் செலவே.

இஃது உடன்போக்கொழித்துத் தனித்துச் செல்வல் என்ற தலைமகற்குத் தோழி கூறியது.

** பழைய உரை :**
களிறுபிடி……. வருந்தும் என்றது, நீ அவற்றைக் கண்டால் செல்லாய் என்பதாம்.

** உரை :**
தலைவ, களிற்றியானை தன் பிடியானையைத் தழுவி, வேனில் வெப்பம் தெறுதலால் உணவொன்றும் பெறலா காமையின், அது பெறலாகும் வேறு புலங்களை முன்னிச் செல்லுதலும் செய்யாது, பசிப்பிணி வருத்த வருந்தி உயங் கும் பசுமையற்ற குன்றத்துக்கு, ஒளி விடும் வளை யணிந்த இளையவளாகிய இவள் நின் பிரிவாற்றாது அழுது புலம்ப, இவளை நீங்கிச் செல்லும் நின் செலவு யாது பயனைச் செய்யும்? கூறுக என்றவாறு.

களிறு வேனில் வெம்மைக்கு ஆற்றா தாயினும், தான் தழுவி நிற்கும் பிடியானை உடன்வர மாட்டாமையின், அதனைத் தனிப்ப விடுத்துச் சேறற்கு அஞ்சிப் பிற புலம் படராது என்றும், தோன்றி நிலவும் சிறுபொழுதை யன்றிப் பிரிவுத்துன்பம் போல் நினைவின்கண் நின்று நினைத்தொறும் துன்பம் பயவாமையின், அதனை ஆற்றி யிருக்கு மென்பாள், பசிதின வருந்தும் என்றும், வெம்மையால் பசுமையின்றிப் புற்கள் கரிந்தமையின், பைதறு குன்றம் என்றும் கூறுப. பைது, பசுமை.

தனக்கு உரியார் அழுது புலம்பத் தான் பிரிந்து சென்று செய்யும் பொருள் நன்றாகாது என்பாள், எனைப் பயம் செய் யுமோ என்றும், பிரிந்தவழித் தலைமகட் குளவாகும் மேனி வேறுபாடும் அவலமும் நோக்கி இரங்குவாள் குறிப்பு மொழி யால், சுடர்த்தொடி என்றும், அவளிடத்து நுகரப்படும் இன்பம் சிறத்தற் கேதுவாகிய இளமை நில்லாது கழியும் என்பாள், குறுமகள் என்றும் கூறினாள், வெளிப்பட மொழிதல் செந்நெறி யன்மையின்.

பிடி தழீஇய களிறு உணவின்றிப் பசியால் வருந்தியாயினும் தன்கட் பிரிவு நிகழாவாறு முயலும் என்றது, அத்துணை அன் பினை யுணர்த்தும் குன்றத்துக்குச் செல்லின், நீயும் இவளை நினைந்து அன்பு நெருக்குதலால் வருந்துவை யாதலின் நீ செய்யும் வினை பயன் தாராது எனச் செலவழுங்குவித்தவாறு.

    306.    வெல்போர்க் குரிசில்நீ வியன்சுர னிறப்பின் பல்கா ழல்கு லவ்வரி வாடக் குழலினு மினைகுவள் பெரிதே  

விழவொலி கூந்தன் மாஅ யோளே.

இது பிரியும் தலைமகற்குத் தோழி தலைமகள் பிரிவாற்றாமை கூறியது.

** உரை :**
வெல்லுகின்ற போரையுடைய தலைவனாகிய நீ அகன்ற காட்டிடத்தைக் கடந்து செல்லின், பலவாகிய மணிகள் கோத்த மேகலை யணிந்த அல்குலிடத்து அழகிய வரிகள் வாட்டம் எய்த, நின் பிரிவாற்றாமையால், மணவிழாவிற் போல நறுமணம் கமழும் கூந்தலையும் மாமைநிறத்தையு முடைய இவள் குழல் ஒலிப்பது போல் மிகவும் அழாநிற்பள் என்றவாறு.

நிகழும் போர் எல்லாவற்றினும் வெற்றியே பெறுவதுபற்றி வெல்போர்க் குரிசில் என்ப, “வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ 1” என்றாற்போல. வியன் சுரன், விரிந்த பாலைநிலத்து வழி. காழ், மணிகள்; முத்து வடமுமாம். வளவிய மகளிருடைய வயிற்றிலும் குறங்கிலும் விளங்கும் வரிகள் ஆங்குக் கிடந்து அழகு செய்தலின் அவ்வரி எனப்படும். இன்பக்காலத்து எழில் செய்யும் இவை துன்பக்காலத்து மேனி வாட்டத்தால் தோல்சுருங்கும் போது மறையும். அல்குல் 2, இடைக்கும், முழந்தாளுக்கும் இடையிலுள்ள உடற்பகுதி. ஈண்டு அணியப்படும் மேகலை அல்குல் எனப்பட்டது. அல்குலிடத்து மேகலை அணிபவாக லின் பல்காழல்குல் எனப்பட்டது. “பல்காசு நிரைத்த சில்கா ழல்குல் 3” என்றார் பிறரும். “அல்கு லவ்வரி வாடத் துறந்தோர் 4” என்றும், “திதலை யல்குல் அவ்வரி வாடவும், அத்தமா ரழுவ நத்துறந் தருளார் 5” என்றும் சான்றோர் கூறுதலால், அல்குலிடத்து வரியுண்மையும், அது பிரிவு நிகழ்ந்துழி வாட்டமெய்தலும் அறிக. மகளிர் அழுகுரற்குக் குழலை யுவமித்தல் மரபு. “குழல் இனைவதுபோல அழுதனள் பெரிதே 1” என்ப; குழல் எனப் பொதுப்படக் கூறினும் அழுகையொலிக்குச் சிறந்த ஆம்பற் குழல் கொள்ளப்படும்; “இயவ ரூதும், ஆம்பலங் குழலி னேங்கிக், கலங்கஞ ருறுவோள் 2” என்பது காண்க.

விழவொலி கூந்தல், விழாக்காலத்திற் போல நறுமணம் தழைத்துக் கமழும் கூந்தல். விழா, ஈண்டுச் சிறப்புடைய திரு மணத்தின் மேற்று. “வதுவை மகளிர் கூந்தல் கமழ்கொள 3” “வதுவை நாறும் வண்டுகமழ் ஐம்பால் 4” என்றும், பல்வகைப் பூக்கள் மலர்ந்து மணம் கமழும் கானத்தை, “மணமனை கமழும் கானம் 5” என்றும் உரைப்பது காண்க. மாயோள், மாமைநிற முடையவள்.

நீ செல்வுழியெல்லாம் ஊறின்றி வென்றி யெய்தும் பேராண்மை யுடையை யென்பதை அறிந்துள ளாயினும், நின் பிரிவாற்றும் மதுகை யிலள் என்றற்கு, வெல்போர்க் குரிசில் என்றாள். உண்டியிற் குறைந்து உடம்பு நனி சுருங்கி வேறுபடுவள் என்றற்கு அல்குல் அவ்வரி வாட என்றும், கேட்கும் மாவும் புள்ளும் மனங்கரைந்து உருகுமாறு இசைக்கும் குழலொலியினும் இவளது அழுகையொலி, கேட்பார்க்கு அவள்பால் இரக்க மேயன்றிப் பிரியும் நின்பால் பழியும் தோற்றுவிக்கும் என்பாள், குழலினும் இனைகுவள் என்றும், நீ மீளுங்காறும் தன் கூந்தலிற் பூச்சூடாள் என்பது குறிப்பித்து விழவொலி கூந்தல் என்றும் எண்ணிக் கூறினாள். இஃது அழிவில் கூட்டத்து அவன் பிரி வாற்றாமை..

இதனுள் குழலினும் இரங்குவள் என்று பிரிந்தவள் இரங்கு தற் பொருள்படத் தோழி தலைவரும் விழுமம் தலைவற்குக் கூறினாள் என்பர் நச்சினார்க்கினியர் 6.

    307.    ஞெலிகழை முழங்கழல் வயமா வெரூஉம் குன்றுடை யருஞ்சுரஞ் செலவயர்ந் தனையே  

நன்றில கொண்கநின் பொருளே
பாவை யன்னநின் றுணைப்பிரிந்து வருமே.

இது பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் அதன் சிறப்புக் கூறியவழித் தோழி அதனை இழித்துக் கூறியது.

** உரை :**
மூங்கிலாற் கடையப்பட்ட கழையிடத்து எழுந்த முழங்கு கின்ற நெருப்பினை வலியினையுடைய புலிகள் அஞ்சியோடும் அரிய காடுகள் பலவும் கடந்து பொருள் செய்வான் சேறல் மேற்கொண்டனை; கொண்கனே, பாவைபோலும் நின் னுடைய துணைவியைப் பிரிந்து செயின்அல்லது வாராதாக லான், நின் பொருள்பால் அறம் இல்லைகாண்; அவளொடு கூடிச் செய்வதே பொருளாகலின், நீ செலவொழிக என்ற
வாறு.

ஞெலிகழையும் முழங்கழலும் வினைத்தொகை. வெயில் வெம்மையால் மூங்கில்கள் தம்மில் இழையப் பிறந்த அழல் மலையெங்கும் பரந்து முழங்குதலின் ஞெலிகழை முழங்கழல் எனப்பட்டது. பிறரும், “கனைகதிர் தெறுதலின் கடுத்தெழுந்த காம்புத்தீ, மலைபரந்து தலைக்கொண்டு முழங்கிய முழங்கழல் 1” என்பது காண்க. பொருள் நன்றில, துணைப்பிரிந்து வருமாகா லான் என இயையும். அவளொடு கூடி என்பது முதலாயின குறிப்பெச்சம். மழை பெய்து குளம் நிறைந்தது என்றாற்போலப் பிரிந்து என்றது காரணப்பொருளில் வந்தது.

துணைவியொடு கூடி அறத்தாற்றிற் செய்யும் பொருள் போலாது, அவள் துன்புற்று வருந்தச் செய்யப்படுதலின், நன்றில கொண்க நின் பொருளே என்றும், நன்றும் தீதுமாகிய இருவழியானும் செய்யப்பட்டு நிலைபேறின்றிக் கழியும் பொருள் போலாது, திருநல வுருவின் மாயா இயற்கைய ளென்பாள், பாவை யன்ன நின் துணை யென்றும் கூறினாள். பாவை அன்ன இயல்பு, “கால்பொரு திடிப்பினும் கதழுறை கடுகினும், உருமுடன் றெறியினும் ஊறுபல தோன்றினும், பெருநிலம் கிளரினும் திருநல வுருவின், மாயா வியற்கைப் பாவை 2” என்பதனால் அறிக.

“கடம்இறந்து செயல்சூழ்ந்த பொருள்பொரு ளாகுமோ, வடமீன்போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள், தடமென்றோள் பிரியாமை பொருளாயின் அல்லதை 1” என்றும்,“வருவிருந்தோம்பித்தன் னகர்விழையக் கூடின், இன்னுறல் வியன்மார்ப அதுமன் நும் பொருளே 2” என்றும் வருதல் கொண்டு துணைவியொடு கூடிச் செய்தல் பொருளாதல் கொள்க.

ஞெலிகழையிடத்துப் பிறந்த முழங்கழல் கண்டு வயமா வெரூஉம் என்றது, அன்பொடு புணர்ந்த நும் இன்பவாழ்வில் தோன்றிய இப்பொருட்பிரிவு கண்டு யாம் அஞ்சுகின்றேம் என்றவாறு.

    308.    பல்லிருங் கூந்தன் மெல்லிய லோள்வயின்  

பிரியா யாயினு நன்றே விரியிணர்க்
காலெறு ழொள்வீ தாஅய
முருகமர் மாமலைப் பிரிந்தெனப் பிரிமே.

இது, “பிரிவல்” என்ற தலைமகற்குத் தோழி, “பிரியா தொழியப் பெறின் நன்று; பிரிவையாயின் இம்மாலை இப்பருவத்து எங்களை விட்டுப் பிரிந்தாற் பிரிக” எனச் சொல்லியது.

** உரை :**
பலவாகிய கரிய கூந்தலையும் மெல்லிய இயல்பினையு முடைய தலைமகளைப் பிரியாதொழிகுவையாயின் நன்று; பிரிவதே பொருளாயின், விரிந்த கொத்துக்கள் பொருந்திய வலிய காலையுடைய எறுழமரத்தின் ஒள்ளிய பூக்கள் பரந்த முருகன் விரும்பும் இப்பெரிய மலையிடத்து இப்பருவத்தே எங்களைவிட்டுப் பிரிக என்றவாறு.

கரிய நீண்ட மயிர்த்திரளாதல் பற்றிக் கூந்தல் பல்லிருங் கூந்தல் எனச் சிறப்பிக்கப்பட்டது. “பல்லிருங் கூந்தல் பசப்பு நீவிடின்3” எனப் பிறரும் கூறுதல் காண்க. உம்மை: எச்சப் பொருட்டு. கால் எனப் பொதுப்படக் கூறினமையின் வன்மை கொள்ளப்பட்டது. கால், அடிப் பகுதி; “கருங்கால் வேங்கை 4” “செங்காற் பலவு 5” என்றாற்போல. எறுழ், எறுழமரம்; இதன்பூ நெருப்புப் போலும் நிறமுடைமை பற்றி “எரிபுரை எறுழம்6” எனச் சான்றோர் சிறப்பித்துரைக்கின்றனர். ஒள்வீ தாஅய மலை, முருகமர் மலை என இயையும். பிரியின் எனற்பாலது பிரிந்தென எனத் திரிந்தது. “வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய1” என்பது தொல்காப்பியம். பிரிமே என்பது “அட்டி லோலை தொட்டனை நின்மே 2” என்றாற்போல முன்னிலைக்கண் வந்தது. முருகமர் மலை யென்றார், முருகன் மலையுறை கடவுளாதலின். எறுழ் வீ தாஅய் முருகு அமர்மலை என இயைத்து எறுழம்பூவின் மணங் கமழும் மலை யென்றுமாம்.

செலவுக் கருத்துணர்ந்து அழுங்குவிக்கும் செயலினளாதலின் தோழி செல்லா யாயினும் நன்று என்றாள். செல்லாவழிப் பிரிவும், அது வாயிலாகத் தலைமகட்கு வருத்தமும் இல்லையா தலின் மெல்லியலோள் வயின் செல்லாயாயின் நன்றே
என்பா ளாயினள். பிரிதலே பொருளாயின், இம் மலையிடத்து இவ்வேனிற் பருவம் நீங்காவாறு செய்து அதன்கண்ணே எம்மை இருத்திச் செல்க என்பாள், பிரிந்தென இம்மாமலைப் பிரிமே என்றாள். எறுழம் பூப்பது வேனிற்பருவத்தே யாகலின், அதன் ஒள்வீ தாய மலை எனக் கூறியது, மலையிடத்தே வேனிற்பருவம் நின்றமை குறித்தவாறாயிற்று. வேனிற்பருவம் நிலைபேறின்றிக் கழிவதாகலின், அதன்கண் தலைமகளை நீங்காவாறு இருத்திப் பிரிவது கூடாமையின், தோழி பிரிமே என்றது, செல்லற்க என்று செலவழுங்குவித்ததாம்.

ஒள்வீ தாய மாமலை யென்று ஒழியாது முருகமர் மாமலை என்றது, அன்பின்றிப் பிரிந்தார் மலை பூத்தல் கூடாதென்றும், பிரியேன் என்று சொல்லி மணந்து பின், பிரிவாரை முருகக்கடவுள் தெறும் என்றும் கொண்டு தலைமகள் வேறுபட்டு வருந்துவள் என்பது சுட்டி நின்றது.

309. வேனிற் றிங்கள் வெஞ்சுர மிறந்து  

    செலவயர்ந் தனையால் நீயே நன்றும்
    நின்னயந் துறைவி கடுஞ்சூற் சிறுவன்
    முறுவல் காண்டலி னினிதோ
    இறுவரை நாடநீ யிறந்துசெய் பொருளே.

இது பொருள்வயிற் பிரிவல் என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது.

** உரை :**
முறிந்த மலைப்பக்கத்தையுடைய நாடனே, நீ வேனிற் பருவத்தின்கண் வெவ்விய சுரத்தைக் கடந்து பொருள்வயிற் பிரியக் கருதினை யாயின், நீ பிரிந்து செய்யும் அப்பொருள், நின்னைப் பெரிதும் விரும்பி யுறையும் இவளுடைய முதற்
சூலில் தோன்றிப் பிறந்த சிறுவனுடைய இளநகையைக் காண்டலாற் பெறலாகும் இன்பத்தினும் இனிதாமோ? கூறுக. என்றவாறு.

திங்கள், ஈண்டுப் பருவத்தின் மேற்று; “கோடைத் திங்களும் பனிப்போள் 1” என்புழிப் போல. வேனிற்றிங்களில் சுரம் “காலை
யும் மாலையும் நண்பகலன்ன கடுமை கூரச் சோலை தேம்பிக் கூவல் மாறி நீரும் நிழலும் இன்றி நிலம் பயந்துறந்து புள்ளும் மாவும்” புலம்புறக் கிடத்தலின் வெஞ்சுரம் என்றார். நன்று என்னும் உரிச்சொல் மிகுதிப்பொருட்டு;“நன்றுபெரிதாகும் 2” கடுஞ்சூல், தலைச்சூல்; “கடுஞ்சூல் மகளிர் 3”: புதுமைப் பொருட்டாய கடி யென்னும் உரிச்சொல் திரிந்து கடுஞ்சூல் என வந்தது. இறுவரை, கற்கள் முறிந்து சரிந்து கிடக்கும் பக்கத்தையுடைய மலை. “இருங்கல் லிகுப்பத்து இறு வரை 4” என்பது காண்க. சரிவின்றி நெட்டாக உயர்ந்திருக்கும் மலையும் இறுவரை எனப்படும்; “இறுவரை புரையுமாறு இருகரை யேமத்து 5” என்பதன் உரை காண்க.

