வல்லிக்கண்ணன் கதைகள்
சிறுகதை தொகுப்பு - பாகம் 1
ஆசிரியர் வல்லிக்கண்ணன்

vallikaNNan kataikaL
(short stories collection)
by vallikkaNNan
In tamil script, unicode/utf-8 format

வல்லிக்கண்ணன் கதைகள்
சிறுகதை தொகுப்பு - பாகம் 1
ஆசிரியர் வல்லிக்கண்ணன்

பொருளடக்கம்
1. புன் சிரிப்பு 12. தோழி நல்ல தோழிதான்!
2. மனம் வெளுக்க. 13. சொல்ல முடியாத அனுபவம்
3. மூக்கப்பிள்ளை வீட்டு விருந்து 14. நண்பர்கள்
4. உள்ளூர் ஹீரோ 15. வாழ விரும்பியவள்
5. மனம் செய்யும் வேலை! 16. ஒரு காதல் கதை
6. காதலுக்குத் தேவை 17. பேபி
7. நினைத்ததை முடிக்காதவர் 18. காதல் போயின்?
8. வானத்தை வெல்பவன் 19. கொடுத்து வைக்காதவர்
9. ஊரும் ஒருத்தியும் 20. வெயிலும் மழையும்
10. புது விழிப்பு 21. யாரைக் காதலித்தான்?
11. ஒரு முகம்

கதைகளைப் பற்றி.


சிறுகதை வாழ்க்கையின் சாளரம் என்று சொல்லப்படுவது உண்டு. அகண்ட வாழ்வின் ஏதோ ஒரு பகுதியைக் கண்டு புரிந்து கொள்ள உதவுகிற சன்னல் அது.

வாழ்க்கை மிகப் பரந்தது. ஆழமானது. விதம் விதமான அம்சங்களைக் கொண்டது. புதிரானது. சிக்கல்கள் மிகுந்தது. துன்பங்களும் சந்தோஷங்களும் நிறைந்தது. மனிதர்களை பலப்பல விதங்களில் பாதிப்பது. வேடிக்கையானது. ரசங்கள் மிக்கது. ஆகவே, சுவாரசியமானது.

வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிற மனிதர்களும் சுவாரசியமானவர்கள். விதம் விதமான இயல்புகளும் போக்குகளும் உடையவர்கள். உணர்ச்சிகளால் இயங்குகிறவர்கள்.

உணர்ச்சிகள் பலப்பல. ஒவ்வொரு உணர்ச்சியும் எல்லோரையும் ஒரே மாதிரித்தான் பாதிக்க வேண்டும் என்பதில்லை. ஒரே உணர்வு ஒரு மனிதனை எல்லா நேரங்களிலும் ஒரே ரீதியில் தான் பாதிக்கும் என்பதும் இல்லை.

அதே போல வாழ்க்கையின் நிகழ்வுகளும் மனிதரைப் பல விதங்களில் பாதிக்கின்றன. ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள் வெவ்வேறு சமயங்களில் ஒருவரை வெவ்வேறு விதமாக பாதிக்கின்றன. அவரவர்களுடைய, குறிப்பிட்ட நேரத்திய, மனநிலை சூழ்நிலை பக்கத் துணை முதலிய பலவற்றைச் சார்ந்து அமையக் கூடிய விஷயம் அது.

இப்படி எல்லாம் இருப்பதனால் வாழ்க்கையை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்போருக்கு வாழ்க்கை ஒரு நாடகமாகவும், ரசிக்க வேண்டிய விளையாட்டாகவும் தோன்றுகிறது.

நான் வாழ்க்கைச் சுழல்களில் - அனுபவச் சிக்கல்களில் - ஆழ்ந்து விடாது, வாழ்வின் ஒரு ஓரத்தில் நின்று வாழ்க்கையையும் மனிதர்களையும் வேடிக்கை பார்த்து வருகிறேன். அவை எழுப்புகிற என் மன அலைகளையும் எண்ண ஓட்டங்களையும் சுவையாகப் பதிவு செய்து வந்திருக்கிறேன். அத்தகைய முயற்சிகள் சிறுகதைகளாகவும், குறுநாவல்களாகவும், நாவல்களாகவும் வடிவெடுத்திருக்கின்றன.

நான் எழுதியுள்ள பல நூறு சிறுகதைகளில் நாற்பத்தொரு கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. மனிதர்களின் விதம் விதமான உணர்ச்சி நாடகங்களையும், உளவியல் போராட்டங்களையும் எடுத்துக் காட்டும் வாழ்க்கைச் சித்திரங்கள் இவை. வாழ்க்கையில் காணப்படுகிற முரண்பாடுகளையும், அங்கதங்களையும், விசித்திரத் தன்மைகளையும் இவை சுவையோடு பதிவு செய்துள்ளன.

ரசனைக்கு இனிய விருந்து ஆகும் இச்சிறுகதைகளைத் தொகுத்து, அழகான புத்தகமாக வெளியிடும் ராஜராஜன் பதிப்பகத்துக்கும், நண்பர் மா. நந்தன் அவர்களுக்கும் என் நன்றி உரியது.
இக்கதைகளை வெவ்வேறு காலங்களில் வெளியிட்ட பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கும் நன்றி.

வல்லிக்கண்ணன்
-------------------------------

வல்லிக்கண்ணன் கதைகள
1. புன் சிரிப்பு


ஒளிப் பூக்கள்போல் இனிமையாகச் சிரித்துக் குலுங்கும் விளக்குகளின் மத்தியில், பேரொளிச் சுடரெனத் திகழ்ந்தாள் அகிலாண்ட நாயகி.

கருவறையின் புனிதச் சூழல் குளுகுளு விளக்குகளின் ஒளியினாலும் பன்னிற மலர்களின் வனப்பாலும், வாசனைப் பொருள்களின் நறுமணத்தாலும் சிறப்புற்று விளங்கியது. அந்த இடத்துக்கு தெய்வீகத்தன்மை தந்து நின்ற அகிலாண்டநாயகி திரு உருவம், அர்ச்சகரின் பக்தி சிரத்தையான சிங்காரிப்பினால் உயிர் பெற்று இலங்கியது.

"சொல்லி வரம் கொடுக்கும் அகிலாண்டநாயகி” வாய் திறந்து பேசிவிடுவாள் போல் காட்சி அளித்துக்கொண்டிருந்தாள். கன்னக் கனிந்த அன்னையின் கரிய திரு முகத்தில் அருள் ஒளி சிந்தும் விழிகளும், குமின் சிரிப்பு நெளியும் உதடுகளும் சன்னிதியில் கைகூப்பி நினிற ராமலிங்கத்தை நோக்கிச் சிரிப்பது போலவே தோன்றின.

“ரொம்ப அவசரம். ரொம்ப ரொம்ப அவசரம் உனக்கு இல்லையா?” என்று அவள் கேட்டுக் குறும்பாகச் சிரிப்பதுபோல் ராமலிங்கத்துக்குப்பட்டது.

தேவியின் திருமுகத்தையே வைத்த கண் வாங்காது பார்த்து நின்ற ராமலிங்கம் "அம்மா தாயே, என்னை காப்பாற்று" என்று வணங்கி, தன் கன்னங்களில் அடித்துக்கொண்டார்.

அன்னையின் குறுநகை மேலும் பிரகாசம் பெற்றது போலிருந்தது.

பட்டர், கர்ப்பூர வில்லைகள் வரிசையாய், அடுக்கடுக்காய், கொளுத்தப் பெற்ற அடுக்குச் சூடத் தட்டை கைகளில் பற்றி, தனி லயத்துடன் மேலும் கீழுமாக லேசாக அசைத்து அசைத்து ஆட்டி, "நடன தீபாராதனை" பண்ணி நின்றார். அதற்கேற்ற முறையில் நாதசுரம் தனித் தன்மையோடு இசைஒலி எழுப்பியது. மணிகள் ஒலித்தன. "அம்மா தாயே, அகிலாண்டநாயகி" என்று பக்தர்கள் பரவசத்துடன் முனகிக் கரங்கூப்பி நின்றனர்.

ஒளியில் குளிக்கும் மங்களப் பேரொளியாய் காட்சி தந்த அம்பாளின் திரு உருவும், மோகனப் புன்னகையும் ராமலிங்கத்தை என்னவோ செய்தன. அந்தத் திருமுகத்தையே கவனித்து நின்ற அவருக்கு அம்பாள் தன்னைப் பார்த்துப் பரிகாசமாய் சிரிப்பது போல் இருந்தது.

"சுடுற கஞ்சியை காலில் கொட்டிக் கொண்டது போல் தவித்தாயே - நேரமாச்சு, நேரமாச்சு; சீக்கிரம் போகணும் என்று, ரொம்பவும் பரபரப்பு காட்டினாயே! இப்போ பறக்கலியா?” என்று கேட்பதாகத் தோன்றியது.

அவர் பார்வை இயல்பாகக் கைப் பக்கம் பாய்ந்தது. மணி என்ன என்று பார்ப்பதற்காக. கையில் கடியாரம் இல்லை. நெஞ்சு திக்கென்றது ஒருகணம். உடனேயே, "கோயிலுக்குத் தானே. வாட்ச் வேண்டாம்” என்று அதை கையில் கட்டிக் கொள்ளாமலே வந்து விட்டது நினைவில் உறைத்தது.

அகிலாண்டநாயகியின் சிரிப்பு அழுத்தம் பெற்றதாக அவருக்குப் பட்டது.

"அம்மா, தாயே, அகிலாண்ட நாயகி. என்னை மன்னித்து விடு" என்று உருக்கமாக வேண்டிக் கொண்டு, அன்னையை உள்ளத்தில் நினைந்து, கண்மூடிக் கரம் குவித்து வணங்கி நின்றார் ராமலிங்கம்.

அவர் அவசரமாகப் பயணம் புறப்பட்டுக் கொண்டு தான் இருந்தார். சிவபுரத்திலிருந்து பஸ் பிடித்து, ஐந்து மைல்களுக்கு அப்பால் உள்ள ஜங்ஷனுக்குப் போய், எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரயாணம் போகவேண்டும். முக்கிய அலுவல் ஒன்று அவருக்காகக் காத்திருந்தது.

இந்த ஊர் பஸ்ஸை நம்பமுடியாது. எப்ப வரும், எப்போ போய்ச் சேரும் என்று கணக்கே கிடையாது. டிரைவர் கண்டக்டர் இஷ்டத்துக்கு வரும், போகும், மணிக் கணக்கில் வராமலே ஒழிஞ்சு போனாலும் போகும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ் என்று பேரு. ஒன்றரை மணி நேரம், ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை பஸ் வருவதுதான் வழக்கமாக இருக்கு. அதனாலே வீட்டை விட்டு சீக்கிரமே புறப்படனும்" என்று அவர் பரபரப்புக் கொண்டிருந்தார்.

அவருடைய அவசரத்தை அறியாதவர்களாக வீடுதேடி வந்தார்கள் ராசாப்பிள்ளையும் அவர் மனைவியும். ஊரிலே பெரிய மனிதர். ராமலிங்கத்துக்கு நெருங்கிய உறவும் கூட. தம்பி, இன்று நம்ப குழந்தைக்கு ஆண்டு நிறைவு. அகிலாண்டம் மனுக்கு விசேஷ பூஜைக்கு ஏற்பாடு பண்ணியிருக்கிறோம். நீங்க கட்டாயம் வரணும்" என்று வருந்தி அழைத்தார்.

ராமலிங்கம் தனது பிரயாண ஏற்பாடு பற்றியும், அவசர அவசியம் குறித்தும் எவ்வளவோ சொன்னார். ராசாப்பிள்ளை கேட்பதாக இல்லை.

“எக்ஸ்பிரசுக்குத் தானே போகணும்? ஏயம்மா எவ்வளவு நேரம் கிடக்கு கோயிலுக்கு வந்து, அம்பாளை தரிசித்து பூசையில் கலந்து பிரசாதமும் வாங்கிக் கொண்டு போக தாராளமா நேரம் இருக்கும். அம்மன் அருளும் உங்களுக்குக் கிடைக்கும்” என்று அவர் சொன்னார். அவர் மனைவியும் வேண்டிக் கொண்டாள்.

அவர்கள் மனசை முறிக்க ராமலிங்கம் விரும்பவில்லை. பூஜையில் கலந்து கொள்ள முடியாது; தேவியின் திருவருள் கிடைக்கிற போது கிடைக்கட்டும் என்று அடித்துப் பேசவும் அவர் மனம் இடம் தரவில்லை.

"பஸ்ஸை பிடித்து எக்ஸ்பிரசுக்குப் போய்ச் சேரணுமே அதுதான் யோசனையாயிருக்கு" என்று இழுத்தார் ராமலிங்கம்.

கவலைப்படாதீங்க. எல்லாத்தையும் அகிலாண்டநாயகி கவனித்துக் கொள்வா" என்று தைரியமூட்டினார் ராசாப்பிள்ளை.

எப்படி தட்டிக் கழிக்கமுடியும்?

"பூஜை சீக்கிரமே நடந்துவிடும்” என்று ராசாப்பிள்ளை உறுதி கூறிய போதிலும், கோயிலில் நேரம் இழுத்துக்கொண்டே போயிற்று. மெது மெதுவாகத் தான் காரியங்கள் நடை பெற்றன.

அம்பாளுக்குத் திருமுழுக்குச் செய்து, திருக்காப்பிட்டு, அலங்காரம் பண்ணி முடிப்பதற்கே வெகுநேரம் ஆகிவிட்டது. திரை விலகியதும் ஒளிரும் விளக்குகளின் வெளிச்சத்தில் அம்மனின் திரு உருவம் உயிர்பெற்றுச் சிரித்து நிற்கும் திவ்யமங்கள சொரூபமாகத் திகழ்ந்தது. அத்திருக்காட்சியில் ராமலிங்கம் பக்தி பரவசரானார். தனது பரபரப்பையும் பிரச்னைகளையும் மறந்தார். இந்தத் தரிசனத்துக்காக எத்தனை நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் என்று அவருக்குத் தோன்றியது.

தீபாராதனை முடிந்து, விபூதி குங்குமம் பெற்றுக் கொண்டதும், "அப்ப நான் வரட்டுமா?” என்று ராமலிங்கம் ராசாப்பிள்ளையிடம் கேட்டார்.

"நல்லாயிருக்குதே நியாயம்! இத்தனை நேரம் இருந்து போட்டு பூஜைப் பிரசாதம் பெற்றுக் கொள்ளாமல் போவ தாவது இருங்க இருங்க, இதோ ஆச்சுது!” என்றார் மற்றவர்.

அங்கேயே வசதியான ஒரு இடத்தில் இலைகள் பரப்பி, பிரசாதம் விநியோகித்தார்கள். வெண்பொங்கல், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல். ராமலிங்கம் இலையில் தாராளமாகவே பரிமாறப்பட்டன.

"இதே போதும். இனிமேல் சாப்பாடு தேவையில்லை. வீட்டுக்குப் போயி, உடனே கிளம்ப வேண்டியது தான்" என்று அவர் எண்ணிக் கொண்டார்.

மற்றவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு அகிலாண்ட நாயகியின் உருவத்தை அவர் திரும்பிப் பார்த்தபோது, மீண்டும் அந்த புன்னகை அவரை வீசிகரித்தது. குறும்புத்தனமும் பரிவும் பிரியமும் கலந்த ஒரு மோகனப் புன்னகை. எதிரே நின்று முகம் பார்த்து அன்னை சிரிப்பது போலவே தோன்றியது.

ராமலிங்கத்தின் உள்ளத்தில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. ஒரு நிறைவு புகுந்தது. அம்மனையே பார்த்தபடி நின்றார்.

சிறிது நேரம் சென்றதும், திடுக்கிட்டவராய் தன்னை சுதாரித்துக் கொண்டு, "அம்மா அகிலாண்ட நாயகி! நீ தான் எனக்குத் துணை. அம்மா, என்னை கைவிட்டு விடாதே" என்று மனமாறப் பிரார்த்தித்து வணங்கினார். பிறகு திரும்பித் திரும்பி அன்னையின் அருள் முகத்தைப் பார்த்தபடி நடந்தார்.

ராமலிங்கம் "பஸ் நிற்குமிடம் சேர்ந்தபோது, "ஜங்ஷன் போற பஸ் இப்ப தான், சித்தெ முந்தித்தான் போச்சு" என்ற தகவல் கிடைத்தது. அடுத்த பஸ் இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்திடும்" என்று ஆறுதல் மொழியும் கிடைத்தது.

"இன்னும் கொஞ்ச நேரம்" என்பது அந்த ஊர் பஸ்களைப் பொறுத்த வரை ஒவ்வொரு நாள் - ஒவ்வொரு நேரத்தில் - வெவ்வேறு கால அளவாக அமையும். ராமலிங்கம் காத்திருந்த வேளையில் ஒன்றரை மணி நேரத்துக்கும் அதிகமாக ஆயிற்று.

என்ன செய்வது? போய்த்தானே தீரவேண்டும் என்று முணுமுணுத்துக் கொண்டார் அவர்.

பஸ் வந்தது, அவசரம் அவசரமாகப் பிரயாணிகள் ஏறி இடம் பிடித்தார்கள். அவர்கள் பொறுமையை மேலும் சிறிது நேரம் சோதித்த பிறகு பஸ் சாவதானமாகக் கிளம்பியது. ஒடியது. ராமலிங்கம் அடிக்கடி கைக்கடியாரத்தைப் பார்த்துப் பார்த்துப் புழுங்கிக் கொண்டிருந்தார்.

"எக்ஸ்பிரசை பிடிக்கும்படியா இது போய் சேருமோ என்னமோ!" என்ற உதைப்பு அவர் மனசை அலைக் கழித்தது. "உம்ம். எல்லாம் அவள் அருள். நடக்கிறபடி நடக்கட்டும்" என்றும் மனம் குறுகுறுத்தது.

இடை வழியில் ஒரு பெரும் சோதனையாக லெவல் கிராஸிங் கேட் அடைக்கப்பட்டு விட்டது. எப்பவோ வரவிருந்த ஏதோ ஒரு டிரெயினுக்காக முன்கூட்டியே கதவை அடைத்து விட்டார்கள். வழக்கமான இச்செயலினால் பாதிக்கப்படுகிற பஸ் பயணிகள் வழக்கமாகப் புலம்புகிற குறை கூறல்களை இந்த பஸ்ஸின் பயணிகளும் புலம்பினார்கள். ராமலிங்கத்தின் மனமும் ஒத்துப் பாடியது.

"வெகுநேரம்" எனத் தோன்றிய ஒரு கால அளவுக்குப் பிறகு - ரயில்வண்டி கடந்து போன பின்னர் - கேட் திறக்கப்பட்டது. வண்டிகள், பஸ்கள், லாரிகள் மற்றும் பலவகை வாகனங்களும் ஏற்படுத்திய நெரிசலில், பஸ் மிக மெதுவாகத்தான் முன்னேற முடிந்தது.

ராமலிங்கம் ஜங்ஷன் ஸ்டேஷனை அடைந்த போது, எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்று ஐந்து நிமிஷங்கள் ஆகியிருந்தன.

ஏமாற்றம் அவரை குழப்பத்தில் ஆழ்த்தியது. என்ன செய்வது இனி என்ன செய்யலாம் என்று குழம்பியபடி நின்றார் அவர்.

“ஸார் வாறேளா? ஒரே ஒரு ஸிட் இருக்கு. அருமையான வண்டி. நல்ல பிளஷர் கார் ரயில் கட்டணத்துக்கு மேலே ஒரு ரூபா கொடுத்தால் போதும் ஜம்னு உட்கார்ந்து, எக்ஸ்பிரஸை விட வேகமாப் போயி சீக்கிரமே நகர் சேர்ந்திடலாம்!"

அவர் அருகில் வந்து இதைச் சொன்னவனின் குரல் அவரது ஆசையை தூண்டியது. சிறிது தயங்கினார். பிறகு துணிந்து விட்டார். அந்த ஆள்காட்டிய காரில் ஏறி அமர்ந்தார்.

காரினுள் செளகரியமாக அமர்ந்து, கார் புறப்பட்டு வேகமாக ஒடவும், அவர் நிம்மதியாக மூச்சு விட்டார். "அகிலாண்ட நாயகி எல்லாம் உன் கிருபை" என்று அவர் மனம் பேசியது.

அப்போதும் குறும்பும் பரிவும் அருளும் கலந்த புன்னகை யோடு அவரையே பார்த்த அன்னையின் திருமுகம் அவர் உள்ளத்தில் பளிரென்று நிழலிட்டு மறைந்தது. "அம்மா அகிலாண்டநாயகி, உன் அருள்" என்று மனசுக்குள் கூறிக் கொண்டார் அவர்.

ராமலிங்கம் இப்படி ஆத்ம பூர்வமாக அடிக்கடி எண்ணிக் கொள்ள வேண்டிய அவசியம் அந்தப் பிரயாண முடிவிலேயே நேரிட்டது.

அந்தக் கார் அடையவேண்டிய நகரை உரிய காலத்தில் அடைந்தது. அதில் வந்த பயணிகளுக்கு ஒரு பரபரப்பான செய்தி அங்கே காத்திருந்தது.

ராமலிங்கமும் மற்றவர்களும், காலம் துணைபுரிந்திருந்தால் ஏறி பயணம் செய்திருக்கக் கூடிய - செய்திருக்க வேண்டிய - எக்ஸ்பிரஸ் ரயில் இடை வழியில் ஒரு இடத்தில் தண்டவாளம் பெயர்ந்து, தடம் புரண்டு, விபத்துக்கு உள்ளாகியிருந்தது. என்ஜினும் அதை அடுத்த இரண்டு பெட்டிகளும் கவிழ்ந்து விழுந்து விட்டன. பல பேர் செத்துப் போனார்கள்; ஏகப்பட்ட பேருக்கு பலத்த அடி, காயம்.

இதைக்கேட்ட ராமலிங்கத்தின் உள்ளத்தில் இனம்புரியாத உணர்ச்சி ஒன்று பொங்கிப்பிரவாகித்தது. அதில் ஆனந்தமும், "அம்மா நாம் பிழைத்தது பெரிய அதிர்ஷ்டந்தான்" என்ற நிம்மதியும் கலந்திருந்தன. அதற்கெல்லாம் மேலாக தேவியின் திருவருள்தான் நம்மை காப்பாற்றியிருக்கிறது என்ற பரவசமும் இணைந்து ஒலித்தது. அன்னையின் குறும்புத்தனமும் பாசமும் பிரியமும் நிறைந்த புன்னகை இப்பவும் அவர் கண்முன்னே களிநடம் புரிவதுபோன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது.

"அம்மா அகிலாண்டநாயகி...” வேறு எதுவும் கூறமுடியாத உணர்ச்சித் தழுதழுப்புடன் அந்த இடத்திலேயே கரம் குவித்து வணங்கினார் ராமலிங்கம்.
(கலா வல்லி, தீபாவளி மலர் - 1981)
---------


2. மனம் வெளுக்க.


சிவசிதம்பரம் பெருமூச்சு உயிர்த்தார்.

ஒரு பிரச்சினை தீர்ந்ததை நினைத்து அவர் நெஞ்சு உந்திய நெடுமூச்சுதானா அது..? அல்லது, மேலும் எதிர்நோக்கி நின்ற புதிய பிரச்சினைகளை மனம் அசை போட்டதால் எழுந்த அனல்மூச்சுதானோ என்னவோ!

அவர் மகள் கமலத்துக்கு ஒருமட்டும் கல்யாணம் முடிந்து விட்டது.

அந்த நினைப்பு "அப்பாடா!" என்று ஒரு நிம்மதியை அவருள் கொண்டு சேர்த்தது உண்மைதான்.

கமலத்துக்குக் கல்யாணம்! எல்லாருக்கும் மகிழ்ச்சி அளித்த பெரிய விஷயம். கமலத்துக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் தந்த நிகழ்ச்சி.

எதிர்பார்ப்புகளையும் ஆசைகளையும் தன்னுள் விதைத்து, அன்றாடம் பசுமைக் கனவுகளை அறுவடை செய்துவந்த பெண் உள்ளம், காலஓட்டத்தில் கூம்பிக் குவிந்து ஏக்கப் பெருமூச்சுகளை விட்டுக் கொண்டிருக்கும்படியான சூழ் நிலையே வளர்ந்தது. தனக்கும் கல்யாணம் என்று ஒன்று நடக்குமா என்று அவள் குமைய நேர்ந்தது.

*கமலத்துக்கு இன்னும் கல்யாணம் பண்ணாமல் வீட்டோடு வைத்திருக்கிறீர்களே!" என்று வக்கணை கொழித்தார்கள் அக்கம் பக்கத்தினரும், உற்றார் உறவினரும்.

அவர்களுடைய, மற்றும் சமூக மனிதர்களுடைய சின்ன மனசை, "சிறியதோர் கடுகு உள்ளத்தை, சுயநலத்தை, பேராசையை, வியாபாரப் போக்கை சிவசிதம்பரம் சந்திக்க நேரிட்டது, கல்யாண முயற்சிகளின் போது, "கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்" என்று வாய்கிழியப் பேசுகிறார்கள். கல்யாண முயற்சியில் ஈடுபடுகிறபோது, "மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள்" லாப நோக்கம் கொண்டு வியாபாரிகளாக மாறி விடுகிறார்கள். பேரம் பேசுகிறார்கள். ஓர் இடத்தில் பேசி, முடிவாகப் போகிற கட்டத்தில், மற்றொரு பெண்வீட்டுக்காரர் "ஆயிரம் இரண்டாயிரம் அதிகம் தருவதாக ஆசை காட்டியதும், மனிதத் தன்மையை காற்றிலே விட்டு விட்டு, பணத்தாசையோடு செயல்பட்டார்கள்.

இப்படி ஒன்றா, இரண்டா? "புத்திக் கொள்முதல்" கணக்கில் வரவுகள் எத்தனை எத்தனையோ!

வருஷங்கள் ஓடின. கமலத்துக்கும் வயது அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அவளது புலப்பங்களும், பெருமூச்சுகளும் பெருகின. அவள் அம்மாக்காரியின் முணமுணப்புகளும் தொணதொணப்புகளும் அமைதியைக் குலைத்தன.

சிவசிதம்பரம்தான் என்ன செய்வார், பாவம்! ஊர் ஊராக அலைந்தார். தெரிந்தவர்கள், வேண்டியவர்கள் என்று எல்லாரிடமும் சொல்லி வைத்தார்.

எப்படியோ ஒர் இடம் சித்தித்தது. பேரங்கள், வாக்குறுதிகள் வெற்றிகரமாக முடிந்தன. நகைகள், ரொக்கப்பணம், மாப்பிள்ளைக்கு "ஸூட்டு வகையறா", கல்யாணச் செலவு என்று பல ஆயிரம்கள் பணம் தாள்களாகப் பறந்து மறைந்தன.

கன்னி கமலம், மணமகள் வேடம் தாங்கி கல்யாண நாடகத்தில் சந்தோஷமாக நடித்து, திருமதி சந்திரசேகரன் என்ற பதவி ஏற்று, "மாப்பிள்ளை வீடு" போய்ச் சேர்ந்தாள்.

"மணமகளே மருமகளே வாவா! - உன் வலது காலை எடுத்து வைத்து வாவா! - குலமிருக்கும் குணம் இருக்கும் வாசல் எங்கள் வாசல்.." என்று ஒலி பெருக்கிகள் ஒலமிட்டு வரவேற்றதில் ஒன்றும் குறைச்சல் இல்லை!

உரிய முறைப்படி பண்டபாத்திரங்கள், பலகார வகைகள் முதலிய சகல சீர்சிறப்புகளுடனும் அந்த வீட்டிலே கொண்டு கமலத்தை சேர்த்துவிட்டு வந்த சிவசிதம்பரம் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டார் என்றால், அது நியாயமேயாகும்.

அந்த நிம்மதி அல்பாயுசானது என்பதை உணரும் சக்தி பெண்ணைப் பெற்ற பெரியவருக்கு அவ்வேளையில் இல்லைதான்.

அவருக்கு "ஞானோதயம்" ஏற்படுவதற்கு வெகுகாலம் தேவைப்படவில்லை.

இரண்டு, மூன்று மாதங்களிலேயே, "குலமிருக்கும் குணமிருக்கும் வாசல் எங்கள் வாசல்" என்று பெருமை ஒலி பரப்பு பண்ணி, "மருமகளே வா வா" என்று. அழைத்த வீட்டில் குணக்கேடர்களே குடியிருந்தார்கள் என்பது புரிந்து விட்டது.

அம்மா பர்வதம் இனிப்பு வகைகளும் முறுக்கு சீடை தினுசுகளும் தயாரித்துக் கொண்டு, மலர்ந்த முகத்தோடு மகளைப் பார்க்கப் போனாள். மறுநாளே கொண்டை முடிந்து தொங்கப் போட்டது போல்" மூஞ்சியை "உம் "மென்று வைத்துக் கொண்டு திரும்பி வந்தாள். அவளுக்குப் புலம்புவதற்குப் புதிய விஷயங்கள் கூடைகூடையாய் கிடைத்திருந்தன.

கமலம் அங்கே சந்தோஷமாக இல்லை. மாமியார்காரி பெரிய தாடகை. மருமகளைப் படாதபாடு படுத்துகிறாள். மாப்பிள் ளைப் பையன் அம்மாப்பிள்ளை ஆக இருக்கிறான். நாம எவ்வளவோ செய்திருந்தும், அவங்களுக்குத் திருப்தி இல்லே. குறைகூறி, குத்திக்காட்டிக்கிட்டே இருக்கிறாங்களாம். கமலம் அந்த வீட்டிலே சம்பளம் இல்லாத வேலைக்காரியாகத்தான் இருக்கிறாள். ஏகப்பட்ட வேலைகள். அப்படி வேலை செய்தும் நல்ல பெயர் இல்லே...

இந்த ரீதியில் பலப்பல சொன்னாள்.

கொல்லன் உலைத் துருத்தியைப் போல சிவசிதம்பரத்தின் நெஞ்சு அனல் பெருமூச்சை வெளியே தள்ளியது.

"நாமும் எவ்வளவோ பிரயாசைப்பட்டு, நல்ல இடமாக வலை போட்டு தேடினோம். கமலம் பெரியமனுஷி ஆகிப் பதினஞ்சு வருசம் ஆயிட்டுதே. இன்னும் வீட்டோடு வைத்திருப்பது நல்லாயில்லை என்று, கிடைத்த இடத்தை முடிச்சோம். பையன் சுமாராப் படிச்சிருக்கான். தனியார் நிறுவனம் ஒன்றிலே சாதாரண வேலை ஒண்ணு பார்க்கிறான். பெரியதனங்கள் பண்ணமாட்டான்; பேராசைப்பட மாட்டான் என்று நினைத்தோம். அவனும் இந்த லெச்சணத்திலேதான் இருக்கிறான். என்ன பண்ண முடியும்? கமலத்தின் தலை யெழுத்து இவ்வ்ளவுதான்னு நினைத்துக்கொள்ள வேண்டியது தான்.”

சிவசிதம்பரம் இப்படி தனக்கும், தன் மனைவிக்கும் ஆறுதல் கூறிக் கொண்டார்.

ஒருநாள் - கமலத்துக்குக் கல்யாணமாகி ஆறேழு மாதங்கள் கழிந்தபோது - சிவசிதம்பரம் காலை உணவு சாப்பிட்டு விட்டு ஈஸிச்சேரில் சாய்ந்திருந்த சமயம் வாசல் கதவு தட்டப்பட்டது.

"யாரது?" என்று கேட்டவாறு எழுந்துபோய், கதவைத் திறந்த சிவசிதம்பரம் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தார். அங்கே கமலம் கையில் ஒரு பையுடன் நின்றாள்.

"வா" என்றுகூட சொல்லத் தோன்றாமல், “என்னம்மா, நீ மட்டும்தான் வந்திருக்கியா? மாப்பிள்ளை வரலியா?" என்று விசாரித்தார் அவர். விலகி நின்று மகளுக்கு வழிவிட்டார்.

அம்மா பர்வதமும் அடுப்படியிலிருந்து வெளியே வந்தாள். மகளின் தோற்றமே அந்தத் தாயின் வயிற்றில் புளியைக் கரைத்தது, நெஞ்சில் பெரும் சுமையை ஏற்றி வைத்தது.

“என்ன கமலம், இப்படி ஆயிட்டே ஆளை அடையாளமே தெரியலியே. மெலிஞ்ச கறுத்து ...” என்று தாய் அங்கலாய்த்தாள்.

மகள் அவள் மீது சாய்ந்து, தோளில் முகம் புதைத்து விம்மினாள்.

என்னவோ, ஏதோ என்று பதறினர் பெற்றோர். அவளைத் தேற்றி, நல்லது கூறி மெதுமெதுவாக விசாரித்தார்கள்.

அவள் சொன்ன ஆறுமாதத்துக் கதையே ஒரு மகாபாரதமாக இருந்தது.

சந்திரசேகரன் நல்லபடியாக இல்லை. குடிக்கிறான். பணம் வைத்துச் சூதாடுகிறான். கமலத்தின் நகைகளைப் பிடுங்கிக் கொண்டு போய் அடகு வைத்து, சூதாடி பணத்தைத் தோற்று விட்டான். இப்போது கைவளையல்களைப் பிடுங்க வந்தான். அவள் கொடுக்க மறுத்தபோது, விறகுக்கட்டையால் அடித்தான். வளையல்களை முரட்டுத்தன்மாகப் பிடுங்கிக் கொண்டு போனான். .

கமலத்தின் கைகள் வீங்கியிருந்தன. வலியிருந்தது. முதுகிலும் அடி விழுந்த தழும்புகள்.

அவள் அழுது புலம்பிக் கொண்டிருந்தது. மாமியாருக்குப் பொறுக்கவில்லை. "துடைகாலி, துப்புக் கெட்ட மூதேவி, விடியாமூஞ்சி, தரித்திரப்பீடை, சனிப்பாடை, நீ அடி எடுத்து வைத்ததிலிருந்து இந்த வீட்டிலும் மூதேவி புகுந்துவிட்டது. என் மகனும் களை இழந்து, அழகு குலைஞ்சு, சீக்காளியாகி, சந்தோஷமே இல்லாமல் ஆகிப்போனான்" என்றெல்லாம் ஏசலானாள். காசு வைத்துச் சீட்டாடிக் கொண்டிருந்தபோது, போலீசார் வந்து சந்திரசேகரனையும் அவன் கூட்டாளிகளையும் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள். மாமியார்க்காரி பத்திரகாளி ஆகிவிட்டாள்: "சூன்யம் புடிச்ச மூதி; சவம், நீ அழுது அழுதுதான் இந்த வீட்டிலே இருள் மண்டிப் போச்சு. நீ உங்க வீட்டுக்குப் போ" என்று ஏசி, கமலத்தைத் துரத்தி விட்டாள்.

- மகள் சொன்னதைக் கேட்டதும் சிவசிதம்பரம் துயரப் பெருமூச்சு உயிர்த்தார். அவரால் வேறு என்ன செய்ய இயலும்?

அவரைப் பார்த்துப் பேச வந்த அருணாசலம், வீட்டு நிலவரத்தை அறிந்து, சிவசிதம்பரத்துக்காக அனுதாபப்பட்டார்.

… பெண்ணுக்குக் கல்யாணம் முடிந்ததும் ஒரு பிரச்சினை தீர்ந்ததுன்னு சொன்னிங்க. சமூக நிலைமை அப்படி இல்லை. பெண்ணுக்குக் கல்யாணம் ஆவதற்கு முன்னாலும் ஏகப்பட்ட பிரச்சினைகளை பெற்றோர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கு. கல்யாணத்துக்குப் பிறகும் பல பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியதாகிறது. உண்மையில், ஒரு பெண்ணின் கல்யாணம் அவள் வாழ்க்கையில் புதியபுதிய பிரச்சினைகள் புகுவதற்கு வழிசெய்யும் வாசலாகத்தான் இருக்கிறது" என்றார் நண்பர்.

“பெரிய படிப்பு படிச்சவன், பணம் - சொத்து - பெரிய வேலை எல்லாம் உடையவன் நம்ம நிலைமைக்குச் சரிப்பட மாட்டான். சாதாரணப் படிப்பும், சுமாரான வேலையும், மத்தியதர நிலையும் உள்ள ஒருவன் தனக்கு மனைவியாக வருகிறவளை நல்லபடியாகக் கவனித்துக் கொள்வான். கண்கலங்கும்படி செய்ய மாட்டான்"னு எண்ணினேன். அவனும் மோசமாகத்தான் நடந்துகொள்கிறான்” என்று சிவசிதம்பரம் குறைப்பட்டுக் கொண்டார்.

"ஆண்மனம் என்பதுதான் இதுக்கெல்லாம் அடிப்படை. "ஆண்" என்ற எண்ணமே சமூகத்தில் பெரும்பாலருக்கு ஒரு திமிரை, கர்வத்தை, பேராசையை, பெண்ணை அடக்கி ஆளும் விருப்பத்தை, மனைவியை அடிமை போல் கருதும் போக்கை எல்லாம் தந்து கொண்டிருக்கிறது. பெண்ணை வாழ்க்கைத் துணையாக மதிக்கும் பண்பைவிட, பெண்ணைக் கொண்டு தனது அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் - வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் - தனது சுகசவுகரியங்களையும் பலவிதமான தேவைகளையும் பூர்த்தி பண்ண வேண்டும் என்ற நினைப்பும் நடப்புமே ஆண் களிடம் காணப்படுகிறது. இந்த நிலைமை மாறினால்தான் பெண் சமூகத்தில் நல்வாழ்வு பெற முடியும். அதற்கு ஆண்களின் மனம் புனிதமுற வேண்டும். அப்படி மனம் வெளுப்பதற்கு மருந்தோ, மார்க்கமோ ஏதாவது உண்டோ?" என்றார் அருணாசலம். அவர் ஒரு மாதிரியான நபர் என்பது மற்றவர்களின் எண்ணம்.

அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சிவ சிதம்பரத்தின் உள்ளத்து அனல், நெடுமூச்சாக வெளிப்பட்டது.
("இதயம் பேசுகிறது", 1981)
-----------------------


3. மூக்கபிள்ளை வீட்டு விருந்து


மூக்கபிள்ளையின் மனசாட்சி திடீரென்று உறுத்தல் கொடுக்க ஆரம்பித்தது.

அது அப்படி விழிப்புற்று அரிப்புதருவதற்கு பத்திரிகைகளில் வந்த சில செய்திகள் தான் காரணமாகும்.

சுகமாய் சவாசனம் பயின்று கொண்டிருக்கிற மனசாட்சி சிலபேருக்கு என்றைக்காவது திடும்விழிப்பு பெற்று, குடை குடை என்று குடைந்து, முன் எப்பவோ பண்ணிய பாபத்துக்கு - அல்லது தவறுக்கு - பரிகாரமாக இப்போது செயல் புரியும்படி தூண்டி துளைப்பது ஏனோ தெரியவில்லை. மனித மனம், மனசாட்சி என்பதெல்லாம் விசித்திரமான தத்துவம் என்றோ, எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத புதிர் என்றோதான் எண்ணவேண்டி இருக்கிறது.

மூக்கபிள்ளை அப்படித்தான் நினைத்தார்.

"வடக்கே ஒரு ஊரில்” எவனோ ஒருவன் எப்பவோ ஒரு காலத்தில் ரயிலில் டிக்கெட்டு வாங்காமலே பிரயாணம் செய்திருந்தானாம் பலப்பல வருடங்களுக்குப் பிறகு இப்போ அவன் தனது தவறை உணர்ந்து வருத்தப்பட்டு ரயில் கட்டணமும் அபராதத் தொகையும் சேர்த்து ரயில்வே நிர்வாகத்துக்கு அனுப்பி நல்ல பேரும் பத்திரிகைப் பிரபலமும் பெற்றுக் கொண்டான்.

தெற்கே ஒரு நபரும் அதே மாதிரி, மனசாட்சியின் தொந்தரவுக்குப் பணிந்து எந்தக் காலத்திலோ இலவசமாக செய்திருந்த பிரயாணத்துக்கு உரிய பணத்தையும் அதற்கான வட்டியையும் சேர்த்து ரயில்வேக்கு அனுப்பி வைத்தான். இதுவும் பத்திரிகைச் செய்திதான்.

இவையும் இவைபோன்ற வேறு சில தகவல்களும் மூக்கபிள்ளையின் கவனத்தைக் கவர்ந்து. மனசில் ஆழமாய் பதிந்து, உள்ளுற வேலை செய்யலாயின.

"தன்னெஞ்சறிவது பொய்யற்க; பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும். திருவள்ளுவர் பெரிய ஆளு தான். சரியாத்தான் சொல்லி வச்சிருக்காரு" என்று அவர் எண்ணிக் கொண்டார்.

- ஆனா இந்த நெஞ்சு அதாகப்பட்டது மனசாட்சி, ஏன் உடனுக்குடனே சுடுவதில்லை? அநேகம் பேருக்கு சுடுவதே இல்லை போல் தெரியுதே! சில பேருக்கு மட்டும் குழிப் பிள்ளையை எடுத்து மடியிலே வச்சு அழுகிற கணக்கிலே, அதுவும் புள்ளை மக்கி மண்ணாகி எலும்புகள் கூட உருமாறிப் போவதற்குப் போதுமான காலம் ஆகிவிட்ட பிறகு, தன்னெஞ் சறிந்து பொய்த்ததற்காக இத்தன்னெஞ்சு திடீர்ச்சுடுதல் பண்ணுவானேன்?...

இந்த ரீதியிலே மூக்கபிள்ளையின் மனதின் ஒரு பகுதி எண்ண வளையங்களை அதிரப் பண்ணவும், "சீ மூதி, நீசும்மா கிட” என்று அவர் அதன் மண்டையில் ஓங்கி அடித்தார்.

மூக்கபிள்ளை டிக்கட் வாங்காமல் பிரயாணம் செய்ததில்லை. அவர் அதிகமாகப் பயணம் போனதே கிடையாது அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம் என்கிற மாதிரி, அவருக்கு சொந்த ஊரான சிவபுரம்தான் சொர்க்கம் ஆகும்.

பரபரப்பு மிகுந்த கடைகளில் சாமான்கள் வாங்கி விட்டு, பில்படி பணத்தை கொடுக்காமல் அவர் நைசாக நழுவியதில்லை. அல்லது நோட்டுக்கு சில்லறை கொடுக்கிறபோது ஓட்டல் காரனோ, ஷாப்காரனோ அல்லது வேறு எவனுமோ, கவனப் பிசகாக அதிகப்படியாக ஒரு ரூபா ரெண்டு ரூபா தாள்களை கொடுத்து விடுகிறபோது, நம்ம அதிர்ஷ்டம் என்று எண்ணி அதை அமுக்கிக் கொண்டு வந்ததில்லை அவர். நின்று, பில்படி பணம் இவ்வளவு; பாக்கி இவ்வளவு தான் உண்டு; ஆனால் தரப்பட்டுள்ள தொகையோ இவ்வளவு இருக்கு என்று எடுத்துச் சொல்லி அதிகப்படியாக வந்ததை திருப்பிக் கொடுத்து விட்டுதான் அவர் வெளியேறுவார். “ஊரான் காசு நமக்கென்னத் துக்கு?" என்ற பாலிசி அவருடையது.

ஆகவே பொதுச்சொத்து எதையும் மூக்கபிள்ளை சுரண்டிய தில்லை. தனிநபர் எவரையும் அவர் ஏமாற்றியதில்லை. பின்னே அவருடைய மனசாட்சி குரங்குத்தனம் பண்ணுவானேன்?

சுகவாசிகள் மிகுந்த சிவபுரத்தில் சுத்த சுயம்பிரகாசச். சுகவாசியாக வாழ்ந்த மூக்கபிள்ளை மற்றவர்களிலிருந்து கொஞ்சம் மாறுபட்டவராக நடந்து வந்தார். சமூக ஜீவியாக அவர் அந்த ஊரில் வசித்து வந்தபோதிலும் சமூகத்தோடு ஒட்டி உறவாட விரும்பாதவர் போல் விலகியிருந்தார். சொந்தக்காரர்கள் வீடுகளுக்குப் போவதில்லை; மற்றவர்களோடு நெருங்கிப் பழகுவதில்லை; ஊர்ப் பொது விவகாரங்களில் அக்கறை கொள்வதில்லை; கோயில் திருவிழாக்கள், விசேஷ பூஜைகள் போன்ற சந்தர்ப்பங்களில் ஊராரோடு சேர்ந்து கோவிலுக் குப் போவதில்லை; இப்படி எவ்வளவோ சம்பிரதாயங்கள் இல்லையா - அவற்றில் எதையுமே அவர் அனுஷ்டிப்ப தில்லை.

ஆனால் ஊர் இழவு, ஊர் கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அவசியம் - தலையைக்காட்ட வேண்டும்" என்று சமூகநியதி வரையறை செய்துள்ள பொதுக் காரியங்களுக்கு வேண்டா வெறுப்பாக அவரும் போகத்தான் வேண்டியிருந்தது. அப்போது கூட "பேருக்குத் தலையைக் காட்டி விட்டு வருகிற" வேலைதான். "இன்னொருத்தன் வீட்டிலே கையை நனைக்கிற சோலியே கிடையாது". அதாவது, விருந்துச் சாப்பாட்டில் பங்கு பற்றுவது இல்லை, ரொம்ப நேரம் இருந்து கலகலப்பாக பேசி, உற்சாகமாக சிலரை பரிகசித்தும் சிலரால் கேலி செய்யப்பட்டும் பொழுது போக்குவது என்பதெல்லாம் அவருடைய வாழ்க்கை நியதிக்கு அப்பால்பட்ட விஷயங்கள்.

ஊர் இழவு என்றால், சாவு வீட்டுக்குப் போவது, நீர்மாலையில் கூட்டத்தோடு கூட்டமாக வாய்க்கால் வரை போய் வருவது, பிணத்தைத் தூக்குகிற வரையில் இழவு வீட்டில் காத்திருந்து அப்புறம் பாடையோடு சுடுகாடு வரை போய் ஆகவேண்டியதை எல்லாம் முடித்து கடைசியில் ஆற்றில் குளித்துவிட்டுத் திரும்புவது என்பது தலைமுறை தத்துவமாகக் கையாளப்படுகிற வழக்கமாகும்.

வரவர சில சுகவாசிகள் இதையெல்லாம் ஒழுங்காகச் செய்வதில்லை. சும்மா தலையை காட்டிவிட்டுத் திரும்பி விடுவார்கள். மூக்கபிள்ளையின் வழக்கமும் அதுதான்.

ஆனால் "ஊர் வழக்கம்" ஒன்றை அவர் தட்ட முடியாமல் போயிருந்தது. ...

ஒரு வீட்டில் கல்யாணம் நடந்தால் பல தினங்களுக்கு பிறகு "நல்ல மாசத்துப் பழம்" என்று வாழைப் பழங்களும் சிறிது சீனியும் ஊர் பூராவுக்கும் வழங்குவார்கள். "மறு வீடு வீட்டு பலகாரம்" என்று, மைசூர் பாகு லட்டு மற்றும் சில இனிப்பு தினுசுகள், முறுக்கு, மிக்ஸ்சர் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் வைத்து சொந்தக்காரங்களுக்கு (சொக்காரங்களுக்கு) வழங்குவர். இது "ஊர் வழக்கம்" ஆகும்.

பெரியவர் யாராவது இறந்து போனால், மகள் அல்லது பேத்தி ஊருக்கு "கடலை போடுவது" வழக்கம். அரைப்படி கடலை - வசதி மிகுந்தவர்கள். 1 படி கடலை கூட - “ஊர் வழக்கம்" ஆக உறவுக் காரர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைப்பார்கள்.

அநேகமாக எல்லா வீட்டாரும் இம்மாதிரி "ஊர் வழக்கங்"களை தட்டாமல் வாங்கிக் கொள்வார்கள். ஒன்றிரண்டு பேர்தான் நாங்கள் என்னத்தை திரும்பச் செய்யப் போகிறோம் எங்களுக்கு ஊர் வழக்கம் வேண்டாம்" என்று மறுத்து விடுவார்கள்.

மூக்கபிள்ளை ஒன்றிரு தடவைகள் மறுத்துப் பார்த்தார், "வழக்கம் கொண்டு வருகிற பெண்கள், சும்மா வாங்கித்தின்னு வையிங்க. ஊர் வழக்கத்தை விடுவானேன்? என்று கொண்டு வந்ததை அவர் வீட்டிலேயே வைத்துவிட்டுப் போனார்கள். அதன் பிறகு அவர் மறுத்ததில்லை. சடங்கு வீடுகளிலிருந்து "சர்க்கரைப் பொங்கல்" (பாச்சோறு) வரும். கோயில் திருவிழாக் காலங்களில் "புளியோதரை”, "பருப்புப் பொங்கல், சர்க்கரை பொங்கல். சுண்டல் பிரசாதம் வரும். கல்யாண வீட்டுப் பணியாரங்கள் வரும்.

"சும்மா சாப்பிட்டு வையிங்க" என்று பெண்கள் தாராளமாகக் கொடுத்து விட்டுப் போனார்கள்.

இதை எல்லாம் வாங்குறமே நாம ஊராருக்கும் உறவுகாரங்களுக்கும் திருப்பி செய்ய சந்தர்ப்பம் வரவா போகுது? என்று அவர்மனம் ஆதியில் குறுகுறுத்தது. இதுக்காகவே, வசை இருக்கப்படாதுன்னே, நான் விசேஷ வீடுகளில் சாப்பிடுகிறது இல்லை. நம்ம வீட்டிலே என்ன விசேஷம் வரப்போகுது. நாம ஊர் கூட்டி சாப்பாடு போடப் போறோம்" என்று அவர் எண்ணினார்.

ஆனாலும் போகப் போக அவருடைய மனமும் ஆட்சேபிக்கவில்லை. மூக்கபிள்ளையும் "ஊர் வழக்கங்களை வாங்கி அனுபவித்துக் கொண்டிருந்தார்.

இப்போது அவருடைய மனசாட்சி உதைத்துக் கொண்டது. தொந்தரவு கொடுத்தது.

முந்திய தினம் ஒரு வழக்கம் வந்தது. வசதியான வீடு. "மறுவீடு வீட்டுப் பலகாரம்" என்று நிறையவே கொடுத்து அனுப்பியிருந்தார்கள். இனிப்புகளும், காரங்களுமாய் வகை வகையான தின்பண்டங்கள்.

"எனக்கு வேண்டாம் இனிமே நான் ஊர் வழக்கத்தை வாங்கப் போறதில்லே" என்று அறிவித்தார் மூக்கபிள்ளை.

"இதென்ன புது வழக்கம்? எப்பவும் போலே வாங்கி வையுங்க. பலகாரமெல்லாம் தினுசு தினுசாயிருக்கு சும்மா சாப்பிடுங்க. நான் வேணும்னா காப்பி போட்டுத் தரட்டுமா?" என்றாள் அதைக் கொண்டு வந்தவள். அவள் கொஞ்சம் வாயாடி.

அங்கே அப்படி, இங்கே இப்படி என்று வாயடி அடித்து, கொண்டு வந்ததை அவருக்கே விட்டு விட்டு போனாள்.

அதுமுதல் அவர் மனம் அரித்து கொண்டேயிருந்தது.

- இதெல்லாம் "வட்டி இல்லாக் கடன்" என்பாக. இப்ப ஒருத்தர் செய்தா, மற்றவர் பிறகு எப்பவாவது திரும்பச் செய்யணும். அவர் இல்லாவிட்டாலும், அவர் பேரை சொல்லி அவருடைய மகனோ மகளோ பேரப்பிள்ளைகளோ செய்வாங்க. எதுவுமே செய்யாத என் போன்றவர்கள் - நானாக எதுவும் ஊருக்குச் செய்யப் போவதில்லை எனக்குப் பிறகு என் பேராலே செய்றதுக்கும் யாருமில்லை. அப்படி இருக்கையிலே ஊர் வழக்கங்களை வாங்கி அனுபவிப்பது எப்படி நியாயம் ஆகும்?...

- ஒருத்தர் இல்லாவிட்டால் இன்னொருவர் எப்பவாவது பழிச்சொல் உதிர்ப்பாங்க. பொம்பிளைகள் சில சமயம் வசையாப் பேசுறதும் வழக்கமாகத்தானே இருக்கு நாங்க அதைச் செய்தோம், இதைசெய்தோம் ஊர்க்காரங்க வயணமா வாங்கிச் சாப்பிட்டாங்க. இந்த ஊரு எங்களுக்கு என்ன செஞ்சுதுயின்னு நீட்டி முழக்குவாங்க.

- சிலபேரைப் பற்றி சில சமயங்களில் அநேகர் பேசுவது உண்டே! ஊர் சாப்பாடுன்னு சொன்னா பந்திக்கு முந்தி வந்திருவான் வாய்க்கு ருசியா வழிச்சு வழிச்சுத் தின்பான். ஒரு கல்யாண வீடு கருமாதி வீடு எதையும் விட்டுவிடமாட்டான். அவன் வீட்டிலே இதுவரைக்கும் எந்த விசேஷமும் செய்த தில்லை. யாருக்கும் சாப்பாடு போட்டதில்லே. என்னத்தை செய்யப்போறான்? அப்படியே செய்தாலும், ரொம்பச் சுருக்கமாச் செய்து ஊர்ச்சாப்பாடு போடாம ஒப்பேத் திடுவான். –

இப்படி நினைக்க நினைக்க மூக்கபிள்ளையின் மனம் சங்கடப்படலாயிற்று.

"என்னைப் பத்தியும் நாலு பேரு நாலைச் சொல்லத்தானே செய்வான்? இப்பவே யார் யாரு என்னென்ன பேசு றாங்களோ?" என்று முணுமுணுத்தார் அவர்.

மூக்கபிள்ளை வீட்டில் விசேஷம் என்று எதுவும் வந்த தில்லை. இனிமேல் செய்வதற்கு வாய்ப்பும் இல்லை.

"நம்ம வீட்டில் கல்யாணம் கார்த்திகை ஆண்டு நிறைவு சடங்கு என்று எதுவும் நடக்கப்போவதில்லை. பெண்டாட்டிக் காரி இருந்தா, போன வருசம் நமக்கு அறுபது வயசு நிறைஞ்சதுக்கு சட்டிப்பரிதி (சஷ்டியப்தபூர்த்தி) கொண்டாடி யிருக்கலாம். அதையே ஒரு கல்யாணம் மாதிரி நடத்தி ஜாம் ஜாம்னு ஊரை அழைச்சுச் சாப்பாடு போட்டிருக்கலாம்.

காலையிலே இட்லி பலகாரம் மத்தியானம் பாயசம், வடையோடு சாப்பாடுன்னு தடபுடல் பண்ணியிருக்கலாம். அதுக்குத்தான் கொடுத்து வைக்கலியே! இப்படி இருக்கையிலே ஊர் வழக்கத்தை மட்டும் வாங்கிக்கிட்டேயிருந்தால் என்ன அர்த்தம்? ஊருக்கு நாமளும் செய்யிறதா இருந்தால், சரீன்னு சொல்லலாம். அதுதான் இல்லைன்னு ஆயிட்டுதே! அப்புறம்? என்று அவர் "நெஞ்சோடு கிளத்தல்" பண்ணினார்.
உறுத்திக் கொண்டே இருந்த மூக்கபிள்ளையின் மனசாட்சி, பரிகாரமாக ஒன்று செய்யவேண்டும், ஊருக்கு நாமும் சிறிது பணம் செலவு பண்ணிக் கடனை தீர்க்கணும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.

- என்ன செய்யலாம்.

- மிட்டாய் கடையிலே ஸ்வீட், காரம் வாங்கி வந்து, பங்கு போட்டு “ஊர்வழக்கம் மாதிரி எல்லா வீடுகளுக்கும் சப்ளை பண்ணிவிடலாமே!

"செய்யலாம்தான். ஆனா என்ன காரணத்தை சொல்லி வழங்குவது? நம்ம விவகாரமெல்லாம் தான் எல்லாருக்குமே தெரியுமே சும்மானாச்சியும் அர்த்தம் இல்லாமல் இப்படிச் செய்தால் யார் வாங்கிக் கொள்ளுவாங்க? நூறுகேள்வி கேட்டு இல்லாத நொள்ளாப்பு பேசி திருப்பி அனுப்பிவிடுவாங்களே. சிவபுரம் ஆசாமிகள், லேசுப்பட்டவர்களா? என்றும் அவர் எண்ணினார்?”

