இராமாயணம் நடந்த கதையா?
ந.சி. கந்தையா




இராமாயணம் நடந்த கதையா?


1. இராமாயணம் நடந்த கதையா?
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
7. இராமாயணம் நடந்த கதையா?

 

நூற்குறிப்பு
  நூற்பெயர் : இராமாயணம் நடந்த கதையா?
  ஆசிரியர் : ந.சி. கந்தையா
  பதிப்பாளர் : இ. இனியன்
  முதல் பதிப்பு : 2003
  தாள் : 16.0 கி. மேப்லித்தோ
  அளவு : 1/8 தெம்மி
  எழுத்து : 11 புள்ளி
  பக்கம் : 20 + 164 = 184
  படிகள் : 2000
  விலை : உரு. 80
  நூலாக்கம் : பாவாணர் கணினி
  2, சிங்காரவேலர் தெரு,
  தியாகராயர் நகர், சென்னை - 17.
  அட்டை வடிவமைப்பு : பிரேம்
  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
  20 அஜீஸ் முல்க் 5வது தெரு
  ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
  கட்டமைப்பு : இயல்பு
  வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
  328/10 திவான்சாகிப் தோட்டம்,
  டி.டி.கே. சாலை,

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)


தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.

‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’

என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.

அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.

இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.

பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.

தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.

திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-

திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.

பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.

“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”

வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.

அன்பன்

கோ. தேவராசன்

அகம் நுதலுதல்


உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.

உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.

தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.

தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.

எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.

இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.

எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.

வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.

உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.

இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.

சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.

அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.

உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.

நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.

அன்பன்

புலவர் த. ஆறுமுகன்

நூலறிமுகவுரை


திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.

இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.

திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.

இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.

ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:

சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்

58, 37ஆவது ஒழுங்கை,

கார்த்திகேசு சிவத்தம்பி

வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்

கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.

கருவிநூல் தந்த ந.சி. கந்தையா


தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.

தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.

தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.

உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.

மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.

நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.

தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.

பேரா. கு. அரசேந்திரன்

பதிப்புரை


வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.

இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.

ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.

தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.

தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.

தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.

நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.

வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.

ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?

தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.

மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.

இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதிப்பகத்தார்

இராமாயணம் நடந்த கதையா?


முன்னுரை
இராமாயணத்தைப்பற்றிய ஆராய்ச்சி மிகச் சிக்கலானது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை காலம் முதல் இராமாயணத்தைப்பற்றிய பற்பல ஆராய்ச்சிகள் வெளிவந்துள்ளன. சில சமயங்களில் உண்மை வரலாறுகள் மறைந்துபோகின்றன; உண்மையல்லாத வரலாறுகள் வழங்குகின்றன. சீதையின் தந்தை எனப்படுகின்ற சனகன் பாரத காலத்துக்குப் பின் இருந்த வன். இராமாயண நிகழ்ச்சி பாரத நிகழ்ச்சிக்கு முன் நடந்ததெனச் சொல்லப் படுகின்றது. இக் கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கதாயில்லாமையால் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்காரவர்கள் இராமாயண நிகழ்ச்சி பாரத நிகழ்ச்சிக்குப் பிற்பட்டதெனக் கூறுவாராயினர். இராமாயணம் ஆராய்ச்சியாளருக்கே பெரிய திகைப்பை உண்டாக்குகின்றது. அதுபற்றியே இராமாயணம் நடந்த கதையா என நாம் ஆராய்ந்து முடிவுகட்ட வேண்டியிருக்கிறது.

ந. சி. கந்தையா

இராமாயணம் நடந்த கதையா?
தோற்றுவாய்
இராமாயணம் நடந்த கதையா - என்னும் கேள்வி பலருக்கு வியப்புத் தரலாம். நாம் நெடு நாட்களாக நம்பிவந்த புராணக்கதைகள் பல கற்பனைக் கதைகளே என்று அறிகின்றோம். இராமாயணம் உண்மையில் நிகழ்ந்த கதை எனப் பலர் நம்பிவருகின்றனர். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, பண்டிதர் சவரி ராயபிள்ளை, ஆர். சி. தத்தர் போன்ற ஆராய்ச்சியாளர் இவ்வரலாறு நீண்ட கற்பனைகளுள் மறைந்து கிடக்கும் ஒரு சிறு நிகழ்ச்சியென்றோ முற்றும் கற்பனை என்றோ கருதினார்கள். ஆராய்ச்சி அறிஞர் தமது நுண்ணிய மதி கொண்டு ஆய்ந்து வெளியிடும் ஆய்வுரைகள் பெரும்பாலும் பொது மக்களுக்கும் பிறருக்கும் கிடைப்பதில்லை. ஆராய்ச்சியாளர் தக்க காரண மின்றி உண்மையைத்திரித்துக் கூறமாட்டார்கள். அவர்கள் கூறியுள்ளவை களை எல்லாம் இச்சிறிய நூலில் திரட்டித் தருகின்றோம்.

வால்மீகி இராமாயணம்
வால்மீகர் இராமாயணத்தை வடமொழியிற் செய்தார். இன்று வடமொழியிற் காணப்படும் இராமாயணம் வால்மீகியாற் செய்யப்பட்டதன்று என்பது ஆராய்ச்சி அறிஞர் கருத்து. முன் இருந்த இராமாயணம் பல கூட்டல், கழித்தல், திருத்தல்களோடு புதிதாக அமைக்கப்பட்டிருக்கின்றதென்பதை எவரும் ஒப்புக்கொள்ளாமல் இருக்கமுடியாதென
வைத்தியா கூறியுள்ளார்.1

