விசிறி வாழை (காதல் நவீனம்)
சாவி (சா. விஸ்வநாதன்)

viciRi vAzai (novel)
by cAvi (cA. visvanAtan)
In tamil script, unicode/utf-8 format

விசிறி வாழை (காதல் நவீனம்)
சாவி (சா. விஸ்வநாதன்)

Source
விசிறி வாழை (காதல் நவீனம்) - சாவி
முன்னுரை


இக் கதை 'வாஷிங்டனில் திருமணத்தை'ப் போன்ற ஒரு நகைச்சுவைத் தொடர் அல்ல என்பதை வாசக நேயர்களுக்கு முன் கூட்டியே தெரிவித்துவிட விரும்புகிறேன். இது ஒரு தனித் தன்மை வாய்ந்த புதுமையான காதல் நவீனம். இதில் நகைச்சுவைக்கும் இடம் உண்டு.

இதற்கு முன் எத்தனையோ விதமான காதல் இலக்கியங்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் ரோமியோ ஜூலியட், லைலா மஜ்னு, சாகுந்தலம் போன்ற காதல் இலக்கியங்கள் அழிவில்லாத அமரத்வம் பெற்றவை. ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையில் தனிச் சிறப்பு வாய்ந்தவை.

அந்த மாபெரும் இலக்கியங்கள் இந்தக் காதல் நவீனத்தை நான் ஒப்பிட்டுப் பேசவில்லை. இதுவரை தோன்றி 'யுள்ள காதல் கதைகளுக்கெல்லாம் முற்றிலும் மாறுபட்ட முறையில் இந்தக் கதை அமைந்துள்ளது என்பது என் கருத்து. ஒரு காதல் கதையின் வெற்றிக்கு இன்றியமை யாத அம்சங்கள் எத்தனையோ உண்டு. அந்த உத்திகள் எதுவும் இதில் கையாளப்படவில்லை. காதலுக்குரிய சூழ்நிலை கதாபாத்திரங்கள் இவை இல்லாமலே இதை ஒரு காதல் நவீனம் என்று தைரியமாகக் கூறுகிறேன். ஆயினும், கதை யின் முடிவில் தான் நேயர்கள் இதைப்பற்றி முடிவு செய்ய வேண்டும். ஆனால் என்னைப் பொறுத்த மட்டில் இந்தக் காதல் கதையைப் படித்து முடித்த பிறகு யாராவது ஒரு சொட்டுக் கண்ணீர் விடுவார்களானால் அதையே இந்தக் கதையின் வெற்றியாகக் கொள்வேன்.

இந்தத் தொடரின் பின்னுரையில் நேயர்களுக்காக ஒரு முக்கிய விஷயம் காத்திருக்கிறது. அது இக் கதையில் வரும் கதாபாத்திரங்களையோ நிகழ்ச்சிகளையோ பற்றி அல்ல. அதை இப்போதே கூறிவிட்டால் சுவாரசியம் கெட்டு விடு மாகையால் இப்போது கூறாமல் கதையைத் தொடங்குகிறேன்.
-------------------

விசிறி வாழை - குருத்து ஒன்று


ராஜா!......

மாடியிலிருந்து ஒலித்தது அந்த அதிகாரக் குரல். கண்ணியமும் கம்பீரமும் மிக்க அந்தக் குரலுக்குரியவரின் பெயர் பார்வதி; குரலினின்று பார்வதியின் உருவத்தை - நிறத்தை அழகை - வயதைக் கற்பனை செய்ய முயலுகிறோம். முடிய வில்லை.

இன்னும் சிறிது நேரத்தில், அந்தக் கன்னிப் பெண் - இல்லை. வயதான மங்கை,- ஊஹம், குமாரி பார்வதி, அதுவும் சரியில்லை - பின் எப்படித்தான் அழைப்பது? சாரதாமணிக் கல்லூரியின் தலைவி டாக்டர் குமாரி பார்வதி, அது, தான் சரி - இப்போது கீழே இறங்கி வரப்போகிறாள். அப்போது நேரிலேயே பார்த்து விடலாம்.

மேஜை மீது வைக்கப்பட்டுள்ள காப்பி ஆறுவது கூடத் தெரியாமல் அந்தப் புத்தகத்திலுள்ள சில வரிகளில் மனத்தைச் செலுத்தி அவற்றையே திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருந்தாள் பார்வதி. அவளை அவ்வளவு தூரம் கவர்ந்து விட்ட அந்தப் புத்தகம் வேறொன்றுமில்லை. 'பில்க்ரிம்ஸ் ப்ராக்ரஸ்' என்னும் நூல் தான்.

பார்வதி தற்செயலாகத் தலை நிமிர்ந்தபோது எதிரில் ஆறிக் கொண்டிருக்கும் காப்பியைக் கவனித்தாள். சாப்பிடுவதற்குப் பக்குவமாக இருந்த சூடு இப்போது அதில் இல்லை. ஆறிப் போயிருந்தது. ஆயினும் அவள் அதைப் பொருட் படுத்தாமல் எடுத்துக் குடித்தாள். அவள் பார்வை பல கணியின் வழியாக ஊடுருவிச் சென்று சற்றுத் தூரத்தில் தெரிந்த சாரதாமணிக் கல்லூரியின் புதிய ஹாஸ்டல் கட்டடத்தில் பதிந்தது. அந்த வெண்மையான தூய நிறக் கட்டடத்தைக் கண்டபோது அவள் உள்ளமும் உடலும் சிலிர்த்தன. எண்ணம் ஆறு மாதங்களுக்குப் பின் நோக்கிச் சென்று, அப்போது நிகழ்ந்த ஒரு காட்சியைச் சலனப் பட மாக்கி, மனத் திரைக்குக் கொண்டு வந்தது.

ஆறு மாதங்களுக்கு முன்புதான் பார்வதி - முதல் முறையாக அவரைச் சந்தித்தாள். அவருடைய கெளரவமான தோற்றம், முகத்தில் நிலவிய அமைதி, உள்ளத்தில் உறைந்த உறுதி, வார்த்தைகளைத் தராசிலே நிறுத்துப் போட்டுச் செலவழிக்கும் சிக்கனம், கல கல வென்ற குற்றமற்ற குழந்தைச் சிரிப்பு! - எல்லாம் நினைவில் தோன்றி நெஞ் சத்தை நிறைத்தன. அவள் தன்னுள் வியந்துகொண்டாள். ஒரு முறை அந்த ஹாஸ்டல் கட்டடத்தின் கம்பீரத்தைக் கண்ணுற்றாள். இருப்பது ஒரே நாள். நாளைக் காலைக்குள் எல்லா ஏற்பாடுகளும் முடிந்தாக வேண்டும். மாலையில் விழா ஒரே கோலாகலமாயிருக்கும். அவர் வந்து புதிய ஹாஸ்டல் கட்டடத்தைத் திறந்து வைப்பார். அழகாகப் பேசுவார். மாணவிகள் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள், கலை நிகழ்ச்சியின் குதூகலத்துடன் ஆண்டு விழா இனிது முடிவுறும். அப்புறம்?... மறுநாள் திங்களன்று காலை வழக்கம் போல் கல்லூரி வகுப்புகள் தொடங்கும்போது கலகலப்பெல்லாம் ஓய்ந்து, திருவிழாக் கோலம் கலைந்து பேரமைதி நிலவும் - இந்தக் காட்சியையும் அவள் எண்ணிப் பார்த்தாள்.

'ராஜா!''

மீண்டும் குரல் கொடுத்தாள் பார்வதி. பதில் இல்லை; பதில் கொடுக்க வேண்டியவன் அங்கே இல்லை.

கீழே சாம்பிராணிப் புகை கம்மென்று மணம் வீசி அந்தப் பங்களா முழுவதும் நெளிந்து வளைந்து அடர்த்தியாக மண்டியது. அம்மம்மா! என்ன மணம்! அந்தத் தெய்விக மணத்தை நுகரும்போது உள்ளத்தில் எத்தனை நிம்மதி பிறக்கிறது! முன்வாசல் ஹாலில் மாட்டப்பட்டிருந்த கெடிகாரத்தின் பெண்டுலம் அமைதியாக வாசலாடிக் கொண்டிருந்தது.

பகவான் ராமகிருஷ்ண பரமஹம்ஸரும், அன்னை சாரதா மணி தேவியாரும் ஹால் சுவரின் இன்னொரு புறத்தை அலங்கரித்தார்கள்.

’ஒரு வீட்டில் மாட்டப்பட்டுள்ள படங்களே அந்த வீட்டில் வசிப்பவர்களின் உள்ளத்தைப் பிரதிபலித்துக் காட்டும் சின்னங்கள்' என்று யாரோ எப்போதோ கூறிய தாக ஞாபகம்.

”ராஜா!...''

வீணையின் ரீங்காரம் போல் மூன்றாம் முறையாக ஒலித்தது அக்குரல்.

"ராஜா இல்லை அம்மா!... விடியற்காலை ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு போனவர்தான். இன்னும் வரவில்லை. என்.ஸி.ஸி. போலிருக்கிறது...'' சமையல்காரி ஞானம் குரல் கொடுத்தாள்.

வாசல், 'போர்ட்டிகோ'வுக்கு முன்னால் துடிப்பாக வளர்ந்து கொண்டிருந்த விசிறி வாழையின் இரண்டொரு இலைகள் அசைவதைத் தவிர, அந்தப் பங்களாவுக்குள் வேறு சலனமே இல்லை. காம்பவுண்ட் கேட்டருகில் தேய்ந்து போன முக்காலியில் உட்கார்ந்திருந்தான் கூன் முதுகுப் பெருமாள். அவனுக்கு அந்தப் பங்களாவுக்குள்ளே, வெளியே நடக்கிற விவகாரம் எதுவுமே தெரியாது. காரணம், காது கொஞ்சம் மந்தம். முன்னெல்லாம், அதாவது அவனுடைய அறுபதாவது வயதில் இப்படியில்லை. இப்போது ஒரே டமாரச் செவிடு! பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைப் புத்தகம் ஒன்றும், அல்லி அரசாணி மாலையும், வயது முதிர்ந்து காலத்தின் சுழலிலே தாக்குண்டு, பழுப்பேறி,ஏடு நைந்து தொட்டால் துகளாக உதிர்ந்துவிடும் நிலையில் அவன் அறிவுத் தோழர்களாக அவனுடனேயே இருந்து கொண்டிருந்தன. பெருமாள் உட்கார்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்தான். அது சர்விஸில் ஏற்பட்ட பழக்கம்! நரம்புகள் தளர்ச்சியுற்று உடல் முழுவதும் சுருக்கங்கள் கண்டு, முதுகில் கூன் விழுந்த பிறகும் அவனை வெளியே அனுப்பிவிடப் பார்வதியின் இளகிய மனம் இடம் தரவில்லை.

கல்லூரியின் சேவகனாக ஐம்பது ஆண்டுக்காலம் தொண்டாற்றிய அந்தத் தொண்டுக் கிழவனை அநாதரவாக விட்டு விட மனமின்றித் தன்னுடைய பங்களாக் காவலனாக அமர்த்திக் கொண்டாள்.

சாப்பாட்டு ஹாலில் ராஜாவுக்கும் பார்வதிக்கும் மணை போட்டுத் தயாராக வைத்திருந்தாள் ஞானம். மணி ஒன்பதரை ஆயிற்று. தினமும் இதற்குள் சாப்பிட்டு முடிந்திருக்கும். இன்று கொஞ்சம் லேட். ராஜா வந்தால் சாப்பிட உட்கார வேண்டியது தான். அது ஏனோ, பார்வதிக்கு ராஜா இல்லாமல் தனித்துச் சாப்பிடத் தோன்றவில்லை. பழக்கமும் இல்லை. ஸ்கூட்டர் வரும் ஓசை கேட்கிறது, பெருமாளுக்கு அல்ல. வேப்பமரத்து நிழல் அவனை நல்ல உறக்கத்தில் ஆழ்த்தி விட்டிருந்தது. ராஜா அவனை ஏக வசனத்தில் திட்டிக்கொண்டே ஸ்கூட்டரை நிறுத்திக் கீழே இறங்கிக் கதவைத் தானே திறந்துகொண்டு உள்ளே சென்றான். காலையில் செய்த 'கசரத்’தில் அவனுக்கு உடல் களைத்துப் போயிருந்தது. நல்ல பசி வேறு. சமையலறையில் கொதித்துக் கொண்டிருந்த தக்காளி ரசத்தின் வாசனை, சாம்பிராணிப் புகையுடன் கலந்து வந்தபோது அவனுடைய பசியை மேலும் தூண்டியது.

வீட்டுக்குள் நுழையும் போதே ”அத்தை ! பசி! பசி!... வா அத்தை!'' என்று எக்காளமிட்டுக் கொண்டே சமையலறையை நோக்கி விரைந்தான். நொடிப் பொழுதில் காக்கி உடையைக் களைந்து, வேறு உடை மாற்றிக்கொண்டு மணையில் போய் உட்கார்ந்துவிட்டான்.

''தக்காளி ரசம் வாசனை மூக்கைத் துளைக்கிறதே! என்ன சமையல் இன்றைக்கு! அப்பளம் பொரித்திருந்தால் முதலில் கொண்டு வந்து போடு. அத்தை வருகிறவரை அதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். பசி தாங்கவில்லை. உஸ்ஸ்... இடியட்! பெருமாள்! நெற்றி முழுதும் நாமத்தைப் பட்டையாகத் தீட்டிக்கொண்டு......... உட்கார்ந்தபடியே எப்படித்தான் நாள் முழுவதும் தூங்க முடிகிறதோ அவனால்!...'' வார்த்தைகளைப் பொரித்துக் கொட்டிக் கொண்டிருந்தான் ராஜா.

சமையலறையில் பச்சைப் பட்டாணியும் முட்டைக் கோஸும் எவர்ஸில்வர் வாணலியில் இளம் பதமாக வதங்கிப் பக்குவமாகிக் கொண்டிருப்பது அவன் கண்ணில் பட்டது.

''அந்தக் கறியில் கொஞ்சம் கொண்டுவந்து போடு... பசி தாங்கவில்லை. அத்தையைக் காணோமே... அத்தே! அத்தே! நீ வரப் போகிறாயா.... நான் சாப்பிடட்டுமா?”

ஞானம் புகையப் புகைய கோஸ் கறியைக் கொண்டு வந்து பறிமாறினாள். அவசரமாக அதைச் சட்டென்று எடுத்து வாயில் போட்டுக்கொண்ட ராஜா, நாக்கைச் சுட்டுக் கொண்டு சூடு பொறுக்காமல் திணறிப் போய் ''பூ! பூ!” என்று வாய்க்குள்ளாகவே ஊதிச் சுவைத்துக் கொண்டிருந்த இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டே வந்த பார்வதி, சிரிப்பை அடக்கிக் கொண்டவளாய், ”ஏண்டா! ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப்பொறுக்கவில்லையா? உனக்காக நான் இத்தனை நேரம் காத்திருந்தேனே, நான் வருவதற்குள் என்ன அவசரம் வந்து விட்டது உனக்கு?''

ராஜா பதில் கூறவில்லை. பதில் கூறும் நிலையில் இல்லையே அவன்!

துல்லியமாக, எளிமையாகத் தன்னை அலங்காரம் செய்து கொண்டிருந்தாள் பார்வதி. ஒரு கல்லூரியின் பிரின்ஸிபால் என்று கூறுவதற்குரிய வயதோ, தோற்றமோ, ஆடம்பரமோ அவளிடம் காணப்படவில்லை. அவளுடைய ஆழ்ந்த படிப்பும், விசாலமான அறிவும் அவளுடைய எளிமையான அடக்கமான தோற்றத்தில் அமுங்கிப் போயிருந்தன. நாகரிகம் என்ற பெயரில் கல்லூரி மாணவிகள் தங்களை அலங்காரம் செய்து கொண்டு வரும் அவலட்சணங்களைக் காணும்போதெல்லாம், அந்த அநாகரிகமான பண்பற்ற கோலங்களைக் கண்டிக்கத் தவறியதில்லை அவள்.
"ஏண்டா கறியைச் சுடச் சுட விழுங்கி விட்டாயா? அவசரக் குடுக்கை! ஆத்திரப்பட்டால் இப்படித்தான் ஆகும்...'' பார்வதி தன் செல்ல மருமகன் ராஜாவை நாசூக்காகக் கண்டித்தபடியே மணைமீது அமர்ந்தாள்.

''அதற்காக ஆறிப் போகும்படியும் விடக்கூடாது அத்தை! அப்போது ருசியை இழந்து விடுவோம்'' என்றான் ராஜா.

பார்வதிக்குச் சுருக்கென்றது.

’அளவுக்கு மீறிக் காலம் கடத்துவதும் கூடாது தான்.... ராஜா எதை மனத்தில் எண்ணிக்கொண்டு இப்படிச் சொல் கிறான்? இவனுக்குத் திருமணம் செய்யும் காலத்தைக் கடத்தி விடக் கூடாது என்று எச்சரிக்கிறானா? அல்லது...'

காலையில் மேஜை மீது ஆறிக்கிடந்த காப்பியை அருந்தும் போது கூட அவளுக்கு இந்த எண்ணம் உண்டாயிற்று. சிந்தனையில் லயித்துக் காப்பியின் ருசியை இழந்து விட்டது கால தாமதத்தினால் நேர்ந்த இழப்புத்தானே?

'ஒன்றை இழந்தால் தான் இன்னொன்றின் சுகத்தைப் பெற முடியும். எதை அடைய விரும்புகிறோமோ, எந்த மாபெரும் காரியத்தைச் சாதிக்க விரும்புகிறோமோ, அந்தக் காரியமே நமது வாழ்க்கையின் குறிக்கோளாகி விடும்போது மற்ற இன்பங்களெல்லாம் அற்பமாகி விடுகின்றன. உலகத் தில் அரும் பெரும் காரியங்களைச் சாதித்தவர்கள், சாதிப்ப வர்களின் வாழ்க்கையைத் துருவினால், அவர்களின் சரித்திரத்தை ஆராய்ந்தால் இந்த உண்மை நமக்குப் புலனாகாமற் போகாது. சிற்சில சமயங்களில் என்னை நான் மறந்து விடுகிறேன் என்பது உண்மைதான். ஆனால், அதனால் என் வாழ்க்கையில் நான் பெறவேண்டிய இன்பத்தைப் பெறத் தவறி விட்டேனா? காலம் கடந்து போய் விட்டதா?

பார்வதியின் சிந்தனையைக் கலைத்தான் ராஜா.

”அத்தை! இந்தச் செவிட்டுப் பெருமாளை எதற்காகத் தான் கேட்டில் உட்கார வைத்திருக்கிறாயோ? காதுதான் கேட்கவில்லை யென்றால் கண்களையும் மூடிக்கொண்டு நிம்மதியாகத் தூங்கி விடுகிறானே !”

''பாவம்! அநாதைக் கிழவன். இந்த உலகத்தில் அவனுக்கு யாருமே இல்லை. அத்தோடு காது வேறு செவிடு. தன் வாழ்நாள் முழுவதும் நமது கல்லூரியிலேயே கழித்த வனைக் காப்பாற்றுவது நம் பொறுப்பு இல்லையா?...”

”கல்லூரி ஆண்டு விழா என்றைக்கு அத்தை?''

" நாளைக்குத்தான். விழாவைச் சிறப்பாக நடத்தும் பொருட்டு எங்கள் கல்லூரிக்கு மூன்று நாள் விடுமுறை விட்டிருக்கிறேன் ராஜா! உனக்கு இன்றும் நாளையும் லீவு தானே! நீயும் இப்போது என்னுடன் கல்லூரிக்கு வரலாம். நீ பெரிய என்ஜினீயர் படிப்பு படிப்பவனாயிற்றே! புதிய ஹாஸ்டல் கட்டடத்தை வந்து பார். அத்துடன் கல்லூரியில் 'டெகரேஷன்' வேலை நடந்து கொண்டிருக்கிறது. உனக்கு இதிலெல்லாம் ஒரு ’டேஸ்ட்' உண்டே !...''

”பெண்கள் கல்லூரிக்குள் நான் வரலாமா, அத்தை?''

''தாராளமாக வரலாம்; அங்கே இப்போது கலை நிகழ்ச்சிக்காக ஒத்திகை நடந்து கொண்டிருக்கும். பாரதியும் இன்னும் சில பெண்களும் மட்டுமே வந்திருப்பார்கள். அவர்களைக் கண்டால் நீதான் வெட்கப்படுவாய்! ரொம்ப வாயாடிப் பெண்கள்!'' என்றாள் பார்வதி.

''பாரதியா? யார் அத்தை அது? எஸ். பாரதி, பி.எஸ்ஸி. ஸெகண்ட் இயர் ஸ்டூடன்ட்தானே! 'ஸ்லிம்' மாக சினிமா ஸ்டார் நூடன் மாதிரி இருப்பாளே, அந்தப் பெண்ணா?

''அவளை உனக்கு எப்படித் தெரியும், ராஜா?'' அத்தையின் விழிகள் வியப்பால் மலர்ந்தன.

"ரேடியோ க்விஸ் புரோக்ராமுக்கு அடிக்கடி வருகிற பெண்தானே? நானும் அவளும் க்விஸ் மாஸ்டரின் கேள்வி ஒன்றுக்கு ஒரே சமயத்தில் சேர்ந்தாற்போல் பதில் கூறினோம். மாஸ்டர் அத்தப் பெண்ணுக்குத்தான் 'பாயின்ட்' கொடுத்தார். பிறகு என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே "லேடீஸ் ஃபஸ்ட்' என்று சொல்லிக் கண் சிமிட்டினார்.”

"அதென்னடா அப்படிப்பட்ட கேள்வி?" அத்தை கேட்டாள்.

”ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாய் வாழ்வமிந்த நாட்டிலே........’ இந்தக் கவிதையைப் புனைந்த கவிஞன் யார்?' என்பது கேள்வி. பாரதி என்று நாங்கள் இருவரும் பதில் கூறினோம். ’சபாஷ்' என்று கூறிய மாஸ்டர், 'உன் பெயர் என்னம்மா?' என்று அந்தப் பெண்ணைக் கேட் டார் 'பாரதி' என்று நாணத்துடன் பதில் கூறினாள் அவள். அப்போது தான் எனக்கு அந்தப் பெண்ணின் பெயர் தெரியும்' என்று கூறினான் ராஜா.

'வெரி ஷ்ரூட் கர்ல்! இவ்வாண்டு சாரதாமணிக் கல்லூரி நடத்திய அழகுப் போட்டியிலும் கூட அவளுக்கே முதல் பரிசு கிடைத்திருக்கிறது. இதற்காக ஆண்டுவிழாவின் போது பரிசாகக் கொடுப்பதற்கென்று ஒரு பெரிய வெள்ளிக் கோப்பைகூட வாங்கி வைத்திருக்கிறோம். அது மட்டுமல்ல. கலை நிகழ்ச்சியில் குறத்தி டான்ஸ் ஆடப்போகிறாள் அவள்......'' என்று கூறினாள் பார்வதி.

குறத்தி வடிவத்தில், குதூகலத்தின் எல்லையில், வாலிபத்தின் எக்களிப்போடு, ராஜாவின் மனக்கண் முன் தோன்றினாள் பாரதி.

ராஜா பால்பாயசத்தை உறிஞ்சிக்கொண்டே பாரதியின் அழகை அசை போடலானான்.

''உங்கள் இருவருக்கும் இன்னும் கொஞ்சம் பாயசம் போடுகிறேன்'' என்றாள் ஞானம்.

”என்ன ஞானம்? இன்றைக்கு என்ன விசேஷம்? பால் பாயசம் போட்டிருக்கிறாய்?'' என்று அப்போதுதான் விசாரித்தாள் பார்வதி.

"இன்றைக்கு உங்களுக்குப் பிறந்த தினமாயிற்றே! அது உங்களுக்கு எங்கே ஞாபகம் இருக்கப் போகிறது, எந்நேரமும் கல்லூரியைப்பற்றிய நினைவுதான்.'' ஞானம் கூறினாள்.

”நாற்பத்தாறு வயதா ஆகி விட்டது எனக்கு? காலம் விளையாட்டாக ஓடிவிட்டது. கல்லூரிக்கும் எனக்கும் மூன்று வயது வித்தியாசம் தான். கல்லூரிக்கு நாளை ஐம்பதாவது ஆண்டு விழா. எனக்கு நாற்பத்தேழாவது பிறந்த நாள்.''

தான் வேறு, கல்லூரி வேறு என்ற உணர்வே அவளிடம் கிடையாது.

''இந்தக் கல்லூரியிலேயே படித்து, அங்கேயே லெக்சரராக வேலை பார்த்து, இப்போது அதன் தலைவியாகவும் ஆகி விட்டேன். ஹ்ம்ம். பெருமுச்சு ஒன்றை வெளியிட்டு மனத்தில் தோன்றிய எண்ணத்தை மறைக்க முயன்றாள்.

''அத்தை உனக்கு அடிக்கடி பிறந்தநாள் வர வேண்டும்'' என்று வாழ்த்திக் கொண்டே எழுந்தான் ராஜா.

"ஏண்டா நான் சீக்கிரத்திலேயே கிழவியாகிவிட வேண்டும் என்று வாழ்த்துகிறாயா?'' என்று கேட்டாள் பார்வதி.

''பாயசத்துடன் எழுந்து விட்டாயே, மோர் சாப்பிட வில்லையா ராஜா? என்று கேட்டாள் ஞானம்.

"ஹவுஸ் புல்!'' என்று கூறிக்கொண்டே திருப்தியுடன் ஓர் எப்பம் விட்டான் ராஜா.

"உனக்கு எப்போதும் இந்த சினிமாப் பேச்சுதான்.... சரி, போய் காரை எடு; காலேஜுக்குப் புறப்படலாம், என்று அத்தை கூறி முடிக்கு முன்பே, 'ஓ.கே!'' என்று வாசலுக்குப் பாய்ந்து ஓடினான் ராஜா.

பார்வதி வாசல் ஹாலுக்கு வந்து நின்று பகவானையும், தேவியையும் அண்ணாந்து பார்த்து வணங்கிவிட்டுக் காரில் ஏறிக்கொண்டாள். கார் போர்ட்டிகோவை விட்டு நகர்ந்ததுதான் தாமதம், செவிட்டுப் பெருமாள் மரியாதையாக முக்காலியை விட்டு எழுந்து நின்றான்.

”அத்தை! இந்தச் செவிடனுக்கு நீ வெளியே போகிற நேரம் மட்டும் எப்படியோ மூக்கிலே வியர்த்து விடுகிறது. மற்ற நேரங்களில் காதும் கேட்பதில்லை, கண்ணும் தெரிவதில்லை. பெரிய வேஷக்காரன் அத்தை இவன்!... கையில் அல்லி அரசாணி மாலையைப் பாரு!'' என்றான் ராஜா.

”உன் மாதிரி 'ஹிட்ச்காக்' படம் பார்க்கச் சொல்கிறாயா, அவனை?”

ஹாரன் செய்தபடியே காரைக் கலாசாலைக் காம் பவுண்டுக்குள் செலுத்திப் பிரின்ஸிபால் அறைக்கு முன்னால் கொண்டு நிறுத்தினான் ராஜா. அந்த ஹாரன் சத்தம் கலாசாலையின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று ஒலித்த போது, ஆங்காங்கே அதுவரை ’கேசமுசா' வென்று பேசிக் கொண்டிருந்தவர்கள் 'கப்சிப்'பென்றாகிப் 'பிரின்ஸிபால் வந்து விட்டார்' என்ற எச்சரிக்கை உணர்வுடன் வேலை செய்யத் தொடங்கினர்.

”ராஜா! புதிய ஹாஸ்டல் கட்டடத்தில் தான் மீட்டிங்கும் கலை நிகழ்ச்சியும் நடைபெறப் போகின்றன. எலெக்ட்ரீஷியனை வரச்சொல்லி யிருக்கிறேன். அதற்கு முன்னால், காகிதப் பூத்தோரணங்களால் ஹாலை அழகுபடுத்த வேண்டும். ஹாஸ்டல் மாணவிகள் கலர் காகிதங்களில் விதம் விதமான தோரணங்கள் தொடுத்து வைத்திருக்கிறார்கள். நீ போய் அவற்றை யெல்லாம் அழகாகக் கட்டிவிடு. பாரதியும் ரிஹர்ஸலிலிருந்து வருகிற நேரமாயிற்று என் றாள் பார்வதி.

ராஜாவின் இதயம் உற்சாகத்தில் சீட்டியடித்தது. அடுத்த கணமே அவன் புதிய ஹாஸ்டல் கட்டடத்தில் இருந்தான். ஹாலுக்குள் நுழையும்போதே அந்த வாயாடிப் பெண்களுக்கு முன்னால் சங்கோசமின்றிப் பழகவேண்டும் என்று தானாகவே எண்ணிக்கொண்டு, செயற்கையான அதட்டல் குரலில் மெள்ளப் பேச வேண்டிய விஷயத்தைக் கூட இரைந்து கத்தினான்.

''எங்கே தோரணமெல்லாம் ?............ எலெக்ட்ரீஷியன் வந்தாச்சா? ஆணி இல்லையா? சுத்தியல்....!... ” இப்படிப் பொதுவாக அதட்டல் போட்டுக் கொண்டே சுற்று முற்றும் யாராவது தன்னைக் கவனிக்கிறார்களா என்று ஒரு முறை கடைக்கண்ணால் கவனித்துக் கொண்டான். அங்கே யாருமே இல்லை : ஒரு மூலையில் குவிந்து கிடந்த காகிதத் தோரணங் களையும், இன்னொரு பக்கம் குத்திட்டு அடுக்கி வைக்கப் பட்டிருந்த மடக்கு நாற்காலிகளையும் தவிர......

ராஜா அந்த நாற்காலிகளில் ஒன்றை நடு ஹாலில் இழுத்துப் போட்டுக்கொண்டு, ’செட்டில்’ நட்சத்திரங்களின் வருகைக்காகக் காத்திருக்கும் ஒரு சினிமா டைரக்டரைப் போல் உட்கார்ந்துகொண்டான். அப்படி ஒரு நினைப்பு அவனுக்கு!

அடுத்த நிமிடம் 'கூடை முறம் கட்டுவோம், குறி சொல்லுவோம்' என்று ஊமை ராகத்தில் பாடியபடியே மறு நாள் ஆடப் போகும் குறத்தி நடனத்தை ஒத்திகை பார்த்துக் கொண்டவளாய்த் தன் தோழிகளுடன் ஹாலுக்குள் குதித்து வந்தாள் பாரதி. அங்கே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்த ராஜாவைக் கண்டதும் அவள் முகம் வெட்கத்தால் சிவந்து போயிற்று !

"ஹல்லோ ! எஸ் பாரதி, பி.எஸ்ஸி, ஸெகண்ட் இயர், சாரதாமணி காலேஜ். டான்ஸ் ரொம்ப பிரமாதம்! கூடை முறம் அப்புறம் கட்டிக் கொள்ளலாம். இப்போது இந்தத் தோரணங்களை முதலில் கட்டி முடிக்கலாமா?'' ராஜா ரொம்பப் பழகியவன் போல் பேசினான்.

"இதோ நாங்கள் தோரணம் தொடுத்து ரெடியாக வைத்திருக்கிறோம்'' என்றாள் பாரதி.

"இவற்றை எப்படிக் கட்டுவதாம்? இங்கே யாருக்காவது ஏதாவது 'ஐடியா’ இருக்கா?'' என்று கேட்டான் ராஜா.

''என்ஜினீயர் படிக்கிறவர்களுக்கு இல்லாத ஐடியாவா?'' பாரதி வேடிக்கையாகக் கூறினாள்.

''என்ஜினீயர் என்றால் எல்லாம் தெரிந்திருக்க வேண்டுமா என்ன? ஒரு துறையில் புத்திசாலிகளாயிருந்தால் அவர்களுக்கு உலகத்திலுள்ள அத்தனை விஷயங்களும் தெரிந் திருக்க வேண்டுமென்பதில்லை. அப்படியானால் சர்ச்சிலுக்கு வேஷ்டி கட்டத் தெரியாது. குருஷ்காவுக்கு ஹாரிகாம்போதி பாடத் தெரியாது'' என்றான் ராஜா.

இந்த ஹாஸ்யத்துக்கு பலமாகச் சிரித்தார்கள் பாரதியின் சிநேகிதிகள்! அந்தப் பெண்கள் சிரித்ததும் ராஜாவுக்குத் தலை கிறுகிறுத்தது.

சுவர் ஓரமாக ஒரு பெஞ்சை இழுத்துப் போட்டு, அதன் மீது ஒரு ஸ்டூலை எடுத்து வைத்து அதன் மீது ஏறி நின்று கொண்ட அவன், ''ஆணி எங்கே, சுத்தியல் எங்கே?'' என்று அதிகாரம் செய்தான்.

ஆணிகளையும் சுத்தியலையும் கொண்டு வந்தாள் பாரதி.

ராஜா அவளிடமிருந்து ஆணி ஒன்றை வாங்கிச் சுவரிலே வைத்துச் சுத்தியால் ஓங்கி ஓர் அடி அடித்தான். ஆணி வளைத்துக் கொண்டது !

வளைந்த ஆணியை எரிச்சலோடு கீழே எறிந்துவிட்டு, ”பரவாயில்லையே! கட்டடம் ரொம்ப ஸ்ட்ராங்காகத்தான் இருக்கிறது. உங்க அப்பா கட்டிக் கொடுத்த கட்டடம்
அல்லவா?”

”இது எங்கப்பா கட்டியதில்லை........ கொத்தனார்........”' என்றாள் பாரதி.

ஏதோ அபூர்வ ஹாஸ்யத்தைக் கேட்டு விட்டது போல் அந்தக் கட்டடமே இடிந்து விழுகிற மாதிரி சிரித்தார்கள் அந்தப் பெண்கள்.

”சரி, இன்னொரு ஆணியைக் கொடுங்கள்'' என்று பாரதியைப் பார்த்துக் கேட்டான் ராஜா.

பாரதி கொஞ்சம் வலுவான ஆணியாகவே எடுத்துக் கொடுத்தாள்.

அதைக் கையில் வாங்கியபடியே, ”முதல் முதல் ஆணியைக் கண்டு பிடித்தவர் யார்?” என்று ஒரு குவிஸ் கேள்வி போட்டான் ராஜா.

''முதல் முதல் சுத்தியலைக் கண்டு பிடித்த மேதாவி யார்?” என்று பதிலுக்கு இன்னொரு குவிஸ் கேள்வி போட்டாள் பாரதி.

''யார் கண்டு பிடித்திருந்த போதிலும், அவ்விரண்டு பேரும் ஒருவருக்கொருவர் பெரிய எதிரிகள்'' என்றான் ராஜா.

"அதெப்படி?'' என்று கேட்டாள் பாரதி.

”ஆணியைக் கண்டால் அதன் மண்டையில் அடிக்கிறது இந்தச் சுத்தியல். சுத்தியலைக் கண்டால் எதிர்த்து நிற்கிறது இந்த ஆணி. ஆகவே இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரிகள்!

இப்படியே நீங்கள் சுவர் முழுவதும் ஆணி அடித்துக் கொண்டிருந்தால் அப்புறம் இன்னொரு புதிய ஹாஸ்டலே கட்ட வேண்டியதுதான்... தரையில் பாருங்கள், எத்தனை ஆணிகளை வளைத்துப் போட்டிருக்கிறீர்கள்?''

இன்னொரு ஆணியை வாங்கிப் பலமாக அடித்த ராஜா, "ஐயோ! என்று அலறியபடியே கீழே குதித்து இடது கையை உதறிக் கொண்டான். சுத்தியல் அவன் இடது கைக் கட்டை விரலை நசுக்கிவிடவே இரத்தம் பெருகிவந்தது.

கையிலிருந்து பெருகி வழிந்த ரத்தத்தைக் கண்டதும் பாரதி பயந்து போய்விட்டாள்.

அவன் கட்டை விரலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டவள், சிநேகிதிகள் பக்கமாகத் திரும்பி ''ஃபஸ்ட் எய்ட் பாக்ஸ் ப்ளீஸ்” என்று பரபரத்தாள்.

'பாணிக்கிரகணம் செய்து கொடுக்கப் போவதாகப் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு....... என்று அந்தப் பொல்லாத பெண்கள் கண் சிமிட்டியபடியே முதல் உதவிப் பெட்டியைக் கொண்டுவர ஓடினார்கள்.

பிரின்ஸிபால் பார்வதி தமது அறைக்குள் சென்று நாற்காலியில் அமர்ந்தபோது டெலிபோன் மணி அடித்துக் கொண்டிருந்தது. ரிசீவரை எடுத்துப் பேசி முடித்ததும் மேஜை மீதிருந்த கல்லூரியின் பொன் விழா அழைப்பிதழ் அவள் கவனத்தைக் கவர்ந்தது. வழவழப்பான காகிதத்தில் 'சேதுபதி' என்ற பெயர் பொன் எழுத்துகளால் பொறிக்கப் பட்டிருந்தன. பார்வதி ஒருமுறை அப் பெயரை நெஞ்சம் நிறையச் சொல்லிப் பார்த்துக் கொண்டாள். "இந்தப் பெயரில் என்ன மாய சக்தி இருக்கிறது? இதைக் காணும் போது எனக்கு ஏன் வியர்க்கவேண்டும்?' என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள். அவள் சிந்தனை அவரையே சுற்றி வட்டமிட்டது.

''நாளை விழாவில் இவரை எவ்வாறு அறிமுகப்படுத்திப் பேசுவது? சுருக்கமாக அழகாகப் பேச வேண்டும். வளவளவென்று பேசினால் அவருக்குப் பிடிக்காது. பேசும்போது குரலில் தடுமாற்றம் இருக்கக்கூடாது. நடுக்கம் தொனிக்கக் கூடாது.''

பார்வதிக்குக் கூட்டமோ சொற்பொழிவோ புதிதல்ல. இதற்கு முன் எத்தனையோ கூட்டங்களில் எவ்வளவோ முறை பேசியிருக்கிறாள். அறிவாளிகளின் பாராட்டுதல்களை யும் கரகோஷத்தையும் கூடப் பெற்றிருக்கிறாள். ஆனால் நாளைக்குப் பேசப் போவதைக் குறித்து எண்ணும்போதே அவளுக்குச் சற்று யோசனையாக இருந்தது.

வெண்மையான மல்லிகை மலர்களால் சுமக்க முடியாத அளவுக்ருப் பெரிய மாலையாகக் கம்பீரமான அவர் உருவத்துக்கு ஏற்ற முறையில் அழகாகத் தொடுத்துக் கொண்டு வரச் சொல்லி, அறிமுகப் பேச்சு முடிந்ததும்....

...'' முடிந்ததும் '' என்று பயங்கரமாக ஓர் எதிரொலி எழுந்தது. பார்வதி பயந்து போய்ச் சுற்றுமுற்றும் பார்த் தாள். வேறு ஒருவருமில்லை. அவள் உள் மனமேதான்!

அறிமுகம் முடிந்ததும் அவர் கழுத்தில் மாலையைச் சூட்ட வேண்டும். யார் சூட்டுவது? தன் உள்ளத்தின் அடி வாரத்தில், ஏதோ ஓர் அற்ப ஆசை நிழலாடுவதைப்போல் உணர்ந்தாள். அதுவரை தன் வாழ்நாட்களில் அனுபவித் தறியாத புதுமையான உணர்வு அது.

யாரைக் கொண்டு அவருக்கு மாலை சூட்டுவது என்ற கேள்விக்குப் பதிலே கிடைக்கவில்லை அவளுக்கு.

திடீரென்று கள்ளத்தனமாகத் தன்னுள் புகுந்து குருத்து விடத் தொடங்கியிருக்கும் அந்த ஆசையை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடத் துணிந்தாள்; முடியவில்லை.

அந்தத் தங்க எழுத்துகள் மீண்டும் அவள் கவனத்தை ஈர்த்தன. அதைக் கண்ணுற்ற போது, ஆறு மாதங்களுக்கு முன் அவரைக் காணச் சென்றபோது நிகழ்ந்த விவரங்க ளெல்லாம் மறுபடியும் நினைவுக்கு வந்தன.

அதற்கு முன் அவள் அவரைப் பார்த்ததே இல்லை. நிறையக் கேள்விப்பட்டிருக்கிறாள். ’மிகவும் கண்டிப்பான வர்; அதிகம் பேசமாட்டார். யாருக்கும் அவருடைய பேட்டி எளிதில் கிட்டிவிடாது' என்பதே அவரைப்பற்றி அவள் அறிந்திருந்த விஷயம்.

தான் அவரைக் காண வந்திருப்பதாகச் சொல்லி அனுப்பினால் நன்கொடை விஷயமாகத்தான் வந்திருக்கிறேன் என்பதை எளிதில் யூகித்து விடுவார்.

''இப்போது அவசர ஜோலியிருக்கிறது. அப்புறம் வந்து பார்க்கச்சொல் என்று பதில் கூறி அனுப்பிவிடுவார் என்ற எண்ணத்துடனேதான் அன்று புறப்பட்டுச் சென்றான். அங்கே போனபோது முற்றிலும் நேர்மாறாகவே நடந்தது.

தன் பெயரை ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி அனுப்பி விட்டு, உள்ளம் படபடக்க உட்கார்ந்திருந்தாள் பார்வதி. ஒரு கண நேரம் கூட ஆகவில்லை. தங்களை வரச் சொல்கிறார்' என்று பியூன் வந்து அழைத்தபோது வியப்புத் தாங்கவில்லை அவளுக்கு.

பார்வதி உள்ளே செல்லும் போதே அவர், "வாருங்கள், உட்காருங்கள். தங்களைப்பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன். கல்லூரியை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷம்'' என்று பெருமிதத்தோடு சிரித்தார்.

"தங்களைப் போன்றவர்களின் ஆதரவும் ஆசியும் தான் முக்கியம். இப்போது கூடக் கல்லூரி விஷயமாகத்தான் தங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். தங்கள் நேரத்தை வீணாக்க மனமில்லை. சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். ஹாஸ்டல் ஒன்று கட்டுவதற்கு நிதி திரட்டிக் கொண்டிருக் கிறோம். அதற்குத் தங்களுடைய உதவியை எதிர்பார்க்கிறோம்,'' என்று மனப்பாடம் செய்து வைத்திருந்த வார்த்தைகளை அப்படியே கூறி முடித்தாள் பார்வதி.

''எனக்கு அதைப்பற்றியெல்லாம் இப்போது சிந்திக்க அவகாசம் இல்லை. நேரம் கிடைக்கும்போது நானே தங்களுக்குச் சொல்லி அனுப்புகிறேன்'' சேதுபதி நாலே வார்த்தைகளில் நடக்கென்று பேட்டியை முடித்து விட்டார். பார்வதிக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. நன்கொடை இல்லையே என்பதல்ல; பேட்டி இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே என்றுதான்.

அவரிடம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது. ஆயினும் வணக்கம் என்று கூறி விடைபெற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

அந்தத் தங்க எழுத்துக்களை உற்றுப் பார்த்தபடியே யோசிக்கலானாள் பார்வதி. அன்று அவரைச் சந்தித்துப் பேசிவிட்டு விடைபெற்றுக் கொள்ளும்போது அவரைப் பிரிந்து செல்லவே அவளுக்கு மனமில்லை. இதுவரை அவள் யார் யாரையோ, எத்தனை எத்தனையோ அறிவாளிகளை, பிரமுகர்களை, தனவந்தர்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறாள். அப்போதெல்லாம், ஏற்படாத வருத்தம் இவரைப் பிரியும்போது மட்டும் ஏன் ஏற்படவேண்டும்? இந்தக் கேள்விக்கு அன்று அவளுக்கு விடை கிடைக்கவில்லை. ஏன் இன்றும் இன்னமும் கிடைக்கவில்லை.
----------------

குருத்து இரண்டு


முதல் உதவிப் பெட்டியை எடுத்து வர ஓடிய பெண்கள் பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகியும் திரும்பி வராமற் போகவே, ராஜாவின் கையைப் பிடித்துக் கொண்டிருந்த பாரதியை வெட்கம் சூழ்ந்து கொண்டது. அதுவரை அவளுக்கு அந்த இக்கட்டான சூழ்நிலையில் நின்று கொண்டிருப்பதின் விபரீதம் புரியவில்லை. நேரமாக. ஆகத்தான் அவள் அதை உணர்ந்தாள். நெஞ்சு படபடக்க, அவர்கள் வருகிறார்களா என்று கவலையோடு திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தாள். ராஜாவும்தான் பார்த்துக் கொண்டிருந்தான் அவர்கள் வந்துவிடப் போகிறார்களே என்ற கவலையோடு!

அப்போது அந்த ஹாலில் அவர்கள் இருவரையும் தவிர வேறு யாருமே இல்லை.

ராஜா பாரதியிடம் ஏதாவது பேச வேண்டுமெனத் துடித்தான். ஆனால் என்ன பேசுவதென்று புரியவில்லை.

சினிமாக்களில் வரும் காதலர்கள் தனிமையில் சந்தித்துக் கொள்ளும் நேரங்களில் என்ன பேசிக் கொள்வார்கள் என்று யோசித்துப் பார்த்தான். தமிழ்ப் படங்களாயிருந்தால், தத்துப் பித்தென்று ஏதோ பேசிக் கொண்டிருப்பார்கள்; அல்லது 'டூயட்' பாடியபடியே ஒருவரை யொருவர் துரத்திப் பிடிப்பார்கள். அவர்கள் தங்கள் இரட்டை நாடிச் சரீரத்தைச் சுமந்து கொண்டு அந்தப் பாட்டு முடியும்வரை காடு மேடெல்லாம் ஓடிக் களைத்து வியர்த்துப் போகும் நேரத்தில் 'இன்டர்வல்’ விட்டுவிடுவார்கள். ஹிந்தி நடிகர்களாயிருந்தால், அவர்கள் பேசுகிற பாஷையே நமக்குப் புரியாது. ஆங்கிலப் படமா யிருந்தாலோ காதலன் காதலியின் முகத்தருகே தன்னுடைய முகத்தைக் கொண்டுபோய் ரகசியக் குரலில், ’ஐ லவ் யூ' என்பான். அவளும் அவனது இரு தோள்களைப் பற்றிக்கொண்டு அதே வார்த்தையைத் திருப்பிக் கூறுவான். இதற்குள் அவர்கள் ஒரு டஜன் முத்தங்களைப் பறிமாறிக் கொண்டிருப்பார்கள். இவ்வளவுக்கும் பிறகு ‘ஐ லவ் யூ" என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் கூறித் தங்களுடைய காதலைப் பிரகடனப்படுத்துவார்கள்.

இந்த முறைகள் எதுவுமே ராஜாவுக்குப் பிடிக்கவில்லை. பேச்சே வேண்டாம். பாரதியின் மாந்தளிர் போன்ற விரல்கள் தன் கையைப்பற்றிக் கொண்டிருப்பதே அவனுக்குச் சுகமாயிருந்தது. பாரதியும் தானும் அதே நிலையில், அதே போஸில், சிலையாக மாறிக் காலமெல்லாம் அப்படியே நின்று கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. ஆனால், அடுத்த கணமே 'ஊள ஹம்; கூடாது; சிலையாக மாறி விட்டால் உணர்ச்சியில்லாமல் அல்லவா போய்விடும்? என்று எண்ணினான்.

பாரதிக்கு ராஜாவிடம் அந்தரங்கத்தில் அன்பு இருந்த போதிலும், அவனுக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சி அடைந்த போதிலும், தனிமையில் அவனுடன் இருப்பது தன் பெண்மைக்கு இழுக்கு, நாலு பேர் கண்டால் கேலிக்கு இடம் என்பதை அவள் மனம் குத்திக் காட்டிற்று.

அந்த நிலையில் ராஜாவின் கையை அப்படியே விட்டுச் செல்லத் துணிவின்றித் தவித்தபோது, சட்டென உதித்த யோசனையைச் செயல்படுத்துவதுபோல் தன் இடுப்பில் செருகியிருந்த மெல்லிய கைக்குட்டையை எடுத்து, ஃபயர் பக்கெட்டிலிருந்த தண்ணீரில் நனைத்துப் பரபரவென்று அவன் கட்டை விரலைச் சுற்றிக் கட்டிவிட்டு, "இதோ இங்கேயே இருங்கள். நான் போய் முதல் உதவிப் பெட்டியை எடுத்து வருகிறேன்'' என்று கூறிக்கொண்டு ஓட்டமாக ஓடிவிட்டாள்.

ராஜாவின் கையில் பட்டது இலேசான அடிதான். ஆயினும் அவன் கத்திக் கூச்சலிட்டுப் பாரதியுடன் நெருங்கிப் பேசுவதற்கும் பழகுவதற்கும் அதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டான்.

பாரதி அந்த இடத்தை விட்டு நகர்ந்ததுதான் தாமதம், அடுத்த கணமே அவன் அந்தக் கைக்குட்டையை எடுத்து மடித்துத் தன் சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டான்.
# # #

கல்லூரியின் பொன் விழாவுக்குத் தலைமை தாங்கப் போகும் பிரதம நீதிபதி அவர்களையும், ஹாஸ்டலைத் திறந்து வைக்க அன்புடன் இசைந்துள்ள திருவாளர் சேதுபதி அவர்களையும் சிறந்த முறையில் வரவேற்பதற்கான திட்டங்களை மானசீகமாக வகுத்துக் கொண்டிருந்தாள் பார்வதி.

வாசலில் அவர் காரில் வந்து இறங்கும்போது இரண்டு மாணவிகள் விரைந்து சென்று காரின் கதவைத் திறந்து வரவேற்க வேண்டும். அவர் கீழே இறங்கி வரும்போதே இன்னொரு மாணவி பன்னீர் தெளித்துச் சந்தனமும் கற்கண்டும் வழங்க வேண்டும். வேறொருத்தி ஒற்றை ரோஜா மலரை எடுத்து அவரிடம் தரவேண்டும். அப்போது டேப் ரிக்கார்டரிலிருந்து ஒலிப்பரப்பாகும் ராஜரத்தினம் பிள்ளையின் தோடி ஆலாபனை இலேசாகக் காற்றில் மிதந்து வர வேண்டும். வாசலில் வாழை மரங்களுடன் கூடிய வரவேற்பு வளைவுகளும், மாவிலைத் தோரணங்களும், காகிதப்பூக் கொடிகளும் கட்டிவைக்க வேண்டும். மரங்களில் சின்னஞ்சிறு மின்சார விளக்குகள் பழுத்துக் குலுங்குவது போல் ஒளி வீச வேண்டும்.

வாசல் கேட்டிலிருந்து விழா நடைபெறப் போகும் புதிய ஹாஸ்டல் கட்டடம்வரை வழிநெடுகத் தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டு வைக்க வேண்டும். பாதைக்கு இரண்டு பக்கங்களிலும் மாணவிகள் மஞ்சள் நிற யூனிபாரத்தில் வரிசையாக அணிவகுத்து நிற்கவேண்டும்.

விழா ஆறரை மணிக்குத் தொடங்கப் போவதால், அவர் பத்து நிமிடங்கள் முன்னதாகவே வந்து விடுவார். ஏறக்குறைய நீதிபதியும் அதே நேரத்துக்குள் வந்து விடலாம்.

திருவாளர் சேதுபதி அவர்கள் வந்ததும் புன்சிரிப்போடு என்னைப் பார்த்துக் கைகூப்புவார். நானும் கார் அருகில் சென்று அவரை வணங்கி வரவேற்று உள்ளே அழைத்துச் செல்வேன். மேடையில் போய் அமர்ந்ததும் ஜட்ஜுக்கும் அவருக்கும் ராஜாவைக் கொண்டு மாலை சூட்டுவேன். சமயத்தில் மாலையைக் காணாமல் தேடிக் கொண்டிருக்கக் கூடாது. விழா முடிந்ததும் அவர்களிருவடைய மாலைகளையும் ஞாபகமாகக் கொண்டுபோய்க் காரில் வைக்கவேண்டும். இந்த ஏற்பாடுகளை யெல்லாம் பார்த்துவிட்டு அவர் ’அரேஞ்ச் மென்ட் ரொம்ப கிராண்ட்' என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.

பார்வதியின் சிந்தனையை டெலிபோன் மணி கலைத்த போது யாராயிருக்கும்? ஒருவேளை....' என்று யோசித்தவளாய் ரிஸீவரைக் கையில் எடுத்தாள்.

'நாளை இரவு பத்தரை மணிக்குப் புறப்படும் விமானத்தில் அவசரமாகப் பம்பாய் செல்ல வேண்டியிருப்பதால், நாளை விழாவின் இடையிலேயே தங்களிடம் விடைபெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. கலை நிகழ்ச்சியில் கடைசி வரை உட்கார்ந்திருக்க முடியாமலிருப்பதற்காக மன்னிக்க வேண்டும். இப்படிப் பேசியது திருவாளர் சேதுபதி அல்ல; அவருடைய அந்தரங்கக் காரியதரிசி.

பார்வதிக்கு இந்தச் செய்தி பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அவள் என்னென்னவோ கோட்டைகள் கட்டி வைத்திருந்தாள். விழா முடிந்த பிறகு அவரை ஆபீஸ் அறைக்குள் அழைத்துச் சென்று கொஞ்ச நேரமாவது அவருடன் உரையாடிக் கொண்டிருக்க வேண்டும். அந்தக் குறைந்த அவகாசத்தில் எதைப்பற்றியெல்லாம் பேசுவது என்பது பற்றி முன் கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். தானே அதிகமாகப் பேசி விடாமல் அவரைப் பேசத் தூண்டி, அவர் பேசுவதைக் கேட்கவேண்டும்.

முதலாவது, அவருக்கு எந்த சப்ஜெக்டில் நாட்டமிருக்கிறது என்பதை அறிந்து கொள்வது முக்கியம். பிறகு அந்த சப்ஜெக்டிலேயே பேச்சைத் தொடரவேண்டும். அவரைத் திருப்திப் படுத்துவதற்காக, அதில் நமக்குள்ள எண்ணத்தை மாற்றிக்கொண்டு, அவர் சொல்வதற்கெல்லாம் 'ஆமாம்' போட்டுவிடக் கூடாது. அரசியலாயிருந்தால் 'பிளாட்டோ' விலிருந்து சில 'கொடேஷன்களையும், பிலாஸபி' யாயிருந்தால் விவேகானந்தரின் சிகாகோ ஸ்பீச்சிலிருந்து சில பகுதிகளையும் எடுத்துச் சொல்லவேண்டும்.

டெலிபோனில் வந்த செய்தி இவ்வளவையும் தகர்த்து விட்டது.

கண்களை மூடிய வண்ணம் சிந்தனையில் மூழ்கியிருந்த பார்வதியை ”அத்தை! அத்தை!'' என்று அழைத்துக் கொண்டு வந்த ராஜாவின் குரல் விழிப்படையச் செய்தது.

”என்ன ராஜா! தோரணங்களைக் கட்டி முடித்து விட்டாயா?”

”ஆணியெல்லாம் ரொம்ப 'வீக்' அத்தை! கார்ப்பென்ட்டரை எதிரில் பார்த்தேன். தோரணம் கட்டும் வேலையை அவனிடமே ஒப்படைத்து விட்டேன். மூன்று மணிக்கு எனக்கு ஒரு முக்கிய வேலை இருக்கிறது. நான் போய் விட்டு ஆறு மணிக்கெல்லாம் வந்து விடுகிறேன்" என்றான்.

"அந்த முக்கிய வேலை என்னவென்று எனக்குத் தெரியும். மாடினி சினிமாதானே?'' என்று கேட்டாள் அத்தை.
# # #

திருவிழாக் கோலம் பூண்டு துலங்கிய அந்தக் கல்லூரி யெங்கிலும் மிதந்து கொண்டிருந்த நாதஸ்வர இசை காற்றிலே கரைந்து கொண்டிருந்தது.

புதிய ஹாஸ்டல் மண்டபத்துக்கு எதிரே வரிசையாகப் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் நகரத்தின் முக்கிய பிரமுகர்களும் சீமாட்டிகளும் கல்லூரியைச் சேர்ந்த புரொபஸர்களும், லெக்சரர்களும் அமர்ந்திருந்தனர். இடை வெளியில், கல்லூரி மாணவிகள் அணி அணியாகவும் அலங்காரமாகவும் உட்கார்ந்திருந்தனர்.
கனம் நீதிபதியும், திருவாளர் சேதுபதியும் குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தார்கள். மேடையின் பின்னணியில் பரமஹம்சரும் தேவியாரும் காட்சி அளித்துக் கொண்டிருந்தனர். அடர்ந்த ஊதுவத்தியின் நறுமணம் ஹாலைப் புனிதமாக்கிக் கொண்டிருந்தது. ராஜா, மேடையின் ஓரத்தில் அடக்கமாக நின்றுகொண்டிருந்தான்.

சபையிலுள்ளவர்கள் தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை அவன் உணர்ந்தபோது சங்கோசமும் கூச்சமும் அவனைச் சூழ்ந்துகொள்ளவே, திரைக்குப் பின்னால் மறைந்து கொண்டான்.

முதலில், டாக்டர் குமாரி பார்வதி - சாரதாமணிக் கல்லூரியின் தலைவிதான் மேடைமீது பிரசன்னமானாள். பின்னோடு நீதிபதியும் சேதுபதியும் தொடர்ந்து வந்து நாற்காலியில் அமர்ந்தார்கள்.

’இறை வணக்கம்’ என்று பார்வதி நிகழ்ச்சி நிரலை எடுத்துப் படித்ததும், பாரதியும் இன்னொரு மாணவியும் மேடைமீது வந்து பாடத் தொடங்கியதும் எல்லோரும் எழுந்து நின்றார்கள்.

அடுத்தாற்போல் தலைவர்களுக்கு மாலை போடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த ஒரு சின்னக் காரியத்துக்காக ராஜா, தன்னைக் காலையிலிருந்தே தயார்ப்படுத்திக் கொண்டிருந்தான். கடைசியில் பிரின்ஸிபால் பார்வதி பேசுவதற்காக எழுந்து நின்றபோது, சபையில் எழுந்த கரகோஷ ஆரவாரம் அடங்க ஐந்து நிமிஷ நேரம் ஆயிற்று.

"இவ்விழாவுக்குத் தலைமை தாங்க இசைந்துள்ள நீதிபதி அவர்களே! ஹாஸ்டலைத் திறந்து வைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள திருவாளர். சேதுபதி அவர்களே! என்று பேசத் தொடங்கியபோது மாணவிகள் மீண்டும் கை தட்டி மகிழ்ந்தனர்.

முதலில் தலைவரைப்பற்றி நாலே வார்த்தைகளில் சுருக்கமாகப் பேசி அறிமுகப்படுத்தி முடிந்ததும், சேதுபதியைப்பற்றி ஆரம்பித்தாள். அவருடைய பெயரை உச்சரிக்கும்போதே பார்வதியின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.

”திருவாளர் சேதுபதியைப் பற்றி நான் அதிகம் கூறத் தேவையில்லை. இந்த அழகான ஹாஸ்டலைக் கட்டிக் கொடுத்த பெருமை அவரையே சேரும். முதன்முதலில் நான் கொடை விஷயமாக நான் அவரைக் காணச் சென்றபோது அவர், இப்போது எனக்கு நேரமில்லை. பின்னால் அவகாசம் கிடைக்கும்போது கூப்பிட்டு அனுப்புகிறேன்" என்று சொல்லி அனுப்பிவிட்டார். பெரிய மனிதர்கள் வழக்கமாகக் கூறும் பதில் இது தான் என்பது என்னைப்போல் நன்கொடை வசூலிக்கச் செல்பவர்களுக்கு நன்கு தெரியுமாகையால், அவர் கூறிய பதிலில் நம்பிக்கை இழந்த வளாய்த் திரும்பி வந்துவிட்டேன். அப்புறம் அவர் என்னைக் கூப்பிட்டு அனுப்பவே இல்லை. அதைப்பற்றி நான் ஆச்சரியப்படவும் இல்லை. நாளை என்பதும் அப்புறம் என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம் என்று எண்ணிக்கொண்டேன். உண்மையாகச் சொல்கிறேன்; இவரும் அந்தப் பழமொழிக்கு விலக்கல்ல என்றே எண்ணியிருந்தேன்.

ஆனால், நான் சற்றும் எதிர்பாராத வகையில் அடுத்த வாரமே எனக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்துடன் ஒரு செக்கும் இணைக்கப்பட்டிருந்ததைக் கண்டபோது, எனக்கு வியப்புத் தாங்கவில்லை.

'தங்கள் கல்லூரியில் கட்டப்போகும் ஹாஸ்டலுக்காக இத்துடன் ஒரு சிறு தொகைக்குச் செக் அனுப்பியுள்ளேன். இதைக் கொண்டு ஹாஸ்டல் கட்டட வேலையைத் தொடங்க வும். மேற்கொண்டு ஹாஸ்டலை முழுமையாகக் கட்டி முடிப்பதற்கு ஆகும் செலவு எதுவானாலும், அது என்னுடைய தாகவே இருக்கட்டும்' என்று அதில் எழுதியிருந்தது. "அன்று அவர் அனுப்பியிருந்த அந்தச் சிறுதொகை எவ்வளவு தெரியுமா? ஒரு லட்சம் ரூபாய்தான்!''

எவ்வளவோ கூட்டங்களில் பேசிப் பழக்கப்பட்ட பார்வதி, இந்த இடத்தில் மாணவிகள் பலமான கரகோஷம் செய்வார்கள் என்பதை எதிர்பார்த்து, தன் பேச்சைச் சற்று நேரம் நிறுத்திக் கொண்டாள். அவள் எதிர்பார்த்தபடியே கைதட்டல் ஆரவாரம் அடங்க வெகு நேரம் ஆயிற்று. அவள் மீண்டும் பேசத் தொடங்கினாள்.

"திருவாளர் சேதுபதியைப் பற்றி நான் புகழப் போவதில்லை. காரணம், ஏற்கெனவே அவரைப்பற்றி அறிந்து கொண்டுள்ள நமக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமாகத் தோன்றாது. அத்துடன் இப்போது அவரைப் புகழ்ந்தால், அவர் கொடுத்த நன்கொடைக்காகப் புகழ்வதாகத்தான் என்று எண்ணத் தோன்றும். ஒருவன் தன் தாயாரை தன்னைப் பெற்றவள் என்பதற்காக மதிப்புக் கொடுக்காமல், அவள் லேடீஸ் கிளப் பிரஸிடென்டானவுடன் புகழ்வதைப் போலாகும் !"

பார்வதி அதற்கு மேல் அதிகம் பேசாமல் சேதுபதி அவர்களை அழைத்துக் கட்டடத்தைத் திறந்து வைக்கும்படி கேட்டுக்கொண்டாள்.

திருவாளர் சேதுபதி, காலஞ்சென்ற தமது மனைவி சரஸ்வதி அம்மாளின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துத் தமது கடந்த கால வாழ்க்கையில் நேர்ந்த அனு பவங்களை உருக்கமாகவும் சுருக்கமாகவும் கூறி முடித்து - ''என்னுடைய துன்பகரமான நாட்களை யெல்லாம் பகிர்ந்து கொண்டு எனக்காகவே தன் வாழ்வைத் தியாகம் செய்த அந்த உத்தமியின் பெயரால் அமைந்துள்ள இந்த ஹாஸ் டலைத் திறந்து வைப்பதில் மிகுந்த பெருமை அடைகிறேன். இது அவளுடைய இரண்டாவது ஞாபகச் சின்னம். முதலாவது சின்னம் சற்று முன் இங்கு வந்து இறைவணக்கம் பாடிய என் ஒரே மகளான பாரதி.

இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளாகிய உங்களுக்கு நான் அதிகம் எதுவும் கூறப்போவதில்லை.

கல்வி என்பது தலை மீது பெரிய அறிவு மூட்டையாகச் சுமப்பது அல்ல. அப்படியானால் பெரிய துணி மூட்டையைச் சுமக்கின்ற கழுதையை நல்ல உடை அணிந்திருப்பதாகக் கூற முடியுமா? இல்லை. ஒழுக்கத்தோடும் பண்போடும் வாழ்வதுதான் உண்மையான கல்வி. அத்தகைய கல்வியைத் தான் இக் கல்லூரி அளித்து வருகிறது. மற்றக் கல்லூரிகளுக்கு இது ஒரு வழிகாட்டியாகவும் அமைந்திருக்கிறது. நீங்கள் எல்லோரும் ஒளவையைப் போல் கல்வி அறிவு பெற்ற வர்களாகி, உயர்ந்த பண்புடையவர்களாய்த் திகழவேண்டும் என்பது என் அவா. ஆனால், ஓளவையைப்போல் திருமண வாழ்க்கையே வேண்டாமென்று கூறிவிடக்கூடாது! (சிரிப்பு. - கரகோஷம் - ஆரவாரம்.)

குடும்பக் கலை பற்றி எனக்குத் தெரியாது. நான் பழைய தலைமுறையைச் சேர்ந்தவன். நமது நாகரிகம் எல்லாத் துறைகளிலும் நாலடி உயர்ந்திருக்கிறது. முன்னெல்லாம் பாயில் படுத்து உறங்கினோம். இப்போது நாலடி உயரமான கட்டிலில் படுத்து உறங்குகிறோம். முன்னெல்லாம் மணையில் உட்கார்ந்து சாப்பிட்டோம். இப்போதோ மேஜைக்கு முன்னால் நாற்காலியில் உட்கார்ந்து சாப்பிடுகிறோம். நாற்காலியும் மேஜையும் போட்டுப் பிரசங்கங்கள் செய்கிறோம். இவ்விதம் எல்லாக் காரியங்களையுமே உயர்த்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவையெல்லாம் உண்மையான உயர்வாகா. முக்கியமாக நமது பாரத நாட்டின் பண்பு உயர வேண்டும். அந்தப் பண்பை வளர்ப்பது குடும்பத்தின் தலைவி களாகப் போகிற பெண்கள் கையில்தான் இருக்கிறது'' என்று கூறி முடித்தார்.

சொற்பொழிவு நிகழ்ச்சி முடிந்து, கலை விழா ஆரம்பமாவதற்குள் மணி எட்டரை ஆகிவிட்டது. பிரின்சிபால் பார்வதி முன்வரிசையில் போடப்பட்டிருந்த சோபாக்களில், தலைவர்களை அமரச் சொல்லித் தானும் அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.

கலை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, சேதுபதி அடிக்கடி தம் கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்வதி கவனிக்கத் தவறவில்லை. மணி ஒன்பதுக்கு சேதுபதி இருக்கையை விட்டு எழுந்து வெளியே புறப்பட்டபோது, குழுமியிருந்தவர்கள் அத்தனை பேருடைய பார்வையும் அவர் மீதே பதிந்தது.

பின்னோடு எழுந்த பார்வதி வாசல் வரை சென்று அவரை வழி அனுப்பிவிட்டு வந்தாள்.

அவர் போன பிறகு விழாவே சாரமற்ற ஒரு சடங்காகப் போய்விட்டது அவளுக்கு. திரும்பி வந்து பழையபடியே தன் இருக்கையில் அமர்ந்தாள். நிலைகொள்ளவில்லை. பாரதியின் குறத்தி நடனம் நடந்து கொண்டுதானிருந்தது. ஆயினும் பார்வதியின் நினைவெல்லாம் அவரைப்பற்றியே சுழன்று கொண்டிருந்தது. அவர் சொற்பொழிவில் குறிப்பிட்ட கருத் துக்களை எண்ணி எண்ணி வியந்து கொண்டிருந்தாள். 'எவ்வளவு உயர்வான பேச்சு! எத்தகைய பெருந்தன்மை யான நோக்கம் அவர் பக்கத்தில் அமர்ந்திருக்கும்போது நாமே இமாலயம் போல் உயர்ந்து விட்டதாக அல்லவா எண்ணுகிறோம். அவர் எழுந்து சென்றதும், எவ்வளவு சிறியவர்களாகி விட்டோம்?'

அவர் அமர்ந்திருந்த, இப்போது காலியாக வெறிச் சோடிக் கிடந்த அந்த நாற்காலியைப் பார்த்தாள் பார்வதி. சட்டென அவள் முகத்தில் வியப்புக்குறி தோன்றியது. அடுத்த கணம் அவள் இதழ்களில் தவழ்ந்த புன்முறுவல் மாயமாய் மறைந்தது. அவள் உள்ளம் உடனே விமான நிலை யத்தை அடைந்தது.

அரை மணி நேரத்திற்கெல்லாம் விழா முடிவு பெற்றது. தலைமை தாங்கிய கனம் நீதிபதியும் விடைபெற்றுக்கொண்டு விட்டார். கூட்டத்தினர் ஒவ்வொருவராக வந்து பார்வதி யிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டார்கள்.

அமைதியற்ற நிலையில், பரபரக்கும் உணர்ச்சியுடன், தவித்துக்கொண்டிருந்த பார்வதி, அவர்களுக்கெல்லாம் இயந்திரம் போல் பதில் கூறி அனுப்பிவிட்டு, அவசரம் அவசரமாகத் தானே காரை எடுத்துக்கொண்டு விமான நிலையத்தை நோக்கி வேகமாகச் செலுத்தினாள். போகும் போது அவள் மனம் எண்ணமிட்டது.

"இப்போது நான் விமானக்கூடத்தில் அவரைச் சந்திப் பேன் என்று அவர் எதிர்பார்க்கவே மாட்டார். என்னைக் கண்டதும் என்ன நினைத்துக் கொள்வார்! நானும் எங்காவது வெளியூருக்குப் போவதாக எண்ணிக் கொள்வாரோ? அல்லது, என்னைக் கண்டதும் வியப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மௌனமாக இருந்து விடுவாரோ? நானே அவரை அணுகி விஷயத்தைக் கூறிய பிறகு நிச்சயம் அவர் முகம் மகிழ்ச்சியால் மலரும். ரொம்ப தாங்ஸ்' என்று குறைந்தது நாலைந்து முறையாவது கூறாமல் இருக்க மாட்டார்.

அவள் விமானக் கூடத்தை அடைந்த சமயம் மணி பத்தேகால் தான். விமானம் புறப்படுவதற்கு இன்னும் பதினைந்து நிமிஷ நேரம் இருந்தது.

பார்வதி உள்ளே போய் அவரைத் தேடிய போது, அவர் லெளஞ்சின் ஒரு மூலையிலிருந்த சோபாவில் அமர்ந்து தமது காரியதரிசியுடன் பேசிக்கொண்டிருந்தார்.

பார்வதி அவர் எதிரில் போய் நின்றபோது அவர் வியப்பை வெளிக் காட்டாமல் லேசாகப் புன்முறுவல் பூத்த படி "வாருங்கள்! நீங்களும் எங்காவது வெளியூர்...'' என்று விசாரித்தார்.

"தங்களைப் பார்க்கத்தான்...." என்று கூறினாள் பார்வதி.

