Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" : பகுதி 29 (3016-3118)
அகிலாண்டநாயகிமாலை

Tiricirapuram makAvitvAn mInATci cuntaram piLLaiyin
pirapantat tiraTTu : part 29 (3016-3118)
akilANTanAyaki mAlai
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany
for providing us with a photocopy of the work.
Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach.
We thank the following persons in the preparation and proof-reading of the etext:
Senthan Swaminathan, S. Karthikeyan, Nalini Karthikeyan and R. Navaneethakrishnan<
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2009.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 30-1
அகிலாண்டநாயகிமாலை (3016-3118)


சிவமயம்
செல்வவிநாயகர்.
3016 திருவளர் கபோல மதப்பெருக் குண்டு
        தெவிட்டுகார் வண்டின மெழுந்து,
மருவளர் செய்ய சாந்தினுண் மறைந்த
        மத்தக மீதுதங் கிடுதல்,
கருவளர் மணிகள் பதித்தபொற் குடத்திற்
        கவின வீற் றிருந்தருள் கொழிக்கு,
முருவளர் செல்வ விநாயகன்
        பொற்றாளுபயபங் கயமுடிக் கணிவாம்.
0

நூல்.
3017 பூமலி செய்ய பொலிமணித் தோடு
        புதுவெயி லெறித்து முண் மலர்ந்த,
தேமலி யாம்பற் செய்யவாய் முளைத்த
        சிறுநகை யிளநிலா வெறித்து,
மாமலி குழனின் றவர்முக மலர்கண்
        வளந்தர முன்புவந் தருள்வாய்,
காமலி வானும் புகழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
1
3018 வடதிசை யவனுஞ் சமழ்ப்புறக் கனகம்
        வாய்ந்துதென் றிசைநகத் தமருங்,
குடமுனி யவனுஞ் சமழ்ப்புறக் கல்வி
        கூர்ந்துமிக்குயர்ந்தவர் பலருந்,
தடமலர் புரைநின் முகத்திரு கடைக்கட்
        சார்பொருங் குற்றவ ரன்றோ,
கடவுளர் மனம்புக் கமர்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
2
3019 விழிவிருந் துதவு நின்றிரு மணத்தில்
        விமலனார் கரமலர்மேற்கொண்,
டொழிவரு கருங்கன் மிசையுறு நின்றா
        ளுற்றவென்கரமலர் மேற்கொண்,
டிழிவற வடியேன் மனக்கலி னிடத்து
        மியைந்துறு மென்றுனைத் துதித்தேன்,
கழிநசை முனிவர் புகழ்திரு
        வானைக்காவகி லாண்டநா யகியே.
3
3020 அடியனேன் கொடிய னென்றுமுன் வருதற்
        கஞ்சினை யென்னின்வெங் கூற்ற,
மடியமுன் னுதைத்தான் றுணையடைந்
        தேனும் வருமதிமற் றதுநினக் கரிதோ,
நெடியவன் பிரம னிந்திரன் முதலோர்
        நித்தமும் தாழ்ந்துசூழ்ந் தேத்திக்,
கடியவெவ் வினைதீர்ந் துயர்திரு
        வானைக் காவகி லாண்டநா யகியே.
4
3021 பாவிநீ நின்முன் வருவது தகாதென்
        பரிசினுக் கென்பையேன் முன்ன,
மாவிசூழ் மதுரை யகத்துமா பாவி யாயினா
        னொருவன்முன் முக்கட்,
கோவினோ டடைந்த குணத்திநீ யலையோ
        குலவதுமறந்தனை கொல்லோ,
காவியங் கழனி சூழ்திரு
        வானைக் காவகி லாண்டநா யகியே.
5
3022 பண்டுநீ பெருமா னருள்வழி புகலிப்
        பாலனுக் களித்தனை ஞான,
மண்டுமற் றதனான் முழுப்புகழ் நினக்கே
        யாயதோ விரங்குபுநீயே,
தொண்டுகொண் டடியேற் களித்தனை
        யாயிற் றூயநிற் கேமுழுப்புகழாங்,
கண்டுநேர் மொழியார் பயிறிரு
        வானைக் காவகி லாண்டநா யகியே.
6
3023 அளவறு பிழைகள் பொறுத்தரு ணின்னை
        யணியுருப் பாதியில் வைத்தான்,
றளர்பிழை மூன்றே பொறுப்பவ டன்னைச்
        சடைமுடி வைத்தன னதனாற்,
பிளவியன் மதியஞ் சூடிய பெருமான்-
        பித்தனென் றொருபெயர் பெற்றான்,
களமர்மொய் கழனி சூழ்திரு
        வானைக் காவகி லாண்டநா யகியே.
7
3024 3024.
பெரும்புக ழமைந்த நின்பதி யென்னும்
        பிரணவ குஞ்சர நின்கை,
யரும்புவிற் கரும்பு விரும்புபு கவரு
        மடல்புரிந் தென்றுளங் குறித்தோ,
வரும்புகர் முகங்கொ ளங்குச பாசம்
        வயங்குற வேந்தினை நாளுங்,
கரும்புய னிறத்தோன் சூழ்திரு
        வானைக் காவகி லாண்டநா யகியே.
8
3025 யானென தென்னுஞ் செருக்கிழந் தவர்மற்
        றிழப்புறார் நின்னையீ துண்மை,
தானென மறைகண் முழங்கவு முணராச்
        சழக்கனே னினையிழந் துழல்வேன்,
மீனென வயங்குங் கண்ணினாய் கொடியேன்
        வினைக்குமோ ரிறுதியுண் டாங்கொல்,
கானென வரம்பைசூழ்திரு
        வானைக் காவகி லாண்டநா யகியே.
9
3026 விழியிடந் தப்பி மகவரிந் தூட்டி
        விருப்புறு தந்தைதா டடிந்து,
பழியகன் மனையை யுதவிமற் றின்னும்
        பலசெயற் கரியசெய்தார்க்கே,
மொழியுநின் கொழுந னருள்செய்வா னென்னான்
        முடிதராதென்றுனை யடைந்தேன்,
கழியுணர் வுடையார் புகழ்திரு
        வானைக் காவகி லாண்டநா யகியே.
