சமீபத்திய மலையாளச் சிறுகதைகள்
எம். முகுந்தன் (தொகுப்பு)
: ம. இராஜாராம் (மொழிபெயர்ப்பு)

Recent Malayalam Short Stories
M. Mukundan (editor), M. Rajaram (translation)
In tamil script, unicode/utf-8 format

சமீபத்திய மலையாளச் சிறுகதைகள்
எம். முகுந்தன் (தொகுப்பு)
: ம. இராஜாராம் (மொழிபெயர்ப்பு)


Source:
"சமீபத்திய மலையாளச் சிறுகதைகள்"
தொகுப்பு : எம். முகுந்தன்
மொழிபெயர்ப்பு: ம. இராஜாராம்
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
முதற்பதிப்பு : 1980 (சக : 1901)
இரண்டாம் அச்சு : 1990 (சக : 1912)
அனைத்திந்திய நூல்வரிசை
(© ) உரிமைகள் அந்தந்த ஆசிரியர்களுடையன
தமிழாக்கம் (©) நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா, 1979
ரூ. 16.50
வெளியிட்டவர்: டைரக்டர், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.
ஏ-5, கிரின்பார்க், புது தில்லி - 110016.
Original title: Recent Malayalam Short Stories (Malayalam)
Tamil title: Sameebathiya Malayala Siru Kathaikal.
Printed at Kay Kay Printers 150-D Kamla Nagar Delhi - 110007
----------------

அறிமுகம்.


1930-50 ஆம் ஆண்டு காலகட்டம்- மலையாளக் கதையின் பொற்காலமாக இருந்தது. இக் காலகட்டத்தில்தான் மலையாளத்தில் சிறுகதை இலக்கியம் வளர்ந்து பக்குவமெய்தியது.

1930-க்கு முன்பும் ஏாளமான கதைகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. முதல் கதை வெளிவந்தது 1894-ல் என்று கருதப்படுகிறது. மூர்ங்கோத்துக் குமாரனுடையது அக் கதை. பிற்காலத்தில் நூற்றுக்கும் அதிகமான கதைகள் எழுதிப் பிரபலமடைந்த அவரை மலையாளக் கதையின் தந்தை என்று கூறலாம். இந் நூற்றாண்டின், முப்பதுக்கள்வரை மலையாளக் கதை அதன் இளம்பிராயத்திலிருந்தது. மேற்கத்திய நாடுகளில் உருவாகிவந்திருந்த நவீன கதைகள் மலையாள மொழியில் வந்தடைந்திருக்கவில்லை. கலையழகற்ற, நீண்ட வர்ணனைகள் அடங்கியவையாக இருந்தன அந்நாளையக் கதைகள். மங்களமாக முடிகின்ற திருமணங்களும் வீரச்செயல்களும் கொண்ட கதைகள் நிரந்தரமாக விரும்பப்பட்டன.

முதல் கதை தோன்றி நாற்பதாண்டுகள் ஆக வேண்டியிருந்தது. இன்று வழங்கும் நவீன சிறுகதை பிறப்பதற்கு. ஆலன்போ, செகாவ் முதலான உலகக் கதாசிரியர்களினுடைய படைப்புக்களின் புதுமைகள் மலையாள மொழியிலும் உண்டாயின. புதிய கதாசிரியர்களில் அநேகம் பேரும் ஆங்கில அறிவு உள்ளவர்களாகவும் இருந்தனர். புதுக்கதை இலக்கியங்களைக் குறித்து அறிய இது அவர்களுக்கு உதவியாக இருந்தது. படிப்படியாக மாப்பஸானுடையவோ, செகாவினுடையவோ கதைகளில் காணப்படும் கலையழகு மலையாளக் கதைகளுக்கும் உண்டாயிற்று. விரைவிலேயே கருத்தாழம் மிக்க பரப்பெல்லையும் காணத் தொடங்கியது. ரஷ்யப் புரட்சியும், தொடந்து நிலைநின்ற முதல் சோஷலிஸ்ட் ஸ்டேட்டும், மார்க்ஸிஸ்ட் மனப்பான்மை கொண்ட எழுத்தாளர்களுக்கு ஊக்கம் ஊட்டின. இக் காலகட்டத்தின் கதாசிரியர்கள்தான் தகழி, கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி முதலானோர்.

இதே சமயத்தில்தான் ஃப்ராய்டின் மனத்தத்துவமும், ப்ராஸ்ட், ஜாய்ஸ் ஆகியோரின் சங்கேதங்களும்கூட மலையாள இலக்கியத்தில் நுழைந்தன. நுண்பொருள் கோட்பாட்டியல் உணர்வு, நவீன சங்கேதங்களின் ப்ரவாகம் என்றிவற்றில் மலையாளமொழிக் கதாசிரியர்களுக்கு, தத்தம் ஆற்றலைக் கண்டு கொள்ளவும், தத்தம் நடைகளைக் கையாளவும், அப்படியே கதை இலக்கியத்தை வளர்க்கவும் இக் கால கட்டத்தில் இயன்றது. தகழியும் வர்க்கியும், செருகாடும் சோஷலிஸ்ட் ரியலிஸத்தை உறுதிப்படுத்தினார்கள். பொற்றெக்காடு ரோமான்டிஸிஸத்தின் கண்ணாடி மாளிகையைக் கட்டினார். இயக்கங்களிலிருந்து தனித்து நின்று தன் திறமையினால் பஷீர் மலையாளக்கதையின் முன்னேற்றத்திற்கு விலையுயர்ந்த பங்களித்தார். மலையாளக்கதையின் பொற்காலமாகவே இருந்தது இக் காலகட்டம்.

மேலே விமரிசிக்கப்பட்ட கதாசிரியர்களுக்குப் பிறகு வந்தவர்களே பாரப்புரத்து, மலையாற்றூர் ராமகிருஷ்ணன், ஸி.ராதாகிருஷ்ணன், உன்னி கிருஷ்ணன்புத்தூர் முதலான எழுத்தாளர்கள். மலையாளக்கதை இலக்கியத்தின் வளர்ச்சியில் இவர்களுடைய பங்கு விலைமதிப் பற்றதாகும். சோஷலிஸ்ட் ரியலிஸத்தின் சார்புரிமையாளர்களான கதாசிரியர்களுக்குப் பிறகு மலையாளத்தில் உதித்த இரு திறமைசாலிகள் எம்.டி. வாசுதேவன் நாயரும், மாதவிக் குட்டியும். கலையழகின் முத்துக்கள் போன்றவை வாசுதேவன் நாயரின் கதைகள், மலபாரில் தளர்ச்சியடைந்து கொண்டிருந்த நாயர் குடும்பங்களின் நிலையை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தையும் வீழ்ச்சியையும் அவருடைய கதைகளில் காணலாம். மாதவிக் குட்டியோவெனில், பெரும் நகரங்களில் மாட்டிக் கொண்டவர்களைப்பற்றியும் ஆண்பெண் உறவைக் குறித்தும் அதே கலைத்திறமையுடன் கதைகளெழுதினார்.*
-------
* ஸ்ரீ ஓம்சேரி என். என். பிள்ளை, நேஷனல் புக் டிரஸ்டிற்காகத் தயாரித்த முதல் மலையாளக்கதைத் தொகுப்பில் அவர் எழுதிய குறிப்பைப் பார்க்கவும்.

இயக்கங்களுடன் சம்பந்தப்படாமல் மலையாளக்கதைகளை ஊட்டி வளர்த்த மற்ற சில எழுத்தாளர்களோடு சேர்ந்தவர்கள் என்.பி.முகமது, எம்.கோவிந்தன், பட்டத்து விள கருணாகரன், ஜய தேவன், துளசி என்பவர்கள். இக் கூட்டத்திலொருவன்தான் நான். திடமான தனித்துவமே முகமதினுடைய கதைகளின் முக்ய குணம். தினசரி வாழ்க்கையில் எல்லாவிதமான முரண்பாடுகளுக்கும் மேலாகத் தத்தம் ஆன்மாவை உயர்த்திக்கொள்பவர்கள் அவரது கதா பாத்திரங்கள். முஸ்லீம் சமுதாயத்தின் சிரிப்பும் அழுகையும் முகமதின் கதைகளுக்குத் தாளம் கூட்டுகின்றன. அவரது கிராமத்திலுள்ள அருவி ஒழுக்குப் போன்றது அவருடைய நடை. சிலசமயம் அவரது கருத்து குரானிலும், ஐதீகங்களிலும் உள்ள புராணக் கதைகளில் உலவுவ தைக் காணலாம். எண்.கோவிந்தன், சிந்தனையாளரும் கட்டுரையாளரும் கவிஞரும் ஆவார். வேதாந்த சிந்தையும் ஆழமான அறிவும் கோவிந்தனின் கதைகளுக்கு ஆழமும் பரப்பும் கொடுக்கின்றன. பட்டத்து விள கருணாகரன் குறைவாகவே எழுதியுள்ளபோதிலும் இலக்கிய உலகில் தமக்கென்று ஓரிடத்தைத் தேடிக்கொண்டவர்.

முழுக்க முழுக்கத் தனியான நடை அவருடையது. கருணாகரனின் நாயக நாயகிகளில் பெரும்பான்மையோர் ஆசையொழிந்த இடதுசாரி அறிவு ஜீவிகளோ அல்லது பௌத்தத்திற்கு அடிமைப்பட்டவர்களோ ஆவர். மார்க்ஸிஸத்திற்கு ரோமான்டிஸிஸத்தின் ஒளியைக் கொடுக்கிறார் அவர். கருணாகரனின் கதைகள், வாசுதேவன் நாயருடையவை போலவோ, மாதவிக் குட்டியினுடையவை போலவோ ஜன சம்மதத்தைப் பெற்றவையல்ல எனினும் அவை நவீன மலையாளக் கதைகளுக்கு விலையுயர்ந்த ஒரு முதல் கட்டம். ஆரம்பத்தில் சுயாபிமானம் மிக்க ரொமான்டிக் கதைகளைத்தான் துளஸி எழுதினார். பிறகு புதுப்பபுது கதைப்பாணிகளுக்கான சோதனைக்கூடமாயின அவரது கதைகள். ஊழல்மிகு உலகத்தில் கிடந்து உழலுபவர்களின் விடுதலை ஏக்கங்களையே என்னுடைய கதாபாத்திரங்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்று தோன்றுகிறது.

பழைய தலைமுறைக் கதாசிரியர்களின் சிரத்தை, கதையின் உருவ அமைப்பிலல்ல. உள்ளடக்கத்தில்தானிருந்தது. தகழி, கேசவதேவ் இவர்களின் நடை செயல்களோடு ஒட்டியது. அவர்களுடைய கதைகளின் வலிமையும் அவற்றில் துடிக்கும் வாழ்க்கை மட்டுமே. தினசரி வாழ்க்கைப் பிரச்னைகளில் மூழ்கிய அத் தலைமுறைக்குச் சொல்லழகைத் தேடிக்கொண்டிருக்க நேரமிருக்கவில்லை. தினசரி வாழ்க்கையின் விருப்பு வெறுப்புகளை வைத்து அவர்கள் கதைகள் புனைந்தனர். ஆனால் புதிய தலைமுறை அவற்றால் மட்டும் திருப்தி அடைவதில்லை. வாழ்க்கையை யதார்த்தமாக மட்டும் சித்திரித்தால் போதாது என்று அவர்களு்க்குத் தோன்றியது. அவர்களில் முதன்மையாக நிற்பவர் எம்.டி.வாசுதேவன் நாயர். அவருடைய கதைகளின் உயிர்நாடியும் துடிக்கும் வாழ்க்கைதான். ஆனால் வாழ்க்கைத் துடிப்பை அவர் காவியமாக அலங்கரிக்கிறார். மலையாளக்கதை பாவகீதத்துடன் விளங்குவது வாசுதேவன் நாயரின் கதைகளுடனேயாம். தொடர்ந்து அவருடைய பாதையில் நடப்பவர்கள் என்.மோஹனனும், ஜெய தேவனும். ஜெயதேவனின் பல கதைகளும் தூய கவிதைகள். அவர் உபயோகிக்கும் சொற்கள் சலங்கை போலக் குலுங்குகின்றன. என். மோஹனன், கதையைக் காவியமாக்குவதில் வாசுதேவன் நாயரைவிட மேலே போய்விடுகிறார். பரந்த கான்வாஸில் எழுதப்பட்டவையல்ல அவருடைய கதைகள். பல சமயங்களிலும் ஆழமும், பரப்பும் இல்லாமலிருக்கலாம். ஆனாலும் இதயத்தைக் கவருகின்ற சக்தியுண்டு அவைகட்கு. புதிய வெளிப்பாடுகளைத் தேடி வெகுதூரம் சஞ்சரித்த மற்றொரு கதாசிரியர் கோவிலன். ஆரம்பத்தில் அவர் யுத்தக் கதைகள் மட்டும் தான் எழுதினார். பாரப்புரத்து, நந்தனார் இவர்களைப் போல. நந்தனாரின் நேரான நடையல்ல அவரது கதைகளுக்கு. மோஹனனின் கதைகளுக்கு நேர் எதிரானவை கோவிலனின் கதைகள். மொழியின் கடினத்தால் அவருடைய கதைகளின் கலையுணர்வே சேதமாகிறது. கோவிலனின் கதைகளில் கலகலக்கும் சொற்கள் எங்கும் காணப்பட மாட்டா. கருங்கல் துண்டின் கூர்மையைப் போன்றது அவர் நடை.

சோஷலிஸ்ட் ரியலிஸமும், ரோமான்டிஸிஸமும் பின்னடைந்த பிறகு இன்று நவீன பாணியை அடைந்திருக்கின்றன மலையாளக் கதைகள். புதுக்கதைகளையே நவீனக் கதைகளென்று அழைக்கிறோம். இந் நவீன காலகட்டத்தின் கதாசிரியர்களே காக்க நாடன், ஓ.வி. விஜயன், எம்.பி. நாராயணபிள்ளை முதலியோரும் நானும். மலையாளத்தில் புதிய போக்குகள் முதலில் நுழைந்தது சிறுகதைகளில்தான். ஏறக் குறைய, ஒரு பன்னிரண்டு வருட காலத்திற்கு முன்பிலிருந்து நவீன கதைகளின் விதைப்பு நடந்துகொண்டிருக்கிறது. முதல் நவீன கதை எதுவென்று திட்டவட்டமாகச் சொல்வது கஷ்டம். ஏனென்றால் புதுக் கதை சட்டென்று ஒரு நாளில் தோன்றியதல்ல.நவீன கதையின் வேர்களை வாசுதேவன் நாயர், மோஹனன் இவர்களுடைய சில கதைகளில் காணலாம் - முக்யமாக டெக்னிக்குகளைப் பொறுத்த வரையிலும். புதுமைக்கான ஆர்வத்தை மோஹனனின் கதைகளில் தெளிவாகக் காணலாம். நவீன கதைகளின் விசேஷங்களிலொன்று: பாரம் பரியமோ சன்மார்க்க எழுத்துக்களோ, ஆன்மவெளிப்பாட்டில் கட்டுப் பாடான தடையாக அவர்களுக்கு இருப்பதில்லை என்பதே. இத் தனிச் சிறப்பை பஷீரின் சில கதைகளில் காணலாம். நவீன கதையின் கலா பூர்வமான வேர்கள் வாசுதேவன் நாயரிலிருந்தும், உணர்ச்சிபூர்வமான வேர்கள் பஷீரிலிருந்தும் ஊன்றியுள்ளன.

ஆனால் நவீன கதை அதன் பூரண உருவத்தில் வெளிப்படுவது 1960-க்குப் பிறகுதான். அதன்பின் இருப்போர் ஒரு கூட்டம் இளைஞர்கள். எம். பி. நாராயண பிள்ளையின் "ஜோர்ஜாறாமன்றெ கோடதி" (ஆறாம் ஜார்ஜின் நீதிமன்றம்) வாசகரைக் கிளர்ச்சிப்படுத்திய ஒரு கதையாகும். நாராயண பிள்ளையுடன் சேர்ந்து மேடைக்கு வந்த மற்ற நவீன கதாசிரியர்கள் "ஆறாம் ஜார்ஜின் நீதிமன்றத்"தையும் மிஞ்சுகிற கதைகள் எழுதினர். ஓ.வி. விஜயனின் "எட்டுகாலி" (சிலந்தி) , "தீட்டம்" (மலம்) என்ற கதைகள் வாசகரை அதிர்ச்சிக்குள்ளாக்கின. முதல் கதை பாலுணர்வி்ன்மேல் வெறுபைப்பற்றியதாகவும் இரண்டாவது மலத்தைப்பற்றியதாகவு மிருந்தன.

நவீன மலையாளக் கதையின் சிறப்புக்களில் மிகவும் முக்கியமானது அது பாரம்பர்யத்திலிருந்து பெற்ற விடுதலையென்பதாகும். சோஷலிஸ்ட் ரியலிஸம் கதையமைப்பில் விசேஷமான மாற்றம். ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. அதன் பாதிப்பு உள்ளடக்கத்தில்தான் இருந்தது. இதற்கு நேரெதிராக ரோமான்டிஸிஸத்தின் கால கட்டத்தில் மாற்றம் அமைப்பில் மட்டுமேயிருந்தது. நவீன கதை ஏற்படுத்திய விளைவு முழுமையானது. கதையின் உருவம், உள்ளடக்கம் இவை உடைத்து வார்க்கப்பட்டவையாக இருக்கின்றன. தகழி, காக்க நாடன் இவர்களுடைய கதைகளுக்கிடையே கிரகங்களின் இடை வெளியை நாம் காண்கிறோம். காரூரும், வெட்டூரும் எழுதியது போன்ற, முதல், இடை, இறுதி அமைப்புள்ள கதைகளை இன்று காணோம். புதுக்கதை வாரப்பத்திரிகைகளின் இரண்டோ மூன்றோ பக்கங்களில் அடங்கிவிடுகிறது. கதை படிப்படியாக வளருவதோ, முடிவான ஒரு திருப்பத்தில் முடிந்துவிடுவதோ கிடையாது. புதுக் கதையில் இந்த முறையான முத்தாய்ப்பைக் காண முடியாதெனலாம். உள்ளடக்கம் எது, உருவம் எது என நிர்ணயிப்பதுவே கஷ்டம். அவை இரண்டும் அந்த அளவு இழைந்து ஒன்றியிருக்கின்றன. காக்க நாடனின் கதைகளில் இவ்விழையொன்றிப்புப் பூரணமாக உள்ளது. நவீன கதை ஒரு பீறிடல். நிமிட நேரமானாலும் அது சிலிர்ப்பைக் கொடுக்கிறது.

பாரம்பர்யத்திலிருந்து விடுதலை புதிய கலைஞர்களுக்கு ஒரு குறிக் கோளாக நிலைத்திருப்பதைக் காணலாம். ஆ்த்ம விசாரணையின் புதிய பாதைகளை அது அவர்களுக்குக் கொடுக்கிறது. தனிப்பட்ட மனிதனின் கட்டறுப்பின் விளைவுகளே நவீன கதைகள். காக்க நாடனின் கதைகளிலிருந்து மிகவும் மாறுபட்டவை விஜயனின் கதைகள். சேதுவைப் போலல்ல பூனத்தில் குஞ்ஞப்துல்லா எழுதுவது. சோஷலிஸ்ட் ரியலிஸக்காரர்களாகிய கதாசிரியர்களிடையிலுள்ள பிணைப்பு ஒரே விகுதி சாஸ்திரத்திலுள்ள நம்பிக்கையாகவிருந்தது. தகழியையும், வர்க்கீஸையும் , செருகாட்டினையும், இவர்களையொத்த பிறரையும் அந்த நம்பிக்கை சேர்த்து இணைக்கிறது. ஆனால் அவ்விதமான ஒரு விகுதி சாஸ்திரத்தின் இல்லாமையே நவீன கதாசிரியர்களைச் சேர்த்து வைக்கிற சங்கிலி.

மற்ற மொழிகளின் நவீன இலக்கிக் கர்த்தாக்களைப்போல மலையாள மொழியின் நவீன கதாசிரியர்களும் எதிர்வாதம் புரிபவர்களும், நம்பிக்கை இழந்தவர்களுமாவர். வாழ்க்கையென்னும் தர்ம சங்கடத்தின் பெருங்குழப்பம் அவர்களுடைய கதைகளில் இருளை வீசுகிறது. சில சமயம் எங்கும் காணப்படும் மூலக்குழுவுக் கெதிராக அவர்களில் சிலர் கோபம் கொள்கிறார்கள். இவர்களைச் சேர்ந்தவர் எம். சுகுமாரன். பழைய தலைமுறை எழுத்தாளர்களின் கையில் எழுது வதற்கான கருக்கள் இருந்தன. சமூக வாழ்க்கையில் அலையடித்து வந்த புத்துணர்ச்சி. அவ்வுணர்ச்சி பறந்துபோன, தினசரி மதிப்புக்கள் தேய்ந்து வருகிற இருண்ட ஓர் காலகட்டம்தான் புது எழுத்தாளனின் கருக்கள். அவன் ஓர் பேச்சாளனைப்போல பிரசங்கம் செய்வதாகக் காணப்படவில்லை. தினசரி வாழ்க்கையில் நிறைந்த பிரச்னைகள் பல பொழுதும் அவனைத் தொடுவதில்லை. அவனுடைய பிரச்னைகள் பெரும்பாலும் நுண்பொருள் கோட்பாட்டியல் (metaphysics) மட்டத்திலுள்ளவை. விளக்கமான ஒரு தரிசனத்தின் தேவை புதிய எழுத்தாளர்களை ஆதரவற்றவர்களாகவும், துணையற்றவர்களாகவும் ஆக்குகிறது. குருடர்களைப்போல வித்யாசமான வேதாந்த மட்டத்தில் அவர்கள் அலைகிறார்கள். சிலர் பிழைப்பாதாரக் கொள்கையைப் (Existentialism) பரப்புகிறார்கள். சிலர் நிஹிலிஸத்தைத் தழுவுகிறார்கள் ஒரு நவீனக் கதையில் கதாபாத்திரம் சொல்கிறது: "ஓவியர்கள் மடியட்டும், அநார்க்கிஸ்டுகள் மடியட்டும் ப்ரோலட்டேரியன்ஸ் மடியட்டும். சமூகவாதிகள் மடியட்டும். பூர்ஷ்வாக்கள் மடியட்டும். அரிஸ்ட்டோக்ராட்டுகள் மடியட்டும். எல்லாம் எல்லாம் மடியட்டும். " ஜீன்பால் ஸார்த்ரெவினுடையது போல எல்லாவற்றையும் திரும்பவும் பூஜ்யத்திலிருந்து ஆரம்பித்துப் பார்க்க அவர்கள் ஆசைப்படுகிறார்கள்.

புதிய கதாசிரியர்கள் ஒன்றற்கொன்று எதிரான வழிகளில் சஞ்சரிக்கிறார்கள். ஆனால் அவர்களில் பலரும் தமக்குள் சந்தித்துக்கொள்ளும் ஓரிடம்தான் ஆன்ம சோதனை. அவர்கள் சதா தம்மையே கேள்வி கேட்டுக்கொண்டிருக்கின்றனர். "நான் ஒரு வழியைத்தேடி நடந்து கொண்டிருக்கிறேன். வெளியேறுகிற வழி." (" வெளியேறுகிறவழி" - காக்க நாடன்) "தவற்றுக்கும் சரிக்கும் அப்புறம் என்ன?" (நசிகேதன் யமதர்மனிடம் கேட்டது" - பட்டத்து விள கருணாகரன்).

நவீன கதைகளைப் பொறுத்த வரையிலும் தடுக்கப்பட்ட வார்த்தைகளும் பிரயோகங்களும் கிடையா. இவ் வாக்குச் சுதந்திரம் நவீன கதாசிரியர்களின் நன்கொடையாகும். பழைய மரபுகள் சுயான்ம வெளிப்பாட்டிற்குப் போதாவென்று கண்ட அவர்கள் வார்த்தைகள், பிரயோகங்கள் இவற்றிற்கான புதிய சாத்தியக்கூறுகளைத் தேடி வெகு தூரம் சஞ்சரிக்கிறார்கள். வார்த்தைகளையும் பிரயோகங்களையும் தேர்ந் தெடுப்பதில் இன்று அவர்கள் மிகவும் சுதந்திரர்கள். போன தலைமுறையினர் தீண்டாமல் ஒதுக்கியிருந்த வார்த்தைகள் இன்று தாராளமாக உபயோகிக்கப்படுகின்றன. இச் சுதந்திரம் நவீன கதாசிரியனுள் கனலைத் தூண்டுகிறது. சுதந்திரத்தின் மயக்கத்தில் கருத்தின் முக்யத்வம் பல இடங்களில் மறைந்துவிடுகிறது. பல கதைகளும் தனிப்பட்ட தீவிர வெளிப்பாடுகளாக மட்டுமே ஆகிவிடுகின்றன. காக்கநாடன், இந்தியப் பழங்கதைகளிலும், இரகசிய சாஸ்திரங்களிலும் இந்த அநுபூதிகளைக் கண்டமைகிறார், நாராயண பிள்ளை பாம்புகளிலும் தந்திரங்களிலும் இவைகளைக் காண்கிறார். விஜயன் ஸர்ரியலிஸத்தைத் தழுவுகிறார். நேற்றைய கதாசிரியர்கள் சந்தனச் சாறெனக் கொண்டாடிய நிலவொளியை இன்றைய எழுத்தாளர்கள் உடைந்து வடியும் சீழாக கௌரவிக்கிறார்கள். இன்றைய மலையாளக் கதையின் இச் சிதைவு, இந்தக் காலகட்டத்தின் மனித இனத்தினுடைய சிதைவின் விளைவேயென சில விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

பழைய தலைமுறையின் கதாசிரியர்களிடம் மார்க்ஸிஸத்தின் கனத்த பாதிப்பு உண்டாயிருந்ததல்லவா. சோஷலிஸ்ட் ரியலிஸத்தின் வருகையுடன் இப் பாதிப்பு மலையாளக் கதையில் குறைந்து வருகிறதாகத் தோன்றுகிறது. இந்நாளைய கதாசிரியர்கள் பலரும் தாங்கள் மார்க்ஸிஸ்டுகள் இல்லையென்று சொல்வதில்லை அவர்கள் மௌனம் சாதிக்கிறார்கள். இங்கேயும் நவீன கதாசிரியனின் தர்மசங்கடம்தான் பிரச்னை. ஒரு நாளும் உண்டாகாத புரட்சிகளைக் குறித்து துக்கக் கனவுகளை பட்டத்து விள கருணாகரனுடையவும் , எம். சுகுமாரனுடையவும் கதைகளில் காணலாம்.

காக்கநாடன் ஓ. வி. விஜயன், எம். பி. நாராயண பிள்ளை இவர்களுடன் புதுக்கதையைப் பேணியவர்கள் ஸேது, பத்மராஜன், பூனத்தில் குஞ்ஞப்துல்லா, ஸக்கரியா, ஈ. ஹரிகுமார் முதலானவர்கள். நவீன கதை இலக்கிய இரசிகர்களுக்கிடையில் நிரந்தரமான வாதங்கள் நடக்கின்றன. அசமனூர் ஹரிஹரனின் "ஸ்வப்னம்" (கனவு) ஒரு மனத் தத்துவக் கதை. புதுக்கதையின் விமர்சனம் இரு விதமாகவும் உள்ளது. ஒரு பக்கம் யதார்த்தவாதிகளான எழுத்தாளர்களும் வாசகர்களும், மறுபக்கம் கம்யூனிஸ்ட் அறிவு ஜீவிகளும். இவ் விமர்சனத்தை நவீன கதை எதிர்த்து நிற்பதைக் காண்கிறோம். அது மட்டுமல்ல. அது நாள் தோறும் படர்ந்து வளரவும் செய்கிறது. நவீன கதையின் வளர்ச்சி இன்னும் முழுமையாகவில்லை. பதிய கதாசிரியர்களில் பலரும் முப்பத்தைந்து வயதிற்கும் குறைந்தவர்களே. அவர்களிடமிருந்து மலையாள மொழிக் கதைக்கு இன்னும் கனமான தானங்கள் எதிர்பார்க்கப் படுகின்றன. நவீன மலையாளக் கதை, இன்றைய அதன் சிதைவு குணத்தை நீக்கிக்கொள்ளுமெனவும் சோஷலிஸ்ட் ரியலிஸ்ட் அமைப்பைப்போல ஆரோக்யமான ஒரு கதை முறைக்கு வழிவகுக்குமெனவும் சில விமரிசகர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள்.

எம். முகுந்தன்
------------------------


பொருளடக்கம்
அறிமுகம் எம். முகுந்தன்
1. ஒரு அடியீடு மட்டும் என். பி. முஹம்மது
2. நசிகேதன் யமதர்மனிடம் கேட்டது பட்டத்து விள கருணாகரன்
3. பித்தம் கோவிலன்
4. பூஜைக்கு உதவாத பூக்கள் என். மோஹனன்
5. பாம்பு எம். கோவிந்தன் 43
6. டில்லி ஜயதேவன்
7. வெளியே போகும் வழிகாக்க நாடன்
8. பாறைகள் ஓ.வி. விஜயன்
9. புலரி முதல் புலரி வரை எம். முகுந்தன்
10. ஆறாம் ஜார்ஜின் நீதிமன்றம் எம்.பி.நாராயண பிள்ளை
11. கன்னிகையின் எலும்பு துளஸி
12. உலக முடிவுபூனத்தில் குஞ்ஞப்துல்லா
13. உங்களுக்காக ஒரு மரணம் ஸேது
14. இயேசுபுரம் பப்ளிக் லைப்ரரியைப் பற்றி ஒரு குற்றச்சாட்டுஸக்கரியா
15. குற்றப் பத்திரிகைக்கு பதில் எம். சுகுமாரன்
16. இன்னொருவன் பி. பத்மராஜன்
17. கரப்பான் பூச்சிகள் இ. ஹரிகுமார்
18. கனவு அசமன்னூர் ஹரிஹரன்
ஆசிரியர்களைப் பற்றி ....
--------------


1. ஒரு அடியீடு மட்டும்


கனன்று எரிகின்ற வாழ்க்கையையும் பளிங்குக் குவளையில் செருகிய மஞ்சள் இலைகள் போன்ற தீ நாக்குகளையும் பின் தள்ளிவிட்டு யூசுஃப் நகர வாசலைக் கடந்தான்.

ஆகாயத்தில் முத்துமணிகள் உலரப் போடப்பட்டிருக்கின்றன. தூரத்தில் திட்டுத்திட்டாக இருள் மூடிக்கிடக்கின்ற பாலைவனத்திலிருந்து காற்று விஸிலடித்துக்கொண்டிருந்தது. பாலைவனத்தின் முகத்தில் பாலுண்ணிகள்போல நகர வாயிலுக்கப்புறத்தில் சாகக் கிடக்கும் ஒட்டகங்கள் சுருண்டு கிடந்தன.

யூசுஃப் சற்று நின்றான்.தன்னைப் பாவத்தால் வளர்த்த பட்டணத்தை இன்னுமொருமுறை அவன் நோக்கினான். அவன் பெரு மூச்சு விட்டான்.

பாவத்தில் திளைத்துப் புரளும் நகரம்.வானளவு உயர்த்திய ஸ்தூபிகளைப் போல எழுந்து நிற்கும் மசூதிகளின் கோபுரங்களில் வௌவால்களின் ரீங்காரம் கேட்கலாம்.

இனி விடை பெறட்டும்.

திறந்திருக்கும் நகர வாசல். படுக்கையறை செல்லப் பரபரக்கும் நகரம். அவனுடைய பெருவிரல்கள் நடுங்கின. வேண்டாம்.தான் இப் பட்டணத்தின் மயானத்தைச் சென்றடைய வேண்டியவன். இனியுள்ள நாட்களை இங்கேயே கழிக்கலாம்.

யூசுஃப் அந் நகரத்தை பயத்தால் ஆட்சிசெய்தான். யூசுஃபின் பரந்த மீசையும், அடர்ந்த தாடியும், சிவந்து உருண்ட கண்களும், நீண்ட அங்கியும் காண்கையில், அவனுடைய உறையில் தொங்கிய வாள் அவர்களுடைய மனத்தினுள் புகுந்து பாய்கிறது. தாய்மார் அவனைக் காண்கையில் குழந்தைகளை மார்போடணைக்கின்றனர்; ஆண்கள்
பதுங்குகிறார்கள். அந் நகரத்தின் முதுகில் அறைகிற சாட்டையாக விருந்தான் அந்த ஆள்.

யூசுஃப் தலை குனிந்தான்.

தூரத்தில் உயர்ந்தும் தாழ்ந்தும் செல்லும் மணற்காடுகளில் ஓரிடத்திலும் ஒளியின் மின்னல்கள் பரவுவதில்லை. எவ்வளவு தூரம் அவன் நடக்க வேண்டியிருக்கும்? அவனுக்குத் தெரியாது. பார்க்க வேண்டியவனை அவனுக்குத் தெரியாது. அவன் எங்கே இருப்பான்? தெரியாது. ஒன்று மட்டும் யூசுஃப் அறிவான். பெற்று வளர்ந்து
கொழுத்த வாழ்க்கையிலிருந்து அவன் பின்வாங்கிக்கொண்டிருந்தான்.

அவன் பின்வாங்குகையில் கடந்த காலத்தின் நேரக் கற்களில் மனம் சென்று முட்டிக்கொண்டிருந்தது.

மசூதியின் மினாரிலிருந்து காற்றில் மிதந்து வந்த பாங் அழைப்பின் ஓசையை யூசுஃப் அப்போது கேட்கிறான்.

அல்லாஹு அக்பர்.
- தெய்வம் மகானாகிறான்.

பிரார்த்தனைக்கான அவ்வழைப்புடன் மனத்துள் எல்லாம் புகுந்தேறி வருகின்றன. எப்படி இது நிகழ்ந்தது? ஏன் நிகழ்ந்தது?

விளக்குகள் அணையவும் மனிதர்களின் கண்கள் மூடவும் செய்தபோது பாலைவனத்தின் விரக வேதனையை அனுபவிக்கும் சுழற்காற்று வீசி ஒலிக் கையில் அவனுடைய சிவந்து உருண்ட கண்கள் மின்னவும், உறையில் ஒதுங்கிக் கிடந்த வாள் கையில் எழவும் செய்தது. அடைத்த வாசல் அவனுக்காக மலர்ந்தது.

படுத்துறங்கும் வீட்டுத் தலைவன்; அவனைத் தழுவிக் கிடக்கும் தலைவி. ஜமுக்காளத்தில் கட்டிப் பிடித்துக் கிடக்கும் குழந்தைகள். யூசுஃப் பெட்டியைக் குத்தி உடைத்தான். இரும்புப் பெட்டியின் எதிர்ப்பைக் கேட்டுக் கணவன் எழுந்தான்.

"அட கடவுளே..."

"பேசாதே, நாக்கை அறுத்துப்போட்டு விடுவேன்"

பெட்டியில் ஒளித்து வைத்திருந்த பணம் கலகலத்துச் சிரித்தது. மூடி மறைத்த பொன் நாணயங்களின் தடுப்புப் பலகையை நீக்க யூசுஃப் ஆர்வம்கொண்டிருந்தபோது தேம்பித் தேம்பி அழுத கணவன் அவனுடைய கையில் தொங்கினான்.

யூசுஃப்பின் வாள் பளபளத்தது. பளபளத்த வாளின் நுனி சிவக்கையில்...

"அல்லாஹ்!"

கேவிய மனைவி. அலறியழுத அப் பிஞ்சு சிசுக்கள். யூசுஃபிற்கு அவர்களது முகங்களைப் பார்க்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை.

வாளை வீசி அவன் வெளியே பாய்ந்தான். எத்தனை யெத்தனை இரவுகள்; எத்தனை யெத்தனை குடும்பங்கள்! கழுத்துகள் இரத்தம் பீறிட்டுத் தெறித்து உடலிலிருந்து துள்ளி விழுந்தன. பயந்து நிற்கும் பெண்களின் ஆடைகளை அவன் கிழித்தெறிந்தான். அது ஓர் ஆவேசமாக இருந்தது. செய்ய நினைத்ததை யூசுஃப் செய்தான். அவன் செய்த
போது ஜனங்கள் அவனிடம் பயந்தார்கள்.

யூசுஃப்.

அவன் நகரத் தெருக்களில் நடந்தபோது மற்றவர்கள் விலகிப் போனார்கள். அக் கொள்ளைக்காரன் முன் அரண்மனைகள் நடுங்கின. யூசுஃப் இருட்போர்வை போர்த்தி மணற்காட்டை நோக்கினான். இருள் நீங்குமோ? கதிரவன் கனன்று ஜொலிப்பானோ? யூசுஃபின் மனத்தில் கடந்துபோன நாட்கள் விழித்திருந்தன.

அந்த யாத்ரீகனும் ஒட்டகமும் நகர்ந்து நகர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

ஒட்டகத்தின் கால்கள் பாலைவனத்தில் பதிந்தன. யாத்ரீகன் கூனிக் குறுகி அமர்ந்திருந்தான். சுற்றிலும் தீப்பொறி பறந்து கொண்டிருந்தது. அலைகள்போல மணற்பொடிகள் வழுக்கி வழுக்கி விழ, பாலைவனப் பரப்பில் புதிய பாதைகள், ஓடைகள் உண்டாகிக் கொண்டிருந்தன.

"நில்லுடா!"

யாத்ரீகனின் கையிலிருந்த மூக்கணாங்கயிறு தளர்ந்தது. ஒட்டகம் நின்றது. சீற்றமிகு சூரியன் தகித்தது. உதடு வரண்ட அம் மனிதனின் முகம் தெரியவில்லை. நெற்றியும், மூக்கும், காதுகளும் துணியில் மறைந்திருந்தன. கண்கள்மட்டும் தெரி்ந்தன. கேள்விக்குறி செதுக்கிய கண்கள்.

யூசுஃப் கட்டளையிட்டான்.

"இறங்கு!"

யாத்ரீகன் பணிந்தான். யூசுஃப் வாளை உயர்த்தினான். ஒளி தட்டிப் பளீரிட்ட வாளில் இரத்தக்கறைகள் காணப்படவில்லை.

"எங்கே உன் பண மூட்டை? கொடு"

உலர்ந்த உதடுகளில் புன்னகை விரிந்தது.

"அதற்கா இத்தனை ஆர்ப்பாட்டம்?"

அவன் பண மூட்டையை எடுத்தான். இரண்டு கையாலும் யூசுஃபினிடம் அதைக் கொடுத்தான்.

"அல்லாவின் கருணையால் இது உங்கள் குடும்பத்திற்கு நல்லவிதத்தில் செலவாகட்டும்"

யூசுஃப் அவ் வார்த்தைகளை நன்றாகக் கேட்டான். ஒருபோதும் ஒரு வரும் அவனிடம் அப்படிச் சொன்னதில்லை. பல தடவைகள் அவர்கள் பணப் பையைக் கொடுக்கத் தயங்குவதும் யூசுஃப் அதைத் தட்டிப் பறிப்பதுமே நிகழ்ந்துள்ளன. சிலர் வாய்விட்டு அழுதிருக்கிறார்கள். சிலர் பயந்து விறைத்திருக்கிறார்கள்.

"உன் மூட்டையில் என்ன இருக்கிறது?"

"ஓஹோ, பணப் பையோடு சேர்த்து எனது மூட்டையையும் ஒட்டகத்தையும் உங்களுக்குத் தர நான் மறந்துபோனேன். மன்னித்து விடுங்கள்!"

பிரயாணி ஒட்டகத்தின்மேலிருந்து இறங்கினான். யூசுஃப் தாவியேறினான். திருட்டு ஆதாயத்தைப் பார்த்தவாறிருந்தான். விலையேறிய பட்டாடைகள்; ஜாடி நிறைய பொற்காசுகள்; உலர்ந்த பழங்கள்; கொழுத்துத் தடித்த ஒட்டகம். எல்லாம் அவனுடைய உடமைகளாகி விட்டிருந்தன. யூசுஃப் ஒட்டகத்தின்மேலிருந்து இறங்கினான். எங்கே
யாத்ரீகன்? காணவில்லை. பளீரிடும் சூரியன். நிழல் விழாத மணற் காடுகள். அவன் வலது கையை நெற்றியின்மேல் நீளவாட்டில் வைத்துக்கொண்டான். தூரத்தில், பரந்த பாலைவனத்தில், ஒரு வெள்ளைப் பிராணிபோல அம் மனிதன் நடந்து போய்க்கொண்டிருந்தான். யூசுஃபின் மனம் களவு சாமான்களிலிருந்து அம் மனிதனிடம் தாவியது. இதற்கு முன்பு ஒரு தடவைகூட யூசுஃபிற்குத் தன் இரையைக் குறித்து நினைத்துப் பார்க்கவேண்டி வந்ததில்லை.

தாவியேறினான் ஒட்டகத்தின்மேல் அவன். தடியை ஆட்டினான். ஒட்டகம் நகர்ந்தது.

"நில்!"

யூசுஃப் அலறினான். யாத்ரீகன் நின்றான். யூசுஃப் அவனை கவனமாகப் பார்த்தான்.

கறைபிடித்த செப்புத்தகடு போன்ற அம் முகத்தில் இளநீல நிறத்தில் சிறு கண்கள். கருத்த வட்டத்தாடியைத் தடவியவாறு அவன் யூசுஃபை நோக்கிச் சிரித்தான்.

"என்ன சகோதரா, என்ன வேண்டும்?"

யூசுஃபின் முன்னால் பயமறியாது துளிர்த்த அற்புதம் மனித உருவத்தில் நிற்கிறது.

"என் மேலாடை வேண்டுமோ?"

"வேண்டாம்"

"எனது செருப்புகள் வேண்டுமோ?"

"வேண்டாம்"

"என்னை அடிமையாக்கி விற்க வேண்டுமோ?"

"வேண்டாம்."

"உங்களுக்கு என்னதான் வேண்டும்?"

"நீ யார்?"

"நான், நான் ... உங்களைப் போல ஒருவன்!"

"கொள்ளைக்காரனா?"

யாத்ரீகன் சிரித்தான்.

"ஒருவிதத்தில் . ஆட்களை பயமுறுத்தி உங்களைப்போல நான்
சொத்து சம்பாதிக்கவில்லை. அவர்களுக்கு ஆசைமூட்டி, பொருட்களை நல்ல லாபத்தில் விற்று சொத்துச் சேர்த்திருக்கிறேன்."

"உன் பெயர்?"

"அது தெரிந்து என்ன பயன்? நானொரு யாத்ரீகன். மரணத்தை நோக்கி நடக்கும் மனிதன்"

யாத்ரீகன் மீண்டும் சிரித்தான்.

"உன் ஊர்?"

"குராஸ்தான்"

யூசுஃபின் நா தளர்ந்தது. மனிதர்களிடம் மென்மையாகப் பேச அவன் கற்றதில்லை. முன்னால் நிற்கும் அம் மனிதனிடம் கூற அவனுக்கு எதுவும் இருக்கவில்லை.

யாத்ரீகன் மெதுவாக, சுட்டுப் பழுத்த நிலத்தில் நடந்தபோது காலடிச்சுவட்டின் மணல்தூள்கள் நாற்புறமும் சிதறின.

யூசுஃப் அவனைப் பார்த்தான். சற்று நேரம் பாலைவனத்தில் நின்றான். ஒட்டகத்தின் மேலே ஏறினான். மெல்ல மெல்லப் பட்டணத்தை நோக்கி நகர்ந்தான்.

யூசுஃப் ஏராளமான பொருள்களைக் கவர்ந்திருக்கிறான். அப் பொன் நாணயங்கள் மதுவின்மேலே நுரைத்துப் பொங்கும் குமிழிகளோடு சேர்ந்து காணாமற்போயின. பொன் நாணயங்கள், சூதாட்டத்தில் பகடைகள் திரும்பியபோது கைமாறிப்போயின. மீண்டும் யூசுஃப் திருடினான். கொடுங்கொலை செய்தான். நாணயங்கள் நீர்போல ஓடிப் போகவும், பிணங்கள் பாலைவனத்தில் காய்ந்து பொடியாகவும் செய்தன.

நாட்கள் வாடி விழுந்தன. மனத்தின் எட்டாத மூலைகளில் அந்த யாத்ரீகன் வாழ்ந்தான். யூசுஃபின் இதயத்தினுள் ஏறியமர்ந்து அந்த யாத்ரீகன் யூசுஃபை நிம்மதியாக இருக்க விடவில்லை. பயந்து விழுந்த மனிதர்களைவிட அவனிடம் என்ன முக்யத்துவம்? யூசுஃபின் மனத்தில் பயத்தின் சிறு திரிகள் எரியத் தொடங்கின. அம் மங்கிய ஒளியில் அவன் தன் வாழ்க்கையின் இருண்ட பாகங்களைக் கண்டான். யூசுஃப் திடுக்கிட்டான். பருவமெய்திய பெண்மக்களைக் கல்யாணம் செய்து கொடுப்பதற்காகச் சேர்த்துச் சேர்த்து வைத்த குடும்பத்தலைவனை, பின்னிரவுகளில் அவன் கொள்ளை-யடித்தபோது... தலையற்று விழுந்த குடும்பத் தலைவன் முன்னால் இளஞ்சிறுவர்கள் அலறியழுதபோது... அவற்றிற்கு ஓர் புது அர்த்தம் உண்டாயிற்று. யூசுஃப் பயந்துபோனான்.

யூசுஃப் பேய்க் கனவுகள் கண்டான். தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்தால் அவன் வியர்த்து வெளுத்துப்போவான். கைகால்கள் தளர ஆரம்பித்தன. ஆட்களைக் காண்கையில் அவனைப் பச்சாத்தாபம் பீடித்தது.

யூசுஃப் தலைகுனிந்து நடந்து போவான். பரிச்சயமான நகரம் அவனைப் பார்த்துத் தலைகுனிந்தபோது யூசுஃப் பெருமைகொண்டிருந்தான். புதிய யூசுஃபை அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

அவர்கள் அறிந்திருந்தது கொள்ளைக்காரன் யூசுஃபைத்தான். மசூதிக்குள் ஏறிச்சென்றதை அவன் நினைவு கூர்ந்தான். மினாரின் உச்சியில் வெள்ளைத் தாடி காற்றில் பறந்தது. வராண்டாவில் பிரித்து வைத்த குரானை ராகம்போட்டு ஓதிக்கொண்டிருந்த முக்ரி அப்துல் ரஹ்மான் யூசுஃபைப் பார்க்கவுல்லை. அவர் கண்ணைப் பாதி மூடிக் கொண்டிருந்தார். யூசுஃப் தொண்டையைக் கனைத்தான்.

முக்ரி யூசுஃபைப் பார்த்தபோது பயந்துபோனார். இக் கொடியவன் மசூதியிலும் புகுந்துவிட்டானா?

அரண்டுபோயிருந்த முக்ரியிடம் அவன் எல்லாவற்றையும் சொன்னான். அவனால் உட்கார முடியவில்லை. வேலை செய்ய முடியவில்லை. இப் பட்டணம் அவனை நெருக்கித் தொலைக்கிறது. அவன் குராஸ்தான் வியாபாரியின் கதையைச் சொன்னான்.

யூசுஃபின் நிற மாற்றம் கண்டு முக்ரி அதிசயப்பட்டுக்கொண்டிருந்தார். அவர் கடவுளைப் பிரார்த்தித்தார்.

"முக்ரி, என்னை நன்மைக்குள் திரும்பியழைத்துச் செல்ல வேண்டும்."

பளபளத்தன யூசுஃபின் கண்கள். மசூதி வாசலில் மாடப்புறாக் கூட்டம் பறந்து போயிற்று. விரிந்து நிற்கும் ஈச்சை மரங்களின் நிழல்கள் மசூதி முற்றத்தில் பதிந்தன.

"யூசுஃப், உங்களுக்கு அந்த சக்தி இருக்கிறதா?"

"எனக்குக் கொலை செய்யும் சக்தி இருந்தது."

"இப்போதோ?"

யூசுஃபிற்கு பதில் சொல்ல முடியவில்லை. முக்ரி பதிலை எதிர்பார்க்கவுமில்லை. அவர் கேட்டார்:

"உங்கள் குரு யாரென்று தெரியுமா?"

"எனக்கு குரு கிடையாது."

"உண்டு."

"இல்லை, முக்ரி ஸாஹேப்."

"உண்டு. உங்களுடைய குரு குராஸ்தான் வியாபாரி? அவரைக்

கண்டு பிடியுங்கள். அப்படியானால் நீங்கள் நன்மையை அடைவீர்கள்." கடந்துபோன நிகழ்ச்சிச் சுருள்களை, நகர வாசலின் முன்பு நின்று நிமிர்த்திக்கொண்டிருந்தபோது, இருள் மூடிக்கிடக்கும் நிலத்தையே அவன் கண்முன் கண்டான். யூசுஃபிற்கு அப்போது ஒட்டகமில்லை. குராஸ்தானின் வியாபாரி உயிரோடிருக்கிறாரோ, இறந்துவிட்டாரோ
என்று தெரியாது. அவ் வியாபாரி இப்போது குராஸ்தானில்தான் இருப்பாரோ? வேறெங்காவது வியாபாரநிமித்தம் போயிருப்பாரோ?

குறிக்கோளற்றதே அப் பிரயாண‌ம் என்பதை யூசுஃப் அறிவான் மீண்டும் அவன் நகரத்தைப் பார்த்து நெடுமூச்செறிந்தான். பாவத்தில் மூழ்கிக் குளிக்கும் நகரம். பாவத்தாலேயே தன்னை வளர்த்த நகரம். தான் இங்கே மனிதனில்லை.

"கொள்ளைக்காரன் யூசுஃப்."

உணர்ச்சி வேகங்கள் அவன் மனத்தை கொக்கியிட்டு இழுத்தன. யூசுஃப் இருளில் காலெடுத்து வைத்தான்.

யூசுஃப் நடந்தான். பாதையோரங்களில் படுத்தான். கிடைத்த பண்டத்தைத் தின்றான். வயிறு காய்ந்த பகல்கள்; களைத்துறங்கிய இரவுகள். பாலைவனத்தில் சூர்யன் உதிப்பதும் அஸ்தமிப்பதுமாக இருந்தது. சிவந்து பளபளக்கும் சூர்யன். பரந்து மயங்கிக் கிடக்கும் பாலைவனத்தில் ஒளியும் வெப்பமும் கொடுத்தது. மணற்குன்றுகள்
காற்றில் குழம்பித் திரும்பின. மணற்குழிகளிலிருந்து காலைத் தூக்கி யெடுக்க யூசுஃப் பெரும்பாடு பட்டான்.

காலைச்சுற்றிலும் மணல் வட்டம் சூழ்கிறது. அவனுடைய வலதுகால் மணற்குழியில் அகப்பட்டது. யூசுஃபின் முகம் வெளிறியது. உடம்பு வியர்த்தது. உடை கிழிந்து பறந்தது. குழியிலாழ்ந்தன சிவந்து இருண்ட கண்கள்.

மணற்காற்றின் விஸில் முழங்கிக் கேட்டது.

இல்லை. மணற்குழியிலிருந்து அவனுக்குக் காலைத் தூக்க முடியவில்லை.

யூசுஃப் பூமிக்குள் புதைந்துபோகிறானோ? அவன் முழுச் சக்தியையும் உபயோகித்தான். காலை உதறினான். மணல் துகள்கள் காலைச் சுற்றிலும் அட்டைகள் போல பாய்ந்து கடிக்கின்றன.

யூசுஃபின் கண்கள் நனைந்தன. படலம் விழுந்தது. கண்களுக்குப்பின். மங்கிய வெளிச்சத்தில் வெள்ளை ஜந்துபோல குராஸ்தானின் வியாபாரி நடந்துபோய்க் கொண்டிருக்கிறானோ?

"நண்பா!" யூசுஃப் கடைசியாக யாசித்தான்.

"நண்பா!" மணற்காற்றிலிருந்து உண்டான விஸிலடிப்பில் அச் சப்தம் எதிரொலியில் அமிழ்ந்தது.

அலைகள்போல மணல் கர்ஜித்துப் பொங்கிச்சிதறிப் பறக்கிறது.

யூசுஃபின் நெஞ்சம் துடித்தது. அவன் கத்தினான். "ஐயோ!" அத்துடன் அவன் முன்பக்கம் பாய்ந்தான். மணற்குழியிலிருந்து கதறித்தாவின விரல்கள். அம் முயற்சியில் அவன் நிலை தடுமாறி விழுந்தான்.

விழுந்த இடத்திலிருந்து அவன் கையூன்றி நகரப்பபார்த்தான். கைகள் தளர்ந்து போயின. அவன் ஓரடி ஊர்ந்தான். ஒரு அடியீடு மட்டும். ஒரு அடி ஊர்ந்ததின் நேர்க்கோடு ஒரு நிமிடம் மணலில் தெரிந்தது. காற்றடித்தது; அக் கோடு அழிந்தது. கண்ணுக்கெட்டா தூரம் பரந்து கிடக்கும் மணற்காடு மட்டும்.

யூசுஃபிற்குக் கையை ஊன்ற இயலவில்லை. உலர்ந்த மாமிசம் போல அவனுடைய உடல் பழுக்கக் காய்ந்த மணலில் பதிந்து கிடந்தது. சூர்யனின் குரூரமான ரேகைகள் அவனுடைய காதுகளில் துளைத்து நுழைந்தபோது யூசுஃப் இருமினான். அவன் செருமினான். தன் இதயத்தை யாரோ பறித்தெடுக்கிறார்கள். அவன் வாய் பிளந்தான்.

கதிரவன் கனன்று ஒளி வீசினான். மணற்காற்று சப்தமிட்டது. யாரும் பார்க்கவில்லை. யாருக்கும் தெரியாது. ஆயிரம் பேரைக் கொன்ற யூசுஃப் பாலைவனத்தில் ஒரு துளி நீருக்காகத் தலையை அசைத்தான். தலை சுற்றிற்று. அசைய முடியவில்லை. ஏடுபடிந்த
கண்கள் உற்று நோக்கின. அவை மூடவில்லை.

வளைந்த ஆகாயம் தூரத்தில் மண்டியிட்டுக் கிடக்கிறது. அடி வானத்திலிருந்து மேகப் பாளங்கள் உதிர்ந்து விழுவதுபோலக் காட்சியளித்தன. பிளந்த ஆகாயத்திலிருந்து வெண் பறவைகளைப் போல மேகத் துண்டுகள் பறந்து வருகின்றன. அவ் வெண்பூக்கள் பாலை வனத்தில் இறங்கின. யூசுஃப் கண்ணை மூடவில்லை. விரிந்த சிறகுகளுடன் தேவதூதர்கள் யூசுஃபின் வலப்பக்கம் வந்து நின்றனர்.

யூசுஃபிற்கு அதையெல்லாம் பார்க்க முடிந்தது.

மீண்டும் ஆகாயத்திலிருந்து மேகக் கீற்றுகள் கீழே பறந்து வருகின்றன. சிறகுகளுடைய தேவதூதர்கள். அவர்கள் தரையில் இறங்கினார்கள். யூசுஃபின் இடப்பக்கம் அவர்கள் நின்றனர். நடுவில் கீழே சரிந்து கிடக்கும் யூசுஃப். இடப்புறமும் வலப்புறமும்
தேவதூதர்கள்.

வலப்பக்கமிருந்த தேவதூதர்கள் அவனைத் தூக்கி யெடுக்கக் கைகளை நீட்டியபோது இடப்பக்கத் தேவதூதர்கள் தடுத்தார்கள்.

"இது எங்கள் ஆத்மா"

வலப்பக்கத் தேவதூதர்களின் தலைவன் கேட்டான்:
"நீங்கள் யார்?"

"நாங்கள் சொர்க்கத்தைக் காக்கும் தேவதூதர்கள்."

"நண்பர்களே, உங்களுக்கு ஆள் மாறிப் போயிற்று. இவனை நரகத்திற்கு கொண்டு போகவே நாங்கள் வந்தோம்." இடப்பக்கத் தேவ தூதர்களின் தலைவன் சொன்னான்.

தேவதூதர்கள் அவனுடைய ஆத்மாவிற்காகத் தர்க்கமிட்டுக் கொண்டார்கள். யூசுஃபிற்கு அதைக் கேட்க முடிந்தது. பார்க்க முடிந்தது. ஆனால் அவனுடைய கைகள் உயரவில்லை. உதடுகள் அசையவில்லை. வெப்பமில்லை. தண்மையில்லை. கண் முன்னால் கண்ணாடியில் பார்ப்பது போல எல்லாம் தெரிகிறது.

"ஆயிரம்பேரைக் கொன்ற துஷ்டன் இவன். நரக பாவி!"

"அதெல்லாம் சரி, ஆனால் அவன் பச்சாத்தாபமுற்றிருக்கிறான்."

"குற்றம் செய்துவிட்டு வருந்தி என்ன பயன்?"

"நல்லபடியாக வாழவே இவன் நகரத்திலிருந்து கிளம்பினான்."

"ஒருவனுடைய செயலே முக்கியம். இவன் தீமையின் அவதாரம்."

"யூசுஃப் தீமையிலிருந்து விடுதலையடைந்தான்."

"இல்லை."

"இவன் நன்மையை நோக்கிப் பயணம் போய்க்கொண்டிருந்தான்"

"எண்ணத் தூய்மையல்ல முக்கியம்."

"எண்ணத் தூய்மைதான் முக்கியம்."

"இவன் நரக பாவி!"
"இவன் சொர்க்கத்தைச் சேரவேண்டியவன்!"

"நாம் இரு கூட்டத்தினரும் கடவுள் சேவை செய்பவர்கள். இந்நரக பாவிக்காக நமக்குள் சச்சரவிடவேண்டுமா?"

"சண்டை போடக்கூடாது. ஆனால், சொர்க்கத்தைச் சேர வேண்டியவனை நரகத்திற்கு விட்டுக்கொடுத்தால் எங்கள் கடமையில் தவறியவர்களாவோம்."

"ம்ஹூம்."

"தொலைவிலுள்ள நகரத்திலிருந்தாக்கும் இந்த ஆள் வருகிறான். பார், இவனுடைய இடுபபில் வாள் இல்லை. கையில் பணப் பையில்லை. இவன் திருந்துவதற்காகப் புறப்பட்டவன்."

நரகத்தின் தேவதூதர்கள் யூசுஃபைப் பரிசோதித்தார்கள். சொர்க்கத்தின் தேவதூதர்கள் கூறியவையெல்லாம் சரிதான்.

"ஆனால் இவனுடைய பூர்வ சரித்திரம்!"

"பூர்வ சரித்திரம் இருளடைந்திருந்த எத்தனையோ பேர்கள் பிற்காலத்தில் மகாத்மாக்களாக ஆகியிருக்கிறார்கள்."

"அது சரி, அவர்களுடைய செயல்தான் அவர்கள் மகத்வத்தின் சாட்சி."

"அதுபோலவே யூசுஃபின் இந்தச் செயலும்."

"யூசுஃப் செய்த ஒரு நன்மையைச் சொல்லுங்கள்."

"இப் பிரயாணம். நன்மையை நோக்கிச் சென்ற இப் பிரயாணம்!"

"இவன் எங்கே போகிறான்?"

"குராஸ்தானுக்கு. அங்குள்ள வியாபாரியே இவனுக்கு நன்மையின் வாசலைக் காட்டிக்கொடுத்தான்."

"அதற்கு சாட்சி எங்கே?"

"சாட்சி இல்லை."

பிடிவாதக்காரர்களாகிய நரகத்தின் தேவதூதர்கள் விடுகிற மாதிரியாகக் காணவில்லை. சொர்க்கத்துத் தேவதூதர்கள் மண்டையைக் குடைந்துகொண்டு யோசித்தார்கள்.

சூர்ய வெப்பத்தால் மணல் துகள்கள் சூடடைந்திருந்தன. யூசுஃபின் திறந்த கண்களைத் தேவதூதர்கள் பார்த்தார்கள். கண்ணீர் நிறைந்த கண்கள். சாந்தம் நிறைந்த முகம்!

"உங்கள் கையில் அளவு நாடா இருக்கிறதா?"

"இருக்கிறது."

"நாம் ஒன்று செய்வோம். நாம் இவ்வாத்மாவிற்காக ரொம்ப நேரமாகச் சச்சரவிட்டுக்கொண்டிருக்கிறோம். நகரத்திலிருந்து யூசுஃப் இறந்து கிடக்கும் இடத்துக்குள்ள தூரத்தை அளக்கலாம். இங்கே யிருந்து குராஸ்தானுக்குள்ள தூரத்தையும் அளப்போம்."

"எதற்காக?"

"நகரத்திலிருந்து இவ்விடத்திற்குள்ள தூரம் குறைவானால் நீங்கள் கொண்டுபோய்க் கொள்ளுங்கள். இங்கிருந்து குராஸ்தானுக்குள்ள தூரம் குறைவானால் நாங்கள் கொண்டு போகிறோம்."

நரகத்திலிருந்து வந்த தேவதூதர்கள் கலந்தாலோசித்தார்கள். அவர்கள் மெதுவாகப் பேசிக்கொண்டார்கள். பிரச்னையைத் தீர்க்க வேறு வழிகளை அவர்கள் காணவில்லை. ஆனால், அந்த நிபந்தனையிலிருந்து அதிக லாபமடைய அவர்கள் தயாரானார்கள்.

"ஒரு சந்தேகம்! எந்தப் பக்கமிருந்து என்பதைத் தீர்மானிக்க வேண்டும்."

"யூசுஃபின் தலை கிடக்கும் பக்கத்திலிருந்து."

"அது சரியில்லை. நாங்கள் சம்மதிக்க முடியாது."

"பிறகு?"

"யூசுஃபின் காலடி மணலில் தொட்ட பக்கத்திலிருந்து." சொர்க்கத்திலிருந்து வந்த தேவதூதர்கள் யோசித்தனர். வேறு வழியில்லை. அவர்கள் நரக தேவதூதர்களின் யோசனையை ஏற்றுக் கொண்டார்கள்.

சொர்க்கத்திலிருந்தும் நரகத்திலிருந்தும் வந்த தேவதூதர்கள் ஒன்று சேர்ந்தார்கள். அவர்கள் இரு கட்சிகளாகப் பிரிந்தார்கள். ஒரு பகுதி நகரத்திற்குப் போயிற்று. மற்றப் பகுதி குராஸ்தானுக்குப் போயிற்று. அவர்கள் அளவு ரிப்பனால் இரண்டு பக்கங்களிலிருந்தும் அளந்தார்கள். இரண்டு பக்கங்களிலிருந்தும் அவர்கள் ஒரே சமயத்தில் வந்தனர், இரு கூட்டத்தினரும் யூசுஃப் இறந்து விழுந்திருந்த இடத்தை அடைந்தனர். ஒரே நேரம்.

இரு நாடாக்களையும் அவர்கள் நுனியைச் சேர்த்துப் பிடித்தனர். நுனியைச் சேர்த்து வைத்த நாடாக்களைச் சுருட்டி வைத்தனர் தேவதூதர்கள். நாடாக்களின் மறு நுனிகள் தெரிந்தன. இரு கூட்டத்தாரும் ஆவலுடன் நோக்கினர். இரு நாடாக்களும் ஒரே அளவா? யூசுஃபின் ஒரு பாதி சொர்க்கத்திற்கும் மறு பாதி நரகத்திற்கும் சேர வேண்டுமோ?

கண்ணைத் திறந்து கிடக்கிறான் யூசுஃப்.

அளவு நாடாவைச் சுருட்டி வைக்கிறார்கள் தேவதூதர்கள்.

நரகத்துத் தேவதூதர்களின் முகம் கறுத்தது.

"எவ்வளவு வித்தியாசம்?"

சொர்க்கத்துத் தேவதூதர்களின் தலைவனுடைய கேள்வி. சொர்க்கத்திலிருந்து வந்த தேவதூதருள் ஒருவன் கீழே பார்த்தான். அவனுடைய அழகான உதடுகளில் மனோகரமான சிரிப்புப் பரவியது. அவன் நாடாவையெடுத்து யூசுஃபின் மரத்துப்போன காலின் நீளத்தை அளக்கையில் நரகத்துத் தேவதூதர்கள் ஆகாயத்தை நோக்கி ஏறிக் கொண்டிருந்தார்கள்.

சொர்க்கத் தூதன் அளந்தான்; அவனுடைய குரல் முழங்கியது:

"ஒரே ஒரு அடியீடு மட்டும்!"
-----------------------

2. நசிகேதன் யமதர்மனிடம் கேட்டது.


எத்தனையோ முறை உனக்குத் தெரிவிக்க நான் முயன்றேன்! ஆனால் நீ அனுமதிக்கவில்லை. என்னுடைய எல்லா ஆரம்பங்களும் தப்பாக இருந்தன. மனப்பூர்வமென்று காட்டிக்கொள்ளாமல் மிகவும் சுலபமாக உன்னால் விஷயத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முடிந்தது. நீ விளையாட்டுப் பிள்ளையைப்போல நடந்துகொண்டாய்.

நான் துளசி மாலை அணிந்தபோதும் நீ சந்தேகிக்கவில்லை. வேண்டிய உதவிகள் செய்து தந்தாய். நீதான் துளசி மணிகளைத் தேர்ந்தெடுத்தாய். கோவிலில் கொடுத்துப் பூஜையில் வைக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தினாய். இரகசியமாக நீ மற்றவர்களிடம் சொன்னாய்!

அவருக்குக் கொஞ்சம் பக்தி வந்திருக்கிறது.!

பக்தி! எத்தனை சுலபமாக நீ முடிவு செய்துவிட்டாய்; எனக்கு இப் போதாவது பக்தியின் வாடை அடித்ததில் நீ பெருமை யடைந்ததாகப் பட்டது. அது நாலுபேருக்குத் தெரியவேண்டும். அதற்குமேல் உனக்கு எதுவுமில்லை அதில். எனது அடிமனத்தில் கூடம் அமைத்திருந்தது என்னவென்று எனக்கே தெரிந்திருக்கவில்லை. அடுத்த ஆசிரமத்தைத் தேடுகின்ற பயணத்தில் ஒரு பார்வையாளராகவாவது உன்னைக் காண நான் ஆசையுற்றேன். நான் தாடி விட்டதையும் முடி வளர்த்தியதையும், எப்போதாவது கஞ்சா அடிப்பதும் மயக்க மருந்து சாப்பிடுவதும் போல இளைய தலைமுறையைப் பின்பற்றும் பைத்தியக்காரச் செயல்களாக நீ கருதினாய். துளசி மாலை அதனுடைய ஒரு பகுதியே என்று நீ நம்பினாய். இளமைக்கும் பிரம்மச்சரியத்திற்கும் திரும்பிப் போக நான் வேட்கையுடனிருந்திருப்பேன். ஆனாலும் எத்தனை குரூரமாயிருந்தது உன்னுடைய தப்பெண்ணம்!

இப்போதும் உன்னுடன் கோவிலுக்குப் போனால் நான் ஆளில்லாத மூலையில் பார்வையாளனைப்போல நிற்பதைத்தானே நீ பார்த்திருக்கிறாய்? நீ மறைந்திருந்து பார்ப்பதுண்டு. இவர் என்ன எடுக்கிறார்? கைகூப்பி வணங்குகிறாரோ? கடவுளை வணங்குவதும் பிரசாதம் வாங்குவதும் எப்போதும் நீயேதான் அல்லவா? ஆனால், இப்போது உன்னோடு கோவிலுக்கு வர நான் சோம்பல் அடைவதில்லை. என் நெற்றியில் சந்தனமிட இன்று உனக்குத் தைரியமுண்டு. நான் தடுக்கமாட்டேன் என்று உனக்குத் தெரியும். இம் மாற்றம் எப்படி வந்ததென்று நீ விசாரிக்கவில்லை. என்று முதல் ஆரம்பித்ததென்றும் உனக்குத் தெரியாது. அதை நீ அறிந்திருந்தால் நமக்கு ஒருவரையொருவர் புரிந்திருக்கும். பார்க்கலாம் கொஞ்சநாள் போகட்டும்.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு, நமக்குத் திருமணம் ஆன மூன்றாம் நாள் உன்னோடு ஆலயத்திற்கு வர நான் தயங்கியபோது உன்னுடைய தமக்கை கூறியது இன்று என் நினைவிற்கு வருகிறது. நாம் நமக்குள் மிகவும் நெருங்கியதும், சேர்ந்தே இறக்கச் சபதம் செய்ததும் அப் போதுதானே? ஆனாலும் உன்னுடைய கடவுளைக் கும்பிட நான் உடன் வரவில்லை. நீ அதற்காக வேதனையுற்றுக் கண்ணீர்விட்டாய். நான் பணியவில்லை. காலம் கழியட்டும் - வழிக்கு வருவேனென்று நீ எதிர் பார்த்தாய். உன் புத்திசாலியான தமக்கை அதை ஆமோதித்தாள்.

காலம் நீண்டது. உனக்குக் குழந்தை பிறந்தது. வளர்ந்தது. நீ அவளுக்கு சந்தியா கீர்த்தனைகள் பாராயணஞ் செய்யக் கற்றுக் கொடுத்தாய். அவள் அவற்றை உரக்க ராகம் போட்டுச் சொன்னாள். நான் தடுக்கவில்லை. ஆனாலும் நமக்குள் பிணக்குண்டாயிற்றல்லவா? நீ மறுக்க வேண்டாம்.

முதலிலெல்லாம் நான் கடவுளைப் பரிகாசம் செய்யும்போது நீ முகத்தைத் தூக்கிக் கொள்வாய். வெளிப்படையான வேதனையுடன் நீ சொல்வாய்:

கடவுளைக் கும்பிடவேண்டாம். ஆனால் நிந்திக்காமலிருங்கள்!

என்னையறியாமலேயே அது என்னைத் தூண்டிவிடும். நான் உணர்ச்சி பொங்க இளம்பருவத்து அனுபவங்களைச் சொல்லிக்கொண்டிருப்பேன்.

தேவியை ஜானி வசை பொழிந்தான். பிறகென்ன ஆயிற்று?

யார் அந்த வீர புருஷன் ஜானி? நீ நிந்தை கலந்த என் முறையிலேயே திருப்பிக் கேட்டாய்.

இளம்பருவத் தோழன். சட்டைக்காரப் பையன்.

நான்கதை சொன்னேன்:

அம்மாவுடன் எல்லாச் சனிக்கிழமைகளிலும் அம்மன் கோவிலுக்குக் கும்பிடப்-போவதுண்டு. துர்க்கை கோபக்காரி. போய் வணங்கவில்லையானால் தொற்றுநோய் வருத்திவிடுவாள். ஆனால், ஒரு நாள் ஜானி கோவில் பிரகாரத்தில் நிக்கரை அவிழ்த்தான்.

எனக்குக் கேட்க வேண்டியதில்லை.

ஆனாலும் நான் தொடர்ந்தேன்.

நானும் ஜானியும் கோவில் மைதானத்தில் போட்டி போட்டுக் கொண்டு புறாக்களைப் பறக்கவிட்டுக்கொண்டிருந்தோம். என்னுடைய புறா எழும்பி வெண்மேகத்திற்கு மேலே மறைந்தபோது ஜானியின் ஆண் புள்ளிப்புறா கரணமடித்து அம்மன் கோவிலின் மொட்டை மாடியில் இறங்கியது. அவனுக்குக் கோபம் தாங்க முடியவிலலை. அவனுடைய கையில் கவண் இருந்தது. அவன் கல்லைத் தொடுத்து அடித்தது துர்க்கையின் கருங்கல் சிலையை நோக்கி.

ஜானி அன்று சொன்ன கெட்ட வார்த்தைகளை நான் உனக்குத் தெரிவிக்கவில்லை. அவை நீ கேட்க லாயக்கற்றவை. தேவி கேட்டிருப்பாள். நிச்சயம். ஏனென்றால் வைசூரி போட்டது எனக்குத்தான். இருபத்தெட்டாம் நாள் என்னைக் குளிப்பாட்டி சலவை செய்த உடையுடுத்தி செண்டை மேளங்களுடன் அம்மன் கோவிலைச் சுற்றி நடக்க வைத்தபோது ஜானிக்கு அது பெரிய தமாஷாகத் தோன்றியது.

சமீப காலமாக நான் அதிக நேரம் வாசிப்பதோ அறையில் ஏகாந்தமாக தாடி மயிரைத் தடவிக்கொண்டு மேலே பார்த்துக் கொண்டிருப்பதோ உன்னைத் கோபத்திற்குள்ளாக்குகிறது. நீ புத்தகத்தை பலமாகப் பறித்து வாங்கி ஒளித்து வைத்திருக்கிறாய். அதற்கு நான் எதிர்ப்புத் தெரிவித்ததில்லை. ஏனென்றால், எனக்குத் தெரியும்; வாசிக்கும் கட்டம் கடந்தாயிற்று. இனி, வாசிப்பினால் மனத்தை மலர்த்திக்கொள்ள முடியுமென நான் நம்பவில்லை. ஆத்மாவிற்கு விமோசனம் வேண்டும். இனிமேல் பிறக்கக்கூடாது. நான் நீண்ட மௌனத்தில் இருக்கும்போது நீ என்னை அதிருப்தியுடன் பார்த்துக் கேட்டாய்.

என்ன?

நான் சாதாரணமாகப் பதில் சொல்வதில்லை. அது உன்னை இன்னும் அதிகம் எரிச்சலூட்டும். என் மௌனமும், உனக்குத் தெரியாமல் உன்னை நான் பார்ப்பதுவும் பொறுக்காமல் போகும்போது நீ உரக்க ரேடியோ வைப்பாய். பாத்திரங்களைக் கீழே போட்டு உடைப்பாய். ஆனால், எப்போதாவது உன் செய்கையால் நான் கோபமடைவதை நீ பார்த்திருக்கிறாயா?

மதிற்சுவருக்குள்ளிருந்த பங்களாவில் ஜானி வசித்துவந்தான். தரையில் வெண்கற்கள் பாவியிருந்தன. சுவரில் கிறிஸ்துதேவன் சுந்தர ரூபனாக இருந்தான். முள் கிரீடம்கூடப் பார்க்க அழகாக இருந்தது. எல்லா ஞாயிற்றுக்கிழமையும் ஜானி மாதா கோவிலுக்குப் போகும் போது பான்டும் கோட்டும் அணிந்திருப்பான். அவனுக்கு ரொம்பப் பெருமையாக இருந்தது. அவனுடைய மூத்த சகோதரி டயானாவும் கூட இருப்பாள். அவர்கள் டாடி சிங்கப்பூரிலிருந்து அனுப்பியிருந்த விலையுயர்ந்த உடைகளைத்தான் டயானா உடுத்துவது வழக்கம். அவ்வளவு நல்ல துணியை நான் கண்டதில்லை.

நான் ஜானியைத் தேடி பங்களாவுக்குப் போகும்போது டயானா என்னை உள்ளே அழைத்துச் சென்று தட்டு நிறையக் கேக் வெட்டித் தருவாள். பெரும்பாலும் அவள் கண்ணாடி முன் அமர்ந்திருப்பாள். மேஜையில் நிறைய அலங்காரப் பொருட்கள் நிறைந்திருக்கும். அறையில் குட்டிக்கூரா பவுடர் , வாஸலின் இவற்றின் வாசனைஇருக்கும். சில சமயம் டயானா என்னைக் கூப்பிட்டு நகங்களில் பாலீஷும் கன்னத்தில் யூடிகோலனும் தடவி விடுவாள். ஜானியை அங்கெங்கும் பார்க்க முடியாது. அவளோடு சேர்ந்திருக்க நான் ஆசையுடனிருந்தேன். டயானா தலைமயிருக்கு எண்ணெய் தேய்ப்பதில்லை. தோள் வரையிலும் மட்டுமே எட்டும் மயிரை பிரஷ்ஷால் நீவிக் கொண்டே அவள் என்னிடம் சொல்வாள்:

அந்த ரிப்பனைக் கொஞ்சம் எடு.

உள்ளறையிலிருந்து நிற்காத பேச்சு கேட்டுக்கொண்டேயிருக்கும். அது ஜானியின் மம்மியென்று எனக்குத் தெரிந்தது. அவளுடைய அறை அடைத்திருக்கும். யாரோடு அவள் பேசிக்கொண்டிருக்கிறாள்? வேறு எவருடைய சப்தமும் கேட்பதில்லை. ஆனாலும் ஒரு தடவை கூட அவள் பேச்சை நிறுத்தவில்லை. அவள் மாதா கோவிலுக்குப் போவதை நான் பார்த்ததில்லை. சிலசமயம் மாதா கோவில் பாதிரி பங்களாவுக்கு வருவதுண்டு. ஜானியின் மம்மியை ஒரு முறை பார்க்க நான் விரும்பினேன்.

ஒரு நாள் வெளியே யாரையும்; காணவில்லை. நான் உரக்க ஜானியைக் கூப்பிட்டேன். திடீரென்று டயானா ஓடி வருவதைப் பார்த்தேன். நான் சொல்ல முடியாத குழப்பமடைந்தேன். பக்கத்தில் வந்ததும்தான் அது டயானா அல்லவென்று தெரிந்தது. அவர்களுக்குள் அத்தனை ஒற்றுமையிருந்தது. அவள் என்னுடைய தாடையைப் பிடித்துத் தாங்கி என்னவோ கேட்டாள். எனக்குப் புரியவில்லை. அவள் சிரித்தவாறே என் கன்னத்தில் கிள்ளினாள். அப்படி நிற்கையில் அவளுடைய கண்களில் பயத்தையும், திடீரென அவள் பின் வாங்குவதையும் நான் கண்டேன். நான் திரும்பிப் பார்த்தபோது டயானா கனத்த துடைப்பத்தை ஓங்கிக்கொண்டு என் பின்னால் நிற்பதைக் கண்டேன். அம்மா பணிவான சிறுமியைப்போல திறந்த வாயிலுக்குள் நகர்ந்தாள். டயானா அவளை அறையினுள் தள்ளிக் கதவையடைத்துக்கொண்டு திரும்பிவந்து என்னிடம் சொன்னாள்:

பையா, யாரிடமும் சொல்லக்கூடாது, என்ன?

அடுத்த மூன்றாம் நாள் மஞ்சள் உடுத்துத் தலையை மொட்டையடித்த பிக்ஷு என்னைக் காண வந்தபோது நீ கவனித்தாய். இரவு முழுவதும் நீ உறக்கம் கலைந்திருந்தாய். காலையில் பிக்ஷு போனபோது நீ கேட்டாய்:

யார் அது?

பிக்ஷு.

அது எனக்குத் தெரியும்.

அவ்வளவு சட்டென்று கோபம் வந்துவிடுகிறது உனக்கு இப்போதில்லாம்! ஒருகால் எல்லாம் திறந்து சொல்லவேண்டிய தகுந்த சந்தர்ப்பமாயிருந்தது அது. ஆனால் விஷயத்தைப் புரிந்து கொள்ளும் பொறுமை உன் முகத்தில் காணப்படவில்லை. ஏன் நான் கிரந்த பாராயணத்தை நிறுத்திவிட்டு குருவைத் தேடுகிறேன்? எது மோட்சம் தரும் மூர்த்தி?

ஒரு தடவை திட்டமிட்டு உன்னிடம் எல்லாம் திறந்து சொல்வதற்காக நான் தயாரானேன். நீ அன்று வழக்கத்தைவிட உற்சாகமாக இருந்தாய். சரியான சந்தர்ப்பமென்று நான் எதிர்பார்த்தேன். சொல்ல வேண்டிய வாக்கியங்களையும் தொடக்கத்தையும் நான் தயாராக்கி வைத்திருந்தேன்.

ரிஷிகேசம். நான் ஆரம்பித்தேன்.

ரிஷிகேசத்திலென்ன? நீ உடனேயே என் ஆரம்பத்திற்குக் கடிவாள மிட்டாய்.

நான் தவறு செய்துவிட்டேன். உன் எதிர்ச்செயல் என்னவாக இருக்குமென்று அறியாமலேயே நான் சம்பாஷணையைத் தொடங்கினேன். ஓட்டம் தடைப்பட்டதால் நான் குழந்தையைப் போல உரக்கப் பிடிவாதம் செய்தேன்!

எனக்கு சன்யாசியாக வேண்டும்.

நீ வெடித்துச் சிரித்தாய்.

ஓஹோ, அதற்கென்ன? நானும் வருகிறேன். நீ அதில் பெரும் வேடிக்கை கண்டிருக்க வேண்டும். ஊறிப்பொங்கும் சிரிப்பில் நீ என்னை முட்டாளாக்கினாய்.

ஆனால் நான் நம்முடைய படுக்கையறைக்குக் காவி நிறம் அடித்தபோது உனக்கு அது மிகவும் பிடித்திருந்தது.

அழகான நிறம்! நீ சொன்னாய்.

நீ உன் சிநேகிதிகளை அழைத்து வந்து அதன் அழகைக் காட்டினாய். அவர்கள் அந் நிறத்தை ஒத்துக்கொண்டனர். படுக்கையறைக்கு ஏற்ற நிறம். நீ பெருமையடைந்தாய்.

அவர் தன்னந்தனியாகத் தேர்ந்தெடுத்தது. நீ அவர்களுக்குத்தெரிவித்தாய்.

ஆனால் உன் படுக்கையை அறையிலிருந்து எடுத்து நீக்க நான் விரும்பியபோது நீ என்ன சொன்னாய்?

இந்த ஆச்ரமத்தை நான் துறக்கிறேன். நீண்ட யாத்திரை, வெளியே கிளம்புகையில் நீ தடுக்காதே. வேதத்தில் இரு பாகங்களுண்டு. கர்மமும் அறிவும். கர்மம் முழுதும் நிர்வகித்துவிட்டேன் என்று நான் சொல்லிக்கொள்ளவில்லை. நம்முடைய மகளுக்கு இப்போதுதான் வயதாகிக்கொண்டிருக்கிறது. நான் விடைபெற வேண்டிய காரியமில்லை. அறிவைத் தேடவேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் இறங்கித் திரும்பப் போகிறேன். நசிகேதன் யமனிடம் கேட்டதைத்தான் எனக்கும் கேட்கவும் படிக்கவும் வேண்டும்.

தவற்றுக்கும் சரிக்கும் அப்பால் என்ன? குறிக்கோளுக்கும் பலனுக்கும் பிறகு? கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் அப்புறம் என்ன?
---------------------

3. பித்தம்.


கமலாவின் தாயாராயிருக்குமோ?

வாயிலில் நிழலாடியதும் டாக்டரின் முகம் கேள்விக்குறியாயிற்று. வாய் ஓயாமல் வம்பு பேசுகிற ராம்மோகன் டாக்டரைக் கவனிக்க வில்லை. தன்னுடைய பேச்சின் பீறிடலில் அவன் மூழ்கிப்போனான். நிழல் சற்றுத் தயங்கி நின்றது. திரைச்சீலையின் கீழே பதிந்த பாதங்களும், முனைத்து நின்ற நரம்புகளும், காய்ப்பு ஆணியும், குழி நகம் விழுந்த விரல்களும் தெரிந்தன. மாலிக்குட்டிதான். அவள் போகவில்லையா? மோகன், கொஞ்சம் மெதுவாகப் பேசு. இது ஆஸ்பத்திரி. டாக்டர் எழ முனைந்தபோது காலடிகள் நீங்கிவிட்டன. மோகன், உனக்கு பயந்து உன் சப்தத்தில் பயந்து அவள் உள்ளே வரவில்லை. ஏன் அவள் போகவில்லை?

டாக்டர் வாட்சைப் பார்த்தார். வாட்ச் தெரியவில்லை. மணிக்கட்டில் கமலாவின் வட்ட முகம் தெரிந்தது. முட்களோ, கண்களோ, அவயவங்களோ, சிறு பற்களோ எவையுமில்லை. வீங்கி வட்டமான பிஞ்சுமுகம்தான் மணிக்கட்டில் செத்துக்கிடந்தது.

"டானி, இதுதான் அவர்களுடைய நோக்கு. நாட்டில் மூலச்சொத்து மனித இனமாகும். தாயும் குழந்தையும்..."

நீ சற்று நிறுத்துவாயா? நீ எப்போதுமே வாயாடி. உன் மூலதனமே வாய் வீச்சு. அதைத் தாராளமாகக் கையாண்டு நீ இளைய சமுதாயத்தின் ஆளானாய். நீயே இளைய சமுதாயத்தின் உதாரணமானாய். உனது உயர்ந்த வாலிப உடம்பு, உன் மேல்மீசை இவையெல்லாம் உலகம் சுற்றின. விழாவோ, சாவோ! நீ சற்று இங்கிருந்து போவாயா? எனக்கொரு குழந்தையின்... மோகன், கமலா இறந்து போனாள். அவளுடைய பிணமும், தாயும் ஆஸ்பத்திரியிலிருக்கிறார்கள். அவர்கள் இது வரையிலும் போகாதது ஏனென்று கொஞ்சம் விசாரிக்கட்டும்.

"பை த பை, என்ன நடந்தது டானி?"

"ஒரு குழந்தையின் கேஸ் இருந்தது. சற்றுப் பார்த்துவிட்டு வருகிறேன். ஜஸ்ட் எ மினிட்."

வாயிலில் மாட்டியிருக்கும் திரைச்சீலை தலைகீழாய்த் தொங்குகிறது. இதுவரை இப்படிக் கண்டதில்லை. வாயிலில் யாருமில்லை. திரைச்சீலை அசையக்கூட இல்லை. துக்கமோ? எவ்வளவு அழகானவை இப் பூக்கள்! திரைச்சீலையில் செடியின் தண்டுகள் கீழ்ப்பக்கமாக வளருகின்றன. அவை மண்ணில் உரமும் வாயுவில் உப்பும் தேடுகின்றன. யார் அவற்றின் வளர்ச்சியைத் தடுத்தார்கள்? தையல்காரனா, அட்டெண்டரா, பெருக்குபவளா? ஸிஸ்டர்களாக இருக்காது. அவர்கள் மலர்களை ஆராதிக்கிறார்கள். நட்டு நீரிட்டுப் போற்றுகிறார்கள்.

கமலாவின் தாயார் எங்கே?

இப்போது டாக்டர் டானியல் வாட்சைப் பார்க்க முயலவில்லை. மணிக்கட்டில் நினைவுகள் பத்திரப்படுத்தப்படுவதில்லை. கமலாவின் எல்லையற்ற தூய மென்முகத்தை டாக்டருக்கு எங்கும் தேட வேண்டியிருக்காது. ராம்மோகனின் பார்வை நிலைத்த வலதுகை மணிக்கட்டில் நிமிடங்களை அளந்தார். நான்கு நாற்பத்து மூன்றை நிமிட முள் அசைந்து அடைகிறது - நாற்பத்து நான்கு, நாற்பத்தைந்து, ஐந்து முப்பதுக்கு வரவேற்பு விழா.

அன்பர்களே,

உலக இளைஞர் சபையின் நல்வரவேற்பைத் தெரிவிக்க..- உலகத்தின் இதயம் ராம்மோகனின் நெஞ்சத்தில் பறையடித்தது. தொண்டையடைத்தது. நிமிட முள் ... திரும்பி வந்திருந்தபோது டாக்டரின் முகத்தில் முன்பில்லாத தளர்வு உண்டாகியிருந்தது.

"டானி, நான் .என்ன கூறிக்கொண்டிருந்தேன்? நீ தியானத்தில் ஆழ்ந்துவிட்டாயோ? யு.எஸ்.எஸ்.ஆரிலும் மத பக்தர்கள் உண்டு. மாதா கோவில்களும் கன்னி மேரியும் உண்டு. அவர்கள் தாய்மாரை ஆராதிக்கின்றனர். ஒருத்தி கர்ப்பிணி என்று தெரிந்தால்...

இப்போது டாக்டர் டானியலின் முகத்தில் சற்றும் தளர்ச்சியில்லை. அவருடைய பெரிய கண்களில் தாகத்தின் திரி எரிகிறது. அவர் காதால் கேட்கவில்லை. ராம்மோகனின் முகத்தை நோக்கி, கண்ணிலெரியும் திரி தாவிப் படருகிறது.! செய்தி: யு.எஸ்.எஸ்.ஆரில் ஒருத்தி கர்ப்பவதி என அறிந்தால் என்ன நடக்கும்! கணவன் சபிப்பானோ? மாமியார் சாபமிடுவாளோ? மூத்த குழந்தைகள் தாய்க்குத் துரோகம் இழைப்பார்களோ?

"நான் ஐரோப்பாவும் அமெரிக்காவும் பார்த்தேன். யு.எஸ்.எஸ். ஆர் பார்த்தேன். அமெரிக்கத் தம்பதிகள் இருக்கிறார்களே, ஒப்பிடும் போது அவர்கள் தனவந்தர்கள்தாம். பணமுண்டு. ஒவ்வொருத் தருக்கும் கார் உண்டு. ஆர்ப்பாட்டங்களுண்டு. ஆனாலும், ஒருத்தி பெற்றுப் பிழைத்து வருவதற்குள் சகல சம்பாத்யமும் தீர்ந்து, கணவ‌னையும், காரையும்,வீட்டையும்,பணயத்தில் வைத்துவிட்டிருப்பார்கள். அதுதான் அங்குள்ள செலவின் நிலைமை. பிள்ளைப்பேறு நிலையத்துள் நுழையவே அவர்கள் பயப்படுகிறார்கள். சோவியத்தில் ஒருத்தி கர்ப்பிணி என அறிந்தால் போதும்; சோவியத் நாடு காத்து நின்று கொண்டிருந்ததோ என்று தோன்றும். அவளை நாடு ஏற்றுக் கொண்டு விடும்.முதுகு வலிக்கிறதா? எலும்பு நெரிகிறதா;மனம் குமட்டுகிறதா? அவள் தாயாகப் போகிறாள்.அவள் நாட்டின் சொத்தாகப் போகிறாள். அவளுடைய கர்ப்பப் பையில் நிதி சுமக்கிறாள். பெண், மாதா ஆகிறாள். குழைந்தைகள் பொன் மணிகள். கர்ப்ப சிச்ருஷைகள், சுக‌ப்பிர‌வ‌ச‌ம். நர்ஸ‌‌ரிக‌ள்-தாய்க்குத் தெரியாது; த‌க‌ப்ப‌னுக்குத் தெரிய‌ வேண்டாம்; நாடு தாயார்க‌ளை உப‌ச‌ரிக்கிற‌து: குழ‌ந்தைக‌ளை வ‌ள‌ர்க்கிற‌து."

