கல்கியின் சிறுகதைகள்
தொகுப்பு (பாகம் 4)
ஆசிரியர்: கல்கி கிருஷ்ணமூர்த்தி

Short stories collection (part 4)
by Kalki Krishnamurthy
In tamil script, unicode/utf-8 format

கல்கியின் சிறுகதைகள் தொகுப்பு (பாகம் 4)
ஆசிரியர்: கல்கி கிருஷ்ணமூர்த்தி

------------

கல்கியின் சிறுகதைகள் தொகுதி - part 4
46. கடிதமும் கண்ணீரும்

1

பிரசித்தி பெற்ற தேவி வித்யாலயத்தின் ஸ்தாபகரும் தலைவியுமான சகோதரி அன்னபூரணி தேவி ஒரு நாள் மாலை வழக்கம் போல் வித்யாலயத்தைச் சுற்றியிருந்த பெரிய தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார். வித்யாலயத்துக்குக் கொஞ்ச தூரத்திலுள்ள ஒரு பங்களாவிலிருந்து வந்த நாதஸ்வரத்தின் கீதம் அவருக்கு ஏதேதோ பழைய நினைவுகளை உண்டாக்கின. எப்போதும் சாந்தம் குடி கொண்டிருக்கும் அவருடைய முகத்திலே ஒரு நிமிஷம் கிளர்ச்சியின் அறிகுறி தோன்றி அடுத்த கணம் மறைந்தது. அக்காட்சி, அமைதியான சமுத்திரத்தில் திடீரென்று ஒரு பேரலை கிளம்பிக் கரையோரமிருந்த பாறைமீது மோதி அதை ஒரு நிமிஷம் மூழ்க அடித்து விட்டு, மறு நிமிஷம் திரும்பிச் செல்ல, மீண்டும் அக் கடலில் அமைதி குடி கொள்வது போலிருந்தது. அலை அடித்தது என்பதற்கு ஞாபகார்த்தமாய் அந்தப் பாறையிலே உள்ள பள்ளங்களில் தண்ணீர் தங்கியிருப்பது போல, அன்னபூரணியின் கண்களிலும் ஜலம் ததும்பி நின்றது.

அப்போது அந்தத் தோட்டப் பாதையில் எதிர்ப்புறமாக வித்யாலயத்தின் உதவி ஆசிரியை ஸ்ரீமதி சாவித்ரி, எம்.ஏ., எல்.டி. வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும், அன்னபூரணி தேவி கண்ணீரைச் சட்டென்று துடைத்துக் கொண்டு, புன்னகையுடன் சாவித்ரியை வரவேற்றார். இருவரும் சமீபத்தில் ஒரு வேப்ப மரத்தின் அடியில் இருந்த சிமெண்ட் மேடை மீது உட்கார்ந்தார்கள்.

பெண் குலத்தின் சேவையில் தலை நரைத்துப் போனவர் என்றால் அது சகோதரி அன்னபூரணிக்கு முற்றும் பொருத்தமாயிருக்கும். அவருடைய நெற்றியைக் கவிந்து கொண்டு அடர்த்தியாய் வளர்ந்திருந்த வெள்ளிய கேசத்தைப் பார்க்கும்போது, மலைச் சிகரங்களின் மேல் அடுக்கடுக்காகத் தங்கி நிற்கும் வெண்ணிற மேகங்களின் காட்சி ஞாபகத்துக்கு வரும். இவ்வாறு தலை நரைத்துப் போயிருந்தாலும், அவர் முகத்தைப் பார்க்கும்போது, அவர் ஐம்பது வயதை தாண்டியவர் என்று யாராலும் சொல்ல முடியாது. மாறாத இளமையின் இரகசியத்தைக் கண்டுபிடித்தவரோ அவர் என்று கூடத் தோன்றும். வெள்ளைக் கலையுடனும், வெண்மயிர் அடர்ந்த தலையுடனும், சாந்தம் குடிகொண்ட முகத்துடனும் தோன்றிய சகோதரி அன்னபூரணியைப் பார்ப்பவர்கள், அவரைச் சரஸ்வதி தேவியின் அவதாரமென்றே நினைப்பார்கள்.

அன்னபூரணியின் வாழ்க்கை வரலாறோ, எல்லாரும் பிரசித்தமாக அறிந்த விஷயம். ஒன்பதாவது வயதில் நினைவு தெரியுமுன்பே வைதவ்யக் கொடுமைக்கு ஆளாகும் துர்ப்பாக்கியத்தைப் பெற்றவர் அவர். அவருடைய அந்தத் துர்ப்பாக்கியமே பெண் குலத்தின் நற்பாக்கியம் ஆயிற்று. பிற்காலத்தில் அவர் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து, முயற்சியுடன் படித்து, கடைசியாக பி.ஏ.,எல்.டி. பட்டமும் பெற்றார். அதுமுதல், இளம்பிராயத்தில் கணவனை இழந்தவர்கள், கணவன்மார்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள், அநாதைப் பெண்கள் முதலியோருக்குத் தொண்டு செய்வதிலேயே தமது வாணாளைச் செலவிட்டு வந்தார். அவருடைய இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு சாதனமாக இந்தத் தேவி வித்யாலயத்தை ஸ்தாபித்துத் தமது உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் அதற்கே அர்ப்பணம் செய்திருந்தார்.

உதவி ஆசிரியை ஸ்ரீமதி சாவித்ரி இளம் பிராயத்தவள். வயது சுமார் இருபத்தைந்து இருக்கும். இன்னும் கலியாணம் ஆகவில்லை. மூன்று வருஷத்துக்கு முன் அவள் எம்.ஏ.,எல்.டி. பரீஷை தேறி, இந்த வித்யாலயத்தில் உதவி ஆசிரியையாக வந்தபோது, சம்பாத்யத்துக்காகவே வந்தாளென்றாலும், பின்னால் சகோதரி அன்னபூரணியின் சகவாசத்தினால் அவளுடைய மனோபாவமே மாறிப் போயிருந்தது. அன்னபூரணியைப் போல் தானும் பெண் குலத்தின் தொண்டுக்காகவே வாணாளை அர்ப்பணம் செய்தாலென்ன என்று கூடச் சில சமயம் அவள் எண்ண மிடுவதுண்டு.

சிமெண்ட் மேடையின் மீது உட்கார்ந்ததும், சாவித்ரி, "அம்மா! இன்று கவிதைப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது எனக்கு ரொம்பக் கஷ்டமாய்ப் போய்விட்டது. 'அன்பினால் தான் உலகம் இயங்குகின்றது' என்பதாக அதில் ஒரு வரி வருகிறது. 'எந்த அன்பைச் சொல்கிறார் கவி?' என்று பத்மா கேட்டாள். ரொம்பப் பொல்லாத பெண் பத்மா!...அதோ அவள் சிரிக்கிற சப்தத்தைக் கேளுங்கள்!" என்றாள் சாவித்ரி.

தோட்டத்தின் இன்னொரு பகுதியில் சில பெண்கள் கையால் எறிந்து விளையாடும் பந்தாட்டம் ஆடிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்து கிளம்பிய கலகலவென்ற சிரிப்பின் ஒலி தென்றல் காற்றில் தவழ்ந்து வந்து கொண்டிருந்தது.

"பத்மாவின் கேள்விக்குப் பதில் என்ன சொன்னாய்?" என்று அன்னபூரணி கேட்டாள்.

"பதில் சொல்லத் திணறிப் போய் விட்டேன். கவி இங்கே 'அன்பு' என்று சொல்லும்போது காதலைத்தான் குறிப்பிடுகிறார். ஆனால் இதை அந்தப் பெண்களுக்கு நான் எப்படிச் சொல்வது? சாதாரணப் பெண்களுக்கு முன்னால் சொல்வதே கஷ்டம். நான் 'குவீன் மேரீஸ்' காலேஜில் படித்தபோது, எங்கள் ஆசிரியைகள் பட்ட அவஸ்தை நன்றாய் ஞாபகமிருக்கிறது. இங்கே, விதவைப் பெண்கள், புருஷர்களால் தள்ளி வைக்கப்பட்டவர்கள் - இப்படிப் பட்டவர்கள் முன்னால் காதலைப் பற்றி என்னமாய்ப் பேசுவது?"

இப்படிச் சொல்லி வந்த சாவித்ரி சட்டென்று நிறுத்தினாள். சகோதரி அன்னபூரணியும் பால்யத்தில் கணவனை இழந்தவர் என்பது சாவித்ரிக்கு அச்சமயம் ஞாபகம் வரவே, தான் விரஸமாய்ப் பேசிவிட்டதாக அவளுக்குப் பயம் உண்டாயிற்று. அந்தத் தவறை நிவர்த்தி செய்யும் பொருட்டு அவள் மறுபடியும் கூறினாள்: "உண்மையாகப் பார்த்தால், அம்மா, இதெல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனம் என்றுதான் தோன்றுகிறது. காதல், கீதல் என்று சொல்வதெல்லாம் வெறும் பிரமையேயல்லவா? வேலையில்லாத கவிகளின் வீண் மனோராஜ்யத்தைத் தவிர வேறொன்றுமில்லை..."

அப்போது, அன்னபூரணி, "அப்படியா சமாசாரம்? எல்லாம் பிரமைதானா? ரொம்ப சரி, அந்தப்படி டாக்டர் சீனிவாசனுக்கு நான் கடிதம் எழுதுகிறேன்," என்றார்.

சாவித்ரி டாக்டர் சீனிவாசனைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிற விஷயத்தையே அன்னபூரணி அவ்வாறு குறிப்பிட்டார். சாவித்ரி ஒரு மழுப்பல் சிரிப்புச் சிரித்துவிட்டு, "ஆமாம்; யார் கண்டார்கள்? இப்போது நிஜம் போல் இருக்கிறது, இரண்டு வருஷம் போனால் எப்படி இருக்குமோ? யாருக்குத் தெரியும்? அது போனால் போகட்டும் அம்மா! 'உலகத்தில் சிறந்த காரியங்கள் எல்லாம் காதலினால்தான் நடக்கிறது' என்று இந்தக் கவி சொல்வது அபத்தந்தானே? அது எப்படிச் சரியாகும்? இருபத்தைந்து வருஷ காலமாக நடந்து வரும் இந்தத் தேவி வித்யாலத்தையே எடுத்துக் கொள்ளலாம். கன்யாகுமரியிலிருந்து ஹிமாலயம் வரையில் இந்த ஸ்தாபனத்தைப் புகழாதவர்கள் இல்லை. தங்களுடைய சேவையைப் பாராட்டாதவர்களும் இல்லை. இந்த ஸேவாலயத்தின் விஷயத்தில் கவி சொல்வது எப்படிப் பொருந்தும்?" என்றாள்.

"சாவித்ரி! உலகத்திலே நடக்கும் மற்றச் சிறந்த காரியங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. கவி சொல்வது அவற்றுக்கெல்லாம் பொருந்துமோ, என்னவோ, அறியேன். ஆனால், என்னுடைய சேவையை ஒரு பெரிய காரியமாய்க் கருதும் பட்சத்தில், கவி சொல்வது அதற்கு முற்றிலும் பொருந்தும். என்னுடைய முயற்சிகளுக்கெல்லாம் மூலகாரணம் அன்புதான்."

"இல்லையென்று யார் சொன்னார்கள்? அநாதைகளிடத்திலும் தீனர்களிடத்திலும் தங்களுடைய அன்பு பிரசித்தமானதல்லவா?"

"அந்த அன்பைச் சொல்லவில்லை நான். கவி சொல்லும் காதலைத் தான் சொல்கிறேன். நான் ஏதாவது சேவை செய்திருந்தால், அது அவ்வளவும் காதல் என்னும் விதையிலிருந்து முளைத்து எழுந்ததுதான்"

சாவித்ரி இதைக் கேட்டு அளவிலா வியப்பு அடைந்தாள். "அம்மா! நிஜமாகவா, அம்மா? ஐயோ! எனக்கு எல்லாம் சொல்லுங்கள்!" என்று பரபரப்புடன் கேட்டாள்.

2

அன்னபூரணி சொல்கிறார்:

"அதோ அந்தக் கலியாண வீட்டிலிருந்து மேளச் சத்தம் காற்றில் மிதந்து வருகிறதே, கேட்கிறாயல்லவா? நாயனக்காரன் நாட்டைக்குறிஞ்சி ராகத்தை அற்புதமாய் வாசிக்கிறான். உன்னைப் பார்ப்பதற்கு ஒரு நிமிஷம் முன்னால் அது என் காதில் விழுந்தபோது பழைய காலத்து ஞாபகம் எனக்கு உண்டாயிற்று. ஒரு நாளும் இல்லாதபடி கண்ணில் ஜலம் கூட வந்துவிட்டது. பல வருஷங்களுக்கு முன்னால் ஒரு கல்யாணத்தின் போது இதே ராகத்தைச் செம்பொன்னார் கோவில் ராமசாமி வாசித்தான். அப்போதெல்லாம் நாயனக்காரர்களில் அவன் தான் பிரசித்தம்..."

"அதெல்லாம் உங்களுக்கு இன்னுமா ஞாபகம் இருக்கிறது, அம்மா! ரொம்பவும் பால்யத்தில் உங்களுக்குக் கலியாணம் ஆயிற்று என்று கேள்விப்பட்டிருக்கிறேனே?"

"என்னுடைய கலியாணத்தை நான் சொல்லவில்லை. ஆறு வயதிலே எனக்குக் கலியாணம் பண்ணினார்களாம். ஒன்பது வயதிலே கைம்பெண் ஆனேன். அதெல்லாம் எனக்குக் கனவு மாதிரி கூட ஞாபகத்தில் இல்லை. அவ்வளவு இளம் வயதில் விதவையானதில் ஒரு சௌகரியம் இருந்தது. உனக்குச் சிரிப்பு வருகிறதல்லவா? ஆனாலும் உண்மை அப்படித்தான். நாலைந்து வருஷத்துக்குப் பிறகு அப்படி நேர்ந்திருந்தால், எல்லாரையும் போல் என்னையும் அலங்கோலம் செய்திருப்பார்கள். ரொம்பச் சிறு வயதானபடியால் அப்படி ஒன்றும் செய்யாமல் விட்டிருந்தார்கள்."

அன்னபூரணி சற்று நேரம் சிந்தையில் ஆழ்ந்த வண்ணம் சும்மா இருந்துவிட்டு, மறுபடியும் கதையைத் தொடர்ந்தார்:

"நான் குறிப்பிட்டது என்னுடைய சித்தி பெண்ணின் கலியாணத்தை. அம்புஜம் எனக்கு இரண்டு வயது சின்னவள். அவளுக்குக் கலியாணம் ஆனபோது எனக்குப் பதினாறு வயதிருக்கும் அம்புஜம் என்னிடம் உயிராயிருந்தாள். நான் கைம்பெண் ஆனதிலிருந்து என் சித்தியின் வீட்டிலேயே வளர்ந்து வந்தேன். என்னுடைய துர்க்கதியை எண்ணி அந்த வீட்டில் எல்லாரும் என்னிடம் மிகவும் பிரியமாயிருந்தார்கள். நான் வைத்ததே சட்டமாய் எல்லாம் நடந்து வந்தது."

"அம்புஜத்துக்குக் கல்யாணம் நிச்சயமானபோது, என் இஷ்டப்படிதான் எல்லா ஏற்பாடுகளும் நடந்தன. மாப்பிள்ளைக்கு என்ன வேஷ்டி வாங்குவது, மேளக்காரன் யாரை அமர்த்துவது, நாலாம் நாள் விருந்துக்கு என்ன பட்சணம் போடுவது என்பது முதல் எல்லாம் நான் தான் தீர்மானித்தேன்."

"கலியாணத்துக்கு முதல் நாள் இராத்திரி மாப்பிள்ளை அழைத்த பிறகு நிச்சயதார்த்தம் நடந்தது. பெண் வீட்டு ஸ்திரீகளுடன் நானும் கூடத்தில் நின்று கொண்டிருந்தேன். மணையில் உட்கார்ந்திருந்த அம்புஜத்தின் தலையிலிருந்து கல்லிழைத்த திருகுப்பூ கழன்று விழுந்து விடும்போல் இருந்தது. நான் அவளருகில் போய் அதைச் சரியாகத் திருகினேன். அப்படித் திருகிவிட்டுத் தலையை நிமிர்ந்தபோது, மாப்பிள்ளைக்கு அருகில் உட்கார்ந்திருந்த ஓர் இளைஞர் என்னை உற்று நோக்குவதைக் கண்டேன். அந்தக் கணத்தில் என் தேகமெல்லாம் பதறிற்று. தலை சுழன்றது; ஸ்மரணையிழந்து கீழே விழுந்து விடுவேனோ என்று பயந்து போனேன். பகவான் அருளால் அப்படி ஒன்றும் நேரவில்லை."

"அவருடைய முகத்தை மறுபடி பார்க்க வேண்டுமென்ற ஆவல் என் மனத்தில் பொங்கி எழுந்தது. அப்படி ஓர் ஆசை இருக்கக் கூடுமென்றே நான் கனவிலும் கருதியதில்லை. எவ்வளவோ மனத்தை அடக்கி அடக்கிப் பார்த்தேன். பல்லைக் கடித்துக் கொண்டு பார்த்தேன். ஒன்றும் சாத்தியமில்லை. கடைசியில் அவர் இருந்த பக்கம் திரும்பியபோது அவர் அப்போதுதான் என்னைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு முகத்தைத் திருப்புவதைக் கண்டேன்."

"அன்றிரவு நான் தூங்கவேயில்லை."

"மறுநாள் அம்புஜத்தின் கலியாணம் சிறப்பாக நடந்தேறியது. வெளித்தோற்றத்திற்கு நான் எப்போதும் போல் காரியங்களைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் என் மனம் என்னவோ வேறு தனி உலகம் ஒன்றில் சஞ்சரிக்கத் தொடங்கியது."

"கொஞ்சநஞ்சமிருந்த சந்தேகமும் கலியாணத்தன்று தீர்ந்து போயிற்று. அவர் என்னைப் பார்த்தது எல்லாம் தற்செயலாக அல்ல; வேண்டுமென்றுதான். என் மன நிலையும் எனக்கு நிச்சயமாயிற்று. ஏதோ ஒரு காந்த சக்தி அவர் பக்கம் என்னைக் கவர்ந்து இழுக்கிறது என்பதை அறிந்தேன்... அதோ பூரனச் சந்திரன் கிளம்புகிறதே, பார்த்தாயா?" என்று அன்னபூரணிதேவி கேட்க, சாவித்ரி அந்தப் பக்கம் நோக்கினாள்.

"பூரணச் சந்திரனை அதற்கு முன்னால் எவ்வளவோ தடவை நான் பார்த்துத்தானிருந்தேன். ஆனால் அம்புஜத்தின் கலியாணத்தன்று இரவு பூரணச் சந்திரனில் நான் கண்ட அழகை அதற்கு முன் கண்டதில்லை. நாதச்வரத்தின் இனிய நாதம் அதற்கு முன்னால் என்னை அப்படிப் பரவசப்படுத்தியது கிடையாது. சந்தனத்தின் வாசனையும், மல்லிகைப் பூவின் மணமும் எனக்கு அவ்வளவு இன்பத்தை அதற்கு முன் எப்போதும் அளித்ததில்லை."

"என் உள்ளத்தில் என்றைக்கும் தோன்றாத ஆசைகள் எல்லாம் தோன்றின. 'எல்லாப் பெண்களையும் போல் நானும் ஏன் தலையை வாரிக்கொண்டு பூ வைத்துக் கொள்ளக் கூடாது? ஏன் குங்குமம் இட்டுக் கொள்ளக் கூடாது? ஏன் சந்தனம் பூசிக்கொள்ளக் கூடாது?' என்றெல்லாம் எண்ணம் உண்டாயிற்று.

"கலியாணம் மூன்றாம் நாளன்று மத்தியானம் நான் அம்புஜத்தை அழைத்துக் கொண்டு சம்பந்திகளின் ஜாகைக்குப் போனேன். அம்புஜத்துக்கு அவளுடைய நாத்தனார் தலைவாரிப் பின்னிக் கொண்டிருந்தாள். அவளுக்கு என்னென்ன நகை இப்போதிருக்கிறது, இன்னும் என்னென்ன நகை பண்ணிப் போடப் போகிறார்கள் என்பது போன்ற அருமையான விஷயங்களைப் பற்றி அம்புஜத்தை அவளுடைய நாத்தனார் கேட்டுக் கொண்டிருந்தாள். எனக்கு ஞாபகம் அந்தப் பேச்சில் இல்லை. காமரா உள்ளில் யாரோ பேசிக் கொண்டிருந்தது இங்கொரு வார்த்தையும் அங்கொரு வார்த்தையுமாக என் காதில் விழுந்தது. இவருடைய குரல் போலத் தோன்றவே, கவனமாய்க் கேட்கத் தொடங்கினேன். அந்தக் குரலில் தான் என்ன இனிமை! என்ன உருக்கம்! பால்யத்தில் கைம்பெண் ஆகிறவர்களின் கதியைப் பற்றித்தான் அவர் பேசிக் கொண்டிருந்தார். அதன் கொடுமையைப் பற்றிச் சொல்லியிருக்கும் யாராரோ மகான்களுடைய வாக்கியங்களையெல்லாம் எடுத்துக் காட்டினார். பல புத்தகங்களின் பெயர்களையும் குறிப்பிட்டார். அவற்றில், 'மாதவய்யா எழுதியிருக்கும் முத்துமீனாட்சி கதையை வாசியுங்கள்' என்று அவன் சொன்னது மட்டும் இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது. 'சரிதானப்பா, பிரமாதமாகப் பேசுகிறாயே? அப்படியானால் நீதான் அன்னபூரணியைக் கலியாணம் செய்து கொள்ளேன்' என்று ஒருவன் சொன்னான். அதற்கு இவர், 'சீச்சீ! சுத்த முட்டாள்கள் நீங்கள்! உங்களுடன் பேசுவதைக் காட்டிலும் குட்டிச் சுவரோடு பேசலாம்' என்று பதில் சொன்னார். உடனே அந்த அறையினின்றும் ஒருவர் எழுந்து போனதுபோல் சப்தம் கேட்டது. அது இவராய்த்தான் இருக்கவேண்டும்.

"அந்த இரண்டு மூன்று நாளைக்குள் அவரைப் பற்றிய விவரங்கள் எல்லாம் சம்பந்திகளின் பேச்சிலிருந்து தெரிந்து கொண்டிருந்தேன். அந்த வருஷம் அவர் சென்னை இராஜதானியிலேயே பி.ஏ. பரீட்சையில் முதலாவதாகத் தேறியிருந்தாராம். ஐயாயிரம் ரூபாய் வரதட்சணையுடன் அவருக்கு வரன்கள் பல வந்து கொண்டிருந்ததாகவும் பேசிக் கொண்டார்கள். அப்படிப்பட்டவருடைய அன்புக்கா நான் பத்திரமானேன். என்னுடைய பாக்கியத்தை என்னால் நம்ப முடியவில்லை.

3

"நாலாம் நாள் கலியாணத்தன்று காலையில் சம்பந்தி அம்மாளுக்கு உடம்பு சரியில்லையென்று தகவல் வந்தது. நான் பார்த்துவிட்டு வருகிறேனென்று சொல்லி, சம்பந்தி ஜாகைக்குப் போனேன். அங்கே ஒருவேளை இவர் இருப்பாரோ என்று எண்ணமிட்டுக் கொண்டே சென்றேன். வாசற்படி தாண்டியதும் ரேழி ஹாலில் தனிமையாக உலாவிக் கொண்டிருந்த இவர், என்னைப் பார்த்ததும், 'யார் வேண்டும்?' என்று கேட்டுக் கொண்டே வந்தார். நான் பதில் சொல்லத் தெரியாமல் திகைத்து நிற்கையிலேயே சட்டென்று என் கையில் ஒரு கடிதத்தை வைத்து அது வெளியில் தெரியாதபடி என் விரல்களால் மூடினார். உடனே திரும்பிச் சென்றார்.

"புயற் காற்றிலே இலைகள் ஆடுவது போல் என் உடம்பு நடுங்கிற்று. ஆனாலும் நான் மிகுந்த மனோதிடத்துடன் அந்தக் கடிதத்தை என் இருதயத்தின் அருகில் பத்திரமாய் வைத்துக் கொண்டேன். பிறகு உள்ளே போனேன். சம்பந்தியம்மாளுடன் பேசும்போதெல்லாம் என் புத்தி என் வசம் இல்லை. அந்த அம்மாள் என்னை உற்றுப் பார்த்துவிட்டு, 'எனக்கு என்ன உடம்பு என்று கேட்கிறாயேடி? உனக்கு என்னடியம்மா உடம்பு? கண்ணும் முகமும் நன்றாயில்லையே?' என்று கேட்டாள். 'ஆமாம்; எனக்குக்கூடத் திடீரென்று தலையை வலிக்கிறது' என்று சொல்லிவிட்டு வீடு திரும்பினேன். உடனே உள் அறை ஒன்றில் பாயை விரித்துப் படுத்துக் கொண்டேன். கேட்பவர்களுக்கு உடம்பு சரியில்லை யென்று சொல்லிவிட்டு, விம்மி, விம்மி அழுது கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு அவரை - என் உள்ளத்தைக் கவர்ந்த தெய்வத்தை - நான் பார்க்கவேயில்லை..."

"ஐயோ! ஏன் அம்மா அப்படி? அந்தக் கடிதத்தில் என்னதான் எழுதியிருந்தது?"

"கடிதத்திலா? என்னிடத்தில் அவருக்கிருந்த ஆசை அவ்வளவையும் அதில் கொட்டியிருந்தார். எனக்காக எந்தவிதத் தியாகமும் செய்யத் தயாராயிருப்பதாயும், உலகம் முழுவதையும் எதிர்த்து நிற்கத் துணிந்திருப்பதாயும், எழுதியிருந்தார். ஆனால் என்னை வற்புறுத்தவோ கட்டாயப்படுத்தவோ விரும்பவில்லையென்றும், அவரிடம் எனக்கும் அன்பிருந்து, சமூகத்தின் ஏளனத்துக்கெல்லாம் துணிவதற்குத் தைரியமிருந்தால், அன்று சாயங்காலம் நலங்கின் போதாவது ஊர்வலத்தின் போதாவது நான் கையில் ஒரு மல்லிகைப் பூவை வைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்றும், அந்த அடையாளத்தைக் கண்டதும் தாம் வேண்டிய ஏற்பாடு செய்வதாகவும் எழுதியிருந்தார்..."

"அப்படியானால் நீங்கள் ஏன் அழுது கொண்டிருந்தீர்கள், அம்மா? அவர் சொன்னபடி செய்தீர்கள் அல்லவா?"

"பாவி, நான் அப்படிச் செய்யவில்லை. போதாததற்கு, உள்ளே போய்ப் படுத்து அழுது கொண்டிருக்கவே, தம் பேரில் எனக்கு இஷ்டமில்லையென்றும், என்னுடைய மனத்தைத் தாம் புண்படுத்தி விட்டதாகவும் அவர் எண்ணியிருக்க வேண்டும். இவ்வாறு, என் வாழ்க்கையின் நாலு நாள் இன்பக் கனவு முடிவு பெற்றது..."

"ஆமாம், அம்மா! ஆனால் நீங்கள் ஏன் அவர் சொன்னபடி செய்யவில்லை? எனக்குப் புரியவில்லையே?"

"அந்தக் காரணத்தை இப்போது சொல்லவும் எனக்கு வெட்கமாயிருக்கிறது, சாவித்ரி! அவருடைய கடிதத்தை அன்றைய தினம் நான் படிக்கவில்லை. ஒரு வருஷத்திற்குப் பிற்பாடுதான் அதை நான் படித்தேன். அப்படிப் படிப்பதற்குள் எத்தனையோ நாள் அதைக் கையில் வைத்துக் கொண்டு கண்ணீர் சிந்தினேன். கடைசியில், அதை நான் படித்தபோது அதில் பாதிக்கு மேல் கண்ணீரால் மறைந்து போயிருந்தது.

"அம்மா, என்ன சொல்கிறீர்கள்? தங்களுக்கு அப்போது..."

"ஆமாம், சாவித்ரி. அவர் கடிதத்தைப் பெற்ற அன்று எனக்கு ஏற்பட்ட அவமானமும் மனவேதனையுந்தான் என்னை மேலும் மேலும் படிக்கும்படி தூண்டி, பி.ஏ., எல்.டி., பட்டமும் அளித்து, பெண் குலத்துக்கு நான் செய்யும் இவ்வளவு தொண்டுக்கும் காரணமாயிற்று. அவர் என் கரத்தைத் தொட்டுக் கடிதத்தைக் கொடுத்த அந்நாள், எனக்குப் படிக்கத் தெரிந்திருக்கவில்லை!"

சாவித்திரியின் கண்களிலிருந்து கலகலவென்று உதிர்ந்த கண்ணீர்த் துளிகள் வெண்ணிலவின் ஒளியில் முத்துக்கள் போல் பிரகாசித்தன.

அந்த நாதஸ்வரக்காரன் கேதாரகௌள ராகந்தான் வாசிக்கிறானா? அல்லது உலக மகா காவியங்களிலுள்ள சோக ரஸத்தையெல்லாம் பிழிந்து நாதஸ்வரக் குழாய் வழியாகப் பொழிகின்றானா?
---------------

47. வைர மோதிரம் [காணாமற் போகாதது]

1

ராஜாராமன், பி.ஏ. (ஆனர்ஸ்) கடற்கரைச் சாலை ஓரமாய் நடந்து கொண்டிருந்தான். மாலை சுமார் நாலு மணியிருக்கும். ஹைக்கோர்ட்டிலிருந்து திரும்பும் மயிலாப்பூர் வக்கீல்களின் வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாய்ச் சரசரவென்று போய்க் கொண்டிருந்தன. அந்த வண்டியில் அமர்ந்திருந்த கனதனவான்களுக்கு மட்டும், அப்போது ராஜாராமனுடைய மன நிலைமை தெரிந்திருந்தால், அப்படி அலட்சியமாய் போயிருப்பார்களா? அன்றிரவு அவர்களால் கவலையின்றித் தூங்கியிருக்க முடியுமா?

சுருங்கச் சொன்னால், அப்போது ராஜாராமனுடைய உள்ளம் ஒரு லட்சம் செங்கல்லை வேகவைக்கக்கூடிய காளவாயைப் போல் எரிந்து கொண்டிருந்தது. அந்தத் தீயினால் அவன் அந்தக் கடற்கரைச் சாலையிலிருந்த கட்டிடங்களையெல்லாம் சுட்டெரித்துவிட விரும்பினான். முக்கியமாக, அந்த ஸெனட் மண்டபம், பிரஸிடென்சி கலாசாலை, புதிதாய்க் கட்டியிருக்கும் பரீட்சை மண்டபம் இவை அவன் கண்களை உறுத்தின. எதற்காக இந்தக் கட்டிடங்கள்? எதற்காக இவற்றில் ஒருவன் படிப்பதும் பரீட்சை தேறுவதும்? பி.ஏ. (ஆனர்ஸ்) பரீட்சையில் முதல் தரத்தில் தேறிய தன்னுடைய கதி இப்போது எவ்விதம் இருக்கிறது?

'பட்டினியினால் இறந்தான்' என்று கதைகளிலாவது, பத்திரிகைச் செய்திகளிலாவது படித்தபோதெல்லாம் ராஜாராமன் ஆச்சரியப்படுவான். 'யாராவது பட்டினியினால் சாவார்களா? என்னதான் தரித்திரமானாலும், வயிற்றுக்குச் சோறு கிடைக்காமலா போய்விடும்? சுத்தப் பொய்யும் புளுகும்' என்று நினைப்பான்.

இப்போது அவனுக்கே அந்த கதி நேர இருந்தது. இராத்திரி சாப்பாட்டுக்கு வழியில்லை! தனக்கு மட்டுமல்ல; தன் தம்பி ரகுவுக்கும் அதே கதிதான்.

ஆம்; தான் மட்டுமாயிருந்தால் கூடப் பாதகமில்லை. சமுத்திரத்தில் விழுந்து உயிரை விட்டாலும் விடலாம்; அல்லது போலீஸ்காரன் மேல் கல்லை விட்டெறிந்து சிறைக்குப் போகலாம். ஆனால் ரகுவை என்ன செய்வது? தனக்கு ஏதாவது நேர்ந்தால் அந்தக் குழந்தையினுடைய கதி என்னவாகும்?

ரகு சாயங்காலம் வழக்கம்போல விளையாடிவிட்டு ஆறரை மணிக்குத் திரும்பி வருவான். வரும்போதே, "அண்ணா! பிஸ்கோத்து வாங்கி வந்திருக்கிறாயா?" என்று கேட்டுக் கொண்டு வருவான். அறையிலே தன்னைக் காணாவிடில் அவன் என்ன செய்வான்? தவித்துப் போக மாட்டானா?... சரிதான்; ஆனால் தான் அறையில் உயிரோடு இருந்துதான் என்ன பிரயோஜனம்? குழந்தைக்குப் பிஸ்கோத்து வாங்கிக் கொண்டு போகக் கையில் காசு எங்கே இருக்கிறது?

இரண்டு வருஷத்திற்கு முன்னால் ராஜாராமனுடைய தாயார் - கிராமத்திலிருந்தவள் - திடீரென்று இறந்து போனதாகத் தந்தி வந்து அவன் உடனே புறப்பட்டுச் சென்றான். அதற்கு முன்னாலேயே அந்த அம்மாள் விற்கக் கூடிய நகை, நட்டு எல்லாவற்றையும் விற்றுவிட்டிருந்தாள். அவ்வளவையும் ராஜாராமனுடைய படிப்பும், பட்டணவாசமும் விழுங்கி விட்டன. தாயாருடைய மரணத்தினால் அந்த வருஷம் அவனுடைய படிப்பு தடைபட்டது. சில மாதம் ஊரில் இருந்து, பாக்கி இருந்த வீட்டையும் நிலத்தையும் மிகவும் பிரயாசையின் பேரில் கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு, ரகுவையும் அழைத்துக் கொண்டு சென்னைப் பட்டணம் வந்து சேர்ந்தான்.

அந்த வருஷம் நன்றாய்ப் பரீட்சையிலும் தேறினான். அதற்குள் கையில் கொண்டு வந்திருந்த பணமெல்லாம் கரைந்துவிட்டது. சாமான்களை ஒவ்வொன்றாக விற்க ஆரம்பித்தான். கடைசியாக மிஞ்சியிருந்த கைக்கடிகாரத்தையும் விற்றாய்விட்டது.

இந்த மூன்று மாதமாக அவன் உத்தியோகந் தேடி அலையாத இடம் சென்னையில் கிடையாது; அவன் ஏறி இறங்காத ஆபீஸ் கிடையாது.

அன்று மாலை கடற்கரைச் சாலை ஓரத்தில் அவன் ஏன் அவ்வளவு உள்ளக் கொதிப்புடன் நடந்து கொண்டிருந்தான் என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா?

2

"ஹலோ! ராஜாராம்!" என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். ஒரு பெரிய மோட்டார் வண்டி அவன் பின்னால் நின்றது. அதில் ஒரு பெரிய மனிதர் உட்கார்ந்திருந்தார்.

"நமஸ்காரம்" என்றான் ராஜாராமன்.

"ஏதாவது வேலையாய்ப் போகிறாயா?" என்று அப்பெரிய மனிதர் கேட்டார்.

"வேலையா? வேலையிருந்தால் தான் எவ்வளவோ தேவலையே?"

"அப்படியென்றால் என்னுடன் வா! உட்கார்!"

ராஜாராமன் வண்டியில் ஏறி அவர் அருகில் உட்கார்ந்தான். வண்டி கிளம்பியது.

அந்தப் பெரிய மனிதர் ஒரு மாஜி திவான். ஒரு தடவை, ராஜாராமன் கலாசாலைத் தமிழ்ச் சங்கத்தின் காரியதரிசியாயிருந்தபோது, அவரை ஓர் உபந்நியாசத்துக்காக அழைத்திருந்தான். அச்சமயம் அந்த மாஜி திவானின் சில முக்கிய குணாதிசயங்களைப் பற்றி அவன் வெகுவாகப் புகழ்ந்து பேசினான். அவரிடம் அந்தக் குணங்கள் உண்டென்பதை அதற்கு முன் யாரும் கண்டு பிடிக்கவில்லை. உண்மையில், அவருக்கே கூட அது புதுமையாய்த்தான் இருந்தது. இன்னும் புகுந்து பார்த்தோமானால், அந்தப் புகழுரை ராஜாராமனுடைய சொந்த சரக்குமன்று. ஓர் ஆங்கில நூலாசிரியர் "கனவான் யார்?" என்ற தலைப்புடன் எழுதியிருந்த கட்டுரையை அதற்கு முதல் நாள் அவன் படித்திருந்தான். அதில் குறிப்பிட்டிருந்த குணாதிசயங்களையெல்லாம் மாஜி திவான்மேல் அவன் ஏற்றிப் பேசினான்.

அது எப்படியானாலும், அன்றைய தினம் மாஜி திவான், ஜாம்பவந்தனால் புகழப்பட்ட அனுமாருடைய நிலையை அடைந்தார். அவருடைய இருதயம் குதூகலத்தினால் விரிந்தது. மேலும் ராஜாராமனிடம் அவருக்கு ஓர் அபிமானம் விழுந்து விட்டது.

இப்போது ராஜாராமன் தம் பக்கத்தில் உட்கார்ந்ததும் அவன் முதுகில் ஒரு பெரிய 'ஷொட்டு'க் கொடுத்துவிட்டு, "என்ன செய்து கொண்டிருக்கிறாய் இப்போது?" என்று கேட்டார். தன் கஷ்டங்களுக்கு ஒரு வேளை முடிவு வந்துவிட்டதோவென்று ராஜாராமனுக்குத் தோன்றியது. பி.ஏ. (ஆனர்ஸ்) பாஸ் செய்து விட்டு மூன்று மாதமாய் வேலைக்கு அலைந்து கொண்டிருப்பதைப் பற்றிச் சாங்கோபாங்கமாய் எடுத்துச் சொன்னான்.

அதைக் கேட்டதும் மாஜி திவான் தமது பிரசங்கத்தை ஆரம்பித்தார்: "நமது தற்கால நாகரிகம் அவ்வளவு இலட்சணத்தில் இருக்கிறது. வேலையில்லாதவர்கள் 'வேலை, வேலை' என்று அலைகிறார்கள். வேலை இருப்பவர்களோ எப்படி வேலை செய்யாமல் தப்பித்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறார்கள். நம் பெரியோர்கள் எவ்வளவு நல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள் என்று இப்போது தெரிகிறதா? வர்ணாசிரமத்தை இகழ்கிறீர்களே. பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்று பிரித்து, அந்தந்தச் சாதிக்கு அந்தந்த வேலையென்று ஏற்படுத்தினார்களே அவர்கள் எவ்வளவு புத்திசாலிகள்!... தற்கால நாகரிகத்தைப் போய் நீங்கள் ஒசத்தியாய்ச் சொல்கிறீர்கள்!..."

"நான் சொல்லவில்லையே..." என்று ஆரம்பித்தான் ராஜாராமன்.

"நீ என்றால் நீயா? நீ சொல்லாவிட்டால், உன்னைப் போன்றவர்கள் சொல்கிறார்கள். என் பிள்ளையாண்டான் ஆக்ஸ்போர்டில் படிக்கிறான். அவன் என்ன எழுதுகிறான் தெரியுமா? ஜவாஹர்லால் நேருவின் சரித்திரத்தைப் படித்தானாம். அவர் சொல்கிறதுதான் சரியாயிருக்காம். இந்தியாவுக்கு 'ஸோஷலிஸ'ந்தான் வேண்டுமாம். சுத்த முட்டாள்கள்! இவர்களுக்கெல்லாம் என்ன தெரியும்? இந்தியாவுக்கு வேண்டியது என்னவென்பதை எத்தனையோ ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால் நம் ரிஷிகள் எழுதி வைத்துவிட்டார்கள். தைத்திரீய உபநிஷத் என்ன சொல்கிறது. 'அன்னாத் பிராணா: பிராணபான:..."

உபநிஷத் பிரசங்கம் முடிவதற்குள் வண்டி லாயிட்ஸ் ரோட்டிலிருந்த ஒரு பெரிய பங்களாவின் கேட்டில் புகுந்து நின்றது. அப்போது ராஜாராமன் அவனைப் புளகாங்கிதமாகச் செய்த ஒரு காட்சியைக் கண்டான்; தன்னையும், தன் வேலையில்லாத் திண்டாட்டத்தையும், மாஜி திவானிடம் உத்தியோகம் கேட்க வேண்டுமென்ற நினைவையும் மறந்தான். வண்டியிலிருந்து இறங்குவதற்குக் கூட மறந்து போனான். அப்படி அவனை மெய் மறக்கச் செய்தவை. ஒரு பெண்மணியின் முகத்திலிருந்த இரண்டு கண்கள் தான்.

என்று ஆழ்வார் பகவானைப் பற்றிப் பாடியவாறு போல, தன்னைப் பேதைமை செய்த அந்தக் கண்களையும் அவற்றைப் படைத்த பெண்ணையும் இனித் தன் வாழ்நாளில் பார்க்கப் போகிறோமென்ற எண்ணமே அவனுக்கிருக்கவில்லை. அப்படியிருக்க, இங்கே, சற்றும் எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நேரத்தில் அவளைப் பார்த்ததும் அவன் மெய்மறந்ததில் வியப்பென்ன?

"இறங்கு! ஒரு சின்ன டீ பார்ட்டி கொடுக்கப் போகிறேன். நீயும் இருந்துவிட்டுப் போகலாம். பாதகமில்லை, இறங்கு! வருகிறவர்கள் எல்லாரும் ரொம்ப வேண்டுமென்கிறவர்கள் தான்" என்று மாஜி திவான் வற்புறுத்திச் சொன்ன பிறகு, ராஜாராமன் கொஞ்சம் சுய ஞாபகம் வந்து வண்டியிலிருந்து இறங்கினான்.

3

போலீஸ் டிபுடி கமிஷனர் மிஸ்டர் கபாலி அவர்களுக்குச் சமீபத்தில் 'ராவ் சாகிப்' பட்டம் அளிக்கப் பெற்றதை முன்னிட்டு நம் மாஜி திவான் அந்தச் சிற்றுண்டி விருந்தை ஏற்பாடு செய்திருந்தார். ரொம்பவும் பொறுக்கி எடுத்த அத்தியந்த சிநேகிதர்கள் மட்டுந்தான் அந்த விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.

அவர்களின் அண்ணனும் தங்கையுமாகிய ஓர் இளைஞனும் யுவதியும் இருந்தனர். அவர்கள் முக்கிய விருந்தினராகிய ராவ்சாகிப் கபாலியின் மருமகனும் மருமகளும். அவர்கள் பெயர்: பாலகோபால், வத்ஸலை. அவர்களுக்கு ராஜாராமனை மாஜி திவான் அறிமுகம் செய்து வைத்தார்.

"உங்களை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன் போல் இருக்கிறதே? ஸெயிண்ட் ஜான் காலேஜில் படித்தீர்களா?" என்று பாலகோபால் கேட்டான்.

"ஆமாம்; கொஞ்ச நாள் தான் படித்தேன். நீங்களும் உங்கள் சகோதரியும் தினம் காரில் வருவீர்கள். உங்களை மட்டும், இறக்கிவிட்டு வண்டி உங்கள் சகோதரியுடன் போய் விடும் இல்லையா?"

அதற்குள் வத்ஸலை, "நீங்கள் காலேஜ் மாடி வராண்டாவில் மூன்றாவது தூணில் சாய்ந்து கொண்டு நிற்பீர்கள், இல்லையா?" என்றான்.

ராஜாராமனுக்கு ரோமம் சிலிர்த்தது. இவள் தன்னைக் கவனித்திருப்பது மட்டுமல்ல; நன்றாய் ஞாபகம் வைத்துக் கொண்டும் இருக்கிறாள்! பழைய நினைவுகள் எல்லாம் அவன் உள்ளத்தில் குமுறிக் கொண்டு வந்தன.

சென்ற வருஷத்துக்கு முந்திய வருஷம் கலாசாலை திறந்து சில நாளைக்கெல்லாம் ஒரு நாள் சற்று முன்னதாகவே ராஜாராமன் கலாசாலைக்குச் சென்றுவிட்டான். எனவே, மணி அடிக்கும் வரையில் மாடித் தாழ்வாரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது ஒரு மோட்டார் வண்டி வந்து கலாசாலை வாசலில் நின்றது. அதில் ஒரு யுவனும் யுவதியும் இருந்தார்கள். முக ஒற்றுமையிலிருந்து அவர்கள் அண்ணனும் தங்கையுமாய்த்தான் இருக்க வேண்டுமென்று தெரிந்தது. இளைஞன் வண்டியிலிருந்து இறங்கினான்; வண்டி அந்த யுவதியுடன் போய்விட்டது. அவள் பெண்கள் கலாசாலைக்குப் போகிறாள் போலும்!

வண்டி போன பிறகும், அந்தப் பெண்ணின் கண்கள் மட்டும் ராஜாராமனின் எதிரில் தோன்றிக் கொண்டிருந்தன. அம்மா! அந்தக் கண்கள் தான் எவ்வளவு விசாலமானவை! 'கடலினும் பெரிய கண்கள்' என்று கவி வர்ணித்திருப்பது இப்படிப்பட்ட கண்களைப் பற்றித் தான் இருக்க வேண்டும்!

அடுத்த நாளும் ராஜாராமன் சற்று முன்னதாகவே கலாசாலைக்குச் சென்றான். அதே இடத்தில் நின்றான். வண்டியும் அதே நேரத்துக்கு வந்தது. இளைஞன் வண்டியிலிருந்து இறங்கியதும் என்னவோ சொன்னான். ஏதோ வேடிக்கையாக அவன் சொல்லியிருக்க வேண்டும். அதைக் கேட்டு, அந்தப் பெண் புன்னகை புரிந்தாள்; பளீரென்று ஒரு மின்னல் மின்னுவது போல் இருந்தது.

பரந்த விழிகளுடன் கூடிய அந்தப் புன்னகை பூத்த முகம் ராஜாராமனுடைய உள்ளத்தில் பதிந்தது. "இவள் ஒரு 'ஸினிமா ஸ்டார்' ஆக வேண்டும்; அப்படி ஆனால் மேனாட்டின் பிரசித்த நடிகைகளையெல்லாம் தோற்கடித்து உலகத்தையே விலைக்கு வாங்கிவிடுவாள்" என்று அவன் முதலில் நினைத்தான். 'சீ? இவ்வளவு சௌந்தரியமும் அப்படியா வீணாய்ப் போக வேண்டும்? இவள் மட்டும் தேச சேவையில் ஈடுபட்டால், எவ்வளவு நல்ல வேலை செய்யலாம்? இவளுடைய தலைமையின் கீழ் யார் என்ன தியாகந்தான் செய்யப் பின் வாங்குவார்கள்?' என்று கருதினான். பிறகு, 'இதெல்லாம் நம் தேசத்தில் நினைத்து என்ன பிரயோஜனம்? எந்த அசடு இவளைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறதோ? அல்லது ஒரு வேளை முன்னமே ஆகிவிட்டதோ என்னவோ? கலியாணம் ஆகிவிட்டால் பிறகு எல்லாரையும் போல் ஜனத்தொகையை அபிவிருத்தி செய்து கொண்டு, வாழ்க்கையைத் தள்ளவேண்டியதுதானே?' என்றெல்லாம் எண்ணமிட்டான்.

ராஜாராமன் மறுநாளும் அதே நேரத்தில் அதே இடத்தில் நின்றான். அன்று வண்டி அங்கே நின்றுவிட்டுக் கிளம்பிச் சென்றபோது, அந்தப் பெரிய கண்கள் ஒரு தடவை சுழன்று அவன் மேல் ஒரு வீச்சு வீசி, அவனைத் திகைக்கச் செய்து விட்டு, மறுவினாடி மறைந்தன.

பிறகு, இதே மாதிரி அநேக நாட்கள் நடந்தது. அந்தக் கண்கள் என்னதான் சொல்கின்றன? அந்தப் பார்வையின் அர்த்தந்தான் என்ன? பரிகாசமா? கோபமா? மமதையா? அல்லது...

மூன்று மாத காலம் ராஜராமன் ஒரு சொப்பன உலகத்தில் வாழ்ந்து வந்தான். திடீரென்று ஒரு நாள் அம்மா இறந்த செய்தி வர, ஊருக்குப் புறப்பட்டுச் சென்றான். அடுத்த வருஷம் அவன் மறுபடி அதே கலாசாலையில் வந்து சேர்ந்தபோது, அந்தப் பச்சை வர்ண மோட்டார் வண்டி இந்த வருஷம் அங்கு வருவதில்லையென்று தெரிந்தது.

4

நமது மாஜி திவானுடைய வாழ்க்கையில் பழைய நாகரிகமும் புது நாகரிகமும் அழகாகக் கலந்திருந்தன.

இந்தச் சிற்றுண்டி விருந்துக்கு மேஜைகள், விரிப்புகள், கிண்ணங்கள், கோப்பைகள் சகிதமாக மேனாட்டு முறையில் தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் புருஷர்களுக்குத் தனி மேஜையும் ஸ்திரீகளுக்குத் தனி மேஜையும் போடப்பட்டிருந்தன.

விருந்துக்கு வந்திருந்தவர்களுடைய பிரபாவங்களை இப்போது கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்ரீமான் கங்கோத்ரி அய்யர் ஒரு வக்கீல், அவருடைய காலத்திலே அநேகம் கட்சிக்காரர்களைத் தலை மொட்டையடித்தவர். இப்போது அவருடைய முக்கியமான வேலை என்னவென்றால், உலகத்திலுள்ள பெரிய மனிதர்களுக்கெல்லாம் கடிதம் எழுதுவதுதான். அவரவர்களுக்கு எந்தெந்த விஷயத்தில் பிரமை உண்டென்று அவர் தெரிந்து கொண்டு அதைப் பற்றி எழுதுவார். மகாத்மாவுக்கு ஹரிஜன சேவையைப் பற்றியும், கிராம நிர்மாணத்தைப் பற்றியும் அவர் அநேக கடிதங்கள் எழுதியிருக்கிறார். மகாத்மாவிடமிருந்து அவருக்கு ஒரு தடவை பதில் வந்தது. "தங்களுடைய கடிதங்கள் மிகவும் ருசிகரமான விஷயங்களை உட்கொண்டவை என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதை நான் நம்புகிறேன். ஆனால், நான் புலன்களை அடக்கும் விரதம் கொண்டிருக்கிறேனாதலால் அவற்றை அனுபவிக்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லை" என்று மகாத்மா எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தை நமது வக்கீல் கண்ணாடி போட்டு மாட்டியிருக்கிறார். அதே மாதிரி, பெர்னாட்ஷாவிடமிருந்து, "தங்கள் கடிதத்தைப் படித்தேன்; இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்" என்று வந்த கடிதத்தையும், ரொமேன் ரோலண்டிடமிருந்து, "தங்கள் முப்பது பக்கங்கொண்ட கடிதம் கிடைத்தது; தங்கள் பாஷை எனக்குப் புரியாததற்காக மிகவும் சந்தோஷப்படுகிறேன்" என்று வந்த கடிதத்தையும் கண்ணாடி போட்டுச் சுவரில் மாட்டியிருக்கிறார்.

அவர் அப்படிக் கண்ணாடி போட்டு மாட்டியிருக்கும் கடிதங்களில் நடுநாயகமாக விளங்குவது சென்னை மாஜி கவர்னர் ஒருவருடைய கடிதந்தான். சீமைக்குப் போய் விட்ட அந்த மாஜி கவர்னருக்கு ஸ்ரீமான் கங்கோத்ரி அய்யர் எத்தனையோ கடிதங்கள் எழுதினார்; ஒன்றுக்கும் பதில் வரவில்லை. கடைசியாக, கடவுள் அருளால் அவருடைய மனோரதம் நிறைவேறும் காலம் வந்தது. ஐயருடைய அருமை மனைவி காலஞ்சென்றாள். அவள் கைலாசப் பிராப்தி அடைந்த வரலாற்றை மிகவும் உருக்கமாக ஒரு கடிதத்தில் எழுதி, "தங்களிடமிருந்து ஓர் ஆறுதல் மொழி வந்தால் தான் உயிர் தரிப்பேன்" என்று முடித்திருந்தார். இம்மாதிரி விஷயங்களில் வெள்ளைக்காரர்கள் சம்பிரதாயத்தைக் கண்டிப்பாக அநுசரிப்பவர்கள். உடனே மாஜி கவர்னரிடமிருந்து பதில் வந்தது. "தங்கள் மனைவி தங்களைவிட்டுச் சென்று கைலாசத்தை அடைந்த விஷயம் தெரிந்து மிகவும் வருத்தப்படுகிறேன். அவளுக்கு நல்ல புத்தி ஏற்பட்டுத் திரும்பி வந்தால், மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று அந்தக் கடிதம் சொல்லிற்று. அதன் பொருள் என்னவென்று ஸ்ரீமான் கங்கோத்ரி அய்யருக்கு இன்றுவரை நன்கு விளங்கவில்லையென்றாலும், கடிதம் என்னவோ கண்ணாடி போடப்பட்டு தொங்குகிறது.

விருந்தினரில் இன்னொருவர் ஒரு பத்திரிகாசிரியர், அவருடைய பெயர் ராவ் பகதூர் அச்சுதராயர், முப்பத்திரண்டு வருஷமாக நடந்து வரும் அவருடைய பத்திரிகையின் பெயர் 'குடும்பநேசன்'. அவருடைய குடும்பத்துக்கு அந்தப் பத்திரிகை நேசனாயிருப்பதில் சந்தேகமேயில்லை. அந்தப் பத்திரிகையை யார் படிக்கிறார்கள் என்பது மட்டும் ஒரு பரம ரகசியம்; மொத்தத்தில் அந்தப் பத்திரிகையில் எத்தனை விளம்பரங்கள் வருகின்றனவோ, அவ்வளவு பிரதிகளும் அதற்குமேல் பத்துப் பிரதிகளும் அச்சிடப்படுவதாக வதந்தி. ஒரு தடவை, 'குடும்பநேச'னில் விளம்பரம் கொடுப்பது பற்றி நகர சபையில் விவாதம் வந்த போது, 'குடும்பநேச'னில் விளம்பரம் செய்வதை விட நாமே தலைக்கு ஒரு பிரதி கையால் எழுதி விநியோகம் செய்துவிட்டு, விளம்பரப் பணத்தைப் பங்கு போட்டுக் கொள்ளலாமே!" என்று ஓர் அங்கத்தினர் யோசனை சொன்னாராம். ஆனாலும் மேற்படி பத்திரிகையும் ஒரு முக்கியமான பொதுஜன சேவை செய்துதான் வருகிறது. மற்றப் பத்திரிகைகளில் வராத நமது மாஜி திவான் போன்றவர்களின் உருவப் படங்களும், அவர்களுடைய உயர் குணாதிசயங்களும் 'குடும்பநேச'னில் அடிக்கடி வெளியாவதுண்டு.

இன்னொருவர் ஒரு பெரிய ரயில்வே உத்தியோகஸ்தர். மாதம் இரண்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறவர். அந்த அந்தஸ்த்துக்குத் தகுந்தபடி தலையில் வழுக்கை விழுந்தவர். அவருக்குச் சங்கீதத்தில் ரொம்ப பிரமை. மாதம் ரூ.100 ஒரு வித்வானுக்குக் கொடுத்து அவரிடம் மூன்று வருஷம் சங்கீதம் கற்றுக் கொண்டார். முடிவில் அந்த வித்வான், "உமது மூளையில் சங்கீதம் ஏறாது" என்று ஸர்ட்டிபிகேட் கொடுக்கவே, இவர் கோபங்கொண்டு "சங்கீத வித்தையையே சீர்திருத்துகிறேன்" என்று ஆரம்பித்துவிட்டார்! அவர் இதுவரையில் புதிதாக ஒன்பதரை ராகங்களும், பதிமூன்றேகால் தாளங்களும், 356 ஸ்வரங்களும் கண்டுபிடித்திருக்கிறார். இவற்றைக் கேட்டு ஆனந்திப்பவர்களில் நம் மாஜி திவான் ஒருவராதலால், அவரிடம் ஸ்ரீமான் சி.ஆர்.சந்தர் அவர்களுக்கு அதிக மதிப்புண்டு.

அடுத்தவர் ஒரு மாஜி ஸப் ஜட்ஜ். அவர், "இந்தியாவுக்கு வேண்டியதென்ன?" என்னும் பெயர் கொண்ட பிரசித்தி பெற்ற புத்தகத்தின் ஆசிரியர். அந் நூலில், கிராப்புத் தலை மோகத்தைக் கண்டித்துக் குடுமியின் அவசியத்தை வலியுறுத்தும் அத்தியாயம் மட்டும் 28 பக்கங்கள் அடங்கியது. இந்த அருமையான புத்தகத்தை அவர் இங்கிலாந்தின் பார்லிமெண்ட் சபை அங்கத்தினர் ஒவ்வொருவருக்கும் அனுப்பி, புத்தகம் பெற்றுக் கொண்டதற்கு அவர்களுடைய அத்தாட்சிக் கையெழுத்துக்களை வாங்கி வைத்திருக்கிறார். இந்த அரிய பெரிய நூலுக்கு முன்னுரை தந்திருக்கிறவர் நம் மாஜி திவான் தான் என்றால், இவர்களுடைய பரஸ்பர நன்மதிப்பைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை.

ஐந்தாவது பிரமுகர் அந்த டிவிஷனின் கார்ப்பரேஷன் கௌன்ஸிலர் என்பதை அவரிடமிருந்து கிளம்பிய கார்ப்பரேஷன் வாசனையே பிரசித்தப்படுத்திக் கொண்டிருந்தது. ஆகையால் நாம் அவரைப்பற்றி ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை.

