மனை விளக்கு
(சங்கநூற் காட்சிகள்)
கி. வா. ஜகந்நாதன்

manai viLakku
(scenes from cangkam literature)
of ki.vA. jakannAtan
In tamil script, unicode/utf-8 format

மனை விளக்கு (சங்கநூற் காட்சிகள்)
கி. வா. ஜகந்நாதன்

Source:
மனை விளக்கு
(சங்கநூற் காட்சிகள்)
கி. வா. ஜகந்நாதன்
அமுத நிலையம் லிமிடெட்
46, இராயப்பேட்டை ஹைரோடு,
சென்னை-60004,
உரிமை பதிவு : அமுதம்-30
முதற் பதிப்பு, டிசம்பர்-1951 மூன்றும் பதிப்பு, டிசம்பர்-1980
அச்சிட்டோர் : வள்ளல் பாரி அச்சகம்,
52, முத்து முதலி தெரு
ராயப்பேட்டை,
சென்னை-600 014.
------------------

முகவுரை


தமிழ் மொழியைப் பலவகையிலே சிறப்பிற்துச் சொல்வதுண்டு. செந்தமிழ், பசுந்தமிழ், தீந்தமிழ், நற்றமிழ் என்று பாராட்டுவார்கள். இப்படி மற்ற மொழிகளையும் அவற்றைப் பேசுவோர் பாராட்டிச் சொல்வதும் இயல்புதான். ஆனல் தமிழின் சிறப்பை வேறு ஒருவிதமாகச் சொல்வதுண்டு. அந்தச் சிறப்பு வேறு மொழிகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ’சங்கமலி செந்தமிழ்’, ‘சங்கத்தமிழ்"என்று சிறப்பித்துப் பாராட்டும் தமிழ், சங்கங்களிலே சிறப்பாக வளர்ச்சி பெற்றது. மக்கள் பேசுவதனால் தமிழ் விரிந்து பரந்தது. ஆனல் அதனோடு நின்றிருந்தால் இலக்கியச் செல்வம் வளர்ச்சி பெற்றிராது. புலவர்கள் பல நூல்களை இயற்றுவதனால் தான் அந்தச் செல்வம் ஒரு மொழியில் மிகுதியாகும்.

தமிழில் பல புலவர்கள் பல பல நூல்களை இயற்றினார்கள். அந்த நூல்கள் யாவுமே தமிழ் நாட்டாரின் பாராட்டைப் பெறவில்லை. இயற்றப் பெற்ற நூல்கள் எல்லாமே நின்று நிலவும் பெருமையைப் பெற முடியுமா? தமிழ்ச் சங்கம் என்ற புலவர் கூட்டம் ஒன்று இருந்தது. அதில் பல சிறந்த புலவர்கள் இருந்தார்கள். அழகிய கவிகளைப் பாடினார்கள். நாடு முழுவதும் வேறு பல புலவர்கள் இருந்தனர். அவர்களும் பல கவிகளை இயற்றினர், ஆயினும் அப் புலவர்கள் தங்கள் கவிகளைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றியதனால்தான் தமிழ் நாட்டாரின் நன்மதிப்பைப்பெற முடிந்தது. இவ்வாறு தமிழ் நூல்கள் தக்கவர்களுடைய பார்வைபெற்றுத் தமிழ் நாட்டில் உலவி வந்தன. அதனுல்தான் சங்கத் தமிழ் என்ற பெருமை தமிழுக்கு வந்தது.

தமிழ்ச் சங்கத்தை வளர்த்தவர் பாண்டிய மன்னர், பாண்டிநாடு தமிழ் நாட்டின் நடுநாயகமாக இருந்தது. செந்தமிழ் நாடு, தமிழ் நாடு என்ற பெயர்கள் அந்த நாட்டுக்குப் பழங்காலத்தில் வழங்கி வந்தன. பாண்டி நாட்டில் மக்கள் பேசும் தமிழ்தான் நல்ல தமிழ் என்றுகூட அக்காலத்தில் நினைத்தார்கள். அதன் தலைநகரத்தில் தமிழ்ச் சங்கம் இருந்து வந்தது. அங்கே இருந்தாலும் மற்ற நாடுகளிலிருந்து புலவர்கள் வந்தார்கள். முடியணிந்த மன்னராகிய சேர சோழ பாண்டியர் என்ற மூவரும் தமிழ் நாட்டை ஆண்டு வந்தனர். இவர்களுக்குள்ளே எப்பொழுதாவது பகைமை இருந்தாலும், பிறநாட்டிலுள்ள புலவர்கள் பாண்டிநாட்டுக்கு வருவதற்கு ஒரு தடையும் இருந்ததில்லை. சங்கத்தில் இருந்த புலவர்கள் அத்தனை பேரும் பாண்டி நாட்டார் என்று சொல்ல முடியாது. பல நாடுகளில் பல ஊர்களில் பிறந்து வாழ்ந்த புலவர்கள் சங்கத்தில் இருந்து தமிழை வளர்த் தார்கள்.

பழைய தமிழ்ச் சங்கங்கள் மூன்று இருந்தன என்று சொல்வார்கள். ஒரே காலத்தில் அவை இருக்கவில்லை. வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்தன. தொடர்ந்து பல ஆண்டுகள் நடந்து வந்த சங்கம், கடல் கோளினால் பாண்டியனுடைய தலைநகரம் மாறியபோது, வேறு இடத்திற்கு மாறவேண்டிய அவசியம் நேர்த்தது.

இன்றுள்ள கன்னியாகுமரிக்குத் தெற்கிலும் தமிழ் நாட்டுப் பகுதி இருந்தது. குமரிமலை, குமரியாறு, பஃறுளி யாறு என்பவை அந்த நிலப் பரப்பிலே இருந்தன. மதுரை என்ற நகரம் ஒன்று இருந்தது. அதுவே அக்காலத்துப் பாண்டி நாட்டின் தலைநகரம். பாண்டியர்களே தமிழ்ச் சங்கத்தை வளர்த்தமையால் அவர்களுக்குரிய தலைநகரமே தமிழ்த் தாய்க்கும் தலைநகரமாக விளங்கியது. அந்தப் பழைய மதுரையையும் பாண்டி நாட்டைச் சார்ந்த ஒரு பகுதியையும் கடல்பொங்கி அழித்துவிட்டது. அதனால் அந்த நாட்டின் நிலை மாறியது. பாண்டிய மன்னன் வடக்கே உள்ள கபாடபுரம் என்ற நகரத்தைத் தன் தலை நகரம் ஆக்கிக்கொண்டான். அந்த நகரத்தைப் பற்றிய செய்தி வால்மீகி ராமாயணத்தில் வருகிறது. பாண்டிய மன்னன் அங்கே தமிழ்ச் சங்கத்தையும் நிறுவினான்.

மீண்டும் மற்றொரு கடல்கோள் வந்தது. கபாடபுரம் இருந்த பாண்டி நாட்டின் தென்பகுதியைக் கடல் விழுங்கியது. பாண்டிய மன்னன் அப்போதைக்கு வடக்கே மணலூர் என்ற இடத்தில் சென்று தங்கினான், “இந்த நாட்டில் கடற்கரைக்கு நெடுந் தூரத்தில் இருக்கும்படி நாமே ஒரு நகரம் புதியதாக அமைத்துக்கொள்ள வேண்டும்’ என்ற நினைவு அவனுக்கு உண்டாயிற்று. இறைவன் திருவருளைத் துணைக் கொண்டு ஒரு நகரத்தை நிறுவினான். பாண்டி நாட்டுக்குப் பழங்காலத்தில் தலை நகரமாக இருந்த மதுரையின் பெயரையே அதற்கு வைத்தான். இந்தப் புதிய மதுரையில் தமிழ்ச் சங்கத்தையும் நிறுவி வளர்த்து வரலானான்.

இந்த மூன்று தலைநகரங்களிலும் இருந்த தமிழ்ச் சங்கங்களைத் தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச்சங்கம் என்று சொல்வார்கள். சங்கத்தை அக்காலத்து மக்கள் எவ்வளவு உயர்வாகக் கருதினார்கள் என்பதற்கு அதைப் பற்றிய வரலாறுகளே சாட்சி. சாதாரண மக்கள் கூடிப் பேசும் இடம் அது என்ற நினைவே அவர்களுக்கு இல்லை; தமிழ்த் தெய்வத்தின் திருக்கோயில் அது என்றும், சங்கப் புலவர்களெல்லாம் நாமகளின் அவதாரம் என்றும் நம்பி வழிபட்டார்கள். அதுமட்டுமல்ல; சிவபெருமான், முருகன் திருமால் ஆகியவர்கள் கூடப் புலவர்களாக முதற் சங்கத்தில் இருந்தார்கள் என்று சொல்லிச் சொல்வி அதன் மதிப்பை அதிகமாக்கினார்கள். சங்கத் தமிழாக இருந்தது தெய்வத்தமிழாகவும் விளங்க வேண்டுமென்பது அவர்கள் ஆசை.

இறையனார் அகப்பொருள் என்ற இலக்கண நூலின் உரையில் இந்த மூன்று சங்கங்களின் வரலாறுகளும் வருகின்றன. தலைச்சங்க காலத்தில் தோன்றிய நூல்களில் ஒன்றேனும் இப்போது கிடைக்கவில்லை. இடைச் சங்கத்தில் எழுந்த நூல்களில் தொல்காப்பியத்தைத் தவிர வேறு ஒன்றும் கிடைக்கவில்லை. நல்ல வேளையாக, சிறந்த தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியமாவது மிஞ்சியதே என்று மகிழ்ச்சியடைய வேண்டும்.

மூன்றாவது சங்கமாகிய கடைச் சங்கத்தில் நாற்பத் தொன்பது புலவர்கள் இருந்தார்களென்று சொல்வார்கள். அக்காலத்தில் புலவர்கள் அவ்வப்போது பல பாடல்களைப் பாடினார்கள். அவை தமிழ் நாட்டில் அங்கங்கே வழங்கி வந்தன. நாளடைவில் அவை மறந்து போய்விடுமோ என்ற அச்சம் உண்டாயிற்று, சில பாடல்கள் மறைந்துகொண்டும் வந்தன. ஆதலின், கடைச் சங்க காலத்தின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த புலவர்களும் அரசர்களும் அங்கங்கே வழங்கிய பாடல்களைத் தொகுத்து ஒழுங்குபடுத்த எண்ணினார்கள். சில அரசர், புலவர்களின் துணைகொண்டு இந்தத் தொகுப்பு வேலையைச் செய்தார்கள். பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க் கணக்கு என்று அவற்றை மூன்று வரிசையாக வகுத்து அமைத்தார்கள். பத்துப் பாட்டு என்பது நீண்ட பாடல்கள் பத்து அடங்கிய தொகுதி. திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப் படை, சிறுபாணுற்றுப்படை, பெரும்பாணுற்றுப்படை, முல்லைப் பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்ற பெயருடைய பத்து நூல்கள் அந்தத் தொகுதியில் இருக்கின்றது.

எட்டுத்தொகை என்பது எட்டு நூல்கள் சேர்ந்த வரிசை. அந்த வரிசையில் உள்ள ஒவ்வொரு நூலும் பல பாடல்களின் தொகுதி. அதனால் இவற்றைத் தொகை நூல்கள் (Anthology) என்று சொல்வார்கள். பிற்காலத்தில் தனிப் பாடல் திரட்டு என்ற பெயருடன் சில நூல்கள் வந்துள்ளன. அவற்றைப் போன்ற திரட்டு நூல்களே இவை. பதினெண் கீழ்க்கணக்கு என்பவை பதினெட்டுச் சிறு நூல்கள் அடங்கியவை. அவற்றிற் பல, நீதிநூல்கள், திருக்குறள், பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்ததே.

எட்டுத் தொகையைத் தொகுக்கும்போது சில வரை பறைகளை மேற் கொண்டு தொகுத்திருக்கிறார்கள். காதலைப் பற்றிச் சொல்லும் அகப்பொருட் பாடல்களை யெல்லாம் தனியே தொகுத்தார்கள். அப்படியே வாழ்க்கையின் மற்றப் பகுதிகளைப் பற்றிய பாடல்களையும் தொகுத்து அமைத்தார்கள். இவ்வாறு தொகுத்துவைத்த நூல்கள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பவை. ஐங்குறுநூறு என்பது அகப்
பொருளைச் சார்ந்து ஐந்து திணைகளையும் பற்றித் தனித் தனியே நூறுநூறாக ஐந்து புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுதி. பதிற்றுப்பத்து என்பது சேர அரசர்கள் பத்துப் பேர்மேல் பத்துப் பத்துப் பாட்டாகப் பத்துப் புலவர்கள் பாடிய நூறு பாடல்கள் அடங்கியது. பரிபாடல் அந்தப் பெயருள்ள பாவகையால் அமைந்த பல புலவர்களின் பாடல் தொகுதி. ஐந்து திணை பற்றி ஐம்பெரும் புலவர்கள் தனித்தனியே கலிப்பாவாகப் பாடிய பாடல்கள் அமைந்த நூல் கலித்தொகை, புறப்பொருள் பற்றிய நானூறு செய்யுட்களை உடையது புறநானூறு. அகப்பொருள் பற்றிய மற்றப் பாடல்களைத் தொகுத்து அடிக் கணக்குப் பண்ணினார்கள். சிறிய பாட்டுகளைத் தொகுத்து அவற்றைக் குறுந்தொகை யென்ற பெயரோடும், அடுத்தபடி சற்றுப் பெரிய பாடல்களைத் தொகுத்து நற்றிணை என்ற பெயரோடும், பின்னும் பெரிய பாடல்களைத் தொகுத்து அகநானூறு என்ற பெயரோடும் உலவ விட்டனர். நாலடி முதல் எட்டடிவரையில் உள்ள பாடல்கள் நானூறு குறுந்தொகையில் இருக்கின்றன. ஒன்பதடி முதல் பன்னிரண்டடி வரையில் உள்ள பாடல்கள் நானூறு நற்றிணையில் உள்ளன. பதின்மூன்றடி முதல் முப்பத்தோரடி வரையில் உள்ள பாடல்களை அகநானூற்றில் காணலாம்; அந்த நூலிலும் நானூறு பாடல்கள் இருக்கின்றன.

சங்க நூல்கள் வழக்கற்றுப்போய், அவற்றைப் படிப்பவரும் கற்பிப்பவரும் இல்லாமல் தமிழ்நாடு சில காலத்தைப் போக்கியது. என்னுடைய ஆசிரியப்பிரானாகிய மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் சங்க நூல்களைத் தேடித் தொகுத்து ஆராய்ந்து வழுக் களைந்து அச்சிடலானார்கள். பெரும் பகுதியை அவர்கள் வெளியிட்டார்கள். அவர்களோடு பழகியவர்களும், அவர்களுடன் இருந்து ஆராய்ச்சி செய்தவர்களும், அவர்கள் நூற்பதிப்பைக் கண்டு உணர்ந்தவர்களும் சில நூல்களை வெளிப்படுத்தினர்கள். தமிழ் நாட்டில் காவியத் தமிழும் தோத்திரத் தமிழும் சமயத் தமிழும் பிரபந்தத் தமிழுமே வழங்கிவந்த காலத்தில் அவர்கள் அவதாரம் செய்து சங்கத் தமிழைப் புதையலைப் போல எடுத்து வழங்கா விட்டால் இன்று தமிழுக்குள்ள ஏற்றம் வந்திருக்குமா? ஆகவே, சங்கத் தமிழ்ச் சோலைக்குள் புகும் யாவரும் அவர்களை நன்றியறிவுடன் நினைப்பது கடமையாகும்.

2
உணர்ச்சியைத் தலைமையாகக்கொண்டு, காதலன் காதலியரிடையே நிகழ்வன-வற்றைச் சொல்வது அகப் பொருள். செயலைத் தலைமையாகக் கொண்டு உலக வாழ்க்கையில் பிற துறைகளில் நிகழும் செய்திகளைச் சொல்வது புறப்பொருள். காதல் அல்லாத பிற எல்லாம் புறமே ஆனாலும், பெரும்பாலும் புறத்துறைப் பாடல்கள் வீரத்தைச் சார்ந்தே இருக்கக் காணலாம்.

காதலனும் காதவியும் அன்பு செய்யும் ஒழுக்கம் இரண்டு வகைப்படும். கல்யாணம் செய்து கொள்வதற்கு முன் பிறர் அறியாமல் காதல் செய்வதைக் களவொழுக்கம் என்றும், மணத்தின் பின்னர்க் கணவன் மனைவியராக வாழும் வாழ்க்கையைக் கற்பொழுக்கம் என்றும் சொல்வார்கள். கதைபோலத் தொடர்ந்து வரும் காதல் வாழ்க்கையில் பல பல கட்டங்கள் உண்டு. ஒவ்வொரு கட்டத்திலும் பல நிகழ்ச்சிகள் இருக்கும். தனித்தனி நிகழ்ச்சியைச் சொல்லும் பகுதியைத் துறை என்று கூறுவார்கள். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு துறையில் அமைந்திருக்கும். ஒவ்வொன்றும் காதலன், காதலி, தோழி முதலியவர்களில் யாரேனும் ஒருவருடைய கூற்றாக இருக்கும், காதலனைத் தலைவனென்றும், காதலியைத் தலைவியென்றும் சொல்வது மரபு. தோழியைப் பாங்கி என்றும், தோழனைப் பாங்கன் என்றும், பெற்ற தாயை நற்றாய் என்றும், வளர்த்த தாயைச் செவிலி யென்றும் சொல்வார்கள்.

பிறருடைய உதவியும் தூண்டுதலும் இல்லாமல் அழகும் அறிவும் சிறந்த தலைவன் ஒருவன் தன் தகுதிக்கு ஏற்ற அழகி ஒருத்தியைத் தனியிடத்திலே சந்திக்கிறான். அவர்கள் ஒருவரோடு ஒருவர் காதல் கொண்டு அளவளாவுகிறார்கள். மறுநாளும் அப்படியே தனியிடத்தில் சந்திக்கிறர்கள். பிறகு தலைவியைப் பிரிந்து சென்ற தலைவனைப் பாங்கன் காண்கிறான். அவனிடத்தில் ஏதோ ஒரு வகையான சோர்வு இருப்பதை உணர்ந்து, என்ன காரணம் என்று வினவுகிறான் , தான் ஒரு மங்கையின் காதல் வலையிற் பட்டிருப்பதை அவன் எடுத்துச் சொல்கிறான். பாங்கன் அம்மங்கை நல்லாள் இருக்கும் இடத்தைத் தலைவன் வாயிலாக அறிந்து, அவ்விடம் சென்று அவளை அறியாமல் அவளைக் கண்டு அவள் தலைவனுக்கு எவ்வகையாலும் ஏற்றவளே என்பதை உணர்ந்து மீண்டு வந்து தலைவனிடம் சொல்கிறான்.

மீண்டும் தலைவனும் தலைவியும் சந்தித்து அளவளாவுகிறார்கள். தலைவி தன் உயிர்த் தோழி இன்னாள் என்பதைக் குறிப்பால் தலைவனுக்குப் புலப்படுத்த அவன் அவளைத் தங்கள் காதல் வாழ்க்கைக்குத் துணையாகக் கொள்ளலாம் என்று நினைக்கிறான், அவளே அணுகித்தான் தலைவியினிடம் காதல் பூண்டுள்ளதைத் தெரிவிக்கிறான், தோழி ஏதேதோ காரணங் கூறி அவனை மறுக்கிறாள். மீண்டும் மீண்டும் தன் காதலின் ஆழத்தைத் தலைவன் புலப்படுத்து வதோடு, தலைவிக்கும் தனக்கும் தொடர்-பிருப்பதையும் குறிப்பிக்கிறான், அப்பால் தோழி அவன் உண்மைக் காதலன் என்று தேர்ந்து, தலைவியினிடம் அவன் காதலைப் பற்றிச் சொல்கிறாள். முதலில் தலைவி ஒன்றும் அறியாத வள்போல் இருக்கிறாள். அப்பால் மறுப்பவளைப்போலப் பேசுகிறாள். தோழி மேலும் வற்புறுத்தவே, தலைவி ஒப்புக் கொள்பவளைப் போலப் பேசுகிறாள். அதுமுதல் தோழியின் துணையைக் கொண்டே பகற்காலத்தில் திணைப்புனத்திலும வீட்டுக்குப் புறம்பான வேறிடங்களிலும் தன் காதலனைச் சந்தித்து வருகிறாள். இடையில் சில நாள் அவனைச் சந்தக்க முடியாமற் போகின்றது. அப்பொழு
தெல்லாம் அவள் மிக்க துன்பத்தை அடைகிறாள்.

திணைப்புனத்தைக் காத்தல், பூக்கொய்தல் முதலிவற்றுக்காக வீட்டுக்குப் புறத்தே வந்து செல்லும் தலைவியை அவளுடைய தாய் வீட்டிலே இருக்கும்படி சொல்லிக் கட்டுப்பாடு செய்கிறாள். அதைத் தோழி வாயிலாக அறிந்த தலைவன் அத்தோழியின் உதவி பெற்று இரவுக் காலங்களில் வந்து யாரும் அறியாமல் தலைவியைச் சந்தித்துச் செல்கிறான். இந்த இரவுச் சந்திப்புக்கும் சில நாட்கள் தடை நிகழும் அப்பொழுது தலைவி தலைவனைக் காணாது வருந்துவாள்.

இவ்வாறு யாரும் அறியாமல் காதல் செய்வதற்குப் பல இடையூறுகள் ஏற்படுகின்றன. அவற்றால் மனம் வாடிய தலைவியைக் கண்ட தோழி, தலைவன் தலைவியை மணந்து கொண்டு வாழ்வதே தக்கதென்று நினைக்கிறாள். தன் கருத்தைக் குறிப்பாகத் தலைவனுக்குத் தெரிவிக்கிறாள். அவன் அதனை ஏற்துக் கொண்டு, கல்யாணத்தின் பொருட்டுப் பொருள் தேடப் பிரிகிறான். அப்பொழுது அவன் பிரிவால் தலைவிக்குத் துயரம் உண்டாகிறது.

தலைவன் மணம் செய்துகொள்வதற்குரிய முயற்சிகளைச் செய்கிறான். அவனைத் தலைவியின் தாய் தந்தையர் ஏற்றுக் கொள்ளமாட்டார் என்றோ, வேறு யாருக்கேனும் அவளை மணஞ் செய்து கொடுக்க எண்ணியிருக்கின்றனர் என்றோ தெரிய வந்தால், தலைவி ஒரு தலைவனிடம் ஈடுபட்டிருக்கிறாள் என்பதைத் தோழி அவர்களுக்குக் குறிப்பாகப் புலப்படுத்துவாள். அதனை உணர்ந்து அவர்கள் தலைவனுக்கு அவளை அளிக்க உடம்படுவார்கள்.

சில சமயங்களில் அவர்கள் உடம்படாவிட்டால் தலைவன் தலைவியை ஒருவரும் அறியாமல் அழைத்துக் கொண்டு தன் ஊர்சென்று அங்கே அவளை மணந்துகொள்வான். அவர்கள் போன பிறகு தலைவியின் உண்மைக் காதலை அறிந்த தாயும் செவிலியும் வருந்துவார்கள். செவிலித்தாய், ’நான் போய் என் மகள் எங்கிருந்தாலும் அழைத்து வருகிறேன்’ என்று புறப்படுவாள். இதுவரையில் உள்ளது களவு என்ற பிரிவு.

காதலர் இருவரும் மணம் புரிந்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்வார்கள். அப்போது சில காரியங்களுக்காகக் கணவன் தன் வீட்டை விட்டுச் சென்று சில காலம் தலைவியைப் பிரிந்திருப்பான். அந்தப் பிரிவால் இருவருக்கும் வருத்தம் உண்டாகும். இல்லறத்தை வளப்படுத்தும் பொருட்டுப் பொருள் தேடத் தலைவன் பிரிவது உண்டு. கல்வி கற்கப் பிரிவது உண்டு. அரசனுக்குத் தாதுவனாக நின்று தூது உரைப்பதற்-காகவும், போரில் துணை புரிவதற் காகவும், நாட்டைக் காப்பதற்காகவும் பிரிந்து செல்வது உண்டு.

பரத்தையினிடம் விருப்பம் கொண்டு தலைவன் சில சமயம் செல்வது உண்டு. அப்போது தலைவி ஊடல் கொள்வாள். தோழியின் உதவியாலும் தன்னுடைய முயற்சியாலும் தலைவியின் ஊடலைப் போக்கத் தொடங்குவான் தலைவன். தலைவி ஊடலொழிந்து தலைவனுடன் ஒன்றுபட்டு வாழ்வாள். இவை கற்புக் காலத்து நிகழ்ச்சிகள்.

இந்தக் காதற் கதையில் நானூறுக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகள் அல்லது துறைகள் உண்டு. சங்க நூல்களில் இந்தத் துறைகள் தொடர்ச்சியாக இருப்பதில்லை; கலந்து கலந்து வரும். இவற்றைக் கதைபோலக் கோத்துத் தொடர்பு படுத்தி ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு செய்யுள் அமைத்துப் புலவர்கள் பாடியிருக்கும் ஒருவகை நூலுக்குக் கோவை என்று பெயர்; அகப்பொருட் கோவை யென்றும் ஐந்திணைக் கோவை-யென்றும் சொல்வார்கள்.

3
இந்தப் புத்தகத்தில் நற்றிணையிலிருந்து எடுத்த ஒன்பது பாடல்களுக்குரிய விளக்கங்களைக் காணலாம். முதற்பாட்டாகிய கடவுள் வாழ்த்து அகத் துறையையை சார்ந்ததல்ல. எட்டுத் தொகையில் உள்ள நூல் ஒவ்வொன்றிலும் கடவுள் வாழ்த்து உண்டு. இந்தக் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவர். அவர் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடல்கள் வேறு தொகை நூல்களிலும் உள்ளன. இந்தப் பாட்டுத் திருமாலைப் பற்றியது.

மற்றப் பாடல்களில் களவுக் காதலைப் பற்றிய பாடல்கள் ஆறு (3, 4, 5, 6, 8, 9). கற்பு வாழ்க்கையைப் பற்றியவை இரண்டு (2, 7); தோழி தலைவன் காதலை எடுத்துத் தலைவிக்குச் சொல்வது ஒன்று; வீட்டுக்குப் புறம்பே பகற் காலத்தில் வந்து தலைவியைச் சந்திக்கும் தலைமகன் சில நாள் வாராமையால் வருந்தும் தலைவி சொல்வது ஒன்று; தலைவன் மணம் புரிந்து கொள்ளும் ஏற்பாட்டோடு வந்திருக்கிறான் என்று தோழி கூறுவது ஒன்று; தலைவன் தலைவியை அழைத்துக் கொண்டு போவதாகத் திட்டம் போட்ட பிறகு தன் ஆயத்தாரைப் பிரிய முடியாமல் தலைவி வருந்துவதைத் தலைவனுக்குத் தோழி உரைப்பது ஒன்று; தலைவன் தலைவியை அழைத்துக் கொண்டு போகையில் அவளோடு கூறுவது ஒன்று; தலைவி தலைவனுடன் போய்விட அதனை உணர்ந்த தாய் வருந்தி உரைப்பது ஒன்று-இவை களவுத் துறைகள்.

இல்லறம் நடத்தும்போது பொருள் தேடும் பொருட்டுப் பிரிந்து செல்ல நினைத்த நெஞ்சை நோக்கித் தலைவன் கூறியதாக ஒரு பாட்டும், அவன் பொருள் ஈட்டச் செல்வதற்கு உடம்பட்ட தோழியைத் தலைவி பாராட்டிக் கூறியதாக ஒரு பாட்டும் உள்ளன. இவை கற்புக்குரிய துறைகள்.

இந்த இருவகை வாழ்க்கை நிலையிலும் உணர்ச்சி வகையினுல் ஐந்து பகுதிகள் உண்டு. தலைவியும் தலைவனும் ஒன்று பட்டு இன்பத்தில் ஆழ்வது ஒன்று; இதற்குக் குறிஞ்சித் திணை என்று பெயர். தலைவனும் தலைவியும் பிரிந்து துன்புறுதல்; இதற்குப் பாலைத் திணை என்பது பெயர். தலைவன் பிரிந்திருக்கும் காலத்தில் அவன் வருவான் என்ற நம்பிக்கையோடு தலைவி இருத்தல் முல்லைத் திணை என்ற பெயர் பெறும். தலைவன் தலைவியைப் பிரிந்து வேறு மகளிரை நாடும்போது தலைவி ஊடல் கொள்வாள்; இது மருதத் திணை என்று பெயர் பெறும். தலைவி தலைவனை நினைந்து புலம்புதல் நெய்தல் திணையாகும். புணர்ச்சி, பிரிவு, இருத்தல், ஊடல், இரங்கல் என்ற பெயர்களால் இந்த ஐந்து பகுதிகளையும் சுருக்கமாகச் சொல்வார்கள்.

குறிஞ்சி முதலியவை ஒழுக்க வகைகளானுலும் அவை நிகழும் நிலங்களுக்கும் அந்தப் பெயர் வழங்கும், முதலில் நிலத்திற்குப் பெயர் ஏற்பட்டுப் பிறகு அந்த நிலத்தில் நடக்கும் ஒழுக்கத்துக்குப் பெயராக வந்தது. மலையும் மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி. இந்த நிலத்தில் புணர்தலாகிய ஒழுக்கம் சிறப்பைப் பெறும். மழையுன்றி வறண்டு போன நிலம் பாலை; பிரிவு இங்கே நிகழ்வதாகச் சொன்னால் பிரிவினது துன்ப உணர்ச்சி நன்முக வெளிப்படும். காடும் காட்டைச் சார்ந்த இடமும் முல்லை; இந்த நிலத்தில் இருத்தல் என்னும் ஒழுக்கம் நிகழ்வதாகச் சொன்னால் சிறப்பாக இருக்கும். வயலும் வயலைச் சார்ந்த இடமும் மருதம்; இது ஊடலுக்கு ஏற்ற இடம், கடலும் கடலைச் சார்ந்த இடமும் நெய்தல்; தனிமையிலே புலம்புதற்கு ஏற்ற இடம்.

சங்க நூல்களில் இயற்கை எழிலைப் புலவர்கள் மிக நன்றாக வருணித்திருக்கிறார்கள். விலங்கினங்களிடத்தும் காதல் வாழ்க்கை இருப்பதைப் புலப்படுத்தியிருக்கிறார்கள். இப்புத்தகத்தில் உள்ள பாடல்களில் குறிஞ்சி நிலத்தையும் பாலை நிலத்தையும் பார்க்கிறோம், குறிஞ்சி நிலத்தில் நன்னெடுங் குன்றம் ஓங்கி நிற்கிறது. காலையில் பெய்த மழையினுல் அருவி பெருக்கெடுத்து வீழ்கிறது. அது பாயும் காடுகள் காண்பதற்கு அரிய அழகுக் காட்சியாகத் திகழ்கின்றன. காந்தள் மலரில் வண்டு மொய்த்து ஊதுகின்றது. அதன் இன்னிசை யாழொலியைப் போல இருக்கிறது. யாமத்தில் அடர மழை பெய்கிறது. மரங்கள் அடர்ந்து ஓங்கி நின்ற மால் வரை திருமாலைப் போலத் திகழ்கிறது. வெள்ளை வெளேரென்று வீழும் அருவி பலராமரைப் போல இருக்கிறது. குறமகளிர் தினைப்புனத்தைக் காவல் புரிகிறர்கள். அவர்களை ஏமாற்றிவிட்டு மந்தி இணைக் கதிரைப் பறித்துக்கொண்டு கன் கணவனாகிய கடுவனோடு மலை மேலே ஏறிப்போய்ச் தினைக் கதிரைக் கையால் தேய்த்துத் தின்கிறது. தன் கவுளிலும் தாடையிலும் தினையை அடக்கிக் கொள்கிறது.