டாக்டர் டானிய‌ல் வாயிலிலேயே பார்வையை ஊன்றியிருந்தார். ராம்மோகனின் பேச்சை ஒரு காதால் கேட்டார். வாயிலில் வந்தடையும் காலோசைக்காக இன்னொரு காதைக் காத்து வைத்தார்.பழக்க‌மான செயலாகிப்போயிற்று. பிரித்தறியும் உணர்வின் விரவிப் பரவுதல் எந்நேரமும் இயங்கிக் கொண்டே இருக்கிறது; எடுத்துக் கொள்கிறது; தள்ளுகிறது; புலனுண‌ர்கிறது. மோகன், நீ பாட்டில் சொல்; நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

திரைச்சீலை தலை கீழாய்த் தொங்கியது. செடிக்காம்புகளில் பூக்கள் தொங்கின. இது என்ன பழிகேடு; பார்த்திருக்கையிலேயே திரைச்சீலை ஒரு முறை சுருங்கி அசைந்தது.

கமலாவின் தாயாரோ? காற்று.

காற்று திரைச்சீலையில் சப்தங்கள் விளைவித்தது. சப்தங்கள் திரைச் சீலையில் நீந்தி விளயாடின. வழுக்கி வழுக்கி இறங்கின. புடைத்துப் பெருத்து நின்றது.

கர்ப்பமோ?

ஓசைகள் சட்டென்று குறைந்தன. செடிக்காம்புகளும் பூக்களும் கீழ் வரையிலும் வளர்ந்து இடித்தன. வாடி, வெளிறி, விறைத்து நின்றன. உதிர்ந்து விழுகின்றனவோ?

"என்ன டானி, உனக்கு ஓர் அசுவாரசியம்?"

"என்னுடைய ஒரு குழந்தை இறந்து போயிற்று."

ராம்மோகன் திடுக்கிட்டுப்போனான்.

"உன்...?"

"என் குழந்தையில்லை. கமலா என்னுடைய சிகிச்சைக்கு வந்தவள்."

"என்னவாயிருந்தது கமலாவுக்கு?"

மோகன், நீ என்னை உற்சாகமூட்ட, கமலாவைத் தத்தெடுத்தாற்போல சொந்தம் கொண்டாடிக் கேட்கிறாய். உன் கபடநாடகத்தில் சாமான்யர்கள் மயங்குவர், இரங்குவர். டாக்டர் டானியல் அல்ல. டானியலுக்கு உன்னிடம் வெறுப்பு உண்டென்பதல்ல. நீயும் ஒரு மனிதன். உன்னை வாழவைக்கும் ஜீவஅணுக்கள் உன்னை ஒட்டுணியாக்கி விட்டன. உனக்கு நான் என்றும் மன்னிப்பளிப்பேன். உன் குணத்தை மாற்ற இன்று சிகிச்சையில்லை. நீ இறக்கும் முன், என் வாழ்நாளிலேயே அதற்கும் சிகிச்சை உண்டாகும். ஹரிகோவிந்த் கொரானாவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயோ? ஸ்டேட்ஸில் நீ அவரைப் பார்த்தாயா? உன்னை சிருஷ்டித்த ஜீவ அணுக்களில் டி.என்.ஏயின் (D.N.A) சுபாவம் தீர்மானிக்கப்படுகிறது. தூய ஒழுக்கம், சத்தியகுணம் இவை உள்ளவனின் ஜீவஅணுக்களிலிருந்து வேறுபடுத்தியெடுத்து அவற்றை உன்னுள் குத்திவைக்க முடிந்த டாக்டராக எனக்கு வாழவேண்டும்.

கமலாவுக்கு இதய நோயாயிருந்தது. இதயத்திற்கு சக்தியில்லை. இரத்தத்தைப் பம்ப் செய்ய முடியாமல் அவளுடைய நெஞ்சில் இதயம் தளர்ந்து கிடந்தது. அவளுக்குப் பித்தம் என்று மாலிக்குட்டி கருதினாள். சோகைதான் முதலில் தெரிந்தது. மூச்சு முட்டத் தொடங்கியது. பிறகு நீர்வீக்கம், இழுப்பு ஆரம்பித்தது. வைத்யர் சொன்னார். ஒன்றுமில்லை, பித்தமாக்கும் என்று. இங்கே கொண்டு வந்தபோது கமலாவுக்கு மொத்தமாக வயிறு மட்டுமே இருந்தது. வயிறு வீங்கி நீர் சேர்ந்து நெஞ்சுவரைக்கும் ஏறிக்கிடந்தது. கைகளோ, கால்களோ கமலாவுக்கு இல்லை. முகம் இருந்தது. தலையும் வயிறுமான உடம்பில் அடங்கிப்போயிருந்தாள். உபஜந்துக்களைப் போல முகம்மட்டும் தெரிந்தது. அவள் அப்படி. அவளுடைய தாயார்? தாய் விதவை. கணவன் இறந்தபோது நாலாவது குழந்தை கர்ப்பத்திலிருந்தது. ராம்மோகன், மாலிக்குட்டி தாயாகிறாள். மாதா; ஸ்ரீ என்ற உன் சொத்து. அவளது இளைய குழந்தை வயிற்றுப்பக்கம் குறுக்காக, இளைத்த, இளைத்து இல்லையென்றான குச்சிக்கால்களால் தத்தித் தத்தி அவளது முன்னால் கமலா, அவர்கள் இந்தத் திரைச் சீலைக்குப் பின்னால் வந்து நின்றார்கள். விம்மலும் விசிப்பும் கேட்டன. உள்ளே யாரும் வரவில்லை. திரைச்சீலையை ஒதுக்கித் தள்ள தாயாருக்கு வசதியில்லை. ஒன்று கையணைப்பில், மற்றது விரல் நுனியில். கையை விட்டால் இண்டும் விழும். இப்படியொரு காட்சியை நீ கண்டதில்லை. நீ அதிருஷ்டசாலி. வாலிப சங்கத்திற்குச் செயலாளன்- ஸெக்ரட்டரி ஜெனரல் - உனக்குச் சுற்றிவரக் கார்; தங்க ஹோட்டல்கள்; உனக்கு சேவை செய்யத் தனி வேலைக்காரர்கள்; உன்னைப் பின்பற்ற ரசிகர்கள். நான் யாரைக் கவனிப்பேன்? தாயாரையா, இல்லாத முலைப்பாலைச் சப்பும் குழந்தையையா, கமலாவையா? தாயார் கமலாவுக்காக மட்டும் ஒரே ஒரு சீட்டே எடுத்திருக்கிறாள். மருந்தோ?

மருந்திற்கு என்னிடம் பணமில்லை. இன்று இங்கே வந்ததினால் நானும் நாலு குழந்தைகளும் பட்டினி. பட்டினி!

ராம்மோகனால் சகிக்க முடியாமல் போயிற்று. டாக்டர் டானி எப்படியாவது பட்டினிப் பாட்டுப் பாடிக் கேட்கவேண்டி வராது என்று நினைத்துத்தான் உள்ளே வந்தான். வார்டுகளில் சுற்றி வந்த பின்னும் இன்னும் நேரம் இருக்கிறது. வரவேற்பு விழா வரையிலும் எங்கே போவது?

"நீ என்ன செய்தாய்?"

”கமலாவுக்கு கார்டியோ மயோபதி. வைத்யன் சொல்வான் பித்தமாக்கும் என்று. இரத்தம் இல்லை. இரத்தம் குறையக் குறைய நீர்ப் பங்கு ஏறுகிறது. வெளிறுகிறாள். நீர் வைக்கிறது. பித்தமாம்! இந் நாட்டில் யாருக்குத்தான் பித்தமில்லை? இரத்தத்தைப் பம்ப் செய்ய முடியாமல் இதயத்தின் தசைப்பகுதிகள் தளர்ந்து போய்க் கொண்டிருந்தன. அவளுக்கு. தன் மகள் இறந்துகொண்டிருக்கிறாளென்று மாலிக்குட்டிக்குத் தெரியாது. ராம்மோகன், நீ அந்தத் திரைச்சீலையைப் பார்த்தாயா?"

ராம்மோகன் திரும்பிப் பார்த்தான். திரைச்சீலையில் என்ன இருக்கிறது?

"பூக்கள் கீழ்ப்பக்கமாக மலர்கின்றன. தலைகீழாக மண்ணை நோக்கி யாருடைய குற்றம் அது?"

பாவம் ராம்மோகன். அவன் வரவேற்புரையில் மனித இனத்தை அழைக்க நிமிடங்களை எண்ணிக்கொண்டிருக்கிறான். தலைகீழாக மலரும் பூக்களைப்பற்றி என்ன சொல்ல?

"நான் டிஜாக்ஸின் கொடுத்தேன். - இதயத்தின் தளர்ச்சி நீங்கட்டும். டென்ஸாலின் கொடுத்தேன் - நீர் கழிந்து இறங்கட்டும்."

தலைவரின் பற்றற்ற தன்மையுடன் பற்றற்ற புன்னகையுடன் ராம் மோகன் கேட்டான்:

"மருந்து ஃப்ரீயாகக் கொடுத்தாயோ?"

"கொடுக்கலாம். அநாதைகளின் சிகிச்சை நிதி இருக்கிறதே ஆஸ்பத்திரியில்."

"மருந்து வாங்கமுடியாதவர்களும் இந்நாட்டில் இருக்கிறார்களோ?"

முற்றிலும் வெளிநாட்டானுடையதைப் போல ஆகிவிட்டது கேள்வி! ராம்மோகன் திருத்தினான்.

"இங்கே வருபவர்களில் இருக்கிறார்களோ?"

"சில சமயங்களில்."

"உன்னை ஏமாற்றி சிகிச்சை பெறலாமில்லையா?"

"டாக்டராகிவிட்டேனல்லவா?"

"உன் குழந்தைகள் இதை அனுபவிப்பார்கள். அவர்களை நீ பட்டினி போடுவாய். வேலை செய்ய முயலாமல் பிச்சையெடுத்தலைபவர்கள் வாசலில் வந்து ஆழாக்குக் கஞ்சி தாருங்கள் என்று கெஞ்சினால் நீ அவர்களைப் போற்றுவாய்."

டானியல் சிரித்தார். அவருடைய முகம் அச் சிரிப்பில் வெளிறிப் போயிற்று.

"ராம்மோகன், என் குழந்தைகள் வளர்வது சோஷலிஸ்ட் இந்தியாவில் அல்லவா?" வாயாடியானாலும் ராம்மோகனுக்கு மென் தோல் உண்டு. அவன் கேட்டான்:

"டானி, நீ ஏன் பாதிரியாகவில்லை?"

"அதுதான் நானும் கேட்கிறேன். நான் விசுவாசி ஆகிறேன். ஆத்மாவைவிட உடம்பை வணங்குகிறேன். கைகளை விரித்து ஆகாயத்தைப் பார்க்கும் மனிதனை நான்; சேவிப்பதில்லை. என் மனிதன் அறிவும், தலையும், இதயமும், சுவாசகோசங்களும், உணவுக்குழாயும், அடிவயிறும், கன்னமும், குடலும், நரம்பு மண்டலமும், எலும்புக்கூடும், தசைகளும், சரும முடியும்."

"ஏன் நிறுத்திவிட்டாய்?"

"வாயிலில் யாரோ இருக்கிறார்கள்."

"நீ உன் மனிதனைப்பற்றிச் சொல்"

டாக்டர் எழுந்தார். ராம்மோகன் ஆச்சரிய வயப்பட்டிருந்தான்.

இவனுடைய சந்ததிகள்!

வாயிலில் மாலிக்குட்டிதான்!

"போகவில்லையா?"

அவளுக்குப் பேச முடியவில்லை.

டாக்டர் டானியல் இரண்டாம் முறை கேட்க நிற்கவில்லை. அவசரமாக நடந்தார். மாலிக்குட்டிக்குப் பார்க்க முடியவில்லை. கோபப் பட்டுக்கொண்டே போய்விட்டார்! ஆக மொத்தம் கனிவாக இருந்தது டாக்டர் மட்டும்தான். அவருக்கும் கோபம். மதருக்குக் கோபம்.

ஏன் போகவில்லை?

இங்கே நோயாளிகள் இருக்கிறார்கள். பிணம் கிடந்தால் நோயாளிகள் பயப்படுவார்கள்.

கொண்டு போ!

எல்லோருக்கும் கோபம்.

அவளுக்கு மூச்சு இல்லை; மூச்சு இருந்தது. மூச்சு நெஞ்சில் முட்டியது. கையால் அழுத்திக்கொண்டாள். அவளுடைய நெஞ்சில் கைகளுக்குக் கீழே வீக்கம். வீக்கத்தில் மூச்சுக் கிடந்து வீங்கியது. நெஞ்சம் பொரிந்தது. நெஞ்சு வீங்கி, முளைத்தது முனையாகி, முனை ஊசியாகி, ஊசி கடப்பாறையாகி, கோடாலியாகி நெஞ்சு வெடிக்கிறது. வெட்டுகிறது. வெடிக்கும், வெடித்துவிட்டது. கூக்குரல் வெடித்துச் சிதறிய போது ராம்மோகனுக்குப் பொறுக்க முடியாமல் போயிற்று. அவன் எழுந்து வாசலுக்கு வந்து திரைச்சீலையை நீக்கினான்.

நாசம்!

எங்கே டானியல்?

மாலிக்குட்டி தகர்ந்த தொண்டையில் எழுத்துக்களை முனங்கி உருட்டினாள்.

கடவுளே!

"என்ன, என்ன?"

சட்டென்று ராம்மோகனுக்கு நெஞ்சம் குமைந்தது.

"நான் டாக்டரல்ல. நானல்ல டாக்டர்! டாக்டர் வெளியே போயிருக்கிறார்."

இன்னும் பதிமூன்று நிமிடங்கள் இருக்கின்றன. போய்விடலாமா? யோசித்து நிற்கையில் டாக்டர் டானியல் அவசரமாக வந்தார். அவருக்குப் பின்னாலேயே மதர் வருகிறாள்.

ராம்மோகன் கேட்டான்.

"என்ன, என்ன டானி?"

"ஒன்றுமில்லை! இவளுடைய மகள்தான் செத்தது. பிணத்தைக் கொண்டு போக முடியவில்லை"

கொஞ்சமாவது சுயபுத்தி இருந்திருந்தால்!

ராம்மோகன் வேறுவிதமாகக் கேட்டான்.

"டாக்சி ஸ்டாண்டு இல்லையா இங்கே?"

டாக்டர் சொன்னார்: "முப்பது ரூபாய் சார்ஜ் தேவைப்படும்; இவளிடம் இல்லை. என்ன
செய்யலாம்?"

கொண்டு போகவேண்டாம் என்று ராம்மோகன் மனத்துள் நினைத்துக்கொண்டான். ஆஸ்பத்திரிகளில் எலெக்ட்ரிக் க்ரிமெட்டோரியம் இருக்கவேண்டும். ஓவனில் சவம் எறியவேண்டும். ஸ்விட்ச் ஆன்! உடனே தகிக்கவேண்டும். தாயும் மகளும் தங்கையும் - எல்லா பித்த நோயாளிகளும், எல்லா இதய நோயாளிகளும் - நாட்டின் எல்லா சாபக்கேடுகளும்... மதர் பரந்து விரிந்து நடந்தடைந்தாள். மாலிக்குட்டியிடம் சொன்னாள்:

"வா!"

மதரின் குரல் கனத்துவிட்டதென்று ராம்மோகனுக்குத் தோன்றியது. டாக்டர் தேவதையாகும்போது ஆஸ்பத்திரியின் மேட்ரன் தேவதூதராக வேண்டாமா?

அவர்கள் மெதுவாக நடந்து நீங்கியபோது டக்டர் கேட்டார்:

"ராம்மோகனின் கார் எங்கே?"

ராம்மோகனுக்குக் கொஞ்சம் நாடகமாடவேண்டி வந்தது. இன்று சுற்றிவரத் தகுதியான ஒரு வாகனம் கிடைக்கவில்லையே. பழைய

என்னிடம் மினியே இருக்கிறது. பிணத்தைக் கிடத்தினால் தாயாருக்கு அமர இடம் இருக்காது. உன் வண்டியை எடுத்துக் கொள்ளலாமென்று நினைத்தேன்.

ராம்மோகன் அருவருப்படைந்தான். அருவருப்பை முகத்தின் மயிர்க் காம்புகளில் மூழ்கடித்து ராம்மோகன் சொன்னான்:

"பத்து நிமிடங்களே வரவேற்பு விழாவுக்கு பாக்கியுள்ளது. உலகம் சுற்றி வந்திருக்கிறேனல்லவா. நான் சற்று பங்க்சுவலாக இருக்க வேண்டும்."

அவனுடைய கூம்பிய கன்னங்களில் நிறங்கள் போட்டியிட்டன. சிரிப்பின் வெண்மையை முகத்தில் பிடித்து நிறுத்த அவன் பற்களை வெளியே காட்டினான்.

டாக்டர் பிறகு ஒன்றும் சொல்லவில்லை. அவசரமாக வாசற்படியிலிறங்கிக் காரில் ஏறினார். பெண்கள் வார்டின் முன்புறத்தை அடையும் போது, ஸிஸ்டர்மார் கமலாவின் சவத்தை எடுத்து வருகிறார்கள். நன்றாகப் பின்புறம் திரும்பி டாக்டர் கதவைத் திறந்துவிட்டார். அவர் எதையும் காணவில்லை. அவருடைய மனதில் மலர்கள் நிறைந்திருந்தன. அம் மலர்கள் தலைகீழாக மலர்கின்றன.

படியில் தயங்கி நின்ற ராம்மோகன் வரவேற்பு விழாவிற்காகச் சொல்லடுக்குகளைத் தேடிக்கொண்டிருந்தான்.

அன்பர்களே...
-------------------

4. பூஜைக்கு உதவாத பூக்கள்.


அவன் படிகளிலிறங்கி நடந்துபோனான். ஒரு முறைகூடச் சற்றேனும் திரும்பிப் பார்க்கவும் இல்லை. ஒவ்வொரு காலடி வைப்பிலும் கோபம் நெரிந்து புதைந்துகொண்டிருந்தது. இல்லை, இனி ஒருபோதும் அவன் திரும்பிப் பார்க்கமாட்டான். ஒருபோதும் அவன் வரமாட்டான். பொறுக்கமுடியாத வேதனையுடன் கூக்குரலிட்டாள்.

... என் பொன்னான தம்பி.

மாடிப்படிகளில் ஓடியேறி மொட்டை மாடியின் வராந்தாவில் நின்று அவள் தரையைக் குனிந்து பார்த்தாள். காலியான தெருவினூடே ஏதோ புயற்காற்று அடித்துத் தள்ளியதுபோல அவனுடைய ஜீப் உறுமி நகர்ந்துகொண்டிருந்தது. நனைந்த கண்களோடு நோக்கி நின்றாள். கடைசி உறவும் அற்று விழுகிறது.

இனி யாருமில்லை, ஒன்றுமில்லை. பரந்த உலகின் நடுவில் ஏகாந்தமான ஒரு தீவுபோலத் தனித்து நிற்கிறாள்.

ஒரு நாளும் மீண்டும் காணமுடியாத ஒன்றை மனதிலிருந்து ஒரு போதும் இழந்துவிடக் கூடாது என்பதுபோல அவள் அந்தப் பக்கமாகவே பார்த்திருந்தாள். தெருத்திருப்பத்தில் அந்த வண்டி மறைந்து போனபோதிலும் பார்த்துக்கொண்டே நின்றாள்.

"சாரதாக்கா"

கீழேயிருந்து யாரோ கூப்பிட்டார்கள். கார்த்யாயனியாக இருக்கும். இயந்திரம்போலக் கையை உயர்த்தி அவள் வாட்சைப் பார்த்தாள். இனித் தாமதித்தால் ஆஃபீசுக்கு லேட்டாகும். ஆனால், நின்ற நிலையில் உறைந்து நிற்கவே முடிந்தது. அசைய முடியவில்லை. பேச முடிய வில்லை. ஒரே ஒரு உண்மை மட்டுமே இனிமேல் முன்னால் உள்ளது.

இனி, தான் தனி.

மாடிப்படிகளில் ஓடியேறி வந்த கார்த்யாயனி அவளது தோளைக் குலுக்கிக் கேட்டாள்.

"என்ன ஆச்சு சாரதாக்கா...?" அம் முகத்தில் கொந்தளிப்பும் இயலாமையும் கண்ட பின்னரே அவள் சட்டென்று மௌனமானாள்.

கார்த்யாயனிக்கு ஒன்றும் புரிந்திருக்காது. எப்படிப் புரிய வைப்பது...? ஒரு அர்த்தத்தில் அவள் வெறும் குழந்தைதான். வாழ்க்கையின் வாயிற்படியை அப்போதுதான் அடைந்திருக்கிறாள். கருமேகங்களே இல்லாத சித்திரை மாதம் மட்டும்தானே பார்த்திருக்கிறாள். ஆனாலும் அவளுக்கு மனிதர்களின் துன்பத்தைக் கண்டால் புரியாமலிருந்திருக்கும். ஒரு வேளை துன்பத்தின் ஊமையான உறைகுளிர் அவளுடைய நாவையும் மரத்துப்போகச் செய்திருக்கலாம்.

உறக்கத்திலிருந்து விழித்ததுபோலச் சாரதா சொன்னாள்:

"கார்த்தீ! நான் இன்றைக்கு வரலை. உடம்பு சரியாயில்லை. என் லீவு லெட்டரைக் கொஞ்சம் ஆஃபீஸில் கொடுத்துடு."

சாரதா லீவு லெட்டர் எழுதிக்கொண்டிருக்கையிலும் கார்த்யாயனி ஒன்றும் கேட்கவில்லை. வீங்கிய முகமும் கலங்கிய கண்களும் கண்டு மௌனமாகவே நின்றிருந்தாள். ஏதோ எதிர்பாராத துக்கத்தின் கடினமான காயத்தைமட்டுமே அவள் தரிசித்தாள். என்னவாக இருக்குமது? தெரியவில்லை. காலையில் சாரதாவைப் பார்க்கத் தம்பி வந்திருந்தான் என்பதுமட்டும் அவளுக்குத் தெரியும். அவ்வப்போது அவன் வருவதுண்டே. ஐ.பி.எஸ். பயிற்சியாளனான அந்த ஒரு தம்பி மட்டுந்தானே சாரதாவுக்குச் சொந்தமென்று இருக்கிறவன். என்ன துக்க செய்தியை அவன் கொண்டு வந்திருக்கிறானோ? எதுவும் கேட்கும் சந்தர்ப்பமில்லை. லீவு லெட்டரை மடித்துப் பிடித்துக் கொண்டு கார்த்யாயனி இறங்கிப் போனாள்.

அவள் மாடிப்படியில் இறங்கிப் போவதையே பார்த்துக்கொண்டு சாரதா ஒரு நிமிடம் நின்றாள்.

வருடங்களின் படிகளை மிதித்து சப்தமுண்டாக்கிக்கொண்டு நினைவுகள் இறங்கி ஓடிப்போய்க் கொண்டிருந்தன.

எல்லோரும் போயாகிவிட்டது. ஒவ்வொருத்தராகப் போயினர். ஏகாந்தத்தின் நிசப்த இரவுகளுக்குள் அவளை உதறிவிட்டு. இதோ கடைசி ஆளும் போயாயிற்று.

நகரத்தின் சப்த கோஷங்களுக்கு நடுவில், யாரும் நினைவுகூர நேரம் வீணாக்காத ஒரு முன்னாள் நட்புபோலக் கவற்சியற்றிருந்த ஒரு என்.ஜி.ஓ. பெண்கள் விடுதியின் இருண்ட ஓர் அறையில் தனித்திருந்து அவள் அழுதாள்,. கண்ணீர் விடாமல் அழுதாள். பதினெட்டு வருட இன்க்ரிமென்ட்டும் முப்பத்தெட்டு வருடப் பழக்கமும் உள்ள ஒரு வெறும் இயந்திரம்மட்டுமாகவே இருந்தாள் அவள். அவளுக்கெப்படிக் கண்ணீர் உண்டாகும்...?

மாடியில் ஒட்டடையை நோக்கியவாறு அவள் மல்லாந்து கிடந்தாள். காலம் துடைத்தெறிய மறந்துபோன ஒரு ஒட்டடைதானே அவளும்.


...மிகத் தொலைவில் எங்கோ இளமைப்பருவத்தின் பசுமை நிறைந்த பள்ளத்தாக்குகள் இருந்தன. பூக்கள் நிறைந்த பள்ளத்தாக்கு. அன்று பாட்டிக்கு, காலை பூஜைக்காக அவள் பூப்பறிக்கப் போனாள். காலில் முள் குத்தியது. கையில் சிராய்த்தது. ஆனாலும் பூப்பறித்தாள். ஆனால் கொண்டு போனபோது பாட்டிசொன்னாள்:

"இதொன்றும் ஆகாது மகளே! இதெல்லாம் பூஜைக்கு உபயோகிக்காத பூக்களாகும் மகளே..."

தொட்டால் வாடிப் பூக்கள், வேலிப்பருத்திப் பூக்கள், கொங்கிணிப் பூக்கள், கள்ளிப்பூக்கள், ஊமத்தைப் பூக்கள்!

பூஜைக்குத் தொடாத அப் பூக்கள் முற்றத்து மூலையில் குப்பைத் தொட்டியில் யாருக்கும் வேண்டாமல் கிடந்து அழுதன. கழுத்தில் கருப்புச் சரட்டில் டாலர் கட்டிக்கொண்டிருந்த ஒரு சிறுமி கன்னத்தில் உலர்ந்த கண்ணீர்க் கோடுகளுடன் வராந்தாவின் தூணில் சாய்ந்து அதைப் பார்த்தவாறு நின்றாள். தேம்பித் தேம்பி
நின்றிருந்தாள்.

அந்தப் பாட்டி இறந்து புல்முளைத்துப் போயாயிற்று. அதற்கும் எத்தனையோ வருடங்களுக்கு முன்பு, நினைவுகளும் சென்று எட்டாத இறந்த காலத்தின் பனி மூடிய மண்ணில் தாயும் மறைந்துகிடந்தாள். வெறும் பத்தொன்பதே வயதான அவள் அப்படியாக ஒரு வீட்டுத் தலைவியானாள். சிறகு முளைக்காத ஒரு சிறு தம்பிக்கும், பருவத்தின் துறைமுகத்தை நோக்கி அதிவேகமாகக் குதித்துக்கொண்டிருந்த ஒரு தங்கைக்கும் அவள் திருமணம்கூடக் கழிந்திராத தாயானாள். பிரசவித்தறியாத பாட்டியானாள்.

தகப்பனார் மட்டும் உள்ளே படுத்திருந்தார். பக்கவாதத்தில் அடிபட்டு ஒரு பக்கம் நசுங்கித் தளர்ந்து படுத்திருந்தார். சற்று யோசித்தால் எல்லாவற்றிற்கும் காரணம் அந்த அப்பாதானே? ஆனால் அவ்விதமாக ஆலோசிக்கவே முடியாது. உணர்ச்சிகள் ஒளிவீசிய ஒரு சரித்திர கட்டத்தின் விளையாட்டு பொம்மையாக மட்டுமே இருந்தார் அப்பா. எதற்காக அவரைப் பழி சொல்லவேண்டும்...?

...சுதந்திரம் , சமத்துவம், சோஷலிசம் இவ்வார்த்தைகளின் பொருள் ஒன்றும் எனக்குத் தெரியாது. நாடு என்றும் நாட்டவர் என்றும் சொன்னால் எனக்குத் தெரியாது. ஆனால் அப்பா? இவ்வாழ்க்கை இப்படித் தரிசாகிவிட்டதே - என்று நினைக்குப்போது வருத்தம் வந்து விடுகிறது.

அப்பா ஒரு சுதந்திரச் சிப்பாயாக இருந்தார். ஸத்யாக்ரகம் நடத்தி, "பிக்கெட்டிங்" நடத்தி ஜெயிலுக்குப் போனார். கோஷங்கள் ஊர்வலங்கள் இவைகளின் கட்டுப்பாடற்ற உணர்ச்சி வேகத்தின் உற்சாகத்தில் இழைந்துபோனார். எல்லாம் தொலைந்தது. நெல் கிடைத்துக்கொண்டிருந்த நிலமும், கொஞ்சம் பணம் இருந்த பத்திரமும், தனது ஆரோக்யமும் கூட. இறுதியில் கொஞ்சமும் முடியாமல் தளர்ந்து விழுந்தார். அப்படிக் கிடக்கும்போதும் அப்பாவின் சிந்தனையும் பேச்சும் முழுக்க அதுவாகத்தானிருந்தது. அவளால் ஒரு போதும் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களைப்பற்றியும் , ஆட்களைப் பற்றியும், சம்பவங்களைப்பற்றியும், நாடும் நாட்டவரும் பொதுப் பிச்னைகளும். அப்பாவின் மனநிலையைப் பாதித்த தீராத புற்று நோயாயிருந்தது அது. படுக்கையில் விழுந்த பிறகும் முதலிலெல்லாம் யாராரோ அப்பாவைப் பார்க்க வருவதும் போவதுமாக இருந்தார்கள். மெதுவாக அதுவும் நின்றது. இறுதியில் மறதியின் ஆழம் மிகு தடாகத்தில் வீசி எறியப்பட்ட ஒரு கல் போல அப்பா பாசி பூசிக் கிடந்தார். அவ்வாறாக இருந்தது தியாக ஒளியான ஒரு வாழ்வின் மகத்தான முடிவு. ஆனால் ஒருவிதத்தில் அப்பா அதிருஷ்டசாலியாக இருந்தார். என்றே நினைத்துக்கொள்ள வேண்டும். தான் நினைவுகூரப்படாதவ னென்றும், அறியப்படாத ஆயிரம் பேர்களில் ஒருவனேயென்றும் இறுதிவரை புரிந்துகொள்ளாமல் இருந்தாரல்லவா. வேறு யாருக்காக இல்லா விட்டாலும் தனது மூன்று குழந்தைகளுக்காகவாவது விலை மிக்கதாயிருந்திருக்கக்கூடிய ஒரு வாழ்க்கையைத் தொலைத்தோமென்று அறிய வில்லையல்லவோ. மோகவெறியில் பிறந்த அம் மகனைப் பிரசவித்ததைத் தொடர்ந்து உண்டாகிய நோய்க்காலங்களில், தொலைதூரத்தில் எங்கேயோ உள்ள இருண்ட சிறையில்போய்க் கிடக்காமல் இருந்திருந்தால், ஒருபோதும் ஒரு குறையும் கூறியறியாத தன் சாதுவான மனைவிக்காவது அகால மரணம் நேரிட்டிருக்காது என்று நினைத்துப் பார்க்கவில்லையல்லவா.

"நீங்களெல்லாம் உட்கார்ந்து அனுபவிக்கும் இந்தச் சுதந்திரம் இருக்கே, அதற்காக நானெல்லாம் பாடுபட்டேனாக்கும்."

"இந்த ஜனாதிபத்யம் இருக்கே, இதை ஸ்தாபிக்க நான் என் வாழ்க்கையையாக்கும் கொடுத்தேன்."

என்று தற்பெருமையுடன் தானே உருவாக்கிக்கொண்ட ஓர் ஆத்ம திருப்தியின் மூட உலகத்தில் மயங்கிக் கிடக்க அப்பாவால் இயன்றிருந்தது.

"நான் எதையும் அடைய நடக்கவில்லை. சிபாரிசுக்கும் உதவிக்கும் நடந்ததில்லை. துன்பத்துக்குக் கூலி பெறவும் முயலவில்லை. புரிந்ததா...?

ஆனால், வீடு இருந்த தோட்டம் தவிர வேறெதுவும் பாக்கியில்லை. இலட்சியம் நிறை சுய பிரதாபத்தின் தீ நாக்குகளில் சிறகு கரிந்து துடித்து விழுந்த ஒரு விட்டில்பூச்சியாக இருந்தார் அப்பா.

அந்த ஆதரவற்ற நிலையின் மத்தியில்தான் அவள் படிப்பை நிறுத்தினாள். எத்தனை சிறியதாயிருந்தாலும் பரவாயில்லை, உத்யோகம் தேடினாள். 45-75-ன் ஒற்றையடிப்பாதையினூடே ஒரு லோயர் டிவிஷன் கிளார்க்காக அப்படி அவள் நடக்கத் தொடங்கியபோது ஒரு புதிய தீர்மானத்தின் ஆரம்பமாயிருந்தது அது.

எல்லாம் நேற்று நடந்ததுபோல நினைவிருக்கிறது. குமுறி அழுதவாறேதான் காலேஜிலிருந்து விலகினாள். தோழிகளுக்கு நடுவிலுள்ள அந்த உல்லாச வாழ்க்கை, எல்லாக் கஷ்டங்களும் கிலேசங்களும் மறந்துபோகும் மகிழ்ச்சி நிறைந்த நிமிடங்களாயிருந்தன. நேரங் கெட்ட நேரங்களில் ஒரு காரணமும் இல்லாமல் வெடித்துச் சிரிக்க முடிந்தது. என்னவெல்லாம் ஆசைகள், கனவுகள்... எல்லாம் நிறம் மங்கி இதழ் உரிந்து கீழே விழுந்தன. கையிலணிந்துகுலுக்கிக் கொண்டிருந்த மோகத்தின் கண்ணாடி வளையல்களெல்லாம் உடைந்து சிதறிப் போயின. வாழ்க்கை அவளை ஒரு சுமைதாங்கியாக மாற்றிக் கொண்டிருந்தது. ஒரு எரிச்சலோ, குறையோ, முணுமுணுப்போ இன்றி அவளை விதி ஆட்கொள்ளவும் செய்தது. தெளிவற்ற ஏதோ ஒரு தீர்மானத்தின் பதிந்த பாவுகற்களினூடே அழுத்தி மிதித்து அவள் நடந்துபோனாள். இடவலம் நோக்காமல், ஒரு நிமிட சஞ்சலமும் இல்லாமல்.

ஹா! ஒரு நிமிட சஞ்சலமும் இல்லாமலா? அப்படிச் சொல்ல முடியுமா...? அங்கே நினைவுகள் இடறுகின்றன. தகர்ந்த மோகங்கள் வாய்விட்டு அழுகின்றன. கடந்த காலத்தின் வேதனைகள் மீண்டும் வீங்கி உடைந்து சீழ்வடிக்கின்றன. தியாகம் என்று எத்தனையோ இனிப்பான செல்லப் பெயரிட்டு அழைத்தாலும், அது ஒரு கொலை பாதகமாகத்தானே இருந்தது? தன்னுடைய மட்டுமல்ல, இன்னொருவருடையவும்கூட. வாழ்க்கை அபிலாஷையின் கழுத்தை நெரித்துக் கொல்லுவதாகவே இருந்தது அது.

எல்லாம் எதற்காக...? ஒன்றும் கிடைக்கவில்லை. ஒரு இடத்தையும் சென்று அடையவுமில்லை. இல்லாத குறிக்கோளை நோக்கிய அர்த்த சூன்யமான ஒரு பயணமாக ஆகிவிட்டிருக்கிறது எல்லாம்.

கடவுளே! எனக்கு மன்னிப்புத் தரணுமே...

நனைந்த கண்ணிமைகள் முன்பு பாலச்சந்திரன் இப்போதும் வந்து நிற்கிறான். இன்றுமாதிரி நரைத்த மயிருடனல்ல. மேலே ஏறத் தொடங்கிவிட்ட நெற்றியோடல்ல; முகமெல்லாம் சுருக்கமும் கோடுகளும் விழுந்து உட்புறமாகச் சற்று வளைந்து தளர்வுமேலிட்ட அஸிஸ்டின்ட் செகரட்டரியாகவல்ல.

தடித்த ஃப்ரேம் கொண்ட கண்ணாடி வழியாக உயர்குடிப் புன்சிரிப்புச் சொரியும் சிவந்த, மெலிந்த, ஆரோக்யவானாகிய இளைஞனாக, யாரையும் நிராயுதபாணியாக்கும் மென்குணம்மிக்க புருஷனாக.

பாலச்சந்திரன் அன்று சூப்பிரின்டெண்டாக இருந்தான். அவனுடைய ஸெக்ஷனில்தான் சாரதா முதலில் வேலை செய்தாள். அவன்தான் அவளுக்குப் பர்ஸனல் ரிஜிஸ்டர், ட்ராஃப்ட், நோட், சப்மிஷன் எல்லாம் கற்றுக் கொடுத்தான். ஒரு உத்யோகஸ்தினளாக மாற்றினான்.

ஒரு லீவு நாளில் வேலை முடிந்து திரும்புகையில் ஆஃபீஸின் பின்னால் மலைவாழைகள் கொண்டையை நிமிர்த்தி நின்ற பூந்தோட்டத்தின் சமீபத்தில் பூத்துக் குலுங்கி நின்ற குல்மோஹர் செடியின் அடியில் பாலச்சந்திரன் அவனிடம் கேட்டான்.

"சாரதாமேல் ஆசைப்பட எனக்கு அருகதையுண்டா......?

அந்த குல்மோஹர் செடி போலவே மனமும் அசைந்து குலுங்கியது. பூக்கள் உதிர்ந்து இலைகள் பறந்தன.

அப்படியொரு கேள்வியை ஒருபோதும் யாரிடமிருந்தும் செவியுறப் போவதில்லை என்று மனப்பூர்வமாக எண்ணியிருந்தாள். உறுதியாயிருந்ததாள். மனத்தின் அந்தப் பக்கத்து ஜன்னல்களையெல்லாம் அடைத்துச் சாத்தி பத்திரப்படுத்தியிருந்தாள். அப்படியிருந்தும் இதோ.....

.. நீ யாரைத் தவிர்க்க ஆசைப்பட்டாயோ அவனே இதோ....

அக்கேள்விக்கு ஒரு பதிலை மனதில் தயாராக வைத்திருக்கவி்ல்லை. அதைப்பற்றி சிந்திக்கவே இயன்றிருக்கவில்லை. பக்கவாதக்காரனாகிய ஒரு தந்தையின், தாயற்ற மகளாக இருந்தாள் அவள். பருவமடையத் தொடங்கியிருந்த ஒரு தங்கையினுடையவும், வயது வராத ஒரு தம்பியினுடையவும் மூத்தவளாயிருந்தாள் அவள். ஒரு குடும்பத்தைத் துழவிச் செல்லவேண்டிய தலையெழுத்துக் கொண்ட ஓடக்காரியாக இருந்தாள் அவள். அப்படியொரு கேள்விக்கு அவள் வாழ்க்கையில் இடமிருக்கவில்லை. அதனால்தான் பதிலைப்பற்றி யோசிக்கவேண்டிய அவசியமும்.

மைதானத்திலிருந்து வந்த காற்று மலைவாழைகளின் இலைகளை அடித்துக் கிழித்துத் தோரணமாக்கிக்கொண்டிருந்தது. குல்மோஹர் பூக்கள் பாய்ந்து பறந்தன. யௌவனத்தின் அரும்பொருளான மந்த ஹாஸத்தைப் போன்ற சிவப்புப் பூக்கள் தாங்கி யூஃபர்ஸியா கொடிகள் கம்பி வேலியில் படர்ந்திருந்தன. ஆகாயத்தில் அந்தி மேகங்கள் சாட்சி நின்றன.

அவள் ஒன்றும் பேசவில்லை. மெல்ல நடக்க மட்டும் செய்தாள். திரும்பிப் பார்க்கக்கூட இல்லை. திரும்பிப்பார்க்க முடியவுமில்லை. அல்ல, சற்றுத் திரும்பிப் பார்த்திருந்தால், அம்முகத்தின் மாற்றத்தைக் கண்டிருந்தால், அக்கண்களின் காந்த சக்தியின் வசீகரப் பரப்பில் விழுந்திருதால்...

விழுந்திருந்தால்.... என்னவாயிருக்கும்?

வேரோடு சாய்ந்து விழுந்துவிட்டிருக்காது?

துயரம் தோய்ந்த இதயத்தின் எல்லாத் துன்பங்களுடனும் அவனுடைய காலடியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்க மாட்டாள்.? மெதுவாக நடந்து போய்க்கொண்டிருந்தபோது இதயத்தின் ஆழ்மட்டத்தில் எங்கேயோ துணையற்ற‌ ஒரு ஆசையின் ஆதரவற்ற குரல் கேட்டது. ஆழமான ஒரு பள்ளத்தாக்கிலிருந்து வருவதைப்போல முனகி முழங்கியது. அதுவும் கேட்காத மதிரி நடித்து நடந்தாள். சுய கட்டாயங்களின் கற்படுக்கைகளினூடே அழுத்தமான காலடிகளுடன் நடந்தாள்.

...கடவுளே!...பதறக்கூடாது...வழுக்கக்கூடாது...விழ‌க்கூடாது...

ஆனால், இரவில் உறங்க முடியவில்லை. அடுத்த தினங்களில் ஆஃபீசுக்குப் போக முடியவில்லை.

நினைவின் வாசலைப் பாதி திறந்து எட்டிப் பார்த்து, கண்களில் புனித‌ ஒளியின் டார்ச் அடித்துக் கொண்டு, மென்மையும், உணர்ச்சி மிக்கது மான தொனியில் கேட்கிறான்:

"சாரதாமேல் ஆசைப்பட எனக்கு அருகதையுண்டா...?

நாணத்துடன் நிற்க மட்டுமே முடிகிறது. அவிழ்ந்து விழுந்த தலை மயிர்க்கொத்தில் முகச் சிவப்பை ஒளித்து, மௌனமாக நிற்கமட்டுமே முடிகிறது.

பெண்ணே! நீ பிற‌ந்ததே இந்தக் கேள்வியைச் செவியுறமட்டுமே... என்று யா‌ரோ ச‌தா உள்ளே ஜ‌பிக்கிறார‌க‌ள். அவ் வார்த்தைக‌ளின் ம‌ய‌க்க‌த்தில், அந் நினைவின் ம‌ண‌த்தில் எல்லாம் ம‌ற‌ந்து ல‌யித்து நின்றுவிடும் ஆத்மாவில் ஒரு குல்மோஹ‌ர்.

பூத்துக் குலுங்கி நிற்கிற‌து.

அத‌னுடைய‌ இய‌ல்பான‌ இத‌ழ‌விழ்த‌ல் என்னவாகியிருக்கும்..? பெண்மையின் அந்த‌ச் ச‌ல‌ச‌ல‌ப்பு வாழ்க்கையின் ச‌ங்கீத‌மாக‌வே ம‌ல‌ர்ந்திருக்கும‌ல்ல‌வா..? விண்வெளியின் செவிக‌ளிலும்கூட‌ அந்த‌ ஆன‌ந்த‌கான‌த்தின் ராக‌ தாரைக‌ள் சென்று ஒலித்திருக்கும‌ல்ல‌வா..?

ஆனால்,எதுவும் அத‌ன் இய‌ல்பான‌ முடிவை அடைவ‌தில்லையே. விதியின் மாய‌க்க‌ரங்க‌‌ள் எல்லாவ‌ற்றையும் மாற்றித் த‌லைகீழாக்கி விட்ட‌ன‌. எல்லாம் வீழ்ந்து உடைந்த‌ன‌. ஏன் விதியைப் பழிக்க‌ வேண்டும்...?

...எல்லாவ‌ற்றிற்கும் கார‌ண‌ம் நான்தான்.

கொம்ப‌ன் யானைக‌ளைப்போல‌க் க‌ருமேக‌ங்க‌ள் ம‌த‌முற்று நிற்கும் ஆகாயம் மட்டுமே இனி பாக்கி. பேய் மழை எப்போது வேண்டுமானாலும் பெய்யலாம்.

அப்பா திடீரென்று இறந்துபோனார். மரணம் அதன் விருப்பம் போல் வந்து அப்பாவை வருடியபோது அவள் உணர்ச்சியற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். மாரில் அடித்துக்கொண்டு அழவில்லை. மயக்கமாக விழவில்லை. இயக்கமற்றுப் பார்த்துநின்றாள்.

--இனி அப்பா இல்லை. மகளைக் கொஞ்ச அப்பா அறிந்திருக்கவில்லை. வாத்ஸல்யத்தை விளிப்படுத்த அவருக்கு இயன்றிருக்கவில்லை. ஆறாயிரம் காத தூரத்திலிருந்த வெள்ளையர்களின்மேலிருந்த வெறுப்பாக இருந்தது அப்பாவின் மனம் முழுவதும். அதிலிருந்து விடுபட்டபோது, பதிலாக வந்தவர்கள்மேல் திரும்பிவிட்டது. வீரமும் வெறியும் மட்டும் கனன்றுகொண்டிருந்த ஒரு வாழ்க்கையாக இருந்தது. வாழ மறந்துபோன ஒரு மனிதனாயிருந்தார் அப்பா.

ஆனால், அதிசயமென்றே சொல்லலாம்; மரணத்தின் முன்னால் இனமறியாத ஏதோ உந்துதல்போல அப்பா அவளை அருகில் அழைத்தார். மேலிருந்து துவாரங்கள் வழியாகச் சிவப்பு ஒளி வட்டங்கள் விழுந்துகொண்டிருந்த அந்தி வேளை. தோட்டத்து எல்லையிலிருந்த உயரமான கரும்பனையின் கருநிழல் நீண்டு நீண்டு வந்து திண்ணையில் விழுந்து கிடந்திருந்தது. அவள் பக்கத்தில் சென்றபோது, என்னவோ என்று பார்த்தபோது, அப்பாவின் கண்கள் நிறைந்து கவிந்திருக்கின்றன. ரோமம் அடர்ந்த முகத்தின் ஆழங்களில் இரு கண்ணீர்த் தடாகங்கள்.

ஒருபோதும் அழுதிராத அப்பா அழுகிறாரோ?

வெளிறிச் சூம்பிய கரங்களால் அவளை அணைத்துப் பிடித்துக்கொண்டு சிதறிய தொனியில் அப்பா அழைத்தார்.

"என் அதிர்ஷ்டம் கெட்ட...மகளே..." அத்தனை ஜீவராசிகளின் முழு வாத்ஸல்யமும் சிநேகமும் அதனுள் அடங்கியிருந்தன. தொடர்ந்தும் ஏதோ சொல்ல அவ்வுதடுகள் அசைந்தன. ஆனால், எதுவும் வெளிவரவில்லை. ஒன்றும் சொல்லாமலேயே அவ் வாழ்க்கை முடிந்தது.

அவள் மரத்துப்போய் நின்றாள். தங்கையும் தம்பியும் ஓலமிட்டு விழுந்து அழுதபோதும் அவள் மரத்துநின்றாள்.

அவ்வுதடுகளில் துளும்பி நின்ற வார்த்தைகள் என்ன...? கடைசியாக அப்பாவுக்குச் சொல்லவேண்டியிருந்தது என்னவாயிருந்திருக்கும்...?

வருடங்கள் குளம்பு ஒலியுண்டாக்கி, புழுதிப்படலம் உயர்த்திக் கொண்டு கண்முன்னால் கடந்துபோயின. பெருமை பேசும் ஊர்வலங்கள்... பொதுக்கூட்டங்கள்... ஸத்யாக்ரகங்கள்... மறியல்கள்...எல்லாவற்றிற்கும் முன்னால் கதர்த்தொப்பியணிந்த ஆஜானுபாகுவான ஒரு ஆளைக்காணோம். பத்திரிகைகளில் எல்லாம் அவருடைய படம் காணப்பட்டிருக்கலாம். பேச்சுக்கள் அச்சாகி வ்திருக்கலாம். அப்பா!

அன்றும், சிறுமியாயிருந்தபோதே, அவள் பாவாடையும் ஜாக்கெட்டு மணிந்து பையைத் தோளில் மாட்டிக்கொண்டு ஸ்கூலுக்குப் போகும் போது ஜனங்கள் மரியாதையுடன் சுட்டிக்காட்டிச் சொல்வதைக் கேட்டிருநந்தாள்.

"...டைய மகள், தெரியாதா?"

அந்தத் தந்தையின் மகள்தான் இப்படி...

இல்லாவிட்டால் - அத் தந்தையின் பெருமை என்னாயிற்று...? அறிந்து கொள்ளப்படாமல், அங்கீகரிக்கப்படாமல், ஆதரிக்கப்படாமல்... ஆறடி மண்ணில் எல்லாம் அடங்கிப்போயிற்று.

காட்டு எருக்கும், கானாநாரிச் செடிக்கும் மட்டுமே மலர் வளையங்கள் சமர்ப்பித்துத் தலைகுனிந்து நின்ற அம் மயானத்தில் புதிதாக நட்ட தென்னங்கன்றின் இளங்குருத்துக்களை நோக்கியவாறு அவள் அசைவற்று நின்றாள். அத் தென்னையின் அடியில் ஒரு வாழ்க்கை முடிந்து கிடக்கிறது. ஆழ்ந்த நித்திரையில் அமிழ்ந்து கிடக்கிறது. மறதியின் சில்லிட்ட இருளில் மறைந்து கிடக்கிறது.

இப்போதும் அக் கண்கள் நிறைந்து தளும்பிக்கொண்டிருக்குமோ...?

--அப்பா கொஞ்சம் சொல்லுங்கள் கடைசியாகத் தெரிவிக்க வேண்டியிருந்தது என்ன...?

வாழ்க்கையின் சூன்ய பூமிகளில் ஆதரவற்றவர்களாக விட்டுச் செல்லவேண்டி வந்த இக் குழந்தைகளைப் பற்றியோ...? சிறகு முளைக்காத சிறு தம்பியின் எதிர்காலத்தைப் பற்றியோ...? ஒன்றுமே ஆகியிராத தங்கையைப் பற்றியோ...?

வாழ்ந்திருந்தபோது அப்பாவுக்கு ஓய்வு இருக்கவில்லை. மரணத்திலாவது அது கிடைக்கட்டும். உறங்கிக்கொள்ளுங்கள். ஓய்வின் அமைதியில் உறங்கிக்கொள்ளுங்கள். கடைசி நிமிடத்தில் எவ்வளவு முயன்றும் சொல்ல இயலாத அவ் வார்த்தைகளுக்கு நான் இதோ பதில் கொடுக்கிறேன்.

--எல்லாவற்றையும் நான் ஏற்கிறேன். அப்பாவின் நற்பெயரையும், பெருமையையும், தங்கை தம்பியின் வாழ்க்கையையும் எல்லாம் நான் ஏற்கிறேன்.

அப் பிரதிக்ஞையை நிறைவேற்றுவதற்கான பூரணமான ஒரு சமர்ப் பணமாக இருந்தது அதன்மேற்கொண்டு. ஒரே சிந்தனையோடு கூடிய ஒரு பிரயாணம். அப் பிரயாணத்தில் விரும்பிய பலவற்றையும் தட்டித் தள்ளவேண்டி வந்தது. விலை மதிப்பற்ற பலவற்றையும் தூக்கி எறிய வேண்டிவந்தது. அதுவே ஒரு பெண்ணின் மிகவும் பெரிய வாழ்க்கை என்பதுபோல. முடிந்துபோன அந்த தர்மசங்கட முகூர்த்தம் இன்றும் உயிர்த்துடிப்புடன் நினைவிருக்கிறது.

அப்பாவின் மரணச் செய்தியறிந்து பாலச்சந்திரன் ஓடிவந்து சேர்ந்தான். கொள்ளிவைப்போடு சம்பந்தமான எல்லா விஷயங்களையும், உறவினனும் பொறுப்பு உள்ளவனும் போல அவன் விசாரிக்கலானான். அதற்குப் பிறகும் பல சமயங்களில் வந்தான். தன்னுடைய சௌம்யமான பிரசன்னத்தினால் அவன் ஒளியைத் தூவத் தொடங்கியிருந்தான். கண்ணீ்ர் மேகங்கள் நிறைந்த , அவளது தனிமையெனும் பயங்கரம் நிறைந்த இரவுகளில் ஒரு வசந்த பௌர்ணமி போல வந்து சேர்ந்திருந்தான். அந்த நல்தரிசனங்கள் அதிகமாகுந்தோறும், முதலிலேயே பிரச்னைகள் நிறைந்த வாழ்க்கை இன்னும் அதிகமாகச் சிக்கலடையாதோ என்று பயந்தாள். அதனால் வெளிப்படையாகச் சொன்னாள். அன்பும், நட்புறவும், உதவியும் மட்டுமே என்றும் நல்கிய நல்லவனாகிய அம் மனிதனிடம் இங்கிதமின்றிச் சொன்னாள். மென்மையற்ற வார்த்தைகளையே தேர்ந்தெடுத்து மனப்பூர்வமான குரூரத்துடன் சொன்னாள்:

"எனக்கு ஒரு நாளும் திருமணம் கிடையாது."

வெளிறிப்போன முகத்தில் வேதனை தளும்பி நிற்க அவன் சொன்னான்: "எத்தனைநாள் வேண்டுமானாலும் நான் காத்திருப்பேன்..."

பெண்மையின் இயல்பான சாதுர்யமும், யௌவனத்தின் உணர்ச்சி பூர்வமான மோகமும் வந்து கையைப்பிடித்து விலக்கும்முன்பு அடித்துச் சொன்னாள்:

"வேண்டாம், அது வேண்டாம்... எனக்கு ஒருபோதும் திருமணம் நடக்காது. அது நிச்சயம். எனக்காக யாரும் காத்திருக்கவேண்டாம்."

நிஷ்களங்கமான அன்பின் பரந்த மார்பில், ஓங்கியெறிந்த கட்டாரி போல அவ் வார்த்தைகள் சென்று தரித்திருக்கவேண்டும். வேறொன்றும் கூறாமல் போய்விட்டான். வழியில் ஒரு நிழல்கூட விழவிடாமல் போய் விட்டான்.

அதற்குப்பிறகு ஒரே சிந்தனையோடு வாழ்க்கையை ஒரு தவமாக்கிக் கொண்டாள். ஒரு பழைய ஃபைலைப்போல மனத்தை அதனுடைய எல்லாத் தளர்ச்சிகளுடனும் சிவப்பு நாடாவால் இறுகக் கட்டி வைத்தாள். சமுதாயத்தின் நியதிகளையெல்லாம் பின்பற்றி ஒடுங்கி நடந்து, பாதையின் இடது பக்கமாகவே நடந்தாள். 45-75-லிருந்து 50-150-க்கும், 90-200-க்கும் மட்டுமே வழிவிட்டு நடந்தாள். வருடங்களின் படிக்கட்டுகளை மிதித்துத் தள்ளினாள். பணிவான தினங்களின் வாட்டமிகு ஆவர்த்தனங்கள். அதன் நடுவில் செய்து தீர்க்கவேண்டிய பலவற்றையும் செய்து தீர்த்தாயிற்று என்ற ஆத்ம திருப்தி மட்டும் உண்டு. தங்கையின் திருமணத்தை நடத்தினாள். குழந்தைகளும் குடும்பமுமாகத் தொலைதூர நகரத்திற்கு அவள் பறந்துபோனாள். கூட்டில் அடைந்தும் விட்டாள். தம்பியும் ஒரு நிலைக்குவரத் தொடங்கி விட்டான். வீட்டையும் தோட்டத்தையும் இதற்கிடையில் விற்க வேண்டி வந்தது. அதனால் என்ன... கடமைகளின் சுமைகளை ஒவ் வொன்றாகத் தீர்த்து இறக்கியாயிற்று. இனி எதுவும் செய்து தீர்க்க பாக்கி வைத்திருக்கவில்லை.ஆனால் காலம் இதற்கிடையில் தலையில் வெண்பூக்கள் பின்னிவிட்டன. கன்னங்களில் துடிப்பு மாய்ந்து போயிற்று. யௌவனம் கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றுக் கொண்டது. பிரிந்தது. கதிரவன் அடிவானத்தைக் கடந்திருக்கிறான். இதற்கு நடுவே பலரும் நுழைந்து வந்தனர்; பலரும் பிரிந்து போயினர். இரவு பகல்கள், நீண்ட வருடங்கள், இப் பழைய மகளிர் விடுதியின் இருண்ட அறையிலிருந்து செக்ரட்டேரியட் வரையிலுள்ள இடுங்கிய வழியில் இடது ஓரமாக ஒடுங்கி நடந்தாள். எவ்வளவு பேர்கள் கூட்டாளிகளாக மாறிமாறி வந்தனர்.

சுமதி, ஆனி, ராதை, மேரி, இந்திரா, ஸ்ரீதேவி....

ஒவ்வொருவராகப் பிரிந்துபோயினர். ஒவ்வொரு சிறிய குடும்பத்தின்
ஓங்கிய சுவர்கட்குள்ளாக... குலுங்கும் கொலுசுகள் அணிந்த சிறு பிள்ளைகள் ஆரவாரத்துடன் விளையாடும் மண் முற்றங்களை நோக்கி... ஒரு தண்ணீர்விட்டான் கொடியைப் போல மெலிந்து ஒற்றைப் புறாவைப்போல் ஒதுங்கியவளான அந்த மைத்ரேயிகூட ஒரு காதல் திருமணத்தின் தீரத்துடன் வெளியே போனாள். அவர்கள் தாய்மாராயினர். சிலர் பாட்டிமாராகவும் ஆயினர். தமது இல்லற சௌந்தர்யத்தின் சுகமிகு ஆனந்தத்தில் நெருங்கியமர்ந்து சலசலத்துக் கொண்டிருந்த அத் தாய்ப்பறவைகளை, சாதாரண பார்வையாளர் ஒருவரைப் போலப் பார்த்திருந்தாள். அதிருப்திமிகு தாகத்துடன், நிராசையின் இருப்போடு, பரிதாபமிகு களைப்புடன் நோக்கி நின்றாள்.

- நான் மட்டும் காலால் உதைத்து எறியப்பட்டிருக்கிறேன்.

ஆட்கள் வருவதும் இளைப்பாறுவதும் பிரிவதுமான ஒரு தங்குமிடத்தில் இருள் அடரும் நேரம் மாதிரியிருந்தது அவருடைய வாழ்க்கை! அதே ஒற்றையடிப் பாதையோடு ஆஃபீசுக்கும், திரும்பி விடுதிக்குமாயுள்ள ஒரு நடை இடைவிடாமல் தொடர்ந்து கொண்டேயிருந்தது. முற்றுப்புள்ளியற்ற ஒரு வாழ்க்கைச் சக்கரம் போலத் தானே
நிர்மாணித்த சிலந்தி வலையில் சுற்றிச் சுழல்கிறாள்! வறுமையின் சிலந்தி
வலையிலேயே எல்லாம் முடிகிறது...

நினைவுகளின் முன் மலர்த்தட்டு ஏந்தி நின்ற அந்த குல்மோஹர் மட்டும் உள்ளே கண்ணீர் அருவிகளை உண்டாக்கிற்று. இக் கண்ணீர் அருவியின் கரையில் ஒருநாளும் மலராத குல்மோஹரின் கீழே யாரையும் எதிர்பாராமல் தனித்துக் காத்திருக்கிறாள்.

எனக்கு ஒருபோதும் திருமணம் ஆகாது.

எனக்காக யாரும் காத்திருக்க வேண்டியதில்லை.

இறந்த காலத்தின் நடைபாதைகளில் தானே சிதறித் தூவிய அம்முட்கள் நினைவின் காலில் குத்தி இரத்தம் சிந்துகிறது. வேதனை உண்டாக்குகிறது.

- பாலச்சந்திரன். ஆஷாட மாதத்தின் முதற் பூவைப்போல உன் இதய நறுமணத்துடன் நீ ஏன் என்னை எழுப்பிவிட்டாய்? காலம் உன் கண்ணீரைத் துடைத்து விட்டது. என் கண்ணீர்...?

பாலச்சந்திரனைப் பார்ப்பதுண்டு; மனப்பூர்வமான முயற்சிசெய்து தன்னுடைய செக்‌ஷனை மாற்றிக்கொண்டு போன பிறகும் சில நேரங்களில் ஒருபோதும் எதையும் நினைவுபடுத்தவில்லை. நட்பின் புன்னகையை மட்டும் அளித்துப்போனான். ஆனால், பார்த்தபோதும் பார்க்காதபோதும் அவன் லாபநஷ்டங்களின் துக்கமயமான நினைப்பை உண்டாக்கினான். தீவிர வேதனையின் தீ நாக்காகக் கொழுந்துவிட்டான்.

அவன் திருமணம் செய்துகொண்டான். தகப்பன் ஆனான். வாழ்க்கைப் பயணத்தில் வெகுதூரம் முன்னேறினான். ஆனாலும், இனமறியாத ஏதோ ஓர் சக்தி எந்நாளும் அவளை அவன் பக்கமாகக் கவர்ந்தது. அவனுடைய வாழ்க்கையைப்பற்றியும், சந்தோஷத்தைப் பற்றியும் எப்போதும் கவலைமிகு பரபரப்புடன் மௌன விசாரிப்பு நடத்தினாள். ஏக்கம் நிறைந்த ஆசையுடன் மனம் அவள் பின்னாலேயே சென்றது. எப்போதும் மௌனமாகப் பிரார்த்தித்தது.

- அவனுக்குக் கடவுள் கருணை காட்டட்டும்.

அவனுடைய குடும்பத்துடன் பரிச்சயமாயிற்று. மெல்ல அக்குடும்பத்தின் ஒரு பார்வையாளரானாள். அக் குழந்தைகளின் விளையாட்டுத் தோழியும் அன்பிற்குரியவளுமானாள். அக் குழந்தைகளைக்கட்டியணைத்து முத்தமிட்டபோது மட்டும் நெஞ்சில் தாய்மை சுரந்தது.

ஆனால், அவ்வுறவுகளைப்பற்றி ஜனங்கள் கட்டத்தொடங்கிய கதைகள் எதையும் அவள் அறியவில்லை. மயிர் நரைக்கத்தொடங்கிய மத்ய வயதுக்காரியான இப் பழைய அப்பர் டிவிஷன் கிளார்க்கின் புதிய உறவைப்பற்றி ஏராளம் கதைகள் சொன்னார்கள். அவளறியாமல் அவள் வம்புக்குப் பாத்திரமானாள். இளைஞர்களான புதுப்பணியாளர்களுக்கு, ஒரு நடுவயதுக்காரியின் சிரிப்புக்கிடமான சபலம், சூடான வம்பாயிருந்தது. போனி டெயில் கட்டி, லிப்ஸ்டிக் தடவி, மெல்லிய நைலான் துணிக்கடியில் தத்தம் உடம்பின் பூகோள சாஸ்திரத்தைக் காட்டி நடந்த யுவதிகள், 'வெயிட்டிங் ரூமில்' அவளைக் கண்டால் தமக்குள் கிசுகிசுத்தார்கள்.

"கிழவிக்கும், கிழவனுக்கும் ஒரு காதல்...." தங்கள் வயதுக்குச் சுமக்க முடிந்ததற்கும் அதிகமான கதைகளைத் தாமே நடத்திக் காட்டியிருந்த அந்த யுவதிகள் மூக்கு முழி வைத்துப் பரப்பினார்கள்.

"அங்கேயேதான் தங்கியிருக்காளாம்."

"ஒருநாள் ரெண்டு பேரையும் கன்யாகுமரியில் பார்த்ததாக என் கஸின் சொன்னான்."

"இத்தனை வயசானப்புறமும் வெட்கமில்லையே, அதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு."

அவள் இதையொன்றும் அறிந்திருக்கவில்லை. நேற்றுத்தான் முதன் முறையாகக் கேட்க நேர்ந்தது. நேற்று முதல்முதலாகக் கேட்டபோது நடுங்கிச் சிதறிப்போனாள். குரூரமான ஓர் விதியின் விளையாட்டுபோல பாலச்சந்திரனிடமிருந்து அதை அறிய வேண்டி வந்தது.

எல்லாம் பழைய பின்னணியிலேயே நடந்தது. ஆஃபீஸின் பின்புறம் அந்தி வெயிலின் பொன்னொளியில் மூழ்கிக் கிடந்தது. மைதானத்திலிருந்து காற்று 'ஓ'வென்று வீசியடித்துக்கொண்டிருந்தது. எதிர்பாராமல்தான் பாலச்சந்திரனைப் பார்த்தாள். அரங்கமும் கதா பாத்திரங்களும் எல்லாம் முன்போலத்தான். நடிக்கவேண்டிய பாகங்கள் மட்டும் தமக்குள் மாற்றிக்கொள்ள வேண்டி வந்திருக்கிறது.

"என் குடும்ப வாழ்க்கையைத் தகர்க்காமலிரு சாரதா, நீ விரும்பியதுபோல நானே விலகிப்போனேன்... எனது இவ்வழியிலாவது ஒதுங்கிப் போக என்னை விடமாட்டாயோ..."

ஸ்தம்பித்துக் கேட்டிருந்தாள். உணர்ச்சியற்றுக் கேட்டிருந்தாள். ஒரு வார்த்தை கூட வரவில்லை. உள்ளே சுழல்கள் சுற்றிச் சுழன்றன. மலர்கள் விரிந்து வெடித்துச் சிதறின. நுங்கும் நுரையும் கலந்து கலங்கிக் குழம்பின. நீண்டு விழுந்த தன் நிழலை ஊடுருவிக்கொண்டு களைப்புற்ற அவன் நடந்து போவதைப் பார்த்தவாறு பிரமித்து
நின்றாள்.

எங்கும் யாரும் இருக்கவில்லை. கொண்டையுயர்த்தி நின்ற மலை வாழைகள் இல்லை. பூத்து நின்ற குல்மோஹர் இல்லை. இளமையின் அரும்பொருளான மந்தஹாஸத்துடன் நின்ற யூஃபர்ஸியாக் கொடிகளில்லை. பழங்கதையை நினைவுபடுத்த யாருமில்லை. வெற்றான ஆகாயம் மட்டும் இடியுண்டாற்போலிருந்தது. காலம் இயக்கமற்றுப் பார்த்திருந்தது. முன்பு கொண்டையுயர்த்தி நின்ற மலைவாழைகளின் பின்னணியில், பூத்து நின்ற குல்மோஹரின் இடத்தில் புதுக்கட்டடங்கள் கட்டுவதற்காகக் கொண்டுவந்து தள்ளிய கருங்கல் ஜல்லிகள் குன்றாகக் கிடக்கின்றன.

கருங்கல் ஜல்லிகள்! தத்தம் கனவுகளுடன் மகிழ்ச்சி நிறைந்த கற்பனைகளில் மயங்கியிருந்த அப் பூக்கள், இக் கருங்கற்களின் கீழே நசுங்கித் தேய்ந்து கிடக்குமாயிருக்கலாம்...

நசுங்கித் தேய்ந்த மனத்துடன் இரவு முழுவதும் கிடந்து அழுதாள். இமையை மூடக்கூட முடியாமல் தேம்பியழுதாள். எல்லாம் தகர்ந்து போயிற்று. தாறுமாறாயிருக்கிறது... உறங்காத இரவின் கரிய ஜாமங்களில் திடமான முடிவ செய்தாள். காலையில் ஆஃபீசுக்குப் போனதும் தம்பிக்கு ஃபோன் பண்ணவேண்டும்.

மாலையில் ஹாஸ்டலுக்கு வா, கட்டாயம் வரவேண்டும், வந்தே தீர வேண்டும்.

அப்புறம் அவனிடம் சொல்வேன்: "இயலாது, எனக்கு இனிமேல் முடியாது. இயன்றதற்கு மேலேயே தாங்கியாயிற்று. செய்ய வேண்டியதற்குமேல் செய்தாயிற்று. இதோ, இப்போது தளர்ந்துபோயாயிற்று. எனக்கு இனிமேல் வேலை செய்ய முடியாது. நீ விரும்பினாயில்லையா... அதுபோல நான் ராஜினாமா செய்துவிட்டேன். எங்கேயாவது போகலாம். நான் இதோ தயார்"

ட்ரெயினிங் முடிந்து வந்த பிறகு அவன் அடிக்கடி சொல்கிறான்: "எதற்காக இந்தக் கேடுகெட்டவேலை இனிமேல்? விட்டுத்தொலை. பெரியக்கா... உன்னையும் சேர்த்துக் காப்பாற்றத் தேவையான பணம் எனக்குக் கிடைக்கிறதே"

உலகம் தனக்கு மட்டும் அநீதி இழைக்கிறது என்ற வேரூன்றிய நினைப்புடன் பார்த்ததினாலும், தான் கருப்புக்கண்ணாடி வழியாகவே நோக்கியதாலும் அப்போதெல்லாம் நினைத்துக்கொண்டாள்.

--ஒரு ஐ.பி.எஸ். காரன் தன் தமக்கை ஒரு வெறும் குமாஸ்தா என்று சொல்லிக்கொள்ள வேண்டியிருப்பது அவனுக்கு இப்போது அவமான கரமானதாக இருக்கிறது. அவனுக்கு வந்துகொண்டிருக்கும் பெரிய திருமண ஆலோசனைகளுக்கும், உயர்ந்த குடும்ப சம்பந்தங்களுக்கும் முன்னால் அக்காவின் வேலை அவனுக்குக் கேடுகெட்டதாக இருக்கிறது! மோசமானதாக இருக்கிறது! அவனுடைய ஸ்டாட்டஸுக்குக் குறைவுண்டாகிறது. ஒருவேளை அந்த ஆலோசகர்களே அதைச் சுட்டிக்காட்டி யிருக்கக்கூடும். உன்னுடைய இந்த ஐ.பி.எஸ். ஸைச் சம்பாதித்துக் கொடுத்தது அக்காவின் இந்தக் கேவலமான வேலையின் குறைந்த சம்பளம்தான் என்பதை நீ புரிந்துகொள்வதில்லை. உன்னுடைய போலி கௌரவத்தின் களங்கத்தை மறைப்பதற்காக, தயாளமான இந்த யோசனை. ஆனால், எனக்குப் புரிகிறது.

இன்னொரு பயமும் இருந்தது. தம்பி மணம் செய்துகொண்டு குடும்பஸ்தனாகும்போது, தான் அங்கும் ஒரு அதிகச் சுமை ஆகிவிட மாட்டோமா? அக் குடும்ப சங்கீதத்தில் ஒரு அபஸவரமாக ஆகிவிட மாட்டேனா? மிகவும் அபூர்வமாகவே கிடைக்கும் தங்கையின் கடிதங்களில் மட்டுமே இருப்பதாகத் தோன்றும் அந்த இரக்கம், தயவு, இவ்வுணர்ச்சிகளை மட்டும்தானே அதன்பின் கடைசிவரை எங்கேயும் எதிர்பார்க்க வேண்டியிருக்கும்.

பாவம் பெரியக்கா! யாருமில்லை. போக இடமில்லை. எதையாவது சொல்லிக்கொண்டிருப்பாள். நீ கொஞ்சம் பொறுத்துக்கொள்ளக் கூடாதா"

எதிர்காலச் சிந்தனையை வெளிக்காட்டாமல், அவனுடைய யோசனையைப் பெரிதாக எடுத்துக்கொண்டதாகக் காட்டிக் கொள்ளாமலும் சொன்னாள்:

"என்னவானாலும் இத்தனை காலமும் ஆயிட்டுதே..... வேற கஷ்டம் ஒண்ணுமில்லியே. முடியாதுண்ணு தோணுறபோது விட்டுடலா மில்லையா."

ஆனால் இதோ இப்போது விலங்கு இறுகிவிட்டிருக்கிறது. கதிகெட்டிருக்கிறேன். இனிமேல் திறந்துபேசினால்தான் திருப்தியாகும்.

-முடியாது தம்பி, கொஞ்சமும் முடியாது. நான் சோர்ந்து போயிருக்கேன். வெளிப்படையான ஏளனத்தையும் திட்டையும் விட வேறெதுவும் பரவாயில்லை.

ஆனால் காலையில் ஆஃபீசுக்குப் போகவேண்டி வரவில்லை. ஃபோன் செய்யவேண்டி வரவில்லை. அதற்கு முன்பே அவன் வந்து சேர்ந்தான். தம்பி வந்திருக்கிறானென்று தெரிவித்தபோது, மாடிப்படிகளிலிறங்கிக் கொண்டே நினைத்தாள்:

- கடவுள் எல்லாவற்றையும் முன் கூட்டியே அறிந்திருக்கிறான். அவனை முன்னாலேயே சொல்லி அனுப்பியிருக்கிறான்.

ஆனாலும் கண்டவுடன் பதறிப்போனாள். வழக்கத்திற்கு மாறாக உத்யோகவேஷத்தில், வேலை அவசரத்திற்கிடையில் பாய்ந்து வந்தாற்போல, முகம் தீஜ்வாலைபோல சிவந்து ஒளிர்கிறது. திக்பிரமை தெளிவதற்கு முன்பே இடி முழங்கியது.

"நீங்க என் சகோதரின்னு சொல்லிக்கவே வெட்கமாயிருக்கு. தலை நிமிர்ந்து நடக்கமுடியலை. வெட்கம் மானமில்லாத....கஷ்டம்!!... நான் உங்க தம்பியில்லை. உங்களோடு எனக்கு எந்த உறவுமில்லை. அந்த கிழவன் அஸிஸ்டென்ட் ஸெக்ரட்டரியின் வைப்பாட்டியாகவே இருந்துக்குங்க...."

இயக்கமற்று நின்று கேட்டாள். கண்ணீர் இல்லாததனால் அழவில்லை. நாணமும் மானமும் இல்லாதவள்தானே. அதனால் தலை குனியவில்லை.. உணர்ச்சியற்று நின்று கேட்டாள். சொன்ன கையோடு அவன் வெளியே போனான். - ஒரு புயற்காற்று மாதிரி.

குழந்தைப்பருவத்திலிருந்தே அவன் முன்கோபி. எகிறிக் குதிப்பவனாயிருந்தான். பொறுமையற்றவனாயிருந்தான். ச*கிப்புத்தன்மை யற்றவனாயிருந்தான். ஆனால் எப்போதும் அவன் பலவீனனாயிருந்தான்.

அஸிஸ்டென்ட் ஸெக்ரட்டரியின் வைப்பாட்டி!

- இவ் வார்த்தைகளை என் முகத்தைப் பார்த்துச் சொல்ல உன்னால் எப்படி முடிந்தது குழந்தாய்!

அவளுடைய கையில் படுத்துவளர்ந்தவன் அவன். அவள் ஊட்டிக் கொடுத்தே சாப்பிட்டவன். அவளுடைய தாலாட்டைக் கேட்டு உறங்கியவன். அவள், தாயும், அண்ணனும், அக்காவும் எல்லாமா யிருந்தாள். அன்போடு வளர்த்தாள். எதையும் எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கையிலிருந்து எதுவும் எதிர்பார்க்கக் கூடாதென்ற கசப்பான உண்மையை வெகு சிறுவயதிலேயே கற்றிருந்தாள் அல்லவா. ஆனால்
இது... இது....

குரூரமான இக் குத்தல்... இதை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ஆறுதலைத் தேடிவந்தபோது, தேறுதலைத் தேடி ஓடி வந்தபோது... "உங்களுடன் எனக்கு இனி எந்தவித உறவுமில்லை"

எல்லாம் எவ்வளவு சுலபத்தில் முடிந்துவிட்டது. வெறும் நீரில் வரைந்த கோடுகள் போல... கடந்த காலத்தின் கதவுகளை அடைத்துப் பூட்டுவது இத்தனை சாதாரணமான செயலா?

மனம் பட்டுச்சேலையும் தறித்துணியும் உடுத்து வெளியே ஓடிற்று.; இடுப்புச் சலங்கையும் அரைச் சதங்கையும் குலுக்கிக்கொண்டு ஓடிற்று; இளம்பருவத்தின் பசுமையான பள்ளத்தாக்குகளை நோக்கி. அங்கே எண்ணற்ற பூக்களிருந்தன. அப் பூக்களைப் பறிக்க விருவிருப்பாக நடந்தாள். பூவே! உதிர்! என்று கூவியழைத்தாள். காலில் முள் குத்தினால் என்ன...? கையில் கீறல் விழுந்தாலென்ன...? திரும்பி வந்த போது கூடை நிறையப் பூக்கள் இருந்தன. அப் பூக்களைப்போலவே மலர்ந்த முகமும்.

ஆனால் எல்லாம் எவ்வளவு சட்டென்றே வாடிக்கருகின. பூஜையறையின் வாயிலில் கொண்டுவைத்தபோது பாட்டி சொன்னாள்: "இதெல்லாம் பூஜைக்கு உபயோகிக்காத பூக்களாச்சே மகளே..?

ஒன்றுக்குக்கூட பூத்தட்டில் இடம் கிட்டவில்லை. முற்றத்துமூலையில் குப்பையில் கிடந்து அவை வாய்விட்டு அழுதன. பிறகு வாடிக் கருகின.

--பூஜைக்கு உதவாத பூக்கள்!!

வருடங்களின் வேதனை உறைந்துபோன இதயத்துடனென்ற போதிலும் சாந்தமகாவே கேட்கிறேன் பாட்டி.. எரிச்சல் கொஞ்சமுமின்றிக் கேட்கிறேன் பாட்டி...

-அன்று அவ்வார்த்தைகளைச் சொன்னது அன்பு நிறைந்த அந் நாவால்தானோ...? அல்லது இருண்ட எதிர்கால விதியின் கரிநாக்காலோ..?

ஆகாய‌த்தின் ஆழ்ந்த‌ இருளிலிருந்து ஒரு சாப‌க்கேட்டைப்போல‌ அவ் வார்த்தைக‌ள் வாழ்க்கையில் வ‌ந்து விழ்ந்திருக்கின்ற‌ன‌.அழுந்த‌ச் சுட்டுச் சிரிக்கின்ற‌ன‌. க‌ருக்கி அரிக்கின்ற‌ன‌.

-பூஜைக்கு உத‌வாத‌ பூ நான்தான் பாட்டி!...நானேதான்... யாருக்கும் தேவையின்றி எதற்கும் உப‌யோக‌மில்லா‌ம‌ல் இதோ வீசி எறிய‌ப்ப‌ட்டிருக்கிறேன்.

பூஜைக்கு வேண்டாம்.

பூசாரிக்கு வேண்டாம்.

வாழ்க்கையின் குப்பையில் கிட‌ந்து அழுகிறேன்.வாடுகிறேன்...
-----------------------

5. பாம்பு


வார்னிஷின் ஈரம் உலர்ந்திராத ஜன்னல் கம்பிகளினூடே ஊடுருவும் திருவாதிரை நிலவொளி, பனியில் தோய்ந்த இன்னொரு மஞ்சள் நிறக் குவியலாயிற்று. கூடவே ஜன்னலின் வலைத்துவாரங்களினூடே வட்ட நிழல்களும் சேர்ந்து வந்து விழுந்தபோது, காவிநிறம் பளீரிட்ட நிலத்தில், கை வண்ணத்திலும் காவிய அலங்காரத்திலும் சூர்யகாந்திப் பூக்களின் வழிவந்த ஒரு அழகு தரிசனம்.

"வின்ஸென்ட்" - கையெழுத்து மட்டுமில்லை.

யாருடைய காலடியோசை கேட்கிறது? சரிவாக வைத்த ஒரு மூடித் தேங்காய் போல முகத்தில் கட்டை மயிரடர்ந்த ஒரு குள்ள மனிதன்., தன்னுடைய காதை அறுத்துக் காதலிக்கு சமர்ப்பித்த பைத்தியக்காரன் வான் கோ(க்), இல்லாத காதின் பாதியையும் இறக்கியணிந்த ஃபெல்ட் தொப்பியில் மறைத்து வைத்து, ஏதோ சொல்லிவிட்டுப் போகிறான்.

வாழ்த்துக்கள் என்றா? வருந்துகிறேன் என்றா? நிலவில் விரியும் சூர்யகாந்திப் பூக்கள்! நீ கவனித்தாயோ? அவன் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

மனத்தின் மாயா மோகங்கள்.

வேதனையில் குழைத்த ஆன்ம சர்ச்சையே வான் கோவின் கலை. நான் எனக்குள்ளேயே முனகும்போது எனது பாட்டைப் பாடுகிறேன். என்னுடைய வண்ணக் கலவைகள் இழைபிரிந்து நாட்டியமாடுகையில் எது சித்திரங்கள் உருவம் கொள்கின்றன. கலை, ஆன்மவெளிப்பாடு என்கிற தத்துவம் பாதித் தவறு. எல்லாக் கலைகளும் ஆன்ம சர்ச்சைகள் என்பதே முழுக்க சரி.

அவன் ஆன்ம வாதத்தில் பேரார்வமுற்றவன். கலைஞனாக வேண்டு மென்ற ஆவலினாலல்ல. அது அவனுடைய இயல்பு. சுரப்பதைவிடப் பாலை அதிகமாக உள்ளே உறிஞ்சும் ஒரு பசுவின் மடியப்போல மண இரவிலும் விசித்திரமான இந்த சுபாவத்திலிருந்து அவனால் தப்ப முடிய வில்லை. புதுப்பெண் கட்டிலில் படுத்திருக்கிறாள். மணவாளனோ நான்கு குதிரைகளைப் பூட்டி மனோராஜ்யத்தில் சஞ்சரிக்கிறான்.அந்த சஞ்சாரத்தினிடையில் கண்ணில் படும் காட்சிகளோடு அவன் சல்லாபிக்கிறான். மனித மனத்திற்கு மூன்று போக்குகள்: நம்பிக்கை, குழப்பம். ஊச‌லாடும் தன்மை. ஃபெய்த், ஃபான்ட‌ஸி, ஃப்ராக்மென்டட்னஸ்.

ஒவ்வொருவருடைய பெர்ஸனாலிட்டியும் இந்த‌ குணங்களின் ஏற்ற‌ இறக்கங்களைப் பொறுத்திறுக்கும். குழப்பமும் ஊசலாடும் தனமையும் அவனிடம் நிறைய உண்டு. நம்பிக்கையின் சிறிய பங்குதான் உண்டு. அதனால் அவன் சந்தேகப் பிராணியாகவும் சிதறிச் சிந்திக்கும் தன்மை பெற்றவனாகவும் ஆனான்.

மனத்தத்துவ ஆராய்ச்சியாளர்களின் சித்தாந்தத்தை அவன் ஒரு போதும் ஆதரித்ததில்லை. ஆகாயக் கோட்டைகளை உருவாக்குவதற்கு பதில் இந்தப் புண்ணியவான்கள் பாதாளத்தில் கிணறு வெட்டுகிறார்கள். உண்மையின் உன்னதங்களில் தேவதை என்பது போல, மனத்தின் ஆழங்களில் பிசாசுகள் கூடமைத்துப் பார்க்கின்றன போலும். தாய் நாட்டில் வெந்துலர்ந்த நாகரிகத்தின் சுமையோடு வியன்னா நகரின் தெரு வீதிகளிலும், ஆஸ்பத்திரி வராந்தக்களிலும் அலைந்து திரிந்த ஸிக்மண்ட் ஃப்ராய்டுக்கு அவ்வாற‌ன்றி வேறுவிதமாக யோசிக்க முடிந்தது. முதல் பாவத்தின் புள்ளிக் குத்துக்கள், யஹோவாவைப் புறக்கணித்த அந்த யூதனுடைய ஆத்மாவின் அடுக்குகளாகவும், ஒவ்வொரு அடுக்கிற்கும் ஒவ்வொரு மூடியுமாகப் பரிணமித்தன‌

யுங்?

மற்றொரு கள்ள நாணயம்!

மனத் தத்துவத்தில் கொஞ்சம் கீழைநாட்டுச் சிந்தனைகளையும் கலக்கி
ஊற்றினார். வெண்கல ஓட்டால் செய்த இந்தக் கள்ள நாணயங்களைப்
பாக்கெட்டில் இட்டுக் குலுக்கி, கலைஞர்கள் வியாபாரம் செய்கிறார்கள்.
மூல உருவங்களென்று முழங்கி விமரிசகர்கள் விமரிசனம் சமைக்கிறார்கள். முதல் பாவத்திலிருந்து முதல் உருவத்திற்கு அதிக தூரமில்லையென்று அறிந்துகொள்ளுங்கள்.தரித்திரம் பிடித்தவர்கள்! மனித‌ இதயத்தின் ஆழங்களில் முட்டையிட்டுப் பெருகும் முதலைக் குட்டிகளின் கொட்டாவியைப்போல கலை!

கரையை எட்டாமல் திரும்பிப் போகும் அலைகளைக் குறித்து உனக்கு ஏதேனும் தெரியுமா? தாங்கள் பளபளக்கையிலும் கண்களில் இருள் சூழும் தாரகைகளின் துக்க சங்கீதம் கேட்டதுண்டா? அவ்வளவெல்லாம் ஏன், நீங்கள் விஸிலடிக்கையில் உதட்டிலிருந்து உதிரும் வெப்பத் தினால் சுற்றிலுமுள்ள புற்கொடிகள் வாடுவதைக் கவனித்ததுண்டா?

என்னவாக இருக்கும் காரணம், கல்யாணச் சடங்குகள் கழிந்து மண மகளின் அறையில் பிரவேசித்த உடனேயே முதல்முதலாகச் சூர்ய காந்திப் பூக்களின் பகற்கனவு மயக்கத்தில் ஆழ்வதற்கு! குழப்பம்? சிதறல் மனப்பான்மை? அவன் சூர்யகாந்திப் பூவும், அவள் சூர்யனுமோ? அவளுடைய ஒவ்வொரு அசைவையும் அனுசரித்து நகர வேண்டிய ஒரு காய் மட்டுமே தான் என்பதோ குறிப்பு?

நிழலும் நிறமும் இணைத்திட்ட கோலங்களில் சில அசைவுகள் , சற்று தூர பந்தலிட்டு நிற்கும் புளி மாவின் இலைகள் காற்றிலாடுகையில் நிழல்கள் சூர்யகாந்திப் பூக்களின் கன்னங்களை வருடுகின்றன. அக் காட்சியைக் கண்டபோது அவனது நினைவு, இளம்வெயிலில் குளித்த ஒரு மணிநாகத்தைப் போலச் சற்று நேரம் தலையுயர்த்தி நின்று, ஒன்றிரண்டு முறை குலுங்கியாடி, கரையும் மின்னொளி போல மற்றோரிடத்திற்கு ஊர்ந்து போயிற்று. மாவிலைக்கு இஸ்திரிப் பெட்டியின் மூக்கினுடைய சாயலுண்டு. அயர்ன் பாக்ஸின் மூக்கு! இது ஒரு பிரமாதமான உதாரணமாயிற்றே!

முகத்தில பாலுண்ணி கொண்ட அக்கா, வியர்வைத் துளிகளைச் சுண்டு விரலால் துடைத்து வழித்து, சிவப்பும் கருப்பும் சிறுசிறு புள்ளிகளிட்ட ப்ளவுசுக்கு இஸ்திரி போடுகிறாள்,. இஸ்திரியோ, இஸ்தினியோ, என்ன மண்ணானாலும் சரி, அவன் சிரித்தான்.

அக்கா, அக்கா, காக்கக்கா.
மரத்தின் கீழே தவளைக்கா.

அக்கா ஒரு நாள் அவனையும் தூக்கிக்கொண்டு சிநேகிதிகளுடன் சோறு சமைத்து விளையாடுகையில் அவள் உரக்கக் கூறிய வார்த்தைகள், செங்கொட்டை மரத்தின் கிளையில் ஒரு காகமும், அடியில் ஒரு மரத் தவளையும் இருந்தன. பிற்பாடு அவனை இடுப்பில் வைத்து நடக்கும் போதெல்லாம் அவன் அவ்விரு அடிகளையும் பாடிக்கொண்டிருந்தான். அவனது முதற்கவிதை. அது எதுவென ஆராய, நோட்டுப் புத்தகமும் துண்டுப் பென்ஸிலுமாகப் பேட்டி காண்பவர் வரும் நல்ல நாளெதுவோ?

அக்காவுக்கு இறகுகளும் தூவல்களும் முளைத்து முற்றி்த் தழைத்த போது வேலிக்கருகிலிருந்து ஒரு பூவன் கோழி கொஞ்சிக் கூவியது. ஒரு கர்சீப் ஆசாமி, வைத்யன் அறிவித்தான்: தலைமயிரை முடிந்து இறுக்கிப் பிழிந்து இழுத்தால் பாலுண்ணி உதிரும். அம்மா சொன்னாள்: "என்னருமை வைத்யரே, அது அவள் முகத்தழகு. பிய்க்கவும் வேண்டாம்; படரவும் வேண்டாம். அது இதயத்தின் காரியம். அஷ்டாங்க ஹிருதயத்தினுடையதல்ல". அயலார் லட்சணம் சொன்னார்கள்: பாலுண்ணி குன்றிமணிக்கொட்டையளவாகையில் அவளுக்கொரு மணவாளன் வருவானே, ஒல்லியும் பலவானுமான ஒரு அரும்பு மீசைக்கார நாயர்! கொஞ்சம் தூர நின்று பார்த்தால் அக்காவின் மூக்குப் பாலுண்ணி அவளணிந்த நீலக்கல் மூக்குத்தியா மெனத் தோன்றும். முக்கியமாக, கொன்னைகள் பூக்கும் நேரங்களில்; காயலோரங்களில் கரிமீன் கூட்டங்கள் புஞ்சை நிலங்களில் புரண்டு தாவும் வேளைகளில். அவன் கல்லூரி பூட்டி ஊருக்கு வந்த சமயத்தில் தான் அவள் முதன்முதலாக அத்தானின் கண்ணில் பட்டாள். மேட மாதத்தில் வேஷ்டி மடியைச் சுற்றிக் கட்டி, கையிலொரு பனையோலை விசிறியுடன், விஸிலடித்துக்கொண்டு, நாட்டுப்புறத்தின் சந்துகளிலும் குளக்கரைகளிலும் சுற்றி நடக்கும் காலம். கல்யாணப்பேச்சு, நிச்சயதார்த்தம், கல்யாணம் எல்லாம் சிக்கெனத் தீர்ந்தன. தீ பறக்கும் மேட மாதம் கழிந்து இடவப் பாதியின் இடியும், மின்னலும், மழையும் கூடிய போது அண்டை வேலிக்குப் பக்கத்தில் வந்து நிற்கும் மீசைக்கார இளைஞன் அவனது அத்தானாகிவிட்டான். அப்படி நேர்ந்தபோது எதற்காகவோ இவனுக்குக் கோபம் வந்தது. அக்காவின் பொன் வண்டை அவன், "அந்த ஆசாமி" என்று மட்டுமே குறிப்பிட்டான்.

"அந்த ஆசாமி இல்லேடா" அம்மா சொன்னாள் ,"ஒன் அத்தான்"
"ஊகும்! அத்தான் இல்லை. அக்காவின் சம்பந்தக்காரன்"

அக்காவின் மூக்குப் பாலுண்ணி மூக்குத்தியல்லவென்று அவன் புரிந்து கொண்டிருப்பான். ஆனாலும் அதை உரித்தெறிய அவனும் விரும்பவில்லை, அவளது அதிருஷ்டம் அவனுடையதுவும். அரும்பு மீசைக்காரனுக்கு அரிசிப் பாலுண்ணிக்காரி.ஃபெய்த், ஃபான்டஸி, ஃப்ராக் மென்ட்டட்னஸ்!