அவர் மேலும் கூறுவது, “பழைய இராமாயணமாகிய கருவைச்சுற்றி மிகப் பெரிய புதிய கற்பனைகள் திரண்டுள்ளனவென்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம். இது இந்திய வரலாற்றின் பழங்காலத்தைச் சேர்ந்தது. அக் காலத்தில் வேள்வியே ஆரியரின் சிறந்த வணக்கமாக விருந்தது. அப் பொழுது புத்த மதம் தோன்றவில்லை. அக்காலத்தில் விக்கிரக வணக்கமும் எழவில்லை. பிராமணரும் சத்தியரும் அக்காலத்தில் தாராளமாக ஊன் உண்டார்கள். பெண்கள் வேதங்களைப் பயின்று வேதக்கிரியைகளைச் செய் தார்கள். அக்காலத்தில் சத்திரியர் பிராமணரோடு கல்வியில் போட்டி யிட்டனர்; பிராமணர் சத்திரியரோடு வில்வித்தையில் போட்டியிட்டனர். இலக்குமணன் புதிதாக அமைத்த குடிசையில் பலி செலுத்துதற்கு இராமன் வேட்டையாடிக் கொண்டு வந்த மானை இலக்குமணன் முழுதாக நெருப்பில் வாட்டுகிறான். தாவர உணவையே கொள்ளும் எங்களுக்கு இது மிக வியப்பை அளிக்கலாம்.

“இராமருடைய காலத்தில் பெண்கள் பலியிட்டார்கள். கோசலை வேள்விக் குதிரையை வாளினால் மூன்று வெட்டில் வெட்டிக் கொன்றாள்.”

ஆரியர் இந்திய நாட்டை கி. மு. 2000 வரையில் அடைந்தார்கள் என்று சிலரும், கி. மு. 1500 வரையில் என்று சிலரும் கூறுகின்றனர். கி. மு. 1000-க்கு முன் ஆரியர் விந்திய மலைக்குக் கீழ் வரவில்லை என்பதும், அவர்கள் விந்தியத்துக்குத் தெற்கிலுள்ள நாடுகளைப்பற்றி அறியாரென்பதும் வரலாற்றாசிரியர்கள் கொண்டுள்ள முடிவுகளாகும்.

கி. மு. 1000 வரையில் இராமாயணக் கதை வழங்கியிருக்குமானால் அது வடநாடு தொடர்பான கதையாயிருக்குமேயன்றித் தென்னாடு தொடர்பான கதையாயிருக்க முடியாது. இராமாயணத்தில் தென்னாடு சம்பந்தமாகக் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சிகளுக்குச் சமாதானம் காணமாட்டாத வடநாட்டு வரலாற்றாசிரியர்கள் இலங்கை என்பது இலங்கைத்தீவு அன்று; அது தண்டகாருணியத்தை அடுத்திருந்த ஓர் இடம் எனக் கூற ஆரம்பித் திருக்கின்றனர்.

தசரத சாதகம்
கௌதம புத்தர் கி. மு. ஆறாம் நூற்றாண்டில் விளங்கினார். அவர் காலத்தோ அதற்குச் சிறிது பின்போ, புத்தரின் பழம் பிறப்புகளைக் கூறும் சாதகக் கதைகள் எழுந்தன. அக் கதைகளுள் ஒன்றாகிய தசரத சாதகத்தில் இராம கதை பின் வருமாறு கூறப்பட்டுள்ளது:

முன்னொரு காலத்திலே வாரணவாசியில் தசரதன் என்னும் அரசன் வாழ்ந்தான். அவனுக்கு அறுபதினாயிரம் மனைவியர் இருந்தனர். அவர் களுள் பட்டத்துத்தேவி இரு குமாரரையும் ஒரு குமாரத்தியையும் பெற்றாள். மூத்த குமாரன் இராமன், இரண்டாம் குமாரன் இலக்குமணன்; புதல்வி சீதை, பின்பு அரசி இறந்து போனாள். அவள் இறந்துபோதலும் அரசன் இன் னொருத்தியை மணந்தான். அவன் அவளிடத்தில் மிக மயங்கியிருந்தான். அவள் வயிற்றில்ஒரு மகன் பிறந்தான். அவனுக்குப் பரதன் என்று பெயர். மகன்மீது கொண்ட பற்றினால் அரசன் பட்டத்துத்தேவியை ஒருவரம் கேட்கும் படி சொன்னான். அவள் தான் வேண்டும்போது வரத்தைக் கேட்டுக்கொள்வ தாகச் சொன்னாள். பரதனுக்கு எட்டு வயதாயிற்று அப்பொழுது அவள் அரசனிடம் சென்றாள். முன் கொடுப்பதாகச் சொன்ன வரத்தின்படி இராச் சியத்தை மகனுக்குக் கொடுக்கும்படி கேட்டாள். அரசன் கையை உதறி, “நாயே எனது அழகிய இரண்டு மக்களையும் கொன்றுவிட்டு இராச்சியத்தை உன் மகனுக்குக் கொடுக்கும்படி கேட்கிறாயா?” என்றான். அவள் அரசனின் கோபமான சொற்களைக்கேட்டுப் பேசாது அறையினுள் சென்றாள். அவள் தினமும் அரசனை அடைந்து நாட்டை மகனுக்குக் கொடுக்கும்படி கேட்டு வந்தாள். அவன், “பெண்கள் தீயவர்கள்; இவள் பொய்யான கடிதம் எழுதி அல்லது எவருக்காவது கைக்கூலி கொடுத்து என் புதல்வரைக் கொன்று விடுவாள்,” என்று தனக்குள்ளே நினைத்தான். அவன் தனது இரு புதல்வரை யும் அழைத்து, “நீங்கள் இங்கிருந்தால் உங்களுக்குப் பல துன்பங்கள் நேரும்; நீங்கள் அடுத்த இராச்சியத்துக்கு அல்லது காட்டுக்குச் செல்லுங்கள்; எனது மரணக்கிரியை நடக்கும்போது வந்து எனது இராச்சியத்தைக் கைப்பற்றிக் கொள்ளுங்கள்” என்று சொன்னான். அவன் சோதிடரை அழைத்தான்; தனக்கு இன்னும் எவ்வளவு கால வாழ்நாள் இருக்கின்றதென்று பார்க்கும்படி சொன்னான். அவர்கள் இன்னும் பன்னிரண்டு ஆண்டுகள் இருக்கின்றன என்று சொன்னார்கள். பன்னிரண்டு ஆண்டுகள் கழித்துவரும்படி அரசன் தனது இரு புதல்வருக்கும் சொன்னான். “நானும் எனது சகோதரர்களுடன் செல்லப் போகின்றேன்” என்று சீதை சொன்னாள். பலர் பின் தொடர மூவரும் நாட்டுக்கு வெளியே சென்றார்கள். அவர்கள் உடன் வந்தவர்களைப் போகும்படிச் செல்லிவிட்டு ஹமவந்தா என்னும் காட்டை அடைந்தார்கள்; அங்கே இலைகளால் வேய்ந்த குடிசை ஒன்றை அமைத்தார்கள். இராமனைக் குடிசையில் இருக்கும்படிச் சொல்லிவிட்டு இலக்குமணனும் சீதையும் பழங்கள் கொண்டுவர வெளியே சென்றார்கள். அன்று முதல் இராமன் குடிசையில் இருந்தான்; மற்ற இருவர் பழங்களைக் கொண்டுவந்தார்கள். இவர்கள் இவ்வாறு இருக்கும்போது தசரதன் மக்களைப் பிரிந்த கவலையினால் ஒன்பதாவது ஆண்டு மரணமானான். ஈமக்கிரியை முடிந்தது. “எனது குமாரனுக்கு முடிசூட்டுங்கள்” என்று அரசி மந்திரிமாரிடம் சொன் னாள். அவர்கள் அதற்கு இணங்க வில்லை. பரதன் இராமனைக் காட்டி னின்றும் அழைத்துவருவதாகச் சொல்லி நால்வகைச் சேனைகளோடும் புறப் பட்டான். அவன் சேனையைத் தூரத்தில் நிறுத்திவிட்டுச் சென்றான். அப் பொழுது இலக்குமணனும் சீதையும் பழம் பறிக்க வெளியே சென்றிருந்தார்கள் பரதன் இராமனைக் கண்டான்; அவன் பாதங்களில் விழுந்து வணங்கித் தன்தையின் மரணத்தைக் கூறினான். இராமன் கவலை கொள்ளவும் இல்லை, அழவும் இல்லை; பரதன் அழுதுகொண்டிருந்தான். அப்பொழுது மற்று இருவரும் பழங்கள் கொண்டுவந்தனர். தந்தையின் மரணத்தைக்கேட்டதும் அவர்கள் மயக்கமடைந்தார்கள். அறிவு தெளிந்தபின் அவர்கள் எல்லாரும் அழுதுகொண்டிருந்தார்கள்; இராமன் அழவில்லை. பரதன் இராமனை நோக்கி “நீர் அழாமல் உறுதியாக இருப்பதற்குக் காரணம் என்ன” என்று கேட்டான். “மனிதனால் ஆகாத ஒன்றிற்காகப் புலம்புவதால் பயனில்லை. பழுத்தபழம் எப்பொழுதாவது நிலத்தில் விழுந்துவிடும். பிறந்தவர் எல்லாரும் ஒரு நாளைக்கு இறந்துவிடுவர்” என்று இராமன் சொன்னான். இதைக் கேட்டு மற்றவர்கள் ஆறுதலைடைந்தார்கள். பரதன் வணங்கி வாரணவாசியை ஆளும்படி இராமனைக் கேட்டான். “இலக்குமணனையும் சீதையையும் அழைத்துச்சென்று நீயே ஆட்சி செய். எனது தந்தை பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து வரும்படிக் கட்டளையிட்டார். இப்பொழுது வந்தால் நான் தந்தையின் கட்டளையைக் கடந்தவனாவேன். நான் இன்னும் மூன்று ஆண்டுகளின் பின் வருவேன்” என்றான். அவ்வளவு காலமும் யார் ஆட்சி புரிவார்” என்று பரதன் கேட்டான். இராமன் “எனது மிதியடிகள் ஆட்சி புரியும்” என்று சொல்லித் தனது புல்லால் முடைந்த மிரிதடிகளை அவனிடம் கொடுத்தான். மூவரும் மிதியடிகளை எடுத்துக் கொண்டு வாரணவாசி சென்றார்கள். மந்திரிமார் சிங்காசனத்தின் மீது மிதியடிகளை வைத்து ஆட்சி புரிந்தார்கள். ஆகாத யோசனைகளை அவர்கள் செய்ய நேர்ந்ததால் மிதி யடிகள் ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டன. மூன்று ஆண்டுகள் கழிந்தன. இராமன் காட்டினின்றும் வந்தான் அவன் பதினாறாயிரம் ஆண்டுகள் நீதி ஆட்சி புரிந்து வானுலகடைந்தான்.”

இவ்வரலாற்றில் இராவணன் சீதையைக் கவர்ந்ததைப் பற்றியோ இராம இராவணப்போர்களைப் பற்றியோ யாதும் கூறப்படவில்லை. தசரத சாதகக்கதை எழுதப்படுகின்ற காலத்தில் இராம இராவணப்போர்களைப் பற்றிய வரலாறு வழங்கவில்லை என நன்கு புலப்படுகின்றது. தொடக்கத்தில் தசரதசாதகத்தில் சொல்லப்பட்டதுபோல வழங்கிய கதையே பிற்காலத்தில் இன்றைய இராமாயணமாக வளர்ச்சியடைந்தது. இவ்வாறு இராமாயணம் மேலும் மேலும் வளர்தற்குள்ள காரணம் இராமர் வீட்டுணுவின் அவதார மெனப் பிற்காலத்திலெழுந்த தவறான கருத்தேயாகும்.
இப்பொழுது உள்ள வடமொழி இராமாயணம்
கி. மு. 200இல் தொகுக்கப்பட்டது