'அப்படி என்ன முக்கிய விஷயம்? இத்தனை நேரம் கல்லூரியில் தானே இருந்தேன்? அங்கேயே பேசியிருக்கலாமே?' என்று மனத்திற்குள் யோசித்து எண்ணிக்கொண்டாலும், ''என்னைப் பார்க்கவா? அப்படி என்ன முக்கிய விஷயம்?'' என்றவர், ''அடேடே, நிற்கிறீர்களே! இப்படி உட்காருங்கள்" என்று சோபாவைத் தன் கையினால் தட்டிப் பார்வதியை அமரச் சொன்னார்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்ட பார்வதி, தன் பையிலிருந்த அவர் மூக்குக் கண்ணாடியை எடுத்து, "இதோ இதை மறந்து வந்து விட்டீர்கள்! இது ரொம்ப அவசியமல்லலா? வெளியூருக்குப் போகுமிடத்தில் இது இல்லையென்றால் முக்கிய காரியமே தடைப்பட்டுப் போகும். வேறு எதை மறந்தாலும் பரவா வில்லை. வேறொன்று வாங்கிக் கொள்ளலாம். மூக்குக் கண்ணாடியை நினைத்த நேரத்தில் வாங்கிவிட முடியாதே! அதற்காகத்தான் நானே எடுத்துக்கொண்டு அவசரமாக வந்து சேர்ந்தேன்!'' என்றாள்.

மூக்குக் கண்ணாடியை மறந்து வந்து விட்ட விஷயம் சேதுபதிக்கு அப்போது தான் புரிந்தது.

''அடாடா! மிக்க நன்றி! நாளைக்கு முக்கியமான டாகு மென்ட்டுகளையெல்லாம் படித்துக் கையெழுத்துப் போட வேண்டும். அந்த நேரத்தில் இது இல்லையென்றால் ரொம்பத் தடுமாற்றமாய்ப் போயிருக்கும். இதன் முக்கியத்தை உணர்ந்து தாங்கள் இவ்வளவு அக்கறையோடு இதைக் கொண்டு வந்து கொடுத்ததற்குத் தங்களுக்கு எப்படி நன்றி கூறுவதென்றே தெரியவில்லை '' என்றவர், ''....ம்.... விழா ரொம்பச் சிறப்பாக நடந்தது. ஏற்பாடு அதைக் காட்டிலும் சிறப்பாயிருந்தது'' என்றார்.

”தங்கள் பேச்சு விழாவுக்கே சிகரம் வைத்தது போல் அமைந்து விட்டது'' என்று பார்வதி பதில் கூறினாள்.

அவர்களிடைய சம்பாஷணை இரண்டு அல்லது மூன்று நிமிடமே நீடித்தது. இதற்குள் ”பம்பாய் செல்லும் பிரயாணிகள் விமானத்துக்குச் செல்லவும்'' என்ற அசரீறி அறிவிப்பு ஒலித்தது.

''நான் வரட்டுமா?'' என்று எழுந்து நின்று கைகூப்பி வணங்கி விட்டு விமானத்தை நோக்கி நடக்கலானார் சேதுபதி. பார்வதியின் முகம் ஏன் ஒளியிழந்து உற்சாக மிழந்து போயிற்று?

விமானத்தில் போய் அமர்ந்து கொண்ட சேதுபதி, கண்ணாடிப் பலகணியின் வழியாகப் பார்வதியையே பார்த்துக் கொண்டிருந்தார். உறுதி உறைந்த அந்த உள்ளத்தை ஏதோ ஒன்று அசைத்தது. பார்வதியுடன் சிறிது நேரம்தான் பேசிக்கொண்டிருந்தார். ஆயினும் அவளை விட்டுப் பிரியும்போது வெகு நாள் பழகிவிட்ட ஒருவரைப் பிரிந்து செல்வதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது.

அவருக்கு. ஆறுமாதங்களுக்கு முன் முதல் தடவையாக அவள் தன்னைப் பேட்டி காண வந்தது, தன்னிடம் சுற்றி வளைக்காமல் விஷயத்தைச் சட்டென்று தொடங்கிச் சுருக்கமாகப் பேசியது, இன்று மேடையில் தன்னை அறிமுகப் படுத்தியது, முன் யோசனையுடன் மூக்குக் கண்ணாடியை எடுத்து வந்து கொடுத்தது எல்லாமே அவர் உள்ளத்தில் இனிமையான, பசுமையான நினைவுகளாகப் பதிந்து விட்டன. தன்னை அறியாமலே அவளிடம் தன் மனம் லயித்திருப்பதை உணர்ந்தார். 'அது ஏன்?’ என்று தன்னையே கேட்டுக் கொண்டார். அது அவருக்கே புரியவில்லை.

விமானம் வெகு உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. தன்னை மறந்த நிலையில் அந்த விமானத்தையே பார்த்துக் கொண்டு சிலையாக நின்றாள் பார்வதி.
-----------------
குருத்து மூன்று


மாடிப் படிகளின் மீது வேகமாக வந்து விழும் காலைப் பத்திரிகையின் சலசலப்பு, பக்கத்து வீட்டுப் பசுமாட்டின் கனிந்த குரல், பால் டிப்போ சைக்கிள் மணி ஓசை, பார்வதி வீட்டுக் கடிகாரம் மணி ஆறடிக்கும் சுநாதம் - இவை யாவும் ஒரே சமயத்தில், சற்று முன்பின்னாக நடைபெறும் அன்றாட நிகழ்ச்சிகள்.

அந்தப் பிரெஞ்சு நாட்டுக் கடிகாரத்தின் ஒலி பார்வதிக்குப் புதிதல்ல. ஆனால் இன்று மட்டும் அதன் ஒலி அவள் செவிகளுக்கு இனிமையாகவும், இதயத்துக்கு இதமாகவும் இருப்பானேன்?

அந்தக் கடிகாரத்தைக் காணும் போதெல்லாம் பார்வதிக்குத் தன் கல்லூரியில் நீண்ட காலமாகப் பிரெஞ்சு மொழி ஆசிரியையாகப் பணியாற்றி வரும் மிஸஸ் அகாதாவின் உருவம் நினைவில் தோன்றும். உடனே, அவள் குடையைப் பிரித்துக் கொண்டு இடது காலை விந்தி விந்தி நடக்கும் காட்சிதான் கண்ணெதிரில் நிற்கும்.

இந்தக் கடிகாரத்தைப் போலவே தன் கடமையைத் தவறாமல் செய்து வரும் அகாதாவினிடத்தில் பார்வதிக்குத் தனிப்பட்ட மதிப்பும் மரியாதையும் உண்டு.

பார்வதி ஏதோ ஓர் உணர்ச்சிக்கு வசமாகி, அமைதி இழந்த நிலையில் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தாள்.

.... முதல் நாள் இரவு விமானக் கூடத்துக்கு விரைந்து சென்று மூக்குக் கண்ணாடியைச் சேதுபதியிடம் கொடுத்த போது ’அடாடா, மிக்க நன்றி' என்று மலர்ந்த முகத்துடன் அவர் வாங்கிக் கொண்டதும், ’தங்கள் பேச்சு விழாவுக்கே சிகரம் வைத்தது போல் அமைந்து விட்டது' என்று அவள் கூறியதும், அவர் தங்கள் ஏற்பாடு மிக மிகச் சிறப்பாயிருந்தது' என்று அவளைப் புகழ்ந்ததும்... பார்வதியின் உள்ளத்தில் ஒரு பெரும் புரட்சியை உண்டாக்கி இருந்தது.

உள்ளத்தில் புகுந்துவிட்ட அந்தப் புதுமையான உணர்வை, நெஞ்சத்தை அலைக்கும் சஞ்சலத்தை ஆரம்பத்திலேயே அழித்துவிட முயன்றாள். ஆனால் முடியவில்லை, சோடா புட்டியின் நெஞ்சுக்குள்ளே புகுந்து ஊசலாடும் கண்ணாடிக் கோலியைப்போல் அந்த உணர்வு - அவளை யறியாமல் அவள் இதயத்தில் புகுந்து அழைத்துக் கொண்டிருந்தது. அதை அவஅ விழுங்கி ஜீரணம் செய்து கொள்ளவோ, வெளியே துப்பி விடவோ முடியாமல் தவித்தாள்.

கண்ணாடியின் முன் சென்று அதில் பிரதிபலித்த தன் உருவத்தையே சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். தன் பிம்பத்தை அதில் கண்டபோது பார்வதியின் வேதனை அதிகரித்தது, உண்மையாகவே தனக்கு வயதாகி விட்டதா? அதோ இடது காதின் ஓரமாக இரண்டொரு நரைகூடத் தெரிகின்றனவே! மெதுவாகத் தன் இடது காதுப் பக்கமாகத் தடவிப் பார்த்துக்கொண்டாள். 'ஓ! கண்ணாடியில் இடது புறம் என்றால், தனக்கு அது வலது புறம் அல்லவா?’ - மெத்தப் படித்த பார்வதிக்கு, டாக்டர் குமாரி பார்வதிக்கு B.A., B.Ed. PhD (Lonodon) Dip in Anthropology போன்ற நீண்ட பட்டங்களைப் பெற்றிருந்த அறிவாளி பார்வதிக்கு அப்போதிருந்த மனநிலையில் இந்தச் சின்ன விஷயம்கூடத் தெரியாமற் போயிற்று! தனக்குத் தானே அனுதாபத்துடன் ஒரு முறை சிரித்துக்கொண்டவளாய், மேஜை மீதிருந்த காலைப் பத்திரிகையை எடுத்துப் புரட்டினாள். அதிலிருந்த எழுத்துகள் நீரிலே கரைந்தவை போல் தெளிவின்றித் தெரிந்தன.

"ஓ! கண்ணாடி அணிந்து கொள்ளாமல் அல்லவா படிக்கிறேன்?' என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு கண்ணாடியை எடுத்துப் போட்டுப் பார்த்தபோது எழுத்துகள் மணி மணியாய்ப் பளிச்சிட்டன.

'நிஜமாகவே எனக்கு வயதாகி விட்டதா? இல்லை; இல்லவே இல்லை. வயது, வாலிபம் வயோதிகம் என்பதெல் லாம் நாமாகவே ஏற்படுத்திக் கொண்ட ஒரு வரம்பு தானே?’

மேஜை மீது கிடந்த ஸ்கேல் ஒன்று அவள் கண்ணில் படவே, அதைக் கையில் எடுத்துத் தன் இடது உள்ளங் கையை அதனால் தட்டியபடியே, 'இதோ இந்த அங்குலம் காட்டு மரச் சட்டத்தில் நாமாகவே கோடுகளைப் போட்டு இதை ஸ்கேல் என்று கூறுகிறோம். இந்தக் கோடுகள் நாம் போட்டவை, இவை இல்லையென்றால் இது வெறும் மரச் சட்டம்தானே?’

’அதைப் போலவே நாமாகவே நம் ஆயுளை வயதுகளால் வகுத்து வரம்பு கட்டிக் கொண்டிருக்கிறோம். அந்த வரம்புகள் இல்லையென்றால், நாம் நாமாகவே தான் இருப்போம் வயதாகி விட்டது என்பதை நாம் எப்போது உணர்கிறோம். நம் வயதைப் பற்றிச் சிந்திக்கும்படியான காரியங்கள் குறுக்கிடும்போதுதான். இப்போது ஏதோ ஓர் உணர்வு என் உள்ளத்தில் புகுந்திருக்கிறது. அந்த உணர்வே என் வயதைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டுகிறது. இத்தனை காலமும் அந்த உணர்வு என்னிடம் இல்லாததால் என் வயது பற்றிய எண்ணமே எனக்குத் தோன்றவில்லை. கோலி விளையாடும் ஏழு வயதுச் சிறுவனைக் காணும்போது தெருவில் நடந்து செல்லும் வாலிபன் தனக்கு வயதாகி விட்டதாக எண்ணுகிறான். கல்லூரியில் படிக்கும் மாணவனைப் பார்க்கும்போது காரியாலயத்தில் வேலை செய்யும் குமாஸ்தா தனக்கு வயதாகி விட்டதென்று கருதுகிறான். ஆகவே, ஏதோ ஒன்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் வயது பற்றிய சிந்தனை நமக்கு ஏற்படுகிறது.

புத்தகப் படிப்பிலேயே இதுகாறும் இரண்டறக் கலந்து கிடந்த பார்வதிக்குத் தன் வயது பற்றிச் சிந்திக்கும் சந்தர்ப்பமே ஏற்படவில்லை. படிப்புக்கும், ஆராய்ச்சிக்கும் வயது இடையூறாக இருப்பதில்லை. உண்மையில் வயது ஆக ஆகத்தான் அறிவு விசாலமடைகிறது. அறிவின் விசாலம் ஆராய்ச்சிக்கு உதவுகிறது. எனவே வயதாகிறதே என்ற எண்ணமே தோன்றுவதில்லை.

சுருதி சுத்தமாக ஒலித்துக் கொண்டிருந்த பார்வதியின் வாழ்க்கையில் ஏதோ ஒன்று குறுக்கிடவே இப்போது அவள் விழிப்படைந்து வயதைப்பற்றி எண்ணுகிறாள்.

பார்வதி மீண்டும் யோசிக்கத் தொடங்கினாள். "நீங்கள் ஒளவையைப் போல் அறிவாளிகளாக விளங்க ஆசைப்பட வேண்டும். ஆனால் ஒளவை மாதிரி கலியாணமே வேண்டாம் என்று சொல்லி விடக்கூடாது.''

இந்த வார்த்தையை அவர் மாணவிகளுக்கு மட்டும்தான். கூறினாரா? அல்லது என்னையும் மனத்தில் வைத்துக்கொண்டு மறைமுகமாகக் கூறினாரா? அப்படியானால் அதன் உட் கருத்து?... பார்வதிக்கு விளங்கவில்லை.

கீழே, லதா மங்கேஷ்கரின் பாட்டு ஒன்றை ராஜா சீட்டிக் குரலில் இனிமையாகப் பாடிக் கொண்டிருப்பது பார்வதியின் காதில் விழுந்தது. அதிலிருந்தே அவன் பாத் ரூமில் குளித்துக் கொண்டிருக்கிறான் என்பதைப் பார்வதி ஊகித்துக் கொண்டாள். குளிக்கும்போதுதான் அவனுக்குக் குஷியாகப் பாட வரும். ராஜாவின் சீட்டி அன்று அவளுக்குப் பிடித்திருந்தது.

ஏதேனும் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிப்பதன் மூலம் அமைதியைப் பெற எண்ணிய பார்வதி புத்தக அலமாரியைத் திறந்து கைக்கு வந்த ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்தாள்.

சீனப் பேரறிஞர் லின்யுடாங் எழுதிய 'புயலில் ஓர் இலை’ என்னும் புத்தகம் வந்தது. அதைக் கண்ட பார்வதி, 'ஏறக் குறைய என் உள்ளமும் இப்போது புயலில் சிக்கிய இலையாகத்தான் இருக்கிறது' என்று தனக்குத் தானே கூறிக் கொண்டாள்.

புத்தகத்தைப் பிரித்தாள். அது எந்த இடத்தில் பிரிந்ததோ அந்தப் பக்கத்திலிருந்த வரிகளைப் படிக்கத் தொடங் கினாள்.

''மனிதனுடைய முதல் நாற்பது ஆண்டுக்கால் வாழ்க்கையில் சோதனைகள் நடக்கின்றன. அடுத்த நாற்பது ஆண்டு வாழ்க்கை அவற்றைப் பரிசீலித்து மார்க்குப் போடுகிறது!

பார்வதி சிரித்துக் கொண்டாள். ’எனக்குப் பரீட்சையே இப்போதுதானே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அதைப் பரிசீலித்து மார்க்குப் போட நான் மறுபிறவிதான் எடுத்தாக வேண்டும்.'

அவள் பலகணியின் வழியாக வாசலை எட்டிப் பார்த்த போது விசிறி வாழை குளுகுளு வென்று அழகாக ஓங்கி வளர்ந்து காற்றிலே அசைந்தாடிக் கொண்டிருந்தது. ராஜா பெரிய கத்தரிக்கோல் ஒன்றால் அதன் இலைகளைத் துண்டித்துக்கொண்டிருந்தான்.
''ராஜா ! ஏன் அந்த இலைகளை வெட்டுகிறாய்?” பார்வதி கேட்டாள்.

''இதில் இரண்டு இலைகள் மட்டும் பழுத்து மரத்தின் அழகையே கெடுக்கிறது, அத்தை!...” என்றான் ராஜா.

பார்வதி துணுக்குற்றவளாய் நரைத்துப் போன தன் கூந்தல் இழைகளைத் தடவிப் பார்த்துக்கொண்டாள்.

அடுத்த கணமே அவருடைய கெளரவமான தோற்றம், முகத்தில் நிலவிய அமைதி, உள்ளத்தில் உறைந்த உறுதி, கல கலவென்ற குழந்தைச் சிரிப்பு எல்லாம் நினைவில் தோன்றி நெஞ்சத்தை நிறைத்தன.

கீழேயிருந்து வந்த சாம்பிராணிப் புகையின் தெய்விக் மணம், மணி ஒன்பதரை ஆகி விட்டது என்பதை உணர்த்தியது.

பார்வதி கீழே இறங்கிச் சென்று அவசரம் அவசரமாகச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, பகவான் பரம ஹம்சரையும் தேவியையும் வணங்கிவிட்டு, காரை எடுத்துக்கொண்டு கலாசாலைக்குப் புறப்பட்டாள். கார் கேட்டைத் தாண்டும் போது அங்கு உட்கார்ந்திருந்த செவிட்டுப் பெருமாள் வழக்கம்போல் எழுந்து நின்று மரியாதை செலுத்தினான். அவளுடைய கார் கலாசாலையின் காம்பவுண்ட் கேட்டை நெருங்குவதற்கும் பிரெஞ்சு மொழி ஆசிரியை மிஸஸ் அகாதா ஒற்றைக் காலை 'விந்தி விந்தி' நடந்து கேட்டுக்குள் நுழைவதற்கும் சரியாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை யாரேனும் காண நேரிட்டால் தங்கள் கைக் கடியாரத்தில் மணி பத்து அடிக்க ஐந்து நிமிஷமா என்று பார்ப்பார்கள். இல்லையேல் திருத்திக் கொள்வார்கள்.

பார்வதியைக் கண்டதும் சற்று உடலைச் சாய்த்து "ஹல்லோ குட்மார்னிங்'' என்று கையை ஆட்டியபடியே கூறினாள் மிஸஸ் அகாதா. பார்வதியும் பழக்கப்படி ”வெரி குட்மார்னிங்'' என்று பதில் வணக்கம் தெரிவித்து விட்டுக் காரைக் கொண்டுபோய்த் தன் அறைக்கு நேராக நிறுத்தினாள். அப்போது அங்கே தயாராக நின்று கொண்டிருந்த அட்டெண்டர் ரங்கசாமி வழக்கம் போல் காரின் கதவைத் திறக்க ஓடி வந்தான். கடந்த பத்தாண்டு காலமாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்ச்சி இது.

கல்லூரி எங்கிலும் நிரம்பியிருந்த மாணவிகளின் பேரிரைச்சல், காரின் குழல் ஒலி கேட்டதும், மந்திர சக்திபோல் அப்படியே அடங்கியது.

ஆபீஸ் அறையில் பார்வதியின் வரவை எதிர்பார்த்துப் பல வேலைகள் காத்துக் கிடந்தன. அவ்வளவையும் செய்து முடிக்க அவளுக்கு ஒரு நாள் போதவில்லை. அடுத்த நான்கு நாட்கள் வரை அவள் ஓய்வு ஒழிவு இல்லாமல் உழைத்தாள். தான் செய்ய வேண்டிய பணிகளை அவள் எப்போதுமே தள்ளிப் போட்டதில்லை. கடமையினின்று வழுவுவதைப் பெரும் குற்றமாகக் கருதுபவள் ஆயிற்றே அவள்.

இடையில் ஒரு மாத காலமாக விழா சம்பந்தமான வேலைகள் குறுக்கிட்டு விட்டதால், அவளால் வழக்கமான கல்லூரி அலுவல்களைச் சரிவரக் கவனிக்க முடியாமற் போய் விட்டது. இதற்கு ஓரளவு அவளுடைய மன நிலையும் காரணமாயிருந்திருக்குமோ என்னவோ?

தன்னைப் போலவே தன் கல்லூரி மாணவிகளும் நல்லொழுக்கங்களையும் நற்பண்புகளையும் கடைப் பிடித்து நடக்க வேண்டுமென அவள் விரும்பினாள். அந்த உன்னத லட்சியத்துக்காக அவள் கல்லூரி மாணவிகளிடையே மிகவும் கண்டிப்பாக நடந்து கொண்டாள். மாணவிகள் நேரம் கழித்து கலாசாலைக்கு வருவது, கலாசாலைக்குள் இங்குமங்கும் நின்று பேசிக்கொண்டிருப்பது, படிக்க வேண்டிய நேரத்தில் அரட்டை அடிப்பது, வகுப்புக்கு வராமல் மட்டம் போடுவது போன்ற நேர்மையற்ற காரியங்களைக் காண நேரிடும் போதெல்லாம் அத்தகைய மாணவிகளை அழைத்துக் கடுமையாக எச்சரித்து அனுப்புவாள். 'சாரதாமணிக் கல்லூரி மாணவிகள் படிப்பிலே திறமையில்லாதவர்கள்' என்று பெயர் எடுப்பதை அவள் பொறுத்துக் கொள்ளத் தயாராயிருந்தாள். ஆனால் அவர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்று பெயரெடுப்பதை அவள் ஒருபோதும் அனுமதித்ததில்லை.

பார்வதி வெளிப் பார்வைக்கு எவ்வளவு கடுமையாகத் தோன்றிய போதிலும் அவ்வளவுக்கு அவளுடைய இதயம் மிகவும் இளகியதாயிருந்தது. ஏழை மாணவிகளிடம் அன்பும் ஆதரவும் காட்டி சிற்சில சமயங்களில் அவர்கள் கல்லூரிச் சம்பளம் கட்ட முடியாமல் தவிக்கும் போது அவர்களுக்குப் பொருளுதவி செய்யவும் அவள் தயங்கியதில்லை.

அன்று வெள்ளிக்கிழமை. வழக்கத்தைக் காட்டிலும் சீக்கிரமே எழுந்து விட்ட பார்வதி, காலைப் பத்திரிகையின் வரவுக்காகக் காத்திருந்தாள். அப்புறம்தான் பக்கத்து வீட்டுப் பசுமாடு கத்தியது. பால் டிப்போ சைகிள் மணி ஓசை கேட்டது. பின்னோடு காலைப் பத்திரிகையும் வந்தது. முதல் காரியமாக அதைப் பிரித்துக் குறிப்பாக ஒரு பகுதி யைத் தேடினாள். அவள் எதிர்பார்த்த அந்தச் செய்தி அந்தப் பகுதியில் இருந்தது. சேதுபதி பம்பாயிலிருந்து திரும்பி விட்டார்' என்னும் அச் சேதியைப் படித்தபோது பார்வதியின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது. தினப் பத்திரிகைகளில் எத்தனையோ காலமாகத்தான் அந்தப் பகுதி வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதுவரை அப்படி ஒரு பகுதி அந்தப் பத்திரிகையில் வந்து கொண்டிருப் பதை அவள் கண்ணெடுத்தும் பார்த்ததில்லை.

இப்போது மட்டும் அந்தப் பகுதியில் என்ன கவர்ச்சி வந்து விட்டது! அவர் வந்து விட்டார் என்பதில் தனக்கு ஏன் அத்தனை மகிழ்ச்சி?

அன்று காலை கல்லூரிக்குச் சென்றதும் பூகோளப் பாடம் நடத்தவேண்டிய ஆசிரியைக்கு உடல் நிலை சரியில்லை என்று தெரிந்தது. எனவே, அன்று அந்த ஆசிரியை நடத்த வேண்டிய வகுப்புக்குத் தானே போவதென்று முடிவுசெய்து கொண்டாள். சரியாக மூன்று மணிக்கு, குறிப்பிட்ட நேரத்தில் பி.எஸ்ஸி, வகுப்புக்குள் நுழைந்தாள் பார்வதி. நாற்காலியில் அமர்ந்தவள் யாரையோ தேடுவது போல் ஒரு முறை கண்ணோட்டமிட்டாள். அந்த ஒரு பார்வையிலேயே பாரதி வகுப்புக்குள் இல்லை என்பதை அறிந்து கொண்டாள். ஆனால் அவள் ஏன் வரவில்லை என்று மாணவிகளை விசாரிக்க வில்லை. அதற்குப் பதிலாக ரிஜிஸ்தரை எடுத்து அதற்கு முந்திய வகுப்பில் பாரதி ஆஜராகியிருக்கிறாளா என்று பார்த்துக் கொண்டாள். அவள் பூகோள வகுப்புக்கு மட்டுமே மட்டம் போட்டுவிட்டுப் போயிருக்கிறாள் என்பதை அறிந்த போது பார்வதிக்கு உள்ளூறக் குமுறியது.

''பாரதியை எங்கே காணோம்?' மிடுக்குடன் ஒலித்தது பார்வதியின் குரல்.

"தலைவலி” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள் மேடம்'' என்றாள் ஒரு மாணவி.

”ஓகோ, ஜாக்ரபி பிரொபஸர் வர மாட்டாள் என்று தெரிந்ததும் தலைவலி வந்து விட்டதோ? இன்று வெள்ளிக் கிழமையல்லவா? புதுப் படம் பார்க்கப் போயிருப்பாள். சரி சரி, நாளைக்கு அவள் வரட்டும், சரியான முறையில் பாடம் கற்பிக்கிறேன்'' என்று மனத்திற்குள்ளாகவே கறுவிக் கொண்டாள் பார்வதி.
----------------
குருத்து நான்கு


கல்லூரி ஆண்டு விழா முடிவுற்று ஐந்து நாட்கள் கூட ஆகவில்லை. பாரதியும் ராஜாவும் இதற்குள் மூன்று முறை சந்தித்து விட்டதுமன்றி வெகுநாளைய சிநேகிதர்களைப்போல் பழகவும் தொடங்கிவிட்டனர்.

அவர்களுடைய சந்திப்புகள் முன் கூட்டியே பேசி வைத்துக்கொண்டவை அல்ல. ரகசியமானதும் அல்ல. இயற்கையாக, சகஜமாக அவர்களே எதிர்பாராமல் ஏற்பட்டவை தான். ஒருவரையொருவர் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் அவர்கள் உள்ளத்தில் இருந்தது என்னவோ உண்மைதான். ஆயினும் அதற்காக அவர்கள் எவ்வித முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை.

வெள்ளிக்கிழமையன்று கூட வகுப்புக்கு மட்டம் போட்டு விட்டு, வெளியே போக வேண்டுமெனப் பாரதி எண்ண வில்லை. அப்படிச் செல்வது அவள் வழக்கமுமில்லை. அன்று அவளைத் தூண்டி இழுத்தவள் அதே கல்லூரியில் வேறொரு பிரிவில் படிக்கும் அவளுடைய சிநேகிதி மிஸ் டூலிப்தான். அந்த ஆங்கிலோ இந்தியப் பெண்ணுக்கு அன்று பிறந்த தினமாகையால், பாரதியை அவள் ஐஸ் கிரீம் பார்லருக்கு வர-வேண்டுமென்று கட்டாயப்படுத்தினாள்.

”இன்று என்னுடைய 'பர்த்டே'; உனக்கு ஆல்மண்ட் க்ரீம் வாங்கித் தரப்போகிறேன். அப்புறம் இரண்டு பேரு மாகச் சினிமாவுக்குப் போகலாம்'' என்றாள் டூலிப்.

ஐஸ்கிரீம் ஆசை எந்தப் பெண்ணைத்தான் விட்டது? 'ஆல்மண்ட் க்ரீம்' என்றதுமே பாரதி நாக்கில் ஜலம் ஊற, 'ஹய்யா... வெரிகுட்!' என்றாள். அப்புறம் சினிமாவுக்கும் போகலாம் என்று டூலிப் கூறிய போது, "என்ன பிக்சர்?'' என்று கேட்டாள் பாரதி.

''லவ் ஆன் தி ஹவாய் பிரிட்ஜ்,'' என்றாள் டூலிப்.

படத்தின் பெயர் கவர்ச்சிகரமாகத்தான் இருந்தது. ஆனாலும் பிரின்ஸிபாலுக்குத் தெரிந்துவிட்டால் என்பதை எண்ணியபோது பாரதிக்குப் பகீர் என்றது.

”எனக்கு இப்போது ஜாக்ரபி க்ளாஸ் இருக்கு டூலிப்! எக்ஸ்க்யூஸ்மி” என்றாள் பாரதி.

”பரவாயில்லை; ப்ளீஸ் ;.... ப்ளீஸ்!” என்று மன்றாடிய படியே பாரதியின் கரங்களைப் பற்றி இழுத்தாள் டூலிப்.

"அப்படியானால் ஒரு கண்டிஷன். சினிமாவுக்கு நான் தான் டிக்கெட் வாங்குவேன்'' என்றாள் பாரதி.

"ஓ எஸ்'' என்று ஒப்புக் கொண்டாள் டூலிப்.

இருவரும் பார்லருக்குச் சென்று ஆளுக்கு இரண்டு கப் ஐஸ்க்ரீமைத் தீர்த்துக் கட்டிய பிறகு, அடுத்தாற்போலிருந்த சினிமாத் தியேட்டருக்குள் நுழைந்தார்கள். பாரதி தான் டிக்கெட் வாங்கினாள்.

உள்ளே போனபோது 'ஏர் கண்டிஷன் குளுமையும், ’கம் ஸெப்டம்பர்’ கானத்தின் இனிமையும் அவர்களை வர வேற்றன. இருவரும் ஒரு மூலையாகப் போய் அடக்கமாக உட்கார்ந்து கொண்டார்கள். மிஸ் டூ லிப் மட்டும் உற்சாக மிகுதியில் தன் கால்களால் தரையைத் தட்டித் தாளம் போட்டபடியே, ''ஐ லவ் திஸ் ஸாங் வெரி மச்!'' என்றாள்.

யாராவது தன்னைக் கவனித்துவிடப் போகிறார்களே என்ற திகிலில் உட்கார்ந்திருந்த பாரதி, 'எனக்கு ரொம்பவும் பயமாயிருக்கு டூலிப்'' என்றாள்.

"பயப்படாதே! ஹிச்காக் படம் தான் பயப்படணும். மர்டர், மிஸ்டரியெல்லாம் வரும். இது முழுக்க முழுக்க லவ் ஸ்டோரியாச்சே!'' என்றாள் டூலிப்.

"சற்று நேரத்துக்கெல்லாம் விளக்குகள் அணைக்கப்பட்டுப் படம் ஆரம்பமாயிற்று. இருவரும் ஆளுக்கொரு சுவிங்கத்தை வாயில் போட்டுச் சுவைத்தபடியே படத்தை ரசிக்கத் தொடங்கினர். நேரம் ஆக ஆகத் தியேட்டரில் நிலவிய இருட்டுக்குள்ளேயே ஒரு தெளிவு பிறந்தது. அத்தெளிந்த இருட்டில் தனக்குத் தெரித்தவர்கள் யாராவது வந்திருக் கிறார்களா என்று பாரதி சுற்றுமுற்றும் கண்ணோட்டமிட்ட போது. ஆமாம் - ராஜா சற்றுத் தூரத்தில் உட்கார்ந்திருந்தான்! அவனைக் கண்டதில் அவளுக்கு மகிழ்ச்சி தான். ஆனாலும் தான் படம் பார்க்க வந்திருக்கும் விஷயம் அவனுக்குத் தெரிந்துவிடப் போகிறதே என்று கவலைப்பட்டாள்.

காரணம், இரண்டு நாட்களுக்கு முன்னால் அவன் பாரதியைச் சந்தித்தபோது, 'படம் பார்க்க வருகிறாயா?’ என்று அழைத்தான். அவள் செல்ல மறுத்துவிட்டாள். இப்போது மட்டும் தான் வந்திருப்பதைக் கண்டால், ராஜா என்ன நினைத்துக் கொள்வான்?

இடைவேளையில் தற்செயலாகப் பின்புறம் திரும்பிய ராஜா, அங்கே பாரதி உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் வியப்பில் ஆழ்ந்து போனான். ஆயினும் படம் முடியும்வரை அவன் அவளைக் கண்டுகொள்ளவே இல்லை. பாரதிக்கு அது மிகவும் திருப்தியாக இருந்தது. எங்கே தன்னைக் கண்டதும் பாய்ந்து வந்துவிடுவானோ என்று பயந்த அவளுக்கு, அவனுடைய பெருந்தன்மையான போக்கு நிம்மதியை அளித்தது.

பாரதி, லேசாகத் தன் கண் இதழ்களை உயர்த்தி அவன் என்ன செய்கிறான் என்று கவனித்தாள். அவன் தேநீரைச் சுடச்சுடக் குடித்துவிட்டு நாக்கைச் சுட்டுக் கொண்டு திணறினான். 'ராஜா எதிலுமே கொஞ்சம் அவசரப் புத்திக் காரர். அன்று அவசரப்பட்டு ஆணி அடிக்கும்போது கையை நசுக்கிக் கொண்டார். இன்று அவசரப்பட்டு நாக்கைச் சுட்டுக் கொண்டிருக்கிறார்' என்று எண்ணியபோது அவளுக்கு அவன் மீது இரக்கமே உண்டாயிற்று. இன்னொரு நாள் அவன் வாணலியில் வெந்து கொண்டிருந்த கோஸ் கறியைப் புகையப் புகைய வாயில் போட்டுக்கொண்டு தவித்த தவிப்பு பாரதிக்குத் தெரியாது.

படம் சீக்கிரமே முடிந்துவிட்டது. நன்றாயிருக்கிறதோ, இல்லையோ இங்கிலீஷ் படங்களில் இது ஒரு பெரிய செளகரி யம். ராஜா எல்லோருக்கும் முன்னால் எழுந்து வெளியே செல்வதைப் பாரதி கவனிக்கத் தவறவில்லை. அவன் தியேட்டர் வாசலில் போய் ஒரு புறமாக ஒதுங்கி நின்றுகொண் டான். பாரதியாகவே தன்னைக் கண்டுவிட்டுப் பேசினால், தானும் பேசுவது. இல்லையென்றால் பேசாமலேயே விட்டுக்குப் போய்விடுவது என்ற முடிவுடன் அவன் காத்திருந்தான். வெளியே வந்த டூலிப்பும் பாரதியும் பஸ் ஸ்டாண்டில் போய் நின்று கொண்டனர். டூலிப்பின் சுருள் சுருளான பொன்னிற மயிர்க் கற்றைகள் அவன் கவனத்தை ஈர்த்தன. இந்த ஆங்கிலோ இந்தியப் பெண்களுக்குத்தான் ஆண்டவன் எப்படி ஞாபகமாகப் பொன்னிறக் கூந்தலைப் படைக்கின்றானோ என வியந்து கொண்டான். நல்ல வேளையாக முதலில் டூலிப்பின் பஸ் வந்துவிடவே, ”நான் வருகிறேன் பாரதி! பை, பை!'' என்று சொல்லிக் கொண்டே அவள் பஸ் ஏறிச் சென்றுவிட்டாள். அடுத்த கணமே பாரதியின் கண்கள் ராஜாவைத் தேடின.

அவன் தான் அவசரக்காரன் ஆயிற்றே! பாரதி அவனை அழைக்கும் வரை காத்திருப்பானா?

"என்ன பாரதி ! படம் எப்படி இருந்தது. டைடில் பிரமாதம் இல்லையா?' என்று கேட்டுக்கொண்டே அவள் அருகில் நெருங்கி வந்துவிட்டான்.

”டைடில் தான் பிரமாதம். படம் சுமார்தான். ஒரே போர். தலைவலி” என்றாள் பாரதி.

”அதோ அந்த ஓட்டலுக்குள் சென்று காப்பி சாப்பிடலாம், வா. தலைவலி பறந்து விடும்” என்று சற்றுத் தூரத்தில் தெரிந்த ஓட்டலைக் காட்டினான் ராஜா.

”நேரத்தில் வீட்டிற்குப் போக வேண்டும்” என்றாள் பாரதி.

"டாக்ஸியில் போய் விடலாம், கவலைப்படாதே" என் தன் ராஜா.

இருவரும் அந்த ஓட்டலுக்குள் புகுந்து திறந்த வெளி மாடிக்குப் போய் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த வட்ட மேஜைக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டனர்.

”அதென்ன புத்தகம் ராஜா?” எனக் கேட்டாள் பாரதி.

"ஏதோ 'பிலாஸபி’யாம். லைப்ரரியிலிருந்து வாங்கி வரச் சொல்லியிருந்தாள் அத்தை'' என்று கூறிச் சலிப்புடன் அப்புத்தகத்தை மேஜை மீது போட்டான் ராஜா. பாரதி அதை எடுத்துப் புரட்டினாள்.

''நாம் இருவரும் சினிமா பார்த்துவிட்டு வருகிறோம் என்று தெரிந்தால், எங்க அப்பாவும் உங்க அத்தையும் என்ன செய்வாங்க தெரியுமா?''

"ஏன்ன செய்வாங்க? படம் எப்படி இருக்கிறது என்று கேட்பாங்க! நன்றாயிருக்கிறது என்று சொன்னால் அவங்களும் போய்ப் பார்ப்பாங்க'' என்றான் ராஜா.

''பார்ப்பாங்க, பார்ப்பாங்க! நம்ம ரெண்டு பேரையும் வீட்டை விட்டே துரத்தப் பார்ப்பாங்க.”

"நீ கவலைப்படாதே! பிரின்ஸிபால் எங்க அத்தை தானே!”

இச்சமயம். சர்வர் வந்து 'என்ன வேண்டும்?' என்று விசாரித்தான்.

"நீ என்ன சாப்பிடுகிறாய் பாரதி?”

''வெறும் காப்பி போதும்.''

”வேறு ஏதாவது சாப்பிட்டேன். உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு.''

”உங்களுக்கு எது பிடிக்குமோ, அதையே கொண்டு வரச் சொல்லுங்க” என்றாள் பாரதி,

”எனக்கா? எனக்குப் பிடிக்காதது இந்த உலகத்திலே ஒண்னே ஒண்ணுதான்'' என்றான் ராஜா.

''என்ன அது?''

”பயித்தியம் தான் பிடிக்காது” என்றான் அவன். டம்ளரிலிருந்த தண்ணீரைக் குடிக்க இருந்த பாரதி பகீரெனச் சிரித்துவிட்டாள்.

"நல்ல வேளை! இந்த ஜோக்கை நீ தண்ணீர் குடிக்கும்போது சொல்லியிருந்தால் என்ன ஆகியிருக்கும்!” என்றான் ராஜா.

''கால் டம்ளர் தண்ணீர் நஷ்டமாகியிருக்கும்'' என்று சொல்லிச் சிரித்தாள் பாரதி.

சர்வரைப் பார்த்து, ”உனக்குப் பிடித்தமானதைக் கொண்டு வாப்பா!'' என்றான் ராஜா.

”எனக்கு இந்த ஓட்டலில் போடுவது எதுவுமே பிடிக் காது ஸார்!'' என்றான் சர்வர்.

”சரி; அப்படியானால் இரண்டு கப் காப்பி மட்டும் கொண்டு வா, போதும்'' என்றாள் பாரதி.

காப்பி வருகிறவரை பாரதியின் ஜாக்ரபி புத்தகத்தை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தான் ராஜா.

காப்பி வந்ததும் அதை அருந்தியபடியே அவன் வானத்தைப் பார்த்தபோது, வானமெங்கும் கருமேகங்கள் கவிந்து கொண்டிருந்தன.

”இறுக்கமாக இருக்கிறது. மழை வந்தாலும் வரலாம்'' என்றாள் பாரதி.

”வந்தாலும் என்ன? வந்து கொண்டே இருக்கிறது'' என்றான் ராஜா.

அவன் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே படபடவென்று மழைத்துளிகள் மேஜை விரிப்பின் மீது சிதறின. இருவரும் அவசரம் அவசரமாகப் புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு தெருவுக்கு விரைந்து போய் ஒரு டாக்ஸியைப் பிடித்துக் கொண்டனர்.

தான் மட்டும் தனியாகப் பஸ்ஸில் போய்விடலாம் என்றுதான் பாரதி முதலில் திட்டமிட்டிருந்தாள். மழையும் ராஜாவும் சேர்ந்து சதி செய்ததுபோல் அவள் எண்ணத்
தையே மாற்றி விட்டார்கள்.

டாக்ஸி பாரதியின் வீட்டு வாசலில் போய் நின்றபோது மழை சோவெனக் கொட்டிக் கொண்டிருந்தது. நல்ல வேளையாக அவள் ராஜாவுடன் வந்து இறங்கியதை ஒருவரும் கவனிக்கவில்லை.

அப்போது மணி ஏழு ஆகிவிடவே, நன்கு இருட்டிப் போயிற்று. டாக்ஸியிலிருந்து இறங்கிய பாரதி பங்களாவுக்குள் போவதற்குள் லேசாக நனைந்து விட்டாள். நெஞ்சு பட படக்க அவள் உள்ளே செல்லும்போதே அப்பா அவருடைய அறையில் இருக்கிறாரா என்று கவனித்துக் கொண்டாள்.

”அறைக் கதவு ஒரு பென்ஸில் கனத்துக்கு லேசாகத் திறந்திருப்பது தெரிந்தது. திறந்த கதவின் இடுக்கு வழியாக வெளிப்பட்ட மின் ஒளி தாழ்வாரத்தில் படிந்திருந்தது.

உள்ளே மின் விசிறி சுழன்று கொண்டிருப்பதையும், அப்பா ஏதோ வேலையில் மூழ்கியிருப்பதையும் கண்டபோது அவள் திடுக்கிட்டாள். ”அப்பாவுக்குக் காது ரொம்பக் கூர்மை. வாசலில் டாக்ஸி வந்து நின்றபோது அவர் கட்டா யம் அதைக் கவனித்திருப்பார். தன்னை அழைத்து ஏன் இத்தனை நேரம்? எங்கே போயிருந்தாய்?' என்று விசாரித் தால் என்ன பதில் சொல்லுவது என்ற திகிலுடன் மெதுவாகப் பூனை போல் நடந்து சென்றாள்.

"பாரதி!'' சேதுபதிதான் அழைத்தார். அவர் குரலில் எப்போதுமே நயம் இருந்ததில்லை. இன்று வழக்கத்தைக் காட்டிலும் சற்று கடுமையாகவே ஒலித்தது.

பரம சாதுவைபோல் அவர் எதிரில் போய் நின்றாள் பாரதி.

"இத்தனை நேரம் எங்கே போயிருந்தாய்?' சேதுபதி கேட்டார்.

”காலேஜில் தான் இருந்தேன் அப்பா! ஹாஸ்டலில் ஒரு பெண்ணிடம் கணக்குப் பாடம் கற்றுக்கொண்டிருந்தேன்'' என்று துணிந்து பொய்யைச் சொன்னாள் பாரதி.

சேதுபதி ஒரு முறை அவளை ஏற இறங்கப் பார்த்தார். அவள் பொய் சொல்கிறாள் என்பதை அவள் முகம் காட்டிக் கொடுத்து விட்டது. அதைப் புரிந்து கொண்ட சேதுபதி அவளுடைய பொய்யை அம்பலமாக்க விரும்பவில்லை. தான் அதை அறிந்து கொண்டதாகவும் காட்டிக் கொள்ளவில்லை. காரணம், அப்படிச் செய்வதால் தன்னிடம் அவளுக்குள்ள பயமும் மரியாதையும் குறைந்துவிடும் என்பது தான்.

“கணக்கில் 'வீக்' என்றால் என்னிடம் சொல்லுவதற் கென்ன? உடனே டியூஷன் வைப்பதற்கு ஏற்பாடு செய்திருப் பேன் அல்லவா? சரி; இனிமேல் இம்மாதிரி நேரம் கழித்து வீட்டுக்கு வரக்கூடாது, தெரிந்ததா? இதற்கு முன்னால் கூட இரண்டு நாள் நீ நேரம் கழித்து வந்திருக்கிறாய்'' என்றார்.

”தான் இரண்டு நாட்கள் லேட்டாக வந்தது அப்பாவுக்கு எப்படித் தெரிந்தது? இவ்வளவு கணக்காகத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறாரே!'' பாரதி சிந்தித்தாள்.

''சரி; நீ போகலாம்" என்று கூறி அனுப்பினார் சேதுபதி.

மறுநாள் காலை, சேதுபதி தம்முடைய அறையில் உட் கார்ந்து பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்தபோது, டெலிபோன் மணி அடிக்கவே அவர் பாரதியை அழைத்து,

”டெலிபோனில் கூப்பிடுவது யாரென்று பார்” என்றார்.

பாரதி டெலிபோன் ரிஸீவரைக் கையில் எடுத்துக் கேட்டபோது, 'பிரின்ஸிபால் பார்வதி பேசுகிறேன்' என்று பதில் வந்தது.

தன் குட்டு வெளிப்பட்டு விட்டதோ என்று பாரதி நடுங்கிப் போனாள்.

""அப்பா வீட்டில் இருக்கிறாரா? பார்வதி கேட்டாள்.

''கொஞ்சம் வேலையாக இருக்கிறார். உங்களுக்கு என்ன வேண்டும்?' என்று அடக்கமாகக் கேட்டாள் பாரதி.

''நான் இப்போது வந்தால் அவரைச் சந்திக்க முடியுமா என்று கேட்டுச் சொல்.”

”கொஞ்சம் இருங்கள் மேடம்! இதோ கேட்டுச் சொல்கிறேன்...”

பாரதி தன் தந்தையிடம் ஓடிப்போய், "அப்பா, பிரின்ஸி பால் உங்களைச் சந்திக்க வேண்டுமாம். இப்போது வரலாமா என்று கேட்கிறார்.... நீங்கள் கொஞ்சம் வேலையாக இருப்பதாகச் சொன்னேன்..”

”ஆமாம், இப்போது எனக்கு நேரமில்லை, அப்புறம் பார்க்கலாம்” என்று அப்பா பதில் கூறிவிடுவார் என்று அவன் எதிர்பார்த்தாள்.

ஆனால் சேதுபதியோ அப்படிக் கூறாமல், ''வரச் சொல்லேன்'' என்றார்.

ஏதேனும் ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு சேதுபதியைச் சந்திக்க விரும்பினாள் பார்வதி.

நேற்று பாரதி ஜாக்ரபி வகுப்புக்கு மட்டம் போட்டு விட்டுப் போனதில் பிரின்ஸிபாலுக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி! அதையே காரணமாக வைத்துக் கொண்டு அவரைச் சந்தித்து விடலாமல்லவா!

திருவாளர் சேதுபதியின் உள்ளத்திலும் பார்வதியைக் காண வேண்டும் என்ற ஆவல் உள்ளுறக் கனிந்து கொண்டிருந்தது. பாரதிக்கு டியூஷன் ஏற்பாடு செய்யச் சொல்லும் சாக்கில் பார்வதியை வீட்டுக்கு அழைக்கலாமா என்றுகூட அவர் எண்ணியதுண்டு. ஆனால் எந்த ஒரு எண்ணத்தையும் செயலுக்குக் கொண்டு வருமுன் அதைப்பற்றி ஆயிரம் முறை சிந்திப்பது அவருடைய வழக்கமாயிற்றே! அப்போது பார்வதியே போன் செய்து வரட்டுமா என்று கேட்கவே அவர் மிக்க மகிழ்ச்சியுடன் ’வரச் சொல்லேன்’ என்று கூறிவிட்டார்.

யாருடைய வரவையும் அவ்வளவு ஆவலுடன் எதிர் பார்க்காத அவருக்கு, பார்வதி வரப் போகிறாள் என்னும் செய்தி மட்டும் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அது சேதுபதிக்கே வியப்பாக இருந்தது.

பார்வதி அறைக்குள் நுழையும்போதே ''ஓ! வாருங்கள்" என்று வரவேற்று, எதிரிலுள்ள நாற்காலியில் அமரச் சொன்னார். முகத்தில் புன்சிரிப்புத் தவழ, பார்வதி அடக்கமாக அவர் எதிரில் உட்கார்ந்து கொண்டான். சில விநாடிகள் அந்த அறைக்குள் ஓர் அசாதாரணமான அமைதி நிலவியது. எப்படிப் பேச்சைத் தொடங்குவது என்று பார்வதி யோசித்தாள். எடுத்த உடனேயே பாரதியைப் பற்றி அவரிடம் புகார் கூறுவது அவளுக்கே பிடிக்கவில்லை. எனவே, அவரே முதலில் பேசட்டும் என்று காத்திருந்தாள். எவ்வளவு நேரம்தான் சும்மா உட்கார்ந்திருக்க முடியும்? அந்த அறையில் மாட்டப்பட்டிருந்த அவருடைய மனைவியின் படத் தையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். பாரதியின் ஜாடையாகவே காணப்பட்ட அந்த உருவத்தைக் கண்ட போது, பார்வதியின் கண்கள் கூசின.

சேதுபதி இலேசாகக் கனைத்துக் கொண்டு, ”ஏதாவது விசேஷம் உண்டா?' என்று கேட்டார்.

''ஆமாம்'' என்று பதிலளித்த பார்வதி, தான் கூறவந்த விஷயத்தைச் சொல்லலாமா வேண்டாமா என்று சற்றுத் தயங்கி விட்டு, ''ஒன்று மில்லை; பாரதியைப் பற்றிச் சொல்லி விட்டுப் போகத்தான் வந்தேன். அவள் நேற்று மூன்று மணிக்கு யாருடைய அனுமதியுமின்றி காலேஜிலிருந்து வெளியே போயிருக்கிறாள்...'' என்றாள்.

"அப்படியா!'' வியப்புடன் ஒலித்தது சேதுபதியின் குரல்.

''ஆமாம், அனுமதியின்றி அவள் வகுப்பை விட்டுப் போவது இதுதான் முதல் தடவை. ஆகவே, இதை ஒரு பெரிய புகாராகத் தங்களிடம் சொல்ல வேண்டாமென்று தான் முதலில் நினைத்தேன். மாணவிகளின் ஒழுக்கம் மிகவும் முக்கியமானது. ஆகவே இம்மாதிரி தவறுகளை வளர விடாமல் முளையிலேயே கிள்ளி விடுவது நம்முடைய கடமை யல்லவா? தங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டுமென்பதற்காகவே இதைச் சொன்னேன். அவள் நல்ல பெண்தான். யாராவது சிநேகிதிகளுடன் சேர்ந்து கொண்டு சினிமாவுக்குப் போயிருப்பாளோ என்பது என் சந்தேகம்...'' என்றாள் பார்வதி.

""ஆமாம், அப்படித்தான் இருக்கும். அவள் நேற்று நேரம் கழித்து வந்த விஷயம் எனக்கும் தெரியும். உடனே கூப்பிட்டு விசாரித்தபோது தான் கணக்கில் வீக் என்றும் யாரோ ஒரு ஹாஸ்டல் பெண்ணிடம் கணக்குக் கற்றுக் கொண்டிருந்ததாகவும் என்னிடம் துணிந்து ஒரு பொய்யைச் சொன்னாள்...'' என்றார் சேதுபதி.

தம்முடைய மகள் மீது அவர் கொண்டுள்ள கோபத்தைத் தணிக்க எண்ணிய பார்வதி தமாஷாகச் சிரித்துக் கொண்டே, "இல்லையே, பாரதி கூறியது பொய்யில்லையே?'' என்றாள்.

”பொய்யில்லையா? அவள் சினிமாவுக்குப் போயிருப்பாள் என்று தாங்களே சற்று முன் கூறினீர்களே!”

"ஆமாம்; அவள் கணக்கிலே 'வீக்' என்று கூறியது பொய்யில்லை என்றுதான் சொல்ல வந்தேன். சிரித்தபடியே கூறினாள் பார்வதி.

தம் மகளிடம் பார்வதி எடுத்துக் கொண்டுள்ள அக்கறையைச் சேதுபதியால் புரிந்து கொள்ள முடிந்தது. எவ்வளவு நாசூக்காகச் சிரித்துக் கொண்டே விஷயத்தைக் கூறிவிட்டாள் என்று தனக்குள்ளாகவே வியந்து கொண்டார்.

"அப்படியானால் அவளுக்கு யாராவது ஒரு புரொபஸ்ரைக் கொண்டு டியூஷன் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்ய முடியுமா?'' சேதுபதி கேட்டார்.

''யாராவது ஒரு புரொபஸர் என்ன? உங்களுக்கு ஆட் சேபனை இல்லையென்றால் நானே வந்து சொல்லித் தருகிறேன்'' என்றாள் பார்வதி.

“பாரதி விஷயத்தில் இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டு வந்தது பற்றி மிக்க நன்றி. தங்களுக்குள்ள வேலைகளுக் கிடையில் தாங்களே டியூஷனுக்கு வருவது........" என்று இழுத்தார் சேதுபதி.

''அதனால் பரவாயில்லை; ஒழிவு நேரங்களில் தான் வரப் போகிறேன்.''

சேதுபதிக்கு அந்தச் செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. பார்வதியை இனி அடிக்கடி சந்திக்கலாம் என்பதை நினைக்கும்போது, அவர் உள்ளம் உற்சாகத்தில் மிதந்தது. அவளைச் சந்திப்பதில், அவளைக் காண்பதில், அவளுடன் பேசுவதில், அவளைப்-பற்றியே எண்ணிக் கொண்டிருப்பதில் தனக்கு ஏன் இத்தனைக் குதூகலம்? அதற்கு என்ன காரணம்? அவருக்கே அது விளங்கவில்லை.
---------------
குருத்து ஐந்து


ஓங்கி உயர்ந்து கொண்டிருந்த உதய சூரியனின் அழகைப் பலகணியின் வழியாகப் பார்த்து ரசித்தபடியே சிந்தனையில் மூழ்கியிருந்தான் பார்வதி.

நேற்று முன்தினம் சேதுபதியை அவருடைய இல்லத்தில் கண்டு பேசிவிட்டு வந்தது முதலே, அவள் உள்ளப் போக்கு அடியோடு மாறுபட்டிருந்தது. இதற்கு முன் அனுபவித்தறியாத அபூர்வ உணர்வும், ஆனந்தப் பரவசமும் அவளை ஆட்கொண்டிருந்தன.

தினம் தினம் தான் அவள் சூரியோதயத்தின் அழகைக் காண்கிறாள்; அந்திவேரைச் சூரியனின் அமைதியைப் பார்க்கிறாள். ஆயினும் என்றும் காணாத புதுமையும் கவர்ச்சியும் இன்று மட்டும் தோன்றுவானேன்? எங்கோ, எப்போதோ படித்திருந்த சில வரிகள் அவன் கவனத்துக்கு வந்தன.

"காலையில் சூரியன் உதிக்கும் அழகைக் கண்டு களிக்கிறோம். மாலையில் அஸ்தமனத்தின் அற்புதத்தைக் கண்டு ஆனந்தமடைகிறோம். அதே சமயத்தில் நம்முடைய வாழ் நாளில் ஓர் ஏடு கிழிந்து விட்டது என்பதை எண்ணிப் பார்க்க மறந்து விடுகிறோம்.”

இந்தக் கருத்து, பார்வதியின் வயதைச் சுட்டிக் காட்டிச் சிந்திக்க வைத்தது.

'நாற்பத்தாறு ஆண்டுகள் வீணாகப் போய்விட்டனவா? இனி எனக்கு வாழ்வே கிடையாதா? இளமைப் பருவத்தின் எல்லையைக் கடந்து விட்டேனா வயோதிகத்தின் முதல் படி யில் காலடி எடுத்து வைத்து விட்டேனா?

தன் உருவத்தை ஒருமுறை பார்த்துக் கொள்ள விரும்பியவளாய் நிலைக்கண்ணாடியின் முன் சென்றான். அங்கே தலையைச் சாய்த்துச் சாய்த்து, தன் மூக்கினால் கண்ணாடியைக் குத்திக் குத்தி, அதில் தெரிந்த தன் உருவத்தைப் பல கோணங்களில் ரசித்துக் கொண்டிருந்த குருவி ஒன்று பார்வதியைக் கண்டதும் சட்டெனப் பறந்து விட்டது.

பார்வதியால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. தலையில் தெரிந்த நரை தன்னைக் கண்டு பரிகசிப்பது போல் தோன் றவே, அந்த எண்ணம் அவள் உள்ளத்தை உறுத்தியது. அவள் சொல்லிக் கொண்டாள்: 'அப்படி ஒன்றும் எனக்கு வயதாகி விடவில்லை. இதோ என் கழுத்து, தாழங் குருத்து போல் எத்தனை அழகாயிருக்கிறது!' என்று, பிடரியைத் தன் இரு கைகளாலும் தடவிப் பார்த்துக் கொண்டாள்.

புன்முறுவல் ஒன்றின் மூலமாகத் தன் மனக்குறையை ஜீரணித்துக் கொண்டவளாய் நாற்காலியில் போய் அமர்ந்து, மேஜை மீது கிடந்த புத்தகம் ஒன்றை எடுத்துப் புரட்டினாள்.

"மக்களுக்குத் தொண்டு புரியும் மகான்கள், சமூக சேவையில் ஈடுபட்ட தலைவர்கள், பள்ளிக்கூட ஆசிரியர்கள் ஆகியோர் ’ஸில்வர் ஓக்' என்னும் மரங்களுக்கு ஒப்பானவர்கள். இந்த மரம் தனக்கென வாழ்வதில்லை. இதற்கெனத் தனிப்பட்ட ஆசாபாசங்களும் கிடையா. தேயிலைச் செடிகள் வளர்வதற்கு இவற்றின் லேசான இளம் நிழல் பயன் படுகிறது. இந்த மரங்களின் கிளைகள் அடர்ந்து படர்ந்து வளரும்போது நிழல் அதிகமாகிவிடும் என்பதற்காக அவற்றை வெட்டி விடுவார்கள். ஸில்வர் ஓக் மரத்தைப் போல், ஆசாபாசங்களை அவ்வப்போது வெட்டிக்கொண்டு வாழ்பவர்கள் தான் சமூக சேவையைச் சரிவரச் செய்ய முடியும்.”

’நானும் "ஸில்வர் ஓக்” மரத்தைப் போல் ஆசாபாசங்களை வெட்டிக் கொண்டு வாழவேண்டியவள் தானா? எனக் கென்று தனி வாழ்க்கை கிடையாதா?’

கீழே ராஜாவின் சீட்டிக் குரல் மணி ஒன்பதாகி விட்டது என்பதை அறிவித்தது.

'இன்று திங்கட்கிழமை. சீக்கிரமே கல்லூரிக்குப் போய் அலுவல்களை முடித்துக் கொள்ள வேண்டும். இன்று மாலை கல்லூரி முடிந்ததும் பாரதியின் வீட்டுக்குச் சென்று கணக்குப் பாடத்தைத் தொடங்கிவிட வேண்டியதுதான்.'

சனிக்கிழமை மாலையே போக வேண்டுமென்றுதான் முதலில் நினைத்தாள். ஆனாலும் ஒப்புக்கொண்ட உடனேயே அவ்வளவு அவசரப்பட்டுக் கொண்டு போய்விடக் கூடாதென்பதற்காக, இரண்டு தினங்கள் தள்ளிப் போட்டாள். இந்த இரண்டு நாட்களாக எத்தனைக் கெத்தனை அமைதியோடு இருக்க வேண்டுமென்று எண்ணினாளோ, அவ்வளவுக்கு அவள் உள்ளத்தில் ஒருவிதப் பரபரப்பு அலைந்து கொண்டிருந்தது.

”ஞானம்! சமையலாகி விட்டதா? சாப்பிட உட்காரலாமா?'' என்று கேட்டுக் கொண்டே மாடியிலிருந்து கீழே இறங்கி வந்துவிட்டாள் பார்வதி.

தினந்தோறும், மணை போட்டு, இலை போட்டு, ராஜா வந்து உட்கார்ந்துகொண்டு 'அத்தை அத்தை' என்று அலறிய பிறகே கீழே இறங்கி வருவதுதான் பார்வதியின் வழக்கம். வழக்கத்துக்கு மாறாக ராஜாவுக்கு முன்னால் வந்து விட்ட பார்வதி, "ராஜா, சாப்பிட வரவில்லையா? ஏன் லேட் இன்றைக்கு உனக்கு?'' என்று கேட்டது, ஞானத்துக்குப் பெரும் வியப்பாயிருந்தது.

''நான் லேட் இல்லை அத்தை; நீங்கதான் எர்லி” என்று சிரித்துக் கொண்டே வந்து உட்கார்ந்தான் ராஜா.

"நான் எர்லியா? நாற்பத்தாறு வயது என்பது எர்லியா?'' தனக்குள்ளாகவே எழுந்த கேள்விக்கு விடை தேடிக் கொண்டிருந்தது அவள் உள்ளம்.

""அத்தை! பால்காரச் சின்னையனுக்குக் கல்யாணமாம். அடுத்த மாதம் முகூர்த்தம் வைத்திருக்கிறானாம். இரு நூறு ரூபாய் முன் பணம் வேண்டுமென்கிறான்!'' என்றான் ராஜா.

"அவனுக்கு இதுவரை கலியாணமே ஆகவில்லையா? வயசு ஐம்பதுக்கு மேல் இருக்கும் போலிருக்கிறதே!”

”நான் கூட அதைத்தான் சொன்னேன். இப்போது என்னடா அவசரம் வந்து விட்டது? வயசு ஐம்பது தானே ஆகிறது! இன்னும் பத்து வருஷம் போகட்டுமே' என்றேன்'' என்று ராஜா சிரித்துக் கொண்டே கூறினான்.

"ராஜா! சின்னையனுக்கு அப்படி என்ன வயசாகிவிட் டது? மிஞ்சினால் ஐம்பது இருக்கும். அது ஒரு வயசா? சாப்பிட்டு முடிந்ததும் செக்குப் புத்தகத்தைக் கொண்டு வா, கையெழுத்துப் போட்டுத் தருகிறேன். உடனே அவனுக்குப் பணத்தைக் கொடுத்தனுப்பு'' என்றாள் பார்வதி.

”வயதாகிவிட்ட பிறகும் கலியாணம் செய்து கொள்ளும் வழக்கம் மேல் நாடுகளில் தான் உண்டு என்று கேள்விப் பட்டிருக்கிறேன். வர வர நம் நாட்டிலும் இது சகஜமாகி விட்டது...'' என்று முணுமுணுத்தான் ராஜா.

”உனக்கு இதில் என்ன ஆட்சேபனை..?” பார்வதி கேட்டாள்.

”எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. தங்களுடைய வயதுக்கேற்ப இன்னொரு வயதான மங்கையாகப் பார்த்து ஜோடி சேர்த்துக் கொள்ளாமல், இளம் பெண்களின் வாழ்வைப் பாழாக்கி விடுகிறார்களே என்பதை எண்ணும் போது தான்...''

”அவரவர்கள் வயதுக்கேற்ற முறையில் ஜோடி சேர்த்துக் கொள்ள வேண்டும்... அவ்வளவுதானே?' ராஜாவின் பதில் பார்வதிக்குத் திருப்தியை அளித்தது. சேதுபதியின் வயதோடு தன் வயதை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டாள். சரியான பொருத்தம்தான். அவருடைய ஆழ்ந்த அறிவு, கண்ணியமான தோற்றம், அடக்கமான குணம், வார்த்தைகளை நிறுத்துப் போட்டுப் பேசும் தன்மை,குற்றமற்ற குழந்தைச் சிரிப்பு - எல்லாமே தனக்குப் பொருத்தமாக அமைந் திருப்பதாகத் தோன்றியது அவளுக்கு.

''கல்லூரிக்கு நேரமாகி விட்டது; நான் புறப்படுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே வாசலுக்குச் சென்ற பார்வதி, பகவான் பரமஹம்சரையும் தேவியையும் வணங்கி விட்டுக் காரை எடுத்தாள். அவள் உள்ளத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருக்க முயன்றபோதிலும் அவளால் முடியவில்லை.

கார், வாசலைத் தாண்டியபோது செவிட்டுப் பெருமாள் வழக்கம்போல் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினான். ஆனால் அவன் ஏதோ மாதிரியாகத் தன்னைக் கவனிப்பது போல் பட்டது அவளுக்கு.

கார் கல்லூரி காம்பவுண்ட் வாசல் திருப்பத்தை அடைந்தபோது மணி பத்தடிக்க ஐந்து நிமிஷம்! அதோ, காலை விந்தி விந்தி நடந்து வரும் அகாதாவும் வந்துவிட்டாளே!

”ஹல்லோ, குட் மார்னிங்” என்று புன்சிரிப்போடு கூறினாள் அந்தப் பிரெஞ்சு மாது. அகாதாவின் புன்சிரிப்பில் ஏதோ அர்த்தம் இருப்பது போல் தோன்றியது பார்வதிக்கு. கல்லூரி போர்டிகோவில் கொண்டு போய்க் காரை நிறுத்தியதும், அட்டெண்டர் ரங்கசாமி கார்க் கதவைத் திறக்க ஓடிவந்தான். அவன் கூடத் தன்னை ஏதோ மாதிரியாகப் பார்ப்பதுபோல் தோன்றியது அவளுக்கு.

தினந்தோறும் தன் அறைக்குள் சென்று நாற்காலியில் உட்கார்ந்ததும் மள மளவென்று அலுவல்களை முடிக்கும் பார்வதிக்கு, அன்று ஏனோ எந்த வேலையுமே ஓடவில்லை. எதுவும் முக்கியமாகவும் படவில்லை. 'சாயந்திரம் எப்போது மணி ஐந்தடிக்கப் போகிறது, கல்லூரி முடியப் போகிறது; சேதுபதியின் வீட்டுக்குப் போகலாம்’ என்பதையே எண்ணிக் கொண்டிருந்தாள் அவள்.

இதுவரை நேரம் போதவில்லையே என்பதுதான் பார்வதியின் குறை. இன்று நேரம் போகவில்லையே என்பது அவள் குறையாக இருந்தது!

கெடியாரத்தின் முள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டிருந்தது.

பார்வதிக்குத் தன்னுடைய கடந்தகால வாழ்க்கை நினைவுக்கு வரவே, கண்களை மூடியபடியே, தான் கல்லூரியில் படித்த நாட்களை எண்ணிப் பார்த்தாள். அப்போது டியூஷனுக்குச் சென்ற நிலைமைக்கும், இப்போதைய நிலைமைக்கும் எத்தனை வித்தியாசம்!

அப்போது அவள் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கி,முன்னேற முடியாத நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்தது. இன்டர்மீடியட் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த பார்வதி, தன் சக மாணவிகள் சிலருக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்துகொண்டு, அதில் வந்த வருமானத்தின் மூலம் தன் ஒரே அண்ணனையும், நோய்வாய்ப் பட்டிருந்த தன் தாயாரையும் காப்பாற்ற வேண்டிய தாயிற்று.

டியூஷன் சொல்லித் தரும் பணியை ஒரு கட்டாயக் கடமையாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் அப்போது அவள் இருந்தாள்.

இன்று முற்றிலும் மாறுபட்ட நிலை. வறுமையின் வற்புறுத்தலோ, கடமையின் கட்டாயமோ இப்போது இல்லை.

எந்தக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றாளோ, அதே கல்லூரிக்கு இன்று அவள் தலைவி. பல பட்டங்களைப் பெற்றவள். அந்தக் கல்லூரிக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டு, தன்னையும் தன் எதிர்காலத்தையும் மறந்து வாழ்பவள். தன் உழைப்பின் பயனாக, தான் எடுத்துக்கொண்ட பெருமுயற்சி காரணமாகக் கல்லூரி அடைந்துள்ள உன்னத நிலையைக் கண்டு பெருமிதப்படுபவள். 'கல்லூரியின் ஐம்பதாம் ஆண்டும் வெற்றிகரமாகப் பூர்த்தியாகி விட்டது. இனி ஒரு குறையுமில்லை' என்ற திருப்தியுடன், மகிழ்ச்சிப் பெருமிதத்துடன் இருக்கும்போதுதானா அவள் அந்தரங்கத்தில் ஒரு சிறு கீறல் தோன்றவேண்டும்? அந்தக் கீறல் சிறிது சிறிதாக வளர்ந்து பெரிதாக வேண்டும்?

அது தானாகவே அழிந்து போகிற கீறல் அல்ல; அவளாக அழித்துவிடக் கூடியதும் அல்ல, அவள் இதயத்தின் பூவிதழ் போன்ற பட்டுத் துகிலில் அந்தக் கீறலைப் போட்டவர் வேறு யாருமல்ல; திருவாளர் சேதுபதி அவர்கள் தான்.

மணி ஐந்தடித்ததுதான் தாமதம். கல்லூரி மாணவிகள் அனைவரும் பட்டாம் பூச்சிகளைப்போல் தெரு வாயிலை நோக்கிப் பறந்து கொண்டிருந்தார்கள்.

பாரதி மட்டும் உற்சாகமின்றிப் பிரின்ஸிபால் பார்வதியின் அறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.

காரணம், கல்லூரி முடிந்ததும், தன்னுடைய அறைக்கு வந்துவிட வேண்டும் என்பது பார்வதியின் கட்டளை.

பாரதியைக் கண்டதுமே, ”என்ன புறப்படலாமா?” என்று கேட்டாள் பிரின்ஸிபால்.

'கணக்கில் வீக்! கல்லூரி ஹாஸ்டல் தோழியுடன் படித்துக் கொண்டிருந்தேன்' என்று தந்தையிடம் கூறிய ஒரு சின்ன பொய், இவ்வளவு விபரீதத்தில் கொண்டுவிடும் என்று பாரதி கனவிலும் கருதவில்லை.

போலீஸ் காவலுடன் சிறைக் கூடத்துக்குச் செல்லும் கைதியைப் போல், மெளனமாகக் காரில் ஏறி உட்கார்ந்து கொண்டாள் பாரதி. அடுத்த சில நிமிடங்களுக்குள்ளாகவே அந்தக் கார் சேதுபதி அவர்களின் பங்களாவில் போய் நின்றது.

காரை விட்டுக் கீழே இறங்கும்போதே அவ்விருவர் கண்களும் ’அவர் இருக்கிறாரா’ என்று அறிந்துகொள்ளும் ஆவலில் சேதுபதியின் அறையைத் துழாவின. இருவருடைய ஆவலும் இரு வகையானவை. அ’வர் இருக்கமாட்டாரா?’ என்ற ஆவலில் பார்த்தாள் பார்வதி. ’அவர் இருக்கக் கூடாதே!'' என்ற கவலையுடன் நோக்கினாள் பாரதி! வித்தியாசம் அவ்வளவுதான்!

”அப்பாவின் அறையில் உட்கார்ந்து கொள்ளுங்கள் மேடம். இதோ வந்து விடுகிறேன்...'' என்று கூறிச் சென்றாள் பாரதி.

தனிமையில் அந்த அறைக்குள் காலடி எடுத்து வைத்த போது, ஒரு கோயிலின் கர்ப்பக் கிரகத்துக்குள் செல்வது போல் அச்சம் ஏற்பட்டது பார்வதிக்கு.

அறைக்குள்ளிருந்த திருவாளர் சேதுபதி அவர்களுடைய மனைவியின் திருவுருவப் படம், அமைதி நிறைந்த அந்த அழகு வடிவம், பார்வதியைப் பார்த்துக் கேட்டது ! 'என்னுடைய கணவரின் அன்புக்குப் பாத்திரமாகப் பார்க்கிறாயா, அம்மா?’