10
3027 வழிபடு மடிய ராயினார் தமக்கே
        வழங்குதுங் கருணைவேறாய,
பழிபடு மவர்க்கு வழங்குறா மென்னிற்
        பயோதர மருதமு னன்றிப்,
பொழிசுவை நறுநீர் புல்லுவர் நிலத்தும்
        பொழியுமே புண்ணியப் பொருளே,
கழிதலி றென்னங் காத்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
11
3028 கொடியவ னிவற்கு மருள்புரி யென்றுன்
        கொழுநனுக் கெனைக்குறித் துணர்த்த,
முடிவிலின் னருளா லெண்ணினை யேலம்
        முதல்வனின் னூடலையுணர்த்த,
வடிபணி பொழுதி லுணர்த்திடல்
        வேண்டு மஃதுடன் பலிக்குநீ யறிதி,
கடிதலில் கழகஞ் சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
12
3029 தாவருஞ் சிருக்கு மணிவடஞ் சங்கு
        சக்கரஞ் சூற்படை யிலைவே,
லோவருஞ் சிறப்பின் வேறுவே றேந்து
        முண்மையா லொண்மல ரோன்முன்,
மூவரு மியற்று மூவகைத் தொழிற்கு
        மூலநீயென்பது தெரிந்தேன்,
காவரு மலர்நல் கிடுந்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
13
3030 தாயினைக் கொன்றுந் தந்தையைக் கொன்றுந்
        தவலரு மனைவியைக் கொன்றுஞ்,
சேயினைக் கொன்றுங் கடும்பினைக் கொன்றுஞ்
        சேர்ந்தவர்க் கருள்வனின் கொழுநன்,
வீயினைப் பொருவும் பதமடைந் தார்க்கே
        விருப்பினீ யருள்வதோர்ந் தடைந்தேன்,
காயினைச்சுமந்த பொழிற்றிரு
        வானைக் காவகி லாண்டநா யகியே.
14
3031 குற்றியை யடைந்த பசும்புலை யுழுநர்
        கொடியவன் னாஞ்சிலென் செயுமப்,
பெற்றியி னின்னை யடைந்தநா யேனைப்
        பிறையெயிற் றந்தகன் கரத்துப்,
பற்றிய தண்டப் படைசெய லென்னே
        பரவிய கருணைவா ரிதியே,
கற்றிணி மதில்கள் சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
15
3032 முடிமிசை யொருமந் தாகினி வாழ
        முதல்வன்வைத் திடுதலிற் சிறந்த,
கொடியவ ளென்றி யார்நினைப் பவர்கா
        கோதர மெருக்கெலும் பாதி,
படிதரு மிடத்திற் சற்றிட முடம்பிற்
        பாதியோ விடமருட் டாயே,
கடிமலர்த் தடங்கள் சூழ்திரு
        வானைக் காவகி லாண்டநா யகியே.
16
3033 பெருவள னமைந்த நீருரு வாய
        பெருந்தகை நீருரு வாய,
வொருகுல மகளை மலர்மிசைத் தேவு
        முணர்தராக் காட்டிடை மறைத்தா,
னருகுநுண் ணிடைநிற் கஞ்சியே யன்றே
        லணியுருப் பாதிமற்றிலையோ,
கருமுகி றவழு மதிற்றிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
17
3034 அலையடி யடைந்த வகத்தடி நிலையா
        தலையடியேற் கிரங்குபுபுன்,
றலையடி சூட்டிப் பிடியடி யென்பான்
        றடியடி விலக்கியாளிமய,
மலையடி யுதித்து வளர்ந்துவெண் ணாவன்
        மரத்தடி வாழ்பவற் புணர்ந்தாய்,
கலையடி யுணர்ந்தார் புகழ்திரு
        வானைக் காவகி லாண்டநா யகியே.
18
3035 இருவினைச் சிமிழ்ப்புண் டுழல்கொடி
        யவன்மற் றிவற்கரு ளென்றிரங் குபுநின்,
னொருமுத லவனுக் குணர்த்துதி
        வருத்த முன்னலுன் பரிசினுக் கடாது,
வருபசுங் குழவிக் குறுபிணி தீர்க்கு
        மருந்தனை யன்றியார் நுகர்வார்,
கருமுகி லுறங்கு மதிற்றிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
19
3036 எடுப்பது பிச்சை யேந்துவ தோடாங்
        கியக்குவ தொற்றையே றரைக்க,
ணுடுப்பது புன்றோன் மற்றிவர் மனையா
        யுற்றநீ யுயிர்வயிற் றழலா,
யடுப்பது தவிர வூட்டுத லாதி
        யறமெலாம் வளர்ப்பையீ தழகே,
கடுப்பது தவிர்ந்த மதிற்றிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
20
3037 முற்றவம் புரிந்து முழுமலந் துமித்த
        மோனமெய்ஞ் ஞானிய ரன்றி,
மற்றவர் கவரப் படுங்கொனின் கருணை
        வானகத் தெழுமதிக் கதிரை,
நற்றவம் புரிந்த சகோரமோ கொடிய
        நவில்கருங் காகமோ கவருங்,
கற்றவர் புகழ்ந்து சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
21
3038 தொண்டவாய் மனமா திகளொருங்
        குய்க்குந் தூயவ ரன்றிமற் றோரு,
மண்டரா தியரு மணுகரு நின்றா
        ளடைவரோ வளவறு மேன்மை,
கொண்டவான் கங்கை யடைவதோ திமமோ
        குரண்டமோ குணப்பெருங் குன்றே,
கண்டவர் பவங்கா ணாத்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
22
3039 இடையறா வன்பின் மெய்கொடு துதிப்பா
        ரின்றுதி முன்னர்மெய்ந் நிழல்போற்,
புடையறா வினையேன் பொய்கொடு
        துதிக்கும் புன்றுதி யெங்ஙன மென்னி,
னடையறாத் தேமாங் குயிற்குர லெதிரோ
        ரரிட்டமுங் கதறுதல் பொருவுங்,
கடையறா மரு தஞ் சூழ்திரு
        வானைக் காவகி லாண்டநா யகியே.