சாதகக் கதைகளில் கூறப்பட்ட வகையில் வழங்கிய இராமாயணக் கதை பல நூற்றாண்டுகளாக வளர்ச்சியடைந்து வந்தது. கி. மு. இரண்டாம் நூற்றாண்டில் இக்கதை தொடர்பான பாடல்கள் திரட்டப்பட்டன; திரட்டப் பட்ட பின்பும் இராமாயணம் வளர்ந்துகொண்டு செல்வது நின்றுவிடவில்லை. அது இன்றுவரையும் வளர்ந்து கொண்டே வருகின்றது. வைத்தியா கூறுவது வருமாறு; “இன்றுவரையும் இராமாயணத்தின் பின் சேர்ப்பு அல்லது இடைச் செருகல் வளர்ந்துவருகின்றன என்பதைப்பற்றிய ஆராய்ச்சி வேண்டிய தில்லை. பேர்போன இராமாயண உரையாசிரியரான காதக என்பவர் இடைச் செருகல் என்று குறிப்பிட்ட நீண்ட சருக்கங்கள் மாத்திரமல்ல; அவர் காலத்தி லில்லாத பல சருக்கங்களுமே இன்றைய இராமாயணத்திற் காணப்படு கின்றன.

“இன்றைய இராமாயணத்தின்படி இராமருக்குப் பல மனைவிய ரிருந்தனர். காளிதாசரும் அவருக்குப் பின் வந்த புலவர்களும் அவருக்கு ஒரு மனைவி மாத்திரம் இருந்தார் எனக் கூறுகின்றனர். பரதனுக்கும் பல மனைவியர் இருந்தனர். இக்கால இராமாயணம் தசரதருக்கு 350 மனைவியர் இருந்தனர் என்று கூறுகின்றது. தமதுமுறைமையான மனைவியரைத்தவிர தசரதன், இரமன், பரதன் முதலானோர் பல மனைவியருடையராயிருந்தனர் எனத்தெரிகின்றது.

“கௌதம புத்தர் காலத்திற்குப்பின்பே இராமாயணம் தொகுக்கப்பட்ட தென்பதில் ஐயம் சிறிதும் இல்லை. இராமாயணத்தில் புத்தரைப் பற்றித் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது புத்தரைக் கடுமையாகக் கண்டித்திருக்கின்றது.

“இராமாயணம் கிறித்துவுக்குமுன் தொடங்கி இரண்டாம் நூற்றாண்டு வரையில் தொகுக்கப்பட்டதென்பதை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். மகாபாரதம் தொகுக்கப்பட்ட பின்னரே இராமாயணம் தொகுக்கப்பட்டுள்ளது. மகாபாரதத் தொகுப்புக் காலம் அலக்சாந்தரின் படை எடுப்புக்காலத்துக்குப் பிற்பட்ட தென்று காட்டியுள்ளோம். பாரதத்தில் கிரேக்கவீரர் பெயர் குறிப் பிட்டுப் புகழப்பட்டுள்ளார்கள். ஆதிபருவத்திலுள்ள சுலோகங்களால் அலக் சாந்தரின் படையெடுப்பு நிகழ்ச்சி மகாபாரதம் தொகுத்தவரின் உள்ளத்தில் மறக்கப் படாமல் இருந்ததென நன்கு விளங்குகின்றது. மகாபாரத்துக்குப்பின் இராமாயணம் தொகுத்தவர் சபாபருவம் ஐந்தாம் சருக்கத்திலுள்ளவைகளை அப்படியே அயோத்தியா காண்டத்தில் படி எடுத்து எழுதியிருக்கின்றார். இப்போதைய இராமாயணத்தில் வாசுதேவன் மிகவணக்கத்தோடு இருமுறை குறிப்பிடப்பட்டுள்ளார்.

“இராமாயணத்தைக் தொகுத்தவரின் திறமைக் குறைவினால் வால்மீகியின் ஆதி இராமாயணத்தில் வைணவக் கொள்கைகள் தொடர்பான எதுவும் இருக்கவில்லை என நன்கு அறியவருகின்றது.”

அவதாரங்கள் பிற்காலக் கற்பனைகள்
“வாசுதேவனுக்கு முற்பட்ட வீரர் விட்டுணுவின் அவதாரங்களாகக் குறிக்கப்பட்டுள்ளனர். இது பௌத்தர் முன் பலமுறைகளில் புத்தர் அவதாரஞ் செய்தார் என்று சொல்லும் கொள்கையைப் பின்பற்றி எழுதப்பட்டதாகும். மாபாரதத்தில் கூறப்படும் இராமன் விட்டுணுவின் அவதாரம் என்று கூறப்படுகின்றான். இராமோபாக்கியானத்தில் இவ்வாறு சொல்லப்பட் டிருத்தலே வால்மீகியின் இராமாயணத்தை மாற்றி எழுதவேண்டி வந்த மைக்குக் காரணம். இராமன் விட்டுணுவின் அவதாரம் எனக்கொள்ளும்படி புதிய செய்திகள் சேர்த்து வால்மீகி இராமாயணத்தில் எழுதப்படலாயின.

1 “நாரதர் இராமரை அவதாரமாகக் கொள்ளவில்லை; இராமர் உயர்ந்த வாழ்க்கையை நடத்தி மரணத்தின் பின் பிரம உலகத்தை அடைந்தவராகக் கூறியிருக்கிறார்.”

“பத்து அவதாரங்களைப்பற்றிய படைப்புப் புராணங்களாற் கொண்டு வரப்பட்டது; மாபாரதம் இதைப்பற்றிக் கூறவில்லை; இராமாயணத்திலும் இதைப்பற்றி யாதும் காணப்படவில்லை. இராமர் காலத்தில் வராக அவதாரம் விட்டுணுவின் அவதாரமாகக் கொள்ளப்படவில்லை.”

“மேற்கூறியவை பத்து அவதாரங்களைப் பற்றிய எண்ணங்கள் இராமாயணத்தில் இல்லை என்று விளக்கும். இன்றைய இராமாயணம் தொகுக்கப்படும் காலத்தில் அவதாரம் என்பதைப்பற்றிய கருத்துக் கருவி லிருந்து பிற்காலத்தில் மெல்ல மெல்லப் புராணகாலத்தில் வளர்ந்துள்ள தெனத் தெரிகின்றது.