உருவம் பேசவில்லை. அப்படி ஒரு பிரமை பார்வதிக்கு. சட்டென அவ்வறையை விட்டு வெளியேறிய பார்வதியின் முகத்தில் வியர்வைத் துளிகள் முத்து முத்தாக அரும்பி யிருந்தன.

”ஏன் மேடம், உங்களுக்கு இப்படி வியர்த்து விட்டது. விசிறியின் ஸ்விட்சைப் போடட்டுமா” என்று கேட்டுக் கொண்டே வந்தாள் பாரதி.

''நாம் இருவரும் இங்கேயே இந்த ஹாலிலேயே உட் கார்ந்து கொள்ளலாம்'' என்றாள் பார்வதி.

கணக்குப் பாடம் ஆரம்பமாயிற்று. முதல் நாள் என்பதால் மிகவும் சுலபமான கணக்குகளையே கொடுத்துப் போடச் சொன்னாள் பார்வதி. அரைமணி நேரம் கழிந்தது.

”சரி, இன்று இத்துடன் நிறுத்திக்கொள்ளலாம்...” என்று கூறிய பார்வதி, அமைதியின்றி அங்குமிங்கும் பார்த் துக் கொண்டே இருந்தாள். அந்தரங்கமாக ஓர் ஆசை, அவர் ஒரு வேளை வந்தாலும் வரலாமென்று. அதே சமயம் வாசலில் கார் வரும் ஓசை கேட்டது. ஆமாம், அதிலிருந்து சேதுபதிதான் இறங்கி வந்தார்.

'அவரை எப்படியும் சந்திக்கலாம்' என்று பார்வதியின் உள் மனம் சொல்லிக் கொண்டிருந்தது வீண் போகவில்லை. பார்வதி புறப்படுவதற்குத் தயாராக எழுந்து நின்று கொண்டிருப்பதைக்கண்ட சேதுபதி, ”உட்காருங்கள் போகலாம். வந்து வெகு நேரமாயிற்றா? பாரதி, எங்கள் இருவருக்கும் காப்பி கொண்டுவா...” என்று கூறியபடியே சோபாவில் சாய்ந்தவர் ”ம்... பாரதி கணக்கில் எப்படி இருக்கிறாள்!” என்று கேட்டார்.

”பரவாயில்லை. நான் வந்து அரை மணி நேரம்தான் ஆயிற்று. முதல் நாளே எல்லாக் கணக்குகளையும் கொடுத்து அவளைத் தொந்தரவு படுத்த விரும்பவில்லை. எடுத்த எடுப்பி லேயே மூளையைக் குழப்பிவிடக் கூடாதல்லவா? பொதுவாகவே குழந்தைகள், தினம் மூன்று மணிநேரம் படித்தால் போதும் என்பதுதான் என் அபிப்பிராயம். ஆடு மாடுகள் புல்லை மேய்கின்றன. மேலோடு மேய்கின்றன. புல் திரும்பவும் செழிப்பாக வளர்கிறது. வேர் வரையில் தின்று விட் டால் என்னவாகும்? புல்லே அழிந்துவிடும் அல்லவா? அதே மாதிரிதான் குழந்தைகளையும் வருத்தக் கூடாது'' என்றாள்.

"பேஷ்! என்னுடைய கருத்தும் இதேதான். ஏறக்குறைய நம் இருவருடைய எண்ணங்களும் ஒன்றாகவே இருக் கும் போலிருக்கிறது'' என்று சிரித்துக்கொண்டே கூறினார் சேதுபதி.

"நம்முடைய சிறு வயதில் கொண்டிருந்த அபிப்பிராயங்களுக்கும் இப்போதுள்ள-வற்றுக்கும் எவ்வளவோ வித்தியாசம். முன்பெல்லாம் மாணவிகள் ஓயாமல் படித்துக் கொண்டிருக்க வேண்டுமென்ற கருத்துடையவளா யிருந்தேன். இப்போது முற்றிலும் மாறாக எண்ணுகிறேன். வயது ஆக ஆக, அனுபவம் முதிர்ச்சி அடைய அடைய, நம்முடைய கருத்துகளும் மாறிக்கொண்டே போகின்றன....” என்றாள் பார்வதி.

''அதுதான் இயற்கை, அறிவின் வளர்ச்சிக்கு அடையாளம், மாவடுவாக இருக்கும்போது துவர்க்கிறது. அதுவே காயாகும்போது புளிக்கிறது. பின்னர் பழமாகும்போது இனிக்கிறது. ஆகவே, இவை மூன்றும் வெவ்வேறு பழ வகை கள் என்று கூறுவது சரியில்லை யல்லவா?''

சேதுபதி இந்த உவமையைக் கூறியதும் பார்வதி, "மிகப் பொருத்தமான உதாரணத்தின் மூலம் நான் கூற வந்ததைத் தெளிவாக்கி விட்டீர்கள்!' என்று கூறி வியந்தாள்.

அவளால் அதற்குமேல் பேச முடியவில்லை. ஏதேதோ பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த தெல்லாம், அந்த உவமையைக் கேட்ட வியப்பில் அடிப்பட்டுப் போய் விட்டன. அவரை நேரில் காணும்போது பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த தெல்லாம், இப்போது பேசத் தகுதியற்ற விஷயங்களாகி விட்டன. அவர் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருக்கிறார்!

பாரதி காப்பி கொண்டு வந்து வைத்தாள். காப்பியை அருந்தியபடியே "தாங்கள் தினமும் இங்கு வரப்போவ தாகச் சொன்னீர்கள் அல்லவா?'' என்று கேட்டார் சேதுபதி.
"ஆமாம்'' என்றாள் பார்வதி.

"அவசியம் வந்து போய்க் கொண்டிருங்கள். நேரம் கிடைக்கும் நாட்களில் நானும் வந்துவிடுகிறேன். பொதுவாகச் சில விஷயங்களைப்பற்றி இருவரும் பேசிக் கொண்டிருக்கலாம். உங்களிடம் பேசிக் கொண்டிருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது'' என்றார் சேதுபதி.

பார்வதி தலையைக் குனிந்து கொண்டாள். அது அடக்கத்தின் அறிகுறியா? வெட்கத்தின் விளைவா?

வாசலில் ஸ்கூட்டர் வரும் ஓசை கேட்டது. "பாரதி, யார் என்று பார்த்துவிட்டு வா'' என்றார் சேதுபதி.

பாரதி வெளியே போய்ப் பார்த்தாள். ராஜா வந்து கொண்டிருந்தான்.

அவனைக் கண்டதும் பாரதியின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. 'ராஜா இப்போது எதற்காக இங்கே வருகிறார்? அவருடன் ஏதேதோ பேச வேண்டுமெனத் துடித் துக் கொண்டிருந்தாள், பாரதி. ஆனால் அப்பாவும் பிரின்ஸி பாலும் இருக்கும்போது எப்படிப் பேசுவது?'

"எங்கே வந்தீர்கள் ராஜா?"
அவளுக்கு ராஜா பதில் கூறிக் கொண்டிருக்கும்போதே, அப்பாவும் பிரின்ஸிபாலுமே வாசலுக்கு வந்து விட்டார்கள்.

"அத்தை! எங்கள் கல்லூரி பிரின்ஸிபால் தங்களைச் சந்திக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார் அல்லவா! இன்று நம் வீட்டுக்கு வந்து காத்திருக்கிறார்" என்றான் ராஜா.

"அப்படியா? இதோ வருகிறேன்'' என்று ராஜாவுக்குப் பதில் கூறிய பார்வதி, சேதுபதியிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டாள்.

சேதுபதிக்கும் பார்வதிக்கும் இன்னும் வெகு நேரம் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் போலிருந்தது.

பேசுவதற்கு வேண்டிய விஷயங்களும் அவர்களிடம் இருந்தன. சந்தர்ப்பமும் அதற்கு இடமளித்தது. அவர்கள் பேசினார்கள். ஏதேதோ பேசினார்கள். ஆனால் இருவரும் தங்கள் இதய ஆழத்தில் புதைந்து கிடந்த ஓர் எண்ணத்தை மட்டும் வெளியிட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். சூழ்நிலையும் சந்தர்ப்பமும் இடமளித்தபோதிலும், ஏதோ ஒரு பெரிய சுவர் அவர்களுக்குக் குறுக்கே நின்றது. வயதாகி விட்டது என்ற காரணமே அந்தச் சுவராயிருக்குமோ?
-------------
குருத்து ஆறு


அகத்திக் கீரையைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துப் பசு மாட்டுக்குக் கொடுத்துக்கொண்டே, அதன் கழுத்தைத் தடவியபடி, கடமையற்ற, கல்லூரிக்குச் செல்ல வேண்டிய அவசரமற்ற ஞாயிற்றுக்கிழமையின் விடுமுறை நிதானத்தைச் சாவகாசமாக அசை போட்டுக் கொண்டிருந்தாள் பார்வதி. வாரம் முழுவதும் கல்லூரி அலுவல்களில் ஆழ்ந்து விடும் அவளுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் ஓய்வுத் தினம். ஆயினும் விடுமுறை நாட்களில் கூட அவள் வீண் பொழுது போக்குவதில்லை.
ஓய்வு நாட்களில் வீட்டிலேயே இருந்து கவனிக்க வேண்டிய வேலைகளுக்கு முதல் நாளே திட்டம் போட்டு வைத்துக்கொள்வாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. பத்து மணிக்கெல்லாம் சாப்பாட்டை முடித்துக்கொண்டு மாடிக்குச் சென்று பீரோவில் அடைந்து கிடக்கும் காகிதக் குப்பைகளையும், பழைய கடிதங்களையும் எடுத்து வெளியே போட்டு, வேண்டாதவற்றை ஒதுக்கி, வேண்டிய-வற்றை மட்டும் ஒழுங்காக அடுக்கி வைக்கவேண்டும் என்று முதல் நாளே திட்டம் போட்டு வைத்திருந்தாள்.

கடந்த மூன்று ஞாயிற்றுக்கிழமைகளாகவே இந்த வேலையை அவள் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தாள். காரணம், முப்பது ஆண்டுகளாகச் சேர்ந்துள்ள குப்பைகளைக் கிளறும்போது தன்னுடைய கடந்த கால வாழ்க்கை விநோதங்களெல்லாம், தான் அனுபவித்த இன்ப துன்பங்களெல்லாம் நினைவில் தோன்றி சஞ்சலப்படுத்துமல்லவா?

மணி ஒன்பது இருக்கும். கல்லூரி மாணவிகள் இருவர் பிரின்ஸிபால் பார்வதியின் பேட்டிக்காக வாசலில் காத்திருந்தனர். பார்வதி, உள்ளே சமையலறையில், ஞானத்துக்கு உதவியாகக் காய்களைத் திருத்திக் கொடுப்பதில் முனைந் திருந்தாள். அவளுடைய ஞாயிற்றுக்கிழமை திட்டங்களில் அதுவும் ஒன்று! காய்கள் திருத்துவதில் பார்வதிக்கு எப்போதுமே பிரியம் அதிகம்!

வாழைப்பூவின் இதழ்களை ஒவ்வொன்றாகப் பிய்த்து அதன் நீள நீளமான பூக்களைத் தனித்தனியாகப் பிரித்து எடுத்து, அந்தப் பூக்களின் இதயத்தில் ஒளிந்திருக்கும் 'கள்ளனை'க் கண்டு பிடித்து அகற்றுவது ஒரு பெரிய கலை, அன்று அதை ஒரு விளையாட்டுச் சிறுமிபோல் செய்து மகிழ்ந்து கொண்டிருந்தாள் பார்வதி.

வாழைப்பூ ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பார்வதி தன் வாழ்க்கையை எண்ணிப் பார்த்துக் கொண்டாள்.

'என் இதயத்தில் புகுந்திருக்கும் கள்ளனைக் கண்டு பிடித்து அகற்றும் சக்தி எனக்கு உண்டா?' இந்தக் கேள்விக்கு அவளால் விடை காண முடியவில்லை. கை, பூவிலுள்ள கள்ளர்களைக் களைந்து கொண்டிருந்தது. அதே சமயத்தில் மனம் தன் இதயக் கள்ளனைக் களையும் மார்க்கம் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

"அத்தை! வாசலில் யாரோ இரண்டு மாணவிகள் உங்களைப் பார்க்கக் காத்திருக்கிறார்கள்' என்று ராஜா கூறிய வார்த்தைகள் அவள் சிந்தனையைக் கலைத்தன.

பார்வதி எழுந்து வாசலுக்குச் சென்றபோது அங்கு உட்கார்ந்திருந்த மாணவிகள் இருவரும் மரியாதையோடு எழுந்து நின்று வணக்கம் செய்தனர்.

"ஓ, நீங்களா!.... ஒரு வாரமாக நீங்கள் வகுப்புக்கு வருவதில்லை என்று கேள்விப்பட்டேன்...ஏன்?... சம்பளம் கட்ட முடியவில்லை என்றால் என்னிடம் வந்து சொல்லி யிருக்கலாமே.... நான் கூட ஒரு காலத்தில் உங்களைப்போல் சம்பளம் கட்ட முடியாமல் கஷ்டப்பட்டவள்தான். வறுமை, உங்கள் படிப்புக்குத் தடையாயிருக்கக் கூடாது. உங்கள் தாய் தந்தையரை எனக்குத் தெரியாது. அதனால் பரவாயில்லை.... உங்களிருவருடைய சம்பளத்தையும் நான் கட்டி விடுகிறேன். நாளையிலிருந்து வகுப்புக்கு வந்து விடுங்கள். சரி... நீங்கள் போகலாம். இதைச் சொல்லுவதற்குத்தான் உங்களிருவரையும் வரச் சொல்லியிருந்தேன்'' என்றாள் பார்வதி.

நன்றிப் பெருக்கின் உணர்ச்சியில் அந்தச் சகோதரிகள் இருவரும் கண்களில் கண்ணீர் மல்கப் பேசமுடியாமல் மௌனிகளாக நின்றனர். அந்தப் பெண்களின் மௌனத்தில் கள்ளன்களைப்போல் மறைந்து கிடந்த ஆயிரம் நன்றிகளைப் பார்வதி கண்டு கொண்டாள்.

'நீங்கள் போகலாம்' என்று இதமான மிதமான தனது மொழிகளால் அவர்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பிய பார்வதி உள்ளே போகும்போது, ''பாவம் நன்றாகப் படிக்கிற குழந்தைகளின் குடும்பம் வறுமையால் வாடுகின்றன. வசதியுள்ள குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளோ நன்றாகப் படிப்பதில்லை'' என்று தனக்குத்தானே வாய்விட்டுச் சொல்லிக்கொண்டு போனாள்.

பார்வதியால் எதையும் பொறுத்துக்கொள்ள முடியும். சம்பளம் கட்ட முடியாமல் எந்த மாணவியும் படிப்பை நிறுத்தி விடுவதை மட்டும் அவளால் சகிக்க முடிவதில்லை.

சாப்பிட்டு முடிந்ததும் திட்டப்படி மாடி அறைக்குச் சென்று பீரோவைத் திறந்து அதிலிருந்த பழைய குப்பை களை எடுத்து வைத்துக்கொண்டாள் பார்வதி.

ஒவ்வொரு காகிதமாக எடுத்துப் படித்துக்கொண்டே வந்தபோது, அவளுடைய கடந்த கால வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாக நினைவில் தோன்றி அவள் கண்களைப் பனிக்கச் செய்தன. அந்தக் குப்பைகளுக் கிடையே பளிச்சிட்ட திருமண அழைப்பிதழ் ஒன்று அவள் கவனத்தைக் கவர்ந்தது. முப்பது ஆண்டுகளுக்கு முன் அவளுடன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அவள் தோழி சரஸ்வதியின் திருமணப் பத்திரிகை அது. பார்வதி ஆவலுடன் அதைப் பிரித்துப் பார்த்தாள்.

சௌபாக்கியவதி சரஸ்வதிக்கும், சிரஞ்சீவி சேதுபதிக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட மேற்படி திருமண சுபமுகூர்த்தம் இனிது நடந்தேறி இன்று முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.

சேதுபதி! - அந்தப் பெயரை வாசித்தபோது அவள் நெஞ்சத்தில் ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது.

சரஸ்வதி! - சேதுபதியின் அறையில் மாட்டப்பட்டுள்ள அவருடைய மனைவியின் உருவப் படம் இந்தச் சரஸ்வதியினுடையதுதானோ? முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பழகிய தன்னுடைய கல்லூரித் தோழி சரஸ்வதியின் முகத்தை நினைவுக்குக் கொண்டு வந்து அந்த முகத்துடன் படத்திலுள்ள முகத்தை ஒத்திட்டுப் பார்க்க முயன்றாள். ஊஹும் முடிய வில்லை. பால்ய சிநேகிதி சரஸ்வதியின் முகம் அவளுக்கு மறந்தே போய்விட்டது!

படத்திலுள்ள சரஸ்வதிக்கு வயது முப்பது அல்லது முப்பத்தைந்துக்கு மேல் இருக்கலாம். கல்லூரித் தோழி சரஸ்வதியை அவள் பதினெட்டு வயது கன்னிப் பெண்ணா யிருந்தபோது கண்டதுதான். எனவே, அடியோடு மறந்து போன ஒரு முகத்தை, முப்பத்தைந்து வயதான ஒரு சுமங்கலியின் முகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து, அந்தச் சரஸ்வதிதானா இவள் என்பதை நிச்சயப்படுத்துவது அவளால் இயலாத காரியமாயிருந்தது.

எண்ணங்கள் சுழன்றன. ஏதேதோ குழப்பங்களும், ஆசைகளும், கவலைகளும் கற்பனைகளும் பார்வதியின் நெஞ்சத்தில் புகுந்து புயலாகப் பரிணமித்துச் சுழன்று கொண் டிருந்தன்.

முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள், பார்வதிக்கு அப்போது பதினெட்டு வயது இருக்கலாம். இதே சாரதாமணிக் கல்லூரியில் இன்டர்மீடியட் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய தந்தை பலராம் வாத்தியார் எலிமென்டரி பாட-சாலையில் நீண்ட காலம் 'எழுத்தறிவிக்கும் இறைவனாக' இருந்து வயிற்றைக் கழுவி
விட்டுத் தன் மகள் பார்வதியையும், மகன் சிவராமனையும் பால்ய வயதிலேயே அநாதைகளாக்கிச் சென்றுவிட்டார்.

பலராம வாத்தியாரின் நண்பர் சாம்பசிவம் பார்வதியையும், அவள் அண்ணனையும் தன் வீட்டோடு அழைத்து வந்து ஆதரவு காட்டி வளர்க்கலானார்.

உரிய காலத்தில் சிவராமனுக்குத் திருமணம் நடந்தது. மறு வருடமே அவன் மனைவி ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துத் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். அந்தத் துயரம் தாங்காமல் சிவராமன் பார்வதிக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வடநாட்டுக்கு யாத்திரை கிளம்பிப் போய்-விட்டான். போனவன் போனவன் தான், அப்புறம் திரும்பவேயில்லை

அன்றே அண்ணனுக்குப் பிறந்த ஆண் மகவைக் காப்பாற்றும் பொறுப்பு பார்வதியின் தலையில் விழுந்தது. கன்னிப் பருவத்தைக் கட்டிக் காக்க வேண்டிய கடமை, வறுமையின் கொடுமை, இவற்றுக்கிடையே குழந்தையை வளர்க்க வேண்டிய கடமையும் சேர்ந்து நிலை தடுமாறி நின்ற பார்வதிக்கு ஆதரவாக இருந்து பரிவு காட்டியவர் சாம்பசிவம்தான். அவருக்குக் காது சற்று மந்தம். செவிச் செல்வத்தைத் தவிர மற்ற செல்வங்களை யெல்லாம் பெற்று வாழ்க்கையின் இன்பங்களை யெல்லாம் ஆண்டு அனுபவித்து ஏகாங்கியாக வாழ்பவர் அவர். உற்றார் உறவினர்களிடம் ஒட்டுதல் இன்றி, பற்றற்ற ஞானிபோல் தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த வயோதிகருக்கு ஆண்டவன் இப்படி ஒரு பொறுப்பை அளித்திருந்தான். ஆனாலும் பார்வதி அவருக்கு ஒரு பாரமாக இருக்க விரும்பவில்லை. காலையிலும் மாலையிலும் தன் கல்லூரித் தோழிகள் சிலருக்கு டியூஷன் சொல்லித் தந்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தாள். விசித்திரமான தன் வாழ்க்கையை எண்ணிப் பார்த்தபோது பார்வதிக்கே வேடிக்கையாக இருந்தது.

'எங்கேயோ பிறந்தேன். எங்கேயோ வளர்கிறேன். நான் ஓர் அநாதை. கன்னிப் பெண்; கலியாணமாகாதவள். என்னிடம் இன்னொரு அநாதைக் குழந்தை! இந்தக் குழந்தைக்கும் எனக்கும் ஆதரவு சாம்பசிவம்.'

'நான் கன்னிப் பெண்ணாக இருந்து கொண்டே, குழந்தைக்குத் தாயாகவும் இருக்க வேண்டும். படித்துக் கொண்டே பணமும் சம்பாதிக்க வேண்டும். தெருவில் செல் லும் வாலிபர்களின் கண் பார்வையிலிருந்து தப்பி வாழவேண்டும். படித்துக் கொண்டே, படித்தபடி பணம் சம்பாதித்துக் கொண்டே, அநாதையாக இருந்து கொண்டே, அநாதையை வளர்த்துக் கொண்டே, கன்னியாக இருந்து கொண்டே, கலியாணம் ஆனவளைப் போல் வாழ்ந்து கொண்டே, தேவி!... இதென்ன விசித்திர வாழ்க்கை ! யாருக்காக நான் வாழ்கிறேன்? எதற்காக வாழ்கிறேன்?'

'அப்பா, நான் டியூஷனுக்குப் போகிறேன்' என்று குழந்தையை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு புறப்பட் டாள் பார்வதி.

சாம்பசிவம் சிரித்தார். அந்தச் சிரிப்பிலே வேதனையும் வருத்தமும் கலந்திருந்தன.

"போகிற இடங்களுக் கெல்லாம் இந்தக் குழந்தையை யும் கூடக் கூடத் தூக்கிக் கொண்டு போகிறாயே, இதைத் தொட்டிலில் விட்டுச் சென்றால் நான் பார்த்துக் கொள்ள மாட்டேனா?" சாம்பசிவம் கேட்டார்.

"தங்களுக்கு எதற்குச் சிரமம், அப்பா! கையோடு இந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு போவது எனக்கு ஒரு விதத்தில் செளகரியமாகவே இருக்கிறது. தெருவில் செல்லும் வாலிபர்கள் என்னைப் பார்க்கும்போது ஒரு தாயைப் பார்ப்பதுபோல் மரியாதை காட்டுகிறார்கள். அவர்களுடைய பார்வை குற்றமில்லாமல் இருக்கிறது. ஆகையால், என் ராஜா என் கன்னிப் பருவத்துக்கு ஒரு கவசமாக இருந்து உதவுகிறான்...."

"நீ ஒரு வேடிக்கையான பெண்!'' என்றார் சாம்பசிவம்.

"ஆமாம், இராமலிங்க சுவாமிகள் சரித்திரம் நீங்கள் படித்ததில்லையா? அவர் முற்றும் துறந்த முனிவராகப் பற்றற்று வாழ்ந்த காலத்திலும் தன் இடுப்பில் ஒரு சாவிக் கொத்தைச் செருகி வைத்துக் கொண்டிருப்பாராம். வீடோ, வாசலோ, பெட்டியோ எதுவும் இல்லாமல் வெறும் சாவிக் கொத்தை மட்டும் வைத்துக் கொண்டிருந்ததற்கு என்ன காரணம் தெரியுமா? மற்றவர்கள் தன்னை உயர்வாக, முற்றும் துறந்த முனிவராக எண்ணிவிடக்கூடாது என்பதற்காகத்தான். என் கதையும் ஏறக்குறைய அப்படித்தான். கன்னிப்பெண் என்று என்னை யாரும் எண்ணிவிடக் கூடாது என்பதற்காகவே எங்கே போனாலும் இந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அலைகிறேன். என்னைப் பார்க்கிறவர்கள், என்னை ஒரு தாயாகப் பார்ப்பார்கள் அல்லவா?'' என்று கூறிச் சிரித்தாள்.

"இனிமேல் உனக்கு இந்தக் கஷ்டமெல்லாம் இருக்காது. இன்று மாலை நான்கு மணிக்கு எனக்குத் தெரிந்தவர்கள் உன்னைப் பெண் பார்க்க வரப்போகிறார்கள். நான் தான் ஏற்பாடு செய்திருக்கிறேன். பெரிய பணக்கார இடம். பையன் பி.ஏ. படித்துக் கொண்டிருக்கிறான். ராஜா மாதிரி கண்ணுக்கு லட்சணமாக இருப்பான். நீ என் பேச்சைத் தட்ட மாட்டாய் என்ற நம்பிக்கையில் அவர்களை வரச் சொல்லி-யிருக்கிறேன். கலியாணமே வேண்டாம் என்று சொல்லக்கூடாது. சொன்னால் இன்று முதல் நான் உன்னுடன் பேசவே மாட்டேன்...''

பலமான பீடிகையுடன் பார்வதி மறுத்துக்கூற முடியாதபடி விஷயத்தைச் சொல்லி முடித்து விட்டார் சாம்பசிவம்.

அன்று மாலையே சாம்பசிவத்துக்குத் தெரிந்த நண்பரும் அவருடைய மனைவியும் ஒரு வாலிபனுடன் பார்வதியைப் பார்க்க வந்திருந்தார்கள்.

"இவன் என்னுடைய சகோதரியின் மகன் இவனுக்குத் தாயார் தகப்பனார் இல்லை. என் சொத்தெல்லாம் இவனுக்குத்தான் எழுதி வைக்கப் போகிறேன். பி.ஏ. படித்துக் கொண்டிருக்கிறான். பெயர் சேதுபதி...'' என்றார் பிள்ளைக்கு மாமா.

பலகாரங்களையும் தானே தயாரித்த காப்பியையும் கொண்டுவந்து அவர்கள் மூவருக்கும் கொடுத்துவிட்டு நமஸ்காரம் செய்தாள் பார்வதி.

"இவள் என் வளர்ப்பு மகள். ரொம்பக் கெட்டிக்காரி ; பெயர் பார்வதி. ' என்று பெண்ணை அறிமுகப்படுத்தி வைத்தார் சாம்பசிவம்.

"பெண் அடக்கமாக இருக்கிறாள்'' என்றார் பிள்ளைக்கு மாமா.

''பிராப்தம் இருந்தால் நடந்துவிடுகிறது'' என்றாள் பிள்ளைக்கு மாமி.

பிள்ளையும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அந்தரங்கமான மெளன மொழியில் பேசிக் கொண்டார்கள். அந்த ஒரு விநாடியிலேயே ஒருவர் மீது
ஒருவர் காதல் கொண்டார்கள் என்று கூடக் கூறலாம்.

''காப்பி முதல் தரமாயிருக்கிறது'' என்று பையன் நாசுக்காகத் தன் உள்ளத்தைச் சொல்லி விட்டான்.

பார்வதி உள்ளே போய் மறைவாக நின்று கொண்டு அந்த வாலிபனுடைய அழகிய வடிவத்தை, கம்பீரத்தைப் பார்த்து ரசித்தாள். அவன் தனக்குப் புருஷனாக வாய்ப்பானா?' என்று ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.

பிள்ளைக்கு மாமா, பார்வதி கொண்டுவந்து வைத்த கோதுமை அல்வாவை ருசித்தபடியே தம் மனைவியைப் பார்த்து, "நீயும் அல்வா செய்கிறாயே! இந்த அல்வாவைப் பார்! எவ்வளவு ருசியாயிருக்கிறது!'' என்றார்.

"ஏன், உங்கள் மனைவி செய்யும் அல்லவா இவ்வளவு நன்றாக இருக்காதோ?'' என்று கேட்டார் சாம்சிவம்.

"என் மனைவி செய்யும் அல்வாவைச் சாப்பிட்டால் அப்புறம் அபிப்பிராயமே கூறமுடியாது'' என்றார் பிள்ளைக்கு மாமா கண் சிமிட்டியபடி!

@அதென்ன அப்படி?'' என்று வியந்தார் சாம்பசிவம்.

"அது அப்படித்தான். அந்த அல்வாவைச் சாப்பிட்ட தும் நாக்கும் அண்ணமும் ஒன்றோடு ஒன்றாக ஒட்டிக் கொண்டு பேச முடியாமல் போய்விடும்” என்றார் பிள்ளைக்கு மாமா,பார்வதி உட்பட எல்லோரும் சிரித்து விட்டார்கள்!

"சரி, நேரமாகிறது; நாங்கள் போய் இரண்டு நாட் களில் தகவல் சொல்லி அனுப்புகிறோம்...'' என்று கூறிப் புறப்பட்டனர் அந்தப் பெரியவர்கள்.

அதுவரை தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை, அவர்கள் புறப்படும்போது 'வீல்' என்று அழத் தொடங்கியது.

"இது யாருடைய குழந்தை? '' வியப்புடன் கேட்டார் பிள்ளைக்கு மாமா.

@இந்தப் பெண்ணுக்கு ஓர் அண்ணன் இருக்கிறான். அவனுடைய குழந்தை. அது ஒரு தனிக்கதை'' என்றார் சாம்சிவம்.

நாலைந்து நாட்கள் கழிந்தன. ஏனோ தெரியவில்லை. இந்தச் சம்பந்தத்தில் எங்களுக்கு இஷ்டமில்லை என்று தகவல் அனுப்பி விட்டார்கள் அந்தப் பெரியவர்கள்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பார்வதியிடம் கலியாணம் என்ற பேச்சை எடுக்கவே பயந்து விட்டார் சாம்பசிவம். பார்வதியும் தன் திருமணத்தைப்பற்றி அன்றோடு மறந்து விட்டாள். காலம் ஓடிக்கொண்டிருந்தது. திடீரென்று ஒரு நாள் சாம்பசிவமும் கண் மூடிவிட்டார். இதெல்லாம் நிகழ்ந்து இன்று முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.

பார்வதி தன் கையிலிருந்த சரஸ்வதி - சேதுபதியின் திருமணக் கடிதத்தை இன்னொரு முறை படித்துப் பார்த்து விட்டு, அன்று தன்னைக் காணவந்த வாலிபன் தான் சேதுபதியா? சரஸ்வதிதான் அவருடைய மனைவியா? சேதுபதியின் வீட்டில் மாட்டப்பட்டுள்ள திருவுருவப் படம் என் தோழி சரஸ்வதியினுடையதுதானா?' என்று யோசித்தாள்.

அன்று மாலை சேதுபதியின் வீட்டில் பாரதிக்கு டியூஷன் சொல்லிக் கொண்டிருந்த-போது பார்வதி கேட்டாள் :
"பாரதி! உன் அம்மா பெயர் என்ன?

''சரஸ்வதி!'' என்றாள் பாரதி.

கன்னியாகவே ஐம்பது வயதைக் கடந்து விட்ட பார்வதிக்கு, என்றுமே, யாரிடமுமே ஏற்படாத பந்தமும் பாசமும் இத்தனை வருடங்களுக்குப் பிறகு சேதுபதியிடம் ஏற்படுவானேன்? விட்ட குறை தொட்ட குறை என்பார்களே, அது தானோ? - பார்வதி நீண்டதொரு பெருமூச் செறிந்தாள்.
---------------
குருத்து ஏழு


சுழல் நாற்காலியில் சாய்ந்த வண்ணம், மேஜை விளிம்பைக் கால்களால் உந்தி முன்னும் பின்னுமாக ஆடியபடியே தீவிரச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் சேதுபதி, கல்கத்தாவிலுள்ள ஒரு வர்த்தக ஸ்தாபனத்துடன் 'டிரங்' டெலிபோன் மூலம் தொடர்பு கொள்வதற்காகக் காத்திருக்கும் போது அந்தப் பொன்னான நேரத்தை வீணாக்காமல் தம்முடைய மோட்டார் தொழிற்சாலையின் எதிர்காலத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார்.

யோசனையின் தீவிரத்தில் அவர் தம்முடைய அகன்ற நெற்றிக்கும் வலது உள்ளங்கைக்குமிடையே சிக்கியிருந்த பென்சிலை இப்படியும் அப்படியும் உருட்டிக் கொண்டிருந்த சமயம், ''அப்பா! இன்றைக்கு எனக்குப் பிறந்த நாள்!' என்று குதூகலத்தோடு கூறிக்கொண்டு அவருடைய அருமை மகள் பாரதி அவர் எதிரில் வந்து நின்றாள்.

"அப்படியா? ரொம்ப சந்தோஷம்! இன்றைக்கு உனக்கு எத்தனையாவது பிறந்த நாள்?'' சேதுபதி கேட்டார்.

"இருபதாவது...''

''வெரிகுட்! உன் அத்தையிடம் சொல்லி முதல் தரமான விருந்து தயாரிக்கச் சொல்லு.... உனக்குப் பால் பாயசம் ரொம்பப் பிடிக்குமே! உன் சிநேகிதிகளை யெல்லாம் சாப்பிடக் கூப்பிடுவதுதானே?''

"கூப்பிடாமல் இருப்பேனா? அவர்கள் எல்லோரும் மாடி யில் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பத்து நிமிஷத்தில் விருந்து தயாராகிவிடும். அப்பா ! நீங்களும் இன்று என்னோடு சாப்பிட வேண்டும்...''

"அப்படியா சங்கதி? எல்லா ஏற்பாடும் நடந்து கொண்டிருக்கிறதா? இந்த வீட்டில் நடப்பது ஒன்றுமே எனக்குத் தெரிவதில்லை...''

"உங்களுக்குத்தான் எதிலேயுமே அக்கறை கிடையாதே! எந்த நேரமும் வேலைதான். அதே ஞாபகம்தான்! உங்க வயசே உங்களுக்கு நினைவில் இருப்பதில்லையே!@

"நான் எல்லாவற்றையும் மறந்து விடுகிறவன் என்று தீர்மானித்துவிட்டாயா? சின்ன வயசிலே நடந்ததெல்லாம் கூட எனக்கு ஞாபகம் இருக்கிறது. நான் பிறந்தபோது எனக்கு வைத்த பேரைக்கூட. இன்னும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறேன், தெரியுமா?....''

"அடேயப்பா! ரொம்ப ஆச்சரியமாயிருக்கே! அது சரி ; உங்களுக்கு இப்போது என்ன வயசாகிறது தெரியுமா?....''

"அதுதான் மறந்து போச்சு. உள்ளே போய் அத்தையைக் கேட்டுப் பாரு. சரியாகச் சொல்லுவாள். அவளைவிட எனக்கு நாலு வயசு கூட. அவளுக்கு இப்போ...''

@நாற்பத்தெட்டு ஆகிறது.''

"அப்படின்னா எனக்கு இப்ப ஐம்பத்திரண்டு ஆகியிருக்கணுமே!... ஓ... அவ்வளவு வயசாகி விட்டதா எனக்கு?"

"அப்பா, அம்மாவையும் உங்களையும் சேர்ந்தாப் போல நிற்க வைத்து நமஸ்காரம் செய்ய முடியலையே என்று எனக்கு ரொம்ப நாளாகக் குறை. கொஞ்சம் எழுந்து அம்மா படத்துக்குப் பக்கத்திலே நில்லுங்கப்பா... நமஸ்காரம் செய்யறேன்...''

கண்களில் தளும்பிய கண்ணீரைத் துடைத்தபடியே சேதுபதி தமது மனைவியின் படத்தைப் பார்த்தார். அந்தக் களைபொருந்திய முகம் தெய்வத் தன்மை பெற்று விளங்கியது.

திருமணத்தன்று சேதுபதி அவளுக்கு மாலை சூட்டிய போது அவள் வெட்கம் சூழத் தலை குனிந்த வண்ணம் தம் எதிரில் நின்ற காட்சி அவர் நினைவுக்கு வந்தது.

அன்று கல்யாண கோலத்தில் நின்ற சரஸ்வதியின் அழகிய வடிவத்துக்கும் இப்போது எதிரில் நிற்கும் பாரதியின் தோற்றத்துக்கும் அதிக வித்தியாசம் இல்லை. சேதுபதியின் நெஞ்சத்தில் உணர்ச்சி அலைகள் பொங்கின.

சரஸ்வதியைப் பிரிந்து இன்று பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இத்தனை காலமும் வைராக்கிய புருஷராக, சலனமற்ற தபசியாக, திடசித்தம் வாய்ந்தவராக வாழ்ந்து விட்ட சேதுபதியின் உள்ளத்தில் பார்வதி பெரும் புயலைக் கிளப்பியிருந்தாள்.

''பாரதி! நீ போய்ச் சாப்பிடு! எனக்காகக் காத்திருக்க வேண்டாம். காலேஜுக்கு நேரமாகிவிடும் உனக்கு. நான் கல்கத்தாவுக்கு டிரங்க்கால் புக் செய்திருக்கிறேன்.''

''பிறந்த நாளன்றுகூட என்னோடு சாப்பிடக் கூடாதா அப்பா! எப்போது பார்த்தாலும் வேலைதானா?'' சலிப்போடு கூறினாள் பாரதி.

''இன்றைக்கு உனக்குப் பிறந்த தினம் என்று நீ என் னிடம் நேற்றே சொல்லி-யிருந்திருக்கக் கூடாதா?''

"நேற்று நான் சொன்னபோது 'பேஷ் பேஷ்' என்றீர்களே! அதற்குள் மறந்து விட்டீர்களா?''

"நீ என்ன சொன்னாய் என்பதே இப்போது என் ஞாபகத்தில் இல்லை. நான் ஏதோ கவனமாக பேஷ், சொல்லியிருக்கிறேன்! பரவாயில்லை உன் சிநேகிதிகளெல்லாம் வந்திருக்கிறார்கள் இல்லையா! அவர்களை யெல்லாம் சாப்பிடச் சொல்லு'' என்றார் சேதுபதி.

"அப்பா, உங்களுக்கு வர வர ஞாபக மறதி அதிகமாகிக் கொண்டே போகிறது. நான் சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் மறுபடியும் மறந்து போனாலும் போவீர்கள். ஆகையால் எனக்கு இப்போதே ”பர்த்டே பிரசன்ட்டைக் கொடுத்து விடுங்கள்'' என்றாள் பாரதி.

”பிரசன்ட்டா ! என்ன பிரசன்ட் கொடுக்கிறது?”

”ஜப்பானிலிருந்து நாய் பொம்மை ஒன்று வந்திருக்கிறதாம். யாராவது கூப்பிட்டால் அந்தப் பொம்மைநாய் தானாகவே வாலை ஆட்டிக் கொண்டு ஓடி வருகிறதாம்.''

"தானாகவே எப்படி ஓடி வரும்? யாராவது கீ கொடுத்து வைத்திருப்பார்கள்.”

”அதுதான் இல்லை; கூப்பிடறவர்களின் சத்தத்தைக் கேட்டுத் தானாகவே ஓடி வருகிறதாம்.”

”விஞ்ஞானம் அவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறது. அந்த நாய் என்ன விலையாம்?''

”அறுநூறு ரூபாயாம்!''

”ரொம்ப அதிகம்....”

'கூப்பிட்டால் ஓடி வருகிறதே! அதுக்கு இது ஒரு விலையா?”

“தெருவிலே போகிற நாய்க்கு ஒரு பக்கோடாவைக் காட்டிக் கூப்பிட்டால் போதுமே! உன் கூடவே ஓடி வருமே! இதுக்குப் போய் அறுநூறு ரூபாய் செலவழிப்பார்களா?'' என்று சிரித்தார் சேதுபதி.

பாரதியும் சிரித்து விட்டாள்.

''நான் சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் அறுநூறு ரூபாய் ரெடியா இருக்கணும்” என்று சொல்லிக் கொண்டே ஓடினாள் பாரதி.

"பாரதி!'' என்று அழைத்தார் சேதுபதி. வேகத்துடன் புறப்பட்ட பாரதி, சேதுபதியைத் திரும்பிப் பார்த்து "என்னப்பா? என்று கேட்டாள்.

''ஆமாம், உங்க பிரின்ஸிபாலைக் கூப்பிடலையா?"

''அழைச்சிருக்கேன், அநேகமா, இப்ப வந்தாலும் வருவாங்க.''

பிரின்ஸிபால் வரப் போகிறாள் என்னும் சேதி சேதுபதிக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது. ஆயினும், அவர் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை.

நேற்று கூடப் பார்வதியைச் சந்தித்தபோது பொது வாகப் பல விஷயங்களைப்பற்றி அவர் வெகுநேரம் விவாதித்துக் கொண்டிருந்தார். எல்லா விஷயங்களிலும் அவளுக்குத் தெளிவான, நிச்சயமான அபிப்பிராயம் இருந்தது. ஆழ்ந்த படிப்பும், படிப்புக்கேற்ற பண்பும், எதையும் சூட்சுமமாகப் புரிந்து கொள்ளும் அறிவுக் கூர்மையும் வாய்ந்த பார்வதி யுடன் பேசிக் கொண்டிருப்பதில் சேதுபதிக்கு ஒரு வெறியே இருந்தது. ஒரு நாளைக்கு ஒரு முறை சந்திப்பதாலும் பேசுவ தாலும் தீர்ந்து போகிற வெறி அல்ல அது. தாகத்துக்கு உப்புத் தண்ணீர் குடிக்கிற மாதிரிதான். குடிக்கக் குடிக்க, மேலும் மேலும் தாகம் எடுத்துக் கொண்டே இருக்கு மல்லவா? தன்னுள் புகுந்து தன்னை ஆட்டி வைக்கும் அந்த மயக்கத்தைப்பற்றி அவரே ஆராய்ந்து பார்த்தார். அதன் இரகசியம், மர்மம், மாயம் எதுவுமே அவருக்கு விளங்கவில்லை.

தம் வாழ்நாளில் அவர் எத்தனையோ அழகிகளைச் சந்தித் திருக்கிறார். அறிவாளி-களுடன் பழகியிருக்கிறார். அவர்களிடமெல்லாம் காணாத கவர்ச்சியும் மயக்கமும் பார்வதியினிடத்தில் மட்டும் எப்படி வந்தன? இந்த முதிர்ந்த பிராயத்தில் உடல் உறவு சம்பந்தமான இச்சைகளுக்கெல்லாம் முடிவு காண வேண்டிய பருவத்தில் இந்த மயக்கம் எதற்கு?

ஆற்றலும் அனுபவமும் மிக்க சேதுபதி, திடசித்தம் வாய்ந்த இலட்சியவாதி தடுமாறி நின்றார். மனைவியின் படத்தைக் கண்டபோது அவருக்குப் பழைய நினைவுக-ளெல்லாம் ஞாபகத்துக்கு வந்தன.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தாய்ப்பாசம் ஒன்றையே ஆதரவாகக் கொண்டு வாழ்க்கையில் பெரும் போராட்டங்கள் நிகழ்த்தி வெற்றி கண்டவர் அவர். உழைப்பால் உயர்ந்த உத்தமர். சரஸ்வதியை மணந்த பின்னரே, அவருடைய வாழ்க்கை விரிவாக மலரத் தொடங்கியது. ஆயினும், அந்த வாழ்வின் பூரண இன்பத்தை அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை அவளுக்கு. பாரதியைப் பெற்றெடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அவள் காலமாகி விட்டாள். அதற்குப் பிறகு சேதுபதி இல்லற வாழ்க்கையில் விரக்தி அடைந்து மறுமணம் செய்து கொள்வதில்லை என்ற முடிவுடன் வைராக்கிய புருஷராக இருந்து விட்டார்.

அடுத்த ஆண்டிலேயே அவருடைய தங்கை சாரதாம்பாள் கட்டிய கணவனை இழந்து கைம்பெண்ணாகிக் கண்ணிரும் கம்பலையுமாகச் சேதுபதியின் வீட்டோடு வந்து சேர்ந்தாள். ஆதரவற்றுக் கிடந்த சேதுபதியின் குடும்பப் பொறுப்பை அவளே ஏற்க வேண்டியதாயிற்று. சமயம் நேரும்போதெல்லாம் அவ்வப்போது சேதுபதியை மறுமணம் செய்து கொள்ளும்படி அவள் தூண்டிக் கொண்டிருந்தாள். சேதுபதி அதற்கு இணங்கவில்லை.

''குழந்தை பாரதியிடம் அன்பும் ஆதரவும் காட்டி வளர்க்க நீ இருக்கும்போது நான் எதற்கு மறுமணம் செய்து கொள்ள வேண்டும்?'' என்று கூறிவிட்டார்.

அந்தப் பிடிவாதம், தீவிர விரதம், திடசித்தம், உறுதி மொழி எல்லாம் இப்போது பார்வதியின் முன்னால் ஆட்டம் கண்டுவிட்டன.

நினைவுச் சுழலிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு நாற்காலியை விட்டு எழுந்து நின்றார். சேதுபதி. 'பார்வதி வரும் நேரமாகிறது. இந்த நேரத்தில் நான் இங்கே இருப்பதைக் கண்டால் என்னைப்பற்றி என்ன நினைத்துக் கொள்வாள்? தனக்காகக் காத்துக்கொண்டிருப்பதாக, தன் வரவை எதிர்பார்த்து உட்கார்ந்திருப்பதாக அல்லவா எண்ணுவாள்? அம்மாதிரி அவள் தன்னைப்பற்றி எண்ணுவதற்கு இடம் தரக்கூடாது. அவள் வருவதற்குள் நான் வெளியே போய் விட வேண்டும். அப்போது என்னைப்பற்றி பாரதியிடம் விசாரிப்பாள். மாலையில் டியூஷனுக்கு வரும்போது காலையில் சந்திக்க முடியவில்லையே' என்று என்னிடம் கூறுவாள். தன் மீது அவள் கொண்டுள்ள அன்பும் அக்கறையும் அப்போது அவள் முகத்தில் வெளிப்படும்.'

கல்கத்தாவிற்குப் போட்டிருந்த டிரங்க் காலை ரத்து செய்துவிட்டு, 'பாரதி' என்று அழைத்தார்.

''என்ன அப்பா?'' என்று கேட்டுக்கொண்டே வந்தாள் பாரதி.

"எனக்கு அவசரமாக வேலை இருக்கிறது. நான் வெளியே போய்விட்டுப் பன்னிரண்டு மணிக்கு வருகிறேன்...''

“பிரின்ஸிபால் சாப்பிட வருவதாகச் சொல்லியிருக்கிறாரே! நீங்க இல்லைன்னா....''

”பரவாயில்லை; முடிந்தால் சாய்ந்திரம் பார்க்கிறேன். எனக்காகக் காத்திருக்க வேண்டாம். அவரைச் சாப்பிடச் சொல்லு...''

உண்மையில் சேதுபதிக்கு எந்த அவசர வேலையும் இல்லை. அவசரமாக அவருக்கிருந்த வேலை கல்கத்தாவுக்கு டெலிபோனில் பேச வேண்டியதுதான். அந்த அவசர வேலையையும் அவசரம் அவசரமாக ரத்து செய்துவிட்டு வெளியே புறப்பட்டுச் செல்வதற்கு ஒரே ஒரு காரணம் பார்வதியைச் சந்திக்கக்கூடாது என்பதுதான். அவளுடன் பேச வேண்டும் என்று எவ்வளவுக்கெவ்வளவு அவர் மனம் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்ததோ அவ்வளவுக்கு அவர் அந்த ஆசையைக் கட்டுப்படுத்திக் கொண்டு வெளியே கிளம்பிப் போய்விட்டார்.

அவர் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் டெலிபோன் மணி அடித்தது. பாரதி ரிஸீவரைக் கையிலெடுத்துப் பேசிய போது பிரின்ஸிபால் பார்வதியின் குரல் கேட்டது.
பாரதி! எனக்கு இப்போது அவசரமாகக் கொஞ்சம் வேலை இருக்கிறது. ஆகையால், நீ எனக்காகக் காத்திருக்க வேண்டாம். மாலையில் நான் வரும்போது உன்னைப் பார்க்கிறேன். விஷ்யூ ஹாப்பி பர்த்டே !'' என்றாள்.

உண்மையில், பார்வதிக்கும் எந்த அவசர வேலையும் இல்லை. சேதுபதி தனக்காகக் காத்திருப்பார். அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது நான் அங்கே போகக் கூடாது நான் வரப் போவதில்லை என்று தெரிந்ததும் அவர் பாரதியிடம் விசாரிப்பார். மாலையில் தன்னைச் சந்திக்கும் போது ஏன் வரவில்லை?' என்று கேட்பார். அப்படிக் கேட்கும்போது அவருக்குத் தன் மீதுள்ள அன்பும் அக்கறையும் வெளிப்படும்! - பார்வதியின் அவசரமான ஜோலிக்குக் காரணம் இதுதான்!

தொழிற்சாலையில் சேதுபதிக்காகப் பல அலுவல்கள் காத்துக் கிடந்தன. ஆனால் அவை எதிலுமே சேதுபதியின் மனம் செல்லவில்லை. மீண்டும் மீண்டும் பார்வதியின் நினைவு ஒன்றே அவர் உள்ளத்தை அலைத்துக் கொண்டிருந்தது.

உள்ளத்தில் வெகு நாட்களாகப் புழுங்கிக் கொண்டிருந்த ஓர் எண்ணம் இமயமாக வளர்ந்து அழுத்துவது போல் தோன்றியது.

’இந்த மனப் போராட்டத்துடன் எத்தனை நாட்கள் வேதனைப் படுவது? மனதிற்குள்ளாகவே அடக்கி வைத்திருக் கும் அந்த எண்ணத்தை இன்று வெளியிட்டுவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்து கொண்டார். அடுத்த கணமே 'சே! பார்வதி என்னைப்பற்றி எவ்வளவு உயர்வாக எண்ணிக் கொண்டிருக்கிறாள்? என்னிடம் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறாள். இப்படி நான் ஓர் அற்ப ஆசை வைத்திருக்கிறேன் என்று தெரிந்தால் என்னைத் தாழ்வாக எண்ணிக் கொள்வாளோ? எண்ணிக் கொள்ளட்டுமே! தெரியட்டுமே. தெரிந்து தான் போகட்டுமே. ஒரு நாளைக்கு இல்லா விட்டால் ஒரு நாள் தெரிய வேண்டியதுதானே? இதற்கு ஒரு முடிவு ஏற்பட வேண்டியதுதானே. இன்று மாலையே பேச்சுக் கிடையில் திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இருக்கிறதா?' என்று தெளிவாகத் தைரியமாகக் கேட்டு விடுகிறேன். கேட்டு நிச்சயமாக ஒரு பதிலை அறிந்து கொண்டு விடுகிறேன்.'

ஒரு தீர்மானத்துக்கு வந்தவராய் நாற்காலியை விட்டு எழுந்தார், சேதுபதி. அன்று மாலை ஐந்து மணி இருக்கும். தம்முடைய பங்களா வாசலில் மரத்தடி ஊஞ்சலில் உட்கார்ந்து லேசாக ஆடியபடியே ஒவ்வொரு விநாடியும் பார்வதியின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண் டிருந்தார் அவர்.

எங்கோ ஒலிக்கின்ற ஹாரன் சத்தங்களெல்லாம் பார்வதியின் காராயிருக்குமோ என்ற பிரமையை உண்டாக்கின. கடைசியில், காம்பவுண்டுக்கு வெளியே ஒரு கார் வந்து நின்றது. சேதுபதி ஆவலுடன் அந்தக் காரை நோக்கினார். ஆனால் அதில் பார்வதியைக் காணவில்லை. பாரதி மட்டுமே இறங்கி வருவதைக் கண்ட சேதுபதிக்குப் பெரும் ஏமாற்றமாயிருந்தது.

"என்ன பாரதி! இன்றைக்கு டியூஷன் இல்லையா?” என்று கேட்டார் சேதுபதி.

”உண்டு அப்பா. பிரின்ஸிபாலுக்கு ரொம்ப வேலை இருக்கிறதாம். ஆறு மணிக்கு மேல் வருவதாகச் சொல்லி யிருக்கிறார்'' என்றாள் பாரதி.

’அப்படியா?' என்றவர் வரட்டும். நீண்ட நாட்களாக என் உள்ளத்தில் புகுந்து உடைந்து கொண்டிருக்கும் பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டி விடுகிறேன்' என்று தமக்குத் தாமே சொல்லிக் கொண்டவராய் ஊஞ்சலை வேகமாக ஆட்டினார்.
-------------
குருத்து எட்டு


முதல் நாள் இரவு வெகு நேரம் வரை கண் விழித்துப் படித்துக் கொண்டிருந்த பார்வதி அன்று பொழுது புலரும் நேரத்தில் சற்று அதிகமாகவே தூங்கி விட்டாள், தூக்கம் கலைந்து அவள் படுக்கையை விட்டு எழுந்தபோது கடிகாரத்தில் மணி ஏழடித்துக் கொண்டிருந்தது. அறைக்குள் சில புத்தகங்கள் தாறுமாறாகச் சிதறிக் கிடந்தன. 'துன்பத்துக்கும் இன்பத்துக்கும் இடையே' என்பது அவற்றுள் ஒன்று. "வித் லவ் அண்ட் ஐரணி' என்பது இன்னொன்று. அந்தப் புத்தகங்களைக் கண்டபோது அவள் இதழ்களில் இலேசான புன்முறுவல் தோன்றி நெளிந்தது.

அந்தப் புன்னகைக்குள் 'ஏதோ ஒன்று' ஒளிந்து கொண்டிருப்பதை பார்வதியைத் தவிர வேறு எவருமே அறியமாட் டார்கள்.

'இத்தனைக் காலமும் இல்லாமல் இப்போது என்னுள் புகுந்துள்ள அந்த உணர்வுக்கு என்ன காரணம்? நான் ஏன் அவரைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறேன்? அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

சேதுபதியின் மகள் பாரதியினிடத்தில் நிஜமாகவே எனக்கு அக்கறை இருக்கிறதா? அவளுக்கு டியூஷன் சொல் லிக் கொடுப்பதில் எனக்கு ஏன் இத்தனை ஆர்வம்? அவளுக்குப் பாடம் சொல்லித் தரும் நேரங்களில் என் மனம் ஏன் அமைதியின்றி அலைய வேண்டும்? அவரைக் காண வேண்டும் மென்ற ஆவலில் என் கண்கள் ஏன் அங்குமிங்கும் சுழல் வேண்டும்? இதற்கெல்லாம் என்ன பொருள்?'

சேதுபதியின் கண்ணியமான, கம்பீரமான தோற்றம் அவள் கண்ணெதிரில் வந்து நின்றது. 'இந்தத் தோற்றத்தில் அப்படி என்ன கவர்ச்சி இருக்கிறது? என்னைக் கவர்ந்திழுக் கும் மாய சக்தி இதற்கு எங்கிருந்து வந்தது?'

ஆம்; சேதுபதியைக் காட்டிலும் கவர்ச்சி மிக்க,அழகு வாய்ந்த ஆடவர்களைப் பார்வதி சந்தித்திருக்கிறாள். வெளி நாடுகளில், எத்தனையோ அறிவாளிகளை, ஆராய்ச்சியாளர் களை, கல்வித் துறையில் புகழுடன் விளங்குபவர்களை, பட்டம் பெற்றவர்களைப் பார்த்துப் பேசியிருக்கிறாள். கருத்து அரங்குகளில் அவர்களுடன் வாதாடி இருக்கிறாள். ஆயினும் அவர்களிடமெல்லாம் காண முடியாத கவர்ச்சி, காந்த சக்தி சேதுபதியிடம் இருந்தது. அந்தக் கவர்ச்சி, ஆண் - பெண் உறவு சம்பந்தமான உடற் கவர்ச்சி அல்ல. அதற்கெல்லாம் அப்பாற்பட்ட அறிவு பூர்வமான ஒரு சக்தி அது! அதை அவளால் விளக்க முடிய வில்லை. விளங்கிக் கொள்ளவும் முடிய வில்லை.

இரண்டாகப் பிரிந்து குப்புறக் கீழே வீழ்ந்து கிடந்த புத்தகத்தை எடுத்தபோது அதில் இரவு படித்த சில வரிகள் அவள் கவனத்துக்கு வந்தன.

'உலக வாழ்க்கை ஒரு பாதாளக் கிணறு போன்றது. குழந்தை அதன் பக்கத்தில் நின்று கொண்டு எட்டி எட்டிப் பார்த்தால் என்ன சொல்லுவோம்? 'அங்கே நிற்காதே! எட்டிப் பார்க்காதே! தூர நில்' என்போம். அவ்வாறே யாகும் வாழ்க்கையின் அபாயங்கள். கிணற்றில் வீழ்ந்து விட்டால் மீள்வது துர்லபம்.'

நான் அந்தப் பாதாளக் கிணற்றின் அருகில் நிற்கும் ஒரு குழந்தையா? ஒருநாளுமில்லை.

இத்தனை ஆண்டுகளும் நான் கலியாணம் செய்து கொள்ளாமலே, கணவனோடு வாழாமலே இல்லறத்தின் இன்ப துன்பங்களை அனுபவிக்காமலே வாழ்ந்து விட்டேன். என் கன்னிப் பருவம் முழுமையும் தாய்மைக் கோலம் பூண்டு, குழந்தை ராஜாவை வளர்ப்பதிலேயே கழித்து விட்டேன். இனி?...

பார்வதிக்கு இந்த உலக வாழ்க்கை தெரிந்திருந்தது. பெண்மையும் பெண்மைக்குரிய ஆசாபாசங்களும் தெரிந் திருந்தன, ஆனால் அந்தப் பெண்மை தனக்கும் உண்டு என்பதை அவள் உணர்ந்ததில்லை. அவள் வாழ்க்கை தெரிந் தவள். ஆனால் அந்த வாழ்க்கை தனக்கும் உண்டு. என்பதை அறியாதவள்.

கீழே ராஜாவின் சீட்டிக் குரல் ஒலித்தது. காலைப் பத்திரிகையைப் படித்தபடியே யோசித்துக் கொண்டிருந்த பார்வதி, மணி ஒன்பதாகி விட்டது என்பதை அப்போது தான் உணர்ந்தாள்.

'வெகு நேரம் தூங்கி விட்டிருக்கிறேன். என்றுமே இப்படித் தூங்கியதில்லை. கல்லூரிக்கு நேரமாகி விட்டது' என்று எண்ணிக்கொண்டே அவசரமாக எழுந்து போய் தேதிக் காலண்டரின் முதல் நாள் தாளைக் கிழித்தெறிந்தாள். அப்போதுதான் அவளுக்கு ஞாபகம் வந்தது. "ஓ ! இன்று பாரதிக்குப் பிறந்த நாளல்லவா? என்னைச் சாப்பிடக் கூப்பிட்டிருக்கிறாளே! போகலாமா, வேண்டாமா?" என்று யோசிக்கலானாள்.

"இப்போது ஒருவேளை சேதுபதி வீட்டில் இருந்தாலும் இருக்கலாம். பாரதி என்னை அழைத்திருக்கும் செய்தி அவருக்குத் தெரிந்திருக்கலாம். இப்போது அங்குச் சென்றால் அவருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கலாம்'' என்று முதலில் எண்ணினாள்.

அடுத்தாற்போல், "கூடாது; இப்போது போகக் கூடாது. போகாமலிருந்தால், ஒரு வேளை அவர் தன்னைப் பற்றிப் பாரதியிடம் ஏன் வரவில்லை?' என்று விசாரித்தாலும் விசாரிக்கலாம். மாலையில் என்னைச் சந்திக்கும்போது "காலையில் ஏன் வரவில்லை?' என்று கேட்டாலும் கேட்கக் கூடும். அவர் என்னைப் பற்றி விசாரிக்கும் பெருமையை இப்போது போவதால் இழந்துவிடக் கூடாது'' என்று தீர் மானித்தவளாய் டெலிபோனை எடுத்து, பாரதி! எனக்கு இப்போது கொஞ்சம் அவசர வேலையிருக்கிறது. மாலையில் வருகிறேன்'' என்று கூறிவிட்டுக் கீழே இறங்கிச் சென்றாள்.

அவசர அவசரமாகச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு பகவான் பரமஹம்சரையும் தேவியையும் வணங்கி விட்டுக் காரை எடுத்துக் கொண்டு கல்லூரிக்குப் புறப்பட்டாள். கார், வாசல் கேட்டைத் தாண்டும்போது செவிட்டுப் பெருமாள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினான். கல்லூரிக் காம்பவுண்டை நெருங்கிய போது, சொல்லி வைத்தாற்போல் பிரெஞ்சு ஆசிரியை மிஸஸ் அகாதா காலை விந்தி விந்தி நடந்து வந்து கொண்டிருந்தாள்! அகாதாவைக் கண்டதும் பார்வதி கைக் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்தடிக்க ஐந்து நிமிஷம்!

காரைத் தன் அறைக்கு வெளியே கொண்டு போய் நிறுத்தியபோது அட்டெண்டர் ரங்கசாமி வழக்கம்போல் காரின் கதவைத் திறக்க ஓடி வந்தான்.

குறித்த நேரத்தில் கல்லூரிக்கு வந்துவிட்டதில் பார்வதிக்குப் பரம திருப்தி! அதில் அவள் எப்போதுமே உஷார்!

உள்ளே போய், நாற்காலியில் அமர்ந்ததுதான் தாமதம், இயந்திரகதியில் இயங்கத் தொடங்கி விட்டாள்.

எல்லா வேலைகளையும் முடித்தானதும் அன்று வந்த தபால்களை ஒவ்வொன்றாக எடுத்துப் படிக்கத் தொடங்கினாள், அந்தக் கடிதங்களில் கல்கத்தா ராமகிருஷ்ண மடத்திலிருந்து வந்திருந்த அழைப்புக் கடிதமும் ஒன்று. உலகத்து அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு விவாதிக்கப் போகும் வேதாந்த விசாரணையில் பார்வதியும் பங்கு பெறவேண்டு மென்பது அழைப்பாளர்களின் விருப்பம்.

வேறொரு சமயமாயிருந்தால், பார்வதி அந்த அழைப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருப்பாள். தனக்குக் கிடைத்த ஒரு பெருமையாகவும் எண்ணியிருப் பாள். ஆனால் இன்று இப்போது அவள் உள்ளப் போக்கு அடியோடு மாறியுள்ள இந்த நேரத்தில் அவளால் அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

மாலை வேளைகளில் சேதுபதியைச் சந்தித்துப் பேசுவதில் அவள் பேருவகை யடைந்தாள். அதைக் காட்டிலும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் இந்த உலகத்தில் வேறு ஒன்று இருப்பதாகவே அவளுக்குத் தோன்றவில்லை. எனவே, 'மன்னிக்கவும்' என்று பதில் கடிதம் எழுதிப் போட்டு விட்டாள்.

மணி மூன்றடிப்பதற்குள் தன்னுடைய வேலைகளை யெல்லாம், கடமைகளை யெல்லாம் முடித்துக் கொண்டு விட்ட பார்வதி, 'மணி எப்போது ஐந்தடிக்கப் போகிறது' என்று எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தாள்.

மணி ஐந்து அடித்தது.

சேதுபதியைச் சந்திக்கும் ஆவலில் அவள் உள்ளம் துடித்துக் கொண்டிருந்த போதிலும், பாரதி வந்து அழைத்த போது, "எனக்கு இப்போது ரொம்ப வேலை இருக்கிறது. நீ போகலாம். நான் ஆறு மணிக்கு வருகிறேன்'' என்று சொல்லி அனுப்பிவிட்டாள்.

கல்லூரி முடிந்தவுடன் பாரதியையும் காரில் அழைத்துக் கொண்டு டியூஷனுக்குப் புறப்பட வேண்டும் என்பதுதான் பார்வதியின் திட்டம். ஆனால் பாரதி வந்து அழைத்த போது ஏனோ அவள் மனம் மாறிவிட்டது.

பாரதி அப்பால் சென்றதும், 'ஆறு மணிக்கு வருவதாக ஏன் சொல்லியனுப்பினேன்? இதென்ன பயித்தியக்காரத் தனம்?' என்று தனக்குத்தானே சிரித்துக் கொண்டாள் பார்வதி.

அடுத்த ஒரு மணி நேரமும் அவள் தன்னுடைய அறையிலேயேதான் உட்கார்ந்திருந்தாள். ஒரு மணி நேரம் தான் என்றாலும், அந்த நேரத்தில் அது ஒரு யுகமாகத் தோன்றி யது! அறை அவளுடைய சொந்த அறைதான் என்றாலும், அந்த நேரத்தில் அது சிறைக் கூடமாகத் தோன்றியது. பார்வதி ஏதேதோ யோசித்தாள். கடந்து போன தன் பழைய வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை யெல்லாம் எண்ணிப் பார்த்து அசை போடலானாள்.

சிறுவயதில் தாய் தந்தையரைப் பிரிந்து அனுபவித்த துன்பங்கள், தன் சகோதரனுடன் கிராமத்தை விட்டு வந்த சம்பவம், அவனுக்குத் திருமணம் செய்து வைக்கத் தான் பட்டபாடு, தான் காலேஜில் சேர்ந்து படிப்பதற்கும், அண்ணன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கும் வேண்டிய பொருளாதார வசதி இல்லாமல் மாணவிகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தது, அண்ணன் மனைவியின் மறைவு, அந்தத் துயரம் தாங்காமல் அண்ணன் தன்னை விட்டுப் பிரிந்து சென்றது, குழந்தை ராஜாவுடன் கிழவர் சாம்பசிவத்தின் ஆதரவில் வாழ்ந்தது,சேதுபதி தன்னைப் பெண் பார்க்க வந்தது, காரணம் கூறாமலே தன்னை நிராகரித்தது, தந்தைபோல் அன்பு பாராட்டிய சாம்பவம் தன்னை அநாதையாக்கி விட்டுப் பிரிந்து சென்றது, பல இன்னல்களுக்கிடையே படித்துப் பட்டம் பெற்றது, பின்னர் இதே கல்லூரியில் படிப்படியாக முன்னுக்கு வந்து, கடைசியில் பிரின்ஸிபால் ஆனது வரை எல்லா நிகழ்ச்சிகளையும் எண்ணிப்பார்த்து வியந்து கொண்டாள்.

மணி ஆறு அடித்துக் கொண்டிருக்கும்போதே பார்வதியின் கார் திருவாளர் சேதுபதியின் பங்களாவுக்குள் போய் நின்றது. வெகு நேரமாக மரத்தடி ஊஞ்சலில் உட்கார்ந்து பார்வதியின் வரவை ஆவலுடன் எதிர் நோக்கியிருந்த சேதுபதி, அவள் வருவதற்குச் சற்று முன்புதான் உள்ளே எழுந்து போனார்.

அறைக்குள் அமர்ந்திருந்த சேதுபதிக்கு வாசலில் கார் வரும் ஓசை கேட்டபோது 'ஒருகணம் எழுந்து போய் பார்வதியை வரவேற்கலாமா?' என்று தோன்றியது. அடுத்த கணமே, "சே! கூடாது; தனக்கு அவளிடம் உள்ள அந்தரங்க ஆவலை வெளியே காட்டிக் கொள்ளக்கூடாது. பாரதிக்கு டியூஷன் சொல்லிக்கொடுத்த பிறகு பார்வதி யாகவே தன்னைத் தேடி தன்னுடைய அறைக்கு வருவாள். அதுதான் வழக்கம். வழக்கப்படி இன்றும் அவளாகவே. வரட்டும். அதற்குள் நான் ஏன் அவசரப்படவேண்டும்?" என்று எண்ணியவராய் அறைக்குள்ளேயே இருந்துவிட்டார்.

அன்று டியூஷன் முடிவதற்கு வழக்கத்தைக் காட்டிலும் கால் மணி நேரம் அதிகமாயிற்று. பாடம் நடந்துகொண்டிருந்தபோது பார்வதியின் உள்ளத்தில் அமைதி இல்லை. சேதுபதியையே எண்ணி எண்ணிக் குழம்பிக் கொண் டிருந்தது.

'இன்று அவருடைய அறைக்குச் சென்று அவருடன் வெகு நேரம் பேசிக் கொண்டிருக்க வேண்டும். பேச்சுக் கிடையில் தன் உள்ளத்தில் சஞ்சலமிட்டுக் கொண்டிருக்கும் எண்ணத்தை, வெளிப்படையாகச் சொல்லிவிட வேண்டும். அவர் என் அந்தரங்கத்தை அறிய நேரிட்டால் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வார்... ? அவர் என்னிடம் கொண்டுள்ள மதிப்பை மாற்றிக்கொண்டு விடுவாரோ?'

அடுத்த கணமே, 'மாற்றிக் கொள்ளட்டும்; எதை வேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளட்டும். மனத்திற்குள்ளாகவே, எண்ணி எண்ணிப் புழுங்கிப் புழுங்கி வேதனைப் படுவது என்னால் இனி முடியாத காரியம். அவருடைய உறவை, அறிவு பூர்வமான நட்பை என் உள்ளம் நாடுகிறது. அதை நான் அவரிடம் கூறியாக வேண்டும். என் எண்ணத்தை, என்னுள் புகுந்துள்ள அபூர்வ உணர்வை, என்னுள்ளேயே எத்தனைக் காலத்துக்கு மறைத்து வைத்துக்கொண் டிருப்பேன்...?

புயலில் சிக்கி அலையும் துரும்பைப் போல் எந்த முடிவுக் கும் வரமுடியாமல் அலைந்து கொண்டிருந்தது பார்வதியின் உள்ளம்.

'அதே நேரத்தில் பார்வதி அனுபவித்துக் கொண்டிருந்த வேதனைகளை யெல்லாம் அறைக்குள் உட்கார்ந்திருந்த சேதுபதியும் அனுபவித்துக் கொண்டிருந்தார். பார்வதி தன் அறைக்குள் வந்து பேசிக் கொண்டிருக்கும்போது, எப்படித் தன் விருப்பத்தை வெளியிடுவது, விஷயத்தை எப்படித் தொடங்குவது, எவ்வாறு கூறி முடிப்பது?' என்று தீவிர மாக யோசித்துக் கொண்டிருந்தார். தம்முடைய அந்தரங்கத்தை அறிய நேரிட்டால், அவள் தன்னைப்பற்றி என்ன நினைப்பாளோ? நினைக்கட்டும். அதற்காக எத்தனைக் காலம் சொல்லாமலேயே இருக்கமுடியும்?'