மகன் பிறந்த பின்னும் கணவன் பால் அன்பு பெருகி நிற்கும் கற்புக்கடனை வியந்து நன்றும் நின் நயந்துறைவி என்று தலைமகளை விதந்து கூறினாள். தலைச்சூலிற் பிறந்த முதல் மகன்பால் பெற்றோர்க்குப் பேரன்பு நிகழ்தல் கண்டு கடுஞ்சூற் சிறுவன் என்றும். மக்களின் சொற்கேட்டல் செவிக்கின்பமும், மெய்தீண்டல் உடற்கின்பமும் தருதல் போல இளநகை காண்டல் கட்கின்பம் பயத்தலின் முறுவல் காண்டலின் என்றும், நீ இறந்துசெய்யும் பொருள், நினக்கே யாகாது, நின் பெற்றோரை நோக்கிநின் நல்வினையாலே அவர்பாற் சேறலின், நினக்கேயாய் நின்மகன் செய்யும் பொருள்போல் நீ செய்யும் பொருள் சிறந்த தன்மையின், சிறுவன் முறுவல் காண்டலின் இனிதோ என்றும் கூறினாள். “தம்பொரு ளென்ப தம் மக்கள் அவர்பொருள், தந்தம் வினையான் வரும் 1” என்பதனால் மக்கள் சிறந்த பொருளாதல் அறிக. இருமையும் பயத்தற் சிறப்புடைய ஏனைச் செல்வம் போல, மக்கட் செல்வமும் “இம்மை யுலகத் திசையொடும் விளங்கி, மறுமை யுலகமும் மறுவின் றெய்துப, செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச், சிறுவர்ப் பயந்த செம்மலோ ரெனப், பல்லோர் கூறிய பழமொழி யெல்லாம், வாயே யாகுதல் 2” யாவரும் அறிந்ததொன் றாகலின், இது பயவுவமம்.

310.     பொலம்பசும் பாண்டிற் காசுநிரை யல்குல்  

    இலங்குவளை மென்றோ ளிழைநிலை நெகிழப்
    பிரிதல் வல்லுவை யாயின்
    அரிதே விடலையிவ ளாய்நுதற் கவினே.

இது பிரிகின்ற தலைமகற்குத் தோழி, நீ நினைக்கின்ற கருமம் முடித்தாயாயினும், இவள் நலம் மீட்டற் கரிது எனச் சொல்லிச் செலவழுங்குவித்தது.

** உரை :**
தலைவ, பொன்னாற் செய்யப்பட்ட பசிய பாண்டிலைச் சுற்றி மணிகள் கோத்தணிந்த அல்குலையும், விளங்குகின்ற வளைகளையும் மெல்லிய தோள்களையுமுடைய இவள் அவ்வணிகள் நின்ற நிலையின் நெகிழ்ந்து நீங்க, நீ பிரிந்து செய்யும் வினையை முடித்தல் வல்லையாயினும், நின் பிரிவால் இவளிடத்து நீங்கிக் கெடும் சிறுநுதலின் அழகு பெறற்கரிதுகாண் என்றவாறு.

பாண்டில், பொன்னால் வட்டமாகச் செய்யப்படுவதோர் அணிவகை. இதனைச் சுற்றி மணிகள் கோத்து மேகலையோ டணிதல் பண்டை மரபாகலின், பொலம்பசும் பாண்டிற் காசுநிரை யல்குல் என்றார். இதனைப் “பொன்செய் பாண்டிற் பொலங்கலம் 3” எனப் பிறாண்டும் கூறுவர். “பவழக் காசொடு பன்மணி விரைஇத், திகழக் கோத்த செம்பொற் பாண்டில் 1” என இக்கருத்தைக் கொங்குவேளிர் விளக்கிக் காட்டுவர். பிரிந்தவழி மேற்கொண்ட பொருள்வினைகளை முடித்தல்லது மீளாமை தலைமகற்குத் தலைமைப்பண்பாதலின், பிரிந்து வினைமுடித் தலைப் பிரிதல் என்றே கூறினார். ஆயின் என்புழிச் சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. மகளிர்க்கு நுதல் சிறுத்தல் சிறப்பாதலின், ஆய்நுதல் எனப்பட்டது. “நுதலடி நுசுப்பென மூவழிச் சிறுகி 2” என்பது காண்க.

பிரிந்தவழி யெய்தும் மெலிவினால், வளையும் இழையும் நெகிழ்தல் ஒருதலையாகலின், நிலைநெகிழ என்றும், காதலாற் பிணிப்புண்டு ஈருடலும் ஓருயிருமாய் நிற்பார் ஒருவரினொருவர் பிரிதல் அருமை தோன்றப் பிரிதல் வல்லுவையாயின் என்றும், அரிதிற் பிரிதலும், பிரிந்து வினைமுடித்தலும் வல்லா யாயினும், இவள் நுதற்கவினை மீட்கும் வன்மை யுடையை யல்லை என்
பாள், கவின்மேல் ஏற்றி அரிது என்றும் கூறினாள். “நின் அளிபெற நந்தும்இவள் ஆய்நுதற் கவினே 3” எனப் பிறரும் கூறுதல் காண்க.


செலவுப் பத்து

இதன்கண் வரும் பாட்டுக்கள் பத்தும் தலைமகன் தலை மகளின் நீங்கிச் சென்றவிடத்து அச்சென்றமை பொருளாக வந்த வற்றின் தொகுதி யாகலின், இஃது இப்பெயர் எய்துவதாயிற்று.

கற்புநெறி நின்றொழுகும் பொற்புடை மனைவாழ்வின் கண் கடமை பற்றிப் பொருள்வினை குறித்துத் தலைமகன் தலைமகளின் நீங்கிப் பிரிந்தேக வேண்டிய நிலை உண்டாவது இயற்கை. அக்காலை அவனது உள்ளம் கடமையும் காதலும் தம்மிற் பொருது நிற்கும் போர்க்களமாகும். போர்முடிவு கடமையின் வெற்றியாக முடியும். தலைமகன் உள்ளம் கடமைவழிச் செல்லும்.

செலவு ஒருப்பட்டவன் தன் கருத்தை முதற்கண் தோழிக்குச் சொல்லித் தலைமகட்கு உணர்த்துவிப்பன்; தானும் பள்ளி யிடத்தனாகியபோதும் பிறாண்டும் குறிப்பினால் தன் பிரிவுக் கருத்தைப் புலப்படுத்துவன். சிறப்புடைய வாழ்வு கடமை வழி நின்றால் இல்வாழ்வின் பயன் இனிது எய்தும் என்பதைத் தோழி நன்கு அறிவாளாயினும், தலைமகட்குத் துணையாய் நின்று அவள் எய்தும் பிரிவுத்துன்பத்தை உடனிருந்து அறிந்து ஆற்று விக்கும் கடமையுடைமையால் தலைவனைச் செலவழுங்கு விப்பள். அவளால் தலைவனது உள்ளம் கடமைவழி இயங்கு தற்கு உறுதிபெறுவது பெரும்பான்மை. தலைவியும், ஒரோவழி அவனைச் செலவழுங்குவித்தலும் செய்வள். இவ்வாற்றால் தலைமகன் உள்ளம் செலவின்கண் உறுதியும் காதலின் மாண்பும் நன்கு உணர்ந்துகொள்ளும். உறுதியுள்ளம் படைத்த தலைவன் முடிவில் பிரிந்தே போவன்; பிரியுங்கால், தலைவியது ஆற் றாமைக் கஞ்சிச் சொல்லாதே பிரிவதும் உண்டு.

ஒன்றியிருக்கும் உயிர்ப்பொருள் இரண்டும் ஒன்றினொன்று பிரிந்தவழி, ஒவ்வொன்றும் பிரிவாற்றாது துடிப்பதும் வருந்து வதும் இயல்பு. அவ்வியற்கைநெறியே பிரிவின்கண் தலைவியது உள்ளம் பிரிவாற்றாது துடித்து வருந்தும். அவ்வருத்தத்தின்கண் அவள் தலைமகன் சென்றது பொருளாகச் சில சொல்லுவள்; அவட்குத் துணைநின்று ஆற்றுவிக்கும் தோழியும் சில சொல்லு வள். அவற்றை இப்பகுதிக்கண் காணலாம்.

களவின்கண், தலைமகட்குத் தன்பால் உண்டாகிய காதல், தன்னை இன்றியமையாத அளவிற் பெருகி முறுகுமாறு ஒழுகிய தலைமகன், அந்நிலை எய்தியது உணர்ந்ததும், அவளை வரைந்து கொள்ளத் துணிந்து, அவள் பெற்றோர்பால் சான்றோரை மகட்கொடை வேண்டி விடுவன். இதற்கிடையே, வேறு சிலர் மகட்கொடை வேண்டுதலும் உண்டு. தான் விடுத்த சான் றோர்க்கு மகட்கொடை மறுப்பினும், அயலார்க்கு மகட் கொடை நேர்வது போல் தோன்றினும், தலைமகள் பெருங் கற்பின ளாதலின் ஆற்றாது உயிர்விடுவ ளாதலால், அவளைப் பெற்றோர் அறியாவகையிற் கொண்டுதலைக்கழிவது முண்டு. அஃதொழிய வேறு வழியின்மை காணும் தோழியும் தலைமகளும் அதற்கு உடன்படுவர். குறித்த நாள் இரவில், தோழி கையடை செய்யத் தலைமகன் தலைமகளைத் தன்னுடன் கொண்டு போவன். இஃது உடன்போக்கு என்று வழங்கும். இஃது அறக்கழிவுடைய செயலாயினும், தலைமகளது கற்பறம் பேணும் நெறியில் இன்றியமையாமைபற்றிச் சான்றோர் உடன்போக் கினை ஒழுக்காறாகவே கொண்டுள்ளனர். “இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின், சிறந்தானை வழிபடீஇச் சென்றனள், அறம் தலை பிரியா ஆறுமற்று அதுவே 1” எனச் சான்றோர் உரைப்பது காண்க. உடன்போக்கு, “அறம் தலைப்பிரியா ஆறு” என்பது பற்றியே ஆசிரியர் தொல்காப்பியனாரும், உடன்போக்கில் நிகழ்வனவற்றை மேற்கொண்டு இலக்கணம் அமைப்பாராயினர். அவரது கருத்தை அறியும் நுண்ணறிவு இன்மையால், ஆராய்ச்சி யாளர் சிலர், இவ்வுடன்போக்கு நெறியை இகழ்ந்துரைக்கத் தமது வெண்மை விளங்க நின்றதும் உண்டு. இவ்வண்ணம் உடன் போக்கு என்னும் செலவு பிறந்தவழி, அச்செலவின்கண் நிகழ்ந்த வற்றைச் சொல்லும் பாட்டுக்களும் இப்பத்தின்கண் உள்ளன.

    311.    வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும்  

ஆரிடைச் செல்வோ ராறுநனி வெருஉம்
காடிறந் தனரே காதலர்
நீடுவர் கொல்லென நினையுமென் னெஞ்சே.

இஃது, ஆற்றது அருமை நினைந்து நீ ஆற்றாயாதல் வேண்டா, அவர் அவ்வழி முடியச் சென்றார் என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

** உரை :**
காட்டிடை நின்ற வேங்கைமரத்தில் ஏறிப் பூக்கொய் வோர், பஞ்சுரம் என்னும் பண்ணினைப் பாடுவாராயினும், அரிய நெறியின்கட் செல்வோர் அது கேட்பினும்,அவ்வழியிடைச் செல்லுதற்கு அஞ்சும் காட்டினை, நம் காதலர் முற்றவுங் கடந்து சென்றனராதலால், என் நெஞ்சம்.. அவர் விரைய வாராது நீட்டிப்பர்கொல்லோ என நினையாநின்றது என்றவாறு.
வேங்கைப்பூவைக் குறிஞ்சிநில மகளிர் பெரிதும் விரும்பி அணிவர்; அதனால் அவர்கள் வேங்கைமரத்தில் ஏறிப் பூக் கொய்வர்; அக்காலை அவர்கள் பேராரவாரம் செய்வது மரபு. “கருங்கால் வேங்கை யிருஞ்சினைப் பொங்கர், நறும்பூக் கொய் யும் பூசல் 1” எனவும், “கிளர்ந்த வேங்கைச் சேணெடும் பொங்கர்ப், பொன்னேர் புதுமலர் வேண்டிய குறமகள், இன்னா இசைய பூசல் பயிற்றலின் 2” எனவும் சான்றோர் உரைப்பது காண்க. இவ் வாறு குறமகளிர் வேங்கை கொய்யுங்கால் பஞ்சுரம் என்னும் பாலைப்பண்ணைப் பாடுவது பற்றி வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும் என்றார். பாலையில் வாழும் புறாக் களும் இப்பஞ்சுரமே இசைக்கும் என்பாராய், “வெஞ்சுரம் செல்வோர் வினைவழி யஞ்சப், பஞ்சுர வோசையிற் பையெனப் பயிரும், வெஞ்சிறைச் செங்கால் நுண்பொறிப் புறவே 3” என்று பிறரும் கூறுதல் காண்க.

தலைமகன் செல்லுதற்குரிய சுரத்தின் வெம்மையையும் கொடுமையையும் நினைந்து வருந்திய தலைமகள் ஆற்றி யிருப் பள் எனத் தோழி, சுரத்தை இனிது கடந்து சென்று சேர்ந்தார் என்றாளாக, அது கேட்டு மகிழ்வாளாய்த் தலைவி, அவள் கூற்றையே கொண்டெடுத்து, காடு இறந்தனரோ காதலர் என்றாள். அதனால் உவகை கொண்ட தோழியை நோக்கி, யான் மகிழ்ந்தேனாயினும், சுரத்தின் கொடுமையைப் பொருளாக நினையாவாறு அவர் உள்ளத்தைப் பிணித்து நிற்கும் வினையின் அருமை நோக்கி, விரைய முடியாது நீட்டிப்பரோ என அஞ்சு கின்றேன் என்பாள், நீடுவர் கொல்என நினையும் என் நெஞ்சு என்றும் கூறினாள்.

    312.    அறஞ்சா லியரோ வறஞ்சா லியரோ  

வறனுண் டாயினு மறஞ்சா லியரோ
வாள்வனப் புற்ற வருவிக்
கோள்வ லென்னையை மறைத்த குன்றே.

இஃது, உடன்போயின தலைமகள் மீண்டு வந்துழி, “நின் ஐயன்மார்பின் துரந்து வந்தவிடத்து நிகழ்ந்தது என்னை?” என்ற தோழிக்கு, நிகழ்ந்தது கூறித் தலைமகன் மறைதற்கு உதவி செய்த மலையை வாழ்த்தியது.

** உரை :**
ஒளியினால் வனப்பு மிகவுடைய அருவிகளை யுடைத் தாய், உடன்போக்கின்கண் எம்மைத் தொடர்ந்து போந்த தமர் அறியாவாறு வலிமிக்க என் தலைவனை மறைத்து உதவிய குன்றம், எங்கும் வறம் உண்டாயினும், நீர் வறங்கூராத அறம் நிறைந்து மிக ஓங்குவதாக என்றவாறு.

சாலியர்: நிறைக என்றும் பொருட்டாய வியங்கோள்முற்று. அறம், மாரிக்கண் மிகப்பெற்றுக் கோடைக்கண் அருவியாகப் பெருகி வீழும் நீர்வள முடைமை. வறம், ஈண்டுக் கடுங்கோடை மேற்று. அருவிக் குன்று என இயையும். கருவரைக்கண் ஒளி திகழ்ந்து வீழ்தலின் வாள் வனப்புற்ற அருவி என்றார். “வரைதாழ்பு வாணிறங் கொண்ட அருவித்து 1” என்று பிறரும் கூறுவர். கோள்வல் என்னை என்புழிக் கோள், கடைப்பிடி; என்னை, தலைவன்.

தாம் பூண்ட ஒழுக்கம் கெடாவகை மறைதற்கு இடந் தந்து உதவினமையின், அடுக்கு, காதற்சிறப்பு உணர நின்றது. தமருடைய வன்கண்மையும் தலைவனது மறமாண்பும் போர் நிகழின் வரும் ஏதமும் எண்ணிப் பெருங்கலக்குற்று வருந்தின தலைவி, இடைநின்று தலைவனை மறைத்துப் போருண்டாகாத வாறு தடுத்த குன்றினது சிறப்பும் தன் ஆராமையும் தோன்ற அறங்சாலியரோ அறஞ்சாலியரோ என அடுக்கிக் கூறினாள். “மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி, அமர்வரின் அஞ் சேன் பெயர்க்குவென், நுமர்வரின் மறைகுவன் மாஅ யோளே 2” என்று தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்துக் கூறினா னாகலின், கோள்வல் என்னை என்றாள். இது, “வீளைப் பருந்தின் கோள்வல் சேவல் 3” என்புழிப்போலத் தான் கருதியது கருதியாங்குத் தப்பாது கொள்ளும் வன்மை உணர்த்திற்று. தன்னுடைய தமரொடு பொருவதாயின், தலைமகற்கு ஏதம் நிகழுமோ எனக் கவன்று தலைமகள் இறந்து படுமாகலின், அவள் அவ்வாறு கவலாதவாறு மறைந்தானாகலின், அஃது அவன் தலைமைக்கு இழுக்காகாமையான் மறைத்த குன்று என்றாள்; “அமரிடை யுறுதர நீக்கிநீர், எமரிடை யுறுதர ஒளித்த காடே 1” எனப் பிறாண்டும் தலைவி கூறுதல் காண்க.

“எஞ்சி யோர்க்கும் எஞ்சுதல் இலவே 2” என்பதன் உரையில் இதனைக் காட்டி, “நின் ஐயன்மார் வந்துழி நிகழ்ந்தது என் என்ற தோழிக்குத் தலைவி தலைவனை மறைத்த மலையை வாழ்த் தியது” என்பர் நச்சினார்க்கினியர்; இது தமர் வந்துற்றவழிக் கூறியது என்பர் இளம்பூரணர்.
வாள்வயப்புற்ற என்றும், கோள்வரும் என்னையை என்றும் பாடமுண்டு.

    313.    தெறுவ தம்ம நும்மகள் விருப்பே  

உறுதுய ரவலமொ டுயிர்செலச் சாஅய்ப்
பாழ்படு நெஞ்சம் படரடக் கலங்க
நாடிடை விலங்கிய வைப்பின்
காடிறந் தனணங் காத லோளே.

இது, தலைமகள் புணர்ந்துடன் போகியவழிச் செவிலி ஆற்றாமை கண்ட நற்றாய் அவட்குச் சொல்லியது.

** பழைய உரை :**
தெறுவது என்றது, யான் அவள்மேல் வைத்த காதல் என்னால் தெறப்படுவது என்றவாறு.

** உரை :**
மிக்க துயரம் காரணமாகத் தோன்றும் அவலத்தால் உயிர் நீங்குமாறு மெலிந்து பாழ்படும் என்னெஞ்சம், தன்னை நினைத்தலால் வருத்தம் மிக்குக் கலக்க மெய்த, நம்மாற் காதலிக்கப்பட்ட அவள், நாடுகள் பல இடையிட்ட இடத் தினையுடைய காடுகளைக் கடந்து சென்றன ளாகலின், அவள்மேற் சென்ற என் காதல் துன்புறுத்துவதாயிற்றுக்காண் என்றவாறு.

