Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

இளங்கோவடிகள் இயற்றிய "சிலப்பதிகாரம்" மூலமும்
நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள்
எழுதிய உரையும் - புகார்க்காண்டம் / பாகம் 1

cilappatikAram of ilangkO aTikaL
with the commentary of vEngkaTacAmi nATTAr
pukARk kANTam, part 1
In tamil script, unicode/utf-8 format
  Acknowledgements:
  Our Sincere thanks go to the Mr. S. Govindarajan and Mr. N.D. Logasundaram for the preparation of the etext.
  Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.


  © Project Madurai, 1998-2013.
  to preparation
  of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
  are
  http://www.projectmadurai.org/

இளங்கோவடிகள் இயற்றிய "சிலப்பதிகாரம்" மூலமும்
நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரையும் - 1


  உள்ளடக்கம்
  பதிகம்
  உரைபெரு கட்டுரை
  புகார்க்காண்டம்.
  1. மங்கல வாழ்த்துப் பாடல்
  2. மனையறம்படுத்த காதை
  3. அரங்கேற்று காதை
  4. அந்திமாலைச் சிறப்புசெய் காதை
  5. இந்திர விழவு ஊர் எடுத்த காதை
  6. கடலாடு காதை
  7. கானல் வரி
  8. வேனில் காதை
  9. கனாத்திறம் உரைத்த காதை
  10. நாடுகாண் காதை
  ---------------

  பதிகம்

  ( மலைநாட்டிலுள்ள நெடுவேள் குன்றில் வேங்கை மரத்தின் நிழலில் நின்ற கண்ணகிக்கு வானவர் வந்து கோவலனைக் காண்பித்து இருவரையும் வானுலகத்திற்கு அழைத்துச் சென்ற புதுமையைத் தம் கண்ணாற் கண்ட குன்றக் குறவர், அச்செய்தியை மலைவளங் காண வேண்டி வந்திருந்த செங்குட்டுவற்கு அறிவித்து, அதன்பின் இளங்கோவடிகட்கும் சென்று அறிவித்தனர். அப்பொழுது செங்குட்டுவனைக் கண்டு அடிகளிடம் வந்திருந்த சாத்தனார், புகார் நகரத்து வணிகனாகிய கோவலன் நாடகக் கணிகையின் சேர்க்கையால் பொருளனைத்தையும் இழந்து பத்தினியாகிய கண்ணகியின் காற்சிலம்பை விற்றற் பொருட்டு மதுரைக்கு வந்து, பொற்கொல்லனது பொல்லாத சூழ்ச்சியாற் கொலைக்களப்பட்டதனையும், கண்ணகி பாண்டியன்பால் வழக்குரைத்து, அவன்துஞ்சியபின், கூடற்பதியை எரியூட்டியதனையும், மதுரை மாதெய்வம் வீரபத்தினிமுன் வந்துதோன்றி அவர்கட்குப் பழம்பிறப்பில் உண்டாய சாபவரலாற்றையும், பதினாலாம் நாள் அவள் கோவலனை வானோர் வடிவிற் காண்பள் என்பதனையும் கூறத் தாம் கேட்டதனையும் அடிகட்கு உரைத்தனர். அடிகள் 'அவ் வரலாற்றைச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் ஒரு காப்பியமாக நாம் இயற்றுவோம்' என்ன, மூவேந்தர்க்கு முரிய அதனை நீரே இயற்றுவீர் என்று சாத்தனார் கூறினர். இளங்கோவடிகள் அதற்கிசைந்து மங்கலவாழ்த்துப் பாடல் முதலாக வரந்தருகாதை ஈறாகவுள்ள முப்பது பகுதியையும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக இயற்றிக்கூற, சாத்தனார் அதனைக் கேட்டனர். )

   (இணைக்குறள் ஆசிரியப்பா)

   குணவாயில் கோட்டத்து அரசுதுறந்து இருந்த
   குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்குக்
   குன்றக் குறவர் ஒருங்குடன் கூடிப்
   பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்
   ஒருமுலை இழந்தாள்ஓர் திருமா பத்தினிக்கு (5)

   அமரர்க்கு அரசன் தமர்வந்து ஈண்டிஅவள்
   காதல் கொழுநனைக் காட்டி அவளொடுஎம்
   கட்புலம் காண விண்புலம் போயது
   இறும்பூது போலும்அ•து அறிந்தருள் நீயென,
   அவனுழை இருந்த தண்தமிழ்ச் சாத்தன் (10)

   யான்அறி குவன்அது பட்டதுஎன் றுரைப்போன்:
   ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்ப்
   பேராச் சிறப்பின் புகார்நக ரத்துக்
   கோவலன் என்பான்ஓர் வாணிகன் அவ்வூர்
   நாடகம் ஏத்தும் நாடகக் கணிகையொடு (15)

   ஆடிய கொள்கையின் அரும்பொருள் கேடுறக்
   கண்ணகி என்பாள் மனைவி அவள்கால்
   பண்ணமை சிலம்பு பகர்தல் வேண்டிப்
   பாடல்சால் சிறப்பிற் பாண்டியன் பெருஞ்சீர்
   மாட மதுரை புகுந்தனன், அதுகொண்டு (20)

   மன்பெரும் பீடிகை மறுகிற் செல்வோன்
   பொன்செய் கொல்லன் தன்கைக் காட்டக்
   கோப்பெருந் தேவிக்கு அல்லதை இச்சிலம்பு
   யாப்புறவு இல்லைஈங்கு இருக்கயென்று ஏகிப்
   பண்டுதான் கொண்ட சில்லரிச் சிலம்பினைக் (25)

   கண்டனன் பிறன்ஓர் கள்வன் கையென,
   வினைவிளை காலம் ஆதலின் யாவதும்
   சினையலர் வேம்பன் தேரா னாகிக்
   கன்றிய காவலர்க் கூஉய்அக் கள்வனைக்
   கொன்றுஅச் சிலம்பு கொணர்க ஈங்கெனக் (30)

   கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
   நிலைக்களம் காணாள் நெடுங்கண் நீர்உகுத்துப்
   பத்தினி யாகலின் பாண்டியன் கேடுற
   முத்தார மார்பின் முலைமுகந் திருகி
   நிலைகெழு கூடல் நீள்எரி ஊட்டிய (35)

   பலர்புகழ் பத்தினி யாகும் இவள்என,
   வினைவிளை காலம் என்றீர் யாதுஅவர்
   வினைவிளைவு என்ன, விறலோய் கேட்டி
   அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்
   கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில் (40)

   வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன்
   ஆர்அஞர் உற்ற வீரபத் தினிமுன்
   மதுரைமா தெய்வம் வந்து தோன்றிக்
   கொதியழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய்
   முதிர்வினை நுங்கட்கு முடிந்தது ஆகலின் (45)

   முந்தைப் பிறப்பில் பைந்தொடி கணவனொடு
   சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்துச்
   சங்கமன் என்னும் வாணிகன் மனைவி
   இட்ட சாபம் கட்டியது ஆகலின்
   வார்ஒலி கூந்தல்நின் மணமகன் தன்னை (50)

   ஈர்ஏழ் நாளகத்து எல்லை நீங்கி
   வானோர் தங்கள் வடிவின் அல்லதை
   ஈனோர் வடிவில் காண்டல் இல்எனக்
   கோட்டம்இல் கட்டுரை கேட்டனன் யான்என,
   அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம் (55)

   உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
   ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
   சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
   சிலப்பதி காரம் என்னும் பெயரால்
   நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்என, (60)

   முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
   அடிகள் நீரே அருளுகஎன் றார்க்குஅவர்,
   மங்கல வாழ்த்துப் பாடலும், குரவர்
   மனையறம் படுத்த காதையும், நடம்நவில்
   மங்கை மாதவி அரங்கேற்று காதையும், (65)

   அந்தி மாலைச் சிறப்புசெய் காதையும்,
   இந்திர விழவூர் எடுத்த காதையும்,
   கடலாடு காதையும்,
   மடல்அவிழ் கானல்வரியும், வேனில்வந் திறுத்தென
   மாதவி இரங்கிய காதையும், தீதுடைக் (70)

   கனாத்திறம் உரைத்த காதையும், வினாத்திறத்து
   நாடுகாண் காதையும், காடுகாண் காதையும்,
   வேட்டுவர் வரியும், தோட்டலர் கோதையொடு
   புறஞ்சேரி இறுத்த காதையும், கறங்குஇசை
   ஊர்க்காண் காதையும், சீர்சால் நங்கை (75)

   அடைக்கலக் காதையும், கொலைக்களக் காதையும்,
   ஆய்ச்சியர் குரவையும், தீத்திறம் கேட்ட
   துன்ப மாலையும், நண்பகல் நடுங்கிய
   ஊர்சூழ் வரியும், சீர்சால் வேந்தனொடு
   வழக்குரை காதையும், வஞ்சின மாலையும், (80)

   அழல்படு காதையும், அருந்தெய்வம் தோன்றிக்
   கட்டுரை காதையும், மட்டலர் கோதையர்
   குன்றக் குரவையும், என்றுஇவை அனைத்துடன்
   காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்,
   வாழ்த்து, வரந்தரு காதையொடு (85)

   இவ்வா றைந்தும்
   உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள்
   உரைசால் அடிகள் அருள மதுரைக்
   கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்,
   இது, பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென். (90)

  சிலப்பதிகாரம் - சிலம்பு காரணமாக வளர்ந்த வரலாற்றினை உரைப்பது. "வன்றொடர் மொழியும்" என்னும் சூத்திரத்தான் சிலம்பு என்னும் மென்றொடர்க் குற்றியலுகர மொழியின் மெல்லொற்று வல்லொற்றாயது; ஆசிரியர் நச்சினார்க்கினியர் அச் சூத்திரவுரையில், இயல்பு கணம் வருமிடத்தும் மெல்லொற்றுத் திரிதற்குச் சிலப்பதிகாரம் என்னுந் தொடரை எடுத்துக் காட்டியிருப்பது அறிந்தின்புறற்பாலது.

  பதிகம் - நூலின் பொருளைத் தொகுத்துரைப்பது; என்னை?

  [1]“பதிகக் கிளவி பல்வகைப் பொருளைத்
  தொகுதி யாகச் சொல்லுத றானே"

  என்பவாகலின், பதிகம் என்னும் இப்பெயர் இப்பாட்டின் இறுதியடியிற்குறிக்கப்பெற்றுள்ளது.)

  உரை


   1-9 குணவாயில் கோட்டத்து அரசுதுறந்து இருந்த
   குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்குக்
   குன்றக் குறவர் ஒருங்குடன் கூடிப்
   பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்
   ஒருமுலை இழந்தாள்ஓர் திருமா பத்தினிக்கு (5)
   அமரர்க்கு அரசன் தமர்வந்து ஈண்டிஅவள்
   காதல் கொழுநனைக் காட்டி அவளொடுஎம்
   கட்புலம் காண விண்புலம் போயது
   இறும்பூது போலும்அஃது அறிந்தருள் நீயென,

  குணவாயில் கோட்டத்து- திருக்குணவாயில் என்னும் ஊரிலுள்ள கோயிற்கண்ணே, அரசு துறந்து இருந்த அரசு போகத்தைத் துறந்து தவவுருவம தாங்கியிருந்த, குடக்கோச் சேரல் இளங்கோவடிகட்கு-குடதிசைக்கோவாகிய செங்குட்டுவன் என்னுஞ் சேரற்கு இளங்கோவாகிய அடிகட்கு, குன்றக் குறவர் ஒருங்கு உடன்கூடி- மலையில் வாழும் குறவரெல்லாரும் திரண்டு சென்று, பொலம்பூ வேங்கைநலம் கிளர் கொழுநிழல்-பொன்போலும் பூவினையுடைய வேங்கை மரத்தின் நன்மை மிக்க கொழுவிய நிழற்கண்ணே, ஒரு முலை இழந்தாள் ஓர் திருமா பத்தினிக்கு-ஒரு முலையினை இழந்து வந்து நின்றவளாகிய அழகிய பெருமையுடைய ஒரு பத்தினியின் பொருட்டு, அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி - தேவர்க்கரசனாகிய இந்திரன் றமர் நெருங்கி வந்து, அவள் காதல் கொழுநனைக் காட்டி - அவளுடைய காதலையுடைய கணவனை அவட்குக் காட்டி, அவளொடு எம் கண் புலம் காண விண் புலம் போயது - அவளோடும் அவர் எம்கண்ணாகிய புலம் காண விண்ணினிடத்திலே சென்றது, இறும்பூது போலும் - ஓர் அதிசயமாயிருந்தது, அஃது அறிந்தருள் நீ என - அதனை நீ அறிந்தருள்வாயாக என்றவளவிலே,

  (அடியார்க்கு நல்லார் : குணவாயில் - திருக்குணவாயி லென்பதோரூர் - அது வஞ்சியின் கீழ்த்திசைக்கணுள்ளது; அஃது ஆகுபெயர். கோட்டம் - அருகன் கோயில். இளமைப் பருவத்தே இராச போகத்தைத் துறத்தல் அருமையால், துறந்து என்றும், அங்ஙனம் போகம் நுகர்ந்தவிடத்தோ மீட்டும் தவவுருத் தாங்கியிருத்த லருமையான், இருந்து என்றும் கூறினார். குன்றக்குறவர்-ஏழனுருபுத்தொகை;குன்றம்-கொடுங்கோளூர்க்கு அயலதாகிய செங்குன்றென்னும் மலை. அது திருச்செங்கோடு என்பவாலெனின், அவரறியார்; என்னை ? அத் திருச்செங்கோடு வஞ்சி நகர்க்கு வடகீழ்த் திசைக் கண்ணதாய் அறுபதின் காத ஆறுண்டாகலானும், அரசனும் உரிமையும் மலைகாண்குவமென்று வந்து கண்ட அன்றே வஞ்சி புகுதலானும் அது கூடாமையின் என்க.)

  கோட்டம் என்பது பல கடவுளர் உறையு மிடங்களுக்கும் பெயராகக் கனாத்திறமுரைத்த காதையில் வழங்கி யிருத்தலானும், கோயில் என்பதன் பரியாயமாகக் கொண்டு ஊர்காண் காதையிலும் முருகன் கோயிலைக் கோட்டம் என்று கூறியிருத்தலானும், குமர கோட்டம் முதலிய பெயர் வழக்கினும் இருத்தலானும் ஈண்டுக் கோட்டம் என்பதற்கு அருகன் கோயில் என்று பொருள் துணிதல் சாலாது. அடிகள் என்னும் பெயர் பெரும்பாலும் அருக சமயத் துறவிகட்கு வழங்கியதாகுமென்னும் கருத்தால் அடியார்க்கு நல்லார் அருகன் கோயில் என்று கூறினார் போலும்!

  செங்குன்று என்பது கொடுங்கோளூர்க்கு அயலதாகிய மலையென்றும், திருச்செங்கோடு வஞ்சி நகர்க்கு வடகீழ்த் திசையில் அறுபதின்காத வழியில் உள்ளதென்றும் கொங்கு நாட்டினராகிய அப்புலவர் பெருமான் துணிந்து கூறுதலின் கொடுங்கோளூராகிய வஞ்சியையும், செங்குன்றையும் அவர் நன்கறிந்து கூறியுள்ளாரென்பது பெறப்படும்.

  அரசாட்சி இன்பம் பயப்பதென்பதனை,

  [2]"தனிமு டிகவித் தாளு மரசினும்
  இனியன் றன்னடைந் தார்க்கிடை மருதனே"

  என்னும் திருக்குறுந்தொகை யானும் அறிக.பொலம் - பொன் என்பதன் திரிபு:

  [3]"பொன்னென் கிளவி யீறுகெட முறையின்
  முன்னர்த் தோன்றும் லகார மகாரம்
  செய்யுள் மருங்கிற் றொடரிய லான."

  என்பது காண்க. 'திருமா பத்தினி இழந்து வந்து நின்றாள்; அவள் பொருட்டு' என விகுதி பிரித்து விரித்துரைக்க. தமராவார் தேவர். கட்புலம்-கண்ணினது அறிவு என்றுமாம். போயது-போய அது என்பதன் விகாரமுமாம். போலும்: [4]ஒப்பில் போலி. குறவர் கூடிச் சென்று விட்புலம் போயது இறும்பூது என இளங்கோவடிகட்குக் கூறினாராக என்க. இது புதுமைபற்றிய மருட்கை யென்னும் மெய்ப்பாடு.
  ------------

   க0-கக. 10-11 அவனுழை இருந்த தண்தமிழ்ச் சாத்தன் (10)
   யான்அறி குவன்அது பட்டதுஎன் றுரைப்போன்:

  அவன் உழை இருந்த தண்டமிழ்ச் சாத்தன் - அப்பொழுது அவன்பால் வந்திருந்த தண்டமிழ்ப் புலவனாகிய
  சாத்தன், யான் அறிகுவன் அது பட்டது என்று உரைப்போன்-அது விளைந்ததனை யான் அறிகுவன் என்று உரைக்கின்றவன்.

  செங்குட்டுவனைக் கண்டு இளங்கோவடிகள்பால் வந்திருந்த சாத்தன் என்க. சாத்தன்-மதுரைக் கூலவாணிகன் சாத்தனாரென்னும் நல்லிசைப் புலவர் என்பது பின்னர்ப் பெறப்படும். சீத்தலைச் சாத்தனார் என்று கூறப்படுபவரும் இவரே யென்பது, [5]தொல்காப்பியச் செய்யுளியல் உரையில் 'சீத்தலைச் சாத்தனாராற் செய்யப்பட்ட மணிமேகலை' எனப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் உரைத்தலால் அறியப்படும். காட்சிக் காதையுள்ளும் "தண்டமிழாசான் சாத்தன்" எனவும், "நன்னூற் புலவன்" எனவும் இவரைப் பாராட்டியுரைத்தலானும், இக்காப்பியத்தை இவர்முன் கூறிக் கேட்பித்தலானும் இளங்கோவடிகள் இவர்பால் வைத்த பெருமதிப்புப் புலனாகும்.

  'அறிகுவன்' என அன் விகுதி தன்மைக்கண் வந்தது; மேலும் இங்ஙனம் வருமிடனறிந்து கடைப்பிடிக்க. அது என்றது ஒரு முலை யிழந்ததனை.

  இவ்வடிகட்கு அடியார்க்கு நல்லார் கூறிய உரை பதிக இறுதிக்கண் ஆராயப்படும்.
  ---------

   ௧௨-உ0. 12-20 ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்ப்
   பேராச் சிறப்பின் புகார்நக ரத்துக்
   கோவலன் என்பான்ஓர் வாணிகன் அவ்வூர்
   நாடகம் ஏத்தும் நாடகக் கணிகையொடு (15)

   ஆடிய கொள்கையின் அரும்பொருள் கேடுறக்
   கண்ணகி என்பாள் மனைவி அவள்கால்
   பண்ணமை சிலம்பு பகர்தல் வேண்டிப்
   பாடல்சால் சிறப்பிற் பாண்டியன் பெருஞ்சீர்
   மாட மதுரை புகுந்தனன் (20)

  ஆரங்கண்ணி-ஆத்திமாலையையுடைய, சோழன்-செம்பியனது, மூதூர்-பழைய நகரங்களுள்ளே, பேராச் சிறப்பின்-நீங்காத சிறப்பினையுடைய, புகார் நகரத்து-புகார் என்னும் நகரத்திடத்து, கோவலன் என்பான் ஓர் வாணிகன்-கோவலன் என்று பெயர் கூறப்படுவானாகிய ஒரு வாணிகன், அவ்வூர்-அப்பதியின் கண், நாடகம் ஏத்தும்-நாடகத்தின் பொருட்டு யாவரும் கொண்டாடும், நாடகக் கணிகையொடு-நாடகப் பொதுமகளாகிய மாதவி யென்பாளோடு, ஆடிய கொள்கையின்-கூடியொழுகிய ஒழுக்கத்தால், அரும்பொருள் கேடுற-பெறுதற்கரிய பொருள் தொலைதலின், கண்ணகி என்பாள் மனைவி-கண்ணகி யென்று பெயர் கூறப்படும் அவன் மனைவியோடும், அவள் கால் பண் அமை சிலம்பு-அவளது காலணியாகிய ஓசை யமைந்த சிலம்பினை, பகர்தல் வேண்டி-விற்றலைக் கருதி, பாடல் சால் சிறப்பின்-பாடுதல் அமைந்த சிறப்பினையுடைய, பாண்டியன் பெருஞ்சீர் மாட மதுரை-பாண்டியனது மிக்க புகழையுடைய மாட மதுரைக் கண்ணே, புகுந்தனன்-சென்று புக்கான்;

  'ஆரங்கண்ணி' என்பதில் ஆர் அம்முச்சாரியை பெற்றது; இதனை,

  [6]"ஆரும் வெதிரும் சாரும் பீரும்
  மெல்லெழுத்து மிகுதல் மெய்பெறத் தோன்றும்"

  என்னும் சூத்திரத்து 'மெய்பெற' என்னும் இலேசான் அமைத்தார் நச்சினார்க்கினியர்.

  [7]"ஆரங்கண்ணி யடுபோர்ச் சோழர்"
  என்பதுங் காண்க. மூதூராகிய புகார் என்னலுமாம். புகார்-ஆற்றுமுகம்;

  [8]"புகாஅர்ப் புகுந்த பெருங்கலம்"

  என்பதன் உரை காண்க. காவிரி கடலொடு கலக்கு மிடத்துள்ளதாகலின் காவிரிப்பூம்பட்டினம் புகார் எனப்பட்டது. அரும்பொருள்-அளத்தற்கரிய பொருள் என்றும், அறனும் இன்பமும் பயக்கும் பொருள் என்றும் கூறுதலுமாம். சிறப்பினையுடைய மதுரை யென்க; பாண்டியற்கு அடையாக்கலுமாம். மாடம் என்னும் அடையடுத்து 'மாட மதுரை'எனப் பலவிடத்தும் வழங்குவது காணப்படும். நாடகம், மனைவி என்பவற்றில் முறையே குவ்வுருபும், ஒடுவுருபும் தொக்கன.

  நகரத்து வாணிகன் ஆடிய கொள்கையாற் கேடுறுதலின் சிலம்பு பகர்தல் வேண்டி மனைவியொடு மதுரை புகுந்தனன் என்க.

  {அடி. நாடகமேது மென்றது நாடகந்தான் இவளாற் சிறப்பெய்துதலின் ஏத்திற்றென்றவாறு. காற்சிலம்பு பகர்தல் வேண்டியெனவே தலைக்கோலம் முதலிய அணிகளனைத்தும் முன்னமே தொலைந்தது விளங்கி நின்றது. சிறப்பிற் பாண்டியன் என்றும், பெருஞ்சீர் மாடமதுரை யென்றும் அடிகள் புகழ்ந்தார்; இவையும் பழவினையால் அழிந்த வென்னும் இரக்கந்தோன்ற. மாடமதுரை புகுந்தனன் என்பது, காட்டினன்றி ஓரூரின்கண் உயிரும் பொருளும் இழந்தானென்பது மேல் விளையத் தோன்றி நின்றது.}
  ----------

   உ0 -௨. 20-22 அதுகொண்டு
   மன்பெரும் பீடிகை மறுகிற் செல்வோன்
   பொன்செய் கொல்லன் தன்கைக் காட்டக்

  அதுகொண்டு-அங்ஙனம் புகுந்தனன் பிற்றை ஞான்று சிலம்பினை யெடுத்துக்கொண்டு, மன் பெரும் பீடிகை மறுகில் செல்வோன்-அதனை விற்பதற்காக மிக்க பெருமையினையுடைய வணிகர் தெருவிற் செல்கின்றவன், பொன்செய் கொல்லன் தன் கைக் காட்ட-எதிரே வந்த பொற்கொல்லனைக் கண்டு அதனை அவன் கையிற் காட்ட,

  மன்- மிகுதிப் பொருட்டு [9]"மன்னு மாதற் பெருங்கற்பு" என் புழிப்போல, 'மன் கழிவின் கண் வந்தது' என அடியார்க்கு நல்லார் கூறியது ஈண்டைக்குப் பொருந்துவதன்று. பொன்செய்-பொற் பணி செய்யும். தன்:சாரியை, கண்டு என ஒரு சொல் வருவிக்க.

  {அடி. அதுகொண்டு என்றார்.அச்சிலம்பால் மேல் விளைவன தோன்ற அது அநியாயபுரத்தே புகுகின்றவன் கூற்றத்தையும் உடன்கொண்டு புக்கான் என்றாற் போன்றிருந்தது.}


   ௨௩-௬. 23-26 கோப்பெருந் தேவிக்கு அல்லதை இச்சிலம்பு
   யாப்புறவு இல்லைஈங்கு இருக்கயென்று ஏகிப்
   பண்டுதான் கொண்ட சில்லரிச் சிலம்பினைக் (25)
   கண்டனன் பிறன்ஓர் கள்வன் கையென,

  கோப்பெருந்தேவிக்கு அல்லதை-கோப்பெருந் தேவிக்கே யன்றி, இச்சிலம்பு-இப்பெருவிலைச் சிலம்பு, யாப்புறவு இல்லை-ஏனோர் அணிதற்குப் பொருத்தமில்லை யாகலான் யான் இதனை அரசர்க்கு உணர்த்திவருந் துணையும், ஈங்கு இருக்க என்று ஏகி-இக்கோட்டத்தில் இருக்கவெனச் சொல்லிப்போய், பண்டுதான் கொண்ட -தான் முன்பு களவிற்கொண்ட, சில் அரிச் சிலம்பினை-சிலவாகிய அரியினையுடைய சிலம்பினை, கண்டனன் பிறன் ஓர் கள்வன் கை என-வேற்று நாட்டவனாகிய ஒரு கள்வன் கையிற் கண்டேன் என்று அரசர்க்கு உரைப்ப,

  அல்லதை: வினைத் திரிசொல்: ஐ சாரியை எனலுமாம். சுட்டு அதன் பெருமையை உணர்த்திற்று. இருக்கென்று: அகரந்தொக்கது. 'பண்டு தான் கொண்ட' என்றது கவி கூறியது. அரி-பரல்; மேல் வழக்குரை காதையில் 'என் காற் பொற்சிலம்பு மணியுடை யரியே' என்றலின், சிலவாகிய அரியெனல் கூடாமையின் சாதிபற்றக் கூறியதெனக் கொள்க; அன்றி, அரி என்பதற்கு வினைத்திறம் என்றும், ஓசையென்றும் கூறுதலுமாம். அதனைக் காட்டக் கண்ட பொற்கொல்லன் ஏகி உரைப்ப வென்க.

  { அடி. தான் கொண்டவென்றார் தன்னெஞ்சறியத் தான் கொண்டதனை இங்ஙனம் கூறினானென்பது தோன்ற பிறனோர் கள்வன் கையிற் கண்டன வென்றார். தன்னையுங் கள்வனென்றமை தோன்ற.}


   ௨௭-௩0. 27-30 வினைவிளை காலம் ஆதலின் யாவதும்
   சினையலர் வேம்பன் தேரா னாகிக்
   கன்றிய காவலர்க் கூஉய்அக் கள்வனைக்
   கொன்றுஅச் சிலம்பு கொணர்க ஈங்கெனக் (30)

  வினை விளை காலம் ஆதலின் - தான் முற் பிறப்பிற் செய்த தீவினை வந்து பலிக்கின்ற காலம் ஆதலாலே, யாவதும்-யாதொன்றையும், சினை அலர் வேம்பன்-முகை விரிந்த வேப்பம்பூ மாலையையுடைய பாண்டியன், தேரான் ஆகி-ஆராயதவனாகி, கன்றிய காவலர்க்கூஉய்-அடிப்பட்ட காவலாளரை அழைத்து, அக்கள்வனைக் கொன்று-இவன் சொன்ன அக் கள்வனைக் கொன்று, அச்சிலம்பு கொணர்க ஈங்கு என-அச்சிலம்பை இப் பொழுதே கொணர்க என்று கூற;

  யாவதும் தேரானாகி என இயையும், கூஉய்: கூவி என்பதன் விகாரம். ஈங்கு-இப்பொழுதே யெனப் பொழுதினை யுணர்த்திற்று. உரைப்பக் கேட்ட வேம்பன் கொணர்க வென்று கூற என்க. அக் கள்வனைக் கொல்ல அச்சிலம்பையும் அவனையும் கொணர்கவெனச் சொல்லக் கருதினவன் வாய் சோர்ந்து, கொன்று அச் சிலம்பைக் கொண்டு வருகவென்று கூறினானெ அடியார்க்கு நல்லார் கருதியது ஏற்புடைத்தன்று; என்னை? வினைவிளை கால மாதலின் யாவதும் தேரானாகி என்றமையானும், அச்சிலம்பு எனத் தேவியின் சிலம்பைக் கருதிக் கூறினமையானும், வழக்குரை காதையுள்ளும் "கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று" என்றிறுத்தமையானும் என்க.

  {அடி. இதனை ஆராயு நெறி பலவுளதாகவும், அவற்றில் ஒன்றையும் தேர்ந்திலனென்பார். யாவதும் தேரானாகி என்றார்; முன்னர்க் கை குறைத்தன் முதலிய முறைசெய்தோன் இதனைத் தேர்ந்திலனென்று அடிகள் இரங்கிக் கூறினார். கன்றிய காவலர் என்றார். அவரும் முன்னர்த் தீது செய்யா ரென்பது தோன்ற.}
  ---------

   ௩௧-௩௬. 31-36 கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
   நிலைக்களம் காணாள் நெடுங்கண் நீர்உகுத்துப்
   பத்தினி யாகலின் பாண்டியன் கேடுற
   முத்தார மார்பின் முலைமுகந் திருகி
   நிலைகெழு கூடல் நீள்எரி ஊட்டிய (35)
   பலர்புகழ் பத்தினி யாகும் இவள்என,

  கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி-அங்ஙனம் அரசன் கூறக்கேட்ட காவலாளரும் வினைவிளை காலமாதலின் அவனைக் கொல்லுதல்செய்யக்கொலையிடத்தே பட்ட கோவலன் மனைவி, நிலைக்களம் காணாள்-தனக்கு நிலையிடம் காணாளாய், நெடு கண் நீர் உகுத்து-நெடிய கண்ணின் நீரைச் சொரிந்து, பத்தினி ஆகலின்-ஆக்கவும் அழிக்கவும் வல்லள் ஆதலின், பாண்டியன் கேடு உற-பாண்டியன் உயிர் கெடுமாறு செய்து, முத்து ஆரம் மார்பின் முலை முகம் திருகி-முத்தாரம் அணிந்த மார்பினகத்து முலையின் முகத்தைத் திருகி யெறிந்து, நிலைகெழுகூடல் நீள் எரியூட்டிய-அதினின்றும் உண்டாகிய நெடிய தீயால் நிலைபெற்ற மதுரையாகிய அவனூரையும் உண்ணப் பண்ணிய,பலர் புகழ் பத்தினி ஆகும் இவள் என - பலரும் புகழும் பத்தினியாகும் இக் குறவராற் சொல்லப் பெற்றவளென்று சாத்தன் கூற,

  நிலைக்களம் காணாள்-ஓரிடத்து நிற்றலாற்றாளாய் என்க. கேடுறச் செய்து என ஒருசொல் விரித்துரைக்க; கேடுற உகுத்து என்றியைத்தலுமாம். எரியை உண்பித்த என விரித்தலும் பொருந்தும். கண்ணின் நீராற் பாண்டியனை அடுதலும், முலையின் தீயாற் கூடலைச் சுடுதலுஞ் செய்தாளென்க.

  "தொல்லை வினையால் துயருழந்தாள் கண்ணினீர்
  கொல்ல உயிர்கொடுத்த கோவேந்தன்"

  என வாழ்த்துக் காதையுள் உரைத்தலும் ஈண்டு அறியற்பாலது.


   ௩௭-௩௮. 37-38 வினைவிளை காலம் என்றீர் யாதுஅவர்
   வினைவிளைவு என்ன,

  வினை விளை காலம் என்றீர்-நீர் வினை விளை காலம் என்று கூறிப் போந்தீர், யாது அவர் வினை விளைவு என்ன-அவர்க்கு வினையின் விளைவாவது என்னை யென்று அடிகள் வினவ,
  ------------

   ௩௮-௫௪. 38-54 விறலோய் கேட்டி
   அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்
   கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில் (40)
   வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன்
   ஆர்அஞர் உற்ற வீரபத் தினிமுன்
   மதுரைமா தெய்வம் வந்து தோன்றிக்
   கொதியழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய்
   முதிர்வினை நுங்கட்கு முடிந்தது ஆகலின் (45)
   முந்தைப் பிறப்பில் பைந்தொடி கணவனொடு
   சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்துச்
   சங்கமன் என்னும் வாணிகன் மனைவி
   இட்ட சாபம் கட்டியது ஆகலின்
   வார்ஒலி கூந்தல்நின் மணமகன் தன்னை (50)
   ஈர்ஏழ் நாளகத்து எல்லை நீங்கி
   வானோர் தங்கள் வடிவின் அல்லதை
   ஈனோர் வடிவில் காண்டல் இல்எனக்
   கோட்டம்இல் கட்டுரை கேட்டனன் யான்என,

  விறலோய் கேட்டி-மேலோய் கேட்பாயாக;அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்-நடுக்கமில்லாத சிறப்பினையுடைய மதுரையாகிய மூதூரிடத்துள்ள, கொன்றை அம் சடை முடி மன்றப் பொதியலில் வெள்ளி அம்பலத்து-மன்றமாகிய பொதியில்களில் கொன்றை மாலை யணிந்த சடைமுடியையுடைய இறைவனுறையும் வெள்ளியம்பலத்துள், நள் இருள் கிடந்தேன்-செறிந்த இருளையுடைய அரை யிரவில் துயின்றேனாக, ஆர் அஞர் உற்ற வீரபத்தினி முன்-அப்பொழுது அரிய துன்பத்தை யுற்ற வீர பத்தினியின் முன், மதுரை மாதெய்வம் வந்து தோன்றி -அந்நகர்க்குக் காவற்றெய்வமாகிய மதுரை மாதெய்வம் வந்து வெளிப்பட்டு, கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய்-நினது மிக்க சினத்தால் வெவ்விய அழலை நின் கொங்கை யிடத்தே விளைவித்தோய், முதிர்வினை நுங்கட்கு முடிந்தது ஆகலின்-நுங்கட்கு முற்பட்ட நல்வினை தீர்ந்தது ஆகலான், முந்தைப் பிறப்பில் பைந்தொடி கணவனொடு-பசிய தொடியினையுடையாய் முற்பிறப்பில் நின் கணவனொடு நினக்கு, சிங்கா வண்புகழ்ச் சிங்கபுரத்து-கெடாத நல்ல புகழையுடைய கலிங்கநாட்டுச் சிங்கபுரம் என்னும் பதியின்கண், சங்கமன் என்னும் வாணிகன் மனைவி-சங்கமனென்னும் வணிகனுடைய மனைவியானவள், இட்ட சாபம் கட்டியது ஆகலின்-இட்ட சாபம் இப்பிறப்பில் வந்து மூண்டதாகலின், வார் ஒலி கூந்தல்-நீண்டு தழைத்த கூந்தலையுடையாய், நின் மணமகன் தன்னை-நின் கணவனை, ஈரேழ்நாள் அகத்து எல்லை நீங்கி-இன்றைக்குப் பதினாலாம் நாளில் பகற்பொழுது நீங்கியபின் காண்பை; வானோர் தங்கள் வடிவின் அல்லதை-காணுங்கால் வானோர் வடிவிற் காண்பதல்லது, ஈனோர் வடிவில் காண்டல் இல் என-மக்கள் வடிவிற் காண்பதில்லை யென்று கூற, கோட்டம் இல் கட்டுரை-வஞ்சகமற்ற அக்கட்டுரையினை, கேட்டனன் யான் என-யான் கேட்டேனென்று சாத்தன் கூற,

  விறல்-பெருமை. கேட்டி:முன்னிலை யொருமைவினை எதிர்காலம் பற்றியது. அதிர்வு-நடுக்கம்;

  [10]"அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கஞ் செய்யும்"
  என்றாராகலின். பகைவரால் நடுங்காத வென்க; அது,

  [11]" நீர்முற்றி மதில் பொரூஉம் பகையல்லால் நேராதார்
  போர்முற்றொன் றறியாத புரிசைசூழ் புன லூரன்''

  என்பதனான் அறியப்படும். சடைமுடி: இறைவனுக்கு ஆகுபெயர். பொதுஇல்:பொதியில் என மரீஇயிற்று: இது [12]"கிளந்தவல்ல" என்னும் அதிகாரப் புறனடையான் அமைக்கப்படும். கொன்றையஞ்சடை முடி, [13]"புன்னையங்கானல்" என்புழிப்போல அம் சாரியை பெற்றது. [14]பொதியில் என்பது பாடமாயின் பொதியிலாகிய வெள்ளியம்பலம் என்க. நள்-நளியென்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது; நளி-செறிவு, நள்ளென்னும் ஓசையுமாம்.

  முதிரிவினை-தீவினை யெனக்கொண்டு, அதனால் இங்ஙனம் முடிந்ததாகலின் என்றுரைத்தலுமாம். பைந்தொடியும் கூந்தலும் அண்மைவிளி. எல்லை-பகற்பொழுது. ஈனோர்-இவ்வுலகத்தோர்; ஈன் இவ்விடம் என்னும் பொருட்டு.

  {அடி. வீரபத்தினி-மறக்கற்புடையாள். கோப்பெருந்தேவி-அறக்கற்புடையாள்; ஆக ஆறிய கற்பும் சீறியகற்பும் எனக் கற்பு இரு வகை. கட்டுரை-பொருள் பொதிந்த சொல்;உறுதியுடைய சொல்லுமாம்.}
  -----------

   ௫௫-௬0. 55-60 அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம் (55)
   உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
   ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
   சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
   சிலப்பதி காரம் என்னும் பெயரால்
   நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்என, (60)

  அரைசு இயல் பிழைத்தோர்க்கு-அரசர் முறை செய்தலிற் சிறிது வழுவினும் அவர்க்கு, அறம் கூற்று ஆவதூஉம்-அறக் கடவுளே கூற்றமாகும் என்பதுவும், உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்-புகழமைந்த கற்புடை மகளை மக்களே யன்றித் தேவர் முனிவர் முதலாயினாரும் ஏத்துதல் இயல்பு என்பதுவும், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்-முன் செய்த தீவினை உருக்கொண்டு வந்து தன் பயனை நுகர்விக்கும் என்பதும், சூழ்வினைச் சிலம்பு காரணம் ஆக-சிற்ப வினை பொருந்திய சிலம்பு காரணமாகத் தோன்றினவாதலின், சிலப்பதிகாரம் என்னும் பெயரால்-சிலப்பதிகாரமென்னும் பெயருடன், நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள் என-ஒரு காப்பியமாக நாம் அம் மூன்றுண்மைகளையும் நிறுத்துதும் என்று அடிகள் சொல்ல,

  அரைசு: போலி. கூற்றாவது-கொல்வ தென்றபடி. அறம் கொல்லுமாறு,

  [15]"என்பிலதனை வெயில்போலக் காயுமே
  அன்பிலதனை யறம்"

  என்பதனானறியப்படும். பத்தினிக்கு : வேற்றுமை மயக்கம். உருத்து-வெகுண்டு என்றுமாம். இரு வினையும் செய்த முறையே வந்து ஊட்டுமென்பாரு முளர். தோன்றினமையின் எனவும், அவற்றை எனவும் விரித்துரைக்க. பாட்டு உடைச் செய்யுள்-இசைப்பாட்டுக்களை இடையே உடைய தொடர்நிலைச்செய்யுள் என்க உரைப்பாட்டையும் இசைப்பாட்டையுமுடைய என ஈண்டு அடியார்க்கு நல்லார் கூறியது மிகை. மேல் உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் என்பராகலின்.
  -------

   ௬௧-௨. 61-62 முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
   அடிகள் நீரே அருளுகஎன் றார்க்கு

  முடி கெழு வேந்தர் மூவர்க்கும் உரியது-இவ்வரலாறு தமிழ் நாட்டு முடியுடைய வேந்தர் மூவர்க்கும் உரியதாகலின், அடிகள் நீரே அருளுக என்றாற்கு-அடிகள் நீரே அருளிச் செய்க என்று கூறிய சாத்தற்கு.