23
3040 மறைபல துதிக்கு நின்பெரும் புகழை
        வழுத்திய வான்றவர் நாவு,
மறையுமோ மற்றைப் புல்லிய தெய்வத்
        தமைபுக ழறையுமே லினிமை,
நிறைதரு கருப்பஞ் சாறவா வியநா
        நிம்பநெ யவாவுதல் போலுங்,
கறையறு வளமை மலிதிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
24
3041 மனைதொறு மிரப்புத் தொழில்கொடு
        புகுவார் மறலிதனாலயம் புகுவார்,
நினைதர முடியாக் கருக்குழி பலவு
        நிரம்புற வோடுபு புகுவா,
ரினையவர் புகாநின் றிருப்பெருங் கோயி
        லேழையேன் புகவருள் புரிவாய்,
கனைகடல் வாவி சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
25
3042 எண்ணருங் கொடிய பாதகம் பலவு
        மியற்றுமா பாவியா னெனினு,
நண்ணரு நினது திருவரு டோயி
        னண்ணுத லரிதுகொல் புனிதம்,
பண்ணருங் கொலைசெய் வாளும்பொன்
        னாமே பரிசனவேதிதீண் டுதலாற்,
கண்ணருங் கழனி சூழ்திரு வானைக்
        காவகி லாண் டநா யகியே.
26
3043 முழுவதுங் குணமே நாடின்முற் றாது
        முகுந்தனா தியரிடத் தினுநீ,
பழுதற வுணர்த்தா விடினுணர் வாரோ
        பரமனைப் பண்டவர் புரிதோ,
மெழுதரி தவரு மின்னரே லம்ம
        வென்செயல் யாதெனப் புகல்கேன்,
கழுவிய மணியிற் சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
27
3044 உலகிடை யழுத பிள்ளைபால் குடிக்கு
        முண்மையென் றுரைப்பதற் கேற்ப,
விலகுசீ காழி மழவழ வளித்தா
        யின்முலைப் பாலழா விடினு,
மலகற விரங்கி யளிப்பவ ரிலையோ
        வத்தகு மழவியா னருள்வாய்,
கலகமில் கழகஞ் சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநாயகியே.
28
3045 அழுமழ வொன்றற் களித்தனன் றீம்பா
        லம்பலத் தாடிய பெருமான்,
பழுதற நீயு மளித்தனை தீம்பால்
        பசித்தழு மிளமழ வொன்றற்,
கொழுதரு மிவற்றா னினக்குறு புகழ்போ
        லெம்பிராற் குண்டுகொ லியம்பாய்,
கழுமணிச் சிகரி பொலிதிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
29
3046 இடையறா வன்பு பெருக்கிநீ பூசை
        யியற்றிட வினிதுள முவந்து,
சடையறா முடியோ னுறைதரப் பெற்ற
        தண்ணிழ னாவலந் தருவோ,
புடையறா தமர ருறைதரப் பெற்ற
        பொலந்தரு வோசிறந் ததுகட்,
கடையறாக் கருணை யாய்திரு
        வானைக் காவகி லாண்டநாயகியே.
30
3047 சிறுபிறைக் கொழுந்து வீற்றிருத்
        தலினாற் றேவதேவன்றிரு முடிமேன்,
மறுவிலச் சுவடு பொலிதரு மைய
        மருவுறா தஃதுமற் றெவர்க்கு,
முறுமறைக் கரிய நின்னடி யகத்து
        மொளிருமச் சுவடுகா ரணமென்,
கறுவொழித் துரைப்பாய் புகழ்த்திரு
        வானைக் காவகி லாண்டநா யகியே.
31
3048 எதிர்மலர் தொடுத்த மாரவே ளுடல
        மெரிக்குண வாக்கிய பெருமா,
னதிர்வரு மெய்யிற் பாதிநீ கவர்ந்தா
        யமைதர முழுவதுங் கவர்ந்தா,
லுதிர்தலி னினது திறமையா ருணர்வா
        ரோங்கவன் வியாப்பியப் படலாற்,
கதிர்படு மிதுவே யருடிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
32
3049 தவவலி யுடையோர் பலரையு மயக்கிச்
        சடைமுடி யோனெதிர் மயங்கி,
யிவருமம் மயக்காற் புணர்ந்தொரு மகவு
        மீன்றமான் மோகினி தனித்துப்,
பவர்படர் வனம்புக் குறைதன்மற் றவன்மெய்ப்
        பாதிநீ கவர்ந்ததோர்ந் தன்றோ,
கவலரும் வளமை மலிதிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
33
3050 நீயெனப் பெருமான் விரும்பியோர் தினத்து
        நிகழ்தரப் பொலிவதும் புவிக்குத்,
தாயெனப் படுநீ யவனெனப் பொலியுந்
        தன்மையும் வேறலே மென்று,
சேயெனப் படுபல் லுயிர்க்கெலா முண்மை
        தெரிப்பது போலுமீ தருளே,
காயெனப் பவமுற் றகழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
34
3051 பரவுநங் கருணை வான்றவ முடையார்
        பாலலாற் புன்மையோர் பாலும்,
விரவுமோ வென்னி னெழுபெரு வெள்ளம்
        விரிதரு வாரிதி மட்டோ,
வுரவுதீ ருறவி யளையினும் புகுமே
        யுவமையில கோமளக் கொழுந்தே,
கரவுதீர் முனிவர் சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
35
3052 சடையெனும் வனத்து வாழ்தருங் கங்கை
        தனித்துறை வாள்கொலென் றெண்ணி,
விடைமிசைப் பெருமா னவளுயிர் வாழ்வான்
        மிலைந்தனன் கொன்றையாங் கன்னப்,
பெடையன நடையா யனையவன் றனைநீ
        பித்தனென் றெண்ணுதல் பிழையே,
கடையுறா வளமை மலிதிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
36
3053 பரவுறு முலகத் துயிரெலா மீன்று
        பருவர லவையுறா தோங்க,
வுரவுறு கருணை யால்வளர்த் திடுநீ
        யொருமலை மகளென வுதித்து,
விரவுறு புறவு கிளிமயில் பூவை விரும்புபு
        வளர்த்தவா றென்னே,
கரவுறு மவர்கா ணாத்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
37
3054 பரிதிவந் துதய மெழமுறுக் குடையும்
        பங்கய மலர்மிசை யுறைவா,
ரரிமறு மார்பு மயன்றிரு நாவு மமர்பவ
        ரென்பர்நின் முகமாம்,
விரிமலர்க் கமலத் துறவரென் றுணரார்
        மேதினி மடமையென் சொல்கேன்,
கரிசறு வளமை மலிதிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
38
3055 விரும்புநின் செங்கை தாங்கலா லிரண்டாம்
        வேற்றுமை விரித்துரை செய்யா,
தரும்புதா மரைதாங் குவாரென லான்மூன்
        றாவதும் படுசொலும் விரிக்கும்,
பெரும்புவி மலர்பூ மாதெனும் பெயர்கள்
        பெறும்வினைத் தொகைகுணத் தொகைப்பேர்,
கரும்புபைங் கமுகிற் பொலிதிரு
        வானைக் காவகி லாண்டநா யகியே.