தெறுவது, துன்பம் செய்வது; “தெறுவ தம்மஇத் திணைப் பிறத் தல்லே 3” என்று பிறரும் கூறுவது காண்க. விருப்பு, ஈண்டுக் காதல் மேற்று. இன்ப ஒளியின்றித் துன்பவிருள் படிந்து நினைத்தற் றொழிற்கு இடமாகாது செயலற்று வருந்தும் நெஞ்சு, பாழ்படு நெஞ்சம் எனப்பட்டது. இடை விலங்கிய வைப்பு, ஈண்டுத் தலைமக்கள் நாட்டின் இடையே இனிது சென்று சேர்தற்கியலா வாறு குறுக்கே மாறாய்க் காடு பரந்து கிடக்கும் இடம். அவலம், பிறர் புலனுக்குத் தோன்றி நிற்கும் வருத்தம். இது காதல் செய்து ஓம்பிய தலைமகளை இழந்தது பொருளாகப் பிறந்த துயரின் வழித் தோன்றுதலின், உறுதுயர் அவலம் என்றார்; “இளிவே இழவே அசைவே வறுமையென, விளிவில் கொள்கை அழுகை நான்கே 1” என்று ஆசிரியர் கூறுவது காண்க. ஒடு ஆனுருபின் பொருட்டு. இதனை “அன்ன பிறவும் அதன்பால என்மனார் 2” என்பதனால் அமைப்பர்.

தன்னாற் காதலிக்கப்படும் பொருள் நெஞ்சின்கண் நின்று இன்பந்தர நுகர்ந்தவள், அது நீங்கியவழி, வைப்புழி மறந்த வறியோன் போல வாடுகின்றா ளாகலின் பாழ்படு நெஞ்சம் என்றும், அவள் ஆடிடமும் பயில்பொருளும் காண்டொறும் உள்ளத்தில் துயர்மிகுதலின் படரடக் கலங்க என்றும், இல் இகவா இளம்பருவத்தே நம் அன்பினை நெகிழ்த்துச் சென்றவள், வேற்றுநாட் டகவயின் செல்லின் நம் அன்பினை அறவே மறந் தொழிவள் என்பாள், நாடிடை விலங்கிய வைப்பின் காடிறந் தனள் என்றும், அன்னவள் நம்மாட்டு அன்பில ளாயினும், நாம் அவள்மாட்டுச் செய்த அன்பு பெரிதாய் அவளது பிரிவாற்றாது நம்மை வருத்துவ தாயிற்று என்பாள், தெறுவது அம்ம நும்மகள் விருப்பே என்றும் கூறினாள். கற்பின்கண் தானும் செவிலியும் ஒத்து ஒழுகுதலின், நம் காதலோளே என்றும், களவின்கண் தன்னினும் செவிலி தலைமகட்குச் சிறந்தாளாய் ஒழுகுதலின், நும்மகள் விருப்பே என்றும் கூறினாள். “ஆய்பெருஞ் சிறப்பின் அருமறை கிளத்தலின், தாய் எனப் படுவோள் செவிலி யாகும். 3” என்பது விதி. இது, “தன்னும் அவளும் 4” என்ற சூத்திரத்து, “ஆகிய கிளவியும் அவ்வழி யுரிய” என்பதனை மொழிமாற்றி, “அவ்வழி யாகிய கிளவியு முரிய” என்று கொண்டு, நற்றாய் தலைமகளின் அன்பின்மை கூறியதாகக் கொள்க. “களவல ராயினும் 5” என்ற சூத்திரத்துப் “பிரிவி னெச்சத்தும்” என்புழி இதனைக் காட்டி, “இது பின்செல்லாது வருந்தி யிருந்த செவிலியைக் கண்ட நற்றாய் கூறியது” என்றும், இது நற்றாய் கூற்றாய்ச் “செவிலி மேன” ஆயிற் றென்றும் கூறுவர் நச்சினார்க்கினியர்.

    314.    அவிர்தொடி கொட்பக் கழுதுபுக வயரக்  

கருங்கட் காக்கையொடு கழுகுவிசும் பகவச்
சிறுகண் யானை யாள்வீழ்த்துத் திரிதரும்
நீளிடை யருஞ்சுர மென்பநம்
தோளிடை முனிநர் சென்ற வாறே.

இது, தலைமகன் பிரிந்துழி, அவனுடன் போய் மீண்டார் வழியது அருமை தங்களிற் கூறக் கேட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

** உரை :**
தோழி, விளங்குகின்ற தொடியினை யணிந்த பேய்மகள், ஆறலைக்கப்பட்ட இடத்தின்கண் இறந்தோர் கருந்தலை தேடித்திரிய, அவள் ஊர்ந்து போந்த கழுது அவர்தம் நிண மாகிய உணவு தேடியுண்ண, எஞ்சியவற்றை உண்ணும் கரிய கண்களையுடைய காக்கையும் கழுகும் விசும்பின்கண் கத்தித் திரிய, சிறிய கண்களையுடைய யானை. எதிர்ப்பட்ட மறவரைக் கொன்று திரியும் நீண்ட இடத்தினையுடைய கடத்தற்கரிய காடு என்று கூறுவர் நம் தோளிடத்து விருப்பமின்றிச் சென் றோரது நெறியினை; அது கேட்டு என் நெஞ்சம் கவலாநின்றது என்றவாறு.

அது கேட்டு என்பது முதலாயின குறிப்பெச்சம். அவிர் தொடி, அவிர்தொடியையுடைய பேய்மகள்; அன் மொழித் தொகை. தொடி, யானைத் தந்தத்தாற் செய்யப்பெற்ற பூண்; இதனை மகளிர் தாம் அணிந்த வளை நெகிழாவகை முன்கையில் அணிப. பேய்மகள் இறந்தார் தலையை யுண்பவள்; “விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப், பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்பு, கணநரி யோடு கழுதுகளம் படுப்ப 1” என்றும், “உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள், குருதி யாடிய கூருகிர்க் கொடுவிரல், கண்தொட் டுண்ட கழிமுடைக் கருந் தலை, ஒண்டொடித் தடக்கையின் ஏந்தி 2” என்றும் வருவன வற்றாலும், அவள் கழுதூர்ந்து வருதல். “கவைத்தலைப் பேய் மகள் கழுதூர்ந்து இயங்க 1” என்று வருதலாலும் உணர்க. “கழுது, பேயில் ஒருசாதி யென்பர்” நச்சினார்க்கினியர்.

பேய்மகளிரைச் சவந்தின் பெண்டிர் என்று பிற்காலத்தார் கூறுப. அவர்கள், இக்காலத்தே மலைப்புறங்களில் வாழும் தடவர், இறவுளர், முதுவர், காடர் என்பார் போல, சங்ககாலத்தில் மக்களினம் வழங்காத பாலைநிலங்களில் வாழ்ந்த மக்கள்; பிணந்தின்னும் இயல்பினராய் 2 இருந்தமையின் அவர்களைப் பேய்மகளிர், கழுது, கூளி எனப் பல திறமாகக் கூறினர். அவர் கூட்டம் காலப்போக்கில் அழிந்துபோயிற்றென அறிக. பாரத ராமாயணங்களிலும் ஒரு சில பழம்புராணங்களிலும் காணப் படும் அரக்கரினம் இக்கூட்டத்தினரையே யாம். இவர்கள் தென்கடல் நாட்டுக்குத் தெற்கிலும் மேற்கே ஆப்பிரிக்கா முதல் கிழக்கே ஆத்திரேலியா வரையில் இருந்த நிலப்பகுதிகளிலும் ஒருகாலத்தில் வாழ்ந்தனர். அந்நாடுகளிற் பெரும்பாலன கடற்குள் மூழ்கினமையின் அவர்கூட்டம் பெரிதும் மறைந்தொழிந்தது எஞ்சிநின்ற ஒருசிலர் நன்மக்கள் வாழ்வில் பழகிப் பிணந் தின் றலைக் கைவிட்டனர்.

முனிநர் என்புழி முனிதல் வெறுத்தல். புகவு: “குறியதன் இறுதிச் சினைகெட வுகரம், அறிய வருதல் செய்யுளுள் உரித்தே 3” என்பதனாற் செய்யுள்முடிபு எய்திய பெயர்ச்சொல். இதன் சொன்னிலை புகா என்பது; “புகாஅக் காலை 4” என்றும், “புகாப் புகர் கொண்ட புன்பூங் கலிங்கம் 5” என்றும் சான்றோர் கூறுதல் அறிக. யானை ஆள்வீழ்த்துத் திரிதல், “நீளிடை, ஆட்கொள் யானை யதர்பார்த் தல்கும் 6” எனப் பிறரும் கூறினர். ஆள், பாகனு மாம். கருங்கண், சிறுகண் என்பன வாளாது இயற்கை அடை யாய் நின்றன; அன்றி, ஈரமின்மையும், “அறிந்தறிந்தும்பாகனையே கொல்லும் 7” சிறுமையும் முறையேயுடைமை உணர நின்றன எனினுமாம்.

பேய்மகளிரும் கழுதும் காக்கையும் கழுகும் இயங்கும் சுரம் எவர்க்கும் விருப்பத்தைத் தாராதாகலின், அதனை விரும்பிச் சென்றார் நம் தலைவர் எனின், அவர்க்கு நம்மிடை இன்பம் இல்லை என்பது இனிது விளங்கும் என்றற்குச் சுரத்தின் கொடு மையை எடுத்து மொழிந்தாள்.
நம் தோளிடைப் பெறலாகும் இன்பத்தினை வெறுத்தில ராயின், நீளிடை யருஞ்சுரம் செல்லார் என்னும் கருத்துத்தோன்ற, தோளிடை முனிநர் சென்ற வாறே என்றாள். “மலையுடை யருஞ்சுரம் என்பநம், முலையிடை முனிநர் சென்ற வாறே1” என்றார் பிறரும்.

    315.    பாயல் கொண்ட பனிமலர் நெடுங்கட் பூசல் கேளார் சேய ரென்ப  

இழைநெகிழ் செல்ல லுறீஇக்
கழைமுதிர் சோலைக் காடிறந் தோரே.

இது, தலைமகன் சொல்லாது பிரிந்துழித் தலைமகள் வேறு பாடு கண்ட தோழி இரங்கிச் சொல்லியது.

** பழைய உரை :**
பாயல் கொண்ட பனிமலர் நெடுங்கட் பூசல் என்றது, அவர் போகின்ற காலத்து விலக்காத வகைத் துயின்றீர் எனக் கண்ணொடு புலந்து கூறுகின்ற பூசல்.

** உரை :**
தன்னால் துறக்கப்பட்டோர்க்குத் தன் பிரிவால் இழைகள் நெகிழ்ந்தோட வல்ல துயரத்தை உறுவித்து மூங்கில்கள் நிறைந்த சோலைகளையுடைய காடுகளைக் கடந்து, மிக்க சேய்மையிற் சென்றுள்ளா ராகிய காதலர், பிரிந்தபொழுது அயர்ந்து உறக்கங் கொண்டமை பொருட்டுக் குளிர்ந்த மலர்போல் நீண்ட நின்கண்களால் விளைகின்ற ஆகுலத்தைக் கேளார்; கேட்பாரெனக் கலங்குதலாற் பயன் என்? என்றவாறு.

பாயல், உறக்கம். பனிமலர், குளிர்ந்த தாமரை; நீலம், குவளை, நெய்தல் முதலிய நீர்ப்பூக்கட்கும் பொதுப்பெயர். நெடிய கண்கள் பசத்தலால் அலர் தோன்றி வருத்துவதும் அதனால் தலைமகள் ஆற்றாமை மிகுவதும் குறித்து நெடுங்கட் பூசல் என்றார். “வாடுதோட் பூசல்” எனத் திருவள்ளுவனாரும் 1, “இருந்தணை மீது பொருந்துழிக் கிடக்கை, வருந்துதோட் பூசல் களையும் மருந்தென, உள்ளுதொறும் படூஉம் பல்லி 2” என்று பிறரும் கூறுதல் காண்க. பூசல்: ஆகுபெயர். என்ப: அசைநிலை. இறந்தோர்: என்றமையான், சொல்லிப் பிரியும் அன்பு நிலையைக் கடந்து தலைமகன் சொல்லாது பிரிந்தனன் என்பது பெற்றாம்.

தலைமகன் பிரிவன் என்ற குறிப்புணராது கண்கள் அயர்ந்து உறங்கினமை தோன்றப் பாயல் கொண்ட என்றும், பிரி வுணர்ந்து ஆற்றாமையால் கண்கள் பசந்து நீர்சொரிந்து வருந் தினமையின், பனிமலர் நெடுங்கண் என்றும், அதனால் அலர் பிறப்ப ஆற்றாது வருந்தினமை விளங்க, நெடுங்கட் பூசல் என்றும், கண் பசந்ததோடு, தொடியும் வளையும் நெகிழுமாறு மேனி வாடியவழிப் பிறந்த தோட்பூசலை இழைநெகிழ் செல் லல் உறீஇ என்றும், இவ்வண்ணம் நின் கண்ணும் தோளும் செய்யும் பூசல், காடிறந்து சென்ற காதலர் செவிப்புலம் சென்று சேரா என்பாள், கேளார் என்றும், எனவே, அன்பின்றிச் சொல் லாது பிரிந்தார் பொருட்டு, ஆற்றாது வருந்துதலைக் கைவிட்டு விரையத் தாம் மேற்கொண்ட வினை முற்றி மீள்வாராக என வேண்டுதலே செயற்பாலது எனத் தோழி கூறினாள் என்று உணர்க. “இழைநெகிழ் செல்லல் உறீஇ” என்றது உடம்பு நனிசுருங்கலும், அழிவில் கூட்டத்து அவன் பிரிவாற்
றாமையுமாம்.

    316.    பொன்செய் பாண்டிற் பொலங்கல நந்தத்  

தேரக லல்கு லவ்வரி வாட
இறந்தோர் மன்ற தாமே பிறங்குமலைப்
புல்லரை யோமை நீடிய
புலிவழங் கதர கானத் தானே.

இது, தலைமகள் மெலிவிற்கு நொந்து தலைமகன் பிரிவின் கண் தோழி கூறியது.

** உரை :**
உயர்ந்த மலைப்பக்கத்தே புல்லென்ற அரையினை யுடைய ஓமைமரங்கள் நிறைந்த, புலிகள் இயங்காநிற்கும் கானத்தின்கண், பொன்னாற் செய்யப்பட்ட பாண்டி லாகிய பொன்னணி நெகிழ்ந்தொழிய, தேர்த்தட்டுப் போலும் அகன்ற அல்குலின்கட் கிடந்த அழகிய வரிகள் வாட்ட மெய்த, நம்மைத் தெளிவாகப் பிரிந்து சென்றா ராகலான், நாம் ஆற்றுமாறு என்னையோ? அறியேன் என்றவாறு.

பாண்டிலைச் சுற்றிக் கோக்கப்படும் பொற்காசுகள் ஈண்டுப் பொலங்கலம் எனப்பட்டன. பொற்கலம் பொலங்கலம் என வந்தது. அல்குற்குத் தேர்த்தட்டு, தலையகன்று அடிசுருங்கித் தோன்றுவது பற்றி வந்த மெய்யுவமம். இறந்தார் என்பது “ஆ வோ வாகும் 1” என்பதனால் இறந்தோர் என வந்தது. பாண்டிற் பொலங்கலம் என்பதனைப் பொலம்பசும் பாண்டில் என்புழிக் கூறினாம். ஓமை மரத்தின் அடிப்பகுதி பொலிவின்றிப் பொருக்கு களையுடையதாய் நிற்றலின், புல்லரை யோமை யெனப்பட்டது.

மேலே செதிள்கள் பல கொண்டு பொருக்குகள் நிறைந்து இருத்தலால், “இருங்கழி முதலை மேந்தோல் அன்ன கருங்கால் ஓமை 2” எனவும், அதன் உட்பட்டை சிவந்திருப்பதுபற்றி, “பொரி யரை யோமைப் பெரும்பொளிச் சேயரை 3” எனவும் சான்றோர் குறிப்பது காண்க. புலிவழங் கதர கானத் தானே என்றது, வழியருமை நினைந்து கூறுதல். பிரிவாற்றாது மெலிவாட்குப் பிரிவுக் கேதுவாகிய பொருள் மிக்குத் தோன்றுதலின், பொலங் கலம் நந்த என்றாள். தேரகல் அல்குல் அவ்வரி வாட என்றது, அவன் பிரிவாற்றாமையான் உடம்பு நனி சுருங்கல்.

தலைமகன் பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகட்கு ஆற்றுந் திறமாவன கூறுதற்குரிய தோழி, நீர் செல்லும்வழிச் சாய்ந்து நீரின் செலவுக்கடுமை ஆற்றும் புல்லினம் போல, உயிர்த் துணையாகிய தலைமகள் எய்தும் துன்பத்தையே தானும் எய்தி உழந்து ஆற்றுவிப்பாளாய், பொலங்கலம் நந்த, அல்குல் அவ்வரி வாட இறந்தோர் மன்ற தாமே என்றாள். மனையின் கண் இருந்து பிரிந்தொழுகும் எல்லை கடந்து, நாட மலை காடு முதலியவற்றை இடையிட்டு நெடிது பிரிதல் பற்றிப் பிரிந்தோர் என்னாது இறந்தோர் என்றாள். இறத்தல், எல்லை கடத்தல். பிரிந்தவன் விரைய வாராது நீட்டித்தலின், நம்மைத் துறந்ததே யன்றி மறந்துவிட்டனர் போலும் என்பாள் குறிப்பால், இறந் தோர் மன்றதாமே என்றாள். காதலர்க்கு நம்மினும் பொருளே காதல் என்பாள், பொன்செய் பாண்டிற் பொலங்கலம் நந்த என்றாள் என்றுமாம்.

    317.    சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டுப்  

பைதற வெந்த பாலை வெங்காட்
டருஞ்சுர மிறந்தோர் தேஎத்துச்
சென்ற நெஞ்ச நீடிய பொருளே.

இது, தலைமகன் பிரிந்து நீட்டித்துழி, நெஞ்சினைத் தூது விட்ட தலைமகள், அது வாராது தாழ்த்துழித் தோழிக்குச் சொல்லியது.

** உரை :**
தோழி, பாழெய்திப் பசுமை யில்லையாய் வெந்து கரிந்து பாழாகிய வெவ்விய காட்டினிடத்ததாகிய அரிய சுரத்தைக் கடந்து சென்ற காதலர்பால் தூதுசென்ற என் நெஞ்சம் விரைய வாராது நீட்டித்தலின் பொருள் தெரிந்திலது; ஆக லின், அதனை ஆராய்வோம். வருக என்றவாறு.

பைது, பசுமை. பாழ்பட்டுப் பைதற வெந்த பாலை என்றது, வேனில் வெப்பத்தால் வழங்குநரும் வழங்குநவும் இன்றிப் பாழ்பட்டு, ஓரறிவுயிராகிய புல்லும் நிலைகெட்டு வெந்து கரிந்து பரல்மிக்க காடாய்த் தோன்றும் பாலை யென்பதாம். பாலை நிலத்திற் காணப்படும் மரங்களுள் பாலைமரம் சிறந்தமை பற்றி, நெடுஞ்சுரம் பாலை எனப்படும் என்பதும் ஒன்று. நீடிய பொருள், விரைந்து மீளாமைக்குக் காரணம்.