அக்காவின் கல்யாணம் தடபுடல்பட்டது. அன்று காலையில் வழக்கத்திற்கு மாறாக அவனையும் அழைத்துக்கொண்டு அவள் கோயில் குளத்தில் குளிக்கப் போனாள். படித்துறையில் அவனும், அக்காவும், மஞ்சள் பாவுபோலப் பூ மலர்ந்த மரக்கிளையில் மூக்கை உராயும் இரண்டு நாரைகளும் மட்டுமே

அக்கா முதலில் அவனைக் குளிப்பாட்டினாள். அவன் ஓரமாக நின்றான். அவனது ஈரக்கோவணத்திலிருந்து நீர்த் துளிகள் சொடியொழுகிப் புல்நுனியில் விழுந்தன.

"நான் போயிட்டா ஒனக்குக் கஷ்டமாயிருக்குமில்லே?" மார் முழுதும் சோப்பு நுரை பொங்கும் அவளது கேள்விக்கு அவன் பதில் கூறவில்லை. அவனது கண்கள் சட்டென்று புற்கொடியிலிருந்தவொரு சிவப்பு எறும்பின் பக்கம் திரும்பின.

"நீ ஒரு கடிதமெழுதினா நான் ஒடனே வருவேன். வரும்போது உனக்கு ஏதாவது கொண்டும் வருவேன். "

அவன் சிரித்தான்.

ஆனால் அவன் அக்காவுக்குக் கடிதமே அனுப்பவில்லை. எழுதிய கடிதங்களைக் கிழித்தெறிந்தான். கிழித்தெறிந்த கடிதங்களின் வரிகளை நினைத்துச் சிரித்தான். அவள் வாக்குறுதி கொடுத்த "ஏதாவது" கொண்டு வந்ததுமில்லை.

அதிருஷ்ட அடையாளமான பாலுண்ணி அலங்கரிக்கும் மூக்கு மட்டுமல்ல; அழகு திகைந்த வெண்மையான நீண்ட மெலிந்த கைவிரல்களுமுண்டு அவனுடைய அக்காவுக்கு. கல்யாணத்தின் மறுநாள் அவளுடைய விரலில் கிடந்த மோதிரத்தின்மேல் அவனது திருஷ்டி விழுந்தது. மோதிரத்தின்மேல் ஒரு எழுத்து பி.

"என்ன இது பி?"
அவனுக்குத் தெரிந்தும் அதை விசாரித்தான்.
"பஃபூன்"
அக்கா சிரித்தாள். அவனும் சிரித்தான்.

"இல்லை புல் டாக்" அவன் திருத்தினான்.
"போப்ளோப்ளோ" அவள் குரைத்தாள்.

அவன் புள்ளி நாயைப்போலப் பல்லிளித்துக்காட்டினான். சட்டென்று அவனது அக்கா அவனைக் கட்டியணைத்தாள். அவள் அழுதாளோ? அப்படியானால் எதற்காக?

இப்போது தனது கைவிரலிலும் ஒரு மோதிரம். மோதிரம் இட்டவள் கட்டிலில் சுவர்ப்பக்கம் திரும்பிப் படுத்திருந்தாள். மோதிரத்தின்மேல் "எஸ்" என்ற எழுத்து இருக்கிறது. எழுத்து செதுக்கலின் பின்னணி நிறம் நீலமல்ல, மெஜன்டா.

நாளைக்காலையில் அக்கா வந்து எனது விரலில் கிடக்கும் மோதிரத்தில் செதுக்கியிருக்கும் எழுத்தின் பொருளென்னவென்று ஆராய்ந்தால் நானென்ன சொல்வேன்?

சூர்யகாந்தி?
ஸுர சுந்தரி?
ஸுப்ரியா?
ஸுன்னாமுகி?

அதை மட்டும் சொல்லமாட்டேன்- ஸரளா. மென்மையும் கொஞ்சலும் ஒத்திணைந்த அருமைப் பெயர். உச்சரிக்கையில் நா நுனியிலொரு லாவகமும் தண்மையும், பாவகீதத்தின் ஆரம்பம்போல மணி காஞ்சி விருத்தத்தில் கரைந்து சேரும். களகாஞ்சியிலும், உபஸர்ப்பிணியிலும், உபஸர்ப்பிணி!

மெஜன்டா அவனுக்குப் பிரியமான நிறம். மணிகாஞ்சி விருத்தத்தில் அமைந்த கவிதைகளும் அவனுக்கு இஷடமானவை. முனைப்பான வண்ணக் கலவையில் மெழுகியவை அவனது விருப்பு வெறுப்புக்கள். மங்கலில் பற்றுதலில்லை. வாழ்வும் சாவும் போல அருகருகேயிருப்பினும் இணையாமல் அவனது விருப்பு வெறுப்புக்கள் வாழ்கின்றன.

பிஸ்மில்லா கானின் ஷெனாய் இசை அவனுக்கு மிக விருப்பம். ஆன்மாவின் தேம்பலும், மென்னொலிகளும் கலங்கித் தெளியும் ராக மாலிகை. அவனது பிரியமான நிறத்தில் ஓவியங்கள் மிகக் குறைவு.

வான் கோவிடம் அவனுக்கு மதிப்புண்டு. வர்ணப் பொலிவல்ல வான்கோ சித்திரங்களில்; துடிப்பு நிறைந்த உணர்ச்சித் தூவல்கள். நிறங்களெனும் பெண் பிள்ளைகள் நீண்டு நிமிர்ந்து ஊஞ்சலாடுகையில் மெஜன்டா என்ற சுந்தரி விளையாட்டிலிருந்து விடுபட்டு நின்று சொல்கிறாள்: "நான் நிறங்களின் ராஜகுமாரி. உங்கள் கூட்டத்தில் விளையாட மாட்டேன். " நாட்டியக் கலையில் அவனுக்குக் கிஞ்சித்தும் ஈடுபாடில்லை. அங்க அசைவுகளின் அழகில் ஆன்மாவின் அழகு சோர்ந்துபோகும், அவ்வளவுதான். குலுங்கும் சதையசைவிலும், இழையும் விரலிலும் அவமானகரமான ஏதோ ஒன்றுண்டு.

அவனுக்குப் பிடித்த நூல்: "ஒரு காலத்தில் ஒரு முட்டாள் வாழ்ந்திருந்தான்"

ஆயிரத்து முன்னூறுக்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட நவீனம். அதன் படைப்பாளி மிஸ்டர் எஸ். ப்ரிக்ஸ். இவர் சிரஞ்சீவியான உலகப்புகழ்பெற்ற இலக்கிய கர்த்தா. ஆனாலும் உங்களுக்குத் தெரிந்திருக்க சந்தர்ப்பமில்லை. மிஸ்டர் எஸ். ப்ரிக்ஸின் மாஸ்டர் பீஸ் இன்னும் பிரசுரி்க்கப்படவில்லை. முழுவதும் எழுதப்படவுமில்லை. உலகத்தில் மொத்தம் ஒரே ஒரு ப்ரிக்ஸே உள்ளார். உலகத்தில் இன்று வரை ஒளி காணாத பெருமைக்குரிய நவீனத்தை உருவாக்கிய மிஸ்டர் எஸ். ப்ரிக்ஸ்.

அவர் அவன்தான்!

மூடிப்புதைந்து கிடக்கிறாள். உறங்குவதுபோல் நடிக்கிறாள். பெண் விக்கிரகமே, உனக்கென்ன தெரியும்?

"ஒரு காலத்தில் ஒரு முட்டாள் வாழ்ந்திருந்தான்". அதிசயங்கள் வித்தூன்றுவதும் விளைவதும் முட்டாள்தனத்தின் கதிரறுத்த நிலத்துப் பயிரில்தான். தான் அவளுக்கொரு ஆச்சரியத்தைக் கொடுக்கப் போகிறோம். அது கதிராகையில் அவளது கன்னங்களில் குழிகளும், குழிகளில் நுரைநுரையாக முத்தும் பவளமும் விரியும். அந்த இரத் தினங்களின் தும்பும் தூசியையும் அவன் உதட்டிலணிவான். கீசகன் வேஷம் கட்டும் காவுங்ஙல் சங்கரப் பணிக்கரின் அரிதாரம் பூசிய முகத்தில் காக்காய்ப் பொன் துகள்கள் மன்னுவதை அவன் பார்த்திருக்கிறான். மணிக்கட்டு சுற்றளவில் திரியிட்ட நிலைவிளக்கின் ஓங்கியெரிதலினிடையில் பவழச் சிவப்பான உதடுகளிலும், பச்சை நிறமான கன்னங்களிலும் பொன்னலை போல மின்னிய காக்காய்ப்பொன் துகள்கள். கீசகனின் கெஞ்சலுக்கு அது ஒரு மேம்பாடு நல்கியது. அந்த அரிதாரத்தையும், காகாகாய்ப்பொன் துகள்களையும், வேஷங்களையும் அழிக்காமல் கீசகப்பணிக்கரை ஒரு பெண்பிள்ளை அழைத்தாளென்று கேள்விப் பட்டதையும் அவன் நினைவுகூர்ந்தான். யார் அவளுக்குத் தேவை? கீசகனா, அந்த வேஷம் கட்டிய சங்கரப் பணிக்கரா? கீசகன்தான். இல்லாவிட்டால், நெற்றிச் சுட்டியும் சட்டையும் அவிழ்க்காமல் நேராக வரவேண்டுமென அவள் வேண்டிக்கொண்டிருந்திருக்க மாட்டாள். மனிதனல்ல, கலையே அவளுள் காமம் மூட்டியது. ஆனால், தான் கீசகனல்ல. தனதருகில் படுத்திருக்குமிவள் ஸைரப்ரியுமல்ல. இங்கே வேதனைகளுக்கு வேதனையில்லை. மனச்சோர்வுக்கு மதர்ப்புமில்லை.


அறையில் சூழ்ந்து நிலவும் பரிமளம். சுகந்த ரேகைகளின் இன்னோசை மிகு ரஸக்கிரீடை. பன்னீரும் முல்லைப்பூவும், எரியும் ஊதுபத்தியும், கஸ்தூரி கலந்த கருஞ்சாந்தும், பௌடரும் பாலராமபுரம் பட்டுச் சேலையும், நேரியலும், காயாத வார்னீஷும், நிழல் விரித்து அசையும் மாந்தளிர்களும், சூர்யகாந்திப் பூக்களும்- பரிமளங்களின் கிணுகிணுப்பு துளும்பும் ஸ்வர ராக லஹரி. அவைகளுக்கிடையிலிருந்து ஒரே ஒரு மணம், பிஸ்மில்லா கானின் ஷெனாய் நாதம்போல வேறுபட்டு கட்டவிழ்ந்து அவனது மூக்கினுள், நரம்பு மண்டலத்துள், இணைப்புக்களுள், எழில்மிகு கற்பனைகளுள் முதிர்ந்து சேரும் அவளுடைய மணம், கல்யாண சுகந்தம், ஷெனாய் நாதம் காதில் உலவுகையில் அவன் முன் முகத்திரையணிந்த ஓர் போதைதரும் பேதை தோன்றுகிறாள். நெற்றியின் நீளவாகில் சந்தனப் புள்ளிகள். மெல்லிய முகத் திரையினூடேயும் புருவங்களுக்கு மேலே வளைந்து மின்னும் புள்ளிகள். அவளுக்குச் சற்று உப்பிய கன்னங்கள். அவள் நடுநடுவே முகத்திரையை விலக்கி இடது கண்ணால் சாய்ந்தும் சரிந்தும் பார்க்கிறாள். ஹிந்தியிலோ, குஜராத்தியிலோ இரண்டோ நான்கோ வார்த்தைகள் மொழிகிறாள். அருகிலிருக்கும் தோழியரின் காதுகளில். நாணத்தால் மழலைபேசும் ஒரு பெண். மனதுள் மயக்கமூட்டும் மணம்.

"மணம், மனிதவாழ்வு இவற்றுக்கிடையில் தொடர்ந்து நிலவும் உறவுண்டு. திருமணமென்றால் கல்யாணம். மணவாளனுக்கு மண வாட்டி. மணம், மலரினது போலவே இளமையினுடையவும் சத்தாகிறது. ஜீவனுடையவும் மூலகாரணம். அவனும் அவளும், அவளுக்கும் அவனுக்கும் விதித்த பரிமளத்தைத் தேடும் பிரயாணத்தைப் பிரேமை என அழைக்கிறோம். அவர்களுடைய பரிமளங்கள் கூடியும் குறைந்தும் தெளிவும் தேடலும் மிக்க தாள லயங்களைச் சம்பாதிக்கையில் வாழ்வின் புது ரேகைகள் தளிர்க்கின்றன. கல்யாணப் பொருத்தத்தில் ஜாதகத்தை விட முக்யம் மணமே. "நட்சத்திரங்களுக்கு நிறமேயுண்டு. மணமில்லை" தனது விவாக யோசனைக்காலத்தில் இவ்விதமே புறக்கணிக்கப்பட்டது. அந் நேரத்தில் மூக்கில் வேறொரு மணம் கூடுகட்டியது. அவளுடைய, அதாவது மற்றவளுடைய மணம்!

மற்றவள், அவள்.

எதிரொலியும் ஸ்வரமும்.

இனிமேலும் பிரசுரிக்கத் தயங்கும் உலகப் புகழ்பெற்ற நாவலின் வரிகள். இவ்விதம் எத்தனையெத்தனை உயர்ந்த நடைகள், எங்கும் பொருந்தும் முடிவுகள் வெளிச்சம் காணக் காத்துக்கிடக்கின்றன.!

மிஸ்டர் ப்ரிக்ஸ்.

ஜீனியஸ் ஆஃப்த ஏஜ்.

யுகத்தின் மேதையோ, மேதையின் யுகமோ?

யுகமா மேதையை உருவாக்குகிறது?

மேதையின் அவதாரத்தை யுகப் பேரொளியென அழைக்கிறோமல்லவா?

"ஹலோ, குட் மார்னிங்"

"மார்னிங்"

"மிஸ்டர் ப்ரிக்ஸைப் பார்க்க முடியுமா?"

"எதற்காக?"

"ஒருவிழா விஷயமாக."

"முடியாது"

"விழா மலருக்கு ஒரு கட்டுரை, கதை, கவிதை ஏதேனுமொன்று...!"

"மிஸ்டர் ப்ரிக்ஸ் விழாமலருக்கு எழுதுவதில்லை. நாட்டிய விழாவைத் தொடங்கி வைப்பதுமில்லை."

"ஒரு செய்தியாவது, நாலு வரி."

"இயலாது."

"ஆயிரம் ரூபாய் ரொக்கம்."

"நீங்களென்ன சண்டை போடுகிறீர்கள்? நாகரிகமற்றவனைப் போல!
ப்ரிக்ஸின் விலையென்னவென்று உங்களுக்குத் தெரியுமோ?"

"மிஸ், கொஞ்சம் முயன்றால்."

"யூ கெட் அவுட்."

"பரவாயில்லை. நல்ல காட்டமானவள்தான். மானத்திற்குப் பயப் படாதவர்களைச் சமாளிக்க இவளைப் போன்றவர்கள்தான் வேண்டும். சூட்டிகையானவள் தான் நம்ம ஸெக்ரட்டரி" அவளது உதட்டு வண்ணம் மெஜன்டா. ப்ரீஃப்கேஸை எடுத்துக் கொண்டு லிஃப்டினருகில் வந்து சேர்ந்த ப்ரிக்ஸ் புன்சிரிப்புப் பூத்தார். ஸெக்ரட்டரி ஸ்பானிஷ் பிரசுரகர்த்தருக்கான கடிதத்தை டைப் அடிக்கிறாள்.

ஸிங்ஞார் ப்ரிக்ஸ் இஸ் வெரி ப்ளீஸ்டு..ட...ட்ட...ட்டி... டைப் அடிக்கும் சுந்தரிகளின் விரல்கள் எல.ஓ.வி.இ. என்ற நான்கு எழுத்துக்களில் இடறுகையில் அவர்களுடைய கன்னத்தில் சுழன்றும் முகத்தில் மறுபடியும் மலருவதுமான காதலுணர்ச்சிகளின் நிறப்பொலிவும் அழகொலியும் எப்படியென நினைத்து நிற்கையில், அந் நினைப்பின்
அலையில் நீர்க்குமிழிபோலப் புன்சிரிப்பு உதட்டில் புரள, உரக்க ஒரு வெடித்த சிரிப்பு.

ஓ, காட்டுமிராண்டிகள், அரக்கர்கள்!

ப்ரீஃப் கேஸை எடுத்துக்கொண்டு லிஃப்டை நோக்கி நகரும் மிஸ்டர் எஸ். பிரிக்ஸ், யுகத்தின் ஜீனியஸ். கல்யாண இரவில் மணவாட்டியின் கட்டிலில் அவளது மணத்தை மூக்கில் போற்றிக் கிடக்கும் அவனாகி விட்டார். அப்போது இரண்டு மணி, முப்பத்தேழு நிமிடம். இந்தியன் ஸ்டாண்டர்டு டைம்.

கல்யாணச் சடங்கில் இரண்டாம் பகுதியின் கூட்டமும் கூக்குரலும் அடங்கவில்லை. பெட்ரோமாக்ஸ் விளக்குகளும் முக்கியப் பங்கெடுத்தவர்களும் கண்மூடவில்லை. பெட்டிப் பாட்டை மூடியது நல்லதாயிற்று. பழைய "பூங்கா விநோதமே" முதல் "பூ நிலாவின் கீற்றுத் தடத்தில்" என்ற புதிய சினிமாப் பாட்டு வரை ஆலாபித்த பெட்டி தொண்டை உடைந்து உறக்கமுற்றது. மரப்பெட்டிகள் உறங்கிய பின்னும் மனிதன் உறக்கமின்றியிருக்கிறான்.

அவன் மெல்லக் கட்டிலிலிருந்து எழுந்து ஜன்னலருகில் போய் நின்றான்.

முதியோர்கள் வெற்றிலைச் செல்லத்தின் முன்னமர்ந்து சல்லாபித்துக் கொண்டிருக்கிறார்கள். வழுக்கையர்கள், குடைவயிறர்கள், வைரக்கல் கடுக்கன் அணிந்தவர்கள், குடுமி வைத்தவர்கள், விபூதியணிந்தவர்கள், வாடிய துளஸியைக் காதில் செருகி வைத்திருப்பவர்கள்- அவர்களது அந்த இருப்பும், விட்டேத்தித் தன்மையும், சம்பாஷணைச் சாதுர்யமும் அவனை ஆச்சர்யப்படுத்தின. நல்ல பலமுள்ள அசாதாரணமான தலைமுறை. இவர்களெல்லாம் தன்னைப் போல, மணவாட்டியின் மணியறையில், சாய்வு நாற்காலியில், படுக்கையில், அல்லது பொம்மை போட்ட பல்வகைப்புற்பாயில் முதலிரவுகளைக் கழித்தவர்கள். இன்று அவர்களுடைய மக்களும் மருமக்களும் மணவாளர்களும் மனவாட்டிகளுமா-யிருக்கின்றனர். ஆனாலும் காலம் கழுவிக் குழைத்த இம் மண் வளமும் வீர்யமும் கொண்டதே.

கல்யாணத்தில் முக்கியமானவர்களில் ஒருவரான சங்கு நாயர் தனது மண இரவின் அனுபவங்களைப் பற்றிப் புளுகிக்கொண்டிருக்கிறார். அதைக் கேட்கக் காதைத் தீட்டிக்கொண்டு வேலப்ப மேனனும் கூட்டத்தாரும். வேலப்ப மேனனைப் பார்த்தபோது அவனுக்குச் சிரிப்பு வந்தது. வெளுத்த, பருமனான ஒரு ஆசாமி. உருவத்தில் கிஞ்சித்தும் குறையில்லை. நெய் அல்வாவின் பளபளப்பும் நிறமும் கொண்ட அந்த பீமசேனனுக்கு தெய்வம் மனமுவந்து நல்கிய ஒலிப்பேறு ஒரு ஒயிலிடை யாளுடையது. கிணுகிணுத்த நாதமும் பெருத்த தேகமும் ஒரு விதத்திலும் பொருந்தவில்லை. அவர் எவ்வளவு முக்கியமான விஷயங்களைச் சொன்னாலும் ஜனங்கள் வெடித்துச் சிரிப்பார்கள். தெய்வத்தின் ஞாபகக் குறைவாலுண்டாகும் அமளிகள்! கடவுள் சிலசமயம், அவளுக்குள்ளதை அவனுக்கும் அவனுக்கு வேண்டியதை அவளுக்கும் மாற்றிக் கொடுத்துவிடுகிறார். அப்படி ஆண் கோலத்தில் பெண்மையும், பெண்ணுருவத்தில் ஆண்மையும் மாட்டிக்கொள்கின்றன.

முதியோர்களின் நடுநிசிப் பிரசங்க நடவடிக்கை இவனுக்கு ரசமான அனுபவமாக இருந்தது. பரிகாசத்துக்குரிய பழமைவாதிகள். எதிலும் அவர்கள் "நேரே வா! நேரே போ!" மட்டக்காரர்கள். கல்யாணமானாலும், பொங்கலானாலும், கருமாதியானாலும் பொழுதுபோக்கு ஒருபோதும் கைவிட்டதில்லை. நகைச்சுவையுணர்வு அவர்கள் வாழ்க்கையில் நறும் பசுமை மிக்கதாகும். பருவம் வந்து பழுத்த போதிலும் பச்சையும் பசையும் அவர்களில் மிச்சம்.

தானும் தன் தலைமுறையுமோ?

இக் கட்டுமஸ்தானவர்களோடு ஒப்பிடுகையில் வெறும் தொட்டாற் சிணுங்கிகள்!

ஏன், தொடும் முன்பே வாடும் வர்க்கம்.

ஆரவாரமும், கூக்குரலும், மேளமும், குரவையும், வெடிப்புச் சிரிப்பும் அறிமுகமான இவர்களது வாழ்க்கையில் காமம் ஒரு முனகல் பாட்டல்ல. பசுமையான பல்லவியும் அனுபல்லவியுமாகும். கலவி அவர்களுக்கு உயிருக்கு ஊட்டம் சேர்க்கும் ஒரு உன்மத்த லாகிரி.

"ஆனால் ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொள்"
யார் தனது நினைவோட்டத்திற்கு விலங்கிடுவது? அவன் திரும்பிப்பார்த்தான்.
அவளல்ல. வேறு யாருமல்ல.
மிஸ்டர் எஸ் ப்ரிக்ஸ்!
"மரபார்ந்த காமம் மென்மையும் நவீனமானதுமான சுலப வெளிப்
பாட்டைப் பெற்றிருக்கவில்லை."

அவனால் மனத்துள் கட்டளையிட மட்டுமே இயன்றது. சொல்வது தனக்குள்ளிருக்கும் மிஸ்டர் ப்ரிக்ஸாக இருந்தபோதிலும். அவன், அவனுடைய அவனாகிய ப்ரிக்ஸினிடம் கேட்டான்: "கொனாரக்கிலும் கஜுராஹோவிலும் போயிருந்தபோது நாம் பார்க்க வில்லையா? கல்லில் செதுக்கி வைத்த காமம்?"

(குருவாயூர்க் கோயில் சித்திரங்கள் என்று சொல்லவே எண்ணம். ஆனால் அச் சுவர்ச் சித்திரங்களை அவ்விருவரும் கண்டதில்லை.)

"சிலைக்குக்கூடச் சதையும் உணர்ச்சியும் இரத்தமும் உருவாக்கிய சிற்பங்கள்?"

"ஆமாம் " ப்ரிக்ஸ் சொன்னார். "ஒளிவு மறைவற்ற காமத்தை அவர்கள் கல்லில் செதுக்கி வைத்தனர். பிறகு வாழ்க்கையில் மிகவும் கரடுமுரடானதும் குரூரமானதுமான ஆபாசங்களில் ஈடுபட்டனர். அப் பிரதிமைச் சிற்பங்கள் உயிர்த்தெழுந்து வந்தால்? முதியோர்களை அவைகள் குட்டிச்சாத்தானின் சுரங்கக்குழியில் போட்டுப் பூட்டி வைக்கும். இவர்களைப் போலத்தான், ராமாயணத்தில் ராமநாமத்தைவிட ஒவ்வொரு செய்யுளிலும் ஃப்ரராய்டினுடையவும் யுங்கினுடையவும் பேரைச்சொல்லி பஜனை செய்யும் நவீன ஸர்ரியலிஸ்டிக் வால்மீகிகளும். ஒரு கூட்டத்தார் வாழ்க்கையைக் கல்லாக்கித் தீர்க்கையில் மற்றக் கூட்டத்தார் உடைந்த ராகத்தில் புல்லாங்குழல் ஊதியூதி நுரையீரலைக் கெடுத்துக்கொள்கின்றனர். உதிரத்தில் சர்க்கரை வீணாவதில் துக்கம் கொள்ளும் இவர்கள் இன்ஸுலின் குத்திக்கொண்டு தப்புகின்றனர். அவர்களது இன்ஸுலின் என்பது இரண்டு துரைமார்களின் பெயராகும். அதை உச்சரித்துவிட்டால் குத்திக்கொண்டது போல.!

மிஸ்டர் ப்ரிக்ஸ் அப்படித்தான். நடுவழி யென்பது அவர்க்கில்லை. இடைநிலை சீக்கிரமே தகருமென்ற நம்பிக்கைக்காரர். இக் குழப்ப யோசனைகளை அந்த விதமே தாலாட்ட அவன் தயாரில்லை. கஜுராஹோவில் கலைஞர்கள் காமத்தைக் கல்லில் செதுக்கி வைத்தனர். ப்ரிக்ஸ்? எழுத்துப் புற்றில் இதைப் புகுத்தி வைக்கிறார். நவீன ரோமாண்டிக்குகளோ, பதனப்படுத்திய சுருதியெனும் இலைகளில் பொட்டலம் கட்டிய கற்பூரம் போல மணத்து உலவுகின்றனர். "காமம் கல்லுமல்ல, எழுத்துமல்ல; சுருதியில் வாட்டிப் பொதிந்த கற்பூரப் பொட்டலமுமல்ல"

வழக்கத்திற்கு மாறாக , தானும் ப்ரிக்ஸும் இப்படியொரு வாக்கு வாதத்தில் ஈடுபட்டது எப்படி? அவனுக்கு ஆச்சரியமுண்டாயிற்று. என்னவானாலும் இந்தப் பண்டிதர் ஒரு நிம்மதியைக் குலைப்பவர்தான். அவரது நாவலின் தலைப்புப் பரவாயில்லை. அவன் வாய் பொத்திச் சிரித்தான். அடைந்த வாயில் ஓட்டையூடே சிரிப்பின் சேமங்கலத் தாளத்தினிடையில் ப்ரிக்ஸ் மீண்டும் பேசினார். அவர் வெறி பிடுத் தவராயிருக்கிறார்.

"நாம் மிகவும் முன்னேற வேண்டியிருக்கிறது. காமத்திற்கும் மறு பிறவி உண்டாகவேண்டும். நடப்பிலிருந்து கற்பனைக்கு, செய்கையிலிருந்து செய்யும் உணர்வெனும் நினைப்பிற்கு நகரவேண்டியிருக்கிறது. வருகிற தலைமுறை. பழையவர்களுடையவும், புதியவர்களுடையவும் நடத்தைகள் முடிய வேண்டிவரும். புதுமையின் கவர்ச்சி உணர்வு அந்த வழியை நோக்கியல்லவா? இந்த யுகம் வேசிகளுடையதல்ல. நடிகைகளையே ஜனங்கள் விரும்புகிறார்கள். இன்றைய கோவில்கள் சினிமாத் தியேட்டர்களும் நாடகக் கொட்டகைகளுமே. அங்கே தேவதாசிகள் ஆடுகிறார்கள். மனிதர்களை அவர்களது தாசர்களாக்கிவிட்டு, நடிகைகளை மனத்துள் வைத்து அவர்கள் தங்கள்வசமென்ற மாயக் கற்பனையில் ஜனங்கள் நடந்துகொள்கிறார்கள். ஒன்றும் நடக்கப் போவதில்லையாயினும் ஓரான்ம திருப்தி. காமம் இங்கே கனவின் ஒளி வட்டத்தை யணிகிறது. செயல், நடிப்பாகப் பரிணமிக்கிறது. எண்ண பூர்வமானதோர் உணர்ச்சி வெளிப்பாடு என்பது நடிப்பாம்! வேஷம் போடுவதும் கண்கட்டு வித்தை....!

"இச்சொற்பொழிவை இன்னும் நீட்ட வேண்டுமா?" அவன் விநயமாக விசாரித்தான்.

"வேண்டும்." மிஸ்டர் ப்ரிக்ஸ் உறுதியாகச் சொன்னார். உண்மையை நேராகச் சென்று தெரிந்துகொள். ஒளிந்து ஓடுவதால் தப்பமுடியாது.

நீங்கள் இன்னும் மனத்தத்துவவாதிகளின் ஆதிக்கத்திலிருக்கிறீர்கள். அவர்கள் புறக்கணிக்கப்பட்டுவிடுவார்கள் வெகு விரைவில். ஓடிப் பஸும், ஆண்டகணியுமெல்லாம் தெருச்சுற்றிக ளாவார்கள். குருடனுக்குக் குருடன் வழிகாட்டும் மகத்தான காலகட்டம் அஸ்தமிக்கும். ஓடிப்பஸ் குருடன் என்ற விஷயம் தெரியுமில்லையா? புராண புருஷர்களைக் கலையின் பூணூலணிவித்துப் பூசாரிகளாக்கும் மனத்தத்துவ வாதிகளின் எதிர்காலம் இக்கட்டிற்குள்ளாகும். அவர்களுக்குப் பதில் சமூகத்தில் கலைஞர்கள் வழிபடத்தக்கவர்களாவர். காமம் கலையாகாது. கலை காமமாகும். அதுதான் அப்போது நேரும். நாளைய மனித இனம் கவிதை வாசிப்பு, ஓவியக் கண்காட்சி, நாடக அரங்கேற்றம், கதா காலட்சேபம், பாட்டுக்கச்சேரி என்றிவற்றில் கிடைக்கும் மயக்கத்தில் காம திருப்தியைப் பெறும் தங்களுடைய கடும் உழைப்பை மகிழ்ச்சி நுகர்வுப்பரப்பிற்கு உயர்த்திக்கொண்டு, இன்னுமொரு காமனெரிப்பு நடக்கப் போகிறது. மனத்தத்துவவாதிகளின் காமனைச் சுட்டெரித்தல்!

புராதனமும் கொச்சையானதுமான நடத்தைகளுக்குப் பதில் அதே பலன் அளிக்கும் நாகரிக வித்தகங்கள் கைவரும், மிக நொய்மையானது

மனிதர்களின் நரம்பு, நாகரிகத்தில் அது இன்னும் நொய்மையாகி விடுகிறது. இந் நிகழ்வை வைத்து மனத்தத்துவவாதிகள் முடிவுகளைப் புனைந்து சேர்க்கிறார்கள். அக் கற்பனைகள் இன்றைய யதார்த்தங்களுடன் சீதக உறவுகூடப் புலர்த்தவில்லை. அதனால் புதுக் கற்பனைகள் அவசியமாயிருக்கின்றன."

வார்த்தைகளின் இந்த அம்புக்கூட்டத்திலிருந்து தப்பித்தால்! அவன் நியாயமாகவே விரும்பினான். "வாழ்க்கை நாடகம் என்ற முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். வாழ்க்கை ஒரு காவியமல்ல. நீங்கள் அப்படி ஆக்குகிறீர்கள்."

ப்ரிக்ஸ் விடவில்லை. "வாழ்க்கை நாடகமல்ல காவியமுமல்ல. நாடகம் ஆனால் காவியமாவதிலும் கெடுதலில்லை. விசேஷமான உறவு என்ற பொருட் செறிவு வேண்டும்; அவ்வளவுதான். பொருள் விளக்கத்தின் விஷயம் அப்படியே இருக்கட்டும் இப்போதைக்கு. ஒரு காலத்தில்- அவ்வளவு நெருங்கிய எதிர்காலத்திலாக முடியாது- மனித வர்க்கம் கலைஞர்களைக் காமதேவதைகளாக்கிப் பன்னீர் தெளிக்கும். அந்தக்காலத்து டயோனிஸஸைப்போல, காளியைப்போல. கலா ரசனையிலிருந்து புதிய வழிபாட்டுமுறைகள் உருவெடுக்கும் . அக் கலையும் கலைஞர்களும் மிக உயர்ந்த மட்டத்தில் உலாவுபவர்களாயிருப்பர். ஆனாலும் ஒரு விஷயத்தை அறுதியிட்டுச் சொல்வேன். யாரும் அருவக் கலையின் பிரயோகத்திற்கு ஆளாக மாட்டார்கள்

"எதனால்"?

"நீங்கள் சற்றாவது சிந்தித்ததுண்டா?"

ப்ரிக்ஸ் ஏதோ கொள்கையை நிலைநாட்ட முயல்வதுபோல உரக்கச் சொன்னார்" ...அருவக்கலையின் பிறப்பிடம் எதுவென்று? கலவியைக் குறித்துள்ள விபரீதப் பார்வை; சுருங்கிச் சிதைந்த நரம்புகளை வளைத்து இணைத்த தாளவெறுமை. கட்டவிழ்ந்த உருவங்களாவன- ஆடியுலைந்த மனங்கள், உலர்ந்து சுருங்கிய நரம்புகள் இவையிணைந்த குழப்பங்களே.

வளர்ச்சியடைந்திராத காலங்களின் அருவக் கலைக்கும் இக் கலைக்கும் எந்த உறவுமில்லை. முதலாவது உற்சாகத்தின் முண்டியடித்தலும் தாள கதிகளுமாம். இதுவோ பலவீனத்தின் வெறுப்புக்கள். பாண்டு நோயின் அதீத வெண்மை அழகு என்பதுபோலக் காமத்தைக் குறிப்பிட்டு இது கற்பனையை ஒத்திருக்கும். கலையின் ஊற்றும் உண்மையும்- ஃபார்மும் கண்டென்டடும்- காம சக்தியின் வீர்யமே கலையின் வஜ்ரம்.

இந்த மனிதர் என்னவெல்லாம் அடித்துவிடுகிறார்!

அவனுக்குத் தலையும் வாலும் பிடிபடவில்லை. சரியான கன்ஃப்யூஷனும் உண்டாயிற்று. இது மிஸ்டர் எஸ். பிரிக்ஸின் ஒரு திறமை. சில சமயம், நேரெதிராக இந்த அபிப்ராயங்களுக்கு எதிர்மாறான தத்துவங்களை வெளிப்படுத்துவதும் அவருக்கு எளிது. அந்த வேளைகளில்தான் பிரமித்து நின்றுவிடுகிறோம். வழியறியாத ஒரு அடர் காட்டில் அகப்பட்டதுபோலவும், பெரியதோர் பாரத்தை நெஞ்சில் ஏற்றிவைத்ததுபோலவும்.

தனது ஆன்மாவில் அங்குமிங்குமாக மடக்கோ, சுருக்கோ இன்றி அலையும் ரேகைகளுக்கும் நிறங்களுக்கும் உருவம் கொடுக்க அவன் முயன்றான். கற்பனையின் காந்திபொழியாத நினைவுகள் மதிப்பிற் குரியவை. ஒரு காலத்தில் காமம் வாழ்க்கையிலிருந்து வேறாக உதிர்ந்து விழவும், பிறகு அதனுடைய காலியான மொட்டில் கலை சூலுற்று விரியவும் செய்யுமென்ற கற்பனை சாமர்த்தியமானதுதான். அவன் மெல்லச் சொன்னான், பிரிக்ஸ் கேட்காமலிருக்க. அதற்குள் ப்ரிக்ஸ் தனது கைத் தடியைச் சுழற்றிக்கொண்டு அவன் முன்பிலிருந்து போய்விட்டிருந்தார்! மிஸ்டர் எஸ். ப்ரிக்ஸ்!!

ஸெக்ஸைப் பொறுத்த வரையிலும் அவனுக்கும் கற்பனைகளுண்டு. அதனுடைய சின்னம் பூமொட்டு. அதிமென்மையும் அழகு மணமும் கொண்ட மொட்டுக் கிண்ணம். நேர்த்தியையும் மணத்தையும் பருக வேண்டியவன் அதை நெருங்கவேண்டிய விசேஷ முறைகளிருக்கின்றன. முரட்டுத்தனமாக நெருங்கினால் நேச நேர்த்தி மங்கும். கிள்ளி வேதனைக்காளாக்கினால் அலங்கோலம் கொள்ளும். மணஇரவின் மறு தினம் கன்னத்திலும் உதட்டிலும், வீக்கமும் கீறலகளுமாக வெட்கம் மீதூர வரும் பெண்களைப்பற்றி அவன் யோசித்தான். மறைக்க முடியாத இடங்களில் கீறிப்பிளக்கும் மிருகத்தனமும், ஆபாசமும், அடக்கியாளலும்! பாதாளச் சுரங்கங்களில் சங்கிலியில் கட்டிப்போட்ட ஆண்களை, இரவு நேரத்தில் திராட்சை ரசமும் வறுத்த ஆட்டுக்கறியும் ஊட்டியபின், அந்தப்புரத்திற்கனுப்பி, ஒட்டகமயிர் பொதிந்த சாட்டையால் விளாசும் அரேபியக்கதை சுந்தரிகளின் நகைச்சுவை இரசனையை அவன் சிலாகித்தான். அந்த ஆரணங்குகளின் முன்னால் தான் இந்த ஆசாமிகளை அனுப்பவேண்டும்.

"ஸெக்ஸ் என்றால் ஈஸ்த்தெட்டிக்ஸின் உயர்ந்த மட்டத்தில் விளையாடும் ஒரு உணர்ச்சி உச்ச மயக்கம்."

மீண்டும் - மிஸ்டர் ப்ரிக்ஸ்.

அவன் முடிக்குமிடத்தில் அவர் தொடங்குகிறார். சில சமயத்தில் ஒரு இயங்கியல்வாதியான அதிகப் பிரசங்கியாக; வேறு சில நேரங்களிலொரு நம்பிக்கையற்றவனின் தீவிரவாதத்துடன்.

அவனும் மிஸ்டர் ப்ரிக்ஸும் உறைந்துளரென்ற உணர்வேயின்றி கடிகார முட்கள் நகர்கின்றன. நேரத்தின் இதயத் துடிப்புக்கள். காலத்தின் இதயத்தைப் புதுப்பிக்க வேண்டிய நேரம் ஆகிவிட்டது,

"தாளமென்பது அண்டத்தின் நிற்காத நாத தாரை. உயிர்த் துடிப்பின் வளர்ச்சி அணுக்கள். தாளத்தை ஒடுக்கி ஒன்றாக்கியதே கடிகாரம். உனது, உன்னுடைய உலகின், ஒரு நாளின் வாழ்க்கையினுடையதான ஓரம்சம் அதிலுண்டு. அதன் நகர்வில் நீயும் உன்னை யறியாமல் நகர்கிறாய். ஏங்கி இழுத்து நகர்கிறாய், உன்னிடமிருந்தேகூட."

இந்த "நீ" உபயோகம் அவனுள் நிம்மதியின்மையைத் தோற்றுவித்தது. ப்ரிக்ஸ் தனது படைப்புத்தான். "பாஸ்" அல்ல. படைப்பானது படைத்தவனையே மீறுவதில்லை. இருந்தாலும் இந்த ப்ரிக்ஸ் அப்படி நடந்துகொள்கிறார்,. மறுத்துக்கூற அவன் நா எழுவதில்லை. தனது காலத்தின் துளிகள் அடர்ந்து பெயர்ந்து விழுந்து கொண்டிருக்கின்றன. கடிகாரத்தின் முட்கள் ஒவ்வொரு "டிக் டிக்" சப்தத்திலும் அவற்றைத் தோண்டித் தோண்டி யெடுக்கின்றன. ஆனாலும், நான் வாழ்வேன்; என்னைத் தாங்கி நிறுத்தும் தாளக் கிரமங்களெல்லாம் தகர்ந்துபோயிடினும். அவ்வுருமாற்றம்தான் மிஸ்டர் எஸ் ப்ரிக்ஸ். "ஒருகாலத்தில் ஒரு முட்டாள் வாழ்ந்திருந்தான்."- அதனுடைய படைப்பாளி, கணக்கற்ற ஜீவதமனிகளில் பரிமளமும் வீரமும் பரப்பி, குதித்து உயர்ந்து, இறவாப் புகழ் பெற்றவராவார். தான் நிகழ் காலம்; தனது எதிர்காலம் ப்ரிக்ஸ். ப்ரிக்ஸின் கை விரல்களுக்கிடையில் காலத்தின் நூலிழைகள் கொஞ்சிக் குழையும். "எங்களுக்கு உருவம் கொடுங்கள்"

காவி தேய்ந்த நிலத்தில் நிலாவொளி பரப்பிய கவிதைகள் பின் வாங்கத் தொடங்குகின்றன. இதயத்துள் இரகசியங்கள் எழும்பி ஏறுகின்றன.

அவள் இப்போது என்ன யோசித்துக்கொண்டிருப்பாள், உறக்கத்தில் ஆழ்ந்திருக்கவில்லையென்றால்? நேரமடங்கும் அந்திமினுக்கில் கிழக்குத் தொடர்ச்சிமலையின் மேடுகள்போல அவள் கட்டிலில் சரிந்து படுத்திருக்கிறாள். சற்றுத்தள்ளி, தானோ அரேபியக்கடல் அலைபோல் நினைவுகளுக்கு நடுவே. அவளுள்ளும் இருக்கலாமோ அவளுடைய ஒரு ப்ரிக்ஸ்? தன்னந்தனியென உறுதியிட்டு நடிக்கும் ஒவ்வொருத்தனும் ஒவ்வொருத்தியும் உள்ளே எத்தனைபேரைச் சுமந்து கொண்டிருப்பார்கள்! அவளும் தனியாயிருக்க வழியில்லை. சமூகத்தின் பல துண்டுகளையும் சேர்த்துத் தைத்த ஒரு துவாலையே தனிமனிதன். தையல் உள்ளேதான், வெளியேயல்ல.

மாலையையும் மோதிரத்தையும் அகற்றி வைத்தபோது மணி நேரம் பலவும் கழிந்தது. இதுவரை அவர்கள் தமக்குள் எதுவுமே பேசவில்லை. அவள் வெட்கிக் குனியும் பெண்ணல்ல. அன்று பார்த்தபோதே தோன்றியது முதிர்ந்த விதைதானென்று. முதிர்ந்த விதையினுள்ளும் ஊமைக் கனவுகள் இருக்கலாம். ஈரமண்ணில் கிடந்து கனாக்காணாத ஒரு விதையும் இன்றுவரை முளைத்து இதழ் விரித்து நின்றதில்லை. இளம் பருவத்தில் பயற்று விளையில் குருவிகளை விரட்டியபோது முளையூன்றிய பயற்றுமணிகள் அவனைக் கவர்ந்தன. தண்டின் இரு முனையிலும் வளைந்த பருப்புக்களின் கூனலும் நிமிர்வும். கர்ப்பப் பையில் மனிதக் குழந்தை சுருண்டு கிடப்பதைப்போலத்தான்! இப்படித் தோன்றியது மிகவும் வளர்ந்த பிற்பாடே. எல்லா விதைக்கும் இரண்டு பருப்புண்டு. ஒன்றுதானென்று தோற்றமளிப்பதிலும். படைப்பு நியதி அத்வைத சாஸ்திரத்திற்கு எதிரானது ஏன்?

ஆனாலும் அவள் ஏதேனும் உரையாடலாமாயிருந்ததல்லவா. பழைய முறையிலென்றால் பழைய முறையிலாவது: "இதைப் பாருங்கள்":- இல்லாவிட்டால் "ஐயாவின் மனத்துள் இப்போது என்ன நினைவு?" என்றோ- ஏதாவது ஒருவிதத்தில் ஓர் ஆரம்பம். தானும் அவளிடம் ஒன்றும் கூறவில்லை. நினைவுகளைச் சப்புக்கொட்டியும், சந்தேகங்களுக்கு அட்டிகை யணிவித்து அலங்காரங்கள் செய்தம் , ப்ரிக்ஸ்ஸுடன் வார்த்தையாடியும் நேரம் சென்றது.

அவன் ஒரு சிகரெட்டைக் கொளுத்தினான். அது ஒரு பெரிய நிகழ்ச்சியல்ல. எத்தனையோ சிகரெட்டுகள் கொளுத்திப் புகைத்தான்; அணைத்து எறிந்தான். ஆனால் இது ஓர் பொருள்பொதிந்த நிகழ்ச்சியாயிற்று. சிகரெட்டைக் கொளுத்திய பின்னும்; தீக்குச்சியை அணைக்கவில்லை. விரல் சுடும் வரை அதைப் பிடித்திருந்தான். ஜரிகைப் புடவையும் பச்சைப்பட்டுச்சோளியும் மணிக்கட்டு நிறைய வளையல்களு மணிந்த அவளும் அவ்வொளி உண்டாகியபோது திரும்பிப் பார்த்தாள். அவனைத்தான். வளை குலுங்கல் கேட்டபோது அவனது கண்களும் அந்தப்பக்கம் திரும்பின. ஒளியின் கடைசிமூச்சில் அவன் பார்த்தான். இரு கண்கள்.

முன்பெங்கேயோ கண்ட கண்கள்!

அக் கண்களை அவனெப்போது கண்டான்? அவள் உறங்கிக் கொண்டிருந்திருக்கவில்லை. உறங்கும் பாவனையில் படுத்திருக்கிறாள்.

அவளது கண்ணிமை மயிர்களில் ஈரமிருந்ததோ? அவனையறியாமல் ஒரு முறை தூக்கி வாரிப்போட்டது. சுவற்றில் சாய்த்து வைத்திருந்த சாய்வு நாற்காலியை நிமிர்த்தி அவளையும் ஜன்னல்புறக் காட்சிகளையும் பார்க்கும்விதத்திலொரு கோணத்தில் நாற்காலியைப் போட்டு அமர்ந்தான்.

அவ்விரண்டு கண்களும் இப்போதும் அவனைத்தான் பார்க்கின்றனவோ? இருளில் ஒன்றும் புலப்படவில்லை. வெளியே எரியும் பெட்ரோமாக்ஸின் வெளிச்சம் பரவி விழும் மங்கிய மினுக்கத்தில் இர‌ண்டு சிறு கண்மணிகளைக் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம்.

நடுநிசி தாண்டிய நேரத்தில்,கனவுகள் தாலாட்டிய கண்ணிமையில், சிறகுகள் படபடக்கும் ஆரவாரத்துடன் விழிப்புற வேண்டிய கண்ணிமை மயிர்களில் ஈரத்துடன் சுருண்டு சுருங்கி, நாணமுற்று, கிட்டத் தட்ட ஒரு குற்றவாளியைப் போல, திருமணவறைக் கட்டிலில் தனியாக, நடுவிலெதுவிமில்லாத ஒற்றை பிராக்கெட்டைப் போல,சரிந்து படுத்திருக்கும் பெண்ணே, தூண்டுதல் வார்த்தைகளின் சுடுரஸமேற்று சிரித்துக் குழைய வேட்கையுற்றிருக்கும் மங்கைத் தையலாளே...!

சட்டென்று அவனது வார்த்தையோட்டம் உடைந்து சிதறியது.அக் கண்கள் தனக்குப் ப‌ரிச்சயமானவையென்ற உணர்வு மனதில் மீண்டும் புடைத்தெழுந்தது. ஒரு நினைவின் தூக்கிட்டுத் தொங்கும் நூலிழையில் அவனது பச்சை இதயம் உருண்டுருண்டு அசைவது போல. 'இதய'மென்ற மூன்றெழுத்து அவனை ஒரு மாதுளை மரத்தடிக்கு அனுப்புகிறது. மாதுளம் பழத்தின் நிறமும் உருவமும் கிட்டத்தட்ட மனித இதயத்தினுடையவை. அதனுடைய தோலுறைக்குள் கரிந்துறைந்த இரத்தச் சொட்டுகளிருக்கின்றன. வாழ்க்கையின் துடிப்பும் எழுச்சியும் தாவுகின்றன ஒவ்வொன்றிலும்,மனித இதயம் போலவே மாதுளம் பழ‌மென்று. ஃப்ரெடரிக்கோக்ரேஷியலோர்க் கவிதை எழுதியதெப்போது? எப்படியானாலும் அதைப் படிப்பதற்கு எவ்வளவோ காலம் முன்னாலே இவ்வுண்மையை அவன் கண்டுபிடித்திருந்தான்.

ஒவ்வொரு கீதமும் ப்ரேமையின் மௌனம். ஒவ்வொரு நட்சத்திரமும் காலத்தின் கெட்டிப்பட்ட வெளிப்பாடு. நேரத்தின் சிடுக்குகள். ஒவ்வொரு பெருமூச்சும் கூக்குரலின் நிசப்தம்.

லோர்க்கின்மேல் அவனுக்கு மதிப்புண்டு. யார் அதிகக் கற்பனா சக்தியுள்ளவர், லோர்க்கையா, ரில்கெயா? மிஸ்டர் ப்ரிக்ஸ் இவ்விரண்டு பேரையும்விடத் தற்படைப்புத் திறம் மிக்கவர்.

வீடு பாகப் பிரிவினையாவதற்கு முன் முற்றத்தில் ஓர் மாதுள மரம் இருந்தது. அதன் அடியிலேதான் முதலில் அக் கண்கள் அவனை நோக்கின. மாதுளம் பழம் கொத்தித் தின்ன‌ வந்த இரு பறவைகள் மனித இதயம் போலிருக்கும் பழங்களில் தாவிக்குதித்து அலகைத் தீட்டிக் கொத்தின. இரத்தத்துளிகள் தெரித்து வீழ்ந்தன. மூக்கில் படிந்த இரத்தத்துடன் குருவிகள் கிளையிலிருந்து பழத்திற்கும், பழத்திலிருந்து கிளைக்கும் தாவிப் பறந்தன ஹர்ர்...என்ற ஒலியுடன். அக்குருவிகள் சிற‌குகளைச் சிறகுகளில் தீட்டி, இறகுகளை இறகுகளில் ஒளித்தன. கிணுகிணுக்களின் இடையில் சற்றுக் கலவியும் கொண்டாடின. சட்டென்று நினைவு தப்பியதுபோலப் பெண் குருவி கீழே விழுந்தது. பயந்தோ, வேறெதனாலோ, ஆண் பறவை பறந்து மறைந்தது.

மாதுளை மரத்தைப் பற்றியொரு செவிவழிச் சரித்திரமுண்டு என்பதை அவன் நினைவுகூர்ந்தான்.

முன்னொரு காலத்தில் அதாவது மிக்க பழங்காலத்தில் இம் மரம் மரமாயிருக்கவில்லை.அதன் வேர்கள் மண்ணில் ஊன்றியிருக்கவில்லை. நடுமரம் ஆகாயத்தை நோக்கி உயர்ந்திருக்கவில்லை. பூமியிலும் ஆகாயத்திலும் ஒரேபோலப் படர்ந்திருந்த ஒரு ராட்சசனின் உருமாற்றமே மாதுளை மரம். அவனுக்குப் பிடித்த உணவு மனித இதயம் மட்டும். நாள்தோறும் நாற்பத்தொன்று இதயங்களை உள்ளே தள்ளினால்தான் அவன் பசியடங்கும்.ஆயுட்காலத்திற்குள் அநேகமாயிரம் மனிதர்களைக் கொன்றொடுக்கி அவர்களது மாரைப் பிளந்து இதயத்தைப் பறித்தெடுத்து அவன் உண்டான். ஒரு நாள் அவனுக்கு மனித இதயம் கிடைக்கவில்லை. அவன் கொன்று குவித்த மனிதர்களில் யாருக்கும் இதயம் இருக்கவில்லை. கணநேரத்திற்கு அவன் ஆச்சர்யமுற்றான். பசி அதிகமாகியபோது ஆச்சர்யம் மடிந்தது. விஷயம் இந்தமாதிரிப் போனால் தான் பட்டினிகிடந்து இறப்போமென அவன் பயப்பட்டான்.

மனிதர்களுக்கு இதயம் கொடுக்கவேண்டுமென்று கடவுளிடம் வேண்டத் தீர்மானித்துக் குகையிலிருந்து வெளியே புறப்பட்டான். அப்போது காட்டில் நீர்ப்பொய்கையில் அழகு தேவதைகளாகிய பெண்கள் நீராடுவதைக் கண்டான். ராட்சசன் ஒரு ராஜகுமாரனின் வேடம் பூண்டு அவர்களை மோக வசமாக்கினான். ஒவ்வொரு அழகுக் கன்னியையும் அழைத்துக்கொண்டு குகைக்குள் போனான். அவர்களது மார்பைக் கீறி மரக்கிளையின் கொம்பில் தொங்கவிட்டான். நாற்பத்தொன்று சேர்ந்தால் உண்ணத் தொடங்கலாமென நினைத்தான். அப்படி அவன் முப்பத்தாறு இதயங்களை மரக்கிளையில் முடிச்சிட்டான். அந்நேரத்தில் அவ் வழியாகக் குளிக்க‌ வ‌ந்த‌ ஒரு ரிஷிப‌த்தினி இந்த‌க் கோர‌க்காட்சியைக் க‌ண்டு கோப‌முற்று ராட்ச‌ச‌னைச் ச‌பித்தாள். "டேய், குரூர‌க் கொடியோனே, நீ ஒரு ம‌ர‌மாக‌க் க‌ட‌வாய்." அவ‌னொரு ம‌ர‌மானான் அந்த‌க் க‌ண‌த்திலேயே. அதுவே மாதுளை ம‌ர‌ம். அவ‌ன் அன்றுவ‌ரை புசித்த‌ இத‌ய‌ங்க‌ளை மாதுள‌ம்ப‌ழ‌ உருவ‌த்தில் முப்ப‌த்தாறு தேவர்க‌ளுக்கும் மற்ற‌‌வை ம‌னித‌ர்க‌ளுக்கும் திருப்பிக் கொடுக்கும் வ‌ரையில் ராட்ச‌ச‌னுக்கு சாப‌ விமோச‌ன‌மில்லை. ம‌னித‌ இத‌ய‌ங்க‌ளையெல்லாம் அவ‌ன் திருப்பிக் கொடுத்துவிட்டானென்றும், பாக்கியிருக்கும் முப்ப‌த்தாறு தேவ‌ இத‌ய‌ங்க‌ளைக் கொடுக்க‌ வான‌வ‌ர்க‌ளை பூமியில் காணாத‌தினால் இன்றும் ம‌ர‌மாக‌வே சாப‌ம‌னுப‌விக்கிறான் என்றும் கேள்வி. இக் க‌தையைக் கேட்ட‌பின் அவ‌ன் மாதுள‌ம் ப‌ழ‌ம் தின்ன‌வில்லை. தேவ‌ இத‌ய‌த்தைத் தின்ற குருவிக்கு என்ன ஆயிற்று? சொர்க்கவாசம்! மாதுளை மரத்தினடியில் கிடந்த குருவியை அவன் கையிலெடுத்தான். குருவி அவனைப் பரிதாபமாகப் பார்த்தது. சற்றுக் கழிந்ததும் அது செத்து விறைக்கவும் செய்தது. அப்போதுகூட அதன் கண்களில் ஒளி வற்றியிருக்கவில்லை. அக் குருவியின் கண்கள். அவளுடைய கண்கள்.

அக் குருவியைப்போல இவளும்..அவனால் தொடர்ந்து யோசிக்கமுடியவில்லை. சும்மா வேண்டாத இவற்றையெல்லாம் சிந்தித்து நெஞ்சில் துன்பத்தின் நஞ்சிட்டுக் குமைக்கிறான்.

இந்த இதயமென்பது எத்தனை விசித்திரமான பொருள்! மாதுளம் பழம் மட்டுமல்ல அது. அசுத்தம் மிக்க உமிழ்நீர் படிக்கம்கூட. எவ்வளவு விரைவில் அதில் கெட்டவை நிறைகின்றன. கீழ்த்தரமான கலவியின் அருவருப்பான நிலைகளை அவன் கண்டான். ஆடு, மாடு, பருந்து, நாய், பாம்பு, கீரி-எல்லாவற்றினுடையவும் கலவி முறைகள். இதெல்லாம் தனது மனத்தினுள் நுரைதள்ளிப் பொங்குகின்றனவென்பதை நினைத்தபோது அவனுக்கு அவனிடமே அருவருப்புண்டாயிற்று.கெட்ட காட்சிகளின் அடுக்குகளைச் சுருட்டி வைதத சுமையே மனம். மனத்தின் காட்சிகளைப் பிய்த்தெடுக்கவும் முடியாது. உறக்கமும் அவனைப் புறக் கணித்த மாதிரித்தான். அவன் கவிதையை நோக்கித் திரும்பினான்.

உறக்கப்பறவை எந்தன் கண்ணில்
முட்டையிட முடிவு செய்தும்
கண்ணிமை மயிர்கள் வலையாமெனவே
குழம்பியங்கு பறந்து போயிற்று.

ஆயிரம் வருடத்துக்குமுன் ஒரு மூரிஷ் கவிஞன் பாடினான். அதே வழி வந்த மற்றொரு கவிதையையும் அவன் தனக்குள் பாடினான்.

அவன் எங்கிருந்து ஆரம்பித்தானோ அங்கேயே வந்து சேர்ந்தான். பார்க்கவும், முகரவும் செய்தபோதிலும், நினைவுகளுக்கும் பார்வைகளுக்கும் சற்றுக்கூடத் தூய்மை கிட்டியது. வாய்க்கூடை கட்டிய ஒரு ஒட்டகக் குட்டியைப் போல அவனும் அவளை நோக்கினான்.

அவள் கட்டிலில் படுத்திருக்கிறாள்.
வாய்க் கூடையை மெதுவாக அவிழ்த்து நீக்கி,
மெல்ல மெல்ல சென்று,
காலியாய்க் கிடக்கும் படுக்கையின் பாதியில்
சரிந்து, சற்று நீந்தி நீங்கினான்.

அவளது சிதறி விழுந்த அளகபாரங்களைச் சீவியொதுக்கி, நெற்றியில் விரல்களைப் பதித்து, கண்ணிமை மயிர்களைத் தடவி அதன் ஈரத்தை உருமாலில் ஒத்தியெடுத்து, விரலைச் சற்றுயர்த்திப் புருவக் கொடிகளின் வளைவையும் நீளத்தையும்மளந்து, மூக்கின் பாலத்தோடு மோதிர விரலை நீவி, அதன்மேல் இனிய வீணை வாசித்து, அப்படியும் அசையாமல் கிடக்கும் அவளது அதரங்களில் சற்று இலேசாக அழுத்தி, இன்னும் கொஞ்சம் அழுத்தி, ஒரு நெடுமூச்சுவிட்டு, அவளில் ஒருமூச்சை எழுப்பி, சுடும் உதடுகள், மயக்கும் பரிமளம், மென்மைமிகு நாடித் துடிப்புக்கள்....அப்படியப்படி.....

வெளியே ஓசையும் சலனமும் அடங்கின. விளக்குகள் மட்டும் எரிகின்றன. எல்லாக் கண்களும் உறக்கத்தில் கட்டுண்டடங்குகின்றன. நடுநிசிப் பாட்டில் எல்லாவற்றிற்கும் களைப்பு. பூமிகூட சுக நித்திரையில். பாவம் பூமி! அவள் அதிருஷ்டம் கெட்ட ஒருத்தி, சூரியனென்னும் சுல்த்தானின் அரண்மனையில் சுந்தரி. சுல்த்தானுக்கு மற்றும் உளர் சுந்தரிகள் – வைப்பாட்டிகளாகவும் மனைவியராயும். சுல்த்தான் அவர்களுக்கருகே செல்கையில் பூமிக்குக் காவலாக ஒரு கருப்பு அடிமையை நிறுத்துகிறான். அவனும் உறக்கத்திலாந்துவிட்டான்-அலி.

ஒருவன் மட்டும் உறங்கவில்லை. ஒருத்திக்கு அருகிலிருப்பவன். தான் காவலாளியல்ல. கருப்பு அடிமையல்ல. பிறகு மறுபடியும் நினைவுகள் கட்டு முளையை இழுத்துக்கொண்டு மறுபக்கம் குதிக்கின்றன. நினைவுகளை வரப்பில் மேய விடுகையில் அவை பதறி வயலில் குதிக்கின்றன. வயலிலிருந்து இன்னொரு வயலுக்கும்.

"தூங்க வேண்டாமா?” அவள்தான் கேட்கிறாள். அவள் செவியுற்றதும் சினம் பிறந்தது. பின்னே உறங்க வேண்டாமா? கல்யாண ராத்திரி சிவராத்திரியா? பின் எதற்காக இவள் தன்னிடம் இதைக் கேட்க வேண்டும்? அடீ பெண்ணே, உறங்கிக் கொள். எனது அருமை மணவாட்டி நித்திரைவயப்பட்ட போதிலும், எனது அருளுக்காகக் காத்திருக்கிறாளோ அவள்? அதுவா அல்லது தன்னை உறங்கச் செய்யும் பிடிவாதமா? வந்திருக்கிறாள் ஒருத்தி தாலாட்டித் தூங்க வைக்க. பெண்களெல்லாம் கணவன்மாரைக் காண்பது இவ்விதமா? தாலாட்டித் தொட்டிலாட்டி, கையில் கிடத்தி உறங்க வைக்க வேண்டிய பிஞ்சு சுசுக்களைப் போல-ராராரிராராரோ..... என்று உன்னி கிருஷ்ணன் பிறந்தானோ? இருக்கலாம். அவளுடைய காம உணர்ச்சிகூட ஒரு தாலாட்டுப் பாடல்தான். ஆணின் தொட்டிலும் சவப்பெட்டியுமே பெண். அவள் தாலாட்டுப் பாடுகிறாள். அதை நிறுத்தி ஒப்பாரியை ஆரம்பிக்கிறாள்.

"உறங்க வேண்டாமா?”

மீண்டும் அதே வார்த்தை. ஆனால் குரல் வேறு. தன்னுடைய குரல். அவளது வார்த்தைகளைத் தனது தொனியில் பொதிந்து திருப்பிக் கொடுத்தல். அவனது சொற்களுக்கு என்ன நேர்ந்தது? எல்லாவற்றையும் மிஸ்டர் ப்ரிக்ஸ் கைப்பற்றிக்கொண்டுவிட்டாரோ?

"உறக்கம் வருவதில்லை” அவள் சொன்னாள்.
அவனொன்றும் சொல்லவில்லை.
அப்போது அவள் மறுபடியும் கூறினாள்:
”கட்டெறும்பின் தொந்திரவு.”
"படுக்கை விரிப்பைத் தட்டி உதறிவிட்டால் போதும்.”
"அப்படியெல்லாம் போய்விடுகிற கட்டெறும்பில்லை.”

சட்டென்று அவனுக்குத் தனது ஒரு வாக்கியம், அதாவது மிஸ்டர் எஸ். ப்ரிக்ஸின் சொற்றொடர் நினைவிற்கு வந்தது. முட்டாளிடம் அவனது நூற்றெட்டுக் காதலிகளில் அறிவில் குறைந்தவளான மிஸ் விலாஸினி கூறியது: தங்களுடைய கல்யாணக் கட்டிலில் ஒரு கட்டெறும்பாகிவிடச் சற்றும் விரும்பியதிலை. பிரபோ, இவள்.”

அவன் கேட்டான் அவளிடம்-முட்டாள். விலாஸினியிடமல்ல- மணவாளன், மணவாட்டியிடம்: "கட்டெறும்பெங்கே? கட்டிலிலா, உள்ளங்கையிலா?”

"கையில்”
"கட்டெறும்புகள் அப்படித்தான்” ப்ரிக்ஸை தியானித்து அவன் விவரித்தான். "அவற்றின் கடியேற்றால் தாங்க முடியாத எரிச்சலும் கடுப்பும் உண்டாகும். கட்டெறும்புகளில் பல பிரிவுகளுண்டு மிகவும் குறும்பானவன்-நீல நிறமும் மெலிந்த உடலும் கொண்ட குரூர மானவன். அவனது கொடுக்கில் ஒரு ஸ்பூன் கொழுத்த விஷம் இருக்கும். விஷத்தில் மரணத்தின் பிணைப்பும்.”

அவள் பதில் கூறவில்லை. தனது தொண்டை இடறுகிறதென்று அவன் புரிந்துகொண்டுவிடக் கூடாது. இருளில் கண்ணிலிருந்து பெயர்ந்து விழும் துளிகளை அவன் பார்க்கவில்லை. நல்லதாய்ப் போயிற்று. அப்போது பக்கத்தில் கோழி கூவியது. பெண்கள் கன்னத்தில் கண்ணீரை வழிய விடுகையில் கோழியின் தொண்டையிலிருந்து நாதம் உயர்கிறது. இப்போது கோழியின் கொண்டைப்பூ குதிரைப் படை வீரனின் தலைப்பாகை நுனிபோல அசையுமாயிருக்கும். விடிகாலையில் எழுந்த கொக்கரக்கோ நின்றதெப்படி? ப்ரோக்கன் இமேஜ் போல ப்ரோக்கன் ஸெளண்டும் உண்டாமோ? யாருக்குத் தெரியும்? சே! நான் இகழும் அம் மனத்தத்துவக்காரர்களின் நாடை, என் நினைப்பில் எங்ஙனம் பிணைந்தது? வெட்கக்கேடு!

அறையில் சில ‘உஸ்’ஸென்ற ஓசைகள். காற்றும் ஜரிகைப்புடவையும் இடறுகின்றன. வளை குலுங்கல். அவள் சாய்வுநாற்காலியின் பின்னால் வந்து நிற்கிறாள். குன்றின் பின்னால் உதயம்போல அவளது நெருக்கம்தன்னில் கவிதையின் மயக்கத்தைப் புரட்டுகிறது. அந்த மங்கல வேளையில் கிரெளஞ்சப் பறவைகளில் ஒன்றை எய்து வீழ்த்திய காட்டுவாசியின் கூர்மையான அம்பு போல இன்னொரு நினைவு இதயத்தில் துளைத்தேறியது. தான் கல்யாணத்திற்குப் புறப்படத் தயாராகும் வேளை. ஒரு சீட்டுக் கடிதத்துடன் ஒரு சிறுவன் தோன்றுகிறான். நோன்புக் கயிறு கட்டிய அவனது கையில் ஒப்படைக்கிறான். மணிமணியான எழுத்தில் சில வரிகள். அதில் கவனத்திற்குரியதும் குறியீடானதுமான ஓர் வரி.

’இதோ என் வாழ்த்துக்கள். தங்களது சுத்தப்படுத்தப்பட்ட பாதையில் ஒரு காரைமுள்ளாக விழுந்து கிடக்க இவளுக்கு விருப்ப மில்லை, சற்றும்.’ அடியில் ஒரு ஓவியம்-ஒரு பாதை; நாலைந்து காரைமுட்கள்.

காரை முள்ளும் கட்டெறும்பும்.
படுக்கையறையும் பாதையும்.

காலில் தைத்த காரைமுள் தானே வழுக்கிக் குதித்தது. இதயத்தில் படிந்த கட்டெறும்போ? ஊர்ந்து வெளியே போகுமோ, அல்லது குத்தி விஷத்தைப் பாய்ச்சுமோ?

இருளில் புகைச்சுருள்களை விரித்துக்கொண்டு அவன் அப்படியே அமர்ந்திருந்தான். அச் சுருள்களுக்கு நடுவே அவனது மாயக்கவிதைகள் விளையாடின. இறுதியில் புகைச்சுருள்களுடன் அவையும் அசைந்து சிதைந்தன. சுருள் மட்டுமல்ல, அவற்றுக்கு உருவமேற்றிவிட்ட உதடுகளும், முகமும், மனிதனும், அவனமர்ந்திரு்கும் சாய்வு நாற்காலியும், அதைப் பிடித்துக்கொண்டு நிற்கும் பெண் மடந்தையும், அவ்வறையும் ஊர்ப்பகுதியுமெல்லாம் இல்லாமல் போயிற்று. எத்தனை பட்டென்ற மாற்றங்கள்!

அவனது உருவத்திற்குப் பதில் சாட்சாத் மிஸ்டர் எஸ். ப்ரிக்ஸ் தோன்றினார். அவர் சற்று மிடுக்குடனிருந்தார். மிஸ்டர் ப்ரிக்ஸ் சிகரெட் குடிப்பதில்லை. உதட்டின் இடது ஓரத்தில் வழக்கத்தைவிட நீண்ட ஒரு பைப். தூய ரோமத்தால் நெய்த உடைகள். ஓவர்க் கோட். காஷ்மீர்த் தொப்பி. கழுத்தில் சுற்றிய மஃப்ளர். ஐந்து நாள் தாடிமயிர் அவ் வதனத்தை அலங்கிரிக்கிறது. இடம் ஸ்வீடன் நாட்டின் தலைநகர். அங்குள்ள அரண்மனைப்பூங்கா. பூந்தோட்டத்தில் ஏராளமான கூட்டம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், நாய்கள், எல்லோரும் பனியின்வசத்தில். சிறியதோர் சிலம்பின் சிணுக்கலுடன் பனியிதழ்கள் வீழ்கின்றன. காலம், 'ஒரு காலத்தில் ஒரு முட்டாள் வாழ்ந்திருந்தான்' என்ற அழியா நவீனத்திற்கு அவ் வருட நோபல் பரிசு. ஸ்வீடனின் மகாராஜாவிடமிருந்து கருணையுடன் பெற்றுக் கொண்ட சரித்திரப் பிரசித்தமான விழாவின் மறுநாள் மாலை, மிஸ்டர் ப்ரிக்ஸ் தனது விசிறிகளிடமிருந்து தப்புவதற்காகப் பூங்காவனத்தில் சற்றுச் சுற்றித் திரியலாமென வந்தார்.

அப்போது அவள் பின்னால் நெருங்கினாள்..

அவளுக்கு வேண்டியது இன்டர்வியூ. அவ்வளவுதான். அன்று முழுவதும் நிருபர்களின் வேட்டையாகவிருந்தது. ஹோட்டல் அறைகளும், சுற்றுப்பறமும் சந்தைக்கடை போலாயின. மலர்த்தட்டுக்கள், பூமாலைகள், பீர் சீசாக்களின் மூடிகள், விஸ்கி லேபில்கள், சிகரெட் நுனிகளும்,சாம்பலும், வாழ்த்துரைகளும், கவிதைகளும்; டெலி ஃபோன் அழைப்புக்கள், பதில்கள். கடவுளே, இது என்ன தொல்லை! மனிதனுக்குப் பரிசு கொடுத்துக் கொல்ல வேண்டுமென்றிருக்கிறதோ1 இதோ இப்போது இந்தப் பூந்தோட்டத்திலும் தப்புதலில்லை. வேட்டை நாய்களின் வாயிலிருந்து தப்புவதற்காக, வந்து சேர்ந்ததோ கண்ணியின் நடு மத்தியில், பிரபலமான இலக்கியக் கரத்தாவுக்கு எங்கும் நிம்மதியில்லை. மனிதர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவன் வேட்டையாடப்படுகிறான். வேட்டையென்றால் பேட்டி. ஈட்டிகளாவன கேள்விகள். எருமையாகப் பிறந்துவிட்டால் நுகத்தடி பூணுவதை எதிர்க்கக்கூடாது. இலக்கியக் கர்த்தாவானால் பேட்டிக்கு முகத்தைத் துடைத்துச் சுத்தமாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். " தாங்கள் எழுதுகையில் கவிழ்ந்து படுத்திருப்பீர்களோ, அல்லது குறுகிக்கொண்டு ஒரு குந்தத்தின் மேல் அமர்ந்திருப்பீர்களோ?" "ஸார், 'க்ஷ்' என்ற எழுத்தை எழுதுகையில் அது படைப்பு முறையினால் மேன்மைபெற்று 'ச' என்று ஆவதுண்டோ?" ஆனால் இலக்கியத்துக்குப் புறம்பான விஷயங்களைப் பேசுவதுதான் சரி.

இவ் வனிதாமணி, முற்றியவிதை, என்னவெல்லாம் ஆயுதங்களுடன் வந்திருக்கிறாளோ! அவள் தனது காலடிச் சுவடுகளை மோப்பம் பிடித்து வந்திரு்கிறாள். அவளுக்கு வெறுப்புண்டாக்குவது மடத்தனம். 'லர் ஹுமானித்தெ' யுடையவோ, ' நியூயார்க் டைம்ஸ்'ஸினுடையவோ நிருபராயிருக்கலாம். லட்சக்கணக்கில் மக்கள் படிப்பர். "மிஸ்டர் எஸ். ப்ரிக்ஸ் நோபல் பரிசு பெற்றவர். ரவீந்திரநாத் டாகூருக்குப் பிறகு........"

"யூ மீன் டகோர்?"

"ய!"

"ஃபன்னி ஓல்ட் மேன் , அஃப்கோர்ஸ்!"

முன்பக்கம் வீனஸின் சிலைகொண்ட மார்பிள் பெஞ்சில் மிஸ்டர் ப்ரிக்ஸ் ஊன்றியமர்ந்தார். அந்த வெண்ணெய்க்தற்சிலையின் தொடைகளுக்கு இத்தனை முனைப்பு அவசியமா? யாருடைய படைப்பு? தன்னிடம் பேட்டிக்காக வினயத்துடன் நெருங்கி வந்திருக்கும் ஒயிலாளும் மினிப் பாவாடைக்காரிதான். அவளுடைய தொடைகளுக்கு அத்தனை முனைப்பில்லை.

கேள்விகளையெல்லாம் அவள் தயார் செய்துகொண்டு வந்திருக்கிறாள். தாக்குதலுக்கு வேண்டிய ஆயுதங்களையெல்லாம் முதலிலேயே சேகரித்துக்கொண்டு வந்திருக்கிறாள். அவள் வெறும் பத்திரிகை நிருபரல்லள். சாட்சாத் பத்திரிகை ஆசிரியையே. காலகட்டத்தின் வைரம் பாய்ந்த பிரச்னைகளே பேச்சின் கரு. மினிப்பாவாடை யணிந்த கால் முட்டியைக் குறுக்கி, மென்மை வாய்ந்த கண்கள் உலகத்தின் பெரும் விஷயங்களை எடுத்து அம்மானையாடக் காட்டும் ஆர்வத்தை நினைத்தபோது நகைச்சுவைக்கப்பாற்பட்ட மிஸ்டர் எஸ். ப்ரிக்ஸுக்குக் கூடச் சிரிப்பு வந்தது. ஆனால் அவர் சிரிப்பை ஒதுக்கி வைத்தார். கேலி செய்தல் கூடாது. அவள் சமர்ப்பித்த கேள்வி மாலையிலிருந்து புரிந்துகொள்ளலாம். ஒரு அறிவு ஜீவி அவள். அறிவு ஜீவிகளைக் காண்கையில் புருவத்தைச் சுளித்துக்கொள்ளுங்கள். ஆனால் பீறிட்டுச் சிரித்து விடாதீர்கள். நிர்வாணமான பற்கள் மூளையைப் பரிகாசம் பண்ணுகின்றன.

அவள் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டது: மிஸ் மரியா கொரோஸி,எடிட்டர், 'லா புர்க்ஸி'.

'லா புர்க்ஸி' ~ஒரு லிட்டில் மாகஸின். மொத்தமே அச்சாகும் பிரதிகள் நூற்றியெழுபத்தேழு. கல்லச்சில்தான் அச்சாகிறது. உலகத்தில் நூற்றைம்பது பெரிய மனிதர்கள். இக் காலாண்டு இதழை வாசிக்கின்றனர். இதைப் படிப்பவர்கள் அப்படிச் செய்வதினாலேயே பெரிய மனிதர்களாகிறார்கள். ஆர்தர் மில்லர் முதல் ஸோலக்கோவ் வரை இப் பரம்பரையில் உட்படுவர். ஸார்த்ரெ அனுப்பிய படைப்பு, வேண்டிய அளவு தத்துவார்த்தமாக இருக்கவில்லையென்ற காரணத்தால் 'லா புர்க்ஸி ' அதைப் பிரசுரிக்கவில்லை. ஒருமுறை மட்டும் காமுவின் படைப்பைச் சேர்த்தது. ஆசிரியருக்கான ஒரு சிறு கடிதம். அக் கடிதம் வெளிவந்த மாதத்தில்தான் காமுவுக்கு நோபல் பரிசு கிடைத்தது. நோபல் ப்ரைஸ் வாங்கியவர்களுக்கே இப் பிரசுரத்தில் எழுத அருகதையுண்டு. வாசகர்களைக்கூட ஆசிரியரே தேர்ந்தெடுக்கிறார். மிஸ்டர் ப்ரிக்ஸை 'இன்டர்வியூ' பண்ணும் 'லா புர்க்ஸியின்' பெருமைகள் இவையும், இன்னும் பலவும்.

ஒரு கையில் சீவிய பென்சிலும், மறு கையில் நோட் புத்தகமுமாக அவள் தன் முன்னால் நிற்கிறாள். அழகுமிகு ஓர் கம்பீர வனிதை. வீனஸ் சிலையின் பின்னணியில் அவளுக்குத் தெய்வீகமான அழகு உண்டாயிற்று. மிஸ்டர் ப்ரிக்ஸ் அவளை நோக்கியவாறிருந்தார். அப் பார்வையின் கவர்ச்சியாலோ அல்லது அதனுடைய ஊடுருவலாலோ என்னவோ அவள் புல்தரையில் தனக்கு நேராக முன்னால் இடம் பிடித்தாள். அவள் ஒரு புறக்கொடியின் நுனியைக் கிள்ளி முகத்தைச் சொறிந்துகொண்டபோது மிஸ்டர் ப்ரிக்ஸின் மனத்தில் கவர்ச்சி மிக்கதோர் இந்திய சினிமா நடிகையின் சித்திரம் பதிந்தபோதிலும் கணப்பொழுதில் அவ்வுபயோகமற்ற சித்திரம் அழிந்துபோயிற்று. அது நல்லதொரு சம்பவம். ஒரு மினி ஸ்கர்ட்டுக்காரி காலடியில் புல்தரையில் அமர்ந்திருப்பதும், நீங்கள் சற்று உயரத்தில் பெஞ்சில் உட்கார்ந் திருப்பதுமாக இருக்கையில், உங்கள் பருந்துக் கண்கள் பம்பரம்போல எந்தப் பக்கம் திரியுமென ஊகித்துக்கொள்ளுங்கள். இல்லாத பாவாடை நுனியால் அவள் பெண்மையின் வடிவுகளை இழுத்து மறைக்க முயற்சித்தாள். கடைசியில் அவள் தொடையின்மேல் நோட்புக்கை வைத்துக்கொண்டாள். ப்ரிக்ஸ் பொழிந்த பொன் மொழிகளைக் குறித்துக்கொண்டாள். அவள் மரியாதை கலந்த வணக்கங்களுடன் சமர்ப்பித்த கேள்விமாலையில் கண்ணையூன்றி, பைப்பை வாயிலிருந்து எடுக்காமல் புகையில் பொதிந்த வார்த்தைகளை அவர் வெளியே விட்டார்.

"இக் கவிதைகளில் பெரும்பாலானவையும் நான் இப்தால் சர்வகலா சாலையில் கூட்டிய அகில உலக இலக்கிய மாநாட்டின் தலைமையுரையில் சர்ச்சைப் பொருளாக்கியிருக்கிறேன். அதை நீங்கள் படித்தீர்களா?”

"படிக்கவில்லை. மேஜை இழுப்பறையில் வைத்திருக்கிறேன்” என்றாள் "லா புர்க்ஸி” பத்திரிகாசிரியை.

"அரிய சிந்தனைகள் மேஜை இழுப்பறையில் வைக்கப்படவேண்டியவையல்ல. இதயத்தில் பாதுகாக்கப்பட வேண்டியவையே”-மிஸ்டர் ப்ரிக்ஸ் தொடர்ந்தார். "இந்தப் பத்தாண்டில் பத்திரிகாசிரியர்களுக்குக் கருத்துக்கள் மூளையிலல்ல, அலமாரிகளிலாம். அவர்களை மட்டும் நான் குறை கூறவில்லை, வேதப் புத்தகம்கூடப் பாதிரியின் இருக்கைத் தலையணைக்கு உயரம் கூட்டும் உபாயமாக இருக்கும் காலகட்டத்தில்.”

அவள் சிரித்தாள்: அவரும் சிரித்தார். அவளது பற்கள் நீல நிறமானவை. சிகரெட் குடிப்பதனாலிருக்கலாம். வைட்டமின்-ஸி குறைவினாலுமிருக்கலாம். தனது பெட்டியிலிருக்கும் மாத்திரைகளைக் கொஞ்சம் எடுத்துக் கொடுத்தாலென்ன? வெள்ளைக்காரப் பெண்மணிக்கு ஏராளம் சத்துக் குறைவுகளுண்டு. அதையெல்லாம் சரிக்கட்டதான் ஏன் மெனக்கெட வேண்டும்! அதுவும் நோபல் பரிசு வாங்கிய ஓர் ஆசியன்.

"மிஸ்டர் ப்ரிக்ஸ், எனது ஏழாம் கேள்வியைக் கவனித்தீர்களா? ஸெக்ஸ், ஸொஸைட்டி இவற்றிற்கிடையிலுள்ள உறவைப்பற்றி, நவீன நாகரிகத்தின் விதியை நிர்ணயிக்கும் முடிவு அதுதானே?”

"இக் கேள்வியை அதனுடைய நிர்வாண உருவிலேயே சிந்திக்க வேண்டியுள்ளது.”

"நேக்கட்ஸ் த வேட்” மிஸ் மரியா கொரோஸி ஆமோதித்தாள்.

"வாழ்வின் சத்தும் ஸெளந்தர்யமும் ஸெக்ஸ்தான். படைப்பெனும் செயல் ஸெக்ஸ் மட்டும்தான். மற்றெல்லாப் படைப்பு முறைகளும் ஸெக்ஸின் உப-விளைவுகளே. மாற்று வகைகள் என்றும் கூறலாம். மேலைநாட்டவர்கள் மேலெழுந்தவாரியான சிந்தனையாளர்கள். அவர்களுக்கு கலையைப் பொறுத்த அப்பாலைக் கற்பனைகள் கிடையா. இப்போதிங்கே அவ்வளவுதான். எக்ஸ்டென்ஷியாலிஸம். அந்த வழியில் சில விசாரணைகள் ஆரம்பித்தது. ஆனால் இலட்சியத்தை அடையாமல் தோற்றது. வெளிப்படையாகச் சொல்வதினால் உங்களுக்கு அதிருப்தி உண்டாவதில்லையே? உங்களுக்கு ஆண் பெண்ணினுடைய ஸெக்ஸின் பரந்த சாத்தியக் கூறுகள் புரியவில்லை. உதாரணத்திற்கு ஸார்த்ரெயையும் மதாம்புவையும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள்தானே எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட் திருச்சபையில் மேட்ரனும் மதர் ஸுப்பிரியரும். அவர்கள் புண்ணியவான்களின் வேஷமிட்டு ஆட மட்டுமே செய்கின்றனர். புதிய வாசக வித்தைகள் செய்கின்றனர். அடிப்படையாக, நொடித்தலுக்குள் வழுக்கித் தாவும் மேற்கத்திய பூர்ஷ்வாக்களின் பழைய மொராலிட்டியில்தான் இவர்களும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மார்க்ஸிஸ்ட் கொள்கையில் அதை முக்கியெடுத் திருக்கிறார்கள் என்பது மட்டும்தான் ஒரு வேறுபாடு. அவர்கள் புரட்சிக்காரர்களில்லை. துடைத்துப் பளபளபாக்கிய அலங்கோல நம்பிக்கைகளின் மொத்த வியாபாரிகள். நான் சொல்வது புரிகிறதா?”

"ஆமாம் மான்ஸிக்ஞேர்.”

"மீசை முளைக்காத பிள்ளைகளுடையவும் முலை வளராத சிறுமிகளுடையவும் ஃபிலாஸபியே எக்ஸிஸ்லென்ஷியாலிஸம். வளர்பருவத்தின் ஏறு மாறான நடத்தைகள் சிலருக்கு வயதான காலத்தில் சாகஸங்களாகிவிடும். ஸெமிட்டிக் வர்த்தகத்திற்கு அசல் ஆசியனைப்போல வளர முடியவில்லை. அவ் வர்க்கத்தின் தர்மக் கட்டுகளே மேற்கத்திய நாகரிகத்தையும் வாழ்க்கை முறையையும் கட்டி உயர்த்தியிருக்கின்றன. மேற்கத்தியரின் அறிவு விலாசம் அவர்களுடைய கண்டுபிடிப்புக்களிலேயே, மேலே என்னவென்றறியாத நிலையின் வசமாகிவிட்டது.

ஸெக்ஸின் சிம்பல் பாம்பு என்பதை அவர்கள் அறிந்தனர். இதோடு ஸர்ப்ப விரோதிகளுமானார்கள். இக்காலத்தில் ஆட்டம்-பாம் தயாரித்து விற்றுவிட்டு அதைத் தடைசெய்ய வேண்டுமென்று அறை கூவல் விடுவதைப் போல. சில காலமாக அவர்கள் பார்வையும் கிழக்கு நோக்கித்தான்.”

”அப்படியென்றால்?”

"பழைய ஆதாமைப் போலவும் ஏவாளைப் போலவும் மேலைநாட்டு நாகரிகத்தின் கனவுலகிலிருந்து தாமே விலகிக்கொண்ட யுவதிகளும் வாலிபர்களும் கூட்டம் கூட்டமாக்க் கல்கத்தாவிலும், தில்லியிலும், கேரளக்கரையிலும் சுற்றியலைகிறார்களென்பது உங்களுக்குத் தெரியுமா? பழமையின் களங்கமின்மைக்குத் திரும்புவதல்ல அவர்களது வெறி. ஸெக்ஸைச் சுற்றி ஸெமிட்டிக் மதக்கோட்பாடுகள் பொதிந்து வைத்த கட்டுப்பாடுகளை அகற்ற வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள். 'கூடாது!' என்ற பெரியதோர் போர்டை முன்னால் வைத்துக்கொண்டு யாரால் வாழ முடியும்! பாம்பு சைத்தானல்ல, படைப்பாளி. கடவுளின் விரோதியல்ல, உதவியாளன். இந்து தெய்வங்களைப் பாருங்கள். விஷ்ணு ஸர்ப்ப சயனி. சிவனின் மார்பில் மாலையே பாம்பு. புத்தனுக்குக் குடை விரித்தது நாகம்தான். பாம்பின்றிக் கடவுள்களால் படைக்க முடியாது.

ஆசியாவின் ஜனப் பெருக்கத்தையும் ஐரோப்பாவின் மக்கள் தொகைக் குறைவையும் இப் பின்னணியிலேயே மதிப்பிட வேண்டும். நாங்கள் காட்டுமிராண்டிகள் என்பதால் குழந்தைகளைப் பெற்றுப் போடுகிறோம் என்றுதானே நீங்கள் பிரசாரம் செய்கிறீர்கள்? நீங்கள் நாகரிகமானவர்களாகையால் குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப் பிடிக்கிறீர்கள் போலிருக்கிறது. இந்தக் கட்டுக்கதையை இளம் தலை முறை நம்புவதில்லை. உயிர்ச்சக்தி அறுபடுவதா நாகரிகம்? இருபாற் பண்போ அதனுடைய அடையாளக்கொடி? மேலைநாட்டு நாகரிகம் இயந்திரங்களின் வைப்பாட்டியாக மாறியிருக்கிறது. இயந்திரங்களோடு சல்லாபம். அதுதான் உங்கள் ஆனந்தம். பாட்டுக்கேட்க ரேடியோ, படம் பார்க்க டெலிவிஷன்; பயணம் செய்யக் கார், விமானம். கணக்குப்போடக் கம்ப்யூட்டர்; பிண எரிப்புக்கும் மின்சார இயந்திரங்கள். மேலைநாட்டார் வாழ்க்கைக்காக அடைந்துள்ளவை நியாயத்திற்குட்பட்டவையல்ல. நீங்கள் பரிணாமத்தின் பிடியிலிருந்து விழுந்து கொண்டிருக்கிறீர்கள். அதற்கிடையில்தான் இயலாமைகளின் ஆட்டி வைத்தலுடன் உங்கள் மதங்கள். புதிய மதமாக வளர்ந்துவிட்ட மனத்தத்துவம். இவையெல்லாம் ஸெக்ஸிற்குப் பர்தா அணிவித்திருக்கின்றன.

உணர்ச்சி ஒளியல்ல, உணர்ச்சி வெட்டுதலே நேருகிறது. மதமும் மனத்தத்துவமும் உங்களுடைய மேம்பாட்டைத் தகர்க்கின்றன. யூரோப்பியன் ஒரு பொய் மனிதன். அவனுடைய சத்தை என்றோ அவன் தலை முழுகிவிட்டிருக்கிறான். நீங்கள் செயற்கையில் பாது காப்பைக் காண்கிறீர்கள். பொய்ப்பல், பொய் மயிர், பொய் மார்பு, பொய் நிறம், பொய் மணம். பொய்ப் பிட்டம். இதோ இப்போது பொய் இதயமும் – பொய் மனிதன். இளைஞர்கள் இச் சிதைவிலிருந்து தப்ப ஆவேசப்படுகிறார்கள். அவர்கள் கிழக்கைச் சரணடைகிறார்கள். வெளிச்சம் எப்போதும் உதித்தது கிழக்கில்தான்; அஸ்தமித்தது மேற்கில். புதிய பிறப்பின், வேதத்தின், வாழ்க்கை முறையின், கடவுளினுடைய ஊற்றைத் தேடி ஊர்சுற்றிகளைப்போலத் தாமே பாய்ந்து விழுந்தவர்களும், மேலைநாடுகளின் மதமெனும் கபடங்களை எதிர்ப்பவர்களும் புதிய ஒன்றினுக்காகத் தாகமுற்றவர்களுமான இளைஞர்கள், தடையற்ற ஒரு பாலியல் அறிவிற்காக ஏங்குகுறார்கள். பாலியல் தரிசனமென்றால் வாழ்க்கையின் உயிர்த்தெழல், வீர்யத்தின் புரட்சி. மேலைச் சிந்தனையாளர்கள் புரட்சியின் ஈமச் சடங்குகளுக்குத் தயாராகும் அவசரத்திலிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து ஒன்றையே எதிர்பார்க்கலாம். குளிர்ந்த சாவு!!”