39
3056 நந்திய வறியா மையினினைத் துதிப்பே
        னாயினே னாயினுமதனான்,
முந்திய வினைமுற் றொழிதரா துறையு
        முறைமையென் மறவியி னேனு,
முந்திய வழலைத் தொடிற்சுடா துறுங்கொ
        லொழிவருங் கருணைவா ரிதியே,
கந்திதென் பொருவப் பொலிதிரு
        வானைக் காவகி லாண்டநா யகியே.
40
3057 அங்கையேந் துறுபைங் கிள்ளையின் மொழியோ
        வறுமுகக் குழவிவாய் மொழியோ,
சங்கையே குழையாக் கொண்டவ னூடறணித்திடப்
        புகலுமின் மொழியோ,
மங்கைநின் செவிக்கு நாயினேன் புன்சொன்
        மற்றுநீ யிரங்கலெவ் வாறோ,
கங்கைதாழ் பொன்னி சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
41
3058 ஒப்பினின் புகழே கேட்கவென் செவிகண்
        ணோங்குநின் னுருவமே காணத்,
தப்பினின் றனையே பாடிட வாய்கை
        தவாது நின் னடிப்பணி யாற்ற,
விப்படி யுறுமேற் செங்கதி ருதய
        மெத்திசை யெழினுமற் றென்னே,
கப்பிணர்த் தருக்கள் சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
42
3059 ஓதுறு முறைமை யொன்றின்முன் மூன்று
        ளொருசிறி யேற்குநின் பதிக்கும்,
போதுறு குழனீ நடுப்பொலி தலினாற்
        புரிந்து நின் பதியொடு மெனைப்பின்,
றீதுறு மிரண்டி னீக்கியொன் றாக்குந்
        திறனினக் கன்றியார்க் குளது,
காதுறு கண்ணார் சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
43
3060 கோவண மறையாக் கொண்டனன் பெருமான்
        கொண்டனை நீயுமே கலையாத்,
தூவண வவன்மா தேவன்மா தேவி
        துதிக்குநீ யெனிற்றிரு நெடுமா,
லேவண வவற்கு நீவியாப் பியமென்
        றிசைப்பதெங் ஙனமருட் டாயே,
காவண மறுகு மலிதிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
44
3061 பொறியரி தொடரு மருமலர்த் தாளோன்
        பொலியனந் தொடர்சடா முடியோ,
னறியுநின் கொழுநன் பொறியரி தொடரு
        மலர்க்குழ லினைநடை யன்னஞ்,
செறிதரத் தொடர்மென் பதத்தினை யெனினீ
        தேவொடு மாறுளாய் கொல்லோ,
கறிபயி லளிசூழ் பொழிற் றிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
45
3062 திருந்துறு தந்தை யாகிய வரையைத்
        திரிபுர மெரித்த நாட் குழைத்த,
பெருந்திற லுணர்ந்தம் மலையுள மகிழப்
        பெருந்தகை நிறமுலைக் கோட்டாற்,
பொருந்துறக் குழைத்தாய் போலுநின்றிறமை
        புகலுதற் கடங்குமோ தாயே,
கருந்துழாய் மார்பன் புகழ்திருவானைக்
        காவகி லாண்டநா யகியே.
46
3063 மறைமுதல் பொருவ வேந்தினை நீயு
        மலர்புரை தருகையில் வன்னி,
யுறைதரு மனையா னிறமுநின் னிறமு
        மொத்தன வாயினுமவன,
தறைதரு மெழுநா வதுநின தொருநா
        வதுசெவி யவாமொழியதுதான்,
கறையற வெதுநீ புகறிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே
47
3064 குடகட லொடுங்கு மிரவிதண் மதியங்
        குணகட லுதிக்குமென் றுரைக்கும்,
படவர வேந்து முலகநின் னொருகைப்
        பங்கயத் தொடுங்குநின் கொழுநன்,
றடமலர் வதனத் துதிக்குமென் றுணராத்
        தன்மையென் மென்மைசான் மயிலே,
கடவுளர் பலருஞ் சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
48
3065 பெருவழக் கெடுத்துப் பேரவை யேறிப்
        பேசுவ குறையறப் பேசி,
யொருதிரு நாவ லூரனை யாண்டா
        னோங்குவெண் ணாவ லூ*ர*ண்ண,
லருளொடு நீயு மத்தகு செயலொன் றாற்றினன்
        றென்றியா னினைந்தேன்,
கருளற வொளியின் மலிதிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
49
3066 முதுபுக ழுடைநின் பதியிரு பாத
        முழுமலர்க் கருச்சனையாற்றின்,
மதுமல ரொன்று குறையினு மதற்கு
        மாறுகண் ணிடந்திடல் வேண்டு,
மதுசெய மாயோ னல்லன்யா னின்பொன்
        னடியருச் சனைசெய்வான் புகுந்தேன்,
கதுமென வருள்செய் தருடிதரு
        வானைக் காவகி லாண்டநா யகியே.