தலைமகன்பால் தூதுசென்ற நெஞ்சம் தன்னிடமே வந்து சேர்தற்பாலதாகவும் வாராமைக்குக் காரணமொன்று உளதாகல் வேண்டு மாகலின், சூழ்கம் வம்மோ எனத் தோழியை அழைத் தாள். ஆராய்ச்சி யெல்லாம் தான் தேர்ந்துகொண்ட இனத் தோடே எண்ணிச் செய்தற்கு உரியவாகலின் சூழ்ச்சித் துணை யாகிய தோழியைத் தோழி என்றாள். தலைமகனை நினைந்த நெஞ்சத்தில் அந்நினைவு விடாது நிகழ்தலின், சென்ற நெஞ்சம் என்றும், நீடிய பொருளே யென்றும் கூறினாள். இஃது, “உறுப்புடை யதுபோல் உணர்வுடை யதுபோல், மறுத்துரைப் பதுபோல் நெஞ்சொடு புணர்த்தும் 1” என்புழி அடங்கும். பிரிவுத் துன்பத்தாற் பேதுறும் மகளிர்க்குத் துணையாவது அவர் நெஞ் சல்ல தின்மையின், அது பற்றி இது கூறுவாளாயினள் என்றுமாம். “துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய, நெஞ்சம் துணையல் வழி 2” என்ப வாகலின்.
“அவனறி வாற்ற அறியு மாகலின் 3” என்ற சூத்திரத்துப் “பல்வேறு நிலை” என்றதனால், இது நெஞ்சினைத் தூதுவிட்டுக் கூறியது என்பர் நச்சினார்க்கினியர்.

    138.    ஆய்நலம் பசப்ப வரும்படர் நலிய  

வேய்மருள் பணைத்தோள் வில்லிழை நெகிழ
நசைநனி கொன்றோர் மன்ற விசைநிமிர்ந்
தோடெரி நடந்த வைப்பிற்
கோடுயர் பிறங்கன் மலையிறந் தோரே.

இது, நம்மைப் பிரியார் என்று கருதியிருந்த தலைமகள் அவன் பிரிந்துழி இரங்கிச் சொல்லியது.

** உரை :**
ஓசை மிக்குப் பலவிடத்தும் பரவிச் செல்லும் தீ எரித்த இடத்தினை யுடைய முடிகளால் உயர்ந்து செறிந்த மலை யினைக் கடந்து சென்ற தலைவர், அழகிய என் நலம் கெட்டுப் பசலை பாயவும், அவர்மேல் உளதாகிய நினைவு வருத்தலால், மூங்கில் போலும் பருத்த தோளிடத்து அணிந்த ஒளி யுமிழும் மணிகள் நெகிழ்ந்து நீங்கவும் பிரிந்து, நம் மனத்தெழும் விருப்பத்தைப் பெரிதும் அழித்தொழிந்தனர் காண் என்றவாறு.

ஆய்கவின்4 என்றாற் போல ஆய்நலம் அழகின்மேல் நின்றது. ஆய்தல், ஈண்டு மெலிவின் மேலதாயின் பசப்ப என்பது வேண்டா கூறலாம். அரும்படர், மிக்க துன்பம்; மிக்கவழித் துன்பம் பொறுத்தற் கரிதாகலின், அரும்படர் எனப்பட்டது. பணைத்தோள், பெரியதோள்; தோள் பெருத்தல் மகளிர்க்கு இலக்கணம் என அறிக; “அகல் அல்குல் தோள்கண் என மூவழிப் பெருகி 1” எனப் பிறரும் கூறுப. நசை கொன்றார் என்பது, நன்றி கொன்றார் என்றாற்போல நின்றது. இசை, தீயின் முழக்கம்; “முழங்கழல் 2” என்பது காண்க. விசை நிமிர்ந்து எனக் கொண்டு, விரைவு மிகுந்து என்று உரைப்பினும் அமையும். நின்று எரியாது காற்றின்வழிப் படர்ந்து செல்வதுபற்றி ஓடெரி எனவும், எதிர்ப் பட்ட எதனையும் விடாது வெதுப்பிச் சேறலின் நடந்த எனவும் கூறினார்; “கனையெரி நடந்த கல்காய் கானம் 3” என்பது காண்க. வைப்பினையும் மலையினையும் இறந்தோர் என்க. வைப்பு, பாலைநிலம்.

பசையற வெதுப்பும் தீ நடந்த வைப்பினையும் கோடுயர் மலையினையும் கடந்து சென்றார்க்கு நம்பால் நசை யற மறந்து சேறல் அரிதன்று என்றற்கு, ஓடெரி நடந்த வைப்பு என்றும், தன்னாற் காதலிக்கப் பட்ட யாம் நலமிழந்து, படர்மிகுந்து இழை நெகிழ்ந்து வருந்துதலை அறிந்து வாராமையின், தலைமகன் தன் அன்பினை முற்றும் மறந்தொழிந்தான் என இரங்குவாள், நசை நனி கொன்றார் என்றும், இனிப் பிரியார் எனத் தான் கருதுமாறு ஒழுகியவன், கடத்தற் கரிய கானம் கடந்து, தன்னால் ஆற்றுதற் கரிய துன்பமும் தந்தமையான், “கொன்றோர்” என்றதனோ டமையாது மன்ற என்றும் கூறினாள். அன்பு மறவாராயின், தன்னால் அன்பு செய்யப்பட்டவர்க்கு எய்தும் துன்பத்தைத் துடைத்தலைக் கருதாது அவர் பிரிவே கருதிச் செல்லார் என்ப தாம். ஆய்நலம் பசப்ப, என்பது, பசலைபாய்தல். அரும்படர் மெலிய என்றது, துன்பத்துப் புலம்பல். பணைத் தோள் வில்லிழை நெகிழ என்றது, உடம்பு நனி சுருங்கல்.

    319.    கண்பொர விளங்கிய கதிர்தெறு வைப்பின்  

மண்புரை பெருகிய மரமுளி கானம்
இறந்தன ரோநங் காதலர்
மறந்தன ரோதில் மறவா நம்மே.

இது, தலைமகன் பிரிந்துழி அவன் உணர்த்தாது பிரிந்தமை கூறிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

** உரை :**
தோழி, கண்ணொளியோடே மாறுபட விளங்குகின்ற வெயில் மிகுந்து வருத்தும் இடத்தினையுடைத்தாய், மண் மேடுகள் பெருகிய, மரங்கள் கரிந்து உலர்ந்த கானத்தை நம் காதலர் கடந்து சென்றனர்கொல்லோ? தம்மை மறவா துறையும் நம்மை மறந்தார்கொல்லோ? மறந்தாரே ஆவர், காண் என்றவாறு.

கண்ணளவாய் நில்லாது இறப்பவும் மிக்குத் திகழ்தல் பற்றிக் கண்பொர விளங்கிய கதிர் என்றார். “கண்பொர விளங்கிய விண் பொரு வியன்குடை 1” என்று பிறரும் கூறுவர். வைப்பு, ஊர்களாயின், மண்புரை யென்றது, மண்ணாற் கூரை வேய்ந்த வீடுகள் மேற்றாம். மண்புரை, மண்மேடுகள்; மட்குன்றங்களு மாம். வெப்பமிகுதியால் மரங்கள் அழிந்தமையின் மண் நிறைந்த மேடுகளும் குன்றுகளுமே நிற்றலான், மண்புரை பெருகிய மரமுளி கானம் என்றார். முளிதல், உலர்தல், “உருகெழு ஞாயிற்று ஒண்கதிர் மிசைந்த, முளிபுற் கானம் 2” என்பதனால் அறிக. தில், அசைநிலை.

கண்ணாற் காண்டற்கும் மெய்யால் நடத்தற்கும் அரிய கானத்தைக் கடந்து தலைமகன் சென்றான் என்பது தோழி முதலாயினாரால் அறிந்ததும், தலைமகள் ஆற்றாளாயினமையின், அவர்கூற்றையே கொண்டெடுத்துக் கானம் இறந்தனரோ நம் காதலர் என்றாள்; என்றவள், நம் காதலர் என்றது நம்பால் காதலுடையர் எனவும், நமது காதலையுடைய ரெனவும் இரு பொருள்பட நிற்றலின், காதலர் நமது காதலை உடைய ராகலின், நாம் அவரை மறவேமாயினேம் என்பாள், மறவா நம்மே என்றும், ஆராயுமிடத்து அவர் தமது காதலை நம்பாற் செலுத்து கின்றாரில்லை என்பது அவர் நமக்குச் சொல்லாது பிரிந்தமையே நன்கு உணர்த்தாநிற்கு மாகலின், நம்மை மறவாமைக்குரிய காதல் அவர் மனத்து இன்றென்பாள், மறந்தாரே ஆவர் என்றும் கூறினாள். “எம்மை நினையாது விட்டாரோ விட்டகல்க, அம்மென் இணர அடும்புகாள் அன்னங்கள், நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்1” எனத் தலைவி வருந்திக் கூறுமாறு காண்க. மறவா நம்மே என்றது, ஓராற்றால் தன்வயின் உரிமை யும், மறந்தனரோ என்றது அவன்வயிற் பரத்தைமையும் சுட்டி நிற்றல் காண்க.

    320.    முள்ளரை யிலவத் தொள்ளிணர் வான்பூ  

முழங்கழ லசைவளி யெடுப்ப வானத்
துருமுப்படு கனலி னிருநிலத் துறைக்கும்
கவலை யருஞ்சுரம் போயினர்
தவலி லருநோய் தலைத்தந் தோரே.

இது, தலைமகன் பிரிந்துழிச் சுரத்து வெம்மை நினைந்து தலைமகள் சொல்லியது.

** உரை :**
முட்கள் பொருந்திய அடிமரத்தினையுடைய இலவமரத் தின் ஒள்ளிய கொத்திடை மலர்ந்த வெண்மையான பூக்கள், முழங்குகின்ற நெருப்பினை அலைத்தற்கெழுந்த காற்று எடுத்து வீசுதலால், விசும்பிலே இடியின்கட் பிறக்கும் நெருப்புப்போலப் பெரிய நிலத்தின்கண் உதிரும் கவர்த்த வழிகளை யுடைய அரிய காட்டைக் கடந்து சென்றா ராயினும், நமக்குக் கெடாத பொறுத்தற் கரிய நோயினைத் தந்தனர்காண் என்றவாறு.

அரையில் முள்ளுடைய இலவமரத்தை முள்ளிலவு என்பர். “முளிகொடி வலந்த முள்ளரை இலவம் 2” என்று பிறரும் கூறுதல் காண்க. அழலெழும் போது சூழவுள்ள காற்று வெம்மை யுற்று மேலே செல்வதால், புறத்தேயுள்ள காற்று ஆண்டுப் போந்து தானும் வெம்மையுற்று நீங்கும்; இவ்வாற்றால் அசைவளி தோன்றுவதும் அழல் எங்கும் பரவுவதும்பற்றி, முழங்கழல் அசைவளி எடுப்ப என்றும், அக்காற்றால் உதிரும் இலவம்பூ ஒளியாலும் நிறத்தாலும் தீச்சுடரை ஒத்தலின், உருமுப்படு கனலின் உறைக்கும் என்றும் கூறினார். “நீளரை யிலவத்து ஊழ் கழி பன்மலர், விழவுதலைக் கொண்ட பழவிறல் மூதூர், நெய் யுமிழ் சுடரின் கால்பொரச் சில்கி, வைகுறு மீனின் தோன்றும் 1” எனப் பிறரும் கூறுவது காண்க. கவலை, கிளைவழி. தவல், கெடுதல்.

தலைமகன் சென்ற சுரம் அருஞ்சுரம் என்றதனால், தலை மகள் உள்ளத்தில் ஆற்றுதற்கரிய நோய் உண்டாக, உண்மைநெறி ஈதென உணராவாறு மயக்கும் பலதலையான வழிகள் பொருந்தி யது அச் சுரம் என்ற சொல் அந்நோயை மிகுவித்தமையின் தவலில் அருநோய் என்றாள்.

அசைவளி எடுப்ப உதிரும் இலவத்தின் ஒள்ளிணர் வான்பூ உருமுப்படு கனல் போலத் தோன்றும் என்றது, பொருள்நசை கடவுதலால் தலைமகன் செலவால் உளதாகிய பிரிவு, பொறுத்தற் கரிய பெருந்துயராய் என்னை வருத்துகின்றது எனத் தலைமகள் கருதிக் கூறுவதை உணர்த்துமாறு அறிக.


இடைச்சுரப் பத்து

தலைமகன் செயல்வகைகளுள் இடைச்சுரத்து நிகழ்வன பொருளாக வரும் பாட்டுக்கள் பத்தின் தொகுதியாகலின் இஃது இப்பெயரினைப் பெறுவதாயிற்று.

காதல் வாழ்க்கையில் தலைமகன் தலைமகளைப் பிரிந்து செல்லுங்கால், பிரிவுக்கு ஏதுவாகிய கடமை பின்னின்று அவன் நெஞ்சினைச் செலுத்தினும், காதலின் உருவாகி நிற்கும் தலை மகளின் வடிவும் பண்பும் செயலும் மொழிகளும் அவன் நெஞ் சின்கண் இடையறாது நின்று நினைவெல்லாம் அவையேயாக நிலவுவிக்கும்; ஒரோவழிக் காதல் நினைவு மீதூர்ந்து மேற் கொண்ட செலவைக் கைவிட்டு மீளுமாறு தூண்டக் கூடிய அளவு பெருகுவதும் உண்டு. ஆயினும் தலைவன் தனது தலைமைப் பண்பால் கடமைவழியே நிற்பன். சென்றவன், வினைசெய் யிடத்தை அடைந்ததும், வினையின்கண் தோய்ந்து செயற்குரிய வற்றையே நினைவிற்கொண்டு முடிப்பன். வினை முடிவில் மனைக்கு மீளவேண்டிய செவ்வி தோன்றியதும், அவன் நினைவு முற்றும் காதலிபாற் பதிந்துவிடும்.

சுரத்திடைச் செல்லுங்கால் ஆண்டுத் தோன்றும் இயற்கைக் காட்சிகளும் அவன் உள்ளத்தில் காதலியின் குணஞ்செயல்களை நினைவுறுத்தும். அந்நினைவுவழி நின்று நெஞ்சொடு பிணங்கிச் சிலசொற்களைத் தனக்குள்ளே சொல்லிக்கொள்வதும் உண்டு. தன்னோடு உடன்வருபவர்களுள் நெருங்கிய தோழர்பால் தன் நினைவினைச் சொல்லித் தெளிவுறுவதும் தலைமகனுக்கு இயல்பு.

வாழ்வுவகை பலவற்றுள்ளும் காதல்வாழ்வு போல இளமைக்கண் கடமையொடு கடும்போர் நிகழ்த்தும் செவ்வி வேறின்மையின், தலைமகன் உள்ளம், பிரிவின் கண்ணும், பிரிந்து செல்லும் இடைச்சுரத்தின்கண்ணும் கொள்ளும் நினைவுகளை எடுத்துப் புலனெறிவழக்கம் செய்து மக்கள் மனவுணர்வைப் பண்டைச் சான்றோர் பண்படுத்தியுள்ளனர். இப்பகுதிக்கண், தலைமகளைப் பிரிந்து செல்லும் தலைமகன் உள்ளத்தில், இயற்கைக் காட்சிகள் சில, அவனை அவளை நினைக்குமாறு தூண்டுதலால், அவன் நினைக்கும் திறங்களும், அந்நினைவால் அவன் எய்தும் பயன்களும், தன்னொடு வரும் தோழர்பால் அவன் உரைப்பனவும், வினைமுற்றி மீண்டு மனையடைந்தபின் மனை யோர்பால் தான் இடைச்சுரத்துக் கொண்ட நினைவுகளைச் சொல்லி இன்புறுவனவும் பிறவும், காணப்படும்.

இவ்வண்ணம், தலைமகனது உள்ளம் காதலின் வன்மையை வென்று கடமைவழி நின்று வினைமுற்றுதற்கு அவனுக்குத் துணைசெய்யும் உணர்வுகள் பலவாகும். அவற்றை, ஆசிரியர் தொல்காப்பியனார். “நாளது சின்மையும் இளமையது அருமை யும், தாளாண் பக்கமும் தகுதிய தமைதியும், இன்மையது இளிவும் உடைமைய துயர்ச்சியும், அன்பினது அகலமும் அகற்சிய தருமையும், ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பகுதியும் 1” என வகுத்து எடுத்துக் கூறியிருக்கின்றார். இவற்றைத் தூக்கித் தகுவன வற்றைத் தேர்ந்து மேற்கொள்ளும் வகையால் தலைமகன் மாண்பு சிறப்புறுகின்றது.

இடைச்சுரம் என்பது கடைக்கண் என்பது போலப் பின் முன்னாகத் தொக்க ஆறாம்வேற்றுமைத்தொகை; இது விரியுங் கால், சுரத்திடை எனவரும்.

    321.    உலறுதலைப் பருந்தி னுளிவாய்ப் பேடை  

அலறுதலை யோமை யங்கவட் டேறிப்
புலம்புகொள விளிக்கு நிலங்காய் கானத்து
மொழிபெயர் பன்மலை யிறப்பினும்
ஒழிதல் செல்லா தொண்டொடி குணனே.

இது, பிரிந்து போகாநின்ற தலைமகன் இடைச்சுரத்துத் தலை மகள் குணம் நினைந்து இரங்கிச் சொல்லியது.

** பழைய உரை :**
மொழிபெயர் பன்மலை இறப்பினும் என்றது, பின்னும் செல்லும் வழியை நோக்கி என்றவாறு.

** உரை :**
காய்ந்த தலையினையிடைய பருந்தின் உளிபோற் கூரிய தாய வாயினையுடைய பேடை, இலையின்றி உலர்ந்து விரிந்து தோன்றும் ஓமைமரத்தின் அழகிய கவைக்கிளையின் கண் இருந்து துயருற்று இசைக்கும் வறண்ட கானத்தையும், வேற்று மொழி பேசும் மக்கள் வாழும் மலைபல வுடைய நாடுகளையும் கடந்து செல்லினும், ஒள்ளிய தொடியையுடையாளின் காதல் கெழுமிய குணம் நினைவின்கண் தோன்றி வருத்துகிறது. இனிச் செய்யுமாறு என்னோ? என்றவாறு.

