Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" : பகுதி 28 (2915 -3015)
கலைசைச்சிதம்பரேசுவரர் மாலை

Tiricirapuram makAvitvAn mInATci cuntaram piLLaiyin
pirapantat tiraTTu : part 28 (2915 -3015)
kalaicaic citamparEsvara mAlai
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany
for providing us with a photocopy of the work.
Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach.
We thank the following persons in the preparation and proof-reading of the etext:
Senthan Swaminathan, S. Karthikeyan, Nalini Karthikeyan and R. Navaneethakrishnan<
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2009.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 28
கலைசைச்சிதம்பரேசுவரர் மாலை *

* கலைசையென்பது தொண்டைநாட்டிலுள்ளதான தொட்டிக்கலையென்னுமூர்.

கணபதி துணை.
திருச்சிற்றம்பலம்.
விநாயகர் துதி.

ஆசிரியவிருத்தம்.
2915 பூமேவு மதுவொழுகி யுவட்டெடுத்துப்
      புலவகலப் புணரிபாயு,
மாமேவு பொழிற்கலைசை யெழிற்சிதம்ப
      ரேச்சுரற்கோர் மாலைசாத்த,
நாமேவு புகழ்மலிநீ ராவிதொறு
      நனிவிளங்கு நாளும் வாழுந்,
தேமேவு செங்கழுநீ ராம்பலடித் தாமரைநார்
      சிறப்பக் கொள்வாம்.

நூல்.
2916 பூமலி யிதழி புனைசடை முடியிற்
      புக்கடங் கியபுனல் பொருவ,
மாமலி தளிர்நின் னடியிலென் பரந்த
      மனம்புகுந் தடங்குமா றருள்வாய்,
பாமலி புகழ்ப்பைந் தோகைமேன் முருகப்
      பண்ணவனமர்தல்போற் பரிதி,
காமலி யிணைந்த கமுகின்மேற் பொலியுங்
      கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
1
2917 ஆய்மதி புனைந்த சடையினஞ் சரவு
      மமர்தல்போ னின்னடி யவரை,
யேய்தர வரைபுத் தகத்தொரு புறத்தி
      லென்னையு மெழுதுவித் திடுவாய்,
வேய்குழன் மடவார் படாமெறிந் தெழுந்த
      வெம்முலை விழைதரத் தெங்கங்,
காய்பல பாளை யெறிந்தெழும் பொழில்சூழ்
      கலைசைவாழ் சிதம்பரே சுரனே.
2
2918 பாற்பசுக் கறவார் கற்பசுக் கறக்கப்
பலகைபெற் றாரெனநின்சீ,
ரேற்பயான் பேசேன் வம்புபே சிடுதற்
      கெண்ணில்வாய் படைத்துளே னென்னே,
சூற்பய னடைந்த மாதர்தம் வதனத்
      துணைவிழியெனவிணைக் கயனீர்க்,
காற்பணைக் கமல மலரகத் துறையுங்
      கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
3
2919 வரியமர் முலையார் புரிநட நோக்கி
      மகிழும தொழிந்துமாலயற்கு,
மரியநின் னடமன் பூற்றெழ நோக்கி
      யானந்த மடையுநாளென்றோ,
பொரியரை மாச்சூர் மாவின மென்று
      புரந்தர னாங்குயிற்கினமாங்,
கரியபைங் குயில்கள் சினைபுகுந் துழக்குங்
      கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
4
2920 பொருவரு நினது திருவரு ளென்னும்
      புகழ்மிகு மூரலுக் கன்றே,
மருவிய வினையேன் மும்மல மெனுமும்
      மதிலெதி ராவதெந் நாளோ,
செருவிழி மடவார் புலவியி னெறிந்த
      செழுமணி பலவொளிர் வீதி,
கருவலி வலன்மெய் வீழ்களம் பொருவுங்
      கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
5
2921 செய்யநின் னடியார் செய்யுண்மு னாயேன்
      செய்யுளெத்தன்மைய தென்னி,
னையநின் னரிய கூத்தின்முன் பேய்க்கூத்
      தவ்வளவேயினி தருள்வாய்,
வெய்யபாற் கடற்க ணெழுதிருப் புரைய
      மேதியின் பாலளாம் வாவிக்,
கையலர் மடவார் மூழ்கிமே லெழுஞ்சீர்க்
      கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே
6
2922 பெண்ணுரு வொடுமற் றாணுரு வமுமாய்ப்
      பிறங்குநின்றிருவுருக் குறியேன்,
புண்ணுரு வாம்பெண் ணுருவமே குறித்துப்
      புலம்புவேற் கென்றருள் புரிவாய்,
மண்ணுரு வசுர வுருவெனத் தெரிக்கு
      மாண்புபோன் மாதர்பொன் முகத்துக்,
கண்ணுரு நீலம் பலமலர் மருதக்
      கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே
7
2923 விரிந்தபாற் கடலின் மாலொடு மீனு
      மேவுநின்னருட் பெருங்கடலிற்,
புரிந்தநின் னடியா ரோடுநா யேனும்
      புக்குமே விடிற்குறை வருமோ,
சொரிந்தபான் மேதி யுழக்கலின் மாடத்
      துவசம்வேள் கொடியென மடுவிற்,
கரிந்தநீள் கயலக் கொடிமிசைப் பாயுங்
      கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே
8
2924 இரும்புனற் பயின்றும் பசுநிறம் வாய்ந்து
      மீரமில் கிடையென மறைநூல்,
விரும்பிடம் பயின்றும் பூதிசா தனமே
      மேவியுமன்பில னானேன்,
சுரும்பினஞ் செறிந்த மலர்க்கொடி தாய்ப்பைந்
      தோகையைப் பிணித்திட வளைந்த,
கரும்பின மதவேள் கைக்கரும்பேய்க்குங்
      கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே
9
2925 மலைமகள் செங்கை மலர்கொலோ மால்கண்
      மலர்கொலோ நின்றிரு வடிக்குப்,
புலையரும் விரும்பாப் புன்புலால் யாக்கைப்
      பொறையினேன் சொன்மல ரைய,
தலைமைசால் புலமைச் சங்கநாவலவர்
      தமக்குநூல் பயிற்றினோ ரென்னக்,
கலைவரம் புணர்ந்தோர் கழகமே மல்குங்
      கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே
10
2926 நண்பக லதற்கு மேனிழல் பொருவ
      நாடொறும் வளர்வினை காலை,
யெண்படு மதற்கு மேனிழல் பொருவ
      வெந்தநாள் குறுகுமோ வுரையாய்,
