Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

சிதம்பரத் தோத்திரத்திரட்டு
(சிதம்பரநாதர் திருவருட்பா, சிதம்பர வெண்பா, பரமராசியமாலை
& தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ்)

citamparat tOttirat tiraTTu
(citamparanAtar tiruvarutpA,. citampara veNpA, paramarAciyamAlai,
& tillaic civakAmiyammai piLLaittamiz)
In tamil script, unicode/utf-8 format
  Acknowledgements:
  Our thanks also go to the Tamil Virtual Academy
  for providing a scanned PDF copy of this work.
  This e-text has been generated using Google OCR online followed by proof-reading and corrections.
  Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

  © Project Madurai, 1998-2019.
  to preparation
  of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
  are
  http://www.projectmadurai.org/

சிதம்பரத் தோத்திரத்திரட்டும் சிறந்த சில செய்யுட்களும்

  Source:
  சிதம்பரத் தோத்திரத்திரட்டும் சிறந்த சில செய்யுட்களும்

  இவை சிதம்பரம். பரஞ்சோதி ஆசிரம உரிமையாளரும் ஸ்தாபகரும் ஆகிய
  உயர்திரு. சி. ப. விசுவநாத சுவாமிகள் அவர்களால் திரட்டப்பெற்றன.

  பதிப்பாளர் : சி.ப. விசுவநாத சுவாமி

  பரஞ்சோதி ஆசிரமம்
  45, மன்னார்குடி ரோட்டுத் தெரு, சிதம்பரம்.
  உரிமையுள்ளது) 1960
  (விலை ரூ. 7 )
  --------------

  பரஞ்சோதி ஆசிரமம் வெளியீடு எண் : 4
  முதல் பதிப்பு: 1960
  சிவமயம் திருமுருகன் துணை
  இந்நூல் திருமுருகன் திருவடித் தொண்டரும் ஆத்திகத்தைப்பரப்பும் அறநெறிச்
  செல்வருமாகிய தவத்திரு திருமுருக கிருபாநந்தவாரியார் அவர்களின் அன்பின் அறிகுறியாகத் தொகுத்து வெளியிடப்பட்டது.
  பாரி அச்சகம், சென்னை -1 -1000 படிகள்
  ---------------------

  பதிப்புரை

  கற்பகத்தை முக்குறுணிக் கடகரியைக் கந்தனாம் எந்தைதன்னை
  சிற்பரனைச் சிவகாம சுந்தரியைக் கோவிந்த ராசத் தேவை
  கற்பவர்கள் போற்று மொழிற் கலைமகளைத் திருமகளைக் கமலோன் தன்னைத்
  தற்பரமாம் பரஞ்சோதித் தனிஞான தேசிகனைத் தொழுது வாழ்வோம்.

  அன்புடையீர்!

  குரு நமசிவாயதேவர் அருள்மிகு பெரியார். அவர் இயற்றிய அற்புதங்களை, அவர் வரலாற்றைப் படித்து அறிவீர்கள். அருள்மிகு அப்பெரியார், இயற்றிய சிதம்பர வெண்பாவினிடத்துப் பேரன்புகொண்ட யான் அதனை வெளியிடற்கு அவாக் கொண்டேன். அவ்வெண்ணம் விரிந்து சிதம்பரத்தோத்திரட்டு என்னும் இச்சிறிய நூலாக வெளிப்போந்துள்ளது.

  இந்நூலின் அருமை பெருமைகளை நீங்கள் எளிதில் உணர்ந்து கொள்வீர்கள். இந்நூலுக்கு முகவுரை எழுதித் தந்தவரும் மறைசை அகத்தியான் பள்ளியில் வாழ்பவரும் சாந்தமூர்த்தியும் புலவரும் ஆகிய திரு. வை. முரு. முத்துக்குமாரசாமிப்பிள்ளை அவர்கட்கும் கூத்தப்பிரான் படத்தை அழகாக அச்சிட்டுத் தந்த சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சிப் பொறுப்பாளர் உயர்திரு. வ. சுப்பையா பிள்ளையவர்கட்கும், அழகிய முறையில் அச்சிட்டுத் தந்த பாரி அச்சக உரிமையாளர் நற்குணக்கொண்டல் உயர்திரு. நாராயணன் செட்டியார்வர்கட்கும், உதவி கலெக்டர் அருட்டிரு S.R. பூபதிமதுரை அவர்களுக்கும், ஒரு ரீம் தாளுதவிய கவுணியன் அச்சகத்தாருக்கும், பரமராசியமாலை, சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ் ஆகிய நூல்களை உதவிய காசி சர்வகலாசாலை சைவ சித்தாந்த விரிவுரையாளர் சிவராமன் எம்.ஏ. அவர்களுடைய தந்தையார் மறைத்திரு கோ. கிருட்டிண ஐயர் பி. ஏ . அவர்கட்கும், சிதம்பரம் தாலுக்கா கொடி யாலம் இராமச்சந்திரா அரிசியில் உரிமையாளர் திரு. பொ. சொக்கலிங்கப் படையாச்சியவர்கட்கும், நாகைத் தாலுகா மஞ்சக்கொல்லை சிவநேசச் செல்வர் சம்பந்த முதலியார் அவர்களுக்கும், மற்றும் பொருளுதவி செய்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி உரியதாகும். எவ்வித இடை யூறும் இன்றி இந்நூல் வெளிவருவதற்குத் தோன்றாத் துணையாக இருந்த தில்லைக் கூத்தப்பிரானுடைய திருவடிகளை இடைவிடாது வந்தித்துச் சிந்தித்து வாழ்த்துகின்றேன். இந்நூல் விற்பனையினால் வரும் தொகையைத் தில்லைச் சிவகாமி பிள்ளைத் தமிழ் பரமராசியமாலை முதலிய நூல்களை வெளியிடுவதற்குப் பயன்படுத்தப்பெறும்.
   அற்றைதொறும் ஆயிரம் ஆயிரம் பிழைகள்
   செய்தாலும் அடியேன் தன்னைப்
   பெற்ற திரு அருட்கடலில் குளிப்பாட்டித் தாள்மலரும்
   பேறாய்ச் சூட்டி
   சொற்றவெலாம் தோத்திரமாய்ப் புனைந்தருளி
   எனை வளர்க்கும் தொட்டிலாகி
   உற்றகுரு ராயனெங்கள் பரஞ்சோதி
   வள்ளலையாம் உணர்ந்து வாழ்வாம்.

  16-4-60 இப்படிக்கு
  சிதம்பரம் சி.ப. விசுவநாத சுவாமி
  (ஸ்ரீ பரஞ்சோதி ஆசிரமம் உரிமையாளர் )
  ---------------------------

  முகவுரை


  சிதம்பரத் தோத்திரத்திரட்டு என்னும் இந்நூலைத் திரட்டி வெளியிட்ட ஸ்ரீ விசுவநாத சுவாமிகள் அவர்கள் சோழவள நாட்டிலே திருமறைக் காட்டிற்கு அண்மையில் உள்ள ஆயக்காரன்புலம் என்னும் ஊரிலே அகமுடையார் குலத்திலே இராமையா பிள்ளை என்பவருக்கும் தையல் நாயகி அம்மையார் என்பவருக்கும் அருந்தவப் புதல்வராக 1905-ஆம் ஆண்டிலே பிறந்தவர். பள்ளிக் கல்வியைப் பாங்குடன் பயின்றபின் திருத்தில்லையை அடைந்து பொன்னம்பல சுவாமிகளின் திருமடத்திலே அமர்ந்து வேதாந்த நூல்களை ஓதியுணர்ந்தவர். பிறகு திருப்பனந்தாள், காசிமடம் திருவையாறு அரசர் கல்லூரி முதலிய இடங்களிலே தக்க ஆசிரியர்களிடத்தில் தமிழ் இலக்கண இலக்கியங்களையுங் கற்றுணர்ந்தார். பின்,

  சிதம்பரம் பொன்னம்பல சுவாமிகள் திருமடத்தில் மூன்றாவது ஞானாசிரியராக எழுந்தருளியிருந்த ஸ்ரீவஸ்ரீபரஞ்சோதி ஞான தேசிகர் அவர்களிடம் அருளுரையும் பெற்று அப்பெரியாருடைய பிரதம மாணாக்கராக இருந்தவர். அப் பெரியார் மகாசமாதியடைந்த பிறகு அம்மடாலயத்தின் மேற்குப் பக்கத்தில் ஸ்ரீ பரஞ்சோதி ஆசிரமம் என்னும் பெயரோடு ஆசிரமம் ஒன்றை அமைத்துத் தம்முடைய
  ஞானாசிரியரின் பெயரை யாண்டும் பரப்பி வருகிறார்.

  தமிழ்த்தொண்டு புரியும் நல்லியற்கை அமையப் பெற்ற இவர் வேலூர் தோபா சுவாமிகளின் வரலாற்றை வேத மொழிபெயர்ப்பாசிரியர் சிவாநந்தயதீந்திர சுவாமிகள் அவர்களைக்கொண்டு விரிவாக எழுதி வெளியிட்டு உதவினார். மற்றும் வெகுகாலத்திற்கு முன்னர் அச்சிடப் பட்டு இப்பொழுது விலைக்கு அகப்படாமல் மறைந்து போகக்கூடிய நிலையில் உள்ள பழைய தோத்திர நூல்களை வெளியிட்டுப் பாதுகாக்கவேண்டும் என்னும் சீரிய நோக்கம் உடையவராய் இப்பொழுது சிதம்பரத் தேவாரப் பாடல்கள் சில குருநமசிவாயர் இயற்றிய சிதம்பர வெண்பா , அவருடைய வரலாறு அவர் இயற்றிய பரம ராசிய மாலையில் 22 பாடல்கள், மாயூரம் கிருட்டிண ஐயர் இயற்றிய சிதம்பரம் சிவகாமியம்மை பிள்ளைத் தமிழில் சிறந்த செய்யுட்கள் மற்றும் மிருத்யுஞ்சய தோத்திரம் அறநெறி மாண்பை விளக்கும் அரிய பாடல்கள் பல ஆகியவைகளை ஒன்றுபடுத்தி இந் நூலை வெளியிட்டுள்ளார். இந்நூல் சிதம்பரம் கூத்தப்பிரானிடத்தில் பக்தியுடையவர்கட்கும் மற்றவர்க்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகும். அன்பர்கள் இந் நூலை ஆதரித்து மேலும் இத்தகைய நூல்களை அவர் வெளிப்படுத்துவதற்கு ஊக்கம் அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

  மறைசை, அகத்தியான்பள்ளி        புலவர் வை. முரு. முத்துக்குமாரசாமி
  தஞ்சை மாவட்டம்
  ------------------

  பொருளடக்கம்
  1. குருகீதை 8. பிருத் யுஞ்சயதோத்திரம்
  2. தேவாரப்பாடல்கள் முதலியன 9. பகவத் கீதை 12 அத்தியாயம்
  3. சிதம்பரநாதர் திருவருட்பா 10. பிரபுலிங்கலீலை
  4. குருநமசிவாயர் வரலாறு 11. சிவநாம மகிமை
  5. சிதம்பர வெண்பா 12. திருமந்திரம்
  6. பரமராசியமாலை 13. பட்டினத்தார் பாடல்
  7. தில்லைச் சிவகாமி பிள்ளைத் தமிழ் 14. தனிப்பாடல்கள்
  --------------------

  1. குரு கீதை - வேதவியாசர் செய்தது


  நித்யா நந்தம் பரம ஸுகதம் கேவலம் ஜ்ஞாந மூர்த்திம்
  விஸ்வா தீதம் ககந சதுருஸம் தத்வமஸ்யாதி லக்ஷ்யம் (1)

  ஏகம் நித்யம் விமல மசலம் ஸ்ர்வதீ ஸாக்ஷபூதம்
  பாவா தீதம் த்ரிகுண ரஹிதம் ஸத்குரும் தம்நமாமி (2)

  அஜ்ஞாந திமிராந் தஸ்ய ஜஞாநா ஞ்ஜந ஸலாகயா
  சக்ஷு ருத் மீலிதம் யேந தஸ்மை ஸ்ரீகுரவே நம: (3)

  அகண்ட மண்டலா காரம் வ்யாப்தம் யேந சராசரம்
  தத்பதம் தர்சிதம் யேந தஸ்மை ஸ்ரீகுரவே நம: (4)

  தயான மூலம் குரோர் மூர்த்திம் பூஜா மூலம் குரோ:பதம்
  மந்த்ர மூலம் குரோர் வாக்யம் முக்தி மூலம் குரோர்க்ருபா (5)

  மந்நாத: ஸ்ரீஜகந்நாதோ மத்குரு: ஸ்ரீஜகத் குரு:
  ஸ்வாத் மைவ ஸர்வபூதாத்மா தஸ்மைஸ்ரீகுரவே நம: (6)

  சைதந்யம் ஸாஸ்வதம் ஸாந்தம் வ்யோமாதீதம் நிரஞ்ஜநம்
  நாதபிந்து களாதீதம் தஸ்மை ஸ்ரீகுரவே நம (7)

  குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு: குருர்தேவோ மஹேஸ்வர :
  குரு ஸாக்ஷாத் பரப்பிரம்மம் தஸ்மை ஸ்ரீகுரவே நம: (8)
  --------------

  ஏதுபிழை செய்தாலும் ஏழையே னுக்கிரங்கித்
  தீது புரியாத தெய்வமே-நீதி
  தழைக்கின்ற போரூர்த் தனிமுதலே நாயேன்
  பிழைக்கின்ற வாறுநீ பேசு.

  நோயுற் டராமல் நொந்துமனம் வாடாமல்
  பாயிற் கிடவாமல் பாவியேன்-காயத்தை
  ஓர்நொடிக்குள் நீக்கியெனை ஒண்போரூர் ஐயரின்
  சீரடிக்கீழ் வைப்பாய் தெரிந்து

  நாயேனுன் சீரடிக்கு நன்கல்ல செய்தாலும்
  பேயேன் இழைத்த பெரும்பிழையை- நீயே
  பொறுத்தாள்வது உன்கடனாம் போருரா என்னை
  ஒறுத்தால் எனக்கார் உறவு,
  -----------

  தோற்றந் துடியதனில் தோயுந் நிதியமைப்பில்
  சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமாய்
  அன்று மலர்ப்பதத்தே உற்றதிரோ தம்ழத்தி
  நான்ற மலர்ப்பதத்தே நாடு.
  ----------------

  சிதம்பரத் தோத்திரத் திரட்டு
  2. திருத்தில்லைத் தேவாரப் பாடல்கள் முதலியன

  சிவமயம் - திருச்சிற்றம்பலம்
  திருச்சிற்றம்பலம்
  அல்லல் என்செயும் அருவினை என்செயும்
  தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என்செயும்
  தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்
  கெல்லை இல்லதோர் அடிமைபூண் டேனுக்கே. (1)

  சிறந்த செல்வம்
  செல்வ நெடுமாடஞ் சென்றுசேண் ஓங்கிச்
  செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
  செல்வர்வாழ் தில்லைச் சிற்றம் பலமேய
  செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே. (2)

  சிவனடிபோற்றாதவர்
  பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
  நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
  ஆக்கைக் கேஇரை தேடி அலமந்து
  காக்கைக் கேஇரை ஆகிக் கழிவரே. (3)

  அடியனேன் வந்தேன்
  பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரமயோகி
  எத்தினாற் பத்திசெய்கேன் என்னை நீ இகழவேண்டாம்
  முத்தனே முதல்வாதில்லை அம்பலத் தாடுகின்ற
  அத்தாஉன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே. (4)

  கண்பேற்றபேறு
  பாளையுடைக் கமுகோங்கிப் பன்மாடம் நெருங்கியெங்கும்
  வாளையுடைப் புனல்வந்தெறி வாழ்வயல் தில்லைதன்னுள்
  ஆளவுடைக்கழல்சிற்றம் பலத்தரன் ஆடல்கண்டால்
  பீளையுடைக் கண்களாற் பின்னைப்பேய்த்தொண்டர் காண்ப தென்னே (5)

  செய்ஞ்ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்
  மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள்கண்டு மகிழ்ந்துநிற்க
  நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்தநீல மணிமிடற்றான் கைஞ்ஞன்ற ஆடல்கண்டாற்பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே. (6)

  மனிதப்பிறவி
  குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
  பனித்தசடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்
  இனித்தமுடைய எடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்
  மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே. (7)

  இறைவன் தொண்டர் எதனையும் பாரார்
  வானந் துளங்கிலென் மண்கம்பமாகிலென் மால்வரையும்
  தானந் துளங்கித் தலைதடுமாறிலென் தண்கடலும்
  மீனம்படி லென் விரிசுடர் வீழிலென் வேலைநஞ்சுண்
  டூனம்ஒன் றில்லா ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே. (8)

  பேசாத நாட்கள்
  அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்
  அருமருந்தை அகல்ஞாலத் தகத்துள் தோன்றி
  வருந்துணையும் சுற்றுமும் பற்றும் விட்டு
  வான்புலன்கள் அகத்தடக்கி மடவாரோடும்
  பொருந்தணைமேல் வரும்பயனைப் போகமாற்றிப்
  பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க்கென்றும்
  பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
  பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. (9)

  பிறதேவாரப் பாடல்கள்

  திருமறைக்காட்டுத் தேவாரம்
  வேண்டியதை அருள்வான்
  தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
  தொல்லமரர் சூளாமணி தான் கண்டாய்
  காண்டற் கரிய கடவுள் கண்டாய்
  கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்
  வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
  மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம்
  மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
  மறைக்காட் டுறையும் மணாளன் தானே. (10)

  தீவினையாளர்கள்
  திருநாமம் அஞ்செழுத்தும் செப்பார் ஆகில்
  தீவண்ணர் திறம்ஒருகால் பேசார் ஆகில்
  ஒருகாலுந் திருக்கோயில் சூழார் ஆகில்
  உண்பதன் முன் மலர்பறித்திட் டுண்ணார் ஆகில்
  அருநோய்கள் கெடவெண்ணீ றணியார் ஆகில்
  அளியற்றார் பிறந்தவா றேதோ என்னில்
  பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்துப்
  பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே. (11)

  நாம் வணங்குங் கடவுள்
  சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தந்து
  தரணியொடு வானாளத் தருவ ரேனும்
  மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லேம்
  மாதேவர்க் கேகாந்தர் அல்லாராகில்
  அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோயராய்
  ஆஉரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
  கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பர் ஆகில்
  அவர்கண்டீர் நாம் வணங்குங் கடவுளாரே. (12)

  நாம் இறைவனுக்கே அடிமை
  நாமார்க்கும் குடியல்லேம் நமனை அஞ்சோம்
  நரகத்தில் இடர்படோம் நடலை இல்லோம்
  ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
  இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை
  தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான
  சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதில்
  கோமாற்கே நாம்என்றும் மீளா ஆளாய்க்
  கொய்மலர்சே அடியிணையே குறுகி னோமே. (13)

  குற்றமே பெரிதுடையேன்
  குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன்
  குற்றமே பெரிதுடையேன் கோல மாய
  நலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி அல்லேன்
  நல்லாரோ டி.சைந்திலேன் நடுவே நின்ற
  விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தேன் அல்லேன்
  வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன்
  இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன்
  என்செய்வான் தோன்றினேன் ஏழையேனே. (14)

  திருவாசகம் - வாழாப்பத்து
  பாரொடு விண்ணாய்ப் பரந்தஎம் பரனே
  பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
  சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே
  திருப்பெருந் துறை உறை சிவனே
  யாரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன்
  ஆண்டநீ அருளிலை யானால்
  வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
  வருகஎன் றருள்புரி யாயே. (15)

  நான் உன் அடைக்கலம்
  வெறுப்பனவே செய்யும் என் சிறுமையைநின் பெருமையினால்
  பொறுப்பவனே அராப் பூண்பவனே பொங்குகங்கைசடைச்
  செறுப்பவனே நின்திருவருளால் என் பிறவியைவேர்
  அறுப்பவனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. (16)

  நான் வேறுயாது செய்வேன்
  முழுமுதலே ஐம்புலனுக்கும் மூவர்க்கும் என்தனக்கும்
  வழிமுத லேநின் பழவடியார்திரள் வான்குழுமிக்
  கெழுமுத லேயருள் தந்திருக்க இரங்குங் கொல்லோவென்
  றழுமது வேயன்றி மற்றென் செய்கேன் பொன்னம் பலத்தரைசே. (17)

