Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

அதிவீரராம பாண்டியன் எழுதிய
வெற்றிவேற்கை
உரையும் கதைக்குறிப்பும்

veRRivErkai of ativIrarAma pANTiyan
with notes and related stories
In tamil script, unicode/utf-8 format
  Acknowledgements:
  Our thanks also go to the Tamil Virtual Academy for providing a scanned PDF copy of this work.
  This e-text has been generated using Google OCR online followed by proof-reading and corrections.
  Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

  © Project Madurai, 1998-2019.
  to preparation
  of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
  are
  http://www.projectmadurai.org/

அதிவீரராம பாண்டியன் எழுதிய வெற்றிவேற்கை
உரையும் கதைக்குறிப்பும்

Source:
--------

Source:
வெற்றிவேற்கை
(ஆசிரியர் : அதிவீரராம பாண்டியன்)
உரையும் கதைக்குறிப்பும்

வாழ்குடை, சுப்பிரமணிய சர்மா
மூன்றாவது பதிப்பு
ஆர். கணபதி அண்டு கம்பெனி,
பிரம்பூர், சென்னை.
1919 , 3rd edition
All Rights Reserved.)
(விலை அணா 5.
P.R. Rama Iyar and Co, Printers, Madras
--------------

முகவுரை

இந்தப் புத்தகத்துக்கு 'வெற்றிவேற்கை', 'நறுந்தொகை' என்று இரண்டு பெயருண்டு. வெற்றிவேற்கை யென்பது புத்தகத்திலுள்ள தொடர்மொழி. இஃது ஆத்திசூடி, கொன்றை வேந்தன் என்பனபோல் முதற்குறிப்பாகுபெயர். 'நறுமை + தொகை' என்பது நறுந்தொகை யென்றாயிற்று. இது பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. 'நல்ல நீதி வாக்கியங்களினாற் றொகுக்கப்பட்டதென்பது பொருள்.

இதனை அதிவீரராம பாண்டியன் என்பவர் இயற்றினார். இவர் பாண்டி நாட்டிலுள்ள தென்காசியில் அரசு செலுத்தினவர். சந்திரவம்சத்துச் சிற்றரசர். சைவ சமயத்தினர். இவர் சகோதரர் வரதுங்கராம பாண்டியன். தென்காசியின் சிலாசாசனத்தினால் இவர் காலம் சாலிவாகன சகம் 1485 என்று தெரியவருகிறது. மதுரைக்கருகிலுள்ள கொற்கை யென்னும் பட்டணத்தில் இவரிருந்து அரசு நடத்தவில்லை. அஃது ஒருசமயம் இவரைச் சேர்ந்ததாக விருந்திருக்கலாம். இவர் செய்த வேறு நூல்கள் நைடதம், கூர்ம புராணம், காசிகாண்டம் என்பன. இவா சகோதரர் செய்த நூல் பிரமோத்தரகாண்டம்.

சிலர், கருவை வெண்பவந்தாதி கருவைக் கலித்துறையந்தாதி, கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி யென்ற மூன்று அந்தாதிகளை யும் இவர் செய்தாரென்று சொல்லுகின்றனர். இன்னுஞ் சிலர், இவர் சகோதரர் செய்தாரென்று அபிப்பிராயப்-படுகின்றனர். அப் புத்தகங்களினால் செய்தவரை அறிய முடியவில்லை.

பிரதம பாடசாலை (ப்ரைமெரிஸ்கூல் ) மாணவர்களின் உபயோகத்தை நினைந்து உலகநீதி, ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை, நல்வழி யென்ற ஐந்து புத்தகங்களுக்கும் உரையும் கதைக்குறிப்பும் எளிய நடையிலெழுதி வெளிப்படுத்தி-யிருக்கிறோம். அவற்றில் இது. வெற்றிவேற்கை உரையும் கதைக்குறிப்பும் என்பது. பிள்ளைகளுக்கு நீதி, மதம் இவை சம்பந்தமான சரித்திரங்களைக் கற்பிக்க இதுபோன்ற சிறு நூல்கள் இன்றியமையாதன.

இங்ஙனம்,
ஆர். கணபதி அண்டு கம்பெனி.
1919
-----------

வெற்றி வேற்கை உரையும் கதைக்குறிப்பும்

கடவுள் வாழ்த்து

பிரணவப் பொருளாம் பெருந்தகை யைங்கரன்
சரணவற் புதம லர் தலைக்கணி வோமே.

இதன் பொருள் - பிரணவம் பொருள் ஆம் - (ஓம் என்னும் ) பிரணவ மந்திரப் பொருளாகிய, பெருந்தகை - பெருந்தன்மையை யுடைய, ஐங்கரன் - ஐந்து கரங்களை யுடைய (விநாயகக்) கடவுளின், சரணம் - திருவடிகளாகிய, அற்புதம் - அழகிய, மலர் - தாமரைமலர்களை, தலைக்கு - (நமது) தலைக்கு, அணிவோம் - (அலங்காரமாகத் ) தரித்துக்கொள்வோம். ஏ - அசை.
-------

நூலாசிரியர் பெயரும் நூலின் பயனும்

வெற்றி வேற்கை வீர ராமன்
கொற்கை யாளி குலசே கரன்புகல்
நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்
குற்றம் களைவோர் குறைவிலா தவரே.

கொற்கை - கொற்கை (என்னும் கரை), ஆளி - ஆம் பவனும், குலம் - (பாண்டிய) குலத்திற்கு, சேகரன் - கிரீடம் போன்றவனும், வெற்றி - ஜயத்தைத் தருகின்ற, வேல் வேலாயுதத்தை (ஏந்திய), கை - கையை (உடையவனுமான) , வீர ராமன் - அதிவீர ராம பாண்டியன் என்னும் அரசன், புகல் - சொன்ன, நல் - நல்ல, தமிழ் - தமிழ்ப் (பாஷையில்) , தெரிந்த - ஆராய்ந்தெடுத்த, நறுந் தொகை தன்னால் - நறுந்தொகை என்கிற இந்த நீதி நூலினால், குற்றம் - (தங்கள் ) குற்றங்களை, களைவோர் - போக்கிக் கொள்கின்றவர்கள், குறைவு இலாதவர் - ஒரு குறையும் இல்லாதவராவார்கள். ஏ-அசை.

கதைக் குறிப்புக்கள்

1. a. ஆதிகாலத்தில் அயோத்திப் பட்டணத்தில் தசரதர் என்று ஒரு பெரிய அரசர் இருந்தார். அவர் கோசல நாட்டுக்குத் தலைவர். உலகத்துக்குச் சக்ரவர்த்தி. நெடு நாள் வரையில் அவருக்குப் பிள்ளை யில்லாமற் போயிற்று. அவர் அப்புறம் பெரிய யாகம் ஒன்று செய்து அதன் முன்னிலையில் நான்கு புத்திரரை அடைந்தார். அச்சிறுவருக்கு இராமன், இலஷ்மணன், பரதன், சத்ருக்னன் என்று பெயர். அந்நால்வரும் மிகவும் நல்லவர். அடக்கமும் பொறுமையும் அமைந்தவர். தாய் தந்தைகளின் கட்டளையைத் தவறாமல் செய்பவர். நாளடைவில் அவர்களுக்குக் கல்விப்பருவம் வந்தது. தசரதர் வசிஷ்டர் என்ற பெரிய முனிவரிடத்தில் அவர்களை ஒப்புவித்தார்.

சிறுவர் நால்வரும் அந்தக் குருவை அடுத்து அவருக்குப் பணிவிடை புரிந்தும், அவர் கட்டளைக்கு அடங்கியும் நடந்து, எல்லாக் கலைகளையும் குறைவில்லாமல் கற்றுப் பண்டிதரானார்கள். அப்புறம் விசுவாமித்திரர் என்ற வேறொரு முனிவர் இராமனுக்கு வலுவில் உபதேசிக்கிறேன் என்று இரண்டாவது குருவாக வந்து சேர்ந்தார். இராமன் அவரையும் அநுசரித்து அவரோடு வனத்துக்குச் சென்றும், வனத்தின் வருத்தங்களைப் பொறுத்தும், அவர் குறிப்பறிந்து நடந்தும் அவர் உபதேசித்த மகா மந்திரங்களையும் வில்வித்தைகளையும் குறைவறக் கற்றுக் கொண்டான். அக்காலத்தில் கல்வியிலாவது ஒழுக்கத்திலாவது அவனை ஒப்பவர் இலர். படைக்கலப் பயிற்சி யிலும் பிற ஒழுக்கங்களிலும் அவன் ஒரு அவதார புருஷன். அவனுக்கு நிகர் அவனையல்லாமல் வேறொருவரையும் சொல்லமுடியாது.

அவன் தன்னை எல்லாரும் வணங்கும்படியான உயர்ந்த பெருமையை உலகத்தில் அடைந்திருந்துங்கூடத் தான் வசிஷ்டரையும் விசுவாமித்திரரையும் வணங்கி, அவர்களுக்குப் பணிவிடை புரிந்து, அவர்கள் கட்டளைக்கு அடங்கி நடப்பதில் ஒருநாளும் தவறவில்லை. குருவின் கட்டளை தனக்கு இஷ்டமாயிருப்பினும் இஷ்டமில்லா திருப்பினும் அவன் அதனை அலஷ்யம் பண்ண மாட்டான். அவன் அபிப்பிராயம் இது. - குரு மனித வடிவம் எடுத்து வந்த கடவுளாவர். அவர் கட்டளை கடவுள் கட்டளையே யாகும். அதனைத் தள்ளுவது கடவுள் கட்டளையைத் தள்ளுவது போன்றது' என்பதுதான். அவன் தனக்குக் கொஞ்சமும் சம்மதமில்லாத தாடகை வதத்தைக் குருவின் கட்டளை யென்று கூசாமல் நிறைவேற்றியதே இதற்கு உதாரணமாகும். ஆதலால், எப்படிப்பட்டவர்களுக்கும் கல்வி கற்பித்த ஆசிரியன் கடவுளைப்போல வணங்கத் தக்கவனாவான்.
-------- இராமாயணம்.

1b. எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.

a. எழுத்து - இலக்கண இலக்கிய நூல்களை, அறிவித்தவன் - (நமக்குக்) கற்பித்தவன், இறைவன் - கடவுளுக்குச் சமானமாக, ஆகும் - (வணங்கத்தக்கவன்) ஆவான்.

b. முற்காலத்தில் பாணினி என்று ஒரு முனிவர் இருந்தார். அவர் வடமொழியில் நிகரற்ற பண்டிதர். அவர் அப்பாஷைக்குத் தாம் ஓரிலக்கணம் செய்யவேண்டும் என்று பனிமலைச் சாரலில் சிவபெருமானை நோக்கித் தவம் செய்யத் தொடங்கினார். அப்பொழுது சிவபெருமான் அவருக்குத் தரிசனம் கொடுத்துத் தமது இடக் காத்திலிருந்த டமருகம் என்ற வாத்தியத்தை ஒலிக்கப் பண்ணினார். அவ்வாத்தியத்திலிருந்து பதினான்கு வகையான அக்ஷா சப்தங்கள் உண்டாயின. பாணினி முனிவர் அச்சப்தங்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு இலக்கண சூத்திரங்களை உண்டு பண்ணினார். அதற்குப் பாணினி வியாகர்ணம் என்று பெயர். அப்புறம் பதஞ்சலி என்ற வேறொரு முனிவர் அதற்குப் பாஷியம் (உரை) எழுதி விளக்கினார்.

முன்பு இமயவரசன் புத்திரியான பார்வதிதேவிக்குப் பனிமலையில் திருக்கலியாணம் நடந்தது. அதற்கு உலகத்திலுள்ள எல்லாத் தேவர்களும் எல்லா முனிவர்களும் ஒன்றாகத் திரண்டு வந்திருந்தார்கள். அதனால், உலகத்தின் வடக்குத் திசையில் பளு அதிகமாயிற்று. அந்தப் பாரத்தைத் தாங்கமாட்டாமல் அத்திசை தாழ்ந்து தெற்குத் திசை உயர்ந்து போயிற்று. சிவபெருமான் அதன் காரணத்தை உணர்ந்து தெற்கில் சென்று உலகத்தின் பளுவைச் சமன் செய்யும்படி முனிவரிற் சிறந்த அகஸ்தியருக்குக் கட்டளை யிட்டனர்.

அம்முனிவர் கடவுளை வணங்கித் ’தலைவரே! தங்கள் திருக்கலியாணம் காண உலகத்தில் உள்ள அனைவரும் வந்து ஒன்றாகத் திரண்டிருக்கின்றனர். நான் மாத்திரம் அதனைக் காணாமல் அகல்வது நியாயமாகுமா? அதனுடன் தெற்குத்திக்கு திராவிட தேசம். எனக்கு அந்தப் பாஷை கொஞ்சமும் தெரியமாட்டாது. நான் சென்று அங்கு எப்படியிருப்பேன் ?' என்று சொன்னார். சிவபெருமான் ’அன்பனே! கவலையுறாதே ; எமது திருமணக்கோலத்தை நீ விரும்பும் ஒவ்வொரு சிவதலந்தோறும் உனக்குக் காண்பிக்கிறோம். திராவிட பாஷையில் உனக்குச் சிறந்த ஞானம் உண்டாகும் வண்ணம் அநுக்கிரகம் செய்கிறோம். உன் பெயரால் இலக்கணமியற்றி நீ அந்தப் புராதன பாஷைக்குத் தலைவனாக விளங்கிவா!' என்று திருவாய்மலர்ந்து,

அவருக்குத் தமிழ்ப்பாஷையையும் அதன் இலக்கணத்தையும் உபதேசம் செய்தனர். உடனே முனிவர் கடவுளிடம் விடை பெற்றுக்கொண்டு தென் திக்கை அடைந்து பொதிகை மலையில் தங்கித் தமது பெயரால் அகத்தியம் என்று ஒரு பெரிய இலக்கணமியற்றித் தமிழ்ப் பயிரை வளர்த்தார். ஆதலால், வடமொழி தென்மொழி யென்ற இரண்டு பாஷைகளுக்கும் முதலில் இலக்கணத்தை அறிய வித்தவர் சிவபெருமானே யாவர்.
--- திருவிளையாடற் புராணம்.
----------

2. எழுத்தறிவித்தவன் இறைவ னாகும்.

b. எழுத்து - இலக்கண இலக்கிய நூல்களை, அறிவித்தவன் - (உலகத்துக்கு) முதலில் கற்பித்தவன், இறைவன் ஆகும் - கடவுள் ஆவார்.

2. முன்னர்ச் சொன்ன பட்டணத்தைச் சார்ந்த மைலாப்பூரில் திருவள்ளுவர் என்று ஒரு தமிழ்ப்புலவர் இருந்தார். அவர் தமிழ்ப்பாஷையைத் தெளிவாகக் கற்றவர். நல்லொழுக்கம் நிறைந்தவர். இல்வாழ்க்கையில் இயைந்தவர். முனிவர்களைப்போல முக்காலத்தையும் அறிந்து சொல்கின்ற ஞானக்கண் பெற்றவர். அவர் திருக்குறள் என்று மிகவும் சிறந்த நீதி நூலொன்று இயற்றி அதனை மதுரைப் பட்டணத்துக்கு எடுத்துக் கொண்டு சென்று அங்கிருந்த தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றினார். அதன் பொருள் இணையற்றதென்று எல்லா மதத்தவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மிகவும் சிறிய வாக்கியங்களில் பெரிய விஷயங்களை அடக்கித் தெளிவாகச் சொல்லியிருக்கும் நீதி நூல் தமிழ்ப்பாஷையில் அஃதொன்றேயாகும் அந் நூல் அவர்கள் திறமையை உள்ளங்கை நெல்லிக்கனிபோல உணர்த்துவது மல்லாமல், படிப்பவர் மனத்தைப் பாகுபோல வுருக்கிப் பயன் பெறவும் செய்கின்றது. ஆதலால், திருவள்ளுவரைப் போலக் குற்றமும் சந்தேகமும் இல்லாமற் சொல்வது தான் ஒருவன் கற்ற கல்விக்கு அழகாகும்.
--- புலவர் புராணம்.
-----------

3. கல்விக் கழகு கசடற மொழிதல்.

கல்விக்கு – (ஒருவன் கற்ற) கல்விக்கு, அழகு - அழகாவது, கசடு அற - குற்றம் நீங்க, மொழிதல் - (கேட்போருக்குச்) சொல்லுத்தலாம்.

3. முற்காலத்தில் இலங்கைப் பட்டினத்தை மாலிய வான், சுமாலி, மாவியென்ற மூன்று அரக்கவரசர் பரிபாலித்து வந்தனர். அவர்கள் மிகவும் கொடிய துஷ்டர்கள். அவர்கள் உலகத்தை உபத்திரவப்படுத்தி வந்தபடியினால் ஸ்ரீ மகாவிஷ்ணு அம்மூவரையும் எதிர்த்து யுத்தம் செய்து அவர்களைச் சண்டையில் அபஜயப் படுத்தினார். அரக்கர்கள் அவரது சக்ராயுதத்துக்குப் பயந்து இறந்தவர்போக இருந்த வீரர்களோடு பாதாளவுலகம் புகுந்து ஒளிந்து கொண்டு விட்டார்கள். அப்புறம் அவர்கள் நகரத்தில் விசிரவசுவின் புத்திரனாகிய குபேரன் என்ற இயக்கர்க்கரசன் வந்து குடியேறி வசித்து வந்தான். பிற்பாடு அவ்வரக்கர்களது பெண் வயிற்றிற் பிறந்த இராவணன் என்பவன் தனது சகோதரர்களுடன் நான்முகக் கடவுளை நினைந்து நெடுங்காலம் வரையில் நிலையாக நின்று தவம் செய்து அவரால் அளிக்கப் பெற்ற அரிய வரங்களை யடைந்து அசுர சக்ரவர்த்தியானான்.

மகாவிஷ்ணுவுக்குப் பயந்து பாதாளத்தில் ஒளித்து உயிர் பிழைத்து வந்த அவன் பாட்டன்மார் மூவரும், மற்றும் அவரைச் சார்ந்தவர்களும் மகாவிஷ்ணுவின் கொடுமை யையும். தாங்கள் இழந்துவந்த இலங்கைப் பட்டினத்தின பெருமையையும் அவனுக்கு எடுத்துச் சொல்லி, எப்படியாவது தங்கள் குலத்துக்குக் கவுரவ முண்டுபண்ணி அனைவரையும் காப்பாற்றவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இராவணன் அவர்களுக்கு அப்படியே செய்கிறேன்' என்று வாக்குக் கொடுத்து உடனே பெரும் படைகளைத் திரட்டிச் சென்று இலங்கையை முற்றுகையிட்டுக் குபேரனை வென்று அந்தப் பட்டினத்தைத் தனக்கு இராஜதானியாகச் செய்துகொண்டான். அப்புறம் பாதாளத்தில் ஒளிந்திருந்த எலலா வரக்காகளும் நிர்பபயமாகத் தன இராஜதானியில் தங்கியிருந்து எலலாச் சுகங்களையும் அநுபவிக்கலாம் என்று அவர்களுக்குத் தூதனுப்பி அனைவரையும் அழைத்துவந்து அதிக சவுக்கியங்களை உண்டு பண்ணிக் கவுரப் படுத்தினான் அவன், தான் இறந்து போகுமவரையில் அவர்களைக் கொஞ்சமும் கைவிடவில்லை. அவர்களோடு ஆலோசனை பண்ணாமல ஒரு காரியததையும் செய்வதிலலை. அரக்கர் அனைவரும் அவன் காலத்தில் அதிக சவுக்கியங்களையும் கவுரவங்களையும் அடைந்து வந்தார்கள் ஆதலால், செல்வமுள்ளவா அஃதில்லா திருக்கும் சுற்றத்தாரைக காப்பாற்றுவது தான் செலவம் படைத்ததற்கு அழகாகும்.
-- உத்தரமாயணம்
---------

4. செல்வர்க் கழகு செழங்கிளை தாங்கல்

செல்வாக்கு - செல்வமுள்ளவாகளுக்கு, அழகு - அழகாவது, செழுங்கிளை - வளர்ந்து பெருகிய சுற்றத்தாரை, தாங்குதல் - காப்பாற்றுதலாம்.

4. நெடுநாளைக்கு முன்பு கவுதமா என்ற முனிவர் தம் மனைவி அநசூயையோடு நைமிச வனத்தில் தவம் செய்துவந்தார். அப்பொழுது உலகத்தில் பன்னிரண்டு வருஷம் வரையில் மழை பொழியாமல் பெரும் பஞ்சம் பாவிப் பீடித்து வந்தது. வனத்திலிருந்த முனிவர்களும் நாட்டிலுள்ள அந்தணர்களும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேறு வகையில்லாமல் கவுதமாச்சிரமத்துக்கு வந்து அவரைத் தஞ்சமடைந்தார்கள். கவுதம முனிவர் தமது உயர்ந்த வேத பாராயணத்தினாலும், சிறந்த தவவொழுக்கத்தினாலும் கோதுமைப் பயிர் செய்து அதிகமான தானியங்களை விளைத்து அத்தனை பெயரையும் குறைவில்லாமல் காப்பாற்றி வந்தார். பின்னர் இரண்டாவது தடவை நேர்ந்த அவ்விதமான மற்றொரு பஞ்சத்திலும் அவர் திரியம்பகம் என்றவிடத்தில் இருந்து கொண்டு தமது வேத பாராயண மகிமையினால் பிடி நெல்லை விதைத்துப் பயிர் செய்து விளைத்து எல்லாம் அந்தணர்களையும் பஞ்சம் தெளியும் வரையில் காப்பாற்றி வந்திருக்கிறார். அம்முனிவரைப்போல வேதமோதுவதும் அடுத்தவர்களை ஆதரிப்பதும் அந்தணர்களுக்குச் சிறந்த தருமமாகும்.
-- சிவபுராணம்.
--------

5. வேதியர்க் கபூத வேதமும் ஒழுக்கமும்.

வேதியர்க்கு - பிராமணர்களுக்கு, அழகு - அழகாவன, வேதமும் - வேத மோதுதலும், ஒழுக்கமும் - (நல்ல) ஆசாரத்துடன் இருத்தலுமாம்.

5. முன்னர்த் திருவாரூரைப் பரிபாலித்து வந்த மனுச்சோழ மன்னவனுக்கு வீதிவிடங்கன் என்று ஒரு புத்திரன் இருந்தான். அவன் ஒருநாள் இராஜவீதியிற் செல்லும் பொழுது அவனுடைய தேர்க்காலில் ஒரு பசுவின் இளங்கன்று அகப்பட்டு இறந்து போயிற்று. கன்றை இழந்த தாய்ப்பசு அரசன் சபைக்குச் சென்று அங்கோரிடத்தில் கட்டியிருந்த [#]ஆராய்ச்சி மணியைத் தனது நீண்ட கொம்பினால் கணகணவென்று ஒலிப்பித்துக் கதறிக் கொண்டிருந்தது. மனுச்சோழன் திடுக்கிட்டுப் பசுவை வந்து கண்டு அங்கிருந்தவர்களால் சங்கதி தெரிந்து அம் மகாபாதகத்தைப் பண்ணின தன் மகனுக்கு என்ன நியாயம் நடத்தலாம் என்று மந்திரிமார்களோடு ஆலோசனை செய்தான். அவர்கள் அரசகுமாரன் கங்கைமுதலான புண்ணிய நதிகளில் நீராடிப் பிராயச்சித்தம் செய்துகொள்வது தரும் சாஸ்திரங்களின் சம்மதம்' என்று தெரிவித்தார்கள்.
----
[#] அவசரமாக நியாயம் வேண்டுகின்றவர் அரசனுக்குத் தெரிவிக்கும் பொருட்டுக் கட்டியிருக்கும் மணி.