  கெழு வென்னுஞ் சாரியை [16]"லனவென வரூஉம் புள்ளி யிறுதி முன்" என்னுஞ் சூத்திரத்து, 'அன்ன மரபின் மொழியிடைத் தோன்றி' என்பதனால் இகர வீற்றின் முன்னும் வந்தது. புகாரினும் மதுரையினும் வஞிசியினும் நிகழ்ந்ததாகலின், மூவர்க்கு முரியது என்றார். அடிகள்: அண்மைவிளி. அருளுக என்பதன் அகரந் தொக்கது. என்றாற்கு அடிகள், அருள என மேல் வந்தியையும்.

  {அடி. 'நீரே' என்பதிலுள்ள ஏகாரத்தை வினாப் பொருட்டாகக் கொண்டு, 'இச்செய்கின்ற காப்பியம் மூவேந்தர்க்கு முரியதென்பதனால் ஏனையோரை இவர் புகழ்ந்துரையாராகலின், யாம் காப்பியஞ் செய்யக் கடவே மென்பது கருதி, நீரே அருளுகென ஏகார வினாப் பொருண்மை தோன்ற இது கருதி இது சொன்னாற்கு அவர் கருதிய பொருளிற்கு உடம்படாது சொல்லிற்கு உடன்பட்டாரென்பதாயிற்று' என்றுரைப்பது சிறப்புடைத்தன்று; என்னை? அடிகளின் மனத் தூய்மையைச் சாத்தனாரும், சாத்தனார் கருத்தை அடிகளும் அறிந்திலர் என்னும் குற்றம் பொருந்துமாகலின். 'மூவேந்தர் நாட்டினும் நிகழ்ந்த கதையாகலான் ஏனை இருவேந்தரியல்பும், வேத்தியலும் பொதுவியலும் எல்லா முணர்ந்த நீரே அருளவேண்டும் என்று சாத்தன் சொல்ல' என்னும் அரும்பத வுரைகாரர் கருத்தே திட்ப முடைத்தாகும் என்க.}

  இனித்தாம் வகுத்துக் கொண்டதனைக் கூறுவர்.
  ----------

   ௬௨-௩. 63-64 அவர்,
   மங்கல வாழ்த்துப் பாடலும்,

  அவர் மங்கல வாழ்த்துப் பாடலும்-அவர் மணத்தில் மகளிர் வாழ்த்துதலையுடைய பாடலும்,

  {அடி. இதனை மங்கல வாழ்த்துக் காதையுமென்னாது பாடலுமென்றது என்னையோ வெனின்,-இஃது ஆசிரியப் பாவால் வாராது கொச்சகக் கலியால் வருதலானும், கதையையுடையது காதையா மாதலானும், அவ்வாறு இதிற் கதை நிகழ்ச்சி யின்மையானும், வாழ்த்தும் உரையும் பாடலுமாய் வருதலானும், இங்ஙனம் பெயர் கொடுத்தாரென வுணர்க. அஃது அற்றாக; மேலும் கானல்வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, துன்பமாலை, ஊர்சூழ்வரி, வஞ்சின மாலை, குன்றக் குரவை. இவையிற்றையும் காதை யென்றிலரா லெனின்,-அவற்றைக் கூறாததும் சில வேறுபாடு கருதிப்போலும்; என்னை வேறுபாடெனின், அவை தத்த முடிவிற் கூறுதும்.}

  ஆசிரியப் பாவால் வாராதது கதையன்றென்னில், வாழ்த்துக்காதை என்னும் பெயர் பொருந்துவதன்று; அஃது ஆசிரியப் பாவால் இயலாமையின்; ஆகலின், பெரும்பாலும் கதைò தொடர்புடையது காதை என்பதே அடிகள் கருத்துப் போலும்.
  --------

   ௬௩-௪. 65-66 குரவர்
   மனையறம் படுத்த காதையும்,

  குரவர் மனையறம் படுத்த காதையும்-இருமுது குரவரும் இவரை இல்லறத்தில் அடிப்படுத்த வேண்டி வேறுபட இருத்திய காதையும்,
  ----------

   ௬௪-௫. நடம்நவில்
   மங்கை மாதவி அரங்கேற்று காதையும், (65)

  நடம்நவில் மங்கை மாதவி அரங்கேற்று காதையும்-ஐயாண்டில் தண்டியம் பிடித்து ஏழாண்டு நடம்பயின்ற மாதவி மங்கைப் பருவத்தே அரங்கேற்றின காதையும்,

  தண்டியம்-தண்டு; கோல்
  -----

   ௬௬. 66 அந்தி மாலைச் சிறப்புசெய் காதையும்,

  அந்தி மாலைச் சிறப்புச் செய்காதையும்-அந்திப்பொழுதாகிய மாலையைச் சிறப்புச் செய்த காதையும்,

  சிறப்புச் செய்தல்-புனைந்துரைத்தல்.
  --------

   ௬௭. இந்திர விழவூர் எடுத்த காதையும்,

  இந்திர விழவு ஊர் எடுத்த காதையும்-அப் பதியின்கண் இந்திரனுக்கு விழாச் செய்த காதையும்,
  --------

   ௬௮. கடலாடு காதையும்,

  கடல் ஆடு காதையும்-விழாவின் முடிவிற் கடலாடின காதையும்,
  ------

   ௬௯. மடல்அவிழ் கானல்வரியும்,

  மடல்அவிழ் கானல்வரியும்-கடலாடிய கோவலனும் மாதவியும் பூக்களின் இதழ்விரித்த கழிக்கானலிடத்து யாழ்கொண்டு பாடிய கானல்வரியும்,

  மடல் - பூ என்பது அரும்பதவுரை. கானல்-கடற்கரைச் சோலை. இஃது இசைப்பாவாற் பெற்ற பெயர். இதனுட் பெரிதும் கதை நிகழாமை உணர்தற்பாற்று.
  -------

   ௬௯-௭௰. 69-70 வேனில்வந் திறுத்தென
   மாதவி இரங்கிய காதையும், (70)

  வேனில் வந்து இறுத்தென மாதவி இரங்கிய காதையும்-இளவேனில் வந்து பொருந்தியதாகப் பிரிந்த மாதவி வருந்திய காதையும்,
  -------

   ௭0-௧. 70-71 தீதுடைக்
   கனாத்திறம் உரைத்த காதையும்,

  தீது உடைக் கனாத்திறம் உரைத்த காதையும்-கண்ணகி தான் கண்ட தீங்கையுடைய கனாவின் திறத்தைத் தேவந்திக்கு உரைத்த காதையும்,

  கனா நிலை யுரைòதற் பொருண் முடிபினைக் கூறுதலின் இது காதையாயிற் றென்பர் அடியார்க்கு நல்லார்.
  -----------

   ௭௧-௨. 71-72 வினாத்திறத்து
   நாடுகாண் காதையும்,

  வினாத்திறத்து நாடுகாண் காதையும்-கவுந்தியடிகள் வினாவின் திறத்தையுடைய சோணாட்டின் வளத்தை அவர்கள் கண்ட காதையும், கண்ணகி மதுரை மூதூர் யாதென வினாவின திறம் எனலும் பொருந்தும்.
  நாடு-மருத வளஞ் சான்றது.
  ---------

   ௭௨. 72 காடுகாண் காதையும்,

  காடுகாண் காதையும்-அங்ஙனம் நாட்டினைக் கண்டு இன்புற்றவர் காட்டினைக் கண்டு துன்புற்ற காதையும்,
  காடு - பாலை நிலமாயது.
  --------

   ௭௩. 73 வேட்டுவ வரியும்,

  வேட்டுவ வரியும்-வேட்டுவ மகளாகிய சாலினி கொற்றவை உருக்கொண்டு ஆடிய கோலவரியும்,
  இது கூத்தாற் பெற்ற பெயர். வரி - வரிக்கூத்து.
  ----------

   ௭௩-௭௪. 73-74 தோட்டலர் கோதையொடு
   புறஞ்சேரி இறுத்த காதையும்,

  தோட்டு அலர் கோதையொடு புறஞ்சேரி இறுத்த காதையும்-இதழ் விரிந்த மாலையையுடைய கண்ணகியோடு மதுரைப் புறஞ்சேரியிற் சென்று தங்கிய காதையும்,

  தோடு; தோட்டு என விகாரமாயிற்று. கோதை : ஆகுபெயர்.
  ----------

   ௭௪-௫. 74-75 கறங்குஇசை
   ஊர்க்காண் காதையும்,

  கறங்கு இசை ஊர்காண் காதையும்-முழங்கா நின்ற முரசொலியையுடைய மதுரையைக் கோவலன் கண்ட காதையும்,
  ----------

   ௭௫-௬. 75-76 சீர்சால் நங்கை (75)
   அடைக்கலக் காதையும்,

  சீர்சால் நங்கை அடைக்கலக் காதையும்-புகழ்மிக்க கண்ணகியாகிய நங்கையை மாதரிபாற் கவுந்தியடிகள் அடைக்கலங் கொடுத்த காதையும்,
  ---------

   ௭௬. 76 கொலைக்களக் காதையும்,

  கொலைக்களக் காதையும்-கோவலன் கொலைக்களப்பட்ட காதையும்,
  --------

   ௭௭. 77 ஆய்ச்சியர் குரவையும்,

  ஆய்ச்சியர் குரவையும்-தம் சேரிக்கு உற்பாத சாந்தியாக மாதரி முதலான ஆய்ச்சியர் குரவைக் கூத்தாடின முறைமையும்

  இதுவும் கூத்தாற் பெற்ற பெயர்.
  --------

   ௭௭-௮. 77-78 தீத்திறம் கேட்ட
   துன்ப மாலையும்,

  தீத்திறம் கேட்ட துன்ப மாலையும்-கோவலன் கொலையுண்ட தீய செய்தியைக் கண்ணகி கேட்டு அவலித்து அரற்றிக் கவன்று கையாறுற்ற துன்ப வியல்பும்,

  மாலை-தொடர்ச்சியுமாம்.
  --------

   ௭௮-௯. 78-79 நண்பகல் நடுங்கிய
   ஊர்சூழ் வரியும்,

  நண்பகல் நடுங்கிய ஊர் சூழ்வரியும்-நண்பகற் பொழுதில் எல்லாரும் கண்டு நடுங்குமாறு கண்ணகி ஊரினைச் சூழ்வந்த ஊர்சூழ் வரியும்,

  நடுங்கிய : செய்யிய வென்னும் எச்சம் : கண்ணகி நடுங்கிய என்றலுமாம். கண்ணகி நாணிறந்து வெளிப்பட்டு ஊர்சூழ வருவதனைப் பத்தினிப் பெண்டிர் கண்கூடாகக் காண்டலின் இஃது "ஊர்சூழ் வரியாயிற்று".

  இதுவும் கூத்தாற் பெற்ற பெயரென்பர்.
  ---------

   ௭௯-௮0. 79-80 சீர்சால் வேந்தனொடு
   வழக்குரை காதையும்,

  சீர்சால் வேந்தனொடு வழக்கு உரை காதையும்-புகழமைந்த பாண்டியனோடு கண்ணகி வழக்குரைத்த காதையும்,

  உரை காதை : வினைத்தொகை; இறந்த காலம்.
  ---------

   ௮0. 80 வஞ்சின மாலையும், (80)

  வஞ்சின மாலையும்-தானுரைத்த வழக்குந் தோற்று உயிருந் தோற்ற நெடுஞ்செழியன் தேவியை நோக்கிக் கண்ணகி வஞ்சினங்கூறிய இயல்பும்,

  மாலை-இயல்பு.
  -------

   ௮௧. 81 அழல்படு காதையும்,

  அழற்படு காதையும் - கண்ணகியின் முலைமுகத்தெழுந்த தீ அவளேவிய இடமெங்குந் தாவி எரித்த காதையும்,
  -------

   ௮௧-௨. 81-82 அருந்தெய்வம் தோன்றிக்
   கட்டுரை காதையும்,

  அருந்தெய்வம் தோன்றிக் கட்டுரை காதையும்-மதுரை மாதெய்வம் வெளிப்பட்டு அவளது பவத்தொடர்பினைக் கட்டுரைத்த காதையும்,

  கட்டுரை-விளங்கச் சொல்லுதல் என்பது அரும்பதவுரை.
  ---------

   ௮௨-௩. 82-83 மட்டலர் கோதையர்
   குன்றக் குரவையும்,

  மட்டு அலர் கோதையர் குன்றக் குரவையும்-மது ஒழுக மலர்ந்த மாலையினையுடைய குறத்தியர் வேங்கை நிழற்கண் அவளைக் கண்டதற்கு உற்பாத சாந்தியாக முருகவேளை நோக்கி அக் குன்றின்கண் ஆடிய குரவையும்,

  இதுவும் கூத்தாற் பெற்ற பெயர். 'கோதை யென்று பாடங் கூறிக் கோதைக்கு அவர்களெடுத்த குரவை யெனினும் அமையும்' என்பர் அடியார்க்கு நல்லார்.
  ---------

   ௮௩. 83 என்றுஇவை அனைத்துடன்

  என்று இவை அனைத்துடன்-என்று சொல்லப்பட்ட இவ் விருபத்து நான்குடனே,
  --------

   ௮௪. 84 காட்சி,

  காட்சி-காட்சிக் காதையும்,

  காட்சி- கல்லினைக் காண்டற்கு மனத்தாற் றுணிதல். குறவர் கையுறையுடன் செங்குட்டுவனைக் கண்டனராயினும் அது பொருளன்றாம்.
  -------

   ௮௪. 84 கால்கோள்,

  கால்கோள்-கல்லிலே கடவுளின் வடிவெழுதத் தொடங்கிய காதை,

  கால்கோள்-தொடங்குகை. அடியார்க்கு நல்லார் கற்கொண்ட காதையும் எனப் பொருள் கூறிக் கற்கோள் கால்கோளென விகாரம் என்றனர். [17]"கற்கால் கொண்டனன்" என்பராகலின் அது பொருந்துவதன்று.
  ---------

   ௮௪. 84 நீர்ப்படை,

  நீர்ப்படை- அங்ஙனம் எழுதின பத்தினிக் கடவுள் வடிவைக் கங்கை யாற்றில் நீர்ப்படுத்தின காதையும்,
  ---------

   ௮௪. 84 நடுகல்,

  நடுகல்-பத்தினிக் கோட்டத்துத் தெய்வப் படிமத்திலே நங்கையைப் பிரதிட்டை செய்வித்த காதையும்,
  --------

   ௮௫. 85 வாழ்த்து,

  வாழ்த்து-பத்தினிக் கடவுள் செங்குட்டுவனை வாழ்த்தின காதையும்,
  -------

   ௮௫. 85 வரந்தரு காதையொடு (85)

  வரம் தரு காதையொடு-அங்ஙனம் வாழ்த்திய கடவுள் செங்குட்டுவற்கும் அங்கு வந்திருந்த மன்னரனைவர்க்கும் வரங்கொடுத்த காதையும்,

  ஒடு : அசை ; எண்ணொடுவுமாம். தருதல்-கொடை; இடவழுவமைதி

  [18]" காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
  சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென்
  றிருமூன்று வகையிற் கல்லொடு"

  என்பதும், அதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையும் ஈண்டு அறியற் பாலன.
  ----------

   ௮௬. 76 இவ்வா றைந்தும்

  இவ்வாறைந்தும்-என்னும் இம் முப்பதுமாகிய,

  ௮௭. உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள்

  உரை இடையிட்ட பாட்டுடைச் செய்யுள்-இடையிட்ட உரையும் பாட்டுமுடை காப்பியத்தை,

  உரை-உரைச்செய்யுள். பாட்டு-இசைப்பாட்டு. செய்யுள் பொருட்டொடர் நிலைச்செய்யுள்; ஆவது பெருங்காப்பியம்.
  --------

   ௮௮. 77 உரைசால் அடிகள் அருள

  உரைசால் அடிகள் அருள-புகழமைந்த இளங்கோவடிகள் அருளிச்செய்ய,
  -------

   ௮௮-௯. 77-78 மதுரைக்
   கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்,

  மதுரைக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன்-மதுரையின்கட் கூலவாணிகனான சாத்தன் என்னும் நல்லிசைப் புலவன் கேட்டனன்.

  கூலம் எண் வகைத்து: அவை. நெல்லு, புல்லு, வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இராகி என்பன. பதினெண்வகைத் தென்பர் கூத்த நூலார். [19]"பதினெண் கூலமும் உழவர்க்கு மிகுக" என்பது காண்க.
  ---------

   ௯0. 80 இது,
   இது-இங்ஙனங் கூறியவிது,

  ௯0. பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென். (90)

  பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென்-இச்செய்யுளின் பாகுபாடாகிய வகையினைத் தெரிதற்குக் கருவியாகிய

  முறைமையுடைய பதிகம் என்க.

  தெரிந்த-தெரிதற்குக் கருவியாகிய என்க. பதிகம் எனினும் பாயிரம் எனினும் ஒக்கும். மரபிற் பதிகம் என மாறுக. என், அசை. இச்சொல் ஆசிரியப்பாவிற்கு முடிபு சிறப்புடைத்தென்பர்.

  இனி, குறவர் இளங்கோவடிகளை நோக்கி அறிந்தருளென்ற வளவிலே செங்குட்டுவன் அதிசயித்து முகநோக்கப் பரிசில் காரணமாக வந்து அவனுழையிருந்த சாத்தன் அதனைக் குறிப்பானறிந்து அது விளைந்ததெல்லாம் யானறிவேன் என்றுரைத்தனன் என்றும், அங்ஙனம் அரசனோடு சாத்தன் கூறக்கேட்ட அடிகள் நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுளென்றார் என்றும் அடியார்க்கு நல்லார் உரை கூறியுள்ளார். காட்சிக் காதையில் மலைவளí காணச்சென்று பேரியாற்றங்கரையில் தங்கிய செங்குட்டவனோடு இளங்கோவடிகளும் சென்றிருந்தனர் என்பதற்கு யாதொரு குறிப்பும் இன்றாகலானும், குறவர்கள் செங்குட்டுவனிடம் உரைத்தனரெனவே ஆண்டுக் கூறியிருத்தலானும், வஞ்சி நகரத்தில் வெள்ளி மாடத்தில் 'இளஙகோ வேண்மாளுடனிருந்தருளி'னன் என்புழி, இளங்கோ என்பதனை வேறு பிரித்து அடிகள் எனக் கூறினும் அவர் உடன் சென்றார் என்பது பெறப்படாமையானும், உடன் சென்றிருப்பினும் குறவர் அவரிடம் கூற அதனைச் செங்குட்டவன் கேட்டு அதிசயித்தனன் என்பது கூடாமையானும் அவ்வுரை பொருந்தாமையின் அரும்பத உரையாசிரியர் ஆய்ந்து கூறிய 'குணவாயிற் கோட்டத்துக் கடவுளர் முன்னர்த் துறந்திருந்த இளங்கோவடிகளுக்குக் கண்ணகி வானவர் போற்றத் தன் கணவனொடு கூடியது கண்டு செங்குட்டுவனுக்குரைத்த குறவர் வந்து, எல்லாமறிந்தோய்! இதனை அறிந்தருள் என்று கூறிப்போக, பின்பு செங்குட்டுவனைக் கண்டு போந்து அடிகளுழை வந்த சாத்தன் அது பட்டவாறெல்லாங் கூற என்னும் உரையினை மேற்கொண்டு, யாமும் இங்ஙனம் உரை கூறினாம் என்க.

  இதில் (௬அ )'கடலாடு காதையும்' எனக் குறளடியும்,(அரு) 'வாழ்த்து வரந்தரு காதையொடு' எனச் சிந்தடியும் "இவ்வாறைந்தும்"(அ௬)எனக் குறளடியும் வந்து, ஏனையன நேரடியாயினமையின் இது குட்டச் செந்தூக்கு ஆகும். இணைக் குறளாசிரியப்பா எனக் கூறலுமாம்.

  பதிகம் முற்றிற்று.


  உரைபெறு கட்டுரை

  ௧. அன்று தொட்டுப் பாண்டியனாடு மழை வறங்கூர்ந்து வறுமையெய்தி வெப்பு நோயுங் குருவுந் தொடரக் கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் நங்கைக்குப் பொற்கொல்ல ராயிரவரைக் கொன்று களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய நாடு மலிய மழைபெய்து நோயும் துன்பமும் நீங்கியது.

  ௨. அதுகேட்டுக் கொங்கிளங் கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய மழை தொழிலென்றும் மாறா தாயிற்று.

  ௩. அதுகேட்டுக் கடல்சூ ழிலங்கைக் கயவாகு வென்பான், நங்கைக்கு நாட்பலி பீடிகை கோட்ட முந்துறுத்தாங்கு அரந்தை கெடுத்து வரந்தரு மிவளென ஆடித்திங்க ளகவையி னாங்கோர் பாடி விழாக்கோள் பன்முறை யெடுப்ப மழை வீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று.

  ௪. அதுகேட்டுச் சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறத்தானும் வரந்தரு மிவளோர் பத்தினிக் கடவுளாகுமென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமுஞ் சமைத்து நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே.

  உரை

  ௧. அன்று தொட்டுப் பாண்டியன் நாடு-பாண்டியனது நாடானது அன்று தொடங்கி, மழை வறம்கூர்ந்து வறுமை எய்தி, மழை வறத்தல் மிக்கு அதனால் வறுமையுற்று, வெப்பு நோயும் குருவும் தொடர-வெப்பு நோயும் கொப்புளமும் இடைவிடாது நலிதலின், கொற்கையில் இருந்த வெற்றி வேற் செழியன்-கொற்கைப் பதியில் இருந்த வெற்றி பொருந்திய வேலையுடைய வழுதியானவன், நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று-பத்தினி தேவிக்கு ஆயிரம் பொற்கொல்லரைப் பலியிட்டு களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய-களவேள்வியாற் சாந்தி செய்து விழவெடுத்தலானே, நாடு மலிய மழை பெய்து-அவன் நாடு மிகவும் மழை பெய்து, நோயும் துன்பமும் நீங்கியது-முற்கூறிய நோயும் வறுமைத் துன்பமும் நீங்கிற்று.

  அன்று என்றது கதையை உட்கொண்டு நின்றது. காவலன் செங்கோல் வளையக் கோவலன் வெட்டுண்டு வீழ்ந்த அன்றுதொட்டு என்றபடி, கூர்தல்-மிகுதல். வெப்பு-தொழுநோய் என்பர் அடியார்க்கு நல்லார். குரு-கொப்பளம், வெம்மையான் உண்டாவது. வெற்றி வேற் செழியன் பெயருமாம். மாவினால் ஆயிரம் பொற்கொல்லர் உருச்செய்து பலியிட்டனன் போலும். இவனே நெடுஞ்செழியனுக்குப் பின் அரசுகட்டிலேறி ஆட்சி யெய்தினான் என்பது பின் [20]நீர்ப்படைக் காதையால் அறியப்படும். சாத்தனாராற் புறத்திலே பாடப்பெற்ற நன்மாறன் என்பான் இவனே போலும்.

  சாந்தி-ஊர்ச்சாந்தி. சாந்தி செய்து விழவெடுத்தலால் என மாறுக. இடத்து நிகழ்பொருளின் றொழில்கள் இடத்தின்மேல் நின்றன.

  ௨. அதுகேட்டு-அதனைக் கேட்டு, கொங்கு இளங்கோசர்-கொங்கு மண்டிலத்து இளங்கோக்களாகிய கோசர், தங்கள் நாட்டகத்து-தங்களது நாட்டின்கண், நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய-நங்கைக்குச் சாந்தியும் விழவுஞ் செய்தலான், மழை,-தொழில் என்றும் மாறாதாயிற்று-பெய்தற் றொழில் பெய்யும் பருவ நாளெல்லாம் வழுவாதாயிற்று.

  அது என்பது செழியன் நன்மை செய்து தீமை நீங்கியதனை, முடி வேந்தரன்மையின் இளங்கோசர் எனப்பட்டனர். எனவே, கோசரென்பார் சிலர் அந்நாட்டினை ஆட்சிபுரிந்தா ரென்பது போதரும்.

  ௩. அதுகேட்டு-அதனைக் கேட்டு, கடல்சூழ் இலங்கைக் கயவாகு என்பான்-கடலை அகழாகவுடைய இலங்கையிலுள்ள கயவாகு என்னும் அரசன், நங்கைக்கு நாட் பலி பீடிகை கோட்டம் முந்துறுத்து ஆங்கு-அவ்விடத்தே நங்கைக்கு நாடோறும் பலி கொள்ளும் பலி பீடத்தை முற்படச் செய்து பின்பு கோட்டமும் அமைத்து, அரந்தை கெடுத்து வரம் தரும் இவள் என-துன்பங்களைக் கெடுத்து நமக்கு வேண்டும் வரங்களை இவள் தருமென்று துணிந்து, ஆடித் திங்கள் அகவையின்-ஆடித்திங்களிலே, ஆங்கு ஓர் பாடி விழாக்கோள்-தனது நகரின்கண் விழாச் செய்தலை, பன்முறை எடுப்ப-ஆண்டு தோறும் நிகழ்த்தா நிற்க, மழை வீற்றிருந்து-மழை குறைவின்றி நிலைபெறுதலானே, வளம்பல பெருகி-பல வளங்களும் நிறைந்து, பிழையா விளையுள நாடு ஆயிற்று-பொய்யாத விளைவினையுடைய நாடாயிற்று அவனது நாடு.

  ஈண்டு அது கேட்டு என்றது பாண்டியன் செய்து பெற்றதனைக் கேட்டு என்றபடி மேல் வருவதுமது. முந்து உறுத்து-முற்படச் செய்து கோவலன் கொலையுண்டதும் கண்ணகியால் மதுரை எரியுண்டதும் ஆடித் திங்களிலாதலின் அத் திங்களிலே விழாச் செய்தன னென்க. அவை ஆடித் திங்களில் நிகழ்ந்தன வென்பது.

  [21]“ஆடித் திங்கட் பேரிருட் பக்கத்
  தழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று
  வெள்ளி வாரத் தொள்ளெரி யுண்ண
  உரைசால் மதுரையோ டரைசுகே டுருமெனும்
  உரையு முண்டே"

  என்பதனாற் பெறப்படும். ஆடித் திங்களில் என்றமையின் ஆட்டை விழாவெனக் கொள்க. அகவை : ஏழனுருபு ; அகவையின் என்பதன் போலியுமாம். ஆங்கு, ஓர் : அசைகள். பாடி-நகரி.

  ௪. அதுகேட்டு-அதனைக் கேட்டு, சோழன் பெருங்கிள்ளி-பெருங்கிள்ளி யென்னுஞ் சோழன், கோழியகத்து-உறையூரிடத்தே, எத்திறத்தானும் வரம் தரும் இவள் ஓர் பத்தினிக் கடவுள் ஆகும் என-இவள் ஒரு பத்தினிக் கடவுளாதலின் எத்திறத்தானும் நமக்கு வரந்தருமெனக் கருதி, நங்கைக்குப் பத்தினிக் கோட்டமும் சமைத்து-நங்கைக்குக் கோயிலும் எடுப்பித்து, நித்தல் விழா அணி நிகழ்வித்தோன்-நித்தமாகிய அணிவிழாவும் நிகழ்வித்தனன்.

  பெருங்கிள்ளி-இவன் பெருநற்கிள்ளி யெனவும் படுவன். கோழி உறையூர் ; இதனை,

  [22] “முறஞ்செவி வாரண முன்சம முருக்கிய

  புறஞ்சிறை வாரணம்"

  என்பதனானறிக. ‘எத்திறத்தானு மென்றார். இவள் பிறந்த உரிமைபற்றி என்பர் அடியார்க்கு நல்லார்.

  உரைபெறு கட்டுரை-உரைத்துப் போதுகின்ற கட்டுரை என்பர் அரும்பதவுரையாசிரியர்.

  உரை பெறு கட்டுரை முற்றிற்று.
  --------------------------

  [1] தொல். எழுத். சூ. ௪க ௬

  [2] .திருநா. திருக்குறு. திருவிடைமரு.

  [3] தொல். எழுத். சூ. ௩௫௪

  [4] தொல். சொல். சூ. உஎஅ

  [5] தொல். பொருள். சூ. ருருஉ--உரை

  [6] தொல். எழுத். ௩௬௩

  [7] அகம் ௬௩

  [8] புறம். ௩0

  [9] சிலப். காணல். ௩

  [10] தொல். சொல். ௩க௬

  [11] கலி. ௬எ.

  [12] தொல். எழுத். ௪அ௩

  [13] அகம்.அ0

  [14] சிலப். அரும்

  [15] குறள். அதி. அ:எ

  [16] தொல். எழுத். சூ. ௪அக

  [17] சிலப். உ௪. உரு௪

  [18] தொல். பொருள். சூ. ௬0

  [19] மதிவாணர் நாடகத்தமிழ் நூல்.

  [20] சிலப். ௨௭: ௧௨௭-௧௩௮

  [21] சிலப். உ௩ : ௧௩௪-எ

  [22] சிலப். க0: உ௪எ


  முதலாவது : புகார்க் காண்டம்


  1. மங்கல வாழ்த்துப் பாடல்

  (பொதுவற்ற சிறப்பினையுடைய புகார் நகரிலே வண்மையிற் சிறந்த மாநாய்கன் குலக்கொம்பரும், திருமகள் போலும் அழகும், அருந்ததி போலும் கற்பும் உடையவளுமாகிய கண்ணகிக்கும், ஒப்பற்ற செல்வமும், வண்மையுமுடைய மாசாத்துவான் மகனும், மடவார்களாற் செவ்வேள் என்று பாராட்டப்படுஞ் சிறப்பினையுடையவனுமாகிய கோவலற்கும் மணவணி காண விரும்பிய குரவர்கள் ஒரு பெருநாளில் யானை யெருத்தத்தின் மீது அணியிழையாரை இருத்தி மாநகர்க்கு மணத்தை அறிவித்தனர். பலவகை இயங்களும் ஒலித்தன. திங்களை உரோகிணி கூடிய நன்னாளில் நீல விதானத்து நித்திலப் பந்தர்க்கீழ்க் கோவலன் கண்ணகியை மறைவழி மணந்து தீவலஞ் செய்தனன். பொற் பூங்கொடி போன்ற மாதர்கள் மலரும் சாந்தும் சுண்ணமும் விளக்கும் பாலிகையும் நிறைகுடமும் முதலாய மங்கலப் பொருள்களோடு வந்து, ‘காதலனைப் பிரியாமல், கவவுக்கை நெகிழாமல் வாழ்க’ என வாழ்த்தி, மலர்தூவி, அருந்ததியன்னாளை அமளியின்கண் ஏற்றினார்கள். )

   (சிந்தியல் வெண்பாக்கள்)

   திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
   கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
   வங்கண் உலகுஅளித்த லான்.
   ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
   காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு

   மேரு வலம்திரி தலான்.
   மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
   நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
   மேநின்று தாஞ்சுரத்த லான்.
   பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் 10

   வீங்குநீர் வேலி உலகிற்கு அவன்குலத்தொடு
   ஓங்கிப் பரந்துஒழுக லான். ஆங்கு,
   பொதியில் ஆயினும் இமயம் ஆயினும்
   பதிஎழு அறியாப் பழங்குடி கெழீஇய
   15

   பொதுஅறு சிறப்பின் புகாரே ஆயினும்
   நடுக்கின்றி நிலைஇய என்பது அல்லதை
   ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின்
   முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே.
   அதனால், 20

   நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு
   போகம்நீள் புகழ்மன்னும் புகார்நகர் அதுதன்னில்
   மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்
   ஈகைவான் கொடியன்னாள் ஈராறுஆண்டு அகவையாள்,
   அவளுந்தான், 25

   போதில்ஆர் திருவினாள் புகழுடை வடிவென்றும்
   தீதிலா வடமீனின் திறம்இவள் திறம்என்றும்
   மாதரார் தொழுதுஏத்த வயங்கிய பெருங்குணத்துக்
   காதலாள் பெயர்மன்னும் கண்ணகிஎன் பாள்மன்னோ,
   ஆங்கு, 30

   பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த
   ஒருதனிக் குடிகளொடு உயர்ந்தோங்கு செல்வத்தான்
   வருநிதி பிறர்க்குஆர்த்தும் மாசாத்து வான்என்பான்
   இருநிதிக் கிழவன்மகன் ஈரெட்டுஆண்டு அகவையான்,
   அவனுந்தான், 35

   மண்தேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம்
   பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
   கண்டுஏத்தும் செவ்வேள்என்று இசைபோக்கிக் காதலால்
   கொண்டுஏத்தும் கிழமையான் கோவலன்என் பான்மன்னோ.
   அவரை, 40

   இருபெருங் குரவரும் ஒருபெரு நாளால்
   மணஅணி காண மகிழ்ந்தனர், மகிழ்ந்துழி
   யானை எருத்தத்து அணிஇழையார் மேல்இரீஇ
   மாநகர்க்கு ஈந்தார் மணம்.
   அவ்வழி, 45

   முரசுஇயம்பின, முருகுஅதிர்ந்தன, முறைஎழுந்தன
   பணிலம்,வெண்குடை
   அரசுஎழுந்ததொர் படிஎழுந்தன, அகலுள்மங்கல அணிஎழுந்தது.
   மாலைதாழ் சென்னி வயிரமணித் àணகத்து
   நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்
   வான்ஊர் மதியம் சகடுஅணைய வானத்துச் 50

   சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன்
   மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
   தீவலம் செய்வது காண்பார்க்கண் நோன்புஎன்னை.
   விரையினர் மலரினர் விளங்கு மேனியர்
   உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர் 55

   சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
   ஏந்துஇள முலையினர் இடித்த சுண்ணத்தர்
   விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகை
   முளைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர்
   போதொடு விரிகூந்தல் பொலன்நறுங் கொடிஅன்னார் 60

   காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
   தீதுஅறுக எனஏத்திச் சின்மலர் கொடு தூவி
   அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
   மங்கல நல்அமளி ஏற்றினார், தங்கிய
   இப்பால் இமயத்து இருத்திய வாள்வேங்கை 65

   உப்பாலைப் பொன்கோட்டு உழையதா எப்பாலும்
   செருமிகு சினவேல் செம்பியன்
   ஒருதனி ஆழி உருட்டுவோன் எனவே.
   -------------------------

  நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை

   ௧-௩. திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
   கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
   வங்கண் உலகுஅளித்த லான்.

  திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்-யாம் திங்களைப் போற்றுவேம்; திங்களைப் போற்றுவேம்; கொங்கு அலர் தார்ச்சென்னி குளிர் வெண்குடை போன்று-தாது பரந்த மாலையையுடைய சோழனது குளிர்ச்சியையுடைய வெண்குடை போன்று, இ-இந்த, அம்கண் உலகு-அழகிய இடத்தையுடைய உலகிற்கு, அளித்தலால்-பொதுவற அளி செய்தலால்.

  அடுக்கு, சிறப்பின்கண் வந்தது; மேல்வரும் மூன்றடுக்குகளும் அன்ன. இது

  [1]“விரவியும் வரூஉ மரபின வென்ப”

  என்பதனால், பண்பும் பயனும் விரவிவந்த உவமம். உலகை அளித்தலான் என விரித்தலுமாம். இது பாடாண்டிணைக்கண். [2]“நடைமிகுத்தேத்திய குடைநிழன் மரபு” என்னுந் துறையாகும். ‘இத்தொடர் நிலைச் செய்யுட்குச் சிறந்த மங்கல மொழியாகலின் திங்களை முற்கூறினார்’ என்பர் அடியார்க்கு நல்லார். மங்கல வாழ்த்து என்பதற்கு இரட்டுற மொழிதலால் நூன்முகத்துரைக்கப்படும் மங்கலமாகிய வாழ்த்து என்றலும் பொருந்தும். [3]“முந்நீர் தாப்பண்” என்னும் புறப்பாட்டில், ‘உவவு மதி கண்டு விறலியும் யானும் வளவன் வெண்குடையை யொக்குமெனத் தொழுதனம்’ என்பதன் கருத்து இதனுடன் ஒத்திருப்பது காண்க.
  ------------

   ௪- ௬. ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
   காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
   மேரு வலம்திரி தலான்.

  ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்-யாம் ஞாயிற்றைப் போற்றுவேம் ; ஞாயிற்றைப் போற்றுவேம் ; காவிரிநாடன் திகிரிபோல்-பொன்னி நாட்டையுடைய சோழனது ஆழி போல், பொற்கோட்டு மேருவலம் திரிதலான்-பொன்னாலாய கொடுமுடியையுடைய மேருவை வலமாகத் திரிதருலால்.

  திகிரி-ஆக்கினாசக்கரம். பொன்-பொலிவுமாம். இது தொழில் பற்றிய உவமம். நச்சினார்க்கினியர் புறத்திணையியலுரையில். ‘குடைநிழல் மரபு’ என்புழி ‘மரபு என்றதனாற் செங்கோலும் திகிரியும் போல்வனவற்றைப் புனைந்துரையாக்கலுங் கொள்க’ என்று உரைகூறி, திகிரியைப் புனைந்துரைத்தற்கு இதனையே எடுத்துக் காட்டியுள்ளார்.
  ---------------

   எ-௯. மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
   நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
   மேநின்று தாஞ்சுரத்த லான்.

  மா மழை போற்றுதும் மா மழை போற்றுதும்-யாம் பெரிய மழையைப் போற்றுவேம் ; பெரிய மழையைப் போற்றுவேம் ; நாம நீர் வேலி உலகிற்கு – அச்சத்தைத் தருகின்ற கடல்சூழ் உலகிற்கு, அவன் அளிபோல்-அவன் அளி செய்யுமாறு போல, மேல் நின்று தான் சுரத்தலான்-மேலாகி நின்று தன் பெயலால் வளஞ்சுரத்தலால்.

  நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது. வேலி-சூழ்தல். அளி-ஈகை. தான் : அசை. மேலே பெயர் கூறினமையின் அவன் எனச் சுட்டி யொழித்தார்.
  --------------

   க0-௧௨. பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்
   வீங்குநீர் வேலி உலகிற்கு அவன்குலத்தொடு
   ஓங்கிப் பரந்துஒழுக லான்.

  பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்-யாம் அழகிய புகாரினைப் போற்றுவேம் ; அழகிய புகாரினைப் போற்றுவேம்; வீங்கு நீர் வேலி உலகிற்கு-கடலை வேலியாகவுடைய உலகின்கண், அவன் குலத்தோடு ஓங்கிப் பரந்து ஒழுகலான்-தொன்றுதொட்டு அவன் குலத்தோடு பொருந்தி உயர்ந்து பரந்து நடத்தலால்,

  பூ – அழகு, பொலிவு. பூம்புகார் : மெலித்தல் விகாரம். வீங்கு நீர் - மிக்க நீர் ; ஆவது கடல். அவன் குலத்தினைப் புகழ்வார் இதனையும் புகழ்வரென்பது கொள்க.

  {அடி. இறப்பப் புனைந்துரைத்தற்குக் குடை நிழன் மரபு என்றதனால் திகிரியும் கொடையும் உயர்ச்சியும் புனைந்து கூறியவாறாயிற்று.}

  { அரும். இவை நான்கு சிந்தியல் வெண்பாவும் செம்பியனையும் புகாரினையும் சிறப்பித்தன.}
  ----------------

   ௩-௯. ஆங்கு,
   பொதியில் ஆயினும் இமயம் ஆயினும்
   பதிஎழு அறியாப் பழங்குடி கெழீஇய
   பொதுஅறு சிறப்பின் புகாரே ஆயினும்
   நடுக்கின்றி நிலைஇய என்பது அல்லதை
   ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின்
   முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே.