எங்கே பார்த்தாலும் வெப்பம் நிரம்பி அழல் கொளுந் தும் பாலை நிலத்தைச் சில பாடல்களில் காண்கிறோம். உலர்ந்த காந்தளும் ஓய்ந்த புலியும் ஈனும் பருந்தும் அங்கே வருகின்றன. ஈப்போதும் கோடைக் காலம் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டதோ என்று தோள் றுகிறது. வேப்ப மரத்தின் மேல் இலைகள் சுருங்கிச் சுரண்டுள்ளன. அதன் கீழே புள்ளி புள்ளியாத்தான் நிழல் காணப்படுகிறது. அதன் மேலே பிரசவ வேதனையோடு பருந்து தங்கி யிருக்கிறது. அந்த நிழலில் மறவர்களின் சிறுவர்கள் தாயக் கட்டம் போன்ற விளையாட்டை ஆடுகிறார்கள்; நெல்லிக் காயை உருட்டி விளையாடுகிறர்கள். கருவுயிர்த்த பெண் புலி நடக்க முடியாமல் ஓரிடத்தில் இருக்க, அதற்கு இரை தேடி ஆண் புலி வழியில்ே யாராவது வருகிறார்களா என்று ஒளித்துப் பார்த்து நிற்கிறது.

நெல்லி மரமும் விளாமரமும் எங்கேயோ ஓரிடத்தில் உயிர் வைத்துக் கொண்டிருக்-கின்றன. இந்தப் பாலையில் பிறரைக் கொன்று வாழும் மறவர்களாகிய வில்லேருழவர்கள் வாழ்கிறர்கள்.

எங்கோ ஓரிடத்தில் கொஞ்சம் பசுமை இருக்கிறது. அங்கே விளாமரத்தின் கீழே பச்சைக் கம்பலத்தை விரித்தாற்போலப் பயிர் பரந்திருக்கிறது. அதன் மேலே விளாம் பழங்கள் பழுத்து உதிர்ந்திருக்கின்றன. மாமரச் சோலையும் அதில் இருந்து பாடும் குயிலும் பாலை நிலத்தை அடுத்து இருக்கின்றன.

பழந் தமிழர் வாழ்க்கையில் தெய்வ பக்தி நன்றாக இருந்தது. திருமாலையும் பலராமனையும் இந்தப் புத்தகத்தில் வரும் செய்யுட்களில் காண்கிறோம். சக்கரபாணியாகிய திருமால் வேத முதல்வராகவும் உலகமே உருவமாகப் பெற்ற பெருமானாகவும் விளங்குகிறார். அவர் எப்பொருளினோடும் இருப்பவர்; எல்லாவற்றையும் தம்முள் அடக்கியவர். சர்வாந்தரியாமி; சர்வ வியாபகர். அவர் தமையனராகிய பல தேவர் வெள்ளை நிறமுடையவர்.

பல தெய்வங்கள் இருந்தாலும் உள்ளம் கசிந்து வழி படும் தெய்வம் ஒன்று ஒவ்வொருவருக்கும் இருக்கும். அத்தெய்வத் திருவருளைப் பெறவேண்டுமென்ற ஆர்வத்தினால் சோர்வில்லாமல் அவர்கள் சாதனங்களில் ஈடுபட்டார்கள். வழிபடு தெய்வத்தைக் கண்ணாலே காணலாமென்றும், அந்தக் காட்சியின்பம் எல்லா இன்பங்களிலும் சிறந்த தென்றும் நம்பினார்கள்.

நோன்பு நோற்று நீராடி ஈரம் புலராதபடியே சென்று கையினால் பிட்சை ஏற்று உண்ணும் துறவியர் இருந்தனர்.

இல்லற வாழ்வுக்குப் பொருள் இன்றியமையாதது என்பதை ஆடவர் உணர்ந்திருந்தனர். பொருள் ஈட்டுவது அவர் கடமை என்பதை மகளிர் உணர்ந்து அவர்களைப் பிரிந்து சிலகாலம் இருக்கும் துன்பத்தைப் பொறுத்தார்கள். எண்ணியபடி செய்யும் துணிவுடையவர்களே சிறந்த ஆடவர்கள் என்ற எண்ணம் இருந்தது. ஒருவரோடு நட்புப் பூண வேண்டுமானால் அவர் தகுதி முதலியவற்றை முன்பே ஆராய்ந்து, ஏற்புடையவரென்றால் நண்பு செய்வதும் இல்லையானால் செய்யாமல் இருப்பதும் பெரியோர் இயல்பு. ஒருமுறை நண்பராக்கிக் கொண்டால் பிறகு அவருடைய தகுதியை ஆராய்வது தவறு என்பது அவர்கள் கொள்கை.

இளம் பெண்கள் மணலில் விளையாடுவார்கள். கம்பலத்தை விரித்து அதன்மேல் பந்தாடுவார்கள். இல்லத்தில் மகளிர் மாலைக் காலத்தில் விளக்கேற்றுவார்கள்; விடியற் காலத்தில் தயிர் கடைவார்கள். காவிலே சிலம்பையும் உடம்பிலே பொன்னாலகிய சேயிழைகளையும் அணிவார்கள். இயற்கை அழகைக் கண்டு இன்புறுவது சில மகளிர் இயல்பு.

மகளிருக்கு உயிரைவிடச் சிறந்தது நாணம். இளம் பெண்கள் தம்முடைய அன்னையா-ரிடத்திலும் ஆயத்தோரி டத்திலும் மிக்க அன்பு பூண்டிருந்தார்கள். இரவில் தம் அன்னையின் அணைப்பிலே இன்புற்று உறங்குவார்கள். தாய் தன் பெண்ணை வாயிலே முத்தமிட்டுக் கொள்வதுண்டு.

பொன்னை உரை கல்லில் தேய்த்துப் பார்ப்பார்கள். அந்த உரைக் கல்லுக்குக் கட்டளை என்று பெயர். தயிர்ப் பானையில் விளாம்பழத்தைப் போட்டு மூடிவைப்பார்கள். அதனுல் அந்தப் பானையின் முடைநாற்றம் மாறும். யாழ் வாசித்து அந்த இசையிலே ஈடுபடும் வழக்கம் தமிழ் மக்களுக்கு உண்டு,

இந்த ஒன்பது பாடல்களிலே இத்தனை செய்திகளும் இன்னும் சில செய்திகளும் அமைந்திருக்கின்றன. நானூறு பாடல் அடங்கிய நற்றிணையில் இன்னும் பல பல செய்திகள் உண்டு. இப்படியே எட்டுத்தொகை நூல்களிலும் உள்ள செய்திகளை ஆராய்ந்தால் பண்டைக் காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலைகயைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த நற்றினையைப் பழங்காலத்தில் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்ற அரசன். உரை எழுதி அச்சிற் பதிப்பித்தவர் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் என்ற பெரியார்.

சங்க நூல்களிலுள்ள பாடல்கள் இக்காலத்துத் தமிழ் மக்களுக்கு விளங்காத நடையில் இருக்கின்றன. அவற்றைத் தெளிவாக்கிளுல் அவற்றிலுள்ள பொருள் யாவர் மனத்தையும் கொள்ளை கொள்ளும், இந்த எண்ணத்தினால் சில அகப்பொருட் செய்யுட்களுக்குக் கதை போன்ற உருவத்தில் விளக்கம் எழுதிக் ’கலைமகளி’ல் முன்பு வெளியிட்டேன். அவற்றை அன்பர்கள் படித்துப் பார்த்து மிகவும் பாராட்டினர்கள். அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து, ’காவியமும் ஓவியமும்’ என்ற பெயரோடு ஒரு புத்தகமாக்கி விரிவான முகவுரையோடு வெளியிட்டேன். அப்பால் திருமுருகாற்றுப் படைக்கும் விளக்கம் எழுதி, ’வழிகாட்டி’ என்ற பெயரோடு வெளியிட்டேன். இந்த இரண்டு புத்தகங்களும் தமிழர்களின் உள்ளத்துக்கு உவந்தவையாக இருக்கின்றன என்று தெரிந்து இன்ப மடைகிறேன். முருகன் திருவருளும் என் ஆசிரியப் பிரானுடைய ஆசியுமே இந்தச் செயலில் யான் புகுவதற்கு மூலகாரணமாக நிற்பவை.

இதே முறையில் இன்னும் பல பாடல்களுக்கு விளக்கம் எழுதலாமென்று எண்ணினேன். என் கருத்தை அறிந்து, அப்படிச் செய்வது மிகவும் நன்றென்றும், நான் அதைச் சிறிதும் சோர்வின்றி நன்றாகச் செய்ய வேண்டுமென்றும் வற்புறுத்தி, இவை புத்தக உருவத்தில் வருவதற்குரிய ஏற்பாடுகளையும் செய்து, என்னைத் தூண்டி நிற்பவர் என் உழுவலன்பினரும், அமுத நிலையத்தின் தலைவரும் ஆகிய ஸ்ரீ ரா. ஸ்ரீ, ஸ்ரீகண்டன் அவர்கள். இயல்பிலே சோம்பலை அணியாகப் பூண்ட நான் அவர்களுடைய ஊக்கம் இல்லையானால் இதை எழுத முற்பட்டிருக்க மாட்டேன். ஆகவே அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவிப்பது என் தலையாய கடமை.

இந்த முயற்சி நன்கு நிறைவேறுவதற்கு முருகன் திருவருளும் தமிழ் அன்பர்களின் ஆதரவும் இன்றியமை யாதவை. அவை கிடைக்கும் என்ற நம்பிக்கையே 'மனைவிளக்கை’ முதல் முதலில் ஏற்றச் செய்தது.

கார்த்திகைத் திருநாள்
12-12-1951 கி. வா. ஜகந்நாதன்
-----------------

குறிப்பு
சங்கநூற் காட்சிகளுக்குத் தமிழுலகம் அளித்த ஆதரவினல் இப்போது இதன் இரண்டாம் பதிப்பு வெளியாகிறது. இப்பதிப்பில் பின்னும் இரண்டு பாடல்களுக்குரிய விளக்கத்தைச் சேர்த்திருக்கிறேன்.
கல்யாணபுரம், மயிலாப்பூர்
9-2-1955 கி. வா. ஜகந்நாதன்.
-----------------


உ ள்ளுறை

----------------

மனை விளக்கு
1. வேத முதல்வன்

இறைவன் எங்கும் நிறைந்தவன், எல்லாப் பொருளாகவும் நிற்பவன். அவனுக்குள் எல்லாம் அடங்கி நிற்கின்றன. அவன் எல்லாவற்றிலும் கரந்து நிறைந்து நிற்கிறான். பூவில் மணம் போலவும் எள்ளுள் எண்ணெய் போலவும் நெருப்பில் வெப்பம் போலவும் எல்லாப் பொருள்களிலும் நிறைந்து விளங்குகிறான் என்று நூல்கள் கூறும். வேதங்கள் எல்லாம் அக் கடவுளைத் துதிக்கின்றன. அந்த வேதத்தை உலகத்துக்குத் தந்த முதல்வன் அவன்தான்.

அவனுடைய தத்துவத்தையும் பெருமையையும் உலகம் உணர்வது எளிதன்று. உணர்ந்தாலன்றி அவனை அணுகி அருள் பெற்று இன்பமடையும் நெறி உலகத்தில் உள்ள உயிர்களுக்குப் புலப்படாது. சூரியன் தன்னைக் காட்டித் தன் ஒளியால் உலகத்தையும் காட்டுகிறான். கடவுள் தன்னை நேரே காட்டுவதில்லை. தன் உண்மையை அறிவுடையோர் உணரும் வண்ணம் அருள் நூலைக் காட்டினான். அதைத்தான் வேதம் என்று சொல்வார்கள். அறிய வேண்டியவற்றை அறியும்படி தன்னை ஓதுவாருக்கு உதவியாக இருப்பதனால் வேதம் என்ற பெயர் அதற்கு அமைந்தது.

அவனுடைய உருவம் எது? நமக்கு ஆதாரமாக இருக்கின்ற எல்லாம் அவனுடைய உருவமே. அவன் உருவத்துக்கு அளவு எது? நாம் எவற்றை மிக மிகப் பெரிய அளவுள்ளனவாக நினைக்கிறோமோ அவைகளெல்லாம் அவனுடைய திருமேனியின் அளவை அறிய ஒருவாறு பயன்படும், இந்த நிலம் விரித்தது; மிக மிகப் பரந்தது. கடலும் எல்லையற்றுப் பரந்தது. ஆகாயம் பின்னும் விரிந்தது. திசைகள் மிக மிக நீண்டன. இவைகளையே கடவுளின் திருமேனிப் பகுதிகளாகக் காணலாம்; கண்டு மகிழலாம்.

இறைவன் உலகமாக இருக்கிறான். உலகமே திருமேனியாக அழகு பூத்து நிற்கும் அவனுக்கு லோகசுந்தரன் என்ற திருநாமம் அமைந்திருக்கிறது.

நாம் பிறந்து வாழ்ந்து நடந்து அடங்குவதற்கு ஆதாரமாக நிற்பது பூமி. இந்த மாநிலம் நம்மைத் தாய் போலத் தாங்குகிறது. அகழ்ந்தாலும் உதைத்தாலும் பொறுத்துத் தாங்கும் அருள் தன்மையை உடையது மாநிலம். நமக்கு இருக்கையாகவும் உணவு தரும் களஞ்சியமாகவும் நமக்கென்று பல பொருள்களைத் தன் அகத்தே பொதிந்து வைத்திருக்கும் பெட்டியாகவும் இலங்குகிறது. பூமி இல்லையாயின் நாம் இல்லை; புல் பூண்டு, பயிர் பச்சை, ஆடு மாடு, புலி சிங்கம், மனிதர் யாருமே இல்லை. உலகம் என்றாலே உயிர்க் கூட்டத்தைக் குறிக்கும் பெயராகி விட்டதல்லவா?

இப்படி நம் கண்முன் நமக்கு ஆதாரமாக விரிந்து கிடக்கும் இந்த மாநிலமே இறைவனுடைய சேவடி. தாமரை போன்ற சிவந்த திருவடி உடையவன் இறைவன் என்று போற்றுகிறோம். அந்தத் திருவடி எங்கோ திருவைகுந்தத்தில் திருக் கோயிலில் மாத்திரமே நிற்பது என்று கருத வேண்டாம். நாம் உணர்ந்தாலும் உணரா விட்டாலும் நம்மைத் தாங்கும் ஆதாரப் பொருள் அது தான். உலகத்தான் அப்பெருமானது திருவடி.
பூமியைச் சூழ்ந்திருப்பது கடல். கடல் இல்லையானால் நமக்கு நீர் இல்லை. உலகத்தைச் சுற்றிக் கடல் இருப்புதனால் பூமிக்கு அடியில் நீர் ஊறுகிறது. கடல் இருப்பதால் தான் மேகங்கள் அதனிடத்தே நீரை முகந்து மழை பெய்கின்றன. கடலின் நீர் ஆழத்தால் நீலநிறமாகத் தோன்றினும் தூய வெள்ளை நிறமுடையது. அந்த நீர் நோயை உண்டாக்காத தூய்மையை உடையது; உலகத்து அழுக்கெல்லாம் ஆற்றின் வழியாகவும் கால்வாய் வழியாகவும் தன்பால் விழுந்தாலும் தன் தூய்மை கெடாமல் இருப்பது.

கடல் ஆழமாக இருப்பதனால் அதில் சங்குகள் உண்டாகின்றன; இப்பி, சங்கு, இடம்ரி, வலம்புரி முதலிய பல வகையான சங்கங்கள் உண்டாகின்றன. சங்குக்குத் தமிழில் வளை என்று பெயர். உயிர் உள்ள சங்கு முழங்கு மாம். கடலில் மேற் பரப்பில் வந்து மேயும்போது காற்று வீசினால் சங்கில் ஒலி எழும்பும் என்றும் சொல்வதுண்டு. வளைகள் நரலும் ஓசையைக் கடற்கரையில் உள்ள நம்மால் கேட்க இயலாது. ஆனாலும் பெளவத்தில் வளைகள் நரன்று கொண்டுதான் இருக்கின்றன. கண்ணால் காணும் தூய நீரையும் காதால் கேட்கும் வளைகள் நரலும் ஒலியையும் உடையது கடல்.

மாநிலத்தைச் சுற்றிக் கிடக்கும் இந்தத் தூநீரையுடைய பெளவத்தை, வளை நரலும் பெளவத்தை, மாநில மடந்தையின் உடையாக வருணிப்பது புலவர் வழக்கம். மாநிலம் இறைவனுடைய திருவடிகளானல் அவற்றைச் சூழும் பெளவம் அவனுடைய உடையாகத் தோன்றுவது பொருத்தம் அல்லவா? மாநிலத்தைச் சேவடியாகக் கொண்ட இறைவன் தூநீர் வளை நரல் பெளவத்தை உடுக்கையாகக் கொண்டு நிற்கிறான்,
பாதமே இவ்வளவு விரிந்ததானால் அவனுடைய உடல் வண்ணம் முழுவதும் காண்பார் யார்? பூமியிலிருந்து மேலே ஓங்கி நிற்பது விசும்பு. அதன் உயரத்தையும் பரப்பையும் அளவிடுவார் யார்? மெய்யில் தாள் சிறியது. தாளைக் காட்டிலும் திருமேனிப் பரப்பு விரிவாக இருக்கும். இங்கே, மாநிலத்தையே சேவடியாகப் படைத்த பெருமானுக்கு எவ்லாவற்றையும் தன் அகத்தே அடக்கிய ஆகாயமே திருமேனியாக விளங்குகிறது. அந்த விசும்பு எல்லாப் பூதங்களையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு நிற்பது. விசும்பு தன் மெய்யாகக் கொண்டு இறைவன் எழுந்தருளியிருக்கிறான்.

தெய்வத் திருவுருவங்களுக்கு நான்கு கைகள் இருக்கும். எட்டுக் கைகளும் பதினறு கைகளும் அதற்கு மேற்பட்ட கைகளும் இருப்பதுண்டு. இரண்டு கைகளைப் படைத்த மக்களைக் காட்டிலும் பெருஞ்செயலும் ஈகைத்திறனும் படைத்தவன் இறைவன் என்பதைக் காட்டும் அடையாளங்கள் அவை. மாநிலத்தைச் சேவடியாகவும், தூநீர் வளை நரலும் பெளவத்தை உடுக்கையாகவும், விசும்பை மெய்யாகவும் படைத்த பிரான் எத்தனை கைகளை உடையவன்? திசைகள் எத்தனை? கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று நான்கு என்று கூறலாம். இறைவனுக்கும் நான்கு திருக் கரங்கள்; அந்தத் திசைகளே கரங்கள். திக்குகள் நான்கு மட்டுமா? கோணத் திசைகளாகிய வடகிழக்கு, வட மேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என்பவற்றையும் சேர்த்தால் எட்டாகிவிடுமே அஷ்டதிக்கு என்பது அடிப்பட்ட வழக்கமாயிற்றே! அப்படியானுல் இறைவனுக்கும் கைகள் எட்டென்றுதானே சொல்ல வேண்டும்? அதோடு நிறுத்திவிடக் கூடாது. மேலும் கீழுமாகிய திசைகளையும் சேர்த்துப் பத்துத் திக்கு என்று சொல்வதும் ஒரு வழக்கம். ஆழ் கடலில் ஒருவன் மூழ்குகிறான்; அவன் எந்தத் திக்கில் பிரயாணம் செய்கிறன்? கீழே, வான விமானத்தில் ஒருவன் ஏறுகிறான். அவன் எட்டுத் திக்குகளில் செல்ல வில்லை; மேலே செல்கிறான், ஆகவே, பத்துத் திசை என்று சொல்வது இந்தக் காலத்தில் நன்றாக விளங்கும். திசை பத்து என்றால் இறைவன் கைகளும் பத்துத்தான். இன்னும் நுணுக்கமாகத் திசையாராய்ச்சியைச் செய்தால் வட கிழக்குக்கும் கிழக்குக்கும் நடுவே பல பல கோணத் திசைகள் உண்டு. அலை அத்தனையுமே இறைவன் திருக்கரங்கள்தாம். இத்தனை கைகள் என்று கணக்கிட்டுச் சொல்வதில் சங்கடம் எழும். ஆனல் திசைகள் எத்தனையோ அத்தனை கைகள் என்று சொல்லிவிட்டால் ஒரு சங்கடமும் இல்லை. இறைவன் திசைகளைக் கையாகப் பெற்று விளங்குகிறான் ,

சேவடியைக் கண்டோம்; உடுக்கையைத் தரிசித்தோம்; மெய்யை உணர்ந்தோம்; கையையும் தெரிந்து கொண்டோம், நீண்டு உயர்ந்து விரிந்து படர்ந்து நிறைந்து விளங்கும் திருக்கோலத்தை ஒருவாறு நினைக்க முடிகிறது. என்ன உன்னதமான திருவுருவம் கம்பீரமான காட்சி அளவு காண இயலாத திருக்கோலம் மாநிலம் சேவடியாக, துரநீர் வளை நரல் பெளவம் உடுக்கையாக, விசும்பு மெய்யாக, திசை கையாக நிற்கும் பெருந் திருமேனி அழகியது; விரிந்தது; ஆதாரமானது.

எம்பெருமானுடைய திருவிழிகளைக் காண வேண்டாமா? இறைவன் திருவிழிகள் அவன் பிறரைப் பார்க்க மாத்திரம் அமைந்தவை அல்ல. நாமும் அவன் திருவிழிகளாலே தான் பார்க்கிறோம். நமக்கு முகத்தில் இரண்டு விழிகள் இருப்பது உண்மைதான். ஆஞல் இந்த விழிகள் தாமே காணும் திறம் படைத்தவை அல்ல. இறைவன் தன் திருவிழிகளை விழித்து அருள் நோக்கம் பாலிக்காவிட்டால் நாம் கண் இருந்தும் குருடர்களாகவே கலங்கி நிற்போம். பகலில் செங்கதிரோன் உதயமாகாவிட்டால் உலகமே இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இருட்டறைக்குள்ளே விட்டு விட்டால் கண் இல்லாத குருடனுக்கும் கண்ணுள்ளவனுக்கும் வேறுபாடு இல்லை. கண் உடையவனுக்கு அந்தக் கண் பயன்பட வேண்டுமானால் ஒளி வேண்டும்; அந்த ஒளியை இரவில் சந்திரனும் பகலில் சூரியனும் எப்போதும் அக்கினியும் தருகின்றன. அந்த மூன்றையும் முச்சுடர்கள் என்று சொல்வார்கள். மூன்று சுடர்களும் இல்லா விட்டால் உலகில் யாவரும் குருடர்களே ஆவார்கள்.

இறைவனுக்கு மூன்று கண்கள் உண்டு. காண்பதற்குக் பசுமையாகக் குளிர்ச்சியாக நிலவு வீசும் மதியம் ஒரு கண்; வெஞ்சுடர் வீசும் கதிரவன் ஒரு கண், தீச்சுடரும் ஒரு கண். இந்த மூன்றுகண்களும் ஒளிப் பிழம்புகள். இவற்றல் உலகம் ஒளி பெறுகிறது. இறைவன் திருக்கண்ணால் நோக்கினால்தான் உயிர்கள் விழிப்படைகின்றன என்று சொல்வது எவ்வளவு பொருத்தமான செய்தி. சூரியன் இல்லாவிட்டால் பயிர் பச்சை இல்லை; அக்கினி இல்லா விட்டால் மனிதன் பல செயல்களைச் செய்ய முடியாது. இறைவன் திருவிழிகளை மலர்த்திப் பார்ப்பதனால் உலகம் ஒளி பெறுவதோடன்றி, எழுச்சி பெறுகிறது; மலர்ச்சி பெறுகிறது; வளர்ச்சி அடைகிறது; முறுக்குப்பெறுகிறது; கனிவடைகிறது. பயிர் பச்சைகள் செழிக்கின்றன; மலர் மலர்கிறது; கொடி படர்கிறது; தாமரையும் குவளையும் சிரிக்கின்றன; நாம் தூங்கி விழிக்கிறோம். உடம்பில் ரத்தம் ஒடுகிறது; இரும்பு உருகுகிறது; நமக்கு உணவு வேகிறது. -இப்படியே மூன்று சுடர்களால் நிகழும் காரியங்களை அடுக்கிக்கொண்டே போகலாம் அல்லவா? பசுங்க திரையுடைய மதியமும் பிற சுடர்களும் கண்ணாக அமைய இறைவன் எழுந்தருளி-யிருக்கிறான் என்பதில் எத்தனை உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன!

இப்போது அவனுடைய திருமேனிக் காட்சியைத் திருவடியில் தொடங்கி உடையைப் பற்றி மெய்யையும் கையையும் தொட்டுத் திரு விழியளவும் சென்று தரிசித்தோம். இறைவனுடைய சந்நிதானத்தில் முதலில் திருவடியைக் காண்பதுதான் முறை. நம் தலை அப்போதுதான் வணங்கும் அகங்கார முடையவன் அடியைக் காணமாட்டான். இறைவன் திருமுன் ஆணவம் அடங்கி நிற்க, அவனை வணங்கிப் பணிய வேண்டும். பணியுங்கால் அவன் திருவடி ஒன்றுதானே தெரியும்? அதைக் கண்டால், அன்புடன் கண்டால், பிறகு மற்ற அங்கங்களைப் பார்க்க இயலும், கடவுளைத் துதி செய்கையில் திருவடி தொடங்கித் திருமுடி வரையில் வருணிப்பது மரபு. இதைப் பாதாதி கேசம் என்று சொல்லுவார்கள். இங்கே இறைவனுடைய திருமேனியைச் சேவடி தொடங்கிக் கண்டோம். அந்தச் சேவடி, மாநிலம். நாம் நிற்கும் நிலத்தை முதலில் பார்த்துத்தானே கடலையும் விசும்பையும் திசையையும் சுடரையும் பார்க்க வேண்டும்? மாநிலப் பரப்பைக் கண்டோம்; அதில் இறைவன் சேவடியைக் கண்டோம்; கண்டோமோ இல்லையோ காணவேண்டும். தூநீர் வளை நரல் பெளவத்தைக் கண்டோம்; அதில் இறைவன் உடுக்கையைக் கண்டோம். விசும்பைப் பார்த்தோம்; திசையைக் கண்டோம்; அவன் மெய்யையும் கையையும் கண்டோம். பசுங்கதிர் மதியத்தையும் சுடரையும் பார்த்தோம்; அவற்றில் அவன் கண்களைக் கண்டோம். மாநிலத்தைச் சேவடியாகப் பார்க்கும்போது மாநிலம் என்ற நினைவு மறந்து இறைவன் நினைவு ஊன்றுகிறது. பெளவத்தை அவன் உடுக்கை யாகப்பார்க்கும் கண்ணுடையாருக்குக் கடல் மறை கிறது; அவன் நீலப்பேராடையே தோன்றுகிறது. விசும்பை மறந்து மெய்யைப் பார்க்கவும், திசையை மறந்து கை யைப் பார்க்கவும், சுடரை மறந்து கண்ணைப் பார்க்கவும் வன்மையுடையவர்கள் எங்கும் இறைவனைப் பார்க்கும் பேரறிவாளர்கள்.

நாம் அப்படிப் பார்ப்பதில்லை. நாம் பார்க்க முடிய வில்லை என்பதனால் உண்மை மாறதே!

இறைவன் எங்கும் நிறைந்து பயின்று நிற்கிறான், இயற்கை முழுவதும் அவன் திருவுருவம் பல பல உருவங்களாக இயலும் எல்லாவற்றிலும் அவன் உறைகிறான்; அவற்றினூடே நிறைந்து பயின்று நிற்கிறான். அவற்றுக்குள்ளே அடங்கி நிற்கிறான், இயன்ற எல்லாவற்றிலும் பயின்று நிற்கும் இந்த நிலையைச் சர்வ வியாப்பியம் என்று சொல்வார்கள். பார்க்குமிடம் எங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரம்பொருள் அவன். நமக்குத் தெரியாமல் எல்லாப் பொருள்களுக்குள்ளும் பயின்று நிற்கும் அப்பெருமான் அந்தப் பொருள்களை விடச் சிறியவன் அல்ல. அடங்கின பொருளைக் காட்டிலும் அடக்கி வைத்திருக்கும் பொருள் பெரிது என்பது இயல்பு. இங்கே இயன்ற எல்லாப் பொருள்களிலும் இறைவன் அடங்கி நிற்கிறான் என்ருல், அந்தப் பொருள்கள் அவனைவிடப் பெரியவை என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா? ஒரு குடத்தைக் குளத்துக்குள் போடுகிறோம். அந்தக் குடம் முழுவதும் நீர் நிரம்பி இருக்கிறது. குடத்துக்குள்ளே நீர் இருக்கிறது. ஆனால் நீர் குடத்துக்குள் இருப்பதோடு நிற்கவில்லை. அது குடத்துக்கு உள்ளே அடங்கியிருக்கிறது; ஆயினும் அந்தக் குடம் நீருக்குள் இருப்பதனால், அந்த நீர் குடத்தைத் தனக்குள்ளே அடக்கியும் இருக்கிறது குடத்துக்கு உள்ளும் புறம்பும் நீர் இருப்பதனால் குடத்துக்குள் அடங்கியும் குடத்தைத் தனக்குள் அடக்கியும் நிற்கிறது நீர் என்று சொல்லுவதில் தவறு இல்லை. இறைவனும் அப்படித்தான் இருக்கிறான். இயன்ற எல்லாவற்றிலும் பயின்று நிறைந்திருக்கிறான்; அதே சமயத்தில் எல்லாவற்றையும் தன் அகத்தே அடக்கியும் வைத்திருக்கிறான், உள்ளும் புறம்பும் நிறைந்து விளங்குகிறான். அவன் சர்வாந்தரியாமி; சர்வ வியாபகன். எதற்குள்ளும் அடங்கியவன்; எதிலும் அடங்காதவன். எல்லாவற்றுள்ளும் இருக்கிறான்; எல்லாவற்றிற்கும் அப்பாலாய் இருக்கிறான்; கடவுள்.

இப்படி, இயன்ற எல்லாவற்றினோடும் பயின்றும், எல்லாவற்றையும் அகத்து அடக்கியும் விளங்கும் இறைவனே வேதத்தைத் திருவாய் மலர்ந்தருளினான். வேதத்தை அவன் சொன்னான்; அந்த வேதம் அவனைத்தான் சொல்கிறது. ஆகவே வேதத்தைத் தந்த முதல்வனும் அவனே, வேதத்திற்குப் பொருளாகிய முதல்வனும் அவன்தான்.

உலகமே தன் உருவாக அமைய, எங்கும் பயின்று எவற்றையும் தன்னுள் அடக்கிய வேத முதல்வனைப்பற்றி நமக்கு என்ன தெரியும்? நாம் கோயிலில் விக்கிரகமாக வைத்து வழிபடுகிறோம். அந்த உருவந்தான் நமக்குத் தெரியும். பலபல கோலங்களில் திருமால் கோலம் ஒன்று. சக்கரம் தரித்ததிருக்கரத்தை உடைய சக்கர பாணியாக அவனை வணங்குகிறோம். அந்தச் சக்கரம், தீதெல்லாம் அறும்படியாக அவன் கரத்தில் விளங்குகிறது; உயிர்க் கூட்டங்களுக்கு நலிவு நேர்ந்தால் அதைப் போக்கிப் பாதுகாக்கும் படை அது; தீது அறும் பொருட்டு விளங்கும் திகிரி; அந்தத் திகிரியை உடையவனாக நாம் இறைவனைக் காண் கிறோம், சக்கரக் கையோன், தீதற விளங்கிய திகிரியோன் என்று புகழ்கிறோம்.

திகிரியைத் திருக் கரத்தில் கொண்ட திருமாலாக நாம் காணும் இப்பெருமானை அருள் பெற்ற சான்றோர்கள் எப்படிச் சொல்கிறர்கள் தெரியுமா? வேத முதல்வன் என்று சொல்லுகிறார்கள். எங்கும் நிறைந்த பரம்பொருள், எல்லாவற்றையும் தனக்குள் அடக்கிய முதல்வன் என்று பாராட்டுகிறர்கள். இதுமட்டுமா? அவனருளே கண்ணாகக் கண்டவர்கள் அப்பெரியார்கள்; அவனுடைய திருமேனிக் கோலத்தைக் கண்டு இன்புற்று அந்த இன்பப் பூரிப்பிலே நமக்கும் எடுத்துச் சொல்கிறார்கள். நாம் பார்க்கும் ‘தீதற விளங்கிய திகிரியோனை’யே அவர்கள் மாநிலஞ் சேவடியாகப் பெற்றவன் என்றும், தூநீர் வளை நரல் பெளவமே அவன் உடுக்கையாகும் என்றும், விசும்பு மெய்யாக விரிந்த திருமேனியன் அவன் என்றும், திசைகையாக நிற்பவன் என்றும், பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக அவனுக்கு ஒளிரும் என்றும் சொல்லி, அவன் விசுவ ரூபத்தைக் காட்டுகிறார்கள். அதோடு, அவன் இயன்றவெல்லாம் பயின்றவனென்றும் புகழ்கிறர்கள்.

