இளங்கோவடிகள் இயற்றிய "சிலப்பதிகரம்"
மூலமும் நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி
நாட்டாரவர்கள் எழுதிய உரையும்
புகார்க்காண்டம் - பாகம் 2

cilappatikAram of ilangkO aTikaL
with the commentary of vEngkaTacAmi nATTAr
pukARk kANTam, part 2
In tamil script, unicode/utf-8 format

இளங்கோவடிகள் இயற்றிய "சிலப்பதிகரம்" மூலமும்
நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரையும் -2


உள்ளடக்கம்
பதிகம்
உரைபெரு கட்டுரை
புகார்க்காண்டம்.
1. மங்கல வாழ்த்துப் பாடல்
2. மனையறம்படுத்த காதை
3. அரங்கேற்று காதை
4. அந்திமாலைச் சிறப்புசெய் காதை
5. இந்திர விழவு ஊர் எடுத்த காதை
6. கடலாடு காதை
7. கானல் வரி
8. வேனில் காதை
9. கனாத்திறம் உரைத்த காதை
10. நாடுகாண் காதை
---------------

4. அந்திமாலைச் சிறப்புச் செய் காதை


(கடலாடை நிலமடந்தையானவள் ‘உலக முழுதாண்ட ஒரு தனித்திகிரியை உடைய உரவோனைக் காண்கின்றிலேன்’ என்று திசைமுகம் பரந்து, தன் கணவனாகிய பரிதியைக் கெடுத்து வருந்துங்காலை, முடியுடைப் பேரரசர் நீங்கிய அற்றம் பார்த்துக் குடிகள் வருந்துமாறு வந்து புகுந்த குறுநில மன்னர்போல மாலைப்பொழுது வந்தது. பின்னர், இளையராயினும் பகையரசு கடியும் பாண்டியர் குல முதலாகிய வெண்பிறை தோன்றி, மாலையாகிய குரும்பினை யோட்டி மீனரசினை ஆளா நின்றது. அப்பொழுது மாதவியானவள் நிலாமுற்றத்திலே மலரமளியில் ஊடலும் கூடலும் கோவலற் களித்து இன்புறுகின்றாள்; அவளைப் போன்றே கணவரோடு கூடிய மகளிர் பலரும் பூஞ்சேக்கையின் ஆவி போலும் கொழுநர் மார்பில் ஒடுங்கிக் காவிமலர் போலும் கண்ணாற் களித்துயில் எய்துகின்றனர். கண்ணகியோ காதலனைப் பிரிந்தமையால் மங்கலவணியன்றிப் பிறிதணி அணியாமலும், வேறு ஒப்பனை யொன்று மின்றியும், நுதல் திலகம் இழக்கவும், கண் அஞ்சனம் மறக்கவும், கூந்தல் நெய்யணி துறக்கவும் கையற்ற நெஞ்சுடன் கலங்குகின்றனள். அவள்போன்றே காதலர்ப் பிரிந்த மாதர் பலரும் ஊதுளைக் குருகுபோல் வெய்துயிர்த்துக் கண்கள் முத்தினை உதிர்க்க வருந்துகின்றனர். இவர்கள் இவ்வாறாக, இரவு நீங்கும் வைகறைகாறும் மகரக் கொடியையுடைய மன்மதன் நடு யாமத்தும் துயிலாது திரிதலால் நகர்க்காவல் நனி சிறப்பதாயிற்று.)
நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை
விரிகதிர் பரப்பி – விரிந்த கதிர்களைப் பரப்பி, உலகம் முழுது ஆண்ட உலகமனைத்தையும் ஆண்ட, ஒரு தனித்திகிரி-ஒப்பற்ற தனியாழியையுடைய, உரவோற் காணேன்-திண்மையுடையோனைக் காண்கின்றிலேன்; அங்கண் வானத்து-அழகிய இடத்தையுடைய வானின்கண், அணிநிலா விரிக்கும்-அழகிய நிலாவை விரிக்கும், திங்களஞ் செல்வன் யாண்டுளன் கொல்-திங்களாகிய செல்வன் எவ்விடத்துள்ளானோ, என – என்று, திசைமுகம் பசந்து-திசையாகிய தன்முகம் பசப்பூரப்பட்டு, செம்மலர்க் கண்கள் முழுநீர் வார- செவ்விய மலராகிய கண்கள் முழுதும் நீர்வார, ÓØமெÔõ பனித்து-மெய்ம்முழுதும் பனித்து, திரைநீர் ஆடை இருநில மடந்தை-கடலை ஆடையாக வுடைய பெரிய நிலமடந்தை, அரசு கெடுத்து அலம்வரும் அல்லற்காலை-தன் கணவனைக் காணாது நெஞ்சு கலங்குகின்ற இடுக்கட் பொழுதிலே,