இந்த ஐந்து பிரமுகர்களோடு மாஜி திவான், ராவ் சாகிப் கபாலி, பாலகோபால், ராஜாராம் இவர்கள் சேர்ந்து மொத்தம் ஒன்பது பேர் புருஷர்களுடைய மேஜையை அலங்கரித்தார்கள். ஸ்திரீகளுடைய மேஜையில் இருந்தவர்களைப் பற்றி நாம் ஏதாவது சொன்னால், மாஜி திவான் கட்டாயம் ஆட்சேபிப்பாராதலால், மேலே கதையைத் தொடர்வோம்.

*****
சிற்றுண்டி விருந்து நடந்து கொண்டிருந்தது. அதே சமயத்தில் மாஜி திவான் விருந்தினரின் செவிக்கும் விருந்து அளித்துக் கொண்டிருந்தார்.

"சோஷலிஸமாம்! இந்த ஜவஹர்லால் நேற்று பையன். இவன் பிறப்பதற்கு மூவாயிரம் வருஷங்களுக்கு முன்னால், மனு எழுதிவிட்டுப் போயிருக்கிறார். மனு எங்கே, இந்தக் காரல் மார்க்ஸ் எங்கே? தற்கால நாகரிகம் நமது பிள்ளையாண்டான்களுடைய கண்களை மறைத்து வருகிறது..."

இடையிடையே பாலகோபால் அவருடைய வாயைக் கிளறி விட்டுக்கொண்டிருந்தான். "தற்கால நாகரிகம் தற்கால நாகரிகம் என்று மண்ணை வாரி இறைக்கிறீர்களே! தற்கால நாகரீகத்தில் எந்த அம்சத்தை நீங்கள் ஆட்சேபிக்கிறீர்கள்? இங்கிலீஷ் படிப்பதில், உத்தியோகம் பார்ப்பதில், பென்ஷன் வாங்குவதில், பட்டம் பெறுவதில், பிள்ளையைச் சீமைப் படிப்புக்கு அனுப்புவதில், மோட்டார் வைத்துக் கொள்வதில் - இது ஒன்றிலும் உங்களுக்கு ஆட்சேபமில்லை; பின் எதைக் குறித்துத்தான் வாயைச் செலவழிக்கிறீர்கள்?"

"கேட்டீர்களல்லவா?..." என்று மாஜி ஸப் ஜட்ஜ் ஆரம்பித்தார்.

மாஜி திவான் அவரைப் பேச விடுவாரா? "நீங்கள் இருங்கள். அவனுக்கு நானே சொல்கிறேன் பதில். பாலகோபால்! நீ கேட்டது சரியான கேள்வி. அந்தக் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது. அந்தக் கேள்விக்கு அடிப்படையான மனப்பான்மை இருக்கிறதே, அதைத்தான் ஆட்சேபிக்கிறேன். உங்களுக்கெல்லாம் நமது புராதன நாகரிகத்தில் நம்பிக்கை போய்விட்டது. அதனால் தான் இந்தக் காலத்துப் பிள்ளைகள் இப்படிப் பேசுகிறீர்கள். ஒருவனுடைய வெளிநடத்தை எப்படியிருந்தாலும், மனப்பான்மை சரியாயிருந்தால் அவனுக்குக் கதி உண்டு. உங்களுக்கு நமது புராதன நாகரிகத்தில் பக்தி சிரத்தை கிடையாது. ஜவஹர்லால் நேருவினிடம் உள்ள தப்பு இது தான்..."

5

மாஜி திவானுடைய பேச்சில் ஒவ்வொரு வார்த்தைதான் ராஜாராமன் காதில் விழுந்தது. காரணம் வாசகர்களே யூகித்துக் கொள்ளலாம். அவனுடைய கவனமெல்லாம் ஸ்திரீகள் மேஜையிலிலேயே இருந்தது. அவர்களில் அதிகமாகப் பேசிய குரல் வத்ஸலையினுடையதுதான் என்பதை அவன் அறிந்தான். இந்த மாஜி திவானுடைய வாய் சற்று ஓயாதா என்று அவனுக்குத் தோன்றிற்று.

இரண்டொரு சமயம் மிகவும் தயக்கத்துடன் அவன் ஸ்திரீகள் இருக்கும் பக்கம் திரும்பிப் பார்த்தான். அதே சமயத்தில் அவளுடைய பரந்த கண்களின் கருவிழிகளும் சுழன்று தன்னை நோக்குவதைக் கண்டபோது அவனுக்கு இந்த உலக ஞாபகமே இல்லாமல் போயிற்று.

என்று கவி பாடியபோது, இத்தகைய ஒரு பெண்ணை நினைத்துதான் பாடியிருக்க வேண்டும்.

இப்படி அவன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில், அவன் தேனினும் இனியதென்று நினைத்த அந்தக் குரலிலே பின்வரும் சொற்கள் அமுதமும் நஞ்சும் தோய்ந்தனவாய் வெளிவந்தன:

"ஆமாம்! மனப்பான்மைதான் சரியாயிருக்க வேண்டும்! காரியம் என்ன பிரமாதம்? இந்த சென்னைப் பட்டணத்தில் இன்றைய தினம் இரவு உணவுக்கு என்ன செய்வோம் என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழைகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். குடிப்பதற்குப் பாலில்லாமல் ஒட்டி உலரும் குழந்தைகள் எத்தனையோ இருக்கின்றன. நாமோ இங்கே ஒவ்வொன்று இரண்டு அணா விலையுள்ள சீமை பிஸ்கோத்துகளில் தலைக்கு நாலைந்து தின்கிறோம். அதனாலென்ன மோசம்? நம்முடைய மனப்பான்மை சரியாயிருக்கிறதல்லவா?"

மாஜி திவான் சொன்னதற்குப் பதிலாக வத்ஸலை மேற்கண்டவாறு கூறினாள். அதற்குள் திவான், "நீ கூட உன் அண்ணனுடன் சேர்ந்து விட்டாயா? ரொம்ப பேஷ்! தேசம் உருப்பட்டால் போலத்தான்" என்று கூறி, மேலே ஏதோ பேசிக் கொண்டு போனார்.

ஆனால், வத்ஸலையின் வார்த்தைகள் ராஜாராமனுடைய மனத்தில் வேறோர் எதிர்பாராத பலனை உண்டாக்கின. 'இராத்திரிச் சாப்பாடு...குழந்தை...பிஸ்கோத்து...' இவ்வார்த்தைகள் செவியில் விழுந்ததும் ராஜாராமன் கனவு உலகத்திலிருந்து விழித்துக் கொண்டான். ரகுவின் நினைவு வந்தது. 'அந்தோ! குழந்தை ராத்திரி என்ன செய்வான்? இங்கே நாம் வயிறு புடைக்கச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். கடவுளே! ஸ்திரீ சௌந்தர்யத்தின் சக்திதான் என்ன? தன்னைத் தவிர வேறு கதியில்லாத அருமைத் தம்பியைக் கூடச் சற்று நேரம் மறக்கச் செய்துவிட்டதே! - ராஜாராமனுடைய உள்ளம் வெட்கத்திலும் வேதனையிலும் ஆழ்ந்தது. "ரகு! நீ வழக்கம்போல் ஆறரை மணிக்கு 'அண்ணா!' என்று கூப்பிட்டுக் கொண்டு வருவாயே? உனக்கு என்ன கொடுப்பேன்? இராத்திரி நீ பட்டினி கிடக்கவா வேண்டும்?" என்று அவனுடைய இருதயம் அலறிற்று. கண்களில் துளித்த கண்ணீர்த் துளிகளை வெகு சிரமப்பட்டுப் பிறருக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டான்.

*****

மாஜி திவான், மேலே பிரசங்கம் செய்து கொண்டு போனார்: "ஏற்கனவே உலகில் தர்மக் குழப்பம் அதிகமாயிருக்கிறது. எது சத்தியம், எது மித்தை என்பதை அறிய முடியாமல் ஜனங்கள் திண்டாடுகிறார்கள். ஸ்திரீகள் வேறு பொது விவகாரங்களில் புகுந்துவிட்டால் கேட்க வேண்டியதில்லை. உங்களுக்கெல்லாம் என்ன தெரியும்? உண்மை வைரம் ஒன்றையும், இமிடேஷன் வைரம் ஒன்றையும் கொடுத்தால், எது வைரம், எது இமிடேஷன் என்று கண்டு பிடிக்க முடியுமா? இதோ, பாருங்கள்; இந்த மோதிரத்தை இன்று வாங்கினேன். இதை நிஜ வைரமல்லவென்று யாராவது சொல்ல முடியுமா?" என்று கூறிப் பக்கத்திலிருந்த மாஜி ஸப் ஜட்ஜினிடம் மோதிரத்தைக் கொடுத்தார். அதில் பதித்திருந்த ஒரு பெரிய வைரமும் இரண்டு சிறு வைரங்களும் பளபளவென்று கண்களைப் பறித்தன. மாஜி ஸப்-ஜட்ஜ் அதைப் பார்த்துவிட்டு, "ஆமாம்; அசல் வைரம் மாதிரிதான் இருக்கிறது. இருந்தாலும் கவனித்துப் பார்த்தால் தெரிந்துவிடும்" என்றார். பிறகு, அதை அடுத்தாற் போலிருந்த ராவ்சாகிப் கபாலியிடம் கொடுத்தார். அவர் அதைப் பார்த்துவிட்டு, "ரொம்ப நன்றாயிருக்கிறது. இது நிஜ வைரமென்று யாராவது நம்புவார்களா, என்ன? பைத்தியந்தான்" என்றார். மோதிரம் கைமாறிப் போய்க்கொண்டேயிருந்தது. அடுத்தபடி, வக்கீலும் அந்த மாதிரியே அபிப்பிராயப்பட்டார். பத்திரிகாசிரியர், "எனக்கு வைரங்களில் அவ்வளவு அநுபவம் இல்லை. இருந்தாலும் இதைப் பார்த்தால் சந்தேகம் ஏற்படாமலிராது" என்றார்.

மாஜி திவான், "ஹஹ்ஹஹ்ஹா!" என்று சிரித்தார். "பார்த்தீர்களா? கேவலம் ஒரு வைரத்தை நிஜம், பொய் என்று கண்டுபிடிக்க முடியாதவர்கள், சத்தியத்தின் ஸ்வரூபத்தை எப்படிக் கண்டுபிடிக்கப் போகிறோம்? அது நிஜ வைரந்தான். ரூபாய் 750க்கு இப்போதுதான் வாங்கினேன் - லவனபுரம் ஜமீன்தாருக்காக" என்றார்.

6

ராஜாராமனுடைய செவிகளில் இதெல்லாம் ஏறவேயில்லை. 'வைரம்', 'வைர மோதிரம்' என்பது மட்டும் காதில் விழுந்தது. அவனுடைய ஞாபகத்தில் ரகு இன்னும் சற்று நேரத்தில் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி விடுவானே என்பதிலேயே ஈடுபட்டிருந்தது. மாஜி திவானுடைய பிரசங்கமோ முடிகிற வழியாய்க் காணவில்லை. அவரிடம் தன்னுடைய நிர்ப்பந்தமான நிலையைச் சொல்லி ஏதாவது அவசரமான உதவி வேண்டுமென்று கேட்க அவன் விரும்பினான். அவரிடம் அவனுடைய நம்பிக்கை இதற்குள் ரொம்பவும் குறைந்து விட்டது. தன்னில் தானே ஆழ்ந்து போயிருக்கும் அந்த மனிதருக்குப் பிறருடைய சுக துக்கங்களை உணரும் சக்தி இருக்குமா? எப்படியிருந்தாலும் இன்றைய தினம் அவரிடம் தனியாகப் பேசுவது சாத்தியமில்லை. நாளைக் காலையில் வந்து பார்க்க வேண்டியதுதான்.

"எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது. போனால் தேவலை" என்று அருகிலிருந்த பாலகோபாலிடம் தெரிவித்தான். அவன், "உங்களை அடிக்கடி பார்க்க விரும்புகிறேன். எங்கே வசிக்கிறீர்கள்?" என்று கேட்டான்.

"திருவல்லிக்கேணி சுந்தரமுதலியார் தெருவில் 48ஆம் நம்பர் வீட்டு மாடி அறையில் இருக்கிறேன். ஆனால் அங்கே எத்தனை நாள் இருப்பேன் என்பது நிச்சயமில்லை" என்றான் ராஜாராம்.

"எங்கள் வீடு எழும்பூரில் இருக்கிறது. நீங்கள் ஒரு நாள் கட்டாயம் வரவேண்டும்" என்று பாலகோபால் சொல்லி, தன் விலாசம் எழுதிய சீட்டை அவன் கையில் கொடுத்தான்.

ராஜாராம் விடைபெற்றுக் கொள்வதற்காக எழுந்து நின்றான்.

அப்போது மாஜி திவான், ஏதோ பேசிக் கொண்டிருந்தவர், பேச்சை நிறுத்தி, "மோதிரம் எங்கே?" என்று கேட்டார்.

எல்லாரும், "எங்கே? எங்கே?" என்றார்கள். சுற்று முற்றும் பார்த்தார்கள். மோதிரத்தைக் காணோம்.

"எனக்குக் கொஞ்சம் காரியம் இருக்கிறது. நான் போய் வரட்டுமா?" என்றான் ராஜாராமன், மாஜி திவானைப் பார்த்து.

அவரும் இவனைப் பார்த்தார். ஆனால் பதில் ஒன்றும் சொல்லவில்லை. மற்றவர்களைப் பார்த்து, மோதிரம் எங்கே?" என்று கேட்டார்.

எல்லாரும் மேஜையைப் பார்த்தார்கள். பக்ஷணத் தட்டுகளைப் பார்த்தார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள். பிறகு, ஆகாயத்தைப் பார்த்தார்கள். எங்கும் மோதிரத்தைக் காணவில்லை.

ராஜாராமன் நின்று கொண்டேயிருந்தான். "நான் வரட்டுமா?" என்று மறுபடியும் கேட்டான்.

அப்போது டிபுடி கமிஷனர் கபாலி, இனிமேல் காரியங்களை நடத்தும் பொறுப்பு தம்முடையது என்பதை உணர்ந்தார். உடனே, எழுந்து நின்று, "நண்பர்களே! ரூ.750க்கு வாங்கிய ஒரு வைர மோதிரத்தை ஐந்து நிமிஷத்துக்கு முன்னால் நாம் பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போது அந்த மோதிரத்தைக் காணோம் என்று நமக்கு விருந்தளித்த பெரிய மனிதர் கூறுகிறார். இது நம்மெல்லாருக்கும் அவமானம் தரக்கூடிய விஷயம். கண்யமுள்ளவர்கள் இத்தகைய சந்தர்ப்பத்தில் செய்யக் கூடியது ஒன்றுதான் இருக்கிறது. நம்மை நாமே சோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவேண்டியதுதான். முதலில் ஒவ்வொருவரும் சட்டைப் பைகளை உதறுங்கள்!" என்றார்.

"அது தான் சரி" என்றார் மாஜி ஸப் ஜட்ஜ்.

"எனக்கு ஆட்சேபமில்லை" என்றார் வக்கீல். மற்றவர்கலும் சம்மதத்துக்கு அறிகுறியாக முணுமுணுத்தார்கள். கபாலி, ராஜாராமனுடைய முகத்தைப் பார்த்தார். அவன் முகத்தில் ஏற்பட்ட குழப்பத்தைக் கவனித்தார். திருடன் அகப்பட்டுவிட்டான் என்று தீர்மானித்துக் கொண்டார். போலீஸ் இலாகாவில் முப்பது வருஷம் இருந்து தலை நரைத்துப் போன அவருக்கு இந்தத் திருட்டைக் கண்டுபிடிப்பது ஒரு பெரிதா?

அந்தச் சமயம் பாலகோபால் புன்னகையுடன், "சட்டையை மட்டும் உதறினால் போதுமா? வேட்டி மடிப்பில் செருகிக் கொண்டிருந்தால்? குடுமியில் வைத்து முடிந்து கொண்டிருந்தால்?..." என்றான்.

கபாலி, "பாலகோபால்! இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் கூடவா விளையாட்டு? துளிக்கூட நன்றாயில்லை. முதலில் சட்டைப் பைகளை உதறுவோம். அதில் அகப்படாவிட்டால், பிறகு எல்லாரும் தனி அறைக்குப் போய்ப் பூரண சோதனை செய்து கொள்வோம். நல்ல வேளையாக, ஸ்திரீகள் இதில் சம்பந்தப்படவில்லை" என்றார்.

"ஏன் அப்படி எங்களை ஒதுக்குகிறீர்கள்? மற்ற எல்லாவற்றிலுந்தான் நாங்கள் மட்டமாயிருக்கிறோம்; திருட்டுப் பட்டம் கட்டிக் கொள்வதில் கூடவா மட்டமாயிருக்க வேண்டும்?" என்று வத்ஸலை கேட்டாள். அவளுடைய குரலில் ஏளனம் அதிகமாயிருந்ததா, கோபம் அதிகமாயிருந்ததா என்று சொல்வதற்கு முடியாமலிருந்தது.

கபாலி, "திருட்டு என்று யார் சொன்னார்கள்? ஞாபக மறதியாய் யாராவது சட்டைப் பையில் போட்டுக் கொண்டிருக்கலாம். அப்படியின்றி, மோதிரம் மாயமாய்ப் போயிருந்தாலும், நம்முடைய பொறுப்பை நான் கழித்துக் கொள்ளலாமல்லவா?" என்று கூறி, தமது கோட்டை அவிழ்த்து உதறினார்.

"எனக்கு ஆட்சேபமில்லை, ஸ்வாமி!" என்று பாலகோபாலும் தன் கோட்டை எடுத்து உதறினான். மற்றவர்களும் அப்படியே செய்தார்கள்.

ராஜாராமன் மட்டும் நின்றபடியே இருந்தான்.

"மிஸ்டர் ராஜாராம்! ஏன் நிற்கிறீர்கள்? அவசரமாய்ப் போக வேண்டுமென்றீர்களே! சட்டையை உதறிவிட்டால், உடனே போகலாமே!" என்றார் கபாலி.

ராஜாராமனுக்கு என்ன நேர்ந்து விட்டது? அவன் ஏன் அப்படித் தேம்புகிறான்? அவனுடைய கண்களில் ஏன் நீர் ததும்புகிறது?

ஒரு நிமிஷம் அவ்வாறு நின்றுவிட்டுக் கோபமும் துக்கமும் பொங்கிய குரலில், "நான் மாட்டேன்; என் சட்டையைக் கழற்ற மாட்டேன். எனக்குத் தெரியும் உங்கள் சமாசாரம்; என்னை அவமானப்படுத்துவதற்காகவே இப்படிச் செய்திருக்கிறீர்கள். அது வைர மோதிரமேயல்ல; அது கெட்டுப் போகவுமில்லை; சுத்தப் பொய். நீங்கள் எல்லாரும் பெரிய மனிதர்கள். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நான் ஏழை!..." என்று அலறினான்.

கபாலி, தொண்டையைக் கனைத்துக் கொண்டு, சாவதானமாக, "தம்பி! பதறாதே!..." என்று ஆரம்பித்தார்.

அதற்குள், ராஜாராமன், "ஆமாம்; பதறாதே! உங்களுக்கென்ன உபதேசம் செய்வதற்கு? முடியாது. நான் இந்த அவமானத்துக்கு உட்படமாட்டேன். சட்டையை உதறமாட்டேன். இதோ நான் போகிறேன். உங்களால் ஆனதைச் செய்து கொள்ளுங்கள்" என்று விம்மிய குரலில் சொல்லிவிட்டு, விரைவாக நடந்து வெளியே சென்றான்.

ராவ்சாகிப் கபாலி, கடகடவென்று சிரித்தார். ஆனால் மற்றவர்கள் யாருக்கும் சிரிப்பு வரவில்லை. ராஜாராமனுடைய ஆத்திரமான பேச்சும், அவனுடைய குரலில் தொனித்த துக்கமும் அவர்களையெல்லாம் பிரமை பிடித்தவர்கள் போல் ஆக்கிவிட்டன. கிணறு வெட்டப் போய்ப் பூதத்தைக் கண்டவனுடைய நிலையை அவர்கள் அடைந்திருந்தார்கள்.

கபாலி மட்டுந்தான் தம்முடைய நிதானத்தை இழக்கவில்லை. வெளியில் கொஞ்ச தூரத்தில் நின்று கொண்டிருந்த ஓர் ஆளை அவர் சமிக்ஞை செய்து கூப்பிட்டார். அருகில் வந்ததும் அவன் காதில் ஏதோ சொன்னார்.

அப்போது வத்ஸலை தான் இருந்த இடத்தில் எழுந்து நின்று, "மாமா! நீங்கள் என்ன சொல்கிறீர்களென்று எனக்குத் தெரியும். மிஸ்டர் ராஜாராமைப் பின் தொடர்ந்து போகச் சொல்கிறீர்கள். ஆனால், அது தேவையில்லை..." என்றாள்.

எல்லாரும் அவள் முகத்தை வியப்புடன் நோக்கிக் கொண்டிருக்கையிலேயே, "இதோ அந்த வைர மோதிரம், பத்திரமாயிருக்கிறது!" என்று எடுத்துக் காட்டினாள். "பரிசாரகன் உங்கள் மேஜையிலிருந்த காராபூந்தித் தட்டை இங்கே எடுத்து வைத்தான். காராபூந்திக் குவியலுக்குள் இது இருந்தது. உங்களில் ஒருவர் பேச்சு ஸ்வாரஸ்யத்தில் ஞாபக மறதியாய்த் தட்டில் போட்டிருப்பீர்கள்..."

"அடடா! அந்தப் பையனைப் போய்ச் சந்தேகித்தோமே? என்ன அநியாயம்! நீ ஏன் முன்னமே சொல்லியிருக்கப்படாது?" என்று மாஜி திவான் கேட்டார்.

"ஏனா? உங்களுடைய புத்திசாலித்தனம் எவ்வளவு தூரம் போகிறதென்று பார்க்கத்தான்!" என்றாள்.

7

சற்று நேரத்துக்கெல்லாம், பாலகோபாலும் வதஸ்லையும் மாஜி திவானின் பங்களாவுக்கு வெளியே வந்து தங்களுடைய காரில் ஏறிக் கொண்டார்கள்.

"டிரைவர்! திருவல்லிக்கேணிக்குப் போ!" என்றாள் வத்ஸலை.

"திருவல்லிக்கேணிக்கா? எதற்காக?" என்றான் பாலகோபால்.

"அவரைப் பார்ப்பதற்குத்தான்."

"ஐயோ! ஏதோ விலாசம் சொன்னான்; மறந்து விட்டேனே!"

"நீ மறந்து விட்டால் எனக்கு ஞாபகம் இருக்கிறது. சுந்தர முதலியார் தெரு, 48ஆம் நெம்பர்."

"அவனுக்கு ஏன் அவ்வளவு கோபம் வந்தது? சட்டைப் பைகளை உதறமாட்டேனென்று அவ்வளவு பிடிவாதம் ஏன் பிடித்தான்? அதுதான் எனக்குத் தெரியவில்லை."

"எனக்குந்தான் தெரியவில்லை. ஆனால் ஏதோ காரணம் இருக்கவேண்டும். அதை நான் கண்டுபிடிக்காவிட்டால், என் பெயர் வத்ஸலை அல்ல; நான் டிப்டி கமிஷனர் கபாலியின் மருமகளல்ல" என்றாள்.

பத்து நிமிஷத்துக்கெல்லாம் வண்டி மேற்படி வீட்டின் வாசலை அடைந்தது.

கீழ்க்கட்டில் குடியிருந்த ஒருவர் வாசலில் நின்று கொண்டிருந்தார்.

"ராஜாராமன் இங்கேதானே இருக்கிறார்?" என்று பாலகோபால் கேட்டான்.

"ஆமாம்; இப்போதுதான் வெளியிலிருந்து வந்து மாடிக்குப் போனார்" என்று பதில் வந்தது.

பாலகோபாலும், வத்ஸலையும் மெதுவாக அடிவைத்து மச்சுப் படிகளின் மீது ஏறினார்கள்.

மேலே சற்று விஸ்தாரமான திறந்த மாடி இருந்தது. அதன் ஒரு பக்கத்தில் ஒரு சின்ன அறை இருந்தது. இவர்கள் மெதுவாக நடந்து சென்று அறையின் கதவண்டை நின்று எட்டிப் பார்த்தார்கள்.

*****

ராஜாராமன் தன்னுடைய கோட்டைக் கழற்றித் தன் சட்டைப் பைகளிலிருந்து ஏதோ சாமான் எடுத்துக் கொண்டிருந்தான். அது என்ன? ஆ! மாஜி திவானுடைய விருந்தில் வைத்திருந்த பிஸ்கோத்து; அதை மேஜை மீது வைத்துவிட்டு மறுபடியும் பையில் கையை விடுகிறான். இன்னொரு பிஸ்கோத்து. இம்மாதிரி ஆறு பிஸ்கோத்துகளை எடுத்து அடுக்கி வைக்கிறான். உஸ்! தனக்குத்தானே ஏதோ பேசிக் கொள்கிறானே!

"ரகு! ரகு! அவளைப் போன்ற ஆயிரம் தேவகன்னிகைகளின் காதலைக் காட்டிலும் உன்னுடைய அன்புதான் எனக்குப் பெரிது!"

இது காதில் விழுந்தபோது, வத்ஸலையின் அழகிய கன்னங்கள் குழிந்தன. "அவள்" என்று அவன் குறிப்பிடுவது யாரை என்பது வத்ஸலைக்குத் தெரியாதா, என்ன?

அதே சமயத்தில், "அண்ணா! அண்ணா!" என்று குதூகலமாய்க் கூவிக்கொண்டு, யாரோ மாடிப்படி ஏறி வரும் சப்தம் கேட்டது.

"ரகு ஓடி வா!" என்றான் அறையிலிருந்தபடியே ராஜாராமன்.

அடுத்த நிமிஷத்தில், குருகுருவென்று கண்களும், சுருட்டை மயிரும், களை சொட்டிய முகமும் படைத்த ஒன்பது வயதுச் சிறுவன் ஒருவன் மாடிக்கு வந்தான். "அண்ணா! பிஸ்கோத்து வாங்கி வந்திருக்கிறாயா?..." என்று கேட்டவன் அறையின் வாசலில் இருவர் நிற்பதைக் கண்டு திகைத்துப் போனான். உள்ளே வந்து, அண்ணாவிடம் மெதுவான குரலில், 'வெளியில் நிற்பவர்கள் யார்?' என்று கேட்டான்.

ராஜாராமன் ஆச்சரியத்துடன் வெளியே வந்து பார்த்தான். பாலகோபாலையும் வத்ஸலையையும் கண்டதும் முதலில் அவனுக்கு கோபம் வந்தது. ஆனால், வத்ஸலையின் புன்னகை பூத்த முகத்தையும், அந்தக் கண்களையும் கண்டதும் கோபம் பறந்தது. அதற்குப் பதில் வெட்கம் பிடுங்கித் தின்னத் தொடங்கியது.

"தங்களுடைய விலாசம் மறந்து போவதற்குள் வீட்டைக் கண்டுபிடித்து வைக்கலாம் என்று வந்தோம்" என்றான் பாலகோபால்.

"இவ்வளவுதானா? திருட்டுக் கண்டுபிடிக்க வந்தீர்களென்றல்லவா பார்த்தேன்?"

வத்ஸலை சொன்னாள்: "ஆமாம்; திருட்டைக் கண்டுபிடிக்கத்தான் வந்தோம். ஆனால் மோதிரத் திருட்டையல்ல. மோதிரம் என்னிடந்தான் இருந்தது. காராபூந்தித் தட்டிலிருந்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன். அதை நான் காட்டியதும் அந்தக் கிழங்களின் முகத்தில் அசடு தட்டியதை நீங்கள் பார்க்காமல் வந்து விட்டீர்கள். ஆனால், நாங்கள் வந்தது வேறு திருட்டைக் கண்டுபிடிக்க. மேஜையில் இருந்த பிஸ்கோத்துகளில் ஐந்தாறு பிஸ்கோத்துகளைக் காணோம். ஒருவேளை இங்கே இருக்குமோ என்று வந்தோம். அடடா! இதோ இருக்கே!"

இவ்வாறு சொல்லி, ராஜாராமனுடைய பதிலுக்கு இடங் கொடாமல், வத்ஸலை மேஜையண்டைப் போய் அந்தப் பிஸ்கோத்துகளைக் கையில் எடுத்துக் கொண்டாள். திகைத்துப் போய் நின்ற ரகுவை பலவந்தமாகப் பிடித்திழுத்து அவன் வாயில் பிஸ்கோத்துகளைத் திணிக்கத் தொடங்கினாள்.

அப்போது, பாலகோபால், தனக்குள், "சரி, சரி! இந்த ராஜாராமன் பிஸ்கோத்துகளை மட்டும் திருடவில்லை. ஒரு மகா அதிகப் பிரசங்கியான பெண்ணின் இருதயத்தைக் கூடத் திருடி விட்டான் போலிருக்கிறது?" என்று எண்ணமிடலானான்.

"இவள் எந்த முட்டாளைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறாளோ?" என்று ராஜாராமன் முன்னொரு நாள் நினைத்தானல்லவா? ஆறு மாதத்திற்கெல்லாம் வத்ஸலைக்குக் கலியாணம் நடக்கத்தான் செய்தது. ஆனால், அவளைக் கலியாணம் செய்து கொண்டவனை முட்டாள் என்பதாக ராஜாராமன் இப்போது ஒப்புக்கொள்வதில்லை.

அவ்வளவு ஆத்ம நிந்தனை செய்து கொள்ள யாருக்குத்தான் மனம் வரும்?

---------------

48. வீணை பவானி

1

இரவு ஒன்பது மணியிருக்கும். வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்திருந்தன. சிறு தூற்றல் போட்டுக் கொண்டிருந்தது. மூடி போட்ட வீதி விளக்குகளின் மங்கலான வெளிச்சத்தைப் பார்க்கும்போது வானம் ஏதோ சொல்ல முடியாத துயரத்துடன் கண்ணீர் விடுவது போல் தோன்றியது.

இந்தக் காட்சியைப் பார்க்கச் சகியாமல் வீட்டுக்குள்ளே வந்தேன். என் உள்ளமும் சோர்வினால் பீடிக்கப்பட்டிருந்தது. இருட்டடிப்பு உபத்திரவத்தை முன்னிட்டு ஜன்னல் கதவுகளையெல்லாம் சாத்தி விட்டுப் பிரகாசமாக விளக்கைப் போட்டுக் கொண்டேன். மனத்திலுள்ள சோர்வை மாற்றுவதற்காகக் கதைப் புத்தகம் படிக்கலாமென்று ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டேன்.

சோர்வு, சோர்வு என்று சொல்லுகிறேன். அப்படி என்ன சோர்வு வந்தது என்று நேயர்கள் அறிய விரும்பலாம். சோர்வுக்குக் காரணங்களா இல்லை? உலக நிலைமையிலும் தேச நிலைமையிலும் மனச்சோர்வுக்கு வேண்டிய காரணங்கள் இருந்தன. போதாதற்கு அன்று சாயங்காலம் தினசரி பத்திரிகையில் வந்த ஒரு செய்தி மனத்தில் கொஞ்சம் நஞ்சம் இருந்த உற்சாகத்தையும் போக்கடித்து விட்டது.

அது கடலூருக்கும், சிதம்பரத்துக்கும் இடையில் நேர்ந்த ரயில் விபத்தைப் பற்றிய செய்திதான். நேற்று ராத்திரி எழும்பூரிலிருந்து கிளம்பிய போட்மெயில் அங்கே பெரும் விபத்துக்கு உள்ளாயிற்று. காரணம் நன்றாகத் தெரியவில்லை. நகரில் பலவித வதந்திகள் உலவின. திடீரென்று பெருகிய மழை வெள்ளத்தினால் தண்டவாளம் பெயர்ந்து விட்டதாக உத்தியோக முறையில் செய்தி. அந்த ரயிலில் பெரிய உத்தியோகஸ்தர் யாரோ போவதாகத் தெரிந்து தண்டவாளத்தை யாரோ வேண்டுமென்று பிடுங்கிப் போட்டதாக ஒரு வதந்தி. விபத்தில் செத்துப் போனவர்களின் கணக்கைப் பற்றி உலவிய வதந்திகளுக்கு அளவே இல்லை.

"நூறு பேர் செத்துப் போனார்கள். இருநூறு பேர் செத்துப் போனார்கள்" என்றெல்லாம் கேள்விப்பட்டபோது கூட என்மனம் அவ்வளவு கலங்கிவிடவில்லை. ஆனால், பத்திரிகையில் இறந்து போனவர்களின் பெயர்களை வரிசை வரிசையாகப் படித்து வந்த போது அதிலும் ஒரு குறிப்பிட்ட பெயர் வந்ததும் - ரயில் வண்டி கவிழ்ந்து என் மேலேயே விழுந்தது போலிருந்தது.

வாசகர்களில் பலருக்கு ஐயம்பேட்டை கந்தப்பன் பெயர் ஞாபகமிருக்கலாம். "திருவழுந்தூர் சிவக்கொழுந்து" கதையை எனக்குச் சொன்ன தவுல் வித்வான் கந்தப்பன் தான். ரயில் விபத்தில் இறந்து போனவர்களின் ஜாபிதாவில் கந்தப்பப் பிள்ளையின் பெயரைப் பார்த்தவுடனேதான் எனக்கு அவ்வளவு மன வேதனை உண்டாயிற்று. அதென்னமோ பகவான் நம்மை அவ்விதம் படைத்து விட்டிருக்கிறார்.

அமெரிக்காவில் எரிமலை விபத்தில் இருபதினாயிரம் பேர் செத்துப் போனார்கள் என்று அறிந்தால், நமக்கு ஒரு உணர்ச்சியும் உண்டாவதில்லை. நமக்குத் தெரிந்த மனிதர்களில் ஒருவர் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டால் நம்மை என்னமோ செய்கிறது. "ஆஹா! ஐயம்பேட்டை கந்தப்பனுக்கு இந்த முடிவா ஏற்படவேண்டும்? எப்பேர்ப்பட்ட மனுஷன்? என்ன தேசபக்தி? எத்தகைய நல்லொழுக்கம்? பழகியவர்களிடத்தில் தான் எவ்வளவு அபிமானம்? என்ன ரஸிகத்தனம்?" என்று எண்ணமிட்டுக் கொண்டிருக்கும்போது, வாசலில் குதிரை வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது. "இந்த நேரத்தில் யார் வருகிறது?" என்று சிறிது வெறுப்புடன் எண்ணினேன். என் உள்ளம் அப்போதிருந்த நிலைமையில், யாரையாவது பார்ப்பதற்கோ, பேசுவதற்கோ பிடிக்கவில்லை.

ஒரு நிமிஷத்துக்கெல்லாம் வாசற் கதவு திறந்தது. அடால்ப் ஹிட்லரோ, ஜெனரல் டோஜோவோ வாசற்படியில் வந்து நின்றிருந்தால் கூட, எனக்கு அவ்வளவு திகைப்பு ஏற்பட்டிருக்காது. அங்கு நின்றவர் வேறு யாருமில்லை; ஐயம்பேட்டை கந்தப்பன் தான்.

"பயப்பட வேண்டாம்! நான் தான் வந்திருக்கிறேன். என்னுடைய ஆவி இல்லை" என்று கந்தப்பனுடைய குரலைக் கேட்டதும், என்னுடைய திகைப்பு மாறி அளவிறந்த சந்தோஷம் உண்டாயிற்று.

"வாருங்கள்! வாருங்கள்!" என்று அவருடைய கையைப் பிடித்து உள்ளே அழைத்து கொண்டு போய் உட்கார வைத்தேன்.

"என்ன சேதி? என்ன சமாசாரம்? ரயில் விபத்திலிருந்து எப்படிப் பிழைத்து வந்தீர்கள்? இப்போதுதான் பத்திரிகையில் உங்கள் பெயரைப் படித்து விட்டுக் கதிதலங்கிப் போனேன். அதெப்படி தப்புச் செய்தி அனுப்பினார்கள்? வெட்கக் கேடாக அல்லவா இருக்கிறது?" என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனேன்.

"நல்லவேளை, நான் போகவே இல்லை; நேற்று இரவு வண்டியில் எனக்கு ஸீட் ரிசர்வ் செய்திருந்தேன். தவுல் முதலிய சாமான்களையும் முன்னால் கொண்டு போய் ஏற்றியாகி விட்டது. நான் ஸ்டேஷனுக்கு வருவதில் தான் இரண்டு நிமிஷம் தாமதமாயிற்று. நல்ல காலந்தான்."

"ரயிலில் உங்கள் பெயர் கட்டித் தொங்கியதாக்கும். அதையும் தவுலையும் பார்த்துவிட்டுப் பத்திரிகை நிருபர்கள் உங்களையும் சேர்த்து வைகுண்டத்துக்கு அனுப்பிவிட்டார்கள் போலிருக்கிறது."

"அப்படித்தான் இருக்க வேண்டும்."

"உங்கள் வீட்டில் எல்லோரும் கவலைப்பட மாட்டார்களா? இன்றைக்கு ஏன் ஊருக்குப் போகவில்லை" என்று கேட்டேன்.

"ஊருக்குத் தந்தி கொடுத்து விட்டேன். உங்களைக் கொஞ்சம் பயமுறுத்தி விட்டுப் போகலாம் என்று வந்தேன்."

"என்னையா பயமுறுத்தப் பார்த்தீர்கள்?"

"ஆமாம்; மகுடபதி கதையில் வெறுமனேயாவது பெரியண்ணனுடைய ஆவி வந்து நின்றதாகச் சொல்லி எங்களையெல்லாம் பயமுறுத்தினீர்களல்லவா? அதற்குப் பழிக்குப் பழியாக..."

"அதெல்லாம் கதையிலே நடக்கும். நிஜத்தில் நடக்குமா?" என்றேன்.

"நீங்கள் சொல்வது சுத்தத் தப்பு" என்றார் ஐயம்பேட்டை கந்தப்பன்.

"என்ன? அவ்வளவு கண்டிப்பாகச் சாப்புக் கொடுக்கிறீர்களே?"

"ஆமாம்; வாழ்க்கையில் அந்த மாதிரி நடந்திருக்கிறது."

"எந்த மாதிரி?"

"செத்துப் போனதாக நினைத்திருந்த மனுஷர் திடீரென்று தோன்றியதனால் ஆபத்து நேர்ந்திருக்கிறது."

"என்ன ஆபத்து?"

"உயிருக்கே ஆபத்து!"

ஏதோ ஒரு ரஸமான சம்பவத்தைச் சொல்லத்தான் ஐயம்பேட்டை கந்தப்பன் வந்திருக்கிறார் என்று அப்போது தெரிந்து கொண்டேன்.

"சொல்லுங்கள், கேட்கிறேன்; என் மனது இன்றைக்கெல்லாம் சரியாகவேயில்லை. ரொம்பவும் உற்சாகக் குறைவாயிருக்கிறது. உங்களுடைய கதையைக் கேட்டாலாவது."

"என்னுடைய கதை உற்சாகந் தருவதல்ல; ரொம்பவும் சோகமானது. இன்னொரு நாளைக்கு வேண்டுமானால்..."

"கூடவே கூடாது. மனத்தில் உற்சாகமில்லாத போது தான் சோகக் கதை கேட்க வேணும். சொல்லுங்கள்" என்றேன்.

2

ஐயம்பேட்டை கந்தப்பப் பிள்ளை எப்போதும் ஒரு கேள்வியுடனே தான் கதையை ஆரம்பிப்பது வழக்கம். அவ்விதமே இப்போதும், தொண்டையைக் கனைத்துச் சரிப்படுத்திக்கொண்டு, "பூந்தோட்டம் பவானி என்று கேள்விப்பட்டதாக ஞாபகம் இருக்கிறதா?" என்றார்.

அந்த மாதிரி ஒரு பெயர் ஏதோ பூர்வ ஜன்மத்தில் கேள்விப்பட்டது மாதிரி எனக்கு இலேசாக ஞாபகம் வந்தது. கிராமபோன் பிளேட் கூட ஒன்றிரண்டு கேட்டிருக்கும் நினைவு வந்தது. ஆனால் நான் ஞாபகப்படுத்திக் கொண்டு பதில் சொல்லும் வரையில் கந்தப்பப் பிள்ளை காத்திருக்கவில்லை. மேலும் சொல்லத் தொடங்கினார்.

*****

"முப்பது வருஷத்துக்கு முன்னால் 'பூந்தோட்டம் பவானி' என்னும் பெயர் மிகவும் பிரசித்தமாயிருந்தது. 'வீணை பவானி' என்றும் சொல்வதுண்டு. வீணையை வைத்துக் கொண்டு பாடினாளானால், ஸரஸ்வதி தேவியே அவதாரம் எடுத்து வந்திருப்பது போல் தான் தோன்றும். அவளுடைய குரலுக்கு உபமானம் சொல்ல வேண்டுமானால், வீணைத் தந்தியை அவள் மீட்டும் போது உண்டாகும் ரீங்கார நாதத்தைத்தான் சொல்லலாம். அந்த வீணைத் தந்தியின் ரீங்காரத்துகோ அவளுடைய குரலைத் தவிர வேறு உபமானம் சொல்ல முடியாது. ஆயிரக்கணக்கான ஜனங்கள் கூடியுள்ள சபைகளில் அவளுடைய கச்சேரிகள் நடப்பதுண்டு. நிசப்தமாய் இருந்து கேட்பார்கள்; பரவசப்படுவார்கள்; கோவில்களிலே முக்கியமாகத் திருவாரூர்க் கோவில் - உற்சவ சமயங்களில் அவளுடைய கச்சேரி அடிக்கடி நடக்கும். இந்தக் காலத்தில் வரவர நாதஸ்திகம் அதிகமாகி வருகிறது. சுயமரியாதை இயக்கம், அது இது என்று உலகமே கெட்டுப் போய் வருகிறது. போதாதற்கு சினிமா வேறு வந்து சேர்ந்து விட்டது. உற்சவங்களைச் சிரத்தையாக நடத்துவோரும் இல்லை. அந்தக் காலத்தில் ஜனங்களுக்கெல்லாம் கோவில் திருவிழா - இம்மாதிரி காரியங்களிலே தான் கொண்டாட்டம். ஒரு கோவிலில் உற்சவம் என்றால் சுற்று வட்டாரத்தில் இருபது மைல் தூரத்திலுள்ள ஜனங்கள் எல்லாம் திரண்டு வந்து விடுவார்கள்.

இப்படிப்பட்ட திருவிழாக் கூட்டத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் சங்கீதக் கச்சேரிகள் நடக்கும். ஒவ்வொரு கச்சேரிக்கும் அபரிதமான கூட்டம் சேரும். அதிலும் பூந்தோட்டம் பவானியின் கச்சேரி என்றால் கேட்க வேண்டியதில்லை. அந்தக் காலத்தில் பெரிய கூட்டத்துக்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால் 'பூந்தோட்டம் பவானியின் கச்சேரிக்குக் கூடுகிறார் போல் கூடியிருக்கிறதே!' என்பார்கள். அப்படி ஜனக் கூட்டம் கூடியிருக்கும் இடத்தில் கசகசவென்று எவ்வளவு சந்தடியிருக்கும்? ஆனால் பவானியின் விரல்கள் வீணையின் தந்திகளைத் தொட வேண்டியதுதான்; முகத்தைச் சிறிது நிமிர்த்திக் கொண்டு அவளுடைய இனிய குரலைக் காட்டிச் சுருதி கூட்ட வேண்டியது தான்; அவ்வளவு இரைச்சலும் ஒரு நொடியில் 'கப்' என்று அடங்கிவிடும்! இரைச்சல் ஓடுவதும், பவானியின் இனிய குரல் ஒலியும் வீணைத் தந்தியின் நாதமும் சேர்ந்து கிளம்புவதும், ஒரு இந்திரஜாலம் போல் தோன்றும்.

பவானியின் கச்சேரி கேட்பதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தால், நான் அதை விடுவதில்லை. அத்தகைய சந்தர்ப்பங்கள் எனக்கு அடிக்கடி கிடைப்பதும் உண்டு. கல்யாணங்களிலோ, கோவில் உற்சவங்களிலோ, பவானியின் கச்சேரிகள் நடக்குமிடங்களில், நானும் என்னுடைய தொழிலுக்காகப் போய்ச் சேரும்படி அடிக்கடி நேரும். பவானியின் கச்சேரி கேட்டுக் கொண்டிருக்கும் போது, எனக்கு அடிக்கடி கண்ணில் ஜலம் வந்து விடும். பக்கத்திலுள்ளவர்கள் பார்த்து பரிகசிக்கப் போகிறார்களே என்று ஏதோ தலை வலிக்கிற பாவனையாகத் தரையை நோக்கிக் குனிந்து கொள்வேன். கண்ணீருக்குக் காரணம் என்ன என்றா கேட்கிறீர்கள்? அது தான் எனக்குத் தெரியாது. ஆனந்தக் கண்ணீர் தானா அல்லது இவ்வளவு அற்புதமான சங்கீதம் நீடித்து நிற்க வேண்டுமே என்ற அநுதாபத்தில் பெருகிய கண்ணீரா? ஜனங்கள் பேசிக் கொண்டு போவார்கள். "இது எங்கேடா நிலைத்து நிற்கப் போகிறது? இப்படிப் பாடினால் உலகம் தாங்குமா!" என்று கவலைப்படுவார்கள். கச்சேரி முடிந்த பிறகு நான் பவானியைப் போய்ப் பார்ப்பேன். "தங்கச்சி! அம்மாவை திருஷ்டி சுற்றிப் போடச் சொல்லு!" என்பேன். பவானியின் தாயாரும் பெண்ணை எத்தனையோ கண்ணும் கருத்துமாய்த்தான் காப்பாற்றி வந்தாள். ஆனாலும், கடைசியில் திருஷ்டி பட்டே விட்டது.

பவானியின் தாயாருக்குப் பூந்தோட்டம் பிரஹதாம்பாள் என்று பெயர். அவள் பரம்பரையான பணக்காரி. அதோடு அவளுடைய குணத்திலும் பிரசித்தி பெற்றவள். ஒரு பெரிய மனிதரோடு மட்டும் சிநேகம் வைத்துக் கொண்டுடிருந்து, அவருக்கு உண்மையான தர்மபத்தினியாக நடந்து கொண்டிருந்தாள். அவன் காலஞ்சென்ற பிறகு அவள் பகவானுடைய பக்தியில் சிந்தையைச் செலுத்தி வந்தாள்.

தாயாருடைய சுபாவம் பெண்ணிடமும் இருந்தது. நெற்றியில் திவ்வியமாக விபூதியைப் பூசிக் கொண்டு தான் கச்சேரிக்கு வந்து உட்காருவாள். பக்திரஸமுள்ள பாட்டுக்களைத்தான் பாடுவாள். வீட்டிலே தினம் ஸ்நானம், பூஜை எல்லாம் பிரமாதமாக நடக்கும். இதனாலெல்லாம் பவானிக்கு ஞானப் பைத்தியம் பிடித்திருப்பதாகப் பலர் பேசினார்கள்.

பிரஹதாம்பாளுக்குத் தன் பெண்ணை ஒரு யோக்கிமான நல்ல பிள்ளையாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டுமென்று விருப்பம். ஆனால் பவானியோ தான் ஆண்டாளைப் போல் கன்னியாகவே இருந்து கடவுளின் பாதத்தை அடையப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். இவர்கள் இரண்டு பேருடைய எண்ணமும் நிறைவேறவில்லை. எல்லாம் ஒரு மனுஷன் பராபரியாய் யாரிடமோ சொல்லிக் கொண்டு போன ஒரு வார்த்தையில் அடிபட்டுப் போய்விட்டது.

ஒரு தடவை திருவாரூர்க் கோவிலில் கச்சேரி செய்து விட்டுப் பவானி வெளியே வந்து வண்டியில் ஏறிக் கொள்ளப் போகும் சமயத்தில், ஒரு மனுஷன் தன் சிநேகிதனுடன் பேசிக்கொண்டு போன ஒரு வார்த்தை அவள் காதில் தற்செயலாக விழுந்தது. "பாட்டு, பாட்டு என்கிறாயே, பிரமாதமாய் பாட்டு இருக்கட்டும், அப்பா! அவள் முகத்திலே சொட்டுகிற களையைச் சொல்லு!" என்றான், அந்த மனிதன. இதைக் கேட்டதும் பவானிக்குச் சிரிப்பு வந்தது. கலீரென்று சிரித்துவிட்டாள். யார் சிரிக்கிறதென்று அந்த மனுஷன் திரும்பிப் பார்க்கவே பக்கத்தில் பவானி நிற்பதைக் கண்டு வெட்கிப் போனான். பவானியும் சட்டென்று வண்டியில் ஏறிக் கொண்டாள்.

விதி என்று சொல்லுகிறார்களே! இது தான் விதி! அவ்வளவு கூட்டத்திற்கு நடுவிலே, இருட்டிலே அந்த மனுஷன் அந்த வார்த்தையைப் பவானி வண்டி ஏறுகிற இடத்திலே வந்து சொல்வானேன்? அது இவள் காதில் விழுவானேன்? பவானி வீட்டுக்குப் போனதும், அவள் தாயாரிடம் "அம்மா! நீ ஏன் இன்றைக்கு நான் கச்சேரிக்குப் போன போது கைக்குட்டை வைக்கவில்லை?" என்று கேட்டாளாம். அவள் தாயார் "இதென்ன கேள்வி?" என்று சும்மாயிருக்கவே, "மண்டபத்திலே இறுக்கம் அசாத்தியம், ஓயாமல் வியர்த்துக் கொட்டிக் கொண்டே இருந்தது" என்றாளாம். அதோடு விடவில்லை. "கேட்டுக்கோ, அம்மா! என் முகத்திலே வியர்வை கொட்டிக் கொண்டே இருந்ததா? அதைப் பார்த்து விட்டு ஒரு மனுஷர், 'களை சொட்டுகிறது' என்று சொல்லிக் கொண்டு போனார் அம்மா" என்று கூறி இடி இடி என்று சிரித்தாளாம். இதையெல்லாம் பவானியும், அவள் தாயாரும் எனக்கு அடிக்கடிச் சொல்வார்கள். இப்படி வேடிக்கையும் சிரிப்புமாக ஆரம்பித்த காரியம்தான் பிற்பாடு பெரிய வினையாக முடிந்தது.

3

அந்த மனுஷரும் எனக்குத் தெரிந்தவர்தான். மன்னார்குடிக்குப் பக்கத்தில் தும்பை வனம் என்று ஒரு கிராமம் இருக்கிறது. அந்த ஊரில் அவர் மிராசுதார்; கோபாலசாமி என்று பெயர். இளம் வயது தான். அவருடைய கல்யாணத்துக்குக் கூட நான் தவுல் வாசித்திருக்கிறேன். கல்யாணம் நடந்து அப்போது ஐந்தாறு வருஷத்துக்கு மேல் இருக்கும். அவருக்குக் குழந்தைகளும் உண்டு.

இந்த மனுஷருக்கும் பவானிக்குந்தான் விதி வசத்தினால் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் மறுபடியும் எப்படிச் சந்தித்தார்கள், சிநேகம் எப்படி வளர்ந்தது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. விதி இருக்கும் போது எப்படியாவது வழியும் ஏற்பட்டு விடுகிறது. பவானியின் ஞானப் பைத்தியம் நீங்கி விட்டது என்ற பிரஸ்தாபம் மட்டும் எங்கும் பரவியது. அதோடு தும்பைவனம் கோபாலசாமி முதலியாரின் பெயரும் தஞ்சாவூர் ஜில்லாவெங்கும் அடிபட்டது.

இந்தச் செய்தியெல்லாம் எனக்கு அவ்வளவு நிம்மதி அளிக்கவில்லை. என்னுடைய அபிப்பிராயந்தான் உங்களுக்குத் தெரியுமே? இம்மாதிரி ஒரு ஜாதியும், இந்த மாதிரி ஒரு தொழிலும் கூடவே கூடாது என்பதுதான். 'கடைசியில் இப்படித்தானா ஆக வேண்டும்? யாரையாவது ஒழுங்காகக் கல்யாணம் செய்து கொண்டிருக்கக் கூடாதா?' என்று எண்ணினேன். கோபாலசாமி முதலியாரின் மனைவி, மக்களை நினைத்தும் வருத்தப்பட்டேன். இதையெல்லாவற்றையும் விட இந்த சிநேகத்தினால் பவானியின் தெய்வீக சங்கீதத்துக்குக் கேடு வராமலிருக்க வேண்டுமே என்ற கவலையும் உண்டாயிற்று.

நல்ல வேளையாக அப்படி ஒன்றும் நேரவில்லை - கோபாலசாமி முதலியார் நல்ல சங்கீத ரஸிகர். அதோடு பவானியின் பாட்டைக் குறித்து அவருக்கு ரொம்பப் பெருமையும் இருந்தது. என்னிடம் ஒரு சமயம் அவர் சொன்னது நன்றாய் ஞாபகமிருக்கிறது. "பவானியை மற்ற மனிதர்களைப் படைத்தது போல் பிரம்மா படைக்கவில்லை; கல்யாணியையும், மோகனத்தையும் செஞ்சுருட்டியையும் சேர்த்துப் படைத்திருக்கிறார்! நீர் வேண்டுமானால், பாரும்! பவானி செத்துப் போகும் போது, அவளுடைய உடம்பு அப்படியே கரைந்து உருகி ராகங்களாகப் போய்விடும்!" என்று கோபாலசாமி முதலியார் சொன்னபோது, "இருக்கலாம்; ஆனால் அதை நீங்களும் நானும் பார்க்க மாட்டோ ம். நமக்குப் பிறகு பவானி ரொம்ப காலம் பாடிக் கொண்டிருக்கும்" என்றேன். ஆனால் வருங்காலத்தையறியும் சக்தியைப் பகவான் நமக்குக் கொடுக்கவில்லையே? கொடுத்திருந்தால் உலகத்திலே துன்பம் ஏது? இன்பந்தான் ஏது?

ஆமாம் பவானியின் சங்கீதத்தைப் பற்றியல்லவா சொல்லிக் கொண்டு வந்தேன்? அவளுடைய சங்கீதம் மேலும் மேலும் பிரமாதமாகிக் கொண்டுதான் வந்தது. ஆனால், என்னுடைய பழகிய காதுக்கு அதில் என்னவெல்லாமோ, அதிசயமான மாறுதல்கள் தோன்றின. ஒரு கச்சேரியைப் போல் இன்னொரு கச்சேரி இராது. ஒருநாள் அவளுடைய பாட்டில் குதூகலம் பொங்கித் ததும்பும். காலை வேளையில் உதய சூரியனை வரவேற்கும் புள்ளினங்களின் குரலிலுள்ள ஆனந்தமும், பௌர்ணமியன்று வெண்ணிலவைக் கண்டு பொங்கும் கடலின் ஆரவார உற்சாகமும் தொனிக்கும். இன்னொரு நாள் கச்சேரியிலோ, அவளுடைய பாட்டைக் கேட்கும் போது உள்ளமானது காரணந் தெரியாத சோகத்தை அடையும். தாயைப் பிரிந்த குழந்தையின் தீனக்குரலையும், பகவானைப் பிரிந்த பக்தனின் தாபக் கதறலையும் அவளுடைய பாட்டிலே கேட்பது போல் இருக்கும். அவள் வீணை வாசிக்கும்போது கையிலுள்ள வாத்தியத்தின் கம்பிகளைத்தான் மீட்டுகிறாளா, அல்லது கேட்பவர்களின் இருதய வீணையின் கம்பியைத்தான் மீட்டுகிறாளா? என்ற சந்தேகம் தோன்றும்.

முதலில், இதெல்லாம் எனக்கு விந்தையாயிருந்தது; விளங்காத மர்மமாயிருந்தது. அப்புறம் அப்புறம், ஒருவாறு விஷயம் புரிந்தது.

அன்பு, காதல் என்று சொல்கிறார்களே, ஸ்வாமி, ரொம்ப அதிசயமான காரியம். காதலில் மனிதர்கள் அடைவது என்ன? துன்பமா? இன்பமா? சொல்ல முடியாத துயரமா? அளவிட முடியாத ஆனந்தமா?

பவானியையும் தும்பை வனம் முதலியாரையும் பற்றி நான் கேள்விப்பட்ட விஷயங்கள் இம்மாதிரி சந்தேகங்களையெல்லாம் உண்டாக்கின. அவர்கள் சந்தோஷமாயிருந்த காலம் அதிகமா, சண்டை போட்டுக் கொண்டு வேதனையில் முழுகியிருந்த நாட்கள் அதிகமா என்று சொல்ல முடியாமலிருந்தது. 'இந்தப் பெண்ணுக்கு ஏதோ பிடித்திருக்கிறது தம்பி!' என்று அவள் தாயார் சொன்னாள். சில சமயம் பவானி எல்லார் மேலும் எரிந்து எரிந்து விழுவாளாம். சின்னச் சின்னக் காரியத்துக்கெல்லாம் ரகளை செய்வாளாம். கூச்சல் போடுவாளாம். முகத்தைக் கூட அலம்பிக் கொள்ளாமல் பிரமஹத்தி பிடித்தது போல் உட்கார்ந்திருப்பாளாம். இன்னும் சில சமயம் இதற்கு நேர்மாறாக இருக்குமாம். பிரமாதமாக அலங்காரம் செய்து கொள்வாளாம். ஒரே சிரிப்பும் குதூகலமுமாயிருப்பாளாம். இதையெல்லாம் அறிந்த போது, பவானியின் சங்கீதத்தில் தொனித்த மாறுதல்களின் காரணத்தை ஒருவாறு அறிந்தேன். 'யாராவது மந்திரவாதியை அழைத்து வந்து பார்க்கச் சொல்லலாமா' என்று பவானியின் தாயார் கேட்டதற்கு 'மந்திரமும் வேண்டாம் மாயமும் வேண்டாம், நாளடைவில் எல்லாம் தானே சரியாய்ப் போய்விடும்' என்று சொல்லிவிட்டு வந்தேன்.