  திருவிசைப்பா

  அரிவையர் காதலிற் சிறிது
  தத்தை அங் கனையார் தங்கள்மேல் வைத்த
  தயாவைநூ றாயிரங்கூறிட்
  டத்திலொங் கொருகூ றுன்கண்வைத் தவருக்
  கமருல களிக்கும் நின்பெருமை
  பித்தனென் றொருகால் பேசுவ ரேனும்
  பிழைத்தவை பொறுத்தருள் செய்யும்
  கைத்தலம் அடியேன் சென்னிமேல் வைத்த
  கங்கைகொண்ட சோளேச் சரத்தானே. (18)

  திருப்பல்லாண்டு

  வாழ்த்து
  மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
  வஞ்சகர் போய்அகலப்
  பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
  புவனியெல்லாம் விளங்க
  அன்னநடை மடவாள் உமைகோன்
  அடியோமுக் கருள்புரிந்து
  பின்னைப்பிறவி அறுக்கநெறி தந்த
  பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே (19)

  பெரிய புராணம்
  நடராசர் வணக்கம்
  கற்பனை கடந்தசோதி கருணையே உருவம் ஆகி
  அற்புதக் கோலம் நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்
  சிற்பர வியோம மாகும் திருச்சிற்றம் பலத்துள் நின்று
  பொற்புடன் நடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி (20)
  --------------------

  3. தருமபுர ஆதினம் சிவஞானதேசிகர் அருளிச்செய்த
  சிதம்பரநாதர் திருவருட்பா

  திருச்சிற்றம்பலம்

  விரித்த செஞ் சடையாட வதனசந் திரனாட
  விரிகமல நயனம் ஆட
  வெண்முறுவல் நிலவாட நண்ணுதம ருகம்ஆட
  வீசுமொரு செங்கை ஆடத்
  தரித்தபுலி அதளாட அபயகரம் ஆடஇரு
  தங்குதோ டூச லாடத்
  தாங்குநூ லாடமே லோங்குநீ ராடவொளிர்
  தண்பவள மேனீ யாட
  உரித்தகரி யுரியாட உரக்கங் கணமாட
  உபயபரி புரமும் ஆட
  ஒருபதம் எடுத்தாட ஒருபதம் மிதித்தாட
  உள்ளே மகிழ்ந்து சற்றே
  சிரித்துமலை மங்கைகொண் டாடநின் றாடுமுன்
  திருநடனம் என்று காண்பேன்
  செகம்பணி திகம்பர சிதம்பர நடேசனே
  சிற்சொரூ பாநந் தனே. (1)

  உன்னுடைய நடனத்தை உள்ளபடி யொளியாமல்
  ஒருநிமிட மாகி லுங்கண்(டு)
  உத்தமர்கள் பெற்றிடுவர் முத்தியினை யென்றென்(று)
  உரைக்குமறை உண்மை யானால்
  முன்வந்த சன்னத்தி லேயெனக் குக்கண்டு
  முடியக் கிடைத்த ததனால்
  முற்பந்தம் ஓடிவிடும் இப்பந்தம் வாராது
  முடியுமுன் இப்ப வத்தே
  புன்மையறி வோடாகி லுங்காண வருகின்ற
  பொலிவினால் மேற்பிறப்புப்
  போனதே போவதற் கேதுவீ தாதலால்
  புண்ணியம் மிகுந்த இந்தச்
  சென்மமன் றோசென்மம் எண்பத்து நான்குநூ
  றாயிரஞ் சென்மத் தினும்
  செகம்பணி திகம்பர சிதம்பர நடேசனே
  சிற்சொரூ பாநந் தனே.

  தட்சணாமூர்த்தி திருவருட்பா

  பூங்கமல வதனமும் பொழிகருணை நயனமும்
  புன்முறுவல் நிலவெ றிப்பும்
  பொலிசடா டவியுமதில் உறைநிலா மதியுமொளி
  புனைகுழை இலங்கு காதும்
  தேங்குபர மானந்த சின்மயா காயமாம்
  சித்தியருள் முத்திரையு மேல்
  சிவாநுபவ நீங்கினோர் சேரவருள் செபமாலை
  சிவஞான புத்தகமுமோர்
  வேங்கையத ளுடையும் சரற்கால மதிகோடி
  வெள்ளமென நிறைவடிவமும்
  மேலான தெய்வம்நாம் அன்றி வேறில்லையிது
  மெய்யென் றெடுத்த கனலும்
  ஓங்கவட வாலடியில் உறைகின்ற தெய்வமே
  உனையன்றி வேறு நினையேன்
  ஒன்றாகி யானந்த உருவாகி யென்னுயிர்க் (கு)
  உயிரான பரம சிவமே.
  --------------

  4. குருநமசிவாயர் வரலாறு

  நினைக்க வீடுபேறளிக்குஞ் சிவப்பதியாகிய திருவண்ணாமலையிலே நமசிவாய மூர்த்தி என்னும் பெயருடைய சித்தர் ஒருவர் எழுந்தருளியிருந்தார். அவர் மலையின் மேல் குகையில் நிட்டை புரிந்து கொண்டிருந்தபடியால் அவருடைய பெயர் குகைநமசிவாயர் என்று வழங்கியது. அவர் குகையின் அண்மையில் வளர்ந்தோங்கி நின்ற ஓர் ஆலால மரத்தின் மீது தூங்கும் ஊஞ்சலிட்டு அதில் அறிதுயில் கொள்வது வழக்கம்.

  குகைநமசிவாயருக்கு நமசிவாயமூர்த்தி என்னும் பெயருடைய மாணவர் ஒருவர் இருந்தார். அவர் தம்முடைய குருவுக்கு அண்மையில் இருந்து மிகுந்த அன்புடன் பணிவிடை செய்தலைத் தம்முடைய கடமையாகக் கொண்டிருந்தார். அவ்வாறிருக்கும்-போது ஒருநாள் திடீரென்று நகைத்தார். சீடர் நகைத்ததைக்கண்ட குருவானவர், "அப்பா! நமசிவாயம்! என்ன புதுமையைக் கண்டு நகைத்தாய்?” என்று கேட்டார்.

  நமசிவாயர் தம்முடைய ஆசிரியரைப் பார்த்து, 'என்னை அடிமை கொண்ட ஐயனே! திருவாரூரிலே தியாகராசர் திருவுலாக் கொண்டருளினார். தெருவில் கூத்திகள் பலர் கூத்தியற்றிக் கொண்டுவந்தனர். அவர்களில் ஒருத்தி கால் தடுக்கி மல்லாந்து கீழே விழுந்தாள். அங்கு நின்றவர்கள் அனைவரும் நகைத்தனர். நானும் நகைத்தேன் அதைத் தவிர வேறொன்றும் இல்லை' என்றார்.

  மற்றொரு நாள் நமசிவாயர் தம்முடைய ஆடையைப் பிடித்துத் தேய்த்தார். குருவானவர் தம்முடைய மாணவரைப் பார்த்து, "எதற்காக இப்படித் தேய்த்தாய்?" என்று உசாவினார். அதற்கு மாணவராகிய நமசிவாயர், ''திருத்தில்லையிலே பொன்னம்பலத்திற்குக் கறுப்புத் திரை போட்டிருந்தார்கள். அதற்கு அண்மையில் குத்து விளக்கிலே நெய்விட்டுத் திரிபோட்டு எரியவிட்டிருந்தார்கள். அத்திரியை ஓர் எலி இழுத்துக்கொண்டு சென்றது. அப்பொழுது திரை பற்றிக்கொண்டு எரியத் தொடங்கியது. அங்கிருந்தவர்கள் திரையைத் தேய்த்துத் தீயை அணைத்தார்கள். அடியேனும் தேய்த்து மேலும் எரியா வண்ணஞ் செய்தேன்'' என்று கூறினார்.

  "பிறகு ஒருநாள் குகைநமசிவாயர் தம்முடைய மாணவரை ஆராய்ந்து பார்த்தற் பொருட்டு வாந்தி செய்து அதைத் திருவோட்டிற் பிடித்துத் தம்முடைய மாணவரிடங் கொடுத்து, ''இதனை மனிதர் காலடிபடாத இடத்தில் கொண்டுபோய்க் கொட்டிவிட்டு வா'' என்று கூறினார். நமசிவாயர் மனிதர் காலடிபடாத இடம் எதுவென ஆராய்ந்து பார்த்து அதனைத் தாமே சாப்பிட்டுவிட்டார்.

  குருவானவர் இப்புதுமைகளையெல்லாம் பார்த்து மாணவரை நோக்கி, ''அப்பா! நமசிவாயம் அடிபடாத இடத்தில் வைத்தாயா?" என்று கேட்டார். மாணவர் "வைக்கவேண்டிய இடத்தில் வைத்தேன்'' என்று கூறினார். ஆசிரியர் நமக்கு மேல் மாணவனுக்கு வரவ மெய்யறிவு மிகுதிப் பட்டுக்கொண்டிருக்கிறது. இனிமேல் இவ்விடத்தில் வைத்திருக்கக்கூடாது. இன்னும் ஒரு புதுமை பார்த்து மாணவனைத் தக்க இடத்திற்கு அனுப்பிவிட. வேண்டும் என்று முடிவு செய்தார்.

  ஒருநாள் நமசிவாயர் தம்முடைய மாணவரைப் பார்த்து ;
   ''ஆல்பழுத்துப் பட்சியினுக் காகார மானதென
   வேல் பழுத்து நின்ற நிலை வீணிலென –

  என்று ஒரு வெண்பாவில் பாதியைப் பாடினார். இதனைக் கேட்ட மாணவர் "ஏன் சுவாமி எஞ்சியதையுங் கூறலாமே'' என்று கேட்டார். குகைநமசிவாயர், ''எஞ்சியதை நீ முடி பார்ப்போம்" என்று கூறினார். அதற்கு மாணவர் "நான் குருவாக்கிற்கு எதிர்வாக்குச் சொல்லக் கூடாது" என்றார். "நீ ஞானப் பிள்ளையாகையாற் சொல்லலாம்” என்றார் ஆசிரியர். உடனே மாணவர் ;

   - சாலவனச்
   செய்யா ஒருத்தருடன் சேர்ந்தும் இருப்பீரோ
   ஐயா நமச்சிவா யா''

  என்று பாடலை முடித்தார்.

  இதனைக் கேட்டதும் குகைநமசிவாயர் தாம் அறிதுயில் கொள்ளும் படுக்கை விட்டு இறங்கி, ''அப்பா! என்னிரு கண்மணியே! இன்றல்லோ நீ மெய்யறிவை அடைந்தாய். புதுமை ! புதுமை ! உன்னைப்போல் மாணவன் யாருக்குக் கிடைப்பான்? உன் பெயர் இன்று முதல் குருநமசிவாயர் என்று வழங்குக என்று சொல்லித் தழுவிக்கொண்டார். பிறகு மாணவரைப் பார்த்து, ''ஒரு தூணிலே இரண்டு யானைகளைக் கட்டுதல் கூடாது. இதுவோ போகத்தை யளிக்குஞ் சிவப்பதி. அஞ்ஞானத்தைப் போக்கி மெய்ஞ் ஞானத்தைத் தரும் அம்பலவாணர் எழுந்தருளியிருக்கும் மேலான சிவப்பதியாகிய திருத்தில்லை என்னும் ஊர் ஒன்று இருக்கிறது. அப்பதியில் உன்னால் திருப்பணி முதலியவை நடைபெற வேண்டியதாக இருக்கிறது. ஆகவே நீ அங்கே போய்த் தங்கியிருக்குதல் வேண்டும்' என்று கூறினார்.

  மாணவர் ஆசிரியரைப் பார்த்து, ''நான் குருவைப் போற்றி வழிபட்டுக்கொண்டு அவரைத் தெரிசித்திருப்பேனே யல்லாமல் குருவின் தெரிசனம் இல்லாமல் இருக்க மாட்டேன்'' என்றார். ஆசிரியர் தம் மாணவரைப் பார்த்து "நீ திருத்தில்லை போய் அங்கு தங்கியிரு, கூத்தப்பிரான் என்னைப்போல் காட்சியளிக்க வில்லையானால் இவ்விடத்திற்கு வந்துவிடு'' என்று கூறினார். குருநமசிவாயர் ’நல்லது' என்று ஒப்புக்கொண்டு ;

   ''வாக்காலே தியானத்தாலே மனமகிழ் கிருபையாலே
   நோக்காலே பரிசத்தாலே நுண்ணிய பிறவி தீர்க்கும்
   தாக்கான நமசிவாயம் சலக்கமெய் யாடுகின்ற
   நாற்காலி காலதானால் நான் முத்தி பெறலுமாமே''

  என்று பத்துப்பாடல்களாற் புகழ்ந்து வணங்கினார். ''நடக்கலாம்'' என்று ஆசிரியர் கட்டளை பிறந்தது. உடனே நமசிவாயர் தாம் மட்டுந் தனித்தவராய்ப் புறப்பட்டுக் கிழக்கு நோக்கிக் காதவழி வந்தார். இருள் மிகுந்து இராப்போதாயிற்று. ஓரிடம் பார்த்து ஒரு மரத்தின்கீழே நிட்டை கூடியிருந்தார், நேரமாகியதும் பசிநோய் வருத்தத் தொடங்கியது. உண்ணாமுலை அம்மையை எண்ணி ;

   ''அண்ணா மலையார் அகத்துக் கினியாளே
   உண்ணா முலையே உமையாளே- நணணா
   நினைதோறும் போற்றிசெய நின்னடியார் உண்ண
   மனைதோறுஞ் சோறு கொண்டு வா''

  என்னும் வெண்பாவைப் பாடினார். அண்ணாமலையில் அண்ணாமலையாருக்குச் சர்க்கரைப் பொங்கல் செய்து பொற்றாம்பாளத்தில் வைத்துப் படைத்தனர். பூசகர் முதலியோர் அப்பொற்றாம்பாளத்தை எடுப்பதற்கு மறந்து கோவிலைப் பூட்டிக்கொண்டு அவரவர் வீடு போய்ச் சேர்ந்தார்கள். உண்ணாமுலை அம்மையார் அத்தாம்பாளத்தை உணவோடு எடுத்துக் கொண்டுவந்து குருநமசிவாயருக்குக் கொடுத்துவிட்டுக் கோயிலுக்குப் போய்ச் சேர்ந்தார்.

  மறுநாள் பொழுது விடிந்தது. பூசகர் முதலானோர் கோயிலுக்குள் வந்து கோவிலைத் திறந்து பொற்றாம்பாளத்தைப் பார்த்தார்கள். அஃது எங்கும் காணப்படவில்லை. யாரோ கள்வர்கள் கோவிலுக்குள் நுழைந்து பொற்றாம் பாளத்தைக் களவு செய்து கொண்டு போய்விட்டார்கள் என்று கோவில் குருக்களும் ஊர்வாழ் மக்களும் எண்ணினார்கள். தாம்பாளத்தைத் தேடி எல்லோரும் மனங் கவன்று சுழன்றதில் இருபது நாழிகை வரையில் கோவிலிற் பூசை நடைபெறவில்லை. அப்போது ஓர் அந்தணச் சிறுவன் மீது ஆவேசம் வந்தது. அவன் கூடியிருந்த மக்களைப் பார்த்து, ''குருநமசிவாய மூர்த்தி திருத்தில்லைக்குப் போகிற வழியிலே ஓர் ஆலால மரத்தின் கீழே அமர்ந்திருக்கிறார். அவருக்கு அமுது கொண்டுபோய் உண்ணா முலை யம்மையார் கொடுத்தார். தாம்பாளம் அங்கே கிடக்கிறது எடுத்துக்கொண்டு வாருங்கள்'' என்று இயம்பினான். அதனைக் கேட்டு எல்லோரும் வியப்படைந்தார்கள். குருக்கள் முதலியோர் குறிப்பிடப்பட்ட இடத்திற்குப் போய்த் தாம்பாளத்தை எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தார்கள்.

  குருநமசிவாயர் மறுநாட் காலையில் எழுந்ததும் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு குருவைப் போற்றி வழிபட்டுக் கிழக்கு நோக்கிப் புறப்பட்டார். வழியில் இருடிவந்தனம் என்னும் பெயருடைய சிறந்த பதியைக் கண்டார். அப்பதியில் அம்மனும் சுவாமியும் பாகம் பிரியாமலிருப்பர். முனிவர்கட்கரசராகிய அகத்திய முனிவராற் பூசிக்கப்பட்டது. அங்கு ஐயாயிரங்கொண்டான் என்னும் பெயருடைய திருத்தநீரும் உண்டு. குருநமசிவாயர் அதில் நீராடி நாட்கடன்களை முடித்துக்கொண்டு நிட்டையில் இருந்தார். பசிநோய் வந்தணுகியது. அவ்வளவில் ;

   ''தாயிருக்கப் பிள்ளை தளருமோ தாரணியில்
   நீயிருக்க நான்தளரல் நீதியோ-வேயிருக்கும்
   தோளியே விண்ணோர் துதிக்குந் திருமுத்து
   வாளியே சோறு கொண்டு வா.''

  என்று பாடினார். இதனைப் பாடியதும் அம்பிகை தோன்றி; என்னப்பா ''நான் பாகம்பிரியாமல் இருக்கவும் நீ பிரித்துப் பாடினது சரியா? உன்னுடைய வாக்கினாலே பிரித்துப் பாடக் கூடாது. சேர்த்துத்தான் பாடவேண்டும்'' என்று திருவாய் மலர்ந்தருளினார். குருநமசிவாயர்;

   ''மின்னும் படிவந்த மேவுகல தீசருடன்
   மன்னுந் திருமுத்து வாளியே-பொன்னின்
   கலையாளே தாயேயென் கன்மனத்தே நின்ற
   மலையாளே சோறு கொண்டு வா''

  என்று பாடினார். அம்மையார் அமுது கொண்டுவந்து வழங்கினார். குரு நமசிவாயர் அதனை உண்டுவிட்டு அங்கு நின்று புறப்பட்டார். விருத்தாசலம் என இந்நாளில் வழங்கும் பழமலைக்கு வந்து சேர்ந்தார். மணிமுத்தா நதியில் நீராடினார்; பழமலை நாதரையும் பெரியநாயகியம்மை யாரையும் போற்றி வழிபட்டார். ஒரு குளக்கரையிலே நிட்டையில் அமர்ந்தார். பசிநோய் உண்டாகியது.

   ''நன்றிபுனை யும்பெரிய நாயகியெ னுங்கிழத்தி
   என்றுஞ் சிவன்பால் இடக்கிழத்தி - நின்ற
   நிலைக்கிழத்தி மேனிமுழு நீலக் கிழத்தி
   மலைக்கிழத்தி சோறு கொண்டு வா”

  என்று பாடினார். அவ்வளவில் அம்மன் தண்டூன்றிக் கொண்டு விருத்தாம்பிகையாக வந்து குரு நமசிவாயரைப் பார்த்து, "என்னப்பா உன்னுடைய வாக்கினாலே என்னைக் கிழத்தி என்று பாடுதல் நலமா? கிழவிக்கு நடக்க முடியுமா? தண்ணீர் எடுக்க முடியுமா? அமுது கொண்டு வர முடியுமா?'' என்று உசாவினார்,

  குரு நமசிவாயர் அம்பிகையைப் பார்த்து ''அம்மா! பாலகாசியிற் பாலாம்பிகை. இது விருத்த காசி. நீரும் பெரிய நாயகி உம்முடைய சுவாமியும் பழமலை நாதர் ஆகையால் நான் இவ்வாறு பாடினேன்'' என்று கூறினார். "உன்னுடைய வாக்கால் இளமையாகப் பாடவேண்டும் என்று அம்பிகையார் கேட்டுக்கொண்டார். குரு நமசிவாயர், "அப்படிப் பாடினால் இரண்டு அம்மன்களாக முடிகிறதே'' என்று சொன்னார். ''முடிந்தால் முடியட்டும்" இளமையாகவே பாடவேண்டும் என்று அம்பிகையார் கட் டளையிட்டார். உடனே குரு நமசிவாயர்;

   ''முத்த நதிசூழும் ழதுகுன் றுறைவாளே
   பத்தர் பணியும் பதத்தாளே - அத்தர்
   இடத்தாளே மூவா முலைமேல் ஏரார
   வடத்தாளே சோறு கொண்டு வா'

  என்று பாடினார். அம்பிகையார் வாலாம்பிகையாய் உணவு கொண்டுவந்து கொடுத்தார். அதனை உண்டுவிட்டுப் புறப்பட்டுப் புவனகிரிக்கு வந்து சேர்ந்தார். நான்கு கோபுரங்களும் காணப்பட்டன. அவைகளைப் போற்றிப் பணிந்தார்.