வண்பழ னங்க டொறுமட மாதர் மலரடி
      மேற்சிலம் பொலிபோற்,
கண்படு கமல மிசையன மொலிக்குங்
      கலைசைவாழ்சிதம்பரேச் சுரனே
11
2927 உழிதரு வளியோ டுழிதரு சருகி
      னொழிவற வுழிதருபுலனோ,
டுழிதரு மனமற் றுழிதரா வணம்யா
      னுன்னருள் பெறுவதெந் நாளோ,
கழிதரு பழனத் துழிமலர் கமலக்
      கழிசுவைத் தேன்கரு முகிலிற்,
கழிதரு கடலிற் பாய்ந்துவ ரகற்றுங்
      கலைசைவாழ்சிதம்பரேச் சுரனே
12
2928 வெளிபசுந் தோலிற் சுருளுமேல்
        விண்மேல் வீசுபா டாணநின் றிடுமே,
லளிபடு பத்தி யன்றியு முத்தி
        யடையலா மையவென் செய்கே,
னொளிமினார் முகமுங் கமலமும்
        பகுத்தாங் குணர்தராதுழல்பெரு வாவிக்,
களியளி பிரம ரப்பெயர் விளக்குங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
13
2929 சொற்படு முவர்நீர் நனிபரு கிடினுந்
        தொலையுமோ தாகமங் கதுபோற்,
பற்பல நூல்க ணனிபடித் திடினும்
        பாறுமோ பவத்தொடர் பைய,
வற்பொடு முறுவார் குறிப்பறிந் துதவு
        மக்குண மிகுத்தலின் விண்வாழ்,
கற்பகஞ் சமழ்ப்பப் பொலிபவர் மேவுங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
14
2930 துறைமலி யன்பர் துதியொடு நாயேன்
        றுதியுநின் றிருச்செவி யேற்கு,
மறைகடல் புனித நதிப்பெரும் புனலோ
        டங்கண நீருமேற் றிலையோ,
நிறைசுதைத் தவள மாளிகை முகட்டு
        நெடுநிலா மதிநடு வுடலக்,
கறைதபத் தவழ்ந்து திரிதரும் வளமைக்
        கலைசைவாழ்சிதம்பரேச் சுரனே.
15
2931 குற்றவன் றருக்கள் பலவெனு மழலோர்
        குறும்பொறிக் கெதிருமோ வதுபோ,
லுற்றவென் வினையத் தனையுநின் னாம
        மொன்றினுக் கெதிர்படுங் கொல்லோ,
நற்றவத் தமைந்த வளகையே முதலா
        நகரெலாஞ் சிறுநக ரென்று,
கற்றவர் புகழப் பெருநக ராய
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
16
2932 ஒருவருக் கொன்று கொடுப்பவோர் கையு
        முளனலேன் வாங்குதற் கெனிலோ,
பருவலி வாணன் கையினு மிரட்டி
        படைத்துளே னென்றுய்வேன் கொல்லோ,
பொருவில வென்று நோக்குதல் செய்யும்
        புலவர்கண் ணேறுறா வண்ணங்,
கருமுகி லுறைமேற் பொதிந்தமா ளிகைசேர்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
17
2933 வரையெலா மிவர்ந்து நதியெலாம் படிந்தும்
        வனமெலாமமர்ந்தும்வா ரிதிசூழ்,
தரையெலா முழன்று மாவதெ னின்னைச்
        சரண்புகா மானிடர்க் கம்ம,
திரையெலா மலைக்குஞ் செயலறிந் துறுகற்
        செறித்தெனச் செழுமணி பலவுங்,
கரையெலாஞ் செறியப் பொலிதரும் வாவிக்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
18
2934 மனைவியைப் பொடித்து மகவினை யறுத்து
        மறங்கொடு தந்தையை வதைத்து,
நினைதரு தமரைச் செகுத்தும்பெற் றனரா
        னின்னருள் யான்பெற்ற தென்னே,
புனைதரு புவிக்குப் பொன்னிற மன்று
        புகல்கரும் பொன்னிற மென்னக்,
கனைகுரல் வேழங் கடம் பொழி வாரிக்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
19
2935 உலகெலா மழலிற் பொடிசெய்தா யிடைநின்
        றொருவனா யாடிமே வுனக்கெ,
னலகில்வெங் கொடியேன் றீமனத் தகத்து
        மாடிமே வுதல்வழக் கன்றோ,
விலகுபு திசைக் டொறும்பரந் தாங்கணியைந்தமா
        மதத்துளை யடைப்பக்,
கலகவாள் விழியார் சுண்ணமாட்டுவக்குங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
20
2936 வலியக னினது மனமதன் மாட்டு
        மருவுறே னென்றுநீயிசைக்கிற்,
பொலிபருப் பதமந் தரமுத லிடத்துப்
        புணர்ந்தது தகாததாய் முடியு,
மலிசுவைக் கரும்புங் கந்தியு மாவும்
        வருக்கையும் வளரிலாங் கலியுங்,
கலிபுக வரிதென் றகலுறச் சூழுங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
21
2937 அழலகத் திட்ட மெழுகென வறைநே
        ரமைந்தவென் மனங்குழைத் துன்னைப்,
பழமறை யெல்லாம் வல்லவ னென்னும்
        பழஞ்சொலைப் புதுக்குவ தென்றோ,
முழவொலி மதமா முழங்கொலி வயமா
        முரணொலி தேரொலி வீரர்,
கழலொலி யெழுந்து கடலொலி மாற்றுங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
22
2938 மனிதரி லுயர்ந்தோர் வானவ
        ரெனுஞ்சொன் மற்றைய ரிழிபுகண் டன்று,
புனிதமில் புழுத்த நாயினுங் கடையேன்
        புன்மை கண் டெழுந்ததே யன்றோ,
வினிதுவந் தடைந்தோர் மயக்கமா நகர
        மெய்துறா வகையருள் செய்து,
கனிதிரு வருணன் னகரமே யாய
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
23
2939 வெள்ளம்வா ரிதிமட் டோவெறும் பளையும்
        விரவுறுநின்னருள் பெருமை,
யுள்ளவர் மட்டோ சிறியனே னிடத்து
        முறத்தகு நீயுமீ துணர்வாய்,
புள்ளவாந் தடத்துப் பலவகை மீனும்
        புழுகுசாந்தாதிக ணாறக்,,
கள்ளவாள் விழியார் மெய்கழீஇக் குடையுங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
24
2940 சிறியவர்க் கியல்பு குற்றமே புரிதல்
        செயிரறு பெரியவர்க் கியல்பு,
மறியவக் குற்ற மாய்த்தினி தாள்கை
        மற்றிது நீயறி யாயோ,
செறிவய லிளஞ்சூ னெற்பயிர் மேய்ந்து
        திருமலர் குதட்டியங்கரும்பு,
கறிசெய்து மேதி மரநிழ லுறங்குங்
        கலைசைவாழ் சிதம்பரேச்சுரனே.