4

இரண்டு மூன்று வருஷங்கள் சென்றன. இந்தக் காலத்தில் தும்பை வனம் முதலியாருடைய சொந்தக் காரியங்கள் ரொம்பவும் சீர்கெட்டு வந்தன. அவருக்கு விரோதிகள் அதிகமாகி வந்தார்கள். பவானி விஷயத்தில் எத்தனையோ பணக்காரப் பிரபுக்களுக்கு அபிப்பிராயம் இருந்திருக்குமென்பது எதிர்பார்க்கக் கூடியதுதானே? அவர்களெல்லாம் கோபாலசாமி முதலியாரைத் தீர்த்துக் கட்டி விடுவதென்று கங்கணம் கட்டிக் கொண்டார்கள். முதலில் ஒரு கோவில் பஞ்சாயத்து சம்பந்தமாகக் கேஸ் ஏற்பட்டது. அந்தக் கோவில் தர்மகர்த்தாக்கள் மூன்று பேரில் கோபாலசாமி முதலியார் ஒருவர். மற்ற இரண்டு பேரும் இவரைத் தள்ளிவிட்டு காரியங்களை நடத்தியதுடன், கோவில் உற்சவத்தின் போது இவரை அவமரியாதையாக நடத்தி விட்டார்கள். கோபாலசாமிக்குக் கோபம் வந்து கேஸ் போட்டார். இதிலிருந்து சிவில் கேஸுகளும் கிரிமினல் கேஸுகளும் முளைத்துக் கொண்டே இருந்தன. அக்கம் பக்கத்து மிராசுதார்கள், பிரபுக்கள் எல்லாரும் கோபாலசாமியைத் தொலைத்துவிட்டு மறுகாரியம் பார்ப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டு, பிடிவாதமாக வேலை செய்தார்கள். கோபாலசாமிக்கு நாளுக்கு நாள் கடன் முற்றிக் கொண்டு வந்தது. வருஷா வருஷம் நிலத்தை விற்றுக் கொண்டு வந்தார்.

ஒரு தடவை தும்பைவனம் கோவில் உற்சவத்துக்கு நான் போயிருந்த சமயத்தில், முதலியார் வீட்டுக்குப் போயிருந்தேன். அவர் சம்சாரம் ஐயம்பேட்டைக்குப் பக்கத்து ஊர்ப் பெண்தான். அந்த அம்மாளை எனக்கு நன்றாகத் தெரியும். பாவம்! அவள் ஒரே துக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். "கந்தப்பா! இவ்வளவும் அந்தப் பூந்தோட்டத்து மூதேவியால் தான் வந்தது!" என்று சொல்லி அழுதாள். எனக்கு மனது ரொம்பவும் கஷ்டப்பட்டது. இந்த மாதிரி ஒரு ஜாதியை நம் தேசத்தில் எதற்காக ஏற்படுத்தினார்கள் என்று எண்ணி மனம் நொந்தேன். அடுத்த தடவை திருவாரூருக்குப் போகும் போது என் கோபத்தை பவானியின் மேல் காட்டி விடுவதென்று தீர்மானித்துக் கொண்டேன். ஆனால், அங்கே போய்ப் பவானியின் நிலையைப் பார்த்தபோது, என் கோபமெல்லாம் பறந்து போய் விட்டது. சோகமே உருவெடுத்தவள் போலிருந்தாள். "என்னால் இப்படியெல்லாம் கஷ்டம் அவருக்கு வந்து விட்டதே!" என்று சொல்லிச் சொல்லி உருகினாள். அவளுக்கு சமாதானமாக நான், "நீ என்ன அம்மா செய்வாய்? உன் பேரில் என்ன தப்பு?" என்று திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது.

"அண்ணே! அவரை அவ்விடத்து நிலம் வீடு வாசல் எல்லாவற்றுக்கும் தலை முழுகி விட்டு இங்கேயே வந்து விடும்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். கேட்க மாட்டேனென்கிறார். நீயாவது சொல்லேன்; தினம் பொழுது விடிந்தால் கோர்ட்டுக்குப் போவதே வேலையாகி விட்டதே, என்னத்திற்காக இந்த மாதிரி வம்புக்கும் தும்புக்கும் போக வேண்டும்? நாலு குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு வேண்டிய சொத்து இங்கே இருக்கிறதே? இதையெல்லாம் யார் கட்டிக் கொண்டு போகப் போகிறார்கள்?" என்றாள்.

"அது நடக்கிற காரியமா தங்கச்சி! அவர் ஆண் பிள்ளை இல்லையா? ரோஸம் இராதா? வீண் வம்புக்கு இழுக்கிறவர்களுக்குப் பயந்து கொண்டு ஊரை விட்டு வந்து விடுவாரா? அதுவும் இங்கே? அவர் சம்மதித்தாலும் சம்சாரம் குழந்தைகள் இருக்கிறார்களே?" என்றேன்.

பிறகு பவானி, அவருடைய சம்சாரத்தையும் குழந்தைகளையும் பற்றிக் கேட்டுக் கொண்டே இருந்தாள்.

பவானியின் தாயாரிடம் பேசினேன். "ஏன் அக்கா என்னத்துக்காக நமக்கு இந்தக் கெட்டப் பெயர். பவானியினாலே ஒரு பெரிய குடும்பம் அழிந்து போகிறது என்று இந்த ஜில்லா முழுவதும் பேசிக் கொள்கிறார்களே?" என்றேன்.

"யார் என்னத்தையாவது சொல்லட்டும் தம்பி; அவர்கள் இரண்டு பேரையும் பிரிப்பது மகாபாவம். பிரித்தால் என் மகள் உயிரை வைத்துக் கொண்டிருக்க மாட்டாள்" என்றாள்.

"இப்படி எத்தனையோ பேர் சொல்லியிருக்கிறார்கள் அக்கா! நாம் பார்த்ததில்லையா!" என்றேன் நான்.

"பவானியின் சமாச்சாரம் உனக்குத் தெரியாது தம்பி" என்றாள்.

பிறகு, "இப்பொழுது அவர்களுக்குள் எப்படியிருக்கிறது? முன்னேயெல்லாம் போல் கோபதாபம் உண்டா?" என்று கேட்டேன்.

பவானியின் குணமே அடியோடு மாறிவிட்டதென்றும் அவள் சாந்தமே உருக் கொண்டவளாகி விட்டாள் என்றும் தெரிந்தது. இதற்கு நேர்மாறாகக் கோபாலசாமி முதலியாருக்குக் கோபதாபங்கள் அதிகமாகி வந்தனவாம். அதோடு, அடிக்கடி இல்லாத பொல்லாத சந்தேகங்கள் அவருக்குத் தோன்றி வந்தனவாம். "இது என்ன மனித சுபாவம்?" என்று எனக்கு ஆச்சரியமாயிருந்தது. பவானி எதற்காக அவரிடம் அன்பு வைக்க வேண்டும்? நிர்ப்பந்தம், கட்டாயம் ஏதாவது உண்டா? தன் மனமொப்பி அவரையே தெய்வம் என்று எண்ணி இருப்பவள் மேல் ஒரு மனிதன் சந்தேகப்படுவதென்றால்? எனக்கு ரொம்பக் கோபமாயும் வெறுப்பாயுமிருந்தது. நமக்கென்னவென்று பேசாமல் போய் விட்டேன்.

இதற்கப்புறம் ஏறக்குறைய ஒரு வருஷ காலம் ஏதேதோ அசௌகரியங்களினால் நான் திருவாரூர்ப் பக்கம் போகவில்லை. பவானியின் தாயார் இறந்து போனாள் என்று தெரிந்ததும், துக்கம் விசாரிப்பதற்குப் போயிருந்தேன். அதற்கப்புறம் அங்கே போவதையே நிறுத்தி விட்டேன். "நமக்கு என்னத்திற்கு வம்பு?" என்ற எண்ணந்தான் காரணம்.

தும்பைவனம் முதலியாரின் காரியங்கள் வரவரச் சீர்கெட்டு வருகின்றன என்று மட்டும் அடிக்கடி காதில் விழுந்து கொண்டிருந்தது. சென்னைப் பட்டிணத்தில் ஹைகோர்ட்டில் அவருக்கு ஒரு பெரிய கேஸ் நடந்து வந்தது. அதில் தோற்றுப் போனால், ஆள் திவால்தான் என்று சொன்னார்கள்.

இப்படியிருக்கும் போது தான் ஒருநாள் அந்தப் பயங்கரமான ரயில் விபத்தைப் பற்றி செய்தி வந்தது. விழுப்புரத்துக்கும், கூடலூருக்கும் நடுவில் ரயில் கவிழ்ந்துவிட்டது. மூன்று வண்டிகள் அடியோடு நாசமாயின. நாற்பது ஐம்பது பேருக்கு மேல் செத்துப் போனார்கள் என்று தெரிந்தது. அந்தக் காலத்திலிருந்தே எனக்குப் பத்திரிகை படிப்பதில் ஆசை உண்டு. அதுவும் இந்தப் பயங்கர ரயில் விபத்து நடந்த சமயத்தில் அதைப் பற்றிய விவரங்களைப் படிப்பதற்காக, வெகு ஆவலுடன் சுதேச மித்திரன் பத்திரிகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். விபத்து நடந்த மறுநாள், பத்திரிகையில் இறந்து போனவர்களின் பெயர் விவர ஜாபிதா வந்திருந்தது. அதில் தும்பைவனம் முதலியாரின் பெயரைப் பார்த்ததும், எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ள வேண்டியதுதான். உடனே எனக்குப் பூந்தோட்டம் பவானியின் கதிதான் ஞாபகத்திற்கு வந்தது. ஐயோ, அந்தப் பெண் ஒரு வருஷத்திற்குள்ளே தாயாரையும் இழந்து, ஆசை நாயகனையும் இழந்து, அநாதையாய்ப் போய் விட்டாளே? இனிமேல், அவளுடைய வாழ்க்கை எப்படியாகுமோ?

கோபாலசாமி முதலியாரின் சம்சாரம், குழந்தைகளின் ஞாபகமும் வந்தது. ஐயோ பாவம்! அவர்களுடைய சொத்தெல்லாம் கோர்ட்டு விவகாரங்களில் தொலைந்து போயிருக்கும். சாப்பாட்டுக்கே கஷ்டப்படும்படியான நிலைமை வந்து விடுமோ என்னமோ?

ஒரு வாரத்துக்கெல்லாம் மன்னார்குடிக்குப் போக வேண்டியிருந்தது. அங்கிருந்து அப்படியே தும்பை வனத்துக்குப் போனேன். முதலியாரின் மனைவி பட்டத் துக்கத்தையும் அழுத அழுகையையும் பார்க்கச் சகிக்கவில்லை. தகப்பனாரை இழந்த குழந்தைகளைப் பார்க்கவும் பரிதாபமாய்த்தானிருந்தது. நல்ல வேளையாக ஊரிலிருந்து அவர்களுடைய தாத்தாவும் பாட்டியும் வந்திருந்தார்கள்! குழந்தைகளை அவர்கள் பார்த்துக் கொண்டதுடன், பெண்ணுக்கும் தேறுதல் கூறினார்கள். "என்ன செய்வதடி, அம்மா? உன் தலையெழுத்து அப்படியிருந்தது. குழந்தைகளுக்காக நீ உயிரை வைத்துக் கொண்டிருக்க வேண்டுமோ, இல்லையோ?" என்று சொல்லித் தேற்றி, பட்டினி கிடக்காமல் அரை வயிறாவது சாப்பிடும்படியும் பலவந்தப்படுத்தினார்கள். நானும் எனக்குத் தெரிந்தவரையில் ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

இவர்களைப் பார்த்த பிறகு பவானியையும் அவசியம் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆவல் உண்டாயிற்று. நேரே திருவாரூருக்குப் போனேன். அவளுடைய வீட்டுக்குப் போகும்போது, என் மனம் ரொம்பவும் வேதனைப்பட்டது. ஒரே துக்கசாகரத்தில் மூழ்கியிருப்பாளே, எப்படி அவளைப் பார்த்துப் பேசுகிறது, எப்படி ஆறுதல் சொல்கிறது என்று என் மனம் தவித்தது. ஆனால் வீட்டுக்குள் போய் பவானியைப் பார்த்ததும், ஒருவாறு கவலை நீங்கிற்று. ஏனெனில், நான் பயத்துடன் எதிர்பார்த்தபடி அவள் கண்ணீருங் கம்பலையுமாய்ப் படுத்துக் கொண்டிருக்கவில்லை. என்னைக் கண்டதும் அலறி அழவில்லை. சாதாரணமாய்த்தான் இருந்தாள். "வாருங்க அண்ணே!" என்று ஆர்வத்துடன் என்னை அழைத்தாள்.

கவலை நீங்கிற்று என்றா சொன்னேன்? ஆமாம்; கவலை நீங்கிற்று என்பது தான் உண்மை. ஆனால் மனத்திற்குள் பெரும் ஏமாற்றமும் உண்டாயிற்று. கடைசியில் 'சாதிக்குணம்' என்று உலகம் சொல்வது சரியாய்ப் போய் விட்டதல்லவா? தாலி கட்டிய மனைவி அங்கே படுகிற துக்கத்துக்கும், இங்கே இவள் சாதாரணமாய் வந்தவர்களை 'வா' என்று அழைத்துக் கொண்டிருப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்?

அதையெல்லாம் நான் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. என்னுடைய பொறுப்பைக் கழித்துக் கொள்வதற்காக, ஏதோ ஆறுதல் வார்த்தை கூறிவிட்டுக் கிளம்பினேன். கிளம்பும் போது பவானி "அண்ணே! நவராத்திரி வெள்ளிக்கிழமையன்று, அம்மன் சந்நிதியில் கச்சேரி செய்யப் போகிறேன், நீங்கள் கட்டாயம் வரவேணும்" என்றாள். எனக்குச் சுருக்கென்று தைத்தது. கச்சேரியா இதற்குள்ளேயா?

"இந்த வருஷம் கச்சேரி செய்ய வேண்டியதுதானா, தங்கச்சி! அடுத்த வருஷம் பார்த்துக் கொள்ளக்கூடாதா?" என்றேன்.

"இல்லே அண்ணே! கச்சேரி செய்வதாக முன்னமே ஒப்புக் கொண்டு விட்டேன். உற்சவப் பத்திரிகையிலே கூடப் போட்டு விட்டார்கள். அதைமாற்ற இஷ்டமில்லை" என்றாள்.

எனக்கு அப்போது அவள் மீதும், கோவில் தர்மகர்த்தாக்கள் மீதும் கூடக் கோபம் வந்தது.

"சௌகரியப்பட்டால் வருகிறேன், தங்கச்சி" என்றேன்.

"அப்படிச் சொல்லக் கூடாது அண்ணே! ஒரு வேளை இது தான் நான் செய்கிற கடைசிக் கச்சேரியாயிருக்கும். நீங்கள் கட்டாயம் வர வேண்டும்" என்றாள்.

இதைக் கேட்டதும் என் மனம் உருகிவிட்டது. "ஏனம்மா! அப்படிச் சொல்கிறாய்? எது எப்படியானாலும் உன் சங்கீதம் மட்டும் வளர வேண்டும்" என்றேன். பிறகு நவராத்திரி வெள்ளிக்கிழமைக்கு அவசியம் வருவதாகச் சொல்லிவிட்டு, விடைபெற்றுக் கொண்டு சென்றேன்.

5

பவானிக்கு வாக்குக் கொடுத்தபடியே நவராத்திரி வெள்ளிக்கிழமை அன்று திருவாரூருக்குப் போனேன். அவள் வீட்டுக்கு நான் போனபோது கச்சேரிக்கு அவள் கிளம்புகிற சமயமாயிருந்தது. பவானியைப் பார்த்ததும் நான் பிரமித்துப் போய்விட்டேன். அவ்வளவு பிரமாதமாக ஆடை ஆபரண அலங்காரங்களைச் செய்து கொண்டிருந்தாள். கல்யாண மண்டபத்துக்குப் போகும் பெண் மாதிரி தோன்றினாள். இயற்கையிலேயே நல்ல ரூபவதி. இப்போது பார்த்தால், தேவலோகத்திலிருந்து ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை ஆகியவர்களில் ஒருத்தி இறங்கிப் பூலோகத்துக்கு வந்து விட்ட மாதிரியே இருந்தது. மனதிற்குள் எனக்கு ஏற்பட்ட வேதனையைச் சொல்லி முடியாது.

என்னைப் பார்த்ததும் பவானி புன்னகையுடன், "அண்ணே! வந்து விட்டீர்களா" என்றாள்.

எனக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. இருந்தாலும் "ஆமாம்; வந்துவிட்டேன் தங்கச்சி!" என்று சாவதானமாகப் பதில் சொன்னேன்.

"அண்ணே! இன்று காலையிலிருந்தே உங்களை நான் எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். போனால் போகட்டும். கச்சேரி முடிந்ததும் நீங்கள் நேரே இங்கு வரவேணும், ரொம்ப முக்கியமான காரியம்; தவறக் கூடாது" என்றாள்.

"ஆகட்டும் தங்கச்சி!" என்றேன்.

"உங்கள் தலைமேல் ஆணை! கட்டாயம் வரவேணும்" என்று சொல்லிவிட்டுப் பவானி வண்டியில் போய் ஏறிக் கொண்டாள்.

பவானி இந்த மாதிரிப் பேசி நான் கேட்டதில்லை. 'என்னமோ விஷயம் இருக்கிறது. எல்லாம் இராத்திரி தெரிந்து போகிறது' என்று எண்ணிக் கொண்டு கோவிலுக்குப் போனேன்.

என் வாழ்நாளில் நானும் எத்தனையோ சங்கீதக் கச்சேரிகள் கேட்டிருக்கிறேன். பிரபல வித்துவான்கள், பாடகிகள் எல்லாருடைய பாட்டையும் கேட்டிருக்கிறேன். ஆனால், அந்த நவராத்திரி வெள்ளிக்கிழமையன்று பவானி செய்த கச்சேரியைப் போல் கேட்டதும் கிடையாது, கேள்விப்பட்டதும் இல்லை. பவானியின் குரல் அன்று தேனாக இருந்தது. விரல் வீணையின் தந்தியை மீட்டிய போது அமுதவாரி பெருகிற்று. இதையெல்லாம் விட அன்று அவளுடைய பாட்டில் இன்னும் ஏதோ ஒன்று இருந்தது! அது கேட்பவர்களின் இருதயத்தில் ஒரு அதிசயமான இன்ப வேதனையை உண்டு பண்ணிற்று. சபையில் அன்று ஒரே நிசப்தம். மூச்சு விடும் சப்தம் கூடக் கேட்கவில்லை. 'ஆஹா', 'பேஷ்', 'சபாஷ்' முதலிய குரல்களும் இல்லை. எல்லாரும் மந்திரத்தால் கண்டுண்டது போல், அந்தத் தெய்வீக சங்கீதத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில் பவானி 'பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து' என்ற திருவாசகத்தைக் காம்போதி ராகத்தில் பாடியபோது நான் கர்ப்பக்கிரஹத்துக் குள்ளிருந்த அம்மன் விக்ரஹத்தை நோக்கினேன். இந்தப் பாட்டைக் கேட்டுவிட்டு, அந்தக் கல் விக்ரஹம் உருகிக் கரைந்து போகவில்லையே என்று எனக்கு ஆச்சரியமளித்தது. ஆனால் ஒரு தடவை விக்ரஹத்தின் கண்களில் நீர்த்துளிகள் நின்றது போல் தோன்றியது. இது என்ன பிரமை என்று என் கண்களைத் துடைத்துக் கொண்டு, சுற்றுமுற்றும் ஜனங்களைப் பார்த்தேன். சபை ஓரமாக நாலாபுரத்திலும் ஜனங்கள் சுவர் வைத்தாற் போல் நின்று கொண்டிருந்தார்கள். அந்தக் கும்பலின் பின் வரிசையில் ஒரு மூலையில் நின்ற ஒரு முகத்தின் மேல் தற்செயலாக என் பார்வை விழுந்தது. அந்த மனுஷர் தலையில் பாதி நெற்றியை மறைத்த பெரிய முண்டாசுக் கட்டிக் கொண்டிருந்தார். கண்வலி வந்தவர்கள் போட்டுக் கொள்வது போன்ற பெரிய பச்சைக் கண்ணாடி அவர் கண்களை மறைத்தது. எதனாலேயோ திரும்பத் திரும்ப அந்த முகத்தின் மீது என் பார்வையும் கவனமும் சென்றன. அதற்குப் பிறகு பாட்டில் கவனம் குன்றியது. "பார்த்த முகம் மாதிரியிருக்கிறதே, யாராயிருக்கும்?" என்று அடிக்கடி மனது யோசித்தது. சட்டென்று உண்மை தெரிந்தது. என் உடம்பெல்லாம் பதறியது. ஏதோ விபரீதம் நேரிடப் போகிறது என்று மனதிற்குள் ஏதோ சொல்லிற்று. நானும் கூட்டத்தின் ஓரத்தில் தான் இருந்தேனாதலால், மெதுவாக எழுந்திருந்து நின்று கொண்டிருந்த ஜனங்களின் பின்புறமாக சென்று, அந்தப் பச்சைக் கண்ணாடிக்காரரின் சமீபத்தில் போய் நின்றேன்.

கச்சேரி முடிந்தது! எல்லோருக்கும் முன்னால் அந்த மனுஷர் விரைவாக அவ்விடமிருந்து கிளம்பிச் சென்றார். நானும் பின்னோடு போனேன். கோவிலுக்கு வெளியில் கொஞ்சம் ஒதுக்குப் புறமான இடத்துக்கு வந்ததும், நான் அவருடைய கையைப் பிடித்துக் கொண்டு, "என்ன தம்பி! இது என்ன வேஷம்?" என்று கேட்டேன்.

கையை உதறிய கோபாலசாமி முதலியார் என்னைப் பார்த்ததும், "யார், கந்தப்பனா?" என்றார். பிறகு அவர் "ஆமாம் கந்தப்பா! ஆமாம் வேஷந்தான். இந்த உலகமே வேஷந்தான். பார்த்தாயல்லவா உன் தங்கச்சி போட்ட வேஷத்தை? முன்னே போட்டது ஒரு வேஷம்" என்று மனங் கசந்து பேசிக் கொண்டே போனார்.

"இல்லை தம்பி! நீங்கள் எல்லா விஷயமும் தெரிந்து கொள்ளவில்லை! பவானி இன்றைக்குச் செய்த கச்சேரிதான் கடைசிக் கச்சேரி என்று சொல்லிற்று. அதனால் தான் இவ்வளவு ஆவேசமாய்ப் பாடிற்று" என்று சமாதானம் சொன்னேன்.

"கந்தப்பா யாரிடம் காது குத்துகிறாய். என்னைப் பச்சைக் குழந்தை என்று நினைத்துக் கொண்டாயா? பாட்டாம் பாட்டு! கச்சேரியாம் கச்சேரி! மனது வந்ததே! கடவுள் என்னுடைய கண்ணைத் திறப்பதற்காகவே, இந்த ரயில் விபத்தை உண்டு பண்ணினார்!"

பேச்சை மாற்றுவதற்காக, நான் "ஆமாம் தம்பி! கடவுள்தான் உங்களை பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்தார். அந்த அதிசயத்தைப் பற்றிச் சொல்லுங்கள்? பத்திரிகையில் ஏன் அப்படித் தவறாகச் செய்தி வந்தது? நீங்கள் எப்படித் தப்பிப் பிழைத்தீர்கள்? இத்தனை நாள் எங்கே இருந்தீர்கள்!" என்று கேள்விகளை அடுக்கினேன்.

"அதையெல்லாம் அப்புறம் விவரமாகச் சொல்கிறேன் கந்தப்பா! பெரிய கதை எழுதலாம். ஏதோ செத்துப் போனவன் தான், கடவுள் அருளால் பிழைத்தேன். பத்து நாள் சுய நினைவு இல்லாமல் ஆஸ்பத்திரியில் கிடந்தேனாம். அப்புறம் பழைய பத்திரிகைகளைப் பார்த்துச் செத்துப் போனவர்களின் ஜாபிதாவில் என் பெயரும் இருந்ததைத் தெரிந்து கொண்டேன். யாருடைய நிலைமை எப்படியெப்படி, என்னோடு உடன் கட்டை ஏறுவேன் என்று சொன்னவர்கள் எல்லாம் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டுமென்று தோன்றிற்று. அதற்காக, இந்த வேஷத்துடன் வந்தேன். இப்போது பார்த்தாகிவிட்டது!" என்று மிகவும் வெறுப்புடன் சொன்னார்.

பேசிக் கொண்டே நாங்கள் தெருவோடு போய்க் கொண்டிருந்தோம். "அதெல்லாம் இருக்கட்டும் தம்பி! இப்போது எங்கே போகிற உத்தேசம்" என்று கேட்டேன்.

"அங்கேதான் போகிறேன். அவளை அடித்து விடுவேன், கொன்றுவிடுவேன் என்று நினைக்காதே! கச்சேரி பேஷாயிருந்தது என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போய்விடுவேன்; அவ்வளவுதான். நீயும் வேணுமானால் பின்னோடு வந்து பார்" என்றார் கோபாலசாமி முதலியார்.

இரண்டு பேருமாகவே போய்ச் சேர்ந்தோம். பவானி குதிரை வண்டியில் முன்னாலேயே வீட்டுக்கு வந்து விட்டாள். அவளைத் தனியாக முதலில் பார்த்துத் தயார் செய்ய வேண்டுமென்று எண்ணினேன். அதற்கு கோபாலசாமி முதலியார் இடங்கொடுக்கவில்லை. என்னைப் பின்னால் தள்ளிக் கொண்டு, அறைக்குள் அவர் முதலில் போனார்! நாங்கள் போகும் போது பவானி ஜலமோ, பாலோ ஒரு கிண்ணத்திலிருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். பச்சைக் கண்ணாடியும் பெரிய முண்டாசுமாக உள்ளே வந்தவரைப் பார்த்துவிட்டுப் பவானி ஒரு நிமிஷம் திகைத்து நின்றாள். முதலியார் கண்ணாடியையும் முண்டாசையும் எடுத்ததும் அவளுடைய முகத்தில் ஏற்பட்ட பயங்கர மாறுதலைப் பார்த்தேன். என் இருதயம் அப்படியே நின்று விட்டது.

எத்தனை நேரம் இப்படி மூன்று பேரும் ஸ்தம்பித்துப் போயிருந்தோம் என்று தெரியாது. பவானி திடீரென்று சுருண்டு போய்க் கீழே விழுந்த போதுதான், எனக்குப் பிரக்ஞை வந்தது. எனக்கு முன்னாலேயே கோபாலசாமி ஓடி அவளைத் தூக்கித் தமது மடியில் வைத்துக் கொண்டார். சற்று நேரம் நான் அங்குமிங்கும் பார்த்து விழித்துக் கொண்டு நின்றேன். பிறகு டாக்டரை அழைத்து வருவதற்காக ஓடினேன். டாக்டருடன் நான் திரும்பி வந்தபோது சந்தேகத்துக்கே இடமிருக்கவில்லை. பவானியின் உயிர் போய் அரைமணி நேரத்துக்கு மேலாகி விட்டது.

6

கந்தப்பப் பிள்ளை மேற்கண்ட விதம் கூறி கதையை நிறுத்தினார். அப்பொழுதுதான் ஒவ்வொரு சம்பவமும் நடப்பது போல் அவ்வளவு தெளிவாகவும் உணர்ச்சியுடனும் அவர் சொல்லிக் கொண்டு வந்தபடியால், என் உள்ளம் முன்னைக் காட்டிலும் இளகிக் கனிந்து போயிருந்தது. சற்று நேரம் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் மௌனமாயிருந்தேன்.

எங்கள் சம்பாஷணை எப்படி ஆரம்பமாயிற்று என்பது ஞாபகம் வந்தது.

"திடீரென்று தோன்றிய கோபாலசாமி முதலியாரை அவருடைய ஆவி என்பதாக நினைத்து பவானி பயந்து போய் விட்டாளாக்கும். அப்புறம் நீங்கள் என்ன செய்தீர்கள்" என்று கேட்டேன்.

"அப்புறம் செய்வதற்கு என்ன இருக்கிறது? டாக்டரிடம் 'எதிர்பாராத ஷாக்கினால் மரணம்' என்று சர்டிபிகேட் எழுதி வாங்கிக் கொண்டேன். கோபாலசாமி முதலியாரும் நானுமாகச் செய்ய வேண்டிய சடங்குகளையெல்லாம் செய்து முடித்தோம். பாவம்! அந்த மனுஷர் பட்ட துக்கத்துக்கு அளவே இல்லை."

"பவானியின் மனம் களங்கமற்றது என்று அப்புறமாவது முதலியாருக்கு தெரிந்ததா? அவரிடம் அவள் வைத்திருந்த அன்பின் பெருமையை அறிந்து கொண்டாரா?" என்று கேட்டேன்.

"அது எப்படித் தெரியும்? அவருக்கு ஒரு பக்கம் வருத்தமிருந்தாலும் இன்னொரு பக்கத்தில் பவானி தன்னுடைய துரோகம் தெரிந்து போய் விட்டதே என்ற பயங்கரத்தினால் செத்துப் போய் விட்டாள் என்று எண்ணினார். ஆனால் கொஞ்ச நாள் கழித்து வெளியான விஷயம் அவருக்குப் பவானியின் மேல் இருந்த அவநம்பிக்கையை ஒருவாறு போக்கிற்று. பவானி தன்னுடைய சொத்தையெல்லாம் கோபாலசாமி முதலியாரின் குழந்தைகளுக்கு எழுதி வைத்திருந்தாள். உயில் வக்கீலிடமிருந்தது."

வியப்புடன் "ஓஹோ! அப்படியா" என்றேன்.

இன்னமும் சொல்வதற்கு விஷயம் பாக்கியிருக்கிறது என்று கந்தப்பப் பிள்ளை முகபாவத்திலிருந்து தெரிந்தது.

"எல்லாம் சரிதான். டாக்டரிடம் எதற்காகச் சர்டிபிகேட் எழுதி வாங்கினீர்கள்?" என்று கேட்டேன்.

"இந்த மாதிரித் திடீர் மரணங்களில் போலீஸ் தொந்திரவு ஏற்படுமல்லவா? அதற்காகத்தான். கோபாலசாமி முதலியாருக்கே நான் உண்மையைச் சொல்லவில்லை. டாக்டருக்கும், எனக்கும் மட்டுந்தான் தெரியும்!" என்றார்.

ஏதோ விஷயம் பாக்கி இருக்கிறதென்று நினைத்தேன். "உண்மைக் காரணந்தான் என்ன?" என்று கேட்டேன்.

"நடந்து இருபத்தைந்து வருஷம் ஆகிறது. இனிமேல் சொன்னால் என்ன? - பவானி மயங்கி விழுந்ததும் முதலியாருக்குப் பின்னால் நானும் ஓடினேனல்லவா? பக்கத்தில் இருந்த சிறு முக்காலிப் பலகையின் மேல் பவானி, பால் குடித்த கிண்ணத்துக்குப் பக்கத்தில் ஒரு கடிதம் கிடந்தது. அதன் மேல் என் பெயர் எழுதியிருக்கவே, சட்டென்று எடுத்து, முதலியாருக்குத் தெரியாமல் மடித்து வைத்துக் கொண்டேன். டாக்டரைக் கூப்பிடப் போனபோது தெரு லாந்தர் வெளிச்சத்தில் படித்தேன். அந்தக் கடிதம் இதுதான்" என்று கூறி, கந்தப்பப் பிள்ளை மடியிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்துக் கொடுத்தார். அது வெகுநாட்பட்ட பழுதடைந்த காகிதம். அதில் மங்கிப் போன முத்தான எழுத்தில் பின் வருமாறு எழுதியிருந்தது.

'அன்புள்ள கந்தப்ப அண்ணனுக்கு தங்கச்சி பவானி எழுதிக் கொண்டது. என் பிராண நாயகரைப் பிரிந்து நான் உயிர் வாழ விரும்பவில்லை. இன்றைக்கு நான் செய்யும் கச்சேரிதான் கடைசிக் கச்சேரி. அவர் எனக்கு அன்புடன் வாங்கிக் கொடுத்த வைர மோதிரத்திலிருந்த வைரங்களை எடுத்துப் பொடி பண்ணி வைத்திருக்கிறேன். கச்சேரியிலிருந்து வந்ததும் சாப்பிட்டு விடுவேன். என் சொத்தில் பாதியைக் கோவிலுக்கும், பாதியை அவருடைய குழந்தைகளுக்கும் எழுதி வைத்திருக்கிறேன். உயில் வக்கீல் ... ஐயரிடம் இருக்கிறது. நான் செய்வது பிசகாயிருந்தால் என்னை மன்னிக்கவும். அவரைப் பிரிந்து என்னால் உயிர் வாழ முடியாது.
இப்படிக்கு
பவானி'

இந்தக் கடிதத்தை இரண்டு மூன்று தடவை படித்துவிட்டு, "இதை ஏன் கோபாலசாமி முதலியாரிடம் நீர் சொல்லவில்லை?" என்று கேட்டேன்.

"சொன்னால் என்ன லாபம்? ஏற்கனவே ரொம்பத் துக்கப்பட்டார். இது தெரிந்தால் அவரும் உயிரை விட்டாலும் விட்டிருப்பார். அல்லது அவருடைய மனைவி மக்கள் மேல் பாசமில்லாமல் போயிருக்கலாம். ஒரு குடும்பத்தை அநியாயமாகக் கெடுப்பானேன் என்று தான் சொல்லவில்லை.

சற்றுப் பொறுத்து "நான் போய் வருகிறேன், ஸ்வாமி!" என்று கந்தப்பப் பிள்ளை எழுந்திருந்தார். கடிதத்தை அவரிடம் திருப்பிக் கொடுத்தேன்.

வாசற் கதவைத் திறந்து கொண்டு அவர் வெளியே சென்றார். ஜில்லென்று காற்று அடித்தது. இருண்ட வானத்திலிருந்து சிறு தூற்றல் போட்டுக் கொண்டிருந்தது.
---------------

49. தூக்குத் தண்டனை

1

அமாவாசை இரவு. திவான் பகதூர் ஜட்ஜ் அஸ்டோ த்தரமய்யங்கார் சுகமான பஞ்சு மெத்தைப் படுக்கையில் படுத்து புரண்டு கொண்டிருந்தார். என்ன புரண்டாலும் தூக்கம் வருகிற வழியாயில்லை. தலைப் பக்கத்துத் தலைகாணியைக் கால் புறத்திலும், கால் புறத்துத் தலைகாணியைத் தலைப்புறத்திலும் வைத்துக் கொண்டு பார்த்தார். அப்படியும் தூக்கம் வரவில்லை

கடிகாரத்தில் மணி அடிக்கத் தொடங்கிற்று. "ஒன்று, இரண்டு, மூன்று..." என்று எண்ணிக் கொண்டே வந்தார். பன்னிரண்டு மணி அடித்து ஓய்ந்தது. "இனிமேல் கட்டாயம் தூங்க வேண்டியதுதான்" என்று ஜட்ஜ் அய்யங்கார் திடசங்கல்பம் செய்து கொண்டு கண்களை இறுக மூடினார். அப்போது அவருடைய மனக் கண்ணின் முன்பாக ஒரு பயங்கரக் கோரக் காட்சி தென்பட்டது.


முதலில் எங்கேயோ வெகு தூரத்தில் உள்ளது போல் அந்தக் காட்சி மங்கலாய்த் தெரிந்தது. தூக்கு மேடையில் தூக்கு மரத்தில் ஒரு உருவம் தொங்கி இலேசாகக் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. சட்டென்று அந்தக் காட்சி, தூக்கு மரம், அதில் தொங்கிய உருவம் எல்லாம் வெகு சமீபத்தில் ஸ்பஷ்டமாகத் தெரிந்தது. பால் வடியும் அழகிய வாலிபனுடைய முகம். ஆனால், முகத்தில் உயிர்க்களை இல்லை. கண்கள் விழித்தது விழித்தபடியே இருந்தன. உயிரில்லாத அந்தக் கண்கள் திவான் பகதூரின் இருதயத்தை ஊடுருவிப் பார்ப்பது போல் அவருக்கு உணர்ச்சி உண்டாயிற்று

சட்டென்று அய்யங்கார் எழுந்து உட்கார்ந்தார். படுக்கையிலிருந்து கீழே குதித்தார். ஜன்னல் ஓரமாகச் சென்று ஜன்னல் கதவைத் திறந்தார். குளிர்ந்த காற்று உள்ளே 'விர்'ரென்று வந்தது. கொஞ்சம் ஆசுவாசம் ஏற்பட்டது. அய்யங்கார் ஜன்னல் ஓரமாக நின்று வெளியே தோட்டத்தில் பார்வையைச் செலுத்தினார்.

ஆஹா! அது என்ன! அதோ அந்த மரத்தின் கிளையில் ஏதோ தொங்குகிறாப் போல் இருக்கிறதே? ஐயோ?...படீரென்று ஜன்னல் கதவைச் சார்த்தினார் அய்யங்கார். இருட்டில் தடவிக் கொண்டே சென்று, 'ஸ்விட்ச்' இருக்குமிடம் கண்டுபிடித்து, மின்சார விளக்கை ஏற்றினார். அலமாரியைத் திறந்து கையிலகப்பட்ட புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தார். புத்தகத்தைப் பிரித்தார். ஆகா! புத்தகத்திற்குள் ஏதாவது தேள் ஒளிந்திருந்து அவர் கையில் கொட்டி விட்டதா என்ன? புத்தகத்தை அப்படித் திடீரென்று போட்டு விட்டுக் குதிக்கிறாரே?

தேளுமில்லை கீளுமில்லை; அந்தப் புத்தகம் நாலாயிரத் திவ்யப் பிரபந்தமாயிருந்தது தான் காரணம். திவ்யப் பிரபந்தத்தைப் பார்த்ததும் உபய வேதாந்தஸார உபந்நியாச சக்ரவர்த்தி சடகோபாச்சாரிய ஸ்வாமிகள் மதகுப்பட்டி கலக வழக்கில் கூறிய சாட்சியம் அய்யங்காருக்கு ஞாபகம் வந்தது. அவர் என்ன சாட்சி சொன்னார்? "மதகுப்பட்டிக் கலகம் நடந்த அன்றைக்கு முதல் நாள் இரவு நானும் திருமலையும் திருச்சி ஜங்ஷன் வெயிட்டிங் ரூமில் திவ்யப் பிரபந்தத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்!" என்றார். "பெரியாழ்வார் பாத சாட்சியாகவும் திருமங்கையாழ்வார் திருவடி சாட்சியாகவும் சத்தியமாய்ச் சொல்கிறேன்" என்று ஆணையிட்டார். சடகோபாச்சாரிய ஸ்வாமியை அஷ்டோ த்தரமய்யங்காருக்கு வெகு காலமாகத் தெரியும். பரம பக்தர்; சிறந்த அறிவாளி; உயர்ந்த ஒழுக்கமுள்ளவர். எத்தனையோ தடவை அவரிடம் அஷ்டோ த்தரமய்யங்கார் திவ்யப் பிரபந்த பாசுரங்களைக் கேட்டு மனமுருகிக் கண்ணீர் வடித்திருக்கிறார். அப்பேர்ப்பட்டவருடைய சாட்சியைப் பொய்ச்சாட்சி என்று தள்ளிவிட்டு, போலீஸ் சாட்சியத்தையே உண்மையென்று ஏற்றுக் கொண்டு திருமலைக்குத் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டியதாயிற்று! சடகோபாச்சாரியின் சாட்சியம் உண்மையாக இருக்குமோ? திருமலை நிரபராதிதானோ? குற்றமற்ற பையனையா நாளைப் பொழுது விடிந்ததும் தூக்கில் போடப் போகிறார்கள்? அந்தப் பாதகம் தம்முடைய தலையிலா விடியப் போகிறது? ஐயோ! இந்த ஜட்ஜ் உத்தியோகத்தை என்னத்திற்காக ஏற்றுக் கொண்டோ ம்? வக்கீலாகவே இருந்து காலத்தை ஓட்டி இருக்கக் கூடாதா?... இப்படி அய்யங்காரின் மனம் எண்ணாததெல்லாம் எண்ணி அலைந்தது.

2

மதகுப்பட்டிக் கலகமும், அதன் பயனாக விளைந்த மதகுப்பட்டிக் கலக வழக்கும் நேயர்களுக்கு ஞாபகமிருக்கலாம்; ஆனால் தேசமெங்கிலும் அப்போது குழப்பமாய் இருந்தபடியால் நேயர்கள் சிலர் மறந்து போயிருக்கவும் கூடும். எனவே, வழக்கின் விவரங்களை இங்கே சுருக்கமாகக் கூறுகிறேன்.

சென்ற வருஷம் (1942) மகாத்மா காந்தி முதலியவர்கள் கைதியான புதிதில் மதகுப்பட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு அரை மைல் தூரத்தில், யாரோ, ஒரு தண்டவாளத்தைக் கழற்றி நகர்த்தியிருந்தார்கள். நல்ல வேளையாக விபத்து ஒன்றும் நேரவில்லை. பொழுது விடியும் சமயத்தில் வந்த முதல் ரயில் வண்டியின் டிரைவர் ரயில் பாதையில் தண்டவாளம் நகர்த்தப்பட்டிருப்பதைப் பார்த்து வண்டியை நிறுத்திவிட்டான். அரைமணிக்குள் பாதை சரி செய்யப்பட்டு வண்டியும் போய்விட்டது.

பிறகு மதகுப்பட்டி போலீஸார் தங்கள் கைவரிசையைக் காட்டத் தொடங்கினார்கள். அநேக வீடுகள் சோதனை போடப்பட்டன. ஹைஸ்கூலுக்குப் போய் எல்லா வகுப்புகளும் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஆறு மாணாக்கர்களைக் கைது செய்து போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு போனார்கள். அந்த ஆறு பேரைத் தொடர்ந்து பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் அவ்வளவு பேரும் கோஷித்துக் கொண்டு வெளிக் கிளம்பினார்கள்.

அன்று மதகுப்பட்டி வீதிகளில் புரட்சி கோஷங்கள் வானளாவ எழுந்தன. கூச்சலின் பலத்தைக் கொண்டு மட்டும் சுயராஜ்யம் கிடைப்பதாயிருந்தால், அன்று மதகுப்பட்டிக்கு இரட்டிப்பு சுயராஜ்யம் கிடைத்திருக்க வேண்டும்.

பள்ளிப் பிள்ளைகளின் பெருங் கோஷத்தைக் கேட்டு வியாபாரிகள் பீதியடைந்து மளமளவென்று கடைகளை அடைத்தார்கள். வீதிகளில் கூட்டம் அதிகமாயிற்று.

போலீஸ் ஸ்டேஷனைச் சுற்றியும் கூட்டம் சேர ஆரம்பித்தது. ஸ்டேஷனுக்குள் அடைக்கப்பட்டிருந்த மாணாக்கர்கள் ஜன்னல் வழியாக வெளியில் நின்ற கும்பலைப் பார்த்துவிட்டு "புரட்சி ஓங்குக!" என்று கோஷமிட்டார்கள். வெளியில் நின்ற கூட்டத்தார் பதில் கோஷம் செய்தார்கள். போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளே மாணாக்கர்களை அடிக்கிறார்கள் என்ற வதந்தி கிளம்பி அந்த ஜனக் கூட்டத்தில் அதி வேகமாகப் பரவிற்று. ஜனங்களின் கொதிப்பு அதிகமாயிற்று. சமீபத்தில் ரோடு ரிப்பேர் செய்வதற்காகக் கப்பிக் கற்கள் கொட்டப்பட்டிருந்தன. இதனால் ஜனங்களின் கொதிப்பு வெளியாவதற்கு சௌகரியம் ஏற்பட்டது. கப்பிக் கற்கள் போலீஸ் ஸ்டேஷனை நோக்கிப் பறந்தன.

போலீஸ்காரர்கள் கையில் துப்பாக்கியுடன் வெளி வந்து கூட்டத்தை நோக்கிக் குறிபார்த்தார்கள். இதன் பலனாகக் கூட்டத்தின் வெறி அதிகமாயிற்று. ஜனங்கள் ஸ்டேஷனை இன்னும் நெருங்கி வந்தார்கள். போலீஸ் துப்பாக்கியிலிருந்து வேட்டுக்கள் கிளம்பின. இரண்டொருவர் காயம்பட்டு விழுந்தனர். கூட்டம் ஒரே பாய்ச்சலாகப் போலீஸ் ஸ்டேஷனை நோக்கிப் பாய்ந்தது. துப்பாக்கியில் ரவைகள் தீர்ந்து விட்டபடியால் போலீஸ் சேவகர்கள் ஸ்டேஷனுக்குள் ஓடிப் புகுந்து கொண்டார்கள். கூட்டத்தில் ஒரே ஜயகோஷம் ஆரவாரம்.

இத்துடன் நின்றதா? இல்லை. போலீஸ் ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் ஒரு சில மண்ணெண்ணெய் டிப்போக்கள் இருந்தன. கூட்டத்தில் சிலர் டிப்போவின் கதவை உடைத்து உள்ளே புகுந்து மண்ணெண்ணெய் டின்களை எடுத்து வந்தார்கள். புகை குடிப்பவர்கள் சிலர் நெருப்புப் பெட்டி கொடுத்து உதவினார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் போலீஸ் ஸ்டேஷனில் புகையும் நெருப்பும் எழுந்தது.

இதற்குள்ளாகத் தகவல் தெரிந்து ஜில்லா மாஜிஸ்ட்ரேட், போலீஸ் ஸுபரிண்டெண்ட் முதலியவர்கள் பெரிய போலீஸ் படையுடன் வந்து சேர்ந்தார்கள். இந்தத் தடவை நிஜமான துப்பாக்கிப் பிரயோகம் நடந்தது. சிலர் உடனே உயிர் துறந்து விட்டார்கள். பலருக்குக் காயம் ஏற்பட்டது. ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் கூட்டம் கலைந்து போயிற்று. தீயும் அணைக்கப்பட்டது. போலீஸ் ஸ்டேஷன் கட்டிடம் பாதிக்கு மேல் எரிந்து போயிற்று.

அன்று மதகுப்பட்டியே சுடுகாடு மாதிரி இருந்தது. ஜனங்கள் யாரும் வெளியில் தலைகாட்டவில்லை. பிரேதங்களை எடுத்துச் சென்று தகன சம்ஸ்காரம் செய்யக் கூட முதலில் யாரும் முன் வரவில்லை. உறவினர்களுக்குத் தெரிவிப்பதற்கு வெகு நேரம் ஆகி விட்டது. கடைசியில் தகவல் எப்படியோ தெரிந்து காரியங்கள் நடந்தேறின.

மறுநாள் மதகுப்பட்டியில் பிரிட்டிஷ் அதிகாரம் தன்னுடைய உண்மை ஸ்வரூபத்தைக் காட்டத் தொடங்கியது.

எங்கே பார்த்தாலும் போலீஸ் மயமாக இருந்தது. போலீஸார் வீடு வீடாகப் புகுந்து, முதல் நாள் கலகத்தில் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்து வந்தார்கள். மொத்தம் 186பேர் கைது செய்யப்பட்டனர். பின்னால் இவர்களில் முப்பது பேர் தகுந்த சாட்சியமில்லையென்று விடுவிக்கப்பட்டனர். பாக்கி 156 பேர் மேல் கேஸ் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தியப் பாதுகாப்புச் சட்டத்திலும் பீனல் கோடிலும் உள்ள செக்ஷன்கள் இந்தக் கேஸில் பிரயோசனப்பட்ட மாதிரி இதுவரை வேறு எந்தக் கேஸிலும் உபயோகப்பட்டது கிடையாது என்று பிரசித்திப் பெற்ற 'கிரிமினல்' வக்கீல்கள் சொன்னார்கள்.

திவான் பகதூர் ஜட்ஜ் அஸ்டோ த்தரமய்யங்காரின் கோர்ட்டில் உரிய காலத்தில் மேற்படி கலக வழக்கு விசாரணைக்கு வந்தது.

3

மதகுப்பட்டிக் கலக வழக்கில் முதலாவது எதிரி திருமலை என்னும் இளைஞன். இவன் பேரில் மொத்தம் ஒன்பது செக்ஷன்கள் பிரயோகிக்கப்பட்டன. தண்டவாளத்தை பெயர்த்தது முதற்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குத் தீ வைத்த வரையில் பல குற்றங்கள் சுமத்தப்பட்டன. திருமலையின் சார்பாகப் பிரபல வக்கீல்கள் வைத்துப் பலமான எதிர் வழக்கும் ஆடப்பட்டது. திருமலை அவனுடைய பெற்றோர்களுக்கு ஒரே பிள்ளை. மதகுப்பட்டிக்கே அவன் செல்லப்பிள்ளை.

நல்ல அறிவாளி; முகவெட்டும் வாக்குச் சாதுர்யமும் உள்ளவன். சிறந்த ஒழுக்கம் படைத்தவன்; பொதுக் காரியங்களில் அளவற்ற ஊக்கமுடையவன். இத்தகைய குணங்களினால் அவன் மதகுப்பட்டி வாசிகளின் அன்பையும் மதிப்பையும் கவர்ந்திருந்தான்.

காங்கிரஸ் கமிட்டியானாலும் சரி, சங்கீதசபையானாலும் சரி, பழைய மாணவர் சங்கம் - கூட்டுறவு பண்டக சாலை - இலவச வாசக சாலை - எதுவானாலும் சரி, திருமலைக்கு ஒரு முக்கியமான நிர்வாகப் பொறுப்பு இருந்தே தீரும்.

எந்தப் பொதுக் காரியத்துக்கானாலும் பணம் வசூலிப்பதற்குத் திருமலை கிளம்பினால் ஒரே சுற்றில் வேண்டிய பணத்தைச் சேர்த்துக் கொண்டு கிளம்பி விடுவான். வேறு யார் போனாலும் மதகுப்பட்டி வாசிகளிடம் பணம் கிளம்புவது சிரமமான காரியமாயிருக்கும்.

இம்மாதிரியெல்லாம் பொதுக்காரியங்களில் திருமலை ஈடுபட்டிருந்தமையால் மதகுப்பட்டி அதிகாரிகளுக்கும் அவனுக்கும் எப்போதும் சஷ்டாஷ்டமாகவே இருந்தது.

அப்படிப்பட்ட திருமலைதான் மேற்படி கலக வழக்கில் முதலாவது எதிரி. திருமலையின் சார்பாக சொல்லப்பட்ட எதிர் வழக்கு என்னவென்றால், மதகுப்பட்டியில் கலகம் நடந்த தினம் அவன் ஊரிலேயே இல்லை. அன்று சாயங்காலந்தான் மதகுப்பட்டிக்கு வந்தான் என்பது.

இதற்குத் திருமலையின் சார்பாகச் சாட்சி கூறியவர் உபய வேதாந்தஸார உபந்நியாச சக்கரவர்த்தி சடகோபாச்சாரிய ஸ்வாமிகள் என்பவர். அன்று சாயங்காலம் அவர் ஸ்ரீரங்கத்தில் உபந்நியாசம் செய்துவிட்டு ரயிலுக்கு வந்ததாகவும், ரயில் தவறி அங்கே இருந்த திருமலையைப் பார்த்ததாகவும், அந்தப் பிள்ளையாண்டானைத் தமக்கு ஏற்கனவே தெரியுமென்றும், இரண்டு பேரும் வெகு நேரம் வரையில் பேசிக் கொண்டிருந்ததாகவும் கூறினார். "எதைப் பற்றிப் பேசினீர்கள்?" என்று கேட்டதற்கு "முக்கியமாக திவ்யப் பிரபந்தப் பாசுரங்களில் உள்ள கவிதைச் சுவையையும் பக்திப் பெருக்கையும் பற்றிப் பேசினோம்" என்றார்.

"அதைத் தவிர வேறு எந்த விஷயத்தைப் பற்றியாவது பேசினீர்களா?" என்று திருமலையின் வக்கீல் கேட்டார்.

"தேசத்தில் அப்போது நடந்து கொண்டிருந்த விபரீதமான காரியங்களைப் பற்றியும் பேசினோம்."

"விபரீத காரியங்கள் என்றால் என்ன?"

"ரயில் தண்டவாளத்தைப் பெயர்ப்பது முதலிய காரியங்கள்."

"அதைப் பற்றி என்ன பேசினீர்கள்?"

"ரயில் பிரயாணம் ரொம்பவும் அபாயகரமாகப் போனது பற்றிப் பேசினோம். 'இதனாலெல்லாம் என்ன பிரயோஜனம் ஏற்படப் போகிறது? நம்முடைய ஜனங்கள் தானே கஷ்டப்படுவார்கள்? ஒரு ரயில் வண்டி கவிழ்ந்தால், எத்தனை உயிர்ச்சேதம் ஏற்படும்? எத்தனை குடும்பங்கள் துன்பமடையும்' என்று நான் சொன்னேன். திருமலை என்னுடைய அபிப்ராயத்தை முழுவதும் ஆமோதித்தான். தந்தியறுப்பது, தண்டவாளம் பெயர்ப்பது முதலியவை பலாத்காரக் காரியங்கள் தான் என்றும், மகாத்மா காந்தி அந்தக் காரியங்களை ஒருநாளும் அனுமதித்திருக்க மாட்டாரென்றும், ஐந்தாம் படைக்காரர்கள் அவருடைய பெயரைப் பொய்யாக உபயோகப்படுத்துகிறார்கள் என்றும் சொன்னான்."

இந்தச் சமயத்தில் கவர்ன்மெண்ட் தரப்பு வக்கீல் ஆட்சேபித்து, மேற்படி அபிப்ராயங்கள் எல்லாம் சாட்சியம் ஆகாதென்றும், அவைகளைப் பதிவு செய்யக் கூடாதென்றும் கூறினார். இத்துடன் சடகோபாச்சாரிய ஸ்வாமியின் சாட்சியம் முடிந்தது.

சடகோபாச்சாரி ஸ்வாமியின் சாட்சியத்துக்கு நேர் மாறாகப் போலீஸ் தரப்புச் சாட்சிகள் சொன்னார்கள். போலீஸ் ஸ்டேஷனைச் சேர்ந்த கூட்டத்தில் திருமலையும் இருந்தானென்றும், அவன் போலீஸ் காம்பவுண்ட் சுவரில் ஏறி நின்று கொண்டு, மண்ணெண்ணெய் டின்னை வெளியிலிருந்து வாங்கி உள்ளே இருந்தவர்களிடன் கொடுத்ததைக் கண்ணால் பார்த்ததாகவும் சொன்னார்கள்.

கேஸ் விசாரணையெல்லாம் சாங்கோபாங்கமாக நடந்தது. நூற்றுக்கணக்கான சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள். கடைசியில் தீர்ப்புக் கூறும் நாள் வந்தது.

முதல் எதிரி திருமலை சம்பந்தமாகத் தீர்மானம் செய்வதில் தான் ஜட்ஜ் அஷ்டோ த்தரமய்யங்காருக்கு ரொம்பவும் கஷ்டம் ஏற்பட்டது. அவருக்கும் அவருடைய மனசாட்சிக்கும் பெரிய போராட்டம் நடந்தது. சடகோபாச்சாரிய ஸ்வாமிகளின் சாட்சியம் உண்மையாகவே தோன்றிற்று. அம்மாதிரி ஒரு சம்பவத்தை அவர் கற்பனை செய்திருக்க முடியாது. அவ்வளவு பச்சையான பொய் சொல்லக் கூடியவரல்ல; சொல்ல வேண்டிய அவசியமும் அவருக்கில்லை. ஆனால் போலீஸ் தரப்பின் திட்டமான சாட்சியத்தை நிராகரிப்பது - 'பெரிய இடத்து' அதிருப்திக்கு ஆளாக நேரிடும். அடுத்த பட்டமளிப்பில் தமக்கு ஸி.ஐ.இ. பட்டம் வருமென்று அய்யங்கார் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். கேவலம் இதற்காக வேண்டி ஒரு காரியம் செய்யப் போவதில்லை; ஆனால் என்ன முகாந்திரத்தைக் கொண்டு ஐந்து போலீஸ்காரர்களின் சாட்சியத்தை நிராகரித்து ஒரு வைஷ்ணவ உபந்நியாசகரின் சாட்சியத்தை ஒப்புக் கொள்வது? - இப்படிச் செய்தால் தம் பேரிலேயே ஒரு வேளை சந்தேகம் ஏற்பட்டாலும் ஏற்படலாமல்லவா? ஏன் லஞ்சம் வாங்கிக் கொண்டு, விடுதலை செய்ததாகச் சொன்னாலும் சொல்வார்கள்.

பார்க்கப் போனால், ஜட்ஜுனுடைய கடமை என்ன? கோர்ட்டில் தாக்கல் ஆகியிருக்கும் சாட்சியத்தைக் கொண்டு தானே, ஜட்ஜ் தீர்ப்புச் சொல்ல வேண்டும்? எல்லாம் வல்ல தெய்வத்தின் சாட்சியாகத்தான் போலீஸ்காரர்களும் சாட்சி சொல்லியிருக்கிறார்கள் - அவர்கள் எல்லாம் பொய் சொல்லியிருக்கிறார்கள் - சடகோபாச்சாரியார் மட்டும் தான் நிஜம் சொன்னார் என்று தீர்மானிப்பதற்கு என்ன நியாயம் இருக்கிறது?

இவ்விதமெல்லாம் அஷ்டோ த்தரமய்யங்காரின் மனதில் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. கடைசியில் போலீஸ் சாட்சிதான் ஜயமடைந்தது!

மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனையும், பன்னிரெண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும், மற்றவர்களுக்கு இரண்டு வருஷம் முதல் பத்து வருஷம் வரையில் சிறைவாசமும் அளிக்கப்பட்டது.

துக்குத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரில் திருமலையும் ஒருவன்.

தீர்ப்புச் சொல்லப்பட்ட அன்றைக்குக் கோர்ட்டில் திருமலையின் தகப்பனாரும் தாயாரும் வந்திருந்தார்கள். சடகோபாச்சாரியாரின் சாட்சியத்தின் பேரில் திருமலைக்கு விடுதலை கிடைத்துவிடலாமென்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். அல்லது சிறைவாச தண்டனையோடாவது போகுமென்று நம்பினார்கள். இதற்கு மாறாக, தூக்குத் தண்டனை என்று கேட்டதும், திருமலையின் தாயார் அங்கேயே பிரக்ஞை தப்பி விட்டாள். திருமலையின் தகப்பனார் "அடேய் திருமலை! அடேய் திருமலை! எங்கேடா போய்விட்டாய்?" என்று கதறிக் கொண்டு சாலையோடு நெறிக் கெட்டு ஓடத் தொடங்கினார்.