50
3067 தருமமென் றுரைக்கு மளியமர் நின்கைத்
        தாமரை மலரின தலர்ச்சி,
பெருமதி மலர்ச்சி மாற்றுமென் றுரையார்
        பெருமதி யவர்ச்சியே செழித்த,
மருமலி கமல மலரின தலர்ச்சி
        மாற்றுமென்றுரைப்ப ரீதென்னே,
கருணையங் கடலே யருட்டிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
51
3068 நீவினோ தத்தா னின்பதி முகக்க
        ணிகழ்கைசேர்த் தெடுத்திடுங் கால,
மோவிய மனையாய் கணமுமின் றுனக்கஃ
        தும்பரா தியபல வுயிர்க்கு,
மேவிய கோடி யுகம்பல வாமவ்
        விநோதநீ யாற்றுதறகாது,
காவியங் கண்ணார் பயிறிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
52
3069 தென்னவன் புரிந்த பெருந்தவப் பேற்றாற்
        செழுந்தழ லகத்தொரு மகவே,
யென்னநீ யுதித்த வாஞ்சையுட் குறித்தே
        யிறைநுதற் கண்புதை யாது,
மன்னமற் றிருகண் புதைத்தனை நின்னை
        மதிக்குல மென்பதோர்ந் திலையோ,
கன்னவி றோளார் பயிறிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
53
3070 அரும்புமோர் நின்கைக் கணிபல வணிந்துள்
        ளவாவொடு தாங்குமா தர்களை,
விரும்புபு சுமக்கு மெல்லிதழ்க் கமல
        மெய்த்தவமுடையன வெனவே,
யிரும்புவி புகன்றா லனையமா தர்கட
        மிருந்தவப் பெருமையென் புகல்கேன்,
கரும்புநேர் மொழியார் பயிறிரு
        வானைக் காவகி லாண்டநா யகியே.
54
3071 சிலம்பகத் துதித்த நின்னடி தற்சூழ்
        சிலம்பகத் துதித்தமா தரைவல்,
வலம்பகப் பொலியு முலையினா யங்கை
        மலரகத் துதித்தமா தென்ன,
வுலம்பகப் பொருதோ ளரன்முடிக் கொளாமை
        யுணர்ந்தன்றோ வூடலிற் றாக்குங்,
கலம்பக முலாமுற் புனைதிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
55
3072 பெரியவர்க் கிடுக்கண் புரிவதை யுணர்ந்து
        பெரும்புகழ்த் தந்தைதன் மரபென்,
றரியவர் சிந்தை யாலயம் புகுவா யயர்ந்துமெண்
        ணாமல்வண் குறிஞ்சிக்,
குரியவன் கரத்துப் புகூஉக்குரு குப்பே
        ரொருவரை கொன்றனை யழகே,
கரியவன் பிரமன் சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
56
3073 நினையுணர் மகடாய் மரபென வொருமா
        னெடுங்கையேந்தினன் பெம்மா னம்மான்,
றனையுணர் மகன்றாய் மரபெனக் கிள்ளை
        தன்னைநின் கையிலேந் தினையால்,
வினையுன ரார்சொன் னீயுநின் பதியும்
        விரும்புறு மாடலென் னுரைக்கேன்,
கனையுண ரளிசூழ் பொழிற்றிரு
        வானைக் காவகி லாண்டநா யகியே.
57
3074 பொலிதரப் பசந்து நீர்மழை யெங்கும்
        பொழியுமே புயலது போல,
மலிதரப் பசந்து நீயும்வண் கருணை மழைபொழி
        குவைகொடு வினையான்,
மெலிதர லுற்ற வெனையொழித் திடுவான்
        விதியெவன் விமலமெய்ச் சுடரே,
கலிதரு துயர்சா ராத்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
58
3075 நறையிலா மலரோ நயமிலா மொழியோ
        நயனமில் லாதவாண் முகமோ,
பொறையிலாத் தவமோ மகவிலா மனையோ
        புனலிலா வோடையோ நீதி,
முறையிலா வரசோ மதியிலா விரவோ
        மூடனேன் பத்தியில் பாடல்,
கறையிலா வளமை மலிதிரு வானைக்
        காவகிலாண்டநா யகியே.
59
3076 குணமிலேன் மொழிபா நயமில தெனினுங்
        குறித்ததை யேற்றருள் செய்ய,
விணர்மலி குழானிற் கேதகுஞ் சிலம்பி
        யியற்றுநூற் பந்தரு முவந்து,
புணரருள் புரிந்தா னின்பதி யந்தப்
        புராணநீ யோர்ந்தனை யன்றே,
கனமலி முனிவர் சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
60
3077 வரிவிழிக் குடைந்த மானையு நுதற்கு
        மானுறாப் பிறையையு மல்குற்,
கிரிதரும் படவெவ் வரவையு மருங்குற்
        கிணைதராத் துடியையுஞ் சுமந்தான்,
றுரிசறு வனப்பார் நின்னுறுப் பினுக்குத்
        தோற்றறும் விசேடமென் றுணர்ந்தே,
கரியகண் டத்தோ னருட்டிதரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
61
3078 பொறையரு ளடக்க மன்புப சாரம்
        பொலியுமா சாரநல் வாய்மை,
யறைதரு மின்ன குறையுளே னெனினு
        மடிமையே நினக்கியா னுறுப்புக்,
குறையுடை யாரு மக்களென் றெடுத்துக்
        கூறுவருலகர்நீ யுணர்வாய்,
கறையற விளங்கு மருட்டிரு வானைக்
        காவகிலாண்டநா யகியே.
62
3079 உரைசெய்வெண் ணாவனிழலுறை பெருமா
        னோங்கருண் முறைசெலுத் தியகோன்,
விரைசெய்பூங் கொன்றை யவனென நீயும்
        விருப்பொடு செலுத்திடல் வேண்டும்,
புரைசெயென் பாலே மற்றது செலுத்திற்
        பொருப்பின்மே லிடுசுடர் போலாங்,
கரைசெயா வளங்கண் மலிதிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
63
3080 புண்ணிய வெள்ளை நாவலோ னாரம்
        பூண்டவ னெனும் பெயர் புனைந்தான்,
றண்ணிய குணத்து நீயுமென் பாட றழுவுபு
        பூணுவை யாயி,
னண்ணிய பாடல் பூண்டவ ளெனுமோ
        ரரும்பெயர் நினக்குமுண் டாமே,
கண்ணிய வரங்க டருதிரு வானைக்
        காவகிலாண்டநா யகியே.