25
2941 பலகலை யுணர்ச்சி தோன்றினு முறுமோ
        பக்குவ மிலார்க்குமெய்ஞ் ஞான,
மலர்கதிர் கோடி தோன்றினுங் கூகைக்
        கந்தகாரங்கெடுங் கொல்லோ,
மலர்தலைக் கதலி மிசைமுகி றவழ்தன்
        மற்றது மாம்பையே யென்று,
கலவிவிண் ணாள்வோன் றழுவுத லேய்க்குங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
26
2942 மாதர்த மல்கு லெனும்பண வராவென்
        மதியெனு மதியினை விழுங்க,
மோதஞர் மிகுவெம் பவமெனுங் கடற்கண்
        முழுகுவே னுய்வது முளதோ,
வாதர மிகுபொன் னுலகமந் தரத்தே
        யமர்ந்ததென் றமரருட் கொண்ட,
காதர மொழிய மாடமேற் றாங்குங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
27
2943 பாவியேன் மனமா கியபெரு வெள்ளம்
        பத்தியா கியபெருநதியை,
மேவியே யொளிர்நின் பாதமா கியநல்
        வீரையுட் புகுவதெந்நாளோ,
பூவியல் கழனி யாமைவன் முதுகிற்
        பொருந்துகைக் குயங்கள்கூர் படைப்பக்,
காவியங் கருங்கட் கடைசியர் தீட்டுங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
28
2944 அருளிலாத் தவமோ விதுவில்வா
        னகமோ வாதரஞ் சற்றுமி லறமோ,
தெருளிலா வுணர்வோ விரையிலா மலரோ
        சிறியனேன்பத்தியில் பாடல்,
பொருள்பெறு சுதைதீற் றுயர்ந்தமா ளிகைமேற்
        புதுப்பிறை தவழ்தன்மீப் பொங்குங்,
கருளில்பாற் கடலூர் வலம்புரிகடுக்குங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
29
2944 இடையறா வன்பர் பாட்டொலி முன்ன
        ரேழையேன் பாட்டொலி தேமா,
வுடையபைங் குயிலி னோசைமுன் கொடிசெய்
        யோசையே யுணர்ந்தனன் யானு,
மடையெழில் வான மீமிசைப் பொலியுமந்துகிற்
        கொடியெலாம் வானக்,
கடையுடுக் கணங்கள் சிதர்தரப் புடைக்குங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
30
2946 குயமகன் றிகிரி போற்சுழல் கொடியேன்
        கொடுமனங்கைபுனைந் திடுமண்,
மயமகன் றிகிரி போற்சுழ லாது
        வயங்கநீ யருளுவ தென்றோ,
நயமகன் றிடாமின் னாரொடா டவர்பூ
        நகுதட மடப்பிடி யொடுவன்,
கயமகன் றுறைநீ ராடல்போ லாடுங்
        கலைசைவாழ்சிதம்பரேச் சுரனே.
31
2947 கொடியவெங் கூற்ற நடாவுறு கடாவின்
        கொடுமணி யோசைகேட் டிடுமுன்,
னெடியநீ யுகைக்கும் விடைமணி யோசை
        நீசனேன் கேட்குமா றுளதோ,
வடியயிற் கண்ணா ரட்டில்வா யிட்ட
        வளங்கெழு குய்ப்புகை பரந்து,
கடிகெழு திசைகண் முழுமையுங்கமழுங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
32
2948 வட்டநாண் மலர்மேற் கடவுளென் றலைமேல்
        வருந்துறக் கடவையென் றெழுதி,
யிட்டதீ யெழுத்து நீரெழுத் தாதற்
        கெத்தவஞ் செய்துளே னடியேன்,
பட்டமே வுறுமோ திமமுயிர்ப் பெடையைப்
        பார்ப்பொடுஞ் சிறகரா லணைத்துக்,
கட்டவாக் கமல மலர்மிசையுறங்குங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
33
2949 ஆயவென் பிறவிச் கணக்கெழு தியவே
        டாலவா யழவில்வெங் குருமுத்
தீயரிட் டருளே டாகுறா தமணத்
        தீயரிட்டொழிந்தவே டாமோ,
மாயமீன சிறிது சிறிதென மீண்டு
        வலிபடைத்துடல்பருத் தளவில்,
காயமீ னஞ்சத் தோயமீன் பயிலுங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
34
2950 என்னகத் திருண்மாய்த் தமைந்தகா மாதி
        யெனும்பலமீனொளி மழுக்கி,
முன்னரு மொளியைப் பரப்பிடு வதற்குன்
        முக்கணு ளொருகணே யமையும்,
பொன்னணி முலையார் புலவியினெறிந்த
        பொங்கொளி மணிப்பணி செறிந்து,
கன்னவி றிணிதோளிளையர்தேர் தடையுங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
35
2951 அருந்துதல் பொருந்த னிவிர்த்திசெய் விரத
        மையநின்பொருட்டியா னியற்றேன்,
வருந்துறு பிணியா திகளுறி னியற்ற
        வல்லவ னாயினே னன்றோ,
விருந்துற நோக்கி மகிழ்நர்மேற் கொண்ட
        வெகுளியாற் செய்தசெந் தடங்கண்,
கருந்தடங் கண்செய் துடன்மகிழ் பவர்சூழ்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
36
2952 தின்றுதின் றொழிவே னென்றுவெங்
        கூற்றஞ்சினந்தெதிர் வீசுபா சத்தோ,
டொன்றுவெம் பிறவி வீசுபா சமுமற்
        றூத்தையே னுய்யுநாளுளதோ,
துன்றுபைங் குமுத மலர்த்தடந் தோய்ந்து
        துதைமண்ணம் வாருபு தென்றற்
கன்றுவந் துலவு மரமிய மாடக்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