மனுச்சோழன் 'தேர்க்காலில் அகப்பட்டு இறந்து போன பசுவின் கன்றை மீட்டும் எழுப்பித்தருகின்ற அற்புத சக்தி எனக்கில்லா விட்டாலும், இளங்கன்றை இழந்து வருந்தும் தாய்ப்பசுவுக்குப் பக்ஷபாதம் பண்ணாமல் நியாயம் நடத்தும் சக்தி எனக்கிருக்கின்றது. அந்தப் பசுவைப் போல நானும் என்னுடைய இளஞ்சிறுவனை இழந்து வருந்துவது தான் சிறந்த நீதியாகும்' என்று சொல்லித், தன் குலத்துக்கு அவன் ஒரே மகன் என்பதையும் கருதிப்பாராமல், வீதிவிடங்களை அவ்வீதியிற் படுக்க வைத்து அவன் மீது தனது தேரைச் செலுத்தி நீதியை நிலை நிறுத்தினான். அவனைப்போல அரசர்கள் தமர் பிறர் என்று பக்ஷபாதம் பண்ணாமல் உலகத்தைப் பரிபாலிப்பதனைச் சிறந்த தருமம் என்பார்கள்.
--- பெரியபுராணம்.
----------------

6. மன்னவர்க் கழகு செங்கோல் முறைமை.

மன்னவர்க்கு-அரசர்களுக்கு, அழகு-அழகாவது, செங்கோல். நீதியுடன், முறைமை - (உலகத்தை ) ஆளுகை செய்தலாம்.

6. முன்னொரு காலத்தில் இராஜமாபுரத்தில் ஸ்ரீதத்தன் என்று ஒரு வணிகர் தலைவன் இருந்தான். அவன் ஒரு சமயம் தன் கப்பலில் அதிகமான சரக்குக்களை ஏற்றிக் கொண்டு வேறு தேசத்துக்கு வர்த்தகம் செய்யப் போனான். அவன் கப்பல் நடுக்கடலிற் செல்கையில் பெருங் காற்றில் அலைப்புண்டு முழுகிப்போயிற்று. ஸ்ரீதத்தன் கடல்நடுவில் முழுகியும் கிளம்பியும் உயிரை நிராசை செய்து நெடுநேரம் வரையில் வருந்திப் பின்பு தற்செயலாகக் கிடைத்த ஒரு மரப்பலகையைத் துணை பற்றிக் கொண்டு நீந்திக், கடவுள் அருளாற் கரையேறி, ஒருவைச் சேர்ந்தான். பின்னர் அந்தத் துவீபத்துக்குச் சமீபத்தில் உள்ள வெள்ளிமலைக்கு வேந்தனான கலுழ்வேகன் என்பவனைக் கண்டு அவன் சினேகத்தை அடைந்தான்.

அப்புறம் அவ்வரசன் சிநேகத்தினால் இராஜமாபுரத்து அரசகுமாரனாகிய சீவகன் என்பவனுக்கு மணம் செய்து கொடுப்பதற்காக அவன் புத்திரியான அழகிற் சிறந்த காந்தருவ தத்தை என்பவளையும், அவளுக்கு ஸ்ரீதனமும் தனக்கு உபகாரமுமாக ஏழு கப்பல் நிரம்பிய பெரும் பொருள்களையும் அவன் கொடுக்கப் பெற்றுக்கொண்டு தன்னுடைய பட்டணம் வந்து சேர்ந்தான். பின்னர்க் காந்தருவ தத்தையைச் சீவகனுக்குக் கொடுத்து விவாகத்தை நடத்தியும், வர்த்தகம் செய்து தான தருமங்களைப் பண்ணியும் இராஜமாபுரத்தில் மிகுந்த சிறப்புடன் வாழ்ந்து வந்தான். அவன் முதலில் வர்த்தகம் செய்வதற்குக் கடலில் துணிந்து செல்லாதிருந்தால், அவ்வளவு பெரும் பொருள்களையும் புகழையும் அடைந்திருக்க முடியாதல்லவா ? ஆதலால், வைசியர்கள் எப்படியாவது வருந்திப் பொருளைச் சம்பாதித்துப் புகழ் பெறவேண்டும்.
--- சீவகசிந்தாமணி.
-------------

7. வணிகர்க் கழகு வளர் பொருள் ஈட்டல்.

வணிகர்க்கு - வைசியர்களுக்கு, அழகு - அழகாவது, வளர் - வளர்ந்து பெருகுகின்ற, பொருள் - திரவியத்தை, ஈட்டல் - சம்பாதித்தலாம்.

7. முற்காலத்தில் திருவெண்ணெய் நல்லூரில் சடையப்ப முதலியார் என்று ஒரு பெரிய வேளாளர் இருந்தார். அவருக்கு விளை நிலங்கள் அதிகமாயிருந்தன. அவர் பயிர்த் தொழில் செய்து, தாமும் சுற்றமும் உண்டு மிகுந்த தானியத்தைக் கொண்டு விசேஷமான பொருளைச் சேர்த்தார். அவர் செல்வம் அரசர்களும் மதித்துக் கவுரவிக்கும்படியான அளவில் மிகவும் பெருகியிருந்தது அக்காலத்தில் உறையூரை ஆண்டு வந்த குமார குலோத்துங்கன் என்ற சோழராஜன் அவருக்குச் சரியாசனம் கொடுத்துச் சிநேகம் செய்து வந்தான். கவிசக்ரவர்த்தியான கம்பர் தாம் செய்தருளிய இராமாயணத்தில் அவர் கொடையையும் செல்வத்தையும் அதிகமாகப் புகழ்ந்து பாடியிருக்கிறார். அவரைப்போல எல்லா உழவர்களும் பயிர் செய்தும் செய்வித்தும் உண்டு பொருளையும் புகழையும் தேட வேண்டும்.
--------- விநோதரசமஞ்சரி.
---------

8. உழவர்க் கழகே நழுதூண் விரும்பல்.

/ உழவர்க்கு - உழுது பயிர் செய்கின்றவர்களுக்கு, அழகு - அழகாவது, ஏர் உழுது - ஏர் உழுது (பயிர்செய்து அல்லது செய்வித்து உண்ணுகின்ற ), ஊண் - உணவை, விரும்பல் - விரும்பி வாழ்தலாம்.

8. ஆதிநாளில் அத்தினாபுரத்தில் திருதராஷ்டிரன் என்று ஒரு குருட்டரசன் இருந்தான். அவனுக்குத் துரி யோதனன் முதலான நூறு பிள்ளைகள் பிறந்தார்கள். திருதராஷ்டிரனுக்குப் பாண்டு விதுரன் என்று இரண்டு சகோதரர் இருந்தனர். அவர்களில் பாண்டுவுக்கு ஐந்து மக்கள் பிறந்தனர். அவர்களுக்குத் தருமன், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகதேவன் என்று பெயர். அவர்களைப் பாண்டவர் என்று சொல்லுவர். பாண்டவரின் சிறு பருவத்திலேயே பாண்டு மன்னவன் பரலோகத்தை அலங்கரிக்கச் சென்றுவிட்டான். அப்புறம் பாண்டவரும் துரியோதனன் முதலியவர்களும் அத்தினபுரத்து அரண்மனையில் வளர்ந்து கல்விகற்றுப் பெரியவரானார்கள்.

துரியோதனன் தனது பாலியம் முதற்கொண்டு பாண்டவர் மீது பொறாமை கொண்டு அவர்களைப் பகைத்து வரத் தொடங்கினான். அதனையறிந்த பெரியவர்கள் வெவ்வேறிடங்களில் இருந்து கொண்டு உலகத்தைப் பரிபாலித்து வரும் வண்ணம் அவர்களை வேறு பிரித்து அனுப்பிவிட்டார்கள். அவர்களில் துரியோதனன் தந்தையுடன் அத்தினாபுரத்திலும், பாண்டவர் தாயாருடன் இந்திரப் பிரஸ்தத்திலும் இருந்து நீதிப்பயிரை வளர்த்து வந்தனர். பாண்டவர் வீரரும் தீரரும் தெய்வ பக்தியுள்ளவருமாக இருந்துவந்தபடியினால் அவர்கள் புகழும் பராக்கிரமும் உலகத்திற் பரந்து நிறைந்தது. எல்லாவரசரும் அவர்கள் உத்தரவுக்கு அடங்கி நடந்துவரத் தலைப்பட்டனர். அவர்கள் இராஜசூயம் என்னும் உயர்ந்த யாகத்தை மிகுந்த பணச் செலவு பண்ணி அனைவரும் கண்டு ஆச்சரியப் படும் வண்ணம் அழகாகச் செய்து முடித்தார்கள். யாககாலத்தில் வந்து குவிந்த அவர்கள் செல்வப் பெருக்கத்தைக்கண்டு துரியோதனனுக்குப் பொறாமை யுண்டாயிற்று. அதனால், எப்படியாவது அவன் பாண்டவர் செல்வத்தைப் பறித்துக்கொள்ள வேண்டுமென்று தந்தையுடன் பலவிதத்திலும் ஆலோசனை பண்ணினான். திருத ராஷ்டிர மன்னவன் துரியோதனனுடைய பிடிவாதத்தை மறுக்கமுடியாமல் அலங்கார மண்டபம் ஒன்று உண்டு பண்ணி அதனிலிருந்து சூதாடுவதற்காகப் பாண்டவர்களை அழைத்து வரும்படி மந்திரியும் தனக்குச் சகோதரனுமான விதுரனிடம் சொன்னான்.

விதுரன் ''அண்ணா! தாங்கள் துரியோதனன் வார்த்தையைக் கேளாதீர்கள். அவன் தீயவர்களோடு நட்புச் செய்து நல்லவர்களான பாண்டவர்களைப் பகைத்து வருகிறான்; அஃது அவன் க்ஷேமத்துக்கு எள்ளளவும் நல்லதன்று; பாண்டவர் நீதியுள்ளவர்களும் பலசாலிகளும் சூரர்களுமாக விருப்பதனால் கடவுள் அருளுக்குச் சொந்தமாக விளங்கி வருகிறார்கள். தங்கள் புத்திரனுக்கு அவ்வருள் தினையளவும் இல்லை. அதனை யறியாமல் அவன் பாண்ட வர்களுக்குக் கெடுதி செய்வதனால் தன் சகோதரர்களுடன் சீக்கிரத்தில் அழிந்து போவதற்குத் தனக்குத் தானே கெடுதியை உண்டுபண்ணிக் கொள்கிறா னென்று தோன்றுகின்றது. சாத்தியமானால், தாங்கள் அவனை நல்ல வழியில் திருப்பப் பாருங்கள்! அதுதான் தங்களுக்குக் கவுரவமும் கருமமுமாகும்'' என்று பலவகையாகப் புத்தி சொல்லித் தடுத்தான். திருதராஷ்டிரன் தன் கெட்ட காலத்தினால் அவ்வார்த்தைகளைக் கொஞ்சமும் கேட்காமல் பிள்ளைகளுக்கு இதஞ் செய்ய நினைத்து முடிவில் அவர்களையும் அழித்துத் தானும் அழிந்து போனான். அதுபோல, மந்திரிகள் பின்வரும் காரியங்களை முன்னிட்டுக் குறிப்பினால் அறிந்து அரசனுக்குச் சொல்வார்கள்.
------- மகாபாரதம்.
----------

9. மந்திரிக் கழகு வரும் பொரு ளுரைத்தல்.

மந்திரிக்கு - மந்திரிக்கு, அழகு அழகாவது, வரும் பொருள் - (இனி) வரப்போகின்ற காரியங்களை, உரைத்தல் - (முன்னறிந்து அரசனுக்குச்) சொல்லுதலாம்.

9. ஆதிகாலத்தில் வீரரும், சூரரும், தருமம் தெரிந்தவருமான பீஷ்மர் என்று ஒரு அரசர் இருந்தார். அவர் சந்திர வம்சத்தில் பிறந்தவர். சந்தனுமன்னவர் புத்திரர் பாண்டவருக்கும் துரியோதனனுக்கும் பாட்டனார். பாண்டவர்களுக்கும் துரியோதனனுக்கும் பாக விஷயமாகப் பெருஞ்சண்டை உண்டாயிற்று. அந்தச் சண்டையில் பாண்டவர்களை வெற்றி கொள்வதற்குத் தம்மால் முடியாதென்று நன்றாகத் தெரிந்திருந்துங்கூடப் பாரத யுத்தத்தில் பத்துநாள் வரையில் சேனாதிபதியாக நின்று துரியோதனன் பொருட்டுச் சண்டை செய்து வெற்றி பெறாமல் இரணகளத்தில் இறந்து போனார். அதற்குப் பின்னர்த் துரியோதனனுக்கு என்றும் வெற்றி கிடைக்க மாட்டாதென்று நன்றாகத் தெரிந்திருந்தும் துரோணர் என்பவர் துரியோதனன் தம்மை வேண்டிக்கொண்ட பொழுது தாம் சேனாதிபதியாக நின்று பாண்டவர்களோடு போர் புரிய மாட்டேனென்று மறுத்துப் பேசவில்லை. தம் கடமையைத் தாம் செய்தால், கடவுள் திருவுள்ளத்தின் வண்ணம் காரியம் நடக்கட்டும்' என்று உடனே சேனாதிபதி-யாகப் புறப்பட்டுச் சென்று யுத்தம் செய்யத் தொடங்கினார். ஆதலால், அஞ்சாமல் நின்று சண்டை செய்வது சேனாதிபதிகளுக்குச் சிறந்த கடமையாகும்.
-- மகாபாரதம்.
----------

10. தந்திரிக் கழகு தறுகண் ஆண்மை.

தந்திரிக்கு - சேனைத் தலைவனுக்கு, அழகு - அழகாவது, தறுகண் - (போரில்) அஞ்சாமையாகிய, ஆண்மை - வீரமாகும்.

10. நெடுநாளைக்கு முன்பு நம்மிந்தியாவில் சந்திதேவர் என்று ஒரு பெரியவரசர் இருந்தார். அவர் தம்மும்டைய எல்லாச் செல்வங்களையும் யாசகர்க்குத் தானம் பண்ணிவிட்டுத் தவம் செய்யும் பொருட்டு ஒரு வனத்துக்குப் போனார். அங்கு நாற்பத்தெட்டு நாட்கள் வரையில் பட்டினிகிடந்து நிறைவேற்றக்கூடிய ஒரு பெரிய விரதத்தை அவர் மிகவும் அரிதில் செய்து நிறைவேற்றிச் சாப்பிடச் செல்லும்பொழுது ஒரு எளியவன் வந்து 'ஐயா! மிகவும் பசியாயிருக்கின்றது; எனக்கு ஏதாவது கொஞ்சம் உணவு தாருங்கள் ! இல்லாவிட்டால், நான் இப்பொழுதே இறந்து போய் விடுவேன்' என்று சொன்னான். அவ்வரசர் தமது இலையிலிருந்த அன்னத்தில் அவனுக்குப் பாதியைக் கொடுத்து உண்டுபோ' என்று சொல்லியனுப்பினார். பின்பு அவனைப் போலவே மற்றொருவன் வந்து யாசித்துக் கையை ஏந்தினான். அவனுக்கு இருந்தவற்றில் பாதியைப் பங்கிட்டுக் கொடுத்தனுப்பினார். அப்புறம் ஒரு எளிய நாய் வந்து தன் பசியைக் குறிப்பித்து வாலைக் குழைத்துக்கொண்டு எதிரில் நின்றது. ரந்தி தேவர் மிகுந்திருந்த பாதியை அதற்கு வைத்துவிட்டுத் தாம் சந்தோஷமாகத் தண்ணீரைப் பருகிப் பசியைத் தணித்துக்கொண்டார். அப்பொழுது கடவுள் வந்து அவர் உயர்ந்த ஒழுக்கத்தை வியந்து அவர் விரும்பின எல்லா வரங்களையும் கொடுத்து மறைந்தார். ஆதலால், பசித்தவர்களுக்குக் கொடுத்து மிகுந்தவற்றைச் சாப்பிடுவது தான் ஒருவன் சாப்பாட்டுக்கு அழகாகும்.
-- பாகவதம்.
-----------

11. உண்டிக் கழகு விருந்தோ டுண்டல்.

உண்டிக்கு - சாப்பாட்டுக்கு, அழகு - அழகாவது, விருந்தோடு - விருந்தினர்களோடு (கூடியிருந்து), உண்டல் - உண்ணுதலாம்.

11. முதற்கதையில் இராமனைப்பற்றிக் கொஞ்சம் படித்திருக்கிறீர்கள். அவன் மனைவிக்குச் சீதை என்று பெயர். அவன் தாய்தந்தைகளின் கட்டளைப்படி தனக்குச் சொந்தமான அரசு முதலிய எல்லாவற்றையும் தன் தம்பி பரதனுக்குச் சொந்தமாகக் கொடுத்துத், தனது மற்றொரு தம்பியான இலஷ்மணனை அழைத்துக்கொண்டு மனைவியின் அரண்மனை யடைந்து சீதையை நோக்கி அழகானவளே! நான் பிதாவின் கட்டளைப்படி பதினான்கு வருஷம் வனத்தில் வசித்து வரவேண்டும் ; நீ என் தாய்தந்தைகளுக்குப் பணிவிடை செய்து கொண்டு அரண்மனையில் இரு ! தவணை கழிந்ததும் வந்து விடுகிறேன்' என்று சொன்னான். சீதை 'தலைவரே! நான் தங்களைப் பிரிந்து அரைக்கணமும் அயோத்தியில் இருக்கமாட்டேன். தங்கள் பணிவிடை எனக்கு முக்கியமே யன்றித் தாய் தந்தைகளின் பணிவிடை அவ்வளவு முக்கியமன்று. தாங்கள் எங்குச் சென்றாலும் நிழலைப்போலத் தங்களைத் தொடர்ந்து வந்து தங்களுக்கு இதம் செய்து வருவேன். என்னை அழைத்துப் போகத்தான் வேண்டும்' என்று பிடிவாதம் பண்ணினாள். பின்னர் விதியில்லாமல் இராமன் அவளை வனத்துக்கு அழைத்துக் கொண்டு போனான். கணவன் கட்டளையை அலக்ஷியம் செய்து வந்தே தீருவேன் என்று பிடிவாதம் பண்ணின குற்றத்தினால், அவள் இராவணன் வீட்டில் பத்து மாதம் வரையில் சிறையிருந்து வருந்தலா யிற்று. ’இராக்ஷதன் வீட்டில் சிறையிருந்தவள் ' என்ற அபவாதமும் உலகமுள்ளவரையில் அவளுக்குச் சொந்தமாய் விட்டது. ஆதலால், கற்புடைய பெண்கள் கணவர் வார்த்தையை அலக்ஷியம் பண்ணி நடக்கமாட்டார்கள்.
--- இராமாயணம்.
----------

12. பெண்டிர்க் கழகெதிர் பேராதருத்தல்.

பெண்டிர்க்கு - பெண்களுக்கு, அழகு - அழகாவது ஏன், எதிர் பேசாது - (கணவர் மொழிக்கு) எதிர்த்துப் பேசாமல், ஒருத்தல் - அடங்கியிருத்தலாம்.

12. முன்னொரு காலத்தில் அசுவபதி யென்ற அரசனுக்குச் சாவித்திரி யென்று நற்குணம் நிறைந்த ஒரு பெண்மணி யிருந்தாள். அவள் தரித்திர தசையினால் காட்டில் திரிந்து கொண்டிருந்த சத்தியவான் என்ற ஒரு அரசகுமாரனுக்கு மனைவியாக விரும்பினாள். 'சத்தியவானை விரும்பாதே; அவனுக்கு ஒரு வருஷம் வரையில்தான் ஆயுள் இருக்கின்றது ; நீ வேறொரு புருஷனை விரும்பி மணம் செய்து கொள்' என்று நாரத முனிவர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கூட அவள் கேளாமல் அவனையே மணம் புரிந்து கொண்டாள். பின்னர்ச் சத்தியவான் அத்தவணைப்படி ஒருநாள் மாலையில் அவள் துடையின் மீது படுத்தவண்ணமே வனத்தில் இறந்து போய் விட்டான். சாவித்திரி அவன் உயிரைக் கவர்ந்து செல்லவந்த தென திசைக்குத் தலைவனான யமதருமனைத் தொடர்ந்து சென்று அவன் மகிழ்ந்து கொடுத்த முதல் வாரத்தினால் தன் மாமனார் தாயுமாசேன மன்னவருக்குக் கண்ணையும் இழந்த இராஜ்யத்தையும் பெற்றுக்கொண்டாள். மறுபடியும் அவன் அளித்த இரண்டாவது வாரத்தினால் தனக்கு நூறு சகோதரர்களை அடைந்தாள். அப்புறம் மூன்றாவது வரத்தினால் தனது இறந்துபோன புருஷன் சத்தியவாளைப் பெற்று, அவனோடு பட்டணத்துக்கு வந்து நெடுங்காலம் வரையில் நன்றாக வாழ்ந்தாள். அவளைப்போல, நற்குலத்தில் பிறந்த பெண்கள் ஆபத்துக் காலங்களில் கணவர்களைக் காப்பாற்றி அவர்களோடு சுகித்து வருவார்கள்.
-- மகாபாரதம்.
-----------

13. # # #

14. குலமகட் கழகு தன் கொழுநனைப் பேணுதல்.

குலமகட்கு - நற்குலத்தில் ( உசித்த) பெண்களுக்கு, அழகு - அழகாவது, தன் - தன்னுடைய, கொழுநனை - நாயகனை, பேணுதல் - காப்பாற்றுதலாம்.

14. முன்பு சந்திரவம்சத்தில் சந்தனு மன்னவருக்குக் கங்காதேவியின் வயிற்றில் தேவவிரதன் என்று ஒரு புத்திரர் பிறந்தார். அவர் வசிஷ்ட முனிவரிடத்தில் வேதங்களையும், சுக்கிர பகவானிடத்தில் மந்திரங்களையும், பிருகஸ்பதியினிடத்தில் சாஸ்திரங்களையும், பரசுராமரிடத் தில் தநுர்வேதங்களையும் கற்றுக், கல்வியில் தமக்கு ஒருவரும் நிகரில்லாமல் விளங்கினார். பிற்பாடு, தாசராஜன் புத்திரியாகிய பரிமளகந்தி என்பவளைத் தம் பிதாவுக்கு மணம் செய்விக்கும் பொருட்டுத் தாம் என்றும் மணம் செய்து கொள்ளாமல் பிரமசாரியா யிருப்பதாகச் சபதம் செய்து கொண்டு அவளை மணம் செய்துவைத்தார். அப்புறம் தமக்குச் சொந்தமான இராஜ்யத்தைப் பரிமளகந்தியின் வயிற்றில் பிறந்த சித்திராங்கதன் விசித்திர விரியன் என்ற சகோதரர்களுக்குக் கொடுத்துவிட்டது மல்லாமல் அவர்கள் சந்ததிகளுக்கும் கல்வி முதலியவற்றைக் கற்பித்துக் காப்பாற்றிக்கொண்டு வந்தார். அவர் உலகத்தில் இருக்கும் வரையில் ஒருநாளும் ஒருசிறிதும் ஒழுக்கத்தில் தவறினதே யில்லை. உத்தமர் உத்தமர் என்று பலராலும் புகழப்பெற்று வந்தார். ஆதலால், அறிஞர்கள் சாஸ்திரங்களைக் கற்று அவற்றில் சொல்லியபடி மனத்தாலும் வாக்காலும் உடலாலும் அடங்கி நடப்பார்கள்.
-- மகாபாரதம்.
-----------

15. அறிஞர்க் கழகு கற்று சார்ந் தடங்க.

அறிஞர்ககு - அறிவுள்ளவர்களுக்கு, அழகு -அழகாவது, கற்று - ( நூல்களைப்) படித்து, உணர்ந்து - அவற்றின் பொருள்களைத் தெரிந்து, அடங்கல் - (மனம் மொழி மெய் என்ற மூன்றினாலும் ) அடங்கியிருத்தலாம்.

15. முன்னர் அவந்தி தேசத்தைச் சேர்ந்த அக்கிர காரமொன்றில் குசேலன் என்று அந்தணன் ஒருவன் இருந்தான். அவன் தரித்திரததைச் சொல்லி முடியாது. எழுதியும் அடங்காது. அவனுக்கு இருபத்தேழு மக்கள் வரையில் பிறந்து அவன் தரித்திரத்தை இன்னமும் அதிகப் படுத்தினார்கள். அங்ஙனம் வருந்தியுங்கூட அவன் அச்சிறுவர்க்குச் செய்யவேண்டிய வைதிக கருமங்களில் ஒன்றையும் குறைக்காமல் எல்லாவற்றையும் விதிப்படி நிறைவேற்றிக்கொண்டு வந்தான். அவன் ஒருவரிடத்திலும் சென்று யாசித்ததேயில்லை. அந்தணர்களுக்குச் சொந்தமான வைதிக வொழுக்கங்களில் ஒன்றை யாவது விட்டுவிட்டதுமில்லை. தன் வீட்டுக்கு வந்த விருந்தினர்களை உபசரித்து அவர்களுக்கு இயன்றவரையில் அன்னமும் அளித்துவந்தான். நெடுநாளைக்குப் பிற்பாடுதான் கண்ணபிரான் அவனுக்குச் செல்வத்தைக் கொடுத்தார். அது போலப் பெரியவர்கள் தரித்திர தசையிலிருந்தாலும் தங்களுக்கு இன்றியமையாத நலலொழுக்கங்களைக் கைவிட மாட்டார்கள்.
-- பாகவதம்.
--------------

16. வறிஞர்க் கழகு வறுமையிற் செம்மை.