”வாழ்க்கை மறுபடியும் உயிர்த்தெழுவ தெங்கேயென்று தயவு செய்து விவரித்தால், எங்களுக்கு அருள் செய்வதாகும்.” மரியா கொஞ்சி மொழிந்தாள். ப்ரிக்ஸின் பரந்த அறிவின் போதை அவளுடைய தலையில் ஏற ஆரம்பித்திருந்தது. அவள் தானும் கண்டு கொள்ளும் விஷயங்களை வெளியிடும் உற்சாகத்தில் மீண்டும் கூறினாள்:

"இந்தியாவில் ஆவதுதான் சாத்தியம்.”

"இந்தியாவில்தான்.” ப்ரிக்ஸ் நிலைநாட்டினார்! "உங்களுக்குத் தெரியுமா? இந்திய நாட்டில், கேரளாவென்றொரு மாநிலமுண்டு. சிறிய பிரதேசம், நிறைய மனிதர்கள். புதிய தரிசனத்தின் ஆரம்பம் அங்கே யிருந்துதானிருக்கும்.”

"சுவையானது இம் முடிவு.” நீலநிறமான பற்களை அவள் வெளிக் காட்டினாள். அப்போது அவள் தனது நாடான ஃப்ரான்சைப்பற்றி யோசித்தாள். எப்படிப்பட்ட சிதைவு! எவ்வளவு கீழான நிலைமையில் அங்குள்ள சிந்தனையாளர்களும் இலக்கியக் கர்த்தாக்களும்! ப்ரிக்ஸ் ப்ரான்ஸில் பிறந்திருந்தால்! மகத்தானவோர் மூன்றாம் புரட்சியின் தீர்க்கதரிசியாகிவிட்டிருப்பார். அவளுக்கு இத் தவிட்டுநிறக்காரனிடம் எல்லையற்ற அன்பு பிறந்தது. அவள் ப்ரிக்ஸினருகில் பெஞ்சில் வந்து அமர்ந்தாள். "யூ ஆர் ஏ ஜீனியஸ்!” சற்று நேரம் அவர்கள் முகத்தை முகம் பார்த்தவாறிருந்தனர். ஒரு வெறும் மகிழ்ச்சி.

"கேரளத்தைப் பற்றி?” அவள் விசாரித்தாள்.

"மிகப் பழங்காலத்திலிருந்து மலபாரிகள் நாகாராதனை செய்பவர்கள். சரித்திர காலத்திற்கும் முன்பிருந்தே, அங்குள்ள கிராமங்களில் பாம்புச் சோலைகளுண்டு. அக்கே நாக சித்திரங்கள், பந்தலித்து ந்ற்கும் பரந்த மரங்கள். பாம்பு விக்கிரகங்கள். பாம்புத் தோப்பு ஸர்ப்ப மண்டபமே கோயில். பாம்புகள் ஓவியக் கற்களினடியின் சுருண்டுகிடந்து உறங்குகின்றன; சில சமயம் ஓவியக் கல்லின்மேல் வாலையூன்றி நின்று பட்த்தை யுயர்த்தி நடனமாடுகின்றன. கரிமூக்கன்கள், பொன்புள்ளியுள்ளவை, பறப்பவை, தலையில் மாணிக்க மணியை அணிபவை ஆகிய பலவகை ஸர்ப்பங்கள். நாங்கள் ஸர்ப்ப விழாக்கள் கொண்டாடுகிறோம். எங்களது அழகியரான கன்னியர் பாம்புத் துள்ளலின் தாளத்தில் அலைகளைப் போல நடனமாடுகின்றனர். தலைமயிரை விரித்துப் போட்டு, முனைத்த முலைகள் துள்ள, வியர்வையாம் முல்லை மொட்டுக்களை உதிர்த்து, மழை முகில்களைப் போல. அசைந்தாடுவதில் துள்ளித்தளர்ந்த தளிர் மேனியரான மலையாள மங்கைகளின் மனமும் உடலும் சோர்வுறுகின்றன. கலவிக்குப் பிறகுபோல அரியதோர் லாவகம். செயலுணுர்வான ஸெக்ஸின் நாட்டிய வெளிப்பாடு அது. வாழ்க்கையுடன் வருக, விளையாடுக என்ற அழைப்பு. மரியா கொரோஸி, நீங்கள் பழைய ஏற்பாட்டைப் படித்ததில்லையா?”

"உண்டு. ஆனால் பல பகுதிகளும் மறந்துபோயிற்று."

"எனக்கு நினைவிருக்கிறது. மற‌தியும் மேலை நாட்டவரின் ஒரு நீங்கா நோய். உங்களது சரித்திர உணர்வை இன்று பூரணமாகக் காயம் பீடித்திருக்கிறது. ஆதாமிற்கும் ஏவாளுக்கும் பாலுணர்வு உண்டானது பாம்புடன் தொடர்பு உண்டான பிறகே. ஏவாள் பாம்பை ஆராதித்துத் தோற்றுவித்தாள். கடவுள் கொடுக்கத் தயங்கியது அவளுக்குப் பாம்பிடமிருந்து கிடைத்தது. அவள்தான் முதல் பாம்புக் குதியாட்டத்தை ஆரம்பித்தவள். பாம்பு எழுச்சியடைந்தபோது அவளுள் காமம் கலந்தது. அதை அவள் ஆதாமினுள்ளும் புகுத்தினாள். அந் நிமிடம் முதல் அவர்களுக்கு வெட்கம் என்ற உணர்வு உண்டாயிற்று. காமத்தின் அடிநுனியே நாணம். அது காமத்தை மறைப்ப‌தில்லை. மகிழ்ச்சிகரமான தாக்குகிறது. படைப்புச் சக்தியின் மெல்லிய ஏடே வெட்கம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். காமதேவனாகிய பாம்பை வெறுப்ப‌தும், ஆனாலும் அவன் உப‌தேசித்த காம விளையாட்டைத் தொடர்வதும்- இவற்றினிடையிலுள்ள‌ உள்ள தர்ம சங்கடமே மேலைநாட்டு வாழ்க்கையை அலங்கோலப்படுத்துகிறது. பல நூற்றண்டுகளாக உங்கள் மனதில் இந்த முரண்பாடு இறுகிப்போயிருக்கிறது. உங்களுடைய மனத் தத்துவம் முழுவதும் இப் பின்னணியில்தான் வெளிப்பட்டிருக்கிறது. நீங்கள் எப்போதாவது பிற‌வி உறுப்பைப் ப‌ற்றிச் சிந்தித்த‌துண்டா, ஒரு பல‌வீன‌மான‌ நிமிட‌த்திலாவ‌து?"

"சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில்."

"அப்போதெல்லாம் என்ன‌ தோன்றிய‌து?"

"அதை எப்ப‌டிச் சொல்வ‌து?"

"சொல்ல‌ வெட்க‌மென்றால் வேண்டாம். க‌ட்டாய‌மில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் முத‌லில் பிற‌வி உறுப்பு இருக்க‌வில்லை. இந்த‌ச் ச‌ரித்திர‌ உண்மை உங்க‌ளுக்குத் தெரியுமா?"

"ம்ஹூம். இம் முடிவின் அடித்த‌ள‌ம் எது?" அவ‌ள் அறிந்துகொள்ளும் உற்சாக‌ம் மிக்க‌வ‌ளாக‌க் காண‌ப்ப‌ட்டாள்.

"பிற‌வி யுறுப்புக்க‌ள் க‌ட‌வுளின் ப‌ரிச‌ல்ல‌. பாம்பினுடைய‌வை. ஆணிலும் பெண்ணிலும் பாம்பின் அம்ச‌ம் இருக்கிற‌து. அதொன்று ம‌ட்டுமே ஒருவ‌ரை ஆணோ பெண்ணோ ஆக்குகிற‌து. ய‌ஹோவாவா‌ன‌ க‌ட‌வுள் த‌ன‌து அடிமைக‌ளைப் பாம்பு பாதித்துவிட்ட‌போது, செய‌லிழ‌ந்து அடிமைக‌ளிட‌ம் கோப‌த்தோடு ந‌ட‌ந்துகொண்டார். ஆனாலும் க‌ட‌வுள் த‌யாநிதிதான் - க‌ளைப்புற்றாலும் சின‌முற்றாலும் - த‌ன‌து ப‌டைப்பை வ‌ருத்துகிற‌போதிலும் அவ‌ர் க‌ருணையும் காட்டுகிறார். ஆதிகால‌த்திலும் அப்ப‌டியே. முத‌ல் அறுவைசிகிச்சை ந‌ட‌த்திய‌து க‌ட‌வுள் என்ப‌து தெரியும‌ல்ல‌வா. ஆதாம் என்ற‌வ‌ன் உற‌ங்கிக்கிட‌ந்த‌ போது அவனது விலாவெலும்பை யெடுத்து ஏவாளைப் ப‌டைத்தார். கடவுள் மறுபடியும் ஒரு அறுவை சிகிச்சை செய்தார். ஈடன் தோட்டத்திலிருந்து ஆதாமையும் ஏவாளையும் விரட்டியடிப்பதற்கு முதல் நாள் இரவு.”

"இது பழைய ஏற்பாட்டில் இல்லை"

"இப்போது இல்லை. அந்நாளில் இருந்தது. சநாதனிகள் அவ்வரிகளை வெட்டியெறிந்துவிட்டனர். அவர்கள் வேதப்புத்தகத்தையும் திருத்தினார்கள்! கடவுளின் திருமறையைக்கூட. அவர்களல்லவோ பாம்பின் பரம விரோதிகள். எப்போதும் பாம்பைச் சுட்டிக்காட்டி மனிதன் பாவம் செய்தானென்று நினைவுபடுத்துபவர்கள். கடவுள் ஆதி பாம்பைக் கொன்றார். அதைத் துண்டாக வெட்டினார். ஒரு துண்டை யெடுத்து ஆதாமின் தொடைகளுக்கு நடுவில் தைத்து வைத்தார். இரு பக்கங்களிலும் இரு பாம்பு முட்டைகளையும்."

"ரியலி?" மரியா துள்ளிக் குதித்தாள்.

"நிச்சயமாக, பிறகு தயாநிதியான தெய்வம் ஏவாளின் வயிற்றைக் கிழித்தார்."

"ஓ! உறி வாஸ் க்ரூய‌ல்!" அவ‌ளுக்கு வேத‌னை உண்டயிற்று.

"ஒரு கூட்டைத் தைத்து வைத்தார். அதற்கொரு பாதுகாப்பான மூடியும். நீங்கள் பாம்பின் நண்பர்களாகையால் எக்காலமும் பாம்பு பூஜை செய்து வம்சம் பெருக்கி வாழ்வீர்களாக என்று இருவருடைய காதிலும் ஓதினார்."

"விஷம்தான் படைப்புச்சக்தி. ஆட‌வன் தன்னுள் சொறியும் விஷத்தைப் பரப்பி, படைப்புச் செயலுக்குத் தயாராகிறான். அந்த விஷத்தை யேற்று படைப்புச் செயலில் பங்காளியாவற்காகப் பெண். இதுதான் ஆதி பாவ‌ம். ம‌னித‌னைப் பொறுத்த‌வ‌ரையிலும் ம‌க‌த்தான‌ பேறு. ஸெக்சும் பாம்பும் ஒன்றுதான். பாம‌பை வெறுப்ப‌வ‌ர்க‌ள் புண‌ர்ச்சி விரோதிக‌ளும் இய‌ற்கையை எதிர்ப்பவர்களுமாக‌ இருப்பர். க‌ட‌வுளின் உற‌வின‌ர்க‌ளாக‌ ஆவ‌த‌ற்காக‌க் க‌ச்சைக‌ட்டுப‌வ‌ர்க‌ள் பிர‌ம்ம‌ச‌ர்ய‌ம் அனுஷ்டிக்க‌ வேண்டுமென்ற‌ நிய‌தியின் பொருள் இதுதான். ஒவ்வொரு பாம்புக் குட்டியும் அத‌னுடைய‌ கூட்டைச் சேர‌ வேட‌கை கொள்கிற‌து. ஒவ்வொரு பாம்புக் கூடும் அத‌னுடைய‌ விஷ‌த்தை ஏற்க‌வும். இணை சேர்ந்து பிடித்துப் ப‌ட‌ர்ந்து ஆடி காம‌த்தை அவ‌ர்க‌ள் ஒரு க‌லையாக‌ மாற்றுகின்ற‌ன‌ர்.

"அக் கூட்ட‌த்தில் நானும் நீங்க‌ளும்."

"ஆமாம். பாம்பின் அம்‌ச‌ங்க‌ள் ந‌ம்மிலுமுண்டு. ப‌டைப்பு பூர்வ‌மான‌ அம்ச‌ம். வ‌ம்ச‌ ப‌ர‌ம்ப‌ரையை நிலை நிறுத்தும் விஷ‌ம். உயிச்ச‌த்து."

எத‌ற்கோ அவ‌ள் உள்ள‌ங்கையை உய‌ர்த்தினாள். மிஸ்ட‌ர். எஸ் ப்ரிக்ஸ் சொன்னார்: "உள்ள‌ங்கையின் உருவ‌ம் நாக‌த்தின் த‌லையுடைய‌து. ப‌ட‌ம் விரித்தாடும் பாம்பின் தலையுடையது. பாருங்கள், ஆணும் பெண்ணும் கைகோர்த்துப் பிடித்து நடனமாடுகையில் அவர்கள் பாம்புகளாக நடிக்கிறார்கள்."

ப்ரிக்ஸ் அவளுடைய கையை எட்டிப் பிடித்தார்.

"அவள் விலக்கவில்லை. அவர் எழுந்தார். அவளும். அவளது இரு உள்ளங்கைகளும் அவரது உள்ளங்கைகளில் அடங்கின. ப்ரிக்ஸ் பாடினார். ஆடு பாம்பே, மெய்யும் மனமும் குளிர்ந்தாடு பாம்பே! அவளுடைய பாட்டு அவருக்குப் புரியவில்லை. அது ஃப்ரெஞ்ச் மொழி. ஸெக்சின் மொழியல்ல.

மெதுவாக அவ்விரு உருவங்களும் மறைந்தன. ஸ்டாக்ஹோமின் நந்தவனமும், வீனஸின் சிலையும், பனிமூடிய ஒளியும். வீட்டு அறை. அறைக்குள் இரு பாம்புகள். ஆண் பாம்பு படர்ந்து வீர்யத்துடன் ஆடுகிறது. பெண் பாம்பு பதுங்கிக் கிடக்கிறது. ஆண் பாம்பு மெல்ல அவளுடைய தலையில் முத்தமிட்டது. அப்போது அவளும் தீநாக்குப் போலப் புடைத்துத் தெரித்தெழுந்து படமெடுத்தாடத் தொடங்கினாள். ஆடுகின்ற ஆண் பாம்பும் பெண் பாம்பும் சுற்றிப் பிணைந்தன.

இறுதியில், காவி ஒளிர்ந்த நிலத்தில், சூர்யகாந்திப் பூக்கள் கரிந்து பீடித்த அதே இடத்தில், கதிரவனின் ஒளியேற்று, அசையாமல் பளபளத்துக் கிடந்தது இரு தலைகள் கொண்ட ஒரே ஸர்ப்பம்!
-------------------

6. டில்லி


க‌ன்னாட் ப்ளேஸின் ந‌டுவிலுள்ள‌ பார்க்கிலிருந்து சுற்றிலும் நோக்கிய‌ போது தான் ஒரு கூட்டுக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறோம் என்று தோன்றிய‌து அவ‌னுக்கு.

பார்க்கினுடைய‌ இரும்புக் கிராதிக‌ளைச் சூழும் க‌ருப்புத்தாரிட்ட‌ க‌ர‌டுமுர‌டான‌ வ‌ட்ட‌த்திற்க‌ந்த‌ப்புற‌ம் உருண்ட‌ பெருந்தூண்க‌ள் வ‌ரிசையாக நிற்கின்ற‌ன‌. அத‌ற்கும் பின்னால் ப‌ல‌மான‌ சுவ‌ர்க‌ள். சுவ‌ர்க‌ளிலுள்ள‌ ஜ‌ன்ன‌ல்க‌ளில் ப‌ல‌வித‌மான பொருட்க‌ள் காட்சிக்கு வைக்க‌ப் ப‌ட்டிருக்கின்ற‌ன‌.

தான் நிற்கும் நில‌த்தைப் 'பார்க்' என்று சொல்ல‌ முடியாது. ச‌ம‌மில்லாத‌ ஈர‌மான‌ நில‌த்தில் புல் க‌ட்ட‌ற்றுப் ப‌ட‌ர்ந்திருக்கிற‌து. இருளிற்குக் க‌ன‌ம் கூட்டுவ‌த‌ற்காகப் ப‌ந்த‌லிட்டு நிற்கும் ம‌ர‌ங்க‌ளை வ‌ள‌ர்த்திருக்கிறார்க‌ள். ம‌ர‌ப்ப‌ட்டைக‌ளாலான‌ ப‌ழைய‌ பெஞ்சுக‌ள் போட்டிருக்கிறார்க‌ள்.

மிக‌வும் இருட்டியாகிவிட்ட‌து. க‌டைக‌ளெல்லாம் அடைத்துவிட்டிருந்த‌ன‌. காலியான‌ ரோடில் அவ்வ‌ப்போது ஓரிரு வாக‌ன‌ங்க‌ள் க‌ட‌ந்து சென்ற‌ன‌. க‌ட்ட‌ட‌ங்க‌ளில் நீல‌ம், சிவ‌ப்பு, ம‌ஞ்ச‌ள் நிற‌ நியான் எழுத்துக்க‌ளும் சித்திர‌ங்க‌ளும் ப‌ளீரிடுவ‌தும், மறை‌வ‌துமாக‌ இருந்த‌ன‌.

பார்க் ஆளற்றிருந்த‌து.

ஒரு கூண்டில் அக‌ப்ப‌ட்டுக் கொண்ட‌வ‌னைப்போல‌ அவ‌ன் அங்கே நின்றான். ம‌ன‌தில் இருப்புக் கொள்ளாத‌, இன‌ம‌றியாத‌ வேத‌னை வியாபித்திருந்த‌து. இங்கே வ‌ந்த‌து முத‌ல் இது ம‌ன‌தில் இருக்கிற‌து. என்ன‌ கார‌ண‌ம் இத‌ற்கு? ஒன்றும் க‌ண்டுபிடிக்க‌ முடிய‌வில்லை. நாட்க‌ள் க‌ழிய‌க்க‌ழிய‌ அத‌னுடைய‌ ஆழ‌ம் அதிக‌மாகி மிக‌வும் அல‌ட்டிய‌து.

தான் இக் கூண்டிலிருந்து விடுப‌ட‌ப் போகிறோம். இன்னும் சில‌ மாத‌ங்க‌ளே தேவை. அதை நினைத்த‌போது ச‌ந்தோஷ‌ம் உண்டாயிற்று. ஊரில் ஆர‌ம்பிக்கும் ம‌த்ய‌ அர‌சின் ஒரு க‌ம்பெனியில் த‌ன்னை நிய‌மிக்க சிபாரிசு போயிருக்கிற‌து.

நா‌ன் இங்கிருந்து விடுத‌லை பெறுகிறேன்!

நகரத்திலிருந்து வெகுதூரத்திலிருந்து ஒரு குன்றுப் பகுதியில் ஃபாக்டரி. ஒதுக்கமான ஒரு வீட்டில் அமைதியான வாழ்க்கை. இழந்த சுகங்களை யெல்லாம் மீண்டும் பெற வேண்டும். அப்போது மனதிற்குச் சமாதானம் கிடைக்குமாயிருக்கும்.

மறந்தாயிற்று என நினைத்திருந்த ஒரு பெண்ணைப் பற்றி சமேபகாலமாக மீண்டும் நினைக்கத் தொடங்கியிருக்கிறான். தன்னுடையவளாயிருந்தாள் அவள். திருமண யோசனைகளை அவள் அத்தனை ஒதுக்கித் தள்ளியதை அறிந்தபோது மகிழ்ச்சியின்மையே உண்டாகிக் கொண்டிருந்தது. யாருக்காக அவள் காத்திருக்கிறாள்? வாழ்நாள் முழுவதும் தன்னைக் குற்றவாளியாக்க......

இப்போது அதில் மகிழ்ச்சி உண்டாகிறது. தன்னுடைய வீட்டை ஆள, தன் குழந்தைகளுக்குத் தாயாக ஆவதற்கு இருப்பவள்.

ஒரு பெஞ்சின்மேல் சுருட்டிக் குவிந்திருந்த கம்பளியின் உள்ளிருந்து பலமான இருமல் எழுந்தது ரங்கசாமி அய்யர். இவர் ஏன் இப்போதும் இங்கே இருக்கிறார் என்று ஆச்சர்யப்படுவதுண்டு. என்ன காரணத்தால்? உற்றார் யாருமில்லை இங்கே. படுக்க இடம்கூட இல்லை. பனிக் காலத்தின் சில்லிட்ட இரவுகளைப் பப்ளிக் பார்க் பெஞ்சில் கழிக்கிறார்.

இருபது வருடங்கள் முன்பு பென்ஷன் வாங்கினார். சமையல்காரனாகத்தான் வந்தார். அரசாங்க சர்வீஸில் அஃபீஷியேட்டிங் அஸிஸ்டெண்டாக ரிட்டயர் ஆனார். இருக்கும் ஒரு மகளை மதுரையில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். மனைவி எப்போதோ இறந்து போய்விட்டாள். இரண்டு வேளைச் சாப்பாட்டுக்குகூடக் காணாத கேவலமான பென்ஷன் மட்டும்தான் வரவு. இருந்தும் ஏன் இந் நகரத்தைவிட்டுப் போவதில்லை?

குளிர்காற்று அடிக்கிறது. தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. அதோடு பனிக்காலம் அதிகாரபூர்வமாக ஆரம்பமாகிறது.

திரும்பிப் பார்த்தபோது மேலே பூரண நிலவு தெளிவாக நிற்கிறது. ஜும்மா மசூதியின் வெண் மார்பிள் ஸ்தூபிகள் நிலவில் பளீரிடுகின்றன.

இந் நகரத்தின் ஆத்மாவை முகல் சரித்திரத்தில்தான் கண்டு பிடிக்க முடியும் என்று தோன்றுகிறது.

சுந்தர் நகரிலுள்ள தனது ஆஃபீஸிலிருந்து பார்த்தால் இந்திரப் பிரஸ்தம் இருந்த இடத்தில் நிற்கும் பெரிய கருங்கற்கோட்டை.

சுயநலத்திற்காகப் பொய் சொல்லலாம்; துரோகம் செய்யலாம்; இரத்த சம்பந்தமுள்ளவர்கள். குருநாதர்கள் இவர்கள் எல்லோருடைய இரத்த்த்தைச் சிந்தலாம்-இவற்றிலெல்லாம் நிறுவப்பட்ட ஒரு நாகரிகமே இங்கே உடல்கொண்ட்து. பெண்கள் சூதாட்ட்த்தில் பணயம், போதையில் சன்மானம் முதலியவற்றிற்கன பொருட்களாயிருந்தனர்

இன்று இங்கே ஒரு மொகலாயாச் சக்ரவர்த்தி வசித்த கோட்டை நிற்கிறது. முகல் வாழ்க்கைக் காலத்திலும் இதெல்லாம்தான். சொந்த சகோதரர்களின் இரத்தம் சிந்துகின்றனர். தகப்பனாரைக் குற்றவாளி யாக்குகிறார்கள். தயவற்று துரோகம் இழைக்கிறார்கள். தமக்குள் ஏமாற்றுகிறார்கள், வஞ்சிக்கிறார்கள். பரஸ்திரிகளைத் தன்னுடைமை யாக்க முயற்சிக்கிறார்கள். அரசுரிமைக்காக, பொருளுக்காக, போக வாழ்க்கைக்காக.

இக் கோட்டையை நோக்கியவாறு சோம்பேறித்தனமாக அமர்ந்திருக் கையில் யோசிப்பதுண்டு. எதுதான் இந் நகரத்தின் ஆத்மா? பக்கத்திலேயே யுவதியான ஸ்டெனாக்ராஃபரை வழிக்குக் கொண்டுவர சப்ராஸி முயற்சி செய்துகொண்டிருக்கிறான். இந்த ஆஃபீஸில், போகட்டும். இந் நகரத்திலேயே வேலை அவசரத்துடன் யார் இருக்கிறார்கள்? கிணற்றிலிருந்து நீரிறைக்கும் காளைகளைப் போல சோம்பேறித்தனமாகவும், பழக்கப்பட்டுவிட்டவர்கள் போலும். உற்சாகமின்றி வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.

ஓரிரவு அவன் உடன் பணிபுரியும் ஆபிரகாமுடன் ரிவோலியிலிருந்து ஃபர்ஸ்ட் ஷோ முடிந்து வெளியே வந்துகொண்டிருந்தான். டிஸம்பர் வந்தாயிற்று. கடுமையான குளிராயிருந்தது.

கன்னாட் ப்ளேஸின் நடுவிலுள்ள பார்க்கில் ஒரு பெஞ்சில் சுருண்டு குவிந்திருந்த கம்பளியின் உள்ளிருந்து ரங்கசாமி அய்யரின் இருமல் எழும்பிக்கொண்டிருந்தது. பழகிச் சிதைந்த இந்தக் கம்பளியால் இந்தப் பார்க்கின் கடுங்குளிரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. எத்தனை வருடங்கள் பழகியதாக இருக்கும் இக் கம்பளி! மேலே ஒரு கூரைகூட இல்லாத மனிதன். வருத்தம் தோன்றியது.

ஒரு தடவை இப் பார்க்கில், தான் மாட்டிக்கொண்ட கூட்டைக் குறித்து நினைத்துக் கொண்டிருக்கையில்தான், இருட்டிலிருந்து தெளிவான தென்னிந்திய உச்சரிப்பான இங்கிலீஷில், "சார், ரெண்டு நாளா நான் ஒன்றும் சாப்பிடலை; ஒரு ரூபா தந்தா.....”

அப்படித்தான் ரங்கசாமி ஐயரிடம் பரிச்சயமுண்டாயிற்று. கொஞ்சம் சம்பாதித்திருந்தது மகளின் கல்யாணத்திற்குச் செலவாகி விட்டது. தவிர, கடனும் வாங்கவேண்டி வந்தது. சில வீடுகளில் ட்யூஷன் இருந்தது. உத்யோகஸ்தர்கள் மாற்றலாகிப் போனார்கள். குழந்தைகள் பெரியவர்களானார்கள். ரங்கசாமி அய்யருக்கு வயதாயிற்று. புதிதாக அவரை ஓரிடத்திலும் ட்யூஷனுக்கு நியமிக்கவில்லை. கேவலமான பென்ஷன் மட்டுமே வரவு. சாப்பிடக் காணாது. அப்படியிருக்க வாடகை கொடுப்பது எப்படி? பொதுப் பூங்காவிற்கு வாசம் மாற்றினார்.

பாவ‌ம்! இப் பென்ஷ‌னை வைத்துக் கொண்டு ஊரில் நாளை ஓட்ட‌ முடியுமா? முடியாதென்ப‌தே கார‌ண‌மாயிருக்கும் ஊருக்குப் போகாத‌த‌ற்கு.

கோய‌ம்புத்தூரிலுள்ள‌ நாக‌ப்ப‌ன் செட்டியாருக்கு எழுத‌வேண்டும். அவ‌ன் ஒரு வேலை கொடுத்தால் ர‌ங்க‌சாமி அய்ய‌ருக்குப் பெரிய‌ உத‌வியாக‌ இருக்கும். ஊருக்கும் ம‌க‌ளுக்கும் ச‌மீப‌மாக‌ப் போக‌லாம். நாக‌ப்ப‌ன் ஏதாவ‌து செய்யாம‌ல் இருக்க‌மாட்டான். ப‌டிக்கும் கால‌த்தில் நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளாயிருந்த‌ன‌ர். அவன் த‌க‌ப்ப‌னின் பிசின‌ஸை மேனேஜ் செய்கிறான். நான் அர‌சாங்க‌ உத்யோக‌ம் பார்த்து அழிகிறேன்.

"நீ லாட்ஜுக்கு வா, தொண்டை ந‌னைக்க‌லாம்." ஆப்ர‌காம் சொன்னான்.

இவ‌ன் ச‌ம்ம‌தித்தான்.

ஆப்ர‌காம் அங்கே ப‌க்க‌த்திலேயே இருந்த‌ ஒரு தென்னிந்திய‌ன் மெஸ்ஸில்தான் த‌ங்கியிருந்தான்.

க‌ன்னாட் ப்ளே‌ஸில் அந்நிய‌ நாட்டு ம‌துக்க‌டைக‌ளில் இந்த‌ போர்ட் தொங்கிய‌து. "டுமாரோ இஸ் ஃப்ரைடே!" தொண்டை ந‌னைக்க‌ வேண்டுமென்ப‌வ‌ர்க‌ள் இன்றே வாங்கிக்கொள்ளுங்க‌ள் என்றே அவை சூச‌க‌மாக‌ச் சொல்கின்ற‌ன‌.

ஆப்ர‌காம் வாங்கி வைத்திருந்தான். அவ‌னோடு அவ்வ‌றையில் இருப்ப‌வ‌ன் ஊரில் இல்லை.

உட‌ம்பில் கொஞ்ச‌ம் சூடேறிய‌தும் ஆப்ர‌காம் கேட்டான்: "நீ வ‌ரியா?"

"எங்கே?"

"லாஜ்ப‌த் ந‌க‌ர்."

அவ‌ன் குறிப்பிடுவ‌து புரிந்த‌து. அங்கே வசிக்கும் மரியாவின் ஒரு வாடிக்கையாள‌னாக‌ இருந்தான் அவ‌ன்.

"நான் வ‌ர‌லை."

"மாரியாவின் ம‌க‌ள் கான்வென்ட்டிலிருந்து வ‌ந்திருக்கிற‌தாய்க் கேள்விப்ப‌ட்டேன்." ஆப்ர‌காம் தொட‌ர்ந்தான். "ம‌க‌ள் கொஞ்ச‌ம் கூட‌ வ‌ள‌ர‌ட்டும்; ஒரு வ‌ருஷ‌ம் கூட‌ ஆக‌ட்டும்னு போன‌ த‌ட‌வை அவ சொன்னா. இந்த‌ வாட்டி எப்ப‌டியாவ‌து ச‌ரிக்க‌ட்ட‌ணும்."

இவ‌னுக்கு வெறுப்புண்டாயிற்று. "நீ இன்னுமொரு வேசியை உருவாக்குகிறாய். தாயோ இந்த‌த் தொழிலில் இற‌ங்கிட்டா. ம‌க‌ளையும் நீ இதில் இற‌க்க‌வேண்டுமோ?"

"போடா! நீயும் உன் வேதாந்த‌மும்!"

ஆப்ர‌காம் தொட‌ர்ந்தான்: "ர‌வி, ச‌த்ய‌ச‌ந்த‌மான‌ ப‌ந்த‌ம் இதொண்ணு ம‌ட்டுந்தான். அன்பின் அர்த்த‌மில்லாத‌ வார்த்தைக‌ளில்லை; க‌வ‌ர்ச்சியூட்ட‌ல்க‌ள் இல்லை; வ‌ஞ்ச‌னை இல்லை; சொந்த‌ம் கொண்டாட‌லில்லை; நிராசையும் துக்க‌மும் இல்லை. அவ்வ‌ப்போது க‌ண‌க்குச் சொல்லித் தீர்க்கும் உற‌வு."

இதையொன்றும் கேட்டுக்கொண்டிருக்க‌த் த‌ன‌க்கு விருப்ப‌மில்லை. அன்பின் வார்த்தைக‌ளில்கூட‌, க‌வ‌ர்ச்சியூட்டலில்கூட‌ எல்லாவ‌ற்றையும் அடைவ‌தே த‌ன்னுடைய‌ குறிக்கோள். தான் அதை ஒரு க‌லையாக்கி விட்டிருக்கிறோம் - இவ‌ன் ந‌ம்பினான்.

இறுதியில்...

"என் அப்பாவும் அம்மாவும் இத் திருமணத்திற்குச் சம்ம‌திக்க‌ மாட்டாங்க‌."

"உங்க‌ள் அன்பு ம‌ட்டும் போதும் என‌க்கு; எந்த‌க் க‌ஷ்ட‌த்தையும் பொறுத்துக்கொள்ள‌ நான் த‌யார்."

"இல்லையில்லை. கஷ்டத்தை நோக்கி உன்னை நான் அழைத்துப் போகமாட்டேன்."

இல்லாவிட்டால் வேறு என்ன‌வெல்லாம் ச‌ல்ஜாப்புக்க‌ள் உள்ள‌ன‌. முடிப்ப‌தும் ஒரு க‌லைதான்.

ஆப்ர‌காம் போய்விட்டிருக்கிறான். அறையைப் பூட்டிச் சாவியை மானேஜ‌ரிட‌ம் கொடுத்துவிட்டுத் தானும் போக‌லாம். போக‌வில்லை. ம‌ன‌தில் ஏனென்ற‌றியாத‌ துக்க‌ம் பொங்கி வ‌ழிந்த‌து.

ஜ‌ன்ன‌ல் வ‌ழியாக‌த் தெரிந்த‌ நீல‌ வான‌ம் ச‌ல‌ன‌ம‌ற்றிருந்த‌து- கான்வாஸில் தேய்த்த‌ வ‌ர்ண‌ம் போல‌. முழு நில‌வை ம‌றைத்தும் வெளிப்ப‌டுத்திக்கொண்டும் பிள‌ந்து கிட‌ந்த‌ நீல‌மேக‌ம் ஒரு சிறுமியின் நிர்வாணமான‌ நிர‌ம்பிய‌ மார்புமீது விழுந்து கிட‌க்கும் துண்டைப் போல‌க் காட்சிய‌ளித்த‌து.

அவ‌ன் அறையைப் பூட்டிவிட்டுக் கீழே இற‌ங்கினான். சாவியை மானேஜ‌ரிட‌ம் கொடுத்துவிட்டு வெளியே வ‌ந்தான். ப‌ழ‌க்க‌முள்ள‌ ஒரு பெண்ணிட‌ம்தான் திரும்பிப்போனான். ஒருபோதும் ஒன்றையும் ம‌றுத்த‌வ‌ளில்லை.

அடுத்த‌ நாள் ஆஃபீசில்தான் அதை அறிந்தான். வ‌ய‌தான‌ ஒரு ச‌ப்ராஸி. அவ‌ன் வ‌சித்த‌து லாஜ்ப‌த் ந‌க‌ரில்.

அவ‌ன் வீட்டுப் ப‌க்க‌த்தில் ஒரு பெண் தூக்கு மாட்டிக்கொண்டு செத்தாள். அவ‌ளுடைய‌ தாயார் அவளுக்குச்‌ செல‌விற்கு வேண்டிய‌ ப‌ண‌த்தைப் ப‌ல‌ புருஷ‌ர்க‌ளிட‌மிருந்து ச‌ம்பாதித்திருந்தாள். இதை அவள் தெரிந்துகொண்டது நேற்றுத்தான். நேற்று அவ‌ளை ஒரு புருஷ‌னுக்குக் காட்சி வைக்க‌ அவளது தாயார் முய‌ற்சித்தாள். அதுதான் கார‌ண‌ம்.

"த‌ங்க‌ம் போல‌ பொண்ணு." ச‌ப்ராஸி சொன்னான். "என்ன‌ நிற‌ம்!
என்ன‌ அழ‌கு! ப‌தினாறு ப‌தினேழு வய‌சே ஆகியிருக்கும்."

சப்ராஸி சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஆப்ரகாம் அங்கே வந்தான். இவன் சொன்னான்: "மரியாவின் மகள் தற்கொலை செய்து கொண்டாளாம்.”

"பெண் பிள்ளைகளுக்குப் பகுத்தறிவு இல்லைன்னா என்ன செய்யிறது?” நிராசையுடனும் கோபத்துடனும் அவன் சொன்னான்.

தனக்கு இந் நகரத்தில் எல்லாவற்றின்மேலும் வெறுப்புண்டாகி விட்டது. மனத்தில் துக்கம் மட்டுமே இருக்கிறது. இங்கிருந்து விடுதலை பெற வேண்டும்.

மாலையில் கிளப்பில் கோபாலனைப் பார்த்தபோதும் இவனுடைய மனநிலை மாறியிருக்கவில்லை.

"ஏன் இப்படியிருக்கே? வேண்டியவன் யாரோ செத்ததுபோல!” அவன் கேட்டடான்.

"இங்கே வந்தப்புறம் என் மனம் சமாதானம் என்னங்கிறதை அறியவில்லை.” இவன் கூறலாயினான்: "இங்கேயிருந்து எப்படியாவது போகணும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம்.”

"இந் நகரம் ஒரு பிசாசைப் போன்றது” கோபாலன் சொன்னான்.
"உனது ஆத்மாவிற்காக எப்போதும் உன்னைத் தொந்திரவு பண்ணிக் கொண்டே இருக்கும்.”

"என் ஆத்மாவை நான் காட்சியாக: வைத்தாச்சு”. இவன் மந்தகாசம் புரிந்தான்.

"அப்படியானால் இனிமேல் கதியில்லை. நீ இதன் அடிமையாகியிருக்கிறாய்.”

மனதிற்குள் சிரித்துக்கொண்டான். என்னவெல்லாம் கற்பனைகள்!
பிசாசும், ஆத்மாவும், அடிமைத்வமும். நான் இங்கிருந்து போகையில் என்ன சொல்வான்? இன்னும் சில வாரங்களுக்குள் நான் இங்கிருந்து விடுதலையடையப் போகிறேன். அடிமையாகிவிட்டிருக்கிறேனாம்!

நாகப்பன் செட்டியார் வந்திருந்தான். ஒரு பார்லிமெண்ட் மெம்பரிடம் ஏதோ காரியம் ஆகவேண்டியிருந்தது. பெர்மிட்டோ, லைசென்ஸோ என்னவோ?

ரங்கசாமி அய்யரைக் கூப்பிட்டு வரவழைத்தான். குளிக்க எண்னையும் சோப்பும் கொடுத்தான். தனது ஷர்ட்டையும் வேஷ்டியையும் அணியக் கொடுத்தான்.

நாகப்பனுக்கு ஆர்வம் உண்டாயிற்று. ஏதாவது அந்த மனிதருக்குச் செய்து கொடுக்கிறேன் என்றான். அவர்கள் பல விஷயங்களைக் குறித்தும் பேசிக்கொண்டிருக்கும்போது அய்யர் வெளியே காத்து நின்று கொண்டேயிருந்தார். அவருக்கு மிகவும் சந்தோஷமாயிருக்குமென்று இவன் நினைத்தான்.

விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்தபோது செட்டியார் வாசல் வரையிலும் வந்தான். அய்யரிடம் சொன்னான்: "நான் நாளன்னைக்குப் போறேன். என்னோட வந்துடுங்க, ஏதாவது வேலை தரேன். நாளை ஓட்டக் கஷ்டமிராது.”

ஆச்சரியம் உண்டாயிற்று. அய்யர் குழம்பி நின்றிருந்தார், அவ்வளவுதான்.

நாகப்பன் கேட்டான்: "என்ன ஒண்ணும் சொல்லலியே? வரலிங்களா?”

சற்று நேரத்திற்குப் பிறகே அய்யர் சொன்னார்: "நான் விஷயத்தை ஸார் கிட்ட சொல்றேன்.”

"அப்படியே ஆகட்டும்” -செட்டியார் அதை இரசிக்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. தனக்கும் பிடிக்கவில்லை.

அய்யர் வேகமாகப் போனார்.

விஷயம் சொல்ல ரங்கசாமி அய்யர் வரக்காணோம். ஒரு மாலையில் கன்னாட் ப்ளேஸில் அவரைக் காணநேர்ந்தது. தனது பழகிக் கிழிந்த கம்பளியால் மூடிப் போர்த்திக்கொண்டு பெண்கள் ஆடைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு கடையின் முன்னால் அவர் நின்றுகொண்டிருந்தார்.

தன்னுடைய குரல் கேட்டதால் உண்டான இக்கட்டு வெளிப்படையாத் தெரிந்தது- "நீங்க வந்து விவரம் சொல்றேன்னுட்டு அப்புறம் காணுமே.”

ஒரு குற்றவாளியைப் போலவே அவர் பதில் சொன்னார்: "அது வேண்டாம் ஸார்!”

சற்று நேரத்திற்குப்பின் அவர் தொடர்ந்தார்: "இங்கேயே ஏதாவது வேலை கொடுக்க முடிஞ்சா...”

இவன் தன்னையே சமாதானப்படுத்திக்கொள்ள முயற்சித்தான். எதற்காகக் கோபப்படுகிறோம்? இங்கேயிருந்து விடுதலை பெறுவதற்கான வழியைத்தான் காட்டிக்கொடுத்தோம். விடுதலை பெற அவருக்கு இஷ்டமில்லையானால் தான் என்ன செய்வது? தன் காலிலேயே நிற்கிற மனிதர் அவர்.

ஜனவரியின் ஆரம்ப தினங்கள். இந் நகரம் கடுங்குளிரில் உறைந்து போயிருக்கிறது. ஸஃபதர்ஜங் ஏர்போர்ட்டின் தெர்மாமீட்டரில் பாதரசம் பூஜ்யத்திற்கும் கீழே இறங்கியது.

மாலையில் சூப்பர் பஜாருக்குப் போனான். விற்பனைக்கு வரும் புதுப்புது பொருட்களைப் பார்க்கலாம். ஷாப்பிங்கிற்கு வருபவர்களைப் பார்க்கலாம். விற்பனை செய்பவரையும் பார்க்கலாம். திருவிழாவிற்குப் போவதுபோலிருந்தது.

திரும்புகையில் ஆப்ரகாமின் மெஸ்ஸிற்குப் போனான். உடம்பிற்குக் கொஞ்சம் சூடேற்றினான். வெளியே வந்தான்.

கன்னாட் ப்ளேஸின் நடுவிலுள்ள பார்க்கின் பக்கம் வந்தபோது பழக்க‌ தோஷத்தால் பார்த்துவிட்டான், ரங்கசாமி அய்யர் அங்கே இருக்கிறாரோவென்று.

பெஞ்சில் அவருடைய கம்பளி சுருண்டு கிடந்தது. அதனுள்ளிருந்து வழக்கம்போல் இருமல் கேட்கவில்லை. பக்கத்தில் போனபோது பார்த்தான், ஒரு எறும்புச்சாரி கம்பளியின் உள்ளே செல்வதை. கம்பளியின் வழியாக உடம்பு தெரிந்தது. துர்நாற்றம் வீசத்தொடங்கும்போது யாராவ‌து முனிஸிபாலிட்டிக்குத் தெரிவிப்பார்க‌ள்.

மிக‌வும் துக்க‌ம் உண்டாயிற்று அவ‌னுக்கு. ஆப்ரக‌ாமிட‌மும் ர‌ங்க‌சாமி அய்ய‌ரின் க‌தையைச் சொன்னான்.

"இங்கே வ‌ந்தால் பிற‌கு விட்டுப் போவ‌து என்ப‌தில்லை." ஆப்ர‌காம் சொன்னான். ச‌ற்றுக் க‌ழித்து அவ‌ன் தொட‌ர்ந்தான்:" இந் ந‌க‌ர‌ம் சாம‌ர்த்திய‌சாலியான‌ ஒரு தேவ‌டியாளைப் போல‌வாக்கும். இங்கே வ‌ருகிற‌வ‌ர்க‌ள் இங்கேயே ப‌ற்றிக்கொள்கிறார்க‌ள். அழிகிறார்க‌ள்."

இது ச‌ரியா...?

ந‌ட‌க்கும்போது அவ‌ன் தொட‌ர்ந்தான்: "அக்ப‌ர் ஆக்ராவிலிருந்து ஒரு சாம்ராஜ்ய‌ம் ஸ்தாபித்தார்.அவ‌ருடைய‌ பின் தோன்ற‌ல்க‌ள் இந் ந‌க‌ர‌த்தில் குடியேறிய‌து முத‌ல் அவ‌ர்க‌ளது அழிவு ஆர‌ம்பித்த‌து. பிரிட்டிஷார் க‌ல்க‌த்தாவிலிருந்து ஒரு சாம்ராஜ்ய‌ம் நிறுவினார்க‌ள். த‌லைந‌கரை இந் ந‌க‌ர‌த்திற்கு மாற்றிய‌கால‌த்தில் அவ‌ர்க‌ள‌து பிரதாபத்தைக் கொஞ்ச‌ம் நினைத்துப் பார். முப்ப‌த்தைந்து வ‌ருட‌ங்க‌ள் வேண்டியிருக்க‌வில்லை எல்லாம் அழிய‌... உங்க‌ளுடைய‌ த‌ர்ம‌புத்ர‌ன் இல்லையா? குருக்ஷேத்திர‌த்தில் போரில் ஜெயித்த‌போது பெரிய‌வ‌ருக்குத் தோன்றிற்று -இந் ந‌க‌ரிலிருந்துதான் தன்னுடைய‌ ர‌ாஜ்ய‌த்தை ஆள‌வேண்டுமென்று. இந்திர‌னின் அர‌ண்ம‌னைக்கு ஈடான‌ ஒன்றை நிறுவி ஆட்சி தொட‌ங்கினார். பிற‌கு? அவ‌ருடைய‌ வாழ்நாளிலேயே எல்லாம் அழிந்த‌து."

இப்ப‌டியொரு சாப‌ம் இந் ந‌க‌ர‌த்தோடு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டிருக்கிறதோ?

யார் இந் ந‌க‌ர‌த்திற்கு டில்லி என்று பெய‌ரிட்ட‌து? கோபுர‌த்துவார‌ம். கொஞ்ச‌ங்கூட‌ சாதா‌ர‌ண‌மாக‌ச் சொன்னால் க‌த‌வு. அழிவிற்கான‌ க‌த‌வோ? இத‌னுள்ளே நுழைந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள் இந் ந‌க‌ரின் அடிமைக‌ளாகித் தீர்வார்க‌ளோ? விடுத‌லைய‌டைய‌ முடியாத‌வர்களாவார்க‌ளோ?

சே, இதெல்லாம் வெறும் முட்டாள்த‌ன‌ங்க‌ள். மூட‌ ந‌ம்பிக்கைக‌ள்.
நான் இதோ விடுத‌லைய‌டைய‌ப் போகிறேன். இதோ பார்த்துக்கொள். நான் போக‌ வேண்டிய‌ நாளை ம‌ட்டுமே நிச்சயிக்க‌வேண்டும். அது என்றைக்கு வேண்டுமானாலும் ஆகலாம். ஊரிலிருந்து ஒரு நண்பன் விவரம் கேட்டு எழுதியிருந்தான். கம்பெனி தீர்மானம் செய்தாகி விட்டது. விஷயத்தை அரசாங்கத்திற்கு எழுதியும் ஆயிற்று.

ஒரு வேளை நாளையே....

அடுத்த நாள் காலையில் ஆஃபீசுக்குப் போனபோது தெரியவந்தது இதுதான். ஸெக் ஷன் ஆபீசராக நியமிக்கப்படுபவரின் பெயர் வந்திருக்கிறது. சிவசரண் அகர்வாலுடைய பெயர். தன்னுடையதில்லை.

அவர் தன்னைவிட ஜூனியர். கவனத்தோடும் நம்பிக்கையோடும் சீக்கிரம் செய்து தீர்க்கவேண்டிய வேலைகள் எப்போதும் தன்னிடமே ஒப்படைக்கப்பட்டன. அகர்வாலுக்கு முக்கியமான எந்த வேலையையும் கொடுப்பதில்லை. மிகவும் சுலபமான கார்யங்களைக்கூட குழப்பியடிக்க அவனுக்கு விசேஷமான திறமை இருந்தது. அப்படியும் இப்போது.....

"டேய், நீ சரியான அடிமுட்டாள்தான்!" ஆப்ரஹாம் சொன்னான்:

"உங்கிட்டே பெண் இருக்கா. கள் இருக்கா, பிண்ட தைலம் குழம்பு இருக்கா?"

சற்றுப் பின்னர் அவன் தொடர்ந்தான்: "பேரைப் பார்த்தால் நீ இந்தப் பக்கத்துக்காரனும் இல்லை."

இதெல்லாமா காரணங்கள்? நேரான வழியில் இங்கே ஒன்றும் அடைய முடியாதா?

மனதில் நிராசையும் வேதனையும் அதீதமாக உறுத்தின.

லஞ்ச் முடிந்ததும் அண்டர் ஸெக்ரட்டரி கூப்பிட்டார். இவன் கிளர்ச்சி யுற்றவனாகவே நின்றான். அவர் சொன்னார்: "எதற்காகக் கூப்பிட்டேன் என்று தெரியுமா? சந்தோஷமான ஒரு விஷயம் சொல்லத்தான் ரிஃபைனரியிலிருந்து கடிதம் வந்திருக்கிறது. உங்களை நியமிக்க அவர்கள் தீர்மானித்திருக்கிறார்கள். ஊரில்தான். நல்ல சம்பளம் கிடைக்கும். அதோடு இதெல்லாம் இப்போது அரசாங்க சர்வீஸ் போலத்தான்.
நீங்கள் உண்மையான அதிருஷ்டசாலிதான்."

அப்போதுதான் அவர் இவனுடைய முகபாவத்தைக் கவனித்தார் என்று தோன்றியது. " என்ன இது? உங்களுக்கு இது பிடிக்கவில்லையா?

"அது எனக்கு வேண்டாம் ஸார்."

"என்ன சொல்றீங்க நீங்க?'

"நான் முடிவு செய்தாச்சு."

"திரும்பி வந்து ஸீட்டில் அமர்ந்தபோது அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்: நான் இங்கே ஒரு சூழ்ச்சி செய்யத் தீர்மானிச்சிருக்கேன்.
----------------

7. வெளியே போகும் வழி


நான் ஒரு வழியைத் தேடி நடந்துகொண்டிருக்கிறேன். வெளியே போகும் வழி.

நடையைத் தொடங்கி வெகு நேரமாயிற்று. நான் தளர்ந்திருக்கிறேன். உடம்பு முழுவதும் வலி. கால்கள் மிகவும் கடுக்கின்றன. கைகள் வாழைநார்கள் போலவாயின. சதையும் எலும்புமச்சையும் வற்றிப்போயின. எலும்புகள் மெலிந்து உலர்ந்திருக்கின்றன. எந்த நிமிஷமும் அவை ஒடிந்து போகலாம். இனி, எனக்கு இந் நடை இயலாது.

வெளியேபோனால் விடுதலை கிடைக்கும். வெளியே என்னவெல்லாம் இருக்கின்றனவென்று எனக்குத் தெரியாது. ஆனாலும் வெளியே விடுதலை கிடைக்காமல் இருக்காது. தாடிக்காரக் கூனக்கிழவன் சொல்லித் தந்தான் வெளியே நித்தியமான சந்தோஷம் உண்டென்று; அங்கே அடைவது மட்டுமே இந் நடையின் இலட்சியம்; அதனால் அங்கே போகும் வழியைக் கண்டு பிடிப்பவர்கள் அதிருஷ்டசாலிகள் என்று என்னவோ? நான் அவனுடைய வார்த்தைகளை நம்புவதில்லை. நித்தியமான இன்பம் என்ற ஒன்றிற்காக நான் காத்திருக்கவில்லை. ஆனாலும் ஒன்று நிச்சயம். வெளியே மகிழ்ச்சி அதிகமாகும். காரணம் என்ன வென்றால் இங்கே கஷடம் அவ்வளவு கடினமானது. இதைவிடத் தேவலை வேறு எந்த இடமும். அதனால்தான் நான் வெளியே போகும் வழியை விசாரிக்கிறேன்.

இதொரு பெரிய அரண்மனை. இத்தனை பெரியதென்று எனக்குத் தெரியாமலிருந்தது. எவ்வளவு என்று இப்போதும் தெரியாது. இது வளர்கிறதோ? நடக்க நடக்கப் பரவலான வெளிச்சமுள்ள, நீண்ட வராந்தாக்கள் முன்னால் வளர்ந்து வளர்ந்து போகின்றன. வளைந்தும் நெளிந்தும் வளர்கிறது. கிளைகளாக விரிகிறது. முடிவதில்லை.

வராந்தாக்களின் ஓரத்தில், கனத்த கருங்கற் சுவர்கள் கொண்ட சிறிய அறைகளிலிருந்து குரூரமான முகங்கள் பல்லிளிக்கின்றன. குஷ்டம் பிடித்த முகங்கள். கண்களில் தீ பறக்கிறது. நுனிமேல் நோக்கி மலர்ந்த மூக்குகள். வெடித்து கீறிய உதடுகள். கன்னங்களிலும் நெற்றிகளிலும் பருக்கள். பொள்ளிய அப்பளம் போல இரணங்களுள்ள விரல்கள். நுனி தடித்த விரல்கள் தாவிப் பிடிக்க நீண்டு வரும். ஒதுங்கித் தூர நடக்கவேண்டும். ஆனால் எப்போதும் முடியாது. பிடிபட்டுவிட்டால் குஷ்டம் பீடிக்கும்.

அங்கஹீனமடைந்த குஷ்டரோகிகளிடம் தின்பண்டங்களும், தங்கமும், பணமும் உண்டு. அவர்களுடைய அறைகளின் பின்பக்க சிவப்பு மஸ்லின் திரைச் சீலைகளுக்குப் பின்புறம் நிர்வாணமான ஸ்திரீகள் உளர். கருத்த, ஊடுருவித் துளைக்கும் கண்கள். மறக்கடிக்கும் லாகிரிப் பொருட்கள். கட்டிப்புணர நீளும் கொழுத்த அவயவங்கள். ஆலிங்கனத்தில் ஈடுபட்டு முடியும்போது, அதரங்களின் வீக்கம் உறிஞ்சிக் குடித்து முடியும்போது நீங்கள் நீண்டதொரு மயக்கத்தில் விழுகிறீர்கள். மயக்கம் தெளியும்போது மேலே புண்.

என் உடம்பில் புண் இருக்கிறதோ? வெப்பப்புண்? குஷ்டம், சே இருக்காது. இல்லை. இது புண்ணல்ல, மூட்டைப்பூச்சி கடித்ததாயிருக்கும். இல்லாவிட்டால் எறும்பு.

குஷ்டம் பிடித்த இந்த இடைவழிகள் முடிவதில்லை. தளர்ந்த தலையும், தளர்ந்த உடலும், தளர்ந்த கால்களுமான நான் என்று முதல் நடக்கிறேன்?

என்று முதல்?

என்று நான் இங்கே வந்தேன்? எனக்கு நினைவில்லை. ரொம்பக் காலம் ஆகியிருக்கிறது.

வந்தது தனியாக. உற்றவர் யாருமில்லாமல். புட்டுக் குழலிலிருந்து விழுவது போலவே நெம்பிப் பிதுங்கித்தான் நான் இக் கட்டடத்தில் வந்து விழுந்தேன். சிறியதோர் துவாரம் வழியாக. வளையினுள்ளிருந்து எட்டிப் பார்க்கும் எலிக்குஞ்சைப்போல நான் தலை நீட்டிப் பார்த்தேன். விழித்த கண்களுடன் மிரண்டு எதையோ தேடினேன். எதை நான் தேடினேன்? எதை இன்னும் தேடுகிறேன்? எனக்குத் தெரியவில்லை. நான் இங்கே வந்து விழுந்தபோது எனக்குப் பின்னால் வாசல் அடைத்துவிட்டது. இனிமேல் அக் கதவு எனக்காகத் திறக்கப்படப் போவதில்லை. திரும்பி அங்கே போக எனக்கு ஆசையுமில்லை, காரணம் என்னவென்றால் அவ்விடம் எப்படியிருக்கும் என்று எனக்குத் தெரியாது. இக் கட்டடத்துள் வந்தடைந்தபோதுதான் எனக்குப் பார்வை உண்டாயிற்று. அப்படியே, ஏதாவது மாயா சக்தியாலோ அல்லது மனப் புண்ணாலேயோ எனது ஞாபக சக்தி போய்விட்டதோ? அப்படியானால் நான் விட்டு வந்த இடம் எனது நீண்ட, நித்யமான மறதியின் இருளில் ஆழ்ந்து கிடக்கிறது. எனக்கு அதை நினைவுகூர முடியவில்லை.

சில சமயம் மயக்கத்தில் ஈரமும் வெப்பமும் மென்மையுமான ஒரு உறையில் நானொரு தொட்டிலில் கிடப்பதுபோலப் படுத்திருப்பதாகக் கனவு காண்பதுண்டு. அதுவாயிருக்குமோ ஒரு வேளை நான் விட்டு வந்த ஜன்ம பூமி? அங்கேயிருந்துதானே மிருதுவான ஒரு வாசல் வழியாக நான் இந்த ஆபத்து மிக்க வளைவிற்குள் நெட்டித் தள்ளப் பட்டேன்?

நான் இங்கே வந்து விழுந்தபோது சுற்றிலும் நின்ற முகங்கள் பல்லைக் காட்டிச் சிரித்தன. அவர்கள் பாட்டுப்பாடி, ஆட்டம் ஆடினார்கள். என் வரவைக் கொண்டாடினார்கள். எனக்கு அவர்களிடம் பிரியம் உண்டாயிற்று. பருவும் படையும் பீடித்த அவர்கள் உடம்பில் நான் அழகைக் கண்டேன். எனக்கு ஒன்றும் தெரிந்திருக்கவில்லை.

அவர்கள் எனக்கு அவர்களுடைய மொழியைக் கற்றுத் தந்தார்கள். நடக்கவும், ஓடவும், குதிக்கவும் சொல்லிக்கொடுத்தார்கள். பல விஷயங்களும் கற்றுத் தந்ததற்குப் பின்னால் ஒரு உத்தேசம் அவர்களுக்கு இருந்ததென்பது எனக்குப் பிற்பாடே புரிந்தது. அவர்களது சிரிப்புக்குப் பின்னால் என்னுடைய இரத்தம் வேண்டி தாகம் இருந்தது.

இவர்களுக்கிடையில் நான் நடையைத் தொடங்கினேன். இருள் மூடிய பாதைகள் வழியாக. இவர்களில் யாரோ என் பாதைகளில் கல்லையும் முள்ளையும் தூவினார்கள். என்னை விழக்க, கண்ணிகள் விரித்து வைத்தனர். நான் பார்த்துப் பார்த்து நடந்தேன். சோர்வுற்றபோது நான் காலியான அறைகளைக் கண்டுபிடித்துப் படுத்து மயங்கினேன். அப்போதுதான் கனவுகள் என்னைத் தேடி வந்தன. கனவில் நான் முகத்தில் பருக்கள் இல்லாத மனிதர்களைக் கண்டேன். அழகு, விரூபம் இவற்றிற்கிடையிலுள்ள வேறுபாடு எனக்கு அப்படித்தான் புரிந்தது.

இக் கட்டடத்தை யார் கட்டினார்கள் என்பது எனக்குத் தெரியாது. மிகப் பழையது. ஆனால் என்றும் வளர்வதால் பழமை தெரியவில்லை. புது அறைகள், புதிய அலங்காரங்கள். இது மிகவும் பழமையானதும் மிகவும் புதியதுமாகும்.

கொஞ்சம் விசித்திரமான ஜீவன்களே அங்கே வாழ்கிறார்கள். அவர்களெல்லாம் மறைந்து வளர்கிறார்கள். எங்கேயிருந்து இங்கு வந்து சேர்ந்தார்கள் என்று கேட்டால் தெரியாது. எங்கே போகிறார்களென்றும் தெரியாது. பலரும் இருப்பார்கள் என்னைப்போல வெளியே போகத் துடிப்பவர்கள். சிலர் முயற்சித்துச் சோர்ந்தார்கள். இனி இங்கேதான் கடைசிவரை என்று தீர்மானித்திருக்கிறார்கள் அவர்கள். அவர்களுக்கெல்லாம் தலையிலும் உதட்டிலும் சிரங்கு பிடித்திருக்கிறது. ஒருநாளும் உலராத சொறி.

சில‌ பேர் வ‌ழிகாட்டிக‌ள்.

அவ‌ர்க‌ளில் ஒருவ‌னே கூன‌ன்.அவ‌னுகுத் தாடி உண்டு.க‌ழுத்தில் ஒரு ஜ‌ப‌மாலை.இடையில் முத்திரை குத்திய‌ மேல‌ங்கி.சுக‌ந்த‌ தூப‌ங்க‌ள் புகைத்துக்கொன்டு இடைவ‌ழியின் ஓர‌த்தில் ஒரு ம‌றைவில் அவ‌ன் உங்க‌ளுக்காக‌க் காத்திருக்கிறான். த‌டித்த‌ நாக்கை வெளியே தொங்க‌ விட்டு, த‌ங்க‌ம் பூசிய‌ ப‌ற்க‌ளைக் காட்டி, இறைச்சியைக் க‌ண்ட‌ நாயைப் போல‌ச் சிரித்துக்கொண்டே அவ‌ன் என்னை ஏற்றுக் கொண்டான். அவ‌னுடைய‌ முக‌ப்புண் தாடி ம‌யிர்க‌ளில் ம‌றைந்திருந்த‌து.அத‌னால் அவ‌ன் கூப்பிட்ட‌போது நான் ப‌ய‌ப்ப‌டாம‌ல் போனேன்.ப‌ருக்க‌ளி லிருந்து சிந்தும் துர்க்கந்த‌‌த்தை அவ‌ன் சாம்பிராணிப் புகையில் ஒளித்து வைத்திருந்தான்.அவ‌ன் என்னை "ம‌க‌னே" என்ற‌ழைத்தான். உட்கார‌ச் சொன்னான்.நான் உட்கார்ந்த‌தும் அவ‌ன் பேச‌த் தொட‌ங்கினான்.

"நீ ந‌ட‌ந்து த‌ள‌ர்ந்திருக்கிறாய் என்று என‌க்குத் தெரியும்.உன‌க்குச் சோர்வை அக‌ற்ற‌ வேண்டும் இல்லையா?"

"வேண்டாம்.என‌க்கு இங்கேயிருந்து போக‌வேண்டும்." நான் குறையை உண‌ர்த்தினேன்.

"ஆமாம்.அதுதான் மேலான‌ ல‌ட்சிய‌ம்.இங்கிருந்து போக‌ வேண்டும். இத‌ற்கு வெளியே நிலையான‌ ம‌கிழ்ச்சியுண்டு.அங்கேபோய்ச் சேர‌வேண்டும்.ஆனால் உன் நேர‌ம் வ‌ர‌வில்லை.நேரம் ஆவ‌து வ‌ரை நீ ந‌ட‌க்க‌ வேண்டும்.நேராக‌ ந‌ட‌. உன‌க்கு வெளியே செல்லும் வ‌ழியை நான் காட்டுகிறேன்.ஆனால் நீதான் அதை ந‌ட‌ந்து தீர்க்க‌ வேண்டும்.இந்தா,ஜ‌ப‌மாலையைக் க‌ழுத்தில் போட்டுக்கொள். த‌ள‌ர்ச்சிய‌டையும்போது இம் மாலையின் ஜ‌ப‌ம் சொல்.என்னை நினைத்துக்கொள். சோர்வு நீங்கும். மீண்டும் ந‌ட‌."

க‌ழுத்தில் அவ‌ன் போட்ட‌ மாலையும் உத‌ட்டில் அவ‌ன் க‌ற்றுத் த‌ந்த‌ ம‌ந்திர‌முமாக‌ நான் வெளியே போகிறேன்.

ந‌ட‌ந்து சோர்வ‌டைந்த‌போது நான் அவ‌ன‌து ம‌ந்திர‌த்தைச் சொன்னேன். என்ன‌ அற்புத‌ம், அவ‌ன் காட்சிய‌ளித்தான். ஆனால் க‌ருப்பு மேல‌ங்கியும் தாடியுமாக‌ அல்ல‌.த‌டித்து உருண்ட‌ ஒரு உருவ‌த்தில். அவ‌னுடைய‌ வ‌யிறு மிக‌வும் வீங்கியிருக்கிற‌‌து. த‌லை மொட்டைய‌டித்திருக்கிற‌து. அவ‌னுக்குத் தும்பிக்கை இருக்கிற‌து.சுக‌ந்த‌ திர‌விய‌ங்க‌ளின் மண‌‌த்தில் அவ‌ன் நுர்நாற்றங்களை ம‌றைத்து வைத்திருந்தான். தும்பிக்கைக்கு அடியில் இர‌ண‌ங்க‌ளை நான் பார்த்தேன்.குர‌லிலிருந்துதான் நான் அவ‌னை அடையாள‌ம் க‌ண்டுகொண்டேன். ந‌ட‌க்க‌ச் சொல்லித்தான் ம‌றுப‌டியும் உப‌தேச‌ம்.வெளியே செல்லும் வ‌ழி தெரியும் வ‌ரை ந‌ட‌க்கும்ப‌டி. கூன‌னின் வார‌த்தைக‌ளை ந‌ம்ப‌வில்லை. நம்புவதற்கு வேறெதுவும் இல்லாததினால்தான் நான் நடந்ததும், நடப்பதும்.

குஷ்டரோகிகளின் வெறிமூண்ட கண்களின் முன்பாக நான் ஊன்றி ஊன்றி நடந்தேன். என் கால்கள் தேய்ந்து தேய்ந்து சிறியவை ஆவதாக எனக்குத் தோன்றியது. ஆனாலும் வழி முடிவில்லாமல் நீண்டது.

மறுபடியும் சோர்வுற்றபோது நான் திரும்பவும் படுத்தேன். மயங்கிய போது கனவுகள் என்னைத் தேடி வந்தன. என் மகிழ்ச்சிகள் எனது கனவுகள் மட்டுமேயல்லவா? வழவழப்பும், ஈரமும், சிறு வெம்மையும், மென்மையும் கொண்ட உறையில் நான் கிடக்கின்றேன். என் சொந்த இடத்தில். அந்த ஜன்ம பூமிக்குத் திரும்பிப்போக என்னால் முடியுமானால்! பிறகும் கனவுகள் வந்தன. கனவுகளில் குஷ்டமில்லாத மனிதர்களும்.

விழிப்பு வந்தபோது நான் கனவுகண்டுகொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றியது. கனவில் மனிதரைப் போன்ற ஒரு உருவம் என்னை எழுப்பிற்று. முல்லைப்பூவின் மணமும், கருங்குவளைப் பூவின் அழகும், உழுது தள்ளிய புதுமண்ணின் வெம்மையும் கொண்ட ஒரு பெண். அவள சிரித்தபோது என் சோர்வு நீங்கியது. அவளுடைய சப்தத்தில் என் பீதிகள் உலைந்து போயின. அவளுடைய தழுவலில் நான் என்னையே மற‌ந்தேன்.

அவள் சொன்னாள்: "நான் உனக்காகக் காத்துக்கொண்டிருந்தேன்."

நான் அறியாமலேயே பதில் சொன்னேன்! "நான் உன்னைத் தேடி நடந்து கொண்டிருந்தேன்."

நான் கூறியது பொய்யல்லவா? நான் தேடி நடந்தது வெளியே போகும் வழியையல்லவா? ஆனால் நான் அப்படித்தான் சொன்னேன். அவள் சந்தோஷமடைந்தாள். நானும் சந்தோஷமடைந்தேன்.

அவள் சொன்னாள்: "நான் உனக்காக மணவறை தயாராக்கியிருக்கிறேன். பூ வேலைப்பாடு செய்த தலையணைகளும், நறுமணம் பூசிய வெண்விரிப்புகளும்
தயார் செய்திருக்கிறேன்."

"எங்கே?" நான் கேட்டேன், நான் தொடர்ந்தேன்: "எங்கே? என்னை அங்கே அழைத்துப் போ. அந்த இன்பத்தை விசாரித்துக் கொண்டுதான் நான் நடந்தேன்."

நான் அவள் கையைப் பிடித்தேன்.

யாரோ மணியடித்தார்கள்.

யாரோ எங்கள்மேல் மலர் தூவினார்கள்.

யாரோ சொன்னார்கள்: "நீங்கள் இணைபிரியாமல் இருங்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துங்கள். அன்பில் ஒன்றாகுங்கள்."

நான் அவளுடைய கைப் பிடித்து மணவறைக்குள் நுழைகையிலும் அவ்வொலிகள் தொடர்ந்துகொண்டிருந்தன. சுகந்தம் நிறைந்த அறையின் மங்கிய வெளிச்சத்தில் நாங்கள் பிரவேசித்ததும் பின்னால் வாசல் அடைத்தது. சப்தங்களெல்லாம் மாய்ந்தன. வேறு உலகம் போன்ற மணவறையின் மணத்திற்குள், நிசப்தத்திற்குள் கண நேரத்திற்குப்பின் புனிதமான ஒரு ராகத்தின் மெல்லிய அலைகள் எங்கிருந்தோ நுழைந்து வந்தன. மணம் பூசின விரிப்பு, சந்தனம் மணக்கும் தலையணைகள் படுக்கையில் அவளது நிர்வாணத்தின் லாகிரி.

"இதுதான் நான் தேடி நடந்த வாசல். இதுதான் என் சொர்க்கம்." நான் அவளுடைய காதில் ஜபித்தேன்.

தசையின் வெம்மைக்கிடையில் அவள் கொஞ்சி மொழிந்தாள்: "என்னை ஒருபோதும் விட்டுப் பிரிய மாட்டீர்களே."

"ஒருபோதும் மாட்டேன்."

நான் அவளுள் பிரவேசிக்க முயற்சித்தேன். அவளுள் என்னை, என் பயங்களை, என் துக்கங்களை மறைத்து வைக்க விரும்பினேன். அதே வெறியுடன் அவள் என்னுடைய பாகமாக ஆகவும் முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

காலம் தெய்வீகமான ஒரு ராகமாகிக் கழிந்தது. வாயில் போதையேற்றும் லாகிரி வஸ்து. ராகமும் போதையும். இருள் வழியாக, ஈரம் வழியாக, வெப்பம் வழியாக, போதை கூடியது.

என் நாவில், மார்பில், இதயத்தில்,உணவுக்குழாயில், நரம்புகளில் எல்லாம் அவள் நுழைந்து, கிசுகிசு மூட்டி இழைந்து புகுந்தாள்.

நான் கூப்பிட்டேன்: "என் கண்ணே!"

அவளும் கூப்பிட்டாள்: "என் கண்ணே!"

காலமென்ற ராகத்தின் சுருதி தவறிய போதாக இருக்கவேண்டும். நான் மயங்கி விழுந்தேன். கனவற்ற முதல் மயக்கம்..

மயக்கம் தெளிந்தபோது ஒளி உண்டாகியிருந்தது.

மார்பில் சில்லென்ற ஒரு பெரும்பாம்பு இழைவதுபோலத் தோன்ற நான் பார்த்தேன். அவளுடைய கை. வெட்டிய சேனைக்கிழங்கின் நிறங் கொண்ட ஒரு கை. நிறைய சிவந்த தடிப்புக்கள், கொப்புளங்கள். நான் அரண்டு புரண்டேன். அவள் என்னைக் கட்டியணைத்திருக்கிறாள். அவளுடைய உடம்பு முழுதும் தடிப்புக்கள்; புறப்பாடுகள்; இரணங்கள்.

நான் ஓலமிட முயன்றேன். என் ஒலி வெளியே வரவில்லை. நான் அவளைக் குலுக்கியழைத்தேன். அவள் விழிக்கவில்லை. அவளுடைய சில்லிட்ட கையை நான் பலமாக என்னிடமிருந்து விலக்கினேன். குளிர்ந்து மரத்துக்கிடந்த அவளைப் பார்த்தபோது, கடந்துபோன லாகிரியின் நிமிடங்களை நினைவுகூர்ந்து நான் நடுங்கினேன்.

அடைக்கப்பட்டிருந்த வாயிலை மிதித்து உடைத்து நான் வெளியே வந்தேன். நடுக்கமுற்றவனாக, தளர்வுற்றவனாக நான் ஓடினேன். அயர்ச்சியுற்றபோது நான் படுத்தேன். மயக்கம் பீடித்தபோது அந்தச் சில்லிட்ட, சிவந்த, மரத்துப்போன கை என்னைப் பிடித்துக் குலுக்கி எழுப்பியது.

நான் மீண்டும் ஓடினேன். தளர்வுற்றபோதும் நான் படுக்கவில்லை. படுத்தால் கடைசியாகக் கண்ட அவளது உருவம் வந்து என்னைக் கூப் பிட்டு எழுப்புமென்று நான் பயந்தேன். இப்போதும் பயப்படுகிறேன். நான் படுக்க மாட்டேன். உறங்கமாட்டேன்.

தளர்ந்த கால்களும், தளர்ந்த தலையும், தளர்ந்த மனமுமாக நான் இப்படி நடக்க மட்டுமே செய்வேன்.

குஷ்டரோகிகளிடமிருந்து நீங்கி, கூனன்மார்களின் பார்வையில் படாமல். இருண்ட வராண்டாக்கள் வழியான இந் நடை என்று முடியுமோ, என்னவோ? வெளியே செல்லும் வழி, என்று எனக்குத் திறந்து கிடைக்குமோ?
----------------------

8. பாறைகள்.


மிருகாங்க மோஹனன் பலவற்றையும் நினைவுகூர்ந்தான்.அஸ்த‌ மனம் இளம் சூட்டினால் தொட்ட பாறைகளை மிதித்து நடக்கும்போது, பள்ளத்தாக்கைத் தாண்டி அம்மன் கோயில் தெரிந்தது.தந்தையின் சிறு விரலை இன்னும் கொஞ்சம் அழுத்திப் பிடித்துக்கொண்டு மிருகாங்க மோஹனன் கேட்டான்.

"அப்பா, நான் கொஞ்சம் அந்தக் கோயில் வரையிலும் போகட்டுமா?"

"எதுக்கு?" அப்பா கேட்டார்.

ஒன்றும் சொல்லாமல் கொஞ்ச நேரம் அப்பாவின் பின்னால் ந‌ட‌ந்தான்.பறவைகள் பரல் மீன்கள் போல வெட்டிப் பறந்து போயின‌. தூசியில் சில‌ ச‌ம‌ய‌ம் சாண‌‌த்தின் வாச‌னை, துள‌சியின் ம‌ண‌ம்.

"மிருகாங்கா!" அப்பா கேட்டார்: "நீ ப‌தில் சொல்ல‌லியே!"

"என‌க்கு" மிருகாங்க மோஹனன் விம்மினான்.

"எனக்கு அந்த தேவியைப் பார்க்கணும்." அப்பாவின் முகம் இருண்டது.

"அங்கே தேவியொண்ணுமில்லை." அப்பா சொன்னார்: "வெறும் கல்லில் செதுக்கிவச்ச ஒரு உருவம்தான். ஒரு பாறைத் துண்டைப் பார்க்க‌ அவ்வ‌ள‌வு தூர‌ம் ஏன் போக‌னும்?"

அப்ப‌வுக்குச் சொல்லிப் புரிய‌வைக்க‌ முடியாது.போதாத‌ற்கு அப்பாவின் இருளும் முக‌த்தை மன‌த்துள் காணவே மிருகாங்க மோஹனன் பின்வாங்கினான். பாதுகாப்பு அற்ற‌வனானான்‌.திரும்ப‌வும் பாதுகாப்பிற்காக‌,அப்பாவின் சிறுவிர‌லைத்தான் இறுக்கிப் பிடித்தான். அப்பாவிட‌ம் சொல்ல‌ வேண்டிய‌து, ஆனால் சொல்ல‌ இய‌லாத‌‌து மிருகாங்க மோஹன‌னின் ம‌ன‌தில் தெ‌ளிவ‌ற்ற‌ விருப்ப‌ங்க‌ளாக‌ உருவ‌ம் கொண்ட‌ன‌.தின‌மும் அந்தி நேர‌த்தில் பாறைக் க‌ட்டுக‌ளில் ந‌ட‌க்க‌ப் போகையில், தொலைவில் அம்ம‌ன் கோயில் தெரியும்போது,இற‌ந்து போன‌ தாயைப் ப‌ற்றித்தான் நினைப்பான்.அப்பாவிட‌ம் அதைக் கூற‌ தைரிய‌மில்லை.

"நான் பக்கத்துவீட்டு சுநந்தாவோட போறேன்." மிருகாங்க மோஹனன் திரும்பவும் சொன்னான்.

"வேண்டாம்." அப்பா சொன்னார்: "யாரோடவும் போக வேண்டாம்."

பிறகு இருவரும் ஒன்றும் பேசவில்லை. மிருகாங்க மோஹனன் காலடிகளில் பாறைகளின் ஸ்பரிசம் தவித்தது. இளம் சூடு. குறுங் காலடிகளில் பாறைகள் துடித்தன. அத் துடிப்புகள் காலோடு மேலே ஏறின. அவை அவனுள் முழுதும் நிறைந்தன. மத்யானத்தில் தனியாக வெளியே வர முடிந்தால் மிருகாங்க மோஹனன் வீட்டைச் சுற்றிலுமுள்ள மாந்தோப்புக்களிலும், திறந்த வெளிகளிலும் அலைந்து திரிவான். பழைய பாம்புச் சிலைகளின் முன் அமர்ந்து நாகர்களின் கருங்கல் படங்களைத் தழுவிக் கேட்பான்: "என்னைக் கடிப்பீங்களோ?"

"கண்ணே!" "அவர்கள் சொல்வார்கள்: "நீ எங்கள் தங்க மகனல்லவா!"

"நீங்க என்னோட விளையாட வருவீங்களோ, நாகத்தார்மாரே!"

"நீ எங்களோட வா. மாணிக்கங்களை ஒளித்து வைத்த சுரங்கங்களைக் காட்டுகிறோம். நீல மீன்களுள்ள ஆம்பல் பொய்கைகளைக் காட்டுகிறோம். அந்திநேரத்தின் இளம் வெப்பம் மாயாத கற்பாங்ளகள் மேல் உனக்குப் படுத்து உறங்கலாம்."
* * *

மீண்டும் அவன் அவ்விளம்பருவத்தின் நினைவிலாழ்ந்தான். மறுபடியும் காலடிகளில் பாறைகளில் இளம் சூடு. தூரத்தில் காடுகள் எரிந்து அடங்கியிருந்தன. அதற்குப் பின்னால் விஷம் கலந்த சமுத்திரம். சமுத்திரத்தின் மேலே அணுக்கதிர்வீச்சின் நிறம் மாறும் மேகங்கள். இறந்துபோன ஜீவராசிகளின் எதிரொலிகளோடு சுழற்றியடிக்கும் காற்று. மிருகாங்க மோஹனன் தொலைநோக்கியை எடுத்துக் காட்டின் கருங்கட்டைகளுக்கிடையே தேடத் தொடங்கினான். கடைசியில் அவளைக் கண்டு பிடித்தான். கரிக்கட்டைகளுக்கிடையில் அவள் பதுங்கிக் கிடந்தாள். மிருகாங்க மோஹனன் ஆயுதத்தைப் பாறையின் மேல் வைத்தான். அந்த ஒரு நிமிடத்தில் பாறையின்மேல் உள்ளங்கை பதிந்தது. இளமைக் காலத்தைப்போல பாறைகளிலிருந்து துடிப்புக்கள் மிருகாங்க மோஹனனின் உள்ளங்கைக்குள் ஏறின. அவற்றின் பொருளென்னவென்று புரிந்துகொள்ள அவன் முயற்சித்தான்.

"சின்னப் பையா," பாறைகள் கேட்டன: "நீ எதற்காக இந்த ஆயுதத்தைக் கையிலெடுத்தாய்? இதுதானா நம் நட்பிற்கு நீ செய்யும் கைம்மாறு?"

மிருகாங்க மோஹனன் சொன்னான்: " நான் உங்களைத் தொந்திரவு செய்யலியே."


"நீ எங்க‌ள் ந‌ட்பை வேத‌னை‌க்குள்ளாக்கினாய்" பாறைக‌ள் கூறின; "நீ ஆயுத‌த்தைக் கை‌யிலெடுத்த‌ நிமிஷ‌த்தில் ந‌ம் ந‌ட்பு முறிந்த‌து. எங்க‌ளுடைய அமைதியில் ப‌ங்கு வேண்டாமென்று நீ சொல்கிறாய்."

மிருகாங்க‌ மோஹ‌ன‌ன் வேத‌னையால் நிர‌ம்பினான்.மீண்டும் ஒரு குழ‌ந்தையாக ஆக அவ‌ன் முய‌ற்சித்தான். அம்ம‌ன் கோயிலின் கருங் க‌ற்சிலையை நினைவுகூர்ந்தான். அதைப் பார்க்க‌ முடியாம‌லேயே, தொட முடியாமலேயே குழந்தைப்பருவம் கடந்துபோயிற்று. அக் குன்றுப் புறமும், கோயிலும், அந்திநேரமும் இப்போதும் அங்கேயே இருக்குமோ? ஒருவேளை அழிவார்ந்த கதிர்வீச்சின் அலைகளில் அதெல்லாம் பொடிந்து போயிருக்கலாம். தேவி! மிருகாங்க‌ மோஹ‌ன‌ன் சொன்னான். நான் சுநந்தாவுடன் அந்தக் கோயிலுக்கு வந்திருக்கவேண்டியது. மத்யானம் அப்பா தூங்கும்போது, இல்லாவிடில் அப்பா வேட்டைக்குப் போகும் போது சுநந்தாவுடன் ஒளிந்தோடி வந்திருப்பேன்.

மிருகாங்க‌ மோஹ‌ன‌ன் விழிப்படைந்தான்.இப்போது பாறைகளின் துடிப்புக் கேட்கவில்லை. அவன் தனது முதுகிலிருந்த பையைத் திறந்து ஒரு வெள்ளைக்கொடியை வெளியே எடுத்தான். குன்றின் சரிவில் உலர்ந்து கிடந்த ஒரு கிளையொடித்து வெள்ளைத் துணியை அதில் கட்டிக் கொண்டு, அவன் பள்ளத்தாக்கில் இறங்கினான். காட்டின் கரிய உடல் நூறாயிரம் வீண் பெருமைகளாக‌த் தெறித்து நின்றது. அந்தியின் இளம் சூடு, துக்கத்தின் இளம் வெப்பம் அவற்றைத் தொட்டது.

கரிக்கட்டைகளுக்கு நடுவில் நின்றுகொண்டு மிருகாங்க‌ மோஹ‌ன‌ன் வெள்ளைக் கொடியைத் தூக்கிக் காட்டினான்.அவன் உரக்கக் கூவி யறிவித்தான். "நான் நிராயுதபாணியாக வந்தி ருக்கிறேன். உனக்கு என் வெள்ளைக் கொடி தெரிகிறதா?"

சற்று நேரம் கழிந்துதான் அந்த மெல்லிய குரல் பதில் சொல்லிற்று. "எனக்குப் புரிந்தது. நான் வெளியே வருகிறேன்.ஆயுதமில்லாமல்தான். அங்கே காத்திரு."

அவள் வெளியே வந்தாள்.

மிருகாங்க‌ மோஹ‌ன‌ன் தன்னைய‌றியாமல் சொல்லிவிட்டான். "அய்யோ! உன்மேல் முழுதும் சுட்டுப் புண்ணாயிருக்கிற‌தே."

அவ‌ள் சிரித்தாள்.

"நீங்க‌ள் ஏன் என்னைப்ப‌ற்றிக் க‌வ‌லைப் ப‌டுகிறீர்க‌ள்?" அவ‌ள் கேட்டாள். "நான் உங்க‌ளுடைய‌ எதிரி அல்ல‌வா?"

அவ‌ன் பேச‌வில்லை. என்ன‌வெல்லாமோ நினைக்க‌வார‌ம்பித்தான். பாறைக‌ளுக்குமேல் செய்த அந்தி நேர‌ப் ப‌ய‌ண‌ம். அப்பாவின் சாம‌ர்த்திய‌த்தின் முன் தாழ்வு ம‌ன‌ப்பான்மையோடு பின்வாங்குவ‌து. அவ‌ள் த‌ன‌து எதிரி என்ற‌ உண்மை அத‌னுடைய‌ அபாரமான சாம‌ர்த்திய‌த்தின் கைக‌ளைப் ப‌ர‌ப்பி மிருகாங்க‌ மோஹ‌ன‌னைத் த‌டுத்த‌து.

அவ‌ள் அருகில் வ‌ந்தாள்.

"ம‌ன‌ந் த‌ள‌ர‌ வேண்டாம்." அவ‌ள் கூறினாள்: "இதொன்றும் தீப்புண்க‌ள‌ல்ல‌. நான் சும்மா க‌ரியெடுத்து மேலே தேய்த்துக் கொண்ட‌துதான்."

அவ‌ள் க‌ரியைத் த‌ட்டிவிட்டுக் கொண்டாள். சீனாக்காரியின் ம‌ஞ்ச‌ள் நிற‌ம் ம‌றுப‌டியும் தெளிவ‌டைந்த‌து. சிறிய‌தோர் பிக்கினியின் கீழ்ப்பாதி ம‌ட்டுமே அவ‌ளுக்கு ஆடையாக‌ இருந்த‌து.

"உன‌க்குத் துணிக‌ள் இல்லையா?" அவ‌ன் கேட்டான்."எல்லாம் போயிற்று!" அவ‌ள் சொன்னாள்: "இதோ இடுப்பைச் சுற்றியுள்ள‌ இந்த‌ நாடா ம‌ட்டும்தான் பாக்கி."

மிருகாங்க‌ மோஹ‌ன‌ன் அவளை ஒட்டி நின்றான். "தான்வான்!" அவ‌ன் கேட்டான்: "நான் உன்னை சுந‌ந்தா என்று கூப்பிட‌ட்டுமா?"

"எத‌ற்காக‌?" அவ‌ள் சொன்னாள்: "ம‌னோக‌ர‌மான‌ பெய‌ராகும் தான்‌வான் என்ப‌து. சீன‌மொழியில் அத‌ன் பொருள் என்ன‌வென்று உங்க‌ளுக்குத் தெரியுமா?"

"உன்னுடைய‌வ‌ற்றின் எந்த‌ அர்த்த‌மும் என‌க்குத் தெரிந்து கொள்ள‌ வேண்டாம்." அவ்ன் சொன்னான்: "நீ என் எதிரி. எதிரியின் எத‌னுடைய‌த‌ற்கும் அர்த்த‌மும் அழ‌கும் இல்லை."

"யார் சொன்ன‌து?"

"என் நாட்டின் த‌லைவ‌ர்க‌ள் சொன்னார்க‌ள்.உன் த‌லைவ‌ர்க‌ளும் உன‌க்கு அப்ப‌டித்தான் சொல்லித் த‌ந்திருப்பார்க‌ள்."

"ச‌ரிதான்" தான்வான் கூறினாள்.

"ஆனால் என் த‌லைவ‌ர்க‌ளும் உன் த‌லைவ‌ர்க‌ளும் இன்று மீத‌மில்லை. அவ‌ர்க‌ள் அத்த‌னைபேரும் இக் க‌திர்வீச்சின் த‌ங்க‌த் தூளில் சிதைந்து குலைந்து இல்லாம‌ல் போய்விட்டிருக்கிறார்க‌ள், பார்."

அவ‌ள் சுட்டிக் காட்டினாள். அச் சுட்டுவிர‌ல் அடிவான‌ங்க‌ளை வெளிப் புற‌மாக‌ச் சுருட்டிய‌து. அடிவான‌ங்க‌ள் கொழுந்துவிட்டெரிந்த‌ன‌. ப‌ட்டுப் பூச்சியின் ம‌க‌ர‌ந்த‌ம்போல‌ பூத‌ல‌மெங்கும் த‌ங்க‌ப்பொடி நிறைந்திருந்த‌து. ந‌க‌ர‌ங்க‌ளும், நாக‌ரிக‌ங்க‌ளும், சாம்ராஜ்ய‌ங்க‌ளும், இறுமாப்புக்க‌ளுமே அப் பொடி. ப‌ல்வேறுப‌ட்ட‌வைக‌ளும் அப் பொடியில் ஒன்றாயின‌.

"ஆனால்" மிருகாங்க‌ மோஹ‌ன‌ன் சொன்னான். "நானும் நீயும் இர‌ண்டு எதிரிப்ப‌டைக‌ளின் க‌டைசிப் போர்வீர‌ர்க‌ள். நாம் அதை ம‌ற‌க்க‌முடியாது."

தான்வான் அவ‌ளுடைய‌ பிக்கினியை அவிழ்த்து எறிந்தாள். நிர்வாணமாக‌ அவ‌ன் முன் நின்றுகொண்டு சொன்னாள்: "பார்!"

"நீ அழகி!" அவன் கூறினான்.

"அதுவல்ல!" அவள் கூறினாள்: "உங்களுக்கு என் நாபியும் அதற்குக்கீழே பள்ளத்தாக்கும் தெரிகிறதா?"

பாறைகளின் துடிப்புப்போல ஒரு சலனத்தின் அலைகள் அவனுள் ஊடுருவின.

"தெரிகிறது."அவன் சொன்னான்: "அங்கே இரத்தம் ஒழுகுகிறது."

"பருவ மழை." அவள் கூறினாள், "புது மழை, மாதவிடாய், என் கர்ப்பப்பை கண்ணீர் விடுகிறது."

"கண்ணீர் விடுகிறதா?" இவன் கேட்டான்.

"இந்த வெறுக்கத்தக்க மகரந்தப் படலத்தின் எதிரே" அவள் சொன்னாள்.

"யுத்தத்திற்கெதிரே என்று நீ சொல்கிறாயோ?" அவன் கேட்டான்:
"ஆனால், ஏன்?:

"சொல்லுகிறேன்." அவள் சொன்னாள்: " ஆனால் அது உங்களுடைய நாட்டுப் பற்றை ஆட்டிவிட்டால்?"

" சொல்."

"அப்படியானால் சொல்லுகிறேன். இம் மகரந்தப் படலத்தில்தான் என் இளம் மகன் சிதைந்து சேர்ந்தான். உங்கள் ஆயுதத்திலிருந்து கணை ஏற்றுத்தான் நாலு வயதான என்னுடைய சென் இறந்தான். குஞ்சுக் கால்களிலும் குட்டிக் கைகளிலுமெல்லாம் அக் கதிர்வீச்சு பற்றிப் பிடிக்கையில் அவன் சொன்னான்: "அம்மா எனக்கு வலிக்கிறது"

அவள் அழத் தொடங்கினாள்.