உலகத்தை நாமும் காண்கிறோம்; அவர்களும் காண்கிறார்கள். நாம் உலகத்தை உலகமாகவே பார்க்கிறோம்; அவர்கள் திருமாலாக, வேத முதல்வனாக, எங்கும் நிறைந்த இறைவனாகப் பார்க்கிறர்கள். அவர்களுடைய பெருமையை என்னென்று சொல்வது!

[ உயிர்க் கூட்டத்தின் தீமைகளெல்லாம் அறும் பொருட்டுத் தன்னுடைய திருக்கரத்திலே சுடர் விட்டு விளங்கிய சக்கராயுதத்தையுடைய திருமாலை, பெரிய நிலத்தைச் செம்மையான திருவடிகளாகவும், தூய நீரை யுடைய சங்குகள் முழங்கும் கடலை ஆடையாகவும், ஆகாயத்தை உடம்பாகவும், திசைகளைக் கரங்களாகவும், தண்மையுடைய கிரணங்களைப் பெற்ற சந்திரனோடு சூரியன் அக்கினி என்ற பிற சுடர்களைக் கண்களாகவும் பெற்று, உலகத்தில் இயற்கையில் அமைந்த எல்லாப் பொருள்களினோடும் இசைந்து நிறைந்து, அவற்றைத் தன்னுள்ளே அடக்கிய, வேதத்துக்கு மூலபுருஷன் என்று பெரியோர்கள் சொல்வார்கள் l

திகிரியோனை ஆக, பயின்று, அடக்கிய முதல்வன் என்ப என்று வாக்கியத்தைப் பொருத்திக் கொள்ள வேண்டும்,

வளை-சங்கு நரல்-முழங்கும், உடுக்கை-ஆடை. விசும்பு-ஆகாயம், பசுங்கதிர்-குளிர்ந்த கிரணம். இயன்ற இயல்பாக அமைந்த, பயின்று - பழகி நிறைந்து. என்ப - என்று சொல்வார்கள். திகிரியோன் - சக்கரப் படையை உடையவன்.]
-----------

2. மனை விளக்கு

இல்லற வாழ்வில் ஈடுபட்டு இன்பம் காணும் அந்தக் கட்டிளங் காளைக்கு எதனாலும் குறைவில்லை. அழகுப் பிழம்பாகத் திகழும் காதலியைப் பெற்றபின் அவனுடைய இன்பத்துக்கு வேறு என்ன வேண்டும்? உலகம் அறிய மனைவியாக அவளை ஏற்றுக் கொண்டான். அழகிய இல்லத்தில் அவளோடு வாழப் புகுந்தான். அறத்தை வளர்த்து இன்பக் கடலில் துளைந்தாடும் வாழ்விலே அவன் ஈடுபட்டான். தம் முன்னோர் ஈட்டி வைத்த பொருள் இருந்தாலும் தம் முயற்சியினாலே பொருளைச் சம்பாதித்து அறம் புரிவதுதான் சிறப்பு என்பது தமிழர் கொள்கை. ஆகவே, அவன் அறமும் இன்பமும் நெடுங் காலம் இடையூறின்றி விளையும் பொருட்டுப் பொருள் ஈட்டி வர எண்ணினாள். அறம் பொருள் இன்பம் என்ற மூன்று உறுதிப் பொருள்களிலும் நடுநாயகமாக நிற்கும் பொருள் இருந்தால் அறம் செய்யலாம்; இன்பமும் துய்க்கலாம். அந்தப் பொருள் இல்லாத வறியவர்கள், பிறருக்கு ஈயவும் இயலாது; தாமே இன்பம் துய்க்கவும் முடியாது, இவற்றையெல்லாம் அவன் நன்கு உணர்ந்தவன்.

வேற்று நாட்டுக்குச் சென்றால் நிறையப் பொருள் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. திரைகடல் ஒடியும் திரவியந் தேடும் உறுதிப்பாடும் உண்டு. ஆனல் ஒரே ஓர் எண்ணம் இந்த முயற்சிக்குத் தடையாக நின்றது; அதுதான் பிரிவு.

அவனும் அவன் காதலியும் அன்றிற் பறவைகளைப் போலப் பிரிவில்லாமல் இணைந்து வாழ்கிறவர்கள் மலரும் மனமும்போல ஒருவரோடு ஒருவர் உள்ளம் ஒன்றி இசைந்து இன்ப வாழ்வு காண்கிறவர்கள். இப்போது அவன் அவளை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டியிருக்கும். பொருள் ஈட்டச் செல்லும் இடத்திற்கு அவளையும் அழைத்துச் செல்வது இயலாத காரியம். பிரிந்துதான் போக வேண்டும். போகாமல் இருந்து விடலாமென்றால், பொருள் இல்லாமல் இல்லற வாழ்க்கையில் ஒன்றும் செய்ய இயலாதே!

பிரிந்து செல்லத்தான் வேண்டும். எவ்வளவு விரைவிலே பொருளைச் சம்பாதித்துக் கொண்டு வரலாமோ அவ்வளவு விரைவிலே வந்துவிட வேண்டும் என்றுதான் அவன் நினைத்தான். இன்றியமையாத அளவுக்குப் பொருள் ஈட்டினால் போதுமே கோடி கோடியாகக் குவித்து விட வேண்டும் என்ற ஆசை அவனுக்கு இல்லை. ஆதலின் சிறிது காலமே அவளைப் பிரிந்திருக்க நேரும்.

ஆனாலும் அந்தச் சிறிது காலங்கூட அவர்கள் பிரிந்திருக்க முடியாதே! அவன் ஆடவன்; மனத்திண்மை படைத்தவன். பொருளிட்டும் முயற்சியில் ஈடுபடுவதனால் பிரிவுத் துன்பத்தை அவன் ஓரளவு மறந்திருக்கலாம். அவனுடைய காதலி பிரிவைச் சகிப்பாளா? ஒவ்வொரு கணமும் அவனைக் காணாமையாலே புழுவைப் போலத் துடிக்க மாட்டாளா?

பொருளோ இன்றியமையாதது; அதை சம்பாதிக்கக் காதலியைப் பிரிந்துதான் செல்ல வேண்டும். பிரிவுத் துன்பமோ பொறுத்தற்கு அரியது. இந்த இசைகேடான நிலைமையில் என்ன செய்வது?

எப்படியோ ஒருவாறு அவளுக்குத் தன் காதல் புலப்படும்படி கொஞ்சினான்; ஆறுதல் கூறினான்; தான் போக வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினான்; புறப்பட்டு விட்டான். போய்ப் பொருள் தேடினான். சம்பாதித்தான்; மறுபடியும் ஊர் வந்து சேர்ந்தான். அவளோடு இப்போது சேர்ந்து அநுபவிக்கும் இன்பம் முன்னைக் காட்டிலும் மிகுதியாக இருக்கிறது. நினைத்த காரியத்தை நினைத்த வண்ணம் நிறைவேற்றி வெற்றி கண்டு விட்டால், எத்தனை ஆனந்தம் இருக்கும் அவ்வளவு ஆனந்தம் அவளால் உண்டாகிறது. மேற்கொண்ட செயலை. வினையை-முடித்தாற்போன்ற இனிமையைத் தருபவள் அவள்; செய்வின முடித்தன்ன இனியோள். செய்வினையை முடித்துப் பயன் பெற்றவன் அல்லவா அவன்? ஆகவே அந்த இன்பத்தையும் இந்த இன்பத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் இயல்பு அவனிடம் அமைந்தது.

-------------- # # ----------

இப்போது அவனுடைய உள்ளத்தில் சிறிது சபலம் தட்டியது; மறுபடியும் வெளிநாடு சென்று சில காலம் தங்கி ஏதேனும் தொழில் செய்து பணம் சம்பாதித்து வரலாமா என்ற எண்ணம் தோன்றியது. பணம் எவ்வளவு இருந்தால் தான் என்ன? செலவழிக்கவா வழி இல்லை? இன்னும் பணம் சேர்த்து வந்தால், இன்னும் இன்பம் உண்டாவதற்கு ஏற்ற வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாமே என்ற விருப்பம் அவனுடைய நெஞ்சிடையே முளைத்தது.

’அட பாவி நெஞ்சே உனக்கு இன்னுமா சபலம்? முன்னலே பட்ட துன்பங்களை-யெல்லாம் அதற்குள் நீ மறந்து போனாயா? பொருளைச் சம்பாதிக்க மறுபடியும் போகலாம் என்று எண்ணுகிறாயே போன தடவை படாத பாடு பட்டோம்; அதி எண்ணிப்பார்’ என்று அவன் நினைக்கிறான்; நெஞ்சு தான் நினைக்கிறது; ஆனாலும் அதை வேறாக வைத்துப் பேசுவதுபோல் அந்த நினைப்பு ஓடுகிறது.

"நாம் போனோமே, அந்த வழி அழகிய சாலையும் சோலையுமாகவா இருந்தது? பூங்காவும் அடர்ந்த மரமும் நிழல் தர, போகும் இடங்களில் எல்லாம் மக்கள் உபசாரம் செய்ய, அழகிய காட்சிகளைக் கண்டு களித்துச் சென்றாலும் குற்றம் இல்லை. அந்தக் கண்ணராவிக் காட்சியை என்னவென்று சொல்வது!"

அவன் இப்போது இருந்த இன்பச் சூழலிலே அன்று அப்போது பட்ட பாட்டை நினைவுக்குக் கொண்டு வருகிறான்.

போன வழியெல்லாம் மரம் கருகி வளம் சுருங்கிய பாலை நிலம் அது. எங்கேயோ ஒரு மூலையில் வேப்ப மரம் ஒன்று; வேறு எங்கோ ஓரிடத்தில் நெல்லி மரம் ஒன்று. பார்த்தாலே கண் எரிச்சலை உண்டாக்கும் அந்தச் சுரத்தில் நிற்கும் அந்தச் சிரத்தில் நிற்கும் அந்த வேப்ப மரமாவது அடர்ந்து வளர்ந்திருக்கிறதா? என்றைக்கோ தண்ணிரைக் கண்ட அது ஏதோ புண்ணியத்துக்கு உயிரை வைத்துக் கொண்டிருக்கிறது. இலையே தெரியாமல் கிளை தெரிவதனால் அது நீளமாகத் தோற்றுகிறது. வளம் இல்லாமல் சதைப் பிடிப்பின்றிக் குச்சி குச்சியாக இருக்கும் கையும் காலும் உடம்பும் நீளமாகத் தோற்றுவது இல்லையா? வானத்திலே அந்தக் கிளைகள் நிமிர்ந்து நின்றென. பரந்து படர்ந்து தழைத்து நிழல் தர அங்கே நீர் வளந்தான் இல்லையே. மேலெல்லாம் ஆகாசம். அதை முட்டுவதுபோல நிற்கிற வான். பொரு நெடுஞ்சினை களையுடையது அந்த வேப்ப மரம்.

அதன் அடிமரம் எப்படி இருக்கிறது? பொறுக்குத் தட்டின புண்ணைப்போலே பொரிந்து போய்க் கிடக்கிறது. பொரிந்த அரையையுடைய அந்த மரத்தின் வான்பொரு நெடுஞ்சினையின் மேல் ஒரு பறவை இருக்கிறது. அது குயிலும் அல்ல; கிளியும் அல்ல. குயிலுக்கும் கிளிக்கும் அங்கே பழமும் தளிரும் ஏது? பருந்தும் கழுகுமே அந்தப் பாலைவனத்தின் பறவைகள், வழிப்பறி செய்யும் கள்வர்கள் பிரயாணிகளை மடக்கிக் கொலை செய்வதும் உண்டு. அந்தப் பிணங்களைக் கொத்தி விருந்துண்ணும் பெருமை உடைய பறவைகளே அந்த நிலத்தில் வாழ முடியும். பருந்தும் கழுகும் பிணந்தின்னும் சாதி அல்லவா?

பாலை நிலத்துப் பிரஜையாகிய பருந்து ஒன்று வேப்ப மரத்தின்மேல் இருக்கிறது. அதற்கு அங்கே என்ன வேலை? அது முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்க வந்திருக்கிறது. பிரசவ வேதனையோடு அந்த மரத்துக் கிளையில் தங்கியிருக்கிறது. அந்த வேம்யின் மேலே, ஈனும் பருந்து வருந்தி உறையும் காட்சியைத் தான் காணலாம். பிணந் தின்னும் பரம்பரை வளர இடம் கொடுக்கிறது, அந்த வேப்ப மரம்!

வேப்ப மரத்தின் கீழே என்ன இருக்கிறது? அடர்ந்து செறிந்திருந்தால் நல்ல நிழல் இருக்கும். இந்த மரத்திலோ பேருக்கு இலைகள் இருக்கின்றனவே ஒழிய, அவை தளதள வென்று தழைத்திருக்கவில்லை; அந்த இலைகளும் உருவம் சுருங்கிய சிறிய சிறிய இலைகள். மரத்தின் கீழே நிழல் படர்ந்தா இருக்கும்? புள்ளி புள்ளியாக நிழல் இருக்கிறது, பொரிந்த அரையும் வானைப் பொரும் நெடுஞ்சினையும் ஈனும் பருந்த உயவும் (வருந்தும்) நிலையும் உடைய அந்தப் பாலை நில வேப்ப மரத்தின் கீழே புள்ளி நிழல் தான் இருக்கிறது.

அட! அந்த நிழலுக்குக்கூட வெறித்துப் போனவர்கள் அங்கே இருக்கிறார்களே! எங்கே பார்த்தாலும் படை பதைக்கும் வெயில் காயும் போது அது புள்ளி நீழலாக இருந்தால் என்ன? நிழல் என்பதே அரிய பொருளாக இருக்கும் அந்தப் பிரதேசத்தில் எவ்வளவு குறைவாக இருந்தாலும் நிழல் நிழல்தானே?

வேப்ப மரத்தின் கீழே புள்ளியிட்டாற்போன்ற நிழலில் குழந்தைகள் விளையாடு-கிறர்கள். பாலை நிலத்திலும் மக்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய குழந்தைகள் அவர்கள். பாலை நிலமாயிற்றே; நீர் வளம் நிலவளம் இல்லாத அந்த இடத்தில் என்ன விளையும்? எதைப் பயிர் செய்ய முடியும்? அங்கே உள்ள மனிதர்கள் எப்படிப் பிழைக்கிறார்கள்?

அவர்களும் உழவுத் தொழில் செய்பவர்களே, நிலத்தை ஏரால் உழுபவர்கள் அல்ல; வில்லும் அம்பும் கொண்டு, வழிப் போகும் மக்களைக் கொன்று அவர்களிடம் உள்ள பொருளைப் பறித்து அதைக் கொண்டு வாழ்பவர்கள். அவர்கள் தங்கள் வில்லையே ஏராகக் கொண்டு வழிப்பறியாகிய விவசாயத்தைச் செய்கிறவர் கள்; வில்லேருழவர். கொலைத் தொழிலும் கொள்ளையிடு வதுமே அவர்களுடைய உத்தியோகம். அவர்களுக்கும் குழந்தை குட்டிகள் உண்டு. அவர்களுடைய குழந்தை கள் வேப்ப மரத்தடியில் விளையாடுகிறார்கள். அவர்களுக்குப் படிப்போ நல்ல பழக்கங்களோ இல்லை, கல்லாச் சிறார். அவர்கள் வட்டு ஆடுகிறர்கள்; தாயக் கட்டம் ஆடுவது போன்ற ஒரு விளையாட்டை ஆடுகிறார்கள். பாலை நிலத்தில் எங்கோ தனியே வளர்ந்திருக்கும் நெல்லிக்காயைப் பொறுக்கிக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதையே உருட்டி உருட்டி விளையாடுகிறர்கள். வேப்ப மரத்தடியில் கோடு கிழித்து அதிலே நெல்லிக் காயை உருட்டி விளையாடுகிறர்கள். அவர் கோடு கிழித்த இடம் பொன்னை உரைக்கும் கல்லைப் போலக் கறுப்பாகக் கரடு முரடாக இருக்கிறது. வில்லேர் உழவர்களுடைய கல்லாச் சிறர் வட்டு ஆடும் அரங்காக அந்த மரத்தின் அடி இருக்கிறது.

இடம் நினைத்தாலே அச்சந் தருவதாக இல்லையா? ஒரு பொருளாவது உள்ளத்திலே குளிர்ச்சியை, அழகைத் தருவதாக இருக்கக் கூடாதா? கைப்புக்கு இடமான வேம்பு; அதுகூட இலை சிறுத்து அடி மரம் பொரிந்து நிற்கிறது. அதன் மேலே பிணத்தை விருந்தாக அருந்தும் பருந்து. கீழே வில்லேருழவரின் கல்லாச் சிறார்!

வழிப்பறி செய்கிற வில்லேருழவர்கள் சேர்ந்து வாழும் சின்னச் சின்ன ஊர்கள் வழி முழுவதும் இருக்கின் றன. வெப்பம் நிறைந்த முற்றங்களையுடைய ஊர்கள் அவை. புறத்திலே மாத்திரம் வெப்பம் அல்ல; உள்ளத்தே கூட வெப்பம் கொண்ட மக்கள் வாழும் இடங்கள் அவை. சுடுகாட்டுக்கும் அவற்றிற்கும் வேறுபாடு இல்லை.
★ ★

இவ்வளவு கொடுமை நிறைந்த பாலை நில வழி காதலனுடைய அகக் கண்ணிலே வந்து நின்றது. "நாமா அந்த நிலத்தைக் கடந்து போனோம்!” என்று அவனே மலைத் தான். நினைத்தாலும் நடுக்கந்தரும் இடம் அல்லவா அது? அந்த இடத்தின் வழியாக மறுபடியும் போய்ப் பொருள் ஈட வேண்டுமென்று இந்த நெஞ்சு நினைக்கிறதே! என்ன பைத்தியக் காரத்தனம்!

சென்ற தடவை அவன் போனபோது அந்தப் பாலை வனத்தின் கொடுமையை நேரே கண்டிருக்கிறான். அதன் வழியே செல்லும்போது உண்டான துன்பம் கிடக்கட்டும். அப்போது அவன் உள்ளத்தே எழுந்த ஒரு பெரிய போராட்டத்தை ஒருவாறு வென்று மேலே சென்றன். அந்தச் செய்தியும் இப்போது அவனுக்கு நினைவுக்கு வருகிறது.

வில்லேர் உழவர் வாழும் வெவ்விய முன் இடங்களையுடைய சிறிய ஊர்கள் இடையிடையே இருக்கும் சுரத்தின் வழியே அவன் போய்க்கொண்டிருந்தான். அங்கே வெயில் கடுமையாக அடிக்கும்போதுதான் மிக மிகத் துன் பம் உண்டாகும். ஆனால் இப்போது வெயில் தணிந்து கொண்டிருந்தது. மாலைக் காலம் வந்துவிட்டது. அந்தச் சமயத்தில்தான் அவனுக்கு அதிகத் துயரம் உண்டாயிற்று. அவனுடைய நெஞ்சத்தின் உரமெல்லாம் எங்கேவோ போய் ஒளிந்துகொண்டது. அவன் அப்பொழுது தன் மனையை நினைத்தான்; மனைக்கு விளக்காகத் திகழும் காதலியை நினைத்தான். இந்தப் பாலை நிலத்தில் தன்னந் தனியே நாற்புறமும் ஜீவனற்ற காட்சிகளே நிறைந்த இடத்தில் அவன் நிற்கிறான், அவன் தன் வீட்டில் இருந் தானானால் இந்த நேரத்தில் அவன் காதலி மனைக்கு ஆழகைத் தருகிற விளக்கை ஏற்றி அதை வணங்கிவிட்டு, அவன் முன் புன்னகை பூத்தபடி வந்து நிற்பாளே! தலையை அழகாக வாரிப் பின்னி மலரைச் சூடிக்கொண்டு நெற்றியில் திலகம் இட்டு அந்த விளக்கைக் கையில் ஏந்திச் செல்லும் கோலம் இப்போது நினைத்தாலும் உள்ளத்தைக் கிளரச் செய்கிறது.

இன்று அங்கே தன் இல்லத்தில் அவள் எப்படி இருப்பாள்? அதை உன்னிப் பார்த்தான். அந்தச் சுரத்திலே அவன் உரன் மாயும்படி வந்த மாலைக் காலத்திலே அவன் நினைத்துப் பார்த்தான். இப்போது அவள் மனைக்கு மாட்சி தரும் திருவிளக்கை ஏற்றுவாள். ஆனால் தன் காதலன் அருகே இல்லாமையால் முகம் வாடி அப்படியே உட்கார்த்து விடுவாள். அந்த விளக்கைப் பார்த்தபடியே, ’அவர் எங்கே இருக்கிறாரோ!’ என்ற சிந்தனையில் மூழ்கி யிருப்பாள்.

’இந்த நேரத்தில் அவள் மnஐ மாண் சுடரை ஏற்றி அதன் முன்னே அமர்ந்து தன் நெஞ்சிலே படரும் நினைப்பில் ஈடுபட்டிருப்பாள்' என்று அவன் எண்ணினான், அவன் அவளை நினைத்தான். அவள் அவனை நினைப்பாள். இப்படித் துன்பம் அடைவதைவிடப் பேசாமல் ஊருக்கே திரும்பிப் போய்விடலா: என்றுகூட அவன்நினைத்தான். "சீ சீ முன்வைத்த காலைப் பின் வைக்கவாவது! உலகம் ஏசாதா? இனரீ ரசமாட்டார்களா? காதலியே ஏளனமாகப் பார்த்துச் சீரிக்கமாட்டாளா? இத்தனை தூரம் வந்துவிட்டோம். எப்படியாவது நினைத்த காரியத்தை முடித்துக் கொண்டு உணமும் கையுமாகத்தான் ஊருக்குப் போகவேண்டும்’ என்று தீர்மானித்தான். ஆயினும் அவன் மனை விளக்காகிய காதலி மனையில் விளக்குக்கு முன்னே நினைப்பில் ஆழ்ந்திருக்கும் கோலத்தை எளிதில் அவன் உள்ளத்திலிருந்து அகற்ற முடியவில்லை, மனம் சுழன்றது; கலங்கியது; மயங்கியது; திரும்பிப் போகலாம் என்று சிதறியது.

கடைசியில் ஆண்மை வென்றது. உறுதியுடன் பாலை நிலத்தைக் கடந்துசென்றான். வேற்று நாட்டுக்குப்போய்ப் பொருள் ஈட்டி வந்தான். நினைத்த காரியத்தை நினைத்த படி முடித்து வந்தான். அதற்குரிய மனத் திண்மை அவனுக்கு இருந்தது. “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணிடார், திண்ணியர் ஆகப் பெறின்” என்பது எத்தனை உண்மை! அப்படி நிறைவேற்றினதால் வந்த இன்பத் தான் என்ன! அந்த மன நிறைவுக்கு ஒப்பு உண்டா? உண்டு. இப்போது அவனுடைய காதலி நினைத்த வினையை மூடித்தால் வரும் இனிமையின் பிழம்புபோல இருக்கிறாள். அவளே மீட்டும். பிரிந்து செல்வதா?
★ ★

பழங்கதை அவனுடைய உள்ளத்தே ஓடியது. ’நெஞ்சே, அன்று நான் பாலை நிலத்தில் நடு வழியில் என் உரனெல்லாம் மாயும் படி வந்த மாலைக்காலத்தில் வினை முடித்தாலன்ன இனியோளாகிய காதலி மனைக்கு மாட்சிமை தரும் சுடரொடு நின்று படரும்பொழுது இது என்று நினைத்து மயங்கினேனே! மறுபடியும் அந்த அவஸ்தைக்கு ஆளாக வேண்டுமா? பட்ட பின்பும் துன்பத்தை வலிய மேற்கொள்வார் உண்டோ? நான் போக மாட் டேன்’ என்று தன் நெஞ்சோடு அந்தத் தலைவன் பேசுகிறான்.

[ நெஞ்சே, முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பருந்து இருந்து வருந்தும், வான முட்டும் நீண்ட கிளைகளையும் பொரிந்த அடியையும் உடைய வேப்ப மரத்தின், புள்ளி வைத்தாற்போன்ற செறிவில்லாத நிழலிலே, பொன்னை உரைக்கும் கல்லைப் போன்ற வட்டாடுதற்குரிய இடத்தை அமைத்து, கல்லாத சிறுவர்கள் நெல்லிக் காயாகிய வட்டுகளை வைத்துக்கொண்டு விளையாடுவதும், வழிப்போவோரைக் கொலை செய்யும் வில்லையே ஏராகக் கொண்டு முயற்சி செய்யும் ஆறலை கள்வர் வாழ்கின்ற வெம்மையையுடைய முன்னிடங்களைப் பெற்ற சிறிய ஊர்களை உடையதுமாகிய பாலைநில வழியில் வந்த என் மன வலிமையை அழியச் செய்கின்ற மாலைக் காலத்தில் நான் நினைத்துக் கவலையுற்றேன் அல்லவா, "நினைத்த காரியத்தை நிறை-வேற்றினால் வரும் இனிமையைப் போன்ற இனிமையையுடைய நம் காதலி, நம் மனைக்கு அழகான விளக்கோடு நின்று கவலையோடு நம்மை நினைக்கும்பொழுது இது" என்று?]

மாலையில், எனவே, யான் உள்ளினென் அல்லனோ என்று வாக்கியத்தை முடித்துக் கொள்க.

[ஈனாதல் - கருவுயிர்த்தல். உயவும் - வருந்தும். சினை - கிளை. பொரி அரை-பொரிந்த அடி மரம்; பொறுக்குத் தட்டிப்போன அடிமரம். புள்ளி நீழல்-ஒரே பரப்பாகச் செறிந்து கிடக்காமல் புள்ளி புள்ளியாக இருக்கும் நிழல். கட்டளை-பொன்னை உரைக்கும் கல். வட்டு அரங்கு - சூது காய்களை ஆடும் இடம்; குண்டுகளை ஆடும் இடம். வில் ஏர் உழவர்- வில்லையே ஏராக உடைய உழவராகிய பாலை நில மறவர். முனை-முன்னிடம். சீறூர்-சிறு ஊர். கரன்முதல்-பாலை நில வழியிடத்தில்; முதல் : ஏழாம் வேற்றுமை உருபு, உரன்-வலிமை; இங்கே மனத்திண்மை, உள்ளினென்-நினைத்தேன். வினைமுடித்தன்ன-காரியத்தை நிறைவேற்றினாற் போன்ற, மனைமாண்-மனைக்கு மாட்சி தருகின்ற, சுடர்-விளக்கு. படர்-நினைக்கும். ]

’முன் ஒரு காலத்துப் பொருள் வயிற் பிரிந்த தலைமகன், பின்னும் பொருள் கடைக்கூட்டிய கெஞ்சிற்குச் சொல்லியது’ என்பது இந்தப் பாடலின் துறை. ’முன்பு ஒரு தடவை பொருள் ஈட்டுவதற்காகத் தன் காதலியைப் பிரிந்து சென்று மீண்ட தலைமகன், மறுபடியும் பொருள் தேட வேண்டுமென்று எண்ணிய நெஞ்சுக்குச் சொன்னது?’ என்பது அதற்குப் பொருள். மணம் செய்துகொண்டு இல்ல றம் நடத்தும் கற்புக் காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி இது.

இதனைப் பாடியவர் இளங்கீரனார் என்னும் புலவர். இது நற்றிணையில் மூன்றாவது பாட்டு.
----------------

3. வழிபடு தெய்வம்

காதலனும் காதலியும் பிறர் அறியாதவாறு அன்பு செய்து பழகினார்கள். அவர்களுடைய காதல் வைரம்போல உறுதியாகி வந்தது. இனிமேல் இரகசியமாகச் சந்தித்து அளவளாவுவதை விட்டு, உலகறிய மணம் செய்து கொண்டு வாழ வேண்டுமென்று அவன் நினைத்தான். ஆனால் காதவியினுடைய தாய் தந்தையர் வேறு யாருக்கோ அவளை மணம் செய்விக்கும் எண்ணம் உடையவர்களாக இருந்தார்கள்.
காதலிக்கு உயிர்த்தோழி ஒருத்தி இருந்தாள். தலைவியின் நிலை முதலியவற்றைத் தலைவனுக்குத் தெரிந்து கூறுபவள் அவள்தான். தலைவியின் பெற்றோர்களுடைய எண்ணத்தை உணர்ந்து தலைவனிடம் அவள் தெரிவித்தாள். அவள் மற்றொரு யோசனையும் கூறினாள். தலைவன் தலைவியை அழைத்துக் கொண்டு சென்று தன் ஊரில் மணம் செய்து கொள்ளலாம் என்றாள். அவனும் அதற்கு உடம் பட்டாள்


காதலர் இருவரும் புறப்பட்டு விட்டார்கள்.

அது வரையில் யாரும் அறியாமல் வந்து காதலியோடு அளவளாவிச் செல்லும் காதலனுக்கு, இப்போது யாருடைய தடையும் இன்றி யாருக்கும் அஞ்சாமல், முழு உரிமையோடு அவளுடன் குலவி மகிழும் நிலை கிடைத்திருக்கிறது.

போகின்ற வழி வளப்பமான இடம் அல்ல. பாலை நிலத்து வழியேதான் போக வேண்டும். அதில் நடப்பதற்கு அவள் ஒருகால் அஞ்சுவாளோ என்ற ஐயம் உண்டாயிற்று. இன்னும் கடுமையான பாலை நிலத்தின் இடைப் பகுதிக்கு வரவில்லை, அங்கே ஒரு புன்கமரம், அதன் நிழலிலே அவளுடன் அமர்ந்தான். ஆர அமர அவள் திருவுருவ எழிலைப் பார்த்தான்.

"என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்?" என்று புன்னகை பூத்தபடியே அவள் கேட்டாள். அவளுடைய வெள்ளே வெளேரென்ற பற்கள் முத்துக் கோத்தாற்போல அழகாக இருத்தன. வால் எயிறு உடையவள் அந்த மடமங்கை.

’உன்னைச் சந்தித்துப் பேச வேண்டுமென்று இரவு நேரங்களில் நான் ஒருவரும் அறியாமல் வந்தேனே! அப் போது உன்னைக் காண்பது எவ்வளவு அரிதாக இருந்தது! எவ்வளவு மனம் கலங்கினேன்! இனிமேல் நீயும் நானும் பிரியாமல் யாருடைய கட்டுக் காவலும் இல்லாமல் பழகலாம்.'

’அப்போதெல்லாம் நான் மாத்திரம் கலங்க வில்லையா? ’

*நீயும் கலங்கினாய். ஆனாலும் நான்தான் முயற்சி செய்தேன். இருவரும் அளவளாவி இன்புற்றலும் உன்னைத் தேடிக்கொண்டு இரவில் காடு கடந்தும் ஆறு கடந்தும் ஓடி வந்தேனே! எனக்கல்லவா உன் அருமை தெரியும்?

’நான் உங்களைத் தெய்வமாக மதித்து உங்களையே எண்ணி நாள் முழுவதும் அலமந்தேனே! அதனை நீங்கள் அறிவீர்களா?’

"எனக்கு நீதான் இஷ்ட தெய்வம்; உபாஸனா மூர்த்தி; வழிபடு கடவுள். நெஞ்சிலே முறுகிய அன்புடைய பக்தர்கள், ஆர்வத்தையுடைய மக்கள், தங்கள் இஷ்ட தெய்வங்களை வழிபடுகிறார்கள். எத்தனை துன்பம் அடைந்தாலும் அவற்றால் சோர்வு அடையாமல், அழிவிலராகி மேலும் மேலும் தங்கள் வழிபாட்டிலே ஈடுபட்டு நிற்கிறார்கள். தங்கள் ஆண்டவனுடைய திவ்ய தரிசனம் காண வேண்டுமென்று அலமந்து வேசாறி நிற்கிறாரர்கள். விரதம் இருந்தும் தவம் செய்தும் தானம் செய்தும் மத்திரங்களை உச்சரித்தும் போற்றுகிறார்கள். அவர்களுக்கு அந்தக் கடவுள் நேரில் எழுந்தருளித் தன் திருக்கோலத்தைக் காட்டியருளினால் எத்தனை ஆனந்தத்தை அடைவார்கள்!”