“இராமாயணத்தில் கூறப்படுவது போல, இராமன் விட்டுணுவின் அரை அம்சமாகவும், பரதன் கால் அம்சமாகவும், பரதரும் சத்துருக்கரும் எஞ்சியுள்ளகால் அம்சமாகவும் பிறந்தார்கள் எனக் காளிதாசர் கூறியுள்ளார். ஆனால் புராணங்களில் இராமர் விட்டுணுவின் அரை அம்சமளவில் இருப்பதை விரும்பவில்லை. இதற்குச் சான்று பத்ம புராணத்தில் காணப் படுகின்றது. அது இராமரை விட்டுணுவின் முழு அவதாரமாகவும், பரதன் பாஞ்ச சன்னியத்தின் அம்சமாகவும், இலக்குவன் விட்டுணுபள்ளி கொள் ளும் பாம்பின் அம்சமாகவும், சத்துருக்கன் சக்கரத்தின் அம்சமாகவும் பிறந்த னர் எனக் கூறுகின்றது.

“சீதை முற்பிறப்பில் இலக்குமி அல்லது வேதவதி என்னும் பிராமணப்பெண் எனக்கொள்ளப்படுதலால், விட்டுணுவின் மனைவி இலக்குமி என்னும் கொள்கை அக்காலத்தில் உண்டாகவில்லை. பத்ம புராணம் சீதை இலக்குமி என ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்தது. புராணங்கள் காளிதாசனுடைய காலத்துக்குப் பின் 7வது அல்லது 8வது நூற்றாண்டில் எழுதப்பட்டவை.”

பலவகையால் ஆராய்ச்சி செய்யுமிடத்து வால்மீகியின் இராமாயணம் இராமனைச் சாதாரண வாழ்க்கை நடத்திய ஒரு மனிதனாகவே குறிப்பிட்டது என்றும், இராமர் விட்டுணுவின் அவதாரம் என்னும் கொள்கை மகாபாரதத்தி னின்றும் எடுக்கப்பட்டதென்றும் நன்கு விளங்கும்.

புத்தர் காலத்துக்குமுன் வால்மீகியால் செய்யப்பட்ட சுருக்கமான இராமாயணமாகிய ஒரு கரு இருந்ததென்பதையும், அது அலக்சாந்தர் படை எடுக்குப்பின் தொகுக்கப்பட்டு (கி. மு. 1ஆம் நூற்றாண்டு) நீண்ட காலத்தில் நீண்ட வளர்ச்சியை அடைந்துள்ளது என்பதையும் மறுக்க முடியாது.

“இராமாயணத்தில் சொல்லப்படுகின்ற பல செய்திகள் மிக வியப்பானவை. இராமன் பதினோராயிரம் ஆண்டுகள் வாழந்தான், தசரதன் அறுபதினாயிரம் ஆண்டுகள் ஆண்டான் என்று கூறப்படுகின்றன. ஒருவ னுடைய வாழ்நாள் நூறு ஆண்டுகள் என்பதைத் தசரதனே ஒப்புக்கொண் டிருக்கிறான். உத்தரகாண்டத்தில் சொல்லப்படும் இன்னொருகதை இவை களைவிட வியப்பானது. ஒரு பிராமணனுடைய மகன் பருவம் அடையாது இறந்துபோனான். இறக்கும்போது அவனுக்கு வயது 5000, அப்பொழுது அவன் விளையாடும் வாலிபப் பருவத்தையும் அடையவில்லை”

ஆர். சி. தத்தர் இராமாயணத்தைக் குறித்து வெளியிட்டுள்ள கருத்து வருமாறு:

மாபாரதத்தைப் போலவே இராமாயணமும் வரலாற்று முறையான ஆராய்ச்சிக்குப் பயனற்றதாகும். மகாபாரதத்திற்போலவே இராமாயணத்தில் வரும் கதை தொடர்பானவர்களின் பெயர்கள் கற்பனைகள் போலத் தெரிகின்றன.1 வேதகாலம் முதல் சீதை என்னும் பெயர் உழவுசாலைக் குறிக்க வழங்கிவருவதாயிற்று. உழவுசால் சீதை என்னும் உழவுசால் பெண் தெய்வ மாக வழிபடவும் பட்டது. பயிர்ச்செய்கை தென் திசை நோக்கிப் பரவியபோது சீதை தெற்கே உள்ளவர்களால் கவர்ந்து செல்லப்பட்டாள் என்னும் கற்பனைக் கதை எழுவது புதுமை அன்று. சீதை தெய்வமானபோது அவள் கல்வியிற் சிறந்த சனகன் என்னும் விதேகநாட்டு அரசனின் புதல்வியாக்கப்பட்டாள். சீதையின் கணவனாகச் சொல்லப்படும் இராமன் யார்? புராணங்கள் இராமன் விட்டுணுவின் அவதாரம் எனக் கூறுகின்றன. நாங்கள் இப்பொழுது பேசுகின்ற காலத்தில் விட்டுணு வணக்கம் முதன்மை அடையவில்லை. இதிகாச காலத்தில் இந்திரனே முக்கிய கடவுள். பிரஸ்கார கிரியை சூத்திரம் (11, 17, 97) சீதை இந்திரனின் மனைவி எனக் கூறுகின்றது. முகில்களோடு போரிடும் இந்திரனே இராமன் எனப்பட்டான் என்று நாம் அனுமானிக்கலாம். இந்திரனுடைய வரலாறே இராமன் தெற்கே உள்ள நாடுகளை வெற்றி கொண்ட வரலாறாக வடிவெடுத்தது.