திருமலையின் தங்கை கர்ப்பமாயிருந்தாள். தீர்ப்பைக் கேட்டதும், அவளுக்குக் குறைபிரசவம் ஆகி ஆஸ்பத்திரியில் கொண்டு போட்டார்கள். ஐந்தாறு நாளைக்கெல்லாம் அவள் கண்ணை மூடினாள்.

4

மதகுப்பட்டிக் கலக வழக்கில் தீர்ப்புச் சொன்ன நாளிலிருந்து அஷ்டோ த்தரமய்யங்காரின் மனம் சரியான நிலைமையில் இல்லை; திருமலை விஷயத்தில் அநியாயம் செய்து விட்டோ மோ என்ற எண்ணம் அவர் மனத்தில் உறுத்திக் கொண்டே இருந்தது.

தூக்குத் தண்டனைக் கைதிகளின் சார்பாக கவர்னருக்குக் 'கருணை விண்ணப்பம்' செய்யப்பட்டிருக்கிறது என்று அறிந்தபோது, அய்யங்காருக்குச் சிறிது திருப்தி ஏற்பட்டது. கவர்னர் கருணை செய்து தூக்குத் தண்டனையை ரத்து செய்துவிட்டால் தம்முடைய பொறுப்பு நீங்கி விடும் என்று எண்ணினார்.

ஆனால் கவர்னர் அவ்விதம் கருணை செய்யவில்லை. அய்யங்காரின் மனத்திலிருந்த பாரமும் நீங்கவில்லை.

நாளுக்கு நாள் அந்தப் பாரம் அதிகமாயிற்று. தூக்குத் தண்டனை நிறைவேற்றும் தினம் நெருங்க நெருங்க இரவில் அவருக்குத் தூக்கம் வருவதே அரிதாயிற்று.

திருமலையின் குற்றமற்ற இளம் முகம் அவர் மனக் கண்ணின் முன் அடிக்கடி தோன்றியது. சர்க்கார் தரப்புச் சாட்சியங்களைக் கேட்டுக் கொண்டிருந்தபோது அவன் முகத்தில் தோன்றிய வியப்பும் திகைப்பும் அப்படியே அவருடைய நினைவுக்கு வந்தது. 'இதென்ன அபாண்டம்? அன்று நான் ஊரிலேயே இல்லையே?" என்று அவன் கதறியதும் ஞாபகத்துக்கு வந்தது. நினைத்துப் பார்க்க பார்க்க அந்தக் குரலில் உண்மை தொனித்ததாக அவருக்குத் தோன்றியது. "ஐயோ! நாம் அநீதிதான் செய்து விட்டோ மோ? அந்தப் பிள்ளையின் அகால மரணத்துக்கு நாம் தான் பொறுப்பாளியாவோமோ?" என்று எண்ணிய போதெல்லாம், அவருடைய நெஞ்சு திக், திக் என்று அடித்துக் கொண்டது.

இரவு ஒரு மணி. இரண்டு மணி, மூன்று மணியும் ஆயிற்று. அய்யங்கார் இப்பொது சாய்வான நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்தார். அவருடைய கண்கள் சில சமயம் தாமே மூடிக் கொள்ளும். அடுத்த நிமிஷம் திடுக்கென்று தூக்கி வாரிப் போட்டுக் கண்ணைத் திறந்து பார்ப்பார். "திருமலையைத் தூக்கில் போட இன்னும் நாலு மணி நேரந்தான் இருக்கிறது - இன்னும் மூன்றரை மணிதான் பாக்கி" என்று மனம் ஒரு புறத்தில் கணக்குப் போட்டுக் கொண்டேயிருக்கும்.

அதிகாலை ஆறு மணிக்குள் மரணதண்டனைக் கைதிகளைத் தூக்கில் போடுவது வழக்கமென்று அவருக்குத் தெரியும். ஆகையினால் தான் மணியை அவ்வளவு கவலையுடன் எண்ணினார்.

தூக்க மயக்கத்தில் அய்யங்காருக்கு ஒரு அதிசயமான யோசனை தோன்றிற்று. அந்த யோசனை எப்படி அவர் மனத்தில் உதித்ததென்பதை அவராலேயே சொல்ல முடியாது. திடீரென்று தோன்றியது.

சில சமயம் கைதிகள் சிறையிலிருந்து தப்பித்து ஓடி விடுகிறார்கள் அல்லவா? அதிலும் அரசியல் கைதிகள் - புரட்சிக் கைதிகள் சிறையிலிருந்து தப்புவது சகஜமல்லவா? சுபாஷ் போஸ் கூடப் போலீஸாரை ஏமாற்றி விட்டுக் கம்பி நீட்டி விடவில்லையா? அந்த மாதிரித் திருமலையும் ஏன் சிறையிலிருந்து தப்பி ஓடி விடக் கூடாது? அவ்வளவு துணிச்சலும் சாமர்த்தியமும் அந்த சாதுப் பையனுக்கு எங்கே வரப் போகிறது? - அவன் குற்றம் செய்யாதவனாயிருந்தால் கட்டாயம் ஓடி விடுவான். அதற்குப் பகவான் கூட உதவி செய்வார். ஏன் செய்ய மாட்டார்?

டிங், டிங், டிங், டிங் மணி நாலு அடித்தது. "ஐயோ! நேரம் நெருங்கிவிட்டதே!" என்று, அய்யங்கார் மனம் திடுக்கிட்டது. அதே சமயத்தில் அவருடைய அறையின் கதவு சிறிது திறந்து, ஜில்லென்று காலைக் காற்று உள்ளே வந்தது.

கதவை மூடலாமென்று அய்யங்கார் எழுந்திருக்கப் பார்த்தார். ஆனால் எழுந்திருக்கவில்லை. அப்படியே திகைத்து உட்கார்ந்து விட்டார்.

ஏனெனில், திறந்த கதவு வழியாக ஒரு மனித உருவம் உள்ளே வந்தது. ஆ! இது யார்? இந்த இளம் முகம் யாருடையது! சந்தேகமென்ன? 'திருமலைதான்' - ஆகா! இவன் எப்படி இங்கே இந்த நேரத்தில் வந்தான்! நாம் எண்ணியது போல் உண்மையாகவே சிறையிலிருந்து தப்பித்துக் கொண்டு வந்து விட்டானா? - அப்படியானால் கெட்டிக்காரன் தான்.

திருமலை நிதானமாக நடந்து வந்து அய்யங்காருக்கு எதிரில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தான்.

சற்று நேரம் இருவரும் ஒருவரையொருவர் உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள். திருமலையின் முகத்தில் சொல்ல முடியாத ஒரு இரக்க பாவம் காணப்பட்டது.

அய்யங்காரின் கண்களில் கண்ணீர் ததும்பிற்று. அவர் பேச ஆரம்பித்தபோது அவருடைய குரலை அவராலேயே அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு கம்மிப் போயிருந்தது.

"யார்? திருமலைதானே" என்றார் அய்யங்கார்.

"ஆமாம்; அடியேன் திருமலைதான்"

"பொழுது விடிந்தால் ஆறு மணிக்குள்" என்று அய்யங்கார் தடுமாறினார்.

"ஆமாம்; ஆறு மணிக்குள் தண்டனை நிறைவேற வேண்டியது."

"நல்ல வேளை நீ தப்பி வந்தது..."

"நல்ல வேளையா?"

"ஆமாம்; நல்ல வேளைதான். உன்னைத் தண்டித்தது பற்றி எனக்கு மனச் சமாதானமே ஏற்படவில்லை. நீ சிறையிலிருந்து ஏன் தப்பித்துக் கொள்ளக்கூடாது என்று நான் கூடச் சற்று முன்பு நினைத்தேன்."

திருமலையின் முகத்தில் ஆச்சரியம் தாண்டவமாடிற்று!

"நீ தப்பித்து வந்தது பற்றிச் சந்தோஷந்தான் ஆனால்..."

"ஆனால் என்ன?"

"நீ இங்கு வந்ததுதான் பிடிக்கவில்லை. இங்கே என்னத்திற்காக வந்தாய்?"

"முக்கியமாக உங்களைப் பார்ப்பதற்குத்தான் நான் சிறையிலிருந்து தப்பினேன்."

"என்ன? என்னைப் பார்ப்பதற்கா?"

"ஆமாம்; தூக்குத் தண்டனையைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நீங்கள் பெரிய பக்தர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சடகோபாச்சாரியார் ரொம்பவும் சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட தாங்கள் என்னைப் பொய்யனென்று நினைத்தது தான் ரொம்பவும் வருத்தமளித்தது. சத்தியமாகச் சொல்கிறேன்; நான் அன்றைக்கு மதகுப்பட்டியில் இல்லை. திருச்சி ஜங்ஷனில் தான் இருந்தேன். சடகோபாச்சாரி ஸ்வாமிகளிடம் பேசிக் கொண்டிருந்தேன்."

"நீ சொல்வதை முழுதும் நம்புகிறேன். சடகோபாச்சாரியாரும் நிச்சயமாய்ப் பொய் சொல்லியிருக்க மாட்டார். தீர்ப்பு எப்படியோ பிசகாய்ப் போய்விட்டது. நீ தப்பி வந்ததே நல்லதாயிற்று. ஆனால் இங்கே நீ அதிக நேரம்..."

"இல்லை, இங்கே அதிக நேரம் தாமதிக்கவில்லை. உங்களிடம் சொல்லிவிட்டுப் போகத்தான் வந்தேன். என் வார்த்தையை இப்போதாவது நம்புகிறீர்களே, ரொம்ப சந்தோஷம் போய் வருகிறேன். நமஸ்காரம்"

திருமலை ஒரு கும்பிடு போட்டுவிட்டு எழுந்திருந்து போனான்.

*****

மறுபடியும் அய்யங்காருக்குத் திடுக்கென்று தூக்கிவாரிப் போட்டது. இந்தத் தடவை நாற்காலியிலிருந்து அவர் எழுந்து திறந்திருந்த கதவண்டை போய், அப்பாலிருந்த தாழ்வாரத்தில் பார்த்தார். அங்கே ஒருவரையும் காணவில்லை. வாசற்கதவைப் போய்ப் பார்த்தார். கதவு உட்புறம் பந்தோபஸ்தாகத் தாளிடப்பட்டிருந்தது!

திருமலை எப்படி உள்ளே வந்தான். எப்படி வெளியே போனான்?

"சீ! வெறும் பிரமை! திருமலையாவது வரவாவது?" என்று எண்ணமிட்டவராய், அஷ்டோ த்தரமய்யங்கார் தமது அறைக்குத் திரும்பினார். மணி ஐந்தடித்தது.

இரண்டு நாளைக்குப் பிறகு ஜட்ஜ் அஷ்டோ த்தரமய்யங்கார் தினசரிப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்த போது, ஒரு மூலையில் சின்ன எழுத்தில் அச்சிட்டிருந்த பின்வரும் செய்தி, அவருடைய கவனத்தைக் கவர்ந்தது.

தூக்குக் கைதியின் மரணம்

"மதகுப்பட்டிக் கலக வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டிருந்த திருமலை. சிறைச்சாலையில் முந்தாநாள் காலை நாலு மணிக்கு இயற்கை மரணமடைந்தான். எனவே, கைதியைத் தூக்குப் போட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை."

மேற்படி செய்தியைப் படித்ததும் அய்யங்காருக்குத் தலை சுற்றியது. அதே நேரத்தில்தான் திருமலை தம்முடைய அறையில் வந்து பேசினான் என்பது நினைவு வந்தது. அய்யங்கார் திடீரென்று கீழே விழுந்தார். டாக்டர்கள் வந்து பார்த்துவிட்டு, "மாரடைப்பினால் மரணம்" என்று தெரிவித்தார்கள்!
------------

50. என் தெய்வம்

திருநீர்மலையைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை எனக்கு வெகு காலமாக இருந்து வந்தது. ஆங்கிலக் கதைகளில் 'கிரெட்னா கிரீன்' என்னுமிடத்தைப் பற்றிச் சொல்கிறார்களே, அந்த மாதிரி நம் தமிழ்நாட்டுக்குத் திருநீர்மலை என்று கேள்விப்பட்டிருந்தேன். தொல்காப்பியர் காலத்துத் தமிழ்நாட்டை இந்தக் காலத்தில் திருநீர்மலையில் காணலாம் என்றும் சொன்னார்கள். அதாவது காதல் மணம் செய்து கொள்ளத் தீர்மானிக்கும் ஒருவனும் ஒருத்தியும் திருநீர்மலையைத்தான் சாதாரணமாய்த் தேடி வருவது வழக்கமாம். எனவே அந்த ஊர்க் கோவிலில் அடிக்கடி காதல் திருமணங்கள் நடைபெறுமாம். இக்காரணங்களினால் தான் திருநீர்மலையைப் பார்க்க எனக்கு ஆசை உண்டாகியிருந்தது. எனவே, சமீபத்தில் ஒருநாள் திருநீர் மலையைப் பார்ப்பதற்காகப் பயணம் கிளம்பிச் சென்றேன். 'விடியாமூஞ்சி எங்கேயோ போனால் எதுவோ கிடைக்காது' என்பார்களே அது மாதிரி, நான் போன சமயம் பார்த்துத் திருநீர்மலை வேறு எங்கேயாவது போயிருக்குமோ என்று கொஞ்சம் மனதில் பயம் இருந்தது. நல்ல வேளையாக திருநீர்மலை அப்படியொன்றும் செய்துவிடவில்லை. திருநீர்மலைக்கோவிலும் ஊரிலேதான் இருந்தது. இன்னும் நான் போன அன்று அந்தக் கோவிலில் ஒரு கல்யாணமும் நடந்தது. கல்யாணம் என்றால் எப்பேர்ப்பட்ட கல்யாணம்? மிகவும் அதிசயமான கல்யாணம். தம்பதிகளையும் புரோகிதரையும் தவிர, ஒரே ஒரு விருந்தாளி தான் கல்யாணத்துக்கு வந்திருந்தது! அந்த விருந்தாளி மணமகனின் தாயார் என்று தெரிந்து கொண்டேன்.


திருமாங்கல்ய தாரணம் ஆகி மற்ற விவாகச் சடங்குகளும் முடிந்த பிறகு, புரோகிதர் "சுவாமி சந்நிதிக்குப் போய் முதலில் நமஸ்காரம் செய்யுங்கள்; அப்புறம் அம்மாவுக்கு!" என்றார். ஆனால், தம்பதிகள் இருவரும் சொல்லி வைத்தாற்போல், அம்மாவுக்கு முதலில் நமஸ்காரம் செய்தார்கள். ஆனந்தக் கண்ணீர் என்பதை அப்போது நான் பார்த்தேன். மணமக்களை அன்புடன் அணைத்து ஆசீர்வதித்த அந்த அம்மாளின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகிற்று. கண்ணீர் என்றால் எப்படி? ஒரே அருவிதான்!

இதையெல்லாம் பார்த்து என்னால் தாங்கவே முடியவேயில்லை. இந்தக் கல்யாணத்தில் ஏதோ விஷயமிருக்கிறதென்றும், அதைத் தெரிந்து கொள்ளாமல் திருநீர்மலையை விட்டுக் கிளம்புவதில்லையென்றும் முடிவு செய்து கொண்டேன். மாப்பிள்ளைப் பையனுடன் மெதுவாகப் பேச்சுக் கொடுத்து சிநேகம் செய்து கொண்டு கொஞ்சங் கொஞ்சமாக அவர்களுடைய வரலாற்றை அறிந்தேன். இதோ அந்த வரலாறு...

1

சாம்பமூர்த்தி பி.ஏ. அவனுடைய தாயாருக்கு ஒரே பிள்ளை; அவர்கள் பரம ஏழைகள். சாம்பமூர்த்தியினுடைய சிறு பிரயாத்தில் அவன் தாயார் பட்ட கஷ்டங்கள் சொல்லத்தரமல்ல. ஓட்டலில் இட்லிக்கு மாவு அரைத்தும், இன்னும் பிரபுக்கள் வீட்டில் ஊழியம் செய்தும், அவள் காலட்சேபம் நடத்தியதுடன் பிள்ளையையும் படிக்க வைத்தாள். சாம்பமூர்த்தி நல்ல புத்திசாலி. கொஞ்சம் விவரம் தெரிந்ததும், பள்ளிக்கூடத்தில் உபகாரச் சம்பளம் வாங்கிக் கொண்டதோடு, அவனை விடச் சின்ன வகுப்புப் பிள்ளைகளுக்கு வீட்டில் பாடம் சொல்லிக் கொடுத்து பணம் சம்பாதிக்கத் தொடங்கினான். வறுமையின் கஷ்டம் எவ்வளவோ இருந்த போதிலும், தாயும் பிள்ளையும் பரஸ்பரம் கொண்டிருந்த அன்பின் காரணமாக, அவர்களுடைய வாழ்க்கை சந்தோஷமாகவே போய்க் கொண்டிருந்தது.

கடைசியாக, அவர்களுடைய தரித்திரம் தீரும் காலமும் வந்தது. பி.ஏ. பரீட்சையில் சாம்பமூர்த்தி முதல் தரமாகத் தேறினான். சுருக்கெழுத்து, டைப் அடித்தல் முதலியவையும் கற்றுக் கொண்டிருந்தான். எனவே, சென்னைப் பட்டினத்தில் மாதம் அறுபது ரூபாய் சம்பளத்தில் அவனுக்கு உத்தியோகம் கிடைத்தது. அதாவது, உத்தியோகத்துக்கு உத்தரவு வந்து விட்டது. சென்னைக்குப் போய் ஒப்புக் கொள்வது தான் பாக்கி.

ஊரைவிட்டுப் போகுமுன்னம் சாம்பமூர்த்தி நிச்சயம் செய்து கொள்ள விரும்பிய காரியம் ஒன்றே ஒன்று பாக்கியிருந்தது. அது அவனுடைய கல்யாண விஷயந்தான்.

கல்யாணம் என்றாலே சிக்கலான விஷயம். அதில் காதலும் கலந்திருந்தால் கேட்கவே வேண்டியதில்லை.

சாம்பமூர்த்தியின் கல்யாணம் அவ்வாறு சிக்கலடைந்திருந்தது.

ஆமாம்; சாம்பமூர்த்தி காதல் நோய்க்கு ஆளாகியிருந்தான்.

ஒரு வக்கீலின் குழந்தைகளுக்கு சாம்பமூர்த்தி அவர்கள் வீட்டிலேயே பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். அந்த வக்கீலின் இளம் சகோதரி ஒருத்தியும் வீட்டில் இருந்தாள். அவள் லட்சணமான பெண். எஸ்.எஸ்.எல்.சி. வரையில் படித்தவள்.

"காதல் ஏன் வளருகிறது? எப்படி வருகிறது என்றெல்லாம் சொல்ல முடியாது. அது தேவ ரகசியம்!" என்று ஒரு பிரசித்தி பெற்ற ஆசிரியர் சொல்லியிருக்கிறார். அத்தகைய தேவரகசியமான காரணத்தினாலே, ரங்கநாயகிக்கும் சாம்பமூர்த்திக்கும் காதல் வந்து விட்டது.

வேடிக்கை என்னவென்றால், சாம்பமூர்த்தியும் ரங்கநாயகியும் தங்களை காதல் நோய் பீடித்திருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு முன்னாலேயே அந்த விஷயத்தை வீட்டிலுள்ள மற்றவர்கள் தெரிந்து கொண்டார்கள். இதில் ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் எப்பேர்ப்பட்ட கெட்டிக்காரர்களானாலும் காதலுக்கு வசமாகி விட்டால், அவர்கள் முகத்தில் ஒரு மாதிரி அசடு தட்டி விடுகிறது. அவர்கள் ஒருவரையொருவர் பார்க்கும் போது அசடு வழியப் பார்க்கிறார்கள்; அசடு வழியப் பேசுகிறார்கள். அவர்களுடைய நடை, உடை, பாவனை எல்லாம் ஒரு மாதிரி மாறுதல் அடைந்து காணப்படுகிறார்கள். இதையெல்லாம் மறைத்துக் கொள்ளச் சக்தியும் அவர்களுக்கு இருப்பதில்லை.

ரங்கநாயகியின் இந்த நிலைமை வீட்டிலுள்ளவர்களுக்கு நன்றாய்த் தெரிந்துவிட்டது. அதற்கு முன்னாலெல்லாம் ரங்கநாயகி படிப்பிலேதான் அதிக ஆசையுள்ளவளாயிருந்தாள். பள்ளிக்கூடத்து பரீட்சைகளில் முதலாவதாகத் தேற வேண்டுமென்பதே அவளுடைய வாழ்க்கையின் இலட்சியம் போல் தோன்றியது. ஆடை அலங்காரம் முதலியவற்றில் அவள் அதிகக் கவனம் செலுத்துவதில்லை.

கொஞ்ச காலமாக இந்த நிலைமை மாறி விட்டது. வீட்டிலே ஒரு வருஷத்துக்கு ஆகும்படியாக மை கூட்டி வைத்திருந்தது. அதையெல்லாம் ரங்கநாயகி வழித்து வழித்துக் கண்களில் பூசிக் கொண்டு தீர்த்து விட்டாள். அது மாதிரியே சோப்புக் கட்டிகள், பவுடர் பெட்டிகள், கூந்தல் தைலங்கள் எல்லாம் மளமளவென்று தீரத் தொடங்கின. தினசரி அலங்காரத்துக்கு அதிக நேரம் செலவாயிற்று. நெற்றியில் பொட்டு, சிறிதாயும், பெரிதாயும், நீளமாயும், அகலமாயும், உயரமாயும் - இப்படிப் பல உருவங்கள் எடுத்தது.

இவ்வாறெல்லாம் ரங்கநாயகி தன்னை அழகு செய்து கொள்வதற்கும், சாம்பமூர்த்தி பிள்ளைகளுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்க வருவதற்கும் ஒரு வகையான சம்பந்தம் இருப்பதை வீட்டார் சீக்கிரத்தில் கண்டு கொண்டார்கள்.

இன்னும், குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதில் சாம்பமூர்த்திக்குக் கவனக்குறைவு ஏற்பட்டதையும் அவர்கள் கவனித்தார்கள். பாடத்தைக் கவனித்துப் படிக்கும்படி சாம்பமூர்த்தி பிள்ளைகளைக் கண்டிப்பதற்குப் பதிலாக, பிள்ளைகள் "என்ன ஸார்! பாடத்தைக் கவனிக்காமல் எங்கேயோ பார்க்கிறீர்களே?" என்று கேட்கும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டது. இதன் முடிவான பலன் என்ன ஆயிற்று என்றால், வீட்டு எஜமான், சாம்பமூர்த்தியிடம், "பிள்ளைகளுக்குப் பாடமெல்லாம் வந்து விட்டது; நீர் சொல்லிக் கொடுத்தது போதும்" என்று சொல்லி, அவனை நிறுத்தி விட்டார்.

சாம்பமூர்த்தி, ரங்கநாயகி இரண்டு பேருக்குமே அப்போது தான் தங்களுடைய வியாதி எவ்வளவு தூரம் முற்றிப் போயிருக்கிறது என்று தெரிய வந்தது. ஒருவர் இல்லாவிட்டால் ஒருவர் உயிர் வாழ முடியாது என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். உயிர் வாழ்வதே முடியாத காரியம் என்றால், சாம்பமூர்த்தி சென்னைப் பட்டணத்துக்குப் போய் உத்தியோகம் பார்ப்பது எப்படி?

அப்போதுதான் ரங்கநாயகி, தான் படித்த பெண், அதோடு மேஜரானவள் என்பதை நினைவு கூர்ந்தாள். பெண் சுதந்திரத்தில் தனக்குள்ள ஆழ்ந்த பற்றையும் வெளிக்காண்பிக்க ஆரம்பித்தாள். அவளுடைய தமையனாரிடம் தனக்காக அவன் வரன் தேட வேண்டிய அவசியம் இல்லையென்றும் சாம்பமூர்த்தி மேல் தான் காதல் கொண்டு விட்டதாகவும், அவரையே தான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் மனம் விட்டுச் சொன்னாள். இதை யார் ஆட்சேபித்த போதிலும், தான் பொருட்படுத்தப் போவதில்லையென்றும் கண்டிப்பாகத் தெரியப்படுத்தினாள்.

இதெல்லாம் சாம்பமூர்த்திக்கு ஒருவாறு தெரிந்த போது, அவனும் தைரியத்தைக் கையில் எடுத்துக் கொண்டான். (தைரியம் என்பது இங்கே பேனாவைக் குறிக்கும்) ரங்கநாயகியின் தமையனுக்கு ஒரு கடிதம் எழுதினான். ரங்கநாயகியைத் தான் காதலிப்பதாகவும், வாழ்நாளெல்லாம் அவளுக்கு ஒரு குறைவும் இல்லாமல் வைத்துக் காப்பாற்றுவதாகவும், அவளைத் தனக்குக் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டுமென்றும் மரியாதையாகக் கேட்டுக் கொண்டான். அதோடு, ரங்கநாயகியும் தன்னைக் காதலிக்கிறபடியால், மனமொத்த தங்களுக்கிடையில் குறுக்கே வந்து நிற்பதற்கு யாருக்குமே பாத்தியதை கிடையாது என்பதையும் குறிப்பிட்டிருந்தான்.

மேற்படி கடிதம் எழுதிச் சில நாள் வரையில் அதற்குப் பதில் வருமென்று சாம்பமூர்த்தி எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். ஒன்றும் வராமற் போகவே, நேரிலேயே பதிலைத் தெரிந்து கொண்டு திரும்புவதென்று சாம்பமூர்த்தி வக்கீல் வீட்டுக்குக் கிளம்பினான்.

வக்கீல் வீட்டு வாசலை அடைந்ததும், சாம்பமூர்த்திக்கு உள்ளே ஏதோ ரகளை நடந்து கொண்டிருக்கிறதென்று தெரிய வந்தது. நாலைந்து பேர் சேர்ந்தாற் போல் பேசுகின்ற சத்தம் கேட்டது. அந்த இரைச்சலுக்கிடையே ஒரு விம்முகின்ற குரல் - ஆங்காரம் நிறைந்த குரல் - சாம்பமூர்த்தியின் காதில் விழுந்தது; அவனுடைய நெஞ்சைப் பிளந்தது. அந்தக் குரல் ரங்கநாயகியினுடையதுதான் என்று சொல்ல வேண்டுமா?


ஒரு கண நேரத்திற்குள் சாம்பமூர்த்தி உள்ளே நடப்பது என்னவென்பதைக் கற்பனை செய்து கொண்டான். ரங்கம் தன்னைத்தான் கல்யாணம் செய்து கொள்வேனென்று பிடிவாதம் பிடிக்கிறாள். மற்றவர்கள் கூடாது என்று சொல்லி அவளை வற்புறுத்துகிறார்கள்! இப்பேர்ப்பட்ட சந்தர்ப்பத்தில் தன்னுடைய கடமை என்னவென்பதை நிர்ணயிக்கவும் அவனுக்கு அதிக நேரம் ஆகவில்லை. ரங்கநாயகிக்குத் துணையாகப் போய் அவள் அருகில் நிற்க வேண்டியதுதான்; நின்று, அவளைச் சுற்றியுள்ள துஷ்ட மிருகங்களிடமிருந்து அவளைக் காப்பாற்றி அழைத்துப் போக வேண்டியதுதான்; சந்தேகம் என்ன?

இலேசாகச் சாத்தியிருந்த வாசற் கதவைப் படீரென்று திறந்து கொண்டு சாம்பமூர்த்தி உள்ளே போனான். ஏறக்குறைய அவன் எதிர்பார்த்தக் காட்சிதான் அங்கே காணப்பட்டது. ரங்கநாயகி கண்ணீரும் கம்பலையுமாய் நின்றாள். கண்களிலிருந்து கண்ணீர் மையுடன் கலந்து வழிந்து கொண்டிருந்தது. வக்கீல் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தார். அவருடைய மனைவி, வயதான விதவை அத்தை, அக்கா, அத்திம்பேர் ஆகியவர்கள் சுற்றிலும் உட்கார்ந்திருந்தார்கள். குழந்தைகள் பயந்த தோற்றத்துடன் அங்குமிங்கும் நின்றார்கள்.

இதையெல்லாம் ஒரு கண நேரத்தில் சாம்பமூர்த்தி பார்த்தான். சகுந்தலை துஷ்யந்தனைப் பார்த்து, "அட பாவி! என்னை விபச்சாரி என்றா சொன்னாய்?" என்று கேட்கும் காட்சி அவனுக்கு ஞாபகம் வந்த்து. அந்தக் காட்சியில் சகுந்தலையின்மேல் தனக்கு ஏற்பட்ட இரக்கம், துஷ்யந்தன் மேல் உண்டான கோபம் எல்லாம் அப்படியே உள்ளத்தில் தோன்றின. சகுந்தலைக்கு அச்சமயம் தன்னால் உதவியொன்றும் செய்யமுடியவில்லை. ஆனால், இப்போது ரங்கநாயகிக்கு உதவி செய்யும் சக்தி தன்னிடம் இருக்கிறது. அவளை அந்தப் பேய் பிசாசுகளிடமிருந்து காப்பாற்றி அழைத்துப் போக வேண்டியது தன்னுடைய கடமை. இப்படியெல்லாம் சில விநாடி நேரத்திற்குள் சாம்பமூர்த்தி சிந்தித்துத் தீர்மானித்துக் கொண்டு ரங்கநாயகிகு எதிரே போய் நின்று, அவளுடைய முகத்தைக் கம்பீரமாய்க் கருணை ததும்ப நோக்கினான்.

"ரங்கம், இவர்கள் உன்னை..." என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தான்.

சாம்பமூர்த்தி வந்ததிலிருந்தே, அங்கிருந்தவர்கள் அவ்வளவு பேருடைய முகமும் ஒரு மாதிரியாகி விட்டது. ரங்கநாயகியும் சட்டென்று தலைகுனிந்து சேலைத் தலைப்பினால் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

சாம்பமூர்த்தி பேச ஆரம்பித்தவுடனே அவள் பளிச்சென்று தலை நிமிர்ந்து அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். அவனுடைய பேச்சில் குறுக்கிட்டு விம்முகின்ற குரலில், "சார்! இவர்கள் எல்லாம் உங்களைப் பற்றி..." என்று ஏதோ சொல்லத் தொடங்கினாள்.

இதற்குள் வக்கீல், கோபமான குரலில் "ரங்கம்! உனக்கு என்ன பைத்தியமா? இவனிடம் என்ன சொல்லப் போகிறாய்?" என்றார்.

ரங்கநாயகி இன்னும் ஆத்திரத்துடன் "ஆமாம், நீங்கள் சொன்னதைத்தான் சொல்லப் போகிறேன். ஏன் மறைக்க வேண்டும்? ஸார்! இவர்கள் எல்லாரும் உங்கள் தாயாரைப் பற்றி அவதூறு சொல்கிறார்கள். உங்கள் தாயார் நடத்தைப் பிசகு உள்ளவராம். இன்னும்...இன்னும்... அவர் விதந்துவான பிறகு உங்களைப் பெற்றாராம். இந்தமாதிரி அபாண்டமான பொய் சொல்லுகிறவர்களிடம் நான் எப்படி இருப்பேன்? என்னை உடனே அழைத்துப் போங்கள்!" என்றாள்.

இந்தக் கர்ண கொடூரமான வார்த்தைகளை ரங்கநாயகி சொல்லி முடித்த போது அங்கே எல்லையற்ற நிசப்தம் குடி கொண்டது.

எல்லோரும் ஒரேயடியாகச் சாம்பமூர்த்தியின் முகத்தை நோக்கினார்கள். அந்த முகத்தில் சொல்ல முடியாத குரோதம் பொங்கிற்று. அவன் உடம்பெல்லாம் நடுங்கிற்று.

வக்கீல், 'இன்று இங்கே கொலை விழப் போகிறது!' என்று தீர்மானித்துக் கொண்டார். போலீஸ் ஸ்டேஷனுக்கு எப்படிச் சொல்லி அனுப்புவதென்று யோசிக்கத் தொடங்கினார்.

சாம்பமூர்த்தி ஏதோ பேசுவதற்கு முயன்றான். ஆனால், வாயிலிருந்து வார்த்தை ஒன்றும் வரவில்லை.

அடுத்த வினாடி அவனுடைய முகம் தொங்கி விட்டது. முகத்தில் தோன்றிய குரோதமும் வேதனையாக மாறியது.

ஒரு நிமிஷம், இவ்விதம் சாம்பமூர்த்தி நின்று கொண்டிருந்தான். பிறகு, ஒரு வார்த்தையும் சொல்லாமல் யாருடைய முகத்தையும் பார்க்காமல் குனிந்த தலை நிமிராமல் அங்கிருந்து வெளியேறினான்.

அவன் வீட்டு வாசற்படியைக் கடந்த போது, "இப்போது என்ன சொல்கிறாய் ரங்கம்!" என்று வக்கீலின் குரல் கேட்டது. யாரோ சிரிக்கும் சத்தமும் கேட்டது. சிரிப்புக்கு நடுவில் விம்மல் ஒலியும் கலந்து வந்தது.

2

சாம்பமூர்த்திக்குத் தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தது எப்படியென்றே தெரியாது. வீட்டு வாசலை அடைந்ததும் தான் அவனுக்குக் கொஞ்சம் சுய நினைவு வந்தது. வீட்டுக்குள் நுழைந்து ரேழித் திண்ணையில் குப்புறப் படுத்துக் கொண்டான். பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொள்ள முயன்ற போது அது விம்மலாக வெளிப்பட்டது. அவனுடைய உடம்பைத் தூக்கித் தூக்கிப் போட்டது.

சற்று நேரத்துக்கெல்லாம் அவன் தாயார் அங்கே வந்தாள். குப்புறப் படுத்துக் கிடந்த புதல்வனைப் பார்த்தாள். கல்லும் கனியும் குரலில், "அப்பா! குழந்தை!" என்று சொல்லிக் கொண்டு, அவன் முதுகின் மேல் கையை வைத்துத் தடவிக் கொடுக்கப் போனாள்.

சாம்பமூர்த்தி வெடுக்கென்று அவளுடைய கையைப் பிடித்துத் தள்ளினான். மறுபடியும் பலமாகக் குப்புறப்படுத்துக் கொண்டான்.

தாயார் திடுக்கிட்ட குரலில் "குழந்தை! இதென்ன? ஏன் அழுகிறாய்? என் பேரில் என்ன கோபம்? நான் என்ன செய்தேன்?" என்றாள்.

சாம்பமூர்த்தி சட்டென்று எழுந்து உட்கார்ந்து, "என்ன செய்தாயா? என்னை எதற்காகப் பெற்றாய்?" என்று கத்தினான். கத்திவிட்டுத் தன் தலையில் இரண்டு தடவை அடித்துக் கொண்டான்.

தாயார் திகைத்துப் போய் அவனைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.

சாம்பமூர்த்தி மேலும், "இந்த அவமானத்தை என்னால் இனி மேல் சகிக்க முடியாது. தூக்குப் போட்டுக் கொண்டு செத்துப் போகிறேன்" என்று கத்தினான்.

தாயார் வேதனை நிறைந்த குரலில் "குழந்தை! இது எனக்கு வேண்டியதுதான்" என்றாள்.

சாம்பமூர்த்தி நிமிர்ந்து பார்த்தான். அம்மாவின் கண்களில் இரண்டு துளி ஜலம் துளித்து நிற்பதைக் கண்டான்.

"ஐயோ! அம்மா! உன்னைப் பற்றி ஏன் இப்படிச் சொல்லுகிறார்கள்" என்று அலறினான்.

தாயார் அவனை உற்றுப் பார்த்து, "குழந்தை! அவர்கள் வீட்டுக்குப் போனாயா? அவர்கள் ஏதாவது சொன்னார்களா? என்ன சொன்னார்கள்?" என்று கேட்டாள்.

"என்னத்தைச் சொன்னார்கள்? ஊரிலே எல்லோரும் சொல்வதைத்தான் அவர்களும் சொன்னார்கள்."

"குழந்தை! ஊரிலே எல்லோரும் என்ன சொல்கிறார்கள்! அதைத்தான் சொல்லேன்!" என்றாள் தாயார்.

"என் வாயால் சொல்லச் சொல்கிறாயா? சரி சொல்கிறேன். 'எனக்குத் தகப்பனார் யார் என்று தெரியாது' என்று சொல்கிறார்கள். 'நீ விதந்துவான பிறகு என்னைப் பெற்றதாகச் சொல்கிறார்கள்.' போதுமா? இன்னும் சொல்ல வேணுமா?" என்று சாம்பமூர்த்தி கூறித் தலையில் இன்னும் நாலு தடவை அடித்துக் கொண்டான். மறுபடியும் குப்புறப்படுத்துக் கொண்டான்.

இத்தனை நேரமும் நடையில் நின்று கொண்டிருந்த தாயார் திண்ணையில் சாம்பமூர்த்தியின் காலடியில் உட்கார்ந்தாள். தலைகுனிந்து முகத்தை வைத்துக் கொண்டு சற்று நேரம் சும்மா இருந்தாள். பிறகு தலையை நிமிர்த்திக் கொண்டு, "குழந்தை! சம்பு! எழுந்து உட்கார்! எத்தனையோ நாளாக உனக்கு உண்மையைச் சொல்ல வேண்டும், சொல்ல வேண்டும் என்று இருந்தேன். தைரியம் வரவில்லை. இப்போது கட்டாயம் சொல்ல வேண்டும் சமயம் வந்து விட்டது குழந்தை! எழுந்து உட்கார்ந்து கேள்!" என்றாள்.

சாம்பமூர்த்தி பளிச்சென்று எழுந்து உட்கார்ந்தான். "என்ன? உண்மையைச் சொல்லப் போகிறாயா! - என்ன உண்மை? ஐயோ! அவர்கள் சொன்னது நிஜந்தானா?" என்றான்.

அன்னை முன்பைவிட அதிக சாந்தத்துடன் கனிந்த குரலில், "குழந்தை! ஏன் பதறுகிறாய்? கொஞ்சம் பொறுமையாகக் கேள்!" என்றாள்.

"பொறுமையா? என்னைப் பொறுமையாயிருக்கச் சொல்கிறாயா? கடவுளே!"

"ஆமாம், சாம்பு! பொறுத்துத்தான் ஆக வேண்டும். கடவுள் எழுதின எழுத்தை அழித்து எழுத முடியுமா!"

"கடவுள்! கடவுள்! கடவுள் ஒருவர் இருக்கிறாரா! இருந்தால் என்னத்திற்காக அவளை நான் சந்திக்கும்படி செய்கிறார்! பிறகு இப்படிக் கொடூரமாகப் பிரிக்கிறார்? என்னத்திற்காக என்னை உயிரோடு வைத்திருக்கிறார்? டைபாய்டு சுரம் வந்ததே? அதிலேயே கொண்டு போயிருக்கக் கூடாதா?" என்று அலறினான் சாம்பமூர்த்தி.

தாயார் எங்கேயோ தொலை தூரத்திலுள்ள எதையோ பார்ப்பவள் போல் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, ஒரு நெடிய பெருமூச்சு விட்டாள். சாம்பமூர்த்தியைத் திரும்பிப் பார்த்து, "ஆமாம் சாம்பு! உனக்கு டைபாய்டு சுரம் வந்த போது கடவுள் உன்னைக் கொண்டு போகத்தான் பார்த்தார். நான் தான் குறுக்கே நின்று காப்பாற்றினேன். இருபத்தொரு நாள் இராத் தூக்கம் - பகல் தூக்கம் இல்லாமல் கண் விழித்தேன். டாக்டர்கள் கூடக் கைவிட்டு விட்டார்கள் இன்னும் அரை மணி நேரந்தான் என்று கெடு விதித்தார்கள். நான் உன்னை விடமாட்டேன் என்றேன். நீ அப்போது கண்ணை மூடியிருந்தால் அரை நாழிக்குள் என் உயிரும் போயிருக்கும். இன்றைக்கு இந்த மாதிரி வார்த்தை உன்னிடம் கேட்டிருக்க வேண்டியதில்லை" என்றாள்.

சாம்பமூர்த்தி "ஐயோ! அம்மா! அதையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறாய்?" என்றான். அவன் குரலில் முன் போன்ற வெறியில்லை; சிறிது சாந்தம் ஏற்பட்டிருந்தது.

அவன் சொன்னது காதிலே விழாதவள் போல் தாயார் மேலும் சொன்னாள் "டைபாய்டு சுரம் வந்த போது மட்டுந்தானா? பதினோரு வயதில் உனக்கு வயிற்றுக் கடுப்பு வந்தது. முப்பத்தைந்து நாள் கிடந்தாய். அப்போதும் யமன் வாயிலிருந்து காப்பாற்றினேன். அதற்கு முன்னால், உன் மூன்றாவது வயதில் கட்டி விழுந்தது. இரண்டரை வருஷம் ஆயிற்று குணமாவதற்கு. அந்த இரண்டரை வருஷ காலமும் நான் தேடிப் போகாத வைத்தியனில்லை. நான் வேண்டிக் கொள்ளாத கோவிலும் தெய்வமும் இல்லை. உன் அப்பா தொலைத்தது போக பாக்கியிருந்த சொத்தெல்லாம் அந்த இரண்டரை வருஷத்தில் தான் போயிற்று. கட்டிகரைந்தது போல் சொத்தும் கரைந்து விட்டது" என்றாள்.

"என் அப்பா... என் அப்பா..." என்று சாம்பமூர்த்தியின் வாய் முணுமுணுத்தது.

"ஆமாம் குழந்தாய்! உன் அப்பாதான்!"

"அப்படியானால், ஊரார் சொல்வதெல்லாம் பொய்தானே, அம்மா!" என்று சாம்பமூர்த்தி அளவற்ற ஆவலுடன் கேட்டான்.

"பொய்யோ! நிஜமோ? இந்த உலகத்தில் எது பொய், எது நிஜம் யாருக்குத் தெரியும்? நான் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லி விடுகிறேன், சாம்பு! அப்புறம் நீயே பொய் எது, நிஜம் எதுவென்று தீர்மானித்துக் கொள். எங்கே ஆரம்பிக்கிறது, எப்படிச் சொல்கிறது என்று தெரியாமல் திண்டாடுகிறேன்" என்றாள் தாயார்.

பிறகு, இவ்விதமாக ஆரம்பித்தாள்.

"உன் அப்பாவுக்கு என்னைக் கல்யாணம் செய்து கொடுத்த போது நான் ஓட்டலில் மாவு அரைக்கும் படியான கதிக்கு வருவேன் என்று என் அப்பாவும் அம்மாவும் சொப்பனத்தில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். என் அப்பா அம்மாவுக்கு நான் ஒரே பெண். அப்பா பணக்காரர். கிராமத்தில் ஐம்பது காணி நிலமும், இன்னும் நிறையச் சொத்துக்களும் இருந்தன. அந்தச் சொத்தெல்லாம் எனக்குத்தானே என்று சொத்து இல்லாவிட்டாலும் படித்த பிள்ளையாயிருக்க வேண்டுமென்று வரன் பார்த்தார்கள். கடைசியில் உன் அப்பாவுக்குக் கொடுத்தார்கள். அவர் உன்னைப் போலவே பி.ஏ. பரீட்சை தேறியிருந்தார். கல்யாணம் ரொம்பப் பிரமாதமாக நடந்தது."

அவர்களுடைய இல்வாழ்க்கையானது ஆனந்தமயமாக இருந்தது. அனந்தராமன் பி.ஏ சில காலம் தாலுகா குமாஸ்தா வேலை பார்த்து விட்டு ரெவின்யூ இன்ஸ்பெக்டர் ஆனார். மேலே மேலே உத்தியோக உயர்வு கிடைக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலைமையில் பெண்ணும் மாப்பிள்ளையும் சந்தோஷமாய் வாழ்க்கை நடத்துவதைப் பார்த்துவிட்டுச் செல்லம்மாளின் தாயும் தகப்பனும் காலமானார்கள். செல்லம்மாளுக்கு ஏராளமான மஞ்சட் காணி சொத்தையும் வீட்டுத் துணைக்கு வயதான அத்தை ஒருத்தியையும் அவர்கள் வைத்து விட்டுப் போனார்கள்.

அதற்குப் பிறகு இன்னும் சில காலம் செல்லம்மாளின் வாழ்க்கை சந்தோஷமாக இருந்து வந்தது. நாளாக ஆக, அவளுடைய மனத்திற்குள்ளே மட்டும் ஒரு அந்தரங்க வேதனை தோன்றத் தொடங்கியது. குழந்தையில்லையே என்ற வேதனைதான் அது. அத்தைக் கிழவி இந்த வேதனைக்கு அடிக்கடித் தூபம் போட்டு வளர்த்து வந்தாள். "அடிப் பெண்ணே! என் கண்ணை மூடுவதற்குள் உன் வயிற்றில் ஒரு குழந்தை பிறந்து பார்க்க மாட்டேனா?" என்று அவள் அடிக்கடி பிரலாபிப்பாள். அதைக் கேட்க கேட்கச் செல்லம்மாளுக்கு என்னமோ செய்யும். பகலிலும் இரவிலும் குழந்தையைப் பற்றியே நினைக்கவும் கனவு காணவும் தொடங்கினாள்.

அண்டை அயல் வீட்டுக் குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம், அவளுக்கு ஒரு பக்கத்தில் எல்லையற்ற வாஞ்சை உண்டாகும். இன்னொரு பக்கத்தில் காரணமில்லாமல் கண்ணில் ஜலம் துளிக்கும்.

இப்படி இருக்கும் சமயத்தில், அவளுடைய வாழ்க்கையே பாழாக்கும்படியான இடி விழுந்தது.

அனந்தராமன் மேல் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் ஏற்பட்டது. வேலையிலிருந்து அவன் நீக்கப்பட்டதுடன் மேலே கிரிமினல் வழக்கும் நடந்தது. வழக்கு ஹைக்கோர்ட்டு வரையில் போய் முடிவதற்குள் மூன்று வருஷம் ஆயிற்று. கடைசியில் தண்டனை ஒன்றுமில்லாமல் உத்தியோகம் போனதுடன் அனந்தராமன் தப்பி வந்து சேர்ந்தான். இதற்குள்ளாக செல்லம்மாளின் மஞ்சட்காணிச் சொத்தில் பாதி போய்விட்டது.

உத்தியோகம் போன பிறகு அனந்தராமன் வீட்டில் சுகமாயிருந்து கொண்டு காலட்சேபம் நடத்தியிருக்கலாம். பாக்கி அவ்வளவு சொத்து. ஆனால் புருஷன் சம்பாத்தியம் இல்லாமல் வீட்டில் சும்மா உட்கார்ந்து கொண்டிருப்பது என்னும் விஷயம் அனந்தராமனுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே வியாபாரத்துறையில் இறங்கினான். வியாபாரம் என்றால் கேவலம் ஜவுளிக்கடை, மளிகைக் கடை வைக்க அவன் விரும்பவில்லை. கமிஷன் எஜென்ஸி தொழிலில் புகுந்தான். பல சாமான்களுக்கு ஏஜென்ட் ஆனான். முதலில் ஜில்லாக்களுக்கு ஏஜென்ஸி எடுத்து, பிறகு தென் இந்தியா முழுவதற்குமே அனந்தராமன் ஏஜென்ஸி எடுத்துக் கொண்டான். இதனால் அடிக்கடி சுற்றுப் பிரயாணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

ஏஜென்ஸி தொழில் மேலும் மேலும் அபிவிருத்தியடைந்தது. இதனால் மூலதனமும் அதிகமாகவே தேவையாயிற்று. செல்லத்தின் மஞ்சட்காணிச் சொத்தும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டு வந்தது. வியாபார விருத்திக்காக நிலத்தை மேலும் மேலும் விற்க வேண்டியதாயிற்று.

இதற்கிடையில், செல்லத்தின் அத்தை, "அடி பெண்ணே! உன் வயிற்றில் ஒரு குஞ்சு பிறந்து நான் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே? எனக்குக் கண் பார்வை மங்கி வருகிறதே!" என்று பிரலாபித்துக் கொண்டேயிருந்தாள்.

இந்த அத்தைக்கு மைத்துனன் பிள்ளை ஒருவன் இருந்தான். அத்தைக் கண்ணை மூடினால் இவன் தான் கர்மம் செய்ய வேண்டியவன். எனவே, தன்னுடைய கடமையை நிறைவேற்றுவதற்குரிய காலம் சமீபித்து விட்டதா என்று பார்க்கும் பொருட்டு, இவன் அடிக்கடி இவர்கள் வீட்டுக்கு வந்து போவது வழக்கம்! அப்போதெல்லாம் செல்லத்தினிடம் உறவு கொண்டாடுவான். செல்லமும் அவனை அத்தான் என்று அழைத்துப் பிரியமாயிருப்பாள். சில சமயம் அவனுடைய நடவடிக்கை வரம்பு கடந்ததாக அவளுக்குத் தோன்றும். அவனுடைய பார்வையும் பேச்சும் விரஸமாகத் தோன்றும். ஆனாலும் தன்னிடம் உயிருக்குயிராயிருந்த அத்தையை உத்தேசித்து, அத்தானுடைய அசந்தர்ப்ப நடவடிக்கைகளையெல்லாம் அவள் பொருட்படுத்தாமல் உதாசீனம் செய்து வந்தாள்.

கடைசியில், இந்த அத்தான் தான் இடியிலும் பேரிடியான செய்தியைக் கொண்டு வந்தான்.

முதலில் அவன் அதைச் செல்லம்மாளிடம் நேரில் சொல்லவில்லை. அத்தையிடம் கொஞ்சம் கொஞ்சமாக வத்தி வைத்தான். அதாவது, அனந்தராமன் வியாபார அலுவல் என்பதாகச் சொல்லிக் கொண்டு வெளியூருக்குப் போவதெல்லாம் வெறும் பொய் என்றும், தஞ்சாவூரில் ஒரு மாயமோகினியின் வலையில் அவன் விழுந்து விட்டதாயும் செல்லம்மாளின் மஞ்சட்காணிச் சொத்தெல்லாம் அங்கேதான் போய்க் கொண்டிருக்கிறதென்றும் சொன்னான். அத்தையும் பிள்ளையும் அடிக்கடி காதைக் கடித்துக் கொள்வதையும் 'ஐயோ! இந்த அசட்டுப் பெண் இப்படிப் பேசாமல் இருக்கிறாளே!' என்று அங்கலாய்ப்பதையும் சில காலம் வரையில் செல்லம் சகித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உள்ளத்தில் என்னவெல்லாமொ சந்தேகங்கள் கொந்தளிக்கத் தொடங்கின. கடைசியில் ஒரு நாள் அத்தானைக் கேட்டே விட்டாள். விஷயம் தெரிந்ததும் அவள் மகா ஆக்ரோஷத்துடன், "இப்படியெல்லாம் நீ அவர் மேல் இல்லாததும் பொல்லாததும் சொல்வதாயிருந்தால், இனிமேல் இங்கே வரவேண்டாம்!" என்றாள். அத்தான் பிரமித்தவன் போல் நின்று, "நானா? நானா இல்லாததும் பொல்லாததும் சொல்கிறேன்? கடைசியில் நானா பொல்லாதவனாய்ப் போய்விட்டேன்? உண்மையும் பொய்யும் ஒரு நாளைக்கு உனக்கே தெரியப் போகிறது. அது வரையில், நான் இங்கே தலைகாட்டுவதில்லை" என்று சொல்லி விட்டுப் போய்விட்டான்.

அதற்குப் பிறகு அத்தையின் புலம்பல் அதிகமாயிற்று. "அடி பெண்ணே! உன் தலையில் இப்படியா எழுதியிருந்தது?" என்று ஓயாமல் அங்கலாய்க்கத் தொடங்கினாள். செல்லத்துக்கோ, அப்புறம் ஒரு வினாடி கூட மன அமைதி இல்லாமற் போயிற்று. அத்தான் மேல் அவள் எரிந்து விழுந்த போதிலும் அவன் சொன்னது உண்மைதான் என்று அவள் உள் மனத்தில் ஏதோ ஒன்று சொல்லிற்று. மறுபடியும் அத்தானை வரவழைக்க வேண்டும் அவரைப் பற்றி எல்லா விபரமும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு பக்கத்தில் மனம் துடித்தது. இன்னொரு பக்கம் தன்னுடைய அருமைத் தகப்பனார் கொடுத்த மஞ்சட்காணிச் சொத்தெல்லாம் இப்படியா பாழாய்ப் போய் கொண்டிருக்கிறது என்று எண்ணிய போது அவள் நெஞ்சம் கொதித்தது. தன் உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் யாருக்குத் தத்தம் செய்திருந்தாளோ, யாரைத் தெய்வமாக எண்ணிப் பூசித்தாளோ, இம்மைக்கும் மறுமைக்கும் தன்னுடைய ஒரே கதியென்று யாரை நம்பியிருந்தாளோ அந்தப் புருஷன் இப்படித் தன்னை வஞ்சித்து வருகிறான் என்று எண்ணிய போது அவளுடைய இருதயம் 'படீர்' என்று வெடித்துவிடும் போலிருந்தது. மற்றொரு சமயம் அவரை இவ்விதம் மருந்து வைத்து மயக்கி விட்ட மாயக்கள்ளியைக் கொன்று விட வேண்டுமென்று ஆத்திரம் உண்டாயிற்று.

அத்தான் மறுபடியும் ஏதோ வியாஜம் வைத்துக் கொண்டு வந்து சேர்ந்தான். இந்தத் தடவை செல்லம்மாளே அவனிடம் எல்லா விபரமும் விசாரித்துத் தெரிந்து கொண்டாள்.
அடுத்த தடவை அனந்தராமன் வீட்டுக்கு வரும் போது, "உங்களுக்கு நான் வேண்டுமா? அவள் வேண்டுமா?" என்று கண்டிப்பாய்க் கேட்டுவிடச் செல்லம்மாள் தீர்மானித்துக் கொண்டாள். அவர் சரியான பதில் சொல்லாவிட்டால், அத்தையுடன் தன்னுடைய பிறந்த ஊருக்குப் போய் பிதிரார்ஜித வீட்டில் தனியாக இருப்பதென்றும் முடிவு செய்து கொண்டாள்.

ஆனால், அனந்தராமன் அடுத்த முறை வீட்டுக்கு வந்த போது செல்லம்மாள் அப்படி ஒன்றும் கேட்கவில்லை. ஏனெனில் அவன் வரும் போதே 104 டிகிரி சுரத்துடன் வந்தான். வந்து படுத்தவன் படுத்தவன் தான். இருபது நாள் படுத்த படுக்கையாய்க் கிடந்தான். செல்லம்மாள் அந்த இருபது நாளும் இராப் பகல் அவன் அருகிலேயே இருந்து சிச்ரூஷை செய்தாள். கழுத்துச் சங்கிலியை விற்று டாக்டர்களுக்குப் பணம் கொடுத்தாள். ஒன்றும் பிரயோஜனப் படவில்லை. இருபத்தோராம் நாள் அனந்தராமன் கண்ணை மூடினான். அந்த மகா உத்தமியின் உள்ளத்தில் தான் குத்திய முள்ளின் கொடுமையைப் பற்றி அறிந்து கொள்ளாமலேயே உயிரை விட்டான். கடைசி காலத்தில், அவன் ஏதோ செல்லத்திடம் அந்தரங்கமாய்ச் சொல்ல விரும்பியது போல் தோன்றியது. ஆனால் அதற்குத் தக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லையோ, அல்லது அவனுக்குத் தான் தைரியம் உண்டாகவில்லையோ, தெரியாது. அவன் ஒன்றும் சொல்லவும் இல்லை. செல்லம் வற்புறுத்திக் கேட்கவும் இல்லை

3

அனந்தராமன் காலமான பிறகு அவனுக்குச் செய்ய வேண்டிய உத்திரக்கிரியைகளையெல்லாம் செல்லம் நடத்தியதுடன், அவன் பட்டிருந்த கடன்களையெல்லாம் தீர்த்தாள். எல்லாம் போக கடைசியில் சொற்பச் சொத்துத்தான் மிஞ்சியது. அதை வைத்துக் கொண்டு கிராமத்தில் நிம்மதியாய்க் காலங் கழிக்கலாமென்று சென்றாள்.

ஆனால், 'நிம்மதி' மட்டுந்தான் ஏற்படவில்லை. தெய்வமென்று போற்றிய கணவன் தனக்குச் செய்த துரோகத்தை நினைத்து நினைத்து, அவள் மனம் புண்ணாயிற்று. தன் வயிற்றில் ஒரு குழந்தை பிறக்காமல் போன துரதிர்ஷ்டத்தை நினைத்து அவள் வேதனை அடைந்தாள். கடவுளை நொந்து கொண்டாள். இவையெல்லாவற்றையும் விட, தன் பதியின் உள்ளத்தைத் தன்னிடமிருந்து திருடிக் கொண்ட மாயக்கள்ளி யார்? அவள் எப்படியிருப்பாள்? தன்னிடம் இல்லாத வசீகரம் அவளிடம் என்ன இருக்கும் என்று தெரிந்து கொள்ள, அவள் மனம் துடித்துக் கொண்டேயிருந்தது.

அப்புறம் அத்தான் இரண்டொரு தடவை வந்தான். செல்லம்மாளிடம் மிகுந்த அநுதாபங் காட்டியதுடன், "இப்பேர்ப்பட்ட உத்தமிக்குத் துரோகம் செய்த பாவி"யைப் பற்றி இடித்துக் காட்டினான். அனந்தராமனுக்குச் செல்லம்மாள் எவ்விதத்திலும் கடமைப்பட்டிருக்கவில்லை என்பதையும், இந்தக் காலத்தில் விதவா - விவாகம் சாதாரணமாய் நடக்கிறதென்பதையும், ஜாடைமாடையாய்க் குறிப்பிட்டு வந்தான்.