  ஆங்கு-ஆதலால், பொதியில் ஆயினும்-பொதியிலும், இமயம் ஆயினும் – இமயமும், பதி எழு அறியாப் பழங்குடி கெழீஇய பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும் – பதியினின்றும் பெயர்தலையறியாத பழைய குடிகள் பொருந்தின பொதுமை நீங்கிய சிறப்பினையுடைய புகாரும், நடுக்கின்றி நிலைஇய என்பது அல்லதை-ஆதியிற்றோன்றிச் சலிப்பின்றி நிலைபெற்றன வென்று கூறினல்லது, ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின்-அவற்றின்கண் உயர்ந்தோர் இருத்தலான் அவற்றிற்கு முடிபுண்டென்று கூறார், முடித்த கேள்வி முழுது உணர்ந்தோரே-முற்றிய கேள்வியால் அனைத்தும் உணர்ந்த பெரியோர்.

  அவை அத்தன்மைய வாதலானும், உயர்ந்தோருண்மையானும் முழு துணர்ந்தோர் ஒடுக்கம் கூறார் என்க. ஆயினும் என்பது ஓர் எண்ணிடைச்சொல் ;

  [4]“கிளந்த வல்ல வேறுபிற தோன்றினும்
  கிளந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே” )

  என்னும் புறனடையாற் கொள்ளப்படும். பதியெழு வறியாமைக்குக் காரணம் செல்வ மிகுதியும் பகையின்மையும் ஆம். பொது வறு சிறப்பு-தனக்கே யுரிய சிறப்பு. நிலீஇயர் என்று பாடங்கொண்டு, நிற்பதாக வென்றுரைப்பர் அரும்பதவுரை யாசிரியர். முடித்த கேள்வி-புலத்துறை முற்றிய கேள்வி ; கரை கண்ட கேள்வி.

  {அடி. உயர்ந்தோர்-முனிவனும், இறைவனும், அரசனும் : இனி உயர்ந்தோர்-அகத்தியனும், இருடிகளும் பழங்குடியினுள்ளாரும் என்றுமாம்; என்றது இமயத்தோடும் பொதியிலோடுமுள்ள இருடிகளையும் புகாரிலுள்ள வணிகரையும் உவமித்தவாறாம்.}
  ------------

   ௨0. அதனால்,

  அதனால்-அங்ஙனம் நிலைபேறுடையதாதலால்,
  -----------

   ௨௧-உஉ. நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு
   போகம்நீள் புகழ்மன்னும் புகார்நகர் அதுதன்னில்

  நாக நீள் நகரொடு நாக நாடு அதனொடு-நெடிய சுவர்க்கத்துடனும் நாகருலகத்துடனும் பொருந்திய, போக நீள் புகழ் மன்னும் புகார் நகர் அது தன்னில்-நீண்ட புகழும் போகமும் நிலை பெற்ற புகார் என்னும் அந்நகரின்கண்,

  அவற்றொடும் ஒக்க மன்னும் புகார் எனலுமாம் : எதிர்நிரனிறை.
  --------------

   ௨௩-௪. மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்
   ஈகைவான் கொடியன்னாள் ஈராறுஆண்டு அகவையாள்,

  மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குலக்கொம்பர் ஈகை வான் கொடி அன்னாள்-விசும்பிடத்து மழையை நிகர்த்த வண்ணம் பொருந்திய கையையுடைய மாநாய்கனது குலத்திற்றோன்றிய பூங்கொம்பும் மேலான பொற்கொடியும் போல்வாள், ஈராறு ஆண்டு அகவையாள்-பன்னீராண்டிற்கு உட்பட்ட பிராயத்தினளாயினள்,

  மாநாய்கன்-சிறப்புப்பெயர் போலும். ஈகை-பொன். மேல் ‘பொன்னங் கொடிபோலப் போதந்தாள்’ என்பது காண்க. வான் கொடி-வான வல்லியுமாம். அகவை – உட்பட்டது.
  ---------

   ௨௫. அவளுந்தான்,

  அவளும் தான் – அவள் தான்

  உம்மை : இசை நிறை. தான் - கட்டுரைச் சுவைபட நின்றது.

  போதில்ஆர் திருவினாள் புகழுடை வடிவென்றும்
  தீதிலா வடமீனின் திறம்இவள் திறம்என்றும்
  மாதரார் தொழுதுஏத்த வயங்கிய பெருங்குணத்துக்
  காதலாள் பெயர்மன்னும் கண்ணகிஎன் பாள்மன்னோ,
  ------------

  ௨௬-௯. போதில் ஆர் திருவினாள் புகழுடை வடிவு என்றும்-தாமரைப் பூவிற் பொருந்திய திருமகளின் புகழுடைய வடிவு இவள் வடிவை யொக்குமென்றும், தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்-குற்றமிலலாத அருந்ததியின் கற்பு இவள் கற்பை யொக்குமென்றும், மாதரார் தொழுது ஏத்த-உலகின் மாதரார் தன்னைத் தொழுது ஏத்தும்படி, வயங்கிய பெருங் குணத்துக் காதலாள்-விளங்கிய பெருங்குணங்களைக் காதலிப்பாள், பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ-அவள் கண்ணகி யென்று பெயர் கூறப்படுவாள்.

  திருவினாள் , ஒரு சொல், இவள் வடிவு என்று வருவித்துரைக்க. தீது – பிறர்நெஞ்சு புகுதல் ;

  [5]“ மண்டிணி ஞாலத்து மழைவளந் தரூஉம்
  பெண்டி ராயிற் பிறர்நெஞ்சு புகாஅர்”

  என்பது காண்க.

  திறம்-கற்பு. பெருங் குணத்தாற் காதலிக்கப்படுபவள் என்றுமாம். மன்னும் , மன், ஓ என்பன அசைநிலை இடைச்சொற்கள்.
  -----------

   ௩0- ௪. ஆங்கு,
   பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த
   ஒருதனிக் குடிகளொடு உயர்ந்தோங்கு செல்வத்தான்
   வருநிதி பிறர்க்குஆர்த்தும் மாசாத்து வான்என்பான்
   இருநிதிக் கிழவன்மகன் ஈரெட்டுஆண்டு அகவையான்

  ஆங்கு-அப்புகாரினிடத்து, பெருநிலம் முழுதும் ஆளும் பெருமகன் தலைவைத்த-நெடுநிலம் முழுவதையும் தனியே ஆளும் சோழ மன்னனை முதற்குடியாக வைத்து எண்ணுதலையுடைய, ஒரு தனிக் குடிகளோடு-ஒப்பற்ற குடிகளாகிய தன் கிளையோடு கூடி, உயர்ந்து ஓங்கு செல்வத்தான் – மிக்கோங்கிய செல்வத்தையுடையான், வருநிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான்-அறநெறியால் வந்த பொருளை வறியராய பிறர்க்கு உண்பிக்கும் மாசாத்துவான் என்று பெயர் கூறப்படுவான்; இருநிதிக் கிழவன் மகன் ஈரெட்டு ஆண்டு அகவையான்-அவ்விருநிதிக் கிழவனுடைய மகன் பதினாறாண்டுக்கு உட்பட்ட பிராயத்தானாயினன்,

  பெருமகன்-கரிகால னென்பர் அடியார்க்கு நல்லார்; அங்ஙனந் துணிதல் சாலாதென்பது பின்னர் விளக்கப்படும், ஒப்பின்மையின் மிகுதி கூறுவார் ஒரு தனிக்குடிகள் என்றார். உயர்ந்தோங்கு : ஒரு பொருளிரு சொல். வருநிதி- கலத்தினுங் காலினும் வருநிதி யென்றுமாம். பலர்க்கும் என்னும் பாடத்திற்கு இல்லார் பலர்க்கும் என்றுரைக்க. ஆர்த்தும்-நிறைவிக்கும் என்றுமாம். மாசாத்துவான் - இயற்பெயர். இருநிதிக் கிழவன்-சிறப்புப்பெயர். மாசாத்துவான் குடிப்பெயர் என்பர் அரும்பதவுரை யாசிரியர். இருநிதி-பெரிய நிதி : சங்கநிதி, பதுமநிதி யிரண்டும் என்றுமாம். தலைவன் பதினையாண்டும் பத்துத் திங்களும் புக்கவனும், தலைவி பதினோராண்டும் பத்துத் திங்களும் புக்கவளும் ஆதல் வேண்டும் என்பராகலின், அகவையான், அகவையாள் என்றார். இதனை,

  [6]“களவினுள் தவிர்ச்சி வரைவின் நீட்டம்
  திங்க ளிரண்டின் அகமென மொழிப”
  என்னுங் களவியற் சூத்திர உரையானறிக.
  -------------

   ௩௫. அவனுந்தான்,
   அவனும்தான்-அவன்றான்,

  ஈண்டும் ‘அவளுந்தான்’ என்புழி உரைத்தாங் குரைக்க.
  -------------

   ௩-௩௯. மண்தேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம்
   பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
   கண்டுஏத்தும் செவ்வேள்என்று இசைபோக்கிக் காதலால்
   கொண்டுஏத்தும் கிழமையான் கோவலன்என் பான்மன்னோ.

  மண் தேய்த்த புகழினான்-பூமி சிறுகும்படி வளர்ந்த புகழையுடையான்; மதிமுக மடவார்தம் பண்தேய்ந்த மொழியினார் ஆயத்து-பண்ணை வென்ற மொழியாராகிய மதிபோலும் முகத்தையுடைய மடவார் தமது ஆயத்தின்கண், பாராட்டிக் கண்டு ஏத்தும் செவ்வேள் என்று இசைபோக்கி-உலகிலே கண்டு ஏத்தப்படும் செவ்வேள் என்று பாராட்டி அவன் இசையைப் பரப்பி, காதலால் கொண்டு ஏத்தும் கிழமையான்-காமக்குறிப்பின் உட்கொண்டு ஏத்துதற் குரியான் ; கோவலன் என்பான் மன்னோ-அவன் கோவலனென்று பெயர் கூறப்படுவான்,

  மொழியினராகிய மடவார் தம் ஆயத்துச் செவ்வேள் என்று பாராட்டி எனக்கொண்டு கூட்டுக. கண்டேத்தும் என்றது வேற்றுமை. செவ்வேளைக் கூறினமையின் கோவலனும் நிறஞ் செய்யனாதல் வேண்டும். போக்கி என்னும் எச்சத்தைத் திரித்து. மடவார் இசை பரப்ப அதுகண்ட ஏனோரும் காதன்மையாற் கொண்டு ஏத்தப்படும் கிழமையான் எனலுமாம். கிழமையான்-கொடை, வீரம், அழகு என்றிவற்றிற்குரியான். மொழியினால் என்பது பாடமாயின் மடவார் மொழியினாற் பாராட்டி யென்க. பத்தினியை ஏத்துதல் கருத்தாகலானும், கதைக்கு நாயகியாகலானும் கண்ணகியை முற்கூறினார் என்க.

  {அடி. இனி மடவார் என்பதற்குப் பூமாதும், கலைமாதும், சயமாதும், புகழ்மாதும், புவிமாதும் என்றுகூறி, இவர், அழகிற்கும் அறிவிற்கும் ஆண்மைக்கும் புகழுக்கும் பொறைக்கும் இவனென் றுட்கொண்டு ஏத்துங் கிழமையான் எனினும் அமையும்.}
  ------------

   ௪0-உ. அவரை,
   இருபெருங் குரவரும் ஒருபெரு நாளால்
   மணஅணி காண மகிழ்ந்தனர், மகிழ்ந்துழி

  அவரை-அத்தன்மையார் இருவரையும், இரு பெருங்குரவரும்-பெருமையுடைய இருவர் குரவர்களும், ஒரு பெரு நாளால்-ஒரு பெருநாளிலே, மண அணிகாண மகிழ்ந்தனர்-மணக்கோலங்காண விரும்பினர்; மகிழ்ந்துழி-விரும்பியவளவிலே,

  குரவர்-தந்தையும் தாயும். மணவணி காண என்பது ஒரு சொல்லாய் அவரை யென்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. நாளால்-நாளில் ; வேற்றுமை மயக்கம். மகிழ்தல்-விரும்புதல். உழி-அளவு

  யானை எருத்தத்து அணிஇழையார் மேல்இரீஇ
  மாநகர்க்கு ஈந்தார் மணம்.
  ----------

   ௪௩- ௪யானை எருத்தத்து அணியிழையார் மேல் இரீஇ மாநகர்க்கு ஈந்தார் மணம்-அவர் யானையின் எருத்தத்தின் மேல் மங்கல மகளிரை இருத்தி அம்மாநகர்க்கு இவர் மணமென்னும் மகிழ்ச்சியை ஈந்தார்,

  எருத்தம்-புறக்கழுத்து. ஈந்தார்-அறிவித்தாரென்றபடி; சில மகளிரை அணிந்து யானையேற்றி அறிவித்தல் மரபென்க.
  -----------

   ௪௫-எ. அவ்வழி,

  முரசுஇயம்பின,முருடுஅதிர்ந்தன, முறைஎழுந்தன பணிலம்,வெண்குடை அரசுஎழுந்ததொர் படிஎழுந்தன, அகலுள்மங்கல அணிஎழுந்தது.

  அவ்வழி-அவ்விடத்து, முரசு இயம்பின - முரசு முதலியன இயம்பின ; முருடு அதிர்ந்தன-மத்தளம் முதலியன அதிர்ந்தன ; முறை எழுந்தன பணிலம்– சங்கம் முதலியன முறையே முழங்குதலெழுந்தன, வெண்குடை அரசு எழுந்ததொர் படி எழுந்தன-வெண்குடைகள் அரசன் உலா வெழுந்தபடியாக எழுந்தன , அகலுள் மங்கல அணி எழுந்தது-ஊரிலே மங்கல நாண் வலஞ் செய்தது.

  முருடு-பத்தலுமாம். ஓர், விகாரம். அகலுள்-தெருவுமாம். எழுந்தது-எழுந்து வலஞ் செய்ததென்றபடி. ‘மங்கலவணி எங்கும் எழுந்தது’ என்ற அடியார்க்கு நல்லார் கருத்து விளங்குமாறின்று.
  -------------

   ௪அ-௪௯. மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து
   நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்

  மாலை தாழ் சென்னி வயிரமணித் தூணகத்து-மாலைகள் பொருந்திய சென்னியையுடைய வயிரமணித் தூண்களையுடைய மண்டபத்தில், நீலவிதானத்து நித்திலப் பூம்பந்தர்க்கீழ்- நீலப்பட்டினாலாகிய மேற்கட்டியின்கீழ் அமைத்த அழகிய முத்துப் பந்தரிடத்தே,

  தாழ்தல்-தங்குதல் தொங்குதலுமாம். தூண்-மண்டபத்திற்கு ஆகுபெயர். அத்து சாரியை. பூ-பொலிவு. முத்து ஒளி பெறுதல் நோக்கி நீல விதானங் கூறினார். அக்காலத்து முத்து நோக்குவார் ஒப்புக்கு நீலப்பட்டினை விரித்து நோக்குவர் என்ப.
  -------------

   ரு0-௩. வான்ஊர் மதியம் சகடுஅணைய வானத்துச்
   சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன்
   மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
   தீவலம் செய்வது காண்பார்க்கண் நோன்புஎன்னை.

  வான் ஊர் மதியம் சகடு அணைய-வானின்கட் செல்லும் திங்கள் உரோகிணியைச் சேர்ந்த நாளிலே,வானத்துச் சாலி ஒரு மீன் தகையாளை-வானிலுள்ள ஒரு மீனாகிய அருந்ததி போலும் கற்புடையாளை, கோவலன் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட-பிதாமகன் மறைநெறியிற் சடங்கு காட்டக் கோவலன் கலியாணஞ்செய்ய, தீவலம் செய்வது-அவ்விருவரும் தீயை வலஞ்செய்யு மிதனை, காண்பார் கண்நோன்பு என்னை-காண்கின்றவர் கண்கள் முன்பு செய்த தவம் யாதுகாண் என்பாராய்,

  சகடு-உரோகிணி ; பண்டைத் தமிழ்மக்கள் உரோகிணியைத் திருமணத்திற்குச் சிறந்த நாளாகக் கொண்டிருந்தனர் ; உரோகிணியைக் கூடின நாளில் சந்திரன் உச்சனாகலின் எவ்வகைத் தீங்கும் நீங்குமென்னும் கருத்தினர் போலும் :

  [7]“அங்க ணிருவிசும்பு விளங்கத் திங்கட்
  சகட மண்டிய துகடீர் கூட்டத்துக்
  கடிநகர் புனைந்து கடவுட் பேணிப்
  படுமண முழவொடு பரூஉப்பணை யிமிழ
  வதுவை மண்ணிய”

  என்பதுங் காண்க. கலியாணஞ் செய்ய எனவும், அவர் எனவும் சொற்கள் விரித்துரைக்க. மாமுது பார்ப்பான் – பிரமன்; ஈண்டு இருவரையும் இடைநின்று பொருத்துவிக்கும் பார்ப்பானாவன்;

  [8]“பாங்க னிமித்தம் பன்னிரண் டென்ப”

  என்னுஞ் சூத்திரவுரையில், ‘எண் வகை மணத்தினும் இடைநின்று புணர்க்கும் பார்ப்பான் இருவகைக் கோத்திர முதலியனவும் தானறிந்து இடைநின்று புணர்த்தல் வன்மை அவர் புணர்தற்கு நிமித்தமாதலின், அவை அவன் கண்ண வெனப்படும். இவனைப் பிரசாபதி யென்ப,’ என நச்சினார்க்கினியர் கூறினமை காண்க. பிரசாபதி-பிரமன். காண்பார்கள் நோன்பு எனப் பிரித்துரைத்தலுமாம். இதனைப் பிரசாபத்தியம் என்பர் அடியார்க்கு நல்லார். அது தமிழில் ஒப்பு என்று கூறப்படும்; ஒப்பாவது மைத்துனக் கோத்திரத்தான் மகள் வேண்டிச் சென்றால் மறாது கொடுப்பது என்பர்.
  ---------------

   ரு௪- ௯. விரையினர் மலரினர் விளங்கு மேனியர்
   உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்
   சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
   ஏந்துஇள முலையினர் இடித்த சுண்ணத்தர்
   விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகை
   முளைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர்

  விரையினர் மலரினர் விளங்கு மேனியர் உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்-விளங்குகின்ற மேனியையுடைய மகளிர் விரையினராயும் மலரினராயும் உரையினராயும் பாட்டினராயும் ஒதுங்கிப் பார்க்கும் பார்வையினராயும், சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர் ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர்-அண்ணாந்துயர்ந்த இளைய முலையினையுடைய மகளிர் சாந்தினராயும் புகையினராயும் விளங்குகின்ற மாலையினராயும் இடிக்கப் பெற்ற சுண்ணத்தினராயும், விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகை முளைக்குடம் நிரையினர் முகிழ்த்த மூரலர்-அரும்பிய புன்முறுவலையுடைய மகளிர் விளக்கினராயும் கலத்தினராயும் விரிந்த முளைப்பாலிகையினராயும் நிறை குடத்தினராயும் வந்து திரண்டனர்;

  விரை-கோட்டம் முதலாயின. உரை-பாராட்டுரை. புகை-அகில் முதலியவற்றானாய நறும்புகை. சுண்ணம்-பூசுகின்ற பொற்பொடி கலம்-அணிகலன். குடம்-நிறைகுடம். நிரையினர்-கூடினர். மேனியரும் முலையினரும் மூரலருமாகிய மகளிர் விரை முதலியனவுடையராய் வந்து கூடினரென்க: விரையினர் மலரினராகிய விளங்கு மேனியர் என்றிங்ஙனம் கூட்டி, இக்கொடியன்னார் என முடிப்பர் அரும்பதவுரையாசிரியர்.
  --------------

   ௬0. போதொடு விரிகூந்தல் பொலன்நறுங் கொடிஅன்னார்

  விரிகூந்தல் பொலன் நறுங்கொடி அன்னார்-அப்பொழுது மலரணிந்த தழைத்த கூந்தலையுடைய அழகிய பொற்கொடி போலும் மடந்தையர்.
  -----------

   ௬௧-உ. காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
   தீதுஅறுக எனஏத்திச் சின்மலர் கொடுதூவி

  காதலற் பிரியாமல்-இவள் தன் காதலனைக் கண்ணினும் மணத்தினும் பிரியாதிருக்க, கவவுக்கை ஞெகிழாமல்-இவள் காதலனும் இவளை அகத்திட்ட கை நெகிழாருக்க. தீது அறுக என ஏத்தி-இருவரும் தம் கூட்டத்திற்கு இடையூறின்றி நெடிது வாழ்வாராக என வாழ்த்தி, சின்மலர்கொடு தூவி-சிலமலரைத் தூவி.

  கவவு-அகத்தீடு, உரிச்சொல். ஏத்தி என்பதற்குத் தம் வழிபடு தெய்வத்தை நினைந்து துதித்து என்னலுமாம். மலர்கொடு-மலரை.
  --------------

   ௬௩-அ. அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
   மங்கல நல்அமளி ஏற்றினார், தங்கிய
   இப்பால் இமயத்து இருத்திய வாள்வேங்கை
   உப்பாலைப் பொன்கோட்டு உழையதா எப்பாலும்
   செருமிகு சினவேல் செம்பியன்
   ஒருதனி ஆழி உருட்டுவோன் எனவே

  அங்கண் உலகில் அருந்ததி அன்னாளை-அழகிய இடத்தையுடைய புவியின் அருந்ததி போல்வாளை, மங்கலநல் அமளி ஏற்றினார் தங்கிய-பொருந்திய நல்ல மங்கல அமளியிடத்தே ஏற்றினார்; இப்பால் இமயத்து இருத்திய வாள்வேங்கை-இவ்விடத்து நின்றும் இமயத்தில் இருத்திய புலியானது, உப்பாலைப் பொற்கோட்டு உழையதா-அதனது உப்பாலிடத்தாயே நிற்பதாக; எப்பாலும் செருமிகு சினவேற் செம்பியன் ஒரு தனி ஆழி உருட்டுவோன் எனவே-எப்பக்கத்தும் தன் போர் மேம்பட்ட சினம் பொருந்திய வேலையுடைய வளவன்-மாறில்லாத தன் திகிரியை உருட்டுவோனாக எனச் சொல்லி யென்க.

  உலகினருந்ததி: இல்பொருளுவமம். அமளி-பள்ளி, படுக்கை. வேங்கை-புலிக்கொடி. வாள்-கொடுமை; புலிக்கு அடை. பொற்கோடு-பொன்மலை; இமயம்: ஈண்டுச் சுட்டுமாத்திரை. சினவேல்-இலக்கணை வழக்கு. உருட்டுவோனாக என விரிக்க. கொடியன்னார் ஏத்தித் தூவி, வேங்கை உழையதாகச் செம்பியன் உருட்டுவோனாக எனச் சொல்லி அருந்ததியன்னாளை அமளியேற்றினார் என்க.

  இச்செய்யுள் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா.

  மங்கலவாழ்த்துப் பாடல் முற்றிற்று
  -----------------------

  [1] . தொல். பொருள். சூ: ௨௭௭.

  [2] தொல். பொருள். சூ: ௬௧

  [3] . புறம். ௬0.

  [4] தொல். இடைச்சொல்லியல்.

  [5] . மணி. உ௨: ௪௫-௬.

  [6] . இறை. அகப்.சூ-௩௨.

  [7] . அகம்: ௧௩௬.

  [8] . தொல். பொருள்: ௧0௪.
  -----------------  2. மனையறம்படுத்த காதை


  (அரிய தவத்தினைச் செய்தோர் அதன்பயனாய இன்பத்தை நுகர்தற்கு உத்தரகுருவில் தோன்றுவது போலப் புகார் நகரிலே கொழுங்குடிச் செல்வர்க்குத் தோன்றிய கண்ணகியும் கோவலனும் எழுநிலை மாடத்தின் இடைநிலத்தில் இருந்தபொழுது பலவகைப் பூக்களின் மணத்துடன் கூடித் தென்றல் வந்துற, இருவரும் மகிழ்ச்சிக்கு நிலா முற்றத்தை அடைந்தனர். இருவருடைய தாரும் மாலையும் ஒன்றோடொன்று மயங்கின. கோவலன் தீராக்காதலுடன் கண்ணகியின் முகத்தை நோக்கி, அவளுடைய நுதல், புருவம், கண், இடை, நடை சொல் முதலியவற்றைப் பொருந்திய உவமைகளாற் புனைந்துரைத்து, மற்றும் மாசறு பொன்னே! வலம்புரிமுத்தே! காசறுவிரையே! கரும்பே! தேனே! அரும்பெறற் பாவாய்! ஆருயிர் மருந்தே! "நின்னை", மலையிடைப் பிறவா மணியே யென்கோ! அலையிடைப் பிறவா அமிழ்தே யென்கோ! யாழிடைப் பிறவா இசையே யென்கோ! என்று பலபடப் பாராட்டி, அவளுடன் களிப்புற்று ஒழுகுங்கால், கண்ணகி விருந்து புறந்தருதல் முதலிய இல்லற வாழ்க்கையில் மேம்படுதலைக் காண விரும்பிய கோவலன் தாய் பலவகைச் செல்வங்களோடும், உரிமைச் சுற்றமோடும், அவர்களைத் தனியே இருக்கச் செய்ய வியத்தகு சிறப்புடன் இல்லறம் நடாத்துவதிற் கண்ணகிக்குச் சில யாண்டுகள் கழிந்தன.)

  (நிலைமண்டில ஆசிரியப்பா)

   உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்
   பரதர் மலிந்த பயம்கெழு மாநகர்
   முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும்
   வழங்கத் தவாஅ வளத்தது ஆகி
   அரும்பொருள் தருஉம் விருந்தின் தேஎம் 5
   ஒருங்குதொக் கன்ன உடைப்பெரும் பண்டம்
   கலத்தினும் காலினும் தருவனர் ஈட்டக்
   குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்
   அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர்
   உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய 10

   கயமலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்
   மயன்விதித் தன்ன மணிக்கால் அமளிமிசை
   நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்துழிக்
   கழுநீர் ஆம்பல் முழுநெறிக் குவளை
   அரும்புபொதி அவிழ்ந்த சுரும்புஇமிர் தாமரை 15

   வயற்பூ வாசம் அளைஇ அயற்பூ
   மேதகு தாழை விரியல்வெண் தோட்டுக்
   கோதை மாதவி சண்பகப் பொதும்பர்த்
   தாதுதேர்ந்து உண்டு மாதர்வாள் முகத்துப்
   புரிகுழல் அளகத்துப் புகல்ஏக் கற்றுத் 20

   திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து
   மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த
   கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து
   வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்
   கண்டு மகிழ்வுஎய்திக் காதலில் சிறந்து, 25

   விரைமலர் வாளியொடு வேனில்வீற் றிருக்கும்
   நிரைநிலை மாடத்து அரமியம் ஏறி,
   சுரும்புஉணக் கிடந்த நறும்பூஞ் சேக்கைக்
   கரும்பும் வல்லியும் பெருந்தோள் எழுதி
   முதிர்க்கடல் ஞாலம் முழுவதும் விளக்கும் 30

   கதிர்ஒருங் கிருந்த காட்சி போல,
   வண்டுவாய் திறப்ப நெடுநிலா விரிந்த
   வெண்தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
   கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழத்
   தாரும் மாலையும் மயங்கிக் கையற்றுத் 35

   தீராக் காதலின் திருமுகம் நோக்கிக்
   கோவலன் கூறும்ஓர் குறியாக் கட்டுரை
   குழவித் திங்கள் இமையவர் ஏத்த
   அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்
   உரிதின் நின்னோடு உடன்பிறப்பு உண்மையின் 40

   பெரியோன் தருக திருநுதல் ஆகஎன,
   அடையார் முனையகத்து அமர்மேம் படுநர்க்குப்
   படைவழங் குவதுஓர் பண்புண்டு ஆகலின்
   உருவி லாளன் ஒருபெருங் கருப்புவில்
   இருகரும் புருவ மாக ஈக்க, 45

   மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்
   தேவர் கோமான் தெய்வக் காவல்
   படைநினக்கு அளிக்கஅதன் இடைநினக்கு இடையென,
   அறுமுக ஒருவன்ஓர் பெறுமுறை இன்றியும்
   இறுமுறை காணும் இயல்பினின் அன்றே 50

   அம்சுடர் நெடுவேல் ஒன்றுநின் முகத்துச்
   செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது?
   மாஇரும் பீலி மணிநிற மஞ்ஞைநின்
   சாயற்கு இடைந்து தண்கான் அடையவும்,
   அன்னம் நல்நுதல் மெல்நடைக்கு அழிந்து 55

   நல்நீர்ப் பண்ணை நனிமலர்ச் செறியவும்,
   அளிய தாமே சிறுபசுங் கிளியே.
   குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தநின்
   மழலைக் கிளவிக்கு வருந்தின வாகியும்
   மடநடை மாதுநின் மலர்க்கையின் நீங்காது 60

   உடன்உறைவு மரீஇ ஒருவா ஆயின,
   நறுமலர்க் கோதை.நின் நலம்பா ராட்டுநர்
   மறுஇல் மங்கல அணியே அன்றியும்
   பிறிதுஅணி அணியப் பெற்றதை எவன்கொல்?
   பல்இருங் கூந்தல் சின்மலர் அன்றியும் 65

   எல்அவிழ் மாலையொடு என்உற் றனர்கொல்?
   நானம் நல்அகில் நறும்புகை அன்றியும்
   மான்மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்?
   திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும்
   ஒருகாழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்? 70

   திங்கள்முத்து அரும்பவும் சிறுகுஇடை வருந்தவும்
   இங்குஇவை அணிந்தனர் என்உற் றனர்க்கொல்?
   மாசறு பொன்னே. வலம்புரி முத்தே.
   காசறு விரையே. கரும்பே. தேனே.
   அரும்பெறல் பாவாய். ஆர்உயிர் மருந்தே. 75

   பெருங்குடி வாணிகன் பெருமட மகளே.
   மலையிடைப் பிறவா மணியே என்கோ?
   அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
   யாழிடைப் பிறவா இசையே என்கோ?
   தாழ்இருங் கூந்தல் தையால் நின்னைஎன்று 80

   உலவாக் கட்டுரை பலபா ராட்டித்
   தயங்குஇணர்க் கோதை தன்னொடு தருக்கி
   மயங்குஇணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள்,
   வாரொலி கூந்தலைப் பேர்இயல் கிழத்தி
   மறுப்புஅருங் கேண்மையொடு அறப்பரி சாரமும் 85

   விருந்து புறந்தருஉம் பெருந்தண் வாழ்க்கையும்
   வேறுபடு திருவின் வீறுபெறக் காண
   உரிமைச் சுற்றமொடு ஒருதனி புணர்க்க
   யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையின்
   காண்தகு சிறப்பின் கண்ணகி தனக்குஎன்.
   (வெண்பா) 90
   தூமப் பணிகள்ஒன்றித் தோய்ந்தால் எனஒருவார்
   காமர் மனைவியெனக் கைகலந்து - நாமம்
   தொலையாத இன்பம்எலாம் துன்னினார் மண்மேல்
   நிலையாமை கண்டவர்ப்போல் நின்று.
   ----------------------  நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை


   ௧-௭. உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்
   பரதர் மலிந்த பயம்கெழு மாநகர்
   முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும்
   வழங்கத் தவாஅ வளத்தது ஆகி
   அரும்பொருள் தருஉம் விருந்தின் தேஎம்
   ஒருங்குதொக் கன்ன உடைப்பெரும் பண்டம்
   கலத்தினும் காலினும் தருவனர் ஈட்டக்

  கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட-கலத்தானும் காலானும் தந்து ஈட்டுதலால், அரும்பொருள் தரூஉம் விருந்தின் தேஎம் ஒருங்கு தொக்கன்ன உடைப்பெரும் பண்டம்-பெறுதற்கரிய பொருளைத்தரும் புதுமையுடைய பண்டங்கள், முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும்-ஆர்கலிசூழ்ந்த ஞாலமுழுதும் ஒரு சேர வரினும், வழங்கத் தவாஅ வளத்தது ஆகி-வழங்கத் தொலையாத வளத்தினையுடையதாகி, உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின் பரதர் மலிந்த பயம் கெழு மாநகர்-புகழமைந்த சிறப்பினையுடைய அரசரும் விரும்பும் செல்வத்தையுடைய பரதர் மிக்க பயன் பொருந்திய பெரிய புகார் நகரின்கண்,
  பரதர் – வணிகர்: கடலோடிகள் என்பது அரும்பதவுரை; பரதரால் மேன்மையுற்ற என்றுமாம். ஞாலம் : ஆகுபெயர். தேஎம்-தேயம். புகாரின்கண் பிறநாட்டு அரும்பொருள்கள் வந்து தொகுதலை,

   "நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
   காலின் வந்த கருங்கறி மூடையும்
   வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
   குடமலைப் பிறந்த ஆரமு மகிலும்
   தென்கடன் முத்துங் குணகடற் றுகிரும்
   கங்கை வாரியுங் காவிரிப் பயனும்
   ஈழத் துணவுங் காழகத் தாக்கமும்
   அரியவும் பெரியவும் நெளிய வீண்டி"

  என்பதனானறிக. கலம்-மரக்கலம். கால்-வட்டை; சாகாடு. தருவனர், எச்சமுற்று. ஈட்டுதலால் தொக்கன்ன பண்டம் வழங்கத்தவா வளத்ததாகி அரைசு விழை திருவினையுடைய பரதர் மலிந்த நகர் என்க.
  -------------

   ௮-௧௧. குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்
   அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர்
   உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய
   கயமலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்

  குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்-குலவொழுக்கத்திற் குன்றாத நற்குடியினராகிய செல்வர்கட்கு, அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர் உத்தர குருவின் ஒப்பத்தோன்றிய –அங்ஙனம் அறத்தின் ஈட்டிய பொருளாலே தலைப்படு தானத்தைச் செய்தோர் எய்தும் உத்தரகுருவை அந்நகர் ஒக்கும்படி தோன்றிய, கயமலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்-பெரிய மலர்போலும் கண்ணினையுடையாளும் கொழுநனும்-பெரிய மலர்போலும் கண்ணினையுடையாளும் அவளாற் காதலிக்கப்படும் கொழுநனும்,
  குலவொழுக்கமாவன : "நெடுநுகத்துப் பகல்போல, நடுவு நின்ற நன்னெஞ்சினோர், வடுவஞ்சி வாய்மொழிந்து, தமவும் பிறவுமொப்ப நாடிக் கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது" வாணிகஞ் செய்தல் முதலியன. செல்வர் என்றது இருவர் தந்தையையும். அருந்தவம்-ஈண்டுத் தலைப்படு தானத்தின் மேற்று. முடித்தோர் எய்தும் என ஒரு சொல் வருவிக்க. உத்தர குரு-போக பூமியாறனுள் ஒன்று. தலைப்படு தானம் இன்னதென்பதனை,"

   "அறத்தி னாற்றிய வரும்பெரும் பொருளைப்
   புறத்துறைக் குற்றமூன் றறுத்தநற் றவர்க்குக்
   கொள்கெனப் பணிந்து குறையிரந் தவர்வயின்
   உள்ள முவந் தீவ துத்தம தானம்"

  என்பதனானும், போக பூமியின் இயல்பினை,

   "பதினாறாட்டைக் குமரனுஞ் சிறந்த
   பன்னீ ராட்டைக் குமரியு மாகி
   ஒத்த மரபினு மொத்த வன்பினும்
   கற்பக நன்மரம் நற்பய னுதவ
   ஆகிய செய்தவத் தளவு மவ்வழிப்
   போகம் நுகர்வது போக பூமி"
   என்பதனானும், போக பூமியின் வகையா றனையும்,
   "ஆதியரி வஞசம் நல்லரி வஞ்சம்
   ஏம வஞ்சம் இரண வஞ்சம்
   தேவ குருவம் உத்தர குருவமெனப்
   போக பூமி யறுவகைப் படுமே"

  என்பதனானும் அறிக. கய-பெருமை;
  "தடவும் கயவும் நளியும் பெருமை"
  என்பது தொல்காப்பியம். கயமலர்-நீர்ப்பூ என்னலுமாம். இவர்கள் தோன்றிப் போகம் நுகர்தலான் புகார் உத்தரகுருவை யொத்ததென்க. மாநகர்க்கண் அந்நகர் உத்தர குருவை யொக்கும்படி செல்வர்க்குத் தோன்றிய கண்ணியும் கொழுநனும் என்றுரைக்க
  -----------

   ௧௨-௩. மயன்விதித் தன்ன மணிக்கால் அமளிமிசை
   நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்துழிக்

  மயன் விதித்தன்ன மணிக்கால் அமளிமிசை நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்துழி-எழுநிலை மாடத்து இடைநிலைக் கண்ணே மயன் நிருமித்து வைத்தாலொத்த அழகிய கால்களையுடைய கட்டிலின்மீது இருந்தவளவில்.
  மயன்-தெய்வத் தச்சன். விதித்தல்-மனத்தால் நிருமித்தல். மணி-பவழம் முதலியவுமாம். நெடுநிலை-எழுநிலை. இடைநிலம்-நான்காம் நிலம்.
  ---------

   ௧௪-உரு. கழுநீர் ஆம்பல் முழுநெறிக் குவளை
   அரும்புபொதி அவிழ்ந்த சுரும்புஇமிர் தாமரை
   வயற்பூ வாசம் அளைஇ அயற்பூ
   மேதகு தாழை விரியல்வெண் தோட்டுக்
   கோதை மாதவி சண்பகப் பொதும்பர்த்
   தாதுதேர்ந்து உண்டு மாதர்வாள் முகத்துப்
   புரிகுழல் அளகத்துப் புகல்ஏக் கற்றுத்
   திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து
   மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த
   கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து
   வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்
   கண்டு மகிழ்வுஎய்திக் காதலில் சிறந்து