37
2953 குவலய நடுங்கக் கருங்கடா வுகைக்குங்
        கூற்றுவன் கரங்கொடு புடைக்குந்,
தவலரும் வயிரத் தண்டிளங் கதலித்
        தண்டென வென்றெனக் கருள்வாய்,
அவலமர் தருநீ ரிரவல ரலான்ம
        ணமரிர வலரிலை யென்னக்,
கவலரும் வளமைப் பெருங்கொடை யினர்சேர்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
38
2954 2954. மாண்டநின் னடியார் குழாத்தொடு மடியேன்
        வயங்குநின் பேரவை புகுங்கா,
லாண்டகை நந்தி கணமிவன் புகுத
        லடாதெனத் தடாவகை யருள்வாய்,
பூண்டகு மணியுமாடமும் வீதிப்
        புறங்களுங் கடியன வாயுங்,
காண்டகு சிறப்பு மிகப்படைத் தோங்குங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
39
2955 பொறிவழிச் செல்ல மனமதன் வழியே
        போகுமென் னறிவுவன் கடாப்போ,
நெறிவழிச் செல்லக் கொழுவதன்
        வழிச்செனெடியதுன் னூசியே நிகரும்,
வெறிகமழ் கைதை நெய்தலுங் கொன்றை
        விரைகமழ் தரையுமேற் படர்ந்து,
கறிகமழ் வரையுஞ்சூழ்பெரு மருதக்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
40
2956 பற்றவா வறுத்த நின்னடி யவர்தம்
        பழக்கமே விரும்பினப் பழக்கத்,
துற்றவா தரமே நின்னடி யடைதற்
        குறுதுணை யாமஃ தருள்வாய்,
துற்றவா டவர்தந் தடக்கையும் யானைத்
        துதிக்கையுந்தாழ்வுற்றுக் கிடந்துங்,
கற்றநா வலர்கள் புகழ்தரப் பொலியுங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
41
2957 மனத்தினா னினையேன் வாக்கினாற் றுதியேன்
        மலர்கையாற் றூவிநிற் பணியே,
னுளத்தகா வென்மா னிடப்பிறப்
        பினுமற்றோரிழி பிறப்புநன் றாமால்,
வனத்துழாய் மாயோன் வளர்ச்சியி னுயர்ந்து
        வயங்குபே ரண்டமூடுருவிக்,
கனத்தமா மணிப்பொற் கோபுரம் பொலியுங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
42
2958 அடியனேன் மனத்துக் கழலொடு சிலம்பு
        மதளொடு பட்டும்வெள் ளியநுண்,
பொடியொடு சாந்துஞ் சடையொடோ தியுமாய்ப்
        பொலிதரப் பொறுவதெந் நாளோ,
கொடியிடை மடவார் கொவ்வைவா யிதழுங்
        குறியகட் கொழுஞ்செழுங் கரும்புங்,
கடிபடத்தெ விட்டா விரதமூற் றெடுக்குங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
43
2959 ஆதர மில்லா வென்னையு முறுபே
        ரருளினா லாண்டுகொள் ளுவையேற்,
பேதம துறாநின் னடியவர் புதிதாப்
        பித்தனென்றுனையுரைப் பாரொ,
மாதர்த மிருவார்க் கொங்கையு மவர்தம்
        வால்வளைச் செங்கையு நாளுங்
காதலங் கிள்ளை யுற்றுறப்பொலியுங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
44
2960 பாரிடைப் பிறந்த புலியுட னிலைக்கப்
        பற்றரண் செய்பவரறிவு,
நீரிடைப் பிறந்த புற்புத நிலைக்க
        நெடியபூண் கட்டுவா ரறிவே
சீரிடைப் பிறந்த மாடமே னீலச்
        செழுஞ்சுவ ரருகுறு மடவார்
காரிடைப் பிறந்த மின்னெனத் தோன்றுங்
        கலைசைவாழ் சிதம்பரேச்சுரனே.
45
2961 அந்தகன் கணம்வெம் பாவிவந் தனையா
        வளறது பாரெனு முனநின்
பந்தமில் கணங்க ளுயர்சிவ லோகம்
        பாரிது வெனப்பெறு வேனோ,
சந்தநான் மரைசொல் வழியழன் மூன்றுந்
        தவாதுசெ யிருபிறப் பாளர்,
கந்த நாண் மலர்மேற் கடவுளிற் பொலியுங்
        கலைசை வாழ் சிதம்பரேச் சுரனே.
46
2962 பொருவிலன் புடைய நின்னடி யவருட்
        புன்மையேன்றளிர்மலர் கனிகாய்,
மருவுபன் மரத்துணின்றிடும் வற்றன்
        மரம்பொர நிற்பனோ வருள்வா,
யுருவளர் நீல மணிப்பெரு மாடத்
        துட்பொலி மாதர்தம் வதனங்
கருநெடு முகிலுட் பொலிமதி புரையுங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
47
2963 கோதிலா வமுதே குணப்பெருங் குன்றே
        குறை வில்பேரருட்பெருங்கடலே,
சோதியே யென்று நாடொறு நினையே
        துதித்திட வரமெனக் கருள்வா
யாதிநா ளமர ரதிபதி நகர மதற்கு
        மா றாகமண் ணாண்ட,
காதிசேய் படைத்த நகரெனப் பொலியுங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
48
2964 பல்லெலாந் தெரித்துத் தராதரந்
        தெரியாப் பாவியர் மேற்கவி பாடிச்,
சொல்லெலாஞ் சொல்லித் துயருவார் நின்னைத்
        துதித்தலின் வருபய னறியா,
ரல்லெலா நிலைகெட் டோடுபு மற்றோ
        ரண்டத்துப் புகவொளிர் செங்கேழ்க்
கல்லெலாம் புகுந்த மாளிகை மல்குங்
        கலைசை வாழ் சிதம்பரேச் சுரனே.