அவள் தொடர்ந்தாள்: "அம்மா எனக்கு வலிக்கிறது. துன்பத்திற்கு இம் மூன்று வார்த்தைகளின் ஆழமேயுள்ளது. அதுதான் அடி மட்டம். அதற்குப் பிறகு வேதனையில்லை. என் மகன் எனக்கு நேராகக் கையை நீட்டினான். ஓய்வு நெருங்கிவிட்டது என்பதேபோல எனக்கு நேராக ஒரு கைவிரல் நீட்டினான். நான் அதைத் தொடவில்லை. தொடக்கூடாதென்று என் நாட்டுப் பற்றும் கடமையுணர்ச்சியும் விலக்கின. ஏனென்றால், நான் எனது நாட்டின் கடைசிச் சிப்பாய். அக் கதிர்வீச்சு என்னுள் ஊடுருவ அனுமதிக்க முடியாது. என் சிறுவிரலைப் பிடிக்காமல் எங்கும் போகாத சென் அப்படியாகத் தனித்துப் பயணமானான்."

"நான் பிழைத்திருக்க நீ இறந்தால் உன் நாடு தோற்றுவிடுமாயிருக்கும்." அவன் கேட்டான்: "இல்லையா?"

"ஆமாம்."

"ஆனால், உன் நாடு எங்கே?"

" என்னுடையவும் உங்களுடையவும் நாடுகள் இன்றில்லை." தான்வான் கூறினாள்: "யாருடைய நாடுகளும் இன்றில்லை. யாரும் உயிருடனில்லை, உங்களையும் என்னையும் தவிர. அப்படித்தான் கம்ப்யூட்டர்கள் சொல்கின்றன. நீங்களும் நானும் மட்டும் இவ்வுலகத்தில் பாக்கியிருக்கிறோம்."

சட்டென்று அவளுடைய வார்த்தைகள் அவனுடைய உடையின் மீதங்களை உடம்பிலிருந்து பிய்த்து எறிவதாக அவனுக்குத் தோன்றியது. அவனும் அவளைப்போல நிர்வாணமானான். அந் நிர்வாணத்துடன் அவர்கள் கைகளைக் கோர்த்துப் பிடித்துக் கொண்டார்கள். அவர்கள் நடந்தார்கள். சுற்றிலும் யாருமில்லை. அந்தி. நீறுபூத்துக் கிடக்கும் எரிகுழம்பு.செடிகளின், பிராணிகளின், கட்டடங்களின், இயந்திரங்களின் பலவிதமான உருவகங்களும் எரிந்து அடங்கிய சிதிலம். அவற்றிற்கெல்லாம் மேலே அந்தக் கதிர்வீச்சு. தங்கத் தூள்போல மரணத்தின் மகரந்தம்.

மரணத்தின் கட்டற்ற இப் பூந்தோட்டத்தில் அவளும் தானும் தனித்து.

"தான்வான்" மிருகாங்க மோஹனன் சட்டென்று சொன்னான். "என் மகளுக்கு மூன்று வயதாயிருந்தது. அவள் என் பக்கத்தில் படுத்துத்தான் உறங்குவாள். இரவில் நான் படுக்கையில் ஒரு விளிம்பிற்கு நீங்கியதை விடிகாலையில் அவள் கண்டுபிடித்தால் பாதியுறக்கத்தில் அவள் என் பக்கத்திற்கு உருண்டு வருவாள். பிறகு ஒரு கண் பாதி திறந்து நான் அங்கே இருக்கிறேன் என்று தன்னைத்தானே தைர்யப் படுத்திக் கொள்வாள். பாதி யுறக்கத்தில், பாதிக் கனவில் சிரிப்பாள். நான் அவளுடைய மழலை வார்த்தைகளை மீண்டும் கேட்கிறேன். அவளுடைய பெயர் கீதா. முன்பொரு தடவை பக்கத்து வீட்டுக்காரனொருவனின் மகள் அவளிடம் கேட்டாள். உன் பேரு சீதா தானே குழந்தே? என் மகளுடைய உதடு கோணியது; அவள் அழத் தொடங்கினாள். அன்றைக்கு முழுதும் கீதா அழுதாள். பக்கத்து வீட்டுக்காரி அவளை சீதாவென்று கூப்பிட்டுவிட்டாளல்லவா? நான் என் மகளை வாரி யெடுத்துக் கட்டியணைத்தேன். அந்த அழுகையைக் கண்டு நான் சிரித்தேன். பிற்பாடு நிறையத் தடவைகளும் நினைவு வந்து சிரித்தேன். ஆனால், சாகும்போது அவள் அப்படி உதடுகள் கோணித்தான் அழுதாள்.

தான்வான், மிருகாங்கனிடம் நெருங்கி வந்து அவனுடைய கையோடு தன் கையைக் கோர்த்துக்கொண்டாள்.

"ம்ஹூம்" என்றான் அவன். ஆனாலும் அவளுடைய பிடியை விலக்க அவன் முயற்சிக்கவில்லை.

"நீ என் எதிரி." அவன் சொன்னான்.

"சூரியன் அஸ்தமிக்கிறது." அவள் கூறினாள்.

கைகோர்த்து நின்றுகொண்டு அவர்கள் அந்திமேகங்களை நோக்கினர். வானம், பார்த்துக்கொண்டிருக்கையிலேயே கருமையடைந்தது. கருக்கும் வான‌த்தடியில் லாவா இன்னும் தெளிவடைந்தது. மரணத்தின் மக‌ரந்தம் தெளிவடைந்தது.

"என் சென்!" அவள் கூறினாள்.

"இருள் சேரும்போது அவனுக்குப் பயமாயிருக்கும். அவன் ஓடிவந்து என் விரலைப் பிடித்துக் கொள்வான். அப்படியிருந்தும் நன் அவனைத் தொடவில்லை.

அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

"தான்வான்", மிருகாங்க மோஹனன் கேட்டுவிட்டான்: "நீ அழுகிறாயோ?"

கொஞ்சமும் நினைக்காமல் கேட்டுவிட்டான். பிறகும், யோசிக்காமல்தான் அவளுடைய பின்னால் கை வைத்தான். யோசிக்காமல்தான் அவளைத் தன்னோடணைத்தான்.

"தான்வான்,அழாதே"

அவள் அவனுடைய தோளில் கன்னத்தை வைத்து அழுத்தினாள். உதட்டை ஒற்றினாள். தோளில் சூடான கண்ணீர் விழுந்தது. அவன் அவளுடைய முகத்தைத் துடைத்துவிட்டான்.

"தான்வான்," அவன் சொன்னான்: "உன் மார்பு எனக்குப் பிடித்திருக்கிறது."

அவள் மெல்ல அழுகையை நிறுத்தி, திரும்பி அவனது கண்களை நோக்கினாள்.

"அவை சிறிய‌வை." அவ‌ள் ம‌ன்னிப்புக் கேட்டாள். "உங்க‌ள் பெண்க‌ளைப் போல‌ என‌க்கும் பெரிய‌ மார்பு இருந்திருந்தால்....என்று நினைத்திருக்கிறேன். கோயில் சிலைக‌ளைப் போல‌ வ‌டிவான‌ பெண்க‌ள். நானும் அப்ப‌டியிருந்தால் --"

"அப்ப‌டியிருந்தால்?" அவ‌ன் கேட்டான்.

அவ‌ள் ச‌ற்று நேர‌ம் ப‌தில் சொல்ல‌வில்லை.

க‌டைசியில் சொன்னாள். "உங்க‌ளுக்கு இன்ப‌ம் த‌ர‌ என்னால் இய‌ன்றிருக்கும்."

இள‌ஞ்சூடான‌ பாறைக‌ளின் ப‌க்க‌மே அவ‌ர்க‌ள் ந‌ட‌ந்தார்க‌ள்.

"தொட‌ட்டுமா?" அவ‌ன் கேட்டான்.

"எத‌ற்காகக் கேட்க‌வேண்டும்?" அவ‌ள் கூறினாள்.

திர‌ண்ட‌ க‌ன்ன‌ங்க‌ளிலும், சிறு கோடுக‌ள் போன்ற‌ கீற்றுக் க‌ண்க‌ளிலும், மார்பிலும், நாபியிலும், தொடைக‌ளிலும் அவ‌ன் முத்த‌மிட்டான்.

"மிருகாங்கா", அவ‌ள் சொன்னாள்: "ஆகாய‌ம் இருக்கிற‌து.இப்போது ஒரு செய‌ல்வ‌கைய‌ற்ற‌தான‌ உண‌ர்ச்சி என‌க்கு உண்டாகிற‌து.

என் கர்ப்பப் பாத்திரத்தின் அழுகையில் நான் கட்டுண்டவளாகிறேன்."

"நீ ஒன்றும் கவலைப்படாதே!" அவன் அதையெல்லாம் அற்பமானதாக ஆக்க முயற்சித்தான்.அவன் கர்ப்பத்தடைச் சாதனங்களை நினைத்தான். மாதவிடாயின் ரத்தக் கடலில்,கர்ப்பத்தடையின் பெட்டகங்களில் பயணம் செய்து அழியும் வெண் விந்துகளை நினைத்தான்.

"இருட்டுகிறது" என்றாள் அவள்.

சட்டென்று அவன் இருளிற்காக அவாவினான். இருளென்ற கடலும் நட்சத்திரங்களென்ற விந்துக்களும்.

"நடசத்திரங்களுக்கடியில் நீ சுந்தரியாக இருப்பாய்" அவன் கூறினான்.

"ஓ" என்றாள் அவ‌ள்.அவ‌ள் க‌ண்க‌ளை மூடினாள். க‌ண்ணைத் திற‌‌ந்து அவ‌னுடைய‌ க‌ண்க‌ளினுள்ளும், அவை வ‌ழியாக‌ மீண்டும் ஆழங்க‌ளினுள்ளும் பார்த்தாள். பார்வையில் ச‌ம‌ர்ப்ப‌ண‌மும் ஆராத‌னையும் இருந்த‌ன‌. அவ‌னில் இதிகாச‌ங்க‌ளை உண‌ர்ந்தாள். உன்னை நான் என்னுட‌மையாக்குகிறேன். ஏதோ நிப‌ந்த‌னையின் வில்லையொடித்து இம் ம‌ண்ணிலிருந்து பிற‌ந்த‌, அழிவில்லாத‌ உன்னை நான் ஏற்கிறேன்.

"மைதிலி" அவ‌ன் அவ‌ளை அழைத்தான்.

"காமுகா", அவ‌ள் சொன்னாள்:" குழைந்தைத்த‌ன‌மாக‌ என்ன‌ வெல்லாமோ செய்ய‌த் தோன்றுகிறது எனக்கு. நான் உங்களுக்கு முன்னால் மண்டியிடட்டுமா?"

தான்வான் ம‌ண்டியிட்டாள். மிருகாங்க‌ மோஹ‌ன‌ன் அவ‌ள்மீது
உயர்ந்து நின்றான். இத்காச‌ அரச‌‌ர்க‌ளைப்போல‌ அவ‌ன் துக்க‌ம் பூண்டான்.

இய‌ந்திர‌ங்க‌ள் அப்போதும் அவ‌ர்க‌ளுட‌ன் உரையாடிக் கொண்டிருந்த‌ன‌. ம‌னித‌ ராசியின் முடிவின் விவ‌ர‌ங்க‌ளை அவை தெரிவித்த‌ன‌. க‌திர் வீச்சின் ஆதிக்க‌த்தில் உருவான‌ க‌ர‌ப்பான்க‌ள் ஒரு வேள்வியைப்போல‌ப் பாறைக‌ளின் மேலாக‌ ஊர்ந்து போய் அந்தப் ப‌க்கத்து எரி குழ‌ம்பில் விழுந்து இற‌ந்த‌ன‌. சில‌ ச‌ம‌ய‌ம். ச‌ற்றுத் தாம‌தித்துப்போன‌ ஒரு விண் வெளிக் க‌ப்ப‌ல் இய‌க்குந‌ரின் உட‌லுட‌ன் நில‌ய‌த்தைய‌டைந்த‌து.

மெத்த‌ன்ற‌ புல்லில் மிருகாங்க‌ மோஹ‌ன‌னும் தான்வானும் கிட‌ந்த‌ன‌ர்.

"இங்கே க‌திர் வீச்சு இல்லை." அவ‌ள் கூறினாள்.

"இங்கே புற்க‌ள் வ‌ள‌ர்கின்ற‌ன‌." அவ‌ன் சொன்னான். "இங்கே பூக்க‌ள் ம‌ல‌ர்கின்ற‌ன‌."

"ந‌ம‌க்காக‌வே இந்த‌ப் புக‌லிட‌ம் காப்ப‌ற்ற‌ப்ப‌ட்ட‌து." என்றாள் அவ‌ள்.

"யாரால்?"

"க‌ட‌வுளால்"

"எத‌ற்காக‌!"

மிருகாங்க‌ மோஹ‌ன‌ன் அவ‌ள‌து உட‌லின் எல்லாவிட‌ங்க‌ளிலும் வ‌ருடினான்

சிருஷ்டி தொடர" என்றான் அவன்.

மேலே ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள் வெளிப்ப‌ட்ட‌ன‌.

"எல்லா ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளிலும் ம‌ர‌ண‌மே.": தான்வான் சொன்னாள்:
"ஒவ்வொரு ஸெல்லிலும் போர். ஒன்று ம‌ற்றொன்றைக் கொன்று, இல்லாவிட்டால் அத‌னுடைய‌ உயிரைத் த‌ன‌க்குள் கொண்டு- அப்ப‌டித்தான் ஜீவ‌ன் தொட‌ர்கிற‌து. ஆத‌ர‌வின்றி ந‌ம்மை நோக்கிய‌ழும் குழ‌ந்தைக்குள்ளும் இந்த‌க் குரூர‌ம் ந‌ட‌க்கிற‌து."

"என‌க்கு நினைவு ப‌டுத்தாதே" என்றான் அவ‌ன்.

* * * *
உற‌ங்கியெழுந்த‌போது வெயில் தாங்க‌முடியாம‌லிருந்த‌து.

"ஓடு", சீனாக்காரி சொன்னாள்."நான் உங்க‌ளுக்கு ஐந்து நிமிஷ‌ம் த‌ந்திருக்கிறேன்."

மிருகாங்க‌ மோஹ‌ன‌ன் ஓடிப்போய் பாதுகாப்பிட‌த்தைய‌டைந்தான். அங்கே த‌ன் ஆயுத‌ம் இருக்கிற‌து. தான்வான் காட்டில் பெரிய‌ க‌ரிக்க‌ட்டைக‌ளுக்கு ந‌டுவே ம‌றைந்தாள்.

போர் ம‌றுப‌டியும் தொட‌ங்கிய‌து.

ந‌ம்பிக்கையிழ‌ந்த‌ ச‌துர‌ங்க‌ விளையாட்டுப்போல‌ அவ‌ர்க‌ள் போரிட்டார்க‌ள். நேர‌ம் தாழ்ந்த‌ போது மீண்டும் வெள்ளைக் கொடிக‌ளை உய‌ர்த்தினர்.

"காமுகா" ந‌ட்ச‌த்திர‌ விதைக‌ளுக்க‌டியில் அவ‌ள் கேட்டாள். "மீண்டும் ப‌டைப்புத் தொட‌ருமோ?"

"இப் ப‌ர‌ந்த‌ ம‌க‌ர‌ந்த‌க் க‌ட‌லின்மேல் ஒரு ஆலிலையில் க‌ட‌வுள் ப‌டுத்துக் கிட‌ப்பார்!" அவ‌ன் சொன்னான்: "மீண்டும் எல்லாவ‌ற்றையும் ப‌டைப்பார்."

"இக் குரூர‌ம் தொட‌ர‌" என்றாள் அவ‌ள்.

"ஆமாம்." அவ‌ன் சொன்னான்: "கொன்று தின்னும் ஸெல்க‌ளை சிருஷ்டிக்க‌."

"த‌ர்ம‌ப் போரென்று சொல்லி ஜீவ‌ன‌க‌ளைக் குழ‌ப்பி ஏமாற்ற‌" என்றாள் அவ‌ள். "அதை அனும‌திக்க‌லாகாது."

மிருகாங்க‌ மோஹன‌னின் சூடேறும் உட‌ம்பில் தான்வான் ஏறிப்ப‌டுத்தாள். அவ‌ள் அழுதாள்.

"காமுகா", அவ‌ள் சொன்னாள்: "ந‌ம‌து தேச‌ங்க‌ள் இன்றில்லை. ந‌ம‌க்கு வேண்டுமானால் ப‌டைப்பின் ப‌ர‌ம்ப‌ரையைத் தொட‌ர‌லாம். ஆனால் எனக்கு என் சென்னைத்தான் நினைவு வருகிறது. நீங்கள் உங்கள் கீதாவை நினைத்துப்பாருங்கள்.

"நினைக்கிறேன்". அவன் கூறினான்: "அவள் பிறந்த நாள். அவளுடைய குஞ்சுக்கைகள். அவளது அழுகை. மழலை மொழி...."

"இதெல்லாம் குரூரமே" அவள் சொன்னாள்.

"ஆமாம்" என்றான் அவன். "யாரோ நம்மை ஏமாற்றிவிட்டார்கள். வெறுமையின் பெரியதோர் வலையில் மாட்டிவிட்டார்கள்."

"காமுகா", அவள் சொன்னாள்: "கவனமிருக்கட்டும். நான் இப்போது நமது நாடுகளைக் குறித்தோ போரைக் குறித்தோ அல்ல சிந்திக்கிறேன். அதெல்லாம் மதிப்பற்றதும் அற்பமானதுமாயிருந்தன. நான் சிந்திப்பது நம் குழைந்தகளைப் பற்றியே. நாம் இதை இங்கே முடிக்க வேண்டும்.

"எதை?" அவன் கேட்டான்.

"குரூரம்" அவள் கூறினாள்: "படைப்பென்ற பொய்."

"முடிக்கலாம்". உற்சாகமின்றி அவன் பகன்றான்.

தான்வானுடையவும் மிருகாங்க மோஹனுடையவும் மனங்களில் அவர்களுடைய குழ‌ந்தைக‌ளின் சித்திர‌ங்க‌ள் மீண்டும் க‌டைசியாக‌க் காட்சிய‌ளித்த‌ன‌. குழ‌ந்தைக‌ள் அங்கே விளையாடிக்கொண்டிருந்தார்க‌ள். இட‌றி விழுந்தார்க‌ள். அழுவ‌தும், பிடிவாத‌ம் பிடிப்ப‌தும், சிரிப்ப‌துமாக‌ இருந்த‌ன‌ர்.

தான்வான் அம்பெய்தினாள். மிருகாங்க‌ மோஹ‌ன‌ன் வீழ்ந்தான். மீண்டும் க‌திர்வீச்சின் அம்பெடுத்து த‌ன‌து நெஞ்சில் ஏற்றிக் கொண்டாள்.

"காமுகா, போகிறேன்!" என்றாள் அவ‌ள்.

"போகிறேன், மைதிலி!" என்றான் அவ‌ன்.

க‌திர்வீச்சு அவ‌ர்க‌ளின் உட‌ம்புக‌ளினூடே நுழைந்து ப‌ட‌ர‌த் தொட‌ங்கிய‌து. எல்லாம் முடிந்த‌போது த‌ங்க‌ நிற‌மான‌ ம‌க‌ர‌ந்த‌ப் ப‌ட‌ல‌ம் ம‌ட்டும் மிஞ்சிய‌து.
* * * * *

பாறைக‌ளில் காற்று வீசிய‌து.

முன்பு எப்போதோ உப்பு நீரின் அலைக‌ள் பாறைக‌ளில் மோதி மோதியே முத‌ல் உயிர் முளை விட்ட‌து. கொன்றும் தின்றும் அது வ‌ள‌ர்ந்து பெரி‌தாயிற்று. அத‌னுடைய‌ யுக‌ங்க‌ள் கால‌த்தின் நீண்ட‌ அள‌வு கோலில் ஒரு நொ*டி நேர‌ம் ம‌ட்டுமாக‌வே இருந்த‌து. அந் நொடி நேர‌ம் தீர்ந்திருந்த‌து.

த‌வ‌ற்றைத் திருத்தியாகியிருந்த‌து. பாறைக‌ள் அதை அறிந்த‌ன‌. பாறைக‌ள் மீண்டும் ச‌மாதியில் மூழ்கின‌.
-----------------

9. புலரி முதல் புலரி வரை


அவனை ஸ்டேஷனில் இறக்கி விட்டுவிட்டு ரயில் கூவிக்கொண்டு ஓசையுடன் வடக்கு நோக்கி ஓடிச்சென்றது. வண்டி கண்ணிலிருந்து மறைந்த பின்னும் அது கக்கிய புகைப்படலம் அழியவில்லை. உருவம் மாற்றிக் கொண்டு கருத்த புகைப்படலம் ஆகாயத்தில் படர்ந்து ஏறியது. புகையை நோக்கியவாறு, விளையவிருப்பதை ஊகிக்க முடியாதவனாய் அவன் நின்றான். புகைச் சுருள்கள் நீர்க்குமிழிகளைப் போல ஆயிரக் கணக்கான கால்களில் நீந்தின.

கூட்டம் நிறைந்த ப்ளாட்ஃபார்மில் தனியனாக நின்றான். எங்கும் பரிச்சயமற்ற முகங்கள் மட்டுமே. இவர்கள் யாரையும் தெரியாது. இவர்களுடைய குரல்கள் பரிச்சயமில்லை. இவர்களுடைய வாசனையும் பரிச்சயமில்லை. இவர்கள் யார்? இவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள்? காக்கியுடை தரித்த போர்ட்டர்களைக் கண்டவுடன் உற்சாகம் உண்டாயிற்று. பச்சைக் கொடியுடன் ஆஃபீசுக்குள் போன ஸடேஷன் மாஸ்டரும் ஆர்வத்திற்குரிய பொருளாயிருந்தார்.

அவன் கண் நிறையக் குழப்பத்துடன் பெட்டியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு ஒரு மூலையில் ஒதுங்கி நின்றான்.

சற்று நேரமானபோது ப்ளாட்ஃபார்ம் காலியாயிற்று. அவன் தனியனானான். அப்போது வண்டியைப்பற்றி நினைத்தான். நீண்டு போகும் தண்டவாளங்களில் அவனுடைய கண்கள் சஞ்சரித்தன. தண்டவாளங்களின் எல்லையில் ரயில் மறைந்திருக்கிறது. தூரத்தில் சூன்யத்தில் தண்ட வாளங்களும் மறைந்துபோகின்றன. ரயில் விட்ட புகை இதற்குள் ஆகாயத்தில் சிதைந்து இல்லாமல்போயிருந்தது. அவன் தனிமையை உணர்ந்தான். தான், தொப்புள் கொடியிலிருந்து வேறுபடுத்தப்பட்ட குழந்தை என்று அவனுக்குத் தோன்றிற்று. இந்த ப்ளாட்ஃபார்மில், ஆளற்ற இந்த ப்ளாட்ஃபார்மில் தான் தனியன். தான் கேட்ட ஒலிகள் தனிமையின் ஒலிகளாயிருந்தன. கண்ட வர்ணங்கள் தனிமையின் வர்ணங்களாயிருந்தன. ப்ளாட்ஃபார்மின் மேற்கூரையைத் தாங்கி நிறுத்தும் துருப்பிடித்த இத் தூண்கள், மாமரத்தடியில் கிடக்கும் இந்த பெஞ்சுகள், வெயிலில் கிடந்து உளையும் இந்தத் தண்டவாளங்கள், தனிமையை உணர்த்துகின்றன. இந்த ரயில் நிலையம், இச் சிறிய நகரம், நகரத்தின்மேல் தொங்கும் ஜொலிக்கின்ற இவ்வாகாயம். ஆகாயத்தில் கொழுந்துவிட்டெரியும் இந்தச் சூரியன் இவையெல்லாம் தனிமையை அழைத்து எழுப்புகின்றன.

இப் பெரிய பூமிக்கு மேலே, பரந்து கிடக்கும் இப் பெரிய ஆகாயத்தின் அடியில் தான் தனியன்.

தன்னை ஸ்டேஷனில் இறங்கி விட்டுவிட்டு ஓடிப்போன வண்டியைப் பற்றி நினைத்து துக்கப்பட்டுக்கொண்டு அவன் ப்ளாட்ஃபார்மில் தனது பெட்டியின் மேல் அமர்ந்தான். ரயிலே, திரும்பி வா. என்னை ஏற்றுக்கொள். உஷ்ணமான, ஈரமான, மெத்தென்ற உன் உடமபினுள் என்னைத் திருப்பி அழை. தொப்புள் கொடியில் என்னைக் கட்டிப்போடு. வண்டி அவனுடைய குரலைக் கேட்கவில்லை. ரயில் அநேகம் நாழிகைகளுக்கு அப்புறத்தில் திரும்பிப் பார்க்காமல், பின் சென்ற பாதைகளைப்பற்றி நினைக்காமல், காலத்தைப்போல ஓடிக் கொண்டிருந்தது.

"மகனே!--"

தலையை உயர்த்திப் பார்த்தான். ஒரு வயதான மனிதர். ஒற்றை வேஷ்டியும் அரைக்கை ஷர்ட்டும்தான் வேஷம்.

"என் பேரு நாணு நாயர்."

நாணு நாயர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். வெற்றிலைக் காவிபடிந்த பற்களைக் காட்டி சிரித்தார்.

"நாணு நாயரைத் தெரியாதா?"

அவன் பெட்டியின்மேலிருந்து குதித்தெழுந்தான். நாணு நாயரோ? யாருக்குத்தான் அவரைத் தெரியாது? எவ்வளவோ காலமாக‌ அவருடைய பெய‌ரைக் கேட்கிறான்! எத்தனையோ தடவைகள் எவ்வளவோ பேர்கள் தன்னிடம் நாணு நாயரைப்பற்றிப் பேசியிருக்கிறார்கள். பார்க்கவேண்டுமென்றும் அறிமுகம் செய்துகொள்ள வேண்டுமென்று பலதடவை ஆசைப்பட்டதுண்டு. இப்போதாவது அதற்கு சந்தர்ப்பம் உண்டாயிற்றே. நாணு நாயர் தயாளசீலரும் தீனர்களுக் கிரங்குபவருமாவார். இனிமேல் யாரைப்பற்றியும் பயப்பட வேண்டியதில்லை. இவ்வாகாயத்திற்கடியில், இப்பூமிக்கு மேலே, இனி யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை. தனக்கு நாணு நாயர் இருக்கிறார்.

"வண்டி எப்ப வந்தது?" நாணு நாயர் கேட்டார். "நான் கொஞ்சம் பிந்திட்டேன்."

நாணு நாயர் சொன்னதை அவன் கவனிக்கவில்லை. நாணு நாயரைக் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான் அவன். தொண்டையில் பெரியதோர் குமிழ். தலைமயிர் முழுக்க நரைத்திருக்கிறது. காலில் வார் அறுந்த செருப்பு. இப் பெரிய மனிதனின் உருவம்தான் சிறியது.

நாணு நாயர் கையிலிருந்த துண்டால் கழுத்தையும் முகத்தையும் ஒற்றிக் கொண்டார். வியர்வையில் குளித்திருக்கிறார். ஷர்ட் முதுகில் நனைந்து ஒட்டிக்கிடக்கிறது.

"அப்போ நடக்கலாமா?"

அவன் தலையாட்டினான்.

"பெட்டிய இங்கக் கொடு"

"நானே வச்சிருக்கேன்."

"இப்படிக் கொடு மகனே."

நாணு நாயர் பலவந்தமாகப் பெட்டியை வாங்கிக் கொண்டார். பெட்டியைத் தூக்கிப் பிடித்தபோது அவருடைய மெலிந்த கை மேல் நரம்புகள் இழுத்து முறுக்கேறின. நாணு நாயரின் கையில் சதையும் எலும்பு இல்லாதது போலவும் வெறும் நரம்புகள் மட்டுமே இருப்பது போலவும் தோன்றும்.

"பிரயாணம் சௌர்யமாயிருந்துச்சா?"

"ம்"

நாள் முழுதும் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தானல்லவோ.

"சாப்பாடெல்லாம் கெடைச்சுதா?"

நாணு நாயர் ஒவ்வொன்றும் கேட்டுக்கொண்டு ஸ்டேஷனுக்கு வெளியே நடந்தார். பின்னால் நடந்தான். வெளியே நல்ல கூட்டம். கார்கள் வரிசையாக நின்றன. நாலைந்து குதிரை வண்டிகளும் இருந்தன. மாமரங்களின் நிழலில் பட்சி சாஸ்திரம் சொல்கிற. எலிகளைச் சுட்டுத் தின்னும் குறவர்கள் கூடாரம் அடித்திருந்தார்கள் சாலைக்கு அப்புறத்தில் கடைகள் நிறைந்திருக்கின்றன.

"நடந்துடலாமா?" காருல போகிற தூரம் இல்லை மகனே."

"நடக்கலாம்."

நடந்தால் சுற்றுப்புறத்திலுள்ள காட்சிகளை விஸ்தாரமாகப் பார்க்க முடியும். நாணு நாயர் பெட்டியைத் தரையில் வைத்து, மடியிலிருந்து ஒரு சுருட்டை எடுத்துக் கொளுத்திப் புகை விட்டார். சுருட்டையும், அதன் நுனியில் கனலையும் அதிசயத்தோடு பார்த்திருந்தான். நாணு நாயரின் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் புகை வெளியேறியபோது அவன் இன்னும் அதிகமாகத் திகைப்படைந்தான். நாணு நாயர் ஓர் இளம் புன்சிரிப்புடன் பெட்டியை எடுத்துக்கொண்டு நடந்தார். சுருட்டை வாயில் கடித்துப் பிடித்திருந்தார். வெயிலில் தன்னுடையவும் நாணு நாயருடையவும் நிழல்களை அவன் கண்டான். தங்களோடு நகர்கிற நிழல்களை வியப்படன் அவன் பார்த்துக்கொண்டிருந்தான்.

"வேகமா நட மகனே, சரியான வெய்யிலப்பா!"

நாணு நாயர் பெட்டியைக் கை மாற்றிக் கொண்டார். அப்போது எதிரேயிருந்து ஒரு குதிரை வண்டி வந்தது. குதிரையின் வாயில் நுரை தள்ளியிருந்தது. கழுத்தில் சலங்கைகள் குலுங்கின. குதிரை வண்டி நகர்ந்து பக்கத்தில் வந்தபோது குதிரையைச் சுட்டிக் காட்டிக் கொண்டு அவன் கேட்டான்:

"அது என்ன மிருகம்?"

"அது குதிரை".

நாணு நாயர் சுருட்டை வாயிலிருந்து எடுக்காமல் பதில் சொன்னார். குதிரை வண்டி கடந்துபோன பிற்பாடும் குதிரைமேலிருந்து அவன் கண்ணை எடுக்கவில்லை. திரும்பி நின்று குதிரையை நோக்கினான். குதிரை, வண்டியின் முன்னால் இருந்ததனால் அதனுடைய கால்களை மட்டுமே அவனால் பார்க்கமுடிந்தது. உருண்டுகொண்டிருக்கும் சக்கரங்களுக்கிடையில் குதிரையின் கால்கள் தாளத்தோடு ஆடிக் கொண்டிருந்தன.

"நட மகனே"

நாணு நாயர் உணர்த்தினார். நடக்கையிலேயே அவர் குதிரைகளைப் பற்றிப் பேசினார். முன் காலத்தில் குதிரைகள் காட்டு மிருகங்களாயிருந்தன. அவை தாகம் எடுத்தபோது தண்ணீர் குடித்தும், பசியெடுத்தபோது புல்லைத் தின்னும், இணைசேர நினைத்தபோது இணை சேர்ந்தும் காடுகளில் வாழ்ந்து வந்தன. காட்டில் வாழ்ந்திருந்த மனிதன் என்ற குரங்கு, குதிரைகளை வேட்டையாடிச் சுட்டுத்தின்றான். பிற்காலத்தில் மனிதன் குதிரைகளைக் கண்ணி வைத்து உயிரோடு பிடிதது வயலில் வேலை வாங்கினான். படிப்படியாக அவர்கள் குதிரையின் மேல் சவாரி செய்யக் கற்றனர். அக்காலத்தில் குதிரைதான் மனிதனின் முக்கிய வாகனம். சக்கரங்கள் கண்டு பிடிக்கப்பட்டதும் குதிரைகள் வண்டியிழுக்கவாரம்பித்தன. குதிரை மனிதனையும் இழுத்துக்கொண்டு காடுகளிலும் கிராமங்களிலும் நகரங்களிலும் சஞ்சரித்தது.

"மனிதன் குதிரையைச் சரியானபடி உபயோகப்படுத்தினது எப்ப தெரியுமா?"

"ம்ஹும்"

அவன் தலையாட்டினான்.

"யுத்த காலத்துலதான். முன் காலத்துல யுத்தத்துல குதிரைகளுக்குக் குறிப்பிட்ட ஒரு பங்கு இருந்தது. அதிகம் குதிரைகள் உள்ள நாடு குறைந்த குதிரைகள் உள்ள நாட்டைத் தோற்கடித்தது."

இன்றைக்கென்னவென்றால் குதிரைகளின் உபயோகம் குறைந்து வருகிறது. வயற்காடுகளில் வேலை செய்ய ட்ராக்டர்கள் இருக்கு. மனுஷன் போகக் காரும், விமானமும், கப்பலும் இருக்கு. குதிரைகளோ எண்ணிக்கையில் குறைந்தும் வருகின்றன.

"ஆனாலும் சர்க்கஸ்காரனுக்கு இப்பவும் குதிரைகள் தேவையிருக்கு." நாணு நாயர் முடிவாகச் சொன்னார்.

ம‌ஞ்ச‌ள் நிற‌மான‌, லாட‌ம‌டித்த‌ கால்க‌ளுள்ள, கடிவாளமணிந்த, அசை போடும் குதிரையைக் கனவு கண்டவாறு அவன் நடந்தான். அவர்கள் மூன்று சாலைகள் சேரும் ஒரு சந்திப்பை அடைந்தனர்.

"வீட்டுக்குப் போற வழி எது தெரியுமா?"

"ம்ஹூம்"

அவன் தலையாட்டினான். அவ‌னுக்கு ஒன்றும் தெரியாது. சொந்த வீட்டுக்கு வழிக்கூட‌த் தெரியாது. நாணு நாய‌ர் வீட்டிற்கான‌ சாலையில் திரும்பினார். சாலை, தார் போட்ட‌ அக‌ல‌மான‌ சாலைய‌ல்ல. ச‌ர‌ளைக‌ள் நிறைந்த‌, குண்டும் குழியுமான‌ கிராம‌ப் பாதைதான். வாக‌ன‌ங்க‌ளின் சுவ‌டுகள் காணப்படவில்லை. ஆனால் மனிதர்களுடையவும் பிராணிகளுடையவும் அடிச்சுவடுகள் காணப்பட்டன. சில ப‌ற‌வைக‌ளுடைய‌ சுவ‌டுக‌ளையும் காண‌முடிந்த‌து.

"கோழியுடைய‌தோ, காகத்துடைய‌தோவாக‌ இருக்கும்."

நாணு நாய‌ர் சொன்னார். அவ‌ர் பெட்டையைக் கீழே வைத்து மடியிலிருந்து இன்னொரு சுருட்டை எடுத்துப் ப‌ற்ற‌ வைத்தார்.

"சிறிய‌து சிறுவ‌ர்க‌ளுடைய‌‌வும், பெரிய‌வை வ‌ய‌தான‌வ‌ர்க‌ளுடைய‌வும் கால‌டிச் சுவ‌டுக‌ள்."

நாணு நாய‌ர் விள‌க்கினார். பெட்டியைத் தூக்கிக் கொண்டு ப‌ய‌ண‌த்தைத் தொட‌ர்ந்தார்.

த‌ன‌து கால்க‌ளுக்குப் பின்னால் தான் ந‌ட‌ந்த‌ வ‌ழியில் பாத‌ச் சுவ‌டுக‌ள் பிற‌ப்ப‌தை அவ‌ன் உவ‌கையுட‌ன் பார்த்தான். நாணு நாய‌ரின் கால‌டிக‌ளின் சுவ‌ட்டிலும் பாத‌ச்சுவ‌டுக‌ள் பிற‌ந்துகொண்டிருந்த‌ன‌. அவ‌ருடைய‌ அடிச்சுவ‌டுக‌ள் த‌ன‌து அடிச்சுவ‌டுக‌ளைப்போ லிருக்க‌வில்லை.

"நான் செருப்புப் போட்டிருக்கேன். ஒங்கால்ல‌ செருப்பில்லைல்லே!" நாணு நாய‌ர் விள‌க்கினார்.

அடிச்சுவ‌டுக‌ளின் ஊர்வ‌ல‌த்திற்கு முன்பாக‌ அவ‌ர்க‌ள் ப‌ய‌ண‌ம் தொட‌ர்ந்த‌ன‌ர்.

"அதென்ன‌ ம‌ர‌ம்?"

சாலையோர‌த்தில் க‌ண்ட‌ ப‌லாம‌ர‌த்தைச் சுட்டிக் காட்டிக் கொண்டு அவ‌ன் கேட்டான். சுருட்டை வாயிலிருந்து எடுக்காம‌ல் நாணு நாய‌ர் ப‌தில் சொன்னார்.

"அது ப‌லா."

நாணு நாய‌ர் தொட‌ர்ந்தார்.

"பலாமரத்துலதான் பலாக்காய் காய்க்கும்.”

“மாங்காய்?”

“மாங்காய் மாமரத்துல காய்க்கும்.”

“மாமரம் எங்கே நாணு நாயரே?”

“காட்டறேன், காட்டறேன்.”

நாணு நாயர் நடந்துகொண்டிருக்கையில் கழுத்தையும், மார்பையும் துண்டை எடுத்துத் துடைத்தார். அவர் முழுக்க வியர்வையில் மூழ்கியிருந்தார். நெற்றியில், கன்னத்தில், கழுத்திலெல்லாம் வியர்வை வழிந்து ஓடிக்கொண்டிருந்தது, மூச்சும் வாங்கிற்று.

“பெட்டிய நான் எடுத்துக்கறேன், நாணு நாயரே.”

“வேண்டாம் மகனே. நாணாயர்க்கு இது பழக்கந்தான்.”

செம்மண் நிறைந்த சாலை வழியாக அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

“நாணாயரே!”

“என்ன மகனே?”

”மா, கொடியா மரமா?”

“மரந்தான் மகனே.”

“அப்போ, எது கொடி?”

“வெள்ளரிக்கா, பாவக்கா, இதெல்லாம் கொடியில் காய்க்கும். மிளகும் கொடியில்தான் உண்டாகும்.”

“மிளகுன்னா என்ன நாணு நாயரே?”

“பொறு மகனே, எல்லாம் படிக்கலாம்.”

அவன் சற்று நேரம் எதுவும் பேசாமல் நாணு நாயரின் பின்னால் நடந்தான். வேஷ்டியின் நுனி மண்ணில் இழைந்தது.

மயிரடர்ந்த கால்கள் வியர்த்திருந்தன. ஆனாலும் அவனுக்குச் சோர்வு உண்டாயிருக்கவில்லை. மூச்சு இழைக்கவில்லை. சோர்வுற்றதும் மூச்சிறைத்ததும் நாணு நாயரல்லவோ-

“அதோ அங்கே தெரிகிறதுதான் மா.”

நாணு நாயர் ஒரு மாமரத்தைச் சுட்டிக் காட்டினார். படர்ந்து பந்தலிட்டு நிற்கும் ஒரு மாமரம். கிளைகள்தோறும் மாங்காய்கள். கிளைகளெல்லாம் கட்டிப் பின்னிக் கிடந்தன. ஒரு தாழ்ந்த கிளையின் மேலமர்ந்து தூங்கிக்கொண்டிருந்த காகத்தின்மேல் அவனுடைய கண் பதிந்தது.

“நாணு நாயரே!-”

“அது காக்கா. காக்கைகளில் பல ஜாதியுண்டு. பலி காக்கை, மாப்பிள்ளைக் காக்கை, கடல் காக்கை....”

“இது பலி காக்காய், இல்லியா?”

”இல்லையப்பா, இது மாப்பிள்ளைக் காக்காய்.”

“மாப்பிள்ளைக் காக்காயையும் பலி காக்காயையும் பார்த்தா எப்படிப் பிரிச்சுத் தெரிஞ்சுக்கலாம்?”

“அது சுலபம் மகனே. பலி காக்கை கருப்பு. உடம்பு நல்ல அமைப்பா இருக்கும். மாப்பிள்ளைக் காக்காய்னா ஒல்லியா இருக்கும். கழுத்துல நரைச்ச மயிர் இருக்கும். திருட வேற செய்யும்.”

மாமரத்தின் மேலிருக்கிற காகத்திற்கு மெலிந்த உடலும் ஒல்லிக்கால்களும் கழுத்தில் செம்பட்டை மயிர்களும் இருக்கின்றன.

“சரிதான் அது மாப்பிள்ளைக் காக்காய்.”

அவன் தலையைக் குலுக்கினான். அவர்கள் சாலையிலிருந்து திரும்பி வயற்காட்டில் இறங்கி வரப்பினூடே நடந்தனர்.

“அதுதான் ஒன் வீடு.”

நாணு நாயர் சுட்டிக் காட்டினார். நுழை வாயிற் கட்டடமுள்ள, ஓலை வேய்ந்த ஒரு பெரிய வீடு. வயலைத்தாண்டி அவர்கள் வீட்டின் முன்பை அடைந்தனர். நாணு நாயர் நுழைவாயிற் கட்டடத்தின் கதவைத் தள்ளித் திறந்தார். வீட்டு முகப்பில் யார் யாரோ நின்று கொண்டிருந்தார்கள்.

“வந்தாச்சா! எம்பிள்ளை வந்துட்டானா?”

காதில் தங்கத் தோடணிந்த, வெள்ளை வஸ்திரம் தரித்த ஒரு ஸ்திரீ முற்றத்தில் ஓடியிறங்கி வந்தாள். அவள் அவனைக் கட்டியணைத்தாள். குழம்பி நின்றான். அதைப் பார்த்து நாணு நாயர் ஒரு சிரிப்புடன் சொன்னார்: “ஒன் அம்மா மகனே.”

அவன் தாயைத் தழுவினான். அம்மாவின் வாய்க்குக் களிப்பாக்கின் மணம் இருந்தது. அவர்கள் முகப்பில் ஏறினார்கள். நாணு நாயர் ஒவ்வொருத்தராக அறிமுகப்படுத்தினார்.

“இது ஒங்கப்பா...”

அப்பா துணி நாற்காலியில் படுத்திருந்தார். நல்ல கனமும் பருமனுமான, காதில் கடுக்கனணிந்த, சிவப்பான ஒரு மனிதர். வாசலின் பின்னால் மறைந்து நிற்கும் வாயில் ஸாரியுடுத்த பெண்ணைச் சுட்டிக் காட்டிக்கொண்டு நாணு நாயர் கேட்டார்:

”அது யார்னு தெரியுமா?”

“ம்ஹும்”

“ஒம் பெண்டாட்டி மகனே, சந்திரிகா.”

அவன் வாசலினருகில் சென்று நின்று அவளைப் பார்த்தான். நெற்றியில் சாந்துப் பொட்டு. சங்கு போன்ற அழகான கழுத்து. நிலைப்படியின்மேல் படிந்திருந்த அவளுடைய கை விரல்களை அவன் மெதுவாக வருடினான். தலை குனிந்து நின்ர அவளுடைய கன்னங்களில் இரத்தப் பிரவாகமுண்டாயிற்று.

”போய்க் குளிச்சிட்டு வா.” அம்மா சொன்னாள்: “தண்ணி சேந்தி வச்சிருக்கு. சோப்பும் துண்டும் குளியலறையில் இருக்கும்.”

அவன் குளியலறைக்குப் போய்க் குளித்துவிட்டு வருவதற்குள் மேஜை மேல் சாப்பாடு தயாராக இருந்தது.

‘நாணாயரே, சாப்பிடலாம்.”

அப்பாவும் நாணு நாயரும் செம்பில் நீரெடுத்து முகம் கழுவினார்கள். அவனும். அவர்கள் புற்பாயில் அமர்ந்து சாப்பிட்டார்கள். சோற்றையள்ளிச் சாப்பிடுவதனிடையில் நாணு நாயர் அவனிடம் கேட்டார்:

“எல்லாரும் அறிமுகம் ஆயாச்சு இல்லியா, எல்லாம் புரிஞ்சிக் கிட்டாச்சில்லியா?”

ஆமாம் என்று அவன் தலையாட்டினான். சாப்பாடு ஆனபிறகு அப்பாவும் நாணு நாயரும் வெற்றிலை போட்டுக்கொண்டும், ஊர் வம்புகளைப் பேசிக்கொண்டும் இருந்தார்கள். அவன் தூணில் சாய்ந்து நின்று ஆகாயத்தினுடையவும் மரங்களுடையவும் அழகை ருசி பார்த்தான். மரங்களின் நிறம் பச்சை, ஆகாயத்தின் நிறம் நீலம். இதெல்லாம் அவன் இதற்குள் புரிந்துகொண்டிருந்தான். எல்லாம் படித்திருக்கிறான். இப்போது எல்லாம் தெரியும்.

"மூணு நாலு நாள் பிரயாணம் செய்தாயில்லியா? களைப்பா இல்லியா மகனே ஒனக்கு?” அம்மா கேட்டாள்.

“போய்க் கொஞ்சம் படுத்துத் தூங்கு” அப்பா சொன்னார்.

அவன் மாடிப்படியேறி மேலே தன் அறைக்குப் போனான். அறையில் ஜன்னலினருகில் சந்திரிகா முகம் குனிந்து நின்றிருந்தாள். ஜன்னல் வழியாக வரும் காற்றில் அவளுடைய மயிர்கற்றைகள் பறந்து விளையாடின. அவன் அவளருகில் சென்று நின்று அவளது முகத்தைப் பிடித்து உயர்த்தினான். அவளுடைய மை தீட்டிய கண்களில் ஈரக்கசிவு தெரிந்தது.

“அழறியோ?”

அவள் மந்தகாசம் புரிந்தாள்.

அவர்கள் கட்டிலில் அமர்ந்தனர். அவன் அவளுடைய கையை எடுத்துத் தன் மடியில் வைத்து மணிக்கட்டில் ப்ளாஸ்டிக் வளையல்களை எண்ணினான். ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு, ஆறு, ஏழு. அவன் அவளுடைய தலைமயிரையும் கன்னங்களையும் வருடினான். மலர்ந்து கிடக்கும் அவளது கழுத்தில் தன் கன்னத்தைச் சேர்த்து வைத்துக்கொண்டு அவன் படுத்தான். வலது கை அவளுடைய மார்பில் தங்கியது.

விழித்தபோது அந்தியாகியிருந்தது. கட்டிலில் எழுந்து உட்கார்ந்த போது அவன் சட்டென்று நினைவுகூர்ந்தான். எல்லா விஷயங்களையும் நான் நாணு நாயரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஆனால் எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம், நான் யாரென்ற விஷயம் கேட்டுத் தெரிந்துகொண்டேனா? நானொரு முட்டாள். எல்லோரையும் தெரிந்து கொண்டேன். எல்லோருடைய பெயர்களையும் தெரிந்து கொண்டேன். என்பெயரைத் தெரிந்து கொள்ளவில்லை. நான் படு முட்டாள். நாணு நாயர் கிட்டப் போய் கேட்கலாம். அவன் மாடிப்படி இறங்கிக் கீழே போனான்.

“நாணு நாயர் எங்கே அப்பா?” “இதோ இப்பத் தான் போனார்.”

அவன் முற்றத்திலிறங்கி நுழைவாயிற் கட்டடத்தை நோக்கி ஓடினான். தெருவில் இறங்கிப் பார்த்தான். தொலைவில் நாணு நாயர் நடந்து போவதைக் கண்டான்.

“நாணாயரே! “ உரக்கக் கூப்பிட்டான். நாணு நாயருக்குக் கேட்கவில்லை. அவன் முடிந்த அளவு உரக்கக் கூப்பிட்டுக் கேட்டான். “எம் பேரென்ன நாணாயரே? நான் யாரு நாணாயரே?”

நாணு நாயர் கேட்கவில்லை. திரும்பிப் பார்க்கவில்லை. அந்தியின் கூடிவரும் இருளில், மங்கிய வெளிச்சத்தில் நாணு நாயர் மறைந்து போனார்.
---------------------------

10. ஆறாம் ஜார்ஜின் நீதிமன்றம்


பினாங்கிலிருந்து ஒரு தந்தி, மடத்திராமன் முடிவு நெருங்கிவிட்டது' உடனே புறப்படுக.

இறந்த பிறகே இப்படித் தந்தியடிப்பது. "முடிவு நெருங்கிவிட்டது".

அப்போது மடத்திராமன் இறந்தான். செத்தான். செத்து விழுந்தான்.

துஷ்டர்கள் இற‌ந்து போகிறார்கள். ந‌ல்லவர்கள் திரும்பிப் போகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.

மிகவும் சிலரே திரும்பிப் போகிறார்கள். ஏனென்றால் நல்லவர்கள் கொஞ்சம்தான்.

திரும்பிப்போவதை மோட்சம் என்றும் சொல்வர்கள்.

நரைத்த தலைமயிர் கருக்கும். வழுக்கையில் மயிர் முளைக்கும். வற்றிச் சுருங்கின தோல் வளப்பமுறும். உடம்பு கொழுத்து உருண்டு வரும். மணிக்கட்டிலும் அக்குளிலும் மார்பிலும் மயிர் உதிர்ந்துபோகும். பிறகு முகத்திலும். குரல் தெளிவுறும். பற்கள் விழுந்துவிடும். அப்படியாக முதல் வகுப்பு வரை தோற்பார்கள்.* பிறகு உடற்பயிற்சிக் கூடத்திற்கு. எழுத்தாணி பிடிப்பது முதல் பிள்ளையார் சுழி வரை பின்னே செல்லும் தினங்கள். மறதியின் நாட்கள். படிக்கப்போடுவது முதல் சோறுண்ணல், நடந்து நடந்து நடக்க முடியாமலாகிறது. தவழுகிறான். நீந்துகிறான். கைக்குழந்தையாகிறான். முலைப்பால் குடிக்கிறான். ஒரு நாள் வந்த வழியே திரும்பிப் போகிறான்.

அம்மாவின் வயிற்றுக்குள்.

பிற‌கு க‌ண‌க்குக் கீழ்நோக்கிப் போகிற‌து. ப‌த்துமாத‌ம், ஒன்ப‌து மாத‌ம், எட்டுமாத‌ம், ஏழு,ஆறு, சீம‌ந்த‌ம், கும‌ட்ட‌ல், வாந்தி.

இர‌த்த‌ம் இர‌த்த‌த்தினுள் தேடிப்போகும் முடிவ‌ற்ற‌ ப‌ய‌ண‌ம்.

ஆனால் அத‌ற்குத் தாயெங்கே?

தாயெங்கே? த‌ந்தையெங்கே? த‌லைமுறைக‌ளெங்கே?

--------------*

*ஏழாம் வ‌குப்பில் ப‌டிப்ப‌வ‌ர் ஏழிலிருந்து ஆறுக்கும், ஆறிலிருந்து‌ ஐந்துக்கும்.

தலைமுறைகள் திரும்பிப் போவதற்கான வாயில்கள். தங்கம்போல மெருகேற்றிய பித்தளைத் தாழ்ப்பாளிட்ட வாயில்கள்.

யுகங்கள் வழியாகத் திரும்பிப் போக வேண்டும். வருடமாகும்போது சிங்ஙம் (மாதப்பெயர்) ஒன்று. ரோமை அடையும்போது சிலுவையில் அறைபட்ட கிறிஸ்து.

பிறகு வருடங்களற்ற பயணம்.

எடுத்து முடிந்த அவதாரங்களை உணர்ந்தெழுந்து ஏற்கிறான்.. வராகம் கூர்மத்திற்கும். கூர்மம் மச்சத்திற்கும், மச்சம் மோட்சத்திற்கும் பின் வாங்குகின்றன. அழிவிலிருந்து வாழ்தல் வழியாகப் படைப்புக்கு. படைப்பும் அழிவும் ஒன்றாகும் வாழ்வு.

துஷ்டர்கள் இறந்து போகிறார்கள். அவர்களது பிணங்களைக் குள்ள நரிகள் நஞ்சுக்கொடியைப் போலக் கடித்துக் குதறுகின்றன.

நஞ்சுக் கொடிதான் மனிதனின் ஒரேயொரு பந்தம். ஒரு முத்தம் கொடுக்க முடிவதற்கு முன் நாய்கள் கடித்துப் பறித்துக்கொண்டு போன சகோதரன். அவனைத் தோட்டம் வழியாகப் பிடித்து இழுத்துக் கொண்டு போயின.

பிரசவித்தால் உடனே காராம்பசு நஞ்சுக்கொடியைத் தின்கிறது. இயற்கை அவளுக்குக் கர்ப்பப் பாதுகாப்புக்குக் கொடுத்திருக்கும் வெந்தயக் குழம்பு அது.

பூனை பசி பொறுக்க முடியாமல் குட்டிகளைத் தின்கிறது. எட்டுக்கால் பூச்சிக்குஞ்சுகள் அம்மாவை.

மனிதன் புத்திசாலியானதினால் திருடித் தின்கிறான்.

திருடித்தின்னும் தீயவர்கள் மடத்திராமனைப்போலுள்ள தீயவர்கள்.

சிவராத்திரியன்று மணல்புரத்தில் கண்டபோது பிடித்து நிறுத்தி மடியில் இருந்த இரண்டு ரூபாயை எடுத்துக்கொண்டு போனான். ஒரு டம்ளர் டீ குடிக்க இரண்டணாவாவது திருப்பித்தரச் சொல்லக் கேட்ட போது கையைப் பிடித்து விரித்தான். விரலையொடித்துப் போடத்தான் தொடங்கினான்.

அவனைக் கொல்லணும். கெட்டவர்களையெல்லாம் கொல்லணும். நல்லவர்கள் வாழ்கிறார்கள். வாழ்ந்த வாழ்க்கை போதுமென்னும் போது திரும்பிப் போகிறார்கள்.

தேவர்கள் வானத்திலிருந்து பூமிக்கு இறங்கி வருகிறார்கள். பிராணிகளுடன் இணை சேர்கிறார்கள். அதிலிருந்து நல்ல மனிதன் பிறக்கிறான்.

திருடாதவர்கள் - தட்டிப் பறிக்காதவர்கள்.

அப்படிப் பிறந்தவர்தான் ம்ருகாஸ்ப்தி மகரிஷி. அவர் தனது தபோவனத்தை அசுத்தப்படுத்திய மடத்திராமனென்ற அசுரனைச் சபித்து பஸ்மமாக்குகிறார். அந்தச் சாம்பல் விழுந்த மண்ணிலிருந்து கள்ளிச் செடியும், பூமுள்ளும், காரைச் செடியும், அரளியும், எட்டிமரமும் முளைக்கின்றன. முள்ளுள்ள செடிகள். கசப்பான இலைகள். விஷம் சொரியும் பழங்கள். பாம்பு சுவைத்த கொய்யாக்காய். பற்ற வைத்தால் எரியும் கள்ளிப்பால்.

கள்ளிப்பாலை எரியவிட, சுட்ட கோழியைப் பறக்கவைக்கும் மந்திர வாதம் வேணும். படுசூன்யம். மாந்திரீகம்.

கருப்புப் பூனையின் மண்டையோட்டை அவனது துளசி மாடத்தின் கீழே குழித்து மூடுகிறார்கள். பிறகு அவனை எட்டிப் பலகையில் அறைகிறார்கள்.

அப்போது அவன் அசைவதைக் கொஞ்சம் பார்க்கணும். கைதி.

பிறகு அவன் தெருவில் என் வேஷ்டியை அவிழ்த்து எறியமாட்டான்.

அப்புறம் எப்படி அவன் தன்னைக் கல்லால் அடிக்கிறான் என்பதைக் கொஞ்சம் பார்க்கணும். கைகள் எட்டிப் பலகையுடன் சேர்த்து அறையப்பட்டிருக்கின்றன.

அசைந்தால் வலி. நீல நிறமான இரத்தம் வழிகிறது.

துஷ்டர்களினுடைய இரத்தத்தின் நிறம் நீலம் அவர்களுடைய இதயத்தில், நரம்புகளில் ஓடுவது கெட்ட ரத்தம்.

கம்பின் நுனியில் இரண்டு நாய்களின் தலைகள்.

கம்பு பாம்பாகிறது. நாய்கள் வெறி நாய்களாகின்றன. வெறி நாயின் தலைகொண்ட பாம்பு. பேய் பிடித்த பாம்பு. அவனுடைய முகத்தில் கடித்தது.

மிளகாய் அரைத்த ஆட்டுக்கல்லைக் கழுவின நீரை என்னுடைய முகத்தில் விட்டதற்கான தண்டனை.

ஜஹாங்கீர் சக்ரவர்த்தி அவனைத் தண்டிக்கிறார்.

யாரானாலும் வேண்டாம். குற்றம் செய்தவர்கள் தண்டனைக் குரியவர்கள். மெஹருன்னிஸா பேகமானாலும் வேண்டாம். மடத்திராமனானாலும் வேண்டாம். தண்டனைக்குரியவன்.

மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டிலிருந்து கேஸை செஷன்ஸுக்கு அனுப்புகிறார்கள். செஷன்ஸில் தூக்கிலிட்டுக் கொல்லத் தீர்ப்பு. ஹைக் கோர்ட் அப்பீலைத் தள்ளிவிட்டது. கொலைச் சோறு. தூக்கிலிடுபவர். கழுமரம். பன்னிரண்டாம் எண் கயிறு.

பினாங்கியிருந்து திரும்பவும் தந்தி, தகனமாயிற்று. புறப்பட வேண்டாம்.

வேண்டாமென்று முன்னாலேயே சொல்லியாச்சே.

பிற நாட்டில் கிடந்து சாகணும். முக்தி கிடைக்காத மரணம்.

பித்ருக்கள் பிண்டத்தைக் கொத்த மறுக்கின்றன. திருட்டுக் காக்கைதான் கடைசியில் காய்ந்த சோற்றைக் கொத்துகிறது. திருட்டுக் காக்கைகள் அசுரர்களின் பித்ருக்கள். மனிதர்களின் பித்ருக்கள் காகங்கள். தேவர்களின் பித்ருக்கள் குயில்கள்.

மடத்திராமனின் பித்ருக்கள் திருட்டுக் காக்கைகள். அவன் அசுரன். தேவாசுர யுத்தம். தேவலோகத்திலிருந்து தந்தி. மடத்திராமன் உடனே புறப்படணும். அசுரகணத்துடன் சேர்ந்து யுத்தமிட. சம்மதம். பயங்கரப்போரில் அசுரகணம் தோற்கிறது. மகாவிஷ்ணுவின் சக்கரம் தேவர்களைக் காப்பாற்றுகிறது. ஆகாயத்திலிருந்து உடலின் பாகங்களை பூமியில் பதிக்கிறது. முண்டங்கள். இந்தத் தலை யாருடையது? கருப்பு மருவும் பூரான் மீசையும். மடத்திராமன். இந்தக் கை, கத்திக் குத்தின் அடையாளமுள்ள இம் மார்பு, வேனல்கட்டி நிறைந்த இந்த இடுப்பு யாருடையது? மயிரடர்ந்த இந்தக் காது யாருடையது?

மாதாவே, நீ ஏன் அழுகிறாய்? அசுரனைப் பெற்ற உன் வயிறு சாபம் நிறைந்தது. அசுரன் சப்புக்கொட்டிய உனது முலைக்காம்புகளும், அசுரனை முத்தமிட்ட உனது உதடுகளும், அசுரனைப் பார்த்து ரோமாஞ்சனம் அடைந்த உனது உடம்பும் சாபம் பூண்டவை. சாப விமோசனத்திற்காகப் பிரார்த்தனை செய். திரும்பிப் போவதற்கான வரத்திற்காக.

ராமா, நீ என்னைத் தடியாலடித்தாய். நீ என்னைத் திரண்டி மீனின் வாலால் அடித்தாய். நாய்த் தூவியின் பொடியை வாரி என் முகத்தில் தேய்த்தாய்.

நீ என்னைப் பட்டினி போட்டாய். தாகமெடுத்தபோது நீ என் வாயில் உப்பை வாரிப் போட்டாய். இந்துப்பு.

பைத்தியத்திற்கு மருந்து தாகமெடுக்கையில் இந்துப்பு.

இந்துப்பு மருந்தாகும். நீ யென் வாயில் அள்ளிப்போட்டது இந்துப்பு அல்ல வெடியுப்பு.

பிறகு கந்தகத்தைப் போட்டாய்.

வெடியுப்பும் கந்தகமும், காலையில் உமிக்கரியால் பல் தேய்க்கும்போது பட்டாஸ் வெடிக்க வேண்டும்.

வெடியுப்பும் கந்தகமும் உமிக்கரியும் சேர்ந்து அரைக்கும்போது வெடிமருந்து உண்டாகுமென்பதை நீ அறிந்திருந்தாய். துரோகி. அன்றைக்கு நான் பல் விளக்குவதை நிறுத்தினேன்.

கந்தகம், வெடியுப்பு இவற்றின் சுவை, வாயிலிருந்து இன்னும் நீங்கவில்லை.

நீ அம்மைத் தடுப்பு ஊசிக்காரன் மாதிரி வேஷமிட்டு என்னைத் தேடியலைந்தாய், இல்லையா? உனது புட்டியில், ஊசியில் அம்மைத் தடுப்பு அணுக்க‌ள் இருக்க‌வில்லை. நிஜ‌மான‌ அம்மை நோயின், க‌ரிஞ்ச‌ப்ப‌ட்டையின், உயிருள்ள‌ அணுக்க‌ள்.

நார‌த‌ முனிவ‌ன் குருநாத‌ராக‌ப் பிர‌த்ய‌ட்ச‌ய‌மாகி அவ் விஷ‌ய‌த்தை என‌க்குத் தெரிவித்தார். அன்றுதான் நான் என் இருப்பிட‌த்தை ஸ்ரீகோவிலுக்கு மாற்றினேன். துஷ்ட‌ர்க‌ளான‌ பிராம‌ண‌ர்க‌ள் என்னை வெளியே விர‌ட்டினார்க‌ள். ஆல‌ம‌ர‌த்த‌டியில் க‌ட்டிப் போட்டார்க‌ள். அஹோர்ம‌னைக்க‌ல் ப‌த்ம‌னாப‌னுக்கு ம‌த‌ம் பிடித்த‌போது க‌ட்டிப் போட்ட‌ ஆல‌ம‌ர‌த்த‌டி.

ம‌ழையும் வெய்யிலும் ப‌ட்ட‌போது என‌து உட‌ம்பில் பாசி பிடித்த‌து. உள்ள‌ங்காலைக் கரையான் தின்ற‌து. விர‌ல்க‌ளின் நுனியில் குருத்துக்க‌ள் உண்டாயின‌.என் ம‌யிர்க‌ள் வேர்களாயின‌. கைக‌ள் ம‌ர‌ உச்சிக‌ளாயின‌. புதிய‌ விர‌ல்க‌ள், புதிய‌ கிளைக‌ள் கிளைத்த‌ன‌.ப‌ச்சை நிற‌மான‌ இலைக‌ள் உண்டாயின‌.அவை ப‌ழுத்த‌போது ம‌ஞ்ச‌ள் நிற‌ம் ஏற்ற‌ன‌.வ‌ஸ‌ந்த‌த்தில் நான் பூத்தேன். வ‌ண்ண‌த்துப் பூச்சிக‌ள் ம‌க‌ர‌ந்த‌த்துட‌ன் வ‌ந்த‌போது என‌க்குக் குறுகுறுப்புண்டாயிற்று. த‌னியாக‌ப் ப‌ற‌ந்தேபோகும் குருவிக‌ள் உச்சிக‌ளில் வ‌ந்து அம‌ர்ந்து இளைப்பாறிய‌போது நான் நிறை வெய்தின‌வ‌னானேன்.

அங்கே சாப்பாட்டுக் கூட‌த்து வேலைக்கா‌ர‌னாகிய‌ இப் பிராம‌ண‌ன் அந்த‌ ம‌ர‌த்தை வெட்டிப் போட்டான். நீதான் முத‌லில் கோடாலியை வைத்தாய்.

கோடாலிக்குக் குஷ்ட‌மில்லை. குஷ்ட‌ரோகியை வெட்டிச் சுட்டாலும் கோடாலிக்குக் குஷ்ட‌மில்லை.

உமைய‌ம்மை ராணியின் எட்டுக்குழ‌ந்தைக‌ளை விளையாட்டுக் குள‌த்தில் மூழ்க‌டித்துக் கொன்ற‌து யார்?

ம‌ட‌த்திராம‌ன்.

ஆயில்ய‌ம் திருநாளுக்கு ஸ்ரீ ப‌த்ம‌னாப‌னின் நெய்பாய‌ச‌த்தில் விஷ‌ம் கொடுத்த‌து யார்?

ம‌ட‌த்திராம‌ன்.

வாழைப்ப‌ள்ளிக் குஞ்ச‌க்காவின் அறுநூறு குத்த‌கைப் பொருளைத் தான‌ம் வாங்கிப் ப‌ண‌ய‌ம் வைத்த‌து யார்? யாரு என்று கேட்டேன்.

குஞ்ச‌க்காதான் தான‌ம் கொடுத்தாள்.ஆனால் பொருள்க‌ள் அவ‌ளுடைய‌வை ய‌ல்ல‌. வேறு ஆண்க‌ளுடைய‌வை.

அகோர்ம‌னைக்க‌ல் பிராம‌ண‌ சொத்து.

ஆல‌ங்காட்டு சாமி சொத்து.

க‌ல்லில் எழுதி வைத்த‌ உயில்.

குஞ்ச‌க்காவின் ச‌ம்ப‌ந்த‌ம். குஞ்ச‌க்காவைச் ச‌ம்ப‌ந்த‌ம் செய்யலா‌மென்று சொல்லி அவ‌ளுடைய‌ அறுநூறு குத்த‌கைப் பொருளை தான‌ம் வாங்கிக் கை க‌ழுவிவிட்டுப் போன‌து யார்?

மடத்திராமன்.

பிராமணரை ஏமாற்றுவது பிரும்மஹத்தி. தேவர்களை ஏமாற்றுவது தேவஹத்தி. இவ்வுலக‌த்திலும் மேலுலகத்திலும் புண்யம் கிடைக்காது.

பாலச்சோட்டு ஜோஸ்யனின் கையில் பதினேழு குட்டிச் சாத்தான்கள் இருக்கின்றன. சாத்தான்கள் பதினேழாகும். பாலச்சோட்டு ஜோஸ்யன் கிட்ட விளையாடினால் அவன் சும்மா விடமாட்டான். அப்படிப்பட்ட பாலச்சோட்டு ஜோஸ்யனைக் கைக்குள் போட்டுக்கொண்டு நீ எனக்குப் பைத்தியம் பிடிக்க வைக்கப் பார்த்தாய் இல்லையா? சபரிமலைப் பிரசாதம் என்று சொல்லி கைவிஷம் கொடுத்தனுப்பினாய். நான் அதைத் தின்னத் தொடங்கியபோது தென்கிழக்கு மூலையிலிருந்து ஒரு கௌளி மூன்று தடவை முரலி ஒலித்தது.

கூடாது... விஷம்.... கூடாது.

நான் தின்னவில்லை.

அப்போது குட்டிச்சாத்தான்கள் வந்தன. பேரய்க்காப்பள்ளி குஞ்ஞன் உடனே சோற்றானைக்கரைக்குப் போய்க் கும்பிட்டான். தேவி பரிசுத்தமாய் அணிந்திருந்த செம்பருத்திப் பூக்களும் கூவள இலைகளும் கொண்டு திரும்பி வந்தான். சாத்தான்கள் திரும்பிப் போயின. பேரய்க்காப்பள்ளி குஞ்ஞனை ஒன்றும் செய்ய முடியாதெனத் தெரிவித்தன. பிறகு ஜோஸ்யன் மோகினிப் பிசாசுகளை ஏவிவிட்டான்.

சாத்தான்கள் உபத்திரவம் கொடுப்பது பக‌லென்றால், மோகினிப் பிசாசுகள் இரவில். பாலச்சோட்டு ஜோஸ்யன் மோகினிகளை வைப்பாட்டிகளாக வைத்திருக்கிறான். ஆணைக்குட்பட்டு. பனங்குலைபோலத் தலைமயிர் கொண்ட மோகினிகள் இரவில் பாதச் சலங்கையுடன் வருகின்றன. ஒன்றல்ல இரண்டல்ல, ஏராளம். கோயில் குளத்தில் திருவாதிரை நீராட்டல். கண்ணடிக்கின்றன. அழைத்துக்கொண்டு போகின்றன. ஒரு துண்டுப்புட‌வையுடன் ஆசாமி பின் தொடர்கிறான். எங்கே போய்ச் சேருகிறான்? அரண்மனை அந்தப்புரங்களுக்கு. யாருடைய அந்தப்புரங்களுக்கு? அக்பர் சக்ரவர்த்தியின் அந்தப்புரத்திலா? இல்லை பாலச்சோட்டு ஜோஸ்யனின் அந்தப்புரத்தில்.

அங்கே கீத கோவிந்தம். கட்டியணைக்கையில் தங்க அரைஞாணை அறுத்து எடுக்கும். முத்தமிடுகையில் நாக்கால் தங்கப்பல்லை நிமிண்டி எடுக்கும். பிறகு இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும். சக்கையாக்கிய பின் கண்ணைக் கட்டி அறுவடையான வயலில் கொண்டுபோடும். அங்கே முற்றத்தில் அவிழ்த்து விட்டதுபோல் வட்டமடித்துச் செத்து விழுகிறான்.

நீ பாலச்சோட்டு ஜோஸ்யனைக் கைக்குள் போட்டுக் கொண்ட தினத்தில் நான் தூக்கத்தை விட்டேன். அத‌ற்குப் பிறகு உறங்கவேயில்லை. இரவில் தூங்கக் கூடாது. கண்ணை மூடினால் தலை இருக்காது. இர‌வில் ஏமாற்று; எல்லாம் ஏமாற்று; வஞ்சனை.

மாறு வேஷத்தில் திரியும் மோகினிகள். பேய்கள். யானை மருதுகள். பால ப்ரேதங்கள்.

திருடன் போலீஸ்காரன் வேஷத்திலும், போலீஸ்காரன் திருடன் வேஷத்திலும்.

யார் யாரைத் திருடுகிறார்கள்?

அக் கூட்டத்தில் வனவாசம் செய்கிற பாண்டவர்கள் இருக்கிறார்கள். பீமன், கீசகனின் அரண்மனையில். அரக்கு மாளிகையில் எப்போது தீப்பிடிக்குமென்று தெரியாது. கோவிலும் அரக்கில்லம்தான்.

ஆனால் அரக்கு இல்லம் தீப்பிடித்தாலும் கடவுளுக்கு ஒன்றுமில்லை. பேரய்க்காப்பள்ளி குஞ்ஞனுக்கொன்றுமில்லை.

பூசாரி வருகிறார். பூசாரி போகிறார். கோவில் பணியாட்கள் இறந்து போகிறார்கள். மாலைகட்டும் பண்டாரங்கள் யாருமறியாமல் கிழவர்களாகி விடுகிறார்கள். செண்டையடிப்பவர்கள் இறந்து போகிறார்கள். முதல் பரம்பரை மாறுகிறது. மாதப்படி மாறுகிறது. பட்டாத்ரியின் சொத்துக்குச் சண்டை. குற்றிக்காடு கோயில் சொத்து யார்பேரில்? மகன் பேரிலா? மருமகன் பேரிலா? கேஸ் ஹைக்கோர்ட்டில், மாசி மாதத்தில் சிவராத்திரியன்று தீர்ப்பு.

கோயில் சொத்து யார் பேரிலுமல்ல--தெய்வத்தின் பேரில். தெய்வம் மாறுவதில்லை.

பேரய்க்காப்பள்ளி குஞ்ஞனும் மாறுவதில்லை. குற்றிக்காடு கோயில் சொத்து பேரய்க்காப்பள்ளி குஞ்ஞனுக்குத் தூய சொத்து.

ஆனால் குஞ்ஞன் தூங்கக்கூடாது. கண்ணைச் சிமிட்டக்கூடாது.

கோழிரத்தம் குடிக்கப் பிசாசுகள் தேயிலைச் செடிகளுக்கிடையில் பதுங்கியிருக்கின்றன.

பிசாசுகளுக்கும் பாம்புகளுக்கும் வேண்டியது கோழி ரத்தம்தான்.

நாக பூஜையை நிறுத்தாமல் செய்யவேண்டும். ஓய்வு நாட்களில் உத்யோகஸ்தர்கள் பாம்புகளைத் தவிர, தேள், பூரான் இவைகளையும் ஆராதனை செய்ய வேண்டும். மோகினிகளிலிருந்தும் பிசாசுகளிலிருந்தும் காத்துக்கொள்ள நாக பூஜை. பாம்புகளுக்குக் கோழிரத்தம் கொடுக்க வேண்டும். பூவன்கோழி, குளக்கோழி, காட்டுக்கோழி, காலங்கோழி, கடல்கோழி, பெட்டைக்கோழி, காடை என்ற இவ்வகைக் கோழிகளின் இரத்தம். எல்லா ஸர்ப்பங்களையும் ஆராதிக்க வேண்டும். அனந்தன், தக் ஷகன், வாசுகி, எட்டடிமூக்கன், வெம்பாலை, சேரை, நீர்கோலி, செவிப்பாம்பு, வெற்றிலைப்பாம்பு, பாக்குப்பாம்பு, புகையிலைப்பாம்பு--

பாம்புகளின் தெய்வம் பாம்பும் மெய்க்காட்டு மனைக்கல் திருமேனி. 'பாம்பும் மெய்க்காட்டுமனைக்கல்'லிலிருந்து இரண்டு பாம்புகளை ஒரு சீசாவிலிட்டு வாரிக்காட்டு ஸர்ப்பக்கூட்டிலுள்ள ஒரு புற்றில் பிரதிஷ்டை செய்கிறான். பால் கொடுத்துப் பூஜை செய்கிறான்.பசுவின் பால், எருமைப்பால்,ஆட்டுப்பால், கோழிப்பால், புலிப்பால், கள்ளிப் பால், ரப்பர்ப்பால்,முலைப்பால், பால்பொடி என்ற இப்பால்களைப் போதும் என்கிற வரை கொடுக்கவேண்டும். "பாம்புக்குப் பால் வார்த்தால் பாய்ந்து வந்து கடித்திடும்"

மடத்திராமனை.

கோழி ரத்தம் குடித்து வெறிபிடித்த வெற்றிலைப்பாம்புகள் மோகினிகளைக் கொத்துகின்றன.

ஆலிலைக் கிருஷ்ணா, வெற்றிலைப் பாம்புகளிடமிருந்து நீயென்னைக் காப்பாற்று.

எல்லாவற்றிற்கும் காரணம் மடத்திராமனென்ற அசுரன் பாலச் சோட்டு ஜோஸ்யனைக் கைக்குள் போட்டுக்கொண்டதுதான்..

மாமிச உணவு இயற்கையின் நியதி. கரையானைக் கோழி தின்கிறது. கோழியைக் குள்ளநரி தின்கிறது. குள்ளநரியை மனிதன் தின்கிறான். மனிதன் மனிதனைத் தின்கிறான். அவனைச் சிங்கம் தின்கிறது. சிங்கத்தைக் கழுகு தின்கிறது. கழுகை எறும்பு தின்கிறது. எறும்பை ஆஸ்திரேலியாவில் ஒரு பிராணி தின்கிறது. அந்தப் பிராணியைக் கரையான் தின்கிறது. கரையானைக் கோழி தின்கிறது.

மனிதன் மீன் தின்கிறான். மீன் மனிதனைத் தின்கிறது.

அது சரியில்லை. சுயநிறைவு அடையணும். நாம் மற்றொரு ஜீவனின் இறைச்சியைத் தின்னக்கூடாது. சொந்த மாமிசம் மட்டுமே புசிக்கணும்.

பாம்புகள் பசியெடுக்கும்போது வாலை விழுங்கணும். யானை தும்பிக் கையைத் தின்னணும். நெல்லின் உரம் கதிர்.

சுய நினைவற்ற மடத்திராமன் தண்டனைக்குரியவனே.

இங்கிலாந்திலிருந்து தந்தி. சீமைத்தந்தி. பேரய்க்காப்பள்ளி குஞ்ஞனுடன் புறப்படணும் இங்கிலாந்துக்கு. ஆறாம் ஜார்ஜின் நீதி மன்றத்தை அடையணும். பேரய்க்காப்பள்ளி குஞ்ஞனுக்கு அந்தப் புரத்தில் துவாரபாலகனின் வேலை. இன்று முதல் இங்கிலாந்தில்.

ஆனால் குஞ்ஞன் அரண்மனையில் சாப்பிடமாட்டான். ஜாரஜ் ஆறாமவன் கிறிஸ்தவன். அது மட்டும் வேண்டாம்.

ஒருநாள் குஞ்ஞன் ஜார்ஜாறாமவனிடம் சொல்கிறான்: "கொடை வள்ளலான பொன்னரசே, குன்னத்து நாடு தாலுக்கா, ராயமங்கலம் பகுதி, புல்வழிக் கரையில் மடத்தி வீட்டில் வேலுப்பிள்ளை ராமன் நாயரால் மிகவும் தொந்திரவாயிருந்தது. இந்த ராமன் மனிதரையும் மிருகங்களையும் கொன்று தின்னுகிறான். கப்பம் வாங்குகிறான்.

ஆறாம் ஜார்ஜுக்குக் கோபம் வருகிறது.

"ஹாய், என் ராஜ்யத்தில் வேறொரு ராஜாவா?" உடனே கட்டளை பிறந்தது.

”பேரய்க்காப்பள்ளி குஞ்ஞன் போய் மடத்திராமனைப் பிடித்துக்கட்டி ஆஜராக்கட்டும்.”

இரண்டு வாரண்டு சிப்பாய்களையும் ஓரு அமீனாவையும் அழைத்துக் கொண்டுவந்து நான் ராமனை விலங்கிட்டு நடத்திக்கொண்டு போகிறேன். ஆறாம் ஜார்ஜின் நீதி மன்றத்தில் ஆஜராக்குகிறேன்.

ஆறாம் ஜார்ஜின் நியாய‌மன்றம்.

இருப்பவர்கள் ஆறாம் ஜர்ஜ், விக்டோரியா மகாராணி, ஸ்ரீசித்திரைத் திருநாள் பாலராமவர்மா மகாராஜா, அகோர்மனைக்கல் மகன் விஷ்னு நம்பூதிரிப்பாட், அரண்மனை வைத்தியன் தன்வந்தரி மூஸ்ஸது. ராமன் பிரதிவாதிக்கூண்டில். குஞ்ஞன் குற்றப்பத்திரம் வாசிக்கிறான். விசாரணை தொடங்கிற்று.

ஆறாம் ஜார்ஜ் கேட்கிறார்.

"மடத்தில் ராமன் அல்லது மடத்தில் வீட்டு ராமன் நாயர்."

"ஆஜர்......"

"...ஸ்டாண்டு, ஸிட்...ஸ்டாண்டு.. ஸிட்.."

"ஏற்ற இறக்கம். பொருளென்ன மடத்திராமன்?"

பேச்சில்லை.

"ஜியாக்ரஃபி. அர்த்தமென்ன?"

மீண்டும் மௌனம்.

"தெரியாது. முட்டாள் ஒன்றும் படிக்காமல் வந்திருக்கிறான்."

"செள்ளுப் பூச்சிகள் எப்படி உண்டகின்றன? ராமன் சொல்லட்டும்."

"பெரிய செள்ளுகள் சிறிய செள்ளுகளைப் பெறுகின்றன."

"தப்பு. குஞ்ஞ‌ன் சொல்லிக்கொடு."

"சாணகப் புழுவுக்குச் சிறகு முளைக்கும்போது செள்ளாகிறது."

"கரெக்ட். ஈசல் எப்படி உண்டாகிறது?"

"வெளிச்சத்தைப் பார்க்கும்போது உண்டாகிறது."

"தப்பு. குஞ்ஞ‌ன் சொல்?"

"கரையானுக்குச் சிறகு முளைக்கையில் ஈசலாகிறது."

"மின்மினிப் பூச்சி எப்படி உண்டாகிறது? ராமனே சொல்லட்டும் இந்தத் தடவை."

"செவிப் பாம்புக்குச் சிறகு முளைக்கும்போது மின்மினிப் பூச்சி யாகிறது."

"ஒட்டுணிச் செடி தின்று வாழும் பிராணிகள் எவை?"

"ஒட்டுணிப் பன்றி."

"இருபத்தேழு அரசாங்க ரூபாய்க்கு எத்தனை பிரிட்டிஷ் ரூபாய்?"

"இருபத்தெட்டு."

"தப்பு. இருபத்தெட்டு அரசாங்க ரூபாய்க்கு இருபத்தேழு பிரிட்டீஷ் ரூபாய். சரி, நீ போகலாம்."

தீர்ப்பு மறுநாளைக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

மறுநாள் தீர்ப்பு அளி்கப்பட்டது. மடத்திராமனைத் தூக்கிலிட்டுக் கொல்ல. வேலுத்தம்பியைத் தூக்கிலிட்டதுபோல. சந்தை முனையில் பகிரங்கமாகத் தூக்கிலிட. அன்று மத்யானம் மடத்திராமன் கொலைச் சோறு உண்டான். அடைப்பிரதமன் சேர்த்து.

தூக்கிலிடும் கொலையாளிகள் குளித்துக் கும்பிட்டு வந்தார்கள். பாலச்சோட்டு ஜோஸ்யனை அழைத்து ப்ரச்னம் வைத்து நேரம் நிச்சயித்தனர். மந்திரவாதிக்கு நேரம் கிடைக்கணும். பிசாசாக மாறக் கூடாது. அகால மரணமில்லையா?

யார் அது? குஞ்ஞன் இங்கில்லையென்று சொல்லு போ. இங்கிலாந்துக்குப்போயிருக்கான்.

பிசாசை ஆணியால் அறையணும். எட்டிப்பலகையில் சலித்தமாவு இரண்டாழாக்கு, தலைமட்டம் தட்டிமூன்றுபடி.......

இன்னும் என்ன தயங்கித் தயங்கி நிற்கிறாய்? குஞ்ஞன் இங்கில்லையென்று சொல்லவில்லையா?

ஙே....யாரு?

ஆஹா...நீயா?.

ந்தா, என்னோடு விளையாடாதே. நான் சொல்றேன்.

ஐயோ விரலை வளைக்காதே.ஒடிஞ்சு போகும். வேஷ்டி தரேன். வளைக்காதே ராமா....... இதோ இந்த மடியிலிருக்கு ரெண்டுரூபாய் நாலணா. காசை எடுத்துக்கோ. வேஷ்டியைக் கொண்டு போகாதே. எனக்கு உடுத்த வேறெதுவுமில்லை. ராமா, என்னை இந்த நிலைமைக் காளாக்கிவிட்டியே. ராமா, அந்த வேஷ்டியை இங்கே போட்டுட்டுப் போ....

ஐயோ.... ராமா....

என்......

எங்கே ஆறாம் ஜார்ஜ்?

-----------------------

11. கன்னிகையின் எலும்பு


ஆகாயத்தைத் தலையிலும், சூர்யனைக் கிழக்குத் தோளிலும் சுமக்கும் கிழட்டுப் பாதையோர மாமரம். இலைகளிலும், நரைத்துப் போன கிளைகளிலும் ஊர்ந்து இறங்கி இற்று விழும் ஒளிக்கதிர்கள், குறுந்தெருவின் சரளைக்கல் முத்துக்களில் கட்டி நின்ற இடவப்பாதியின் சிறுகடல்களில் நீண்ட குண்டூசிகளைக் குத்தி நிறுத்தின.

கிராமத்தின் கண்களை, அயல் வீட்டு அம்புகளை அவன் பயந்தான். கன்னிகையிருந்த வீட்டின் படியில் கால் இடறியது. அடுக்களை முற்றங்களிலும், கோழிகள் மேலும், வாழைகள் மேலும், சூர்ய வெளிச்சம். மனிதர்கள் மேலும். கண்கள் இந்தப் பக்கம் திரும்பாத முகங்களாக இருந்ததினால் அவனுக்கு அவர்கள் மேல் நட்புத் தோன்றியது.

குதிகால்களில் வேகத்தின் விதைகள் முளைத்தன. முற்றத்திலி சரசரக்கக் காத்துக்கிடக்கும் மணற்புரப்புக்கள். அடைத்த வாசல்களுடன் முகப்பு காது மடல்களைப் பொத்திப் பிடித்துக்கொண்டு நடந்தான். அவளுடைய படிப்பறை. கதவின் ஒரு பாதிமட்டும் நல் வரவு கூறுகிறது. அடுக்களையிலிருந்து எழும் ஒலிகளுக்காகக் காதுகளை அங்கே பதித்து அவன் உள்ளே கால் வைத்தான். சுவற்றில் காலேஜ் க்ரூப் ஃபோட்டோவின் ஒரு மூலையில் நின்று அவள் புன்சிரித்தாள்.

வாடி நிறம் மங்கிய பிச்சிப்பூ மொசட்டுகள். கிராமத்துப் படிப்பகத்தின் புத்தகங்களுக்கு மேலே திறந்து வைத்த கண் மைக்கூண்டு. சாந்தின் உலர்ந்த சிவந்த துளிகள் அவளுடைய சாம்ராஜ்யம். கொடியில் ஸில்க் ஜார்ஜெட் ஸாரிகள். அவளுடைய இனிமையான மூச்சுக்களும், மணமிக்க கனவுகளும் மயங்கும் அந்த அந்தரங்க உலகத்தில், அவளில்லாத போது அவளுடைய உடல். அதனுடைய பல்வண்ண சுகந்தம் வாயுவில் பூக்கிறது.

அவன் கதவுகள் வெளியே சாய்ந்திருந்த ஜன்னலுக்கு எதிராக நடந்தான். சட்டென்று அற்புதப்பறவை அவன் கண்ணில் கொத்திற்று. திறந்த கண்களில் அவள். ஜன்னல் கம்பிக்கு அந்தப்புறம் வெறும் தரையில், வராந்தாவில். பிரித்துப் போட்ட மயிர். அதைச் சீவாத சீப்பு கையில்.வெளிறிய முகம். சோகத்தின் வித்துக்களும் வெறிச்சிட்ட பார்வையும் கொண்ட கண்கள். காலேஜ் ஃபோட்டோவின் லோ வெயிஸ்ட் ஸாரியுடுத்த பெண்ணைக் காணவில்லை. முண்டு உடுத்து, மேல்முண்டு இல்லாமல், பிளவுஸ் மட்டுமணிந்த வெறும்பெண் சிமின்ட் தரையில் அமர்ந்திருக்கிறாள்.

சீப்பை மடியில் வைத்தாள். நீளம் குறைந்த சுருண்ட மயிரை இரு கைகளாலும் அள்ளி ஒரு சிறு வாழைக் கூம்பாக்கினாள். துக்கத்தின் பெரியதோர் கட்டையைக் கரைத்து விழுங்கியதைப் போல உதடுகளில் நாவை ஒட்டினாள். எழுந்து நின்று வேஷ்டியைத் தட்டியுதறி கீழுதட்டைக் கடித்துக்கொண்டாள். முகத்தைத் திருப்பிய அவள் பட்டென்று அலமர்ந்து அக் காட்சியைக் கண்டாள்.

கதவோடு சேர்ந்து முகம் மட்டும் நீண்டு வந்தது. கண்களின் வேதனை வித்துக்கள், நாணத்தின் விதைகளாக உதிர்ந்து விழுகின்றன.

"நான் பயந்துபோனேன்! எப்படி இதுக்கு உள்ள வந்தீங்க?"

அவளுடைய முகம் மட்டுமல்ல, உடம்பும் வந்தது, சிரிப்பும் வந்தது.

"ஏன் வாசலைச் சாத்தி வெளியே நிற்கிறே?"

அவன் கேட்டான்.

உடம்பிலிருந்து அவளுடைய முகம் போயிற்று. வார்த்தைகள் ஜன்னல் கம்பிகளில் தங்கின. " எனக்கு உடம்பு சரியில்லை."

"என்ன உடம்பு?"

மீதி உடம்பும் மறைவிற்குள் போயிற்று. வார்த்தைகளென்ற பதிலுமில்லை. வராந்தாவின் திறந்தவெளிக்குப் பின்னால் முற்றத்தின் ஓரத்தில் சிவந்த வாழைகளின் கூட்டம். குலைதள்ளத் தொடங்கியிருந்த ஒரு வாழை வராந்தாவுக்கு நேரே இலைகளைச் சாய்த்து நின்றது. கீழே நிலத்தில் செம்பருத்தி. கிளைகளில் சிவப்பு பூத்த அரளிமரம். கிளைகளில் சிவப்பு தூக்கிய, காய்த்த சாம்ப மரம். அந்த இளம் சிவப்பின் பிரளயப் பிரதேசத்தைப் பார்த்து நின்ற அவன் கேட்டான்: "அம்மா எங்கே?"

முதலில் விரல்கள் நீண்டு வந்து ஜன்னல் கம்பிகளைப் பிடித்தன. ஒரு கை. பாதித்தலைமயிர். ஒரு கண். அரை மூக்கு. பாதியுதடு. ஒரு சிறிய மார்பு. அப்படி அவள். சிவப்பின் விளிம்புள்ள சிரிப்பும்.

"அம்மா, அக்கா வீட்டுக்குப் போனாள்." அவள் சொன்னாள்.

அவன் பேசவில்லை. அவள் காத்திருந்தாள்: பிறகு அரளிக் கொப்பினுடைய ஒரு பூங்குலையாக முகத்தை மாற்றி வைத்துக்கொண்டு ஜன்னல் கம்பிகளில் பதித்தாள். உதட்டுச் சிரிப்புக்கு இணையாக கண்களிலிருந்த சிரிப்பிழைகள் பாவு வேய்ந்துவருகின்றன.

"சொல்லு, தாஸண்ணா."

"என்ன?"

"விசேஷங்க‌ள்."

மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் என்கிற‌ வால் கொண்ட‌ நாற்காலி கிடைத்து ந‌க‌ர‌த்திற்குப் போகிற‌ கிராம‌த்துப் பெண். ஃபைல்க‌ளின் ச‌வ‌ப்பெட்டியிலிருந்து த‌லையைத் தூக்கி வர‌‌ண்ட‌ உத‌டுக‌ளோடு அன்பைத் தெரிவிக்‌க‌த் தெருவோர‌த்தில் காத்து நிற்கும் உனது அந்தி நேர‌ம். வ‌னிதா ச‌த‌ன‌த்தின் வாச‌ல்வ‌ரை புள‌காங்கித‌ம் சும‌க்கும் ந‌ம‌து ச‌ந்தியா கால‌ம். வாட‌கைய‌றையில் க‌ன‌வின் எலும்பைப் பொறுக்கி இர‌வைப் புகைக்கும் என‌து வேளைக‌ள்.