ஞாயிற்றைப் பேரரசராகவும், புவியைக் கோத்தேவியாகவும் சிலேடை வகையால் உருவகஞ் செய்கின்றார். கதிர்-கிரணம். ஒளி. ஒரு தனித்திகிரி-ஒப்பற்ற ஒற்றைத் தேராழி, ஆக்கினா சக்கரம். செல்வன்- மைந்தன். திசை முகம் – திசையினிடம்; திசையாகிய முகம். திசை என்றமையால் முகம் நான்கு கொள்க. பசந்து-பசுவெயிலாற் பசுமையுற்று; பசப்புற்று. மலர்க்கண்கள் முழுநீர் வார-மலரினிடமெல்லாம் கள்ளாகிய நீர் ஒழுக, மலராகிய கண்கள் முழுதும் நீர்வார, பனித்து-பனிகொண்டு, நடுக்குற்று. அரசு-கணவன். "காலமுலகம்" என்னுஞ் சூத்திரத்தால் ஞாயிறு திங்கள் என்பன உயர்திணையாய் இசையா எனக்கூறிய ஆசிரியர் "நின்றாங் கிசைத்தல் இவணியல் பின்றே" "இசைத்தலுமுரிய வேறிடத் தான" என்று கூறினமையின், ஈறுதிரிந்து வாய்பாடு வேறுபட்டுத் திங்களஞ் செல்வன் என்றாயிற்று. மேல் இவ்வாறு வருவனவற்றிற்கும் இதுவே விதியாமென்க. கொல், ஐயப்பொருட்டு. கெடுத்து-மறைய விடுத்து; காணப்பெறாது. "எற்கெடுத்திரங்கி" என்புழிப்போல.


கறை கெழு குடிகள் கைதலை வைப்ப-இறை செலுத்துதற்குப் பொருந்தியுள்ள குடிகள் துயரமுற, அறைபோகு குடிகளோடு ஒரு திறம்பற்றி-அங்ஙனம் இறை செலுத்தாது கீழறுத்தல் செய்யும் குடிகளை ஒரு தலையாகப் பற்றி, வலம்படுதானை மன்னர் இல்வழி-வெற்றி பொருந்திய சேனையையுடைய வேந்தர் இல்லாத இடமறிந்து, புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்-அவர் நிலமெல்லாம் கெடும்படி புதிதாக வந்து தங்கிய குறுநில மன்னர் போல,

கறை-கடமை; வரி. துயருற என்பதனைக் கைதலை வைப்ப என்பதனாற் குறிப்பிட்டார். விருந்தின் மன்னர் குடிகொன்றிறை கொள்வாராகலின் வரி செலுத்துங் குடிகள் துயருறுவாரென்க. அறைபோதல் கீழறுத்தல்: உட்பகையாய்ப் பகைவர்க்கு உதவிசெய்தல். ஓடு-ஐ. இல் வழி-இல்லாதவிடம்: ஈண்டுக் காலத்தை உணர்த்தி நின்றது. குறுநில மன்னரை விருந்தின் மன்னர் என்றமையால் தானை மன்னர் தொன்றுதொட்டு வருவோர் என்பதாயிற்று.


தாழ்துணை துறந்தோர் தனித்துயர் எய்த-தம் மனத்திலே தங்கிய கொழுநரைப் பிரிந்திருக்கின்ற மகளிர் ஒப்பற்ற துயரினை யெய்தவும், காதலர்ப் புணர்ந்தோர் கலிமகிழ்வு எய்த-தம் காதலரைக் கூடியிருக்கும் மகளிர் மிக்க மகிழ்ச்சியை அடையவும் ; குழல் வளர்முல்லையில்-வேங்குழலிலும் வளர்கின்ற முல்லையின் மலரிலும், கோவலர் தம்மொடு மழலைத்தும்பி வாய் வைத்து ஊத-கோவலரும் இளமையுடைய வண்டுகளும் முறையே வாயை வைத்து ஊதவும், அறுகாற்குறும்பு எறிந்து-வண்டுகளாகிய குறும்பினை யோட்டி, அரும்பு பொதிவாசம்-அரும்புகள் உள்ளடக்கிய மணத்தினை, சிறுகாற் செல்வன் மறுகில் தூற்ற-இளந்தென்றலாகிய செல்வன் தெருவெல்லாம் தூற்றவும், எல்வளை மகளிர் மணி விளக்கு எடுப்ப-ஒளி பொருந்திய வளையையுடைய மகளிர் அழகிய விளக்கினையேற்றவும், மல்லல் மூதூர் மாலை வந்து இறுத்தென-வளம் பொருந்திய மூதுரின்கண்ணே மாலைப் பொழுது வந்துவிட்டதாக;
தாழ்தல்-தங்குதல். இவர் இடைவிடாது நினைத்தலை அவர் மனத்திற் றங்குதலாகக் கூறினார். தனித்துயர்-தனிமையாலாகிய துயருமாம். குழலிலும் முல்லையிலும் கோவலரும் தும்பியும் ஊத என்றது நிரனிறை. இனி, ‘குழல்வளர் முல்லையில்’ என்பதனைச் சிலேடையாக்கி, வேய்ங்குழலில் வளர்கின்ற முல்லை யென்னும் பண்ணைக் கோவலரும், கூந்தலில் வளர்கின்ற முல்லை மலரில் வண்டுகளும் ஊத என்றுமாம். குழல்-ஊதுங்குழலும், கூந்தலும். முல்லை-முல்லைப் பண்ணும், முல்லை மலரும். வளர்தல்-பொருந்துதல். தென்றல் தளிர்ப்பித்தலும் பூப்பித்தலு்ம் செய்யத் தான் இடைப்புகுந்துண்டலின் வண்டினைக் குறும்பென்றார். மணிவிளக்கு-மாணிக்க விளக்குமாம். கறைகெழு குடிகள்போல் தணந்தோர் துயரெய்தவும். அறைபோகு குடிகள்போல் புணர்ந்தோர் மகிழ்வெய்தவும் விருந்தின் மன்னர்போல மாலை வந்ததென உவமங் கொள்க. இப்பதியின் கண் மாலைப்பொழுது வந்ததனைச் சாத்தனார் கூறுமிடத்தும், "பைந்தொடி மகளிர் பலர் விளக்கெடுப்ப" எனவும் "கோவலர் முல்லைக் குழன் மேற்கொள்ள" எனவும் வந்துள்ளமை காண்க.