64
3081 தழைசெய்வெண் ணாவ னறுநிழ லுறைவான்
        றனிமுத லவனொரு பாகத்,
துழைசெயொள் விழியா யுறைகுவை நீமற்
        றுன்னடி நிழலிலெஞ் ஞான்றும்,
விழைசெயா னுறையப் புரிந்திடி னதனான்
        மிக்கபுண் ணியநினக் குண்டே,
கழைசெய்பூங் கழனி பொலிதிரு
        வானைக் காவகி லாண்டநா யகியே.
65
3082 பிரம்படி பட்டுங் கல்லடி யேற்றும்
        பிறைபொரு வில்லடி கொண்டு,
நிரம்புற வருள்வா னோங்குவெண்
        ணாவ னிழலுறை பவனடி யார்பா,
லுரம்பயி லவன்போ னீயவ்வா றேற்றின்
        புதவுந ளல்லண்மெல் லியனீ,
கரம்பறு கழனி மலிதிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
66
3083 பற்பல ரறியப் பித்தனென் றெள்ளிப்
        பனவபோ வென்றுளார் தமையும்,
பொற்பலர் பெருமான் விடாமென
        வாண்டு புரந்தன னங்ஙன மின்றி,
வெற்பலர் மருந்தே துதித்துவா வென்னும்
        வினையினேன் றனைவிட விதியென்,
கற்பலர் நந்த வனத்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
67
3084 தேவியோ டினிது வந்தருள் புரிந்தான்
        சிவனடி யார்க்கென்ப தன்றி,
யாவிநேர் கொழுந னோடுவந் தாண்டா
        ளம்மையென்பாரிலை யன்னே,
மேவியச் சீர்த்தி நினக்குறா விதமென்
        விளம்பிட வேண்டுநா யேற்குக்,
காவியார் தடஞ்சூழ் தருதிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
68
3085 அடியவர் குறிப்போர்ந் தாண்பனை காய்க்க
        வாற்றெதிர் செல்லவே டென்பின்,
பொடிமட வரலா கக்கராம் விழுங்கும்
        பொருடரச் செய்தனன் பரமன்,
கொடியனேன் குறிப்போர்ந் துன்னடிக் கன்பு
        கொளப்புரி வதுமுனக் கரிதோ,
கடிமலர்த் தடங்கள் சூழ்திருவானைக்
        காவகி லாண்டநா யகியே.
69
3086 அயனரி குலிச னமரருண் ணடுங்க
        வடர்ந்தெழுங் கொடுவிடம் வாங்கி,
நயனமூன் றுடையா னுண்டனன் முன்ன
        நங்கைநின் பவளவா யமிர்தப்,
பயனுணர்ந் தன்றோ வலனெனி னனைய
        பரமனெவ் வாறுணத் துணிவான்,
கயன்மலர்த் தடங்கள் சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
70
3087 ஒளிமிகு சம்பு லிங்கநா யகர்போ
        லுடையையா னுதல்விழி நீயு,
மளிமிகு மனையார் மாரனை யெரித்தார்
        யாரைநீ யெரித்தனையம்மா,
விளிமிகு நாயேன் வினையினை யெரித்தா
        லிரும்புக ழவரினு நினைக்காங்,
களிமிகு மமரர் சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
71
3088 நெடுவலி கொடுமா மேருவிற் பிடித்தாய்
        நீயஃ துணர்குவன் யானு,
மடுதிறற் சூலி பிடித்தன னென்பா
        ரவனியுட் சிலர்கருத்தென்னோ,
விடுகிடை நீயு மவனும்வே ரல்லீ
        ரென்பதை யுணர்ந்தனர் கொல்லோ,
கடுவிழி மடவார் பயிறிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
72
3089 அம்பலத் தாட வெடுத்ததா டுணையென்
        றறைவனோர் கான்மலை யரையன்,
வம்பலர் முன்றிற் றிருமணத் தம்மி வைத்ததா
        டுணையென்ப னோர்காற்,
செம்பொரு டுணியா னென்றனை யிகழே
        றேர்ந்தொரு வழிநின்றே னன்னாய்,
கம்பலர்த் தடஞ்சூழ் தருதிருவானைக்
        காவகி லாண்டநா யகியே.
73
3090 எதிரறு பொதுவிற் குறட்பிணர் வெரிந்மே
        லியைத்திடறகாதென வுணர்ந்து,
முதிருணர் வுடைய பரன்மறைச் சிலம்பார்
        மொய்வலத் தாணிறீஇ யிடத்தா,
ளதிர்வர வெடுத்தான் வழுதியவ் வருமை
        யறிதரான் பிழைத்தனன் பொறுத்தாய்,
கதிரருட் கழகே யதுதிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
74
3091 பரவுவெண் ணாவ னீழலோ னிடத்தாள்
        பற்றிய வென்முனங் குறுக,
வுரவுசெய் தண்ட தரனுள நடுங்கு
        முதைத்ததத் தாளெனவுன்னி,
விரவுமப் பதநின் பதமன்றோ வதனை
        மென்பத மென்பதென் விளம்பாய்,
கரவுறாப் புலவர் புகழ்திரு வானைக்-
        காவகி லாண்டநா யகியே.
75
3092 ஒருகருங் கேழ லுருவெடுத் திணையி
        லுன்பதி யடிமலர் காண்பான்,
பெருநில மகழ்ந்த மாயவ னினது
        பிறங்குபே ராலயஞ்சூழ்ந்த,
பொருவினீ றிட்டான் மகிலடி கண்டாற்
        போதுமே புண்ணியக் கொழுந்தே,
கருள்கடிந் தொளியின் மலிதிரு
        வானைக் காவகி லாண்டநாயகியே.