   ''கோபுரங்கள் நான்கினையும் கண்டமட்டிற் குற்றமெலாம்
   தீபரந்த பஞ்சதுபோல் சென்றதே - நூபுரங்கள்
   ஆர்க்கின்ற செஞ்சரண அம்பலவா நின்பாதம்
   பார்க்கின்றார்க் கென்னோ பலன்''

  என்று பாடிக்கொண்டே திருத்தில்லைக்கு வந்து சேர்ந்தார். கோவிலுக்குப் போய்ச் சிவகங்கையில் நீராடினார்.

   ''கண்டமட்டில் கண்டவினை காதம்போம் கையிலள்ளிக்
   கொண்டமட்டில் கொண்டவினை கொள்ளைபோம் --- வண்டமிழ் சேர்
   வாயார வேபுகழும் வண்ணச் சிவகாமித்
   தாயார் திருமஞ்சனம்"

  என்று பாடினார். பொன்னம்பலத்திற்குப் போய்க் கூத்தப்பிரானைப் போற்றி வழிபட்டார். கூத்தப்பிரான் திருவருணையில் இருக்கும் குருவாகிய குகை நமசிவாயரைப் போலக் காட்சி கொடுத்தார். அப்போது இவர்;

   ''திருவணா மலையிற் குகைநம சிவாய
         தேசிக வடிவமா யிருந்து
   கரவனா மடியேன் சென்னிமேல் உனது
         கழலினை வைத்தவா றுணரேன்
   விரகநா ரியரைப் புதல்வரைப் பொருளை
         வேண்டிய வேண்டிய தனைத்தும்
   பரவினார் புகழ்வார்க் களித்திடும் பொன்னம்
         பலவனே! பரமரா சியனே!''

  என்று நூறு பாடல்களை ஒரு நாழிகை நேரத்தில் நின்ற படியே பாடினார். (இந்நூல் பரமராசிய மாலை என்னும் பெயரோடு வழங்குகின்றது). பிறகு ஓர் அறைக்குட் சென்று நிட்டை செய்துகொண்டிருந்தார். தில்லைவாழ்ந்தணர்களில் மிகச் சிறந்தவர்களாக மூவர் இருந்தனர். அவர்களுடைய பெயர் சிவமுத்தர், சடாமுத்தர், மகாமுத்தர் என வழங்கும். தில்லையம்பலவாணர் அம்மூவரிடமும் போய்த் "திருவண்ணாமலையில் இருந்து ஒரு துறவி இங்கு வந்துள்ளார். அவர் மிகப் பெரியவர். யோகநிட்டையில் அதிகமாக இருப்பவர். அவருக்குத் தனியே இடங்கொடுக்கவேண்டும். அவராலே நமக்குப் பல திருப்பணிகள் நடைபெறக் காத்திருக்கின்றன. அதற்கு எங்கே இடமென்றால் நம்முடைய கோவிலுக்கு வடபுறத்தின் எல்லைக்கப்புறம் இடமிருக்கின்றது; அங்கே நாம் போய் இரண்டு தரம் அடிவைத்திருக்கின்றோம். அஃது எதற்காகவெனின் மாணிக்க வாசகருடைய திருவாசகத்தை எழுதுவதற்காகவும் உபமன்யருக்குத் திருப்பாற்கடலை அழைத்துக் கொடுப்பதற்காகவுமாம். அவ்விடத்திற்கு . இவரை அழைத்துக் கொண்டு போய்விடுங்கள்" என்று கூறி மறைந்தருளினார். அவ்வாறே தில்லைவாழந்தணர் மூவரும் குரு நமசிவாயரை அவ்விடத்திற்கு அழைத்துக் கொண்டுபோய் விட்டுவிட்டுக் கோவிலுக்கு வந்துவிட் டார்கள். அவ்விடத்திலே இவர் நிட்டை புரிந்துகொண்டிருந்தார். அப்போது பசிநோய் உண்டாகியது. உடனே;

   ''ஊன்பயிலுங் காயம் உலராமல் உன்றனது
   வான்பயிலும் பொன்னடியை வாழ்த்துவேன் --தேன்பயிலும்
   சொல்லிய நல்லார் துதிக்கும் சிவகாம
   வல்லியே சோறு கொண்டு வா"

  என்று பாடினார். அப்போது சிவகாமியம்மையார் அமுது கொண்டு வந்து இவருக்களித்து;

   ''கொண்டுவந்தேன் சோறு குகைநமச்சி வாயரது
   தொண்டர் அடியார் சுகிக்கவே - பண்டுகந்த
   பேய்ச்சிமுலை யுண்ட பெருமாள் உடன்பிறந்த
   நாய்ச்சி சிவகாமி நான்''

  என்று திருவாய் மலர்ந்தருளியதுடன் நாள்தோறும் உணவு வழங்கிக்கொண்டிருந்தார். இவர் நிட்டையிலே பொருந்தி யிருந்தார்.

  குரு நமசிவாயர் மெய்ஞ்ஞானி என்பதை உணர்ந்த பலர் இவரிடம் வந்து போற்றி வழிபட்டுச் செல்லத் தொடங்கினார்கள். அவர்கள் பணங் காசு முதலிய பொருள்களை எதிரிலே வைத்துவிட்டுச் சென்றார்கள். அவைகள் மலைபோற் குவிந்து கிடந்தன. குரு நமசிவாயர் யோகநிட்டையில் இருந்து புற நோக்காகும்போது அப் பொருள்களைப் பார்த்து இஃது ஆட்கொல்லி ; இஃதிவ் விடம் இருத்தல் தகாது என்று எண்ணமிட்டுக் கொண்டே அப்பொழுது யார் எதிரே இருக்கிறார்களோ அவர்களைப் பார்த்து அப்பொருளை எடுத்துக்கொண்டு போகுமாறு கட் டளையிடுவார். அவர்கள் அவ்வாறே எடுத்துக்கொண்டு போய் விடுவார்கள். இவ்வாறு ஏராளமான பொருட்கள் போயின.

  இவ்வாறு பெரும் பொருள் வீணாதலைத் தில்லை மூவாயிரர் பார்த்து இவ்வாறு பெரும் பொருள் வீணாகப் போகிறதே என்று எண்ணமிட்டார்கள். குரு நமசிவாயர் இடத்திற்கு வந்து, 'தேவர் இவ்விடத்தில் இருக்கிறபடியால் கண்ட பேர் பொருளை எடுத்துக் கொண்டு போய் விடுகிறார்கள். கோவிலுக்குள் வந்தால் பல் திருப்பணிகள் நடைபெறும். பல கட்டளைகளை ஏற்படுத்தலாம் ஆகையால் உள்ளே வரவேண்டும்" என்று கூறினார்கள்.

  குரு நமசிவாயர் "நாம் அம்பலவாணர் கட்டளைப்படி இங்கு வந்திருக்கிறோம் நமக்கு அவ்விடத்திலே என்ன வேலையிருக்கிறது?'' என்று சொல்லி ஊருக்குள்ளே செல்வதற்கு மறுத்தார்.

  தில்லைவாழந்தணர்கள் இவர் நாமழைத்தால் வரமாட்டார் நம்முடைய சுவாமியைக் கொண்டு அழைக்க வேண்டும் மென்று எண்ணியவர்களாய்க் கூத்தப்பிரான் திருமுன்பு சென்று தங்கள் நோக்கத்தை முறையிட்டார்கள். கூத்தப் பிரான், 'நல்லது உங்களுக்கு வரமாட்டார். நாமே போய் அழைத்து வருகிறோம்'' என்று கூறினார். முதிர்ந்த துறவி யாய்த் தண்டு கமண்டலம் பிடித்துக்கொண்டு திருப்பாற் கடலுக்கு வந்து குரு நமசிவாயருக்கு எதிரே நின்றார். நிட்டை தெளிந்ததும், 'வணக்கம்' என்று கூத்தப்பிரானைப் பார்த்துச் சொன்னார். கூத்தப்பிரானாகிய துறவியாரும் 'வணக்கம்' என்று சொன்னார். குரு நமசிவாயர் மாறு கோலத்துடன் வந்திருப்பவரைப் பார்த்து, ''நீர் எந்த ஊர்?'' என்று உசாவினார். வந்தவர், தில்லைவனம்' என்றார். ''உம்முடைய பெயர் யாது?'' என்றார் நமசி வாயர். '' அம்பலத்தாடுவார்'' என்று சொன்னார் கடவுள் 'இவ்விடத்திற்கு வந்த காரியம் என்ன?'' என்றார் குரு நமசிவாயர். வந்தவர், ''உணவு தேவையாக இருக்கிறது. இவ்வூர் முழுவதுஞ் சென்றேன். அகப்படவில்லை, சிலர் இவ்விடத்திற்கு வந்தால் அகப்படும் என்று சொன்னார்கள். ஆகையால், இவ்விடம் வந்தேன்' என்றார். அதற்குக் குருநமசிவாயர் நமக்குத்தேவி உணவு கொண்டு வந்து கொடுக்கிறது. நம்மிடத்தில் ஏனங்கூட இல்லை" என்று கூறினார். கடவுள், 'ஏனம் இதோ இருக்கிறது என்று கூறித் திங்களையே ஏனமாக வைத்தார்.

  குரு நமசிவாயர் அம்மனை எண்ணினார். உணவு வந்தது.'' இதனைக் கொள்ளும்" என்றார். அம்பலத்தாடுவார், ''நாம் கொள்ளமாட்டோம்" என்று சொன்னார். குரு நமசிவாயர் ''என்ன காரணம்?'' என்று உசாவினார். ''இவ்வாறு நாள்தோறும் உணவு கொடுத்தால்தான் கொள்ளுவோம் இல்லாவிட்டால் வேண்டியதில்லை” என்றார் வந்தவர். குரு நமசிவாயர் வந்தவரைப் பார்த்து "நீரோ மிக முதியராக இருக்கிறீர். நானோ காசியோ இராமேசுவாமோ என்று இருக்கிறேன். அவ்வாறாக நாள்தோறும் உணவு கொடுக்கிறேன் என்று எவ்வாறு சொல்லுகிறது?" என்றார்.

  அம்பலத்தாடுவார், ''உமக்கு முன்னே நடந்தால் உணவு கொடும். பின்னால் இருந்தால் உணவு வேண்டாம்'' என்றார். குரு நமசிவாயர் 'நீர் எப்பொழுதும் எமக்கு முன்னே இருந்தால் உணவு கொடுக்கிறேன் இல்லாவிடில் இல்லை” என்றார். அம்பலத்தாடுவார், ''நாம் எப்பொழுதும் முன்னால் இருக்கிறோம்" என்றார். பிறகு நமசிவாயர் ''இப்பொழுது உணவு கொள்ளும்" என்றார். வந்தவர், "திருநீற்றையும் சிவ கண்மணியையும் தொட்டுக்கொடுத்தால் கொள்ளுவோம்'' என்றார். குரு நமசிவாயர், 'நீர் முன்னால் நின்றால் தொட்டுத் தருகிறோம்” என்றார். அவ்வாறே அம்பலத்தாடுவார் முன்னிற்கக் குரு நமசிவாயர் திருநீறு சிவ கண்மணி ஆகியவைகளைத் தொட்டுக்கொடுத்தார். அம்பலத்தாடுவார் உணவு கொண்டார். தாகத்திற்கு நீர் வேண்டும் என்றார். ''அதோ திருப்பாற்கடல் இருக்கிறது, தண்ணீர் குடித்துக்கொள்ளும்'' என்றார் குரு நமசிவாயர். அம்பலத்தாடுவார் தண்ணீர் குடிக்கப்போய் அப்படியே மறைந்துவிட்டார்:

  பிறகு அம்பலத்தாடுவார் தில்லைவாழ் அந்தணரை அழைத்து, "நாம் போய்த் திட்டஞ் செய்துவிட்டு வந்திருக்கிறோம். நீங்களனைவருங்கூடி நமக்குண்டாகியுள்ள விருது களையும் நாம் ஏறுகிற சிவிகையையும் எடுத்துக்கொண்டு போய் அவரைச் சிவிகையிலேற்றி விருதுகளுடன் ஊர்வல மாக நம்மிடத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள் . என்று கட்டளையிட்டார்.

  தில்லைவாழந்தணர் அவ்வாறே சென்று ''இனிமேலாவது எழுந்தருளலாமே இந்தப் பல்லக்கில் ஏறவேண்டும்'' என்று சொன்னார்கள். குரு நமசிவாயர் "நமக்கேன் பல்லக்கு? தேவையில்லை" என்று சொன்னார். "இது பல்லக்கு அன்று சூரிய சிம்மாசனம்'' என்றார்கள் தில்லைவாழந்தணர்கள். 'எதுவாக இருந்தாலுஞ் சரி வேண்டாம் என்றார் குரு நமசிவாயர். பிறகு தில்லைவாழந்தணர்கள், குரு நமசிவாயரைப் பார்த்து, 'நேற்று நண்பகலில் எங்களுடைய கடவுள் தங்களிடத்திற்கு வந்தாரே நீங்கள் என்ன சொன்னீர்கள்?'' என்று கேட்டார்கள். குரு நமசிவாயர் நிட்டையிலே பார்த்தார். கூத்தப்பிரான் காட்சி கொடுத்தார். இவ்விடத்திற்கு வந்துவிட்டு அங்கும் போய்ச் சொன்னாரா என்று எண்ணிக்கொண்டு;

   ''சங்கமராய் அம்பலவர் தாமே எருந்தருளி
   இங்கெமக்குப் பிச்சை இடுவென்ன - அங்கமுது
   திட்டமுடன் நமக்குத் தினமுமே நீசர்வ
   கட்டளையுண் டாக்கு கென்றார் காண்''

  என்று கூறிக்கொண்டே பல்லக்கிலேறித் திருவீதி வலமாகச் சென்றார். அப்போது :

   ''அல்லல் ஆகிய இருவினை தனைஅறுத் தடியனை தருவாரோ
   மல்லல்நீடிய புவியின் மேல் இன்னமும் வருபிறப் பறுப்பாரோ
   நல்லமாமுலை மாதுமை நாயகர் நான்மிதம் நவின் றேத்தும்
   தில்லைநாயகர் அம்பலத் தாடுவார் திருவுளர் தெரியாதே.

  என்று பாடிக்கொண்டே கோவிலுக்குப் போய்க் கொடி மரத்தருகே பல்லக்கைவிட்டு இறங்கினார். பஞ்சாட்சா மதில் வரைக்கும் பாதக்குறடு போட்டுக்கொண்டு சென்றார். பிறகு பொன்னம்பலத்திற்குப் போய்க் கூத்தப்பிரானைப் போற்றி வழிபட்டார். தில்லை மூவாயிரவரைப் பார்த்து நாம் இப்பொழுது என்ன கட்டளையை ஏற்படுத்தலாம் என்று எண்ணமிட்டார். கூத்தம்பி பான் உருவிலி வாக்காய்ச் 'சர்வசனத்துக்கும் சர்வகட்டளை' என்று மொரி பிறந்தது. இப்பொழுது இவ்வளவு பேரும் பார்த்திருக்கும் போதே அம்பலவாணர் பிச்சை கொடுத்தால் எப்போதும் நடக்குமென்று பொற்றாம்பாளத்தை ஏந்திக்கொண்டு,

   ''காதலுடன் சர்வ கட்டளையாய் உன்னுடைய
   பாத மலர்ப்பூசை பண்ணவே - ஓது
   குருவாய் எனையாண்டு கொண்டவனே பிச்சை
   தருவாய் சிதம்பரநா தா''

  என்று பாடினார். எல்லா மக்களும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அம்பலவாணர் முன் விண்ணில் இருந்து தங்கக்காசு ஒன்று விழுந்தது. கடவுளே பிச்சை கொடுத்தார் என்று மக்களனைவரும் வாகன், ரூபாய், பயம், காசு ஆகியவைகளை ஏராளமாகப் போட்டார்கள். இரு நமசிவாயர் சேர்ந்த பொருளைத் தில்லை மூவாயிரவர் கையால் கொடுத்துவிட்டுச் சிறிது தொலை நடந்தார். சற்றுத் தடை யுண்டாயிற்று. 'ஏன் தடையுண்டாகிறதென்று தில்லை மூவாரவரைப் பார்த்துக் கேட்டார். அவர்கள் 'எங்களுக்குத் தெரியாது' என்று கூறினார்கள். குரு நமசிவாயர் நிட்டையிலே பார்த்தார். பிறகு ”சுவாமிக்கு அணிகலன்கள் இருந்ததுண்டா?'' என்று கேட்டார். தில்லை வாழந்தணர்கள் சிறிது எண்ணிப் பார்த்துவிட்டு, ''பதஞ்சலி முனிவருக்கும் வியாக்கிரபாத முனிவருக்கும் திருக்கூத்தியற் றியபொழுது பாதச் சிலம்பும் கிண்கிணியும் இருந்த துண்டென்பர். அதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை'' என்று சொன்னார்கள்.

  பிறகு குரு நமசிவாயர் சிற்பாச்சாரியை அழைப்பித்துப் பாதச் சிலம்பும் கிண்கிணியும் வீரகண்டாமணியும் செய்யவேண்டும் அதற்கு என்ன சொல்லுமென்று கேட்டார். அவன் 'ஐம்பதாயிரம் பொன்'' செல்லுமென்று கூறினான். வந்திருக்கிற பொருளை யெடுத்துக்கொடுத்து அவைகளைச் செய்யுமாறு கூறியனுப்பிவைத்தார். பிறகு தாம் தம்முடைய அறைக்கு எழுந்தருளினார்.

  தில்லை மூவாயிரவர் ஒன்று கூடி, "நாமெல்லோரும் இவராற் பிழைக்கலாம் என்று எண்ணியிருந்தோமே. பொருளைக் கொடுத்துச் சிலம்பும் கிண்கிணியுஞ் செய்யச் சொன்னாரே. அதை யணிந்துகொண்டால் கூத்தியற் றுதல் வேண்டுமே. இவருக்குச் சுவாமி கூத்தியற்றிக் காட்டப் போகிறாரா?'' என்று ஏளனமாக உரையாடத் தொடங்கினார்கள். அச்சொல் இவருடைய காதுகட்கு எட்டியது. நாற்பதாம் நாளில் சிலம்புங் கிண்கிணியும் செய்யப்பெற்று வந்தன.

  குருநமசிவாயர் தில்லை மூவாயிரவரையும் மற்றவர்களையும் அழைப்பித்து, 'இப்பொழுது அம்பலவாணர் கூத்தியற்றினால் நீங்கள் எல்லோரும் பார்ப்பீர்களா?'
  என்று உசாவினார். ''அவ்வாறு திருக்கூத்துக்கான நாங்கள் எவ்வளவு நல்வினை செய்தோமோ எங்களுடைய மூவேழ் தலைமுறையும் ஈடேறிப்போகுமே; திருக்கூத்தைக் காண்டற்கு அருள்புரிய வேண்டும்" என்று சொல்லி வேண்டிக் கொண்டார்கள்.

  ’ஒருவேளை காற்று வந்து அசைந்தார்' என்று சொன்னாலும் சொல்வீர்கள் பலகணி வாயில்களையெல்லாம் அடைத்துவிடுங்கள்'' என்று குருநமசிவாயர் கட்டளை யிட்டார். சிலம்பையுங் கிண்கிணியையும் கூத்தப்பிரா னுடைய அடிமலர்களிலே அணியச் செய்தார். பிறகு அம்பலவாணர் திருக்கூத்தியற்றுதலை விரும்பினவராய்,

   ''அம்பல வாஒருக்கால் ஆடினால் தாழ்வாமோ
   உம்பரெலாங் கண்டதெனக் கொப்பாமோ -- சம்புவே
   வெற்றிப் பதஞ்சலிக்கும் வெம்புலிக்குந் தித்தியென
   ஒத்துப் பதஞ்சலிக்கு மோ''

  என்று பாடினார். அவ்வளவில் கூத்தப்பிரான் கூத்தி யற்றத் தொடங்கினார்.