இளையர் ஆயினும் பகை அரசு கடியும்-தாம் நனி இளம்பிராயத்தினராயினும் பகையரசரை யோட்டவல்ல, செருமாண் தென்னர் குல முதல் ஆகலின்-போரில் மாட்சியுற்ற பாண்டியர் குலத்திற்கு முதல்வனாகலின், அந்திவானத்து வெண்பிறை தோன்றி-அந்திப்பொழுதிலே செவ்வானத்தின் கண் வெள்ளிய பிறை தோன்றி, புன்கண் மாலைக் குறும்பு எறிந்து ஓட்டி-வருத்தத்தைத் தரும் மாலையாகிய குறும்பினை எறிந்து ஓட்டி, பான்மையில் திரியாது-முறைமையில் வழுவாது, பாற்கதிர் பரப்பி-தனது பால்போலும் வெள்ளிய ஒளியை விரித்து, மீன் அரசு ஆண்ட-மீனிராச்சியத்தை ஆண்ட, வெள்ளி விளக்கத்து-வெண்மையுடைய விளக்கத்திலே.

பாண்டியர் இளையராயினும் பகைவர்க்கடிதலை "இளையதாயினுங் கிளையரா வெறியும்" "கிண்கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டு" என்னும் புறப்பாட்டுக்களாலறிக. வெண்பிறை எனப் பண்படுத்தமையால் எடுத்த மொழி இனஞ்செப்பிச் செவ்வானத்து வெண்பிறை தோன்றி யென்பதாயிற்று. புன்கண்-துன்பம். இடைநின்ற காலத்துப் புகுந்து வருத்துதலின் மாலையைக் குறும்பு என்றார். பான்மை-முறைமை. அரசியல். சந்திரன் உடுபதியாகலின் அவன் ஆள்வதனை மீனரசு என்றார்; மீனரசு என்பதற்குச் சந்திரன் என்று பொருள் கொள்ளின், மீனரசாகிய பிறை எனக் கூட்டுதல் வேண்டும். விளக்கம்-புகழென்னும் பொருளும் தோன்றும்.


இல்வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த பல்பூஞ் சேக்கைப் பள்ளியுட் பொலிந்து-மனையிடத்தே வளரும் முல்லையும் மல்லிகையும் மற்றும் பலவுமாகிய பூக்கள் அவிழ்ந்து பரந்த படுக்கையாகிய சேக்கையின்கண் பொலிவு பெற்று, செந்துகிர்க்கோவை சென்று ஏந்து அல்குல் அம்துகில் மேகலை அசைந்தன வருந்த-பரந்து உயர்ந்த அல்குலினிடத்தே அழகிய புடவையின்மேற் சூழ்ந்த பவள வடமாகிய மேகலை அசைந்தனவாய் இரங்க, நிலவுப் பயன்கொள்ளும் நெடுநிலா முற்றத்து-நிலவின் பயனைக் கொள்ளுதற்குக் காரணமாகிய உயர்ந்த நிலாமுற்றத்திலே, கலவியும் புலவியும் காதலற்கு அளித்து-தன் காதலனுக்கு ஒருகாற் கூடுதலையும் ஒருகால் ஊடுதலையும் மாறியளித்து, ஆங்கு ஆர்வ நெஞ்மொடு கோவலற்கு எதிரி-அவ்விடத்து விருப்பமிக்க நெஞ்சத்துடன் கோவலனை எதிரேற்று முயங்கி, கோலம் கொண்ட மாதவி அன்றியும்-அம் முயக்கத்தால் முன் குலைந்த ஒப்பனையைப் பின்னும் வேட்கை விளைக்குங் கோலமாகத் திருந்தச் செய்த மாதவியும் அவளன்றியும்,
ஓடு : எண்ணின்கண் வந்தது. சேக்கைப்பள்ளி - ஒரு பொருளிருசொல். சென்று-பரந்து. துகில் செல்லப்பட்டுக் கோவையாகிய மேகலை அசைந்து வருந்த எனச்சொல்நிலை மாற்றியுரைத்தலுமாம். மேகலை-பவளக்கோவை எட்டினாற் செய்தது. ‘அசைந்தன வருந்த நிலவுப் பயன்கொள்ளும்’ என்றது இடக்கரடக்கு. எதிரி-எதிரேற்று; முயங்கியென்றபடி. கோவலற்கு, உருபுமயக்கம்.
" உப்பமைந் தற்றால் புலவி யதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்".
என்பவாகலின் கலவியும் புலவியும் அளித்தென்றார். மாதவியும் அன்றியும் என விரிக்க.