இரண்டு உள்ளங்களும், உணர்ச்சி அலைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தன. டியூஷன் முடிந்தது. பார்வதி தயங்கியபடியே சேதுபதியின் அறையை நோக்கி மெதுவாக நடந்தாள். அவள் இதயத்தில் பெரும் புயல் வீசிக்கொண்டிருந்தது. கால்கள் தடுமாறின. குழம்பிய உள்ளத்துடன் கனத்த இதயத்துடன் சேதுபதியின் அறைக் கதவுகளைத் தள்ளிக் கொண்டு 'வணக்கம்' என்று கைகூப்பியபடியே உள்ளே பிரவேசித்தாள். அதே சமயத்தில், "வாருங்கள்'' என்று அழைத்த சேதுபதியின் குரலில் வழக்கமாகக் காணும் கம்பீரம் இல்லை; தடுமாற்றம் தொனித்தது.
-----------------
குருத்து ஒன்பது


'வணக்கம்' என்று சொல்லிக்கொண்டே சேதுபதியின் அறைக்குள் பிரவேசித்த பார்வதி, கலக்கமும் பரவசமும் கலந்த உணர்ச்சி வசப்பட்டவளாய், தெய்வ சந்நிதியில் மெய்ம்மறந்து நிற்கும் ஒரு பக்தனைப்போல் தன்னை மறந்த நிலையில் அசைவற்று நின்று கொண்டிருந்தாள். அதே நிலைதான் சேதுபதிக்கும். பார்வதியைக் கண்டதும் வழக்கமாகக் கையைக் காட்டி அமரச் சொல்லும் அவர், அன்று உண்மையிலேயே ஒரு தெய்வச் சிலைபோல் உட்கார்ந்திருந்தார்.

இந்த மௌன நிலை இரண்டு நிமிடங்கள் நீடித்தது. பார்வதி தானாகவே உட்கார்ந்திருக்கலாம், அல்லது சேதுபதியாவது அவளை உட்காரச் சொல்லி-யிருக்கலாம். ஆனால் இருவருமே ஒருவரில் ஒருவர் லயித்து, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, ஒருவருடைய இதய ஆழத்தின் அடி வாரத்தில் புதைந்து கிடக்கும் இரகசியத்தை மற்றவர் ஊடுருவி அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் வாயடைத்துப் போன ஊமைகளாகி, மெளன மொழியில் சம்பாஷித்தபடியே, தத்தம் உணர்ச்சிகளை, ஆசைகளை உள்ளத்தில் புதைந்து கிடக்கும் எண்ணங்களை வெளியிட முயலும் நடிப்புக்கலையில் இரண்டு நிமிடங்களைக் கழித்து விட்டனர். கடைசியில், சுயஉணர்வு பெற்று, உட்காருங்கள்'' என்று கூறிய சேதுபதி பார்வதியைப் பார்த்தபோது, அவள் நாற்காலியில் அமர்ந்துவிட்டிருப்பதைக் கண்டார்.

"மன்னிக்க வேண்டும்; தாங்கள் எது பற்றியோ தீவிர மாகச் சிந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில்..."

சேதுபதி சிரித்தார். அது பொருளற்ற ஒரு வறட்டுச் சிரிப்பு!

அவர் உள்ளம் எதையோ எண்ணிக் கொண்டிருந்த நிலையில் உதடு சிரிப்பைக் காட்டிக் கொண்டிருந்தது.

"தாங்கள் காலையில் வரப்போவதாகப் பாரதி சொல்லிக் கொண்டிருந்தாளே, ஏன் வரவில்லை?" என்று சேதுபதி ஆவலுடன் கேட்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த பார்வதிக்கு அவர் ஒன்றுமே கேட்காதது மிக ஏமாற்றத்தை அளித்தது.

அடுத்த கணமே, 'தன்னிடம் அவருக்கு அவ்வளவு அக்கறை இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன அசட்டுத்தனம்?' என்று எண்ணிக் கொண்டாள்.

உதட்டில் தவழ்ந்த புன்சிரிப்புக்கும் உள்ளத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த உணர்ச்சிகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இன்றிச் சிந்தனையில் மூழ்கியிருந்த சேதுபதி, பார்வதியை மறந்துவிட்டவரைப் போல் காணப்பட்டாலும், அவருடைய எண்ண-மெல்லாம் அவளைப் பற்றியதாகவே இருந்தது. அவர் அவளைக் கவனிக்காதது போல் பார்த்துக் கொண்டிருந்தார். அவளை மறந்துவிட்டவர்போல் அவளையே எண்ணிக் கொண்டிருந்தார்.

சாந்தமே வடிவமாக, ஆனால் சலனமே இதயமாக அவர் எதிரில் உட்கார்ந்திருந்த பார்வதிக்குப் பேசத் தோன்ற வில்லை; என்ன பேசுவது என்றும் புரியவில்லை.

இருவரும் ஒரே மாதிரி எண்ணிக்கொண்டு, பார்த்துக் கொண்டு, சிந்தித்துக் கொண்டு, என்ன பேசுவது என்று தோன்றாமல் திகைத்துக்கொண்டு அப்படியே, அதே நிலையில், எப்போதும், என்றென்றும், இருந்துவிடவே விரும்பினார்கள். அந்த மெளன நிலையில் அவர்கள் இருவருக்குமே அத்தனை இன்பமும் சுகமும் இருந்தன. அப்படி ஒரு சுகம் இருப்பதை இருவருமே தனித்தனியாக உணர்ந்து அனுபவித்தார்கள். ஆனால் வாய்விட்டுச் சொல்லிக் கொள்ளவில்லை.

இருவர் உள்ளங்களும் நெருங்கிய நிலையில் உறவாடிக் கொண்டிருந்த போதிலும், இருவருக்கும் தங்கள் ஆர்வத்தை வெளியிட முடியாத நிலை! அது ஓர் அபூர்வ நிலை!

வயது ஐம்பத்திரண்டு கடந்து விட்ட பிறகு, இன்னொருத்தியின் துணையை,உறவை நாடுகிறது அவருடைய உள்ளம். இதைக் காதல் என்று கூறமுடியாது; காதலுக்கும் உடலுறவுக்கும் அப்பாற்பட்ட ஓர் ஆசை இது.

பார்வதிக்கு வயது நாற்பத்தாறு ஆகிவிட்டது. இத்தனைக் காலமும் கன்னியாகவே வாழ்ந்துவிட்ட அவள், திருமண வாழ்க்கையை என்றுமே விரும்பியதில்லை. தன் கன்னிப் பருவத்தை, இளமையின் பைசாச உணர்ச்சிகளுக்குப் பலியாக்கி விடாமல் புனிதமாகப் பாதுகாத்துக்கொண்டு வாழ்ந்து விட்ட பின்னர், இத்தனைப் பிராயம் கடந்து இப்படி ஒரு விசித்திரமான ஆசை!

சேதுபதியின் உறவை அவள் விரும்புகிறாள். ஆயினும் அந்த எண்ணம் தற்கால இலக்கியங்களில் சர்வ சாதாரணமாக வர்ணிக்கப்படும் காதல் அல்ல. அவரிடம் அவளுக்கு ஏற்பட்டுள்ள அன்புக்கு, ஆசைக்கு, பரிவுக்குக் காரணம் அறிவு பூர்வமான தொடர்பேயாகும்.

சேதுபதியின் அறைச் சுவரைப் பெரிய உலகப்படம் ஒன்று அலங்கரித்தது. உலகத்திலுள்ள தேசங்கள், தீவுகள், கடல்கள், மலைகளெல்லாம் அதில் வரையப்பட்டிருந்தன. இன்னொரு புறம் உலக மகா மேதைகள் எழுதிய அறிவு நூல் கள் கண்ணாடி அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒரு மூலையில் வெண்கலத்திலான புத்தர் சிலை, மேஜை மீது உருண்டை வடிவமான சுழலும் உலகத்தின் கோளம் ஒன்று.

சுற்றியுள்ள படங்களும், அறிவு நூல்களும் வெறும் காட்சிப் பொருள்கள் அல்ல; சேதுபதியின் அறிவு விசாலத்துக்குச் சாட்சியம் கூறிக்கொண்டிருக்கும் உன்னதப் பொக்கிஷங்கள் அவை.

'தான் ஓர் அறிவாளி; கல்வி கேள்விகளில் வல்லமை வாய்ந்த ஓர் இலக்கிய மேதை' என்ற பெருமை பார்வதிக்கு உண்டு. ஆயினும் அந்தப் பெருமையை அவள் அகம்பாவ மாக்கி விடவில்லை. அடக்கமும் பண்புமே கற்றதன் பயன் என்பதை நன்கு உணர்ந்திருந்த அவள் நீறுபூத்த நெருப் பாக அடக்கமே உருவாக இருந்தாள்.

சேதுபதியின் அறிவாற்றல், ஆழ்ந்த படிப்பு, உலக அனுபவம், எந்த விஷயத்திலும் அவருக்குள்ள ஒப்பற்ற ஞானம் - இவைகளைக் காணும்போது அவள் தன்னை மின் விளக்கின் அருகில் பறக்கும் கேவலம் ஒரு மின்மினிப் பூச்சி யாகவே கருதிக் கொண்டாள்.

அந்தச் சுழலும் உலகத்தைத் தன் விரல்களால் அசைத்து உருட்டியவாறே அவள் மௌனத்தில் மூழ்கியிருந் தாள். அந்த மௌனம் அவளுக்கே வேதனையைத் தந்தது.

சேதுபதியிடம் ஏதேனும் பொதுவாகப் பேச வேண்டும் போல் இருந்தது. பேசினாள்; ''யுத்தம், அணுகுண்டு, துப்பாக்கி இவையெல்லாம் இல்லாமலே இந்த உலகம் இயங்க முடியாதா?" - பார்வதியின் குரல் அசாதாரணமாகவே ஒலித்தது.

''இதோ இயங்கிக் கொண்டிருக்கிறதே!" என்று சொல்லிவிட்டுப் பார்வதியையும் சுழன்று கொண்டிருந்த அந்தக் கோளத்தையும் மாறி மாறிப் பார்த்தார் சேதுபதி, உதட்டில் புன்னகை தவழ...

''உலக மக்கள் யுத்த அபாயம் இன்றி வாழவே வழி யில்லையா?'' பார்வதி மீண்டும் கேட்டாள்.

சேதுபதி சிரித்துக் கொண்டே சொன்னார்!

''தங்கள் கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதில் கூறிவிட முடியாது. ஆனாலும் சுருக்கமாகச் சொல்கிறேன். எறும்புப் புற்றைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அதில் கோடிக் கணக்கான எறும்புகள் எவ்வளவு ஒழுங்காகச் சண்டை சச்சரவில்லாமல் தங்கள் காரியங்களைச் செவ்வனே நடத்து கின்றன. அவற்றுக்கு மகாத்மாக்களோ, ஞானிகளோ யாரே னும் உபதேசம் செய்கிறார்களா? இந்த உலகம் பெரிய எறும்புப் புற்றுதான். இதில் நாம் அனைவரும் எறும்புகள் போல் வாழ்க்கையைச் சண்டை சச்சரவின்றி ஒழுங்காக நடத்தி னால், அணுக்குண்டு, யூத்தம் எதுவுமே இருக்காது. நமக்குள் தத்துவங்களும் தலைவர்களும் உள்ளவரை சண்டையும் சச்சரவும் இருந்து கொண்டுதான் இருக்கும். பகுத்தறியும் சக்தியோ, தலைமையோ தத்துவங்களோ இல்லாத எறும்பு கரையும் வீட்னி ஜாலங்களையும் பாருங்கள். எவ்வளவு ஒற்று மையாகச் சண்டை சச்சரவின்றி வாழ்கின்றன...''

சேதுபதியின் பதில் பார்வதியை வியப்பில் ஆழ்த்தி விட்டது.

'அடாடா! எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு தெளிவாக விளக்கி விட்டார்!' - அவளுடைய வியப்புத் தீரு முன்னரே, சேதுபதி இன்னொரு முறையில் அவள் கேள் விக்குப் பதில் அளித்தார்.

'' மனிதன் உள்ளத்தில் ஓர் ஆசை உண்டாகிறது. அதைத் தீர்த்துக் கொண்டால் பிறகு சுகமாக இருக்கலாம் என்று எண்ணுகிறான். அதற்காகப் படாத பாடெல்லாம் படுகிறான். ஆனால் ஆசையின் படிகளுக்கோ ஒரு முடிவே இல்லை...."

எல்லாமே விளங்கிவிட்டது போல் தன்னுடைய சந்தேகங்கள் அனைத்துக்குமே விடை கிடைத்துவிட்டது போல் நிறைவு ஏற்பட்டது அவளுக்கு.

எப்படியும் தன் எண்ணத்தை - நீண்ட நாளைய விருப்பத்தை வெளியிட்டுவிட வேண்டும் என்ற முடிவுடன் வந்திருந்த பார்வதி, அவருடைய பேச்சில் மயங்கி தன்னை மறந்தவளாய் அவருடன் பேசிக் கொண்டிருப்பதிலேயே பெரு மகிழ்ச்சியும் நிம்மதியும் பெற்றவளாய் உட்கார்ந்திருந்தாள்.

டெலிபோன் மணி ஒலித்தது. சேதுபதி ரிலீவரை எடுத்துப் பேசினார். அந்தக் குழலில் வந்த செய்தியைக் கேட்டதும் அவர் முகம் மாற்றமடைந்ததைப் பார்வதி கவனிக்தாள்.

"என்ன, பஞ்சுத் தொழிற்சாலையில் தீயா? இரண்டு லட்சமா? உயிர்ச்சேதம் ஒன்றுமில்லையே? என்று கேட்ட சேதுபதி ரிஸிவரைக் கீழே வைத்துவிட்டு, நல்ல வேளை! உயிர்ச்சேதம் ஒன்றும் இல்லையாம்! இரண்டு லட்சம் ரூபாய் சேதமாம் ! பரவாயில்லை; இன்ஷர் செய்யப்பட்டிருக்கிறது...'' என்று சர்வ சாதாரணமாகக் கூறினார்.

தீ என்ற சொல் கேட்டுத் துணுக்குற்ற பார்வதி, "தீயா? யாருடைய பஞ்சாலையில்?'' என்று விசாரித்தாள்.

"என்னுடைய பஞ்சாலையில் தான்'' என்றார் சேதுபதி மிக அமைதியாக.

இரண்டு லட்சம் என்ற வார்த்தை அவரை அசைக்க வில்லை. உயிர்ச் சேதம் உண்டா ?' என்றுதான் விசாரித்தார்.

உயிரின் மதிப்புக்கும் பொருளின் மதிப்புக்கும் உள்ள வித்தியாசம் அவருக்குப் புரிந்திருந்தது. அதனால் தான் பொருள் நஷ்டத்தை அவர் பெரிதாக மதிக்கவில்லை.

பார்வதி சிரித்தாள்.

அதைக் கண்ட சேதுபதி அவள் சிரிப்பதன் காரணத்தைப் புரிந்துகொண்டு புரியாதவர் போல், "ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டார்.

''எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. ஒரு பஞ்சாலையே தீப்பற்றி எரிந்து போய்விட்டது என்று அறிந்தும் தாங்கள் கொஞ்சம்கூடப் பரபரப்படையவில்லை. இரண்டு லட்சம் நஷ்டம் என்று தெரிந்தும் சர்வ அலட்சியமாக இன்ஷர் செய்யப்-பட்டிருக்கிறது...' என்று கூறிப் பேசாமலிருந்து விட்டீர்களே! அந்த நஷ்டம் இன்ஷூரன்ஸ் கம்பெனியைச் சேர்ந்தது என்பதால் தானே, இல்லையா?" என்று கேட்டாள்.

"இல்லை; நஷ்ட ஈடு கொடுக்க வேண்டிய அந்த இன்ஷன் ரன்ஸ் கம்பெனியும் என்னுடையதுதான்" என்றார் சேதுபதி.

பார்வதி திகைத்தாள்.

"ஒரு பஞ்சாலை தீப்பிடித்து எரிந்து போய்விட்டதென்றால், அந்த நஷ்டத்தைத் தேசிய நஷ்டம் என்றுதான் கூற வேண்டும். இந்தத் தேசத்தின் உற்பத்தியில் ஒரு சிறிதளவு நஷ்டமாகிவிட்டது என்பதுதான் அதன் பொருள் பஞ்சாலைக்கோ இன்ஷாரன்ஸ் கம்பனிக்கோ நஷ்டமாகாது" என்றார் சேதுபதி.

பார்வதி திகைப்புடன் அவரைப் பார்த்தாள்.

''உங்கள் திகைப்பு எனக்குப் புரிகிறது. அதாவது, இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கு நஷ்டம்தானே? அந்த இன்ஷரன்ஸ் கம்பெனி எனக்குச் சொந்தமாயிருந்தும் அந்த நஷ்டத்தை நான் பெரிதாகக் கருதவில்லையே என்றுதானே யோசிக்கிறீர்கள்?'' என்றார் சேதுபதி.

பார்வதி தலையசைத்தாள்.

"அதைத்தான் நான் இல்லை என்கிறேன். பஞ்சாலைக்கு நஷ்டமில்லை என்பதைத் தாங்களே ஒப்புக்கொள்கிறீர்கள். நஷ்டம் இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கும் இல்லை என்று நான் கூறுகிறேன். அது எப்படி என்பதையும் சொல்கிறேன். எல்லா வியாபாரங்களையும் போல் இன்ஷரன்ஸ் கம்பெனியும் ஒரு வியாபாரம். ஒரு வியாபாரம் என்றால், அதற்கு வரவு - செலவு இரண்டும் உண்டு. நான் ஒரு தொழிற்சாலை நடத்துகிறேன். அந்தத் தொழிற்சாலையில் உற்பத்தி செய் வது எனக்குச் செலவு. அவற்றை விற்பனை செய்வது வரவு இல்லையா...''

தலையசைத்தாள் பார்வதி.

"அதைப் போலவே இன்ஷாரன்ஸ் கம்பெனிக்கும் வரவு செலவுக் கணக்கு உண்டு. இன்ஷர் செய்து கொள்ளு கிறவர்கள் கட்டும் பாலிஸிப் பணமெல்லாம் வரவு என்றால், இம்மாதிரிக் கொடுக்கப்படும் நஷ்ட ஈடுகள் எல்லாம் அவர் களுடைய செலவாகும். நஷ்டஈடு கொடுத்தது போக, மிச்ச மிருப்பது லாபம். இப்போது புரிகிறதா? இது இன்ஷூரன்ஸ் கம்பெனியின் செலவுக் கணக்கில் தான் வரும். நஷ்டக் கணக்கில் வராது. அதனால் தான் இந்த நஷ்டத்தை தேசிய நஷ்டம் என்று மட்டும் கூறுகிறேன்.''

இருட்டறைக்குள் மின் விளக்கைப் போட்டதும், பளிச் சென்று ஒளி தோன்றி, இருள் முழுவதும் விலகி விடுமே அப்படி இருந்தது பார்வதிக்கு.

வியப்போடு சேதுபதியையே மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். அவள் பேசாததை யெல்லாம் அவள் கண்கள் பேசின. அந்தப் பார்வையில் ஏதேதோ பொருள்கள் பொதிந்து கிடந்தன.

பார்வையின் முன்னால் ஞான விளக்காக ஓங்கி உயர்ந்து வானை முட்டுவது போன்ற விசுவரூபம் எடுத்துக் காட்சி அளித்தார் சேதுபதி. அவரைப்பற்றி அவள் எவ்வளவோ உயர்வாக எண்ணிக் கொண்டிருந்தாள். இன்று அந்த உயர்வுக்கெல்லாம் உயர்வாக இமயமாக வளர்ந்து காட்சி அளித்தார் அவர். அந்த இமயமலைக்கு முன்னால் அவள் ஒரு சிறு குன்று! சின்னஞ்சிறு குன்று! அப்படித்தான் எண்ணினாள் அவள்.

''அப்பா!'' என்று அழைத்துக்கொண்டே அறைக்குள் நுழைந்த பாரதியின் குரல், பிரன்ஸிபாலை விழிப்புறச் செய்தது.

இரண்டு கோப்பைகளில் காப்பியைக் கொண்டுவந்து வைத்த பாரதி, பிரின்ஸிபாலைப் பார்த்து, "ப்ளீஸ்..." என்றாள்.

''உனக்கு இன்று பர்த் டே அல்லவா? மிக்க மகிழ்ச்சி; இப்போது உன் வயது என்ன?" என்று கேட்டாள் பார்வதி.

"இருபது'' என்றாள் பாரதி.

"ஓ, டீன் ஏஜ் முடிந்துவிட்டதென்று சொல்?'' சிரித்துக் கொண்டே கூறினாள் பார்வதி.

பதில் கூறாமல் வெட்கத்துடன் நின்ற பாரதி, "அப்பா, நான் கொஞ்சம் வெளியே போய் என் பிரண்டைப் பார்த்து விட்டு வரப்போகிறேன்'' என்று தன் தந்தையிடம் ஆங்கிலத்திலேயே பேசி உத்தரவு கேட்டாள்.

'அந்த பிரண்ட் கர்ல் பிரண்டா,பாய் பிரண்டா ?' என்று சேதுபதி கேட்கவில்லை. அப்போது இருந்த மன நிலையில் அவருக்கு அதெல்லாம் கேட்கத் தோன்றவில்லை.

பார்வதிக்குத் தன்னுடைய 'டீன் ஏஜ் 'பருவம் பற்றிய நினைவு தோன்றிவிடவே, அந்தச் சிந்தனையில் மூழ்கிப் போனாள்.

"ம்.. இளமைப் பருவத்துக்குள்ள மகிழ்ச்சியும் உற்சாகமுமே தனி!'' என்று பெருமூச்சுடன் கூறினாள் பார்வதி.

"ஆமாம்; குழந்தைப் பிராயம், வாலிபப் பருவம் என்ப தெல்லாம் ஒன்வே டிராபிக், போன்றது. ஒரு வழிப் பாலத் தில் ஒரு முறை போகத்தான் முடியுமே தவிர, திரும்பி வர முடியாது. திரும்பி அந்த வழியில் செல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டாலும் முடியாது. திரும்பி வருவதற்கு மனம் இருக்கலாம். ஆனால் செயல்படுத்த முடியாது!'' என்றார் சேதுபதி.

இப்படிச் சொன்னவர் சட்டென்று ஏதோ நினைத்துக் கொண்டவர்போல் பேச்சை நிறுத்திக் கொண்டு, 'இந்த உதாரணத்தை ஏன் சொன்னோம்' என்று எண்ணி மனத்திற் குள்ளாகவே வருத்தப்பட்டார்.

அவர் கூறிய வார்த்தைகள் பார்வதிக்குச் 'சுருக்' கென்றன.

"உனக்கு வயதாகிவிட்டது. இளமைப் பருவத்தைக் கடந்துவிட்டாய். மீண்டும் அதை அடைய முடியாது. ஒரு வழிப் பாலத்தில் மீண்டும் செல்ல ஆசைப்படாதே!'' என்று அவர் மறைமுகமாகச் சொல்கிறார் என்றே தோன்றியது அவளுக்கு.

அதே சமயத்தில் அவர், 'நானே அந்த ஒரு வழிப் பாலத்தில் திரும்பிச் செல்ல ஆசைப்படுகிறேன். எனக்கு மட்டும் வயதாகவில்லையா? என் உள்ளத்தில் புகுந்திருக்கும் ஆசைக்கும் அந்தரங்கமாக ஊசலாடும் உணர்வுக்கும் என்ன பொருள்? ஒரு வழிப் பாதையில் திரும்பிச் செல்ல விரும்பு கிறேன் என்பதுதானே பொருள்?' என்று எண்ணிக் கொண்டார்.

பார்வதியின் அறிவு குழம்பியது. உள்ளத்தில் ஆசைத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அந்தத் தியைச் சற்றும் எதிர்பாராத நேரத்தில் நெருப்பணைக்கும் இயந்திரம் ஒன்று வந்து அணைத்து விட்டதைப்போல் இருந்தது சேதுபதியின் பதில். நான் ஒரு வழிப் பாதையில் திரும்பிச் செல்ல ஆசைப் படுகிறேன் என்பதைச் சேதுபதி அறிந்து கொண்டுதான் இம்மாதிரி கூறி எச்சரிக்கிறாரோ? சொல்ல வேண்டும். சொல்ல வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த தன் எண்ணத்தை, ஆசையை அடக்கிக் கொண்டவளாய் கலங்கிய உள்ளத்துடன் நாற்காலியை விட்டு எழுந்திருக்க முயன்றாள் பார்வதி.

ஹால் கடிகாரத்தில் 'மணி டங்' என்று ஒரே முறை அடித்து மணி ஏழரை என்பதை அறிவித்தது.

கை கூப்பி வணங்கியபடியே, "தங்களிடம் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டேன். நேரம் போனதே தெரிய வில்லை.... மன்னிக்கவும்" என்று விடை பெற்றுக்கொண்ட பார்வதி, குமுறி வந்த துக்கத்தை அடக்கிக் கொண்டவளாய் பாறையாகக் கனக்கும் இதயத்துடன் போய்க் காரில் ஏறிக் கொண்டாள்.

காரின் வேகத்தில் உள்ளே புகுந்து வந்த காற்று, பார்வதியின் மனப் புழுக்கத்துக்குச் சற்று இதமாக இருந்தது. வீட்டுக்குச் சென்றவள், நேராக மாடி அறைக்குப் போய்ப் பலகணியின் வழியாகச் சற்று நேரம் தெளிந்த வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அது நிர்மலமாக இருந்தது. அவளுக்கு எதிலுமே மனம் ஓடவில்லை. மனச்சுமை அவளை ஆழ்த்தியது. சோர்வும் விரக்தியும் அமைதியின்மையும் அவள் உடலையும் உள்ளத்தையும் உற்சாகமிழக்கச் செய் திருந்தன. நாற்காலியில் அமர்ந்தவள். கண்களை மூடியவாறே மேஜைமீதே கவிழ்ந்து கொண்டாள். சற்று நேரத்துக்கெல் லாம் அப்படியே அயர்ந்து விட்டாள்.
--------------
குருத்து பத்து


பகலின் ஒளி மங்கி, அந்தியின் இருள் மயங்கும் சந்தி நேரத்தில் வானத்தில் கண் சிமிட்டும் வைர மலர்களைக் கடற் கரையில் உட்கார்ந்தபடியே கண்டு களித்துக் கொண்டிருந் தான் ராஜா. அவனருகில் அமர்ந்திருந்த பாரதி, கடல் அலை களையும். அவற்றுக்குப் பின்னால் உயர்ந்தும் தாழ்ந்தும் மிதந்து கொண்டிருந்த நிழல் சித்திரம் போன்ற படகுகளை யும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஜன சந்தடி அதிகமில்லாத இடமாகப் பார்த்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்று, அவர்களுக்குப் பின்னணி யாக அமைந்திருந்தது.

''படகிலே ஒரு முறை பிரயாணம் செய்ய வேண்டும் போல் ஆசையாக இருக்கிறது'' என்றாள் பாரதி.

"எனக்கும் கூடத்தான்; ஆனால் அதற்கு 'விஸாவும் "பாஸ் போர்ட்டும் வாங்க வேண்டும்?'' என்றான் ராஜா.

"கப்பலில் வெளி நாட்டுக்குப் பயணம் செய்வதாயிருந்தால் தானே அதெல்லாம் வாங்க வேண்டும்". பாரதி கேட்டாள்.

"இல்லை, படகிலே போவதாயிருந்தாலும் வேண்டும். நீயும் நானும் வாழ்க்கைப் படகில் பயணம் செய்ய வேண்டுமானால், அதற்கு என் அத்தையிடமும், உன் தந்தையிடமும் 'பாஸ் போர்ட் வாங்கியாக வேண்டும்'' என்றான் ராஜா.

பாரதி சிரித்துவிட்டாள்.

சினிமாவிலே காதலர்கள் "டூயட் பாடிக்கொண்டு படகில் போவார்களே, அது எனக்குக் கட்டோடு பிடிக் காது'' என்றான் ராஜா.

"ஏன்?" என்று கேட்டாள் பாரதி.

"அந்தக் காதலர்கள் நாமாக இல்லையே என்றுதான்!" என்றான் ராஜா.

கரையை நோக்கி வந்து கொண்டிருந்த படகுகளைப் பார்த்தபடியே, "முதன் முதல் இந்தப் படகைக் கண்டு பிடித்தது யார்?' என்று கேட்டாள் பாரதி.

''நான் தான்'' என்றான் ராஜா.

"நீங்களா?" என்று கேட்டுவிட்டுச் சிரித்தாள் பாரதி.

''ஆமாம், இப்போது நாம் சாய்ந்து கொண்டிருக்கிறோமே இந்தப் படகையும், இந்த இடத்தையும் கண்டு பிடித்தது நான் தானே!'' என்றான் ராஜா.

"ரேடியோ குவிஸ் புரோகிராமில் 'படகைக் கண்டு பிடித்தது யார்?' என்று கேட்டால், இந்த மாதிரிப் பதில் சொல்லி வைக்காதீர்கள்! உங்கள் என்ஜினீரிங் காலேஜுக்கே அவமானம்!'' என்றாள் பாரதி,

"எங்கள் என்ஜினீரிங் காலேஜ் அதற்காக ரொம்பப் பெருமைப்படும். படகைக் கண்டுபிடித்த அறிவாளியை இந்த உலகத்துக்கு அளித்த பெருமை எங்கள் கல்லூரிக்குக் கிட்டுமல்லவா..."

"போதும் உங்கள் தமாஷெல்லாம் நான் இப்போது ஒரு முக்கியமான கேள்வி கேட்கப் போகிறேன். அதற்குக் கொஞ்சம் ஒழுங்காகப் பதில் சொல்ல வேண்டும்.... தெரியுமா?''

"அதோ பட்டாணி சுண்டல்காரப் பையன் வருகிறான். முதலில் இரண்டு பொட்டலம் சுண்டல் வாங்கிக் கொண்டு விடுகிறேன். அப்புறம் பேசலாம்...'' என்றான் ராஜா.

"உங்களுக்குச் சுண்டல் என்றால் ரொம்பப் பிடிக்குமா? “

"அதெல்லாம் ஒன்றுமில்லை. சுண்டல் வாங்கவில்லை யென்றால், அந்தப் பையன் திரும்பத் திரும்ப இந்தப் பக்கம் வந்து, நம்மையே சுற்றிக் கொண்டிருப்பான்...'' என்று கூறிய ராஜா, அந்தச் சுண்டல்காரப் பையனை அருகில் அழைத்து இரண்டு பொட்டலம் சுண்டலை வாங்கிக் கொண்டான். அந்தப் பையன் அப்பால் போனதும், "...ம்......... இப்போது கேள்வி பதில் சொல்கிறேன்'' என்றான் ராஜா.

பாரதி கேட்டாள்! "இத்தனைப் பெரிய கடலைப் படைத்த கடவுள் எதற்காக இந்தக் கடல் நீரை உப்பாகப் படைத்தார். இவ்வளவு உப்புத் தேவையா?''

"கொஞ்சம் அதிகம்தான்'' என்று கூறிய ராஜா, சுண்டலில் கரித்த உப்பைச் சகித்துக் கொள்வது போல் முகத்தைச் சுளித்துக்கொண்டான்.

பொத்துக் கொண்டு வந்த சிரிப்பைக் 'கலீர்' என்று கொட்டி விட்டாள் பாரதி.

பின்னர், "நான் கேட்கிற கேள்விக்குச் சரியாகப் பதில் கூறப் போகிறீர்களா, இல்லையா?" என்று சற்றுக் கோப மாகக் கேட்டாள்.

"அந்தச் சுண்டல்காரப் பையன் இந்தப் பக்கம் வந்தால் அவனுக்கு நன்றி கூற வேண்டும்'' என்றான் ராஜா.

"ஏன்? 'உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்பது பழமொழி. இந்தப் பையனோ சுண்டலில் 'டபிள்' உப்புப் போட்டிருக்கிறான். நம் நன்றியை அவனுக்குத் தெரிவிக்க வேண்டாமா?"

''உங்களால் தாமாஷாகப் பேசாமல் இருக்க முடியாது; என்னால் சிரிக்காமலும் இருக்க முடியாது.''

"நீ சொல்ல நினைப்பதெல்லாம் நான் பேச வேண்டும். நான் பேசும் பேச்சுக்கெல்லாம் நீ சிரிக்க வேண்டும்..." என்று அப்போதே ஒரு சினிமாப் பாட்டைக் கொஞ்சம் மாற்றிப் பாடினான் ராஜா.

"ரொம்ப நன்றாகப் பாடுகிறீர்களே!"

"இப்போது நாம் இரண்டு பேரும் படகில் பயணம் செய்தால் ஒரு டூயட்டே பாடலாம்'' என்றான் ராஜா.

''கடவுள் கடல் நீரை உப்பாகப் படைத்ததற்குக் காரணம் சொல்லாவிட்டால் நான் உங்களுடன் டூ" என்றாள் பாரதி.

"இரண்டு பேர் சேர்ந்தால் நீ தான். தனியாக இருந்தால் ஒன்...'' என்று கூறிய ராஜா, "நாமெல்லாம் ஆண்டவனிடம் நன்றியோடு இருக்க வேண்டும் என்பதற்குத்தான். ஒரு வேளை உணவு படைப்பவர்களை உப்பிட்டவர்கள் என்று கூறி அவர்களை உள்ளளவும் நினை என்கிறோம். கடவுள் இந்த உலகத்து மக்களுக்கெல்லாம் உணவைப் படைத்து வைத் திருக்கிறார். அந்த உணவுக்கு வேண்டிய உப்பையும் படைத்து வைத்திருக்கிறார். உலகத்தில் வாழும் உயிர்களுக் கெல்லாம் உப்பிட்டு வரும் அந்தக் கடவுள், கடல் நீரில் கலந்திருக்கும் உப்பைப் போலவே நம் கண்ணுக்குப் புலனாகாத சூட்சும வடிவத்தில் இருந்து வருகிறார்'' என்றான்.

பாரதி ராஜாவையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

''என்ன பாரதி! அப்படிப் பார்க்கிறாய்? எனக்கு இவ்வளவு ஞானம் எப்போது வந்துவிட்டது என்றுதானே? இன்று காலையில் தான்.... என் அத்தையின் மேஜை மீது கிடந்த ஒரு புத்தகத்தில் இந்த விஷயத்தை இன்று காலையில் தான் படித்தேன்...'' என்றான் ராஜா.

கையினால் மணலைக் கீறியபடியே, ராஜா கூறிய உயர்ந்த தத்துவத்தை எண்ணி வியந்து கொண்டிருந்த பாரதி சட்டென, "ஐயோ!" என்று அலறியபடி கையை உதறிக் கொண்டாள்.

அவள் வலது கை ஆள்காட்டி விரலில் இரத்தம் பெருகி வழிவதைக் கண்டு பதறிப்போன ராஜா, "என்ன பாரதி, கையை ஏதாவது கீறிவிட்டதா என்ன?" என்று கேட்டான்.

"ஆமாம், கண்ணாடித் துண்டு'' என்று மணலில் புதைந்து கிடந்த ஒரு பெரிய கண்ணாடித் துண்டை எடுத்து ராஜாவிடம் கொடுத்தாள் பாரதி.

"இந்தக் கண்ணாடித் துண்டு உன் கையைக் கீறியதா, அல்லது உன்னுடைய கை கண்ணாடித் துண்டைக் கீறியதா?'' என்று கேட்டான் ராஜா.

சினிமாக்களில் கதாநாயகிக்கு ஏதாவது ஆபத்து நேரும் போது (அது தான் நேருமே), கதாநாயகன் அவளைக் காப்பாற்ற ஓடி வருவான். அச்சமயம், வில்லனுக்கும் அவனுக்கும் சண்டை நடக்கும். அந்தச் சண்டையில் கதா நாயகன் வெற்றி பெறுவான். உடனே கதாநாயகி, கதா நாயகனைக் காதலிக்கத் தொடங்கி விடுவாள்.

ராஜா தன்னுடைய வாழ்க்கையில் அப்படி ஒரு நிகழ்ச்சியை எதிர்பார்க்கவில்லை யென்றாலும், அந்தக் கண்ணாடியை ஒரு வில்லனாகவே மதித்து அதைக் கடலில் வீசியெறிந்தான். உடனே எழுந்து சென்று தன்னிடமிருந்த கைக்குட்டையைக் கடல் நீரில் நனைத்து வந்து அவள் கைவிரலைச் சுற்றிக் கட்டினான். இரத்தப் பெருக்கு நின்றது.

"மணலில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் அஜாக்கிரதையாகக் கீறினால், இப்படித்தான் நேரும்.'' என்றான் ராஜா.

"ஆமாம்; சுவரில் ஆணி அடிக்கும்போதுகூட ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும்'' என்றாள் பாரதி.

அன்றொரு நாள், கல்லூரி ஆண்டு விழாவின் போது சுத்தியலால் தன் கைவிரலை நசுக்கிக் கொண்டதையும், பாரதி அப்போது தன் கைக்குட்டையால் கட்டுப் போட்ட தையும் பாரதி சுட்டிக் காட்டுகிறாள் என்பதை ராஜா புரிந்துகொண்டான்.

"நீ ரொம்பப் பொல்லாதவள்!'' என்று பாரதியின் கன்னத்தை லேசாகக் கிள்ளினான் ராஜா. தன் கரங்களால் அவன் கைகளைத் தடுத்தபடியே ராஜாவையே கண் கொட்டாமல் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள் பாரதி. திடீரென ஏதோ நினைத்துக் கொண்டவள் போல், "இப்போது நான் என் கைவிரலைக் கீறிக் கொண்டது பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்'' என்றாள்.

அவள் அப்படிக் கூறியபோது ராஜாவுக்குப் பெருமை தாங்கவில்லை. பாரதி தன் மீது கொண்டுள்ள அன்பைத் தான் இப்படி மறைமுகமாகச் சொல்லுகிறாள் என்று எண்ணி மகிழ்ந்தான் அவன்.

அவன் அவ்வாறு மகிழ்ந்துகொண்டிருந்தபோதே, "என் மகிழ்ச்சிக்கு என்ன காரணம் தெரியுமா? இந்தக் கைக்குட்டைதான். இது என்னுடைய கைக்குட்டை. அன்று கல்லூரியில், நீங்கள் கையை நசுக்கிக் கொண்டபோது, இந்தக்கைக் குட்டையால் தானே கட்டுப்போட்டேன். அப்புறம் இதைத் தாங்கள் திருப்பிக் கொடுக்கவேயில்லை. நல்ல வேளை இப்போது திரும்பி வந்துவிட்டது' என்று சிரித்துக் கொண்டே கூறினாள் பாரதி.

".... நீ ரொம்ப ரொம்ப..." என்று கூறத் தொடங்கிய ராஜாவின் வார்த்தையை, "பொல்லாத பெண். ஆகையால் ரொம்ப ரொம்ப உஷாராயிருங்கள்'' என்று முடித்துவிட்டு எழுந்திருந்தாள் பாரதி.

"இதற்குள் ஏன் எழுந்துவிட்டாய், பாரதி?''

"இப்போது மணி என்ன தெரியுமா... எட்டரை !" என்று கூறிக்கொண்டே புறப்பட்டாள் பாரதி.

ராஜா வீட்டுக்குத் திரும்பிச் சென்றபோது, மணி ஒன்பது. டாக்ஸி ஒன்றைப் பிடித்துப் பாரதியை அவள் வீட் டில் கொண்டுவிட்டு வருவதற்குள் அவனுக்கு நல்ல பசி எடுத்துவிட்டது. வீட்டுக்குள் நுழையும்போதே 'பசி பசி' என்று அலறிக் கொண்டு சமையலறையை நோக்கி விரைந் தான். அங்கு ஞானம் கையில் திருப்புகழை வைத்துக் கொண்டு தன்னுடைய வசத்துக்கு உட்படாத குரலில் பாடிக் கொண்டிருந்தாள்.

''பசி உயிர் போகிறது; என்ன பாட்டு வேண்டியிருக் கிறது?' என்று கேட்டுக் கொண்டே வந்த ராஜா, "அத்தை! சாப்பிட்டாச்சா?'' என்று கத்தினான்.

"அத்தை இங்கே இல்லை; மாடியிலே படித்துக் கொண்டிருக்கிறார்களோ என்னவோ?'' என்றாள்.

"அத்தை, அத்தை!'' என்று அழைத்தான் ராஜா. பதில் இல்லாமல் போகவே மாடிக்குப் போய்ப் பார்த்தான். அத்தை அங்கே மேஜை மீது தலையைக் கவிழ்த்துத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

"அத்தை! சாப்பிட வரவில்லையா?' என்ற ராஜாவின் குரல் கேட்டதும், அவள் தலையை நிமிர்த்தி, ''எனக்கு வேண்டாம், ராஜா! பசியே இல்லை. நீ சாப்பிடு போ' என்று கூறி அனுப்பிவிட்டு அப்படியே எழுந்து போய்ப் படுக்கையில் சாய்ந்து கொண்டாள்.

"இத்தனை நேரம் நீ எங்கே போயிருந்தாய்?' என்று அத்தை கேட்டால் என்ன பதில் சொல்லுவது என்று அஞ்சிக் கொண்டே வந்த ராஜாவுக்கு அவளுடைய பதில் மிகுந்த
மகிழ்ச்சியை அளித்தது.

''சரி, அத்தை ! நான் போய்ச் சாப்பிடுகிறேன்'' என்று கூறிக்கொண்டே கீழே இறங்கிப் போய்விட்டான் ராஜா..

சீக்கிரமே சாப்பாட்டை முடித்துக்கொண்ட ராஜாவும் அன்று அதிக நேரம் கண் விழித்துக் கொண்டிருக்கவில்லை. அவனுடைய நினைவெல்லாம் பாரதியைப் பற்றியதாகவே இருந்தது. அவளுடன் கடற்கரையில் உட்கார்ந்து உல்லாசமாக உரையாடிக் கொண்டிருந்த இன்ப நினைவுகளிலேயே அவன் எண்ணம் லயித்திருந்தது.

ரேடியோவைத் திருகிச் சற்று நேரம் இங்கிலீஷ் பாட்டுகளைக் கேட்டுவிட்டு உறங்கப் போய்விட்டான்.

மணி பன்னிரண்டுக்கு மேல் இருக்கலாம். பார்வதி படுக்கையில் இப்படியும் அப்படியும் புரண்டு கொண்டேயிருந் தாள். எந்த நாளிலும் அவளுக்கு இத்தகைய அனுபவம் ஏற்பட்டதில்லை.¨

சேதுபதியின் நினைவு மயக்கம் அவள் உறக்கத்தை விழுங்கிவிட்டிருந்தது. மயக்கமும் உறக்கமும் கலந்த கனவு நிலையில் புரண்டு கொண்டிருந்த பார்வதியின் இதழ்கள் அவளையும் அறியாமல் புன்முறுவல் பூத்துக்கொண்டிருந்தன. அந்தக் கனவிலே அவள் சேதுபதியின் புறத் தோற்றத்தைக் கண்டுவிட்டுச் சிரிக்கவில்லை.

அன்று மாலை அவர் கூறிய உயர்ந்த கருத்துகள், எந்த விஷயத்திலும், அவருக்குள்ள ஆழ்ந்த ஞானம், உதாரணங்களின் மூலம் விஷயத்தைத் தெளிவாக்கித் தரும் ஆற்றல் இவ்வளவும் அவள் உள்ளத்தில் - பதிந்து போயிருந்தன. இன்ஷகூரன்ஸ் கம்பெனி பற்றி அவர் கூறிய கருத்தும், ஒரு வழிப்பாதை உதாரணமும் அவள் நினைவில் தோன்றின.

அந்தப் புதுமையான கருத்தையும் உதாரணத்தையும் சேதுபதி மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லுவது போல் தோன்றியது. சேதுபதியின் அறிவுக் கூர்மையை நினைத்து நினைத்து வியந்தது அவள் உள்ளம். அந்தக் கனவு மயக்கத்தில் அவள் உள்ளத்தில் தேங்கிய மகிழ்ச்சியை, வியப்பை, ரசிப்பை அவள் உதடுகள் புன்சிரிப்பின் மூலமாகப் பிரதிபலித்துக் கொண்டிருந்தன.

அதே சமயத்தில் ராஜாவின் உறக்கத்தில் பாரதி தோன்றியிருந்தாள். அவள் சிரிப்பிலே, உற்சாகத்திலே, போலியான கோபத்திலே, அவள் தளிர்க் கரத்தின் மென்மையிலே லயித்திருந்தான் ராஜா. அந்த லயத்தின் பிரதிபலிப்பாக அவன் முகம் மகிழ்ச்சியாய் அடிக்கடி மலர்ந்து கொண்டிருந்தது.
---------------
குருத்து பதினொன்று


ராஜாவின் உறக்கத்தை, முழுமையான மெய்ம்மறந்த உறக்கம் என்று கூறமுடியாது. விழிப்பும் உறக்கமும் கலந்து கிடந்த ஒரு மயக்கம் அவனை அணைத்துப் பிணைத்துக்கொண். டிருந்தது. விடியற்காலைக்குரிய இருளோடு லேசாக ஓர் ஒளி யும் கலந்து கிடக்குமே, அந்த மாதிரி.

அந்த அரை குறையான உறக்கத்தில் ராஜாவின் முன் பாரதி தோன்றுவதும் மறைவதுமாக மாயாஜாலம் புரிந்து கொண்டிருந்தாள். சொப்பன உலகத்தின் விசித்திரங்களெல்லாம் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தன.

சினிமாக்களில் வரும் பூர்வ ஜன்மக் காதலியைப்போல் அவள், 'கல கல' வென்று சிரித்த வண்ணம் மெல்லிய துகி லுடன் காற்றிலே மிதந்து வந்தாள். அடுத்த கணம் காற்றிலேயே கரைந்து மறைந்தாள். உறங்கிய நிலையிலேயே, கனவின் மயக்கத்திலேயே ராஜா அந்தச் சொப்பன இன்பத்தை அனுபவித்தவனாய் அவளுடைய அங்க அசைவு ஒவ்வொன்றையும் ரசித்துப் புன்முறுவல் பூத்துக் கொண்டிருந்தான்.

அவள் 'கல கல' வென்று சிரித்தபோது பாரிஜாத மலர்கள் குயிலின் குரல் பெற்று உதிர்வன போன்ற பிரமை உண்டாயிற்று. மறுகணம் அவள் சிவந்த இதழ்கள் முறுவலிக்க, நீண்ட விழிகள் அலைய, கால் சதங்கைகள் 'கலீர் கலீர்' என ஒலிக்க ஒரு நடனப்பெண் வடிவத்தில் தோன்றித் தன் மெல்லிய கரங்களால் ராஜாவைப் பற்றி இழுத்தாள்.

இந்த இன்ப அனுபவம் வெகு நேரம் நீடித்திருக்கவில்லை. இதற்குள் அவன் தூக்கம் கலைந்துவிடவே இடையே அறுபட்ட பிலிம் சுருள் மாதிரி, அந்தச் சொப்பனக் காட்சி தடைப்பட்டுப் போயிற்று.

பாரதியின் அழகு வடிவத்தை, ஸ்பரிச இன்பத்தைத் தொடர்ந்து அனுபவிக்க முடியாமற்போன ராஜா, கலைந்து போன தன் துயிலை மீண்டும் தன் வசமாக்கிக் கொண்டு அந்தச் சொப்பன நிகழ்ச்சியின் தொடர்ச்சியில், பாரதியின் மலர்ந்த விழிகளை, சிவந்த இதழ்கரை, பூக்கும் முறுவலை மீண் டும் மீண்டும் கண்டு ரசிக்க விரும்பினான்.

காதல் வயப்பட்டவர்கள் எல்லோருக்குமே இந்தச் சொப்பன அவஸ்தை உண்டு போலும்! ஆமாம்; அங்கே மாடியில் படுத்திருந்த டாக்டர் குமாரி பார்வதி, சேதுபதியின் உருவத்தைத் தன் கண்ணெதிரில் கொண்டு நிறுத்த வெகு பாடுபட்டுக் கொண்டிருந்தாள்; அவளால் இயல வில்லை. உண்மையில் அவளுக்குச் சேதுபதியின்பால் ஏற்பட்டிருந்தது உடல் பூர்வமான காதல் அல்லவே! அவரை அவள் நேசிப்பது, அவர் அன்பை வேண்டுவது, அவர் துணையை நாடுவது, அவருடனேயே பேசிக் கொண்டிருப்பது, அவரைப் பிரிந்திருக்கும் நேரங்களில் அவரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பது என்னவோ உண்மைதான். ஆயினும், பார்வதியின் இந்த ஆசைகளுக்கெல்லாம் காரணம் காதல் அல்ல; கேவலம் உடலாசையைப் பின்னணியாகக் கொண்ட, உடலாசை தீர்ந்ததும் அழிந்து போகிற அற்பமான காதல் அல்ல. சேதுபதியிடம் இவள் கொண்டுள்ள நேசத்துக்கும் பாசத்துக்கும், அன்புக்கும் அக்கறைக்கும் முன்னால், வயதும் புறத் தோற்றமும் மிக மிக அற்பமானவை. வயதின் கவர்ச்சியும் அழகின் வசீகரமும் மங்கிப்போன பிறகு, வலிவிழந்து விட்ட பின்னர், காலம் கடந்த காலத்தில் தோன்றியுள்ள காதல் இது. அதனால்தான் சேதுபதியின் தோற்றத்தை அவளால் உருவகப்படுத்திப் பார்க்க இயலவில்லை.

ராஜாவைப் போலவே பார்வதியின் உறக்கமும் அடிக் கடி தடைப்பட்டுக் கொண்டிருந்தது. தூக்கம் கலைந்த போதெல்லாம் அவள் உறங்க முயன்று கொண்டிருந்தாள்.

உறங்கிய போதெல்லாம் சேதுபதியின் தோற்றத்தை உருவகப்படுத்த முயன்று கொண்டிருந்தாள்; உறக்கம் வந்தது. ஆயினும் அவளால் சேதுபதியின் உருவத்தைக் காண முடியவில்லை.

அன்று மாலை அவர் கூறிய வார்த்தைகள் அனைத்தும் அவள் நெஞ்சத்தில் பதிந்து கிடந்தன. இன்ஷாரன்ஸ் பற்றிய தன்னுடைய அறியாமையை அறிய நேர்ந்த சேதுபதி என்ன எண்ணியிருப்பார் என்பதை நினைத்தபோது அவளுக்கு வெட்கமாயிருந்தது. நஷ்டம் இன்ஷூரன்ஸ் கம்பெனிக்குத்தானே?' என்று அதிமேதாவியைப் போல் தான் கூறியபோது, அவர் அலட்சியமாகச் சிரித்த சிரிப்பில் எத்தனைப் பொருள் பொதிந்து கிடந்தன!

'நீ மெத்த படித்தவளாயிருக்கலாம்; பட்டங்கள் பெற் றிருக்கலாம்; அறிஞர்கள் பலரோடு வாதாடி வெற்றி பெற்றிருக்கலாம், கல்வி கேள்விகளில் வல்லவளா யிருக்கலாம். ஆனாலும் இந்தச் சின்ன விஷயம் உனக்குத் தெரிய வில்லையே, என்று அவர்தம் சிரிப்பின் மூலம் கூறாமல் கூறி விட்டாரே! இப்போது அதை எண்ணிய பார்வதிக்கு வெட்க மாயிருந்தபோதிலும், கூடவே இன்பமாகவும் இருந்தது!

என்னுடைய பெரு மதிப்புக்கும், நேசத்துக்கும் பாத்திர மாகியுள்ள சேதுபதி தானே சிரித்தார்? அந்தச் சிரிப்பு என்னுடைய அறியாமையைப் பற்றியதுதானே? என் அறியாமையை எள்ளி நகையாடும் அளவுக்கு என்னிடம் அவர் உரிமை எடுத்துக் கொண்டதால் அல்லவா அவர் அவ்வாறு சிரித்தார்? அப்படியானால் அவருக்கு என்னிடம் அன்பு இருக்கிறது; அக்கறை இருக்கிறது; ஆசை இருக்கிறது; பாசமும், பரிவும் இருக்கின்றன. அந்தச் சிரிப்புக்கு இதெல்லாம்தான் பொருள். சேதுபதியின் சிரிப்பு அவள் காதுகளில் ரீங்காரமிட்டது. அந்தச் சிரிப்பின் இனிமையிலே, பாசத்திலே, பரிவிலே என்றுமே அனுபவித்தறியாத சுகம் இருப்பதை அவள் உணர்ந்தாள். அந்த உணர்ச்சீ களை யெல்லாம் ஒன்றாகத் திரட்டிப் புன்முறுவலாக வெளி யிட்டுக் கொண்டிருந்தன அவளுடைய இதழ்கள்.

மணி ஒன்பது இருக்கும். ராஜாவுடன் டாக்ஸியில் வந்து இறங்கிய பாரதி, நெஞ்சு படபடக்க மெதுவாக அடிமேல் அடி வைத்தவளாய், தன் தந்தைக்குத் தெரியாமல் வீட்டுக்குள் சென்றுவிட எண்ணினாள். நடு ஹாலில் படுத்திருக்கும் சேதுபதியைக் கண்டதும் திடுக்கிட்டுப்போன பாரதி, முன்னொரு நாள் தான் நேரம் கழித்து வீட்டுக்கு வந்தபோது "இத்தனை நேரம் எங்கே போயிருந்தாய்?' என்று தந்தை கேட்டதும், தான் அதற்குக் கல்லூரி ஹாஸ்டல் மாணவி யுடன் கணக்குப் பாடம் கற்றுக் கொண்டிருந்ததாகப் பொய் சொன்னதும், தான் கூறிய அதைப் பொய்யென்று புரிந்து கொண்ட அப்பா, அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் தன் வார்த்தைகளை நிஜமென்று நம்புவது போல் நடந்து கொண்டதும் அவள் நினைவுக்கு வந்தன.

அப்பா தூங்குகிறாரா என்று கடைக் கண்ணால் கவனித் துக்கொண்டாள். சேதுபதிக்குக் காது ரொம்பக் கூர்மை. தூங்கிக் கொண்டிருக்கும்போது பக்கத்தில் நிழலாடினாலும் அறிந்து கொண்டுவிடுகிற சூட்சுமமான அறிவு அவருக்கு உண்டு. இன்று பாரதி வரும்போது அவர் விழித்துக் கொண்டுதான் படுத்திருந்தார். மணி ஒன்பதுக்கு மேல் ஆகிவிட்டது என்பதையும், பாரதி லேட்டாக வீட்டுக்கு வந்திருக்கிறாள் என்பதையும் அவர் உணராமலில்லை. ஆயினும் பயந்தபடியே உள்ளே வந்து கொண்டிருந்த பாரதியை அவர் கண்டிக்க விரும்பவில்லை. எந்தவித உணர்ச்சியையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் மாலை ஐந்து மணிக்குக் கல்லூரியிலிருந்து வரும் பாரதியை எப்படி வரவேற்பாரோ அவ்வாறே வரவேற்றார்.

"என்ன பாரதி. யாரோ ஒரு பிரண்டைப் பார்க்கப் போகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றாயே, பார்த்து விட்டாயா?' என்று சகஜமாக விசாரித்தார்.

''ஆமாம்'' என்று மெல்லிய குரலில் பதில் கூறினாள் பாரதி.

"இத்தனை நேரம் சாப்பிடாமலா பேசிக்கொண்டிருந் தாய் வா, வா, உள்ளே போய்ச் சாப்பிடலாம். உனக்காக நானும் சாப்பிடாமல் காத்திருக்கிறேன்'' என்று அன்பும் பரிவும் கலந்த குரலில் வரவேற்றார். தந்தையின் அன்பு மொழிகளில் பாரதி மெய் சிலிர்த்துப்போனாள். அப்பாவா இப்படிப் பேசுகிறார்? நிஜமாகவேதான் இப்படிக் கூறுகிறாரா? அல்லது கோபத்தை விழுங்கிவிட்டு மேலாக அன்பொழுகப் பேசு கிறாரா?

"ஏன் லேட்?' என்று ஒரு வார்த்தை கேட்கவில்லையே! நிஜமாகவே என் மீது கோபமில்லையா? அவருடைய சாந்த மான பேச்சும், அன்பும் வரவேற்பும் பாரதிக்குப் பெரும் வேதனையை அளித்தன.

'அப்பா! நான் நேரம் கழித்து வீட்டுக்கு வந்திருக்கிறேன். இப்போது மணி ஒன்பது; தயவு செய்து என்னைக் கொஞ்சம் கோபித்துக் கொள்ளுங்கள் அப்பா!' என்று கெஞ்சிக் கேட்டுக்கொள்ள வேண்டும் போலிருந்தது. தன்னை அவர் கோபமாக நாலு வார்த்தை திட்டி அனுப்பினால்தான் உள்ளம் அமைதியுறும் போல் தோன்றியது. ஆனாலும் தன் வேதனையை அடக்கிக் கொண்டவளாய் மெளனமாகச் சமையலறையை நோக்கி நடந்தாள் பாரதி.

சேதுபதிக்கும் பாரதிக்கும் மேஜை மீது உணவு தயாராகக் காத்திருந்தது. தந்தையும் மகளும் அருகருகே அமர்ந்ததும், சேதுபதியின் சகோதரி உணவு வகைகளை ஒவ்வொன் றாக எடுத்துப் பரிமாறினாள். சேதுபதி எதுவும் பேசாமல் மெளனமாகவே சாப்பிடத் தொடங்கினார். அவர் முகத்தில் மகிழ்ச்சியில்லை. பேசிய இரண்டொரு வார்த்தைகளிலும் உற்சாகமில்லை.

'ஒருவன் எவ்வளவு துன்பங்களை அனுபவித்தபோதிலும் கவலைகள் பட்டபோதிலும் சாப்பிடும் நேரங்களில் மட்டும் எல்லாவற்றையும் மறந்து நிம்மதியுடன் சாப்பிட வேண்டும்' என்று சேதுபதி அடிக்கடி கூறுவது வழக்கம். தம்முடைய அனுபவத்திலும் அவர் இந்தக் கொள்கையைக் கடை பிடிக்கத் தவறியதில்லை. வியாபாரத்தில் பல லட்சம் ரூபாய் நஷ்டமாகியிருந்தாலும் லாபமாகியிருந்தாலும் இரண்டையும் சமநிலையில் ஜீரணம் செய்துகொள்ளும் சக்தி அவருக்கு உண்டு. அவர் முக-பாவத்திலிருந்து, லாபம் நஷ்டம் எதையும் கண்டுபிடித்துவிட முடியாது. அத்தகைய திடசித்தம் வாய்ந்தவர் முகத்தில் இன்று மட்டும் ஏன் இத்தனைக் கவலை? அமைதியின்மை ?

"அப்பாவின் கவலைக்கு என்ன காரணம்?'' என்று யோசித்தாள் பாரதி. தன் அண்ணனின் முகத்தில் என்றுமில்லாத வருத்தம் சூழ்ந்திருப்பதன் காரணம் என்னவென்று புரியாமல் தவித்தாள் சேதுபதியின் தங்கை.

சேதுபதியின் கை விரல்கள் சாப்பாட்டை அடைந்து கொண்டிருந்தன. அவர் உள்ளம் எங்கேயோ அலைந்து கொண்டிருந்தது.

மெளனமாக. இதைக் கவனித்துக் கொண்டிருந்த பாரதியும் அத்தையும் ஒருவருக்-கொருவர் ஜாடைகளாலேயே பேசிக் கொண்டனர்.

'அப்பாவின் வருத்தத்துக்கு என்ன காரணம்? ஏன் சோற்றை அளைந்து கொண்டிருக்கிறார்?' என்று பாரதி கேட் டாள். இல்லை, அவள் முகபாவமும் கைஜாடைகளும் அப்படிக் கேட்டன்.

"எனக்கென்ன தெரியும். உன் அப்பா சங்கதி? ஒரு வேளை பஞ்சுமில் தீப்பற்றி எரிந்து விட்டதை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாரோ என்னவோ?" சேதுபதியின் சகோதரி பதில் கூறினாள். இல்லை அவளுடைய கண்களும் அபிநயங்களும் அவ்வாறு பதில் கூறின.

மகளும் சகோதரியும் மெளன மொழியில், அபிநயங் களின் மூலமாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்த சேதுபதி லேசாகச் சிரித்துக் கொண்டே, "என்ன பாரதி ! அத்தையும் மருமகளும் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? நான் ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறேன் என்றுதானே? பஞ்சு மில் எரிந்து போயிற்றே என்று நான் வருத்தப்படுவதாக எண்ணுகிறீர்களா? வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும் போது கவலைப்படுவது என்பது எனக்குத் தெரியாத விஷயம். பணம் வந்து போவது பற்றி நான் எப்போதுமே கவலைப் பட்டதில்லை; கவலைப்படவும் கூடாது. ஆனால் படக்கூடாத ஆசைகளைப் பட்டுவிட்டு, அது நிறைவேறாமல் போகும்போது வருந்த நேரிடுகிறதல்லவா? என் வருத்தத்திற்குக் காரணம் ஆசை நிறைவேறவில்லையே என்பதால் அல்ல. நிறை வேறாத ஆசையை ஏன் பட்டோம்" என்றுதான் வருந்துகிறேன் என்றார்.

'அப்படிப்பட்ட அந்த ஆசை என்ன?' வென்று சேதுபதியைக் கேட்கும் தீரம் பாரதிக்கோ, அவள் அத்தைக்கோ இருக்கவில்லை.

ஆனால் பாரதி மட்டும் தன் தந்தையைப் பார்த்து, "அப்படியானால் அந்த ஆசையை விட்டு விடுங்களேன்" என்றாள். அது கேட்ட சேதுபதி தமக்குள்ளாகவே சிரித்துக் கொண்டார். அவருடைய உள்ளத்தின் அடிவாரத்தில் ஆழ்ந்து கிடக்கும் ரகசியம், இதுவரை பார்வதியேகூட அறியாத அந்த ரகசியம், மகளிடமோ தங்கையிடமோ சொல்லி ஆறுதல் பெறக் கூடியதல்லவே!

சாப்பாட்டை அரை குறையாக முடித்துக் கொண்ட சேதுபதி, சட்டென்று நாற்காலியைவிட்டு எழுந்து நின்ற வராய், "சரி, பாரதி! நேரமாகிறது. நீ போய்ப் படிக்கலாம்'' என்று கூறிவிட்டுத் தமது அறையை நோக்கிச் சென்றார்.

"ஆசையை விட்டுவிடும்படி அப்பாவுக்குச் சுலபமாகச் சொல்லி விட்டேன். என் மனத்திலுள்ள ஆசையை என்னால் விடமுடியவில்லையே! ராஜாவைப்பற்றி என் அந்தரங்கத் தில் கொண்டுள்ள எண்ணங்களை அகற்றிவிட முடிய வில்லையே!" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்ட வளாய்த் தன்னுடைய அறையை நோக்கி நடந்தாள் பாரதி.

தம்முடைய அறைக்குள் பிரவேசித்த சேதுபதியின் உள்ளம் பார்வதியைப்பற்றியே எண்ணமிட்டுக் கொண்டிருந்தது. அவளுடன் அன்று மாலை விவாதித்துக் கொண்டிருந்த விஷயங்களெல்லாம் அவர் நினைவுக்கு வந்தன. பார்வதியிடம் எனக்கு ஏன் இத்தனை அக்கறை! எந்நேரமும் என் மனம் ஏன் அவளைப்பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறது?

அவள் எப்போதும் என் அருகிலேயே இருக்க வேண்டும் என்று என் உள்ளம் விரும்புவது எதனால்? அவளைப் பிரிய நேரும் போதெல்லாம் ஏதோ ஒரு பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதைப் போன்ற வருத்தம் ஏற்படுவானேன்? இதற் கெல்லாம் என்ன காரணம்?

சேதுபதியின் பார்வை தற்செயலாகச் சுவரில் மாட்டப் பட்டிருந்த அவருடைய மனைவியின் படத்தின் மீது சென்றது. அந்தப் படத்திலுள்ள சரஸ்வதியின் உருவம் சேதுபதியைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தது. அந்தக் காட்சி, "எனக்குத் துரோகம் செய்யலாமா?' என்று, தன் குற்றத்தை எடுத்துக் காட்டிச் சிரிப்பது போல் தோன்றியது சேதுபதிக்கு.

'சரஸ்வதிக்கு நான் என்ன துரோகம் செய்தேன்? பார்வதியை நான் விரும்புகிறேன்; அவள் துணையை நாடுகிறேன்; அவளிடம் பேசிக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்; அவளைப் பிரிய நேரும்போது வருத்தமடைகிறேன்; உண்மைதான். இதனாலெல்லாம் சரஸ்வதிக்கு நான் எவ்விதத் துரோகமும் செய்துவிடவில்லையே! சரஸ்வதியைப் பிரிந்தது முதல் இத்தனை ஆண்டுக் காலமும் வேறு எவளையும் சரஸ்வதியின் ஸ்தானத்தில் வைத்துப் பார்த்த தில்லை. விரும்பியதுமில்லை.... பார்வதியிடம் நான் கொண்டுள்ள அன்புக்கு, ஆசைக்கு என்னால் விளக்கம் கூறமுடிய வில்லைதான். ஆனால் அது கேவலம் ஓர் ஆணுக்கும் பெண் ணுக்கும் இடையே தோன்றும் உடலாசையைப் பின்னணி யாகக் கொண்ட காதல் அல்ல. அவளை நான் விரும்புகிறேன்... அவ்வளவுதான்...'

விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையில் சாய்ந்து கொண்ட சேதுபதியின் உள்ளத்தில் அலை அலையாக எழுந்த எண்ணங்களும் கேள்விகளும் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டு, ஒன்றுக் கொன்று பதில் கூறிக்கொண்டு அவரைத் தூங்க விடாமல் செய்து கொண்டிருந்தன. குழம்பிய உள்ளத்துடன் அவர் விழித்துக் கொண்டிருந்தார்.
மணி பன்னிரண்டுக்கு மேல் இருக்கும். சேதுபதி அயர்ந்து தூங்கத் தொடங்கினார். தூக்கத்தில் ஏதேதோ குழப்பமான கனவுகள். எல்லாம் பார்வதியைப் பற்றியவையே.
அந்தக் குழப்பத்திலும் அவர் முகம் மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார். அதற்கு என்ன காரணமோ? கனவிலே கொடிய நோய், பட்டம் படிக்க வைத்து பட்ட நிகழ்ந்த நிகழ்ச்சிகளோ என்னவோ?

தாம் ஏழைச் சிறுவனாக இருந்தபோது பட்ட துன்பங்கள், தன்னை வளர்க்கவும் படிக்க வைக்கவும் தன்னைப் பெற்ற தாய் பட்ட கஷ்டங்கள், வறுமையின் கொடிய பிடியில் சிக்கிக்கொண்டு தானும் தன் தாயும் அனுபவித்த இன்னல்கள், அப்போது உயர்ந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள், தான் முன்னுக்கு வந்து பெரும் பணத்தைத் திரட்டிக் குவித்தபோது படிப்படியாக மேல் நிலையிலிருந்து கீழ் நிலைக்குத் தாழ்ந்து போனது, சமூகத்தில் தனக்கு ஓர் உயர்ந்த அந்தஸ்து ஏற்பட்டபோது, தன்னைவிட உயர்ந்தவர்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தவர்களில் பலர் கீழ்ப்படிக்கு இறங்கியது - இவ்வளவும் அவர் கனவில் தோன்றின.

கடைசியாக அன்று கல்லூரி விழாவில் தன்னை அறிமுகப் படுத்திய பார்வதி, அவர் முன்னால் தோன்றிப் பேசத் தொடங்கினாள்.

”திருவாளர் சேதுபதியைப்பற்றி நான் புகழப் போவதில்லை. காரணம் ஏற்கெனவே அவரைப்பற்றி அறிந்து கொண்டுள்ள நமக்கு, அவர் அளித்த நன்கொடை ஒரு பெரிய விஷயமாகத் தோன்றாது. அத்துடன் இப்போது அவரைப் புகழ்ந்தால் அவர் கொடுத்த நன்கொடைக்காகப் புகழ்வதாகத்தான் தோன்றும். ஒருவன் தன் தாயாரை, தன்னைப் பெற்றவள் என்பதற்காக மதிப்புக் கொடுக்காமல், அவள் லேடீஸ் கிளப் பிரஸிடெண்-டானவுடன் புகழ்வதைப் போலாகும்.”

இந்த அறிமுகப் பேச்சின் மூலம் சேதுபதியின் உள்ளத்தில் நிரந்தரமான இடத்தைப் பிடித்துவிட்ட பார்வதியை அவர் வெறும் கல்லூரி பிரின்ஸிபாலாக மட்டும் மதிக்க வில்லை. அவளை ஓர் உயர்ந்த பீடத்தில் ஏற்றித் தம்முடைய அந்தஸ்து, கௌரவம், அறிவு, ஆற்றல் இவ்வளவுக்கும் ஈடு கொடுக்கக்கூடிய பெருமை வாய்ந்தவளாகக் கருதினார். அன்று பார்வதி அவரை விமான நிலையத்துக்குத் தேடிச் சென்று மூக்குக் கண்ணாடியைக் கொடுத்தபோது, ஏற்கெனவே அவளைப்பற்றி அவர் கொண்டிருந்த எண்ணம் மேலும் ஒரு படி உயர்ந்துவிட்டது. அவருடைய அந்த மதிப்பீட்டில் பார்வதி உயர்ந்தது மட்டுமல்ல, சேதுபதி தம்மைத்தாமே ஒரு படி தாழ்த்திக்கொண்டார்.

''மூக்குக் கண்ணாடியை மறந்து வந்துவிட்டீர்களே, இது ரொம்ப அவசியமல்லவா? வெளியூருக்குப் போகுமிடத்தில் இது இல்லை யென்றால், முக்கிய காரியம் கெட்டுப் போகுமே வேறு எதை மறந்தாலும் பரவாயில்லை. வேறொன்று உடனே வாங்கி விடலாம். மூக்குக் கண்ணாடியை நினைத்த நேரத்தில் வாங்கிவிட முடியாதே!'' என்று கூறி, அவள் அந்தக் கண்ணாடியை எடுத்து வெகு அலட்சியமாகக் கொடுத்தபோது அவள் முன் நான் எவ்வளவு சிறியவனாகி விட்டேன்? அவள் அந்த நேரத்தில் எவ்வளவு பொறுப்புடன், கண்ணியத்துடன் நடந்து கொண்டாள். நானோ இன்று இன்ஷூரன்ஸ் பற்றிய பேச்சு எழுந்தபோது அவள் இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கு நஷ்டம் என்று கூறிய தவறைச் சுட்டிக்காட்டி, அவள் குற்றத்தை எடுத்துக்காட்டி அவளைத் திருத்த முற்பட்டேன். அவள் அறியாமையைச் சுட்டிக் காட்டியதும், அவள் தவறைத் திருத்தியதும் சரியாயிருக்கலாம். ஆனால் அவளைத் தாழ்த்தி விட்ட குற்றம் என்னுடையதல்லவா? தெரியாமல் அவள் நஷ்டம் என்று கூறியபோது நான் சிரித்திருக்கக் கூடாதல்லவா? தம்முடைய குணத்தையும் அவளுடைய பண்பையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்ட சேதுபதியின் எண்ணத்தில் பார்வதி மேலும் உயர்ந்து காட்சி அளித்தாள். அவளுக்கு முன்னால் தான் மேலும் ஒரு படி தாழ்ந்து விட்ட தாகக் கருதினார்.