   ''மிதித்தபொற் பதமும் எடுத்தபா தார விந்தமும் சந்தவெம் புலித்தோல்
         விளங்கிய விடையும் உந்தியுஞ் சுழியம் மேனிவெண் ணீற்றின தொளியும்
   கதித்தநற் கனக மேருநான் கனைய கனசதுர்ப் புயங்களுங் காள
         கண்டமும் முகமும் சென்னியுஞ் சரியே கண்டுகண் களிக்குநாள் உளதோ
   துதித்த தங்கள் பலர்புகழ்ந் தேத்தத் தும்புரு நாரதர் பாடத்
         துங்கமா மாயன் மத்தள ரிடைமேல் சுமந்து தொந் தோமென முழக்கத்
   திதித்திதிதி தகுவென் றம்பிகை கெளரி திகழ்திருத் தாளமொத் திசைப்பத்
         தில்லையம் பலத்தே திருநடம் புரியும் தேவனே சிதம்பரே சுரனே''

  என்று இவர் பாடினார். எல்லோருங் கீழே விழுந்து வணங்கி அசைவற்றிருந்தார்கள். தில்லைவாழந் தணர்களிற் சிறந்தவர்களாகிய மூவர் வெகுநேரமாகக் கூத்து நடை பெறுகிறதே என்று எண்ணினார்கள். திருக்கூத்தை நிறுத்த வேண்டுமென்று வேண்டிக்கொண்டார்கள். 'ஆடச் சொல்வதும் நிறுத்தச் சொல்வதும் நம்முடைய அதிகாரமா?' என்று குருநமசிவாயர் பேசாமல் இருந்தார். தாளம் போடுகிறவர்கள் நிற்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டார்கள். அப்போது குருநமசிவாயர்;

   ''தூக்கியகால் நோகாதோ துட்டன் முயலகன்மேல்
   தாக்கியகால் தானுஞ் சலியாதோ-வாக்கா
   தினவரதா தில்லைத் திருத்தாண்ட வாநீ
   அனவரதங் கூத்தாடி னால்"

  என்று பாடினார். கூத்தப்பிரானைக் குருநமசிவாயர் பாடுகிறாரே. நாம் குரு நமசிவாயரைப் பாடுவோமென்று தில்லை மூவாயிரவர்

   ''வேடனெச்சில் மிக விரும்பும் வேளவன்றன் மேனிபொன்ற
   ஆடனித்தங் காளியொடா டம்பலவர் சந்நிதிக்குக்
   கோடி.லட்சம் கவிபாடும் குருநமசி வாயரருள்
   பாடல்மெச்சி யம்பலவர் பாதகச்சை யாடியதே"

  என்று பாடினார்கள். குரு நமசிவாயர் திருக்கூத்தை நிறுத்த வெண்ணி ;

   "நகுதத்தா தாதகியெந் நாடகத்திற் கேற்ற
   தகுதித்தா ளுஞ்சிலம்பும் தானாம் - அகுதப்பா
   பாரே இனியமையும் பொன்னம் பலத்தாடு
   வாரே திருத்தாண்ட வம்”

  என்று பாடினார். அவ்வளவில் திருக்கூத்து நின்றது. தில்லை மூவாயிரவர் குருநமசிவாயரைப் பார்த்துத் 'தேவரீர் வீடு பேற்றையடைந்தால் நாங்கள் பூசித்து வழிபாடு செய்கிறோம்'' என்று சொன்னார்கள். குருநமசிவாயர் "அவ்வாறே செய்யுங்கள்” என்று கூறிக் கூத்தப்பிரானுக்குப் பல திருப்பணிகளை நடத்திக்கொண்டிருந்தார். சிதம்பர வெண்பா முதலிய நூல்களைப் பாடினார். மேலுங் கட்டளைகளை விரிவாக நடத்த எண்ணி எம்பேர் தம்பிரான்கட்குப் பல்லக்கு விருது மற்றும் வேண்டியவை களையுங் கொடுத்து நாடெங்கும் அனுப்பினார். இதனாலுங் கட்டளைகள் விரிவாகவுஞ் சிறப்பாகவும் நடைபெற்றன. குருநமசிவாயர் நெடுங்காலமிருந்து திருப்பெருந்துறை-யிலே வீடு பேற்றையடைந்தார்,

   ''வந்தீஸ் வரவருடம் வைகாசி தேதிநவம்
   இந்து தினம் நாழிகை ஏழரைமேல்-வந்தகுரு
   தானாம் அருணகிரி தாணுசிவ லிங்கத்துகள்
   ஆனான் நமச்சிவா யன்"

  கல்வெட்டுப் பாடல்

   ''தென்னருணை மருவுகுகை நமச்சி வாய
   தேவர் சிஷ்யன் குருநமச்சி வாயன் செய்யும்
   மன்னுபணி விடையாகப் புலியூர்ச் செம்பொன்
   மன்றுடையான் பூசை கொண்டு மகிழ்ந்து வாழ்க
   இந்நிலமெ லாந்தழைக்க அரசூர்ப் பத்து
   இலிங்கபுரச் சாதாக்கல் எழுதி நாட்டி
   நன்னெறிசேர் காலாட்கள் தோழன் சின்ன
   நல்லநய னான் கொடுத்து நடத்தி னானே.''
  -------

  5. குருநமசிவாயர் அருளிச்செய்த சிதம்பர வெண்பா

  சிவமயம்
  காப்பு
  மன்னும் சிதம்பரதே வாவென்று வெண்பாவிற்
  பன்னும் தமிழ்மாலை பாடவே - உன்னும்
  கருத்தக் கணமுதவக் கண்பார்த் தருள்வாய்
  நிருத்தக் கணபதியே நீ.

  நூல்
  முத்திக்கு மூலம் மொழியில் உனையடைந்தோர்
  பத்தித் தவத்தோர் பரிவன்றோ - தித்திக்கும்
  பாகா மொழியமையாள் பாகா பணியணிந்த
  வாகா சிதம்பரதே வா. (1)

  தூக்கிய பொற் றாளிற் சுவைகாட்டித் தொல்வினையை
  நீக்கியெனை யாள நினைகண்டாய்-- பாக்கியமும்
  மின்னார் சிவலோக வீடும் தரும்புலியூர்
  மன்னா சிதம்பரதே வா. (2)

  அருவுருவ மாகியொளி யாகிநீ யார்க்கும்
  கருவுருவ மாகியகண் காணத் - திருவுருவ
  மாயம் பலத்தினட மாடுந் திறமிதென்ன
  மாயம் சிதம்பரதே வா. (3)

  பீடேந்தி நின்னாடியைப் பேணுவார் உண்டுடுத்து
  நாடேந்தி வாழ்வதற்கு நாணாமல் – ஓடேந்தி
  நேயம் பெறத்துணிந்து நீசென் றிரப்பதென்ன
  மாயம் சிதம்பரதே வா. (4)

  நாவிருக்கப் பாவிருக்க நல்லதிரு நீறிருக்கப்
  பூவிருக்க வெங்கும் புனலிருக்கச் - சேவிருக்க
  நீயம் பலத்திருக்க நெஞ்சொருமி யாததென்ன
  மாயம் சிதம்பரதே வா. (5)

  தொளைத்தமணி முத்திலகு துய்யபணி பூட்டி
  உளத்தினிமை யானவெல்லா மூட்டி வளர்த்தெடுத்த
  காயங் கிடக்கவுயிர் காணாமற் போனதென்ன
  மாயம் சிதம்பரதே வா. (6)

  தழைத்திடுசீ ராளன் தனைக்கறிக ளாக்கி
  விழைத்தலினா லேபடைத்து மீள-அழைத்திடவே
  காயங் கொடுநடந்து கண்காண வந்ததென்ன
  மாயம் சிதம்பரதே வா. (7)

  மாறுபடு மாடகனை வல்லுகிரி னாற்கிழித்துக்
  கூறுபடக் கொன்றுகடுங் கோபமாய்-வீறுபடும்
  சீயம் தனையடக்கச் சிம்புள்வடி வானதென்ன
  மாயம் சிதம்பரதே வா. (8)

  பங்கயமின் சேரும் பகீரதனென் பான்புரியும்
  துங்கமிகு நற்றவத்தால் தோன்றவே - கங்கைநதி
  தோயும் சடைக்கே சுவறக் கரந்ததென்ன
  மாயம் சிதம்பரதே வா. (9)

  தன்றகப்ப னென்றுமொரு தன்மையுமி லாமறையோன்
  என்றுசற்று நெஞ்சகத்தில் எண்ணாமல் - கொன்றவற்கு
  நீயங் கவற்குரிய நீடுதந்தை யானதென்ன
  மாயஞ் சிதம்பரதே வா. (10)

  சாதல் பிறவி தனிலிளைத்த நாயேற்குன்
  பாத மலர்வீடு பாலிப்பாய்---நாத
  முடிவே யழியா முழுமுதலே முத்தி
  வடிவே சிதம்பரதே வா. (11)

  எப்போது நாயடியேன் இந்தவுடல் போடுவேன்
  அப்போது முன்னின் றருளுவாய் -- முப்போதும்
  பொன்னாடர் வந்திறைஞ்சிப் போற்றும் கனகசபை
  மன்னா சிதம்பரதே வா. (12)

  மோகக் கடல்கடந்து முத்திக் கரைகாண்கைக்
  கேகப் புனைபெறுவ தெந்தநாள் - நாகப்
  பணியே அணியும் பரஞ்சுடரே கண்ணின்
  மணியே சிதம்பரதே வா. (13)

  தானவரும் மாலும் சதுமுகனும் மற்றுமுள்ள
  வானவரும் தேடி மயங்கவே - ஞானமுடன்
  நேயம் பெறுமடியார் நெஞ்சினுள்ளே நிற்பதென்ன
  மாயம் சிதம்பரதே வா. (14)

  குலங்கடந்து முன்னைக் குணங்கடந்து பொல்லாச்
  சலங்கடந்து தர்க்கங் கடந்து - மலங்கடந்து
  நின்றார் கருத்திலுறை நித்தனே நீள்கனக
  மன்றார் சிதம்பர தேவா. (15)

  அங்கப் பலுக்குவிலை அங்கனையார் அல்குல்மலப்
  பங்கத் தழுந்துவதோ பாவியேன் -- சங்கக்
  குழையாய் பழையாய் குளிர்கருணை வெள்ள
  மழையாய் சிதம்பர தேவா. (16)

  இன்றுன் பதங்ககண்டேன் ஈடேறி னேன்பிறந்தே
  பொன்றும் துயரனைத்தும் போக்கினேன்-என்றும்
  திரனே பரனே தெரிசனா முத்தி
  வரனே சிதம்பரதே வா. (17)

  வஞ்சத் தமியேனின் வாய்த்தமலர்ச் சேவடிக்கே
  நெஞ்சிற் கனிவாய் நினைந்திடேன் - பஞ்சாக்
  கரனே யரனே கருதரிய முத்தி
  வரனே சிதம்பரதே வா. (18)

  பச்சிலைக்கு நேரான பங்கயக்கண் மாலறியா
  நிச்சயத்தைப் பாலிக்கும் நேசமாம் - இச்சை
  தருவாய் உனைவணங்கச் சங்கரியோ டிங்கே
  வருவாய் சிதம்பரதே வா. (19)

  வெந்நிட்டுத் தோற்றபடை வெல்லுமே யேதுமுனை
  முன்னிட்டுக் கொண்டான் முடியுமே --- நின்னிட்டம்
  அல்லா ரறிவதனுக் கப்புறத்தே நின்றுவிட
  வல்லாய் சிதம்பரதே வா. (20)

  பேறிளமை இன்பம் பிணிமூப்புச் சாக்காடென்
  றாறினையும் மாற்றியெனை ஆளுவாய் -- ஈறு முதல்
  இல்லாப் பொருளினுமுண் டில்லையுமாய் நின்றுவிட
  வல்லாய் சிதம்பரதே வா. (21)

  வன்பு செயுமறலி வந்தழைத்த போதமும்
  அன்பும் உயிர்த்துணையே அல்லாமல் -- இன்பம்
  தருமோக மாதும் தமனியமும் கூட
  வருமோ சிதம்பரதே வா. (22)

  ஆரணமும் போற்றி அளவிட் டறியாத
  பூரணமெய்ஞ் ஞானநெறி போதிப்பாய் --- நாரணனும்
  காணா மலரடியைக் காட்டும் கனகசபை
  வாணா சிதம்பரதே வா. (23)

  பொய்யென்று சொல்லாமல் பொல்லாப் புலாலுடம்பை
  மெய்யென்று பேரிட்டார் வீணிலே ---மையொன்று
  கண்ணாள் ஒருபாகம் கைக்கொண்ட செம்பவள
  வண்ணா சிதம்பரதே வா. (24)

  என்றுனது தில்லைநகர் எல்லைதனில் எய்துவேன்
  என்றுனது முன்புமின் றேத்துவேன் - என்றுனது
  பொன்னார் சபைகுறுகிப் போற்றுவேன் பூதியணி
  மன்னா சிதம்பரதே வா. (25)

  சந்ததமும் நின் பாத தாமரையைச் சிந்தித்துச்
  சந்ததமும் பாடவரம் தாகண்டாய்---சந்ததமும்
  பன்னாக மும்புலியும் பார்த்துநிற்கக் கூத்தாடும்
  மன்னா சிதம்பரதே வா. (26)

  நாடி யுனைப்பு காலம் நல்லோரை யும்பொதுவில்
  ஆடி மகிழ்னையும் அல்லாமல் - கூடி
  இணங்கேன் பிறரோ டினியொருதெய் வத்தை
  வணங்கேன் சிதம்பரதே வா. (27)

  செற்றம் பகையாசை தீராத நாயேன்றன்
  குற்றம் பொறுத்தடிமை கொள்ளுவாய்- நித்தம்
  பரிந்தே நினைவார் பவப்பிகைக்கு வாய்த்த
  மருந்தே சிதம்பரதே வா. (28)

  பற்றியயா வக்கடலுள் பாவமெனும் சம்பரனைச்
  சுற்றிய காகம்போல் தோன்றினேன்-- வெற்றியுற
  முன்னாள் அவுணர்புரம் மூன்றும் சிரித்தெரித்த
  மன்னா சிதம்பரதே வா. (29)

  விரித்த சபாடவியும் வெண்ணீறும் மெய்யும்
  தரித்த சிலம்புரிரு தாளும் -- சிரித்த
  திருவாய் முகிழ்மலரும் தீவினையேன் காண
  வருவாய் சிதம்பர தேவா. (30)

  மேதி யுடன்மீது வீறுந் தறுவாயில்
  காதல் பெறுமடியேன் கண்காண- ஓதும்
  குருமா னெயா கண்ட கோலமே கொண்டு
  வருவாய் சிதம்பரதே வா. (31)

  துன்மதனுக் கின்பம் தொலையாக் கதிகொடுத்த
  நன்மைதனைக் கண்டடியேன் நம்பினேன் - மன்மதனைக்
  கண்ணால் எரிந்துவிழக் காய்ந்தருளும் செம்பவள
  வண்ணா சிதம்பரதே வா. (32)

  அன்றுமா லானார்க் கரிதாகி நீயுலகில்
  இன்றுமா லானார்க் கெளிதன்றோ- கொன்றைசேர்
  பொன்னார் சடாமகுடப் புண்ணியா பொற்சபையின்
  மன்னா சிதம்பரதே வா. (33)

  ஐயா உனையடியேன் ஐயா வெனவழைத்தால்
  ஐயா வெனைநீ அழைகண்டாய் - மெய்யாம்
  சரதா அனவரத தாண்டவா ஞான
  வரதா சிதம்பரதே வா. (34)

  செஞ்சடையில் திங்கட் சிறுகுழவி சிந்துகின்ற
  அஞ்சுதலைப் பாம்பினைக்கண் டஞ்சாத - கஞ்சமலர்த்
  தாளா மலைபயந்த சங்கரிக்கு வாய்த்தமண
  வாளா சிதம்பரதே வா. (35)

  தனக்குவமை இல்லாநின் தாளிணையைச் சேர்ந்தேன்
  மனக்கவலை மாற்றினேன் வாழ்ந்தேன் -- எனக்குலகில்
  உன்னா விரந்துகொள்ள ஒன்றுமினிக் கண்டிலேன்
  மன்னா சிதம்பரதே வா. (36)

  நேசமுடன் பல்கால் நினைந்துருகி நின்னுடைய
  வாசமலர்த் தாளிணையை வாழ்த்தியே - பூசனையுஞ்
  செய்வேன் எனக்கருளைச் செய்யாத போதுனையான்
  வைவேன் சிதம்பரதே வா. (37)

  கறுத்த முழு நீலக் கடுமிடறன் பிள்ளை
  அறுத்தகறி தன்னைவிருப் பானோன்- ஒறுத்தசிலைக்
  கைவேள் வடிவழியக் காய்கண்ணன் என்றுனையான்
  வைவேன் சிதம்பரதே வா. (38)

  தேரத் தெளியத் தெரிந்துன் றிருவருளைக்
  சாரத் தவசித்தி தாகண்டாய் -- மேருச்
  சிலையால் புரமெரித்த சேவகா வெள்ளி
  மலையா சிதம்பரதே வா. (39)

  என்பு தசைதோல் இவையால் எடுத்தவுடல்
  வன்பு தருஞ்சுவையை மாசறுவாய்- அன்பர்
  இனாத்தாய் பெரியோர் இனதுறையும் தில்லை
  வனத்தாய் சிதம்பர தேவா. (40)

  வெள்ளை எருத்தின் மிசையே உனைக்காண
  உள்ளி ஒருத்தி உருகுவாள் --- தெள்ளி
  அறிவால் அறியும் அரும்பொருளே செங்கை
  மறியாய் சிதம்பர தேவா. (41)

  வெள்ளிமலை மீதே விளங்குஞ்செம் பொன்மலைமேற்
  துள்ளுமெரு தேறிவந்து தோன்றுவாய்- உள்ளமுறப்
  பன்னாள் நினைந்துருகிப் பாடுவார் பங்கிலுறை
  மன்னாசிதம்பரதே வா. (42)

  காவென் றுனையடைர்ந்து கண்டுகொண்ட நாயேனை
  வாவென் றருகழைத்து வாழ்விப்பாய்--- சேவொன்று
  மின்னாள் தவளவுரு வெள்ளிமலை மேலுறையும்
  மன்னா சிதம்பரதே வா. (43)

  உறையும் பதியே துரைத்தருள வேண்டும்
  நிறையந் தவத்தோர் நினைவோ- மறையின்
  தலையோ கனகசபை தானோ கயிலை
  மலையோ சிதம்பரதே வா. (44)

  வீடு புகுத வினையேற்கு வெம்பிறவிக்
  காடு கடக்கநெறி காட்டுவாய் --- தேடும்
  விதியால் அறிவரிய வேணியா பாதி
  மதியா சிதம்பரதே வா. (45)

  கண்ணுடையர் உன் கோலங் காணுஞ் சிவஞானக்
  கண்ணுடையார் தாமன்றோ காணுங்கால் - மண்ணுலகுஞ்
  சேணா டரும்புகழுந் தில்லைக் கனகசபை
  வாணா சிதம்பரதே வா. (48)

  பெறுவானும் பேறுமுயர் பேரின்ப வீடும்
  உறுவானும் உன்னையன்றி உண்டோ - மறவாமல்
  எந்நாளுஞ் சொல்வார்இதயந் தனிலுறையும்
  மன்னா சிதம்பரதே வா. (47)

  அறியும் அறிவாம் அரும்பொருளாம் உன்னை
  அறியும் அறிவே தறியேன் - மறையின்
  முடிவா முகுந்தனுக்கும் முண்டகற்கும் எட்டா
  வடிவாஞ் சிதம்பரதே வா. (48)

  சும்மாடு கட்டிச் சுமந்துழலு வார்சிலரை
  இம்மா நிலத்தினிலே எண்ணுங்கால் - அம்மா நின்
  பொன்னார் அடிமுடியைப் போற்றாத பேரன்றோ
  மன்னா சிதம்பரதே வா. (49)

  ஐந்து புலனும் அடையப் பொறிகலங்கி
  முந்து வினைத்துயர மூடியே - சிந்தை
  அறவே தளர்ந்தவத்தை ஆனாலும் உன்னை
  மறவேன் சிதம்பரதே வா. (50)

  ஆன பெருந்துறையில் ஆயிரக்கான் மண்டபத்தின்
  ஞான முனிவருடன் நண்ணியே - மோனம்
  உறவே கருதி உனைப்புகழ்வேன் என்றும்
  மறவேன் சிதம்பரதே வா. (51)

  மாத்திரைப்போ தாயினுநின் வாய்த்தமலர்ச் சேவடிக்கே
  நேத்திரத்தை நெஞ்சில் நிறுத்தாமற் - சாத்திரத்தை
  எல்லாம் அறிந்து பயன் ஏதுமினிக் கண்டிலேன்
  வல்லாய் சிதம்பரதே வா. (52)

  செப்பையொத்த பூண்முலையார் சிங்கிதனி லேயகப்பட்
  டிப்பிறப்பும் வீண்போகு தென்செய்வேன் --- எப்பிறப்பும்
  பெண்ணான் அலியாகும் பெற்றியா செம்பவள
  வண்ணா சிதம்பரதே வா. (53)