  கழுநீர் ஆம்பல் முழுநெறிக்குவளை-கழுநீரும் சேதாம்பலும் முழு நெறியாகிய செங்கழுநீரும், அரும்பு பொதி அவிழ்ந்த சுரும்பு இமிர்தாமரை-அரும்பு கட்டவிழ்ந்த வண்டு ஒலிக்கும் தாமரையும் ஆகிய, வயற்பூ வாசம் அளைஇ-நீர்ப்பூக்களின் மணத்தினைக் கலந்துண்டு, அயற்பூ-அவற்றின் வேறாய கோட்டுப்பூ முதலியவற்றுள், மேதகு தாழை விரியல் வெண் தோட்டு-மேன்மை பொருந்திய தாழையின் விரிந்தவெள்ளிய தோட்டகத்தும், கோதை மாதவி சண்பகப் பொதும்பர்-சண்பகக்காவிலுள்ள மாலைபோலும் மாதவிப் பூவினிடத்தும்; தாது தேர்ந்து உண்டு-தாதினை ஆராய்ந்து உண்டு போந்து, மாதர் வாள் முகத்துப் புரிகுழல் அளகத்துப் புகல் ஏக்கற்றுத் திரிதரு சுரும்பொடு-ஒள்ளிய முகத்தினையுடைய மாதருடைய புரிந்த குழற்சியையுடைய கூந்தலில் உண்டாகிய கலவை மணம் பெறுதற்கு ஏக்கற்றுப் புகுதற்கு வழிகாணாமற் சுழலுகின்ற சுரும்போடும், செவ்வி பார்த்து-செவ்வியறிந்து, மாலைத் தாமத்து மணி நிரைத்து வகுத்த கோலச்சாளரக் குறுங்கண் நுழைந்து-மணிக்கோவையாலே ஒழுங்குபட நிரைத்து வகுத்த அழகினையுடைய சாளரத்தின் குறிய புழைகளால் நுழைந்து; வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் கண்டு-வண்டோடும் புகுந்த மணத்தினையுடைய தென்றலைக் கண்டு, மகிழ்வு எய்திக் காதலிற் சிறந்து-மகிழ்ச்சியுற்றுக் கலவியை விரும்பிக் காதல் மிகுதலால்,
  முழுநெறி, இதழொடியாத முழுப் பூ. குவளை-ஈண்டுச் செங்கழுநீர்;
  "குவளைக் கூம்பவிழ் முழுநெறி" என்பதும். அதனுரையும் நோக்குக. சேதாம்பல் ஏனைய போன்று பகலில் மலரும் பூவன்றாயினும் அவை விரியும் காலத்து இது குவிதலின்மையின் ஒருங்கு கூறினார். பொதும்பர் -மரச்செறிவு. உண்டு என்பதனை முன்னுங் கூட்டி, அளைஇ உண்டு, தேர்ந்துண்டு என்க. மாதவி-குருக்கத்தி. சண்பகத்தோடு மலர்தலின், தேர்ந்துண்டு என்றார். சண்பகம் வண்டுணா மலர் மரமாகலின், வாண் முகத்து மாதர் எனவும், அளகத்து ஏக்கற்று எனவும், புகற்குத் திரிதரு எனவும், மணித்தாமத்து எனவும், மாலை நிரைத்து எனவும் மாறுக. செவ்வி-இவர் மகிழுஞ் செவ்வி. மாலை-ஒழுங்கு-சுரும்போடும்,வண்டோடும் புக்க வென்க. மணவாய்த் தென்றல்-மணத்தைத் தன்னிடத்தேயுடைய தென்றல்; வாய்-இடம்.
  அளைஇ உண்டு தேர்ந்துண்டு ஏக்கற்றுத் திரிதரு சுரும்போடும் வண்டோடும் புக்க தென்றல் என்க.
  ---------------

   ௨௬-உஎ. விரைமலர் வாளியொடு வேனில்வீற் றிருக்கும்
   நிரைநிலை மாடத்து அரமியம் ஏறி,

  விரைமலர் வாளியொடு வேனில் வீற்றிருக்கும் நிரைநிலை மாடத்து அரமியம் ஏறி-அங்ஙனம் காதல் மிகுதலால் அவர்கள் நிரைத்த நிலைகளையுடைய மாடத்தின் இடைநிலத்து நின்றும் மணத்தினையுடைய மலர்க்கணையோடே காமன் வீற்றிருக்கும் மேனிலமாகிய நிலாமுற்றத்தின் மேல் ஏறி,
  வேனில்-காமன் : ஆகுபெயர், அரமியம்-நிலாமுற்றம்
  --------------

   ௨௮-.௩க. சுரும்புஉணக் கிடந்த நறும்பூஞ் சேக்கைக்
   கரும்பும் வல்லியும் பெருந்தோள் எழுதி
   முதிர்க்கடல் ஞாலம் முழுவதும் விளக்கும்
   கதிர்ஒருங் கிருந்த காட்சி போல,

  சுரும்புணக் கிடந்த நறும்பூஞ் சேக்கை-சுரும்புகள் உண்ணும்படி பரப்பிய நறிய பூக்களையுடைய சேக்கைக் கண்ணே, முதிர் கடல் ஞாலம் முழுவதும் விளக்கும் கதிர் ஒருங்கு இருந்த காட்சிபோல-முற்றிய கடலையுடைய ஞாலம் முழுவதையும் விளக்கும் ஞாயிறும் திங்களும் சேர இருந்த காட்சிபோல இருந்து, கரும்பும் வல்லியும் பெரும்தோள் எழுதி-கரும்பு வல்லி என்பனவற்றைப் பெரிய தோளிலே யெழுதி
  சுரும்புகளுண்டற்குப் பரப்பி வைத்தாற் போலக் கிடந்த நறும்பூஞ் சேக்கையெனலுமாம். முதிர்தல்-சூழ்தலுமாம். கதிர்-வெங்கதிராகிய ஞாயிறும் தண் கதிராகிய திங்களும்,ஒருங்கிருத்தல், இல் பொருளுவமம். போல இருந்து என ஒரு சொல் வருவிக்க. கரும்பும் வல்லியும் சந்தனக் குழம்பால் எழுதப்படுவன.
  {அடி. சுரும்பையும் வல்லியையும் தோளில் எழுதி யெனவே தொய்யி லொன்றையும் முலைமே லெழுதி என்பதாயிற்று.}
  ----------------

   ௩௨௩௭-. வண்டுவாய் திறப்ப நெடுநிலா விரிந்த
   வெண்தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
   கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழத்
   தாரும் மாலையும் மயங்கிக் கையற்றுத்
   தீராக் காதலின் திருமுகம் நோக்கிக்
   கோவலன் கூறும்ஓர் குறியாக் கட்டுரை

  வண்டு வாய் திறப்ப நெடுநிலா விரிந்த வெண்தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு-வண்டுகள் புரியை நெகிழ்க்க நெடிய நிலவைப் போல விரிந்த வெள்ளிய இதழையுடைய மல்லிகையின் மலர்ச்சியையுடைய மாலையோடே, கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழ-இதழொடியாது கட்டின கழுநீர்ப் பிணையலும் குலைந்து அலைய, தாரும் மாலையும் மயங்கிக் கையற்று-மார்பிலிட்ட இவ்விருவகை மாலையும் மயங்கப்பட்டு இருவரும் செயலற்ற புணர்ச்சியிறுதிக்கண், தீராக்காதல் திருமுகம் நோக்கி-நீங்காத காதலையுடைய திருமகளைப் போல்வாளுடைய முகத்தை நோக்கி, கோவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுரை-முன்னர்க் கருதாத பொருள் பொதிந்த உரையைக் கோவலன் கூறாநிற்பன் ;
  நிலா-ஒளியுமாம். தாரும் மாலையும் மயங்கி என்பதனாற் புணர்ச்சி கூறிற்று; இடக்கரடக்கு. கையறுதல்-கலவியால் அவசமுறுதல். காதலால் என விரித்தலுமாம். திரு-திருப்போல்வாள். ஓர், அசை. குறியா-தன் அறிவு முதலியவற்றைக் கருதாத என்றுமாம். கட்டுரை-நலம்பாராட்டல் என்னும் பொருள் பொதிந்த உரை.
  ----------------

   ௩அ-௪க. குழவித் திங்கள் இமையவர் ஏத்த
   அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்
   உரிதின் நின்னோடு உடன்பிறப்பு உண்மையின்
   பெரியோன் தருக திருநுதல் ஆகஎன.

  குழவித் திங்கள் இமையவர் ஏத்த அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்- பிறைமதியானது இமையவர் ஏத்தாநிற்க இறைவன் தன் முடிக்கு அழகு செய்தல் காரணத்தாற் சூடிய அருமையுடையதாயினும், உரிதின் நின்னோடு உடன்பிறப்பு உண்மையின் பெரியோன் தருக திருநுதல் ஆகென-அது நின்னோடு உடன்பிறப்பாகலின் நினக்கு உரித்தாதலால் அப்பெரியோன் அதனை நினக்குத் திருநுதலாகத் தரக் கடவன்;
  திங்கட் குழவியென்றது "சொல்லிய வல்ல பிறவவண் வரினும்" என்னும் மரபியற் புறனடையான் முடியுமென்பர் அடியார்க்கு நல்லார்;
  "பிள்ளை குழவி கன்றே போத்தெனக்
  கொள்ளவு மமையு மோரறி வுயிர்க்கே"
  என்னுஞ் சூத்திரத்து ஓரறிவுயிர்க்குக் கொள்ளவும் அமையுமென்னும் உம்மையை எச்சப்படுத்துப், பிறவழியுங் கொள்ளப்படும் என முடிப்பர் பேராசிரியர். இமயவ ரேத்தல் "அப்பிறை பதினெண் கணனு மேத்தவும் படுமே"என்பதனாலு மறிக. உரிது-உரித்து. பெரியோன். மாதேவன்; இறைவன். திருநுதலாக வென்று தருக என்க. பிறை திருவொடு பாற்கடலிடைப் பிறத்தலின், இவளைத் திருமகளாக மதித்து இங்ஙனம் கூறினான்.
  {அடி. தருக வென்றது சூடின பிறை இரண்டு கலையாதலின், அதனை எண்ணாட்டிங்களாக்கித் தருகவென்பது கருத்து: என்னை? "மாக்கட னடுவண் எண்ணாட் பக்கத்துப், பசுவெண் டிங்கள் தோன்றி யாங்குக், கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல்" என்றாராகலின், இதனான் மேற்கூறுகின்ற கரும்பையும் வச்சிரத்தையும் அவ்வவ் வுறுப்புக்கட் கேற்பத் திருத்தி ஈக்க அளிக்க என்பதாயிற்று; என்றது, கரும்பிற்கு நிறனும், வச்சிரத்திற்கு நேர்மையும் உண்டாக்கி என்றவாறு}.
  -------------

   ௪௨-௪௫. அடையார் முனையகத்து அமர்மேம் படுநர்க்குப்
   படைவழங் குவதுஓர் பண்புண்டு ஆகலின்
   உருவி லாளன் ஒருபெருங் கருப்புவில்
   இருகரும் புருவ மாக ஈக்க,

  அடையார் முனையகத்து அமர் மேம்படுநர்க்குப் படைவழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின்-பகைவர் முனையிடத்தே போரினை மேம்படுப்பார் சிலர்க்குப் படைக்கலம் வழங்குவதொரு முறைமை அரசர்க்குண்டாதலின், உருவிலாளன் ஒரு பெருங்கருப்புவில் இரு கரும் புருவமாக ஈக்க-அனங்கன் போர் செய்தற்கு எடுத்த பெரிய கரும்பு வில் ஒன்றையும் நினக்குக் கரிய இரு புருவமாகத் திருத்தித் தரக்கடவன்;
  'ஒரு பெருங் கருப்புவில் இரு கரும் புருவம் என்றது சேமவில்லையுங் கூட்டி'என அடியார்க்கு நல்லார் கூறினர்; பின் வேலொன்று கண்ணிரண்டா ஈத்தது என வருதலின், இதனையும் அவ்வாறே கோடல் பொருந்தும். மற்றும் அவர், 'முனிவராகிய முரட்பகையை அழித்தற்கு வல்வில்லே வேண்டுதலின், ஒருபெருங் கருப்புவில் லென்றார்' என்று கூறியதும் ஈண்டைக்குப் பொருந்துவதன்று; காமவேள் தன்னுடன் செய்யும் போரில் அவற்கு வென்றி தருவாளாகக் கொண்டு இங்ஙனம் கூறினானென்க.
  ---------------

   ௪௬-௪அ. மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்
   தேவர் கோமான் தெய்வக் காவல்
   படைநினக்கு அளிக்கஅதன் இடைநினக்கு இடையென,

  மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்-மூவாமைக்கு ஏதுவாகிய அமிழ்திற்கு நீ முற்பிறத்தலால், தேவர் கோமான்-தேவர்க் கரசனாகிய இந்திரன், தெய்வக் காவற் படை-அசுரரை யழித்துச் சுரரைக் காத்தற் கெடுத்த வச்சிரப்படையை, நினக்கு அளிக்க அதன் இடை நினக்கு இடையென-அதன் இடை நினக்கு இடையாகவெனத் திருத்தித் தரக் கடவன்;
  மூவா என மூப்பினை யொழித்தல் கூறவே இறப்பினை யொழித்தலும் கூறிற்றாம். நீ அமுதாகலின் நினக்கு முன்னர் வச்சிரம் பிறத்தலால் எனினுமமையும். வச்சிரம் இருதலைச் சூலமாய் நடுவு பிடியாயிருத்தலின் அதன் இடையை மகளிர் இடைக்கு உவமங் கூறுவர். ஆகவென ஒரு சொல் வருவிக்க.
  -------------------

   ௪௯-௫௨. அறுமுக ஒருவன்ஓர் பெறுமுறை இன்றியும்
   இறுமுறை காணும் இயல்பினின் அன்றே
   அம்சுடர் நெடுவேல் ஒன்றுநின் முகத்துச்
   செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது?

  அறுமுக ஒருவன் ஓர் பெறுமுறை இன்றியும்-ஆறு திருமுகத்தையுடைய ஒப்பிலானாகிய முருகன் இவ்வாறு ஓர் உரிமையின்றியும், இறுமுறை காணும் இயல்பினன் அன்றே-யான் துன்புறு முறைமையைத் தன் கண்ணாற் காண்டல் காரணத்தானன்றே, அம்சுடர் நெடுவேல் ஒன்று-தன் கையிலுள்ள அழகிய சுடரையுடைய நெடியவேலொன்றையும், நின் முகத்துச் செங்கடை கழைக்கண் இரண்டா ஈத்தது-நின் முகத்திலே சிவந்த கடையையுடைய குளிர்ச்சி பொருந்திய கண் இரண்டுமாம்படி ஈத்தது
  பெறுமுறையின்றியும்-உரிமையின்றியும்; தனக்குப் பெருங்கூறு ஒன்றில்லையாகவும் எனினு மமையும். இறுமுறை-வருந்து முறைமை; சாக்காடுமாம்; இது,
  "கொள்ளும் பொருளில ராயினும் வம்பலர்
  துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வவ்வலின்"
  என்றாற் போல்வது. இரண்டா ஈத்தது-இரண்டாக நிருமித்துத் தந்தது;
  "ஓக்கிய முருகன் வைவே லோரிரண்டனைய கண்ணாள் "
  என்பது காண்க. ஈத்தது: தொழிற்பெயர். ஒருவன் ஈத்தது காணும் இயல்பினின் என முடிக்க. இவற்றுட் கட்புலனாய் எழுதப்படும் உறுப்புக்களைப் பாராட்டி இனிக் கட்புலனாயும் ஆகாதுமாய் எழுதப்படாதன பாராட்டுவான்.
  -------------

   ௫௩-௬௧. மாஇரும் பீலி மணிநிற மஞ்ஞைநின்
   சாயற்கு இடைந்து தண்கான் அடையவும்,
   அன்னம் நல்நுதல் மெல்நடைக்கு அழிந்து
   நல்நீர்ப் பண்ணை நனிமலர்ச் செறியவும்,
   அளிய தாமே சிறுபசுங் கிளியே.
   குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தநின்
   மழலைக் கிளவிக்கு வருந்தின வாகியும்
   மடநடை மாதுநின் மலர்க்கையின் நீங்காது
   உடன்உறைவு மரீஇ ஒருவா ஆயின,

  மாயிரும் பீலி மணிநிற மஞ்ஞை நின் சாயற்கு இடைந்து தண்காள் அடையவும்-கரிய பெரிய பீலியையுடைய நீலமணி போலும் நிறத்தையுடைய மயில்கள் நின்சாயற்குத் தோற்றுத் தண்ணிய காட்டிடத்தேபோய் ஒடுங்கா நிற்பவும், அன்னம் நன்னுதல் மென்னடைக்கு அழிந்து நன்னீர்ப் பண்ணை நளிமலர்ச் செறியவும்-நல்ல நெற்றியை யுடையாய்! அன்னங்கள் நின் மேன்மையுடைய நடைக்குத் தோற்று நல்லநீரையுடைய வயல்களிற் செறிந்த மலரிடையே புக்கு மறையவும்; அளியதாமே சிறு பசுங்கிளியே-சிறிய பசிய கிளிகள் தாம் அளிக்கத் தக்கன; குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின் மழலைக் கிளவிக்கு வருந்தினவாகியும்-அவை குழலினிசையையும் யாழினிசையையும் அமிழ்தத்தையும் கலந்து குழைத்தாலொத்த நினது முதிராத மழலைச் சொற்குத் தோற்றனவாகியும், மட நடைமாது நின் மலர்க்கையின் நீங்காது உடன் உறைவு மரீஇ ஒருவாவாயின-மடப்பத்தையுடைய நடையினையுடைய மாதே! நின்னை வழிபட்டு அச்சொல்லினைக் கற்கக் கருதி நினது மலர்போலுங் கையினின்றும் நீங்காவாய் நின்னுடனே வெறுப்புத் தோன்றாமல் உறைதலையும் பொருந்திப் பிரியாவாயின ஆகலான்,
  மாயிரு என யகர உடம்படுமெய் பெற்றது. "கிளந்தவல்ல" என்னும் புறனடையான் அமையும். மணி-நீல மணி. தண் கான் இழிந்த காடு நளி-செறிவு. செறிதல்-ஒடுங்குதல். குழைத்த-குழைத்தாலொத்த; இல்பொருளுவமம்; குழைவித்த எனினுமமையும்; வருத்திய என்றபடி.
  நன்னுதல், மாது, மஞ்ஞை அடையவும், அன்னம் செறியவும், கிளி வருந்தினவாகியும் நீங்காது மரீஇ ஒருவாவாயின; ஆகலின் அவை அளிக்கத்தக்கன என வினை முடிபு கொள்க.
  ------------------

   ௬௨-௪. நறுமலர்க் கோதை.நின் நலம்பா ராட்டுநர்
   மறுஇல் மங்கல அணியே அன்றியும்
   பிறிதுஅணி அணியப் பெற்றதை எவன்கொல்?

  நறுமலர்க் கோதை-நறிய மலரை யணிந்த கோதையே, நின் நலம் பாராட்டுநர்-நின்னைப் புனைந்து அழகு செய்யும் மகளிர், மறு இல் மங்கல அணியே அன்றியும்-குற்றமற்ற நினது புனையாத அழகிருக்கவும் அஃதன்றி, பிறிது அணி அணியப் பெற்றதை எவன்கொல்-வேறு சில அணிகளை அணிந்ததனாற் பெற்றது யாதோ;
  நலம் பாராட்டுநர்-ஒப்பனை செய்வார். மங்கலவணி-இயற்கையழகு; மாங்கலிய மென்பாருமுளர். அணிய-அணிதலால்.
  "உமிழ்சுடர்க் கலன்கள் நங்கை யுருவினை மறைப்ப தோரார்"
  என்பது ஒப்புநோக்கற்பாலது.
  ---------------

   ௬௫-௬. பல்இருங் கூந்தல் சின்மலர் அன்றியும்
   எல்அவிழ் மாலையொடு என்உற் றனர்கொல்?

  பல்இருங் கூந்தற் சின்மலர் அன்றியும்-பலவகைத்தாகிய கரிய கூந்தலில் மங்கலமாகச் சில மலரைப் பெய்தலன்றியும் எல்அவிழ் மாலையொடு என் உற்றனர்கொல்-ஒளியுடைய அவிழ்கின்ற மாலையைப் புனைதற்கு அம் மாலையோடு அவர்கள் என்ன உறவுடையார்களோ;
  ௬௭-௮. நானம் நல்அகில் நறும்புகை அன்றியும்
  மான்மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்?

  நானம் நல் அகில் நறும்புகை அன்றியும்-அவர், கூந்தற்கு நாற்றமுடைய நல்ல அகிற்புகையை ஊட்டுதலன்றியும், மான்மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்-மான்மதச் சாந்தை அணிதற்கு அதனோடு தமக்குள தாகிய கண்ணோட்டம் யாதோ;
  நானம்-நெய்யுமாம். மான்மதம்-கத்தூரி. வந்ததை-பொருந்திய கண்ணோட்டம் ; வந்த உறவு எனலுமாம்.

   ௬௯-எ0. திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும்
   ஒருகாழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்?

  திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும்-அவர், முலைத்தடத்தின்மேல் தொய்யி லெழுதுத லன்றியும், ஒருகாழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்-தனிமுத்து வடத்தைப் பூட்டு வதற்கு அதனோடு அவர்க்குண்டான உரிமை யாதோ;
  திரு-முலைமேற் றோன்றும் வீற்றுத் தெய்வம் என்பர்; "ஆமணங்கு குடியிருந் தஞ்சுணங்கு பரந்தனவே" என்றார் சிந்தாமணியிலும், தடம்-பரப்பு. காழ்-வடம். முத்தக் காழ் என மாறுக.
  எக-உ. திங்கள்முத்து அரும்பவும் சிறுகுஇடை வருந்தவும்
  இங்குஇவை அணிந்தனர் என்உற் றனர்க்கொல்?

  திங்கள் முத்து அரும்பவும்-மதிபோலும் முகத்தில் முத்துப் போலும் வியர் தோன்றவும்; சிறுகு இடை வருந்தவும்-நுண்ணிய இடை ஒசியவும், இங்கு இவை அணிந்தனர்-இவ்வுழி இவற்றை அணிந்தாராகலின், என் உற்றனர்கொல்-அவர்கள் என்ன பித்தேறினார்களோ.
  திங்கள், முத்து என்பன காதலும் நலனும் நிலைக்களனாகத் தோன்றிய பண்புவமத் தொகை; குறிப்பினாற் பொருள் உணர நின்றன; ஆகு பெயரென்பாரு முளர்.
  மங்கலவணியும் சின்மலரும் அகிற்புகையும் தொய்யிலுமே பாராமாய் அரும்பவும் வருந்தவும், பிறிதணியும் மாலையும் சாந்தும் முத்தும் அணிந்தார் என முற்கூறியவற்றைக் கருதிக் கூறியவாறு.
  ---------------

   ௭௩-௪. மாசறு பொன்னே. வலம்புரி முத்தே.
   காசறு விரையே. கரும்பே. தேனே.

  மாசுஅறு பொன்னே-கட்கு இனிமையாற் குற்றமற்ற பொன்னை யொப்பாய், வலம்புரி முத்தே-ஊற்றின் இன்பத்தால் வலம்புரி யீன்ற முத்தை யொப்பாய், காசு அறு விரையே-உயிர்ப்பின் இனிமையாற் குற்றமற்ற விரையை யொப்பாய், கரும்பே-சுவையினிமையிற் கரும்பை யொப்பாய், தேனே-இனிய மொழியையுடைமையால் தேனை யொப்பாய்.
  வலம்புரி முத்தென்றதனால் மரபின் தூய்மையுங் கூறினான்; "வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பு" என்பது காண்க. தேன் - யாழின் நரம்பிற்கு ஆகுபெய ரென்னலுமாம். "நரம்பார்த் தன்ன இன்குரற்றொகுதி" என்றார் நக்கீரனாரும். ஒளியும் ஊறும் நாற்றமும் சுவையும் ஓசையுமாகிய ஐம்புலனுங் கூறி நலம் பாராட்டினான்;
  "கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும்
  ஒண்டொடி கண்ணே யுள"
  என்னும் வள்ளுவர் வாய்மொழியுங் காண்க.
  ----------------

   ௭௫-௬. அரும்பெறல் பாவாய். ஆர்உயிர் மருந்தே
   பெருங்குடி வாணிகன் பெருமட மகளே.

  அரும்பெறல் பாவாய்-பெறுதற்கரிய பாவையே, ஆர் உயிர் மருந்தே - அரிய உயிரை நிலைபெறச் செய்யும் மருந்தே, பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே-பெருங்குடிப் பிறந்த வணிகனுடைய பெருமை பொருந்திய மடப்பத்தையுடைய புதல்வியே,
  காட்சியின் உயிர் மயக்குறுதலிற் கொல்லியிற் பாவாய் என்றும், அவ்வாறு அழியுமுயிரை இமைப்பிற் றருதலின், ஆருயிர் மருந்தே என்றுங் கூறினான். உயிர் மருந்து - மிருத சஞ்சீவினி என்பர்.
  ------------------

   எஎ-அக. மலையிடைப் பிறவா மணியே என்கோ?
   அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
   யாழிடைப் பிறவா இசையே என்கோ?
   தாழ்இருங் கூந்தல் தையால் நின்னைஎன்று
   உலவாக் கட்டுரை பலபா ராட்டித்

  மலையிடைப் பிறவா மணியே என்கோ-மலையிற் பிறவாத மணியே என்பேனோ, அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ-கடலிற் பிறவாத அமிழ்தே என்பேனோ, யாழிடைப் பிறவா இசையே என்கோ-யாழிற் பிறவாத இசையே என்பேனோ, தாழ் இருங் கூந்தல் தையால் நின்னை என்று-நீண்ட கரியகூந்தலையுடைய தையலே நின்னை என்று நீண்ட கரிய கூந்தலையுடைய தையலே நின்னை என்று, உலவாக் கட்டுரை பல பாராட்டி-தொலையாத கட்டுரை பலவற்றால் நலம் பாராட்டி;
  அலை : ஆகு பெயர். தையால் நின்னை என்கோ என்கோ என்கோ என்று பாராட்டி யென்க.
  {அடி. மலையிடைப் பிறக்கு மணி குழையாமையின் அதிற் பிறவா மணியே யென்பேனோ, அலையிடைப் பிறக்கும் அமிழ்திற்கு இவ்வடிவின்மையின் அதனிற் பிறவாத அமுதே யென்பேனோ, யாழ் கட்கின்னா தாகலின் அதனிடைப் பிறவாத இசையே யென்பேனோவெனத் தெரிதருதேற்ற வுவமை யென்னும் அலங்காரமும், மலைகடல் என விரோதமும் பின்வருநிலை யென்னும் அலங்காரமும் புலப்படுத்தினாரென வுணர்க.}
  ----------------

   ௮௨-௩. தயங்குஇணர்க் கோதை தன்னொடு தருக்கி
   மயங்குஇணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள்,

  தயங்கு இணர்க் கோதை தன்னொடு தருக்கி-விளங்குகின்ற பூங் கொத்துக்களாலாகிய கோதையை யுடையாளோடும் இன்பத்தில் மிக்கு, வயங்கு இணர்த்தாரோன் மகிழ்ந்து செல்வுழி நாள்-விளங்கு இணர்த் தாரினை யுடையோன் மகிழ்ந்து செல்லாநின்ற நாட்களில் ஒருநாள்,
  தயங்கல், வயங்கல் இரண்டும் விளக்கமென்னும் பொருளன; இங்ஙனம் வருவனவற்றைப் பரியாயவலங்காரமென்பர் அடியார்க்கு நல்லார்.
  ------------------

   ௮௪-௯0. வாரொலி கூந்தலைப் பேர்இயல் கிழத்தி
   மறுப்புஅருங் கேண்மையொடு அறப்பரி சாரமும்
   விருந்து புறந்தருஉம் பெருந்தண் வாழ்க்கையும்
   வேறுபடு திருவின் வீறுபெறக் காண
   உரிமைச் சுற்றமொடு ஒருதனி புணர்க்க
   யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையின்
   காண்தகு சிறப்பின் கண்ணகி தனக்குஎன்.

  வார் ஒலி கூந்தற் பேரியற் கிழத்தி-நீண்ட தழைத்த கூந்தலையுடைய இருநிதிக் கிழவன் மனைக்கிழத்தி, மறப்பருங் கேண்மையோடு-மறத்தலரிய சுற்றந்தழாலோடே, அறப் பரிசாரமும்- அறநெறியாளரை ஓம்பலும், விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கை-விருந்தினரைப் பேணுதலுமாகிய இவற்றுடன் கூடிய பெருமையுடைய இல்வாழ்க்கையை, வேறுபடு திருவின் வீறுபெறக் காண-நானாவிதமான செல்வத்தோடே நடத்திக் கைவந்து உயர்ச்சி பெறுதலைக் காணவேண்டி, உரிமைச் சுற்றமொடு ஒரு தனி புணர்க்க -அடிமைத் திரளோடே வேறாக இருக்கச் செய்ய, யாண்டுசில கழிந்தன. இற்பெருங் கிழமையின் காண்தகு சிறப்பின் கண்ணகி தனக்கென்-காணத்தக்க சிறப்பினையுடைய கண்ணகிக்குப் பெருமையுடைய இல்லறத்தை நடத்தும் உரிமைப்பாட்டுடன் சில ஆண்டுகள் கழிந்தன.
  வாரொலி கூந்தல் கண்ணகியை என்றுமாம். 'கூந்தலையுடைய பேரியற் கிழத்தியெனினு மமையும்' என அடியார்க்கு நல்லார் கூறுதலின், 'கூந்தலைப் பேரியற் கிழத்தி' எனப் பிறர் பாடங் கொண்டமை பொருந்துவதன்று.
  'பேரிற் கிழத்தி' என்பதும், 'அறப்பரிகாரம்'என்பதும் அரும்பதவுரை யாசிரியர் கொண்ட பாடம். அறப் பரிகாரம் துறந்தாரைப் பூசித்து அறத்தைப் பரிகரித்தல் என்பர். மறப்பரிய என்ற அடையைப் பிறவற்றோடுங் கூட்டுக. அறப்பரிகாரம் என்பதில் அறவோர்க் களித்தலும் அந்தணரோம்பலும் துறவோர்க்கெதிர்தலும் அடங்கும்; பின், கொலைக்களக் காதையிற் கண்ணகி கூறுமாறு அறிக. புறந்தரூஉம்-புறந்தரலும் என்க: புறந்தரல்-பேணுதல். ஏனை மூன்று நிலையினரையும் வறியவர் முதலானாரையும் வேண்டுவன தந்து புரக்கும் அன்பும் அருளுமுடைமையால் பெருந்தண் வாழ்க்கை யென்று பெயர் கூறினார். என்: அசை.
  செல்வர்க்குத் தோன்றிய கண்ணியும் கொழுநனும் தென்றலைக் கண்டு மகிழ்ந்து சிறந்து ஏறிக் காட்சிபோலச் சேக்கையிலிருந்து, எழுதி மயங்கிக் கையற்று முகநோக்கிக் கட்டுரை கூறுகின்றவன், பல பாராட்டி மகிழ்ந்து செல்வுழி ஒருநாள், பேரியற் கிழத்தி ஒரு தனி புணர்க்கக் கண்ணகி தனக்குப் பெருங் கிழமையோடு ஆண்டு சில கழிந்தன எனக் கூட்டுக.
  எல்லா வடியும் நேரடியால் வந்து முடிதலின் இது நிலைமண்டில வாசிரியப்பா.

   வெண்பா
   தூமப் பணிகள்ஒன்றித் தோய்ந்தால் எனஒருவார்
   காமர் மனைவியெனக் கைகலந்து - நாமம்
   தொலையாத இன்பம்எலாம் துன்னினார் மண்மேல்
   நிலையாமை கண்டவர்ப்போல் நின்று

  வெண்பாவுரை
  மண்மேல் நிலையாமை கண்டவர்போல் நின்று-புவியின்கண் பொருள் முதலியவற்றின் நிலையாமையைக் கண்டு அவை உள்ள பொழுதே அனைத்தின்பம் துய்த்தற்கு விரைதல்போல நின்று, காமர் மனைவியெனக் கைகலந்து-காமனும் இரதியும் போலக் காதலால் ஒருவர் ஒருவரிற் கலந்து, தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தாலென ஒருவார்-சினத்தையுடைய பாம்புகள் ஒன்றுபட்டுத் தழுவினாற்போல விட்டு நீங்காராய், நாமம் தொலையாத இன்பமெலாம் துன்னினார்-அழகு கெடாத இன்பத்தையெல்லாம் துய்த்தனர் (கோவலனும் கண்ணகியும்) என்க.

  மனையறம் படுத்த காதை முற்றிற்று.
  -----------------------

  3. அரங்கேற்று காதை


  (காவிரிப்பூம் பட்டினத்திலே கணிகையர் குலத்திற் றோன்றிய மாதவி யென்பாள் ஆடல் பாடல் அழகு என்னும் மூன்றிலும் சிறந்து விளங்குதற்கேற்றவளாய் இருந்தமையின், அவளை ஐந்தாம் ஆண்டில் தண்டியம் பிடிப்பித்து, ஏழாண்டு இயற்றுவித்துப் பன்னீராண் டெய்தியபின் அரசற்கு அவையரங்கேறிக் காட்டலை விரும்பி, ஆடலாசான், இசையாசிரியன், இயற்றமிழ்ப் புலவன், தண்ணுமை முதல்வன், குழலோன், யாழாசிரியன் என்போர் ஒருங்கு கூடி, தக்க நிலத்திலே சிற்ப நூன் முறைப்படி இயற்றப்பட்டதும், விளக்குகள் ஏற்றியும் எழினிகள் வகுத்தும் விதானம் கட்டியும் முத்துமாலை நாற்றியும் புனையப்பட்டதுமாகிய அரங்கின்கண், மாற்றரசரின் குடைக்காம்பு கொண்டு நவமணி பதித்தியற்றியதும், அரசன் கோயிலின் வழிபாடு செய்து இருத்தப் பெற்றதுமாகிய தலைக்கோலினை நல்ல நாளிலே பொற்குடத்தேந்தி வந்த புண்ணிய நன்னீரால் மண்ணிய பின்பு மாலை யணிந்து அரச யானையின் கையிற் கொடுத்தனர். பின்பு அவர்கள் அவ்வியானையுடன் அரசனும் ஐம்பெருங்குழுவும் உடன்வர வலமாக வந்து வீதியிலே தேரின்மிசை நின்ற பாடுவான் கையில் அதனைக் கொடுப்பித்து, நகரியை வலம்வந்து அரங்கிற் புகுந்து எதிர்முகமாக அதனை வைத்தனர். வைக்க, மாதவியானவள் அரங்கிலே வலக்காலை முன்வைத்து ஏறி வலத்தூணைப் பொருந்தி, அரசன் முதலாயினோர் அவையில் அமர்ந்தபின் குயிலுவக் கருவிகளெல்லாம் கூடி நின்றிசைக்க மங்கலமாகிய பாலைப் பண்ணைப்பாடி, தேசியும் வடுகுமாகிய அகக்கூத்து புறக்கூத்துக்களை நூன்முறை வழுவாது பொன்னானியன்ற பூங்கொடி நடிப்பதுபோல் அவினயந்தோன்ற ஆடிக் காட்டினாள். அதனால் அவள் அரசனது பச்சைமாலையும் தலைக்கோற் பட்டமும் பெற்றதுடன், தலை வரிசையாக ஆயிரத்தெண் கழஞ்சு பொன் பரியம் பெற்றாள். அம்மாலையை ஒரு கூனி கையிற் கொடுத்து, ‘இம்மாலை ஆயிரத்தெண் கழஞ்சு பொன் பெறுவது; இவ்வளவு பொன் கொடுத்து இதனைப் பெறுவோர் மாதவிக்கு மணமகனாவர்’ எனக்கூறி, நகர நம்பியர் உலா வரும் வீதியில் நிற்கச் செய்ய, கோவலன் அம்மாலையை வாங்கிக் கூனியுடன் மாதவி மனையை அடைந்து அவளை அணைந்த அன்றே மயங்கி, தன் மனைவியையும் மனையையும் மறந்து, மாதவியை ஒருபொழுதும் விட்டு நீங்கா விருப்புடையனாயினன். (இக்காதையில் இசை நாடகங்களின் இயல்புகளும், அவற்றிற்கு அங்கமானவைகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.))