இலாசன் (LASSEN) என்பார் கூறியிருப்பது வருமாறு:
இராமாயணம் ஆரியர் தென்னாட்டை வெற்றிகொள்ளச்செய்த முயற்சியைப்பற்றி எழுந்தகற்பனைக்கதை. இராமன் தக்காணத்தில் எங்காவது தனது ஆணையை நிலைநிறுத்தியவனாக இதிகாசங்களிலோ வேறெங்கோ சொல்லப்படவில்லை. வெபர் (Weber) என்பாரும் இக்கருத்தையே இன்னொரு வகையில் விளக்கியுள்ளார். இராமாயணம் ஆரியக்கொள்கைகள் தெற்கிலும் இலங்கையிலும் பரவியவரலாற்றைக் குறிக்க எழுந்த கற்பனைக் கதை என்று அவர் கூறியுள்ளார். இதிகாசங்கள் கூறுகின்றபடி இராமர் தெற்கு நோக்கிப்படை எடுத்தார் என்று கொள்ளினும் பொருந்தவில்லை. இராமனின் படை எடுப்பினால் தெற்கே அங்குமிங்கும் பிராமணரின் வாசங்கள் இருந்தன என்பதைப் பற்றி அல்லாது இராமாயணம் பாடியவருக்கு வேறு ஒன்றும் தெரியாது.

இராவணனுடைய மகன் இந்திரசித்து எனப்படுகின்றான். இந்திரசித்து என்பதற்கு இந்திரனின் பகைவன் அல்லது இந்திரனை வென்றவன் என்பது பொருள். இந்திரனின் பகைவன் விருத்திரன் என்று இருக்குவேதம் கூறு கின்றது. இராமாயணத்தின் இராம இராக்கதப்போர்கள் இந்திர விருத்திரர் களைப் பற்றிய பழங்கதை தொடர்பானவை. இராவணனுடைய மிகத்தீரமான செயல் சீதையைக்கவர்ந்தது. இது திருடிச் செல்லப்பட்ட பசுக்களை இந்திரன் மீட்டகதையைப் போலக்காணப்படுகின்றது. அனுமார் சீதையைத்தேடி வானத்தைத் தாவிச்சென்றார் என்று சொல்லப்படுகின்றது. இது இந்திரர் களுடைய போரில் இந்திரன் மருத்துக்களுடைய நட்பைப்பெற்ற கதையை ஒத்திருக்கின்றது.

1பண்டிதர் சவரிராயன் அவர்கள் இராக்கதர் என்னும் தலைப்பின்கீழ் எழுதிய குறிப்பு:

1.  ஆரியர் வெண்ணிற மக்களென்று எங்களுக்குத்தெரியும். ஆகவே இராக்கதர் கறுப்பு நிறத்தவராகக் குறிக்கப்பட்டுள்ளார்கள். இராமாயண வீரனாகிய இராமன் கறுப்புநிறத்தவனாகக் கூறப்படுவதன் காரணம் யாதுஎன்னும் கேள்வி எழலாம். இது ஒரு விதிவிலக்கு. இராமாயணம் செய்த புலவர் தமிழ்நாட்டுப் பழைய வரலாறு ஒன்றைவைத்துக் கொண்டு அதனைக் கோசலநாட்டு இராமன் கதையோடுபின்னி இராமாயணத்தை முடித்திருக்க லாம்2 என்று நான் பிறிதோரிடத்தில் கூறியுள்ளேன். இராமன் என்னும் சொல்லின் வேர் இருளைக்குறிக்கும் தமிழ்ச் சொல். இவ்வேர்ச்சொல் இன்று மறக்கப்பட்டிருந்தாலும் அது அடியாகப்பிறந்த இரா, இருள், இருந்தை, இரும்பு முதலிய சொற்கள் இன்றும் வழங்குகின்றன. இராமன் என்பதற்குக் கரியவன் என்று பொருள். இராமனின் பெண்பாற் பெயர் இராமாயி. இப்பெயர் தாழ்ந்த வகுப்பினரிடையே இன்றும் வழங்குகின்றது. கிழக்குத் தேச மக்கள் கறுப்பை அழகாகக் கொண்டார்கள். ஆகவே காரிகை என்பதுபோல இராமன் என்னும் பெயர் அழகுடையவன் என்னும் பொருளில் வழங்கிற்று.

2.  இராக்கதர் மிகத்திருந்திய மக்களென்று நாம் இராமாயணம் மூலம் அறிகின்றோம். அவர்கள் ஆரியரின் தொடர்பின்றி உயர்ந்த நாகரிகம் பெற் றிருந்தார்கள்; அவர்கள் ஆரியரிலும் பார்க்க உயர்ந்த பண்பாடுடையவர். இராக்கதர் பெண்களுக்குக் கொடுத்த மதிப்பிலும் பார்க்க ஆரியர் பெண் களுக்குக் கொடுத்த மதிப்புத் தாழ்வு. முற்காலத் திராவிடப் பெண்வீட்டுக் கரசியும் சொத்து உடையவளுமாயிருந்தாள். கணவனைத் தெரிந்தெடுக்கும் உரிமை அவளுக்கே இருந்தது. மிகப் பழைய காலம் முதல் ஆரியரின் மணமுறை கன்னிகாதானமாகும். கன்னிகாதானம் என்பது பெண்ணைக் கணவனுக்குக் கொடுத்துவிடுதல். அவர்களின் உரிமை தந்தை வழியானது. இராவணனுக்கு அரசுரிமை தாய் வழியில் வந்தது என்று உத்தரகாண்டம் கூறுகின்றது.

3.  இரு குலத்தினருக்குமுள்ள வழிபாட்டு முறைகளிலும் வேறுபாடு உண்டு. ஆரியர் பல தெய்வங்களையும் விண் மீன்களையும் வழிபட்டனர். இராக்கதர் ஆரியர் தெய்வங்களுட் சேராத சிவன் என்னும் முழுமுதற் கடவுளை வழிபட்டனர். ஆரியர் யாகங்களைச் செய்தனர்; அவர்களின் எதிரி களாகிய இராக்கதர் இரத்த வேள்விகளை அழித்தனர். இவ் வேள்விகள் உலக வாழ்க்கை தொடர்பான நன்மைகளின் பொருட்டுச் செய்யப்பட்டன. இயற்கைத் தோற்றங்களை வழிபடும் ஆரியரின் வழிபாடு உண்மை அறிவு மிக்க தமிழருக்குப் பயனற்றவையாகத் தோன்றின. தமிழ்ச் சாதியாரின் முன்னோரான. இராக்கதரும் அசுரரும் சிவனை இலிங்க வடிவில் பூவும் புகையும்கொடுத்து வழிபட்டனர். அவர்கள் வழிபாட்டின் இலக்கு வீட்டுப்பேறு அடைதல்.