”இனி இம்மாதிரிக் குற்றத்தை ஒரு நாளும் செய்யமாட் டேன். யாரையும் குறை கூறி, அவர்கள் குற்றத்தை உணரச் செய்து, நம்மைக் காட்டிலும் அவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்தை உண்டாக்க மாட்டேன். குறையை நாசூக்காகச் சொல்லித் திருத்தவேண்டும். அதுதான் பண்பு. ஒருவருடைய குறையை எடுத்துக் கூறும்போது, அவர்களைவிட நாம் அறிவாளி என்ற அகம்பாவம் நம் உள்ளத்தில் ஏற்படக்கூடாது. நம்மைவிடச் சிறந்த அறிவாளிகள் இந்த உலகத்தில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் நாம் ஒரு சிறு துரும்பு...'' சேதுபதி ஒரு முடிவுக்கு வந்தார். அந்த முடிவில் அவருக்கு ஒரு நிம்மதி பிறந்தது. அப்படியே தூங்கிப்போனார்.
-------------
குருத்து பன்னிரண்டு


ஏக்கத்து வீட்டுப் பசு மாட்டின் கனிந்த குரல், காலை பத்திரிகை வந்து விழும் சலசலப்பு, பால் டிப்போ சைக்கிள் மணியோசை இவையாவும் பார்வதிக்கு விடியற்காலை வேளையில் வழக்கமாகக் கேட்டுப் பழக்கமாகிவிட்ட ஒலிகள்.

'இன்று இன்னும் அந்த ஒலிகளைக் கேட்க முடிய வில்லையே, ஏன்?' என்று யோசித்தவளாய்க் கைக்கடிகாரத் தைப் பார்த்துக் கொண்டாள். அதில் மணி ஐந்தரைதான் ஆகியிருந்தது.

'ஒரு வேளை இந்தக் கடிகாரம் மெதுவாக ஓடுகிறதோ?’ என்று எண்ணியவளாய், ”ராஜா! ராஜா!'' என்று அழைத் தாள்.

அவன் உறக்கத்தில் ஆழ்ந்து கிடந்தான். கீழே இறங்கிச் சென்று ஹாலில் மாட்டப்பட்டிருந்த அந்த பிரெஞ்சு நாட்டுக் கடிகாரத்தைப் பார்த்தபோது, அதுவும் ஐந்தரை மணியையே காட்டியது. அந்தக் கடிகாரத்தின் மீது அவளுக்கு அதிக நம்பிக்கை!

''மணி ஐந்தரைதான் ஆகிறதா?... அப்படியானால், நான் இன்று வழக்கத்தைக் காட்டிலும் சீக்கிரமே எழுந்து விட்டிருக்கிறேன்...” என்று தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டாள்.

உண்மையில், பார்வதி அன்று உறக்கத்தைவிட்டு எழுந் திருக்கவே இல்லை. இரவெல்லாம் தூங்கியும் தூங்காமலும் படுக்கையில் புரண்டவாறு சேதுபதியைப்பற்றி எண்ணமிட்டுக் கொண்டிருந்தவளுக்கு, 'எப்போது தூங்கினோம், எப்போது விழித்துக் கொண்டோம்?' என்ற உணர்வே துளியும் இல்லை.

படுக்கையினின்றும் வெகு சீக்கிரமே எழுந்துவிட்டவள், உள்ளத்தில் அமைதியோ உற்சாகமோ இன்றி இங்குமங்கும் உலாவிக் கொண்டிருந்தாள். புத்தகங்களை எடுத்துப் புரட்டினாள். பலகணியின் வழியாகக் கீழ்த்திசையில் நிகழ்ந்து கொண்டிருந்த விடியற்காலை ஜாலங்களைப் பார்க்கலானாள். எதிலும் மனம் லயிக்காமற் போகவே, கீழே இறங்கிச் சென்று குளிர்ந்த நீரில் உடல் குளிரக் குளித்துப் பின்னர், உடை மாற்றிக் கொண்டு கண்ணாடியின் முன் சென்று தன் உருவத்தையே சற்றுநேரம் பார்த்துக்கொண்டாள். கூந்தலை அழகாகச் சீவி, கொண்டை போட்டு, ஊசிகளால் அவற்றைக் கட்டுப்படுத்திய பின்னர், நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டு ஒருமுறை தலையைச் சாய்த்துப் பார்த்தவளாய், ''அப்படி ஒன்றும் வயதாகி விடவில்லை நாற்பதுக்கும் ஒன்றிரண்டு வயது குறைவாகவேதான் மதிப்பிடலாம் என்று சமாதானம் சொல்வது போல் எண்ணிக் கொண் டாள்.

மேஜை மீது கிடந்த மூக்குக் கண்ணாடியை எடுத்துச் சீலையின் தலைப்பால் அதைத் துடைத்து அணிந்துகொண்ட பிறகு மீண்டும் ஒரு முறை, நிலைக்கண்ணாடியின் முன் போய் நின்று தன் உருவத்தைப் பார்த்தாள். இப்போது இரண்டு வயது அதிகமாகி விட்டது போல் தோன்றியது.

"பரவாயில்லை; வயது சற்று அதிகமாகத் தோன்றினாலும், இந்தக் கண்ணாடி அணிந்த பிறகே முகத்தில் அறிவின் களை வீசுகிறது'' என்று தனக்குத்தானே திருப்தி அடைந்தாள்.

அடுத்த கணமே அவளுக்கு இன்னொரு எண்ணமும் உண்டாயிற்று.

'வயதைப்பற்றியோ, வசீகரத்தைப் பற்றியோ, இத்தனைக் காலமும் ஏற்படாத கவலைகள் இப்போது மட்டும் தோன்றுவானேன்? என் உள்ளத்தில் எழுந்துள்ள பலவீனமான எண்ணங்களுக்கு இதுவே அறிகுறியாக இருக்கலாமோ?’ என்று யோசித்துப் பார்த்தாள்.
இதற்கெல்லாம் என்ன காரணம்? யார் காரணம்? ஆம்; சேதுபதியேதான். அவருடைய அறிவை, உறவை, பரிவை, அன்பு மொழிகளை என் உள்ளம் நாடுகிறது.

என் எண்ணத்தை வெளிப்படையாகக் கூறவும் முடிய வில்லை; மனத்திற்குள்ளே மறைத்து வைக்கவும் இயலவில்லை. சோடாபுட்டியின் நெஞ்சுக்குள் அகப்பட்டுத் தத்தளிக்கும் கண்ணாடிக் குண்டு போல், சேதுபதி பற்றிய எண்ணம் என் நெஞ்சுக்குள் புகுந்து அலைந்து கொண்டிருக்கிறது.

’என் உள்ளத்தை, உள்ளத்தில் புகுந்துகொண்டிருக்கும் இரகசியத்தை அவர் புரிந்து கொண்டிருக்கிறாரா? புரிந்து கொண்டுதான் பேசாமல் மௌனம் சாதிக்கிறாரா? நான் படும் வேதனைகளை அவர் அறிந்து கொண்டிருக்கிறாரா? அல்லது அறிந்து கொண்டுதான் அறியாதவர் போல் நடித் துக் கொண்டிருக்கிறாரா?’

'அவருக்கு என்னிடம் அன்பு இருக்கிறது, அவர் என்னை நேசிக்கிறார். என் உள்ளத்தைப் புரிந்து கொண்டிருக்கிறார்! ஆமாம்; அதனாலேயே மாலை வேளைகளில் நான் அவர் வீட்டுக்குச் செல்லும் நேரங்களில் எனக்காகக் காத்திருக்கிறார். பாரதியே சொல்கிறாளே, ''கொஞ்ச நாட்களாகத் தான் அப்பா மாலை நேரங்களில் வீட்டில் தங்கியிருக்கிறார் என்று. அதற்கு என்ன காரணம்?' எப்படி யெல்லாமோ பற்பல கோணங்களில் சிந்தித்துப் பார்த்தும், பார்வதியால், நிச்சயமான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. சேதுபதி உண்மையிலேயே அவளை நேசிக்கிறாரா இல்லையா என்பதை அவளால் உறுதிப்படுத்த முடியவில்லை.

தன் எண்ணத்தை, ஆசையை வெளிப்படுத்த முடியாத நிலைமை ஒரு புறம், அவராகவே தன் நிலையைப் புரிந்து கொண்டும் மௌனம் சாதிக்கிறாரா என்ற சந்தேகம் இன்னொரு புறம். அவருக்குத் தன்னிடம் அன்பு இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொண்டுவிட வேண்டுமென்ற துடிப்போடு இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தாள் பார்வதி. அப்போது மணி ஐந்தரைகூட ஆகவில்லை.

''இந்த நிலையை நீடிக்க விடக்கூடாது. மனத்திற்குள்ளாகவே வைத்துப் புழுங்கவும் கூடாது. இன்று இதற்கு ஒரு முடிவு கண்டுவிட வேண்டும், ஒரு சிறு சோதனையின் மூலம் அவர் எண்ணத்தைப் புரிந்து கொண்டு விட வேண்டும்'' என்று தீர்மானித்துக் கொண்டான்.

மணி ஒன்பதரைக்குள் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, வாசல் ஹாலுக்கு வந்து நின்றாள் பார்வதி. அங்கே பகவான் பரமஹம்சரும், தேவியாரும் சாந்தமாக, அமைதியாகக் காட்சி அளித்தனர்.

’தேவி! என் மனத்துக்கு அமைதியைக் கொடு' என்று வேண்டிக் கொண்டவளாய், அந்த இரு உருவங்களுக்கும் தலை குனிந்து வணங்கிவிட்டு காரில் போய் ஏறிக் கொண்டாள்.

கார் வாசல் காம்பவுண்டைத் தாண்டியபோது செவிட்டுப் பெருமாள் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினான். கார் கல்லூரிக் காம்பவுண்ட் சுவரை நெருங்கித் திரும்பிய நேரத்தில் மிஸஸ் அகாதா குடையைப் பிடித்தவண்ணம் காலை விந்தி விந்தி நடந்து வந்து கொண்டிருந்தாள்.

'குட்மார்னிங் மேடம்' என்று அவள் சற்று உடலைத் தாழ்த்திக் கூறியபோது, பார்வதியும் பதில் வணக்கம் தெரியவித்தாள். அப்போது மணி பத்தடிக்க ஐந்து நிமிஷம்
போர்ட்டிகோவில் போய் கார் நின்றது. அட்டெண்டர் ஆறுமுகம் வழக்கம்போல் காரின் கதவைத் திறக்க ஓடி வந்தான்.

பிரின்ஸிபால் பார்வதி காரைவிட்டு இறங்கித் தன்னுடைய அறைக்குள் போய் அமர்ந்து கொண்டாள். மின்சார விசிறி சுழலத் தொடங்கியது.

மேஜையின் மீது ஏதேதோ பைல்கள் அவள் கையெழுத் துக்காகக் காத்துக் கிடந்தன. அவள் அவற்றைப் படித் தாள். சிலவற்றைப் புரிந்து கொண்டும், சிலவற்றைப் புரிந்து கொள்ளாமலும் கையெழுத்துகளை ஏனோதானோ வென்று போட்டுத் தீர்த்தாள்.

இரண்டில் ஒன்று தெரிந்து கொண்டு விட வேண்டும் என்ற துடிப்பில் உள்ளம் ஊசலாடிக் கொண்டிருந்தது.

அவள் அறிவுக்குப் புலப்பட்ட ஒரே வழி அந்தச் சோதனைதான். அவருக்கு உண்மையில் தன்னிடம் அன்பு இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொண்டு விடுவதற்கு அது ஒன்றுதான் வழி.

"இனி மாலை வேலைகளில் தங்கள் பங்களாவுக்கு என்னால் வரமுடியாது. அந்த நேரத்தில் எனக்குக் கல்லூரியில் நிறையப் பணிகள் இருப்பதால் பாரதியை இன்று முதல் என் வீட்டுக்கே அழைத்துச் சென்று டியூஷன் சொல்லித்தரப் போகிறேன்” என்று ஒரு கடிதம் எழுதி ஆறுமுகத்திடம் சேதுபதியின் வீட்டிற்கு அதைக் கொடுத்தனுப்புவது என்பதே அதன் முடிவு.

காகிதத்தை எடுத்து மிகச் சுருக்கமாகக் கடிதத்தை எழுதி முடித்தவள், ஒரு முறை அதைத் திரும்பப் படித்தும் பார்த்தாள்.
அந்தக் கணம், அந்தக் கடிதத்தை அவன் படித்துக் கொண்டிருந்த சமயம் அவள் தன்னையே சேதுபதியாகவே எண்ணிப் படிக்கும்போது, அவர் என்ன நினைப்பார் என் பதைக் கற்பனையில் ஊகித்துப் பார்த்தாள்.

'பாவம்! திடீரென்று இந்தக் கடிதத்தைப் படித்துப் பார்க்கும்போது அவருக்கு மிகவும் ஏமாற்றமாயிருக்கும்! என் மீது நிஜமாகவே அவருக்கு அன்பு இருந்தால், இனி என்னைச் சந்திக்க முடியாதே என்பதை எண்ணி வருத்தப் படுவார். என்னைக் காண்பதிலும் என்னுடன் உரையாடிக் கொண்டிருப்பதிலும் விருப்பம் இருந்தால், அதற்கு இனி சந்தர்ப்பம் இல்லாமற் போய்விடுமே என்பதை நினைத்து ஏங்கிப் போவார். சாக்குப் போக்குச் சொல்லி டியூஷனைத் தம் வீட்டிலேயே வைத்துக் கொள்ளும்படி பாரதியிடம் சொல்லி அனுப்புவார். அல்லது தம் கையாலேயே கடிதம் எழுதி அனுப்புவார். அப்போது, அந்தக் கடிதத்தைப் படித் துப் பார்க்கும்போது என் உள்ளம் பரவசப்படும். சேதுபதி தன்னிடம் கொண்டுள்ள அந்தரங்கமான ஆசையை அறிந்து பெருமகிழ்ச்சி அடைவேன்.'

'ஆறுமுகம்!' என்று மணியடித்து அழைத்த பார்வதியின் குரலில் ஏதோ ஒரு புதுமை தொனித்தது. ஆறுமுகம் உடனே எதிரில் வந்து நின்றான்.

''இந்தா, இந்தக் கடிதத்தைக் கொண்டுபோய் சேதுபதி யின் வீட்டில் கொடுத்துவிட்டு வா'' என்று உறையிட்டு முடிய அக்கடிதத்தை அவனிடம் கொடுத்தனுப்பினாள்.

ஆறுமுகம் திரும்பி வந்தபோது, மணி பன்னிரண்டு. ''என்ன ஆறுமுகம் கடிதத்தைக் கொடுத்துவிட்டாயா?... சேதுபதி படித்துப் பார்த்தாரா?''... என்று ஆவல் தூண்டும் பரபரப்போடு விசாரித்தாள் பார்வதி.

"அவர் வீட்டிலே இல்லீங்க. பத்து மணிக்கே ஆபீசுக்குப் போய்விட்டாராம். அந்த வீட்டிலே ஒரு அம்மா இருந்தாங்க. அவங்ககிட்டே கொடுத்துட்டு வந்துட்டேன்'' என்றான் அவன்.

பார்வதியின் எண்ணத்தைப் புரிந்து கொள்ள முடியா மல் தவித்துக் கொண்டிருந்த சேதுபதிக்கு அலுவலகத்தில் எந்த வேலையும் ஓடவில்லை. பார்வதியைச் சந்திக்கும் நேரங்களில் நேரில் கேட்டுவிடுவது என்று எத்தனையோ முறை முடிவு செய்தும் முடியாமற் போய்விட்டது. நேரில் காணும்போது என்ன காரணத்தாலோ பேச முடிவதில்லை. எப்படிப் பேசுவது? என்னவென்று பேசுவது?

தன்மீது பார்வதிக்கு உண்மையிலேயே ஆசையிருக்கு மானால், அதை அறிந்துகொள்வதற்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. இன்று முதல், மாலை நேரங்களில் தன்னால் வீட்டுக்கு வரமுடியாதென்றும் புதிய தொழிற்சாலை ஒன்று தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதால் இன்னும் சில மாதங்களுக்குத் தனக்கு ஓய்வே இருக்காதென்றும் பார்வதியிடம் கூறவேண்டும். அப்போது அவள் மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாவாள். தன்னுடன் இனி பேசமுடியாது. தன்னைச் சந்திக்க முடியாது. என்று அறிய நேரும்போது மிகவும் வருத்தப்படுவாள். டெலிபோனில் இதை நான் கூறும்போது அவள் ஏதேனும் பதில் கூறுவாள். அப்போது அவள் குரல் உற்சாகம் இழந்து தொனிக்கும். அந்தக் குரலில் ஏமாற்றமும், வருத்தமும் கலந்து பிரதிபலிக்கும். அதிலிருந்து அவள் என் மீது கொண்டுள்ள ஆசையும் அக்கறையும் புலப்படும்.

இந்த முடிவுடன் டெலிபோனைக் கையில் எடுத்து பிரின்ஸிபால் பார்வதியுடன் பேசத் தொடங்கினார்.

’ஹல்லோ !' சேதுபதியின் கம்பீரமான குரல் டெலிபோன் குழலில் ஒலித்தபோது பார்வதியின் உடல் ஒருமுறை சிலிர்த்தது.

"சேதுபதி பேசுகிறேன்'' என்று அவர் மேலும் தொடர்ந்தபோது, யாரை நினைத்து நினைத்து இதுகாறும் உருகிக் கொண்டிருந்தாளோ, யாருக்காக என்னென்ன எண்ணமிட்டுக் கொண்டிருந்தாளோ, யாருடைய குரலைக் கேட்க ஏங்கிக் கொண்டிருந்தாளோ, யாருடன் உரையாட ஆசைப்பட்டுக் கொண்டிருந்தாளோ, யாருடைய அந்தரங்கத்தை அறியக் காத்துக் கொண்டிருந்தாளோ அந்தக் குரலைக் கேட்டபோது, அவளுடைய உள்ளம் படபடவென்று அடித்துக்கொண்டது. தான் எழுதிய கடிதத்தைப் பார்த்து வீட்டுத்தான், அதைப் பார்க்காதவர்போல் டெலிபோன் செய்திருக்கிறார் என்று எண்ணியவளாய்த் தன் உணர்ச் சியைக் கட்டுப்படுத்திக் கொண்டு, மிக அமைதியாக, ”நான் தான் பார்வதி பேசுகிறேன். வணக்கம்" என்றாள்.

'வணக்கம்' என்று பதிலுக்குக் கூறிய சேதுபதி. "ஒன்று மில்லை; இன்றுமுதல் எனக்கு அதிக வேலை இருக்கிறது. புதிய தொழிற்சாலை ஒன்று தொடங்கப் போகிறேன். ஆகையால், மாலை வேளைகளில் இனி ஓய்வு இருக்காது. வீட்டுக்குத் திரும்பி வர ஒன்பதாகிவிடும். பாரதியைக் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுடையது. இதைச் சொல்வதற்குத்தான் கூப்பிட்டேன்.”

"அப்படியா! ஆகட்டும்” பார்வதியின் குரலிலிருந்து சேதுபதியால் எதையும் ஊகிக்க முடியவில்லை.

சேதுபதி அன்று மாலை வீட்டுக்குத் திரும்பி வந்தபோது மேஜையின் மீது பார்வதியின் கடிதம் அவருக்காகக் காத்திருந்தது. அதை எடுத்துப் படித்துப் பார்த்தவர், 'பார்வதி என்னிடம் டெலிபோனில் பேசிய பிறகே, எனக்கு இக்கடிதத்தை எழுதியிருக்க வேண்டும். என்னிடம் அவளுக்குள்ள அன்பு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே டெலிபோனில் பேசுவதற்கு முன்பே கடிதம் எழுதியிருப்பது போல் எழுதியிருக்கிறாள் என்று எண்ணிக் கொண்டார்.

சேதுபதி தன் கடிதத்தைக் கண்டுவிட்டே டெலிபோனில் பேசியிருக்கிறார் என்று பார்வதி எண்ணிக் கொண்டதைப் போலவே, பார்வதியிடம் தான் டெலிபோனில் பேசிய பிறகே அவள் கடிதம் எழுதியிருக்கிறாள் என்று சேதுபதி எண்ணிக் கொண்டார்.

அன்று மாலை கல்லூரி விட்டதும், பார்வதி சேதுபதியின் வீட்டுக்குச் செல்லவில்லை.

''பாரதி! இன்று முதல் உனக்கு என் வீட்டில்தான் டியூ ஷன். ஏறிக்கொள் வண்டியில்” என்றாள்.

ஒன்றுமே அறியாத பாரதி, மகிழ்ச்சியோடு காரில் ஏறி அமர்ந்து கொண்டாள். பிரின்ஸிபால் வீட்டில் தான் இனி டியூஷன் என்னும் சேதி பாரதிக்கு அளவிலாத மகிழ்ச்சியை அளித்தது.

காரணம், ராஜாவை அங்கே தினமும் சந்திக்கலாம் அல்லவா?

அன்று மணி ஏழரை வரை டியூஷன் நடந்தது. அந்த நேரத்தில் ராஜா குறுக்கும் நெடுக்குமாகப் பலமுறை அலைந்து கொண்டிருந்தான்.

பார்வதியின் மனத்தில் அமைதியில்லை. 'அவசரப்பட்டு சேதுபதிக்குக் கடிதம் எழுதிவிட்டேனே ; தினம் தினம் அவரைச் சந்திப்பதில், அவருடன் பேசுவதில், அடைந்த இன்பமும் ஆறுதலும் இனிக் கிட்டாதே! என்ன அசட்டுத் தனம்! எதற்காகக் கடிதம் எழுதினேன்? அவரை இனி எந்தக் காரணத்தை வைத்துக்கொண்டு சந்திப்பேன்? சேதுபதி தன்னைவிட்டே நழுவிச் சென்றுவிட்டது போலவும் வெகு தூரத்துக்கு அப்பால், இன்னும் அப்பால் அடிவானம் பூமியைத் தொட்டுக் கொண்டிருக்கும் எல்லை விரிப்பில் ஒரு சிறு புள்ளியைப்போல் அவர் நகர்ந்து கொண்டிருப்பது போலவும் தோன்றியது பார்வதிக்கு.

’டெலிபோனில் எதற்காகப் பேசினேன்? தினம் தினம் அவளைச் சந்தித்து உரையாடி மகிழும் இன்பத்தை நழுவ விட்டுவிட்டேனே! என்ன அசட்டுத்தனம்! தம் செய்கையை எண்ணித் தாமே வருத்தப்பட்ட சேதுபதிக்குப் பார்வதி தன்னைவிட்டு நழுவி விட்டது போலவும், தன்னால் நெருங்க முடியாத தொலைவில், அதற்கும் அப்பால் வான முகட்டின் எல்லையில் ஒரு சிறு புள்ளியாக மாறி நிற்பதைப் போலவும் தோன்றியது.

மணி எட்டு இருக்கும்.

"பாரதி நீ வீட்டுக்குப் போகலாம். எனக்கு உடம்பு சரியில்லை. மற்ற பாடங்களை நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்... ராஜா! பாரதியை அவள் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு வா” என்றாள் பார்வதி.

அந்த வார்த்தையை எதிர்பார்த்துக் காத்திருந்த ராஜாவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. சினிமா டியூன் ஒன்றைச் சீட்டியடித்துத் தன் உற்சாகத்தை வெளிப்படுத்த எண்ணினான். ஆயினும் உற்சாகத்தை அடக்கிக்கொண்டு, ஓடிப்போய்க் காரின் கதவைத் திறந்து பாரதியை அதில் ஏறிக்கொள்ளச் சொன்னான்.

கார் நகர்ந்து, வாசல் காம்பவுண்டைத் தாண்டி வலது பக்கம் திரும்பியது. அந்தப் பக்கம் தான் சேதுபதியின் வீடு இருந்தது. கடற்கரை இருந்த திசையும் அதுதான்.
------------
குருத்து பதின்மூன்று


உயரமான மேடை. அதன் மீது ஒரு பெரிய பாறாங்கல், நாலைந்து தொழிலாளர்கள் அந்தப் பாறையைக் கடப்பாரையால் கீழே தள்ளுவதற்குத் தங்கள் பலம் கொண்ட மட்டும் முயன்று பார்க்கிறார்கள். தொழிலாளர்கள். நரம்புகள் புடைக்கப் பாறையைத் தள்ளும் காட்சியைக் கற்சிலையாக வடித்துக் கடற்கரையில் வைத்துள்ளான் சிற்பி ஒருவன்.

பாரதியைக் காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ராஜா வுக்கு அவளை உடனே வீட்டில் கொண்டு விட்டுவிட மனமில்லாததால், சற்று நேரம் கடற்கரையிலேயே சுற்றிக் கொண்டிருந்தான். எங்கெங்கோ சுற்றிய பின்னர் கடைசியாக அந்தக் கற்சிலையின் அருகில் போய்க் காரை நிறுத்திவிட்டு ”பாரதி! இந்தச் சிலை எவ்வளவு அழகாயிருக்கிறது. பார்த் தாயா?” என்று கேட்டான்.

”எனக்கு இதைப் பார்க்கவே சங்கடமாயிருக்கிறது” என்றாள் பாரதி.

"ஏன்?”

''அந்த மேடைமீது இன்னும் கூட இரண்டு தொழிலாளர்கள் நிற்பதற்கு இடமிருக்கிறதே, அப்படியிருக்கப் பாறையை ஏழெட்டுப்போர் தள்ளுவது போல் செய்திருக்கலாமே'' என்றாள் பாரதி.

”செய்திருக்கலாம்; ஏழெட்டுப்பேர் சேர்ந்து தள்ளினால் பாறை கீழே விழுந்துவிடுமே!'' என்றான் ராஜா.

பாரதி சிரித்துக்கொண்டே, "மிஸ்டர் டிரைவர்! நேரமாகிறது. காரை எடுங்கள். வீட்டுக்குப் போகவேண்டும்'' என்றாள்.

''மிஸஸ் டிரைவர்! இப்படி முன் சீட்டில் வந்து அமருங்கள். இல்லையென்றால் கார் இந்த இடத்தைவிட்டு நகராது'' என்றான் ராஜா.

”முடியாது; நம் இருவருக்கும் மணமாகும்வரை நான் முன் சீட்டில் உட்காரமாட்டேன்'' என்றான் பாரதி.

நான் பின் சீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டால் கார் ஒட்ட முடியாதே'' என்றான் ராஜா.

பாரதி மீண்டும் சிரித்துக்கொண்டே, "மிஸ்டர் டிரைவர் ! காரை எடுக்கப் போகிறீர்களா, இல்லையா?' என்று அதிகாரம் செய்தாள்.

”மேடம்! நீங்கள் முன் சீட்டில் வந்து உட்காரப் போகிறீர்களா, இல்லையா?' என்று பாரதியின் காதைப் பிடித்து முன் வீட்டுக்கு இழுத்துச் சென்றான் ராஜா.

பாரதிக்கு ராஜாவின் அருகில் அமர உள்ளுற ஆசைதான் என்றாலும் மேலுக்கு விருப்பமில்லாதவள் போல் முகத்தை வைத்துக்கொண்டாள்.

காரை மெதுவாகச் செலுத்தத் தொடங்கினான் ராஜா. இருவருக்கும் இடையே நிலவிய மெளனத்தைக் கலைப்பது போல், 'என்ஜினீரிங் படிப்பு முடிந்ததும் என்ன செய்யப் போகிறீர்கள் ராஜா?'' என்று கேட்டாள் பாரதி.

"என்ஜினீராகப் போகிறேன், ஏன், எதற்காக” என்றான் ராஜா.


"அப்படியா! நான் நினைத்தேன்... என்ஜினீரிங் படித்து விட்டு வக்கீல் தொழில் செய்வார்கள் என்று என்றாள்” பாரதி.

”பி.எஸ்ஸி. படித்து முடித்ததும் நீ என்ன செய்யப் போகிறாய்?' என்று ராஜா கேட்டான்.

"யாரோ ஒருவரை கார் டிரைவாக அமர்த்திக்கொண்டு அந்த டிரைவரின் மிஸஸ் ஆகிவிடப் போகிறேன்'' என்று கூறிக் 'கல கல' வெனச் சிரித்தாள் பாரதி.

"அந்த யாராவது ஒருவர் யாரோ?'' என்று ஆவலோடு கேட்டான் ராஜா.

”கரா... கஜா!'' என்றாள் பாரதி.

“கச... கபா... கஷ்!'' என்றான் ராஜா. கார் எங்கெங்கோ வளைந்து திரும்பிக் கடைசியில் பாரதியின் வீட்டை நெருங்கிய சமயம் ராஜா காரை வேகமாகச் செலுத்த முற்பட்டான்.

அதைக்கண்ட பாரதி, "மெதுவாகப் போங்கள். வீடு நெருங்கிவிட்டதே, தெரிய-வில்லையா?' என்றாள்.

''தெரிகிறது; அதனால் தான் வேகமாகப் போகிறேன். இன்னொரு முறை சுற்றிவிட்டு வரலாமே'' என்றான் ராஜா,

"ஊஹும். கூடாது; நாம் இருவரும் இப்படியே சுற்றிக் கொண்டிருந்தால் கடைசியில் என் அப்பாவுக்கும் உங்கள் அத்தைக்கும் விஷயம் தெரிந்துவிடும்'' என்றாள் பாரதி.

"தெரியட்டுமே; நம் திருமணத்தைப்பற்றி அவர்களிடம் கூறுவதற்கு நம் இரண்டு பேருக்குமே தைரியம் கிடையாது. அவர்களாகவாவது தெரிந்து கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாமே!'' என்றான் ராஜா.

பாரதி வீட்டுக்குத் திரும்பியபோது மணி ஒன்பதாகி விட்டது. தம்முடைய அறையில் தனியாக உட்கார்ந்து சிந்தனையில் ஈடுபட்டிருந்த சேதுபதிக்கு நேரம் போனதே தெரியவில்லை. சேதுபதியின் சகோதரி காமாட்சி அவரைச் சாப்பிட அழைத்தபோது, ''பாரதி டியூஷனிலிருந்து வந்து விடட்டுமே!'' என்றார்.

சேதுபதியின் கவலை தோய்ந்த முகத்தைக் கவனித்த காமாட்சி, அண்ணாவுக்கு என்ன கவலை? மலையே புரண்டாலும் நிலை கலங்க மாட்டாரே! அவரா இப்படிக் கவலையே உருவாக உட்கார்ந்திருக்கிறார்?' என்று வேதனைப்பட்டாள்.

"என்ன அண்ணா உனக்கு? ஏன் ஒரு மாதிரியாக உட்கார்ந்திருக்கிறாய்?'' என்று காமாட்சி கேட்டதற்கு, ''ஒன்றுமில்லையே, ஏதோ யோசித்துக் கொண்டிருக்கிறேன்'' என்று சகஜமாகப் பதில் கூறி அனுப்பிவிட்டார் அவர்.

சற்று நேரத்துக்கெல்லாம் பாரதியும் வந்துவிட்டாள். ’அப்பா என்ன சொல்வாரோ?' என்ற திகிலுடன் உள்ளே வந்து கொண்டிருந்த பாரதியைப் பார்த்துச் சேதுபதி, "என்னம்மா இவ்வளவு நேரம்? டியூஷனுக்கு நேரமாகி விட்டதா! வா சாப்பிடலாம்'' என்று அழைத்ததும் தான் பாரதிக்கு நிம்மதி ஏற்பட்டது.

”இதோ வந்துவிட்டேன் அப்பா!'' என்று குதித்துக் கொண்டே ஓடினாள். பாரதியும் சேதுபதியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சேதுபதி எதுவுமே பேசவில்லை. காமாட்சி கேட்ட கேள்வி அவர் உள்ளத்தை உறுத்திக் கொண்டிருந்தது. "என்ன அண்ணா உனக்கு?'' என்று கேட்டபோது ’ஒன்றுமில்லை' என்று அவளிடம் மழுப்பி விட்டேன். ஆனால் உண்மையாகவே எனக்கு ஒன்றுமில்லையா? என் உள்ளத்தில் உறுத்திக் கொண்டிருக்கும் எண்ணத்தை அவளிடம் விளையாட்டாகச் சொல்லிப் பார்க்கலாமே'' என்று தோன்றியது.

மெளனமாகவே சாப்பாட்டை முடித்துக்கொண்டு ஹாலில் போய் அமர்ந்தவர் சாவகாசமாகத் தட்டிலிருந்த பாக்கையும் வெற்றிலையையும் எடுத்துப் போட்டபடியே 'காமாட்சி!...' என்று அழைத்தார்.

காமாட்சி எதிரில் வந்து நின்றதும், ”இப்படி உட்கார்ந்து கொள்ள சற்று நேரம் உன்னிடம் தாமாஷாகப் பேசிக் கொண்டிருக்கப் போகிறேன்...” என்று எதிரிலிருந்த சோபாவைச் சுட்டிக் காட்டினார்.

சேதுபதியின் பேச்சும் போக்கும் காமாட்சிக்கு வியப்பை அளித்தன. 'அண்ணாவா இப்படிப் பேசுகிறார்?' என்று எண்ணிக் கொண்டவள் ”தமாஷாக்கும் வேடிக்கைக்கும் கூட உனக்கு அவகாசம் இருக்கிறதா, அண்ணா !'' என்று கேட்டபடியே நாற்காலியில் அமர்ந்தாள்.

சோபாவில் உட்கார்ந்திருந்த காமாட்சியைப் பார்த்து சேதுபதி திடீரென்று கேட்டார்.

'காமாட்சி! இப்போது எனக்கு என்ன வயசிருக்கும்?"

''என்னைவிட நாலு வயசுகூட இருக்கும். ஏன் அண்ணா திடீரென்று இப்போது வயசைப்பற்றி என்ன கவலை வந்து விட்டது உனக்கு?”

”ஒன்றுமில்லை; சும்மாத்தான் கேட்டேன். இப்போது உனக்கு என்ன வயசு?”

''நாற்பத்தெட்டு.”

"உன்னைவிட நாலு வயசு கூட என்றால்....... எனக்கு இப்போ ஐம்பத்திரண்டு தானே?”

''ஆமாம்...”

''எனக்கு ரொம்ப வயசாகிவிட்டது. இல்லையா?”

@சீ சீ ! இது ஒரு வயசா, என்ன? அறுபதாம் கலியாணத்துக்கே இன்னும் ஏழு வருஷம் இருக்கே?....''

''சரி, காமாட்சி! இப்போது நான் கலியாணம் செய்து கொள்கிறேன் என்று வைத்துக்கொள். நீ என்ன செய்வே?”

காமாட்சி சிரித்துக்கொண்டே, "உனக்கு மனைவியாக வருகிறவளை அண்ணி ' என்று கூப்பிடுவேன்'' என்றாள்.

காமாட்சியின் பதில் சேதுபதிக்குச் சற்று நிம்மதி அளித்தது. விளையாட்டாகக் கேட்பது போலவே தன் உள்ளத்திலுள்ள சந்தேகங்களை யெல்லாம் ஒவ்வொன்றாகக் கேட்கலானார்.

"ம்... சரி ; நீ அண்ணின்னு கூப்பிடுவே, பாரதி என்ன செய்வாள்?”
"அம்மா என்று கூப்பிடுவாள்.”

சேதுபதி சிரித்தார். சிரித்துக்கொண்டே, ”என் கேள்வி யெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது இல்லையா, உனக்கு!” என்று கேட்டார்.

"வேடிக்கையாகத்தானே நீ கேட்கிறாய்? என்றாள் காமாட்சி.

”நீ எப்படி நினைக்கிறே? நிஜமாகவே கேட்பதாக எண்ணிவிட்டாயா? அதுசரி, இன்னொரு முக்கியமான கேள்வியையும் கேட்டு விடுகிறேன். இப்போது நான் கல்யாணம் செய்துகொண்டால் உலகம் அதைப்பற்றி என்ன நினைக்கும்?''

''ஒன்றும் நினைக்காது கை கொட்டிச் சிரிக்கும்; அவ்வளவுதான் : பாரதி குழந்தையாயிருக்கும்போதே நான் படித்துப் படித்துச் சொன்னேன். அப்போது நீ கேட்கவில்லை. சரஸ்வதியை மறக்க முடியாது. அவளுடைய ஸ்தானத்தில் இன்னொருத்திக்கு இடமளிக்க மாட்டேன் என்று சீறி விழுந்தாய். இப்போது இத்தனை வயதான பிறகு, திருமணத்தைப் பற்றி நீயாகவே பேசுகிறாய். உலகம் என்ன நினைக்கும் என்று கேட்கிறாய். விளையாட்டாகக் கேட்பதாகச் சொல்கிறாய். உலகம் என்ன நினைக்கும் தெரியுமா? ’குடுகுடு கிழவருக்குக் கலியாணம் டும் டும் கொட்டித் தாலி கட்டினார்’ என்று கேலி செய்யும்.”

"காமாட்சி! இந்த உலகத்தையே எதிர்த்துத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று வைத்துக்கொள். அப்போது?....”

”செய்து கொள்ளலாம்; ஆனால், நீ இந்த உலகத்தில் வாழவேண்டுமே...''

இதைக் கேட்ட சேதுபதி 'ஓ' என்று எக்காளமிட்டுச் சிரித்தார், சிரித்துக்கொண்டே "அசடே! சுத்தப் பயித்தி யமாயிருக்கிறாயே! நான் விளையாட்டாகச் சொன்னதை யெல்லாம் உண்மையென்று நம்பிவிட்டாயா? பாரதிக்குக் கலியாணம் செய்யவேண்டிய வயசிலே நான் திருமணம் செய்து கொள்வேனா? நிஜமாகவே நம்பிவிட்டாயா?” சேதுபதி கூறியது உண்மைதான். அந்த நிஜத்தை வாழ்க்கையோடு விளையாடிப் பார்க்க எண்ணினார். அந்த எண்ணத்தைத்தான் சகோதரியிடம் வேடிக்கையாகக் கூறிப் பார்த்தார். காமாட்சியின் பதில் அவருக்கு வேதனையை அளிக்கவே, தன் வார்த்தைகளை வேடிக்கை என்று கூறி மழுப்பி விட்டு அந்த இடத்தை விட்டு எழுந்து போய்விட்டார்.

படுக்கையில் போய் சாய்ந்து கொண்டவருக்கு வெகு நேரம் தூக்கம் வரவில்லை. இரண்டு கேள்விகள் அவர் உள்ளத்தில் புகுந்து மாறி மாறிக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தன. ஒவ்வொரு குரலும் தனித் தனியாகப் பேசும் போது அதனதன் கட்சியை வலிவாக வாதாடியது!

”உலகத்தை எதிர்த்துத் தைரியமாக மணம் புரிந்து கொள்! துணிந்து நிற்பதுதான் ஆண்மைத்தனம்” என்றது ஒரு குரல்.

”உலகத்துக்குத் தாழ்ந்துப் போய்விடும். அது தான் அடக்கம். அப்போதுதான் உலகோடு ஒட்டி வாழமுடியும்” என்றது இன்னொரு குரல்.

இரு குரல்களும் மாறி மாறி எழுந்து முழுக் சக்தியுடன் அவருடன் போர் புரிந்தன. இரு எண்ணங்களுமே சரி சமமான பலத்தில் எதிர்த்து நின்றதால், அவற்றில் எது சரி எது தப்பு என்பதை அவரால் முடிவு கட்ட முடியவில்லை. நேரம் போய்க்கொண்டிருந்தது. கடைசியில் எந்த முடிவுக்கு வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்த சேது பதியை உறக்கம் ஆட்கொண்டது.

கல்லூரி அலுவலக அறையில் உட்கார்ந்திருந்த பிரின்ஸிபால் பார்வதி, அன்று வந்த கடிதங்களைப் படித்துக்கொண்டிருந்தாள். அவற்றில் ஒன்று மீனாவைப் பற்றியது. ஹாஸ்டலில் தங்கி பி. ஏ. இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருத்தியின் பெயர்தான் அது. கல்லூரியிலேயே மிக அழகி என்று பெயரெடுத்தவள் அவள். ஆடம்பரமான ஆடை, பகட்டான ஆபரணங்கள் ஏதுமின்றியே எளிமையான உடையணிந்து காண்போரைக் கவர்ந்துவிடும் வசீகரக் கவர்ச்சி அவளிடமிருந்தது. இடைவேளையிலோ அல்லது வேறு வேளையிலோ கல்லூரி மாணவிகள் அத்தனை பேரும் தினமும் அவளை ஒரு முறை பார்க்காமல் போக மாட்டார்கள். அவள் ஆடை அலங்காரத்தைப் பற்றியும் தினுசு தினுசாகப் போட்டுக் கொள்ளும் கொண்டைகளைப் பற்றியும் பேசாமல் இருக்கமாட்டார்கள்.

நாகரிகம் என்ற பெயரில் கூந்தலைக் கந்தரித்துக் கொண்டும், குதிரைவால் முடி போட்டுக்கொண்டும் அலங்கோலமாகச் சிங்காரித்துக் கொண்டும் வரும் மாணவிகளைப் பார்வதிக்குக் கட்டோடு பிடிக்காது. அத்தகைய மாணவிகளை அழைத்துக் கண்டிக்கவும் தவற மாட்டாள். ஆயினும் பார்வதிக்கு மீனாவின் அடக்கமான ஆடை அலங்காரத்தில் குற்றம் காண முடியவில்லை.

டென்னிஸ் முதலிய விளையாட்டுப் போட்டிகளில் பல கல்லூரி மாணவ மாணவிகளை வென்று சாரதாமணிக் கல்லூரிக்குப் பெருமையும் புகழும் தேடித் தந்துள்ள பெருமையும் மீனாவுக்கு உண்டு.

கடிதம் மீனாவைப் பற்றியது என்பதை அறிந்த பார்வதி, மிக அக்கறையுடனேயே அதைப் படித்து முடித்தாள். அவள் முகத்தில் புன்னகை அரும்பியது.

வேறொரு சமயமாயிருந்தால் கடிதத்தில் இருந்த விஷயம் இதற்குள் பார்வதியை வேங்கையாக மாற்றிச் சீறச் செய்திருக்கும். தன் கல்லூரி கெளரவமே பாழாகி விட்டதாக எண்ணிக் கொந்தளித்திருப்பாள். அந்தக் கணமே மீனாவைத் தன் அறைக்கு அழைத்து வரச்சொல்லி, ஒழுக்கம் கெட்ட பெண்களுக்குத் தன் கல்லூரியில் இடமில்லை என்று ஏசி டிஸ்மிஸ் செய்து ஹாஸ்டலிலிருந்தும் வெளியேற்றியிருப்பாள். இப்போது அவள் பழைய பார்வதி அல்ல. முற்றிலும் மாறிவிட்ட ஒரு புதுமைப் பெண்மணி.

மீனாவின் தந்தை எழுதியிருந்த அக்கடிதத்தை எடுத்து மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தாள். அப்போதும் அவளுக்குக் கோபம் வரவில்லை.

''தங்கள் கல்லூரி ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் பெண்கள் தகுந்த பாதுகாப்பின் கீழ் பத்திரமாகப் படித்து வருவார்கள். அவர்களுடைய ஒழுக்கம் கெட்டுப்போகாத முறையில் தாங்கள் கவனித்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையும் நல்ல பெயரும் தங்கள் கல்லூரிக்கு எப்போதுமே உண்டு. அந்த நம்பிக்கையின் காரணமாகத்தான் என் மகள் மீனாவைத் தங்கள் கல்லூரி ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்க வைத்தேன். இப்போது நான் கேள்விப்படும் செய்தி என்னைத் திடுக்கிடச் செய்துள்ளது.

"மீனா வேறொரு கல்லூரியில் படிக்கும் மாணவன் ஒருவனை அடிக்கடி சந்திப்பதாகவும், அவனுடன் நட்பு கொண்டிருப்பதாகவும் எனக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்திருக்கிறது. இது உண்மையானால் இதைவிட அவக்கேடான செய்தி வேறொன்றும் இருக்க முடியாது. இது பற்றித் தாங்கள் உடனே தீர விசாரித்து எனக்கு உண்மையைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.''

பார்வதிக்கு வியப்பாக இருந்தது. ”இதில் உண்மை யிருக்குமா?' என்று யோசித்துப் பார்த்தாள். ’மீனா மிக நல்ல பெண். அப்படியெல்லாம் பண்பு கெட்டு நடக்கக் கூடியவள் அல்ல' என்றே கூறியது அவள் உள் மனம்.

மீனாவையே நேரில் அழைத்துக் கேட்டுவிடலாம் என்ற முடிவுடன் ஆறுமுகத்தை அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னாள்.

மீனா எதிரில் வந்து நின்றபோது பார்வதி சற்று நேரம் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். பெண்ணுக்குப் பெண்ணே பார்த்து வியக்கும் அளவுக்கு அத்தனை அழகு!

பார்வதியால் சட்டென்று விஷயத்தைப் பிரஸ்தாபிக்க முடியவில்லை. சுற்றி வளைத்து ஏதேதோ கேள்விகளை யெல்லாம் கேட்டுவிட்டுக் கடைசியில் ஸ்போர்ட்ஸெல்லாம் இப்போது எந்த மட்டில் இருக்கிறது, மீனா?'' என்று கேட்டாள்.


”பரீட்சை முடிகிற வரையில் அதைப்பற்றி நினைக்கவே நேரம் கிடையாது மேடம்'' என்றாள் மீனா.

”பேஷ்! அப்படித்தான் படிக்கவேண்டும். அது சரி; பீ.ஏ.வை முடித்துவிட்டு என்ன செய்யப் போகிறாய்?”

”அப்பா என்ன சொல்கிறாரோ, அதன்படி நடந்து கொள்வேன்...”

”அப்பா கல்யாணம் செய்து கொள்ளச் சொன்னால்...”

“அவர் இஷ்டப்படியே நடப்பேன்.''

“அவர் தேர்ந்தெடுத்துச் சொல்லும் பையனை மணந்து கொள்வாயல்லவா?....''

”அது தான் முடியாது; அந்த ஒரு விஷயத்தில் மட்டும் எனக்குச் சுதந்திரம் வேண்டும்.''

"அப்படியென்றால் நீயாகவே ஒருவனைத் தேர்ந்தெடுக்கப் போகிறாயா?”

''ஆமாம்...'' என்று கூறியவள், வெட்கத்துடன் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.
மீனா அந்தப் பையன் யாரென்று என்னிடம் சொல்லலாமோ?”

மெளனமாக நின்றாள் மீனா.

”என்னிடம் வெட்கப்படாமல் சொல், பார்க்கலாம். இது விஷயத்தில் உனக்கு என்னாலான உதவியைச் செய்கிறேன். உன் அப்பாவுக்கு நானே கடிதம் எழுதி, உன் திருமணத்தை முடிந்து வைக்கிறேன்.....”

"எனக்கு வெட்கமாக இருக்கிறது மேடம்....”

”மீனா! என்னிடம் சொல்லுவதற்கு வெட்கப்படலாமா? எங்கே சொல்லு பார்க்கலாம்...''

தலையை நிமிர்த்திச் சொல்லுவதற்கு ஆயத்தமான மீனாவை மீண்டும் வெட்கம் சூழ்ந்துகொண்டது.

''யார் அவன்? எங்கே இருக்கிறான்? பெயர்?.......” தூண்டிக்கேட்டாள் பார்வதி.

"டென்னிஸ் ப்ளேயர் கோபாலன்.''

''யார் அது? கார்நேஷன் கல்லூரியில் படிக்கும் டென் னிஸ் சாம்பியன் கோபாலனா?”

அ”வனுடன் உனக்கு எப்படிப் பழக்கம் ஏற்பட்டது?''

”டென்னிஸ் மாட்ச் நடைபெற்றபோது.......”

''சரி; நீ வகுப்புக்குப் போகலாம்.''

மீனா திரும்பி வகுப்பை நோக்கி நடந்தாள். அவள் நடையழகையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த பார்வதிக்கு மீனாவின் மீது துளியும் கோபம் வரவில்லை. மீனாவின் மீது குற்றம் இருப்பதாகவும் தோன்றவில்லை. அதற்குப் பதிலாக அவள்மீது அனுதாபமே பிறந்தது.

டெலிபோனை எடுத்துக் கார்நேஷன் கல்லூரியின் எண்களைச் சுழலவிட்டாள். அடுத்த கணமே அந்தக் கல்லூரியின் பிரின்ஸிபால் திருவாளர் வேதாந்தம் பேசத் தொடங்கினார்.

"நான்தான் சாரதாமணிக் கல்லூரி பிரின்ஸிபால் பேசுகிறேன். தங்களிடம் ஒரு முக்கிய விஷயம் பேச வேண்டும். இப்போது வந்தால் சந்திக்க முடியுமா?'' என்று கேட்டாள் பார்வதி.

"தாங்களா இங்கே வருவதா? தங்களுக்குச் சிரமம் வேண்டாம். அரை மணிக்குள் நானே அங்கு வந்துவிடுகிறேன்'' என்றார் வேதாந்தம்.

''தயவு செய்து மன்னிக்க வேண்டும். என்னுடைய காரியமாகவே தங்களைப் பார்க்க வரப்போகிறேன். ஆகையால் நான் அங்கே வருவதுதான் முறை. இதோ இப்போதே புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்'' என்று கூறியபடி நாற்காலியை விட்டு எழுந்தாள் பார்வதி.
------------
குருத்து பதினான்கு


பார்வதியின் கார், கார்நேஷன் கல்லூரியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதைச்
செலுத்திக்கொண்டிருந்த பார்வதியின் உள்ளம் தீவிரச் சிந்தனையில் ஈடுபட்டிருந்தது.
மேற்படி கல்லூரியின் தலைவர் திருவாளர் வேதாந்தத்தைப்பற்றி எண்ணும்போதே அவளுக்கு ஒருமித அச்சமும், பக்தியும் தோன்றின. அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அவளுக்கு இதுவரை ஏற்பட்டதில்லை. இதற்குமுன் அவரை இரண்டொரு முறை சந்தித்துப் பேசியிருக்கிறாள். ஆயினும், குறைந்த வார்த்தைகளுடனேயே அச்சந்திப்புகள் முடி வடைந்து விட்டன.

சாரதாமணிக் கல்லூரியின் பொன்விழா நிகழ்ச்சிக்கு அவர் வந்திருந்தபோதுகூடப் பார்வதியால் அவரிடம் பேச முடியவில்லை. அடக்கமே உருவான திருவாளர் வேதாந்தம், அமைதியே வடிவமாய் ஒரு பக்கமாகப் போய் உட்கார்ந்து கொண்டிருந்தார். நிறைகுடம் என்பார்களே, அந்தப் பெயர் திருவாளர் வேதாந்தத்தைப் பார்த்த பிறகே தோன்றியிருக்க வேண்டும்.

ஆங்கிலம், தமிழ் இவ்விரு மொழிகளிலும் அவருக்கு ஆழ்ந்த புலமையும் சரி சமமான பற்றுதலும், ஞானமும் இருந்தன. கம்பனையும் ஷேக்ஸ்பியரையும் சமநோக்குடன் சம எடையில் வைத்து ஆராய்ந்த அறிவாளர் அவர்.

நிஜாரும், கோட்டும் போட்டுக்கொண்டு, குடுமியா கிராப்பா என்று தெரியாமல் மறைத்துவிடும் தலைப்பாகை யுடன் தான் எந்நேரமும் காட்சியளிப்பார். யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. அப்படிப் பேசினாலும் பொதுவாகத் தமிழ் இலக்கியங்களைப் பற்றியோ, ஆங்கில நூல்களைப் பற்றியோதான் பேசுவார்.

எந்த மொழியில் பேசிய போதிலும் அந்த மொழிக்கே உரிய தனித் தூய்மையுடன் தான் பேசுவார். ஒரு மொழி பேசும்போது அத்துடன் இன்னொரு மொழியைக் கலந்து விடக்கூடாது என்பதில் எப்போதுமே கண்ணும் கருத்துமாக இருப்பவர்.

திருவாளர் வேதாந்தத்துடன் தமிழில் பேசுவதா, ஆங்கிலத்தில் பேசுவதா என்ற கவலை ஒருபுறமும், தன்னுடைய கல்லூரி மாணவி மீனாவைப்பற்றி அவரிடம் எவ்வாறு பேச்சைத் தொடங்குவது என்ற அச்சம் இன்னொரு புறமும் பார்வதியை வாட்டிக் கொண்டிருந்தன.

"எங்கே வந்தீர்கள், என்ன விஷயம்” என்று வேதாந்தம் கேட்டால், விஷயத்தை எப்படித் தொடங்குவது?

'தங்கள் கல்லூரி மாணவன் கோபாலனைப்பற்றிப் பேச வந்திருக்கிறேன்' என்று கூறி, மீனாவின் தந்தையிடமிருந்து வந்துள்ள கடிதத்தை அவரிடம் கொடுத்து விடுவதா? அல்லது பொதுவாகச் சில விஷயங்களைப்பற்றி முதலில் பேசிக்கொண்டிருந்த பின்னர், பேச்சுக்கிடையில் தான் வந்த காரியத்தை நாசுக்காக அறிவிப்பதா?

’காதல், கல்யாணம் இவைபற்றி வேதாந்தம் என்ன அபிப்பிராயம் கொண்டிருக்கிறார் என்பதை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். பின்னர்தான் மீனா விஷயத்தைப் பிரஸ்தாபிக்க வேண்டும். கோபாலனைப்பற்றிக் குற்றம் சொல்வதாகவும் இருக்கக் கூடாது. நடந்திருப்பதையும் தெளிவாகச் சொல்லவேண்டும். காதல் விவகாரங்களில் அனுபவம் எதுவுமே இல்லாத பார்வதிக்கு இது ஒரு பெரும் பிரச்னையாக இருந்தது.
திருவாளர் வேதாந்தத்தைச் சந்தித்து உரையாடப் போவது இதுதான் முதல் தடவை. முதல் முறையாக அவரைச் சந்திக்கப் போகும்போது இம்மாதிரியான காதல் விவகாரத்தையா எடுத்துக் கொண்டு போகவேண்டும்?

இன்னொரு புறம் காதலைப்பற்றிய உணர்வு அவள் சிந்தனையைப் பகிர்ந்து கொண்டிருந்தது.

மீனா - கோபாலன் நட்பில் குற்றம் இருப்பதாக அவளால் ஊகிக்க முடியவில்லை. தவறு ஏதும் நேராத வரையில் மீனாவும் கோபாலனும் நெருங்கிப் பழகுவதை ஏன் ஆட்சேபிக்க வேண்டும்?

பார்வதி யோசித்தாள். இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டு திருவாளர் வேதாந்தத்திடம் போக வேண்டியது அவசியந்தானா என்றுகூடத் தோன்றியது அவளுக்கு. ஆனாலும் வேதாந்தம் இதைப்பற்றி என்ன எண்ணுகிறார்; என்ன சொல்லுகிறார் என்பதை அறிந்து கொள்ளவும் ஆவல் தூண்டியது.

காலமெல்லாம் கன்னியாகவே வாழ்ந்துவிட்ட பார்வதிக்கு, காதல் கல்யாணம் பற்றிய அனுபவமே இல்லாத பார்வதிக்கு, கல்வியும் கல்லூரியுமே உலகம் என வாழ்நாளை வீணாக்கிவிட்ட பார்வதிக்கு இப்போது ஒரு புதிய உணர்வும் உற்சாகமும் தோன்றியுள்ளன.

இந்த நிலைக்குக் காரணம் சேதுபதிதான்.

சேதுபதியின் உறவை அவருடைய நட்பை அவள் விரும் பினாள்; எந்நேரமும் அவர் தன்னுடனேயே இருக்கவேண்டும் என்று எண்ணினாள். இந்த ஆசைக்கு, விருப்பத்துக்கு, எண்ணத்துக்கு என்ன காரணம் என்பதை அவளால் கூற முடிய-வில்லை. சேதுபதியிடமே கூடச் சொல்ல முடியாமல் இரகசியத்தில் மௌனமாக இருந்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்த பார்வதியின் உள்ளப்போக்கில் இப்போது பெரும் மாறுதல் ஏற்பட்டிருந்தது.

நிறையப் படித்துள்ள பார்வதிக்கு, பல நூல்களை ஆராய்ந்து பட்டங்கள் பெற்றுள்ள பார்வதிக்கு இத்தனை அறிவும், ஆற்றலும் இருந்தும் தன் சொந்த வாழ்க்கையை மலரச் செய்து கொள்ளத் தெரியவில்லை. அனுபவத்தோடு அறிவு சேருகிறபோதுதான் மலர்ச்சியும் ஏற்படுகிறது. இப்போதுதான் அந்த அனுபவம் அவளுக்குக் கிட்டியிருக்கிறது.

பார்வதி காரைவிட்டு இறங்கும்போதே வாசலில் காத்திருந்த வேதாந்தம் ”வாருங்கள் வரவேண்டும்...'' என்று அகமும் முகமும் மலரக் கைகூப்பி வரவேற்றார்.

முதிர்ந்த தோற்றமும் அறிவின் ஒளிவீசும் கண்களும் அடக்கமும் அமைதியும் கலந்த பண்பாடும் ஒருங்கே சேர்ந்த உருவமே வேதாந்தம் என்ற பெயரைப் பெற்றிருந்தனவோ?

'தங்கள் வரவு நல்வரவாகுக' என்ற உபசரிப்புடன் தம்முடைய அறைக்குப் பார்வதியை அழைத்துச் சென்றார் அவர்.

புன்சிரிப்பைத் தவிர, பார்வதியின் வாயினின்று எதுவுமே வெளிப்படவில்லை.

பேச்சை எப்படித் தொடங்குவது என்பதிலேயே அவள் மனம் எண்ணமிட்டுக் கொண்டிருந்தது.

கடைசியில், ”தங்களைச் சந்தித்துப் பேசும் பேறு எனக்குக் கிட்டியதற்காக மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்'' என்று பேச்சைத் தொடங்கினாள்.

வேதாந்தம் சிரித்தார். கள்ளம், கபடறமற்ற அந்தச் சிரிப்பின் மூலமே தம்முடைய பதிலைக் கூறிவிட்டார் அவர்.

”தாங்கள் என்னைத் தேடி வந்த காரியம் என்னவோ?”

ஆங்கிலத்தில் மிக மிகச் சரளமாகப் பேசும் திறமை பெற்றிருந்த போதிலும் வேதாந்தம் தூய தமிழிலேயே பேசினார்.

கார்நேஷன் கல்லூரி பிரின்ஸிபால் பதவி அவரைத் தேடி வந்ததற்குக் காரணம் அவர் தமிழில் பெரும் புலமை பெற்றவர் என்பதற்காக அல்ல. ஆங்கிலத்தில் அவருக்கு உள்ள ஞானமே அவரை இந்த நிலைக்கு உயர்த்தியது. ஆயினும், அவர் தம்மை ஒரு தமிழ்ப் புலவர் என்று கூறிக் கொள்வதிலேயே பெருமைப்பட்டார். தம்மைப் பொறுத்த வரையில் தமிழுக்கு உயர்ந்ததொரு ஸ்தானத்தைக் கொடுக்க வேண்டுமென்ப-தற்காகவே தலைப்பாகையைத் தலையிலே அணிந்து கொண்டிருந்தார்.

”வள்ளுவரைப்பற்றித் தங்கள் கருத்து என்னவென் பதை நான் அறியலாமா?” பார்வதி மிக மிக விநயமாகக் கேட்டாள்.

''’வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு,’ என்று பாரதி பாடிய பிறகு, நான் கூறுவதற்கு என்ன இருக்கிறது!''

"மன்னிக்க வேண்டும். இன்னொரு விஷயம் பற்றியும் தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்" என்றாள் பார்வதி.

''நன்று நன்று! தாராளமாகக் கேளுங்கள்'' என்றார் வேதாந்தம்.

“காதல் என்ற சொல்லுக்குத் தாங்கள் விளக்கம் தர முடியுமா ''

''காதல் என்ற புனிதமான சொல் ஆண் பெண் உறவு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. நான் தமிழ் மொழி மீது காதல் கொண்டுள்ளேன். சிலர் இந்தி மீது காதல் கொண்டுள்ளார்கள். உங்களுக்கு உங்கள் கல்லூரியின் மீது காதல்.”

”உண்மைக் காதலைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?....”

”அதுபற்றித் தனிச் சொற்பொழிவே நிகழ்த்த வேண்டும். ஆனாலும் ஒன்று கூறுவேன். காதல் என்பது ஆண் மகனுடைய வாழ்க்கையில் ஒரு பகுதிதான். ஆனால் அதுவே ஒரு பெண்ணின் முழு வாழ்வுமாகும்.''

”மிக உயர்ந்த கருத்து...'' என்று பாராட்டினாள்.

” இக்கருத்து என்னுடையதல்ல. பைரனைப் பாராட்டுங்கள்'' என்றார் வேதாந்தம்.

”அப்புறம்?'' என்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு வேதாந்தத்தையே கூர்ந்து நோக்கினாள் பார்வதி.

”ஒரு பெண்ணின் உள்ளத்தில் காதல் உணர்ச்சி தோன்றும்போது தான் காதலைப் பற்றிய முழுச் சக்தியையும் அவள் அறிய நேரிடுகிறது” என்றார் வேதாந்தம்.

"காதலைப் பற்றி வள்ளுவர்?....''

”நிரம்பச் சொல்லி யிருக்கிறார். அவற்றுள் எனக்கு மிகவும் பிடித்தது,
''காணுங்காற் காணேன் றவராய
காணாக்காற் காணேன் றவறல்லவை”
என்ற குறளாகும். காதலனை நேரில் காணும்போது காதலிக்கு அவனுடமுள்ள குற்றங்கள் எதுவுமே தெரிவதில்லையாம். அவனைக் காணாதபோது அவனிடமுள்ள குற்றங் களைத் தவிர வேறெதுவுமே தெரிவதில்லையாம்!”

"எவ்வளவு அழகான கருத்து...'' என வியந்தாள் பார்வதி.

"வள்ளுவர் கூறாத கருத்துகளே இல்லை'' என்று மகிழ்ந்தார் வேதாந்தம்.

மெளனத்திலாழ்ந்திருந்த பார்வதி, ஏதோ பேசுவதற்குத் தயங்கிக் கொண்டிருக்கிறாள் என்பதைக் குறிப்பால் அறிந்த வேதாந்தம், "ஏதேனும் முக்கிய விஷயமிருந்தால் தயங்காமல் கூறுங்கள்'' என்றார்.

''தாங்கள் இந்தக் கடிதத்தைப் படித்துப் பார்க்கவேண்டும். இந்த அற்ப விஷயத்தில் தங்களுக்குத் தொந்தரவு கொடுப்பதற்காக மன்னிக்க வேண்டும்" என்ற பூர்வ பீடிகையுடன் கடிதத்தை எடுத்துக் கொடுத்தாள் பார்வதி.

அதைப் பிரித்துப் பார்த்த வேதாந்தம், "இதையா அற்ப விஷயம் என்று கூறினீர்கள்? இது நம் இரு கல்லூரியையுமே பாதிக்கும் விஷயமல்லவா? இம்மாதிரி விஷயங்களில் நாம் அலட்சியமாக இருந்துவிட்டால் கடைசியில் அது நம் கல்லூரிகளுக்கே இழுக்கைத் தேடித் தரும். கல்லூரித் தலைவர்களுக்கு இவை சம்பந்தமற்றவை என்று உதாசீனம் செய்துவிடுவது மிகமிகத் தவறான செயல். இது விஷயத்தில் தாங்கள் எடுத்துக் கொண்ட அக்கறையைப் பாராட்டுகிறேன். இப்போதே கோபாலனை அழைத்துப் பேசி உண்மையை அறிந்து கொண்டு விடுவோம். சற்று நேரம் தாங்கள் இந்த அறையிலேயே உட்கார்ந்திருங்கள். தங்களை நேரில் வைத்துக்கொண்டு அவனை விசாரிப்பது அவ்வளவு சரியாக இருக்காது. அவன் என்ன கூறுகிறான் என்பதைத் தாங்களும் கேட்க வேண்டும். ஆகையால், நான் அவனை அடுத்த அறைக்கு வரச்சொல்லி விசாரணை செய்கிறேன். இந்த அறையிலிருந்தபடியே தாங்கள் கேட்டுக் கொள்ளலாம்” என்றார்.
தலையசைத்தாள் பார்வதி. அடுத்த அறையில் விசாரணை ஆரம்பமாயிற்று.

”கோபால்! உன்னிடம் இன்று சில கேள்விகள் கேட்கப் போகிறேன். எதையும் மறைக்காமல் பதில் கூறவேண்டும். இப்படி உட்கார்ந்து கொள்'' என்றார் வேதாந்தம்.

கோபாலன் உட்காரவில்லை. ”மன்னிக்க வேண்டும்!” என்று கூறித் தன் பண்பை வெளிப்படுத்தினான்.

''உனக்கு என்ன வயதாகிறது கோபால்?"

''இருபத்து மூன்று....?”

''இந்த ஆண்டுடன் உன் படிப்பு முடிந்து விடுகிற தல்லவா?''

”ஆம்...”

''அப்புறம் என்ன செய்யப் போகிறாய்....?”

''ஏதாவது ஓர் அலுவலகத்தில் சேர்ந்து பணி புரியப் போகிறேன்...”

''எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறாய்?''

”என் தந்தை முடிவு செய்யும்போது...''

"உன் தந்தையாகப் பார்த்து முடிவு செய்யும் பெண்ணை மணந்து கொள்ள போகிறாயா? அல்லது...''

”அந்தப் பொறுப்பை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார்...”

”அப்படியானால்....!”

"நானாக ஒரு பெண்ணைத் தேர்ந்து மணம் செய்து கொள்வதற்கு அவர் தம்முடைய பூரண சம்மதம் அளிப்பார்...''

”ஒரு வேளை நீ தேர்ந்தெடுக்கும் பெண்ணை அவர் ஒப்புக் கொள்ளவில்லை யென்றால்?....''

”ஒப்புக்கொள்ளமாட்டார் என்று ஏன் சந்தேகப்பட வேண்டும்? பொதுவாக உலகத்தில் நம்பிக்கைதான் முக்கியம். ஆயினும், எல்லாவற்றிலுமே நம்பிக்கை வைத்துவிடக் கூடாது தான். அதற்காக எதையுமே நம்பாமலும் இருக்கக் கூடாதல்லவா?''

”கோபால்! மிக அருமையாகப் பேசுகிறாயே! இதுவரை விளையாட்டிலும் படிப்பிலும் மட்டுமே புத்திசாலி என்று தான் எண்ணிக்கொண்டிருந்தேன். காதல் விவகாரத்திலும் நீ...'' வேதாந்தம் சிரித்தபடியே கூறினார்.

”காதலா...” கோபாலன் சற்றுத் திகைப்போடு கேட்டான்.

”காதலிப்பது தவறில்லை கோபால்! இதோ பார் இந்தக் கடிதத்தை...''

கடிதத்தை வாங்கிப் படித்த கோபாலன், ''ஐயா, மீனாவை நான் நேசிப்பது உண்மைதான். ஆனால் எங்கள் நட்பில் முறைகேடு எதுவும் கிடையாது. அவளை நான் என் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்திருக்கிறேன்.''

அழுத்தமாகவும் திருத்தமாகவும் பேசினான் கோபால்.

கோபாலனின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த பார்வதியின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கிற்று. அவனை ஒரு முறை கண்ணால் பார்த்துவிட விரும்பிய பார்வதி, கதவின் வழியாக அவனைப் பார்க்கவும் செய்தாள்.

சிரித்த முகத்துடன், மிடுக்கான தோற்றத்துடன் அடக்கமாக நின்று கொண்டிருந்த கோபாலனின் உருவத்தைக் கண்ட பார்வதி, ’மீனாவுக்கு ஏற்ற ஜோடிதான்' என்று மனத்திற்குள்ளாகவே மகிழ்ந்து கொண்டாள்.

"சரி, நீ போகலாம்'' என்று கோபாலனை அவனுடைய வகுப்புக்கு அனுப்பிவிட்டுத் தம்முடைய அறைக்குத் திரும்பி வந்தார் வேதாந்தம்.

வேதாந்தத்தைக் கண்டதும் ”மிக்க நன்றி. தங்களுடைய நேரத்தை வீணாக்கி விட்டதற்காக மன்னிக்க வேண்டும்'' என்று எழுந்து நின்றாள் பார்வதி.

''வீணாக்கி விட்டதாக எப்படிக் கூற முடியும்? பயனுள்ள ஒரு முக்கிய காரியமல்லவா இது?''

பார்வதி பதில் கூறாது புன்முறுவலுடன் நின்று கொண்டிருந்தாள்.

''ஆமாம்; தாங்கள் தமிழில் இவ்வளவு அழகாகப் பேசுகிறீர்களே, எப்போதுமே இப்படித்தான் பேசுவீர்களா?'' வேதாந்தம் விசாரித்தார்.

"இல்லை; தமிழில் பேசினால் தாங்கள் மகிழ்ச்சியுறுவீர்கள் என்பதால் பேசிப் பார்த்தேன். நான் நன்றாகப் பேசுகிறேன் என்பதைக் கேட்க எனக்குப் பெருமையாக இருக்கிறது...'' என்றாள் பார்வதி.

"மீனாவின் தந்தைக்குக் கடிதம் எழுதி, திருமணத்துக்கு வேண்டிய ஏற்பாடு செய்து விடுங்கள். கல்லூரித் தலைவர்கள், மாணவர்களின் கல்வி விஷயத்தில் மட்டும் கருத்தைச் செலுத்தினால் போதாது. அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையிலும் கவனம் செலுத்த வேண்டும்...” சிரித்தபடியே கூறினார் வேதாந்தம்.

"வணக்கம்; நான் வருகிறேன்'' என்று விடைபெற்றுக் கொண்டாள் பார்வதி.

அன்று காலையில் தினப்பத்திரிகை வந்ததும் பார்வதி அவசர அவசரமாக அதைப் புரட்டினாள். பத்திரிகையின் ஏதோ ஒரு மூலையில் வழக்கமாக வரும் ஒரு பகுதியில் அவன் கவனம் சென்றது. அந்தப் பகுதியிலிருந்த செய்தியைக் கண்டதும், அவள் பெரும் வேதனைக்குள்ளானாள்.

”நேற்றிரவு சேதுபதி பம்பாய்க்குப் பயணமானார்'' என்பதுதான் அச்செய்தி. ஏற்கெனவே அவள் சேதுபதியைச் சந்தித்து நாலைந்து நாட்களாகியிருந்தன. அந்தப் பிரிவுகூட அவளுக்கு வேதனையைத் தரவில்லை. இப்போது தன்னிடம் கூறிக் கொள்ளாமலே அவர், பம்பாய்க்குப் புறப்பட்டுப் போயிருக்கிறார் என்னும் தகவலைத்தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த உலகமே வெறிச்சென்றாகி விட்டதைப்போல் உணர்ந்தாள். அவர் ஊரிலிருந்தபோது சேதுபதி தன் அருகில் இருந்தது போலவும், இப்போது எல்லாமே தன்னைவிட்டு விலகிச் சென்றுவிட்டது போலவும் உணர்ந்தாள்.

சேதுபதியின் மீது அவளுக்கு கோபம் கோபமாக வந்தது.