   தெய்வ மால்வரைத் திருமுனி அருள
   எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
   தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய
   மலைப்புஅருஞ் சிறப்பின் வானவர் மகளிர்
   சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய 5

   பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை
   தாதுஅவிழ் புரிகுழல் மாதவி தன்னை
   ஆடலும் பாடலும் அழகும் என்றுஇக்
   கூறிய மூன்றின் ஒன்றுகுறை படாமல்
   ஏழாண்டு இயற்றிஓர் ஈராறு ஆண்டில் 10

   சூழ்கடல் மன்னற்குக் காட்டல் வேண்டி,
   இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
   பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
   பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும்
   விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்துஆங்கு 15

   ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்
   கூடிய நெறியின கொளுத்துங் காலைப்
   பிண்டியும் பிணையலும் எழிற்கையும் தொழிற்கையும்
   கொண்ட வகைஅறிந்து கூத்துவரு காலைக்
   கூடை செய்தகை வாரத்துக் களைதலும் 20

   வாரம் செய்தகை கூடையிற் களைதலும்
   பிண்டி செய்தகை ஆடலிற் களைதலும்
   ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும்
   குரவையும் வரியும் விரவல செலுத்தி
   ஆடற்கு அமைந்த ஆசான் தன்னொடும், 25

   யாழும் குழலும் சீரும் மிடறும்
   தாழ்குரல் தண்ணுமை ஆடலொடு இவற்றின்
   இசைந்த பாடல் இசையுடன் படுத்து
   வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கித்
   தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்துத் 30

   தேசிகத் திருவின் ஓசை எல்லாம்
   ஆசுஇன்று உணர்ந்த அறிவினன் ஆகிக்
   கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும்
   பகுதிப் பாடலும் கொளுத்துங் காலை
   வசைஅறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் 35

   அசையா மரபின் இசையோன் தானும்,
   இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத்
   தமிழ்முழுது அறிந்த தன்மையன் ஆகி
   வேத்தியல் பொதுவியல் என்றுஇரு திறத்தின்
   நாட்டிய நன்னு஡ல் நன்கு கடைப்பிடித்து 40

   இசையோன் வக்கிரித் திட்டத்தை உணர்ந்துஆங்கு
   அசையா மரபின் அதுபட வைத்து
   மாற்றார் செய்த வசைமொழி அறிந்து
   நாத்தொலைவு இல்லா நன்னூல் புலவனும்,
   ஆடல் பாடல் இசையே தமிழே 45

   பண்ணே பாணி தூக்கே முடமே
   தேசிகம் என்றுஇவை ஆசின் உணர்ந்து
   கூடை நிலத்தைக் குறைவுஇன்று மிகுத்துஆங்கு
   வார நிலத்தை வாங்குபு வாங்கி
   வாங்கிய வாரத்து யாழும் குழலும் 50

   ஏங்கிய மிடறும் இசைவன கேட்பக்
   கூர்உகிர்க் கரணம் குறிஅறிந்து சேர்த்தி
   ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமைச்
   சித்திரக் கரணம் சிதைவுஇன்றி செலுத்தும்
   அத்தகு தண்ணுமை அருந்தொழில் முதல்வனும், 55

   சொல்லிய இயல்பினிற் சித்திர வஞ்சனை
   புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின்
   வர்த்தனை நான்கும் மயல்அறப் பெய்துஆங்கு
   ஏற்றிய குரல்இளி என்றுஇரு நரம்பின்
   ஒப்பக் கேட்கும் உணர்வினன் ஆகிப் 60

   பண்அமை முழவின் கண்ணெறி அறிந்து
   தண்ணுமை முதல்வன் தன்னொடு பொருந்தி
   வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்துஆங்கு
   இசையோன் பாடிய இசையின் இயற்கை
   வந்தது வளர்த்து வருவது ஒற்றி 65

   இன்புற இயக்கி இசைபட வைத்து
   வார நிலத்தைக் கேடுஇன்று வளர்த்துஆங்கு
   ஈர நிலத்தின் எழுத்துஎழுத்து ஆக
   வழுவின்று இசைக்கும் குழலோன் தானும்,
   ஈர்ஏழ் தொடுத்த செம்முறைக் கேள்வியின் 70

   ஓர்ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி
   வன்மையிற் கிடந்த தார பாகமும்
   மென்மையிற் கிடந்த குரலின் பாகமும்
   மெய்க்கிளை நரம்பிற் கைக்கிளை கொள்ளக்
   கைக்கிளை ஒழித்த பாகமும் பொற்புடைத் 75

   தளராத் தாரம் விளரிக்கு ஈத்துக்
   கிளைவழிப் பட்டனள், ஆங்கே கிளையும்
   தன்கிளை அழிவுகண்டு அவள்வயிற் சேர
   ஏனை மகளிரும் கிளைவழிச் சேர
   மேலது உழையிளி கீழது கைக்கிளை 80

   வம்புஉறு மரபின் செம்பாலை ஆயது
   இறுதி ஆதி ஆக ஆங்குஅவை
   பெறுமுறை வந்த பெற்றியின் நீங்காது
   படுமலை செவ்வழி பகர்அரும் பாலைஎனக்
   குரல்குரல் ஆகத் தற்கிழமை திரிந்தபின் 85

   முன்னதன் வகையே முறைமையின் திரிந்துஆங்கு
   இளிமுத லாகிய ஏர்படு கிழமையும்
   கோடி விளரி மேற்செம் பாலைஎன
   நீடிக் கிடந்த கேள்விக் கிடக்கையின்
   இணைநரம்பு உடையன அணைவுறக் கொண்டுஆங்கு 90

   யாழ்மேற் பாலை இடமுறை மெலியக்
   குழல்மேற் கோடி வலமுறை மெலிய
   வலிவும் மெலிவும் சமனும் எல்லாம்
   பொலியக் கோத்த புலமை யோனுடன்,
   எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது 95

   மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
   புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்
   கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு
   நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்
   கோல்அளவு இருபத்து நால்விரல் ஆக 100

   எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
   ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி
   உத்தரப் பலகையொடு அரங்கின் பலகை
   வைத்த இடைநிலம் நாற்கோல் ஆக
   ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத் 105

   தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்தப்
   பூதரை எழுதி மேல்நிலை வைத்துத்
   தூண்நிழல் புறப்பட மாண்விளக்கு எடுத்துஆங்கு
   ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்
   கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்துஆங்கு 110

   ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து
   மாலைத் தாமம் வளையுடன் நாற்றி
   விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்துப்
   பேர்இசை மன்னர் பெயர்ப்புறத்து எடுத்த
   சீர்இயல் வெண்குடைக் காம்புநனி கொண்டு 115

   கண்இடை நவமணி ஒழுக்கி மண்ணிய
   நாவல்அம் பொலம்தகட்டு இடைநிலம் போக்கிக்
   காவல் வெண்குடை மன்னவன் கோயில்
   இந்திர சிறுவன் சயந்தன் ஆகென
   வந்தனை செய்து வழிபடு தலைக்கோல் 120

   புண்ணிய நன்னீர் பொற்குடத்து ஏந்தி
   மண்ணிய பின்னர் மாலை அணிந்து
   நலம்தரு நாளால் பொலம்பூண் ஓடை
   அரசுஉவாத் தடக்கையில் பரசினர் கொண்டு
   முரசுஎழுந்து இயம்பப் பல்இயம் ஆர்ப்ப 125

   அரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவும்
   தேர்வலம் செய்து கவிகைக் கொடுப்ப
   ஊர்வலம் செய்து புகுந்துமுன் வைத்துஆங்கு,
   இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்
   குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப, 130

   வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து
   வலத்தூண் சேர்தல் வழக்குஎனப் பொருந்தி
   இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த
   தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும்
   சீர்இயல் பொலிய நீர்அல நீங்க 135

   வாரம் இரண்டும் வரிசையில் பாடப்
   பாடிய வாரத்து ஈற்றில்நின்று இசைக்கும்
   கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்
   குழல்வழி நின்றது யாழே, யாழ்வழித்
   தண்ணுமை நின்றது தகவே, தண்ணுமைப் 140

   பின்வழி நின்றது முழவே, முழவொடு
   கூடிநின்று இசைத்தது ஆமந் திரிகை
   ஆமந் திரிகையொடு அந்தரம் இன்றிக்
   கொட்டுஇரண்டு உடையதுஓர் மண்டிலம் ஆகக்
   கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி 145

   வந்த முறையின் வழிமுறை வழாமல்
   அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர்,
   மீத்திறம் படாமை வக்காணம் வகுத்துப்
   பாற்பட நின்ற பாலைப் பண்மேல்
   நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து 150

   மூன்றுஅளந்து ஒன்று கொட்டி அதனை
   ஐந்துமண் டிலத்தால் கூடை போக்கி
   வந்தவா ரம்வழி மயங்கிய பின்றை,
   ஆறும் நாலும் அம்முறை போக்கிக்
   கூறிய ஐந்தின் கொள்கை போலப் 155

   பின்னையும் அம்முறை பேரிய பின்றை,
   பொன்இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென
   நாட்டிய நன்னூல் கடைப் பிடித்துக்
   காட்டினள் ஆதலின், காவல் வேந்தன்
   இலைப்பூங் கோதை இயல்பினில் வழாமைத் 160

   தலைக்கோல் எய்தித் தலைஅரங்கு ஏறி
   விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண்கழஞ்சு
   ஒருமுறை யாகப் பெற்றனள் அதுவே
   நூறுபத்து அடுக்கி எட்டுக்கடை நிறுத்த
   வீறுஉயர் பசும்பொன் பெறுவதுஇம் மாலை, 165

   மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்குஎன
   மான்அமர் நோக்கிஓர் கூனிகைக் கொடுத்து
   நகர நம்பியர் திரிதரு மறுகில்
   பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த,
   மாமலர் நெடுங்கண் மாதவி மாலை 170

   கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு
   மணமனை புக்கு மாதவி தன்னொடு
   அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
   விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்.
   வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்துஎன். 175
   (வெண்பா)
   எண்ணும் எழுத்தும் இயல்ஐந்தும் பண்நான்கும்
   பண்ணின்ற கூத்துப் பதினொன்றும் - மண்ணின்மேல்
   போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவிதன்
   வாக்கினால் ஆடரங்கில் வந்து.
   ------------------  நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை


  (கூத்தியது அமைதி)

   ௧-௭. தெய்வ மால்வரைத் திருமுனி அருள
   எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
   தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய
   மலைப்புஅருஞ் சிறப்பின் வானவர் மகளிர்
   சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய
   பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை
   தாதுஅவிழ் புரிகுழல் மாதவி தன்னை

  தெய்வ மால்வரைத் திருமுனி அருள-தெய்வத் தன்மையுடைய பெரிய மலையாகிய பொதியிலின்கண் உள்ள அகத்திய முனிவன் அருள் செய்தலால், எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு-முன்பு அவனால் எய்திய சாபத்தையுடைய இந்திரன் குமாரனாகிய சயந்தனோடும், தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய-நாடக அரங்கின்கண்ணே சாபம் நீங்கப் பெற்ற, மலைப்பருஞ் சிறப்பின் வானவர் மகளிர் சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய – மாறுபடுதலரிய சிறப்பினையுடைய அரம்பையரில் வரிசையிற் குன்றாத நாடகத் தொழிலொடு பொருந்திய உருப்பசியாகிய அம் மாதவி மரபில் வந்த, பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை-பிறப்பிற் குன்றுதலில்லாத பெரிய தோளையுடைய மடந்தையாகிய, தாது அவிழ் புரிகுழல் மாதவி தன்னை-தாதுவிரியும் பூக்களை யணிந்த கடை குழன்று சுருண்ட கூந்தலையுடைய மாதவியை,
  முனிவருட் சிறந்தோனாகலின் அகத்தியனைத் திருமுனி என்றார். அருள-சாபமிட்டருள வென்றுமாம். தலைக்கோற்றானம்-நாடகவரங்கு. இந்திர சிறுவனொடு சாபம் நீங்கிய உருப்பசி யென்க. ‘செய்கையொடு பொருந்திய’ என்பதன்பின், உருப்பசியாகிய அம்மாதவி மரபில் வந்த என விரித்துரைக்க. ‘சாப நீங்கிய’ என்பதன்பின் அங்ஙனம் விரித்துரைத்து வானவர் மகளிர் என்பதற்குத் தளியிலார் என்று பொருள் கூறுவர் அரும்பதவுரை யாசிரியர். சயந்தனும், உருப்பசியும் சாபம் பெற்றதும், அதினீங்கியதுமாகிய வரலாறு பின்னர்க் கடலாடு காதையானும். அடியார்க்கு நல்லார் எடுத்துக் காட்டிய பழைய மேற்கோளானும் விளக்கமுறும்; ஆண்டுக் காண்க. அருளால் என்பதூஉம் பாடம்.
  -------------

   ௮-௯. ஆடலும் பாடலும் அழகும் என்றுஇக்
   கூறிய மூன்றின் ஒன்றுகுறை படாமல்

  ஆடலும் பாடலும் அழகும் என்று இக்கூறிய மூன்றின் ஒன்று குறைபடாமல்-கூத்தும் பாட்டும் அழகுமென்று சொல்லப்பட்ட இம் மூன்றினுள் ஒன்றும் குறைவுபடாமல்
  இவை,குறைவுபடாமைக்குக்,காரணமுடையளாகலின் என்க.
  -------------

   ௧0-௧௧. ஏழாண்டு இயற்றிஓர் ஈராறு ஆண்டில்
   சூழ்கடல் மன்னற்குக் காட்டல் வேண்டி,

  ஏழாண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி-ஐயாண்டில் தண்டியம் பிடிப்பித்து ஏழாண்டு இயற்றுவித்துப் பன்னீராண்டில் வீரக்கழல் சூழ்ந்த காலினையுடைய அரசற்கு அவனது அவையரங்கேறிக் காட்டலை விரும்பி, தண்டியம்-கோல், மன்னன்-சோழன் கரிகார்ப் பெருவளத்தான்,என்பர்அரும்பதவுரையாசிரியரும்,அடியார்க்குநல்லாரும். ஈண்டுக் கரிகாலன் என்று பெயர் கூறப்படாமையானும்,
   "செருவெங் காதலின் திருமரீ வளவன்
   புண்ணியத் திசைமுகம் போகிய வந்நாள்"
  என இந்திர விழவூரெடுத்த காதையினும்,
   "மன்னன் கரிகால் வளவன்நீங் கியநாள்
   இந்நகர் போல்வதோர் இயல்பின தாகி"

  என மணிமேகலை யுள்ளும் கரிகாலன் வடதிசைக்கட் படையெடுத்துச் சென்றமை கூறப்பட்டிருத்தலன்றி, நிகழ்காலத்தில் வைத்து அவன் யாண்டுங் கூறப்படாமையானும், மதுரைக்காண்டத் திறுதிக் கட்டுரையில் பாண்டியன் நெடுஞ்செழியனையும் வஞ்சிக்காண்டத் திறுதிக் கட்டுரையில் சேரந் செங்குட்டுவனையும் கிளந்தோதும் அடிகள் புகார்க் காண்டத் திறுதிக் கட்டுரையில் சோழனொருவனையும் பெயர் குறித்துக் கூறாமையானும் கரிகாலன் அப்பொழுதிருந்தா னென்று துணிதல் சாலாதென்க.
  பரதசேனாபதியார் கூறிய, பின்வரும் வெண்பாக்கள் ஈண்டு அறியற்பாலன.
   "பண்ணியம்வைத் தானைமுகன் பாதம் பணிந்துநாட்
   புண்ணிய வோரை புகன்றனகொண்-டெண்ணியே
   வண்டிருக்குங் கூந்தல் மடவரலை ஐயாண்டில்
   தண்டியஞ்சேர் விப்பதே சால்பு."

   "வட்டணையுந் தூசியு மண்டலமும் பண்ணமைய
   எட்டுட னீரிரண்டாண் டெய்தியபின்-கட்டளைய
   கீதக் குறிப்பும் அலங்கார முங்கிளரச்
   சோதித் தரங்கேறச் சூழ்."

   "நன்னர் விருப்புடையோள் நற்குணமு மிக்குயர்ந்தோள்
   சொன்னகுலத் தாலமைந்த தொன்மையளாய்ப் – பன்னிரண்டாண்
   டேய்ந்ததற்பின் ஆடலுடன் பாடலழ கிம்மூன்றும்
   வாய்ந்தவரங் கேற்றல் வழக்கு."

  -----------
  (ஆடலாசிரியன் அமைதி)

   ௧௨-௨௫. இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
   பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
   பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும்
   விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்துஆங்கு
   ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்
   கூடிய நெறியின கொளுத்துங் காலைப்
   பிண்டியும் பிணையலும் எழிற்கையும் தொழிற்கையும்
   கொண்ட வகைஅறிந்து கூத்துவரு காலைக்
   கூடை செய்தகை வாரத்துக் களைதலும்
   வாரம் செய்தகை கூடையிற் களைதலும்
   பிண்டி செய்தகை ஆடலிற் களைதலும்
   ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும்
   குரவையும் வரியும் விரவல செலுத்தி
   ஆடற்கு அமைந்த ஆசான் தன்னொடும்,

  இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து-அகக் கூத்தும்,புறக்கூத்துமாகிய இருவகைக் கூத்தினிலக்கணங்களையும் அறிந்து, பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்ந்து-அவற்றின் பகுதிகளாகிய பல கூத்துக்களையும் விலக்குறுப்புக்களுடன் புணர்க்க வல்லனாய், பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும்-அல்லியம் முதற் கொடுகொட்டி யீறாய்க்கிடந்த தெய்வ விருத்தியாகிய,பதினொருகூத்துக்களையும் அக்கூத்துக்களுக்குரிய பாட்டுக்களையும் அக்கூத்துக்களின் விகற்பங்களுக்கெல்லாம் அமைந்த வாக்கியங்களின் கூறுகளையும், விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து ஆங்கு-விதித்தல் மாட்சிமைப் பட்ட நூலின் வழியே விளங்கவறிந்து, ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும் கூடிய நெறியின கொளுத்துங்காலை-ஆடலும் பாடலும் தாளங்களும் தாளங்களின் வழிவரும் தூக்குக்களும் தம்மிற் கூடிய நெறியினவாக நிகழ்த்துமிடத்து, பிண்டியும் பிணையலும் எழிற்கையும் தொழிற்கையும் கொண்டவகையறிந்து – பிண்டி பிணையல் எழிற்கை தொழிற்கை என்று சொல்லப்பட்ட நான்கினையும் கொள்ளுதற்குரிய வகையினை அறிந்து, கூத்து வருகாலை-இருவகைக் கூத்துக்களும் நிகழுமிடத்து, கூடை செய்த கை வாரத்துக் களைதலும், வாரம் செய்த கை கூடையிற் களைதலும்-கூடைக் கதியாகச் செய்த கை வாரக் கதியுட் புகாமலும், வாரக்கதியாகச் செய்த கை கூடைக்கதியுட் புகாமலும் களைதலும், பிண்டி செய்த கைஆடலிற் களைதலும், ஆடல் செய்த கை பிண்டியிற் களைதலும்-ஆடல் நிகழுங்கால் அவிநயம் நிகழாமலும், அவிநயம் நிகழுங்கால் ஆடல் நிகழாமலும் களைதலும் பேணி, குரவையும் வரியும் விரவல செலுத்தி-குரவைக் கூத்தும் வரிக் கூத்தும் தம்மில் விரவாதபடி செலுத்தி, ஆடற்கு அமைந்த ஆசான் தன்னொடும்-இவ்வாறு ஆடவும் ஆட்டுவிக்கவும் வல்ல ஆடலாசிரியனோடும்;

  அரும்பதவுரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் இருவகைக் கூத்து என்பதற்கு இருவகைப்பட்ட அகக்கூத்து என்றும், பலவகைக்கூத்து என்பதற்குப் பலவகைப்பட்ட புற நடங்கள் என்றும் பொருள் கூறினர். அவருள் முன்னவர், "இவ்வகைக் கூத்தாவன: தேசி, மார்க்கம் என விவை; "மார்க்கமென்பது வடுகின் பெயரே" என்றும், பின்னவர்: "இருவகைக் கூத்தாவன; வசைக்கூத்து, புகழ்க்கூத்து; வேத்தியல், பொதுவியல்; வரிக்கூத்து, வரிச்சாந்திக் கூத்து; சாந்திக் கூத்து, விநோதக்கூத்து; ஆரியம், தமிழ்; இயல்புக்கூத்து, தேசிக்கூத்து எனப் பலவகைய" என்றும், "ஈண்டு இருவகைக் கூத்தாவன: சாந்தியும், விநோதமும்" என்றும் விளக்கம் கூறினர். அகக்கூத்தெல்லாம் தேசி, மார்க்கம் என அடங்காமையாலும், வசை, வரி, விநோதம் முதலியன அகக்கூத்துள் அடங்காமையானும், இருவகைக் கூத்து என்பதற்கு அகமும் புறமுமாகிய இருவகைக் கூத்து என்றலே பொருத்தமாகும். இரண்டிரண்டாக எடுத்துக் காட்டியவை யெல்லாம் வெவ்வேறியல்பு பற்றி வேறு வேறு பெயரான் வழங்கப்படுவன வன்றி, வெவ்வேறு கூத்துக்களல்ல. இவ்வாற்றால் அவை யெல்லாவற்றையும், அகம், புறம் என்றாதல், வேத்தியல் பொதுவியல் என்றாதல், சாந்தி, விநோதம் என்றாதல் பாகுபடுத்தல் பொருந்தும்.
  வேத்தியல் – அரசர்க்காடுவது. பொதுவியல்-ஏனையோர்க்காடுவது. வேத்தியலை அகமென்றும், பொதுவியலைப் புறமென்றும் கூறுவாருமுளர்.

   "சாந்திக் கூத்தே தலைவ னின்பம்
   ஏந்திநின் றாடிய வீரிரு நடமவை
   சொக்க மெய்யே யவிநய நாடகம்
   என்றிப் பாற்படுஉ மென்மனார் புலவர்"

  என்பதனால், சாந்திக்கூத்து நால்வகைப்படும்; அவற்றுள், சொக்கம் என்பது சுத்த நிருத்தம்; ஆவது தாள லயத்தை ஆதாரமாக வுடையது. மெய்க்கூத்து என்பது மெய்த்தொழிற் கூத்து என்றும், அது தேசி, வடுகு சிங்களம் என மூவகைப்படும் என்றும் கூறுவர். இஃது உள்ளக் குறிப்பை ஆதாரமாகக் கொண்டது போலும். அவிநயக் கூத்து என்பது கதை தழுவாது பாட்டின் பொருளுக்குக் கை காட்டி வல்லபஞ் செய்யுங் கூத்து. நாடகம் என்பது கதை தழுவி வருங்கூத்து. இந்நான்கினும் இறுதிக் கண் நின்ற நாடகம் சிறந்ததாதல் ஓர்ந்துணர்க. இவையாவும் நாயகன் சாந்தமாக ஆடிய கூத்தாதலின் சாந்திக் கூத்தெனப்படும் என்பர்.
  விநோதக் கூத்து என்பதில் குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு,தோற்பாவை என்பன அடங்குமென்பர். அவற்றுள்,
  குரவை என்பது காமமும் வென்றியும் ரொருளாகக் குரவைச் செய்யுள் பாட்டாக எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கைபிணைந்தாடுவது.
  கலிநடம் என்பது கழாய்க்கூத்து.
  குடக்கூத் தென்பது பதினோராடலுள் ஒன்று
  கரணமாவது படிந்தவாடல்.
  நோக்கென்பது பாரமும் நுண்மையும் மாயமும் முதலாயினவற்றை யுடையது.
  தோற்பாவை யென்பது தோலாற்பாவை செய்து ஆட்டுவிப்பது.
  இன்னும் நகைத்திறச் சுவையுடைய விதூடகக் கூத்தினோடு ஏழென்பாரும், வெறியாட்டு முதலாகத் தெய்வமேறி யாடுங் கூத்தினைக் கூட்டி ஏழென்பாரு முளர். விதூடகக் கூத்து வசைக்கூத்து; அது வேத்தியல், பொதுவியல் என இரண்டு வகைப்படுமென்பர்.

  ௧உ. இருவகைக் கூத்தின் இலக்கணங்களாவன: "அறுவகை நிலையும் ஐவகைப் பாதமும் ஈரெண் வகைய அங்கக் கிரியையும், வருத்தனை நான்கும் நிருத்தக்கை முப்பதும், அத்தகு தொழில வாகுமென்ப" என்றோதப்பட்டன.

  ௧௩. பலவகைக் கூத்தும் என்றது மேலே கூறப்பட்ட அகக்கூத்து முதலியவற்றுடன் வென்றிக் கூத்தும், வசைக்கூத்து மாகும். "பல்வகை யென்பது பகருங்காலை, வென்றி வசையோ விநோத மாகும்."என்பதொரு சூத்திரங் காட்டுவர்; அவற்றுள் "மாற்றா னொடுக்கமும் மன்ன னுயர்ச்சியும், மேற்படக்கூறும் வென்றிக் கூத்தே" எனவும், "பல்வகை யுருவமும் பழித்துக் காட்ட, வல்ல னாதல் வசையெனப் படுமே" எனவும் வென்றி, வசைக்கூத்துகட்கு இலக்கணங் கூறுவர்.
  விலக்கினின் – விலக்குறுப்போடு: வேற்றுமை மயக்கம். விலக்குறுப்பு என்ற சொற்குப் பொருள் வேந்து விலக்கு, படைவிலக்கு, ஊர்விலக்கு என்னும் விலக்குகளாகிய பாட்டுக்களுக்கு உறுப்பாயி வருவது என்றும், தலைவன் செலுத்துகின்ற கதையை விலக்கியும் அக்கதையை நடாத்தியும் முன்பு செய்த கதைக்கே உறுப்பாகுவது என்றுங் கூறுவர்;

   "விலக்குறுப் பென்பது விரிக்குங் காலைப்
   பொருளும் யோனியும் விருத்தியுஞ் சந்தியும்
   சுவையுஞ் சாதியுங் குறிப்புஞ் சத்துவமும்
   அவிநயஞ் சொல்லே சொல்வகை வண்ணமும்
   வரியுஞ் சேதமும் உளப்படத் தொகைஇ
   இசைய வெண்ணி னீரே ழுறுப்பே"

  என்னுஞ் சூத்திரத்தால், விலக்குறுப்புக்கள் பதினான்கு வகையினவாதல் பெறப்படும்.
  இப்பதினான்கனுள் பொருள், சாதி, யோனி, விருத்தி என்னும் நான்கும் ஒருவகையும்; சுவை, குறிப்பு, சத்துவம், அவிநயம் என்னும் நான்கும் ஒருவகையும்; சொல், சொல்வகை, வண்ணம், வரி என்னும் நான்கும் ஒருவகையும்; சந்தி, சேதம் என்னும் இரண்டும் ஒருவகையுமாகப் பாகுபடும்.
  அவற்றுள், பொருள் நான்கு வகைப்படும்; அவை: அறம், பொருள், இன்பம், வீடு என்பன. இவை நாடகத்திற் கூடியும் குறைந்தும் வருமிடத்து நாடகம், பிரகரணப் பிரகரணம், பிரகரணம், அங்கம் எனப் பெயர் வேறுபடும். அறமுதல் நான்கும் அமைந்தது முதலதும், அறம் பொருள் இன்பம் அமைந்தது இரம்டாவதும், அறம் பொருள் அமைந்தது மூன்றாவதும், அறமொன்றும் அமைந்தது நான்காவதும் ஆம்; இவை நான்கும் நாடகமே.
  இவைதாம் முறையே அந்தணர் முதலிய சாதிகளாகவும் கூறப்படும்.
  யோனியாவது பொருள் தோன்றுமிடம் உள்ளோன் தலைவனாக உள்ளதொரு பொருண் மேற்செய்தலும், இல்லோன் தலைவனாக உள்ளதொரு பொருண்மேற் செய்தலும், உள்ளோன் தலைவனாக இல்லதொரு பொருண்மேற் செய்தலும், இல்லோன் தலைவனாக இல்லதொரு பொருண்மேற் செய்தலும் என அது நான்கு வகைப்படும். என்னை?

   "உள்ளோற் குள்ளதும் இல்லோற் குள்ளதும்
   உள்ளோற் கில்லதும் இல்லோற் கில்லதும்
   எள்ளா துரைத்தல் யோனி யாகும்."

  என்றாராகலின்.
  விருத்தியாவது நாடகத்தின் இயல்பு அல்லது தன்மை. சாத்துவதி, ஆரபடி, கைசிகி, பாரதி என விருத்தி நால்வகைப்படும். அவற்றுள், சாத்துவதி யென்பது அறம் பொருளாகத் தெய்வமானிடர் தலைவராக வருவது. ஆரபடி யென்பது பொருள் பொருளாக வீரராகிய மானிடர் தலைவராக வருவது. கைசிகி யென்பது காமம் பொருளாகக் காமுகராகிய மக்கள் தலைவராக வருவது. பாரதியாவது கூத்தன் தலைவனாக நடன் நடி பொருளாகக் காட்டியும் உரைத்தும் வருவது. சுவை ஒன்பது வகைப்படும்: அவை: வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், வெகுளி, நகை, சமநிலை என்பன. வேம்பென்னும் பொருளும் நாவென்னும் பொறியும் கூடியவழி நாவால் உணரப்படும் கைப்புச்சுவை போலச் சுவைக்கப்படும் பொருளும் அதனைச் சுவைக்கும் பொறியும் கூடியவழிப்பிறக்கும் பொறியுணர்வு சுவையெனப்படும்.
  குறிப்பாவது: அச்சுவை யுணர்வு மனத்துட் பட்டவழி உள்ளத்தே நிகழுங் குறிப்பாகும்.
  சத்துவமாவது: உள்ளத்து நிகழும் குறிப்பினுக்கேற்ப உடம்பின்கண் நிகழும் வேறுபாடு. இது விறல் எனவும் படும். மெய்ம்மயிர் சிலிர்த்தல், கண்ணீர் வார்தல், நடுக்கமடுத்தல், வியர்த்தல், தேற்றம், களித்தல், விழித்தல், வெதும்பல், சாக்காடு, குரற்சிதைவு எனச் சத்துவம் பத்து வகைப்படும் என்பர். வடநூலார் சத்துவத்தை எண்வகைப்படுத்துச் சிறிது வேறுபட வுரைப்பர். சுவைப்பொருள், பொறியுணர்வு,குறிப்பு, விறல் என்னும் நான்குங் கூடியபொழுது
  சுவையென்னும் மெய்ப்பாடு தோன்றும்.
  ஒன்பான் சுவைகட்குரிய விறல்கள் அவ்வச் சுவை யவிநயங்கள் எனவும் படும். அவற்றைப் பின்வருஞ் சூத்திரங்களால் அறிக:
  " வீரச்சுவை யவிநயம் விளம்புங் காலை, முரிந்த புருவமுஞ் சிவந்த கண்ணும், பிடித்த வாளுங் கடித்த வெயிறும், மடித்த வுதடுஞ் சுருட்டிய நுதலும், திண்ணென வுற்ற சொல்லும் பகைவரை, எண்ணல் செல்லா விகழ்ச்சியும், பிறவும், நண்ணு மென்ப நன்குணர்ந்தோரே."
  "அச்ச வவிநயம் ஆயுங் காலை, ஒடுங்கிய வுடம்பும் நடுங்கிய நிலையும், மலங்கிய கண்ணுங் கலங்கிய வுளனும், கரந்துவர லுடைமையுங் கையெதிர் மறுத்தலும், பரந்த நோக்கமு மிசைபண் பினவே."
  "இழிப்பி னவிநயம் இயம்பும் காலை, இடுங்கிய கண்ணு மெயிறு புறம்போதலும், ஒடுங்கிய முகமு முஞற்றாக் காலும் சோர்ந்த யாக்கையுஞ் சொன்னிரம் பாமையும், நேர்ந்தன வென்ப நெறியறிந்தோரே."
  "அற்புத அவிநயம் அறிவரக் கிளப்பின், சொற்சோர் வுடையது சோர்ந்த கையது, மெய்ம்மயிர் குளிர்ப்பது வியத்தக வுடையது, எய்திய திமைத்தலும் விழித்தலு மிகவாதென், றையமில் புலவ ரறைந்தனரென்ப"
  "காம வவிநயங் கருதுங் காலைத் தூவுள் ளுறுத்த வடிவுந் தொழிலும், காரிகை கலந்த கடைக்கணுங், கவின்பெறு மூரல் முறுவல் சிறு நிலா வரும்பலும், மலர்ந்த முகனு மிரந்தமென் கிளவியும், கலந்தன பிறவுங் கடைப்பிடித் தனரே."
  "அவலத் தவிநயம் அறிவரக் கிளப்பின் கவலையொடு புணர்ந்த கண்ணீர் மாரியும், வாடிய நீர்மையும் வருந்திய செலவும், பீடழி யிடும்பையும் பிதற்றிய சொல்லும் நிறைகை யழிதலும் நீர்மையில் கிளவியும், பொறையின் முகலும் புணர்த்தினர் புலவர்."
  "வெகுளிச்சுவை யவிநயத்தை உணர்த்துஞ் சூத்திரம் சிதைந்து விட்டது. " கைபிசையா வாய்மடியாக் கண்சிவவா வெய்துயிரா, மெய்குலையா வேரா வெகுண்டெழுந்தான்"என்னும் தண்டியலங்கார மேற்கோளால் அதனையறிக.
  "நகையி னவிநயம் நாட்டுங் காலை, மிகைபடு நகையது பிறர்நகையுடையது, கோட்டிய முகத்தது..... விட்டுமுரி புருவமொடு விலாவுறுப்புடையது, செய்வது பிறிதாய் வேறுசே திப்பதென், றையமில் புலவரறைந்தன ரென்ப."
  "நாட்டுங் காலை, நடுவுநிலை யவிநயம், கோட்பா டறியாக் கொள் கையு மாட்சியும், அறந்தரு நெஞ்சமும் ஆறிய விழியும், பிறழ்ந்த காட்சி நீங்கிய நிலையும், குறிப்பின் றாகலுந் துணுக்க மில்லாத் தகைமிக வுடைமையுந் தண்ணென வுடைமையும், அளத்தற் கருமையு மன்பொடு புணர்தலும், கலக்கமொடு புணர்ந்த நோக்குங் கதிர்ப்பும், விலக்காரென்ப வேண்டு மொழிப்புலவர்."
  அவிநயம் என்பது பாவகம். முற்குறித்த சுவைநிலை யவிநயங்களன்றி, வேறு இருபத்து நான்கு அவிநயங்கள் உள. அவை: வெகுண்டோன் அவிநயம். ஐயமுற்றோன் அவிநயம், சோம்பினோன் அவிநயம், களித்தோன் அவிநயம், உவந்தோன் அவிநயம், அழுக்காறுடையோன் அவிநயம், இன்பமுற்றோன் அவிநயம், தெய்வமுற்றோன் அவிநயம், ஞஞ்ஞையுற்றோன் அவிநயம், உடன்பட்டோன் அவிநயம், உறங்கினோன் அவிநயம், துயிலுணர்ந்தோன் அவிநயம், செத்தோன் அவிநயம், மழை பெய்யப்பட்டோன் அவிநயம், பனித்தலைப்பட்டோன் அவிநயம், வெயிற்றலைப்பட்டோன் அவிநயம், நாணமுற்றோன் அவிநயம், வருத்தமுற்றோன் அவிநயம் கண்ணோவுற்றோன் அவிநயம், தலைநோவுற்றோன் அவிநயம், அழற்றிறம்பட்டோன் அவிநயம், சீதமுற்றோன் அவிநயம், வெப்பமுற்றோன் அவிநயம், நஞ்சுண்டோன் அவிநயம் என்பன. இவையனைத்திற்கும் அடியார்க்கு நல்லார் காட்டிய நூற்பாக்கள் வருமாறு:
  "வெகுண்டோன் அவிநயம் விளம்புங் காலை, மடித்த வாயு மலர்ந்த மார்புந், துடித்த புருவமுஞ் சுட்டிய விரலும், கன்றின உள்ளமொடு கையுடைத் திடுதலும், அன்ன நோக்கமோ டாய்ந்தனர் கொளலே."
  "பொய்யில் காட்சிப் புலவோர் ஆய்ந்த, ஐய முற்றோன் அவிநயம் உரைப்பின், வாடிய உறுப்பும் மயங்கிய நோக்கமும், பீடழி புலனும் பேசா திருத்தலும், பிறழ்ந்த செய்கையும் வான்றிசை நோக்கலும், அறைந்தனர் பிறவும் அறிந்திசினோரே."
  "மடியின் அவிநயம் வகுக்குங் காலை, நொடியொடு பலகொட்டாவி மிக வுடைமையும், மூரி நிமிர்த்தலும் முனிவொடு புணர்த்தலுங், காரணமின்றி யாழ்ந்து மடிந் திருத்தலும், பிணியு மின்றிச் சோர்ந்த செலவோ, டணிதரு புலவர் ஆய்ந்தன ரென்ப."
  "களித்தோன் அவிநயம் கழறுங் காலை, ஒளித்தலை ஒளியான் உரைத்த லின்மையும், கவிழ்ந்துஞ் சோர்ந்துந் தாழ்ந்துத் தலர்ந்தும், வீழ்ந்த சொல்லொடு மிழற்றிச் சாய்தலும், களிகைக் கவர்ந்த கடைக்கணோக் குடைமையும், பேரிசை யாளர் பேணினர் கொளலே."
  "உவந்தோன் அவிநயம் உரைக்குங் காலை, நிவந்தினி தாகிய கண்மல ருடைமையும், இனிதி னியன்ற உள்ள முடைமையும், முனிவினகன்ற முறுவனகை யுடைமையும், இருக்கையுஞ் சேறலுங் கானமும் பிறவும், ஒருங்குட னமைந்த குறிப்பிற் றன்றே."
  "அழுக்கா றுடையோன் அவிநயம் உரைப்பின், இழுக்கொடு புணர்ந்த இசைப்பொருளுடைமையுங், கூம்பிய வாயுங் கோடிய உரையும், ஓம்பாது விதிர்க்கும் கைவகை யுடைமையும், ஆரணங் காகிய வெகுளி உடைமையுங், காரண மின்றி மெலிந்தமுக முடைமையு, மெலிவொடு புணர்ந்த இடும்பையு மேவரப் பொலியு மென்ப பொருந்து மொழிப்புலவர்";
  "இன்பமொடு புணர்ந்தோன் அவிநயம் இயம்பின், துன்பம் நீங்கித் துவர்த்த யாக்கையுந், தயங்கித் தாழ்ந்த பெருமகிழ் வுடைமையும், மயங்கி வந்த செலவுநனி யுடைமையும், அழகுள் ளுறுத்த சொற்பொலி வுடைமையும் எழிலொடு புணர்ந்த நருமலருடைமையும் கலங்கள் சேர்ந்தகன்ற தோண்மார் புடைமையும், நலங்கெழு புலவர் நாடின ரென்ப";
  "தெய்வமுற்றோன் அவிநயம் செப்பிற், கைவிட்டெறிந்த கலக்க முடைமையும், மடித்தெயிறு கௌவிய வாய்த்தொழி லுடைமையும், துடித்த புருவமுந் துளங்கிய நிலையுஞ், செய்ய முகமுஞ் சேர்ந்த செருக்கும், எய்து மென்ப இயல்புணர்ந்தோரே";
  "ஞஞ்ஞை யுற்றோ னவிநயம் நாடில், பன்மென் றிறுகிய நாவழி வுடைமையும், நுரைசேர்ந்து கூம்பும் வாயும் நோக்கினர்க், குரைப்போன் போல உணர்வி லாமையும், விழிப்போன் போல விழியா திருத்தலும், விழுத்தக வுடைமையும் ஒழுக்கி லாமையும், வயங்கிய திருமுகம் அழுங்கலும் பிறவும், மேவியதென்ப விளங்குமொழிப் புலவர்";
  "சிந்தையுடம் பட்டோன் அவிநயம் தெரியின், முந்தை யாயினும் உணரா நிலைமையும், பிடித்த கைமேல் அடைந்த கவினும், முடித்தலுறாத கரும நிலைமையுஞ், சொல்வது யாதும் உணரா நிலைமையும், புல்லு மென்ப பொருந்துமொழிப்புலவர்";
  "துஞ்சா நின்றோன் அவிநயம் துணியின், எஞ்சாத லின்றி இருபுடை மருங்கு, மலர்ந்துங் கவிழ்ந்தும் வருபடை யியற்றியு மலர்ந்துயிர்ப் புடைய ஆற்றலுமாகும்.";
  "இன்னுயி லுணர்ந்தோன் அவிநயம் இயம்பின், ஒன்றிய குறுங் கொட்டாவியும் உயிர்ப்புந் தூங்கிய முகமுந் துளங்கிய உடம்பும், ஓங்கிய திரிபும் ஒழிந்தவுங் கொளலே.";
  "செத்தோன் அவிநயம் செப்புங் காலை, அத்தக அச்சமும் அழிப்பும் ஆக்கலும், கடித்த நிரைப்பலின் வெடித்துப் பொடித்துப், போந்த துணி வுடைமையும்
  வலித்த உறுப்பும், மெலிந்த வகடு மென்மைமிக வுடைமையும், வெண்மணி தோன்றக் கருமணி கரத்தலும், உண்மையிற் புலவர் உணர்ந்த வாறே";
  " மழைபெய்யப் பட்டோன் அவிநயம் வகுக்கின், இழிதக வுடைய தியல்புநனி யுடைமையும்,மெய்கூர் நடுக்கமும் பிணித்தலும் படாத்தை, மெய்பூண் டொடுக்கிய முகத்தொடு புணர்த்தலும், ஒளிப்படு மனனிலுலறிய கண்ணும், விளியினுந் துளியினு மடிந்தசெவி யுடைமையுங் கொடுகி விட்டெறிந்த குளிர்மிக வுடைமையும், நடுங்கு பல்லொலி யுடைமையு முடியக், கனவுகண் டாற்றா னெழுதலு முண்டே";
  "பனித்தலைப் பட்டோன் அவிநயம் பகரின், நடுக்க முடைமையும் நகைபடு நிலைமையுஞ், சொற்றளர்ந் திசைத்தலு மற்றமி லவதியும், போர்வை விழைதலும் புந்திநோ வுடைமையும், நீறாம் விழியுஞ் சேறு முனிதலும், இன்னவை பிறவும் இசைத்தனர் கொளலே";
  "உச்சிப் பொழுதின் வந்தோன் அவிநயம், எச்ச மின்றி இயம்புங் காலைச் சொரியா நின்ற பெருந்துய ருழந்து, தெரியா நின்ற உடம்பெரி யென்னச் சிவந்த கண்ணும் அயர்ந்த நோக்கமும், பயந்த தென்ப பண்புணர்ந்தோரே";
  "நாண முற்றோன் அவிநயம் நாடின், இறைஞ்சிய தலையும் மறைந்த செய்கையும், வாடிய முகமும் கோடிய உடம்பும், கெட்ட வொளியும் கீழ்க்கண் ணோக்கமும், ஒட்டின ரென்ப உணர்ந்திசி னோரே"; "வருத்த முற்றோன் அவிநயம் வகுப்பிற், பொருத்த மில்லாப் புன்க ணுடைமையுஞ், சோர்ந்த யாக்கையுஞ்
  சோர்ந்த முடியுங், கூர்ந்த வியர்வுங் குறும்பல் லுயாவும், வற்றிய வாயும் வணங்கிய உறுப்பும் உற்றதென்ப உணர்ந்திசி னோரே";
  "கண்ணோ வுற்றோன் அவிநயம் காட்டி, னண்ணிய கண்ணீர்த் துளிவிரல் தெறித்தலும், வளைந்தபுரு வத்தொடு வாடிய முகமும், வெள்ளிடை நோக்கின் விழிதரு மச்சமுந், தெள்ளிதிற் புலவர் தெளிந்தனர் கொளலே";
  "தலைநோ வுற்றோன் அவிநயம் சாற்றின், நிலைமை யின்றித்தலையாட்டுடைமையுங், கோடிய விருக்கையுந் தளர்ந்த வேரொடு, பெருவிரலிடுக்கிய நுதலும் வருந்தி, ஒடுங்கிய கண்ணொடு பிறவுந், திருந்துமென்ப செந்நெறிப் புலவர்";
  "அழற்றிறம் பட்டோன் அவிநயம் உரைப்பின், நிழற்றிறம் வேண்டும் நெறிமையின் விருப்பும், அழலும் வெயிலுஞ்,சுடரும் அஞ்சலும், நிழலும் நீருஞ் சேறு முவத்தலும், பனிநீ ருவப்பும் பாதிரித் தொடையலும், நுனிவிர லீர மருநெறி யாக்கலும், புக்க துன்போடு புலர்ந்த யாக்கையும், தொக்க தென்ப துணிவறிந் தோரே";
  "சீத முற்றோன் அவிநயம் செப்பின், ஒதிய பருவர லுள்ளமோ டுழத்தலு, மீர மாகிய போர்வை யுறுத்தலு, மார வெயிலுழந் தழலும் வேண்டலு முரசியு முரன்று முயிர்த்து முரைத்தலுந், தக்கன பிறவுஞ் சாற்றினர் புலவர்";
  "வெப்பின் அவிநயம் விரிக்குங் காலைத் தப்பில் கடைப்பிடித் தன்மையுந் தாகமும், எரியி னன்ன வெம்மையோ டியைவும், வெருவரு மியக்கமும் வெம்பிய விழியும் நீருண் வேட்கையு நிரம்பா வலியும், ஓருங் காலை உணர்ந்தனர் கொளலே";
  "கொஞ்சிய மொழியிற் கூரெயிறு மடித்தலும், பஞ்சியின் வாயிற் பனிநுரை கூம்பலுந், தஞ்ச மாந்தர் தம்முக நோக்கியோர், இன்சொலியம்புவான் போலியம் பாமையும், நஞ்சுண் டோன்றன் அவிநயம் என்ப";
  " சொல்லிய வன்றியும் வருவன வுளவெனிற், புல்லுவழிச் சேர்த்திப் பொருந்துவழிப் புணர்ப்ப;"
  இனி, சொல் என்னும் உறுப்பு மூன்று வகைப்படும். அவை , உட்சொல், புறச்சொல், ஆகாயச் சொல் என்பன. நெஞ்சொடு கூறல் உட்சொல்லும், கேட்போர்க்குரைத்தல் புறச்சொல்லும், தானே கூறல் ஆகாயச்சொல்லும் ஆம்.
  சொல்வகை நான்கு வகைப்படும். அவை : சுண்ணம், சுரிதகம், வண்ணம், வரிதகம் என்பன. அவற்றுள், சுண்ணம் நான்கடியான் வருவது; சுரிதகம் எட்டடியான் வருவது; வண்ணம் பதினாறடியான் வருவது; வரிதகம் முப்பத்திரண்டடியான் வருவது.
  வண்ணமானது ஒரு வகையான் பெருவண்ணம், இடைவண்ணம், வனப்புவண்ணமென மூன்று வகைப்படுமென்றும், அவற்றுள், பெருவண்ணம் ஆறாயும், இடைவண்ணம் இருபத்தொன்றாயும், வனப்புவண்ணம் நாற்பத்தொன்றாயும் வருமென்றுங் கூறுவர். ஆசிரியர் தொல்காப்பியனார் இருபது வண்ணங் கூறினர். நூறுவண்ணங் கூறினாருமுளர்.
  வரியாவது : வரிக்கூத்துக்குரிய பாடல்.
  "வரிப்பாடலாவது : பண்ணும், திறமும், செயலும், பாணியும் ஒரு நெறியன்றி மயங்கச் சொல்லப்பட்ட எட்டனியல்பும், ஆறனியல்பும் பெற்றுத், தன் முதலும் இறுதியுங் கெட்டு, இயல்பும் முடமுமாக முடிந்து கருதப்பட்ட சந்தியும் சார்த்தும் பெற்றும் பெறாதும் வரும்" என்றும் கூறுவர் அரும்பதவுரை யாசிரியர். வரிப்பாட்டுக்கள் திணை நிலைவரி, கிணைநிலை வரி எனவும் முகமுடை வரி, முகமில் வரி, படைப்பு வரி எனவும் அவை பலவாகவும் பாகுபாடெய்தும். அவற்றினியல்பெல்லாம் பின்னர், கானல்வரியுள்ளும் வேனிற்காதையுள்ளும் விளங்கலுறும்.
  இனி, சந்தியென்பது நாட்டியக் கட்டுரையின் பிரிவுகள் ஒன்றோடொன்று தொடர்ந்து நிற்கும் நிலை. அது, முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல் என ஐவகைப்படும். அவற்றுள் முகமாவது எழுவகைப்பட்ட உழவினாற் சமைக்கப்பட்ட பூழியுள் இட்ட வித்துப் பருவஞ் செய்து முளைத்து முடிவது போல்வது: பிரதிமுகமாவது அங்ஙனம் முளைத்தல் முதலாய் இலைதோன்றி நாற்றாய் முடிவது போல்வது;
  கருப்பமாவது அந் நாற்று முதலாய்க் கருவிருந்து பெருகித் தன்னுட் பொருள் பொதிந்து கருப்பமுற்றி நிற்பது போல்வது; விளைவாவது கருப்ப முதலாய் விரிந்து கதிர் திரண்டிட்டுக் காய் தாழ்ந்து முற்றி விளைந்து முடிவது போல்வது; துய்த்தலாவது விளையப்பட்ட பொருளை அறுத்துப் போரிட்டுக் கடாவிட்டுத் தூற்றிப் பொலிசெய்து கொண்டு போய் உண்டு மகிழ்வது போல்வது. வித்து, நாற்று, கரு, விளைவு, துய்த்தல் என்பன ஒன்றினொன்று தொடர்ந்து முடிதல்போல நாடகத்திற்குரிய கதை ஐந்து பகுதியாய் ஒன்றினொன்று தொடர்ந்து முடியவேண்டும் என்றபடி. இவ்வுறுப்பு,நாடகத்திற் கின்றியமையாத தொன்றென்க.
  சேதம் என்பது ஆதிக் கதையை ஆரியம், தமிழ் என்னும் இருவகைக் கூத்திற்கேற்பச் சேதித்திடுவது என்பர்.