76
3093 உயன்மறந் தடருந் திரிபுரஞ் சிதைப்பா
        னொருவரை யெளிதினிற் குழைத்த,
பயன்மதி முடித்த பாடல்சால் பெருமான்
        பாழியந் தடநெடுந் தோள்கள்,
வியன்முலைக் கோட்டாற் குழைத்தருணினக்கு
        மெல்லிய லெனும்பெயர் தகுமோ,
கயன்மலர்த் தடங்கள் மலிதிரு வானைக்
        காவகி லாண்டநாயகியே.
77
3094 மையவாண் மகனெள் ளெச்சிலுண் டாற்கு
        மகிழ்ந்தருள் செய்துநின் கொழுநன்,
மெய்யவாஞ் சீர்த்தி படைத்தன னெனக்கு
        விரும்பிநீ யருளுவை யாயி,
னையபெண் மகளெள் ளெச்சிலுண் டானுக்
        கருளினா ளெனும்புகழ் நினக்காங்,
கையர்வந் தணுகற் கருந்திரு வானைக்
        காவகி லாண்டநாயகியே.
78
3095 புனல்பயி றவளை முழங்கநின் கொழுநன்
        புகழ்ப்பெயருரைத்ததா வுணர்ந்து,
மினல்பயில் கனகம் வீசினா னொருவன்
        மெய்ம்மையே நின்பெயருரைக்கு,
முனல்பயில் குழாம்பு கேன்றொழேன்புகழே
        னுவந்திடே னெங்ஙன முய்வேன்,
கனல்பயின் மணிமாமதிற்றிரு வானைக்
        காவகி லாண்டநாயகியே.
79
3096 மாவியல் பெருமான் மான்பிறை
        சுமந்தேன் வாமபா கத் தினி தமரு,
நீவிளை யாடற் கென்பனம் பற்க
        நிகழஃ திடைமருதூரின்,
மேவியோ ரரசில் விழுங்கிய தாதி
        வெறுப்பன மறைப்பதற்கென்று,
காவியங் கண்ணா யுணர்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
80
3097 அண்டகோ டிகளென் றுரைத்திடுஞ் சிற்றி
        லமைத்தமைத் தாடிடு வாய்நீ,
துண்டவாண் மதியஞ் சூடிய சடிலச்
        சுந்தரனழித்தழித் தாடும்,
பிண்டநூ லென்றும் பேதைநீ யனையான்
        பித்தனென் றுரைப்பது மெய்யே,
கண்டவா மொழியார் பயிறிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
81
3098 மகளென நினைந்து தாயென விளித்த
        மலையிறை மனையறி யாமை,
புகரறு பிரமன் முதற்பல வுயிர்க்கும்
        பொருந்துதா யாமுனைக் கணேச,
னகநகு முருகக்கடவுடா யென்று நவிலறி
        யாமையை யேய்க்குங்,
ககனமே லோங்கு மதிற்றிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
82
3099 இலங்கற முப்பத் திரண்டென வகுத்தாங்
        கிகலற வவையெலாம் வளர்த்து,
மலங்குயிர் பலவும் புரக்குநீ கொடியேன்
        மாட்டருள் புரியினஃ தவற்றுட்,
டுலங்குமொன் றோடுசே ராதுகொ றனிப்பிற்
        சொற்றிமுப் பத்துமூன் றென்றே,
கலங்கலில் வளமை மலிதிருவானைக்
        காவகி லாண்டநா யகியே.
83
3100 இளைத்தடைந் தேனை யாடியென் றுனையா
        னிரந்திரந் தேத்தநீ யிரங்கி,
வளைத்தபே ரருளா லாளுவ தனிலு
        மன்றநீ யேயருள் புரிந்தான்,
முளைத்தசீர் பரவ விடமிலை கேட்டோ
        முகின்மழை வழங்கிடுந் தாயே,
களைத்தடஞ் சிகரி சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
84
3101 பிழைபல வுடையே னாயினு மவற்றைப்
        பேதைநீ யென்பதற் கிணங்கக்,
குழைமனத் தகற்றி யாளவே வேண்டுங்
        கூர்ந்தினி தாண்டிடா யென்னின்,
மழைமலர்க் கூந்தற் கங்கையைப் புகழ்வேன்
        வைவரே நொந்தவர் தாயே,
கழைமலி கழனி சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
85
3102 சடைமிசை மாதை நோக்கியா ரெனினீ
        சங்கர னீரென்பான் முகமு,
னிடைதெரி தரலென் னென்னினோக் குறுநின்
        னெழின்முக முதனிழ லென்ப,
னுடையநா யகிநீ மறுத்திடிற் பிறராலுணரென்பா
        னுணரவல் லவர்யார்,
கடையுற லொழிந்த வளத்திருவானைக்
        காவகி லாண்டநா யகியே.
86
3103 எனக்கருள் செயினின் கொழுநனைப் புகழ்வே
        னிமயநின்றந்தையைப் புகழ்வேன்,
மனக்கினி தாநின் மைந்தரைப் புகழ்வேன்
        மலரினின் றோழியர்ப் புகழ்வே,
னினக்கினி யவரா மடியரைப் புகழ்வே
        னின்னையும் புகழுவேன் றாயே,
கனக்கடி மதில்சூழ் தருதிருவானைக்
        காவகி லாண்டநா யகியே.
87
3104 பூவண நகரிற் பொன்னனை யாளிற்
        புகுந்தனன் முன்புகாமாரி,
தூவண வன்பி னைந்திணை யெனிநூல்
        சொற்றதை விளக்கின னென்னின்,
மாவணத் தளிர்நேர் மேனியா யுலக
        மாதுகொ னீவிடை யிதற்கென்,
காவண நிறைவீ தித்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
88
3105 பேயொடு நடிக்கும் பித்தனே யென்றோ
        பெருங்கதி யிலியிவ னென்றோ,
தாயொடு தந்தை யில்லவ னென்றோ
        தம்பிரா னொருதிருமேனி,
நீயொரு பாதி நின்முனோர் பாதி
        நிலவுறக் கொண்டது நன்றே,
காயொரு வாத்தென் பொலிதிரு
        வானைக் காவகி லாண்டநாயகியே.