அடுத்த கணம் ’நான் ஏன் அவரைக் கோபிக்க வேண்டும்? எதற்காக அவர் என்னிடம் சொல்லிக்கொண்டு போக வேண்டும்? எனக்கும் அவருக்கும் என்ன உறவு? அன்று என்னுடைய சொந்த அண்ணன் என்னைத் தனியாகத் தவிக்கவிட்டுச் சொல்லிக் கொள்ளாமல் போனபோது கூட எனக்குக் கோபம் வரவில்லையே! இப்போது எனக்குச் சம்பந்தமற்ற யாரோ ஒருவர் தன் சொந்தக் காரியமாகப் பம்பாய் போய்விட்டார் என்பதற்காகக் கோபம் வருவானேன்?’ பார்வதிக்கு வேதாந்தம் சொன்ன குறள் நினைவுக்கு வந்தது.
"காணுங்காற் காணேன் றவராய
காணாக்காற் காணேன் றவறல்லவை”

விமானத்தில் போய்க்கொண்டிருந்த சேதுபதியின் உள்ளத்திலும் அமைதியில்லை. ஊரை விட்டுப் புறப்படும் போது அவர் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டுதான் புறப்பட்டார். ஆனாலும் பார்வதியிடம் சொல்லிக் கொள்ளாமல் வந்தது பெரும் குறையாகத் தோன்றியது அவருக்கு. அடுத்த கணம் 'பார்வதிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? அவளிடம் நான் ஏன் சொல்லிக் கொள்ள வேண்டும்?' என்று தமக்குத் தாமே கேட்டுக்கொண்டார்.

அவர் உள்ளத்தில் அமைதியில்லை. பார்வதியைப் பற்றியே மீண்டும் மீண்டும் எண்ணமிட்டவராக விமானத் தின் பலகணி வழியாக விண்வெளியை வெறிச்சிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
-------------
குருத்து பதினைந்து


''பாரதி! பரீட்சை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் கணக்கில் நீ அவ்வளவு 'வீக்' இல்லை. ஆகையால் இன்றுமுதல் உனக்கு ஸயன்ஸ் பாடம் சொல்லித் தரப் போகிறேன். எங்கே, ஸயன்ஸ் புஸ்தகம் கொண்டு வந்திருக்கிறாயா? அதிலிருந்து சில கேள்விகள் கேட்கப் போகிறேன்'' என்றாள் பார்வதி.

ஸயன்ஸ் என்றதுமே பாரதியின் வயிற்றில் 'பகீர்' என்றது. கணக்குக்கு அடுத்தபடியாக அவளுக்குப் பிடிக்காத 'சப்ஜெக்ட்' அதுதான். அன்று பாரதி ராஜாவுடன் சினிமாவுக்குப் போகத் திட்டம் போட்டு வைத்திருந்தாள். அந்த நேரத்திலா ஸயன்ஸ் பாடம் படிக்கத் தோன்றும்? படு 'போர்' ஆயிற்றே !

''காலையிலிருந்தே எனக்குத் தலைவலி தாங்கவில்லை அம்மா! அத்துடன் இன்று நான் ஸயன்ஸ் புத்தகமும் கொண்டுவர மறந்து போனேன்'' என்றாள் பாரதி.

”மாத்திரை கொடுக்கிறேன் அதைச் சாப்பிட்டுவிட்டு இப்படிக் கொஞ்ச நேரம் படுத்துக் கொண்டிரு. ராஜா வந்ததும் உன்னைக் கொண்டுபோய் வீட்டில் விட்டு வரச் சொல்கிறேன்.......”

”கல்லூரியிலிருந்து புறப்படும்போதே சொல்வதற்கென்ன? உன்னை அப்போதே வீட்டில் கொண்டுபோய் விட்டிருப்பேனே'' என்றாள் பார்வதி.

''அப்போது ராஜாவைச் சந்திக்க முடியாதே!'' என்று பாரதி கூறவில்லை. எண்ணிக் கொண்டாள்.

ஸயன்ஸ் புத்தகம் கொண்டு வராததற்காகத் தன்னை பிரின்ஸிபால் கோபிப்பான் என எதிர்பார்த்த பாரதிக்கு பார்வதியின் உபசரணைகளும், அன்பு மொழிகளும் வியப்பை அளித்தன.

சேதுபதி பம்பாயிலிருந்து எப்போது திரும்பி வருவார் என்பதை அறிந்து கொள்ளவே பார்வதி அவ்வாறு அன்பு பாராட்டினான். ஆனாலும் பாரதியிடம் அதைக் கேட்டுவிடும் துணிவு அவளுக்கு ஏற்படவில்லை. சகஜமாகக் கேட்பதுபோல் கேட்டுப் பார்க்கலாமா? ஊஹும் கூடாது.

'அப்பா, நீங்கள் எப்போது வருவீர்கள் என்று பிரின்ஸி பால் விசாரித்தார்' என்று பாரதி தன் தந்தையிடம் கூறினால் அவர் என்ன எண்ணிக் கொள்வார்? அவர் வருகையில் நான் அக்கறை கொண்டிருப்பதாக அல்லவா நினைப்பார். 'போய் வருகிறேன்' என்று ஒரு வார்த்தை சொல்லிக் கொண்டு போகாதவரைப்பற்றி நான் ஏன் விசாரிக்க வேண்டும்? அவரிடம் எனக்கு அக்கறை இருப்பதாக ஏன் காட்டிக் கொள்ள வேண்டும்? ஆனாலும் அவளால் சேதுபதியைப் பற்றி எண்ணாமல் இருக்க முடியவில்லை.

வெகு நேரம் தனக்குத்தானே குழம்பிக் கொண்டிருந்த பார்வதி, கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தாள். பாரதியை மெதுவாக விசாரிக்கத் தொடங்கினாள்.

""பாரதி! உனக்கு அடிக்கடி தலைவலி வருவது உண்டா ?”

"இல்லை அம்மா!'' கொஞ்ச நாட்களாகத்தான்.... இப்படி...?”

”யாராவது டாக்டரிடம் சிகிச்சை செய்து கொள்வது தானே? ஆமாம்... உன்னுடைய அப்பாகூட ஊரில் இல்லை போலிருக்கிறதே எப்போது வருகிறார்?... நான் வேண்டுமானால் டாக்டரிடம் அழைத்துக் கொண்டு போகட்டுமா? என்று பேச்சுக்கிடையில் தான் கேட்கவேண்டிய கேள்வியை வெகு சாமர்த்தியமாகத் திணித்துவிட்டாள் பார்வதி.

"ஞாயிற்றுக்கிழமை மாலை வருகிறார். இப்போது எனக்கு முன்னளவு தலைவலி இல்லை. வீட்டுக்குப் போய்ச் சற்று நேரம் ஓய்வெடுத்துக்கொண்டால் சரியாகிவிடும்” என்றாள் பாரதி.

"ராஜா வரட்டும்; உன்னைக் காரில் கொண்டு விடச் சொல்லுகிறேன்" என்று பார்வதி சொல்லி வாய் மூடவில்லை.

வாசலில் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது. அதை அடுத்து ஒரு சீட்டிக் குரல், தொடர்ந்து வருவது ராஜாதான் என்பதை அறிந்து கொண்ட பாரதியின் உள்ளத்தில் குதூகலம் பொங் கியது.

"ராஜா! உனக்கு ஆயுசு நூறுடா” என்றாள் பார்வதி.

''என்ன அத்தை ! நான் வாலிபனாக இருப்பது உனக்குப் பிடிக்கவில்லையா? என்னை குடு குடு கிழவனாக்கிப் பார்க்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறதா?”

பார்வதி சிரித்துக் கொண்டே “ஆமாம்; நீ கிழவனாக ஆனால் வேடிக்கையாகத்தான் இருக்கும். சரி; பாரதிக்குத் தலை வலிக்கிறதாம். அவளைக் கொண்டுபோய் வீட்டில் விட்டு வா... ”

'சரி, அத்தை!'' என்று சந்தோஷமாகத்தான் பதில் கூற வாயெடுத்தான் ராஜா. ஆனால் தனக்கு அந்த வேலையைச் செய்வதில் இஷ்டமில்லாதது போல் அத்தையிடம் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, ”இதுவே எனக்குப் பெரிய வேலையாகப் போய்விட்டது. பாரதி வீட்டு டிரைவராகவே ஆகிவிட்டேன்” என்று முணுமுணுத்த படியே பாரதியைக் கடைக் கண்ணால் கவனித்தான்.

வானத்தில் வீட்டுக் கூரைக்கு மேலே அப்போதுதான் ஒரு விமானம் பறந்து கொண்டிருந்தது. அந்தச் சத்தத்தில் ராஜா கூறிய வார்த்தைகள் பார்வதியின் காதில் விழவில்லை.

”என்னடா சொல்கிறாய்?'' என்று கேட்டாள் அத்தை.


”ரேடியோவில் இன்று எனக்குக் குவிஸ் புரோகிராம்' இருக்கிறது அத்தை! ஆகையால் நான் திரும்புவதற்கு லேட்டாகும்'' என்றான் ராஜா.

''சரி சரி, சீக்கிரம் வந்துவிடும்” என்று சொல்லி அனுப்பினாள் பார்வதி.

பார்வதிக்கு இருப்புக் கொள்ளவில்லை. அமைதியின்றித் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தாள். சேதுபதியின் நினைவு முகத்தை அவளால் மறக்க முடியவில்லை.
குருவி ஒன்று இங்குமங்கும் அலைந்து கொண்டிருந்தது. தன் கூட்டுக்குள் போய் உட்காருவதும், பிறகு துணைவனைக் காணாமல் தேடி அலைவதுமாக இருந்த அந்தக் குருவியையே சற்று நேரம் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் பார்வதி, அந்தக் குருவி முதன்முதல் தனியாக அங்கு வந்து கூடு - கட்டிக் குடியேறியபோது பார்வதி அதைக் கவனித்திருக்கிறாள். இப்போது சில நாட்களாக அது வேறொரு குருவியுடன் சிநேகம் பூண்டு சுற்றிக் கொண்டிருப்பதையும் கவனித்திருக்கிறாள். இன்று அந்த ஆண் குருவியைக் காணாமல், பெண் சிட்டுக்கு ஆண் சிட்டு எங்கே போயிற்றே! எப்போது போயிற்றோ ! பெண் சிட்டிடம் சொல்லிக்கொண்டு போயிற்றோ! சொல்லிக் கொள்ளாமலேயே போய், அலைய வைத்துக் கொண்டிருக்கிறதோ? பார்வதிக்கு அந்தக் குருவி மின் நிலை மிகுந்த வேதனையைத் தந்தது. பார்வதிக்கு மீண்டும் சேதுபதியின் நினைவு தோன்றவே அதை மறக்க விரும்பினாள்.

மீனாவின் தந்தை தனக்கு எழுதிய கடிதமும் அவருக்குத் தான் எழுதிப்போட்ட பதில் கடிதமும் ஞாபகத்துக்கு வந்தது.

நேராக மாடி அறைக்குச் சென்றாள். போகும்போது அந்த விசிறி வாழை அவளைப் பார்த்துச் சலசலப்பதுபோல் தோன்றியது. கீழே கிளைத்திருந்த முதிர்ந்த இலை ஒன்று மெளனமாக அவளை விசாரிப்பது போலவும் தோன்றியது. 'சே! இதெல்லாம் வீண் பிரமை!' என்று எண்ணிக்கொண்ட வளாய், படிகளைக் கடந்து அறைக்குள் பிரவேசித்தாள். மேஜை டிராயரைத் திறந்து மீனாவின் தந்தைக்குத் தான் எழுதிய கடிதத்தின் பிரதியை எடுத்துப் படித்தாள்....

”ஐயா, தங்கள் கடிதம் கிடைத்தது. மீனா மிக நல்ல பெண். படிப்பிலும், விளையாட்டிலும் முதன்மையாக இருந்து இந்தக் கல்லூரிக்கே நல்ல பெயர் வாங்கித் தந்திருக்கிறாள்....... தாங்கள் எழுதியுள்ளபடி வேறொரு கல்லூரி மாணவனுடன் அவள் நட்பு பூண்டிருக்கிறாள் என்பது உண்மைதான். ஆனால் அந்த நட்பில் குற்றம் எதுவும் இல்லை. மீனாவைத் தனியில் அழைத்து விசாரித்தேன். அவள் எதையும் மறைக்காமல், என்னிடம் உண்மையைக் கூறிவிட்டாள். கார்னேஷன் கல்லூரி மாணவனாகிய கோபாலன் என்பவனை டென்னிஸ் விளையாட்டின்போது அடிக்கடி சந்தித்திருக்கிறாள். ஒருவருக்கொருவர் நட்புப் பூண்டிருக்கின்றனர். இது விஷயமாக அந்தக் கல்லூரி பிரின்ஸிபால் திருவாளர் வேதாந்தத்தையும் நேரில் சந்தித்துப் பேசினேன். நான் அறிந்த வரையில் கோபாலன் மீனாவுக்கு ஏற்ற ஜோடியாக இருக்கிறான். கண்டிக்கத் தக்க முறையில் ஏதும் நடந்துவிடவில்லை. அவர்கள், இருவரையும் சந்தோஷமாக வாழவைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. கோபாலனுடைய தந்தைக்குக் கடிதம் எழுதி அவர் சம்மதத்தைப் பெற்றுத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். இதற்கு என்னுடைய மனப்பூர்வமான ஆசிகள். மீனாவின் எதிர்காலம் மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கல்லூரித் தலைவி என்ற முறையில் என்னுடைய கடமை இத்துடன் முடிவடைகிறது.
''பார்வதி.”

கடிதத்தைப் படித்து முடித்ததும் பார்வதியின் முகத்தில் பெருமிதம் நிலவியது.

மறுநாள் காலை. வழக்கத்தைக் காட்டிலும் கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து காலைப் பத்திரிகையின் வரவுக்காகக் காத்திருந்தாள் பார்வதி. காரணம் அன்று திங்கட்கிழமை. ஞாயிற்றுக்கிழமையே அவர் வரப்போவதாகப் பாரதி கூறினாளே! நேற்று அவர் வந்துவிட்டிருப்பாரோ? ’திருவாளர் சேதுபதி பம்பாயிலிருந்து திரும்பினார்' என்ற செய்தி பத்திரிகையில் வெளியாகியிருக்குமல்லவா?

பத்திரிகை வந்தது. அவள் எதிர்பார்த்த செய்தியும் அதில் இருந்தது!

அந்தச் செய்தியைக் கண்டதும், பார்வதியின் உட லெங்கும் இதற்கு முன் அனுபவித்தறியாத உணர்ச்சி அலை பரவியது.

'அவர் வந்துவிட்டார் என்பதில், எனக்கு ஏன் இத்தனை மகிழ்ச்சி? அவரைச் சந்தித்து ஒரு யுகமே ஆகிவிட்டது போல் அல்லவா தோன்றுகிறது? அவரைப் பார்க்கச் செல்லலாமா?’

எந்தக் காரணத்தை வைத்துக்கொண்டு மீண்டும் அவர் வீட்டுக்குச் செல்வேன்? அதிக வேலை இருக்கிறது. மாலை வேளைகளில் இனி வரமுடியாது' என்று கடிதம் எழுதி அனுப்பிவிட்டு இப்போது அவர் வீட்டுக்குப் போய் நின்றால் என்னைப்பற்றி என்ன எண்ணிக்கொள்வார்?

எது வேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளட்டும். என்னால் இனி ஒரு கணமும் அவரைப் பாராமல் இருக்க முடியாது. பார்வதி உறுதியாக ஒரு முடிவுக்கு வந்தாள்.

அன்று மாலை கல்லூரி முடிந்ததுதான் தாமதம். வழக்கமாக வீடு நோக்கிச் செல்லும் பார்வதியின் கார், அன்று சேதுபதியின் வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.

"எங்க வீட்டுக்காக போறீங்க மேடம்?'' என்று கேட்டாள் காரில் உட்கார்ந்திருந்த பாரதி.

"ஆமாம்" உறுதியாக வெளி வந்தது பார்வதியின் பதில்.

காரணம் கேட்கும் அளவுக்குத் துணிவு இல்லாத பாரதி மெளனமாகி விட்டாள். ராஜாவைச் சந்திக்க முடியாதே என்று எண்ணியபோது அவளுக்கு வருத்தமாக இருந்தது.

பார்வதியின் கார் உள்ளே நுழைந்த சமயம், சேதுபதி தற்செயலாக வாசலிலேயே நின்று கொண்டிருந்தார்.

'ஒரு வேளை இன்று பார்வதி வந்தாலும் வரக்கூடும்’ என்று அவருடைய உள் மனம் சொல்லிக் கொண்டிருந்தது. சரியாகவே போய்விட்டது.

காரிலிருந்து இறங்கிய பார்வதியை முக மலர்ச்சியுடன் வரவேற்ற சேதுபதி, "வாருங்கள்.... வாருங்கள்........ பாரதி எப்படிப் படித்துக் கொண்டிருக்கிறாள்...'' என்று விசாரித்தார்.

'அதிக வேலை இருப்பதால் இனி மாலை வேளைகளில் வரமுடியாதென்று கூறினீர்களே, இப்போது வேலையெல்லாம் தீர்ந்துவிட்டதா?’ என்று கேட்பார் என்று எதிர்பார்த்த பார்வதிக்குச் சேதுபதியின் வினா வியப்பூட்டியது.

’எவ்வளவு பெருந்தன்மையான போக்கு! எவ்வளவு உயர்ந்த புண்பு!’ - பார்வதி எண்ணிக் கொண்டாள்.

''பாரதி நன்றாகவே படித்து வருகிறாள். ஞாபக மறதி தான் கொஞ்சம் அதிகமாயிருக்கிறது. எந்தப் புத்தகம் கேட்டாலும் அந்தப் புத்தகத்தை மறந்து வந்துவிட்டதாகச் சொல்கிறாள். ஆகவேதான் புத்தகங்கள் இருக்கும் இடத்திலேயே பாடத்தை நடத்துவதென்று வந்துவிட்டேன்...''

"எனக்கும் கூட இனி அவ்வளவு வேலை இருக்காது. என் அலுவல்களை யெல்லாம் கவனித்துக் கொள்ளப் பொறுப்பான ஒருவரை நியமித்துவிட்டேன். மாலை வேலைகளில் இனி எனக்கும் ஓய்வுதான்... தினமும் ஒரு மணி நேரமாவது நிம்மதியாகப் பொழுதைக் கழிக்கப் போகிறேன். பொருளாலும் புகழாலும் மட்டும் ஒருவன் அமைதியைக் கண்டு விடமுடியாது. 'கம்பானியன்' என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்களே, அது ரொம்ப ரொம்ப முக்கியம்...''

பாரதி இருவருக்கும் காபி கொண்டுவந்து வைத்தாள்.

”சிற்சில சமயங்களில் நமக்குத் தனிமை வேண்டியிருக்கிறது. சிற்சில சமயங்களில் தனிமை அலுத்துப் போய், யாராவது வரமாட்டார்களா? என்று தோன்றி விடுகிறது.”

பார்வதி பதில் ஏதும் கூறாமல் சேதுபதியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

”சரி... நீங்கள் டியூஷனை ஆரம்பியுங்கள்... எனக்கும் கொஞ்சம் அவசர ஜோலியிருக்கிறது. அரை மணியில் திரும்பி வந்துவிடுகிறேன்'' என்று கூறிப் புறப்பட்டார் சேதுபதி.

அன்றிரவு பார்வதி வெகு நேரம் தூங்காமல், தூக்கமும் வராமல், அமைதியின்றிப் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். சேதுதிபதி கூறிய வார்த்தைகளை ஒவ்வொன்றாக நினைவுப்படுத்திப் பார்த்து ’எதற்காக இப்படிப் பேசினார். அதன் இரகசியம் என்ன?’ "கம்பானியன்” என்ற சொல்லுக்கு என்ன பொருள்? இவைபற்றியே அவன் எண்ணம் சுழன்று கொண்டிருந்தது. என்னுடைய துணையை மனத்தில் எண்ணியே அப்படிப் பேசியிருக்கிறார். அவருடைய உள்ளத் தில் எனக்கு இடமிருக்கிறது. அவர் என்னை விரும்புகிறார். என் உறவை நாடுகிறார். அவருக்கு என்மீது நாட்டமிருக் கிறது. இல்லையென்றால் இம்மாதிரி அவர் பேசியிருக்க மாட்டார். சொற்களைத் தராசில் நிறுத்திப் போட்டு மிதமாகப் பேசக் கூடியவராயிற்றே! என் உள்ளமும் அவரையே எண்ணி எண்ணி ஏங்குகிறது. அவரை நான் சந்திக்க வேண்டும். சந்தித்து என் உள்ளத்தை அவரிடம் சொல்ல வேண்டும். ஆம்; நாளை காலையே அவரைச் சந்தித்து என் அந்தரங்கத்தை அவரிடம் கூறி விடுகிறேன். மனம் விட்டுப் பேசி விடுகிறேன். நீண்ட நாட்களாக என் மனத்தில் சுமந்து கொண்டிருக்கும் பாரத்தை இறக்கி விடுகிறேன். அப்போது தான் எனக்கு நிம்மதி பிறக்கும். நெஞ்சுக்குள் புகுந்து அனைத்துக் கொண்டிருக்கும் வேதனை நீங்கும். இந்த முடிவு அவளுக்குச் சற்று நிம்மதியைத் தந்தது.

மறுநாள் விடியற்காலையிலேயே எழுந்துவிட்ட பார்வதி குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு தேவியின் படத்துக்கு முன்னால் போய் நின்று வணங்கினாள். "தாயே! எனக்கு மனச் சாந்தியைக் கொடு. அவரிடம் என் உள்ளத்தை எடுத்துச் சொல்லும் துணிவைக் கொடு” என்று வேண்டிக் கொண்டாள். பின்னர், மாடி அறைக்குப் போய்க் கண்ணாடி முன் நின்று, அலங்காரத்தில் ஈடுபட்டாள். தலையைச் சீவிப் பலவிதமான கொண்டைகள் போட்டுப் பார்த்துக் கடைசி யில் எதுவுமே திருப்தியளிக்காததால் வழக்கமாகப் போடும் கொண்டையையே போட்டுக் கொண்டாள். புடவைகளை மாற்றி மாற்றி உடுத்திப் பார்த்தாள். நகைகளை அணிந்து கொண்டு பார்த்தபோது 'சே! இவ்வளவு படாடோபம் கூடாது. அடக்கமாக, அழகாக, எளிய முறையில் அலங்கரித்துக் கொள்ள வேண்டும். அதுதான் அவருக்குப் பிடிக்கும்’ என்று தீர்மானித்தாள். கண்ணாடியில் கடைசி முறையாகப் பார்த்துக் கொண்டபோது, மூக்குக்கண்ணாடி அவள் வயதைச் சற்று அதிகமாக எடுத்துக் காட்டுவதுபோல் தோன்றியது.

'சே! அப்படி எனக்கு என்ன வயதாகி விட்டது?' என்று எண்ணியவள், அந்தச் சந்திப்பு எப்படி இருக்கும் என்பதைத் தனக்குள்ளாகவே கற்பனை செய்து பார்த்துக் கொண்டாள். வெட்கத்துடன் தலை கவிழ்ந்த வண்ணம் தான் அவர் எதிரில் நிற்பது போலவும், தான் கூறுவதைக் கேட்டு அவர் முகம் மலர்வது போலவும் அவள் மனக்கண் முன் தோன்றியது. அவள் மெய்சிலிர்த்துப் போனாள்.

அந்த இன்ப நினைவோடு, துணிவான தீர்மானத்தோடு சேதுபதியைச் சந்திக்கும் நோக்கத்தோடு மாடியிலிருந்து அவசரம் அவசரமாகக் கீழே இறங்கி வந்தாள் பார்வதி.

அச்சமயம் நடு ஹாலில் படித்துக் கொண்டிருந்த ராஜா ''அத்தை !'' என்று அழைக்கவே, பார்வதி திரும்பி அவன் அருகே சென்று, ''என்ன ராஜா?'' என்று விசாரித்தாள்.

''ஒன்றும் இல்லை அத்தை! இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்திருக்கிறீர்களா?'' என்று கேட்டான் ராஜா.

"என்ன புத்தகம்?'' என்று கேட்டபடியே அந்தப் புத்தகத்தைக் கையில் வாங்கிப் பார்த்த பார்வதி, ’பிக்விக் பேப்பர்ஸா?' என்று லேசாகச் சிரித்துக் கொண்டாள்.

''ஏன் சிரிக்கிறீர்கள் அத்தை ?''

”பதினைந்து வருஷமாக இதைத் தானே திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருக்கிறேன். கல்லூரியில் இது தானே பாடப்புத்தகம்! இதன் ஆசிரியர் சார்லஸ் டிக்கன்ஸன் ஒரு பெரிய அறிவாளி'' என்றாள்.

'ஆமாம். மகா மேதை!'' என்று கேலியாகக் கூறினான் ராஜா.

''என்னடா உளறுகிறாய்?''

''நான் உளறவில்லை. டிக்கன்ஸ்தான் உளறியிருக்கிறான். பெரிய அறிவாளியாம்! மேதையாம் உலகப்புகழ் பெற்ற ஆசிரியராம்! 'இந்தப் புத்தகத்தில் அவன் எழுதி யிருப்பதைப் பார்த்தீர்களா ; கற்பனை யென்ற பெயரில் கண்டதை யெல்லால் எழுதலாம் போலிருக்கிறது. ஐம்பது வயசுக் கிழவன் ஒருவனைக் காதலிக்கிறாளாம். ரொம்ப நன்றாயிருக்கிறதல்லவா? இதை பெரிய நகைச்சுவை என்று எழுதியிருக்-கிறாராம். இல்லை,இயற்கை என்று எழுதியிருக் கிறாரா? வாழ்க்கையில் நடக்கக் கூடியதா இது? இதற்குக் காதல் என்ற புனிதமான சொல் ஒரு கேடா? சே! புத்தகமா இது எழுத்தா இது? கிழவிக்கும் கிழவனுக்கும் காதலாம்! வெட்கக் கேடு தூ...'' என்று அந்தப் புத்தகத்தைக் கோபமாக அப்பால் வீசி எறிந்தான் ராஜா.

ராஜாவின் வார்த்தைகள் பார்வதியின் உள்ளத்தில் ஈட்டிகளாகப் பாய்ந்தன. 'தன்னையே குற்றம் சாட்டிப் பேசுகிறானோ?' என்று கூட அவள் நெஞ்சம் குறுகுறுத்தது. அவளால் அவனுக்குப் பதில் கூற முடியவில்லை. தானே அந்தக் குற்றவாளியாக மாறி அவன் எதிரில் நிற்பது போன்ற ஒரு மயக்கம்!

மெளனமாகத் திரும்பிய பார்வதி மெதுவாக அவ் விடத்தைவிட்டு நகர்ந்தாள். அவள் கால்கள் வாசல் பக்கம் செல்லவில்லை. அதற்குப் பதிலாக மாடிப்படிகளை நோக்கி நடந்தான்.
--------------
குருத்து பதினாறு


நீண்ட நேர அலங்காரத்திற்குப் பிறகு, மிகுந்த உற்சாகத்துடன், சேதுபதியைச் சந்திக்கப் போகிறோம் என்னும் குதூகலத்துடன், அவருடைய அந்தரங்கத்தை அறியப் போகும் ஆர்வத்துடன், இரண்டில் ஒன்று தெரிந்து கொண்டு விடுவதென்னும் திடமான தீர்மானத்துடன் அவருடைய வீட்டுக்குப் புறப்பட்ட பார்வதியை, ராஜாவின் பேரிடி போன்ற சொற்கள் நிலைகுலையச் செய்துவிட்டன. ஒரு கணம் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

சேதுபதியிடம் எனக்குள்ள அக்கறையைப் புரிந்து கொண்டே ராஜா இப்படிப் பேசியிருக்கிறான். கடந்த சில நாட்களாக என்னுடைய போக்கில் ஏதோ ஒரு மாறுதல் இருப்பதை அவன் உணர்ந்திருக்கிறான். அதனாலேயே இன்று நான் வெளியே போகும் நேரத்தில் என்னைத் தடுத்து நிறுத்தி, 'பிக்விக் பேபர்ஸ்' பற்றிப் பிரஸ்தாபித்து, மறைமுகமாக என்னைத் தாக்கியிருக்கிறான் என்று ஊகித்த பார்வதி, அடுத்த கணமே சேதுபதியைச் சந்திக்கும் எண்ணத்தைக் கைவிட்டவளாய் மாடிப்படிகளை நோக்கி நடக்கலானான்.
அவள் உள்ளம் குழம்பியது. உடல் பதறியது. கால்கள் தடுமாறின. கண்கள் கலங்கிச் சிவந்தன. தட்டுத் தடுமாறிய படியே மாடியை அடைந்து தன் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டாள். அங்கே கண்ணாடியில் தன் உருவத்தைக் கண்டபோது, தன் கண்களிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் வழிந்து கொண்டிருப்பது தெரிந்தது. தன்னுடைய நிலைக்குத் தானே இரங்கினாள் பார்வதி.

ஆம்; பார்வதிக்காக, அவள் பரிதாப நிலைக்காக இந்த உலகத்தில் வேறு யாருமே இல்லை.

உடல் சோர்ந்து, உள்ளம் கசந்து, உறுதி தளர்ந்து, திட்டங்கள் தகர்ந்து, தட்டுத் தடுமாறி நிலை குலைந்து போன பார்வதி, நிற்கும் சக்தியற்றவளாகிப் படுக்கையில் சாய்ந்து விட்டாள்.

இனி அவள் சேதுபதியைச் சந்திக்க விரும்பவில்லை. சில நிமிடங்களுக்கு முன் வரை இருந்த அந்த ஆசையை இப்போது தன் உள்ளத்திலிருந்தே கெல்லி வீசி எறிந்து விட்டாள்.

'அவர் பதில் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. என்னை நேசிப்பதாகச் சொன்னால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன். அவர் இதயத்தில் எனக்கு இடமே இல்லை என்று கூறினாலும் அந்த அதிர்ச்சியையும் திடமாக ஏற்றுக் கொள்வேன். ஆனால் இரண்டில் ஒன்று முடிவாகத் தெரிந்து விட வேண்டும். மனத்திற்குள்ளாகவே மறைத்து வைத்துக் கொண்டு என்னால் இனி வேதனைப்பட முடியாது. இன்று முடிவு தெரிந்துவிட வேண்டும். அப்போதுதான் எனக்கு நிம்மதி ஏற்படும்' என்ற தீர்மானத்துடன் புறப்பட்ட பார்வதிக்கு இந்த இரண்டும் கெட்ட நிலை மிகுந்த எரிச்சலைக் கொடுத்தது.

படுக்கையில் சாய்ந்தபடியே யோசிக்கலானாள். ராஜா வின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவன் காதுகளில் பயங்கரமாக ஒலித்தன.

'கிழவனுக்கும் கிழவிக்கும் காதலாம்!'

யாரோ ஓர் ஆசாரியர், ஏதோ ஒரு புத்தகத்தில் எப்போதோ எங்கேயோ, தமாஷக்காக எழுதிய ஒரு சின்ன விஷயத்தையே ராஜாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை யென்றால், தன் சொந்த அத்தை, தாய்போல் இருந்து, தன்னைப் பாசத்துடன் போற்றி வளர்த்த அத்தை, இத்தகைய எண்ணம் கொண்டிருக்கிறாள் என்பதை அறிய நேரிடும்போது எத்தகைய சீற்றம் கொள்வான்? ஐயோ, அதை எண்ணிப் பார்க்கவே பயமாக இருந்தது பார்வதிக்கு. இதுகாறும் தன் மனத்துக்குள் இம்மாதிரி ஓர் எண்ணம் வைத்திருந்ததாகவே ராஜா அறியக் கூடாது. இப்போதே மறந்துவிடுகிறேன். மறந்துவிட்டு எப்போதும்போல் குமாரி பார்வதியாகவே, பிரின்ஸிபால் பார்வதியாகவே வாழ்ந்து விடுகிறேன், உள்ளத்தில் புகுந்து என்னுடன் இரண்டறக் கலந்துவிட்ட எண்ணத்தை அவ்வளவு எளிதாகக் களைந்து விடக் கூடியதாயிருந்தால் அது உண்மையான பற்றுதலா யிருக்க முடியுமா ?

'ஆமாம், நீ ஏன் ராஜாவுக்காக உன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவேண்டும்.' பார்வதியின் உள் மனம் அவளைக் கேட்டது.

"ராஜாவை நீ உன் சொந்த மகனைப்போல் பாசம் வைத்து வளர்த்தாய். இப்போது அவன் பெரியவனாக வளர்ந்து, உலகம் தெரிந்தவனாக, நல்லது கெட்டது புரிந்தவனாக ஆகியிருக்கிறான். இத்தனை வயது கடந்த பிறகு, நீ ஒருவரின் நட்பை விரும்புகிறாய், உறவை நாடுகிறாய் என்று அவன் அறிய நேரிட்டால் அவன் அதைப் பொறுத்துக் கொள்ளமாட்டான், உன் உறவையே முறித்துக்கொண்டு உன்னை அநாதையாக்கிவிட்டு உன் முகத்திலேயே விழிக்க விருப்பமின்றி, உன்னைப் பிரிந்து போய்விடுவான்' என்றது இன்னொரு குரல்.

'போகட்டுமே; எனக்கென்று ஒரு வாழ்வு கிடையாதா?'

'உண்டு; ஆனால் அதைக் காலம் கடந்து விரும்புகிறாய்! இப்போது ராஜாவைப் புறக்கணித்துவிட்டுச் சேதுபதியை நீ மணந்துகொண்டால் உலகம் உன்னைச் சுயநலக்காரி என்று தூற்றும்.'

கடைசியில் பார்வதி ஒரு முடிவுக்கு வந்தாள். சேதுபதியை அன்றோடு, அந்தக் கணத்தோடு மறந்துவிடுவது என்பதே அந்த முடிவு.

அப்போது கடிகாரத்தில் மணி ஒன்பது அடிக்கும் ஓசை அவள் காதில் விழுந்தது.

'இன்னும் அரை மணி நேரத்திற்குள் காலேஜுக்குப் புறப்பட வேண்டும்' என்ற கடமை உணர்ச்சியால் உந்தப் பட்டவள், மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்றாள்.

அத்தையின் வரவுக்காகத் தினமும் காத்திருக்கும் ராஜாவை இன்று காணவில்லை. அவன் சீக்கிரமே சாப்பிட்டு விட்டு வெளியே சென்றுவிட்டான் என்பதைச் சற்று முன்பு கேட்ட ஸ்கூட்டரின் ஒலியிலிருந்தே பார்வதி புரிந்துகொண் டாள். அவனை நிமிர்ந்து நோக்கவும், அவனுடன் பேசவும் கூடக் கூசிக்கொண்டிருந்த பார்வதிக்கு, அவன் அங்கே இல்லாதது ஆறுதலாகவே இருந்தது.

பார்வதி அதிகம் பேசவில்லை. சாப்பாட்டை முடித்துக் கொண்டு குறித்த நேரத்திலேயே கல்லூரிக்குப் புறப்பட்டு விட்டாள். வழக்கம்போல் செவிட்டுப் பெருமாள் முக்காலியை விட்டு எழுந்து நின்று வணக்கம் செலுத்தினான். கல்லூரிக் காம்பௌண்டுச் சுவர் நெருங்கும்போது காலை விந்தி விந்தி நடந்து வந்துகொண்டிருந்த மிஸஸ் அகாதா 'ஹலோ குட்மார்னிங்' என்றாள். அப்போது மணி பத்தடிக்க ஐந்து நிமிஷம்.

பார்வதி காரைத் தன் அறைக்கு நேராகக் கொண்டு போய் நிறுத்துவதற்குள், அட்டெண்டர் ரங்கசாமி ஓடி வந்து காரின் கதவைத் திறந்தான். இதற்குள் பிரின்ஸிபால் வந்துவிட்டார் என்ற சேதி கல்லூரியெங்கும் பரவிவிடவே, பேச்சுக் குரல் அடங்கி அமைதி நிலவிற்று.

பார்வதி அமைதியாகத் தன் அறைக்குள் போய் அமர்ந்து கொண்டாள். அவள் கையெழுத்துக்காக மேஜை மீது ஏதேதோ கடிதங்கள் காத்திருந்தன. அவற்றைப் படித்துக் கையெழுத்துப் போட வேண்டும். பகல் ஒரு மணிக்கு வெளி நாட்டிலிருந்து யாரோ கல்வித் துறை நிபுணர்கள் வருகிறார்கள். அவர்களை வரவேற்று உபசரித்துக் கல்லூரியைச் சுற்றிக் காண்பிக்க வேண்டும். உதவிப் பிரின்ஸிபாலுக்கு உடம்பு சரியில்லை. அவளுக்குப் பதிலாக வகுப்புக்குச் சென்று பாடங்கள் நடத்த வேண்டும். மாலை நாலு மணிக்கு அவர்களை வழியனுப்ப விமான நிலையத்துக்கு வேறு சென்றாக வேண்டும். பார்வதிக்கு லேசாகத் தலையை வலித்துக்கொண்டிருந்தது. அதைப் பொறுத்துக் கொண்டவளாய், தன் கடமைகளை முடிந்த வரையில் செய்து முடித்தாள் பார்வதி.

மணி மூன்று. அவளால் உட்கார்ந்திருக்கவும் முடியாத நிலை. பாரதியை அழைத்து வரச் சொன்னாள்.

அவள் வந்ததும் பாரதி! இன்று எனக்கு உடம்பு சரியில்லை. ஆகையால் டியூஷனை நாளைக்கு வைத்துக் கொள்ள வேண்டியதுதான். நான் இப்போது வீட்டுக்குச் செல்கிறேன்'' என்று கூறிப் புறப்பட்டாள்.

பார்வதி, சாரதாமணிக் கல்லூரியின் தலைமைப் பதவியை ஏற்று எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை அவள் தலைவலி என்று சொல்லிக் கல்லூரிக்கு வராத நாளே கிடையாது.

பார்வதி முக்கிய அலுவல்களை யெல்லாம் ரத்து செய்து விட்டு, கடமைகளை யெல்லாம் மறந்துவிட்டு, கல்லூரியிலிருந்து இரண்டு மணி முன்பாகவே புறப்பட்டுச் சென்றது அன்றுதான் முதல் தடவை.

மாடியில் போய்ப் படுத்தவள் தான். மாலை ஆறு மணி வரை எழுந்திருக்கவில்லை. கடுமையாகக் காற்று வீசிக்கொண்டிருக்கவே, அவள் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந் தாள். ஏதேதோ எண்ணங்கள் மாறி மாறித் தோன்றிக் கொண்டிருந்தன.

சேதுபதி தன்னைக் காண வந்திருப்பது போல் ஒரு பிரமை. அவரை நினைக்கவே அவளுக்குப் பயமாக இருந் தது. 'அவரை இனி நான் சந்திக்கவே மாட்டேன். சந்திப்பதால் என் உள்ளத்தில் வளரக்கூடிய எண்ணத்துக்கு இனி இடம் தரமாட்டேன்' என்று எண்ணுகிறாள்.

"அத்தை ! அத்தை !'' என்று அவசர அவசரமாகக் கூப்பிட்டுக்கொண்டு மாடிப்படிகளில் ஏறிவரும் ராஜாவின் பூட்ஸ் ஒலி பார்வதிக்குக் கேட்டது. அவள் மெதுவாகத் திரும்பிப் படுத்துக்கொண்டாள். ராஜாவின் முகத்தைப் பார்க்கும் துணிவு அவளுக்கு இல்லை. ராஜாவின் கைகள் தன் நெற்றியைத் தொடுவதை உணர்ந்த பார்வதி, அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

''என்ன அத்தை! நல்ல ஜூரம் அடிக்கிறதே! உங்களுக்கு என்ன உடம்பு!... " பதறிப்போன ராஜா, கீழே ஓடிச்சென்று தர்மாமீட்டரைக் கொண்டுவந்து பரிசோதித்தான்.

"101 டிகிரி'' என்று அறிந்தபோது, ராஜாவின் கண்கள் கலங்கின.

"ஒன்றுமில்லை ராஜா! இன்றிரவு பட்டினி போட்டால் நாளைக்குச் சரியாகிவிடும்'' என்று பார்வதி ஈன சுரத்தில் கூறினாள்.

"நீ சாப்பிடவில்லை யென்றால், நானும் சாப்பிடப் போவதில்லை. நான் போய் டாக்டரை அழைத்து வருகிறேன்'' என்று கூறிப் புறப்பட்ட ராஜா, சற்று நேரத்துக் கெல்லாம் டாக்டருடன் திரும்பி வந்தான்.

பார்வதியைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர் பாலம்மாள் சிரித்துக்கொண்டே, "நான் டாக்டர் தொழிலை மேற்கொண்டு ஆறு வருடங்கள் ஆகின்றன. இதுவரை உங்களுக்குத் தலைவலி என்று கூடக் கேள்விப்பட்டதில்லை. உங்களுக்குச் சிகிச்சை செய்ய இப்போதாவது எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததே!'' என்றாள்.

"அப்படியானால் எனக்கு ஜூரம் வந்தது பற்றித் தாங்கள் ரொம்ப சந்தோஷப்-படுகிறீர்கள், இல்லையா?" என்று கேட்டாள் பார்வதி ; பாலம்மாள் சிரித்தாள்.

''பயப்படக்கூடிய அளவுக்கு ஒன்றும் இல்லை. சாதாரண ஆரம்தான். நான் மருந்து கொடுத்துவிட்டுப் போகிறேன். சாப்பிடுங்கள். நாளைக்கு ஜூரமே இருக்காது. ஆனால் ஓய்வு ரொம்ப முக்கியம்" என்று கூறிவிட்டுப் புறப்பட்டாள் டாக்டர்.

"சாப்பிடலாமா?" என்று கேட்டான் ராஜா.

"ஓ" என்றாள் டாக்டர்.

"பார்த்தீர்களா அத்தை! டாக்டரே சாப்பிடச் சொல்லி விட்டார்' என்றான் ராஜா.
டாக்டர் புன்சிரிப்புடன் திரும்பி, "சாப்பிடலாம் என்று நான் கூறியது உன்னைத்தான். உன் அத்தையை அல்ல" என்றாள்.

"பார்த்தாயா ராஜா! போய்ச் சாப்பிடு'' என்றாள் அத்தை.

அன்றிரவெல்லாம் பார்வதிக்குத் தூக்கமே இல்லை. பழைய சம்பவங்களெல்லாம் துண்டு துண்டாகப் பார்வதி யின் நினைவில் தோன்றின. பலவீனம் காரணமாகக் கண்ணெதிரில் மின்மினிப் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன.

என்னுடைய கணவரின் அன்புக்குப் பத்திரமாகப் பார்க்கிறாயா; அம்மா'' - சரஸ்வதியின் குரல்.

காகிதக் குப்பைகளுக்கிடையே பளிச்சிடும் திருமண அழைப்பிதழ், விமானக் கூடத்தில் அவருடைய மூக்குக் கண்ணாடியைக் கொண்டு கொடுத்தபோது அவர் பார்த்த பார்வை - கூறிய வார்த்தை...

[பெண்கள் ஓளவையைப் போல் கல்வி அறிவு பெற வேண்டும். ஆனால் ஓளவையைப் போல் திருமண வாழ்க்கையே வேண்டாம் என்று கூறிவிடக் கூடாது' என்று தான் கூறியபோது அவர் சிரித்த சிரிப்பு.... ஒருமுறை வியர்த்துக் கொட்டியது. விடியும் நேரத்தில் அயர்ந்து தூங்கிக்கொண் டிருந்தாள் பார்வதி. ராஜா வந்து அவள் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். ஜுரம் இப்போது துளிக்கூட இல்லை என்று தெரிந்ததும், அவன் அவளை எழுப்பாமலே போய் விட்டான். பார்வதி கண்விழித்துப் பார்த்தபோது தன் அறைக்குள் வெயில் அடித்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள்.

கடிகாரத்தில் மணி பத்து அடித்துக் கொண்டிருந்தது.

''ஓ! மணி பத்தாகி விட்டதா " படுக்கையை விட்டு எழுந்த பார்வதி, அவசர அவசரமாகக் கீழே இறங்கி வந்துவிட்டாள். ஞானம் பதறிப்போய், ”நீங்கள் இன்று காலேஜுக்குப் போகக்கூடாது. டாக்டர் ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்” என்றாள்.

''கல்லூரிக்குப் போனால் எனக்கு எல்லாம் சரியாகி விடும். ஜூரம் நேற்றோடு போய்விட்டது. மணி பத்தடித்து விட்டது. நான் போய் வருகிறேன்'' என்று ஞானத்திடம் சொல்லிக் கொண்டவள், சாப்பிடாமலேயே புறப்பட்டு விட்டாள்.

அன்று பார்வதியின் கார் கேட்டைத் தாண்டியபோது செவிட்டுப் பெருமாள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வில்லை. அவன் வழக்கமாக எழுந்து நின்று கும்பிடு போடும் நேரத்தில் போட்டுவிட்டான். இன்றைக்குப் பார்வதி லேட்!

பார்வதியின் கார் கல்லூரிக் காம்பவுண்டை நெருங்கிய போது, அங்கே மிஸஸ் அகாதாவைக் காணவில்லை. அகாதா அன்று கல்லூரிக் காம்பவுண்டை நெருங்கிய போது, 'குட் மார்னிங் பிரின்ஸிபால்' என்று கூறிக்கொண்டே பார்வதியின் கார் வருகிறதா என்று திரும்பிப் பார்த்தாள். காரைக் காணவில்லை. கைக் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்து அடிக்க ஐந்து நிமிஷம்! ஏமாற்றத்துடன் சென்று விட்டாள் அகாதா.

வழக்கம்போல் அட்டெண்டர் ரங்கசாமி பத்தடிக்க ஐந்து நிமிஷத்துக்குக் கார்க்கதவைத் திறக்க ஓடிவருகிறான்; காரைக் காணவில்லை. முகத்தில் கேள்விக் குறியுடன் திரும்பிச் செல்கிறான்.

சரியாகப் பத்தேகால் மணிக்குப் பார்வதியின் கார் கல்லூரிக் காம்பவுண்டுச் சுவரை நெருங்கியபோது எதிரிலிருந்த காலேஜ் புத்தகக் கடைக்கார அம்பாள் கடிகாரத்தைப் பார்க்கிறாள். அது சரியாக ஓடுகிறதா என்ற சந்தேகம் வந்து விடுகிறது அவளுக்கு. பார்வதியின் காரைக் கண்டதும் அவள் கடிகாரத்தின் முள்ளைத் திருப்பிப் பத்தடிக்க ஐந்து நிமிஷத்துக்கு மாற்றி விடுகிறாள். பார்வதியின் கார் வந்தால், மணி பத்தடிக்க ஐந்து நிமிஷம் என்பது அவளுக்கு அவ்வளவு நம்பிக்கை.

பார்வதி இன்று லேட்டாக வந்தபோது அந்தக் கண்களுக்குப் பார்வதியின் மேல் நம்பிக்கை குறையவில்லை. கடிகாரத்தில் பழுது இருப்பதாகவே தோன்றியது.
பார்வதி தன் அறைக்குள் சென்றுகொண்டிருந்தபோது அங்கிருந்த டெலிபோன் மணி அடித்துக்கொண்டிருந்தது.

பார்வதி ரிஸீவரை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டாள். சேதுபதியின் குரல் என்ன சேதுபதியா! அவளுக்கு வியர்த்துப் போயிற்று.

"ஓ, நீங்களா? என்ன வேண்டும்?@ பற்றுதல் எதுவும் மின்றி உணர்ச்சியற்ற குரலில் பேசினாள் பார்வதி.

”பாரதி சொன்னாள், தங்களுக்கு உடம்பு சரியில்லை யென்று.... இப்போது எப்படி இருக்கிறது?”

”இப்போது ஒன்றுமில்லை... தாங்க்ஸ்...” சட்டென ரிஸீவரை வைத்துவிட்டாள் பார்வதி.

அவள் இதயம் படபடத்தது. ”இவர் எதற்காக என்னைப்பற்றி விசாரிக்க வேண்டும்? இவரை நான் மறக்க முயன்றாலும் முடியவில்லையே? ஒருவேளை இவர் என்னை நேசிக்கிறாரோ? அவர் உள்ளத்தில் எனக்கு இடமளித்திருக்கிறாரோ? அவரை நான் மறந்துவிடப் போகிறேன்; அதைப் போல் அவரும் என்னை மறந்துவிட வேண்டும். அப்போது தான் நான் நிம்மதியுடன் வாழமுடியும்”. திடமான, தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தாள் பார்வதி.

மணி மூன்று இருக்கும். பி.எஸ்ஸி. வகுப்புக்கு ஜாக்ரபி போதிக்கும் கடமை அவளை அழைத்தது.

பார்வதி, தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் தன் கடமையைச் செய்யப் புறப்பட்டாள். மெதுவாக நடந்து வகுப்புக்குள் நுழைந்தபோது, அவளுக்குத் தலை சுற்றியது. அதையும் பொறுத்துக் கொண்டு வகுப்புக்குள் நுழைந்து மேடைமீது ஏறினாள். கால்கள் தடுமாறின. மயக்கமுற்றுக் கீழே சாய்ந்துவிட்டாள்.
------------------
குருத்து பதினேழு


பார்வதி கண் விழித்துப் பார்த்தபோது தன் வீட்டு மாடி அறையில் உள்ள கட்டிலில் தான் படுத்துக்கொண்டிருப் பதை உணர்ந்தாள். கல்லூரியில் மயக்கமுற்றுக் கீழே விழுந்துவிட்ட பின்னர் நடந்தது எதுவுமே அவளுக்கு நினைவில் இல்லை.

ராஜா, பாரதி, ஞானம், கல்லூரி மாணவிகள் சிலர், மிஸஸ் அகாதா, இன்னும் சில புரொபஸர்கள் அத்தனைப் பேரும் அந்த அறைக்குள் கவலை தோய்ந்த முகத்துடன் பார்வதியையே பார்த்த வண்ணம் நின்றுகொண்டிருந்தனர்.

அப்போது இரவு பதினோரு மணி இருக்கலாம். பார்வதி, அவர்கள் எல்லோரையும் ஒரு முறை கண்ணோட்டமிட்டு ”நீங்களெல்லோரும் எத்தனை நேரமாக இங்கே காத்திருக்கிறீர்கள்? பாவம்! சாப்பிட்டீர்களா, இல்லையா? ராஜா! இவர்களை யெல்லாம் கீழே அழைத்துக்கொண்டு சென்று சாப்பிடச் சொல்லு...”என்று ஈனஸ்வரத்தில் பேச முடியாமல் பேசினாள்.

''முதலில் நீங்கள் சாப்பிடுங்க'' என்று கூறி, பக்கத்திலிருந்த ஹார்லிக்ஸை எடுத்துத் தன் கையாலேயே கலந்து கொடுத்தாள் மிளஸ் அகாதா.

அந்த பிரெஞ்சு ஆசிரியையின் அன்பு, பார்வதியின் கண்களைப் பனிக்கச் செய்து விட்டது.

"பாவம்! நீங்கள் கூடவா மாடிப்படி ஏறி என்னைப் பார்க்க வந்திருக்கீங்க! கல்லூரியில் கூட மாடியில் நடக்கும் வகுப்பாயிருந்தால் பாடம் நடத்தப் போக முடியாதென்று கூறுவீர்களே!'' என்றாள் பார்வதி.

''நான் என்ன! கல்லூரி முழுதுமே இங்கேதான் இருக்குது...'' என்றாள் அக்காதா.

திருவாளர் சேதுபதியும், பாலம்மாளும் அப்போது அறைக்குள் பிரவேசிக்கவே, சுற்றியிருந்தவர்கள் சற்று விலகி மரியாதையுடன் நின்றார்கள்

சேதுபதியைக் கண்டதும் பார்வதியின் இதயம் படபடத்தது. ”ஐயோ இவர் எதற்காக இங்கே வந்தார்? இவரை நான் மறக்க முயன்றாலும் இவர் என்னை மறக்கவிட மாட்டாரோ? இவரை இனிக் கண்ணால் காணக்கூடாது; மனத்தாலும் நினைக்கக் கூடாது என்றல்லவா எண்ணிக் கொண்டிருந்தேன். இப்போது இவரே என் எதிரில் வந்து நிற்கிறாரே!”

டாக்டர் பாலம்மாள், பார்வதியின் கை நாடிகளைச் சற்று நேரம் உணர்ந்து பார்த்துவிட்டுப் பின்னர் காது குழலை வைத்துப் பரிசோதித்தாள்.

"கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஒரு மாதம் ஓய்வெடுக்க வேண்டும். அதுதான் ரொம்ப முக்கியம். நான் நேற்றுச் சொல்லிவிட்டுப் போனேன். கல்லூரிக்குப் போகக் கூடாது என்று'' என்று கூறிவிட்டுப் புறப்பட்டாள் டாக்டர்.

டாக்டருடனேயே கீழே இறங்கிச் சென்ற ராஜா ''அத்தைக்கு என்ன ஆகாரம் கொடுக்கலாம் டாக்டர்?'' என்று விசாரித்தான்.

”மில்க்கும், ப்ரூட் ஜூஸம் நிறையச் சாப்பிடனும்..” என்றாள் டாக்டர்.

"என்ன ப்ரூட்ஸ் கொடுக்கலாம் டாக்டர்? மாதுளம் பழம் கொடுக்கலாமா? அத்தைக்கு மாதுளம்பழம் ரொம்பப் பிடிக்கும்...”

"பிடிச்சால் ஜூஸாகவே பிழிந்து கொடேன்.... ரெஸ்ட் ரொம்ப முக்கியம்'' என்று கூறிக்கொண்டே காரில் போய் ஏறிக்கொண்டாள் டாக்டர்.

அறைக்கு வெளியே வராந்தாவிலேயே நின்று கொண் டிருந்த சேதுபதி, ராஜா வந்ததும், ''டாக்டர் என்ன சொல்கிறார் ராஜா!'' என்று விசாரித்தார்.

"அத்தைக்கு ரெஸ்ட்தான் ரொம்ப முக்கியம் என்கிறார்.''

”டாக்டர் அப்படிச் சொல்லி யிருக்கும்போது அத்தையை நீ நேற்றுக் கல்லூரிக்குப் போக விட்டிருக்கக் கூடாது!'' சேதுபதியின் குரலில் குற்றச்சாட்டு தொனித்தது.

"நான் காலை ஒன்பது மணிக்கே காலேஜுக்குப் போய் விட்டேன். அத்தை யார் பேச்சையும் கேட்க மாட்டாள். வழக்கம்போல் அவள் காலேஜுக்குப் போய் மூணு மணி வரை ஓய்வின்றி உழைத்திருக்கிறாள். மாலையில் ஜாக்ரபி வகுப்பு நடத்தச் சென்றபோது தான் மயக்கமாகக் கீழே விழுந்திருக்கிறாள். நல்ல வேளையாக அங்கிருந்த மாணவிகள் ஓடிச்சென்று தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். செய்தி தெரிந்தது தான் தாமதம், அத்தனைப் பேரும் ஓடிச்சென்று அத்தையைக் காரிலே ஏற்றி இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள்... பாரதி போன் செய்த பிறகுதான் எனக்கே விஷயம் தெரிந்து ஓடி வந்தேன்'' என்றான் ராஜா.

வராந்தாவில் நின்ற வண்ணம் சேதுபதியும் ராஜாவும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்வதி சற்றுக் கவனமாகவே கேட்டுக் கொண்டாள்.

அந்தப் பேச்சில், சேதுபதி அவள் மீது கொண்டிருந்த அன்பு வெளிப்பட்டது.

'எவ்வளவு உரிமையோடு ராஜாவைக் கோபித்துக் கொள்கிறார்? அந்தக் கோபத்தில் எவ்வளவு பரிவும் பாசமும் புதைந்து கிடக்கின்றன? என்மீது இவருக்கேன் இத்தனை அக்கறை? தம்முடைய பொன்னான நேரத்தை யெல்லாம் வீணாக்கிக்கொண்டு இங்கே எத்தனை நேரமாகக் காத்திருக் கிறாரோ?’

"பாரதி! உன் அப்பாவை உட்காரச் சொல்லம்மா” என்று கூற வாயெடுத்தவள், சட்டென மெளனியாகி விட்டாள். காரணம், அவரைக் காணவே அவள் கண்கள் கூசின. அவரை உட்காரச் சொல்லவோ, அவரிடம் பேசவோ, அன்பு பாராட்டவோ மறுத்தது உள்ளம். உள்ளத்தை உறுதியாக்கிக்கொண்டு அவர் வந்திருப் பதையே மறந்தவளாய், மறக்க முயன்றவளாய், மறக்க முடியாதவளாய் - ஒரு பெரும் சோதனையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள் பார்வதி.

அறைக்கு வெளியிலேயே நின்றுகொண்டிருந்த சேதுபதி, பார்வதியைப் பார்க்கவே விரும்பவில்லை. காரணம் தன்னைக் கண்டதும் அவளால் படுத்திருக்க இயலாது. எழுந்து உட்கார்ந்து விடுவாள். அந்தச் சிரமத்தை அவளுக்குக் கொடுக்கக்கூடாது என்று அவர் எண்ணியது தான்.

ஒவ்வொருவராக வந்து பார்வதியிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டனர். கடைசியில் மிஸஸ் அகாதா விடைபெற்றுக்கொள்ள வந்தபோது பார்வதியின் கண்கள் கலங்கி விட்டன. காலை விந்தி விந்தி நடக்கும் அகாதாவிடம் பார்வதிக்குத் தனிப்பட்ட அன்பு உண்டு. வானமே இடிந்தாலும் பூமியே பிளந்தாலும் அகாதா கல்லூரிக்கு வரத் தவறியதில்லை.

”ராஜா! இந்த பிரெஞ்சு லேடியைக் காரிலே கொண்டு போய் விட்டுவிட்டு வா'' என்று பார்வதி கூறியபோது, ”இவர்களை நானே கொண்டு போய் விட்டுவிடுகிறேன். ராஜாவை எங்கும் அனுப்ப வேண்டாம். ராஜா நீ இங்கேயே இருந்து அத்தையைக் கவனித்துக்கொள். ஏதாவது முக்கியமாயிருந்தால் எனக்கு உடனே டெலிபோன் செய்” என்றார் சேதுபதி, வராந்தாவில் நின்றபடியே.

’தோங்க் யூ' என்று கூறிப் புறப்பட்டாள் அகாதா.

"அப்பா! நான் இங்கேயே இருக்கட்டுமா?” என்று கேட்டாள் பாரதி.

”வேண்டாம்; நீ என்னோடு வந்துவிடு. நாம் வீட்டுக்குப் போனதும் உன் அத்தையை இங்கே அனுப்பி வைக்கலாம். நம்மைக் காட்டிலும் அவள் இங்கே இருந்தால் உன்னுடைய பிரின்ஸிபாலுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து கொண்டிருப்பாள்” என்றார் சேதுபதி.

சேதுபதியின் அன்பு மொழி ஒவ்வொன்றும் பார்வதியின். நெஞ்சத்தைச் சஞ்சலத்திலாழ்த்தின. நேற்று முன் தினமாயிருந்தால் அந்த மொழிகள் அவளுக்கு இனித்திருக்கும். இப்போது அவற்றை அவள் கசப்பு மாத்திரைகளாக்கி விழுங்கிக் கொண்டிருந்தாள்.
'இவர் எதற்காக என்மீது அன்பு பாராட்ட வேண்டும்? அளவுக்கு மீறிய அன்பைப் பொழிந்து என்னைச் சித்திர வதைக்குள்ளாக்க வேண்டும்? நான் மயக்கமுற்று விழுந்ததற்கு இவரல்லவா காரணம்? இவரிடம் நான் கொண்டிருந்த அன்பல்லவா காரணம்! இதுகாறும் இவரையே நினைத்து நினைத்து, இவருடைய அன்புக்காகவே ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன். என்னுடைய எண்ணத்தை இப்போது மாற்றிக்கொண்டு விட்டேன். இவரை மறந்து வாழ முடிவு செய்துவிட்டேன். இப்போது நான் வேண்டுவ தெல்லாம் இவர் என்னிடம் அன்பு பாராட்டாமல் இருக்க வேண்டும் என்பதுதான். தேவி! இந்தச் சோதனையிலிருந்து நீயே என்னைக் காக்க வேண்டும்' என்று வேண்டிக் கொண்டாள்.

வாசலில் சேதுபதியின் கார் புறப்படும் ஓசை கேட்ட போது பார்வதி அந்த ஓசையை உற்றுக் கவனித்தாள். தன் கண்களில் பெருகி வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட பார்வதி, "என்னால் அவரை மறக்க முடிய வில்லை...” என்று தனக்குத்தானே கூறிக் கொண்டாள்.

மறுநாள் காலை. மணி எட்டுகூட அடித்திருக்காது. பாரதியையும், தங்கை காமாட்சியையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டார் சேதுபதி. காரிலிருந்து இறங்கியவர் நேராக மாடிக்குச் சென்று பார்வதி படுத்திருந்த அறைக்குள் எட்டிப் பார்த்தார். பார்வதி அயர்ந்து தூங்கிக்கொண் டிருந்தாள். மெதுவாக அந்த அறைக்குள் சென்ற சேதுபதி, தன் கையோடு கொண்டு வந்திருந்த பழங்களை எடுத்துப் பக்கத்திலிருந்த மேஜை மீது வைத்தார். அவ்வளவும் மாதுளம் கனிகள்!

'அத்தைக்கு மாதுளம் பழம் என்றால் ரொம்பவும் பிடிக்கும்' என்று முதல் நாள் இரவு ராஜா டாக்டரிடம் கூறியதும், ’பழத்தை ஜூஸாகப் பிழிந்து கொடேன்' என்று டாக்டர் பதில் கூறியதும் சேதுபதியின் காதில் விழுந்திருக்க வேண்டும். அவர் சந்தடியின்றிப் பழங்களை வைத்துவிட்டுப் புறப்பட்டபோது பார்வதி சட்டென்று கண் விழித்துக் கொண்டு ''நீங்களா? இப்போது எதற்கு வந்தீர்கள்? மாதுளம் பழங்களெல்லாம் ஏது?....'' என்று கேட்டாள்.

”என் தங்கையை அழைத்து வந்தேன். அவள் தங்களுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வாள். எனக்குக் கொஞ்சம் அவசர வேலை யிருக்கிறது! நான் மறுபடியும் மாலையில் வந்து பார்க்கிறேன். நீங்கள் அதிகம் பேசக்கூடாது. மனசுக்கு அமைதியும் உடலுக்கு ஓய்வும் மிக முக்கியமாம். டாக்டர் கூறியிருக்கிறார்”. மேலே எதுவுமே சொல்லாமல் புறப்பட்டு விட்டார் சேதுபதி.

'இவர் யாரோ? நான் யாரோ? இவர் எதற்காக எனக்கு இத்தனை உபசாரம் செய்ய வேண்டும்? நான் இவரை மறக்க நினைக்கும்போது இவர் ஏன் என் மீது அளவற்ற அன்பைப் பொழிகிறார்? எனக்கு மாதுளம் பழத்தின் மீது ஆசை என்பது இவருக்கு எப்படித் தெரிந்தது! ராஜா கூறியிருப்பானோ?' 'ராஜா!'' என்று அழைத்தாள்.

"கூப்பிட்டிர்களா அத்தை?'' என்று கேட்டுக்கொண்டே வந்தான் ராஜா.

"ஆமாம்; மாதுளம்பழம் இங்கே எப்படி வந்தது?”

"தெரியாதே! ஒருவேளை சேதுபதி வந்திருப்பார்”

”அவருக்கு யார் சொன்னது? டாக்டர் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ஒருவேளை அது அவர் காதில் விழுந்திருக்கலாம்...''

"ஓ!....”

''ஏன் அத்தை சாப்பிடறீங்களா, ஜூஸ் பிழிஞ்சுக் கொடுக்கிறேன்...”

ஆர்வத்துடன் கேட்டான் ராஜா...

"வேண்டாம்...'' அலட்சியத்துடன் சாரமற்ற குரலில் பதில் கூறினாள் பார்வதி. அதில் வெறுப்பும் இழையோடி இருந்தது.

சேதுபதியின் அன்பு அவள் இதயத்தை நெகிழ வைத்தது. ஆனால் அதை அவள் பாராட்டவில்லை. அவர் காட்டும் அன்பை ஏற்றுக் கொள்ளவும் தயாராயில்லை. அந்த அன்பை அவள் பொருட்படுத்தவும் இல்லை. அலட்சியம் செய்யவும் இல்லை. அவர் தன்னிடம் அன்பு கொண்டிருப் பதை அவள் உணர்ந்ததாகவே காட்டிக் கொள்ளாமல், அவர் வருகிறபோதும், பேசுகிறபோதும், உணர்ச்சியற்து மரக்கட்டையாக இருந்து சர்வ சாதாரணமாகப் பதில் கூறிக்கொண்டிருந்தாள்.

இப்போது? அவர் ஆசையோடு கொண்டுவந்து வைத்து விட்டுப் போயிருக்கிற மாதுளம் பழங்களைச் சாப்பிடுவதா, வேண்டாமா?

”கூடாது; இதைச் சாப்பிட்டால் அவர் என்மீது கொண்டுள்ள அன்பை நான் ஏற்றுக் கொள்வதாகும். இந்தப் பழங்களை நான் கையினாலும் தொடமாட்டேன். இன்று மாலை அவர் இங்கே வருவார். வந்ததும் வராததும் மாதுளம் பழங்களை நான் சாப்பிட்டு விட்டேனா என்று கவனிப்பார். பழங்கள் அப்படியே கிடப்பதைக் கண்டதும் என் மீது அவருக்குக் கோபம் கோபமாக வரும். என்னிடம் வெறுப்புத் தோன்றும். பிறகு அவர் என்னிடம் வைத்துள்ள பாசத்தை, நேசத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிட எண்ணுவார். அதைத்தான் நானும் எதிர் பார்க்கிறேன்.'' அவள் அந்தப் பழங்களைத் தொடவே இல்லை.

மாலை ஐந்து மணி. சேதுபதியின் கார் வரும் ஓசை கேட்டுப் பார்வதியின் இதயம் அடித்துக் கொண்டது.

"தாங்கள் வைத்து விட்டுச் சென்ற மாதுளங்கனிகள் அமுதமாக இனித்தன” என்று பார்வதி கூறுவாள். அந்தப் பதிலைக் கேட்டதும் என் முகத்தில் எந்தவித மாறுதலும் தோன்றக் கூடாது. இவ்வாறு எண்ணியபடியே படிகளைக் கடந்து பார்வதியின் அறையை அடைந்தார் சேதுபதி.

பார்வதி அவரை ஏறிட்டுப் பார்த்தான். அந்தப் பார்வையில் எந்த உணர்ச்சியுமே இல்லை.

''நன்றாகத் தூங்கினீர்களா?” சேதுபதி ஆவலுடன் கேட்டார்.

"தூங்கினேன்...” பார்வதியின் பதிலில் அத்தனை உற்சாகமில்லை.

சேதுபதியின் பார்வை பழங்கள் மீது பதிந்தது, காலையில் வைத்து விட்டுப்போன அத்தனைப் பழங்களும் அப்படியே அநாதைபோல் கிடந்தன. அந்தக் காட்சி அவருக்கு வேதனையை அளித்தது. வேதனைகளெல்லாம் ஓர் உருண்டை யாக மாறி நெஞ்சுக்குள் அடைத்துக் கொண்டது போல் ஓர் உணர்ச்சி. அதை விழுங்கி ஜீரணித்துக் கொள்ள முயன்றார். முடியவில்லை.

ஒரு நிமிஷம் அந்த அறைக்குள் மெளனம் நீடித்தது. அந்த ஒரு நிமிஷத்துக்குள் பார்வதிக்கு இதயமே வெடித்து விடும் போல் தோன்றியது.

வேதனையைச் சகித்துக் கொண்டு மௌனத்தைக் கலைத்துக்கொண்டு அவர்தான் பேசினார்.

”சாப்பிட்டீர்களா?''

அந்தக் கேள்வியில் எல்லா வேதனைகளும் அடங்கிக் கிடந்தன.

"உங்கள் கையால் அதை எடுத்துக் கொடுங்கள்'' என்று சொல்லத் துடித்தது அவள் இதயம். ஆனால் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. துக்கம் நெஞ்சை அடைத்துக் கொள்ள, கையை நீட்டி நெஞ்சை அடைத்துக் கொள்ள, கையை நீட்டினாள் பார்வதி.

'மாதுளம்பழம் எனக்குப் பிடிக்கும் என்னும் ரகசியத்தை எப்படியோ அறிந்துகொண்டு இந்தப் பழங்களை எனக்காக ஆசையோடு வாங்கி வைத்திருக்கிறார். நான் இவற்றைச் சாப்பிட்டால் அவர் அன்பை ஏற்றுக்கொண்டதாக ஆகும். அவரை நான் மறந்து வாழ விரும்புகிறேன்; அதைப்போல் அவரும் என்னை மறந்து வாழ வேண்டுமென்று எண்ணு கிறேன். அவர் செலுத்தும் அன்பை நான் அங்கீகரித்தால் அது பெரும் விபரீதத்தில் கொண்டு போய்விடும். ஆகவே இந்தப் பழங்களை நான் தொட மாட்டேன். தொடவே மாட்டேன்’. பார்வதியின் வைராக்கியம், திடசித்தம், தீர்மானம் எல்லாம் சேதுபதியைக் கண்டபோது தவிடு பொடியாகத் தகர்ந்து போயின.

பார்வதி கை நீட்டிக் கேட்டபோது சேதுபதியின் முகம் மலர்ந்தது. சட்டென அவர் அந்தப் பழங்களில் ஒன்றை எடுத்துத் தோலை அகற்றி அதனுள் புதைந்து கிடந்த கெம்புக் கற்கள் போன்ற முத்துகளை எடுத்து அவளிடம் கொடுத்தார்.

'இத்தனை நாளும் இவர் அன்புக்காக நான் காத்திருந்தேன். இப்போது நானே இவருடைய அன்பை ஏற்றுக் கொள்ள மறுக்கிறேன்.'

இவ்வாறு எண்ணிய பார்வதிக்கு துக்கம் நெஞ்சை அடைத்தது.

மீண்டும் சேதுபதி முத்துகளை எடுத்துக் கொடுத்த போது 'போதும்' என்று கையசைத்தாள் பார்வதி.

"ஏன்? பழத்தில் ருசி இல்லையா?

"ருசி இருக்கிறது, பசி இல்லை.''

பார்வதியின் பதிலில் வழக்கமாக உள்ள உற்சாகம் இல்லை.

“ஏன் இப்படிப் பேசுகிறாள்? ஒருவேளை உடல் நிலை சரியில்லாதது காரணமா-யிருக்குமோ?” சேதுபதி ஒரு கணம் சிந்தித்தார். பிறகு சட்டென ஒரு முடிவுக்கு வந்தவர்போல், ''சரி; நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நான் அப்புறம் வந்து பார்க்கிறேன்'' என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.

பார்வதி அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவருடைய கம்பீரமான தோற்றமும், பெருந்தன்மை மிக்க பேச்சு, பேச்சிலே கனிந்த அன்பு எல்லாவற்றையும் ஒருமுறை எண்ணிப் பார்த்தாள்.