  சேரின்ப மாகவுனைச் சிந்தைசெயும் இன்பம் போல்
  ஓரின்பம் உண்டோ உணருங்கால் - பேரின்பத்
  தேனே அமுதே திருவம் பலத்தாடு
  வானே சிதம்பரதே வா. (54)

  மாதர் தமக்குருகும் மாப்போல நின்னுடைய
  பாத மலர்க்குருகேன் பாவியேன் - வேத
  முடிவே உரைக்கரிய மோனஉப தேச
  வடிவே சிதம்பரதே வா. (55)

  அஞ்செழுத்தை ஓதாமல் அன்பாய் அனுதினமும்
  நெஞ்சகத்திற் சற்று நினையாமல் -- வஞ்சமுற்ற
  இன்னா வினைப்பிறவி எப்படிப்போம் இப்புவிமேல்
  மன்னா சிதம்பரதே வா. (56)

  இந்த வுலகத் தொழுந்தருளி என்னுடைய
  சிந்தை குடிபுகுந்த தேசிகா - பந்தம்
  அறவே கருணை அளித்தாண்ட உன்னை
  மறவேன் சிதம்பரதே வா. (57)

  துன்ப நெறியைத் தொலைத்துச் சிவஞான
  இன்ப நெறிதந் திரட்சிப்பாய்---அன்பர்
  இனத்தாய் பெரியோர் இனிதுறையும் தில்லை
  வனத்தாய் சிதம்பரதே வா. (58)

  வெத்தருடன் கூடும் வினையேன் எழுபிறப்பை
  முத்தருடன் கூட்டி முனிகுவாய் - பத்தரிட
  நேசா விசும்பவளவாய் நீளுங் கயிலாச
  …சா சிதம்பரதே வா. (52)

  சத்தவித பாதாளம் தானுந் தரைவானும்
  அத்தனையு மின்மேனி ஆனக்கால் - நித்தமிடப்
  பொன்னார் சபையுனக்குப் போதுமோ பொற்புலியூர்
  மன்னா சிதம்பரதே வா. (60)

  மோனமுற நின்பாத முண்டகத்தே தூங்குமொரு
  ஞானவரம் என்றனக்கு நல்குவாய் - வானமுகில்
  ஏழும் பயில்பொழில்சூழ் இன்பப் புலியூரில்
  வாழுஞ் சிதம்பரதே வா. (61)

  ஒருத்தியுடன் சால உயர்ந்ததொரு வெள்ளை
  எருத்தின்மிசை வந்தெனைவா என்பாய் - கருத்திசைய
  உன்னுந் தவமுடையோர் உள்ளமே ஆலயமாம்
  மன்னுஞ் சிதம்பரதே வா. (62)

  அளிக்குமொரு பல்கோடி அண்டாண்டம் எல்லாம்
  விளிக்குமொரு மாத்திரையின் மீள - அளிக்குமொரு
  சித்தா புலியூர்ச் சிவகாம சுந்தரிவா
  மத்தா சிதம்பரதே வா. (63)

  தழைத்த திருப் பாற்கடலைச் சந்நிதிக்கே உள்ளங்
  குழைத்தமுனி பாலகன்பால் கொள்ள - அழைத்துதவும்
  அத்தா புலியூர் அமர்ந்தருளுங் கொன்றைத்தா
  மத்தா சிதம்பரதே வா. (64)

  படுத்தமக மேருவுடன் பாம்புசிலை நாணாத்
  தரித்தநெடு மாலே சரமாச் - சிரித்தருளி
  ஒன்னார் புரமூன் றொருநொடியி லேயெரித்த
  மன்னா சிதம்பரதே வா. (65)

  சற்குருவைப் போற்றாமற் சற்குருவைச் சாற்றாமல்
  சற்குருவைச் சந்ததமுஞ் சாராமல் - சற்குருவை
  நின்றா தரியாமல் நீள்பிறவி நீங்கிடுமோ
  மன்றா சிதம்பரதே வா. (66)

  சங்கமத்தை நின்கோலந் தன்னைக் குருபாத
  பங்கயத்தை நம்பாத பாவியேன் - பங்கிலுறை
  இன்னாப் பிறவியொழித் தெப்படிஈ டேறுவேன்
  மன்னா சிதம்பரதே வா. (67)

  எந்தவகை யாலுலகில் ஈடேறு வேன்அடியேன்
  பந்தமற நின்பாதம் பற்றியே - சிந்தையுற
  நாட்டேன் பலகாலும் நாமந் தனைத்துதிக்க
  மாட்டேன் சிதம்பரதே வா. (68)

  குருபதத்தை நம்பிக் குறித்துருகுந் தொண்டர்
  இருபதத்தை யான் பெறுவ தெந்நாள் - ஒரு பதத்தைத்
  தூக்கா நடம்புரியுஞ் சோதியே தாயமறை
  வாக்கா சிதம்பரதே வா. (69)

  தேடிப் பலகாலுஞ் சிந்தித் துனைப்புகழ்ந்து
  பாடிப் பரவவரம் பாலிப்பாய்-நாடித்
  தொழுவார் வினையைத் துணிக்குமொரு வென்றி
  மழுவா சிதம்பரதே வா. (70)

  பன்றிவடி வாகிப் படியிடந்து மாலறியா
  நன்றிபுனை தாளெனக்கு நல்குவாய் - வென்றிபுனை
  ஆனேறு வந்தேறும் அத்தனே அண்டர் பெரு
  மானே சிதம்பரதே வா. (71)

  அன்னைவயிற் றின்னம் அடையாமல் அம்புவிமேல்
  என்னையினிக் கண்பார்த் திரட்சிப்பாய் - பொன்னிதழித்
  தாமா சிவகாமித் தாயார் தமக்களித்த
  வாமா சிதம்பரதே வா. (72)

  அண்டமுழு துந்தாக்கி அம்பரத்தி லேமிதித்த
  புண்டரிகச் சீர்பாதம் போற்றிலேன் - கொண்டபடி
  செப்பா யன திரண்டு சேவடியி லேதிலனை
  வைப்பாய் சிதம்பரதே வா. (73)

  அனவரதங் கண்டடியேன் ஆதரித்துப் போற்றில்
  அனவரதம் முன்னின் றருள்வாய் - அனவரதம்
  பொன்னார் சபைக்கே புனித நடம்புரியும்
  மன்னா சிதம்பரதே வா. (74)

  பொன்னான சேவடியைப் போற்றாமற் பாவியேன்
  எந்நாளும் பாழுக் கிறைத்தேனே - மின்னாளும்
  பாகா பிறப்பறுக்கும் பால்வெள்ளை நீறுபுனை
  வாகா சிதம்பரதே வா. (75)

  மறையவரைத் தேசிகரை மாதவத்தோர் தம்மைக்
  குறையமதிப் பாரையினிக் கொள்ளேன் - இறையிழித்
  தாராய் திருநாமஞ் சாற்றுமடி யாரிடத்து
  வாராய் சிதம்பரதே வா. (76)

  யானோர் பொருளாக என்றும் பழவடிமை
  ஆனோ ருடன்கூட்டி ஆண்டவா - வானோர்
  பலரா தரித்திறைஞ்சும் பங்கயப்பொற் பாத
  மலரா சிதம்பரதே வா. (77)

  விழியிரண்டுந் துஞ்சி வெளுத்துடலுங் கூனி
  மொழி தளர்ந்து கோலூன்று முன்னம் - பழிதவிர்ந்து
  நின்னாமம் உச்சரிக்க நேயந் தரவேண்டும்
  மன்னா சிதம்பரதே வா. (78)

  சிந்தை களிக்கத் தெரிசிக்கக் கண்ணினைவாய்
  வந்தவடி வைப்புகழ்ந்து வாழ்த்தவே - என்றன்
  கரந்தா மரைத்தாளைக் கற்பொடுபூ சிக்க
  வரந்தா சிதம்பரதே வா. (79)

  ஒன்றோடுங் கூடா துனைக்கருத்தி லேகூடி
  நின்றால் ஒழிந்துவினை நீங்குமே - மன்றா
  பரதா சரதாப வானியிடப் பாகா
  வரதா சிதம்பரதே வா. (80)

  என்றும் பெருந்துறையில் ஏழையேன் கண்காண
  நின்றஞ் சிவலோக நித்தனே - என்றும்
  தரையா னது தழைக்கத் தானுயர்ந்த வெள்ளி
  வரையாய் சிதம்பரதே வா. (81)

  திருப்பா திருப்புலியூர்ச் சென்றடைந்து நின்னை
  விருப்பாய் அடிவணங்க வேண்டுங் - கருப்புச்
  சிலையான் தனையெரித்த சேவகா வெள்ளி
  மலையாய் சிதம்பரதே வா. (82)

  ஓகைவந்த சோணகிரி ஓம்நமசி வாயகுரு
  ஆகிவந்து நாயேனை ஆண்டவா - பாகுவந்த
  சொல்லாள் உடனேயும் தோன்றிக் கருணை செய்ய
  வல்லாய் சிதம்பரதே வா. (83)

  உனையடைந்து பாவியே னோகெட்டேன் ஐவர்
  தனையடைந்து மாயத் தகுமோ - மனையடைந்து
  முன்னாள் அறுபத்து மூவர்க்கு முன்னின்ற
  மன்னா சிதம்பரதே வா. (84)

  வாவா சிதம்பரதே வாவாஎன அழைத்தால்
  வாவா எனஅழைத்து வாழ்விப்பாய் - வாவா
  குருவே உருவே குணங்குறிகள் இல்லா
  வருவே சிதம்பரதே வா. (85)

  உண்டு துணையருணை யோநமசி வாயகுரு
  மண்டு மறலிபடை வந்தாலுங் - கண்டு
  வெருவேன் இனியுலகில் வெறொருதெய் வத்தை
  மருவேன் சிதம்பரதே வா. (86)

  காம வெகுளியைக் கங்கடமை வேரறுத்துன்
  நாம எழுத்தோதி நாள்தோறும் - சேம
  நிதியாம் உனைக்காண நேயந்தா வேணி
  மதியா சிதம்பரதேவா. (87)

  ஐந்துவித்துக் காமாதி அற்றுன் அடியிணைக்கே
  சிந்தைவைத்து வாழும் திரமென்றோ-சுந்திரப்பொன்
  தாளா மலையந்த சங்கரிக்கு வாய்த்தமண
  வாளா சிதம்பரதே வா. (88)

  என்னநெறி சென்றாலும் என்ன நெறி நின்றாலும்
  என்ன மொழி பேசி இருந்தாலும் - உன்னுடைய
  தாளே நினைவேன் தரைமேல் இனிப்பிறந்து
  மாளேன் சிதம்பரதே வா. (89)

  எடுத்தபிறப் பெல்லாம் எனக்கு வந்து தாய்மார்
  கொடுத்தமுலைப் பாலனைத்துங் கூட்டில் - அடுத்தவிரற்
  பன்னா கணைத்துயின்மால் பாலாழி யுஞ்சிறிதாம்
  மன்னா சிதம்பரதே வா. (90)

  துய்ய திருநாமஞ் சொல்லித் தொழுதேத்தி
  மையல் உறு வேனை வாவென்று - செய்ய
  திருவாய் மலர்ந்தருளித் தேவியுடன் சேவில்
  வருவாய் சிதம்பரதே வா. (91)

  பரிவாய்உனைப் புகழ்ந்து பாடுவார் பங்கில்
  திரிவோம் எனவருளிச் செய்தாய் - குருவாய்
  எனையாள் அருணகிரி எந்தாய் அமுதம்
  அனையாய் சிதம்பரதே வா. (92)

  எந்த வடிவாய் எனைவந் திரட்சிப்பாய்
  அந்தவடிவை அசையாமல் - சிந்தை
  இணங்குந் தவமே எனக்களிப்பாய் வானோர்
  வணங்குஞ் சிதம்பரதே வா. (93)

  அருண கிரிக்குகையில் ஐந்தெழுத்த னாகிச்
  சரணமலர் தந்தருளிச் சார்வாய் - கருணை புரி
  எந்தாய் புவிமேல் எனையோர் பொருளாக
  வந்தாய் சிதம்பரதே வா. (94)

  நரம்புதிரந் தோலெலும்பு நாறுதசை மூளை
  இரம்புவினை சுக்கிலத்தோ டேழுங் - குரம்பையுறு
  காமந் தனிலடைத்துக் கண்கலக்கஞ் செய்ததென்ன
  மாயஞ் சிதம்பரதே வா. (95)

  துன்னிமித்தஞ் செய்யினுநின் தொண்டருக்குத் தொல்லுலகில்
  நன்னிமித்தம் ஆகுமே நாடுங்கால் - வன்னிமத்தம்
  புன்னாகங் கொன்றைதும்பை பூளையெருக் குப்புனைந்த
  மன்னா சிதம்பரதே வா. (96)

  சமையக் கவலை தனையொழித்துச் சிந்தை
  சமையத் தவநெறி தந்தாள்வாய் - இமையக்
  கொடிவாள் நுதல்பாகங் கொண்ட பரஞ் சோதி
  வடிவா சிதம்பரதே வா. (97)

  நற்றியனைச் சிந்தையுற நாடுமடி யாருளத்தின்
  மற்றுமொரு தெய்வ மதிப்பரோ- நெற்றிதனிற்
  கண்ணா திருநீல கண்டா கனிபவள்
  வண்ணா சிதம்பரதே வா. (98)

  பொன்றுந் தசையுடலம் போடுந் தறுவாயில்
  அன்றுன் பதந்தந் தருளுவாய் - என்றுஞ்
  சிரத்தா திருப்புலியூர்த் தேசிகா வெற்றி
  வரத்தா சிதம்பரதே வா. (99)

  உரையிறந்த மெய்ஞ்ஞான உண்மையார் அன்றோ
  கரையிறந்த பேரின்பங் காண்பார் - புரையிறந்த
  வேதா கமப்பொருளே மெய்தா னொருபாதி
  மாதா சிதம்பரதே வா. (100)

  சிதம்பர வெண்பா முற்றிற்று.
  இவர் இயற்றிய நூல்கள்; பரமராசியமாலை, சிதம்பர வெண்பா, அண்ணாமலை வெண்பா, நமசிவாயமாலை முதலியன.
  ----------

  6. பரமராசியமாலை (குருநமசிவாயர் அருளியது )

  காலனைக் கடிந்த காலனே உமையாள் கணவனே கடவுளே என்றென்(று),
  ஓலமிட் டலறி என் மனம் உருகி உளங்களித் தோதும் நாள் உளதோ,
  சீலமெய்த் தவமார் வியாக்கிர பாத தெய்வமா முனிபயந் தெடுத்த,
  பாலனுக் குதவும் பாலனே பொன்னம் பலவனே! பரமரா சியனே! (1)

  முத்தனே உனையே புகழ்ந்துநின் றேத்தி முன்னுறக் கண்டுகண் களிப்பார்,
  எத்தனை பிறப்பில் அருந்தவம் புரிந் தார் இவர்பணி ஏழையேற் கருள்வாய்,
  சித்தநைந் துருகி ஆலயஞ் சூழ்ந்து தினந்தினந் தெண்டனிட் டிறைஞ்சும்,
  பத்தருக் குதவும் பதத்தனே பொன்னம் பலவனே! பரமரா சியனே! (2)

  அசைவற மனத்தில் நின்னைவைத் துருகி அன்பினால் வணங்கிநின் றேத்தி,
  அசைவற மனத்தோ ருடன்கலந் திருக்கும் அநுக்கிரகம் என்றுநீ அருள்வாய்,
  பசுவென வனத்தே திரிபவர் முதலாப் பற்பல தேவரும் பலரும்,
  பசுபதி எனப்பேர் படைத்திடும் பொன்னம் பலவனே ! பரமரா சியனே ! (3)

  செஞ்சடா டவியுங் கரியமா மிடறும் திருவெண் ணீற் றொளி திகழ் சிறப்பும்,
  குஞ்சிதாம் புயப்பொற் பாதமுஞ் சிறியேன் குறித்திருந் துருகுநாள் உளதோ,
  வஞ்சனாம் அடியேன் பிழையெலாம் பொறுத்து வாழ்வுற வாழ்விக்கும் மருந்தே,
  பஞ்சினேர் அடியாள் பாகனே பொன்னம்பலவனே! பரமரா சியனே ! (4)

  தந்தையும் நீயே தாயுமாய் வளர்த்த சற்குரு நாதனும் நீயே,
  எந்தையும் நீயே இறைவனும் நீயே எனும் நினை வேழையேற் கருள்வாய்,
  முந்தையின் மூல முடிவிலா முதலே முதலியர் மூவருந் துதித்த,
  பைந்தமிழ் வேதம் முழங்கிடும் பொன்னம்பலவனே ! பரமரா சியனே! (5)

  கந்தமு மலரு முதலிய கொண்டுன் கழலிணை அருச்சனை புரிந்து,
  மந்திர வடிவாம் நின் திரு நாமம் மனத் தில்வைத் துருகவே தருவாய்,
  இந்திரன் முதலாய் எண் டிசை யோரும் இறைஞ்சிடும் ஒரு தனி முதலே,
  பந்தணி விரலாள் பாகனே பொன்னம் பலவனே! பரமராசியனே ! (6)

  மண்ணினாற் பொன்னான் மாதரால் மயங்கி மனக்கவலை லையில் அழுந் தாமல்,
  எண்ணினாற் பஞ்சாக் கரத்தையே எண்ணி ஏழையேன் வாழும் நாள் உளதோ?
  கண்ணினாற் கண்டு கருத்தினாற் கருதிக் காதலித் துருகுசீர் அடியார்
  பண்ணினால் பாடிப் பணிந்திடும் பொன்னம் பலவனே ! பரமரா சியனே ! (7)

  மாதர்தங் கலவிக் கடலில் வீழ்ந் தழுந்தி மயங்கினும் மாதவ ருடனே,
  போதகம் பொருந்தி வாழினும் உனது பொன்னடிக் கமலமே தருவரய்,
  வேதகம் இரும்பைச் சொன்னமாக்குதல் போல் விரும்புவார் தமைச்சிவம் ஆக்கும்,
  பாதபங் கயனே ஐயனே பொன்னம் பலவனே ! பரமரா சியனே ! (8)

  காலமே எழுந்து மஞ்சனம் ஆடிக் காயமீ திலங்க நீ றணிந்து,
  சீலமாய் வணங்கிப் போற்றி நின் நாமம் செபித் திடும் செனனமே தருவாய்,
  ஆலமே அருந்தி அகிலமுஞ் சுரரும் அறிந்திடா வகையருள் புரிந்த,
  பாலமேல் விளங்கும் கண்ணனே! பொன்னம்பலவனே! பரமரா சியனே ! (9)

  நாற்கவி உணர்ந்து நான்மறை யோதி நால்வகை ஆகிய உண்மை,
  மார்க்கமும் அறிந்த மாதவம் புரிவார் மலரடி வணங்கவே தருவாய்,
  சீர்க்கலை தெரிந்த சீரடி யார்தம் சிந்தையில் இருள்அணு காமல்,
  பாற்கரன் எனவே விளங்கிடும் பொன்னம்பலவனே! பரமரா சியனே! (10)

  நாத்தனிற் பஞ்சாக் கரத்தையே செபித்து ஞானநாட் டத்தினால் உனது,
  கூத்தினைக் கண்டு கும்பிடும் பெருமை கொடியநாய் அடியனோ பெறுவேன் ?
  மாத்தநுப் பாசு பதமுத லாக மனத்திலே நினைத்தவை அனைத்தும்,
  பாத் தனுக் குதவும் சகாயனே பொன்னம் பலவனே பரமரா சியனே ! (11)

  தூணினிற் பிறந்த சிங்கவீ றடங்கச் சுந்தரச் சிம்புளா னதுவும்,
  ஊணெனக் கொடிய விடத்தையுண் டருளி உம்பரைக் காத்ததும் மறவேன்,
  சேணினிற் பறந்து பங்கயன் தேடும் திருமுடி தன்னிலே விறகைப்,
  பாணனுக் காகச் சுமந்தருள் பொன்னம்பலவனே! பரமராசியனே! (12)

  சாம்பணி ஓழியச் சஞ்சலப் பிறவி தவிரநின் சந்நிதி தனக்கே,
  ஆம்பணி செய்யும் அடியவர்க் கடியேன் அடிமை செய் தொழுகும்நாள் உளதோ?
  காம்பணி தோளி கெளரி கல் யாணி கணவனே! கதிர்மதி யுடனே,
  பாம்பணி வேணிப் பரமனே! பொன்னம் பலவனே! பரமரா சியனே! (13)