- அப்படியானால்?

அவருக்கு "திடீர்னு ஒரு ஐடியா" உதயமாயிற்று. ஊரை அழைத்து ஒரு விருந்து கொடுக்கலாம். சித்திரா பெளர்ணமிச் சிறப்பு விருந்து என்று காரணம் கூறலாம். சித்திரா பெளர்ணமி எல்லோருக்கும் முக்கியமான நாள். அன்று நயினார் (சித்திரபுத்திர நயினார்) நோன்பும் கூட. பெளர்ணமியின் போது உல்லாச விருந்து உண்பது மக்களுக்கு பிடித்தமான விஷயம்.

சித்திரான்னங்களை உண்ண ரொம்ப பேர் பிரியப்படுவார்கள் சிவபுரம் வாசிகள் சித்திரா பெளர்ணமியன்று ஒரு சிறப்பு சித்திரான்ன விருந்து உண்டு மகிழட்டுமே என்று எண்ணினார் அவர்.

இந்த எண்ணம் கிளைவீசி வளர வளர மூக்கபிள்ளைக்கு இருப்புக் கொள்ளவில்லை. "இதுதான் சரி" என்று குதித் தெழுந்தார். "சக்கைப்போடு போட்டிருவோம்! ஜமாய்ச்சுப் போடுவோம்" என்று சொல் உதிர்த்தபடி அங்குமிங்கும் நடந்தார். கைகளை தேய்த்து கொண்டார். தானாகவே சிரித்தார். "பேஷ் பேஷ்” அருமையான ஐடியா என்று பாராட்டி மகிழ்ந்து போனார்.

முதல் வேலையாக மூக்கபிள்ளை செய்தது பஞ்சாங்கத்தைப் பார்த்து சித்திரா பெளர்ணமி என்று வருகிறது என்று கண்டுபிடித்ததுதான்.

பன்னிரண்டு நாட்கள் தான் இருந்தன.

பரவால்லே, அதுக்குள்ளே எல்லா ஏற்பாடுகளையும், முடித்து விடலாம் என்று திருப்தி அடைந்தார் அவர்.

பிறகு காரியங்கள் துரிதமாக நடந்தன. நல்ல தவசிப் பிள்ளை" இரண்டு பேரை வரவழைத்தார். தேவையான சாமான்களுக்குப் பட்டியல் போட்டு அனைத்தையும் வாங்கித் தீர்த்தார்.

மூக்கபிள்ளை எவருடனும் தாராளமாகக் கலத்து பழகுவ தில்லை ஆதலால், யாரும் அவர் வீட்டைத் தேடி வந்து பேசிப் பழகி "என்ன ஏது" என்று விசாரிப்பது கிடையாது.

இருப்பினும் மூக்கபிள்ளை என்னவோ பண்ணப்போறார் என்று மற்றவர்கள் யூகித்தார்கள் "அப்பாவி! என்னத்தையும் பண்ணிட்டுப்போறான்" என்று ஒன்றிருவர் கருத்து தெரிவித்தார்கள்.

மூக்கபிள்ளையும் தனது எண்ணத்துக்கு தீவிர விளம் பரம் கொடுக்கத் தயாராக இல்லை, விருந்து அன்றைக்கு எல்லோருக்கும் சொன்னால் போதுமென்று நினைத்து விட்டார்.

"சித்திரா பெளர்ணமி மத்தியானம் விரதச் சாப்பாடு வீட்டிலேதான் சாப்பிடுவாங்க ராத்திரிக்கு நம்ம சித்திரான்னச் சிறப்புச் சாப்பாடு. சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சம் பழச் சாதம், வடை, பூம்பருப்புச் சுண்டல்" என்று திட்டம் தீட்டினார் அவர்.

அதன்படியே ஏற்பாடு செய்தார்.

காலையிலேயே "அழைப்புக்காரன்" ஆறுமுகத்தைக் கூப்பிட்டு, சிவபுரம் சுகவாசிகள் எல்லோர் வீட்டுக்கும் போய் "சித்திரா பெளர்ணமி சித்திரான்னச் சிறப்புச் சாப்பாடு" பற்றிச் சொல்லி, அழைக்கும்படி ஏற்பாடு.

வீட்டில் விளக்குகளை ஏற்றி வைத்துக்கொண்டு இலைகளை ரெடி பண்ணி வைக்கச் சொன்னார். ஆட்கள் ஏழுமணி முதல் தயாராக இருந்தார்கள்.

ஆனால், அழைக்கப்பட்ட நபர்களில் ஒருவர் கூட வரவில்லை,

மணி எட்டு. எட்டரை. ஒன்பது என்று ஓடியது. ஊகூங். ஒரு ஆளைக் கூடக் காணோம்.

மூக்கபிள்ளை மனம் குமுறிக் கொண்டிருந்தது. அவர் முகம் "என்னமோ மாதிரி மாறிவிட்டது வீட்டில் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தார்.

ஒன்பதே கால்.

திரும்பவும் ஆறுமுகத்தை அனுப்பி வைத்தார்.

சுகவாசிகள் மிகுந்த சிவபுரத்தில் விசேஷமான பழக்க வழக்கங்கள், கட்டுப்பாடுகள், எத்தனையோ உண்டு. ஒரு வீட்டில் விசேஷம், விருந்து என்றால் ஊரார் எதிர்பாக்கிற சம்பிரதாயங்கள் பலவாகும்.

முதலில் விசேஷ வீட்டுக்காரரே நேரில் ஒவ்வொருவரையும் கண்டு விஷயத்தைச் சொல்லி அழைக்கவேண்டும். "சாப்பாட்டையும் நம்ம வீட்டிலேயே வச்சுக்கிடுங்க” என்று வற்புறுத்தவேண்டும். விசேஷ நாளுக்கு முதல் நாள் அழைப்புக்காரன் வீடு வீடாக போய், நாளைக்கு இன்னார் வீட்டு விசேஷம் - தாம்பூலத்துக்கும் சாப்பாட்டுக்கும் அழைச்சிருக்கு" என்று சொல்லிப் போக வேண்டும். அப்புறம் விசேஷத்தன்று சாப்பாடு நேரத்தில் "ஐயா, சாப்பாட்டுக்கு வாங்க இலை போட்டாச்சு" என்று அறிவிக்கவேண்டும்.

சுகவாசி வருகிறாரோ வரவில்லையோ, அழைக்கத் தவறக்கூடாது. அழைப்பு விட்டுப் போனால் அதுபெரும் தவறாகக் கருதப்படும்.

ஊர் மரபு அப்படி இருக்கையில்.

இந்த மூக்கபிள்ளை என்ன நெனச்சுப்போட்டான்? பெரிய லார்டு ரிப்பன் பேரனோ? வீட்டிலே இருந்துகிட்டு ஆள் மூலம் சொல்லி அனுப்புவானாம் நாம ஓடிப்போகணுமாம் சாப்பிடற துக்கு நாம என்ன சோத்துக்கு அலைந்துபோயா கிடக்கிறோம்? என்று கொதிப்புற்றனர் சிலர்.

இந்த மூக்கபிள்ளை புத்தி போனதைத்தான் பாரேன். சித்ரா பெளர்ணமி - நயினார் நோன்பு - வருஷத்திலே ஒரு நாள விரதம் ஆச்சே? இட்லி உப்புமா இப்படிச் சாப்பிடுவாங்களா? சோறு வகைகளை தின்னப் போவாங்களா?" என்றனர் சில பேர்.

"அவன் யார் வீட்டு விருந்துக்கு வந்தான், நாம அவன் அழைச்ச உடனே அவன் வீட்டுக்கு போகணும் என்பதுக்கு? என்று கேட்டார்கள் பலர்.

ஆறுமுகம் இதைஎல்லாம் மூக்கபிள்ளையிடம் ரிப்போர்ட் பண்ணினான்.

தவசிப்பிள்ளைகளும் பரிமாற ரெடியாக நின்றவர்களும் பிள்ளையையும் சித்திரான்ன வகைகளையும் மாறி மாறிப் பார்த்தார்கள். இவ்வளவு ஏற்பாடுகளும் வீணாச்சுதே என்ற மனச்சுமை அவர்களுக்கு.

மூக்கபிள்ளை தொண்டையைச் செருமினார்: ஆறுமுகம் என்றார்.

"ஐயா!" என்றான் அவன் பணிவோடு.

"உனக்கு அழைப்புக் கூலி ரெண்டு ரூபாயா? ரெண்டுதரம் அழைச்சிருக்கே நாலு ரூபாயாச்சு. இன்னும் ரெண்டு ரூபா வாங்கிக்கோ. இந்த ஊர் பெரியவாள்களும் பிரமுகர்களும் தானே நம்ம வீட்டு விருந்துக்கு வரமாட்டோம்னு சொல்லிப் போட்டாக! போகட்டும். நீ வடக்கூர் கீழுர் பக்கம் போயி, அங்கே உள்ள ஏழை எளிய பிள்ளைகளை எல்லாம் இங்கே வரசொல்லு ஐயா வீட்டிலே நயினார் நோன்பு பூசை சித்திரான்ன பிரசாதம்னு சொல்லி அனுப்பு. வருஷத்திலே ஒரு நாள் அதுக புதுமையா, திருப்தியாச் சாப்பிடட்டும். நீயும் வயிறாறச் சாப்பிடு. நீ சாப்பிட்ட பிறகு போனாப் போதும். வே, இலையைப் போடும் எனக்குப் பரிமாறும்! திண்ணையிலே இலை போட்டு ஆறுமுகத்துக்கு பரிமாறும். என்று மிடுக்காக உத்திரவிட்டார்.

"செய்தது எதுவும் வீணாகி விடாது!" என்றார் அவர் தவசி பிள்ளைகளுக்கு எடுத்து சொல்வது போல.

- இருக்கிற சுகவாசிகளுக்கே மேலும் மேலும் விருந்தளிப் பதை விட, ஏழை எளியதுக வயிற்றுக்கு சோறு போடுவது ரொம்பப் பெரிய விஷயமாக்கும்!

இப்படிப் பொன்மொழி தீட்டிக் கொண்டது மூக்கபிள்ளை மனம்.
(மஞ்சு, 1984)
-----------------


4. உள்ளூர் ஹீரோ


சிவபுரம் சின்னப்பண்ணையார் சிங்காரம் நடித்த சினிமா வெளியாகிவிட்டது என்ற செய்தி சிவபுரம் வாசிகளுக்கு பரபரப்பு அளித்தது. அந்தப்படம் நம்ம ஊருக்கு எப்போ வரும்? இதுதான் அனைவரது கவலையும் ஆயிற்று.

அந்த நல்ல நாளும் விரைவிலேயே வந்தது.

"நம்மூர் சின்னப்பண்ணையார் நடித்த அற்புதமான படம்" என்று அச்சடித்த விளம்பரத் தாள்கள் சுவர்களை அழகு செய்தன. தட்டிகளில் மினுங்கின. பஸ்களில் பளிச்சிட்டன.

அவை குறிப்பிட்டிருந்த தேதியை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள் சிவபுரம்காரர்கள்.

அவர்களுக்குப் பெருமையாவது பெருமை! அளக்க முடியுமா அதை?

"நம்ம பண்ணையார் நடிச்சபடம் வருது".

"சின்னப் பண்ணை சக்கைப்போடு போட்டிருப்பாரு. பாத்திடவேண்டியது தான்."

"பின்னே நாடக மேடையிலே ஜமாய்த்து ஒகோன்னு பேர் வாங்கியவராச்சே! சினிமாவிலே கேட்கணுமா?"

இந்த விதமான பேச்சு தெருக்களிலும் டீக் கடைகளிலும், பஸ் நிலையத்திலும், எங்கும் எப்போதும் அடிபட்டுக் கொண்டிருந்தது. அந்த அளவுக்கு சிவபுரம் வட்டாரத்தில் தனது கீர்த்திக் கொடியை நிலை நாட்டியிருந்தார் சின்னப்பண்ணையார் சிங்காரம்.

சினிமாவில் நடித்து தனது புகழ்க்கொடியை மேலும் பறக்கவிட வேண்டும் என்ற ஆசை அவருக்கு ரொம்பகாலமாக இருந்தது. அதற்காகவே அவர் தன்னை தயார்படுத்தி வந்தார்.

சிங்காரத்துக்கு படிக்கிற காலத்திலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் இருந்தது. பள்ளிக்கூட ஆண்டு விழாவின்போது ஸ்கூல் டிராமாவில் அவர் முக்கிய வேடம் தாங்கி நடிப்பது வழக்கம். அப்பவே அருமையாக நடிப்பார் என்று சக மாணவர்களும் மற்றும் பலரும் சொல்வது உண்டு.

படிப்பை முடித்துக் கொண்டு சிங்காரம் சின்னப் பண்ணையாராய் வீட்டோடு தங்கிவிட்டபோதும், நடிப்புக் கலையில் அவருக்கு இருந்த மோகம் தணியவில்லை. "சிவபுரம் ரிக்ரியேஷன் கிளப்" என்று ஒன்றை ஆரம்பித்தார். சீட்டுக்கச்சேரி முக்கிய பொழுதுபோக்கு என்றாலும், அவ்வப்போது பிக்னிக் போவது, எப்பவாவது வேட்டைக்கு என்று சொல்லி காடுகள் மலைகள் பக்கம் திரிவது, டென்னிஸ் விளையாடுவது போன்ற பொழுதுபோக்குகளில் அவரும் அவருடைய நண்பர்களும் ஈடுபட்டார்கள். அனைத்தினும் மேலாக, வருடத்துக்கு இரண்டு மூன்று நாடகங்கள் நடித்து மகிழ்வார்கள்.

எல்லாவற்றுக்கும் மூல காரணம் சின்னப்பண்ணை சிங்காரம் தான். அவர் கதாநாயகனாகத் தோன்றி அட்டகாசமாக நடிப்பார். எந்த வேடம் போடவும் தயங்க மாட்டார். ஆனால், பகட்டாக விளங்க ஆசைப்படுவார். ஏற்றுக் கொண்ட பாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்குமா இராதா என்ற கவலை அவருக்குக் கிடையாது.

"மார்க்கண்டேயர்" நாடகத்தில் சிங்காரம் "முன் குறத்தி"யா கவும் "பின் எமன்" ஆகவும் நடிப்பது உண்டு. அதாவது, முதலில் குறத்தி வேடம்; பின்பகுதியில் அவரே எமனாக வருவார். குறத்தியாக வரும்போது, அவர் விலை உயர்ந்த சில்க் புடவை, கையில் அருமையான ரிஸ்ட் வாட்ச், கால்களில் ஸ்டைலான ஸ்லிப்பர்கள் அணிந்து வருவார். எமன் வேடத்தின் போது, தங்க விளிம்புடன் மினுமினுக்கும் "கூலிங்கிளாஸ்" அணிந்துகொண்டு காட்சி தருவார்.

பார்க்கிறவர்கள் தங்களுக்குள் குறை கூறிக் கொள்வார்கள். பரிகாசமாகப் பேசுவார்கள். ஆனால் பண்ணையார் முன்னே விமர்சிக்கமாட்டார்கள். "குறத்தி ஆக்டிலே கொன்னுட்டீங்க போங்க! ". "எமன் அடா அடா என்ன ஆர்ப்பாட்டம் எத்தனை மிடுக்கு அபாரமான நடிப்பு. பிரமாதம் ஐயா பிரமாதம்" என்ற ரீதியில் புகழ்ந்து தள்ளுவார்கள் அவரிடம்.

"நம்ம பண்ணையார் சரியான வேஷப் பிரியன்" என்றும் ஊர்காரர்கள் சொல்லிக் கொள்வார்கள்.

அவரும் அப்படித்தான் நடந்து கொண்டார். வாழ்க்கை கூட அவருக்கு நாடகமாகத்தான் தோன்றியதுபோலும். ஒரு ஹீரோ வாகத் தன்னை எண்ணிக் கொண்டு அலங்காரத் தோற்றத்தோடு ஊர் சுற்றுவார். விதம்விதமான டிரஸ்கள். கழுத்தணிகள். விசித்திரமான தலை முடிச் சிங்காரிப்புகள். இவற்றோடு சிங்காரம் ஜம்மென்று பவனி வருவதை சிவபுரம்காரர்கள் கண்டு ரசித்திருக்கிறார்கள்.

பண்ணையார் ஒரு மோட்டார் பைக் வாங்கினார். அதில் எடுப்பாக அமர்ந்து வேகமாகப் போய் வந்தார். "சினிமாவிலே மோட்டார் பைக் காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்கும். அதுக்காக இப்பவே டிரெய்னிங்" என்று அவர் நண்பர்களிடம் சொன்னார்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அவருக்கு ஆசை இருக்கிறது என்பது இது போன்ற அவரது பேச்சுக்களினால் அவ்வப்போது விளம்பரமாயிற்று.

சிங்காரம் அந்த ஊர் தியேட்டருக்கும், அருகில் உள்ள நகரத்தில் இருந்த தியேட்டர்களுக்கும் வருகிற எல்லாப்படங் களையும் பார்த்துவிடுவார். தனியாகப் போக மாட்டார். சில நண்பர்களையும் உடன் அழைத்துப் போவார். தாராளமாக காப்பிடிபன் சப்ளை பண்ணுவார்.

படம் பார்க்கிறபோதே, "இவன் என்ன நடிக்கிறான், மொண்ணை மூஞ்சி! நானாக இருந்தால் இந்த இடத்திலே பிய்ச்சு உதறி இருப்பேன், தெரியுமா?... முண்டம், நடிக்கிறானாம் நடிப்பு. இப்படியா இஸ்பேட் ராஜா மாதிரி நிற்கிறது? சே, நான் என்றால் என்ன பண்ணுவேன் தெரியுமா?" என்ற தன்மையில் தொன தொணப்பார்.

நண்பர்கள் அவருடைய சிநேகத்தை இழக்க விரும்பாத காரணத்தினாலே, சிங்காரம் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருப்பார்கள். "ஆமா அது சரிதான்" என்று என்னவா வது சொல்லி வைப்பார்கள்.

"நீங்க சினிமாவிலே நடிக்கத்தான் வேண்டும். ஜோரா ஆக்ட் பண்ணி, ஒரே படத்தில் ஸ்டார் ஆகிவிடுவீங்க!" என்று சொல்லி அவர் தலையில் ஐஸ் வைத்தார்கள் சில பேர்.

"நடிக்காமலா போகப்போறேன்பின்னே! பார்த்துக்கிட்டே யிருங்க. ஒருநாள் ஐயாவாள் சினிமா ஸ்டார் ஆகி ஜொலிக்கப் போறது நிச்சயம்" என்று, ஒரு சுவால்மாதிரி அறிவித்தார் சிங்காரம்.

அதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபடவும் தவறவில்லை. யார் யாருக்கெல்லாமோ கடிதங்கள் எழுதினார். சென்னைக்கு சில தடவைகள் போய் வந்தார். சிவபுரம் பக்கம் வந்த திரைப்பட இயக்குநர் ஒருவருக்கு தடபுடலாக விருந்து உபசாரம் செய்தார்.

வேட்டையாடவும் அவரை அழைத்துப் போனார். அந்த அன்பரும் "சான்ஸ் வரும்போது உங்களுக்கு தந்தி கொடுக்கிறேன்" என்று சொல்லிப்போனார்.

சும்மா இருக்க முடியுமா சிங்காரத்தால்? அவர் அடிக்கடி நடிப்புப் பயிற்சிகள் செய்துகொண்டிருந்தார். பெரிய கண்ணாடி முன்னே நின்று முகத்தைச் சுழித்தும் இளித்தும் பலவிதக் கோரணிகளும் பண்ணிக் களித்தார். முகபாவங்களை நடிததுப பழகினார் அப்படி, உத்திரத்திலிருந்து கயிறு கட்டித தொங்கி, தூண்மேலே ஜம்ப் பண்ணிப் பழகினார். ஸ்டண்ட் நடிப்புக்கு தன்னை தயார்படுத்திக் கொள்வதாக அவர் சொன்னார்.

இதுபோன்ற சமயங்களில் சிங்காரத்தைப் பார்க்க நேரிட்டவர்கள், "இவருக்கு பைத்தியம் பிடிச்சிட்டுது போலிருக்கு! என்றுதான் நினைத்தார்கள். அவ்வளவுக்கு சினிமா நடிப்புப் பித்து சின்னப்பண்ணையாரை ஆட்டி வைத்தது.

திடீரென்று சிவபுரம் வாசிகள் ஒரு புதிய காட்சியைக் கண்டார்கள். சின்னப் பண்ணையார் குதிரை மீது பவனி வந்தார்.

அருமையான குதிரை ஒன்றை வாங்கி, சவாரி பழகி, சிங்காரம் அதன் மீதமர்ந்து ஊரைச் சுற்றினார். காலையிலும் மாலையிலும் ஊர்ப் புறத்து ரோடுகளில் வேகமாகக் குதிரை சவாரி செய்தார். சினிமா ஹிரோ குதிரை மீது செல்கிற கட்டங் களை அவர் கற்பனை செய்து கொண்டு அவ்வாறெல்லாம் திரிந்தார்.

தேர்ந்த வாத்தியார் ஒருவரை ஏற்பாடு செய்துகொண்டு வாள் பயிற்சி, சிலம்ப வித்தை எல்லாம் கற்கலானார் அவர். எதைச் செய்தாலும் சினிமா ஹீரோ என்ற கோணத்திலேயே அவர் இயங்கினார்.

"சினிமாவிலே நடிக்கிற சான்ஸ் கிடைக்காமல் போனால், ஐயா அவுட் ஆயிடுவார் போலிருக்கே! அந்த ஏக்கத்திலேயே பைத்தியம் ஆயிடுவாரு" என்று அவரை அறிந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்.

அப்படி எதுவும் நிகழ்ந்துவிடவில்லை.

"நான் கூடிய சீக்கிரம் மெட்ராஸ் போக வேண்டியிருக்கும். இங்கே வந்திட்டுப் போனாரில்லே சினிமா டைரக்டர், அவர் லெட்டர் எழுதியிருக்காரு. ஒரு சான்ஸ் கிடைக்கும்னு தோணுது" என்று சிங்காரம் ஒரு நாள் செய்தி அறிவிப்பு செய்தார்.

அது வேகமாகவே சிவபுரம் நெடுகிலும் பரவியது. "நம்ம சின்னப் பண்ணையார் சினிமாவிலே நடிக்கப்போறாரு!" என்று சந்தோஷமாகப் பேசிக் கொண்டார்கள் ஊர்க்காரர்கள்.

"டைரக்டரிடமிருந்து ட்ரங்கால் வந்தது. நாளைக்கு நான் புறப்படுகிறேன்" என்று சிங்காரம் தெரிவித்தார் ஒருநாள்.

அவர் சென்னைக்குப் புறப்படுவதற்கு முந்திய நாள் மாலை டிப்டாப்டாக டிரஸ் செய்துகொண்டு, குதிரை மீது அமர்ந்து ஜம்மென்று ஊர்வலம் வந்தார். அதையும் போட்டோ பிடிக்க ஏற்பாடு செய்திருந்தார்.

சின்னப் பண்ணையாரின் பங்களாச் சுவர்களில் அப்படி ஏகப்பட்ட போட்டோக்கள் தொங்கின. விதம் விதமான போஸ்களில் சிங்காரம் காட்சி தரும், சிரித்து விளங்கும் போட்டோக்கள்.

"இனமேல் சினிமா ஸ்டில்களையே ஃபிரேம் பணணி மாட்டி விடலாம்" என்று அவர் மனம் எண்ணியது.

"சிவபுரம் ரிக்ரியேஷன் கிளப்" சிங்காரத்துக்குப் பிரிவு உபசாரக் கூட்டம் நிகழ்த்தியது. அவரது நடிப்புத் திறமையைப் பாராட்டிப் பலர் பேசினார்கள். மாலைகள் சூட்டினார்கள்.

அவர் பிரயாணம் கிளம்பிய மாலையில் அவரை வழி அனுப்புவதற்காகப் பெரும் கூட்டம் திரண்டு நின்றது. ரயில்வே நிலையத்தில் ஏகப்பட்ட மாலைகள் அவருக்கு அணிவிக்கப் பட்டன. எக்ஸ்பிரஸ் புறப்பட்டபோது, "நம்ம ஊர் ஹிரோ வாழ்க! சினிமா ஹீரோ சின்னப்பண்ணை சிங்காரம் அவர்களுக்கு ஜே!" என்ற கோஷங்கள் ஒலித்தன.

சிங்காரம் வாசலில், சினிமா ஹீரோவுக்கு உரிய தோரணை யோடு நின்று, ஒய்யாரமாக போஸ் கொடுத்து, அழகாகச் சிரித்து, ஸ்டைலாகக் கையசைத்தார். வண்டி நகர்ந்து வேகம் பிடிக்கிறவரை அவர் அவ்வாறே கையசைத்து, பிரியா விடை பெற்று நின்றார்.

அவரைப் பற்றியும், அவர் நடிக்கப் போகிற படம் பற்றியும் கற்பனையோடு சுவாரஸ்யமாக அளந்து மகிழ்ந்தபடி உள்ளூர் அன்பர்கள் பிரிந்து போனார்கள்.

சில மாதங்கள் சிங்காரம் சென்னையிலேயே தங்கிவிட்டார். படம் சம்பந்தமான வேலைகள் முழுவதும் முடிந்த பிறகுதான் அவர் சிவபுரம் திரும்பினார்.

சிங்காரத்தின் நண்பர்கள் அவரைக் கண்டுபேச வந்தார்கள். மற்றும் பலரும் அவரைப் பார்த்துக் கும்பிடு போட்டு நலம் விசாரித்தார்கள்.

எல்லோரிடமும் சொல்வதற்கு சின்னப் பண்ணையாரிடமும் விஷயங்கள் நிறையவே இருந்தன. சென்னை மாநகரம் பற்றியும், சினிமா உலகம் பற்றியும், திரைப்படங்கள் பற்றியும் அவர் கதைத்தார். அவர் நடித்த படம் குறித்தும் பொதுவாக நிறையச் சொன்னார்.

"அதில் நீங்கள்தான் ஹிரோவா?" என்று கேட்டார் ஒருவர்.

சினிமாச் சிரிப்பு சிரித்தார் சின்னப் பண்ணை. "நாமெல்லாம் முதல் சான்சிலேயே ஹிரோ ஆகிவிட முடியுமா!" என்றார் அலட்சியமாக.

"வில்லன் வேஷம்….", என்று ஒருவர் தயங்கித் தயங்கி சொற்களை மென்றார்.

"வில்லன் ஆக்டிலேகூட ஜமாய்க்கலாம். டாப் ஆகக்கூட இருக்கும். ஆனா, நமக்கு வில்லன் ஆக்ட் சரிப்படாது. ஒரு படத்திலே வில்லனாக வந்தால் அப்புறம் வர்ற படங்களிலே எல்லாம் வில்லனாக நடிக்கிற சான்சுதான் கிடைக்கும். நல்ல ரோல்களிலே வரணும்" என்று சிங்காரம் லெச்சர் அடித்தார்.

"காதல் காட்சிகள் உண்டா உங்க படத்திலே?" இது ஒருவர் கேள்வி.

உலகம் தெரியாத ஒரு அப்பாவியைப் பார்ப்பதுபோல் பண்ணையார் அவரைப் பார்த்தார். "இந்தக் காலத்திலே லவ் ஸீக்குவன்ஸ் இல்லாமல் படம் ஏதய்யா? காதல் காட்சிகள், கனவுகள், பாட்டுகள் எல்லாம் உண்டு படத்திலே" என்று பொதுப்படையாகப் பேசினார் சிங்காரம்.

அவருக்கு என்ன வேடம், அவர் எப்படி நடித்திருக்கிறார் என்று எவரும் எதுவும் அறிந்துகொள்ள இயலவில்லை, சிங்காரம் பேச்சுகளிலிருந்து.

அதை தூண்டித் துருவிக் கேட்ட ஒன்றிரு பேர்களிடம்கூட, "படம் வரும். அப்ப பார்த்துக்கிடுங்களேன். என்ன அவசரம்" என்று சொல்லி, பேச்சை முடித்துவிடுவார் பண்ணையார்.

இதனால் எல்லாம் சிவபுரம் வாசிகளின் ஆசை தூண்டி விடப்பட்டிருந்தது. "நம்ம பண்ணையார் நடித்த படத்தை அது வந்த உடனேயே பார்த்துவிட வேண்டியதுதான்!" என்று அனைவரும் தீர்மானித்திருந்தார்கள்.

அந்தப் படம் அவர்கள் ஊருக்கே வந்துவிட்டது.

ஊராரின் மனநிலையை அறிந்து வைத்திருந்த தியேட்டர்காரர்களும் "நம் ஊர் சின்னப் பண்ணையார் சிங்காரம் நடித்த படம்! காணத் தவறாதீர்கள்!” என்று விளம்பரப்படுத்தி விட்டார்கள்.

முதல் காட்சியிலேயே பார்த்துவிட வேண்டும் என்று முண்டி அடித்து மோதிச் சாடினார்கள் மக்கள் கூட்டம் கூட்டமாக.

அவர்கள் மனசில் விதம் விதமான எதிர்பார்ப்புகள். படத்தின் ஹிரோ அவராக இருப்பார் என்று எண்ணியவர்களுக்கு முதலி லேயே ஏமாற்றம் கிட்டிவிட்டது. புகழ் பெற்ற ஸ்டார் நடிகர் ஒருவரின் பெயர் எடுப்பாக போஸ்டர்களில் காணப்பட்டது. இருந்தாலும், நம்ம பண்ணையார் துணை ஹிரோவாக வரக்கூடாதா என்று அவர்கள் நினைத்தார்கள்.

யார் யாரோ ஜோடியுடன் அவர் ஜோராக ஆக்ட் பண்ணியிருப்பார் என்று அநேகர் எதிர்பார்த்தார்கள்.

படம் ஆரம்பித்து ஓடியது. ஒடிக்கொண்டே இருந்தது.

"என்ன நம்ம ஆளை இன்னும் காணோம்" என்று பரபரத்தது ரசிகர்களின் மனம்.

இடைவேளை வந்தது.

"இதுவரை சின்னப் பண்ணையார் தலை காட்டவேயில்லையே! அவர் நடிச்ச பாகம் படத்திலே இருக்குதோ இல்லையோ!" என்று முணுமுணுத்தார்கள் சில சந்தேகப் பிச்சுகள்.

அவர்கள் அவசரப்பட்டுவிட்டார்கள்!

இடைவேளைக்குப் பிறகு படம் விறுவிறுப்பாக வளர்ந்தது. ஹிரோ நடிகர் பல வேலைத்தனங்கள் பண்ணிக் கொண்டிருந்தார்.

ஒரு கூட்டம். ஹீரோவை தாக்குவதற்காக நாலைந்து பேர் ஓடி வருகிறார்கள். ஹிரோ கால்களாலும் கைகளாலும் அவர்களுக்கு செம்தியாகக் கொடுக்கிறார். அப்போது "விடாதே, பிடி, உதை" என்று கூவிக்கொண்டு மூன்று பேர் வருகிறார்கள். ஹிரோவின் ஆட்கள். எதிரிகளோடு மோதுகிறார்கள். குத்து கிறார்கள். எதிரிகளை விரட்டி அடித்து, வெற்றி மிடுக்கோடு ஹிரோவைப் பார்க்கிறார்கள்.

"ஹ்விட். ஹ்விட்டோ ஹ்வீட்!"

தரை ரசிகர்கள் மத்தியிலிருந்து ஒரு விசில் ஒசை, "அதோ சின்னப் பண்ணையார்" என்றொரு கூவல்.

எல்லோரும் பார்த்து விட்டார்கள் - சிங்காரத்தின் நிழலை. குத்துவீரர் மூவரிலே ஒருவர். எதிரியைத் துரத்திவிட்டு வெற்றிச் சிரிப்பு சிரித்து நின்றார்.

படம் ஓடி, காட்சிகள் வளர்ந்தன. ஆனாலும், சிங்காரம் அப்புறம் தென்படவேயில்லை. சப்பென்றாகி விட்டது சிவபுரம் காரர்களுக்கு.

"பத்து நிமிடம் கூட வரவில்லை அவர். என்னவோ நாமும் படத்திலே நடிச்சிட்டோம் என்று பேருக்கு வந்து போகிறார் நம்ம பண்ணையார். ப்சு, இவ்வளவுதானா"

உள்ளூர் ரசிகர் ஒவ்வொருவரின் மனமும் செய்த விமர்சனம் இதுதான். என்றாலும் தியேட்டர்காரருக்கு திருப்தி –

"படம் இரண்டு வாரம் வெற்றிகரமாகப் போகும். நம்ம பண்ணையார் நடித்த படம் என்பதுக்காக சிவபுரம்காரர்கள் எல்லோரும் படத்தை, கண்டிப்பாகப் பார்த்துப் போடுவாங்க."
("சினிமிக்ஸ், 1984)
--------------------


5. மனம் செய்யும் வேலை!


வாழ்க்கை விசித்திரமானது.

அது மனிதரை எப்படி எல்லாமோ பாதிக்கிறது. ஒவ்வொரு வரையும் வெவ்வேறு விதமாக பாதித்து விடுகிறது. சிலர் சில சமயம் அடியோடு மாறிப் போகிறார்கள்.

இதற்கெல்லாம் மனம் எனும் மாய சக்தி தான் அடிப்படைக் காரணம் என்று சொல்ல வேண்டும்.

காத்தமுத்து இதற்கு ஒரு நல்ல உதாரணம் ஆவான்.

முரடன் என்று பெயர் வாங்குவதில் அவனுக்குத் த மகிழ்ச்சி இருந்தது. சின்ன வயசிலிருந்தே.

வீண் வம்புகளை நாள்தோறும் அவன் வளர்த்து வந்தான். இரவில் வெகுநேரம தெருவில் சுற்றித் திரிவான். அதனால் "இராக் காடு வெட்டி" என்று பலர் அவனைக் குறிப்பிடுவது வழக்கம்.

இருட்டில் எந்த இடத்துக்கும் தனியாகப் போய்வர அஞ்சாதவன் அவன். "பூச்சி பொட்டு கிடக்கும். ஒரு வேளையைப் போல இன்னொரு வேளை இருக்காது" என்று பெரியவர்கள் எச்சரிக்கும் போது, "ப்சா சாப்பிட்டுது போ!" என்றோ, "கிழிச்சுது!" எனவோ, எடுத்தெறிந்து பேசுவான்.

காத்தமுத்து துணிந்த கட்டை பேய் பிசாசு என்றெல்லாம் சொல்லி அவனை மிரட்டி விட முடியாது. "பேயாவது கீயாவது ! நம்மைக் கண்டாலே அதுகள்ளாம் பயந்து பம்மிவிடும்! என்று கூறி, அட்டகாசமாய் சிரிப்பான் அவன்.

ஒரு சமயம் ஒரு பந்தயத்துக்காக இரவு நேரம் முழுவதையும் சுடுகாட்டிலேயே கழித்தான் அவன். இந்தச் சாதனையை அவன் பெருமையாகச் சொல்வது வழக்கம்.

அப்பேர்ப்பட்ட காத்தமுத்து திடீரென்று ஒரு காலகட்டத்தில் அடியோடு மாறிப் போனான். ராத்திரி நேரத்தில் வீட்டுக்குள் தனியாகப் படுத்து உறங்க அஞ்சினான். தடால் என்று ஏதாவது ஓசை கேட்டால் அவன் திடுக்கிட்டு விழிப்பான். ஒருவிதமான பதறலுடன், கலவரமாய் அங்கு மிங்கும் பார்ப்பான். ஒரு மிரட்சி அவன் கண்களில் குடிபுகும்.

அறைக்குள் தூங்குகிற போது ஏதோ கெட்ட கனவு கண்டு பதறியவன் போல் திடீரென அவன் அலறுவான். உடல் எங்கும் வேர்வை பொங்க, பயந்தடித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்து, திருதிருவென்று விழிப்பான். வெகுநேரம் அவன் தேகம் நடுங்கிக் கொண்டிருக்கும். உள் பயம் அவனை அப்படி ஆட்டி வைத்தது.

பாழடைந்த வீட்டினுள்ளும், காட்டு வழிச் சந்துகளிலும், பேய் வசிப்பதாகச் சொல்லப்பட்ட இருள் மண்டிய கட்டிடங்களிலும் படுத்து நிம்மதியாகத் தூங்கியவன்தான் அவன். அப்படிப்பட்ட காத்தமுத்துவிடம் இப்படி ஒரு மாறுதல் விளைந்தது எதனால்? இது பலரைக் குழப்பிய ஒரு விஷயம்.

காத்தமுத்துவுக்கு ஒருநாள் ராத்திரி ஏற்பட்ட அதிர்ச்சி தான் இதற்குக் காரணம் ஆகும்.

அவன் வீட்டினுள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். வீட்டின் மேல் தளத்திலிருந்து ஒரு பெரிய கட்டி பெயர்ந்து கீழே விழுந்தது. தடால் எனப் பெரும் ஓசை எழுந்தது. அது அக்கம் பக்கத்திலும் பல வீடுகளுக்கும் கேட்டது.

காத்தமுத்துவின் தலைமாட்டிலே தான் அந்தக் காரைக்கட்டி விழுந்தது. ஒரு சாண் தள்ளி, செங்கல்லும் சுண்ணாம்பும் கொண்ட அந்தப் பெரிய கட்டி விழுந்திருக்கு-மானால், அது நேரே அவன் தலைமீது விழுந்திருக்கும். முகத்தில் தாக்கி, மூக்கு நசுங்கி, மண்டை சிதைந்து போயிருக்கக் கூடும்.

அதிர்ச்சியோடு பதறி எழுந்த காத்தமுத்துவுக்கு இந்த உண்மை புரிந்தது.

சத்தம் கேட்டு விழிப்படைந்து, என்னவோ ஏதோ என்று விரைந்து வந்த பக்கத்து வீட்டுக்காரர்களும் இதையே திரும்பச் சொன்னார்கள்.

"நீ ஒரு ஆசை பிழைச்சே! நீ செத்திருக்க வேண்டியவன். பிழைத்தது மறு பிழைப்புதான்!", "உன் அதிர்ஷ்டம், நீ இன்னும் உயிரோடு இருக்கிற!" என்று பலரும் பன்னிப் பன்னிப் பேசினார்கள்.

"எவ்வளவு பெரிய கட்டி!" "என்னமா சத்தம் கேட்டுது!" "அது தலைமேலே விழுந்தால் மனுசன் பிழைப்பானா!" இப்படி ஆளுக்கு ஒன்று சொன்னார்கள்.

காத்தமுத்துவின் உடல் ரொம்பநேரம் நடுங்கிக் கொண்டிருந்தது. அவன் உள்ளப் பதைப்பு தணிய வெகுநேரம் ஆயிற்று. ஆனாலும், அந்தரங்கத்தில், அவனது உள்ளத்தின் ஆழத்தில், ஒரு பீதி வேரோடி விட்டது.

அதன் பிறகு அவனுக்கு இருட்டில், அறைக்குள் தனியாகத் தங்குவதற்கும், படுத்து உறங்குவதற்கும் பயம். பகல் பொழுதுகளில் கூட வீட்டுக்குள் நெடுநேரம் இருந்தால், அவன் உள்ளத்தில் காரணமற்ற, அர்த்தமற்ற, பயம் வந்து கவியும். அவன் உடல் நளுக்கிக் கொடுக்கும். திடீர் விபத்து ஏற்பட்டு தனக்கு ஆபத்து நிகழும் என்று மனம் பதைபதைக்கும். உடனே அறையை விட்டு அவசரமாக வெளியேறுவான் அவன்.

காத்தமுத்துவும் சில உறவினரும் ஒரு கிராமத்தில் நிகழ விருந்த கல்யாண விசேஷத்துக்குப் போனார்கள்.

பஸ் வசதி இல்லாத ஊர். அதிகாலை முகூர்த்தம். அதனால் முந்திய தினம் மாலை நேரத்திலேயே அந்த ஊருக்கு அவர்கள் போய்விட்டார்கள்.

இரவில் அவர்கள் தங்கியிருப்பதற்கு ஒரு வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. பெரிய கட்டிடம். ஒரு சுவரில் பெரிதாகக் கீறல் காணப்பட்டது. மேல் தளத்தில் காரை உதிர்ந்து, அங்கும் இங்கும் வட்டங்களும் சதுரங்களும் தென்பட்டன. சில இடங்களில் சுண்ணாம்புத் தூள் உதிர்ந்து கொண்டிருந்தது.

கட்டிடத்தின் பழமை பற்றி அவர்கள் பேசிக் கொண்டார்கள். "வயசாயிட்டுது. இருந்தாலும், நல்ல உறுதியான கட்டிடம். இப்போதைக்கு விழாது "

"எந்தக் கட்டிடமும் திடீர்னு விழுந்து, உள்ளே இருக்கிற வங்களை சாகடிச்சிடாது. முதல்லே பல நாட்களுக்கு தர்மக்கட்டி சிறுசுசிறுசா, பொடிப் பொடியா, உதிர்ந்து கொண்டேயிருக்கும். அபபடி உதிர்ந்து எச்சரிக்கும். அப்புறம் ஒருநாள் தொம்முனு விழுந்திரும்" என்று ஒருவர் சுவாரஸ்யமாக வர்ணித்தார்.

காத்தமுத்து சுவர்களையும் மேல்தளத்தையும் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். மற்றவர் பேச்சுக்களும் அவனுள் வேலை செய்தன.

எனினும், அவன் எல்லோர் கூடவும் சேர்ந்து தான் படுத்தான். தூங்கியும் போனான்.
இரவு கனத்தது. கிராமத்துச் சூழலில் அமைதி கனமாய் கவிந்து தொங்குவது போல் அழுத்தமாக இருந்தது.

வெளியே ஒரு மரத்தில் ஆந்தை ஒன்று திடீரென்று பயங்கரமாய் அலறியது. அதைத் தொடர்ந்து இரண்டு பூனைகள், ஏற்ற இறக்கங்களோடு, நீளமாய் விகாரமாய், விசித்திரத் தொனியில் கத்தின.

அந்தக் கூச்சல் ஒன்றிருவரை விழிப்புற வைத்தது.

அப்போது தான் கோரமான அலறல் வீட்டினுள் எழுந்தது. உயிருக்கு மல்லாடுவது போல; அச்சத்தால் துடித்துக் கதறுவது மாதிரி.

எல்லோரும் திடுக்கிட்டு விழித்தார்கள். விளக்குகளை எரிய விட்டார்கள்.

காத்தமுத்து தான் அப்படிக் கத்தினான். அருகில் இருந்தவர் அவனை உலுக்கினார். அதற்குள் அவனே பதறி, உடல் நடுங்க, விழித் தெழுந்து உட்கார்ந்தான்.

அவன் தேகம் அதிகமாக நடுங்கிக் கொண்டிருந்தது. மிரள மிரள விழித்தான்.

பலரும் என்ன என்ன என்று தூண்டித் துருவ, அவன் ஞஞ்ஞ மிஞ்ஞத்தனம் பண்ணினான். "ஏதோ சொப்பனம்" என்றான். "வீடு இடிந்து விழுந்து, பெரிய கல்லு என் மேலே பட்டு, என்னை நசுக்கின மாதிரி. நிசமா நடப்பது போலவே இருந்தது. அது தான்" என்றான்.

"பையன் எங்கேயோ பயந்திருக்கான்" என்றார் ஒருவர்.

காத்தமுத்து மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. குறுகுறு என்று உட்கார்ந்திருந்தான். பிரமை பிடித்தவன் போல் ஒரு திக்கையே பார்த்தபடி,

எல்லோரும் விளக்குகளை அணைத்து விட்டுப் படுத்தார்கள். சிலர் தூங்கினார்கள். மற்றவர்களும் கண்களை மூடிக்கொண்டு கிறிக்கத்தில் ஆழ்ந்தார்கள்.

காத்தமுத்துவுக்கு உறக்கம் வரவில்லை. அவன் மனமே அவனை அரித்தது. விடிந்தபின் மற்றவர்கள் கேட்கக்கூடிய கேள்விகள், பேசக்கூடிய கேலிகள் சொல்லக்கூடிய உபதேசங்கள் விதம்விதமாய் அவனது மனவெளியில் ஒலிக்க, அவனை வெட்க உணர்வு பிடித்தது. அவர்கள் முகத்தில் விழிக்க அவன் நாணினான்.

அதிகாலை முகூர்த்தத்துக்காக அவன் அங்கே காத்திருக்கத் துணியவில்லை. காலையில் கண் விழித்ததும், அவனிடம் பேச்சுக் கொடுக்க வேண்டும் என்ற துடிப்புடன் தேடியவர்கள் காத்தமுத்துவைக் காணாது திகைத்தார்கள். அவன் எவரிடமும் கூறிக்கொள்ளாது, எந்நேரத்தில் விழித்தெழுந்து, அவ்வூரை விட்டு வெளியேறினான் என்பது அவர்களில் யாருக்கும் தெரியவில்லை.
(இளந்தமிழன், 1988)
-----------------


6. காதலுக்குத் தேவை


சித்ரா! என் கனவில் ஒளி வீசும் நினைவே! நினைவில் சிரிக்கும் கனவே! விழிகளுக்கு விருந்தாக விளங்கிய அழகே! உள்ளத்தில் சதா இனிக்கும் அமுதே! என் அன்பே!...

எழுதுவதை நிறுத்திவிட்டு நம்பி ராஜன் எண்ணம் சென்ற போக்கில் லயித்தான்.

"சித்ராவைப்பார்த்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. அவள் ஒரு தடவை கூட வந்து பார்க்கவில்லை. வருவாள், அவசியம் வருவாள் என்று எதிர்பார்த்து ஏமாறுவதில் என் மனம் இன்னும் அலுப்பு அடையவில்லை. இனிமேல் அவள் இங்கே வராவிட்டாலும் பரவாயில்லை. நாளை நானே அவளைக் காண அவள் வீடு தேடிச் செல்ல முடியுமே!"

இந்த எண்ணம் அவன் உள்ளத்தில் உவகைக் கிளுகிளுப்பு உண்டாக்கியது. அவளைப் பார்த்தால்…..

அவன் கைவிரல்கள் அவன் முன்னே கிடந்த நோட்டில் சில தாள்களைப் புரட்டின. அவன் எழுதி வைத்திருந்த வரிகள் இப்போதும் அவனுக்கு இனித்தன.

"அசைந்து வரும் அழகே மயக்கம் போல் என் அகம் புகுந்து விட்ட சுந்தரி என் அருமைச் சித்ரா. உள்ளத்தில் உணர்ச்சிப் புயலைக் கிளப்பும் நீ தென்றலென வருகிறாய். அழகு மலர்த்தோட்டம் என விளங்கும் நீ அடி எடுத்து வருகையில் மலர்களிடையே சஞ்சரிக்கும் வண்ணப்பூச்சி போலும் காட்சி தருகிறாய். உன் மீது பதித்த கண்களை மீட்க முடிவதில்லை. முழு நிலவு போன்ற உன் எழில் முகத்தில் அரும்பும் புன்னகை தனியொரு புது நிலவாய் ஒளிர்கிறது. என் உள்ளத்தில் எண்ணற்ற அலைகள் பொங்கி எழச் செய்யும் முழுமதியே... !

சித்ராவின் தோற்றம் இவ்விதமான எண்ணக் கிளர்ச்சிகளை உண்டாக்கி விடும் தான். அவள் தினம்தோறும் அவன் வாழ்வில் இனிமை சேர்த்த அன்பின் வடிவம். இந்த மூன்று மாதங்களாக அவளைக் காண முடியாதவாறு காலம் சதி செய்து விட்டது.

கவிதைகளால் வர்ணித்து, கற்பனையில் மிதக்கச் செய்து ஒரு பெண்ணைத் தன் காதலுக்கு அடிமையாக்கிக் கொள்வது மிகச் சுலபம். ஆனால் அக்காதல் வளர்ந்து, தளர்ந்து, வேரூன்றிக் கொள்ளத் தேவையானது "பணம்தான். பணம் இன்றேல் காதல் காற்றில் பறக்கும்” என்கிறார் இக்கதாசிரியர்.

நம்பிராஜன் நெடுமூச்சு உயிர்த்தான். கவி உள்ளம் படைத்தவன் அவன். முழுக்கவி ஆகிவிடவில்லை இன்னும். கவிஞன் ஆகவேண்டும் என்ற ஆசை அவனுக்கு இருந்தது. அவன் எண்ணங்களையும் கனவுகளையும் அவ்வப்போது இஷ்டம் போல் எழுதி வைக்கத் தவறியதில்லை. அவனது நண்பர்கள் அவனை "அரைக்கவிஞர்" என்று கேலியாகக் குறிப்பிடுவது வழக்கம். அரைக்கிறுக்கு" என்று சிலர் சொல்வது உண்டு.

கவிஞர் என்றால் அவர் கவிதைகள் எழுதினாலும் எழுதா விட்டாலும் அவருக்குக் காதலி என்று ஒருத்தி அவசியம் இருக்க வேண்டும். அவர் அவளால் காதலிக்கப்படா விட்டாலும், அவளை அவர் காதலித்து, உணர்ச்சி வசப்பட்டு சதா கவிதைப் புலம்பல்களைக் கொட்டிக் கொண்டு இருக்க வேண்டியது அவசியம்!

இப்படி ஒரு நண்பர் சொன்னார். அவர் பரிகாசமாகத்தான் பேசினார். ஆனால் அதில் உண்மை இருக்கிறது. உலக மகா கவிகளின் வரலாறுகளும் இதைச் சுட்டிக் காட்டுகின்றன என்று நம்பிராஜனின் கவியுள்ளம் உறுதிப்படுத்தியது. "காதல் உதயத்தின் பொன் ரேகைகள் எட்டிப் பார்க்கும் என்று என் விழிச் சாளரங்களைத் திறந்து வைத்து நான் காத்துக் கிடந்த காலத்தின் அளவு தான் எவ்வளவு!

செம்பட்டு உடுத்து, செம்மலர்சூடி, செவ்விய கன்னங்கள் தனி ஒளி காட்ட, வந்த அழகு மகளே! உஷை நிகர்த்த பெண்ணே! உன் கண்ணின் சுழற்சி என்னை வெற்றி கொண்டது. உன் மாதுளை மொக்கு உதடுகளில் மலர்ந்த முறுவல், ஆகா, நீ தான் அவள்! எவளுக்காக நான் காத்திருந்தேனோ அவளே தான் நீ எனும் சத்தியம் என்னுள் பொறி தெறிக்க வைத்தது…. ."

அவனால் காதலிக்கப்பட வேண்டிய பெண் அவன் முன்னால் வந்து தோன்றிய போது நம்பி எழுதி வைத்த வரிகள் இவை. அதை எத்தனை தடவைகள் அவன் படிததுப படிததுச சுவைத்துவிட்டான். இப்போதும் படித்தான். அந்த சந்தர்ப்பம் பசுமையாய் அவன் நினைவில் நிழலிட்டது.

ஒருநாள் அவன், அழகான ரஸ்தா என்று அவன்கருதிய ஒரு இடத்தில், பாதை ஒரத்தில் அமர்ந்த, விண்ணையும் மண்ணையும் கண்டு வியந்து கொண்டிருந்தான். மனசில் அலை மோதிய எண்ணங்கள் காரணமாக அவன் முகம் மலர்ச்சியுற்றிருந்தது. எதையோ எண்ணி அவன் சிரித்துக் கொண்டிருந்தான். அப்பொழுதுதான் அவள் வந்தாள்.

வழியோடு போனவள், தன்னைப் பாராமல் வெறும் வெளியைப் பார்த்து ரசித்துச் சிரித்துக் கொண்டிருக்கும் கலைஞன். அதிசயத்தைப் பார்ப்பது போல் பார்த்தாள், அவன் கவனத்தை கவர்வதற்காக அவள் கைவளைகளை கலகலக்கச் செய்தாள். அப்போது தான் அவளுக்குத் திடீர் தொண்டைப் புகைச்சல் வந்தது! தொண்டையைச் செருமிச் சரிப்படுத்தினாள்.

நம்பி கவனிக்காமல் இருப்பானா? பளிச்சிடும் தக்காளிப்பழ வர்ண ஆடையும் நாகரீக உருவமுமாய் மெதுநடை நடந்த யுவதியைக் கண்ட உடனேயே, கவிதையாய் வந்த காதலி என்ற சொல் உதயமாயிற்று. அவன் உள்ளத்திலே, "காதலாய் வந்த கவிதையே! கவிதையாய் அசையும் சுந்தரி!” என்றும் அவன் நோட்டில் குறித்துக் கொண்டான்.

அவனும் அவன் செயலும் அவளுக்கு விசித்திரமாகப் பட்டிருக்க வேண்டும். திரும்பித் திரும்பி அவனைப் பார்த்துக் கொணடே நடந்தாள்.

"காந்தம் ஒளிருது சுழல் விழியில்! சுந்தரம் சிரிக்குது உன் இதழ் கடையில்" என்ற வரிகளும் அவனுக்கு உதயமாயின. ஆகா, இவள் தான் என் கவித்திறனை வளர்க்கக் கூடிய காவியமகள் என்று அவன் முடிவு கட்டாது எவ்வாறு இருத்தல் கூடும்?

"எவனோ. பைத்தியம்."

மறுநாள். அவள் அவ்வழியே வந்தாலும் வரலாம் என்ற எண்ணத்தோடு, வர வேண்டும் எனும் ஆசையோடு - அவசியம் வருவாள் என்ற நம்பிக்கையுடன் அவன் அதே இடத்தில் காத்திருந்தான். ஏமாறவில்லை. அவள் வந்தாள். மறுநாளும், அதற்கு மறுநாளும், தினந்தோறும்!

அந்நேரத்தில் அவ்வழியே தினசரி போயாக வேண்டிய வேலை அவளுக்கு உண்டு என்பதை புரிந்து கொண்ட நம்பிராஜன் நாள்தோறும் அங்கே வந்து காதிருப்பதைத் தனது முக்கிய வேலையாக ஏற்றுக் கொண்டான்.

பார்வைப் பழக்கம் பேச்சுத் தொடர்புக்கும், சேர்ந்து நடந்து போகும் பழக்கத்துக்கும் வழி அமைத்துக் கொடுத்தது. அதற்கு அவளும் செயலூக்கத்தோடு உற்சாகம் காட்டினாள். அவனுக்குத் துணிச்சல் தந்தாள். அவளைப் பற்றி அவன் எழுதிய கவிதை வரிகளை அவளுக்குப் படித்துக் காட்டினான். அவள் மிக மகிழ்ந்து போனாள்.

நம்பிராஜன் அவளைச் சந்திக்க சில சமயம் அவள் வீட்டுக்குப் போவதும் உண்டு. அதை அவள் ஆட்சேபிக்கவும் இல்லை; அடிக்கடி வரவேண்டும் என்று விரும்பி அழைக்கவு மில்லை. அவள் வீதியிலும், கடலோரத்திலும் சந்தித்துப் பொழுது போக்குவதைத்தான் பெரிதும் ரசித்தாள் என்பதை அவன் புரிந்து கொண்டான். அதனால் இயற்கை இனிமை களையும் அவளது இயற்கை மோகத்தையும் இணைத்து அநேக பக்கங்கள் எழுதி வைத்தான்.

அவன், காதல் வளர்க்கும் பலரையும் போல அவளை ஒட்டலுக்கும் சினிமாவுக்கும் அழைத்துப் போக வில்லை. அவன் அழைத்துச்செல்வான், அப்படி அழைத்துப் போக வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டிருக்கலாம். ஆனால் அவனிடம் கோரிக்கை விடுக்கவில்லை.

ஒரு சமயம். வெகு தூரம் நடந்து அலுத்த பிறகு, பெரிய ஓட்டல் ஒன்று தென்படவும், "உள்ளே போகலாமா? ஏதாவது சாப்பிடணும் போல் இல்லை?" என்று அவள் தூண்டினாள். அவனும் "ரெடியாக அவளோடு சென்றான். இரண்டு பேருக்கும் நல்ல பசி, ஸ்வீட், டிபன், காப்பி என்று சுவைத்துச் சாப்பிட்டார்கள். சுவையான பேச்சுகள் பரிமாறிக் களித்தார்கள். அவள் என்ன எண்ணத்தில் அவனை ஒட்டலுக்கு அழைத்தாளோ? அவன் "பில் பணம் நான் தருகிறேனே!" என்று சொல்லுக்குக் கூட சொல்லவில்லை. அவள் தான் பணம் கொடுக்க நேர்ந்தது.