*வழிபடு தெய்வத்தைக் கண்ணிலே கண்டவர்கள் உண்டோ?"

”இல்லையென்று எவ்வாறு சொல்ல முடியும்? எவ்வளவோ அன்பர்கள் உலகில் இருக்கிறார்கள். கடவுள் அருளைப் பெற அவர்கள் ஆர்வத்தோடு முயலும் திறத்தை நாம் அறிய முடிவதில்லை. அவர்கள் அன்பு அற்புதமான ஆற்றலையுடையது. அந்த ஆர்வ மாக்கள் வழிபடு தெய்வத்தை இந்த ஊனக் கண்ணாலே கண்டுவிட்டால் பெறும் ஆனந்தம் இத்தகையதென்று எனக்குத் தெரியும்.”

"எப்படித் தெரியும்? உங்கள் வழிபடு தெய்வம் எது?”

"அந்தத் தெய்வத்தை இடையீடில்லாமல் தரிசிக்க வேண்டுமென்று நான் முயன்றேன். தெய்வம் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டேன் என் முன். கடைசியில் தெய்வம் நேரிலே வந்து காட்சி அளித்து வரம் கொடுத்துவிட்டது.”

“உங்கள் பேச்சு விளங்கவில்லையே!”

*நான் வழிபடும் தெய்வம் இன்னதென்று இன்னுமா தெரியவில்லை? முன்பே சொன்னேனே! தன் முகம் தனக்குத் தெரியுமா?"

காதலிக்குக் காதலனுடைய உள்ளக் குறிப்புத் தெரிந்துவிட்டது. நாணத்தால் தலை கவிழ்ந்தாள். தலைவன் அவள் தோளைத் தன் கையால் மெல்லித் தழுவினான்

“இந்த அழகிய பருத்த தோளை அடைய நான் எத்தனை முயற்சிகள் செய்தேன்! இப்பொழுதல்லவா எளிதிலே இந்தப் பாக்கியம் கிடைத்தது? அழிவு இலராகி ஆர்வமுடைய மாக்கள் தம் வழிபடு தெய்வத்தைத் தம் கண்ணாலே தரிசித்ததுபோல உன்னை அடைந்தேன். உன் அழகிய மெல்லிய பருத்த தோளை அணைந்தேன். இதுவரைக்கும் நான் எப்படியெல்லாம் திரிந்தேன்! காடென்றும் மலை யென்றும் பாராமல், மழையென்றும் இருளென்றும் நில்லாமல், ஆறென்றும் விலங்கென்றும் அஞ்சாமல் வந்தேன். ஆனாலும் மனம் சுழன்றது; கலங்கியது; ஒவ்வொரு நாளும் உன்னைப் பார்க்க முடியுமோ, முடியாதோ என்று கலங்கியது. இத்தகைய வருத்தத்துக்கு இனிமேல் இடம் இல்லை. நம் மனம்போல முழு உரிமையுடன் பழகலாம்.”

*நாம் போகும் இடங்களில் இப்படி மரங்கள் நிறைய இருக்குமோ??

*அங்கங்கே இருக்கும். இதோ இந்தப் புன்க மரத்தின் தளிரைப் பார். எவ்வளவு அழகாகவும் பளபளப்பாகவும் இருக்கிறது! இந்தத் தளிரைப் பறித்து உன் மார்பிலே அப்பிக் கொள். பொன்னிறப் பிதிர்வுடைய உன் அழகிய நகில்களிலே இந்தத் தளிரை அப்பு. அங்கே தெய்வம் வீற்றிருக்கிறது. அத்தளிர்களை அருச்சிப்பது போலத் திமிர்ந்துகொள்.”

"வழியிலும் பல மரங்கள் இருக்குமோ?”

”இருக்கும். எங்கெங்கே நிழலைக் காண்கிறோமோ அங்கங்கே தங்கலாம்; நெடுநேரம் தங்கி அளவளாவலாம். மணல் இருந்தால் அங்கே நீ விளையாடலாம். அப்படியே வருத்தம் இல்லாமல் நாம் வழி நடக்கலாம்.”

"வருத்தம் ஏன்? என்று கேட்டாள் காதலி.

*வாலெயிற்றோய், உன் தாய் தந்தையரையும் தோழிமார்களையும் பிரிந்து வந்ததனால் ஒரு கால் உனக்கு வருத்தம் உண்டாகலாம். தளிரால் அலங்கரித்துக் கொண்டு, நிழலைக் காணுந்தோறும் இளைப்பாறிச் செல்வோம், விளையாடவும் இடம் உண்டு. மணல் நிரம்பிய இடங்கள் இருக்கின்றன. அங்கே நீ கோடு கிழித்துக் கோலம் போட்டு வீடுகட்டிச் சிறு சோறு சமைத்து விளையாடலாம். வழியெல்லாம் உனக்கு மகிழ்ச்சி உண்டாகத் தக்கபடி மரமும் மணலும் இருக்கின்றன. தளர்ச்சியில்லாமல் போகலாம்”.

*வழியிலே என்ன என்ன மரங்கள் உண்டு???

*காடு காடாக மரங்கள் சில இடங்களில் உண்டு. சில இடங்களில் மாஞ்சோலைகள் இருக்கின்றன. கம்மென்று மாம்பூ வாசனை வீசும். உள்ளே புகுந்தால் தண்ணென்று குளிர்ச்சியாக இருக்கும். மாமரம் நிரம்பிய நறுந்தண் பொழில் அவை. மாம்பூவின் அரும்பைக் சோதி இன்புறும் குயில்கள் இனிமையாகக் குரல் எடுத்தக் கூவும், கண்ணுக்கு அழகான காட்சி, மாமரமும் மாம்பூவும். உடம்புக்கு இனிதான நிழல்; தண்ணிய பொழில். நாசிக் கினிய நறுமணம், காதுக்கு இனிய குயிலின் இசை, இத்தனை இனிமையும் உள்ள இடங்களின்வழியே நீ நடந்து செல்லப் போகிறாய்.”*

"நான் மட்டுமா? நீங்கள்?”

‘'நீ என்றா சொன்னேன்? தவறு. நாம் செல்லும் வழியிலுள்ள கானங்கள் இத்தகைய நறுந்தண் பொழில்களை உடையன”.

”மனிதர்கள் வாழும் இடம் ஒன்றும் இல்லையா?”

”அடடா! அதைச் சொல்ல மறந்து போனேனே! எத்தனையோ ஊர்கள் இருக்கின்றன. சின்னச் சின்ன ஊர்களாகப் பல உண்டு. எல்லாம் நாம் போகும் வழியிடையே நீதான் காணப் போகிறாயே!’-அவன் ‘நாம்" என்பதை அழுத்திச் சொன்னான்.

புன் கமரத்தின் புதுத் தளிரும், இனிய நிழலும், எழிலார்ந்த மணலும், குயிலும், மாம்பொழிலும், ஊர்களும் ஆகியவற்றைப் பற்றிப் பேசிய பேச்சினாலே தன்னுடைய இன்பத் தெய்வத்தின் உள்ளத்தில் தைரியத்தையும் மகிழ்ச்சியையும் ஊட்டினான் காதலன். அவள் அதைக் கேட்டு ஆறுதல் பெற்றாள். அவனோடு ஒன்றிச் செல்வதே தனி ஆனந்தமல்லவா?

[ சோர்வு இல்லாதவராகி வழிபாட்டு வகைகளாகிய முயற்சியைச் செய்யும் ஆர்வத்தையுடைய அன்பர்கள் தாம் வழிபடுகின்ற தெய்வத்தைத் தம் புறக்கண் முன்னே கண்டால் வருத்தம் தீர்ந்து இன்பம் அடைதல் போல, களவுக் காலத்தில் பலநாள் நாம் பட்ட மனச்சுழற்சியும் வருத்தமும் தீரும்படியாக உன்னுடைய அழகும் மென்மையும் பருமையும் உடைய தோளை அடைந்தோம் . ஆகையால் பொரியைப் போன்ற பூவையுடைய புன்க மரத்தின் அழகையும் பளபளப்பையும் உடைய தளிரைப் பொற்பிதிர் போன்ற சுணங்கை அணிந்த அழகையுடைய நகில்களில் அதற்குரிய தெய்வம் இருக்கை கொள்ளுமாறு அப்பி, நிழலைக் காணும்போதெல்லாம் நெடுநேரம் அங்கே தங்கி, மணலைக் காணும்போதெல்லாம் விளையாட்டிடத்தை அமைத்து விளையாடி வருத்தமடையாமல் செல்; தூய வெண்மையான பற்களை உடையவளே! மாமரத்தின் அரும்பைக் கோதி மகிழ்கின்ற குயில்கள் கூவுகின்ற நறுமணம் வீசும் தண்ணிய பொழில்களையுடையன, தாம் செல்லும் வழியில் உள்ள காடுகள்; சிறிய பல ஊர்களை உடையவை, நாம் போகும் வழிகள்.

ஆர்வ மாக்கள் கண்டாஅங்கு, தோள் எய்தினம்; திமிரி, வைகி, தைஇ, ஏகுமதி; கானம் பொழில; ஆறு ஊர என்று கூட்டுக.

அழிவு-சோர்வு. ஆர்வம்-ஆவல். அலமரல்-மனம் சுழலுதல்; கவலை கொள்ளுதல். யாழ ; அர்த்தமில்லாத அசைச் சொல்; பாட்டின் ஒசைக்காகப் போடுவது. நலம்- அழகு. பனை-பெருமை; மூங்கிலைப்போன்ற என்றும் சொல்லலாம். தகை-இயல்பு. முறி-தளிர். சுணங்கு -மகளிர் மேனியிலே பொன்னிறமாகக் காணும் அழகுத் தேமல். வனம்-அழகு. அணங்கு-தெய்வம்; நகில்களில் வீற்றுத் தெய்வம் என்ற பெண் தெய்வம் இருப்பதாகச் சொல்வது மரபு, திமிரி -அணிந்து; அப்பி. நெடிய-நெடு நேரங்கள். வைகி- தங்கி, வண்டல்-விளையாட்டு, தைஇ-அமைத்து. ஏகுமதி-போ. வால் எயிற்றோய்-வெண்பற்களை உடையவளே. நனை - அரும்பு. கொழுதி-கோதி. ஆலும்-கூவும். பொழில - சோலைகளை உடையன. ஆறு-வழி. ]

"உடன்போகா நின்ற தலைமகன் தலைமகட்கு உரைத்தது" என்ற துறையில் அமைந்த பாட்டு இது. தலைவியை அழைத்துக் கொண்டு தலைவன் செல்வதை உடன்போக்கு என்று சொல்வார்கள்.

இதைப் பாடியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்னும் அரசர்.
இது நற்றிணையில் ஒன்பதாவது பாட்டு.
------------------

4. கலுழ்ந்தன கண்

களவின்பத்தை நுகர்ந்து வந்த காதலர்களுக்கு இடையீடில்லாமல் கணவனும் மனேவியுமாக இருந்து இன்புற வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது. ஒரு நாளைப் போலவே நள்ளிருளில் கரடுமுரடான வழியில் தான் வருவதைக் காதலன் பொருட்படுத்தவில்லை. அவளோ, அவனுக்கு ஏதேனும் இடையூறு தேர்ந்தால் என் செய்வது என அஞ்சினாள். இனி வரவேண்டாம் என்று சொல்லி, அவன் வருவதை நிறுத்தலாமா? அப்புறம் அவள் வாழ்வதே அரிதாகிவிடும். அவனைப் பிரிந்து வாழ்வது என்பது நினைப்பதற்கும் அரிய செயல். எத்தனை நாளைக் குத்தான் பிறர் அறியாமல் அவர்கள் சந்திப்பது? எப்படியாவது மணம் புரிந்துகொண்டு உலகறிய ஒன்று பட்டு வாழலாம் என்ற எண்ணம் மேல் ஓங்கியது.

அவனுக்கு அவளை மணம் செய்து கொடுக்க அவளுடைய தாய்தந்தையர் உடம்படுவார்களோ என்ற ஐயம் எழுந்தது. ஒருவருக்கும் தெரியாமல் அவளை அழைத்துக் கொண்டு தன் ஊருக்குச் சென்று மணந்து கொள்ளலாம் என்று அவன் எண்ணினான். தோழி அது நல்ல வழி என்றாள். காதலியும் இணங்கினாள்.

ஒருநாள் விடியற் காலையில் புறப்பட்டுவிடுவது என்று திட்டம் போட்டிருந்தார்கள். ஆனல் அவர்கள் புறப்பட வில்லை. காரணம் இதுதான்.

காதலி தன் வீட்டைப் பிரிந்து செல்வதற்கு ஏற்ற மன உறுதி இல்லாமல் இருந்தாள். தான் பழகிய இடத்திலும் பழகிய பொருள்களின் மேலும் பழகிய தோழிமார்களிடத்தும் அவளுக்கு இணையற்ற பற்று இருந்தது. அந்தப் பற்றே அவளைத் தடுத்து விட்டது.

இறுதிக் கணம் வரையில் அவள் எப்படியும் போய் விடுவது என்றே நினைத்தாள். அதற்கு வேண்டிய காரியங்களையும் செய்தாள். விடியற் காலத்திலே எழுந்து விட்டாள், ‘சர் சர்’ என்று அயல் வீடுகளில் தயிர் கடையும் ஒலி அவள் காதில் விழுந்தது.
# #

பெண்டிர் விடியற் காலத்திலே எழுந்து தயிர் கடைவார்கள். முதல் நாள் நன்றாகத் தேய்த்துக் கழுவின பானையிலே பாலைக் காய்ச்சி இரவில் பிரை குற்றுவார்கள். அந்தப் பானை வயிறு அகன்றதாய் நிறைந்த கருப்பம் உடையது போல இருக்கும். கமஞ்சூலையுடைய குழிசி அது, எவ்வளவோ காலமாக அந்தப் பானையில்தான் தயிரைத் தோய்த்துக் கடைந்து வருகிறர்கள். அது ஆகிவந்த பானை, மாமியார் கடைந்தது; மருமகள் கடைந்தது; மறுபடி மருமகள் மாமியாராகிக் கடைந்தது; அவள் மருமகள் கடைந்தது. அந்தத் தயிர்ப் பானை அந்தக் குடும்பத்தின் பழமையையும், சுறுசுறுப்பையும், முயற்சியையும், வளப்பித்தையும் எடுத்துக் காட்டும் அடையாளம் போல விளங்குவது.

ஒரே பானையில் தயிரைத் தோய்த்து வைத்தால் அதில் புளித்த நாற்றம் உண்டாகும்; தயிரின் முடைநாற்றம் ஏற்படும். வெயிலிலே காய வைப்பதோடு கூட, அந்த முடை நாற்றம் மாறுவதற்கு முறிவாக அவர்கள் ஒரு காரியம் செய்வது வழக்கம், விளாம்பழத்தை அதற்குள் இட்டு மூடி வைப்பார்கள். பிறகு அதை எடுத்தால் கம்மென்று விளாம்பழ வாசனை வீசும். முடை நாற்றம் அடியோடு போய்விடும். அதில் பாலைக் காய்ச்சித் தோய்த்தால் அந்தத் தயிருக்கே ஒர் இனிய வாசனை உண்டாகும். விளாம்பழம் கமழும் கமஞ்சூற் குழிசி அல்லவா அது?

இதோ ஒரு வீட்டில் தயிர் கடைந்து வெண்ணெய் எடுக்கிறாள் ஒரு மங்கை, அதைச் சற்றுக் கவனிக்கலாம். அவள் முன்னே தயிர்ப் பானை இருக்கிறது; விளாம்பழ வாசனை வீசும் குழிசி; கமஞ்சூ ற் குழிசி. ஒரு கம்பம் நட்டிருக்கிறார்கள். அதில் தான் மத்தைப் பூட்டி அந்த மங்கை கடைகிறாள். மத்தின் கோல் தேய்ந்திருக்கிறது. கயிற்றால் கடைந்து கடைந்து அப்படித் தேய்ந்துவிட்டது. எவ்வளவு காலமாக அந்த மத்து இருக்கிறதோ, யார் கண்டார்கள்? யாரேனும் நுட்பமான ஆராய்ச்சி வல்லவர்கள் அதன் தேய்மானத்தை அளவெடுத்து, இத்தனை காலம் இது வெண்ணெய் எடுக்கும் வேலையைச் செய்து வருகிறது என்று சொல்லலாம். அப்படி ஆராய்ச்சி செய்கிறவர்கள் யாராவது இருக்கிறார்களா, என்ன? கயிறு தின்று தேய்ந்துபோன தண்டையுடைய மத்தைக் கம்பத்திலே பூட்டி அந்தப் பெண் கடைகிறாள். வெண்ணெய் எடுப்பதற்காகக் கடைகிறாள். அந்த மத்துச் சுழல்கிறது நெய்யை எடுப்பதற்கு இயங்குகிறது; அது நெய் தெரி இயக்கம், விடியற் காலையில் பலர் இன்னும் துயின்று கொண்டிருக்கும் நேரத்தில் இந்த நெய் தெரி இயக்கம் நடைபெறுவதால் அதன் ஒலி தெளிவாகக் கேட்கிறது. அந்தக் கம்பத்தின் அடியிலே முழங்குகிறது தயிர் கடையும் சத்தம், இருள் பிரியும் நேரம் அது என்பதை அந்தச் சத்தமே சொல்கிறது. அந்தப் பெண்மணிக்குத்தான் எத்தனை சுறுசுறுப்பு


தங்கி நின்ற இரவு புலரும் விடியற்காலமாகிய அந்த வைகு புலர் விடியலில் நெய் தெரியும் இயக்கம் முழங்குவதைக்கேட்டுக் காதலி எழுந்தாள். முன்னாலே திட்டமிட்டபடி தன் காதலனுடன் புறப்பட எண்ணியே எழுந்தாள். அவள் போகும் செய்தி உயிர்த் தோழி ஒருத்திக்குத்தான் தெரியும்; வேறு யாருக்கும் தெரியாது.
அந்த இரவெல்லாம் அவளுக்குத் தூக்கம் இருந்திருக்குமா? தன் காதலனுடன் என்றும் பிரியாமல் இணைந்து வாழும் இன்ப உலகத்துக்கல்லவா அவள் செல்லப் போகிறாள்? யார் கண்ணிலும் படாமல் புறப்படவேண் டுமே என்று கவலை கொண்டாள். உடம்பையெல்லாம் போர்த்துக் கொண்டு வழி நடக்கவேண்டும் என்று தீர்மானம் செய்தாள். அவள் காலில் உள்ள சிலம்பு நடக்கும் போதே கல் கல் என்று ஒலிக்கும். அதற்குள் பரல்கள் இருந்தன; பரலுக்கு அரி என்று ஒரு பெயர் உண்டு. அரியமை சிலம்போடு நடந்தால் அவள் செல்வதைச் சிலம்பே விளம்பரப்படுத்திவிடும். அதைக் கழற்றி வைத்துவிட வேண்டும் என்று நினைத்தாள்.

கொஞ்சம் கண் மூடியும் சிறிது நேரம் துரங்கியும் நெடு நேரம் யோசனையுள் ஆழ்ந்தும் அவள் படுத்திருந்தபோது தயிர் கடையும் ஒலி காதில் பட்டது. விடியற்காலம் ஆகி விட்டது என்று எழுந்தாள். ஒருவரும் அறியாமல் ஒரு நீண்ட போர்வையை எடுத்துத் தன் உடம்பு முழுவதையும் போர்த்துக்கொண்டாள். அரிகள் அமைந்த தன் சிலம்புகளைக் கழற்றினாள். அவற்றை எங்கே வைக்கலாம் என்று யோசித்தாள். அவள் விளையாடும் கருவிகளெல்லாம் ஓரிடத்தில் இருந்தன. அங்கே வைக்கலா மென்று போனாள். தன்னுடைய தோழிமார்களுடன் பந்து விளையாடுவதில் அவளுக்கு மிக்க விருப்பம். அழகான பத்துகள் அவளிடம் இருந்தன. பலவகை அழகோடு கூடிய பல பந்துகளை அவள் வைத்திருந்தாள். இறுக்கிக் கட்டிய பந்து கள் அவை. ”அந்தப் பந்துகளோடு சேர்த்து இந்தச் சிலம்புகளை வைத்துவிடலாம்" என்று எண்ணிக் கழற்றிய சிலம்புகளைக் கையில் எடுத்துக்கொண்டு சென்றாள்.

அப்போது அவள் உள்ளம், மறுநாள் காலையில் என்ன நிகழும் என்பதைக் கற்பனை செய்து பார்க்கத் தொடங்கியது. அடுத்த நாள் காலையில் தாய் எழுந்து தன் காரியத்தைப் பார்ப்பாள். செவிலித் தாயும் எழுந்து ஏதேனும் வேலையிலே ஈடுபடுவாள். தோழிமார்கள் எழுந்து வந்து அவளை எழுப்ப வருவார்கள்; பந்து விளையாடலாம் என்று அழைக்க வருவார்கள். படுக்கையிலே காணாமல் வீட்டில் மற்ற இடங்களைப் பார்ப்பார்கள். தாயினிடம் கேட்பார்கள்; செவிலித்தாயைக் கேட்பார்கள். "நேற்று ராத்திரி வழக்கம் போலத்தானே இங்கே படுத்திருந்தாள்? எங்கே போயிருப்பாள்? உங்களில் யாரையாவது தேடிக்கொண்டு போயிருப்பாள். வந்துவிடுவாள்' என்று அவர்கள் சொல்வார்கள். சிறிது நேரமாகியும் தலைவி வராமை கண்டு தோழிமார்கள் கவலைக்கு உள்ளாவார்கள். பெற்ற தாயும் வளர்த்த செவிலித் தாயுங்கூட மனத்தில் அச்சமடைந்து தேடத் தொடங்குவார்கள்.

தோழிமார் விளையாட்டுக் கருவிகள் வைத்திருக்கும் இடத்தில் போய்ப் பார்ப்பார்கள். வரிப்புனை பந்தோடு அரியமை சிலம்புகளும் இருப்பதைப் பார்த்துக் கூவுவார் கள். தலைவி புறத்தே சென்று விட்டாள் என்ற உண்மை அவர்களுக்கு அப்போது தெரியவரும். அந்தப் பந்தையும் சிலம்பையும் பார்த்து யாவரும் வருந்துவார்கள்.

இந்தக் கற்பனைக் காட்சி காதலியின் உள்ளத்தே ஒடியது. தன்னைப் பெற்ற தாயும் வளர்த்த செவிலித் தாயும் நொந்தாலுங்கூட அவர்களைப் பற்றி அவள் அவ்வளவாக்க் கவலைப்படவில்லை. அந்த இரண்டு பேருமே தன்னுடைய தலைவனைத் தான் மணம் செய்து கொள்ள முடியாமல் தடையாக இருப்பவர்கள். ஆதலால். அவர்களிடம் அவளுக்குக் கோபந்தான் இருந்தது, ’அவர்கள் உண்மை தெரிந்து வருந்தட்டும்’ என்றுகூட அவள் எண்ணினாள். ஆனல் தோழிமார் வருந்துவார்களே! அதை நினைக்கும்போதுதான் அவளுக்கு என்னவோ போல் இருந்தது. மனசுக்குச் சமாதானம் தோன்றவில்லை. பல நாட்களாக ஒன்றுபட்டுப் பழகிய ஆயத்தோர்கள் அல்லவா அவர்கள்? அவர்கள் தன் பிரிவால் நொந்து அரற்றுவார்களே! அவர்களுக்குக் காதலியின் நிலை தெரியாதே! அவர்கள் வருந்துவதை நினைத்தால் உள்ளம் இரங்குகிறது. அவர்கள் மிகவும் அன்புடையவர்கள்; பாவம்! ஏங்கிப் போவார்கள். அளியரோ அளியர்! இரங்கத் தக்கவர்கள்.

இந்த நினைப்பு வந்ததோ இல்லையோ, காதலிக்கு ஊக்கம் குறைந்தது. திட்டமிட்டபடி எல்லாவற்றையும் செய்தவள், இப்போது வாட்டம் அடைந்தாள். அவள் கால் எழவில்லை. காதலனுடன் இடையூறின்றி இன்புற்று வாழலாம் என்று எண்ணி அடைந்தபெருமிதம் இப்போது எங்கோ ஒளித்துக்கொண்டது. அவள் உள்ளத்தே துயரம் வந்து கப்பிக்கொண்டது. அவளையும் அறியாமல், அவளுடைய உறுதியையும் மீறி, அவள் கண்களில் நீர்த்துளிகள் புறப்பட்டன. மயங்கி நின்றாள்.

அவள் எழுந்தது முதல் அவளை ஒருத்தி கவனித்துக் கொண்டே இருந்தாள். அவள் வேறு யாரும் அல்ல அவளுடைய உயிர்த்தோழி. தலைவனுடன் அவளை வழியனுப்புவதற்கு வேண்டிய காரியத்தைச் செய்தவன் அவளே. அவள் தலைவியைக் கவனித்தாள். சிலம் கழற்றும் வரைக்கும் அவளுக்கு இருந்த ஊக்கம், வரிப்பு பந்தைக் கண்டபோது இல்லாமற் போனதையும் அவள் கண்கள் கலுழவதையும் கண்டாள்.

மெல்லச் சென்று அவளை அணுகினாள். தலைவனுடன் செல்வதற்கு அவள் மனம் விரும்பினாலும், பழகிய இடத்தைப் பிரிவதற்குரிய துணிவு அவளுக்கு இல்லை என்பதைத் தோழி உணர்ந்து கொண்டாள். அவள் முதுகைத் தடவித் தலையைக் கோதி ஆறுதல் செய்தாள். "நீ வருந்தாதே; இங்கிருந்து நீ போக வேண்டாம். உன் காதலனை ஏற்றுக்கொண்டு கணம் செய்து கொடுக்கும் படி செவிலித் தாய்க்குக் குறிப்பாகத் தெரிவிக்கிறேன்; உன் உள்ளம் கொள்ளை கொண்டவன் இன்னான் என்பதை வேறு சந்தர்ப்பத்தில் தந்திரமாக அவள் உணரும்படி செய்வேன். நீ படுத்துக்கொள்' என்று சொல்வி, அவள் காலில் மீட்டும் சிலம்பை அணிந்தாள். தடுமாறும் உள்ளத்தோடே தலைவி தன் பாயலில் வந்து படுத்தாள்.

வெளியில் தலைவன் நின்று கொண்டிருந்தான். தன் காதலியை அழைத்துச் செல்லும் நோக்கத்தோடு அவளை எதிர்பார்த்து மறைவான ஓரிடத்தில் காத்துக் கொண்டிருந்தான். தோழி அங்கே சென்றாள், காதலியைக் காணாமல் அவளை மட்டும் கண்ட தலைவன், "அவள் எங்கே?” என்று கேட்டான். "அவள் வருவதாகத்தான் இருந்தாள். ஆனால்”. சிறிது நிறுத்தினாள், தலைவன் ஆவலோடு கேட்கலானான்.

‘விடியற் காலையில் எழுந்து யாரும் அறியாமல் புறப்படலானாள். காற் சிலம்பைக் கழற்றிப் பந்தோடு வைக்கப்போனாள்; உம்மோடு வருவதில் முழு மனமும் உடையவளாய் எல்லாவற்றையும் செய்தாள், பந்தைக் கண்டவுடன் ஆயத்தோர் நினைவு வந்துவிட்டது போலும்! காலையில் அவர்கள் இவற்றைப் பார்த்து எப்படி யெல்லாம் வருந்துவார்கள் என்ற எண்ணம் மேலோங்கி யிருக்க வேண்டும். அவளும் எவ்வளவே’ அடக்கி அடக்கிப் பார்த்தாள். ஆனால் அவள் கண்கள் அதையும் மீறி அழுது விட்டன. அவளுக்கு உடம்பாடுதான்; ஆனாலும் அழுத கண்ணோடு புறப்படலாமா?’

தலைவன் தலைவியின் பூப்போன்ற உள்ளம் புண்படக் கூடாதென்று நினைக்கிறவன். தோழி கூறியதைக் கேட்டு என்ன செய்வதென்று தெரியாமல் மலங்க மலங்க விழித்தாள். ‘இனி என்ன செய்வது?’ என்ற கேள்வி அவன் வாயிலிருந்து வந்தது. "நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று அபயம் அளிப்பவளைப் போலச் சொன்னாள் தோழி.

[ விளாம்பழத்தின் வாசனை வீசும், நிறைந்த கருப்பத்தை உடையது போல நடுவிடம் பருத்த பானையில், கயிறு தின்ற தேய்த்த தண்டையுடைய மத்தினால் மகளிர் வெண்ணெயைக் கடைந்து எடுக்கும் தொழில் தூண் அடியில் ஒலிக்கின்ற இரவு புலர்கின்ற விடியற் காலத்தில், தன் உடம்பை மறைத்துத் தன் காவில் இருந்த பரற்கல் அமைந்த சிலம்புகளைக் கழற்றி, பலவாகி மாட்சிமைப் பட்ட வரிந்து, புனைந்த பந்தோடு அவற்றை வைக்கும் பொருட்டுச் சென்ற உம்முடைய காதலி, "இவற்றைப் பார்க்குந்தோறும் வருந்துவார்களே, என் தோழிமார்! மிகவும் இரங்கத்தக் கவர்கள்’ என்று எண்ணவே, அவள் உம்மோடு வருவதற்கு வேண்டியவற்றைச் செய்து கொண்டே இருக்கவும், அவள் சக்திக்கு உட்படாமல் அவள் கண்கள் அழுதன.

கரந்து, கழீஇ, வை இய செல்வோள், என, அயரவும் கண் கலுழிந்தன என்று கூட்டுக.

கம-நிறைவு ; கமஞ்சூல்-நிறைந்த கருப்பம். குழிசி; பானை. பாசம்-கயிறு. மத்தம்-மத்து. தெரிதல்-கடைந் தெடுத்தல். இயக்கம்-செயல். வெளில்முதல்-கம்பத்தினடியில், வைகு புலர் விடியல்-இரவு விடிகிற விடியற் காலம். அரி-சிலம்பின் உள்ளே இடும் பரல், கழிஇ - கழித்து கழற்றி. மாண்-மாட்சிமைப்பட்ட, அழகுள்ள. வரிப்புனை பந்து-வரிந்து புனைந்த பந்து. வைஇய-வைக்கும் பொருட்டு. அளியர்-பாவம் என்று இரங்குவதற்-குரியவர். ஆயத்தோர்-பாங்கியர். அயர - செய்ய. வரைத்து - சக்திக்கு உட்பட்டது. கலுழிந்தன -அழுதன.]
”தோழி உடன்போக்கு அஞ்சுவித்தது" என்பது இந்தப் பாட்டின் துறை, "தலைவியை அழைத்துக்கொண்டு அவளுடன் போகலாம் என்று துணிந்த தலைவனிடம் தோழி பேசி அப்படிச் செல்வதற்கு அஞ்சும்படி செய்தது” என்பது இதன் பொருள். தலைவி வீட்டை விட்டுப் பிரிவதற்கு வருந்துகிறாள் என்ற காரணம் காட்டி, "அவள் வருந்தும்படி நாம் அவளை அழைத்துச் செல்லுதல் தகாது?” என்று தலைவனை அஞ்சச் செய்தாள்.

இதைப் பாடியவர் கயமனார் என்ற நல்லிசைப் புலவர்.
இது நற்றிணையில் பன்னிரண்டாவது பாட்டாக உள்ளது.
------------------

5. தப்பினேன்!

காதலனும் காதலியும் வீட்டுக்குப் புறம்பே தினைப் புனத்தில் சந்தித்து வந்தார்கள். இந்தக் களவுக் காதல் தலைவியினுடைய உயிர்த் தோழிக்கு மாத்திரம் தெரியும். அயலார் அறியாமல் அவர்கள் சந்தித்துக் குலவுவதில் பல இடையூறுகள் இருந்தன. ஒவ்வொரு நாளும் தலைவன் வந்து போவதென்பது இயலுவதா? அவன் எத்தனையோ பொறுப்புள்ள கடமைகளை மேற்கொண்டவன். அவற்றைக் கவனிக்கும் நிலையில், சில நாட்கள் வந்து தலைவியைச் சந்திக்க முடிவதில்லை.