பிற‌கு ஒரு முகூர்த்த‌ம்.

ந‌க‌ர‌ எல்லையில் இடுங்கிய‌ இரு அறைக‌ளைக் கொண்ட‌ அசுத்த‌மான‌ வாச‌ஸ்த‌ல‌ம். இருட்டில், வெப்ப‌மெனும் பித்த‌ளைப் பாத்திர‌த்தில் வ‌றுத்து, பாட்டுப் பாடும், வாட்க‌ளால் வெட்டிக்கொல்லும் கொசுக்க‌ள். ஆனாலும், விய‌ர்வையொழுகும் மார்பின் இனிய‌ நிர்வாண‌த்தில். உத‌டுக‌ளில் இனிக்கும் தீயில், சுவாச‌த்தின் இனிய‌ நாத‌த்தில், ஒரு க‌ட்டிலின் நீள‌ அக‌ல‌த்தில் நாம் நிர்மாணிக்கும் புள‌க‌ங்க‌ளின், முத்த‌ப் பூக்க‌ளின் ல‌ஹ‌ரிப் பிர‌ப‌ஞ்ச‌த்தில்-

"க‌ன‌வுக‌ளும் விசேஷ‌ங்க‌ளும் சொன்னால் தீருமா?" அவ‌ன் கேட்டான்.

"ம்ஹும்!" அவ‌ள‌து மூக்கிற்குக் கீழே அற்புத‌ப்ப‌ற‌வை வ‌ந்த‌ம‌ர்ந்து உத‌ட்டை வ‌ளைத்த‌து. "என‌க்கு எழுதியிருக்க‌லாமில்லையா?"

ஒரு வாடிய‌ பூவாக‌ அவ‌ள் ச‌ற்றுச் சிரித்தாள்.

"ச‌த்ய‌ம். வீட்டிலிருந்து போர் அடிச்சு‌து. அன்றைக்குச் சொன்ன‌ வேலை கிடைக்குமா? கொஞ்ச‌ம் சொல்லேன்."

சிறு குழ‌ந்தையின் முக‌மும் நாவில் வார்த்தைக‌ளுமாக‌ அவ‌ள் உற்று நோக்குகிறாள்.

"உன‌க்கொரு நாற்காலி கிடைக்கும் பெண்ணே."

அவ‌ள் சிறு குழ‌ந்தை போல‌ முக‌ம் ம‌ல‌ர‌வில்லை. அவ‌ளுக்குத் துக்க‌ம‌டையும் ப‌ருவ‌மாயிற்று.

சாம்ப‌ ம‌ர‌த்திலிருந்து சிவ‌ந்த‌ வாழையிலைமேல் ஒரு அணில் தாவிய‌து. குலை தள்ளவிருந்த‌ வாழையின் மொட்டில் அது வ‌ந்து அ‌ம‌ர்ந்த‌து. தானே உருவாக்கின‌ கூட்டிலிருக்கும் ம‌கிழ்ச்சியோடு அணில் குந்தியிருந்து வாலை விறைத்த‌து. அவ‌ன் சொன்னான்: "இதோ பாரு, ஒரு அணில் வாழைமேல் அம‌ர்ந்து க‌ன‌வு காண்கிற‌து."

அணிலைப் பார்க்காம‌லே அவ‌ள் சொன்னாள்: "பார்த்தேன். அதுக்கு என்கிட்டே ப‌ய‌மில்லை. என்மேல‌ தாவியேறும்."

"உன் இத‌ய‌ம் நிறைய‌ அன்பாயிருக்கும். அதுதான் அணிலுக்கு அத்த‌னை சிநேக‌ம்."

வாழைமேலிருந்து அணில் முற்ற‌த்தில் குதித்த‌து. அடுத்த‌ தாவ‌லுக்கு சிமென்ட் த‌ரையை அடைந்த‌து. முழ‌ங்கை தாங்கி அம‌ர்ந்திருக்கும் அவளது மடிவழியாகக் குதித்துத் தாவித் தூரச் சென்ற‌மர்ந்தது. முதுகில் மூன்று கோடுகள் கொண்ட சிறு ஜீவன். பளபளக்கும் கண்களால் அவளைப் பார்த்து, ச்சில்.. ச்சில்...என்று பாடியது. அவள் சிரித்தாள். அவன் சிரித்தான். அவர்கள் சிரித்தார்கள்.

"என் இத‌ய‌ம் இந்த‌ அணில்."

அவன் சிரிப்பை மாய்த்தான்.

உயர்த்தி வைத்த கால் முட்டுகளில் மேவாயைத் தாங்கி விழிகளைத் தாழ்த்தி அவளும் அதை மாய்த்தாள்.

அணில் முற்றத்தில் குதித்துத்தாவி சிவப்பு வாழையில் ஏறி மறைந்தது.

"எனக்கு வேதனை உண்டாகிற‌து" அவள் சொன்னாள்.

"எதுக்கு வருத்தப்படறே?"

"தாஸண்ணனுக்கு ஒரு டீ போட்டுத் தர முடியல்லியே"

"நான் வேட்கை மிக்க விருந்தாளி. எனக்கு டீ வேணும். உன்னுடைய டீயை தினமும் குடிப்பது பொன்னான ஒரு கனவல்லவா?"

அவள் தலை குனிந்தாள்.

அவன் வார்த்தைகளின் கொடியை அறுத்துவிடாமல் படர்த்தி ஏற்றி அவளைத் திக்குமுக்காடச் செய்தான்.

"அம்மா இல்லை, யாருமில்லை. ஆளற்று மயங்கிக்கிடக்கும் வீடு. நீ மனைவி, நான் க‌ண‌வ‌ன். அம்மா வ‌ர்ற‌து வ‌ரை நாம‌ இங்கே வ‌சிக்க‌லாம்."

அவ‌ள் க‌ண்ணிமைக‌ள் விரிந்த‌ன‌. அவ‌ன் நிறுத்தாம‌ல் சொன்னான்: "கொஞ்ச‌ நேர‌மாவ‌து ஒரு வீட்டில் பொண்டாட்டியும் புருஷ‌னுமாக‌ வாழ்ந்து, வாழ்க்கையின் ஒரு துணுக்கையாவ‌து அடைய‌லாம்."

ஒரு நீண்ட‌ பெருமூச்சை விட்ட‌ போதிலும் அவ‌ள் சிரித்தாள்.

"ஏய் பெண்டாட்டிப் பெண்ணே, என‌க்கு உன‌து தித்திக்கும் டீ"

"டீயில்லை புருஷ‌னே, என‌க்கு உட‌ம்பு ச‌ரியில்லை."

"இப்ப‌ என்ன‌ செய்யிற‌து?"

"புருஷ‌ன் சொல்ல‌னும்."

அனுச‌ர‌ணையான் க‌ண‌வ‌ன் அடுக்க‌ளையை அடைந்தான். முற்ற‌த்தைச் சுற்றிக்கொண்டு ம‌னைவியும் வ‌ந்தாள்.

தீ செத்துக்கிட‌க்கும் அடுப்பிற்குள் விற‌கை வாரித் திணித்துக்கொண்டு க‌ண‌வ‌ன் ஆராய்ந்தான்: "ஆர‌ம்பிக்க‌ட்டுமா?"

மேவாயை ஆட்டி ம‌னைவி அனும‌தி த‌ந்தாள்.

தீப்பெட்டி விற‌கிற்க‌ளித்த‌ ஜ்வாலைக்குக் கீரிட‌ம் உண்டான‌தும் க‌ண‌வ‌ன் சிறிய‌ செம்பைக் கையிலெடுத்துக்கொண்டு கேட்டான்."எங்கே த‌ண்ணீர்?"

மூடியிருந்த‌ ஒரு பெரிய‌ பாத்திர‌த்தை ம‌னைவி சுட்டிக் காட்டினாள். பாத்திர‌த்தின் மூடியைத் திற‌ந்து பார்த்து புருஷ‌ன் ஏமாற்ற‌ ம‌‌டைந்தான்.

"தண்ணியில்லை."

"ச்சோ! அம்மா தண்ணியெடுத்து வைக்கலை. இப்பொ என்ன செய்யிறது?" பெண்டாட்டி ப‌ரிதவித்தாள். "நான் கிணற்றிலிருந்து இறைக்கவும் கூடாது."

"நானும் நீயும் இநதக் காலி வீடும்! நான் உன்டாக்கிற டீயைக் குடிக்க உனக்கு தாகமெடுக்கிறது இல்லையா?"

கிண‌ற்றைப் பார்த்து ந‌க‌ர்ந்த‌ க‌ண‌வ‌னின் கால‌டிக‌ள் ப‌தியும் சேற்றிலேயே ம‌னைவி கால் வைத்து அதை அழித்து ந‌ட‌ந்தாள். வாளியைக் கீழே அவிழ்த்து விட்ட‌போது ம‌னைவி ப‌ர‌ப‌ர‌ப்ப‌டைந்தாள்.

"ச‌த்த‌ம் போடாதீங்க‌! ப‌க்க‌த்து வீட்டுக்கார‌ங்க‌..."

க‌ண‌வ‌ன், ராட்டின‌ம் ச‌த்த‌ம் போடாம‌ல் ஒரு வாளி நீரை மெல்ல இழுத்தான்.

அடுப்பில் நீரும் ப‌ற்றியெரியும் தீயுமான‌போது புருஷ‌ன் திரும்பி வாச‌லுக்கு வெளியே நிற்கும் ம‌னைவியைப் பார்த்து:

"எங்கே தேயிலைத் தூள்?"

"அதோ அது!"

"எது?"

"சிவ‌ப்பு டின்"

"இதுவா?"

"அந்த‌ச் சிவ‌ப்பில்லை."

"பின்னே?"

"ம‌ஞ்ச‌ளுக்குப் ப‌க்கத்திலிருக்கிற‌ சிவ‌ப்பு--"

ம‌னைவிக்குக் கோப‌ம் வ‌ந்த‌து.

முற்ற‌த்திலிருந்து நீள‌மான‌ ஒரு சுள்ளிக் க‌ம்‌பைக் கையிலெடுத்து உள்ளே நீட்டினாள்.

"நான் தொட்டுக் காட்ட‌றேன்."

தேயிலைப் பொடியில் இர‌ண்டாவ‌து முறையும் ஸ்பூனை விட்ட‌போது பின்னாலிருந்து க‌ண‌வ‌னின் முதுகில் ம‌னைவி த‌ட்டினாள்.

"ஸ்...ஸ் போதும்-"

ச‌ர்க்க‌ரை போடும்போது க‌ண‌வ‌ன் ம‌னைவியைப் பார்த்தான்.

"எம் புருஷ‌னுக்கு விய‌ர்த்துப் போச்சு."

ம‌னைவி அனுதாப‌ம் தெரிவித்தாள்.

க‌டைசியில் தேயிலை.

ஒரு விழுங்கு குடித்துக்கொண்டு ம‌னைவி முணுமுணுத்தாள்: "தாங்ஸ். ந‌ல்ல‌ டீ."

"ஒன் நாக்குக்கு ந‌ன்றி."

தேயிலை குடித்து முடியும் முன்பே ம‌னைவி முன்ன‌றிவிப்புச் செய்தாள்: "ரெண்டு ட‌ம்ள‌ரையும் நான் க‌ழுவித்த‌ரேன்."

பால் காலியான பாத்திரத்தைப் பத்திரமாக அடைத்து வைத்து, அடுப்பில் தீயை அணைத்து, அடுக்களையைப் பழைய போலாக்கி, கணவனும் மனைவியும் வெவ்வேறு பக்கமாக நடந்தார்கள்.

ப‌டிப்பறை. ஜன்னல். கம்பிகளுக்குளே. வெளியே, அவன், அவள்.

பழுத்த சாம்பக்காயைக் கொத்தி வயிறு புடைத்த குருவிகள் சல சலத்தன. அரளி வேரின் அருகில் நிர்மாணித்த புதிய அரண்மனையை நோக்கிப் பயணம் செய்யும் சிதலெறும்புகள் பாடின. மரக்கிளையில் சிறகை ஒடுக்கியிருந்த குயிலும் வயனப் பூமணம் சுமக்கும் காற்றும் பாடின.

மரச் சட்டங்களிலிருந்து நீக்கிப் பதித்த ஒரு வலது கை, அவனுடைய உள்ளங்கையில் நீளக் கிடந்தது. உருண்டு நீண்ட எலும்புகளில், சிவப்பானதும் வெண்மையானதுமான தோல் மூடி உண்டாக்கிய விரல்கள் அவனுக்கு இதழ்களாயின. ஐந்து இதழ்களுள்ள பூவை அவன் வருடினான். அதைப் பிடித்தெடுத்து ஷர்ட்டினுள்ளே நெஞ்சில் வைத்து அவன் மூச்சையடக்கிப் பிடித்தான்.

சிவ‌ப்புப் ப‌ட்டில் பொதிந்த‌ வ‌ளைவான‌ வாட்க‌ளின் வெள்ளிக் கூர்மைக‌ளை மினுக்கிக்கொண்டு அவ‌ள் நாணினாள்.

"த்சு! என்னைத் தொட‌க்கூடாது."

அப்புற‌மும் வில‌க்கிக் கொள்ளாத‌ கையும் ஜ‌ன்ன‌ல் நிலையில் அழுத்திய உட‌ம்புமாக‌ அவ‌ள் வ‌ராந்தாவில்.

அவ‌ளுடைய‌ க‌ன்ன‌ங்க‌ளில் சிவ‌ப்பு மை ப‌ட‌ர்ந்த‌து. நாசித் துவார‌ங்க‌ள் வட்ட‌மாக‌ விரிந்த‌ன‌. மேலுத‌ட்டில் ரோம‌ங்க‌ளுக்குக் க‌ருப்பு வ‌ள‌ர்ந்த‌து.

வாயுவின் நீள‌ம் குறைந்த பால‌ம் க‌ட்டி நிறுத்திய‌ உத‌டுக‌ள். இருந்த‌ போதிலும் அவ‌னுக்கு ஒரு வாழ்க்கையின் முத்துக் கிடைத்த‌து. ஒரு ஆத்மாவின் த‌ங்க‌ம் கிடைத்த‌து. ஒரு பெண்ணின் ர‌‌த்தின‌ம்‌ கிடைத்த‌து....

நிமிட‌ங்க‌ளின் ப‌ற்ச‌க்க‌ர‌ங்க‌ளும் ந‌க‌ர்ந்து போயின‌. அவ‌ள் க‌ண் நிறைந்த‌து. அவ‌னுடைய‌ க‌ண்ணீர் க‌ன்ன‌த்தில் வ‌ழிந்த‌து. அவ‌ள் அறைக்கு உள்ளேயா, வெளியிலா?

தோட்ட‌தில் இருளின் மூலையிலெங்கோ ப‌துங்கியிருந்த ஆந்தை மூளிய‌து. திரும்ப‌வும் நீள‌மாக‌க் குர‌ல் கொடுத்த‌போது அவ‌னுடைய‌ செவிக‌ள் அம்புக‌ளைத் தேடின‌. அவ‌ளுடைய‌ க‌ண்க‌ள் பீதியைத் தின்ற‌ன‌.

முன்ப‌க்க‌த்திற்கு ஓடிய‌ வேக‌ம் ம‌ற‌க்காம‌ல் அவ‌ள் திரும்பி வ‌ந்தாள். "அம்மாவும், அக்காவும், அக்காவோட‌ புருஷ‌னும், இன்னும் யாரெல்லாமோ வ‌ராங்க‌."

நுனி ம‌ழுங்கிய வார்த்தைகளை ஜன்னல் கம்பியில் கோர்த்துப் போட்டு விட்டு அவள் மறைந்தாள்.

தப்புவதற்கு ஒரு ஒளியுமிடத்தை அவனும் தேடினான். மேஜைப் பக்கம் கிடந்த புத்தகத்தையெடுத்துப் பிரித்து அதில் கண்களைப் புதைத்து ஒரு சிறு புகலிடம் உண்டாக்கினான். ஆனாலும் வாசலிலிருந்து நேரே இழைந்து வருகிற காலடிகளின் சரர‌ப்புக்களும் வார்த்தைகளின் எல்லைகளும் அவனை அச்சுறுத்தின.

இரண்டு முகங்களில் முகமூடி யணிந்துகொள்ளத் தாமதமாகிப் போயிற்று. சிரித்தாள் - அவளுடைய தாய்.

"எங்கே காணவேயில்லை. என்ன விசேஷ‌ம்?"

"ஓ,விசேஷம் சொல்ல இதுதான் நேரம்! நீ காப்பி போடற வழியைப் பாரம்மா!"

முகமூடிக்குச் சமமான கருணையின்மையை அவளது அக்கா வார்த்தைகளில் தோய்த்தாள்.

அம்மா அடுக்களைக்குத் திரும்பிப் போனபின் அவளது தமக்கை கேள்விக் கணைகளால் குத்தினாள்.

"இந்த அறையில்தானா உட்காரணும்? இது மரியாதையில்லை. அந்தப் பக்கம் வந்திருக்கிறவங்க பார்த்தா என்ன நினைப்பாங்க?"

திரும்பவும் அவளது தாயின் நிழல், குரல்: "மூடி வச்சிருந்த பாலைக் காணோம். பாத்திரம் மூடியிருக்கு!"

"யாரு குடிச்சது?" அவளது அக்கா கேட்டாள்.

வாசல் பக்கத்தில் துக்க ஸ்வரத்தில் அழுதவாறு கண்ணை மூடிப் பதுங்கி வரும் பூனையைப் பார்த்து அவளுடைய அம்மா சொன்னாள்: "நம்ம பூனை பாலைத் திருடிக் குடிக்காது. பூனையை விசாரிச்சுக்கிட்டிருக் காம நீ போய்ப் பசுவைக் கறம்மா. அவளெங்கே?"

"அடுக்களைக்கு வெளியே. அவளுக்கு உடம்பு சரியில்லை.யாருக்கும் காப்பி கொடுக்க முடியாதாம்."

"சுகமில்லைன்னு நெற்றியிலே எழுதி ஒட்டியிருக்காக்கும். நான் ஸாரி உடுத்தி விடறேன்." அவளுடைய அக்கா தரையை உதைத்து நடந்தாள்.

அடுக்களையிலும் முன்புறத்திலும் வீடு முழுவதும் எழும் வார்த்தைகள், சப்தம் சுவர்த்துவாரங்கள் வழியாக நுழைந்து வந்தன.

சம்பளம் ரூ.600. அடுக்களையில் பாத்திரங்கள் இடித்தன. க்வார்ட்டர்ஸ்...ப்ரமோஷன்....பெண் கிராஜுவேட்டானால் முப்பது நாட்களுக்குள் வேலைகிடைக்கிற ஊர்...கிணற்றில் ராட்டினம் அழுதது. அவளைக் கடிந்துகொள்ளும் தமக்கையின் தணிந்த தொனி.

சிவப்பு வாழையில் ஒளிந்திருந்த அணில் தாவி வராந்தாவில் அவள் இருந்த இடத்தையடைந்தது. வாலை விறைத்தது. வட்டக் கண்களை உயர்த்தி சுற்றும் பார்த்தது. ஜன்னலோடு ஒட்டி நின்ற அவனுடைய கண்கள் பளபளத்தன. சுவரில் ஆணியில் மாட்டியிருந்த அவளுடைய குடையை இழுத்தெடுத்து ஜன்னல் வழியாகத் தரையில் பலமாக அடித்தான். அணில் நகரவில்லை. கொஞ்சம் தலையையுயர்த்திக் கண்ணைச் சுழற்றிப் பார்த்தது. திரும்பவும் அவன் குடையை உயர்த்தினான். அணிலின் தலை நசுங்கியது. வால் துடித்தது. தரையில் இரத்தம் பரவியது. உயிர் காற்றினுடைய கையை ஓடிச்சென்று பிடித்துக் கொண்டது.

"என் அணிலைக் கொன்னுட்டீங்களா?"

சாம்ப மரத்தினடியில் கண்ணீரால் நிர்மாணித்த அம்புகளுடன் அவள். "கொன்னுட்டீங்களா?"

விம்மல்களின் அலைகளை அங்கேவிட்டு விட்டு அவள் மின்னலானாள்.

ஜன்னல் கம்பிகள் வழியாகத் தோட்டத்தில் மரங்களுக்கும் அப் புறத்தில் அவன் நோக்கினான். இருட்டின் சதுரப்பெட்டிகளை ஒளித்து வைத்த மூங்கில் புதர் எதிலேயோ பதுங்கியிருந்த ஆந்தை அலறுகிறது.....

உனது மருவின் இனிமையும் தொப்புளைச்சுற்றி வியர்வை முத்துக்களும் உதட்டின் மின்சாரமும் கன்னத்தின் சிந்தூரமும் புதிய உடமையாளனுக்குச் சொந்தமாகும். ஆனால் யாருக்கும் வேண்டாத வெளுத்த எலும்புகள். இதயத்திற்கும் தோலுக்கும் அடியில் பற்றி நிற்கும் உன் எலும்புகள்.....

மூங்கில் புதிர் ஆந்தையிடம் அவன் கேட்டான்:

எலுமிச்சையும், ஜவந்தியும், பிச்சிப்பூவும் கட்டிய மாலையால் கொஞ்சம் சுற்றி வைக்க, மரணத்தின் சிறகொளி படபடப்பை நெஞ்சிலமர்த்தி இதயத்திற்கு வெம்மை கொடுக்க ஒரு எலும்பு எனக்குக் கிடைக்குமா?

இருள் பெட்டியிலிருந்து ஆந்தை மரணவொலி முழங்கிற்று.

ஙும்.... உம்.....ங்ஙும்...உம்.

அப்போது அவளது அக்கா அறைக்குள் வந்தாள். கொடியில் மடித்துத் தொங்கவிட்டிருந்த ஸாரிகளைத் தொட்டுப் பார்த்து, கட்டிவிட ஒன்றைத் தேடினாள். கொடியை விட்டுவிட்டுத் தரையிலமர்ந்து பெண்களின் கனவுகள் உறங்கும் முண்டுப் பெட்டியைத் திறந்தாள்.

நிமிடங்களில் பற்சக்கரங்கள் நகர்ந்து போன இறந்த காலத்தில், அவள் அறைக்குள் வந்தபோது முண்டுப்பெட்டியும் திறந்திருந்ததோ? அவள் உடுத்தியிருந்த உடை, அதில் அரளிப்பூ மொட்டுக்களின் நிறமும் கசக்கியிடப்பட்டிருக்கிறது. பெட்டிக்கு மேலே அது உயர்ந்தபோது சிவப்பு வாயுவில் சிதறியது.

அவளுடைய அக்கா பதறி நடுங்கினாள். அப்போது கையிலிருந்து நழுவி அது தரையிலும் விழுந்தது.
--------------------------

12. உலக முடிவு


முடிவு ஆரம்பித்தது. ஆரம்பித்தது என்று சொன்னால் அப்போதுதான் ஆரம்பித்தது. அந்த ஒரு நொடிக்குள்ளாக அவனுடைய‌ இரண்டு பிறவிகளின் கதை முடிந்தது. மூன்றாம் பிற‌வியின் முடிவு காலமும் நெருங்கிற்று.

ஆதரவற்ற குரங்கு ஒரு கோயிலின் முன்னாலுள்ள ஆலமரத்தின் கிளையில் அமர்ந்து ஆலோசித்தது.

யோசித்த விஷயம் இப்பிறவியில் அடைய முடியாமல் போனவைகளைக் குறித்து மட்டுமல்ல. கடந்துபோன பிறவிகளில் அடைந்தவைகளையும் குறித்ததாயிருந்தது.

ஆலமரத்தின் கிளையைப் பல‌மாகப் பிடித்து, நரைத்த புருவக்கோடுகளை உயர்த்தி, வெள்ளெழுத்து பாதிக்கத் தொடங்கிவிட்ட கண்களால் முன்னால் பார்த்தது.

ஒரு விண்வெளிக் கப்பல் போல ஆகாயத்தைத் துளைத்து உய‌ர்ந்த பிரும்மாண்டமான கோபுரத்தையும் அதனுடைய மார்பில் ஒற்றை முலைபோல‌ வாசம் செய்யும் கடிகாரத்தையும் அது கண்டது. அப்போது பூர்வ ஜன்ம நினைவுகள் கர்ப்பப்பைக்குள் சிசுவைப் போலப் புரண்டன. புரண்டபோது கண்ணில் நீர் நிறைந்தது. நீர் நிறைந்தபோது காட்சிகள் மங்கின. கோபுரம் மங்கியது. கடிகாரம் மங்கியது. கோவில் மங்கியது.

மங்கி மங்கி ஸ‌ர்வமும் இருள். இருட்டியபோது அகக் கண்கள் மின்னின. மின்னியபோது பூர்வ ஜன்மங்களைக் கண்டது.

முதற் பிறவி, மண‌வாரண்யத்தில் மனித புத்திரனாகப் பேரும் புகழும் ] உடைய ஒரு வம்சத்தில், வம்சத்தலைவனின் நான்காம் மனைவியின் ப‌திமூன்றாம் மக‌னாக அவன் பிறந்தான்.

அவன் வாலிபனான்.

ஒட்டகத்தை மேய்ப்பதும், ஈந்தப்பழம் தின்பதும், விபசாரம் செய்வதுமாக இருந்தான். இதற்கிடையில் திருமணம் செய்து கொண்டான். ஏழு சந்தானங்களின் பிதாவாக‌வும் ஆனான். அப்போதுதான், அந்தக்காலத்தில்தான் தீர்க்கதரிசியின் போதனை கேட்கிறது.

மணவாரண்யத்தில் புரட்சி நடக்கும் காலம். தீக்கதரிசியின் ஆதரவாளர்களுக்கும் எதிரிகளுக்குமிடையில் யுத்தம். படுகோரமான சந்திப்புகள்.வைடூர்ய மலையின் மடியிலமர்ந்து தீர்க்கதரிசி தெய்வத்துடன் சம்பாஷனை நடத்திக்கொண்டிருந்தார். தூய கிரந்தத்தின் அத்யாயங்கள் பூமிக்கு இறங்கி வந்துகொண்டிருந்தன. இருபத்தேழாம் நாள் தெய்வம் தீர்க்கதரிசியைத் தனது சந்நிதிக்குள், பேரவைக்குள் அழைத்தார். ஆச்சயர்த்தால் வியர்த்துப்போன தீர்க்கதரிசி கேட்டார்:

"நான் அங்கே வருவதாவது? ஆகாயம் ஒன்றல்ல, இரண்டல்ல, ஏழு. இந்த ஏழு ஆகாயங்களையும் அவைகளுக்கிடையிலுள்ள வெற்று வெளி யையும் தாண்டி யுகங்கள் செலவழித்து நான் உன் சந்நிதிக்கு வர வேண்டுமா? அது எனக்கு முடியுமா? கடவுளே நீ என்னை சோதிக்கிறாயோ?"

தெய்வத்தின் குரல்: "தீர்க்கதரிசியே, நீ ஒரு விஷயத்தை நினைவில் வை. எனது உதவியுண்டானால் இப்பிரம்மாண்டத்தில் முடியாததெதுவுமில்லை. மனத்தையும் தவிர, பஞ்சேந்திரியங்களல்ல உனக்கு - ஆறு இந்திரியங்கள் என்ற உண்மையை நீ மறந்தாயோ?"

தீர்க்கதரிசி வின‌யத்துடன் தலைகுனிந்து நின்றான்.

இரவில் இறுதிப் பிரார்த்தனையும் முடிந்து தீர்க்கதரிசி பெண்ணின் தலையும் இறக்கைகளும் கொண்ட குதிரையின் முதுகில் ஏறினான். குதிரை குதித்து மேலே உய‌ர்ந்தது. ஆகாயமும் விண்வெளியும் பல தட‌வைகள் கடந்து தீர்க்கதரிசி தெய்வத்தினுடைய சிம்மாசனத்தின் முன்னால் வந்து சேர்ந்தான்.

மறக்க முடியாத சந்திப்பு.

பேச்சு வார்த்தையும் இரகசியப் பேச்சுக்களும் நடந்தன.

தீர்க்கதரிசி பூமியிலிறங்கியபோது மறுநாள் காலை வணக்கத்திற்கான பாங்க் அழைப்பு முழங்குகிறது. தீர்க்கதரிசிக்கு மயிர்கூச்செறிந்தது. ஒரு இரவில். ஒரே ஒரு இரவில். கடவுளே உன் லீலை, உன் மாயை.. தனக்காக எத்தனை காலம் காத்திருந்தீர்களென்று சிஷ்யர்களிடம் தீர்க்கதரிசி கேட்கவில்லை.

இநதக் கதையைக் கேட்டு அவன் விழுந்து சிரித்தான். நகரத்தின் நடுவிலிருந்து அவன் இக் கதையின் ஓட்டையைத் திறந்து காட்டினான். ஜனங்கள் அவனோடு சேர்ந்து தீர்க்கதரிசியைப் பரிகாசம் பண்ணிச் சிரித்தனர். அவனும் சிரித்தான்.

சிரித்துச் சிரித்து அவன் வீட்டையடைந்தான். அவனுடைய மனைவி அடுக்களையில் தோசை வார்த்துக்கொண்டிருந்தாள். குழந்தைகள் முற்றத்திலமர்ந்து ஈநதப்பழக் கொட்டைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். சிரிப்பைப் பார்த்து மனைவிக்குக் கோபம் வந்தது. சிரித்துகொண்டு நிற்காமல் குளித்துவிட்டு வரச்சொல்லி அவள் கட்டளையிட்டாள்.

எண்ணெயும் சோப்பும் எடுத்துக்கொண்டு அவன் வீட்டின் முன்னாலிருந்த குளத்தில் குளிக்கப்போனான்.

தண்ணீரிலிறங்கி நன்றாக ஒரு முறை மூழ்கினான். மூழ்கியெழுந்தபோது அவன் ஆச்சரியத்த்தால் விறைத்துப் போனான். தான் ஒரு பெரிய நதியின் கரையில் நிற்கிறோம். ஏராளமான ஸ்திரீகள் சுற்றிலும் நின்று குளிக்கிறார்கள். என்ன கதை இது? தான், அரை நிர்வாணப்பெண்கள் இத்தனை பேர்களின் நடுவிலா. அப்போதுதான் தோளில் விழுந்து கிடக்கும் நீண்ட மயிரையும் மதர்த்த மார்பையும் கண்டான்.

இன்னொரு முறை வியர்த்துப் போனான்.

அவன் ஒரு அழ‌கான பெண்ணாக மாறியிருக்கிறான்.

துணியுடுத்தினாள்; நதியின் படிகளில் ஏறினாள்; அவள் நடந்தாள்....

பிறகு என்னவெல்லாம் நடந்தது! அவளை ஒருவன் கல்யாணம் செய்து கொண்டான். கனவனோடு சேர்ந்த வாழ்க்கை. ஐந்து குழந்தைகளைப் பெற்றாள். முதுமை வந்தடைந்தது.

விசேஷமாக எதுவும் நடக்காமல் காலம் நகர்ந்தபோது அவள் வழக்கம்போல‌ ஒருநாள் நதியில் குளிக்கப்போனாள்.

மூழ்கி நிமிர்ந்தபோது ஆச்சரியமடைந்தாள். தான் பழைய ஊரை அடைந்திருக்கிறோம். முன்பு ஆணாகவிருந்த காலத்தில் கடைசியாகக் குளிக்க வந்த குளம்....

தான் இப்போது ஸ்திரீயல்ல.

முன்பு படிக்கட்டில் அவிழ்த்து வைத்த ஆடைகள் அப்படியே கிடக்கின்றன.

அவன் ஆடையுடுத்தான். அதே வழிகளிலேயே வீட்டிற்கு ஓடினான். கவலையுடன் வீட்டையடைந்து உள்ளே நுழைகையில் மனைவி தோசை வார்த்துத் தீர்ந்திருக்கவில்லை. குழந்தைகள் அப்போதும் ஈந்தப் பழக் கொட்டைகளை வைத்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

அவன் பயந்து நடுங்கிப்போனான். ஆச்சரியத்தால் மூச்சு முட்டியது.

மனைவி கேட்டாள். "இவ்வளவு சீக்கிரம் குளிச்சாச்சா, காக்காய்க் குளி போலிருக்கே?"

காலத்தின் மாயாஜாலத்தை அவன் நேரிடையாக அனுபவித்தான். அங்கே வருடங்கள் கழிந்தபோது இங்கே நிமிடங்களே ஆகியிருக்கின்றன. அப்படியானால், தீர்க்கதரிசி ஆகாயத்தில் செலவிட்ட அரை நாள், பூமியில் வருடங்களாகத்தான் இருந்திருக்கவேண்டும்.

அவன் ஞானியானான்.

பிறகு அவனுடைய நம்பிக்கையின் அளவைகள் மாறின.

அவன் யோசித்தான்.

காலம் என்றால் என்ன?

ஆகாயத்தின் எல்லை எங்கே?

காலத்தைக் குறித்துச் சிந்தித்துச் சிந்தித்து புதிய முடிவுளை அடைந்தான். முடிவுகள் குறிக்கப்பட்டன.

காலம் இருந்தது.

காலம் இருக்கும்.

காலம் இருக்கிறது என்ற ஒரு நிலைமை கிடையாது. நிமிடங்கள் பின்னடைவதும் முன்னேறுவதும் மட்டுமே நடக்கின்றன.

சூர்யன் உதித்தது. அஸ்தமித்தது. அவற்றிற்கு நாள் என்று பெயரிட்டான்.

காலத்தைக் கணக்குக் கூட்டத் தொடங்கினான். ஏழு ஈந்தப்பழக் கொட்டைகள் வாரத்தைக் குறித்தன. நான்கு மஞ்சாடி விதைகள் மாதத்தைக் காட்டின. பன்னிரண்டு குன்றி விதைகள் வருடமாயின. பத்துத் தங்க நாணயங்கள் பத்தாண்டைக் குறித்தன.

நேரத்தை திட்டம் செய்தான். நிழல்களை அளந்தான். கீழ்ப்பாகம் குவிந்த சீசாக்களில் மண்ணை நிறைத்தான். குவிந்த பாகத்துத் துளை வழியாக மண் துகள்கள் நிமிடங்களாக உதிர்ந்து விழுந்தன. சீசாத்களில் ரஸம் நிறைத்தான்.

நட்சத்திரத்தைப் பார்த்து ஜாமத்தை அளந்தான்.

எண்களுண்டாக்கினான்.

காலண்டர் கண்டுபிடித்தான்.

கடிகாரம்தான் அவன் கடைசியாக உருவாக்கிய அற்புதப்பொருள்.

வானத்தைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கிய நேரத்தில் அவன் இறந்தான்.

பாரதம் என்ற நாட்டில் மனிதனின் உருவில் அவன் இரண்டாம் பிறவி எடுத்தான்.

பிறக்கும்போது காலம் என்ற நினைவு மட்டுமே இருந்தது மனதில். கர்ப்பப்பையில் இருக்கும்போதும் அந்த ஒரு நினைவு மட்டுமே அவனை ஆட்கொண்டிருந்தது.

பரமாணுவில், ஈரணுவில், சொடக்குப்போடும் நேரத்தினூடே, விருப்பங்களினூடே, கண்சிமிட்டும் நேரத்தினூடே, கழிவுகளில் கலத்தில், நாழிகையில், நொடியில், இரவுபகலில், மாதந்தோறும், பருவந்தோறும், வருடந்தோறும் அவனுடைய வளர்ச்சி ஆரம்பித்தது.

புண்ணிய நதியில் குளித்து, தீர்த்த ஜலம் குடித்து, விக்கிரகத்தைத் தொழுது, பட்சி மிருகங்களை நேசித்து, காய்கனிகள் மட்டும் உண்டு அவன் வளர்ந்தான்.

வளர்ந்து பெரியவனானபோது அறிவு விரிவடைந்தது. அவன் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

காலம் என்ப‌து என்ன?

காலத்தைப் பற்றித்தெரிந்துகொள்வதற்காக இரவு பகல் ஆராய்ச்சி நடத்தினான். ஒரு பலனும் கிட்டவில்லை. ஆனால் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. இப்பிரமாண்டத்தில் அவனை ஞானியாக்க பிரம்மாவிற்கு மட்டுமே முடியும்.

இரவு பகல் பாராமல் தவமிருந்தான்.

ஒளி, ஒரு நினைவாக மாத்திரமே மிஞ்சியது.சடைப்பிடித்து, தாடி மயிர்கள் வள‌ர்ந்து தரை வரையிலும் எட்டியது. விஷ்ணுவின் நாபிக் கம‌லத்திலிருந்து உதித்த பிரம்மாவைப்பற்றிய நினைவு மட்டும் அவனுடைய உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் தங்கி நின்றது.

வருடங்கள் மட்டுமல்ல, யுகங்களும் ஆயின.

ஒரு நாள் அடிவானத்தில் ஒரு கருப்பு விதை போல் அன்னம் பிரத்யட்ச மாயிற்று. சில நிமிடங்களில் பிரம்மா அவன் முன்னால்.

பிரம்மாவின் குரலை அவன் கேட்டான்.

அவன் கண்க‌ளைத் திறந்தான்.

பிரம்மா கண் திறக்கவில்லை.

"குழந்தாய், ஏனிந்த வீண் வேலை? காலத்தைப் பற்றிய கணக்கு என்னிடமே இருக்கிறது."

'அப்படியே அருளிச் செய்யவேண்டும்."

:எதற்காக வீணாகக் கேட்கிறாய்?"

"என் வாழ்வின் விருப்பமே அது பிரபோ."

"அப்ப‌டியானால் கேட்டுக்கொள். பிர‌ம்மா தொட‌ர்ந்தார். "இர‌வு ப‌க‌லில், மாத‌த்தில், ப‌ருவ‌த்தில், அரைசூர்ய‌ வ‌ருட‌த்தில், ம‌னித‌ வ‌ருட‌த்தில், தேவ‌ வ‌ருட‌த்தில், மஹா யுக‌த்தில், உல‌க‌ முடிவில் என்னு டைய‌ ஒரு இர‌வும் ப‌க‌லும் முடிகின்ற‌து. அந்த‌ ஒரு தின‌ம் உன‌து 864,00,00,000 வ‌ருட‌ங்க‌ளுக்குச் ச‌ம‌மாகும்."

"பிரபு, என்னை ம‌ன்னித்த‌ருள‌ வேண்டும்."

பிர‌ம்மாவும் அன்ன‌மும் ம‌றைந்த‌ன‌ர்.

அவ‌ன் த‌வ‌த்திலிருந்து எழுந்தான்.

அக் கால‌க‌ட்ட‌த்திற்குள் அவ‌னுடைய‌ த‌லைமுறையின‌ர் நிறுவியிருந்த‌ ந‌தி தீர‌ நாக‌ரிக‌ங்க‌ள் ம‌ண்ணாகிப் போயிருந்த‌ன‌. அந் நாக‌ரிக‌த்தின் நினைவுகள் பிற்பாடு யாரையும் கிளர்ச்சியுற வைக்கவில்லை. அறிவு குறைந்த சரித்திர மாணவர்கள் மட்டும் நொண்டி இங்கிலீஷில் அதனைத் தம் விடைத்தாளில் விவரித்துக்கொண்டிருந்தனர்.

இதற்கிடையில் ஹிமவான் பகவானின் பாதுகாப்பை ஒரு தீராச் சாபம் போல அழித்துக்கொண்டிருந்த இரு நுழைவாயில்கள் வழியாகப் பருவக்காற்றோடு சேர்ந்து பல விஷ ஜந்துக்களும் இப் புண்ய பூமியில் நுழைந்தன.

அவர்கள் இங்கே கலப்பு வர்க்கங்களை உண்டாக்கினர். அவனுடைய நாகரிகத்தில் கலப்படம் செய்ய முயற்சித்தனர்.

இதய வேதனையுடன் ஒரு உண்மையை அவன் புரிந்துகொண்டான். அவனது அன்பிற்குரிய பிரம்மாவின் விருப்பங்கள் நஷ்டமாகிக் கொண்டிருக்கின்றன. அவனது தலைமுறை அழிந்துகொண்டிருக்கிறது.

பிறகு மிலேச்சனின் மொழியைக் கற்க அவன் நிர்ப்பந்திக்கப் பட்டான்.

அம் மொழியில்கூடக் காலத்தைக் குறித்தும் விண்வெளியைக் குறித்துமே அவன் சிந்தித்தான்.

Right or Left?

Time shares the fate of space.

Are all points of view equivalent?

The relative appears absolute.

The absolute turns out to be relative.

Velocity has its limits.

இத்தனை மகத்தான வார்த்தைகளையும் கிரகித்துக்கொண்டபோது யாரோ அவனிடம் சொன்னார்கள்: "நேரம் இப்போது மாலை ஐந்து மணி ஆகியிருக்கிறது."

அவன் கேட்டான். "எங்கே, இந்தியாவிலா அல்லது அமெரிக்காவிலா?"

அப்படி ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டைப் பாதி படிப் பதற்குள் அவனுடைய இரண்டாம் பிறவியின் கதை முடிந்தது.

புனர் ஜன்மத்திற்காக அவனது ஆத்மா அலைந்து திரிந்தது.

[3]

துர்ப்பாக்கியவானான அவன் மூன்றாம் ஜன்மம் பூண்டது ஒரு குரங்கின் வடிவத்தில்.

குரங்குக்கு உற்றார் உறவினர் யாருமில்லை. பெண்கள் பொதுச் சொத்தான ஒரு வர்க்கத்தில் பிறந்ததினால் அப்பனைப்பற்றி அவன் அறியாதவனாயிருந்தான். தாயின் பின்னால் சுற்றியதும், அவளுடைய முலை குடித்ததும், அவ‌ளுடைய‌ த‌லையிலிருந்து பேன் எடுத்துக் க‌டித்துப் பொடித்த‌தும் நினைவிருக்கிற‌து. இர‌ண்டாவ‌து குர‌ங்குக் குட்டியை க‌ர்ப்ப‌ம் த‌ரித்த‌போது தாயிட‌மிருந்து அவ‌ன் வில‌க்க‌ப்ப‌ட்ட‌வனான்.

ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் கூட‌வே பிற‌கு சக‌வாச‌ம். அவ‌ர்க‌ளுக்கு இணையாக ம‌ர‌ம் தாண்டுவ‌தும். பெரிய‌ சுவ‌ரில் ஏறுவ‌தும், கோவிலின் உத்திரக் க‌ட்டை‌யில் ஆட்ட‌ம் ஆடுவ‌துமாக‌ இருந்தான். அப்ப‌டியிருக்கும்போது, எதிர்பாராம‌ல் ஒரு நாள் கொய்யாத்தோட்ட‌த்திலிருந்து கொய்யாப் ப‌ழ‌ம் திருடித் தின்னுகையில் தோட்ட‌க்கார‌ன் க‌வ‌ண் எறிந்த‌ ஒரு க‌ல் அவ‌னுடைய‌ உட‌லில் ப‌ட்ட‌து. முதுகெலும்பில் பட்டுவிட்டது. அவன் கூக்குரலிட்டுவிட்டான். இர‌ண்டு மூன்று நாட்க‌ள் ப‌ல‌மான‌ வ‌லி இருந்த‌து. பிற‌கு அந்த‌ இட‌த்தில் சிவ‌ந்து வீங்கிய‌து. ஒரு வார‌மான‌ போது புண்ணாயிற்று. புண்ணைச் சுற்றி ம‌யிர் உதிர்ந்த‌து.

புண்ணிலிருந்து சீழும் இர‌த்த‌மும் வ‌டிய‌த் தொட‌ங்கின‌. சீழ் ம‌யிரில் ஒட்டி உல‌ர்ந்த‌து. ஈக்க‌ள் புண்ணில் இடைவிடாம‌ல் மொய்த்த‌ன‌. புழுக்க‌ள் நுழைந்த‌ன‌. துர்நாற்ற‌ம் வீசிய‌து.

அவ‌ன் த‌னிய‌னான்.

இன்று குர‌ங்கு ஆத‌ர‌வ‌ற்ற‌து. த‌னி.

த‌ந்தையில்லை. தாயில்லை. கூட்டுக் குடும்ப‌மில்லை. ந‌ண்ப‌ர்க‌ளில்லை. ந‌ரைதிரை தோன்றி முதுகில் உல‌ராத‌ புண்ணுட‌ன் எருமையின் வ‌ர‌வை எதிர்நோக்கி அத‌னுடைய‌ கால‌ம் நிற்கிற‌து.

கோவிலின் முன்னாலிருந்த‌ ஆல‌ம‌ர‌ம்தான் அத‌னுடைய‌ புக‌லிட‌ம். அந்த‌ ஆல‌ம‌ர‌ம் கோவிலையும், ந‌க‌ர‌த்தையும், போலிஸ் ஸ்டேஷ‌னையும், ஆற்றையும் வீதிக‌ளால் இணைத்த‌ ஒரு ச‌ந்திப்பில் இருக்கிற‌து.

கிளைக‌ளும் விழு‌துக‌ளுமாக‌ப் பிரிந்து ப‌ட‌ர்ந்து ப‌ந்த‌லிட்ட‌து. கீழே யிருந்தும் உட‌ம்பிலிருந்தும் வேர்க‌ளை இற‌க்கி, ந‌ரைதிரைக‌ள் பாதித்து, த‌லைமுறைக‌ளின் ஆத‌ர‌வின்மையைத் த‌ரிசித்து, ப‌ற்ற‌ற்ற‌‌தாகி ஆல‌ம‌ர‌ம் நிலைநின்ற‌து. அத‌னுடைய‌ பொந்துக‌ளில் பாம்புக‌ள் இட‌ம் தேடின‌. ப‌ற‌வைக‌ள் கிளைக‌ளில் கூடு க‌ட்டின‌. உச்சியில் காற்று ஊளையிட்டு ஓடிய‌து. எறும்புக‌ளின் ச‌ங்கிலிக‌ள் கிளைக‌ளில் ந‌க‌ர்ந்த‌ன‌. உட‌ம்பு முழுவ‌துமிருந்த‌ சின்ன‌ஞ்சிறு இலைக‌ள் காற்றில் ந‌டுங்கின‌.

குர‌ங்கு க‌ட‌ந்த‌ எத்த‌னையோ வ‌ருட‌ங்க‌ளாக‌ இந்த‌ப் பெரிய‌ ஆல‌ ம‌ர‌த்தின் அற்ப‌மான‌ ஒரு கிளையில‌ம‌ர்ந்து கிழே வ‌டிந்துபோகும் வாழ்க்கையைத் த‌ரிசித்துக்கொண்டிருந்த‌து.

வ‌ழியோடு போகும் ம‌னித‌ர்க‌ளிட‌மும், மிருக‌ங்க‌ளிட‌மும், ப‌ற‌ந்து போகும் ப‌றைவ‌க‌ளிட‌மும், வாக‌ன‌ங்க‌ளிட‌மும் த‌ன்னுடைய‌ க‌தையைச் சொல்ல‌ அது துடித்த‌து. ஆனால் நா எழ‌வில்லை. த‌ன் நிழ‌லை அள‌ந்து நேர‌ம் க‌ணித்தோம் என்ப‌தையும், ம‌ண‌ற்க‌ண்ணாடிக் கூம்புக‌ள் உபயோகித்து நேரம் அளந்தோம் என்பதையும், எண்கள் கண்டு பிடித்தோம் என்பதையும், காலண்டர் தனது சொந்த சிருஷ்டி என்பதையும், தவம் செய்து பிரம்மாவை வரவழைத்தோம் என்பதும் மற்றுமுள்ள உண்மைகள் சித்திரங்களாக அதனுடைய மனதில் கிடந்தன.

வழிப்போக்கரில் யாரும் அதைக் கவனிக்கவில்லை. குழந்தைகள்கூட அதைப் பார்த்துப் பழிப்புக் காட்டவில்லை. சாப்பாடு கிடைக்கவில்லை. பிரசாதம் நிறைந்த தட்டுகளை ஏந்திய பக்தர்கள் கோவிலிலிருந்து நடந்து போவதைக் காண்கையில் அதனுடைய வாயில் நீர் ஊறும். வயிறு குமுறும். கதவடைத்துப் பூசாரி பால் பாயஸம் குடிக்கும்போது அது கண்ணை மூடாமல் அதைப் பார்த்துப் பசியாறும்.

இரவில் எல்லோரும் தூங்கியபின் அது ஆலமரத்திலிருந்து இறங்கி கோவில் முற்றத்தின் வழியாக நடக்கும். நடுவில் பக்தர்கள் உடைத்த தேங்காய்த் துண்டுகளோ, கெட்டுப்போன பழங்களோ, மண்ணில் புரண்ட மிட்டாய் துண்டுகளோ, மாங்காய்க் கொட்டையோ கிடைக்க நேரிடும். ஒன்றும் கிடைக்கவில்லையானால் கோவில் குளத்திலிறங்கி நீர் குடித்து, பூசாரி இடத்தில் இல்லையானால் கோவிலின் உத்திரக் கட்டையி லேறி மணியடித்து ஒலியுண்டாக்கி, ஓடிப்போய் ஆலமரத்திலேயே ஏறி உட்காரும்.

தூங்குவது சிரமம். கடந்துபோன பிறவிகளைக் குறித்து, காலத்தைக் குறித்து, ஆகாயத்தைக் குறித்து, உலராமல் வலிக்கும் முதுகுப் புண்ணைப்பற்றி, நரைதிரையைப் பற்றி, ஆதரவற்ற தன்மையைக் குறித்து, நினைத்து நினைத்து இதயம் வேதனையுறும். பொழுது புலரும் சமயம் கொஞ்சம் கண்ணை மூடும்.

ஸைரன் கேட்டுத்தான் தினமும் எழுவது, முனிஸிபாலிட்டியிலிருந்து பூதாகாரமான கோபுரத்திற்குப் பக்கத்திலிருந்து ஸைரன் கிளம்புகிறது. அப்போது கடிகாரத்தில் மணி ஆறு.

கோபுரத்தை. கோபுரத்தின் மார்பில் ஒற்றை முலையான கடிகாரத் தைப் பார்த்துக்கொண்டிருக்க ஆரம்பித்த காலத்திலிருந்து ஒரே ஒரு ஆசை அதை ஆட்டிக்கொண்டிருந்தது.

அக் கோபுரத்தின் உச்சியில் ஒரு நாள் ஏறவேண்டும். பிறகு கடிகாரத்தைக் கையிலெடுக்க வேண்டும். சௌகர்யப்பட்டால் அங்கே நின்றுகொண்டு சந்திரனைத்தொடவேண்டும். காலத்தைக் குறித்துச் சிந்தித்து நேரம் அளந்து கணக்கிட்ட, நாழிகை மணியைக் கண்டுபிடித்த, சார்பியல் கோட்பாட்டைப் படிக்கத் தொடங்கிய முற்பிறவிகளில் நற்செயல்கள் புரிந்த அதனுடைய இதயத்தில் இந்த ஆசை உமியிலிட்ட தீ போல் எரிந்து கொண்டிருந்தது.

பல இரவுகளிலும் அது கோபுரத்தின் போயிருக்கிறது. ஆனால், காவல்காரனான நாசமாய்ப்போகிற கூர்க்கா எப்போதும் கோபுர வாசலின் கதவைப் பூட்டிவிட்டு உறங்கிக்கொண்டிருப்பான்.

மகத்தான தினம் வந்தது. நல்ல நிலாவுள்ள இரவு. கோபுரத்தின் உச்சியிலிருக்கும் சூலம் சந்திரனைக் குத்தி நிறுத்தியிருக்கிறது. கோபுர வாசலின் கதவையடைக்க மறந்துபோய் கூர்க்கா குறட்டைவிட்டுத் தூங்குகிறான்.

முதுமையைச் சட்டை செய்யாமல், புண்ணின் வலியைப் பொறுத்துக் கொண்டு, பசியை மறந்து அது கோபுரத்தின் படிகளில் ஏறத் தொடங்கியது.

எவ்வளவு நேரம் ஏறிச்சென்றது என்று நினைவில்லை நூறு நூறு படிகள், ஆயிரமாயிரம் படிகள். உடல் வியர்த்தது தலை சுற்றியது. கால்கள் தளர்ந்தன. இதயம் பறை முழக்கியது. மூச்சிறைப்பு புயல் காற்றுப்போல வீசியது.

கடைசியில் அது புகலிடத்தை எட்டியது. கடிகாரத்தை அது ஆவேசத் துடன் உணர்ச்சி வசப்பட்டு வருடியது. அதனுடைய முட்களில் முத்த மிட்டது. பிறகு முழு பலத்தையும் உபயோகித்து அதைக் கோபுரச் சுவரிலிருந்து பறித்தெடுத்தது.

கோபுரம் தன் முலையை இழந்தது. சூர்ப்பணகையின் வலி.

அதனுடைய அபிலாஷை நிறைவேறியது. கடிகாரத்தைக் கண்டு பிடித்த அதனுடைய கைகளில் கடிகாரம் வந்து சேர்ந்தது.

கடிகாரத்தைப் புண்ணுள்ள முதுகில் வைத்துக்கொண்டு அது கோபுரத்தின் உச்சியில் ஏறி நின்றது. ஒளியில் குளித்த பிரம்மாண்டம். சந்திரன் சூலத்திலிருந்து தொலைவில்-வேண்டுமானால் தொட முடியும். சந்திரனை ஒரு தடவை தொட்டுவிட்டு வந்த வழியாகத் திரும்பலாம்.

அது சந்திரனைத் தொடுவதற்காகக் கால் கட்டைவிரலில் ஊன்றி நின்று கொண்டு ஒரு கையால் கடிகாரத்தை தாங்கிக்கொண்டு மறு கையை உயர்த்தியது. கால் வழுக்கியது மட்டும் தான் தெரியும்…

மறுநாள் இரத்தத்தில் குளித்த ஒரு குரங்கின் பிணமும், பொடிந்து தூளான கடிகாரத்தின் மிச்சங்களும் கோபுரத்தினடியில் கிடப்பதைக் கோவிலுக்குப் போகும் பக்தர்கள் பார்த்தார்கள். அவ்வளவுதான்.

உலக முடிவு இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது.
-----------------------

13. உங்களுக்காக ஒரு மரணம்


மரணத்தைப் பற்றி என்னிடம் முதலில் சொன்னது கார்த்து என்ற மருத்துவச்சி. சுருக்கங்கள் விழுந்த முகமும் தொங்கிய முலைகளும் கொண்ட கார்த்து என்ற மருத்துவச்சி.

இருபது வருடங்களுக்கு முன்னால் மழை பெய்து ஈரமான ஒரு இரவில் அம்மாவுடன் ஓட்டிப் படுத்துக்கொண்டிருந்தேன் நான். என்னைச் சுற்றிலும் பிறவியின் வாசனையாக இருந்தது. பிரசவத்தின் தளர்ச்சியில் நினைவற்றுப் படுத்திருந்த தாயின் கட்டிலுக்குக் கீழே கார்த்து என்ற கிழவி வெற்றிலை மென்றுகொண்டிருந்தாள். தலை ஆடும்போது அவளுடைய நீண்ட காதுகளும் அவற்றிலிருந்த தோடுகளும் ஆடிக் கொண்டிருந்தன. ஒரு துண்டு மட்டும் போர்த்தியிருந்த மார்பில் தோல் வற்றிச் சுருங்கியிருந்தது.

நாழிகைகள் கழிந்து அம்மா கண்ணைத் திறந்தபோது, கார்த்து, துணியில் பொதிந்திருந்த என்னைத் தூக்கிக் காட்டினாள். “ஆண் குழந்தையாக்கும் கல்யாணியம்மா…” என்று கூறிவிட்டு அவள் அசுத்தமான உதடுகளை என் உச்சியில் அழுத்தி முணு முணுத்தாள்: “சாகப் பொறந்த தங்க மகன்.”

அம்மா அதைக் கேட்கவில்லை. முதல் பிரசவத்தின் சூடும் சில்லிப்பும் சுருட்ட அவள் மீண்டும் மயக்கத்தில் விழுந்தாள்.

“மகனுக்குச் சாக இஷ்டமா?” கார்த்து என் காதில் கேட்டாள்.நான் தலையாட்டினேன். “அப்போ ஏன் பிறந்தே?”

என்னிடம் அதற்கு பதில் இல்லை. “நீங்க என்னைப் பிடிச்சு இழுத்து எடுத்ததினால…” என்று வேண்டுமானால் சொல்லியிருக்கலாம். ஆனால், எனக்குப் பேசத் தெரிந்திருக்கவில்லை. அ-ஆ-வும், ஏ-பி-யும் படித்தது பிற்பாடு வருடங்களுக்குப் பிறகுதான். அதுவரை சிந்தனைகளுக்கு வரி வடிவம் தோன்றியிருக்கவில்லை. அவற்றிற்குச் சீட்டுச் சித்திரங்களின் உருவமிருந்தது. பல உருவங்களிலும் உங்களிலுமாக அப் படங்கள் எனது தளிர்த்தலையில் கிடந்து புரண்டுகொண்டிருந்தன.

ஐந்து வருடங்களுக்குப்பிறகு மரமேறப் படித்த காலத்தில் ஒரு அந்தி நேரத்தில் நான் கார்த்துவின் மரணத்தைக் கண்டேன்.

நான் சாவேன் என்று சொன்ன‌ கார்த்து செத்தாள். என‌க்கு அதில் குரூர‌மான‌ ம‌கிழ்ச்சி உண்டாயிற்று. இற‌ப்ப‌த‌ற்குச் ச‌ற்று முன்பு, ம‌ர‌ண‌ம் அந்த வாயிற்படிக்கு அப்புறத்தில் ஒளிந்துநிற்கிறது என்பதைத் தெரிந்துகொண்டுதான் நான் அந்தக் குடிசைக்குள் சென்றேன்.

சாணம் மெழுகிய தரையில், கம்பளி விரித்த பாயில், கார்த்து என்ற மருத்துவச்சி சோர்ந்து கிடந்தாள். தலைக்கு நேரே ஒரு அணையா விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. கிழவியின் மூன்று பிள்ளைகள் வெளியே வராந்தாவில‌மர்ந்து பீடி குடித்துக்கொண்டிருந்தார்கள். தெற்கே எங்கேயோ இருந்த ப‌வானி என்ற மகளை அழைக்க ஆள் போயிருந்தது. முற்றத்தின் ஒரு மூலையில் சாண வறட்டிகளும் கொட்டாங்கச்சிகளும் குவித்து வைக்கப்பட்டிருந்தன. மரணத்திற்குப் பின் கர்மங்கள் நடத்துவத‌ற்காக ரிஸ்ட்வாட்ச் கட்டிய சிரிப்பாணி ராமன் நாயர் காத்துக் கொண்டிருந்தான். அவன் இடையிடையே மணிக்கட்டில் நேரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். தென்பக்கம் சிதை கூட்டத் தயார் செய்து கொண்டிருந்தனர் பக்கத்து வீடுகளைச் சேர்ந்த சில இளைஞர்கள்.

எல்லோரும் காத்துக்கொண்டிருந்தார்கள்.

எனக்கு பயம் உண்டாயிற்று. ம‌ரணம் ஒரு கருப்புக் கழுகாக அவ் வீட்டின் மேலே சிறகு விரித்துக்கொண்டு நிற்கிற‌து. ஒரு காட்டெருமையாக வெளியில் நின்று உறுமுகிறது. கட்டும் கயிறாகத் தோட்டத்தில் எங்கோ சுருண்டு கிடக்கிறது. சுற்றுப்புறம் முழுவதும் மரணத்தின் மணம். அவ் வீட்டிலுள்ளவர்களெல்லாம் பார்வைக்குட்பட்டவர்கள். மர‌ணத்தின் பார்வை மாறிவிழுந்தால் ஆள் வேறாகும். கார்த்துக்கிழ‌வி த‌ப்புவாள். ப‌திலாக‌ வேறு யாராவ‌து.....

இங்கே என் சிந்தை ப‌த‌றிய‌து. என‌க்கு அங்கிருந்து ஓடித் த‌ப்ப‌ வேண்டுமென‌த் தோன்றிய‌து.

இட‌றிய‌ தொனியில் நான் கூப்பிட்டேன்.

"கார்த்துப்பாட்டி...."

என் குர‌ல் கேட்டு மூலையில் க‌ளைத்த‌ம‌ர்ந்திருந்த‌ இர‌ண்டு கிழ‌விக‌ள் த‌லையை உய‌ர்த்திப் பார்த்த‌ன‌ர். அவ‌ர்க‌ள் கேட்டார்க‌ள்:

"ஏன் ம‌க‌னே, இந்த‌ச் ச‌ந்தியா வேளைல‌ இங்கே வ‌ந்து நிக்க‌றே? அம்மாக்குத் தெரிஞ்சா திட்ட‌மாட்டாளா?"

"மாட்டா, மாட்டா" நான் உறுதியாக‌ச் சொன்னேன். நான் கார்த்துப்பாட்டியின் ம‌ர‌ண‌த்தைக் காண‌ வ‌ந்து நின்றிருக்கிறேன். நான் சாவேன் என்று சொன்ன‌து அவ‌ள்தான். அத‌னால் அவ‌ளுடைய‌ ம‌ர‌ண‌த்தை என‌க்குப் பார்க்க‌ வேண்டும், பிற‌கு மூர்க்க‌த்த‌னத்துட‌ன் கேட்க வேண்டும், "நீங்க‌தானே பாட்டி இப்ப‌ச் சாக‌ப் போறீங்க‌?"

"எப்ப‌ பாட்டி செத்துப்போவா?" நான் விசாரித்தேன். கிழ‌விக‌ளில் ஒருத்தி மூக்கைச் சிந்தினாள்.

"அப்ப‌டியொண்ணும் சொல்ல‌க்கூடாது ம‌க‌னே. இக‌லோக‌ம் விடுவ‌து அத்த‌னை சுல‌ப‌ம‌ல்ல‌. மாயையின் க‌ட்டு அப்ப‌டி முறுகி முறுகிக் கிட‌க்கும். அவுத்தாலும் அவுறாது. வெட்டினாலும் முறியாது."

நான் கிழ‌வியின்ப‌க்க‌த்தில் குத்தியிட்ட‌ம‌ர்ந்து மெல்ல‌ அழைத்தேன். "கார்த்துப்பாட்டி."

ப‌ல‌முறைக‌ள் கூப்பிட்ட‌தும் அவ‌ள் கண்ணைத் திற‌ந்தாள்.

"நீங்க‌ எப்போ சாவீங்க‌?" நான் கேட்டேன்.

"ப‌க‌வான் கூப்பிட‌ற‌போது ம‌க‌னே.." அவ‌ள் முணுமுணுத்தாள்.

"சாக‌ இஷ்ட‌மா?"

"இல்லை ம‌க‌னே, ப‌வானியோட‌ பொண்ணு க‌ல்யாண‌மும் பார்க்காம‌ எப்ப‌டி....?"

"பின்னே நான் சாவேன்னு சொன்ன‌து?"

"நீயும் சாவே. ரொம்ப‌த் தாம‌தியாது. ம‌க‌ன் என்கூட‌ வ‌ருவே. நான் கொண்டுபோவேன்."

கார்த்துப் பாட்டியின் க‌ண்க‌ள் கூர்த்துப் ப‌ள‌பளத்த‌ன‌ அவ‌ற்றில் மிக‌ப் பெரிய‌ ஒரு ச‌க்தி இருந்த‌து. அது என்னை‌ ந‌டுக்கிய‌து. கிழ‌வி மீண்டும் எனது ம‌ர‌ண‌த்தை வ‌ருவ‌துரைக்கிறாள். என‌க்கு அங்கேயிருந்து ஓடித் த‌ப்ப‌வேண்டுமென்று தோன்றிய‌து. பிற‌ந்த‌போது இற‌க்க‌ ப‌ய‌ மில்லையென்று கூறிய‌ என‌க்கு இப்போது ப‌ய‌முண்டாகிற‌து. என‌க்குப் பாட்டியிட‌ம் என்ன‌வெல்லாமோ கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டு மென்றிருந்த‌து.

நான் என்று இற‌ப்பேன்? எப்ப‌டி இற‌ப்பேன்?

அப்போது கார்த்துவின் உட‌ல் ச‌ற்று விறைத்த‌து. த‌லை ச‌ரிந்த‌து. வாய் பிள‌ந்த‌து.

அதோடு வெளியே ஒரு கால‌ன்கோழி நீட்டிக்கூவிய‌து. நான் ந‌டுங்கினேன். ம‌ற்ற‌க் கால‌ன்கோழிக‌ள் அதைத் தொட‌ர்ந்து கூவின‌.

அத்தோட்ட‌ம் முழுவ‌தும் கால‌னின் ச‌ங்கு அழைப்புக்க‌ள் முழ‌ங்கின‌. பாட்டியின் க‌ண்க‌ள் பாதி திற‌ந்து கிட‌க்கின்ற‌ன‌. கிழ‌விக‌ள் எழுந்து நின்று க‌ண்க‌ளைத் துடைத்துக்கொண்டார்க‌ள். அட‌க்கிய‌ குர‌லில் தேம்பினார்க‌ள். வ‌ர‌ந்தாவில‌ம‌ர்ந்து பீடி குடித்துக் கொண்டிருந்த‌ பிள்ளைக‌ள் ஓடிவ‌ந்தார்க‌ள்.

சிரிப்பாணி ராம‌ன் நாய‌ர் வாட்சைப் பார்த்து நிம்ம‌தியோடு பெருமூச்செறிந்தான்.

ஒரு ப‌ய‌க் க‌ன‌வு க‌ண்டு விழித்தாற்போல‌ என‌து உட‌ம்பு த‌ள‌ர்ந்திருந்த‌து. நான் சாவேனென்று சொன்ன‌ கார்த்து என்ற‌ ம‌ருத்துவ‌ச்சி செத்திருக்கிறாள். அதோடு அந்த‌ இர‌க‌சிய‌மும் செத்திருக்கிற‌து.

இனிமேல் எனக்கு அதைப்பற்றி யாரிடமும் கேட்க முடியாது. யாராலும் எனக்கு அதைத் தெரிவிக்க முடியாது.

நான் நடந்தேன் நினைவுகளின் அந்திநேரம் நோக்கி…

பத்தாம் பிறந்த நாளில்…

மழை பெய்து குளிர்ந்திருந்த ஒரு மாலைப்பொழுதில் ஸ்கூல் விட்டு வரும்போது கோட்டைக் குன்றின் சரிவில் என்னை யாரோ அழைத்தார்கள்.

“அப்புக்குட்டா…”

நான் சுற்றிலும் நோக்கினேன். ஆளில்லை. அசைவுமில்லை. இரவு கட்டவிழ்ந்து விழப்போகிறது. கோவில் பந்தலின் கீழே குழந்தைகள் விளையாடுமிடம் காலியாகக் கிடக்கிறது. முந்திரி மரத்திலிருந்து இப் போதும் நீர்த்துளிகள் தெறித்து விழுகின்றன. கொஞ்சம் பயம் உண்டாயிற்று. மழை பெய்து இருண்ட அந்தி வேளை. வேகமாக நடக்க வில்லையென்றால் இருட்டின் இந்தச் சேற்றுக்குழியில் புதைந்து போவேன். அப்படி அவசரம் கூடி நடக்கும்போது,

மீண்டும் அந்த ஒலி…

“அப்புக்குட்டா…”

இம் முறை கண்டுபிடித்துவிட்டேன். முந்திரி மரத்தின் கிளையில் ஒரு கருப்புப் பறவை உதடுகள் மலர்த்தி அழைக்கிறது. நான் சட்டென்று திரும்பி நின்று கேட்டேன்.

“என்ன வேணும்?”

“என்னை நினைவிருக்கா?”

“இல்லை.”

“இல்லையா? இன்னும் கொஞ்சம் யோசிச்சுப்பாரு.”

“கொஞ்சம்கூட நினைவில்லை”

பறவை அலகை விரித்து உரக்க கோரம் மிளிரச் சிரித்தது. அதே சமயத்தில் முந்திரித்தோப்பில் மழை சொரிந்தது. கூட்டமாகக் குருவிகள் கூவிக்கொண்டு பறந்துபோயின. மழைத்துளிகளின் அடிபட்டு இலைகள் உதிர்ந்து விழுந்தன. மேலிருந்து சீறிவந்த காற்றில் இலைகள் பறந்து நடந்தன. நான் முழுக்க நினைந்துவிட்டேன். குளிர்ந்து விறைத்தது. பற்கள் கிட்டித்தன.

“என்னை நினைவில்லை. இல்லியா… ஹ...ஹ…ஹ… உனக்குப் பிறவி கொடுத்தது நானல்லவா? அதை மறந்து போனாயா?”

பயந்து மிரண்டு குரலெழுப்ப இயலாமல் நான் நின்றேன். மழையிலிருந்து, கோட்டைக்குன்றின் காற்றிலிருந்து, கருப்புப் பறவையிடமிருந்து தப்புவதற்காக ஒரு மரத்தடியில் புகலிடம் தேடும்போது நான் அந்தக் குரலை இன்னொரு முறை கேட்டேன்.

“அப்புக்குட்டா… இன்னொரு தடவை பாரு…”

நான் பார்த்தேன்.

பறவையின் நீண்ட காதுகளில் தோடுகள் ஆடுகின்றன. வெற்றிலைச் சிவப்பேறிய உதடுகளுக்குமேல் சுருக்கங்கள் விழுந்து மடங்கின தோல்.

எனது நினைவுகள் மீண்டும் என்னைச் சிறைப்படுத்திப் பணியவைத்தன.

“அப்புக்குட்டா, வா. உன்னை நான் கொண்டு போகிறேன்.”

“வேண்டாம், …. வேண்டாம்.” நான் ஓடினேன். திரும்பிப் பார்க்காமல் ஓடினேன். அப்போதும் பின்னால் கோரமான அந்தச் சிரிப்புக் கேட்டுக்கொண்டிருந்தது.

“தப்பிக்கப் பார்க்க வேண்டாம். நான் இன்னும் வருவேன்…”

வீட்டை யடைந்தபோது எனது வாயிலிருந்து நுரை தள்ளியிருந்தது. நான் சோர்ந்து விழுந்தேன். அந்தக் கிடப்பில் மூன்று நாள் கிடந்தேன். சுட்டுப் பொரிக்கும் ஜுரம். பயக்கோளாரென்று அம்மா சொன்னால். அவள் விம்மியழுதாள்.

அவ்வாறாக கோபால ஜோஸ்யன் வந்தான். கோணக்கண் கோபால ஜோஸ்யன். அவன் ராசி பார்த்தான். சோழி பரப்பினான். எனது கிரகங்களின் இயக்கங்கள் அவன் சொல்படியாயின. அவை அவனது மனதில் களங்கள் சமைத்தன. அவன் அக் களங்களை நிலத்திற்கு மாற்றினான். இறந்து போனவர்களையும் கருப்புப் பறவைகளையும் வேட்டையாடினான். சந்தோஷப்படுத்தினான். பயமுறுத்தினான்.

கடைசியில் எனக்குத் தெரிந்தது.

“ஆயுள் நல்லா இல்லை. கடைசின்னு கூடச் சொல்லலாம். இன்றைக்கு இல்லாவிட்டால் நாளை”

அம்மா விசித்து அழுதாள். நோன்பிருந்து வயிற்றில் முளைத்த குருத்துக்கு இவ் வுலக வாழ்க்கை எவ்வளவென்று திட்டமில்லை. அவன் விடைபெற்றுக்கொள்ள விருக்கிறான். இன்றில்லாவிட்டால் நாளை ஒரு அகால மரணம்.

கார்த்து என்ற மருத்துவச்சி சொன்னது சரிதான்.

முந்திரித்தோப்பில் கறுப்புப் பறவை சொன்னது சரிதான்.

இன்றில்லாவிட்டால் நாளை… அதிகம் தாமதமாகாது.

நான் என் நிமிடங்களை எண்ணினேன். என் நிமிடங்கள் ஈசல்களைப் போல வெடித்து முளைத்தன. பறந்து திரிந்து உதிர்ந்து விழுந்தன.

தரையில்தான் ஆபத்து உண்டாகும். கோபால ஜோஸ்யன் உறுதி யாகச் சொன்னான். நீரில் நிலைமை பத்ரமே.

அது முதல் நான் சிறைப்பட்டேன். காவல்கார்கள் உண்டானார்கள். ஸ்கூலுக்குப் போகும்போது பக்கத்து வீடுகளிலிருந்து இரு பிள்ளைகள் இருபுற‌மும் காவ‌ல். விடும‌றை நாட்க‌ளில் காரிய‌ஸ்த‌ன் ச‌ங்குணி நாய‌ரின் சிவ‌ந்த‌ க‌ண்க‌ள் என்னைச் சுற்றிலும். ம‌ர‌மேற‌ச் ச‌ற்றும் அனும‌தியில்லை. ப‌லாவிலும், மாவிலும், கொய்யாவிலும் ஆப‌த்துப் ப‌துங்கிக் கிட‌க்கிற‌து. நீரில் சுத‌ந்திர‌ம். குளிக்க‌லாம். நீந்த‌லாம். குதிக்க‌லாம்.

அப்ப‌டியே நான் மீண்டும் சுற்றினேன். பிள்ளைப‌ருவ‌த்தின் முடிவை நோக்கி, நினைவுக‌ளின் அந்தியை நோக்கி....

ப‌தினைந்தாம் பிற‌ந்த‌ நாள‌ன்று.......

அன்றொரு பிச்சைக்கார‌ன் என்னைத் தேடிவ‌ந்தான். அழைக்காத‌ விருந்தாளியாக் வ‌ந்து சேர்ந்தான். முன் முற்ற‌துத் த‌ரையில் க‌ளைத் த‌ம‌ர்ந்தான். மூட்டையை இற‌க்கி வைத்தான். அவ்ன் நெற்றி முழுவ‌தும் விபூதி பூசியிருந்தான். ந‌டுவில் ஒரு பெரிய‌ குங்கும‌ப்பொட்டு இட்டிருந்தான். அவ‌னுக்குச் சிவ‌ப்புக் க‌டுக்க‌னும் சிவ‌ந்த‌ முக‌மும் சிவ‌ந்த‌ உத‌டுக‌ளுமிருந்த‌ன‌.

"நினைவிருக்கா?" என் முக‌த்தைக் கூர்ந்து நோக்கிக்கொண்டு ஒரு விஷ‌ம‌ச் சிரிப்புட‌ன் அவ‌ன் கேட்டான்.”

"இல்லை."

"ஞாப‌க‌ப்ப‌டுத்திப் பாரு..."

"இல்லை, கொஞ்ச‌ங்கூட இல்லை."

"ஹ‌....ஹ‌...ஹ‌.."

அவ‌ன் தனது பையிலிருந்து ஒரு சிட்டிகை விபூதியெடுத்து என் முக‌த்தில் ஊதினான். என் க‌ண்க‌ள் ப‌த‌றின‌. முக‌ம் போராடிய‌து. என் நினைவுக‌ள் வ‌ருட‌ங்க‌ளின் வாழைப் பாளைக‌ளைக் கிழித்துப் பிள‌ந்து கொண்டு வெளியேறின‌.

அப்போது அம் முக‌த்தில் நான் கார்த்து என்ற‌ ம‌ருத்துவ‌ச்சியைக் க‌ண்டேன். வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு அந்த‌ச் சிறு குடிசையில் பாயில் க‌ண்ட அதே முக‌ம். விபூதி பூசிய‌ முக‌ம். பாதி மூடின‌ க‌ண்க‌ள்.... அவ‌ன் என் முக‌த்தை ஊடுருவி நோக்கினான். என் க‌ண்க‌ளை அவ‌னுடைய‌ க‌ண்க‌ளில் கோர்த்தான். அவ‌ற்றின் காந்த‌ ச‌க்தியில் நான் ம‌ய‌ங்கினேன்.

"இப்போ நினைவிருக்கா?"

"ம்."

"என்றைக்கு, எங்கே?"

வ‌ருஷ‌ங்க‌ளாச்சு.. ஜ‌ன்ம‌ங்களாயிடுச்சு."

எங்க‌ள் க‌ண்க‌ள் இர‌க‌சிய‌மான‌ ஓர் ச‌ம்பாஷணையில் ஈடுப‌ட்ட‌ன‌. கார்த்துப் பாட்டியின் கிணுகிணுவென்ற‌ குர‌லை நான் மீண்டும் கேட்டேன். என‌க்கு இன்னுமொருமுறை நினைவுப‌டுத்த‌ அவ‌ள் வ‌ந்திருக்கிறாள். கிழ‌வியின் க‌ரிநாக்கு ஒரு சாப‌த்தின் ச‌ங்கிலியாக‌ என் பின்னால் நீண்டு வ‌ருகிற‌து.

பிற‌ந்த‌வுட‌னே என் ம‌ர‌ண‌த்தைக் குறித்து அவ‌ள் சொன்னாள். இற‌க்கும் முன்பு இன்னொரு மு‌றை நினைவுப‌டுத்தினாள்.

இதோ இப்போது இன்னொரு நினவுபடுத்த‌ல்.

கார்த்து என்ற‌ ம‌ருத்துவ‌ச்சியின் நிழ‌ல் என் வாழ்க்கையில் ப‌டிந்து கிட‌க்கிற‌து. என் வாழ்க்கையின் நீள‌த்தை நிச்ச‌யிக்க‌ அவ‌ளுக்கு உரிமையுண்டு. அவ‌ள்தான் என‌க்கு வாழ்வு த‌ந்தாள். அவ‌ள் உத‌வி செய்யாம‌ லிருந்தால் அம்மா ஒருபோதும் என்னைப் பிர‌ச‌வித்திருக்க‌மாட்டாள். அம்மாவின் பெரிய‌ வ‌யிற்றில் மூச்சு முட்ட‌க் கிட‌ந்து, வீங்கி, சுருங்கிச் சுருங்கி நான் ஒரு கெட்ட‌ விதையாக‌ ந‌சித்துப்போயிருப்பேன்.

பிச்சைக்கார‌ன் ப‌ரிகாச‌த்தொனியில் சிரித்தான். அவ‌ன் கையைச் சொட‌க்கிக் கூப்பிட்டான்.

"என்னோட‌ வ‌ரியா?"

"இல்லையில்லை."

"பின்னே, எப்போ?"

"ப‌த்தாம் கிளாஸ் ரிஸ‌‌ல்ட் தெரிய‌ட்டும்."

"உம்...நான் அப்போ வ‌ருவேன். நினைவிருக்க‌ட்டும்."

வேண்டாம். வேண்டாம். இனியொருபோதும் நீங்க‌ள் இங்கே வ‌ர‌ வேண்டாம். என‌க்கு உங்க‌ளுடைய‌ அசிங்க‌மான‌ முக‌த்தைப் பார்க்க வேண்டாம். கார்த்துக் கிழ‌வியான‌ நீங்க‌ள் ஒருமுறை ஒரு க‌ருப்புப் ப‌ற‌வையாகி முந்திரித் தோப்பில் வ‌ந்த‌ம‌ர்ந்தீர்க‌ள். இதோ இப்போது ஒரு பிச்சைக்கார‌னாக‌ உருவ‌ம் மாறியிருக்கிறீர்க‌ள். இந்த‌ப் ப‌டியில் இனிமேல் ஏறாதீர்க‌ள். நான் அழுது க‌லாட்டா ப‌ண்ணுவேன். ஆட்க‌ள் சேர்ந்து உங்க‌ளை உதைத்துக் கொன்றுவிடுவார்க‌ள்.

"ஹ‌...ஹ‌..ஹ‌.." அவ‌னுடைய‌ உர‌த்த‌ சிரிப்பு அந்த‌த் தோட்ட‌ம் முழுவ‌தும் கிட‌ந்து முழ‌ங்கிய‌து. ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு அந்‌த‌ச் சிறிய‌ குடிசையில் கேட்ட‌ அதே கிணுகிணுவென்ற‌ ச‌ப்த‌ம். வெளியே கால‌ன்கோழிக‌ள் தொட‌ர்ந்து ஒலித்த‌ன‌. கால‌னின் ச‌ங்குக்கூவ‌ல். எருமையின் அழைப்பு.

நான் உர‌க்க‌ ஓல‌மிட்டேன்.

அம்மா ஓடி வ‌ந்தாள். அக்காமார்க‌ள் ஓடி வ‌ந்த‌ன‌ர்.

"என்ன‌ அப்புக்குட்டா?"

"பிச்சைக்கார‌ன்... பிச்சைக்கார‌ன்" நான் வாச‌ற்ப‌டியைச் சுட்டிக் காட்டினேன்.

"எங்கே பிச்சைக்கார‌ன்?"

கேட் திற‌ந்து கிட‌ந்தது. அவ‌ன் போய்விட்டிருந்தான்.

"எதையாவ‌து பார்த்து ப‌ய‌ந்திருப்பான். இப்ப‌டியொரு ப‌ய‌ந்தாங் கொள்ளியை நான் பார்த்த‌தில்லை. நான் உடல் முழுக்க நடுங்கிக்கொண்டிருந்தேன். நினைவுகள் எனக் கொரு சாபமாயின.

நான் மீண்டும் நடந்தேன் நினைவுகளின் அந்திநேரம் நோக்கி.. எனது நிமிடங்கள் உதிர்ந்து விழுந்துகொண்டிருக்கின்றன. வாடிய பூக்களைப் போல, பழுத்த இலைகளைப்போல, புழுத்துளைகளேற்ற நினைவுகளுடன் பிள்ளைப்பருவத்தின் அந்திகளில் நான் அலைந்து நடந்தேன்.

ஸ்கூலிலிருந்து காலேஜில் சேர்ந்தேன். நிக்கர் மாறி வேஷ்டி வந்தது. முகத்தில் பளபளப்புண்டாயிற்று. மூக்கின் கீழே மயிர் அரும்பியது.

அதோடு சற்றுக் கருக்கவும் தொடங்கின. மரணமாம் மரணம். வரட்டும் ஒரு கை பார்க்கலாம்.

இதற்கிடையில் அம்மா ஒரு புதிய ஜோஸ்யனைப் பார்த்தாள். ஒரு புதிய செய்தி கிடைத்தது. தரையிலல்ல. தண்ணீரில்தான் ஆபத்து உண்டாகும். அதனால் நீரில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எவ்வளவு பெரியவனாக ஆனாலும் தண்ணீரில் தனியாக விடாதீர்கள். நீர்ப்பிசாசின் மோக வலையில் சிக்கினால் ஆற்றில் முழங்கால் தண்ணீர் கூடப் போதும். அவள் பிடித்திழுத்து உள்ளுக்குள் கொண்டுபோய் விடுவாள்.

நான் ஆற்றில் குளிப்பதை நிறுத்தினேன். ஆனால் மரமேற அனுமதி கிட்டிய‌து.

இருபதாம் பிறந்த நாளன்று...

அன்றுதான் நான் சாமியாடியின் மகள் ராதை என்ற பெண்ணோடு அறிமுகமானேன். அவளுக்குக் கருமையான முகமும், அதில் முகப்பருக்களும், பொங்கும் இளமையும் இருந்தன. வீட்டுத் தோட்டத்தைத் தாண்டி, காளித் தோப்பைத் தாண்டி, உடைந்த கல் தரைகளுக்குப் பின்னால், நதிக்கரையில் நாங்கள் தினமும் அந்தி நேரத்தில் சந்தித்தோம். அப்போதுதான் ராதை குளிக்க வருவாள். ஆள் நடமாட்டமில்லாத நதியோரம். வாளிப்பான உடலமைந்த ராதை. இடுப்புவரை நீரில் மார்க்கச்சையுடன் நின்று அவள் குளிப்பாள். நான் கரையில் காத்திருப்பேன். எனக்கு நீரிலிறங்க அனுமதியில்லை. என் மரணம் தண்ணீரில்தான். எனக்கும் ராதைக்கும் நடுவில் ஒரு வரம்பு இருந்தது. நீரின் தெளிந்த ஓர் ரேகை. அதைத் தாண்டினால் மரணம்.

கள்ளச்சிரிப்புடன், நனைந்து ஒட்டிய ஆடைகளுடன் அவள் தண்ணீரிலிருந்து என்னைச் சைகை காட்டி அழைப்பாள். அவளுடைய கண்வீச்சில் இளகிப்போய்விடாமலிருப்பதற்காக நான் கரையில் பற்றிப்பிடித் தமர்ந்திருப்பேன். குளித்து முடித்து என் பக்கம் திரும்பிப் பார்க்காமலேயே அவள் ஓடிப்போவாள். அவளுக்கு நீரில்தான் நான் தேவை. கரையில் நான் வேண்டாம்.

ஒரு மாலையில் முதன்முதலாக அவள் மார்க்கச்சையை அவிழ்த்த போது நான் வரம்புக்கோட்டைக் கடந்தேன்.

ஆற்றங்கரையில் மணல்பரப்பில் ராதை மூச்சுத்திணற மல்லாந்து கிடந்தாள். நாங்கள் கட்டியணைத்துப் படுத்து உருண்டோம். என் உடலின் வெப்பத்தில். அவள் திளைத்துக்கொண்டிருந்தாள். எங்கள் அன்பின் ஊற்றுக்கள் வெடித்துக் கலங்கின. ஒரு தண்ணீர்ப் பிசாசைப் போல அவள் தண்ணீரை நோக்கி உருண்டு உருண்டு போனாள். பின்னாலேயே நானும்.

முதல் புணர்ச்சியின் லாகிரியில் அவள் தண்ணீரை நெருங்கித் தாவினாள். அங்கே கிடந்து வெறியுண்டாள். நீர்ப் பூக்குற்றி மத்தாப்புக்களாகச் சிதறின. அவளுடைய முகத்தை எனக்குப் பார்க்க முடியவில்லை. ஆனாலும் அவளது கிளர்ச்சியுற்ற மூச்சிறைப்பும் சிரிப்பும் எனக்குக் கேட்டன. அந்திநேரத்தின் கடைசி வெளிச்சமும் நீரில் கரைந்து போய் விட்டிருந்தது. மங்கிய இருளில் கரிய நீர்மட்டும் சிதறித் தெறித்துக்கொண்டிருந்தது. திருப்தியடையாத நான் வரம்பைக் கடந்து நீருக்குள் போனேன். கைகளைச் சுழற்றி அவளுக்காகத் துழாவிக்கொண்டு இழைந்தேன்.

இருட்டில் என் கண்கள் மங்கின.

"அப்புக்குட்டா, நினைவிருக்கா?" நீர்ப்பிளவுகளினிடையோடு அந்தக் குரலை நான் கேட்டேன்.

நான் நடுங்கினேன். இதோ என் நிமிடம். எனக்காக வேட்டை யாடியிருந்த நிமிடம்.

தண்ணீரின் கரிய பூக்குற்றிகள் கண்முன்னால் சிதறின. முகத்தில் கூர்மையான துளிகள் வந்து விழுந்தன.

"அப்புக்குட்டா வரியா?" ஸ்திரீயின் கிணுகிணுத்த குரல்.

"ஹ.....ஹ....ஹ....."

நான் அடிமுடி நடுங்கினேன். தலை பெருத்தது. கைகளில் பிசாசின் சக்தி சுரந்து குறுகுறுத்தது. இல்லை, இனிமேல் அதைத் திருப்பிச் செய்யக்கூடாது. கார்த்து என்ற மருத்துவச்சியாக, கருப்புப் பறவையாக, பிச்சைக்காரனாக, ராதை என்னும் தண்ணீர்ப் பிசாசாக.....

இல்லை.

இல்லை.

இல்லை.

சித்தமிழந்த வெறியோடு நான் முன்னால் குதித்தேன். தண்ணீரின் வாழைமடல்களைப் பிளந்து போனேன். கருப்புப் பறவையின் கழுத்து நெரிந்தது. ஒரு அழுகை பாதியிலேயே உடைந்தது. பெருத்த தலையுடன் ஓடிக் கரையில் ஏறியபோது நான் முழுதும் விறைத்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் எனக்கு நிம்மதி உண்டாயிற்று. நான் மரணத்தின் வேரறுத்துக் களைத்திருக்கிறேன். என்னைப் பின் தொடர்ந்துகொண்டிருந்த நிழலைப் பிளந்து எறிந்திருக்கிறேன்...

அப்படி நிம்மதியாக இருக்கையில் நேற்று எனது வக்கீல் வந்தார். கம்பிகளுக்கு அந்தப்பக்கம் நின்று இரு தத்துவச் சிந்தையின் பகுதிபோல அவர் சொன்னார் : மரணத்திலிருந்து தப்புவது இயலாதென்று. கடைசி மனுவும் புறக்கணிக்கப்பட்டுவிட்டது.

நேற்றிரவு கார்த்து என்ற மருத்துவச்சியின் கிணுகிணுவென்ற குரலை நான் மீண்டும் கேட்டேன். கம்பிகளுக்கு வெளியேயிருந்து சுவர்களுக்கு அந்தப்புறத்திலிருந்து அது என்னைத் தேடி வந்தது.

"அப்புக்குட்டா, என்னோட வரியா?"

"ஆமாம்..ஆமாம்" நான் உரக்கச் சொன்னேன்.
---------------------

14. இயேசுபுரம் பப்ளிக் லைப்ரரியைப்பற்றி ஒரு குற்றச்சாட்டு


ஸார்,

எத்தனையோ நூற்றாண்டுகள் பழையதான பெரிய ஸ்தாபனமாகும் இயேசுபுரம் பப்ளிக் லைப்ரரி. இந்த நிறுவனம் இன்று தகர்ந்துபோய்க் கொண்டிருக்கின்றது. இன்றைய நிலை தொடர்ந்தால் இது சீக்கிரமே அழியும். அதிகாரிகளுடையவும் பொது ஜனங்களுடையவும் உடனடி கவனத்திற்காக இயேசுபுரம் பப்ளிக் லைப்ரரி சம்பந்தமான சில விஷயங்களை நான் எடுத்து வைக்கிறேன்.