கவிஞரிடம் கற்பனையும் கவிதையும் நிறையக் கிடைக்கும். காசுக்கு வழி ஏது? சித்ரா புத்திசாலி. அதனால் அவள் மறுபடி ஒட்டல் சமீபமாக அடி எடுத்து வைக்கவில்லை, அவனோடு போகும் சமயங்களில்.

நம்பிராஜன் பேச்சும், அவளைப் புகழ்ந்து அவன் எழுதும் வரிகளும் அவளது செவிகளுக்கும் மனசுக்கும் மிகுதியும் இனித்தன. அவற்றை அவள் வரவேற்றாள்!

அவள் பெயர் சித்ரா என அறிந்ததும் அவன் உற்சாகத்தோடு பல வரிகள் எழுதினான்.

"சித்திரை, வசந்தத்தின் பண்ணை. அழகிய காலம், என் வசந்தம், இனிமையின் கொலு, அருமைச் சித்ரா. எனது வாழ்வில் பசுமை புகுத்த வசந்தம் என வந்தவளே! உனக்குப் பெயர் சித்ரா ஆகா, என்ன அழகான, அருமையான பெயர் நீ அழகுகளின் கொலுமண்டபம். அன்பின் உறைவிடம்."

இந்த ரீதியில் அடுக்கியிருந்தான். அவளுக்கு ஆனந்தம் அளித்தது அது.

நாட்கள் ஜோராக ஓடின. திடீரென்று ஒரு நாள் நம்பிராஜனுக்கு ஒரு வியாதி வந்தது. பலக்குறைவு. போதிய போஷாக்கு இல்லை; வீணான அலைச்சல், மனக்கவலை இப்படி எத்தனையோ காரணங்கள். வியாதி வருவதற்குக் கேட்பானேன்?

வந்த வியாதி லேசில் போகவில்லை. அவன் தர்ம ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். நல்ல கவனிப்பு கிடைத்தது. மூன்று மாத காலம் அங்கேயே தங்கியிருக்க நேர்ந்தது.

சிறிது குணமான உடனேயே அவன் சித்ராவைப் பற்றி எண்ணுவதைத் தொடர்ந்தான். அவனது எண்ணமாய், ஏக்கமாய், ஆசையாய், கனவாய், காதலாய் உருப் பெற்றிருந்தாள் அவள். அவளுக்குக் கடிதங்கள் எழுதினான். நோட்டில் அவளைப் பற்றி எழுதிக் கொண்டே இருந்தான்.

அவள் கடைசிநாள் வரை வரவே இல்லை. அவளுக்கு ஏதேனும் அலுவல் அல்லது அசெளகரியம் ஏற்பட்டிருக்கும் என்று அவன் எண்ணிக்கொண்டான்.

நம்பிராஜன் சித்ராவைக் காணச் செல்வதில் கால தாமதம் செய்யவில்லை. அவன் போனபோது அவள் வீட்டில் இல்லை.

சித்ராவின் தாய் அவனை வெறுப்புடன் நோக்கினாள், "இத்தனை நாளாக இல்லாமல் இப்போ நீ எங்கிருந்து வந்தே?" என்று அவன் முகத்தில் அறைந்த மாதிரி கேட்டாள். தனக்கு வந்த வியாதியின் கொடுமை பற்றி அவன் சொன்ன பிறகு கூட அவள் அனுதாபம் கொண்டதாகத் தெரியவில்லை.

நம்பி அங்கே கிடந்த மேஜையின் முன் ஒரு நாற்காலியில் உட்கார்ந்த போது அவள் அதை விரும்பாதவளாய், அவனை சீக்கிரம் அனுப்பிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு, பேசினாள். "சித்ரா வர நேரம் ஆகும். நீ ஏன் அவளுக்காகக் காத்திருக்கிறே! அவள் யாருடனோ போயிருக்கிறாள்."

நம்பியின் கண்கள் மேஜை மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல கவர்களையும், அருகில் கிடந்த திருமண அழைப்பு இதழ்களையும் கவனித்தன. மேலோட்டமாகப் பார்த்ததிலேயே, சித்ராவுக்குத்தான் கல்யாணம் என்பது தெரிந்துவிட்டது. மணமகன் பெயர் ராமநாதன் என்றிருந்தது.

நம்பிராஜனுக்கு அது ஒரு அதிர்ச்சியாகத்தான் அமைந்தது. எனினும் அவன் சித்ராவின் தாயாரிடம் எதுவும் பேசவிரும்ப வில்லை. அவன் உள்ளம் திடீரென வறண்டு விட்டது போல் தோன்றியது. தனது நோட்டில் எதையும் எழுதி வேண்டும் என்ற எண்ணம் இனி அவனுக்கு என்றுமே எழாது என்று அவனுக்கு நிச்சயமாகத் தோன்றியது.

கடைசியாக அவனுக்கு ஒளிவெட்டுப் போல் எண்ணம் பிறந்தது. அவன் தன்னோடு கொண்டு வந்திருந்த நோட்டில் முகப்பில் எழுதினான். "என் வாழ்வில் சிறு நேர வசந்தமாக வந்து வறண்ட கோடையாகி விட்ட சித்ராவுக்கு அன்புக் காணிக்கை – நம்பிராஜன்" இதை எழுதியதும், அந்த நோட்டை மேஜைமீது, கல்யாண அழைப்புகளோடு சேர்த்து வைத்து விட்டு அவன் புறப்பட்டான்.

அவன் வெளியே வந்ததும், வீட்டின் முன் ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது. மிடுக்காக உடை அணிந்திருந்த நவயுவன் ஒருவன் ஒட்டி வந்த அதில் அவன்மீது சாய்ந்தபடி காட்சி அளித்தது சித்ரா தான். அவள் அவன் பக்கம் பார்வையைத் திருப்பிய போதிலும், அவனைப் பாராதது போலவே நடந்து கொண்டாள். அவசியமில்லாமல் கலகலச் சிரிப்பு சிதறியவாறே கீழே குதித்தாள். அந்த வாலிபன் மீது சாய்ந்து ஒட்டிக் கொண்டே நடந்தாள், அவன் தான் மாப்பிள்ளை என்று தோன்றியது.

அவள் மிகவும் சந்தோஷம் பெற்றவளாகவே காட்சி அளித்தாள். அது நம்பிராஜன் இதயத்தில் வேதனை உணர்வையே கிளறியது. அவளை கூப்பிடாமலே நகர்ந்து விடலாமா என்று எண்ணினான் அவன். அதற்கும் மனம் வரவில்லை. "சித்ரா" என்று கூவினான்.

சித்ரா திரும்பிபி பார்த்தாள். அவனை அறியாதவள் போல் துணைவனோடு போனாள்.

"சித்ரா! எனது அன்புப் பரிசு மேஜை மீது இருக்கிறது!" என்று வேண்டுமென்றே உரக்கக் கத்தினான் அவன். மெதுவாக தன் வழியே நடக்கத் தொடங்கிய அவன் காதில் இந்த உரையாடல் தெளிவாக விழுந்தது.

"யாரது?"அந்த வாலிபன் கேட்டான்.

"எவனோ பைத்தியம்! கவிதையெழுதுவதாகச் சொல்லி ஏதாவது உளறிக் கொண்டே இருப்பான்" என்று அறிவித்தாள் சித்ரா.

நம்பிராஜன் பெருமூச் செறிந்தான். "கவிதையும் கற்பனை யும் காதலை உண்டாக்கலாம். ஆனால் அது கொழுத்து வளாநது இனிய பலனைத் தருவதற்கு பணமும் வேறு பல வசதிகளும் அவசியம் தேவை யென்ற எண்ணம் அவனுள் அலை யிட்டது.
(குண்டூசி - தீபாவளி மலர்)
---------------------


7. நினைத்ததை முடிக்காதவர்


கொம்பங்குளம் சிங்காரவேலு எங்கோ போய்விட்டான்!

அந்த ஊரில் பரபரப்பான பேச்சாயிற்று அது. "சிங்காரவேலு, போயிட்டானாமே? எங்கே போயிருப்பான்? ஏன் ஊரை விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் போனான்?" இப்படி பல கேள்விகள் பலராலும் ஒலிபரப்பப்பட்டன.

சிங்காரவேலு கொம்பங்குளம் ஊரின் கவனிப்புக்குரிய முக்கியப் புள்ளியாகத்தான் இருந்தான். ஊரார் எல்லோரும் இன்புற்றிருக்க எண்ணிச் செயல்புரிந்த பராபரமாகத்தான் வாழ்ந்தான். ஏன் அவன் இரவோடு இருளோடு ஓடிப்போக வேண்டும்?

அதுதான் யாருக்கும் புரியவில்லை.

"பிள்ளையாண்டான் பிழைக்கத் தெரியாத பயலாக இருக்கானே! ஒழுங்கா ஏதாவது வேலை பார்த்து, பணம் சம்பாதித்து உருப்படியாக வாழாமல், நாடகம், நடிப்புன்னு சொல்லி, தானும் கெட்டுப்போறதோடு ஊர்ப்பிள்ளைகளையும் கெடுத்துக் கிட்டிருக்கானே!" என்று சில பெருசுகள் குறைகூறிப் புலம்புவது வழக்கம்தான்.

இருந்தாலும், ஊரின் இளவட்டங்களுக்கு அவன்தான் இலட்சிய ஹிரோ. சின்னப் பையன்களுக்கு, அண்ணாந்து பார்த்து வியந்து போற்றப்பட வேண்டிய ஒளிச்சுடர் அவன். எப்பவும் அவனைச் சுற்றி இளைஞர்கள் கூடியிருப்பார்கள். அவனைப் பார்க்கவும், அவன் ஏதாவது வேலை சொன்னால் உடனடியாகச் செய்து முடிக்கவும் சின்னப் பையன்கள் காத்து நிற்பார்கள்.

சிங்காரவேலுவின் நாடகமோகம் தான் இதற்கெல்லாம் காரணம்.

சிவராத்திரி, தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு, கோயில் திருவிழா சமயம் முதலிய விசேஷ நாட்களில், கோயிலை ஒட்டியிருந்த பொட்டல் வெளி ஊரின் திறந்தவெளி அரங்கமாக மாறித் திகழும். சிங்காரவேலுவின் இயக்கத்தில் சத்தியவான், மார்க்கண்டேயர், வள்ளித் திருமணம் போன்ற நாடகங்கள் நடித்துக் காட்டப்படும்.

சில சமயம் சிங்காரவேலுவே சமூக நாடகம் என்று ஏதாவது எழுதி, நண்பர்களை நடிக்கத் தயார் பண்ணுவதும் உண்டு. அவன்தான் ஹிரோ பார்ட். பெண் வேடங்களில் நடிப்பதற்குத் தகுந்த பையன்களும் இருந்தார்கள்,

அவனுக்கும் அவன் நண்பர்களுக்கும் கொம்பங்குளம் ஊரில் மட்டுமின்றி பக்கத்து ஊர்களிலும் நல்ல பெயர் கிட்டிருந்தது. அவன் நிரந்தரமாக நாடகக்குழு ஒன்று அமைத்து, ஊர் ஊராகச் சென்று புகழ் சேர்க்க வேண்டும் என்று ஆசை வளர்த்தான். நண்பர்களும் தூபம் போட்டார்கள்.

அவ்வாறு நாடகங்கள் நடத்தி "ஃபேமஸ் ஆனப்புறம்" சினிமா உலகில் புகுந்து பிரகாசிக்க வேண்டும் என்றும் சிங்காரவேலு எண்ணம் வளர்த்தான்.

"அது நடக்காமலா போகும் அண்ணாச்சி? எதுக்கும் ஒரு டைம் வரணும். நீங்க பிரமாதமா நடிக்கிறீங்க. அருமையா வசனம் பேசுறீங்க. நீங்களே கதை - வசனம் எல்லாம் எழுதி ஜமாய்க்கிறீங்க. சினிமாத் துறையிலே நீங்க கண்டிப்பா ஒரு ஸ்டார் ஆக ஜொலிப்பீங்க" என்று அவனுடைய நண்பர்கள் குழை அடித்து அவனது கிறக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

அவன் ஒரு ஹீரோ போலவே நடந்து கொண்டான். தலைவாரிக் கொள்கிற ஸ்டைல், பார்வை எறிகிற தினுசு, நடக்கிற தோரணை, டிரஸ் பண்ணிக் கொள்கிற நேர்த்தி முதலிய அனைத்திலும் நாடகமேடைத்தனமும் சினிமாத்தனமும் மின்வெட்டின.

ஊரில் அம்மன் கோயில் கொடை நடக்கத் திட்டமிடப் பட்டிருந்தது. அப்போது புதுசாக ஒரு நாடகம நடிகக வேண்டும் என்று சிங்காரவேலுவும் நண்பர்களும் உற்சாகமாகப் பேசிப் பொழுது போக்கினார்கள். கதை எப்படி எப்படி இருக்க வேண்டும், யார் யாருக்கு என்னென்ன வேடம தருவது என்றெல்லாம் சர்ச்சித்து மகிழ்ந்தார்கள்.

அப்படிப்பட்ட சமயத்திலேதான் திடீரென்று சிங்காரவேலு காணாமல் போய்விட்டான். ஊரில் பரபரப்பு இராதா பின்னே.

அவன் தனிக்காட்டு ராஜா! அவனை தட்டிக் கேட்கவோ, அடக்கி ஆக்கினைகள் செய்யவோ யாரும் கிடையாது. எனவே அவன் எவரிடமும் எதுவும் சொல்ல வேண்டிய தேவையு மில்லை. போய்விட்டான். ஏன் போனான் என்றுதான் பெரியவர்களும், இளைஞர்களும், பையன்களும் குழம்பித் தவித்தார்கள்.


தூத்துக்குடியில் முகாமிட்டிருந்த ஒரு நாடகக் கம்பெனியில் சேரப் போயிருப்பான் என்று சிலர் அபிப்பிராயப்பட்டார்கள். மதுரைக்குப் போயிருக்கலாம் என்று அவன் நண்பர்கள் கருதினார்கள். சினிமாவில் சான்ஸ் தேடி மெட்ராசுக்கே போயிருப்பான் என்று சொன்னவர்களும் இருந்தார்கள்.

இப்படியாகப் பேச்சு வளர்ந்தது. நாட்கள் ஓடின. போனவன் போனவன் தான். அவனைப் பற்றிய தகவல் எதுவும் தெரியவே இல்லை.

காலம் ஒடஒட அவன் போய்விட்ட விஷயமும் ஆறிய பழங்கஞ்சி ஆகியது. ஒதுக்கப்பட்டும் விட்டது. சிவராத்திரி, கோயில் திருவிழா, அம்மன் கொடை போன்ற விசேஷ சமயங்களில் யாராவது நினைவுகூர்வது உண்டு.

"சிங்காரவேலு இருந்தான்னா நல்ல நாடகமா ஏதாவது நடத்துவான். போயிட்டானே பாவிப்பய. எங்கே இருக் கான்னே தெரியலியே. இப்படியா நம்ம மறந்துபோவான்?"

ஊர்க்காரர்கள் மனப்பூர்வமாக அவனை நினைக்கத்தான் செய்தார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் அவனைப் பற்றிய பூர்வ நினைவு எதையாவது ரசமாகச் சொல்லுவார்.

"எங்கே இருந்தாலும் சரி, நல்லாயிருக்கட்டும்" என்பார் ஒருவர்.

"பய கெட்டிக்காரன். ஏதாவது வழி பண்ணி, தான் நினைத்ததை முடிச்சு முன்னுக்கு வந்திருப்பான். நமக்குத்தான் அவனைப் பற்றிய சமாச்சாரம் எதுவும் தெரியலே" என்று ஒருசமயம் பெரியவர் ஒருவர் குறிப்பிட்டார்.

அப்போது சிங்காரவேலு ஊரை விட்டுப் போய் "பத்துப் பன்னிரண்டு" வருடங்கள் ஆகியிருந்தது.

திடீரென்று எதிர்பாராத விதத்தில் மீண்டும் அவன் அவ்வூராருக்கு பரபரப்புச் செய்தி ஆனான். அதற்கு உதவியவர் உள்ளூர் பெரியபிள்ளை ஒருவர்தான்.

சிவபக்தரான அவர் அவ்வப்போது திருத்தல யாத்திரை போய் வருவது வழக்கம். இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மதுரைராமேசுவரம், காசி என்று போய் வருவார்.

இம்முறை "பாடல் பெற்ற புண்ணிய ஸ்தலங்கள்" அனைத்தையும் தரிசித்து விடுவது என்று அவர் காவேரிக் கரையோர ஊர்களுக்கெல்லாம் போனார். திரும்பி வந்தவர் திருத்தலப் பெருமைகளை அளப்பதற்கு முன்னதாக, அவசரம் அவசரமாக, "ஐயா, நம்ம சிங்காரவேலுவை நான் பார்த்தேனே!" என்று ஒலிபரப்பினார்.

ஆங், அப்படியா?... எங்கே பார்த்தீக?.... என்ன செய்துக்கிட்டிருக்கான் அவன்? இப்ப எப்படி இருக்கான்?.... நாடகமெல்லாம் போடுறானாமா?

ஊராரின் "அறியும் அவா" பலப்பல கேள்விகளாக வெடித்தது.

"எல்லாத்தையும் விவரமாச் சொல்றேன் கேளுங்க" என்று லெக்சரடித்தார் அவர்,

பல ஊர்களுக்கும் போய்விட்டு அந்த ஊருக்கும் வந்தார். "ஊர் பேரு சட்டுனு நினைவுக்கு வரலே. பெரிய டவுணு இல்லே. சுமாரான ஊருதான். ஆனால் கோயில் பெரிசு. நான் கோயிலுக்குப் போயி சாமி தரிசனம் பண்ணிப் போட்டு வெளியே வந்தேன். ரதவீதியிலே எடுப்பா ஒரு ஒட்டலு இருந்தது. சரி, இங்கேயே சாப்பாட்டை முடிச்சுக்கிடலாமேன்னு நுழைஞ்சேன்.

கல்லாவிலே இருந்தவரு என்னையே முறைக்க மாதிரி பார்த்துக்கிட்டிருந்தாரு சட்டுனு எழுந்திருச்சு நின்னு கும்பிட்டபடி, என்ன சார்வாள், ஏது இந்தப் பக்கமின்னு விசாரிச்சாரு. சிரிச்ச முகமும் சிவகளையுமா இருந்த அவரை இதுக்கு முன்னே பார்த்ததா எனக்கு ஞாபகமில்லே. திகைச்சு நின்னேன். "என்ன சார்வாள், என்னை தெரியலியா?" கொம்பங்குளம் சிங்காரவேலுயில்லியா" என்கவும் எனக்கு ஒரே ஆச்சரிய மாயிட்டுது.

"அடப் பாவி, நீயா இங்கேயா இருக்கே?"ன்னு கத்திப்போட்டேன். ஏன்டே சொல்லாம, புரையாம ஊரைவிட்டு ஓடி வந்திட்டே? அப்புறம் தகவல்கூட தெரிவிக்கலியே? நாங் கள்ளாம் உனக்கு என்ன துரோகம் செய்தோம்னு கேட்டேன். மாமா, முதல்லே சாப்பிடுங்க. நம்ம கதையை சாவகாசமாப் பேசிக்கலாம்னான். தடயுடலா உபசரிச்சான். ஸ்பெஷல் ரவா தோசை, பொங்கல் வடைன்னு ஏகமா கவனிப்பு. பணம் வாங்க மாட்டேன்னுட்டான்.

நீங்க இன்னிக்கு நம்ம விருந்தாளி. ரெண்டு மூணு நாளு வேணுமின்னாலும் நம்ம வீட்டிலே தங்கலாம்னான். சொந்த ஒட்டலு, சொந்த வீடு, நல்ல மனைவி, குழந்தைன்னு வசதியா இருக்கான்."

அது சரி, அவன் ஏன் ஊரை விட்டுப் போனானாம்? என்று குறுக்குச்சால் ஒட்டியது ஒரு அவசரம்.

"அதைத்தான் சொல்ல வாறேன். பக்கத்து டவுணிலே அவனுக்குத் தெரிஞ்ச ஒருவர் மதராசிலேயிருந்து வந்திருந்தாராம். அவரைப் பார்த்துப் பேச இவன போனானாம். அப்படியே அவரு கூடவே பட்டணத்துக்குப் போயிட்டானாம். சினிமாவிலே நடிக்க வாய்ப்பு தேடலாம்னு நினைச்சானாம். அவன் நினைத்தது நடக்கலே. கொம்பங்குளம் திரும்பவும் மனசில்லே. ஊர் சுற்றியா திரிஞ்சிருக்கான். நம்ம ஊருக்கு கொடை சமயத்திலே எப்பவோ வந்த ஒருவர் அவனை மதுரையிலே கண்டுக்கிட்டார். அவரோட ஊருக்கு அழைச்சுக்கிட்டுப் போயிருக்காரு. அவரோட கிளப்புக் கடையிலேயே அவனுக்கு வேலையும் கொடுத்திருக்கார், கேஷியர் வேலை. அங்கேயே இருந்து அந்த ஓட்டலுக்கு முதலாளி ஆயிட்டான். அது எப்படீன்னா, அவரு வீட்டோட அவரு மக ஒருத்தி விதவைப் பொண்ணா இருந்திருக்கா. அவளை நம்ம சிங்காரம் மறுமணம் செய்துக்கிட்டான். அவன் நினைச்சபடி சினிமா ஹீரோ ஆகலைன்னாலும், சமூக சீர்திருத்த ஹீரோ ஆகிவிட்டான். கலப்புத் திருமணம், விதவை மறுமணம் என்று இரண்டையும் ஒரே சமயத்திலே செய்திருக்கானில்லே!”

பெரியவர் பேசி நிறுத்தினார்.

“சிங்கார வேலு நம்ம ஊருப் பக்கம் வரமாட்டானாமா?" என்று கேட்டார் ஒருவர்.

"அவன்கிட்டே கேட்டேனே. சொன்னான். வரணும் மாமா. நம்ம ஊரையும் நம்ம ஆட்களையும் மறக்க முடியுமா? எல்லாரும் என் கண்ணுக்குள்ளேயே நிக்கிறாக, எல்லோரையும் தேடத்தான் செய்யுது. ஒரு கொடை சமயத்திலே கட்டாயம் வருவேன்னு சொன்னான்" என்றார் அவனைக் கண்டு வந்தவர்.

"மடையன்! ஒரு லெட்டராவது போட்டிருந்திருக்கலாம்" என்று அலுத்துக் கொண்டான், சிங்காரத்தின் முன்னாள் சிநேகிதன் ஒருவன்.
(குங்குமச் சிமிழ்", 1996)
------------------


8. வானத்தை வெல்பவன்


கண்ணாடி முன்நின்ற சிங்காரம் மார்பை நிமிர்த்திக் கொண்டான். கைகளை உயர்த்தியும் தாழ்த்தியும், மூச்சை உள்ளுக்கிழுத்தும் நீளமாக வெளியிட்டும், தன் அழகைத் தானே பார்த்து மகிழ்ந்தான். தலையை ஆட்டினான். முகத்திலே ஒரு சிரிப்பைப் படரவிட்டான்.

"தம்பி சிங்காரம்! நீ சாமானியன் இல்லை. அரும்பெரும் சாதனைகள் புரியவந்தவன். வானமே எல்லை. அதை எட்டிப் பிடிப்பது அல்ல. உன் நோக்கம். அதை வெல்வதே நம் குறிக்கோள்" என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

இப்படி தன்னம்பிக்கை ஊட்டிக் கொள்வது தான் ஒவ்வொரு நாளும் சிங்காரம் செய்கிற முதல் வேலை ஆகும்.

சிங்காரம் தோற்றத்தில் சாதாரணன்தான். ஆனால், அவன் மனம் மற்றவர்களின்றும் மாறுபட்டது. எல்லோரையும் விடத்தான் தனித்தன்மை உடையவன் என்று அவன் எண்ணினான். இவர்களை எல்லாம் விட நான் உயர்ந்தவன் என்று அவன் மனம் மந்திரம் உச்சரிப்பது போல் எப்பவும் முனகிக் கொண்டேயிருக்கும்.

அவன் ஒரு லூஸ், அரைக்கிறுக்கு, ஒரு மாதிரிப் பேர் வழி என்று மற்றவர்கள் அவனை மதிப்பிட்டார்கள். அவனைப் பரிகசிக்கவும் செய்தார்கள். சந்தர்ப்பம் வாய்க்கிற போதெல்லாம் மட்டம் தட்டி மகிழ்ந்தார்கள்.

மடையர்கள், மண்ணாந்தைகள், மக்குப் பிளாஸ்திரிகள், மழுங்கடிக்கப்பட்டவர்கள் என்று மற்றவர்களைப் பற்றி மனசுக்குள் திட்டித் திருப்தி கொள்வான் சிங்காரம்.

ஒருநாள் வரும் அப்போது இவர்கள் அறிவார்கள் இந்த சிங்காரம் யார் என்பதை. இதுவும், அவன் தனக்குத் தானே உரம் ஏற்றிக் கொள்வது தான்.

எப்படியாவது ஏதாவது சாதனைகள் புரிந்து, மாமனிதன் என்று தன் பெயரை நிலை நிறுத்திவிட வேண்டும் என்பதே சிங்காரத்தின் எண்ணமாய், ஆசையாய், பெரும் கனவாய் இருந்தது.

ஒருநாள் பாருங்க! இந்த சிங்காரம் திடீர்ப் பிரபலஸ்தன் ஆகியிருப்பான். பத்திரிகைகளில் எல்லாம் அவன் பெயர், படம், பேட்டிகள் வரும். ரேடியோ சிங்காரத்தின் பெருமைகளை ஒலிபரப்பும். தொலைக்காட்சி சிங்காரத்தின் சாதனையை ஒளி ஒலி பரப்பும். அப்ப தெரிந்துகொள்வீங்க. நம்ம சிங்காரம் உண்மையிலேயே பெரிய ஆளுதான் என்கிறதை.

சிங்காரம் "தன் நெஞ்சோடு கிளத்தி" மகிழ்கிற தனிமொழி தான் இதுவும். அபூர்வமாக ஒன்றிரண்டு பேரிடம் இதைச் சொல்லவும் செய்தான். அவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் இதை சொன்னார்கள். வானத்தை வெல்லப் போகிறவன் என்று சிலர் குறிப்பிட்டார்கள். வானத்தை வளைக்கப் போகிறவன் என்றும், வானத்தை அளப்பவன் என்றும் கேலியாக சொல்லிக்கொண்டார்கள். கடைசியில் அது "வானம் பார்த்தான்" என்ற பெயராக ஒட்டிக்கொண்டது சிங்காரத்தின் மீது.

”அப்படி என்னதான் செய்யப் போறே?” என்று அவனிடமே கேட்டார்கள். “அதுக்காக என்ன ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறே?” என்றும் விசாரித்தார்கள்.

”காலத்துக்காக காத்திருக்கிறேன்” என்றான் சிங்காரம். "இப்ப நான் எதுவும் செய்யவில்லை. சமயம் வருகிறபோது என் ஆற்றல் வெளிப்படும்" என்றான்.

"சரியான லூசு" என்று மற்றவர்கள் கருதினார்கள். "மறை கழன்று விட்டது. கூடிய சீக்கிரம் முழுசாகக் கழன்று போகும். அன்று சிங்காரம் இருக்க வேண்டிய இடம் மனநல மருத்துவ மனையே ஆகும்" என்றார்கள்.

சிங்காரம் பைத்தியம் மாதிரி தான் நடந்து கொண்டான். கண்ணாடி முன்நின்று பேசுவது போலவே, தெருவில் நடந்து போகிற போது சட்டென நின்று "இப்படிச் செய்தால் என்ன?" என்று கேட்பான். "இதை செய்யலாமா?" என்பான், அடிக்கடி உரத்த குரலில் வெளிப்பட்டுவிடும் அவன் சிந்தனை.

யார் யாரோ எப்படி எப்படி எல்லாமோ செயல் புரிந்து சாதனைப் பட்டியலில் இடம் பிடித்துவிடுகிறார்கள். மற்றவர்களை விட அதிகம் தும்மியவன். ஒரு மணி நேரத்தில் மிக அதிகம் கொட்டாவி விட்டவன். ஒரு நாள் முழுவதும் தன் கை இரண்டையும் தட்டிக் கொண்டே இருந்தவர். இத்தனை ஆயிரம் தடவைகள் தட்டினார். மூன்று நாட்கள் ஓயாது பேசிக் கொண்டே இருந்தார். விடாது சைக்கிள் ஒட்டினார். எண்ணிக் கையில் மிக அதிகமான இட்டிலிகளை தின்று தீர்த்த சூரர். ஓயாது நாட்கணக்கில் சிரித்தார். இவ்விதம் சாதனை படைத்த வர்கள் விவரம் பத்திரிகைகளில் வருவதை சிங்காரம் படித்திருக்கிறான்.

நாமும் இதுபோல் ஏதாவது சாதனை புரிந்து காட்ட வேண்டும் என்று சிங்காரம் ஆசைப்பட்டான். ஆராய்ச்சி என்று ஏதாவது செய்யலாம் என்று நினைத்தான்.

"நாய்க்கு வேலையும் இல்லை. நிற்க நேரமும் இல்லை என்பது பழமொழி. அப்படி ஒரு நாய் வேலை எதுவும் இல்லாமலே ஒரு நாளில் எங்கு எங்கெல்லாம் போகிறது. எப்ப எப்ப ஓடுகிறது. எப்போ நிற்கிறது என்று ஆராய வேண்டும்” என்று எண்ணினான் சிங்காரம். “பளா பளா இது அருமையான அய்டியா” என்று ஆரவாரித்தது அவன் மனம்.

இதை சிங்காரம் ஒரு நண்பனிடம் கூறினான். அந்த நண்பன் இவனுக்கு அண்ணன்! வேலை மெனக்கெட்டு பழம் பத்திரிகைகளில் வருகிற துணுக்குச் செய்திகளை எல்லாம் சேகரித்து, வகைப்படுத்தி, வெவ்வேறு ஃபைல் போட்டு, பாதுகாக்கிறவன். அதைப் பெரிய சாதனையாகக் கருதுகிறவன்.

அவன் சொன்னான்: “இது புது ஐடியா ஒண்ணுமில்லே. இங்கிலாந்திலே லண்டன் மாநகர் அருகே ஒரு இடத்தில் ஒருவன் என்ன செய்தான் தெரியுமா? ஒரு நாளில் ஒரு பசுமாடு, காலையில் எழுந்ததில் இருந்து என்ன செய்யுது, எங்கெங்கே போகுது, எத்தனை தடவை படுக்குது, அப்புறம் எழுந்து எப்படி எங்கெல்லாம் நடந்து திரியுது என்று ஆராய்ச்சி நோக்கில் ஸ்டடி பண்ணி விரிவாக எழுதி வைத்தான். அவன் பசுமாட்டின் செயல்பாடுகளை ஆராய்ந்தான். நீ ஒரு நாயின் நடமாட்டத்தை ஆய்வு செய்ய ஆசைப்படுகிறாய். அவ்வளவுதான்”

சீ என்றாகிவிட்டது சிங்காரத்துக்கு. புரட்சிகரமா ஏதாவது பண்ணவேணும் என்றான்.

“டிரஸை அவுத்துப் போட்டுவிட்டு ஊர் நெடுக சுத்து! அதுவும் ஒரு புரட்சிதான்” என்று கிண்டல் செய்தான் நண்பன்.

கைகளை ஊன்றி தலைகீழாக நடந்தவன். முதுகு காட்டி (பின்னெக்காட்டி) நடந்து முன்னேறியவன், உருண்டு உருண்டே ஊர் வழி போனவர்கள், தாவித் தாவி நடந்தவர்கள் பற்றி எல்லாம் தகவல்கள் இருக்கின்றன என்று நண்பன் விவரித்தான்.

"சே என்ன செய்வது? வானமே எல்லை. அதை வென்றாக வேண்டுமே!" என்று சிங்காரம் ஏக்கத்தோடு பேசினான்.

"ஒண்ணு செய்யி. கோபுரத்து மேலே ஏறி நின்று, உன்னை விட்டேனா பார் என்று கூவிக்கொண்டு மேலே நோக்கிப் பாய்ந்து பார்" என்று கெண்டை பண்ணினான் நண்பன்.

சிங்காரம் பேசாமல் அவனை விட்டுப் பிரிந்தான். என்ன செய்வது? பெரிதாக என்னவாவது செய்தாக வேண்டுமே! என்னதான் பண்ணுவது? இதுவே அவனது மனக்குமைச்சலாகி விட்ட எந்நேரமும்.

இதே நினைப்பாக ரோடில் நடந்து கொண்டிருந்தான் சிங்காரம்.

அபூர்வமான நிகழ்ச்சி ஒன்று நடந்தது அப்போது, ஒரு குதிரை வெறிபிடித்தது போல் நடுரோடில் வேகமாக ஓடிவந்தது. யாருடைய குதிரையோ, கட்டிலிருந்து விடுபட்டு, தலைதெறிக் கிற வேகம் என்பார்களே அப்படி வந்தது. லாடம் கட்டிய அதன் கால்கள் கற்களில் பட்டு தீப்பொறி கிளப்பின. ஜனங்கள் மிரண்டு பயந்து ஓரங்களில் ஒதுங்கினார்கள். "ஏஏய், வெறிபுடிச்ச குதிரை. வழிவிட்டு விலகி நில்லுங்க..!" என்று கத்தினார்கள் பலர். குதிரையை மடக்கிப் பிடிக்க பின்னே சிலர் ஓடிவந்தார்கள். சிங்காரத்தினுள் உற்சாகம் கரை புரண்டது. இந்தக் குதிரையோடு போட்டி போட்டு ஒடணும். குதிரையை விட வேகமாக ஓடிக்காட்டணும் என்ற எண்ணம் அவனுள் கிளர்ந்தெழுந்தது.

குபிரெனப் பாய்ந்து குதிரையின் பக்கத்திலேயே ஒடலானான் சிங்காரம். மூச்சுப் பிடித்து வேகம் வேகமாக ஒடிக்கொண்டேயிருந்தான்.

இது மற்றவர்களுக்கு நல்ல வேடிக்கைக் காட்சி ஆயிற்று. ஒஒ எனக் கூச்சலிட்டும், கைதட்டியும், வாயினால் சீட்டி அடித்தும், கைகளை வீசியும் அவரவர் உற்சாகத்தை வெளிப் படுத்தினார்கள்.

இதனால் குதிரைக்கு மிரட்சி ஏற்பட்டது. பக்கத்தில் ஓடி வருபவன் தன்னை அடக்கிப் பிடிக்கவே வருகிறான் என்று அதற்கு தோன்றியிருக்க வேண்டும். அது வெகுண்டு திரும்பி சிங்காரத்தைத் தாக்கியது. காலால் ஓங்கி எற்றியது.

அப்பாவி சிங்காரம் அதிர்ச்சியோடு கீழே விழுந்தான். அவனை மிதித்துக் கொண்டு திரும்பிய குதிரை வந்த வழியே திரும்பி ஓடலாயிற்று.

"பாவம் பைத்தியக்காரன்!” என சிங்காரத்துக்காக இரங்கல் தெரிவித்தார்கள் ரோடு ஒரங்களில் நின்றவர்கள்.
("உங்கள் பாரதி, 2000)
--------------------


9. ஊரும் ஒருத்தியும்


திருமணமாகி வந்த நாள் முதலே ரஞ்சிதத்துக்குக் கணவன் ஊரைப் பிடிக்கவில்லை.

இது என்ன ஊரு இது பட்டிக்காட்டுப் பயஊரு. இதுவும் ஒரு ஊரா" என்று பழிப்பது அவளுக்கு வழக்கமாக அமைந்துவிட்டது.

ரஞ்சிதம் டவுனில் பிறந்து வளர்ந்தவள். எட்டாம் வகுப்பு வரை அங்கே பள்ளியில் படித்தவள். நாகரிகம் பயின்றவள் என்ற நினைப்பு.

அவள் கல்யாணமாகி வந்த ஊர் சின்ன கிராமம். கடை வீதி கிடையாது. ஒரே ஒரு கடைதான் இருந்தது. இஷ்டப்பட்டபோது வாய்க்கு ருசியாக ஏதாவது வாங்கித் தின்ன ஆசைப்பட்டால், அதற்கு உதவும்படியாக ஒரு மிட்டாய் கடை உண்டா? ருசி ருசியா வடை, காப்பி என்று சாப்பிட ஒரு ஒட்டல் இருக்குதா? சினிமா தியேட்டர் இல்லை. இதுவும் ஒரு ஊரா?

ரஞ்சிதம் எப்பவும், எல்லோரிடமும் இப்படி குறை கூறிக் கொண்டிருப்பாள்.

அவளுக்கு கணவன் வீட்டாரையும் பிடிக்கவில்லை. என்ன சனங்க நாகரிகம் தெரியாதவங்க! இவ்விதம் மனசில் சொல்லிக் கொள்வாள்.

கணவன் குப்புசாமியைக்கூட அவளுக்குப் பிடிக்கவில்லை தான். பேரைப் பாருங்க! குப்புசாமியாம். அழகான பேரு எத்தனை இருக்கு. அதிலே ஒண்ணு இதுக்குக் கிடைக்காமல் போச்சுதே. ஆளும் அழகு வழியுது ஒவ்வொருத்தர் என்னென் னமா இருக்காங்க! சினிமாவிலே வருகிற கதாநாயகனுக மாதிரி. அவ்வளவுக்கு இல்லாவிட்டாலும் கொஞ்சமாவது லெட்சணமா இருக்கப்படாது? என் தலையெழுத்து எனக் கென்று இப்படி வந்து வாச்சிருக்குதே என அவள் அலுத்துக் கொள்வாள்.

குப்புசாமி நன்றாக உழைக்கக் கூடியவன். பக்கத்துச் சிறு நகரிலிருந்த மில் ஒன்றில் வேலை பார்த்தான். காலையில் ஆறு மணிக்கே சைக்கிளில் போக வேண்டும். சாயங்காலம் திரும்பி வருவான். வந்ததும் தோட்ட வேலை அது இது என்று எதையாவது இழுத்துப் போட்டுக்கொண்டு பொழுது போக்குவான்.

அதெல்லாம் ரஞ்சிதத்துக்குப் பிடிக்கவில்லை. இது என்ன வேலை டவுனில் ஒரு ஜவுளிக் கடையில் ஏதாவது வேலை பார்த்துக் கொண்டு, அங்கேயே வாடகைக்கு வீடு எடுத்துக் குடியேறிவிடலாம். நல்லா டீசன்ட்டா வேட்டி, சட்டை அணிந்து கொண்டு நாகரிகமா இருக்கலாம். பொழுதுபோக்காக சினிமாக்கள் பார்க்கலாம் என்று அவள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். புருசனிடமும் சொன்னாள். பிறத்தியாரிடமும் புலம்பினாள்.

அவள் பேச்சை அவன் சட்டை செய்யத் தயாராக இல்லை. இது பெரும் மனக்குறையாக இருந்தது அவளுக்கு.

ரஞ்சிதத்துக்கு தான் ரொம்ப அழகானவள் என்ற பெருமை. அவள் பிரமாத அழகி இல்லை. ஆனாலும் இருக்கிற அழகு அம்சங்களை அலங்காரமாக, எடுப்பாகக் காட்டி, வசீகரமாக விளங்கக் கூடிய திறமையில் அவள் தேர்ந்திருந்தாள். தான் ரொம்பவும் புத்திசாலி என்ற கர்வமும் அவளுக்கு இருந்தது.

"எங்க வீட்டுக்கு எதிர்வீட்டிலே ஒரு ஸார்வாள் இருந்தாக. ரஞ்சிதம், நீ இருக்கிற அழகுக்கு சினிமாவிலே உனக்கு சான்சு கிடைக்கும்; நீ சீக்கிரமே ஸ்டாரு ஆகிவிட முடியும்னு அடிக்கடி சொல்லுவாக, நீ மட்டும் எட்டாவதோடு படிப்பை நிறுத்தாமல், மேல் கொண்டு படிச்சிருந்தால், உனக்கு இருக்கிற அறிவுக்கு, உனக்கு நல்ல வேலை எத்தனையோ கிடைக்கும். டீச்சராக வரலாம். அல்லது வேறு ஆபீஸ்களிலே வேலை தேடிக் கொள்ளலாம் என்பாக, ஊம்ம் என் விதி, நான் இந்தப் பாடாவதிப் பட்டிக்காட்டு ஊரிலே வந்து, இப்படிப்பட்ட ஒரு வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடக்க நேர்ந்திருக்கு"

இதுவும் ரஞ்சிதத்தின் புலப்பம் தான். தனிமொழியாகத் தன்னுள் "பலநூறு தடவை" புலம்பியிருப்பாள் இதை. அவ்வப் போது உரத்த சிந்தனையாகவும் இது வெளிப்பட்டு விடும்.

குப்புசாமி சிடுசிடுப்பான். "உனக்கு இங்கே என்ன குறைச்சல்? இந்த ஊருக்கு என்ன குறை? அமைதி நிறைந்த அழகான ஊரு. வசதியான வீடு. டவுனிலே நெருக்கடியும் கும்பலும் பரபரப்பும் தான் மிகுதி" என்பான்.

அவன் மனப்போக்கு அவளுக்குப் பிடித்த்தாக இருக்க வில்லை. பேன்ட் மற்றும் ஸ்டைலான ஷர்ட் அணிந்து, விலை உயர்ந்த ஷூ மாட்டிக் கொண்டு, பவுடரும் ஸெண்டும் பூசி, ஜம்மென்று இருக்க வேண்டும் தன் கணவன் என்று அவள் ஆசைப்பட்டாள். அவை அவனுக்கு உவப்பான விஷயங்களாக இல்லையே.

ரஞ்சிதம் அவ்வாறு அலைகிற ஸ்டைல் ஆசாமிகளை விழி அகலப் பார்த்தாள்.
டவுனிலிருந்து அப்படி யாராவது வந்தால், அவர்களோடு பேச்சுக் கொடுத்து, சினிமாக்கள் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினாள்.

éரஞ்சிதம், நீ இருக்கிற அழகுக்கு நீ இருக்க வேண்டிய இடம் சினிமா உலகம்தான். உனக்கு சுலபமா சான்சு கிடைக்கும், நான் அதுக்கு ஏற்பாடு செய்கிறேன்னு ஒருத்தரு சொன்னாரு. ஆள் ஜோரா இருப்பாரு. எங்க வீட்டுக்கு மூன்றாவது வீட்டிலே இருந்த வக்கீலுக்கு உறவு. பட்டணத்திலேயிருந்து வந்து பத்து நாள் தங்கியிருந்தாரு பட்டணத்தைப் பத்தியும், சினிமா படம் பிடிக்கிறவங்க, அதிலே நடிக்கிறவங்க பத்தியும் நிறைய நிறையச் சொன்னாரு. சிரிச்சு சிரிச்சுப் பேசுவாரு. ரொம்ப நல்லவரு. அடுத்த முறை வாரபோது, என்னையும் பட்டணத்துக்கு அழைச்சிட்டுப் போயி சினிமாவிலே நடிக்கதுக்கு சான்சு வாங்கித்தாறேன்னு கூடச் சொன்னாரு, தெரியுமா!"

ரஞ்சிதம் ஒருத்தியிடம் ரகசியமாகவும் பெருமையாகவும் இதை சொன்னாள். அவள் பொறாமைப்படுவாள் என்று இவள் நினைத்தாள்.

ஆனால் அந்த அவளோ, இவளை ஒரு தினுசாகப் பார்த்தாள். "இது ஒரு மாதிரிதான் போலிருக்கு. கல்யாணம் ஆகிறதுக்கு முன்னாடியே கண்டபடி அலைஞ்ச கழுதை" என முடிவுகட்டிப் போட்டாள். "நம்ம குப்பையா அண்ணனுக்கு போயும் போயும் இப்படி ஒரு சின்னச் சவமா பெண்டாட்டியா வந்து வாய்க்கணும்?" என்று உளம் புழுங்கினாள். ரஞ்சிதம் நடத்தை மோசம் என்று தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் ரகசியமாகச் சொல்லி வைத்தாள்.

எந்த ஊரையும் ஊர்காரர்களையும் ரஞ்சிதம் மட்டமாகக் கருதினாளோ, அவர்கள் அவளை மட்டமாக எடைபோட்டு, முத்திரை குத்தி, உன் பவிஷூ இவ்வளவுதான் என்று ஒதுக்கிவிட்டார்கள். ஆனாலும், அவளைப்பற்றி மனம் போன போக்கில் பேசி மகிழத் தயங்கவில்லை.

அதெல்லாம் ரஞ்சிதத்துக்குத் தெரியாது. இதுவும் ஒரு ஊரா? இங்குள்ள சனங்களும் ஒரு சனமா? தரித்திரங்கள். நாகரிகம் தெரியாத முண்டங்கள் என அவள் கரித்துக் கொண்டிருந்தாள்.

அவள் போக்கு புருஷன்காரனுக்கு வெறுப்பு தர ஆரம்பித்தது.

"நான் நினைச்சிருந்தால் நல்ல சினிமா ஸ்டாரு ஆகியிருப் பேன், தெரியுமா? என்னை சினிமாவிலே சேர்த்து விடறதாக்கூட ஒருவர் முன்வந்தாரு. அதுக்குள்ளாரே எனக்கு இப்படி ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சிட்டாங்க" என்று அவனிடமே அவள் ஒரு சமயம் கூறினாள்.

"யாருடீ அவன்?" என்று உறுமினான் குப்புசாமி.

அவள் சொன்னாள். அவள் பேரில் அவனுக்கு சந்தேகம் தான் ஏற்பட்டது. அவளை உறுத்துப் பார்த்தான்.

"எனக்கு நடிக்கத் தெரியாதுன்னு நினைக்கிறேளோ? எனக்கா தெரியாது? நான் ஸ்கூல்லே படிச்சப்போ, ஆண்டு விழா நாடகங்களிலே நடிச்சிருக்கேன், தெரியுமா?" என்று உற்சாகமாகவும் பெருமையோடும் பேசினாள் அவள்.

அவள் எதிர்பாராதது நடந்தது. அவள் கன்னத்தில் பளாரென ஒரு அறை விழுந்தது.

"எனக்கும் எங்க குடும்பத்துக்கும் கேவலம் உண்டு பண்ணனும்னே நீ வந்திருக்கே! சினிமாவாம், நடிப்பாம்! எவனோ சேர்த்து விடுறேன்னு சொன்னானாம். சாக்கிரதையா இருந்துக்கோ. தப்புத் தவறா நடந்தே உன்னை கொலை பண்ணிப் போடுவேன். எலியைக் கொல்லுற மாதிரி உன்னை ஒழிச்சுக் கட்டிருவேன்" என்று கறுவினான் கணவன்.

அவன் பார்த்த பார்வையும், அவன் நின்ற நிலையும், அப்போது அவனுடைய கைகள் - கை விரல்கள் - முன் நீண்டு துடித்த துடிப்பும், அவன் அப்படிச் செய்யக் கூடியவன்தான் என்ற நினைப்பை, அச்சத்தை, அவளுள் விதைத்தன. அவன் மீது அவளுக்கு உள்ளூற பயம் ஏற்பட்டது. அவனிடம் ஏற்பட்டிருந்த வெறுப்பு வளர்ந்தது.

ரஞ்சிதத்துக்கு அந்த ஊரும், வீடும், சுற்றமும் சூழலும் பிடிக்காத விஷயங்களாக மட்டுமில்லாது, தன்னை ஒடுக்கி அடக்கித் தனது சந்தோஷங்களை சிதைத்து, தன்னுடைய வாழ்வையே பாழடிக்கிற பாழ் நிலமாய், படுகுழியாய், பயங்கர நரகமாய் தோற்றம் கொண்டன.

தூரத்து டவுனும், நாகரிகமும், உல்லாசப் பிரியர்களும், அவற்றுக்கும் அப்பால் தொலைதூர நாகரிகப் பெருநகரமும், சினமா உலகமும் குளுகுளு பசுமைகளாய் புன்னகைத்தன. கண் சிமிட்டின. அவளுக்கு ஆசை காட்டின.

அவள் இயல்பான சந்தோஷங்களை அனுபவிக்க முடியாமல், கனவு இன்பங்களுக்காக ஏங்கி, நாட்களை ஒட்டலானாள்.

பிறந்த வீட்டில் ஏதோ விசேஷம் என்று அவள் அம்மா வந்து ரஞ்சிதத்தைக் கூட்டிப் போனாள். பின்னர் வருவதாகக் குப்புசாமி சொல்லி அனுப்பினான்.

உழைப்பில் மிகுந்த அக்கறையும் ஈடுபாடும் கொண்டிருந்த அவன் சொன்னபடி போக முடியவில்லை.

அப்புறம் போக வேண்டியது அவசியம் இல்லை என்றாகி விட்டது.

ரஞ்சிதம் நாகரிக மன்மதன் ஒருவனுடன், அவன் பேச்சையும் சிரிப்பையும் ஆசை வார்த்தைகளையும் நம்பி, வீட்டை விட்டுப் போய்விட்டாள். இந்தச் செய்தி குப்புசாமிக்கும் அவன் ஊருக்கும் தெரிந்தது. பரபரப்பான பேச்சுக்கும் ஏச்சுக்கும் தூண்டுதல் ஆயிற்று, சிறிது காலத்துக்கு.

ரஞ்சிதம் சினிமாவில் சேரத்தான் போயிருப்பாள்; அப்படி ஆசை காட்டித்தான் நாகரிகம் மைனர் அவளை கூட்டிக் கொண்டு போயிருப்பான் என்று குப்புசாமியும், அந்த ஊர்க்காரர்களும் நம்பினார்கள்.

அதுதான் நிஜமும்கூட.

நிஜமான சந்தோஷங்களை அனுபவிக்க மனம் இல்லாத, பகட்டி மினுக்கிய நிழல் இனிமைகளையே நாடி அலைந்த ரஞ்சிதம் என்ன ஆனாள் - அல்லது ஆவாள் - என்று அந்த ஊர் கவலைப்படவில்லை.

தன்னை விரும்பி நேசிக்க மனமில்லாது வெறுத்த அவளை தன்னவளாக அந்த ஊர் ஏற்றுக் கொண்டதில்லைதான்.
(சலங்கை)
----------------


10. புது விழிப்பு


அவன் உளம் சோர்ந்து, உணர்ச்சிகள் குன்றி, செய்வதற்கு எதுவுமற்று, செய்யும் வகை என்னவென்று புரியும் சக்தியற்று, எதிலுமே ஆர்வமும் அக்கறையும் இல்லாதவனாய் மாறி இருந்தான்.

அவன் பெயர் - என்னவாக இருந்தால் என்ன! இன்றைய இளம் தலைமுறையை சேர்ந்தவன். "எதிர்காலம் என்னுடையது!" என்று உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும், நம்பிக்கையோடும் ஒலி எழுப்பும் இதயத்துடன் வாழ்க்கைப்பாதையில் தலைநிமிர்ந்து முன்னேற வேண்டிய இளைஞன். எதிர்வரும் எல்லாவித அனுபவங்களையும் முகமலர்ச்சியோடு ஏறறு அனுபவித்து, அறிவு விசாலம் பெற்று எப்படி எப்படி எல்லாமோ வாழ வேண்டிய வாலிபன்.

ஆனால், இன்று அவன் முன்னே கொக்கி வளைந்து நிற்பது ஒரே பிரச்னை - எப்படி வாழ்வது?

அவன் உள்ளத்தில் சதா ஒலித்துக் கொண்டிருந்த ஒரே கேள்வி - "என்ன பண்ணுவது?"

அவனுடைய பெற்றோர்கள் நம்பிக்கையோடு அவனை படிக்க வைத்தார்கள். பையன் படித்து, பட்டம் பெற்று, நல்லதொரு உத்தியோகத்தில் அமர்ந்து விடுவான்; கைநிறைய சம்பளம் பெறுவான்; விடிவு காலம் பிறக்கும் அவனுக்கு, நமக்கு, நம் குடும்பம் முழுமைக்குமேதான். இவ்விதம் அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

அவன் தாய் உள்ளூர ஆசைப்பட்டாள்; மகன் பெரிய படிப்பு படித்து, பெரிய வேலைக்குப் போவான். நிறைய ரொக்கமும் பெரும்தொகை மதிப்பு உடைய நகைகளும் கொடுத்து. பெண்ணையும் கொடுத்து மணம் முடித்து வைக்கும் பெரிய இடத்து சம்பந்தம் தானாகவே தேடிவரும்.

அவனுக்கும் ஆசைகளும் கனவுகளும் மிகுதியாக இருந்திருக்கும் தான். பொழுது போகாத நேரங்களிலும், சுகமான சோம்பல் வேளைகளிலும், அவன் கட்டிய எண்ணக் கோட்டைகளுக்கும் பறக்க விட்ட கற்பனைக் காற்றாடிகளுக்கும் ஒரு கணக்கு இருக்க முடியாது தான்.

அவன் படித்து, பாஸ் பண்ணி, பட்டம் பெற்றதில் குறை ஒன்றும் இல்லை. அதன் பிறகு, படித்து முடித்த எல்லா வாலிபர்களும் செய்கிற - செய்யக் கூடிய - காரியங்களை செய்வதில் மும்முரமாக முனைந்தான். வேலை வேட்டைக்கு உரிய முயற்சிகளில் தான்.

"எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்"சில் பெயரை பதிவுசெய்வது முதல், தினசரிப் பத்திரிகையில் "வேலை காலி"ப் பகுதியில் உள்ள வரி விளம்பரங்களை படித்து, தகுதியானது எனத் தோன்றியனவற்றுக்கு மனுக்கள் எழுதி அனுப்புவது, எவர் எவரையோ போய் பார்த்து அங்கும் இங்கும் சிபாரிசு செய்யச் சொல்லி அலைவது ஈறாக, சகல முயற்சிகளையும் மேற் கொண்டான். உத்தியோகத்துக்கான பற்பல பரீட்சைகளையும் எழுதினான். அவன் உள்ளம் சதா உச்சரித்துக் கொண்டிருந்த ஒரே மந்திரம் - "எனக்கு ஒரு வேலை வேண்டும்".

அவன் ஒரே ஒரு வேலைக்குத் தான் லாயக்கு - கிளார்க் வேலைக்கு. அரசு அலுவலகமோ, தனியார் கம்பெனியோ, பாங்கோ, வியாபார அமைப்புகளோ, எதுவா இருந்தாலும் சரி. படித்து பட்டம் பெற்றவனுக்கு வாழ்வு அளிக்கக் கூடிய கிளார்க் பதவியைத் தந்து உய்விக்க வேண்டும். படித்து பாஸ் பண்ணியவர்கள் எதிர்பார்ப்பது இதைத்தான்.

அவர்களை பெற்றவர்களும் மற்றவர்களும் விரும்புவதும் இதையே தான். "எவனுக்காவது சம்திங் கொடுக்கணுமின்னாலும் கொடுத்துப் போடலாம். அதுக்கு வழி இருக்கா பாரு?" - பெரியவர்கள் தூண்டுகிறார்கள். பையன்கள் வழி தேடுகிறார்கள். சிலருக்கு "சான்ஸ் அடிக்கிறது? பலருக்கு ஏமாற்றம், தோல்வி, விரக்தி!

அவன் நிலையும் அதே தான்.

அவன் எவ்வளவோ முயன்றான். எத்தனை எத்தனை அப்ளிகேஷன்கள் எழுதினான் எத்தனை பெரிய மனிதர்களை பார்த்தான் அநேக நிறுவனங்கள் நடத்துகிற இன்டர்வ்யூ என்கிற கண் துடைப்பு நாடகங்கள் எத்தனையில் பங்கு கொண்டான். எல்லாம், அவன் உள்ளக் கோயிலில் கொலு இருந்த நம்பிக்கை யைக் கீழே இழுத்துத் தள்ளி மிதித்துச் சமட்டிய படையெடுப்புகள் ஆயின. அந்த இடத்தை இருண்ட மடமாக மாற்றி, அங்கே விரக்தி, வேதனை, சோர்வு, உற்சாக வறட்சி முதலிய குட்டிச்சாத்தான்களை ஆடவைத்த போக்குகள். அவை.