தலைவன் பகற்பொழுதில் வீட்டுக்குப் புறத்தே திணைப்புனம் முதலிய இடங்களில் தலைவியைச் சந்தித்து அளவளாவுவதைப் பகற்குறி என்று சொல்லுவார்கள். பகற் காலத்தில் குறித்த இடத்தில் சந்திப்பதால் இந்தப் பெயர் வந்தது. இந்தக் களவுக் காதல் ஒவ்வொரு நாளும், பிறர் அறிந்து விட்டால் என் செய்வது? என்ற அச்சத்தை உண்டாக்கும். அன்றியும், தலைவன் வராத நாட்களில் அவனைக் காணாமையால் தலைவி மிக்க துன்பத்தை அடைந்து ஒரு வேலையிலும் மனம்செல்லாமல் இருப்பாள்.

இவ்வாறு நடுநடுவே தலைவனைக் காணாமல் வருந்திய தலைவி வீட்டிலே இருந்தாள். அவன் உள்ளம் தலைவனைக் காணாத துயரத்தால் நிரம்பியிருந்தது. ஏதேனும் வேலையில் ஈடுபடலாமென்றால் ஒன்று கிடக்க ஒன்று செய்யும் படி நேர்ந்தது. மனதை வேறு எதிலாவது திருப்பி விட்டு ஆறுதல் பெறலாம் என்று நினைத்தாள்.

காலையில்தான் நன்றாக மழை பெய்தது; கனமான மழை. அவள் வாழ்வது குன்றுகள் அடர்ந்த குறிஞ்சி நிலம். எதிரே கம்பீரமாக ஒரு குன்று நின்றது. அந்தக் குன்றிலிருந்து அருவி சலசலவென்று விழுந்து கொண்டிருந்தது. அதைப் பார்க்கப் பார்க்க உள்ளத்தில் களி துளும்பும். அந்த அழகிய குன்றமும் அதில் உள்ள அருவியும் மலைச் சாரலிலும் மலையடிவாரத்திலும் உள்ள அடர்ந்த காடுகளும் மிக அழகான காட்சியை அளித்தன. இயற்கை யழகில் ஈடுபடும் உள்ளமுடையவர்கள் நேரம் போவதே தெரியாமல் அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

இந்தத் தலைவி அழகிய பொருள்களிலே மோகம் உள்ளவள். அழகான காட்சிகளிலே உள்ளத்தைச் சிக்க விடுபவள். தலைவனுடைய அழகிலே மயங்கிப் போனதே, இந்த அழகுக் காதலால்தான் என்று கூடச் சொல்லலாம்.

இப்போது மனசில் உள்ள கவலையைப் போக்கச் சற்று நேரம் மலையையும் அருவியையும் பார்த்து இன்புறலாமென்று வெளியிலே வந்தாள். சலசலவென்று ஓடிய அருவி பெரிய அலைகளை வீசும் கடலைப் போல முழங்கிக் கொண்டிருந்தது. காலையிலே மழை பெய்ததுதான் காரணம். அந்தக் குன்றம் அங்குள்ளாருக்குப் பலவகையில் நன்மை செய்யும் நல்ல குன்றம்; உயர்ந்த குன்றம்; நன்னெடுங் குன்றம், அதன்மேல் அன்று காலை மழை பெய்யவே, அருவி கடலில் திரை ஆரவாரிப்பது போல் ஒலித்துக் குன்றிலிருந்து இழிந்து வந்தது. அதைப் பாரித்தாள். அந்த அருவி கீழே வந்து காட்டினூடே மறைந்தது. நல்ல நீர்வளம் இருப்பதனால் அந்தக் காடு மரங்கள் அடர்ந்து விரிவாக இருந்தது. அகன்று பரந்த கானத்தில் உள்ள அழகை, அவள் பார்த்தாள்; பார்த்துக் கொண்டே இருந்தாள்.

மனம் அந்த அழகிலே மயங்கிக் கவலையை மறக்கும் என்றெண்ணியே அங்கே வந்தாள். நாள்தோறும் காணும் அழகைவிட இன்று குன்றமும் அருவியும் கானமும் மிக்க அழகோடு விளங்கின. நாள் மழை (காலை மழை) பெய்தமையினால் இயற்கையாக அவற்றிற்கு இருந்த அழகு பின்னும் அதிகமாயிற்று. அவள் உள்ளத்தில் கவலை இல்லாமல் இருந்தால் இந்த அற்புதமான காட்சியிலே சொக்கிப் போயிருப்பாள். ஆனால் இன்று எதையும் கண்டுகளிக்கும் மன நிலை அவளுக்கு இல்லை, அருவியின் அழகும் குன்றத்தின் கோலமும் காணத்தின் கவினும் அவள் உள்ளத்தினூடே புக இயலவில்லை. அங்கேதான் துயரம் குடி கொண்டிருக்கிறதே! உலகமே இப்போது அவளுக்குச் சுவைக்கவில்லை. காதலனைக் காணாது வாழும் நாள் நல்ல நாள் அன்று; பொல்லாத நாள்; உள்ளம் சாம்பும் நாள்: உயிர் போகும் நாளைப் போன்ற நாள்.

கண் குன்றத்தைப் பார்த்தது; கருத்தோ காதலனைக் காணாத துன்பத்தை நினைந்தது. எதிரே அருவி கடவின் அலையைப் போலப் பேரலைகளை மோதி முழங்கியது; அவள் உள்ளக் கடலும் குமுறியது. அடர்ந்த காடு எதிரே படர்ந்திருந்தது; அவள் உள்ளத்தினூடேயும் தெளிவின்றி அடர்ந்த துயரம் பரந்திருந்தது.

குன்றத்தை அவள் பார்த்தாள்; அவள் பார்க்கவில்லை; கண்கள் பார்த்தன. அப்படிச் சொல்வது கூடப் பிழை. பார்வையென்பது கண்ணும் உணர்ச்சியும் இணையும்போது நிகழ்வது. கண்ணைத் திறந்திருந்தால் மாத்திரம் போதாது. அது பார்வை ஆகாது. அவளுடைய கண்கள் திறந்திருந்தனவே ஒழிய எதிரே நின்ற குன்றத்தைப் பார்க்கவில்லை: அருவியிலே செல்லவில்லை.

அவள் தன் தலைவனைக் காணாத இடம் எவ்வளவு வளப்பமுடையதாக இருந்தால் என்ன? அது வெட்ட வெளிக்குச் சமானம்; பாலைவனத்தைப் போலப் பயனின்றி,
அழகின்றி இருப்பது.

உள்ளத்தில் துக்கம் குமுறிக்கொண்டு வருகிறது; காதலனைச் சந்திக்கவில்லையே என்ற துயரம் பொங்குகிறது. விம்மி விம்மி அழ வேண்டும்போல் இருக்கிறது. அவள் அந்த உணர்ச்சியை அடக்கிக் கொண்டாள். அடக்க அடக்கத் துயரம் மிகுகிறதே ஒழிய அடங்கின பாடில்லை. துயரத்தைத் தாங்கித் தடை செய்யலாமென்று முயல்கிறாள்; அவள் அடக்கும் எல்லையில் அது நிற்கவில்லையே!

பார்த்த கண்களுக்கு இப்போது உண்மையாகவே எதிரே நின்ற காட்சி தெரியவில்லை. அவற்றில் நீர் திரை யிட்டது, கழன்றது. எழிலை ஏந்திய அந்தக் குளிர்ந்த கண்களில் நீர்த்துளிகள் வட்டமிட்டன. அடக்கிய வரையில் உள்ளே புதைந்திருந்த துக்கம் கொஞ்சம் உடைப் பெடுத்துக் கொண்டது. இனி அது நிற்குமா? அவள் கண்ணைத் துடைத்துக் கொண்டாள். கண்ணிர் இப்போது மிகுதியாகப் பெருகியது. கண்ணிலே ஓர் அருவியே தோன்றி விட்டது! கண்ணைத் துடைக்கத் துடைக்க நீர் சுழன்று கண்கள் கலுழ்ந்தன.

அந்தச்சமயத்தில் அவளுடைய தாய் அங்கே வந்தாள். தன் அருமை மகள் கண்ணைக் கசக்கிக் கொண்டு நிற்பதைக் கண்டாள். செல்வமாக வளர்த்த பூங்கிளி போன்ற மடமகள் வருந்துவதா? "இவளுக்கு என்ன வருத்த வந்தது?” என்று எண்ணிய தாய் அவளை அணுகினாள்.

"ஏன் அம்மா அழுகிறாருய்? என்ன செய்தாய்? யார் உனக்குத் துயரத்தை விளைவித்தார்கள்?’ என்று அவள் தலையைக் கோதியபடியே கேட்டாள்.

தலைவி தன் கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

“என் கண்ணே! ஏன் இப்படி முகம் வாடி இருக்கிறாய்? அழகாக விளங்கும் பற்கள் தோன்றப் புன்முறுவல் பூப்பாயே! எங்கே, உன் இலங்கு எயிற்றைக் காட்டு; ஒரு சின்ன முத்தமிட்டுக் கொள்கிறேன்" என்று கொஞ்சிக் கொஞ்சிக் கூறினாள்; இனிமையாகக் கூறினாள். அந்தத் தாய்க்குத் தலைவி இன்னும் சின்னஞ் சிறிய குழந்தைதான்.

தாய் இனிய வார்த்தைகளால் பரிவு தோன்றப் பேசவே, தலைவிக்கு உள்ளம் குளிர்ந்தது. மந்திரம் போடுபவர்களுக்கு முன் நாகம் தலை சாய்ப்பது போலவும் வீணை வாசிப்போருக்கு முன் யானை மதம் தெளிந்து மயங்கி நிற்பது போலவும் இருந்தது, தலைவியின் நிலை, “இவ்வளவு அன்புடன் பேசுகிற தாயினிடம் உண்மையைச் சொல்வி விட்டால் என்ன? நம் காதலருடைய பெருமையை எல்லாம் எடுத்துச் சொல்லலாமா? என்ற வேகம் உண்டாபிற்று. தம்முடைய காதலைத் தாங்களே எடுத்துச் சொல்லுவது நாணமுள்ள மங்கையருக்கு அழகன்று என்பதை அவள் மறந்தாள். நாணம் உயிரை விடச் சிறந்தது. நாணம் போனால் உயிர் போய்விடும். அப்படி இருக்க, தாயின் இன்மொழியிலே அந்த நாணத்தை மறந்து வேகமாக உண்மையைச் சொல்லிவிடலாம் என்று நினைத்தாள்.

’அவர் பெரிய மலைக்குத் தலைவர். வானத்தளவும் ஓங்கிய மலையை உடையவர். அந்த மலைச்சாரலில் உள்ள காந்தட் பூக்களில் சென்று தாதை ஊதிய நீலமணி போன்ற தும்பிகள் ரீங்காரம் செய்வது வீணை வாசிப்பது போல இருக்கும்; இம்மென்று முழங்கும். அவ்வளவு வளம் பெற்ற மலைக்குத் தலைவர் அவர். அவருடைய மார்பினால் வந்த வருத்தம் இது" என்று சொல்ல முற்பட்டாள். அப்போதிருந்த வேகத்தில் சொல்லியே இருப்பாள். ஆனால் -

அவள் உத்தம மகள் அல்லவா? அவள் நாணத்தை ஒட்டினாலும் அது அவளை விட்டுப் போகாதே. அது அவளுடன் பிறந்தது அல்லவா? அந்த நாணம் அவள் நாவை இழுத்துப் பிடித்தது. அவள் தன் கண்ணிரைத் தடுக்க முடியவில்லை; ஆயினும் நாவைத் தடுத்துவிட்டாள். உயிரினும் சிறந்த நாணம் அவளிடமிருந்து அகலா10ல் நின் றது. அவள் அதை மறந்தாளே ஒழிய, விட்டுவிடவில்லை. ஆணுல் அவளே அது மறக்கவில்லை.

இப்போது விழித்துக்கொண்டாள். "ஒன்றும் இல்லை அம்மா! அதோ அந்த அருவியைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஏதோ கண்ணில் வந்து பட்டது. அதுதான்’ என்று சொல்லிச் சமாளித்துக் கொண்டாள். தொண்டை வரையில் வேகமாக வந்துவிட்ட வார்த்தையை அடக்கிக் கொண்டு, அன்னைக்கு வேறு சமாதானம் சென்னது அவளுக்கே வியப்பை உண்டாக்கியது.

கண நேரம் அவள் ஏமாந்து போனாள், நல்ல வேளை! முற்றும் ஏமாந்து போகாமல் தப்பினாள்; உண்மையை உரைப்பதினின்றும் உய்ந்தாள்.

"ஆnஆல் ஒவ்வொரு நாளும்இப்படிச் சார்த்தியமாகத் தப்ப முடியுமா?” --அவள் மனம் வேதனப்பட்டது.

அன்றைப் பொழுது எப்படியோ கழிந்தது. மறு நாளாவது தன் காதலனைக் காணலாம் என்று அவள் எண்ணியிருந்தாள். அன்று அவள் எதிர்பார்த்தபடியே அவன் வந்தான். தோழியோடு காணத்துக்குள் சென்று அவனேச் சந்தித்தாள். தான் அவனைக் காணாத பொழுது படும் துன்பத்தையும், அதைத் தாய் அறிந்து கேள்வி கேட்பதையும் அவளுக்கு உண்மையை மறைத்து வேறு கூறுவதில் உண்டாகும் சங்கடத்தையும் அவனுக்கு உணர்த்த வேண்டும் என்று விரும்பினாள். அவன் உணர்ந்தானானால், இனியும் பலநாள் களவிலே வந்து குலவுவதை நீக்கி, மனம் செய்து கொள்வதற்கு உரியவற்றைச் செய்வானென்பது அவள் நினைவு.

ஆனல் இந்தச் செய்தியை அவனிடம் நேர்முகமாகக் கூற நாணினாள். தான் படும் துயரையும் மற்ற இன்னல்களையும் அவன் அறிவது இன்றியமையாதது என்றும் நினைத்தாள். ஆகவே, அவன் அயலில் மறைவாக நிற்கும் போது தன் தோழிக்குச் சொல்பவளைப்போல முதல் நாள் நிகழ்த்தவற்றைற் சொல்லலானள்.

[ தோழி, காலை மழை பெய்த நல்ல உயர்ந்த குன்றத்தில் பெருமையையுடைய கடலின் அலையைப் போல இறங்கி வரும் அருவி அகன்ற பெரிய காட்டிலே சென்று தங்கும் அழகைப் பார்த்துத் துயரைத் தாங்கி நிற்கவும், நான் தடுக்கும் எல்லையிலே நில்லாதனவாக நீர் சுழன்று அழகை ஏந்திய குளிர்ச்சியையுடைய கண்கள் அழுததனால் என் தாய், ‘என்ன செய்தாய்? உன் பல்லை முத்தமிடுவேன்' என்று மென்மையான இனிய சொற்களைச் சொன்னமையால், நான் மிக விரைந்து உயிரைக் காட்டிலும் சிறந்த நாணத்தையும் மறந்துவிட்டு, ‘சாரலிலே உள்ள காந்தள் மலரை ஊதிய தும்பியென்னும் உயர் சாதி வண்டு இனிய யாழ் நரம்பின் ஓசைபோல ரீங்காரம் செய்யும் வான் அளாவிய மலைக்குத் தலைவனகிய என் காதலனுடைய மார்பு செய்த வருத்தம் இது’ என்று சொல்ல வந்தவள், அவ்வாறு சொல்லாமல் தப்பினேன்.

தோழி, கண் நோக்கி, நில்லா, கலுழ்தலின், அன்னை எனக் கூறலின், என உய்ந்தனன் என்று கூட்டுக.

நாள் மழை-காலை மழை; தலை இய-பெய்த; மால் – பெருமை; இழிதரும்-மேலிருந்து கீழே ஓடிவரும்; கானம் – காடு; அல்கு-தங்கும்; வேகமாக ஓடாமல் மெல்லச் செல்வதை இவ்வாறு சொன்னாள்;. தகைவரை-தடுக்கும் எல்லையில்; சுழல்பு-சுழன்று. மழைக்கண்-குளிர்ச்சியை உடைய ஆண்கள்; கலுழிதல்-அழுதல்; எவன் - என்ன. இலங்கு –விளங்குகின்ற; எயிறு-பல்லை;. உண்கு-உண்பேன்; வாயில் முத்தமிடுவேன் என்பதையே "எயிறு உண்கு’ என்று சொன்னாள்; இனிய-இனிமையான வார்த்தைகள்; வல் விரைந்து-மிக விரைந்து-நனிமறந்து-நன்றாக மறந்து விட்டு;. உரைக்கல் உய்ந்தனன்-உரைத்தலின்றும் தப்பினேன், காந்தள் குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்: கண்வலிப்பூ என்று சொல்வதுண்டு. மணி-நீலமணி, தும்பி-உயர்ந்த சாதி வண்டு. தீந்தொடை நரம்பு-கட்டிய நரம்புகளை யுடைய யாழின் இனிய ஓசை; தொடை-கட்டு; இங்கே யாழைச் சுட்டியது. நரம்பின்-நரம்பைப்போல. முரலும்ஒலிக்கும். வான் தோய்-வானத்தைத் தொடும். மார்பு அணங்கு-மார்பினல் உண்டான வருத்தம்.]

’முன்னிலைப் புறமொழியாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது' என்பது இதற்குரிய துறை. ‘தலைவன் முன்னே நிற்கவும் அவனை நேரே பார்த்துச் சொல்லாமல் வேறு ஒருவருக்குச் சொல்லும் பாணியில் தலைமகள் தோழியிடம் சொல்லியது" என்பது இந்தத் துறைக்குப் பொருள்.

இதைப் பாடிய புலவர் கொச்சி நியமங்கிழார் என்பவர்; நொச்சி நியமம் என்ற வர்க்காரர் என்பது அதற்குப் பொருள். மரியாதை யுடையவர்கள் பெயரைக் கூறாமல் வேறு விதமாகக் கூறுவது வழக்கம், "ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது' என்ற மரியாதையால் இந்தப் புலவருடைய இயற்பெயர் நமக்குத் தெரியவில்லை. ஊரின் பெயர் மாத்திரம் தெரிகிறது. நொச்சி நியமம் என்ற ஊரில் வேறு பல மக்கள் வாழ்ந்திருக்கலாம். அவர்கள் அந்த ஊருக்குப் புகழை உண்டாக்கவில்லை. இந்தப் புலவர் தாம் உண்டாக்கினார், அந்த ஊர்ப் பெயரைக் காப்பாற்றினார். அதற்கு அவர் பெயரே சான்று,

இது நற்றிணையில் 17-ஆவது பாட்டு.
---------

6. யாமத்து மழை

தோழி : உன்னுடைய காதலன் பெரிய வளப்பம் மிக்க மலை நாட்டை உடையவன்; இயற்கை எழில் குலுங்கும் மலைகளை உடையவன்.

தலைவி : அப்பெருமானுடைய அன்பு வளத்தை நான் அறிவேன். அவருடைய ஊரை யார் அறிவார்கள்? நாட்டைத்தான் யார் அறிவார்கள்?

தோழி : நீதான் அறிந்து கொள்ளப் போகிறாயே!

தலைவி : அது எவ்வாறு? அவர் இன்னும் திருமணத்துக்கு உரிய முயற்சிகளைச் செய்யாமலே இருக்கிறாரே!

தோழி : அதைப்பற்றி நீ ஏன் கவலை அடைகிறாய்? அவனுடைய கடமையை அவன் மறக்க மாட்டான். உனக்கு வேண்டிய பரிசத்தைக் கொண்டுவந்து, உன்னுடைய தாய் தந்தையரிடம் வழங்கி, உன்னை மணம் செய்து கொடுக்க வேண்டுமென்று கேட்பான், முதியோர்களை முன்னிட்டுக் கொண்டு வரைந்து கொள்ள வருவான்.
தலைவி : அவருடைய நாட்டின் வளப்பத்தைச் சொல்ல வந்தாயே! அவர் எவ்வகை நிலத்துக்குத் தலைவர்?

தோழி : குறிஞ்சிநிலத் தலைவன்; மலை நாடன்,

தலைவி : நாமும் குறிஞ்சி நிலத்தில் வாழ்கிறோம். இங்குக் கள்வர்களைப்போல அங்கும் மகளிர் உண்டோ? தினை கொல்லைகள் உண்டோ?

தோழி : அங்கும் மலைச்சாரல்களில் பசிய தினைப்பயிரை மலைநாட்டு மக்கள் விளைவிப்பார்கள். அடுக்கலிலே விளையும் அந்தத் தினையைக் குறமகளிர் காவல் புரிவார்கள்.

தலைவி : நாம் காத்தோமே, அது மாதிரியா?

தோழி : ஆம்; அதே போலத்தான். ஆனல் பைந்தினையைக் காக்கும் கொடிச்சியர் யாவருக்கும் உனக்குக் கிடைத்த ஊதியம் கிடைக்குமா? நீதான் உன் காதலனைத் திணைப் புணத்தைக் காவல் செய்கையில் பெற்றாய். (சிரிக்கிறாள்).

தலைவி (நாணத்தோடு) சரி சரி; அவர்களுக்கு என்னதான் கிடைக்கும்?

தோழி: அற்புதமான காட்சிகள் காணக் கிடைக்கும். எவ்வளவுதான் ஊக்கத்தோடு காவல் புரிந்தாலும் ஏமாற்றந்தான் கிடைக்கும்.

தலைவி: அது என்ன? ஏமாற்றம் கிடைப்பதாவது?

தோழி! ஆம்; கவணெறிந்தும் தட்டையைத் தட்டியும் கிளிகளை ஒட்டிக் காவல் புரியும் அந்தக் கொடிச்சியரைச் சில விலங்குகள் ஏமாற்றிவிடும்.

தலைவி : யானையையா சொல்கிறாய்? .

தோழி : யானையைக் கொடிச்சியர் என்ன செய்யமுடியும்? கானவர் அம்பு எய்து அல்லவா அதை ஒட்ட வேண்டும்?

தலைவி ; பின்னே நீ எந்த விலங்கைச் சொல்கிறாய்?

தோழி: மிகவும் தந்திரம் கற்ற மந்தி. அது குறத்தியர் அயர்ந்திருக்கும் பொழுது தினைக்கதிரைப் பறித்துக் கொண்டு போய்விடும்!

தலைவி : பறித்துக் கொண்டா போகும்?

தோழி: ஆம். கொடிச்சி காக்கும் அடுக்கலில் உள்ள பைந்தினையில் முதல் முதலில் விளைகின்ற கதிர்களை அவை கொண்டுபோய்விடும்!
தலைவி : கொண்டுபோப் ஸ்ன்ன செய்யும்?

தோழி : முந்து விளைந்த பெருங் கதிரைக் கொண்ட மந்தி, தன் கணவனாகிய கடுவனேடு மலைமேல் தாவி ஏறும்.

தலைவி : மந்திதான் திணைக்கதிரைப் பறிக்குமோ?

தோழி: அதற்குத் தான் மெல்லப் பறிக்கத் தெரியும். அவசரப்பட்டு அடி வாங்கிக் கொள்ளாது. அப்படித் திருட்டுத்தனமாகப் பறிக்கக் கற்ற மந்தி அது. ஆனால் ஆண்குரங்காகிய ஈடுவனே, இதைப் பார்த்துக் கொண்டே இருக்கும். இந்தத் தந்திரத்தை அது கற்றதில்லை; அது கல்லாக் கடுவன். கதிரைப் பறித்த மந்தி உடனே கடுவனேடு மலைமேலே ஏறிவிடும்.

தலைவி : பிறகு?

தோழி: நல்ல வரைமேல் ஏறி ஓரிடத்தில் மந்தியும் கடுவனும் அமர்ந்து கொள்ளும்,

தலைவி : அவற்றிடையே உள்ள காதல் எவ்வளவு அழகானது

தோழி ஆம்; உலகமே காதல் நிறைந்ததுதான். மந்தி அந்தக் கதிரை உள்ளங்கையிலே வைத்து நிமிண்டித் தேய்க்கும். பல கதிர்களைக் பறித்து வந்ததல்லவா? அங்கை நிறைய அந்தத் தனக்கதிர்களை நெருடித் தேய்த்து அப்படியே உண்ணும். தன்னுடைய வளைந்த கவுளில் அடக்கிக்கொள்ளும். மேலும் மேலும் திணையை உண்ணும். தோல் தொங்கும் அதன் கழுத்துக்கூடப் 'பம்’ என்றாகிவிடும். கன்னமும் திரைந்த தாடைப் பகுதியும் நிரம்பும்படி உண்ணும்போது பார்க்க வேண்டும் மழை பெய்து கொண்டிருக்கும், வானம் பெய்த பெயலால் அதன் முதுகு நனைந்து போகும். கையிலே தினையை ஏந்தியபடியே அதை உண்ணுவதையும், அதன் உடம்பு நனைந்திருப்பதையும் பார்த்தால் சந்நியாசிகள் பிட்சை உண்ணுவது போலத் தோன்றும். நீராடிவிட்டு ஈரம் சொட்டச் சொட்டக் கரதல பிட்சை ஏற்று உண்ணும் நோன்பியரை நீ பார்த்ததுண்டா? அந்தக் காட்சியைப் போலவே இருக்கும்.

தலைவி : அவர் நாட்டில் குரங்குகள் எளிதிலே தினையைப் பறித்து உண்ணுகின்றன. குறிஞ்சி நில மக்கள் தினையை விளைத்துப் பயிர் செய்கின்றனர். கொடிச்சியர் அவற்றைக் காவல் புரிந்தாலும் குரங்குகள் அவற்றைக் கொள்ளுகின்றன. இங்கும் அப்படித்தான் இருக்கிறது.

தோழி : இங்கேயும் அத்தகைய காட்சியைக் கண்டிருக் கிறாயா?

தலைவி: அதே காட்சி அன்று, பிறர் காவல் புரியும் ஒன்றை மற்றென்று கவர்ந்து நுகரும் செயலாஈ இங்கேயும் பார்க்கிறோம். அன்னையும் பிறரும் என்னைக் காவல் புரிந்து என் பெண்ஆயைக் காத்து நிற்கிறார்கள். ஆனல் அவர்களையும் அறியாமல் தலைவர் என் நலத்தை வெளவிக்கொண்டார்.

தோழி: நன்ருகச் சொன்னாய்! அது அவனுடைய நாட்டின் இயல்புக்கு ஏற்றதே, கொடிச்சி காக்கும் அடுக் கற்பைந்தினையின் முந்து விளைந்த பெருங்கதிரை, அங்கே மந்தி கல்லாக் கடுவனோடு கொண்டு, கல்வரை ஏறி, அங்கை நிறைய ஞெமிடிக்கொண்டு தன்னுடைய திரைந்த தாடையிலும் வளைந்த கவுளிலும் நிறையும் படி மொக்குகிறது; இங்கோ தாயும் தமையன்மாரும் பிறரும் காத்து ஓம்பும் நின் பெண்மை நலத்தைத் தலைவன் வந்து வெளவினான், ஆனால் குரங்கு நல்வரை ஏறி உண்ணுவது போல, தன் ஊருக்கு உன்னை அழைத்துச் சென்று உலகினர் அறியக் கணவன் மனைவியாக வாழும் நிலை வரவில்லை. அதுவும் வந்து விடும் என்றே நம்புகிறேன்.

தலைவி : வருமா, தோழி? அந்தக் காலம் வருமா? என் காதலர் என்னை வரைந்துகொள்வாரா?
# # #

தோழி : மட நங்கையே, இனி உன் கவலையெல்லாம் ஒழிந்தது. அவன் வந்தனன்

தலைவி : யார்?

தோழி : உன் உயிர்க் காதலனுகிய மலைநாடன்தான். உன்னை மணந்துகொள்ள வேண்டுமென்று உறுதி செய்து முதியவர்களை முன்னிட்டுக் கொண்டு வந்து விட்டான்.

தலைவி : என் காதலரா?

தோழி: ஆம்; தினைக் கதிரைப் பறித்து வரையின் மேல் ஏறிக் கை நிறையத் தேய்த்து, நோன்புடைய சந்நியாசிகள் கைபூண் நுகர்வது போலே மந்திஉண்ணும் நாடன் வந்தான். நீ இனிக் கவலையை ஒழி.

தலைவி : தோழி, இனி எனக்கு இடையீடில்லாத இன்பம் கிடைக்குமா? அவர் சில காலம் வராமல் இருந்தாரே; நான் எவ்வளவு துன்பத்தை அடைந்தேன்! தெரியுமா?

தோழி : எனக்குத் தெரியாமல் என்ன? நம் பெருமான் உன்னை மணந்துகொள்ள எண்ணி, அதற்கு வேண்டிய பொருளை ஈட்டத்தான் சென்றிருக்க வேண்டும். அந்தப் பிரிவை நீ தாங்காமல் துன்புற்றாய். மழை பெய்யாத பஞ்சகாலத்தில் குளங்களெல்லாம் வற்றிப் போய் நீரே இல்லாமற் போனபோது நெற்பயிர் வாடுவதுபோல நீ வாடினாய். முளையிட்டு இலைவிட்டு வளர்ந்து பூட்டை விட்ட சமயத்தில் நீர் இல்லாமையால் வாடிப்போன பயிரைப்போல, அவனுடைய தொடர்பினால் மகிழ்ச்சி பெற்ற நீ வாடி நின்றதை நான் பார்த்தேன்; வருந்தினேன். அந்த வாட்டம் பின்னே தீரும் என்று நம்பினேன். உழவன் நெற்பயிர் வாடுவது கண்டு, ‘மேல் மழை வந்தால் இந்தப் பயிர் தழைத்துக் கதிரி முற்றிப் பயன் தருமே!’ என்று ஏங்கினாற்போல நான் ஏங்கினேன். 'இவளைத் தலைவன் அருள் செய்து மணந்தால் அறமும் இன்பமும் இவளுக்கு வாய்க்குமே!’ என்று நைந்து வருந்தினேன். மழை வருமென்று வானத்தை நம்பியிருக்கும் உழ வனைப்போல நானும் நம்பிக்கையோடு இருந்தேன். பசுமையற்ற காலத்தில் குளங்களெல்லாம் ஈரமற்ற போது, திரங்கிய நெல்லுக்கு இராக் காலத்தில் மழை பொழிந்ததுபோல அவன் வந்துவிட்டான். நள் என்ற யாமத்தில் பெய்யும் மழை அடரப் பொழியும். உன் காதலனும் உன்பால் பேரருளை உடையவனுகி வந்திருக்கிறான், இனி உன்னை இன்பக் கடலில் ஆழ்த்துவான். நீ வரழி.

[ தோழி, நீ வாழ்வாயாக! குறமகள் பாதுகாக்கும் மலையில் விளைந்த பசிய தினையில் முதலில் விளைந்த பெரிய கதிரை, (அக்குறமகள் அறியாமல் பறித்துக்) கொண்ட பெண் குரங்கு, (இத்தகைய தந்திரத்தைக்) கல்லாத ஆண் குரங்கோடு நல்ல மலைப் பக்கத்தில் ஏறி, உள்ளங் கை நிறைய (அந்தத் தினைக் கதிரைத்) தேய்த்துத் தன்னுடைய சுருங்கிய தாடையோடு, விளைந்த கன்னமும் நிறையும்படி உண்டு, வானத்திலிருந்து பெய்த மழையில் நனந்த முதுகை உடையனவாகி, விரதமுடையர் (ஆகிய துறவிகள்) கையில் உண்ணும் கோலத்தில் இருப்பது போலத் தோன்றும் மலை நாட்டையுடைய தலைவன் வந்தான்; உலகத்தில் குளங்களெல்லாம் தம் இடம் வெறுமையாகி அற்றுப்போன ஈரம் அழிந்த (பஞ்ச) காலத்தில் பூட்டையோடு வாடிப்போன நெற்பயிருக்கு, நள்ளிரவில் மழை பொழிந்தது போல.