குடதிசை மருங்கின் வெள் அயிர் தன்னொடு குணதிசை மருங்கிற் கார் அகில் துறந்து- மேற்றிசையிடத் துண்டான வெள்ளிய கண்டு சருக்கரையோடு கீழ்த்திசையிடத் துண்டான கரிய அகில் முதலியவற்றாற் புகைக்கும் புகையைத் துறந்து,

குடதிசை அயிர் – யவன தேசத்து அயிர் என்பர். அயிர் – கண்டு சருக்கரை ; நறு்ம்புகைக்குரிய பொருள். இவற்றைப் புகைத்தல் மரபாதலை ." இருங்காழகிலோடு வெள்ளயிர் புகைப்ப" என்பதனாலு மறிக. அகில் பிறவற்றிற்கும் உபலக்கணம். தட்பத்தை விரும்புங் காலமாதலின் புகையைத் துறத்தல் கூறினார். குடதிசை, குணதிசை : வெள்ளயிர், காரகில் என்பன முரண் என்னும்,அணியாகும்.


வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்துத் தென்மலைப் பிறந்த சந்தனம் மறுக-வடக்கின் கண்ணதாகிய இமய மலையில் உண்டான மிக்க ஒளியையுடைய வட்டக்கல்லில் தென்றிசைக் கண்ணதாகிய பொதியின் மலையிற் பிறந்த சந்தனம் சுழல,

கேழ்-நிறம் ஒளிவட்டம்-சந்தனம் உரைக்கும் வட்டக்கல். சந்தனம்-சந்தனக் குறடு. மறுக-சுழல ;
அரைக்கவென்றபடி. மறுக என்றது பூசுதலாகிய காரியந்தோன்ற நின்றது.
" வடவர் தந்த வான்கேழ் வட்டம்
தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்ப"
என்பதுங் காண்க. கூதிர்க்காலத்துச் சந்தனத்தைத் துறந்து புகையை விரும்புதலும். வேனிற் காலத்துப் புகையைத் துறந்து சந்தனத்தை விரும்புதலும், ஈரிடத்தும் கூறப்பட்டன. மக்கள் வாழ்க்கைக்கு மேற்றிசைப் பொருளும் கீழ்த்திசைப் பொருளும் ஒன்று சேர்தலும், வடதிசைப்பொருளும் தென் திசைப்பொருளும் ஒன்று சேர்தலும், வேண்டுமென்பது இவற்றாற் பெறப்படுதலின், பல தேயத்தாரும் ஒற்றுமையுடன் வாணிகம் நடாத்துதலின் இன்றியமையாமை புலனாம்.


தாமரைக் கொழு முறி-தாமரையின் இளந்தளிரினையும், தாதுபடு செழுமலர்-மகரந்தம் பொருந்திய அதன் செழுமையுடைய மலரினையும், காமரு குவளை-கண்டார்க்கு விருப்பமுண்டாக்கும் குவளை மலரினையும், கழுநீர்மாமலர்-கழுநீரின் சிறந்த மலரினையும், பைந்தளிர்-பச்சிலையுடன் கலந்து தொடுத்த, படலை-படலை மாலையும், பரூஉக்காழ் ஆரம்-பரிய முத்தின் கோவையும், சுந்தரச் சுண்ணத்துகளொடும்-அழகிய சுண்ணமாகிய பொடியுடன், அளைஇச் சிந்துபு பரிந்த செழும்பூஞ் சேக்கை-சிந்திக் கலந்து கிடந்த வளவிய பூஞ்சேக்கையிடத்து, மந்த மாருதத்து மயங்கினர் மலிந்து-இளந்தென்றலால் மயங்கிக் காதல் மிக்கு, ஆங்கு ஆவியங் கொழுநர் அகலத்து ஒடுங்கி-அவ்விட்த்து உயிர் போலும் கொழுநர் மார்பிடத்தே பொருந்தி, காவிஅம் கண்ணார் களித்துயில் எய்த-நீலோற்பல மலர்போன்ற அழகிய கண்களையுடைய மகளிரும் இன்பக் களியான துயில்கூட, (நீலோற் பலம்-கருங்குவளை.)

காமம் மரு என்பது காமரு எனத் திரிந்தது. காமம் வரு என்பது திரிந்த தென்பாருமுளர். படலை-இலைத் தொடை: மலர்களும் இலையும் விரவித் தொடுத்த மாலை. காழ்-சரம்; கோவை. ஆரம்-முத்து.ஆரக்காழ் எனவும், சிந்துபு அளைஇ எனவும் மாறுக. மயங்கினர், எச்சமுற்று. மலிந்து – மிக்கு, காதன்மிக்கு என்க. ஆங்கு - அசையுமாம். அம் என்பதூஉம் அசை. மாதவியும் அவளன்றிக் கண்ணாரும் களித் துயிலெய்தவென்க. கண்ணால் என்று பாடமோதி, மார்பிடத்தே கண்களைப் பொருந்தவைத்து என்றுரைப்பர் அடியார்க்கு நல்லார். களித்துயில் கலவியாலுண்டான அவசமாகிய துயில்.