அவனைச் சுற்றி ஆசைக் கொலுக்கள் அமைந்த பெற்றோர் காலநிலை மறந்து - சமுதாய நிலையை எண்ணாது - நாட்டின் நிலைமையைக் கருதாது - ஆத்திர நிலையை அடைந்தார்கள். வேலை எதுவும் பாராமல் இப்படி வெட்டிப் பொழுதுபோக்கும் "தெண்டச்சோறு" ஆக இருந்தால் என்ன அர்த்தம்? வேலைக்கு தீவிர முயற்சிகள் செய்யாமல் வீட்டிலே உட்கார்ந்து எத்தனை காலத்துக்கு சாப்பிட முடியும்? இவ்வாறான கேள்விக்கணைகள் அவர்களிடமிருந்து புறப்பட்டு அவனைத்தாக்கி தொல்லை கொடுத்தன.

அவனுக்குத் தெரிந்தது - அவன் இதுவரை செய்து வந்த வேலை - படிப்பது தான். இன்னும் அதை அவன் செய்யத் தயார் தான். "மேல் படிப்பு"க்கும் குறைவில்லை. படித்துக் கொண்டே இருக்கலாம். ஆனால் படிப்புச் செலவுக்குத் தேவைப்படும் பணத்துக்குத் தான் பஞ்சம்.

"இன்னும் மேல்படிப்பு வேறே வாழுதாக்கும்! படிச்ச படிப்புக்கு சம்பாத்தியம் பண்ணிச் சாப்பிடத் துபட இல்லே. இன்னும் படிக்கணுமாமில்லே!" என்று தந்தை எக்காளமாகவும் எரிச்சலோடும் சொல் வீசினார்.

அவன் மனம் மேலும் ஒடிந்தது. உளைச்சல் மிகுந்து பல வீனமாகி விட்ட ஒரு நேரத்தில் அவன் அந்த முடிவுக்கு வந்தான். சாக வேண்டியது தான்.

இப்படி உயிர் வைத்துக் கொண்டு, இடிபட்டு, விமோசனத்துக்கு வகை தெரியாமல் திரிவதைவிட, செத்து ஒழிவதே மேல். எனது பிரச்னைகளுக்கும், மற்றவர்கள் சிரமங்கள் இழப்பு களுக்கும் அது சுலபமாக முடிவுகட்டி விடும்.

இந்த எண்ணத்தை வைத்து "தாயம் ஆடியது" மனம். அதுவே நல்லது என்று சித்திரித்துக் காட்டியது. அந்நினைப்பே பூதவடி வெடுத்து அவன் உள்ளத்தில் நிறைந்து நின்று அவனை ஆட்டிப் படைத்தது.

இருந்தாலும், எந்த விதத்தில் உயிரைப் போக்கடித்துக் கொள்வது என்று தீர்மானிக்க இயலாதவனாய் அவன் தத்தளித்தான். நாளிதழ்களில் தவறாது வந்து கொண்டிருந்த தற்கொலைச் செய்திகளை ஊன்றிப் படித்தான். ஊர்தோறும் தற்கொலைச் சாவுகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. ஏதேதோ காரணங்களுக்காக யார்யாரோ, எப்படி எப்படியோ தங்களைத் தாங்களே சாகடிப்பது, வாழ முடியாதவர்கள் தங்கள் பிரச்னையை வேறு வழிகளில் தீர்த்துக் கொள்ள வகையற்று, இறுதியான ஒரே முடிவை கையாளத் துணிகிறார்கள் என்பதை உணர்த்தியது.

அவன் அதையே எண்ணியவனாய் நெடுக அலைந்தான். பிரமை பிடித்தவன் மாதிரி அங்கங்கே நின்றான். அப்போதெல் லாம் வீதிகளில் போகிற வருகிற பலதரப்பட்டவர்-களையும் பார்த்து, இவர்கள் எல்லாம் எங்கே என்ன வேலை பார்க்கிறார்களோ? எவ்வளவு சம்பளம் பெறுவார்களோ? எப்படி வாழ்க்கை நடத்துகிறார்களோ என்ற ரீதியில் அவன் மனம் கேள்விகளை அடுக்கும். வாழ்க்கையை, அதன் விரிந்து பரந்த பல்வேறு சிக்கல்களை, புரிந்து கொள்ளும் சக்தி இல்லாதவனாய் அவன் குழம்புவான்.

அவ்வாறு ஒரு முச்சந்தியின் நடைபாதை ஒரத்தில் அவன் நின்று கொண்டிருந்த போது தான், "என்னடே இங்கே நிற். கிறே?" என்று உரிமையோடு அழைக்கும் குரலும், அன்போடு முதுகில் தட்டிய கையும் அவனை திடுக்கிட்டு திரும்பச் செய்தன.

விநாயகம்பிள்ளை அண்ணாச்சியின் சிரித்த முகம் அவனை விசாரித்தது: "இப்ப என்னடே செய்றே? படிப்பு முடிஞ்சிட்டு துன்னு கேள்விப்பட்டேன். என்ன வேலை பார்க்கிறே?”

“வேலை தேடும் வேலை தான். வேறே என்னத்தைப் பார்க்கிறது! வேலை என்ன சுலபமாக் கிடைச்சிருதா?” உள்ளத்தின் கசப்பு அவன் குரலில் கசிந்தது.

"அது எப்படிடேய் கிடைக்கும்?" என்றார் வி.பி. அண்ணாச்சி, "ஒவ்வொரு வருடமும் பல லட்சம் பேரு எஸ்.எஸ். எல்.சி. ப்ளஸ்டூன்னு பரீட்சை எழுதிபாஸ் பண்ணுறாங்க. காலேஜ் படிப்பு, உத்தியோகப் படிப்புன்னு படிச்சு பாஸ் பண்றவங்க வேறே. இவங்க எலாருமே கிளார்க் குளாகவும் ஆபீசர்களாகவும் டாக்டர்களாகவும் என்ஜினியர்களா கவும் வந்து நல்லா சம்பாதிக்கணுமின்னு தான் ஆசைப்படுறாங்க. நல்ல ஆசை தான். ஆனால் ஒவ்வொரு வருடமும் லட்சம் லட்சமாகத் தயாராகி வருகிற மொத்தப் பேருக்கும் நாட்டிலே வேலை எப்படி கிடைக்கும்? வேலை வாய்ப்புகள் எங்கே இருக்குதாம்? அதையும் யோசிக்கணுமில்லே?" என்று சொல்லி, சிரிப்பு என்று பெரும் கனைப்பு கனைத்தார்.

அவனுக்கு எரிச்சல் வந்தது. "அதுக்காக படிக்கவே படாதுங்கிறீங்களா?" என்று கேட்டான்.

"அப்படி யார் தான் சொல்லுவா? படிக்கட்டும், நல்லா படிக்கட்டும். எல்லாரும் படிக்கட்டும். ஆனா தம்பியாபிள்ளே, அறிவு விசாலம் ஆகணும், ஞானம் பெருகணுமின்னு சொல்லியா படிக்கிறாங்க? இந்தக் காலத்திலேயும் அந்த எண்ணத்தோடு படிக்கப் போறவங்க கொஞ்சம் பேரு இருக்கத்தான் செய்வாங்க. ஆனால் ரொம்பக் கொஞ்சம் தான். படிச்சா வேலை கிடைக்கும். மேல் படிப்பு படிக்கப் படிக்க உயர்ந்த உத்தியோகம், கை நிறையச் சம்பளம், வசதியான வாழ்க்கை எல்லாம் கிடைக்கும்கிற ஆசையிலேதான் ரொம்பப் பேரு படிக்கிறாங்க, படிச்சு முடிச்சா, வேலை கிடைக்காத திண்டாட்டம். வேலை கிடைச்சாலும், சம்பளம் பத்தலியேங்கிற குறை. எவ்வளவு பணம் கிடைச்சாலும், பற்றாக்குறைதான். எப்பவும் திண் டாட்டம் தான். நம்ம படிப்பு வாழ்றதுக்கு கற்றுக்கொடுக்கவும் இல்லே: நல் வாழ்வுக்கு வகை செய்வதாயுமில்லே. நம்ம வாழ்க்கை முறை, படிப்பு நிலை, பொருளாதார நிலைமை எல்லாம் ஏதோ ஒரு போலியான வட்டத்திலேயே சுழல்கின்றன."

"லெக்சரடிப்பது அவர் சுபாவம். அதனால் அவன் பதில் எதுவும் சொல்லாது நின்றான்.

"இப்படி ஒரு பக்கம். இன்னொரு பக்கம் நாட்கூலியாக மிகக் குறைந்த சம்பளம் பெறுகிற உழைப்பாளிக, மற்றும் மாதச சம்பளம் என்று ஒருசில நூறுகளே பெற்றுக் கொண்டு வேலை பார்க்கிறவங்க. இவங்க எண்ணிக்கையும் நிறைய இருக்கு. அதை வைத்துக் கொண்டு சாப்பாட்டுக்கும் பத்தாம, டிரஸ், வீட்டு வாடகை மருந்துச் செலவு என்று எதுக்கும் பணம் போதாமல் திண்டாடுற குடும்பங்களும் நிறையத்தான் இருக்கு. இந்த பயங்கர வறுமை நிலை ஒரு பக்கம். எதைப் பற்றியும் கவலைப் படாமல் நோட்டு நோட்டாக எடுத்து, அலட்சியமாகச் செலவு பண்ற வங்களும் இருக்கத்தான் செய்கிறாங்க, இந்த வாழ்க்கை முறையும், சமூக அமைப்பும் எதுவுமே சரியாக இல்லைடே. எல்லாம் மாறியாகணும். அடியோடு மாற்றப்படனும்."

பொரிந்து தள்ளிவிட்டுத் தன் வழியே போனார் வி.பி. அண்ணாச்சி.

"இவர் ஒரு ரசமான பேர்வழி தான்" என்று அவன் எண்ணினான் முதலில், பிறகு, அவர் பேச்சில் இருந்த உண்மை கள் அவன் உள்ளத்தில் சலனங்கள் எழுப்பலாயின.

வேலை இல்லாது கஷ்டப்படுகிறவர்கள்; வேலை என்று ஏதேதோ செய்து சம்பளம் என்று ஒரு சிறு தொகை பெற்றும் சரியாக வாழ முடியாமல் அவதிப்படுகிறார்கள் கடுமையாக நாள் முழுவதும் உழைத்தாலும் முழு வயிற்றுச் சாப்பாட்டுக்கு வகை செய்ய முடியாமல் அரைப் பட்டினி நிலையில் நாளோட்டுகிறவர்கள் போன்றோரைப் பற்றி அவன் எண்ணத் தொடங்கினான். வாழ முயல்கிறவர்களையும், வாழ முடியாதவர்களையும் புதிய நோக்குடன் கவனிக்கலானான்.

இப்படி, பெரும்பாலோருக்கு வாழ்க்கையே பெரும் போராட்டமாகவும், அவர்களது விருப்பத்துக்கு விரோதமாக அவர்களது மீது சுமத்தப்பட்ட கணத்த சிலுவையாகவும் இருக்கிற போது, தான் எதிர்த்து நின்று போராடிச் சமாளிக்க அஞ்சியும், சுமந்தாக வேண்டிய கட்டாயப் பளுவை சுமக்கத் தெம்பு இல்லாமலும், தோல்வியுற்றுத் தளர்ந்து தன்னையே அழித்துக் கொள்ள எண்ணுவது நியாயம் அல்ல என்று அவனது சிந்தனை அறிவுறுத்தியது.

அவன் தன் பாதையில் எதிர்ப்படுகிற தொழிலாளர்களையும் விவசாயிகளையும் பிறரையும் அவரவர் வாழ்க்கை பற்றியும் பிரச்னைகள் குறித்தும் அனுதாபத்தோடு விசாரித்தான். அவர்கள் சிறிதளவு விரக்தியோடு அலுப்புடனும் பேசிய போதிலும் வாழ்க்கையில் பற்றுதலும் வருங்காலத்தில் நம்பிக்கையும் கொண்டவர்களாக இருப்பதை அவன் உணர முடிந்தது.

உடல்குறை உள்ளவர்கள் கூட ஏதேனும் ஒரு சிறுதொழில் தையல், வாட்ச் ரிப்பேர், குடைரிப்பேர் போன்ற எதையாவது செய்து பிழைப்பு நடத்த முயல்வதை அவன் கண்டறிந்த போது அவனுக்கு உள்ளத்தில் புதியஒளி தோன்றியது.

"நாமும் இப்படி பலருக்கும் பயன்படக் கூடிய ஏதாவது கைத்தொழிலைச் செய்து காலம் கழிக்கலாமே. ஒய்வு நேரத்தில் அறிவு வளர்ச்சிக்கு உதவும் படிப்பையும் எழுத்தையும் மேற்கொள்ள முடியுமே!" என்று அவன் எண்ணினான்.

இந்த நினைப்பு அவனுக்கு உற்சாகமும் புது ஊக்கமும் தந்தது. அனுபவம் மிக்க ஒருவர் தையல்காரராக இருந்தார். தெரிந்த ஒருவர் வாட்ச் ரிப்பேர் தொழில் நடத்திக் கொண்டு சந்தோஷமாக இருந்தார். ஒருவர் ஸ்டவ்களை நல்லாக்குபவராகவும், இன்னொருவர் ரேடியோ பழுது பார்க்கிறவராகவும் தொழில் புரிந்து வாழ்க்கை நடத்தினர்.

இவர்களில் ஒருவரிடம் சிறிது காலத்துக்குப் பயிற்சி பெறுவது, தேர்ச்சி பெற்ற பிறகு சொந்தத்தில் தொழில் நடத்தலாம். உழைப்பு உயர்வளிக்கும். எந்த உழைப்பும் கேவலமானது அல்ல என்ற விழிப்பு உணர்வு பெற்றான் அவன். வாழ்க்கை நம்முடையது; அதை வாழ்ந்தே தீருவோம் என்ற உறுதியுடன் புதிய பாதையில் அடி எடுத்து வைத்தான் அவன்.
("சதங்கை" சிறப்புமலர் -1995)
-------------


11. ஒரு முகம்


அந்த முகம் –

அதை அவன் எங்கே எப்போது பார்த்தான்?

சந்திரனுக்கு அதுதான் பெரும் குழப்பமாக இருந்தது. அந்த முகம் அவனை சதா அலைக்கழித்துக் கொண்டிருந்தது. விழிப்பு நிலையில் பசுமையான நினைவாக தூக்கத்தில் அழுத்தமான கனவுகளாக.

குறுகுறுக்கும் கண்கள். அவனைப் பார்த்ததும் படபடக்கும் இமைகள். இனிய சிரிப்பு பூக்கும் பழச்சுளை உதடுகள். அழகான மோவாய். நீண்ட வெள்ளிய அணிகள் ஊஞ்சலிடும் காதுகள். சிரிக்கும் முகம் –

சந்திரன் உள்ளத்தில் நிலை பெற்றிருந்தது. எங்காவது அந்த முகம் அவனுக்கு எதிர்ப்பட்டிருக்க வேண்டும். எங்கே? எப்போது? அதுதான் அவனுக்குத் தெளிவாக நினைவில்லை.

நெருக்கடி மிகுந்த பஸ் நிலையத்தில் இருக்கலாம். ரயிலில் பார்த்திருக்கலாம். முக்கிய ரஸ்தாவில் இருந்த சினிமா தியேட்டர் எதுக்காவது அவசரமாகச் சென்று கொண்டிருந்த அலங்காரி களில் எவளாவது அந்த முகத்தின் சொந்தக்காரியாக இருக்கலாம்….

அவளை அவன் போகிற போக்கில் கவனித்திருக்கலாம். காலம் மனப் பதிவை நிழல் உருவாக மாற்றியிருக்கும். மறதிப் புழுதி அந்த நிழல் மீது படிந்து விட்டது, என்றாலும் அந்த முகம் மட்டும் சிறிது அழுத்தமாகவே பதிந்திருந்தது என்று தோன்றியது.

அதனால் தான் அந்த எழில் முகம் அவனை நினைவாகவும் கனவாகவும் தொல்லைப் படுத்தியது.

கனவுகளில் மிக அழுத்தமாக, மிகத் தெளிவாக…..

- சந்திரன் பஸ் நிலையத்தினுள் அடி எடுத்து வைக்கிறான். புறப்பட்டு வெளியேறிக் கொண்டிருக்கிற ஒரு பஸ்ஸின் ஒரு சன்னல் கட்டத்தில் ஒரு முகம். மிக அறிமுகமான முகம் போல. அவனைப் பார்த்ததும் விழிகள் சுடரிட, இமைகள் படபடக்க, உதடுகள் சிறுநகையாக நெளிய, பளிரெனத் தென்பட்டது. நெருங்கி வந்த பஸ்சோடு முகமும் கிட்டக்கிட்ட வர, அம்முகத்தின் சந்தோஷ வெளிச்சம் அதிகம் பிரகாசமுற்றது. திரும்பாமல் அவனையே பார்த்திருக்கும் அந்த முகம் அவன் முகத்திலும் மகிழ்வின் ஒளி படரவைத்தது. பேச விரும்புவது போல - பேசி விடுவது போல - சமீபத்தில் காட்சி தந்த அழகு முகத்தை எடுத்துச் சென்றது பஸ். அவன் பார்வையிலிருந்து மறைந்தது. மறைந்து சென்றது.

அது யாருடைய முகம்? அதை அவன் இதற்கு முன் எங்கே பார்த்திருந்தான்?

சந்திரனின் உள்ளத்தில் ஓயாத தவிப்பாக அலைபாய்ந்தது.

- நாகரிக அலைகள் பலரக வேகவாகனங்களாக அப்படியும் இப்படியும் இயங்குகிற பிரதான நெடுஞ்சாலையில், குறுக்கே கிடந்த தண்டவாளங்களுக்கு வேலியாக நின்ற லெவல் கிராசிங் கேட்டுகள் அடைபட்டிருந்த நேரம். ஒரு புறத்தின் கேட் அருகே சந்திரன் நின்றான். கனவில் தான். கடந்து செல்லும் ரயில் வண்டித் தொடரின் ஒரு சன்னலில் அந்த முகம். அவனை காந்தப் பார்வை பார்த்தபடி செல்கிறது. எங்கோ எப்போதோ கண்ட தெரிந்த முகமாகத் தோன்றுகிறதே! யாருடைய முகம் அது?

இந்தக் கேள்வி குறுகுறுக்க அவன் விழிப்புற்றான். அந்த முகம் நேரில் பார்த்தது போல் அப்பவும் பளிச்சென்று கண்முன் நின்றது. அதை அவனால் மறக்க முடியவில்லை.

அந்த முகம் அவனுக்குப் பித்தேற்றியது. எங்கோ அவளைப் பார்த்திருப்பதாக அவன் மனம் சொன்னது - எங்கே என்று தான் புரியவில்லை. யார் அவள் என்பதும் விளங்க வில்லை.

ஏன் அந்த முகம் திரும்பத் திரும்பப் பசுமையாகத் தோன்றி அவனை அலைக்கழிக்க வேண்டும்? தூக்கத்தில் கனவா விழிப்பு நிலையில் நினைவுச் சித்திரமாக.

அவன் அவனது எண்ணக் கட்டுப்பாட்டையும் மீறி அந்த முகத்தை வேட்டையாடுவதில் ஈடுபட்டிருந்தான். இது பிறர் முறைப்பிலிருந்து, முணுமுணுப்பிலிருந்து, பரிகாசப் பார்வையிலிருந்து, கேலிச் சிரிப்பிலிருந்து, கிண்டல் சொல் உதிர்ப்பி லிருந்து, மெது மெதுவாகத்தான் அவனுக்குப் புலனாயிற்று.

தெருக்களில் நடக்கிற போது எதிர்ப்படுகிற பெண்களை, பஸ் நிறுத்தங்களில் காத்து நிற்கும் மகளிரை, ஒட்டலுக்குள் வருகிற - அங்கிருந்து வெளியேறுகிற - சுந்தரிகளை, சினிமா தியேட்டர்களின் கும்பல் மத்தியில் பளிச்சிடுகிற சிரித்த முகங் களை அவன் கூர்மையாக கவனிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தான். மற்றவர்கள் பார்வையில் உறுத்துகிற விதத்தில்.

அவனுடைய நண்பர்கள் கிண்டல் பண்ணலானார்கள். "சந்திரனுக்கு கலர் தாகம் அதிகமாயிட்டுது!" "வரவர டைவா (வாடை) ஜாஸ்தியாகுதே! “பொம்பிளை காந்தம் தீவிரமா இழுக்குது போலிருக்கே!"

அதுமாதிரி சமயங்களில் சந்திரன் அசட்டுச்சிரிப்பு சிரித்தான். இனி இப்படி பலருக்கும் தெரியும்படி கேணத்தனமாக முழிச்சுக்கிட்டுத் திரியக் கூடாது என்று தனக்குள் தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டான.

அது வெகு விரைவிலேயே மங்கிப்போகும். பைத்தியமோ என்று பிறர் நினைக்கக் கூடிய விதத்தில் அவன் சிலசமயம் நடந்து கொள்வதும் உண்டு.

நெடுஞ்சாலை. முன்னே ஒரு பெண் போய்க் கொண்டிருந்தாள். அவளுடைய பின்புறத் தோற்றம் அவன் பார் வையை சுண்டி இழுத்தது. இவளாக இருந்தாலும் இருக்கலாம் என்று அவன் மனம் குறுகுறுத்தது.

அவள் முகத்தை பார்க்கவேண்டும் - பார்த்தே ஆக வேண்டும் - இவள் முகமே அந்த முகமாக இருக்கலாம்….

அவன் வேகமாக நடந்தான். வழியில் குறுக்கிட்டவர்களை இடித்துத் தள்ளிக்கொண்டு. சிலரது முறைப்பையும் ஏச்சுக் களையும் பெரிது படுத்தாமல் விரைந்தான். வேகமாக அவள் அருகில் போய் திரும்பி நோக்கி; இன்னும் முன்னே சென்று திரும்பிப் பார்த்து, அவள் அவனைக் கடந்து செல்லும் வரை உற்றுப்பார்த்து….

அவள் வாய் நிறைய எச்சிலைத் திரட்டி, அவன் மூஞ்சியில் துப்பாத குறையாகக் காறி முன்னே துப்பியபடி, "தூ! மேறையும் மூஞ்சியும் கம்மனாட்டிக் கழுதை!" என்று முணமுணத்தபடி நடந்தாள்.

அவன் காதில் அது தெளிவாக விழுந்தது. அதற்காக அவன் வருத்தப்படவில்லை. இவள் முகம் அந்த முகமாக இல்லாது போயிற்றே என்று தான் வருந்தினான். மிகுந்த ஏமாற்றம் அவனுக்கு.

ஒரு நாள் சந்திரன் யாரையோ எதிர்பார்த்து ரயில் நிலையம் போயிருந்தான். எக்ஸ்பிரஸ் வந்து நின்றது. அவன் பெட்டி பெட்டியாக உற்று நோக்கி நகர்கையில், ஒரு பெட்டியினுள் ஒரு முகம் பளிட்டது. முழு நிலவை மறைக்கும் மேகம் போல் இதர பயணிகள் அதை மறைத்தது அவனுக்கு எரிச்சல் மூட்டியது. அந்த இடத்திலேயே அவன் நின்று விட்டான். ஒவ்வொருவராக, பெட்டி படுக்கை மூட்டை முடிச்சுகளுடன் இடித்து நெருக்கி இறங்கும் போது, ஊடே தென்படப் போகிற அந்த முகத்தை எதிர்பார்த்து ஆர்வத்தோடு கண்களை வாசலிலேயே நிறுத்தி நின்றான். உறுத்து நோக்கியவாறு நின்ற அவன் முகத்தை ஒவ்வொரு பயணியும் ஏறிட்டுப் பார்த்து, யாரையோ எதிர்பார்த்து நிற்கும் எவனோ என ஒதுக்கிவிட்டு, பரபரப்பாக நடந்தபோது, அவர்களில் ஒருத்தியாய் அவளும் இறங்கினாள். அலட்சியப் பார்வை ஒன்றை அவன் மீது போட்டு விட்டு, கும்பலோடு கலந்தாள். சே, இவள் இல்லை என்ற ஏமாற்றம் அவனுக்கு சோர்வு தந்தது.

அந்த ஏமாற்ற உணர்வோடு தயங்கி நின்ற போது, "என்னடே இங்கேயே நின்னிட்டே? நான் பின்னாலே ஒரு கேரியேஜிலேல்லா இருந்தேன்" என்று உற்சாகமாகக் கூறியபடி அவன் தோள்மீது கைவைத்தான் நண்பன்.

சந்திரன் திகைத்துத் திடுக்கிட்டான். தான் இவனை சந்திக்கத் தான் ரயிலடிக்கு வந்திருந்தோம் என்ற விஷயமே அவனுக்கு மறந்து போயிருந்தது. இப்போது சமாளித்துக் கொண்டு ஏதோ ஞஞ்ஞமிஞ்ஞ வார்த்தைகளைக் கொட்டி ஒப்பேற்றி நண்பனோடு நடந்தான்.

இப்படி எத்தனையோ ஏமாற்றங்கள். எனினும் அவன் அந்த முகத்தைப் பிடிக்க பார்வைத் தூண்டிலை கண்ட இடமெல்லாம் வீசி எறிவதை நிறுத்தவில்லை.

எதிர்பாராத ஒரு நேரத்தில், எதிர்பார்க்க முடியாத ஓர் இடத்தில், அந்தமுகம் சந்திரனுக்கு நிஜவடிவமாய் காட்சியாயிற்று.

கவியரங்கம் ஒன்றில் பங்கு பெறப் போயிருந்த இடத்தில் சந்திரன் அந்த முகத்தையும் அதன் சொந்தக்காரியையும் காணநேரிட்டது. அந்த முகத்தை, அந்த சுந்தரியை, வியப்புடன் பார்த்துப் பார்த்து மகிழ்ந்த உணர்ச்சிப் பெருக்கில் அவன் கவியரங்கத்தில் நன்கு சோபிக்காமலே போனான். இவள் யார்; இவளும் கவிபாட வந்தவளோ என்ற கவலையே அவன் மனசில் தறியடித்துக்கொண்டிருந்தது. வேறொரு கவிஞனோடு அவள் இழைந்து குழைந்ததையும், சிரித்துக் களித்ததையும் காணக்காண சந்திரனுக்கு வேறு வகை ஏமாற்றமும் எரிச்சலும் உண்டாயின.

அந்த ஜோடி சீக்கிரமே வெளியே போய் விட்டது. அவனால் அவர்களை பின்தொடர இயலவில்லை. இதுவும் அவனுக்கு வருத்தம் அளித்தது.

அதன் பிறகு சந்திரன் உள்ளம் வேறுவிதப் பிரச்னைகளைப் பின்னிக்கொண்டு அவற்றிலேயே சிக்கி அவதிப்பட்டது; அவள் யார்? எங்கே இருக்கிறாள்? அந்தக் கவிக்கும் அவளுக்கும் என்ன உறவு? கல்யாணம் செய்து கொண்டார்களா? காதலர்களா? அவர்கள் எங்கு வசிக்கிறார்கள்?

விதி, அல்லது காலம், அல்லது வாழ்க்கையின் விசித்திர சக்தி, - அல்லது என்ன இழவோ ஒன்று - தன்னோடு விளையாடுவ தாக சந்திரன் மனம் குமையலானான் இப்போது.

முன்பு அந்த முகத்தை அவன் தேடித்திரிந்த போதெல்லாம் அது தென்படவேயில்லை. தற்செயலாக அந்த சுந்தர முகத்துக்காரி அவன் பார்வையில் நன்றிாகவே பட்டு அவனது வயிற்றெரிச்சலைக் கிளறி விட்டதற்குப் பிறகு அடிக்கடி அவள் தரிசனம் கிடைத்துக்கொண்டேயிருந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் அவனது உள்ளத்தின் எரிச்சலும் கோபமும் அதிகரிக்கும் படியாகவே அமைந்தன அவன் பார்வையில் பட்ட தோற்றங்கள்….

ஒரு நாடகத்தின் போது அவள் காட்சி தந்தாள். நடிப்பவளாக அல்ல. நாடகம் காணவந்த ஒரு உல்லாசியின் நெருக்கத் தோழியாக.

வேகமாக மோட்டார் சைக்கிளில் சவாரி போன ஒரு டம்பப் பேர்வழியின் பின்னால், அவனை கட்டிப்பிடித்தபடி அமர்ந்து, அவன் தோள் மீது தலை சாய்த்து, சிரிக்கும் முகத்தோடு, சிரிக்கச் சிரிக்கப் பேசியவளாக.

நாகரிக ஒட்டல் ஒன்றில், செல்வச் செழிப்போடு விளங்கிய ஒரு தடியனோடு, ஒரு ஜாங்கிரியைப் பிட்டு ஒரு துண்டை அவன் வாயில் அவள் கொடுப்பதும், ஒரு துண்டை அவன் அவளுக்கு ஊட்டுவதும், அவன் விரலை அவள் உதடுகளால் கவ்வி பொய்யாய் கடிப்பதும், அவன் விரலை எடுத்து வலியால் தவிப்பவன் போல் நடிப்பதும், அவள் சிரித்துக் குலுங்குவது மான நிலையில்,

இப்படிப் பல.

அவளை அவன் இனம் புரிந்து கொண்டான். காலமும் பணமும் பசியும் மனமும் துணிவும் கொண்ட வசதிக்காரர்களுக்கு துணைசேரத் தயங்காத சாகசக்காரி, அவர்களை சந்தோஷப்படுத்தி தனது தேவைகளையும் வசதிகளையும் பூர்த்தி செய்து கொள்ளத் துணிந்த நவநாகரிகத் தொழிற்காரி இவள்.

சீ என்றாகி விட்டது சந்திரனுக்கு.

வெட்கம் கெட்ட - தன்மானம் இல்லாத - இந்த சுந்தரிக்கு இவ் இனிய, அழகிய, கவிதை வடிவ - களங்கமற்ற மலர் போன்ற - முகம் ஏன் வந்தது? சுலபத்தில் பிறரை மயக்கவா, வசீகரிக்கவா, ஏய்க்கவா? தன் எண்ணங்களை எளிதில் நிறைவேற்றிக் கொள்வதற்கு வசதியான சாதனம் தானா அந்த முகம்?

இப்பவும், விடைகாண முடியாத பல கேள்விகளை வளர்த்துக் குழம்பினான் சந்திரன். அவன் மனசில் அந்த முகம் - ஆதியில் என்றோ எங்கோ வசிய ஒளியோடு மிளிர்ந்து, அவன் உள்ளத்தில் நிலையாகப் பதிந்து விட்ட அந்த முகம் - எப்பவும் அவனை அலைக்கழிக்கும் ஒரு பிம்பமாகத்தான் மிதந்து கொண்டிருந்தது.
(பயணம், 1984)
------------------------


12. தோழி நல்ல தோழிதான்!


"உந்தன் மனநிலையை நான் தெரிந்து கொண்டேனடி தங்கமே தங்கம்!" என்று சொல்லி, வளைகள் கலகலக்கும் படியாகக் கைகொட்டி, களி துலங்கும் குலுக்குச் சிரிப்பு சிந்தினாள் ராஜம்மா.

"என்னத்தையடி கண்டு விட்டாய் பிரமாதமாக?" என்று சிடு சிடுத்தாள் தங்கம்.

அவள் சிநேகிதி சிரித்தபடி சொன்னாள்: “நெல்லுக்குள்ளே அரிசி இருக்கிறது. எள்ளுக்குள்ளே எண்ணெய் கலந்திருக்கிறது. உன் மனசுக்குள்ளே காதல் புகுந்திருக்கிறது. இதை எல்லாம் தான்."

தங்கம் பதில் பேசவில்லை. தோழியின் விழிகளைச் சந்திக்க மறுத்த அவளுடைய அஞ்சனம் தோய்ந்த கண்களும், செம்மை படர்ந்த முகமும், தலை தாழ்ந்து கொண்ட நிலையும் ராஜம்மா பொய் சொல்லவில்லை" என்று விளம்பரப்படுத்தின.

"என் அருமைத் தங்கம்! டாக்டரிடமும் தோழியிடமும் உள்ளதை உள்ளபடி சொல்லி விட வேண்டும், தெரியுமா? மனசில் உள்ளதை வெளிப்படையாகச் சொன்னால்தான் நன்மை பிறக்க வழி ஏற்படும். அதனாலே, என்னிடம் சொல்வாய் தோழி - உன் உள்ளம் கவர்ந்த கள்வன் யாரோ? என்ன பேரோ? எந்தத் தெருவோ?" என்று நீட்டி நீட்டிப் பேசினாள் ராஜம்மா.

அவள் இருக்கிற இடத்திலே சிரிப்பும் துணை இருக்கும். "ஹாய் - ஊய்ய்" என்ற கூச்சலும் கீச்சொலியும் விஜயம் செய்து போகும். குஷியும் கும்மளியும் வளையமிட்டுக் கொண்டே இருக்கும். அமைதி என்பதை அறிந்து கொள்ளாத அழகி அவள். மெளனம் என்பதைக் கலையாகவோ, பண்பாகவோ போற்ற விரும்பாத குமரி அவள்.

அவளுடைய தோழி தங்கம் "சாதுக் குழந்தை. "அடித்தால் கூட அழத் தெரியாத பாப்பா, இல்லை இல்லை; அழ விரும்பாத பேதை" என்று ராஜம்மா கிண்டலாகக் குறிப்பிடுவது உண்டு. சிநேகிதிகளை சாதாரணமாகவே கெண்டை பண்ணி மகிழும் சுபாவம் உடைய ராஜம்மா குத்திக் குத்தி கேலி செய்வதற்கு விஷயம் கிடைக்கிற போது சும்மா இருந்து விடுவாளா?


”தங்கம் உன்னுடைய…. உம், வந்து….. உம்…., உன்னுடைய என்னவென்று சொல்ல? ஆமா ஆமா…. காதலா எப்படிப்பட்டவர் என்று நான் சொல்லட்டுமா?” ”ஆவாரா ஸ்டைலில் டிரஸ் செய்து கொண்டு, திலீப் குமார் மாதிரி கிராப் வளர்த்துக் கொண்டு, ஜிப்பி பாணியில் வேலைத்தனங்கள் செய்து…."

"சீ போ! " என்று சீறிப் பாய்ந்தாள் தங்கம்.

"தெரியும் தங்கம்!” என்று இழுத்தாள் தோழி. ஒரு நபரைக் காணாத போதெல்லாம் எங்கள் தங்கத்தின் மையுண்ட கண்கள் காற்றில் அலைபட்ட கருமேகங்கள் போல் அங்கும் இங்கும் உருண்டு புரண்டது எங்களுக்குத் தெரியாதா? பஸ் ஸ்டாப்பிலே தவம் செய்ததும், கடலோரத்திலே காத்து நின்றதும், ரோட்டிலே ஏங்கி நடந்ததும் நாங்கள் அறிய மாட்டோமா? அந்த நபர் வரக்கண்டதும் எங்கள் தங்கத்தின் முகம் செந்தாமரையாக மாறியதும், அவள் கண்கள் படபடத்ததும், இதழ்க்கடையிலே குறுநகை. பூத்ததும் நாங்கள் அறியாத விஷயங்களா? அந்த துஷ்யந்த மகாபுருடரும் எங்கள் சகுந்தலை அம்மாளும் கண்களைப் புறாக்கள் ஆக்கிக் காதல் தூது விட்டு மகிழ்ந்து போவதைத் தான் நாங்கள் தெரிந்துகொள்ளவில்லையா?....

"ஐயோ ராஜம், சும்மா இரேன்" என்று தங்கம் கெஞ்சினாள்.

"சும்மா இருந்தால் ஆகாதடி தங்கம். காதல் வளர வேண்டுமானால் தோழியின் தயவு தேவை. நீ தான் இலக்கிய ரசிகை ஆயிற்றே; உனக்குத் தெரியாத விஷயமா இது? என்று ராஜம்மா சொன்னாள்.

இப்படிப் பேசிப்பேசி அவள் தங்கத்தின் உள்ளத்தில் வளர்ந்த ரகசியத்தை உணர்ந்து விட்டாள். தங்கத்துக்கு துணிச்சல் கிடையாது. அச்சம், மடம், நாணம் வகையரா, அளவுக்கு அதிகமாக இருக்கிறது!" என்பது தோழியின் அபிப்பிராயம். ஆகவே, தன் சினேகிதிக்குத் துணைபுரிய வேண்டியது தனது கடமை என்று ராஜம்மா தானாகவே முடிவு செய்து, செயல் திட்டத்திலும் ஈடுபட்டு விட்டாள். புதுமைப் பெண் அவள். பயம், தயக்கம் போன்றவை அவள் பக்கம் தலைகாட்டத் துணிவதில்லை.

ராஜம்மாளின் உதவியினால் தங்கமும், அவள் பார்வைக்கு இனியனாக விளங்கியவனும் பேச்சு பரிமாறிக் கொள்ளும் நிலை பெற முடிந்தது.

ஒரு சமயம் "பஸ் ஸ்டாப்"பில் தங்கமும் ராஜம்மாளும் நின்ற வேளையில், அவனும் சிறிது தள்ளி நின்று கொண்டிருந்தான். ராஜம் தன் சினேகிதியோடு சிரித்துப் பேசிமகிழ்ந்ததை அவனும் ரசித்தான். அப்பொழுது வேகமாக ஒரு டாக்ஸி வந்தது. ரஸ்தாவில் மழைநீர் தேங்கிக் கிடந்தது. டாக்ஸியின் வேகம் தண்ணிரில் அதிர்ச்சி உண்டாக்கியது. நீர்த்துளிகள் மேலெழுந்து எங்கும் சிதறித் தெறித்தன.

இந்த விபத்தை ராஜம்மா மட்டுமே முன்கூட்டி உணர்ந்தாள். டாக்ஸியின் சக்கரங்கள் நீரில் பாய்ந்ததுமே, அவள் "ஊ ஊ. ஊய்ய்!” என்று கீச்சிட்டு, ஒரு துள்ளுத்துள்ளி பின்னால் விலகிக் கொண்டாள். மற்ற இருவரும் திடுக்கிட்டு அவளை நோக்கிய வேளையில், நீர்த்துளிகள் அவர்கள் மீது பட்டு விட்டன.

"ஐயோ!" என்றாள் தங்கம்.

"செச்சே!” என்று வருத்தப்பட்டான் இளைஞன்.

"டாக்ஸி ஹோலி - ரங்க ஹோலி கொண்டாடி விட்டு ஒடுகிறது. பரவால்ல. காய்ந்ததும் சரியாகிவிடும்" என்று ராஜம்மா சொன்னாள். அவனையும் தங்கத்தையும் மாறிமாறிப் பாாத்துக் கொண்டே பேசினாள் அவள்.

அவன் அசட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டு மேலும் கீழும் பார்த்தபடி நின்றான். பிறகு "என்ன இருந்தாலும் இந்த டாக்ஸிக்காரங்க செய்வது அநியாயம். இப்படியா கண்ணை மூடிக் கொண்டு வேகமாகப் போவது? " என்றான்.

"அது சரிதான். நமது கண்களும் சரியாகக் கடமையைச் செய்வதில்லை. சில சமயங்களில், ஏதாவது ஒரு காரியத்தில் தீவிரமாக ஆழ்ந்து, சுற்றுப்புறத்தைக் கவனிக்க மறந்துவிடு கின்றன" என்று வம்பளத்தாள் ராஜம்.

"சும்மா இருக்க மாட்டியா, ராஜம்? " என்று தங்கம் முணு முணுத்தாள்.
"இவள் பெயர் தெரியவில்லையே என்று பார்க்கிறீர்களா? இவள் தங்கம்" என்று அவனுக்கு எடுத்துச் சொன்னாள் தோழி.

"போடி" என்று எரிந்து விழுந்த தங்கம் கீழே பார்வையைச் செலுத்தி நின்றாள்.
"தங்கத்துக்குக் கோபம். அவள் பெயரைச் சொல்லி விட்டேனே என்பதனால் அல்ல. உங்கள் பெயரைக் கேட்டுச் சொல்லவில்லையே என்று தான்" எனக் கூறிய சிநேகிதி, "இல்லையா தங்கம்?" என்று கேட்டாள். ஒய்யாரமாகச் சிரித்தாள்.

அவளுடைய சாதுர்யத்தை வியந்து ரசித்து, மகிழ்ந்தான் அவன். "என் பெயர் சந்திரன்" என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.

அதன் பிறகு அவர்கள் சந்திப்பதும், பேசிக் களிப்பதும், உலா போவதும் நித்திய நிகிழ்ச்சிகள் ஆகிவிட்டன. அத்தகைய சந்தர்ப்பங்களில் எல்லாம் ராஜம்மாவும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று தங்கம் வற்புறுத்தினாள். தோழியும் உடன் வருவதனால் தான் பொழுது பொன்னாகக் கழிகிறது; பேச்சு சுவையாகக் கணிகிறது என்றே சந்திரனும் உணர்ந்தான்.

ஒருநாள், சில செடிகளில் அழகுமயமாகப் பூத்து விளங்கிய புஷ்பங்களை அவர்கள் கண்டு ரசிக்க நேர்ந்தது.

”இந்தப் பூக்கள் ரொம்ப அழகாக இருக்கின்றன; இல்லையா?” என்றாள் தங்கம்.

"செடியில் பூத்துக் குலுங்குகிற போது மலர்களின் அழகு தனிதான்" என்று சந்திரன் சொன்னான்.

”இருக்கலாம். ஆனாலும், அந்நிலையை விட அதிகமான அழகை அதே புஷ்பங்கள் பெறுவதும் உண்டு” என்று ராஜம்மா கூறினாள்.

அவ்வேளையில் அவள் கண்களின் பார்வை மிகவும் வசீகரமாக இருந்தது. குவிந்த மலர் போன்ற இதழில் சிலிர்த்த சிறுநகை கவர்ச்சிகரமாகத் திகழ்ந்தது. அவளுடைய முகமே முழுதலர்ந்து இளம் வெயிலில் மினு மினுக்கும் அருமையான புஷ்பம் போல் மிளிர்ந்தது.

அம்முகத்தை வெகுவாக ரசித்த சந்திரன் கேட்டான் "எப்போது? ” என்று.

"காதலுக்கு உரியவளின் கூந்தலிலே கொலுவிருக்கிற போதுதான். வேறு எப்போது? ” என்று கேட்டு அருவிச் சிரிப்பை அள்ளி வீசினாள் தோழி.

தங்கத்தை வெட்கம் பற்றிக் கொண்டது. சந்திரனின் உள்ளத்தில் ஆனந்தம் பொங்கிப் பொங்கி வழிந்தது.

அவன் கைநிறைய புஷ்பங்களைக் கொய்து தங்கத்திடம் கொடுத்தான். அவற்றை வாங்கிக் கொண்ட தங்கம் கைகளில் ஏந்தியபடியே நின்றாள்.

”ஏன்? தலையில் சூடிக் கொள்ள வில்லை?" என்று அவன் விசாரித்தான்.

”தானாக வைத்துக் கொள்வதைவிட, காதலனே புஷ்பங் களைக் காதலியின் கூந்தலில் சூட்டுகிற போது அதிக இன்பம் உண்டாகும். பூக்களும் தனிச் சிறப்பைப் பெறும்” என்று ராஜம்மா சொன்னாள்.

சந்திரனும் ”அப்படியா! ” என்று கேட்டுச் சிரித்தான். "போடி வாயாடி!" என்று சீறிய தங்கம் மலர்களைத் தோழியின் மீது விசிறி அடித்தாள்.

"ஐயோ பாவம்! பூக்கள் வீணாய்ப் போச்சு. அவற்றை என் மேலே விட்டெறிந்தற்குப் பதிலாக அவர் மீது வீசி இருந்தாலா வது ஜாலியாக இருந்திருக்கும்” என்று தோழி தெரிவித்தாள்.

"ஐயே! ”" என்று முனங்கிய தங்கத்தின் முகம் செக்கச் சிவந்துவிட்டது. இத்தகைய இனிமைகளை ரசிக்காமல் இருந்து விட முடியுமா சந்திரனால்?

தோழி இல்லாத சமயங்களில், அவனுக்கும் தங்கத்துக்கும் என்ன பேசுவது என்றே புரியாமல் போய் விடுவதும் உண்டு. ராஜம்மா உடனிருந்தால் விஷயப் பஞ்சம் ஏற்படவே ஏற்படாதே என்று அவன் எண்ணுவான்.

தங்கம் சங்கோஜம் உடையவள். கலகலப்பாகப் பேசிப் பழகும் சுபாவம் அவளிடம் இல்லை. அதனால் சந்திரன் தான் பேச்சுக்குப் பொருள் தேடித் திண்டாட வேண்டிய அவசியம் ஏற்படும். சிலசமயம் அவன் பேச்சு அவளுக்கு "போர்” அடித்துவிடும். ஆனால் அவளுடைய மெளனமே அவனுக்குப் பெரிய "போர்" ஆக இருந்தது.

ராஜம்மா திடீரென்று தனது ஊருக்குப் போக நேர்ந்தது. திரும்பி வருவதற்குள் தங்கத்தின் காதல் வெறும் அரும் நிலையிலேயே இருக்காது என்று அவள் நினைத்தாள். இதற்குள் மலர்ச்சியுற்றிருக்கும். மணம் பரப்பும் நிலை வந்திருக்கும் என்று அவள் ஒரு கடிதத்தில் எழுதினாள். "எல்லாம் வழக்கம் போல் தான்" என்று தங்கம் எழுதிய பதில் தோழிக்கு திருப்தி தரவில்லை. ஆகவே அவள் சந்திரனுக்குக் கடிதம் எழுதினாள்.

"நான் எவ்வளவோ காதல் கதைகள் படித்திருக்கிறேன். சினிமாவிலும் நாடகங்களிலும் பலரகமான காதல் ஜோடிகளைக் கண்டிருக்கிறேன். வாழ்க்கையிலும் அநேக காதலன் காதலி களையும், அவர்கள் காதல் முடிவுகளையும் பற்றி அறிந்தது உண்டு. எனக்கு சந்திரன் - தங்கம் காதல் அதிசயமாகவே தோன்றுகிறது. இன்னும் ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறதே அது! இதை அறியும்போது சிரிப்பதா அனுதாபப் படுவதா என்றே எனக்குப் புரியவில்லை" என்று அவள் எழுதினாள்.

சந்திரன் பதில் எழுதினான். அவள் தனது பண்பின்படி கேலி செய்தும் சுவையான விஷயங்கள் சேர்த்தும் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தாள். சுவாரஸ்யமில்லாமல் பதில் எழுதி வந்த தங்கம் நாளடைவில் கடிதம் எழுதுவதையே விட்டு விட்டாள். அவளைப் பற்றிக் குறைகூறியும் மனம் கசந்தும் எழுதி வந்த சந்திரன், ராஜம்மாளைத் துதி பாடத் தொடங்கியிருந்தான். அடிக்கடி அவளுக்குக் கடிதம் எழுதுவதில் ஆர்வம் காட்டினான் அவன்.

ரசமான பொழுதுபோக்கு என்று மகிழ்ச்சியோடு இவ் விவகாரத்தில் ஈடுபட்ட ராஜம்மா உண்மையை உணர்ந்து கொண்டாள். சந்திரன்தங்கத்தின் மீது கொண்டிருந்த காதல் கருகி விட்டது; காதல் பயிரை அவள் சரியாக வளர்க்கத் தவறி விட்டாள் என்பது புரிந்தது.

இனி என்ன செய்யலாம் என்ற யோசனை ராஜத்தை அலைக்களித்தது. அவள் சந்திரனின் கடிதங்களுக்குப் பதில் எழுதாமலே இருந்து விட்டாள். அவள் எதிர்பார்க்கவில்லை சந்திரன் அவளைத் தேடி அவள் இருக்குமிடத்திற்கே வந்து விடுவான் என்று.

அவன் அவ்விதம் வந்தது ராஜத்துக்கு மகிழ்ச்சி தான் அளித்தது. எனினும் தன் சிநேகிதிக்காக அவள் பரிந்து பேசினாள். பலன் தான் கிட்டவில்லை.

ராஜம்மாளுக்குச் சந்திரனைப் பிடிக்காமல் இல்லை. அவன் தோற்றமும் குணங்களும் பேச்சும் அவளுக்குத் திருப்தியே தந்தன. ”தங்கம் காதலில் வெற்றி பெறவில்லை என்றால், அது தங்கத்தின் தவறு தான். சந்திரன் என்மீது அளவிலாக் காதல் கொண்டு விட்டதற்கு நானா பழி? ” என்று அவள் தன் நெஞ்சோடு கூறிக்கொண்டாள்.

சந்திரன் ராஜம்மாளைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறான் என்ற செய்தி அறிந்ததும் தங்கம் பெருமூச்செறிந் தாள். அவள் உள்ளத்தில் பொறாமையும் ஆத்திரமும் திகுதிகு" வென்று எரிந்தது.

”இந்த நோக்கத்தோடு தான் அவள் சிரித்துக் குலுக்கி அவன் கூட வலிய வலியப் பேசினாள் போலிருக்கிறது! ” என்றுதான் அவளால் எண்ண முடிந்தது.

”தங்கம், நீ என்மீது வருத்தம் கொண்டிருக்கலாம். கோபப் படலாம். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? தலைவி சிறந்தவள் என்று நம்ப வேண்டிய காதல் தலைவன் தோழி தான் நல்லவள் என்று நினைக்க நேர்ந்து விட்டால், அது யார் பிசகு? தலைவன் மீது தவறா? தலைவி பேரில் தான் தவறா? இதற்கு விடையை நீயே தான் கண்டு கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்த வரையில் நான் ஒன்று கூற விரும்புகிறேன். உனக்காக நான் எவ்வளவோ வாதாடினேன். கடைசி வரையில், தோழி நல்ல தோழியாக விளங்கவே பாடுபட்டாள். அவ்வளவு தான்” என்று ராஜம்மா எழுதினாள்.

அந்தக் கடிதத்தை ஆத்திரத்தோடு கிழித் தெறிந்தாள் தங்கம்.

சந்திரன் என்ன நினைத்தான் என்றும் தெரிந்து கொள்ள வேண்டியதுதானே? அவள் தங்கமாக இருக்கலாம். ஆனால், தங்கத்தின் தோழி வெள்ளியாக இருக்க வில்லையே! இணையில்லாத மாமணியாக அல்லவா வாய்த்து விட்டாள். அதனால் தான், தங்கத்தின் தோழியை நான் என்னுடைய தோழியாய் - துணையாய் - வாழ்வின் ஒளியாய் ஏற்றுக் கொண்டேன்" என்று அவன் எண்ணினான்.

தான் செய்த முடிவுக்காகச் சந்திரன் வருத்தம் கொள்ள நேர்ந்ததே இல்லை.
(மாத மலர், 1968)
---------------


13. சொல்ல முடியாத அனுபவம்


சுயம்புலிங்கத்துக்கு தீராத மனக்குறை. யார் யாருக்கோ என்னென்ன அனுபவங்கள் எல்லாமோ எதிர்ப்படுகின்றன; தனக்கு ரசமான, ஜோரான, சுகமான அனுபவம் ஒன்று கூடக் கிட்டமாட்டேன் என்கிறதே என்றுதான்.

நினைக்க நினைக்கக் கிளுகிளுப்பூட்டும் இனிய நிகழ்ச்சிகள். சொல்லச் சொல்ல வாயூறும் - கேட்பவர்கள் காதுகளில் தேன் பாய்ச்சும் - மற்றவர்கள் நெஞ்சில் ஆசைக் கள்ளைச் சுரக்க வைக்கும் - ஒரு சிலரது உள்ளத்திலாவது பொறாமைக் கனலை விசிறிவிடும் அற்புதமான அனுபவங்கள்.

ஐயோ, பேசிப் பேசிப் பூரித்துப் போகிறார்களே பல பேர்! இரண்டு பேர் சந்தித்தாலே, "கேட்டீரா சங்கதியை! நேற்று..." என்று ஆரம்பித்து சுவாரஸ்யமாக வர்ணிக்கிறார் ஒருவர். "போன மாசம் அப்படித்தான், பாருங்க..." என்று தொடங்கி அளக்கிறார் மற்றவர்.

திண்ணைகளிலும், விசேஷ வீடுகளில் கூடுகிறபோதும், சும்மா நாலைந்து பேர் கூடிப் பேசிப் பொழுது பேர்க்குகிற சமயங்களில் எல்லாம் - எப்போதும் எங்கும் எல்லோருக்குமே, சுவையாக எடுத்துச் சொல்வதற்கு ஜிலுஜிலுப்பான அனுபவங் கள் இருந்தன. பலப் பலருக்கும் வாழ்க்கையில் அவை நிறையவே சித்தித்ததாகத் தோன்றின.

ஆனால் அவனுக்கு அப்படிப் பெருமையாக, மகிழ்ச்சயோடு எடுத்துச் சொல்வதற்கு ஒரு மண்ணும் இல்லை.

- என்ன வாழ்க்கை வேண்டிக் கிடக்கிறது! வெறும் காஞ்ச பய வாழ்க்கை! வயது ஆனதுக்கு மட்டும் குறைச்சலில்லை. குட்டிச்சுவருக்கு ஆகறது போல, ஐம்பதைத் தாண்டிவிட்டது! பசுமையான அனுபவம், இனிமையானது, மற்றவர்கள் மத்தியிலே - ஜவுளிக்கடைக்காரன் பகட்டாக, பளபளப்பாக, வசீகரமாக எடுத்துப் பரப்புகிற ஜோர் ஜோரான துணிகளைப் போல் அனைவரையும் கவரும்படி எடுத்துச் சொல்லக் கூடிய அனுபவங்கள் ஒன்றிரண்டுசுட்ட நம்ம வாழ்வில் இல்லையே!

சுயம்புவின் நெஞ்சு ஏக்கப் பெருமூச்சை நீள உயிர்க்கும். தானாகவே அவன் மனசில் குத்தாலம் பிள்ளை அண்ணாச்சியின் நினைவு நிழலிடும்.

குத்தாலம் பிள்ளை சுவாரஸ்யமான மனிதர். அவர் இருக்கிற இடத்தில் கலகலப்பும் இருக்கும். சிரிப்பு அடிக்கடி கலீரிடும். மத்தாப்பூப் பொறிகள் மாதிரி அவரிடமிருந்து ரசமான தகவல்கள் பொங்கிப் பூத்துச் சிதறிக் கொண்டே இருக்கும். பேச்சிலே மன்னன். பாவி மனிதனுக்கு அனுபவங்கள் எங்கிருந்து எப்படித்தான் வந்து சேருமோ!

சுயம்புலிங்கத்துக்கு அது பெரிய ஆச்சரியம். குத்தாலம் பிள்ளை பேசுவதைக் கேட்கிறபோதெல்லாம், இதிலே நூத்திலே ஒரு பங்கு நமக்கு ஏற்பட்டாலும் போதுமே! மீதி நாளெல்லாம் அசை போடுவது போல் ஆனந்தமாக எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கலாமே!" என்று அவன் மனம் ஏங்கும்.

அநேகமாக ஆண்கள் அனைவரும் பொம்பிளைகள் பற்றித்தான் பேசினார்கள். தங்களுக்கு அந்த லைனில் கிடைத்த வெற்றிகள் பற்றி; எதிர்பாராது வந்து சேர்ந்த ரொமான்ஸ்கள் பற்றி, ரயில் பயணத்தில் கிடைத்த திடீர் காதல்; புதிய இடத்தில் அகப்பட்ட தொடர்புகள்; தேடிப்போன அனுபவங்கள்; ரிக்ஷாக்காரர்கள் துணையோடு நேர்ந்த உறவுகள்; பக்கத்து வீட்டில் பழுத்துக் கனிந்து தங்கள் கையில் வந்து விழுந்த உணர்ச்சிக் க(ன்)ணிகள் பற்றி எல்லாம் அலுப்பில்லாமல் சொன்னார்கள்.

சிலர் பேய்களுடன் நேரிட்ட பேட்டி பாம்பு அல்லது துஷ்ட மிருகத்தை எதிர்த்துக் கொன்றது; அபூர்வமாகக் கிடைத்த வாட்ச் அல்லது நகை அல்லது பர்ஸ் - இப்படி சந்தர்ப்பச் சூழ்நிலை களோடு விவரித்தார்கள். அதிர்ஷ்டசாலிகள்!