தோழி, மந்தி தோன்றும் நாடன், பொழிந்தாங்கு வந்தனன் என்று கூட்டுக.

கொடிச்சி-குறத்தி; அடுக்கல்-மலைத்தொடர்; முந்து – முந்தி; குரல்-தினைக் கதிர்; மந்தி-பெண்குரங்கு,; கடுவன் - ஆண் குரங்கு; வரை-மலைப்பக்கம்; ஞெமிடி-நிமிண்டி தேய்த்து; திரை –சுருங்கிய; அனல்-தாடை, கன்னத்தின் கீழ்ப்பகுதி கொடுங்கவுள்-வளைந்த கன்னம், முக்கி - உண்டு; இப்போது மொக்கி என்று வழங்குகிறது. பெயல் -மழையில். நோன்பியர்-விரதத்தை உடைய துறவிகள். கையூண் இருக்கை- கரதல பிட்சை உண்ணும் கோலம்; நாடன்-குறிஞ்சி நிலத் தலைவன்; கயம்-குளம்; கண் - இடம். பைது அறு காலை-பசுமை அற்ற காலத்தில்; பீள் – பூட்டை;. திரங்கிய-வாடிய. நள்ளென் யாமம்-நடு இரவு; பொழிந்தாங்கு-பொழிந்தாற் போல. ]

துறை : இது, வரைவு மலிந்த தோழி தலைமகட்குச் சொல் லியது.

'மணம் செய்வதற்கு வேண்டிய முயற்சியுடன் தலைவன் பெண் பேச வந்த செய்தியை அறிந்த தோழி, அதனைத் தலைவிக்குச் சொல்லியது' என்பது இதன் பொருள். வரைவு மலிதல்-மனத்துக்குரிய முயற்சி பெருகுதல். ஒருத்தியைத் தன் மனைவியென்று உலகு அறிய வரையறுத்து உரிமையாக்கிக் கொள்வதால் மனத்திற்கு வரைவு என்ற பெயர் வந்தது.

இந்தப் பாடலை இயற்றிய புலவர் பெயர் தெரிய வில்லை.

இது நற்றினையில் இருபத்திரண்டாம் பாட்டு.
-----------------

7. அதன் பண்பு

இல்லற இன்பத்துக்கு இன்றியமையாதவள் காதலி. ஆனல் கணவன் மனைவியருடைய காதல் வாழ்க்கைக்கும், அவர்கள் ஆற்றவேண்டிய அறச்செயல்களுக்கும் உற்ற துணையாக இருப்பது பொருள். செல்வம் இன்றி உலகத்தில் எதைத்தான் சாதிக்க முடியும்? பொருள் இல்லார்க்கு இவ்வுலகமே இல்லை.

இந்த உண்மையை உணர்ந்தவன் காதலன். ஆகவே தன்னுடைய இல்லற வாழ்வு பொருளின்றி நலியக் கூடா தென்று எண்ணினான். வெளிநாடுகளுக்குச் சென்று பொருளிட்டும் விருப்பம் அவனுக்கு உண்டாயிற்று, அதற்குரிய ஆற்றலும் அறிவும் படைத்தவன் அவன், ஊக்கமும் உறுதியும் உடையவன். அப்படிப் பொருள் தேடச் சென்றால் திரும்பிவரச் சில காலம் ஆகும். அதுவரையில் தன் காதலியைப் பிரிந்திருப்பது அவனுக்குத் துன்பமாகத்தான் இருக்கும். ஆயினும் மணவுறுதியினாலும் சென்ற இடத்தில் செய்யவேண்டிய முயற்சிகளினாலும் அந்தப் பிரிவுத் துன்பத்தை அவன் ஒருவாறு ஆற்றிக் கொள்ளலாம்.

அவனுடைய காதலியோ? திருமணம் ஆனது முதல் இதுவரையில் அவள் அவனைப் பிரிந்ததே இல்லை. இப்போது ஏற்படப் போகும் பிரிவில் அவள் வாடி வதங்கிப் போவாள். - இதை நினைக்கும்போது அவன் உள்ளம் சங்கடத்துக்கு உள்ளாயிற்று,
அவன் பிரிந்து போவது கிடக்கட்டும். ’நான் போய் வருகிறேன்’ என்று அவளிடம் சொல்ல வேண்டுமே! போன பிறகு, தன் கடமையை அவள் உணர்ந்து ஒருவாறு ஆறுதல் பெற்று இருக்கலாம். போகும் செய்தியைக் கேட்கும்பொழுது அம்பு பட்ட மான் போல இடர்ப்படுவாள் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அவள் முகத்துக்கு நேரே நின்று இந்தச் செய்தியைச் சொல்வி அதனால் அவள் படும் வேதனையைக் கண்ணினால் காண முடியுமா? அதைக் காட்டிலும் துயரந்தரும் செயல் வேறு இல்லை.

"நாம் பிரிந்து போகத்தான் வேண்டும். அதைத் தவிர்க்க முடியாது. ஆனல் இந்தச் செய்தியை நாமே நேரில் தெரிவித்து, அவள் படும் பாட்டைக் கண்டு மனம் கலங்காமல், வேறு ஏதேனும் வழி செய்யலாமே! பிரிவை உணர்த்தும் வேலையை நாம் ஏன் மேற்கொள்ள வேண்டும்? அவளாகத் தெரிந்து கொள்ளட்டுமே! -அல்லது வேறு யாரிடமாவது இதைச் சொல்வி அவளுக்குச் சொல்லும் படி….”

அவன் இவ்வாறு சிந்தனையில் ஆழ்ந்திருந்தபோது அவனுடைய காதலியின் உயிர்த் தோழி அங்கே வந்தாள். அவளைக் கண்டதும் சமய சஞ்சீவியே அவனுக்குக் கிடைத்து விட்டது போன்ற மகிழ்ச்சி உண்டாயிற்று. *நல்ல வேளை! நீ வந்தாய்’ என்று தன் முகத்தில் புன்னகையை வருவித்துக்கொண்டே அவளைப் பார்த்துச் சொன்னான்.

”ஏன், என்ன விசேஷம்? நான் இங்கேதானே இருக்கிறேன்? இன்றைக்குப் புதிதாக வந்து குதித்து விட வில்லையே!” என்றாள் தோழி,

*அப்படி அன்று. நான் ஒரு சிக்கலான நிலையில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அதை எப்படி நீக்குவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நீ வந்தாய்.”

"சிக்கலைச் சிடுக்காக்கவா?”

"என்ன, அப்படிச் சொல்கிற்ருய்? சிக்கலை விடுவிக்க நீ வந்துவிட்டாயென்று மிக்க மகிழ்ச்சியை அல்லவா அடைந்தேன்?*

”அது என்ன சிக்கல்?"

"உன்னுடைய தோழியின் துயரத்தை நீ ஆற்ற வேண்டும்."

"துயரமா? அவள் இருக்கும் இடத்தில் துயரத்தின் நிழல்கூட வராதே! நீங்கள் இருக்கும் போது, இறைவன் அருளால் நீங்கள் இருவரும் இன்பக் கடலில் ஆழ்ந்திருக்கும்போது, அவளுக்குத் துயரம் ஏது?"

*சொல்வதை முழுவதும் கேள். நான் பொருள் ஈட்டும்பொருட்டு வெளி நாட்டுக்குப் போகிறேன். சில காலம் உன் தோழியைப் பிரிந்திருக்க நேரும். மாலையில் நான் வீடு வர ஒரு கன்னம் தாழ்த்தாலும் நான் வரும் வழிமேல் விழி வைத்துப் பார்த்து வாடும் அவள், எவ்வாறு இந்தப் பிரிவைப் பொறுத்திருப்பாள் என்று யோசித்தேன். போகாமல் இருந்துவிடலாம் என்றாலோ, நான் போய் வருவது இன்றியமையாதது. இந்த யோசனையில் நான் ஆழ்ந்திருக்கும்போதுதான் நீ வந்தாய்."

*நான் பொருளை ஈட்டித் தருவேனென்று நினைக்கிறீர்களா?’ என்று சிரித்துக் கொண்டே தோழி கேட்டாள்.

*வேடிக்கை கிடக்கட்டும். பிரிவுக் காலத்தில் என் ஆருயிர்க் காதலிக்கு ஆறுதல் கூறி அவளைப் பாதுகாப்பது உன் கடமை, அதோடு இப்போது உடனே செய்ய வேண் டிய காரியம் ஒன்று இருக்கிறது.*

”என்ன அது?”

*நான் பொருள் தேடும் பொருட்டுச் செல்கிறேன் என்ற செய்தியை நீயே அவளிடம் சொல்ல வேண்டும்.”

"நீங்களே சொல்லி விடையும் பெற்றுப் போவது தான் தக்கது.'

'நான் சொல்வதும் அவள் மனமுவந்து விடை கொடுப்பதும் நடக்கிற காரியமா? அவளுக்கு முன் இதைச் சொல்வதற்கே என் நா எழாது, ஒருவாறு துணிந்து சொல்லி-விட்டாலும் அவளிடம் உண்டாகும் வேதனையைக் கண்டேனானால், அப்புறம் அவளை விட்டுச் செல்லக் கால் எழாது.”

'நன்றாக இருக்கிறது நீங்கள் சொல்வது! உங்களால் முடியாததை நான் மாத்திரம் செய்ய முடியுமா? "அடுத்த வீட்டுப் பிராமணா, பாம்பைப் பிடி, அல்லித் தண்டு போல் குளிர்ந்திருக்கும்" என்ற கதையாக இருக்கிறதே!”

"நீ இந்த உபகாரத்தைச் செய்யத்தான் வேண்டும். களவுக் காலத்தில் நீ செய்த உபகாரங்களையெல்லாம் நான் மறக்கவில்லை. அவற்றைப் போல் இப்போது இந்த உதவியை நீதான் செய்ய முடியும், அவள் உள்ளம் அறிந்து, செவ்வி அறிந்து, தக்க சொற்களால் பக்குவமாகச் சொல்லும் ஆற்றல் உனக்கு உண்டு. நீ வேறு, அவள் உள்ளம் வேறு என்பது இல்லை. இந்தச் செய்தியைச் சொல்லி, நான் வரும் வரையிலும் ஆறுதல் கூறிப் பொழுது போக்கிக் கொண்டிருந்தால், நான் விரைவில் வந்து-விடுவேன்.”

தோழி அவன் கூறுவதில் உள்ள நியாயத்தை உணர்ந் தாள். தலைவன் விரும்பியபடியே செய்ய ஒப்புக் கொண்டாள்.

”நீங்கள் போகும் நாடு எங்கே இருக்கிறது?"

“நம் நாட்டுக்கு அப்பால் நெடுந்தூரத்தில் பாலை நிலம் ஒன்று உண்டு. அதற்கு அப்பால் உள்ள நாட்டுக்குச் செல்லப் போகிறேன்."

”அந்தப் பாலை நிலத்தைக் கடந்தா செல்லவேண்டும்?” என்று தோழி கேட்டாள்.

"ஆம்.”

"நீரும் நிழலும் அற்ற பாலைவனத்தில் எப்படிப் போவது? உணவும் புனலும் தங்க நிழலும் இல்லாமல் சுடுகாட்டைப்போல விரிந்து கிடக்கும் என்று சொல்வார்களே! அதன் வழியாகப் போவது அரிதல்லவா?”

"அது செல்வதற்கு அரிய வழிதான். ஆனலும் வேற்று நாட்டுக்குப் போவதற்கு அந்த ஆரிடை (அரியவழி)யைதி தவிர வேறு புகல் இல்லை. வாழ்க்கையில் தனியின்பத்தைப் பெறுவார் யாரும் இல்லை. இன்ப துன்பங்கள் மாறி மாறித் தான் வரும். வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருளை ஈட்ட வேண்டுமானால் அதற்கு முன் இந்த அரிய பாலை நில வழியைக் கடந்துதான் செல்லவேண்டும். பின்னாலே வரும் இன்பத்தை எண்ணி முன்னலே எதிர்ப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டால்தான் செய்யும் செயல் நிறைவேறும்."

தோழி சிறிது சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். 'உணவு கிடைக்காத அந்த வழியில் எப்படிப் போவது?" என்று கேட்டாள்.

"உணவு கிடைக்காது என்று சொல்வதற்கில்லை. நாம் நாள்தோறும் உண்ணும் அறுசுவை உண்டி அங்கே கிடைக்காது என்பது உண்மைதான். ஆனலும் அங்கேயும் இயற்கை வழங்கும் உணவு ஒன்று உண்டு.”

"இயற்கை தரும் உணவு என்ருல் எனக்கு விளங்க வில்லையே! “

பாலை நிலத்தில் அங்கங்கே சில இடங்கள் பசிய நிலமாக இருக்கும். பாலை நிலத்தை அடுத்த வேற்று நாட்டு நிலப்பரப்பு வேறு இருக்கிறது. அங்கே விளாமரங்கள் இருக்கின்றன. எவ்வளவோ காலமாக வளர்ந்த மரங்கள் அவை. வேர் ஆழமாகச் சென்றிருக்கும். பார் பகும்படி கீழ் இறங்கின வேரையுடைய மரங்கள் அவை. நீண்டு உயர்ந்த கிளைகளை உடையவை"

”அப்படியா! அங்கே மரங்களும் உண்டென்று சொல் லுங்கள்.”

”ஆம், விழுமிய கொம்புகளையுடைய விளாமரங்கள் இருக்கும்; மிக உயரமாக வளர்ந்தவை. அவற்றின் அடி மரம் பொரிந்து சுரசுரப்பாக உடும்பின் தோல்போல இருக்கும். தூரத்திலிருந்து பார்த்தால், உடும்புகள் ஒட் டிக்கொண்டாற்போல அந்த மரம் தோற்றம் அளிக்கும்.”

”அதெல்லாம் சரி; வேர் இருக்கும், கொம்பிருக்கும், மரம் இருக்கும் என்று சொல்கிறீர்களே! அவைகளெல்லாம் இருந்து என்ன பயன். பழம் உண்டா?”
*மரத்திலிருந்து பழங்கள் தாமே காம்பினின்றும் இற்று விழுந்து கிடக்கும். கீழே பச்சைப் பசேலென்று படர்ந்து பரவியிருக்கும் பசிய பயிரின் மேல் உதிர்ந்து அந்த விளாம்-பழங்கள் பந்துகளைப்போலத் தோற்றம் அளிக்கும். அழகான பச்சைக் கம்பலத்தைப் பரப்பி மகளிர் பந்தாடுகிறார்கள்; பிறகு விளையாட்டெல்லாம் ஒழிந்தும் பந்துகளை அப்படி அப்படியே போட்டுவிட்டுப் போனால் எப்படி இருக்கும்? அந்த மாதிரி, கம்பலத்தைப் போன்ற பைம்பயிரின் மேல் விழுந்த விளாம்பழங்கள் இருக்கும். அங்கே இருப்பவர்களுக்கும் வழி நடப்பவர்களுக்கும் அந்த வெள்ளிலே (விளாம்பழம்) உணவாக உதவும், அத் தகைய வழியிலேதான் நான் போகப் போகிறேன்."

”அப்படியா போகும் வழியில் பைம்பயிரும் விழுக் கோடுடைய நெடிய விளாமரமும் ஆட்டு ஒழிந்த பந்து போல வீழ்ந்த வெள்ளிலும் இருக்குமானால், அச்சமின்றிச் செல்லலாமே. அதோடு, வேற்று நாட்டுக்குச் சென்றால் பொருள் வேறு கிடைக்கும்” என்று தோழி கூறித் தலைவனை வாழ்த்தினாள்.

தலைவன் தன்னுடைய சிக்கலான நிலையில் ஒர் அரிய உதவி கிடைத்ததே என்று எண்ணி ஆறுதல் பெற்றான். செல்வதற்கரிய வழியிலே விளாம்பழம் கிடைத்தது போல இருந்தது அது.

மனத்துக்குத் துன்பத்தை அளிக்கும் செய்தியைத் தலைவிக்கு எப்படித் தெரிவிப்பது என்ற யோசனை இப்போது தோழிக்கு வந்துவிட்டது. தலைவியின் உள்ளம் அறிந்தவளாகையால் எப்படியாவது மெல்லச் சொல்லி விடலாம் என்று துணிந்தாள். என்ன தந்திரமாகச் சொன்னாலும் தலைவி வருந்துவாள், அவள் முகம் வாடும் என்று நினைத்தாள். “எப்படி அவர் போவதற்கு உடம் பட்டாய்?” என்றுகூட அவள் கேட்பாளோ என்ற ஐயம் வேறு எழுந்தது. ‘எப்படியானாலும் அவளுக்குச் சொல்லி விட வேண்டியதுதான்’ என்று முடிவு கட்டினாள். மெல்லச் சொல்லிவிட்டாள். ஆனால் தலைவி என்ன செய்தாள், தெரியுமா? அதுதான் ஆச்சரியம்!

தலைவன் பிரியப் போகிறான் என்பதை அவள் முன்பே குறிப்பாக உணர்ந்திருந்தாள். ஊருக்குப் போகிறவர்கள் குழந்தைக்கு இனிய பண்டங்களைக் கொடுத்துப் போக்குக் காட்டுவது போலச் சில நாட்களாகத் தன் காதலன் வழக்கத்தையும் விட அதிகமாக அருமை பாராட்டி வருவதை அவள் கவனித்தாள். இல்லறத்தின் பெருமையையும், பொருளின் இன்றியமையாத் தன்மையையும், ஆடவர்களின் கடமையையும் அவன் இப்போதெல்லாம் எடுத்துக் கூறுவதை அவள் கேட்டாள். காரணம் இல்லா மல் அவற்றை அவன் எடுத்துச் சொல்வானா? அவன் தான் பிரியப் போவதை முன் கூட்டியே அவளுக்குக் குறிப்பாகப் புலப்படுத்தும் செயல்கள் அவை. அதனால் தலைவிக்கு அவன் பொருளிட்டப் பிரியப் போகிறான் என்பது தெரியும்; அந்தப் பிரிவை ஏற்பதற்கு ஆயத்தமாகவே இருந்தாள்.

இப்போது தோழி மிகவும் தியங்கித் தியங்கிச் செய்தியைச் சொன்னாள், விளாம்பழம் உணவாகக் கிடைக்கும் அருவழியிலே போகப் போவதை உரைத்தாள். மிகவும் நிதானமாக, பொறுமையாகத் தலைவி அவள் சொன்ன வற்றைக் கேட்டாள்.

"நல்ல காரியம் செய்தாய்!" என்று தலைவி கூறிய போது தோழிக்குத் தூக்கி வாரிப்போட்டது. அதை அவள் எதிர்பார்க்கவே இல்லை. முகம் வாடித் துன்புழந்து தன்னைக் கடிவாள் என்று எதிர்பார்த்தாள். ஆளுல் அவளோ, “நன்று செய்தனை” என்றல்லவா சொல்கிறாள்! மேலும் தலைவி பேசுவது காதில் விழுந்தது.

”சேயிழையே!" இப்படித் தலைவி தோழியை விளித்தாள். செம்பொன்னாலாகிய இழைகளை அணிந்தவள் தோழி என்பது இன்றைக்குத்தான அவளுக்குத் தெரியும்? தன் உள்ளத்தில் கோபம் இன்மையைத் தெரிவிப்ப தற்காக அப்படி அருமையாக அழைத்தாள். பிறகு.?

*விளாம்பழத்தை உணவாகப் பெறும் வேற்று நாட்டுக்குச் செல்லும் வழியிலே செல்லுவோம் நாம் என்று அவர் சொன்னார் என்றாய்.”

தலைவி தோழி சொன்னதை அரைகுறையாகக் கேட்க வில்லை; நன்றாகக் கேட்டிருக்கிறாள், உணர்ந்திருக்கிறாள். அவள் பேச்சே அதைத் தெரிவிக்கிறது.

*அப்படி அவர் சொல்ல, சேயிழையே, நீ அது நல்ல காரியம் என்று விருப்பத்தோடு உடம்பட்டாயே! நீயும் நல்ல காரியத்தையே செய்தாய்!"

தோழிக்கு வியப்பின்மேல் வியப்பு உண்டாகிவிட்டது, ’அவர் பிரிய எண்ணுவது தவறு; அவர் பிரிந்து செல்லுவதற்குத் துணையாக நின்றது அதைவிடத் தவறு’ என்று சொல்வாளோ என்ற அச்சம் அவளுக்கு இருந்தது. தலைவி சொல்வது அதற்கு நேர்மாருக இருக்கிறது. ’லரி போவதும் நல்லது; அதற்கு நீ உடம்பட்டதும் நல்லது?’ என்றல்லவா சொல்கிறாள்?

அவர் போவது நல்லதா?’ என்று தோழி கேட்டாள்.

ஆம், ஆடவர்களுக்கு அது நல்லது. சோம்பிக் கிடந்து, பெரியவர்கள் வைத்த பொருளை அழித்து வாழ்வது வாழ்வு அன்று. பணம் ஈட்டவேண்டுமென்று மனத்திலே நினைத்தால் போதாது. அதைச் செயலிலே கொண்டுவர வேண்டும். ஆகவே அவர்கள் தூங்கிக் கிடக்க மாட்டார்கள். பொருள் ஈட்டுவதற்காகச் செல்வார்கள். திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவார்கள். இருந்த இடத்திலே பொருள் நம்மைத் தேடி வந்து குவியாது. போய்த்தான் தேடவேண்டும். வீட்டை விட்டு அகலாமல் இருந்தால் பொருளை எப்படிச் சேர்க்க முடியும்? ஆதலின் செயல்படும் மனத்தினராகிச் செய் பொருளுக்காக வீட்டைவிட்டு அகல்வார்கள். அவர்களே ஆண்மை உடையவர்கள்; ஆள்வினையிற் சிறந்தவர்கள், உத்தமமான ஆடவர்கள். அப்படி அகல்வது பொருளிட்டுவதற்குரிய இயல்புதான். அது அதன் பண்பே."

தோழிக்கு, ’அது அதன் பண்பே* என்ற முடிவு காதில் தண்மையாக விழுந்தது. 'தலைவியினுடைய அறிவுதான் எவ்வளவு சிறப்பானது!’ என்று வியந்து, செயல் மறந்து நின்றாள் அவள்.

சேயிழை! சேறும் என்று சொல்ல, புரிந்தோய்: செய்தனை; ஆடவர் அகல்வர்; அது பண்பு என்று கூட்டுக.

பார் பக-பூமி பிளக்க; வீழ்ந்த – இறங்கிய; விழுக் கோடு - உயர்வையுடைய கிளை; அடைந்தன்ன-பொருந் தினற் போன்ற; பொரி-பொரிதலையுடைய; ஆட்டு ஒழி பந்தின்-விளையாட்டினின்றும் ஒழிந்த பந்துகளைப் போல; கோட்டு மூக்கு இறுபு-கிளையிலிருந்தும் காம்பு இற்று; கம்பலத்தன்ன-கம்பளத்தைப் போன்ற; பைம்பயிர்-பசிய பயிரிலே; தாஅம்-விழுந்து கிடக்கும்; வெள்ளில்-விளாம் பழம்; வல்சி-உணவு; ஆர் இடை-அரு இடை, கடப்பதற்கரிய இடைவழியிலே; சேறும்-செல்வோம்; சே இழைசெம்பொன்னாலான அணிகளை அணிந்தோய். புரிந்தோய் - விரும்பினாய், செயல்படும் மனத்தர்-நினைத்ததைச் செயலாகச் செய்யும் கருத்துடையவர். ]

துறை : பொருட் பிரிவுக்கு உடன்பட்ட தோழியைத் தலைவி உவந்து கூறியது.

”பொருள் ஈட்ட என் காதலியைப் பிரிந்துசெல்வேன். என்று தலைவன்கூற, அந்தப் பிரிவுக்கு இணங்கிய தோழியினிடம் தலைவி அவள் செய்த செயலை அறிந்து மகிழ்ந்து சொல்லியது" என்பது இதன் பொருள்.

இந்தப் பாடலைப் பாடியவர் பெயர் தெரியவில்லை.

இது நற்றிணையின் 24-ஆம் பாட்டு
-------------------

8. எப்படிப் போவாள்!

பிறர் அறியாமல் அன்பு செய்த காதலனும் காதலியும் மணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணினார்கள். காதலன் பரிசம் போட்டுக் கல்யாணம் செய்வதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்யத் தொடங்கினான். ஆனால் காதலியின் தாய் தந்தையருக்கு அவளை வேறு யாருக்கோ மணம் செய்து கொடுக்க வேண்டுமென்ற விருப்பம் இருந்தது. காதலியின் உயிர்த்தோழி இதை உணர்ந்தாள். குறிப்பாகத் தலைவிக்கு இன்ன தலைவன்மேல் அன்பு அமைந்திருக்கிறது என்பதைப் புலப்படுத்தினாள். அவர்கள் அந்தக் குறிப்பை உணரவே இல்லை.

ஒரு தலைவனிடத்தில் தன் நெஞ்சைப் பறிகொடுத்த தலைவி வேறு ஒருவனை மனத்தாலும் நினைப்பாளா? கற்பிலே சிறந்து நிற்பவள் அவள். ஆகவே காதலர் இருவரும் என்ன செய்யலாம் என்று ஆராய்ந்தார்கள், உயிரைவிட நாணம் சிறந்தது. அதைவிடக் கற்புச் சிறந்தது. ஊரார் பழி கூற, தன் நாணம் அழிய தலைனோடு புறப்பட்டு விடுவதென்று தலைவி தீர்மானித்தாள். தலைவன் சொன்னதுதான் அது. அதற்கு அவள் இணங்கினாள்; அவள் தோழியும் இணங்கினாள்.

குறிப்பிட்ட நாளில் தலைவன் தலைவியை அழைத்துக் கொண்டு போய்விட்டான். அவள் போன பிறகுதான் தம்முடைய அறியாமையை நினைந்து வீட்டில் உள்ளவர்கள் வருந்தினார்கள். தலைவியைப் பெற்ற நற்றாய் நைந்தாள்; அவளை ஊட்டியும் சீராட்டியும் தாலாட்டியும் வளர்த்த செவிலித் தாயும் புலம்பினாள். வீடே அலமந்து நின்றது. தலைவியின் இளமையையும், மெல்லிய இயல்பையும் ஒருத்தி சொல்லி வருந்தினாள். அவள் பேதைமையை யும் வெள்ளை உள்ளத்தையும் ஒருத்தி சொல்லி அரற்றினாள்.

அது நல்ல வேனிற்காலம். குறிஞ்சி நிலத்தில் இருந்தது அவர்களுடைய ஊர். அழகான மலைப் பக்கம். அவர்கள் ஊரை அடுத்து நெடுந் தூரத்துக்கு அப்பால், குறிஞ்சி நிலமாக இருந்த பகுதி இப்போது பாலை நிலமாகி விட்டது. நல்ல மழை பொழிகிற வரைக்கும் அங்கே வெப்பம் தாங்க முடியாது. காடும் காட்டைச் சார்ந்த இடமும் முல்லை என்று சொல்வார்கள். மலையும் மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம் ஆகும். வேனிற் காலத்தில் அதிக வெப்பத்தில் முல்லை நிலத்தில் சில பகுதியும் குறிஞ்சி நிலத்திற் சில பகுதியும் தம்முடைய வளப்பத்தை இழந்து நிற்கும்; பாலை நிலமாக மாறும். தமிழ் நாட்டில் இயற்கைப் பாலைவனம் இல்லை. வேனிலின் கொடுமையால் சிலகாலம் பசுமை இழந்து வளமிழந்து நிற்கும் இடங்கள் மரத்திரம் உண்டு. சில காலங்களில் மாத்திரம் பாலை நிலம் உண்டாவதால் தமிழ்நாட்டில் நிரந்தரமாக அதற்கு இல்லை. குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம் நெய்தல் என்று ஐந்து வகை நிலங்கள் இருந்தாலும், இயற்கையில் பாலை அமையாமையால் பூமியை நானிலம் என்று சொல்வார்கள். நான்கு வகைப்பட்ட நிலம் என்ற பொருளில் அவ்வாறு சொல்வது வழக்கம், பாலை நிலமும் இயற்கையாக இருந்தால் ஐந்நிலம் என்று சொல்லலாம். அது இல்லாமையால் நானிலம் என்று சொல்வதுதான் பொருத்தமானது.

குறிஞ்சி நிலம் வேனிற்காலத்தில் பாலையாக மாறி நின்றால் முன்பு அங்கே வாழ்ந்திருந்த விலங்குகள் தம் திறமெல்லாம் குறைந்து நிற்கும். குறிஞ்சி திரிந்த பாலை நிலம் மேலே சொன்ன காதலர் இருவரும் போகும் வழியில் இருந்தது. அதைக் கடந்துதான் அவர்கள் போக வேண்டும்.

இந்த விஷயத்தைத் தலைவியின் தாய் நினைத்துப் பார்த்தாள். ‘அந்தச் சிறிய பெண், நேற்றுப் பிறந்த பெண், கொடி போலத் துவளும் பெண் அவ்வளவு கடுமையான பாலை நிலத்தின் வழியாக எப்படிப் போவாள்' என்ற நினைவு தாய்க்கு உண்டாயிற்று. பாவம் தம் மகள் பெண்; ஆண்மையின் துணையை அவாவும் பருவம் அவளுக்கு உண்டு' என்பதை அவள் தாய்மறந்துவிட்டாள். எத்தனை காலமானலும் அவள் குழந்தையாக, தன் கண்காணிப்பில் வளரும் கன்றாகவே இருப்பாள் என்பது அவள் எண்ணம். என்ன பேதைமை!

அந்தத் தாய் பாலை நிலத்தின் கொடுமைகளை நாலு பேர் சொல்லக் கேட்டிருக்கிறாள், அவற்றையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கிறாள். அவள் வயிறு பகீரென்கிறது. தன் மகளின் இயல்பை நினைக்கிறாள் "உலகம் அறியாத பெண் ஆயிற்றே! அவளா இப்படித் துணிந்துபோனள்?” ”அம்மா! அம்மா!" என்று அறுபது நாழிகையும் ஒட்டிக் கொண்டு வாழ்கிறவள், ஒன்றும் அறியாத பெண்- அவளா பிரிந்து போனாள்? நம்பத் தக்கதாக இல்லையே! ஆனால் அந்தப் பெண் பிரிந்து போனது என்னவோ உண்மைதான்.

பாலை நிலத்தில் அவள் போவதாகக் கற்பனை செய்து பார்க்கக்கூடத் தாய் நடுங்கினாள். வேனிற்காலம் மற்ற இடங்களிலெல்லாம் வரும்; சில காலம் இருக்கும்; போய் விடும். பாலை நிலத்தில் ஆண்டு முழுவதுமே வேனிற் காலமாசத்தான் இருக்கும் போல் தோன்றுகிறது. பல இடங்களுக்குப் போய் அங்கங்கே உள்ள மக்களைப் பார்க்கும் அரசன் நிலையாக இராசதானி நகரத்திலே இருப்பான். அப்படி இந்த வேனில் என்ற அரசனுக்கு இராசதானியே பாலை நிலந்தானே? அங்கே வேனில் நிலையாக நிற்குமென்று சொல்கிறார்களே. அப்படி நின்ற வேனிலில் என்ன வளப்பம் இருக்கும்? முன்பு இருந்த புல் பூண்டுகளெல்லாம் எரிந்து மயானம் போல அல்லவா ஆகிவிடும்? குறிஞ்சி நிலப் பகுதியாக இருந்த இடம் அது அப்போதெல்லாம் காந்தள் " படர்ந்து குலைகுலையாகப் பூத்திருக்கும். நிலையாக நின்ற வேனிற் காலத்தில் காந்தள் வளர்வதாவது! அது காய்ந்து போயிருக்குமே! தழைத்த காந்தளைக் காண அங்கே வழியில்லை; உலர்ந்த காந்தளைக் காணலாம்.

காந்தள் உலர்ந்தது; மரங்கள் வாடிக் கருகின; கதிரவன் அழலையே வாரிச் சொரிகிறன், அங்கே நிற்க நிழல் ஏது? எங்கே பார்த்தாலும் நெருப்புப் போலத் தகிக்கிறது. கண்ணுக்கு எட்டிய தூரம்வரையில் நீண்ட இடம் முழுவதும் அழல் பரவியிருக்கிறது. இந்த அழல் அவிர்கின்ற நீள் இடையிலே மனிதன் தங்க நிழல் கிடைக்காது என்பது கிடக்கட்டும். மலைச் சாரலிலும் அதை யடுத்த காடுகளிலும் வாழ்ந்திருந்த விலங்குகள் அங்கே இப்போது எப்படி வாழ்கின்றன?