வறிஞர்ககு - தரித்திரர்களுக்கு, அழகு -அழகாவது, வறுமையில் - தரித்திர காலத்திலும், செம்மை - ஒழுக்கம் கெடாதிருத் தலாம்.

16. நெடுங்காலத்துக்கு முன்னா அசுரர்களிடத்தில் அன்புகொண்டிருந்த துவஷ்டா என்பவனுக்கு விசுவரூபன் என்று ஒரு புத்திரன் இருந்தான. அவன் எல்லாக் கலைகளையும் நன்றாகக கற்றவன். மந்திரங்களை யெல்லாம் மயக்கமில்லாமல் தெரிந்தவன். யாகம் செய்விப்பதில் இணையற்றவனென்று பெயரெடுத்தவன். அவனை ஒரு சமயத்தில் இந்திரன் தனக்குக் குருவாக வைத்துக் கொள்ள வேண்டிய தாயிற்று. இந்திரன் அவனை யாககுருவாகக் கொண்டு உயர்ந்த யாகம் ஒன்று செய்யத் தொடங்கினான். அவ் வேள்வி அசுரர்களுக்குத் தாழ்ச்சியைத் தரத்தக்கது. விசுவரூபன் அசுரர்களின் பெண் வயிற்றில் பிறந்தவன் அசுரர்களின் ஆதிக்கத்தைக் குறைத்து விடுவதில் அவனுக்கு எண்ணம் கிடையாது. பிருகஸ்பதியின் ஸ்தானமாகிய அந்த உயர்ந்த பதத்தை அடைந்திருந்தும் பெருந்தன்மை யில்லாமல் வாக்கினால் மாத்திரம் தேவர்களுக்கு நன்மை உண்டாக வேண்டு மென்று சொல்லி, மனத்தினால் எல்லா நன்மைகளையும் அசுரர்களே அடைய வேண்டுமென்று தியானித்து யாகத்தை நடத்திவரத் தொடங்கினான். அவன் மோசம் இந்திரனுக்குத் தெரிந்து போயிற்று. அவன் கோபம் கொண்டு வஜ்ரா யுதத்தினால் அப்பொழுதே விசுவரூபன் சிரத்தை வெட்டித் தள்ளிவிட்டான். விசுவரூபன் கிடைப்பதற்கு அருமையான தேவகுருவின் ஸ்தானத்தைப் பெற்றும், தனக்காவது அன்றிப் பிறருக்காவது உதவியில்லாமல் அற்ற புத்தியினால் உயிரிழக்கலாயிற்று. ஆதலால், அற்பர்கள் அதிகமாகப் படித்திருந்தாலும் கூடப் பயன்பட மாட்டார்கள்.
-- திருவிளையாடற்புரா னம்.
------------

17. தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை
வானுற வோங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க் கிருக்க நிழ பாகாதே.

தேம்படு - இனிமை பொருந்திய, பனையின்- பனைமரத்தினது, திரள்பழத்து - திரண்ட பழத்தினுடைய , கருவிதை - ஒரு (பெரிய) விதையானது, வான் உற-ஆகாயத்தை முட்ட, ஓங்கி வளர்த்து, வளம்பெற -செழுமை உண்டாக, வளரினும் வளர்ந்தாலும், இருக்க (வெயிலில்) தங்கியிருக்க, ஒருவர்க்கு - ஒருவருக்காவது, நிழல் ஆகாது - நிழலைத் தராது. ஏ - அசை.

17. முற்காலத்தில் கேகய நாட்டில் இருந்த கிருத வீரியன் என்ற மன்னவன் பிருகு முனிவர் குலத்தில் உதித்த பார்க்கவர்களைக் குருவாக வைத்துக்கொண்டு பலவகையான யாகங்களைச் செய்து அவர்களுக்கு அதிகமான திரவியத்தைத் தானம் பண்ணினான். பிற்பாடு, அவன் வம்சத்தில் பிறந்த கார்த்தவீரியர் என்ற அரச குமாரர்கள் பேராசை கொண்டு உலகத்திலிருந்த எல்லாப் பார்க்கவர்களையும் ஒருமிக்கக் கொன்று அவர்கள் வனங்களில் புதைத்துவைத்திருந்த எல்லாப் பொருள்களையும் எளிதில் எடுத்து வந்துவிட்டார்கள். அந்தப் பார்க்கவ வம்சத்தில் ஒளர்வன் என்பவன் கார்த்த வீரியர்களின் கோபத்தீக்கு இரையாகாமல் நூறு வருஷம் வரையில் தனது தாயின் துடைபில் தங்கியிருந்து அப்புறம் பிறந்தான். அவன் பிறந்த மாத்திரத்தில் கோபம் அதிகமாகிக் கண்களை விழித்து நோக்கினதனால், அப்பார்வையிலிருந்து ஒருவகையான நெருப்பும் புகையும் உற்பத்தியாயிற்று. அவ்விரண்டும் விணாகமுடியாமல் விஷத் தீயும் விஷப்புகையுமாகமாறி, வேகமாக வெளிப்பட்டுச் சென்று நாட்டில் அரசுபுரிந்துவந்த கொடுங்கோல் மிகுந்த எல்லாக் கார்த்த விரியர்களுடைய கண்களையும் குருடு செய்து போயின.

இன்னும், அந்த ஒளர்வன் வயது வந்த பிற்பாடு தாயின் மூலமாக கார்த்தவீரியர் தனது குலத்துக்குச் செய்த கொடுமையைக் கேட்டறிந்து அவர்கள் குலத்தை அடியோடு தொலைத்து விடுகிறேன்' என்று கடுந்தவமும் செய்யத் தொடங்கினான். அவன் தவத்தீயானது மிகக் கொடுமையாக வெளியாகிச் சென்று அவர்களை அடியோடு கொன்று உலகங்களையும் வருத்தத்தொடங்கிற்று. பின்னர்ப் பிதிர் தேவதைகள் கேட்டுக்கொண்ட படியினால் ஒளர்வன் கோபம் தணிந்து அத்தீயைப் பெட்டைக் குதிரை வடிவமாகச் சமுத்திரத்தில் செலுத்தினான். அதற்குத்தான் வட வைக்கனல் என்று பெயர். அப்புறம் ஒளர்வனால் பிருகு வம்சம் ஆலமரம் போலப் பெருகித் தழைத்துப் பிரசித்தியடைந்தது. ஆதலால், பெரியவர்கள் முதலில் மிகவும் சிறிய அற்பர்கள் போலக் காணப்பட்டாலும் அவர்கள் சக்தி அளவற்றதாகப் பெருகி அநேக காரியங்களைச் செய்யும்.
-- மகாபாரதம்.
------------

18. தெள்ளிய வாலின் சிறுபழத் தொருவிதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே யாயினும், அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆள் பெரும் படையொடு
மன்னர்க் கிருக்க நிழலா கும்மே.

தெள்ளிய - தெள்ளி யெடுக்கத்தக்க, ஆலின் - ஆலமரத்தின், சிறுபழத்து - சிறிய பழத்தினுடைய, ஒருவிதை - ஒருவிதையானது, தெள் - தெளிந்த, நீர் - நீரையுடைய, கயத்து - குளத்திலுள்ள, சிறு மீன் - சிறிய மீனின், சினையினும் - முட்டையைக் காட்டிலும், நுண்ணிதே - சிறியதே. ஆயினும் - ஆனாலும், அண்ணல் - பெருமை பொருந்திய, யானை - யானையும், அணி - அழகிய, தேர் - தேரும், புரவி - குதிரையும், ஆள் - காலாள்களுமாகிய, பெரும் - பெரிய, படையொடு - சேனைகளோடு, மன்னர்க்கு- அரசருக்கும், இருக்க (வெயிலில்) தங்கியிருக்க, நிழல் ஆகும் - நிழலைத் தரும். ஏ- அசை.

18. நெடுங்காலத்துக்கு முன்னர்க் காசிபர் என்ற முனிவருக்கு இரணியகசிபு என்று ஒரு புத்திரன் பிறந்தான். அவன் மிகவும் பெரிய வடிவத்தைக் கொண்டவன். உதயகிரி அஸ்தமனகிரி என்ற இரண்டு மலைகளையும் அவன் தன் காதுக்குக் குண்டலங்களாக அணிந்து திரிந்ததுவே அவன் பெரிய வடிவத்தைப் பிரசித்தியாக்கும். அவன் ஒருவரும் பெறமுடியாத உயர்ந்த வரத்தைப் பிரமதேவரிடத்தில் பெற்றிருந்தான். அவன் வரம் இது:- ' இரவிலும், பகலிலும், உயிருள்ளவற்றிலும், உயிரில்லாதவற்றிலும், உள்ளிலும் வெளியிலும், தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன நிற்பன என்ற எழுவகைத தோற்றத்திலும் தான் இறக்கலாகாது' என்பதாம். அவனைப்போல யோசித்து வரம் பெற்றவர் ஒருவரும் இல்லை. பெரும்பாலும் அவன் வரமடைந்ததற்கு இறவாமலேயே இருந்திருக்கவேண்டும். அவனுக்குப் பிடிவாதமும் பெருங்கோபமும் அதிகம். கருவம் அவன் நெஞ்சத்தில் குடி புகுந்தது. அதனால், அவன் கடைசியில் கொஞ்சமும் அறிவில்லாமல் எல்லாரும் தன்னையே கடவுள் என்று கொண்டாடும் வண்ணம் கட்டாயப்படுத்தத் தொடங்கினான். அறிவுள்ளவர் பலரும் அதனைச் சிறிதும் அங்கீகரிக்க வில்லை. உலகத்தில் அவன் உபத்திரவமும் பயமும் அதிகமாக வளரத்தொடங்கின. அப்புறம் ஸ்ரீ மகாவிஷ்ணு நரசிங் காவதாரம் செய்து அவனை உபாயமாகக் கொன்று உலகத்தின் பயத்தை நீக்கினார். ஆதலால், உருவத்தில் பெரியவர்களான அனைவரும் அறிவிலும் பெரியவர்களாக முடியாது.
--- பாகவதம்.
-------------

19. பெரியோ ரெல்லாம் பெரியரும் அல்லர்.

பெரியோர் எல்லாம் - (உருவத்தில்) பெரியவர்களான அனைவரும், பெரியரும் - (அறிவினால்) பெரியவர்களும், அல்லா - ஆகார்கள்.

19. முன்னர்க் கிரது மகாரிஷிக்கு ஓரங்குலம் அளவைக் கொண்ட அறுபதினாயிரம் புத்திரர் பிறந்தார்கள். அவர்களுக்கு வாலகில்யர் என்று பெயர். அவர்கள் ஒழுக்கத்திலும் அறிவிலும் உயர்ந்தவர்கள். ஞானத்தில் மிகுந்தவர்கள். தினந்தோறும் சூரியன் சதத்தை வலம் வந்து துதிப்பது அவர்கள் வழக்கம். ஒரு சமயத்தில் இந்திரன் மிகவும் பெரிய ஒரு யாகத்தைச் செய்யத் தொடங்கினான். உலகத்திலிருந்த எல்லா முனிவரும் யாகம் காண வந்திருந்தார்கள். எவரும் யாகத்துக்கு வெறுங்கையுடன் வரலாகாதாகையால் வாலகில்யர்கள் சமித்து முதலிய யாகத் திரவியங்களைத் தாங்கள் சுமக்கத் தகுந்த அளவு ஆளுக்குக் கொஞ்சம் தலையிற் சுமந்து கொண்டு வந்திருந்தார்கள். இந்திரன் தேவர்களுக்கெதிரில் அவர்களுடைய சிறிய வடிவத்தைக் கண்டு சிரித்தான். வாலகில்யர்கள் அதனால் கோபமடைந்து அவன் கருவத்தை அடக்கும்படியான ஒரு புத்திரனை அடையக் கருதி, அவன் செய்த அந்த யாகத்திலேயே மந்திர பலத்தினால் மகாபலம் பொருந்திய கருடன் என்றவனை உண்டு பண்ணினார்கள். அப்புறம் இந்திரன் அவர்களது தவப் பெருமையைக் கண்டு பயந்து அவர்களை வணங்கி மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். ஆதலால், சிலர் உருவத்தில் சிறியவர்களாகக் காணப்பட்டாலும் அறிவில் மிகவும் பெரியவர்களாக இருப்பார்கள்.
-- மகாபாரதம்.
---------

20. சிறியோ ரெல்லாம் சிறியரும் அல்லர்.

சிறியோர் எல்லாம் - (உருவத்தில்) சிறியவர் அனைவரும், சிறியரும் - (அறிவினால்) சிறியவர்களும், அல்லர்-ஆகார்கள் .

20. முன்னொரு காலத்தில் சூரிய குலத்தில் சகரன் என்ற மன்னவனுக்குச் சகரர் என்று அறுபதினாயிரம் புத்திரர் பிறந்தார்கள். அவர்களுக்கு முருட்டுத்தனமும் பலமும் அதிகமாயிருந்தன. எல்லா அரசரும் அவர்கள் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் நடுங்கி ஒடுங்கிப்போவார்கள். ஒரு சமயத்தில் சகரன் அவர்கள் பலத்தைத் துணை கொண்டு அசுவமேதம் என்ற ஒருவகை யாகம் செய்யக் கருதி யாகக் குதிரையை உலகத்தில் விட்டான். அதனை இந்திரன் சூதினால் அபகரித்துப் பாதாளத்தில் தவம் செய்துவந்த கபிலமுனிவர் ஆச்சிரமத்தில் விட்டு மறைந்து போனான். சகரர்கள் உலகத்தில் குதிரையைக் காணாமல் நிலத்தைத் தோண்டி வழிச் செய்து கொண்டு பாதாளம் புகுந்து கபிலமுனிவர் ஆச்சிரமஞ் சென்று தங்கள் குதிரையைக் கண்டார்கள். உடனே அவர்களுக்குக் கோபம் உண்டாயிற்று. அவர்கள் கபில முனிவர் தாம் தங்கள் குதிரையைக் களவு செய்திருக்க வேண்டுமென்று தவறாகக் கருதி விட்டார்கள். முனிவர் தவத்தில் இருந்தபடியினால் அவரை வருத்திக் கோபத்தை உண்டுபண்ணி அவருடைய கண் நெருப்பினால் அனைவரும் ஒருமிக்க அழிந்து போனார்கள். சகரனுக்குப் பலசாலிகளான அறுபதினாயிரம் பிள்ளைகள் பிறந்தும் அவன் யாகம் அவர்களால் நிறை வேறாமற் போயிற்று. ஆதலால், பிறந்தவர் யாவரும் பிள்ளைகள் ஆக மாட்டார்கள்.
-- இராமாயணம்.
----------

21. பெற்றே ரெல்லாம் பிள்ளைகள் அல்லர்.

பெற்றோர் - (தான்) பெற்ற பிள்ளைகள், எல்லாம் - யாவரும், பிள்ளைகள் அல்லர் - நன்மக்கள் ஆகமாட்டார்கள்.

21. ஆதிநாளில் வடமதுரைப் பட்டணத்திலிருந்த உக்கிரசேன மன்னவனுக்குக் கம்சன் என்று ஒரு புத்திரன் இருந்தான். அவன் சகோதரிக்குத் தேவகி யென்று பெயர். அவளை வசுதேவர் என்றவருக்குக் கொடுத்து மணம் செய்திருந்தார்கள். கம்சனுக்குச் சகோதரியின் மீது வாஞ்சை அதிகம். அவன் அவளையும் அவள் புருஷனையும் தன் பட்டணத்திலேயே இருக்கச்செய்து அன்பு பாராட்டி வந்தான். ஒரு சமயத்தில் கம்சன் அவ் விருவரையும் தேரில் உட்காருவித்துத் தான் தேரை நடத்திச் செல்கையில் கம்சனே! உன் சகோதரியின் வயிற்றில் பிறக்கின்ற எட்டாவது குழந்தையினால் உனக்கு மாணமுண்டாகும்' என்று ஒரு அசரீரி வாக்கு உண்டா யிற்று. கம்சன் உடனே கோபம் கொண்டு சகோதரியை வெட்டத் தொடங்குகையில் வசுதேவர் இடையில் நின்று தடுத்து 'இவளைக் கொல்லாதிரு; இவள் வயிற்றில் பிறக் கும் குழந்தைகளை உன்னிடம் ஒப்புவித்து விடுகிறேன் அவற்றை உனக்கு இஷ்டம் வந்தபடி செய்து கொள்ள லாம்' என்று ஏற்பாடு பண்ணினார். கம்சன் அதற்கு ஒப்புக் கொண்டபடி--யினால் வசுதேவர் தேவகியின் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளை அப்பொழுதப் பொழுது அவனிடம் கொடுத்துக்கொண்டு வந்தார்

கடைசியில் எட்டாவது குழந்தையாகக் கடவுள் வந்து அவதாரம் பண்ணினார். அவர் தமது மாய்கையினால் கம்சனை மயக்கித் தாம் ஆயாப்பாடியில் இருந்த நந்த கோபன் என்ற ஒரு யாதவர் தலைவன் வீட்டிற் சென்று வளர்ந்து வந்தனர். அவருக்குக் கிருஷ்ணன் என்று பெயர். கம்சன் நாரதர் முதலிய சில முனிவர்களாலும் அசரீரியினாலும் அதனைத் தெரிந்து கொண்டு கிருஷ்ணனது குழந்தைப் பருவத்தையும் கருதாமல் அவனைக் கொன்று வரும்படி பூதனை முதலான சில துஷ்டப் பெண்களையும், சகடாசுரன் முதலான சில துஷ்டர்களையும் ஆயப்பாடிக்கு ஒருவர் பின்னொருவராக அனுப்பிக் கொண்டிருந்தான். சகோதரியின் புத்திரன் என்று கொஞ்சமும் இரக்கம் பாராட்டவில்லை. மருமகன் என்ற உறவையும் கவனிக்கவில்லை. அவன் தனக்குத் தெரிந்த அத்தனை உபாயங்களைச் செய்தும் கிருஷ்ணனுக்கு அவற்றால் கொஞ்சமும் ஆபத்து உண்டாகாமற் போயிற்று. முடிவில், கிருஷ்ண-னாலேயே மரணத்தைச் சொந்தமாக்கிக் கொண்டான். ஆதலால், எல்லா உறவினரும் அன்புள்ள உறவினர் ஆகமாட்டார்களென்று இவ்வுதாரணத்தினால் வெளியாகின்றதல்லவா ?
- பாகவதம்.
------------

22. உற்றே ரெல்லாம் உறவினர் அல்லர்.

உற்றோர் எல்லாம்- உறவினர் யாவரும், உறவினர் அல்லர் (அன்புள்ள) பந்துக்கள் ஆகமாட்டார்கள்.

22. முதற் கதை தசரதரைப்பற்றி உங்களுக்குக் கொஞ்சம் தெரிவித்திருக்கின்றது. அவருக்கு கோசலை, கைகேயி, சுமித்திரை என்று மூன்று மனைவிகள். கோலைக்கு இராமனும், கைகேயிக்குப் பரதனும், சுமித்திரைக்கு இலஷ்மண சத்ருக்னர்களும் பிறந்தார்கள். ஒரு சமயத்தில் தசரதர் கைகேயிக்கு இரண்டுவரம் கொடுத்திருந்தார். அவள் இராமனுடைய மகுடாபிஷேக தினத்தின் காலையில் அவனைப் பதினான்கு வருஷம் வனத்துக்கு அனுப்பவேண்டும் என்றும், அதுவரையில் தன் மகன் பரதன் நாட்டில் அரசாளவேண்டும் என்றும் கணவனை வரம் வேண்டினாள். தசரதர் 'இராமன் என் உயிர் ; அவன் வனம் செல்ல வேண்டியதில்லை. அவன் வனத்துக்குப் போனால், நான் மரணமடைவது நிச்சயம். நீ வேறு வரம் கேள்; தருகிறேன்' என்று எவ்வளவோ சமாதானம் சொன்னார். அவள் அவற்றைக் கொஞ்சமும் அங்கீகரிக்கவில்லை. தன் பிடிவாதத்தினால் இராமனை வனத்துக் கனுப்பித் தசரதரையும் மரணத்துக்குச் சொந்தமாக்கி விட்டாள். ஆதலால், விரும்பி மணம் புரிந்து கொண்டவர் அனைவரும் நல்ல மனைவிகள் ஆகமாட்டார்கள்.
-- இராமாயணம்.
--------------

23. கொண்டோ ரெல்லாம் பெண்டிரும் அல்லர்.

கொண்டோர் எல்லாம் - (மணஞ் செய்து) கொண்ட மனைவிகள் யாவரும், பெண்டிரும் அல்லர் - நன்மனைவிகள் ஆகமாட்டார்கள்.

23. 18-வது கதை இரணியகசிபு என்பவனைப்பற்றி உங்களுக்குத் தெரிவித்திருக்கிறது. அவனுக்குப் பிரஹ்லாதன் என்று ஒரு புத்திரன் இருந்தான். மகாவிஷ்ணுவின் பெயரை மறந்தும் உச்சரிக்கலாகாதென் று அவனுக்குத் தந்தை கட்டளையிட்டிருந்தான். பிரஹலாதன் பெரிய விஷ்ணு பக்தன். அவன் அதற்குச் சம்மதிக்கவில்லை. மகா விஷ்ணுவே கடவுள் என்றும், அவரை எவரும் மறக்கலாகா தென்றும் சொல்லி, அவர் நாமத்தை அநுதினமும் சிந்தித்து வணங்கிவரத் தொடங்கினான். தந்தைக்கு அது சம்மதமாகவில்லை. அவன் மிகவும் கோபித்துப் புத்திரனைக் கொல்லும் பொருட்டுப் பெரிய நெருப்புக்குழி யொன்று கெல்லி, அதில் அதிகமாக நெருப்பை வளர்த்திப் பிரஹ்லாதனைத் தள்ளிவிட்டான். பிரஹ்லாதன் நீரில் விளையாடுகின்றவன் போல அந்நெருப்பில் நெடுநேரம் வரையில் விளையாடிக் கொண்டிருந்து வெளியில் வந்து சேர்ந்தான். நெருப்பு அவனைக் கொஞ்சமும் உபத்திரவப் படுத்தவில்லை. அப்புறம் பிரஹ்லாதன் தன்னை நெருப்பில் தள்ளின தந்தையைச் சிறிதும் கோபிக்காமல் 'அந்தோ ! தன் தந்தை அறியாமைத் தனத்தினால் அநியாயமாக அழிந்து போகின்றாரே!'' என்று அழுது வருந்திக் கண்ணீர் வடித்து அவரை வணங்கிக் கடவுளைத் தொழும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். ஆதலால், நல்லவர்களை வருத்தப்படுத்தி னாலும் அவர்கள் குணம் குறையமாட்டாது.
-- பாகவதம்.
-------------

24. அடினும் ஆவின்பா தன்சுவை குன்றாது.

அடினும் - காய்ச்சினாலும், ஆவின் பால் - பசுவின் பால், தன் சுவை – தன்னுடைய சுவையில், குன்றாது -குறையாது.