அவர் மாடிப்படிகளில் நடக்கும்போது, ஒவ்வொரு படியாகக் காலடி எடுத்து வைக்கும் ஓசையைக் கவனமாகக் கேட்கலானாள்.

'அவரை நேரில் காணும்போது ஆசை, அன்பு, பாசம், பரிவு எதுவுமே இல்லாதவள் போல் வெறுப்பாகப் பேசு கிறேன். அவர் கண்களிலிருந்து மறைந்ததும் அவரைக் காணத் துடிக்கிறது என் உள்ளம். ஐயோ, இதென்ன விசித் திரம்? இந்த வேதனை-யிலிருந்து எனக்கு விடுதலையே கிடையாதா?

அவள் துக்கமெல்லாம் கண்ணீராகப் பெருகிக்கொண்டிருந்தது.

கீழே, சேதுபதி யாருடனோ பேசிக்கொண்டிருப்பது கேட்கவே அதை உற்றுக் கவனித்தாள்.

"காமாட்சி! நான் அப்புறம் வருகிறேன். பார்வதியின் உடம்பு குணமாகிறவரை, நீ இங்கேயே இருந்து கவனித்துக் கொள். அவர் மனத்தில் எதையோ வைத்துக் கொண்டு வெளியே சொல்ல முடியாமல் சஞ்சலப்படுவதுபோல் தோன்றுகிறது. அவர் படித்தவர். அத்துடன் சிறந்த அறிவாளி...."

சேதுபதியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பார்வதியின் நெஞ்சத்துக்குள் புகுந்து மாதுளை முத்துகளாய் இனித்தன.

”என்னிடம் இவர் எத்தனை மதிப்பு வைத்திருக்கிறார்? எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறார்? என் உள்ளத்தை எவ்வளவு நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார்.”

மீண்டும் அவருடைய குரல் கேட்கிறது.

"பாரதி! நான் வீட்டுக்குப் போகிறேன். நீயும் வருகிறாயா என்னுடன்...''

”நான் இங்கேயே இருக்கிறேன், அப்பா! அத்தை இங்கே இருக்கும்போது எனக்கு மட்டும் அங்கே என்ன வேலை? பிரின்ஸிபாலுக்கு உடம்பு குணமாகிறவரை நானும் அத்தையோடுதான் இருக்கப் போகிறேன்'' என்றான் பாரதி.

”பேஷ்! அதுதான் சரி; உன் இஷ்டப்படியே செய்; ஆனால் உன் பிரின்ஸிபாலுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது. நீயாகவே படித்துப் பாஸ் செய்ய வேண்டும். தெரிந்ததா?”

கார் புறப்பட்டு வாசல் காம்பவுண்டைத் தாண்டிச் செல்லுகிறது.

பார்வதி அந்த மாதுளங் கனிகளைக் கவனித்தான். அந்தச் சிவந்த முத்துகள் அவளைப் பார்த்துச் சிரித்தன. 'பயித்தியமே! உன்மீது இவ்வளவு அன்பும் அக்கறையும் கொண்டிருக்கும் சேதுபதியையா அலட்சியம் செய்கிறாய்?’ என்பதுபோல் தோன்றுகிறது.

ஹார்லிக்ஸுடன் வந்து நின்ற காமாட்சியைக் கண்டதும் ”இப்படி உட்காருங்கள்'' என்று கை காட்டினான். பார்வதி

”கொஞ்சம் ஹார்லிக்ஸ் சாப்பிடுகிறீர்களா? உங்களுக்கு உடம்பு குணமாகும் வரை என்னை இங்கேயே இருந்து கவனித்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறான், என் அண்ணா...'' என்றாள் காமாட்சி.

"ஓ! அப்படியானால் அவரை யார் கவனித்துக் கொள் வார்கள்?'' - பார்வதி கேட்டாள்.

"வீட்டிலே சமையல்காரன் இருக்கிறான். பார்த்துக் கொள்கிறான். நான் அங்கே இருந்தாலும் என்னை ஒரு வேலையும் செய்ய விடமாட்டான். நீ பேசாமல் உட்கார்ந்து கொண்டிரு. வேலைக்காரர்கள் கவனித்துக் கொள்வார்கள்? என்பான். பிறர் துன்பப்படுவதை அவன் சகிக்கவே மாட்டான், இளகிய மனசு அவனுக்கு. இதுவரை என்னை அவன் யார் வீட்டிலும் தங்க அனுமதித்ததில்லை. அப்படிப்பட்டவன் என்னை இங்கே அனுப்பி உங்களைக் கவனித்துக் கொள்னச் சொல்லியிருக்கிறான் என்றால் அது தங்கள் மீது அவனுக் குள்ள அக்கறையையே காட்டுகிறது'' என்றாள் காமாட்சி.

சேதுபதியைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பினாள் பார்வதி. ஆயினும் அந்த விருப்பத்தை அவள் வெளிப் படையாகக் காட்டிக் கொள்ளாமல் மறைமுகமாகச் சில கேள்விகள் கேட்டாள்.

”உங்க அண்ணா ரெம்பப் பிடிவாதக்காரரோ?” பார்வதி குழந்தை போல் கபடமின்றிச் சிரித்தபடியே கேட்டாள்.

”அதை ஏன் கேட்கிறீர்கள்? சின்ன வயசிலிருந்தே பிடிவாதக் குணம் அதிகம். அவன் அப்பா ஒரு நாள் ஏதோ கோபமாகச் சொல்லி விட்டார் என்பதற்காக வீட்டை விட்டே வெளியேறி விட்டான். அப்புறம் எப்படியோ கஷ்டப்பட்டுப் படித்துத் தானே விழுந்து எழுந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு வந்தான். இப்போது லட்சக் கணக்கில் பணத்தைக் குவிக்கிறான். ம்.. என்ன குவித்து என்ன பிரயோஜனம்” பெருமூச்சுவிட்டாள் காமாட்சி.

”ஏன் இப்போது அவருக்கு என்ன குறைவு?”

”ஒரு குறைவுமில்லை. சரஸ்வதியோடு வாழக் கொடுத்து வைக்காத குறைதான்.... பாரதியைப் பெற்றெடுத்த சில வருடங்களுக்குள்ளாகவே அவள் இறந்து விட்டாள். பாவம் சரஸ்வதியின் மீது அவன் உயிரையே வைத்திருந்தான். அவள் மறைந்த பிறகு, ஆறு மாதம் சரியாகக் கூடச் சாப்பிட வில்லை. எந்நேரமும் பித்துப்பிடித்த மாதிரி கலங்கி நிற்பான். அப்போதுதான் அந்த வீட்டின் முழுப் பொறுப்பையும் நான் வந்து ஏற்றுக்கொண்டேன். அண்ணாவின் நிலை எனக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. ஒரு நாள் அவன் தனியாக உட்கார்ந்திருந்த சமயம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன்.

"நீ ஏன் அண்ணா இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது?'' என்று கேட்டேன். அதற்கு அவன் என்ன பதில் சொன்னான் தெரியுமா? இன்னொரு கல்யாணமா? சரஸ்வதியின் ஸ்தானத்தில் வேறொருத்திக்கு இடமா என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டே எழுந்து போய்விட்டான்....ம்.... இதெல்லாம் பழைய கதை... ஹார். விக்ஸ் ஆறிப் போகிறது. சாப்பிடுங்கள்'' என்றாள் காமாட்சி.

ஹார்லிக்ஸை அருத்தியபடியே பார்வதி யோசித்தாள்.

அவ்வளவு வைராக்கியத்துடன் வாழ்ந்து வரும் சேதுபதியைப்பற்றியா நான் தவறாக எண்ணிக் கொண் டிருக்கிறேன்? என் அந்தரங்கத்தில் நான் அவர்மீது கொண்டுள்ள அன்பே என் கண்களை மறைத்து அவரும் என்னை நேசிப்பதாக எண்ணத் தூண்டுகிறதோ? எல்லோரையும் போல் அவரும் என்னிடம் சாதாரணமாகவே பழகி யிருக்கலாம். நானாகவே அவருடைய செய்கைக்கும் பேச்சுசுக்கும் தவறான நோக்கங்களைக் கற்பித்துக் கொண்டு வீண். பிரமை கொள்கிறேனா? அவர் சாதாரணமாகத்தான் பழகுகிறார் என்று எண்ணியபோது அவளுக்குப் பெரும் ஆறுதலா யிருந்தது. அடுத்தகணமே, அவர் தன் மீது அன்பு செலுத்த வில்லை என்கிற எண்ணம் அவளைச் சஞ்சலத்தில் ஆழ்த்தியது. காரணம் அவள் உள்ளம் இயற்கையாகவே அவர் அன்புக்கு ஏங்கியிருக்கிறது. இப்போது அவர் அன்பு செலுத்தவில்லை என்று தெரிந்ததும் அவள் போலியாகச் சந்தோஷப்பட்ட போதிலும் இயற்கையில் அவள் மனம் சொல்லொணாத வேதனையையே அனுபவித்தது.

ஹார்லிக்ஸுடன் அந்த வேதனையையும் சேர்த்து விழுங்கிய பார்வதி,

"...ம்.... அப்புறம்?'' என்று கேட்டாள்.

"அப்புறம் என்ன, அதற்குப் பிறகு நான் அவன் திருமணத்தைப் பற்றியே பேச்செடுப்பதில்லை. இப்போது கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு நாள் என்னிடம் அவனாகவே பேச்செடுத்தான். 'நான் மறுமணம் செய்து கொண்டால் உலகம் என்ன நினைக்கும் காமாட்சி!' என்று கேட்டான்.

"நீங்க என்ன பதில் சொன்னீங்க?''

”என்ன சொல்வேன்? உலகம் சிரிக்கும். இத்தனை வயசு கழித்துக் கல்யாணமாம்!'' என்றேன்

”அதற்கு அவர் என்ன சொன்னார்”'

"அசடே சுத்தப் பயித்தியமாயிருக்கிறாயே! நான் விளையாட்டாகக் கேட்டதை நிஜமாகவே நம்பிவிட்டாயா?” என்று கூறி மழுப்பிவிட்டுப் போய்விட்டான்.

”அப்புறம்...''

"அப்புறம் என்னிடம் கலியாணப் பேச்சே எடுப்பதில்லை. எப்போதாவது பேசினாலும் பொதுவாகப் பேசி விட்டுப் போய் விடுவான். யாரைப்பற்றியும் அதிகம் பேசமாட்டான். ஆனால் உங்க கல்லூரியைப் பற்றியும் உங்களைப்பற்றியும் பேச ஆரம்பித்து விட்டால் மணிக்கணக்கில் பேசிக்கொண் டிருப்பான்...'

இதைக் கேட்டபோது பார்வதியின் இதயம் மகிழ்ச்சியில் திளைத்தது.

"அப்படியா... அவர் வாயால் புகழக் கூடிய அளவுக்கு நான் என்ன செய்துவிட்டேன்?”

சேதுபதி தன்மீது அளவற்ற அன்பு கொண்டிருக்கிறார் என்பதை அறிந்த பிறகு பார்வதியின் உள்ளத்தில் நிம்மதி பிறந்தது. அந்த நிம்மதியுடன் மன அமைதியுடன் அன்றிரவு தூங்கி எழுந்தாள் பார்வதி.

மறுநாள் காலை. பார்வதி கட்டிலில் படுத்தபடியே சிந்தித்துக் கொண்டிருந்தாள். வீட்டில் உள்ள ஜன்னல் களையும் கதவுகளையும் என்ன தான் மூடி வைத்தாலும் காற்று உள்ளே வராமல் இருக்கிறதா? மனத்தை எவ்வளவு உறுதிப் படுத்திக் கொண்டாலும் பலவீனமான சிந்தனைகள் வந்து கொண்டுதானிருக்கின்றன.

அவரை மறந்துவிட அவள் எவ்வளவோ முயன்றுதான் பார்த்தாள். ஆனால் முடிய-வில்லை. பூவின் நிறத்தையும் அழகையும் எளிதில் மறந்துவிடலாம். ஆனால் அதனுடைய மணத்தை மறக்க முடிவதில்லையே!

”அம்மா, கல்லூரியிலிருந்து ஏழெட்டுப் பேர் வந்திருக்கிறார்கள் தங்களைப் பார்க்க வேண்டுமாம். கீழே வராந்தாவில் காத்திருக்கிறார்கள்” என்று சொல்லிக் கொண்டே வந்தாள் ஞானம்.

”மாணவிகள் மட்டுமா, புரொபஸர்களும் கூடவா?'' என்று கேட்டாள் பார்வதி.

'அதெல்லாம் எனக்குத் தெரியவில்லை' என்றாள் ஞானம்.

பார்வதியின் நெற்றியில் சுருக்கம் கண்டது.

”சரி, நீ போய் அவர்களை மேலே வரச் சொல்...''
------
குருத்து பதினெட்டு


சற்று நேரத்துக்கெல்லாம் அவர்கள் மேலே வந்தார்கள். ”இரண்டு நாட்களாக வேலை சரியாயிருந்தது. அதனால் தங்களை வந்து காண முடியவில்லை. மன்னிக்கவேண்டும்” என்றனர்.

”இப்போது மணி என்ன தெரியுமா?” பார்வதி கேட்டாள்.

”பதினொன்று....”

''இப்போது கல்லூரி நடக்கும் நேரத்தில், வகுப்புக்குப் போகாமல் இங்கே வந்திருக்கக் கூடாது...”

"தங்களை இரண்டு நாட்களாகக் காணாமல் இருந்ததே தவறு.”

"கல்லூரி நேரத்தில் வகுப்பை விட்டு வந்தது அதை விடப் பெரிய தவறு. உங்களுடைய முதல் கடமை படிப்பு தான். படிப்பையும் பரீட்சையையும் விட்டுவிட்டு இங்கே வந்திருக்கக் கூடாது. இந்தச் சின்ன விஷயம் மாணவிகளாகிய உங்களுக்குத்தான் தெரியவில்லை யென்றால், ஆசிரியைகளாவது உங்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும். சரி; நேரத்தை வீணாக்காமல் புறப்படுங்கள் ” கொஞ்சம் கடுமையாகவே பேசி முடித்தாள் பார்வதி. பிரின்ஸிபாலின் கண்டிப்பு அவர்களுக்குத் தெரிந்ததே! ஆகவே, போய் வருகிறோம்'' என்று தாழ்ந்த குரலில் விடை பெற்றுக் கொண்டு உடனே புறப்பட்டு விட்டார்கள் அவர்கள்.

அவர்கள் சென்றதும், "பாவம், கண்டிப்பாகப் பேசி அனுப்பி விட்டேன். கொஞ்சங் கூடப் பண்பில்லாதவள் நான்” வருத்தத்துடன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள் பார்வதி.

ஆயிற்று; பார்வதி படுக்கையாகப் படுத்து விளையாட்டாகப் பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. காமாட்சியும் ஞானமும், பார்வதியின் உடம்பைத் தேற்றுவதற்கு இரவு பகலாகக் கண் விழித்துப் பாடுபட்டும் அவள் உடம்பு தேறாமல் நாளுக்கு நாள் கேவலமாகிக் கொண்டே யிருந்தது. உள்ளத்தில் வேதனைகள் புகுந்து அரித்துக் கொண்டிருக்கும் போது உடலை எவ்வளவு போஷித்தும் என்ன?

சேதுபதியின் அன்பைப் பார்வதி என்று மறந்துவிடத் துணிந்தாளோ அன்று முதல் அவளுக்கு நிம்மதியே இல்லை. அவருடைய அன்பை அவளால் மறக்கவோ மறுக்கவோ முடியாமல் உள்ளத்தில் வலி கண்டு, அந்த வலியே அவள் உடலை இளைக்கச் செய்து கொண்டிருந்தது.

பார்வதி கண்களை மூடிப் படுத்திருந்தாள். பழரசத்துடன் மெதுவாகக் கட்டிலின் அருகே வந்து நின்றாள் பாரதி.

கண் விழித்த பார்வதி, ”பாவம்! என்னால் உங்களுக் கெல்லாம் சிரமம்...”

”பரீட்சையெல்லாம் சரியாக எழுதியிருக்கிறாயா, பாரதி! ராஜாவை எங்கே காணோம்?”

“அவன் எப்படி எழுதியிருக்கிறானாம்?” என்று கேட்டாள்.

"இரண்டு பேருக்குமே நேற்றோடு பரீட்சை முடிந்து விட்டது. நன்றாகவே எழுதியிருக்கிறோம்...'' என்றாள் பாரதி.

”ரொம்ப சந்தோஷம். ராஜாவை இங்கே வரச் சொல்லு...''

”கூப்பிட்டீங்களா அத்தை!'' என்று கேட்டுக் கொண்டே வந்து நின்றான் ராஜா.

''பரீட்சையில் எப்படி எழுதியிருக்கிறாய் என்று கேட்கத் தான் கூப்பிட்டேன்.... லீவு விட்டு விட்டார்கள் அல்லவா? இனிமேல் உன்பாடு குஷிதான். ஒரு படம் கூடத் தவற மாட்டாய்!'' என்றாள் பார்வதி.

"இல்லை அத்தை!'' என்று தலை கவிழ்ந்தபடியே கீழே இறங்கிச் சென்று விட்டான் ராஜா. அப்போது எதிரில் வந்த பாரதியைப் பார்த்து, அத்தை நல்ல மூட்லே இருக்கிறாள். சினிமாவுக்குப் போக 'பர்மிஷன்' வாங்கிவிடும். இது தான் நல்ல சமயம். இன்று மாலை மூன்று மணிக்கு நான் காலேஜிலிருந்து வந்து விடுவேன். எங்க காலேஜுக்கு எதிரில் காந்தி மண்டபம் இருக்கிறது. மூணு மணிக்கு நீ அங்கே வந்துவிடும். அதற்குப் பக்கத்தில் பெரிய காடு இருக்கிறது. அந்தக் காட்டில் நிறைய மான்கள் இருக்கின்றன. அந்த இடத்தைச் சற்று நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு ஆறரை மணி ஷோவுக்குப் போகலாம்.' என்றான்.

"சினிமாவுக்குப் போவதாகச் சொன்னால் பிரின்ஸிபால் என்னை வெளியே அனுப்பவே மாட்டாங்களே!”

”சிநேகிதிகளொடு போவதாகச் சொல்லு. சரிம்பாங்க... பயித்தியமாயிருக்கிறாயே! இதெல்லாம் கூடவா நான் சொல்லிக் கொடுக்கணும்...?''

மணி மூன்றடித்ததோ இல்லையோ, கல்லூரியை விட்டுப் புறப்பட்டு விட்டான் ராஜா. காரை எடுத்துக்கொண்டு நேராகக் காந்தி மண்டபம் போய்ச் சேர்ந்தான். ஆனால் அங்கே பாரதியைக் காணவில்லை. ஒருவரையுமே காண வில்லை. நல்ல வெயில் நேரமானதால் நாலைந்து காகங்கள் - கரைந்து கொண்டிருந்தன. ஐந்து நிமிஷம், பத்து நிமிஷம், பதினைந்து நிமிஷமும் கடந்தன. வருகிற போகிற வண்டிகளை யெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான் ராஜா. பாரதி வந்தபாடில்லை. கடைசியில் சற்றுத் தூரத்தில் ஒரு டாக்ஸி வருவது தெரிந்தது. பாரதி அதில் உட்கார்ந்திருப்பதைக் கண்டதும் ராஜாவின் முகம் மலர்ந்தது.

”ரொம்ப நேரமாகக் காத்துக் கொண்டிருக்கிறீர்களா?” என்று சிரித்தபடியே டாக்ஸியை விட்டுக் கீழே இறங்கி வந்தாள் பாரதி.

அவளுக்காகத் தான் காத்துக் கொண்டிருந்ததாகச் சொல்வது மதிப்புக் குறைவு என்று எண்ணிய ராஜா, "இல்லையே; நான் இப்போதுதான் வந்தேன்'' என்றான்,

"சரி, மான்கள் எங்கே? என்று கேட்டாள் பாரதி.

"இப்பதானே சகுந்தலை வந்திருக்கீங்க? இனிமேல் தான் மான்களும் வரும்.''

”துஷ்யந்த மகாராஜாவே! எனக்கு உடனே மான்களைக் காட்டப் போகிறீர்களா, இல்லையா?” சிரித்துக்கொண்டே கேட்டாள் பாரதி.

"ஆமாம்; வீட்டை விட்டுப் புறப்படும்போது பிரின்ஸி பாலிடம் சொல்லிக் கொள்ளாமல் தானே வந்தாய்?”

”அதை உங்களுக்கு யார் சொன்னது?

"உன் தலை!''

"என் தலையா?” என்று தன் தலையைத் தொட்டுப் பார்த்தாள் பாரதி.

”ஓகோ! இந்த மாதிரிக் கொண்டை போட்டுக்கொண்டு பிரின்ஸிபால் எதிரில் போயிருக்க மாட்டேன்னுதானே கேட்டீங்க? பிரின்ஸிபால் கிட்டே சொல்லிட்டுத்தான் வந்தேன்.''

”அப்ப, பிரின்ஸிபாலிடம் சொன்ன பிறகு கொண்டை போட்டுக் கொண்டிருப்பாய்!”

"சரி, காட்டுக்குப் போகலாம் வாங்க.....”

ராஜா அவளைக் கிண்டி எஸ்டேட் வனத்துக்குள் அழைத் துச் சென்றான்.

”ரொம்ப அழகாயிருக்கே இந்த இடம்” என்றாள் பாரதி.

''நீ கூட இன்று ரொம்ப அழகாயிருக்கே. உன்னை இந்த இடத்தில் இப்போது ஒரு படம் எடுக்கப் போகிறேன். இந்தக் காடு ஓர் ஆசிரமம் மாதிரி இருக்கிறதா? பக்கத்திலே மான்கள் வேறு சஞ்சரிக்கிறதா? நீயும் ரிஷி குமாரி மாதிரி வந்திருக்கிறாயா? இந்தச் சூழ்நிலையிலே உன்னைப் படம் எடுத்தால் அசல் சகுந்தலை மாதிரியே இருக்கும்!”

"ஏன் ஒரு சினிமாவே எடுத்துடுங்களேன்.....!”

"ஐயோ, வேண்டாம்; புராணிக் பிச்சராயிடும். எடுத்தால் ஸோஷல் எடுக்கணும்.''

"சரி சரி, போட்டோ எடுங்க”.

ராஜா காமிராவை எடுத்துச் சரி செய்து கொண்டான்.

”எங்கே! இப்படிக் கொஞ்சம் என்னைப் பாரு! லிட்டில் ஸ்மைல் !... வெரி குட்! ஒன், டூ, த்ரீ! தாங்க்ஸ்” என்றான் ராஜா.

”ஒரு மானைப் பிடித்து வந்தால் அதோடு சேர்ந்து ஒரு படம் எடுத்துக் கொள்ளலாம்...'' என்றாள் பாரதி..

''நான் ராமன் இல்லை. மானைத் துரத்திக்கொண்டு போவதற்கு - துஷ்யந்தன்...!'' என்று கூறிச் சிரித்தான் ராஜா.

'இல்லை' என்றாள் பாரதி.

"வேறு யாராம்?'' என்று கேட்டான் ராஜா.

''துஷ்யந்த மகாராஜா!'' என்று திருத்தினாள் பாரதி!

“நேரமாகிறது, புறப்படலாமா?'' ராஜா கேட்டான்.

“எங்கே ?”

“லைப்ரரிக்கு”

”அப்புறம்?''

“ஓட்டலுக்கு.''

”அப்புறம்?'' சினிமாவுக்கு! இருவரும் காரை நோக்கி நடந்தனர். திடீரென்று பாரதி "ஐயோ!'' என்று கூறிக்கொண்டே கீழே குனிந்தாள்.

”என்ன பாரதி!'' பதறிப் போனான் ராஜா.

"காலில் முள் தைத்துவிட்டது.''

ராஜா மெதுவாக அவள் வலது காலைத் தூக்கி அருகி லிருந்த ஒரு பெரிய கல் மீது வைத்தான். பிறகு அவள் காலிலிருந்த முள்ளை அப்புறப்படுத்தினான். முள்ளை எடுத்து இடத்திலிருந்து ரத்தம் பெருகியது. உடனே அவன் தன் கைக்குட்டையால் அவள் காலில் ஒரு கட்டுப் போட்டு அவள் கையைப் பிடித்துக் காருக்கு அழைத்துச் சென்றான். போகும் போது "அன்று ஹாஸ்டலில் ஆணி அடிக்கும்போது பாணிக் கிரகணம் ஆயிற்று. இன்று வலது காலைத் தூக்கி அம்மிக் கல்லில் வைத்தாயிற்று' என்று சிரித்தான் ராஜா. அதைக் கேட்டுப் பாரதியும் சிரித்துவிட்டாள்!
---------------
குருத்து பத்தொன்பது


"அடுத்தாற்போல் எங்கே போகலாம்?'' என்று கேட்டாள் பாரதி.

”சொர்க்கத்துக்கு...'' என்றான் ராஜா.

“அந்த 'ரூட்'டுக்கு நம்ம வண்டிக்கு பர்மிட் இல்லீங்க!.......” என்றான் டாக்ஸி டிரைவர் சிரித்துக்கொண்டே.

ராஜாவும் பாரதியும் சிரித்து விட்டனர்.

”டிரைவர்! நீங்க ரொம்பத் தமாஷாகப் பேசறீங்களே! சில டாக்ஸி டிரைவருங்க மூஞ்சியை 'உம்' மென்று வைத்துக் கிட்டிருப்பாங்க. அவங்களைக் கண்டால் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது...'' என்றான் ராஜா.

”எப்பவும் சந்தோஷமா இருக்கத் தெரியணுங்க. எந்த நேரமும் கவலைப் பட்டுக்கிட்டு இறக்கிறவங்களை வாழத் தெரியாதவங்கன்னுதான் சொல்லணும்...'' என்றான் டிரைவர்.

''பலே, பலே! நீ என் கட்சி!'' என்றான் ராஜா.

”எந்தப் பக்கம் போகணுங்க?... டிரைவர் கேட்டான்.

”மவுன்ட் ரோடு பக்கம் தான்..."

"ஆறரை மணிக்குத்தானே சினிமா? இன்னும் ரொம்ப நேரம் இருக்குதே!'' என்றாள் பாரதி.

"அத்தை லைப்ரரியிலிருந்து புத்தகம் வாங்கி வரச் சொல்லியிருக்காங்க. அங்கே அரை மணி நேரம். அப்புறம் ஓட்டல்லே முக்கால் மணி நேரம்... ஆமாம்; நீ அத்தை கிட்டே சினிமாவுக்குப் போறதாச் சொல்லிட்டு வந்தாயா?....”

"...ம்.....”

"அத்தை என்ன சொன்னாங்க?....''

''யாரோடு சினிமாவுக்குப் போகப் போகிறாய் என்று கேட்டாங்க... சிநேகிதிகளோடு போகப் போறதாச் சொன் னேன். 'சரி'ன்னுட்டாங்க...”

“நான் சொல்லலையா? இன்றைக்கு அத்தை நல்ல மூட்லே இருக்காங்க. நீ போய்க் கேளு. உடனே பர்மிஷன் கொடுத்துடுவாங்கன்னு...''

"ஆமாம்; நீங்க இன்றைக்கு லேட்டாக வீட்டுக்கு வந்தால் பிரின்ஸிபால், எங்கே போயிருந்தேன்னு கேட்பாங்களே!....?

”கேட்கட்டுமே...''

"நீங்க என்ன பதில் சொல்லுவீங்க?''

”எங்க கல்லூரியிலே இன்றைக்கு ஆண்டு விழான்னு ஒரு 'டூப்' அடிச்சுட்றேன்....”

”என்னை மட்டும் சினிமாவுக்குப் போறதாக நிஜம் சொல்லச் சொல்லிவிட்டு நீங்க பொய் பேசலாமா?” என்று கேட்டாள் பாரதி.

''இது பொய் இல்லை,பாரதி!

'பின் என்னவாம்?’

”புளுகு!”

'புளுகுக்கும் பொய்க்கும் என்ன வித்தியாசம்!''

''புளுகிலே பிறத்தியாருக்குத் தீங்கு கிடையாது..... பொய்யிலே அது உண்டு...''

''அப்படின்னா நான் சிநேகிதிகளோடு சினிமாவுக்குப் போறதாச் சொன்னது பொய்தானே?”

''இல்லை ; புளுகு...”

''எனக்கென்னவோ பயமாயிருக்குது... நாம் ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டுச் சினிமாவுக்குப் போயிருக்கோம்னு பிரின்ஸிபாலுக்குத் தெரிஞ்சுதானா?....''

"ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. நீ தான் பர்மிஷன் வாங்கியிருக்கியே!”

"நீங்க வாங்கலையே!”

''நான் சினிமாவுக்குப் போகலையே. கல்லூரி ஆண்டு விழாவில் இருந்தல்லவா வர்றேன். அதனாலே லேட்!”

"சுத்தப் பொய்!”

"மறுபடியும் பார்த்தாயா! புளுகுன்னு சொல்லு!”

"எல்பின்ஸ்டனுக்குப் போறீங்களா?' டிரைவர் கேட்டான்.

''முதல்லே லைப்ரரிக்குப் போ. அதோ தெரியுது பார் ! அந்தக் கட்டடத்துக்கு முன்னாலே நிறுத்து...'' என்றான் ராஜா.

டாக்ஸி அங்கே போய் நின்றதும் ராஜாவும் பாரதியும் இறங்கி லைப்ரரிக்குள் சென்றனர்..

''என்னை அனுப்பிடுங்க ஸார்! வெயிட்டிங்லே போடாதீங்க. சம்பாதிக்கிற நேரம்" என்றான் டிரைவர்.

''அதுவும் சரிதான்!'' என்று கூறிய ராஜா, அவனுக்கு மீட்டருக்கு மேல் அதிகப்படியாகவே ஒரு ரூபாய் கொடுத் தனுப்பினான்.

''ரொம்ப சந்தோஷங்கள்” என்று கூறிச் சென்றான் டிரைவர்.

அரை மணி நேரம் கழித்து ராஜாவும் பாரதியும் வெளியே வந்து டாக்ஸிக்காகக் காத்திருந்தபோது அதே டாக்ஸி அருகில் வந்து நின்றதும் பாரதிக்கு மகிழ்ச்சி தாங்க வில்லை.

''நீயே வந்து விட்டாயா?'' என்றான் ராஜா.

”ஆமாங்க. இதுக்குள்ளே மாம்பலத்துக்கு ஒரு சவாரி கிடைச்சுது. போயிட்டு வந்தேன். ஏறிக்குங்க.... ஓட்டலுக் குத்தானே?....''

"ஆமாம்...''

”எந்த ஓட்டலுக்கு ?' என்று கேட்டான் டாக்ஸி டிரைவர்.

”முன்னொரு நாள் திறந்த வெளி மாடியில் சாப்பிட்டோமே.-அந்த ஓட்ட்லுக்கே போகலாம்” என்றாள் பாரதி.

டாக்ஸியை அந்த ஓட்டலுக்கு விடச் சொன்னான் ராஜா.

”பக்கத்திலே தான் சினிமா. நாங்கள் நடந்தே போய் விடுகிறோம். நீ காத்திருக்க வேண்டாம்” என்று கூறிய ராஜா, டிரைவரிடம் பணத்தைக் கொடுத்தனுப்பினான்.
பிறகு இருவரும் அந்த ஓட்டலுக்குச் சென்று திறந்த வெளி மாடிக்குப் போய் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த வட்ட மேஜைக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டனர்.

"என்ன சாப்பிடறீங்க?'' என்று கேட்டுக்கொண்டே வந்தான் ஸர்வர்.

அவனிடம் இரண்டு மசாலா தோசைக்கு ஆர்டர் கொடுத்தான் ராஜா.

”எனக்கு மசாலா தோசை பிடிக்கும்னு உங்களுக்கு எப்படித் தெரியும்" என்று கேட்டாள் பாரதி.

"எனக்குத் தெரியாது; மசாலா தோசைக்குச் சொன்னால் அது வருகிற வரைக்கும் கொஞ்சம் பொழுது போகுமே என்பதற்காகச் சொன்னேன்...'' என்றான் ராஜா.

பாரதி சிரித்துக்கொண்டே அந்த லைப்ரரி புத்தகத்தை எடுத்துப் புரட்டினாள்.

''மசாலா தோசை வருவதற்குள் நீ இதைப் படித்தே முடித்துவிடலாம்” என்றான் ராஜா.

''ரொம்ப ட்ரை ஸப்ஜெக்ட்! பிலாஸபி இதைப் போய் வாங்கி வந்தீர்களே!' என்றாள் பாரதி.

”இது உனக்கல்ல; அத்தைக்கு. இந்த மாதிரி ட்ரை ஸப்ஜெக்ட்தான் அவங்களுக்குப் பிடிக்கும்...''

சற்று நேரத்துக்கெல்லாம் மசாலா தோசை இரண்டைக் கொண்டு வந்து வைத்தான் ஸர்வர். பாரதி தோசையின் முறுகலான பாகங்களை மட்டும் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினாள்.

''மசாலா தோசையைக் கண்டுபிடித்தானே அவனுக்கு ஒரு சிலை கட்டி வைக்க வேண்டும்...' என்றான் ராஜா.

"ஐஸ்க்ரீம் கண்டுபிடித்தவனுக்கும் தான்” என்றான் பாரதி.

"இப்போது ஐஸ்க்ரீம் வேணும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறாயா?'' என்று கேட்டுவிட்டுச் சிரித்தான் ராஜா.

"இல்லை, இல்லை'' என்றாள் பாரதி.

ஸர்வரைக கூப்பிடுவதற்காக ராஜா திரும்பிப் பார்த்த போது வேறொரு மூலையில் அவனுடைய காலேஜ் பிரின்ஸி பால் உட்கார்ந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். அவன் 'திருதிருவென்று விழிப்பதைக் கண்ட பாரதி, ''ஏன் ராஜா! ஏன் இப்படி இஞ்சி தின்ற மாதிரி விழிக்கிறீங்க...?'' என்று கேட்டாள்.

''நிஜமாகவே இந்த மசாலாவிலே இருந்த ஓர் இஞ்சித் துண்டைத் தின்னு விட்டேன். அதுதான்...'' என்று கூறி மழுப்பினான் ராஜா.

"பொய், பொய்! எதையோ என்னிடம் சொல்லாமல் மறைக்கப் பார்க்கிறீங்க...''

"எங்க பிரின்ஸிபால் வந்திருக்காரு. நாம ரெண்டு பேரும் அவர் பாக்கறதுக்கு முந்தி எழுந்து போயிடணும்...''

''அவர் சினிமாவுக்கும் வந்து சேர்ந்தால்?...”

''வர மாட்டார். சினிமான்னா அவருக்குப் பிடிக்காது...''

அடுத்த நிமிடம் இருவரும் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு விட்டனர்.

''இன்னும் ஆறு மாத காலத்துக்குப் பூரண ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். காலையிலும் மாலையிலும் சற்று நேரம் தோட்டத்துக்குள் உலாவும் நேரம் தவிர, வெளியில் எங்குமே செல்லக்கூடாது'' என்று கண்டிப்பான உத்தரவு போட்டிருந்தாள் டாக்டரம்மாள்.

அறைக்குள்ளாகவே கட்டுப்பட்டுக் கிடக்கும் கொடுமையைப் பார்வதியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கல்லூரிக்குப் போகாமல், கல்லூரியைக் காணாமல், கல்லூரி மாணவிகளுடன் பேசாமல், கல்லூரியில் தன்னுடைய கடமைகளை நிறைவேற்றாமல் இருப்பதை அவளால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.
அந்தக் கல்லூரியிலேயே படித்து, அங்கேயே உத்தி யோகத்தில் அமர்ந்து, அங்கேயே புரொபஸராகி, கடைசியில் அந்தக் கல்லூரிக்கே பிரின்ஸிபாலும் ஆகிவிட்டாள் அவள். படித்த காலத்தில் கூரை வேய்ந்த சிறு சிறு ஷெட்டுகளே வகுப்பறைகளாக இருந்தன. இப்போது அந்தப் பழைய தோற்றமே அடியோடு மாறிப் புதிய புதிய கட்டடங்களாக உயர்ந்து நிற்கின்றன. அந்தக் கட்டடத்தின் ஒவ்வொரு செங்கல்லும், அவளுடைய முயற்சிக்கும் உழைப்பிற்கும் ஊக்கத்துக்கும் சான்று கூறிக் கொண்டிருக்கின்றன.

புறத் தோற்றத்தில் மட்டும் அந்தக் கல்லூரிக்குக் கவர்ச்சி தேடித் தரவில்லை அவள். அங்கே படித்துத் தேறிய மாணவிகளில் பெரும்பாலோர் இன்று பல்வேறு துறைகளில் புகழுடன் விளங்கி வருகின்றனர். பண்புக்கும், ஒழக்கத்துக் கும் உறைவிடமாகத் திகழும் அந்தக் கல்லூரியை அவள் ஒரு தெய்வத் திருக்கோயிலாகவே போற்றி நடத்தி வருகிறாள். மற்ற கல்லூரித் தலைவர்கள் பார்வதியிடம் மிக்க மதிப்பும் மரியாதையும் கொண்டு ஒருவித அச்சத்துடனேயே பழகி வந்தனர்.

பார்வதியின் உடல் நிலையைப்பற்றி விசாரித்துவிட்டுப் போக இந்தியாவின் பல்வேறு பாகங்களிலிருந்தும் தினமும் பலபேர் வந்து போய்க்கொண்டிருந்தனர். கல்வித் துறையில் புகழ்பெற்ற நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், வேதாந்திகள், டாக்டர் பட்டம் பெற்ற அறிவாளிகள், பழைய மாண வர்கள், இதரக் கல்லூரித் தலைவர்கள் எல்லோருமே வந்தனர்.

நம் நாட்டுக்கேற்ற வகையில் கல்வித் துறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றிப் பார்வதி அவர்களிடம் விவாதித்தாள். அவளுடைய பேச்சைக் கேட்ட பிறகு, அவர் களுக்குப் பார்வதியிடமிருந்த மதிப்புப் பன்மடங்காக உயர்ந்தது.

அன்று, கார்னேஷன் கல்லூரி பிரின்ஸிபால் வேதாந்தம் வந்திருந்தார். தூய தமிழிலேயே அவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த பார்வதி, அவர் புறப்படும் நேரத்தில் ஞாபகமாக, "மீனா - கோபாலன் நட்பு இப்போது எந்த மட்டில் இருக்கிறது?' என்று கேட்டாள்.

வேதாந்தம் சிரித்துக் கொண்டே, "நல்ல முறையில் வளர்ந்து கொண்டிருக்கிறது. தாங்கள் கூட மீனாவின் தந்தைக்குக் கடிதம் எழுதியிருந்தீர்களாம். அவளுடைய தந்தை என்னைக் காண வந்திருந்தபோது கூறினார். கோபாலனைப்பற்றி எல்லா விவரங்களையும் விசாரித்துத் தெரிந்துகொண்டு, அவனையும் நேரில் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார். அநேகமாகத் திருமணத்துக்கு ஏற்பாடானாலும் வியப்பதற்கில்லை'' என்றார்.

அவர்கள் இருவருக்கும் என் மனப்பூர்வமான ஆசிகள்) என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினாள் பார்வதி.

இரவு மணி ஒன்பதரை இருக்கலாம். பார்வதி கண்களை மூடியபடியே எண்ணமிட்டுக் கொண்டிருந்தாள். அப்போது வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. "ஒருவேளை சேதுபதியாயிருக்குமோ?" என்று யோசித்தாள்.

ஞானத்தை அழைத்து "வாசலில் கார் சத்தம் கேட்டதே, யார் வருகிறார்கள் என்று பார்'' என்றாள்.

"பாரதி..." என்றாள் ஞானம்.

"ராஜா இன்னும் வரவில்லையா? " பார்வதி கேட்டாள்.

"இன்னும் இல்லை...''

"சரி; சாப்பிட்டு முடிந்ததும் பாரதியை இங்கே வரச் சொல்!" என்று கூறி அனுப்பினாள் பார்வதி.

முதலில் பாரதியை டாக்ஸியில் கொண்டுவந்து விட்ட ராஜா பத்து நிமிடம் கழித்து அதே டாக்ஸியில் வந்து இறங்கினான்.

அவன் வந்து இறங்கியபோதும் கார் சத்தம் கேட்கவே, ”ராஜாவாகத்தான் இருக்கவேண்டும்” என்பதைப் பார்வதி எளிதில் ஊகித்துக்கொண்டாள்.

பாரதி சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஹார்லிக் ஸ்டன் பரம சாதுவாக மாடிக்குச் சென்றாள். பாரதியைக் கண்ட பிரின்ஸிபால் ”என்ன பாரதி! சினிமா நன்றா யிருந்ததா? என்ன படம் யாரெல்லாம் போயிருந்தீங்க?” என்று அன்போடு விசாரித்தாள்.

"இங்கிலீஷ் பிக்சர் மேடம்! அன்னாகரீனா!.” என்றாள் பாரதி.

”டால்ஸ்டாய் எழுதினது. ரொம்ப நல்ல கதையாச்சே! லவ் ஸ்டோரிதான்... ஆமாம்... ராஜா வந்து விட்டானா?''

”இப்பத்தான் வந்திருக்கிறார்...''

''அவனைக் கூப்பிடு இங்கே...”

”கூப்பிட்டீங்களா அத்தை!'' என்று இறைந்து சத்த மிட்டபடியே மாடிப்படிகள் அதிர ஏறி வந்தான் ராஜா.

தான் எதுவுமே தவறு செய்யாதவன் போல் காட்டிக் கொள்ள வேண்டுமென்பதற்-காகவே அவசியமின்றி உரத்துச் சத்தமிட்டுக் கொண்டு வந்தான் அவன்.

"ஏண்டா இவ்வளவு நேரம் உனக்கு?''

”இன்றைக்கு எங்க காலேஜிலே ஆண்டு விழா அதனாலே லேட்” என்று பொய் சொன்னான் ராஜா. இல்லை; புளுகினான்.

”ஓகோ! ஆண்டு விழாவா? ரொம்ப ஜோராக நடந் திருக்குமே! உ பார்ட்டி உண்டா? பிரின்ஸிபால் என்ன பேசினார்?”

"ஆமாம்; ரொம்ப கிராண்ட்! பிரின்ஸிபால் ரொம்ப நல்லாப் பேசினாரு...'' என்று பொய் சொன்னான் ராஜா. இல்லை; புளுகினான்.

”அப்புறம் டீ பார்ட்டியிலே என்னடா ஐட்டம்?”

"...ம்.... மசாலா தோசை!....”

"என்னடா உளறுகிறாய்?... டீ பார்ட்டியிலே மசாலா தோசையா?”

"ஆமாம், அத்தை! மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து கேட்டுக் கொண்டோம், மசாலா தோசை வேண்டும் என்று...'' என்று பொய் சொன்னான் ராஜா. இல்லை; புளுகினான்.

''சரி; லைப்ரரியிலிருந்து புத்தகங்கள் வாங்கி வரச் சொன்னே, வாங்கி வந்தாயா?”

''ஓ!' என்று கூறிய ராஜா, லைப்ரரிப் புத்தகங்களை எடுத்து அத்தையிடம் கொடுக்க வந்தான். அப்போது அந்தப் புத்தகம் ஒன்றிலிருந்து இரண்டு சினிமா டிக்கெட்டு கள் கீழே உதிர்ந்தன.

''இதென்னடா சினிமா டிக்கெட்?”

''யாரோ இதுக்கு முன்னாலே இந்தப் புத்தகத்தை லைப்ரரியிலிருந்து வாங்கிக் கொண்டு போனவங்க சினிமாவுக்குப் போயிருப்பாங்க. அவங்க இந்தப் புத்தகத்திலே அந்த டிக்கெட்டுகளை வைத்திருப்பாங்க" என்றான் ராஜா.

பார்வதிக்கு எல்லாம் புரிந்து விட்டது. அவள் புன்முறுவலோடு அவனை ஏற இறங்கப் பார்த்தாள். அந்தப் பார்வையிலும் சிரிப்பிலும் ''ஏன் பொய் சொல்கிறாய்?" என்ற கேள்வி பொதிந்து கிடந்தது.

"ராஜா! உங்க கல்லூரிப் பிரின்ஸிபாலுக்குத் துளிக்கூட கடமையுணர்ச்சி என்பதை கிடையாது?”

''ஏன் அத்தை அப்படிச் சொல்றீங்க. அவர் எதிலேயும் ரொம்ப கரெக்ட் ஆச்சே!''

''இல்லே... கல்லூரியிலே ஆண்டு விழா நடக்கிறபோது அங்கே இல்லாமல், என்னைப் பார்க்க வந்து விட்டாரே. இன்று மாலை இங்கே வந்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தாரே!'' என்றாள் பார்வதி.

”அடப்பாவி மனுஷா! இங்கேயும் வந்து விட்டாரா?'' என்று எண்ணிக்கொண்ட ராஜா, இஞ்சி தின்ற மாதிரித் திருதிருவென விழித்தான்.
---------------
குருத்து இருபது


பார்வதி எதிரில் அசடு வழிய நின்று கொண்டிருந்த ராஜா, ’தான் கூறிய பொய்களையெல்லாம் அத்தை புரிந்து கொண்டு விட்டாளே! இனிமேல் ஒருவேளை என்னையும், பாரதியையும் வெளியே செல்ல அனுமதிக்கவே மாட்டாளோ?' என்று எண்ணமிட்டான்.

"போடா! போய்ச் சாப்பிடு; மணி பத்தரை ஆகப் போகிறது. பாவம்! உனக்காக ஞானமும், காமாட்சி அம்மாளும் எத்தனை நேரமாகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள், பார் ! இனிமேல் சினிமாவுக்குப் போவதாயிருந்தால் என்னிடம் சொல்லிவிட்டுப் போக வேண்டும், தெரிந்ததா? சினிமாவே பார்க்கக்கூடாது என்கிற கட்சியைச் சேர்ந்தவளல்ல நான்.”

''மக்களின் உள்ளத்தில் ஒழுக்கத்தையும், பண்பையும் வளர்ப்பதற்குப் பயன்படுத்த வேண்டிய அந்தச் சாதனம், பெரும்பாலும் நேர்மாறான முறையிலேயே உபயோகப் படுத்தப்படுகிறது. அதனால்தான் சினிமாவை நான் வெறுக் கிறேன். நல்ல படங்கள் பார்ப்பதை நான் எப்போதுமே ஆட்சேபித்ததில்லை. ராஜா!.... எனக்கு இரண்டே இரண்டு கண்கள் தான் உண்டு. அவை என்ன தெரியுமா? ஒன்று சாரதாமணிக் கல்லூரி ; இன்னொன்று நீ! என்னுடைய கண்களில் ஒன்று என் கண்ணெதிரிலேயே கெட்டுப் போவதை நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா? நீ சிறு குழந்தையா-யிருந்தபோதே உன் தாயார் உன்னைப் பிரிந்து சென்று விட்டாள். அன்று முதல் உன்னை ஆசை யோடு, பாசத்தோடு வளர்த்து வருகிறேன். வருங்காலத் தில் நீ எப்படியெல்லாம் வாழவேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருக்கிறேன்.''

"ஏன் அத்தை வருத்தப்படறீங்க? நான் இப்ப என்ன செய்துட்டேன்?... சினிமாவுக்குப் போகக் கூடாதுங்கறீங்க. அவ்வளவுதானே! இனிமே போகல்லே! அப்படிப் போனாலும் உங்ககிட்ட பர்மிஷன் வாங்காமல் போவதில்லை. சரி தானே!”

“ரொம்ப சரி; சாப்பிடு போ.........”

''எனக்குப் பசியே இல்லை அத்தை !''

''எப்படிப் பசிக்கும்? டீ பார்ட்டியிலே மசாலா தோசை சாப்பிட்டிருக்கியே!'' என்று சிரித்தாள் பார்வதி.

”கேலி செய்யாதீங்க அத்தை !...' என்று கூறிக் கொண்டே ராஜா கீழே இறங்கிச் சென்றான். ’ஒரு மட்டில் அத்தையிடம் தப்பினோம்' என்ற உற்சாகத்தில் போகும் போதே சினிமாப் பாட்டு ஒன்றை நீட்டி முழக்கிச் சீட்டி யடித்துக் கொண்டு போனான்!

”பாரதி ! நீ சாப்பிட்டாயிற்று அல்லவா? இப்படி என் பக்கத்திலேயே படுத்துக்கொள்...'' என்று பிரின்ஸிபால் கூறியதும் பாரதி, அதிக வெளிச்சமின்றிக் குளுமையாக ஒளி வீசும் நீலவிளக்கைத் தவிர, மற்ற விளக்குகளை அணைத்து விட்டுப் படுத்துக் கொண்டாள்.

மணி பதினொன்றுக்கு மேல் ஆகியும் பார்வதிக்குத் தூக்கமே வரவில்லை சந்தடிகள் குறையக் குறைய, ஊர் அடங்கி உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்தது. எங்கோ தொலைவில் செல்லும் கார்களின் ஹாரன் ஒலி மட்டும் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தன அவளுக்கு.

அவர் இப்போதெல்லாம் முன்போல் இங்கே வருவதில்லையே, ஏன்? ஒரு வேளை அவர் கொண்டுவந்த மாதுளம் பழங்களை நான் ஆர்வத்துடன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாலோ? இருக்காது; அவர் தம்முடைய கையால் எடுத்துக் கொடுத்ததை நான் என் கை நீட்டி வாங்கிச் சாப்பிட்டேனே! அவருக்கு எத்தனையோ அலுவல்கள்! எவ்வளவோ காரியங்கள். அவற்றுக்கிடையில் என்னை வந்துகாண அவகாசம் சிறிதாவது வேண்டாமா?... ஒரு வேளை உண்மையிலேயே என் மீது அவருக்கு அன்பேதான் இல்லையோ? சே! ஒரு நாளும் அப்படி இருக்காது. என்மீது அவருக்கு அன்பு இல்லையென்றால் தம்முடைய தங்கை காமாட்சி அம்மாள், மகள் பாரதி இரண்டு பேரையும் இங்கே கொண்டுவந்து விட்டிருப்பாரா? காமாட்சி கூட அடிக்கடி சொல்லுவாளே, உங்களைப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டால் மட்டும் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பார்'' என்று... அன்பும் அக்கறையும் இல்லையென்றால் அப்படி ஓயாமல் பேசுவாரா? டாக்டரம்மாளிடம் என் தேகநிலை பற்றி அடிக்கடி விசாரித்துக் கொண்டிருக்கிறாராமே! எனக்கு உடல் நலம் சரியில்லை என்பதற்காகத் தம்முடைய வெளியூர்ப் பயணங்களை யெல்லாம் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறாராமே! இங்கே வராமலிருப்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். அவற்றை-யெல்லாம் அவர் கூற முடியாமலிருக்கலாம்.'

பார்வதி புரண்டு படுத்துக் கொண்டாள்.

”சேதுபதியை மறந்து விடுவதற்கு, என் உள்ளத்தில் புகுந்து வேரூன்றிவிட்ட அந்த எண்ணத்தை அப்புறப் படுத்துவதற்கு வழியே கிடையாதா? இப்படியே,மனத்திற் குள்ளாகவே மறைத்து வைத்து அவர் நினைவாகவே அவர் கவலையாகவே, படுத்த படுக்கையாகவே இருந்து, ஒரு நாள் மறைந்து போக வேண்டியதுதானா? இந்த எண்ணம் என்னுள்ளேயே அழிந்து போக வேண்டியது தானா? நான் ஏன் அழிய வேண்டும்? என்னை அணு அணுவாக அரித்துக் கொண்டிருக் கும் இந்த எண்ணத்தை, நான் அழியாமலேயே அழித்து விடுகிறேன். அவருடைய உள்ளத்தில் அந்த எண்ணமிருந்தா லும் நாளையோடு ழித்து விடுகிறேன். அப்புறம் நானும் அவரும் நிம்மதியாக வாழலாம். எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும்” பார்வதியின் உள்ளத்தில் ஒரு திடமான முடிவு ஏற்பட்டுவிட்டது. நீண்ட காலமாக அரித்துக் கொண்டிருந்த வேதனை அந்த விநாடியோடு தீர்ந்து போயிற்று. மிகுந்த நிம்மதியுடன் ஒரு பெருமூச்சு விட்டாள் அவள்.

கடிகாரத்தில் மணி பதினொன்றரை அடித்தது.

''இப்போது அமைதியாகத் தூங்கப் போகிறேன்'' என்று தனக்குத்தானே எண்ணிக் கொண்டவளாய்க் கண்களை மூடித் தூங்குவதற்குப் பிரயத்தனப்பட்டாள். என்றுமில்லாத நிம்மதி காரணமாக, உள்ளத்தில் வியாபித்திருந்த மகிழ்ச்சி காரணமாக உணர்ச்சி பரவசமாகியிருந்த பார் வதிக்குத் தூக்கமே வரவில்லை.

திடீரென்று, கீழே, காமாட்சி யாருடனோ மெல்லிய குரலில் இரகசியமாகப் பேசிக் கொண்டிருப்பது பார்வதி யின் காதில் விழுந்தது.

இன்னொரு குரல் யாருடையது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் அவள் உற்றுக் கவனித்தாள். அவள் ஊகித்தபடி அது சேதுபதியின் குரலேதான்! அவளுக்கு வியப்புத் தாங்கவில்லை.

மாடிப் படிகளில் யாரோ ஏறி வரும் ஒசை கேட்கவே, பார்வதி கண்களை மூடிக்-கொண்டு தூங்குவது போல் படுத்திருந்தாள்.

அறைக்கு வெளியே வந்து நின்ற சேதுபதியும் காமாட்சியும் ஜன்னலினூடே நிழலுருவமாகத் தெரிந்தனர்.

நீல விளக்கின் லேசான ஒளியில் தெரிந்த பார்வதியின் முகத்தையே சற்று நேரம் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் சேதுபதி.

”எழுப்பட்டுமா, அண்ணா ?...” காமாட்சி கேட்டாள்.

"வேண்டாம்; நான் இங்கு வந்து போவதே அவருக்குத் தெரியக்கூடாது. அதற்காகவே-தான் நான் இங்கு இவ்வளவு நேரம் கழித்து வருகிறேன். நான் காரில் வந்தால் அந்தச் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டுவிடப் போகிறாரே என்பதற்காகவே நடந்து
வருகிறேன்.''

"டாக்டர் என்ன சொல்கிறார் அண்ணா?” காமாட்சி கேட்டாள்.

”அதிர்ச்சியாலும் கவலையாலும் அடிக்கடி மயக்கம் வருகிறதாம். ஆகையால் இன்னும் கொஞ்ச காலத்துக்குப் படுக்கையிலேயே இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டு-மென்கிறார். இந்த நிலையில் அவரை நான் தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்-காகவே தினமும் இந்த நேரத்தில் வந்து பார்த்து விட்டுப் போகிறேன்.....”

"இன்று கூட உன்னைப்பற்றி விசாரித்தார். எங்காவது வெளியூர் போயிருக்கிறாரா என்ன? இங்கே வருவதே இல்லையே என்று கேட்டார்.''

""நீ என்ன பதில் கூறினாய்?"

”ஊரில் தான் இருக்கிறார். டெலிபோனில் அடிக்கடி விசாரித்துக் கொண்டிருக்கிறார் என்றேன். நீ இப்போது இங்கு வந்திருப்பது தெரிந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவார் தெரியுமா அண்ணா ? எழுப்பட்டுமா?....'' என்று கேட்டாள் காமாட்சி.

”வேண்டாம், வேண்டாம்... அதோ அந்தப் பக்கம் படுத்துக்கொண்டிருப்பது யார்? பாரதியா?....” என்று கேட்டார் சேதுபதி.

"ஆமாம்; பாரதியை எப்போதும் தம் பக்கத்திலேயே தான் படுக்கவைத்துக் கொள்கிறார். பாரதியிடம் எவ்வளவு அன்பு தெரியுமா அண்ணா அவருக்கு?...”

"ஓ.. சரி காமாட்சி! நான் போய் வருகிறேன் பார்வதியின் உடம்பை ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொள். அதற்காகத்தான் உன்னையும், பாரதியையும் இங்கேயே இருக்கச் சொல்லியிருக்கிறேன்..” சேதுபதியும் காமாட்சியும் பேசியபடியே மாடிப்படிகளில் இறங்கிச் செல்லும் சத்தம் கேட்கிறது.

தன் கண்களில் படர்ந்த நீர்த்துளிகளைத் துடைத்துக் கொள்கிறாள் பார்வதி.

பொழுது விடிந்தது. காமாட்சி ஹார்லிக்ஸ்ட ன் பார்வதியின் அறைக்குள் வரும்போதே, "இன்றைக்கு எனக்கு இட்லி சாப்பிட வேண்டும் போலிருக்கிறது. சாயந்தரம் அஞ்சு மணிக்கு எனக்கு இரண்டு இட்லியும் கொஞ்சம் காரமாகத் தக்காளிப் பச்சடியும் செய்யச் சொல்லி ஞானத் திடம் சொல்லி விடுங்கள்'' என்றாள் பார்வதி.

''அதெல்லாம் சாப்பிட்டால் ஜீரணம் ஆகுமா?”

”பேஷாக ஆகும். எனக்கென்ன ஜூரமா என்ன? ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளி-களுக்குக்கூட இட்லி கொடுக்கிறார்களே!” என்றாள் பார்வதி.

”இட்லி என்றால் என் அண்ணாவுக்கு ரொம்பப் பிடிக்கும்......” என்றாள் காமாட்சி.

''முன்னொரு நாள் கூடச் சொல்லி யிருக்கீங்க. இன்றைக்குச் சாயந்தரம் உங்க அண்ணாவை இங்கே வரச் சொல்லப் போகிறேன். அவர் ஊரில் இருக்கிறாரா?” என்று கேட்டாள் பார்வதி.

”இருக்கிறார்; நான் போன்லே பேசி, அவரை வரச் சொல்லட்டுமா?'' என்று கேட்டாள் காமாட்சி.

''வேணாம். அது மரியாதை இல்லை. இன்னும் கொஞ்ச நேரத்திலே நானே அவரைப் போனில் கூப்பிட்டுப் பேசுகிறேன், அதுதான் மரியாதை!'' என்றாள் பார்வதி.

பார்வதி அவருக்குப் போன் செய்தபோது அவருடன் வேறு யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள். அரைமணி நேரம் கழித்துப் பார்வதி மீண்டும் டெலிபோன் செய்தபோது சேதுபதியின் குரல் கேட்டது.

"ஓ நீங்களா? வணக்கம், உங்கள் உடல் நிலை பற்றித் தான் இத்தனை நேரம் டாக்டரம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். தங்களுக்குத் துளிக்கூட கவலையே இருக்கக் கூடாதாம். மனத்துக்கு நிம்மதியும் உடலுக்கு ஓய்வும் இருந்தால் ஆறே மாதத்தில் குணமாகிவிடும் என்கிறார் என்றார் சேதுபதி.

”அப்படியா! ரொம்ப மகிழ்ச்சி. எனக்குக் கூட அப்படித் தான் தோன்றுகிறது. இப்போது தங்களை நான் போனில் அழைத்தது கூட அதற்காகத்தான். உங்களிடம் ஒரு முக்கிய விஷயம் பேச வேண்டும். தயவுசெய்து இன்று மாலை ஐந்து மணிக்கு இங்கே வந்து போகமுடியுமா? உங்களுக்குச் சிரமம் கொடுப்பதற்காக மன்னிக்கவேண்டும்” பணிவோடும் கனி வோடும் ஒலித்தது பார்வதியின் குரல்.

”ஓ! வருகிறேனே.. இதென்ன சிரமம்? நானும் உங்களைப் பார்த்து வெகு நாளாயிற்று. அடிக்கடி வந்து தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பதற்காகவே வருவதில்லை. மாலையில் அவசியம் வருகிறேன்.....”

”ரொம்ப சந்தோஷம்...'' என்று கூறி ரிஸீவரை வைத்த பார்வதிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

"ராஜா! இன்று மாலை பாரதியின் அப்பா இங்கே வரப் போகிறார், டிபனுக்கு இட்லியும் காரமாகத் தக்காளிச் சட்னிவும் போடச் சொல்லியிருக்கிறேன். நம் வீட்டு வாசல் தோட்டத்திலேயே காற்றாட உட்கார்ந்து பேசுகிறோம். ஐந்து மணிக்கு அங்கே இரண்டு நாற்காலிகள் போட்டு வைக்கச் சொல்லு...'' என்றாள்.

”ஆகட்டும் அத்தை !'' என்றான் ராஜா.

மாலையில் சேதுபதியைச் சந்திக்கும்போது அவரை எவ்வாறு வரவேற்க வேண்டும்? எப்படி உபசரிக்க வேண்டும்? எவ்வாறு பேச்சைத் தொடங்கி முடிக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் சிந்தித்துத் திட்டமிட்டு வைத்துக் கொண்டாள் அவள்.

மணி ஐந்தடிக்கும்போதே சேதுபதியின் கார் உள்ளே வந்து கொண்டிருப்பதைக் கண்ட பார்வதி, என்றுமில்லாத குதூகலத்துடன் அவரை வரவேற்க எழுந்து நின்றாள்.

தன்னை வரவேற்கத் தோட்டத்திலேயே காத்துக் கொண்டிருந்த பார்வதியைப் பார்த்து, "நீங்கள் ஏன் கீழே இறங்கி வந்தீர்கள்? நானே மாடிக்கு வந்திருப்பேனே!'' என்றார் சேதுபதி.

"நான் தினமும் கீழே இறங்கித் தோட்டத்துக்குள் கொஞ்ச நேரம் நடக்க வேண்டும் என்று டாக்டர் கூறியிருக்கிறார். ஆகையால் இன்று தங்களுடன் பேசிக் கொண்டே சற்றுநேரம் நடக்கலாம் என்று எண்ணினேன்.''

"அப்படியா? ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்று சொல்லுங்கள்'' என்றார் சேதுபதி சிரித்துக் கொண்டே.

''இப்படி உட்கார்ந்து பேசுவோமா?” என்று கேட்டாள் பார்வதி.

''இந்த இடம் ரொம்ப அமைதியாகவும் அழகாயுமிருக்கிறது...'' என்றார் சேதுபதி ஆசனத்தில் அமர்ந்தபடியே,

பாரதி சுடச்சுட இட்லியும், தக்காளிச் சட்னியும் கொண்டு வந்து வைத்தாள்.

''பேஷ்! எனக்குப் பிடித்த டிபன்!'' என்றார் சேதுபதி.

”எனக்கும்தான்'' என்று கூறினாள் பார்வதி.

”தக்காளிச் சட்னி ரொம்பக் காரமாயிருக்குமே! நீங்கள் இவ்வளவு காரம் சாப்பிடக்கூடாது'' என்றார் சேதுபதி.

"எனக்கு ஜுரம் ஒன்றுமில்லை. எது பிடிக்கிறதோ அது சாய்பிடலாம் என டாக்டரே கூறியிருக்கிறார்'' என்றாள் பார்வதி.

"இளம் வயதில் கல்லையும் ஜீரணம் செய்து கொள்ள லாம். ஐம்பதைத் தாண்டிவிட்டால் ஆகாரம் சாதுவா யிருக்கவேண்டும். ஆவியில் வெந்த இட்லி எளிதில் ஜீரணமாகி விடக்கூடியது. வாய்க்கு ருசியாகவும் இருக்கிறது. ஆமாம், எனக்கு இட்லி பிடிக்கும் என்று உங்களுக்கு யார் சொன்னது?'' என்று கேட்டார் சேதுபதி.

''யாரும் சொல்லவில்லை. எனக்குப் பிடிக்கும் என்பதற்காகவே செய்யச் சொன்னேன். இது உங்களுக்கும் பிடித்த பண்டமாக அமைந்துவிட்டது பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்'' என்றாள் பார்வதி.

''இந்த இட்லியும், தக்காளிச் சட்னியும் ரொம்பப் பொருத்தமாக அமைந்து விட்டன. நல்ல காம்பினேஷன்'' என்றார் சேதுபதி.

”மண வாழ்க்கையும் இப்படி அமைந்துவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்?'' என்றாள் பார்வதி.

சேதுபதி அவளை ஏறிட்டுப் பார்த்தார்; அந்தப் பார்வையில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?' என்ற கேள்வி தொக்கி நின்றது.

”தங்களிடம் இன்று ஒரு முக்கியமான விஷயம் பற்றிப் பேசப் போகிறேன். நான் கூறப்போவதைத் தாங்கள் முழு மனத்துடன் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது'' என்ற பீடிகையுடன் பேச்சைத் தொடங்கினாள் பார்வதி.

"என்ன விஷயம் அது?'' என்று நிதானமாகக் கேட்டார் சேதுபதி.

''திருமண விஷயம்தான்'' என்று கூறிவிட்டுப் பார்வதி, சேதுபதியின் முகத்தையே கண்கொட்டாமல் கவனித்தாள். அவர் முகத்தில் எவ்வித வியப்புக் குறியும் தோன்றவில்லை, சலனமற்ற அவர் முகம் எப்போதும் போல் அமைதியாகவே இருந்தது.
------------
குருத்து இருபத்தொன்று


'திருமண விஷயம்’ என்று தான் கூறியதும், அந்த விஷயத்தை அறிந்து கொள்ள சேதுபதி மிகுந்த ஆர்வம் காட்டுவார் என்று பார்வதி எதிர்பார்த்தாள். ஆனால், விஷயம் எவ்வளவு முக்கியமானதாக இருந்தபோதிலும் நிதானமிழந்து பரபரப்புக் காட்டுவது அவருடைய சுபாவ மல்லவே!

சேதுபதி கூறப்போகும் பதிலை எதிர்பார்த்தவளாய், அவர் முகத்தையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண் டிருந்தாள் பார்வதி.

சற்று நேரம் புன்முறுவலோடு மெளனமாகவே அமர்ந் திருந்த சேதுபதி, "எனக்கு இதில் துளியும் ஆட்சேபணை இல்லை... ஆனால்...” என்று பாதியில் பேச்சை நிறுத்திக் கண்களை மூடிக்கொண்டார்.

”தேவி இவர் மனத்தில் என்ன எண்ணிக்கொண்டிருக்கிறார். ஒரு வேளை நான் கூறுவதை விபரீதமாகப் புரிந்து கொண்டு விட்டாரோ?” பார்வதியின் உள்ளத்தில் திக் கென்றது.

''ராஜா, பாரதியின் சம்மதம் தான் இதில் முக்கியம். திருமணம் செய்துகொள்ளப் போகிறவர்கள் அவர்கள் தானே” என்று பேச்சை முடித்தார் சேதுபதி.

நிதானம், உறுதி, மன ஆழம் இம்மூன்றையும் மீறி நின்றது அவருடைய அறிவுக் கூர்மை!

’திருமண விஷயம் என்றதும், அது ராஜா - பாரதி திருமணம் பற்றியதுதான் என்பதை எவ்வளவு எளிதில் ஊகித்து விட்டார் ஊகித்ததோடு மட்டுமின்றி, தம் யூகத்தில் சந்தேகமே இல்லாதவர்போல் தீர்மானமாக ’அவர்கள் இரண்டு பேர் சம்மதம்தானே இதில் முக்கியம்?’ என்றல்லவா கூறுகிறார்? ராஜா - பாரதி திருமணம் பற்றித் தான் நான் பேசுவேன் என்பதை அவர் எவ்வாறு அறிந்து கொண்டார்? ஒருவேளை என் உள்ளத்தில் மறைந்துகிடக்கும் ரகசியங்களை யெல்லாம் கூடத் தெரிந்து கொண்டு தெரியாதவர் போல் நடித்துக் கொண்டிருப்பாரோ?’

அவருடைய அறிவை, ஆற்றலை, நெஞ்சத்தின் ஆழத்தை அளக்கும் சக்தி பார்வதிக்கு இல்லை. வியப்புக் காரணமாகச் சிறிது நேரம் பேசவே இயலாமல் கிடந்த பார்வதி, கடைசியாகக் கேட்டாள் :
"ராஜா - பாரதி திருமணம் பற்றித்தான் நான் பேசப் போகிறேன் என்பதைத் தாங்கள் எப்படி ஊகித்தீர்கள்? என்னால் உங்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை...!” உணர்ச்சி வசப்பட்டிருந்த பார்வதியின் குரலில் வியப்பும் தடுமாற்றமும் கலந்திருந்தன.

”எனக்குத் தெரியும், பாரதியைத் தாங்கள் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வருவதை நான் அறிவேன். அவள் ராஜாவுடன் நெருங்கிப் பழகத் தாங்கள் இடமளித்திருப்பதும் தெரியும். பாரதியிடம் தாங்கள் கொண்டுள்ள அன்பு உள்ளத் தோடு ஒட்டியது. எவ்வளவோ தொந்தரவுகளுக்கும் கவலைகளுக்குமிடையில் பாரதியின் எதிர்காலத்தைப்பற்றி மிகுந்த அக்கறை காட்டி வருகிறீர்கள். ஒரு கல்லூரியின் பிரின்ஸிபாலாக இருந்தும், அவளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்க முன்வந்தீர்கள். இப்போது உடல் நிலை சரியில்லாத போதும் அவளைத் தங்களுடனேயே வைத்துக்கொண்டு, தங்களுக்குப் பக்கத்திலேயே படுக்கச் சொல்லி அன்பு பாராட்டி வருகிறீர்கள். இதுக்கெல்லாம் என்ன காரணம் இருக்க முடியும்? தங்களுடைய அந்தரங்கத்தைப் புரிந்து கொண்டுதான் பாரதியும் ராஜாவும் நெருங்கிப் பழகுவதை நான் ஆட்சே பிக்கவில்லை ”

"அப்படியானால் தங்களுக்கு இத்திருமணத்தில் பூரண சம்மதம் என்று சொல்லுங்கள்...''

”அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதால் நம் எதிர்கால வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும் என்றே நினைக்கிறேன்...''

''ஐயோ! என் உள்ளத்தில் இருக்கும் ரகசியத்தை இவர் ஞான திருஷ்டியால் அறிந்தது போலல்லவா சொல்கிறார்? பார்வதிக்கு வியப்புத் தாங்கவில்லை.

உண்மையில் அவள் எண்ணிக் கொண்டிருந்ததும் அது தானே? ’ராஜாவை, அவனுடைய குழந்தைப் பருவம் முதல் சொந்தத் தாயைப்போல் அன்புடன் சீராட்டி வளர்த்து வருகிறேன். ராஜாவுக்கு அவன் தாய் தந்தை இருவரையுமே தெரியாது. அவனை என் மடியிலே போட்டு அமுதூட்டி வளர்த்திருக்கிறேன். அவன் நோயுற்ற காலங்களில் தோளிலே சுமந்து சென்று சிகிச்சை செய்து வந்திருக்கிறேன். ராஜா இன்று பெரியவனாக வளர்ந்து, படித்து, பாஸ் செய்து திருமணம் செய்து கொள்ளும் பருவத்தை அடைந்துவிட் டான். ராஜாவின் திருமணமும் நடந்துவிட்டால் என் வாழ்க்கையின் லட்சியம் பூர்த்தியாகிவிடும். ஆனால் இந்த நேரத்தில், காலம் கடந்த காலத்தில், பருவமற்ற பருவத்தில் என் உள்ளத்தில் வீண் சபலத்துக்கு இடமளித்து விட்டேன். திருவாளர் சேதுபதியைச் சந்தித்தபோது என் இதயத்தில் தோன்றிவிட்ட உணர்வு, காலம் கடந்த உணர்வு தான். அந்த வித்து முளைவிட்டு, இலைவிட்டுச் செடியாகி இப்போது பெரிய மரமாகவே வளர்ந்துவிட்டது. முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டிய செடியை மரமானபின் வாள் கொண்டு அறுக்க முற்பட்டிருக்கிறேன்.'