பாலை நிலத்தைப் பற்றிக் கதை கதையாகப் போய் வந்தவர்களெல்லாம் சொல்லிக் கேட்டவள் அன்னை. ஆகவே அவர்கள் கூறிய செய்திகளெல்லாம் இப்போது நினைவுக்கு வருகின்றன. நேரே பாலை நிலத்துக்குப் போய்ப் பாராவிட்டாலும், காதினாலே கேட்ட செய்திகளெல்லாம் இப்போது அவளுடைய அகக் கண்ணிலே ஒரு பெரிய பாலை நிலத்தைப் படைத்து நிறுத்தின.

பாலை நிலத்தில் வேனில் நிலையாக நிற்கிறது. காந்தள் உலர்ந்து போயின. எங்கே பார்த்தாலும் அழலே அவிர் கின்ற நீண்ட இடம் அது. வளம் இருந்த காலத்தில் விலங்கினங்கள் பல வாழ்ந்திருந்தன. அவற்றில் பல இப் போது மங்கி மடிந்தன. வேனிலின் கொடுமைதான் காரணம். சில சில, உடம்பில் உயிரைத் தாங்கிக் கொண்டு பிழைத்திருக்கின்றன.

இரண்டு புலிகள்: ஒன்று பெண்; ஒன்று ஆண்; நல்ல காலத்தில் அந்த இடத்தில் இன்புற்று வாழ்ந்தவை அவை, பாலை நிலமான பிறகும் அவை அங்கேயே இருக்கின்றன. பிற வளப்பங்கள் இல்லாமற் போனலும் ஆணும் பெண் ணும் உறவு செய்யும் அன்புக்கு இன்னும் பஞ்சமில்லை. பெண் புலி இப்போது கருவுற்றிருக்கிறது. அதனுடைய வயிற்றிலே குட்டிகள் வளர்ந்தன. கருவுயிர்க்கும் காலம் வந்தது. இயற்கை தன் வேலையை யாருக் காக நிறுத்தப் போகிறது? குட்டிகளைப் பெண் புலி ஈன்று விட்டது. குட்டிகளைக் காவல் காத்துக்கொண்டு நின்றது. அதன் குட்டிகளுக்கும் அதற்கும் இரை வேண்டுமே இரையைத் தேடி நல்ல இடத்துக்குப் போகலாமென்ருல் அதனால் முடியவில்லை. ஆண் புலி அருகில் இருந்தது கொஞ்ச தூரம் புலிகளும் குட்டிகளும் சென்றன. பெண்புலிக்குக் காலோ சோர்கிறது. கால் மடிந்த அந்தப் பெண் புலி தங்குவதற்கு நிழலே இல்லை. நிழலான இடம் பெறாமல், கால் மடிந்து வாடிய பெண் புவிக்கு, ஈன்று நின்ற பிணவுப் புவிக்கு, பசி மிகுதியாகி விட்டது, பசியினால் வேதனையுற்றுத் துள்ளியது. அதைப் பார்க்கச் சகிக்கவில்லை ஆண் புலிக்கு, எப்படியாவது அதற்கு இரையைத் தேடி அளித்து விட்டுத்தான் வேறு காரியம் பார்ப்பது என்ற முடிவுக்கு வந்தது ஆண்.

அதற்கு அங்கே என்ன இரை கிடைக்கப் போகிறது? மானா, மரையா? நரிகூட இல்லாமல் உயிரற்ற நிலப்பரப் பாக அல்லவா ஆகிவிட்டது அது? பகலின் வெம்மை சிறிது அகன்றது. மாலை மெல்லத் தலையை நீட்டியது. பெண் புலிக்குப் பசித் தழல் அதிகமாகிவிட்டது. புறத்தே உள்ள அழல் குறைந்தது; ஆனல் அதன் வயிற்றிலே பசி யழல் மூண்டு கொழுந்து விட்டது. இப்போது இருட்டி விட்டது; பொருள்கள் புலப்படாமல் மயக்கத்தை உண் டாக்கும் மாலை வந்தது. ஆண் புலி இரை தேடப் புறப் பட்டது. யாராவது அந்தப் பக்கத்தில் உள்ள கரடுமுரடான வழியிலே சொல்வார்-களென்று எண்ணி அந்த நெறிக்கு அருகே பதுங்கியிருந்தது. வெயிலின் கொடுமை தாங்காமல் எங்கேனும் தங்கிவிட்டு வெயில் தாழ்ந்தவுடன் நடக்கத் தொடங்கிய பிரயாணிகள் அந்த நேரத்தில் அங்கே வரவுங் கூடும். யாராவது அப்படி அவ்வழியே வந்தால் அவர்களை அடித்துப் பசி கூர்ந்த பெண் புலிக்கு அளிக்கலாம் என்று ஆண்புலி பதுங்கியிருந்தது.

அந்த வழி குறுகிய சிறு நெறி; யாரோ சிலபேர் நடந்து சுவடுபட்ட ஒற்றையடிப் பாதை, அதை வழியென்று சொல்வதே தவறு. சோலையோ சாலையோ ஒன்றும் இல் லாத அந்தச் சுடுகாட்டில் எப்போதோ என்றோ ஒருவர் இருவர் போவார்கள். அவர்கள் அடிச்சுவடுபட்டுத் தட மான வழி அது; பொலிவற்ற புன்மையான அதர்; சிறிய தெறி. அந்த வழிக்கு அருகில்தான் புலி பதுங்கியிருந்தது.
# #

தாயின் உள்ளத்தே நின்ற பாலையின் கோலம் இது. "புலி வழங்குவோரைச் செகுக்கும் பொருட்டுப் பார்த்து உறையும் சிறு நெறியிலே இந்தப் பெண் எப்படிப் போவாள்! அதற்கு ஏற்ற மன வன்மையும் உடம்பு வன்மையும் அவளுக்கு ஏது?” என்று நினைக்கும்போதே அவள் தலை சுழன்றது.

ஒரு நாள் நடந்த நிகழ்ச்சி அப்போது தாய்க்கு நினைவுக்கு வந்தது. தலைவி எப்போதும் தாயின் பக்கத்திலே படுத்துத் துயில்பவள்; அவளுடைய அணைப்பிலே பயமின்றித் துயில்பவள். அன்று அவளை இறுக்கிக் கட்டிக் கொண்டு படுத்திருந்தாள் தாய். அப்போது தன் கையைக் கொஞ்சம் தளர்த்தினாள். தலைவி பருவம் வந்த பெண் அல்லவா? அவள் நகில்கள் பருத்திருந்தன; உயர்ந்திருந்தன. தொய்யில் முதலியவற்றல் அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். அந்த இள நகில்கள் இறுக அணைப்பதனால் நோவை அடையும் என்று தாய் நினைத்தாள். அதனால் கையைச் சிறிதே நெகிழ்த்தாள்.

அவள் தன் மகளைத் தனியே விட்டுச் செல்லவில்லை; அவள் படுக்கையை விட்டுத் தனியே வேறு படுக்கையில் படுக்கவும் இல்லை; திரும்பியும் படுக்கவில்லை; கையைக்கூட எடுக்கவில்லை. இறுக்கி அணைத்த கையைக் கொஞ்சம் தளர்த்தினள். "இந்த இளைய பெண்ணின் மார்பை நம்முடைய முரட்டுக் கை உறுத்துமே!’ என்ற நினைவினால் நெகிழ்த்தாள். அவ்வளவுதான் அதற்கு அவள் எவ்வளவு அமர்க் களப்படுத்தி விட்டாள்!

அவள் பெரிய கண்களில் நீர் துளித்தது; அழத் தொடங்கி விட்டாள். ஒன்றோடு ஒன்று மாறுபட்டு அமர் புரியும் பெரிய குளிர்ச்சியான கண்கள்- பேரமர் மழைக்கண் -ஈரமடையும்படி கலுழிந்தாள். பெருமூச்சு விட்டாள். அதில்தான் எத்தனை வெப்பம்! அவள் எத்தனை மென்மை யானவள்! அவள் அழுதபோது, ”அடி பைத்தியமே நான் எங்கே போய்விட்டேன்? உன் பக்கத்திலேதான் இருக்கிறேன்” என்று தாய் சொல்வி ஆறுதல் செய்தாள். ”பின்னே ஏன் இறுக்கிக் கட்டிக் கொள்ளவில்லை?" என்று மகள் விம்மினாள். தாய் அவள் தலையைக் கோதிச் சமாதானம் செய்தாள். கன்னங் கறேலென்று நெய்ப்போடு கூடிய அழகான அவள் கூந்தல் தாயின் நினைவுக்கு வந்தது. மிக மிக அறியாப் பெண், மடப்பத்திலே பெரியவள்; அவள் அறியாத் தன்மை எவ்வளவு பெரியது!

அப்படி இருந்தவள் எப்படிப் பிரிந்து சென்றாள் எவ்வாறு அவளுக்குத் துணிவு வந்தது? மையீர் ஓதியை உடைய பெருமடத் தகையினளாகிய அவள் கொடிய பாலை நிலத்திலே போக எப்படி வல்லவளாவாள்?

தாய் இப்படியெல்லாம் நினைத்து ஏங்கினாள். பாலை நிலமாயினும் அங்கே இன்பம் தரும் காதலன் உடன் செல்கிறான் என்பதை அவள் நினைக்கவில்லை. புலிக்கும் தன் மனைவியைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும்போது அறிவுடைய காதலன் ஒருவன் பின் சென்ற அக்காதலியை அவன் பாதுகாத்து நலம் செய்வான் என்பதை நினைக்கும் அளவுக்கு அவள் உள்ளம் விரியவில்லை. காந்தள் தீந்தாலும், அழல் அவிர்ந்தாலும், புலி கொலை சூழ்ந்தாலும் இத்தனைக்கும் இடையிலே அந்தப் பாலை நிலத்திலும் ஆண் பெண் உறவிலே தோற்றும் அற்புதமான அன்பு ஒளி விடுவதை அவள் தெரிந்து கொள்ளவில்லை. ஈன்று சோர்ந்திருந்த பெண் புலிக்கு இரை தேடி நிற்கும் ஆண் புலியின் உள்ளத்திலே அந்த அன்பு சுடர்வதை அவள் நினைத்தாளா? புலியின் கொடுமையையே நினைத்தாள். அதன் அன்பை நினைக்க வில்லை. வழியின் சிறுமையையே நினைத்தாள் துணையின் பெருமையைச் சிந்திக்க வில்லை. மகள் உடம்பின் மென்மையையே நினைவு கூர்ந்தாள். அவள் காதலின் உரத்தை உணரவில்லை. தன் அணைப்புத் தளர்ந்ததற்கு மகள் வருந்தியதை எண்ணி ஏங்கினாள். தன் தலைவனது இன்ப அணைப்பிலே இன்னல்களை மறந்து செல்வாள் என்பது அவள் பேதை நெஞ்சிற் புலப்படவில்லை! ஆகவே அவள் வருந்திப் புலம்புகிறாள்.

[ நிலைபெற்று நின்றுவிட்டாற் போல் அமைந்த கோடையையும், வாடிப்போன காந்தட் செடியையும் உடைய, வெப்பம் பரவிய நீண்ட இடமாகிய பாலை நிலத்தில், தங்குவதற்கு நிழலுள்ள இடத்தைப் பெருமல் குட்டிகளை ஈன்று நடக்க முடியாமல் கால் சோர்ந்துபோன பெண் புலி பசி மிகுந்திருக்க, மயக்கத்தைச் செய்யும் மாலைக் காலத்தில் வழிப்போவோரைக் கொல்லும் பொருட்டு ஆண் புலி பார்த்துத் தங்கும் பொலிவற்ற வழியையுடைய சிறிய பாதையில் போவதற்கு எப்படி வன்மை-யுடையவளாவாள்? -நான், அலங்காரஞ் செய்து உயர்ந்த தன் இளைய நகில் துன்புறுமோ என்று எண்ணி என் கையைத் தளர்த்திய அந்த அளவுக்கே, தான் தன்னுடைய பெரிய போரிடுகின்ற குளிர்ச்சியையுடைய கண்கள் நீரால் ஈரமுடையனவாய் அழ, வெம்மையாகப் பெருமூச்சு விடும், மென்மையையும் கருமையான நெய்ப் பையுடைய கூந்தலையும், பெரிய மடப்பமாகிய தன்மையையும் உடைய என் மகள்.

யான், என நெகிழ்ந்த அனைத்திற்கு, தான் கண் கலுழ, உயிர்க்கும் சாயல் மடத்தகை, புவி செகீஇய உறையும் நெறி யாங்கு வல்லுநள்என்று கூட்டுக.

உலந்த – பட்டுப்போன; காந்தள் - வேலிக்காலில் வளரும் செடி, கண்வலிப் பூ என்று இதன் பூவைச் சொல்வார்கள்; அழல்-வெப்பம்; இடை-இடம், மடிந்த
சோர்ந்த; பிணவு-பெண்; இங்கே பெண்புலி கூர்ந்தென மிக; மான்ற - மயங்கிய. வழங்குநர் – நடப்பவர்களை; செகீஇய-கொல்லும் பொருட்டு; புல் அதர்-புன்மையான வழி; நெறி-பாதை; யாங்கு – எப்படி; வல்லுநள்-சக்தி யுடையவள், வனைந்து-அலங்காரஞ்செய்து, அனைத்திற்கு - அந்த அளவுக்கு; அமர்-போரிடுவதுபோல் உள்ள. மழை –குளிர்ச்சி; ஈரிய- ஈரம் உள்ளனவாகி; கலுழ-அழ, வெய்ய-வெப்பமாக, சாயல்-மென்மை, மை-கருமை. ஈர் ஒதி-ஈரமான (நெய்ப்பையுடைய) கூந்தல், மடம் - பிள்ளைமை; இளமை, தகை-தன்மையை உடையவள்.

துறை : இது, மகட்போக்கிய தாய் சொல்லியது.

'தன்னுடைய மகள் காதலனுடன் ஒருவரும் அறியாமல் வீட்டை விட்டுப் போய்விட அவளைப் பிரிந்து நின்ற தாய் சொல்லியது” என்பது இதன் பொருள்.

இதனைப் பாடியவர் பூதனுர் என்னும் புலவர்.
இது நற்றினையில் 29-ஆவது பாட்டு.
------------------

9. தோழியின் சினம்

இயற்கைத் தேவியின் எழில் நலம் குலுங்கும் மலைப் பகுதி அது; குறிஞ்சி நிலம். அந்த நிலத்து மடமகளும் வேறு ஒரு மலைக்குத் தலைவனாகிய மைந்தன் ஒருவனும் பிறவிதோறும் தொடர்ந்து வரும் ஊழின் வன்மையால் சந்தித்தனர். அவர்களிடையே காதல் முகிழ்த்தது; அளவளாவினர். எல்லா வகையாலும் ஒப்புடைய அவர்களுடைய களவுக் காதல் வளர ஒரு கொள் கொம்பு வேண்டியிருந்தது. காதலியின் உயிர்த் தோழி ஒருத்தி இருந்தாள்; தலைவியோடு பழகி விளையாடும் தோழிமார் பலர் இருந்தாலும் அவளுடைய உள்ளத்தைப்போல நெருங்கி ஒன்றுபட்டுப் பழகும் நிலை அந்தத் தோழிக்குத் தான் இருந்தது. இதைத் தலைவன் குறிப்பாகத் தெரிந்து கொண்டான். இனிமேல் அவள் துணையைக் கொண்டு அடிக்கடி தன் காதலியைச் சந்திக்கலாம் என்று எண்ணி அவளைத் தனியே அணுகினான்.

மிகவும் பணிவுடையவனாகித் தனக்குத் தலைவியின் பால் உள்ள காதலைப் புலப்படுத்தினன். தோழி முதலில் அவன் வார்த்தைகளைக் கேளாமற் புறக் கணித்தும், அப்பால் பல காரணம் கூறி அவனை மறுத்தும் வந்தாள். அவன் மேலும் மேலும் இரந்து நிற்கவே, அவனுடைய உண்மையான காதலையும், அதன் வலிமையையும் உணர்ந்து கொண்டாள். அன்றியும், தலைவன் பேச்சிலிருந்து அவனுக்கும் தலைவிக்கும் முன்பே பழக்கம் இருப்பதும் அவளுக்குத் தெரிய வந்தது. இறுதியில், தலைவியின் அன்பை அவன் பெறும்படி செய்வதாகக் கூறி விட்டுத் தலைவியை அடைந்தாள்.

தோழி : நினைக்க நினைக்கப் பரிதாபமாக இருக்கிறது!

தலைவி : என்ன தோழி? எதை இப்பொழுது நினைத்தாய்? எது பரிதாபமாக இருக்கிறது?

தோழி : எதற்கும் அஞ்சாத நெஞ்சுடைய வீரனென்று அவனைப் பார்த்தால் தெரிகிறது. மலையைப் போன்ற தோள்கள்; யானைத் துதிக்கையைப் போன்ற கைகள்.

தலைவி : இதோ பார். இந்தத் தேனிறால் எவ்வளவு பெரிதாக இருக்கிறது! நெடுநாட்களாக மலரிலிருந்து ஈட்டிய தேனை வண்டுகள் சேமித்து வைத்திருக்கின்றன.

தலைவி தான் கூறுவதைக் காதில் வாங்கவில்லை என்பதைத் தோழி உணர்ந்தாள். தலைவிக்கோ தன் தோழி தன் காதலனைச் சந்தித்திருக்கிறாள் என்று தெரிந்து விட்டது. ஆனாலும் அவனைத் தனக்குத் தெரிந்ததாகவே காட்டிக் கொள்ளக் கூடாது என்று எண்ணினாள். ஆகவே வேறு எதையோ பேசினாள்.

தோழி : அவன் நிலையை உணர உணர என் உள்ளம் இரங்குகிறது. ஒரு களிறு தன் பிடியின் அருகே நின்றது. அதைக் கண்டு பெருமூச்சு விட்டபடியே அவன் நின்றான்.

தலைவி : என்ன தோழி, நம்மோடு தொடர்பில்லாத செய்திகளையெல்லாம் எதற்காக இங்கே சொல்கிறாய்?

தோழி : அவன் உன்னிடத்தில் இணையற்ற காதல் பூண்டிருக்கிறான். நம்மை நயந்து இநதப் பகுதிகளில் சுற்றிக் கொண்டே உலவுகிறான்.

தலைவி : வழியில் போவோரைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டுப் பயன் என்ன? யாரோ ஒருவா எதையோ பார்த்து வருந்தினார் என்று என்னிடம் எதற்காகச் சொல்ல வருகிறாய்?

தலைவி வேண்டுமென்றே தோழியின் வார்த்தைகளைக் கவனிக்காதவளைப்போல் காட்டிக் கொள்கிறாள், முன்பே தலைவனைத் தெரிந்து கொண்டு பழகிய செய்தியை அவளுக்கு மறைக்கிறாள். இதுவரையில் அவள் அப்படி இருந்ததில்லை. எந்தச் செயலையும் தோழியை அறியாமல் செய்த தில்லை. அப்படி இருக்க, இப்பொழுது மாத்திரம் தோழி சொல்லைக் கேட்கவில்லை.

தோழி தலைவிக்குத் தகாத ஒன்றைச் சொல்வாளா? அவளுக்கு எது நல்லது என்று உணர்ந்து சொல்வதோடு, அதை அடைவதற்கும் துணையாக நிறபாளே! உள்ளம் கலந்து பழகிய நட்புடையவர்கள் அவர்கள் இருவரும், அந்த நட்புக் கிடையே இப்போது ஏதாவது வந்து விட்டதா?

ஒருவர் மற்றவரோடு பழகுவதானால், யோசித்துப் பழகவேண்டும். தமக்கு இனியரா, நன்மை செய்பவரா, இடையூறு வந்தால் உதவி செய்பவரா என்று பல வகையில் நாடி நட்புக் கொள்ளவேண்டும், ஏற்ற நண்பர் என்று உறுதி செய்து நட்ட பிறகு, இவரை நம்பலாமா, கூடாதா என்று ஆராய்வது தவறு. நாடி நட்புக்கொள்ள வேண்டும்; நட்ட பிறகு நாடக்கூடாது.

இப்போது தலைவி, தோழி சொல்வதைக் கவனிக்க வில்லை; அவள் சொல்வதை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இதுவரையில் அவர்களிடையே யாதொரு வேற்றுமையும் எழவில்லை. இப்போது தலைவியின் பேச்சில் வேறுபாடு ஒலிக்கிறது ஏதோ தவறான காரியத்தைச் செய்யச் சொல்வதுபோவத் தோழியின் வார்த்தைகளைத் தலைவி கொண்டாளோ! அப்படியானால் இதுகாறும் அவளே உயிர்த் தோழியாக எண்ணி ஒழுகினளே! அது பொய்யா? அல்லது இதுவரையில் தோழியின் இயலை ஆராய்ந்து பார்க்கும் அவசியம் இல்லாயல் இருந்து, இப்போதுதான் வந்திருக்கிறதா? தலைவி முதலில் நண்பு செய்துவிட்டு, இப்பொழுது அந்த நட்புக்குரிய தோழியைப் பற்றி ஆராய, நாட, தொடங்கியிருக்கிறாளா?

தோழியின் உள்ளம் என்ன எல்லாமோ எண்ணியது.

”நான் என்றும் தவறு செய்யவில்லையே! அந்த வீரப் பெருமகனை நானா வரச் சொன்னேன்? அவன் தன் கருத்தைச் சொன்னவுடனே பல்லை இளித்துக் கொண்டு உடனே ஒப்புக் கொண்டேனா? எத்தனை வகையில் அவனைச் சோதனை செய்து பார்த்தேன்! மறுத்தேன்! அவன் எளிதில் விட்டுச் செல்பவனாகத் தோன்றவில்லை. மலை கலங்கினும், கடல் குமுறினும் அவன் காதல் நிலை கலங்காதென்று எனக்கு நன்றாகத் தெரிகிறது. அது மாத்திரம் அன்று. முன்பே இவளைத் தெரிந்து பழகியவன் என்று வேறு தெரிய வந்தது, அதற்குப் பிறகு நான் மறுப்பதில் பயன் என்ன? இவள் அவனிடம் காதல் கொண்டு விட்டா ளென்றே தோன்றுகிறது. அப்படி இருக்க, இப்போது அவன் யார்? ஏன் வருகிறான் என்று ஆராய்ச்சி செய்வதால் வரும் லாபம் என்ன? நட்ட பின்பு நாடும் அறியாமையைச் சேர்ந்ததுதானே இதுவும்?”

தோழியின் உள்ளத்தே சிறிது சினம் பூத்தது! இவ்வளவு காலமும் இல்லாதபடி இன்று பேசுகிறாளே, நம்மிடமே இவளுக்கு ஐயப்பாடு வந்து விட்டதோ!" என்று பொருமினாள். தலைவியைப் பார்த்துப் பேசலானாள்.

தோழி : அவன் யாரோ, எவனே என்று கேட்கிறாய். அவன் மலைநாடன்; குறிஞ்சி நிலத்தவன்; அழகிய மலைக்குத் தலைவன். வளப்பம் நிறைந்து பசுமை படர்ந்த தோற்றத்தோடு ஓங்கி நிற்கும் அந்த மலைப் பக்கங்களைப் பார்த்தாலே, "இப்படித்தான் நீலமேனி நெடியோனாகிய மாயோன் இருப்பானோ!" என்று நினைக்கத் தோன்றும். பெரிய மலைகளின் தாழ்வரையில், மலைச்சாரலில், நின்று பார்த்து அந்த அழகை நுகரவேண்டும். கண்ணபிரானுடைய நீலத் திருமேனியின் நினைவை உண்டாக்கும் மலைப் பக்கத்தே உயரத்திலிருந்து சலசலவென்று வீழும் அருவி உண்டு. நெடுந்தூரத்திலிருந்து பார்த்தால் விளங்கித் தோன்றும் அருவி அது. வயங்கும் (விளங்கும்) அருவி மலையிலிருந்து வீழ்கையில் ஒரே வெள்ளைப் பரப்பாக இருக்கும். ஆகா! கரிய மலையினிடையே அந்த வெள்ளருவி எவ்வளவு அழகாகத் தோன்றும் தெரியுமா? கண்ணன் கரிய மேனியன். அவனுக்கு மூத்தபிரானாகிய பலராமன் வெள்ளை வெளேரென்ற திருமேனியை உடையவன். "நம் தம்பி இங்கே இருக்கிறான்; நாமும் அவனோடு சேர்ந்து வாழலாம்” என்ற எண்ணத்தோடு அவனும் அங்கே வந்து விட்டானே? வயங்குகின்ற வெள்ளிய அருவி பலவேதனை நினைக்கச் செய்கிறது. மலைச்சார்பும் அருவியும் மாயோனையும், வாலியோனாகிய பல தேவனையும் போலத் தோன்றும் அழகிய மலைக்குத் தலைவன் அவன்.

தலைவி : மலையையும் அருவியையும், மாலையும் வாலியோனையும் பற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இப்போது என்ன வந்தது?

தோழி: அதைத்தான் சொல்ல வருகிறேன். அழகிய மலை கிழவோனாகிய அந்த வடிவழகன் இங்கே வந்தா னென்று சொன்னேன். நம்மை விரும்பி வந்து, தன் விருப்பம் நிறைவேறப் பெருமையால் வருந்துகிறான் என்றும் கூறினேன். அவற்றை நீ காதில் வாங்கிக் கொள்ளவில்லை. என் வார்த்தைகளில் உள்ள கருத்தை நீ தெளியவில்லை. இதுவரையில் நீ இப்படி இருந்ததில்லையே!

தலைவி : என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?

தோழி : என் வார்த்தைகளில் உனக்கு நம்பிக்கை இல்லை. நான் சொல்வதைச் சோதித்துப் பார்க்கும் வழக்கத்தை இப்போதுதான் உன்னிடம் காண்கிறேன். அந்த மலைகிழவோன் நிலையை நீயே தெரிந்து கொள். நான் சொல்வதுதான் உனக்குப் பிடிக்க வில்லை. நீயே நேரில் தெரிந்து கொண்டு, உனக்கு நன்மை செய்ய எண்ணியிருக்கும் வேறு தோழியரோடும் கலந்து யோசித்துப்பார், இன்னது செய்வது தான் அறிவுடைமை என்று தேர்ந்து, பிறகு நீ அவளோடு பழகு. எனக்குக் தெரிந்த ஒன்றை மாத்திரம் சொல்ல விரும்புகிறேன். அவன் எளிதிலே மறுப்பதற்குரியவன் அல்லன், ஆழ்ந்த காதலும், தன் காதலை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஏக்கமும் உடையவனக இருக்கிறான். எப்படியோ நீ செளக்கியமாக வாழ வேண்டும். அதுதான் என் விருப்பம். வாழி!

தலைவி : ஏன் இப்படிப் பேசுகிறாய்?

தோழி : எல்லாம் அவ்விடத்துப் பேச்சில் மாறுபாடு தோன்றினதால் தான். பெரியவர்கள் திடீரென்று ஒருவருடன் நண்பர்களாகி விடமாட்டார்கள். பல காலம் ஆராய்ந்து தகுதி நோக்கி நட்புப் பூண்பார்கள். நாடிய பின்பே நண்பு செய்வார்கள், அப்படி இன்றி யோசனையில்லாமல் நட்புக்கொண்டுவிட்டு அப்புறம், ‘நண்பர்கள் நல்லவரா, அவரோடு பழகலாமா, அவர் வார்த்தையைக் கேட்கலாமா? என்று ஆராய்ச்சி செய்ய மாட்டார்கள். நட்ட பிறகு நாடுவது அவர்கள் இயல்பு அல்ல. தம்மோடு ஒட்டி நட்டவர்கள் திறத்தில் பெரியோர்கள் இன்னவாறு நடந்து கொள்வார்கள் என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும், தோழியரோடு பழகினாலும் இந்த நட்பிலக்கணத்தை நன்கு அறிந்து வைத்தல் நலமென்று எனக்குத் தோற்றியது; சொன்னேன். விருப்பம் இருந்தால் ஏற்றுக் கொள். இல்லையானால் உன் விருப்பப்படியே நடந்து கொள். உனக்கு அறிவுரை கூற நான் யார்?

கோபம் கொப்புளிக்கும் இந்தப் பேச்சைத் தலைவி கேட்டாள். தன் பிழையை உணர்ந்தாள். நட்டு நாடும் பேதைமை தன்னிடம் இருக்கக் கூடாது என்பதைத் தெளிந்தாள். அதன் பயன் என்ன? தோழியின் துணை கொண்டு காதலனைச் சந்திக்கும் நிலை அமைந்தது.

தோழி சினந்து கூறும் கூற்ருக அமைந்திருப்பது பின் வரும் பாட்டு

[ தோழி, திருமாலைப்போன்ற பெரிய தாழ்வரைகளையும், பலராமனைப்போன்ற விளங்கிய வெள்ளிய அருவியையும் உடைய அழகிய மலைக்குத் தலைவனாகிய அவன் நம்மை விரும்பி எப்போதும் வருந்தினான் என்று சொன்னதாகிய என் வார்த்தையை நீ தெளியவில்லை; நீயும் நேரே கண்டு உங்களவர்களாகிய பிற தோழிகளோடும் ஆராய்ந்து, இது செய்தால் அறிவுடைமையாகும் என்பதைத் தேர்ந்து பழகுதல் வேண்டும், அவன் மறுப்பதற்கு அரிய காதலும் உறுதியும் உடையவன்; நீ வாழ்க! பெரியவர்கள் முதலில் ஆராய்ந்து பிறகு ஒருவரோடு நண்பு செய்தாலன்றி, நண்பு செய்து பிறகு ஆராயமாட்டார்கள். தம்மோடு நண்பு செய்து ஒட்டினவர்கள் திறத்தில்.

தோழி, கிழவோன் வருந்தினான் என்பதோர் சொல் தேறாய்; நீயும் கண்டு எண்ணி, அறிந்து அளவல் வேண்டும்; அரியன்; பெரியோர் நாடி நட்பின் அல்லது நட்டு நாடார் - என்று கூட்டுக.

மாயோன்- கரியநிறமுடைய திருமால்; கண்ணன். மால்-பெருமை, வரைக் கவா அன்-மலையின் பக்கம், வாலியோன்-வெள்ளை நிறமுடையவன்; கண்ணனுக்குத் தமையனாகிய பலதேவன். வயங்குதல்-விளங்குதல். அம் - அழகிய; கிழவோன்-உரியவன். நம் நயந்து-நம்மைவிரும்பி. தலைவியும் தோழியும் உள்ளம் ஒன்றிப் பழகியமையால் அவருக்குள் வேறுபாடு இல்லை. அதனால் ’நின்னை நயந்து' என்னாமல், "நம்மை நயந்து” என்றாள். தலைவியைத் தலைவன் விரும்பியதையே அவ்வாறு சொன்னாள். தேமுய்-நீ தெரிந்துகொள்ளவில்லை. நுமர்-உன்னைச் சேர்ந்தவர். கோபம் இல்லாமல் இருந்தால் நமர் என்று சொல்லியிருப்பாள்; கோபத்தினால் தன்னை விலக்கிக்கொண்டு நுமர் என்றாள். அறிவு அறிந்து-இப்படிச் செய்வது - அறிவு என்பதைத் தெரிந்துகொண்டு. அளவல்-பழகுதல். மறு தரல் - மறுத்தல், மறுத்தரல் என்று வருவதே பெரு வழக்கு; ’அறிவறிந்து' என்ற பகுதிக்கு இணைந்து ஒலிக்கும் பொருட்டு 'மறுதரற்கு" என்று வந்தது. நாடி-ஆராய்ந்து ஒட்டியோர்-நண்பராகப் பற்றிக்கொண்டவர்.]

துறை: தலைவிக்குக் குறைநயப்பக் கூறியது.

’தலைவனுடைய வேண்டுகோளுக்கு இணங்கும்படி தலைவியினிடம் தோழி சொல்லியது" என்பது இதன் பொருள். குறை-காரியம்.