49
2965 ஒல்லுரு வெனநின் னுருவிலா வுருவு
        ளொன்றுநான் பற்றுறாத் தீங்காற்
பல்லுருப் பற்றி யுழலுகின் றேனார்
        பரவைசூழ் புவியிடத் தைய
வில்லுரு நுதல்வே லுருவிழி மடவார்
        விளங்குமோ தியும்பல வுருக்கொள்,
கல்லுரு மாடங் களுமண மாறாத
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
50
2966 பரந்தெழு காமஞ் சுரந்தெழு வெகுளி
        படர்ந்தெழு மயக்மிம் மூன்று
நிரந்தர முடையே னிவற்றுளொன் றுறினு
        நிரயமே.தருமென்ப துணரே,
னரந்தடி நெடுவே லாடவர் கண்ணு மரிது
        தோற்றுதலென மருங்குல்,
கரந்தவர் கண்ணுங் கருமைநீங் காத
        கலைசை வாழ் சிதம்பரேச் சுரனே.
51
2967 பூதமோ ரைந்தும் பொறிகளோ ரைந்தும்
        புலன்களோ ரைந்தும்வெம் பாச
பேதமோ ரைந்துங் கலப்பற வுள்வார்
        பெரி யரக் கரங்களோ ரைந்து,
மாதவ னனைய பெயர்ப்பொரு ளடைவான்
        மலர்க்கரஞ் சென்னிமேற் கூப்பிக்,
காதநீ டெல்லைப் புறமுறச் சூழுங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
52
2968 ஒருகணப் பொழுது நின்னடித்
        தொழும்பினூத்தையேன்மருவுத லரிது,
மருவினு மதனை யுகமென நினைப்பேன்
        மற்றதிற்குற்றமொன் றுண்டோ,
பருதியு மதியும் பாம்புமைங்
        கோளும்பற்றுபு புரியஞர் தன்பாற்,
கரிசில்வாழ்க் கையருக் குறாவகை யிரிக்குங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
53
2969 பரவுநின் கோயில் சூழ்தரப் பங்கும்
        பகரும்வே றொருகருமத்தி,
லுரவுறப் படரக் காலுமா யமைந்த
        வுணர்விலேன் பங்கிருகாலும்,
விரிவுறப் பூத்த தருவெலாங் கருமை
        மிகுமளி மொய்த்தலில் வான்வாழ்,
கரவிலர் பழுத்த நாவலோ வென்னுங்
        கலைசைவாழ்சிதம்பரேச் சுரனே.
54
2970 நாய்நரி கழுகு பருந்துமுற் பலவு
        நகைகொடு விருந்துணவெருவை,
தோய்தடி யாதி நிரம்பிய நாலாட்
        சுமைபல நாட்சுமந்தெய்த்தே,
னாய்பொறி யடக்கி வந்ததே யுணவ
        தாக்கிவா ளராக்குகை தொறுந்தோங்,
காய்தவர் போல்வாழ் குறிஞ்சிசூழ் மருதக்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
55
2971 2971. வெள்ளிய பிறைநீர் நுண்பொடி துரோணம்
        விடைவரையானைமுற் பலவுங்,
தள்ளிய லிலாநீ வெள்ளறி வுடையேன்
        றன்னையுங்கொள்வது வழக்காற்,
புள்ளிய லோவ மாடமேன் மடவார்
        புலவியிற்குழனின்றுங் கழித்த,
கள்ளியன் மாலைக் கரம்பைய ரூடுங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
56
2972 நலமலி தரநின் னாமங்க டுதியார்
        நடுநடுங் கிடவரு நமனைக்,
குலமலி நமனென் றெண்ணினர் போலுங்
        குவலயத் திடைச்சிலவறியா,
ருலமலி மைந்தர் திரள்புய மார்ப
        முத்தமாங் கங்களிற் புலந்த,
கலமலி முலையார் பதச்சுவ டறாத
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
57
2973 தருநிழல் வாழ்க்கை மலர்மிசை வாழ்க்கை
        தயங்கொளி வைகுந்த வாழ்க்கை,
யருவருப் புடையே னின்னடி வாழ்க்கை
        யவாவினேற் கென்றருள் புரிவாய்,
பொருவரு தம்பா லிரந்தவர் தம்பாற்
        புவியிடத் தியாரும்வந் திரப்பக்,
கருவிமா முகில்போற் பொழிபவர் சேருங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
58
2973 மாயவெங் காலன் வாதனை தவிர்ப்பான்
        மற்றவ னாருயிர் குடித்த,
சேயபங் கயத்தாள் பற்றுபு நின்றேன்
        சிறியனே னிரங்கிடல் வேண்டு,
மீயுயர் பசும்பொன் மாடமேற் பயிலு
        மின்னனார் பேரெழில் கண்டா,
காயவாழ்க் கையர் தம் முட்கலாம் விளைக்குங்
        கலைசை வாழ் சிதம்பரேச் சுரனே.