  கரங்கள்உன் அடியை அருச்சனை புரியக் கண்கள் உன் காட்சியே காண,
  வரங்கொளும் மனம்உன் வடிவையே நாட மகிழ்ந்தெனக் கருளும் நாள் உளதோ?
  சிரங்களை அரிந்த மாலிகா பரண சீரடி யார்தமக் கிரங்கும்,
  பரங்கரு ணையனே! ஒப்பிலாப் பொன்னம் பலவனே பரமரா சியனே! (14)

  பேருல கதனில் பிறந்திறந் துழலும் பெருவிடாய் உனது சீர்க் கருணை,
  வாரிதி தனிலே குளித்தபோ தன்றி மாறுமோ மாறிடா தன்றே வீரதி,
  வீர பத்திரன் ஆகி வேள்விசெய் தக்கனார் தலையைப் பாரதி மூக்கை,
  அரிந் திடும் பொன்னம் பலவனே! பரமரா சியனே! (15)

  நஞ்செனக் கொடிய நயனலீ லையினால் நகையினால் மொழியினால் முலையால்,
  வஞ்சகச் சிறியோர் தம்மையே மயக்கும் மாதர்பால் மனங்கொடேன் அடியேன்,
  அஞ்செழுத் துருவம் ஆகிநின் றருளி ஐவராய் அநுக்ரகம் முதலாம்,
  பஞ்சகிர்த் யஞ்செய் கூத்தனே பொன்னம் பலவனே ! பரமரா சியானே ! (16 )

  திருவரத்துறையின் முத்தினாற் சமைத்த சிவிகையும் பந்தரும் எதிரே,
  வரவருள் கொடுத்துப் புகலிகா வலற்கு வழங்கிய வண்மையான் மறவேன் ,
  அருமறைப் பெரியோர் மாதவர் முனிவர் அடைந்திடும் தில்லையம் பதிவாழ்.
  பருவ ரைக் கயிலைக் குறைவனே! பொன்னம்பலவனே! பரமரா சியனே! (17)

  அருந்தவ முனிவர் அந்தணர் பசுக்கள் அடியவர் தமைஇகழ்ந் தவர்கள்,
  விரிந்திடு நரகில் வீழ்வரே இதனை மெய்த்தவர் அன்றியார் அறிவார்?
  திருந்திழை குமரி அம்பிகை கெளரி திரியம்பகி பங்கஎன் றவரைப்
  பரிந் தருள் புரியும் கடாட்சனே பொன்னம் பலவனே! பரமரா சியனே! (18)

  ஓரொணாப் பெருமை உளவிராட் புருடன் உட்கம் லாலயப் பொதுவில்,
  சீரெலாம் உதவும் புனித அஞ் செழுத்தே திருவுரு ஆகநின் றருளி;
  நேரிலா உமையாள் கண்டுகண் களிக்க நீடுமா தவர்தொழு தேத்துப்,
  பாரெலாம் உய்ய நடஞ்செயும் பொன்னம்பலவனே! பரமரா சியனே! (19 )

  மதியினாற் பல நூல் கற்றும்என் துறந்து மாதவம் புரிந்துமென் மண்மேல்,
  நதியெலாஞ் சென்று தோய்ந்தும் என் நினது நடந்தெரி சித்திடார் ஆயின்,
  அதிகைகே தாரம் கோவலூர் குடந்தை அருட்டுறை நாவலூர் முதலாம்,
  பதியெலாம் உடைய கடவுளே! பொன்னம் பலவனே ! பரமரா சியனே ! (20)

  சூதரும் வேத ! வியாதரும் துதிக்கத் தும்புரு நாரதர் பாட,
  வேதவாக் கியங்கள் ஓதிட வாணன் வித்தகக் குட முழா முழக்கப்,
  போதன்மால் முதலாம் வானவர் முனிவர் பூமழை பொழிந்துபோற் றிடவே,
  பாதமேல் எடுத்து நடம்புரி பொன்னம் பலவனே ! பரமரா சியனே ! (21)

  சிரதலந் தனிலே வைத்தசே வடியும் தேசிகர் ஆய் எழுந் தருளிக்,
  கரதலந் தனிலே தந்த ஒண் பொருளும் கண்டுகண் களிப்பனோ? அடியேன்
  வரதலம் புலியூர் மகா தலம் அடைந்தேன் மகாநடங் கண்டனன் இனியான்,
  பரதலங் களிற்போய் உழன்றிடேன் பொன்னம் பலவனே! பரமரா சியனே ! (22)
  முற்றிற்று
  ----------

  7. தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ்

  [இது சோழ வளநாட்டில் மாயூரத்திற்கடுத்த நல்லதுக்குடி என்னும் ஊரில் தோன்றியவரும் திருவருள் பெற்றிலக்கிய வரும் ஆகிய கிருட்டிண ஐயர் என்பவரால் இயற்றப் பெற்றது.]

  செங்கீரைப் பருவம்
  பவளவார் சடையாட மாணிக்க மணியொளிர் படம் விரித் தாட அரவும்
        பற்றுபிறை அக்கறுகு கொக்கிறகும் ஆடப் பக்க நெடு முக்கண் ஆடத்,
  துவௗவார் குழையாட அவியாது புகையாது சுடரும்ஒரு கையில் ஆடத்
        துடியாட ஒருகையொடு கைஅஞ்சல் என்றிடச் சுற்றியொரு கையா டவே,
  தவளவார்ச் சில்லரிக் கிண்கிணிக் குஞ்சிதத்தாளதா மரையாட நல் தாளதா
        மரையொன்று முயலகன் முது கொன்று தருசிலம் புடனா டவே,
  திவளவாண் முறுவலுடன் அம்பலவ ராட்டூ செங்கீரை யாடி யருளே
        தில்லைமா நகர் மருவு சிவகாம வல்லியே செங்கீரை யாடி யருளே. (1)

  தாலப் பருவம்
  ஒருதாய் வயிற்றும் பிறவாமல் ஒருவர்முலையும் உண் ணாமல் உந்திக்
        கொடிவாள் ஒசியாமல் ஒரு மென் தவிசின் உகளாமல்,
  வரிவிற் புருவம் பிறழாமல் மைக்கண் முகிழ்த்து விழியாமல் வள்ளைக்
        குழையும் பிடியாமல் மணிவாய் அதரந் துடியாமல்,
  வெருவிக் கனவில் மருளா மல் விம்மிக் குரலுங் கம்மாமல் மிளிர்
        பூண்தொட்டில் உதையாமல் விரல் ஊ றமுதஞ்சுவையாமல்,
  தருநாள் மதி போல் நாள்தோறும் வளர்வாய் தாலோ தாலேலோ
        தண் ணம்புலியூர்ச் சிவகாமித் தாயேதாலோ தாலேலோ. (2)

  தேனே ! கரும்பே! சருக்கரையே! தெவிட்டா அமுதே! உவட்டாத செல்வச்
        செருக்கே ! தருக்கான செஞ்சொற்கிளியே! செழுங்குயிலே !
  மானே! பிடியே! மடமயிலே! வாழைப்பழத்தின் பலாப்பழத்தின் மதுரம்
        பழுத்த மாம்பழத்தின் வடித்தே எடுத்த தேன் குழம்பே!
  ஊனே! உயிரே! உயிர்க்குயிரே! உள்ளே புறம்பே நடுவே வாழ் ஒளியே!
        வெளியே! ஒளிக்கொளியே! ஒளியில் விளைந்த கருணையெல்லாம்,
  தானே வடிவாய் வந்துதித்த மதலாய்! தாலோ தாலேலோ தண்ணம்
        புலியூர்ச் சிவ காமித் தாயே ! தாலோ தாலேலோ. (3)

  சப்பாணிப் பருவம்
  ஐவரைப் பெற்றே வளர்த்திடுங் கையினால் ஐந்தொழி லும் அருள் கையினால்
        ஐம்பெரும் பூதமும் அமைத்திடுங் கையினால் அலகிலா உயிரனைத்தும்,
  பைவரு குரம்பையில் அடைத்துவிளை யாடுசிறு பம்பரச் செங்கை யினால்
        பாசயம ராசன்வரு போதஞ்ச லென்றெமைப் பாதுகாத் தருள் கையினால்,
  மொய்வரைக் கரையன்மக ளாகிமுக் கண்ண னார் முழுமணக் கோல மதனில்
        முளரிமலர் விரல் கொடுத் தருள்கையி னாலிள முலைத்தழும் போடு வளையத்,
  தைவரு தழும்புவைத் தருள்கையி னாலினிய சப்பாணி கொட்டி யருளே தற்பரா
        சத்தியே சிவகாம வல்லியே சப்பாணி கொட்டி யருளே, (4)

  வேறு
  முத்துநிரைத்தபல் முக்கணி யொத்தசொல் முச்சிம லர்க்கோதை முத்தமிழ்
        சொற்கமழ் குற்றமர் புத்தக முத்தி யருட்பாதம்,
  வித்துரு மத்தினில் ஓத்த சிவப் பெழ மெச்சிடை கச்சோதம் வெற்றிய
        நுதற்சிலை மைக்கண் மலர்க்கணை வெற்பு முலைப் பூவை,
  உத்தமி பத்தினி கற்பு மிகத்தணி உற்றொளிர் பொற்றோளி உற்பல
        கைத்தலி பச்சை நிறப்பிடி ஒப்பிடு மத்தாளி,
  கொத்துரு தத்துவ மத்தி லிருப்பவள் கொட்டுக சப்பாணி குற்றம்
        அகற்றிய பொற்புலி சைக்கொடி கொட்டுக் சப்பாணி. (5)

  முத்தப்பருவம்
  சுருதி மணக்குஞ் சிவாகமத்தின் தோற்றமணக்கும் வடகலை
        நூல் துலங்கி மணக்கும் திராவிடத்தின் சுவையே மணக்கும் பிராகிருதம்,
  மருவி மணக்கும் உலகளிக்கும் மகிமை தருமந் திரமணக்கும்
        மலையமிருக்கும் இயலிசையும் வளர்மந் திரத்தின் ஆதாரம்,
  பெருகிமணக்குஞ் சமயநெறி பிறழாச் சகல சாத்திரமும் பேதா பேத
        வகை மணக்கும் பேரம்பலநாட் டகத்தார்கள்,
  தரும மணக்கும் கனிவாயில் தகைசேர் முத்தம் தருவாயே தழைக்கும்
        புலியூர்ச் சிவ காமித் தாயே முத்தம் தருவாயே. (6)

  கண்ணால் உனது மலர்ப்பாதம் கண்டே களிக்க இருகரமும் கமழ்பூ
        மலரால் பூசிக்கக் காலுங் கோயில் வலஞ்செய்ய,
  எண்ணார் செவிகள் நின்கீர்த்தி இசையே கேட்கத் தலைவணங்க
        ஏழேழ் சென்மம் எடுத்தாலும் என்னா நின்னைத் தொழுதேத்தப்,
  பெண்ணார் அமுதே மலையரை யன் பெற்ற மதலாய் உலகமெலாம்
        பிறங்க வேண்டிப் பிறந்த பிள்ளாய் பேராநந்த வெள்ளத்தில்,
  தண்ணார் அமுதே சுவையூறும் தகைசேர் முத்தந் தருவாயே
        தழைக்கும் புலியூர்ச் சிவகாமித் தாயே முத்தந் தருவாயே. (7)

  வருகைப்பருவம்
  கொழிக்குங் கருணை மழைமுகிலே ! குழையா நறுங்குங் குமக்குழம்பே!
        கொழுங்கற் பகமே! கோமளமே! கோமே தகமே! மரகதமே!,
  இழைக்கும் மணிப்பூண் அணி கலமே! இழையா மணிச்சிந்தாமணியே!
        எழுந்தே! ஒளிர்பொன் மலைக்கொழுந்தே! எழுபுன் பிறவிக்கொரு மருந்தே!,
  தழைக்கும் பெருவாழ் வருட்சிவமே! தவமே ஞானத் தனிவிளக்கே ! தமிழ்க்கே
        உதவுஞ் சதகோடிச் சங்க நிதியே! சரோருகமே!,
  செழிக்கும் புலியூர் வாழ் வருளத் திருவே! வருக வருகவே தேயா மதியே!
        சிவகாமித் தாயே! வருக வருகவே. (8)

  வாழ்வே வருக எமதுகண்ணின் மணியே வருகமதியூடு வந்தே விளங்கும்
        ஒளிவருக வளரும் ஒளிக்குள் ஒளி வருகத்,
  தாழ்வே அகலுஞ் சிவம்வருகத் தழைக்குஞ் சிவத்தின் செயல்வருக
        சகல உயிர்க்கும் உயிர்வகைச் சகமும் உயிரும் தான் பூத்தப்,
  பூவே வருக பூவுலகம் பூத்தே காய்த்துப் பழுத்த வித்தின் பொருளே வருக
        பொரு ளாகிப் போகம் விளைக்கும் ஆனந்தத்,
  தேவே வருக புலியூர் வாழ் திருவே வருக வருகவே தேயா மதியே
        சிவகாமித் தாயே வருக வருகவே. (9)

  திரிபுர சுந்தரி வருகவே வெகுதேவதுரந்தரி வருகவே தினகரகுண்டலி
        வருகவே முகசீதள மண்டலி வருகவே,
  மரகத வண்கொடி வருகவே மதிடாசுர சங்கரி வருகவே மலையரை
        யன்கொடி வருகவே நல்வசிகர மங்கலை வருகவே,
  பரிபுரமுண்டகி வருகவே பர வாதவர் கண்டகி வருகவே பரசிவ
        சங்கரி வருகவே பரிவாகிய நெஞ்சகி வருகவே,
  கரதல சுந்தரி வருகவே கலிகோபபுரந்தரி வருகவே கநக
        சிதம்பரி வருகவே சிவகாம சவுந்தரி வருகவே (10)

  அரகர சங்கரி வருகவே அசுரேசர் பயங்கரி வருகவே அமலிசுமங்கலி வருகவே
        அதிரூப அலங்கரி வருகவே சிரகர சுந்தரி வருகவே,
  சிரமாலி துரந்தரி வருகவே சிவசிவ அம்பிகை வருகவே சிவலோக
        திரியம்பிகை வருகவே,
  பரம நிரந்தரி வருகவே பரிபூரண பஞ்சமி வருகவே பவள இளங்கொடி
        வருகவே பறவாத பசுங்கிளி வருகவே.
  கருணை தருந்திரு வருகவே கயிலாய பரம்பரி வருகவே.
        கநகசிதம்பரி வருகவே சிவகாம சவுந்தரி வருகவே. (11)

  மறமலி கஞ்சுகி வருகவே மறவாதவர் நெஞ்சகி அருகவே மதிபதி
        கஞ்சுளி வருகவே மதுவானிரை யுந்துளி வருகவே,
  பறுவத னந்தனி வருகவே முதுபாரதி இந்திரை வருகவே பரகதி
        தந்திட வருகவே பசு பாசம் அகன்றிட வருகவே,
  பொறையின் மிகுந்தவள்வருகவே, புலி ஊரினில் வந்தவள் வருகவே
        புரம் எரித்தவள் வருகவே புவனாதிகள் தந்தவள் வருகவே,
  கறையணி கங்கணி வருகவே கணை யோஎனும்வெம்கணி வருகவே
        கனக சிதம்பரி வருகவே சிவ காம சவுந்தரி வருகவே. (12)

  அம்புலிப்பருவம்
  வடிவெலா நின்கண் களங்கம்உள திவள் தன் மனத் திற் களங்கம் உளதோ
        மதிமுகப்பிள்ளைதனை மதியா திருப்பதுன் மதிகுறைந் திடுத லாலோ,
  முடியின்மிசை நீயிருந் தாலுமிவள் அடியிணையை முடியொடும் பணிய இலையோ
        முயலுவது முதுபுலியை நெக்குவிட நெக்குமோ முதுபுலியை முயல்வெல் லுமோ
  படியின்மிசை கடித்துவர வாரா திருந்திடில் பாரா திருந்து விடுமோ,
        பதஞ்சலி எனும் பெரிய பாம்பினை எடுத்துநம் பாவைதிரு முன்வைத் திடும்,
  அடியினால் அமிர்தம் பிறித்தலும் அறிந்துநீ அம்புலி ஆட வாவே அம்பலவர் உடன்
        மருவு சிவகாம வல்லியுடன் அம்புலி ஆட வாவே. (13)

  மயில்வடிவு நம்மன்னை வந்துவிளை யாடலாம் வாராதி ராகு கேது வந்தாலும்
        என்ன பயம் மகன்வா கனத்துக்கு வலியதோர் இரைய தாகும்,
  குயில்வடிவு கொண்டதொரு கோதையைச் சேர்ந்திடும் குற்றமும் பற்றற்
        றிடும் குறை யாது கலைகளுன் சயரோக வினைகளும் கூறுமுயர் கரை யும் உடலும்,
  வெயில்வடிவி னைச்சேர்ந்த சோபமுந் தீர்ந் திடும் வேண்டிய வரங்கள் பெறலாம்
        விரிசனா மித்தை தவிர் தெரிசன முத்தியும் வெற்றியும் பெற்று வரலாம்ம்
  அயில்வடிவு கொண்டமுக் கண்ணியிவள் விளையாட அம்புலி ஆட வாவே
        அம்பலவருடன் மருவு சிவகாம வல்லி யுடன் அம்புலி ஆட வாவே. (14)

  சிற்றிற்பருவம்
  மண்வைத்து கால்வைத்துத் தூணினாற் சுவர்வைத்து வலியகைம் மரமும் வைத்து
        வாயில்ஒன் பதுவிட்டு மோட்டுவளை பக்கத்து வளைவரிச் சலுந ரம்பால்,
  பண்புற் றிடக்கட்டி மேலெலாந் தோலுடன் பலமயிர்க் கற்றை, யிட்டுப் பழவினைச்
        சேர்கட்டி இன்பதுன் பங்கள்கண் பார்த்து விளக்கும் ஏற்றி,
  எண்பத்து நான்கு நூ றாயிரம் பேதமாய் இனியசிறு வீடு தோறும் எவ்வுயிர்க
        ளுங்குடி இருந்துவிளை யாடவே இன்னமும் அழித்த ழித்துத்,
  திண்பெற்ற பலவீடு கட்டிவிளை யாடும் உமை சிறுவீடு கட்டி அருளே
        சிவகாம சுந்தரி எனும் பெரிய விமலையே சிறுவீடு கட்டி யருளே. (15) .