அம்செஞ் சீறடி அணி சிலம்பு ஒழிய-அழகிய சிவந்த சிறிய அடிகள் அணியுஞ் சிலம்பினை ஒழியவும், மென்றுகில் அல்குல் மேகலை நீங்க-மெல்லிய துகிலை யுடுத்த அல்குலிடத்து மேகலை நீங்கவும், திங்கள் வாள் முகம் சிறுவியர்ப்பு இரிய-மதிபோலும் ஒள்ளிய முகத்திலே சிறு வியர்வு நீங்கவும், செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப-சிவந்த கயல்போலும் நெடிய கண் தீட்டும் மையினை மறக்கவும், பவள வாள்நுதல் திலகம் இழப்ப-பவளம் போற் சிவந்த ஒள்ளிய நெற்றி திலகத்தை இழக்கவும், தவள வாள்நகை கோவலன் இழப்ப-வெள்ளிய ஒளிபொருந்திய முறுவலைக் கோவலன் இழக்கவும், மை இருங் கூந்தல் நெய் அணி மறப்ப-கருமையுடைய நீண்ட கூந்தல் புழுகுநெய் அணிதலை மறக்கவும், கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்-கொங்கை முற்றத்தில் குங்குமம் பூசாளாய், மங்கல அணியிற் பிறிது அணி அணியாள்-மங்கலவணியின் வேறான அணியை விரும்பாளாய், கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்- வளைவாகிய குண்டலத்தைத் துறந்து வடிந்து தாழ்ந்த காதினை யுடையளாய், கையறு நெஞ்சத்துக் கண்ணகி அன்றியும்-செயலற்ற நெஞ்சத்தையுடைய கண்ணகியும், அவளன்றியும்
கோவலன் தன்னைப் பிரிந்தமையின் யாதும் ஒப்பனை செய்திலள் என்பார். சிலம்பொழிய மேகலை நீங்க என்றிங்ஙனங் கூறினார். மங்கலவணி இயற்கையழகுமாம். வடிந்து-அழகு வடிந்து. ."அணிபறித்தழகு செய்யும்" என்றாற்போலக் ‘குழைதுறந்து வடிந்துவீழ் காதினள்’ என்றார். வியர் பிரிய எனப் பிரித்து, விகாரத்தால் ஒற்றுமிக்க தென்பாருமுளர். சிறு வியர் கூட்டத்தாற்றோன்றுவது. முன் கலவியாற் சிவந்த கண் என்க. பவளம் போற் சிவந்த திலகம் என்றுமாம். கண்ணகியின் முறுவல் கண்டு இன்புறாமை கோவலற்குப் பெரியதோ ரிழப்பென்பார். ‘தவளவாணகை கோவல னிழப்ப’ என்றார். எழுதாள் மகிழாள் காதினள் என்பன எதிர் மறையும் உடன்பாடுமாகிய குறிப்பெச்சமுற்றுக்கள். இனி, அடி, அல்குல், முகம், கண், நுதல், கூந்தல் என்பன தம்மையணியுஞ் சிறப்பை முறையே சிலம்பு,மேகலை, வியர், அஞ்சனம், திலகம், நெய் என்பன இழக்க வென்றலுமாம். செயவெனெச்சங்களை எழுதாள் முதலிய எச்சங்களால் முடித்து, அவற்றைக் கையற்ற என்னும் பெயரெச்ச வினையான் முடிக்க. கண்ணகியும் அன்றியும் என விரித்துரைக்க.


காதலர்ப் பிரிந்த மாதர்-தம் காதலரைப் பிரிந்த மாதர்கள், நோதக-கண்டார்க்கு வருத்தமுண்டாகும்படி,ஊது உலைக்குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி-உலையின்கண் ஊதுகின்ற துருத்தியின் மூக்குப்§À¡Ä அழலெழ உயிர்த்தனராய் ஒடுங்கி, வேனிற் பள்ளி மேவாது கழிந்து-இவ்விளவேனிற் காலத்திற் கமைந்த நிலா முற்றத்தில் மேவாது கழிந்து, கூதிர்ப் பள்ளி -கூதிர்க்காலத்திற் கமைந்த இடைநிலத்திலே, குறுங்கண் அடைத்து-தென்றலும் நிலவும் புகாமற் குறிய சாளரக்கண்களை யடைத்து, மலயத்து ஆரமும் மணிமுத்து ஆரமும் அலர் முலை ஆகத்து அடையாது வருந்த-பொதியிலில் உண்டாகிய சந்தனமும் அழகிய முத்தின் கோவையும் பரந்த முலையினையுடைய மாபில் அடையப் பெறாது வருந்தவும், தாழிக்குவளையொடு தண்செங்கழுநீர் வீழ், பூஞ்சேக்கை மேவாது கழிய - தாழியில் மலர்ந்த குவளையும் செங்கழுநீரும் முதலிய குளிர்ந்த மலர்கள் தாம் விரும்பிய பூஞ்சேக்கையில் மேவப்பெறாது வருந்தவும்,துணை புணர் அன்னத் ,தூயிற் செறித்த இணை அணைதூ மேம்படத் திருந்து துயில்பெறா அது-தன் சேவலொடு புணர்ந்த அன்னப்பேடை அப்புணர்ச்சியான் உருகி யுதிர்த்த வயிற்றின் மயிரைத் திணித்த இணைத்தல் பொருந்திய அணையின் மீதே திருந்திய துயிலைப் பெறாமல், உடைப்பெருங்கொழுநரோடு ஊடற் காலத்து-தம்மையுடைய கணவரோடு முன்பு ஊடிய காலத்து, இடைக்குமிழ் எறிந்து-இடைநின்ற குமிழினை யெறிந்து, கடைக்குழை ஓட்டி-கடை நின்ற குழையைத் துறந்து, கலங்கா உள்ளங் கலங்கக் கடை சிவந்து-அவரது கலங்காத நெஞ்சமும் கலங்கும்படி கடை சிவந்து, விலங்கி நிமிர் நெடுங்கண்-குறுக்கிட்டுப் பிறழும் நெடிய கண்கள், புலம்பு முத்து உறைப்ப-தனிமையாலே கண்ணீர்த் துளியைச் சிந்த,