ஆனால், செல்லம்மாளோ அவனை விஷம் போல் வெறுக்க ஆரம்பித்தாள். தன்னுடைய மனம் இப்போது நிம்மதியில்லாமல் தவிப்பதற்கெல்லாம் காரணம் அத்தான் தான் என்ற எண்ணம் அவளுக்குத் தோன்றியிருந்தது. அவனை யார் சனீசுவரன் மாதிரி அந்தத் தஞ்சாவூர்க்காரியைப் பற்றிச் சொல்லச் சொன்னது? அவன் சொல்லாமலிருந்தால் தான் புருஷனிடம் கொண்டிருந்த பக்தியில் சிறிதும் களங்கம் ஏற்படாமல் இருந்திருக்குமல்லவா? இப்போது இம்மாதிரி தன் உள்ளத்தை அரித்து எடுத்துக் கொண்டிருக்காதல்லவா?

ஒருநாள் செல்லம்மாள் இந்த ஆத்திரத்தையெல்லாம் அத்தானிடம் காட்டி, அவனை, "இனிமேல் இங்கே வரவேண்டாம்" என்று சொல்லி விட்டாள். அவனும் அத்துடன் ஒழிந்து போனான்.

அனந்தராமன் காலமாகிச் சுமார் ஒன்றரை வருஷ காலம் ஆயிற்று. அப்போது ஓர் அதிசயமான கடிதம் செல்லம்மாளுக்கு வந்தது. அது தஞ்சாவூரிலிருந்து வந்தது. கடிதத்தின் அடியில், "அனாதை அம்முலு" என்று கையெழுத்துப் போட்டிருந்தது. தான் சாகக் கிடப்பதாகவும், சாவதற்கு முன் செல்லம்மாளிடம் ஒரு முக்கியமான் சமாசாரம் சொல்ல வேண்டும் என்றும் சொல்லாமல் செத்துப் போனால், தன்னுடைய நெஞ்சு வேகாது என்றும், ஆகையால் உடனே புறப்பட்டு வந்து தன்னைப் பார்க்க வேண்டுமென்றும், அந்த அனாதை ஸ்திரீ எழுதியிருந்தாள்.

செல்லம்மாள் அந்தக் கடிதத்தைத் திரும்பித் திருப்பிப் படித்து யோசனை செய்து கொண்டிருந்தாள். கடிதம் எழுதியது யார் என்று அவள் மனதிற்கு உடனே தெரிந்து போய்விட்டது. அதைப்பற்றி அவளுக்குச் சந்தேகமே இல்லை. போவதா, வேண்டாமா என்று தான் யோசனை செய்தாள். "செத்தால் சாகட்டுமே? இவளை நான் என்ன போய்ப் பார்ப்பது" என்று ஒரு சமயம் நினைத்தாள். "இதில் ஏதாவது சூது இருக்குமோ, என்னமோ?" என்று ஒரு பக்கம் பயமாயிருந்தது. இதையெல்லாம் மீறி அவள் எப்படித்தான் இருப்பாள், அவளைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் மேலோங்கிற்று. அவள் அப்படி என்ன சமாசாரம் சொல்லப் போகிறாள் என்று தெரிந்து கொள்ளவும் அவா உண்டாயிற்று. அதோடு அவள் சாவதற்கு முன்னால் நேருக்கு நேராக அவளுக்குச் சாபம் கொடுக்க வேண்டும் என்ற ஆசையும் ஒரு பக்கம் மனத்தில் பொங்கிக் கொண்டிருந்தது.

செல்லம்மாள் யோசனை செய்து கொண்டிருக்கும் போதே இரண்டாவது கடிதமும் வந்துவிட்டது. உடனே புறப்பட்டு வராவிட்டால், தன்னை உயிரோடு பார்க்க முடியாது என்றும், முக்கியமாக ஒரு செய்தியை செல்லம்மாள் தெரிந்து கொள்ள முடியாமல் போகும் என்றும் அதில் எழுதியிருந்தது. எவ்வளவு அசௌகரியமிருந்தாலும், உடனே புறப்பட்டு வரவேண்டுமென்று ரொம்பவும் மன்றாடிக் கேட்டுக் கொண்டிருந்தது.

செல்லம்மாள் அன்றைக்கே கிளம்பி மறுநாள் தஞ்சாவூர் போய்ச் சேர்ந்தாள். சந்து பொந்துகளுக்குப் பேர் போன தஞ்சாவூரில் கடிதத்தில் கொடுத்திருந்த விலாசத்தைக் கண்டுபிடிப்பது ரொம்பவும் கஷ்டமாயிருந்தது. கடைசியில், எப்படியோ கண்டு பிடித்தாள். கிழ வேலைக்காரி ஒருத்தி செல்லம்மாளை அழைத்துக் கொண்டு போய் மச்சு அறையில் விட்டாள். அங்கே ஒரு கயிற்றுக் கட்டிலிலே ஒரு அனாதை ஸ்திரீ படுத்திருந்தாள். உண்மையிலேயே அவள் சாகக் கிடக்கிறாள் என்பது பார்த்தவுடனே தெரிந்து போயிற்று. அந்த நிலைமையில் கூட அவள் முகத்தில் ஒரு களை இருந்தது. அதைக் காட்டிலும் அந்த முகத்தில் குடி கொண்டிருந்த சோகம் செல்லம்மாளின் உள்ளத்தின் அடிவாரத்தில் மறைந்திருந்த இரக்க உணர்ச்சியை எழுப்பிற்று. செல்லம்மாள் தான் சாபங் கொடுக்க வேண்டுமென்று வந்ததையெல்லாம் மறந்து அவள் சொல்வதைக் கேட்கச் சித்தமானாள்.

செல்லம்மாளைக் கண்டதும் அந்தப் பெண் படுத்தபடியே இரண்டு கைகளையும் கூப்பிக் கும்பிட்டாள். அவளை தன் அருகில் உட்காரச் சொன்னாள். மிகவும் ஈனமான குரலில், குழந்தைப் பிராயத்தில் சிறு தாயார் கொடுமைகளுக்கு ஆளானதிலிருந்து தொடங்கி, தன்னுடைய துயரக் கதையை 'மளமள'வென்று சொல்லி முடித்தாள். முடிப்பதற்குள் பல தடவை செல்லம்மாளின் கண்களில் ஜலம் துளிர்த்து விட்டது.

கடைசியாக, உலக வாழ்க்கையின் கஷ்டங்களைப் பொறுக்க முடியாமல், அம்முலு தண்டவாளத்தில் விழுந்து பிராணனை விடுவதென்று தீர்மானித்தாள். அவ்விதம் தண்டவாளத்தில் படுத்துக் கிடந்த போதுதான் அனந்தராமன் வந்து அவளைத் தொட்டு எழுப்பினார். அவளுக்கு எவ்வளவோ சமாதானம் சொல்லி அழைத்துப் போனார். அவளுடைய நிர்க்கதியான நிலைமையைத் தெரிந்து கொண்டு தஞ்சாவூருக்கு அழைத்துப் போய்த் தனி வீட்டில் குடி வைத்தார். வாழ்நாள் முழுவதும் அன்பான வார்த்தையைக் கேட்டறியாத அம்முலு அனந்தராமனிடம் தன்னுடைய இருதயத்தை ஒப்புவித்தாள். அனந்தராமன் அடிக்கடி செல்லம்மாளைப் பற்றியும் அவளுடைய உயர்ந்த குணத்தைப் பற்றியும் அம்முலுவிடம் சொல்வதுண்டு. அப்போதெல்லாம் அம்முலுவின் மனம் படாத வேதனைப்படும் - அப்படிப்பட்ட உத்தமிக்குத் துரோகம் செய்கிறோமேயென்று. இப்படியே சில காலம் சென்றது. ஒரு நாளைக்கு அனந்தராமன் செல்லம்மாளின் அத்தானை ரயிலில் சந்தித்தார். அவனுடன் பேசியதிலிருந்து அத்தானுக்கு தன்னுடைய இரகசியம் தெரியுமென்று அறிந்து கொண்டார். அவன் போய்ச் செல்லம்மாளிடம் சொல்லி விட்டால் என்ன செய்கிறதென்று அனந்தராமன் பீதியடைந்தார். அம்முலுவிடம் "நானே போய்ச் செல்லம்மாளிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடப் போகிறேன்; அப்புறம் நடப்பது நடக்கட்டும்" என்று கூறி விட்டுக் கிளம்பினார்.

கொஞ்ச நாளைக்கெல்லாம் அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ஊருக்குப் போய்ச் சேரும் போதே 104 டிகிரி சுரத்துடன் போனதாகவும், 'காலா ஹஸார்' என்னும் விஷ சுரம் தன்னைப் பீடித்திருப்பதாகவும், பிழைப்பது துர்லபம் என்றும் தெரிவித்திருந்தார். அதோடு செல்லம்மாளிடம் உண்மையைச் சொல்லத் தனக்குத் தைரியம் வரவில்லை என்றும், அவளுடைய மனத்தைப் புண்படுத்த விரும்பவில்லையென்றும், தனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், அம்முலுவே எல்லாவற்றையும் செல்லம்மாளிடம் சொல்லி விட வேண்டும் என்றும், அவள் அம்முலுவுக்கு உதவி செய்து காப்பாற்றுவாள் என்றும் எழுதியிருந்தார்.

அதற்குப் பிறகு அனந்தராமனிடமிருந்து கடிதம் ஒன்றும் வரவில்லை. துடியாய்த் துடித்துக் கொண்டிருந்த அம்முலு ஒரு ஆளை அனுப்பி விசாரித்துக் கொண்டு வரச் சொன்னாள். ஆள் வந்து அனந்தராமன் இம்மண்ணுலகை நீத்த விவரத்தைக் கூறினான்.

"அக்கா அந்த நிமிஷத்திலேயே நான் பிராணனை விட்டிருக்க வேண்டியது. ஆனால், அதோ தொட்டிலில் இருக்கிறானே, அவனுக்காக உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தேன். அவன் அப்போது என் வயிற்றில் இருந்தான், ஆறுமாதம்" என்றாள் அம்முலு.

அம்முலுவின் கதையைக் கேட்டுக் கொண்டிருந்த போது செல்லம்மாளின் கவனம் அடிக்கடி அதே அறையின் ஒரு மூலையில் தரையில் வைத்திருந்த தொட்டிலின் பக்கம் சென்று கொண்டிருந்தது. அந்தத் தொட்டிலில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. அம்முலுவின் கதை முடியும் சமயத்தில் குழந்தை தன் கண்களை மலர விழித்து அப்புறமும் இப்புறமும் பார்த்து அழத் தொடங்கியது. செல்லாம்மாள் ஒரு பாய்ச்சல் பாய்ந்து தொட்டிலின் பக்கம் சென்றாள். குழந்தையின் முகம் அப்படியே அப்பாவை உரித்து வைத்தது போல் இருந்ததைக் கண்டாள்.

"குழந்தை! சாம்பு! அப்போது நீ உன்னுடைய பிஞ்சுக் கைகளை நீட்டிக் கொண்டு, மழலை வாயால் 'அம்மா' என்று சொல்லிக் கொண்டு என்னிடம் தாவி வந்தாய். நான் உன்னை வாரி எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டேன். அந்த நிமிஷம் எனக்கு உலகமே மறந்து போய்விட்டது. எனக்குக் குழந்தை இல்லை என்ற குறையைப் பகவான் பூர்த்தி செய்துவிட்டார் என்ற ஒரு நினைவுதான் இருந்தது" என்றாள் செல்லம்மாள்.

4

அப்புறம் மூன்று நாள் அம்முலு உயிரோடு இருந்தாள். அந்த மூன்று நாளும் இறந்து போன அனந்தராமனைப் பற்றியே இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்தார்கள். தன்னுடைய நல்ல குணத்தைப் பற்றி அனந்தராமன் கூறியதைப் பற்றிக் கேட்கக் கேட்க செல்லம்மாளுக்கு அனந்தராமன் மேலிருந்த கோபதாபமெல்லாம் போய் விட்டது. அம்முலு கண்ணை மூடிய பிறகு, செல்லம்மாள் கண்ணீரும் கம்பலையுமாய்க் குழந்தையைத் தோளோடு சாய்த்து எடுத்துக் கொண்டு ஊருக்கு கிளம்பிச் சென்றாள்.

ஊரில் செல்லம்மாளைப் பற்றி வம்பு வளர்க்கத் தொடங்கினார்கள். யாரோ ஒரு அனாதைக் குழந்தையை விலைக்கு வாங்கி வந்திருப்பதாகச் சொன்னார்கள். சாதி தெரியாத குழந்தையை வைத்துக் கொண்டு வளர்ப்பதற்காக அவளைச் சாதியிலிருந்து தள்ளி வைத்தார்கள். இன்னும் சொல்லத் தகாத அவதூறையும் சிலர் வாய் கூசாமல் கேலியாகச் சொன்னார்கள். அதாவது செல்லம்மாளே குழந்தையைப் பெற்று எடுத்துக் கொண்டு வந்ததாகச் சொன்னார்கள். கிராமத்திலிருந்து செல்லம்மாள் பட்டணத்துக்குப் போன போதும், இந்தப் பொய் அவதூறு அவளைத் தொடர்ந்து போயிற்று. ஆனால் இதையெல்லாம் செல்லம்மாள் சிறிதும் பொருட்படுத்தவில்லை. தன்னுடைய சகல கஷ்டங்களையும் துயரங்களையும் குழந்தை சாம்புவின் ஒரு புன்சிரிப்பில் மறந்து வாழ்ந்து வந்தாள்.

*****

இவ்விதம் செல்லம்மாள் கதையை முடித்ததும், உட்கார்ந்திருந்த சாம்பமூர்த்தி எழுந்திருந்தான். "அம்மா! கடவுள் எங்கேயோ இருக்கிறார் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். கோவிலிலும் குளத்திலும் போய்த் தெய்வத்தைத் தேடினேன். என் தெய்வம் வீட்டிலேயே இருக்கிறதென்பதை அறியாமற் போனேன். அம்மா! நீதான் என் தெய்வம்!" என்று சொல்லித் தரையில் விழுந்து, தாயின் பாதங்களைத் தொட்டு நமஸ்கரித்தான். செல்லம்மாள் உணர்ச்சி நெஞ்சை அடைக்க ஒன்றும் பேசமுடியாதவளாயிருந்தாள்.

பிறகு, சாம்பமூர்த்தி எழுந்து நின்று, "அம்மா எனக்குக் கல்யாணமும் வேண்டாம்; ஒன்றும் வேண்டாம். வாழ்நாளெல்லாம் நான் பிரம்மச்சாரியாகவே இருப்பேன். உனக்குப் பணிவிடை செய்வதே என் வாழ்க்கைக் கடமை கடவுள் அறிய..." சபதம் செய்யத் தொடங்கிய போது "நிறுத்து குழந்தை, நிறுத்து!" என்று செல்லம்மாள் நிறுத்தினாள்.

அதே சமயத்தில், முக்கால்வாசி சாத்தியிருந்த ரேழி நடைக் கதவு படீர் என்று திறந்தது. ஸ்ரீமதி ரங்கநாயகி ஆத்திரத்துடன் உள்ளே வந்தாள்.

"ரொம்ப அழகாயிருக்கிறது! நீங்கள் பிரம்மச்சாரியாயிருந்து விட்டால், என்னுடைய கதி என்ன? நானும் கன்னியாகவே இருக்க வேண்டியதுதான். நான் உங்களுக்காக உங்களைக் கல்யாணம் செய்து கொள்ளாவிட்டாலும், உங்கள் அம்மாவுக்குப் பணிவிடை செய்வதற்காகவே கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன், அம்மா! எனக்கும் நீங்கள் தான் தெய்வம்!" என்று சொல்லி, ரங்கநாயகியும் செல்லம்மாளின், பாதங்களில் நமஸ்கரித்தாள். அவளுடைய தலையைத் தொட்டுச் செல்லம்மாள் ஆசிர்வாதம் செய்தபோது, 'கலகல'வென்று அவளுடைய கண்களிலிருந்து நீர் பொழிந்தது.

சாம்பமூர்த்தி அவ்விதம் குனிந்த தலையுடன் வக்கீல் வீட்டிலிருந்து கிளம்பி வந்த பிறகு, ரங்கநாயகியை அவள் வீட்டார் ரொம்பவும் பரிகசித்துப் புண்படுத்தினார்களாம். இதனால் ரங்கநாயகியின் மனம் உறுதிப்பட்டு விட்டதாம். "நான் அவரைத்தானே கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன். அவருடைய அம்மாவைக் கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை. அவருடைய அம்மா எப்படியிருந்தால் எனக்கு என்ன?" என்று சொல்லிவிட்டு, மற்றவர்கள் எவ்வளவு தடுத்தும் கேளாமல், அவள் சாம்பமூர்த்தியின் வீட்டுக்கு வந்தாளாம். வாசற்படிக்கு அருகில் வந்த போது, உள்ளே தாயாரின் பேச்சுக் குரல் கேட்டதாம். அங்கு நின்றபடியே செல்லம்மாள் சொன்ன கதையின் பிற்பகுதியை எல்லாம் கேட்டுவிட்டுச் சாம்பமூர்த்தி சபதம் கூறும் சமயத்தில் உள்ளே வந்தாளாம்.

*****

திருநீர்மலையில் கல்யாணம் ஆன அன்று பிற்பகல், மேற்படி வரலாறுகளையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டபின், "ஏன் மாப்பிள்ளை! உங்கள் மனைவியின் வீட்டார் அப்புறம் சமாதானம் அடையவே இல்லையா? இன்னும் கோபமாய்த் தான் இருக்கிறார்களா?" என்று கேட்டேன்.

"இல்லை; ரங்கநாயகியின் உறுதியைக் கண்டபின், அவர்கள் ஒருவாறு சமாதானம் அடைந்து விட்டார்கள். இந்தக் கல்யாணத்துக்குக் கூட வருவதாகக் கடிதம் எழுதியிருந்தார்கள். ஆனாலு திடீரென்று புயலும் மழையும் அடித்து ரயில் பாதை சீர்கெட்டு விட்டதல்லவா? அதனால் தான் வர முடியவில்லை" என்றான்.

அப்போது மணப் பெண் ரங்கநாயகி "அதுவும் எங்களுடைய அதிர்ஷ்டந்தான். அந்தக் கும்பல் எல்லாம் வந்திருந்தால், நாங்கள் இன்றைக்கு இவ்வளவு ஆனந்தமாக இருந்திருக்க முடியுமா?" என்றாள்.

இந்த வருஷம் வைகாசிக் கோடையில் திடீரென்று அவ்வளவு பெரிய புயலும் மழையும் அடித்து, ரயில் பாதை கெட்டதின் காரணம், அப்போதுதான் எனக்குத் தெரிய வந்தது.
-------------

51. எஜமான விசுவாசம்

1

இந்தியாவையும், உலகத்தையுமே ஒரு கலக்குக் கலக்கி விடுகிறேன் என்று சொல்லிக் கொண்டு ஸர். ஸ்டாபோர்டு கிரிப்ஸ் துரை இந்தியாவுக்கு வந்தாரல்லவா? வந்து, அவர் சொன்னபடியே ஒரு கலக்குக் கலக்கிவிட்டுச் சேற்றை வாரிப் பூசிக் கொண்டு திரும்பிப் போனாரல்லவா? அந்தக் கிரிப்ஸ் துரையின் விஜயத்தினால் ஏதாவது உண்மையில் பிரயோஜனம் ஏற்பட்டதா, ஏற்படாவிட்டால் அது யாருடைய குற்றம்? - என்பதைப் பற்றியெல்லாம் அபிப்ராய பேதம் இருக்கலாம். ஆனால் ஒரு பலன் நிச்சயமாக ஏற்பட்டது என்பதை நான் அறிவேன். கிரிப்ஸ் விஜயத்தின் பலனாகத்தான் 'வாச்மேன்' வீராசாமிக்கு வேலை போயிற்று. வேலை போனதோடு இல்லை; கிட்டத்தட்ட அவன் தூக்கு மேடையில் ஏறும்படி கூட ஆகிவிட்டது.

சென்னை அரண்மனைக்காரன் தெருவில் பிரசித்தியாக இருந்து (இப்போது 'இருந்த' என்று சொல்ல வேண்டியிருக்கிறது, பாவம்) மோகன் கம்பெனியில் இராக்காவல் வேலை பார்த்தான் வீராசாமி. இந்த வேலையை அவன் சென்ற ஒன்பது வருஷ காலமாகப் பார்த்து வந்தான். இது விஷயம், மேற்படி மோகன் கம்பெனியின் புரொப்ரைட்டர் மிஸ்டர் எம்.டி. மோகன் அவர்களைத் தெரிந்தவர்க்கெல்லாம் ரொம்பவும் ஆச்சரியத்தை அளித்தது. ஏனெனில், மிஸ்டர் மோகனுடைய சுபாவம் ஒரு மாதிரியானது. அதாவது 'க்ஷணச்சித்தம் கணப்பித்தம்' என்பார்களே, அந்த மாதிரி சுபாவம். காலையில் ஒரு சிப்பந்தியைக் கூப்பிட்டு, "சம்பளத்தைத் தூக்கிப் போட்டிருக்கிறேன்" , என்பார் சாயங்காலம் அதே சிப்பந்தியைக் கூப்பிட்டு "'டிஸ்மிஸ்' - கணக்குப் பார்த்துச் சம்பளத்தை வாங்கிக் கொண்டு போ! - பதில் பேசாதே!" என்பார். ஆகவே, அவருடைய ஆபீஸ் சிப்பந்திகள் எல்லாரும் அன்றாடம் ஆபீசுக்குக் கிளம்பும் போது "டிஸ்மிஸ்" உத்தரவு வாங்கிக் கொண்டு திரும்புவதற்குத் தயாராகவே கிளம்புவார்கள். அதோடு தினசரிப் பத்திரிகை 'வாண்டட்' பத்தியைப் பார்த்துக் கொண்டும் வேறு வேலைக்கு மனுப் போட்டுக் கொண்டுந்தான் இருப்பார்கள்.

ஒன்றிரண்டு கிழப் பெருச்சாலிகள் மட்டும் - பிடித்துத் தள்ளினாலும் போகாமல் உட்கார்ந்திருந்தார்களே தவிர, மற்றபடி மோகன் கம்பெனியில் 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' மாகவே எப்போதும் இருக்கும்.

ஆனால், இவ்விதம் சிப்பந்திகளை மாற்றிக் கொண்டு வந்தால், கம்பெனியின் காரியங்கள் எப்படி ஒழுங்காக நடைபெறுமென்று வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். இயற்கையுங் கூடத்தான். ஆனால், மிஸ்டர் மோகனுடைய இயற்கையை வாசகர்கள் நன்றாய்த் தெரிந்து கொள்ளாத தோஷமே அதற்குக் காரணம். மிஸ்டர் மோகன் ஒரு சமயம் என்ன சொன்னாராம் தெரியுமா? கேளுங்கள் :

"தெருக் கூட்டுகிற விளக்குமாறுகளை இந்த ஆபீஸ் நாற்காலி ஒவ்வொன்றிலும் கொண்டு வந்து உட்கார வைத்து, இந்த ஆபீஸை நான் நடத்தி விடுவேன். நீங்கள் ஒருவரும் இங்கே வேண்டாம்! தொலைந்து போங்கள்" என்றாராம்.

மோகன் கம்பெனியின் பழைய பெருச்சாளி மானேஜர் என்ன செய்தாராம் தெரியுமா? மேற்படி அருமையான மணி வாக்கியங்களை பளபளப்பான காகிதத்தில் அழகாக அச்சிட்டுக் கண்ணாடி சட்டம் போட்டு ஒவ்வொரு சிப்பந்திக்கும் ஒவ்வொன்று கொடுத்தாராம். கொடுத்து, அவரவர்களுடைய வீட்டில் படுக்குமிடத்துக்கு நேரே மாட்டி வைக்கும்படியும், காலையில் எழுந்ததும் அதைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொள்ளும்படியும் சொன்னாராம். "என்னத்துக்காக?" என்று ஒரு சிப்பந்தி கேட்டதற்கு "அட பாவிகளா! அப்படிச் செய்தால் உங்கள் பிதிர்க்கள் கரையேறுவார்கள். கயா சிரார்த்தம் பண்ணின பலன் கிடைக்கும்!" என்றாராம்.

சரி, நம்முடைய கதாநாயகன் 'வாச்மேன்' வீராசாமியிடம் வருவோம். அவன் இப்போது ஒரே சோகக் கடலில் முழுகிக் கிடக்கிறான். அவனுக்கு வேலை போய் ஒரு வாரத்திற்கு மேலாகி விட்டது. வேலை போன விதத்தை நினைக்க நினைக்க, அவனுக்கு அழுகையும் ஆத்திரமும் வந்தது.

ஒருநாள் பிற்பகலில், சம்பளம் வாங்குவதற்காக ஆபீஸுக்குப் போனான் வீராசாமி. காஷியர், "மானேஜரிடம் போ!" என்றார். மானேஜர், "வீராசாமி! நேற்று இராத்திரி 10 மணிக்கு எஜமான் இந்தப் பக்கம் வந்தாராம். உன்னைக் காணோமாம். கணக்குத் தீர்த்து அனுப்பி விடும் படி உத்தரவு!" என்றார். வீராசாமிக்குத் தலையில் ஜப்பான் குண்டு விழுந்தது போலிருந்தது. "ஐயோ! நான்..." என்று ஆரம்பித்தான். "பேசாதே! போ!" என்று அதட்டினார் மேனேஜர். எஜமான விசுவாசமுள்ள வீராசாமி, சம்பளமும் வாங்கிக் கொள்ளாமல் ஆபீஸ் வாசலில் போய் நின்று காத்திருந்தான். மிஸ்டர் மோகன் வெளியில் வந்து காரில் ஏறும் சமயத்தில் போய் நின்று, "எசமான்!" என்றான் "எசமானாவது? சனியனாவது! டிரைவர், விடு" என்றார் மோகன். கார் போய் விட்டது.

பிறகு வீராசாமி, மறுபடியும் காஷியரிடம் போய்ப் பாக்கி இரண்டரை மாதத்துச் சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்தான்.

2

வீராசாமி அவனுடைய மகளின் வீட்டில் இருந்தான். அவளுக்கு இரண்டு குழந்தைகள். அவர்களிடம் கிழவனுக்கு உயிர். மகளின் புருஷன் குடிகாரன். சம்பாதிக்கிற காசைச் சரியாக வீட்டுக்குக் கொண்டு வருகிறதில்லை. ஆகவே கிழவனுடைய சம்பளம் குடும்பத்துக்கு ரொம்ப ஒத்தாசையாயிருந்தது. ஐயோ! திடீரென்று மாதம் 12 ரூபாய் நின்று போய் விட்டதே? காலட்சேபம் எப்படி நடக்கும்? மகள் எங்கேயாவது வீட்டு வேலை செய்யப் போக வேண்டும் போலிருக்கிறதே.

"எப்படியாவது நடந்து விட்டுப் போவுது? நீ இரவிலே நல்லாப் படுத்துத் தூங்கு!" என்றாள் அருமை மகள். ஆனால் கிழவனுக்குத் தூக்கம் வந்தால் தானே? ஆறு வருஷமாகக் காவல் காத்த மோகன் கம்பெனி ஆபீஸ் கட்டிடம், அவனை 'வா வா' என்று வருந்தி அழைத்துக் கொண்டேயிருந்தது.

ஒருநாள் இருட்டிய பிற்பாடு வீராசாமி குடிசையில் இருப்புக் கொள்ளாமல் வெளியே கிளம்பினான். வீதியோடு போய்க் கொண்டிருந்தவன், மோகன் கம்பெனி ஆபீஸ் பையன் ஒருவனைப் பார்த்தான். ஏதோ காணாது கண்டவனைப் போல் ஆர்வத்துடன் அவனைப் பிடித்துக் கொண்டு "ஏண்டா, முனுசாமி! என்னடா சேதி? ஆபீஸெல்லாம் எப்படிடா நடக்குது!" என்றான்.

"ஆபீசு குட்டிச்சுவராப் போச்சு! விடு. நான் போகிறேன்" என்றான் முனுசாமி.

"அட பாவி! எசமான் சம்பளத்தை வாங்கித் தின்னுட்டு, அவருக்கே துரோகம் நினைக்கிற பசங்களா..."

"எப்படியோ தாத்தா! ஓடிப் போனவனுக்கு ஒன்பதாமிடத்திலே ராசா என்கிறாப்பலே, உன்பாடு தேவலை."

"என்னடா, என்பாடு தேவலை?"

"இரண்டரை மாதச் சம்பளம் மொத்தமா வாங்கிக்கிட்டே இல்லையா? எங்களுக்கெல்லாம் காலணா இன்னும் கிடைக்கலை."

"அப்படியா?"

"ஆமாம்; எசமான் பாடு ரொம்ப 'அவுட்' என்கிறாங்க! ஆபீசே குளோசு ஆகிவிடும் என்கிறாங்க!"

கிழவன் ஏதோ நினைவு வந்தவனாய், "ஏண்டா முனுசாமி, எனக்கு பர்த்தியாய் யாராவது வாச்மேன் வந்திருக்கானா?" என்று கேட்டான்.

"இல்லை, தாத்தா! நான் கூட ஒரு கிழவனைக் கொண்டு வந்து விட்டேன். 'வாச்மேன்' தேவையில்லை யென்று எசமான் சொல்லி விட்டாராம்!" - இவ்விதம் சொல்லிக் கொண்டே பையன் கம்பி நீட்டினான்.

வீராசாமியின் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. வீதியின் முடுக்கில் இருந்த பாலத்தின் மேல் உட்கார்ந்து யோசிக்கத் தொடங்கினான். "ஆகா! எசமானுக்குக் கஷ்டம் வந்தவுடனே, இந்த துரோகிப் பசங்கள் எல்லாரும் எப்படிப் பேசுகிறார்கள், பார்த்தாயா? அடாடா! கட்டிடத்தில் ராத்திரி காவலே இல்லையாமே? எந்தக் களவாணிப் பயலாவது வந்து சுருட்டைக் கொளுத்திப் போட்டுட்டுப் போனால் என்ன செய்கிறது? குடி முழுகிப் போய் விடுமே?"

வீராசாமியின் கால்கள் மோகன் கம்பெனி ஆபீஸ் வாசலை நோக்கித் தள்ளாடிக் கொண்டே நடந்தன.

3

இப்போதுநாம் மிஸ்டர் எம்.டி. மோகனை நேரில் சந்தித்தாக வேண்டும். இராத்திரி இரண்டு மணி ஆன போதிலும், அவரை இப்போதே பார்த்து விடுவதுதான் நல்லது. பொழுது விடிந்தால் வேறு அலங்கோலமான நிலைமையில் அவரைப் பார்க்கும்படி நேரிடும்.

நல்ல வேளையாக மிஸ்டர் மோகனும் இன்னும் தூங்கவில்லை. அவருடைய பெரிய பங்களாவின் மேல் மச்சில் முகப்பு அறையில் மேஜையின் பின்னால் உட்கார்ந்திருக்கிறார். வயது சுமார் நாற்பது இருக்கும். பணத் தொந்தி லேசாக விழுந்திருக்கிறது. தட்டையான முகத்தில் ஹிட்லர் மீசை; கிராப்புத் தலை. சுவரில் ஹாட் முதலிய நாகரிக உடைச் சின்னங்கள் காணப்படுகின்றன.

மேஜை மேல் உள்ள காகிதங்களில் ஏதேதோ கூட்டியும் கழித்தும் கணக்குப் பார்க்கிறார்; பக்கத்தில் டெலிபோன் இருக்கிறது. அதை ஆவலுடன் திரும்பிப் பார்க்கிறார்.

இதையும் அதையும் இருக்கிற இருப்பையும் முகத்தில் பரபரப்பையும் பார்த்தால், மனுஷர் டெலிபோனில் ஏதோ முக்கியமான செய்தியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

அவர் எதிர்பார்க்கும் செய்தி டெலிபோனில் வருவதற்குள்ளே, மிஸ்டர் மோகனுடைய வாழ்க்கை வரலாற்றைக் கொஞ்சம் சுருக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்.

மிஸ்டர் மோகன், ஒரு வயதுக் குழந்தையாயிருக்கும் போதே பணம் சேர்க்க ஆரம்பித்து விட்டான் என்று அவனுடைய பெற்றோர்கள் அந்தக் காலத்தில் பெருமைப்படுவதுண்டு. ஒரு சமயம் வீட்டில் ஒரு இரண்டணா வெள்ளி நாணயம் (அப்போது இந்த நாட்டில் சில வெள்ளி நாணயங்களும் இருந்தன) காணாமற் போய் விட்டதாம். தேடு தேடு என்று தேடினார்களாம். கடைசியில் குழந்தையின் வாயைத் திறந்து பார்த்தால், கடைவாயில் இரண்டணாவை அடக்கிக் கொண்டிருந்ததாம்! அதை எடுப்பதற்குள் குழந்தை ரகளை செய்து விட்டதாம்!

இப்பேர்ப்பட்ட மோகன், காலேஜ் படிப்பு முடிந்ததும் கேவலம் உத்தியோகத்தைத் தேடாமல் தொழில் ஆரம்பித்தான். அவன் ஆரம்பித்த தொழில், ஏஜென்ஸி வியாபாரம். எந்த ஊரில் எந்தச் சாமான் தயாராகிறதென்று தெரிந்து கொண்டு, அதற்கு ஏஜென்ஸி எடுத்து, விளம்பரம் பண்ணி, சில்லறைக் கடை வியாபாரிகளுக்கு விநியோகிப்பது. ஓடாத கடிகாரம் முதல், தலை வழுக்கைத் தைலம் வரையில் எத்தனையோ சாமானகளுக்கு மோகன் ஏஜென்ஸி எடுத்தான். இவற்றை விளம்பரம் செய்வதற்காக முதலில் கேட்லாக்குகள், அப்புறம் பஞ்சாங்கங்கள், டைரிகள், கேலண்டர்கள் இப்படியெல்லாம் பிரசுரம் செய்யத் தொடங்கினான். மோகன் பஞ்சாங்கம், வெகு சீக்கிரத்தில் பிரசித்தியாகி, "வேறு எந்த பஞ்சாங்கத்தையும் விட மோகன் பஞ்சாங்கத்தில்தான் அமாவாசையும், தியாஜ்யமும், அதிகம்" என்ற பெயரைப் பெற்று விட்டது! மோகன் கேலண்டர் என்றால், ஜனங்களிடையே அடிதடி உண்டாவது வழக்கமாயிற்று. அவ்வளவு கிராக்கி! "மோகன் டைரியில் மாதத்துக்கு 33 தேதி!" என்ற புகழும் உண்டாயிற்று.

சாதாரணமாக, இம்மாதிரி வியாபாரத்தில் நாலு அணா சாமானுக்கு மூன்றரை ரூபாய்க்கு மேல் லாபம் வைப்பதில்லையாதலால், பணம் வந்து குவியத் தொடங்கியது.

பணம் குவியவும் மிஸ்டர் மோகன் பணச் செலவுக்கும் வழி ஏற்படுத்திக் கொண்டு வந்தார். கிளப்புகளில் அங்கத்தினரானார். பார்ட்டிகள் கொடுத்தார். பெரிய இடத்துச் சிநேகிதங்கள் ஏற்பட்டன. குதிரைப் பந்தயத்துக்கும் போனார்.

ஒரு தடவை கார்ப்பொரேஷன் தேர்தலுக்கு நின்று பிரமாதமான தோல்வியடைந்தார்! மகத்தான வெற்றிகரமாக ஓடிய ஒரு தமிழ் டாக்கியில் பங்காளியாகி, போட்ட பணத்தில் பாதியை இழந்தார்! ஜனங்களுக்கோ வரவர ஓடாத கடிகாரங்கள், வழுக்கைத் தைலங்கள், எலக்டிரிக் ஜீவசக்தி மாத்திரைகள் - இவற்றிலெல்லாம் மோகம் குறைந்து வந்தது.

கடைசியில் மிஸ்டர் மோகன் தம்முடைய பொருளாதார நிலைமையைக் கவனித்துப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கவனித்துப் பார்த்ததில், 'நிலைமை பேபர்ஸுதான்" என்று தெரிந்தது. நிலைமையைச் சீர்திருத்துவதற்கு, சம்பாத்தியத்தை அதிகப்படுத்துவதற்கு உடனே ஏதாவது பெருமுயற்சி செய்தாக வேண்டும்.

இவ்விதம் தீர்மானித்துக் கொண்டு மிஸ்டர் மோகன் சுற்றும் முற்றும் பார்த்தார். அவருக்கு ஒரே திகைப்பாய் போய்விட்டது. யுத்த ஆரம்பத்திலிருந்து பலர் பலவகைகளிலும் ஏராளமாய்ப் பணம் பண்ணிக் கொண்டிருப்பதைக் கண்டார். சிலர் மிலிட்டரி காண்ட்ராக்டில் பணம் பண்ணினார்கள். ஒருவர் ஊரிலுள்ள ஓட்டை தகரங்களையெல்லாம் சேர்த்து வைத்திருந்தார். அவருக்கு அரை லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது. பழைய கோணிப் பைகளையெல்லாம் வாங்கினார் ஒருவர். அவர் முக்கால் லட்சம் தட்டினார். இரண்டாயிரம் ரூபாய்க்கு ஒருவர் க்ஷவர பிளேடுகளை வாங்கி வைத்திருந்தார். அவருக்கு இருபதினாயிரம் ரூபாய் லாபம். காகிதம் ஸ்டாக் செய்தவர்கள், எலக்ட்ரிக் சாமான்கள் ஸ்டாக் செய்தவர்கள் இவர்களுடைய லாபத்தையெல்லாம் சொல்ல முடியாது.

இதையெல்லாம் பார்க்கப் பார்க்க மிஸ்டர் மோகனின் பரபரப்பு அதிகமாயிற்று. இந்தியா கவர்மெண்டார் கோடி கோடியாக நோட்டுகளை அச்சிட்டுத் தள்ளிக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில், தாம் பணம் சம்பாதிக்காவிட்டால், உயிர் வாழ்ந்து தான் என்ன பிரயோஜனம்? அதற்கு என்ன வழி? எத்தனையோ வழிகள் இருக்கின்றன...அவற்றில் எதைக் கையாளுவது?

ஒரு வழியில் அவருடைய கவனம் சென்றது. அவருடைய கிளப் அங்கத்தினர்களில் ஒருவர் 'ஷேர் மார்க்கெட்' என்று சொல்லப்படும் பங்கு வியாபாரத்தில் மூன்றே மாதத்தில் இருபது லட்சம் ரூபாய் சேர்த்தது அவருக்குத் தெரிந்தது. இது தான் சரியான வழியென்று தீர்மானித்து, ஷேர் மார்க்கெட்டில் புகுவதற்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்யத் தொடங்கினார்.

அதனுடைய, தந்திர மந்திரங்களையெல்லாம் படித்தார். 'தோலைக் கடித்து - துருத்தியைக் கடித்து - தானே வேட்டை நாயாக வேண்டும்?' என்னும் முதுமொழியைப் பின்பற்றி, முதலில் சொற்ப அளவில் பங்குகள் வாங்கி விற்க ஆரம்பித்தார். அதோடு பிரமாதமாக ஒரு அடி அடிப்பதற்கு நல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்தச் சந்தர்ப்பந்தான் ஸர்.ஸ்டாபோர்டு கிரிப்ஸின் விஜயத்தின் போது ஏற்பட்டது.

ஷேர் மார்க்கெட்டில் பங்குகளின் விலை உயர்வதும் விழுவதும் பல அதிசய காரணங்களால் ஏற்படுகின்றன. மகாத்மா காந்திக்கும் ஷேர் மார்க்கெட்டுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லையல்லவா? ஆனாலும் மகாத்மா சிறைப்பட்டார் என்றால், பங்குகளின் விலை இறங்கும்; மகாத்மா விடுதலை அடைந்தாரென்றால், பங்கு விலை ஏறும்!

கிரிப்ஸ் தூது வருகிற செய்தி கிடைத்ததுமே, "சரி பங்கு மார்க்கெட்டில் விலை ஏறப் போகிறது!" என்று மிஸ்டர் மோகன் தீர்மானித்துக் கொண்டார். அதில் உண்மையில்லாமற் போகவில்லை. "கிரிப்ஸ் வரவினால் இந்திய அரசியல் பிரச்சினை தீரலாம்" என்ற நம்பிக்கை தேசத்தில் உண்டானது போல், ஷேர் மார்க்கெட்டிலும் ஏற்பட்டது. பங்குகளின் விலை ஏறுமுகம் காட்டிற்று.

'கிரிப்ஸ் பறந்து வரப் போகிறார்?' - பங்கு விலை இன்னும் சிறிது ஏறிற்று. 'கிரிப்ஸ் கிளம்பி விட்டார்' - பங்கு விலை சுர வேகம் அடைந்தது. 'கிரிப்ஸ் கராச்சியில் வந்து இறங்கினார்' - நூறு ரூபாய் விலையிலிருந்த சில பங்குகள் நூற்றறுபதுக்கு வந்து விட்டன.

மிஸ்டர் மோகனுக்கும் பண ஜுரம் அடித்துக் கொண்டிருந்தது. பங்கு வாங்குவது - அதைப் பாங்கியில் அடகு வைத்துக் கடன் வாங்குவது - அந்தப் பணத்தைக் கொண்டு பங்கு வாங்குவது - இப்படி ஜமாய்த்துக் கொண்டிருந்தார்.

நாளுக்கு நாள் விஷம் ஏறுவது போல் ஏறிக் கொண்டிருந்தது பங்குகளின் விலை.

"கிரிப்ஸுக்கும் காங்கிரஸுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது" என்று பொய்ச் செய்தி வந்து, பத்திரிகைகளில் கூடத் தலையங்கம் எழுதி விட்டார்கள் அல்லவா? அன்றைய தினம் மிஸ்டர் மோகன் வாங்கின பங்குகளையெல்லாம் விற்றிருந்தால், ஏழரை லட்சம் லாபம் பண்ணியிருக்கலாம்.

ஆனால், அந்தோ! "இன்னும் இருபத்து நாலு மணி நேரம் பார்க்கலாம்" என்று இருந்து விட்டார். அடுத்த இருபத்து நாலு மணி நேரத்திற்குள் "கிரிப்ஸின் படுதோல்வி", "வேஷம் வெளியாயிற்று" என்ற தலைப்புகளுடன் செய்திகள் வெளி வந்து விட்டன.

பங்கு மார்க்கெட் தலை கீழாக உருட்டியடித்துக் கொண்டு விழுந்தது. மிஸ்டர் மோகன், பாவம்!

4

'கிணுகிணு' வென்று டெலிபோன் மணி அடித்தது. மோகன் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்து நின்று டெலிபோன் ரிஸிவரைக் கையிலெடுத்தார்.

"ஹலோ"

"பூக்கடைப் போலீஸ் ஸ்டேஷனா? ஓகோ என்ன விசேஷம்?"

"புகைஞ்சுதா? என் கம்பெனியிலேயா? அப்புறம்?"

"பையர் இன்ஜின் வந்து நெருப்பை அணைச்சுட்டுதா? ரொம்ப..."

"வாச்மேனே கிடையாதே..."

"யார்? வீராசாமியா?"

"கொஞ்சங்கூடச் சேதம் ஆகலேன்னா சொல்றீங்க? ரொம்ப..."

"யாராவது எஜமானத் துரோகி செய்த வேலையாய்த்தான் இருக்கணும். அவ்வளவு ஏற்பாடாய்த் தீப்பிடிக்கச் செய்யறதுன்னா...?"

"டிரைவர் இல்லை. காலையிலே வந்து பார்க்கிறேன் குட் நைட்..."

டெலிபோன் ரிஸீவரைப் படீரென்று வைத்தார் மோகன். மேஜையை நாலு தடவை குத்தினார். அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. உதடுகளும், ஹிட்லர் மீசையும் துடித்தன. கண்களில் பொறி பறந்தது.

பின் வருமாறு தமக்குள்ளே சொல்லிக் கொண்டார்.

"கிழட்டுப் பிரம்மஹத்தி - சண்டாளன் - துரோகி - இவனை யார் அங்கே போகச் சொன்னது? - அவனைச் சுட்டுப் பொசுக்கிக் கொன்று குழியை வெட்டி மூடினாலும் தோஷமில்லை! - கடைசி பிளானும் இப்படிப் போச்சு! இனிமேல்?"

அரைமணி நேரம் ஆவேசம் வந்தவர் போல் அங்குமிங்கும் நடந்து, பல்லைக் கடித்து, மேஜையைக் குத்தி, சுவரை உதைத்து - எல்லாம் ஆனபிறகு, மிஸ்டர் மோகன் மேஜை டிராயரைத் திறந்து, அதிலிருந்த கைத் துப்பாக்கியை எடுத்தார். சற்று நேரம் அதைத் தன் மார்புக்கு நேராகப் பிடித்துக் குறி பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர், அதை மேஜை மீது வைத்து விட்டுப் பேனாவும் காகிதமும் எடுத்து எழுதத் தொடங்கினார்.

பாவம்! அநேகமாய் அவருடைய மனைவி மக்களுக்குக் கடிதமாயிருக்கலாம். அவர்களெல்லாம் 'எவாக்வேஷன்' சமயமாதலால் வெளியூரில் இருந்தார்கள். அவருடைய அந்தரங்கக் கடிதங்களை நாம் பார்ப்பது, நியாயமில்லை யல்லவா?

*****

பலபலவென்று கிழக்கு வெளுக்கும் நேரம். மிஸ்டர் மோகன் கடிதங்களை எழுதி முடித்து இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டினார். திரும்ப மேஜையினருகில் வந்தார்.

"எஜமான்!" என்ற சத்தம் திடீரென்று கேட்டதும் வாசற்படிப் பக்கம் திரும்பிப் பார்த்தார்.

'வாச்மேன்' வீராசாமி கூர்ச்சம் போல் நின்று கொண்டிருந்தான். பங்களாவின் வாசல் வராண்டாவில் மச்சுப்படி இருந்த படியால் அதன் வழியாக அவன் பாட்டுக்கு ஏறி வந்திருக்க வேண்டும்.

சற்று நேரம் மிஸ்டர் மோகன் பிரமித்து நின்ற போது, வீராசாமி சொல்லிக் கொண்டே போனான். "எஜமான், என்னமோ கால வித்தியாசத்தினால் எசமான் நம்மை மறந்தாலும், நாம் மறக்கக் கூடாதுன்னு இராத்திரி நம்ம கம்பெனிக்குப் போனேங்க. பர்த்தி வாச்மேன் இன்னும் வைக்கலேன்னு கேள்விப் பட்டேனுங்க. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் புகைச்சல் நாத்தம் தெரிஞ்சுதுங்க. ஜன்னல் வழியாப் புகை வந்துதுங்க. உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினேனுங்க. பையர் இன்சின் ஒரு நொடியில் வந்து அணைச்சிட்டுதுங்க. ஒரு சேதமும் இல்லாது போச்சுங்க."

மிஸ்டர் மோகன் திடீரென்று பாய்ந்து வந்து, வீராசாமியின் கழுத்தை இறுக்கிப் பிடித்தார். "அடப்பாவி துரோகி! உன்னைத் தான் டிஸ்மிஸ் பண்ணியாச்சேடா உன்னை யாருடா வரச் சொன்னா?" என்று சொல்லிக் கொண்டே, அவன் முதுகிலும், தலையிலும் போடு போடு என்று போட்டார். அவனுடைய கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளிக் கொண்டே மச்சுப் படியண்டே வந்து ஒரு தள்ளுத் தள்ளினார். கிழவன் உருட்டியடித்துக் கொண்டு போய்க் கீழே விழுந்தான்.

வீராசாமி அளவில்லாத திகைப்புடன் எழுந்து உட்கார்ந்து, தன்னைச் சமாளித்துக் கொள்ள முயன்ற போது மேலே 'டுமீல்' என்று துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டது.

சத்தத்தைக் கேட்டு, தோட்டக் குடிசையில் படுத்திருந்த தோட்டக்காரன், வாசலில் போன பால்காரன், வீட்டுச் சமையல்காரன் எல்லாரும் ஓடி வந்தார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் போலீஸ்காரர்களும் வந்தார்கள்.

மேலே மிஸ்டர் மோகனுடைய உடல் துணியெல்லாம் இரத்தம் தோய்ந்து, தரையில் விழுந்து கிடந்தது. அருகில் அவருடைய கைத்துப்பாக்கியும் கிடந்தது.

மோகனுடைய உடலை வைத்தியப் பரிசோதனைக்காக ஜெனரல் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனார்கள்.

வீராசாமியைப் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு போய் 'லாக்-அப்'பில் அடைத்தார்கள்!

*****

வடபழனி ஆண்டவனின் புண்ணியத்தில், கிழவன் வீராசாமி அதிக காலம் சிறையில் இருக்கும்படி நேரவில்லை.

ஏனெனில், ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மிஸ்டர் மோகனுடைய உடம்பில் உயிர் இருக்கிறதென்று கண்டுபிடித்து அவருக்குப் பிழைப்பூட்டி விட்டார்கள். எத்தனையோ பேரை வேலை தீர்ப்பவர்கள், சிலருக்குப் பிழைப்பூட்டவும் வேண்டியது தானே?

பிழைத்தெழுந்த மோகன், அந்தப் பலஹீனமான உடல் நிலைமையிலும் போலீஸ்காரரிடம் உள்ளது உள்ளபடி எல்லாவற்றையும் சொல்லி விட்டார்.

அவருக்கு வியாபாரத்தில் பெருநஷ்டம் வந்து விட்டதென்றும், நிலைமையைச் சமாளிப்பதற்காக ஆபீஸுக்கு அவரே நெருப்பு வைத்து விட்டு பையர் இன்ஷ்யூரன்ஸ் தொகை... லட்சம் ரூபாய் வாங்குவதற்கு எண்ணினார் என்றும், அதற்காகவே 'வாச்மேன்' வீராசாமியை டிஸ்மிஸ் பண்ணினாரென்றும், அவனுடைய எதிர்பாராத தலையீட்டினால் நோக்கம் நிறைவேறாமல் போகவே, தற்கொலை செய்து கொள்ள முயன்றாரென்றும் அவருடைய வாக்குமூலத்தின் மூலம் தெரிய வந்தன.

எனவே, வீராசாமி விடுதலையடைந்து அவனுடைய பேரக் குழந்தைகளைப் பார்ப்பதற்கு வீடு வந்து சேர்ந்தான்.

எப்படியும் அவனுடைய எஜமான விசுவாசம் வீண் போகவில்லையென்றே சொல்ல வேண்டும். அவனைத் தூக்கு மேடையிலிருந்து காப்பாற்றுவதற்காகவே மிஸ்டர் மோகன் குறிபிசகாய்ச் சுட்டுக் கொண்டிருக்கலாமல்லவா?

-------------

52. இது என்ன சொர்க்கம்

1

ராவ்பகதூர் வியாக்ரபாத சாஸ்திரிகள் மிகுந்த வியாகூலத்துடன் போய்க் கொண்டிருந்தார். அவருடைய கண்கள் அங்குமிங்கும் ஆவலுடன் நோக்கின. 'தெரிந்த முகம் ஏதாவது கண்ணுக்குத் தென்படாதா' என்ற ஏக்கம் அவருடைய உள்ளத்தை அரித்துக் கொண்டிருந்தது. "அம்மா! இங்கு வந்து வருஷம் பன்னிரண்டுக்கு மேலாகிறது. பன்னிரண்டு வருஷந்தானா பன்னிரண்டு யுகம் போல் அல்லவா தோன்றுகிறது? - இருக்கட்டும்; இந்தப் பன்னிரண்டு வருஷத்தில் பழக்கமான முகம் ஒன்றைக் கூட காணமுடியவில்லை. பழைய ஞாபகங்களைப் பற்றிக் குஷாலாகப் பேசிக் கொண்டிருக்க ஒரு ஆத்மா கூட அகப்படவில்லை. இது என்ன சொர்க்கம்?" என்று எண்ணிப் பெருமூச்சு விட்டார் வியாக்ரபாத சாஸ்திரிகள். விஷயம் என்னவென்றால், அவருக்குச் சொர்க்கம் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. இந்தச் சொர்க்கத்தை அடைவதற்காகப் பூலோகத்தில் அவர் செய்த காரியங்களை நினைத்தால், அவருக்குச் சிரிப்புச் சிரிப்பாய் வந்தது. இந்தச் சொர்க்கத்தை அடைவதற்காக அவர் செய்யாத காரியங்களை நினைத்தால் அவருக்கு அழுகையாய் வந்தது. ஆனால், தரித்திரம் பிடித்த இந்த சொர்க்கத்தில் சிரிக்க முடியுமா? முடியாது! அழத்தான் முடியுமா? அதுவும் முடியாது! இதற்குப் பெயர் சொர்க்கமாம். சிவ!சிவ! ராம! ராம! இல்லை. பிசகு! வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். சிவனையும் ராமனையும் பிரார்த்தித்துத்தான் இந்தச் சொர்க்கத்துக்கு வந்து சேர்ந்தேனே! போதாதா? சொர்க்கத்திலிருந்து பூலோகத்துக்குப் போவதற்கு யாரைப் பிரார்த்திக்கலாம்? சனீசுவரனைப் பிரார்த்தித்துப் பார்க்கலாமா? "சனிசுவர! சனீசுவர! சனீசுவர! சனீசுவர!"

"யார் சாஸ்திரிகள்வாளா?" என்று பழகிய குரல் காதில் விழுந்தது. சாஸ்திரிகள் மூன்று துள்ளி துள்ளி ஒரே குதியாய்க் குதித்தார். பார்த்தால் சாக்ஷாத் திவான்பகதூர் கச்சபேசுவர முதலியார் எதிரே வந்து கொண்டிருக்கிறார்.

"அடாடா!, முதலியார்வாளா? வாருங்கோ வாருங்கோ வாருங்கோ! பார்த்துப் பதினைந்து வருஷத்துக்கு மேலாச்சே! எப்போது வந்தீர்கள்? என்ன சேதி? என்ன சமாச்சாரம்?" என்று உற்சாகமாகக் கேட்டு சாஸ்திரிகள் முதலியாரின் கையைப் பிடித்துக் குலுக்க முயன்றார். ஆனால் கையில் ஒன்றும் அகப்படாமற் போகவே, முகத்தில் ஏமாற்றம் தோன்றியது.

"என்ன சாஸ்திரிகள் வாள்! இது சொர்க்கம் என்கிறதே மறந்து போய்விட்டாற் போலிருக்கிறது! பூலோகத்தில் இருப்பதாகவே ஞாபகமோ?" என்றார் கச்சபேசுவர முதலியார்.

"அப்படித்தான்னா அப்படித்தான்! உங்களைப் பார்த்த சந்தோஷத்தில் ஒரு நிமிஷம் இது சொர்க்கம் என்கிறதே மறந்துதான் போச்சு! பூலோகமென்றே நினைச்சுட்டேன்!" என்று சாஸ்திரிகள் கூறி 'ஹிஹ்ஹிஹ்ஹி' என்று சிரித்தார்.

அப்போது அந்தப் பக்கமாகப் போன தேவர்களும் தேவிகளும் அவரை நோக்கி ஏளனமாகப் பார்த்துக் கொண்டு போனார்கள்.

"இந்த மாதிரி சிரிப்பைக் கேட்டுப் பத்து வருஷத்துக்கு மேலாகி விட்டது?" என்றார் முதலியார்.

"ஆமான்னா! அதை நினைத்தால் துக்கம் துக்கமாய் வருகிறது. ஊம் ஊம்!" என்று சாஸ்திரிகள் பலமாக அழுதார்.

"வேண்டான்னா, அழாதேங்கோ!" என்று முதலியார் கூறி, "இப்படி அழுகைக் குரலைக் கேட்டு எத்தனை நாள் ஆச்சு தெரியுமா? ஊம் ஊம்" என்று தாமும் அழத் தொடங்கினார்.

இரண்டு பேரும் ஒருவருடைய கண்ணை ஒருவர் துடைக்க முயன்று, அதில் பிரயோஜனமில்லையென்று கண்டபோது, அதனுடைய ஹாஸ்ய ரசத்தை அநுபவித்துப் பலமாகச் சிரித்தார்கள்.

"அப்படின்னா, உங்களுக்கும் சொர்க்கம் பிடிக்கவில்லையென்று சொல்லுங்கோ?" என்றார் முதலியார்.

"பிடிக்கவில்லையா? அழகுதான். பிடிக்கவில்லையான்னா கேட்கிறீர்கள்? சொர்க்கம் என்கிறது இந்த மாதிரி இருக்கும் என்று மட்டும் தெரிந்திருந்தால் அவ்வளவு தானம் தர்மம் தலையிலே குட்டிக்கிறது, மூக்கைப் பிடிக்கிறது, கோவிலுக்குப் போகிறது - ஒன்றுமே பண்ணியிருக்க மாட்டேனே? இந்த அழகான சொர்க்கத்துக்காகப் பூலோகத்தை நன்றாக அனுபவிக்காமல் போனது என்ன முட்டாள்தனம் என்பதை எண்ணும் போது..."

"என் மனத்திலிருக்கிறதை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறீர்கள். சாஸ்திரிகள்வாள்! எங்கேயாவது ஓரிடத்தில் சாவகாசமாக உட்கார்ந்து பேச வேணும். இருக்கட்டும் இப்போ எங்கே கிளம்பிப் போய்க் கொண்டிருந்தீர்கள்" என்று முதலியார் கேட்டார்.

"எங்கே கிளம்பினேனா? ஓரிடத்துக்கும் இல்லை. இந்த அழகான சொர்க்கத்திலே எங்கே போனால் தான் என்ன? எல்லாம் ஒரே லட்சணந்தான்!" என்று சாஸ்திரிகள் அலுப்புடன் கூறினார்.

"அப்படியானால் வாருங்கள்! அதோ அந்த மந்தார மரத்தடியில் உட்கார்ந்து சாவகாசமாகப் பேசலாம்" என்றார் முதலியார்.

இரண்டு பேரும் சமீபத்தில் தென்பட்ட மந்தார மரத்தடிக்குப் போய் உட்கார்ந்தார்கள்.

2

மந்தார விருட்சம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. அந்த மலர்களிலிருந்து கிளம்பிய திவ்ய பரிமள வாசனை நாலாபுறமும் சூழ்ந்திருந்தது. மரக்கிளையில் குயில்கள் உட்கார்ந்து 'குக்கூ' 'குக்கூ' என்று இனிய குரலில் பாடின.

மரத்தினடியில் பச்சை ஜமக்காளம் விரித்தாற் போல் பசும் புல் படர்ந்திருந்தது. ஒரு தூசி தும்பு கிடையாது.