   "ஆரியந் தமிழெனுஞ் சீர்நட மிரண்டினும்
   ஆதிக் கதையை யவற்றிற் கொப்பச்
   சேதித் திடுவது சேதமென் றாகும்"

  என்பது காண்க. "விலக்கினிற் புணர்த்து" என்பதனாற் குறிக்கப்பட்ட விலக்குறுப்புக்கள் இதுகாறும் உணர்த்தப்பட்டன.

  ௧௪. பதினோராடலாவன : அசுரரைக் கொல்ல அமரராடிய பதினொரு கூத்துக்கள். அவற்றை,

   "கடையமயி ராணிமரக் கால்விந்தை கந்தன்
   குடைதுடிமா வல்லியமற் கும்பம்-சுடர்விழியாற்
   பட்டமதன் பேடுதிருப் பாவையரன் பாண்டரங்கம்
   கொட்டியிவை காண்பதினோர் கூத்து"

  என்பதனாலறிக. இவை நின்றாடல், படிந்தாடல் என இருவகையின.

   "அல்லியங் கொட்டி குடைகுடம் பாண்டரங்கம்
   மல்லுட னின்றாட லாறு"

   " துடிகடையம் பேடு மரக்காலே பாவை
   வடிவுடன் வீழ்ந்தாட லைந்து."

  இக்கூத்து ஒவ்வொன்றும் எவ்வெக்காரணம் பற்றி எவ்வெவ்விடத்து நிகழ்த்தப்பட்டன வென்பது பின்னர்க் கடலாடு காதையால் விளக்கமாம்.


  ௧௪. பாட்டு என்றது அக நாடகங்களுக்கும், புறநாடகங்களுக்கு முரிய உருக்களை. அக நாடகங்களுக்குரிய உருவாவன: கந்த முதல் பிரவந்தவுரு வீறாக இருபத்தெட்டும். இவற்றுள், கந்தமென்பது அடி வரையறை யுடைத்தாய் ஒரு தாளத்தாற் புணர்ப்பது; பிரபந்தமென்பது அடிவரையறையின்றிப் பல தாளத்தாற் புணர்ப்பது. புறநாடகங்களுக்குரிய உருவாவன: தேவபாணி முதலாக அரங்கொழி செய்யுளீறாகச் செந்துறை விகற்பங்க ளெல்லாமென்க.


  ௧௪. கொட்டு – கொட்டப்படும் வாச்சியங்கள். அவை கீதாங்கம், நிருத்தாங்கம், உபயாங்கம் என்பன. அவற்றுள் கீதாங்கம் கீதத்திற்கு வாசிப்பது; நிருத்தாங்கம் நிருத்தத்திற்கு வாசிப்பது; உபயாங்கம் இரண்டிற்கும் வாசிப்பது.


  ௧௫. கொள்கை-நூல், ஆங்கு : அசை.


  ௧௬. ஆடல் – முற்கூறிய அகக்கூத்திலும் புறக்கூத்தினுமுள்ள ஆடல். கீற்று, கடிசரி முதலாகிய,தேசிக்குரிய கால்கள் இருபத்து நான்கும், சுற்றுதல், எறிதல் முதலாகிய வடுகிற்குரிய கால்கள் பதினான்கும், உடற்றூக்கு முதலாகிய உடலவர்த்தனை ஒன்பதும் அக்கூத்துக் குரியன "சிங்களம் இருவகை நிலையினும் எய்தும்" என்பாரும், உடலவர்த்தனையைச் சிங்கள மென்பாருமுளர். எனவே, தமிழ், வடுகு, சிங்களம் என ஆடல் மூவகைப்படும் என்க.


  ௧௬. பாடல் – இன்பம், தெளிவு, நிறை, ஒளி, வன்சொல், இறுதி, மந்தம், உச்சம் என்னும் எண்வகைப் பயனுமுடைய பாடல்.


  ௧௬. பாணி-தாளம் : அது கொட்டு, அசை, தூக்கு, அளவு என நான்கு நிலையினையுடையது; கொட்டாவது அமுக்குதல்; அசையாவது தாக்கியெழுதல்; தூக்காவது தாக்கித் தூக்குதல்; அளவாவது தாக்கின வோசை நேரே மூன்று மாத்திரை பெறுமளவும் வருதல், கொட்டு அரை மாத்திரை: அதற்கு வடிவு, க; அசை ஒரு மாத்திரை; அதற்கு வடிவு, உ. அளவு மூன்று மாத்திரை; அதற்கு வடிவு ஃ எனக் கொள்க. கொட்டு முதலியவற்றின் வடிவைக் குறிக்க, ‘க’ முதலிய இடுகுறியாக நிறுத்தப்பெற்றன வென்க.

   "கொட்டும் அசையுந் தூக்கும் அளவும்
   ஒட்டப் புணர்ப்பது பாணி யாகும்"
   "ககரங் கொட்டே எகரம் அசையே
   உகரந் தூக்கே அளவே யாய்தம்"

  என்பன காண்க.

  அரை மாத்திரையுடைய ஏகதாளம் முதலாகப் பதினாறு மாத்திரையுடைய பார்வதி லோசனம் ஈறாகச் சொன்ன நாற்பத்தொரு தாளம் புறக்கூத்துக்குரிய வெனவும், ஆறன் மட்டம் என்பனவும், எட்டன் மட்டம் என்பனவும், தாளவொரியல் என்பனவும், தனிநிலை யொரியல் என்பனவும், ஒன்றன் பாணி எண்கூத்துப் பாணியீறாகக் கிடந்த பதினொருபாணி விகற்பங்களும், முதல்நடை, வாரம் முதலாயினவும் அகக்கூத்திற்குரிய வெனவும் கூறுவர்.


  ௧௬. தூக்கு-இத்தாளங்களின் வழிவரும் எழுவகைப்பட்ட தூக்குக்கள்; அவை செந்தூக்கு, மதலைத்தூக்கு, துணிபுத்தூக்கு, கோயிற்றூக்கு, நிவப்புத் தூக்கு, கழாற்றூக்கு, நெடுந்தூக்கு என்பன; என்னை? ஒருசீர் செந்தூக்கி ருசீர் மதலை, முச்சீர் துணிபு, நாற்சீர் கோயில், ஐஞ்சீர் நிவப்பே யறுசீர் கழாலே, எழுசீர் நெடுந்தூக் கென்மனார் புலவர்" என்றாராகலின்.


  ௧௭. கொளுத்துதல் – ஆட்டுவித்தல்.


  ௧௮. பிண்டி-ஒன்று; ஈண்டு ஒற்றைக்கைக்கு ஆகுபெயர். பிணையல்-இணைதல்; ஈண்டு இரட்டைக்கை. பிண்டி, ஒற்றைக்கை, இணையாவினைக்கை என்பன ஒரு பொருளன; பிணையல், இணைக்கை, இரட்டைக்கை என்பன ஒரு பொருளன. அவிநயக்கை இங்ஙனம் இருவகைப்படும். பிண்டி-பொருட்கையாம்; பிணையல்-தொழிற்கையாம் என்க. அவற்றுள் ஒற்றைக்கை முப்பத்து மூன்று வகைப்படும். அவை: பதாகை-௧, திரிபதாகை-௨, கத்தரிகை-௩, தூபம்-௪, அராளம்-௫, இளம்பிறை-௬, சுகதுண்டம்-௭, முட்டி-௮, கடகம்-௯, சூசி-௧0, கமல கோசிகம்-௧௧, காங்கூலம்-௧௨, கபித்தம்-௧௩, விற்படி-௧௪, குடங்கை-௧௫, அலாபத்திரம்-௧௬, பிரமரம்-௧௭, தாம்பிரசூடம்-௧௮, பசாகம்-௧௯, முகுளம்-௨0, பிண்டி-௨௧, தெரிநிலை-௨௨, மெய்ந்நிலை-௨௩, உன்னம்-௨௪, மண்டலம்-௨௫, சதுரம்-௨௬, மான்றலை-௨௭, சங்கு-௨௮, வண்டு-௨௯, இலதை-௩0, கபோதம்-௩௧, மகர முகம்-௩௨, வலம்புரி-௩௩ என்பன. இவற்றுள்,
  பதாகையாவது நான்கு விரலும் தம்முள் ஒட்டி நிமிரப் பெருவிரல் குஞ்சித்து நிற்பது.
  திரிபதாகை யாவது பதாகைக்கையின் அணிவிரல் முடக்குவது.
  கத்தரிகையாவது திரிபதாகையின் முடங்கிய அணிவிரற் புறத்ததாகிய நடுவிரலைச் சுட்டுவிரலோடு பொருந்த நிமிர்ப்பது.
  தூபமாவது நிமிர்ந்த நடுவிரலும் சுட்டு விரலும் பாதிப்பட வளைய நிற்பது.
  அராளமாவது பெருவிரல் குஞ்சித்துச் சுட்டுவிரல் முடக்கி ஒழிந்த விரன் மூன்றும் நிமிர்ந்து வளைவது.
  இளம்பிறையாவது சுட்டுவிரலும் நடுவிரலும் அணிவிரலையும் சிறு விரலையும் ஒட்டி அகம் வளைய வளைத்த பெருவிரல் அவற்றை விட்டு நீங்குவது. "சுட்டும் பேடும் அநாமிகை சிறுவிரல், ஒட்டி யகம் வளைய வொசித்த பெருவிரல், விட்டு நீங்கும் விதியிற் றென்ப."
  சுகதுண்டம் "சுகதுண்ட மென்பது தொழில்பெறக் கிளப்பின், சுட்டுவிரலும் பெருவிரல் தானும் ஒட்டி யுகிர்நுனை கவ்வி முன்வளைந் தநாமிகை முடங்கப் பேட்டொடு சிறுவிரல், தான்மிக நிமிர்ந்த தகுதித் தென்ப."
  அநாமிகை-அணிவிரல்; பவுத்திரவிரல். பேடு-நடுவிரல்.
  முட்டி : "முட்டி யென்பது மொழியுங் காலைச், சுட்டு நடுவிரல் அநாமிகை சிறுவிரல், இறுக முடக்கி யிவற்றின்மிசைப் பெருவிரல், முறுகப் பிடித்த முறைமைத் தென்ப."
  கடகம் : கடக முகமே கருதுங் காலைப், பெருவிர னுனியுஞ் சுட்டுவிர னுனியு, மருவ வளைந்தவவ் வுகிர்நுனி கௌவி, யொழிந்த மூன்றும் வழிவழி நிமிர, மொழிந்தன ரென்ப முடிபறிந் தோரே."
  சூசி : "சூசி யென்பது துணியுங் காலை நடுவிரல் பெருவிர லென்றிவை தம்மி, னடைவுட னொற்றிச் சுட்டுவிர னிமிர, வொழிந்தன வழிவழி முடங்கி நிற்ப, மொழிந்தனர் மாதோ முடிபறிந் தோரே."
  பதும கோசிகம் : "பதும கோசிகம் பகருங்காலை, யொப்பக் கைவளைத் தைந்து விரலு, மெயய்ப்பட வகன்ற விதியிற் றாகும்.
  காங்கூலமாவது : "காங்கூலம்மே கருதுங் காலைச், சுட்டும் பேடும் பெருவிரல் மூன்று மொட்டிமுன் குவிய வநாமிகை முடங்கிச், சிறு விர னிமிர்ந்த செய்கைத் தாகும்" "முகிழ்காங் கூல முந்துறமொழிந்த, குவிகாங் கூலங் குவிவிழந் ததுவே." "மலர்காங் கூல மதுமலர்ந்ததுவே."
  கபித்தமாவது: "சுட்டுவிர னுனியும் பெருவிரனுனியும் உகிர்நுனை கௌவிப் பிடித்த ஒழிந்த மூன்று விரலும் மெல்லெனப் பிடிப்பது.
  விற்பிடி : "விற்பிடி யென்பது விரிக்குங் காலைச், சுட்டொடு பேடியதாமிகை சிறுவிர, லொட்டி யகப்பால் வளையப் பெருவிரல், விட்டு நிமிரும் விதியிற்றாகும்".
  குடங்கையாவது எல்லா விரலுங் கூட்டி உட்குழிப்பது.
  அலாபத்திரமாவது சிறுவிரல் முதலாகிய வைந்தும் வளைந்து மறிவது.
  பிரமரமாவது அநாமிகை விரலும் நடுவிரலும் தம்மிற் பொருந்தி வலஞ்சாயப் பெருவிரல் நடுவிரலினுள்ளே சேரச் சுட்டு விரலும் சிறுவிரலும் பின்பே வளைந்து நிற்பது.
  தாம்பிரசூடமாவது நடுவிரலும் சுட்டுவிரலும் பெருவிரலும். தம்மில் நுனியொத்துக் கூடி வளைந்து சிறுவிரலும் அணிவிரலும் முடங்கி நிமிர்வது.
  பசாசமாவது பெருவிரலும் சுட்டுவிரலுமன்றி ஒழிந்த மூன்று விரலும் தம்மிற் பொலிந்து நிற்பதெனக் கொள்க.
  அப் பசாசந்தான் மூன்று வகைப்படும்:
  அகநிலைப் பசாசம்-சுட்டுவிர னுனியில் பெருவிர லகப்படுவது.
  முகநிலைப் பசாசம்- அவ்விரன் முகங்கூடி உகிர்விட்டு நிற்பது.
  உகிர்நிலைப் பசாசம்-சுட்டுவிரலும் பெருவிரலும் உகிர் நுனை கௌவி நிற்பது.
  முகுளமாவது ஐந்துவிரலுந் தம்மில் தலைகுவிந்து உயர்ந்து நிற்பது.
  பிண்டியென்றது சுட்டுவிரல் பேடிவிரல் அநாமிகை சிறுவிரல் ஒட்டி நெகிழ முடங்க அவற்றின்மேலே குறுக்கிடப் பெருவிரல் கட்டி விலங்கி விரல்வழி முறையொற்றல்.
  தெரிநிலையாவது எல்லாவிரலும் விரிந்து குஞ்சித்து நிற்பது.
  மெய்ந் நிலையாவது சிறுவிரலும் அணிவிரலும் நடுவிரலும் சுட்டு விரலும் விட்டுநிமிரச் சுட்டுவிரன்மேற் பெருவிரல் சேரவைப்பது.
  உன்னமாவது சிறுவிரலும் பெருவிரலும் தம்முட்கூட ஒழிந்த மூன்று விரலும் விட்டு நிமிர்வது.
  மண்டலம் : "மண்டலமென்பது மாசறக் கிளப்பிற், பேடு நுனியும் பெருவிர னுனியுங், கூடி வளைந்துதம் முகிர் நுனை கௌவி, யொழிந்த மூன்று மொக்க விளைவதென, மொழிந்தன ரென்ப முழுதுணர்ந்தோரே."
  சதுரமாவது சுட்டு விரலும் நடுவிரலும் அணிவிரலும் தம்முட் சேர்ந்து இறைஞ்சப் பெருவிரல் அகம் தர வைத்துட் சிறுவிரல் பின்பே நிமிர்ந்து நிற்பது.
  மான்றலையாவது பெருவிரலுஞ் சிறுவிரலு மொழிந்த மூன்றுந் தம்மில் ஒத்து ஒன்றி முன்னே இறைஞ்சி நிற்பது.
  சங்கமாவது பெருவிரல் நிமிர ஒழிந்த நான்குவிரலும் வளைந்து நிற்பது.
  வண்டாவது பெருவிரலும் அணிவிரலும் வளைந்து நுனியொன்றிச் சிறுவிரல் நிமிர்ந்து சுட்டுவிரலும் நடுவிரலும் நெகிழ வளைந்து நிற்பது.
  இலதையாவது நடுவிரலும் சுட்டுவிரலும் கூடிநிமிரப் பெருவிரல் அவற்றின் கீழ்வரை சேர ஒழிந்த இரண்டு விரலும் வழிமுறை பின்னே நிமிர்ந்து நிற்பது.
  கபோத மென்றது பதாகைக் கையிற் பெருவிரல் விட்டு நிமிர்வது.
  மகரமுகமாவது பெருவிரலும் சுட்டுவிரலும் நிமிர்ந்துகூட ஒழிந்த மூன்றுவிரலுந் தம்முளொன்றி அதற்கு வேறாய் நிற்பது.
  வலம்புரியாவது, சிறுவிரலும் பெருவிரலும் நிமிர்ந்து சுட்டுவிரலின் அகம் வளைந்து ஒழிந்த விரண்டும் நிமிர்ந்து இறைஞ்சி நிற்பது.
  இனி, இரட்டைக்கை பதினைந்து வகைப்படும். அவை: அஞ்சலி.௧, புட்பாஞ்சலி-௨, பதுமாஞ்சலி-௩, கபோதம்-௪, கற்கடகம்-௫, சுவத்திகம்-௬, கடகாவருத்தம்-௭, நிடதம்-௮, தோரம்-௯, உற்சங்கம்-௰, புட்பபுடம்-௧௧, மகரம்-௧௨, சயந்தம்-௧௩, அபயவத்தம்-௧௪, வருத்தமானம்-௧௫, இவற்றுள்,
  அஞ்சலியாவது : இரண்டு கையும் பதாகையாய் அகமொன்றுவது.
  புட்பாஞ்சலியாவது இரண்டு கையும் குடங்கையாய் வந்து ஒன்றுவது.
  கபோதமென்றது இரண்டு கையும் கபோதமாகக் கூட்டுவது.
  கற்கடக மென்றது தெரிநிலைக் கையிரண்டும் அங்குலி பிணைந்து வருவது.
  சுவத்திக மென்றது மணிக்கட்டிற் பொருந்திய பதாகையிரண்டையும் மணிக்கட்டி லேற்றி வைப்பது.
  கடகா வருத்தமாவது இரண்டு கையும் கடகமாய் மணிக்கட்டுக்கு ஏற இயைந்து நிற்பது.
  நிடதமாவது முட்டியாக இரண்டு கையும் சமஞ்செய்வது.
  தோரமாவது இரண்டு கையும் பதாகையாக்கி அகம்புர மொன்றி முன்தாழ்ந்து நிற்பது.
  உற்சங்கமாவது ஒருகை பிறைக்கையாகக் கொண்டு ஒருகை அராளமாக்கி இரண்டு கையும் மணிக்கட்டி லேற்றி வைப்பது.
  புட்பபுடமாவது குடங்கையிரண்டும் தம்மிற் பக்கங் காட்டி நிற்பது.
  மகரமென்றது கபோத மிரண்டு கையும் அகம்புற மொன்ற வைப்பது.
  சயந்தம் (விடுபட்டது)
  அபயமத்தமாவது. இருகையும் கைதுண்டமாக நெஞ்சுற நோக்கி நெகிழ்ந்து நிற்பது.
  வருத்தமானமாவது முகுளக் கையிற் கபோதக் கையை எதிரிட்டுச் சேர்ப்பது.
  ௧௮- எழிற்கை-அழகுபெறக் காட்டுங் கை. தொழிற்கை-தொழில் பெறக் காட்டுங்கை. பொருட்கை யென்பதும் வருவிக்கப் படும்; ஆவது, பொருளுறக் காட்டுங் கை.

  ௧௯. கொண்டவகை யறிதலாவது-பிண்டியும் பிணையலும் புறக்குத்துக் குரியகை யென்றும்; எழிற்கையும் தொழிற்கையும் அகக்கூத்துக்குரிய கை யென்றும் அறிதல்.

  ௨0-௧. கூடை, வாரம் என்பன சில தாளவிகற்பங்களுக்கும், இசைப்பாட்டுக்களின் இயக்கங்களுக்கும், அவிநயக்கைகட்கும், பிற சிலவற்றிற்கும் பெயர், ஈண்டு அவிநயக் கைகளை யுணர்த்தி நின்றன.
  கூடை-ஒற்றைக்கை; இரட்டை யொற்றைக் கையாகிய குவித்த கையையும் இது குறிக்கும். வாரம்-இரட்டைக்கை. அகக்கூத்து நிகழுமிடத்து ஒற்றையிற் செய்த கைத்தொழில் இரட்டையிற் புகாமலும் இரட்டையிற்செய்த கைத்தொழில் ஒற்றையிற் புகாமலும் களைதல். இன்னும் தேசியிற் கைத்தொழில் மார்க்கத்துப் புகாமலும், மார்க்கத்துக் கைத்தொழில் தேசியிற் புகாமலும் களைதலென்றுமாம்; ஒற்றையும் இரட்டையும் தேசிக் கூறாகலானும் இரட்டையும் இரட்டைக் கிரட்டையும் வடுகிற் கூறாகலானு மென்க.

  ௨௨-௩. பிண்டி-பொருட்கை, ஆடல்-பிணையல்; தொழிற்கை புறக்கூத்தில் ஆடல் நிகழுமிடத்து அவிநயம் நிகழாமலும், அவிநயம் நிகழுமிடத்து ஆடல் நிகழாமலும் களைதல்.

  ௨௪- குரவை-குரவைக்கூத்து; அது காமமும் வென்றியும் பொருளாகக் குரவைச் செய்யுள் பாட்டாக எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கைபிணைத்தாடுவது; அதன் இயல்பினை, "குரவை யென்பது கூறுங் காலைச், செய்தோர் செய்த காமமும் விறலும், எய்த வுரைக்கு மியல்பிற் றென்ப" என்பதனா னறிக.
  வரி-வரிக்கூத்து: அஃது அவரவர் பிறந்த நிலத்தன்மையும் பிறப்பிற்கேற்ற தொழிற் றன்மையும் தோன்ற நடித்தல். இதற்கு வரிச்செய்யுள் பாட்டாகும். டுவது வகுக்குங் காலைப், பிறந்த நிலனுஞ் சிறந்த தொழிலும், அறியக் கூறி யாற்றுழி வழங்கல்" என்பதனானறிக. வரிக்கூத்து ஒருவர் பெரும்பாலும் வேற்றுருத் தாங்கி நடிப்பது.
  இத் தொடர்நிலைச் செய்யுளின்கண், முல்லை சார்ந்து ஆய்ச்சியர் குரவையும், குறிஞ்சி சார்ந்து குன்றக்குரவையும், நெய்தல் சார்ந்து கானல்வரியும், பாலை சார்ந்து வேட்டுவ வரியும் , மருதஞ் சார்ந்து ஊர் சூழ்வரியும் நிகழ்ந்தனவாக அமைந்திருத்தல் அறியற்பாற்று.
  வரிக்கூத்தானது கண்கூடுவரி, கானல்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுத்துக்கோள்வரி என எண்வகைப்படும். இவற்றினியல்பெல்லாம் வேனிற் காதையால் விளக்கமாம். இனி, " இவ்வரியென்பதனைப் பல்வரிக் கூத்தென்பாருமுளர்" என்று கூறி, அடியார்க்கு நல்லார் அதற்கெடுத்துக் காட்டிய கலிவெண்பாட்டொன்றால் தமிழகத்தே பண்டை நாளில் வழங்கிய எத்தனையோ வகையான கூத்துக்களும் பாட்டுக்களும் புலனாகின்றன: அச்செய்யுள் பின்வருமாறு;

   " சித்துப் பிழுக்கை யுடன்சந்தி யோர்முலை
   கொந்தி கவுசி குடப்பிழுக்கை-கத்தன்பாட்
   டாலங்காட் டாண்டி பருமண னெல்லிச்சி
   சூலந் தருநட்டந் தூண்டிலுடன்-சீலமிகும்
   ஆண்டி யமண்புனவே டாளத்தி கோப்பாளி
   பாண்டிப் பிழுக்கையுடன் பாம்பாட்டி-மீண்ட
   கடவுட் சடைவீர மாகேசங் காமன்
   மகிழ்சிந்து வாமன ரூபம்-விகடநெடும்
   பத்திரங் கொற்றி பலகைவாள் பப்பரப்பெண்
   தத்தசம் பாரம் தகுணிச்சங்-- கத்து
   முறையீண் டிருஞ்சித்து முண்டித மன்னப்
   பறைபண் டிதன்புட்ப பாணம்-இறைபரவு
   பத்தன் குரவையே பப்பறை காவதன்
   பித்தனொடு மாணி பெரும்பிழுக்கை-எத்துறையும்
   ஏத்திவருங் கட்களி யாண்டு விளையாட்டுக்
   கோத்த பறைக்குடும்பு கோற்கூத்து-மூத்த
   கிழவன் கிழவியே கிள்ளுப் பிறாண்டி
   அழகுடைய பண்ணிவிக டாங்கந் திகழ்செம்பொன்
   அம்மனை பந்து கழங்காட லாலிக்கும்
   விண்ணகக் காளி விறற்கொந்தி-அல்லாத
   வாய்ந்த தனிவண்டு வாரிச்சி பிச்சியுடன்
   சாந்த முடைய சடாதாரி – ஏய்ந்தவிடை
   தக்கபிடார் நிர்த்தந் தளிப்பாட்டுச் சாதுரங்கந்
   தொக்க தொழில்புனைந்த சோணாண்டு மிக்க
   மலையாளி வேதாளி வாணி குதிரை
   சிலையாடு வேடு சிவப்புத் தலையில்
   திருவிளக்குப் பிச்சி திருக்குன் றயிற்பெண்
   டிருண்முகத்துப் பேதை யிருளன்-பொருமுகத்துப்
   பல்லாங் குழியே பகடி பகவதியான்
   நல்லார்தந் தோள்வீச்சு நற்சாழல்-அல்லாத
   உந்தி யவலிடி யூராளி யோகினிச்சி
   குந்திவரும் பாரன் குணலைக்கூத்-தந்தியம்போ
   தாடுங் களிகொய்யு முள்ளிப்பூ வையனுக்குப்
   பாடும்பாட் டாடும் படுபள்ளி-நாடறியுங்
   கும்பீடு நாட்டங் குணாட்டங் குணாலையே
   துஞ்சாத சும்மைப்பூச் சோனக-மஞ்சரி
   ஏற்ற வுழைமை பறைமைமுத லென்றெண்ணிக்
   கோத்தவரிக் கூத்தின் குலம்"

  --------------------
  (இசையாசிரியன் அமைதி)

   ௨௬-௩௬. யாழும் குழலும் சீரும் மிடறும்
   தாழ்குரல் தண்ணுமை ஆடலொடு இவற்றின்
   இசைந்த பாடல் இசையுடன் படுத்து
   வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கித்
   தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்துத்
   தேசிகத் திருவின் ஓசை எல்லாம்
   ஆசுஇன்று உணர்ந்த அறிவினன் ஆகிக்
   கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும்
   பகுதிப் பாடலும் கொளுத்துங் காலை
   வசைஅறு கேள்வி வகுத்தனன் விரிக்கும்
   அசையா மரபின் இசையோன் தானும்

  யாழும் குழலும் சீரும் மிடறும் தாழ்குரல் தண்ணுமை ஆடலொடு-யாழ்ப்பாடலும் வங்கியப் பாடலும் தாளக் கூறுபாடுகளும் மிடற்றுப் பாடலும் மந்தமாகிய சுரத்தினையுடைய தண்ணுமையும் கூத்துக்களும் வல்லனாய், இவற்றின் இசைந்த பாடல் இசையுடன் படுத்து-இவற்றுடனே சேரச்செய்த உருக்களை இசை கொள்ளும்படியும் சுவை பொருந்தும்படியும் புணர்க்கவும் வல்லனாய், வரிக்கும் ஆடற்க்கும் உரிப்பொருள் இயக்கி-செந்துறை வெண்டுறை என்னும் இருவகைப்பட்ட பாடல்களுக்கும் பொருளான இயக்கம் நான்கினையும் அமைத்து, தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்து-அழகுடைய தேசாந்தரங்களின் பாடைகளையும் அறிந்து, தேசிகத் திருவின் ஓசையெல்லாம் ஆசின்று உணர்ந்த அறிவினன் ஆகி-அந்தப் பாடைகள் இசை பூணும்படியையும் அறிந்து, கவியது குறிப்பும் ஆடற்றொகுதியும் பகுதிப்பாடலும் கொளுத்துங்காலை-இயற்புலவன் கருத்தும் நாடகப் புலவன் ஈடுவரவுகளும் அவற்றுக் கடைத்த பாடல்களும் தம்மிற் சந்திப்பிக்கு மிடத்து, வசைஅறு கேள்வி வகுத்தனன் விரிக்கும்-குற்றம் தீர்ந்த நூல் வழக்காலே வகுக்கவும் விரிக்கவும் வல்லனாயுள்ள, அசையா மரபின் இசையோன் தானும்-தளராத இயல்பினையுடைய இசைப்புலவனும்;

  ௨௬. யாழ்-பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டி யாழ் என யாழ் நால்வகைப்படும். அவற்றுக்கு நரம்பு முறையே இருபத்தொன்றும், பத்தொன்பதும், பதினான்கும், ஏழும்ஆகும். என்னை?

   "ஒன்று மிருபது மொன்பதும் பத்துடனே
   நின்ற பதினான்கும் பின்னேழும்-குன்றாத
   நால்வகை யாழிற்கு நன்னரம்பு சொன்முறையே
   மேல்வகை நூலோர் விதி"

  என்பவாகலின், ஓரேழ்மேற்பத்துடனே என்பது பாடமாயின் மகரயாழிற்கு நரம்பு பதினேழாகும். இந்நால்வகையன்றிச் சிறுபான்மையான் வரும் யாழ் பிறவு முள என்பர். யாழின் பிறவிலக்கணங்கள் பின் கானல்வரி யுரையிற் கூறப்படும். யாழ்-யாழ்ப்பாடல் என்க.


  ௨௬. குழல்-குழலின் பாடல் என்க. குழல்-வங்கியம்; அது மூங்கில், சந்தனம், வெண்கலம், செங்காலி, கருங்காலி யென்னும் ஐந்தானும் இயற்றப்படும். இவற்றுள் மூங்கிலே முதன்மையானது; அது பற்றியே புல்லாங்குழல், வேய்ங்குழல், வங்கியம், வேணு என்னும் பெயர்கள் குழலுக்கு வழங்குவ வாயின. மூங்கில் உத்தமம், வெண்கலம் மத்திமம், ஏனைய அதமம் என்பர். இக் காலத்துக் கருங்காலி செங்காலி சந்தனம் இவற்றாற் கொள்ளப்படும் எனவும், இவை கொள்ளுமிடத்து, உயர்ந்த ஒத்தநிலத்திற் பெருக வளர்ந்து நாலு காற்றும் மயங்கின் நாதமில்லை யாதலால், மயங்கா நிலத்திலே இளமையும் நெடும் பிராயமுமின்றி ஒரு புருடாயுப் புக்க பெரிய மரத்தை வெட்டி, ஒரு புருடாகாரமாகச் செய்து, அதனை நிழலிலேயிட்டு ஆறவைத்து, திருகுதல் பிளத்தல் போழ்ந்து படுதல் இன்மையறிந்து ஒரு யாண்டு சென்றபின் வங்கியம் செய்யப்படும் எனவும், இதன் நீளம் இருபது விரலளவும், சுற்று நாலரை விரலளவுமாம் எனவும்; இது துளையிடுமிடத்து நெல்லரிசியில் ஒரு பாதி மரனிறுத்திக் கடைந்து வெண்கலத்தால் அணைசு பண்ணி இடமுகத்தையடைத்து வலமுகம் வெளியாக விடப்படும் எனவும், இதிலே தூபமுகத்தின் இரண்டு விரல் நீக்கி முதல்வாய் விட்டு, இம்முதல் வாய்க்கு ஏழங்குலம்விட்டு வளைவாயினும் இரண்டு நீக்கி நடுவினின்ற ஒன்பது விரலினும் எட்டுத் துளையிடப்படும் எனவும், துளைகளின் இடைப்பரப்பு ஒரு விரலகலம் கொள்ளப்படும் எனவும் கூறுவர். இதனை வாசிக்குமிடத்து, வளைவாய் சேர்ந்த துளையை முத்திரையென்று நீக்கி, முன்னின்ற ஏழு துளையினும் இடக்கையின் இடைமூன்று விரலும், வலக்கையின் பெருவிரலொழிந்த நான்கு விரலும் பற்றி வாசிக்கப்படும். இவ் வங்கியத்தின் ஏழு துளைகளிலும் சரிகமபதநி என்னும் ஏழெழுத்தினையும் மாத்திரைப்படுத்தித் தொழில் செய்ய இவற்றுள்ளே ஏழிசையும் பிறக்கும்; இவை பிறந்து இவற்றுள்ளே பண்கள் பிறக்கும்;

   "சரிக மபதநியென் றேழெழுத்தாற் றானம்
   வரிபரந்த கண்ணினாய் வைத்துத் –தெரிவரிய
   ஏழிசையுந் தோன்று மிவற்றுள்ளே பண்பிறக்கும்
   சூழ்முதலாஞ் சுத்தத் துளை"

  என்பது காண்க.

  ௨௬. சீர்-அகக்கூத்திற்கும்,புறக்கூத்திற்கு முரிய இருவகைத் தாளக் கூறுபாடுகள்.

  ௨௬. மிடறு-மிடற்றுப்பாடல். இதனைச் சாரீரவீணையென்பர். புற்கலம் எனப்படும் உடம்பு ஐம்பூதங்களின் பரிணாமத்தால் ஆகுமுறைமை அடியார்க்கு நல்லாரால் விரித்துரைக்கப் பட்டுள்ளது; அஃது சண்டைக்கு வேண்டப்படுவதின்று.
  உடம்பினளவு தன் கையால் தொண்ணூற்றாறு அங்குலம் எனவும் அவற்றுள் மேலே நாற்பத்தேழரை யங்குலமும் கீழே நாற்பத்தேழரை யங்குலமும் விட்டு நடுநின்ற ஓரங்குலம் மூலாதாரம் எனவும், மூலாதாரந் தொடங்கி எழுத்தின் நாதம் ஆளத்தியாய்ப் பின் இசை யென்றும் பண்ணென்றும் பெயராம் எனவும், நெஞ்சும் மிடறும் நாக்கும் மூக்கும் அண்ணாக்கும் உதடும் பல்லும் தலையும் என்னும் பெருந்தானம் எட்டினும் எடுத்தல் படுத்தல் நலிதல் கம்பிதம் குடிலம் ஒலி உருட்டு தாக்கு என்னுங் கிரியைக ளெட்டானும் பண்ணிப் படுத்தலாற் பண்ணென்று பெயராயிற்று எனவும் கூறுவர்.
  ஆளத்தி யென்பது இக்காலத்து ஆலாபனம் என வழங்கப்பெறும். அது மகர ஒற்றுடன் கூடிய குற்றெழுத்தாலும், நெட்டெழுத்தாலும் ‘தென்னா, தெனா, தென்னா, தெனா’ என்னும் அசைகள் கூட்டியும் செய்யப்படும் எனவும், மற்றும்: ம,ந,த, என்னும் மூன்று ஒற்றுக்களுடன் கூடிய அ இ உ எ ஒ என்னுங் குற்றெழுத் தைந்தானும் ஆ ஈ ஊ ஏ ஓ என்னும் நெட்டெழுத் தைந்தானும் செய்யப்படும் எனவும், இவ்வாளத்திதான் அச்சு, பாரணை யென்றும், காட்டாளத்தி, நிறவாளத்தி, பண்ணாளத்தி யென்றும் எழுத்து வேற்றுமையாற் பெயரெய்தும் எனவும், பிறவாறும் கூறுப.