நான் லைப்ரரியின் ஒரு ஆயுள் மெம்பர். அதாவது நான் இறக்கும் வரை இந்த லைப்ரரியில் உறுப்பினனாயிருப்பேன். ஒரு நாள் நான் இறந்துபோவேன். ஆனால், இந்த லைப்ரரி இறந்து போகக் கூடாது. அது தொடரவேண்டும். இயேசுபுரம் லைப்ரரியில் பல ஆயுள் உறுப் பினர்கள் இருக்கிறார்கள். அவர்களிலொருவன் என்ற முறையில் நான் அவர்களையும் என்னையும் பாதிக்கும் ஒரு முக்கியப் பிரச்னையை முதலாவதாக எடுத்துக் கூறுகிறேன். என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். இந்த லைப்ரரியின் எதிர்காலம் எனது வாழ்க்கைப் பிரச்னை. நான் இங்கே ஆயுட்கால உறுப்பினனாக ஆன நிமிடம் முதல் எனது ஆயுளுக்கும் இந்த லைப்ரரிக்கும் பிரிக்க முடியாத ஒரு உறவு உருவாக்கப்பட்டு விட்டிருக்கிறது. வெளிப்படையாகச் சொல்கிறேன். இந்த லைப்ரரி இல்லையென்றால் அதனோடு ஒரு தொப்புள் கொடியால் பிணைக்கப் பட்டதுபோல சம்பந்தமுள்ள நான் - மற்ற ஆயுட்கால அங்கத்தினர்களும் நிலைநிற்போம் என்பது என்ன நிச்சயம்? எனக்கு முடிந்த அளவு நாட்கள் அதிகம் வாழ்ந்தால் பரவாயில்லை என்று தோன்றுகிறது. நாமெல்லாம் மரணத்திடம் பயப்படுகிறோம். இந்த லைப்ரரிக்கு நாசம் நேர்ந்தால் இதனுடைய ஆயுள் மெம்பர்களுக்கு என்ன சம்பவிக்கும் என்று நீங்கள் கருணையுடன் சிந்திக்கவேண்டுமென்று நான் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.

இயேசுபுரம் லைப்ரரியின் சாதரண அங்கத்தினர்களுக்குப் பிரத்யேகமாக ஓர் விண்ணப்பமுண்டு. நீங்கள் பாதுகாப்புள்ளவர்கள். ஆனால், அதனால் நீங்கள் எங்களை மறக்கக் கூடாது. உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் லைப்ரரியிலிருந்து விடுபட உரிமையுண்டு. இன்னொரு மாதம்கூட அங்கத்தினராகச் சேர உரிமையுண்டு. ஆனால் நாங்கள் உரிமைகளற்றவர்கள். எங்கள் வாழ்க்கை இயேசுபுரம் லைப்ரரியின் வாழ்க்கையோடு ஒட்டிப் பிணைந்திருக்கிறது. இயேசுபுரம் லைப்ரரி நிலைத்திருக்கவேண்டியது எங்களுடைய முக்கிய‌த் தேவை. சமீபத்தில் நான் ஆயுட்கால அங்கத்தினர்களின் கூட்டமொன்றைக் கூட்டியிருந்தேன். இக்கூட்டத்தில் லைப்ரரியோடு சம்பந்தமில்லாத பொது ஜனங்களும் லைப்ரரியின் சாதாரண உறுப்பின‌ர்களும் பார்வையாளர்களாகப் பங்கெடுத்திருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். இயேசுபுரம் லைப்ரரியின் இடர்மிகு எதிர்காலம் எங்கள் முகங்களில் எழுதி வைத்திருக்கும் பீதியையும், கடுந்துக்கத்தையும், குழப்பத்தையும் நீங்கள் பார்த்திருந்தால் வெறும் காருண்யத்தின்பேரிலாவது இந்த லைப்ரரி அழிய அனுமதிக்கப்படமாட்டாது.

ஆயுட்கால உறுப்பினர்களின் இந்தக் கூட்டத்தில் நடந்த சர்ச்சைகளில் ஒரு பகுதி எடுத்துக்கூறிய குறிபிட்ட விஷயம் உண்டு. இதை ஒரு பிரதான விஷயமாக நான் கருதுகிறேன். அதாவது, இந்த லைப்ரரி எக்காலமும் நிலைக்குமென்றால் ஆயுட்கால உறுபினர்களாகிய நாங்களும் இதனுடன் சேர்ந்து நிலைக்க மாட்டோமென்று சொல்ல முடியுமா? நம் லைப்ரரியின் உறுப்பினர்களில் வயதாலும் அறிவாலும் மூத்தவராகக் கருதப்படக்கூடிய ஒருவரே இந்த அபிப்ராயத்தை முன்னால் வைத்தார். உடலாலும் மனதாலும் ஆயத்தங்களுடன் ஆயுட்கால உறுப்பினர்களாகிய நாங்கள் முயன்றால், ஒருவேளை, இந்த லைப்ரரியுடன் சேர்ந்து நாங்களும் எக்காலமும் தொடரமாட்டோமென யார் கண்டார்கள்? இப்படியொரு தீர பரிசோதனை நடத்த நாங்கள் தயார். ஆனால் முதலில் லைப்ரரிதான் நிலைநிற்கவேண்டி யிருக்கிறது.

ஆனால் என்னையொரு சுயநலமியாகவும், இந்த லைப்ரரியின் மற்ற ஆயுட்கால உறுப்பினர்களையெல்லாம் ஒரு சுயநல‌க் கூட்டத்தினராயும் நீங்கள் தயவுசெய்து கருத வேண்டாம். நாங்கள் உங்கள் எல்லாரையும் போல வாழ்க்கையின் நிச்சயமின்யைப்பற்றிப் பீதி கொண்ட மனிதர்களே. எங்களுக்குப் பிரத்யேகமான ஒரு காரணம் இருக்கிறது, அவ்வளவுதான். லைப்ரரி நிலைக்க வேண்டுமென்ற எங்கள் வேட்கை, சாப்பிடவும், வியாதி குணமாகவுமான உங்கள் விருப்பங்களைப்போலத்தான் என்று கருதுங்கள். இல்லையென்றாகவிருப்பதைப் பற்றி ப‌யம் யாருக்குத்தானில்லை? நீங்களும் எதனுடையவாவது ஆயுட்கால அங்கத் தினராக இருப்பீர்களானால் எங்களை அதிகமாகப் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் வாழ்க்கையின் ஆயுட்கால அங்கத்தினர்கள் மட்டுமேயல்லவோ. உங்கள் உறுப்பினர் நிலை முடிகிற நாள் எதிர்காலத்தில் தூர எங்கேயோ ஒளித்துவைக்கப்ட்டிருக்கிறது. உங்களுக்கு அதை சௌகர்யமாக மறந்துவிடலாம். ஆனால் எங்கள் விஷயம் அப்படியல்ல. டாக்டர் மரணத்தைக் குறித்துவிட்ட வியாதியஸ்தனைப்போல நாங்கள். நோயாளியின் வாழ்க்கையைப்போல இந்த லைப்ரரி அழிந்துகொண்டிருக்கிறது. இது அழிந்தால் எங்களுக்கு என்ன நேரும்? நோயாளிகளுக்கு மரணமாவது நிச்சயம். எங்களுக்கோ? ஒன்றும் தெரியாத இந்த நிலைதான் குரூரம்.

இயேசுபுரத்தின் பப்ளிக் லைப்ரரியின் அழிவு அதனுள் பலவிதங்களில் பாதைகளைத் திறந்து பிரவேசித்துவிட்டிருக்கிறது. புத்தகம் கொடுக்கிற பகுதியை எடுத்துக்கொள்ளுங்கள். இவ்விடம் ஒரு பைத்தியம் பிடித்த பெரிய புத்தகக் குவியல். அலமாரிகளில் வைத்திருக்கும் புத்தகங்களுக்கிடையில் எவ்வித சம்பந்தமுமில்லை. எழுத்து வரிசையையோ, விஷயத்தையோ, ஏன் அளவையோ, நிறத்தையோ அனுசரித்துக்கூட இயேசுபுரம் லைப்ரரியில் புத்தகங்களுக்குள் யாதொரு உறவுமில்லை. ஒரு புத்தகத்திற்கும் மற்றொரு புத்தகத்திற்குமிடையிலுள்ள‌ பந்தம், அவற்றை அந்தந்த ஸ்தானங்களில் வைக்கும் ப்யூனின் அந்தந்த நேரத்தில் தோன்றிய உணர்வற்ற நினைப்புக்களை மட்டுமே பொறுத்தது. ஆனாலும் பல தடவைகள் நான் ஒரே பொருளைச் சம்பந்தித்த, அல்ல‌து ஒரே படைப்பாளியினுடைய, ஒன்றுமில்லா விட்டால் ஒரே பிரசுரகர்த்தர் பிரசுரித்த இரண்டு புத்தகங்களை அருகருகே பார்த்ததுண்டு. ஆமாம், ஆனால் இது நம் வாழ்க்கையில் காணப்படும் விதியின் எதிர்பாராத அற்புதங்களைப் போன்ற அற்புதங்கள் மட்டும்தான். ஏதோ ஒரு அலமாரியில் ஒரு தடவை சஞ்சயனின் ஒன்றாம், ஐந்தாம் வால்யூம்கள் அடுத்தடுத்து இருப்பதைக் காண நேரிட்டபோது உண்டான பெருமகிழ்ச்சியை நான் இன்றும் நினைவுகூர்கிறேன். மற்றொரு சந்தர்ப்பத்தில் ஷேக்ஸ்பியரின் இரு நாடகங்கள் அடுத் தடுத்து இருப்பதை நான் காண நேரிட்டது. ஒரு முறை இளைஞனாகிய ஒரு ப்யூன் ஒரே அள‌வும் ஒரே நிறமும் கொண்ட புத்தகங்களை ஒன்றாக அடுக்கி வைத்ததை நான் நினைவுகூர்கிறேன். அக்காலத்தில் ஷெல்ஃபுகளுக்கு ஏதோ ஓர் அழகு கை வந்திருந்தது. ஆனால், விரைவிலேயே, கொஞ்சம் கொஞ்சமாக, வேண்டும் என்றில்லாமல், அங்கத்தினர்களும் மற்ற ப்யூன்களுமாகச் சேர்ந்து இந்த அடுக்கை உடைத்தனர். தான் ஒருமுறை நிர்மாணித்த அழகைத் திருப்பிக் கொண்டு வர இளைஞனாகிய அந்த ப்யூன் திரும்பத் திரும்ப பலவித முயற்சிகளும் செய்தான். ஆனால் அவனுடைய வெற்றிகள் ஒவ்வொரு தடவையும் ஒன்றிரண்டு நாட்களுக்கு மேல் நீண்டிருந்ததில்லை. ஒரு நாள் அவன், ஏனென்று தெரியவில்லை, வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விட்டான்.

ஆனால் புத்தகப் பகுதியின் இக் குழம்பிய முறையைப்பற்றி வேறுவிதமாக சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களுடைய நோக்குநிலையிலும் சில எதிர்பாராத உண்மைகளுண்டு. காரணம் என்னவென்றால் இவர்களின் நோக்குநிலையில் இயேசுபுரம் லைப்ரரியின் ஒவ்வொரு அல மாரியும் ஒவ்வொரு உலகம். வெளியுலகின் எல்லா மாறுபாடுகளும் நிறைந்த காகிதம் - உடல் - உலகம். இது இயேசுபுரம் லைப்ரரியின் ஒரு சிறப்போ, குணமோ என எடுத்துக் காட்டலாம். வேறெந்த நூலகத்திலும் இப்படியொரு உலகப்பார்வை உங்களுக்குக் கிட்டியது என்று வராது. ஒரு அலமாரியின் ஏதாவதொரு புத்தகத்திற்காகத் தேடும் ஒருவன் தனது தேடலுக்கிடையில் என்னவெல்லாம் விஷயங்களுக்கும், அறிவுகளுக்கும், சாஸ்திரங்களுக்கும் எதிர்ப்படுகிறான்! தனக்குத் தெரிந்த விஷயத்திற்கு மேலும் விஷயங்களின் மகாசமுத்திரம் உண்டென்ற உணர்வை அவனுக்கு உண்டாக்கவாவது இந்த நிலைமை உதவுகிறது என்பதுதான் இந்தக்கூட்டத்தாருடைய வாதம். 'பூகோளவியல்' என்றெழுதி வைத்திருக்கும் அவமாரியில் நான் கண்டு பிடித்த புத்தகங்கள் கீழ்க்காணும் எல்லா விஷயங்களையும் பற்றியவை. வாழ்க்கைச் சரித்திரம், பயணக் கட்டுரை, பிராணியியல், இலக்கிய விமரிசனம், கணிதம், தத்துவவியல், இசை, சமுதாயவியல், சாமுத்திரிகா சாஸ்திரம், சிறுகதை, விவரணத் தாவர நூல், நகைச்சுவை, பல் மருத்துவம், பாலியல் அறிவு, நடனப்பயிற்சிகள், போர்த் தத்துவம், சரித்திரம், தெய்வ சாஸ்திரம், சுயசரிதை, ஆட்சிமுறைப் பாடங்கள், கிரிக்கெட், மாஜிக், வாழ்க்கை வெற்றி, மருத்துவம், நாடகம், இயற்கை வைத்தியம், மனத்தத்துவம், ஸர்க்கஸ், துப்பாக்கி சுடல், எஸ்க்கார்ட்டாலஜி என்ற இவ்விஷயங்கள் பூகோளவியலின் அலமாரியில் ஒன்றாக இருக்கின்றன. பூகோளவியல் மாத்திரம் இல்லை.

மேற்கூறிய ஒரு விசேஷப் பார்வையோடு பார்க்கையில் இந்தக் குழப்பத்தில் நன்மையும் காணலாம். என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள எனக்குத் தயக்கமில்லை. ஆனால் ஒருவனுக்கு ஒரு லைப்ரரியில் செலவழிக்கக் கிடைக்கு்ம் நேரம் எவ்வளவு சுருக்கமானது என்பதையும் நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். தனக்குக் கிடைத்திருக்கும் அற்ப நேரத்தில் ஒரேயொரு புத்தகத்திற்காக, தொடர்பில்லாத ஆயிரம் புத்தகங்களைத் தேடி, சம்பந்தமில்லாத ஆயிரம் புத்தகங்களுடையவும் விஷயங்களுடையவும் இடையில் அலையவேண்டி வருவதில் ஒரு குரூரம் இல்லையா? தனக்குக் கிடைத்திருக்கும் அற்ப நேரத்திற்குள் தனக்கு முக்கியமாக‌த் தேவையானதாகவும், தாம் குறிப்பாக விரும்பியதாகவும் ஒரு புத்தகதை எவ்வளவு விரைவில் கண்டுபிடிக்க முடியும் என்பதுதானே அவர்களுடைய ஒரே ஒரு குறிக்கோள்? நமக்கு விய‌ர்த்தமான இந்த விசாரிப்பில் நஷ்டமாகும் நேரத்தின் பரப்பை வைத்துப் பார்த்தால், அலமாரியில் மற்ற விஷயங்கள் எல்லாவற்றையும்கூட நம் பார்வைக்கு வைக்கும் உலக அறிவு மிகவும் முக்கியமற்றது என்பதே என் அபிப்பிராய‌ம். கடைசியில், தேடலுக்கெல்லாம் பிறகு நமக்கு அவசியமான புத்தகம் இவைகளுக்கிடையிலிருந்து கிடைக்காவிடில், ஒரு வேளை அதற்கு முன்பே லைப்ரரியின் நேரம் ஆகிவிட்டால் பரிச்சயமற்ற இவற்றையெல்லாம் பார்க்க முடிந்ததினால் மட்டும் நமக்கென்ன? உண்மையில், பல அங்கத்தினர்களும் இப்போது குறிப்பிட்ட எதையும் தேடுவதை நிறுத்தியிருக்கிறார்கள். அவர்கள் அலமாரிகளுக்கு நடுவில் இருபுறமும் கண்ணையோட்டிக்கொண்டு அலைந்து நடக்க மட்டுமே செய்கிறார்கள். எதிர்பாராத அற்புதத்தால் எதையாவது கண்டு பிடிக்காமலிருக்க மாட்டோம் என்ற ஆசையுடன். ஆனால் இத்ற்கு மிக அதிகமான நம்பிக்கையும், நல்ல எதிர்பார்ப்பும் வேண்டியிருக்கின்றன. இவை நம்மில் எத்தனை பேர்களுக்குண்டு?

மிகவும் குறுகிய நமது காலம் இவ்விதமாகப் பொருளற்றும் பலனற்றும் தேடலில் செலவாவது இயேசுபுரம் நூலகத்தினுடைய அழிவின் ஒரு போக்காகும். தேடல் தவிர்க்க முடியாதுதான். ஆனால் தேடுபவர்களுக்கு உதவுவதற்காக நிர்மாணித்திருக்கும் பொருட்களின் பெயர்கள் எழுதிய வழிகாட்டிகள் பாசாங்கு. ஆனால் அவற்றை நம்பித் தேடுபவனின் நிலை என்னவாகும்?

வேதனைக்குரிய மற்றொரு விஷயம் இந் நூல் நிலையம் மிக அதிகமான புத்தகங்களை நம்மிடமிருந்து ஒளித்து வைக்கிறதென்பது. அலமாரிகளில் கலைந்த குவியல்களுக்கிடையில் நடத்தும் வழி தவறானாலும் நிரந்தரமான தேடல்களில் நாம் தேடுவது என்றாவது கிடைக்காமலிராது என்ற நினைப்பு நிம்மதியைக் கொடுக்கும். இப்படியொரு சாத்தியக் கூறுதான் வாழ்க்கை தரும் ஆசை. ஆனால் இந்த ஆசைக்கும் இனிமேல் இயேசுபுரம் லைப்ரரியில் இடமில்லை. காரணம் என்னவென்றால் யாரு மறியாமல் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் புத்தகப் பகுதியிலிருந்து மறைந்துகொண்டிருக்கின்றன. அவை ஒருமுறை அலமாரியிலிருந்து வெளியே போய்விட்டால் பிறகு திரும்பி வருவதேயில்லை.வேறு ஆயிரமாயிரம் புத்தகங்களோ என்றால் அலமாரியில் நுழைவதேயில்லை. பழைய புத்தகங்கள் மறைகின்றன. அலமாரிகளில் ஒருபோதும் நுழை யாதவை புதிய புத்தகங்கள். இப்படி இரண்டு விதத்திலும் நூல் நிலையத்தின் இந்தச் சிதைவு, உள்ளது இல்லையென்றாகிறது. புதியது நுழைவதேயில்லை. லைப்ரரியின் உறுப்பினர்களும் இப்படி இரண்டு விதத்திலும் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்கிறார்கள். கடந்த காலத்தில் சேக‌ரித்ததும், நிகழ்காலத்தில் புதிதாக நிறுவியதும் அவர்களுக்கு ஒரே சமயத்தில் நஷ்டமாகின்றன. எதிர்காலம் இந்த நிலைமையின் ஒரு மறுநிகழ்வே யென்றால் அவர்களுடைய உறுப்பு நிலைக்கு என்ன பொருள்? மிக ஏராளமான அங்கத்தினர்கள் இக் காரணத்தால் தங்களது உறுப்புநிலை விடு பட்டுப்போக அனுமதித்திருக்கிறார்கள். அவர்கள் இப்போது கடந்த காலமும் நிகழ்காலமுமற்ற இந்த நிச்சயமின்மையிலிருந்து தங்களது தேடல் பலனற்றுப்போகலாமென்ற குரூரமான அறிவிலிருந்து விடுபட்ட வர்கள். ஆனால் நாங்கள்? ஆயுட்கால உறுப்பினர்களாகிய நாங்களோ? நாங்கள் இக்கோணல் சக்கரத்தில் கட்டப்பட்டிருக்கிறோம். இதனுடைய கோணலை நிமிர்த்த முடியாவிட்டால் எங்களுக்குப் பைத்தியம் பிடிக்கும். இதனுடைய சுழற்சி நின்றாலோ? இது ஒரு வேடிக்கையல்ல, ஸார்.

பழைய புத்தகங்கள் மறைந்துபோவது எப்படி யென்பதை நான் கண்டு பிடித்துவிட்டேன். ஒரு அங்கத்தினர் வாசித்து முடித்துப் புத்தகத்தைத் திருப்பிக் கொண்டு வந்தால் உடனே அது கௌன்டருக்குக் கீழேயுள்ள ஒரு குவியலில் சேர்க்கப்பட்டுவிடுகிறது. இங்கே ஒரு பெரிய கோபுரத்தின் ஒரு பகுதியாக அது பல நாட்களில் மாறுகிறது. கடைசியில் கௌன்டரின் மட்டத்திற்கு மேலே தலைதூக்குகிற, தொட்டால் இடிந்து விழுந்துவிடும்போன்ற பல கோபுரங்கள், அந்தச் சிறிய அரைமதி வடிவத்தில் நிறைந்துவிடும்போது அவற்றைக் கட்டுக் கட்டாகப் பிரித்து ஆஃபீஸின் உள்ளேயுள்ள ஒரு விசாலமான அறைக்கு அவற்றை மாற்றுகிறார்கள். இம் மாற்றம் தற்காலிமானது என்பது போலத்தான். அதாவது அவற்றை அங்கிருந்து சௌகர்யமாகத் தரம் பிரித்துத் திரும்ப ஷெல்ஃப்களில் அடுக்குவதே இப்படிக் கொண்டு போவதின் ஆரம்பகால உத்தேசம். ஆனால் இந்த எண்ணம் எத்தனையோ வருஷங்களாக மறைந்துபோய் விட்டது. எதற்காகத் திரும்பி வந்த புத்தகங்களை அந்த அறைக்குள் கொண்டு போகிறார்கள் என்று கேட்டால், இன்று யாருக்கும் தெரியாது. கொண்டு போவது என்கிற வழக்கம் மட்டும் தொடர்கிறது. இவ்வறையின் தரையில் கடந்த அநேக வருடங்களாக அவை சேர்த்து வைக்கப் பட்டிருக்கின்றன. பூதாகாரமான இக் குவியல்கள் ஒன்றன் பின் ஒன்றாக, தரையிலிருந்து விட்டம் வரை உய‌ரமாக அறையைப் பூரணமாக ஆக்கிர மித்துக் கீழட‌க்கியிருக்கின்றன. அறையுள் நுழைய இனி இடமில்லை. வாசல் பாதிதான் திறக்க முடியும். அதனால், சம்பந்தப்பட்ட ப்யூன் முதலில் புத்தகங்களை வாசலுக்கு வெளியில் கொண்டுவந்து வைக்கிறான். பிறகு அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப் பாதி திறந்த வாசல் வழியாகக் கைநீட்டி இரு பக்கங்களிலும் மேலுமாக எறிகிறான். அவை என்றென்றைக்குமாக மறைகின்றன.

சீக்கிரமே, இவ்வறையின் வாசலைச் சற்றும் திறக்கமுடியாமல் போகும் என்பது நிச்சயம். அதனால்தான் போலிருக்கிறது - இதன் பக்க‌த்திலுள்ள இன்னொரு அறை - கார்டு இன்டெக்ஸின் காலியான ஸ்டாண்டுகள் நிறைந்த ஒரு அறை காலியாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. லைப்ரரியின் புத்தகங்கள் முழுவதும் இவ்வறைகளுக்குள் மறைய எத்தனை வருடங்கள் வேண்டியிருக்கும் என்று ஆயுட்கால அங்கத்தினர்களாகிய நாங்கள் கணக்குப் போடுவதுண்டு - துடிக்கும் நெஞ்சங்களுடன். ஒரு நாள் இந்த இரண்டாம் அறையின் வாசலும் திறக்க முடியாமல் அடைந்துபோகும். ஆனாலும் எங்களுக்குப் பல ஆசைகளும் உண்டு. லைப்ரரியின் ரெஃப்ரன்ஸ் பகுதியும் அதனுள்ளிருக்கும் இரு இருண்ட அறைகளும் தான் எங்களுடைய முக்யமான வாழ்வாதாரங்கள்(இன்று வரை அப்படி) பிறகு, லைப்ரரியின் உத்தியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். புத்தகங்கள் முழுவதும் லைப்ரரியிலிருந்து மறைந்து போனாலும், அரசாங்கத்தின் சம்பள ரிஜிஸ்டரிலிருந்து இந்த லைப்ரரியின் பெயர் அழிந்து போக அவர்கள் அனுமதிப்பார்களா? எனக்கு அப்படித் தோன்றவில்லை. பழைய உத்தியோகஸ்தர்கள் பென்ஷன் வாங்கிவிட்டாலும் புதியவர்களை இந்த‌ வெற்று அலமாரிகளின் மேற்பார்வைக்காக வரச் செய்வதுதான் வழி. இந்த நிறுவனத்தை அரசாங்கம் எடுத்துக் கொண்டது எவ்வளவு நல்லதாயிற்று என்று இப்போது தோன்றுகிறது. எங்களுக்கு இன்னுமொரு ஆசையும் உண்டு. ஞாபக சக்தி குறைந்தவர்களான அங்கத்தினர்களின் கைவசத்தில் திருப்பிக் கொடுக்க மற‌ந்திருக்கும், அல்லது அவர்கள் மனப்பூர்வமாகத் திருப்பிக் கொடுக்காமலிருக்கும் புத்தகங்கள்தான் எங்கள் ஆசை. இப் புத்தகங்களின் திரும்பி வருதல் ஒரு சாத்தியாக இருப்பது வரை லைப்ரரி இல்லாமல் போகாது என்பதே எங்கள் வாதம். எங்கள் விருப்பம். இதை யார் தீர்மானிப்பது? எங்களுக்குத் தெரியாது. நாங்கள் தைரியத்தைத் திரட்டிக் கொண்டு அப்படி விரும்புகிறோம், அவ்வளவுதான்.

எங்களில் புரட்சி மனப்பான்மையுள்ள சிலர் அக் கூட்டத்தில் ஒரு விஷயம் சொன்னார்கள். புத்தக அலமாரிகள் முழுவதும் காலியாக அதிக நாள் ஆகாது என்ற நிலை வந்தால் உடனே ஆயுட்கால உறுப்பினர்கள் எவ்விதத்திலாவது இயன்ற அளவு புத்தகங்களை அவரவர் வீடுகளுக்குக் கொண்டுபோய்விட வேண்டுமென்பது அவர்கள் அபிப்பிராயம். லைப்ரரி முழுவதும் இல்லாமல் ஆகிவிடுவதைத் தடுக்கும் ஒரு மார்கமாகவே அவர்கள் இந்த யோசனையைக் கூறினார்கள். புத்தகங்களைத் திருப்பிக் கொடுக்காத அங்கத்தினர்கள் இருக்கக்கூடுமென்ற நிச்சயமற்ற ஆசையைவிட நாமே ஒரு நடவடிக்கை எடுத்துவிடுவது நல்லது என்று அவர்கள் வாதித்தனர். ஆனால் இது ஒரு அதர்மமான செயலென்று நானுட்பட எல்லோரும் அன்று கருதினோம். ஆனால், உள்ளூர நான் இன்றும் ஆலோசிக்கிறேன். வாழ்வுப் பிரச்னைக்கு முன்னால் எதுதான் தர்மமும் அதர்மமும்? காரணம் என்னவென்றால் இந்த லைப்ரரியில் இனி அதிகம் புத்தகங்களொன்றும் மிச்சமில்லை. முதலில் மனிதன் வேண்டாமோ? அப்புறம்தானே ஸார், தர்மமும் அதர்மமும்.

புதிய புத்தகங்களுக்கு நேர்வது என்னவென்பதையும் குறிப்பிடுகிறேன். அவற்றின் தவிட்டுநிறக் காகிதத்தில் பொதிந்த கட்டுக்களை அவிழ்ப்பதேயில்லை. வருடந்தோறும் அவை தரைமட்டத்திற்குக் கீழே இடங்கொண்ட ரெஃபரன்ஸ் பகுதியை யடுத்துள்ள ஓர் அறையில் குன்றாகச் சேர்கின்றன. நானொரு பழமைவாதி. எனக்கு இன்றைய சிந்தனை, எழுத்து இவற்றின் போக்குகள் புரிவதில்லை. இருந்த போதிலும் நானொருமுறை, அவ்விருட்டறைக்குள் நுழைந்து அவற்றில் ஒன்றிரண்டு கட்டுக்களை அவிழ்த்து எனது சாவிக்கொத்தில் இணைத் துள்ள பென் - டார்ச்சின் உதவியோடு அவற்றில் கண்ணோட்டினேன். இத்தனை நிறைய புது சிருஷ்டிகள் - புதிய உருவங்களும், சிந்தனைகளும், உணர்ச்சிகளும், அழகுகளும் எவ்வளவுதான் பரிச்சயமற்றவையானாலும் - ஒரு இருட்டறையில் கட்டிக்கிடப்பது என்னை வருத்தியது. மற்றொரு விதத்தில் இக் காட்சி எனக்கு ரகசியமான, ஒருவேளை மிகவும் சுயநலமான ஒரு திருப்தியையும் கொடுத்தது. காரணம், இக் கட்டவிழ்க்காத புத்தகங்கள் இங்கே இருக்கம் காலம் வரை லைப்ரரிக்கு ஒரு எதிர்கால முண்டு. மேலேயுள்ள அலமாரிகள் காலியாகி லைப்ரரி பூட்டப்படும் ஒரு நிமிடம் வந்தால் எனக்கு அவர்களைக் கீழே அழைத்துக்கொண்டு வந்து இக் கட்டுக்கலைப் பெருமையுடனும், ஆனந்தத்துடனும் சுட்டிக் காட்டலாம். ஆயுட்கால உறுப்பினர்களாகிய எங்களது ஒரு இரகசிய சொத்தாகும் இவ்வறை.

உண்மையில் ரெஃபரன்ஸ் பகுதியுடன் இணைந்துள்ள இவ்வறை ஒரு பெரிய அறையாகும். ரெஃபரன்ஸ் பகுதியின் ஆஃபீஸ் என்றே இதன் பெயர். ஆனால், வருடக்கணக்காக அதில் குவிந்திருக்கும் புத்தகக் கட்டுகளும், இருட்டுமாகச் சேர்ந்து அதை ஒரு சிறிய அறைபோலத் தோற்றுவிக்கின்றன. கடந்துபோன எத்தனையோ வருடங்களின் புதுமையே இந்த இருட்டறையில் தூசிபடிந்து ஒளிந்து கிடக்கிறது என்று பலமுறை நான் அதன் முன்நின்று சிந்தித்ததுண்டு. இருள் மூடி வைத்திருக்கும் இப் புதுமை என்றாவது ஒருநாள் எங்களுடைய வாழ்வின் மங்கும் திரியை மீன்டும் பளீரீடும் சுடராக ஆக்குமென்ற சிந்தையும் என் மனதுள் அப்போது கடந்து போகும். வாசலில் நின்று சற்று நேரம் உள்ளே பார்த்தால்தான் உள்ளேயுள்ள‌ இருட்டோடு கண்கள் பழகும். அப்போது இருளின் எல்லைக்குள் ச‌துர‌வ‌டிவான‌ புத்த‌க‌க் கட்டுக்களின் சுவரும், அவற்றிற்கும் வாசலுக்கும் இடையிலுள்ள இடுங்கிய இடத்தில் ஒரு மேஜையையும், ஒரு நாற்காலியையும், அந் நாற்காலியில் ஒரு மனித உருவத்தையும் காணலாம். இவ்வுருவம்தான் ரெஃப‌ர‌ன்ஸ் ப‌குதியின் கிளார்க். ஒரு முறை த‌னியாக‌, இங்குள்ள‌ நூற்றுக் க‌ண‌க்கான‌ தூண்க‌ளுக்கிடையில் அலைந்துகொண்டிருக்கையில், முத‌ன் முத‌லாக‌ இந்த‌ இர‌க‌சிய‌மான‌ அறையால் க‌வ‌ர‌ப்ப‌ட்டு, இதனுள்ளே, அந்த‌கார‌த்தினூடே என் பென் - டார்ச்சை அடித்து நோக்கிய‌போது, நான் எப்ப‌டிப் ப‌த‌றித் திடுக்கிட்டேன் என்ப‌தை இன்றும் நான் நினைத்துப் பார்க்கிறேன்.

அம் மேஜைக்குப் பின்னால் நாற்காலியில் என்னையும் தாண்டி தூர‌ நோக்கியிருந்த‌, ச‌ல‌ன‌ம‌ற்ற‌ உருவ‌த்தை என் கண்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. தனக்குப் பின்புறத்தில், திறக்கப்படாத புதுமைகளின், கட்டவிழ்க்கப்படாத ந‌வீனங்களின் ஒரு குவியலோடு ரெஃபரன்ஸ் பகுதியென்ற அந்த விசாலமான ம‌ங்கிய‌ வெறுமைக்கு இருளில் காவ‌லிருந்த‌ அவ‌னை நான் ச‌ற்றும் எதிர்பார்க்க‌வில்லை. த‌ன‌க்கு முன்னால் வாச‌லில் காண‌ப்ப‌ட்ட‌ நூற்றுக்க‌ண‌க்கான‌ தூண்க‌ளுட‌னோ, அவ‌ற்றுக்கிடையில் காலியான‌ மேஜை,நாற்காலிக‌ளுட‌னோ, ம‌ங்க‌லாக‌த் காண‌ப்ப‌ட்ட‌ அல‌மாரிக‌ளுட‌னோ த‌ன‌க்குப் பின்புற‌ம் இருள‌ட‌ர்ந்த‌ புத்த‌க‌க் குவிய‌ல்க‌ளோடோ அவ‌னுக்கு எந்த‌ ஒரு ச‌ம்ப‌ந்த‌மும் உள்ள‌தாக‌த் தோன்ற‌வில்லை.ஆனால், ஒரு ஆயுட்கால‌ உறுப்பின‌னாகிய‌ என‌து வேத‌னைக்கும், வெறுமையுணர்ச்சிக்கும், நிச்ச‌ய‌ மின்மைக்கும் அ‌வ‌னில் நானொரு ஆசுவாச‌ம் க‌ண்டேன். ஆயுட்கால‌ அங்க‌த்தின‌ர்க‌ள‌கிய‌ எங்களது பாதுகாப்பிற்காக‌க் குடிய‌ம‌ர்த்தி யிருக்கும் ஒரு ச‌க்தியைப்போல‌ அவ‌ன் என‌க்குக் காண‌ப்ப‌ட்டான். அந்த‌ ம‌ங்கிய‌ சாம்ராஜ்ய‌த்தில், ஒருபோதும் வெளியே போகாத‌ ரெஃப‌ ர‌ன்ஸ் புத்த‌க‌ங்க‌ளும், இருட்டில் புத்த‌க‌க் க‌ட்டுக‌ளுமாகிய‌ நிதிக‌ளை எங்க‌ளுக்காக‌க் காத்துப் ப‌த்திர‌ப்ப‌டுத்தியிருந்த‌ ஒரு காவ‌ல்பூத‌ம். நான் அவ‌னுட‌ன் பேச‌வில்லை. அவ‌னுட‌ன் பேசி, அந்த‌ இர‌க‌சிய‌ அறையின் நிச‌ப்த‌த்திற்கு ஊறு விளைத்தால் என்ன‌ ந‌ட‌க்குமோ என்ற‌ க‌வ‌லை,பேச‌ நெருங்கும்போதெல்லாம் என்னை சிந்த‌னை வ‌ய‌ப்ப‌டுத்திய‌து. அதும‌ட்டும‌ல்ல‌, அவ‌னிட‌மிருந்து ப‌திலாக‌ ஏதாவ‌து ச‌ப்த‌ம் எழுமென நான் க‌ருத‌வுமில்லை. நான் அவ‌னைப் பார்த்து அதிக‌ நாட்க‌ளாக‌வில்லை. எத்த‌னை எதிர்பாராம‌ல் அது நேர்ந்த‌தென‌ நான் சொல்லி விட்டேன‌ல்ல‌வா.

ரெஃப‌ர‌ன்ஸ் ப‌குதியின் நிலைமை அப்ப‌டி ஏராள‌மான தூண்கள் நிறைந்த ஒரு சுரங்க உலகமே ரெஃபரன்ஸ் பகுதி. இரண்டு ஓரங்களிலும் ஒவ்வொரு பல்புகள் மங்கலாக எரிந்து இந்தச் சுரங்கத்தை ஒளியால் இருட்டடிக்கின்றன. இம் மங்கிய வெளிச் சத்தில் தூண்களின் கரு நிழல்களுக்கிடையில் இங்குமங்குமாக நிறுத்தப் பட்டிருக்கும் தனியான அலமாரிகளில் சில கனமான புத்தகங்களின் இருண்டு பிரிக்கப்ப‌ட்ட உருவங்கள் காணப்படுகின்றன. இங்கு ஐந்து மாதம் தொடர்ச்சியாக ரெஃபரன்ஸ் நடத்திய எனது ஒரு நண்பர் பிறகு ஆறுமாதம் ஒரு கண் மருத்துவ விடுதியில் கழித்தார். அவருடைய ஒரு கண்ணுக்குப் பூரணமான பார்வை இப்போது மில்லை. ஐந்து மாதம் தொடர்ந்து இங்கு வந்துகொண்டிருந்த‌ அவருக்கு ரெஃபரன்ஸ் பகுதி கிளார்க் என்றொரு ஆளைப்பற்றி இன்றும் தெரியுமென‌த் தோன்றவில்லை. ரெஃப்ரன்ஸ் பகுதியையே நிறையப் பேர்கள் பார்த்திருக்கிறார்களென்று சொல்ல முடியாது. துணிவான மனங்கொண்ட சிலரே இங்கே அபூர்வ சந்தர்ப்பங்களிலாவது இறங்கி வருவதுண்டு. நான் பலமுறை தைர்யத்தைத் திரட்டிக்கொண்டு இத் தூண்களின் சலனமற்ற உருவங்களுக்கிடையே நடந்ததுண்டு. எனது மங்கிய நிழல், தூண்களோடு நிசப்தத்தைக் கட்டிப் பிடிப்பதும், எனது காலோசை ஒரு மூச்சைப் போல அம் மங்கிய இருளில் உயர்வதுமாக‌ இருந்ததுண்டு. அவ்வ‌ல‌மாரிகளின் கருத்த உருவங்களைத் தொடவும் பரிசோதிக்கவும் நான் முயற்சித்ததுண்டு. இவற்றைப் பரிசோதித்ததில் ஏராளமானவையும் அகராதிகளாகக் காணப்பட்டன. சிறியதும் பெரிய‌துமான அகராதிகள். அவ‌ற்றைத் தவிர ஒரு பெரிய உடற்கூறு நூல் இருந்தது. மற்றொன்று சித்திரங்கள் அடங்கிய ஒரு பெரிய‌ பைபிள். இன்னும் இரு வால்யூம்களில் ஹாவ்லாக் எல்லிஸின் 'ஸைக்காலஜி ஆஃப் ஸெக்ஸ்'. அங்குமிங்குமாகக் கண்ட மற்ற சில புத்தகங்களையும் நான் ஒரு முறை பரிசோதித்துப் பார்த்தேன். (எல்லாம் என் பென் - டார்ச்சின் உதவியோடுதான்.) இப் புத்தகங்களெல்லாமே பிசாசுக் கதைகளாயிருந்தன.

ஒருமுறை, ஒரு புத்தகத்தில் ஒரு பிசாசு,ஆளற்ற‌ ஒரு பாதையில் நடந்துபோகும் ஒருவனின் பின்னால் சப்தமின்றிச் செல்லும் பயங்கரச் சித்திரத்தைப் பார்த்தபிறகு, நான் எப்படி அந்த அரையிருளிலிருந்து விறைத்தும், சோர்வுற்றும், பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டும் படிகளேறி மேலே வந்து சேர்ந்தேன் என்று எனக்கே தெரியாது. ஆனால் இக்கும்பலில் நான் கண்டு பிடித்த இன்னொரு புத்தகம் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் 'கமென்ட்ரீஸ் ஆன் லிவிங்'கின் இரண்டாம் பாகம். அன்று எனக்கு என்னைத் தவிர இன்னுமொரு ஆள் அந்தச் சுரங்கத்துள் ஏகாந்தமாக இருக்கிறார், இருளில் மறைந்து இருக்கிறார் என்பதொன்றும் தெரியாமலிருந்தது. எப்படியானாலும் ஆயுட்கால‌ அங்க‌த்தின‌ர்க‌ளான‌ எங்க‌ளுக்கு இந்த‌ ரெஃப்ர‌ன்ஸ் ப‌குதியிட‌மும் அத‌னுடைய‌ பாதுகாப்பாள‌னிட‌மும் பெரிய‌ பாச‌ம் உண்டாவ‌து இய‌ற்கையே. ஏனென்றால், முன்பு குறிப்பிட்ட‌துபோல‌ இங்கேதான் இழ‌ந்து போகாத‌ மாடி அறைகளுக்குள் எறிய‌ப்ப‌டாத‌ புத்த‌க‌ங்க‌ள்; இங்கேதான் இன்னும் அவிழ்க்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ புத்த‌க‌க் க‌ட்டுக்க‌ள்.

ஆனால் ஸார், இன்று என் அற்ப‌மான‌ விருப்ப‌த்திற்கும் பேராசை யோடு திர‌ட்டிக் கொண்ட‌ ச‌மாதான‌த்திற்கும் க‌டுமையான‌ ஒரு காய‌ம் ஏற்ப‌ட்டிருக்கிற‌து. நான் அவ‌ச‌ர‌ப்ப‌ட்டு இந்த‌க் குற்ற‌ச்சாட்டை, இந்த‌ விண்ண‌ப்ப‌தை எழுதுகிறேன். இனிமேல் என்னால் காத்திருக்க‌ முடியாது. ரெஃப‌ர‌ன்ஸ் ப‌குதியினுடைய‌ அழிவும் ஆர‌ம்பித்துவிட்ட‌தென்று நான் ப‌ய‌ப்ப‌டுகிறேன். இன்று காலை நான் ரெஃப‌ர‌ன்ஸ் ப‌குதிக்குள் நுழைந்து போய்க்கொண்டிருந்தேன். அங்கே, ஏதோ ஒரு தாங்க‌முடியாத‌ நாற்ற‌ம் ப‌ர‌வியிருப்ப‌தாக‌ என‌க்குத் தோன்றிய‌து. இத‌ன் கார‌ண‌த்தைத் தேடுவ‌த‌னிடையில் அந்த‌ ஆஃபீஸ் அறைக்குள் நீட்டிய‌ என் பென் - டார்ச்சின் வெளிச்ச‌த்தில் ரெஃப‌ன்ஸ் ப‌குதி கிளார்க் தூக்குமாட்டிக்கொண்டு இற‌ந்து தொங்குவ‌தையே நான் க‌ண்டேன். அவ‌ன் தூக்குமாட்டிச் செத்திருக்கிறான். அவ‌ன் இப்ப‌டித் தொங்க‌த் தொட‌ங்கி மூன்று நாட்க‌ளாவ‌து ஆகியிருக்க‌வேண்டும். இத‌ன் பொருள் என்ன‌? இனிமேல் என்ன‌ ந‌ட‌க்க‌ப்போகிற‌து? ரெஃப‌ர‌ன்ஸ் ப‌குதியின் பார‌த்தைத் தாங்க‌ இனி யாராவ‌து வ‌ருவார்க‌ளா? அங்குள்ள‌ புத்த‌க‌ங்க‌ளும் ஒவ்வொன்றாக‌ இனி வெளியே செல்லா தெ‌ன்று என்ன‌ நிச்ச‌ய‌ம்? நான் உட‌னேயே ஆயுட்கால‌ அங்க‌த்தின‌ர்க‌ளின் ஒரு அசாதார‌ண‌க் கூட்ட‌த்தைக் கூட்டுகிறேன். அநேக‌ம் ந‌ட‌வ‌டிக்கைக‌ளைப் ப‌ற்றி அவ‌ச‌ர‌மாக‌ச் சிந்திக்க‌வேண்டியிருக்கிற‌து. அவ‌ற்றின் ஒரு பாக‌ம் ம‌ட்டுமே நான் உங்க‌ள் முன் வைக்கும் இந்த‌ எளிமையான‌ குற்ற‌ச்சாட்டு. க‌ட‌வுளே இனி என்ன‌ ந‌ட‌க்கும்?
-------------------------

15. குற்ற‌ப் ப‌த்திரிகைக்குப் ப‌தில்


நான், கெ.ஸ‌த்ய‌ரூப‌ன், க‌ட‌ந்த‌ ப‌தினைந்து வ‌ருட‌ங்க‌ளாக‌த் த‌ங்க‌ள் ஆஃபிஸில் ஒரு ஏவ‌லாளாக‌ப் ப‌ணிபுரிந்து வ‌ருகிறேன். இக் கால‌ம் முழு‌தும் என்னிட‌ம் ஒப்ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌ வேலைக‌ளை முறையாக‌வும் ம‌ன‌ப் பூர்வ‌மாக‌வும் செய்து முடித்தேன் என்ப‌த‌ற்கான‌ ஒரே சாட்சி என் ம‌ன‌ச்சாட்சி ம‌ட்டுமே. இந்த‌ முப்ப‌த்தியொன்ப‌தாம் வ‌ய‌தில் என‌க்கு நேரிட்ட‌ இந்த‌ அவ‌ல‌த்திற்கு நான் யாரைக் குற்ற‌ம் சொல்ல‌, என் விதியைப் ப‌ழிப்ப‌தைத் த‌விர‌.

என்னை ஸ‌ர்வீஸிலிருந்து ஸ‌ஸ்பெண்ட் செய்த‌ நாள் முத‌ல் என‌து உற‌க்கத்தின் வேர் உல‌ர‌த் தொட‌ங்கிய‌து. நூற்றிய‌ம்ப‌த்தாறு ரூபாய் ச‌ம்ப‌ள‌ம் வாங்கும் ஒரு ஏவ‌லாளுக்கு ஸ‌ஸ்பென்ஷ‌ன் கால‌த்தில் கிடைக்கும் அஸிஸ்டென்ஸ் அல‌வ‌ன்ஸை வைத்துக் கொண்டு இந் ந‌க‌ர‌த்தில் வாழ‌ முடியுமா? என்ற‌ விஷ‌ய‌ம் தாங்க‌ள் ஊகிக்க‌வேண்டிய‌ ஒன்று. சுமுக‌மான‌வ‌ரும், இத்த‌னை இள‌ம் வ‌ய‌தில் உய‌ர் ப‌த‌வியை அடைந்த‌வ‌ருமான‌ தாங்க‌ள் என்னிட‌ம் இப்ப‌டி ந‌ட‌ந்துகொள்வீர்க‌ளென்று நான் க‌னவில்கூட‌க் க‌ருத‌வில்லை. த‌ங்க‌ளைக் குறித்து நான் சில‌ விஷ‌ய‌ங்க‌ளைத் தெரிந்துகொண்டிருந்தேன். தாங்க‌ள் ப‌டிக்கும் கால‌த்தில் முற்போக்கு மாண‌வ‌ அணியின் முன் வ‌ரிசையில் இருந்தீர்க‌ள் என்றும், உழைப்பாளிக‌ளின் நுண்ணிய‌ல் கோட்பாட்டில் தாங்க‌ள் இப்போதும் ந‌ம்பிக்கை வைத்திருக்கீறீர்க‌ள் என்றும் நான் கொண்டிருந்த‌ ந‌ம்பிக்கை உலைந்து விழுந்துவிட்ட‌து.

என‌க்குக் குற்ற‌ப் ப‌த்திரிகை த‌ந்த‌ தின‌ம், த‌ங்க‌ள‌து அறைக்கு முன் வெகுநேர‌ம் நின்ற‌ பிற‌கு த‌ங்க‌ளைச் ச‌ந்திக்க‌ வாய்ப்புக் கிடைத்த‌து. தாங்க‌ள் ரிவால்விங் சேரில் சாய்ந்த‌ம‌ர்ந்து இங்கிலீஷ் ப‌த்திரிகை ப‌டித்துக் கொண்டிருந்தீர்க‌ள். என்னைக் க‌ண்ட‌போது கோப‌த்தோடும் வெறுப்போடும் ப‌த்திரிகையை மேஜைமேல் வைத்தீர்க‌ள். அன்று கூறிய‌ வார்த்தைக‌ள் ஒருவேளை உங்க‌ளுக்கு இன்று நினைவிருக்காது. என‌க்கு அவ‌ற்றை ம‌ற‌க்க‌ முடியாது, ஸார், அம்புபோல‌ அவை என்னுள் தைத்த‌து.

எனக்குக் கூறவேண்டியிருந்ததைக் கேட்கத் தங்களுக்கு நேரமும் வசதியும் இல்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த அறையிலிருந்து வெளியே போயிடணும். இல்லாவிட்டால் வெளியேற்ற வேறு சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டி வரும்.

நான் கூப்பிய கைகளைப் பிரிக்கவேயில்லை. உங்களுடைய ஏவலாள் நீங்கள் கையெழுத்திட்ட ஃபைல்களை எடுத்துக்கொண்டு போகும்போது தன் செருப்புக் காலால் என் கால் விரலை மிதித்தான். நானும் ஒரு ஏவலாள் தான் ஸார். ஒரு செருப்பு வாங்கக்கூட வகையில்லாத ஏவலாள். ஏனென்றால், அப்போது இக் குற்றவாளிக்கூண்டிலிருந்து எப்படி விடுதலையாவது என்ற சிந்தனை மட்டுமேயிருந்தது என் மனதில்.

'என்னைக் காப்பாத்தணும் ஸார்' என்று நான் அரற்றியபோது தாங்கள் மேஜைமேல் ஓங்கிக் குத்தி 'கெட்அவுட்' என்று அலறினீர்கள்.

ஸத்யரூபன் என்றைக்கும் பணிவானவன். அந்த நிமிஷமே வெளியே சென்றேன். அறைக்கு வெளியே, 'காட் இஸ் ட்ரூத்' என்று பின்னியிருந்த கயிற்றுக் கால்மிதியில் குற்றப் பத்திரிகையை மடக்கிப் பிடித்துக்கொண்டு நான் நின்றேன்.

அப்போதுதான் உங்கள் ஏவலாள் வந்து என்னைக் கூப்பிட்டான். தாங்கள் என்னைக் கூப்பிடுகிறீர்கள் என்று கேட்டு அந்த நிமிஷத்தில் என் மனத்தில் உற்சாகத்தின் வசந்தம் மலர்ந்தது.

தங்களுடைய கன்னங்கள் பொலிவுற்றுச் சிவந்திருந்தன. கீழிறங்கிய கிருதாவை அளைந்தவாறு கரகரப்பான் குரலில் தாங்கள் கூறினீர்கள்:

"பத்து நாளுக்குள் பதில் தரணும். காலக்கெடு நீட்டித் தரமுடியாது. பதில் தரலையானால் எக்ஸ்பார்ட்டி விதிக்காளாகணும். நீங்கள் ஒரு விஷயத்தை நினைவு வச்சுக்கிறது நல்லது. குற்றத்தை மறுத்தால் நாங்கள் சாட்சிகளை உபயோகிப்போம். பிறகு சர்வீஸில் வைத்திருக்க மாட்டோம். குற்றத்தை ஒப்புக்கொண்டால் தண்டனையின் கனம் குறையும். போகலாம்,"

நான் இன்னொரு தடவை கும்பிட்டுவிட்டு வெளியே வந்தேன். சில படிகளையும் இரண்டு வராந்தாக்களையும் தாண்டினேன். நான் வேலை செய்த டெஸ்பாட்ச் செக்ஷனை தூரத்திலிருந்து நோக்கியவாறு பெரு மூச்சுவிட்டேன். பசை காய்ச்சும் மணத்தையும், அரக்கு உருகும்போது உண்டாகும் கனத்த நெடியையும் எனக்கு இனிமேல் சுவாசிக்க முடியுமா? தொட்ட இடமெல்லாம் ஒட்டிக்கொள்ளும் அந்த அறைக்குள் எனக்கு இனிமேல் நுழையும் அதிருஷ்டம் உண்டாகுமோ?

குற்றப் பத்திரிகை கையிலிருக்கும்போது எனக்கொரு வேடிக்கை தோன்றுகிறது. எனது பெயர் ஸத்யரூபனல்லவா. யார் எனக்கு இந்தப் பெயரிட்டார்கள். சத்யத்தின் உருவம்! நல்ல வேடிக்கை. அம்மாவுக்குத்தான் இப் பெயர் முதலில் தோன்றியிருக்கும்; அப்பாவுக்குத் தோன்ற வழியில்லை. ஏனென்றால் எனக்கு ஒரு வயசு நிறைந்தபோதுதான் அப்பா ஒன்றரை வருட சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்தார்.

மரியாதைக்குரிய ஐயா, அப்பா செய்த குற்றம் என்னவென்று தெரிய வேண்டாமா. இரும்புக் கடப்பாரையால் அடித்து இடியன் ராமன் பிள்ளை என்ற பெயர் கொண்ட ஒரு ஸப் - இன்ஸ்பெக்டரின் தோள் எலும்பைத் தூளாக்கினார். அப்பா குற்றம் செய்துவிட்டுத்தான் தண்டனை அனுபவித்தார். மகனோ என்றால் குற்றம் செய்யாமல் தண்டனை அனுபவிக்கப்போகிறான்.

போர்ட்டிக்கோவில் வைத்துதான் நான் எனது குற்றப் பத்திரிகையைப் பிரித்து நோக்கினேன். எனது நரம்புகளில் இரத்தம் உறைந்து போயிற்று. எனது இதயத்தின் துடிப்பு நின்றது. எனது கண்மணிக்கு முன் கருப்புத் திரை வந்து மூடியது.

இதென்ன உலகம் ஸார். மனஸா, வாக்கா, கர்மமா? எனக்குத் தெரியாது. நான் லஞ்சம் வாங்கினேனாம்! வேறு எதுவும் பொறுக்கலாம். இதுமட்டும் முடியாது. எனது விரோதிகளில் யாரோ தங்களை வேண்டுமென்றே தப்பான அபிப்பிராயம் கொள்ளச் செய்ய முயற்சிக்கிறார்கள் என்று சொல்வதும் சரியில்லை. ஏனென்றால் எனக்கு விரோதிகளில்லை. இதென்ன மாயம். என்மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்கள் மிகவும் விசித்திரமானவைதான்.

ஒன்று: ப்ராவிடண்ட் ஃபண்டிலிருந்து தன் மகளின் திருமணத் தேவைக்காக ஆயிரம் ரூபாய் நான் - ரீஃபண்டபிள் அட்வான்சுக்காக விண்ணப்பித்த ஹெட்கான்ஸ்டபிள் பி. கெ. குஞ்சு மொய்தீனிடமிருந்து பத்து ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு சம்பந்தப்பட்ட ஸெக்‌ஷன் கிளார்க்கைப் பார்த்துச் சொல்லி மிக விரைவில் காரியத்தைச்
சாதித்துக் கொடுத்தது.

இரண்டு: பென்ஷன் வாங்கிய தாலூகாபீஸ் டைப்பிஸ்ட் ஸ்ரீ பி. குஞ்சுராமன் பிள்ளையிடமிருந்து பதினைந்து ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு சம்பந்தப்பட்ட கிளார்க்கைக் கண்டு, பென்ஷனும் கிராஜூ விட்டியும் ஒரே வாரத்தில் சமாளித்துக் கொடுத்தது.

மூன்று: மெடிகல் காலேஜ் அஸிஸ்டண்ட் ப்ரோஃபஸர் டாக்டர் குஞ்ஞீணி நாயருக்கு ஸரண்டர் - லீவு ஸாலரியுடன் இரண்டு மாதத்து சம்பளமுட்பட ஆயிரத்து முந்நூற்றுச் சில்வானம் ரூபாயின் பே - ஸ்லிப் வாங்கிக் கொடுத்து ட்ரஷரி காப்பி சட்டென்று கிடைக்கச் செய்கிறேன் என்ற நிபந்தனையில் ஐந்து ரூபாய் வாங்கிக்கொண்டது.

என் கண்கள் நிறைந்து வழிந்தன. வெளியே வெயில் எரிகிறது. என் தொண்டை வறண்டது. வாட்டர் கூலர் கெட்டுப்போயிருக்கிறது. இல்லாவிட்டால் இரு டம்ளர் குளிர்ந்த நீர் குடித்திருக்கலாமாயிருந்தது.

ஸார், நான் என்னையே தேற்றிக்கொள்ள முயன்றேன். என் தளரும் மனதிற்குத் தாங்கு தூண்களமைக்க நான் பாடுபட்டேன். நான் கூப்பிட்டேன், டேய், ஸத்யரூபா! படுமுட்டாளே! உனக்கு இத்தனை மூளையில்லாமப் போச்சே! நீ கனவில்கூட நினைக்காத ஒரு குற்றத்திற்காக நீ தண்டனை பெறமாட்டாய். உனக்கு நீதி கிட்டும். எளியவனுக்கு நீதி கிடைக்கல்லைன்னா வேறு யாருக்கடா இங்கே நீதி கிடைக்கும்? தைரியமாயிரு. இளைஞரான உன் மேலதிகாரி உழைப்பாளிகளின் கோட் பாடுகளில் மிகவும் நம்பிக்கையுள்ளவர். உனக்கு ஒரு மண்ணும் ஆகாது.

நான் ஆஃபீஸ் கேட்டைத் தாண்டினேன். வாகனங்கள் என்னை விரோதியாக நினைத்துவிட்டன என்று தோன்றத்தக்க விதத்திலேயே ஹாரனும் ஹீரனும் அடித்தன. காஃபி ஹவுஸிலிருந்து வெளியே வந்த கோவிந்தனும், தாமஸும்,அச்சுதனும் என்னைப் பார்த்தபோது நின்றனர். இந்தக் குமாஸ்தாக்களுக்கு நான் மிகவும் வேண்டப்பட்டவன். எலெக்ட்ரிஸிடி பில் கட்டுவது, டெய்ரியிலிருந்து பால் கூப்பன் வாங்குவது, ட்ரஷரியில் சலான் கட்டுவது போன்ற வேலைகளையெல்லாம் நான் இவர்களுக்குச் செய்து கொடுப்பேன். முதல் தேதியன்று இவர்களெல்லாம் 'ஸத்யரூபா, காஃபி குடிச்சுக்கோ' ன்னு சொல்லி ஒரு ரூபாய் கொடுப்பதுண்டு. ஆனால் இந்தவாட்டி, அதைத் தவிர இரண்டிரண்டு ரூபாய் வீதம் பாக்கட்டில் போட்டுத்தந்தார்கள். எனது இந்த வேதனையான நிலைமையை அறிந்ததினால் இருக்கலாம். அவர்களது முகத்தில் இரக்கத்தின் வாடிய பூக்கள் இருந்தன. எனக்கு எதுவும் சொல்ல முடியவில்லை. நட்பின் முன்னால் எனது தொண்டை அடைத்தது. நான் முகத்தைக் குனிந்து நடந்தேன்.

செக்ரட்டேரியட்டின் பாதையில் வழக்கத்தைவிட அதிகமான கூட்டம் காணப்பட்டது. காற்றில் சிவப்புக் கொடிகள் பறந்து விளையாடுகின்றன. நிழலில் நின்று நான் அதை நோக்கியிருந்தபோது ஒரு போலீஸ்காரன் என் பக்கத்தில் ஓடிவந்தான். என் தோளில் கை வைத்து நட்புடன் உபதேசித்தான். "ஸார், இங்க நிக்காதிங்க. இவங்க கலாட்டா பண்ணுவாங்க. அந்த மாதிரி டைப் ஆசாமிங்க. கொடியைப் பாக்கலியா. அதனால சட்டுனு இங்கிருந்து போயிடுங்க. லாத்திக்கு, சொந்தக்காரர்களையோ தெரிஞ்சவங்களையோ வித்தியாசமாத் தெரியாது."

போலீஸ்காரரின் அவசரத்தைப் பார்த்து நான் ஓடவில்லை. ஆனாலும் உள்ளூர பயமாயிருந்தது. நான் அந்த பயத்தை மறைத்துக்கொண்டு மெதுவாக நடந்தேன். போலீஸ்காரன் கொஞ்சதூரம் என்னோடு வந்தான். அவன் சொல்லிக்கொண்டிருந்தான்: நீங்களானதுனாலதான் எனக்குக் கஷ்டம். உபகாரம் செய்தவங்களை என்னால மறக்க முடியாது ஸார். அது என் வீக்னஸ்."

போலீஸ்காரன் விடைபெற்றுக்கொண்டு போனான்.

திடீரென்று ஒரு முழக்கம். லாத்தி சார்ஜ். ஆட்கள் சிதறினர். பூட்ஸின் சப்தமும் கூக்குரலும் நெருங்கி வருகின்றன. நான் இடது பக்கமிருந்த வழியில் நுழைந்து ஓடினேன்.

வாடகை அறையை அடைந்த பின்னும் என் மூச்சிறைப்பு நின்றிருக்கவில்லை. நான் யோசித்துப்பார்க்கிறேன், ஸார். அந்தப் போலீஸ்காரன் உபதேசம் பண்ணியிருக்காவிட்டால் நான் இப்போது ஆஸ்பத்திரியிலல்லவா இருந்திருப்பேன். பாருங்கள் ஸார், குறைந்த வருமானக்காரனுக்குக் குறைந்த வருமானக்காரனிடமுள்ள மதிப்பை. ஆனால் ஒரே ஒரு சந்தேகம் மட்டும் பாக்கியிருந்தது. உதவி செய்தவர்களை மறக்க முடியாது - அப்படி இப்படின்னு அந்தப் போலீஸ்காரன் சொன்னானில்லையா? அதென்ன? நான் மண்டையை உடைச்சுக்கல்லை. போலீஸ்காரனுக்கு ஆள் மாறிப்போயிருக்கும். ஆனாலும் போலீஸ்காரங்களிலேயும் இருக்காங்களே இப்படிப்பட்ட மனிதாபிமானிகள்.

என் வாடகை அறையை நீங்க பார்த்ததில்லை. பார்த்திருந்தால் இந்த ஏழையைக் கஷ்டப்படுத்த உங்களுக்கு மனது வந்திருக்காது. ஆக மொத்தம் இருக்கிற ஒரே ஜன்னலின் பக்கத்தில், அடுத்த கட்டடத்துச் சுவர். என் அறைக்குள் காற்றும் வெளிச்சமும் நுழைய விடாம ஒரு ராட்சசனைப்போல அது நிற்கிறது. பேர்பெற்ற ஒரு நகர முக்யஸ்தனின் இரண்டு மாடிக்கட்டடம் அது. அது போகட்டும். என் அறைக்குள் பாருங்க. நான், ஒருஸ்டவ், இரண்டு மூணு அலுமினியப் பாத்திரங்கள், ஒரு கொடியும் அதில் சில கசங்கின உடுப்புக்களும். அவ்வளவுதான். ஸார், நான் ஒரு ரேஷன் கார்டு வாங்க என்ன பாடுபட்டேன் தெரியுமா? காலையில் கஞ்சி குடிச்சு, மத்யானத்துக்கு சோறு கட்டியெடுத்துக்கிட்டு நான் ஆஃபீசுக்குப் போகணும். சத்துணவு குறைவானதினால் எனக்கு சரும வியாதி இருக்கு.

ஒரு தவறு நடந்து போச்சு. பத்திரிகை வாங்கிப் படிக்கும்படியா எனக்கொண்ணும் சம்பளத்தில் மிச்சம் கெடையாது. அதனால ரேஷன் கார்டைப் புதுப்பிக்கவேண்டிய நாள் எல்லாம் தெரியவேயில்லை.

போனவாரம் எனக்கு ரேஷன் கிடைக்கலை. ஸஸ்பென்ஷன்ல இருந்ததினால எனக்கு நிறைய நேரம் இருந்தது. ரேஷனிங் ஆஃபீசரைப் போய்ப் பார்த்தேன். என்னை அவர் விரட்டினார். எனக்கு ரேஷன் கார்டு தேவையில்லைன்னும், சாப்பிடணும்னா புதுப்பிக்கிற தேதியை நினைவு வச்சிருப்பேன். அப்படின்னெல்லாம் சொன்னார். என்னவானாலும் கொஞ்சம் தாமதமாகும். இரண்டு மூணு வாரம் இனிமே ஹோட்டல்ல சாப்பிட்டாப் போதும். என்ன செய்யறதுண்ணு தெரியலை. முழுச் சம்பளம் கிடைச்சே வாழ்க்கை நடத்தக் கஷ்டப்படற நான், ஸஸ்பென்ஷன் சமயத்துல கிடைக்கிற தொகையை வச்சு எப்படி வாழுறது மனமுடைந்து ரேஷன் ஆஃபீஸின் வராந்தாவிலே நின்னேன்.

ஒரு ஆள் முதுகில் தட்டினபோதுதான் எனக்கு சுயநினைவு வந்திச்சு. தலை நரைத்த அந்த மனிதன் என்னைப் பார்த்துச் சிரித்தான். எனக்கு ஞாபகப்படுத்திக்கவே முடியலை. ஆனாலும் நானும் சிரிச்சேன்.

என்ன இங்கே என்று கேட்டபோது நான் துக்கத்தை ஆற்றிக் கொள்வதற்காக எல்லாவற்றையும் திறந்து சொன்னேன். ரொம்ப சுலபமான காரியங்கிற மாதிரி எங்கையிலிருந்து ரேஷன் கார்டை வாங்கிக்கொண்டு அந்த மனிதன் உள்ளே போனான். நான் அப்பக்கூட என் கட்டி வைத்திருந்த நினைவை அவிழ்த்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கே பார்த்தோம்? கேட்கிறது நல்லாயிருக்காது. என் ஞாபகச்சக்திக் குறைவுக்கு இதுபோல ஏராளம் உதாரணங்களுண்டு.

சுருக்கமாகச் சொல்றேன் ஸார். அரை மணி நேரத்துக்குள்ள எனக்குப் புதுப்பித்த ரேஷன் கார்டு கெடைச்சுடுத்து. அந்த மனிதன் என்கிட்ட சொன்னான். பென்ஷன் வாங்கிட்டாலும் ஆஃபீசருக்கு தான் ரொம்ப வேண்டியவன்னு.

சட்டென்று பாதையில் ஒரு ஆளைப் பார்த்தபோது போட்டுமா என்று கேட்டுவிட்டு அந்த வயசாளி வெளியே போய்விட்டான்.

குற்றப் பத்திரிக்கைக்குப் பதிலில் இதையெல்லாமெதுக்குச் சொல்றான்னு உங்களுக்குத் தோன்றலாம். தங்களுக்கு இளம் வயசு, ஸார். உலக அனுபவம் இல்லை. உலகத்துல நீங்களும் நானும் மட்டுமில்லையே. கோடானு கோடி மனித உயிர்கள் உண்டு. அவர்களில் ஒன்றோ இரண்டோ பரந்த இதயமுள்ளவரை இங்கே பரிச்சயப்படுத்துகிறேன், அவ்வளவு தான். மன்னிக்கனும், ஸார்.

பத்து நாட்கள்தானே பதில் கொடுக்கத் தந்திருந்தது. ஐந்து நாட்கள் ஆயின. பகலில் தூங்குவதனால் இரவில் தூக்கமில்லை. இரவில் தூக்கம் இல்லாததினால் துர்ச்சொப்பனம் கண்டு தூக்கிவாரிப்போட்டு எழுந்திருக்கிறதில்லை.

உடம்பு முழுதும் ரொம்பச் சொறிகிறது. கஞ்சியும் சிறு பயறும் தொடர்ந்து சாப்பிட்டுக்கிட்டிருக்கேன். வாரத்தில் ஒரு தடவைதான் கொஞ்சம் எண்ணெய் தலையில் வைக்கிறது. பின்னே சொறி எப்படி வராமல் இருக்கும்? இரவு முழுவதும் சொறிந்தது, உடம்பில் நிறையக் கீறல்கள். பொறுக்க முடியாமப் போனதும் நான் மெடிகல் காலேஜ் ஆஸ்பத்திரிக்குப் போகத் தீர்மானிச்சேன்.

நீண்ட க்யூவில் நான் வெகுநேரம் காத்து நின்றேன். கடைசியில் க்யூ என் பின்னாலாயிற்று.

ஹாஃப் டோர் திறந்து நான் டாக்டரைக் கும்பிட்டேன். டாக்டர் மனம் திறந்து சிரித்தார். என்னைப் பிடித்து ஸ்டூலில் உட்காரவைத்தார். எனது நோய்பற்றிய விவரங்களை விசாரித்தார். என் உடற்பாகங்களை சிரத்தையுடன் பரிசோதனை செய்தார். மாத்திரை எழுதினார்.

அவர் சொன்னார்: இந்த மாத்திரை இங்கே கிடையாது. வெளியேயிருந்து வாங்கணும்.
ரொம்ப விலை. ஒண்ணுக்கு அறுபத்தஞ்சு பைசாவோ என்னவோ ஆகும். உங்களுக்குக் கஷ்டம்.

டாக்டர் மேஜை டிராயரை இழுத்துத் திறந்தார்.

கம்பெனிக்காரங்க தந்தது. இத எடுத்துக்குங்க.

நான் ஸ்தம்பித்து நின்றுவிட்டேன். கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி டாக்டர்களில் இத்தனை நல்லவர் ஒருவரா?

நான் எழுந்து கும்பிட்டேன்.

இப்பொழுது அவர் சொன்னார்: இதைச் சாப்பிட்டா பூரணமா குணமாகும். இல்லாட்டா வாங்க.... தயங்கவேண்டாம்... நீங்கள் எனக்காக ட்ரஷரிக்கும் அங்கயும் இங்கயும்
ஓடினீங்கள்ளே.

சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள நா உயர்வதற்குள் அடுத்த நோயாளி ஸ்டூலில் அமர்ந்தான். நான் வெளியே போனேன்.

ஆள் மாறிப்போயிருக்கலாம். ஒரே முகச்சாயல் உள்ள பலரும் இருக்காங்களே இந்த போமியில். எனக்கொரு தந்திரம் தோன்றியது. எப்படியோ ஆகட்டும், சும்மா மாத்திரை கிடைச்சுதுல்லே. சீக்கிரமா இங்கிருந்து போயிடணும். ஆள மாறிப்போச்சுன்னு டாக்டர் திரும்பிக் கூப்பிட்டுட்டா.

என் மரியாதைக்குரிய மேலதிகாரி, இந்த டாக்டரைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். என்னைவிட நாலு மடங்குச் சம்பளம் வாங்கும் மனுஷன். அந்த நடத்தையைப் பாத்தீங்களா. மருந்து சாப்பிடாமலேயே என் வியாதி பாதி குறைஞ்சதுபோல.

மணி நேரங்கள் உதிர்கின்றன. எனது தினங்கள் எண்ணப்பட்டு விட்டன. எழுதும் முறைகள் உங்கள் கையில் ரப்பர்போல. நான் கையளும்போது அவை உருக்காகிவிடுகின்றன. ஆச்சரியம்தான்.

இன்று ஐந்து மணிக்குப் பத்தாம்நாள் தீருகிறது. இன்று காலையிலும் நான் தங்களைக் காண ஒரு முயற்சி செய்தேன். முதல்முறை அனுமதி மறுக்கப்பட்டது. நீங்கள் யாரோ பெரிய மனிதர்களிடம் முக்கியமான சில விஷயங்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தீர்களாம். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நான் திரும்பவும் வந்தேன். சிணுங்கிக் கொண்டுதான் உங்கள் ஏவலாள் அந்த வாசலைத் திறந்துவிட்டான்.

தங்கள் முன் நிற்கையில் என் கண்கள் நிறைந்து துளும்பிக் கொண்டிருந்தன. என்னைக் காப்பாற்றணும் ஸார். என்ன சொன்னாலும் உங்களைத் தவிர வேறு யாராலும் என்னைக் காப்பாற்ற முடியாது.

தாங்கள் புருவத்தைச் சுளித்து நோக்கிக்கொண்டிருந்த ஃபைலை டக்கென்று ஓசையுடன் மூடினீர்கள்.

பதில் கொண்டு வந்திருக்கீங்களா?

இல்லை. நான் புலம்பினேன்.

இன்றைக்கு. ஐந்துக்கு முன்னால கிடைக்கணும். இல்லாவிட்டால் என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது. லஞ்சக் கேஸ். குற்றத்தை ஒப்புக்கொள்வதுதான் நல்லது. ப்ளீஸ் கெட்டவுட்.

எனது ரணத்தில் ஊசி முனைகள் இறங்கின. ஹாலிலும் மற்ற இடங்களிலும் எனது சக ஊழியர்கள் கவனமாக வேலை பார்க்கிறார்கள். என் உடம்பு வியர்த்து வழிந்துகொண்டிருந்தது. நம்ம ஆஃபீஸில் அந்தப் பெரிய ஆலமரம் இல்லே, அதன் கீழே போய் நின்றேன். என் வியர்வை எப்போதும் வற்றாதென்று எனக்குத் தோன்றியது.

நான் தலையை உயர்த்தியபோது யூனியன் ஆஃபீஸை கண்டேன். என் மனமெனும் இரவில் ஒரு நட்சத்திரம் உதித்தது. இத்தனை நாள் என்ன செய்துகொண்டிருந்தாய் என்று செக்ரட்டரி கேட்கும்போது என்ன பதில் சொல்வது? சொல்லலாமே: செய்யாத ஒரு குற்றத்திற்கு நான் எதற்காக பதில் கொடுக்கணும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன் இத்தனை காலம்.

நான் படிகள் ஏறினேன். செகரட்டரி என்னவோ முக்கியமாக எழுதிக்கொண்டிருந்தார். சற்று நேரம் நின்றேன். ஒரு தடவை இருமியபோதுதான் செக்ரட்டரி முகத்தை உயர்த்தினார்.

ஹலோ ஸத்யரூபன் விஷயத்தை நானறிந்தேன். சீஃப்பை நேரில் பார்த்துச் சொல்லலியா?

சொன்னேன் ஸார். ஒரு பிரயோசனமும் இல்லை.

வீட்டுக்குப் போய் பார்த்திருக்கலாமே.

ஒன்றும் சொல்வதற்கில்லை. துக்கம் வீங்கி நிற்கிறது. போகவில்லை ஸார்.

செக்ரட்டரி முனகினார். தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்ததில் கவனம் செலுத்தினார். பட்டென்று தலையை உயர்த்தினார்.

இந்த நோட்டீஸை எழுதினப்புறம் நான் சீஃப்பைப் பார்க்கிறேன் நில்லுங்க.

நான் செக்ரட்டரியின் மேஜைப் பக்கத்தில் நின்றேன்.

செக்ரட்டரி எழுதிக்கொண்டிருந்தார். சிலருடைய வாயை மூடிக் கட்டி, ஒரு பகுதியினரின் குறுகிய மனப்பான்மைபூண்ட அரசியலிலிருந்து உண்டான மேடையாக இந்த அமைப்பை மாற்றுவதற்கான ஈனமான தந்திரத்தின் ஒரு பாகமாக அதைக் காணவேண்டியிருக்கிறது. இந்தத் துண்டாடும் போக்குகளை இந்த ஆபீஸின் மேன்மை தங்கிய அங்கத்தினர்கள் எதிர்த்துத் தோல்வியடையச் செய்வார்களென்றும், இப்புதிய 'ஜனாதிபத்யவாதி'களை மற்றத் துறைகளிலிருப்பதைப் போல் அங்கேயும் தனிப்படுத்துவார்கள் என்றும், எனக்கு நிச்சயமாகத் தெரியும். வணக்கங்களுடன்...

வாங்க...

குற்றப் பத்திரிகையை செக்ரட்டரி வாங்கினார்.

நான் செக்ரட்டரியின் பின்னால் நடந்தேன். என் மனதின் இரவில் இன்னும் நிறைய நட்சத்திரங்கள் உதித்து உயரத் தொடங்கின. நான் காப்பாற்றப் படுவேன்.

செக்ரட்டரி சீஃபின் அறைக்குள் போனார். நான் ஒரு மூலையில் சுவரில் நகத்தால் கூடத் தொடாமல் நின்றேன். என் கை கால்கள் கவலையின் சில்லிப்பில் விறைத்துக்கொண்டிருந்தன.

ஒரு எதிர்பாராத நிமிடத்தில் ஓசையுடன் வாசலைத் திறந்துகொண்டு செக்ரட்டரி வெளியே வந்தார்.

குற்றப் பத்திரிகையை அலட்சியமாக என் முன்னால் எறிந்தார். செக்ரட்டரியின் கண்கள் சிவந்திருந்தன.

செக்ரட்டரியின் குரல்:
லஞ்சம் வாங்கியவனைக் காப்பாற்றும்படி யாரும் எங்கேயும் சொல்லவில்லை. நக்கிப் பிச்சை வாங்கறபோது யோசிச்சிருக்கணும். போலீஸ் காரன், பென்ஷன் ஆசாமி, டாக்டர் இவங்களுடைய ரிட்டன் கம்ப்ளெய்ண்ட்ஸை எடுத்து எனக்குக் காட்டினார். என் தோல் சுருங்கிப் போச்சு.

வேண்டாம். எனக்கு இதொண்ணும் கேட்க வேண்டியதில்லை. இவங்களுடைய கம்ப்ளெயிண்ட் மட்டுமானா சாட்சியில்லைன்னு சொல்லித் தப்பலாம். நீங்க காசு வாங்கறதைப் பார்த்ததாகச் சம்பந்தப்பட்ட செக்ஷன் கிளார்க்குகள் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.

புளுகு சார், பச்சைப்புளுகு.

புளுகா, கோவிந்தனும், தாமஸூம், அச்சுதனும் கைப்பட எழுதிக் கொடுத்தது புளுகோ?... போதும்... போதும். இப்படி நக்கித் தனமா லஞ்சம் வாங்கும் ஒங்களுக்கெல்லாம் செக்ரட்டரியா இருக்கிறதே எனக்கு அவமானம். நீங்க எங்க போய்த் தொலைஞ்சாலும் எனக்கொண்ணுமில்லை.

செக்ரட்டரி படியிறங்கிப் போனபோது ஒரு சின்னக் குழந்தையைப் போல எனக்கு உரக்க அழத் தோன்றியது.

எனது மதிப்பிற்குரிய மேலதிகாரி, இனி நான் என்ன செய்யவேண்டும்? எவ்வளவு நேரம் இப்படிக் கண்களைத் துடைத்துக்கொண்டு நிற்பது? உழைப்பாளியின் கோட்பாட்டை மனவறைக்குள் போட்டுப் பூட்டிச் சாவியைக் கிணற்றில் போட்டுவிட்டுக் கையை வீசி நடக்கும் தாங்களும், கதவைப் பூட்டி, கோட்பாடுகளை, முற்றத்தில் மட்டும் உலவ அனுமதிக்கும் செக்ரட்டரியும் என்னைப் புறக்கணித்த சூழ்நிலையில் நான் என்ன செய்யவேண்டும்? ‘புலிக்குப் பிறந்தால் நகமில்லாமலிருக்காது’ என்ற பழமொழியை நினைத்து, உங்கள் வாசற்கதவைத் தள்ளித் திறந்து உள்ளே நுழைந்து, நாற்காலியையோ, ரூல் தடியையோ எடுத்து உங்களை அடித்துப்போட்டுவிட்டு நேராகப் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்ச் சரணடையலாம். காக்கிச் சட்டைக்காரர்கள் என்னை மிகக் கடுமையாகப் பிழிந்தெடுத்துவிடுவார்கள். எனது எலும்புக்கும் சதைக்குமுள்ள உறவைப் பிரிப்பார்கள். நான் ஜெயில் கம்பிகளுக் குள்ளாவேன்.

கற்பனை செய்யத்தான் என்னால் முடியும். நடத்த முடியாது. எனக்கு வாழணும். இப் பரந்த உலகில் பட்டினி கிடந்தாவது எனக்கு வாழணும். இதனுடைய கடைசித் துணுக்கு வரை எனக்குக் கடிக்கணும்.

எனக்கு மன்னிப்புத் தரணும். தாங்கள் தந்த குற்றப் பத்திரிகையில் சொல்லியிருப்ப-தெல்லாம் சரிதான், குறைந்த வருமானமுள்ள ஒரு ஏவலாள் லஞ்சத்தையன்றி வேறெதை நம்புவது!

போலீஸ்காரனிடமிருந்து வாங்கிய பத்து ரூபாயில் என் மகளுக்கு ஒரு தாவணி வாங்கிக் கொடுத்தேன். பென்ஷன்காரனிடமிருந்து வாங்கிய பதினைந்து ரூபாய்க்கு வயோதிக நோயாளியான என் அப்பாவுக்குக் கம்பளி உடுப்பும், டாக்டரிடமிருந்து வாங்கிய ஐந்து ரூபாய்க்குப் பித்த நோயாளியான என் மனைவிக்கு இரும்புச்சத்து மாத்திரையும் வாங்கினேன்.

இனிமேல் ஒருபோதும் இப்படிச் செய்ய மாட்டேன், ஸார். தரித்திரம் பொறுக்க முடியாமல் செய்திட்டது. எனக்கு மன்னிப்புத் தரணும். வாழ ஆசைப்படும் இந்த ஏழைக்கு மன்னிப்புத் தரவேண்டும்.

ஆயிற்று சார். மணி நாலரையாகிறது. இடையிடையே மை இறங்காத ஒரு பேனாதான் என் கையிலுள்ளது. அதை வைத்துத்தான் இவ்வளவு எழுதினேன். நான் ஏழு வரை தான் படிச்சிருக்கேன். அதனால் இதில் ஏராளம் இலக்கணப் பிழைகள் இருக்கலாம். பொறுத்துக் கொள்ளவேண்டும்.

எனது எதிர்காலம் பூரணமாகத் தங்களுடைய பேனா முனையிலிருப்பதால் எதற்கும் தங்களுடைய அனுமதியை நான் கேட்பேன். கடைசியாக எனக்கு ஒரே ஒரு விண்ணப்பம்.

இப் பதிலை தங்களை நேரில் கண்டு சமர்ப்பித்த பிறகு நான் நேராக என் வாடகையறைக்குத்தான் போகிறேன். என் இதயத்தின் நான்கு சுவர்களும் தகர்ந்துபோகும் வித்த்திலிருக்கிறது துக்கத்தின் பெருக்கம். அந்த அறையில் கிடந்து நான் என் அப்பாவை நினைத்துக்கொள்வேன். கோழையான நான் இந்தச் சந்தர்ப்பத்திலாவது தீரரான என் அப்பாவைப் பற்றி நினைத்துப் பெருமைப்படட்டும்! ஐம்பத்தியிரண்டில் என்று தோன்றுகிறது. ஒரு விவசாயிப் போராட்ட்த்தில் ஆலப்புழை லாக்கப்யில் கிடந்து அப்பா இறந்தார். ஸெரிபரல் த்ராம்பாஸிஸ் அது இதென்று சொல்ல யாரும் மெனக்கெடவில்லை. ஆஸ்பத்திரியைப்போல லாக்கப்பிலும் மரணம் சாதாரணமாயிருந்தது. மரணம் குண்டூசியாக, பசுந்துடைப்பக் குச்சியாக, உருண்ட தடியாக, மிளகாய்ப் பொடியாக அங்கே பிரத்யட்சமாகிக்கொண்டிருந்தது. அப்பாவைப்பற்றி நினைக் கையில் என்னால் அழாமல் இருக்க முடியவில்லை, ஸார். வேண்டிய வரையிலும் அழுது போதுமென்றாகும்போது நான் என்னைப்பற்றி நினைக்கிறேன். இந்த நகரத்தில், முப்பத்தியொன்பதாவது வயதிலும் பிரம்மச்சாரியாக்க் கழிக்கும் என் எதிர்காலம் என்ன?....

என் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் ஸார்.

என்னை அழ அனுமதிக்க வேண்டும்.

அழுது அழுது நான் என் இதயத்தைக் கழுவட்டும்.


-----------------------------

16. இன்னொருவன்


தன்னைப்போல ஒருவன் இச் சிறிய நகரத்தில் எங்கேயோ இருக்கிறான்; மன உளைச்சலுடன் ஜெ. புரிந்துகொண்டான். சரிவான இறக்கத்தில் மிதித்து இறங்கிவரும் சைக்கிள் ஆசாமி கஷ்டப்பட்டு பிரேக் பிடித்து ஜெ. யிடம் கேட்கிறான்: “’எம்’ தானே? எவ்வளவு நாளாச்சு பார்த்து!”

சிவந்த கண்களும், கொம்பு மீசையும், முகத்தில் வெட்டுக்காயங்களும் கொண்ட சைக்கிள்காரன்.

“நான் எம். இல்லை.” ஜெ. பயந்து நடுங்கிக்கொண்டு சொன்னான். சைக்கிள் குப்புற ஓட்டத்தைத் தொடர்ந்தது. தியேட்டரில் பக்கத்து ஸீட்டில் இருந்தவன் லைட் எரிந்தபோது முதுகில் தட்டியவாறு கேட்டான்: “எங்கேயும் ஒன்னைப் பார்க்கிறேனே?”

”நான் எம். இல்லை.” ஜெ. திடுக்கிட்டுச் சொன்னான்.

மயிரடர்ந்த கையை உயர்த்தி அவன் மன்னிப்புக் கேட்டபோதிலும் பிறகு ஜெ.யினால் உட்கார முடியவில்லை. மீண்டும் லைட் அணைந்தபோது எழுந்து போய்விட்டான்.

அப்படியானால் என்னைப்போலொருவன் இந்த டௌனில் வெகு காலமாக வசிக்கிறான். ஜெ. புரிந்துகொள்கிறான்.

ஜிம்னாஷியத்தின் முன்னாலுள்ள ரோட்டின்மீது, ஸ்டேடியத்தின் வளைவில் ஒளித்து நின்று, மரங்கள் இலைகளை நீட்டி நிழல் தந்தன.கைவேலைப் பொருட்கள் விற்கும் இன்ஸ்டிட்யூட்டிலிருந்து காரில் ஏற விருந்த மத்ய வயதுக்காரன் நாக்கைச் சொடக்கிச் சப்தமெழுப்பிக் கூப்பிட்டான். நீரில் கல் விழும் ஒலி, இதோ, மீண்டும் எம். தேவைப்
படுகிறான். அசைந்து ஜொலிக்கும் பான்ட்டும், சுருட்டுமாகப் பணக்காரன் பக்கத்தில் வந்தான். கோபத்துடன் கையை மடக்கிக் கொண்டு சொன்னான்: “சொன்னாச் சொன்னபடி செய்யணும்.”

“நான்...” ஜெ. சொல்லத் தயாரானான்.

"பணம் வாங்கிட்ட பிற்பாடு அதை எதற்காக வாங்கினதுங்கிறதை மறக்கக்கூடாது." அவனுடைய வாயிலிருந்து துர்நாற்றம் வீசியது.

"உங்களுக்கு..." ஜெ' யைச் சொல்லவிடாமல் பெருங்குரல் எழுந்தது.

"சுகேசினியைக் கொண்டு வரப்போகிறாயாம்! ஒண்ணு பணத்தைத் திரும்பித் தரணும். இல்லாட்டா இன்னைக்கு ராத்திரி.."

" நான் ஜெ. எம் அல்ல."

கோபத்துடன் நடக்கத் தொடங்குவதற்குள் இன்ஸ்டிட்யூட்டிலிருந்து கார் அவனைக் கடந்து போயிருந்தது.

எம். கெட்ட நடவடிக்கைகள் கொண்டவன். அது போதாதென்று எதிர்ப்படுபவர்களை மிரட்டிப் பணம் பண்ணுகிறவன் வேறு. ஜெ. முடிவுக்கு வந்தான்.

அவனுக்குப் பிறழவில்லை.

என்னவானாலும் ஒருமுறை தன் உடலுள்ள, தனது இந்த முகத்தை ஒரு முறை காண வேண்டும்.

ஜெ. பாக்கெட்டில் கத்தியுடன் நடந்தான்.

முகங்களிலெல்லாம் பார்வையைப் பாயவிட்டான். நீளமான கண்கள். அவற்றிற்கு மேலே ரோமம் விதைத்த கோடுகள். வர்ணம் தீட்டியதும் தீட்டாததுமான துவாரங்கள். மேலும் கீழுமாக நாசித் துவாரங்களும், காதுகளும், நாற்றமடிக்கும் குகைகளிலிருந்து நாக்குகளும், எத்தனை கோடி

ஆனால், தனது இன்னொரு சாயலைக் கண்டுபிடிக்க வேண்டுமானால் லாட்ஜில் ஆணியில் தொங்கும் உடைந்த கண்ணாடியில் ஒளிபட வேண்டும்.

மாலை மணி ஐந்து நாற்பது என்று ஜெ' யின் வாட்ச் அறிவிக்கிறது. அதன் அர்த்தம், கடந்துபோகும் வாட்சுக்களிலெல்லாம் நேரம் ஐந்து நாற்பத்தைந்துக்கும் ஐந்து முப்பத்தைந்துக்கும் நடுவில் என்பது. ஒவ்வொருத்தனும் அவனவன் வாட்சைச் சுற்றி அலைகிறான். பத்து இருபதுக்குப் பாலத்துக்குப் பக்கத்திலே நிற்கிறேன்; வருவாயா? ஒன்று முப்பதுக்குத் தெற்கிலிருந்து வரும் (மகளிர்) பஸ்ஸில் இரண்டாவது ஸீட்டில் கிழக்கு ஓரமாக சுந்தரி இருப்பாள். மூன்று பதினைந்திற்கு சொறிபிடித்த பையன் மாலைப்பதிப்பு விற்கக் கிளம்புவான். பூத்தில் பால் வாங்க வந்தவர்கள் கலையும்போது மணி மூன்றே முக்காலா யிருக்கும். அப்படியப்படி......

ஜெ'யின் வாட்சின் மேல் இன்னொரு வாட்ச் உராய்ந்தது. ஒருவனுடைய காலச் சக்கரம் மற்றவனுடையதின் மேல் உராய்ந்திருக்கிறது. ஜெ' க்கு அப்படித் தோன்றியது.

நிறைந்து வழியும் ராஜ வீதி. இடுப்பு வரை ஒரே அமைப்பும், இரண்டு கால்களுமுள்ள ஆண் பெண்கள் ஒரே சமயத்தில் இடதுகால். ஒரே சமயத்தில் வலதுகால் என்ற கிரமத்தில் நகர்த்தி சஞ்சரிக்கும் அந்தி.

நல்ல வேளை. வாட்சில் கீறல் விழவில்லை.

ஜெ. தலையை உயர்த்திப் பார்க்கும்போது; இது எம் தான். ஆணியில் தொங்காத கண்ணாடி.

”எம் தானே?”

“ஆமாம், ஜெ.”

“எப்படித் தெரிஞ்சுது?”

“பலரும் என்னைத் தப்பா நினைச்சதுண்டு.”

ஜெ’யின் பாக்கெட்டின் மேல் வேட்கை நிறைந்த ஒரு பார்வை வந்து விழுந்தது. பாக்கெட்டின் உள்ளே வெளிறிப் பழுப்பேறிப்போன பத்து பைசா பஸ் டிக்கட் ஒன்று தனியாக நடுவொடிந்து செத்துக் கிடந்தது.

“என்ன செய்யறீங்க?” ஜெ. சும்மா குசலம் விசாரித்தான்.
“சும்மா நடக்குது” எம். சிரித்தான். ரொம்ப நட்பைக் காட்டிக் கையைப் பிடித்துக் கொண்டான்.
“வேலை?”
“குறிப்பா அப்படியொண்ணுமில்லை” எம் சொன்னான் மத்தவங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து கொடுத்து ஒருவிதமா நாளை ஓட்டிக்கிட்டிருக்கேன். ஸார்” அது முன்னாலேயே தெரிஞ்சிருக்கு, ஸார் - ஜெ. (வெட்கம் கெட்ட நாய்).