- நம்ம வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? பிஞ்சு போன முறத்தாலே அதை வெளும்பச் சாத்த அறுந்த பழைய செருப்பாலே அதன் மூஞ்சியிலே போட! இப்படி எல்லாம் எடுத்துச் சொல்வதுக்கு ஒரு அனுபவத்துக்குக் கூட வழி செய்யலியே அது!

சுயம்புவின் உள்ளம் காளவாயாய்க் கொதிக்கும். புழுங்கும். புகையும்.

ஒரு அனுபவம் நேரக்கூடாது? ஒரே ஒரு அனுபவம்! புதுமையானதாய்! சகஜமாக எதிர்ப்பட முடியாததாய்! நிகழ்ந்தால் என்ன?

இதுவே அவனது நித்திய, நிரந்தர ஏக்கமாக அமைந்து அவனை அலைக்கழித்தது.

சுயம்புலிங்கத்துக்கு உதவி புரிய காலம் மனம் கொண்டது போலும்!

அவனது ஊரிலிருந்து ஆறு மைல்களுக்கு அப்பால் உள்ள "ரெண்டுங் கெட்டான்" ஊருக்கு சுயம்பு போக வேண்டியதா யிற்று. அங்கே வசித்த உறவினர் அவனை வந்து போகும்படி அழைத்திருந்தார்.

அவன் போனபோது அவர் வீட்டில் இல்லை. எப்போது வருவார் என்று தெரியவுமில்லை.

அவன் சென்றது பிற்பகல் மூன்று மணிக்கு. சரி, ஐந்து மணி சுமாருக்கு வந்து பார்க்கலாமே என்று எண்ணி அவன் தெருக்களில் நடந்தான். ஒட்டலுக்குப் போனான். பிறகு ரயில்வே ஸ்டேஷனில் போய் உட்கார்ந்திருக்கலாம்; வசதிப் பட்டால் படுத்தும் கிடக்கலாம் என்று நினைத்தான். போனான்.

சுமாரான ஸ்டேஷன். அந்நேரத்துக்கு வண்டி எதுவுமில்லை. பெஞ்சுகள் காலியாகக் கிடந்தன. ஒரு சுவர் ஒரத்தில், கல்தரை மீது நீட்டி நிமிர்ந்து சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தான் ஒருவன். அருமையான காற்று. அமைதியான சூழ்நிலை.

சுயம்பு சுற்றிலும் நடந்து பார்த்தான். ஸ்டேஷன் அலுவல் அறை பூட்டிக் கிடந்தது. தொழிலாளிகளும் இல்லை. வண்டி வருவதற்கு அதிக நேரம் இருக்கும் எனத் தோன்றியது.

சுயம்பு ஒரு பெஞ்சில் அமர்ந்தான். கருங்கல் தளத்தை, செம்மண் தரையை, நீல வானை, வேப்ப மரங்களின் பசுமையை, சுவர்களின் வெண்மையை - இவ்விதமான வர்ண விஸ்தாரங்களை ரசித்தபடி இருந்தான்.

அவன் கண்களுக்கு விருந்தாக வேறு விதக் கலர் வந்து சேர்ந்தது.

பளிர் வர்ண மில் ஸாரி கட்டிய ஒரு பெண். வயது என்ன இருக்கும்? முப்பதும் இருக்கலாம், நாற்பதும் இருக்கலாம்; இதற்கு இடைப்பட்ட எதுவாகவும் இருக்கலாம். இவ்வாறு கணக்கிட்டது அவன் மனம்.

அவளைப் பார்ப்பதும் பார்க்காதது போல் நடிப்பதுமாக இருந்த அவனை நைஸாக எடை போட்டபடி நடந்து வந்து அவள் எதிர் வரிசை பெஞ்சு ஒன்றில் உட்கார்ந்தாள். அங்குமிங்கும் பார்த்தாள்.

"என்னங்க, வண்டி வர நேரமாயிடுச்சா?" என்று கேட்டாள்.

அங்கே வேறு எவரும் இல்லையாயினும், அவள் தன்னைப் பார்த்துத்தான் கேள்வியை விட்டெறிந்தாள் என்று புரிந்து கொள்ள அவனுக்கு நேரமாயிற்று.

அதற்குள் அவளே, "ஐயா, தெற்கே போற வண்டி எப்ப வரும்? நேரம் ஆயிடுச்சா?" என்று விசாரித்தாள்.

சுயம்பு அவளை நேரடியாகப் பார்த்தான். “எனக்குத் தெரியாதே. ரயில் எப்ப வரும்னும் தெரியாது" என்றான்.

அவள் சிரித்ததுபோல் பட்டது அவனுக்கு. தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.

அவள் அவனை ஒரு தினுசாக நோக்கினாள். சிறிது நேரம் அங்கேயே இருந்தான். பின், எழுந்து ஸ்டேஷன் உள்ளே போனாள்.

சுயம்பு அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வை சுற்றி நகர்ந்து, அவள் காலி செய்து போன இடத்தில் படிந்தது. வியப்புற்றது.

அந்த பெஞ்சில் ஒரு பை - சின்ன பிளாஸ்டிக் பை; நீல நிறத்தில் - கிடந்தது.

அவள் வருவாள், எடுத்துக் கொள்வாள் என்று பேசியது மனம்.

நேரம் மிக மெதுவாக ஊர்வது போல் தோன்றியது. அவன் பொறுமையைச் சோதிப்பதாகவும் இருந்தது அது.

கணிசமான நேரம் காத்திருந்து விட்டதாகப் பட்டதும் அவன் எழுந்தான். ஸ்டேஷன் உள்பக்கம் பார்த்தான். அவளைக் காணவில்லை. எங்கோ போய்விட்டாள். அவள் ரயிலுக்காக வந்தவளில்லை என்றே மனம் கூறியது. அந்த பெஞ்சு அருகே போய் அந்தப் பையை எடுத்தான்.

மீண்டும் அங்குமிங்கும் பார்த்தான். திறந்தான்.

பைக்குள் சில வெற்றிலைகளும் பாக்கும்தான் இருந்தன. ஒரு சிறு பொட்டணம். எடுத்து நோக்கினான் புகையிலை.

இவ்வளவுதானா என்றது மனம்.

ஏமாற்றத்துடன் அதைக் கீழே போட்டான்.

அதற்காகவே பதுங்கி நின்றவள் போல் வேகமாக முன் வந்தாள் அவள். "என் பையை ஏன் எடுத்தே?" என்று கேட்டபடி பாய்ந்தாள்.”

குனிந்து பையை எடுத்தாள். உள்ளே பார்த்தபடி, “ஏ, இதிலே இருந்த நோட்டு எங்கே? அம்பது ரூபா நோட்டு. நைசா அமுக்கிக்கிட்டியா?” என்றாள்.

சுயம்பு பதறிப்போனான். எதிர்பாராத அதிர்ச்சி. "அதிலே ரூபா நோட்டு எதுவும் இல்லே. வெத்திலை பாக்குதானே இருந்தது?”" என்று சொன்னான்.

“களவாணி ராஸ்கல்! மரியாதையா ரூபாயைக் கொடுத்திரு. இல்லையோ, கூச்சல் போட்டு கும்பல் கூட்டுவேன்” என்று அவள் மிரட்டினாள்.

"அதிலே ரூபாயே கிடையாது. நான் அதிலிருந்து எதையும் எடுக்கவுமில்லை” என்றான் அவன். அவன் உள்ளத்தில் ஒரு பீதி கவிந்தது. என்ன அநியாயமாக இருக்கிறதே என்று ஒரு நினைப்பு.

“ஏ மரியாதையா ரூபாயைக் கொடு. இல்லே. நீ சீரழிஞ்சு போவே” என எச்சரித்தான் அவள்.

"நான் எடுத்திருந்தால்தானே தர முடியும்?"

"இங்கே என்ன தகரால்?" கரகரத்த குரலில் கேள்வி எழுப்பியபடி ஒரு காக்கிச் சட்டைக்காரன் அங்கே வந்தான். அங்கே கூலி வேலை செய்கிறவனாக இருக்கும்.

"இந்த ஆளை சரியா விசாரி. பகலு வேளையிலேயே ஐயாவுக்கு என்னமோ மாதிரி இருக்கும்தாம். என் கையைப் புடிக்கிறாரு" என்றாள் அவள்.

சுயம்புவுக்குப் பகீரென்றது. அடிப்பாவி! பழிகாரி என்ன துணிச்சல்! என்றது மனம். “பொய்! சுத்தப் பொய்" என்று கத்தினான்.

"தெரியும்டா! நீ பெரிய யோக்கியன்! உன்னை மாதிரி ஆசாமிகதான் என்னென்னவோ பண்றானுக!" என்று சுயம்புவை நெருங்கினான் முரடன்.

“என் பேக்லேயிருந்த ரூபா நோட்டைக் காணோம். அதை இங்கே வச்சிட்டு உள்ளாற டைம் பார்க்கப் போனேன். இவன் பையைத் திறந்து நோட்டை எடுத்திருக்கான். பக்கத்திலே வந்து கேட்கிறப்போ என் கையைப் புடிக்கிறான்" என்று பழி சுமத்தினாள் அவள்.

"அப்படியாடா நாயே?" என்று சுயம்புவின் சட்டையை இறுகப் பிடித்தான் முரடன்.

சுயம்பு அரண்டு போனான்; பாவம்.

"இல்லே. அப்படி எதுவும் நடக்கலே" என்றான். அவனுக்கு தொண்டை அடைத்தது. பேச்சு சரியாக எழவில்லை.

“பொறுக்கி பொம்பளை பொறுக்கி” என உறுமி அவனை உலுக்கினான் முரடன்.

"அவன் முழிச்ச முழியே அதைக் காட்டுச்சே!” என்றாள் அவள்.

முரடன் அவன் சட்டைப் பைக்குள் கைவிட்டான். ஒரு கவர் கிடைத்தது. எடுத்துப் பார்த்தான். இருபது ரூபாய் இருந்தது. ஒரு பத்து ரூபாய் தாளும், இரண்டு ஐந்து* ரூபாய் தாள்களும்.

"இது என் பணம்" என்றான் சுயம்பு.

“சரிதாம் போடா” என்று அவனைப் பிடித்துத் தள்ளினான் முரடன். “ஊளையிடாம இடத்தை காலி பண்ணு. வாயைத் திறந்தயோ உனக்குத்தான் டேஞ்சர். இவளைக் கற்பழிக்க முயன்றேன்னு போலீஸ்லே புடிச்சுக் கொடுப்பேன்” என்றான்.

சுயம்புவின் பயம் அதிகரித்தது. அவன் கீழே விழாமல் சமாளித்து நின்றதே பெரிது. அழுகை வேறு வந்தது. சே, எவ்வளவு அவமானம். இது போதும்; மேலும் அவமானம் சம்பாதிக்க வேண்டாம் என்று எண்ணியபடி நடந்தான்.

அவளும் தடியனும் கூட்டாளிகள்னு தோணுது என்றது அவள் மனம்.

- எப்படி இருந்தால் நமக்கென்ன! நம்ம பணம் போச்சு. மானமும் போச்சு!

"அனுபவம் புதுமை!" என்ற நினைப்பு வெடித்தது அவனுள். "எதிர்பாராதது! இதுவரை நடக்காதது"

- கேவலம், கேவலம்! வாயைத் திறந்து இதை யாரிடம் சொல்ல முடியும்? பெருமையாகப் பேசப்படுவதற்கு உரிய அனுபவமா இது.

சுயம்புலிங்கம் பெருமூச்செறிந்தான்.

"கையில் காசில்லை. நடந்து நடந்தே ஊர் போய்ச் சேர வேண்டியதுதான். ரெண்டரை அல்லது மூணு மணி நேரம் ஆகும்" என்றது அறிவு.
("குங்குமம்”, 1982)
-----------------


14. நண்பர்கள்


தெற்கு வடக்காக அகன்று நீண்டு கிடந்த மேலத்தெருவின் கிளைபோல் கிழக்கு நோக்கி ஒடுங்கலாகப் பிரிந்து சென்ற நடுத்தெருவில் திரும்பி அடியெடுத்து வைத்த ஆண்டியா பிள்ளையின் நடையில் தனியொரு வேகம் சேர்ந்தது. கைலாசம் பிள்ளையை சந்திக்கப் போகிறோம் என்ற துடிப்பு, அவர் கால் செருப்பின் "டப் - டிப்ட் ஒசையிலேயே உயிரொலி கொடுப்பது போல் தோன்றியது.

"அண்ணாச்சியை பார்த்து ஒரு வருசத்துக்கு மேலே ஆகுதே. இவ்வளவு நீண்டநாள் நான் இந்தப்பக்கம் வராம இருந்ததே இல்லை. ரெண்டு மாசத்துக்கு ஒருக்க, மூணு மாசத்துக்கு ஒருதடவை நான் இந்த ஊருக்கு வந்துக்கிட்டுத்தானே இருந்தேன்? அந்த ஜவுளிக்கடை வேலையை விட்டுப்போட்டு இன்னொரு கடையிலே சேர்ந்த பிறகு எங்கேயும் போக முடியாமலே ஆயிட்டுது."

ஆண்டியாபிள்ளைக்கு பெருமூச்சு எழுந்தது. வேகம் வேகமாக நடப்பதனால் மட்டுமே வாங்கிய மேல்மூச்சு அல்ல அது...

மேலத்தெருவில் நடந்தபோதே, அதுக்கும் முந்தி பஸ்ஸில் வந்து கொண்டிருந்தபோதே, அவர் நினைப்பெல்லாம் கைலாசம் பிள்ளையைத்தான் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. இரண்டு பேருக்கும் நீண்டகாலப் பழக்கம். சுற்றி வளைத்து ஏதோ ஒருவகையில் சொந்தம் கொண்டாடுகிற உறவு என்றாலும், அதைவிட அழுத்தமான நட்பு உணர்வு இரண்டு பேருக்கிடை யிலும் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆண்டியாபிள்ளை அந்த ஊருக்கு வரும்போதெல்லாம், "அண்ணாச்சி யோவ்!" என்று கூவிக்கொண்டு கைலாசம்பிள்ளை வீட்டை எட்டிப் பார்க்காமல் போவதில்லை. அண்ணாச்சியும் அவரைக் கண்டதும் அகமும் முகமும் மலர, "வாரும் வேய்" என அன்புடன் அழைத்து, "என்ன சவுக்கியம் எல்லாம் எப்படி?" என்று விசாரிக்கத் தவறியதுமில்லை.

அதிலிருந்து பேச்சு கிளைவிட்டு, கொடிகள் பரப்பி, எப்படி எப்படியோ தழைத்து, எது எதையோ தொட்டு, சகல விஷயங்களையும் பற்றிப் படரும். உள்ளூர் சமாச்சாரங்களை அண்ணாச்சி சொல்ல; அயலூர் அக்கப்போர், தெரிந்தவர்கள் பற்றிய வம்புகள், ரசமான கிசுகிசுப்புகள், மற்றும் பத்திரிகைச் செய்திகள் என்று ஆண்டியாபிள்ளை கூற, பேச்சு மணிக் கணக்கில் வளரும்.

இரண்டு பேரும் சுவாரஸ்யமாகப் பேசி மகிழ்வார்கள். காப்பி போட்டுக் கொண்டு வரும்படி அண்ணாச்சி உத்தரவிடுவார்.

காப்பி வரும். எந்த நேரமானாலும் கடுங்காப்பி"தான் - பால் சேர்க்கப்படாத கறுப்புக் காப்பி. அது ஒரு தனிச்சுவை கொண் டிருக்கும். மதினி கருப்பட்டியை தூக்கலாகவே போட்டிருப் பாள். ரொம்ப இனிச்சிருக்கும் பானகம் அது என்றாலும் ஆண்டியா பிள்ளை ருசித்துப் பருகுவார். சுவை பெரிதல்ல. அதில் அருவமாகக் கலந்திருக்கிற அன்புதான் முக்கியம். இது தம்பியா பிள்ளைக்குத் தெரியும்.

"தரித்திரம் புடிச்ச இந்த ஊரிலே பால் கிடைக்கிறதே இல்லை. தயிரு, மோரு எதுவுமே கிடைப்பதில்லை. அதனாலேதான் கடுங்காப்பி" என்று அண்ணாச்சி சொல்லுவார் - ஒவ்வொரு தடவையும் சொல்லுவார்.

"அதனாலென்ன, கடுங்காப்பிதான் டேஸ்ட். நல்லதும் கூட" என்று ஆண்டியாபிள்ளை கூறுவார்.

கிராமத்தில் உள்ள கறவை மாடுகளின் பால் எல்லாம் பண்ணையில் கறக்கப்பட்டு பக்கத்து டவுண்களுக்குப் போய்விடுவதால், ஊரிலே பாலுக்குத் தட்டுப்பாடு என்கிற உண்மையும் ஒவ்வொரு முறையும் அவர்களது பேச்சில் அடிபடும்.

இருந்தாலும், ஊரில் பால் தாராளமாகவே கிடைக்கிற நிலை இருந்தால்கூட, அண்ணாச்சியின் நிரந்தரமான பற்றாக்குறை பட்ஜெட் காப்பிக்குப் பால் வாங்குவதை அனுமதிப்பதில்லை. அதனால் என்ன?

இந்த உண்மையை ஆண்டியா பிள்ளையின் மனக்குறளி தானாகவே கூறிக் கொள்ளும். உரத்த சிந்தனையாக அல்ல.

கைலாசம்பிள்ளை தீனிப்பிரியர். சாப்பாட்டைவிட, நொறுக்குத் தீனி அவருக்கு, சீடை, தேன்குழல் என்று ஏதாவது எப்பவும் ஸ்டாக் இருந்து கொண்டேயிருக்கும். அது போக திடீரென்று நினைத்துக் கொண்டு, "ஆமைவடை பண்ணு, "வாழைக்காய் பஜ்ஜி செய்", "உருளைக்கிழங்கு போண்டா செய்" என்று விருப்பம் தெரிவித்துக் கொண்டேயிருப்பார். அவர் வீட்டு மதினியும் அலுக்காமல் சலிக்காமல் அவருடைய ஆசைகளை நிறைவேற்றி வருவாள். அவள் கைக்கு ஒரு தனி ராசி. அவள் எதைச் செய்தாலும் அது தனி ருசியும் மணமும் பெற்றிருக்கும்.

இவை தவிர, வேர்க்கடலை என்றால் - சிறிய கடை வைத்து உள்ளூரின் சின்னச் சின்னத் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் சிறிதளவு லாபம் பெற முடியும் என்பதை அனுபவ பூர்வமாக நிரூபித்துக் கொண்டிருந்த பிச்சையாப்பிள்ளை சொன்னது போல - "கைலாசம்பிள்ளைக்கு உசிரு!" - அதுவும் எப்பவும் வீட்டில் இருக்கும்.

ஆண்டியா பிள்ளையும் - அண்ணாச்சியும் பேசி மகிழ்கிற வேளையில், வீட்டில் இருக்கிற தீனி தினுசுகள் தாராளமாக வந்து சேரும். வேர்க்கடலைக்குப் "பக்கமேளமாகக் கருப்புக் கட்டித்துண்டு.

நேரம் போவதே தெரியாது. சில சமயம் ஆண்டியாபிள்ளை, துண்டை விரித்துப் படுத்துப் பேசுகிறவர் அப்படியே தூங்கிப் போவதும் உண்டு. தூங்குகிறவரை அண்ணாச்சி தட்டி எழுப் மாட்டார்.

"பாவம், அலுப்பு! நல்லாத் தூங்கட்டும்" என்று விட்டு விடுவார். ஆண்டியாபிள்ளை தானாக விழிப்பு வந்து எழுந் உட்கார்ந்து, "அசந்து தூங்கிட்டேன் போலிருக்கே! இன்னமேதான் சாப்பிடணும்" என்பார்.

அண்ணாச்சி எவ்வளவு உபசரித்தாலும் ஆண்டியாபிள்ளை அங்கே சாப்பிட மாட்டார். “சொந்தக்காரங்க வீட்டுக்கே போய்விடுவார்.

இந்த நட்பு பலப்பல வருடங்களாகத் தொடர்ந்து வளர்வது. கைலாசம்பிள்ளை வீட்டை விட்டு வெளியே போவது கிடையாது. அதிலும், அவருக்கு ஆஸ்துமா கடுமையாகி-விட்ட பிறகு விட்டின் தெரு வாசல்படியைத் தாண்டியது இல்லை. ஆகவே, உறவினர் வீட்டுக்கல்யாணம், சாவு, ஏதேனும் விசேஷம் என்று அக்கம்பக்கத்து ஊர்க்களுக்குப் போய் வருவதும் நின்றுவிட்டது.

ஆண்டியாபிள்ளை மாதிரி வீடு தேடி வருகிறவர்கள்தான் சூரிய வெளிச்சமும், புதிய காற்றும்போல, அவரது சாதாரண நாட்களுக்கு விசேஷ உயிர்ப்பு தந்து கொண்டிருந்தார்கள். அனைவரிலும் ஆண்டியாபிள்ளைக்கு அண்ணாச்சியிடம் தனிப் பிடிப்பு; ஒரு தீவிரமான பற்றுதல். தனித்துச் சொல்லும்படியான காரணம் எதுவும் கிடையாது. உள்ளத்தில், உணர்வில், இயல்பாகத் தோன்றி வலுப்பெற்று விட்ட அன்பின் பிணைப்பு.

அதனால் அண்ணாச்சியை நீண்ட காலம் பாராமல் இருந்து விட்டது - அவருடன் பேச்சுப் பரிமாற்றம் செய்து ஊர் விஷயங்களைத் தெரிந்து கொள்ளாமல் போனது - பெரும் குறைவாகவே பட்டது அவருக்கு. இது அவர் உள்ளத்தில் உறுத்திக் கொண்டேயிருந்தது.

அந்த உணர்வுதான் அவரை பஸ்ஸிலிருந்து இறங்கியதும் நேராக கைலாசம்பிள்ளை வீட்டுக்கு உந்தித் தள்ளியது.

தெரு வாசல் படியில் கால் வைக்கும் போதே, "அண்ணாச்சி யோவ்” என்று குரல் கொடுத்தார் ஆண்டியாபிள்ளை.

திண்ணையில் இருந்த தம்பி சோம சுந்தரம், "வாங்க!” என்று அவரை வரவேற்றான். "உட்காருங்க!" என்றான். அவரை ஒருமாதிரியாகப் பார்த்தான்.

தோளில் கிடந்த துண்டை எடுத்து, திண்ணைப் பட்டியக் கல்லில் தூசி தட்டிவிட்டு, துண்டை மடித்தவாறே போட்டு அதன்மீது உட்கார்ந்தார் ஆண்டியாபிள்ளை. “பெரியவாள் வீட்டுக்குள்ளே என்ன செய்றாக? வெளியே காணோம்?" என்று கேட்டார்.

"உங்களுக்குத் தெரியாது? அண்ணாச்சி இல்லை. இறந்து போயிட்டாக..."

ஆண்டியாபிள்ளையின் முகத்தில் ஓங்கி அறைந்ததுபோல் இருந்திருக்க வேண்டும். திடுமென நெஞ்சில் குத்து விட்ட மாதிரி….

அவருக்கு மூச்சே நின்றுவிடும் போல் தோன்றியது. அதிர்ச்சி அவர் முகத்தில் வெளிச்சமாயிற்று. நம்ப முடியாதவர்போல் கேட்டார்:

"ஆங். என்னது?”

"அண்ணாச்சி இறந்து எட்டு மாதங்கள் ஆச்சு.”

ஆண்டியாபிள்ளை திகைப்புடன், “என்ன செய்தது..?" என்றார்.

"ஆஸ்துமாதான். ரொம்பவும் கஷ்டப்படுத்தி விட்டது.”

“சே, எனக்குத் தெரியாதே” என்று முணுமுணுத்தார் பிள்ளை. "அவாளை பார்க்க வராமலே போயிட்டேனே!”

குறுகுறு என்று உட்கார்ந்திருந்தார். வேறு எதுவும் சொல்லாமலே தரைமீது படுத்தார். கண்களை மூடிக் கொண்டார்.

சோமு அவரையே கவனித்தபடி இருந்தான். அவர் முகம் ஏதோ வேதனையைக் காட்டுவதாக அவனுக்குத் தோன்றியது. இந்தச் செய்தி அவருக்கு அதிர்ச்சி தந்து விட்டது என்று எண்ணினான்.

நேரம் ஊர்ந்து கொண்டிருந்தது. அவரை குரல் கொடுத்து உலுக்கலாமா என்று அவன் தயங்கினான்.

சட்டென்று அவரே நிமிர்ந்து உட்கார்ந்தார். "எனக்கு என்னமோ ஒரு மாதிரி வருது..." என்று மென் குரலில் சொன்னார். “நீத்தண்ணி இருக்குமா? ஒரு டம்ளர் கொடேன்” என்றார்.

சோமு வீட்டினுள் போய், பழஞ் சோற்றுப்பானையில் உள்ள தண்ணிரை ஒரு சிறுசெம்பில் எடுத்து வந்து அவரிடம் தந்தான். உப்பு சேர்க்கப்பட்டிருந்த அந்த நீராகாரத்தை அவர் குடித்தார். செம்பை கீழே வைத்துவிட்டு, மவுனமாக அமர்ந்திருந்தார்.

பிறகு எழுந்து, துண்டை உதறித் தோள்மீது போட்டுக் கொண்டு, “வாறேன்” என்று முனகியபடி நடந்தார். வந்தபோது இருந்த மிடுக்கு இப்போது இல்லை அவர் நடையில், நடப்பதே சிரமமான வேலையாக அமைந்து விட்டதுபோல் தோன்றியது.

சோமு அவருக்காக அனுதாபப்பட்டான். "பாவம்" என்று கூறிக் கொண்டான்.

அன்று பிற்பகலில் "ஆண்டியா பிள்ளை செத்துப்போனார்" என்ற செய்தி அவனுக்கு அதிர்ச்சியூட்டும் தகவலாகத்தான் இருந்தது.
("சிறுகதை களஞ்சியம், 1985)
----------


15. வாழ விரும்பியவள்


"மாதவிக் குட்டி பார்ப்பதற்கு மான்குட்டி மாதிரி இருக்கிறாள். பூச்செண்டு போல் குளுமையாய், வாணமயமாயத திகழ்கிறாள். அதெல்லாம் சரிதானப்யா. அவள் மோகனப் புன்னகையையும், காந்தக் கண்ணொளியையும், கண்டு நீர் தப்பித் தவறி அசட்டுத்தனமாக நடந்து கொள்ளாதீர். உண்மையில் அவள் நெருப்பு ஐயா, சுட்டெரிக்கும் நெருப்பு!"

இப்படித்தான் எச்சரிப்பார் கிளார்க் பரமசிவம். சக குமாஸ்தாக்களில் எவராவது ஒருவர் அவரிடம் மாதவியைப் பற்றி அவ்வப்போது பேச்செடுப்பார்கள். அல்லது, அவரைக் கண்டு பேச வருகிறவர்களில் யாரேனும் மாதவிக் குட்டியின் "நிலவு செய்யும் முகத்தையும், காண்போர் நெஞ்சில் குறுகுறுப்பு ஏற்படுத்தும் விழிகளையும், நினைவில் நிலையாகப் பதிந்து விடுகிற முறுவலையும் பார்த்துவிட்டு, அவள் நினைவினால் அலைப்புண்டு, அப்புறம் பரமசிவத்திடம் அவளைப் பற்றிச் சுவாரஸ்யமாகப் பேச ஆரம்பிப்பார்கள். அப்போதெல்லாம் அவர் தனி ரகச் சிரிப்பை முகத்திலே படரவிட்டுத் தனது கருத்தை அழுத்தமாக எடுத்துச் சொல்வார்.

பரமசிவம் பணி புரிந்த அலுவலகத்தில் பல பிரிவுகள். ஒவ்வொரு பிரிவிலும் நாலைந்து ஆண்களோடு ஒன்று அல்லது இரண்டு பெண்களும் குமாஸ்தாக்களாக வேலை செய்து வந்தார்கள். அவர்கள் எல்லோருமே அழகிகள் என்று சொல்லிவிட முடியாது, ஆனால் அனைவரும் ஒய்யாரமாக அழகு படுத்திக் கொள்ளத் தெரிந்தவர்கள்.

பெண் குமாஸ்தாக்கள் வேலை பார்க்கிற இடத்தில் சரிநிகர் சமானமாக, ஆண்களும் வேலை செய்ய வேண்டியிருந்ததன் மூலம வேலையின் தரம் எப்படி இருந்தது; ஆண்களின் உழைப்புத் திறம் எத்திசையில் எவ்வாறு வேலை செய்தது; பெண் சக்தி யார் யாரை எந்த எந்த விதமாகப் பாதித்து வந்தது என்பன போன்ற விவரங்கள் யாவராலும் சேகரிக்கப்பட வில்லை. ஆயினும் ஓர் உண்மை எளிதில் பளிச்சிடத்தான் செய்தது.

பெண்கள் மேனி மினுக்கிகளாகவும், அலங்கார வல்லியரா கவும், நாளுக்கொரு தினுசுப் புடவை கட்டியும், சதா வாசன அலைகளைப் பரப்பியும், இரண்டு மூன்று பேர்களாகச் சேர்ந்து அர்த்தமில்லாமல் கிளுகிளுத்துச் சிரித்துக் கொண்டும் ஆபீசுக்கு வந்தார்கள். அவர்களது புறத் தோற்றத்தில் காணப்பட்ட அழகும் சுத்தமும் அவர்கள் செய்த வேலைகளில் இருக்குமா - இருந்ததா - என்று உறுதியாக யாரே சொல்ல முடியும்?

அவர்கள் பார்வையில் பட்டும், அவர்களுக்கு அருகே உட்கார்ந்தும், அவர்கள் பார்க்கட்டுமே என்பதற்காகவும் ஏதோ முக்கிய காரியம் இருப்பதுபோல் அங்கும் இங்குமாக, ஒர் அறையிலிருந்து இன்னோர் அறைக்குமாய் சும்மா சும்மா போய் வந்து கடமை ஆற்றிய ஆண்குமாஸ்தாக்கள அசமஞ்சங்களா கவும், பித்துக் குளிகளாகவும், ஏழை எளியவர்கள் போலவும், “கேவலம் குமாஸ்தாக்கள்" ஆகவும் காட்சி அளிக்கலாமா? அப்படிக் காட்சிதரத்தான் இயலுமா அவர்களால்?

ஆகவே, ஒவ்வொருவரும் "ஜம்" எனறு "ஜோர்" ஆகவும், "டீக்" ஆகவும், "டிப்டாப்" ஆகவும் ஆடை அலங்காரம் செய்து கொண்டு வந்தார்கள். சிலர், சினிமாவில், நடிக்க வேண்டிய வர்கள் தப்பித் தவறி, சாரமற்ற வேலைகள் நடைபெறும் அலுவலகத்தினுள் அடி எடுத்து வைத்து விட்டவர் போல் தோன்றினார்கள்.

இதனால் என்ன ஆயிற்று என்று கேட்டாலோ, காரியால யங்கள் கண்ணுக்கு இனிய காட்சிகளாகத் தோற்றம் காட்டலா யின. ஆபீஸ் கட்டிடங்களுக்கே உரித்தான அழுமூஞ்சித் தோற்றமும் ஒருவித விசேஷ நாற்றமும் இருந்த இடம் தெரியாமல் ஓடி விட்டன.

சுமார் அழகு பெற்ற நாரீமணிகள் சஞ்சரித்த பகுதிகளின் நிலையே இது வென்றால், மாதவிக்குட்டி போன்ற அழகான பெண்கள் வேலை செய்யும் பிரிவுகள் எப்படி இருக்கும் என்று தெரியாதா என்ன!

மாதவிக்குட்டி நல்ல அழகி. இவ்வளவு சொன்னாலே போதும். அவள் மல்கோவா மாம்பழம் போல் இருந்தாள் என்ற தன்மையில் வர்ணிக்க ஆரம்பித்துப் பழக்கடைக்கும் - அவள் கன்னங்களில் ரோஜாப்பூ சிரிக்கும், கண்களில் கருங்குவளை மின்னும் என்னும் தினுசில் தொடங்கிப் பூக்கடைக்கும் - அவள் மேனி மெருகில் பாதாம் அல்வாவைக் காணமுடியும், சரும மென்மையில் வெண்ணெய் மினுமினுக்கும், அவள் குரலில் குலோப் ஜான் ஊறிக் கிடக்கும் ஜீரா இழையும் என்றெல்லாம் விவரித்து மிட்டாய்க் கடைக்கும் - விளம்பரம் செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை தான்.

மாதவிக் குட்டி வெறுமனே பார்த்தாலும் போதும். எதிரே நிற்பவன் குற்றாலத்தின் குளுகுளு சாரலில் சுக உலா கிளம்பியவன் போல் ஆகி விடுவான். ஆனால், அவள் சுமமா பார்க்க மாட்டாளே! மை பூசப்பட்டிருக்கிறதோ இல்லையோ எனும் ஐயத்தைத் தூண்டும்படி ஒரு கருமை வரையிட்ட மாவடு வகிர் அன்ன” நெடுங்கண்கள் சுடரிட, இதழ்களில் சிறு நகை தவழ, அவள் "என்ன விஷயம் "என்ன விஷயம்?" என்று ஆர்வத்தோடு கேட்பவள் போல் பார்வை எறிவாள். அப்போது குற்றாலம் அருவியில் குளிக்கிற அற்புத இனிமை அல்லவா பிறக்கும்!

மாதவி சகஜமாகச் சிரித்துப் பேசும் சுபாவம் உடையவள். புதிதாக அறிமுகப்படுத்தப் பெறுகிற போது கூட, "ரொம்ப நாள் பார்த்துப் பழகியவர்கள் போல் முகம் நிறைந்த சிரிப்பு வழங்குவாள். வெகு விரைவிலேயே தாராளமாகப் பேச்சுக் கொடுத்து, பேச்சு வாங்க ஆரம்பித்து விடுவாள். அவள் முன்னால் நின்று உரையாடுவதே இனிய அனுபவமாக, சுசிருசியான குளிர் பானத்தைச் சுவைத்துப் பருகுவது போன்ற இன்பமாக அமையும்.

அந்த இன்பத்தை இழக்க மனம் இல்லாதவர்கள் தான் அவ் அலுவலகத்தில் மிகுதியாக இருந்தனர். பொதுவாகவே அங்குள்ளவர்களுக்கு அதிகமான வேலை கிடையாது! பத்தரை மணிமுதல் மாலை ஐந்து மணிவரை ஆபீஸ் நேரம்; நடுவில் ஒரு மணி நேரம் இடைவேளை என்ற திட்டம் இருந்தது என்னவோ உண்மை தான், ஆனால் ஒவ்வொருவரும் இடைக்கிடையே "ஓய்வு நேரம்" தேடிக் கொள்ளத் தயங்கவே இல்லை. சிற்றுண்டி விடுதியில் சிறிது நேரத்தைப் போக்குவார்கள். பெட்டிக்கடை அருகில் நின்று சிகரெட் பிடிப்பார்கள். நண்பரைக் கண்டு பேசச் செல்வது போல் ஒவ்வோர் அறையினுள்ளும் புகுந்து அங்குள்ள பெண்கள் முன்னே தங்கள் உடல் அழகையும், ஆடைப் பகட்டையும், அறிவுப் பிரகாசத்தையும் வெளிச்ச மிடுவதில் உற்சாகம் காட்டுவார்கள்.

பரமசிவத்திடம் சந்தேகத் தெளிவு பெற வருகிறவர்கள் போல் எட்டிப் பார்க்கிறவர்களும், "உங்களைப் பார்த்துப் போகலாமென்று வந்தேன்" என்று கூறிக் கொண்டே வருகிறவர்களும், உண்மையில் மாதவி எனும் சுடரினால் கவரப்படுகிற மனித விட்டில்கள் தாம் என்பதைப் பரமசிவமே நன்கு அறிவார். மாதவிக்கும் ஆண்களின் போக்கைப்புரிந்து கொள்ளத் தெரியாதா என்ன?

அவளுடைய போக்கை தவறாகப் புரிந்துகொண்ட ஆண்கள் அவள் மனம் தங்களிடம் நிலைபெற்று விட்டது என்றே எண் ணினார்கள். ஒவ்வொருவரும் தானே மாதவியின் பிரியத்துக்கு இலக்கானவர் என்று கருதியது மனித சுபாவத்தை எடுத்துக் காட்ட உதவியது.

ரகுநாதன் ஒரு நாள் டிபன் சாப்பிட்டு விட்டு வரும் போது தன் வாயில் ஒரு பீடாவும் கையில் ஒரு பீடாவுமாக வந்தான். உதடுகள் சிவக்க, வாய் நறுமணம் பரப்ப, முகம் மலர வந்தவனைச் சிரிக்கும் விழிகளால் வரவேற்றாள் மாதவி. குறுநகை விருந்து தந்தாள்.

“உங்களுக்குப் பீடா வேண்டுமா மாதவி?” என்று கேட்டான் ரகுநாதன்.

“கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன்?" என்று கேள்வியில் பதிலைப் பொதிந்து கொடுத்தாள் அவள்.

அவள் வாங்கிக் கொள்வாளோ மறுத்து விடுவாளோ என்ற சலன சித்தத்தோடு அதிகப்படியான பீடா வாங்கி வந்தவன் இப்பொழுது ஆனந்தம் அடைந்தான். இதோ!" என்று கையை நீட்டினான்.

தந்தத்தினால் கலை அழகோடு உருவாக்கப்பட்டன போன்ற மெல்லிய விரல்கள் முன் வந்து, பூவிதழ்கள் போல் குவிந்து, பீடாவை எடுத்ததை அவன் ரசித்தான். அவள் கைமேலே சென்று, செவ்விய உதடுகளுக் கிடையே அதைத் திணித்ததை யும், கண்கள் சுழன்றதையும், முகத்தின் மாறுதல்களையும் ஆசைக் கண்களால் அள்ளி விழுங்கியவாறே நின்றான் அவன். அவள் கண்களில் ஒளிர்ந்த தனிச்சுடர் அவனுக்காகவே பிறந்தது அல்லவோ!

அவன் உள்ளம் கிளுகிளுத்தது. "மாதவிக்கு என் மீது ஆசை தான். இதில் சந்தேகமேயில்லை" என்று உறுதியாக நம்பினான் அவன்.

"உனக்கு விருப்பமானதை எடுத்துக் கொள்ளலாம்" என்று சொல்லி, மூடியிருந்த விரல்களை அகலத் திறந்தான் பால கிருஷ்ணன், ஒரு சமயம்.

உள்ளங்கை நிறைய மிட்டாய்கள். பளிச்சிடும் வர்ணங்கள் மினுக்கும் கண்ணாடித் தாள்களில் அடங்கிய அருமையான இனிப்புகள்!

பொன்வளை ஒன்று அழகு படுத்திய எழிலான கை முன் வந்து ஒரே ஒரு மிட்டாயை எடுத்துக் கொண்ட போது, "பொன் அவிர் மேனி மங்கை" என்பது மாதவிக்குத் தான் பொருந்தும்; தங்கம் என்றால் தங்கமே தான் என்று அவன் மனம் பேசியது.

"உனக்கு மிட்டாய் பிடிக்குமா. மாதவி?" எனப் பரிவுடன் விசாரித்தான் அவன்.

"ஓ பேஷாக!" என்று இழுத்தாள் அவள். ஒரு சொல்லை உச்சரித்தால் "இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே" என்பதை வீணான கவிப்பிதற்றல் என்று அடித்துப் பேசும் பாலகிருஷ்ணன் "கவி வாக்கில் உண்மை இல்லாமல் இல்லை" என உணர்ந்தான் இப்போது.

அவள் கண்களை ஒரு தினுசாக ஒடுக்கிக் கொண்டு, சிறுநகை பூத்து "எனக்கு சாக்லட் தான் பிடிக்கும். மில்க் சாக்லட் இருந்தால் போதும். எனக்குச் சாப்பாடே வேண்டாம்" என்று அறிவித்த போது, பாலகிருஷ்ணன் இந்த உலகத்திலேயே இல்லை!

சினிமாக்காரர்கள் சில சமயங்களில் "ட்ரீம் லீக்குவன்ஸ்”" என்று படம் பிடித்துக் காட்டுவார்களே காதலர்களின் கந்தர்வலோக சஞ்சாரம் பற்றி, அப்படிப்பட்ட ஒரு காட்சியில் - பலூன்கள் மிதக்க, புகைச் சுருள்கள் நெளிய, விசித்திரமான இலைகளும் கொடிகளும் துவள, விந்தைப் பூக்கள் சிரிக்க அற்புதமாகத் திகழும் ஒரு கனவு உலகத்தில் - மாதவியோடு அவனும் திரிவதாக மயங்கி விட்டான்.


அதன் பிறகு கேட்பானேன்? அடிக்கடி மாதவிக்கு "மில்க் சாக்லட்" கிடைத்தது. அவள் நாவில் சாக்லட் இளக இளக, அவளது உள்ளமும் தன்பால் உருகி ஓடிவருகிறது என்றே பாலகிருஷ்ணன் நம்பினான்.

இந்த விதமாக ரகுநாதனும், பால கிருஷ்ணனும், சிவப்பிரகாச மும், சொக்கலிங்கமும், மற்றும் ஒன்றிருவரும் எண்ணிக் கொண்டு. ஆகாசக் கோட்டை கட்டுகிற அல்நாஷர்களாக அலைவதைக் கண்டும் காணாதவர்போல் இருந்தார் பரமசிவம். இளிச்சவாய் சுப்பன்கள்! ஒரு நாள் சரியானபடி பாடம் படிக்கத் தான் போகிறார்கள்!" என்று அவர் மனக் குறளி சிரிக்கும்.

அந்த நாள் வரத்தான் செய்தது.

அன்று இளிச்சவாய் சுப்பர்கள் மட்டுமே பாடம் கற்றுக் கொண்டார்கள் என்றில்லை. சிரித்துப் பேசிச் சிங்காரமாய் பொழுது போக்கிய "திட சுப்பி"யும் ஒரு பாடம் கற்றுக் கொண்டாள்.

சில நாட்களில் மாலை வேளைகளில் ஆபீஸர் காரியலாயத் தில் அதிக நேரம் தங்கி விடுவது உண்டு. அவர் கிளம்பிச் சென்ற பிறகே குமாஸ்தாக்கள் வெளியேற வேண்டும். வினாகக் கால நஷ்டம் உண்டு பண்ணுகிற ஆபீஸரை ஏசியாவது அவர்கள் வேலை செய்வது போல் பம்மாத்துப் பண்ணிக் கொண்டிருப்பார்கள்.

அன்று ஆபீஸர் ஆறே கால் மணிக்குத்தான் போனார். மேஜை மீது கிடந்த “குப்பைகளை எல்லாம் அள்ளி டிராயருக்குள் திணித்து விட்டு, குமாஸ்தாக்கள் புறப்படுவதற்கு ஆறரை மணி ஆகிவிட்டது.

ஆறு ஆறேகால் மணிக்கே இருள் பரவி விடுகிற - "பகல் பொழுது குறைவாகவும் இராப் பொழுது அதிகமாகவும் உள்ள" - காலம் அது. ஆபீஸின் அறைகளுக்குள் விளக்குகள் ஒளி சிந்தி அழுது கொண்டிருந்தாலும், வராந்தா, மாடிப்படி, சில திருப்பங்கள் போன்ற இடங்களில் வெளிச்சமே இல்லை.

மாதவி வேலை செய்யும் இடம் மாடியில் இருந்தது. அவள் வேகமாக வந்து படிக்கட்டுத் திரும்பினாள். "மாதவி! உனக்காகத் தான் காத்திருக்கிறேன்" என்ற குரல் கரகரத்ததும் அவள் திடுக்கிட்டாள்; நின்றாள். அதற்குள் ஒரு கரம் அவள் கையைப் பற்றி அவளை அருகே இழுக்க முயன்றது. இடுப்பில் வளைந்து சுற்ற நீண்டது.

இன்று மில்க் சாக்லட் மட்டுமல்ல; ஹேஸல்நட் சாக்லட்டும் கொண்டு வந்திருக்கிறேன். இப்படி நாம் ஜாலியாக பீச்சுக்குப் போகலாம்….."

பேசியது பாலகிருஷ்ணன் என்பதை முதலிலேயே புரிந்து கொண்ட மாதவியின் உடல் படபடத்தது. அவள் இதயத்தில் பதைபதைப்பு. "சீ போ!” என்று சீறினாள் அவள். அவனைத் தள்ளிவிட முரண்டினாள்.

அவன் முகம் அவள் முகம் நோக்கித் தாழ்ந்து கொண் டிருந்தது. திடுமென, "பளார்" என்று ஓர் அறை விழுந்ததும் அது அதிர்ச்சியோடு பின்வாங்கியது.

"சீ மிருகம்!” என்று தன் வெறுப்பு முழுவதையும் திரட்டி வீசிவிட்டு, அவனை வலுவுடன் ஒதுக்கித் தள்ளிய மாதவி வேகமாகப் படிகளில் இறங்கினாள்.

அப்பொழுது தான் மாடிப்படியில் ஏற அடி எடுத்து வைத்த ரகுநாதன் "ஏன் மாதவி இவ்வளவு அவசரம்?" என்று கேட்டான்.

"சீ போடா!” என்று காறித் துப்பி விட்டு ஓடலானாள் மாதவி. ரஸ்தாவை அடைந்ததும் எதிர்ப்பட்ட முதல் டாக்சியை நிறுத்தி, அதில் ஏறிக்கொண்ட பிறகு தான் அவள் பயம் சிறிது தணிந்தது. ஆயினும் உள்ளப் பதைப்பு ஒடுங்கவில்லை.

"மிருகங்கள்! வெறிபிடித்த மிருகங்கள்" என்று முணுமுணுத் தாள் அவள். தாராளமாகப் பேசிப் பழகினேன் என்பதற்காக இப்படியா நடந்து கொள்வது? சீ" என்று குமைந்து கொதித்தது அவள் உள்ளம்.

"எல்லோரும் கெட்ட எண்ணத்தோடு பழகுகிறவர்கள்தாம் என்பது உனக்கு இப்பொழுது தான் புரிகிறது. பெண் ஒருத்தி சிரித்துப் பேசினால் அதன் பின் வேறு கருத்து பதுங்கிக் கிடக்கும் என்று இவர்கள் ஏன் எண்ணவேண்டுமோ, எனக்குத் தெரியவில்லை. ஃபிரண்ட்ஸ்களாகப் பழக அவர்கள் மனம் இடம் தராது போலிருக்கு. எப்பவும் வேறு ரக நினைப்புகள் தான் போலிருக்கு."

இந்த ரீதியில் அவள் மனம் புழுங்கிப் புகைந்தது. அவ் அலுவலகத்தில் இனி கால் பதிக்கப் போவதில்லை என்று தீர்மானித்த பிறகே அவள் உள்ளத்தில் சிறிது அமைதி படர்ந்தது.

மாதவிக்குட்டி தனது வேலையை ராஜிநாமா செய்து விட்டாள்; தாங்கள் இருக்கிற திசையை எட்டிப் பார்க்கவே மாட்டாள் என்பதை அறிந்ததும், பாலகிருஷ்ணன் வகையறா மனம் போன போக்கில் விமர்சனம் கூறுவதில் மகிழ்வுற்றனர்.

"ஏ ஒன் ஏமாற்றுக்காரி! சரியான மினுக்கி! முதல்தர பட்டர்ஃபிளை!" என்று வயிற்றெரிச்சலோடு முனகினான் ரகுநாதன்.

பாலகிருஷ்ணன் "பச்சையான வார்த்தைகளில் வசைபாடித் தன் ஆத்திரத்தைத் தணிக்க முயன்றான். "தேவடியாள், பொறுக்கி" என்றெல்லாம் அர்ச்சனை செய்தான்.

"பசப்புக்காரி. மயக்கிப் பிடுங்கித் தின்கிற வஞ்சகி" என்றே எல்லோரும் அவளைப் பற்றி முடிவு கட்டினர்.

"மாதவிக்குட்டி உங்களை எல்லாம் ஏமாற்றி விட்டாள் என்பது சரியாக இருக்கலாம். ஆனால் அவ்வாறு ஏமாற்றும்படி தூண்டியதே நீங்கள் தான்" என்று பரமசிவம் புன்முறுவலோடு சொன்னார்.

"நன்றாக இருக்கிறதே நீங்கள் சொல்வது! நாங்கள் கொடுத்ததை எல்லாம் வாங்கி மொக்கு மொக்கென்று மொக்கினாளே அந்தத் தடிச்சி! மிட்டாய் கொடுத்தால், மில்க் சாக்லட் நன்றாக இருக்கும் என்றும், சாக்லட் சப்ளை செய்தால் ஐஸ்கிரீம் பிடிக்கும் என்றும் சொல்லி, தனக்குப் பிடித்ததைக் கேட்டு வாங்கித் தன் வயிற்றை ரொப்பிக் கொண்டிருந்தாளே. நாங்களா அப்படி எல்லாம் செய்யும்படி சொன்னோம்?" என்று சடபடவெனப் பொரித்து தள்ளினான் பாலகிருஷ்ணன்.

"அவள் மனசைக் குளிப்பாட்டி, அவள் உள்ளத்தில் இடம் பிடிப்பதற்காகத் தானே நீங்கள் போட்டி போட்டு அவ்விதம் செய்தீர்கள்? உபசரித்து, நல்ல வார்த்தை சொல்லி, நீங்களாக வாரிக் கொடுக்கிற போது, வேண்டாம் என்று யார் தான் மறுப்பார்கள்? மாதவிக்குத் தினசரி ஸ்வீட்டும், ஐஸ்கிரீமும், சாக்லட்டும் வாங்கித் தின்னவேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்படி எல்லாம் தின்ன ஆசைப் பட்டால் வீடு விட்டுப் போகும் மகளே; நமக்குக் கட்டுபடி ஆகிவராது என்று அவளுடைய அம்மா சொல்லியிருப்பாள். சுலபமாகச் சிரிப்பையும் பார்வையையும் இனிய பேச்சையும் கொண்டே அவற்றை எல்லாம் பெற்று விட முடியும் என்பதை அவள் கண்டு கொண்டாள். கிடைக்கிற வரையில் அனுபவித்து மகிழலாமே என்று துணிந்தாள். அவளுக்குக் கொடுப்பதில் உங்களுக்கும் ஓர் இன்பம் ஏற்பட்டது. இல்லை என்று நீங்கள் மறுக்க முடியாது. அப்புறம் அவளை ஏசுவானேன்?" என்றார் பரமசிவம்.

மற்றவர்களால் அவர் பேச்சை மறுக்க முடியவில்லை. எனினும், அவர்களுடைய மனக்கசப்பை மாற்றுவதற்குத் தேவையான சக்தியை அவ்வார்த்தைகள் பெற்றிருக்க வில்லை தான்.
("கலாவல்லி, 1965)
------------


16. ஒரு காதல் கதை


அப்பொழுது நான் தூங்கவில்லை - தூக்கக் கிறக்கத்திலே தோன்றிய சொப்பனமாக இருக்கும் என்று அதைத் தள்ளி விடுவதற்கு.

உண்மையைச் சொல்லப் போனால் அப்போது நான் விழித்திருக்கவும் இல்லை; கண்களை மூடிக்கொண்டு, யோசனையில் ஆழ்ந்து கிடந்தேன், முதுகெலும்பு இல்லாத ஜீவன் மாதிரி நாற்காலியில் சரிந்து சாய்ந்தபடி.

அப்படி என்ன பலமான யோசனை என்றால், சுவையான கதை என்ன சொல்லலாம்; ஒரு கதை அவசியம் வேண்டுமே என்கிற வேதனைதான். பக்கத்து வீட்டுப் பன்னிரண்டு வயது பெண் பர்வதகுமாரி எனது சிநேகிதி. அவளை "ஓயாத தொல்லை" என்றே கூப்பிடவேண்டும். எப்போ பார்த்தாலும் “எனக்கு ஒரு கதை சொல், ஜோரான கதையாக ஒன்று சொல்" என்று அரித்துப் பிடுங்கும் சுபாவம் உடையவள் அவள்.

"எனக்குக் கதை சொல்லத் தெரியாது" என்று மழுப்பி அவளிடமிருந்து தப்பிவிட முடியாது. “ஊக்குங் உனககா தெரியாது? இவ்வளவு புஸ்தகங்கள் படிச்சிருக்கியே! இன்னும் படிச்சுகிட்டே இருக்கியே. உனக்கு கதை சொல்லத் தெரியாது என்றால் யார் நம்புவாங்க?" என்று சண்டை பிடிக்கும் பண்பும் அவளுக்கு உண்டு.

என்ன எழவாவது ஒரு கதையை சொல்லி அவளை அனுப்பினால்தான் அமைதியாகப் படிக்கவோ. சும்மா கண்மூடி மோனத்து இருக்கவோ இயலும். இல்லையெனில் கொசு, மூட்டைப்பூச்சி வகையரா மாதிரி அவளும் தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பாள்.

அன்றைக்கும் அவள் "கதை ஒரு கதை” என்று தொந்தரவு படுத்திவிட்டு, "நல்ல கதையாக ஒன்று யோசித்து வை. நான் அப்புறம் வாறேன்” என அறிவித்து விட்டுப் போனாள். அதைப்பற்றிய யோசனையில்தான் நான் ஈடுபட்டு இருந்தேன்.

விழிப்பும் தூக்கமும் தொட்டுப் பிடித்து விளையாட முயலும் இடை நிலை அது. மனம் கட்டவிழ்த்து விடப்பட்ட கன்றுக் குட்டி மாதிரி துள்ளிக்கும்மாளம் போட்டு இஷ்டம் போல் திரியும். காதருகில் கூட யாரோ - அல்லது, எதுவோ "கொய கொய" என்று தெளிவில்லாக் குரலில் என்னென்னவோ பேசுவது போல் தோன்றும். அத்தகைய நிலையில்தான் நான் இருந்தேன்.

அப்பொழுதுதான் அது என் காதில் விழுந்தது. மிகத் தெளிவாகக் கேட்டது. யாரோ கலகலவெனச் சிரித்த ஒலி. வெண்கலப்பானையில் சில்லரைக் காசுகளைப் போட்டுக் குலுக்கி உலுக்கினால் எழக்கூடிய ஒலிநயம் கலீரிட்டது அந்தச் சிரிப்பிலே.

யார் அவ்விதம் சிரித்தது?

நான் கண்விழித்து மிரளமிரள நோக்கினேன்.

பழக்கமான, அழுது வழியும் சூழ்நிலைதான். புத்தகங்கள், தாள், பேனா, குப்பை கூளம், “சப்புச்சவரு" எல்லாம் அப்படி அப்படியே இருந்தன, யாரும் வந்து எட்டிப் பார்த்ததாகவும் தெரியவில்லை. பக்கத்து வீட்டுக் குறும்புக்காரப் பெண் பர்வதகுமாரியின் சிரிப்பும் அல்ல அது.

என் மனக்குறளியின் சித்து விளையாட்டாகத்தான் இருக்கும் என்று கருதி, மறுபடியும் "தூங்காமல் தூங்கி சுகம் பெறும்" நிலையில் அமர்ந்தேன். ஆனால், தூக்கம் என் கண்களைத் தழுவி என்னை மயக்க நிலையில் தள்ளிவிடவில்லை. இது நிசம்.

திரும்பவும் சிரிப்பொலி தெளிவாகக் கேட்டது. பெண் ஒருத்தி சிரித்த குரல்தான் அது.

நன்றாகப் பார்த்தும் பயனில்லை. யாரும் பார்வையில் படவேயில்லை. “ஏ குரங்கு! ஏட்டி பான குமாரி எங்கே ஒளிந்து நிக்கிறே?” என்று கத்தினேன்.

இப்போது கேலிச் சிரிப்பொலியோடு, கைகொட்டிக் கனித்ததால் எழுந்த வளைகளின் கலகலப்பும் சேர்ந்து ஒலி செய்தது. எனக்கு எதுவும் புரியவில்லை.

“ஹே கற்பனை வறண்ட கதைக்காரா! உனக்கு கதை எதுவும் உதயமாகாததில் வியப்பே இல்லை என்பது பாயசத்தில் உள்ள இனிப்பு போலவும், மிளகாய்ப் பொடியில் உள்ள காரம் போலவும், உப்பில் உள்ள கரிப்பு போலவும் நன்கு புலனாகின்றது….."