24. சைவ சமயாசாரியரில் ஒருவராகிய திருநாவுக்கரசு நாயனார் முதலில் ஜைன மதத்தில் இருந்தார். அவருக்கு வயிற்றில் ஒருவிதமான சூலைநோய் உண்டாயிற்று. அஃது ஒருவகை மருந்தினாலும் குணமடையவில்லை. அவர் திலகவதியென்ற தமது சகோதரியின் கட்டளை வண்ணம் கிருவதிகை என்ற சிவதலத்தில் சைவ சமயத்துக்கு வந்து சேர்ந்தார். உடனே நோயும் குணப்பட்டுவிட்டது. அதனால், மிகவும் சந்தோஷத்து அன்று முதல் சிவபெருமானைச் செய்யுள் வடிவமாகத் துதித்துவரத் தலைப்பட்டனர். கடவுள் அவர் துதிக்கு மகிழ்ந்து திருநாவுக்கரசு என்ற பெயரைக் கொடுத்து மறைந்தார். அஃது அக்காலத்தில் இருந்த சமணவரசனுக்குப் பிடிக்கவில்லை. அவன் நாயனாரைச் சுண்ணாம்பு நீற்றறையில் தள்ளி நெருப்பு வைத்து விட்டான். நீற்றறை அந்த உண்மைப் பக்தரை ஒன்றும் பண்ணாமல் சில்லெனக் குளிரத் தொடங்கிற்று. ஏழுநாள் வரையில் அவர் அந்த நீற்றறையில் இருந்தும் கொஞ்சமும் துன்பமில்லாமல் அனைவரும் கண்டு ஆச்சரியப்படும் வண்ணம் வெளியில் வந்து சேர்ந்தார். ஆதலால், அவரைப்போன்ற உண்மைப் பக்தர்களை நெருப்பாற் சுட்டுக் கொளுத்தினாலும் அவர்களுடைய புகழ் ஒளி குறைய மாட்டாது. அதிகமாகி வளரும்.
--- பெரிய புராணம்
------------

25. சுடினும் செம்பொன் தன்னொளி கெடாது.

சுடினும் - சுட்டாலும், செம்பொன் - தங்கம், தன்ஒளி - தன்னுடைய பிரகாசத்தில், கெடாது - குறையாது.

25. முன்னொரு காலத்தில் இந்திரசபையில் 'மண்ணுலகில் உண்மை யுரைப்பவன் யார்?' என்று ஒரு வினா உண்டாயிற்று. அதற்கு வசிஷ்ட முனிவர் 'என் சிஷ்யன்
அரிச்சந்திரன் இருக்கிறான். அவன் அயோத்திக் கரசன். மறந்தும் பொய் பேசமாட்டான்' என்று சொன்னார். அதனைக் கேட்டு மனம் பொறாத விசுவாமித்திர முனிவர் அரிச்சந்திரன் அத்தனை உயர்ந்தவனல்லன். அவன் வாயில் ஒரு பொய்யன்று; ஒன்பது பொய்யை மிகவும் எளிதில் வாச் செய்யலாம். அவசியமென்று தோன்றினால், நான் அதனை ருஜுப்படுத்துகிறேன்' என்றார். உடனே வசிஷ்டர் 'அரிச்சந்திரன் பொய்யனானால், நான் மண்டை யோட்டில் கள்ளைப் பெய்து கொண்டு தெற்குத் திசையைப் பார்க்க எடுத்துச் செல்லுகிறேன்' என்று சொன்னார். விசுவாமித்திரர் அவ்வரசன் பொய்யனாகா விட்டால், என் தவத்தில் பாதியை அவனுக்குக் கொடுத்து விடுகிறேன்' என்று சபதம் செய்து கொண்டார். பின்னர்ச் சபை கலைந்து அனைவரும் தத்தம் இடங்களுக்குச் சென்று விட்டார்கள். விசுவாமித்திரர் தம் சபதம் நிறைவேறுவதன் பொருட்டு அயோத்தியை அடைந்து, அரிச்சந்திர மன்னவனுடைய அரசை அக்கிரமமாக அபகரித்துக்கொண்டு, அவனையும் அவன் மனைவியையும் பிறருக்கு அடிமைகள் ளாக்கிப் பலவிதமான கஷ்டங்களை உண்டு பண்ணினார். அரிச்சந்திரன் முனிவர் தன்னை அவ்வாறு செய்துங்கூட அவரைக் கொஞ்சமும் வெறுக்கவில்லை. அவ்வளவு துன்பங்களையும் மிகவும் பொறுமையோடு சகித்துக் கொண்டிருந்து உலகத்தில் உயர்ந்த புகழை அடைந்தான். ஆதலால், கீர்த்தியை விரும்புகின்றவர்கள் கஷ்ட காலத்தில் கோபம் கொண்டு தமது பொறுமையைக் கைசோர விட்டு விடமாட்டார்கள்.
--- அரிச்சந்திர காவியம்.
-------------

26. அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது.

அரைக்கினும் - தேய்த்தாலும், சந்தனம் - சந்தனக் கட்டை, தன்மணம் - தன்னுடைய வாசனையில், அறாது - நீங்காது.

26. துரியோதனன் பாண்டவர்களைக் கெடுக்கப் பல விதத்திலும் முயன்று வந்தானென்று எட்டாவது கதை உங்களுக்குத் தெரிவித்திருக்கின்றது. அவன் பாண்டவரில் பீமன் என்பவனைக் கொல்லப் பாலியத்திலேயே அன்னத்தில் விஷத்தைக் கலந்தான். பாம்புகளைக் கடிக்க விட்டான். கங்கையில் கழுக்களை நாட்டி அதில் பீமனைக் குதித்து விளையாடப் பண்ணினான். விஷம் கலந்த பதார்த்தங்களால் விருந்து செய்து அவன் அறிவு மயங்கி விழுந்து கிடக்கும் பொழுது கயிறுகளால் கட்டிக் கங்கையில் எறிந்தான். அப்புறம் வாரணாவதம் என்ற பட்டணத்தில் அரக்கு, மெழுகு, குங்கிலியம் முதலிய பொருள்களால் பாண்டவர் குடியிருப்பதற்குப் பெரிய மாளிகை கட்டி முடித்தான். அதற்கு அரக்கு மாளிகை என்று பெயர். அவ்வீட்டில் பாண்டவர் நித்திரை செய்யும் பொழுது நள்ளிரவில் நெருப்பு வைத்துவிட்டான். அப்புறம் சூதாடி இராஜ்யத்தை அபகரித்துக்கொண்டு அவர்கள் ஐவரையும் மனைவியுடன் வனத்தில் ஓட்டினான். துர்வாச முனிவருக்கு விருந்தளித்து அவ்வண்ணமே பாண்டவரிடத்திலும் அக்காலத்திற் சென்று விருந்தருந்தும் வண்ணம் வரம் வேண்டினான். எண்ணில் அடங்காத இவ்வளவு அக்கிரமங்களைச் செய்தும் பாண்டவர் கொஞ்சமும் பொருள் பண்ண வில்லை. மூத்தவரான தரும் புத்திரர், துரியோதனன் தெரியாமைத் தனத்தினால் தங்களுக்குத் தீங்கு செய்கிறானே யன்றித் தெரிந்து செய்யவில்லை யென்று அவன் மீது பல தடவையிலும் பக்ஷம் பாராட்டி வந்தார். அவர் பக்ஷத்துக்குக் கீழ் வருவது உதாரணமாகலாம்.

பாண்டவர் வனத்தில் வாசம் செய்கையில் அவர்களுக்கு அவமானத்தை உண்டு பண்ண வேண்டும் என்று துரியோதனன் தனது சகோதரர்களுடன் ஆடம்பரமாக இராஜஸ்திரீகளை அழைத்துக்கொண்டு அந்த வனத்துக்கு விளையாட வந்திருந்தான். அங்குச் சித்திரசேனன் என்ற அந்தருவவரசன் காவலில் இருந்த பூஞ்சோலையில் தங்கிப் பூக்களைப் பறித்தும், புனலில் விளை பாடியும் சந்தோஷித் திருக்கையில் அந்தக் கருதருவன் வந்து அவர்கள் அனைவரையும் மனைவிமார்களோடு சேர்த்துக்கட்டிச் சிறை செய்து தேரில் வைத்துக்கொண்டு சென்றான். அச் செய்தி சேவகர்களால் தரும் புத்திரருக்குத் தெரிந்தது. அவர் கண்ணீர் விட்டுக் கலங்கிப் பீமனையும் அர்ச்சுனனையும் அனுப்பி அவர்களை மீட்டுவரச் செய்தார். துரியோதனன் பாண்டவர்களுக்கு அவமானம் விளைக்கவேண்டு மென்று செய்த காரியம் முடிவில் அவனுக்கே அவமானமாக வந்து முடிந்தது. அவன் நிமிர்ந்து நோக்க முடியாமல் தரும் புத்திரருக் கெதிரில் நிலத்தை நோக்கி நின்றுகொண்டிருந்தான். யுதிஷ்டிரர் அவனைப்பார்த்துத் ’துரியோதனா! இனி இப்படி. அஜாக்கிரதையாகப் பெண்களை அழைத்துக்கொண்டு வெளியில் வராதே ; அது குலத்துக்கே அவமானம் விளைப்பது போலாகும்' என்று புத்தி சொல்லிப் பட்டணத்துக்கு அனுப்பினார். ஆதலால், அவரைப்போன்ற மேலானவர்களுக்கு எவ்வளவு துன்பம் செய்தாலும் அவர்கள் உதவியே செய்வார்கள்.
--- மகாபாரதம்.
--------

27. புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது.

புகைக்கினும் - (நெருப்பிலிட்டுப்) புகையச் செய்தாலும், கார் அகில் - கரிய அகிற் கட்டை , பொல்லாங்கு - துர் நாற்றம், கமழாது - வீசாது.

27. ஆதிகாலத்தில் உத்தானபாதன் என்று ஓர் உயர்ந்த அரசன் இருந்தான். அவனுக்குச் சுருசி சுநீதி என்று இரண்டு மனைவிகள். சுருசியின் வயிற்றில் உத்தமன் என்பவனும், சுநீதியின் வயிற்றில் துருவன் என்பவனும் பிறந்தார்கள். சுருசி அரசன் அன்புக்கு இருப்பிடமாக இருந்துவந்த படியினால் அவள் புத்திரனுக்கு அரசன் ஆதரவு அதிகமாகக் கிடைத்தது. ஒருநாள் உத்தமன் தந்தையின் மடியில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந் தான். அங்குத் தற்செயலாக வந்த துருவன் தானும் அரசன் மடியில் அங்ஙனம் அமரவிரும்பிச் சமீபம் சென்றான். அப்பொழுது சுருசி இடையில் வந்து தடுத்துச் ‘சிறுவனே! பேராசை கொள்ளாதே; நீ உத்தமனைப் போல உட்கார்ந்து விளையாடுவதற்கு என் வயிற்றில் வந்து பிறந்திருக்க வேண்டும்.' என்று சொல்லி நிறுத்தி விட் டாள்.

ஐந்தாம் பருவமும் நிரம்பப் பெறாத துருவன் சிறிய தாயின் அந்தச் சொல்லைப் பொறுக்கமாட்டாமல் அழுகையும் கோபமும் அதிகமாகி உடனே தவம் செய்யப் போனான். அப்பொழுது இந்திரன் அவனுக்கு நடுவழியில் பலவிதமான மாய்கைகளை உண்டுபண்ணி அவன் மனத்தைக் கலைத்துப் பயப்படுத்தினான். பின்னர் வசிஷ்டர் முதலான சப்தரிஷிகளும் அவனுக்குத் தவத்தின் கஷ்டங்களைத் தெரியப்படுத்தி – ’உன்னால் தவம் செய்ய முடியாது. உடனே வீட்டுக்குப் போய்ச் சேர்' என்று சொல்லித் தடை செய்தார்கள். அவன் அவற்றிற் கெல்லாம் கொஞ்சமும் மனம் கலங்கவில்லை. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தவஞ் செய்து வரம் பெறாமல் வீட்டுக்குத் திரும்ப மாட்டேன் என்று அவர்களுக்கு உறுதியாய்க் கூறினான். முனிவர்கள் அவன் விடாப்பிடிக்கு மகிழ்ச்சி யடைந்து அஷ்டாக்ஷர மகாமந்திரத்தை அவனுக்கு உபதேசித்து அநுக்கிரகித்துச் சென்றார்கள். அப்புறம் துருவன் அம்மந்திர மகிமையினால் நெடுங்காலம் வரையில் தவஞ் செய்து விரும்பிய வரங்களைப் பெற்றான். ஆதலால், முயற்சியுள்ளவர்களைப் பலவிதமாகப் பயப்படுத்தினாலும் அவர்கள் மனம் கலங்கித் தொடங்கிய தொழிலை விட்டு விடமாட்டார்கள்.
-- பாகவதம்.
--------------

28. கலக்கினும் தண்கடல் சேறா காது.

கலக்கினும் - கலக்கினாலும், தண்கடல் - குளிர்ச்சி பொருந்திய கடல், சேறாகாது – சேறாக மாட்டாது.

28. 26- வது கதை துரியோதனன் துர்க்குணத்தை பற்றி உங்களுக்குத் தெளிவாகத் தெரிவித்திருக்கின்றது. அவன் இயற்கையிலேயே துர்க்குணம் நிரம்பினவன். அவனுக்குப் பீஷ்மர், துரோணர், விதுரர் முதலான பெரியவர்கள் சாமம், தானம், பேதம், தண்டம் என்ற சதுர்விதமான உபாயங்களாலும் தருமங்களையும் நீதிகளையும் விசேஷமாக உபதேசம் செய்தார்கள். மைத்திரேயர் முதலான முனிவர்கள் வந்து நயத்திலும் பயத்திலும் மாகப் பலவகைப்பட்ட நல்லுபதேசங்களைச் செய்தார்கள். எவ்வளவு செய்தும் அவன் கொஞ்சமாவது நல்ல குணத்தை அடையவில்லை. அவர்கள் உபதேசங்கள் ஆற்றில் கரைத்த பெருங்காயத்தைப்போலப் பயன்படாமல் அழிந்து போயின. அவன் முடிவுவரையில் துஷ்டனாகவே யிருந்து இறந்து போனான். ஆதலால், துஷ்டர்களுக்கு எவ்வளவு உபதேசம் பண்ணினாலும் அவர்கள் கொஞ்ச மாவது திருத்தமடையமாட்டார்கள்.
--- மகாபாரதம்.
----------

29. அடினும் பால் பெய்துகைப் பறாது பேய்ச் சுரைக்காய்;
ஊட்டினும் பல்வி.ரை உள்ளி கமழாது.

பால்பெய்து - பாலைவிட்டு, அடினும் - சமைத்தாலும், பேய்ச் சுரைக்காய் - பேய்ச்சுரைக்காயானது, கைப்பு அறாது - கசப்பு நீங்காது ; பல்விரை - பல வாசனைகளை, ஊட்டினும் - சேர்த்தபோதி லும், உள்ளி - உள்ளிப்பூண்டு, கமழாது - (நல்ல வாசனை) வீசாது.

29. வெகுகாலத்துக்கு முன்பு சந்திரவம்சத்தில் யயாதி என்று ஒரு மன்னவன் இருந்தான். அவன் உயர்ந்த தருமங்களை உலகத்தில் செய்து அதன் பயனால் சுவர்க்கத்துக்குச் சென்று நெடுங்காலம் வரையில் சுகங்களை அநுபவித்துக்கொண்டிருந்தான். அவன் ஒருநாள் இந்திரன் எதிரில் கருவத்தினால் தன்னைப் புகழ்ந்து கொண்ட குற்றத்துக்காக நிலத்தில் தள்ளப்பட்டு, அஷ்டகன் முதலான நான்கு முனிவர்களுக்கும் நடுவில் வந்து விழுந்தான். பிற்பாடு மெள்ள மெள்ள அவர்கள் நட்பை அடைந்து அவர்கள் கேட்டுக்கொண்டதன் மேல் ஆச்சிரம தருமங்களையும் தன் வரலாற்றையும் அவர்களுக்குச் சொல்லி அவர்களுடன் அவ்வாச்சிரமத்திலேயே இருந்து வரத் தொடங்கினான். சில நாள் கழித்து அஷ்டகன் முதலான நான்கு முனிவர்களையும் உடனே அழைத்துவரும் படி இந்திரன் தனது விமானத்தை அனுப்பியிருந்தான். அவர்கள் ’யயாதி மன்னவன் இல்லாமல் நாங்கள் வர மாட்டோம்’ என்று தங்கள் தவத்தின் ஒரு பாகத்தை அம்மன்னவனுக்குக் கொடுத்து அவனையும் தங்களுடன் சுவர்க்கத்துக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். ஆதலால், பெரியவர்களுடன் ஒருநாள் பழகினாலும், அப்பழக் கம் நல்ல பலனைத்தரும்.
-- மகாபாரதம்.
-----------

30. ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை
இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே.

ஒருநாள் - ஒரு தினம், பழகினும் - பழகினாலும், பெரியோர் - பெரியவர்களுடைய, கேண்மை - சிநேகமானது, இருநிலம் - பெரிய பூமி, பிளக்க - வெடிக்கும்படி, வேர் வீழ்க்கும் - வேரூன்றி நிற்கும். ஏ- அசை.

30. ஆதிநாளில் பாஞ்சால தேசத்துக்குத் தலைவனாகிய துருபத மன்னவன் துரோணர் என்றவரோடு அக்நிவேசிய முனிவரிடத்தில் பலவருஷங்கள் வரையில் கல்வி பயின்று வந்தான். அவன் தன் அறியாமைத் தனத்தினால் மறந்து போன மந்திரங்களை-யெல்லாம் துரோணாசாரியரிடத்தில் மறுபடியும் கற்றுக்கொண்டு தநுர்வித்தையில் தேர்ச்சியடைந்தான். பின்னர் இருவரும் குருவிடம் விடை பெற்றுக்கொண்டு பிரிந்து செல்கையில் அத்துருபதன் தன் நன்றி யறிதலின் பொருட்டு 'ஐயா துரோணரே! எனக்கு இராஜ்யாதிகாரம் கிடைத்த பிற்பாடு தங்களுக்குப் பாதி ராஜ்யம் தருகிறேன்' என்று வாக்குத் தத்தம் செய்தான். பிற்பாடு மற்றொரு சமயத்தில் துரோணர் அவனிடம் சென்றார். அவன் உபசாரணை செய்யாமல் புதிய மனிதனைப்போலப் பேசாதிருந்து விட்டான். அவர் அதனைப் பாராட்டாமல் ’அரசனே! நான் உன் பழைய நண்பன். நான் ஒரு கறவைப்பசுவை விரும்பி உன்னிடம் வந்திருக்கிறேன்' என்று சொன்னார். துருபதன் உலோப குணத்தினால் ’நான் உன்னை அறியமாட்டேன் ; உடனே சபையைவிட்டு அப்புறம்போ! நீ பேராசைக் காரனாகக் காணப்படுகிறாய்' என்று அவருக்கு அவமான முண்டாகப் பேசினான். துரோணர் மிகுந்த வெட்கத்தோடு திரும்பி வீடுவந்து சேர்ந்தார். ஆதலால், அற்பர்களின் நட்பு என்றும் உறுதியடையாது.
-- மகாபாரதம்.
-------------

31. நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குள் பாசிபோல் வேர்க்கொள்ளாதே.

நூறு ஆண்டு - நூறு வருஷகாலம், பழகினும் - பழகினாலும், மூர்க்கர் - முருடர்களுடைய , கேண்மை - சிநேகமானது, நீர்க்குள் - தண்ணீரில் இருக்கிற , பாசிபோல் - பாசியைப்போல், வேர் கொள்ளாது - வேரூன்றி நிற்காது. ஏ- அசை.

31. திருவள்ளுவர் என்ற தமிழ்ப்புலவரது கல்வித் திறமையைப்பற்றி இரண்டாவது கதை உங்களுக்குத் தெரிய வித்திருக்கிறது. அவர் தம்முடைய குழந்தைப் பருவத்தில் தாழ்ந்த வகுப்பாராகிய வள்ளுவர் சேரியில் வளர்ந்துவந்தார். அவர் கல்வி கற்றுப் பண்டிதராகிச், சென்னபட்டணத்தைச் சார்ந்த மயிலாப்பூரிலிருந்து இல்லறம் நடத்தத் தொடங்கினார். பிற்பாடு, அவர் தமிழ் வேதமாகிய திருக்குறளை இயற்றி அதனை மதுரைச் சங்கத்திற்குக் கொண்டுசென்று அனைவரும் ’அற்புதம்! அற்புதம் !!' என்று புகழ் அரங்கேற்றினார். திருவாலங்காட்டில் கடவுள் திருநடனத்தில் நடந்த தெய்வ ரகஸ்யத்தைக் கூட அவர் தம்மை வந்து கேட்டவர்களுக்கு அறிந்து சொல்லி -யிருக்கிறார். அவர் காலத்திலிருந்த அந்தணர்கள் அவரை அடைந்து பல சந்தேகங்களை நீங்கி வந்தார்கள். அவரைப்போலத் தமிழ்நாட்டில் பெருமை யடைந்தவர் ஒருவரும் இல்லை. ஆதலால், ஒரு வனுக்குப் பெருமையும் சிறுமையும் தன் செயலினாலேயே உண்டாகின்றன.
-- புலவர் புராணம்.
--------------

32. பெருமையும் சிறுமையும் தான் தர வருமே.

பெருமையும் - உயர்வும், சிறுமையும் - தாழ்வும், தான் தா - தானே (தன் செய்கையினால்) உண்டாக்கிக்கொள்ள, வரும் - (தன் னிடத்து) வரும். ஏ - ஆசை .

32. 26- வது கதையைப் படித்துக்கொள்க.
------------

33. சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம்
பெரியோ ராயின் பொறுப்பது கடனே.

சிறியோர் - சிறியவர்கள், செய்த - செய்த, சிறுபிழை - அற்ப குற்றங்கள், எல்லாம் - யாவற்றையும், பெரியோர் ஆயின் - பெரியவர்களாயிருந்தால், பொறுப்பது - பொறுத்துக்கொள்வது, கடன் - அவர்கள் கடமையாம். ஏ - அசை.

33. ஒரு சமயத்தில் வசிஷ்ட முனிவர் தம் சிஷ்யனான ஹோதாஸன் என்பவனைக்-கண்டு எனக்கு மாமிச போஜனம் வேண்டும்' என்று கேட்டார். அவன் தருகிறேன் என்று சொல்லி, நடுவழியில் தற்செயலாக எதிர்ப்பட்ட தன் மனைவியுடன் நெடும்பொழுது பேசிக்கொண்டிருந்து விட் டான். பின்னர்ச் சமையற்காரனைக் கண்டு ’நீ எப்படியாவது முனிவருக்கு மாமிசத்தோடு போஜனம் படைக்க வேண்டும்' என்று சொன்னான். அப்பொழுது அகாலமா யிருந்தபடியினால் அச்சமையற்காரன் அரண்மனையில் தூங்கிக்கொண்டிருந்த ஓரிளங் குழந்தையைக் கொன்று பக்குவ மாகச் சமைத்து முனிவர்க்குப் படைத்தான். வசிஷ்டர் முதலில் கொஞ்சம் தின்று அப்புறம் அது நரமாமிசம் என்பதனை நன்றாக உணர்ந்து கோபித்து அவ்வரசனை நரமாமி சம்புசிக்கின்ற இராக்ஷதனாகும் வண்ணம் சபித்தார். அவ் வரசின் பின்பு கன்மாஷ-பாதன் என்ற பெயரோடு விசுவாமித்திரர் தூண்டுதலினால் மயங்கி வனத்தில் தவம் செய்து வந்த அவருடைய நூறு புத்திர்களையும் கொன்று உணவாகத் தின்றுவிட்டான். வசிஷ்டர் புத்திரசோகத்தினால் வருந்தித் தம் உயிரைத் துறக்கப் பலவிதங்களிலும் பிரயத்தனம் பண்ணினார். அவைகளில் ஒன்றும் பயன்பட வில்லை. பிற்பாடு, துக்கம் தணிந்து கன்மாஷபாதன் செய்த பெருங்குற்றம் தமது சாபத்தினால் வந்த தீங்கே யன்றி வேறில்லையென்று அதனை மனத்தில் கொள்ளாமல் அவன் சாபத்தை நீக்கி முன்போலவே அவனை அயோத்திக்கு அழைத்து வந்து அரசனுமாக்கினார். ஆதலால், அதிகமான குற்றம் செய்தவர்களுக்கும் பெரியவர் சில சமயங்களில் அநுக்கிரகம் பண்ணுவதுமுண்டு.
-- மகாபாரதம்.
--------------

34. சிறியோர் பெரும்பிழை செய்தன ராயின்
பெரியோர் அப்பிழை பொறுத்தலும் அரிதே.

சிறியோர் - சிறியவர், பெரும்பிழை - பெரிய குற்றங்களை, செய்தனர் ஆயின் - செய்தார்களானால், பெரியோர் - பெரியவர்கள், அப்பிழையும் - அந்தப்பெரிய குற்றத்தையும், பொறுத்தல் - சகித்துக்கொண்டிருத்தல், அரிது - அரிதாகும். (ஒருசமயம் பொறுத்தாலும் பொறுப்பார்கள்.) ஏ - அசை.