மிக்க வெயிலால் தெறப்பட்டுக் காய்ந்தது போலத் தோன்று தலின், உலறுதலைப் பருந்து என்றும், அதன் வாயலகு மிகக் கூரிதா யிருத்தலின், உளிவாய்ப் பேடை என்றும் குறித்தார். நுனி சிறிது வளைந்திருப்பது பற்றி “வளைவாய்ப் பருந்து 1” என்பது வழக்கம். ஓமைமரத்தின் உயர்ந்து விரிந்த கிளைகள் வெயில் வெம்மையால் தழையுதிர்ந்து காணப்படுவதால் அலறுதலை ஓமை என்றார்; இளங்கோவடிகள், “அலறுதலை மராமும் உலறுதலை யோமையும் 2” என்றாராக, அலறுதலை யென்றதற்கு விரிந்த தலையென அரும்பதவுரைகாரரும், உலறுதலை என்றதற்கு உலறுதல் தலைமுளிதல் என அடியார்க்கு நல்லாரும் பொருள் உரைத்தனர். கவடு, கிளை. தனித்திருந்து இசைக்கும் பருந்தின் குரல் துன்புற்றுப் புலம்புவது போறலின், புலம்புகொள விளிக்கும் என்றார். “மொழிபெயர் தேஎம் 1” என்றாற்போல வேற்றுமொழி வழங்கும் மக்கள் வாழும் நாட்டிடத்து மலைகள் மொழி பெயர் பன்மலை எனப்பட்டன. பருந்திற்கும் பேடைக்கும் இடை நிற்பனவற்றை, “தத்தம் எச்சமொடு சிவணும் குறிப்பின், எச்சொல் லாயினும் இடைநிலை வரையார்2” என்னும் சூத்திரத்து இலேசினால் அமைக்க.

பசுந்தழை போர்த்த காடும் பைந்தமிழ் வழங்கும் மலைகளும் இன்றி உலறுதலைப் பருந்தும் அலறுதலை ஓமையும் உள்ள காடுகளும் வேறுமொழி வழங்கும் மக்களுமே காணப்படுதலால், காதலியை மறந்திருந்த தலைமகனது உள்ளத்தில் தன் துணைப் பருந்தினைப் பிரிந்து தனித்து உறையும் பெடைப்பருந்தின் புலம்புகுரல், அப்பெற்றியளாய் வருந்தும் தலைமகளது ஆற் றாமை வடிவை மனக்கண்ணில் தோற்றுவித்தலின், ஒண்டொடி குணனே என்றும், காடும் மலையும் நாடும் பிறவும் கடந்து நெடுஞ்சேண் போந்தவழியும் காதலியின் குணமும் செயலும் நெஞ்சில் தோன்றியதுபற்றி ஒழிதல் செல்லாது என்றும் கூறினான்.

    322.    நெடுங்கழை முளிய வேனி னீடிக்  

கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின்
வெய்ய வாயின முன்னே யினியே
ஒண்ணுத லரிவையை யுள்ளுதொறும்
தண்ணிய வாயின சுரத்திடை யாறே.

இஃது, இடைச்சுரத்துக்கண் தலைமகன் தலைமகள்
குணம் நினைத்தலின் தனக்குற்ற வெம்மை நீங்கியது கண்டு சொல்லியது.

** உரை :**
ஒள்ளிய நுதலினையுடைய அரிவையாவாளைப் பிரிந்து செல்லத் துணிந்த காலத்துச் சுரத்திடையே யுள்ள வழிகள், நீண்ட மூங்கில்கள் உலறுமாறு வேனில் நீடுதலால் மிக்க கதிர்களையுடைய ஞாயிறு கற்களும் பிளவெய்துமாறு காய்த லின், முன்பு வெய்யவாய்த் தோன்றின; அவளைப் பிரிந்து இச்சுரத்திடை எய்தும் இப்பொழுது அவை அவளை நினைக் குந்தோறும் குளிர்ச்சியைப் பயந்து தண்ணியவா யிராநின்றன என்றவாறு.

வெயில் மிக்கவழி மூங்கில் பசுமை யிழந்து உலர்ந்து கெடு வது இயல்பாதலின், நெடுங்கழை முளிய வேனில் நீடி என்றார். நீடி என்னும் செய்தெனெச்சம் காரணப் பொருட்டு. ஞாயிற்றின் வெம்மை மிகுதி விளங்கக் கடுங்கதிர் ஞாயிறு என்றும், கடுங்கதிர் தெறுதலால் கற்பாறைகளும் வலியிழந்து பிளந்து விடுமாறு தோன்றக் கல் பகத்தெறுதலின் என்றும் கூறினார். வேனிற்கும் ஞாயிற்றுக்கும் ஒற்றுமையுண்மையின் வேனில் நீடி ஞாயிறு தெறுதலின் என இயைத்து, முடித்தலும் ஒன்று. முன்னே என்றது, மனையின்கண் இருந்து பிரிவு நினைந்த காலத்தைச் சுட்டி நின்றது.

பிரிவுள்ளியவிடத்துத் தலைமகளின் காதலும் ஆற்றாமையும் எழுந்து ஒருபுடை வருத்த, பொருள்வயின் எழுந்த ஊக்கம் ஒருபால் ஈர்ப்ப, நடுநின்ற தலைமகன், வேனில் நீட்டமும், வெயிலவன் வெம்மையும், ஆற்றது அருமையும் உள்ளவாறு கண்டு உணர்ந்தானாகலின் வெய்ய வாயின முன்னே என்றும், பிரிந்து போந்தவன் சுரத்திடைக் காட்சிகள் அவளை நினைப் பிக்க நினைந்துழி, அந்நினைவு அவ்வெம்மை முதலாயினவற்றை மறைத்துத் தலைமகளுடைய அரும்பண்புகளைக் காட்டி இன்பத்தால் அவன் உள்ளத்தைக் குளிர்ப்பித்தமையின், ஒண்ணு தல் அரிவையை உள்ளுதொறும் என்றும் கூறினான். இவற்றுள், மெய் முதலிய கருவிகளின் உறுதல் முதலிய புலனுணர்ச்சிகள் உள்ளம் ஒன்றாவிடத்து நிகழா; சுரத்திடையே நிலவும் வேனில் வெம்மையும் ஞாயிற்றின் கடுமையும் தலைமகன் மெய்ப்பட்ட போதும், அவன் உள்ளம் தலைமகளின் காதலன்பில் தோய்ந்து இன்புற்றமையின் அவற்குப் புலனாகாதொழியவே தண்ணிய வாயின என்றான். இவற்றுள் முன்னது அகற்சியது அருமையும், பின்னது அன்பினது அகலமும் ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பகுதிகளாம்.

“கரணத்தி னமைந்து முடிந்த காலை 1” என்ற சூத்திரத்து “மீட்டுவரவு ஆய்ந்த வகையின் கண்ணும்” என்பதற்கு இதனைக் காட்டி, “இஃது இடைச்சுரத்துத் தலைவி குணம் நினைந்து இரங்கியது 2” என்பர் நச்சினார்க்கினியர்; இளம்பூரணர் இஃது இடைச்சுரத்துக் கூறியது என்று ஒழிவர்.

    323.    வள்ளெயிற்றுச் செந்நாய் வயவுறு பிணவிற்குக்  

கள்ளியங் கடத்திடைக் கேழல் பார்க்கும்
வெஞ்சுரக் கவலை நீந்தி
வந்த நெஞ்சேநீ நயந்தோள் பண்பே.

இஃது, இடைச்சுரத்துத் தலைமகள் குணம் நினைந்த தலை மகன், “அவள் பண்பு வந்தன” என உவந்து தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

** உரை :**
நெஞ்சே, நீ காதலிக்கும் தலைமகளுடைய பண்புகள், கூரிய பற்களையுடைய செந்நாய், வயவுநோய் கொண்டு வருந்தும் தன் பெண்ணாய்பொருட்டுக் கள்ளி நிறைந்த சுரத் திடையே பன்றியின் வரவினை நோக்கியிருக்கும் கொடிய காட்டின்கண் கவர்த்த வழிகள் பலவும் கடந்து வந்தனகாண் என்றவாறு.

வள்ளெயிறு என்றவிடத்து வள், கூர்மை. செந்நாய், காட்டில் வாழும் நாய்வகை. இது காடுகளில் கூட்டம் கூட்டமாய் வாழும் இயல்பிற்று; நாட்டில் வாழும் நாய் போலாது தன் பெண்ணாயிடத்து மிக்க அன்புசெய்யும் பெற்றிமையுடையது. இதனை அம்சதேவர் விருகம், கோகம், ஈபாமிருகம் என மூவகைப்படுத்து இந்நாய்வகை மூன்று முதல் நான்கு திங்களில் கருமுதிரும் என்பர். வயவு, வயாநோய்; “வயாவென் கிளவி வேட்கைப் பெருக்கம்3” என்ப. கடம், கள்ளியும் முள்ளியும் பரற்கற்களும் நிறைந்த பாலைநிலம். கேழல், காட்டுப்பன்றி. செந்நாய் தன் பெண்ணாயின்பொருட்டுப் பன்றியை வேட்டுண் ணும் திறத்தைப் பிற சான்றோரும், “மென்புனிற் றம்பிணவு பசித்தெனப் பைங்கண், செந்நா யேற்றை கேழல் தாக்க 4” என்பது காண்க. வந்த: அன் பெறாதுநின்ற அகரவீற்றுப் பலவறி முற்றுச் சொல். பண்பு, உருவும் நிறமும் குணமும் செயலும் பிறவுமாகிய மாண்புகள்.

செந்நாயேற்றை தன்பிணவின் பசிக்கு உணவு வேண்டிப் பன்றியின் வரவுநோக்கி இருத்தலைக் கண்டவிடத்துத் தலைமகன் நெஞ்சம் தலைமகளை நினைத்தலும், அவளுடைய குணம் செயல்கள் மனக்கண்ணில் தோன்றக் கண்டு மகிழ்வான், நெஞ் சமே, நீ நயந்தோள் பண்பு ஈண்டும் வந்தனகாண் என்றான். வெவ்விய சுரநெறியையும் கடந்து நம்பாற் கொண்ட பெருங் காதலால் இவண் வந்தன என்றது அன்பினது அகலம் சுட்டி நின்றது. “சேயர் என்னாது அன்புமிகக் கடைஇ, எய்த வந்தன வால் தாமே நெய்தல், கூம்புவிடு நிகர்மல ரன்ன, ஏந்தெழில் மழைக்கண் எங்காதலி குணனே 1” எனப் பிறரும் கூறுதல் காண்க.

    324.    எரிகவர்ந் துண்ட வென்றூழ் நீளிடைச்  

சிறிதுகண் படுப்பினுங் காண்குவென் மன்ற
நள்ளென் கங்கு னளிமனை நெடுநகர்
வேங்கை வென்ற சுணங்கின்
தேம்பாய் கூந்தன் மாஅ யோளே.
இது, பிரிந்து வந்த தலைமகன் தலைமகளை நலம்பாராட்டக் கண்ட தோழி, “இவள் குணத்தினை மறந்து அமைந்தவாறு யாது?” என வினாவினாட்கு அவன் சொல்லியது.

** உரை:**
காட்டுத்தீ எழுந்து பகலே யன்றி இரவுப் போதினும் எரித்துச் செல்ல. பகற்போதில் வெயில் மிக்கு வருத்தும் நீண்ட சுரத்திடையே, யான் சிறிது கண்ணயர்வேனாயினும், அச் சிறுபொழுதின்கண், நள்ளென்னும் கங்குல் யாமத்து, பெரிய மனையகத்து நின்ற நெடிய பேரகத்தே நிறத்தால் வேங்கை மலர்போல வீறுபெற்ற சுணங்கினையும், தேன்சொரியுங் கூந்தலையும் மாமைநிறத்தினையு முடைய தலைமகளைத் தெளிவாகக் கண்டு அமைந்தேன்; ஆகலின், இவள் குணத் தினை யான் மறக்குமா றில்லை என்றவாறு.

காட்டின்கண் நிற்கும் மூங்கில்கள் காற்றால் தம்மில் இழையப் பிறக்கும் தீ, அயலிடம் பரந்து எதிர்ப்பட்ட பொருள்களை எரித்துக்கொண்டு செல்லுதலின், எரிகவர்ந் துண்ட என்றார். இனி, வெயில் வெம்மையால் கரிந்து கிடக்கும் தழைகளையும் புற்களையும் விலங்கினம் மேயாமையின் கானவர் தீ யிட்டுக் கொளுத்தி விடுதலும் உண்டு; அவை வெந்து சாம்பராய்க் கழியின், கோடைமழையால் புதுப்புல்லும் புதுத்தளிரும் தோன்றி ஆனிரைகட்கு மேயல் ஆகும் என்பது கருத்து. இவ்வாறு தோன்றிய தீ, இரவும் பகலும் அவியாது எரிந்து கொண்டே செல்லுமாதலால் இரவிற் காட்டுத் தீயின் வெம்மையும் பகற் போதில் ஞாயிற்றின் வெம்மையும் சுரத்தின்கண் நிலவுதலின், மக்கட்கு நல்லுறக்கம் எய்தாமையின், சிறிது கண்படுதலையே விதந்து கூறினார். மகளிர் சுணங்கிற்கு வேங்கைமலர் உவமை யாதலை, “வேங்கை, ஊழுறு நறுவீ கடுப்பக் கேழ்கொள, ஆகத் தரும்பிய மாசறு சுணங்கினள் 1” எனப் பிறரும் கூறுதல் காண்க. நள்ளென் கங்குல், நள்ளிரவு. தேன் என்றது தேம் என நின்றது 2.

காட்டுத்தீயால் வெந்தொழிந்ததன் மேலும் வெயில் மிக்குத் தெறும் நீளிடை எனினுமாம். வெப்ப மிகுதியால் தலைமக்கள் நெடிதுறங்கா ராகலின், அது தோன்றச் சிறிது கண்படுப்பினும் என்றான். அல்லதூஉம், வினைமேற் சென்றார்க்கு அது முற்றுங் காறும் நெடிய வுறக்கம் வாராதாகலின், இவ்வாறு கூறினான் எனினு மாம். உறங்கும் பொழுது அவளைக் கனவின்கட் கண்டும் கூடியும் மகிழ்ந்தேன் என்பான், காண்குவென் மன்ற என்றான். இறந்தகாலத்தாற் கூறற்பாலதனை எதிர்காலத்தாற் கூறியது தெளிவுபற்றி. வேங்கை வென்ற சுணங்கின், தேம்பாய் கூந்தல் மாஅயோளே என்றது அவள் நலம் பாராட்டியது.

“இன்பத்தை வெறுத்தல் 3” என்னும் சூத்திரத்து, “நலத்தக நாடின் கலக்கமும் அதுவே” என்புழிக் கலக்கத்தை வேறு பெயர்த்து வைத்த இலேசினால் தலைமகற்கும் இம் மெய்ப் பாடுகள் எய்த வைத்தமையின், சிறிது கண்படுப்பினும் காண்கு
வென் மன்ற என்றது கனவொடு மயங்கல். “நுண்பூண் மடந்தையைத் தந்தோய் போல, இன்றுயில் எடுப்புதி கனவே, எள்ளார் அம்ம துணைப்பிரிந் தோரே 1” எனச் சான்றோர் கூறுவது காண்க.

“கரணத்தி னமைந்து 2” என்ற சூத்திரத்து, “எண்ணருஞ் சிறப்பின் கிழவோன் மேன” என்புழிச் ‘சிறப்பின்’ என்றதனால் இதனை அமைப்பர் நச்சினார்க்கினியர்.

    325.    வேனி லரையத் திலையொலி வெரீஇப்  

போகில்புக வுண்ணாது பிறிதுபுலம் படரும்
வெம்பலை யருஞ்சுரம் நலியா
தெம்வெங் காதலி பண்புதுணைப் பெற்றே.

இது, பிரிந்து வந்த தலைமகன் “சுரத்தின் வெம்மை எங்ஙனம் ஆற்றினீர்?” என்ற தோழிக்குச் சொல்லியது.

** உரை :**
வேனிற்காலத்து எழுந்த சூறைக்காற்றால் அலைப்புண்ட அரசமரத்தின் இலைகள் அசைதலால் உண்டாகிய ஓசையை அஞ்சிப் பறவைகள் தாம் இரை தேடி உண்டலைச் செய்யாது வேற்றுநிலங்களை உள்ளிச் செல்லும் வெப்பம் பொருந்திய அரிய சுரம், எம்மால் விரும்பப்பட்ட காதலியின் குணங்களைத் துணையாகப் பெற்று யாம் சென்றே மாகலின், எம்மை வருத்தாதாயிற்று என்றவாறு.

அரையம், இக்காலத்தே இஃது அரசமரம் என மருவி வழங்கும்; முன்னாளில் அரை யென்றே நின்று பின்பு புணரியல் நிலையிடைப் பெற்ற அம்முச் சாரியையை இறுதியாகக் கொண்டு வழங்குவதாயிற்று; “பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும், நினையுங் காலை அம்மொடு சிவணும் 3” என்பது காண்க. இங்கே கூறிய ஆவிரை, ஆவிரமென நின்று ஆவாரம் என மருவிவிட்டது. இந்த அரையம் பனிக்காலத்து இலை முதிர்ந்து வேனில் தொடக்கத்தில் இலையுதிர்ந்து முதுவேனிற் காலத்துப் புதுத்தளிர் ஈன்று பொலிவுறும். இப்பாட்டு இளவேனிற் காலம் என்பது போதர, வேனில் அரையத்து இலையொலி என்றார். அரையத்தின் முதிர்ந்த இலை காற்றில் அலைப்புண்டு செய்யும் ஒலி, படை வரவு போலவும் விலங்கின் கூட்டம் வருவது போலவும் இருத்தலால் புள்ளினம் அஞ்சுவன வாயின. போகில், புள்ளினம். உயர்ந்த மரக்கிளையில் கூடமைத்து வாழ்தல் பற்றிப் புள்ளினைப் போகில் என்பது காரணப் பெயர். புகா, உணவு; ஈண்டுப்புகவு என நின்று அரையத்தின் கனிமேலதாயிற்று. வெங்காதலி என்ற விடத்து வெம்மை வேண்டற்பொருட்டு. வெம்பல், வெப்பம். ஐ, சாரியை. “வெயில் வீற்றிருந்த வெம்பலை யஞ்சுரம் 1” என்றார் பிறரும்.

உள்ளம் துணையாகப் பிரிந்து செல்லும் தலைமகன், தலைமகளின் உருவும் நிறனும் நலனுமாகிய பண்புகளை நினைந்து மனக்கண்ணிற் கண்டு மகிழ்ந்து சென்றான் என்பது தோன்ற, எம் வெங்காதலி பண்பு துணைபெற்று என்றும், அதனால் உளதாகிய இன்பத்தால் உளங் குளிர்ந்து சென்றமை யால் புறத்தே கிடந்த அருஞ்சுரம் எம் நெஞ்சினை வருத்தும் வெம்மையாகிய மதுகை இழந்தது என்பான் அருஞ்சுரம் நலியாது என்றும் கூறினான். வெம்பலை யென்றது சுரத்தின் அருமையைச் சிறப்பித்த தாயினும், பிரிந்து செல்லும் தலைமகன் உள்ளத்திற் புகுந்து வருத்தமாட்டாதாயிற்று என்பது முடித்தற்கு. வெம்பலை அருஞ்சுரம் என்ற இஃது அன்புதொக நிற்றல்.