கண்ணகியும் ஏனைக் காதலர்ப் பிரிந்த மாதரு மென்க. குருகு-துருத்தி; ஊதுலைக் குருகு என்றது வெளிப்படை. முத்தாகிய ஆரமும் எனலுமாம். ஆகத்து முலையென மாறினும் அமையும். தாழியுள்ளே குவளையை வைத்து வளர்ப்பர்; "தாழியுண் மலர்ந்த தண்செங்குவளை" என்பது காண்க. வீழ்தல்-விரும்புதல் மேவாது-பள்ளித் தாமமாய் மேவப் பெறாமல் என்றுமாம். கழிய-வருந்த வென்னும் பொருட்டு. தூவி-அடிவயிற்றின்,மயிர். இணையணை-இணைதலையுடைய பலவாகிய அணை;
" இணைபட நிவந்த நீலமென் சேக்கையுட்
டுணைபுண ரன்னத்தின் றூவிமெல் வணையசைஇ"
என்றார் பிறரும் திருந்து துயில் – கணவர் மார்பிலே துயிலும் களித்துயில். கலங்காவுள்ளம் என்றார், "பெருமையும் உரனும் ஆடூஉ மேன" என்பவாகலின். புலம்பு முத்துறைப்ப – உவகைக் கண்ணீர் சிந்தாது துன்பக் கண்ணீர் சிந்த என்றுமாம். குமிழும் பூவும் முத்தும் மூக்கிற்கும் நீர்த்துளிக்கும் உவமை. உறைப்ப-உகுப்ப.


அன்னம் மெல்நடை-அன்னமாகிய மென்மையுடைய நடையினையும், ஆம்பல் நாறும்-ஆம்பலின் மணம் நாறும். தேம் பொதி நறுவிரைத் தாமரைச் செவ்வாய்-தேன்மிக்க நறுமணத்தையுடைய தாமரையாகிய சிவந்த வாயினையும், தண் அறற்கூந்தல்-தண்ணிய அறலாகிய கூந்தலினையும் உடைய, நன்னீர்ப் பெய்கை-நல்ல நீரையுடைய பொய்கையாகிய மடவாள், பாண் வாய் வண்டு நோதிறம்பாட-பாண்டன்மையைத் தம்மிடத்தேயுடைய வண்டுகளாகிய பள்ளியுணர்த்துவார் புறநீர்மை யென்னும் பண்ணாற் பள்ளி யெழுச்சி பாட, காண்வரு குவளைக் கண்மலர் விழிப்ப-அழகு பொருந்திய குவளையாகிய கண்மலர் விழிப்ப,

ஆம்பல் நாறும் செவ்வாய் என இயையும். நடையினையும் வாயினையும் கூந்தலினையுமுடைய பொய்கையாகிய பெண் கண் விழிப்ப வென்க. பாண்-பாண் சாதி. நோதிறம்-புறநீர்மை எனவும் பெயர்பெறும். அது பாலைப்பண்ணின் திறம் ஐந்தனுள் ஒன்றழித; என்னை?

"தக்கராக நோதிறங் காந்தார பஞசமமே
துக்கங் கழிசோம ராகமே-மிக்கதிறற்
காந்தார மென்றைந்தும் பாலைத் திறமென்றார்
பூந்தா ரகத்தியனார் போந்து"

என்பவாகலின் நோதிறம் என்னின் அது முல்லைப்பண்ணின் திறங்களிலொன்றாம் பாட, காரணப்பொருட்டு; உடனிகழ்ச்சியுமாம். இனி, ஆம்பல் என்னும் பண் தோற்றும் வாய் என்றும். பாட்டினையுடைய வாயையுடைய வண்டு என்றும் Üறுதலுமாம். தேம்-இனிமை. தேன்-குவளைக் கண்மலர்-குவளையாகிய கள்ளையுடைய மலர், குவளையாகிய கண்மலர். விழிப்ப-மலர, கண்விழிக்க. இஃது உருவக வணி.