34. வெகுகாலத்துக்கு முன்னர் மதுரைப் பட்டணத்தில் கீரன் என்று ஒருவன் இருந்தான். அவன் சுறுசுறுப்பும் விடாமுயற்சியும் உள்ளவன். ஆனால், தாழ்ந்த குலத்தில் பிறந்தவன். அவன் உறவினர் சங்குகளை அறுத்து வேலை செய்து விற்று வருவது வழக்கம். சங்கு சமுத்திரத்தில் உற்பத்தியாகும் ஒருவகைப் பூச்சியின் கூடு. அக்கூட்டின் மேல் நீளமான முட்கள் முளைத்திருக்கும். அவற்றை வாளினால் அறுத்து மெருகு கொடுப்பார்கள். வேலை செய்யும் இடங்களில் உள்ளே இருக்கும் பூச்சிகளை எடுத்தெறிவதனால் ஒருவகையான கெட்டநாற்றம் எப் பொழுதும் விடாமல் வீசிக்கொண்டிருக்கும். கீரன் தனது இளம்பருவத்தில் அவ்வேலை செய்வதற்கு மனம் வராமல் பள்ளிக்கூடத்துக்குப் போய்ப் படிக்கத் தொடங்கினான். அவனுக்குப் படிப்பில் பெரிய ஆசை இருந்தது. அவன் உபாத்தியாயருக்குச் சம்பளம் கொடுத்துப் படிக்கும் நிலைமையில் இல்லாதிருந்தபடியினால் அவருக்குக் குற்றேவல் புரிந்து இரவும் பகலும் தமிழ்ப்பாஷையை விடாமல் கஷ்டப்பட்டுப் படித்துச் சில வருஷங்களுக்குள் அனைவரும் மதிக்கும்படியான பெரிய பண்டிதன் ஆனான்.

அப்பொழுது மதுரைப் பட்டணத்தில் இருந்த பாண்டிய மகாராஜாவின் சபையில் பிரதான பண்டிதன் வேலை காலியாயிற்று. தமிழ்நாட்டுப் பண்டிதர்கள் அந்த வேலையைத் தங்களுக்குக் கொடுக்கவேண்டும் என்று அரசனிடத்தில் வந்து போட்டி செய்யலானார்கள். ஒருநாள் அரசன் அவர்கள் எல்லாரையும் ஒருமிக்க வரச்செய்து பரிஷிக்கத் தொடங்கினான். கீரனும் அந்தப் பரிக்ஷைக்கு வந்திருந்தான். பண்டிதர்கள் அறிவிலும் குலத்திலும் தாழ்ந்தவன் என்று அவனை அலஷ்யம் செய்தார்கள். ஆனால், காரியம் மாத்திரம் அவர்கள் எண்ணப்படி நிறைவேறவில்லை. பரிக்ஷையில் அவன் தான் முதலில் தேரினான். பாண்டியராஜன் சந்தோஷித்து எல்லாத் தமிழ்ப் பண்டிதர்களுக்கும் அவனையே தலைமைப் பண்டிதனாக நியமித்து நற்கீரன் என்ற பெயரையும் பிருதுகளையும் கொடுத்துக் கவுரவப் படுத்தினான். நற்கீரன் படியாம-லிருந்தால், அவனுக்கு அந்தக் கவுரவமான வேலை கிடைத்திருக்க மாட்டாதல்லவா! ஆதலால், ஒருவன் பிச்சை யெடுத்தாவது படித்தலைச் செய்யவேண்டும்.
-- புலவர் புராணம்.
-----------

35. கற்கை நன்றே கற்கை நன்றே ;
பிச்சை புகினும் கற்கை நன்றே.

கற்கை - கற்றல், நன்று - நல்லதாகும். கற்கை - கற்றல், நன்று - நல்லதாகும். பிச்சை புகினும் - பிச்சையெடுத்தும், கற்கை - நூல் களைக்கற்றல், நன்று - நல்லதாகும். ஏ - மூன்றும் அசைகள்.

35. முற்காலத்தில் பத்திராசலத்தில் சந்தன குமாரன் என்று ஒரு அரசகுமாரன் இருந்தான். அவன் கல்வி கற்காமல் எழுத்தின் மணமறியாத மூடசிகாமணியாக இருந்து வந்தபடியினால் அரசன் வருத்தமுற்று அவனை வெளியில் துரத்திவிட்டான். அவன் நாடோடியாகத் தேசங்கள் தோறும் திரிந்து, முடிவில் அளகாபுரி யரசன் அரண்மனையின் ஓரமாக வந்து கொண்டிருந்தான். அப்பொழுது உப்பரிகையில் உலாவிக்கொண்டிருந்த அரசன்மகள் அவனுடன் சில விஷயங்கள் பேசித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு திருமுகம் எழுதி அவன் முன்னர் எறிந்தாள். அரசகுமாரனுக்கு அக்கடிதத்தைப் படித்துத் தெரிந்துகொள்ளச் சக்தியில்லை.
அவன் அப்பட்டணத்துக்கு வெளியிலிருந்த ஒரு சத்திரக்காரனைக் கண்டு 'நான் இராஜ வம்சம்; என் தகப்பனார் பத்திராசலத்தின் அரசர்; நான் அவர் மூத்த புத்திரன் ; பத்திராசலத்தின் சிங்காசனம் அவர்க்குப் பிற்பாடு எனக்குச் சொந்தமானது ; எங்கள் அரண்மனையில் பல உத்தியோகஸ்தர்கள் இருந்து வருவது அனைவருக்கும் வெளிப்படை. நான் மாத்திரம் சில காரணங்களை முன்னிட்டுத் தேச சஞ்சாரம் செய்ய வந்திருக்கிறேன். இந்தப் பட்டணத்து அரசகுமாரி என்னைக் கண்ட மாத்திரத்தில் இக் கடிதத்தை எறிந்தாள். இதில் என்ன எழுதியிருக்கின்ற தென்பதைச் சீக்கிரம் கண்டறிந்து
வெற்றிவேற்கை சொல்!' என்று கடிதத்தைக் கொடுத்தான். அவன் பிரித்துப் பார்த்துச் சங்கதி தெரிந்து கொண்டு 'ஐயா! உங்களை அரசகுமாரி இப்பொழுதே இவ்வூரைவிட்டு ஓடிப் போகச் சொன்னாள்; இல்லாவிட்டால், உங்களுக்கு மரண தண்டனை கிடைக்குமாம்' என்று மாற்றிச் சொன்னான். அரசகுமாரன் எழுத்து வாசனை அறியாதிருந்த படியினால் அவன் வார்த்தையை மெய்யென்று நம்பி அப்போதே புறப்பட்டு அடுத்த பட்டணம் போய்விட்டான். சத்திரக் காரனுக்கு அக்கடிதம் தெரிந்து போன குற்றத்தினால் அரசகுமாரியும் அவனும் அப்புறம் துன்மாணமாக இறந்து போகலாயிற்று. ஆதலால், படிப்பறிவில்லாத மூடர்கள் தங்கள் குலப் பெருமையைப் பிறரிடத்தில் சொல்லிக் கொள்வது பெருங் குற்றமாகமுடியும்.
--- தமிழறியும் பெருமாள் கதை .
----------

36. கல்லா வொருவன் குலநலம் பேசுதல்
நெல்லினுட பிறந்த பதரா கும்மே.

குலம் நலம் - தன் சாதியின் சிறப்பை, பேசுதல் - சொல்லிக் கொள்ளுதலை மேற்கொண்ட, கல்லா - படியாத , ஒருவன் - ஒரு மனிதன், நெல்லினுள் - நெல்லினிடத்தில், பிறந்த - உண்டான , பதர் ஆகும் - பதருக்கு ஒப்பாவான், ஏ - அசை.

36. ஆதிநாளில் இருசிகர் என்ற முனிவருக்குச் சுனச்சேபன் என்று ஒரு புத்திரன் இருந்தான். அவன் படிப்பையும் ஒழுக்கத்தையும் ஒருமிக்கக் கைவிட்டவன். படிப்பு இன்றியமையாத தென்று அவனுக்கு எத்தனை தடவை எடுத்துச் சொல்லியும் அவன் கொஞ்சமாவது கவனிக்கவில்லை. அதனால், தாயும் தந்தையும் அவன் மீது அருவருப்படைந்து வந்தார்கள். அப்பொழுது அம்ப ரீஷன் என்ற மன்னவன் நரமேதம் என்னும் ஒரு பெரிய யாகத்தை ஆரம்பித்து அதற்கு நாபசுவாக ஒரு மனிதனை விலைக்கு வாங்க வனத்துக்கு வந்திருந்தான். இருசிக முனிவர் அதிகமான பொருளைப் பெற்றுக்கொண்டு அச்சுனச்சேபனை அரசனுக்கு நரபசுவாக விலைப்படுத்தி விட்டார். அவன் அம்பரீஷமன்னவனுடன் வந்து கொண்டிருக்கையில் தற்செயலாக நடுவழியில் எதிர்ப்பட்ட விசுவாமித்திர முனிவரைக் கண்டு தன் பரிதாப நிலைமையைக் கூறி வருந்தினான். அம்முனிவர் மனமிரங்கி அவனுக்கு ஒரு மகா மந்திரத்தை உபதேசம் பண்ணி அவனையும் அரசன் யாகத்தையும் ஒருமிக்கக் காப்பாற்றினார். அவர் இல்லாவிட்டால் அவன் அநியாயமாக இறந்து போயிருப்பான். ஆதலால், அந்தண குலத்தில் பிறந்திருந்தாலும் கல்வியில்லாமற்போனால் சுனச்சேபனைப் போலத் தாழ்ந்த நிலைமையை அடையவேண்டும்.
-- இராமாயணம்.
---------

37. நாற்பாற் குலத்தின் மேற்பா லொருவன்
கற்றில னாயின் கீழிருப் பவனே.

நால்பால் - (அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்று சொல்லப்படுகின்ற) நான்கு வகைப்பட்ட , குலத்தில் ஜாதிக்குள், மேல்பால் - மேல்வகுப்பாகிய (அந்தணர் குலத்திற் பிறந்த), ஒருவன் - ஒரு மனிதன், கற்றிலன் ஆயின் - படியாதவனாக இருந்தால், கீழ் இருப்பவன் - கீழான இடத்தில் இருக்கத் தக்கவனாவான். எ- அசை.

37. 34-வது கதையைப் படித்துக்கொள்க.
-----------

38. எக்குடி பிறப்பினும் யாவரே யாயினும்
அக்குடியிற் கற்றோரை வருக வென்பார்.

எ குடி - எந்தக் குலத்தில், பிறப்பினும் - பிறந்தாலும், யாவ ரேயாயினும் - எவர்களாயிருந்தாலும், அகுடியில் அந்தக் குலத்தில், கற்றோரை - படித்தவர்களை, வருக என்பார் - வாருங்கள் என்று அழைத்து மரியாதை செய்வார்கள்.

38. முற்காலத்தில் சுத்திமுற்றம் என்ற கிராமத்தில் ஒரு புலவர் இருந்தார். அவர் மனைவி உத்தம குணம் நிறைந்தவள். புலவர் எப்பொழுதும் படித்துக்கொண்டிருந்த படியினால் அவர் குடும்பம் தரித்திரத்தில் முழுகிக் கிடந்தது. அவ்வுயர்ந்த மனைவி அவருக்குக் குடும்பத்தின் வறுமையைக் கொஞ்சமும் தெரியப்படுத்துவதில்லை. தான் வெளியிற் சென்று கூலிநெல் குற்றி அவ்வரிசியைக் கொண்டு புலவரைக் காப்பாற்றி வந்தாள். அவருக்குப் பணிவிடை புரிந்த வேளைபோக ஒழிந்த வேளைகளில் மாத்திரம் சென்று நெல் குற்றுவதனால் அவளுக்குப் போதுமான அளவு கூலி கிடைப்பதில்லை. அவள் கிடைத்த அரிசியைச் சமைத்துக் கணவனுக்குப் படைத்து விட்டுத் தான் தினந்தோறும் வடித்த கஞ்சியைப் பருகி வயிறு வளர்ப்பது வழக்கம். மனைவியின் கஷ்டம் நெடுநாள் வரையில் பண்டிதருக்குத் தெரியாது.

அவள் ஒருநாள் அவருக்குச் சாப்பாடு பரிமாறுகையில் உணவில்லாக் குறையினால் வருந்திக் கீழே விழுந்து விட்டாள். புலவர் அதன் காரணத்தை மெள்ள மெள்ளக் கேட்டுத் தெரிந்து கொண்டு, அப்பொழுதே புறப்பட்டு மதுரைப்பட்டணம் சென்று பாண்டியன் தரிசனத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அதிக தரித்திரராக இருந்தபடியினால் அவருக்கு அரசனுடைய தரிசனம் எளிதில் கிடைக்கவில்லை. அவர் ஒருநாளிரவில் இருப்பதற்கும் இடமில்லாமல் வாடைக்காற்றினால் வருந்தித் தேர்முட்டி யொன்றில் தங்கித், தமது தரித்திர நிலைமையை விளக்கித் தம் மனைவிக்கு 'நாராய்! நாராய்! செங்கால் நாராய்!' என்று நாரைவிடு தூதாக ஒரு பாட் டைப் பாடினார். அப்பாட்டில், நாரையின் மூக்குக்குப் பிளந்த பனங்கிழங்கின் நிறம் உவமிக்கப் பட்டிருந்தது. அங்கு மாறுவேடத்தோடு தற்செயலாக வந்த அரசன் அச்செய்யுளைக் கேட்டுச் சந்தோஷித்து அவரைச் சபைக்கு அழைத்துக்கொண்டு சென்று அனைவருக்கும் முன்னிலையில் பலவிதமாகக் கவுரவப்படுத்தினான். பிற்பாடு, அப்புலவர் பாண்டியராஜனிடத்தில் பல்லக்கு முதலான பல வரிசைகளையும் பெற்று அதிகச் சிறப்போடு தமது ஊருக்குத் திரும்பிவந்து நெடுங்காலம் வரையில் சந்தோஷயாகச் செல்வத்தில் வாழ்ந்துவந்தார். ஆதலால், உயர்ந்த பண்டிதர்களை அரசர் விரும்பி ஆதரிப்பார்கள்.
-- புலவர் புராணம்.
-------------

39. அறிவுடை யொருவனை அரசனும் விரும்பும்

அறிவு உடை - கல்வியறிவுள்ள, ஒருவனை - ஒருமனிதனை, அரசனும் - அரசனும், விரும்பும் - விரும்புவான்.

39. முன்னர்ச் சந்திரகுலத்தில் துஷ்யந்த மன்னவனுக்குப் பரதன் என்று ஒரு புத்திரன் பிறந்தான். அவன் தனது ஒப்பற்ற ஆளுகையினால் உலகத்துக்குச் சக்ரவர்த்தியாகி நல்லொழுக்கத்திலும் நீதியிலும் நிகரற்றவனானான். அவனுக்குச் சில மனைவிகள் இருந்தனர். அவர்கள் வயிற்றில் அவனுக்கு நூறு புத்திரர் பிறந்தார்கள். அவர்கள் அனைவரும் சிறுபிராயம் தொடங்கி அதிக மூடர்களாக இருந்துவந்தபடியினால் தற்தை அவர்களை அநாதரவு செய்யத் தொடங்கினான். அதனை யறிந்த அவன் மனைவிமார்கள் அச் சிறுவர்களை வனத்துக்கு அகற்றி விட்டார்கள். சக்ரவர்த்தி அதற்குக் கொஞ்சமும் வருத்தப் படவில்லை. அசட்டுப் பிள்ளைகளினால் ஒருகுலம் பாழ்படுவதைக் காட்டிலும், அந்தக் குலம் சந்ததியில்லாமலேயே அழிந்து போவது சிலாக்கியமானது என்று தீர்மானித்துக் கொண்டான். பிற்பாடு, முனிவர்கள் சக்ரவர்த்தியின் கருத்தை அறிந்து வனத்தில் ஒன்றுசேர்ந்து அவருக்கு யாகத்தின் முன்னிலையில் புமன்யு என்ற உயர்ந்த புத்திரனை உண்டுபண்ணிக் கொடுத்தார்கள். அப்புறம் அவனால் சந் திர வம்சம் பெருகித் தழைத்தது. ஆதலால், அறிவில்லாத பல பிள்ளைகள் பிறந்து ஒரு குலத்தைப் பாழ் செய்வதைக் காட்டிலும், அந்தக் குலம் சந்ததியில்லாமல் அழிந்து போவது சாலச்சிறந்தது.
-- மகாபாரதம்.
----------

40. அச்சமுள் ளடக்கி அறிவகத் தில்லாக்
கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி
எச்சமற் றேமாந் திருக்கை நன்றே.

அச்சம் - பயத்தை, உள் அடக்கி - உள்ளே கொண்டு, அறிவு - விவேகமானது, அகத்து இல்லா - மனத்தில் இல்லாத, கொச்சை மக்களை - இழிவான பிள்ளைகளை, பெறுதலின் - பெற்று வளர்த் தலைக்காட்டிலும், அக்குடி - அந்தக் குலமானது, எச்சம் அற்று - சந்ததி யில்லாமல், ஏமாந்து - (பிள்ளை வேண்டுமென்று) ஆசைப் பட்டுக்கொண்டு, இருக்கை - தங்கியிருத்தல், நன்று - நல்லது. ஏ - அசை .

40. 3-வது கதை இராவணனைப்பற்றி நன்றாகத் தெரிவித்திருக்கின்றது. அவனுக்கு மிகவும் நீண்ட பலமுள்ளதான இருபது கைகள் இருந்தன. அவன் அவற்றால் நல்லவர்களுக்குச் சிறிதும் உபகாரம் செய்யவில்லை. நல்லவர்களுக்கு உபத்திரவம் செய்வதற்கு மாத்திரம் அவற்றை அதிகமாக உபயோகித்துக்கொண்டு வந்தான். முடிவில், அக்கரங்களால் அவன் வனத்தில் வந்திருந்த இராமன் மனைவியாகிய சீதையைத் தூக்கிக்கொண்டு வந்து தன் பட்டணத்தில் சிறைசெய்துவிட்டான். இராமன் அதனை யறிந்து சுக்கிரீவன் முதலான குரங்குப்படைகளைத் துணைகூட்டிக்கொண்டு தென்கடலுக்கு அணை கட்டி இலங்கையை முற்றுகையிட்டான். அந்த யுத்தத்தில் இராவணன் தன் படைவீரர் புத்திரர் முதலிய பலரையும் நாசமாக்கிக்கொண்டு தானும் மரணமடைந்தான். ஆதலால் கைகளினால் பிறருக்கு எப்பொழுதும் உபகாரம் பண்ண வேண்டும். அபகாரம் பண்ணலாகாது.
-- இராமாயணம்.
----------

41. யானைக் கில்லை தானமும் தருமழம்.

தானமும் - (பிறர்க்குக்) கொடுத்தலும், தருமமும் - தருமஞ் செய்தலும், யானைக்கு இல்லை - (நெடிய கைகளையுடைய) யானை (போன்றவர்) களுக்கு, இல்லை - (உண்டாதல்) இல்லை.

41. ஆதிகாலத்தில் காந்தார தேசத்துக்குத் தலைவ னான சகுனி யென்பவன் அஸ்தினாபுரம் வந்து சேர்ந்தான். திருதராஷ்டிரன் புத்திரர்களான துரியோதனன் முத லானவர்களுக்கு அவன் மாமனாக வேண்டும். அவன் அவர் களுக்குப் பொய்யன்பு காட்டி நன்மை செய்வதாக வெளி யில் நடித்துக்கொண் டிருந்தான். அவர்கள் அதனை உண்மையென்று நம்பியிருந்தார்கள். அவன் 'சந்திர வம்ச சிங்காதனத்தைப் பாண்டவர்களுக் கில்லாமல் உங்களுக்குச் சொந்தமாக்குகிறேன்' என்று ஆசை வார்த்தை சொல்லி அவர்களுக்கும் பாண்டவர்களுக் கும் பகையை உண்டுபண்ணிப் பலவிதங்களாலும் அப் பகையை அதிகமாக வளர்த்துக்கொண்டே வந்துவிட் டான். அதனால், அவர்களுக்குக் குருக்ஷேத்திரம் என்ற விடத்தில் பாகம் காரணமாகப் பெரும் போர் உண்டா யிற்று. அந்த யுத்தத்தில் சகுனி துரியோதனன் முத லான நூற்றுவரையும் ஒருவர் பின் ஒருவராகத் தொலைத்துத் தானும் இறந்து போனான். ஆதலால் உருத்திராக்ஷப் பூனை போன்ற வேஷக்காரர்களை உலகத்தில் நம்பலாகாது.
--- மகாபாரதம்.
-----

42. பூனைக் கில்லை தவமும் தயையும்.

பூனைக்கு - (கண்களை மூடிக்கொண்டு யோகம் செய்யும் தபசிகளைப்போல் நடிக்கின்ற) பூனை போன்றவர்களுக்கு, தவமும் - விரதமும், தயையும் - கருணையும், இல்லை - ( உண்டாதல்) இல்லையாம்.

42. முன்னொரு காலத்தில் சவ்வீரதேசத்தில் ரகூகணன் என்று ஒரு அரசன் இருந்தான். அவன் கபில முனிவரிடத்தில் ஞானோபதேசம் பெறுவதற்காகப் பல்லக்கில் ஏறி அவர் ஆச்சிரமத்துக்குப் போனான். பல்லக்குப் போயிகள் நடுவழியில் உன்மத்தனைப் போலத் திரிந்து கொண்டிருந்த ஜடபரதர் என்ற மெய்ஞ்ஞானியைப் பிடித்துத் தங்களுடன் பல்லக்கைச் சுமந்து கொண்டுபோகப் பண்ணினார்கள். அவரும் மறுக்காமல் அப்படியே சுமந்து கொண்டு போனார். ஆனால், அவருக்கு மற்றவருடன் சரியாக அடியெடுத்துவைத்து நடக்க முடியவில்லை. எறும்பு முதலான சிற்றுயிர்கள் எங்குத் தமது காலின் கீழ் அகப்பட்டு இறந்து போகுமோ என்று நிலத்தை நோக்கிச் சென்றபடியினால் ஏறுமாறாக அடிவைத்து நடக்க நேரிட் டது. அதனால், அரசன் சிவிகையை நிறுத்தச் சொல்லி அவரைத் தெரிந்து கொண்டு தன்னை மன்னிக்கும்படி அவர் காலில் விழுந்து பலவாறு வணங்கி வேண்டினான். ஜடபரதர் சிரித்தவண்ணமே 'அரசனே! நீ எனக்கு ஒரு குற்றமும் செய்யவில்லை. உன் மேல் எனக்குக் கொஞ்சமும் கோபம் கிடையாது' என்று சமாதானம் சொல்லி அவனுக்கு ஞானோபதேசமும் செய்து போனார். ஆதலால், அவரைப்போன்ற உண்மை ஞானிகளுக்கு உடல் சம்பந்த மான இன்பதுன்பங்கள் என்றும் உண்டாவதில்லை.
--- பாகவதம்.
----------

43. ஞானிக் கில்லை என்பழந் துன்பமும்.

ஞானிக்கு - (உண்மை ) ஞானிக்கு, இன்பமும்- சுகமும், துன்ப மும்- துக்கமும், இல்லை - (உண்டாதல்) இல்லையாம்.

43. முன்னர்க் குருக்ஷேத்திரத்தில் பாண்டவர்களுக்கும் துரியோதனாதிகளுக்கும் பாகம் காரணமாகப் பெரும்போர் உண்டாயிற்றென்று 9-41-வது கதைகளில் படித்திருக்கிறீர்-களல்லவா ! அந்தச் சண்டையில் அர்ச் சுனன் தன்னை எதிர்த்து வந்த எல்லா அரசர்களையும் கொல்கிறேன் என்று சபதம் செய்து கொண்டு போர்க்கோலம் பூண்டு யுத்த பூமியில் வந்து நின்றான். அப்பொழுது பீஷ்மர் துரோணர் முதலான பந்துக்களும் கர்ணன் முதலான பகைவர்களும் அவனை எதிர்த்துச் சண்டை செய்ய முன்வந்தார்கள். அவன் கொஞ்சமும் தாக்ஷண்யம் பாராமல், தனது காண்டீவம் என்ற வில்லை வளைத்து அஸ்திரங்களைத் தொடுத்து அவர்கள் அனைவரையும் கொன்று ஜயத்தையும் சபதத்தையும் நிலை நிறுத்தினான். ஆதலால், சூரர்கள் இரணகளத்தில் பந்துக்கள் பகைவர் என்று வித்தியாசம் பார்க்கமாட்டார்கள்.
--- மகாபாரதம்.
------------

44. சிதலைக் கில்லை செல்வமும் செருக்கும்.