    326.    அழலவிர் நனந்தலை நிழலிடம் பெறாது  

மடமா னம்பிணை மறியொடு திரங்க
நீர்மருங் கறுத்த நிரம்பா வியவின்
இன்னா மன்ற சுரமே
இனிய மன்றயா னொழிந்தோள் பண்பே.

இஃது, இடைச்சுரத்து வெம்மை ஆற்றானாகிய தலைமகன் தலைமகள் குணம் நினைந்து நொந்து சொல்லியது.

** உரை :**
வெப்பம் மிக்க சுரத்தின்கண், நிழலுள்ள இடம் பெற லாகாமையினால், மடமை பொருந்திய மானின் அழகிய பிணை தன் மறியோடு கூடி வருந்த, மழைநீரால் பக்கம் அலைக்கப்பட்டு இறப்பவும் சிறிதாய வழியினையுடைய சுரம் தெளிவாகத் துன்பம் தருவனவே; ஆயினும் யான் பிரிந்து நீங்கியவள் பண்புகள் மாத்திரம் இன்பந்தருவனவாம் என்ற வாறு.

சுரத்தின் வெம்மைமிகுதி தோன்ற, அழலவிர் நனந்தலை என்றார். “அழல் திகழ் நனந்தலை 1” எனப் பிறரும் கூறுவர். நனந்தலை, விரிந்த இடம்; ஈண்டுச் சுரத்தின் நடுவிடம். பசுமை யுள்ள முல்லைநிலத்துட் புகாது மடமையால் தன் மறியுடன் வெவ்விய சுரத்தில் இயங்குவது பற்றி, மடமான் அம்பிணை மறியொடு திரங்க என்றார். திரங்குதல், வெம்மையால் வாடுதல். மழைநீரால் அலைத்துச் சுருக்கப்பட்ட வழி என்றற்கு நீர் மருங்கு அறுத்த நிரம்பா இயவு என்றார். ஒருவர் கால்வைத்து நடத்தற்குரிய அளவுதானும் அகலமில்லாத வழி நிரம்பாஇயவு எனப்பட்டது. “அரித்தெழுந்து தோன்றி வழிநீர் அறுத்தசுரம் 2” எனப் பிறரும் கூறுதல் காண்க.

மடமான்பிணை மறியுடன் தனித்து நிழலிடம் பெறாது வருந்துவது, காணும் தலைமகனைத் தன் பிரிவாற்றாது தனிமை யுற்று வருந்தும் தலைமகளை நினைப்பித்து வருத்த, நீரால் அறுக்கப்பட்டுச் சிறிதாய வழி அவன் இனிது செல்லாவாறு இடையூறு செய்வது கண்டு வருந்துகின்றமையின், இன்னா மன்ற சுரமே என்றும், அந்நிலையில் தலைமகளின் பண்பு தோன்றி அவன் உள்ளத்துக்கு உவகையும் ஊக்கமும் நல்கி இன்பம் செய்தலின், இனிய மன்ற யான் ஒழிந்தோள் பண்பே என்றும் கூறினான். “திறன்மாண்டு திருந்துக மாதோ நும் செலவு 3” எனத் தலைமகள் உரைத்த சொல்லை நினைந்து ஊக்கம் கொண்டான் என அறிக.

    327.    பொறிவரித் தடக்கை வேத லஞ்சிச் சிறுகண் யானை நிலந்தொடல் செல்லா வெயின்முளி சோலைய வேயுயர் சுரனே அன்ன வாரிடை யானும் தண்மை செய்தவித் தகையோள் பண்பே.  

இது, பிரிந்த தலைமகன் இடைச்சுரத்தின்கண் தலைமகள் குணம் நினைந்து இரங்கிச் சொல்லியது.

** உரை :**
பொறிகளையும் வரிகளையுமுடைய பெரிய கை வேதற் கஞ்சிச் சிறிய கண்களையுடைய யானைகள் நிலத்தைத் தொட வியலாத வெயிலால் உலர்ந்த சோலைகளை யுடையன மூங்கில் உயரமாக வளர்ந்த சுரங்கள். இப்பெற்றியவாய செல்லுதற்கரிய நெறியிடத்தும் இவ் வழகுடையாளின் பண்புகள் வெப்பம் தோன்றாவாறு தட்பம் செய்தன என்றவாறு.

நீண்ட பெரிய கையாயினும் நிலத்தின் வெம்மைக்கு ஆற் றாது என்பார், பொறிவரித் தடக்கை என்றும், சிறு கண்ணை யுடையதாயினும், நிலத்திற் படாதவாறு ஓம்புதல் தோன்றச் சிறுகண் யானை என்றும் சிறப்பித்தார். ஒரு பால் யானை நிலம் தொடல் செல்லாத வெம்மை நிலமும், ஒருபால் வெயிலால் உலர்ந்த சோலையும் உடைய சுரநெறிகள் என்றுமாம். ஆரிடை, செல்லுதற்கரிய இடம். ஆன், இடப்பொருட்டு; “ஆன்வந் தியையும் வினைநிலை யானும் 1” என்றாற்போல. தொடல் செல்லா என்பது ஒரு சொல்லாய்ப் பெயரெச்சமாய் வெயிலொடு முடிந்தது. உம்மை: சுரத்தின் செலவருமை உணர நின்றமையின் சிறப்பு.

தலைமகளின் அழகிய உருக் கண்ணில் தோன்றுதலின், ‘இ’ எனச் சுட்டியும், தன்னாற் காதலிக்கப்பட்டார்க்கு வருத்தம் தோன்றியவிடத்து ஆர்வலர் தோன்றி ஆவன புரிதல் தகுதியின் பாற்படுதலின் இவள் என ஒழியாது இத்தகையோள் என்றும் கூறினான்.

328.     நுண்மழை தளித்தென நறுமலர் தாஅய்த் தண்ணிய வாயினும் வெய்ய மன்ற மடவர லின்றுணை யொழியக் கடமுதிர் சோலைய காடிறந் தேற்கே.  

இது, “மழை வீழ்தலாற் சுரம் தண்ணென்றது; இனி வருத்த மின்றிப் போகலாம்” என்ற உழையரை நோக்கித் தலைமகன் சொல்லியது.

** உரை :**
மடப்பம் பொருந்திய இனிய துணைவியைப் பிரிந்து சுரத்தையும் அதனைச் சூழ்ந்த மரச்செறிவுகளையுமுடைய காட்டினைக் கடந்து போந்த எனக்கு, நுண்ணிய துளிமழை பெய்தமையால் நறிய மலர்கள் உதிர்ந்து பரந்து தண்ணிய வாய்த் தோன்றினும், அவை வெய்யவாகவே இராநின்றன என்றவாறு.

தளி, மழைத்துளி. தளித்தல் ஈண்டுப் பெய்தல் என நின்றது. மடவரல், மடப்பம்; அழகுமாம். கடம், பாலை நிலம். சோலைய காடு என்றவிடத்துச் சோலைய என்றது பெயரெச்சக் குறிப்பு.

மழை தளித்தென நறுமலர் தாஅய்த் தண்ணிய என்றது, உழையர் கூற்றினைக் கொண்டு கூறியது. தலைமகன் உள்ளம், “ஆண்மை வாங்கக் காமம் தட்பக், கவைபடு நெஞ்சம் கட்கண் அசைய 1” “களிறுமாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு, போல 2” வருந்துவது கண்ட உழையர், கடத்தின் வெம்மையால் ஆற்றானா யினன் போலும் எனக் கருதி நுண்மழை தளித்தென நறுமலர் தாஅய்த் தண்ணிய என்றாராக, இம் மழைப் பெயலைக் காணின், தலைமகள், தான் பிரியுங்கால் குறித்த பருவமெனக் கருதித் தன்னை எதிர்நோக்கி என்னாகுவளோ என நினைந்து, வருத்தம் மீதூர்ந்தமையின், தலைமகன் வெய்ய மன்ற என்றும், அவளுடைய இளமையும் இனிய துணைமையும் நோக்கத் தான் பிரிந்து போதரல் கூடாது என்பான் போல மடவரல் இன்துணை ஒழியக் கடமுதிர் சோலைய காடு இறந்தேற்கே என்றும் கூறினான்.

    329.    ஆள்வழக் கற்ற பாழ்படு நனந்தலை வெம்முனை யருஞ்சுர நீந்தி நம்மொடு மறுதரு வதுகொ றானே செறிதொடி கழிந்துகு நிலைய வாக ஒழிந்தோள் கொண்டவென் னுரங்கெழு நெஞ்சே.  

இஃது, இடைச்சுரத்தின்கண் மீளலுறும் நெஞ்சினை நொந்து தலைமகன் உழையர்க்குச் சொல்லியது.

** உரை :**
தோளிடைச் செறிந்துநின்ற வளைகள் நெகிழ்ந்து நீங்கும் நிலைமையினை எய்த, மனையில் தவிர்ந் துறையும் தலை மகளாற் கொள்ளப்பட்ட என் திண்மை பொருந்திய நெஞ்சம், மக்கள் வழங்குத லில்லாத பாழ்பட்ட இடத்தினை யுடைய வெவ்விய ஆறலைப்போர் புலமாகிய அரிய காட்டினைக் கடந்து நம்மொடு வாராது மீளுதலைக் கருதுங்கொல்லோ? இஃது என்? என்றவாறு.

ஆள், மக்கள். “ஆள் வழக்கற்ற சுரத்திடைக் கதிர்தெற 1” என்றார் பிறரும். வெம்முனை, ஆறலைப்போர் உறையும் வெவ்விய புலம்; “வெம்முனை யருஞ்சுரம் முன்னி யோர்க்கே 2” என்று பிறரும் வழங்குப. மறுதருவது, மீளலுறுவது. “சென்ற தேஎத்துச் செய்வினை முற்றி, மறுதரல் உள்ளத்தர் எனினும் 3” என்பதனால் அறிக. இது மறுத்தரல் என்றும் வருவதுண்டு. “பின்னிய தொடர்நீவிப் பிறர்நாட்டுப் படர்ந்துநீ, மன்னிய புணர்ச்சியான் மறுத்தல் ஒல்லுவதோ 4” என்பது காண்க. மறுதரு வதுகொல் என்றமையின் அதற்கேற்ப வாராது என்பது வரு விக்கப்பட்டது.

தான் பிரிந்தவிடத்துத் தலைமகள் தன் பிரிவுள்ளி உடம்பு மெலிந்து வருந்துகின்றாள் என நினைந்து ஆற்றானாகலின், செறிதொடி கழிந்துகு நிலைய வாக என்றும், ஆள் வழங்குத லற்றுப் பாழ்பட்ட இடத்தினையுடைய வெம்முனை அருஞ் சுரம் நீந்தி மேற்சேறற்கு வேண்டிய திண்மையுடையது என் பான், என் உரங்கெழு நெஞ்சு என்றும், செய்வினை யொன்று தொடங்கின இடையில் மடங்கலாகாமையின், மடங்கி மீளலுறு தலை மறுதருவது என்றும், தலைமகளின் காதல் பற்றிய நினைவு மிகுந்து வருத்துதலால் வினைமேற் சென்ற நெஞ்சு செலவு தவிர்ந்து மீளத் துணியுமோ என்று தலைமகன் ஐயுறுவது தோன்ற மறுதருவது கொல் என்றும் உழையர்க்குக் கூறினான். “உள்ளம் பிணிக்கொண் டோள்வயின் நெஞ்சம், செல்லல் தீர்க்கம் செல்வாம் என்னும் 5” என வருவது காண்க.

“கரணத்தின் அமைந்து முடிந்த காலை 1” என்ற சூத்திரத்து, “மீட்டுவர வாய்ந்த வகையின் கண்ணும்” என்புழி இதனைக் காட்டி, இது மீளலுறும் நெஞ்சினை நொந்து தலைவன் உழை யர்க்குக் கூறியது என்பர் நச்சினார்க்கினியர்.

    330.    வெந்துக ளாகிய வெயிற்கட நீந்தி வந்தன மாயினு மொழிகினிச் செலவே அழுத கண்ண ளாய்நலஞ் சிதையக் கதிர்தெறு வெஞ்சுர நினைக்கும் அவிர்கோ லாய்தொடி யுள்ளத்துப் படரே.  

இது, பிரிந்த தலைமகன் இடைச்சுரத்தின்கண் தன் நெஞ் சிற்குச் சொல்லியது.

** உரை :**
விளக்கமும் திரட்சியும் பொருந்திய ஆராய்ந்து கொள்ளப் படும் தொடியினையுடையாளது மனத்துளதாகிய நினைவு, கண்களின் நீர்சோரவும், ஒப்பனை செய்யப்பட்ட மேனி நலம் கெட்டொழியவும், வெயில் தெறும் கொடிய சுரத்தின் கண் நமது செலவின் மேற்றாய் அவளை வருத்துமாகலின், வெவ்விய துகள் மிக்க வெயில் காயும் காட்டினைக் கடந்து வந்துளேம் எனினும், நெஞ்சே, மேலே செல்லுதலை இனி ஒழிவாயாக என்றவாறு.

வெந்துகள், வெயில் வெம்மையால் கல்லும் மண்ணும் கட்டுடைந்து ஆகிய நுண்ணியபொடி; ஆதலால், அப்பொடி வெந்துகள் எனப்பட்டது. வெயிற்றுகள் 2 என்றதும் இதுவே. மிக நுண்ணிதாயினும் வெம்மை செய்தலில் நீர்க்காமையின் வெந்துகள் என்றார். கடம், பாலைநிலம். கடத்திடை நிலவும் காற்றும் நீரலை போல் அலையலையாய்ப் போந்து மோதும் இயல்பிற்றாதலின், அதனை எதிர்த்துச் செல்லும் செலவினை நீந்தி என உரைத்தார். கடலகமும் இவ்வாறு காற்று மோதும் சுரம் போறலின், கடற் செலவைக் குறிக்கும்போதும் சான்றோர், “திமில்மேற் கொண்டு திரைச்சுரம் நீந்தி 3” என்பது காண்க. ஆய்நலம், ஆயத்தாரால் ஆய்ந்து செய்யப்பட்ட அழகு. நன்கு கடைதலால் ஒளியும், ஆயத்தார் நன்றென ஆராய்ந்து கொள்ளப் பட்டமையால் சிறப்புமுடைய தொடி, அவிர்கோல் ஆய் தொடி எனப்பட்டது; “இலங்குகோல் ஆய்தொடி நெகிழ 1” என்றார் பிறரும். படர், உள்ளுதல் 2. இனி, செலவு ஒழிக என முடிக்க.

பிரிந்த தலைமகன் இடைச்சுரத்தின்கண் நெஞ்சொடு கூறி இரங்குகின்றா னாகலின், வெயிற்கடம் நீந்தி வந்தனம் என்றான். உம்மை, கடத்தற் கருமை உணர்த்திற்று. கடத்தற்கரிய சுரத்தினை நீந்திப் போந்தவன் இனிச் செயற்பாலது மேற்கொண்ட செலவே யாயினும் ஒழிதல் நன்றென்பான் போல, ஒழிக இனிச் செலவே என்றான். இஃது அகற்சிய தருமை. தான் கண்ட சுரத்தின் வெம்மையைத் தலை மகள் உள்ளியவிடத்து ஆற்றாது வருத்தமுற்றுக் கலுழ்வாள் என்பான். அழுத கண்ணன் என்றான். பிரிவின்கண், தலைமகள் ஆற்றாது கண்ணீர் சொரிந்தது அவன் கருத்தில் நன்கு பதிந்து கிடத்தலின் இவ்வாறு கூறினான் என்றுமாம். அக்காலை, அவளை ஆற்றுவிப்பான் கூறியவற்றுள், “நோய்முந்து உறுத்து நொதுமல் மொழியல்நின்ஆய்நலம் மறப்பனோ மற்றே 3” என்றது நினைவின்கண் தோன்றுதலின், ஆய்நலம் சிதைய என்றும், நலம் சிதைய நினைக்குமாயின், யான் மறந்தவாறா மாகலின், செலவினைத் தவிர்வதே இனிச் செயற்பாலது என்றலின், நினைக்கும் என்றும் கூறினான். இவ்வாறு செலவின்கண் இடைச்சுரத்து வெம்மை கண்டு இதனைத் தலைமகள் நினைக்கின் ஆய்நலம் சிதைந்து வருந்துவள் என்பது பற்றிக் கதிர்தெறு வெஞ்சுரம் நினைக்குமாயின், இனிச் செலவு ஒழிக என அழுங்கினா னாயினும், அழுங்கும் நெஞ்சினைத் தேற்றிக்கொண்டு சென்று வினைமுடித்தல்லது மீளான் என அறிக. “செலவிடை யழுங்கல் செல்லாமை யன்று” என ஆசிரியர் கூறுவது காண்க. கதிர்தெறு வெஞ்சுரம் என்றது, உற்றாரை வருத்துவதே யன்றிச் சேய்மைக் கண் இருந்து நினைத்தாரையும் நெஞ்சினைச் சுட்டு வருத்தும் என வெம்மை மிகுதி யுணர்த்தி நின்றது4.


தலைவி இரங்குபத்து

உலகில் காணப்படும் உயிர்ப்பொருள் அனைத்தும் உண வுண்டு உடல்வளர்த்தலும் இனம் பெருக்குதலும் என்ற இரண்டையுமே தொழிலாகக் கொண்டுள்ளன. உடல்வளர்ச்சி, இனம் பெருக்கும் வளம் குன்றியதும் தளர்ச்சியுற்று வீழ்ந்தொழிகிறது. எனவே, உலகில் நிலவும் உயிர்வாழ்வு முற்றும் பொதுவகையாக நோக்குமிடத்து இனம் பெருக்குதலைக் குறிக்
கொண்டு நிற்பது உணரப்படும். உலகில் தோன்றும்போது, உயிர், உடம்போடு உடன்தோன்றினும், நீங்கும்போது தான் நின்ற உடம்பை விட்டுத் தனித்து நீங்கிவிடுகிறது. “குடம்பை தனித்
தொழியப் புள்பறந் தற்றே, உடம்போடு உயிரிடை நட்பு 1” எனத் திருவள்ளுவரும் கூறுவர். இதனால் உடம்பொடு கூடி நிற்கும் போது உடல் வளர்ச்சிக்கும் இனம் பெருக்குதற்கும் துணையாயிருந்து பின்னர் நீங்குவது உயிரின் பொதுத் தொழிலாதல் தெரியும். இனம் பெருக்குதலாவது, உயிரொன்று உடம்பொடு கூடி, வேறு உயிர்கள் உலகில் தோன்றுதற்கு இடமாகிய உடம்பை உதவுவது என்பது.