இவ்வாறு அதிகப்பிரசங்கி தனமாக வாயாடும் வல்லமை பெற்றது யாரோ என்று நான் விழித்துக் கொண்டு இருக்கையில், “முன்னே செல்லும் தலை அலங்கார சிங்காரியின் கொண்டையில் கொலுவிருக்கும் மல்லிகை மணத்தை நுகர்ந்தாலும், இங்கே பூ வாசனை எப்படி வந்தது, செடியுமில்லை தோட்டமும் இல்லையே என்று முழிக்கும் பண்பு பெற்ற மக்கு பிளாஸ்திரியின் சரியான பிரதிநிதியே! நான் உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா? என்ற பேச்சு “தொலைபேசி" மூலம் வரும் குரலிழை போல் இழுபட்டு மென்மையாய் ஒலித்தது என்னருகிலே.

யார் பேசுவது என்று புரிந்துக் கொண்டதும் எனக்கு வியப்பு அதிகமாயிற்று.

என் முன்னால் மேஜைமீது ஒரு வெண்கலப் பொம்மை இருந்தது. மிகுந்த அழகு என்று சொல்ல முடியாது. நானும் சில நண்பர்களும் ஊர் சுற்றி, அணைக்கட்டுகளைப் பார்த்துவிட்டு, ஒரு பெரிய கோவிலைக் கண்டுகளித்துத் திரும்பிய சமயம், ஒரு இடத்தில் இந்தப் பதுமை விலைக்குக் கிடைத்தது. பலரும் பல பொருள்களை வாங்கினார்கள். சும்மா இருக்கட்டுமே என்று நான் இந்த பொம்மையை வாங்கி வந்தேன். அதனுள்ளே எப்பவாவது "விக்கிர மாதித்த வேதாளத்தின்" தாயாதி எதுவேனும் புகுந்துக் கொள்ளும்; பதுமை கதை சொல்ல முன்வந்து விடும் என்று நான் கண்டேனா?

எனது எண்ணங்களை உணரும் சக்தியைக்கூட அந்தப் பதுமை பெற்றுவிட்டதாகத் தோன்றியது.

"நான் ஏன் கதைசொல்ல ஆரம்பித்தேன் என்ற கவலை உனக்கு ஏன்? கதைசொல்வது யாராக இருந்தால் என்ன? கதை நன்றாக இருக்கிறதா? இல்லையா? என்பதை கவனி அதுதான் முக்கியம்" என்று பதுமை பெரிய தனம் பண்ணியது.

இவ்வளவுக்குத் துணிந்துவிட்ட அது, நான் "வேண்டாம்” என்று சொன்னால் மட்டும், பேசாமல் இருக்கப்போகிறதா என்ன? அதனால், "சரிதான் உன் இஷ்டம்போலவே அளந்து தள்ளு!" என்றேன்.

"நான் ஒண்ணும் அளக்க வரவில்லை. இது நிஜமாகவே நடந்தது தெரியுமா?” என்றது பதுமை.

பெரிய கதாசிரியர்கள் முதல் இளம் கதைக்காரர்கள் ஈறாக, எல்லோரும் இப்படித்தான் முன்னுரை கூற ஆசைப்படுகிறார்கள் என்று கனைத்தது எனது மனக்குறளி,

"சந்திரன் என்கிற வாலிபனும், ஆனந்தவல்லி என்ற பெண்ணும் ஒருவர்மேல் ஒருவர் ஆசையாக இருந்தாங்க" என்று பொம்மை தன் கதையை ஆரம்பிக்கவே, நான் ஏமாற்றம் அடைந்தேன்" என்று சொல்லத்தான் வேண்டும். அது இவ்வாறு திடுதிப்பென்று கதையை ஆரம்பிக்குமென்று நான் எதிர்பார்க்க வில்லை “ரொம்ப நாளைக்கு முன்னே ஒரு ஊரிலே..." என்றோ, முன்னொரு காலத்தில் ஒரு ராஜா இருந்தார்" எனவோ அது பேசத் தொடங்கும் என்று நினைத்தேன்.

என் ஏமாற்றத்தைச் சமாளிப்பதற்காக நான் குறை கூறலானேன் "என்ன பேரு இது, ஆனந்தவல்லி என்று! வசந்தா, பிரேமா, ஹம்ஸா, சாரு, சுலோ, பத்மு என்ற ரீதியில் அழகா, நாகரிகமாகப் பெயர் வைக்கப்படாதோ அந்தப் பெண்ணுக்கு? என்று முணமுணத்தேன்.

"இதுமாதிரி ஊடே ஊடே நீ வால் தனம் பண்ணிக் கொண்டிருந்தால் நான் சொல்லவந்ததைச் சொல்ல மாட்டேன் ஆமாம்” என்று உறுதியாக அறிவித்தது பொம்மை.

அம்மா தாயே தெரியாமல் செய்து விட்டேன். இனி அவ்விதம் செய்யவில்லை என்று என் மனம் பேசியது.

"நான் அம்மாவுமில்லை, தாயுமில்லை ஆமா..." என்று அது முறைத்தது.

"தப்பு, தப்பு கன்னத்தில் போட்டுக்கொள்ள வேண்டுமா?"

நீ பேசாமல் கம்முனு இருந்தால் போதும் என்று எச்சரித்துவிட்டு அது கதையைத் தொடர்ந்தது.

"ஆனந்தவல்லி அழகுன்னா அழகு அப்படியாப்பட்ட அழகு!"…

எப்படியாப்பட்ட அழகு? என்ற நினைப்பு தானாவே என் மனசில் தலை தூக்கியது. நான் என்ன செய்யட்டும்? எனது மனம் வெறிக் குரங்கு, ஒரு கணம் கூட சும்மா இருக்க முடியாதே அதனால்!

என் சந்தேகத்தை ஒடுக்க முயலுவதைப்போல பதுமை பேசியது.

"அவளைப் பார்த்தால் இன்னிக்கு பூரா பார்த்துக்கொண்டே இருக்கலாம்னு தோணும். அவள் நடந்து போகிறபோது, மின்னல்கொடி துவஞவதுபோலிருக்கும். அவள் ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கண்களை தாழ்த்திக் கொள்கிறபோது, கண்ணாடிமேலே சூரிய ஒளி பட்டுத் தெறிக்கிற மாதிரி பளிச் சென்று இருக்கும். அலைகள் நடனமிடும் சமுத்திரத்திலே நிலவொளி படரும் வனப்பு, தோட்டத்துச் செடிகளில் விதம் விதமான மலர்கள் பூத்துச் சிரிக்கும் கோலம், அந்தி வேளையின் மேலவானத்து அதிசய அழகு, வெண் மேகங்கள் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் நீல வானம் - இதெல்லாம் ஒரு தடவைக்கு ஒரு தடவை, பார்க்கப் பார்க்க புதுமையும் இனிமையும் வாடாத எழிலும் பெற்றிருப்பதாகத் தோன்றவில்லையா? அதேபோல் தான் ஆனந்தவல்லியும் அழகாய் அதிசயமாய், இனிமையும் இளமையும் நிறைந்த இன்பமாய்க் காட்சி தந்து கொண்டிருந்தாள்.

"பையன் சந்திரன் அவள் மீது ஆசை வைத்து அவள் நினைவாகவே அலைந்து திரிந்தது ஒரு அதிசயம் இல்லைதான். அந்த இளம் பெண்ணைக் காணக்கூடிய எந்த வாலிபனும் அவள்மீது மோகம் கொள்ளாமலிருக்க முடியாது. அவள் பார்த்தால், காணக் கிடைக்காத இன்பத்தையெல்லாம் இருவிழிக் கிண்ணங்களில் அள்ளி எடுத்து இந்தா என்று தருவதுபோல் இருக்கும். அவள் சிரித்தால் அபூர்வமான ஒளி உதயங்களைப் பிடித்துக் காட்டுவது போல தோன்றும். அவள் பேசினாலோ, இன்பக் கதைகளை - இன் சுவை கீதங்களை ~ எல்லாம் இசைப்பதுபோல் படும். அவளை அடிக்கடி பார்க்கவும், அவளால் அடிக்கடி பார்க்கப்படவும், அவளது பொன்னொளிச் சிரிப்பைப் பெறவும், அவளுடைய இனிய பேச்சுக்களைக் கேட்கவும் வாய்ப்பு மிகுதியாகப் பெற்றிருந்தவன் சந்திரன். அவன் அவளின் நினைப்பில் சொக்கிக் கிடந்ததில் வியப்புக்கு இடம் ஏது?

ஏது ஏது, இந்தப் பொம்மை சரியான பிசாசுப் பயல் பிள்ளையாக இருக்கும் போல் தோணுதே! என்று என் மனக்குறளி வியப்புக்குரல் கொடுத்தது.

"ஏய் நிறுத்து! இப்படி எல்லாம் என்னைப்பற்றி அகெளரவ மாக எண்ணினால் எனக்குக் கெட்ட கோபம் வரும்" என்று பதுமை முறைத்தது.

எண்ணுவது மனசின் இயல்பு அதுக்கு எப்படித் தடைபோட முடியும? "ஏ ஒன் சைத்தான் குட்டிதான் இது" என்று என் மனம் எண்ணியது. "இல்லை இல்லை இந்த எண்ணத்தை அழிச்சுப் போட்டேன்" என்றும் அது சேர்த்துக்கொண்டது.

அனைத்தையும் உணரும் ஆற்றல் பெற்ற தெம்போடு ஒரு குறும்புச் சிரிப்பை உதிர்த்தபடி தலையை ஆட்டிய பதுமை கதையைத் தொடர்ந்தது.

சந்திரனும் தங்கமான பிள்ளையாண்டான். கண்ணுக்கு லெட்சணமாக இருப்பான். வம்பு தும்புக்குப் போகமாட்டான். அவனும் ஆனந்த வல்லியும் உறவுமுறையாக வேறு இருந்ததனால், ஊரிலே உள்ளவங்களும் உற்றார் உறவினரும் இரண்டு பேரும் சரியான ஜோடிதான், நல்ல பொருத்தம் சீக்கிரம் கல்யாணத்தை முடித்து வைத்துவிட வேண்டியது தான் என்று விளையாட்டாகவும், வினையாகவும் சொல்லுவது வழக்கம். சந்திரனும், ஆனந்தவல்லியும் கல்யாணம் செய்துகொண்டு இன்பமாக வாழ்க்கை நடத்துவதற்கு வேளையும் பொழுதும் வரட்டும் என்று காத்திருந்தார்கள். பெரியவர்கள் அவர்களை அப்படி காக்கும்படி வைத்து காலத்தை ஏலத்தில் விட்டுக் கொண்டிருந்தார்கள்.

"விதி, அதிர்ஷ்டம் என்பவற்றை யார் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி - மனிதருக்குப் புரியாத, அவர்களால் புரிந்துகொள்ள முடியாத, மனித எத்தனத்துக்கும் மேலான சில சக்திகள் மனிதருடைய காரியங்களை பாதிக்கின்றன, மனித வாழ்க்கையை கண்டபடி எல்லாம் ஆட்டிப் படைக்கின்றன என்று ஒவ்வொருவரும் எப்பவாவது எண்ணத்தான் செய் கிறார்கள். அப்படி எண்ணும்படி காலமும், வாழ்க்கையின் போக்கும் எல்லோரையும் தூண்டி விடுகின்றன.

சந்திரன் ஆனந்தவல்லி வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்படுவானேன்? சந்தோஷமாகக் காலம் கழித்து வந்த அவர்கள் சந்தோஷத்தை நீடித்து அனுபவிக்க முடியாமல் போனது ஏன்? இதற்கெல்லாம் "விதி" என்கிற முடிவைத் தவிர வேறு திருப்திகரமான பதில் எதையும் கண்டுபிடிக்க முடியாது.

சந்திரனுடைய போதாத காலம்தான் அவனை ஒரு மாமரத்தின் மீது ஏறத் தூண்டியிருக்க வேண்டும். உயரத்தில் பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்தது ஒரு கனி. காதலியின் கன்னத்தின் கதுப்பையும் மினு மினுப்பையும் நினைவு படுத்திய அந்தப் பழத்தைக் கல்லால் அடித்து விழவைப்பதை விட, மேலே ஏறிப் போய் கையால் பறித்து எடுத்து வந்து அவளிடம் கொடுப்பதே சிறப்பானதாகும் என்று அவன் எண்ணியிருக் கலாம். மரங்களில் ஏறி இறங்குவதில் பெரிய சூரன் தான் அவன். ஆனால் அன்று விதி அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்ததை யார் தான் அறிவார்கள்?

ஆசைத் துடிப்போடும் அளவற்ற தன்னம்பிக்கையோடும் வேகமாக ஏறிய சந்திரன் அஜாக்கிரதையாகக் கால் வைத்ததனால் மரத்திலிருந்து தவறிக் கீழே விழுந்தான். அதிக உயரத்திலிருந்து விழுந்ததால் முதுகில் நல்ல அடி. ஒரு காலிலும் அடி உரிய முறையில் சிகிச்சைகள் நடந்தன. ஆனாலும் கால் ஊனமாகி அவன் நொண்டி ஆனது தான் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. சந்திரன் படுக்கையில் விழுந்து கிடந்த போதெல்லாம் ஆனந்த வல்லி கண்ணிர் வடித்து சோக சித்திரமாக மாறியிருந்தாள். அவன் குணமடைந்து விட்டான் என்று தெரிந்ததும் தான் அவள் உற்சாகம் பெற்றாள்.

ஆனால், சந்திரனின் உள்ளம் உற்சாக உணர்வைப் பறிகொடுத்து விட்டதாகத் தோன்றியது. அவன் சுத்தசுய நலமியாக இருந்திருந்தால் அவன் உள்ளம் வீண் வேதனையை வளர்த்திருக்காது தான். சந்திரன் ஆனந்தவல்லியிடம் புனிதமான அன்பு கொண்டிருந்தான். அவனுடைய ஆசை உயர்ந்தது. அதனால் அவன் தனது நிலைமையையும், தன்னோடு வாழ்க்கை முழுவதம் துணை சேர்ந்து அவளது வருங்காலத்தை குறை உடையதாகவும் நரக வேதனை பெற்றதாகவும் மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிற தனது ஆசைக் கிளியின் வாழ்வு பற்றியும் தீவிரமாகச் சிந்தித்தான். ”அன்பே, நீ என்னையே மணந்து கொள்ள வேண்டும் என்கிற அவசியம் எதுவும் இல்லை. நாம் வளர்த்த இன்பக் கனவுகள் எல்லாம் நிறைவேற முடியாதபடி காலம் வஞ்சித்து விட்டது. நாம் கட்டிய ஆசைக் கோட்டைகள் எல்லாம் ஆகாசக் கோட்டைகள் ஆகிவிடும். நொண்டியைக் கல்யாணம் செய்து கொண்டு நீ என்ன சுகம் காணப்போகிறாய்?" என்று அவளிடமே சொல்லிவிட்டான் சந்திரன்.

அவளுக்கு, அவன் நொண்டியானதை விட, இப்படிப் பேசியதுதான் அதிக வேதனை தந்தது. அவள் தன் பூங்கரத்தால் அவன் வாயைப் பொத்தினாள். இது மாதிரி எல்லாம் நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்?" என்று வேதனையோடு சொன்னாள்.

அவள் கெஞ்சியதற்கு இணங்கி, சந்திரன் அவ்வாறு பேசுவதை விட்டுவிட்டான். ஆனால் வேதனையோடு எண்ணி எண்ணி மணம் குமைவதை ஆசைக்கு இனியவள் கூடத் தடுத்துவிட முடியாது அல்லவா?

அவன் எண்ணி மனசைக் குழப்பிக் கொண்டான். எப்படிப் பார்த்தாலும், அவன் அவளுக்குச் சுமையாகத்தான் இருக்க முடியும் என்றே அவனது உள்ளம் உறுத்தியது. அப்படி வாழ்ந்து, அவளது இனிய வாழ்வையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்குவதை அவன் விரும்பவில்லை. ஆகவே, தனது காதலி ஆனந்தவல்லிக்கு நல்லது செய்வதாக நம்பிக் கொண்டு சந்திரன் மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்து, தனது உயிரைத் தியாகம் செய்து கொண்டான். அவன் இரட்டைத் தியாகி இல்லையா? காதல் தியாகியான சந்திரன் உயிர்த்தியாகியும் ஆனான். இவ்வளவு தான் கதை என்று கூறி முடித்தது பொம்மை.

"எஹெஹெ! இதுவும் ஒரு கதையா!" என்று கனைத்தது என் மனக்குறளி.

"இதுக்கு என்னவாம்? இதில் காதல் இருக்கிறது. காதலின் உயர்வு தெரிகிறது. தனது அன்புக்கு உரியவளுக்கு இன்பம் அளிப்பது மட்டும் காதலின் நோக்கமல்ல; தன்னால் அவளுக்குத் துன்பமும் நீடித்த வேதனையும் ஏற்படும் என்று தெரிந்தால், அப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் தவிர்க்கவும் தூண்டும் உண்மையான காதல்….”

"காதலன் தற்கொலை செய்து கொண்டதால், காதலி சந்தோஷப்பட்டு விடுவாளாக்கும்? ஆனந்த வல்லிக்கு ஆனந்தமே இல்லாமல் செய்து விட்டாயே! எல்லோருக்கும் காதல் கதை பிடிக்கும் தான். ஆனால் எப்போதுமே கதை முடிவு இன்பமயமானதாக இருக்க வேண்டும். வாசகசிகாமணிகள் அதைத்தான் விரும்புகிறார்கள். உனது கதை பக்கத்து வீட்டுப் பன்னிரண்டு வயசுப் பெண்ணுக்குக் கூடப் பிடிக்காது!” என்றேன்.

"ஹ" ம்ப்!” என்று வெறுப்போடு குரல் கொடுத்தது பொம்மை. தனக்குக் கதை சிருஷ்டிக்க முடியாத வறட்சி ஏற்பட்ட நிலையிலும், மற்றவர்கள் கதையை மோசம், மட்டம், குப்பை என்று கண் மூடித்தனமாக விமர்சனம் செய்வதில் மகிழ்வு காண்கிற இலக்கிய பிரம்மாக்களின் கும்பலைச் சேர்ந்தவன் தானா நீயும்? போயும் போயும் உன்னைத் தேடிப் பிடித்தேனே எனது அற்புதமான கதையைச் சொல்வதற்கு!" என்று முனகியது மேஜை மீதிருந்த பதுமை.

அப்புறம் அது பேச்சு மூச்சு காட்டவே இல்லை.

அதையே பார்த்துக் கொண்டிருந்தேன், தூக்கமோ விழிப்போ அல்லாத "இரண்டுங் கெட்டான்" நிலையிலே இறங்கியிருந்த நான். "இப்படி ஒரு பொம்மை நம்மிடம் இருப்பது தப்பு. முதல் வேலையாக இதை எங்காவது ஒரு பாழுங் கிணற்றிலே போட்டு விட்டு வர வேண்டும்” என்று என் மனம் தீர்மானம் செய்தது.
("பரிதி," 1965 )
-------------------


17. பேபி


"தட்டுங்கள், திறக்கப்படும்" என்கிற வாக்கு பேராசிரியர் வீட்டில் செலாவணி ஆகாது போலும்! நானும் எத்தனையோ தடவைகள் தட்டிவிட்டேன். இன்னும் கதவு திறக்கப்பட வில்லையே? யாரது, ஏன் என்று கேட்பாருமில்லையே!”

பேராசிரியர் பரமசிவம் அவர்களின் வீட்டுக்கதவை தட்டி அலுத்துவிட்ட கைலாசத்தின் மனம் இப்படி முணுமுணுத்தது.

"இதற்காகத்தான் நான் பெரிய மனிதர் எவரையுமே பார்க்கப் போவது கிடையாது. பெரிய மனிதர்கள் வீட்டில் அடையா நெடுங்கதவும், அஞ்சல் அஞ்சல் எனும் கரமுமா காத்திருக்கும்? அடைத்த கதவைத் தட்டித் தட்டி நம் கைதான் நோகும். இல்லையென்றால் காவல்காரன் நிற்பான். மரியாதை இல்லாமல் முறைப்பான். அல்லது அவனுக்கு நெருங்கிய உறவான நாய் உறுமிக்கொண்டு கிடக்கும். வீடு தேடிச் செல்கிற நமக்குக் கால நஷ்டமும் கெளரவ நஷ்டமும்…."

இதே தன்மையில் அவன் உள்ளம் இன்னும் புலப்ப புராணம் தீட்டிக் கொண்டேயிருந்திருக்கும், பேராசிரியர் வீட்டுக் கதவு திறக்கப்படும் ஓசை எழாது இருந்தால்!

திறந்த கதவின் பின்னே நின்ற திருவுருவம் கைலாசத்தின் கோபம், கொதிப்பு குமைதல் அனைத்தையும் அவித்துவிடும் ஆற்றல் பெற்ற குளுமைக் காட்சியாகத் திகழ்ந்தது.

பதினேழு - பதினெட்டு வயசு அழகு உருவம், பளிச்செனப் பார்வையில் பதியும் பட்டுப் பாவாடையும் தாவணியுமாக நின்றது. ஒரு கையில் "எவர்சில்வர் தட்டு, அதில் அஞ்சாறு பஜ்ஜிகள் வலது கை பஜ்ஜியை எடுத்து, செவ்விய உதடுகள் வட்டமிட்டு எழிலுறுத்திய வாய்க்கு உதவும் பணியில் ஈடுபட்டிருந்தது. இயல்பாகவே சதைப் பிடிப்பால் மினுமினுத்த கதுப்புக் கன்னங்கள், வாய்க்குள் அடைப்பட்டிருந்த பஜ்ஜி யினால் மேலும் உப்பிக் காணப்பட்டன. வஞ்சனை இல்லாத வளர்த்தி அந்தப் பெண்ணுக்கு.

"சரியான டொமோட்டோ பிராண்டு. கொழுக்கட்டை மார்க்கு” என்று கனைத்துக் கொண்டது கைலாசத்தின் மனக் குறளி. "இப்படி ஓயாமல் திணித்துக் கொண்டேயிருந்தால் ஒரு உருவம் முட்டகோஸ் மாதிரிப் பசுமையாய் வளராமல், என்னைப்போல் வத்தப் புடலங்காயாகவா விளங்க முடியும்?" என்றும் அது இணைத்தது; இளித்தது. கைலாசத்தின் மனக்குறளி எப்பவுமே ஒருமாதிரிதான். கொஞ்சம் "வால்தனம்" பெற்றது அது.

வாயில் கிடந்து திணறிய பஜ்ஜி மறைந்தால் தான் குமரி குரல் கொடுக்க முடியும் என உணர்ந்த கைலாசம் தனது விசேஷ குணமான சங்கோஜத்தை ஒதுக்கி வைக்கத் துணிந்தான். "ஸார்வாள் இல்லையா?" என்று கேட்டான்.

"அவாள் இவாள் - ஸார்வாள் ஹிஹி" என்று குதிரை கனைப்பது போல் சிரிப்பைச் சிந்தினான் குமரி. அவள் வாயிலிருந்த பஜ்ஜித் துணுக்குகள் தன் மீது சிதறி விடாமலிருக்க வேண்டுமே என்று அஞ்சி, கைலாசம் சிறிது விலகி நின்றான்.

"ஸார் அவர்கள் இல்லையா என்று கேட்டேன்" அவன் குரலுக்குச் சிறிது கனம் கொடுத்தான். அவன் முகத்தில் சற்றே கடுமை பரவியது.

தட்டிலிருந்த பஜ்ஜிகளைத் தின்று தீர்த்துவிட்ட குமரியின் கண்களில் தனி ஒளி சுடரிட்டது. குறும்புத்தனத்தின் கனலாக இருக்கலாம் அது. மகிழ்வின் சுடராகவும் இருக்கலாம்.

"தின்று முடித்த திருப்தியின் சாயை!" என்று முனங்கியது கைலாச மனக் குறளி,

"பேபி, அங்கே யாரு?" என்ற கேள்வி வந்தது முதலில், பரமசிவத்தின் உருவம் வந்தது பின்னே, ஈரக் கைகளைத் துண்டில் துடைத்தபடி மெதுவாக வந்தார் அவர். அவன் மீது அவர் பார்வை பட்டதும், வெண்பற்கள் பளிச்சிட்டன. அவர் முகத்தில்.
"என்றுமே ஒரு புதிர் இது. ஸார்வாள் பொய்ப்பல் கட்டி யிருக்கிறார்களா, இல்லை, அவர்களது நிஜப் பல் வரிசையே இந்த வயசிலும் இவ்வளவு அழகாக இருக்கிறதா என்று புரியவில்லை. உறுதியாக முடிவு கட்ட முடியாத விஷயம் இது எனறு கைலாசம் மனக்குறளி கணக்குப் பண்ணியது. அதுவே இதற்கு முன்பு இபிபடி நூற்றெட்டுத் தடவைகள் முணமுணத்திருக்கும். இனியும் சந்தர்ப்பம் நேரும் போதெல்லாம் முனங்கும். அது அதனுடைய உரிமை!

"டிபன் பண்ணிக்கிட்டிருந்தேன். அதுதான் நேரமாகிவிட்டது" என்றார் பேராசிரியர்.

மூன்று கண்ணாடி டம்ளர்களை ஒன்றாகச் சேர்த்து உராய்ந்து தொடர் ஒலிகளை எழுப்பியது போல் கலகலெனவும், கிணிகிணி எனவும், கடகட வென்றும் சிரிப்பொலி சிதறினாள் பேபி.

"என்னம்மா விஷயம்? ஏன் இப்ப இவ்வளவு சிரிப்பு" என்று விசாரித்தார் பரமசிவம்.

திடுமெனப் பாய்ந்த சிரிப்பைச் சடக்கெனக் கொன்றாள் அவள். சொன்னாள்: "நீயா அப்பா டிபன் பண்ணினே? அம்மா பண்ணி வைத்தாள். அதாவது ரெடி பண்ணினாள். நீ ஈட் பண்ணினே! என்னவோ நீயே அடுப்பு முன்னிருந்து டிபன் தயார் பண்ணியது போல் பேசுறிறே!”

“சரியான தின்னிப் பன்னி! என்று சீறியது கைலாசம் மனக்குறளி. இதன் மூளையும் பன்னி மூலைதான்!”

பரமசிவம் சிரித்து வைத்தார். அதில் அசட்டுத்தனம் அதிகம் மின் வெட்டியதா? அருமையான பெண்ணைப் பெற்றுவிட்ட பெருமை ஒளி வீசியதா? என்று அவனால் தீர்மானிக்க முடியவில்லை.

"கைலாசத்துக்கும் கொஞ்சம் பஜ்ஜி எடுத்து வாம்மா” என்று சொன்ன ஆசிரியர், "இவர்தான் கைலாசம். நல்ல ரசிகர்" என்றும் அறிமுகம் செய்தார்.

உருவிய வாட்கள்போல் பளிரெனப் புரண்டு பாய்ந்தன இரண்டு கருவிழிகள். அவற்றின் ஒளிக்கூர்மையால் தாக்குண்ட கைலாசத்தின் விழிகள் மண்மீது படிந்தன. அவை மீண்டும் மேலெழுந்து பேபியின் முகத்தின் பக்கம் திரும்பியபோது, அம்முகம் மலர்க் குவியல்போல் வண்ணமும் வனப்பும் பெற்றுத் திகழ்வதைக் கண்டன.

"கொஞ்சம்னு சொன்னா எத்தனை? ரெண்டா, மூணா, எத்தனை? சில பேருக்கு ஒரு டஜன் கூட கொஞ்சமின்னுதான் தோணும்”" என்று கொஞ்சும் குரலில் வார்த்தையாடி நின்றாள் அவள்.

"போடி வாயாடி! உன்னோடு பேச முடியாதம்மா என்னாலே. அம்மாகிட்டே போய்க் கேளு. தந்ததை வாங்கிவா" என்று கூறி மகளை அனுப்பி வைத்தார் தந்தை. உடனேயே பொங்கும் பெருமையோடு சொன்னார்: "பேபி இப்படி வளர்ந்து விட்டாளே தவிர, அவள் இன்னும் குழந்தையாகத்தான் இருக்கிறாள். விளையாட்டுப் பிள்ளை. வேடிக்கைப் பிரியை..."

சொல்லாத எண்ணங்கள் அவர் உள்ளத்தில் நீந்தி, பெற்ற மனசில் களிப்புத் திவலைகளை அள்ளித் தெளித்தன என்பதை அவர் முகபாவமும், உதடுகளில் விளையாடிய குறுநகையும் எடுத்துக் காட்டின.

அவர் ஈஸிசேரில் சாய்ந்தார். கைலாசம் ஒரு நாற்காலியில் அவருக்கு எதிரே உட்கார்ந்து கொண்டான். பரமசிவத்தின் பின் பக்கத்தில்தான் அடுப்பங்கரை முதலிய பகுதிகள் இருந்தன.

பேபி ஒரு தட்டில் பஜ்ஜி எடுத்து வந்தாள். அவள், வந்த அழகு ரசிக்க வேண்டிய ஒரு தோற்றமாகத்தான் இருந்தது. தன்னைப் பார்த்து அவன் ரசிக்கிறான் என்பதை உணர்ந்து கொண்ட குமரி நடையில், அசைவில், முகத்தில் நயங்கள் சேர்க்கத் தவறினாளில்லை.

"அப்பா, அம்மா கணக்குப்படி கொஞ்சம் என்றால் அஞ்சு என்று தெரியுது. நான் போய் கொஞ்சம் பஜ்ஜி கொடு அம்மா என்றேன். உனக்காடீ என்று எரிந்து விழுந்தாள். இல்லேம்மா ஸார்வாளைத் தேடி ஒரு ஸார் வந்திருக்கிறார்; அந்த ஸாருக்காக நம்ம அப்பா ஸார் வாங்கிட்டு வரச்சொன்னார் என்றேன். அம்மா தந்தது இதோ" என்று நீட்டினாள். அடிக்கடி அவள் கள்ள விழிப் பார்வை கைலாசத்தின் பக்கமே ஓடி ஒடி மீண்டது.

"போக்கிரி!" என்று செல்லமாகக் கூறிய தந்தை பஜ்ஜியைக் கைலாசத்திடம் கொடுத்து உபசரித்தார். அவனும் சம்பிரதாய வார்த்தைகளை முனங்கி விட்டு அதை ஏற்றுக் கொண்டான்.

"பேபி, காபி கொண்டு வந்து கொடு” என்றார் பரமசிவம்.

"ஐயோ! வீணாப் போச்சே” என்று பேபி விரல்களை உதறவும், "என்னது என்னம்மா?" என்று தந்தை பதறினார்.

"இல்லே, நீ சொன்ன வசனத்தை வெறும் கவிதையாகவே நீட்டியிருக்கலாமே! மை டியர் பேபி, எடுத்து வா காபி என்றால் நன்றாக இராது? அது வீணாகப் போச்சே!" என்று சொல்லிச் சிரித்தாள் அருமை மகள். கைலாசத்துக்கு இனிய பார்வையைப் பரிசளித்து விட்டு, ஸ்டைல் நடை நடந்து போனாள்.

தந்தைக்குப் பெருமையாவது பெருமை! தமது திருப் புதல்வியைப் பற்றிய புகழுரைகள் பேசாமல் இருக்க முடியுமா அவரால்? பேசினார், பேசினார் கவிதை வரிவுரைமாதிரிப் பேசினார். பேபி சின்னக் குழந்தை; அவள் பேச்சிலும் செயல்களிலும் அற்புத ரசம் பொங்கித் துளும்பும். அவள் எஸ்.எஸ். எல்.ஸி. பாஸ் செய்துவிட்டாள். மேலும் படிக்க ஆசைதான், ஆனால் அம்மாவும் பாட்டியும் தான் வேண்டா மென்று தடுத்துவிட்டார்கள். சில மாதங்கள் பாட்டி வீட்டில் தங்கிவிட்டு, இப்போதான் இங்கு வந்திருக்கிறாள். வந்து நாலைந்து நாட்களேயாச்சு. அவள் இல்லாமல் வீடே வெறிச் சோடிக் கிடந்தது. இப்பதான் வீடு கலகலப்பாக ஜீவனோடு விளங்குகிறது. இப்படி விவரித்தார்.

கைலாசம் அவ்வப்போது மென்சிரிப்பும்; "ஊம், ஊம்" எனும் குரலும், தலையசைப்பும் கொடுப்பது தவிர வேறென்ன சொல்ல முடியும்? அவற்றை தாராளமாக வழங்கி, ஆசிரியருக்குப் பிடித்த "நல்லபிள்ளை"யாக நடந்து கொண்டான்.

தந்தையின் பேச்சு முடியும் மட்டும் மறைந்து நினிற பேபி வாய் திறவாது அசைந்து நகர்ந்து வந்தாள். வெள்ளி டம்ளரில் காபி எடுத்து வந்தாள், மதிப்பு மிக்க அமிர்தத்தைத் தூக்கி வரும் மோகினி போல. தந்தையருகே வந்துநின்று "ஊம்ம்" என ஒலிக் குறிப்புத் தந்தாள்.

"அவரிடம் கொடம்மா!” என்று அன்பாகச் சொன்னார் பரமசிவம்,

பேபி சிறிது நகர்ந்து முன் வந்து, கை நீட்டி, இந்தாங்க காபி" என்று மழலை மொழிந்து, கைலாசத்திடம் அளித்தாள். எல்லாமே ஏதோ ஒரு நாட்டியத்தின் பாவனைகள் போலத்தான் தோன்றின அவனுக்கு.

அவன் டம்ளரைப் பெற்றுக் கொள்கிறபோது அவள் முகத்தைப் பார்த்தான். அவளுடைய மாதுளை மொக்கு உதடு களில் மென்முறுவல் சுழியிட்டது. கண்ணாடிக் கன்னங்களில் செம்மை சாயமேற்றியது! கண்களில் மிதந்த பார்வை –

"சிறு பெண் எப்பொழுது பெரியவளாகிறாள்? அவளுடைய கண் பார்வையில் விசேஷமான அர்த்தங்கள் தேங்கித் தென் படுகிறபோது!" இப்படி அவன் என்றோ எங்கோ படித்திருந்த நயமான சிந்தனைக்கு ரசமான விளக்கம் காட்டின பேபியின் கண்கள்,

அவன் முகம் மலர்ந்தது. அதன் நிழல்வீச்சுப் போல அவள் முகம் முழு தலர்ந்தது. அவள் தந்த காப்பி அமிர்தமாகத் தான் ருசித்தது அவனுக்கு.

பேராசிரியர் "போரடிப்பு" விருந்து நடந்தினார். தான் அறிந்த அற்புதங்கள், கண்டெடுத்த நயங்கள், உணர்ந்த இலக்கிய உண்மைகள், அபூர்வமாக அவர் எழுதிய எண்ண மணிகள் பற்றி எல்லாம் மிகுந்த ஈடுபாட்டோடு பேசினார்.

இவ்விதப் புரவோலங்களை எல்லாம் கேட்டுச் சகித்துக் கொண்டிருப்பதோடு, இடைக்கிடை வியப்புரை உதிர்த்து உற்சாகம் ஊட்ட வேண்டிய அவசியமும் ஏற்படும் என்பதனால் தான் கைலாசம் அடிக்கடி பெரிய மனிதர்களை கண்டு பேசச் செல்வதில்லை. பேராசிரியர் பரமசிவத்தைப் பார்ப்பதற்கு இதற்கு முன் அவன் இரண்டு தடவைகள் தான் வந்திருக்கிறான்.

"அப்போதெல்லாம் இந்தத் தடி பேபி கண்ணில் பட்ட தில்லை, ஸ்கூலுக்கு போயிருந்திருக்கும். அல்லது, பாட்டி வீட்டில் "டேரா" போட்டிருந்திருக்கும். இதுதான் நான் இவளைப் பார்க்கும் முதல் தடவை” என்று மனக்குறளி தன் தொழிலைச் செய்தது.

இன்று கூடக் கைலாசம் பேராசிரியர் வீடுதேடி வந்திருக்க மாட்டான். "அன்றொரு நாள் வழியில் சந்தித்த பெரியவர், "என்னப்பா உன்னைப் பார்க்கவே முடியலியே? நம்ம வீட்டுக்கு வாயேன். உனக்காக ஒரு புஸ்தகம் வச்சிருக்கேன். உயர்ந்த இலக்கியம். அருமையான நூல். நீ அவசியம் படிக்கணும்" என்று கூறி அவன் ஆவலைத் தூண்டிவிட்டார். புத்தகம் என்றால் அவனுக்குப் பெரும் பித்து. நல்ல புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படித்து ரசிப்பது தான் அவனுடைய வாழ்க்கை லட்சியம்.

புத்தகத்தை வாங்கிச் செல்ல வந்தவனுக்கு எதிர்பாராத காட்சி விருந்தாக விளங்கினாள் பேபி.

"ஸார்வாள் பலப்பல கட்டுரைகள் எழுதியிருக்கலாம். அபூர்வமாகச் சில கவிதைகளும் இயற்றியிருக்கலாம். இலக்கிய மணிகளை எல்லாம் தேடிக் கண்டு திரட்டித் தந்திருக்கலாம். ஆயினும் அவை எல்லாம் ஸார்வாள் தயாரித்துள்ள இந்த அழகு ரத்தினத்துக்கு ஈடு ஆக முடியாது. உலவுகின்ற நற்காவியம் இவள் ஜீவனுள்ள மணிக் கவிதை" என்ற ரீதியில் "இலக்கியநயம்" கண்டு ரசித்துக் கொண்டிருந்தது கைலாசத்தின் மனக்குறளி,

பேபியும் அதற்கேற்றபடி தான் நடந்துகொண்டாள். அடுப்பங்கரைப் பக்கம் போவாள். அங்கிருந்து வெளியே வந்து வேறொரு அறைக்குள் புகுவாள். இன்னொரு அறையினுள் சென்று அவன் பார்வையில் படக்கூடிய இடத்தில் நின்று அதையும் இதையும் எடுத்து, எடுத்ததை இருந்த இடத்திலேயே வைத்து ஏதோ பிரமாத வேலை செய்வது போல் காட்டிக் கொண்டாள். ஒரு அறையின் கதவுக்குப் பின் உடல் மறைத்து, முகிலைக் கிழித்தெழும் முழுமதி போல் முகத்தை மட்டும் காட்டுவாள். மற்றொரு சமயம் முகம் மறைத்து உடல் வனப்புகளை மாத்திரம் காட்சிப் பொருளாக்குவாள். தந்தையிடம் எதையாவது அர்த்தமின்றிக் கேட்டு, காரணம் இல்லாமல் சிரித்து, தேவையில்லாமலே பேச்சுக் கொடுத்து, தான் அங்கிருந்ததை சதா உணர்த்திக் கொண்டிருந்தாள். கைலாசம் விடை பெற்றுப் புறப்பட்டபோது, முகத்தில் வாட்டம் காட்டி முன்வந்தாள்.

"அடிக்கடி வா, கைலாசம். வராமலே இருந்துவிடப் போகிறே!" என்று பரமசிவம் வற்புறுத்திச் சொன்னதும், மகளின் முகத்தில் திருப்தி ஊர்ந்தது. அதே அழைப்பை அவள் விழிகள் சுமந்து படபடத்தன.

"வாரேன் ஸார், வராமலென்ன" என்று அவன் சொன்னதும் அவள் குதூகலித்தாள். குதித்தோடி மறைந்தாள்.

அவனை வழியனுப்பிவிட்டு "குழந்தையோடு" பேசி மகிழ்வதற்காகப் பரமசிவம் உள்ளே போனார். நல்லகுழந்தை வந்து சேர்ந்தது, பச்சைக் குழந்தை! சின்னப் பாப்பா!" என்று கைலாச மனக்குறளி கனைத்துக் கொண்டது.

கைலாசம் இரவலாக வாங்கிவந்த புத்தகத்தைத் திரும்பக் கொடுப்பதற்காக ஒருநாள் பேராசிரியர் வீடு தேடிச் சென்றான். அன்று முன்கதவு சும்மா தான் அடைக்கப்பட்டிருந்தது. அவன் கைவைத்துத் தள்ளியதுமே அது திறந்துகொண்டது. உள்ளே அடி எடுத்து வைத்ததும் அவன் “ஆகா, அற்புதம்!" என்று வியக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

முன் அறையில் பேபி குதித்து ஆடிக் கொண்டிருந்தாள். வெறுமனே அல்ல. கைகளில் ஒரு நூல் கயிற்றைப் பற்றி, அதைத் தலைக்கு மேலும் பாதங்களின் கீழுமாகச் சுற்றிச் சுழற்றி, கயிற்றில் கால்கள் சிக்கிவிடாதபடி சாமர்த்தியமாகத் தாவித்தாவி "ஸ்கிப்பிங் ஆடிக் கொண்டிருந்தாள். தன்னந் தனியாகத்தான். அந்த ஆடலில் அவளுக்கு நல்ல பயிற்சியும் தேர்ச்சியும் உண்டு என்பதை அவளது ஒவ்வொரு துள்ளலும் நிரூபித்தது.

கைலாசம் கதவைத் திறந்துகொண்டு பிரவேசித்த போது, பேபியின் பின்புறத் தோற்றமே அவன் பார்வையில் பட்டது. அதுவும் கண்டு களிக்க வேண்டிய இனிய காட்சியாகத் தான் இருந்தது. அதை ரசித்தவாறே அவன் மெளனமாய் நின்றான்.

அவள் சடக்கென்று துள்ளித் திரும்பினாள். அவளது பாவாடைச் சுழற்சியும், பின்னலின் துவள்தலும், உடலும் குதிப்பும் அவனை மகிழ்வித்தன. அப்பொழுதுதான் அங்கே நின்று தன்னையே கவனித்துக் கொண்டிருக்கும் கைலாசத்தை பேபி பார்த்தாள். அவ்வளவுதான். கயிற்றுச் சுழற்சியின் லயம் கெட்டு விட்டது. கயிறு கால்களில் சிக்கியது. அவள் முகம் செக்கச் சிவந்தது.

"மன்னிக்கணும்” என்று வார்த்தையை மென்றான் கைலாசம். "ஸார்வாளைப் பார்த்து இந்தப் புத்தகத்தைக் கொடுக்கலாம் என்று வந்தேன்….."

தலையை நிமிர்த்தாமல், கண்ணின் கருமணிகளை விழிக்கடையில் நிறுத்தி, அப்பா இல்லை. எங்கோ வெளியே போயிருக்கிறாங்க. வர நேரமாகும்" என்று அறிவிப்புச் செய்தாள் குமரி.

"அப்படியானால் ஸார் வந்ததும் இதைக் கொடுத்து விடுங்கள்” என்று கையிலிருந்த புத்தகத்தை அங்கிருந்த மேசை மீது வைத்துவிட்டு அவன் வேகமாக வெளியேறினான். தெருக் கதவை இழுத்துச் சாத்திவிட்டு நடந்தான்.

சில அடி தூரம் சென்றதும் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று ஏனோ அவனுக்குத் தோன்றியது. அந்தத் தூண்டுதலுக்கு இணங்கியதால் நஷ்டம் ஏற்பட்வில்லைதான்! அவன் திரும்பி நோக்கிய போது, வாசல்படியில் நின்று முன்னால் வளைந்து எட்டிப் பார்த்த பேபியின் தரிசனம் அவனுக்குக் கிட்டியது.

"மனித மனசுக்கும் எலெக்ட்ரிக் தனம் உண்டு. ஒரு மனம் தீவிரமாக எண்ணுகிறபோது, அந்த எண்ணம் சம்பந்தப்பட்ட வரை பாதிக்கிறது. அவர் திரும்பிப் பார்க்கமாட்டாரா என்று பேபி தீவிரமாக எண்ணியிருப்பாள். அது என்னைத் தொட்டு "ஷாக்" எழுப்பியிருக்கும். அதன் விளைவுதான் நான் திரும்பி நோக்கியது" என்று அவன் மனம் "விஞ்ஞான ரீதியான விளக்கம்" வரைந்து மகிழ்வுற்றது.

அவன் திரும்பிப் பார்த்ததில் ஆனந்தம் அடைந்த பேபி முகத்தைச் சிரிப்பால் ஒளிப்படுத்திக் காட்டிவிட்டு உள்ளே இழுத்துக்கொண்டாள்.

இளமையும் இனிமையும் கலந்த உருவம் கண்ணுக்குக் குளுமை. எழில் பெற்ற இளமை சும்மா நின்றாலே இனிய காட்சிதான். அது வளைந்தும் அசைந்தும் துள்ளியும் குதித்தும் ஆடுகிறபோது கண்கள் கவிதை - கலை - ஒவியம் எல்லாவற்றையும் பருகிக் களிக்க முடிகிறது. இதற்கு பேபி நல்ல சாட்சி" என்று கைலாச மனக்குறளி பேசியது. . அதன் மண்டையில் தட்டி அதை அடக்க வேண்டும் எனும் எண்ணம் அவனுக்கு எழவே இல்லை.

புத்தகம் கொடுக்கப்பட்டதைச் சொல்லிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவன் மறுநாள் பேராசிரியர் வீட்டுக்குப் பேரனான். புன்முறுவலோடு எதிர்கொண்டழைத்த பேபி "எனக்குத் தெரியும்" என்று வரவேற்பு கூறினிள்.

"என்ன தெரியும்?" என்று, விளங்காதவனாய் அவன் விசாரித்தான்.

"இன்று நீங்கள் வருவீர்கள் என்று!" என நீட்டினாள் அவள்.

”எப்படித் தெரிந்ததோ?”

"அது எப்படியோ தெரிந்தது! என் மனசு எனக்குச் சொல்லிற்று என்று வைத்துக் கொள்ளுங்களேன்!" எனக் கூறிவிட்டுக் "கலகல"வெனச் சிரித்தாள் ஒயிலி. "உங்களிடம் ஒன்று கேட்பேன். நீங்கள் உள்ளதை உள்ளபடி சொல்லணும். பொய் சொல்லப்படாது. மனசில் பட்டதை மறைக்கக் கூடாது. ஊங்? என்ன நான் சொல்றது? சரியா?" என்று நீட்டல் - குலுக்கல் - தலையசைப்பு - கை அசைப்புகளோடு பேசித் தீர்த்தாள்.

"ஐயோ, நான் ஒரு சித்திரக்காரனாக இல்லையே! அந்தத் திறமை எனக்கு இருக்குமானால், எவ்வளவோ அருமையான ஒவியங்கள் தீட்டலாமே" என்று மனசாற வருந்தினான் அவன்.

"என்ன, ஒண்ணும் சொல்லமாட்டீர்களா?" என்று அவள் வருத்தமாகக் கேட்டாள்.

"சொல்கிறேன். அவசியம் சொல்கிறேன்" என அவன் உறுதி கூறினான்.

இருப்பினும் அவள் தயங்கினாள். பிறகு துணிந்துவிட்டாள். "நேற்று நான் ஸ்கிப்பிங் ஆடிக்கொண்டிருந்ததைப் பார்த்தீர் களே? உங்களுக்கு என்ன தோணிச்சு?" என்று கேட்டாள்.

இதை அவன் எதிர்பார்க்கவில்லை. என்ன சொல்லுவது என்று புரியாமல் குழம்பினான்.

"எனக்குத்தான் தெரியுமே! நீங்கள் சொல்லமாட்டீர்கள். தடிமாடு மாதிரி வளர்ந்திருக்கிற பொண்ணு இப்படிக் குதித்து ஆடுது பாரேன்னுதான் நினைச்சிருப்பீங்க. எருமை மாட்டுக்கு "ஸ்கிப்பிங்" என்ன வாழுதுன்னு உங்க மனசு கேட்டிருக்கும்…."

புலம்பும் குரலில் பேசினாள் அவள். "ஐயோ ஐயோ!" எனப் பதறினான்"நான் அப்படி ஒண்ணும் நினைக்கலே, ஆமா" என்றான்.

"பின்னே? நினைச்சதைச் சொல்லுங்களேன். ஏன் தயங்குகிறீர்கள்?" என்று அவள் சிணுங்கினாள்.

கைலாசம் அவளை ஒரு கணம் பார்த்தான். லேசாகச் சிரித்தான், "அழகான பெண் ஆடிக் குதிப்பது அருமையாகத் தான் இருக்கிறது. பேபி நாட்டியம் ஆடினால் இன்னும் ஜோராக இருக்கும் என்றுதான் எண்ணினேன்.”"

ஒய்யாரப் பார்வை ஒன்றை அவன் மீது பதித்துவிட்டு உள்ளே ஓடினாள் பேபி. பின் பக்கமிருந்து வந்துகொண்டிருந்த பரமசிவத்தின் மேல் மோதிக் கொள்ளத் தெரிந்தாள்.

"என்னம்மா இது? ஏன் இந்த ஓட்டம்? கைலாசத்தைப் பார்த்து விட்டா இப்படி ஓடி வருகிறே? பயமா இல்லை, வெட்கமா? என்ன கண்ணு?" என்று கொஞ்சினார் அவர்.

"போ அப்பா!" எனக் குழறிவிட்டு பேபி ஒரு அறைக்குள் மறைந்து கொண்டாள்.

பேபி சரியான விளையாட்டுப்பிள்ளை, வெறும் குழந்தை என்கிற விஷயமாகப் பத்து நிமிஷம் சுவாரஸ்யமாகப் பேசினார் பேராசிரியர். பிறகு இலக்கிய விஷயங்களில் சஞ்சரிக்கலானார்.

அறையினுள் மறைந்த பேபி "பூரண கிரகணம்" ஏற்படுத்திக் கொள்ளவில்லை. எட்டி எட்டிப் பார்த்தும், எதிர் வந்து நின்றும், ஏதேனும் காரணம் கற்பித்துக் கொண்டு அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தும் கைலாசத்தின் மீது இனிய நோக்கு உகுத்து அவன் பார்வையைப் பெற்று மகிழ்வுற்றாள்.

அன்று மட்டுமல்ல. அவன் அவர்கள் வீடு தேடி வந்த ஒவ்வொரு சமயத்திலும்தான். கைலாசமும் அடிக்கடி அங்கு வரலானான். பேராசிரியரோடு உரையாடிக் கொண்டிருப்பதால் எவ்வளவோ லாபம் கிட்டுகிறது; புதிய புதிய விஷயங்களை அறிய முடிகிறது; பயனுள்ள பொழுது போக்கு என்றெல்லாம் அவன் நெஞ்சொடு. கூறிக் கொள்வதை வழக்கமாக்கினான். அங்கே அவனை அவ்விதம் இழுக்கும் இனிய காந்தம் ஒன்று உலவுகிறது எனும் உண்மையை அவன் ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை.

தமது அறிவொளியாலும், பேச்சுத்திறத்தாலும் வசீகரிக்கப் பட்டே அவன் அடிக்கடி வருகிறான் என்றுதான் பேராசிரியர் நம்பினார். ஆகவே சுவையாகச் சம்பாஷித்தார். பேச்சோடு பேச்சாக, "பேபி அப்படிச் செய்தாள். இதைச் சொன்னாள். விளையாட்டுத்தனமாக நடந்து கொண்டாள்" என்றும் பெருமையோடு அறிவிப்பார்.

ஸார்வாள் இலக்கியக் கதாபாத்திரங்களின் குணாதிசயங் களையும், உணர்வுக் குழப்பங்களையும், உளப் போராட்டங் களையும், மிகத் தெளிவாகப் புரிந்து, நுணுக்கமாக ஆராய்ந்து, அலசிப் பிழிந்து விவரிக்கிறார்கள். ஆனால் தன் மகளின் உள்ளத்தை உணரும் திறமை பெறவில்லை என்றே தோன்று கிறது. ஸார்வாளின் அறிவையும் ஆராய்ச்சித் திறமையையும் தந்தையின் பாசம் எனும் ஒட்டடை மூடிக்கொண்டது போலும்! என்று கைலாசத்தின் மனக்குறளி எடை போட்டது ஒரு சமயம்.

அது சரியான கணிப்புதான் என்றே காலம் உறுதிப் படுத்தியது.

கைலாசத்துக்கு வழக்கமாகப் பற்றுகிற ஒரு கோளாறு இப்பொழுதும் திடீரென்று ஏற்பட்டது. "மனசு சரியில்லை" எனும் நோய்தான் அது. அகத்திலும் புறத்திலும் நிலவுகிற வரட்சியால் தூண்டப்படும் அந்த வியாதிக்கு அவன் அறிந்த மாற்று "ஊர் வழி போவது"ம், பல மாத காலம் வெளியூரிலேயே தங்குவதுமாகும்.

இம்முறையும் அவ்விதமே திட்டமிட்டு, தனது எண்ணத் தைப் பேராசிரியரிடம் தெரிவித்து விட்டு அவன் வெளியேறி னான். வாடிய முகத்தோடு ஏக்கப் பார்வையை அவன் பக்கம் ஏவி நின்ற பேபியின் தோற்றம் கைலாசத்தின் உள்ளத்தில் கிளர்ச்சி உண்டாக்காமல் இல்லை. எனினும் அவன் அதைப் பெரிது படுத்தவில்லை.

பிறகும், பிரயாண முன்னேற்பாடுகளில் முனைந்திருந்த அவன் உள்ளத்தில் பேபியின் நினைவு மேலோங்கி நிற்க வில்லை. ஆகவே நீல வானத்திலிருந்து நேராக இறங்கி வந்த தேவ கன்னிகையைப் போல அவள் வந்து நின்றதும் - கைலாசம் சற்று அயர்ந்துதான் போனான். இவளை விட்டு விட்டு எப்படிப் போவதாம்? எங்கே போவதாம்?" என்று முனங்க ஆரம்பித்தது அவன் மனக்குறளி - இலேசாக! அவன் புறப்படும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக பேபி வந்து நின்றதும் கைலாசம் திகைப்புற்றான். கையில் ஒரு பையுடன் காட்சி தந்தவளைக் கண்டதும், "எங்கே கிளம்பிவிட்டாய் பேபி? பஜாருக்கா?" என்று கேட்டு வைத்தான்.

"ஊகும்" என்று தலையசைத்த பேபியின் புரளும் விழிகள் பேசிய பாஷை அவனுக்கு உணர்வுக் கிளர்ச்சி ஊட்டுவதாகத் தானிருந்தது. அவள் தரையைப் பார்த்தாள். மோட்டைப் பார்த்தாள். நாணியும் கோணியும் நேராகவும் பார்த்தாள்.

"என்ன பேபி, என்ன விஷயம்?" என்று துடிப்புடன் கேட்டான் அவன்.

அவள் மென்னகை புரிந்தாள். நானும் வருவேன்" என்றாள்.

ஆச்சரியத்தோடு அவன் "எங்கே?" என்று விசாரித்தான்.

"உங்களோடு நானும் வருவேன். உங்க கூடவே வருவேன்" என்று சிறுபிள்ளை மாதிரி, பிடிவாதக் குரலில் பேசினாள் அவள்.

"இதென்னடா இது விளையாடுறியா பேபி?" என்று திடுக்கிட்டுக் கேட்டான் கைலாசம். நான் எங்கோ போகிறேன். எப்படி எப்படியோ அலைவேன். நீயாவது என் கூட வருகிற தாவது!.. இன்னும் எவ்வளவோ சொல்லத் தவித்தான் அவன்.

"எங்கே போனாலும் சரி. நானும் உங்களோடு வருவேன். நீங்கள் இல்லாமல் இங்கு என்னால் இருக்க முடியாது" என்று பேபி அடம் பிடித்தாள்.

"சரி. நான் எங்கும் போகலே; இங்கேயே இருந்துவிடு கிறேன்னு வை. அப்புறம்?

"நானும் இருப்பேன். உங்களோடு இங்கேயே இருந்து விடுகிறேனே?" என்று ஆர்வமும் ஆசையும் துளும்பப் பதில் உரைத்தாள் குமரி. நீள் இமைகள் படபடத்த நெடுங் கண்களிலும் அவ்வுணர்வுகள் ததும்பி நின்றன.

"இதேதடா பெரிய வம்பாகப் போச்சு" என்று எண்ணிப் பெரு மூச்செறிந்தான் அவன். எனினும் உள்ளத்தில் மகிழ்வு பொங்கிக் கிளுகிளுப்பு உண்டாக்காமல் இல்லை.

"பேபி” என்று பேச்செடுத்தான் அவன்.