ஜெ. பிரம்மச்சாரி. ஆனாலும் ஏகக் கஷ்டம். குறைந்த சம்பளக்காரன். சிறிய தொகைகளை மணியார்டர் செய்து அவற்றின் ரசீதுகளைச் சேகரித்துக் கூட்டிப்பார்த்து, வீட்டைத் தாங்குபவன் என்று மூச்சு முட்டப் பெருமைப்படும் சுபாவம் கொண்டவன். தன்னை அறிமுகப் படுத்திக்கொள்கையில் யாரிடமானாலும் இந்த விவரத்தைச் சொல்வான்.

“தோ, பாரு, என் தோள்கள் ஒரு வீட்டைச் சுமக்கின்றன. தெரியலே?”

எம்.மிடமும் சுட்டிக் காட்டினான்.

எம். அவனை விட்டுவிட்டுப் போய்விட்டான்.
மறுபடியும் சந்திப்பதற்குள் எம். குபேரனாக மாறியிருப்பான். “இந்நாட்களில் வெற்றி இப்படிபட்டவர்களுக்குத் தான். கயமைக்கும், கெட்ட நடத்தைகளுக்கும் ஊதியம் கிடைக்கும் காலம்.)

ஞாயிற்றுக்கிழமை பகலில் பார்க்கில் அலைந்தான். தளர்ச்சியடைந்தபோது வேஷ்டியை அவிழ்த்து எறிந்தான். பூலில் இறங்கிக் கைகால்களை அடித்து நீந்தினான். மூக்கில் தண்ணீர் ஏறிற்று. காது அடைத்தது.

நீரினடியில் மூழ்கி மல்லாந்து மேலிருந்து கனன்று விழும் சூரியன்களைக் கண்டான். கண்ணிமை மயிர்மேல் குமிழிகள் பளபளப்பதைப் பார்த்து ரசித்தான்.

உடம்பைத் துவட்டினான். குளிர் காற்றேற்று, வாழ்க்கையும் குமிழிதானே என்ற நினைப்புடன் நடக்கையில் ஒரு குழந்தை ஓடிவந்து ஒரு கடிதத்தைக் கொடுத்தது.

"மஞ்சள் புத்தகங்களில் வர்ணித்த நாலு போஸ்களில் அடங்கிவிடும்
ஒருஇரவுதானோ காதல் என்பது?"

திரும்பிப் பார்க்கையில் குழந்தையைக் காணோம்.

பெண்ணின் எழுத்து: "புதிய டூத்பேஸ்ட்டின் சுவை போலத்தான் ஒவ்வொரு புதிய பெண்ணும் என்று நீங்கள் சொல்வதுண்டு. ஆனால் அதைச் செய்து காட்டிவிடுவீர்கள் என்று நான் ஒருபோதும் கருதியிருந்ததில்லை, துஷ்டன்."

எம்.துஷ்டன். கடிதத்தின்கீழே தான் சாவேன் என்று அவள் எழுதியிருந்தாள்.

"வியாழக்கிழமை காலை பத்து மணிக்கு ஸானிட்டோரியத்தின்
எதிரேயுள்ள பஸ் ஸ்டாப்பிற்கு வருவீர்களா?"

ஜெ. வியாழக்கிழமை லீவு எடுத்தான். குறிப்பிட்ட இடத்துக்குப் போனான். உட்புறமாகச் சுருங்கிய பின்பாகமும், கசங்கிய சீட்டுபோன்ற மார்பு மட்டுமே மிஞ்சியிருந்த இனிய வயதுக்காரியான ஒரு பெண் பிரேதம் குறிப்பிட்ட நேரத்தில் ஸானிட்டோரியத்திலிருந்து குதித்து விழுந்தது.

"உங்களோடு ஓரிடத்திற்கு வந்தால் (ஹோட்டலுக்கானாலும், எந்த நரகத்திற்கானாலும்) உங்களை மட்டுமே நான் எதிர்பார்க்கிறேன். கூட்டாளி போலிருக்கிறது. நல்ல பணம் கிடைத்திருக்கும், இல்லையை?" அவள் அழுதாள். " உங்களை நம்பினதால் நான் வஞ்சிக்கப்பட்டிருக்கிறேன். என் வாழ்க்கையை நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றுகொண்டிருக்கிறீர்கள். இப்போது இதோ
கடைசியில் இப்படியும்."

"நான் எம்.அல்ல." ஜெ.முணுமுணுத்தான்.

ரோட்டின் குறுக்குக் காற்றில் ஓராத்மா கரைவதைக் கண்டான்.

நடுவில் ஒருமுறை, கடந்து சென்ற ஒரு காரின் முன் ஸீட்டில் தனது பிரதிச் சாயலை தரிசித்தான். பிறகு பல வாகனங்களிலும், ஒருபோதும் சிரிக்காத தான் பீறிட்டுச் சிரித்துக்கொண்டு விரைவதைக் கண்டான். ஒரு மத்யானத்தில் ஏர்-போர்ட்டிற்குப் போகும் பஸ்ஸிலமர்ந்து கெட்டிக்காரனான தான் ஏமாளியான தன்னைப் பார்த்துக் கைவீசினான்.

ஜெ. தனக்குள் மனச் சோர்வுற்றான்.

அவன் கோவிலுக்குப் போனான். எம்'மின் உருவத்தை மட்டும் தந்து விட்டு ஏன் அவனுடைய அதிருஷ்டங்களை.யும் தனக்குத் தரவில்லை என்று தெய்வத்திடம் கடுமையாகக் கேட்டான்.

பிறகு என்ன கிடைத்தது?

ராணுவத்தினரின் கான்டீனிலிருந்து ரம் வாங்கித் தருகிறேனென்று சொல்லித் துட்டு வாங்கிக்கொண்டு ஒளிந்து திரிகிறாயல்லவா?

நான் ஜெ.

கடன் வாங்கினால் திருப்பித் தரணும். விசாரித்துக்கொண்டு வருகையில் தெரியாததைப்போல நடித்தால் கொன்னு தொலைச்சுப்புடுவேன். ராஸ்கல்.

நான் ஜெ'யாக்கும், மிஸ்டர்.

உங்களுடைய பிளட்டின் ரிஸல்ட் கிடைத்தது. பாஸிட்டிவ். ஏதானாலும் சீக்கிரம் செய்துகொள்ளணும்.

நான் ஜெ., எம் அல்ல.

அக்கா செத்துப்போவேனென்று சொல்லச் சொல்லி அனுப்பினாள்.

நான் எம். இல்லை குழந்தே. ஜெ'யாக்கும்.

இனிமேல் இதை மூடிக் கட்டிக்கொண்டு நடக்க முடியாது. இப்போதே சிநேகிதிகள் எல்லோருக்கும் சந்தேகமாக இருக்கிறது. ஒரு மாசம் கூட ஆனால்..

நான் ஜெ. இக் கடிதம் எனக்குள்ளதல்ல.

அன்று சொன்ன தங்கம்.

ஐயோ, நான் ஜெ. நான் ஜெ'யாக்கும்.

தன்னைத் தோற்கடித்து இன்னொருவன் பணக்காரனாகியிருப்பான். கார் வாங்கியிருப்பான். ரோட்டரி கிளப்பிலெல்லாம் பிரசங்கம் செய்வதும், ஹோட்டல் அறைகளில் வாந்தியெடுப்பதும், காலேஜ் மாணவிகளுக்குப் பண் உதவி செய்வதும், தொளசொளத்த ஆடைகள் உடுத்துவதும், யாரிடத்திலும் வினயமாகப் பேசுவதுமாக இவையெல்லாம் செய்துகொண்டிருப்பான்.

ஜெ'க்குப் பொறாமை உண்டாயிற்று.

அவன் தெரிந்தவர்களைப் பார்த்தால்கூடக் குனிந்து நடந்துபோகும் ஒரு மரமண்டையாக மாறினான்.

ஒருவனுக்கு ஒரு பட்டணத்தில் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும்
வசிக்கலாம்.

பத்து வருடங்கள் தொடர்ந்து வசித்தபின் ஒருவன் அவ்விடத்தில் ஒரு சரித்திரப் பொருளாக மாறிவிடுகிறான். அவ்வளழுதான். அதெப்படி? ஒருவனின் வெளித் தோடுகளைக் கரையான் கொண்டு போகிறது. ஒருவனின் கம் மூக்கு, எல்லாவற்றையும் மூடி சிலந்தி வலை பின்னுகின்றன. வரும்போது வாங்கி. பான்ட்டுகள் மட்டும் அன்றும் நிலைத் திருக்கின்றன. கிழிந்து தைக்கப்பட்டவை. "நீங்கள் சொன்னது சரிதான்." காஃபி ஹௌஸின் முன்னால் படிந்து சேர்ந்து கொண்டிருந்த, புதிதாகப் பெற்று வளர்ந்த கிருமிகள், ஜெ. கடந்து செல்கையில் இரகசியம்பேசின." "தினைந்து வருடத்திற்கு முந்தைய ஃபாஷன்--"

சரித்திர வஸ்துவின் தலைசீவலும், கை மடக்கி வைக்கும் முறையும், ஷூக்களும் முதலிய ஃபாஷனின் மாற்றங்களைக் குறித்து ஆராய்ச்சி நடத்தும் மாணவர்கள் கவனமாகப் படித்தனர். அவற்றைப்பற்றிய விரிவான குறிப்புகள் எடுத்தார்கள். மீண்டும் ஒரு தடவை, இரண்டாம் முறையாக எம்'மை எதிர்கொள்ளவேண்டி வந்தது. இப்போதைய தன் முகத்தின் பிரதிச்சாயல், காலம் ஒரே மாதிரிதான் எல்லோருக்கும் நகருகிறது எந்று தோன்றுகிறது. ஐந்து நிமிட வித்யாசம்கூட முகச்சுருக்கங்களில் காண்பதற்கில்லை. இருவரும் இப்போது ஒரே போல.

எம். பெரிய பணக்காரனாயிருப்பான். ஜெ.மனதிற்குள் முடிவு
செய்தான்.

எம். பக்கத்தில் வந்தான். " ரொம்ப நாளைச்சே, பார்த்து."

"நூத்துக்கு நூறு சரி."

குதிரைச் சாணம் அரைந்து சேர்ந்த ரோட்டில், நடந்து போகிறவர்களின் கபம் உலர்ந்து, குமிழ் குவிந்திருந்தது. வாழ்க்கை! எம். அதன் மேல் துப்பினான். இரத்தம் கலந்த சிறு துர்நாற்றம் கொண்ட துப்பல் ரோட்டை நனைத்தது. உடையாத குமிழுக்குச் சிவப்பு நிறத்தைக் கொடுத்தது.

"மாரியேஜ் எல்லாம் ஆயிடுத்தா?"

"எங்கே! கடமைகள் எல்லாம் தீர்ந்து ஒரு மாத்திரையாவது வாழமுடியுமோ என்ற சந்தேகம். அதிருக்கட்டும். வாழ்க்கை எப்படி?"

"கஷ்டம்."

கோடீஸ்வரனாகலியா?" ஜெ .எதிர்பார்ப்புடன் விசாரித்தான்.

"யாரு?"

"நான் நினைச்சது......."

"குழந்தே." எம். மூச்சிறைத்தான். அவனது பாக்கெட்டின் அடி பாகம் கிழிந்திருந்தது. கண்களில் சிலந்தி வலைகள் காணப் பட்டன. அவற்றில் எட்டுக்கால் பூச்சிகளின் குஞ்சுகளைக் கண்டான். பீளை நிறைந்திருந்தது. இடையிடையே கொழுத்த ஜலம் தலை நீட்டி நரைக்கத் தொடங்கியிருந்த மீசையின் மேல நக்கியது.

ஜெ' க்கு பயம் தோன்றியது. அது புரிந்தபோது எம். கேட்டான்.

"இருபத்தைஞ்சு பைசா வேண்டியிருக்கே!"

பயம் மாறி அனுதாபமாயிற்று.

மொத்தமே இருப‌த்தொன்பது பைசாவை எம்.முக்குக் கொடுத்தான்.

"நான் நினைச்சது." ஜெ. சொன்னான்.

"உங்களுக்கு நல்ல வருமானம் இருந்ததென்று."

"தப்பான ஊகங்கள். நம்மையெல்லாம் காப்பாற்றுபவர்கள் பொது ஜ‌ன‌ங்க‌ள‌ல்ல‌வா, ஜெ? பிற‌கு எப்ப‌டி."

"ப‌ழைய‌ தொழிலெல்லாம் ----"

"நிறுத்திட்டேனாங்க‌ரியா? அவை இப்போது வாழ்க்கையாக்கும். வாழ்மூச்சு."

எம். ந‌ன்றி கூறினான். பத்தொன்ப‌து பைசா கொடுத்த‌த‌ற்காக‌. பிற்பாடு நட‌‌ந்தான். ந‌ட‌க்கையில், பொடிந்துபோன‌ க‌ண்க‌ளில் சில‌ந்திக் குஞ்சுக‌ள் ஓடி விளையாடின‌. ப‌சியும் ப‌ட்டினியும் முன்போல‌வே நிர்வாண‌மாக‌ ந‌ட‌ன‌ம் தொட‌ரும் க‌ண்க‌ள்.

"உன்னைப்போல் ஒருவ‌ன்." ஜெ. உள்ளுக்குள் சிர‌த்தையுடன் அழைத்துச் சொன்னான்.

"பிர‌ம்ம‌ச்சாரியும், ப‌த்துப் ப‌தினைந்து இன்க்ரிமென்டுக‌ள் வாங்கிய‌ க‌வ‌ர்ன்மெண்ட் உத்தியோக‌ஸ்த‌னும் ஆன‌ உன்னைப்போல‌ இதோ ஒருவ‌ன்." நான்கு க‌ண்க‌ளிலும் ஒரே வித‌மான‌ சில‌ந்திகள்.

இரு மூக்குக‌ளிலும் ஒரே அள‌வு கொழுப்பான‌ ஊற்று.

வாழ்க்கையில் முத‌ன் முத‌லாக ஜெ' ய்க்கு ஒரு வெறியை அட‌க்க‌ முடியாம‌லாயிற்று.

யாரிட‌மாவ‌து இதைச் சொல்ல‌ வேண்டும்.

-------------

17. க‌ர‌ப்பான் பூச்சிக‌ள்


ச‌மைய‌ல‌றையில் காலைக் காஃபி த‌யாரித்துக்கொண்டிருக்கையில்தான் அவ‌ள் பார்த்தாள். க‌ர‌ப்பான் பூச்சிக‌ள். மேஜையின் ஒரு விளிம்பில் ச‌ற்று நேர‌ம் கிருகிரு ச‌ப்த‌ம் உண்டாக்கிக்கொண்டு அவ‌ளை ப‌ய‌ப்ப‌டுத்தும் வித‌த்தில் உற்று நோக்கின‌. பிற‌கு மேஜையின் ம‌று ப‌க்க‌த்தில் அவை ம‌றைந்துபோயின‌.

அவ‌ள் காஃபியை எடுத்துக்கொண்டு ப‌டுக்கைய‌றைக்குச் சென்றாள். க‌ண‌வ‌ன் ப‌டுக்கையிலிருந்து எழுந்திருக்க‌வில்லை.ஸ்விட்சைப் போட்ட‌போது க‌ண்ணுக்கு இத‌ம் த‌ரும் மிருதுவான‌ ஒளி அறை முழுதும் நிறைந்து ஒழுக‌த் தொட‌ங்கிய‌து.க‌ட்டிலில் அம‌ர்ந்து காஃபிக்காக‌க் கையை நீட்டிக்கொன்டு அவ‌ளை நோக்கிப் புன்சிரிப்பு சிரித்தான்.

உண‌ர்ச்சியற்ற‌ முக‌த்துட‌ன் அவ‌ன் காஃபி குடிப்ப‌தை அவ‌ள் பார்த்த‌வாறு நின்றிருந்தாள். 'இந்த‌ ந‌டைமுறை என‌க்கு அலுத்துப்போக‌த் தொட‌ங்கியிருக்கிற‌து' அவ‌ள் நினைத்தாள். க‌ண‌வ‌னின் வெளிறிப்போன‌ முக‌த்தையும், ந‌ரைக்க‌த் தொட‌ங்கிவிட்ட‌ ம‌யிர்க‌ளையும் காண்கையிலெல்லாம் அவ‌ளுக்குப் ப‌ச்சாத்தாப‌-முண்டாயிற்று. இந்த‌ப் ப‌ரிதாப‌ம் ம‌ட்டுமே அவ‌ளை ஒரு ச‌ண்டைக்காரியாக்காம‌ல் அட‌க்கி நிறுத்தியிருந்த‌து.

கூட‌ம் வ‌ழியாக‌, காலிக் க‌ப்பை எடுத்துக்கொண்டு திரும்புகையில் டிஸ்டெம்ப‌ர் பூசிய‌ சுவ‌ரில் க‌ருப்பான‌ சிறிய‌ ஒரு ஜ‌ந்து ஊர்வ‌தாக‌ அவ‌ளுக்குத் தோன்றிய‌து. அதைப் பார்க்க‌ வேண்டுமென்றிருந்த‌ போதிலும். ஒரு இய‌ல்பான‌ உந்துத‌லினால் அவ‌ள் ந‌க‌ர்ந்தாள்; நிற்க‌வில்லை.

ச‌மைய‌ல‌றையில் இப்போது நிறைய‌க் க‌ர‌ப்பான் பூச்சிக‌ள் இருந்த‌ன‌. அவை க‌ர‌க‌ர‌வென‌ ச‌ப்த‌முண்டாக்கி மேஜை மேலும் சுவ‌ர்மேலும் ஊர்ந்த‌ன‌. அடுக்க‌ளைக்குள் நுழைய‌ முற்ப‌ட்ட‌போது ஒன்றிர‌ண்டு க‌ர‌ப்பான் பூச்சிக‌ள் ப‌ற‌ந்து வ‌ந்து அவ‌ளுடைய‌ த‌லையில் அம‌ர்ந்த‌ன‌. கையை வீசி அவைக‌ளை அக‌ற்ற‌ அவ‌ள் முய‌ன்றாள்.ஆனால், க‌ர‌ப்பான் பூச்சிக‌ள் மிக‌ அதிக‌மாக‌ இருந்த‌தினால், அவ‌ள் இறுதியில் பின்வாங்க‌ வேண்டி வந்தது. இதைப்பற்றி புருஷனிடம் சொல்ல வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது.

ஆனால் படுக்கையறையில் கணவன் எதனோடோ யுத்தம் செய்து கொண்டிருந்தான். அவன் யுத்தத்திற்கு நடுவில் வாய் திறந்து ‘கரப்பான் பூச்சி’ என்ற வார்த்தையை உச்சரித்தபோதுதான் எதனோடு என்று புரிந்தது. அவன் கரப்பான் பூச்சியை, ஒரு நியூஸ் பேப்பரை மடக்கி அடித்துக்கொண்டிருந்தான். கரப்பான் பூச்சி அவனை ஏமாற்றிப் பறந்தது. அவனுக்கு ஓரளவு வட்டம் சுற்றவேண்டி வந்தது.

“இதனால் ஒரு பலனுமில்லை.” அவள் சொல்ல நினைத்தாள். “அடுக்களையில் ஒரு நூறாவது இருக்கும்.” ஆனால் அவள் ஒன்றும் சொல்லாமல் புருஷன், செத்த பூச்சியைக் காகிதத்தில் அள்ளியெடுத்து ஜன்னல் வழியாக வெளியே எறிவதைப் பார்த்துக்கொண்டு நின்றாள்.

“நல்ல இடம் இது!” அவன் மூச்சு வாங்கச் சொன்னான். “இல்லியா? இந்த ஃப்ளாட்டில் ஒரு கரப்பான் பூச்சிகூட இல்லாமலிருந்துச்சு!”

ஆனால், தங்களுடைய ஃப்ளாட்டில் இதுவரை ஒரு கரப்பான் பூச்சி கூட இல்லாமலிருந்தது என்பதை அவள் இதுவரை நினைத்துப் பார்த்ததில்லை. அந்தச் சுற்றுப்புறத்தில் அவனுக்குச் சற்று அதிகமாகத் தெரிந்தவர்களுண்டு. யாரும் இதுவரை கரப்பான் பூச்சிகளைப்பற்றிக் குறை சொன்னதில்லை.

அவள் சமையலறைக்குத் திரும்பினாள். கணவனுக்குக் காலைச் சிற்றுண்டி எட்டு மணிக்குள் தயாராக வேண்டும். அப்படியானால்தான் அவனுக்கு எட்டரைக்குள் ட்ராம் கிடைக்கும். டல்ஹௌஸி ஸ்கொயரில் இருந்த ஆஃபீஸில் ஒன்பதுக்கு இருக்கவேண்டும். இந்தப் பிரச்னையை நான் தீர்த்துக்கொள்கிறேன்! அவள் நினைத்துக் கொண்டாள்: மார்க்கெட்டுக்குப் போகும்போது கொஞ்சம் கரப்பான் பூச்சி விஷம் வாங்கணும்!

மார்க்கெட்டுக்கு அதிக தூரமில்லை. ஸதர்ன் அவென்யு வழியாக நடக்கையில் கரப்பான் பூச்சிகள் அவளைக் கொஞ்சமும் அலட்டவில்லை

அவள் வேறொரு முக்கியமான விஷயத்தைக் குறித்து யோசித்துக் கொண்டிருந்தாள். மாலையில் டாக்டரைப் பார்ப்பதைப் பற்றி.

“இது ரொம்பச் சின்ன விஷயம்” கணவன் தயங்கியவாறு கூறியதை அவள் நினைவுகூர்ந்தாள். “ரொம்பச் சின்ன விஷயம். ஒரே ஒரு இஞ்செக்ஷன். கொஞ்சங்கூட வலியெடுக்காது. நம்பு, கொஞ்சங்கூட வலி?__ “

ஆரம்பத்திலெல்லாம் அவள் எதிர்த்தாள்: சக்தியோடு எதிர்த்தாள். இனிமையான அந்தச் சுமையைத் தாங்கும் சுய உரிமையை வீறாப்புடன் காப்பாற்றும் ஆவேசத்தோடு.

அப்போது, அவன், அந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டியதற்கான வருமான விவரங்களைப்பற்றிச் சொன்னான். இரண்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும். அவர்களைப் படிக்க வைக்க வேண்டும். மூத்தவள் பெண் குழந்தை. அவளுக்கு ஒரு சாதாரணப் படிப்புப் போதும். ஆனால் மகனுக்கு நல்ல தொழில்நுட்பக் கல்வியே கொடுக்க வேண்டும். "வேலையின் மார்க்கெட் ரொம்ப டைட்." அவன் சொன்னான். "அவனை நல்லாப் படிக்க வைக்கலைன்னா அவன் சீரழிஞ்சுப் போவான். " இதைத் தவிர வேறு செலவுகளும் இருந்தன. வீட்டு வாடகை, எலெக்டிரிஸிட்டி, சலவைக்கூலி முதலானவை. வேலைக்காரக் கிழவிக்குச் சம்பளமும் கொடுக்க வேண்டும். கல்கத்தாவைப் போன்ற ஒரு நகரத்தில் வாழ்க்கை நடத்துவது கஷ்டம்தான். தான் பணியவேண்டி வருமென்று அவளுக்குப் புரிந்தது. ஆனால், அது மனம் குமட்டச் செய்வதாயிருந்தது.

தன் வயிற்றில் வளர்ந்துவரும் ஜீவனைப்பற்றி அவளுக்குத் துக்கம் தோன்றியது. இது வாழ்க்கைப் பிரச்னை. வாழ சந்தர்ப்பம் கிட்டியவர்களின் நிலைநிற்பு. அதைக் கடந்து வருபவர்களைத் தடுக்கும் இந்தக் கீழ்த்தரமான் மனப்போக்கு மனத்தைப் புரட்டுவதாயிருந்தது. ஆனால், அதைப் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

அவள் குழந்தைகளைப்பற்றி நினைத்தாள்.அவர்களைக் கோடை விடுமுறைக்கு அனுப்பியது நல்லதாயிற்று. அவர்கள் இல்லாததில் அவளுக்கு மன உலைவு உண்டு. ஆனால், அதுதான் சற்று நல்லது. அவர்களை இப்போது இங்கே அழைத்துவர அவள் இஷ்டப்படவில்லை. அவர்களுடைய மாமா பக்கத்தில் அவர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும்.

மார்க்கெட்டில் அதிகக் கூட்டமில்லை. புதிய பச்சைக் காய்களின் வாசனை காற்றில் தங்கி நின்றிருந்தது. ஆனால் அவள் தனது குழந்தைகளைப் பற்றியும் மாலையில் டாக்டரைப் பார்க்க வேண்டியதைக் குறித்தும் யோசித்தாள்.

வெளியே வந்தபோது தெருவில் நிறைய ஆட்கள் இருந்தனர். தெரு தூசி நிறைந்துமிருந்தது. சிலர் நீண்ட சிவப்பு பானர்களைத் தூக்கிக் கொண்டு போய்க்கொண்டிருந்தனர். பானர்களெல்லாம் வங்காள மொழியில் இருந்ததினால் அவளுக்குப் புரியவில்லை. அவர்கள் உரக்கக் கோஷங்கள் எழுப்பியும் முஷ்டிகளை ஆகாயத்தை நோக்கி உயர்த்துவதுமாக இருந்தார்கள். சட்டென்று அவள் தன் சமையலறையில் நுழைந்துவிட்ட கரப்பான் பூச்சிகளை நினைத்துக் கொண்டாள்.

"இப்பத்தான் மறந்துபோயிருந்தது!"

மருந்துக்கடை பக்கத்திலேயே இருந்தது. கௌன்டரில் இருந்த சோம்பேறிபோலத் தோன்றிய ஒரு பையனிடம் அவள் கரப்பான் பூச்சிப் பொடி இருக்கிறதா என்று கேட்டாள். இங்கிலீஷில் கேட்டதினால்
அவனுக்குப் புரியவில்லை யென்று தெளிவாயிற்று. "இல்லை" என்றான் அவன். "இங்கே இல்லை," பிறகு அவள் முகத்தில் ஆச்சர்யம் படர்வதைக் கண்டபோது அவன் சொன்னான். "இருங்க."

அவள் நின்றாள். பையன் காஷ் கௌன்ட்டருக்குப் போய், உயர்ந்து மெலிந்த ஒருவனிடம் தாழ்ந்த குரலில் பேசினான். உயரமான மனிதன் கௌன்ட்டருக்கு வந்து அவளுக்குக் 'காக்ரோச் பௌடர்' தானே வேண்டுமெனக் கேட்டான்.

அவள் தலையாட்டினாள். அவன் கண்ணாடியலமாரிகளில் ஒன்றிலிருந்து ஒரு சிவப்புப் பாக்கெட்டை எடுத்து அவளிடம் கொடுத்தான். கூடவே அது உபயோகிக்கப்பட வேண்டிய விவரங்களடங்கிய குறிப்புகளும். தனக்கு அது தெரியுமெனக் கூறி அவள் அவனுடைய நாவை அடக்கினாள். ஆனால் அவன் அதை கவனிக்காமல் மீண்டும் முதலிலிருந்து கடைசிவரை தொடங்குவானெனத் தோன்றியபோது அவள் சொன்னாள்: "நன்றி."

அவன் தன் சொல்வீச்சை நிறுத்தினான், ஒரு எச்சரிக்கையுடன்.

"இது விஷமாக்கும், தெரியுமா? பயங்கரமான விஷம்!"

மாலையில் டாக்டர் இஞ்செக்ஷன் கொடுத்தபோது இதே வார்த்தைகளை ஒரு மன உளைச்சலுடன் அவள் மீண்டும் நினைவுகூர்ந்தாள். டாக்டர் ஒரு பருமனான பெண்மணி. அவள் அவளுடைய குழந்தைகளைப் பற்றி விசாரித்தாள்.

"ரெண்டுபேரும் ஸ்கூலுக்குப் போறாங்கன்னு சொன்னீங்கல்லே?"

"ஆமாம்." பட்டென்று குத்திய ஊசி அவளுடைய உடம்பினுள்ளே இறங்குவதை அவள் உணர்ந்தாள்.

"ஸு, பரவாயில்லை" லேடி டாக்டர் சொன்னாள். "மனசைக் குழப்பிக்க ஒண்ணுமில்லை."

டாக்சியில் அவர்கள் வீடு திரும்பினார்கள். பிரயாணம் சுகமாக இருந்தது. ஆனால் அவள் மிகவும் மனக்கஷ்டப்பட்டாள். நடுங்கும் கைகளால் அவள் தனது அடி வயிற்றைத் தடவினாள். பட்டென்று சக்தி வாய்ந்த தேம்பல்கள் மார்பில் நிறைந்தன. அவளுக்கு மூச்சு முட்டியது. தனிமையில் அமர்ந்து போதுமென்கிற வரா அழ வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது. இப்போதாவது கணவன் பச்சாத்தாபமுற்றால் எவ்வளவு நன்றாயிருக்குமென்று அவள் ஆசைப் பட்டாள். ஆனால் அவனுடைய முகத்தில் பச்சாத்தாபத்தின் துணுக்கு கூட இல்லை. அவன் வெளியே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான்.

படுக்கையறையின் தெளிவான வெளிச்சத்தில் அவளது முகம் வெளிறி சோர்வுற்றுக் காணப்பட்டது. புருஷன் கேட்டான்:

"ஒனக்கென்ன ஆச்சு?"

"எனக்கொண்ணுமில்லை" என்றாள்
”ஒரு சின்னத் தலைவலி, ஸாரிடான் போட்டுக்கறேன், ஒரு மாத்திரை இருக்கா?”?

அவள் கட்டிலில் படுத்தாள், கணவன் மிகவும் கலவரமுற்றிருந்தான். ”மனச் சாட்சி தான் என்னைத் தொந்தரவு பண்ணுகிறது” அவள் நினைத்துக் கொண்டாள். இப்போது எனக்கு ஒரு குற்ற உணர்ச்சி உண்டாகிறது. ஆனால் அப்படிச் செய்யாமல் நிவர்த்தி யில்லை. வேறு வழியொன்றுமில்லை. இக்காலத்தில் சந்தோஷத்துடன் வாழ வேண்டு மானால் இந்தப் படபடப்பைக் கொஞ்சமும் கேட்கவில்லையென நடிக்கத் தான் வேண்டும். நாளை இந்த பயக்கனவின் நினைவுகள் மாய்ந்து போகும்போது சுகமாக வாழலாம்.

“குழந்தைகளைத் திரும்பியழைத்து வர வேண்டும்.” அவள் நினைத்துக் கொண்டாள். “எனக்கு அவர்களைப் பார்க்காமல் இருக்க முடியாது. பதினைந்து நாட்கள் மிகவும் அதிகம். இந்த ஏகாந்தத்தை என்னால் கொஞ்சமும் சகிக்க முடியாது. எனக்கு "என் குழந்தைகளை என்னைச் சுற்றிப் பார்க்கவேண்டும்!”

அவர்கள் டாக்டரிடம் போவதற்கு முன்பே உணவு தயாராக்கியிருந்தாள். அதனால் அதைப் பரிமாறிக் கொண்டு சாப்பிடமட்டுமே வேண்டியிருந்தது. சாப்பிட்டதும் அவளுக்குச் சற்று குணம் தோன்றியது. புருஷன் அந்தச் சிவப்புப் பொடியை அட்டைத் துண்டுகளில் சிறிய குவியல்களாக எடுத்து ஒவ்வொரு மூலையிலும் வைப்பதை அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். சமையலறையில் கரப்பான் பூச்சிகள் டின்களின் மூடிகளில் கரகரவென்ற சப்தம் செய்து பறந்து சுவரில் சென்று மோதும் ஒலி கேட்டது. பறக்கும் பாய்ச்சல் தொடங்கிவிட்டது. மரணப் படபடப்பு. அவள் நினைத்துக் கொண்டாள்.

அவள் படுக்கையறைக்குள் போன போது கணவன் படுத்தாயிற்று. அவள் விளக்கை அணைத்து, கட்டிலில் ஏறிப்படுத்தாள். தெருவிளக்கின் ஒளி ஜன்னல் வழியாக ஊடுறுவி வந்தது. கணவன் உறங்கியிருக்கவில்லை என்று அவளுக்குத் தெரிந்தது. அவன் திரும்பி அவளைக் கையால் வருடினான்.

“இப்போ எப்படியிருக்கு?”
“குணமாயிருக்கு” அவள் சொன்னாள். “எனக்கு இப்போது ஒரு நலக்
கேடும் இல்லை.”
அவன் அவளுடைய முதுகில் அன்புடன் தட்டி, கன்னத்தில் முத்த
மிட்டான்.
“நாளைக்கு உனக்கு எல்லாம் குணமாயிடும்.”
அப்படியொரு தைர்யம் புருஷனிபமிருந்து கிடைக்க அவள் காத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு நிம்மதி உண்டாயிற்று. மெல்ல அவனது ஆலிங்கனம் நெருங்கி வருவதை அவள் உணர்ந்தாள். அவனது மூச்சுவிடல் தாளகதியை அடைந்தது.சில நிமிடங்களுள் அவன் ஆழ்ந்த நித்திரையிலானான்.

சற்று நேரத்திற்கு அவள் டைம்பீசில் டிக் டிக் ஒலியையும் வெளியே தெருவில் ஒரு வாகனத்தின் உறுமல் தூரத்தில் கரைவதையும் கவனித்தாள். அப்படியிருக்கையில் அவள் கருத்த ஜீவன்கள் பறந்து வருவதைப் பார்ததாள். கரப்பான் பூச்சிகள். அவை ஆயிரக்கணக்கிலிருந்தன. கரப்பான் பூச்சிகள் ஒரு ஊர்வலம் நடத்துகின்றன. அவளுக்குச் சிரிப்பு வந்தது. கனவில் மட்டுமே அது நிகழும். ஆனால் கரப்பான் பூச்சிகள் அதைத்தான் செய்துகொண்டிருந்தன. ஊர்வலம் தெருவில் பெருகிச் சேர்ந்தது. அவை உரக்கக் கோசங்கள் எழுப்பியும், மேலும் கீழும் கிளர்ச்சியுற்றுப் பறப்பதுமாக இருந்தன. சில கரப்பான் பூச்சிகள் தூக்கிப் பிடித்திருந்த பானர்களைப் பார்த்தபோதுதான் அவளுக்கு மிகவும் ஆச்சரியம் உண்டாயிற்று.

”எனக்குப் பைத்தியம் பிடிச்சிடும்” என்று நினைத்தாள் அவள். ஊர்வலம் பெரும் கொந்தளிப்பை அடைந்தது. சில கரப்பான் பூச்சிகள் விமானத்தாக்குதல் போல அவளை நோக்கிப் பறந்து வந்தன. அவள் ஒரு கூக்குரலுடன் விழித்தாள். அப்போது அது வெறும் கனவு மட்டுமே என்று அவளுக்குப் புரிந்தது. அவள் சந்தோஷமுற்றாள். கணவனை ஒட்டிப் படுத்தாள்.உறக்கம் கண்ணிமைகளை அழுத்துவதைக் கவனித்தாள்.

அவள் வெகுநேரம் உறங்கினாள். எழுந்தபோது, சூரியக்கிரகணங்கள் அறைக்குள் நுழைந்து வரத்தொடங்கியிருந்தன. தரையில் அவள் கரப்பான் பூச்சிகளைக் கண்டாள். செத்து மல்லாந்திருந்த கரப்பான் பூச்சிகள்.அவள் குளிர்காலத்தில் மரங்களிலிருந்து உதிர்ந்துவிம் உலர்ந்த இலைகளைக் குறித்தும், பல வருடங்களுக்கு முன் இறந்துபோன தாயைக் குறித்தும், குழந்தைகளைப்பற்றியும், வாழும் உரிமை தடுக்கப்பட்டுவிட்ட புதிய ஜீவனின் துணுக்கைக் குறித்தும் நினைத்துப் பார்த்தாள். அவள் துயருற்றாள்.
---------

18. கனவு


கதவைத் திறந்தாள். உள்ளே நுழைந்தான். கூப்பிட்டுப் பார்த்தான். பேசமல் கவிழ்ந்து படுத்திருக்கிறாள். மறுபடியும் கூப்பிட்ட போதும் எழுந்திருக்காததினால் வெளியே போனான்.

டாக்ஸி டிரைவருக்குக் கட்டளையிட்டான். ”திரும்பிப் போய்க்கொள்” நிராசையுடன் அவன் திரும்பிப் போனான்.

தங்கத்திற்கு என்னவாயிற்று? ஒன்பது மணியாகியும் தூக்கம் கலைந்து எழுந்திருக்கவில்லை. காலையிலே டாக்டரிடம் போகலாமென்று நேற்றிரவு சொல்லியிருந்தான். தான் டாக்ஸியோடு வரும்பொது அவள் ரெடியாகி இருப்பாள் என்று நினைத்திருந்தான். உறக்கம் போதவில்லையாக இருக்கும். அப்படியானால் இனி டாக்டரிடம் இன்னொரு நாள் போகலாம்.

நேற்றுப் பாதி ராத்திரி ஆன பின்னும் தங்கமணிக்கு உறக்கம் வரவில்லை. அவள் தன்னையே சலித்துக்கொண்டு படுத்திருந்தாள். பிறந்திருக்க வேண்டியத்தில்லையென்று தோன்றியது. ஆனால் சொல்லி என்ன பயன்? பிறந்தாயிற்றல்லாவா? நினைவு தெரிந்தது முதல் இப்படி நினைக்கத் தொடங்கி விட்டாள். இவ்விரவிலேயே இறந்து போய்விட்டால்... இல்லாவிட்டால், நாளைக் காலையில் டாக்கடரிடம் போகும்போது திருட்டுத்தனமெல்லாம் வெளிப்படும். இரகசியமெல்லாம் அம்பலமாகும். புருஷன் அவளை தள்ளி வைப்பான்.
பிறகு என்னவெல்லாம் நேரும்? ஒன்றும் நினைக்க முடியவில்லை
திரும்பியும், புரண்டும் படுத்தாள். நினைவுகள் அசைபோடுகின்றன.

ஸ்கூலில் படிக்கையில் முதலிலெல்லாம் அவளுக்கு கர்வம் உண்டாகியிருந்தது. நிறையப் பணமிருந்தது. வேண்டிய அளவு ஆபரணங்களிருந்தன. தனது சிநேகிதிகளெல்லாம் ஏழைகள். அவர்கள் ”எண்ணெய்க் கருப்பி” என்றும் ”குள்ளப் பெண்ணே” என்றுமெல்லாம் அழைப்பதுண்டு. அப்போது கோபம் உண்டாகும். பலவும் சொல்வாள். கடைசியி்ல்தான்எல்லாம் புரிந்தது. அப்போது ஆயுதத்தையுப் போட்டுவிட்டுச் சரணடைந்தாள்.

அவள் கருப்பு. உயரம் குறைந்தவள். அழகற்றவள். அதனால்தான் அவளைப் பையன்கள் யாரும் பார்ப்பதில்லை.

சிநேகிதிகளுடன்கூடப் போகையில் மீதிப்பேரை மட்டும் பையன்கள் உற்று நோக்குவார்கள். கருப்பிடம் இத்தனை விரோதமா ஆண்களுக்கு? உயரம் குறைந்திருந்தாலும், கொஞ்சம் விரூபமானவளானாலும் அவர்கள் சற்றுப் பார்க்கக் கூடாதா? வாழ்க்கையில் அவளுக்கு ஒரு ஓரப் பார்வைகூடக் கடைக்கவில்லையே.

சிநேகிதிகளிடமெல்லாம் பொறாமையே உண்டாயிற்று. குறிப்பாக ரமாவிடம். விலை கூடிய ஆடைகளும் நகைகளும் எதுவும் இல்லாமலேயே பையன்கள் அவளில் அழகைக் காண்கின்றனர். அவளைப் பார்க்கின்றனர். பாடுகிறார்கள். இதெல்லாம் அவளுக்கு வெறுப்பாயிருந்தது. ஆண்களிடமும், அழகான பெண்களிடமும் ஒரு வெறுப்பு.

அவளது நிறம் சிவப்பில்லையென்பதினால் பெரிய மனச்சோர்வு உண்டாயிற்று. அதுபோல உயரமும் அழகும் குறைந்து போவதிலும், அதோடு வீட்டுக்காரர்கள் ஒரு பெயர் வைத்திருக்கிறதைப் பாரு! ’தங்க மணி’யாம். ’தங்கம்’தான் போ! பார்த்திராத ஆண்பிள்ளைகள் ஏமாற்ற உதவும். அவ்வளவுதான்.

ஸ்கூலுக்குப் போகும்போது எவ்வளவு நேரம் கண்ணாடி முன்னால் செலவாக்கிக் கொண்டிருந்தாள். இரண்டு அங்குலக் கனத்திற்காவது பௌடர் பூசுவாள். லாக்டோகலாமின் உபயோகிப்பாள். சங்கிலிகளை மாற்றி மாற்றி அணிவாள். காதுகளில் சில சமயம் வளையம் அணிவாள். சில சமயம் நட்சத்திரக் கடுக்கன். மற்ற சில சமயம் ஜிமிக்கியாக இருக்கும்.

மயிர் நல்ல அடர்த்தியாயிருந்தது. அது என்னவானாலும் நல்லாதாயிற்று. அதற்காகவது சவுரி வைக்க வேண்டாமில்லையா?

ஹைஹீல்ஸ் செருப்புதான் அணிவது. உயரம் கொஞ்சம் அதிகமாகத் தோன்றுமில்லையா.

இதெல்லாம் இருந்தும் போதுமெனத் தோன்றவில்லை. அதனாலொன்றும் ஒரு பயனும் காணோம்.

அவள் சவுரி வைத்துக் கட்டக்கட்ட இன்னும் அதிகமாக முழைத்துக் காணப்பட்டது. சிநேகிதிகள் வெறும் வேடிக்கைபோல அவளைக் கேலி செய்தனர். ’கருப்பியென்றும் ’குள்ளி’ என்றும் அழைப்பது வேடிக்கைக்கு என்று எப்படிச் சொல்வது! அவர்கள் சொல்வது நிஜம்தானே. அவள் கருப்புத்தான். உயரம் குறைந்தவள்தான். அழகற்றவள்தான்.

பெயர் வேறு தங்கமணி. இதெல்லாம் உண்மையல்லவா? வேடிக்கையில்லையே.

இறுதியில் மனம் சோர்வுற்றது. ஆடம்பரங்களையெல்லாம் விட்டாள். பெண்ணாணால் பணமில்லாவிடினும் அழகு வேண்டும். வீட்டு வேலைக்காரியான
மாதவிகூடத் தன்னைவிடச் சிவப்பு. வயசு முப்பத்தைந்து ஆனபோதிலும்
அழகு மங்கவில்லை.

யார் கண்டாலும் சற்றுப் பார்ப்பர். அப்படியானால் அவள் மாதவியைவிட......

பத்தாம் வகுப்பில் ஜெயித்தபோது அப்பா சொன்னார்: "மகள் இனிமே படிக்க ஒண்ணும் போகவேண்டாம். படிச்சி ஜெயிச்சு வேலை கிடைச்சுத்தானோ செலவுக்குப் பணம் கிடைக்கணும்?"

நிம்மதியாய்போயிற்று. அவ்வாறு படிப்பை நிறுத்தினாள். பிறகு வீட்டில் இருப்பாயிற்று. சினேகிதிகளின் திருமண அழைப்புகள் முறையாக வந்துகொண்டிருந்தன. ஒன்றிற்கும் போகவில்லை, வாழ்த்தவுமில்லை முன்பிருந்தே யாருடனும் அதிகமாகப் பேசுவதில்லை. முக்கியமாக ஆண்களுடன். பக்கத்து வீடுகளில் நுழைவதில்லை. ஏகாந்தமே பிடிக்கும். சகோதர சகோத ரி யாருமில்லை. வீட்டுவேலைகளிலும் பங்கெடுப்பது வேண்டாம்.அப்பா வாத நோயில் படுத்த படுக்கையாகக் கிடந்தார். அம்மாதான் எல்லாவற்றையும் மேற்பார்வை செய்கிறாள். அப்படியிருக்கையில் அவளது தனிமைக்கு எந்த இடையூருமில்லை யல்லவோ.....

ஓரிரவில் தூங்கிக்கொண்டிருக்கையில் அந்தக் கனவு. பதறிப் போனாள். அவளை ஒருவன் திருமணம் செய்துகொள்வதாகவும், கொஞ்சகாலம் ஆனபோது தானொறரு மலடியென்பது தெரிவதாகவும், அப்போது அவன் அவளை விலக்கிவிட்டுப் போவதகவும்.

பயங்கரமான கனவு. பீறிட்டெழுந்துகொண்டு விழித்தாள். இருட்டில் கையால் துழாவிப் பார்தாள். ஓடிப்போகும் கணவனைப் பிடித்து நிறுத்த.

அவளை மனவேதனைகுள்ளாகிய அக் கனவை கண்டபின் அன்றிரவு உரக்கம் வரவில்லை. நினைத்து நினைத்துப் படுத்திருந்தாள்.

ஒருவன் அவளைத் திருமணம் செய்துகொள்கிறான்! எத்தனை சந்தோஷத்துக்குரியது அது. ஆனால் சற்றுக்கழிந்து விலக்கி வைத்தானல்லவோ. அதுவும் அவள் ஒரு மலடி என்று தெரிந்தபோது!

ஓ! அவள் அப்படி ஏதாவதாக இருப்பாளோ?

கனவு நனவாகிப்போகுமோ? கனவிலும் உண்மையின் கூறுகளைக் காணமுடியுமோ?

அப்படியானால் பின்னர் அவள் வாழ்க்கை என்னவாகவிருக்கும்?

தலைமுறைகள் தன்னோடு முடியும். ஒரு சங்கிலித்தொடரின் கடைசிக் கண்ணியாகிப்
போவாள் அவள்.

"என் குருவாயூரப்பா... கப்பாற்று...." உள்ளம் நொந்து பிரார்த்தித்தாள்

மனதில் எப்போதும் ஒரேயொரு சிந்தனை. அவள் பிரசவிக்காதவள் என்று. அந்த கனவைப்பற்றி யோசித்துக்கொண்டே அப்போதும் இருக்கை. வேதனையப்பற்றிய ஏகாந்த சிந்தனைகள். அந்தச் சிந்தனையிலிருந்து சுகம் கிட்டும். தனிமையில் சுகம். அதுவும் ஒருவிதமான சுகம்தான்.

ஆண்வர்கத்திடம் வெறுப்புத் தோன்றத் தொடங்கிற்று. அவர்களுடைய நட்பும் வேண்டாம். பேசத்தோன்றுவதில்லை. வீட்டு வேலைக்காரன்கூட நிறையத் தடவைகள் கேட்டபின்பே அவள் ஒரு பதில் கொடுப்பாள்.

ஆசைகள் இல்லையென்றில்லை. அவளும் ஒரு பெண்ணல்லவா. உலகத்தோடும் உல்கத்தாரோடும் ஒரு வெறுப்பு. வாழ்க்கையில் ஒரு கசப்பு. ஆனாலும் வாழ்ந்து தள்ளுகிறாள், அவ்வளவுதான். மனம் நிறைய வேதனை.

பேரூழியிலிருந்து ஓடிவரும் நதியை அவள் அடைத்துக்கட்டி நிறுத்துகிறாள், தடுத்துவைக்கிறாள், ஓட்டத்தை நிறுத்துகிறாள். அவ்வோட்டம் அப்படியாக அவளில் வந்து முடிகிற்து. கண்ணை மூடிக்கொண்டு குனிந்தமர்ந்திருப்பாள். அப்போது அந்த நாசமாய்ப் போகும் கனவு பறந்து வரும். யாருமற்ற கணவனால் கைவிடப்பட்ட ஒரு மலடி. அவளுக்கு தலைமுறைகளை வளர்த்த முடியாது. நினைக்கையில் துன்பம்தான். அவள் முழுவதும் நலிந்து சிதைந்து வேதனைமட்டுமேயாக ஆகிவிடுவதைப்போல. அப்போது எல்லா இடத்திலும் ஒரு இருள். இருளும் வேதனையும் மட்டும். அவள் வேதனையாகிவிடுகிறாள். இருளாகிவிடுகிறாள். மீண்டும் மனுஷியாக மாறுகிறாள். அப்போதுதான் எல்லாக் கஷ்டமும். இருளாக மட்டும் ஆகிவிட்டாலும், வேதனையாக மட்டுமே ஆகிவிட்டாலும், அவை ஒன்றையும் அவள் அனுபவிப்பதாகத் தோன்றாமலிருந்தது.

தனிமையோடு சிதைந்து இணைவது சுகம், எங்கும் வெறுமைதானே. அங்கேயும் அவளும் சூன்யமாகிவிடுகிறாள். அது ஒரு பரவசநிலை. அவள் எல்லாவற்றையும் மறந்து ஒன்றும் இல்லாமலாகிவிடுகிறாள், இருட்டாகிறாள், துன்பமாகிறாள், வெறுமையாகிறாள், மீண்டும் மனுஷியாகிறாள்.

அப்படி துன்பம் மனத்தையும் உடம்பையும் அரித்துத் தின்று கொண்டிருந்தது. அப்பா, அம்மாவுக்குக் கவலை தோன்றத் தொடங்கியது. ஆசைமகள் எப்படி இப்படிச் சோர்ந்து போனாள்? வருவோரும் போவோரும் கூறினார்கள்.

”கல்யாணம் பண்ணாததினால் இருக்கும்.”

கல்யாணம் பண்ணாததினாலாம்! ரொம்ப நல்லது. அவள் மனம் குமைந்து புகைவதினால்தான் என்று யாருக்காவது தெரியுமா?

அப்பா பலதடவை கட்டாயப்படுத்தியதும் ஒரு டாக்டரிடம் போனாள். அவர் ஒரு ஸைக்யாட்ிரஸ்ட். எல்லாவற்றையும் விவரித்தாள். அவளது மனத்தின் அடித்தட்டு வரையிலும் அவர் துழாவி மூழ்கிக் கண்டார். விரிவான மெடிக்கல் செக்கப்பும் நடத்தினார். பிறகு சொன்னார்: மனதின் உளைச்சலே உடலின் சோர்வுக்குக் காரணமென்று. கண்டதையும் சிந்தித்து மனதைப் புண்ணாக்கிகொள்ளக் கூடாதென்று.

பல டானிக்குகள் எழுதிக் கொடுத்தார். கடைசியில் இதுவும் சொன்னார்:

”ஒரு டாக்டர் என்கிறதினால இன்னொரு விஷயத்தையும் உங்களிடம் திறந்து சொல்கிறேன். கலவரமடைய வேண்டாம். நீங்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டாம். செய்துகொண்டாலும்...”

அவர் கூறியது முழுவதையும் கேட்க முடியவில்லை. தலை சுற்றுவது போலத் தோன்றியது. பிறகு எதுவும் நினைவில்லை. வெகு நேரத்திற்குப் பின்னரே நினைவு திரும்பியது.

வீட்டுக்குப் போனாள். மனதின் கஷ்டமே சோர்வின் காரணமென எல்லோருக்கும் அறிவித்தாள். திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்று சொன்னதை மட்டும் யாரிடமும் கூறவில்லை. அந்த இரகசியம் அவளோடேயே இருக்க வேண்டியதொன்று. யாரும் அதை அறிய வேண்டியதில்லை. அவளுடைய இதயத்திலிருந்து வேகட்டும்; வெந்து புகையட்டும்; புகைந்து எரியட்டும். அப்படியே சாக வேண்டும். அப்படியானால் எவ்வளவு நல்லது!

டானிக்குகளாலும் லேகியங்களாலும் அலமாரி நிறைந்திருந்தது. அவள், அவை எதையும் சாப்பிடவில்லை, அவ்வளவுதான். மனதில் வேதனை வளர்ந்து பந்தலிட்டிருந்தது. அதில் பூக்களும் காய்களும் நிறைந்துவிட்டன. தனியாக இருந்து வெந்து வெந்து இறக்கிறாள். ஒரு கனவு நனவாகிவிட்டது. அவளது வாழ்க்கையைத் தகர்த்த - தகர்த்துக்கொண்டிருக்கும் கனவு. மனத்தின் சாந்தியை நெரித்துக்கொன்ற கனவு. தலைமுறைகளுக்கு உயிர் கொடுக்கத் தன்னால் முடியாதெனக் காட்டிக் கொடுத்த கனவு. இனிமேல் கனவே காணாமலிருந்தால்!

அம்மா ஒரு நாள் அவளுடைய கள்ளத்தனத்தைக் கண்டு பிடித்து வீட்டாள்--டானிக்குகளை டம்ளரில் ஊற்றிக்கொண்ட பின் முற்றத்தில் கொண்டுபோய்க் கொட்டுவதை.

"மகளே,நீ மருந்தையெல்லாம் கொண்டுபோய் ஏனிப்படிக் கொட்டுகிறாய்? அதைச் சாப்பிட்டால்தானே உடம்பு சரியாகும்?"

பிறகு தாயின் நிர்ப்பந்தப்படி எல்லாம் சாப்பிடவேண்டி வந்தது. தாய் பக்கத்திலிருந்து எல்லாவற்றையும் சாப்பிடவைக்க ஆரம்பித்தாள்.

நிரந்தர நோயாளியான அப்பாவின் உடல்நிலை மோசமாயிற்று. ஆனால் அவளுடைய உடம்பு தேறிக்கொண்டுமிருந்தது. தாயின் கவனிப்பும் சிசுருக்ஷையும் காரணமாயிருக்கலாம். டானிக்குகளுக்கு உடம்பைத் தேற்றத்தானே முடியும்!

அவளது மனத்துள் இருளுக்கும் ஒளிக்குமிடையே வட இழுப்புப் போட்டி. ஒளியைத்தான் அவள் வேண்டுகிறாள். அதற்காக வேட்கையுறுகிறாள். ஆனால் அவளுக்கு அதற்கொன்றும் அருகதை இல்லை யல்லவோ.

இறுதியில் இருள்தான் வெற்றி பெறுகிறது. பூமியில் ஒளி விழுந்தாலும் அவ் வெளிச்சம் மனம் வரையிலும் எட்டுவதில்லை.

இருள் ஒளியை அரித்துத் தின்கிறது -- கார்மேகங்கள் சூரியனைத் தின்பதுபோல.

அவள் பலவாக மறுகுகிறாள். வேதனை, வெறுமை, அந்தகாரம். அப்பாவின் கட்டாயம் பொறுக்க முடியவில்லை. ஒரேயொரு மகள். தான் சாகும் முன் கல்யாணம் செய்து பார்க்கவேண்டுமாம். இப்போது நோயெல்லாம் தீர்ந்து ஆரோக்கியசாலியாகிவிட்டிருக்கிறாளே என்று. அவளது மனம் கொதித்தபோதும் உடல்தேறுவது ஏனோ?

தாயும் தொந்திரவுபடுத்தத் தொடங்கினாள். அப்பாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டுமென்று. அவளிலும் ஆசைகளின் நரம்புகள் இல்லாமலில்லை. ஆனால் தெரிந்துகொண்டே புருஷனை எப்படி வஞ்சிப்பது?

உண்மையை உடைத்துச் சொன்னால்? அப்பாவும் அம்மாவும் அலமந்து தர்ந்து போவார்கள்.

அப்பா மீண்டும் கட்டாயம்தான் படுத்துகிறார். ஒரு நாள் அருகிலழைத்துத் தடவி கொடுத்தவாறு சொன்னார்:

"மகளே, நான் சாகும் முன்னால் உன் கல்யாணம் நடந்து பார்க்கணும். வேறு கல்யாணத்தைப் பார்த்துக்கலாம்னு வைக்க நீயொண்ணும் வேற்ரு மனுஷி இல்லியே!"

அவள் ஒன்றும் சொல்லவில்லை.

கடைசியில் அப்பா, அம்மா கட்டாயத்திற்கு பணிய வேண்டி வந்தது. மனத்திற்குள் ஒரு போர்.

பையன் பெண்ணைப் பார்க்க வந்தான். அவனை நேருக்கு நேர் பார்த்தபோது தலைசுற்றத் தொடங்கியது. ஆனால் அதிலிருந்தெல்லாம் எப்படியோ தப்பினாள்.

விவாகம் நிச்சமாயிற்று. கல்யாண நாளும் வந்தது. பையன் தாலி கட்டியபோது மீண்டும் ஒரு தலை சுற்றல்போல. மனம் ஒரு போர்க்களமாக மாறியது.

அவள் உண்மையை மறைத்து வைக்கிறாள். தப்பு செய்கிறாள். வஞ்சிக்கிறாள்.

அப்போதும் உண்மை தோற்றுப்போயிற்று.

மாமி பின்னால் நின்று அவளைப் பிடித்துக்கொண்டிருந்தாள், தாலி கட்டுகையில் அவள் விழாமலிருப்பதற்காக. வெடிக்கத் தொடங்கியது புஸ்ஸென்று போயிற்று.

மணஇரவில் அவள் மணவறையில் அலங்கரித்த கட்டிலேறி அசையாமல் அமர்ந்தாள். நாற்காலியில் பொறுமையற்றவனாக அமர்ந்திருக்கிறான் கணவன். யாரும் சற்று நேரத்திற்கு ஒன்றும் பேசவில்லை. கடைசியில் அவன் கூப்பிட்டான்.

”தங்கம்...”

பேசவில்லை.

இ்ன்னொரு முறை கூப்பிட்டான். அப்போது அவள் கீழோட்டமாகப் பார்த்துக்கொண்டு குனிந்திருந்தாள். அவன் பக்கத்தில் வந்தான். ஒரு மலரை ஸ்பரிசிப்பதுபோல அவளுடைய உடலைக் கையால் தொட்டான். ஆனாலும் சலனமற்றிருந்தாள். அவனது முயற்சிகளைத் தோல்வியுறச் செய்தாள்.

மனத்தில் போர் ஓய்ந்திருக்கவில்லை. தவறு செய்தாயென மனம் சபித்தது. இறுதியில் மனம் செத்து விழுந்தது. உணர்ச்சி மனதின் செத்த உடலின்மேல் நின்று நையாண்டி காட்டிச் சிரித்தது.

வாரங்கள் மாதங்களுக்கும், மாதங்கள் வருடங்களுக்கும் வழிவிட்டன. பிரசவித்த பெண்களிடமும் கர்ப்பிணிகளிடமும் அவளுக்கு வெறுப்புத் தோன்றவாரம்பித்தது. அருகாமையைச் சேர்ந்த ரோசியின் திருமணம், அவளுடைய திருமணத்தன்றுதான் நடந்தது. அவளுடைய சிநேகிதியும்கூட. இதனிடையில் இரு முறை பிரசவித்து விட்டாள். பிரசவிக்கும் முன் அவளிடமிருந்த நட்பு, அதன்பின் குறைந்து வந்தது. அவளது ஆசைக் குழைந்தையை வீட்டிற்கு கொண்டு வருகையில், கணவனும் கணவனின் தாயும் அள்ளியெடுப்பதைப் பார்ப்பதுண்டு. அதைக் காண்கையில் வெறுப்புத் தோன்றும்.

அக் குழந்தையிடமும் ரோஸியிடமும். அப்போது அவள் உள்ளறைக்குள் போய்விடுவாள். படுக்கையில் விழுந்து தேம்பியழுவாள். யாருமறியாமல் கண்ணீரைத் துடைத்தெறிவாள்.

ரோஸி மூன்றாம் முறையும் கர்ப்பிணியானதைக் கேள்விப்பட்ட போதும் அவள் பெற்றதை யறிந்தபோதும் போய்ப் பார்க்கவில்லை.

கணவனிடம் அவனுடைய தாய் பல சமயங்களில் உள்ளர்த்தம் வைத்துப் பேசுவதைக் கேட்டதுண்டு. பக்கத்திலிருந்து எந்தக் குழந்தை வந்தாலும், அக் குழந்தைகளை அள்ளியெடுத்து முத்தமிடுவதும், தாலாட்டு்ப பாடுவதும், மகனுடைய கையில் கொடுப்பதும் எல்லாம் ஒளிந்திருந்து பார்ப்பதுண்டு.

ஐந்து வருடங்களாகிவிட்டன கல்யாணமாகி. இன்னும் ஒரு புது மணப் பெண்போலத்தான் அவளைப் புருசன் கருதுகின்றான்.

கணவன் மிகவும் நேசிக்கின்றான் - நேசம் உள்ளதினால்.

கணவனையும் நேசிக்கிறாள் - நேசிக்காமலிருக்கக் கூடாதென்பதினாலும். வெறுமையும், அந்தகாரமும், வேதனையும் எப்போதும் தன்னோடேயே தான் இருக்கின்றன. அவள் அவைகளெல்லாமேயல்லவா!

பல இரகசியங்களையும் இதயத்தில் ஒளித்து வைத்திருக்கிறாள். அவை எப்படியாவது வெடித்துச் சிதறிவிட்டால்!

இத்தனை காலமும் நாட்களை நெட்டித் தள்ளிக்கொண்டிருந்தாள். கடைசியில் நேற்று இரவில்....

அம்மா முகப்பறையிலமர்ந்து அப்பாவின் ஒற்றைக் காது கண்ணாடியை வைத்துக்கொண்டு பாகவதம் வாசிக்கிறாள்.

கணவன் படுக்கையறைக்குள் போனான். உறங்கும் நேரமாயிறென்று அதன் பொருள். அவளும் பின்தொடர்நதாள். வழக்கம் போல் மயிரை அவிழ்த்து உதறி மேல்புறமாகத் துாக்கிக் கட்டிக் கொண்டாள்.

அப்போது கணவன் அவளை வாரியணைத்து உதட்டோடு சேர்த்துக்கொண்டு அமுங்கிய குரலில் அழைத்தான்.
”தங்கம்...”
”உம்...” அதைவிட அமுங்கிய தொனியில் கேட்டாள்.
”உனக்கு என்னைப் பிடிக்கிறதா?”
”ஏன் இப்படிக் கேக்கிறீங்க?”
”அப்படின்னா நான் சொல்றதைக் கேப்பியா?”
”உம்...”
பிறகு சற்று நேரத்திற்கு ஒன்றும் சொல்லவில்லை.

அவன் என்னவோ யோசித்துக்கொண்டிருந்தான். முகத்தில் இடரார்ந்த சிந்தனை. விவாகரத்து செய்யலாமா என்பதைக் குறித்து இருக்கும்.

அப்படியானால் நல்லதாய்ப் போயிற்று. அவருடைய எதிர்காலமாவது நன்றாகும் அல்லவா. நாலைந்து வருடமாயும் அவருக்கு ஒரு குஞ்சுக் காலைப் பார்க்க முடியவில்லையல்லவோ. அந்த விஷயத்தைப்பற்றித்தானிருக்கும் இவ்வளவு பலமாகச் சிந்திப்பது. இல்லாவிட்டால் இப்படி இருக்க மாட்டாரே.

மீண்டும் அவளை உதட்டோடு இணைத்தான். பிறகு சொன்னான். ”நாளைக் காலையில் நாம் கொஞ்சம் அந்த டாக்டர் கிட்டப் போய்ப் பார்க்கலாம். கல்யாணமாகி நாலைஞ்சு வருஷமாயிட்டுதில்லையா? என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கலாம்.”

கேட்டபோது பதறிப்போனாள்.

அந்த உதடுகளிலிருந்து தன் உதடுகளைப் பறித்தெடுக்கக் கொஞ்சம் சிரமப்பட வேண்டி வந்தது.

போகலாமென்றோ வேண்டாமென்றோ சொல்லவில்லை.

நாளை அவள் தீர்ப்புக்குள்ளாவாள்... எல்லாம் வெளியாகும்.
மனம் அமர்ந்து வீங்கி, கொதித்து, துடித்தது. இறந்துபோய்விட்டிருந்தால்!...
எவ்வளவு நேரம் அப்படிக் கிடாந்தாளென்பது நினைவில்லை. கடிகாரம் இருமுறை அழுவது கேட்டது. அந்தக் கடிகாரத்திற்கும் வேதனை இருக்கலாம்.

தாகம் உண்டாயிற்று. ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க எழுந்தாள். அவளது உடல்மேல் அணைத்து வைத்திருந்த கணவனின் கையை எடுத்து மெதுவாகத் தள்ளி வைத்தாள். குறட்டைவிட்டுத் துாங்குகிறார் அவர்.

இரண்டு டம்ளர் நிறைய தண்ணீர் குடித்தாள். மீண்டும் வந்து படுத்தாள். ஜீரம் போலத் தோன்றியது. சற்றுக் குளிரவும் செய்தது. இதய பாகத்தில் எவ்வளவு வேதனை! இருளின் கனம் அதிகமாகிறது. கண்ணை மூடிக்கிடந்தாள். மனத்தின் இருள் வெளியேயும், வெளியிருட்டு மனத்திற்குள்ளும் வீசுகிறது.

எங்கும் வெறுமை நிறைகிறது. தான் இருளாகிவிடுகிறாள். வெறுமையாகிவிடுறாள்.
முடிவில் சூன்யத்திற்கு உயர்த்தப்படுகிறாள். இனி, விழிக்காமலிருக்கட்டும்.
------------------------
<

ஆசிரியர்களைப் பற்றி


1. என். பி. முஹம்மது

1928-ல் கோழிக்கோட்டினருகே பிறந்தார். ஹைஸ்கூல் படிப்பை முடித்தபின் தேசீய குடியாட்சி நிறுவனங்களில் பணிபுரிந்தார். சில காலத்திற்குப் பிறகு எல்லாப் பொது நிறுவனங்களிலிருந்தும் விலகி, தன்னந்தனியான படிப்பில் மூழ்கியிருந்தார். ஒரு நல்ல சிந்தனையாளரும் இலக்கியவாதியும்கூட. இலக்கியத்தில் ஒரு எழுச்சியோடும் சம்பந்தப்பட்டவரில்லை. ஆன்ம பரிசுத்தத்திற்காகப் போராடுபவர்களே அவரது கதாபாத்திரங்கள். தான் பிறந்து வளர்ந்த முஸ்லீம் சமுதாயத்தின் யதார்த்தமான சித்திரங்களைக் கதைகளில் காணலாம்.

நூல்கள் - தொப்பியும் தட்டும், நல்லவர்களின் உலகம், மரணம் தாலாட்டுப் பாடிற்று, நாற்பத்தியிரண்டாம் வீட்டில் சாத்தான். கவிதைகள் - முதுகெலும்புகள், பிரஸிடெண்டின் முதல் மரணம். கதைத்தொகுதிகள் - மரம், அரேபியத் தங்கம் (எம்.டி. வாசுதேவன் நாயருடன் சேர்ந்து) நாவல்கள் - இரண்ய கசிபு.

முகவரி- c/o பவன நிர்மாண ஸஹகரண சங்கம், ஒய். எம். ஸி. ஏ., கிராஸ் ரோடு, கோழிக்கோடு - 1
-------------

2. பட்டத்து விள கருணாகரன்

1101-ல் கர்க்கடகத்தில் கொல்லம் நகரில் பிறந்தார். கல்லூரிப்படிப்பு சென்னையிலும் நியூயார்க்கிலும். இதற்கிடையில், திருவனந்தபுரத்தில் கேரள கௌமுதி தினசரியில் சிலகாலம் வேலை பார்த்திருந்தார். படிப்பு முடிந்து அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்த பிறகு ஒரு அயல்நாட்டுக் கம்பெனியான பியர்ஸ் லெஸ்லியில் சேர்ந்தார். இப்போது, இக்கம்பெனியின் கோழிக்கோடு கிளையின் அஸிஸ்டெண்ட் மானேஜர். சில கதைகளே எழுதியுள்ளார். மனத்தை அள்ளிப்பிடிப்பவை அவை. குடத்து விளக்கான அவர் எழுச்சிகளுடனோ, பொது சங்கங்களுடனோ எந்தவித உறவும் கொண்டாடாமல் விலகி வாழ்கிறார்.

நூல்கள் : கண்ணே திரும்பு, பூர்ஷ்வா நண்பன், முனி (கதைத் தொகுப்புகள்).

முகவரி: பட்டத்துவிள, 287-ஸி, கொட்டாரம் ரோடு, நடக்காவு,கோழிக்கோடு.
---------

3. கோவிலன்

வட்டம் பரம்பில் வேலப்பன் அய்யப்பன் என்பது இயற்பெயர். கொல்லம் வருடம் 1098-ல் குருவாயூரருகே ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். சமஸ்கிருதக் கல்லூரியில் வித்வான் பட்டத்துக்குப் படிக்கையில் படிப்பை நிறுத்தவேண்டி வந்தது. 1942-ல் 'வெள்ளையனே வெளியேறு" இய்க்கத்தில் பங்கு கொண்டார். 1943-ல் 'நேவி'யில்
சேர்ந்தபோதிலும் ஒரு வருடத்திற்குப் பிறகு அதிலிருந்து விலக்கப் பட்டார் - நேவி ம்யூட்டினியைத் தொடர்ந்து. நான்கு வருடங்களுக்குப் பின் ஆர்மியில் ஸிக்னல் கோரில் சேர்ந்தார். 1968-ல் ஹவில்தார் மேஜரென்ற பட்டத்துடன் ராணுவத்திலிருந்து விலகினார். கஷ்டமும் கொடுமையும் நிறைந்த ஒரு வாழ்க்கையாகவிருந்தது அவருடையது. ஆரம்ப கால நூல்களில் அதைத் தெளிவாகக் காணலாம். ஒரு கவிஞராகத்தான் இலக்கிய மேடையில் பிரவேசித்தார் என்றாலும், எழுதிய
நாவல்களும் கதைகளுமே ஏராளம். மலையாளக் கதை இயக்கத்தில்
'பட்டாளக் கதை' என்ற ஒரு பகுதியை வளர்த்தவர்களில் ஒருவர்.

நூல்கள் : ஒரு காலத்தில் மனிதனாயிருந்தான், ஒரு துண்டு எலும்பு, ஒரு பலம் நஞ்சு, இவ்வாழ்க்கை நாதியற்றது (கதைத் தொகுப்புகள்); உடைந்த இதயங்கள், ஏ மைனஸ் பி,
தோற்றங்கள் (நாவல்கள்); உன் நம்பிக்கை உன்னைக் காக்கும் (நாடகம்).

முகவரி : கங்ஙாணசேரி, குருவாயூர், கேரளா.

4. என். மோஹனன்

1933-ல் ராமபுரத்தில் பிறந்தார். தாயார் பிரபலமான கவிஞரும், கதாசிரியையுமான லலிதாம்பிகா அந்தர்ஜனம். கல்லூரிப் படிப்பு முடிந்தபின் இரண்டு வருடம் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்த்தார். பிறகு கவர்மென்ட் சர்வீஸில் சேர்ந்தார். இப்போது திருவனந்தபுரத்தில் கேரள அரசாங்கதின் கல்ச்சுரல் டெவலப்டென்ட் ஆஃபீஸர். மலையாளக்கதை இயக்கத்தில் சக்தி மிக்க ரொமான்டிஸிட்.

நூல்கள்- எது கதை (உனதும்), துக்கத்தின் இரவுகள், பூஜைக்குத் தொடாத பூக்கள் (கதைத் தொகுப்புக்கள்)

முகவரி - கல்ச்சுரல் டெவல்மென்ட் ஆஃபீஸர், கவர்ன்மென்ட் ஆஃப் கேரளா, திருவனந்தபுரம்.
---------

5. எம். கோவிந்தன்.

பிறப்பு 1919-ல். வாழ்க்கைக் கஷ்டத்தினால் மேற்படிப்பு படிக்க இயலாமற் போயிற்று. சென்னையில் சிறியதோர் வேலையிலிருந்து கொண்டு ஏராளமாக வாசித்தார். எம். என். ராயின் விசிறியும் ராடிக்கல் ஹ்யூமானிஸ்டுமாக மாறினார். ராயுடைய நெருக்கம் சிந்தனாபூர்வமான சாத்யதைகளை வளர்த்தியது. கேரளம் என்ற மாகாணம் உருவானதும் திருவனந்தபுரத்தில் அரசாங்க வேலையில் சேர்ந்தார். கம்யூனிஸ்ட் அரசாங்கத்துடன் உண்டான கருத்து வேற்றுமையால் வேலையை ராஜினாமா செய்தார். கேரளம் நெடுக மக்களாட்சிப் பற்றாளர்களைக் கூட்டியும், ’ஸமீக்ஷா’ என்ற மாதப் பத்திரிகைளை நடத்தியும் தனது சித்தாந்தத்தைப் பிரபலப்படுத்தினார்.இதற்குள் இந்தியாவின் அறிவு ஜீவிகளுக்கு நடுவே விரும்பத்தக்க ஓரிடம் கிடைத்துவிட்டிருந்தது. அடிப்படையான சிந்தனாசக்தி கொண்ட அவர் மலையாள மொழியில் வேதாந்தமும், படைப்பு பூர்வமான மட்டங்களில் கனத்த ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார். ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் கவிதைகள் எழுதுகிறார். ஒரு கதாசிரியன் என்பதைவிட ஒரு சிந்தனையாளரும் கவிஞருமாவார். ஒரு எழுத்தாளரும் டாக்டருமான பத்மாவதி இவரது மனைவி.

நூல்கள் - ஞானஸ்தானம், மேனகா (கவிதைத் தொகுப்புக்கள்), அரசியின் நாய் (கதைத் தொகுப்பு), நீ மனிதனைக் கொல்லாதே (நாடகம்), தொடக்கம், சற்றுச் சிந்தித்தாலென்ன? அறிவின் பலன்கள், மன்பதை மதிப்புக்கள், கம்யூனிஸத்திலிருந்து முன்னே, சைத்தானும் மனிதனும், உயில், பஷீரின் அருமை மூஷிகன், கவிதைகள் நெருக்கங்கள் (பிரபந்தங்கள்).

முகவரி - 77-பி ஹாரிஸ் ரோடு, மௌன்ட் ரோடு, சென்னை - 2
-----------

6. ஜயதேவன், பி

ஜனார்த்தன மேனனின் எழுது பெயர். எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியிலும், சட்டக் கல்லூரியிலும் படிப்பை முடித்தபின் சிலகாலம் கேரளா ஹைக்கோர்ட்டில் அட்வக்கேட்டாக ப்ராக்டீஸ் செய்தார். இப்போது டில்லியில் மத்ய அரசின் சட்ட இலாக்காவில் அலுவலக மொழி (சட்ட இலாகா) கமிஷனில் வேலை பார்க்கிறார். கடந்த இருபதாண்டுக் காலமாக வழக்கமாக எழுதிவருகிறார். ஆகாசவாணிக்காக நாடகங்களும் ஏராளம் கதைகளும் எழுதியிருக்கிறார். இதுவரை புத்தக உருவில் வந்த படைப்புக்கள் - கோபுர துவாரத்தில், அகம்பாவங்கள் (கதைத் தொகுப்புக்கள்), விருச்சிகக் காற்றில் (நாவல்).

முகவரி - 217, விட்டல்பாய் பட்டேல் ஹௌஸ், ரஃபி மார்க், நியூ டெல்ஹி-1
---------

7. காக்க நாடன்

காக்க நாட்டு ஜார்ஜ் வர்க்கீஸின் புனைப்பெயர். 1935-ல் கொல்லத்தில் பிறந்தார். தந்தை ஜார்ஜ் காக்க நாடன் திருக்கோயில்களுக்கும் ஊழல்களுக்கும் எதிராகப் போராடிய ஒரு புரட்சிமனவாதி. அக் காரணத்தால் சமூகத்திலிருந்து விலக்கப்பட்ட அவருக்குப் பிறந்த ஊரிலிருந்து வெளியேறவேண்டிவந்தது. 1955-ல் பி.எஸ்ஸி. , பாஸான காக்கநாடன் சென்னையிலும் திருச்சிராப்பள்ளியிலும் வேலை பார்த்தார். பிறகு டில்லியில் இரயில்வே மினிஸ்ட்ரியில் இரண்டு வருடங்கள். கிழக்கு ஜெர்மனி அழைப்பின்பேரில் டைப்ஸிக் யூனிவர்ஸிட்டியில், ’இந்தியாவில் இன்றைய சமூக, பொருளாதாரச் சூழ்நிலையில் இலக்கியக் கர்த்தாவின் பங்கு’ என்ற விஷயம் குறித்து ஆராய்ச்சி நடத்துவதற்காக ஜெர்மனிக்குப் போனார். ஒரு வருடத்திற்குப் பின்னர் ஆராய்ச்சியை முடிக்காமல் திரும்பி வந்தார். இப்போது முழுநேர எழுத்தாளராக இருக்காமல் திரும்பி வந்தார். இப்போது முழுநேர எழுத்தாளராக இருக்கிறார். நவீன கதா இலக்கியத்தின் முக்யஸ்தர்களில் ஒருவர்.

நூல்கள்: வியாபாரம், கண்ணாடி வீடு, பதினேழு, போர் முடிவு, வெளியே போகும் வழி (கதைத் தொகுப்புக்கள்; சாட்சி, வைசூரி, ஏழாம் முத்திரை, உஷ்ண மேகலை, அறியாமை யின் பள்ளத்தாக்கு, பறங்கிமலை (நாவல்கள்).

முகவரி: C/o மலையாள நாட்டு வாரிக, கொல்லம், கேரளா.
--------

8. ஓ.வி. விஜயன்

பிறப்பு 1931-ல். கவிஞரும் நாவலிஸ்ட்டும் கதாசிரியருமான இவர், அகில இந்தியப் பிராபல்யம் அடைந்த கார்ட்டூனிஸ்டுமாவார். ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றபின் மூன்று வருடங்கள் கல்லூரி விரிவுரையாளராக வேலை பார்த்தார், பிறகு டில்லியில் 'சங்கர்ஸ் வீக்லி'யில் கார்ட்டூனிஸ்டாகச் சேர்ந்தார். 'பேட்ரியாட் ' தினப் பத்
திரிகையிலும் கார்ட்டூனிஸ்டாக இருந்தார். 'இந்தியன் எக்ஸ்பிரஸ்', 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்', 'லிங்க்' முதலான பத்திரிகைகளின் கலை விமரிசகர். இப்போது சென்னையில் ஹிந்து தினசரியிலும், ஹாங்காங்கின் 'ஃபார் ஈஸ்ட்டர்ன் எக்கனாமிக்ஸ் ரெவ்யூ'விலும் வழக்கமாக வரைகிறார். மலையாளக்கதை நாவல் மேடைக்கு நவீன படைப்புக்களை
கொண்டு வந்தவர்களில் ஒருவர்.

நூல்கள்: மூன்று போர்கள், உச்சகோடி (கதைத் தொகுப்புக்கள்): கஸாக்கின் இதிகாசம் (நாவல்).

முகவரி: C/o சங்கர்ஸ் வீக்லி, ஓடியன் பில்டிங், கனாட் ப்ளேஸ், நியூ டெல்லி.
----------

9. எம்.முகுந்தன்

1942-ல் ஒரு முன்னாள் ஃப்ரெஞ்சு பிரதேசமான மாஹியில் பிறந்தார். ஃப்ரெஞ்சு முறையிலான படிப்பு. இளமைக்காலம் முழுவதும் வருத்திய நோய் படிப்பை முடிக்க அனுமதிக்கவில்லை. 1961-ல் டில்லியில் வேலை தேடி வந்தார். ஒரு ஃப்ரெஞ்ச் பள்ளியில் இரண்டு வருடம் வேலை பார்த்தார். இப்போது டில்லியில் ஃப்ரெஞ்ச் எம்பாஸியில், கல்ச்சுரல் டிபார்ட்மென்ட் பகுதியில் வேலை பார்க்கிறார். 1961முதல் தொடர்ந்து கதைகளும் நாவல்களும் எழுதி வருகிறார். நவீன மலையாள இலக்கி
யத்தை வளர்த்து வருபவர்களில் ஒருவர்.

நூல்கள்- வீடு, நதியும் தோணியும், வேசிகளே, உங்களுக்கொரு கோயில், ஐந்தரை வயதுக் குழந்தை (கதை தொகுப்புக்கள்), டில்லி, ஆகாயத்தினடியில். ஆல்வாயில் சூரியோதயம், ஹரித்வாரில் மணிகள் முழங்குகின்றன. இவ்வுலகம், இதிலொரு மனிதன். மய்யழி நதி தீரங்களில் (நாவல்கள்).

முகவரி -C/o ஃப்ரெஞ்ச் எம்பஸி, டி-25, ஸௌத் எக்ஸ்டென்சஷன் பார்ட்-2, நியூ டெல்லி-49
---------

10. எம். பி. நாராயண பிள்ளை

பிறப்பு 1939-ல் பனாரஸ் யூனிவர்ஸிடியிலிருந்து பி.எஸ்ஸி., பட்டம் பெற்றார் 1960-ல். ஐந்து வருடம் டில்லியில் ப்ளானிங் கமிஷனில் உத்யோகஸ்தராயிருந்தார். 1966-ல் ஹாங்காங்கில் ’ஃபார் ஈஸ்ட்டர்ன் எக்னாமிக்ஸ் ரெவ்யூ’வில் அசிஸ்டென்ட் எடிட்டராகச் சேர்ந்தார். இப்போது பம்பாயில் ’காமர்ஸ்" என்ற பிரசுரத்தில் இருக்கிறார். 1963 முதல் பத்திரிகைப் பிரசுரங்களில் கதைகள் எழுதி வருகிறார்.

நூல் - முருகன் என்ற பாம்பாட்டி (கதைத் தொகுப்பு)

முகவரி - 17-ஏ, மலபார் அப்பார்மென்ட்ஸ், நாப்பியன் ஸீ ரோடு (Napean Sea Road), பம்பாய்.
-----------

11. துளசி

துளசிதாஸின் புனைப்பெயர். மலையாள வருடம் 1116-ல் பிறந்தார். ஆங்கில இலக்கியத்தை முக்கியப் பாடமாக எடுத்து பி.ஏ. பாஸானார். இலக்கியக் கர்த்தாக்களின் கூட்டுறவுப் பிரசுர அமைப்பான எஸ்.பி.ஸி.எஸ்-ஸில் (கோட்டயம்), பப்ளிகேஷன் அஸிஸ்டென்டாக வேலை பார்க்கிறார். கலையழகுமிக்க கதைகளை எழுதும் துளஸி புதிய எழுத்தாளர்களில் கவனத்துக்குரியவர்.

நூல்கள் - தீவு, யுவதி, ஆருத்ரா, ராகக் குருவிகள், உஷ்ணஸீம (நாவல்கள்), கய்ப்ப நீரே நித்யம், நீயும் உன் வழியும், சிவப்பு ஜ்வாலையான ஸ்திரீ, சாபம் கொண்ட இரவு (கதைத் தொகுப்புக்கள்).

முகவரி - C/o ஸாதித்ய ப்ரவர்த்தக ஸஹகரண சங்கம், கோட்டயம், கேரளா.
-----------

12. பூனத்தில் குஞ்ஞப்துல்லா

1942-ல் தென் மலபாரில் பிறந்தார். பி.எஸ்ஸி., பாஸான பிறகு அலிகார் முஸ்லீம் யூனிவர்ஸிடியில் மருத்துவதற்குச் சேர்ந்தார். இப்போது ஊரில் ஒரு கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரியில் ஸர்ஜன், அலிகாரில் படித்துக்கொண்டிருக்கையிலேயே கிறிஸ்துவரான மரியம்மையை மணம் புரிந்தார். குடும்பத்தினுடையவும் சமுதாயத்தினுடையவும் எதிர்ப்புக்களைச் சட்டை செய்யாமல், 1971-ல் அலிகாரில் மனைவி இறந்தார். என்.பி. முகமதுவின் கதைகளைப்போல முஸ்லீம் சமுதாயத்தின் இருளடைந்த பக்கங்களை குஞ்ஞப்துல்லாவின் கதைகளிலும் காணலாம்.

நூல்கள் - தவறு, அலிகாரில், கைதி (நாவல்கள்), கத்தி, காலாட்படையின் வரவு (கதைத் தொகுப்புக்கள்)

முகவரி- டாக்டர் பூனத்தில் குஞ்ஞப்துல்லா, போஸ்ட் மடப்பள்ளி காலேஜ், வடகரை, கேரளா.
--------

13 - சேது
எம். சேது மாதவன். பிறப்பு 1942-ல். பி.எஸ்ஸி., பாஸான பிறகு ஆறு வருடம் வட இந்தியாவில் பலவிடங்களிலும் வேலை பார்த்தார். இப்போது ஸ்டே்ட பாங்க் ஆஃப் ட்ராவன்கூர், பறவூர் கிளையின் மனேஜர். புதிய தலைமுறையில் ஒரு குறிப்பிடத்தக்க காதாசிரியர்.

நூல்கள் - ஒளியின் ஊற்று, பாம்பும் ஏணியும் (கதைத் தொகுப்புக்கள்), அஸ்தமனம் (நாடகம்), நாங்கள் அடிமைகள், நனைந்த மண், அறியாத வழிகள் (நாவல்கள்).

முகவரி - மானேஜர், ஸ்டே்ட் பாங்க் ஆஃப் ட்ராவன்கூர், நார்த்பறவூர், கேரளா.
--------
14. ஸக்கரியா
பால் ஸக்கரியாவின் எழுதுபெயர். 1945-ல் மத்ய திருவிதாங்கூரில் பிறந்தார். எம்.ஏ. பாஸான பின் கல்லூரி விரிவுரையாளராக வேலை பார்த்தார். ஒரு வருடம் ரூபி டயர் வொர்க்ஸின் கோயம்பத்தூர் கிளை மானேஜராகவும் வேலை பார்த்தார். இப்போது டில்லியில் ஒரு அமெரிக்கன் புத்தகப் பிரசுரக் கம்பெனியில் வேலை பார்க்கிறார். வெகு இளம் வயதிலேயே இலக்கியப் படைப்பை ஆரம்பித்த ஸக்கரியா, இன்றைய பத்திரிக்கைகளில் நிறைய எழுதி வருகிறார். இரண்டு கதைத் தொகுப்புக்களைப் பிரசுரித்திருக்கிறார்.

முகவரி - ஸி - 31, ஸௌத் எக்ஸ்டென்ஷன், பார்ட்-ஒன், நியூ டெல்லி - 49
--------

15. எம். சுகுமாரன்
பிறப்பு 1943-ல், பாலக்காடு ஜில்லாவில். ஹைஸ்கூல் படிப்பிற்குப் பின்னர் திருவனந்தபுரத்தில் அக்கௌன்ட்ஸ் ஜெனரல் ஆஃபீஸில் லோயர் டிவிஷன் கிளார்க்காக வேலை பார்க்கிறார். மலையாளமொழியில் நடக்கும் சலனங்களிலிருந்து விலகி நின்று, வாழ்க்கை மணமிக்க கதைகள் எழுதுகிறார். ஒரு சுறுசுறுப்பான ட்ரேட்யூனியன் தொண்டர். மறியல்களில் பங்கெடுத்தத்தைத் தொடர்ந்து இப்போது ஸஸ்பென்ஷனில் இருக்கிறார்.

நூல்கள் - பாறை, ஆழிமுகம் (நாவல்கள்).

முகவரி - டி.ஸி. நம்பர் 23/519? வஞ்சியூர், திருவனந்தபுரம் - 1, கேரளா.
-------

16 - பி. பத்மராஜன்
1945-ல் ஆலப்புழையில் பிறந்தார். கெமிஸ்ட்ரி கிராஜிவேட். 1665 முதல் ஆகாசவாணி திருவனந்தபுரம் நிலையத்தில் அறிவிப்பாளராக வேலை பார்க்கிறார். கடந்த ஏழு வருடங்களாக வழக்கமாகக் கதைகள் எழுதி வருகிறார். இதயத்தைத் துளைத்து ஏறும் தன்மையது அவருடைய நடை.
நூல்கள் - புதிர், மற்றவர்களின் வேனல், இன்னொருவன், புகைக் கண்ணாடி, ஒன்று இரண்டு மூன்று (கதைத் தொகுப்புக்கள்); நட்சத்திரங்களே காவல், பருவ மாற்றங்களின் பரிசு, இதோ இங்கு வரை; வாடகைக்கு ஒரு இதயம் (நாவல்கள்.)

முகவரி: C/O ஆகாசவாணி, திருவனந்தபுரம், கேரளா.
----------

17. இ. ஹரிகுமார்
1943-ல் பிறப்பு. தந்தை பிரபல மலையாளக் கவிஞரான இடச்சேரி கோவிந்தன் நாயர். மெட்ரிகுலேஷன் பாஸான பிறகு உத்யோக‌ நிமித்தமாய் கல்கத்தாவுக்குப் போனார். அங்கே ஓர் கமெர்ஷியல் நிறுவனத்தில் வேலை பார்த்தவாறே மாலை வகுப்புகளில் சேர்ந்து பி.ஏ., பாஸானார். கல்கத்தா, டில்லி, பம்பாய் என்ற இம்மூன்று மாநகரங்களில் வேலை பார்த்தார். சில கதைகளே எழுதியுள்ள போதிலும், கையாளும் விஷயத்தின் ஆழமும், திட்டமான நடையும் அவற்றைக் குறிப்பிடத்தக்கவையாக ஆக்குகின்றன.

நூல்கள்: கரப்பான் பூச்சிகள் (கதைத் தொகுப்பு).

முகவரி: C/o இடச்சேரி கோவிந்தன் நாயர், போஸ்ட் பொன்னாணி, மலபார், கேரளா.
---------

18. அசமன்னூர் ஹரிஹரன்.
முழுப்பெயர் டி.கெ.ஹரிஹரன் நாயர். பிறப்பு 1940-ல். மனத் தத்துவத்தில் எம்.ஏ., பாஸாயிருக்கும் அவர், மத்ய அரசாங்கத்தில், திருடர்கள் பள்ளியில் மனத்தத்துவ நிபுணர் என்ற பதவி வகிக்கிறார். கவிஞரும் நாவலிஸ்டும் கட்டுரையாளரும் கூட.

நூல்கள்: மன நோய்கள் (கட்டுரைகள்.); மஞ்சட்குருவிகள் (நாவல்); கள்ளி (துண்டுக் காவியம்).

முகவரி: ரிஸர்ச் ஆபீஸர். டைரக்டரேட் ஆஃப் சைக்கால‌ஜிக்கல் ரிஸர்ச், 'எம்' பிளாக். ப்ரதிரோத மந்த்ராலயம். நியூ டில்லி-1.
-----------------------------------------------------------


This file was last updated on 10 December 2014.
.