மேலும் உண்ணுங்காலும் இனம் பெருக்குங்காலும் உயிர்கள் ஒருவகை அமைதிபெறுகின்றன. அந்த அமைதி இன்பம் என்று வழங்கும். இந்த இன்பம் அவ்விருவகைத் தொழிற்கும் கூலி யன்றாயினும், ஊதியமாக இருப்பது உணரத்தக்கது. இவ்வாற்றால், உலகில் உயிர்கள், உடலோம்பல் இனம் பெருக்கல் என்ற இரண்டாலும் இன்பம் பெறுவது பயன் என்பது விளங்கும்.

மக்களுயிர் ஒழிய ஏனை உயிர்வகை பலவும் இந்தக் குறிக் கோளிலேயே உலகில் வாழ்கின்றன. மக்களுயிர் மாத்திரமே இந்தக் குறிக்கோளுக்கு மேலாக, இவ்வுலகில் பெறப்படும் இன்பம், அறிவொடுகலந்து நிலைபேறு உடையதாக இருத்தல் வேண்டும் என்றும், அதற்குத் துணையாவன அறமும் பொருளும் என்றும் அறிந்து, அறிவால் அறநெறியிற் பொருள்செய்து பேரின்பம் எய்துவதே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண் டுள்ளது. அதற்கேற்பவே, மக்களுயிர்க்கு உண்மையறிவும் மொழிவன்மையும் சிறப்பாக அமைந்திருக்கின்றன.

மக்களுயிர் தான் பெறக் கருதும். பேரின்பத்துக்கு அறமும் பொருளும் துணையாவதை அறிந்து அவற்றின்வழி ஒழுகுங்கால் முடிவிலேயன்றி இடையிலும் இன்பம் பெறுகிறது. இடையில் பெறப்படும் இன்பம் இவ்வுலகிலும், முடிவில் பெறப்படும் பேரின்பம் உடம்போடு கூடுதலற்ற வீட்டுலகிலும் உள்ளன. உடம்போடு கூடியிருக்குங்கால் எய்தும் இன்பம் உடம்பளவாய் உலக வாழ்வோடே நின்று போவது. ஆயினும், இது மக்கள் உயிரை முடிவிற் பெறலாகும் பேரின்பப் பேற்றுக்கு ஊக்குகிறது. ஏனை உயிர்கள் இந்த இன்பத்தோடே அமைந்து விடுகின்றன.

இவற்றை நோக்கின், இவ்வுலகில் உடம்பொடு வாழ்தற்கண் நிகழும் இன்பநாட்டம், எல்லா உயிரிடத்தும் பொதுவாகக் காணப்படுவது உண்மையாகப் புலனாகிறது. இது பற்றியே ஆசிரியர், “எல்லா வுயிர்க்கும் இன்பம் என்பது, தான் அமர்ந்து வரூஉம் மேவற் றாகும் 1” என்றது பொருத்தமாதல் தெளியப்படும்.

இனி, உடலுக்கு ஆக்கமாகும் உணவு வாயிலாக வரும் இன்பத்தினும், இன்பநாட்ட முடைய உயிர்கட்கு அவ்வுடலின் சிறந்த பணியாகிய வேறு உடம்பு படைக்கும் பணிவாயிலாக வரும் இன்பம் பெரிதாகும். ஆதலால் மக்களுயி ரொழிந்த ஏனை உயிர்கள் இந்த இன்பத்தோடே அமைந்தொழிகின்றன. மக்க ளுயிர் உடலோம்பும் பணியிலும் உடம்பு தரும் பணியில் இன்பம் பெரிதாதல் கண்டு, அந்த அளவில் அமையாது, அதன் இயல் பினை ஆராய்ந்து உடம்புதரு பணி வாயிலாக இன்பம் எய்து மிடத்து, உடம்புக்கு உணவுதரும் பணி நல்கும் இன்பம் மிகவும் சிறிதாய்ப் புறக்கணிக்கப்படுவதைக் கண்டது. உணவுக்கே வாழ்வெல்லாம் செலவிடும் உயிர், உடம்புதரு பணியில் ஈடுபாடு குன்றி, இனம் சுருங்கி முடிவில் வேரோடு மறைந்தொழிந்தமை தெரிந்தது. உணவுப் பணியை ஒழுங்கு படுத்தி உடம்புதரு பணியையும் நெறிப்படுத்திச் சென்றால் இவ்விரண்டிலும் எய்தும் இன்பத்தால் பேரின்பம் எய்துதல் கூடும் என்பது விளங்கவே, மக்களுயிர், அறமும் ஒழுக்கமும் கண்டு அந்நெறியில் உணவுப் பணியும் உடம்புதரு பணியும் மேற் கொண்டு ஒழுகிவருவ தாயிற்று.

இவ்வுடம்புதருபணி உடம்பொடு கூடிய ஓர் உயிரால் தன்னந்தனியே பெரும்பாலும் நடப்பதில்லை. ஒருசில உயிர்களே 1 அது செய்கின்றன. ஏனைய யாவும் வேறோர் உடம்பொடு கூடியே அதனைச் செய்கின்றன. ஓர் உடம்பு வித்துறையும் இடமாகவும், ஓருடம்பு அவ்வித்து வளரும் விளைநிலமாகவும் உள்ளன. வித்துடை யுடம்பு ஆணுடம்பு என்றும், விளைநில மாகும் உடம்பு பெண்ணுடம்பு என்றும் வழங்கும்.

இவ்வுலகில் உயிர்க்கு இடமாகும் வகையில் உடம்பு, தன்னைப் போல் பிறிதோர் உயிர்க்கு இடமாகும் உடம்பு தருபணியிற் குறிக்கொண்டிருப்பதால், அதற்குரிய உடற் கூறுகள் நிறையுங்காறும், உயிரைத் தன் வரை நிறுத்தித் தன்னைப் பேணுவதிலேயே ஒன்றுவிக்கும். வித்தும் வித்து வளரும் கரு நிலமும் வளர்ச்சி நிரம்பியதும் ஆணுடம்பு பெண்ணையும் பெண்ணுடம்பு ஆணையும் அவாவத் தொடங்கும். நிறைவு என்பது கமம் என்னும் சொல்லாற் குறிக்கப்படும்; “கமஞ்சூல் 2” என்று சான்றோரும், “கமம் நிறைந்தியலும் 3” எனத் தொல்காப்பி யனாரும் கூறுவர். அவ்வியைபினால், உடம்புக்குரிய வித்து நிறைவு வழிச் சிறக்கும் அவாக் காமம் என வழங்கும். ஆணும் பெண்ணும் ஒன்றையொன்று வேட்டு உடம்புதரு பணியில் ஈடுபடும்போது அது காமக்கூட்டம் என்றும், அதற்கு முன்னணி யாகத் தோன்றும் உயிர்த்தொடர்பு காதல் என்றும் வழங்கும். உயிரொன்றிய காமக் கூட்டத்தைத் தமிழ்ச்சான்றோர் காதற் காமம் என்று குறித்தனர். “காதற் காமம் காமத்துச் சிறந்தது 4” என்பது காண்க.

நிலைத்திணை உயிர்கட்கு இக்காமக்கூட்டத்தை வண்டி னமும் ஒருசில புள்ளினமும் காற்றும் விளைவிக்கின்றன. ஏனை இயங்குதிணை யுயிர்கள் வேட்கைவழி நின்று பெறுகின்றன. மக்களினமும் இவ்வகையில் ஒன்றே ஆயினும், காமக்கூட்டத் துக்குப்பின் ஏனை உயிர்கள் ஆண்பெண் பற்றின்றி நீங்கி விடு வதும், மக்களுயிர் பிரிவின்றி வாழ்க்கையியல் முடியுங்காறும் பிணிப்புண் டிருப்பதும் வேற்றுமையாகும்.
மக்களுயிர் ஒன்று தவிர ஏனையுயிர்கட்கு ஓரொரு காலத்தே உடம்புதரு வித்துக்கள் நிறைவுபெறும்; அக்காலத்தே தான் அவற்றிற்கு வேட்கை ஓங்கி நிற்கும். பிற காலங்களில் அவை ஆணும் பெண்ணும் உடன் உறையினும் வேட்கை வயப்படுவ தில்லை. மக்களுயிரின் வேட்கை ஏனையவற்றின் வேறுபட்டு இயலுகிறது 1.

மக்கள் வாழ்க்கையின் குறிக்கோள் பேரின்பப் பேறாகலின், காமக்கூட்டத்துக்கு முன்னர் உண்டாகும் காதற்றொடர்பு, பின்னரும் கடைபோக நின்று உணவுப்பணியும் உடம்பு தரு பணியும் செய்து, அவ்வுடம்புகொண்டு பெறலாகும் பேரின்பத் துக்குத் துணையாகும். “காமம் சான்ற கடைக்கோட் காலை, ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி, அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும், சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே 2” என ஆசிரியர் உரைப்பது காண்க.

இந்நிலையில், ஆணும் பெண்ணுமாய்க் கூடி உடம்பு தருபணியில் ஈடுபடும் உயிரினத்துள், பெண்ணுயிர் பிறிதோர் உடம்பைத் தனக்குள் தோற்றுவித்து வளர்த்து வருவதும் பின்பு அதனைக் கருவுயிர்த்துப் புறத்தே வளர்த்து வருவதுமாகிய பெரும்பணியை மேற்கொள்ளுகிறது; தம்பால் தோன்றிய உயிர் தன் உணவுக்குரிய பணியைத் தானே செய்யக்கூடிய வன்மை பெறும்வரை உணவுதந்து ஓம்புதலைக் கடனாகக் கொள்ளும். அதற்கிடையே அதன் உயிரையும் உடம்பையும் தன்னுயிரும் உடம்பும் போலக் கருதும் கருத்தும் காதலும் பெண்ணுயிர் மாட்டு அமைந்துள்ளன. தற்பேணற்குரிய வன்மை வந்தபின் ஒன்றினொன்று பற்றின்றி நீங்கி விடுவது அஃறிணையுயிர்களின் இயல்பு. அதுவரை அதனிடத்தமைந்திருந்த காதல் தாய்மை எனப்படும். படவே, பெண்ணுடம்பில் காதற்காமத்துக்கு அடிப் படை தாய்மைப் பண்பாதலும் விளங்கும்.

இனி, மக்களினத்துத் தாய்மைப்பண்பு, தான் ஈன்ற மக்களின் வாழ்நாள் முழுதும் நின்று நிலவும். அவர்களிடத்தில் உண்மை யறிவு ஓங்கிநிற்பதால், தாய்மையின் மாண்பு கண்டு உணவுக் குரிய புறப்பணியில் பெண்ணுயிரை விடுவதில்லை. ஆணுயிரே அப்பணியில் முன்னிற்கும். பெண்ணுயிர் உணவுப்பணியில் சிறிதும் உடம்புதருபணியில் பெரிதும் ஈடுபடும்.

இம் மக்களினத்தில் தலைமக்கள் என்பார், உயர்நிலை மக்கட்குரிய நன்மாண்புகள் அத்தனையும் திரண்டு உருவெடுத் தாற் போலும் ஆடவரும் பெண்டிரு மாவர், உடம்புதரு பணிக் குரிய காதற்காமத் தொடர்பும், சிறந்தது பயிற்றற் குரிய உயிர்த்தொடர்பும் ஒருங்குடையர். ஈண்டைத் தலைமகள் தலைமைப்பண்பும் கட்டிளமையும் கொண்டு உடம்புதரு பணிக்கு ஏதுவாகிய தாய்மையுணர்வு தலைசிறந்து அப்பணியை ஆற்றுதற்கண் பெருவிதுப்புற்றிருக்கின்றாள். அதற்கு இன்றியமை யாத காதலனாகிய தலைமகன் பிரிந்திருக்கின்றான். தாய்மைப் பணிக்கு முதலாகிய அவளது உடம்பு, உயிரைத் தன்னடிப் படுத்தித் தன் பணியை முற்றுவித்துக் கொள்வது குறித்து இடை யீடின்றி நரப்புக்கால்தோறும் வேட்கைத் தீயைப் பரப்பி வெதுப்பு கின்றது; தனக்கு ஆக்கமும் அரணுமாகும் ஊணுறக்கங் களையும் அவள்உடம்பு வெறுத்து ஒதுக்குகின்றது. ஆயினும், தலை மகளாதலின், அவள் அறிவு அறைபோகின்றாளில்லை.; “செறிவும் நிறையும் செம்மையும் செப்பும், அறிவும் அருமையும் 1” சிறக்க வுடையள்; தலைமகற்குரிய அறவாழ்வு பொருள்வாழ்வு இன்ப வாழ்வு ஆகிய எல்லாவற்றிற்கும் துணைவியாகலின், உடலின் இயற்கை விதுப்பினை அடக்கி அமைகின்றாள்; மற்று, உடம்பு வழிப்பட்ட அவளது உள்ளம் பற்றுக்கோடில்லாத பூங்கொடி போல் துவண்டு அடிக்கடி வந்து தாக்கும் காமக்காற்றால் அலைந்தவண்ணம் இருக்கிறது. அந்நிலையில் அவள் இரங்கிக் கூறுவன பொருளாக வந்த பாட்டுக்கள் பத்தின் தொகுதி யாக லான், இது தலைவி இரங்குபத்து என்று பெயர் பெறுவதாயிற்று.

    331.அம்ம வாழி தோழி யவிழிணர்க் கருங்கான் மராஅத்து வைகுசினை வான்பூ  

அருஞ்சுரஞ் செல்லுந ரொழிந்தோ ருள்ள
இனிய கமழும் வெற்பின்
இன்னா தென்பவவர் சென்ற வாறே.
இது, தலைமகன் பிரிந்துழி, “செல்லும் வழியிடத்து மலை யில் உளதாகிய நாற்றத்தால் நம்மை நினைந்து முடியச் செல்லார், மீள்வரோ?” எனக் கேட்ட தோழிக்கு, “அவர் முடியச் சென்றார்” என்பது அறிந்து இரங்கித் தலைவி கூறியது.

** பழைய உரை :**
சென்ற சுரம் பிரிந்தார் தத்தம் துணைவியரை நினையும் படி வெறிகமழும் மலரை யுடைத்தாகலும், செலற்கருமையால் இன்னாமை யுடைமையும் தலைவி இரங்குதற்குக் காரணமாயின என்றவாறு.

** உரை :**
தோழி, கேட்பாயாக: முறுக்குடைந்த பூங்கொத்துக்களை யுடைய கரிய அடியினையுடைய வெண்கடம்புமரத்தின்கண் உள்ள சினைகளிற் பூத்த வெண்மலர்கள் செல்லுதற்கரிய சுரத்தைக் கடந்து செல்லுவோர் கண்டு தாம் பிரிந்து போந்த துணைவியரை நினைந்து அழுங்குமாறு இனிய மணம் நாறும் மலையிடத்து, நம் தலைவர் சென்ற நெறி துன்பந்தரும் இயல்பின தென்று பலருங் கூறுவர்காண் என்றவாறு.

மலர்ந்த பூக்களையுடைய கொத்து, அவிழ்இணர் எனப் பட்டது. “அரும்புமுதிர் அவிழிணர் 1” என்றது காண்க. வைகு சினை, தாழ்ந்த கிளை. வெண்கடம்பின் அடி கரிய நிறமுடைமை பற்றிக் கருங்கால் மராஅம் என்றார்; பிறரும், “கருங்கால் மராஅத்து வாஅன் மெல்லிணர் 2” என்றும், அதன் பூவின் வெண்மையை, “வாலிய, சுதை விரிந்தன்ன பல்பூ மராஅம் 3” என்றும் கூறுவர். இதன் பூவினிடத்து எழும் மணம் மகளிர் கூந்தலிடத்து எழும் மணம் போறலின், அருஞ்சுரம் செல்லுநர் உள்ள இனிய கமழும் என்றார். “அவிழிணர்த், தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல் 4” என்று சான்றோர் கூறுதல் காண்க.

தலைமகன் பிரிவின்கண் தலைவி எய்திய வேறுபாடு கண் டோர், மராமரத்தின் இயல்பு கூறி, “ஆங்குச் செல்லும் தலைமகன் அதுகண்டு நின்னை நினைந்து மீளுவன்” என்றும், அதற்கு அப்பாலுள்ள நெறியும் இன்னா தாகலின், அவன் மேலே செல்லான் என்றும் கூறினாராக, மராத்து வான்பூ இனிய மணம் கமழ்ந்து நம் காதலரை நம்மை மறவாவாறு நினைப்பிப்பது நன்று என்பாள், மராஅத்து வைகுசினை வான்பூ அருஞ்சுரம் செல்வோர் ஒழிந்தோர் உள்ள இனிய கமழும் வெற்பு என்றும், ஆயினும் அப்பால் செல்லற்குரிய வழி இன்னா தென்ற லின், மேற் கொண்டு செல்லாது நம் நினைவும் வழி யின்னாமை யும் காரணமாக வினைமுடியாது மீள்வராயின் வினையாண்மை இலர் என்பது பட்டு இளிவாம் என்று அஞ்சுகின்றேன் என்பாள், இன்னாது என்ப அவர் சென்ற ஆறே என்றும் கூறினாள். தலைமகன் வினைமேற் சென்றவிடத்து அவன் அதனை முடித்து மீளுதலையே தலைமகள் விரும்புவள் என அறிக. பிறாண்டும், “நோய்நாம் உழக்குவ மாயினும் தாம்தம், செய்வினை முடிக்க தோழி 1” எனத் தலைவி கூறுவது காண்க. ஆறு இன்னாமையும் தலைவி இரங்குதற் கேதுவாகலின், இன்னாது என்ப அவர் சென்ற ஆறே என்றார்; “அஞ்சுவரு மரபின் வெஞ்சுர மிறந்தோர், நோயிலர் பெயர்தல் அறியின், ஆழல மன்னோ தோழிஎன் கண்ணே 2” என்பதும் உண்டு.

வெஞ்சினை வான்பூ என்பது பாடமாயின் விரும்பப் படும் சினைகளிடத்து மலர்ந்த வெள்ளிய பூ என்றுரைக்க. விருப்பம், மலர்மிகுதியால் செல்வார் மணநுகர்தற்கும் கோடற்கும் விரும்புதல்.

    332.    அம்ம வாழி தோழி யென்னதூஉம்  

அறனில மன்ற தாமே விறன்மிசைக்
குன்றுகெழு கானத்த பண்பின் மாக்கணம்
கொடிதே காதலிப் பிரிதல்
செல்ல லைய வென்னா தவ்வே.

இது, பிரிந்த தலைமகன் சுரத்திடைக் கழியச் சென்றான் என்பது கேட்ட தலைமகள், அங்குள்ள மாக்களை நொந்து தோழிக்குச் சொல்லியது.