59
2975 மாரவேள் பகழி மலர்க்கிலக் காயுள்
        வருந்தும்வா னவர்களத் துயரந்,
தீரநம் படியார்க் கருள்வாரோ நுதற்கட்
        டெய்வநா யக நினையல்லாற்,
பாரமால் வரையும் வரையுமோ துதல்போற்
        படர்மறு கிடைமினார் மைந்தர்,
காரவாண் முலையும் புயங்களு மோதுங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
60
2976 பெற்றது சிறிது பலவிட யத்துப்
        பெறாதது பெரிதெனக்கொள்ளுங்,
குற்றமிக் குடையே னாயினுங் கடையேன்
        குலவு நின்னருளுற லென்றோ,
துற்றவல் லிருளும் விளர்ப்புற மதியின்
        றோற்றமு மிகையென முற்றக்,
கற்றவர்மேனி நீற்றொளி விளங்குங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
61
2977 விரைகெழு மென்பூ நின்முடிக் கணியேன்
        மின்னனார் குழன்முடிக் கணிந்து,
வரையற மதவேள் வழங்குபூப்
        பெற்றுவாரிசூழ் பூவிடை யுழல்வேன்,
புரையறு பதும ராகமாளிகையின்
        பொங்கொளி யறாமையா லிரவுங்,
கரையகல் பொய்கைக் கமலம்வாய்மலருங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
62
2978 என்றுநற் றுணையா நினையிகழ்ந் தயலா
        ரிணக்கஞ்செயிழி ந்தவென் னினுந்தற்,
கொண்றுண வளிப்பார் தமைத் தொடர்ந்
        தயலா ருறவிகழ் ஞமலியே விசேடந்,
துன்றுபைங் காவின் மதுவிருந்தருந்தித்
        தொகுபொறி வண்டினம் வயிற்றுக்,
கன்றுவெம் பசிதீர்ந்தணியிசை பாடுங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
63
2979 அருந்துய ரென்னுட் காரொளி யாய
        தம்மவோ வெள்ளொளியாகத்,
திருந்துபச் சொளியோர் பாலுடைத்
        தாய சேயொளியூன்றுவ தென்றோ,
முருந்துறழ் நகையார் மாடமே னின்றுமொய்த்
        தவா னவர்விழி யிருளக்,
கருந்துணர்க் கூந்தன் முடித்திட விரிக்குங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
64
2980 நெடியபே ரடியார் குழாம்புகத் தகாத
        நீமையேன் றனையிரங்குபுசிற்,
றடியவர் குழாத்துக் கடையொரு
        புறத்தி லாவதுபுகுத்திட வேண்டுந்,
துடியிடை மடவார் கந்துக மாடல்
        சோலையினோக்கிய மந்தி,
கடியவிர் தேமாங் கனிபறித் தாடுங்
        கலைசைவாழ்சிதம்பரேச் சுரனே.
65
2981 மேயநம் மடியார் குழாத்திடைப்
        புகுத்தே மெய்யிலா நினையெனின் மாசு,
தேயநா யேனை யாதுதான் செய்யத்
        திருவுளங் கொண்டனை யைய,
பாயுநான் மறையு முழங்கொலி மன்றற்
        பணையொலி பரிகரி யொலியா,
காயவாழ்க் கையர்கை செவிகவித் திடச்செய்
        கலைசை வாழ் சிதம்பரேச் சுரனே.
66
2982 2982. பவமற வொழித்தி மறுப்பையே லருளும்
        பவந்தொறு மிடையறா தடியேன்,
சிவமொழிப் பொருளுட் கொளப்புரி யிவற்றென்
        செய்திடத் திணிந்தனை யைய,
தவமது வருந்திக் காமரம்
        பாடித்தழைபொறிச் சிறைவரி வண்டு,
கவனவொள் விடைநேர் மைந்தர்தார் மருவுங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
67
2983 யாரினும் பெரியை நீநினக் கதிகர்
        யாருமி லென்னையாளுவையேற்,
சீரினும் பெருகுங் கருணையோ னெனலாற்
        சினங்கொடு விலக்குவார் யாரே,
போரினு முயந்த பொழிலினு மாடப்
        பொங்கொளி முகட்டினுங் கமஞ்சூற்,
காரினு முறங்கப் பொலிபெருவளமைக்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
68
2984 மன்னிய பவநோய்க் குன்னருண் மருந்து
        வயித்திய னீயெனத் தெரிந்துந்,
துன்னிய வந்நோ யறவுனை யடாமற்
        சுழலுவேன் விரகினே னன்றோ,
மின்னியன் மருங்கு லுழத்தியர் வெருவ
        விரிமலர்த் தடநின்றும் வாளை,
கன்னியங் கமுகின் கழுத்திறப் பாயுங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
69
2985 மண்டல மதனின் மானிடப் பிறப்பை
        மருவினா ரடைபயனினது,
தொண்டர்தந் தொண்ட ராகிநின் கோயில்
        சூழ்ந்துனைப் போற்றுத லன்றோ,
விண்டல மியங்கும் பரிதிபல் வடிவாய்
        மேவி வீற்றிருந்ததே யென்னக்
கண்டகண் வழுக்கப் பொலிமணி மாடக்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
70
2986 நீயமர் காஞ்சித் தலமுறேன் மகளிர்
        நிலவுகாஞ் சித்தல முறுவேன்,
மேயசீர்க் கூடல் விழைதரே னனையார்
        விருப்புறு கூடலே, விழைவேன்,
பாயநீர்ப் பண்ணை யகத்தெழு செந்நெற்
        பைம்பயிர் கருமதப் பகட்டின்,
காயமுண் மறைய வளர்ந்தெழு மருதக்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
71
2987 என்றுமை யாற்றை மேவுமென் மனநின்
        னிணையிலை யாற்றைமே வாது,
சென்றுயர் தில்லை தரிசித்த தில்லை
        திருவரு ளெங்ஙனங் கிடைக்குந்,
துன்றுநெற் பணையிற் பச்சிளங்
        கதிரைச் சுரருலகத்தினா னீன்ற,
கன்றுறப் பறித்து மென்றுவா யசைக்குங்
        கலைசை வாழ் சிதம்பரேச் சுரனே.
72
2988 மறைவனங் கொடிய பாவியேன் விழிக்கு
        மறைவன மாயின தாரூ,
ரறையருள் பெறுவான் புகுதயா னாரூ
        ராறெனினஞ்சுவன் மூழ்க,
நிறை பெரும் பழனக் கன்னலுங் கமுகு
        நெட்டிலைக் கதலியு மகவான்,
கறையறு மணிமண்டபத்தினுக் கெழில்செய்
        கலைசை வாழ் சிதம்பரேச் சுரனே.