  ஆறுசாத் திரம் நாலு வேதமதிள் தூண் ஆகமங்களிரு பத்தெட் டுடன்
        ஐம்பெரும் பூதங்கள் பதினெண் புரா ணங்கள் அரியசிறு தூண் உத்திரம்
  ஏறுகலை அறுபத்து நாலுவகை மரநாட்டி எழுபத்திரண்டா யிரம் எழில்வரிச் சுடன்
        ஆணி புவனமிரு நூற்றெட்டும் இருபத்து நாலு கமலம்,
  கூறுதொண்ணூற்றாறு தத்துவம் பல்கணிகள் கும்பம் ஒன் பதுவா சலும் குலவுசிற்
        றோடுமிரு பத்தொரா யிரமுடன் கூறும் அறு நூறும் ஆகத்,
  தேறும் ஒரு வீடுகட் டிக்குடி இருக்கும் உமை சிறுவீடு கட்டி அருளே
        சிவகாம சுந்தரி எனும் பெரிய விமலையே சிறுவீடு கட்டி அருளே. (16)

  பத்திமிகுத்தவர் மாதவர் அன்பு படைத்தவர் பக்கலின் வாழ்
        பச்சை நிறத்தவ ளே சிவ சங்கரர் பட்சம் மிகுத்தவளே,
  சத்தினி சிற்றினி பாதம் அடைந்தவர் தற்பரை சிற்பரையே சர்க்கரை
        முக்கனி தேனோ டளைந் திடு சற்குண நிர்க்குணியே,
  வித்தகி வித்திம வான்மகள் என்றிட வெற்பின் உதிப்பவளே
        விற்களையொத்த புருவ நெடுங்கணி மெய்க்கணி யக்கனியே,
  சித்தினி பத்தினி சாமளி சங்கரி சிற்றில் இழைத்தருளே சிற்சபை யிற்
        சிவ காம சவுந்தரி சிற்றில் இழைத்தருளே. 12

  பொன்னூசற்பருவம்
  அன்னையே தாயே என் மாதாபி தாவே என் ஆவியே பூவில் வாழும் அன்னமே
        என்னமே இன்னம் ஒரு கருமத் தில் அலையாமல் எனை வைத்திடும்,
  மன்னுநீ முன்னுநீ பின் னுரு அல்லாது மற்றும் ஒரு தெய்வம் உளதோ மற்றோதி
        யார்பஞ்ச கர்த்தாவை யும் பெற்ற மாதாவும் நீயல்ல வோ,
  கன்னியே குமரியே கன்னிகா ரத்தில் களித்த இரு கொங்கை மயிலே கன்னலே
        மின்னலே உன்னுவோர் முன்னில்வரு கருணா கரக்கெளரியே,
  பொன்னிசூழ் புலிசைவாழ் பொன்னிறப் பூவையே பொன்னூசல் ஆடி யருளே
        பொன்னம் பலச்செல்வி சிவகாம வல்லியே பொன்னூசல் ஆடியருளே. (18)
  ---------------

  8. மார்க்கண்டேயர் அருளிய மிருத்யுஞ் சயத்தோத்திரம்

  சிவமயம்

  1. ருத்ரம் பசுபதிம் ஸ்தாணும் நீலகண்டம் உமாபதீம்
  நமாமி ஸிரஸா தேவம் கின்னோ ம்ருத்தியுங் கரிஷ்யதி

  2. காலகண்டம் காலமூர்த்திம் கலாக்னிம் காலநாசனம்
  நமாமி சிரஸா தேவம் கின்னோ ம்ருத்தியுங் கரிஷ்யதி

  3. நீலகண்டம் விருபாக்ஷம் நிர்மலம் நிருபத்ரவம்
  நமாமி ஸிரஸா தேவம் கின்னோ ம்ருத்தியுங் கரிஷ்யதி

  4. வாம தேவம் மஹாதேவம் லோகனாதம் ஜகத்குரும்
  நமாமி ஸிரஸா தேவம் கின்னோ ம்ருத்தியுங் கரிஷ்யதி

  5. தேவதேவம் ஜகன்னாதம் தேவேசம் வ்ருஷபத்வஜம்
  நமாமி ஸிரஸா தேவம் கின்னோ ம்ருத்தியுங் கரிஷ்யதி

  6. த்ரயக்ஷம் சதுர்ப்புஜம் சாந்தம் ஜடாமகுட தாரிணம்
  நமாமி ஸிரஸா தேவம் கின்னோ ம்ருத்தியுங் கரிஷ்யதி

  7. பஸ்மோத் தூளித ஸர்வாங்கம் நாகாபரண பூஷிதம்
  நமாமி ஸிரஸா தேவம் கின்னோ ம்ருத்தியுங் கரிஷ்யதி

  8. அநந்தம் அவ்யயம் ஸாந்தம் அக்ஷமாலா தரம்ஹரம்
  நமாமி ஸிரஸா தேவம் கின்னோ ம்ருத்தியுங் கரிஷ்யதி

  9. ஆநந்தம் பரமம் நித்யம் கைவல்ய பத தாயினம்
  நமாமி ஸிரஸா தேவம் கின்னோ ம்ருத்தியுங் கரிஷ்யதி

  10. அர்த்த நாரீஸ்வரம் தேவம் பார்வதீ ப்ராணநாயகம்
  நமாமி ஸிரஸா தேவம் கின்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி

  11. ப்ரளயஸ்திதி கர்த்தாரம் ஆதி கர்த்தாரம் ஈஸ்வரம்
  நமாமி ஸிரஸா தேவம் கின்னோ ம்ருத்தியுங் கரிஷ்யதி

  12. வ்யோம கேஸம் விரூபாக்ஷம் சந்திரார் க்ருதஸேகரம்
  நமாமி ஸிரஸா தேவம் கின்னோ ம்ருத்தியுங் கரிஷ்யதி

  13. கங்காதரம் ஸஸிதரம் சங்கரம் சூல பாணினம்
  நமாமி ஸிரஸா தேவம் கின்னோ ம்ருத்தியுங் கரிஷ்யதி

  14. கல்ப்பாயுர் தேகிமே புண்யம் யாவதாயுர் ரோகதரம்
  நமாமி ஸிரஸா தேவம் கின்னோ ம்ருத்தியுங் கரிஷ்யதி

  15. ஸ்வர்க்கா பவர்க்க தாதாரம் ஸ்ருஷ்டி ஸ்திதி யந்த காரணம்
  நமாமி ஸிரஸா தேவம் கின்னோ ம்ருத்தியுங் கரிஷ்யதி

  16. சிவேசானம் மஹாதேவம் வாமதேவம் ஸதாசிவம்
  நமாமி சிரஸா தேவம் கின்னோ ம்ருத்தியுங் கரிஷ்யதி

  17. மார்க் கண்டேய க்ருதம் ஸ்தோத்ரம் யபடேத்ஸவ ஸன்னிதெள தாம்ய
  தஸ்ய ம்ருத்யு பயம் நாஸ்தி ஸத்யம் ஸத்யம் வஹாம்யஹம்

  18. ஸத்யம் ஸத்யம் புனஸ் ஸத்யம் உதரத்யபுஜ மூச்யதே
  வேத சாஸ்திராத்பரம் நாஸ்தி நதைவம் சங்கராதிபரம்

  மார்க்கண்டேயர் அருளிய ம்ருத்தியுஞ் சயத்தோத்திரம் ஸம்பூர்ணம்
  சாந்தி. சாந்தி சாந்தி.
  -----------------
  ஓம் ருத்திராய நம :
  அரும்பொருள்
  மிருத்யுஞ் ஜயஸ்தோத்ரம் – யமனை வெல்வதற்குச் செய்யும் துதி; நமாமி ஸிரஸா தேவம் - நான் தலையால் வணங்குகின்றேன்; கிம்நொ மிருத்யும் கரிஷ்யதி - எனக்கு மரணத்தைச் செய்வாரா? ; வாமதேவம் - குறுகிய வடிவமுள்ளவன். அவ்யயம் - அழிவில்லாதவன். அக்ஷமாலாதரம் - அக்கு மணி மாலை யணிந்தவன்; கைவல்ய பத்தாயினம் - கைவல்ய பதவியைத் தருபவன்; வ்யோமகேடாம் - ஆகாய மளாவிய சடையுடையவன்; ஸ்வர்க்க அபவர்க் தாதாரம் - சுவர்க்கத்தையும் மோட்சத்தையும் அளிப்பவன்.

  [மார்க்கண்டேயர் இத்தோத்திரத்தைக் கூறித் தம்மைப் பிடிக்க வந்த நமன்கையினின்றுந் தப்பினார். இதனை நாள்தோறும் பாராயணஞ் செய்பவர்கட்கு வாணாள் நீளும். எல்லா நன்மைகளும் உண்டாகும். அன்பர்கள் இதனை முறையாக நாள்தோறும் பாராயணஞ் செய்யக் கடவர்.)
  -------------

  9. பகவற்கீதை : 12-ஆவது பக்தியோக அத்தியாயம்

  பாதியோர் பெண்மையான் பரிந்து பெற்றதோர்
  சோதியாங் களிற்றினைத் தூரம் அண்மையில்
  பேதியா துளம் பெறப் பேணிப் பாகவற்
  கீதையான் மொழிகுவன் ஞானங் கிட்டவே.

  ஏயநான் எதிரே கண்ட உருவமே இசைகிற் பாரோ
  தூயநான் மறைக்கும் எட்டாப் பொருளையே தொடர்கிற் பாரோ
  தாயனாய்ப் பெரியோர் என்று தனஞ்சயன் வினவத் தானோர்
  ஆயனாய் நிரைகள் மேய்க்கும் மாயன்வே றருளிச் செய்வான். (1)

  மன்னநீ காண நான்முன் காட்டிய வடிவை நெஞ்சால்
  உன்னல்வாய் மொழியி னாலே உரைத்தல்செய் பவர்கள் எல்லாம்
  என்னலால் பிறிதொன் றெய்தார் இயாரினும் நல்லர் இங்குச்
  சொன்னவர் அன்றி மற்றை அவர்கள் தந் துறையுங் கேளாய். (2)

  உரைசெயற் கரிதாய் நெஞ்சில் உணர்விடப் படாதாய் எங்கும்
  புரையறக் கலந்து போக்கு வரவின்றிப் பொலிந்த தொன்றைக்
  கரைசெயற் கரிய வாய புலன்களைக் கடந்து காண்பான்
  அரசமற் றியானே என்னில் அன்னியம் என்ன லாமோ. (3)

  காரணம் இறந்தொன் றிற்குங் காட்சியிற் படாத தொன்றைச்
  சேர்பவர் வருத்தம் வேறு செப்பிட லாவ தன்றால்
  ஓர்வரி திதுதான் வாழும் உயிர்களால் ஆவதொன்றோ
  ஆரவர் பெருமை தன்னை அளவறுப் பவர்கள் ஐயா. (4)

  யாவர்கள் சிலவர் எல்லா வினையும் என் கண்ணே விட்டிட்(டு)
  இயாவர்தம் அறிவென் பாலே ஆக்குவார் அவர்கள் தம்மைச்
  சாவது முதலாய் உள்ள துயர்க்கடல் நின்றும் தாங்கி
  யாவர்க ளேனுங் காலம் சிறிதிலே எடுக்கின் றேன்நான். (5)

  மெய்யுற உன்னை என்னிலே வைத்தால் என்னில்வே றின்றியொன் றாதற்(கு)
  ஐயுற வில்லை அது செய முடியா தாயின்அப் பியாசமே பயில்வாய்
  பொய்யற அதுவும் புரிகிலாய் எனில் உன் வினைகளென் பொருட்டினாற் புரிவாய்
  செய்யும் அவ் வினைகள் அப்படிச் செயாயேல் வினைப்பயன் தவிரவே செய்வாய். (6)

  அத்தி ஞானம் வினையின் அதனினும்
  மெய்த்தியானம் மிகுமதின் மேலதாம்
  வித்தின் ஆய வினைப்பயன் வீடுதல்
  சித்த சாந்தி அதன்பின் செறியுமால் (7).

  இருவகை உயிர்க்கும் இனியனாய் இன்ப துன்பமியா னென்னதென் றறியா
  தொரு பொரு ளாலுங் குறைவுபாடின்றி உள்ளமும் ஒருவழிப் படரப்
  பொருவரும் துணிவும் கருணையும் புரிந்து புலன்தெரி உணர்வையென் பாலே
  மருவிநின் றொழுகும் இயோகிஎன் பவன்காண் மன்னமற் றெனக்ருவே றினியான். (8)

  உலகமும் தானும் வேறிலா மையினால் தானொரு பொருட்கும் அஞ்சாதே
  அலகிலா உயிர்கட் கினியனா தலினால் அவைகளுந் தன்னை யஞ்சாதே புலவரானவர்கள்
  புகழவே நிகழ்வான் பொறாமையும் மயக்கமுங் களிப்பும்
  இலகிடா நெஞ்சத்தியோகியென் பவன்காண் இயாரினும் எனக்கு வேறினியான். (9)

  ஒன்றினும் ஆசை இன்றிஇந் தியங்கள் தம்வழி ஒழுகிடா தொருக்கி
  நன்றியி னோடு தீங்கினில் ஒத்து நல்வினை தீவினை துறந்து
  பொன்றினும் நோவுற் றழுதல் செய்யாதே பூரித்தல் வாடுதல் இன்றி
  என்று முன் பிறந்த பொருட்கிரங் காதே வரும்பொருட் கிச்சை செய்யாதே. (10)

  இகழ்பவர் நட்டார் என்ப தின்றியே இன்ப துன்பம்
  திகழவ மான மானம் சீதமோ டழலின் தீமை
  புகழ்பழி இவற்றுள் ஒத்துப் பொருந்தி வாழ் இடம்ஒன் றின்றி
  நிகழ்தரும் இயோகி கண்டாய் மற்றெனக் குரியநீரான். (11)

  செயத்தகு வதுவும் ஆகிச் சேர்ந்தவர் செல்லல் தீர
  உயக்கொடு போவ தாய பொருளையான் உரைத்த வண்ணம்
  இயற்பட உணர்கிற் பாருக் கியான் மிக்க இனியன் என்றான்
  மயக்கற ஒருவராலும் அறிவரி தாய மாயோன் (12)
  ----------------

  10. பிரபுலிங்க லீலை

  வந்தநல் விருந்திருப்ப மனையினுற் றருந்துவானும்
  பந்தியின் உணவு வேறு பண்ணுபா தகனும் தாயும்
  தந்தையும் உணவுண் ணாத சழக்கனும் உச்சிப் போதில்
  நொந்தவர் தமைநோக் காமல் நுகர்ந்திடு கொடியன் தானும். (1)

  நிந்தைசெய் உணவி னானும் நிருமலன் பூசை யின்றி
  வந்துண வருந்து வானும் மறுத்தஊன் நுகர்விப் பானும்
  தந்தநல் வினையால் செல்வம் சார்ந்தவர் தம்மைக் கண்டு
  சிந்தனை பொறாத ழுங்கித் தீர்வினுள் மகிழ்வான் தானும். (2)

  கன்றுண விடாமல் ஆன்பால் கறந்துகொள் பவனுஞ் செய்த
  நன்றிகொல் பவனுங் கோடி நடுநிலை தவறு வானும்
  கொன்றுயிர் பதைப்ப நோக்கும் கொடியனும் போர்க்களத்தில்
  தன்தலை வனைவி டுத்துச் சாய்ந்துபோம் மடமை யானும். (3)

  அடைக்கலம் எனவந் தானை அளித்திடா தகற்றுவானும்
  கொடுக்குதும் என உரைத்துக் கொடானும்ஒண் கொடைவி லக்கி
  விடுக்குறும் அவனும் பாவ வினையிடத் துதவி யாகி
  நடக்குறும் அவனும் தேர்ந்து நட்டபின் வஞ்சிப் பானும். (4)

  குரவர்தம் உரைக டக்கும் கொடியனும் துறந்து வார்தம்
  வரவெதிர் கண்டெ ழாத மறவனும் அறிந்தான் போன்று
  கரவினில் அருநூல் கற்கும் கயவனும் புதிய ராகி
  இரவினில் வந்த நல்லோர்க் கிடங்கொடா தகற்று வானும். (5)

  முன்புகழ்ந் துரைத்துப் பின்னர் முறுவல் செய் திகழ்வான் தானும்
  தன்பெருங் கிளைநல் கூர்ந்து தளர்வுற வாழ்கின் றானும்
  அன்பு கொண் டொருவன் வைத்த அரும்பொருள் கவர்கின் றானும்
  துன்புறுந் தொழில்செய் வித்துச் சொல்பொருள் இலையென் பானும் (6)

  கற்பழி மனைவி யோடு கலந்திருப் பவனும் மற்றோர்
  பொற்புடை மனைவி தன்னைப் புணர்வதற் கெண்ணு வானும்
  சொற்பொருள் உணர்த்தி னானைத் தொழஉளம் நாணு வானும்
  விற்பன அலாத விற்று மெய்வளர்த் தழிகு வானும். (7)

  நலமலி வயலில் ஆற்றில் நந்தனத் தால யத்தில்
  சலமலம் ஒழிப்போன் தானும் தனிவழி விலக்கு வானும்
  விலைமொழி பொய்த்து விற்கும் வெய்யவா ணிகனும் தாழ்ந்த
  குலமிலி தன்குற் றேவல் கூலிகொண் டியற்று வானும். (8).

  உறவுசெய் தறிந்த சொல்லை உவர்த்துக் கூறுவானும்
  பிறர்பிழை தனை யே நாடிப் பிறரொடு பேசு வானும்
  முறைவழு வுறுகொ டுஞ்சொல் முனிவிடை மொழிகு வானும்
  அறிவழி மனைவி சொல்லின் வழியிற்கும் அறிவி லானும். (9)

  கலந்தவர் தமைப்பிரித்துக் கலகங்கண் டிடவல் லானும்
  புலந்தரு நாலில் இல்லாப் பொருளினைக் கூறு வானும்
  நலந்தனை அழுக்கா றெய்தி நகைத்திகழ் கிற்போன் றானும்
  மெலிந்தவர் இடத்து மிக்க வெகுளியைப் பெருக்கு வானும். (10)

  புண்ணியம் பிறர்பொ ருட்குப் புரிபவன் தானும் இந்த
  மண்ணிடை இன்பத் திற்கா மறுமைசெய் தொழில்வி டுக்கும்
  தண்ணிய அறிவி லானும் தவத்தரை இகழ்கிற் பானும்
  பண்ணிய வினையில் என்றும் பாவமே பயில்கின் றானும். (11)
  -----------------

  11. சிறந்த சில செய்யுட்கள்

  அரகர சம்பு சங்கர மகேச அம்பிகை பாகமா தேவ,
  புரகர நீல கண்டஎன் றுரைக்கில் புனிற்றிளங் கன்றினுக்கு ஆக்கள்,
  வருவதே போலச் சிவன்விரைந் தோடி வந்திடு மரத்தின்மேற் பறவைக்,
  கொருகலே போலப் பாதகம் அனைத்தும் ஒழித்தின்ப வீடு சென் றடைவார். (1)

  சிவசிவ என்பார் அவர்முனே நிருத்தம் செய்திடும் மறலியும் பணியும்,
  அவரைவிட் டகலான் அம்பிகை பாகன் ஆரணம் அவர் முகத் திருக்கும்,
  தவனனைக் கண்ட பணியெனப் பாவம் சரிந்திடும் பவக்கடல் அழுந்தார்,
  புவனியில் மரண காலையிற் புகலின் புலை யரும் அடைவர்சா ரூபம். (2)

  திருத்தமாய் ஒருத்தன் செவிப்புலன் கேட்கச் சிவசிவ என் றிடிற் பனைமேல்,
  இருத்திய இடி போல் எரிந்திடும் பாவம் இறப் பொடு பிறப்பெலாம் எரியும்,
  ஒருத்தன்வாய் ஆரச் சிவஎன முக் கால் உரைத்திடின் ஓர் உரை அதற்குக் ,
  கருத்தன்வாழ் பதத்தில் இருத்திடும் இரண்டும் கடவுள் மேல் கடன்களாய் நிற்கும். (3)

  எத்தனை படித்தா னேனும் எத்தவஞ் செய்தா னேனும்
  அத்தனை யாகம் எல்லாம் அடைவுடன் செய்தா னேனும்
  நித்தனைப் பூசை செய்யான் நெடுஞ்செயற் போகம் எல்லாம்
  செத்தவற் களித்தால் ஒக்கும் தீங்கானின் மழையை ஒக்கும். (4)

  தவத்தினுக் கரச தான சங்கரன் பூசை செய்யான்
  கவர்த்தமா நரகில் வீழ்வன் ஏறினுங் காகம் போல
  அவத்தனாய் நோயும் பேயும் அல்லலும் மிடியும் சுற்றிச்
  சுவர்த்தலைப் பூனை போலச் சுற்றுவன் யோனி தோறும். (5)

  பூசையி லாதான் உண்டி புழுப்பிணம் புலையன் கட்டம்
  மாசுள பாவம் ஒக்கும் வாளினில் தீயில் வீழ்ந்து
  நாசமா வதுவே நன்று நற்குலம் பிறந்தா னேனும்
  தேசுளார் அவனைத் தீண்டில் தெரிவிக்கின் நினைக்கிற் பாவம். (6)

  நீற்றினொடு கண்டிகை ரினைந்துபுனை வார்தம்
  பேற்றின்அள வென்னஅவர் பிறந்ததுவே சென்மம்
  போற்றியவர் கட்குதவு பூசையது பூசை
  ஆற்றலுள் நற்கொடையும் அக்கொடைய தாமால். (7)

  நீறுபுனை வார்வினையை நீறுசெய்த லாலே
  வீறு தனி நாமமது நீறென விளம்பும்
  சீறுநர கத்து பயிர் செலாவகை மருந்தாய்க்
  கூறுடைய தேவிகையில் முன்னிறை கொடுத்தான். (8)

  நோயகலும் வந்தவினை நுந்துவினை யெல்லாம்
  போயகலும் வெண் பொடி புனைந்தவுட னே முற்
  பேயகலும் வஞ்சகப் பிறப்பினொ டிறப்பின்
  தாயகலும் நன்மைகள் தழைத்துவரு மன்றே. (9)

  தீர்த்தமுள் இதிற் பெரிய தீர்த்தம் அஃ தில்லை
  ஏத்தரிய செல்வமுள் இதிற் பெரிய[ தில்லை
  பேர்த்துரை மருந்தினுள் இதிற் பெரிய தில்லை
  நீத்தலுறு பண்டிதருள் நீற்றதிகர் இல்லை. (10)