** உரை :**
தோழி : கேட்பாயாக, சிறந்த உச்சிகளையுடைய குன்றுகள் பொருந்திய கானகத்தின்கண்ணவாகிய நற்பண் பில்லாத மாக்களின் கூட்டம் எத்துணையும் அறமில்லாதன வேயாம்; “ஐய, காதலியைப் பிரிதல் கொடிதாகலின், இனிச் செல்லற்க” என்று கூறாதொழிந்தன வாகலான் என்றவாறு.

விறல், ஈண்டு உயர்ச்சிமேல் நின்றது. மிசை, உச்சி. கானத்த, கானம் என்னும் பெயரடியாக வந்த பெயரெச்சக்குறிப்பு. கானத்த மாக்கணம், பண்பின் மாக்கணம் என இயையும். அன்பு பண்பும் அறம் பயனுமாதலின், அன்பில்லாமைபற்றி அறனிலவாகிய மாக்கணத்தை அன்பில் மாக்கணம் என்றார். மாக்கணம் அறனில மன்ற என்றது மேற்கோள்; செல்லல் ஐய என்னா தவ்வே என்றது ஏது. கொடிதே காதலிப் பிரிதல் செல்லல் என்றது மான்கணம் கூறல் வேண்டுமெனக் கருதி யுரைக்கும் கூற்று.

எஞ்ஞான்றும் தம் துணையைப் பிரியாதுறையும் மாக் கணம், அப்பண்பு குறித்துப் பிரிந்து போதரும் தலைமகற்கும் பிரிதல் கொடி தென்னாமையின், பண்பின் மாக்கணம் என்றும், தம்மைக் கூடினோர் வருத்த மெய்தப் பிரிந்தாரைத் தெருட்டு மாறு கூறுதல் பண்புடையார்க்கு அறமாகலின், அறனில மன்ற என்றும் கூறினாள்.

    333.    அம்ம வாழி தோழி யாவதும்  

வல்லா கொல்லோ தாமே யவண
கல்லுடை நன்னாட்டுப் புள்ளினப் பெருந்தோ
டியாஅந் துணைபுணர்ந் துறைதும்
யாங்குப்பிரிந் துறைதி யென்னா தவ்வே.

இது, பிரிந்த தலைமகன் “சுரத்திடைச் சென்றான்” என்பது கேட்ட தலைமகள், அங்குள்ள புட்களை நொந்து தோழிக்குச் சொல்லியது.

** உரை :**
தோழி, கேட்பாயாக: அவ்விடத்தவாகிய மலைகளை யுடைய நல்ல நாட்டின்கண் பெருந்தொகையாகவுள்ள பறவைகள், நம் தலைவரை நோக்கி, “ஐய, யாம் எம் துணையிற் பிரியாது கூடியுறைகின்றேம்காண். மேலும், யாம் பிரிதல் வல்லுவேமுமல்லேம்; அற்றாக, நீ எவ்வாறு பிரிதலைச் செய்து போந்தனைகொல்லோ?” என்று கூறி அவர் செல வினைத் தடுக்கா தொழிந்தன வாகலான், அவை சிறிதும் வன்மையுடைய வல்ல போலும் என்றவாறு.

யாவதும், யாதும்; “கல்லத ரத்தம் கடக்க யாவதும், வல்லுந கொல்லோ 1” என்றாற் போல. இது “பகுதிப் பொருள் விகுதி” என்று அடியார்க்குநல்லார் கூறுவர். நல்லியல் பிழந்து பாலை யாகிய நாட்டின் வழியாகச் சென்றமையின், அதனைக் கல்லுடை நாடு என்றும், மாவும் புள்ளும் வாழ்தலின் நன்னாடு என்றும் சிறப்பித்தார். தோடு, தொகுதி; கூட்டமுமாம். “வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு 2” என்று பிறரும் கூறுதல் காண்க. ஆற்றாமை மிக்கவிடத்துச் “சொல்லா மரபி னவற்றோடு கெழீஇச், செய்யா மரபின் தொழிற்படுத் தடக்கியும் 3” தலைமக்கள் கூற்று நிகழ்த்துவ துண்மையின், இக்கூற்று அமையுமென அறிக.
பசுந்தழை போர்த்த மரமும் செடியு மின்றி வெறுங் கற்களே நிறைந்த தாயினும், புள்ளினம் துணையிற் பிரியாது இனிது உறையும் நாடாதல் பற்றி, கல்லுடை நன்னாட்டுப் புள்ளினம் என்றும், பிரிந்தவழி எய்தும் துன்பத்தின் கொடுமை யறிந்து, யாம் துணையிற் பிரிந்துறைதல் மாட்டேமாக, நீ பிரிந்துறைதல் மிக்க வன்மையின் பாற்படு மென்றற்கு, யாங்குப் பிரிந்துறைதி என்றும், பிரிதல் என்னும் இன்னாச்சொல்லை வாயாற் கூறமாட்டா வாயினும், தாம் துணை புணர்ந்துறைதலைத் தானும் கூறாமையின் யாவதும் வல்லா கொல்லோ என்றும் கூறினாள்.

கல்லுடை நன்னாட்டுப் புள்ளினத்துள், “புணர்ந்தீர் புணர் மினோஎன இணர்மிசைச், செங்கண் இருங்குயில் எதிர்குரல் பயிற்றும் 4” எனவும், “பூங்குயில் கவறுபெயர்த், தன்ன நில்லா வாழ்க்கையிட்டு, அகற லோம்புமின் அறிவுடையீர்எனக், கையறத் துறப்போர்க் கழறுவ 5” எனவும், மயில்கள், “ஆர்குரல் மணந்து தணந்தோரை, நீடன்மின் வாரும் என்பவர் சொற் போன்றனவே1” எனவும் கூறுமென்றலின், புள்ளினப் பெருந் தோடு இவ்வாறு கூவித் தடுக்க வல்லுந வாகவும், “புணர்ந்தோர், பிரிதல் சூழ்தலின் அரியது முண்டோ 2” என்று மருண்டு ஒன்றும் சொல்ல மாட்டாவாயின போலும் என்பாள், யாவதும் வல்லா கொல்லோ என்றார் என்றுமாம்.

“அவனறி வாற்ற வறியு மாகலின் 3” என்ற சூத்திரத்துப் “பல்வேறு நிலை” என்றதனால் இது புள்ளை நொந்து கூறியது என்பர் நச்சினார்க்கினியர்.

இனி, வல்லார் கொல்லோ என்றும், பிரிந்துறைதி யென்னு மாறே என்றும் பாடமாயின், புள்ளினப் பெருந்தோடு, “யாம் துணைபுணர்ந் துறைதும், யாங்குப் பிரிந்துறைதி” என்று கூறிச் செல்லுவாரைத் தடுக்கும் நெறியையுங் கடந்து சென்றா ராகலின், அவர் யாதொன்றனையும் செய்தல் வல்லுநர் போலும் என்றுரைக்க; அதுபோது, இது தலைமகன் பிரிந்துழித் தலைமகள் செல்லும் வழியிடத்துப் புள்ளினம் பிரிவருமை கூறித் தகைக்கு மாகலின் அவர் முடியச் செல்லாது மீள்வரோ என்ற தலை மகட்குத் தோழி, அவர் முடியச் சென்றாராகலின், யாதனையும் செய்ய வல்லுநரே யெனத் தலைமகன் இயற்பழித் துரைத்ததாகக் கொள்க. தன்னின் இறப்ப இழிந்த புள்ளினம், துணையிற் பிரிந் துறைய மாட்டா வாதலை உரைப்பக் கேட்டு வைத்தும், மன மிரங்காது தாம் கருதிய பிரிவே பொருளாகப் போயினமையின் அவர் அன்பிலார்க் குரிய செயல் யாவும் செய்வர் என்பாள், யாவதும் வல்லார் கொல்லோ என்று கூறினாள் என்றுமாம்.

    334.    அம்ம வாழி தோழி சிறியிலை  

நெல்லி நீடிய கல்காய் கடத்திடைப்
பேதை நெஞ்சம் பின்செலச் சென்றோர்
கல்லினும் வலியர் மன்ற
பல்லித ழுண்க ணழப்பிரிந் தோரே.

இது, பிரிவு நீட ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

** பழைய உரை :**
பல்லிதழ் உண்கண் அழப் பிரிந்தோர் என்றது, தாம் குறித்த எல்லைக்கண் வாராது நீட்டித்தார் என்பதாம்.

** உரை :**
தோழி, கேட்பாயாக: சிறிய இலைகளையுடைய நெல்லி மரங்கள் மிக்க, மலையுருகக் காயும் வெயில் தெறும் காட்டி டையே, அறியாமையினையுடைய என் நெஞ்சம் தன்பின் தொடர்ந்துவரப் பிரிந்து சென்றவர், பலவாகிய இதழ் களையுடைய மலர் போலும் மையுண்ட கண்கள் கலுழ்ந்து நீருகுப்பப் பிரிந்தா ராகலான், அவர் கல்லினும் வன்மை யுடையா ராவர் என்றவாறு.

நெல்லிமரத்தின் உயர்ச்சியும் பெருமையும் நோக்க இலை மிகச் சிறிதாய் இருத்தலின் சிறியிலை நெல்லி என்றார்; ஏனைச் சான்றோர்களும், “சிறியிலை நெல்லித் தீங்கனி 1” என்றும், “சிறியிலை நெல்லித் தீஞ்சுவைத் திரள்காய் 2” என்றும் கூறுப. வெயில் வெம்மையாற் கல்லும் நெருப்புப் போற் சுடுவது பற்றிச் சுரத்தைக் கல்காய் கடம் என்றார்; “கல்காய் கானம் 3” என்று பிறரும் கூறுவர். பல்லிதழ், பல இதழ்களையுடைய பூ. சென் றோர் வலியர் மன்ற, அழப் பிரிந்தா ராகலான் என எடுத்தோத்தும் ஏதுவுமாய் இயைக்க.

பேதை நெஞ்சம் என்றாள், நாணாமையும் தலைமகனது மனப்பான்மையை நாடாமையும் உடைமையின்; “நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும், பேணாமை பேதை தொழில்4” என்ப வாகலின். ஒருவர்மாட்டு ஒருவர் ஒன்று வேண்டிப் பின்சென்றவழி, அவர்மாட்டு இரங்கி அதனை அருளாராயின், அவரைக் கன்னெஞ்ச ரென்னும் வழக்குப்பற்றிக், கல்லினும் வலியர் என்றும், நினைப்பெல்லாம் தலைவன் செலவின்மேல் நிற்றலின், பின்செலச் சென்றோர் என்றும் கூறினாள்.

இனி, கல்லுருகக் காயும் கடத்திடைச் சென்றும், அவர் நெஞ்சம் உருகாமை என்னோ வென ஒரு நயந் தோன்றுதல் காண்க.

    335.    அம்ம வாழி தோழி நம்வயின்  

நெய்த்தோ ரன்ன செவிய வெருவை
கற்புடை மருங்கிற் கடுமுடை பார்க்கும்
காடுநனி கடிய வென்ப
நீடியிவண் வருநர் சென்ற வாறே.

இது, தலைமகன் சென்ற சுரத்தினிடத்துக் கொடுமை பிறர் கூறக் கேட்ட தலைமகள் ஆற்றாது தோழிக்குச் சொல்லியது.

** உரை :**
தோழி, கேட்பாயாக: குருதி போலச் சிவந்த செவியினையுடைய கழுகுகள் கற்களின் மருங்கே கிடக்கும் மிக்க முடைநாற்றத்தையுடைய ஊன்துண்டங்களைப் பார்க்கும் காடுகள் மிக்க அச்சம் பொருந்தினவாம் என்று நம்மிடத்துக் கூறாநிற்ப ராகலின், விரைய வாராது நீட்டித்து வருதற்பாலராய் நம் காதலர் சென்ற வழிகள் அக்காடுகளி டத்தன வாதலால், யான் வருந்துவேனாயினேன் என்றவாறு.

நெய்த்தோர், குருதி, எருவை, கழுகு. அதன் கழுத்து வெளுத்து இருகவுளிலும் கோழிக்கொண்டைபோலச் சிவந்த தசைகள் வளர்ந்து தொங்குதலின், அவற்றைச் செவியென்று குறித்துச் செஞ்செவி எருவை யென்பது வழக்கு. “பொறித்த போலும் வானிற எருத்தின், அணிந்த போலும் செஞ்செவி எருவை1” என்பது காண்க. அது பற்றியே நெய்த்தோ ரன்ன செவிய எருவை என்றார். புலி முதலிய விலங்குகள் பிறவுயிர்
களைக் கொன்று தின்று கழித்த பிணங்கள் கற்களின் இடையே கிடந்து மிக்க முடைநாற்றத்தைப் பரப்புதலின், அவற்றைக் கடுமுடை என்றார். “புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை 2” என்பர். இவற்றைத் தேடி யுண்டு வாழ்வது எருவையின் செய்தி
யாகலின், எருவை கடுமுடை பார்க்கும் என்றார். “படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ்செவி, எருவைச் சேவல்3” எனச் சான்றோர் உரைப்பர். கடி, அச்சம்.

உயிர்க்கொலை வேட்டுத் திரியும் விலங்குகளும் ஆறலை கள்வரும் வாழும் இடம் என்பது தோன்ற எருவை கடுமுடை பார்க்கும் காடு என்றும், அதனால் அக்காட்டுவழி செல் வோர்க்குத் தீங்கு பயப்பது என்று பிறர் சொல்லக் கேட்டு உள்ளத்தே அச்சமுற்றுத் தலைவி வருந்துமாறு புலப்படக் காடு நனிகடிய என்ப என்றும், தலைமகன் விரைந்து மீளுதல் வேண்டு மென விழைந்து கூறுதலால் நீடி இவண் வருநர் சென்ற ஆறு என்றும் கூறினாள்.

    336.    அம்ம வாழி தோழி நம்வயின்  

பிரியலர் போலப் புணர்ந்தோர் மன்ற
நின்றதில் பொருட்பிணி முற்றிய
என்றூழ் நீடிய சுரனிறந் தோரே.

இது, பிரிவதற்கு முன்பு தங்களிடம் அவன் ஒழுகிய திறம் நினைந்து தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

** உரை :**
தோழி, கேட்பாயாக: நிலையுதலில்லாத பொருள்வயிற் பிரிந்து செய்யும் வினையை முடித்தற்கு வெயில் கடுகிச் சுடும் காட்டினைக் கடந்து சென்ற நங்காதலர், பண்டு நம்மைக் கூடிய போழ்து பிரியார் போலக் கூடி மகிழ்வித்தனர்காண்; அவர் செயல் இருந்தவாறு என்? என்றவாறு.

பிரியலர், என்றும் பிரியாத இயல்பினர். புணர்ந்தார் எனற்பாலது “ஆ ஓவாகும் 1” என்றதனால் புணர்ந்தோர் என நின்றது. நின்றது: நிலையுதல் என்னும் தொழில்மேல் நின்ற வினைப்பெயர். “நின்றதில் பொருட்பிணிச் சென்றிவண் தருமார், செல்ப என்ப 2” எனப் பிற சான்றோரும் கூறதல் காண்க. பொருள் வேட்கையாற் பிணிப்புண்டு செய்யும் நினைவும் சொல்லும் செயலும் பொருட்பிணி என வழங்கும். ஏனைச் சான்றோரும், “பல்லித ழுண்கண் கலிழ, நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசி னோரே 3” என்றும், “ஓதல் காவல் பகைதணி வினையே, வேந்தர்க் குற்றுழி பொருட்பிணி பரத்தையென், றாங்க வாறே யவ்வயிற் பிரிவே 4” என்றும் கூறுவனவற்றா லறிக. “இனிப் பொருட்பிணி என்பது, பொருளிலனாய்ப் பிரிவதன்று; தன் முதுகுரவராற் படைக்கப்பட்ட பல்வேறு வகைப்பட்ட பொரு ளெல்லாம் கிடந்ததுமன்; அதுகொடு துய்ப்பது ஆண்மைத் தன்மை அன்றெனத் தனது தாளாற்றலாற் படைத்த பொருள் கொண்டு வழங்கி வாழ்தற்குப் பிரியுமென்பது; அல்லதூஉம், தேவர்காரியமும் பிதிரர்காரியமும் தனது தாளாற்றலாற் படைத்த பொருளாற் செய்வன, தனக்குப் பயன்படுவன; என்னை? தாயப் பொருளாற் செய்தது தேவரும் பிதிரரும் இன்புறார் ஆதலான்; அவர்களையும் இன்புறுத்தற்குப் பிரியு மென்பது1” என்பர் களவியல் உரைகாரர். முற்றிய: செய்யிய வென்னும் வாய்
பாடு. என்றூழ், வெயில்; வேனிலுமாம். “என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன் 2” என்றார் பிறரும்.

முன்னர்க் கூடியவிடத்து “மெல்லியல் அரிவைநின் நல்லகம் புலம்ப, நிற்றுறந் தமைகுவ னாயின் எற்றுறந்து, இரவலர் வாரா வைகல், பலவாகுக யான் செலவுறு தகவே3” என்று கூறினா னாகலின், பிரியலர் போலப் புணர்ந்தோர் என்று கூறினாள். இது “நிகழ்ந்தது நினைத்தற் கேதுவு மாகும்4” என்பதனால் அமையும்.

பண்டு, நிலையுதல் இல்லாத இளமையாற் பிணிப்புண்டு பிரிவென்பது ஒன்று உண்டு என்ற நினைவே தோன்றாதவாறு கூடியவர், இன்று அதுவே இயல்பாகவுடைய பொருளாற் பிணிப்புண்டு அதனை முற்றுவிப்பது கருதிச் சென்றது எனக்கு வியப்புத்தருகிறது என்பாள், நின்றதில் பொருட்பிணி முற்றிய சுரன் இறந்தோர் என்றும், நீடுதல் இல்லாத பொருள் குறித்து வெயில் வெம்மை நீடிய சுரன் இறந்து போதல் நேரிதன்று எனத் தான் கருதியது முடித்தற்கு, என்றூழ் நீடிய சுரன் என்றும் கூறினாள்.

    337.    அம்ம வாழி தோழி நம்வயின்  

மெய்யுற விரும்பிய கைகவர் முயக்கினும்
இனிய மன்ற தாமே
பனியிருங் குன்றஞ் சென்றோர்க்குப் பொருளே.

இது, தலைமகன் பொருள்வயிற் பிரிந்துழித் தன் முயக்கினும், அவற்குப் பிற்காலத்துப் பொருள் சிறந்ததெனத் தலைவி இரங்கித் தோழிக்குச் சொல்லியது.

** உரை :**
தோழி, கேட்பாயாக; குளிர்ந்த பெரிய குன்றத்தைக் கடந்து பொருள்வயிற் பிரிந்த நம் காதலர்க்கு அப்பொருள்கள், நம்பால் மெய்யுற விரும்பிய கையா