புள்வாய் முரசமொடு-பறவைகளின் ஒலியாகிய முரசுடனே, பொறி மயிர் வாரணத்து-புள்ளிகள் பொருந்திய சிறகினையுடைய கோழிச்சேவலும், முள்வாய்ச் சங்கம்-கூர்ந்த வாயையுடைய சங்கமும், முறைமுறை ஆர்ப்ப-தத்தம் முறைமைக்கேற்ப ஒலிக்கவும், உரவுநீர்ப் பரப்பின் ஊர் துயில் எடுப்பி-கடல்போலும் பரப்பையும் ஒலியையுமுடைய ஊரைத் துயிலெழுப்பி, இரவுத் தலைப்பெயரும் வைகறை காறும்-இருள் நீங்குதலுறும் வைகறையளவும், அரை இருள் யாமத்தும் பகலும் துஞ்சான்-இருள் மிக்க நள்ளிரவிலும் ஒரு மாத்திரைப் பொழுதும் துயிலானாய், விரைமலர் வாளியொடு கருப்புவில் ஏந்தி-மணம் பொருந்திய மலராகிய அம்பையும் கரும்பாகிய வில்லையும் ஏந்தி, மகர வெல் கொடி மைந்தன் திரிதர-மகரமாகிய வெற்றிக்கொடியையுடைய காமதேவன் திரிந்து கொண்டிருத்தலால், நகரம் காவல் நனி சிறந்தது என்-நகரம் மிகவும் காவல் சிறந்ததென்க.

புள்வாய்-வாய் என்பது ஒலிக்காயிற்று. வாரணத்து என்பதில் அத்து சாரியை தவிர்வழி வந்தது. உரவு நீர்ப்பரப்பு-கடல்; இன், உவமப்பொருட்டு. ஊர், ஆகுபெயர். எடுப்பி-எழுப்பி; "சூதரேத்திய துயிலெடை நிலையும்" என்பது கான்க. இரவுத்தலைப் பெயரும் எனத் தகர ஒற்று மிக்கது விகாரம். தலைப்பெயர்தல், ஒரு சொல்; அவ்விடத்தினின்றும் நீங்கும் என்றுமாம். இருளையுடைய அரையாமம் என இயைக்க. அடியார்க்கு நல்லார் அரையிருளும் யாமமும் என விரித்து, ‘அரையிருள் – இரண்டாம் யாமம்; யாமம்- ஓர் யாமம்; பகல்-அரை யாமம்’ என்பர். பொருந்துமேற்கொள்க. பகல்-ஒரு மாத்திரைப் பொழுதென்க. "கைச்சிலை கணையொடேந்திக் காமனிக் கடையைக் காப்பான்." என்றார் திருத் தக்கதேவரும். துஞ்சார் என்றுப் பாடமோதித் துஞ்சாராம்படி என்றுரைப்பர் அடியார்க்கு நல்லார். என் – அசை.
மாதவியும் கண்ணாரும் களிதுயிலெய்தவும், கண்ணகியும் பிரிந்த மாதரும் துயில் பெறாது கண் முத்துறைப்பவும், பாட, விழிப்ப, ஆர்ப்ப, வைகறைகாறும் யாமத்தும் பகலும் துஞ்சானாகி மைந்தன் ஏந்தித் திரிதலால், நகரங்காவல் சிறந்ததென்க. இஃது எல்லாவடியும் அளவடியாகி முடிந்தமையின், நிலைமண்டில ஆசிரியப்பா.

இறுதி வெண்பா


கூடினார்பால் நிழலாய்-நட்பாய்ச் சேர்ந்தவர்பால் நிழலாகியும், கூடார்பால் வெய்யதாய்-பகையாச் சேராதவர்பால் வெய்யதாகியுமுள்ள, காவலன் வெண்குடைபோல்-சோழ மன்னனுடைய வெண்கொற்றக் குடையைப் போல், போது அவிழ்கும் கங்குற்பொழுது-பூக்கள் இதழ்களை விரிக்கும் இராப்பொழுதில், வான் ஊர்மதி விரிந்து-வானிலே ஒளி விரிந்து செல்லும் திங்கள், கூடிய மாதவிக்கும் கண்ணகிக்கும்-கோவலனைக் கூடிய மாதவிக்கும் அவனைப் பிரிந்த கண்ணகிக்கும், காட்டிற்று-முறையோ தண்ணிதாயும் வெவ்விதாயும் தன்னைக் காட்டிற்று.

உவமைக்கண், கூடினார், கூடார் என்பன முறையே நண்பர், பகைவர் என்னும் பொருளன. கூடிய மாதவி யென்றமையால், பிரிந்த கண்ணகி யென்பது பெற்றாம். ஏ: அசை.

அந்திமாலைச் சிறப்புச்செய் காதை முற்றிற்று.
---------------------------


5. இந்திர விழவூரெடுத்த காதை.