இவ்விரண்டு எதிரிடையான குலத்தினருக்கு மிடையிலுள்ள வெளிப் படையான வேறுபாடுகள் இவைகளே. இராவணன் அவன் பக்கத்தினரும் அசுர அல்லது தமிழ்க் குலத்தினராவர். “இராமர் போரிட்ட மக்கள் வேறு குலத்தினரும் வணக்கமும் உடையராவர்” என்று கிரிபித் (Griffith) கூறியது மிகவும் ஏற்றதே. பிற்காலத்தில் இராக்கதர் என்னும் பெயர் பயம் விளைக்கக் கூடியதாயிருந்தபோதும் அது காவலர் அல்லது புரவலர் என்னும் பொருளில் ஆதியில் வழங்கிற்று. இராக்கதர் என்பதற்கு நாட்டைக் காப்பவர் என்று பொருள். இதிகாசங்களிலுள்ள இராவணன், விபீஷணன், கும்பகர்ணன் முதலிய பெயர்கள் வடமொழியாக்கப்பட்டவை. ஆரியர் வாழாத பிறநாட்டில் வாழ்ந்த மக்களுக்கு ஆரியப் பெயர்கள் வழங்கின என்று நாம் துணிதல் முடியாது. சுக்கிரீவன், அனுமான், சடாயு முதலிய பெயர்களும் வடமொழி யாக்கப்பெயர்களே.

கிரிபித் கூறுவது
1இந்தியருடைய நம்பிக்கையின்படி இராக்கதர் என்போர் பல வடிவங்களுடைய பயங்கரமானவர்; யாகங்களை அழிப்பவர்; பிராமணரின் சமயக்கிரியைகளை குழப்புகின்றவர். 2இராமாயணம் செய்தவர் இவ்விழி வான பெயரைப் பகைவர்களாகிய மக்களுக்கு இட்டு வழங்கினார் எனத்தெரி கின்றது. இது வரலாறு சம்பந்தமான பெயரன்று. இராமாயணத்தில் சொல்லப் படும் நிகழ்ச்சிகள் சரித்திர சம்பந்தமானவை என்று ஆன்ற கல்வியுடையோர் கொள்வதில்லை. இராமாயணத்தில் சொல்லப்படும் மக்கள் பெயர்கள் பெரும் பாலும் சில நிகழ்ச்சிகள் செயல்களின் உருவகங்கள் என்று வெப்பர் கருதுவர். இருக்கு வேதத்திலும் கிரியா சூத்திரத்திலும் சீதை என்னும் பெயர் உழவுசாலை யும் குறிக்கின்றது. சீதை உழவுசாலையும் இராமன் உழவனையும் குறிக்கும்.

இராமாயணத்தில் மக்களுக்குப் பற்றுண்டாகக் காரணம்
புராணகாலத்தில் இராமன் விட்டுணுவின் அவதாரம் என்னும் கொள்கை சிறிது சிறிதாக வேரூன்றிவிட்டது. இப் பொய்யான கொள்கை இன்று வரையும் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்துவருகின்றது. இராமருடைய பெயரை வைணவர் மந்திரமாகக் கொள்கின்றனர். இது பற்றியே இராமாயணத்துக்கு எதிராகச் சொல்லப்படும் கருத்துகள் கைப்பாகப் பலருக்கு இருக்கின்றன. கம்பராமாயணமும் சமய வெறியினாலேயே பாடப்பட்டது. இராமருக்கு எவ்வளவு கடவுள் தன்மை கொடுக்க முடியுமோ அவ்வளவும் கொடுத்து இராமருக்குப் பகைவர் என்று கொள்ளப்பட்டவர் களை எவ்வளவு இறக்கமுடியுமோ அவ்வளவு இறக்கிக் கம்பன் பாடி யுள்ளான். இராமாயணம் திராவிட மக்களை இழிவுப்படுத்திக் கூறும் நூல் என்னும் கொள்கை பரவுகின்ற இக்காலத்தில் இராமாயணம் போன்றதோர் நூல் தமிழரால் பயிலப்படுவதை மக்கள் விரும்பவில்லை. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களே இராமாயணம் தமிழரை இழித்து எழுதிய நூலென்றும் அக் கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு உடன்பாடல்ல என்றும் கருதியுள்ளார்கள்.1

இராமாயணத்தில் வரும் குரங்குகள்
இராமாயணத்தில் வரும் குரங்குத் தலைவர்கள் குரங்கு வீரர் என்போர் குரங்கைக் கோத்திரக்குறி (totem) ஆகவுள்ள திராவிட மக்களே யென வரலாற்றாசிரியர்கள் கூறியுள்ளார்கள். வடநாட்டோடு மாத்திரம் சம்பந்தப்பட்டிருந்த ஆதிஇராமாயணத்தோடு இராம இராவணப் போர் களைக் கற்பித்து எழுதிய பிற்கால வடமொழிப் புலவோர் குரங்குக் கோத்திரக் குறியுடையராய்க் குன்றுகளில் வாழ்ந்த திராவிட மக்களைக் குரங்கர் எனக் குறிப்பிட்டிருத்தல் கூடும். 2குரங்கர் மக்களேயாக அவர்களுக்கு வால் கொடுத்துக் குரங்குகளாகக் கொள்வது மிக்க அறியாமையேயாகும்.