சிதலைக்கு - (அகப்பட்ட பொருள்களைத் தின்று வளர்கின்ற) செல்லுக்கு, செல்வமும் - (பிறருக்கு உதவி செய்கின்றவர்களுடைய) செல்வம் என்றும், செருக்கும் - (தாமே யுண்டு) களிக்கின்ற (உலோபிகளின்) பொருள் என்றும், இல்லை - வேறுபாடு இல்லை யாம். (சூரர்களுக்கு இரணகளத்தில் பகையும் உறவும் இல்லை யென்பது பொருள்.)

44. ஆதிநாளில் சேதி தேசத்தில் சிசுபாலன் என்று ஒரு துஷ்ட அரசன் இருந்தான். பெரியவர்களையும் நல்ல வர்களையும் தூஷிப்பதில் அவனுக்கு ஆசை அதிகம். அவன் எவ்விடத்துக்குப் போனாலும் அங்குள்ளவர்களை நிந்தித்து ஒரு கலகத்தை உண்டுபண்ணிவிடுவான். அத னால், எல்லாரும் அவனை வெறுத்து வந்தார்கள். அவன் காலத்தில் இந்திரப்பிரஸ்தம் என்ற புராதன பட்டணத்தில் ஒரு பெரிய யாகம் நடந்தது. பாண்டவர்களில் பெரியவரான தருமபுத்திர மகாராஜர் அதனைச் செய்யத் தொடங்கினார். உலகத்தில் இருந்த எல்லா அரசர்களும் எல்லாப் பெரியவர்களும் யாகத்துக்கு வந்திருந்தார்கள். சிசுபாலன் அந்த யாகத்துக்கு வந்து யாரைத் தூஷிக்கலாம் என்று ஆலோசனை பண்ணினான். அவனுக்கு அத்தனை பெயரும் மரியாதை செய்து வணங்கும்படியான ஒரு பெரியவரைத் தூஷித்துத் தன் சாமர்த்தியத்தைக் காட்ட வேண்டுமென்று எண்ணம் உண்டாயிற்று. அச்சபைக்குக் கிருஷ்ணர் என்பவர் தலைவராக விளங்கினார். எல்லாரும் அவருக்கு மரியாதை செய்து வணங்கத் தலைப்பட்டார்கள்.

சிசுபாலன் அவரைத் திருடன் என்றும், துஷ்டன் என் றும், அயோக்கியன் என்றும் வாய்க்கு வந்தபடி தூஷித்து அவருக்கு எவரும் மரியாதை பண்ணக்கூடாதென்று கூவினான். அவரால் தனக்கு மரணமுண்டாகும் என்பதையும் அவரைத் தன்னால் வெல்லமுடியா தென்பதையும் அவன் அறியாமலிருக்கவில்லை. கிருஷ்ணருக்கு அவன் அத்தைமகன் ஆகவேண்டும். 'அவன் செய்யும் தப்பிதங்களில் தினமொன்றுக்கு நூறுபிழைவரையில் பொறுக்கிறேன்' என்று அவர் அவன் தாய்க்கு ஒரு சமயத்தில் வரம் கொடுத்திருந்தார். அவன் வெறி பிடித்தவன் போல அவரை விடாமல் தூஷித்த-படியினால் அது வரத்தின் அளவையும் கடந்து போய்விட்டது. கிருஷ்ணர் அதனை அறிந்து அப்பொழுதே எல்லாருக்கும் எதிரில் அவனைக் கொன்றுவிட்டார். ஆதலால், மூடர்களுக்குப் பயமும் வெட்கமும் தோன்றுவதில்லை.
------ மகாபாரதம்.
------------

45. அச்சமும் நாணமும் அறிவிலோர்க் கில்லை.

அச்சமும் - (பயப்பட வேண்டியவற்றிற்குப் பயப்படுதலும், காணமும் - (பாவச் செயல்களைச் செய்ய) வெட்கப்படுதலும், அறிவு இலோர்க்கு அறிவு இல்லாதவர்களுக்கு, இல்லை - இல்லையாம்.

45. நோயாளிகளால் ஒருவிதமான விரதமும் நோன் பும் அநுஷ்டிக்க முடியா .
-------------

46. நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை.

நாளும்- (விரதம் அநுஷ்டிப்பதற்குரிய கிருத்திகை முதலான நக்ஷத்திரங்களும், கிழமையும் - (வெள்ளி முதலான) கிழமைகளும், நலிந்தோர்க்கு - நோயாளிகளுக்கு, இல்லை - இல்லையாம்.

46. முன்னாளில் சந்திரவம்ச சக்ரவர்த்தியான சமவர்ணன் என்பவனைப் பாஞ்சாலர்கள் எதிர்த்து யுத்தஞ் செய்து அரசு முதலிய எல்லாவற்றையும் அபகரித்துக் கொண்டு அவனை வனத்தில் ஒட்டி விட்டார்கள். அவன் மனைவி மக்களோடு ஸிந்து நதிக் கரையில் நூறு வருஷகாலம் ஜீவனத்துக்கும் வழியில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருந்தி வந்தான். அவனுக்கு உலகத்தில் பல அரசர் பந்துக்களாகவும் சிநேகர்களாகவும் இருந்துங்கூட அவன் கஷ்டகாலத்தில் முன்வந்து உதவி செய்தவர் ஒருவரும் இல்லை. நெடுங்காலம் வரையில் அவன் குடும்பத்தோடு வனத்தில் வெயிலிலும் பனியிலும் மழையிலும் அப்படியே வருந்தித் துன்பமடைந்தான். அப்புறம் அவன் வசிஷ்ட முனிவர் அநுக்கிரகத்தினால் சூரியன் புத்திரியான தபதி யென்பவளை மணந்து கொண்டு இழந்து போன இராஜ்யத்தை மீளவும் அடைந்து சுகிக்கலானான். ஒருவர் பின் னொருவராக எல்லாப் பந்துக்களும் அப்புறம் வந்து அவனுடன் உறவு கொண்டாடத் தலைப்பட்டார்கள். ஆதலால், பொருளில்லாதவர்களுக்கு நண்பர்களும் பந்துக்களும் உதவி செய்யமாட்டார்கள்.
--- மகாபாரதம்.
------------

47. கேளும் கிளையும் கெட்டோர்க் கில்லை.

கேளும் - நண்பரும், கிளையும் சுற்றத்தாரும், கெட்டோர்க்கு - பொருளை இழந்தவர்களுக்கு, இல்லை - இல்லையாம்.

47. 25-வது கதை அரிச்சந்திரனைப்பற்றி ஒருவாறு தெரிவித்திருக்கின்றது. அம்மன்னவன் அயோத்திக்கு அரசனாகவும் உலகத்துக்குச் சக்ரவர்த்தியாகவும் இருந்து வந்தான். எல்லா அரசர்களும் அவனை அடிபணிந்து அவன் கட்டளைக்கு அடங்கி நடந்துவந்தார்கள். அவன் அநேகவிதமான உயர்ந்த யாகங்களைச் செய்தான். பல வகைப்பட்ட தானங்களைப் பண்ணினான். தருமங்களை இயற்றினான். பிற்பாடு, அவனுக்குக் காலம் மாறிப்போயிற்று. அவன் விசுவாமித்திர முனிவருக்குத் தன் அரசைத் தானம் செய்துவிட்டு மனைவியோடுகூடக் காசிப்பட்டணம் போனான். அவன் அம்முனிவருக்குக் கொஞ்சம் பொன் கடன் தரும்படி ஏற்பட்டதனால் அந்தக் கடனுக்காகத் தன் மனைவியை அங்கு ஓர் அந்தணனுக்கு அடிமையாக்கியும், தான் வீரவாகு என்ற ஒரு பறையனுக்கு அடிமையாகியும் சுடுகாடு காத்துக்கொண்டிருந்தான். ஆதலால், செல்வ மும் தரித்திரமும் எக்காலத்திலும் எவ்விடத்திலும் நிலைத் திருப்பதில்லை.
-- அரிச்சந்திர காவியம்.
-----------

48. உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா.

உடைமையும் - செல்வமும், வறுமையும் - தரித்திரமும், ஒரு வழி- ஒரே நிலையில், நில்லா - நிலைத்து நிற்கமாட்டா. (மாறிமாறி வந்து கொண்டே யிருக்கும்.)

48. முன்னாளில் நளன் என்பவன் நிடத நாட்டுக்குத் தலைவனாக இருந்தான். அவன் சூதாட்டத்தில் புஷ்கரனுக்குத் தான் அரசு முதலிய எல்லாவற்றையும் தோற்று விட்டு நிற்பதற்கும் இடமில்லாமல் கற்புக்கரசியான தன் மனைவி தமயந்தியை அழைத்துக் கொண்டு வனத்துக்குப் போனான். அங்கு நடு ராத்திரியில் தரித்திரத்தின் கொடுமையினால் அவளையும் விட்டுப்பிரிந்து காட்டில் அலைந்து அயோத்தி-யரசனான ருதுபர்ண வேந்தனிடத்தில் சமையற் காரனாகவும் குதிரைக்காரனாகவும் அமர்ந்து வயிறு வளர்க்கத் தொடங்கினான். அவன் மனைவி தமயந்தி அந்தக் காட்டில் பலநாள் வரையில் அலைந்து, முடிவில் சேதியரசன் பெண்ணுக்கு அலங்காரம் செய்யும் சேடிப்பெண்ணாக அமர்ந்து வேலை செய்துவந்தாள். நெடுநாளைக்குப் பிற்பாடு தான் அவர்களுக்கு இழந்த இராஜ்யம் திரும்பக் கிடைத் தது. ஆதலால், அரசர்களாயிருந்தா-லுங்கூட வினைவசத்தினால் வருகின்ற கஷ்டங்கள் விடமாட்டா. வந்தே தீரும்.
--- நைஷதம்.
----------

49. குடைநிழலிருந்து குஞ்சர ழர்ந்தோர்
நடை மெலிந் தோபூர் நண்ணினும் நண்ணுவர்.

குடை - குடையின், நிழல் இருந்து - நிழலில் தங்கியிருந்து, குஞ்சரம் - யானையை, ஊர்தோர் - (ஏறி) நடத்தினவர்கள், நடை மெலிந்து - நடத்தலால் சோர்ந்து, ஓர் ஊர் - ஒரு கிராமத்தை , நண்ணினும் - அடைந்தாலும், நண்ணுவர் - அடைவார்கள்.

49. முன்னர் இந்திரப்பிரஸ்தம் என்ற புராதன பட்டணத்தில் பாண்டவர் இராஜசூய யாகம் செய்தார்கள் என்று 44-வது கதையில் படித்திருக்கிறீர்கள். அந்த யாகத்தில் தரும் புத்திரர் ஸம்ராட்' என்னும் உயர்ந்த பட் டத்தை அடைந்தார். அப்புறம் அவர் தமக்குச் சொந்தமான எல்லாவற்றையும் சூதாட்டத்தில் துரியோதனனுக்குத் தோற்றுவிட்டுத் தமது சகோதரரோடும் மனைவி யோடும் வனத்தில் வாசம் செய்யச் சென்றார். அங்குப் பன்னிரண்டு வருஷம் வரையில் வெயிலிலும் மழையிலும் பனியிலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்து பிற்பாடு அக்ஞாதவாசத்தைக் கழிப்பதற்கு விராட் தேசம் போனார். அந்த ஒப்புயர்வற்ற அரசர் சகோதரர்களுடனும் மனைவியுடனும் அவ்வொரு வருஷம் விராடன் வீட்டில் வருந்திக் காலம் கழித்துவந்தார். ஆதலால், அதிகச் சிறப்புள்ளவர்களும் ஊழ்வினை வசத்தால் தாழ்வடைவது உலகத்தில் சகஜமானது. .
---- மகா பாரதம்.
------------

50. சிறப்பும் செல்வமும் பெருமையு முடையோர்
அறக்கூழ்ச் சாலை அடையினு மடை வர்.

சிறப்பும் - உயர்வும், செல்வமும் - ஐசுவரியமும், பெருமையும் - மேன்மையும், உடையோர் - உடையவர்கள், அறம் - தருமமாக (இடப்படுகின்ற ), கூழ் சாலை - அன்ன சாலையை, அடையினும் - சேர்ந்தாலும், அடைவர் - சேருவார்கள்.

50. 12-வது கதையில் தியுமசேனன் என்ற அரசன் கண்ணையும் இராஜ்யத்தையும் இழந்து காட்டில் தரித்திரப் பட்டுக்கொண்டிருந்தானென்றும், அசுவபதியரசன் மகளான சாவித்திரி யென்பவள் அவன் புத்திரனான சத்தியவானைத் தனக்கு நாயகனாக விரும்பி யடைந்தாளென்றும் படித்திருக்கிறீர்கள். அவள் தன் புருஷன் போன சமயத்தில் இயமதருமராஜனைக் கண்டு திருமத் சேனனுக்கு இழந்து போன கண்ணையும் இராஜ்யத்தையும் வரமாகப் பெற்றுக் கொடுத்து அவனுக்கு அதிக மகிழ்ச்சியை உண்டாக்கினாள். திருமசேனன் மருமகள் நற்குணத்தினால் கண்ணையும் இராஜ்யத்தையும் அடைந்து அப்புறம் நெடுங்காலம் வரையில் இராஜ்ய பரிபாலனம் செய்து கொண்டு சுகங்களை அநுபவித்து வந்தான். ஆதலால், அதிருஷ்ட வசத்தினால் சில சமயங்களில் ஏழை களும் அரசராகிறார்கள்.
-- மகாபாரதம்.
--------------

51. அறத்திடு பிச்சைக் கூவி யிரப்போர்
அரசோ டிருந்தா சாளினும் ஆளுவர்.

அறத்து - தருமத்துக்காக, இடு - இடப்படுகின்ற, பிச்சை - பிச்சையை, கூவி - (கெஞ்சிக் கெஞ்சிக்) கூப்பிட்டு, இரப்போர் - யாசிப்பவர்கள், அரசோடு - அரச லஷ்ணத்தோடு, இருந்து - கூடியிருந்து, அரசு - அரசை , -ஆரினும் - ஆண்டாலும், ஆளுவர் - ஆள்வார்கள்.

51. ஒரு சமயத்தில் இந்திரன் சுவர்க்கத்தில் கொலுவில் வீற்றிருந்தான். அப்பொழுது ஊர்வசி யென்பவள் எல்லாத் தேவர்களும் கண்டு களிக்கு வண்ணம் சபையில் வந்து சிறப்பாக நடனம் பண்ணினாள். சபையிலுள்ளவர் நடனத்தில் கவனமாயிருந்தார்கள். அப்பொழுது பிருகஸ்பதி தாமும் அந்நடனம் காணவந்தார். இந்திரன் அவருக்கு எழுந்து மரியாதை பண்ணவில்லை. அவர் கோபம் கொண்டு உன் செல்வம் அழிந்து நீயும் தரித்திரப்படுக' என்று சாபங்கொடுத்து மறைந்து போனார். பின்னர் இந்திரன் அச்சாபத்தினால் எல்லாப் பொருள்களையும் இழந்து தரித்திரமடைந்து நெடுங்காலம் வரையில் வருந்தினான். ஆதலால், தேவர்களாயிருந்தாலுங்கூட ஒருவரையும் கஷ்டங்கள் விடுவதில்லை.
-- திருவிளையாடற் புராணம்.
---------------

52. குன்றத் தனையிரு நிதியைப் படைத்தோர்
அன்றைப் பகலே அழியினு மழிவர்.

குன்று அத்தனை - மலை யளவாக, இருநிதியை - பெரிய திரவியத்தை, படைத்தோர் - படைத்தவர்களும், அன்றைப் பகலே - (தாங்கள் செல்வம் படைத்த) அன்றைத் தினத்திலேயே, அழியினும் - (பொருளை அநுபவியாமல்) இறந்தாலும், அழிவர் - இறப்பார்கள்.

52. வேலூருக்குச் சமீபத்திலுள்ள படை வீடு (பட வேடு) என்பது நெடுங்காலம் வரையில் பல்லவ அரசர்களுக்கு இராஜதானியாக இருந்து வந்தது. நந்தவர்மன் முதலான எண்ணிறந்த பராக்கிரமம் பொருந்திய அரசர்கள் அங்கிருந்து கொண்டு அரசு நடத்தி வந்தார்கள். அங்கே கமண்டலநாக நதிக்கரையில் இடிந்து விழுந்து போன ஆலயங்களும் மண்டபங்களும் இன்னமும் அடுக் கடுக்காகக் காணப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட உயர்ந்த பட்டணம் மண்மேடிட்டு இருந்தவிடம் தெரியாமல் அடியோடு அழிந்து போய்விட்டது. மண்டபங்களின் முக்கால் பாகங்களையும் இப்பொழுதும் மண்மூடி மறைத்துக்கொண்டிருக்கிறது. அதில் ரேணுகையம்மன் கோயில் என்ற ஒரு தேவாலயத்தை யல்லாமல் வேறொன் றும் நல்ல நிலைமையில் காணப்படவில்லை. அந்தப் பட்டணம் காடும் செடியுமாகவே முழுவதும் மாறிப்போயிற்று. ஆதலால், கால் வித்தியாசத்தினால் பெரிய பெரிய பட்ட ணங்களும் சில சமயங்களில் உருத்தெரியாமல் அழிந்து போகின்றன.
--- டிஸ்திரிக்டு மான்யூல்.
-----------

53. எழுநிலை மாடம் கால்சாய்ந் துக்தக்
கழுதை மேய்பாழ் ஆயினு மாதம்.

எழுநிலை - ஏழு அடுக்கினையுடைய , மாடம்- மாடி வீடுகளும், கால் சாய்ந்து - அடியோடு விழுந்து, உக்கு - நொறுங்கி, கழுதை - கழுதைகள், மேய் - மேய்கின்ற, பாழ் - பாழ் நிலம், ஆயினும் ஆகும் - ஆனாலும் ஆகலாம்.

53. முன்னர் மதுரைப் பட்டணத்தில் ஒரு வணிகன் வீட்டில் கலியாணம் நடந்தது. கலியாணச் சடங்கு முடிந்து பெண்ணும் பிள்ளையும் மணப்பந்தலில் இருந்தார்கள். அப்பொழுது ஒரு மூலையில் கட்டியிருந்த பசு வொன்று மேளச்சத்தத்தினால் மருண்டு கயிற்றை அறுத்துக்கொண்டு வந்து பந்தலில் உட்கார்ந்திருந்த பலரையும் விட்டுவிட்டு மணமகனை மாத்திரம் தன் கொம்பினால் குத்திக் கொன்று போயிற்று. அம்மணப்பெண் கணவனை அடைந்த அந்தச் சபையிலேயே அவனை இழந்து விதவையாய் விட்டாள். ஆதலால், தெய்வத்தின் செயலை நம்மால் கொஞ்சமும் அறியமுடியாது.
--- திருவிளையாடற் புராணம்.
----------

54. மணவணி யணிந்த மகளி ராங்கே
பிணவணி யணிந்து தங் கொழுநரைத் தழீஇ
உடுத்த வாடை கோடி யாக
முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர்.

மண அணி - கலியாணக் கோலத்தை, அணிந்த - பூண்ட, மகளிர் - பெண்கள், ஆங்கே - அப்பொழுதே, பிணம் அணி - பிணக் கோலத்தை, அணிந்து - பூண்டு, தம் - தமது, கொழுநரை - கணவர்களை, தழீஇ - தழுவிக்கொண்டு, உடுத்த - (மணத்திற்கு) உடுத்த, ஆடை-புடவையே, கோடி ஆக - அறுப்புப் புடவையாக, முடித்த கூந்தல் - (மணத்திற்குப்) பின்னிய கூந்தலை, விரிப்பினும் விரிப்பர் - விரித்தாலும் விரிப்பார்கள்.

54. துங்கபத்திரை யாற்றுக்கு அருகிலுள்ள விஜய நகரமானது சுமார் அறுநூறு வருஷத்துக்கு முன்பு வித்தியாரண்ய முனிவரால் உண்டுபண்ணப்பட்டது. அது மனித சஞ்சாரமற்ற பம்பாவனத்தை முழுவதும் அழித்து நூதனமாய்க் கட்டினது. மகம்மது டோக்ளாக்கின் காலத்தில் மாலிக்காபூர் என்பவன் ஆனைகுந்தி நகரத்தை அழித்தபோது தன்னை வந்தடைந்த ஹரிஹரன், புக்கன் என்ற சகோதரர்களின் பொருட்டு அந்த முனிவர் அவ் வழகிய பட்டணத்தைப் படைத்துக் கொடுத்தார். ஆதலால் தெய்வச்செயலினால் சில சமயங்களில் காடுகளும் நாடுகளாகி நல்ல நிலைமைக்கு வருகின்றன.
--------

55. பெற்றமும் கழுதையும் மேய்ந்த வப்பாழ்
பொற்றொடி மகளிரும் மைந்தரும் செறிந்து
நெற்பொலி நெடுநக ராயினு மாகும்.

பெற்றமும் - பசுக்களும், கழுதையும் - கழுதைகளும், மேய்ந்த - மேய்ந்து கொண்டிருந்த, அ பாழ் - அந்தப் பாழ் (நிலமானது), பொன் தொடி - பொன்னாலாகிய வளையல்களை (யணிந்த), மகளி ரும் - பெண்களும், மைந்தரும் -புருஷர்களும், செறிந்து - நிறைந்து, நெல் பொலி - நெல்லின் (குதிர்கள் ) விளங்குகின்ற, நெடுநகர் - பெரிய பட்டணம், ஆயினும் - ஆகும், ஆனாலும் - ஆகும்.

55. முற்காலத்தில் உஷஸ்தி என்று ஒரந்தணர் இருந்தார். அவர் சாமவேதத்தின் அர்த்தங்களை நன்றாகக் கற்றவர். பெரும்பாலும் அவர் இல்லாமல் யாகங்கள் நடப்பதில்லை. ஒரு சமயத்தில் அவர் இருந்த நாட்டில் பெரும் பஞ்சம் பரவிப் பீடித்து வந்தது. ஜனங்கள் யாவ ரும் உணவில்லாமல் வருந்தி இறந்து போனார்கள். அப்பொழுது உஷஸ்தி தம் மனைவியோடு வெளியிற் சென்று உணவு யாசிக்கத் தொடங்கினார். அவருக்குக் கொடுக்க ஒருவரும் முன்வரவில்லை. முடிவில், அவர் ஒரு யானைப் பாகனைக்கண்டு யாசித்தார். அவன் 'ஐயா! யானையும், நானும், என் மனைவியும் தின்று மிகுந்த பயற்றுச் சுண்டல் கொஞ்சம் இருக்கின்றது. இஷ்டமானால் பெற்றுக் கொள்ளுங்கள்' என்று சொன்னான். அவ்வுயர்ந்த அந்தணர் வேறு விதியில்லாமல் அச்சுண்டலைப் பெற்றுக் கொண்டு மனைவியும் தாமும் உண்டு சிறிது பசியாறினார். ஆதலால், கஷ்ட காலத்தில் இல்லாத வொன்றை யாசிப்பது எவருக்கும் இழிவாக மாட்டாது.
----- மகாபாரதம்.
---------

56. இல்லோ ரிரப்பதும் இயல்பே யியல்பே.

இல்லோர் - பொருளில்லாதவர்கள், இரப்பதும் - (அஃதுள்ளவர்களிடத்திற் சென்று) யாசிப்பதும், இயல்பே இயல்பே - இயற்கையே யாகும், இயற்கையே யாகும்.