“என் பெயர் பத்மா. நீங்கள் என்னை பேபி என்று கூப்பிடக் கூடாது!” என்று கட்டளையிட்டாள் அவள்.

அவள் தந்தையை ஏமாற்றுவது, நம்பிக்கைத் துரோகம் செய்வது, தன் மீது படியக் கூடிய குற்றம் பற்றி எல்லாம் லெக்சரடித்தான் கைலாசம். அவன் பெரும் பேச்சு எதுவும் அவள் திடமனசில் சிறு கீறல் கூட ஏற்படுத்தவில்லை.

"அதெல்லாம் எனக்குத் தெரியாது, நீங்கள் என்னை அழைத்துக் கொண்டு போகாவிட்டால், நீங்கள் பிரயாணம் செய்கிற ரயிலிலேயே விழுந்து நான் செத்துப் போவேன். நிச்சயமாக அப்படித்தான் செய்வேன். தனியாக, வீட்டுக்குத் திரும்பவே மாட்டேன்” என்று, குரலில் உறுதி தொனிக்கப் பேசினாள் அவள்.

நிச்சயமாக அவள் அவ்வாறே செய்து முடிப்பாள் என்று அவனுக்குத் தோன்றியது. அவன் மனம் ஊசலிட்டது.

"உங்கள் மீது எனக்கு ஆசை. உங்களைப் பார்த்த தினத்தி லிருந்தே உங்கள் மேல் எனக்கு ஆசை ஏற்பட்டு விட்டது என்று உணர்ச்சி நிறைந்த குரலில் சொன்ன பேபி, அவன் அருகில் சென்றாள். அவன் தோள் மீது கைகளை இணைத்துத்
தலையையும் சாய்த்தாள்.

மேலும் அவளை எதிர்த்துப்பேசவோ, தட்டி விலக்கவோ அவனிடம் வலு இல்லை. "வாழ்க்கையின் வறட்சி இந்தக் குளிர் பூஞ்சுனையினால் நீங்கிவிடும். புதுமலர்ச்சிப் பிறக்கும்" என்று முனங்கியது அவன் மனக்குறளி.

அவள் இடுப்பில் கைவைத்து அவளை இன்னும் அருகில் இழுத்தபடி, ஆசைப் பார்வையை அவள் முகத்தில் பதித்து அவன் அன்போடு கேட்டான்: "சரி பத்மா! உன் அப்பா என்ன சொல்வார்? அம்மா கோபிக்க மாட்டாளா?"

"ஊகுங்" என்று தலையசைத்தாள் அழகி. "என் அப்பா எனது இஷ்டத்துக்கு எதிரே நிற்கமாட்டார். அம்மா கோபித்தால் என்ன? பிறகு இணங்கி விடுவாள்!"

"அப்போ புறப்படு" என்றான் கைலாசம்.

"ரயிலுக்குத் தானே?" என்று கேட்ட பேபி, ஆசைத் துடிப்போடு அவன் முகத்தை, நிமிர்ந்த தன்முகம் நோக்கித் தாழ இழுத்தாள்.

ஒரு கணத்துக்குப் பிறகு தான் அவன் பதில் சொல்ல முடிந்தது. "ஹூஹூம். உன் அப்பாவிடம் தான். நாம் இருவரும் சேர்ந்து நமது கருத்தை அறிவித்தால் அவர் நம் தவறை மன்னித்து விடுவார். நமது எண்ணத்தை மகிழ்ந்து ஏற்றுக் கொண்டு பாராட்டினாலும் பாராட்டுவார். பேராசிரியர் ரொம்ப நல்லவர்" என்றான்.

பரமசிவம் கைலாசத்தின் நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்க வில்லைதான். முதலில் அவர் திகைப்படைந்தார். பிறகு திருப்தியே கொண்டார். "பேபி எனக்கு வீண் சிரமம் வைக்காமல் நீயாகவே உன் வருங்காலத்துக்கு நல்ல வழி வகுத்துக் கொண்டாய் போலும்! ரொம்ப சந்தோஷம் என்றார். இது வந்து எனக்கு எதை ஞாபகப்படுத்துகிறது என்றால்.." என்று இலக்கிய நயம் எதையோ எடுத்துச் சொல்லி விளக்கத் தவித்தார் அவர்.

அவருடைய பேச்சு இப்போது கைலாசத்துக்கு வெறும் போரடிப்பாகத் தோன்ற-வில்லை. அது பெரும் தொண தொணப்பாகவே இருந்தாலும் கூட அதை ஆனந்தமாகக் கேட்டு ரசிக்கத் தயாராக இருந்தான் அவன். கையை அன்போடு பிடித்துக்கொண்டு பேபி அருகிலேயே நிற்கிற போது அவனுக்கு எல்லாம் இன்பமயமாகத் தோன்றாமல் வேறு எப்படி இருக்குமாம்?
----


18. காதல் போயின்?


மாறி ஆடும் பெருமாள் பிள்ளைக்குக் கோபம் என்பது வரவே வராது அவரை நன்கு அறிந்தவர்கள் இப்படிச் சொல்வது வழக்கம்.

"ஐயா, உம்முடைய பெயர் மாரியாடும் பெருமாள் என்றே எழுதப்பட வேண்டும். அதாவது, மாரியம்மன் வந்து ஆடுகிற பெரிய ஆள்! அதை விட்டுப் போட்டு, நீர் மாறியாடும் என்று எழுதுவதன் வயணம் என்ன? ஆட வேண்டிய பூடத்தை விட்டு விட்டு இடம் மாறி ஆடிய பெருமாளா? அல்லது ஒரு காலில் நின்று ஆடிக் களைத்து அப்புறம் கால் மாறி ஆடும் பெருமான் என்று அர்த்தமா?" என்று பிள்ளை அவர்களின் நண்பர் சுப்பையா முதலியார் வேடிக்கையாகவும் வினையாகவும் பேசுகிறபோது கூட அவர் கோபம் கொள்வது கிடையாது. "உங்களுக்கு வேலை என்ன?" என்று சிரித்து மழுப்பி விடுவார்.

அவ்வளவு தங்கமான மனிதரைக் கூட, பேயாக மாறி உக்கிரமாக ஆட வைக்கும் மந்திரம் போல் ஒரு சொல்" இருக்கத்தான் செய்தது. பிள்ளை அவர்களின் முன்னிலையில் "காதல் போயின் சாதல்" என்று சொன்னால் போதும், அவர் நிஜமான மாரியம்மன் கொண்டாடியாகவே மாறி விடுவார்.

"காதல் போயின் சாதலாம்! வெங்காயம் போனால் பெருங்காயம்! போங்கடா முட்டாள் பயல்களா! காதலித்து வாழ்வது என்று கிளம்புகிற இரண்டு பேர் வாழ முடியவில்லை யாம். அப்புறம் இரண்டு பேர் சேர்ந்து சாவது மட்டும் எப்படி நிச்சயமான வெற்றிச் செயலாக முடியுமோ தெரியவில்லை. வாழ்வது நம் கையில் இல்லை என்றால், சாவது மட்டும் நம் இஷ்டம்போல சித்தியாகக் கூடிய விஷயமாகவா இருக்கிறது!” என்ற ரீதியில் கனல் கக்கத் தொடங்குவார் அவர்.

இதற்குக் காரணம் மாறியாடும் பெருமாளை, ஏமாறிவிடும் சிறு பிள்ளையாக மாற்றிய காதலி எவளாவது இருந்திருக்கலாம் என்று எண்ணுகிறவர்கள் உண்மையை விட்டு விலகியே செல்கிறார்கள். அவருடைய மூத்த புதல்வன் மகிழ்வண்ண நாதன் தான் பிள்ளையைச் சீறி ஆடச் செய்யும் மகுடிநாதமாக வந்து வாய்த்தான்.

அவன் அவ்வாறு செயல் புரிவான் என்று பிள்ளை அவர்கள் கனவில் கூட எண்ணியதில்லை. "கல்லுளிமங்கன்" எனப் பலராலும் குறிப்பிடப்பட்ட இரண்டாவது புத்திர பாக்கியமான மகரநெடுங் குழைக்காதன் ஏறுமாறாக ஏதாவது செய்திருந்தால் அவர் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டார்.

மா.ஆ பெருமாள் பிள்ளைக்குத் தமிழ் மொழிமீது அபாரமான காதல் என்று சொல்வதற்கில்லை. அவர் தமது புதல்வர்களுக்கு அழகிய - இனிய - நீளப் பெயர்களைச் சூட்டிய காரணம், திருத் தலங்களில் எழுந்தருளியுள்ள தெய்வங்களின் திருநாமங்கள் அவை என்பதனால் தான். மூன்றாவது மகன் பிறந்தால், அவனுக்குத் திருப்பாற்கடல் நம்பி எனப் பெயரிட வேண்டும் என்று அவர் எண்ணியிருந்தார். அவருடைய மனைவி ஆண்டாள் அம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்று ஏமாற்றி விட்டாள். ஆயினும் "சூடிக் கொடுத்த நாச்சியார்" என்ற நீளப் பெயரிட்டு, பிள்ளை தமது ஏமாற்றத்தை ஒருவாறு மறைத்துக் கொண்டார்.

இவ்விதம் வாழ்க்கையில் குறுக்கிட்ட சிறு சிறு ஏமாற்றங் களையெல்லாம் சகித்துச் சமாளிக்கக் கற்றுக் கொண்ட பிள்ளை அவர்களின் மனமே முறிந்து போகும்படி அல்லவா அவருடைய செல்வ மகன் செயல் புரிந்து விட்டான்!

சீதை என்கிற பெண்ணை அவன் காதலித்தான்.

"பிள்ளையாண்டான் செய்த பெரும்பிழை அதுதான். அவன் குழல்வாய் மொழி என்றோ குறுங்குழல் கோதை என்றோ அல்லது அப்படிப்பட்ட நீண்ட பெயர் எதுவோ உள்ள பெண்ணைத் தேடிப் பிடித்துக் காதலித்திருக்கக் கூடாது? போயும் போயும் சீதை என்கிற "ஸிம்பிளான ஒரு பெயர் கொண்ட பெண்ணைக் காதலித்தானே! இது போன்ற சின்ன பெயரெல்லாம் நம்ம அண்ணாச்சிக்குப் பிடிக்காதே. அது பையனுக்குத் தெரியலியே! என்று சுப்பையா முதலியார் அடிக்கடி சொல்ல ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி விட்டான் அவன்.

சுப்பையா முதலியார் இழவு வீட்டுக் கூட்டத்தில் கூட ஹாஸ்யமாகப் பேசும் பண்பு பெற்றவர். அவர் சுபாவத்துக்கு ஏற்ப, பேச்சிலே சுவை கூட்டிப் பேசினாரே தவிர, அதுதான் உண்மையான காரணம் என்று சொல்ல முடியாது.

மகிழ்வண்ணநாதன் சீதை என்ற பெண்ணைக் காதலித்து, அவளையே கல்யாணம் செய்து கொள்வேன் என்று அடம் பிடித்தது மா.ஆ. பெருமாள் பிள்ளைக்குப் பிடிக்கவில்லை என்பது உண்மை. ஆனால் பெண்ணின் பெயர் சீதை என்று இருந்தது அதற்குக் காரணமல்ல; அந்தச் சீதை அவருடைய ஏழைத் தங்கை லட்சுமி அம்மாளின் மகளாக இருந்ததுதான் அவரது வெறுப்புக்குக் காரணமாகும்.

நிலைமை முற்றி நெருக்கடியாக மாறுகிறவரை பிள்ளை அவர்களுக்குப் பையனின் காதல் விவகாரம் தெரியவே தெரியாது. எல்லாம் முற்றிவிட்ட பிறகு சீறி விழுவது தவிர அவர் வேறு எதுவும் செய்ய முடியாத பராபரமாகி விட நேர்ந்தது. சீறினார், சிடுசிடுத்தார். "மட சாம்பிராணி காதலிக்கத்தான் காதலித்தானே - பெரிய இடத்துப் பெண்ணாக, பணக்காரன் மகளாகப் பார்த்துக் காதலிக்கப்படாது? பெரிய பண்ணை சீனிவாசம் பிள்ளை மகள் இல்லையா? கொளும்புப் பிள்ளைவாள் பேத்தி, மெத்தை வீட்டு ராமானுஜம் பிள்ளையின் மகள் - பெண்களா இல்லாமல் போனார்கள்? இவன் விடியா மூஞ்சி லட்சுமியின் மகள் சீதை மேலே எனக்குக் காதல் என்று முரண்டு பண்ணுகிறானே" என்று முணமுணத்தார்.

ஆரம்ப கட்டத்திலேயே விஷயம் அவருக்குத் தெரிய வந்திருக்குமானால், “டே பையா காதல் கீதல் என்பதெல்லாம் சரிதான். அது கல்யாணம் பண்ணுவதற்கு முந்தித் தான் வர வேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் கிடையாது. கல்யாணம் ஆன பிறகு, கல்யாணம் செய்து கொள்கிற பெண் மீதும் காதல் ஏற்படலாம். நீகாதலியை மனைவியாக மாற்ற ஆசைப்படாமல், உனக்கு வாய்த்த மனைவியைக் காதலித்து உருப்படு. சந்தோஷமாக இரு!" என்று போதித்திருப்பார். வெறும் போதனையுடன் நின்று விடாமல், பணமும் நகையும் சொத்தும் சுகமுமாக வரக் கூடிய ஒரு பெண்ணையும் அவனுக்குக் கட்டி வைத்து மகிழ்வடைந்திருப்பார்.

ஆனால், அவர் வீட்டில் நடந்ததே அவருக்குத் தெரியாமல் போயிற்றே! அவருடைய தங்கை லட்சுமி அம்மாள் விதவையாகி, போக்கிடமின்றி, அண்ணனே கதி என்று நம்பி வந்து பிள்ளை அவர்களுடைய வீட்டிலேயே தங்கி விட்டாள். சமையல் வேலை முதல் சகல அலுவல்களையும் செய்து தான் அவள் வயிறு வளர்த்து வந்தாள். அவள் சூழ்ச்சி செய்து வீட்டிலே அதிகாரம் பெற்று ஆக்கினைகள் பண்ணுவதற்காகவே தன் மகளை மகிழ்வண்ணநாதனுக்குக் கல்யாணம் செய்யத் திட்டமிட்டிருக்கிறாள் என்றே பெரிய பிள்ளை கருதினார். ஆனால் அவருடைய மகனின் பிடிவாதத்துக்கு லட்சுமி அம்மாள் தூண்டுலுமல்ல; துணையுமல்ல.

"சீதை இல்லாமல் என் வாழ்க்கை வாழ்க்கையாக இராது. எனது வாழ்வில் ஒளி புகுத்தக் கூடியவள்.அவள் தான்" என்று அவன் உறுதியாக அறிவித்தபோது முதன்முதலாக அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தவள் அவள் தான். "விஷயம் இவ்வளவு தூரத்துக்கு வளர்ந்துவிடும் என்று எனக்குத் தெரியாமல் போச்சுதே" என்று அவள் தலையில் அடித்துக் கொண்டாள்.

அந்த உண்மை - சீதை தனது துணைவியாக வந்தால்தான் வாழ்க்கை இனிமை மிகுந்த மலர்ச் சோலையாக அமையும் என்கிற ஞானம் - மகிழ்வண்ணநாதனுக்குப் பிடிபடுவதற்கே வெகு காலம் ஆயிற்றே! மற்றவர்களுக்கு அது முதலிலேயே விளங்காமல் போனது அதிசயமில்லைதான்.

மகிழ்வண்ணநாதனுக்கு அத்தை மகள் சீதையிடம் சின்னஞ் சிறு பிராயம் முதலே அன்பும் ஆசையும் இருந்ததாகச் சொல்ல முடியாது. சீதை சூரியன் குஞ்சாகப் பிறக்கவுமில்லை; சந்திரன் குஞ்சாக வளரவுமில்லை. ”மூதேவி! மூஞ்சியைப் பாரு! பனங்காய் மோரை!” என்றெல்லாம் அவனே பலமுறை பழித்திருக்கிறான். அத்தை மகள் என்ற உரிமையோடும், ஒருவித இளக்காரத்தோடும். அலட்சியமாக மதித்துக் கேலி பேசி அவளை அழ அழ வைத்திருக்கிறான். அந்தப் பெண்ணும் ஏச்சுக்கு ஏச்சும், பேச்சுக்குப் பேச்சும், சில சமயம் அடியும் கிள்ளும் கொடுப்பதற்குத் தயங்கியது இல்லை. அப்போது அவளிடம் அவனுக்கு ஆசையுமில்லை; நேசமும் இல்லை.

பாவாடையை அவிழ்த்து அவிழ்த்துக் கட்டிக் கொண்டு, திண்ணைக்கும் மண்ணுக்கும் தாவியவாறே, குரங்கே குரங்கே குற்றாலத்துக் குரங்கே! கொம்பை விட்டு இறங்கேன்" என்று கத்திக் கொண்டு, தோழிகளோடு குதியாட்டம் போட்ட போதெல்லாம், அவன் பார்வையில் அவளும் ஒரு குரங்காகத் தான் தோன்றினாள். கண்ணாம் பூச்சியும், ஒடிப் பிடித்தலும் ஆடிக் களித்த அத்தை மகள் அவன் கண்களுக்குக் கொடி யாகவோ மயிலாகவோ காட்சி அளித்ததில்லைதான்.

பச்சைப் பசிய வயலில் தலையெடுத்துக் காற்றிலே தவழ்ந்தாடும் "மூப்பன் கதிர்" மாதிரி, பருவம் அடைய வேண்டிய பிராயத்தில் சீதையும் தள தள வென்று வளமும் வனப்பும் பெற்றுத் திகழ்ந்தாள். பதின்மூன்று - பதினான்கு வயசுப் பாவாடை தாவணிப் பருவத்துக் குட்டி, வாலிபனாக வளர்ந்து கொண்டிருந்த மகிழ்வண்ணநாதனின் கண்களைக் கவர்ந்தாள். ஆயினும் கருத்திலே நிலையான இடம் பெற்றாளில்லை.

ஒரு சமயம் அவளுடைய சிநேகிதி ஒருத்தி சீதையைச் சீண்டுவதற்காக "அத்தான் பொத்தக்கடா, அழகுள்ள பூசனிக்காய்!” என்று வாயாடினாள். சீதை சீறினாள். "எங்க அத்தான் அப்படி ஒண்ணும் வண்டி கொள்ளாதபடி தண்டியும் சதையுமாக இல்லை. அவர் பொத்தக்கடாவுமில்லை; பூசனிக்காயுமில்லை" என்று வெடுவெடுத்தாள்.

"அப்போ உன் அத்தான் அழகு என்று நீயே மகிழ்ந்து போகிறே; இல்லையாடி சீதை?” என ஒரு வம்புக்காரி கிண்டல் பண்ணினாள்
.
அவ்வேளையில் அவன் தற்செயலாக அங்கு வந்து விடவும், தோழிகள் கை கொட்டிச் சிரித்தார்கள். சீதையின் முகம் செக்கச் சிவந்து, தணிந்து சிரிப்பு சிரித்தது. "சீதை கூட அழகாகத் தானிருக்கிறாள்" என்றது அவன் மனம்.

வேறொரு மாலை வேளையில், பொன் வெயில் சூழ்நிலைக்கு மினுமினுப்பு பூசிக் கொண்டிருந்தபோது, சீதை ஒரு தாம்பாளம் நிறைய அந்திமந்தாரைப் பூக்களைக் கொய்து திரும்பி வந்தாள். ஒரு இடத்தில் வெயில் தனது இனிய ஒளியை அவள் மீது பாய்ச்ச வசதி ஏற்பட்டது. மின்னும் தாம்பாளம் நிறையப் பளிச்சிடும் வண்ணப் பூக்கள் ஏந்தி வந்த பாவையும் அழுத்தமான நிறமுடைய பட்டுப் பாவாடையும் தாவணியுமே கட்டியிருந்தாள். அப்பொழுது அவளே அந்தியிலே பூதிதொளி ரும் புஷ்பக்கொடி போல்தான் விளங்கினாள் அவன் நோக்கிலே மகிழ்வு பூத்த அவள் முகம் வனப்பு மிகுந்த பூச்செண்டாகக் காட்சி தந்தது. எனினும் சீதையிடம் அவனுக்கு அளவிலா ஆசை ஏற்பட்டு விடவில்லை.

காதல், காதல் என்கிறார்களே அந்த அற்புதம் ஒருவனுக்கு ஒருத்தி பேரில் ஏன் திடீரென்று ஏற்பட்டு அவன் உள்ளத்தை யும், உணர்ச்சியையும் பாடாய்ப் படுத்துகிறது என்பதற்கு உரிய விளக்கத்தை எவரும் கண்டு பிடிக்கவில்லை. மகிழ்வண்ண நாதனுக்கு மட்டும் அது எப்படிப் புரியும்? ஆனால், சீதையின் தோற்றம் எப்பொழுது அவனைக் கவர்ச்சிக்கும் காந்தமாக மாறியது என்பதை அவன் நன்கு அறிவான்.
அவ்வூர்க் கோயிலில் வசந்த உற்சவத்தைச் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடாகி-யிருந்தது. புதிதாகப் பொறுப்பு ஏற்றிருந்த தருமகர்த்தா ஒரு "மேன் ஆப் ஐடியாஸ்!" பழைய திருவிழாவில் புதுமை புகுத்த ஆசைப்பட்டு அவர் நயமான வேலைகள் சில செய்திருந்தார். செய்குன்றுகள், செயற்கை அருவிகள், பூஞ்சோலை மின்விளக்குகள், உயர்ந்த ஒரு பீடத்தில் தவமிருக்கும் சிவபிரான் என்றெல்லாம் கலையாக அமைக்கப்பட்டன. சிவனின் தலையிலிருந்து செயற்கை நீரூற்று தண்ணிரை விசிறித் தெறித்தது. அதுதான் கங்கையாம்!

இந்த அற்புதத்தைக் கண்டு களிக்க ஊரே திரண்டு சென்றது. பக்கத்து ஊர்களிலிருந்தும் படை படையாக ஜனங்கள் வந்தார்கள். மகிழ்வண்ணநாதனும், தனது நண்பன் ஒருவனுடன் வேடிக்கை பார்க்கச் சென்றிருந்தான்.

"மான்களும் மயில்களும்", வானவில் வர்ணஜாலம் காட்டும் மேனியரும் “பொம்மெனப் புகுந்து மொய்க்கும் இனியதோர் உலகமாக மாறியிருந்தது வசந்த மண்டபம். பகலில் சோலைகளிலும் நந்தவனங்களிலும் தனது ஆற்றலைக் காட்டும் வசந்தம் முன்னிரவிலே அந்த இனிய சூழலில் கொலுவிருந்தது போலும்!

திடீரென்று "அதோ பார் மகிழம்! ஒரு அழகி உன் மீது வைத்த கண்ணை மீட்க மறந்து போனாள்!" என்று நண்பன் உரைக்கவும், மகிழ்வண்ணநாதன் அத்திசையில் தன் விழியை எறிந்தான்.

அகல் விளக்குகளிடையே ஒரு குத்து விளக்குப் போலும், மலர்க் குவியல்கள் மத்தியில் ஒரு ரோஜா போலும் திகழ்ந்தாள் அவள். "யார்? நம்ம சீதையா?" என வியப்புற்றது அவன் மனம். ஆகா!" என்று அதிசயித்தது ரசனை உள்ளம். அவன் முகம் மலர்ந்து தன்னைக் கவனித்து நிற்பதை உணர்ந்ததும் அவளு டைய அகன்ற பெரிய விழிகள் கயலெனப் புரண்டன, மீண்டும் அவன் மீது மோதவதற்காக, அந்தப் பார்வை தான் அவனை இடர் செய்தது! அவன் உள்ளத்தில் அவள் இடம் பிடித்து விட்டாள்.

அவள் நின்ற நிலையை, அசைந்த அசைவுகளை, அவளது மோகனப் பார்வையை, முகத்தின் அழகை, விழிகளின் சுடரொளியை அவன் மறக்கவேயில்லை. அதன் பிறகு அவளே ஒரு படையெடுப்பாக விளங்கினாள். அவனை வென்று விட்டாள். அவளைத் தன்னவளாக்கிக் கொள்ளத் தவித்தான் அவன், சந்தர்ப்பங்கள் அவனது பார்வைக்கு விருந்தளித்தன. ஆசையைத் தூண்டி வந்தன.

இவை எதுவும் மாறி ஆடம்பெருமாள் பிள்ளைக்குத் தெரியாது. அவர் தமது மூத்த குமாரனுக்கு, பெரும் பணக்கார ரான திருமலைக்கொழுந்துப் பிள்ளையின் மகளை மணம் முடித்து வைக்க முன் வந்தபோதுதான், பையன் பெரிய அதிர் வெடியைத் தூக்கி அவர் எதிர்பாராத விதத்திலே விட்டெறிந் தான். "சீதை இல்லையென்றால் எனக்குக் கல்யாணமே வேண்டாம்" என்றான்.

மா.ஆ.பெருமாள் பிள்ளை போதித்தார். மிரட்டினார். முடிவாக, தம்மை நம்பியிருக்கும் யுவ யுவதியரின் மகிழ்ச்சியை விடத் தம்முடைய கெளரவம், அந்தஸ்து, பணத்தாசை முதலியனவே முக்கியம் என்று கருதுகிற ஒரு சில பெரியவர்களைப் போலவே திடமாக அறிவித்தார். "எலே மகிழம்! இந்தப் பெருமாள் பிள்ளையை உனக்கு நல்லாத் தெரியாதுடா. ஐயாவாள் உன் கண்ணிலே ஒரு செப்புச் சல்லி கூடக் காட்டமாட்டாக. ஆமா தெரிஞ்சுக்கோ. அந்த நத்தம் புறம்போக்கைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ நடுத் தெருவிலே நிற்க வேண்டியதுதாண்டா, அடேலேய்: ஆமா, ஐயாப்பிள்ளை உன்னைச் சந்தியிலே நிற்க வச்சிரு வாருடா, நிக்க வச்சிருவாரு!" என்று கூப்பாடு போட்டார்.

ஆனால் மகிழ்வண்ணன் அவருடைய பயமுறுத்தல்களுக் கெல்லாம் மசிய வில்லை. அவனுடைய நினைவெல்லாம் சீதையாக இருந்தாள், கனவெல்லாம் அவளாகவே நிழலாடினாள்.

சீதையும் இத்தகைய எண்ணத்தையும் வியப்பையும் அவன் உள்ளத்தில் தூண்டிவிடும் அழகுப் பாவையாக வளர்ந்து வந்தாள். மங்கைப் பருவம் அவள் மேனி முழுவதும் பொங்கி வழிந்தது; கண்ணின் பார்வையில் கவிதை கொட்டியது; இதழ்க் கடையின் குறும்புச் சிரிப்பு அவனையே கொத்தி எடுத்தது. அவள் தன் அத்தை மகள் என்பதில் அவன் பெருமை கொண்டான்; அவள் தன் உரிமை, அவளைத் தன்னுடைய வளாக வரித்துக் கொள்ளலாம் என்பதில் மட்டற்ற மகிழ்வே கண்டான். அவன் ஆசை வெள்ளத்துக்கு அணைபோட முயன்றார் தந்தை. அவர் முயற்சி வெற்றி பெறுவதாவது?

அவன் தனது உறுதியை எடுத்துச் சொன்னான். "வருவது வரட்டும்" என்றான். "சின்னஞ் சிறுசுகள் சந்தோஷமாக இருந்தால் போதும்" எனும் நினைப்புடைய தாய் ஆண்டாள் அம்மாளின் பேச்சு எடுபடவில்லை. சீதையின் அன்னை லட்சுமி அம்மாளோ அழுவதும், புலம்புவதும் மூலையில் இருந்த மூக்கைச் சிந்திப் போடுவதும்தான் தன்னால் ஆகக் கூடிய காரியங்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தாள்.

"வெறும் பேச்சு பையனுக்கு புத்தி புகட்டாது. சொல்லைச் செயல்படுத்தினாலதான் தம்பியாயுள்ளெ அப்பா - சாமி என்று அலறி அடித்துக் கொண்டு வருவாரு, தங்கக் கம்பியாகி இழுத்த இழுப்புக்கெல்லாம் இணங்குவாரு" என்று தீர்மானித்தார் பிள்ளை. வீட்டை விட்டு வெளியே போ என்று ஆணை காட்டியது அவர் விரல்.

மகிழ்வண்ணன் போனான். அவன் அழைப்புக்கு இணங்கி, சீதையும் அவனைப் பின் தொடர்ந்தாள். மாறி ஆடும் பெருமாள் பிள்ளை அவர்களின் வீடு, துக்க வீடாக மாறிக் களை இழந்து காணப்பட்டது.

அப்பொழுது முன்னிரவு நேரம். நிலவு இலேசாக அழு வழிந்து கொண்டிருந்தது. குளிர் காற்று சிலுசிலுத்தது.

மறுநாள் அழுகை நாளாகவே உதயமாயிற்று. இரவில் சினுசினுக்கத் தொடங்கிய தூறல் இடைக்கிடை பெரு மழையாகிப் பேயாட்டம் போட்டது. சற்று ஒயும். மீண்டும் சிணுங்கும். குளிர் குறையவே இல்லை. பகலின் விடிவும் அதே தன்மையில்தான் அமைந்தது.

"குழந்தைகள் எங்கே போனார்களோ; என்ன ஆனார்களோ!" என்று ஆண்டாள் அம்மாளின் உள்ளம் பதைபதைத்தது. லட்சுமியின் பேதை மனம் காரணம் புரியாக் கலவரத்தாலும் சோகத்தாலும் கனத்துக் கிடந்தது.

காலம் ஊர்ந்து கொண்டிருந்தது.

பன்னிரண்டு - ஒரு மணி இருக்கலாம். மாடு மேய்க்கச் செல்லும் ஒருவன் ஓடோடி வந்து மாறியாடும் பெருமாள் பிள்ளையிடம் ஒரு சேதி சொன்னான் –

ஊருக்கு வெளியே சிறிது தள்ளி, ரயிலடிக்குப் பாதை வளைந்து செல்கிற இடத்தில், ஒரு குன்று இருந்தது. பாறை என்றும், பொத்தை என்றும், “வெள்ளி மலை" என்றும் விதவிதப் பெயர் பெற்றிருந்த அவ்விடத்தில், குன்று தோறும் ஆடிடும் குமரன்" கோயில் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குன்றின் ஒரு பக்கம் செங்குத்தாக உயர்ந்து, கீழே பெரும் பள்ளம் உடையதாக இருந்தது. ஆபத்தான இடம் அது. மேலே நின்று வேடிக்கையாக எட்டிப் பார்த்து கால் வழுக்கி விழுந்தும், தற்கொலைத் திட்டத்தோடு செயல் புரிந்தும் "பரலோக யாத்திரை" மேற்கொண்டவர்களைப் பற்றி எப்பொழுதாவது அவ்வூரார் பரபரப்படைய வாய்ப்பு கிட்டுவது உண்டு.

அந்தப் பள்ளத்தில் சின்ன ஐயாவும் சீதை அம்மாளும் விழுந்து கிடந்ததைத் தற்செயலாகக் காண நேர்ந்த மாடு மேய்ப்பவன் எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் சொல்லியவாறே, பிள்ளைவாளிடம் வந்து சேர்ந்தான். விஷயமறிந்த பிள்ளையின் வாய் சொல்லிற்று, "சவங்க எக்கேடும் கெடட்டும்" என்று. எனினும், அவர் இதயம் பதைத்தது; உடல் படபடத்தது. வண்டியும் ஆட்களுமாக அவர் அங்கே போய்ச் சேர்ந்தார். பலரும் பலவிதமாய்ப் பேசாமல் இருப்பார்களா? பேசினார்கள்!, பேசினார்கள் !

ரயிலுக்குப் போகிற போக்கில், மழைக்கு ஒதுங்கியபோது இருட்டில் தடுமாறி, கால் வழுக்கி பள்ளத்தில் விழுந்திருக்கலாம் அவனும் அவளும் என்று ஒரு கட்சி. இரண்டு பெரும் பேசி மனப்பூர்வமாகவே விழுந்திருப்பார்கள் என்பது எதிர்க்கட்சி.


நோக்கம் எதுவாக இருந்திருப்பினும், விளைவு எதிர்பாராத தாக அமைந்து கிடந்தது. மகிழ்வண்ணநாதனோ, சீதையோ உயிரற்ற கட்டையாய் மாறிவிடவில்லை. ஆனால் –

மாறி ஆடும் பெருமாள் பிள்ளையின் வயிற்றெரிச்சலுக்கும் மன எரிச்சலுக்கும் வித்து இங்குதான் ஊன்றப்பட்டது.

சீதையின் முதுகெலும்பிலே பலமான அடி. மகிழ் வண்ணனின் கால்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன.

இருவரையும் வீட்டுக்கு எடுத்து வந்து வைத்திய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார் பெருமாள் பிள்ளை. அவர் பொதுவாக நல்ல மனுசன்தான்; மனித உள்ளம் பெற்றவர் தான். பணத்தைத் தண்ணிராக வாரி இறைத்தார். ஆயினும், சீதை படுத்த படுக்கையிலேயே கிடக்க வேண்டியவளாகவும், மகிழம் நொண்டியாகவும் மாறுவதை எந்த வைத்தியமும் எவ்வளவு மருந்தும் தடுத்து நிறுத்த இயலவில்லை.

"பாவம்! இரண்டு பேரையும் இஷ்டம்போல் வாழ விட்டிருக்கலாம்" என்று பிள்ளை அவர்களின் மனச் சாட்சி உறுத்தத்தான் செய்தது. அதை மறைப்பதற்காக அவர் உறுமுவதை மேற் கொண்டார்.

"என்ன காதலோ! என்ன சாதலோ! மனிதர்கள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிற விதத்தில் வாழவும் முடிவதில்லை. வாழத்தான் முடிவதில்லை, செத்துப்போகலாம் என்று ஆசைப்பட்டால் அது எப்படி சாத்தியமாகும்? தங்களுக்கும் தொல்லை; இருப்பவர்களுக்கும் தொல்லைதான்!

நிரந்தர நோயாளிகள் இரண்டு பேரை வைத்துக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவர் தலை மீது சுமந்து விட்டதனால்தான், மாறி ஆடும் பெருமாள் பிள்ளை சிடுசிடுக்கும் அண்ணாவியாகி விட்டார் என்று சிலர் சொல்வது வழக்கம். அந்தச் சுமையை அவரிடம் தள்ளிவிட்ட "காதல். காதல் போயின் சாதல்" என்கிற விதி அவரைப் பித்தராய் - பேயராய் மாற்றுவதும் இயல்பாயிற்று. அவர் கோபம் கொள்வதில் நியாயமில்லை என்று தள்ள முடியுமா என்ன?
---------------


19. கொடுத்து வைக்காதவர்


சிலரைப் பற்றிக் குறிப்பிடுகிறபோது, அவனுக் கென்ன! கொடுத்து வைத்தவன்" என்று சொல்வார்கள். திருவாளர் நமசிவாயம் அவர்கள் அவ்வாறு குறிப்பிடப்பட வேண்டிய அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவர் அல்லர். "பாவம், கொடுத்து வைக்காதவர்" என்று தான் அவரை அறிந்தவர்கள் கூறுவார்கள்.

திருவாளர் நமசிவாயம் தமாஷாகச் சொல்லுவார்: "நம்ம ஜாதக விசேஷம் அப்படி. ஐயாவாள் ஒரு நிமிஷம் முந்திப் பிறந்திருந்தால் பெரிய சீமான் பேரனாக விளங்கியிருப்பேன். சொத்தும் சுகமும் சகல பாக்கியங்களும் பிறக்கும் போதே கிடைத்திருக்கும். எங்க ஊரிலேயே அப்படிப்பட்டவன், கொடுத்து வைத்தவன், ஒருவன் இருக்கிறான். நான் பிறந்தி அதே நாளில், ஆனால் நான் பிறந்த நேரத்துக்கு ஒரு நிமிஷம் முன்னாலே பிறந்தவன் அவன். அது தான் தொலைகிறது! நான் ஒரு நிமிஷம் தாமதித்தாவது பிறந்திருக்கப் படாதோ? அப்படி அவதரித்திருந்தால் நான் ஒரு சினிமா நட்சத்திரம் ஆகியிருப் பேன். புகழும் பணமும் ஆடம்பர வாழ்வும் எனக்கு வந்து சேர்ந்திருக்கும். அதுக்கும் நான் கொடுத்து வைக்கவில்லை!"

இதைக் கூறிவிட்டு அவர் அவுட்டுச் சிரிப்பு உதிர்ப்பார். அது விரக்தியும் வேதனையும் கலந்த சிரிப்பா? வாழ்க்கையின் அர்த்தமற்ற தன்மையையும், மனித நாடகங்களையும் வேடிக்கையாகக் கண்டு ரசிக்கக் கற்றுக் கொண்டவனின் நையாண்டிச்சிரிப்பா? அளவிட்டுச் சொல்ல முடியாதுதான்.

திருவாளர் நமசிவாயம் பிறப்பில் தான் "கொடுத்து வைக்காதவர்" ஆகிவிட்டார் என்றால், வளர்ப்பு நிலையிலும் அவர் பிரமாத வாய்ப்புகளைப் பெற்றுவிட வாழ்க்கை உதவவில்லை.

அவர் பிறந்த சில மாதங்களிலேயே தாய் "வாயைப் பிளந்து விட்டாள். அவள் விதி அப்படி! அதற்கு நமச்சிவாயம் என்ன செய்ய முடியும்? ஆனால், உறவினரும் ஊராரும் குழந்தை யைத் தான் பழித்தார்கள். "ஆக்கம் கெட்டது! பெத்தவளையே தூக்கித் தின்னுட்டு நிற்குது!" என்றார்கள்.

அவர் தந்தை சுமாரான வாழ்க்கை வசதிகளைப் பெற்றிருந்தார். அவருடைய கஷ்ட காலமும் அவர் வாங்கிய கடன்களும் இருந்த சொத்துக்களை இழக்கச் செய்தன. அதற்கும் பையனின் துரதிர்ஷ்டம் தான் காரணம் என்று பலரும் பேசினார்கள்.
இந்த விதமாகப் பல சந்தர்ப்பங்களிலும், பலரும் சொல்லிச் சொல்லி, நமசிவாயத்துக்கே அவருடைய அதிர்ஷ்டம் கெட்ட தனத்தில் ஒரு நம்பிக்கையும் பற்றுதலுட் படிந்து விட்டன. அவர் வாழ்வில் அவ்வப்போது குறுக்கிட்ட நிகழ்ச்சிகளும் அவருடைய அபிப்பிராயத்தை வலுப்படுத்தின.

"பணம் கட்டிப் பரீட்சை" என்றும் "சர்க்கார் பரீட்சை" என்றும் முன்னோர்கள் பெருமையாகக் குறிப்பிட்டு வந்த எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சையில் நிச்சயம் பாஸ் செய்து விடுவோம் என்ற நம்பிக்கை நமசிவாயத்துக்கு இருந்தது. எல்லாப் பாடங்களையும் "ஒரு கை பார்த்து", கேள்விகளுக்கு உரிய பதில்களை “வெளுத்துக் கட்டியிருந்தார். ஆனாலும், பரீட்சை யில் தேறியவர்களின் பட்டியலில் அவர் எண் இல்லாமல் போய்விட்டது.

அதற்காக நமச்சிவாயம் வருத்தப்படவில்லை. "கொடுத்து வைத்தது அவ்வளவு தான்!" என்று அலட்சியமாக ஒதுக்கி விட்டார். அதிலும் தமாஷ் பண்ணுவதில் உற்சாகம் கண்டார்.

"பரீட்சைகள் மூலம் எவருடைய திறமையையும் எடை போட்டு விட முடியாது. பரீட்சையில் தேறியவர்கள் எல்லோரும் அற்புதப் புத்திசாலிகள் என்றும், பெயிலாகிறவர்கள் சுத்த மண்டூகங்கள் என்றும் எண்ணினால், அது அறியாமைதான். பரீட்சை விடைத் தாள்களைத் திருத்தி மார்க்குக் கொடுக்கிற அண்ணாத்தைகள் எல்லோருமே சரியாக எல்லாப் பேப்பர் களையும் வாசித்து நியாயமான மார்க்குகள் கொடுப்பதில் ஆர்வமும் அக்கறையும் காட்டுவதில்லை. எட்டாவது வகுப்பு படிக்கிற போது எனக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது. ஒரு பரீட்சையில் நான் மிகவும் சரியான விடைகளையே எழுதியிருந்தேன். எப்பவுமே நான் பிரைட் ஸ்டுடன்ட் தான். ஆனால், எனக்கு இருபத்து மூன்று மார்க்குகள் தாமே கொடுக்கப்பட்டிருந்தன. மண்டுவான ஒரு பையன், தப்பும் தவறுமான விடைகள் எழுதியிருந்தவன், எழுபது மார்க்குகள் வாங்கியிருந்தான். பல மாணவர்களுக்கும் இது அதிசயமாகவே பட்டது. அதனால் ஸார்வாளிடமே இரண்டு பேப்பர்களையும் காட்டி, இது எப்படி ஏன் என்று கேட்டார்கள். அவர் என் தாளில் உள்ள பதில்களைப் படித்துப் பார்த்தார். அடடே, ரொம்பவும் சரியாக இருக்குதே என்றார். பிறகு, மறுபடி கவனித்து மார்க்குகள் கொடுத்தார். எனக்கு எண்பத்தைந்து மார்க்கு வந்தது. இன்னொரு பையனுக்கு, பதினெட்டு மார்க்குக் கூடக் கிடைக்கவில்லை. அந்த ஸார் தமது பாலிசியை பெருமையாக விவரித்தார் - நான் பேப்பர் திருத்துகிற விதமே தனி, விடைத் தாள்களின் கட்டை எடுப்பேன். முதலில் இருக்கிற தாளுக்கு பாஸ் மார்க் கொடுப்பேன். அடுத்ததுக்குப் பெயில் மார்க் தான். இப்படி மாறி மாறிக் கொடுப்பேன். நமசிவாயம் பேப்பர் பெயில் மார்க் பெற வேண்டிய இடத்தில் இருந்திருக்கிறது! அது தான் விஷயம்" என்றார். இந்த லெட்சணத்தில் தான் இருக்கும் ஒவ்வொருவர் பாலிசியும்" என்று நமசிவாயம் கூறுவார்.

"பார்க்கப் போனால், கடவுள்கூட அந்த வாத்தியார் மாதிரிதான் நடந்து வருகிறார். நல்லவங்க, திறமை உள்ளவங்க, தகுதி உடையவங்க கஷ்டப்படுகிறாங்க. வாழ்க்கை வசதிகள் அவர்களுக்குக் கிடைப்பதேயில்லை. ஆனால், ஏமாற்றுகிற வர்கள், அயோக்கியர்கள், மனச்சாட்சி இல்லாதவங்க சகல வசதிகளையும் பெற முடிகிறது. இதெல்லாம் கடவுள் சித்தம் என்றால், கடவுளும் கண்மூடித்தனமாக மக்களின் வாழ்க்கையை மதிப்பிட்டு "மார்க்குக் கொடுக்கிறார்" என்று தானே சொல்லவேண்டும்?" இப்படியும் பேசுவார் நமசிவாயம்.

மனிதரின், உயிர்க்குலத்தின், உலகத்தின் வளர்ச்சி வீழ்ச்சி களைப் பாதிக்கிற காலத்தைக் கண்காணிக்கும் உபாத்தியாயர் என்று உருவகப்படுத்தினால், அந்த "வாத்தியார்" திருவாளர் நமசிவாயம் அவர்களின் வாழ்க்கைத் தாளில் தாறுமாறான மதிப்பு எண்களையே சிதறி வைத்தார் என்று சொல்ல வேண்டும்.

நமசிவாயத்துக்குத் திருமணம் செய்து வைப்பதற்கு முன்னரே அவருடைய தந்தை காலமாகிவிட்டார். நமசிவாயம் பிழைப்புக்காக என்னென்னவோ வேலைகள் பார்த்து, எங்கெங்கோ திரிந்து, எப்படியோ ஒரு தினுசாக நாளோட்டி வந்தார். அவருடைய ஊர் பெரியவர் ஒருவர், அவர் மீது அனுதாபம் கொண்டோ, அல்லது பெண்ணைப் பெற்று வளர்த்துப் பெரியவளாக்கிய பிறகு எவன் கையிலாவது பிடித்துக் கொடுத்துத் தங்கள் பொறுப்பைக் கழித்துவிடப் பெரிதம் முயன்றும் வெற்றி பெறாது தவித்த பெற்றோர் தந்த கமிஷனைப் பெற்றுக் கொண்டோ, லட்சுமி என்கிற பெண்ணை நமசிவாயத்துக்கு வாழ்க்கைத் துணைவி ஆக்கினார்.

இல்லற வாழ்வின் இனிமைகளை முழுமையாக அனுபவிக் கவும் நமசிவாயத்துக்குக் "கொடுத்து வைக்கவில்லை" லட்சுமி கொடிய நோயினால் பீடிக்கப்பட்டாள். அந்த எலும்புருக்கி நோய்க்கே பலியானாள்.

அதன் பிறகு நமசிவாயம் கல்யாணத்தை நாடவில்லை; குடும்ப வாழ்வுக்கு ஆசைப்படவுமில்லை. சமூக சேவை, பொது நலப் பணி கடுமையான உழைப்பு என்று பல வழி களிலும் தன் கவனத்தையும் காலத்தையும் செலவிடலானார். அதில் அவருக்குப் பணம் கிடைக்கவில்லை. ஓரளவு பெயர் கிடைத்தது. அவருக்கு அன்பர்களும் வியப்பர்களும் வந்து சேர்ந்தார்கள்.

"நமசிவாயம் அவர்களின் அன்பு உள்ளத்தை, ஆற்றலை, உழைப்பை, தன்னலமற்ற சேவையை - பொதுவாக, அவரது பெருமையை, மதிப்பை - நம்மவர்கள் நன்றாக உணரவில்லை. ஊம். அவருக்குக் கொடுத்து வைத்தது இவ்வளவுதான் அவர் மட்டும் அமெரிக்காவில், அல்லது ஐரோப்பிய நாடு எதிலாவது பிறந்திருந்தால், மிகவும் ஏற்றிப் போற்றப்பட்டு மிகுந்த கெளரவ நிலைக்கு உயர்த்தப் பட்டிருப்பார்" என்று அவர்கள் சொல்வது வழக்கம்.

பிறப்பு, வாழ்வு இவைகளிலே அவருக்குச் சீரும் சிறப்பும் கொடுக்காத காலம் மரணத்திலாவது பரிகாரம் செய்ததா? அதுவும் இல்லை.

முக்கியமான சமூகத் திருப்பணி ஒன்றின் காரணமாக திருவாளர் நமசிவாயம் தமது மாவட்டத்தை விடுத்து பட்டணம் போகத் திட்டமிட்டார். இன்று போகலாம், நாளைப் போகலாம் என்று காலத்தை ஏலத்தில் விட்டு நாள் கழித்தார். பிறகு ஒரு நாள் துணிந்து ரயிலேறிவிட்டார்.

அங்கும் காலம் சதி செய்துவிட்டது. "நேற்றே கிளம்பி யிருக்கணும். போக முடியலே. நாளைக்கு என்று இன்னும் ஒத்திப் போடுவது சரியல்ல. இன்றே போய்விட வேண்டியது தான்" என்று சொல்லி யாத்திரை கிளம்பினாரே நமசிவாயம், அவர் தமாஷ் பண்ணி மகிழ்ந்த ஜாதக விசேஷம் இப்பொழுது விஷமத்தனமாக விளையாடியது! ஒரு நாள் முந்தியோ, ஒருநாள் தாமதித்தோ நேராத, கோர விபத்து அன்றுப் பார்த்து ரயில் பாலத்தில் விளையாடி, வண்டிகளைக் கவிழ்த்து, பலரைச் சாகடித்தது. செத்தவர்களில் நமசிவாயமும் ஒருவர்.

அவர் உடல் நசுங்கிச் சிதைந்து, "ஆளே அடையாளம் தெரியாதபடி மாறிப்" போயிருந்தது.

"பாவம், நல்ல மனிதருக்கு நல்ல சாவு கொடுத்து வைக்கலியே! என்று அவரை அறிந்திருந்த அனைவரும் அனுதாபப்பட்டார்கள்.

திருவாளர் நமசிவாயம் வளர்ந்து, வாழ்ந்து, பணி பல புரிந்து வந்த நகரத்தில் அவருக்காக - அவர் நினைவை கெளரவிப்பதற்காக - அவருடைய நண்பர்கள் அனுதாபக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்கள். அநேக பிரசங்கிகள் பங்கு கொள்வதாக இருந்தது. அதற்கென விளம்பரங்கள், முன்னேற் பாடுகள் எல்லாம் ஆர்வத்தோடு செய்யப்பட்டன.

அன்று மாலைதான் இரங்கல் கூட்டம்.

அது பற்றியும், பேச்சாளர்கள் நிகழ்த்தக் கூடிய நமசிவாயப் புகழுரைகள் குறித்தும், அவருடைய வரலாற்றையும் பத்திரிகை களில் வெளியிடுவதற்குச் சிலர் தீவிர முயற்சிகள் செய்தார்கள்.

ஆனால், பாருங்கள் –

மனிதர்கள் தீவிரமாகத் திட்டம் தீட்டுகிறார்கள்; காலம் குறும்புத்தனமாக அல்லது குரூரமாக, அதைச் சிதைத்து விடுகிறது!

நமசிவாயம் விஷயமும் அப்படித்தான் ஆயிற்று!

அன்று அதிகாலையில், யாருமே எதிர்பார்த்திராத விதத்தில், பெரும் சோகம் நாடெங்கும் கவிழ்ந்து கொண்டது. பெரும் தலைவர் ஒருவர் திடீரென்று மரணமடைந்தார். அதனால் எல்லா நிகழ்ச்சிகளும் நின்று போயின. அத்துக்கத்தைக் கொண்டாடும் முறையில், முன்னறிவிப்பில்லாமலே, பல துறைகளிலும் சகலவிதமான கொண்டாட்ட ஏற்பாடுகளும் ரத்து செய்யப் பட்டன. திரு. நமசிவாயம் அவர்களின் நினைவுக்காகத் திட்ட மிடப் பெற்றிருந்த நிகழ்ச்சி மட்டும் விதி விலக்கு ஆகிவிட இயலுமா என்ன?

"பாவம், நமசிவாயம்! அவருக்குக் கொடுத்து வைக்க வில்லை!" என்றுதான் இரக்கப்பட முடிந்தது அவருடைய நண்பர்களால்!
("அமுத சுரபி” 1966)
-------------


20. வெயிலும் மழையும்


சொக்கம்மாளுக்கு எத்தனையோ ரகசியங்களை இனிக்க இனிக்கச் சொல்லும் ஒரே தோழி அவளுடைய கண்ணாடிதான்.

விலை குறைந்த சாதாரணக் கண்ணாடிதான் அது. இருக்கட்டுமே! சொக்கம்மா மட்டும் பட்டும் படாடோப ஆடைகளும் கட்டி மினுக்கும் சீமாட்டியா என்ன? வேலைக்காரி சீதையம்மாளின் மகள் தானே.

சீதைக்குத் தன் மகள் மீது அதிக அன்பும் ஆசையும் உண்டு. அவளைப் பற்றி தாய் கொண்டிருந்த பெருமைக்கும் அளவு கிடையாது. "எங்க சொக்கம்மா அதைச் சொன்னாள். எங்க சொக்கு இதைச் செய்தாள்" இப்படி ஒரு நாளைக்கு நூற் றெட்டுப் புகழ் பாடுவதில் அவள் மிகுந்த மகிழ்ச்சி கண்டு வந்தாள்.

சின்ன வயசிலிருந்தே அப்படி, இப்போ கொஞ்ச நாட்களாக சீதையின் பெருமையும் ஆனந்தமும், பெளர்ணமி இரவின் கடல் அலைகள் போல், பொங்கிப் பொங்கிப் புரண்டு கொண்டிருந்தன.

"தாய்க்கண்ணோ பேய்க் கண்ணோ என்பார்கள். என் கண்ணே உனக்குப் பட்டு விடுமோ என்று நான் பயப்படுகி றேன். சொக்கு, நீ ராணி மாதிரி இருக்கிறே. சிலுக்கும் சீட்டியுமா உனக்கு புதுப் புது டிரசுக கட்டிப் பார்க்கணுமின்னு எனக்கு ஆசையா இருக்கு. குரங்குகளும் கோட்டான்களும் என்னமா மினுக்கிக்கிட்டுத் திரியுதுக. ராசாத்தி மாதிரி இருக்கிற உனக்கு நல்லா உடுத்தி அழகு பார்க்கிறதுக்கு என்கிட்டே காசு பணம் இல்லேயடியம்மா" இவ்வாறு வெளிப்படையாகவே தனது மனக்குறையை அருமை மகளிடம் சொல்லித் தீர்த்தாள் சீதை.

சொக்கம்மா சமயம் கிடைத்த உடனேயே கண்ணாடி முன் ஓடினாள். "ஆமாம். நீராணியே தான். உன் அழகு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது" என்று கண்ணாடி அவளுக்கு உணர்த்தியது.

கண்ணாடி மட்டும்தானா அவ்வாறு சொல்லும்? அவள் வீதி வழியே போகையில், எதிரே தென்பட்ட ஆண்களின் கண்களும் அதே கதையைத் தானே கூறின! நீ அழகி. ரொம்ப ஜோராக இருக்கிறாய்" என்று அவர்களது பார்வை புகழ் ஒளி சிந்த வில்லையா என்ன? சிலர் ஒருதரம் பார்த்ததில் திருப்தி அடைய முடியாமல், மறுபடியும் மறுபடியும், திரும்பித் திரும்பி, அவளைப் பார்க்கத் தானே செய்தார்கள்?

இதை எல்லாம் எண்ண எண்ண சொக்கம்மாளுக்குப் பெருமையாகத்தான் இருந்தது. சந்தோஷத்துக்கும் குறைவு இல்லை. எண்ணிப் பார்த்தால், எல்லாம் கொஞ்ச காலமாக ஏற்பட்டு வருகிற நிகழ்ச்சிகளே.

அவளிடம் அவளை அறியாமலே ஏதோ ஒரு மாறுதல் திடீரென ஏற்பட்டிருக்க வேண்டும். அல்லது, மெது மெதுவாக உள்ளூர ஏற்பட்டு, திடுமென ஒளி வீசத் தொடங்கியதோ என்னவோ! முந்திய மாலை வரை உறங்குவது போல் அழகற்று நிற்கும் மொக்கு அதிகாலையில் வசீகர வனப்பும் இனிய மணமும் பெற்றுத் திகழ்கிறதே, அதுமாதிரி.

சொக்கம்மாளுக்கு எதுவும் விளங்கவில்லை. ஆனால், அந்த மாறுதல் அவளுக்கு மிகுதியும் பிடித்திருந்தது. மற்றவர்கள் அவளைச் "சிறு பிள்ளை" என்று கருதுவதில்லை. இப்போதெல் லாம் அலட்சியமாக மதிக்கவில்லை. "ஏட்டி - வாட்டி" என்ற தன்மையில் ஏவுவதையும் விட்டு விட்டார்கள். அவள் பெரிய வளாக வளர்ந்து விட்டாள். அவளது தந்தை கூட "வாம்மா, என்னம்மா" என்ற முறையில் தான் பேசினார். முன்பெல்லாம் அப்படியா? "ஏ முண்டம். ஏட்டி சின்னமூதி, பரட்டைக் கழுதை" என்றெல்லாம் ஏசிக் கொண்டிருப்பார்.

இப்போ, எல்லோரும் "சொக்கம்மா வளர்ந்து விட்டாள். நாளைக்கே இன்னொரு வீட்டில் போய்க் குடியும் குடித் தனமுமாக இருந்து நல்ல பேரு வாங்குவாள்" எனும் ரீதியில் பேச்சுக்குப் பேச்சு சொல் உதிர்த்தார்கள்.

சீதை அம்மாள் அவளைச் "சின்னப் பொண்ணு" என்று கருதுவதை விட்டு விட்டாள். தனக்குச் சமமானவள், தனக்குத் துணை என மதித்தாள். எல்லா விஷயங்களையும் மகளிடம் சொல்லுவாள். சில விஷயங்களில் மகள் தனக்கு வழி காட்ட முடியும் என்று கூட அவள் எண்ணினாள். மகளின் ஆலோச னையை அடிக்கடி நாடுவாள்.