73
2989 வளமலி மாட நின்றிருக் கடவூர்
        வாய்மையி னடைந்தவர்க் கென்று,
முளமலி யுவகை யெழவருள் கடவூ
        ருண்மையீதென்பதுட் குறியேன்,
றளமலி விடபச் சோலையுந் தருமச்
        சாலையுந் தயங்குபல் குன்றிற்,
களமலி போரும் வளமுகில் சேருங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
74
2990 மதித்தமா தங்க வனமனங் குறியேன்
        மாதங்க வனங்குறிப் பேன்மீன்,
குதித்தநீர்க் கோலக் காவுறேன் வீணே
        கோலக்காத்தோறுமுற் றுழல்வேன்,
பதித்தபைஞ் சாலிப் பயிரக மலர்ந்த
        பவளமுண் டகமர கதமே,
கதித்தபா றையிற்செங் காந்தளை நிகருங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
75
2991 விரும்பிந ளாறு புகுதரே மயக்க
        விரும்பின ளாறுபோய்ப் புகுவே,
மரும்பிய மலர்நீர் வாஞ்சிய மொருநா
        ளாயினும் வாஞ்சிய மழகே,
சுரும்பின மெழுந்து விழுந்துவாய் மடுத்துத்
        தொக்கமுண்டகமது வருந்திக்,
கரும்பினு மினிய காமரம் பாடுங்
        கலைசைவாழ்சிதம்பரேச் சுரனே.
76
2992 உடற்பரங் குன்ற நின்பரங் குன்ற
        முற்றொரு காற்றொழேன் கருவூர்,
விடற்கரு மாசை கொண்டெழேன் கருவூர்
        விடற்கரு மாசைமிக் குடையேன்,
மடற்செழுஞ் செய்ய மரைமலர் பசிய
        வயலக மலர்கதிர் பலவோர்,
கடற்பரப் பிடையே யுதித்தென மலருங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
77
2993 வேய்வன மடையேன் மங்கையர் தொடித்தோள்
        வேய்வன மடைகுவ னான்றோ,
ராய்வலஞ் சூழியெண் ணேனவ ருந்தியாய்
        வலஞ் சுழிகுறித் துழல்வேன்,
மாயிரும் புவியிற் பெரும்பிர தாபம்
        வதிவதிந் நகரென விருளைக்,
காய்மணி மாடச் சேயொளி மல்குங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
78
2994 மங்கையர் தங்கள் குழற்கருங் காடு
        மதித்தலிற் கழைப்பசுங்காடு,
பொங்குசெங் காடு புகழ்செய்வெண் காடு
        புந்தியின் மதித்திடா துழல்வேன்,
கொங்கவிழ் மலர்மேற் றிருவிற்குந் திருவங்
        கொடுத்திடத் தக்கதென் றென்றுங்,
கங்கையிற் றூய சான்றவர் புகழுங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
79
2995 கொழுமணி கொழிக்கு மருவியங் கயிலைக்
        குன்றநன் புகழ்க்கொடுங் குன்ற,
மெழுகழுக் குன்றங் குறித்திடேன் மடவா
        ரிணைமுலைக் குன்றமே குறிப்பே,
னொழுகொளி மணிப்பூ ணொண்ணுதன் மடவா
        ரொன்றவா லரிப்பெருங் குன்றங்,
கழுவுநீர் பாய்ந்து கன்னலை வளர்க்குங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
80
2996 நாரிய ரொடுசேர் பஞ்சணைப் பள்ளி
        நயந்துநின் னகத்தியான் பள்ளி,
சீரிய காட்டுப் பளியறப் பள்ளி
        சிராப்பள்ளி நயக்கிலேனாயேன்,
வாரிச மலரின் வழிநற வோடி
        மடையுடைத் திடையெதிர்ப் பட்ட,
காரியல் கதலிப் பூங்குலை சாய்க்குங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
81
2997 அமரரென் பெயரு மயனெனும் பெயரு
        மச்சுத னெனுமொரு பெயரும்,
விமலநின் னருள்சற் றுறுதலி னன்றோ
        விண்ணவர் வேதன்மால் பெற்றார்,
பமரமிக் குழக்கு மலர்க்குழன் மடவார்
        பற்பலர் குளித்தநன் மஞ்சள்,
கமழ்புனல் பணைநெற் பயிரெலாம் விளைக்குங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
82
2998 வானக மகவான் சத்திய வுலக
        மலரவன் வைகுந்த மாயோ,
னானவ னுவப்பின் வாழ்வதுன் னம்பொ
        னடியருச் சனைப்பயனன்றோ,
நானமும் புழுகு நெருக்கில்வீழ்ந் தளறா
        நன்மறு கிடைமினார் கூந்தற்,
கானநின் றுகுபூங் குப்பைமா றாத
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
83
2999 அடைந்தவர்க் கருளு மண்ணனீ யேயென்
        றருமறை முறையிட றெரிந்து,
முடைந்தநெஞ் சோடு நினையடை யாத
        வுணர்விலே னெங்ஙன முய்வேன்,
குடைந்துவண் டிமிர்பூஞ் சோலையின்
        மகஞ்செய் கோதிலார் வாய்மனுக் கேட்டுக்,
கடைந்ததெள் ளமுதிற கிளியெலா நவிலுங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
84
3000 நெற்படு பழனம் பற்பல வேண்டி
        நின்றன னீயினி திருக்கு,
மற்படு பழனம் வாஞ்சியேன் கொடிய
        வஞ்சக னல்லனோ கடையேன்,
பொற்பவா ரணமா கமநியா யம்பல்
        புராணநன் மிருதிமுற்பலவுங்,
கற்பவர்க் கிடமீ தெனப்பலோர் புகலுங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
85
3001 3001. அந்தகன் வன்கைத் தடியடி முடியேற்
        றளற்றியா னழுந்துறா வண்ண,
நந்திதன் மென்கைப் பிரம்படி யேற்றுன்
        னல்லடியழுந்துமா றருள்வாய்,
சந்தமுத் தரும்பி மரகதங் காய்த்துத்
        தயங்குசெம் பவளமே பழுக்குங்,
கந்திகண் மலிந்த காமரு சோலைக்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
86
3002 ஒன்றினைச் செய்கை செய்தரா தொழிகை
        யொழிந்துவே றொன்றினைச் செய்கை,
யென்றிவை யுடையோ னீயெனின்
        யானீடேறுமா செயனினக் கரிதே,
துன்றுபல சுவைய மடைவிருந் தோடுந்
        துய்த்துத்தேக் கெறிபவ ரன்றிக்,
கன்றுவெம் பசியின் வருந்துநரில்லாக்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
87
3003 பிணிநனி நன்றஃ துறினினை நினைக்கும்
        பெற்றியே நிறுத்தலி னதுதான்,
றணிதரு காலை யுறநினை மறக்கத்
        தக்கதே செயுமதா ரறியா,
ரணிகெழு திசையி னரவெலா மிடியி
        னமைதரு முழக்கென வெருவக்,
கணிதமின் முழவந் துயிறரா தொலிக்குங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
88
3004 புனைமுகி லுவர்நீ ரெடுத்துவ ரொழித்தல்
        புகலுமந் நீர்விருப் புணர்ந்தோ,
வெனையுமவ் வாறே யெடுத்துமும் மலமு
        மிரிப்பதற் கென்விருப் பெண்ணேல்,
புனைகுழன் மடவார் குழற்கிடு புகையும்
        பூசுரர் மகத்தெழு புகையுங்,
கனைகட லுதிக்குங் கதிரையு மறைக்குங்
        கலைசைவாழ் சிதம்பரேச்சுரனே.