(உலகை மூடிய இருள் அகன்றிட ஞாயிறு தோன்றிக் கதிர்களைப் பரப்பியது; அன்று சித்திரைத் திங்களில் சித்திரையும் நிறைமதியும் கூடிய நாளாக விருந்தது. புகார் நகரிலுள்ளார் இந்திவிழாச் செய்யத் தொடங்கினர். மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என இரு பகுதியையுடையது புகார் நகரம். மருவூர்பாக்கத்திற் கடற்கரையை யொட்டிக் கண்ணைக் கவரும் அழகுடைய யவனர் இருப்பிடங்களும், மற்றும் வாணிகத்தின் பொருட்டுப் பல நாடுகளிலிருந்தும் வந்தோர் கலந்துறையும் இருப்பிடங்களும் விளங்குவன. வண்ணம், சுண்ணம், சாந்தம், பூ, முதலியன விற்போர் திரியும் நகரவீதியும், பட்டுச் சாலியர் இருககு மிடங்களும், நவமணிகளும் பொன்னும் பொற்பணிகளும் விற்கும் மறுகுகளும், கூலக்கடைத் தெருவும், வெண்கலக் கன்னார், செம்பு கொட்டிகள், தச்சர், கொல்லர், தட்டார் முதலியவர்களும், குழலினும் யாழினும் ஏழிசைகளையும் வழுவின்றிசைக்கும் பாணர்களும், ஏனோரும் உறையுமிடங்களும் ஆண்டுள்ளன. பட்டினப்பாக்கத்தில் அரசவீதியும், கொடித்தேர் வீதியும், பீடிகைத் தெருவும், வாணிகர் மறுகும், மறையோர் இருக்கையும், வேளாளர் வீதியும், மற்றும் மருத்துவர் சோதிடர் சூதர், மாகதர், கூத்தர், நாழிகைக்கணக்கர், கணிகையர் முதலாயினார் இருக்கைகளும், யானைதேர் குதிரைகளைச் செலுத்துவோரும், கடுங்கண் மறவரும் புறஞ்சூழ்ந்திருக்கும் இருக்கைகளும் திகழ்வன. அவ்விரு பாக்கங்கட்கும் இடையே சோலைகளின் மரங்களே கால்களாகக் கட்டப்பட்ட நாளங்காடி யென்னும் கடைத்தெரு உளது.

அதன்கண் உள்ள நாளங்காடிப் பூதத்திற்கு மறக்குடிப் பெண்டிர் பூவும் பொங்கலும் முதலியன சொரிந்து குரவையாடி அரசனை வாழ்த்திச் செல்கின்றனர். பின்னர், மருவூர் மருங்கின் மறங்கெழு வீரரும், பட்டி மருங்கிற் படைகெழு மாக்கலும் முந்தச் சென்று ‘வேநதன் கொற்றங் கொள்க’ எனக்கூறி, முரசு முழங்க உயிர்ப்பலி யூட்டுகின்றனர். அதன்பின் திருமாவளவன் முன்பு வடதிசைச் சென்று இமயத்தின் சிமையத்தில் பொறித்து மீண்ட காலே, வடநாட்டரசர்கள்பாற் பெற்றுக் கொணர்ந்த முத்துப்பநதர், பட்டிமண்டபம், தோரணவாயில் என்பன. ஒருங்குடன் கூடிய அரும்பெறல் மண்டபத்திலும், பலதிறப்பட்ட வியத்தகு செய்கைகளை யுடையனவாகிய வெள்ளிடைமன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல்மன்றம், பூதசதுக்கம், பாவை மன்றம் என்னும் ஐவகை மன்றங்களிலும் பலிகள் கொடுக்கப்படுகின்றன. பின்பு, வச்சிரக்கோட்டத்திருந்த முரசை வெள்யானைக் கோட்டத்திற் கொணர்ந்து யானையின் பிடரில் ஏற்றி விழாவின் முதலும் முடிவும் திரிவித்து, தருநிலைக் கோட்த்திலுள்ள கொடியைய நிமிர்த்துகின்றனர். நகரவீதிகளெல்லாம் பூரண கும்பம், பொற்பாலிகை, பாவை விளக்கு முதலியவற்றால் அணி செய்யப்படுகின்றன. ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் அரச குமரரும் பரத குமரரும் களிறு தேர் புரவிகளை ஊர்ந்துவந்து திரண்டு அரசனை வாழ்த்தி, காவிரியின் புண்ணிய நன்னீரைப் பொற்குடங்களிற் கொணர்ந்து இந்திரனை நீராட்டுகின்றனர். பின்னர்ப் ‘பிறவா யாக்கைப் பெரியோன்’ ஆகிய சிவ பிரான் முதலாகவுள்ள எல்லாத் தேவர்களின் கோயில்களிலும் ஓமம் முதலியன செய்யப்படுகின்றன. அறவோர் பள்ளிமுதலிய இடங்களிற் பெரியோர்கள் அறநெறிச் சொற்பொழிவுகள் செய்கின்றனர். யாழ்ப்புலவர், பாடற்பாணர் முதலாயினாரது இசை ஒரு பக்கம் சிறந்து திகழ்கின்றது. இவ்வாறாக இந்திர விழாவின் களிப்புமிக்க நகரவீதியில் விழாவினிடையே, மாதவியுடன் கூடிக் களிப்புறும் கோவலன் போலப் பரத்தையரைப் பலபடப் பாராட்டிக் கூடி, அவர் பூசிய சாந்து முதலியனதம் மெய் முழுதும் பொருந்தவந்த கொழுநரை நோக்கி அவர்தம் கற்புடை மனைவியர் கடைக்கண் சிவப்புறலால், கணவர்கள் விருந்தொடு புகுந்து அச்சிவப்பினை மாற்றிக் கூடுகின்றனர். அக்காலத்தே கண்ணகியின் கருங்கண்ணும் மாதவியின் செங்கண்ணும் நீரினை உகுத்து முறையே இடத்தினும் வலத்தினும் துடித்தன.


This file was last updated n 20 June 2012
Feel free to send the corrections to the .