சாஸ்திரிகள் ஒரு புல்லைப் பிடுங்கி வாயில் வைத்துக் கடித்தார்.

"என்ன, வியாக்ரபாத சாஸ்திரிகளே! புல்லைத் தின்கிறீர்களோ? புலி பசித்தாலும் புல்லைத் தின்னுமா என்னும் பழமொழி என்ன கதி ஆயிற்று?" என்று முதலியார் சொல்லி, 'ஹிஹ்ஹிஹ்ஹி' என்று சிரித்தார்.

"அதெல்லாம் பூலோகத்துப் பழமொழி! இந்தத் தரித்திரம் பிடித்த சொர்க்கத்திலே புலிக்கு பசியே தான் கிடையாதே?" என்று சாஸ்திரிகள் சொல்லி, 'ஹஹ்ஹஹ்ஹா' என்று சிரித்தார்.

"பின்னே என்னத்திற்காகப் புல்லைத் தின்கிறீர்கள்?"

"என்ன இருக்கிறது இங்கே தின்கிறதுக்கு? அமிர்தத்தைத் தவிர - வேறு ஒரு மண்ணாங்கட்டி கூட இல்லை. அமிர்தம் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போய் விட்டது!"

"அமிர்தம் அலுத்துப் போய்விட்டதா? அது தான் கேட்டேன், ஏன் சாஸ்திரிகள்வாள்! பூலோகத்தில் நீர் எதற்கெடுத்தாலும் 'அமிர்தமாயிருக்கு' என்று சொல்லி வந்தீரோ, இல்லையோ? இனிமேல் சொல்ல மாட்டீரே."

"என் வயிற்றெரிச்சலைக் கிளப்பாதீர்! இட்லி, மிளகாய்ப் பொடி, நல்லெண்ணெய் இந்த சொர்க்கத்தில் கிடையாது என்று மட்டும் தெரிந்திருந்தால்...அமிர்தமாம்! அமிர்தம்!"

"பிச்சுவய்யர் ஹோடலிலே வெங்காய கொத்ஸு பண்ணுவார்களே, அதன் காலிலே கட்டி அடிக்கவேணும் இந்த அமிர்தத்தை!"

"அடடா! நாம் லாகாலேஜில் படித்துக் கொண்டிருந்தபோது, சங்கரய்யர் ஹோட்டலிலே ரவா தோசை சாப்பிடுவோமே, ஞாபகமிருக்கா?"

"அதை நினைச்சுண்டா நாக்கிலே ஜலம் சொட்டுகிறது?"

"வேறு எது வேணாலும் இல்லாமற் போகட்டும்! காப்பியைச் சொல்லும்! காப்பி இல்லாத சொர்க்கம் சொர்க்கமா என்று கேட்கிறேன்."

இந்தச் சமயத்தில் மந்தார மரத்தின் கிளையிலிருந்து குயில் ஒன்று எட்டிப் பார்த்து 'குக்கூ' 'குக்கூ' என்று கத்திற்று.

"முதலியார்வாள்! இந்தக் குயிலைக் கொஞ்சம் பேசாமலிருக்கச் செய்கிறீரா? இல்லாவிட்டால், நான் எங்கேயாவது ஓடிப் போகட்டுமா? கேட்கச் சகிக்கவில்லை."

"சாஸ்திரிகளே! பூலோகத்தில் நீர் எத்தனை தடவை நல்ல குரலைப் பற்றிப் பேசும் போது 'குயில்தான்' என்று சொல்லியிருக்கிறீர்? இப்போது ஏன் இப்படி அலுத்துக் கொள்கிறீர்?"

"அட சனியனே! அப்போதெல்லாம் நான் குயிலின் குரலையே கேட்டதில்லையே? அதனாலல்லவா அப்படிச் சொல்லித் தொலைத்தேன்."

"இந்தச் சொர்க்கத்திலே சங்கீதம் எவ்வளவு கேவலமாயிருக்கிறது பாருங்களேன்! மகாமட்டம்!"

"அடடா, நாம் நடத்தினோமே பட்டணத்தில் கர்நாடக சங்கீத புனருத்தாரண சபை! எவ்வளவு ஜோராக நடத்தினோம்!"

"இங்கே பாடுகிறார்களே, தலைக்குத் தலை ஒரு வீணையை மீட்டிக் கொண்டு, இது ஒரு பாட்டா? நாலு மனைச் சவுக்கத்திலே முக்காலே அரைக்கால் இடத்தில் பல்லவியை எடுத்துக் கொண்டு நாலு ஆவர்தம் ஸ்வரம் பாடும் வித்வான் இங்கே யார் இருக்கிறார்? நம் ஊரில் சங்கீத கேஸரியின் கச்சேரி நடக்கும் போது மிருதங்கம், கஞ்சிரா, கடம், கொன்னக்கோல், டோ லக், இவ்வளவு பக்க வாத்தியங்களும் சேர்ந்து என்ன அமர்க்களமாயிருக்கும்? அது சங்கீதமா? இங்கே இவர்கள் அழுது வடிக்கிறார்களே, இது சங்கீதமா?"

"ஆமான்னா, ஆமாம்! இங்கே நான் எத்தனையோ பேரைக் கேட்டுட்டேன். ஹார்மோனியம் வாசிக்கத் தெரியுமா என்று அந்த மாதிரி வாக்கியத்தையே இங்கே ஒருவரும் கேட்டதில்லையாம்."

"சரியாய்ப் போச்சு, போங்கள்! அது ஒன்று தான் இந்த சொர்க்கத்திலே நல்ல அம்சம் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய நாட்டுப் பெண் ஸுலோசனா தினம் ஹார்மோனியத்தை எடுத்து வச்சுண்டு அழறதைக் கேட்கச் சகிக்காமல் தான், சீக்கிரமாகச் சொர்க்கத்துக்கு வந்து விடணும் என்று ஆசைப்பட்டேன். அம்மம்மா! அவள் என்னைப் படுத்தி வச்சப்பாடு! நான் ரொம்பக் கர்நாடகமாம்! நான் பகவத் கீதைப் பிரசங்கம் பண்ணுகிறதை அவள் என்னவெல்லாம் கேலி செய்தாள் தெரியுமோ? அவள் பவுடரைப் பூசிக்கிறதும், மினுக்குகிறதும், குலுக்குகிறதும் மகாமோசம்! ஆனால் முதலியார் இதற்கு நேர் விரோதம், நம்ம பையன். உள்ளூரிலே பகவத் கீதை பிரசங்கம் நான் செய்தால் நம்ம பஞ்சாமிதான் கடைசிவரையில் உட்கார்ந்து சிரத்தையாய்க் கேட்டுக் கொண்டிருப்பான்."

"சாஸ்திரிகளே! உம்முடைய மனத்தில் இருப்பதை நிஜமாகச் சொல்லி விடட்டுமா. உம்முடைய பகவத் கீதைப் பிரசங்கத்தைக் கேட்பதற்குச் சொர்க்கத்தில் ஒருவரும் இல்லையென்பது தானே உம்முடைய மனக்குறை?"

"வாஸ்தவந்தான்! இந்த சொர்க்கத்தில் இருப்பவர்கள் அந்த விஷயத்தில் மகா மோசம். பகவத் கீதை உபநிஷத், பெரிய புராணம் ஒன்றிலுமே இவர்களுக்குச் சிரத்தை கிடையாது. சுத்த நாஸ்திகர்கள். எல்லாரும் ஆடல் பாடல்களிலேயே முழுகியிருக்கிறார்கள். ஏதடா! நாளைக்குப் போகும் கதிக்கு வழி தேடிக் கொள்ள வேண்டுமே என்று ஒருவருக்கும் கவலை கிடையாது."

"இருக்கட்டும், முதலியார்! இங்கே சாயங்கால வேளையில் உங்களுக்கு எப்படிப் பொழுது போகிறது! பீச்சா, கிளப்பா, சபா கச்சேரியா, ஒரு இழவுந்தான் கிடையாதே! தினம் சாயங்காலம் வந்தால், பகவத் கீதையிலே நாலு நாலு சுலோகமாய்ச் சொல்லிண்டு வரேன்..."

"சாஸ்திரிகளே! நிறுத்தும். பூலோகத்தில் உம்மிடம் பகவத் கீதை பிரசங்கம் கேட்டதெல்லாம் போதும். வேறு பேச்சு ஏதாவது பேசுவதாயிருந்தால் நான் இருக்கிறேன். இல்லாவிட்டால் இதோ நடையைக் கட்டுகிறேன்" என்று முதலியார் எழுந்திருக்க, சாஸ்திரிகள் அவரைக் கையைப் பிடித்து உட்கார வைக்க முயன்று முடியாமற் போகவே, "வேண்டாம், நான் பகவத் கீதையைப் பற்றிப் பேசவில்லை. வேறு ஏதாவது பேசுவோம். தயவு செய்து உட்காருங்கள்" என்றார்.

"வேறு எதைப் பற்றி பேசலாம்?" என்று சாஸ்திரிகள் கேட்டார்.

"எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. உதாரணமாக, இந்தச் சொர்க்கலோகத்திலுள்ள ஸ்திரீகளைப் பற்றி உம்முடைய நிஜமான அபிப்ராயம் என்ன?"

"சுத்த மோசம் என்பதுதான்?"

"எந்த விஷயத்தில் மோசம்?"

"எல்லா விஷயத்திலுந்தான். முக்கியமாக, சொர்க்கத்தில் எந்த ஸ்திரீயைப் பார்த்தாலும் ஒரே மாதிரி இருக்கிறாள். அதில் என்ன விசேஷம் இருக்கிறது? பூலோகத்தில் நம்முடைய காலத்திலே என்ன?"

"எப்படி?"

"எது?"

"யாரு?"

"அவள்தான்னா மிஸ்ஸஸ் லோசனா தத்..."

"அப்படிச் சொல்லுங்கோ சாஸ்திரிகளே."

3

இதற்குப் பிறகு சாஸ்திரிகளும் முதலியாரும் பேசிய விஷயங்கள் கொஞ்சம் விரஸமாயும் அப்படியே பிரசுரிப்பதற்கு லாயக்கற்றவையாயும் இருந்தன. கடைசியாக அந்த "லோசனா தத்தின் பெயர் பத்திரிகையிலே கூடக் கொஞ்ச நாள் அடிபட்டதில்லையா?" என்றார் முதலியார்.

"ஆமான்னா ஆமாம். பத்திரிகை என்ற உடனே ஞாபகம் வருகிறது. இந்தச் சொர்க்கத்திலே ஒரு நியூஸ் பேப்பர் கூடக் கிடையாது. பார்த்தீரா? மற்றதெல்லாம் ஒரு புறம் இருக்க, நியூஸ் பேப்பர் இல்லை என்கிறதை நினைத்தால் தான், 'இது என்ன தரித்திரம் பிடித்த சொர்க்கம்' என்று தோன்றுகிறது."

"வாஸ்தவந்தான். நியூஸ் பேப்பர் இல்லாததுதான் பெரிய குறை. சாஸ்திரிகளே! சமாசாரம் தெரியுமா? பூலோகத்திலே இப்போது பெரிய யுத்தம் நடக்கிறதாமே? நம்ம காலத்திலே நடந்த யுத்தத்தை இந்த யுத்தத்தின் காலில் கட்டி அடிக்க வேணுமாம்!"

"நிஜமாகவா? அடாடாடா! இப்பேர்ப்பட்ட சமயத்திலா நாம் பூலோகத்தில் இல்லாமல் இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறோம்? ஆனால் உங்களுக்கு எப்படித் தெரியும், முதலியார்!"

"நாலு நாளைக்கு முன்னால் ஒரு பிள்ளையாண்டான் பூலோகத்திலிருந்து வந்தான். அவனைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தேன்."

"நீர் அதிர்ஷ்டசாலி ஓய்! பூலோகத்திலிருந்து வந்தவனைப் பார்த்தீரா? அவன் இன்னும் என்னென்ன சொன்னான்?"

"யுத்தம் என்றால் உங்க வீட்டு யுத்தம், எங்க வீட்டு யுத்தம் இல்லையாம். ஆகாச விமானங்களிலே கொண்டு வந்து குண்டு போடுகிறார்களாம். ஊர் ஊராய்ப் பற்றி எரிகிறதாம். ஆமாம் சாஸ்திரிகளே! பூலோகத்திலே நாமெல்லாம் புராணங்களிலே வாசித்துக் கொண்டிருந்தோமே, தேவர்களும் அசுரர்களும் பிரமாத யுத்தம் செய்தார்கள் என்று, இங்கே ஒரு மண்ணாங்கட்டியையும் காணோமே."

"அது தெரியாத உமக்கு? அசுரர்களையெல்லாம் கொன்றாகி விட்டதாம்! இனிமேல் இங்கே யுத்தம் என்பதே வராதாம்!"

"சட்சட்! இவ்வளவுதானா?"

"ஆமாம் முதலியார்வாள்! யாரோ பூலோகத்திலிருந்து புதிதாய் வந்தான் என்றீரே? அவனை எங்கே பார்த்தீர்? என் கண்ணிலே ஒருவனும் தட்டுப்படவில்லையே?"

"எங்கே பார்த்தேன் என்றா கேட்கிறீர்?"

"அதைத்தான் கேட்கிறேன்?"

"சொல்லப் பயமாயிருக்கிறது."

"பயமா? என்னத்திற்குப் பயம்?"

"இந்த சொர்க்கம் எங்கே தான் போய் முடிகிறது என்று பார்ப்பதற்காக நான் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தேன். வெகு தூரம் போன பிறகு, பூலோகத்திலே நாம் கேள்விப்பட்டிருக்கிறோமே, மலைக் கணவாய் - அந்த மாதிரி ஒரு இடம் வந்தது. அந்தக் கணவாய் வழியாய்க் கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவை ஒரு புது மனிதர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்."

"ஆமாம்; அந்தக் கணவாய்க்குள் புகுந்து அது எங்கே போகிறது என்று பார்த்தீரா?"

"இல்லை, பயமாயிருந்தது."

"என்ன பயம்?"

"சில பேர் அதற்குள் புகுந்து போனதைப் பார்த்தேன். அவர்கள் திரும்பி வரவேயில்லை."

"என்ன நிஜந்தானா?"

"ஆமாம்."

"சபாஷ்!" என்றார் சாஸ்திரியார்.

"எதற்கு சபாஷ்!"

"அந்தக் கணவாய்தான் பூலோகத்துக்குப் போகும் வழியாயிருக்க வேண்டும். முதலியார்வாள்! சத்தியமாகச் சொல்லும். உமக்கு இந்தச் சொர்க்கம் பிடிக்கிறதா?"


"கட்டோடே பிடிக்கவில்லை."

"பூலோகத்துக்குப் போக வேண்டுமென்றிருக்கிறதல்லவா?"

"இருக்கிறது!"

"சரி, அப்படியானால் கிளம்பும்" என்று சாஸ்திரிகள் எழுந்தார். இரண்டு பேரும் காற்று வெளியில் மிதந்து வெகுதூரம் போனார்கள்.

"அதோ!" என்றார் முதலியார்.

"ஒரு நீண்ட மேக மலைத் தொடர் தெரிந்தது. அதன் நடுவில் ஒரு பிளவு தென்பட்டது.

இருவரும் அந்தப் பிளவுக்குள் போனார்கள். கொஞ்ச தூரம் போனதும் சட்டென்று முடிந்து விட்டது. அப்புறம் ஒன்றுமே இல்லை. வெறும் வெளிதான். விளிம்பினருகில் போய்ப் பார்த்தால் கீழே அதல பாதாளம்.

"அம்மம்மா! எவ்வளவு பெரிய பள்ளம்! இதில் விழுந்தால்..."

"பூலோகத்துக்குப் போகலாமே" என்று முதலியாரின் குரல் கேட்டது.

அவ்வளவுதான்! சாஸ்திரியார் கீழே கீழே கீழே விழுந்து கொண்டிருந்தார். காலவரம்பென்பதே இல்லாமல் அனந்தகாலம் கீழே போய்க் கொண்டிருந்ததாகத் தோன்றியது. அப்புறம் அவருடைய ஞாபகம் போய் விட்டது.

*****

சாஸ்திரியாருக்கு மறுபடியும் சுயப் பிரக்ஞை வந்த போது படார், படார் என்று வெடிச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அவருக்குக் கீழேயும் பக்கங்களிலும் ஏதோ மிருதுவான வஸ்து இருப்பது போல் உணர்ச்சி உண்டாயிற்று. அடே! இதென்ன? சொர்க்கத்திலே ஸ்பரிச உணர்ச்சிதான் கிடையாதே! பார்க்கிறதோடு சரிதானே - ஜம்மென்று பூலோகத்தில் பஞ்சு மெத்தையில் படுத்துக் கொண்டிருப்பது போல் அல்லவா தோன்றுகிறது? - ஆமாம் கச்சபேசுவர முதலியார் எங்கே?

ஏதோ பேச்சுக்குரல் கேட்டது. ஆனால் முதலியாரின் குரல் இல்லை. ஸ்திரீகள் குரல். யாரோ குனிந்து பார்ப்பது போல் இருந்தது. ஓஹோ நமது பாரியாள் சீதாலக்ஷ்மி அம்மாள் அல்லவா? ஆனால், இதென்ன மாறுதல்? முகத்தில் இவ்வளவு சுருக்கங்கள் - தலை மயிர் ஒரே வெள்ளை! சரிதான்; பன்னிரண்டு வருஷம் கழித்துப் பார்க்கிறோமல்லவா?

"தாத்தாவையே உரித்து வச்சிருக்கு!" என்றாள் சீதாலக்ஷ்மி அம்மாள்.

இன்னொரு குரல் பக்கத்திலிருந்து, "அபசகுனம் மாதிரி அப்படியெல்லாம் சொல்லாதேங்கோ. தாத்தாவுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது. அவர் என் வயிற்றிலே பிறந்திருக்க மாட்டார்" என்றது. அவருடைய மாட்டுப் பெண் ஸுலோசனாவின் குரல் அது என்று தெரிந்து கொண்டார்.

"அப்படிச் சொல்லாதேடி, மனத்துக்குள்ளே உன் மேலே அவருக்கு ரொம்ப வாஞ்சை. கடைசி வரையில் குழந்தை மாதிரி தீபாவளிக்குப் பட்டாசுச் சுட்டு விடுவாரோல்யோ? அதுதான் தீபாவளியன்றைக்குப் பிறந்திருக்கிறார்" என்றாள் சீதாலக்ஷ்மி அம்மாள்.

அப்போது சாஸ்திரியார் மனப்பூர்வமாக வெறுத்த அவருடைய மாட்டுப் பெண்ணின் முகம் - முன்னே பார்த்ததைக் காட்டிலும் பெருத்து உப்பியிருந்த முகம் - பவுடர் வாசனை மூக்கைத் துளைத்த முகம் - அவருடைய முகத்தின் மிக அருகில் வந்தது. அதைத் தடுத்துத் தள்ளுவதற்காகச் சாஸ்திரியார் கையைத் தூக்கினார். என்ன வேடிக்கை! கை துளியுண்டு இருக்கிறதே!

"என் கண்ணே! அதற்குள்ளே அம்மான்னு தெரிஞ்சு போச்சா!" என்றாள் ஸுலோசனா.

அப்போதுதான் சாஸ்திரியாருக்கு விஷயம் தெரிந்தது. விதி தன்னை எவ்விதம் கேலிக்கூத்துக்கு உள்ளாக்கி விட்டதென்று! தன்னுடைய சொந்த வீட்டில் தான் தொட்டிலில் படுத்திருப்பதையும், தன் மாட்டுப் பெண்ணுக்குக் குழந்தையாய்ப் பிறந்திருப்பதையும் உணர்ந்தார். பிரமாதமான ஆத்திரமும், அழுகையும் வந்தது. கையையும் காலையும் உதைத்துக் கொண்டு 'வீல்' என்று அழுதார்.

"அம்மா நீங்கள் சொன்னது சரிதான். தொண்டையைப் பாருங்கோ! அசல் தாத்தாதான்" என்றாள் ஸுலோசனா.

வெளியிலிருந்து சாஸ்திரிகளுடைய குமாரன் பஞ்சாமியின் குரல் சொல்லிற்று: "எத்தனை பகவத் கீதையைப் பிரசங்கம் பண்ணி, இருக்கிறவாள் பிராணனை எல்லாம் வாங்கப் போகிறாரோ."

இதைக் கேட்டதும் சாஸ்திரியார் மூர்ச்சையடைந்தார்.

மறுபடியும் பிரக்ஞை வந்தது; ஆனால் நல்ல வேளையாய்ப் பூர்வ ஞாபகம் வரவில்லை.
-------------

53. கைலாசமய்யர் காபரா

1

எத்தனையோ பயந்த சுபாவமுடையவர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் கைலாசமய்யரைப் பார்க்காதவரையில் சரியான பயந்த சுபாவத்தை நீங்கள் பார்த்ததாகச் சொல்ல முடியாது. பயப்படுகிற விஷயத்தில் அவரை மிஞ்சக் கூடியவர் யாருமில்லை. ஒரு சமயம், அவர் வீட்டு வாசலில் தேசியத் தொண்டர்கள் "அச்சமில்லை; அச்சமில்லை" என்று பாடிக் கொண்டு போனார்கள். அந்தப் பயங்கரமான சத்தத்தைக் கேட்டுக் கைலாசமய்யர் பயந்து கட்டிலிருந்து கிழே விழுந்து காலை ஒடித்துக் கொண்டார்!

மற்றொரு சமயம், அவர் தமது மேஜையில் உட்கார்ந்து எழுதப் போனவர், திடீரென்று 'பாம்பு' என்று அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்திருந்தார். எல்லாரும் கம்பும் கையுமாய் ஓடி வந்து 'எங்கே பாம்பு?' என்று கேட்டார்கள். "அதோ! மேஜை மேலே!" என்றார். மேஜைமேல் பாம்பைக் காணோம். அப்புறம் கிட்ட நெருங்கிப் பார்த்த போது, மேஜை மேல் கிடந்த ஒரு துண்டுக் காகிதத்தில் 'பாம்பு' என்று எழுதி இருந்தது தெரிந்தது. இந்த வேலை செய்தது யார் என்று விசாரித்ததில் கைலாசமய்யருடைய ஏழு வயதுப் பையன் மணி விஷமத்துக்காக அப்படி எழுதி வைத்திருந்தான் என்று வெளியாயிற்று. பாம்பை அடிக்க வேலைக்காரன் கொண்டு வந்த தடியைக் கைலாசமய்யர் பிடுங்கிக் கொண்டு பையனை அடிக்கப் போனார். நல்ல வேளையாக, அந்தச் சமயம் ஜோஷனாரா பிகம் வந்து குறுக்கிட்டதால் பையன் பிழைத்தான்!

ஜோஷனாரா பீகம் என்றதும், சில பேருக்குச் சுவாரஸ்யம் தட்டலாம். ஏதோ இந்தக் கதையில் நவாபுகளும் அவர்களுடைய அந்தப்புரத்து அழகிகளும் வரப் போகிறார்கள் என்று நினைக்கலாம். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. கைலாசமய்யருக்கு வடக்கத்தி ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் அதிகப் பிரியம். "பயமில்லாமல் கேட்கக் கூடியது ஹிந்துஸ்தானி சங்கீதந்தான்" என்பார். ரேடியோவில் அவர் அடிக்கடி லக்னௌ ஜோஷனாரா பீகத்தின் சங்கீதத்தைக் கேட்பதுண்டு. ஆனால், வீட்டிலே மற்றவர்களுக்கு - முக்கியமாக அவருடைய மனைவிக்கு - ஜோஷனாரா பீகமும், அவளுடைய சங்கீதமும் கொஞ்சமும் பிடிப்பதில்லை. எனவே, அவர்கள் வீட்டில் வளர்த்த ஒரு கறுப்புப் பூனைக்கு 'ஜோஷனாரா பீகம்' என்று பெயரிட்டிருந்தார்கள். இந்த ஜோஷனாரா பீகத்தைக் கண்டால் கைலாசமய்யருக்குக் குலை நடுக்கம்! அச்சமயம் அந்தப் பூனை வந்ததினால் தான் அவருடைய பையன் மண்டை உடையாமல் தப்பிப் பிழைத்தான்.

பட்ட காலிலே படும் என்பது போல், அவ்வளவு பயந்தவரான கைலாசமய்யருக்கு, அந்த மகா பயங்கரமான அநுபவம் ஏற்பட்டது. ஏற்கனவே தும்பைப் பூவைப் போல் நரைத்திருந்த அவருடைய தலை மயிர், அந்த ஒரு நாள் இரவில் 'ஜாப்கோ' மசியைப் போல் கறுத்து விட்டதென்றால், அந்த அநுபவம் எவ்வளவு பயங்கரமாயிருந்திருக்குமென்று நீங்களே ஊகித்துக் கொள்ளலாம்!

அவருடைய தலைமயிரைச் சுட்டிக் காட்டி "இது எப்படி நேர்ந்தது?" என்று நான் கேட்ட போது கைலாசமய்யர் முதலில் சிறிது நேரம் தலை முதல் கால் வரையில் நடுங்கினார். பிறகு கொஞ்ச நேரம் கால் முதல் தலை வரை நடுங்கினார்.

அவருக்கு நான் தைரியம் கூறிச் சமாதானப்படுத்தி ஒருவாறு விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். அந்த வரலாறு தான் இது.

2

கைலாசமய்யருடைய மனைவி, தம் தம்பியின் தலை தீபாவளிக்காக குடும்பத்துடன் ஊருக்குப் போக விரும்பினாள். கைலாசமய்யர், "உன் தம்பிக்கு தலை தீபாவளி என்றால் அவன் தலை எழுத்து; நமக்கு என்ன வந்தது?" என்று எவ்வளவோ சொல்லியும் அந்த அம்மாள் கேட்கவில்லை. இப்போதெல்லாம் சொர்க்கத்தில் இடம் கிடைத்தாலும் ரயிலில் கிடைக்காது என்பதைக் கைலாசமய்யர் நன்கு அறிந்தவராதலால் ஐந்தாறு நாள் முன்னாலேயே டிக்கெட் வாங்கி இடம் ரிஸர்வ் செய்திருந்தார். கிளம்ப வேண்டிய அன்றைக்குக் கொட்டு கொட்டு என்று மழை கொட்டியது. கைலாசமய்யர் "இன்றைக்குப் புறப்படுவது அவ்வளவு உசிதமல்ல, ரயில் பாதைகள் எப்படி இருக்குமோ, என்னமோ! மொத்தத்தில் கொஞ்ச காலமாகவே ரயில் பாதைகளுக்கு ஏழரை நாட்டுச் சனியன் பிடித்திருக்கிறது" என்றார். அவர் மனையாள், அதைக் கேட்காமல் "கட்டாயம் போகத்தான் வேண்டும்" என்று பிடிவாதம் பிடித்தாள். கடைசியாகச் சாயங்காலம் அவர்கள் குழந்தை குட்டிகளுடன் காரில் ஏறிக் கொண்டு கிளம்பினார்கள். வழியில் மவுண்ட் ரோட்டில் கார் தண்ணீரில் நீந்த வேண்டியதாயிருந்தது. அப்போதெல்லாம் கைலாசமய்யர் "போனால் உயிர் தானே போகும்! அதற்கு மேலே போவதற்கு ஒன்றுமில்லையே?" என்று சொல்லிக் கொண்டிருந்தார். "அழகாயிருக்கிறது அபசகுனம் மாதிரிப் பேசறது" என்று முணுமுணுத்துக் கொண்டேயிருந்தாள் மிஸ்ஸஸ் கைலாசமய்யர். கடைசியில் எப்படியோ உயிரோடு எழும்பூர் போய்ச் சேர்ந்தார்கள்.

எழும்பூரிலே நல்ல சந்தோஷமான சமாசாரம் தெரிய வந்தது. அதாவது பல்லாவரத்து மலை, மழைக்குப் பயந்து இடம் பெயர்ந்து வந்து பல்லாவரம் ஸ்டேஷனுக்குள் தண்டாவளத்தில் உட்கார்ந்து கொண்டதென்றும், டி.டி.எஸ். முதலிய பெரிய பெரிய உத்தியோகஸ்தர்கள் எல்லாம் வந்து எவ்வளவோ பிரார்த்தனை செய்தும் அது நகரவில்லை என்றும் தெரிய வந்தது. இன்னும் சிலர், மேற்படி தகவல் ஆதாரமற்றதென்றும் கோடம்பாக்கத்துக்கும் மாம்பலத்துக்கும் நடுவில் ஒரு ஐம்பதடி தண்டவாளத்தை மழை ஜலம் அடித்துக் கொண்டு போய் விட்டது என்றும் சொன்னார்கள். காரணம் எதுவானாலும் ரயில்கள் எழும்பூரிலிருந்து அன்று கிளம்பாதென்று நிச்சயம் தெரிந்தது. அதோடு எல்லா ரயில்களும் தாம்பரத்திலிருந்து கிளம்புகின்றன என்றும் தெரியவந்தது. அப்போதுதான் கைலாசமய்யரை அன்று தைரியப் பிசாசு பிடித்திருந்தது என்பது வெளியாயிற்று!

"விடு காரை தாம்பரத்துக்கு!" என்றார் கைலாசமய்யர். அவருடைய சம்சாரம். "வேண்டாமே! பேசாமல் வீட்டுக்குப் போய்ச் சேர்வோமே" என்று ஆன மட்டும் முணுமுணுத்துப் பார்த்தாள். கைலாசமய்யரிடம் ஒன்றும் பயன்படவில்லை. அவர் "உயிர் தானே போகும்? அதற்கு மேல் ஒன்றுமில்லையே?" என்றும் "அந்த ராஸ்கல் ஜப்பான்காரன் வந்து குண்டு போட மாட்டேன் என்கிறானே?" என்றும், "குண்டு விழாவிட்டால் இடி விழுந்தாலும் போதும்" என்றும், "விழுகிற இடி இந்தக் காரின் தலையில் நேரே விழ வேண்டும்; அப்போது தெரியும் தம்பி தலை தீபாவளிக்குப் போகிற இலட்சணம்!" என்றும் - இம்மாதிரியெல்லாம் உற்சாகமாகப் பேசிக் கொண்டே போனார். குழந்தைகள் "இன்றைக்கு அப்பாவுக்கு ஆவேசம் வந்திருக்கிறது" என்று அறிந்து, வாயை மூடிக் கொண்டு வந்தார்கள். மழை ஜலத்தை கிழித்துக் கொண்டு கார் தாம்பரத்தை நோக்கிப் போயிற்று.

தாம்பரம் ஸ்டேஷனும் வந்தது. அதிக மழையினால் மின்சாரக் கோளாறு ஏற்பட்டிருந்தபடியால் ஸ்டேஷனில் விளக்குகள் இல்லை. ஒரே கும்மிருட்டு ஆனாலும் கைலாசமய்யர் பின் வாங்கவில்லை. அவருடைய கைநாடி மட்டும் நிமிஷத்துக்கு 350 தடவை வீதம் அடித்துக் கொண்டதே தவிர, மற்றபடி வெகு தைரியமாய்க் காரிலிருந்து இறங்கி மச்சுப்படி ஏறிப் போனார். பின்னால் மனைவி மக்கள் வருகிறார்களா, சாமான்கள் என்ன ஆகின்றன என்று கூடக் கவனிக்கவில்லை. எப்படியோ பிளாட்பாரத்தில் எல்லாரும் வந்து சேர்ந்தார்கள். ரயிலும் தயாராக நின்று கொண்டிருந்தது. இரண்டாம் வகுப்பு வண்டிகள் காலியாகத்தான் இருந்தன. ஒரு வண்டியில் கைலாசமய்யரும் அவருடைய குடும்பத்தாரும் ஏறிக் கொண்டார்கள். வண்டிக்குள் ஒரே மௌனம்; வண்டிக்கு வெளியே கும்மிருட்டு.

சற்று நேரத்துக்கெல்லாம் அவருடைய மனையாள் "இன்றைக்கு ரயிலே காலி போலிருக்கே! கூட்டமே இல்லையே" என்று சொல்லி மௌனத்தைக் கலைத்தாள்.

கைலாசமய்யர் உடனே "ஆமாம், ஆமாம்; அதனாலென்ன? வண்டியிலே தனியாய்ப் போனால் கொலைகாரனா வந்து விடப் போகிறான்! யாரையோ, எப்பவோ ஒரு நாளைக்கு ரயிலுக்குள்ளே கொலை செய்து விட்டால், அதற்காக எப்போதும் அதே ஞாபகமா?" என்று 'டோ ஸ்' கொடுக்க ஆரம்பித்தார்.

"போதுமே, பேசாம இருங்களேன். குழந்தைகள் பயப்படப் போகிறது!" என்றாள் மிஸ்ஸஸ் கைலாசமய்யர்.

அப்பாவுக்குக் கோபம் என்று தெரிந்த குழந்தைகள் ரயில் ஓரமாய்ப் போய் வாயைத் திறக்காமல் உட்கார்ந்து கொண்டிருந்தன.

3

வண்டி நகரத் தொடங்கியது. அதே சமயத்தில் அந்தத் தடுக்க முடியாத சம்பவம் நடந்து விட்டது. அலங்கோலமாக ஒரு மனிதர் அவர்களுடைய வண்டியருகில் வந்து, "கதவைத் திறவுங்கள்! அவசரம்!" என்று கதறிக் கொண்டே ரயிலின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு தொங்கினார். ரயிலின் வேகமோ அதிகமாயிற்று. கைலாசமய்யருக்கு மனத்தில், "நல்லவேளை. ஒரு துணை கிடைத்தது" என்ற எண்ணம் பளிச்சென்று எழுந்தது. தட்டுத் தடுமாறிக் கதவைத் திறந்தார். வந்த மனுஷர் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து உள்ளே வந்து கைலாசமய்யருக்கு எதிர் ஆசனத்தில் தொப்பென்று விழுந்தார். அதே பெஞ்சின் ஓரத்தில் இருந்த மிஸ்ஸஸ் கைலாசமய்யர், சற்று அவசரமாகவே எழுந்திருந்து இன்னொரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

ஆம்; அந்தப் புதிய மனிதரின் தோற்றம் யாரையும் அவசரமாக எழுந்திருக்கச் செய்வதாகத்தானிருந்தது. ரயில் அச்சமயம் மணிக்கு முப்பது மைல் வேகத்தில் போய்க் கொண்டிராவிட்டால், கைலாசமய்யர் மூட்டை முடிச்சுகள், மனைவி, மக்களுடன் அந்த வண்டியிலிருந்தே கிழே குதித்திருப்பார்.

அந்த மனிதரின் கிராப்புத் தலை எண்ணெய் கண்டு ஒரு யுகம் ஆகியிருக்கும். அந்த மாதிரி ரோமங்கள் குத்திட்டு நின்றன. கண்கள் செக்கச் செவேலென்று சிவந்து திறுதிறுவென்று விழித்தன. மேல் கோட்டு நனைந்திருந்தது. உள் ஷர்ட் கிழிந்திருந்தது. இரண்டிலும் பொத்தானகள் கழன்று போயிருந்தன. மூக்குக் கண்ணாடி ஒரு காதில் மட்டும் மாட்டிக் கொண்டு தொங்கிற்று. இத்தனை அலங்கோலத்திலும் அந்த மனுஷருடைய வாய் மட்டும் வெற்றிலை பாக்குப் புகையிலையை விடாமல் அரைத்துக் கொண்டிருந்தது.

அந்த அவசரக்காரர் தம்முடைய நனைந்த கோட்டைக் கழற்றினார். கழற்றும் போது அதிலிருந்து சாமான்கள் பொலபொலவென்று விழுந்தன. அப்படி விழுந்த சாமான்களில் ஒரு பெரிய பேனா கத்தியும் கிடந்தது.

"அட சனியனே!" என்று அந்த மனிதர் கிழே குனிந்து அந்தச் சாமான்களைத் திரட்டி எடுத்தார். மணிப்பர்ஸ், பேனா முதலியவைகளைப் பெஞ்சில் வைத்து விடுக் கத்தியை மட்டும் கையில் வைத்துக் கொண்டார். கைலாசமய்யரைப் பார்த்துக் கேட்டார்.

"ஏன் ஸார்! இந்த மாதிரி சின்னப் பேனாக் கத்தியினாலேயே ஒரு மனுஷனைக் கொன்று விடலாம் என்று சொல்கிறார்களே? அது முடியுமா? உங்களுக்கு என்ன தோன்றுகிறது?" என்றார்.

கைலாசமய்யருக்கு அப்போது தாம் ஓர் ஆகாச விமானத்திலிருப்பது போலவும், அந்த விமானம் தலைகீழாகக் கீழே அதல பாதாளத்துக்குப் போய்க் கொண்டிருப்பதைப் போலவும் தோன்றிக் கொண்டிருந்தது. நல்ல வேளையாக, அவருடைய பத்தினி அந்தப் பிரமையைக் கலைத்தாள். "ஏன்னா? அடுத்த ரயில்வே ஸ்டேஷன் எப்போது வரும்?" என்றாள். அதற்குக் கைலாசமய்யர், "சற்று வாயை மூடிண்டு இருக்க மாட்டாயா?" என்று வள்ளென்று விழுந்தார். பிறகு எதிரில் உள்ள மனுஷரைப் பார்க்க இஷ்டமில்லாமல் தாம் கொண்டு வந்திருந்த தினசரிப் பத்திரிகையைப் பிரித்து முகத்துக்கு நேராக வைத்துக் கொண்டு படிக்கத் தொடங்கினார். படிப்பதற்கு முயற்சி செய்தாரே தவிர, படிக்க முடியவில்லை. பத்திரிகை இங்கிலீஷ் பத்திரிகைதான். ஆனால் அச்சமயம் அதிலிருந்த எழுத்துக்கள் கிரீக் பாஷையோ லாடின் பாஷையோ என்று தெரியாதபடி கைலாசமய்யர் கண்ணுக்கு ஒரே குழப்பமாயிருந்தன.

ஆனால், எதிரிலிருந்த மனுஷரின் கண்கள் மட்டும் வெகு துல்லியமாயிருந்தது போல் தோன்றியது. ஏனெனில் அவர் எதிர் பெஞ்சியில் உட்கார்ந்திருந்தபடியே கைலாசமய்யர் கையிலிருந்த பத்திரிகையின் பின்புறத்தைப் படிக்கத் தொடங்கினார். ஒரு நிமிஷத்துக்கெல்லாம் "ஹா!" என்று சொல்லி பத்திரிகையைத் தாமும் ஒரு கையால் பிடித்துக் கொண்டு படித்தார். இலேசாகக் கைலாசமய்யர் கையிலிருந்து எடுத்துக் கொண்டு உற்றுப் பார்த்துப் படித்தார். "ஹா!ஹா!ஹா!" என்றார். கைலாசமய்யரால் வாயைத் திறந்து ஒரு 'ஹா!' கூட சொல்ல முடியவில்லை.

வந்த மனுஷர், "என்னைத் தெரியுமா?" என்று கேட்டார்.

"தெரியாது" என்று பளிச்சென்று கைலாசமய்யர் பதில் சொன்னார்.

"தெரியாதா? என் பெயரையாவது கேள்விப்பட்டிருப்பீர்கள்" என்றார் அந்த மனிதர்.

"சத்தியமாய் இல்லை" என்று கைலாசமய்யர் அழுத்தமாய்க் கூறினார்.

"ரொம்ப வந்தனம். இந்தச் செய்தியைப் பார்த்தீர்களா?" என்று வந்த மனிதர் பத்திரிகையில் ஓரிடத்தைச் சுட்டிக் காட்டினார்.

கைலாசமய்யர் அந்த இடத்தைப் பார்த்தார். அது மரணச் செய்திகள் போடும் இடம். பின்வரும் செய்தி அங்கே காணப்பட்டது.

"ஒரு நிருபர் எழுதுகிறார்: பிரசித்தி பெற்ற தமிழ் எழுத்தாளரும், 'பிரகஸ்பதி சுப்பன்' என்ற புனைப்பெயரால் புகழ் பெற்றவருமான ஸ்ரீ பிரணதார்த்தி ஹரன் இன்று காலை மரணமடைந்த செய்தியை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். மயிலாப்பூரில் அவருடைய சொந்த ஜாகையில் திடீரென்று உயிர் போன காரணத்தினால் அவருடைய வருந்தத்தக்க மரணம் நேரிட்டது. அவருடைய அந்திம ஊர்வலத்துக்குக் கணக்கற்ற ஜனங்கள் - சுமார் ஒன்பது பேர் இருக்கலாம் - வந்து கௌரவித்ததிலிருந்து, இந்த எழுத்தாளர் தமிழ் வாசகர்களின் உள்ளத்தில் எவ்வளவு மகத்தான இடத்தைப் பெற்றிருந்தார் என்பதை ஊகிக்கலாம். அவருடைய அருமையான ஆத்மா சாந்தி அடைவதாக!"

கைலாசமய்யருக்குப் 'பிரகஸ்பதிச் சுப்பன்' என்று எங்கேயோ, எப்போதோ, கேட்டிருப்பதுபோல ஞாபகம் வந்தது. நல்ல வேளையாகப் பேசுவதற்கு வாகாய் ஒரு விஷயம் அகப்பட்டதென்று உற்சாகமடைந்தவராய், "அடடா! நம்ம பிரஹஸ்பதிச் சுப்பனா இறந்து போனார்? எனக்குத் தெரியாமல் போச்சே! தெரிந்திருந்தால் நான் கூட மழையைப் பார்க்காமல் அவருடைய ஊர்வலத்துக்குப் போயிருப்பேனே?" என்றார்.

அவசரக்காரர் இன்னும் சில தடவை 'ஹா, ஹா' காரம் செய்துவிட்டு, மேற்படி பத்திரிகைச் செய்தியை மீண்டும் சுட்டிக் காட்டி, "இது சாதாரணச் சாவு இல்லை ஸார்! சாதாரணச் சாவில்லை. இது கொலை!" என்றார்.

"என்ன?" என்று கைலாசமய்யர் கத்திய போது ரயிலையே தூக்கி வாரிப் போட்டது போல் இருந்தது.

"ஆமாம்; நான் சொல்கிறதை நம்புங்கள், இது கொலை!"

கைலாசமய்யர் அப்போது தாம் பயப்படுவதாகக் காட்டிக் கொண்டால் காரியம் மிஞ்சிவிடும் என்பதை அறிந்தார். எனவே, தைரியத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு "கொலையாவது, கொத்தவரங்காயாவது? உமக்கு எப்படி ஐயா தெரியும்?" என்று கேட்டார்.

"ஆகா! அப்படிக் கேளுங்கள்; கேட்டால்தானே சொல்லலாம்? இது கொலைதான். சாதாரண மரணமில்லை என்பதை நிரூபிக்கிறேன். ரொம்ப ரொம்ப ஆச்சரியமான கதை. தூங்காமல் மட்டும் கேட்க வேண்டும்" என்றார்.

அந்தச் சமயம் கைலாசமய்யர் குழந்தைகள் இருவரும் அவரிடம் வந்து "கதை சொல்லுங்கள் மாமா! நாங்கள் கேட்கிறோம்" என்றன. கைலாசமய்யர் கண் விழி பெயரும்படியாக அக்குழந்தைகளை உற்றுப் பார்த்தார். ஆனால் குழந்தைகள் அவரைப் பார்க்கவேயில்லை.

அவசரக்காரர் குழந்தைகளை விழித்துப் பார்த்து "பயங்கரமான கதை; நீங்கள் பயப்படுவீர்கள்!" என்றார்.

"நாங்கள் பயப்பட மாட்டோம், மாமா! எங்களுக்குப் பயமே கிடையாது. அப்பாதான் பயப்படுவா!" என்றான் போக்கிரி மணி.

"அடே என் கண்மணிகளா! அப்படியானால் கேளுங்கள்" என்று சொல்லிவிட்டு, அந்த மனிதர் கதையை ஆரம்பித்தார்.

"ஆயிரம், பதினாயிரம், லட்சம், முந்நூறு லட்சம் வருஷங்களுக்கு முன்னால் போங்கள். அந்தக் காலத்தில் மனிதர்களே இல்லை. உலகமெல்லாம் காடும், மலையும், தண்ணீருமாய் இருந்தன. பெரிய பெரிய மிருகங்கள், விநோதமான மிருகங்கள் அக்காடுகளில் ஊர்ந்து திரிந்தன. அந்த மிருகங்களுக்கு நீண்ட வாலும், குட்டைச் சிறகுகளும் உண்டு. அவை வாலினால் பறக்கும்; சிறகுகளினால் நடக்கும். இந்த மிருகங்களில் ஒன்றுக்கு ரொமாண்ட மல்லன் என்று பெயர். இன்னொன்றுக்கு பிரமாண்டமல்லன் என்று பெயர். ஒரு நாளைக்கு ரொமாண்டமல்லன், பிரம்மாண்டமல்லனைப் பார்த்து, 'உன் வாலைக் காட்டிலும் என் வால் தான் நீளம்' என்றது. 'இல்லை உன் வால் தான் குட்டை!' என்றது பிரம்மாண்டமல்லன். உடனே இரண்டுக்கும் பயங்கரமான போர் மூண்டது. வாலினால் ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டு, முந்நூறு வருஷம் அவை சண்டை போட்டன. போட்டும் ஜயம் தோல்வி ஏற்படவில்லை. அப்போது ரொமாண்டமல்லன், இனிமேல் என்னால் சாப்பிடாமல் சண்டை போட முடியாது; "இதோ பிராணனை விடுகிறேன்" என்று சொல்லிவிட்டுப் பிராணனை விட்டது. பிரமாண்டமல்லன், "நானும் இதோ பிராணனை விடுகிறேன்" என்று சொல்லிவிட்டு பிராணனை விடப் பார்த்த போது, தன்னுடைய பிராணன் ஏற்கனவே போய்விட்டதென்பதைப் பார்த்து அதிசயித்தது. தெரிந்ததா, குழந்தைகளே! அப்புறம் இரண்டு லட்சம் வருஷத்தைத் தள்ளுங்கள்!"

"தள்ளிவிட்டோ ம்!" என்றான் போக்கிரி மணி.

"எங்களுக்குப் பயமாகவே இல்லை!" என்றாள் ஸரோஜா.

அவசரக்காரர் மேலும் சொன்ன கதை விசித்திரமாயும் பயங்கரமாயும் இருந்தது. அந்த இரண்டு பழங்கால மிருகங்களும் வெகு காலத்துக்குப் பிறகு ஒன்று கிஷ்கிந்தா புரியில் வானரமாகவும், இன்னொன்று இலங்கையில் ராட்சதனாகவும் பிறந்தனவாம். இராவண சம்ஹாரம் ஆகி, சீதையை இராமன் சேர்த்துக் கொண்டு புஷ்பக விமானத்தில் எல்லாரும் கிளம்பும் வரையில் மேற்படி வானரமும் ராட்சதனும் மட்டும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்களாம். இதைப் பார்த்த அனுமார் இரண்டு பேரையும் பிடித்துத் தலைக்கு நாலு குட்டுக் குட்ட வானரமும் ராட்சதனும் அவமானப்பட்டு ஓடி, அனுமான் கொண்டு வந்திருந்த சஞ்சீவி மலையில் தடுக்கி விழுந்து செத்துப் போனார்களாம்.

அப்புறம் பல்லாயிரம் வருஷங்களுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் மகாபாரதக் காலத்தில் பூமியிலே பிறந்தார்கள். குருக்ஷேத்திரத்தில் ஒருவன் பாண்டவர் சைன்னியத்தில் இருந்தான். இன்னொருவன் துரியோதனன் கட்சியில் இருந்தான். அவர்கள் அந்தப் பெரும் போரில் மாண்ட விதம் மகா விசித்திரமானது. தென்னாட்டிலிருந்து மதுரைப் பாண்டியன் சாப்பாடு கொண்டு வந்து குருக்ஷேத்திர யுத்த களத்தில் இரண்டு கட்சி வீரர்களுக்கும் சோறு போட்டானல்லவா? அந்தச் சாப்பாட்டைப் போட்டி போட்டுக் கொண்டு அளவுக்கு மீறிச் சாப்பிட்டு வயிறு வெடித்து அவர்கள் இறந்து போனார்களாம்!

பிறகு, அந்த மகாவீரர்கள் நாநூறு வருஷத்துக்கு முன்பு வீர இராஜபுத்திர நாட்டில் பிறந்தார்களாம். பிறந்து பேசத் தெரிந்ததும் முதல் காரியமாக அவர்கள் ஒருவரையொருவர் கொன்று விடுவதாகச் சபதம் செய்து கொண்டார்களாம்! சபதத்தை நிறைவேற்றுவதற்கு நல்ல சமயம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குச் சீக்கிரத்திலே சமயம் கிடைத்தது. ஓர் இராஜபுத்திரப் பெண் அவர்கள் இரண்டு பேருக்கும் ஒரே சமயத்தில் ஒரு செய்தி சொல்லியனுப்பினாள். தன்னை ஒரு பாதுஷா பலாத்காரமாய் அபகரித்துச் சென்று அந்தப்புரத்தில் அடைத்து வைத்திருப்பதாகவும், தன்னை விடுதலை செய்து அழைத்துப் போக வேண்டுமென்றும் தெரிவித்திருந்தாள். உடனே மேற்படி இரண்டு ராஜகுமாரர்களும் அந்த இராஜகுமாரியை யார் காப்பாற்றுவது என்று தங்களுக்குள் சண்டையிடத் தொடங்கினார்கள். அந்தச் சண்டையில் ஒருவன் தன்னுடைய தலை முண்டாசில் கத்தி பாய்ந்ததின் பலனாக இறந்து போனான். இன்னொருவன் மேற்படி இராஜகுமாரியைப் பாதுஷாவின் அந்தப் புரத்திலிருந்து காப்பாற்றிக் கொண்டு வந்து, அன்றிரவே அவள் கொடுத்த விஷத்தைக் குடித்து விட்டு இறந்து போனான்.

இன்னும் மேற்கண்ட விதமாகப் பல ஜன்மங்களில் போராடிய பிறகு, அவர்கள் கடைசியாக இந்தக் காலத்தில் தமிழ் நாட்டில் அவதரித்தார்கள். இவர்கள் குழந்தைகளாயிருந்த போதே மசியைக் கொட்டி மெழுகுவதும், பேனாவை விழுங்குவதுமாயிருந்ததைப் பார்த்தவர்கள் எல்லாம், "வருங்காலத்தில் இவர்கள் சிறந்த எழுத்தாளர் ஆகி, உலகத்தையே ஒரு கலக்கு கலக்கப் போகிறார்கள்" என்று சொல்லி விட்டுக் கண்ணீர் விடுவதுண்டு! அவர்கள் பயந்தபடியே வாஸ்தவத்தில் நடந்தது.

'பிரகஸ்பதி சுப்பன்', 'அதிர்வெடிக் குப்பன்' என்னும் புனைப் பெயர்கள் தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் உலகப் பிரசித்தி அடைந்து வந்தன! இவர்கள் பத்திரிகை நடத்தாத போது புத்தகம் எழுதுவார்கள். புத்தகம் எழுதாதபோது பத்திரிகை நடத்துவார்கள்.

'பிரகஸ்பதி சுப்பன்' பத்திரிகை நடத்தும் போது 'அதிர்வெடிக் குப்பன்' எழுதிய புத்தகங்களையெல்லாம் எழுத்தெழுத்தாகப் பிய்த்து எறிந்து விடுவார். 'அதிர்வெடிக் குப்பன்' பத்திரிகை நடத்தும் சமயத்தில் 'பிரகஸ்பதி சுப்ப'னின் புத்தகங்களையெல்லாம் கடித்துத் தின்று உமிழ்ந்து விடுவார். இவ்விதமாக அவர்களுடைய ஆங்காரம் முற்றிக் கொண்டே வந்தது. கடைசியாக நேற்றைய தினம் 'பிரகஸ்பதி சுப்ப'னுக்கு 'அதிர்வெடிக் குப்ப'னிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதிலிருந்து "ஜாக்கிரதை! நாளைய தினம் உன்னை நான் உன்னுடைய ஆயுதத்தினாலேயே கொல்லப் போகிறேன். ஓடித் தப்பித்துக் கொள்ளப் பார்த்தாலும் விடமாட்டேன்" என்று எழுதியிருந்தது.

4

அவசரக்கார மனிதர் மேற்படி கட்டத்திற்கு வருவதற்குள், அவர் கூறிய கதையின் பயங்கர சுவாரஸ்யத்தில் மதிமயங்கிக் கைலாசமய்யரின் குழந்தைகளும் மனைவியும் தூங்கிப் போய்விட்டார்கள். கைலாசமய்யர் மட்டும் தூங்காமல் அடங்காத ஆவலுடன் சொல்ல முடியாத பயத்துடனும் கதையைக் கேட்டு வந்தார்.

"அப்புறம் என்ன ஆச்சு? கடிதப்படி நடந்ததா!" என்று கேட்டார்.

"ஆமாம், நடந்தது. கடிதத்தைப் பெற்றவர் தப்பித்து ஓடிவிடலாமென்று பார்த்தார்; முடியவில்லை. கடைசியில், கடிதம் எழுதியவர் அவரைக் கொன்றே தீர்த்தார்."

"ஐயோ, அப்படியானால்....?" என்று கைலாசமய்யர் பத்திரிகைச் செய்தியைச் சுட்டிக் காட்டினார்.

"ஆம்? 'பிரகஸ்பதி சுப்பன்' என்னும் பிரணதார்த்தி ஹரன் தான் கொல்லப்பட்டு இறந்தவர்."

"ஆ!" என்றார் கைலாசமய்யர். அவருக்கு எல்லா விஷயமும் புரிந்து விட்டது. இந்த மனுஷன் தான் பிரணதார்த்தி ஹரனைக் கொன்று விட்டு வந்திருப்பவன். இவனுடைய அவசரத்துக்கும் படபடப்புக்கும் காரணம் அதுதான். இவனுடைய மூளை குழம்பிப் போய் ஏதேதோ பயங்கரமான கதை சொல்வதின் காரணமும் அதுதான்.

கைலாசமய்யருக்குத் திடீரென்று ஒரு அசட்டுத் தைரியம் பிறந்தது. இந்தக் கொலைகாரனைப் பிடித்து ஏன் போலீஸாரிடம் ஒப்புவிக்கக் கூடாது? - நல்லவேளை; செங்கற்பட்டு ஸ்டேஷன் இதோ வரப் போகிறது. வண்டி நின்றதும் போலீஸ்காரனைக் கூப்பிட வேண்டியதுதான். அது வரையில் இவனுடன் ஏதாவது பேச்சுக் கொடுத்துக் கொண்டு வரவேண்டும்.

"இவ்வளவெல்லாம் சொல்கிறீரே! உமக்கு இதெல்லாம் எப்படித் தெரிந்தது?" என்று கைலாசமய்யர் கேட்டார்.

"எப்படித் தெரிந்ததா? ஹாஹாஹா எனக்குத் தெரியாமல் வேற யாருக்குத் தெரியும்? நான் தானே...!"

"நீர்தானே...?"

"நான் யார் என்று இன்னுமா தெரியவில்லை?"

"தெரியாமலென்ன? பேஷாத் தெரியும். நீதான் அதிர்வெடிக் குப்பன். நீதான் கொலைகாரன். உன்னை இதோ..."

"இல்லை ஐயா! இல்லை. நான் கொலைகாரன் இல்லை!" என்று அவன் கூறிக் கொண்டே மேற்படி பத்திரிகைச் செய்தியைச் சுட்டிக் காட்டினான். "இதோ போட்டிருக்கிறதே, 'பிரகஸ்பதிச் சுப்பன்' என்னும் பிரணதார்த்தி ஹரன் காலமானார் என்று - அந்த சாக்ஷாத் பிரணதார்த்தி ஹரன் நான் தான்!" என்றான்.

கைலாசமய்யரைத் தூக்கிப் போட்ட போட்டில் மேலே எழும்பிய மனுஷர் கீழே வருவதற்குள் வண்டி செங்கற்பட்டு ஸ்டேஷனில் வந்து நின்றது. வண்டி நின்றதும் நிற்காததுமாய்க் கதவைத் திறந்து கொண்டு, அந்த மனுஷன் பளிச்சென்று கீழே குதித்தான். அடுத்த கணத்தில் அவன் மாயமாய் மறைந்து போனான்.

கைலாசமய்யர் படக்கென்று கதவைச் சாத்தி இறுக்கித் தாழ்ப்பாள் போட்டார். அந்தச் சத்தத்தில் அவர் மனையாள் விழித்தெழுந்து, "என்ன? என்ன?" என்று கேட்டாள். "ஒன்றுமில்லை; பிரகஸ்பதி சுப்பன் என்ற பிரணதார்த்தி ஹரனின் பிசாசு!" என்றார் கைலாசமய்யர்.

5

மேற்கூறிய வரலாற்றையெல்லாம் சொல்லிவிட்டு கைலாசமய்யர், "ஏற்கனவே நான் பயந்த மனுஷன் என்று தான் உமக்குத் தெரியுமே? இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்த பிறகு கேட்க வேண்டுமா? அன்று முதல் எனக்கு இராத் தூக்கம் கிடையாது. கண்ணை மூடினால் ரயில் பிரயாணம் செய்வது போலும், பிசாசு வருவது போலும் கதை சொல்வது போலும் சொப்பணம், உங்களுக்கு என்ன தோன்றுகிறது?" என்று கேட்டார்.

"எதைப் பற்றி?" என்றேன்.

"பிரணதார்த்தி ஹரன் சாதாரண மரணமடைந்தாரா? கொலையுண்டு செத்தாரா?"

"நீர் அப்புறம் பத்திரிகை படிக்கவில்லையா, என்ன?"

"பத்திரிகையைக் கண்டாலே எனக்குப் பயமாயிருக்கிறது. தொடவே இல்லை" என்றார் கைலாசமய்யர்.

"மறுநாள் பத்திரிகையிலேயே 'பிரணதார்த்தி ஹரன் மரணமடையவில்லை; ஆகையால் பிரேத ஊர்வலமும் நடக்கவில்லை!' என்று திருத்தம் வெளியாகியிருந்ததே!"

"அப்படியா? ஓ ஹோ ஹோ! நானல்லவா ஏமாந்து போயிருக்கிறேன்? - அப்படியானால் அன்று என்னைக் காபராப்படுத்திய மனுஷன் தான் யார்?"