56. ஆதிநாளில் குமணன் என்ற வள்ளல் தம் சகோதரன் இளங்குமணனுக்கு இராஜ்யத்தைக் கொடுத்துவிட்டு ஒருவரு மறியாமல் வனத்துக்குப் போயிருந்தார். தமையன் வீண் செலவு செய்து பொக்கிஷங்களைக் காலி செய்து விட்டான் என்று இளங்குமணன் கோபம் கொண்டு தமையன் தலையைக் கொணர்கின்றவருக்குத் தன்னரசில் நான்கில் ஒன்று தருகிறேன்' என்று விளம்பரம் பண்ணி யிருந்தான். பெருஞ் சித்திரனார் என்ற தமிழ்ப் பண்டிதர் காட்டுக்கு வந்து குமணனைக் கண்டு புகழ்ந்து [#]பரிசில் கேட்டார். குமண வள்ளலிடத்தில் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லாத படியினால் 'அவர் பண்டிதரே! என் தலையை வெட்டி யெடுத்துக்கொண்டு சென்று இளங்குமணனிடத் தில் கொடுத்து அதன் விலையாகிய நான்கில் ஒரு பங்கு இராஜ்யத்தைப் பெற்றுச் செல்லுங்கள்' என்று தம் கைவாளை அவரிடத்தில் கொடுத்துத் தலை குனிந்து நின்றார். ஆதலால், இயற்கைக் கொடையாளிகளான வள்ளல்கள் எவ்வளவு கஷ்டமிருந்தாலும் யாசித்தவர்களுக்கு இல்லை யென்று சொல்ல மாட்டார்கள்.
--- புறநானூறு.
-------
[#] பரிசில் - பண்டிதர்களுக்குக் கொடுக்கும் வெகுமதி.


57. இரந்தோர்க் கீவதும் உடையோர் கடனே.

இரந்தோர்க்கு - (தன்னிடத்தில் வந்து) யாசிக்கின்றவர்களுக்கு ஈவதும் - (அவர்கள் விரும்பியவற்றைக் கொடுப்பதும், உடையோர் - (பொருள்) உள்ளவர்களுடைய, கடன் - கடமையாகும். ஏ - அசை.

57. 9- 14-வது கதைகள் பீஷ்மரைப்பற்றி உங்களுக்குத் தெரிவித்திருக்கின்றன. அத்தினபுரத்தின் சிங்காசனம் அவருக்குச் சொந்தமாயிருந்தது. அவர் 'நான் உலகத்திலிருக்கும் வரையில் பிரமசாரியாகவே இருக்கப் போகிறேன்' என்று சபதம் செய்துகொண்டு விட்டார். அந்த அரசாட்சி சித்திராங்கதன் என்ற அவர் தம்பிக்குச் சொந்தமாகி அவனும் அவன் சகோதரனும் எல்லா இன்பங்களையும் அநுபவித்து வந்தார்கள். ஆதலால், பிரமசாரிகளுக்குச் செல்வம் முதலியவற்றால் சிறிதும் பயன் கிடைக்க மாட்டாது.
-- மகாபாரதம்.
----------

58. நல்ல ஞாலமும் வளமும் பெறினும்
எல்லா மில்லை இல்லில் லோர்க்கே.

நல்ல ஞாலமும் - நன்மை நிறைந்த மண்ணுலகத்தையும், வானமும் - தேவருலகத்தையும், பெறினும் - பெற்றாலும், எல்லாம் - அவையாவும் , இல் - (நல்ல) மனைவியை , இல்லோர்க்கு இல்லாதவர்களுக்கு, இல்லை - (பயன்) படுவதில்லை. ஏ - அசை.

58. இலங்கைப் பட்டினத்திலிருந்த இராவணனைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவனுக்குப் பத்துத் தலையும் இருபது கரங்களும் இருந்தன. அவன் பிரம தேவனிடத்தில் உயர்ந்த வரங்களைப் பெற்று இந்திரன் முதலான எல்லாத் தேவர்களையும் ஏவல்கொண்டு விளங்கினான். அவன் ஜனகன் புத்திரியாகிய சீதையைச் சிறை யெடுத்து வந்த பிற்பாடு, எளிய மானிடப்பிறப்பில் அவரித்த இராமனுக்கும் இலஷ்மணனுக்கும் பயந்து நித்திரையிலும் வாய் குளறி வரத் தொடங்கினான். முடிவில், அங்கனம் பயந்தவண்ணமே இராமனோடு சண்டை செய்து ரணகளத்தில் மரணமடைந்தான். ஆதலால், உயர்ந்த சூரர்களும் சமயம் நேர்ந்த விடத்தில் சாதாரணமானவர்களுக் குப் பயப்படுவார்கள்.
-- இராமாயணம்.
---------

59. தறுகண் யானை தான் பெரி தாயினும்
சிறுகண் மூங்கில் கோற்கஞ் சும்மே.

தறுகண் - அஞ்சாமையை உடைய, யானை - யானையானது, தான் பெரிது ஆயினும் - தான் (எல்லா மிருகங்களையும் விட உருவத்தால்) பெரியதா யிருந்தாலும், சிறுகண் - சிறிய கணுக்கள் (உள்ள), மூங்கில் கோல்கு - மூங்கிற் கோலுக்கு, அஞ்சும் - பயப்படும். ஏ - அசை.

59. முன்னாளில் சூரியன் புத்திரனாகிய சுக்கிரீவன் என்ற குரங்குத்தலைவன் ரிசிய மூக மலையில் வாசம் செய்து வந்தான். அநுமான் முதலான அறிவில் மிகுந்த வாநரர்கள் அவனுக்கு மந்திரிகளாகி அப்பொழு தப்பொழுது ஆகுங் காரியங்களை அறிந்து சொல்லிவந்தார்கள். வாலி அவ்விடத்துக்கு வந்தால் இறந்து போவான் என்பதை அவன் அறியாமலிருக்கவில்லை. மதங்கர் என்ற முனிவர் வாலிக்கு அவ்வாறு சாபமிட்டிருந்தார். ஆனாலும், சுக்கிரீவன் இரவும் பகலும் வாலியை நினைந்து பயந்து நடுங்கிக் கொண்டேயிருந்தான். இராமன் வந்த பிற்பாடுதான் அவ னுக்கு அந்தப்பயம் நீங்கிற்று. ஆதலால், எவ்வளவு பத்திரமான இடத்திலிருந்தாலும் பெரிய சத்துருக்களுக்கு அனைவரும் பயப்படுவார்கள்.
-- இராமாயணம்.
---------

60. குன்றுடை நெடுங்கா டூடே வாழினும்
புன்தலைப் புல்வாய் புலிக்கஞ் சும்மே.

குன்று உடை-மலைகளையுடைய, நெடும் காடு ஊராடே - பெரிய காட்டினிடத்திலே, வாழினும் - வாழ்ந்தாலும், புன்தலை - சிறிய தலையினை உடைய, புல்வாய் - மானானது, புலிக்கு அஞ்சும் -புலிக்குப் பயப்படும். ஏ- அசை.

60. ஆதிநாளில் விருத்திரன் என்ற அசுரன் இந்திரனை எதிர்த்துச் சண்டை செய்து தோற்று அவன் வஜ்ரா யுதத்துக்குப் பயந்து நெடுங்காலம் வரையில் கடலில் ஒளித்துக் கொண் டிருந்தான். கடல் நிலத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு பெரியது. பகைவன் கண்ணுக்குப் புலப் படாமல் தப்பித் திரிவதற்கு அக்கடலில் அநேக இடங்களும் மலைகளும் இருக்கின்றன. அப்படிப்பட்ட பத்திரமான இடத்தில் இருந்துங்கூட அவன் எப்பொழுது இந்திரன் வந்துவிடுவானோ என்று அதிகமாகப் பயந்து நடுங்கி வந்தான். பிற்பாடு, இந்திரன் அகஸ்திய முனிவரைக் கொண்டு கடல் நீரை வற்றச் செய்து அவனைக் கண்டுபிடித்துக் கொன்றுவிட்டான். ஆதலால், வலிய சத்துருவுக்கு எளியவர் பயப்படாதிருக்க மாட்டார்கள்.
-- மகாபாரதம்.
----------

61. ஆரையாம் பள்ளத் தூடே வாழினும்
தேரை பாம்பிற்கு மிகவஞ் சும்மே.

ஆரை ஆம்-ஆரைக்கொடிகள் படர்ந்த , பள்ளத்து ஊடு - (தண்ணீர் நிறைந்த) பள்ளத்தினிடத்தில், வாழினும் - வாழ்ந்தாலும், தேரை - தவளையானது, பாம்பிற்கு - பாம்புக்கு, மிக அஞ்சும் - மிகவும் பயப்படும். ஏ- இரண்டும் அசைகள்.

61. 18 - 23 - வது கதைகளில் இரணியனைப்பற்றி அறிந்திருக்கிறீர்கள். அவன் தன்னையே தெய்வமென்று வணங்கிக் கொண்டாடிவரும்படி அனைவரையும் நிர்ப்பந் திக்கத் தொடங்கினான். நாட்டில் இருந்தவர் அவன் உபத்திரவத்தைச் சகிக்க முடியாமல் மனைவி மக்களோடு வனங்களுக்குச் சென்று முனிவர்களைச் சரணமடைந்தார்கள். வனத்தில் வசித்துவந்த முனிவர்கள் ஒன்றும் செய்யத் தோன்றாமலும், தங்களிடத்தில் வந்து அடைக்கலம் புகுந்தவர்களை ஆதரிப்பதற்கு முடியாமலும் பலநாள் வரையில் வருந்தித் திகைத்தார்கள். பிற்பாடு மகாவிஷ்ணு அவர்கள் கஷ்டங்களை ஒழிக்கத் திருவுள்ளம் கொண்டு நரசிங்காவதாரம் செய்து அவனைக் கொன்று அவர்கள் வருத்தத்தை நீக்கினார். ஆதலால், கொடுங்கோல-ரசர்களுக்கு அடங்கி வாழ்வதைக்காட்டிலும் புலிகள் வசிக்கும் காட்டிற்குச் சென்று வாசஞ்செய்வது மேன்மையானது.
-- பாகவதம்.
----------

62. கொடு ங்கோல் மன்னர் வாழம் நாட்டின்
கடும்புலி வாழும் காடு நன்றே.

கொடுங்கோல் - அநியாய ஆட்சி செய்கின்ற, மன்னர் - அரசர்கள், வாழும் - வாழ்கின்ற, நாட்டின் நாட்டைப் பார்க்கிலும், கடும் புலி - கொடுமை (நிறைந்த) புலியானது, வாழும் காடு - வாழ்கின்ற காடானது, நன்று - நல்லது. ஏ- அசை.

62. இலங்கைப் பட்டினத்தில் இராவணன் இருந்து வந்தானென்று படித்திருக்கிறீர்-களல்லவா? அப்பட்டினத்தில் விபீஷணனைத் தவிர நல்லொழுக்கமுள்ளவர் இல்லை. அவன் இராவணன் அக்கிரமங்களைச் சகித்துக்கொண்டு அவன் சிறையெடுத்துவந்த சீதையை இராமனிடம் ஒப்பு வித்து விடும்படி அவனுக்குப் பலதடவை புத்தி கூறினான். இராவணன் அவன் வார்த்தைகளைக் கொஞ்சமும் கேட்க வில்லை. அதனால், விபீஷணன் மனம் வெறுத்து அவனோடும் இன்னும் அவனைப் போன்ற மூடர்களோடும் கூடி இலங்கையில் இருப்பதைக்காட்டிலும் வனத்திற்குச் சென்று வேடர்களோடு வசிப்பது மேலானது என்றெண்ணி வெளியில் வந்துவிட்டான். ஆதலால், பெரியோர் இல்லாதவிடத்தில் வாசம் பண்ணலாகாது.
-- இராமாயணம்.
---------

63. சான்றோர் இல்லாத் தொல்பதி யிருத்தலின்
தேன்தேர் குறவர் தேயம் நன்றே.

சான்றோர் - (அறிவு ஒழுக்கங்களால் நிறைந்த) பெரியவர்கள், இல்லா - இல்லாத, தொல்பதி - பழமையான ஊரில், இருத்தலின் - வாழ்வதைக் காட்டிலும், தேன் தேர் - தேன்கூடுகளைத் தேடித் திரிகின்ற, குறவர் - குறவர்களின், தேயம் - மலைநாடு, நன்று - நல்லது. ஏ - அசை.

63. 25 - கதை விசுவாமித்திர முனிவரைப்பற்றி உங்களுக்கு ஒருவாறு தெரிவித்திருக்கிறது. அவர் 'அரிச்சந்திர மன்னவனைப் பொய்யனாக்குகிறேன்' என்று தேவர் முன்னிலையில் இந்திரசபையில் சபதம் செய்து கொண்டார். பின்னர் அவருக்கு வேதம் ஓதுதலினும் தவம் புரிதலினும் மனம் செல்லவில்லை. அவ்வரசனை எவ்விதத்தில் பொய்யனாக்கலாம் என்று அவர் இரவும் பகலும் எண்ணி வருந்திப், பலவிதமான முயற்சிகளைச் செய்து, அவனுக்குச் சகிக்கமுடியாத கஷ்டங்களை உண்டு பண்ணினார். அதன் பொருட்டுப் பல பல தேவர்களையும் அவர் ஏவல் கொண் டார். என்ன செய்தும் அவர் எண்ணம் மாத்திரம் நிறை வேறவில்லை. முடிவில் தேவர்களுக் கெதிரில் தவத்தை இழந்து அவமானத்தையும் அடைந்தார். அவர் அந்த வீண் வம்புக்குச் செல்லாமல் தவம் செய்து வந்தால், ஒரு விதமான உபத்திரவமும் உண்டாயிருக்க மாட்டாதல்லவா! ஆதலால், வேதமோதியும் தவம் புரிந்தும் காலம் கழிக்காத அந்தணர் நெற்பதரைப்போலப் பயனற்றவராவார்கள்.
-- சண்ட கௌசிகம்.
-----------

64. காலையும் மாலையும் நான்மறை யோதா
அந்தண ரென்போர் அனைவரும் பதரே.

காலையும் - காலைப் பொழுதிலும், மாலையும் மாலைப் பொழுதிலும், நான்மறை - நான்கு வேதங்களையும், ஓதா – பாராயணம் பண்ணாத , அந்தணர் என்போர் - பிராமணர் என்று சொல்லப்பட்டவர்கள், அனைவரும் - எல்லாரும், பதர் - பதராவார்கள், ஏ - அசை.

64. 17 - வது கதை கார்த்தவீரியர்களைப்பற்றி ஒருவாறு தெரிவித்திருக்கிறது. கிருதவீரியன் குலத்தில் பிறந்தவர்களுக்கு ஹை ஹயர் என்றும், கார்த்தவீரியர் என்றும் பெயர். அந்த அரசர்கள் பேராசை கொண்டு எந்த விதத்திலாவது முயற்சி செய்து தங்கள் பொக்கிஷங்களை நிரப்பிக்கொள்ளவேண்டும் என்று நினைத்தார்கள். நேர்வழியில் அவர்களுக்குப் பொருள் கிடைக்கவில்லை. பிருகு வம்சத்துப் பிராமணர் அக்காலத்தில் அதிகச் செல்வ முள்ளவர்களாக இருந்துவந்தபடியினால், ஹை ஹயர் அவர்கள் அனைவரையும் கொன்று அவர்களிடத்தில் இருந்த பெரும் பொருள்களை யெல்லாம் கொள்ளையிட்டுக் கொண்டு சென்றார்கள். அப்பொழுதும் அவர்கள் பொக்கிஷம் நிரம்பவில்லை. ஆசையும் அடங்கவில்லை. பின்னர்க் குடிகளைவருத்திப் பயப்படுத்தி அவர்களிடத்தில் இருந்த வற்றையும் அபகரித்துக்கொண்டு அக்கிரமம் செய்தார்கள். பிற்பாடு, பிருகு வம்சத்தில் ஒளர்வர் என்பவர் தோன்றினார். அவர் தமது இளம்பிராயத்திலேயே கண்ணிலிருந்து நெருப்பையும் புகையையும் உண்டாக்கி அவற்றால் அவர்கள் அனைவரையும் கண் தெரியாமல் குருடர்களாக்கி அழித்தார். ஆதலால், அநியாயமாகக் குடிகளை வருத்தும் அரசர்கள் பதரைப்போலப் பயன்பட மாட்டார்கள்.
----------

65. குடியலைத் திரந்து கோலொடு நின்ற
முடியுடை யிறைவனாம் மூர்க்கனும் பதரே.

குடி அலைத்து - குடிகளை வருத்தி, இரந்து - பொருள் வாங்கி, கோலொடு - (கொடுங்கோலொடு, நினற - (தீயவழியில்) நின்ற, முடி உடை-கிரீடத்தையுடைய , இறைவன் ஆம் - அரசனாகிய, மூாக்க னும - மூர்க்கனும், பதா - (அரசருக்குள் ) பதராவான். ஏ - அசை.

65. முன்னாளில் காவிரிப்பூம் பட்டணத்திலிருந்த மாசாத்துவனுக்குக் கோவலன் என்று ஒரு புத்திரன பிறந்தான். அவன் அரசனும் மதிக்கும்படியான உயர்ந்த செல்வத்தைப் பெற்றவன். அவனுக்குக் கண்ணகி யென்று கற்பிலக்கணம வாய்ந்த ஒரு மனைவி யிருந்தனள். அவன், தந்தை செய்த வர்த்தகத்தை விரும்பிச் செய்யாமல் கெட்ட வழிகளில் இறங்கித் தன் காலத்தைக் கழிக்கத் தொடங்கினான். மாசாத்துவன் தேடிய எல்லாப் பொருள் களையும் அவன் ஆட்டக் கச்சேரிகளுக்கும், பாட்டுக் கச்சேரிகளுக்கும், விருந்துகளுக்கும், வீணர்களுக்குமாகச் செலவு செய்து அதிக சீக்கிரத்தில் அழித்து விட்டான். பொருள் போன பிற்பாடு , மனைவி கண்ணகிக்குச் சொந்த மான ஆடைகளையும் ஆபரணங்களையும் கேட்டு வாங்கிச் சிலநாள் செலவு செய்து தொலைத்தான். கடைசியாக அவன் மனைவி காலில் அணிந்து கொண்டிருந்த சிலம்பு ஒன்றுதான் மிச்சமாக நின்றது. கோவலன் அச்சிலம்பை எடுத்துக் கொண்டு மனைவியுடன் மதுரைப் பட்டண மடைந்து அதனை விற்கும் சமயத்தில் ஒரு பொற்கொல்லன் சூழ்ச்சியினால் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு அங்கு மரண தண்டனை யடைந்தான். ஆதலால், வர்த்தகம் பண்ணிப் பொருள் தேடாமலிருக்கும் வணிகர்கள் கோவலன் போலப் பதராவார்கள்.
-- சிலப்பதிகாரம்.
-----------

66. முதலுள பண்டம் கொண்டுவாணிபம் செய்து
அதன்பயன் உண்ணா வணிகனும் பதரே.

உள் முதல் - தன்னிடத்துள்ள முதலால், பண்டம் - பொருள்களை, கொண்டு – வாங்கி வைத்துக்கொண்டு, வாணிபம் செய்து - வர்த்தகம் செய்து, அதன் பயன் - அதனால் வரும் லாபத்தை, உண்ணா - அநுபவியாத, வணிகனும் - வைசியனும், பதர்-பதராவான். எ - அசை .

66. மைசூரில் சங்கரராவ் என்று ஒருவர் இருந்தார். அவருக்குப் பிதிரார்ஜிதமாக நாற்பது ஏகர் நிலம் இருந்தது. அவர் காலமறிந்து பயிர் செய்யத் தெரியாமல் வீண் செலவு செய்து கடன் பட்டுப் பாதி நிலத்தை விற்றுவிட்டார். மற்ற நிலங்கள் குத்தகையில் இருந்தன. தாசப்பா என்றவன் அவற்றை வைத்துக் கொண்டிருந்தான். ஒருநாள் தாசப்பா சங்கரராவைக் கண்டு 'ஐயா! தாங்கள் நிலங்களை விற்கப்போவதாகச் சொல்கிறார்கள்; அது மெய்யாயின் அவற்றை எனக்கு விலைப்படுத்துங்கள் ! நான் பணம் கொடுக்கிறேன்' என்றான். அவர் ஆச்சரியப் பட்டுத் தாசப்பா! எனக்கு எல்லா நிலங்களும் இருந்தும் செலவுக்குப் பற்றாமல் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை விற்றுக்கொண்டு வருகிறேன். நீ பாதி நிலத்தைக் குத்தகை யெடுத்து கொண்டு நிலம் வாங்குவதற்குப் பணம் சம்பாதித்திருக்கிறாய்; பணம் எப்படிச் சேர்த்தாய்? அதனை எனக்குச் சொல் ' என்று கேட்டார்.

அவன் 'ஐயா! நீங்கள் எல்லாவற்றிற்கும் போ! போ!' என்கிறீர்கள். நான் ஒவ்வொன்றுக்கும் 'வா! வா!' என்கிறேன். இதுதான் வித்தியாசம். அதாவது, நீங்கள் வேலையாட்களைப் போய் வேலை செய்யுங்கள்!' என்கிறீர்கள். நான் 'வாருங்கள்! வேலைக்குப் போகலாம்' என்று அவர்களை அழைத்துக்கொண்டு போய் அவர்களோடு வேலை செய்து வருகிறேன். அதனால், எனக்கு அதிக லாபம் கிடைக்கின்றது' என்று சொல்லி அந்நிலங்களை விலைக்குப் பெற்றுக்கொண்டான். ஆதலால், காலத்தில் பயிர் செய்து லாபம் சம்பாதிக்கத் தெரியாதவன் நெற்பதர் போலப் பயன்பட மாட்டான்.
-- கதாவாசகம்.
------------

67. வித்தும் ஏரும் உளவா யிருப்ப
எய்த்தங் கிருக்கும் ஏழையும் பதரே.

வித்தும் - விதையும், ஏரும் - உழவு கருவிகளும், உள ஆய் இருப்ப - (தன்னிடத்தில்) உள்ளனவாக இருக்க, அங்கு - அவற்றால் பிரயத்தனப்படாமல், எய்த்து - சோர்ந்து, இருக்கும் - சோம் பலாயிருக்கும், ஏழையும்- அறிவில்லாதவனும், பதர் - பதராவான். ஏ - அசை .

69. ஒரு சந்நியாசி தான் பல வருஷங்களாக வருந்திச் சம்பாதித்த பொன்னாணயங்களை ஒரு மூங்கிற்றடியில் போட்டு அதனைக் கையில் வைத்துக் கொண் டிருந்தான். அதனை அறிந்த ஆஷாடபூதி யென்றவன் அவனுக்குச் சிஷ்யனாக அமர்ந்து அத்தடியைத் திருடிச் செல்லச் சமயம் பார்த்திருந்தான். ஒருநாள் குருவும் சிஷ்யனும் ஒரு வீட்டில் அன்னமுண்டு காட்டுவழி யொன்றில் சென்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஆஷாடபூதி அங்கிருந்த ஒரு துரும்பை யெடுத்துத் தன் தலையில் போட்டுக்கொண்டு சுவாமிகளே! இதோ பாருங்கள் ! அன்னதாதாவின் வீட்டுத் துரும்பு எனக்குத் தெரியாமல் என் தலையில் வந்திருக்கின்றது. இதனை எடுத்துச் சென்று அவர் வீட்டில் போட்டு வருகிறேன்' என்றான். சந்நியாசி 'அது பாபமன்று; நீ போகாதே' என்று எவ்வளவு சொல்லியும் அவன் கேளாமற் சென்று சற்று நேரம் கழித்து இரைக்க இரைக்க ஓடிவந்து சேர்ந்தான்.

அன்றுமுதல் ஆஷாடபூதியின் ஒழுக்கத்தில் சந்தியாசிக்கு நம்பிக்கை உண்டாயிற்று. அவன் ஆஷாடபூதியை உண்மைப் பக்தன் என்று எண்ணி நாளடைவில் தன் கைத்தடியையும் அவனிடம் கொடுத்து வைக்கத் தொடங்கினான். பிற்பாடு , ஆஷாடபூதி ஒருநாள் சமயம் பார்த்துப் பொன்னாணயங்கள் நிரம்பியிருந்த அந்தக் கைத்தடியை எடுத்துக்கொண்டு ஓடிப்போய்விட்டான். அப்புறம் சந்நியாசி தான் மோசம் போனதை நினைந்து மிகவும் வருந்திக் கண்ணீர்விட்டுக் கலங்கியழுதான். ஆதலால், அந்தச் சந்நியாசியைப்போலப் பொருள் முதலானவற்றைப் பிறரிடம் நம்பிக்கொடுக்கின்றவன் நெல்லோடு பிறந்த பதருக்குச் சமானமாவான்.
-- பஞ்சதந்திரம்.
-----------

70. தன்னா யுதமும் தன்கையிற் பொருளும்
பிறன்கையில் கொடுக்கும் பேதையும் பதரே.