  புண்ணியம் இயற்றில் இறை பூசைநிய மத்தில்
  நண்ணுதவம் ஆதிகளில் கண்ணின் அவை நன்றாம்
  எண்ணரிய பாதகரும் ஈனஉயிர் யாவும்
  கண்மணி விழைந்தணியில் கண்பெறுவ துண்மை . (11)

  அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
  அன்பேசிவம் ஆவ தாரும் அறிகிலார்
  அன்பே சிவம் ஆவ தாரும் அறிந்தபின்
  அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. (12)

  சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
  சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
  சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
  சிவசிவ என்னச் சிவகதி தானே. (13)

  ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
  பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
  சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
  நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே. (14)

  பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்
  பெறுதற் கரிய பிரானடி பேணார்
  பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
  பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே. (15)

  மருவானைப் பெண்ணாக்கி ஒருகணத்தில் கண்விழித்து வயங்கும் அப்பெண்,
  உருவாணை உருவாக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவனேனும்,
  கருவாணை உறஇரங்கா துயிர்உடம்பைக் கடித் துண்ணும் கருத்தனேல்எங்,
  குருவாணை எமது சிவக்கொழுந் தாணை ஞானியெனக் கூறொணாதே. (16)

  அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி அரும்பசி எவர்க்கும் ஆற்றி
  மனத்துளே பேதா பேதம் வஞ்சம் பொய் களவு சூது,
  சினத்தையும் தவிர்ப்பாய் ஆகில் செய்தவம் வேறொன் றுண்டோ ,
  உனக்கிது உறுதியான உபதேசம் ஆகுந் தானே. (17)

  ஒருகணம் இருப்பன்தெய்வ உருவினில் ஈசன் தான்மற்,
  றிருகணம் செங்கோல் ஓச்சும் இறையவன் பால் இருப்பன்,
  அருமறை யவர்குழாத்தில் அம்பிவீழ் அளபுருப்பன்,
  தூரியாஞானிகள் இடத்தில் தூங்குவன் இருந்தப் போதும். (18)

  செந்தமிழ் அடைகாய்நீறு சிவிகைபொன் ஆடை ஆரம்
  சுந்தரம் ஆன தோகை துலங்கும் இவ் வகைகள் ஏழும்
  வந்தபோ திருகை ஏந்தி வாங்கலக் குமியும் சேர்வள்
  அந்தநாள் ஆகா என்றால் அவனை விட் டகலு வாளே. (19)

  இஞ்சி நெல்லி இலைக்கறி பாகற்காய்
  கஞ்சி வெண்தயிர் கங்குல் அருந்திடில்
  பிஞ்சி பூமகள் போயுடன் மூத்தவள்
  கொஞ்சிக் கொஞ்சிக் குலாவி நடிப்பளே. (20)

  ஈதலறம் தீவினைவிட் டீட்டல்பொருள் எஞ்ஞான்றும்
  காத லிருவர் கருத்தொருமித் - தாதரவு
  பட்டதே இன்பம் பரனை நினைந் திம்மூன்றும்
  விட்டதே பேரின்ப வீடு. (21)

  மாலினால் இருவரும் மருவி மாசிலாப்
  பாலனைப் பெயர் தான் படிப்பி யாதுயர்
  தாலமேல் செல்வமாய் வளர்த்தல் தங்கட்கோர்
  காலனை வளர்க்கின்ற காட்சி போலுமே. (22)
  ----------------

  சேக்கிழார் பிள்ளைத்தமிழ்

  சோழமணக்கும் மடங்களெலாம்
  தூய்மைமணக்குஞ் சிந்தையெலாம்
  சுவணமணக்கும் ஆடையெலாந்
  தொங்கல்மணக்குந் தோள்களெலாஞ்
  சேறுமcணக்குங் கழனியெலாஞ்
  செல்வமணக்கும் மாடமெலாம்
  தென்றல்மணக்கும் மேடையெலாம்
  தெய்வமணக்குஞ் செய்யுளெலாம்
  நீறுமணக்கும் நெற்றியெலாம்
  நெய்யேமணக்குங் கறிகளெலாம்
  நெருப்புமணக்குங் குண்டமெலாம்
  நேயமணக்கும் வீதியெலாஞ்
  சாறுமணக்குங் குன்றத்தூர்த்
  தலைவா தாலோ தாலேலோ
  சகலாகம பண்டித தெய்வச்
  சைவா தாலோ தாலேலோ (23)

  மட்டாருந் தென் களந்தைப் படிக்காச னுரைத் தமிழ் வரைந்த வேட்டைப்
  பட்டாலே சூழ்ந்தாலு மூவுலகும் பரிமளிக்கும் பரிந்தல் வேட்டைத்
  தொட்டாலுங் கைமணக்குஞ் சொன்னாலும் வாய்மணக்குந் துய்ய சேற்றில்
  நட்டாலுந் தமிழ்ப்பயிராய் விளைந்திடுமே பாட்டினுறு நளினந் தானே (24)
  -------------------

  12. தாயுமானவர் பாடல்

  காகமா னது கோடி கூடிநின் றாலுமொரு
        கல்லின் முன் னெதிர்நிற்குமோ
  கர்மமா னதுகோடி முன்னேசெய் தாலுநின்
        கருணைப்பிர வாகவருளைத்
  தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ
        தமியனேற் கருட்டாகமோ
  சற்றுமிலை யென்பதுவும் வெளியாச்சு வினையெலாஞ்
        சங்கேத மாய்க்கூடியே
  தேகமா னதைமிகவும் வாட்டுதே துன்பங்கள்
        சேராமல் யோகமார்க்க
  சித்தியோ வரவில்லை சகசநிட் டைக்குமென்
        சிந்தைக்கும் வெகுதூரநான்
  ஏகமாய்நின்னோ டிருக்குமா ளெந்தநா
        ளின்னாளின் முற்றுறாதோ
  இகபர மிரண்டினிலு முயிரினுக் குயிராகி
        யெங்குநிறை கின்ற பொருளே. (25)

  எண்ணாத எண்ணமெலாம் எண்ணி எண்ணி ஏழைநெஞ்சம்
  புண்ணாகச் செய்ததினிப் போதும் பராபரமே (26)

  கண்ணாவாரேனும் உனைக் கைகுவியா ராமயின் அந்த
  மண்ணாவார் நட்பை மதியேன் பராபரமே (27)

  வஞ்சகமன் வாதனைக்கும் வன்பிறவி வேதனைக்கும்
  அஞ்சி யுனையடைந்தேன் ஐயா பராபரமே (28)

  சினமிறக்கக் கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும்
  மனமிறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே (29)

  கொலைகளவு கட்காமம் கோபம் விட்டாலன்றோ
  மலையிலக்காம் நின்னருள்தான் வாய்க்கும் பராபரமே (30)

  அன்பர்பணி செய்யவென ஆளாக்கி விட்டுவிட்டால்
  இன்பநிலை தானே வந்து எய்தும் பராபரமே (31)

  காலமொரு மூன்றும் கருத்தில் உணர்ந்தாலும் அதை
  ஞாலம் தனக்குரையார் நல்லோர் பராபரமே (32)

  மூர்த்திதலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர்
  வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே (33)

  ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்து
  தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம் (34)

  பல்லூழி காலம் பயின்று அரனை அர்ச்சித்தால்
  நல்லறிவு சற்றே நகும் (35)

  கொல்லா விரதங் குவலய மெலாம் ஓங்க
  எல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே (36)

  கொல்லா விரதமொன்று கொண்டாரே நல்லோர் மற்றும்
  அல்லாதார் யாரோ அறியோன் பராபரமே (37)

  எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
  அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே (38)

  வீணுரை கரும்பு ஈசன் மெய்யுரை வேம்பும் ஆகும்
  தாணுவை இறைஞ்சல் ஒட்டா தையலை இறைஞ்சப் பண்ணும்
  நாணற இரத்தல் செய்யும் நல்லவர்க் கீதல் செய்யா(து)
  ஆணவ மலத்தின் செய்கை இவ்வண்ணம் அறிந்துகொள்ளே. (39)

  புல்லினால் வருடம் கோடி புதுமண்ணாற் பத்துக் கோடி
  செல்லுமா ஞாலம் தன்னில் செங்கலால் நூறு கோடி
  அல்லியங் கோதை பாகன் ஆலய மடாலயங்கள்
  கல்லினால் கட்டி வைத்தோர் கயிலைவிட் டகலார் அன்றே. (40)

  நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி
        நலம்ஒன்றும் அறியாத நாரியரைக் கூடிப்
  பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
        புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
  காப்பதற்கும் வகையுறியீர் கைவிடவும் மாட்டீர்
        கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே
  ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல
        அகப்பட்டீர் கிடந்துழல் அகப்பட்டீர் நீரே (41)

  அரியணையில் இருந்துலக அரசாட்சி புரிந்தாலும் அங்கை யேற்றுத்,
  தெருவு தொறும் திரிந்திரந்து தின்றாலும் இளம்பருவத் தெரிவைமாரை,
  பிரியாமல் இருந்தாலும் பிரிந்து தவம் புரிந்தாலும் பேசிற் றெல்லாம்,
  விரிசீவன் முத்தனுக்கு இங்குடன்பா டே - விரோதம் இன்றே. (42)

  சாத்திரத்தால் அளவுபடாத் தனிமுதலைப் பராபரத்தைத் தானே தானாய்,
  மாத்திரையாய் நிற்பதனை வாய்விட்டுப் பேசாத மவுன வெற்பைக்,
  காத்திரவா தனைகடந்த அறிஞருக்குப் பலமியும் கற்பகத்தைப்,
  பார்த்தவிடம் தொறும் நிகழும் பரமரக சியப்பொரு களப் பணிதல் செய்வாம். (43)

  மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று, மிதியாமை கோடி பெறும்,
  உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனை யில் உண்ணாமை கோடி பெறும்,
  கோடி கொடுத்தும் குடிப்பிறந் தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும்,
  கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக் கோடாமை கொடி பெறும். (44)

  கொல்லைத் திடலை உழுது நன்றாய்க் கொத்தித் திருத்திப் பயிர் செய்து,
  அல்லும் பகலும் அது தொழிலாய் அலைந்து திரியக் கடவே னைச்,
  செல்வத் திருவாரூர் தனிலே தியாகேசுரர்தம் அர்ச்சனைக்கு,
  வில்வக்குடலை எடுக்காது வீணுக்கு உடலை எடுத்தேனே. (45)
  ----------------

  13. பட்டினத்தார் பாடல்

  குடை கொண்டிவ் வையமெலாம் குளிர்வித்து எரிபோற் றிகிரி,
  படைகொண்டிகல்தெறும் பார்த்திவராவதிற் பைம்பொற் கொன்றைத்,
  தொடை கொண்ட வார்சடை யம்பலத்தான் தொண் டர்க்கு ஏவல் செய்து,
  கடைகொண்ட பிச்சை கொண்டுண்டு யிங்கு வாழ்தல் களிப்புடைத்தே. (1)

  நல்லா ரிணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே
  யல்லாது வேறு நிலையுளதோ அகமும் பொருளும்
  இல்லாளும் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழில் உடம்பும்
  எல்லாம் வெளிமயக்கே இறைவா கச்சியே கம்பனே. (2)

  எல்லாம் அறிந்து படித்தேயிருந்து எமக்குள்ளபடி
  வல்லான் அறிந்துளன் என்றுணராது மதிமயங்கி
  சொல்லால் மலைந்து உறுசூழ் விதியின் படி துக்கித்துப்பின்
  எல்லாம் சிவன் செயலே என்பர்கான் கச்சியே கம்பனே. (3)

  கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற் குத்திரம் கோள்களவு
  லல்காம ஆகைதவரோ டிணங்காமல் கனவிலும் பொய்
  சொல்லாமற் சொற்களைக் கேளாமற் தோகையர் மாயையிலே
  செல்லாமற் செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே. (4)

  ஊட்டுவிப்பானும் உறங்குவிப்பானும் இங்கொன்றோடு ஒன்றை
  மூட்டுவிப்பானும் முயங்கு விற்பானும் முயன்றவினை
  காட்டுவிப்பானும் இருவினைப் பாசக் கயிற்றின்வினை
  ஆட்டுவிப்பானும் ஒருவன் உண்டே தில்லையம்பலத்தே. (5)

  நெருப்பான மேனியர் செங்காட்டில் ஆத்திநிழல் அருகே
  இருப்பார் திருவுளம் எப்படியோ இன்னம் என்னை அன்னை
  கருப்பாசயக் குழிக்கே தள்ளுமோ கண்ணன் காணரிய
  திருப்பாத மேதருமோ தெரியாது சிவன் செயலே. (6)

  ஐயும் தொடர்ந்து விழியும் செருகி அறிவழிந்து
  மெய்யும் பொய்யாகி விடுகின்ற போது ஒன்று வேண்டுவன் யான்
  செய்யும் திருவொற்றியூர் உடையீர் திருநீறுமிட்டுக்
  கையும் தொழப்பண்ணி ஐந்தெழுத் தோதவும் கற்பியுமே. (7)

  "ஒன் றென்றிரு தெய்வமுண் டென்றிரு உயர் செல்வமெல்லாம்
  அன்றென் றிரு பசித்தோர் முகம்பார் நல்லறமும் நட்பும்
  நன்றென்றிரு நடுநீங்காமலே நமக்கு இட்டபடி
  என்றென்றிரு மனமே உனக்கு உபதேச மிதே. (8)

  நாட்டமென்றே யிரு சற்குரு பாதத்தை நம்பு மொம்மல்
  ஆட்டமென்றே யிரு பொல்லா உடலை அடர்ந்த சந்தைக்
  கூட்டமென்றே யிரு சுற்றத்தை வாழ்வை குடங்கவிழ் நீர்
  ஓட்டமென்றே யிரு மனமே உனக்கு இது உபதேசம் இதே. (9)

  மாடுண்டு கன்றுண்டு மக்களுண்டு என்று மகிழ்வத தெல்லாம்
  கேடுண்டு எனும்படி கேட்டு விட்டோம் இனிக்கேள் மனமே
  ஓடுண்டு கந்தையுண்டு உள்ளே எழுத்தைந்தும் ஓதவுண்டு
  தோடுண்ட கண்டன அடியார் நமக்குத் துணையும் உண்டே (10)

  அழுதாற் பயன் என்ன நொந்தாற் பயனென்ன ஆவதில்லை
  தொழுதால் பயனென்ன நம்மை ஒருவர் சுடவுரைத்த
  பழுதாற் பயனென்ன நன்மையும் தீமையும் பங்கயத்தோன்
  எழுதாப் படிவருமோ சலியாதிரு என்ஏழை நெஞ்சே (11)

  ஒழியாப் பிறவி யெடுத்து ஏங்கி ஏங்கி உழன்ற நெஞ்சே
  அழியாப் பதவிக்கு அவுடதம் கேட்டி அநாதியனை
  மழுமான் கரத்தனை மால்விடை யானை மனத்தில் உன்னி
  விழியால் புனல்சிந்தி விம்மியழும் நன்மை வேண்டும் என்றே. (12)

  ஆயாய் பலகலை ஆய்ந்திடும் தூய அருந்தவர்பால்
  போயாகிலும் உண்மை தெளிந்தா யிலைபூதலத்தில்
  வேயார்ந்த தோளியர் காமவிகாரத்தில் வீழ்ந்தழுந்திப்
  பேயாய் விழிக்கின்றனை மனமே என்ன புத்தி யிதே. (13)

  பேய்போற் றிரிந்து பிணம்போல்க் கிடந்திட்ட பிச்சையெல்லாம்
  நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன்மங்கை யரைத்
  தாய்போல்க் கருதி தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லி
  சேய்போல் இருப்பர் கண்டீர் உண்மை ஞானம் தெளிந்தவறே. (14)

  பாராமல் ஏற்பவர்க்கு இல்லையென்னாமல் பழுது சொல்லி
  வாராமல் பாவங்கள் வந்தணுகாமல் மனம் அயர்ந்து
  பேராமல் சேவை பிரியாமல் அன்புபெறாத வரைச்
  சேராமல் செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே. (15)

  பூணும்பணிக்கு அல்ல பொன்னுக்குத் தானல்ல பூமிதனை
  காணும்படிக்கல்ல மங்கையர்க்கு அல்ல நற்காட்சிக் கல்ல
  சேணும்கடந்த சிவனடிக்கல்ல யென்சிந்தை கெட்டு
  சாணும் வளர்க்க அடியேன் படுந்துயர் சற்றல்லவே. (16)

  சீதப்பனிக்குண்டு சிக்கெனக் கந்தை தினம்பசித்தால்
  நீதுய்க்கக் சோறுமனை தோறும் உண்டு நினைவுஎழுந்தால்
  வீதிக்குள் நல்லவிலை மாதருண்டு இந்த மேதினியில்
  ஏதுக்கு நீசலித்தாய்மனமே என்றும் புண்படவே. (17)

  என்று மின்பம் பெருகு மியினோ(டு)
  ஒன்று காதலித் துள்ளமு மோங்கிட
  மன்று ளாரடி யாரவர் வான்புகழ்
  நின்ற தெங்கும் நிலவி யுலகெலாம். (18)
  --------------

  14. தனிப் பாடல்கள்

  தேவர் குறளும் திருநான் மறைமுடிபும்
  மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
  திருவாசகமும் திருமூலர் சொல்லும்
  ஒருவாசகம் என்று உணர். (1)

  கருப்பைக்குள் முட்டைக்குள் கல்லினுட் தேரைக்கும்
  விருப்புற்று அமுதளிக்கும் மெய்யன் - உருப்பெற்றால்
  ஊட்டி வளர்க்கானோர் கெடுவாய் அண்ணாகேள்
  வாட்டம் உனக்கேன் மகிழ். (2)

  கண் ணுழையாக் காட்டில் கருங்கல் தவளைக்கும்
  உண்ணும்படி யறியது ஊட்டுமவர் ---ண்ணுநம்
  நமக்கும் படியளப்பார் நாரியோர் பாகர்
  தமக்குத் தொழில் என்னதான். (3)

  உள்ள வழக்கிருக்க ஊரார் பொதுவிருக்கக்
  தள்ளி வழக்கதனைத் தான் பேசி - எள்ளவும்
  கைக்கூலி தான் வாங்கும் கால்அறுவன் தன்கிளையும்
  எச்சமறும் என்றால் அறு. (4)

  வழகிகுடையான் நிற்க வலியானைக் கூடி.
  வழக்கை அழிவழுக்குச் செய்தோன்-வழக்கிழந்தோன்
  சுற்றமும் தானும் தொடர்ந்துஅழுத கண்ணீரால்
  எச்சம் அறும்என்றால் அறு. (5)

  வஞ்சித்தொழுகும் மதியிலிகாள் யாவரையும்
  வஞ்சித்தோம் என்று மகிழன்மின் - வஞ்சித்த
  எங்கும்உளன் ஒருவன் என்றுகொல் என்று அஞ்சி
  அங்கம் குலைவது அறிவு (6)

  பிரரால் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும்
  மறவாமல் நோப்பதொன்று உண்டு - பிறர்பிறர்
  சீரெல்லாம் தூற்றிசிறு மைபுறம்காத்து
  யார்யார்க்கும் தாட்சி சொலல். (7)

  நிலையாமை நோய்மூப்பு சாக்காடு என்றெண்ணி
  தலையாயர் தங்கருமம் செய்வார் - தொலைவில்லாச்
  சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவை பிதற்றும்
  பித்தரில் பேதையார் இல். (8)

  சாந்த முடையோன் தவசி அவாவற்றோன்
  வாய்ந்த துறவி மனமாண்டோன் - ஆய்ந்துணர்ந்த
  யோகிபரிபூரணத்தை யுற்றுணர்ந் தோன்
  நல்ல சிவயோகி யெனச்சொல்லும் போது.

  பெருத்திடும் செல்வமாம் பிணிவந்துற்றிடில்
  உருத்தெரியாமலே ஒளி மழுங்கிடும்
  மருந்துளதோ வெனில் வாகடத்திலை
  தரித்திரம் என்னுமோர் பிணியில் தீருமே. (10)

  கூர்த்துநாய் கௌவித் கொளக்கண்டும் தம்வாயால்
  பேர்த்துநாய் கௌவினார் யீங்கில்லை-நீர்த்தன்றி
  கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்பவோ
  மேன்மக்கள் தம்வாயால் மீட்டு.

  சிதம்பரத் தோத்திரத்திரட்டு முற்றிற்று.
  ------------

This file was last updated on 20 Feb. 2019.
Feel free to send the corrections to the .