"சாஷாத் பிரணதார்த்தி ஹரன் தான்!"

"அடே அப்பா! ஒரே புளுகாய்ப் புளுகினானே? எழுத்தாளி என்றாலே எல்லாரும் இப்படித்தான் புளுகுவார்களோ?"

"அவர் சொன்னதில் கொஞ்சம் நிஜமும் உண்டு. அவருடைய எதிரி அவரைக் கொன்று விடுவதாகப் பயமுறுத்திக் கடிதம் எழுதியது உண்மை. அதை அவன் நிறைவேற்றியும் விட்டான்!"

"நிறைவேற்றி விட்டானா? அதெப்படி ஐயா! மூளை குழம்புகிறதே!"

"பிரணதார்த்தியின் ஆயுதத்தினாலேயே அவரைக் கொல்வதாக அவனுடைய எதிரி சொன்னானல்லவா? பிரணதார்த்தியின் ஆயுதம் என்ன? பேனா! அந்தப் பேனாவைக் கொண்டுதான் அவனைக் கொன்றான்!"

"கொன்றானா?"

"ஆமாம்; பிரணதார்த்தி ஹரன் காலமானதாகப் பத்திரிகைகளுக்கு எழுதி விட்டானல்லவா? இது பேனாவினால் கொன்றதுதானே?"

கைலாசமய்யருக்கு அவரையறியாமல் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. விழுந்து விழுந்து சிரித்தார். இடையிடையே 'அதிர்வேட்டுச் சுப்பன் நல்ல அதிர்வெடி போட்டானையா?' என்று சொல்லிக் கொண்டு சிரித்தார். "அந்தப் பிரகஸ்பதிக்கு நன்றாய் வேண்டும்! என்னை காபராப் படுத்தினானோ, இல்லையோ?" என்றும் இடையிடையே சொல்லிக் கொண்டார்.

கைலாசமய்யர் அவ்விதம் சிரித்த போது, அவர் தலைக்கு மேலே ஓர் அதிசயம் நடந்து கொண்டிருந்தது.

பயங்கரப் பிரயாண இரவில், 'ஜாப்கே' மசியைப் போல் கறுத்த அவருடைய தலைமயிரானது என் கண்ணெதிரே மளமளவென்று 'ரோம வர்த்தினி' தடவிய கூந்தலைப் போல வெளுத்து வெள்ளை வெளேரென்று ஆகிவிட்டது!

"கைலாசமய்யர்வாள்! இந்த வருஷம் நடந்தது உங்கள் மைத்துனன் தலை தீபாவளி அல்ல; உங்களுடைய தலை தீபாவளிதான்!" என்றேன்.
--------------

54. லஞ்சம் வாங்காதவன்

1

நடுநிசி. டாண் டாண் என்று மணி அடித்தது. மிஸ்டர் பராங்குசம் ஐ.சி.எஸ். நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தார். மணி பன்னிரண்டு. ஆனால் இன்னும் அவர் பைஸல் செய்ய வேண்டிய தஸ்தாவேஜிக் கட்டுகள் மேஜை மேல் மலைபோல் குவிந்து கிடந்தன!

*****

உத்தியோக பதவியில் மேலேற ஏற, சம்பளம் அதிகமாக ஆக, வேலை குறைவு என்று சாதாரணமாய் ஓர் எண்ணம் இருந்து வருகிறது. சிற்சில இலாக்காக்கள் சிற்சில பதவிகள் விஷயத்தில் இது உண்மையாக இருக்கலாம். ஆனால், நிர்வாக இலாகா உத்தியோகங்களைப் பொறுத்தவரையில் மேற்கண்ட எண்ணம் எவ்வளவு பிசகானது என்பதற்கு மிஸ்டர் பராங்குசம் ஐ.சி.எஸ். பிரத்யட்ச உதாரணமாயிருந்தார்.

அதுவும் ஜில்லாக் கலெக்டர் ஆனதிலிருந்து அவர் பொழுது விடிந்தது முதல் இரவு பன்னிரண்டு மணி வரையில் உழைத்து உழைத்து ஓடாய்ப் போனதை யார் அறிவார்கள்? சர்வமும் அறிந்த ஆண்டவனுக்கும் டபேதார் சின்ன கேசவலுக்கும் தவிர, வேறு யாருக்குத்தான் தெரியும்?

கிராம வெட்டியான் மேல் கிராம முனிசீப் செய்யும் புகார் முதற்கொண்டு ரயில் கவிழ்க்கும் சதியாலோசனை வரையில் அவர் விசாரணை செய்து நியாயத் தீர்ப்பு சொல்ல வேண்டும். புறம்போக்கை ஆக்ரமித்த குடியானவனுக்கு இரண்டு ரூபாய் தண்டத் தீர்வை விதிப்பது முதல் கடற்கரையோரத்தில் ஜப்பான் உளவுப் படகு வருவதைத் தடுப்பது வரையில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பொறுப்பை அவர் தாங்கியாக வேண்டும்.

இதெல்லாம் ஒரு புறமிருக்க, இந்தச் சாமான் கட்டுப்பாடு விஷயம் வந்தாலும் வந்தது - ஐயையோ! சகிக்க முடியாத தொல்லையாய்ப் போயிற்று. மனுஷர் ஐம்பது வயது வாலிபராயிருந்தவர் ஆறே மாதத்தில் எழுபது வயதுக் கிழவனாகி விட்டார். மூக்குக் கண்ணாடியை அந்த ஆறு மாதத்தில் மூன்று தடவை மாற்ற வேண்டியதாகிவிட்டது.

ஆறு மாதத்துக்கு முன்பு அவருடைய தலையில் ஆங்காங்கு இரண்டொரு வெள்ளி ரோமம் காணப்பட்டது. இப்போது தலையெல்லாம் ஒரே நரை. நல்ல வேளை! மிஸ்டர் பராங்குசத்தின் பத்தினி இரண்டு வருஷத்துக்கு முன்பே காலமாகி விட்டாள். இப்போது மட்டும் அந்த நாகரீகப் பெண்மணி உயிரோடிருந்தால், மிஸ்டர் பராங்குசம் எவ்வளவு அவதியடைய நேர்ந்திருக்கும்!

இப்போதும் மிஸ்டர் பராங்குசத்திற்கு அவதி அவ்வளவு ஒன்றும் குறைவாக இல்லை; மேஜை மீது குவிந்து கிடந்த தஸ்தாவேஜுக் கட்டுகளை அவர் வெறுப்புடனே ஒரு தடவை பார்த்தார். சிவா! ராமா! இன்னும் இரண்டு மணி நேர வேலை இருக்கிறது. இப்படி உத்தியோகம் பார்த்து அணு அணுவாய் உயிரை விடுவதைக் காட்டிலும் ஒரேயடியாய்ச் செத்துத் தொலைந்து போனால் தான் என்ன? இதற்குள் மிஸ்டர் பராங்குசத்தின் பார்வை தஸ்தாவேஜுக் கட்டுக்களுக்குப் பக்கத்திலே கிடந்த பண நோட்டுக் கட்டுகளின் மேல் விழுந்தது. உடனே அவர் முகம் பிரகாசம் அடைந்தது. அவர் வேண்டாமென்று சொல்லியும் கேட்காமல் ராம்ஜி ஸேட் மேஜை மேல் வைத்து விட்டுப் போன நோட்டுகள் அவை. ஸேட் அங்கு இருந்தவரையில் மிஸ்டர் பராங்குசம் அந்த நோட்டுக்களைத் திரும்பிப் பார்க்கவில்லை. இப்போது தான் பார்த்தார். பார்த்துவிட்டுக் கட்டுக்களை எடுத்து ஒவ்வொன்றாய் எண்ணினார். ஒவ்வொன்றிலும் இருபது 100 ரூபாய் நோட்டு மொத்தம் பத்து கட்டு ஆக மொத்தம் இருபதினாயிரம் ரூபாய்.

எண்ணிப் பார்த்த கட்டுகளை மிஸ்டர் பராங்குசம் எடுத்து மேஜை டிராயர் ஒன்றுக்குள் திணித்தார்.

மேஜைக்கு மேலே பெரிய பவர்லைட் எரிந்து கொண்டிருந்தது. சுவர் ஓரமாய்த் தரையில் ஒரு ரெவினியூ இலாகா லாந்தர் எரிந்து கொண்டிருந்தது. அதிலிருந்து இப்போது புகை அசாத்தியமாய்க் கிளம்பியது.

"கேசவா! இந்த லாந்தர் புகைகிறது; எடுத்துக் கொண்டு போ" என்றார் பராங்குசம்.

வெளியிலிருந்து டபேதார் வந்து லாந்தரை எடுத்துக் கொண்டு போனான்.

2

கேசவன் போனதும் மிஸ்டர் பராங்குசம் ஒரு கொட்டாவி விட்டு நாற்காலியின் மேல் "அம்மாடி" என்று சாய்ந்தார். பிறகு ஒரு காகிதமும் பென்ஸிலும் எடுத்து யோசித்து சில எண்களை வரிசையாக எழுதினார். எழுதிய எண்களைக் கூட்டிய போது ஒன்பதரை லட்சம் வந்தது.

"இன்னும் ஐம்பதினாயிரம் வந்து விட்டால், அப்புறம் எந்த ராஜா பட்டணம் போனாலும் சரி" என்று மிஸ்டர் பராங்குசம் முணுமுணுத்தார்.

பிறகு, பழையபடி தஸ்தாவேஜிக் கட்டுகளை எடுத்துப் பார்க்கத் தொடங்கினார்.

மிஸ்டர் பராங்குசம் தஸ்தாவேஜுக் கட்டுகளைப் பார்த்துக் கொண்டிருக்கையில், மேற்படி ஒன்பதரை லட்சத்தின் மர்மம் என்னவென்பதை நாம் பார்க்கலாம்.

சென்ற ஆறு மாத காலத்தில் மிஸ்டர் பராங்குசம் லஞ்சம் வாங்கிச் சேர்த்திருந்த பணம் தான் ஒன்பதரை லட்சம்.

வாசகர்களுக்கு இது ஒரு ஆச்சரியமாகத்தான் இருக்கும். சாதாரணமாக ஐ.சி.எஸ். காரர்கள் மீது லஞ்சக் குற்றம் ஏற்பட்டதாக நாம் கேள்விப்பட்டதில்லை. பெரிய அதிகாரங்களை வகிக்கும் அவர்களுக்கு லட்சம் வாங்கத் தூண்டுதலே ஏற்படக்கூடாதென்பதற்குத் தானே பெருவாரியான சம்பளம் கொடுக்கப்படுகிறது?

இதெல்லாம் உண்மைதான். ஆனால், மிஸ்டர் பராங்குசம் அன்று வரையில் ஒன்பதரை லட்சம் வாங்கிச் சேர்த்திருந்ததும் உண்மைதான். இது எப்படி நேர்ந்தது என்பதைச் சொல்லுகிறோம்.

மிஸ்டர் பராங்குசத்தின் காலஞ்சென்ற மனைவிதான் அதற்கு முதற் காரணம். இந்தப் பாழாய்ப் போன யுத்தம் இரண்டாவது காரணம்.

மிஸ்ஸஸ் பராங்குசம் நாகரிகத்தில் முதிர்ந்த சீமாட்டி. இந்த நாளில் நாகரிகமாய் வாழ வேண்டுமென்றால் பணத்தையல்லவா கண்களை மூடிக் கொண்டு செலவு செய்ய வேண்டியிருக்கிறது? மிஸ்டர் பராங்குசம் ஆபீஸுக்குப் போக ஒரு கார், மிஸ்ஸஸ் பராங்குசம் லேடீஸ் கிளப்புக்குப் போக ஒரு கார், குழந்தைகள் பள்ளிக்கூடம் போக ஒரு கார் - இப்படியெல்லாம் நாகரிக வாழ்க்கையாகிய பூதம் பணத்தை விழுங்கிக் கொண்டிருந்தது.

இதனுடைய பயனாக, மிஸ்ஸஸ் பராங்குசம் கண்ணை மூடியபோது, மிஸ்டர் பராங்குசத்துக்குத் திருடர் பயம் என்பதே அடியோடு இல்லாமலிருந்தது. மடியில் கனம் இருந்தால் அல்லவா வழியில் பயம்?

மிஸ்ஸஸ் பராங்குசம் பண விஷயத்தில் தாராளமாயிருந்தது போல் சந்ததிகள் விஷயத்திலும் வெகு தாராளாமாயிருந்தாள். ஐந்து பெண் குழந்தைகளையும் நாலு பிள்ளைக் குழந்தைகளையும் விட்டுச் சென்றாள். இவ்வளவு பேருக்கும் உயர்தரக் கல்வி அளித்து, கல்யாணம் பன்ணி வைக்கும் பொறுப்பு எல்லாம் மிஸ்டர் பராங்குசத்தின் தலையில் விழுந்தது. அவருக்கோ வயது ஆகிவிட்டது. உத்தியோகத்திலிருந்து ரிடையர் ஆக வேண்டிய காலம் சமீபித்திருந்தது.

இந்த நிலைமையில் பாழாய்ப் போன யுத்தம் வந்து தொலைந்ததா? யுத்தத்தினால் எத்தனையோ ஜனங்கள் எத்தனையோ கஷ்ட நஷ்டங்களை அனுபவித்தார்கள். ஆனால் ஒரு சிலர் ஏராளமாய்ப் பணத்தை வாரிக் குவித்துக் கொண்டிருப்பதை மிஸ்டர் பராங்குசம் கவனித்தார். யுத்த காண்டிராக்ட்டுகளில் சிலர் லட்சம் லட்சமாய்ப் பணம் பண்ணியிருந்தார்கள். பிண்ணாக்கு வியாபாரி ஒருவர் ஏழு லட்சம் பண்ணியிருந்தார். நூல் வியாபாரிகள் சிலர் இருபது லட்சம் முப்பது லட்சம் சம்பாதித்திருந்தார்கள். செங்கள் சூளை போட்ட ஒருவர் ஏழு லட்சம் சேர்த்திருந்தார்.

இப்படி யுத்தத்தினாலே பலர் கொழுத்த பணக்காரர்களாகிக் கொண்டு வரும் போது, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு இவ்வளவு நீடித்த ஊழியம் செய்து வந்திருக்கும் தாம் மட்டும் ஏன் ஏழையாயிருக்க வேண்டும் என்று மிஸ்டர் பராங்குசம் வியந்தார்! இத்தனைக்கும் மேற்கண்ட விதமாகப் பணம் சம்பாதித்தவர்கள் பெரும்பாலும் தம்மிடம் லைசென்ஸோ, அனுமதியோ பெற்று வியாபாரம் செய்தவர்கள் என்பதை எண்ணும் போது அவருடைய வியப்பு பன்மடங்கு ஆயிற்று! அவ்விதம் தம்மிடம் லைசென்ஸுக்கோ, பர்மிட்டுக்கோ வருகிறவர்களிடம் தாம் சற்றே கையை நீட்டினால் போதும்; வீட்டில் தனலக்ஷ்மி தாண்டவமாடத் தொடங்குவாள்!

இன்னும் சில நாளைக்கெல்லாம் மிஸ்டர் பராங்குசம் இத்தனை காலமும் தாம் இவ்வளவு பரிசுத்தமாய் இருந்து கண்ட பலன் என்ன என்று வியக்கத் தொடங்கினார். தம் கண் முன்னால் லஞ்சம் வாங்கிப் பணம் சேர்த்திருக்கும் மனிதர்கள் எல்லாம் ஒவ்வொருவராய் அவர் கண் முன்னால் வந்தார்கள். அவர்களுக்கெல்லாம் என்ன கௌரவம் குறைந்து விட்டது? இன்னும் யோசிக்க, யோசிக்க "பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஆதி ஸ்தாபகர்களான கிளைவும் வாரன் ஹேஸ்டிங்க்ஸுமே லஞ்சம் வாங்கியிருக்கும் போது, நமக்கென்ன வந்தது?" என்று அவருக்குத் தோன்றியது.

பட்டினி கிடந்தவர்களின் முன்னால் நல்ல சாப்பாட்டை வைத்தால், கணக்குத் தெரியாமல் சாப்பிட்டு விடுவது இயற்கையல்லவா? அஜீரணமாகி விடுமே - வயிற்றை வலிக்குமே என்றெல்லாம் அவர்கள் யோசித்துக் கொண்டிருக்க முடியுமா? - அதே மாதிரி உத்தியோகத்தில் வெகு காலம் நெறி தவறாமலிருந்த மிஸ்டர் பராங்குசம் லஞ்சம் வாங்க ஆரம்பித்த போது, அவருக்கு நூறு கை வந்து விட்டது போலிருந்தது. அப்படிப் பணத்தை வாரிக் குவித்தார். அவருடைய டபேதார் சின்னக்கேசவலு சுமார் பதினையாயிரம் ரூபாய் சேர்த்து விட்டான் என்றால், அவர் ஒன்பதரை லட்சம் சேர்த்து விட்டதில் என்ன ஆச்சரியம்?"

இப்படி மளமளவென்று குவிந்த பணத்தை எப்படிப் பத்திரப்படுத்துவது என்பதிலேதான் கஷ்டம் அதிகமாயிருந்தது. ஆறே மாதத்தில் மனுஷருக்குத் தலை நரைத்துப் போனதற்கு இந்தக் கவலையும் ஒரு காரணம் என்று சொல்லலாம். வெள்ளிக் கட்டிகளும் தங்கக் கட்டிகளும் வாங்கினார். அப்புறம் ஷேர் மார்க்கெட்டில் பங்குகள் வாங்கினார்.

நாளாக ஆக, அவருக்குத் துணிச்சல் அதிகமாயிற்று. பகிரங்கமாக பாங்கிகளிலேயே பணத்தைப் போட ஆரம்பித்தார்.

நிலைமை இவ்வளவுக்கு முற்றிய பிறகு சர்க்கார் காதுக்கு எட்டாமலிருக்குமா? எட்டிய பிறகு சர்க்கார் தான் நடவடிக்கை எடுத்துக் கொள்ளாமலிருக்க முடியுமா?

ஆனால், பராங்குசத்துக்கு இப்போது ஏற்பட்டிருந்த துணிச்சல் கவர்ன்மெண்ட் நடவடிக்கையைக் கூட 'பூபூ' என்று தள்ளிற்று. 'என்ன பிரமாத நடவடிக்கை எடுத்து விடப் போகிறார்கள்? பிராஸிகியூட் செய்து வழக்கு நடத்த ஒரு நாளும் தைரியம் வரப் போவதில்லை. அதனால் கவர்ன்மெண்டின் மதிப்பேயல்லவா குறைந்து போய் விடும்? இன்றைக்கெல்லாம் செய்தால் உத்தியோகத்தை விட்டு நீக்கி வைப்பார்கள். போனால் போகட்டும் இந்த உத்தியோகம் யாருக்கு வேண்டும்? இன்னும் ஐந்து வருஷம் உழைத்துப் பிறகு காணப் போகும் லாபந்தான் என்ன? பத்து லட்சம் ரூபாயுடன் இப்போதே தான் விலகிக் கொள்ளலாமே! இன்னும் ஐம்பதாயிரம் தான் பாக்கி!" இப்படி எண்ணமிட்ட மிஸ்டர் பராங்குசத்துக்கு மறுபடி கொட்டாவி வந்தது.

3

"மிஸ்டர் பராங்குசம்! உடனே புறப்படும்!" என்ற பேச்சைக் கேட்டுத் திடுக்கிட்டவராய்ப் பராங்குசம் நிமிர்ந்து பார்த்தார்.

எதிரே சுவர் ஓரத்தில் ஓர் கறுத்த உருவம் நின்றது.

சொல்ல முடியாத பீதியினால் மிஸ்டர் பராங்குசத்தின் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.

தட்டுத் தடுமாறி, "நீ யார்?" என்று கேட்டார்.

"மேலேயிருந்து உத்தரவு கொண்டு வந்திருக்கிறேன். உம்மைக் கையோடு அழைத்துக் கொண்டு வரும்படி கட்டளை."

மேலே இருந்து உத்தரவு வரும் என்பது பராங்குசம் எதிர்பார்த்தது தான். ஆனால், இந்த வேளையில் இந்த விதத்தில் இப்படித் திடீரென்று உத்தரவு வரும் என்பதாக அவர் எதிர்பார்க்கவில்லை.

பராங்குசத்தின் மார்பு தட், தட் என்று அடித்துக் கொண்டது.

"ஏன் தாமதம்? கிளம்பும்!"

பராங்குசம் ஈனக் குரலில், "எனக்கு இப்போது வர சௌகரியம் இல்லை" என்றார்.

"உம்முடைய சௌகரியத்தைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. உத்தரவு அப்படியில்லை."

பராங்குசத்தின் ஆரம்ப பீதி குறைந்தது, வர வரத் துணிச்சல் ஏற்பட்டது.

"இந்தத் தஸ்தாவேஜிக் கட்டுகளில் எல்லாம் நான் கையெழுத்துப் போட்டு ஆக வேண்டும்."

"நீர் போட வேண்டியதில்லை; உமக்குப் பதில் வருகிறவர் போட்டுக் கொள்வார்."

"முக்கியமான சொந்த ஜோலிகள் இருக்கின்றன."

"இனிமேல் உமக்கு ஒரு சொந்த ஜோலியும் இல்லை."

பராங்குசம் அப்போது மேஜை டிராயரை இழுத்து ஒரு கத்தை நூறு ரூபாய் நோட்டுக்களைக் கையில் எடுத்தார்.

"இதோ பத்தாயிரம் ரூபாய்; திரும்பிப் போய் நான் வீட்டில் இல்லையென்று சொல்லிவிடும்."

"முடியாது, லஞ்சமெல்லாம் உம்முடனே இருக்கட்டும்."

"இருபதனாயிரம் தருகிறேன்."

"பணப்பேச்சே வேண்டாம்."

"இந்த டிராயரில் உள்ள ஐம்பதினாயிரம் ரூபாயையும் எடுத்துக் கொள்ளும்."

"நான் லஞ்சம் வாங்குவது கிடையாது. கிளம்பும் உடனே."

பராங்குசம் சற்று யோசித்து விட்டு, "கொஞ்சம் பொறுத்துக் கொள்ளும்; என் பிள்ளையப் பார்த்துப் பேசிவிட்டு வருகிறேன்" என்றார்.

"முடியாது; நேரம் இல்லை."

"அரைமணி நேரம் கொடும். மேல் மாடிக்குப் போய் என் கடைக் குட்டிக் குழந்தையை ஒரு தடவை கண்ணால் பார்த்து விட்டு வருகிறேன்."

"குழந்தையா? நீர் செய்த அக்கிரமங்களினாலே இன்று இந்த ஜில்லாவில் இருபதினாயிரம் குழந்தைகள் பட்டினி கிடக்கின்றன."

"இந்த ஐம்பதினாயிரம் ரூபாயும் கொடுத்து இரண்டு லட்சம் ரூபாய்க்குச் செக்கும் தருகிறேன். பத்து நிமிஷமாவது கொடும்."

"முடியாது. ஒரு நிமிஷம் கூடக் கொடுக்க முடியாது."

"அப்படியானால் இந்தாரும்" என்று சொல்லி, மிஸ்டர் பராங்குசம் சடக்கென்று மேஜையின் இன்னொரு டிராயரைத் திறந்தார். அதிலிருந்து ஒரு கைத் துப்பாக்கியை எடுத்து எதிரே நீட்டினார்.

"இப்போது என்ன சொல்கிறீர்?" என்று கூறி மிஸ்டர் பராங்குசம் பயங்கரமாகச் சிரித்தார். அவருடைய சிரிப்பின் எதிரொலியே போல் அந்தக் கறுத்த உருவமும் சிரித்தது.

அடுத்த விநாடி 'படீர்' என்று கைத் துப்பாக்கி வெடித்தது. மிஸ்டர் பராங்குசம் மேஜை மேல் சாய்ந்தார். அவருடைய ஆத்மா தன் நீண்ட பிரயாணத்தைத் தொடங்கிற்று.

4

இரண்டு நாளைக்கெல்லம் பத்திரிகைகளில் பின் வரும் செய்தி பிரசுரமாயிற்று.

"சென்ற செவ்வாய்க்கிழமையன்று இரவு ஜில்லா கலெக்டர் மிஸ்டர் பராங்குசம் ஐ.சி.எஸ். திடீரென்று மாரடைப்பால் காலம் சென்றார்."

"மிஸ்டர் பராங்குசத்தின் மேல் லஞ்சப் புகார் அதிகமாக ஏற்பட்டு மாகாண கவர்ன்மெண்டார் அவர் மேல் நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்திருந்தார்கள் என்று தெரிகிறது. உத்தியோகத்திலிருந்து அவரைத் தற்காலிகமாய் நீக்கி உத்தரவில் கையெழுத்துக் கூட ஆகிவிட்டதாம். மிஸ்டர் பராங்குசத்தின் அகால மரணத்தை முன்னிட்டு மேற்படி நடவடிக்கைகள் வாபஸ் வாங்கப்படுமென்று அறிகிறோம்."

மேற்படி சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குப் பிறகு ஜில்லா கலெக்டர் பங்களாவைப் புதிய கலெக்டர் வரப் போவதை முன்னிட்டு சுண்ணாம்பு அடித்துச் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். டபேதார் சின்னக் கேசவலு இன்னொருவனுடன் கலெக்டரின் ஆபீஸ் அறையைச் சுத்தம் செய்ய வந்தான்.

"அதோ பார்த்தாயா, அண்ணே!" என்று முத்தப்பன் சுவரைச் சுட்டிக் காட்டினான். இருவரும் அருகாமையில் போய்ப் பார்த்தார்கள்.

ரவிவர்மா படத்தில் சத்தியவானுடைய உயிரைக் கொண்டு போவதற்காக ஒரு புகை உருவம் வருகிறதே, அந்த மாதிரியான ஒரு உருவம் சுவரில் காணப்பட்டது.

அதைப் பார்த்து டபேதார் சின்னக் கேசவலு சொன்னான்: "தம்பி, ஒரு நாளைக்கு இங்கே ஹரிகேன் லாந்தர் வைத்திருந்தது. அதிலிருந்து ஒரே புகை அடித்தது. நான் தான் லாந்தரை எடுத்துக் கொண்டு போய் அணைத்தேன். அந்த லாந்தர் புகைதான் இப்படி யமனைப் போல் சுவரில் விழுந்திருக்கிறது."

"அப்படியா?" என்றான் முத்தப்பன்.

"இதில் வேடிக்கையைக் கேளு. அன்றைக்கு இராத்திரி தான் ரூமிலேயே பழைய கலெக்டர் துரை மாரடைத்துச் செத்துப் போனார்!"

ஆமாம், ஆறே மாதத்தில் பதினையாயிரம் சம்பாதித்த டபேதார் சின்ன கேசவனுக்கு, உலகமே இப்போது ஒரு வேடிக்கையாய்த்தானிருந்தது!
-------------

55. ஸினிமாக் கதை

"தங்கம்! அதோ அப்பா வருகிறார், பார்!" என்றான் ராமு.

"மூஞ்சியைப் பார்த்தால் கோபமா வராப்பலே இருக்கே" என்றாள் தங்கம்.

கீழே 'படார்' என்று கதவைச் சாத்தித் தாளிடும் சத்தம் கேட்டது.

"அம்மாவும் கோபமாய்த்தானிருக்கிறாள்" என்றான் ராமு.

"இன்னிக்கு ரகளைதான் நடக்கப் போகிறது" என்றாள் தங்கம்.

"சண்டை போடறதுன்னு ஒண்ணு பகவான் என்னத்துக்காகத் தான் வச்சிருக்காரோ?" என்று ராமு தத்துவம் பேசினான்.

"மனுஷாளுன்னுட்டு என்னத்துக்காகத்தான் ஸ்வாமி படைச்சிருக்காரோ?" என்றாள் தங்கம்.

"கல்யாணம் பண்ணிக்கிறதுன்னுட்டு ஒண்ணு என்னத்துக்குத்தான் ஏற்பட்டிருக்கோ" என்றான் ராமு.

தடால், தடால் என்று கீழே இடிக்கும் சத்தம் கேட்டது.

"நான் இன்னிக்கு கீழேயே போகப் போகிறதில்லை. மாடியிலேயே இருந்துடப் போகிறேன்" என்றாள் தங்கம்.

"நானுந்தான்" என்றான் ராமு.

இந்தக் குழந்தைகளின் பேச்சைக் கேட்கக் கேட்க எனக்கு ஒரு பக்கம் சிரிப்பு வந்தது; இன்னொரு பக்கம் வருத்தமாயிருந்தது.

கீழே அப்பாதுரை ஐயர் ஏழாங்கட்டை சுருதியில், "சனியன்களா? எல்லாரும் ஒரேயடியாய்ச் செத்துப் போயிட்டீர்களா? கதவைத் திறந்து தொலையுங்கோ!" என்று கத்தினார்.

உடனே அதற்கு மேல் ஒரு ஸ்வரம் அதிகமான குரலில் ஜானகி அம்மாள் "வருகிறபோதே என்னத்துக்காக எள்ளுங் கொள்ளும் வெடிச்சுண்டு வரேள்?" என்று கேட்டுக் கொண்டே வந்து கதவைத் திறந்தாள்.

"சரி, யுத்தம், ஆரம்பமாய் விட்டது" என்று ராமு சொன்னான்.

"எப்போ முடியப் போகிறதோ?" என்றாள் தங்கம்.

"அந்தக் குழந்தைகளைப் போலவே தான் நானும் யுத்தம் எப்போது முடியப் போகிறதோ?" என்று எண்ணினேன். அப்பாதுரை ஐயரும் அவர் சம்சாரமும் போட்ட சண்டைகள் எனக்கு ரொம்பவும் உபத்திரவமாக இருந்தன. அவர்கள் கீழ் வீட்டில் குடியிருந்தார்கள்; நான் மேல் மாடியில் குடியிருந்தேன். மேல் மாடிக்கு வரும் மச்சுப் படிகளில் உட்கார்ந்து கொண்டு தான் ராமுவும் தங்கமும் மேற்கண்ட சம்பாஷணையை நடத்தினார்கள்.

*****

மேற்படி தம்பதிகளின் சச்சரவுகள் எனக்கு மிகவும் உபத்திரவமாயிருந்ததற்கு ஒரு விசேஷ காரணம் இருந்தது.

அப்போது நான் அற்புதமான ஸினிமாக் கதை ஒன்று எழுதிக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு நாள் அந்தக் கதை என் மனத்தில் தோன்றிற்று. "ஆஹா! ஸினிமாவுக்கு எவ்வளவு பொருத்தமான கதை" என்று எண்ணினேன். அதனுடைய வாய்ப்பை நினைக்க நினைக்க எனக்கே ஆச்சரியமாயிருந்தது. இந்தக் கதை மட்டும் ஸினிமாப் படமாகப் பிடித்து வந்து விட்டால், தமிழ் நாட்டையே ஒரு கலக்குக் கலக்கிவிடாதா? எல்லாரும் அப்படியே பிரமித்துப் போய் விட மாட்டார்களா? என்னுடைய வறுமைப் பிணியும் அடியோடு நீங்கி விடலாமல்லவா? எத்தனை நாளைக்கு மாதம் முப்பது ரூபாய் சம்பளத்தில் தரித்திரக் காலட்சேபம் செய்து கொண்டிருப்பது?

கதையை விற்பது கொஞ்சம் சிரமமான காரியமா இருக்கலாமென்று எனக்குத் தெரியாமலில்லை. டாக்கி முதலாளிகளும் டைரக்டர்களும் சாதாரணமாக ஒரு மாதிரிப் பேர்வழிகள் என்பது மிகவும் பிரசித்தமான விஷயம். நல்லது எல்லாம் அவர்களுக்குக் கெடுத்தலாய்ப்படும்; கெடுதல் எல்லாம் நல்லதாய்ப் படும். ஆனாலும் இத்தனை பேரில் யாராவது ஒருவனுக்கேனும் என்னுடைய கதையைப் பிடிக்காமலா போய்விடும்? பார்க்கலாமே ஒரு கை!

இம்மாதிரித் தீர்மானத்துடன் தான் அந்த ஸினிமாக் கதையை எழுதிக் கொண்டிருந்தேன். 'ஸினேரியோ' முறையில் முதல் காட்சி, இரண்டாம் காட்சி என்று எழுதிக் கொண்டிருந்தேன். அப்பாதுரை ஐயரும் அவர் சம்சாரமும் தினசரி யுத்தம் நடத்தாமலிருந்தால் இத்தனை நாளைக்குள் எழுதி முடித்திருப்பேன். ஆனால், இவர்களுடைய இடைவிடாத் தொந்தரவின் காரணமாக, கதை இருபத்திரண்டாவது காட்சிக்கு மேல் நகர்ந்த பாடில்லை. மாலை வேளையில் மட்டுமே எழுதுவதற்கு எனக்கு அவகாசம். அதே சமயத்தில் தான், கீழ் வீட்டிலும் தாம்பத்ய கலகங்கள் நடந்து கொண்டிருக்கும். என்றைக்காவது அந்தத் தம்பதிகள் வெளியில் தொலைந்து போனால் நிம்மதியாக இரண்டு மூன்று காட்சிகள் எழுதி முடித்து விடுவேன்.

இன்றைக்கு அப்பாதுரை ஐயர் வருகிறபோதே யுத்த சின்னத்தராய் வந்தபடியால், என்னென்ன நடக்கப் போகிறதோ, என்று எனக்குத் திகிலாயிருந்தது. ஆனால், நான் சற்றும் எதிர் பாராதவிதத்தில் யுத்தம் வெகு சீக்கிரத்திலேயே முடிவடைந்து விட்டது!

*****

அப்பாதுரை ஐயர் வீட்டில் உள்ளே பிரவேசித்ததும், "இந்தச் சனியன்கள் இரண்டும் எங்கே தொலைஞ்சு போச்சு?" என்று கேட்டார்.

"உங்கள் நாக்கிலேதான் சனியன் இருக்கு" என்றாள் ஜானகி அம்மாள்.

"உன் மூஞ்சியிலே மூதேவி கூத்தாடறது" என்றார் அப்பாதுரை ஐயர்.

"நான் மூதேவிதான். என்னைப் பார்த்தால் உங்களுக்குப் பிடிக்காதுதான்; நான் செத்துப் போய் விட்டால் உங்களுக்குச் சந்தோஷந்தான்..." என்று அடுக்கிக் கொண்டே ஜானகி அம்மாள் அழத் தொடங்கினாள்.

"பின்னே என்னத்துக்காக என் வாயைப் பிடுங்கறே?" என்று அப்பாதுரை ஐயர், சிறிது அடங்கிய குரலில் கேட்டார்.

"நீங்கதானே வருகிறபோதே எரிஞ்சு விழுந்துண்டு வரேள்?"

"நீ இப்படி அநாகரிகமாயிருக்கிறதைப் பார்த்தால் எனக்குக் கோபமாய்த்தான் வருகிறது. சாயங்காலம் நாலு மணியானால் முகத்தை அலம்பி, தலையை வாரி, அழகாய்ப் பின்னிக் கொண்டு நெற்றியில் லட்சணமாய்க் குங்குமம் இட்டுக் கொண்டு இருக்கக் கூடாதோ? இந்த மாதிரிதானா மூஞ்சியிலே எண்ணெய் வடிஞ்சுண்டு அவலட்சணமாய் நிற்கணும்?"

"எல்லா அலங்காரமும் பண்ணிக் கொண்டிருந்தால் என்னை நீங்கள் ஸினிமாவுக்கும், டிராமாவுக்கும் அழைச்சுண்டு போகிறது தட்டுக் கெட்டுப் போகிறதாக்கும்! வீட்டிலே அடைஞ்சு கிடக்கிறதுக்கு அலங்காரம் என்ன வேண்டிக் கிடந்தது?"

"நான் வருகிறபோது நீ தயாராயிருந்தால்தானே எங்கேயாவது அழைத்துக் கொண்டு போகலாம்."

"இப்போ சொல்லுங்கோ ஸினிமாவுக்குப் போகலாம்னு அரை நிமிஷத்திலே எல்லாம் பண்ணிண்டு தயாராய் வந்துடறேனா, இல்லையா, பாருங்கோ!"

"அரை நிமிஷம், இல்லை, பதினைந்து நிமிஷம் தருகிறேன், அதற்குள் தயாராகி விடு, பார்க்கலாம்."

"அடே ராமு! தங்கம் ஓடியாங்கோ, அப்பா ஸினிமாவுக்கு அழைச்சுண்டு போறேங்கறா!" என்று ஜானகி அம்மாள் கூவினாள்.

*****

"நல்ல காலந்தான்" என்று எண்ணி நானும் குதூகலித்தேன். அவர்கள் போய் விட்டால் கதையில் இன்னும் நாலு காட்சிகளாவது இன்றைக்கு எழுதி முடிக்கலாமென்று சந்தோஷப்பட்டேன். மேலும் நான் ஸினிமாக் கதை எழுதுவது பற்றி எனக்கு ஒரு புதிய பெருமை உண்டாயிற்று. எப்பேர்ப்பட்ட குடும்பத்துச் சண்டை சச்சரவுகளையெல்லாம் ஸினிமா தீர்த்து வைக்கிறது? எரிச்சலும் விரஸமும் நிறைந்த இல்லற வாழ்க்கையில் கூட எவ்வளவு இன்பத்தையும், திருப்தியையும் அளிக்கிறது? சில பேர் எல்லாம் ஏதோ ஸினிமா என்றால் ஒரு மாதிரி முகத்தைச் சுளித்துக் கொண்டு பேசுகிறார்களே, அவர்கள் எவ்வளவு அறியாதவர்கள்?

இம்மாதிரி எண்ணமிடுவதிலேயே வெகு நேரம் போய்விட்டது. ஆனாலும் இன்றையப் பொழுதுக்கு ஏதாவது எழுதி விட வேண்டுமென்று அவசர அவசரமாக எழுதி இரண்டு காட்சி முடித்து விட்டேன். மூன்றாவது காட்சி எழுதிக் கொண்டிருக்கையில் வாசலில் குதிரை வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் கீழே பூட்டைத் திறக்கும் சத்தம் கேட்டது. உடனே பின்வரும் ரஸமான சம்பாஷணையும் ஆரம்பாயிற்று:-

"ஸினிமாவாம் ஸினிமா! போயும் போயும் பொறுக்கி எடுத்து அழைச்சுண்டு போனேளே! சவரணைதான்! யாரோ கட்டேலே போறவனும், கட்டேலே போறவளும் நின்னுண்டு வாயிலே வந்ததைக் கன்னாபின்னான்னு பேசுறதாம். அதை எல்லாரும் பார்த்துண்டு வாயைப் பிளந்துண்டு உட்கார்ந்திருக்கிறதாம். உங்களுக்குந்தான் புத்தி போச்சே!"

"சீ! வாயை மூடு! ஸினிமாவுக்குப் போகணும் என்று என் பிராணனை வாங்கினதில் குறைச்சல் இல்லை; இப்போது என் மேல் குற்றம் சொல்கிறாயே?"

"உங்க வாயை நீங்க மூடிக்குங்கோ, ஸினிமாவுக்குப் போகணும் என்றால் இந்த மாதிரி கழிசடை ஸினிமாவுக்கா நான் போகணும் என்று அழுதேன்? புருஷாள் என்றால் புத்தியே இல்லாமல் போய்விட வேணுமா?"

"ஏ கழுதை! வாயை இப்போ மூடுகிறாயா இல்லையா?"

"நான் கழுதையாயிருந்தால் நீங்கள் என்ன என்று யோசித்துப் பார்த்துக்குங்கோ!"

"பின்னே என் மேலே என்னத்துக்குக் குற்றம் சொல்றேன்னு கேக்கறேன்? ஆனை, குதிரைன்னு விளம்பரம் பண்ணியிருக்கானேன்னு! நான் கண்டேனா!"

"இதைப் போய் ஒரு கதை என்று எழுதினானே ஒரு கட்டையில போறவன், அவனைச் சொல்லுங்கோ!"

"கதை எழுதினவன் என்ன பண்ணுவான், டைரக்டர் அதைக் குட்டிச்சுவர் பண்ணியிருக்கான்!"

"டைரக்டர் குட்டிச்சுவர் பண்ணினால், பணத்தைச் செலவழித்துப் படம் எடுத்தவன் என்னத்துக்குப் பல்லை இளிச்சுண்டு நின்னான்?"

"உன்னைப் போன்ற இளிச்சவாய்ச் சுப்பிகள் பத்துப் பேர் பார்க்க வருவார்கள் என்று தான்?"

"நான் ஒண்ணும் இளிச்சவாய்ச் சுப்பி இல்லை, உங்கம்மா இளிச்சவாய்ச் சுப்பி, உங்க பாட்டி இளிச்சவாய்ச் சுப்பி."

இதற்குள் மளமளவென்று மாடிப்படி ஏறுகிற சத்தம் கேட்டது. ராமுவும் தங்கமும் ஏறி வந்து தங்களுடைய வழக்கமான இடத்தில் உட்கார்ந்தார்கள்.

"சண்டைன்னு ஒண்ணு என்னத்துக்குத்தான் வச்சிருக்கோ?" என்றான் ராமு.

"ஸினிமான்னு ஒண்ணு என்னத்துக்குத்தான் ஏற்பட்டிருக்கோ?" என்றாள் தங்கம்.

மறுநாளே அந்த வீட்டை விட்டு ஜாகை மாற்றி விட்டேன்.

ஆனால், என்னுடைய ஸினிமாக் கதை மட்டும் நாளது வரையில் பூர்த்தியாகவில்லை. அந்தத் தம்பதிகளின் இரண்டாவது சம்பாஷணையைக் கேட்டதும், எனக்குண்டான அதிர்ச்சி இன்னும் நீங்கியபாடில்லை!
--------------

56. எங்கள் ஊர் சங்கீதப் போட்டி

1

"கேட்டீரா சங்கதியை" என்று கேட்டுக் கொண்டே, கபாலி சுந்தரமய்யர் விஜயம் செய்தார்.

அவர் விஜயமாகும் விஷயத்தை ஜவ்வாது 'நெடி' அரை நாழிகைக்கு முன்னமே தெரிவித்து விட்டது. அந்த நெடியினால் நான் திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் போது, "கேட்டீரா சங்கதியை" என்றார் மறுபடியும்.

"போட்டால் தானே கேட்கலாம்!" என்றேன் எரிச்சலுடன்.

"என்னத்தைப் போட்டால் கேட்கலாம்?" என்று சுந்தரமய்யர் முகத்தைச் சுளுக்கினார்.

"சங்கதியைப் போட்டால் கேட்கலாம். நம் ஊர் சங்கீத சபையில் கச்சேரி நடந்துதான் ஒரு யுகம் ஆகிறதே! பாட்டு என்கிற நாமதேயத்தையே காணோம்; சங்கதிக்கு எங்கே போகிறது?" என்றேன்.

"அதைத்தானே சொல்ல வந்தேன்!" என்றார் சுந்தரமய்யர்.

"சொல்லிவிட்டுப் போங்களேன்!" என்றேன்.

"நம் சங்கீத சபைக்கு நல்ல காலம் பிறக்கப் போகிறது ஸார்! அனந்தராமன், ஐ.சி.எஸ். நம் ஊருக்கு மாற்றலாகி வரப் போகிறாராம்!" என்றார்.

நான் உட்கார்ந்தபடியே ஒரு குதி குதித்து, "எந்த அனந்தராமன்! ஆபோஹி அனந்தராமனா?" என்று கேட்டேன்.

"ஆமாம்; ஆபோஹி அனந்தராமனேதான்?"

"சபாஷ்! அப்படியானால் என் ஆறுமாதத்துச் சந்தா பாக்கியையும் எடுத்துக் கொள்ளும்!" என்றேன்.

சுந்தரமய்யர் போய்விட்டார். அவர் போன பிறகு ஒரு புட்டி மண்ணெண்ணெய் கொண்டுவரச் சொல்லித் தெளித்த பிறகு தான் ஜவ்வாது வாசனை போயிற்று. எனக்கும் வேலையில் மனத்தை செலுத்த முடிந்தது!

கபாலி சுந்தரமய்யருக்கு சங்கீத வித்வான்களுடைய பழக்கத்தினால் தான் ஜவ்வாது பழக்கமும் ஏற்பட்டது. சென்ற முப்பது வருஷ காலமாக அவர் எங்களூர் சங்கீத சபையின் காரியதரிசி. பொறாமை கொண்ட சிலர் அவ்வப்போது அவரை அந்தப் பதவியிலிருந்து விரட்டி விட முயற்சி செய்ததுண்டு. ஆனால், மூன்று மாதத்துக்கெல்லாம் அவர்களே சுந்தரமய்யரிடம் சென்று காரியதரிசிப் பதவியை ஒப்புக் கொள்ளும்படி கெஞ்சுவார்கள்.

சுந்தரமய்யரை சங்கீத உலகின் ஜாம்பவான் என்றே சொல்ல வேண்டும். "கோனேரி ராஜபுரம் வைத்தாவுக்கு இந்தக் கையால் பதினேழரை ரூபாய் எண்ணிக் கொடுத்தேன். திருக்கோடி காவல் கிருஷ்ணய்யருக்கு இருபத்தாறேகால் ரூபாய் எண்ணிக் கொடுத்தேன். இப்போது என்னடா என்றால் தம்பூராச் சுருதி கூட்டத் தெரியாதவன்களெல்லாம் வித்வான்கள் என்று வந்து 'நூறு வேணும், நூற்றைம்பது வேணும்' என்று கேட்கிறான்கள்" என்று சுந்தரமய்யர் அடிக்கடி புகார் சொல்வார். ஆனால் அந்த 'தம்பூரா' சுருதி கூட்டத் தெரியாத வித்வான்கள் வந்து விட்டால், அவர் படுத்துகிற பாடும், செய்கிற உபசாரமும், பக்கத்திலிருப்பவர்களை மிரட்டும் மிரட்டலும் அசாத்தியமாயிருக்கும். "காலத்துக்கேற்ற கோலம் போட வேண்டியிருக்கு ஸார்; நாய் வேஷம் போட்டால் குலைக்காமல் முடியுமா!" என்று சமாதானம் சொல்வார்.

எப்போதும் சுந்தரமய்யருடைய சங்கீத ஊக்கம் ஒரே மாதிரியாயிருந்தாலும் எங்களூர் சங்கீத சபை சில சமயம் ரொம்ப ஜோராய் நடக்கும். சில சமயம் படுத்துத் தூங்கிப் போய்விடும். சபை ஜோராய் நடப்பதும், தூங்கி வழிவதும் அவ்வப்போது எங்கள் ஊருக்கு வரும் பெரிய உத்தியோகஸ்தர்களைப் பொறுத்தது என்று சொல்லலாம். ஜில்லா கலெக்டரோ, ஸெஷன்ஸ் ஜட்ஜோ, சங்கீத அபிமானமுள்ளவர்களாய் வந்து விட்டால், அப்போது சபை நடக்கிறவிதமே ஒரு தனிதான். மற்ற உத்தியோகஸ்தர்கள், வக்கீல்கள் எல்லாரும் சபையில் சேர்வார்கள்; சந்தாவும் கொடுப்பார்கள். பெரிய பெரிய வித்வான்களின் கச்சேரிகள் நடக்கும் சபைக்கு ஒரு கட்டிடம் கட்ட வேண்டுமென்று யோசனை கூடக் கிளம்பும்.

ஆகவே, ஆபோஹி அனந்தராமன் எங்களூருக்கு வரப் போகிறார் என்று தெரிந்ததில் சுந்தரமய்யருக்குப் பிரமாதமான குதூகலம் உண்டானதில் ஆச்சரியமல்லவா?

2

ஸ்ரீ அனந்தராமன் ஐ.சி.எஸ்.ஸுக்கு 'ஆபோஹி' ராகம், என்றால் பிராணன். ஒரு கச்சேரியில் வித்வான் 'ஆபோஹி' ராகம் பாடவில்லையென்றால், அன்றைக்கு கச்சேரிக்கு முக்கால் பங்கு மார்க்குத்தான் கொடுப்பார். ஆபோஹியில் அப்படி என்ன விசேஷமென்று எனக்குத் தெரியாது. 'ஆ' எழுத்தில் ஆரம்பிப்பது விசேஷமென்றால் 'ஆரபி', 'ஆஹிரி', 'ஆனந்த பைரவி' முதலிய ராகங்கள் இருக்கின்றன. என்னைப் பொருத்தவரையில், பாடுகிறவர்கள் பாடினால் எந்த ராகம் பாடினாலும் நன்றாய்த் தானிருக்கிறது. ஆனால் அனந்தராமன் அபிப்பிராயம் அப்படியில்லை. அவர் ஒரு சமயம் ஒரு கச்சேரியில் பாராட்டுச் சொல்லும்படி நேர்ந்தது. அப்போது அவர் கூறியதாவது: "என்னமோ இந்தக் காலத்தில் சிலர் சுயராஜ்யம் வேண்டும் சுதந்திரம் வேண்டும் என்றெல்லாம் கூத்தாடுகிறார்கள். இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு ஆபோஹி ராகத்தில் தான் நம்பிக்கை. 'இந்திய தேசம் வேண்டுமா, ஆபோஹி ராகம் வேண்டுமா?' என்று என்னை யாராவது கேட்டால், சிறிதும் தயக்கமின்றி 'எனக்கு ஆபோஹியைக் கொடுங்கள்; இந்தியாவை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்' என்பேன். என்னவோ ஸோஷலிஸம் என்கிறார்கள். கம்யூனிஸம் என்கிறார்கள், பொதுவுடைமை அபேதவாதம் என்றெல்லாம் பிரமாதமாய்ப் பேசுகிறார்கள். ஆபோஹியை நானும் அனுபவிக்கிறேன்; நீங்களும் அனுபவிக்கிறீர்கள்; நடுத்தெரு நாராயணனும் அனுபவிக்கிறான்! இதைவிட மேலான ஸோஷலிஸம் வேறெங்கே இருக்கிறது என்று கேட்கிறேன். அரசியல்வாதிகள் பதில் சொல்லட்டும்!" (சபையில் பிரமாதமான கரகோஷம்)

இந்தப் பிரசங்கம் செய்தபிறகுதான். அவருக்கு 'ஆபோஹி அனந்தராமன்' என்று பெயர் வந்தது. இதெல்லாம் எனக்கு முன்னமேயே தெரியும். ஆகவே சுந்தரமய்யரைப் போலவே நானும் எங்களூர் சங்கீத சபைக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது என்று நம்பினேன். எங்களுடைய நம்பிக்கை பொய்யாகப் போகவில்லை. அனந்தராமன் ஐ.சி.எஸ். வந்த உடனேயே எங்களூர் சங்கீத சபை எழுந்து உட்கார்ந்து "என்ன சேதி?" என்று கேட்கத் தொடங்கியது.

சங்கீத அபிமானமுள்ள உத்யோகஸ்தர்கள் இதற்கு முன்னாலுந்தான் எங்களூருக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், அனந்தராமன் விஷயத்தில் விசேஷம் என்னவென்றால், அவருடைய மனைவியும், சங்கீதத்தில் அபிமானம் உள்ளவராயிருந்தது தான்.

ஒருவேளை ஏதாவது தலை போகிற காரியம் இருந்தால் அனந்தராமனாவது கச்சேரிக்கு வராமலிருப்பார்; மிஸ்ஸஸ் அனந்தராமன் ஒரு கச்சேரிக்காவது வரத் தவறுவதில்லை. கலெக்டர் சம்சாரம் சங்கீதத்தில் எப்போது சிரத்தை கொண்டாரோ, அப்போது ஜட்ஜின் மனைவி, முனிசீப்பின் பத்தினி எல்லோருக்குமே அந்தத் தொத்து வியாதி பிடித்துக் கொண்டது. வக்கீல்களின் மனைவிமார் இவர்களுக்குப் பின் வாங்கிவிடுவார்களா? கொஞ்ச நாளில் சபையில் ஸ்திரீகளுக்கென்று ஒதுக்கியிருந்த இடத்தை இரண்டு பங்கு விஸ்தரிக்க வேண்டியதாகி விட்டது. அப்படியும் இடம் போதவில்லை.

சில ஸ்திரிகள் தைரியமாகப் புருஷர்களுக்கு மத்தியில் வந்து உட்கார ஆரம்பித்தனர். இதைக் கேள்விப்பட்டதும், சில வயதான ஸநாதனிகள், "கலிமுற்றி விட்டது; ஆகையால் நாமும் இனிமேல் சங்கீதக் கச்சேரிக்குப் போக வேண்டியதுதான்" என்று தீர்மானித்து வரத் தொடங்கினர்.

சுந்தரமய்யர் வீடு வீடாய்ப் போய்ச் சந்தாவுக்காக கெஞ்சிக் கூத்தாடிய காலம் மாறி, சுந்தரமய்யரிடம் நாங்கள் போய் 'ஸீட் ரிசர்வ்' செய்வதற்காகக் கெஞ்ச வேண்டிய காலம் வந்தது.

மிஸ்ஸஸ் அனந்தராமன் கலை வளர்ச்சியில் ரொம்பவும் ஆர்வமுடையவர். வெறுமே கச்சேரிக்கு வந்து கேட்டதுடன் அவர் இருந்துவிடவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைக்குச் சங்கீதம் கற்றுக் கொடுக்க வேண்டும். பரதநாட்டியம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் பிரசாரம் செய்துவந்தார். இதன் பயனாக வீட்டுக்கு வீடு தம்புரா சுருதி, பிடிலை 'கர்புர்' என்று இழுக்கும் சப்தம், 'தா-தை' சப்தம் எல்லாம் கேட்க ஆரம்பித்தன.

இவ்வளவு தூரம் கலை வளர்ச்சிக்குக் காரணமாயிருந்த மிஸ்ஸஸ் அனந்தராமன் அவ்வளவுக்கும் சிகரம் வைத்தது போல் ஒரு காரியம் செய்யத் தீர்மானித்தார். சபை அங்கத்தினர்களின் வீட்டுக் குழந்தைகளுக்காக சங்கீத - நாட்டியப் போட்டிகள் ஏற்படுத்திப் பரிசுகள் வழங்க வேண்டுமென்று சொன்னார். ஊரில் உற்சாகம் கரைபுரண்டு ஓடத் தொடங்கியது. கலெக்டர் அனந்தராமன் சிறந்த பாட்டுப் பாடும் குழந்தைக்கு ஒரு வெள்ளிக் கோப்பை தருவதாகச் சொன்னார். இன்னொருவர் பரத நாட்டியத்துக்குப் பரிசு கொடுப்பதாக முன் வந்தார். ஒருவர் வீணைக்கு, ஒருவர் பிடிலுக்கு, இம்மாதிரி ஏகப்பட்ட பரிசுகள் ஏற்பட்டு விட்டன. சங்கீதப் போட்டிப் பரீட்சையில் கலெக்டர் அனந்தராமன் கட்டாயம் ஒரு ஜட்ஜாயிருப்பார் என்று எல்லாரும் எதிர் பார்த்தார்கள். ஆகவே, ஒவ்வொரு வீட்டிலும் 'மனஸு நில்ப... மதுரகண்ட' என்று ஆபோஹி அலறல் கேட்கத் தொடங்கியது.

3

நவராத்திரிக்கு இன்னும் ஒன்றரை மாதம் இருந்தபோது ஒருவரும் எதிர்பாராத ஒரு துர்ச்சம்பவம் நேர்ந்தது.

எங்கள் நகருக்கு முப்பது மைல் தூரத்தில் ஒரு கிராமத்தில் மாரியம்மன் கோவில் உற்சவம் சம்பந்தமாக ஹிந்து - முஸ்லீம் சச்சரவு ஆரம்பித்தது. அது வெகு சீக்கிரமாகப் பரவிற்று. அடிதடி, வெட்டுக் குத்து, வீட்டில் நெருப்பு வைத்தல், வைக்கோல் போரில் நெருப்பு வைத்தல் - இப்படியெல்லாம் செய்திகள் வரத் தொடங்கின. இது என்னமாய் முடியுமோ என்று எல்லோரும் கதி கலங்கினோம். நகரில் பரபரப்பு அதிகமாகக் கடைகள் எல்லாம் மூடப்பட்டன.

'நவராத்திரி வரைக்கும் இப்படியே இருந்து விடுமோ, என்னமோ? இவ்வளவு ஏற்பாடுகள் செய்து சங்கீதப் போட்டி நடக்காமல் போய் விடுமோ?' என்று மிஸ்ஸஸ் அனந்தராமன் கவலைப்பட்டார். "நீ சும்மா இரு!" என்றார் அனந்தராமன். கலகம் நடக்கும் இடத்துக்கும் நேரில் கிளம்பிப் போனார்.

அனந்தராமன் போய் இருபத்து நாலு மணி நேரத்துக்குள், கிராமங்களில் பூரண அமைதி நிலவியது. அவர் விரட்டிய விரட்டலில் போலீஸார் அதி தீவிரமாக வேலை நடத்தவே, 'கப்சிப்' என்று கலகம் அடங்கி விட்டது. தடைப்பட்ட மாரியம்மன் உற்சவத்தைக் கிட்ட இருந்து அனந்தராமன் நடத்தி விட்டு வந்தார்.

கலெக்டர் அனந்தராமன் கலகம் அடக்கிய மகிமையைக் குறித்துத் தேசமெல்லாம் புகழ்ந்தது. அனந்தராமனும் வெகு குதூகலமாயிருந்தார். நாலு நாளைக்கெல்லாம் அவருக்கு மாற்றல் உத்தரவு வந்தது! வடக்கே, மழை மாரி, ஆறு குளம், சங்கீத சபை ஒன்றுமில்லாத ஒரு வறட்டு ஜில்லாவுக்கு அவர் அனுப்பப்பட்டார். இருபத்து நாலு மணி நேரத்துக்குள்ளே போய் 'சார்ஜ்' ஒப்புக் கொள்ளவேண்டுமென்று உத்தரவு!