தன் ஆயுதமும் - தன்னுடைய ஆயுதத்தையும், தன்கையில் - தன் கையிலிருக்கின்ற, பொருளும் - திரவியத்தையும், பிறன்கையில் - அயலானுடைய கையில், கொடுக்கும் - கொடுக்கின்ற, பேதையும் - அறிவில்லாதவனும், பதர் - பதராவான். ஏ- அசை.

70. முன்னொரு காலத்தில் பிரமன் சிவபெருமானு டைய திருமுடியைக் கண்டு வருகிறேன் என்று அன்ன வடிவம் கொண்டு ஆகாயத்தில் பறந்து போனான். வருஷக் கணக்காக உயரப் பறந்து சென்றும் கடவுள் முடியைக் காண அவனால் கொஞ்சமும் முடியவில்லை. பின்பு அவன் வேசாறி, நிலத்தை நோக்கித் திரும்புகையில் கீழே விழுந்து கொண்டிருக்கும் ஒரு தாழைமலரைக் கண்டு 'நீ எங்கிருந்து வருகிறாய்?' என்று கேட்டான். அது கடவுள் சிரத்திலிருந்து வருவதாகச் சொல்லிற்று. பிரமன் அம்மலரைத் தனக்குச் சாக்ஷி சொல்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டு மகாவிஷ்ணு முதலான தேவர்கள் முன்பு வந்து 'நான் கடவுள் முடியைக் கண்டு வந்திருக்கிறேன். அதற்கு இந்தத் தாழைமலர் சாக்ஷி ' என்று பொய் சொல்லிச் சாதித்தான். தாழைமலர் 'ஆம் ஆம்; நானும் அங் கிருந்துதான் வருகிறேன்; இவர் நிச்சயமாகக் கண்டார்' என்று சாக்ஷி சொல்லிற்று.

தேவர்கள் அதனை உண்மையென்று நம்பிவிட்டார்கள். பிற்பாடு, கடவுள் வெளிப்பட்டு வந்து பிரமன் பொய்யை வெளிப்படுத்தி அவனுக்கு உலகத்தில் கோயிலில்லாமற் போகட்டும் என்றும், பொய் பேசின தாழைமலர் தமது பூஜைக்கு உதவாதொழியட்டும் என்றும் சாபம் கொடுத்து மறைந்தார். ஆதலால், பிரமனைப் போலச் சிலர், தங்கள் சாகசத்தினால் பொய்ச் சொல்லையும் மெய்ச்சொல் போல முதலில் சாதித்துக்கொண்டு விடுகிறார்கள்.
-- ஸ்காந்தம்.
-------------

71. வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும்
சாற்றுவ தொன்றைப் போற்றிக் கேண்மின்.
பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்
மெய்போ லும்மே! மெய்போ லும்மே!

வாய் - வாயானது, பறை ஆகவும் - தம்பட்டம் என்ற பறை வாத்தியமாகவும், நா - நாவானது, கடிப்பு ஆகவும் - அடிக்கும் கோலாகவும் கொண்டு, சாற்றுவது - கொட்டித் தெரிவிப்பதாகிய, ஒன்றை - ஒரு காரியத்தை, போற்றி - ஆதரவுடன், கேண்மின் - கேளுங்கள். பொய் உடை - பொய் பேசுதலையுடைய, ஒருவன் - ஒருமனிதன், சொல் பேசுகின்ற, வன்மையினால் உறுதிப்பாட்டினால், மெய்போலும் - (அவன் பேசிய பொய்ச் சொற்கள் ) மெய்யே போலத்தோன் றும்; மெய்போலும் - மெய்யேபோலத் தோன்றும். ஏ - இரண்டும் அசைகள்.

71. முன்னொரு காலத்தில் சத்திராஜித்து என்று ஒரு உயர்ந்த அரசன் இருந்தான். அவன் சூரியனைக் குறித்துத் தவம் செய்து ஸ்யமந்தகமணி யென்ற ஒரு சிறந்த இரத்தினத்தைப் பெற்றான். அம்மணி நாள் தோறும் ஒரு பாரம் எடையுள்ள தங்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும். ஒரு சமயத்தில் கிருஷ்ணன் என்பவன் தனக்கு அந்த மணியைத் தரும்படி கேட்டதற்குச் சத்திராஜித்து மன்னவன் கொடுக்கமுடியாதென்று சொல்லிவிட்டான். பிற்பாடு அவன் தம்பி பிரேசனன் அம்மணியைக் கழுத்தில் தரித்துக்கொண்டு ஒருநாள் காட் டில் வேட்டையாடப் போனான். அவனை ஒரு சிங்கம் கொன்றுவிட்டு அத்தெய்வ மணியை எடுத்துக்கொண்டு போயிற்று. அதனைக்கண்ட ஜாம்பவான் என்னும் கரடி அச்சிங்கத்தைக் கொன்று தான் அம்மணியை அடைந்தது.

சத்திராஜித்து தம்பியும் மணியும் காணாமற்போன தனால் கிருஷ்ணன் தன் தம்பியைக் கொன்று ஒருவருமறியாமல் மணியை அபகரித்துக் கொண்டு விட்டான்' என்று பலரும் கேட்க அவதூறு பேசத்தொடங்கினான். கிருஷ்ணன் அத்தெய்வமணியைத்தான் அப்கரிக்க வில்லையென்று பலர் முன்னிலையில் பலவிதமாகச் சொல்லியுங்கூட அவன் நம்பவில்லை. சத்திராஜித்து மன்னவனைச் சாந்தவர்களும் அவனைப் போலவே அவதூறு சொல்லிக் கிருஷ்ணனைத் தூற்றத் தலைப்பட்டார்கள். பின்பு கிருஷ்ணன் ஜாம்பவானைத் தேடிச் சென்று அவனோடு சண்டை செய்து ரணகளத்தில் அவனை வென்று அம்மணியைக் கொண்டுவந்து சத்திராஜித்து மன்னவனிடம் கொடுத்த பிற்பாடுதான் அவன் சொல் உண்மையாயிற்று. ஆதலால், சில சமயங்களில் மெய்ச் சொற்களும் பொய்ச் சொற்களாக மாறிப் போகின்றன.
-- பாகவதம்.
------------

72. மெய்யுடை யொருவன் சொலமாட் டாமையால்
பொய்போலும் மே ! பொய் போலும்மே!

மெய்உடை - உண்மை பேசுதலையுடைய , ஒருவன் - ஒருமனிதன் , சொலமாட்டாழையால் - ( திறமையாகப்) பேசமாட்டாமையினால், பொய்போலும் - (அவன் பேசிய உண்மைச் சொற்கள் ) பொய்யேபோலத் தோன்றும்; பொய்போலும் - பொய்யே போலத் தோன்றும். ஏ - இரண்டும் அசைகள்.

72. முன்னொரு காலத்தில் மதுரைய்பட்டணத்தில் இருந்த அந்தணன் ஒருவன் தன் மனைவியைக் காட்டில் ஒரு மரத்தடியில் வேடன் அம்பாற் கொன்றுவிட்டான் என்று பாண்டியன் சபையில் வழக்குக் கொண்டுவந்தான். அவன் மனைவியின் மார்பில் கூரிய அம்பொன்று பொத்துக்கொண் டிருந்தது. வேடன் நான் கொல்லவில்லை ; நான் அந்த மரத்தடிக்கு வரும்பொழுதே அந்த அம்மாள் அம்புபட்டு இறந்து கிடந்தாள்' என்று சொன்னான். நயத்திலும் பயத்திலுமாக எவ்வளவு விசாரித்தும் அரச னுக்கு உண்மை விளங்கவில்லை. பிற்பாடு, அவ்வரசன் கடவுளைத் தொழுது அவர் கட்டளையினால் அந்தணனை அழைத்துக்கொண்டு அந்தப்பட்டணத்தில் நடந்த இதற்கு முன் ஐம்பத்து மூன்றாவது கதையில் வந்திருக்கிற வணிகன் வீட்டுக் கலியாணத்துக்குச் சென்றான். அங்குத் தேவ தூதர்கள் முன்னர் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த அம்பைக் காற்றால் விழுவித்துப் பார்ப்பனியைக் கொன் றோமல்லவா? அது போலவே இப்பொழுதும் பசுவைத் தூண்டி மணமகனைக் கொல்லலாம்' என்று சொன்னார்கள். பாண்டியன் அதனைக் கேட்டு வேடனை விடுதலை செய்தனுப்பினான். ஆதலால், உண்மையான நியாயாதிபதி வழக்குக்களைப் பயத்தோடு நன்றாக ஆலோசித்துத் தீர்ப்புச் செய்யவேண்டும். இல்லாவிட்டால், அவன் குலம் அடி யோடு அழிந்து போய்விடும்.
-- திருவிளையாடற் புராணம்.
----------

73. இருவர்தம் சொல்லையும் எழுதரம் கேட்டே
இருவரும் பொருந்த வுரையா ராயின்,
மறுமுறை நெறியின் வழக்கிழந் தவர்தாம்
மனழற் மறுகிநின் றழுத கண்ணீ ர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழிவழி யிர்வதோர் வாளா கும்மே.

இருவர்தம் - (நியாயாதிபதியானவர், வாதி பிரதிவாதிகளான) இருவகைப் பட்டவர்களுடைய , சொல்லையும் - வார்த்தைகளையும், எழுதரம் - ஏழுதடவை, கேட்டு - (கவனித்துக்) கேட்டு, இருவரும் - அவ்விருவகைப் பட்டவர்களும், பொருந்த - ஒத்துக்கொள்ளும்படி, மறுமுறை - மநுவினுடைய நீதி நூலின் , நெறியின் வழியில், உரையார் ஆயின் - தீர்ப்புச் சொல்லாரானால், வழக்கு - தொடுத்த வழக்கை, இழந்தவர்தாம் - உண்மையில் இழந்துவிட்டவர்கள், மனம் - மனமானது, உற மறுகி - மிகவும் கலங்கி நின்று நின்று, அழுத - அழுதலால் உண்டான , கண்ணீர் - கண்ணீரானது, முறை உற - வரிசை யாக, மூவர் தேவர் - மூன்று தேவர்களும், காக்கினும் - வழக்குத் தீர்த்த நியாயாதிபதியைக் காக்கவந்தாலும், வழி வழி - அவன் சந்ததிகளை, பார்வதி - அறப்பதாகிய, ஒருவாள் ஆகும் - ஒப்பற்றவாளா யுதமாகும். எ, ஏ, தாம், மூன்றும் அசைகள்.

73. 26-வது கதையில் துரியோதனன் பாண்டவர்களுடைய எல்லாவுரிமைகளையும் எல்லாச் செல்வங்களையும் அத்தினபுரத்தில் சூத்தாட்டத்தின் முன்னிலையில் அபகரித்துக் கொண்டான் என்று படித்திருக்கிறீர்கள். சபையில் இருந்த பீஷ்மர் துரோணர் முதலான பெரியவர்கள் 'பாண்டவர் பாஞ்சாலியோடு பன்னிரண்டு வருஷம் வனத்திலும், அப்புறம் ஒருவரும் அறியாமல் ஒரு வருஷம் நாட்டிலும் வசித்துவந்தால், துரியோதனன் அவர்களிடம் கவர்ந்து கொண்ட வுரிமைகளையும் செல்வங்களையும் அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அவர்கள் நாட்டில் மறைந்திருக்கையில் துரியோதனனாவது அவனைச் சேர்ந்தவர்களாவது கண்டு பிடித்துவிட்டால், மறுபடியும் முன்போலவே பன்னிரண்டு வருஷம் வனவாசத்தையும் ஒரு வருஷம் அஞ்ஞாதவாசத்தையும் கழிக்கச் செல்ல வேண்டும்' என்று விதித்திருந்தார்கள்.

அங்ஙனமே பாண்டவர் பதின்மூன்று வருஷததையும் கிரமப்படி கழித்து உபலாவியம் என்னும் பட்டணத்தில் வந்து தங்கித் துரியோதனனிடம் தங்கள் பாகத்தைப் பெற்றுவரும்படி கண்ணபிரானைத் தூதனுப்பினார்கள். அவர் பாண்டவர்களின் தூதாக அத்தினபுரத்துக்கு வந்திருந்தார். துரியோதனனுக்குச் சிறிய தந்தையான விதுரன் என்பவன் முதலில் அவருக்கு விருந்தளித்து உபசரணை செய்தான். அது துஷ்டனான துரியோதனனுக்குப் பிடிக்கவில்லை. அவன் மறுநாள் இராஜசபையில் சத்துருவைச் சார்ந்தவனுக்குத் தன் கட்டளையில்லாமல் விருந்தளித்து உறவு கொண்டாடினான் என்று கோபித்து அவனைத் தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் என்றும், குற்றேவல் செய்யும் தாசியின் மகன் என்றும், நன்றியற்றவன் என்றும், அற்ப புத்தியுள்ளவன் என்றும் பலரும் கேட்கச் சபையில் தூஷித்துப் பேசினான்.

விதுரன் கோபம் கொண்டு தனது வாளை உருவிப் 'புத்தியற்றவனே! என்னையும் குலத்தையும் பழித்துப் பேசின உன் நாவை இப்பொழுதே இரண்டு துண்ட மாக்குவேன். பிள்ளையைக் கொன்றான் என்று வரும் பெரும்பழி என்னை அங்ஙனம் செய்யவொட்டாமல் தடை செய்கின்றது. அதனால், நீ நடத்த விருக்கின்ற யுத்தத்தில் உனக்குத் துணை செய்யாதிருக்கும் பொருட்டு நிகாற்று விளங்கும் என்னுடைய இந்தப் பெரிய வில்லை வெட்டிவிடுகிறேன். அஃதிருந்தால், புத்திரவாஞ்சை ஒரு சமயம் உனக்குத் துணை செய்யத் தூண்டும்' என்று சொல்லித் தன் உயர்ந்த வில்லை வெட்டியெறிந்து வெளியிற் சென்றுவிட்டான். அப்புறம் அவன் துரியோதன னுக்கு எவ்விதமான உதவியையும் செய்யவில்லை. துரியோதனன் தனக்குக் கேட்டைத் தன் வாயினால் தானே தருவித்துக்கொண்டான். ஆதலால், நாமும் பிறருக்குப் பழிப்பையும் அவமானத்தையும் உண்டுபண்ணுகின்ற கெட்ட வார்த்தைகளைச் சொல்லலாகாது.
-- மகாபாரதம்.
------------

74. பழியா வருவது மொழியா தொழிவது.

பழியா - நிந்தையாக, வருவது - வருகின்ற வசனங்களை, மொழியாது - பேசாமல், ஒழிவது - விட்டு விட வேண்டும்.

74. ஆதிநாளில் திரிகூட மலைச்சாரலில் ஆழமும் அகலமும் உள்ள ஒரு பெரிய மடு இருந்தது. அது கடல் போலப் பரந்து தாமரை முதலான நீர்ப்பூக்கள் மலரப் பெற்று அழகுடன் விளங்கிற்று. ஒருநாள் கஜேந்திரன் என்ற உயர்ந்த யானையானது தன் இனத்தோடு அம்மடுவில் இறங்கி நீந்தி விளையாடிக்கொண்டிருக்கையில் பெரிய முதலையொன்று அதன் காலைப் பிடித்து இழுக்கத் தொடங்கிற்று. யானை பலமுள்ளதாக விருந்தும் முதலையினின் றும் விடுபட முடியாமற் போயிற்று. மாதக் கணக்காகத தண்ணீரில் அதனுடன் போராடி இளைத்துப், பிற்பாடு கடவுள் அருளால் அவ்வாபத்தை நீக்கிக்கொண்டது. அதனால், நாமும் அவ்வியானையைப் போலத் தண்ணீரில் இறங்கி அதிகமாகத் துழந்து விளையாடக்கூடாது.
-- பாகவதம்.
------------

76. சுழியா வருபுனல் இழியா தொழிவது.

சுழியா - சுழித்துக்கொண்டு, வரு - வருகின்ற, புனல் - வெள்ளத்தில், இழியாது- இறங்காமல், ஒழிவது - நீங்கவேண்டும்.

75. ஒரு வர்த்தகன் தன்னுடைய நாயோடு அவசரமாக அயலூருக்குப் போனான். அவன் தன் வேலையைப் பார்த்துக்கொண்டு உடனே திரும்பி விட்டதனால், நடுவழியில் விடாய்த்து ஒரு குளத்தை யடைந்தான். முன்னிட்டுச் சென்ற நாய் அவன் தண்ணீரில் இறங்கும் பொழுது வஸ்திரத்தைக் கடித்துக் கரைக்கு இழுத்து அவனை இறங்க வேண்டாமென்று தடை பண்ணிற்று. வர்த்தகன் விடாய் மிகுதியினால் ஆத்திரங் கொண்டு நாயை அடித்து விட்டுக் குளத்தில் இறங்கினான். அந்த நன்றியுள்ள நாய் வேறு வழியில்லாமையினால் அவனுக்கு முன் சென்று தண்ணீரில் விழுந்தது. உடனே அங்குப் படுத்துக்கொண்டிருந்த பெரிய முதலை நாயை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டது. வர்த்தகன் உண்மையை அறிந்து, தன்பொருட்டு முதலைக்கு இரையாகித் தன்னைக் காப்பாற்றின நாயை நினைந்து பலவாறு அழுது, தண்ணீர் பருகாமலேயே துக்கத்தோடு வீடு வந்து சேர்ந்தான். நாய் அவ னோடு சென்றிரா-விட்டால், அவன் முதலைக்கு இரையா யிருப்பது நிச்சயமல்லவா? ஆதலால், துணையில்லாமல் வெளியிற் செல்லலாகாது.
-- கதாசரித்சாகரம்.
------------

76. துணையோ டல்லது நெடுவழி போகேல்.

துணையோடு - துணையினோடு, அல்லது - அல்லாமல், நெடுவழி - தூரமான வழியில், போகேல் - (நீ செல்லாதே.

76. முன்பு ஆறுகாட்டுக்கு நவாப்பாக விருந்த சைதுல்லாகான் என்பவன் செஞ்சிக் கோட்டைக்குத் தலைவனான தேசிங்கு மன்னவனோடு சண்டை செய்யப் போனான். தேசிங்கு அதனைத் தெரிந்து கோபம் கொண்டு தன் படைவீரர்களோடு புறப்பட்டுவந்து அவனை எதிர்க்கத் தொடங்கினான். நவாப்பின் படைகள் அப்பொழுது சண்டைக்குத் தயாராக இருக்கவில்லை. அவர்கள் எதிரியின் வரவைச் சற்றுத் தடுக்கவேண்டுமென்று சமீபத்திலி ருந்த மிகவும் பெரிய மலையனூர் என்ற கிராமத்தின் ஏரியை உடைத்து விட்டார்கள். அவ்வேரி நீர்சங்கராபரணி யாற்றில் விழுந்து அதிக வேகமாகப் பெருகிச் செல்லத் தொடங்கிற்று. தேசிங்கு மன்னவன் தெப்பம், கட்டுமரம் முதலிய ஒருவிதமான கருவியும் இல்லாமல் தன் படைவீரர்களோடு குதிரைமேல் ஏறி ஆற்றைக் கடக்க இறங்கினான். வெள்ளம் அதிகமாகப் பெருகிவந்த படியினால் அவன் வீரர்களில் ஒருவராவது ஆற்றைக் கடந்து கரை சேரவில்லை. தேசிங்கு மன்னவனையும் அவன் நண்பன் மகம்மதுகானையும் தவிர மற்ற அனைவரும் ஆற்று வெள்ளத்தில் அநியாயமாக அமிழ்ந்து போனார்கள். அதனால், தேசிங்குமன்னவன் நஷ்டத்தையும் கஷ்டத்தையும் அடைந்து அச்சண்டையில் இறந்து போனான். ஆதலால், நாமும் தெப்பம் முதலான துணைக்கருவிகள் இல்லாமல் தண்ணீரைக் கடக்க விரும்பலாகாது.
-- சஞ்சீவிகிரி.
-------------

77. புணைமீதல்லது நெடும்புனல் ஏகேல்.

புணைமீது- தெப்பத்தின்மேல், அல்லது-அல்லாமல், நெடும் புனல் - பெரிய நீரில், ஏகேல்- (நீ ) நீந்திச் செல்லாதே.

77. ஆதிகாலத்தில் சுந்தன் உபசுந்தன் என்று இரண்டு பொல்லாத அசுர சகோதரர் இருந்தனர். அவர்கள் தவம் செய்து பிறரால் மரணமடையக் கூடாதென்று நான்முகக் கடவுளிடத்தில் வரம் பெற்றிருந்தார்கள். அப்பொழுது திலோத்தமை என்ற ஒரு தெய்வப் பெண் அவர்களைக் காணவந்தாள். இருவரும் அவள் அழகில ஆசை கொண்டு அவளை மணக்க விரும்பினார்கள். அப் பெண் ’உங்களில் சூரனாகிய வொருவனை நான் கலியாணம் செய்து கொள்கிறேன்' என்று சிரித்துக்கொண்டு சொன்னாள். அவர்கள் அறிவில்லாமல் தங்கள் வரத்தை மறந்து, தங்களில் சூரனைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு ஒருவருக்கொருவர் சண்டை செய்து இருவரும் இறந்து போனார்கள். ஆதலால், பெண்களின் கபடவார்த்தைகளைக் கேட்கலாகாது.
--- மகாபாரதம்.
----------

78. எழிலாரி கயல்பொரு விழியார் தந்திரம்
இயலா தனகொடு ழய ப்வா காதே.

எழில் ஆர் - அழகு நிறைந்த, கயல் - கயல் மீனை, பொரு - ஒத்து விளங்குகின்ற, விழியார் - கண்களையுடைய பெண்களின், தந்திரம் - உபாயங்களால், இயலாதன - பொருந்தாதவற்றை, கொடு - கைக் கொண்டு, முயல்வு - முயலுதல், ஆகாது - கூடாது. ஏ - அசை.

78. ஆதிநாளில் பிருது சக்ரவர்த்தி யென்று ஒரு பெரிய அரசர் இருந்தார். அவர் முதலில் இல்லறத்தில் இருந்து கொண்டு இராஜ்ய பரிபாலனம் பண்ணித் தான தருமங்களையும், பரோபகாரங்களையும், பொது நன்மைக்கு உபயோகமான பல காரியங்களையும் செய்து கீர்த்தியை அடைந்தார். பிற்பாடு, தமது கிழப் பருவத்தில் அரசு முதலிய எல்லாவற்றையும் துறந்து வனத்துக்குச் சென்று தவஞ்செய்து கடவுள் அருளுக்குச் சொந்தமாகிப் பரமபதத்தை அடைந்தார். ஆதலால், ஒருவன் முதலில் இல்லற நெறியில் இருந்து செய்யவேண்டிய கடமைகளை நன்றாகச் செய்து, பிற்பாடு துறவற நெறியால் கடவுள் உலகத்தை அடையவேண்டும்.
-- பாகவதம்.
---------

79. வழியே யோக வழியே மீளுக.

வழியே - (ஒருவன் இல்லற) வழியிலே, ஏகுக - செல்லக் கடவன்; வழியே - (பின்னர் ) அவ்வழியிலிருந்து, மீளுக - (துறவற வழியில்) திரும்பக்கடவன்.
-----------

80. இவைகாண் உலகிற் கியலா மாறே.

இவை - இவைகள் தாம் , உலகிற்கு - உலகத்தில் உள்ளவர் களுக்கு, இயல் ஆம். நடக்கக்கூடிய, ஆறு - நல்லவழிகளாம். காண்,
ஏ - அசைகள்.
---------

81. வாழிய நலனே ! வாழிய நலனே!

நலன் - எல்லா நன்மைகளும், வாழிய - வாழ்க; நலன்- எல்லா இன்பங்களும், வாழிய - வாழ்க . ஏ - இரண்டும் அசைகள்:

வெற்றிவேற்கை முற்றுப்பெற்றன.
----------

This file was last updated on 7 Jan. 2019.
Feel free to send the corrections to the .