சொக்கம்மாளுக்கு இதெல்லாம் மிகவும் பிடித்திருந்தது. இந்த வாழ்க்கையில் விளையாட்டுப் பிள்ளை அல்ல அவள்; அவளும் முக்கியமானவள் தான் என்ற கர்வம் கூட அவளுக்கு ஏற்பட்டது.

சொக்கம்மாளுக்கு வயசு பதினாறு. "நீ இன்னும் சின்னப்பிள்ளை இல்லை, பாவாடை தாவணி கட்டிக்கிட்டு அலையிறதுக்கு. இனிமேல் சேலைதான் கட்டணும்" என்று அம்மா உத்திரவு போட்டு விட்டாள். அம்மா விசேஷம், விழா நாட்களில் அணிவதற்காக வைத்திருந்த நல்ல சீலையையும் ஜாக்கெட்டையும் உடுத்துக் கொண்டு கண்ணாடி முன் நின்று அழகு பார்ப்பதில் அவள் அடைந்த மகிழ்ச்சி இவ்வளவா, அவ்வளவா?" கப்பல் காணாது அதை அடக்கிக் கொள்ள!"

தினுசு தினுசான புடவைகளைக் கட்டிக் கொள்வதற்கு சொக்கம்மாளுக்குப் பிடிக்கும். எந்தப் பெண்ணுக்குத் தான் பிடிக்காது? ஆனால் வாங்குவதற்கு வசதி இல்லை. நாகரிக ஜவுளிக்கடைகளின் முன்னால், கண்ணாடிப் பெட்டிகளுக்குள், நிற்கிற ஆள் உயரப் பொம்மைகள் தன்னைவிட அதிர்ஷ்டம் செய்தவை என்று அவள் நம்பினாள். பின் என்ன? அப்பொம்மைகள் நவம் நவமான ஸாரிகளை - விலை உயர்ந்த ஆடைகளை - அழகும் கவர்ச்சியும் நிறைந்தவற்றை நாள் தோறும் கட்டிக் கொள்ள முடிகிறதே! ஒரே நாளில் அநேக தடவைகள் டிரஸ் மாற்றம் செய்யவும் முடிகிறதே! தனக்கு ஒன்றிரண்டு அழகான ஸாரி, நாகரிகப் புடவை கூட இல்லையே….

இந்த விதமாக எண்ண ஆரம்பித்தால் தான், சொக்கம்மா முகத்தில் வாட்டம் படரும். இல்லாது போனால், அவள் முகம் ரோஜாப்பூ தான்.

சந்தேகமில்லை. சொக்கம்மா பூச்செண்டு தான். கதம்பக் கொத்து. மலர்த் தோட்டம் என்றே சொல்லி விடலாம்.

பக்கத்து வீட்டில் குடியிருந்த சுந்தர மூர்த்தி அப்படித்தான் சொன்னார். அவளிடமே சொன்னார்.

சொக்கம்மா ஒரு நாள் புது வாயில் புடவையும், எடுப்பான ஜாக்கெட்டும் அணிந்து, அந்த வனப்பிலும் அது தந்த ஆனந்தத் திலும் "ஜம்மென்று விளங்கினாள். அவளது கண்ணாடி சொன்ன புகழ்ச்சி மட்டும் அவளுக்குப் போதுமானதாக இருக்கவில்லை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமெல்லாம், "எப்படி இருக்கு? புடவை நல்லாயிருக்குதா? எனக்குப் பொருத் தமா இருக்குதா?" என்று கேட்டு, கிடைக்கிற பாராட்டுரைகளை ஏற்று, குதூகலம் அடைந்து கொண்டிருந்தாள். சுந்தரத்திடமும் கேட்டு வைத்தாள்.

"ஜோராக இருக்கு. நீயே ரோஜாப்பூ மாதிரி அருமையாக இருக்கிறே!" என்றார் அவர்.

பொதுவாகவே புகழ்ச்சி பெண்களுக்கு மிகவும் உகந்ததா கவும் இனியதாகவும் அமைகிறது. அந்தப் புகழ்ச்சி ஆணின் வாய் மொழியாக வருவது பெண்ணுக்கு மிகுதியும் பிடிக்கும். சொல்லும் திறமை பெற்றவர்கள், சொல்ல வேண்டிய நேரத்தில், சொல்லக் கூடிய விதத்தில் சொல்கிற போது அவள் கிறங்கி விடுகிறாள். சொக்கம்மாளும் பெண் தானே!

அவள் உள்ளத்தில் தேன் நிறைந்தது. முகத்திலே மகிழ்வு மலர்ந்தது. அதனால் அழகிய புஷ்பத்தின் மீது வெயிலின் பொன்னொளி பாய்ந்தது போலாயிற்று.

சுந்தரமூர்த்தி அதை ரசித்து வியந்தார். "ஆகா, எவ்வளவு அழகு! உன்னை வெறும் பூ என்று மட்டும் சொன்னால் போதாது. அழகு அழகான பூக்கள் பூத்துக் குலுங்கும் பூந்தோட்டம் என்றே சொல்ல வேண்டும்..."

அவர் பேசப் பேச, சொக்கம்மாளுக்கு இனிமையான பன்னிரை அள்ளி அள்ளி மேலெல்லாம் தெளிப்பது போன்ற சுகம் ஏற்பட்டது. வெட்கமும் வந்தது. "சும்மா இருங்க. கேலி பண்ணாதீங்க" என்று முணுமுணுத்தாள்.

"கேலி இல்லே, சொக்கம்மா. நிசமாகத் தான் சொல்கிறேன்" என்று சுந்தரம் கூறிய விதம் அவளுக்கு நம்பிக்கை ஊட்டுவ தாகத் தான் இருந்தது.

அது முதல் அவள் சுந்தரமூர்த்தியின் புகழ் மொழிகளையும் இனிய பேச்சுகளையும் கேட்பதில் ஆர்வமும் ஆசையும் அதிகம் கொண்டாள். அடிக்கடி அவர் வீட்டின் அருகே வளைய மிட்டாள். வலிய வலியப் பேச்சுக் கொடுத்தாள்.

சுந்தரம் அவள் போக்குகளை ஆதரித்ததோடு, வளரவும் வகை செய்தார். ஏதோ ஒரு கம்பெனியில் என்னவோ 6ԲՓ5 வேலை அவருக்கு. தனியாகத்தான் இருந்தார். ஓட்டலில் சாப்பாடு. வறண்ட பொழுதுகள் நிறைந்த அவரது வாழ்க்கையில் இனிமை நிரப்புவதற்குப் பெண் துணை எதுவும் கிட்டிய தில்லை. எனவே, சொக்கம்மாளின் சிரிப்பும் பேச்சும், வருகையும் போக்கும், அவருக்கு இனிய நிகழ்ச்சிகளாக விளங்கின.

ஒரு நாள் அவள் கேட்டாள், "ராசா மகளே, ரோசாப்பூவே என்று பாடுகிறார்கள். ராசாமகள் அப்படித்தான் இருப்பாளோ?" என்று.

"ராசா மகள் என்ன! நீயே ரோஜாப்பூ தான். நான் தான் அடிக்கடி சொல்கிறேனே. ரோஜாப்பூவைப் பார்க்கிற போதெல் லாம் எனக்கு உன் நினைப்பு தான் வருகிறது" என்று சுந்தரம் சொன்னார்.

"இன்று நான் வருகிற வழியில் ரோஜாப்பூ விற்றார்கள். நானும் அஞ்சாறு பூ வாங்கி வந்தேன். அழகான பூக்களைப் பார்த்துக் கொண்டிருப்பதில் எனக்கு எப்பவுமே ஆசை உண்டு. உன் தலையில் சூடிக் கொண்டால் உன் அழகும், பூவின் அழகும் இன்னும் அதிகமான கவர்ச்சி பெறும் என்றும் கூறினார். அவளிடம் ஒரு பூவைக் கொடுத்தார்.

சந்தோஷத்துடன் அதை வாங்கிக் கூந்தலில் சொருகிக் கொண்ட் சொக்கம்மா, "நன்றாக இருக்குதா? ஊம்ங்?" என்று குழைவுடன் கேட்டாள்.

"ஜோர். வெகு அருமை!" என்று அவர் அறிவித்ததும், ஐஸ் க்ரீம் சாப்பிட்டது போலிருந்தது அவளுக்கு.

"எனக்கு அடிக்கடி பூ வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்படும். கனகாம்பரம், கதம்பம், முல்லை எல்லாம் விற்கும் போது - எல்லோரும் நிறைய நிறையத் தலையில் வைத்திருப்பதைப் பார்க்கிற போது - எனக்கும் ஆசை வரும். ஆனால் காசுக்கு எங்கே போவேன்?" என்று அவள் தன் மனக் குறையை வெளியிட்டாள்.

”ஏன், என்னிடம் கேட்டிருக்கலாமே."

“உங்களிடம் எப்படிக் கேட்பது?” என்று வெட்கத்தோடு இழுத்தாள் அவள்.

"பரவால்லே. இனிமேல் பூ வைத்துக் கொள்ள வேண்டும் என்று நீஆசைப்படுகிறபோது என்னிடம் காசு வாங்கிக் கொள். அழகு தன்னை மேலும் அழகு படுத்திக் கொண்டு கண்ணுக்கு இனிய காட்சியாக விளங்குவது ரசிக்க வேண்டிய விஷயம் தான்”" என்று அவர் அளந்தார். அதன் பிறகு, அவ்வப்போது சொக்கம்மா பூவும் தலையுமாகக் காட்சி தருவது இயல்பாகி விட்டது. "ஏது பூவு?" என்று சீதை சில சமயம் கேட்பதும், "என் சிநேகிதி ஒருத்தி வாங்கினாள். எனக்கும் தந்தாள்" என்று மகள் சொல்வதும் சகஜமாகி விட்டது.

சிவப்புச் சாந்தும், நைலான் ரிப்பனும், காதுக்கு கோல்டு - கவரிங் நாகரிக அணியும் வேண்டும் என்று அவள் ஆசைப்பட்ட போதும், சுந்தரமூர்த்தி அவற்றை அன்பளிப்பாக அவளுக்கு வாங்கித் தந்தார்.

"இப்படி எல்லாம் நீங்கள் ஏன் எனக்காகக் காசு செலவு செய்கிறீர்கள்?" என்று சொக்கம்மாள் கேட்டாள்.

சுந்தரம் மகாரகசியத்தை எடுத்துக் கூறுவது போல, மென் குரலில் பேசினார். "உன் மேலே எனக்கு ஆசை. அதனால் தான்" என்று.

அவ்விதம் அவர் சொன்ன விதமும், பார்த்த வகையும், சிரித்த சிரிப்பும் அவளுக்கு இன்பக் கிளுகிளுப்பு உண்டாக்கின. அவளிடமும் இனம் கண்டு கொள்ள முடியாத பரவச உணர்வு கிளர்ந்து புரண்டது.

அவர் முகத்தையே கவனித்து நின்றவளின் கன்னத்தை சுந்தரம் தன் விரலால் லேசாகத் தட்டினார். மோவாயைப் பற்றி அன்புடன் அசைத்து விட்டு, விரல்கைளைத் தன் உதடுகளில் பொருந்திக் கொண்டார்.

அவர் கைபட்ட இடத்தில் இதமான உணர்ச்சி படர்வதை அவள் உணர்ந்தாள். உள்ளத்தில் குதூகலம் பொங்கியது. காலை இளம் வெளியிலே குளிர் காய்வது போன்ற சுகானுபவம் அவளை ஆட்கொண்டது. நாணம் மீதுற அவள் அங்கிருந்து ஒடிப்போனாள்.

தனது புது அனுபவத்தை - இதயத் துடிப்புகளை - யாரிடமாவது சொல்லி, எண்ணி எண்ணிப் பார்த்து, மகிழ்வுற வேண்டும் என்று வந்தது அவளுக்கு. ஆனால் யாரிடம் சொல்ல முடியும்? அந்தப் பழைய கண்ணாடிதான் அவளுக்குத் துணை. அதில் தன்னையே கண்டு, தனது உணர்வுக் கிளர்ச்சிகளுக்கு விளக்கமும் விடையும் காண முயல்வதே அவளது வழக்கமாகி விட்டது.

வெயிலில் நின்று இதமான அனுபவம் பெறும் ஆசை சொக்கம்மாளுக்கு இல்லாமல் போகுமா? சுந்தரத்தின் பேச்சு, பார்வை, சிரிப்பு முதலியவற்றை அடிக்கடி அனுபவிக்க வேண்டும் என்ற தவிப்பைத் தான் அவள் அடக்க முடியுமா?

"வயது வந்த பெண் இப்படி ஒரு ஆண் பிள்ளையோடு பேசுவதும் சிரிப்பதும் விளையாடிப் பொழுது போக்குவதும் நன்றாக இல்லை" என்று அக்கம் பக்கத்தினர் பேசலானார்கள். "பெரியவளாகி விட்ட பெண்ணுக்குக் கொஞ்சமாவது அடக்கம் ஒடுக்கம் வேண்டாம்? நீயாவது உன் மகளை கண்டித்துவை, சீதை" என்று உபதேசமும் செய்தார்கள்.

சீதை அதைப் பெரிது படுத்தவில்லை. அவளுக்குத் தன் மகளிடம் நம்பிக்கை இருந்தது. தனது மகள் தவறான காரியம் எதையும் செய்யமாட்டாள் எனும் அகந்தையும் இருந்தது. எனினும், மற்றவர்கள் சொல்வதை மகள் காதிலும் போட்டு வைத்தாள் அவள்.

சொக்கம்மா சிரித்தாள். "அவர்களுக்கு வேலை என்ன!" என்று ஒதுக்கி விட்டாள்.

ஒரு நாள் சுந்தரம் அழகான புது மாடல் நெக்லேஸ் ஒன்றைச் சொக்கம்மாளிடம் காட்டினார். அவள் சிறுமி போல் வியப்புடன், "அய்யா! அருமையாக இருக்கிறதே? ஏது?" என்று கேட்டாள்.

"வாங்கி வந்தேன். உனக்காகத்தான்” என்று கூறி அவள் கையில் வைத்தார் அவர்.

அவள் ஆர்வத்தோடு அதைக் கழுத்தில் அணிந்து கொண் டாள். முகமெலாம் உவகையின் மலர்ச்சி. அந்த அறையில் கிடந்த கண்ணாடியில் பார்த்தாள். "நல்லாயிருக்குது. இல்லே? நீங்க சொல்லுங்க. எப்படி இருக்குது?" என்று துடிப்போடு விசாரித்தாள்.


"ஜம்னு இருக்குது. அதுவும் நல்லாயிருக்குது. நீயும் நல்லா யிருக்கிறே!" என்று அவர் சொன்னார்.

அவள் அவர் பக்கம் வீசிய பார்வையில் ஆனந்தம் இருந்தது. பெருமை இருந்தது. ஆசையும் கலந்திருந்தது. யுவதியின் கண்களுக்கே இயல்பான கூரிய காந்த ஒளியும் இருந்தது.

அவற்றால் வசீகரிக்கப்பட்ட சுந்தர மூர்த்தி அவளருகே சென்று அவளை இழுத்துத் தழுவிக் கொண்டார். அவள் கண்களுள் மறைந்து கிடந்த அற்புதத்தை ஆராய விரும்புவார் போல் உற்று நோக்கினார்.

அவள் திடுக்கிட்டுத் திகைத்த போதிலும் செயல் திறம் இழந்து விட்டாள். உணர்வுகள் அவளை ஆட்டுவித்தன. இந்தப் புது அனுபவம் சுகமாகவும் மனோரம்மியமாகவும் இருந்தது. அவளும் அவரோடு இணைந்து, தலையை அவர் மார்பில் சாய்த்துக் கொண்டாள். என்ன பரமானந்த நிலை! இருவருமே இன்பச் சிறகு பரப்பி, பொன்மயமான அற்புத வெளியிலே மிதப்பதுபோல் பரவசமுற்று நின்றனர்.

அவ்வேளையில்தானா சீதையம்மாள் அந்தப் பக்கம் வரவேண்டும்? தற்செயலாக அவள் கண்ணில்பட்ட தோற்றம் பகீரென அவள் உள்ளத்திலும் வயிற்றிலும் தீ இட்டது. "நல்லாத்தானிருக்கு இந்த நாடகம்" என்று சுடு சொல் உதிர்த்தாள் அந்தத் தாய். "சீ, வெட்கமில்லை?" என்று காறி உமிழ்ந்தாள். இருவருக்கும் பொதுவான அந்தப் பேச்சு இருவரையும் சுட்டது.

சொக்கம்மா வேகமாக விலகி, தன் வீட்டுக்கு ஓடி விட்டாள். "அறியாப் பெண்ணை ஏமாற்றி, தன் வலையில் விழ வைத்த அயோக்கியனை" - சுந்தரமூர்த்தியை அவள் இவ்விதம் தான் எடை போட்டாள் - கண்ணெடுத்துப் பார்க்கவும் விரும்ப வில்லை சீதை.

மகளின் சமாதானங்களும் உறுதிமொழிகளும், நெஞ்சில் அடிபட்ட - நம்பிக்கைச் சிதைவு பெற்றுவிட்ட - தாய்க்கு மன ஆறுதல் அளிக்கவில்லை. அவளும் அவள் கணவனும் தீவிரமாக முயற்சி செய்து, அவசரம் அவசரமாக ஒரு கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்து முடித்தார்கள்.

சொக்கம்மா அழுதாள். அரற்றினாள். பட்டினி கிடந்தாள். சுந்தரத்துக்குத் தன் மீது ஆசை என்றும், தனக்கும் அவர் மீது ஆசை என்றும், அவர் தன்னைக் கல்யாணம் செய்து கொள்வார் என்றும் சொன்னாள். அவள் பேச்சு எடுபட வில்லை. சினிமாவிலே, நாடகத்திலே பார்க்கிறபடி எல்லாம் வாழ்க்கையில் நடக்கணும் - நடந்துவிடும் - என்று அவள் எதிர்பார்ப்பது பிசகு என்று தாய் போதித்தாள். பெற்றோர் தேர்ந்தெடுத்த மண மகனையே கல்யாணம் செய்துகொள்ள வேண்டியதாயிற்று.

அவன் கண் நிறைந்த கட்டழகுக் குமரனாக இல்லை. அதற்கு யார் என்ன பண்ணுவது? அவரவர் தலையெழுத்துப்படி தான் நடக்கும்" என்று அம்மா சொல்லி விட்டாள். மகள் மெளனமாகக் கண்ணிர் வடித்துக் கொண்டிருந்தாள்.

"முதல்லே இப்படித் தான் இருக்கும். போகப் போக எல்லாம் சரியாகி விடும். அவள் நன்மையைத் தானே நாம் விரும்பு கிறோம்?" என்று சீதையம்மாள் கூறினாள். உலகம் தெரிந்தவள் இல்லையா அவள்!

தனது வாழ்க்கையில் பிரகாசிக்கத் தொடங்கிய வசந்தகாலப் பொன்னொளி திடுமென இப்படி வறண்டு விடும் என்று சொக்கம்மா கனவு கூடக் கண்டதில்லை. வாழ்வின் வானமே இருண்டு, மழை பொழியத் தொடங்கி விட்டதாக அவள் நம்பினாள். அறியாப் பிராயத்தில் காலை இளம் வெயில் போல் தோன்றுகிற காதல் அன்றாட வாழ்வில் சிறிது நேரம் பகட்டி விட்டுப் போகிற அந்தி வெயில் தான்; அதன் மோகனம் வெகுகாலம் நீடிக்காது என்பதை அந்தப் பேதை அறியவில்லை.

சொக்கம்மாளின் சந்தோஷத்துக்கு சாட்சியாக இருந்த அவளுடைய கண்ணாடி தான் அவளது அழுகைக்கும் ஆறுதல் கூறத் தெரியாத அப்பாவித் தோழியாக அமைந்தது.
("அமுத சுரபி" - ஜூன் 1965)
----------------------


21. யாரைக் காதலித்தான்?


தெருவில் வந்து கொண்டிருந்த சந்திரன் காதுகளில் அவ்வார்த்தைகள் தெளிவாகக் கேட்டன. அவன் அந்த வீட்டை நெருங்குவதற்குச் சில அடி தூரமே இருந்தது. அவன் காதுகளை எட்டாது எனும் தைரியத்தில் தான் அந்தப் பெண் பேசியிருக்க வேண்டும். அவள் உரத்த குரலில் சொன்னது கணிரென்று அவனுக்குக் கேட்டது.

"அதோ வருகிறாரே அவர் தினசரி இந்த வழியாகப் போகிறார். போகும்போதெல்லாம் இந்தப் பக்கம் பார்த்துக் கொண்டே போகிறார்."

கதவின் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு, வாசலுக்கு வெளியேயுமில்லாமல் வராந்தாவிலுமில்லாமல், உள்ளும் புறமுமாக நின்று கொண்டு, நீண்ட தலைப் பின்னல் துவள, சிவப்புக் கரையிட்ட கறுப்புப் பாவாடை அலைகளிட, வான்நீல நிறத் தாவணி அழகு செய்ய அப்படியும் இப்படியும் அசைந் தாடிக் கொண்டிருந்த குமரி ஒருத்தி தான் இவ்வாறு ஒலி பரப்பினாள்.

உண்மைதான், அவளைச் சந்திரன் அடிக்கடி - அந்த விதி வழியே போகும்போதும் வரும்போதும், அவ்வீட்டின் முன்னே ஏதாவதொரு போஸில் கண்டு களித்திருக்கிறான். அவள் திடீரென்று இப்படிக் குரல் கொடுக்கத் துணிவாள் என்று அவன் எதிர்பார்த்ததில்லை.

அவள் பேசியது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது என் றால், அதனினும் வியப்பாக எழுந்தது மற்றொரு ஒலிபரப்பு.

"அவர் உன்னை "லவ்" பண்ணுகிறாரோ என்னவோ!"

தனது குரல் எட்ட முடியாத தூரத்தில் தான் அவன் வருவான் என்ற தெம்பிலே ஒருத்தி பேசியதாகத் தோன்றியது.

"ஐயோ, ஐயோ!" என்று கூவி, சின்னவள் - வாசல் நடையில் நின்றவள் - சிரிப்பு வெட்கம், அச்சம் எல்லாம் முகத்திலே படர, ஒரு கையால் தன் வாயைப் பொத்திய பாவம் ரசமான காட்சியாகப்பட்டது சந்திரனுக்கு. அதை ரசிக்காமலிருப்பானா அவன்?

அவள் கண்கள் அவன் பக்கம் மோதி, வீட்டின் உள்ளே, வராந்தாவிலிருந்த மாடிப் படிக்கட்டின் பக்கம் புரண்டன. அவள் பார்வை நயம் நிறைந்ததாக இருந்தது.

இதற்குள் அவன் அவ்வீட்டருகே வந்து விட்டான். மாடிப்படியில் ஜம்மென வீற்றுத் தங்கையின் பேச்சுக்குக் கேலியாகப் பதில் சொன்ன பெரியவள் அவன் பார்வையில் நன்றாக விழுந்தாள். அதே சமயம், "இவளை லவ் பண்ணுகிற வனின் மூஞ்சியை நாமும் பார்த்து வைக்கலாமே" எனும் ஆசையால் தூண்டப்பட்டவள்போல, கதவருகே வந்து, தங்கையின் பக்கம் நின்று எட்டிப் பார்த்தாள் இன்னொருத்தி - சின்னவளின் இரண்டாவது அக்கா.

அந்நேரத்தில் அம்மூன்று பேரின் முகங்கள் காட்டிய சித்திரமும் கண்களின் போக்கும் விந்தைக் காட்சிகளாகத்தான் அமைந்தன.

மாடிப்படியில் கொலுவிருந்த பெரிய அக்காள், தங்கையால் குறிப்பிடப்பட்டவன் இவனா என்று அறிந்ததும் குழப்ப முற்றாள். கேலி செய்யும் குஷியில் மலர்ந்திருந்த அவளது உருண்டை முகமும், மல்கோவாக் கன்னங்களும் இப்போது ரத்தமேறிச் சிவந்திருந்தன. அவன் கண்களைத் தொட்ட அவளது மையுண்ட விழிகள் சுடரிட்டு மின்னிப் பின் தாழ்ந்தன. பெரிய முட்டைகோஸ் போன்ற அவள் முகம் சற்றே தணிந்தது.

வாசலின் பக்கமாக எட்டிப் பார்த்த சின்ன அக்கா, அவனைக் கண்டதும், இருட்டில் திரிகின்ற சிறு பூச்சி பிரகாசமான வெளிச்சத்தால் தாக்குண்டதும் திணறித் திண்டாடுவது போல் திகைத்தாள். தங்க விளிம்புக் கண்ணாடிகளுக்குள் கயலெனப் புரண்ட கண்கள், அவனைக் கூர்ந்து நோக்கின. அவளது வெள்ளை முகத்தின் ஒட்டிய கன்னங்கள் மேலும் வெளிறுவது போல் தோன்றின. சட்டெனப் பின் வாங்கி அவள் உள் வாசலின் நடைப்படி மீது அமர்ந்தாள்.

இவ்வளவையும் சந்திரன் கண்கள் விசாலப் பார்வையால், ஒரே கணத்தில் - அவை நிகழும் நேரத்திலேயே - கிரகித்துக் கொண்டன.

இப்போதும் அவன் சிரித்த முகத்தோடு அம்மூன்று பேரை யும் பார்த்தவாறு நடந்தான். அவர்களில் இருவர் பேச்சையும் அவன் ரசித்ததால் உண்டான மகிழ்ச்சி அவன் உதடுகளில் முறுவல் தீட்டியிருந்தது. கண்களில் பேசியிருக்கலாம்.

"ஐயோடி! ஏன் நீ அப்படிச் சொன்னே? அவர் காதில் விழுந்திருக்கும். அவர் சிரித்துக்கொண்டே போகிறார்" என்றாள் தங்கை.

அந்த வீட்டைக் கடந்துவிட்ட சந்திரன் காதில் இதுவும் தெளிவாக விழுந்தது. மறுபடியும் பெரிய அக்காள் கிண்டலாக ஏதாவது சொல்லுவாள் என்று எதிர்பார்த்த அவன் ஏமாந்தான்.

சந்திரனின் மனம் அம்மூன்று பேரையுமே சுற்றிக் கொண்டிருந்தது. இந்தப் பெண்ணுக்குக் கண்கள் தான் வெகு அழகு. கனவு காண்பது போன்ற ஒவியக் கண்கள். ஏதோ போதையில் கிறங்கி நிற்பனபோல் தோன்றும் சொக்கழகு விழிகள்" என்று முன்பு பல முறை கொடுத்த சர்ட்டிபிகேட்டை மீண்டும் படித்தது. "பாவாடை தாவணி இவளுக்கு எடுப்பாக, எழிலாக இருக்கிறது. இந்தப் பெண் நெட்டையாக வளரக்கூடும். அவள் உடல்வாகு அப்படித்தான் தோன்றுகிறது" என்றும் மனம் பேசியது.

அந்தப் பெண்ணை மட்டும் தான் அவன் அடிக்கடி பார்த்தான் என்பதில்லை. "உன்னை லவ் பண்ணுகிறாரோ என்னவோ" என்று சொன்னாளே பெரிய அக்காள், அவள் கூடத்தான் அவன் பார்வையில் அடிக்கடி பட்டிருக்கிறாள்.

அவளும் அவனை விளையாட்டாகவும், ஈடுபாட்டுடனும் பார்த்திருக்கிறாள். ஜன்னலின் உட்புறத்தில், அல்லது வராந்தா வில் உள்ள மாடிப்படிமீது உட்கார்ந்திருப்பாள். அநேகமாக, ரோஸ் கலர் பட்டு அல்லது பச்சை நிறப்புடைவை - அழுத்த மான வர்ணமுடைய பட்டாடைதான் - கட்டியிருப்பாள். "இவள் முகம் பம்ப்ளிமாஸ் பழம் மாதிரி இல்லாமல் இருக்குமானால், மூக்கு கொஞ்சம் நீளமாக இருந்திருக்குமானால், இவள் அழகு இன்னும் சோபிக்கும்" என்று அவன் எண்ணுவது உண்டு.

இன்னொரு அக்காள் இருக்கிறாளே, அவள் சுவாரஸ்யமான "கேரக்டர்". சரியான கன்னங்களும் எடுப்பான மூக்கும், சின்னஞ் சிறு வாயும், அழகு தரும் தங்க விளிம்புக் கண்ணாடியும், ஒல்லியான தோற்றமும் கொண்ட அவள், அவன் பார்க்க நேரிட்ட வேளையில் எல்லாம் கறுப்பு நிறப் பட்டாடையில் தான் காட்சி தந்தாள். கரையும், தலைப்பும் மாறி இருக்கலாம். கலர் என்னவோ எப்பொழுதும் கறுப்புத்தான். அது அவளுக்கு அமைவாகவும் இருந்தது.

அவள் சோகமுலாம் பூசிய சித்திரமாகத் திகழ்ந்தாள். அவள் கண்களின் ஆழத்திலே இனம் கண்டு கொள்ள முடியாத ஏதோ ஒரு சோகம், கோயில் கர்ப்பக் கிருகத்தின் ஒளி விளக்குப் போல, மினுமினுத்துக் கொண்டிருந்தது. அவள் முகம் காலை ஒளியில் குதூகலிக்கும் புது மலர் போல் மிளிர்வதை அவன் ஒருபோதும் கண்டதில்லை. மாலை நேரத்தில் சற்றே வாட்டமுற்றுக் காணப் படும் அழகுப் பூ அந்திப் பொன் வெயிலில் மினுமினுப்பது போல், சோகமயமான வசீகரத்தோடு தான் அவள் வதனம் சதா காணப்படும். அவள் ஓயாது படித்துக்கொண்டிருப்பாள். புத்தகமும் கையுமாகக் காணப்படாத வேளைகளில் பிரமாத சிந்தனையில் ஆழ்ந்திருப்பவள் போல் தென்படுவாள்.

அவளையும் அவன் அடிக்கடி பார்த்திருக்கிறான். அவள் பஸ்ஸிலிருந்து இறங்கி வரும்போது - பஸ்ஸ"oக்காகக் காத்து நிற்கையில் - ஓடும் பஸ்ஸின் ஓர் ஒரத்தில் - நடைபாதையில் எதிரே - எந்தெந்த நேரத்தில் எல்லாமோ அவளை அவன் பார்க்க முடிந்திருக்கிறது. வீட்டிலும், அவள் தனிமையில், தானும் தனது எண்ணங்களுமாய் உட்கார்ந்திருப்பதைக் கவனித்திருக்கிறான். அப்பொழுதெல்லாம் அவளது நீளிமைகள் மேலேறி, விழிகள் விசாலமாகி, பார்வை அவன் முகத்தைத் தொட்டு, மீண்டும் மைச் சிமிழ் மூடிக்கொண்டது போல் இமை தணிந்து கொள்வதையும் கவனித்திருக்கிறான்.

அம்மூன்று பெண்களையும் பார்த்து ரசிப்பதனால் அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. "அழகுக் காட்சிகளைக் காண்பதில் என்ன தவறு?"

பார்ப்பது குற்றமற்ற பொழுது போக்கு என்ற தன்மையில் தான் அவன் அவர்களைப் பார்த்து வந்தான். அவர்களும் ரசித்துப் பார்த்து மகிழ்ந்ததனால் அதன் சுவையும் அதிகப் பட்டது. அவ்வளவுதானே தவிர, "லவ்" என்கிற எண்ணமே அவனுக்கு எழுந்ததில்லை. அதாவது, பெரியக்காள் குரல் கொடுக்கிற வரை!

- இம்மூவரில் யார் மீது எனக்கு ஆசை? மூவர்மீதும் ஆசை உண்டு என்றால், யார் பேரில் அதிகமான ஆசை? இதுவரை யார் மீதும் லவ் ஏற்படவில்லை என்றால், இனி இம் மூவரில் யாரை லவ் பண்ணலாம்?. இந்த விதமான எண்ண அலைகள் மோதலாயின.

அப்பெண்களும் அவனைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும். பேச விரும்பாத எண்ணங்களை ஒவ்வொருவரும் தனிமையில் வைத்து மனம் பாண்டி ஆடிக் களித்திருக்க வேண்டும். இது அவர்கள் செயலிலிருந்து நன்கு புலனாயிற்று.

பெரிய அக்காள் விளையாட்டாகப் பேச்சு ஒலிபரப்பிய தினத்துக்குப் பிறகு, ஒவ்வொரு நாளும் அம்மூவரும் சந்திரனின் வருகையை ஆவலோடு எதிர்நோக்கிக் கார்த்திருப்பதும், அவன் தூரத்தில் வரும்பொழுதே எவளேனும் ஒருத்தி "அவர் வாறார்" என்று குரல் கொடுப்பதும், உடனேயே அவர்கள் தத்தமக்கு வசீகரமான இருக்கை நிலை என்று படுகிற போஸில் உட்கார்ந்து கொலு பொம்மைகள் போல் காட்சி கொடுப்பதும் சகஜமாயின. அவன் போகிறபோதே அவர்களைப் பார்ப்பான். ஒவ்வொருவர் முகத்தையும் அவன் கண்நோக்கு தொடும். அவர்கள் கண்கள் தனித்தனியே அவன் பார்வையோடு உறவாடும். மற்றப்படி எவ்விதமான சலனமுமிருக்காது. அவன் போவான், அவர் களைத் தன் எண்ண ஊசலில் வைத்து இஷ்டம்போல் ஆடவிட்டபடி, அவர்கள் இருப்பார்கள் - அவனைப் பற்றிப் பேசியும், பேச விரும்பாத நினைவுகளை எண்ணத்திலிட்டுத் தாலாட்டி மகிழ்ந்தும் பொழுது போக்கியபடி.

சிலசமயம் மூவரில் ஒருத்தி மட்டுமே காணப்படுவாள். அப்பொழுது அவள் அதிக ஈடுபாட்டுடன் பார்ப்பதாக அவனுக்குத் தோன்றும்.

பெரியவள் கண்களில் விஷமம் ஒளிரிடும். அவள் இதழ்க் கடையில் சிறுசிரிப்பு சுழியிடுவதுபோல் தோன்றும். அவள் சிரிக்கிறாளா இல்லையா என்று தீர்மானிகிக இயலாது அவனால். "நாமும் பதிலுக்குச் சிரித்து வைக்கலாமே என்ற ஆசை குமிழ்விடும். சங்கோஜம் அதன் மண்டையிலடித்து ஒடுக்கும்.
சின்ன அக்காள் "ஸிரியஸ் திங்கர்" போல்தான் பார்த்திருப் பாள். கண்களில் சிறு பொறியும், கன்னங்களில் ஒரு வர்ணமும், முழு முகத்தின் தனி மலர்ச்சியும் பார்ப்பதிலும் பார்க்கப் படுவதிலும் அவளுக்கு மகிழ்ச்சியே என்பதை விளம்பரப் படுத்தும்.

கனவு காண்பது போன்ற கண்களை உடைய சிறு பெண் நேராகவே பார்த்து, அழகாகப் புன்னகை புரிவதை வழக்க மாக்கிக் கொண்டாள். அவன் தன்னைத் தான் பார்க்கிறான் . தன்னை மட்டுமே பார்த்து மகிழ்கிறான் - என்ற நம்பிக்கை அவளுக்கு. அதனால், அவள் அவன் வரும் பாதையில் எதிர்ப்பட நேர்ந்தால், அவனுக்கு நேர் எதிராக நடந்து வந்து, அருகுற்றதும் அவனைக் கண்ணினால் தீண்டி சிறிது விலகி அவனுக்குச் சமீபமாக நடந்து போவாள். அவள் திரும்பிப் பார்ப்பாள் என அவன் உள்ளம் சொல்லும். அவள் திரும்பி நோக்குகிறாளா என்று கவனிக்கும்படி அவன் உணர்வு தூண்டும். அவள் உள்ளமும் உணர்வும் அவ்வாறே பேசித் தூண்டிவிடும் போலும்! அவன் திரும்புகிற அதே நேரத்தில் அவள் முகமும் திரும்ப, கண் பார்வைகள் மோத, உதட்டிலே ஆனந்தச் சிரிப்புத் துள்ளும். அவளைப் பொறுத்தமட்டில், அவளுக்குச் சந்தேகமே கிடையாது - அவன் அவளைத்தான் காதலிக்கிறான் என்பதில்.

சந்திரன் உள்ளம் அப்படிச் சொல்லவில்லையே! நாட்கள் ஒடிக்கொண்டிருந்தன. "குற்றமற்ற பொழுது போக்கு இனிமை யாக வளர்ந்து கொண்டுதானிருந்தது. வெறும் பார்வையோடு அது நின்றதே தவிர, உரையாடல் எனும் அடுத்த கட்டத்தைத் தொட முயலவில்லை அவர்கள் உறவு.

சில சமயங்களில், பெண்கள் - அவர்கள் மூன்றுபேர் இருந்தது மிகச் செளகரியமாக இருந்தது - அவன் வருவதைக் கண்ட உடனேயே ஒருவரை ஒருவர் பார்த்து கிண்கிணி ஒலி ஆர்க்கும் சிரிப்பைக் கொட்ட முடிந்தது. சிலவேளை, பெரியவள் சிரிப்பை உதிர்ப்பாள். இரண்டாமவள் புன்னகை புரிவாள். தங்கச்சி வெட்கத்தோடும், களிப்போடும் "உகுங். குகுகூங்" என்று மணிப்புறாச் சிரிப்பை நழுவவிடுவாள்.

அவனைப் பார்த்துவிட்டு, அவர்கள் தங்களுக்குள் பார்வை பரிமாறி இப்படிச் சிரிப்பதனால், இச் சிரிப்பின் அர்த்தம்தான் என்ன?" என்ற ஐயம் அவனுக்கு எழ வகை ஏற்பட்டது. "கேலி செய்கிறார்கள் போலும்!" என்று அவன் மனம் கருதியது.

அவர்கள் கேலியாகச் சிரித்தால்தான் அவன் என்ன செய்ய முடியும்? அவனும் யாராவது நண்பனோடு போனால், நண்பனை பார்த்துச் சிரிப்பதுபோல் சிரிக்கலாம். அவனோடு பேசுவதுபோல், கிண்டலாக ஏதேனும் சொல்லலாம். ஆனால், எப்போதும் அவன் தனியாகத்தானே போய் வந்துகொண்டிருந் தான் "ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று அவர்களைப் பார்த்துக் கேட்க முடியுமா? "அயோக்கியன்! வீட்டுத் திண்ணையிலிருக்கும் பெண்களோடு வம்பாட முயலும் வீணன்" என்று அவர்களும் மற்றவர்களும் சண்டைக்கு வந்து விடுவார்களே? தனியாகத் தானே பதிலுக்கு அவர்களைப் பார்த்துப் பல்லிளித்துப் பழிப்புக் காட்டலாம். "பைத்தியம்! குரங்கு!" என்று அவர்கள் பரிகசிக்கக் கூடுமே! ஆகவே, அவன் மெளனமாக நடக்கும் இயல்பையே அனுஷ்டித்து வந்தான்.

ஒரு நாள் பகலில், மூவரில் இளையவள் வீட்டுக்குள்ளிருந்து ஓடிவந்தாள். அவசரமாகப் படிகளில் தாவி, தெருவில் குதித்த சமயத்தில் சந்திரன் அவளுக்கு நேரரே வர நேர்ந்தது. அவன் வேகமாக விலகிக் கொண்டான். இல்லையெனில், அவள் அவன்மீது மோதியிருப்பாள். அவளுக்கு வெட்கமும் குழப்ப மும் ஏற்பட்டன. அவன் சிரித்துக்கொண்டே போய்விட்டான்.

அன்று சந்திரன் மறுபடியும் அவ்வீதி வழியே போகும் போது, அம்மூன்று பெண்களும் கொலுவிருப்பார்கள் என்று எதிர்பார்த்தான். ஏமாறவில்லை. அவன் எதிர் பாராததும் நிகழ்ந்தது.

தங்கச்சி அன்றைய நிகழ்ச்சியை அக்காள்களிடம் சொல்லியிருக்க வேண்டும். சந்திரன் அருகே வரவும் அவள் தலையைத் தாழ்த்தி, கடைக்கண்ணால் பார்ப்பதில் ஆர்வம் காட்டினாள். சின்ன அக்காள் அவன் முகத்தில் விடுபடாத எந்தப் புதிருக்கோ விடை தேடுவதுபோல், கூரிய பார்வையை பதித்தாள். பெரிய அக்காள் சிரித்துக் கொண்டே, பேசேண்டி, கலா. வாய் திறந்துதான் பேசேன்" என்று தங்கச்சியைச் சீண்டினாள். சின்னவள் முகம் சிவக்க, கைவிரல்களால் கண்களை மூடிக் கொண்டாள். அவ்வளவு நாணம்!

"கலாவா இவள் பெயர்? ஆகவே, ஒருத்தி பெயர் தெரிந்துவிட்டது" என்று மகிழ்வுற்றான் சந்திரன். மற்றவர்கள் பெயரை அறிவது எப்படி? அவன் பெயரை அவர்களுக்கு அறிவிப்பதுதான் எவ்வாறு? பரஸ்பரம் அறிமுகம் செய்து வைப்பதற்குத் தோழியோ, தோழனோ இல்லையே!

"நான் இவர்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசித்தால், இவ்வளவு கஷ்டமோ கவலையோ ஏற்படாது, அவர்களாகவே அறிமுகம் செய்துகொள்வார்கள். படிப்பதற்குப் பத்திரிகை வேண்டும்; கதைப் புத்தகம் இருந்தால் கொடுங்களேன் என்று தொடங்கி, நாளடைவில் தொல்லையாகக் கூட மாறிவிடு வார்கள். இப்போது தெருவில் போய் வந்துகொண்டிருக்கிற ஒருவனோடு அவர்களாகவே எப்படி வலியப்பேச முடியும்? அல்லது, தெருவோடு போகிறவன்தான் தெரியாத பெண்க ளோடு திடுமென்று எப்படிப் பேச்சை ஆரம்பிக்க முடியும்?" என்று சந்திரன் கருதினான்.

ஆகவே, புதுமை எதுவும் காணாமலே காலம் ஒடிக் கொண்டேயிருந்தது. காலம் இறக்கை கட்டிப் பறப்பதுபோல் ஒடியது.

மூன்று பெண்களில் யாரை அவன் காதலித்தான்?

தன்னைத்தான் என்று மூவரில் ஒவ்வொருத்திக்கும் தனித்தனியே எண்ணம் வளர்ந்தாலும் கூட மூன்று பேரும் சேர்ந்திருக்கும்போது - அவன் அவர்களைப் பார்த்தவாறே போவதைக் கவனிக்கையில் - இந்தச் சந்தேகம் இயல்பாகவே தலைதூக்கியது அவர்கள் மத்தியில். இதற்கு விடை அவன் அன்றோ தரவேண்டும்? உண்மையில் சந்திரனுக்காவது உரிய விடை தெரியுமா?

தெரியும் என்று நிச்சயமாகச் சொல்லி விட முடியாது அவனால், அவனுக்கே அது சரியாகப் பிடிபடவில்லை இன்னும், ஒவ்வொரு வகையில் ஒவ்வொருத்தி சிறப்பான வளாகத் தோன்றினாள். சில சில காரணங்களால் ஒவ்வொருத்தி மீது விசேஷமான கவர்ச்சி தனக்கு ஏற்பட்டிருக்கிறது என்று அவனுக்குத் தோன்றியது. தனித்தனியாக நினைவு கூர்ந்தாலும், மூவரில் ஒவ்வொருத்தியும் அவனது மன அரங்கிலே பளிச்சென முன் வந்து நின்று, அவன் எண்ணமும் ஆசையும் தன்மீதே அதிகம் படிந்திருக்கின்றன என்று உறுதிப்படுத்த முயன்றாள். மூவரோடும் பேசிப் பழக வாய்ப்புகள் கிட்டியிருந்தால், அவனது ஆசைக்கொடி தனி ஒருத்தியைச் சுற்றிப் படர்ந்திருக்கக் கூடும். இப்போது அது மூன்று சிறு சிறு சுருள்களாகி ஒவ்வொருத்தியை யும் தொட்டுப் பிடித்து ஒட்டிக் கொள்ள ஊசலாடிக் கொண்டிருந்தது.

மாதங்கள் வருஷங்களாக ஓடினாலும் அவர்கள் நட்பு இந்நிலையிலேயே தான் நின்றிருக்கும். சந்திரனின் சுபாவம் அப்படி. அவனுக்குச் சங்கோஜம் அதிகமிருந்ததோடு, காதல் பாதையில் தானாகவே முன்னேறுவதற்கு வேண்டிய துணிச் சலும், செயலூக்கமும் கிடையாது. அவனோடு கண்ணாமூச்சி ஆடிக் களித்த மூன்று பெண்களுக்கும் சங்கோஜம் இல்லை என்றாலும், நாமாக எப்படித் துணிவது என்ற தயக்கம் இருந்தது. அதனால் தேக்கமே நிலைபெற்றிருந்தது.

காலத்துக்கே இது பொறுக்கவில்லை போலும். இதில் ஒரு சுவையான திருப்பம் காண அது ஒரு சந்தர்ப்பத்தைச் சிருஷ்டித்து விட்டது.

ஒருநாள், வழக்கம்போல் அந்த வீதி வழியே சந்திரன் வருகின்ற வேளையில் அவ்வீட்டு வராந்தாவில் மூன்று பெண்களும் இருந்தார்கள். அதிகப்படியாக வேறு ஒரு பெண்ணும் இருந்தாள். இவள் சின்ன அக்காளின் சிநேகிதியாக இருக்கலாம். ஆனால் அவளைவிட உற்சாகம் மிகுந்தவளாக - துள்ளலும் துடிப்பும் நிறைந்தவளாக - அடிக்கடி மணிச் சிரிப்பைச் சிந்துபவளாகக் காணப்பட்டாள்.

"வனஜா, இப்போ ஒரு வேடிக்கை பாரேன்!" என்றாள் பெரியவள்.

"என்ன வேடிக்கை?" என்று அவள் ஆவலாக விசாரித்தாள்.

"அதோ வருகிறாரே..."

அக்காள் தன்னைப் பரிகாசம் செய்யப் போகிறாள் என்று பயந்த கலா, "அக்கா! உஸ்ஸ்" என்று ஒற்றை விரலால் வாயை மூடிச் சைகை செய்தாள்.

அதற்குள் சந்திரன் அருகே வந்துவிடவும், அவர்கள் பேச்சு தடைப்பட்டுவிட்டது. அவன் ஒவ்வொருவர் முகத்திலும் விழி பதித்தவாறே மெதுவாக நடந்தான். அவர்களும் அவனைப் பார்த்தார்கள். பெரியவள் உரக்கச் சிரித்தாள். உடனே அவள் சகோதரிகளும் சிரிப்பை இணைய விட்டார்கள். புதிய தோழி சிரிக்காமல், ஒன்றும் புரியாதவளாய், அவனை வியப்போடு கவனித்தபடி இருந்தாள்.

அவன் சிறிது நகர்ந்ததும் அவள் கேட்டாள், "ஏன் ஜானகி சிரித்தாய்?" என்று. பதில் எதுவும் கிடைக்காததால், ”சாவித்திரி, உங்க அக்கா ஏண்டி இப்படிச் சிரிக்கிறா? ஏன் என்ன விஷயம்?" என்று விசாரித்தாள்.

அவள் பேச்சு சந்திரன் காதுகளில் நன்றாக விழுந்தது. "ஒகோ, பெரியவள் பேர் ஜானகியா? கண்ணாடிக்காரி தான் சாவித்திரி போலிருக்கு" என்று அவன் நினைத்தான். இவ்வளவு நாட்களுக்குப் பிறகு அவர்கள் பெயரை அறிந்துகொள்ள முடிந்ததில் அவனுக்கு ஆனந்தமே ஏற்பட்டது.

ஆயினும் ஒரு வேதனையும் எழுந்தது. அவர்கள் ஏன் அப்படிச் சிரிக்கிறார்கள்? என்னைக் கேலி செய்யும் விதத்திலா? அல்லது சும்மா விளையாட்டாகத்தானா?" என்று அவன் மனம் வருத்தப்பட்டது. பெரியவள் தன்னைப் பற்றித் தங்கள் சிநேகிதியிடம் கிண்டலாகப் பேசிக் களைப்படைவதை அவனால் கற்பனை பண்ண முடிந்தது. அதனால் அவன் உள்ளம் கனன்று, "மூதேவிகள்! தெருவில் உட்கார்ந்து சிரிப்பு வாழுதோ?" என்று முணுமுணுத்தது.

அவர்களோடு பேசி, அவர்களில் ஒருத்தியைக் காதலிப்பதாகக் காட்டிக் கொண்டிருந்தால் அவர்கள் இவ்வாறு நடந்திருக்கமாட்டார்கள் என்றும் சந்திரன் எண்ணினான். இப்போது கூட அவனால் தீர்மானிக்க முடியவில்லை, யார்மீது அவனுக்கு ஆசை என்று. காதலிப்பது என்றால் அம் மூவரில் யாரைக் காதலித்து அவன் கல்யாணம் செய்துகொள்ள விரும்புவான்? தெரியாது. தெரியாதுதான். திடீரென்று மூன்றுபேரும் பேசித் திட்டமிட்டுக் கொண்டு, சேர்ந்து அவன் முன் நின்று "எங்களை இவ்வளவு காலமாக ஆர்வத்தோடு பார்த்து வருகிறீர்களே; எங்களில் யார்மீது உங்களுக்கு ஆசை? என்று கேட்கத் துணிந்திருந்தால், அவனுடைய பதில் "முழித்தல் ஆகத்தான் இருக்கும்!

மூன்று பேரும் அழகாகத்தான் காட்சி அளித்தார்கள். மூவரைப் பார்க்கும் போதும், மூன்றுபேரைப் பற்றி மொத்தமா கவும் தனித்தனியாகவும் எண்ணும் போதும், இன்பம் அவன் உள்ளத்தில் கொப்பளித்துப் பாயத்தான் செய்தது. அதற்காக மூன்று பேர் மீதும் அவனுக்குக் காதல் என்று சொல்லிவிட முடியுமா? ஒருவன் மூன்று பெண்களை ஒரே சமயத்தில் காதலிக்க முடியுமா?

இத்தகைய விசித்திரமான கேள்விகள் அவன் சிந்தனையில் அலைபாய்ந்த போதிலும், அவற்றுக்கான சரியான விடையைக் கண்டாக வேண்டிய அவசியம் எதுவும் அவனுக்கு ஏற்படவே யில்லை. அதற்கு மாறாக, அவனுடைய மனக்குழப்பத்தைத் தீர்ப்பதற்கு ஒரு சுலபவழி தானாகவே ஏற்பட்டு விட்டது.

மறுநாள், பஸ் நிற்குமிடத்தில் சந்திரன் வனஜாவைப் பார்க்க நேர்ந்தது. அவள் "ரொம்பவும் தெரிந்தவள் போல" அவனை நோக்கிப் புன்னகை பூத்தாள். அதற்கு அடுத்த நாள் அவன் ரஸ்தாவில் நடந்து வரும்பொழுது, தற்செயலாக வனஜாவும் வரநேரிட்டது. அவள் மறுபக்கம் போகவில்லை. முன்னே பின்னே செல்ல விரும்பவுமில்லை. தள்ளி நடக்கவுமில்லை. அவன் கூடவே வருகிறவள் போல, அவனுக்கு அருகிலேயே நடந்து வரலானாள். அவளுக்குச் சிரிப்பு அள்ளிக்கொண்டு வந்தது. ஆனால் அவள் வாய்விட்டுச் சிரிக்கவில்லை. அவன் திரும்பி அவளை நோக்கும்போது, அவள் தரையைப் பார்த்தாள்; அல்லது நேரே நோக்கினாள். "இவள் ஒரு இன்ட்டரஸ்டிங் கேரக்டர் போலிருக்கு!" என்று தான் அவனால் எண்ண முடிந்தது.

சந்திரனுக்கு அம்மூன்று பெண்களுடன் - அல்லது, அவர்களில் ஒருத்தியுடனாவது - பேசிப் பழக வேண்டும் என்ற ஆசை இருந்தும், அதற்கு வேண்டிய மனத்தெம்பு இல்லை. அப் பெண்களும் அதே நிலையில் தான் இருந்தார்கள். அவர்களாகப் பேச்சுக் கொடுக்கட்டுமே என்று அவன் நாளோட்டினான். "அவர் ஏன் பேசுவதில்லை? அவராகப் பேச ஆரம்பிக்கிறாரா இல்லையா, பார்ப்போமே!" என்று அவர்கள் காத்திருந்தார்கள்.

இரண்டு கட்சியிலும் காணப்படாத துணிச்சலும், செயலூக்க மும் தோழி வனஜாவிடம் மிகுதியாக இருந்தன. அவன் பேசட்டுமே என்று அவள் காத்திருக்கவில்லை. பேசுவதற்குரிய வாய்ப்புக்களை அவளாக சிருஷ்டித்துக்கொள்ளத் தயங்கவு மில்லை.

பஸ் நிற்குமிடத்தில் அவள் நிற்கையில் அவன் எதிர்ப் பட்டால், எந்த நம்பரையாவது குறிப்பிட்டு, அது எப்படிப் போகும்?" என்று கேட்டாள். அல்லது "இது இந்த இடத்துக்கு இன்ன வழியாகத்தானே போகிறது?" என்ற மாதிரி எதையாவது விசாரித்தாள். தெருவில் வந்தால், தபால் வர நேரமாகுமோ? தபால்காரர் வருகிறாரா?" என்று எதையாவது கேட்பாள். இப்படி அவளாகவே ஆரம்பித்து, உற்சாகமூட்டி, அவனையும் பேசுகிறவனாக மாற்றிவிட்டாள்: அப்புறம் அவர்கள் சேர்ந்து காணப்படலாயினர். ஒட்டல், சினிமா தியேட்டர், கடலோரம், பஸ் நிற்குமிடம் என்று பல இடங்களிலும் தான்!

அப்புறம் என்ன? சந்திரனுக்கு யாரைக் காதலிப்பது என்ற பிரச்னை எழ இடமே இல்லாமல் போய்விட்டது. வெறுமனே பார்ப்பதிலும், முகம் மலரப் புன்னகை புரிவதனாலும் காதல் வளர்ந்துவிடாது; காதல் கொடி வளர்ந்து மனோரம்மியமான புஷ்பங்களைப் பூத்துக் குலுக்குவதற்கு நாமும் முயற்சி எடுத்து, சிரத்தை காட்ட வேண்டும் என்பதை நன்கு அறிந்தவள் வனஜா. காதலை வளர்க்கும் கலை கைவரப் பெற்ற அவளே அதைக் கவனித்துக் கொண்டதால், அவனுக்குப் பொழுதெல்லாம் பொன்னாக மாறிவந்தது.

ஊரறியும் விஷயமாக வளர்ந்துவிட்ட ஒன்றும் அம்மூன்று பெண்களுக்கு மட்டும் தெரியாமல் போருமா என்ன? "அவன் வஞ்சித்துவிட்டான். சரியான ஏமாற்றுக்காரன். வனஜா சுத்த மோசம்..!" என்று ஒவ்வொருத்தியும் எண்ணினாள். ஆனாலும், பெரியவளான ஜானகி தங்கை கலாவை கிண்டல் செய்வதில் தனது ஏமாற்றத்தை மறைக்க முயன்றாள். "என்னடி கலா, உன்னை லவ் பண்ணினவர் இப்பவும் உன்னைப் பார்த்துக் கொண்டே தான் போகிறாரா?" என்பாள்.

கலா முகத்தைச் சுளித்துக் கோணல் படுத்தி, "தெருவோடு போற சனி எல்லாம் பார்க்கவில்லை என்று யார் வருத்தப் படுறாங்க? பீடை தரித்திரக் குரங்கு - அதும் அதன் மூஞ்சியும்!" என்று சிடு சிடுப்பாள். அக்காளின் சிரிப்பு நீரோடை எனக் களகளக்கும். சின்ன அக்காள் சாவித்திரி இப்பொழுதும் வாய்திறந்து எதுவும் சொல்வதில்லைதான்.
("அமுத சுரபி, 1962)
--------------


This file was last updated on 21 Oct. 2017
,