  ௨௭. தண்ணுமை – பிறகருவிகட்கும், உபலக்கணம்.

  ௨௭. ஆடல்-அகக்கூத்து, புறக்கூத்து. பதினோராடல் என்பன.

  ௨௯. உரிப்பொருள்-இயக்கம்; பாட்டின் நடை. அது முதனடை, வாரம், கூடை, திரள் என நால்வகைப்படும். அவற்றுள், முதனடை மிகத்தாழ்ந்த செலவினையுடையது; வாரம் சொல்லொழுக்கமும் இசையொழுக்கமும் உடையது; கூடை சொற்செறிவும் இசைச்செறிவும் உடையது; திரள் மிக முடுகிய நடையினை யுடையது.
  இசையுடன் படுத்து இயக்கிக் கடைப்பிடித்து உணர்ந்த அறிவினனாகி விரிக்கும் இசையோன் என்க.
  ------------------
  (கவிஞன் அமைதி)

   ௩௭ - ௪௪. இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத்
   தமிழ்முழுது அறிந்த தன்மையன் ஆகி
   வேத்தியல் பொதுவியல் என்றுஇரு திறத்தின்
   நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து
   இசையோன் வக்கிரித் திட்டத்தை உணர்ந்துஆங்கு
   அசையா மரபின் அதுபட வைத்து
   மாற்றார் செய்த வசைமொழி அறிந்து
   நாத்தொலைவு இல்லா நன்னூல் புலவனும்,

  இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய- ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த புவியின் கண்ணே தமிழ் நாட்டினர் அறிய, தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி- முத்தமிழும் துறை போகக் கற்றுணர்ந்த தன்மையையுடையனாகி, வேத்தியல் பொதுவியல் என்று இருதிறத்தின்-வேத்திய லென்றும் பொதுவியலென்றும் கூறப்படும் இரண்டு கூறுபாட்டினையுட, நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து-நாடக நூலை நன்றாகப் பற்றிக் கொண்டு, இசையோன் வக்கிரித் திட்டத்தை உணர்ந்து-இசைப்புலவன் ஆளத்தி வைத்த பண்ணீர்மையை அறிந்து, ஆங்கு-அறிந்தவண்ணம்; அசையா மரபின்-தளராத முறைமையாலே, அது பட வைத்து-அவன் தாளநிலையில் எய்த வைத்த நிறம் தன் கவியிலே தோன்ற வைக்க வல்லனாய், மாற்றோர் செய்த வசைமொழி அறிந்து நாத்தொலைவு இல்லா-முன் பகைவர் செய்த வசைமொழிகளையறிந்து அவை தோற்றாதபடி வசையில்லாத மொழிகளால் நாடகக்கவி செய்யவல்ல கெடாத நாவினையுடைய, நனனூற் புலவனும்-நல்ல நூலை வல்ல புலவனும்;

  ௩௭. தமிழகம்-வேங்கடம் குமரி தீம்புனற் பௌவம் என்பன; வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும் எல்லையாகவுடைய வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு.


  ௪௧. வக்கிரித்தல்-ஆளத்தி செய்தல், உணர்ந்து என்பதற்கு, முதலும் முறையும் முடிவும் நிறையும் குறையும் கிழமையும் வலிவும் மெலிவும் சமனும் வரையறையும் நீர்மையும் என்னும் பதினொரு பாகுபாட்டினானும் அறிந்து என்பர்.
  தன்மையனாகிக் கடைப்பிடித்து உணர்ந்து வைத்து அறிந்து தொலைவில்லாத புலவனும் என்க.
  --------------------

  (தண்ணுமையாசிரியன் அமைதி)

   ௪௫-௫௫. ஆடல் பாடல் இசையே தமிழே
   பண்ணே பாணி தூக்கே முடமே
   தேசிகம் என்றுஇவை ஆசின் உணர்ந்து
   கூடை நிலத்தைக் குறைவுஇன்று மிகுத்துஆங்கு
   வார நிலத்தை வாங்குபு வாங்கி
   வாங்கிய வாரத்து யாழும் குழலும்
   ஏங்கிய மிடறும் இசைவன கேட்பக்
   கூர்உகிர்க் கரணம் குறிஅறிந்து சேர்த்தி
   ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமைச்
   சித்திரக் கரணம் சிதைவுஇன்றி செலுத்தும்
   அத்தகு தண்ணுமை அருந்தொழில் முதல்வனும்

  ஆடல்பாடல் இசையே தமிழே-எல்லாக் கூத்துக்களும் எல்லாப் பாட்டுக்களும் எல்லா இசைகளும் இயல் இசை நாடகமென்னும் மூவகைத் தமிழ்களும், பண்ணே பாணி தூக்கே முடமே-எல்லாப் பண்களும் இருவகைத் தாளங்களும் எழுவகைத் தூக்குகளும், இவற்றின் குற்றங்களும், தேசிகம்-இயற்சொல், திரிசொல் திசைச்சொல், வடசொல் என்னும் நால்வகைச் சொல்வழக்குகளும், என்றிவை ஆசின் உணர்ந்து-என்று சொல்லப்பட்ட இவற்றை நுண்ணிதின் உணர்ந்து, கூடை நிலத்தைக் குறைவின்றி மிகுத்து-ஓருருவை இரட்டிக்கிரட்டி சேர்த்தவிடத்து நெகிழாதபடி நிரம்ப நிறுத்தவும், ஆங்கு வார நிலத்தை வாங்குபு வாங்கி-அவ்விடத்துப் பெறும் இரட்டியைப் பாகவுருவானவழி நிற்குமானம் நிறுத்திக் கழியுமானங் கழிக்கவும் வல்லனாய், வாங்கிய வாரத்து யாழும் குழலும் ஏங்கிய மிடறும் இசைவன கேட்ப-இப்படி நிகழ்ந்த உருக்களில் யாழ்ப்பாடலும் குழலின்பாடலும் கண்டப்பாடலும் இசைந்து நடக்கின்றபடி கேட்போர் செவிக்கொள்ளுமாறு, கூர்உகிர்க் கரணம்குறி அறிந்து சேர்த்தி-தண்ணுமையை விரலின் செய்கையாலே குறியறிந்து சேர வாசிக்கவல்லனாய், ஆக்கலும் அடக்கலும்-மற்றைக் கருவிகளின் குறையை நிரப்புதலும் மிகுதியை அடக்குதலும், மீத்திறம் படாமை-ஆக்குமிடத்தும் அடக்குமிடத்தும் இசையில் இரந்திரந் தோன்றாமற் செய்தலும், சித்திரக் கரணம் சிதைவின்று செலுத்தும்-இவ்வனைத்தும் செய்யுமிடத்துக் கைத்தொழில் அழகுபெறச் செய்து காட்டலும் வல்லனாய், அத்தகு தண்ணுமை அருந்தொழில் முதல்வனும்-அத்தன்மையுடைய தண்ணுமைக் கருவியின் அரிய தொழிலையுடைய ஆசிரியனும்;

  ௪௫. இசை-நரப்படைவால் உரைக்கப்பட்ட பதினோ ராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்றாகிய ஆதியிசைகள் என்பர். இதற்குப் பிரமாணமாக எடுத்துக் காட்டப் பெற்றதொரு சூத்திரம் அடியில் வருமாறு சிதைந்து காணப்படுகின்றது.

   "உயிருயிர் மெய்யள வுரைத்தவைம் பாலினும்
   உடறமி ழியலிசை யேழுடன் பகுத்து
   மூவேழ் பெய்தந்..................
   தொண்டு மீண்ட பன்னீ ராயிரங்
   கொண்டன ரியற்றல் கொளைவல்லோர் கடனே"


  ௪௫. தமிழ் என்பதற்கு, வடவெழுத் தொரீஇ வந்த எழுத்தானே உறழ்ந்து காட்டப்பட்ட வாக்கியக் கூறுகள் என்றும் உரைப்பர்.
  ௪௬. பண்-நரப்படைவால் நிறந்தோன்றப் பண்ணப் படா நின்ற பண்ணும், பண்ணியற் றிறமும், திறமும், திறத்திறமுமாம்.

  ௪௬. முடம்-குற்றம்
  ௪௭. ஆசு-நுண்மை. ஆசின் நுணர்ந்து என்னும் பாடத்திற்குக் குற்றமின்றி யுணர்ந்தென்பது பொருளாகும்.

  ௫௧. ஏங்கிய-ஒலித்தலையுடைய

  ௫௨. கூர்உகிர்-கூரிய நகம்: விரலுக்கு ஆகுபெயர். கரணம்-செய்கை.

  ௫௫. தண்ணுமை என்றது ஏனைத் தோற்கருவிகளையும் அடக்கி நின்றது. அவற்றை,
   "பேரிகை படகம் இடக்கை உடுக்கை
   சீர்மிகு மத்தளம் சல்லிகை கரடிகை
   திமிலை குடமுழாத் தக்கை கணப்பறை
   தமருகம் தண்ணுமை தாவில் தடாரி
   அந்தரி முழவொடு சந்திர வளையம்
   மொந்தை முரசே கண்விடு தூம்பு
   நிசாளம் துடுமை சிறுபறை அடக்கம்
   மாசில் தகுணிச்சம் விரலேறு பாகம்
   தொக்க உபாங்கம் துடிபெரும் பறையென
   மிக்க நூலோர் விரித்துரைத் தனரே"

  என்னுஞ் சூத்திரத்தாலறிக. இவை அகமுழவு, அகப்புற முழவு, புறமுழவு, புறப்புற முழவு, பண்ணமை முழவு, நாண்முழவு, காலை முழவு என எழுவகைப்படும் என்றும், முன்சொன்ன உத்தமமான மத்தளம் சல்லிகை இடக்கை கரடிகை பேரிகை படகம் குடமுழா என்பன அகமுழவும், மத்திமமான தண்ணுமை தக்கை தகுணிச்சம் முதலியன அகப்புற முழவும், அதமக் கருவியான கணப்பறை முதலியன புறமுழவும், முன் கூறப்படாத நெய்தற்பறை முதலியன புறப்புற முழவும், முரசு நிசாளம் துடுமை திமிலை யென்னும் வீரமுழவு நான்கும் பண்ணமை முழவும், நாழிகைப் பறையானது நாண்முழவும், துடி என்பது காலை முழவும் ஆகுமென்றும் கூறுவர். அடிகள் தண்ணுமை யொன்றனையே விதந்தோதுதலின், அதுவே ஏனைக் கருவிகட்கெல்லாம் முதலாமென்பது பெற்றாம்.
  ---------------

  (குழலாசிரியன் அமைதி)

   ௫௬-௬௯. சொல்லிய இயல்பினிற் சித்திர வஞ்சனை
   புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின்
   வர்த்தனை நான்கும் மயல்அறப் பெய்துஆங்கு
   ஏற்றிய குரல்இளி என்றுஇரு நரம்பின்
   ஒப்பக் கேட்கும் உணர்வினன் ஆகிப்
   பண்அமை முழவின் கண்ணெறி அறிந்து
   தண்ணுமை முதல்வன் தன்னொடு பொருந்தி
   வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்துஆங்கு
   இசையோன் பாடிய இசையின் இயற்கை
   வந்தது வளர்த்து வருவது ஒற்றி
   இன்புற இயக்கி இசைபட வைத்து
   வார நிலத்தைக் கேடுஇன்று வளர்த்துஆங்கு
   ஈர நிலத்தின் எழுத்துஎழுத்து ஆக
   வழுவின்று இசைக்கும் குழலோன் தானும்,

  சொல்லிய இயல்பின்-நூல்களிற் சொன்னமுறைமையாலே, சித்திர வஞ்சனை புல்லிய அறிந்து-சித்திரப் புணர்ப்பும் வஞ்சனைப் புணர்ப்பும் என்னும் இரு கூற்றினையும் அறிந்து, புணர்ப்போன் பண்பின்-புணர்க்கவல்ல பாடலாசிரியனையொத்த அறிவினையுடையனாகி, வர்த்தனை நான்கும் மயல் அறப்பெய்து-ஆரோகண அவரோகணங்களில் விரல்களை விட்டுப் பிடிக்கும் வர்த்தனை நான்கினாலும் நூற்று மூன்று பண்ணீர்மைகளையும் தந்நிலை குலையாமற் காட்டவல்லனாய், ஆங்கு-அவ்விடத்து, ஏற்றிய குரல் இளி என்று இரு நரம்பின்-பதினாற் கோவையினிடத்துக் குரல் நரம்பு இரட்டிக்கவரும் அரும்பாலையையும், இளி நரம்பு இரட்டிக்கவரும் மேற்செம்பாலையையயும், இவைபோல அல்லாத பாலைகளையும், ஒப்பக்கேட்கும் உணர்வினன் ஆகி-இசைநூல் வழக்காலே இணை நரம்பு தொடுத்துப் பாடும் அறிவினையு முடையனாய், பண் அமை முழவின் கண்ணெறி அறிந்து-பண்ணுதலமைந்த முழவின் கண்ணெறியினை அறிந்து, தண்ணுமை முதல்வன் தன்னொடும் பொருந்தி-தண்ணுமை முதல்வனோடும் பொருந்தி, வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்து ஆங்கு-நிறத்தினையுடைய இளி யென்னும் நரம்பினை யாழ்மேல் வைத்து, இசையோன் பாடிய இசையின் இயற்கை-அதன்வழியே இசைக்காரன் பாடிய பாட்டினியல்பை, வந்தது வளர்த்து-பாடுகின்ற பண் வரவுகளுக்குச் சுரம் குறைவு படாமை நிறுத்தி, வருவது ஒற்றி-அந்தப் பண்ணுக்கு அயல் விரவாமல் நோக்கி, இன்புற இயக்கி-வண்ண முதலாகக் காட்டப்பட்ட பாடலியல் வழக்கெல்லாம் சுவை பொருந்த நிரப்பக் காட்டி, இசைபட வைத்து-முற்கூறிய முதலும் முறையும் முதலான பண்ணிலக்கணம் பதினொன்றினையும் நிரம்பவைத்து, வார நிலத்தைக் கேடின்று பார்த்து-வாரப்பாடலை அளவு நிரம்ப நிறுத்தவல்லனாய், ஆங்கு-பாடலிடத்து, ஈரநிலத்தின்எழுத்து எழுத்தாக-சொன்னீர்மைகளின் எழுத்துக்கள் சிதையாமலே எழுத்தெழுத்தாக இசைக்கும், வழுவினின்று இசைக்கும் குழலோன் தானும்-இச்சொல்லப்பட்ட இயல்புகளை இலக்கணப்படி வழுவாமல் வாசித்துக் காட்டவல்ல குழலாசிரியனும்;

  ௫௬. சித்திரப் புணர்ப்பாவது இசைகொள்ளும் எழுத்துக்களின் மேலை வல்லொற்று வந்தவழி மெல்லொற்றுப் போலப் பண்ணீர்மை நிறுத்தல். வஞ்சனைப்புணர்ப்பாவது இசைகொள்ளா வெழுத்துக்களின் மேலே வல்லொற்று வந்தவழி மெல்லொற்றுப் போல நெகிழ்த்துப் புணர்த்தல்.

  ௫௮. வர்த்தனை-குழலில் விரலுளர்ந்தூதுந் துளைகள் சுட்டுவிரல் முதலாக விட்டுப் பிடிப்பது ஆரோகணம்; சிறுவிரல் முதலாக விட்டுப்பிடிப்பது அவரோகணம்; இங்ஙனம் ஏற்றியிறக்கலும், இறக்கியேற்றலும் வர்த்தனை யெனப்படும்.

  ௫௯. ‘ஏற்றிய குரலினி....உணர்வினனாகி’ என்பதன் பொருள் பின்னர் யாழாசிரியன் அமைதி கூறுமிடத்து உரைக்கு முறையால் விளக்கமாம்.

  ௬௩. பட்டடை-அடிமணை; எல்லாப் பண்ணிற்கும் அடிமணை யாதலின் இளியென்னும் நரம்பு, பட்டடை யெனப்பட்டது. யாழின் மேற்பண்களை இளி முறையாலே வைத்து என்க. இளி முறையாவது சட்சக் கிரமம். ஆங்கு; அசை.

  ௬௫. ஒற்றி-நினைந்து.

  ௬௭. வார நிலத்தைக் கேடின்று பார்த்து என்பது-முதனடை, வாரம், கூடை, திரள் என்று சொல்லப்பட்ட இயக்கம் நான்கினும் முதல் நடை மிகவும் தாழ்ந்த செலவினை யுடைத்தாகலானும், திரள் மிக முடுகிய நடையினை யுடைத்தாகலானும் இவை தவிர்ந்து, இடைப்பட்ட வாரப் பாடல் சொல்லொழுக்கமும் இசையொழுக்கமும் உடைத்தாகலானும், கூடைப்பாடல் சொற்செறிவும், இசைச் செறிவும் உடைத்தாகலானும் சிறப்புநோக்கி, அவ்விரண்டினுள்ளும் வாரப்பாடலை அளவு நிரம்ப நிறுத்தவல்லனாய் என்க. எனவே, கூடைப்பாடலும் அமைவதாயிற்று.

  ௬௯. இசைக்கும் என்பதை எழுத்தெழுத்தாக இசைக்கும் என்றும் சொல்லப்பட்ட யாவற்றையும் வழுவின்றிசைக்கும் என்றும் பிரித்துக் கூட்டுக.

  அறிந்து மயலறப்பெய்து உணர்வினனாகி அறிந்து பொருந்தி வைத்து வளர்த்து ஒற்றி இயக்கி வைத்துப் பார்த்து இசைக்குங் குழலோன் என்க.

  (யாழாசிரியன் அமைதி)
  இப்பகுதியின் உரை நன்கு விளங்குதற்பொருட்டு இசையைப் பற்றிய சில கொள்கைகளை முதற்கண் விளக்குதும்:-
  தமிழில் இசை என்பது சுரம் இராகம் என்னும் இரு பொருளிலும் வழங்கும். இராகத்திற்கு இசையென்னும் பெயரன்றிப் பண் என்ற பெயரும் உண்டு. வடமொழியில் சுருதியென்று சொல்லப்படுவது தமிழில் அலகு என்றும், மாத்திரை யென்றும் வழங்கும். மற்றும், சுரம் என்பதற்கு நரம்பு என்ற பெயரும், பண் என்பதற்கு யாழ் என்ற பெயரும் தமிழில் வழங்கும். ஏழிசைகட்கும் தமிழிலே குரல் துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன பெயர்களாம். ஏழுசுரங்கட்கும் வடமொழியிலே சட்சம், ரிடபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிடாதம் என்பன பெயர்களாம்.
  தமிழில் ஏழிசைகட்கும் இருபத்திரண்டு அலகுகள் கூறப்பட்டுள்ளன; அவை குரல் முதலியவற்றிற்கு முறையே ௪,௪,௨,௪,௩,௨ ஆகும். இதனை,

   "குரல்துத்தம் நான்கு கிளைமூன் றிரண்டாம்
   குரையா உழையிளி நான்கு- விரையா
   விளரியெனின் மூன்றிரண்டு தாரமெனச் சொன்னார்
   களரிசேர் கண்ணுற் றவர்."

  என்பதனா னறிக.
  வடமொழியிலும் ஏழு சுரங்கட்கும் இருபத்திரண்டு சுருதிகளே கூறப்பட்டுள்ளன. அவை சட்சம் முதலியவற்றிற்கு முறையே ௪,௩,௨,௪,௪,௩,௨ ஆகும்.
  இந்த இசை அல்லது சுரங்களின் வரிசைக்குத் தமிழில் கோவையென்றும் பெயருண்டு. இவ்வரிசை யமைப்புக்கள்,ஆயப்பாலை,சதுரப்பாலை,வட்டப்பாலை, திரிகோணப்பாலை,என,நால்வகைப்படுகின்றன;இவற்றினின்றும் உண்டாவது இராகம் அல்லது பண் ஆகும்.
  ஏழிசை யெனப்படும் சுரங்கள் ஏழினையும் மாறுந் திறத்தினாலேயே பலவகைப் பண்கள் அல்லது இராகங்கள் உண்டாகின்றன; ஆகலின் சுரங்களைப்பற்றிய செய்திகளை முதலில் நன்கு தெரிந்து கொள்ளுதல் வேண்டும். குரல் முதலாய ஏழனுள், தாரத்தில் உழையும், உழையிற் குரலும், குரலில் இளியும், இளியில் துத்தமும், துத்தத்தில் விளரியும், விளரியிற் கைக்கிளையும் பிறக்கும்; இவற்றுள் முதலிற் றோன்றியது தாரம்.

   "தாரத்துட் டோன்றும் உழையுழை யுட்டோன்றும்
   ஒருங் குரல் குரலி னுட்டோன்றிச் – சேருமிளி
   யுட்டோன்றுந் துத்தத்துட் டோன்றும் விளரியுட்
   கைக்கிளை தோன்றும் பிறப்பு".

  என்பது காண்க. தாரத்துள் அதற் கைந்தாவதாகிய உழையும், உழையுள் அதற் கைந்தாவதாகிய குரலும், இம்முறையே ஏனையவும் தோன்றின வென்பது அறியற்பாலது. இவ்வேழிசைகளும் வட்டப்பாலை முறையில் ஓர் இராசி மண்டலத்தின் பன்னிரண்டு இருக்கைகளையும் இடமாகக் கொள்ளும் என்பது பின்னர் ஆய்ச்சியர் குரவையுள் விளக்கப்படும்.
  ஓர் இராகம் அல்லது பண்ணினை உண்டாக்குதற் பொருட்டு முதலிலே தொடங்கப்பெறும் சுரம் குரல் என்பதாகும். ஏழு சுரங்களில் எதனையும் குரலாக நிறுத்துதல் உண்டு; அஃதாவது குரலே குரலாகவும், துத்தம் குரலாகவும், கைக்கிளை குரலாகவும் இங்ஙனம் தொடக்கப்பெறும் என்பதாம்.
  சுரங்களைக்கொண்டு இசையை எழுப்புதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்ட எழுத்துக்கள் சரிகமபதநி என்னும் ஏழுமாம். இவ்வெழுத்துக்கள் சட்சம் முதலிய பெயர்களின் முதலெழுத்துக்கள் என்று கொள்வன பொருந்தாமையால், இவை குறியீடாக அமைத்துக்கொள்ளப் பெற்றனவாதல் வேண்டும். வடநூற்றுறைபோய சிலரும் இங்ஙனம் கருதுவர்.

   " ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ வெனும்
   இவ்வே ழெழுத்தும் ஏழிசைக் குரிய"

  எனத் திவாகரம் கூறுதலின், ஆ முதலிய நெட்டுயிர் ஏழனையும் கருவியாகக் கொண்டு பண்டைத் தமிழ்மக்கள் இசைபாடினராதலும் வேண்டும்.
  தமிழிலே இராகங்கள் பண் எனவும், திறம் எனவும் இருவகைப் படும். "நிரைநரம் பிற்றே பண்ணென லாகும்", "குறைநரம் பிற்றே திறமெனப் படுமே" என்னும் திவாகர நூற்பாக்களால் ஏழு நரம்பானும் இயன்றது பண்ணாம் என்பது்ம், ஆறு ஐந்து நான்கு எனக் குறைந்த நரம்புகளான் இயன்றன திறமாம் என்பதும் பெறப்படும். திறத்தை மூன்று வகைப்படுத்துப் பண்ணியற்றிறம், திறம், திறத்திறம் என வழங்குதலுமுண்டு. பண்ணும், திறமூன்றும் ஆகிய இந்நால்வகை இராகங்களையும் குறிக்கும் வடமொழிப்பெயர்கள் சம்பூர்ணம், சாடவம், ஔடவம், சதுர்த்தம் என்பன. இந்நான்கும் தமிழில் பண், திறம் என இரண்டாகக் கூறப்படுதலோடு யாவும் பண்ணென்றே கூறப்படுதலும் உண்டு.
  தமிழில் ஐந்திணைக்குமுரிய பண்கள் குறிஞ்சியாழ், பாலையாழ், முல்லையாழ், நெய்தல்யாழ், மருதயாழ் என்பன. இவற்றுள் நெய்தல் யாழுக்கு விளரி என்பதும் பெயர். இது திறனில் யாழ் எனப்படுதலின், திறங்களுடைய ஏனை நான்குமே பெரும்பண்கள் எனப்படும்; "யாம யாழ்ப்பெயர் குறிஞ்சி யாழும், செவ்வழி யாழ்ப்பெயர் முல்லை யாழும், பாலை யாழும், மருத யாழுமென, நால்வகை யாழும் நாற்பெரும் பண்ணே" என்பது திவாகரம். இதிலிருந்து குறிஞ்சி யாழுக்கு யாம யாழ் என்ற பெயரும், முல்லை யாழுக்குச் செவ்வழி யாழ் என்ற பெயரும் உண்டென்பது புலனாம். இந்நூற் பெரும் பண்ணும் பிறக்குமாறு "தாரத் துழைதோன்றப் பாலையாழ் தண்குரல், ஒருமுழை தோன்றக் குறிஞ்சியாழ்-நேரே, இளிகுரலிற் றோன்ற மருதயாழ் துத்தம், இளியிற் பிறக்கநெய்த லியாழ்" எனக் கூறப்பட்டுளது. இதில் நெய்தல் யாழ் என்றது செவ்வழி யாதல் வேண்டும். எனவே தாரம் குரலாக உழை அதற்குக் கிளையாகத் தோன்றவது குறிஞ்சியாழ் எனவும், குரல் குரலாக இளி அதற்குக் கிளையாகத் தோன்றுவது செவ்வழி யாழ் எனவும் கூறப்படும் என்க. கிளையாவது நின்ற நரம்பினின்றும் தோன்றும் நரம்பு; நின்ற நரம்பிற்கு ஐந்தாவது நரம்பு. இவ்வாறே நின்ற நரம்பிற்கு நான்காவது நட்புநரம்பென்றும், மூன்றாவதும் ஆறாவதும் பகை நரம்பென்றும், இரண்டாவதும் ஏழாவதும் இணை நரம்பென்றும் அறிக.
  இனி, முற்குறித்த நான்கு பண்களுள் பாலையாழிலிருந்து செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேற்செம்பாலை என்னும் ஏழுபாலை யிசைகள் பிறக்கும்; இவை பிறக்குமாறு மேல் இக்காதையுள்ளும், ஆய்ச்சியர் குரவையுள்ளும் விளக்கமாம்.
  இனி, பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி யென்னும் நாற்பெரும் பண்களில் ஒவ்வொன்றும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்னும் இன வேறுபாட்டால் நந்நான்கு ஆகப் பெரும்பண்கள் பதினாறாகும். நாற்பெரும் பண்களுள்ளே பாலை யாழுக்கு ஐந்தும், குறிஞ்சி யாழுக்கு எட்டும், மருத யாழுக்கு நான்கும், செவ்வழி யாவுக்கு நான்கும் ஆக இருபத்தொரு திறங்கள் உள்ளன. "ஈரிரு பண்ணும் எழுமூன்று திறனும்" என்பது பிங்கலம். திறம் இருபத்தொன்று அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்னும் வேறுபாட்டால் எண்பத்து நான்கு ஆகும். எனவே, பண் பதினாறும், திறம் எண்பத்து நான்கும் சேர்ந்து நூறு என்னும் தொகையினவாகின்றன. பிங்கல நிகண்டிலே திறங்களின் வகை யாவற்றிற்கும் பெயர் கூறி முடிந்தபின், "தாரப் பண்டிறம் பையுள் காஞ்சி படுமலை யிவை நூற்று மூன்று திறத்தன" என்று கூறப்பட்டிருத்தலின், தாரப் பண்டிறம், பையுள் காஞ்சி, படுமலை என்னும் மூன்று திறங்களும் முற்கூறிய நூற்றுடன் சேரப்பண்கள் நூற்று மூன்று என்னும் தொகைபெறும். பண் நூற்றுமூன்றென்றல் பெரு வழக்கு. பெரும் பண்களின் வகை பதினாறனுட் பன்னிரண்டுக்கும், திறங்களும், அவற்றின் வகையுமாகிய எண்பத்து நான்கிற்கும் பெயர் பிங்கல நிகண்டிற் காண்க.
  இனி, தமிழிலே குரல் முதலாகவும், வடமொழியிலே சட்சம் முதலாகவும் ஏழு சுரங்களும் பெயர் கூறப்படுதலின், குரலும் சட்சமும் ஒன்றெனவும், துத்தமும் ரிடபமும் ஒன்றெனவும், இவ்வாறே ஏனையவும் முறையே ஒவ்வொன்றா மெனவும் கருதுதல் கூடும். ஆயின் இவற்றிற்குக் கூறப்படும் அலகும் ஒளியும் பிறப்பிடமும் வேறுபடுதலின் அம்முறையே இவ்விரண்டும் ஒன்றெனல் அமையாமை பெற்றாம். ஈண்டு அலகினை நோக்குதும்:-
  குரல்-௪, துத்தம்-௪, கைக்கிளை-௩, உழை-௨, இளி-௪, விளரி-௩, தாரம்-௨.
  சட்சம்-௪, ரிடபம்-௩, காந்தாரம்-௨, மத்திமம்-௪, பஞ்சமம்-௪, தைவதம்-௩, நிடாதம்-௨.
  இவற்றுள் இரண்டாவதும் மூன்றாவதும் நான்காவதும் மாத்திரையில் ஒவ்வாமை காண்க. சட்சம் முதலியவற்றிற்கு இங்கே காட்டிய சுருதிகளின் அளவே சாரங்கதேவர் இயற்றிய சங்கீதரத்னாகரம் முதலிய நூற்கள் பலவற்றிலும் காணப்படுதலின், அம்முறையே தமிழுக்கும் பொருத்தமாதல் வேண்டும். குரல் என்பதனைச் சட்சம் என்று கொள்ளாது மத்திமம் எனக் கொள்ளின் இரண்டிலும் சுருதியளவுகள் ஒத்து விடுகின்றன.

  குரல்-௪, துத்தம்-௪, கைக்கிளை-௩, உழை-௨, இளி-௪, விளரி-௩, தாரம்-௨.
  ம-௪, ப-௪, த-௩, நி-௨, ச-௪, ரி-௩, க-௨

  சுருக்கங்கருதி மத்திமம் முதலிய பெயர்கள் ம முதலிய எழுத்துக்களாற் குறிக்கப்பட்டன. மேலே காட்டியவற்றில் இரு திறத்தும் அலகு ஒத்திருத்தல் காண்க. இவ்வாற்றால் பண்டைத் தமிழ் இசை நூலோர் வடநூன் முறையிலமைந்த மத்திமத்தை ஆரம்ப சுரமாகக் கொண்டன ரென்பது போதரும். எனவே, தாரத்து உழை தோன்றும் என்ற முறைப்படி காந்தாரத்தில் நிடாதமும், நிடாதத்தில் மத்திமமும், மத்திமத்தில் சட்சமும், சட்சத்தில் பஞ்சமும், பஞ்சமத்தில் ரிடபமும், ரிடபத்தில் தைவதமும் பிறக்கும் எனக் கொள்ள வேண்டும். இவற்றை நன்கு நினைவில் வைத்துக்கொள்ளின், பின் கூறப்படும் இசையியல்புகள் பெரும்பாலும் மயக்கமற விளங்கும். மிக நுட்பமான இசை யியல்புகளை அறிய விழைவோர் இசைநூற்களைக் கற்றும் இசைப் பயிற்சி செய்தும் அறிதல் வேண்டும்.
  -----------------

   ௭0. ஈர்ஏழ் தொடுத்த செம்முறைக் கேள்வியின்
  ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வியின்-செவ்விய முறையே இரண்டேழாகத் தொடுக்கப்பட்ட ஆயப் பாலையாய் நின்ற பதினாற் கோவையில்,
  ---------

   ௭௧. ஓர்ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி
  ஓரேழ் பாலை நிறுத்தல் வேண்டி-செம்பாலை படுமலைப் பாலை செவ்வழிப்பாலை அரும்பாலை கோடிப்பாலை விளரிப்பாலை மேற்செம்பாலை யெனப்பட்ட ஏழு பாலையினையும் இணை நரம்பு தொடுத்து நிரம்ப நிறுத்திக் காட்டல் காரணமாக,
  ----------------

   ௭௨. வன்மையிற் கிடந்த தார பாகமும்
  வன்மையிற் கிடந்த தாரபாகமும்-இப்பாலையின் முடிவுத்தானமாய் வலிந்த நிலைமையினையுடைய தாரம்பெற்ற இரண்டலகில் ஓரலகையும்,
  --------------------

   ௭௩. மென்மையிற் கிடந்த குரலின் பாகமும்
  மென்மையிற் கிடந்த குரலின் பாகமும்-முதற்றானமாய் மெலிவினிற்கும் குரல் நரம்பு பெற்ற நாலலகில் இரண்டலகையும்,
  -----------------

   ௭௪-௫. மெய்க்கிளை நரம்பிற் கைக்கிளை கொள்ளக்
   கைக்கிளை

  மெய்க்கிளை நரம்பிற் கைக்கிளை கொள்ளக் கைக்கிளை-தாரநரம்பில் அந்தரக் கோலிலே கைக்கிளையாக நிறுத்தத் தாரந்தான் கைக்கிளையாயிற்று;
  ---------------

   ௭௫-௭. ஒழிந்த பாகமும் பொற்புடைத்
   தளராத் தாரம் விளரிக்கு ஈத்துக்
   கிளைவழிப் பட்டனள்

  ஒழிந்தபாகமும் பொற்புடைத் தளராத்தாரம் விளரிக்கு ஈத்துக் கிளைவழிப் பட்டனள்-தளராத அழகுடைய தார நரம்பில் ஒழிந்த ஓரலகையும் விளரிக்குத்தர அவ்விளரி துத்த நரம்பாயிற்று;
  ----------------

   ௭௭-௮. ஆங்கே கிளையும்
   தன்கிளை அழிவுகண்டு அவள்வயிற் சேர

  ஆங்கே கிளையும் தன் கிளை அழிவு கண்டு அவள் வயிற் சேர-அம்முறையே இளியும் தன் கிளையாகிய குரலின் அழிவினைக்கண்டு அதன் பாற் சேரவும்,
  ----------------

   ௭௯. ஏனை மகளிரும் கிளைவழிச் சேர

  ஏனை மகளிரும் கிளைவழிச் சேர-ஏனைய உழை முதலாயினவும் தத்தமக்குக் கிளையாயினவற்றிற் சேரவும் இவ்வாறாய பதினாற் கோவையிலே,

  ----------------

   ௮0-௧. மேலது உழையிளி கீழது கைக்கிளை
   வம்புஉறு மரபின் செம்பாலை ஆயது

  மேலது உழையிளி கீழது கைக்கிளை வம்புறு மரபிற் செம்பாலை ஆயது-உழைமுதலாகக் கைக்கிளையிறுதியாக மெலிவு நான்கும் சமம் ஏழும் வலிவு மூன்றுமாய்ப் புதுமையுற்ற முறையாலே உழை குரலாகச் செம்பாலையாயது;
  ---------------

   ௮௨-௩. இறுதி ஆதி ஆக ஆங்குஅவை
   பெறுமுறை வந்த பெற்றியின் நீங்காது

  இறுதி ஆதியாக ஆங்கவை பெறுமுறை வந்த பெற்றியின் நீங்காது-இறுதியாய் நின்ற கைக்கிளை முதலாகவுள்ள கைக்கிளை துத்தம் குரல் என்னுமவை தாம் தோன்றிய இடமுறையான இயல்பின் நீங்காது,
  ----------------

   ௮௪-௫. படுமலை செவ்வழி பகர்அரும் பாலைஎனக்
   குரல்குரல் ஆகத் தற்கிழமை திரிந்தபின்

  படுமலை செவ்வழி அரும்பாலை எனக் குரல் குரலாகத்தற்கிழமை திரிந்தபின்-கைக்கிளை குரலாகப் படுமலைப் பாலையும் துத்தம் குரலாகச் செவ்வழிப் பாலையும் குரல் குரலாக அரும்பாலையும் என முறையே திரிந்தபின்,
  ----------
   ௮௬. முன்னதன் வகையே முறைமையின் திரிந்துஆங்கு

  முன்னதன் வகையே முறைமையில் திரிந்து ஆங்கு-முன்பிற்படியே முறைமையின் வேறுபட்டு,
  ------------
   ௮௭. இளிமுத லாகிய ஏர்படு கிழமையும்

  இளி முதலாகிய எதிர்படு கிழமையும்- தாரம் குரலாகக் கோடிப்பாலையும் விளரிகுரலாக விளரிப்பாலையும் இளிகுரலாக மேற் செம்பாலை எனத் திரிய,
  --------------

   ௮௮. கோடி விளரி மேற்செம் பாலைஎன

  கோடி விளரி மேற்செம்பாலை என-தாரம் குரலாகக் கோடிப் பாலையும் விளரிகுரலாக விளரிப்பாலையும் இளிகுரலாக மேற்செம்பாலை எனத் திரிய,
  ---------------

   ௮௯. நீடிக் கிடந்த கேள்விக் கிடக்கையின்

  நீடிக்கிடந்த கேள்விக் கிடக்கையின்-நெடிதாய்க் கிடந்த சுரங்களின் இடத்தே,
  -----------

   ௯0. இணைநரம்பு உடையன அணைவுறக் கொண்டுஆங்கு

  இணை நரம்புடையன அணைவுறக்கொண்டு ஆங்கு-முதலும் இறுதியுமாகவுள்ள நரம்புகளைப் பொருந்தக் கொண்டு,
  -----------

   ௯௧. யாழ்மேற் பாலை இடமுறை மெலியக்

  யாழ் மேற்பாலை இடமுறை மெலிய-யாழினிடத்து அரும்பாலை முதலாயின இடமுறை மெலியவும்,
  --------------

   ௯௨. குழல்மேற் கோடி வலமுறை மெலிய

  குழல்மேற்கோடி வலமுறை மெலிய-குழலினிடத்துக் கோடிப்பாலை முதலாயின வலமுறை மெலியவும்,
  --------------

   ௯௩ – ௪. வலிவும் மெலிவும் சமனும் எல்லாம்
   பொலியக் கோத்த புலமை யோனுடன்,

  வலிவும் மெலிவும் சமனும் எல்லாம் பொலியக் கோத்த புலமையோனுடன்-வலிவும் மெலிவும் சமனும் விளங்கவும் நரப்படைவு கெடாமலும் பண்ணீரமை முதலாயின குன்றாமலும் எழுத்துக்களால் இசை செய்ய வல்ல யாழிசிரியனும்;
  -----------

  ௭0. கேள்வி-நரம்பு; சுரம் குரல் முதலாய ஏழு நரம்பினையும் இரட்டித்த பதினாற்கோவை யென்க.
  ------------

  ௭௪. தாரத்திற்குக் கைக்கிளை இடமுறையால் ஐந்தாவதாகலின் கிளை நரம்பென்றார். கிளை-ஐந்தாவது நரம்பு.
  --------------

  ௭௭. விளரிக்குத் துத்தம் அம்முறையே ஐந்தாவதாகலின் கிளை வழிப்பட்டனள் என்றார். கிளையும்-இளியும்; குரலுக்கு இளி ஐந்தாவதாகலின் அதனைக் கிளை என்னும் பெயராற் கூறினார்; அன்றி, இளியென்பதே எழுதுவோராற் கிளையெனத் திரிபுற்ற தெனலுமாம். அரும்பதவுரையாசிரியர் சொற்களை எஞ்சாதெடுத்துப் பொருள் கூறிமுடிக்குங் கடப்பாடுடையரல்லர்; மற்று அடியார்க்கு நல்லாரே அங்ஙனம் உரைக்குங் கடப்பாட்டினர். ஆயின் அவர் எக்காரணத்தானோ இசைப்பகுதியில் முன்னவருரைத்தவற்றையே தாமும் உரைத்து, மூலத்திலுள்ள சொற்கள் பலவற்றிற்குப் பொருளும் முடிபும் தெரிக்காது போயினர். அதனால் இஞ்ஞான்று அவற்றின் பொருள் அறிதல் அரிதாயினமையின் எழுதுவோராலும், பதிப்பிப்போராலும் வழுக்கள் நிகழ்தல் இயல்பேயாகும்.
  ‘அரும்பதவுரையிலும்,அடியார்க்குநல்லாருரையிலும் முறையே ‘இக்கிரமத்தினாலே,’ ‘இளிக்கிரமத்தாலே’ (சிலப் அரங். அடி.௬௩-௪) எனவும் பதினாற்கோவை பொலிந்து,’ ‘பதினாற்கோவை கோலினிது’ (அடி.௭0) எனவும், ‘வரப்பட்ட பாலை,’ ‘வட்டப்பாலை’ (அடி. ௭௨-௩) எனவும், இங்ஙனம் எண்ணிறந்தன திரிந்து, திருத்தம் பெறாமலே முந்திய பதிப்புக்கள் பலவற்றிலும் காணப்படுதலை நோக்கின் மூலபாடம் உருச்சிதைந்து வழுப்பட்டிருத்தல் அரிதன் றென்பது புலனாம்.
  ------------------

  ௭௭-௯. நரம்புகளை மகளிராக உருவகப்படுத்தி, ‘வழிப்பட்டனள்’ எனவும், ‘அவள் வயின்’ எனவும், ‘ஏனை மகளிரும்’ எனவும் கூறினார். இதனை அறியமாட்டாது, உரையிலே ‘பெண்டிர்க்குரிய தானமுடைய’ என வந்திருப்பது கொண்டு, இது பெண்டிர்கள் இனிது பாடுதற்கேற்றது என்று கூறினாருமுளர். கிளைவழிச்சேர நீடிக்கிடந்த கேள்விக்கிடக்கையின் இணை நரம்புடையன அணைவுறக் கொண்டு என இயைக்க.