இதைப் பாடிய புலவர் கபிலர்.
இது நற்றிணையில் முப்பத்திரண்டாவது பாட்டு.
-------------------

10. கடவுளானால் என்ன?

அந்த இளம்பெண் நாளுக்கு நாள் மெலிந்து வருகிறாள். எவ்வளவு கலகலப்பாக விளையாடிக் கொண் டிருப்பாள் இப்போது கவலையில் மூழ்கியவளைப் போல எப்போதும் எதனையோ சிந்தித்துக் கொண்டிருக்கிறாள்.

அவளுடைய தாயும் செவிலியும் அவள் நிலையைக் கண்டு கவலை அடைகிறார்கள். 'இவள் ஏன் இப்படித் திடீரென்று மாறிவிட்டாள்?’ என்று எண்ணிப் பார்க்கிறார்கள். ஊரில் உள்ள பெண்களும் அவள் மெலிவைக் கவனிக்கிறார்கள். "இது ஏதாவது தெய்வக் குற்றமாக இருக்கும். நம்முடைய குல தெய்வமாகிய முருகனுக்குப் பூசை போட்டால் சரியாகிவிடும்; பூசாரியை அழைத்து அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று அந்தப் பெண்மணிகள் சொல்லுகிறார்கள். தாயும் செவிலியும் அப்படியே செய்ய எண்ணுகிறார்கள்.

பூசாரியை வேலன் என்று சொல்வது வழக்கம் அவன் முருகனுடைய திருவுருவத்தை வழிபடுபவன், உருவத்தைப் படிமம் என்று சொல்வார்கள். அதற்குப் பூசை போடுவதால் அவனுக்குப் படிமத்தான் என்ற பெயர் வழங்கும். அவன் தன் கையில் வேலை வைத்திருப்பதால் வேலன் என்று வழங்கப் பெறுவான். யாருக்கேனும் நோய் வந்தாலும், வேறு துயர் உண்டானாலும் அவற்றிற்குப் பரிகாரமாக அவனை அழைத்து முருகனுக்குப் பூசை போடச் சொல்வார்கள். அவன் முருகன் உருவத்தை வைத்து அலங்காரம் செய்து மலரைத் தூவி ஆட்டை அறுத்துப் பலியிட்டுப் பூசிப்பான். அவனுக்கு ஆவேசம் உண்டாகும். பூசாரியினிடம் ஆவேச உருவமாக எழுந்தருளி முருகன் அவரவர்கள் செய்த பிழைகளையும், செய்ய வேண்டிய பரிகாரங்களையும் சொல்லுவான். ஆவேசத்தை வெறியென்று சொல்வார்கள். பூசை போட்டு ஆவேசம் வந்து ஆடுவதால் இத்தகைய பூசைக்கே வெறியாடல் என்ற பெயர் வந்துவிட்டது. வெறியெடுத்தல், வெறியாட்டு என்றும் சொல்வதுண்டு.

தாய் வேண்டிக்கொள்ளவே பூசாரி முருகனைப் பூசித்து ஆவேச உருவத்தில் வருவிக்க முயன்றான். பூசைக் கென்று ஓரிடத்தைச் சித்தம் செய்தார்கள். பூசாரி பூசை செய்யத் தொடங்குகிறான்.

அந்த இளம் பெண்ணும் அவளுடைய தோழியும் அங்கே இருக்கிறார்கள். இளம் பெண்ணுக்கு வந்திருக்கும் நோயின் காரணத்தை அறியவும், அதனைப் போக்கவுந் தானே இந்த வெறியாட்டு நிகழ்கிறது?

அவளுக்கு வந்த நோய் யாது? அதனைத் தாய்மாரி இருவரும் உணரவில்லை அவள் ஒரு கட்டிளங்காளையினி டம் காதல் கொண்டிருக்கிறாள். இளங்காதலர் இருவரும் ஒருவாகம் அறியாதவாறு தோழியின் துணையைக் கொண்டு சந்தித்து அளவளாவு-கிறார்கள். இந்தக் களவுக் காதலுக்கு என்றேனும் முடிவுகட்டவேண்டும் என்ற நினைவு காதலிக்கு உண்டாகிறது, தான் விரும்பும் போதெல்லாம் அவள் தன் காதலனைச் சந்திக்க முடிவதில்லை. அவன் வரும் காலங்களிலும் சிலமுறை வீட்டிலுள்ள கட்டுக் காவலால் அவனைக் காண முடியாமல் போய்விடுகிறது. இந்த ஏக்கத்தினால்தான் காதலி வாடித் தவிக்கிறாள்.

காதலனுடைய மார்போடு அணைகின்ற இன்பம் எப்போதும் கிடைக்கவில்லையே என்று எண்ணி எண்ணி அவள் வருந்துகிறாள். ஆதலின் அவளுக்கு வந்திருக்கும் நோய்க்குக் காரணம் காதலனுடைய மார்பு. அதனால் அவளுக்குக் கவலை மலிகிறது. அந்த நோய் பிறராலே தீர்ப்பதற்கு அரிய நோய்; மார்பு தர வந்த படர்மலி அருநோய்.

இந்தக் காரணத்தைத் தாயும் உணரவில்லை; செவிலியும் அறிந்திலள். பாவம் அந்த இளம் பெண்ணைக் கொண்டுவந்து வேலனுக்கு முன்னாலே நிறுத்தி வெறியாடலைச் செய்கிறார்கள். அவர்களுடைய பேதைமையை நினைந்து கோபம் கொள்வதா? அழுவதா? சிரிப்பதா?
# #

பூசாரி பூசை செய்கிறபோது அவனுக்கு ஆவேசம் வந்துவிடுகிறது. அது மெய்யோ, பொய்யோ யார் கண்டார்கள்? கார்காலத்தில் மலரும் கடம்ப மலரால் ஆகிய கண்ணியை அவன் தன் தலையில் அணிந்திருக்கிறான். முருகனுக்கு உரிய பூ அது. தன்னை முருகனைப்போல அலங்கரித்துக் கொண்டிருக்கிறான் வேலன், இதோ அவனுக்கு ஆவேசம் வந்துவிட்டது. தை தை என்று குதிக்கிறான். அவன் என்ன சொல்லப் போகிறானோ? எதைச் சொன்னாலும் பயன் இல்லை.

காதலி அஞ்சுகிறாள். அவளுடைய தோழிக்கு இந்தக் கூத்தைக் கண்டு ஆத்திரமாக வருகிறது, இந்தச் சமயத்தில் உண்மையைச் சொல்லிவிடவேண்டும் என்ற துணிவு அவளுக்கு உண்டாகிறது. அதைத் தாயினிடம் நேரே சொல்லியிருக்கலாம். அப்படிச் சொல்லும் வழக்கம் அவர்களுக்கு இல்லை. குறிப்பாகப் புலப்படுத்துவதுதான் மரபு. இன்னனிடம் இவள் காதல் பூண்டிருக்கிறாள் என்று சொன்னால் உடனே அவர்கள் ஏற்றுக்கொள்வார்களோ, மாட்டார்களோ என்ற ஐயம் தோழிக்கு இருந்தது. அதனால் இதுவரையிலும் அவர்களுடைய காதல் இரகசியமாகவே இருந்தது.

இனியும் அப்படி இருக்கக்கூடாது என்று முடிவு செய்த தோழி உண்மையைச் சொல்லத் துணிந்தாள். ஆவேச உருவத்தில் வந்த முருகனையே நோக்கி விண்ணப் பித்துக் கொள்வது போலச் சொல்லத் தொடங்கினாள்.
# #

”இவளுக்கு வந்திருக்கும் நோய் உனக்குக் குற்றம் செய்ததனால் வந்தது அன்று. இவளுடைய காதலனுடைய மார்பை இவள் நினைந்து நினைந்து ஏங்குவதனால் வந்தது. இதை நீ தெரிந்து கொள்ளாமல் இங்கே வந்துவிட் டாயே!” என்று சொல்ல ஆசைப்படுகிறாள் தோழி.

முதலில் காதலனுகிய மலைநாடனைப்பற்றிச் சொல்கிறாள்.

அந்த மலைநாடனுடைய மலைச்சாரலில் நிகழும் காட்சியாக ஒன்றை அவள் கற்பனை செய்து சொல்கிறாள். ”அவனுடைய நாட்டில் தெய்வத்துக்குக் குற்றமே செய்ய மாட்டார்கள், கடவுள் வழிபாட்டுக்கென்றே பூவையும் கணியையும் புனலையும் தனியே விட்டிருப்பார்கள். மலையிலே சில சுனைகளில் பூக்கும் மலர்களைப் பறித்துத் தாம் பயன்படுத்தாமல் கடவுளுக்கென்றே விட்டுவிடுவார்கள், இலைகளின் மேலே குவளைகள் தலை நீட்டிக்கொண்டிருப் பதை அந்தக் கடவுட் கற்சுனைகளில் காணலாம்.

முருகனுக்குரிய குறிஞ்சி நிலத்தில் விண்ணுலகத்திலிருந்து தெய்வ மகளிர் வந்து அங்குள்ள மலர் முதலியவற்றால் தம்மை அலங்கரித்துக்கொண்டு ஆடுவார்கள். இதை நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் சொல்லுகிறர்.

என்ற பகுதியில் இதைக் காணலாம்.

தோழி தலைவன் நாட்டில் நிகழும் இத்தகைய காட்சி ஒன்றைச் சொல்லுகிறாள்.

ஒரு குரரமகள் இந்த மலைச் செறிவுக்கு வருகிறாள். வானுலகத்திலும் இல்லாத பேரழகை இங்கே பார்க்கிறாள். எங்கே பார்த்தாலும் பசுமை; மலர்ச்சோலை; மலர் விரிந்து மணக்கும் சுனைகள். அவற்றைப் பார்க்கும் போது அலங்காரம் செய்து கொள்ளும் ஆசை எழுகிறது. பெண்களுக்குத் தங்களைக் கோலம் செய்து கொள்வதில் அளவு இறந்த ஆவல் உண்டு அல்லவா? தேவலோகத்துச் சூரர மகளானாலும் பெண் தானே?

கடவுட் கற்சுனையில் அடைகளினின்றும் நீங்கி மேலே உயர்ந்து இதழ் அவிழ்ந்த குவளை மலர்களை -பிறர் யாரும் பறிக்காத குவளைகளைக்-கொய்கிறாள் சூரர மகள். நீல மலர்களாகிய அவற்றைத் தனியே அணிந்து கொள்வதை விட வேறு வண்ணமுள்ள மலர்களையும் சேர்த்துப் புனைந்து கொண்டால் அழகு மிகுதியாக இருக்கும். நீலத்துக்கு மாறுபட்ட நிறம் சிவப்பு. குறிஞ்சி நிலத்தில் இரத்தச் சிவப்பு நிறங்கொண்ட காந்தள் மலர்கள் நிறையப் பூத்துக் கிடக்கின்றன. அவற்றையும் பறித்துத் தொகுத்தாள். குவளை மலர்களோடு காந்தளின் குருதிச் சிவப்புள்ள ஒண்பூக்களையும் வண்ண அழகு தோன்றும்படி மாறி மாறி வைத்துக் கட்டினாள். அந்த அழகிய மாலையை அணிந்து கொள்கிறாள்.

மாலையைத் தன் விருப்பப்படி அணிந்து கொண்டு தன் அழகைத் தானே பார்த்துக் களிக்கிறாள் அவள். உள்ளத்தில் உவகை பொங்குகிறது. அதன் விளைவாக அவள் ஆடத் தொடங்குகிறாள். அவள் ஆடுவது அந்த மலைப் பக்கத்துக்கே ஒரு புதிய பொலிவை உண்டாக்குகிறது. பெரு வரை அடுக்கம் பொலிவு பெறும்படியாகச் சூர்மகள் ஆடுகிறாள். அவள் ஆடுவதோடு பாடவும் பாடுகிறாள். அந்தப் பாட்டுக்குப் பக்கவாத்தியம் வேண்டாமா? மலையிலே எப்போதும் சலசலவென்று விழுந்து கொண்டிருக்கும் அருவியின் ஒலி பக்க வாத்திய சங்கீதமாக அந்தப் பாட்டோடு இணைந்து கேட்கிறது.

இப்படிச் சூரரமகள் ஆனந்தக் கூத்தாடும் மலைப் பக்கத்தையுடைய நாட்டுக்குத் தலைவன் காதலன்

"அவனுடைய மார்பு காரணமாக வந்த நோய் இது”என்று தோழி சொல்கிறாள்.

"தெய்வப் பெண் ஆனந்தக் கூத்தாடும் நாட்டை உடைய அவனிடம் காதல் கொண்டவள் தெய்வத்துக்குக் குற்றம் இழைப்பாளா?" என்று அவள் கேட்கவில்லை. ஆனாலும் அந்தக்கேள்வி, அவனது நாட்டு நிகழ்ச்சியைச் சொல்வதிலிருந்து குறிப்பாகப் புலப்படுகிறது,

நாடன்
மார்புதர வந்த படர்மலி அருநோய்.

இந்த நோய் எதனால் வந்தது என்பது தோழிக் குத் தெரிகிறது. மனித சாதியைச் சேர்ந்த அவளுக்கே தெரியும்போது எல்லாம் அறிந்த கடவுளுக்குத் தெரியாதா? இந்த நோய் யாரால் வந்தது என்ற ஆராய்ச்சி இருக்கட்டும். தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதை முருகன் உணர்ந்திருக்க வேண்டுமே. அவனால் உண்டான வருத்தம் அன்று இது. இதை அவன் உணர்ந்திருந்தும் வேலன் பூசை போட்டான் என்று வரலாமா? தலையை நிமிர்ந்து கார் நறுங் கண்ணி குடி ஆட்டம் போடுகிறவன் முருகனா? தெய்வமா? இந்த முட்டாள் தனமான காரியத்தைச் செய்யலாமா?

தெய்வமாக இருக்கட்டும்; வேறு யாராகவாவது இருக்கட்டும். உண்மையை மறைக்க முடியுமா? "நீ செய்தது அன்று இது என்று உனக்குத் தெரிந்தும் இங்கே வந்து ஆடுகிறாயே! நீ தெய்வமாகவே இருக்கட்டும்; நிச்சயமாக நீ அறியாமையை உடையாய்! நீ வாழ்க முருகா!" என்று சொல்லி நிறுத்துகிறாள் தோழி.

[ முருகா, தெய்வத்துக்கே உரிய மலைச் சுனையிலே இலைகளினின்றும் பிரிந்து மேல் நின்று மலர்ந்தனவும் பிறர் பறிக்காதனவுமாகிய குவளை மலர்களோடு, காந்தளின் இரத்தச் சிவப்பையுடைய விளக்கமுடைய மலர்களை நிறம் சிறக்கும் படி கட்டி அணிந்து, பெரிய மலைப்பக்கம் பொலிவு பெறும்படியாகத் தெய்வப் பெண் அருவியாகிய இனிய இசைக் கருவியின் ஒலிக்கு ஏற்ப ஆடும் நாட்டை யுடைய தலைவனது மார்பு தந்ததனால் வந்த கவலை மிக்க தீர்த்தற்கரிய இவளுடைய நோய் நின்னல் வந்த வருத்தம் அல்லாமையை உணர்ந்தும், தலையை நிமிர்ந்து கார் காலத்தில் மலரும் மணமுள்ள கடம்ப மலர் மாலையைச் சூடிக் கொண்டு, பூசாரி பூசை செய்து வேண்ட இந்த வெறிக் களத்திற்கு வத்தவனே! நீ கடவுளானாலும் ஆகுக! நிச்சயமாக அறியாமையை உடையாய் வாழ்க!

கல்-மலை; அடை-இலை; இறந்து-நீங்கி; அவிழ்ந்த – மலர்ந்த; பறியா-தமக்கென்று யாரும் பறியாத; குருதி - இரத்தம்; இங்கே அதன் செந்நிறத்துக்கு ஆயிற்று. ஒண்பூ-ஒள்ளிய பூ; உருகெழ-வண்ண அழகு பொருந்த; கட்டி-தொடுத்து அணிந்து; பெருவரை-பெரிய மலை, அடுக்கம்பக்கம்; பொற்ப-பொலிவுபெற; சூர்மகள் - தெய்வப் பெண்; இன்னியம் -இனிய இசைக் கருவி; நாடன் - குறிஞ்சிநிலத் தலைவன்; படர்- நினைவு கவலை; அணங்கு – வருத்தம்; அன்மை-அல்லாமை; அண்ணாந்து-தலையை எடுத்து கார்-கார்காலம்; கண்ணி-தலையில் அணியும் குறுமாலை; வேலன்-பூசாரி. வெறிமனை-பூசை போடும் இடம். மடவை -மடமையை உடையாய். முருகு - முருகன்.

முருகே! நாடன் மார்புதர வந்த நோய், அன்மை அறிந்தும், அண்ணாந்து சூடி, வேண்ட வந்தோய்! மடவை என்று கூட்டுக.

முருகனைப் பார்த்துச் சொல்வதனாணுல் பாதுகாப்பாக வாழிய என்றாள்.]

துறை : தோழி தெய்வத்துக்கு உரைப்பாளாய் வெறி விலக்கியது.

"தலைவியின் வேறுபாடு கண்ட தாய் இது தெய்வத்தினால் வந்ததென்று எண்ணி, தெய்வத்துக்குப் பூசை போட வெறியாட்டு எடுத்தபோது தோழி தெய்வத்துக்குச் சொல்லுபவளைப் போல உண்மையை எடுத்துக் கூறி அந்த வெறியாட்டை நிறுத்தச் செய்தது" என்பது இதன் பொருள்.

தோழி இவ்வாறு கூறவே, "அந்த நாடன் யார்?” என்று தாய் கேட்க, அவள் உண்மையைக் கூறுவாள். தலைவன் தலைவியை மணம் பேசப் பரிசத்துடன் உரியவர்களை விடுவான். தாய் அதற்குச் சம்மதிப்பாள்.

இதனைப் பாடிய புலவர் பிரமசாரி என்பவர்.
இது நற்றிணையில் 34-ஆவது பாடல்.
----------------

11. தோழியின் தந்திரம்

”இவளை இனி மணம் புரிந்துகொண்டு வாழ்வதுதான் தக்க வழி; இல்லையானால் இந்தக் களவுக் காதலால் உண்டாகும் அச்சம் உன் காதலியை மெலியச் செய்து விடும், உன்னைக் கண்டபோது எல்லாவற்றையும் மறந்து இன்புறுகிறாள். உன்னைக் காணாதபோதெல்லாம் இவள் படும்பாட்டை என்னவென்று சொல்வேன்! நீ அதனை உணர இயலாது. உடன் இருக்கும் எனக்குத்தான் அது தெரியும், நீ இவளை மணம் புரிவதற்கு உரியவற்றை உடனே செய்ய வேண்டும்" என்று தோழி தலைவனிடம் வற்புறுத்தினாள்.

அவள் கூறுவதை அவன் நன்றாகத் தெரிந்து கொண்டான். திருமணம் செய்துகொள்ள வேண்டுமானால் அவன் அவளுக்குப் பரிசப் பொருளை அளிக்க வேண்டும். அந்தப் பொருள் அவன் ஈட்டியதாக இருக்க வேண்டும். அப்படி ஈட்டுவதென்பது நினைத்த கணத்தில் முடியக்கூடியதா? அவன் திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டான். அதற்கென்று பொருள் ஈட்டத் தொடங்கினால் அவன் தன் காதலியைச் சில நாட்களாவது சந்திக்க முடியாமற் போய்விடும். அதற்கு அவன் உள்ளம் இணங்கவில்லை. கூடியவரையில் நாள்தோறும் காதலியைக் கண்டு அளவளாவும் இன்பத்துக்கு இடையீடு உண்டாகுமே! அதனால் இன்று, நாளை என்று நாள் கடத்தி வருகிறான்.

இங்கே, தலைவியின் வீட்டில் கட்டும் காவலும் அதிக மாகின்றன. அவள் தன் நிலையைத் தன் காதலனாக்கு உணர்த்தும் துணிவு பெறாதவளாக இருக்கிறாள். இப்படியே போய்க் கொண்டிருந்தால் அவர்களுடைய களவுக் காதல் பல நாட்களுக்கு நீடிக்காது என்று அஞ்சினாள் தோழி. எதையாவது சொல்லித் தலைவனுக்கு மணம் புரிவதன் அவசியத்தைப் புலப்படுத்த வேண்டும் என்று எண்ணினாள். இவர்களுடைய களவுத் தனம் தாய் அறியும் நிலைக்கு வந்துவிட்டதென்றும், ஒரு தந்திரம் செய்து அந்தச் சங்கட நிலையினின்றும் தப்பியதாகவும் அவள் தலைவனுக்குச் சொல்கிறாள். பொய்யானாலும் நன்மையை உண்டாக்குமானால் வாய்மையைப் போன்றதே-யல்லவா?
# #

தோழி : உயர்ந்து ஓங்கிய மலைநாடனே! போதும் உன்னுடைய வாக்குறுதிகள். இனி நீ சத்தியம் செய்ய வேண்டாம்.

தலைவன்: ஏன் அப்படிச் சொல்கிறாய்?

தோழி : ஒவ்வொரு நாளும் நீ உறுதி கூறுகிறாய், இன்றைக்கு என்றும், நாளைக்கு என்றும் சொல்லி வருகிறாய். ஆனால் அதன்படி நடப்பதாகக் காண வில்லை.

தலைவன்: அப்படியானல் எனக்கு உன் தலைவியிடம்அன்பு இல்லையென்று சொல்கிறாயா?

தோழி : அப்படிச் சொல்வேனா? உனக்கு உன் காதலியிடம் மிகுதியான அன்பு உண்டு. ஆனால் எங்கள் சிக்கலான நிலை உனக்குத் தெளிவாகத் தெரியவில்லை என்று நினைக்கிறேன். நீயோ ஒவ்வொரு நாளும் உறுதி கூறுகிறாய். இங்கோ ஒருநாள் போவது ஒரு யுகமாக இருக்கிறது.

தலைவன் : எப்போதும் உள்ள கட்டுக் காவல் தானே?

தோழி : இல்லை, இல்லை. பெரிய ஆபத்து நேர இருந்தது நேற்று. அதிலிருந்து ஒருவகையாகத் தப்பினோம்.

தலைவன் : என்ன அது?

தோழி: நேற்று உங்களுடைய களவை எங்கள் அன்னை தெரிந்துகொள்ள இருந்தாள். அவளிடமிருந்து தப்புவதற்குள் எங்களுக்கு உயிரே ஒருமுறை போய் வந்தது. நீயும் ஒவ்வொரு நாளும் இவளேக் காண்பதற்காக எவ்வளவு இன்னல்களுக்கு ஆளாகிறாய்?

தலைவன் : நேற்று என்ன நடந்தது? சொல்.

தோழி: நீ ஒவ்வொரு நாளும் காட்டிலும் மலையிலும் உள்ள ஒற்றையடிப் பாதையில் இரவென்றும் பகலென்றும் பாராமல் வருகிறாய். மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து தீப்பற்றும் வழி அது. கல்லும் முள்ளும் உள்ள குறுகிய வழி. அதில் புலியும் யானையும் பாம்பும் மற்ற விலங்குகளும் ஓடி விளையாடுகின்றன. அவற்றால் உனக்கு ஏதேனும் ஊறு நேர்ந்தால் என் செய்வது என்று நாங்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறோம். நீ அந்தப் பகைகளையெல்லாம் எண்ணாமல் இரவுக் காலங்களில் வருகிறாய்.

தலைவன்: இந்தக் கதைகளெல்லாம் கிடக்கட்டும். நேற்று நடந்தது என்ன? அதைச் சொல்,

தலைவனுக்குள்ள படபடப்பைத் தோழி கவனித்தாள், இப்போதுதான் நாம் சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டுமென்று அவள் எண்ணிப் பேசுகிறாள்.

தோழி: நீ பகையைப் பேணாது இரவில் வந்து இவளை அணைந்து செல்கிறாய். நீ உன் மலையில் விளையும் சந்தனத்தைப் பூசி மலர்களை அணிந்து கொண்டு வருகிறாய். அந்தச் சந்தனமணம் காடெல்லாம் மணக்கிறது. அழகுத் தேமலாகிய பொறி கிளர்ச்சி பெற்று விளங்கும் இவளுடைய ஆகத்தைப் புல்லி நீ செல்கிறாய்.

தலைவன் : என் பொறுமையைச் சோதிக்காதே! விரைவில் நேற்று நடந்ததைச் சொல்.

தோழி: இதைச் சொன்னால்தான் அது விளங்கும். இவள் பொறிகிளர்ஆகம் நீ புல்ல, அதனால் இவள் உடம்பு முழுதும் ஒரே சந்தன மணம் வீசுகிறது. மணம் இருக்கிற இடத்தில் வண்டுகள் மொய்க்கும் அல்லவா? புலால் உள்ள இடத்தில் சில இருகாற் பறவைகள் மொய்க்கும். மணம் உள்ள இடத்தில் அறுகாற் பறவை மொய்க்கும். உன்னை அணைந்தமையால் இவள் தோள்களெல்லாம் மணந்தன. அதனால் வண்டுகள் ஒரே கூட்டமாக இவளை மொய்க்கத் தொடங்கின. அந்தக் காட்சியைத் தாய் பார்த்தாள்; கூர்ந்து பார்த்தாள்; ஏதோ அதிசயத்தைப் பார்ப்பது போலப் பார்த்தாள். பிறகு கண்ணாலே கொன்று விடுவதைப் போல உறுத்துப் பார்த்தாள். “என்ன இது? முன்பும் இந்த வண்டுகள் இப்படி மொய்த்தனவா?’ என்று அவள் கேட்டாள்.

தலைவன்: உன்னையா கேட்டாள்?

தோழி: இல்லை. உன் காதலியைத்தான் கேட்டாள். “முன்பும் இப்படி இருந்தாயோ?" என்று கேட்டாள். ’இது என்ன புதிய காட்சி! நீ என்ன செய்தாய்?’ என்று அவள் கேட்கவில்லை. ஆனலும் அவள் கேட்ட கேள்விக்கு அது தானே பொருள்?

தலைவன் : தலைவி என்ன சொன்னாள்?

தோழி: சொல்வதாவது! அவள் அந்தக் கணத்தில் நடு நடுங்கிப் போனாள். அன்னை கேட்ட கேள்விக்கு என்ன விடை சொல்வது? அவளுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. அவள் முகத்தை அப்போது பார்க்க வேண்டுமே! ஒரேயடியாக வெளுத்துப் போயிற்று.
பாவம் என் முகத்தைப் பார்த்தாள்.

தலைவன்: பிறகு?

தோழி: எனக்கும் ஒன்றும் தோன்றவில்லை. “இப்படிச் சிக்கலான நிலையில் வந்து அகப்பட்டுக் கொண் டோமே!" என்ற அங்கலாய்ப்புத்தான் உண்டாயிற்று. உண்மையை அன்னை உள்ளபடி உணர்ந்து விட்டால் அப்புறம் தலைவிக்கு உய்யும் வழி ஏது? நமக்குத்தான் போக்கிடம் எங்கே?- இதை ஒரு கணம் சிந்தித்தேன். உடனே எனக்கு ஒரு தந்திரம் தோன்றியது. எனக்குத் துணை செய்தது அந்தக் கொள்ளிக் கட்டை.

தலைவன்: கொள்ளிக்கட்டையா? அது எப்படி உதவி யாயிற்று?

தோழி! அதை எடுத்துக்காட்டி, "இதனால்தான் இப்படி ஆயிற்று" என்று சொன்னேன்.

தலைவன்: எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே! கொள்ளிக் கட்டையைக் காட்டவாவது அதனால் ஆனதாவது!

தோழி; அது வெறும் கட்டை அல்ல; சந்தனக்கட்டை. உன் காதலி சந்தனக்கட்டையைக் கொளுத்தி அதில் தன் கூந்தலின் ஈரத்தை புலர்த்துவது வழக்கம். நல்ல வேளை! அன்று சந்தனக் கொள்ளி அங்கே இருந்தது. அதைக் காட்டினேன். அதன் புகை படிந்து உடம்பும் கூந்தலும் நறுமணம் வீசியதால் வண்டுகள் மொய்க்கின்றன என்று நான் விளக்கமாகச் சொல்லவில்லை. அன்னை என் குறிப்பை உணர்ந்து கொண்டாள். நாங்கள் தப்பினேம். இப்படி எத்தனை நாளைக்கு உண் மையை மறைத்து வாழ முடியும்?

தலைவன் இப்போது தன் கடமையை உணர்ந்தான்.

தோழி கூறுவதாக அமைந்திருக்கிறது பாட்டு.

[ உயர்ந்த மலைநாட்டுக்குத் தலைவனே! நின் உறுதி மொழிகள் இனி ஒழியட்டும். மூங்கில்கள் பொருந்திய மலை வழியில் சிறிய குறுநெறியில் எதிர்ப்படும் பகைகளைப் பெரியனவாக எண்ணாமல் இரவிலே நீ வந்து இவளுடைய அழகுத்தேமல் விளங்கும் மேனியை அணைய, (அதனால் உண்டான மனம் காரணமாக) இவளுடைய தோள்களைச் சேர்ந்து வண்டுகள் அளவில்லாதன மொய்த்தலால், தாய் தன் கண்ணினாற் செய்யும் கொலையைப்போலப் பார்த்து, "முன்பும் இப்படித்தான் இருந்தாயோ?” என்று கேட்டாள்; அதற்கு எதிராக ஒன்றும் சொல்லாதவளாகி இவள் மயங்கி என் முகத்தை நோக்கினாள்; நான், தாய் இதன் காரணத்தை உள்ளபடி உணர்ந்தால் இவள் உய்வாளோ? என்று எண்ணி, அங்கே மூட்டியிருந்த சந்தனக் கொள்ளியை எடுத்துக்காட்டி, "இப்படி ஆயின’ என்றேன்.

நாட! வாய்மை ஒழிக, பேணாது வந்து புல்ல, அளவில சேர்பு மொய்த்தலின், யார் நோக்கி வினவினள்; சொல்லாளாகி அல்லாந்து நோக்கியோள்: யான், என காட்டி என்றிசின்-என்று கூட்டுக.

வாய்மை-உறுதிமொழி; காம்பு-மூங்கில்; தலைமணந்த -நெருங்கி வளர்ந்த; கல்அதர்-மலைவழி;,,சிறுநெறி-குறுகிய பாதை; உறுபகை-நேரும் பகைகள்; புலி, சிங்கம் முதலியயன. பேணாது-பொருட்படுத்தாமல்; பொறி-சுணங்கு; அழகுத் தேமல். கிளர்-விளங்கும்; ஆகம்-மார்பு;. புல்ல அணைந்ததனால், சேர்பு-சேர்ந்து; அறுகாற் பறவை-வண்டுகள்; கோள்-கொலை. "என்னைக் கொல்வான்போல் நோக்கி’ என்று வந்தது காண்க. இனையையோ-இப்படி. இருந்தாயோ; யாய்-தாய், அல்லாந்து-மயங்கி; ஆங்கு - அப்படி, உள்ளதை உள்ளபடி; உணர்ந்து-உணர; உய்கு வள்கொல்-தலைவி உயிர் பிழைப்பாளோ. என-என்று எண்ணி; மடுத்த-தீமூட்டிய, சாந்தம்-சந்தனம்; ஞெகிழி- கொள்ளி, ஈங்கு-இப்படி; இது காரணமாக; ஆயின பன்மையாகச் சொன்னது வண்டு மொய்த்தலும், அதைக் கண்டு தாய் கேட்டலும், தலைவி அல்லாத்தலும் ஆகிய பலவற்றை நினைந்து. என்றிசின்-என்றேன். ]

"வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும் தோழி தலைவற்குச் சொல்லியது” என்பது இதன் துறை.

’தலைவன் திருமணம் செய்துகொள்ளும் முயற்சிகளை மேற்கொள்வதற்கு இடையில் தலைவியின் உள்ள மெலிவை ஆறுதல் கூறி ஆற்றுவிக்கும் தோழி தலைவனுக்குக் கூறியது' என்பது பொருள். T

இதனைப் பாடியவர் பெருவழுதி
இது நற்றிணையில் 55 ஆவது பாட்டு
-------------------


This file was last updated on 15 Nov. 2017.
.