89
3005 துடிதுடித் தடியேன் மனமையோ சோற்றுத்
        துறையிலேசெல்லும் தொழிந்து,
நெடியநின் சோற்றுத் துறையிலே செலாது
        நிறையரு ளெங்ஙனம் பெறுவேன்,
பொடியணி மேனிப் புண்ணியர் பூசை
        புரிந்துதோத் திரஞ்செய வெழுந்த
கடிதலின் முழக்கங் கடன்முழக் கவிக்குங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
90
3006 கொடியனேன் புரிந்த தீவினை
        யனைத்துங் குலவுநின்னாலயத் துள்ள,
கடிதலில் பொருளைக் கவருபு நுகருங்
        கயவரொடொன்றுவ தென்றோ,
பிடியடி தடியென் றொடிவற வடையும்
        பெருஞ்சினக் கூற்றுவ னென்றுங்
கடிதலி லெல்லைப் புறத்தும் வந்தடையாக்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
91
3007 வஞ்சகமு லோபம் பொறாமைமுற்
        பலவு மருவுநின் மனத்தியா நுறைதற்,
கெஞ்சலி லிடமின் றெனினினக் கொருசா
        ரில்லையோ விரங்குவை யைய,
வெஞ்சினக் கூற்றின் கருங்கடாக் காணின்
        வெகுண்டல நுகத்திடைப் பிணித்துக்
கஞ்சநற் பழன முழுபவர்மேய
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
92
3008 ஈனசம்பந்த மென்னைவிட் டகல
        விலங்கருட் சம்பந்தர்
புகழு ஞானசம் பந்தர் பாதசம் பந்த
        நான்பெற வென்றருள் புரிவாய்,
வானசம் பந்த மகளிர்கண் ணிமைத்தன்
        மருவினொப் பாகுவ ரென்னக்,
கானசம் பந்த மொழிநலார் பயிலுங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
93
3009 நிலைகுலை யமணக் கொடியர்க ளிட்ட
        நெடும்பொருப் பேபுணை யாக,
வலைகடன் மிதந்தார் திருவடித் துணையி
        லழுந்திலே னெங்ஙன முய்வேன்,
விலைவரம் பில்லா மணிகிடந் திமைக்கும்
        வீதியுளொன்றுகை விலைக்குக்,
கலைபுகழமரர் பதியினை வாங்குங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
94
3010 இலங்குமா ரூர னென்னுநின் றோழ
        னிணையடி யேத்தினிம் மையினே,
யலங்குநின் மற்றோர் தோழனாய், மறுமை
        யணைந்துமேற் கதியையு முறுவே,
னலங்குல வுறுபூம் பொழின்முசுக்
        கலைகணாளொடு நாணிறை மதியுங்
கலங்குற முகிலின் மீமிசைப் பாயுங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
95
3011 சிலையுநைந் துருக நினைநினைந் துருகித்
        தேம்பொலிவாசகஞ் சொற்ற,
நிலைபெறு வளமை வாதவூர்ப் பெருமா
        னிறையருள் கருதிநைந் துருகேன்,
மலையநின் றெழுந்த வாசக்கா லுலவும்
        வளத்துயர் கந்தியம் பொழிலோர்,
கலைமுனி யுணவாங் கடலெழுந்தனைய
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
96
3012 வரையினை யெடுத்த மதியிலா வரக்கன்
        மதித்தொரு சிரங்கரஞ் சேர்த்துப்,
புரையறு மிசைபா டிடமகிழ்ந் தருணின்
        பொலிவுறு கருணையே வாழ்க,
விரைகொணால் வகைய மலர்களு நிறைந்த
        வியங்கெழு நந்தன வனத்துக்,
கரையில்வண் டொலித்தல் கடவொலி மாய்க்குங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
97
3013 சிறுவிதி மகத்தி லவனொடு சார்ந்த
        தேவர்த முயிர்தபச்சினந்து,
மறுவலு மவர்க்கு மகிழ்ந்துயி ரருணின்
        வான்பெருங்கருணைவாழ்ந் திடுக,
வுறுபெருந் தவத்தாற் பிறதலத் தடையு
        முறுபலனினைத்தமாத் திரையே,
கறுவிக லின்றி யடைமகத் துவச்சீர்க்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
98
3014 வரையக மமர்ந்தும் வரைகரங் கொண்டும்
        வரையுதவொருமகட் புணர்ந்தும்,
புரையிலோர் தலத்து வரையுரு வெடுத்தும்
        பொலிவைநின் மனம்வரை யன்றே,
விரைமலி யகன்மா ளிகைதொறு மேற்றும்
        விளக்கொளி மிகையென விளங்கிக்,
கரையகன்மணிப்பூண் மடந்தையர் பயிலுங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே.
99
3015 செக்கரஞ் சடையும் வெண்பிறைக் கொழுந்துந்
        திகழுமுக் கண்ணுநாற் றோளு,
மைக்கரு மிடறு மொருபுறப் பசப்பு
        மலரடித் துணையுநான் மறவேன்,
மிக்கநற் றவத்து முனிவரும் பனிவான்மேய
        பல் லோர்களு மடையக்,
கைக்கரு முவகை யளித்துவீற் றிருக்குங்
        கலைசைவாழ் சிதம்பரேச் சுரனே. (100)

கலைசைச் சிதம்பரேசுவரர்மாலை முற்றிற்று.

This file was last updated on 3 July 2009.
.