89
3106 மோகினி யுருக்கொண் டொருதரம் புணர்நின்
        முன்னவன் றனக்குமோர் பாதி,
யேகலி லெழினின் றனக்குமோர் பாதியெம்பிரான்
        மேனியி லென்றா,
லாகியநீயே யவனெனத் தெரிந்தே னல்லையென்
        றாற்பொறுப் பாயோ,
காகனஞ் சுமக்கும் வளத்திரு வானைக்
        காவகி லாண்டநாயகியே.
90
3107 பல்லுல கீன்ற நின்றிரு வுதரப் பாலுள
        தென்னுநின் னிடைநே,
ரொல்லுமா றிலதா யினுமொரு பக்க
        மொத்தலிற் சிருட்டியை யாற்றும்,
வெல்லுநா யகன்கைத் துடியெனி னின்றன்
        மெல்வ யிற் றிற்கது புகழோ,
கல்லுமா மலத்தர் சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநாயகியே.
91
3108 வண்படு கருப்புச் சிலைகொடு நெடிய
        வலிபடு மேருவிற்கொண்ட,
தண்படு மதியஞ் சூடியைப் பொருது
        சயம்படு நகைபுரிந்துவப்பா,
யொண்படு வலர்க்குப் பசும்புல்வன் படையென்
        றுரைப்பதை விளக்கினை தாயே,
கண்படு மனச்செய் சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநாயகியே.
92
3109 தேவிநின் னிடைதோ ளொத்திடு குணத்தாற்
        சிதம்பர தலத்தும்வேய் வனத்து,
மேவிய நகைமுத் தணிமுலை யொக்கும்
        விதத்தினாற் றிருமுல்லை வாயில்,
பாவிய கயிலை யிடத்தும்வீற் றிருப்பன்
        பரன்றலை மதியனே யன்றோ,
காவியன் ககன முறுந்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
93
3110 சுவைபடு கனிசெய் பனசநெட் டரம்பை
        சூதமா மலகம்வெண் ணாவ,
லிவைமுதற் பலவான்றருநிழ லுறைவா
        னினியநின் மொழிச்சுவை யவாவி,
நவைபடு கொடிய வச்சிர வனமு
        நயந்தனன் பித்தனா தலினாற்,
கவைபடு சூலி யெழிற்றிரு வானைக்
        காவகி லாண்டநாயகியே.
94
3111 இறையவன் வாமத் துறையுநீ தொழில்செ
        யுமையவர் தருப்பணங் காட்ட,
மறைவின்மற் றதனை நோக்கியவ் விறைவன்
        வலப்புறத் தொருமடக் கொடிநன்,
குறைவதென் னெனமற் றவனொடு பிணங்கே
        லுற்றுநோக் கிடிற்பிழை யில்லான்,
கறைமலி களத்தன் வனத்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
95
3112 கொடியது பிறத்த லதனினு மம்ம
        கொடியதே யிறத்தலிவ் விரண்டுந்,
தடிதர நினைந்தேன் றந்தைதா யில்லான்
        றறுகண்வெங் கூற்றுதைத் தாற்குன்,
னடியனென் றுணர்த்தி யருள்விலக் குவையே
        லகிலமீ தொருகதி யுண்டோ,
கடிமலர்த் தடங்கள் சூழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
96
3113 தடியுண லென்றும் வனசரர் பெருமான்
        றருதடி மிசைந்தன னொழிக,
மிடியிடை யவர்மா லென்றுநிற் களித்தான்
        மேனியிற் பாதியா தலினாற்,
படிவிதி விலக்கி லான்பர னென்னைப்
        பற்றியா டற்கவை குறியான்,
கடிதரா துணர்த்து நீதிரு வானைக்
        காவகி லாண்டநாயகியே.
97
3114 வரக்கருங் கொண்மூ மழைபொழி யாதேன்
        மண்பயிருயும்வகை யுண்டோ,
திரக்கடுங் கவலை சிதைதரப் பல்காற்
        செய்யும் விண் ணப்பநீ யுணர்ந்து,
மிரக்கமில் லவள்போ லிருத்தியேற்
        கருணை யெங்கினி யிருப்பது தாயே,
கரக்கரும் வளங்கண் மலிதிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
98
3115 மாயவ னாயோர் பாதியில் லவளாய்
        மற்றொர்பா தியுங்கவர்ந் தனையா,
னாயகன் மேனி யெனினவன் வடிவ
        நாடொறு மறைந்ததா யிருக்கச்,
சேயமண் சத்தி மயமெனா தந்தோ
        சிவமய மென்பதென் னுரையாய்,
காயமீ தெழுந்த மதிற்றிரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
99
3116 பனிபடு நின்றாட் பங்கயம் பொங்கு
        பனிவரை யகநக நிகழுந்,
துனிபடு பொழுது பரன்முடி மதியந்
        துண்ணெனத் தாக்குநீர் வாவி,
நனிபடு முட்டாட் பங்கயம் பெறுமோ
        நவின்றன விணையிலென் றுணர்ந்தேன்,
கனிபடு பொழில்விண் கமழ்திரு வானைக்
        காவகி லாண்டநா யகியே.
100

திருவானைக்கா அகிலாண்டநாயகிமாலை முற்றிற்று.

*சிறப்புப்பாயிரம்
தஞ்சை, சதாவதானம்
ம-ள-ள-ஸ்ரீ சுப்பிரமணிய ஐயரவர்களியற்றியது.
* இது பழையபதிப்பைச் சார்ந்தது.
3117 ஞான கேத்திரத் தமரகி லாண்டநா யகித
னீன மில்பதத் தியற்றமிழ் மாலையொன் றியற்றி
மான மார்ந்தமீ னாட்சிசுந் தரநன்னா வலவ
னூன மோவுறப் புனைந்தன னுலகுவப் புறவே.
1
3118 அன்ன மாலையைச் சோமசுந் தரப்பெய ரமைந்த
நன்னர் மேவிய சுகுணனச் சியற்றிநல் கென்று
பன்ன நன்றென்று தியாகரா சப்பெயர் படைத்த
மன்னு நாவலன் பதிப்பித்து வழங்கினன் மகிழ்ந்தே.
2
சிறப்புப்பாயிரம் முற்றிற்று.
-----------------------

This file was last updated on 20 August 2009.
.