   செம்முறைக் கேள்வியாகும் பதினாற்கோவை வருமாறு :
   (௧) குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்;
   (௨) குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் .
   இதினின்றும் உண்டாய கேள்விக் கிடக்கையாகும் பதினாற் கோவை வருமாறு :
   (௧) உழை, இளி, விளரி, தாரம், குரல், துத்தம், கைக்கிளை;
   (௨) உழை, இளி, விளரி, தாரம், குரல், துத்தம், கைக்கிளை.
   இவை முறையே,
   ம ப த நி ச ரி க – ம ப த நி ச ரி க எனவும்,
   நி ச ரி க ம ப த – நி ச ரி க ம ப த எனவும் கூறிக் கொள்க.

  ---------------

  ௮0. செம்முறை மாறிவந்த பதினாற் கோவையில் உழை முதலும் கைக்கிளை இறுதியுமாய் நிற்றல் காண்க. ‘உழையிளி’ என்னும் பாடம் வழுப்பட்டதாகல் வேண்டும்; ஈண்டு இளி என்பதற்குப் பொருளொன்று மின்மையும், பழைய உரைகளில் இச்சொல் வறிதே விடப்பட்டிருத்தலுங் காண்க.
  -----------

  ௮௨. இறுதி ஆதியாக-இறுதியாகவுள்ள கைக்கிளை முதலாக. கைக்கிளை இறுதியில் நிற்றல் காண்க.
  -------------

  ௮௫. குரல் குரலாக என்பது ஒன்றொன்றாக என்பதுபோல் நின்ற அடுக்கு. தற்கிழமை-முறை நிரனிறை.
  --------------

  ௮௭. எதிர்படுகிழமை-எதிர் நிரனிறை.
  -------------

  ௯0. இணைநரம்பு-முதலும் இறுதியுமாகவுள்ள நரம்பு; உழை முதற் கைக்கிளை யிறுதியும், கைக்கிளை முதல் துத்தம் இறுதியும், இவ்வாறே ஏனையவும் முதலும் இறுதியுமாகி யென்க; இரட்டித்த நரம்பு என்றலுமாம். உழை, கைக்கிளை, துத்தம், குரல், தாரம், விளரி, இளியென இட முறையால் ஒவ்வொன்றும் குரலாகச் செம்பாலை முதலாயின தோன்றினமை அறியற்பாற்று. இவ்வேழு பண்களும் பிற முறையால் உண்டாவன வேனிற் காதையிலும் ஆய்ச்சியர் குரவையிலும் அறியப்படும்.
  -------------


  ௯க-உ. குழல்மேல் கோடி என்றதனால் யாழ்மேல் அரும்பாலையென வருவிக்கப்பட்டது. மெலிதல்-இறங்குதல்; அவரோகணம்.
  --------------


  ௯௩. வலிவு-மேல்; உச்சம்; தாரம். மெலிவு-கீழ்; மந்தம். சமம்-மத்திமம். இவை ஓசையின் மூவகை இயக்கம்.
  ஆங்கவை, திரிந்தாங்கு. கொண்டாங்கு என்பவற்றில் ஆங்கு அசை.
  நிறுத்தல் வேண்டிப் பொலியக் கோத்த புலமையோன் என முடிக்க.
  ------------

  (அரங்கின் அமைதி)

   ௯௫-௧௧௩. எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது
   மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
   புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்
   கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு
   நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்
   கோல்அளவு இருபத்து நால்விரல் ஆக
   எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
   ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி
   உத்தரப் பலகையொடு அரங்கின் பலகை
   வைத்த இடைநிலம் நாற்கோல் ஆக
   ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்
   தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்தப்
   பூதரை எழுதி மேல்நிலை வைத்துத்
   தூண்நிழல் புறப்பட மாண்விளக்கு எடுத்துஆங்கு
   ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்
   கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்துஆங்கு
   ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து
   மாலைத் தாமம் வளையுடன் நாற்றி
   விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்துப்


  ௯௫ - எண்ணிய நூலோர் இயல்பினின் வழாது மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு-எண்ணப்பட்ட சிற்ப நூலாசிரியர் வகுத்த இயல்புகளின் வழுவாத வகை அரங்கியற்றுதற்குக் குற்றம் நீங்கின ஓரிடத்தில் நிலம் வகுத்துக் கொண்டு, புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழை கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு-பொதியின் முதலாய திப்பிய மலைப்பக்கங்களிலே நீண்டு வளர்ந்த மூங்கிலிற் கண்ணோடு கண்ணிடை ஒரு சாணாக வளர்ந்தது கொண்டு, நூல்நெறி மரபின்-நூல்களிற் கூறப்படும் முறையாலே, அரங்கம் அளக்கும் கோல் அளவு இருபத்து நால்விரல் ஆக-அரங்கம் இயற்றுதற்கு அளக்குங்கோல் உத்தமன் கைப் பெருவிரல் இருபத்துநான்கு கொண்ட அளவினதாக நறுக்கி, எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து ஒருகோல் உயரத்து உறுப்பினதாகி-அக்கோலால் எழுகோல் அகலமும் எண்கோல் நீளமும் ஒருகோற் குறட்டுயரமும் உடையதாய், உத்தரப்பலகையோடு அரங்கின்பலகை வைத்த இடைநிலம் நாற்கோல் ஆக-தூணின்மீதுவைத்த உத்தரப் பலகைக்கும் அரங்கின் தளத்திற்கிட்ட பலகைக்கும் இடைநின்ற நிலம் நான்கு கோலளவினதாகவும், ஏற்ற வாயில் இரண்டு உடன் பொலிய-அவ்வளவுகட்குப் பொருந்த வகுக்கப்பட்ட வாயில் இரண்டு விளங்கவும், தோற்றிய அரங்கில்-செய்யப்பட்ட அரங்கிலே, தொழுதனர் ஏத்தப் பூதரை எழுதி மேல் நிலைவைத்து-நால்வகை வருணப் பூதரையும் எழுதி யாவரும் புகழ்ந்து வணங்க மேனிலத்தே வைத்து, தூண்நிழற் புறப்பட மாண்விளக்கு எடுத்து ஆங்கு – தூண்களின் நிழல்நாயகப் பத்தியின் கண்ணும் அவையின் கண்ணும் படாதபடி மாட்சிமைப்பட்ட நிலைவிளக்கு நிறுத்தி, ஒருமுக எழினியும் பொருமுக எழினியும் கரந்து வரல் எழினியும் புரிந்து உடன்வகுத்து ஆங்கு-இடத்தூண் நிலையிடத்தே உருவு திரையாக ஒருமுக வெழினியும் இரண்டு வலத்தூணிடத்தும் உருவு திரையாகப் பொருமுக வெழினியும் மேற்கட்டுத் திரையாகக் கரந்துவர லெழினியும் தொழிற்பாட்டுடனே வகுத்து, ஓவிய விதானத்து-சித்திர விதானத்தையும் அமைத்து, உரைபெறு நித்திலத்து மாலைத் தாமம் வளைவுடன் நாற்றி-புகழமைந்த முத்துமாலைகளாற் சரியும் தூக்கும் தாமமுமாகத் தொங்கவிட்டு, விருந்துபடக்கிடந்த அருந்தொழில் அரங்கத்து-புதுமையுடைத்தாகப் பொருந்திய அரிய தொழிலையுடைய அரங்கின்கண்;


  ௯௫-௬, நூலோர்-நாடக நூலோர் என்பர் அரும்பதவுரை யாசிரியர். இவ்வுலகில் நூல்வழி அரங்கு செய்யுமிடத்துத் தெய்வத்தானமும் பள்ளியும் அந்தணரிருக்கையும் கிணறும் குளனும் கா×ம் முதலாயின அழியாத இயல்பினையுடைத்தாய், நிறுக்கப்பட்ட குழிப்புழுதி குழிக்கொத்து, கல்லப்பட்ட மண் இனிய நாற்றமும் இனிய சுவையும் உடையதாய், தானும் திண்ணிதாய், என்பும் உமியும் பரலுஞ் சேர்ந்த நிலம், களித்தரை, உவர்த்தரை, ஈளைத்தரை, பொல்லாச் சாம்பற்றரை, பொடித்தரை என்று சொல்லப்பட்டன ஒழிந்து, ஊரின் நடுவணதாகியுள்ள நிலத்திலே தேரோடும் வீதிகள் எதிர்முகமாகக் கொள்ளப்படும் என்பர்.

  நிலம் வன்பால், மென்பால், இடைப்பாலென்று மூவகைப்படும்; அவற்றுள் வன்பாலாவது தோண்டப்பட்ட குழியில் அம்மண்ணினைப் பெய்யின் குழியின்மண் மிகுவது; மென்பாலாவது குறைவது; இடைப்பாலாவது ஒத்திருப்பது. இடைப்பாலே வேண்டப்படுவதாம். மண்ணின் சுவைகளுள் துவர்ப்பு அச்சமும், புளிப்பு நோயும், காழ்ப்புப் பசி நீடுதலும், கைப்புக்கேடும், உவர்ப்புக் கலக்கமும், தித்திப்பு அன்பும் விளைக்குமாகலின் தித்திப்பே கொள்ளத்தகுவதாம்.


  ௯௭. போகிய-நீண்ட.


  ௧00. உத்தமராவார்; மிக்க நெடுமையும் மிக்க குறுமையுமில்லோர். அணு எட்டுக்கொண்டது இம்மி; இம்மி எட்டுக்கொண்டது எள்ளு; எள்ளு எட்டுக்கொண்டது நெல்லு; நெல்லு எட்டுக்கொண்டது பெருவிரலாம்.

  ௧0௫. வாயில் இரண்டாவன: உட்புகவும் புறஞ்செல்லவும் சமைத்தவை. மற்றும், கரந்து போக்கிடனும், கூத்தர் குடிஞைப்பள்ளியும், அரங்கமும், அதனெதிர் மன்னர் மாந்தரோடிருக்கும் அவையரங்கமும், புவிநிறை மாந்தர் பொருந்திய கோட்டியும் முதலாயின கொள்ளப்படும்.

  ௧0௭. பூதர்-வருணப் பூதர்;இவர் வச்சிரதேகன், வச்சிரதந்தன், வருணன், இரத்தகேசுவரன் என்னும் நால்வருமாம். நால்வகை வருணத்தாரின் உருவம் தொழில் முதலியன விளங்க இங்ஙனம் வருணப்பூதம் நான்கும் வகுக்கப்பட்டனவாகும். இவற்றினியல்பு பின்னர் அழற்படு காதையுள் விரித்துரைக்கப்படும்.

  ௧௧௧. உரை-புகழ். மேல் ஊர்காண் காதையில் "சந்திர குருவே யங்கா ரகனென, வந்த நீர்மைய வட்டத் தொகுதியும்" எனப் பாகுபடுத்துரைக்கப்படும் புகழ் என்க.

  வகுத்தனர் கொண்டுவைத்து எடுத்து வகுத்து நாற்றிக்கிடந்த அரங்கத்தென்க.
  -------------

  (தலைக்கோல் அமைதி)

   ௧௧௪-௨௮. பேர்இசை மன்னர் பெயர்ப்புறத்து எடுத்த
   சீர்இயல் வெண்குடைக் காம்புநனி கொண்டு
   கண்இடை நவமணி ஒழுக்கி மண்ணிய
   நாவல்அம் பொலம்தகட்டு இடைநிலம் போக்கிக்
   காவல் வெண்குடை மன்னவன் கோயில்
   இந்திர சிறுவன் சயந்தன் ஆகென
   வந்தனை செய்து வழிபடு தலைக்கோல்
   புண்ணிய நன்னீர் பொற்குடத்து ஏந்தி
   மண்ணிய பின்னர் மாலை அணிந்து
   நலம்தரு நாளால் பொலம்பூண் ஓடை
   அரசுஉவாத் தடக்கையில் பரசினர் கொண்டு

   முரசுஎழுந்து இயம்பப் பல்இயம் ஆர்ப்ப
   அரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவும்
   தேர்வலம் செய்து கவிகைக் கொடுப்ப
   ஊர்வலம் செய்து புகுந்துமுன் வைத்துஆங்கு,


  ௧௧௪-௨௮. பேர் இசை மன்னர் பெயர்புறத்து எடுத்த-பெரிய புகழையுடைய பகையரசர் போர்செய்து புறங்கொடுத்தவழிப் பறிக்கப்பட்ட, சீரியல் வெண்குடைக் காம்பு நனிகொண்டு-அழகு பொருந்திய வெண்கொற்றக் குடையின் காம்பை நன்கு எடுத்து, கண் இடை நவமணி ஒழுக்கி மண்ணிய-கணுக்கள் தோறும் கழுவிய நவமணிகளாற் கட்டி, நாவல் அம்பொலம் தகட்டு இடை நிலம் போக்கி-சாம்பூநதம் என்னும் பொன்னின் தகட்டாலே
  கணுக்கட்கு நடுவாகிய இடங்களைக் கட்டி, காவல் வெண்குடை மன்னவன் கோயில்-உலகினைப் புரக்கும்,வெண்குடையையுடைய அரசன் கோயிலில், இந்திர சிறுவன் சயந்தன் ஆகென-தேவேந்திரன் மகன் சயந்தனாக நினைத்து, வந்தனைசெய்து வழிபடு தலைக்கோல்-மந்திர விதியாலே பூசித்து வழிபட்டுக் காப்பமைத்து இருத்திய தலைக்கோலை, புண்ணிய நன்னீர் பொற்குடத்து ஏந்தி மண்ணிய பின்னர் மாலை அணிந்து- முன்கூறிப் போந்த ஆடலாசிரியன் முதலாயினோர் புண்ணிய நதிகளின் நல்ல நீரைப் பொற் குடத்திலே முகந்துவந்து நீராட்டிய பின்பு மாலைகளுஞ் சூட்டி, நலம் தரு நாளால்-இதற்குப் பொருந்திய நல்ல நாளிலே, பொலம்பூண் ஓடை அரசு உவாத் தடக்கையில் பரசினர் கொண்டு-பொன்னாலாகிய பூணினையும் பட்டத்தினையுமுடைய பட்ட வருத்தனத்தின் பெரிய கையில் வாழ்த்துடன் கொடுத்து அதனை உடன் கொண்டு, முரசு எழுந்து இயம்ப-மும்முரசும் எழுந்து முழங்கவும், பல்லியம் ஆர்ப்ப-அவையன்றிப் பல வாச்சியங்களும் ஒலிக்கவும், அரசொடு பட்ட ஐம்பெருங் குழுவும்- அரசனும் அமைச்சர் புரோகிதர் சேனாபதியர் தூதுவர் சாரணர் என்னும் ஐம்பெருங் குழுவினரும் உடன்வர, தேர் வலம் செய்து கவிகைக் கொடுப்ப-வீதியின்கண் நின்ற தேருடன் வலஞ்செய்து தேர்மிசை நின்ற பாடுவோன் கையிலே இத்தலைக்கோலைக் கொடுத்து, ஊர் வலஞ்செய்து புகுந்து முன் வைத்தாங்கு-நகரியை வலமாகவந்து அரங்கின்கட் புகுந்து தலைக்கோலை எதிர்முகமாக வைத்தபின்;

  ௧௧௪-௫. தலைக்கோல் கொள்ளுமிடத்து மாற்றரசர் குடைக்காம்பும், பகை வேந்தரது எயிற்புரத்து வெட்டின மூங்கிலும், புண்ணிய வரையின் மூங்கிலும் ஆம் என்பர்; இவற்றுள் முன்னைய இரண்டும் வேத்தியற்கும், பின்னையது பொதுவியற்குமாம்.

  ௧௧௬. மண்ணிய-கழுவிய, மண்ணிய மணி யென்க.

  ௧௧௭. நாவலம் பொலம்-சாம்புநதம் என்னும் பொன். நாவல்-சம்பு; அம்: சாரியை. "நாவலொடு பெயரிய பொலம்புனைய விரிழை" என்றார் ஆசிரியர் நக்கீரனாரும்.

  ௧௧௮-௨0. மன்னவன் கோயிலில் காப்பமைத்து இருத்தியவென விரித்துரைக்க. ஆகென-ஆக. சயந்தன் அகத்தியர் சாபத்தால் மூங்கிலாய்ப் பிறந்து தலைக்கோற் றானத்துச் சாபம் நீங்கினா னாகலின் தலைக்கோலைச் சயந்தனாக நினைத்து என்றார்.

  ௧௨௩. நாளால் வேற்றுமை மயக்கம். பூண்-கிம்புரி; அணிகலமுமாம்.
   சீரா திரையவிட்டஞ் சித்திரையோ-டாருமுறம்
   மாசி யிடபம் அரிதுலை வான்கடகம்
   பேசிய தேள் மிதுனம் பேசு"

  என்னும் மதிவாணனார் கூற்றால் நன்மையாகிய நாள் பத்தும். இராசி ஆறும் அறிக.


  ௧௨௪. அரசுவா-பட்டவருத்தனம்; பட்டத்தியானை; ஆடலாசிரியன் முதலானோர் தலைக்கோலை யானை கையிற்கொடுத்துத் தேருடன்வலஞ்செய்து, பின் கவியின் கையிற்கொடுத்து ஊர்வலஞ்செய்து புகுந்து வைத்தபின் என்க.
  --------------------

  (மாதவி அரங்கிற் புகுந்து ஆடுகின்ற இயல்பு.)

   ௧௨௯-௫௯. இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்
   குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப,
   வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து
   வலத்தூண் சேர்தல் வழக்குஎனப் பொருந்தி
   இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த
   தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும்
   சீர்இயல் பொலிய நீர்அல நீங்க
   வாரம் இரண்டும் வரிசையில் பாடப்
   பாடிய வாரத்து ஈற்றில்நின்று இசைக்கும்
   கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்
   குழல்வழி நின்றது யாழே, யாழ்வழித்
   தண்ணுமை நின்றது தகவே, தண்ணுமைப்
   பின்வழி நின்றது முழவே, முழவொடு
   கூடிநின்று இசைத்தது ஆமந் திரிகை
   ஆமந் திரிகையொடு அந்தரம் இன்றிக்
   கொட்டுஇரண்டு உடையதுஓர் மண்டிலம் ஆகக்
   கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி
   வந்த முறையின் வழிமுறை வழாமல்
   அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர்,
   மீத்திறம் படாமை வக்காணம் வகுத்துப்
   பாற்பட நின்ற பாலைப் பண்மேல்
   நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து
   மூன்றுஅளந்து ஒன்று கொட்டி அதனை
   ஐந்துமண் டிலத்தால் கூடை போக்கி
   வந்தவா ரம்வழி மயங்கிய பின்றை,
   ஆறும் நாலும் அம்முறை போக்கிக்
   கூறிய ஐந்தின் கொள்கை போலப்
   பின்னையும் அம்முறை பேரிய பின்றை,
   பொன்இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென
   நாட்டிய நன்னூல் நன்குகடைப் பிடித்துக்
   காட்டினள் ஆதலின்,

  இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்-அரசன் முதலிய யாவரும் தகுதிக்கேற்ற இருக்கைகளில் முறையே இருந்தபின், குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப-இடக்கை முதலிய குயிலுவக் கருவியாளர் தாம்நிற்க வேண்டிய முறைப்படி நிற்க, வலக்கால் முன் மிதித்து ஏறி அரங்கத்து-அரங்கேறும் நாடகக் கணிகையாகிய மாதவி அரங்கிலே வலக்காலை முன்வைத்து ஏறி, வலத்தூண் சேர்தல் வழக்கு எனப் பொருந்து-பொருமுக வெழினிக்கு நிலையிடனான வலப்பக்கத் தூணைச் சேர்தல் முறையென்று அவ்விடத்தைச் சேர்ந்து, இந்நெறிவகையால் இடத்தூண் சேர்ந்த தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும்-மாதவி வந்தேறி நின்றவாறே ஒருமுக வெழினிக்கு நிலையிடனான இடப்பக்கத் தூணினைச் சேர்ந்து நின்ற பழைய நெறியியற்கையையுடைய தோரிய மடந்தையரும் தானும், சீர்இயல் பொலிய நீர் அல நீங்க-நன்மை மிகவும் தீமை நீங்கவும் வேண்டி, வாரம் இரண்டும் வரிசையிற் பாட-ஓரொற்று வாரம் ஈரொற்று வாரம் என்னும் தெய்வப்பாடல் இரண்டினையும் முறையாலே பாட, பாடிய வாரத்து ஈற்றில் நின்று இசைக்கும் கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்-பாடிய தெய்வப் பாடலின் இறுதியிலே நின்று கூடிய இசையா நிற்கும் கருவிகளெல்லாம், குழல்வழி நின்றது யாழே-வங்கியத்தின் வழி யாழ்ப்பாடல் நின்றதாக, யாழ்வழித் தண்ணுமை நின்றது தகவே-யாழ்ப்பாடலின் வழியே மத்தளம் தகவுற நின்றதாக, தண்ணுமைப் பின்வழி நின்றது முழவே-மத்தளத்தின் வழியே குடமுழா நின்றதாக, முழவொடு கூடிநின்று இசைத்தது ஆமந்திரிகை-முழவுடன் கூடி நின்று வாச்சியக் கூறுகளை அமைத்தது இடக்கையின் ஓசையாக, ஆமந்திரிகையோடுஅந்தரம் இன்றி-இடக்கையோடு முன் சொன்ன குயிலுவக் கருவிகள் அனைத்தும் பருந்தும் நிழலும் போல ஒன்றாய் நிற்ப,கொட்டு இரண்டு உடையது ஓர் மண்டிலம் ஆக-ஒரு தாளத்திற்கு இரண்டு பற்றாக, கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி-பஞ்சதாளப் பிரபந்தமாகக் கட்டப்பட்ட தேசியொத்தை ஒரு தாளத்திற்கு இரண்டு பற்றாகப் பத்தும் தீர்வு ஒன்றுமாகப் பதினொரு பற்றாலே தேசிக் கூத்தை ஆடி முடித்து, வந்த முறையின் வழிமுறை வழாமல்-இப்படிச் செய்கை நாடக நூல்களில் அமைந்த முறையாகலான் அம்முறை வழுவாமல், அந்தரக்கொட்டு உடன் அடங்கிய பின்னர்-அந்தரக்கொட்டு என்றும், முகம் என்றும் கூறப்படும் இவ்வொத்து ஆடி முடி்ந்த பின்னர், மீத்திறம் படாமை வக்காணம் வகுத்துப் பாற்பட நின்ற பாலைப் பண்மேல்-மங்கலப் பண்ணாய் நரப்படையவும் உடைத்தாயிருக்கின்ற பாலைப்பண்ணை அளவு கோடாதபடி ஆளத்தியிலே வைத்து அதன்மேலே, நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து-மங்கலச் சொல்லினையுடைத்தாய் நாலுறுப்பும் குறைபாடில்லாத உருவுக்குச் சொற்படுத்தியும் இசைப்படுத்தியும் அறிந்து, பாட்டும் கொட்டும் கூத்தும் நிகழ்த்தி, மூன்று அளந்து ஒன்று கொட்டி அதனை-மூன்றொத்துடைய மட்டத்திலே எடுத்து ஓரொத்துடைய ஏக தாளத்திலே முடித்து, ஐது மண்டிலத்தால்-அழகிய மண்டிலநிலையாலே, கூடை போக்கி-தேசிக்கு ஒற்றித் தொத்தலும் இரட்டித் தொத்தலுமேயாகலின் தேசிக் கூறெல்லாம் ஆடி முடித்து,

  இனி மார்க்கங் கூறுகின்றது

  ஆறும் நாலும் அம்முறை போக்கி-பஞ்சதாளப் பிரபந்தமாகக் கட்டப்பட்ட வடுகிலொத்தையும் தேசியவொத்தைக் காட்டினாற்போல இரட்டிக்கிரட்டியாக ஆடி, கூறிய ஐந்தின் கொள்கைபோலப் பின்னையும் அம்முறை பேரிய பின்றை-முன் சொல்லிப் போந்த தேசியைப்போல வடுகும் கட்டத்தாளம் முதலாக ஏகதாளம் அந்தமாக வைசாக நிலையிலே ஆடி முடித்த பின்னர், பொன் இயல் பூங்கொடி புரிந்து உடன் வகுத்தென-பொன்னால் இயன்றதொரு பூங்கொடியானது கூத்து நடித்தாற்போல, நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினள் ஆகலின்-தாண்டவம் நிருத்தம் நாட்டியம் என்னும் மூன்று கூறுபாட்டினும் நாட்டியமென்னும் புறநடத்தை நூல்களிற் சொன்ன முறைமை தவறாமல் அவிநயித்துப் பாவகந் தோன்ற விலக்குறுப்புப் பதினான்கின் நெறி வழுவாமல் ஆடிக் காட்டினள் ஆதலால்:

  ௧௨௯. அரசன் முதலியோர் இருந்த பின்னர் என விரித்துரைக்க.


  ௧௩௪. தோரிய மகளிராவர் ஆடி முதிர்ந்தவர்.

   "இந்நெறி வகையா விடத்தூண் சேர்வோள்
   தொன்னெறி மரபிற் றோரிய மகளே"

  எனவும்,

   "தலைக்கோ லரிவை குணத்தொடு பொருந்தி
   நலத்தகு பாடலு மாடலு மிக்கோள்
   இயற்படு கோதைத் தோரிய மகளே"

  எனவும் கூறுவர். தோரிய மகளிரும் என்னும் உம்மையால் தானும் என்பது விரித்துரைக்க.

  ௧௩௫. சீரியல் பொலிய என்பதற்குத் தாளவியல்பு பொலிவுபெற என்றும் நீரல நீங்க என்பதற்கு அவதாளம் நீங்க என்றும் உரைத்தலுமாம்.

  ௧௩௭-௪௩. நின்றது நின்றது நின்றது நின்றிசைத்தது என்பவற்றுடன் ஆக என்னும் சொற் கூட்டி எச்சப்படுத்து, ஆமந்திரிகை இசைத்ததாக, இங்ஙனம் வாரத்து ஈற்றிலே நின்று கூடி யிசையா நிற்கும் குயிலுவக் கருவிகளெல்லாம் அந்தரமின்றி ஒன்றாய் நிற்ப எனச் சொன் முடிபுகொள்க. ஆமந்திரிகை-இடக்கையென்னும் வாச்சியம். வாரப்பாடல் பாடியபின் என்றமையால் மிடற்றுப் பாடலும் கூறியவாறாயிற்று. யாழ் குழல்வழி நின்றாற்போல மிடற்றுப்பாடலின் வழியும் நின்றதென்க.

  ௧௪௭. இதனை அந்தரக் கொட்டு என்றும், முகம் என்றும், ஒத்து என்றும் பெயர் கூறுப. இந்த ஒத்து ஆடிய பின்னல்லது நாடக மகள் உருக்காட்டுதல் வழக்கல்ல என்பர்.

  ௧௪௮-௯. பாலைப் பண்ணை மீத்திறம் படாமை வக்காணம் வகுத்து அதன்மேல் என்றியைக்க. வக்காணம்-ஆளத்தி.

  ௧௫0. ‘நாலுறுப்புங் குறைபாடில்லாத’ என்னும் இருவருரைக்கும் ‘நான்கின் ஒரீஇய’ என்னும் மூலம் பொருத்தமாதல் இன்று; ஒருவா, ஒருவில என்றிங்ஙனம் பாடமிருந்திருக்கும் போலும். ‘நாலுறுப்பாவன : உக்கிரம், துருவை, ஆபோகம், பிரகலை என்பன. ஈண்டு நாலுறுப்புக்களும் குறைபாடில்லாத உருவென வேண்டியது, மூன்றுறுப்பாலே வருவனவும் உளவாதலின், அவை இரண்டாமடியே ஈற்றடியாகப் பாடி முடிவன. அவை மங்கலத்துக்குப் பொருந்தாவெனக் கொள்க’ என்பர்.

  ௧௫௨.-௪. இக்காதையின் ௨0-௨௧ அடிகளின் பொருள் நோக்குக. மார்க்கம் எனினும் வடுகு எனினும் ஒக்கும்.

  ௧௫௫. ஐந்து என்பது பஞ்சதாளம் என்னும் பொருட்டாக. கூறிய என்னும் அடையால் அது தேசியைக் குறிப்பதாயிற்று.

  ௧௫௮-௯. ‘இக்காதையிற் கூறிய முத்தமிழ் வகையும் காட்டினளாதலின் என்றுமாம்’ என்பர் தொல்லை யுரையாசிரியர் இருவரும்.
  --------------

  மாதவி சிறப்புப் பெற்றதும் கோவலன் அவளை யுற்றதும்

   ௧௫௯-௭௫. காவல் வேந்தன்
   இலைப்பூங் கோதை இயல்பினில் வழாமைத்
   தலைக்கோல் எய்தித் தலைஅரங்கு ஏறி
   விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண்கழஞ்சு
   ஒருமுறை யாகப் பெற்றனள் அதுவே
   நூறுபத்து அடுக்கி எட்டுக்கடை நிறுத்த
   வீறுஉயர் பசும்பொன் பெறுவதுஇம் மாலை,
   மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்குஎன
   மான்அமர் நோக்கிஓர் கூனிகைக் கொடுத்து
   நகர நம்பியர் திரிதரு மறுகில்
   பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த,
   மாமலர் நெடுங்கண் மாதவி மாலை
   கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு
   மணமனை புக்கு மாதவி தன்னொடு
   அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
   விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்.
   வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்துஎன்.

  காவல் வேந்தன் இலைப்பூங்கோதை இயல்பினின் வழாமை(காட்டினளாதலின்)-மாதவி தன் கூத்துக்கும், பாட்டுக்கும், அழகுக்கும் ஏற்ற முறையில் வழுவாமல் காவலையுடைய அரசனது பச்சைமாலையுடன், தலைக்கோல் எய்தி-தலைக்கோற் பெயர் பெற்று, தலை அரங்கு ஏறி-எல்லா முதன்மையும் பெறுதற்குக் காரணமாகிய முன்னரங்கேறப் பெற்று, விதி முறை கொள்கையின்-இந்நாடகக் கணிகையர்க்குத் தலைவரிசையென நூல்கள் விதித்த முறைப்படி, ஆயிரத்து எண்கழஞ்சு ஒரு முறையாகப் பெற்றனள்-ஆயிரத்தெண்கழஞ்சு பொன் ஒரு முறையாகப் பரிசம் பெற்றாள்; அதுவே-அன்று தொடங்கி அதுவே நாடோறும் பரிசமாக, நூற்றுப்பத்து அடுக்கி எட்டுக் கடை நிறுத்த-நூற்றைப் பதின்மடங்காக அடுக்கி அதன் கடைக்கண்ணே எட்டை நிறுத்தின (ஆயிரத்தெட்டு என்றபடி), வீறு உயர் பசும்பொன் பெறுவது இம்மாலை-வீறு பெற்றுயர்ந்த பசும்பொன்னை விலையாகப் பெறுவது இம்மாலை, இம்மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு என - ‘இவ்வளவு பொன் தந்து இம்மாலையை வாங்கிச் சூடுவார் மாதவிக்கு மணமகனாதல் அமையும்’ என்று சொல்லி, மானமர் நோக்கியோர் கூனி கைக்கொடுத்து-மான்போன்ற நோக்கினையுடையவளாகிய ஒரு கூனி கையிற் கொடுத்து, நகர நம்பியர் திரிதரு மறுகில்-நகரத்து ஆண்டகைச் செல்வர்கள் உலாவரும் பெருந் தெருவில்,பகர்வனர் போல்வதோர் பாண்மையின் நிறுத்த – விலைக்கு விற்பாரைப் போல்வதொரு பண்பினால் நிறுத்த, மாமலர் நெடுங்கண் மாதவி மாலை கோவலன் வாங்கி-சிறந்த தாமரைமலர் போன்ற கண்ணையயுடைய மாதவியின் பரிச மாலையைக் கோவலன் வாங்கி, கூனி தன்னொடும் மணமனைபுக்கு – கூனியுடனே மாதவியின் மணமனையிலே புகுந்து, மாதவி தன்னோடு அணைவுறு வைகலின்-அவளுடன் அணைந்த அன்றே, அயர்ந்தனன் மயங்கி-அயர்ந்து மயங்கி, விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்-நீங்க முடியாத விருப்பத்தை உடையனாயினான்; வடு நீங்கு சிறப்பின்-குற்றமற்ற சிறப்பினையுடைய, தன் மனை அகம் மறந்து என்-தன் மனைவியையும் மனையையும் மறந்து என்க.

  ௧௫0. இலைப் பூங்கோதை-மாதவி யென்றுரைப் பாருமுளர்.

  ௧௫க. தலைக்கோற் பெயர் பெறுதலாவது தலைக்கோலி என்னும் பட்டம் பெறுதல், தென்னாட்டுப் பழைய கல்வெட்டுக்களில் "திருநெல்வேலி உடையார் கோயில்
  பதியிலாரில் நக்கன் உரிமை அழகிய பெருமாளான உரிமை அழகிய பெருமாள் தலைக்கோலி" எனவும், "பதியிலான் நக்கன் அரங்கமான ஜயங்கொண்ட சோழத் தலைக்கோலியும், நக்கன்
  பூமியான பரமாக்க விடங்கத் தலைக்கோலியும், நக்கன் சோழ விச்சாதரியான ஒலோக மாதேவி தலைக்கோலியும், நக்கன் பவழக் குன்றான மதுராந்தகத் தலைக்கோலியும்" எனவும் தலைக்கோலி என்னும் பட்டமும், அதனைப் பெற்ற பதியிலார் பலர் பெயரும் வருதல் ஈண்டு அறியத்தக்கன.

  ௧௫௨ . நாடகக் கணிகையர் தலைவரிசையாக ஆயிரத்தெண் கழஞ்சு பெறுதல் நூல் வழக்காகும்.
  "முட்டில் பாணரும் ஆடியன் மகளிரும்
  எட்டொடு புணர்ந்த ஆயிரம் பொன்பெறுப"
  என்பர்.

  ௧௫௫. பசும்பொன்-குளிச்சிறை யென்னும் பொன். பெறுவது – விலைமதிக்கப் பெறுவது. ஆயிரத்தெண் கழஞ்சு பொன்னுக்கு மாலை படிக்கட்டளை யாயிற்று.

  ௧௫௯ . கொடி என்பது மாதவியென்னும் பெயருக்குப் பொருந்தியதொரு நயமுடைத்து.

  ௧௭0. மா மலர்-திருமகள் வாழும் மலர் என்றுமாம்.

  ௧௭௩. அணைவுறு வைகல் – அணைந்த அப்பொழுதே என்றபடி. அயர்த்தல்-அதுவேயாதல். மயங்குதல்-அறிவு திரிதல்.

  ௧௭௫. வடுநீங்கு சிறப்பு-மனையாட்குக் கற்பின் சிறப்பும் மனைக்குச் செல்வச் சிறப்புமாம். வடுநீங்கு சிறப்பின் மனையகம் மறந்து என்றது நாடகக் கணிகையைப்பற்றி அவள் மனையையே வாழுமிடமாகக் கொண்டது அவனுக்கு நீங்காத வடுவாமெனக் குறிப்பினுணர்த்தியாவாறாம். மறந்து ஆயினன் என்றியையும். என் -அசை.
  மாதவியின் ஆடன் முதலியவற்றை மன்னற்குக் காட்டல் வேண்டி ஆடலாசிரியன் முதலாயினார் ஒருங்கு கூடி, அரங்கத்து, வந்தனை செய்து வழிபடு தலைக்கோலை மண்ணியபின்னர் ஊர்வலஞ்செய்து புகுந்துமுன் வைக்க, மாதவி வலக்கால் முன் மிதித்தேறி ஆடிக்காட்டினளாதலின் வேந்தனது இலைப்பூங்கோதையும்,தலைக்கோற்பெயரும்,பெற்றனள்; பெற்றபின் மாலையைக் கூனி கைக்கொடுத்து நிறுத்த, அதனைக் கோவலன், வாங்கி, மனைபுக்கு, அயர்ந்து, மயங்கி, மறந்து விருப்பினனாயினன் என்க.
  இஃது எல்லாவடியும் அளவடியாகி முடிந்தமையின் நிலைமண்டில வாசிரியப்பா.
  -------------

  இறுதி வெண்பா

   எண்ணும் எழுத்தும் இயல்ஐந்தும் பண்நான்கும்
   பண்ணின்ற கூத்துப் பதினொன்றும் - மண்ணின்மேல்
   போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவிதன்
   வாக்கினால் ஆடரங்கில் வந்து.

  பூம்புகார்ப் பொற்றொடி மாதவி-அழகியபுகார் நகரிற் பிறந்த பொன்வளை யணிந்த மாதவி யென்னும் கணிகை, ஆடு அரங்கின் வந்து-நடிக்கும் அரங்கத்திலே வந்து, எண்ணும் எழுத்தும்-எல்லாக் கலைகட்கும் கருவியாகிய கணிதம் இலக்கணம் என்பவற்றையும், இயல் ஐந்தும்-இயற்றமிழின் ஐந்து பாகுபாட்டினையும், பண் நான்கும்-இசைத்தமிழின் நாற்பெரும் பண்ணையும், பண்நின்ற கூத்துப் பதினொன்றும்-நாடகத்தமிழின் இனிமையுடைய பதினொரு கூத்தினையும், தன் வாக்கினால்-தன் வாக்கினாலும், கூத்தினாலும், மண்ணின்மேல் போக்கினாள்-புவி முழுவதும் அறிந்து புகழும்படி செய்தாள்.
  கூத்தினாலும் என விரித்துரைத்துக்கொள்க.

  அரங்கேற்று காதை முற்றிற்று.
  ----------------------

This file was last updated on 18 December 2012.
.