'சோடாபுட்டியின் நெஞ்சுக்குள்ளே புகுந்து ஊசலாடும் கண்ணாடிக் கோலியைப்போல் அந்த உணர்வு என் உள்ளத்தில் புகுந்து அழைத்துக் கொண்டிருக்கிறது. இதை என்னால் விழுங்கி ஜீரணம் செய்து கொள்ளவோ, வெளியே துப்பவோ முடியவில்லை. இப்படி எத்தனைக் காலத்துக்கு அந்த உணர்வை என்னுள்ளேயே வைத்து மறுகுவேன்? இதற்கு முடிவே கிடையாதா?’

'என் அந்தரங்கத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கும் அந்தச் சேதியை அவரிடம் வெளிப்படையாக எடுத்துச் சொல்லிவிட வேண்டும் என்று நானும் எத்தனையோ முறை முயன்று பார்த்துவிட்டேன். ஆனால் அதற்குரிய தைரியம் எனக்கு வரவே-யில்லை. அவரை நேரில் காணும்போது என் தைரியமெல்லாம் பறந்து போய் விடுகிறது. உணர்ச்சி வசப்பட்டுப் பேசும் ஆற்றலையே இழந்து விடுகிறேன். அவர் நினைவாகவே, அந்த நினைவின் பயனாக ஏற்பட்ட கவலையின் விளைவாகவே உள்ளம் திடம் குலைந்து, உடல் பலவீனமுற்று மயக்கமாகக் கீழே சாய்ந்து விட்டேன்.

'அன்று முதல் படுத்த படுக்கையாகவே கிடக்கிறேன். இந்த நிலையிலும் என் நெஞ்சம் அவருடைய நேசத்தை மறக்க மறுக்கிறது. அவரும் என்னை மறந்துவிடுவார் என்று தோன்றவில்லை. அவர் மன ஆழத்தை என்னால் காணவே முடியவில்லை தான். ஆனாலும் அவர் உள்ளம் எனக்குப் புரி கிறது. அவர் அன்பு உள்ளத்தில் எனக்கு இடமளித்திருக் கிறார் என்பதை நான் அறிவேன். இருவருமே ஒருவரை யொருவர் நேசிக்கிறோம். அந்த நேசத்தை வாய்விட்டுக் கூற முடியாத நிலையில் பழகி வருகிறோம். இந்த நிலை இனியும் நீடிக்கக் கூடாது. அதற்குள்ள ஒரே வழி ராஜா - பாரதியின் திருமணம்தான். பாரதி அவருடைய சொந்த மகள். ராஜா என்னுடைய சொந்த மகனைப் போல் வளர்ந்தவன். அதாவது ராஜாவுக்கு நான் தாய். பாரதிக்கு அவர் தந்தை. பாரதிக்கும் ராஜாவுக்கும் திருமணத்தை நடத்தி விட்டால் எங்களிரு வருக்குமிடையே உள்ள உறவு மாறிவிடும். அவர் எனக்குச் சம்பந்தியாகி விடுவார். அப்புறம்? அவர் மகளுக்கும் என் மகனுக்கும் கலியாணம் செய்து வைத்துவிட்ட பிறகு, எங்களிருவருக்குமிடையே வளர்ந்து வரும் அந்த உணர்வுக்கு இடமில்லாமல் போய்விடுமல்லவா? ராஜா திருமணத்தின் மூலமாகத்தான் என் உள்ளப் போராட்டத்துக்கு முடிவு காண முடியும்? அப்புறம் தான் நானும் அவரும் அமைதியாக வாழ முடியும். சஞ்சலமின்றிப் பழக முடியும்.''

இதுதான் பார்வதியின் திட்டம். நீண்ட சிந்தனைக்குப் பிறகு ஏற்பட்ட முடிவு. இப்போது சேதுபதியிடம் விஷயத்தைச் சொல்லியும் விட்டாள். ராஜா - பாரதி திருமணத்தின் அடிப்படையில், பார்வதியின் அந்தரங்கமான திட்டம் மறைந்து கிடப்பதை சேதுபதி அறிவாரா? அவர் சர்வ சாதாரணமாக, பாரதி - ராஜா திருமணத்தால் ஏற்படப் போகிற உறவை எண்ணிப் பாராமலேயே, ஒப்புக்கொண்டு விட்டாரா?

”பார்வதியும் அவரும் வெகு தூரத்துக்கு வெகுதூரம் மீண்டும் நெருங்க முடியாத அளவுக்குப் பிரிந்து போய்விடப் போகிற சூழ்ச்சியை அறியாமல் தான் இந்தச் சம்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டாரா? அல்லது அறிந்து தான் ஒப்புக்கொண்டாரா?”

சலனமற்ற அவர் முகத்திலிருந்து, அமைதியான பதில் விருந்து, பார்வதியினால் எதையுமே விளக்கிக் கொள்ள முடியவில்லை.

அவர் பச்சைக் குழந்தை போல் கள்ளம் கபடமின்றிச் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

பார்வதியைப் பொறுத்தவரை பெரும்பாரம், நீண்ட நாட்களாகச் சுமந்து கொண்டிருந்த இதயச்சுமை அந்தக் கணமே கீழே இறங்கிவிட்டத்தைப் போல் தோன்றியது.

அடுத்த வாரத்திற்குள்ளாகவே திருமணத்துக்கு முகூர்த்தம் வைத்து விடுகிறேன்... எனக்கும் கூடப் பாரதியின் திருமணத்தைச் சீக்கிரமே முடித்துவிட வேண்டுமென்ற ஆசைதான். ராஜா. என்ஜினியரிங் படித்திருக்கிறான். என்னுடைய தொழிற்சாலையின் முழுப்பொறுப்பையும் அவனிடம் ஒப்படைத்து விட்டு நான் வெளிநாடுகளுக்குச் சென்று வரப் போகிறேன். நாளைக்கே திருமணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கவனிக்கிறேன். கலியாணத்தைக் கூட இந்த வீட்டிலேயே நடத்திவிடலாம். தங்களுக்கு உடல் நலம் சரியில்லாததால் தாங்கள் இங்குமங்கும் அலையக் கூடாது. தாங்கள் இருக்குமிடத்திலேயே திருமணத்தை நடத்துவதுதான் நல்லது...''

”பாரதியும் காமாட்சியும் இந்த வீட்டுக்கு வந்த வேளை நல்லவேளை தான்...'' என்றாள் பார்வதி உற்சாகத்தோடு.

"ஆமாம்; தங்களுக்கும் உடம்பு குணமாகி விட்டால் அப்புறம் எல்லாம் சந்தோஷமாக முடிந்துவிடும். நேரமாகிறது... நான் போய்விட்டு நாளைக்கு வருகிறேன். தாங்கள் இரவு நிம்மதியாகத் தூங்குங்கள்'' என்று கூறி விட்டுப் புறப்பட்டார் சேதுபதி.

சேதுபதி காரில் ஏறிச் செல்லும் வரை அவரையே கண் கொட்டாமல் கவனித்துக் கொண்டிருந்தாள் பார்வதி அவளுடைய மனவேதனையும் நெஞ்சத்தின் நீங்காத நிழலும் அகன்று உள்ளம் லேசாகிவிட்ட உணர்வு, சேதுபதியின் மீது தோன்றிய இரக்க உணர்வு, ராஜா பாரதிக்குத் திருமணம் என்கிற மன நிறைவு. இவ்வளவும் கதம்பமாக அவளைக் குழப்பி உணர்ச்சி வசமாக்கிவிட்டன.

கார் மறைந்ததும், அவள் மெதுவாகத் திரும்பி நடந்தாள். உள்ளத்தில் ஏதேதோ எண்ணங்கள் தோன்றித் தோன்றி அவளைச் சஞ்சலத்தில் ஆழ்த்தின. அவள் மெதுவாக அடிமேல் அடி வைத்து நடந்தாள். கால்கள் தள்ளாடின. கண்களில் லேசாக இருள் கவிந்து மின்மினிப் பூச்சிகள் பரக்கத் தொடங்கின. பார்வதிக்கு எதுவுமே தெரியவில்லை. மாடிப் படிகள் வரை சென்று படிகளைக் கடந்து மேலேயும் போய் விட்டாள். தாழ்வாரத்தை நெருங்கிய போது ஒரேயடியாக இருட்டிக் கொண்டு வந்தது. தாழ்வாரத்துச் சுவர், படிகள் அனைத்தும் சுழன்று சுழன்று வந்தன.

”ராஜா!” என்று சத்தமிட்டுக் கூப்பிட எத்தனித்தாள். நாக்குத் தடுமாறி நெஞ்சு உலர்ந்து வார்த்தைகள் வெளி வர மறுத்துவிட்டன. அடுத்த கணமே, தான் கீழே விழுந்துவிடப் போகிறோம் என்கிற உணர்வு தோன்றவே, மாடிப் படிகளின் கைப்பிடியை ஆதாரமாகப் பிடித்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தபோதே அவள் மயக்க
முற்றுச் சாய்ந்து விட்டாள்.

"அத்தை! அத்தை” என்று அலறிக்கொண்டே ஓடி வந்த ராஜா, பார்வதியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.

அதே சமயம் பாரதி, காமாட்சி, ஞானம் மூவரும் பரபரப்புடன் ஓடிவந்து பார்வதியைக் கட்டிலுக்குத் தூக்கிச் சென்றனர்.

அடுத்த கணமே டாக்டருக்கும், சேதுபதிக்கும் தகவல் கொடுக்க போனுக்கு ஓடினான் ராஜா.
-------------
குருத்து இருபத்திரண்டு


''தங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டும் தயவுசெய்து இன்று மாலை இங்கே வந்து போக முடியுமா?” என்று பார்வதி டெலிபோனில் அழைத்தபோது, சேதுபதி ஒரு கணம் ஒன்றும் புரியாமல் திகைத்தார். ’எதற்காக அழைக்கிறாள்? அப்படிப்பட்ட முக்கிய விஷயம் என்னவா யிருக்கும்?' என்ற ஆவலும் பரபரப்பும் அவர் உள்ளத்தில் எழுந்தன. அவரால் இன்னதென்று ஊகிக்க முடியவில்லை. பார்வதியை முதன்முதலாகச் சந்தித்ததிலிருந்து அவர் மன அமைதி இழந்து எந்நேரமும் அவளைப் பற்றியே எண்ண மிட்டுக் கொண்டிருந்தார். அவளை அடிக்கடி சந்திக்கவும் அவளோடு உரையாடிக் கொண்டிருக்கவும் அவர் அந்தரங்கத்தில் அடங்காத ஆர்வம் இருந்து வந்தது. ஆயினும், தம்முடைய இதயத்தில் பொங்கிக் கொண்டிருந்த அந்த உணர்வை வெளியில் காட்டிக் கொள்ளாமல் நீறுபூத்த நெருப்பாக மறைத்து வைத்திருந்தார்.
பார்வதியை நேரில் சந்திக்கும் சமயங்களில் அவருடைய துணிவு, ஆற்றல் அனைத்தும் மறைந்து போய் சின்னஞ் சிறு குழந்தையாகி விடுவார். உள்ளத்தில் பொங்கும் ஆசைகளை யெல்லாம் அடக்கிக் கொண்டு பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசிவிட்டுத் திரும்பி விடுவார்.

பார்வதி அன்று டெலிபோனில் அழைத்தபோது அவர் உள்ளத்தில் மீண்டும் அந்த ஆசை கொழுந்துவிடத் தொடங்கியது. ”ஒரு வேளை இன்று தன் அந்தரங்கத்தை வெளியிடத்தான் அழைக்கிறாளோ?" என்று பரபரப்படைந்தார்.

''இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது. சற்றும் தயக்கமின்றி என் இதயத்தை அவள் அறியச் செய்யப் போகிறேன். அவளாகவே சங்கோசமின்றித் தன் எண்ணத்தை எடுத்துக்கூறும் அளவுக்குச் சூழ்நிலையை உண்டாக்கப் போகிறேன். இவ்வாறு முடிவு செய்து கொண்டவராய் "ஓ! வருகிறேன். அவசியம் வருகிறேன்” என்று பார்வதிக்குப் பதில் கூறினார்.

அன்று மாலை இருவரும் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது சேதுபதி ஒவ்வொரு கணமும் பார்வதியிடமிருந்து வரப்போகும் அந்த வார்த்தைகளை எதிர்பார்த்துக் கொண் டிருந்தார்.

அவர் எதிர் பார்த்தபடியே அவள் பேச்சைத் தொடங்கினாள். திருமணம் பற்றிய பேச்சுத்தான்.

ஆனால், அது அவர்களுடைய சொந்தத் திருமணம் பற்றியதல்ல. ராஜா - பாரதியைப் பற்றியது.

சேதுபதி ஏமாற்றத்தை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. உண்மையில் அவருக்கு அது ஏமாற்றமும் இல்லை. பார்வதியின் அழைப்பு எதற்காக இருக்கும் என்று அவர் பலவாறு யோசித்துப் பார்த்த போதிலும் எந்த ஒரு நிச்சயமான முடிவுக்கும் வந்துவிட-வில்லை.

ஆகவேதான், திருமணம் விஷயம் என்று பார்வதி கூறியபோது அவர் சிறிதும் பரபரப்படையவில்லை. பார்வதி பின் குரலில் உணர்ச்சியோ பரபரப்போ இல்லாமற் போகவே சேதுபதிக்கு உடனேயே விளங்கி விட்டது. மிக அமைதியாகச் சற்று நேரம் மெளனப் புன்னகையில் ஆழ்ந்திருந்தவர், ரோஜா - பாரதியின் சம்மதம் தான் இதில் முக்கியம். திருமணம் செய்துகொள்ளப் போகிறவர்கள் அவர்கள் தானே?'' என்று வெகு சாவதானமாகப் பேச்சை முடித்தபோது பார்வதிக்கு வியப்புத் தாங்கவில்லை.

பார்வதி மயக்கமுற்றுக் கீழே சாய்ந்து விட்டாள் என்று செய்தியை ராஜாவின் மூலம் அறிந்த சேதுபதி திடுக்கிட்டு நின்றார். அடுத்த சில நிமிடங்களுக்குள் பார்வதியின் இல்லத்துக்கு வந்துவிட்ட அவர், தமக்குத் தெரிந்த டாக்டர்களை யெல்லாம் டெலிபோனில் அழைத்துப் பார்வதிக்குச் சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தார்.

”மறுபடியும் அதிர்ச்சிக்கு ஆளாகி யிருக்கிறார். இந்த பலவீனமான நிலையில் எந்த ஒரு சிறு கவலைக்கும் மனத்தில் இடம் வரக்கூடாது. ரத்தக் கொதிப்பு அதிகமாயிருப்பதால் ரொம்ப எச்சரிக்கையோடு கவனித்துக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் உயிருக்கே ஆபத்தாக முடியும்'' என்று கூறிய டாக்டர்கள், மருந்துகளின் பெயரைச் சீட்டில் எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார்கள்.

பார்வதி மயக்க நிலை தெளிந்து கண் விழித்துப் பார்த்த போது மணி இரண்டு. சேதுபதி மெளனமாகத் தன் அருகில் அமர்ந்திருப்பதைக் கண்டபோது பார்வதிக்குத் துக்கம் நெஞ்சை அடைத்தது. கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்தபடியே ''நீங்களா?'' என்று ஈனமான குரலில் கேட்டாள்.

அவளுடைய குரலில், பார்வையில் உலகத்துக் காதல் மகா காவியங்களின் சோகமனைத்தும் ஏக்கமனைத்தும் பிரதி பலித்தன. மெலிந்த தன் கரங்களை உயர்த்தி ஏதோ சொல்ல வாயெடுத்தாள்; பேச முடியவில்லை.

''நீங்கள் பேசக்கூடாது...'' மனத்தில் எந்தக் கவலையும் வைத்துக் கொள்ளக்கூடாது... சேதுபதி அவள் கரங்களைத் தீண்டி அமர்த்தி நிதானமான குரலில் பேசினார்.

''எனக்கு எந்தக் கவலையும் இல்லை. இனி நான் நிம்மதியாக வாழ்வேன். ராஜா - பாரதி திருமணத்துக்கு உடனே ஏற்பாடு செய்யுங்கள் - பார்வதி தட்டுத் தடுமாறிக் கூறி முடித்தாள்.

" அவர்கள் திருமணத்துக்கு இப்போது என்ன அவசரம்? தாங்கள் பூரணமாகக் குணமடைந்து பழையபடி கல்லூரிக்குப் போகத் தொடங்கியதும் வைத்துக் கொள்ளலாமே'' என்றார் சேதுபதி.

"தயவு செய்து எந்தக் காரணத்துக்காகவும் ராஜா - பாரதி திருமணத்தைத் தள்ளிப் போடாதீர்கள். என்னுடைய உடல் நலம் சரியில்லாததாலேயே தான் அவர்கள் திரு மணத்தை உடனே நடத்திவிட வேண்டுமென்று துடிக்கிறேன்....”

இந்தத் திருமணத்தால் தனக்கும் பார்வதிக்கும் ஏற்படக் கூடிய உறவு முறைபற்றிச் சேதுபதி எண்ணிப் பார்க்காமலில்லை, பார்வதியின் மன அமைதிக்காக அவர் தம்முடைய ஆசைகளை யெல்லாம், உள்ளத்தில் நீண்ட காலமாகப் புதைத்து வைத்திருந்த கனவுகளையெல்லாம் தியாகம் செய்துவிடத் தீர்மானித்து விட்டார்.

''தங்கள் விருப்பப்படியே திருமணத்தைக் கூடிய சீக்கிரம் நடத்தி விடுகிறேன். இன்னும் சில தினங்களுக்குள் இந்த வீட்டிலேயே அவர்கள் திருமணம் நடைபெறும்...'' சேதுபதியின் உறுதிமொழி பார்வதிக்கு மட்டற்ற மகிழ்ச்சி யைத் தந்தது.

“தாங்கள் இனி எதைப் பற்றியும் கவலைப்படக்கூடாது. நாளைக் காலையில் நான் மீண்டும் வந்து பார்க்கிறேன்.... காமாட்சி! நீ பார்த்துக் கொள்கிறாயா? தூங்கிவிடப் போகிறாய்.... பாவம்! உனக்குத்தான் சிரமம்” என்று கூறி விட்டுப் புறப்பட்டார் சேதுபதி.

திரும்பிச் செல்லும்போது அவர் உள்மனம் அவரைக் கேட்டது.

'சேதுபதி! அவள் மீண்டும் மயக்கமுற்றுக் கீழே விழுவானேன்? உன்னுடன் ராஜா - பாரதி திருமணம் பற்றிப் பேசியபோது மகிழ்ச்சியோடு தானே காணப்பட்டாள்? அதிர்ச்சிக்கோ, கவலைக்கோ அதில் என்ன இருக்கிறது? உனக்கும் அவளுக்கும் ஏற்பட இருந்த உறவு முறை மாறி விட்டது என்பதுதான் அதிர்ச்சிக்குக் காரணமோ? அப்படி யானால், ’அமைதி நிம்மதி ' என்பதெல்லாம் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் பேச்சுத்தானா?’

ஒரு வாரம் கடந்தது. பார்வதியின் உடல் நிலையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. எழுந்து நடக்கவும் சக்தியற்ற வளாய்ப் படுத்த படுக்கையாகவே கிடந்தாள் அவள்.

டாக்டர்கள் மட்டும் வேளை தவறாமல் வந்து போய்க் கொண்டிருந்தனர். ஆனால் அவள் உடல் நிலையில் மட்டும் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. இந்த நிலையில் திரு மணத்தை நடத்துவதற்கு வேண்டிய உற்சாகமோ ஊக்கமோ சேதுபதிக்கு எங்கிருந்து வரும்? ’திருமணத்தைத் தள்ளிப் போடுவதால் நிலைமை மாறலாம். இதற்குள் பார்வதியின் மனமும் மாறலாம்' என்ற சபலம் அவர் உள்ளத்தில் ஒரு பக்கம் ஒளிந்து கொண்டிருந்தது.

ஆனாலும் பார்வதிக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் அவர் சிறிதும் தயக்கம் காட்டவில்லை. திருமண ஏற்பாடுகள் ஜாம் ஜாம் என்று நடந்து கொண்டிருந்தன.

”காமாட்சி! அடுத்த வெள்ளிக் கிழமை முகூர்த்தம். நிச்சயம் செய்திருக்கிறேன். இன்னும் ஏழே நாட்கள் தான்.... கலியாணத்தை இந்த வீட்டிலேயே நடத்திவிட வேண்டியதுதான். இப்போதுள்ள நிலையில் பார்வதியால் ஓர் அடியும் அப்பால் நகர முடியாது...” என்றார் சேதுபதி.

"ஆயிரம் காலத்துப் பயிர்; ஆறஅமர யோசித்துக் கொஞ்சம் நிதானமாகச் செய்யலாமே..” என்றாள் காமாட்சி.

"முதலில் நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் பார்வதியோ அவசரப் படுகிறாள். இந்த விஷயத்தில் அவள் விருப்பத்திற்கு மாறாக நடந்துகொள்ள எனக்குச் சம்மதமில்லை. எப்படியும் பாரதியும் ராஜாவும் ஒரு நாளைக்குக் கணவன் மனைவியாக வாழ வேண்டியவர்கள் தானே?... சுப காரியங்களைச் சீக்கிரமே முடிப்பது நல்லது தான்'' என்றார் சேதுபதி.

"அதுவும் சரிதான்; நீயே மாடிக்குப் போய் சேதியைச் சொல்லிவிடு...'' என்றாள் காமாட்சி.

சேதுபதி மாடிக்கு ஏறிச் சென்றபோது பார்வதி மிக்க மகிழ்ச்சியுடன் “அடுத்த வெள்ளிக் கிழமையா முகூர்த்தம்? ரொம்ப சந்தோஷம்! முகூர்த்தப் புடவைகளெல்லாம் நானேதான் 'ஸெலக்ட்’ செய்யப் போகிறேன். பாரதிக்கு நகை நட்டுகளெல்லாம் ரொம்ப வேண்டாம். கலியாணத்தை ஆடம்பரமாகச் செய்ய வேண்டாம். முக்கியமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பினால் போதும். மேளத்தைக் கொட்டித் தாலியைக் கட்டி ஏழைகளுக்குச் சாப்பாடு போட்டு விடலாம். அதுவே போதும். பந்தல் கூட ரொம்பப் பெரிதாக வேண்டாம்'' என்றாள் பார்வதி.

"எனக்கும் அதே ஐடியாதான். கலியாணங்களின்போது ஆடம்பர முறைகளில் பணத்தை விரயம் செய்வது எனக்கும் கட்டோடு பிடிக்காது.”

''பல விஷயங்களில் நாம் இருவரும் ஒரே மாதிரியான கருத்துகளையே கொண்டிருக்கிறோம்...'' என்று மறை பொருளாகக் கூறிக் கண் சிமிட்டினாள் பார்வதி.

"ஆமாம்; அந்தக் கருத்துகளை ஒருவருக்கொருவர் மனம் விட்டுச் சொல்லிக் கொள்ளச் சந்தர்ப்பம் தான் ஏற்படுவதில்லை...' என்று சூட்சுமமாகவே பதில் கொடுத் தார் சேதுபதி.

''அண்ணா ! ஜவுளிகளை இங்கேயே கொண்டு வர சொல்லு ; பார்வதியே பார்த்து முடிவு செய்யட்டும்...” என்றாள் காமாட்சி.

”ஏழெட்டு ஜவுளிக் கடைகளை இங்கு அனுப்பி வைக்கிறேன், போதுமா?” என்று சிரித்துக் கொண்டே புறப்பட் டார் சேதுபதி.

கலியாண ஏற்பாடுகள் துரித காலத்தில் நடந்து கொண்டிருந்தன. ராஜாவும் பாரதியும் தாங்கள் மணமக்கள் என்பதைக்கூட மறந்து ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்தார்கள்!

”இன்னும் மூன்றே தினங்கள் தான் இன்னும் இரண்டே நாட்கள் தான்” என்று ஒவ்வொரு நாளும் கவலையோடு சொல்லிக்கொண்டிருந்தாள் காமாட்சி.

பார்வதி கட்டிலில் படுத்த வண்ணமே எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தாள்.
ராஜாவும் பாரதியும் கூட்டாகவே ஓடியாடி வேலை செய்து கொண்டிருப்பதைக் கண்ட அவள், "பாரதி! நாளை மறுதினம் ராஜா உனக்குக் கணவனாகப் போகிறான். ஆகையால் நீ அவனிடம் கொஞ்சம் வெட்கப்படுவதுபோல் நடிக்க வேண்டும்'' என்று கேலி செய்தாள்.

''போங்க அத்தை! எனக்கு வெட்கமாயிருக்கிறது!” என்றான் ராஜா.

''இதோ பார்த்தீர்களா, வேஷ்டி சட்டை” என்று கூறிக் கொண்டே கையில் ஜவுளிகளுடன் வந்து சேர்ந்தார் சேதுபதி.

”வேட்டி சட்டையா? யாருக்கு? ராஜாவுக்கா?.... ரொம்ப சீப்பாக வாங்கி விட்டீர்களே! சிக்கனத்தை மாப்பிள்ளை டிரஸ்ஸிலேயே ஆரம்பித்து விட்டீர்களோ?'' என்று கேட்டாள் பார்வதி.

''இது மாப்பிள்ளை டிரஸ் இல்லை; வாசலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறானே, செவிட்டுப் பெருமாள், அவனுக்கு” என்றார் சேதுபதி,

பார்வதி சிரித்து விட்டாள்.

"ஆமாம், திருமணம் நடக்கப்போகிற விஷயம் அவனுக்குத் தெரியுமா?....''

”மேளம் வாசிக்கிறபோது என்ன சத்தம் என்று கேட்காமலா இருப்பான்? அப்போது தெரிந்துகொள்கிறான்” என்று கூறிச் சிரித்தான் ராஜா.

நேற்றுப் பந்தல் போடும்போதே, "என்ன விசேஷம்!” என்று கேட்டான். நான் சங்கதியைச் சொன்னபோது அவனுக்கு ஆனந்தம் தாங்கவில்லை'' என்றார் சேதுபதி.

''பாவம்! ரொம்ப காலமாக நம்ம வீட்டிலேயே கிடக்கிறான்.... ஆமாம்; இந்தப் புடவை யாருக்கு? ரொம்ப நன்றாக இருக்கிறதே!'' என்று கேட்டாள் பார்வதி.

''பிடித்திருந்தால் நீங்கள் தான் கட்டிக் கொள்ளுங்களேன். பனாரஸ் பட்டு - நல்ல கலர்...'' என்றார் சேதுபதி. அப்போது பார்வதியின் முகம் வெட்கத்தால் சிவந்து மாறியதைச் சேதுபதி கவனிக்கத் தவறவில்லை.

"இம்மாதிரி ஒரு புடவை வாங்கிக் கொள்ள வேண்டுமென்று எனக்கு ரொம்ப நாளாக ஆசை...' என்றாள் பார்வதி.

”தங்களுக்கு இம்மாதிரி ஒரு புடவை வாங்கித் தர வேண்டுமென்று எனக்கும் தான் ரொம்ப நாளாக ஆசை!'' என்று சேதுபதி கூறவில்லை. மனத்தில் எண்ணிக்கொண்டார்.

’இந்தப் புடவை தனக்குப் பிடிக்குமென்று அவருக்கு எப்படித் தெரிந்தது?'
மனத்திற்குள்ளாகவே ஒரு வியப்புக் குறியை எழுப்பிக்கொண்டு யோசிக்கலானாள் பார்வதி.

ஹாஸ்டல் திறப்பு விழாவன்று பார்வதி இதே மாதிரி புடவை ஒன்று தான் கட்டியிருந்தாள். அந்தக் கலர் அவள் தேக அமைப்புக்கு மிகவும் பொருத்தமா-யிருந்ததைச் சேதுபதி அன்றே குறிப்பாகக் கவனித்து வைத்திருந்தார். இப்போது அதை மறந்துவிட்ட பார்வதிக்குச் சேதுபதி வாங்கி வந்த சேலையைக் கண்டதும் வியப்புத் தாங்கவில்லை.

வெள்ளிக்கிழமை காலை குறித்த நேரத்தில் கெட்டி மேளம் முழங்க பெரியோர்கள் ஆசீர்வதிக்க ராஜாவுக்கும் – பாரதிக்கும் அக்னி சாட்சியாகத் திருமண வைபவம் நடந்தேறியது.

மாடியில் கட்டிலில் படுத்தபடியே திருமணக் காட்சி களைத் தன் அகக் கண்ணால் கண்டு களித்துக் கொண்டிருந்தாள் பார்வதி. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தோட மானசீகமாக மணமக்களை வாழ்த்திக் கொண்டிருந்தாள் அவள்.

திருமணச் சடங்குகள் யாவும் முடிந்ததும் ராஜாவும் பாரதியும் சேதுபதியை வணங்கி எழுந்தனர்.

”முதலில் மாடிக்குச் சென்று அத்தைக்கு நமஸ்காரம் செய்யுங்கள்'' என்று கூறி, அவர்களை மேலே அழைத்துச் சென்றார் சேதுபதி.

தான் வாங்கிக் கொடுத்த அந்த பனாரஸ் பட்டுப் புடவையை அணிந்து கொண்டு பார்வதி கட்டிலில் படுத் திருப்பதைக் கண்ட சேதுபதிக்கு மெய் சிலிர்த்தது.

”அத்தை! நமஸ்தாரம் பண்ணுகிறோம்'' என்றான் ராஜா.

”தீர்க்காயுசுடன் பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ வேண்டும்” என்று கூறியபடியே படுக்கையில் சாய்ந்திருந்த பார்வதி எழுந்து உட்கார்ந்து மணமக்களைத் தன் இரு கைகளாலும் தழுவிக் கொண்டாள். ”என் ஆசை நிறைவேறி விட்டது; இனி எனக்கு நிம்மதி தான்; இப்படியே கண்களை மூடி விட்டாலும் கவலையில்லை. பாரதி! என் அருகில் வா...'' என்று பாரதியின் கரங்களைப்பற்றி அழைத்த பார்வதி, அவள் தலையை அன்போடு வருடி, நீ இன்று ரொம்ப அழகாக இருக்கிறாய்?'' என் ராஜா ரொம்ப அதிஷ்டக்காரன்" என்றாள்.

பாரதியின் மணக் கோலத்தைக் கண்டபோது சேதுபதிக்குத் தமது மனைவி சரஸ்வதியின் ஞாபகம் தோன்றி விடவே துக்கம் நெஞ்சை அடைத்தது. சரஸ்வதியின் சாயலாகவே காட்சி அளித்த தம் மகளைப் பார்த்தபோது சேதுபதியின் கண்களில் நீர் துளித்தது. அவர் கண்கள் கலங்குகுவதைக் கண்ட பார்வதியின் நெஞ்சம் உணர்ச்சி வசத்தால் நெகிழ்ந்தது.
-------------
குருத்து இருபத்து மூன்று


வாசலில் காட்டியிருந்த வாழை மரங்களும், மாவிலைத் தோரணங்களும் வாடி வதங்கிச் சருகாகிக் கொண்டிருந்தன. திருமணம் நடந்த வீட்டில் காணக் கூடிய குதூகலம், ஆரவாரம், விருந்து வைபவம், விருந்தாளிகள் நடமாட்டம் எதுவுமே அங்கு இல்லை.

பார்வதியின் நிலை வரவர மோசமாகிக் கொண்டே போயிற்று. இப்போதெல்லாம் அவள் மாடியை விட்டுக் கீழே இறங்கிச் செல்லவும் சக்தியற்றவளாகிப் படுத்த படுக்கையாகவே கிடந்தாள். ராஜாவும் பாரதியும் எந்நேரமும் அவள் அருகிலேயே இருந்து பணிவிடை புரிந்து கொண்டிருந்தனர். சேதுபதி பெரிய பெரிய டாக்டர்களை அழைத்து வந்து, பார்வதிக்குச் சிகிச்சை அளிக்கச் செய்து, அவளைப் பழைய நிலைக்கு மீட்டு விடுவதில் முனைந்திருந்தார்.

''பார்வதி குணமடைந்து பழையபடி சந்தோஷமாக வாழவேண்டும்” - இதுதான் அவருடைய லட்சியமாக இருந்தது. அவளுடைய உயிருக்காக, வாழ்வுக்காக அவர் எதையுமே தியாகம் செய்யத் தயாராயிருந்தார்.

கண்களை மூடியபடியே சேதுபதியைப்பற்றி எண்ண மிட்டுக் கொண்டிருந்த பார்வதிக்கு வியப்புத்தான் மேலிட் டது. என் மீது அவர் ஏன் இத்தனை அக்கறை காட்டவேண் டும்? அன்று அவர் எனக்காக ஆசையோடு வாங்கி வந்த மாதுளம் பழங்களை நான் ஏறிட்டுப் பாராமல் அலட்சியம் செய்ததைக் கூட அவர் பொருட் -படுத்தவில்லை ! எவ்வளவு பெருந்தன்மையான குணம்? நான் பண்பற்றவள். அவரோடு ஒப்பிடும்போது மிக மிக அற்பமானவள். அவருடைய பெருந்தன்மையோடு உயர் குணத்தோடு நற்பண்போடு என்னை நான் ஒப்பிட்டுப் பார்க்கவே தகுதியற்றவள்.... எனக்காக அவர் எதையும் தியாகம் செய்யத் தயாராயிருக்கிறார் என் மகிழ்ச்சிக்காக, மன அமைதிக்காகத் தம்முடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கவும் சித்தமாயிருக்கிறார்.

''ராஜா - பாரதி திருமணத்தை உடனே முடிக்கவேண்டு மென்று நான் கேட்டுக் கொண்டபோது சற்றும் தயங்காமல் யோசிக்காமல், தாமதிக்காமல் ஆகட்டும்; முடித்து விடுகிறேன்' என்று பதில் கூறினாரே? தம்முடைய ஒரே மகளின் எதிர்கால வாழ்க்கையைப் பற்றிச் சிறிதேனும் சிந்தித்துப் பாராமல் திருமணம் செய்துவைக்க இசைந்தாரே! இதற் கெல்லாம் என்ன காரணம்?

'அந்த உத்தமரை நான் அலட்சியம் செய்யவில்லை. என் இதயக் கோயிலில் அவரை நிரந்தரத் தெய்வமாக்கிப் போற்றிக் கொண்டிருக்கிறேன். அவரிடம் நான் கொண்டுள்ள மாசற்ற அன்பு காரணமாகவே சில சமயங்களில் தவறு இழைத்து விட்டுப் பின்னர் அதைப்பற்றி எண்ணி எண்ணி வேதனைப் படுகிறேன். தேவி ! என்னை நீதான் மன்னிக்க வேண்டும் என்று அன்னையை வேண்டிக் கொள்கிறேன். அன்று அவர் ஆசையோடு வாங்கி வந்த மாதுளம் பழங்களை நான் அலட்சியம் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்தான். ஆயினும் அந்தக் குற்றத்தை அவர் பெருந்தன்மையோடு மறந்து விட்டார். மீண்டும் அம்மாதிரி அவர் ஏதேனும் எனக்காக வாங்கி வரும்போது அதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தச் சந்தர்ப்பம் எனக்கு விரைவிலேயே கிடைத்துவிட்டது. திருமணத்தின்போது அவர் எனக்காக வாங்கி வந்த பனாரஸ் பட்டுப் புடவையை நான் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டேன். அந்தப் புடவையை நான் உடுத்தியிருப்பதை கண்டதும் அவர் கண்களில் வீசிய ஒளி, என்னை மெய் சிலிர்க்கச் செய்தது. என் வாழ் நாள் முழுவதும் நினைவில் வைத்துக் குதூகலப்படுவதற்கு அந்த ஒரு நிகழ்ச்சியே போதும் எனக்கு.'

"அத்தை தங்கள் பெயருக்குத் திருமண அழைப்பிதழ் ஒன்று வந்திருக்கிறது...'' என்று கூறிக்கொண்டே விரைந்து வந்தான் ராஜா.

''யாருக்குத் திருமணம்?... படித்துச் சொல்லு?" ஆவலுடன் கேட்டாள் பார்வதி.

"மீனாட்சிக்கும் - கோபாலனுக்கும் வருகிற ஞாயிற்றுக் கிழமையன்று மதுரையில் திருமணமாம். அது யார் அத்தை மீனாட்சி ? மதுரை மீனாட்சி அம்மனுக்குத்தான் ஏற்கெனவே திருமணம் நடந்தாகி விட்டதே?'' என்று சிரித்துக்கொண்டே கேட்டான் ராஜா.

”எங்கே? அழைப்பிதழை இப்படிக் காட்டு பார்க்கலாம்...'' என்று கேட்டாள் பார்வதி.

"வேண்டாம் அத்தை! உங்களால் படிக்க முடியாது. நானே முழுதும் படிக்கிறேன்'' என்று கூறிப் படிக்கத் தொடங்கினான் ராஜா.

'மீனா என்கிற மீனாட்சிக்கும்' என்று அவன் தொடங்கிய போதே "ஓகோ, நம்ம மீனாவுக்கா?” என்றாள் பார்வதி.

”யார் அத்தை அது மீனா?''

''என் காலேஜில் வாசித்துக் கொண்டிருந்த பெண். டென்னிஸ் நன்றாக விளையாடுவாள். சரி... சரி... இப்போது எல்லாம் புரிந்துவிட்டது. ரொம்ப சந்தோஷம். வருகிற ஞாயிற்றுக்கிழமையன்றா முகூர்த்தம்... ம்..... இந்தக் கலி யாணத்துக்கு நான் நேரில் போகவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். உன் கலியாணத்தையே கீழே வந்து பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை எனக்கு...'' என்று பெருமூச்செறிந்தாள்.

''ராஜா ! இவர்களுக்கு என் பெயரால் ஒரு வாழ்த்துச் செய்தி அனுப்பிவிடுகிறாயா?''

''ஆகட்டும் அத்தை?'' ராஜா கீழே போய்விட்டான்.

பார்வதிக்கு மூச்சுத் திணறியது. 'ரத்தக் கொதிப்புள்ள வர்கள் உடம்பையோ, மனசையோ அலட்டிக் கொள்ளக் கூடாது. மூச்சு விடாமல் பேசவும் கூடாது’ என்று டாக்டர்கள் கூறிய வார்த்தைகள் அவள் நினைவுக்கு வந்தன.

அன்றிரவு சேதுபதி பார்வதியைக் காண வந்தபோது மணி பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டது. காமாட்சி மாடி வராந்தாவில் தூங்கிக் கொண்டிருந்தாள். உள்ளே எட்டிப் பார்த்தபோது கட்டிலில் பார்வதி அசைவற்றுப் படுத்துக் கொண்டிருப்பது நிழலாகத் தெரிந்தது. சேதுபதி மெதுவாக நடந்து போய், கட்டிலுக்கருகில் நின்று பார்வதியைக் கவனித்தார். மூச்சு லேசாக இழையோடிக்கொண்டிருந்தது. பலவீனமாகத் திராணியற்றுக் கிடந்த அவள் நிலையைக் கண்ட சேதுபதியின் உள்ளம் வேதனைக்-குள்ளாயிற்று. மெளனமாகவே, சந்தடியின்றி வராந்தாவுக்குத் திரும்பி வந்தவர், ”காமாட்சி!”என்று மெதுவான குரலில் அழைத்தார்.

பகலெல்லாம் உழைத்துக் களைத்துப் போயிருந்த காமாட்சிக்குச் சேதுபதியின் குரல் எங்கோ பாதாளத் திலிருந்து ஒலிப்பது போல் கேட்டது. அவள் திரும்பிப் படுத்துக் கொண்டாள். மீண்டும் காமாட்சி!' என்று சேதுபதி அழைத்த பிறகே, அவள் விழிப்படைந்து எழுந்து உட்கார்ந்தாள்.

"ரொம்ப நேரமாயிற்றா அண்ணா நீ வந்து...''

''இல்லை, காமாட்சி! இப்போது தான் வந்தேன்.... பார்வதி ஏதாவது ஆகாரம் சாப்பிட்டாளா? அவளுக்கு இப்போது எப்படி இருக்கிறது?”

”எதுவுமே சாப்பிடவில்லை. சாயந்திரம் கொஞ்ச பழரசம் பிழிந்து கொடுத்தேன். அதில் பாதியைக் குடித்து விட்டுப் பாதியை அப்படியே வைத்து விட்டாள். எனக்கென்னவோ அவள் நல்லபடி பிழைத்தெழுந்திருக்க வேண்டுமே என்று ஒரே கவலையாயிருக்கிறது, அண்ணா !''

''நம்மால் முடிந்ததையெல்லாம் செய்து பார்த்து விடலாம் காமாட்சி! எப்படியும் அவள் பிழைத்து விடுவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.''

”நீயும் பணத்தைப் பணம் தான்று பாராமல் தான் செலவழித்துக் கொண்டிருக்கிறாய்! மூன்று மாதமாக இதே கவலை தான் உனக்கு நல்ல படியாக அவள் பிழைத்தெழுந்-திருக்க வேண்டும்”. பெருமூச்சு விட்டாள் காமாட்சி.

''நீ உடலால் உழைக்கிறாய். நான் பொருளைத்தானே செலவழிக்கிறேன்? உயிருக்கு விலை கிடையாது. பணம் இன்று வரும். நாளை போகும். பார்வதியின் உயிர் விலை மதிப்பற்றது. அவள் உயிரைக் காப்பாற்ற நான் எதையுமே இழந்துவிடத் தயாராயிருக்கிறேன். பார்வதியைப் போன்ற ஓர் அறிவாளியை, உத்தமியை, உழைப்பாளியை அபூர்வ மாகத்தான் காண முடியும்...''

கண்களை மூடியபடியே கட்டிலில் சாய்ந்து கிடந்த பார்வதிக்குச் சேதுபதியின் வார்த்தைகள் தெளிவாகக் கேட்டன. அவள் கண்களில் நீர் மல்கியது.

“உயிருக்கு விலை கிடையாது. பார்வதியின் உயிர் விலை மதிப்பற்றது என்ற வார்த்தைகள், அவள் இதயத்தை நெகிழ வைத்தன. அன்றொரு நாள் தொழிற்சாலை தீப்பற்றி எரிந்துவிட்டதென்ற செய்தியைக் கேட்டபோது கூட, அவர் பாபரப்புடன் உயிர்ச்சேதம் உண்டா? என்று கேட்டது அவள் நினைவுக்கு வந்தது. 'பணத்தைக் காட்டிலும் உயிரை அவர் எவ்வளவு உயர்வாக மதிக்கிறார்?’ அவருடைய குரல் மீண்டும் கேட்கவே பார்வதி அவர் பேச்சை ஆவலோடு கவனித்தாள்.

”காமாட்சி! இந்தக் கலியாணத்தை முடிப்பதில் நான் அவசரப்பட்டு விட்டதாக உன் நினைப்பு அல்லவா?' நான் அப்போது சொன்ன காரணம் உனக்கு அவ்வளவு திருப்தி அளிக்கவில்லை என்பதும் எனக்குத் தெரியும். உண்மைக் காரணத்தை இப்போது சொல்கிறேன், கேள்.

நான் சரஸ்வதியை மணக்கு முன் ஒரு நாள் பார்வதியைப் பெண் பார்க்கப் போயிருந்தேன். மாமாவும் மாமியும் என்னோடு வந்திருந்தார்கள். பார்வதி அப்போது சாம்பசிவம் என்ற பெரியவர் ஒருவருடைய ஆதரவில் இருந்து வந்தாள். நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது தூளியில் படுத்திருந்த குழந்தை ஒன்று வீரிட்டு அழத் தொடங்கியது. பார்வதி ஓடிச்சென்று அந்தக் குழந்தையை எடுத்துத் தன் இடுப்பிலே வைத்துக் கொண்டாள். மாமாவுக்கும் மாமிக்கும் இந்தச் சம்பந்தத்தில் அவ்வளவாகத் திருப்தி இல்லை. எனவே, பின்னால் தெரியப்படுத்துகிறோம்' என்று கூறிவிட்டு வந்து விட்டார்கள். எனக்குப் பார்வதியைப் பிடித்திருந்த போதிலும், அவனையே மணந்து கொள்ள வேண்டுமென்ற விருப்பம் இருந்த போதிலும், மாமாவின் விருப்பத்துக்கு மாறாகப் பேசும் திலையில் அப்போது நான் இல்லை. எனவே மெளன மாகத் திரும்பி விட்டேன். அப்புறம் தான் சரஸ்வதிக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. பின்னர், சரஸ்வதியின் மூல மாகப் பார்வதியைப்பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்டேன். அவளுடைய அன்பிலும் ஆதரவிலும் அப்போது வளர்ந்து கொண்டிருந்த குழந்தை வேறு யாரு மல்ல. அவளுடைய அண்ணன் மகன் ராஜாவேதான் என்பதையும் தெரிந்து கொண்டேன்.

அன்று முதல், பார்வதியின் எதிர்கால வாழ்வுக்கு இடையூறு செய்துவிட்ட பெரும் குற்றம் என் உள்ளத்தை அரித்து கொண்டேயிருந்தது. அந்தக் குற்றத்துக்குப் பிராயச் சித்தமாக ஏதேனும் ஒருவகையில், என்றாவது ஒருநாள், ஏதாவது ஒன்றைச் செய்துவிட வேண்டுமெனச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தச் சந்தர்ப்பத்தை ஆண்டவன் எனக்கு இப்போதுதான் ஏற்படுத்திக் கொடுத்தார். பாரதியை ராஜாவுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவள் வெளியிட்ட போது நான் சற்றும் யோசிக்காமல், தயங்காமல், தாமதிக்காமல் சட்டென 'ஆகட்டும்' என்று பதில் கூறியதற்கு இதுவே காரணம்.''

சேதுபதி பேச்சை முடித்தார். இவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த பார்வதி, 'ஓகோ, பெண் பார்க்க வந்த விஷயத்தை இவர் இன்னமும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்-கிறாரா? மறந்துவிட்டார் என்றல்லவா எண்ணிக் கொண்டிருந்தேன்?' என்று தனக்குள் வியந்து கொண்டாள்.

"நான் வருகிறேன் காமாட்சி! நேரமாகிறது.... பாரதியை எங்கே காணோம்?” சேதுபதி விசாரித்தபடியே புறப்பட்டார்.

”அவளும் ஞானமும் கீழே படுத்திருக்கிறார்கள் அண்ணா ! ராஜா வெளியே போயிருக்கிறான். அவனுடைய நண்பர் களெல்லாம் சேர்ந்து கொண்டு அவனுக்கு 'டீ பார்ட்டி' வைத்திருக்கிறார்களாம்...''

"அப்படியா? சேதுபதி கீழே இறங்கிப் போய் விட்டார்.

கோடை விடுமுறை தீர இன்னும் ஏழெட்டு நாட்களே இருந்தன. சாரதாமணிக் கல்லூரி அடுத்த திங்களன்று மீண்டும் திறக்கப்பட்டுவிடும். பார்வதிக்குக் கல்லூரியைப் பற்றிய கவலை வந்துவிட்டது. விளையாட்டுப் போல் மூன்று மாதங்கள் ஓடி மறைந்துவிட்டன. இந்த இடைக்காலத்தில் எத்தனை மாறுதல்கள்!

தான் பூரண குணமடைந்து, மறுபடியும் கல்லூரிக்குச் செல்லும் நாளை அவள் கற்பனை செய்து பார்த்துக்கொண் டாள், அந்த நினைப்பில் அவள் உடலெங்கும் ஓர் இன்பம் பரவியது. மூன்று மாத இடைவேளை மிகக் குறுகிய காலம் தான். அதிலும் இரண்டு மாதங்கள் விடுமுறையில் கழிந்து விட்டன. ஆனாலும் அதுவே அவளுக்கு மூன்று யுகங்களாகத் தோன்றி, மீண்டும் கல்லூரியைக் காண்போமா என்ற ஏக்கமே பிறந்துவிட்டது. இதற்கு முன் அவள் கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டில் தங்கிய நாளே கிடையாது. கல்லூரிக்குப் போய் ஒரு முறை அதைக் கண்ணால் பார்த்துவிட்டு வர வேண்டும் என்னும் பேராவல் அவள் உள்ளத்தை உந்தியது.

”மணி என்ன இருக்கும்? என்று அவள் யோசித்த போதே, கீழே முன் வாசல் ஹாலில் மாட்டப்பட்டிருந்த பிரெஞ்சு நாட்டுக் கெடியாரம் மணி பத்தரை என்பதைக் குளுமையாக ஒலித்து அறிவித்தது.

அப்போதே ராஜா ஸ்கூட்டரில் வரும் ஒலியும் கேட்டது. அவன் வந்ததும் வராததும் வேகமாக மாடிக்கு ஏறி வந்து, ''அத்தை எடம்பு எப்படி இருக்கிறது?” என்று பரிவோடு விசாரித்தான்.

''நான் அதிக நாள் பிழைத்திருப்பேன் என்ற நம்பிக்கை எனக்குப் போய்விட்டது ராஜா!'' என்று பார்வதி கூறியதும் ராஜா துக்கம் தொண்டையை அடைக்க அப்படியெல்லாம் சொல்லாதீங்க அத்தை! நீங்கள் செளக்கியமாகப் பிழைத்து எழுந்து பழையபடி 'ஜம்' மென்று காலேஜுக்குப் போகப் போறீங்க. நான் உங்களைக் காரில் கொண்டுவிடப் போறேன், இது நிச்சயம்'' என்றான்.

''ம்... என்னவோ பார்க்கலாம்'' எனக் கூறிய பார்வதி சற்று நேரம் மெளனமாக இருந்துவிட்டு 'ராஜா' என்று அழைத்தாள்.

"என்ன அத்தை !”

"எனக்குக் கல்லூரியைப் பார்க்க வேண்டும் போல் ஆசையாயிருக்கிறது. தயவுசெய்து என்னைக் காரில் அழைத் துக்கொண் போகிறாயா?''

''என்ன அத்தை இது! மணி பதினொன்று அடிக்கப் போகிறது. இராத்திரி வேளை. உங்க உடம்பு இருக்கிற நிலையிலே வெளியிலே போவதா?''

”தடங்கல் சொல்லாதே ராஜா! நான் இப்போதே போய்ப் பார்க்க வேண்டும் நீதான் உதவி செய்யவேண்டும். உன் தோளைப் பற்றிக்கொண்டு நான் மெதுவாகக் கீழே இறங்கி வந்து விடுகிறேன்...''

''அத்தை எனக்குப் பயமாயிருக்கிறது. சேதுபதிக்குத் தெரிந்தால் என்னைக் கோபித்துக் கொள்ளுவார். நான் வர மாட்டேன்...”

"நீ வரமாட்டாயா ராஜா? கண்டிப்பாய்க் கேட்கிறேன். ஒரே வார்த்தைதான்; சொல்லி விடு. முடியாதா?''

ராஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை. தயங்கினான், கடைசியில் அத்தையின் பேச்சைத் தட்ட முடியாமல் "சரி அத்தை புறப்படுங்க...'' என்றான்.

அடுத்த கணமே பார்வதி கட்டிலை விட்டு மெதுவாக எழுந்தாள். ஞானத்தைத் தவிர, வீட்டில் எல்லோருமே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

பார்வதி ஞானத்தை அழைத்து, ''கல்லூரிக்குப் போய் விட்டு அரை மணியில் திரும்பி வந்து விடுகிறேன். வீட்டைப் பார்த்துக்கொள்'' என்று புறப்பட்டாள்.

ஞானம் தடுக்கவில்லை. வெளியில் புறப்படும்போது தடையாக எதுவும் சொல்ல விரும்பாததால் மெளனமாகத் தலை யசைப்பதைத் தவிர, அவளால் வேறு ஒன்றும் செய்ய முடிய வில்லை.
----------
குருத்து இருபத்தி நான்கு


ராஜா அத்தையைத் தாங்கி அணைத்துக் கீழே கொண்டு போய் விட்டான். பார்வதிக்கு மூச்சுத் திணறியது. எப்படியோ காரில் ஏறிப் பின் சீட்டில் சாய்ந்துகொண்டாள்.

வாசல் கேட்டைத் தாண்டியபோது செவிட்டுப் பெருமாள் ஒரு மூலையில் சுருண்டு படுத்துக் கிடப்பது கார் வெளிச்சத்தில் பளிச்செனத் தெரிந்தது.

”'அத்தை! இவனுக்கு உன்னைப் பார்க்க வேண்டுமாம். மாடிக்கு ஏறி வர முடியவில்லையாம். அம்மாவுக்கு உடம்பு ஏப்படி இருக்கிறது?' என்று என்னைத் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறான்...''

"நீ என்ன சொன்னாய்?''

”இப்போது பரவாயில்லை' என்று அவனிடம் சொல்லி விட்டேன். இல்லையென்றால் அவன் இருக்கிற நிலையில் மாடிப் படியேறி வந்து எங்காவது விழுந்து வைப்பானே!'' என்றான் ராஜா.

”பாவம், நன்றியின் சின்னம் இவன்!'' என்று இரக்கப் பட்டாள் பார்வதி.

கார், கல்லூரிக் காம்பவுண்ட் கேட்டை நெருங்கிய போது பார்வதி சுற்றுமுற்றும் பார்த்தாள். மிஸஸ் அகாதா ஒற்றைக் காலை விந்தி விந்தி நடந்து வருவது போலவும் பார்வதியைக் கண்டதும் வலது கையை உயர்த்தி, ஹல்லோ குட்மார்னிங் என்று கூறுவது போலவும் ஒரு பிரமை தோன்றியது அவளுக்கு. மிஸஸ் அகாதா -- பாவம் மிக நல்லவள்; கடமை தவறாதவள்'' என்று எண்ணிக் கொண்டாள்.

அடுத்த நிமிஷம் கார் பார்வதியின் ஆபீஸ் அறைக்கு முன்னால் போய் நின்றது. ஓடி வந்து கதவைத் திறப்பதற்கு அங்கே அட்டெண்டர் ரங்கசாமி இல்லை. ஆனாலும் அந்தக் காட்சியைத் தன் கற்பனையால் கண்டு மகிழ்ந்து கொண்டாள் பார்வதி.

'ராஜா! என்னைக் கொண்டு போய் என் அறையில் விடு!”

ராஜா அவளைத் தூக்கிக்கொண்டு போய் மெதுவாக நாற்காலியில் உட்கார வைத்துவிட்டான்.

இழந்ததெல்லாம் திரும்பி வந்துவிட்டது போன்ற ஒரு பெருமிதம் ஏற்பட்டது அவளுக்கு. ஆசையோடு டெலிபோனைத் தொட்டுப் பார்த்தாள். அதைத் தன் கையால் எடுத்துப் பேசி எத்தனை நாளாயிற்று! அதன்மீது புழுதி படிந்து கிடப்பதைக் கண்டு தானே அதைத் துடைக்கப் போனாள். இதற்குள் ராஜா டஸ்ட்டரை எடுத்து வந்து அதைத் துடைத்துவிட்டான்.

பார்வதி மேஜை மீதிருந்த காலிங் பெல்லைத் தட்டி விட்டு அதன் ஒலியைக் கேட்டுச் சிறு குழந்தை போல் சிரித்துக் கொண்டாள். பின்னர், அறை முழுவதையும் ஒருமுறை கண்ணோட்டமிட்டு அனுபவித்துவிட்டு, ”ராஜா! புதிய ஹாஸ்டல் மண்டபத்துக்குப் போகலாம் வா” என்று கூறியவள் அவன் தோளைப் பற்றிக்கொண்டாள்.

ராஜா அத்தையை ஹாலுக்குத் தூக்கிச் சென்றான்.

பொன் விழாவன்று அந்த ஹாலில் சேதுபதி பேசிய பேச்சு, தன்னுடைய சொற்பொழிவு, அவருக்குப் பக்கத்து வீட்டில் தான் அமர்ந்திருந்தது, மூக்குக் கண்ணாடியை அவர் மறந்து சென்றது, அதை விமான கூடத்தில் கொண்டு போய்க் கொடுத்தது எல்லாம் கண்முன் ஒவ்வொன்றாகத் தெரிந்தன. அவள் கண்களை நீர் மறைத்தது. கடைசியாக அந்த இடத்தைவிட்டு எழுந்து கல்லூரியின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று அங்குள்ள ஜடப் பொருள்கள் ஒவ்வொன் றுடனும் மானசீகமாக உரையாடிவிட்டு மனத்திருப்தியோடு மகிழ்ச்சியோடு காரில் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.

வாசலில் இருந்த வேப்பங்கன்று அவள் பார்வையில் விழுந்தது. ''ராஜா! காரைக் கொஞ்சம் நிறுத்து" என்று கூறி அந்தச் செடியைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந் தாள்.

”நான் வைத்த கன்று. இப்போது எவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டது! இதற்கு யாராவது தண்ணீர் ஊற்றுகிறார்களோ இல்லையோ?'' என்று தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டவள், "ம்... புறப்படு போகலாம்'' என்றாள்.

கார் வீட்டை அடைந்தது. ராஜாவுக்கு ஒரே திகில் அத்தையை நல்லபடி கொண்டு சேர்த்துவிட்டான். மேலே கொண்டுபோய்க் கட்டிலிலும் படுக்க வைத்தாகி விட்டது.
அப்புறம் தான் அவனுக்கு மூச்சு வந்தது.

ஞானத்தை ஹார்லிக்ஸ் கொண்டுவரச் சொல்லி அத்தையின் களைப்புத் தீரக் குடிக்கச் சொன்னான். அவளால் ஒரு வாய்க்கு மேல் அருந்த முடியவில்லை. அன்றிரவெல்லாம் அவள் வேப்பங்கன்று... அகாதா!...'' என்று ஏதோதோ வாய் பிதற்றிக்கொண்டிருந்தாள்.

காலையில் பொழுது விடிந்தபோது அவள் பேசக்கூடச் சக்தியற்றவளாய்ப் படுத்துக் கிடந்தாள்.

நல்ல வேளையாக அன்று அகாதாவே அவளைப் பார்க்க வந்துவிட்டாள். விடுமுறையைக் கழிக்க பங்களூருக்குப் போயிருந்தவளுக்குப் பிரின்ஸிபாலைப் பார்க்கவேண்டும் போல் தோன்றவே, ஒரு வாரம் முன்னதாகவே திரும்பி
வந்துவிட்டாள்.

”அத்தை! அகாதா வந்திருக்கிறார்'' என்று ராஜா கூறுயதும், பார்வதி கண் விழித்துப் பார்த்தாள். அகாதாவைக் கை ஜாடை காட்டி அருகில் அழைத்து அமரச் சொன்னாள். அகாதாவுக்கு உணர்ச்சி பொங்கித் துக்கம் நெஞ்சை அடைத்தது.

''அகாதா! நேற்றெல்லாம் உன் ஞாபகமாகவே இருந்தேன், நீயே வந்துவிட்டாய்! கல்லூரியை நீ தான் கவனித் துக் கொள்ள வேண்டும்.'' பார்வதியால் அவ்வளவுதான் பேசமுடிந்தது. மூச்சு முட்டித் திணறவே கண்களை மூடிக் கொண்டாள்.

”ரெஸ்ட் எடுத்துக் கொள்ளட்டும்; அவரை யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம்'' என்று கூறிவிட்டு, அகாதா விடை பெற்றுக்கொண்டாள்.

அன்று மாலை சேதுபதி வந்தபோது மணி மூன்று இருக்கும்.

கீழே அவர் ராஜாவுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டு பார்வதி எழுந்து உட்கார்ந்து கொண்டாள், அவளுக்கு அவரைக் காணவேண்டும் போலிருந்தது. மெதுவாகக் கட்டிலை விட்டு இறங்கி அறைக்கு வெளியே வந்து நின்றாள்.

''அத்தை.. அத்தை ! எதுக்காக எழுந்து வந்தீங்க?'' என்று கூவியபடியே ராஜா அவளைத் தாங்கிக்கொள்ள ஓடி வந்தான்.

''ராஜா! என்னைக் கீழே படுக்க வை. எனக்கு ஏதோ மாதிரி இருக்கிறது. நெஞ்சை வலிக்கிறது. அவர் வந்திருக்கிறாரா? இவ்வளவுதான் அவளால் பேச முடிந்தது. சேதுபதி அவள் எதிரில் வந்து நின்றபோது பார்வதி அவருடன் ஏதோ பேச முயன்றாள். ஆனால் முடியவில்லை, அவள் கண்கள் அவரையே பார்த்துக் கொண்டிருந்தன. ”எனக்கு ஒரு குறையுமில்லை. தங்களுடன் பூரணமாக வாழ்ந்துவிட்ட நம்மதியுடன் நான் போகிறேன்'' அந்தப் பார்வையின் பொருள் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

அவ்வளவுதான், அடுத்த சில மணி நேரத்துக்குள், பார்வதியின் கதை முடிந்து விட்டது.

”அத்தை!” வீரிட்டு அலறிவிட்டான் ராஜா. ஊரே பார்வதியின் இல்லத்தில் கூடித் தலை குனிந்து நின்றது.

'பார்வதியின் உயிர் விலை மதிப்பற்றது. அதற்காக நான் எதையும் இழக்கத் தயார்' என்று கூறிய சேதுபதி பச்சைக் குழந்தை போல் ஒரு மூலையில் விசும்பிக் கொண்டிருந்தார்.

கண்ணுக்கு லட்சணமாகக் காட்சி அளிப்பதைத் தவிர, விசிறி வாழையினால் யாருக்கும் எவ்விதப் பயனும் கிடையாது. பார்வதியின் வாழ்வும் அத்தகையதுதான். அவள் கடைசிவரை கன்னியாகவே, கண்ணுக்கு லட்சணமான காட்சிப் பொருளாகவே வாழ்ந்துவிட்டுப் போய் விட்டாள். அவளுடைய சொந்த வாழ்க்கை விசிறி வாழையைப்போல், காட்டில் காய்ந்த நிலவைப்போல், பயனற்ற ஒரு வாழ்க்கை யாக முடிந்துவிட்டது.

சாரதாமணிக் கல்லூரி, விடுமுறை முடிந்து திறக்கப் பட்டதும், மாணவிகளும் ஆசிரியைகளும் பிரார்த்தனை மண்டபத்தில் கூடி நின்றார்கள். பார்வதியின் ஆத்மா சாந்திக் காக அவர்கள் இரண்டு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்திவிட்டுக் கலைந்தனர். சில தினங்களுக்கெல்லாம் கஸ்தூரி பிரார்த்தனை மண்டபத்துக் கெதிரில் பார்வதி துளசிச் செடியாக வந்து வளர்ந்து கொண்டிருந்தாள்.

சேதுபதியின் இல்லத்தில் முன் வாசல் கூடத்தில் பார்வதியின் படம் மாட்டப் பட்டிருந்தது. அதன் முன்னால் கைகட்டி நின்று கொண்டிருந்தார் அவர். அந்த இடத்தில் தான் பார்வதி டியூஷன் சொல்லிக் கொடுப்பது வழக்கம்.

ஆம்; அவர் கரத்தால் தீண்டிய சரஸ்வதியின் படம் சேதுபதியின் ஆபீஸ் அறையை அலங்கரித்தது. கருத்தால் தீண்டிய பார்வதியின் படம் முன் வாசல் மாலை அலங்கரித்தது.
--------------
முடிவுரை


''ஒரு கதை சொல்கிறேன், கேட்கிறீர்களா? உற்சாகமாகப் பேச்சைத் தொடங்கினார் நண்பர்.

"சொல்லுங்கள் ” என்று நானும் ஆர்வத்துடன் கதை கேட்கத் தயாரானேன்.

''நான் கூறப்போவது ஒரு புதுமையான காதல் நவீனம். மற்றக் காதல் கதைகளோடு இதை ஒப்பிட முடியாது. இது ஒரு தனித்தன்மை வாய்ந்த கதை. இதில் வரும் கதாநாயகிக்குக் கிட்டத்தட்ட நாற்பத்தெட்டு வயதாகிறது. கதாநாயகருக்கு அவளைக் காட்டிலும் ஏழெட்டு வயது கூட இருக்கும். ஒருவரை ஒருவர் அந்தரங்கமாக நேசிக்கிறார்கள். அதன் விளைவாக மனப் போராட்டங்களுக்கும் கொந்தளிப்புகளுக்கும் ஆளாகிறார்கள். இறுதியில் கதாநாயகி இறந்து விடுகிறாள். அவர்களிடையே தோன்றும் உணர்வு, அதைக் காதல் என்றே கூறலாம் - அமரத்துவம் பெற்று விடுகிறது. இதுதான் கதை. எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

மிகச் சிறந்த கதை என்று பதில் கூறிவிட்டுக் கதையைப்பற்றிய சிந்தனையில் மூழ்கி விட்டேன் நான்.

கதை சொன்னது யார் தெரியுமா ?

கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளைக் கதாபாத் திரங்களாகக் கொண்டு தொடர்கதைகள் எழுதுவதில் வல்லமையும் புகழும் பெற்றுள்ள ’சேவற்கொடியோன்' தான், காதலுக்குரிய வயதைக் கடந்துவிட்ட கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு இவர் கதை எழுத முற்படுவானேன்? சந்தேகம் ஏற்பட்டது. ஆயினும் அதை உடனேயே சொல்லவிட விருப்பமின்றி, மிக உயர்ந்த கதை எழுதுவதற்கு மிகுந்த ஆற்றலும் அனுபவமும் வேண்டும்'' என்றேன்.

இந்தக் கதையை நான் எழுதுவதாக உத்தேசமில்லை. அதற்கு வேண்டிய அனுபவமோ ஆற்றலோ என்னிடம் இருப்பதாகவும் நான் எண்ணவில்லை. இக் கதையைத் தாங்களோ அல்லது ஜெயகாந்தனோதான் எழுத வேண்டும், என்று மிகவும் தன்னடக்கத்தோடு கூறினார் அவர்.

கதையும், அதன் புதுமையும் எனக்கு வெகுவாகப் பிடித்திருந்தன. அந்தக் கவர்ச்சி காரணமாக நானே கதையை எழுதுவதாகக் கூறினேன்.

ஆயினும் ”இதை வெற்றிகரமாக எழுதி முடிக்கும் ஆற்றல் எனக்கு உண்டா? என் திறமையில் சேவற்கொடியோன் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற முடியுமா?” என்ற பயம் இருக்கத்தான் செய்தது.

கதையைக் குட்டிச்சுவராக்கி என் பெயரைக் கெடுத்துக் கொள்வதுடன் அவர் பெயரையும் கெடுத்து விடுவோமோ என்ற அச்சமும் இருந்தது.

மீண்டும் மீண்டும் அந்தக் கதையை அவர் சொல்லிக் கொண்டே இருந்தார். ஒவ்வொரு முறையும் புதுப்புதுக் கருத்துகளும் கற்பனைகளும் வந்துகொண்டே இருந்தன. முழு உருவம் பெறாமலிருந்த கதை,சொல்லச் சொல்ல, முழுமை பெற்றது. எழுதிவிடலாம் என்ற துணிவும் நம்பிக்கையும் ஏற்பட்ட போதிலும் கூடவே இன்னொரு,சந்தேகமும் தோன்றியது. அப்போதுதான் வாஷிங்டனில் திருமணம் என்னும் நகைச்சுவைத் தொடரை எழுதி முடித்திருந்தேன். ஆதலால் இந்தக் கதையும் அம்மாதிரி நகைச் சுவை பொருந்தியதா இருக்கும் என்று வாசகர்கள் எதிர் பார்க்கக் கூடுமல்லவா? எனவேதான் முன்னெச்சரிக்கை யோடு முன்னுரையில் இது ஒரு புதுமையான காதல் நவீனம். இந்தக் கதையைப் படிக்கும் வாசகர்களில் யாராவது ஒரு சொட்டுக் கண்ணீர் விடுவார்களானால், அதையே இந்தக் கதையின் வெற்றியாகக் கொள்வேன் ? என்று குறிப்பிட்டிருந்தேன். அத்துடன் முடிவுரையில் நேயர்களுக்காக ஒரு முக்கிய விஷயம் காத்திருப்பதாகவும் சொல்லியிருந்தேன்.

இப்போது, இந்த இதழுடன், கதை முற்றுப் பெறுகிறது. இருபத்து மூன்று இதழ்களாக இதைத் தொடர்ந்து படித்து வந்த வாசகர்கள் அனைவருக்கும் முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல வாசகர்கள் கதையைப் பாராட்டிக் கடிதங்கள் எழுதியிருப்பதுடன் பல இடங்களில் உணர்ச்சி வசமாகிக் கண்ணீர் பெருக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். கதையின் வெற்றிக்கு யாராவது ஒரு வாசகர் ஒரு சொட்டுக் கண்ணீர் பெருக்கினாலே போதும் என்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு இப்போது ஒரு குடம் கண்ணீர் கிடைத்துவிட்டது. அது போதும்!

இந்த அருமையான கதையையும் இதில் அடங்கியுள்ள பல உயர்ந்த கருத்துகளையும் எனக்குத் தந்து உதவிய திரு சேவற்கொடியோன் அவர்களுக்கு நன்றி செலுத்துவதுடன், இந்தக் கதையின் மூலமாக எனக்குக் கிடைத்துள்ள புகழையெல்லாம் அவரிடமே சேர்த்து விடுகிறேன். கடைசியாக ஒரு வார்த்தை. இந்தக் கதை எந்தத் தனிப் பட்டவர்களின் வாழ்க்கையையும் ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டதல்ல.

வணக்கம்.
- சாவி
--------------

ஆசிரியர் சாவியின் நூல்கள்

வாஷிங்டனில் திருமணம் விசிறி வாழை
வழிப்போக்கன் வடம் பிடிக்க வாங்க, ஜப்பானுக்கு
வேதவித்து. கேரக்டர் பழைய கணக்கு
இங்கே போயிருக்கிறீர்களா? ஊரார் திருக்குறள் கதைகள்
கோமகனின் காதல் தாய்லாந்து
உலகம் சுற்றிய மூவர் என்னுரை (கலைஞரின் முன்னுரையுடன்)
சாவியின் கட்டுரைகள் சாவியின் நகைச்சுவைக்கதைகள்
ஆப்பிள் பசி நான் கண்ட நாலு நாடுகள்
நவகாளி யாத்திரை சிவகாமியின் செல்வன்

சாவி பப்ளிகேஷன்ஸ்
8-A, 7வது பிரதான சாலை அட ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28
---------------

This file was last updated on 29 Oct. 2018
Feel free to send the corrections to the .