இராவணன் திராவிடப் பேரறிஞன்
“இராமன் பிராமணருக்குப்பயம் விளைப்பவனாயிருந்தான் இராவணபாட் என்னும் வேதம் சம்பந்தப்பட்ட ஒரு நூல் இராக்கதனால் செய் யப்பட்டதென்று சொல்லப்படுகின்றது. இராவணன் சிறந்த கல்விமானென் றும் அவன் தெலுங்கு மொழி இலக்கண நூலின் ஆசிரியரென்றும் பயபத்தி யுள்ள பண்டிதர்கள் இன்றும் கருதுகின்றனர். இராமாயணத்தில் இராக்கதர் தோற்றத்தாலும் ஒழுக்கத்தாலும் பயம் விளைப்பவர் எனக் கூறப்பட்டுள்ளது. இரக்கதாயிருக்கும் தன்மை ஒருவன் செய்யும் பாவத்தினாலோ அல்லது அவனது முன்னோர் செய்த பாவத்தினாலோ உண்டாகின்றதெனத் தெரிகின்றது. இராக்கதரைப் பற்றிச் சொல்லப்படும் வடிவம் முதலியன கற்பனையினாலும் பகை காரணமாகவும் உண்டானவை. இலங்கையின் அழகு, கட்டிடங்களின் சிறப்பு மக்களின் ஒழுக்கம் முதலியவை நன்கு இராமாயணத்தில் கூறப்பட் டுள்ளன. வீதிகளில் கிடந்த விலைமதிப்பிற்குரிய பொருளைத் திருடர் தீண்ட அஞ்சினார்கள். இராமருடைய பகைவர் என்று சொல்லப்படுவோர் நாகரிக மற்றவர்களாயும் முரடர்களாயும் ஒருபோதும் இருந்திருக்க முடியாது.”3

இராம இராவணப்போர் கிரேக்கர் வருகைக்குப்பின் சேர்க்கப்பட்டதா?
சேரன் செங்குட்டுவன் வடநாட்டின்மீது படை எடுத்துச் சென்று ஆரிய மன்னரைப் பணிவித்தான் என்னும் செய்தியை இந்தியவரலாற்று ஆராய்ச்சித் துறையில் உழைக்கும் ஒரு சாரார் நம்பப் பின்னடைகிறார்கள். அதற்குக்காரணம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் தமிழ் அரசர் அத்துணைதூரம் படைஎடுத்துச் செல்லமுடியாதெனவும் தமிழர் ஆரியரைப் பணியவைக்க முடியாதெனவும் அவர்கள் நம்புவதேயாகும். இராமன் இலக்குமணர்களாகிய இரண்டு மனிதர் தெற்கே தன்னந்தனியே வெகுதூரஞ் சென்று இராவணன் போன்ற பேரரசன் ஒருவனை வென்றார்கள் என்பதை மேற்படி வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றார்கள் என்னே! அவர்கள் ஆராய்ச்சித்திறமை.

தசரத சாதகத்திற் கூறப்பட்ட அளவே வான்மீகி இராமாயணம் உள்ளது என்று நம்புதற்கு ஏதுக்கள் உள்ளன. வான்மீகர் விந்தத்துக்குத் தெற்கே உள்ளநாடுகளைப்பற்றி அறிந்திருந்தார் என்பது1 நம்பமுடியாதது. கிரேக்கர் படயெடுப்புக்குப்பின் அவர்கள் மூலம் இல்லியாட் என்னும் இவர்கள் பழங்கதையை அறிந்த மக்கள் சிலரே வான்மீகி இராமாயணத் தோடு இராவணன் சம்பந்தமான கதையையும் சேர்த்து எழுதினார்கள் எனக்கூறலாம்.2

வைத்தியர் சொல்வது: It is in short difficult to deny that the Ramayana as it exists today consists of an old nucleus written by Valmiki before the rise of Buddhism buried in substantial addition made long after the invation of Alexander about the 1st century B C”

“புத்தர்காலத்துக்குமுன் வான்மீகி செய்தசிறிய இராமகதை ஒன்று இருந்ததென்பதையும், அது அலக்சாந்தர் படையெடுப்புக்கு நீண்ட காலத் திற்குப்பின் எழுதிச் சேர்க்கப்பட்ட மிகப்பெரிய இடைச்செருகல்களுள் மறைந்து கிடக்கின்றதென்பதையும் யாவராலும் மறுக்க முடியாது”

யாகம் என்றால் என்ன?

“மண்டபத்தின் வெளியான இடத்தில் தருப்பைப்புல் பரப்பப்பட்டது; பலி இடும் விலங்குகளைக் கட்டிவைக்கும் தூண்கள் (யூபங்கள்) நடப்பட்டன; பயத்தினால் நடுங்கிக் கொண்டிருக்கும் விலங்குகள் கிட்ட இழுத்துக் கொண்டு வரப்பட்டன, யாகத்தீ எரிந்துகொண்டிருந்தது. ஆட்டுக்கடா பூட்டிய வண்டியில் சோமப்பூண்டு ஏற்றப்பட்டிருந்தது. யாகக் கிரியை செய்யும் புரோகிதன் தேவர்களோடு கலந்து பேசினான். அவர்கள் யாகத்தில் ஊனும் கள்ளும் உண்ணும்படி அழைக்கப்பட்டார்கள். பலியிடுகிறவனுக்கும் யாகம் நடத்தும் புரோகிதனுக்கும் சமைத்த ஊன் உணவுகள் கொடுக்கப்பட்டன. பலியிட்ட விலங்குகளின் இறைச்சி புரோகிதனுக்கும் பலியிடுகின்றவனுக்கும் அவனுடைய மனைவிக்குமாக முப்பத்தாறுபங்குகளாகப் பிரிக்கப்பட்ட தென ஐதரேயப் பிராமணங் கூறுகின்றது.”1

புத்தர் காலத்தும், பின்பும் பிராமணர்களால் செய்யப்பட்ட இவ்வகை யாகங்கள் ஒழிக்கப்பட்டன. பிராமணர் படையெடுப்பு என்பது ஆயுதங்க ளாலும் ஆட்பலத்தினாலும் நடத்தப்பட்டதன்று. தமது யாகங்களை மக்களிடையே பரப்பி அவர்களிடம் வருவாய் பெறும்பொருட்டு அவர்கள் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தமையே யாகும்.