இந்த மாற்றல் அநேகருக்கு ரொம்பவும் ஆச்சரியமாயிருந்தது. ஆனால் எனக்கு அவ்வளவு ஆச்சரியம் தரவில்லை. அனந்தராமன் செய்தது பிரிட்டிஷ் அரசியல் தர்மத்துக்கு முற்றும் விரோதமான காரியம் அல்லவா? ஓரிடத்தில் ஹிந்து முஸ்லீம் சச்சரவு வந்தால், அதை உடனே அடக்கிப் போடுவது யாருக்குப் ப்ரீதி? நாலு நாள் பத்து நாள் கலகம் நடந்து, ஆடி ஓடி ஓய்ந்தால் சிரங்கைக் கீறி ஆற்றியது போலாகும். சட்டென்று ஒரே நாளில் அடக்கி விட்டால் கலகம் உள்ளடங்கிப் போகிறது. துவேஷம் உள்ளே கிடந்து குமுறுகிறது. இதனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்யமே அல்லவா ஆடிப் போய்விடும்?

மிஸ்ஸஸ் அனந்தராமன் அழாக் குறையாக எங்கள் ஊரை விட்டுப் போனார். ஆனால் போகும் போது கடைசி வார்த்தையாகச் சுந்தரமய்யரிடம், "நான் எங்கே போனாலும் உங்கள் சபையை மறக்க மாட்டேன்; நவராத்திரியில் சங்கீதப் போட்டியை மட்டும் சிறப்பாக நடத்தி விடுங்கள்" என்று சொன்னார். ஆபோஹி அனந்தராமனும், தாம் எப்போதும் எங்கள் சபையின் போஷகராயிருந்து வருவதாக வாக்களித்தார்.

4

நவராத்திரியில் குழந்தைகளின் சங்கீத - நாட்டியப் போட்டி நடத்துவதற்குப் பலமான ஏற்பாடுகள் சுந்தரமய்யர் செய்து வந்தார். ஜட்ஜுகளாக யாரை ஏற்படுத்துவது என்பதில் தான் சிரமம் ஏற்பட்டது. சங்கீத வித்வான்கள் எல்லோருக்கும் தனித்தனியே எழுதிப் பார்த்ததில், அவர்கள் எல்லோரும் சாக்குப் போக்குச் சொல்லி மறுத்து விட்டார்கள்.

சுந்தரமய்யர் எங்களோடெல்லாம் கலந்தாலோசித்தார். கடைசியில் சென்னைப் பட்டணத்திலிருந்து இரண்டு பிரமுகர்களை ஜட்ஜுகளாக வரவழைக்கத் தீர்மானித்தோம். ஒருவர் பெயர் கைலாச சாஸ்திரி, இன்னொருவர் வைகுண்டாச்சாரியார். ஒருவர் பிரசித்தமான மாஜி சப்-ஜட்ஜு. இன்னொருவர் ஒரு காலத்தில் பிரசித்தமாயிருந்த வக்கீல். இரண்டு பேரும் 'சங்கீத நிபுணர்கள்' என்று பேர் பெற்றவர்கள். சங்கீதத்தைப் பற்றி ஏதாவது விவாதம் கிளம்பினால், உடனே இவர்கள் தினசரிப் பத்திரிகையில் தங்களுடைய அபிப்பிராயத்தை எழுதாமலிருக்க மாட்டார்கள். முடிவாக, இந்த இரண்டு பேரில் ஒருவருடைய கடிதத்துக்குக் கீழேதான், 'இந்த விவாதம் சம்பந்தமான கடிதங்கள் இனிமேல் பிரசுரிக்கப்பட மாட்டா' என்று போட்டுப் பத்திரிகாசிரியர்கள் விவாதத்தை முடிவு கட்டுவது வழக்கம்.

அந்த இரண்டு பேரையும் ஜட்ஜுகளாக வரவழைத்து விடுவதென்று தீர்மானமாயிற்று. அவர்களும் நல்ல வேளையாகச் சம்மதித்தார்கள். எல்லா ஏற்பாடுகளும் ஜரூராக நடந்து வந்தன.

கடைசியில் எல்லோராலும் வெகு ஆவலுடன் எதிர்பார்க்கப் பட்ட தினம் வந்தது. அன்று காலையில் கைலாச சாஸ்திரிகளும், வைகுண்டாச்சாரியாரும் ரயிலில் வந்திறங்கினார்கள். அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து தரப்பட்டன. மத்தியானம் மூன்று மணியிலிருந்து மாலை ஏழு மணி வரையில் போட்டி நடத்திப் பிறகு பரிசளிப்பது என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சரியாக இரண்டரை மணிக்கு என் மருமகள் ஸொஜ்ஜியையும் அழைத்துக் கொண்டு நான் சபா மண்டபத்துக்குப் போய் விட்டேன். ('ஸொஜ்ஜி'யின் முழுப் பெயர் சுலோசனா) அவளுக்கு அவள் தாயார், பரத நாட்டியம் கற்பித்திருந்தாள். எல்லாம் மிஸ்ஸஸ் அனந்தராமனின் வேலைதான் என்று சொல்ல வேண்டியதில்லை.

மூன்று மணிக்கு சபா மண்டபத்தில் ஜே ஜே என்று கூட்டம் நிறைந்து விட்டது. ஆனால், ஜட்ஜுகள் வந்தபாடில்லை. மூன்றரை மணிக்கு கைலாச சாஸ்திரிகள் மட்டும் வந்து சேர்ந்தார். வைகுண்டாச்சாரியின் மூக்குக் கண்ணாடி கெட்டுப் போய் விட்டதாகவும் தெரிந்தது. போட்டிக்கு ரொம்பப் பேர் வந்திருந்தபடியால், அவர் வரும் வரையில் காத்திராமல் கைலாச சாஸ்திரியின் தலைமையில் சங்கீதப் போட்டி ஆரம்பிக்கப்பட்டது.

சங்கீதப் போட்டி ஏறக்குறைய முடியும் சமயத்தில் வைகுண்டாச்சாரியார் வந்தார். அவர் பரத நாட்டியப் போட்டிக்கு ஜட்ஜாக இருந்து நடத்தினார். எல்லாம் முடிந்ததும், இரண்டு ஜட்ஜுகளும் சபைக் காரியதரிசி சுந்தரமய்யரை அழைத்துக் கொண்டு தனி ஆலோசனைக்குப் போனார்கள். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வந்து பரிசு பெற்ற குழந்தைகளின் பெயர்களைச் சொன்னார்கள். பரிசு பெற்ற குழந்தைகளின் வீட்டுக்காரர்களுக்கெல்லாம் பரம சந்தோஷம்; மற்றவர்களுக்கெல்லாம் ரொம்பவும் உற்சாகக் குறைவு. "இந்த ஜட்ஜுகளைப் போல் பொறுக்கி எடுத்த முட்டாள்கள் உலகத்தில் இருக்க முடியாது" என்பது அவர்களுடைய அபிப்பிராயம். இந்தப் பெரும்பான்மை அபிப்ராயத்தை நான் ஒத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் பரத நாட்டியத்துக்கு என் மருமகளுக்குப் பரிசு கிடைத்து விட்டபடியால், எனக்கு ரொம்ப உற்சாகமாயிருந்தது. ஆனால் ஒரு விஷயம் மட்டும் கொஞ்சம் சிந்தனையைத் தூண்டிற்று. அதாவது பரிசு பெற்ற குழந்தைகளெல்லாம் பெரும்பாலும் சங்கீத சபைக்குச் சரியாகச் சந்தா செலுத்துவோர் வீட்டுக் குழந்தைகளாகவே இருந்தன.

வைபவத்தின் முடிவில் கபாலி சுந்தரமய்யர் என்னைச் சென்னைப் பிரமுகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். வைகுண்டாச்சாரியார், "உங்கள் மருமகளுக்குத்தான் பரத நாட்டியத்தில் முதல் பரிசு என்று மிஸ்ஸஸ் அனந்தராமன் அப்போதே சொல்லி விட்டாளாமே? அந்த அம்மாளுக்குத் தெரியாதது உண்டோ ? மகா புத்திசாலி!" என்றார். எனக்கு ஆச்சர்யம் அதிகமாயிற்று; மிஸ்ஸஸ் அனந்தராமன் அப்படி ஒன்றும் சொன்னதே கிடையாது!

அன்று ராத்திரி எனக்கு அவசரக் காரியமாகச் சென்னைக்குப் போக வேண்டி இருந்தது. ரயிலில் வேறு இடம் கிடைக்காதபடியால் கைலாச சாஸ்திரிகளும் வைகுண்டாச்சாரியாரும் இருந்த வண்டியிலே நானும் ஏற வேண்டியதாயிற்று.

வண்டி ஏறினதும் வைகுண்டாச்சாரியைப் பார்த்து "நமஸ்காரம்" என்றேன். அவர் கண்ணைச் சுளித்துக் கொண்டு, "யாரையா நீர்?" என்றார். அரைமணி நேரத்துக்குள்ளேயே என்னை மறந்து விட்டாரே என்று ஆச்சரியப்பட்டு கைலாச சாஸ்திரிகளைப் பார்த்தேன். அவர் ஒரு காதைக் கையால் மடித்துக் கொண்டு "என்ன சொல்கிறீர்?" என்றார்.

விஷயம் இன்னதென்று புரிவதற்கு எனக்கு ஐந்து நிமிஷம் ஆயிற்று. விஷயம் புரிந்த பின் அதை ஜீரணம் செய்து கொள்வதற்கு இன்னும் ஐந்து நிமிஷம் ஆயிற்று.

அதாவது அன்று சங்கீத - நாட்டியப் போட்டிகளில் ஜட்ஜுகளாயிருந்தவர்களில் ஒருவருக்குக் கண் தெரியாது. இன்னொரு ஆசாமிக்குக் காது கேட்காது. குருடரும் செவிடருமாகச் சேர்ந்து சங்கீத நாட்டியப் போட்டியில் தீர்ப்பளித்து விட்டார்கள்.

கபாலி சுந்தரமய்யருக்கு இதெல்லாம் தெரிந்து தானிருக்க வேண்டும். எமகாதகர்! எப்படியோ காரியத்தை ஒப்பேற்றிவிட்டார்.

இதையெல்லாம் நினைக்க நினைக்க, என்னை அறியாமல் எனக்குச் சிரிப்புப் பீறிக் கொண்டு வந்தது.

விஷயம் எனக்குத் தெரிந்து விட்டதென்று அவர்களுக்கும் தெரிந்து போயிற்று; உடனே அவர்களும் சிரிக்கத் தொடங்கினார்கள்.

சென்னை போய்ச் சேரும் வரையில் நினைத்து நினைத்துச் சிரித்துக் கொண்டே போனோம்.

ரயிலும் எங்களுடன் சேர்ந்து சிரித்தது!
-------------

57. ரங்கூன் மாப்பிள்ளை

பர்மாவிலிருந்து பத்திரமாய் திரும்பி வந்த பெண்ணையும் மாப்பிள்ளையையும் வரவேற்பதற்காக என்னுடைய நண்பர் ஒருவர் விருந்து நடத்தினார். விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, "ஏன் ஸார்! இன்னும் உங்கள் பெண் - மாப்பிள்ளை யாராவது ஜோஹோரிலோ, ஸுரபயாவிலோ, கொச்சின் சைனாவிலோ, போனியாவிலோ இருந்து திரும்பி வரப் போகிறார்களா?" என்று கேட்டேன். சாப்பாடு அவ்வளவு ருசியாயிருந்தது. ஆனால், அதைக் காட்டிலும் விருந்துக்கு வந்திருந்தவர்களின் பேச்சு ஸ்வாரஸ்யமாயிருந்தது.

சாப்பாட்டுக்கு முன்னால் மாப்பிள்ளையைக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி, அவரை நாங்கள் எல்லோரும் சுற்றிச் சுற்றி வந்து பார்த்தோம். எங்கேயாவது குண்டு பட்டுச் சேதம் ஏற்பட்டிருக்கிறதா என்று பரிசோதித்தோம். ஒரு சேதத்தையும் காணவில்லை. காது, மூக்கு, கைகால், விரல்கள் எல்லாம் அப்படி அப்படியே இருந்தன. வாயைத் திறக்கச் சொல்லிப் பார்த்தோம். பல்லெல்லாம் கூட அப்படியே இருந்தது.

"மாப்பிள்ளை! கொஞ்சங்கூடச் சுகமில்லை. இப்படித்தானா எங்களை ஏமாற்றுகிறது? இத்தனைக்கும் மோல்மீனிலிருந்து வந்ததாகச் சொல்கிறீர்! ஒரு வேளை அந்த ஊரில் ஜப்பான் குண்டு போடுவதற்கு முன்னால் கிளம்பி விட்டீரோ?" என்று கேட்டேன்.

மாப்பிள்ளை வரதராஜன், ரோசத்துடன் "இல்லை; இல்லை! ஐந்து நாள் குண்டு விழுந்த பின் தான் கிளம்பினேன்" என்றார்.

அவரை விட மாமனாருக்கு அதிக ரோஸம் வந்து விட்டது. "நீங்கள் என்னமோ சொல்கிறீர்கள்? முந்தா நாள் பாதி நிசிக்கு இங்கே என்ன நடந்தது தெரியுமோ, இல்லையோ? திடீரென்று 'ஏ பழனி ஆண்டவனே! என்னைக் காப்பாற்று! சுவாமி! என் குழந்தையைக் காப்பாற்று! ஐயையோ! நான் என்ன செய்வேன்?' என்று கூச்சல் கிளம்பவே, நாங்கள் எல்லாரும் பயந்து போய் விட்டோம்."

"என்ன மாப்பிளை! இப்படியா பயமுறுத்தி விட்டீர்?" என்றேன்.

"இல்லை, இல்லை! அவர் பெண்ணின் பெருமையைச் சொல்கிறார்! அங்கே இருந்த வரையில் எப்படியோ தைரியமாய் இருந்து விட்டாள். இங்கே வந்த பிறகு இப்படி திடீர் திடீரென்று கூச்சல் போட்டு மூர்ச்சையாகி விடுகிறாள்" என்று வரதராஜன் சொன்னதும், எங்களுக்கெல்லாம் என்னமோ மாதிரி ஆகிவிட்டது. அப்புறம் கொஞ்ச நேரம் தமாஷாகப் பேச யாருக்கும் மனம் வரவில்லை.

*****

"நீங்கள் சென்னையில் தான் இருக்கப் போகிறீர்களா? ஊருக்குக் கிளம்பும் உத்தேசம் உண்டா?" என்று ஒருவர் கேட்டார்.

"நன்றாயிருக்கிறது. இந்தச் சமயத்தில் யாராவது சென்னையை விட்டுக் கிளம்புவார்களோ? ராஜாஜி சொன்னது போலக் குண்டு விழுகிற வேடிக்கையைப் பார்ப்பதற்காகக் கிராமாந்திரங்களிலிருந்து பட்டணத்திற்கு வர வேண்டிய சமயமல்லவா இது. இந்தச் சமயத்தில் பட்டணத்தை விட்டுப் போகலாமா?" என்றார் ஒருவர்.

"ஆமாம்! ரங்கூனில் இப்படித்தான் அநேகர் குண்டு விழுகிற வேடிக்கையைப் பார்ப்பதற்காக வீதியில் நின்றார்களாம்! அவர்கள் பார்த்த கடைசி வேடிக்கை அதுதானாம்! ஏன் மாப்பிள்ளை! அப்படித்தானே?"

"ஆமாம்" என்றார் மாப்பிள்ளை சுருக்கமாக. அவருக்கு அந்தப் பயங்கரத்தைப் பற்றிப் பேசவே இஷ்டமில்லையென்று தோன்றியது.

"வேடிக்கைப் பார்க்கிறதென்றால், வெளியில் போய் நிற்க வேண்டுமா என்ன? வீட்டிற்குள்ளேயே இருந்து பார்த்தால் போதாதா?" என்று இன்னொருவர் கேட்டார்.

"வீட்டுக்குள் இருந்தால் என்ன வேடிக்கை தெரியும்! வெளியில் இருந்தாலும் அண்ணாந்து பார்க்கலாம்."

"வீட்டுக்குள் இருந்தால் வேடிக்கை ஒரு வேளைப் பார்க்க முடியாது. ஆனால் வேடிக்கையைக் கேட்கலாம்! குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டுச் சிலருக்குக் காது செவிடாகவே போய்விட்டதாம். சில குழந்தைகள் திறந்த வாய் திறந்தபடியே இருக்கின்றனவாம்!" என்றார் ஒருவர்.

"ஆனால் மாப்பிள்ளை மட்டும் வாயையே திறக்க மாட்டேனென்கிறாரே? ஒரு வேளை குண்டு சத்தத்தில் மாப்பிள்ளையின் வாய் மூடிவிட்டதோ?" என்றேன் நான்.

"சாப்பாட்டுக்கு மட்டும் வாய் திறக்கும் போலிருக்கிறது!" என்றார் ஒருவர்.

மாப்பிள்ளை கொஞ்சம் பல் தெரியும்படி சிரித்துவிட்டு, "ஆமாம்; குண்டு விழும்போது வாயைக் கெட்டியாக மூடிக் கொள்ளத்தான் வேண்டும். பல்லைக் கடித்துக் கொள்ள வேண்டும். வெறுமனே கடித்துக் கொண்டால் போதாது; வாயில் கைக்குட்டையை அடைத்துக் கொண்டு பல்லைக் கடித்துக் கொண்டிருக்க வேண்டும். காதிலும் பஞ்சை அடைத்துக் கொள்ள வேண்டும். குண்டு விழும் சப்தம் அவ்வளவு பயங்கரம்!" என்றார்.

"ஒரு குண்டு விழுந்தால் அதைச் சுற்றிலும் எவ்வளவு தூரத்துக்கு அபாயம் உண்டாகும்?" என்று கேட்டேன்.

"குண்டு வெடித்ததும் கிளம்பும் இரும்புத்துண்டுகள் மூன்று நாலு பர்லாங்கு தூரம் வரையில் பரவும்" என்று வரதராஜன் சொன்னார்.

"குண்டு விழும்போது வீட்டுக்குள் இருந்தால் நல்லதா? குழியில் பதுங்கிக் கொண்டிருந்தால் நல்லதா?" என்று விவாதம் நடந்தது.

"வீடாவது? குழியாவது? இதனாலெல்லாம் ஒரு வேளை ஜப்பான் குண்டிலிருந்து தப்பிக்கலாம், யமனிடமிருந்து தப்பிக்க முடியுமா?" என்று வேதாந்தி கேட்டார்.

அப்போது மாப்பிள்ளை, "ஆமாம், விதியும் முக்கியமானதுதான், ரங்கூனில் என்பந்துக்கள் இருக்கும் வீட்டுக்கு அடுத்த வீட்டிலிருந்து ஒரு தெருப் பூராவும் நாசமாகி விட்டது. என் பந்துக்கள் வீட்டில் ஒரு ஓடு செங்கல் பெயரவில்லை" என்றார்.

"ஆமாம், எல்லாம் விதிதான்" என்று சிலர் ஆமோதித்தார்கள்.

"நாளை, பொழுது விடிந்தால் யாருடைய விதி எப்படி இருக்குமோ? எல்லோருக்கும் இன்னும் ஒரு தொன்னை பாதாம் கீர் போட்டுவிடு!" என்றார் விருந்து கொடுத்த சிநேகிதர்.

சாப்பிட்டு எழுந்திருந்ததும், எல்லோரும் தாம்பூலதாரணத்துக்கு உட்கார்ந்தார்கள்.

"இனிமேலாவது ஏதாவது சந்தோஷமான விஷயத்தைப் பற்றிப் பேசலாம்" என்றார் சந்தோஷப் பிரியர்.

"ராயபுரம் கடற்கரையில் 'ஓடிப் போங்கள்' என்று துண்டுப் பிரசுரங்கள் கிடந்ததாமே!" என்று ஒரு சந்தோஷமான பேச்சை ஆரம்பித்தார்.

"அது நிஜந்தானா? யாராவது அந்தப் பிரசுரத்தைப் பார்த்தீர்களா?" ஒவ்வொருவரும் கேட்டார்கள்.

ஒருவரும் நேரில் பார்க்கவில்லையென்று தெரிந்தது. பத்திரிகைகளில் வெளியான சர்க்கார் அறிக்கையைப் பார்த்துத்தான் எல்லாரும் தெரிந்து கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளை, "பிரசுரத்தில் என்ன எழுதியிருந்தது" என்று கேட்டார்.

"'ஓடிப்போங்கள்' என்று எழுதியிருந்தது?"

"நிச்சயந்தானே? 'ஜப்பானே! ஓடிப்போ?' என்று எழுத வில்லையே!"

"இல்லவே இல்லை."

"அப்படியானால் இது யு.பி. ராகவாச்சாரியின் வேலை அல்ல" என்றார் மாப்பிள்ளை.

"அது என்ன சமாசாரம்? யு.பி. ராகவாச்சாரி என்பது யார்?" என்று கேட்டோம். ரொம்பவும் தூண்டிக் கேட்ட பிறகு மாப்பிள்ளை சொன்னதாவது:-

யு.பி. ராகவாச்சாரிக்கு ரங்கூன் போஸ்டு ஆபீஸில் வேலை. மாதம் இருநூறு ரூபாய் சம்பளம். எனக்கு அவன் அத்தான் முறை ஆக வேணும். நான் மோல்மீனுக்குப் போவதற்கு முன் இரண்டு பேரும் ரங்கூனில் ஒரே வீட்டில் குடியிருந்தோம்.

யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து ராகவாச்சாரியின் போக்கு ஒரு மாதிரி ஆகிக் கொண்டு வந்தது. ஆபீஸ் வேலையைக் கூட நன்றாய்க் கவனியாமல் யுத்தச் செய்திகளைப் படிப்பதில் ஈடுபட்டான். தினசரிப் பத்திரிகைகள் வந்ததும் முதலில் யுத்த 'மாப்பை' வெட்டி எடுத்து, அவனுடைய பெரிய நோட்டுப் புத்தகத்தில் ஒட்டி விடுவான்; பத்திரிகை எத்தனை பிரதி கிடைக்கிறதோ அவ்வளவு 'மாப்பு'களையும் வெட்டி எடுத்துக் கொள்வான். ஒரே படத்தை குறுக்கு நெடுக்காகவும், மேல் கீழாகவும் பல விதமாக ஒட்டியிருப்பான். அவைகளை நீலப் பென்ஸிலாலும், சிகப்புப் பென்ஸிலாலும் கோடுகள் இழுப்பான். எப்போது யாரைக் கண்டாலும் யுத்தச் செய்திகளைப் பற்றியே பேசுவான். இதனாலெல்லாம் யு.பி. ராகவாச்சாரியை 'யுத்தப் பித்து ராகவாச்சாரி' என்று எல்லோரும் அழைக்க ஆரம்பித்தார்கள்.

"ஆமாம்; நான் பித்துக்கொளிதான்! பைத்தியந்தான். நாளைக்கு ஜப்பான்காரன் வந்து படார், படார் என்று குண்டு போடுகிற போது யார் பைத்தியம் என்று தெரியும்" என்று ராகவாச்சாரி அடிக்கடி சொல்வான்.

இந்தோ-சைனா, ஸயாம், மலாய், பர்மா, டச்சு இந்தீஸ் ஆகிய தேசங்களின் 'மாப்பு'களை எடுத்து வைத்துக் கொண்டு அம்புக் குறிகள் போட்ட வண்ணம் இருப்பான். "ஐயோ! பார் மோஸாவுக்கு வந்து விட்டானே? இந்தோசைனாவுக்கு வந்து விட்டானே? ஸயாமை எட்டிப் பார்க்கிறானே? இன்னும் இங்கிலீஷ்காரன் தூங்குகிறானே?" என்று பொலபொல என்று அடித்துக் கொள்வான்.

ஸர் ராபர்ட் புரூக் போப்ஹாம், "மலாய் நாடு யுத்தத்துக்குத் தயார்" என்று சொன்ன போதெல்லாம், யு.பி. ராகவாச்சாரி தலையில் போட்டுக் கொள்வான். "இந்தப் பொறுக்கி எடுத்த அசட்டைச் சேனாதிபதியாக அனுப்பியிருக்கிறார்களே!" என்பான். "ஏன்?" என்று கேட்டால், "யுத்தத்துக்குத் தயாராமே தயார்! ஆகாச விமானம் எத்தனை இவர்களிடம் இருக்கிறது? ஆயிரம் பதினாயிரம் ஐம்பதினாயிரம் என்று ஆகாச விமானங்கள் வந்து ஆகாசத்தை மறைக்கும் போதல்லவா யுத்தத்துக்கு நாம் தயார் என்று சொல்லலாம்" என்பான்.

"ஜப்பான் தான் சைனாவில் மாட்டிக் கொண்டு முழிக்கிறதே!" என்று சொல்லிவிட்டால் போதும், உடனே ராகவாச்சாரிக்கு பிரமாத கோபம் வந்துவிடும். "அட பைத்தியக்காரப் பிள்ளை! யார் சொன்னது? சைனாவிலே ஜப்பான்காரன் யுத்தமா செய்கிறான்? பிரிட்டனுடனும் அமெரிக்காவுடனும் சண்டை போடுவதற்காகச் சீனாவை ராணுவப் பயிற்சிக் கூடமாகவல்லவா உபயோகிக்கிறான்?"

இன்னும் அவனுடைய நோட்டுப் புத்தகத்தில், யுத்த 'மாப்பு'களுடன் சண்டை விமானம் பாம்பர் விமானம் முதலிய படங்களை ஒட்டி அவற்றின் கீழ் 'ஜப்பானை முறியடிக்க இம்மாதிரி 20,000 விமானம் வேண்டும்" என்று ஏதாவது எழுதி வைத்திருந்தான்.

கடைசியில் ஜப்பானுக்கும் பிரிட்டனுக்கும் உண்மையாகவே யுத்தம் ஆரம்பமானபோது யு.பி. ராகவாச்சாரியின் பைத்தியம் தலைக்கேறி விட்டது. யுத்தம் ஆரம்பித்தவுடன் நான் தமையன்மார்களுடன் ஆலோசனை செய்வதற்காக, மோல்மீனிலிருந்து ரங்கூனுக்குப் போயிருந்தேன். அப்போது யு.பி. ராகவாச்சாரி என்னை பிடித்துக் கொண்டான்.

"இதைக் கேள் வரதா! இனிமேல் பிறத்தியாரை நம்பியிருப்பதில்லையென்று தீர்மானித்து விட்டேன். ஆகாச விமானப் படை தயாரிக்க நானே ஆரம்பித்து விட்டேன்!" என்றான்.

நான் இதை அலட்சியம் செய்தது ராகவாச்சாரிக்குப் பொறுக்கவில்லை. என் கையைப் பிடித்து, அவனுடைய வீட்டுக்கு இழுத்துக் கொண்டு போனான். வீட்டில் ஜன்னல் எல்லாம் அடைத்து இருட்டாக வைத்திருந்த ஒரு அறையைத் திறந்து காட்டினான்.

"இதென்ன ஆகாசத் தாக்குதலுக்கு ஒளிந்து கொள்ளும் இடமா?" என்று கேட்டேன்.

"சீச்சீ நன்றாய்ப் பார்! அதோ என் ஆகாசப்படை!" என்றான் ராகவாச்சாரி. எவ்வளவோ உற்றுப் பார்த்தும் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. மேல் கூரையில் நாலைந்து வௌவால் தொங்கிக் கொண்டிருந்தது மட்டும் தெரிந்தது.

"அதோ பார்த்தாயா?" என்று ராகவாச்சாரி வௌவாலைச் சுட்டிக் காட்டினான்.

"ஆஹா! டைவ் பாம்பிங் (Dive Bombing) பார்த்தாயா!" என்று ராகவாச்சாரி கதறினான்.

இன்னொரு வௌவால் சிறகை அடித்துக் கொண்டு பறந்து, அறையை ஒரு சுற்றுச் சுற்றிவிட்டுப் போய் மறுபடியும் கூரையில் தொத்திக் கொண்டது.

அது பறந்த போது "பார்த்தாயா, ரோந்து விமானத்தை! Reconnaissance Flight செய்துவிட்டுப் போகிறது! ஜப்பானை ஜாக்கிரதையாய் இருக்கச் சொல்!" என்றான்.

"பார்த்துக் கொண்டே இரு; அந்த ஜப்பான் குள்ளன் ரங்கூனுக்கு வருவதற்குள், இந்த மாதிரி இருபதினாயிரம் சண்டை விமானம் தயார் செய்து விடுகிறேன். அப்புறம் எதிரி விமானங்கள் எல்லாம் தவிடு பொடிதான்!" என்றான்.

ஒவ்வொரு வௌவாலின் கழுத்திலும் ஒரு சீட்டுக் கட்டித் தொங்குவதை அப்போதுதான் பார்த்தேன். "அது என்ன சீட்டு?" என்று கேட்டேன். ராகவாச்சாரி சட்டைப் பையிலிருந்து ஒரு சீட்டை எடுத்தான். அதில் 'ஜப்பானே! ஓடிப்போ!' என்று எழுதியிருந்தது.

பைத்தியம் தலைக்கேறி விட்டது என்று நினைத்துக் கொண்டு நான் மோல்மீனுக்குப் போய்விட்டேன்.

அப்புறம் இரண்டு நாளைக்கொரு தடவை யு.பி. ராகவாச்சாரியிடமிருந்து எனக்குக் கடிதம் வந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு கடிதத்திலும் "ஐம்பது விமானம் தயார்; நூறு தயாராகி விட்டது" என்று எழுதிக் கொண்டிருந்தான்.

*****

ஒரு நாள் தபாலாபீஸில் எனக்கு வரும் கடிதங்களைப் பிரித்துப் பார்க்கிறார்களென்று தெரிய வந்தது. இன்னும் இரண்டு தினங்களுக்கெல்லாம் யு.பி. ராகவாச்சாரியை ஐந்தாம் படைக்காரன் என்று சந்தேகித்துக் கைது செய்து விட்டார்களென்று பத்திரிகைகளில் வெளியாயிற்று.

*****

மோல்மீனில் ஜப்பான் தாக்குதல் ஆரம்பித்ததும் நான் என் மனைவியையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டேன். வரும் வழியில் ரங்கூனில் ஒரு நாள் தங்க வேண்டியிருந்தது. அங்கே யு.பி. ராகவாச்சாரியைப் பார்த்ததும் திகைத்துப் போனேன். விசாரித்ததில் அவனை அதிகாரிகள் 'அபாயமற்ற பைத்தியம்' என்று தீர்மானித்து, விடுதலை செய்துவிட்டதாகத் தெரிந்தது. "வரதா! இன்று இராத்திரி நடக்கப் போகும் வேடிக்கையைப் பார்!" என்று சொல்லி விட்டு ராகவாச்சாரி போய் விட்டான். அவன் கல்யாணம் பண்ணிக் கொள்ள மாட்டேனென்று பிடிவாதமாக இருந்தது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று என்றெண்ணி நான் ஒருவாறு ஆறுதல் அடைந்தேன்.

அன்று இரவு ரங்கூனில் ஆகாச விமானத் தாக்குதல் நடந்தது. அதனால் நாசமான வீடுகளில் ஒன்று என் நண்பன் ராகவாச்சாரி இருந்த வீடு என்று மறுநாள் காலையில் அறிந்து மிகவும் துக்கப்பட்டேன். "பாவம்! அவன் என்ன கதியானானோ? அவனுடைய இருட்டறையில் இருந்த ஆகாசப் படைதான் என்ன கதியடைந்ததோ?" என்று வருந்தினேன்.

இந்த விமானத் தாக்குதலில் ஒரு ஜப்பான் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாகக் கேள்விப்பட்டேன். அங்கு விழுந்த ஜப்பான் விமானத்தைப் பார்ப்பதற்காகப் போன தமையன்மார்களுடன் நானும் போனேன்.

விமானத்தைச் சுற்றி வந்த போது, அதன் என்ஜினில் சிக்கிக் கொண்டிருந்த ஒரு பொருளின் மீது தற்செயலாக என் பார்வை விழுந்தது. உற்றுப் பார்த்தபோது அது வௌவாலைப் போல் தோன்றியது. சொல்ல முடியாத ஆவலுடன் அதன் அருகில் சென்று பார்த்தேன். என்ன ஆச்சரியம்! என்ன அற்புதம்! அது வௌவால்தான். அதன் கழுத்தில் ஒரு சீட்டும் இருந்தது! அதில் "ஜப்பானே ஓடிப்போ!" என்று எழுதி இருந்தது.

மேற்படி ஜப்பான் விமானம் என்ன காரணத்தினால் கீழே விழுந்தது என்பது சரியாகத் தெரியவில்லையென்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள். ஆனால், எனக்கு அது தெரிந்துவிட்டது. யு.பி. ராகவாச்சாரியின் வீடு இடிந்த போது அதன் இருட்டறையில் அடைந்து கிடந்த வௌவால்கள் வெளிக் கிளம்பியிருக்க வேண்டும்! அவற்றில் ஒன்று இசைகேடாக விமானத்தின் இன்ஜின் சக்கரத்தில் மாட்டிக் கொண்டிருக்க வேண்டும். அதன் காரணமாகவே அந்த ஜப்பான் விமானம் விழுந்திருக்க வேண்டும்.

இப்போது நீங்களே சொல்லுங்கள்! யு.பி. ராகவாச்சாரி பைத்தியமா? அவனைப் பைத்தியமென்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் பைத்தியமா?
-------------

58. தேவகியின் கணவன்

1

தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் ஆண்டுதோறும் சுதேசிப் பொருட்காட்சி நடத்துகிறவர்களை வாழ்த்துகிறேன். அந்தப் பொருட்காட்சி காரணமாக என் வாழ்க்கையில் வெகு காலமாய் மர்மமாக இருந்து வந்த ஒரு விஷயம் துலங்கியது. என் மனதில் சுமந்திருந்த ஒரு பெரிய பாரம் நீங்கியது. அடிக்கடி என்னைச் சிந்தனையில் ஆழ்த்தி என் நிம்மதியைக் குலைத்து வந்த ஒரு சந்தேகம் நிவர்த்தியாகி என்னுடைய உள்ளத்தில் அமைதி ஏற்பட்டது.

இந்த வருஷத்துச் (1950 பெப்ருவரி, மார்ச் மாதங்களில் எழுதப்பட்டது) சுதேசிப் பொருட்காட்சிக்கு நான் போகவில்லை. சென்ற வருஷத்தைக் காட்டிலும் இந்த வருஷம் எவ்வளவோ சிறப்பான ஏற்பாடுகள் செய்திருப்பதாக எல்லாரும் சொன்னார்கள். ஆனாலும் நான் போகவில்லை. போகலாமா, வேண்டாமா என்று யோசனை செய்து, வேண்டாம் என்று முடிவு கட்டினேன். போயிருந்தால், அங்கே நான் தேவகியைச் சந்தித்த இடத்துக்கு என் கால்கள் என்னை இழுத்துக் கொண்டு போயிருக்கும். பழைய ஞாபகங்களில் மூழ்கிப் போயிருப்பேன். எல்லாரும் பார்க்கும் காட்சிகளில் என் மனம் சென்றிராது. ஆடல் பாடல்களிலோ நாடகம் நடனங்களிலோ நான் எவ்விதம் கருத்தைச் செலுத்த முடியும்? சித்திரக் காட்சிக்குள் சென்றால், தேவகியின் சித்திரம்தான் என் மனக் கண்முன்னால் தோன்றும். மின்சார சக்தியின் அற்புதங்களைக் காட்டும் இடத்துக்குள் சென்றால், அங்கே திடீரென்று தேவகியை நான் பார்த்த உடனே என் உடம்பில் பாய்ந்து குலுக்கிப் போட்ட மின்சார சக்தியைத் தான் நினைத்துக் கொள்வேன்.

ஒரு வருஷமா? இரண்டு வருஷமா? இருபத்தைந்து வருஷத்துக்குப் பிறகு அவளை நான் பார்த்தேன். கன்னிப் பெண்ணாகத் துள்ளித் திரிந்து கொண்டிருந்தவளை மூன்று குழந்தைகளின் தாயாராகப் பார்த்தேன். ஆயினும், பார்த்த தட்சணமே அடையாளம் தெரிந்து போய்விட்டது. கொஞ்ச நஞ்சம் சந்தேகம் இருந்தாலும், செக்கச் சிவந்த அவள் கன்னத்தில், காதின் ஓரத்தில் இருந்த அழகிய மச்சம் அந்தச் சந்தேகத்தைப் போக்கி விட்டது.

தேவகியும் என்னை அடையாளம் தெரிந்து கொண்டு விட்டாள் என்பது அவள் என்னைப் பார்த்துப் பிரமித்து நின்றதிலிருந்து தெரிந்தது. அவள் கையைப் பிடித்துக் கொண்டு வந்த குழந்தை அவளைப் பிடித்து இழுத்ததைக் கூடக் கவனியாமலே நின்றாள்.

என் மனக் கொந்தளிப்பை ஒருவாறு சமாளித்துக் கொண்டு, "ஹெட்மாஸ்டர் பெண் தேவகிதானே?" என்று நாத்தழுதழுக்கக் கேட்டேன்.

"ஆமாம்; நீங்கள் கிட்டாதானே?" என்றாள் தேவகி.

"ஓகோ! இன்னும் என்னை ஞாபகம் வைத்திருக்கிறாயே?" என்றேன்.

"எப்படி மறக்க முடியும்?... என்றைக்காவது ஒரு நாள் உங்களைச் சந்திப்போம் என்கிற நம்பிக்கை என் மனதில் இருந்தது. அந்த நம்பிக்கை இப்போது நிறைவேறிவிட்டது!" என்று தேவகி கனிவுடன் கூறினாள்.

"அப்படியா? என்னைச் சந்திக்கும் விருப்பம் கூட உனக்கு இருந்ததா? அது என்னுடைய பாக்கியந்தான்!... இந்தச் சென்னைப் பட்டணத்தில் தான் நீ இருக்கிறாயா? ஜாகை எங்கே?... உன்னுடைய கணவர்... இந்தக் குழந்தைகளின் தகப்பனார்... அவர் இங்கே வரவில்லையா?" என்று தயங்கித் தயங்கிக் கேட்டேன்.

"வீட்டுக்கு வாருங்கள்! எல்லாக் கதையும் சாவகாசமாகச் சொல்கிறேன்!" என்று தேவகி கூறிய வார்த்தைகளிலேயே கண்ணீர் கலந்திருந்ததாகத் தோன்றியது.

அவளுடைய வீட்டு விலாசத்தைத் தெரிந்து கொண்டேன். பிறகு பிரிய மனமின்றிப் பிரிந்து சென்றேன்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டுக்கு வரும்படி தேவகி சொல்லியிருந்தாள். அது வரையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகச் சென்று கொண்டிருந்தது.

அந்த நீண்ட யுகங்களை யெல்லாம் பழைய சம்பவங்களை ஒவ்வொன்றாக நினைவுப்படுத்திக் கொண்டு கழித்தேன்.

2

ஏறக்குறைய கால் நூற்றாண்டுக்கு முன்னால் நடந்த சம்பவம். ஆனாலும் நேற்று நடந்ததுபோல் என் ஞாபகத்தில் இருக்கிறது. ஹைஸ்கூலில் ஆறாவது பாரம் படித்துக் கொண்டிருந்தேன். என் தகப்பனாரின் மரணம் காரணமாக நடுவில் மூன்று வருஷம் என் படிப்புத் தடைப்பட்டிருந்தது. ஆகையால் என் வகுப்பில் வாசித்த மற்றப் பிள்ளைகளைக் காட்டிலும் எனக்கு வயது அதிகம். பதினேழு முடிந்து பதினெட்டாவது பிறந்திருந்தது. ஆனால் பள்ளிக்கூடம் போகாத மூன்று வருஷமும் நான் சும்மா இருந்து விடவில்லை. நன்றாகப் படித்திருந்தேன். ஆகையால் இப்போது வகுப்பில் கெட்டிக்காரப் பையன் என்று பெயர் வாங்கியிருந்தேன். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் எல்லாரும் என்பேரில் பிரியமாயிருப்பார்கள். அந்த வருஷத்தில் புதிதாக வந்திருந்த ஹெட்மாஸ்டர் பத்மநாப ஐயங்காரும் என்னிடம் மிக்க அபிமானமாயிருந்தார். அவரைக் காட்டிலும் அவர் மனையாளுக்கு என்னிடம் பிரியம் அதிகம். அந்தத் தம்பதிகள் எங்கள் ஊருக்கு வந்த புதிதில் நான் அவர்களுக்கு மிக்க ஒத்தாசையாயிருந்தேன். புதுக் குடித்தனம் போடுவதற்கு வேண்டிய சாமான்கள் எல்லாம் வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தேன். இதிலிருந்து அந்த மாமிக்கு என்னை ரொம்பப் பிடித்துப் போய்விட்டது. தினசரி காலையில் பலகாரம் காப்பி எனக்கு ஹெட்மாஸ்டரின் வீட்டிலேதான். ஒரு நாளைக்கு நான் அவர்கள் வீட்டுக்குப் போகாவிட்டால், "கிட்டா! நேற்றைக்கு எங்கே காணோம்? இந்த மாதிரி நீ 'ஆப்ஸெண்ட்' போட்டால், ஹெட்மாஸ்டரிடம் சொல்லிப் பரீட்சையில் 'ஸைபர்' போட்டுவிடச் சொல்வேன்!" என்று மாமி சண்டை பிடிப்பாள். இப்படிச் சிலகாலம் ஹெட்மாஸ்டர் வீட்டுக்கு நான் செல்லப் பிள்ளையாயிருந்தேன். அவர்கள் வந்த புதிதில் அவர்களுடைய வீட்டில் அந்தத் தம்பதிகளைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை.

பிறகு ஒரு நாள் ரங்கநாயகி அம்மாள் திடீரென்று ஒரு செய்தி சொன்னாள். அவர்களுடைய குமாரி தேவகி அடுத்த வாரம் சென்னைப் பட்டணத்திலிருந்து வரப்போவதாகச் சொன்னாள். அதுவரையில் அவர்களுக்கு ஒரு புதல்வி உண்டு என்னும் விஷயமே தெரியாமலிருந்தது. எனவே, அந்தச் செய்தியைக் கேட்டவுடன் எனக்கு வியப்பாயிருந்தது. வியப்பு மட்டுமில்லை; காரணம் சொல்ல முடியாத ஒரு பரபரப்பு உண்டாயிற்று. வரப்போகிற தேவகியைப் பற்றி எல்லா விவரங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றிற்று. மாமியிடம் சாதுர்யமாகப் பல கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொண்டேன். தேவகிக்கு வயது பதினைந்து; நாலாவது பாரம் பாஸ் செய்திருந்தாள். அவளை எங்கள் ஊருக்கு அழைத்துக் கொண்டு வர முதலில் பத்மநாப ஐயங்கார் இஷ்டப்படவில்லை. எங்கள் ஊர் பட்டணத்திலும் சேர்ந்ததில்லை; பட்டிக் காட்டிலும் சேர்ந்ததில்லை. இரண்டும் கெட்ட ஊர். பெண்களுக்குத் தனியாக ஹைஸ்கூல் கிடையாது. ஆண் பிள்ளைகள் ஹைஸ்கூல் மட்டுந்தானிருந்தது. ஆகையினாலே தேவகியின் படிப்பைக் கெடுக்க வேண்டாம் என்று பட்டணத்தில் பாட்டி வீட்டிலேயே அவளை விட்டு விட்டு வந்தார்கள். ஆனால் அதிக காலம் செல்லப் பெண்ணைப் பிரிந்திருப்பதற்குத் தாயார் தகப்பனார் இரண்டு பேராலும் முடியவில்லை. ஆகையால் சில நாளைக்கெல்லாம் அவளை அழைத்துக் கொண்டு வரத் தீர்மானித்தார்கள். அழைத்துக் கொண்டு வந்து புருஷப் பிள்ளைகளின் ஹைஸ்கூலிலேயே சேர்த்துவிடவும் முடிவு செய்தார்கள். ரங்கநாயகி அம்மாள் இதற்கு ஆட்சேபணைகள் பல சொல்லாமலில்லை. ஆனால் பத்மநாப ஐயங்கார், "நானே ஹெட்மாஸ்டராயிருக்கும் போது என்ன கவலை? என்னை மீறி என்ன நடந்துவிடும்? கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டுபோய் விடுமா? யாராவது ஏதாவது உளறிக் கொண்டு போகட்டும். இந்தக் காலத்தில் வைதிக குடும்பத்துப் பெண்கள் சாதி விட்டுச் சாதி கல்யாணம் செய்து கொள்கிறார்கள். கப்பலேறிச் சீமைக்குப் போகிறார்கள். வக்கீல் பரீட்சை பாஸ் செய்துவிட்டு நாலு கைச் சட்டை போட்டுக் கொண்டு கோர்ட்டில் வந்து பேசுகிறார்கள். அவர்களையெல்லாம் யார் தள்ளிவைத்து விட்டார்கள்? என் பெண் என் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிப்பதற்கு என்ன வந்துவிட்டது?" என்று அடித்துப் பேசினார்.

அதன் பேரில் ரங்கநாயகி அம்மாளும் சம்மதித்தாள். எங்கள் ஹெட்மாஸ்டரின் மனைவி கொஞ்சம் உலகப் போக்கை அறிந்த பெண்மணி. தன் புதல்வி ஆறாவது பாரம் வரையிலாவது படித்தால்தான் நல்ல இடத்தில் கலியாணம் ஆகும் என்ற எண்ணம் அந்த அம்மாளின் மனதில் இருந்தது.

"நீயே சொல்லு, கிட்டா! இவருக்கோ மாதம் சம்பளம் நூற்றைம்பது ரூபாய். காப்பிச் செலவுக்கே ஐம்பது ரூபாய் ஆகிவிடுகிறது. இந்த இலட்சணத்தில் பணங் காசு எப்படிச் சேரும்? பத்தாயிரம், இருபதினாயிரம் என்று வரதட்சணை கொடுத்துக் கலியாணம் பண்ணிக் கொடுக்க நமக்கு யோக்யதை உண்டா? குழந்தைக்குக் கொஞ்சம் படிப்பாவது இருந்தால் தானே, சுமாராக நல்ல இடமாகப் பார்த்துக் கலியாணம் செய்து கொடுக்கலாம்?" என்று ரங்கநாயகி அம்மாள் என்னிடம் சொன்னதற்கு நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை. அந்த விஷயமாக என் மனதில் அச்சமயம் அபிப்பிராயம் ஒன்றும் ஏற்பட்டிருக்கவில்லை. ஆனால் மாமிக்கு யாரிடமாவது தன் மனதிலிருந்ததைச் சொல்லித் தீர்க்க வேண்டியதாயிருந்தது. ஆகையால் என்னைப் பிடித்துக் கொண்டாள்.

"என்னடா, கிட்டா! ஒன்றும் பதில் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டிருக்கிறாயே? உன் அபிப்பிராயம் என்ன? தேவகியின் படிப்பை நிறுத்த எனக்கும் இஷ்டமில்லைதான். ஆனால் இந்த ஊர் கொஞ்சம் பட்டிக்காடாயிருக்கிறதே என்று பார்க்கிறேன். புருஷப் பிள்ளைகள் படிக்கும் வகுப்பிலேயே தேவகியையும் உட்கார்ந்து படிக்கச் சொன்னால், இந்த ஊர்க்காரர்கள் ஏதாவது வம்பு வளர்க்க மாட்டார்களா?" என்று ரங்கநாயகி அம்மாள் மறுபடியும் வற்புறுத்திக் கேட்டாள்.

"நீங்கள் எதற்காகக் கவலைப்படுகிறீர்கள், மாமி! ஹெட்மாஸ்டருக்குத் தெரியாத விஷயமா? அவர் செய்யும் ஏற்பாடு சரியாகத்தான் இருக்கும்" என்று நான் சொல்லி வைத்தேன்.

"என்னதான் அவர் எல்லாம் தெரிந்தவராயிருந்தாலும், இந்த விஷயம் நன்றாய் யோசித்துச் செய்ய வேண்டிய காரியம் அல்லவா? எந்தப் பக்கம் பார்த்தாலும் தர்ம சங்கடமாயிருக்கிறது. எனக்கும் சரி, அவருக்கும் சரி, குழந்தையை விட்டு விட்டுப் பிரிந்திருக்க முடியவில்லை. தூங்குவதற்குக் கண்ணை மூடினால் தேவகிதான் கனவிலே வந்து நிற்கிறாள். எங்கள் விஷயந்தான் இப்படி என்றால், குழந்தையும் 'நான் வந்து விடுகிறேன்' என்று கடிதத்துக்கு மேல் கடிதமாக எழுதுகிறாள். 'பெண் கல்வி' 'பெண் கல்வி' என்று வாய் கொண்ட மட்டும் எல்லாரும் கூச்சல் போடுகிறார்களே? இந்த ஊரில் பெண்களுக்கு என்று ஒரு ஹைஸ்கூல் இல்லை, பாரேன்!" என்றால் மாமி.

"இந்த ஊரில் பெண்களுக்கு ஹைஸ்கூல் வைத்தால் என்ன பிரயோஜனம், மாமி? பெஞ்சுகளும் நாற்காலிகளுந்தான் படிக்க வேண்டும். இந்த ஊர்ப் பெண்கள் யாரும் நாலாவது வகுப்புக்கு மேல் தாண்டிவருவதேயில்லை!" என்றேன் நான்.

3

ஹெட்மாஸ்டரும் நானும் தேவகியை அழைத்துக்கொண்டு வருவதற்காக ரயில்வே நிலையத்துக்குப் போயிருந்தோம். தெரிந்த மனிதர்களுடன் தேவகியைக் கூட்டி, ரயிலேற்றி அனுப்புவதாகச் சென்னையிலிருந்து கடிதம் வந்திருந்தது. ரயில் எப்போது வரப் போகிறது என்று எனக்கு ஒரே ஆவலாயிருந்தது. கடைசியாக, ரயில் வந்தது. நாங்கள் நின்ற இடத்துக்கு எதிரிலேயே தேவகி இருந்த வண்டியும் நின்றது. ரயிலுக்கு வெளியே முகத்தை நீட்டி ஹெட்மாஸ்டரைப் பார்த்துக் கையை ஆட்டிய பெண்ணைப் பார்த்ததும் அவள் தான் தேவகி என்று எனக்குத் தெரிந்துவிட்டது. கோண வகிடும் சுருட்டை மயிரும் குறுகுறுவென்ற முகமும் கறுப்பான புருவமும் கண்ணிமையுமாகத் தோன்றிய தேவகியின் முகத்தை ரயில் சட்டங்களுக்கு நடுவில் அன்றைக்கு எப்படிப் பார்த்தேனோ, அப்படியே இன்றைக்கும் ஞாபகத்துக்கு வருகிறது. "அப்பா! வந்துவிட்டேன்!" என்று சொன்ன அவளுடைய குரலைக் கேட்டதும் என் நெஞ்சு மேலெழுந்து தொண்டையை அடைத்தது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. ரயிலிலிருந்து தேவகி கீழே இறங்கியதும் எனக்கு என்ன தோன்றிற்று தெரியுமா?

"மாமி சுத்தப் பைத்தியம்! இப்படி ரம்பை, மேனகையெல்லாம் தோற்றுப் போகும்படி அழகு படைத்த பெண்ணுக்குக் கலியாணம் ஆவதைப் பற்றியா கவலைப்படுவது? இவளுக்குப் படிப்பு இருந்தால் தான் கலியாணம் ஆகுமா? பத்தாயிரம் இருபதினாயிரம் வரதட்சணை இந்தப் பெண்ணுக்கா கொடுக்க வேண்டும்? பைத்தியக்காரத்தனந்தான்! இவளைக் கலியாணம் செய்து கொள்ளுகிறவன் அல்லவா இவளைப் பெற்றவர்களுக்குப் பத்தாயிரம், இருபதினாயிரம் பணம் கொடுக்க வேண்டும்? அப்படிக் கொடுத்தாலும் அது இவளுக்கு ஈடாகுமா?" என்று இப்படியெல்லாம் என் மனம் நினைத்தது.

ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வெளியேறியபோது தேவகியின் பெட்டியை நான் தூக்கிக் கொண்டு போனேன். அப்படி அவளுடைய பெட்டியைத் தூக்கியது எனக்குப் பெருமையாயிருந்தது. ஜட்கா வண்டியில் முதலில் தேவகியை ஏறச் சொல்லிவிட்டு ஹெட்மாஸ்டர் ஏறிக் கொண்டார். பிறகு என்னையும் ஏறிக்கொள்ளச் சொன்னார். நான் தயக்கத்துடன் ஏறி உட்கார்ந்தேன். வண்டி நகரத் தொடங்கியதும் தேவகி, "இவர் யார் அப்பா?" என்றாள். அதுவரையில் யாருமே என்னைப் பற்றி அவ்விதம் மரியாதையாகப் பேசியதில்லை. எங்கள் ஊரில் சிறு பெண்கள்கூடப் புருஷப் பிள்ளைகளை 'அவன்' 'இவன்' என்றுதான் சொல்வார்கள். தேவகி எனக்கு மரியாதை கொடுத்துப் பேசியது எனக்கு அளவில்லாத பெருமையையும் மகிழ்ச்சியையும் அளித்தது. பட்டணத்தில் வளர்ந்த பெண்களின் நாகரிகம் எப்படியும் உயர்வுதான் என்று எண்ணிக் கொண்டேன்.

எப்போதும் சளசளவென்று பேசும் பழக்கம் உடைய எனக்கு அன்றைக்கு, அந்த ஜட்கா வண்டியில் போகும்போது, எதனாலோ பேசவே தோன்றவில்லை. தகப்பனாரும் மகளும் பேசுவதைக் கேட்டுக் கொண்டு மௌனமாயிருந்தேன். நடுவில் ஒரு தடவை தேவகி "இவருக்கு ரொம்ப சங்கோசம் போலிருக்கிறது. பேசாமல் வருகிறாரே?" என்றாள். "அதெல்லாம் ஒன்றுமில்லை; அப்பாவும் பெண்ணும் பேசும்போது நடுவில் குறிக்கிட வேண்டாம் என்று இருக்கிறான். உன் அம்மாவுக்கு இவன் செல்லப் பிள்ளை. எதற்கெடுத்தாலும் 'கிச்சாமியை அனுப்புங்கள்!' என்பாள். இவனால் எனக்கு வீட்டு விஷயமான கவலையே இல்லாமலிருக்கிறது!" என்றார் ஹெட்மாஸ்டர். அவரிடம் அப்போது எனக்கு எல்லை கடந்த நன்றி உணர்ச்சி உண்டாயிற்று.

ஹெட்மாஸ்டர் குடியிருந்த வீட்டின் வாசலில் சில மந்தாரை, பவளமல்லி முதலிய புஷ்பச் செடிகளுக்கு மத்தியில் ஒரு பழைய காலத்துச் சாதி முல்லைக் கொடியும் வளர்ந்து படர்ந்து பூத்துக் கொட்டியிருந்தது. ஒடிந்து விழுந்து விடுவாளோ என்று தோன்றும்படி ஒல்லியான தேகத்துடன் தேவகி அந்த வீட்டுக்குள் புகுந்தபோது, பெண்களைப் 'பூங்கொடி' என்று சொல்வதின் பொருத்தம் எனக்கு விளங்கிற்று. இன்றைக்குக் கூட நான் தேவகியைப் பற்றி நினைத்தால், அந்த சாதி முல்லைக்கொடியும் அதில் பூத்திருந்த மலர்களின் மணமும் சேர்ந்து எனக்கு ஞாபகம் வருகின்றன.

4

தேவகி எங்கள் ஊருக்கு வந்து சில நாள் வரையில் என் வாழ்க்கையே குதூகல மயமாயிருந்தது. வழக்கம் போலவே ஹெட்மாஸ்டர் வீட்டுக்கு அடிக்கடி போய் வந்தேன். அம்மாவுக்கு உதவி செய்தது போலவே மகளுக்கும் உதவி புரிந்து வந்தேன். சில சமயம் கணக்கு முதலிய பாடங்களில் தேவகி சந்தேகம் கேட்டால் சொல்லிக் கொடுப்பேன். தேவகிக்கும் என்னை ரொம்பப் பிடித்து விட்டதாகத் தோன்றியது. அம்மாவைப் போலவே பெண்ணும் ஒரு நாள் நான் அவர்கள் வீட்டுக்குப் போகாவிட்டால், "எங்கே நேற்றுக் காணோம்?" என்று கேட்கத் தொடங்கினாள். அவர்களுக்குள் ஒரு வித்தியாசம் என்னவென்றால், தாயார் என்னிடம் பிள்ளை முறை பாராட்டி என்னை ஏக வசனத்தில் அழைப்பாள். புதல்வி மரியாதையாக 'வாங்கள்' 'போங்கள்' என்று கூறுவாள்.

இவ்விதம் சிலகாலம் நான் ஆனந்த மயமான வானுலகத்தில் சஞ்சரித்து வாழ்ந்து வந்தேன். திடீரென்று அந்த வானில் கருமேகம் ஒன்று தோன்றியது. முதலில் சிறியதாகத் தோன்றியது வர வரப் பெரிதாகிப் படர்ந்தது. இடியும் மின்னலும் புயலும் மழையும் தொடர்ந்து வந்தன.

தேவகி எங்கள் பள்ளிக்கூடத்தில் ஐந்தாவது பாரத்திலே சேர்ந்தாள். வகுப்பில் எல்லாப் பிள்ளைகளும் பெஞ்சிகளில் உட்கார்ந்திருப்பார்கள். தேவகிக்கு மட்டும் சற்றுத் தள்ளி ஒரு தனி நாற்காலி போடப்பட்டிருக்கும். அதில் அவள் உட்கார்ந்து கொள்வாள். இதைக் குறித்துச் சில மாணாக்கர்கள் ஒரு விதமாகப் பேசுவதுண்டு என்று எனக்குத் தெரிய வந்தது. பராபரியாகக் கேள்விப்பட்டேனேயன்றி, என் காதில் அத்தகைய பேச்சு எதுவும் விழாமல் கொஞ்ச நாள் வரையில் இருந்தது. ஆகையால், மனதிற்குள் ஆத்திரப்பட்டேனே தவிர அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல முடியவில்லை. கடைசியாக, ஒரு நாள் என் காதுபடக் கேட்டு விட்டேன். ஆறாவது பாரத்தில் இரண்டு வருஷம் தேறாமல், மூன்றாவது வருஷம் படித்த ஒரு பையன் இருந்தான். அவன் பெயர் வைத்தியநாதன். பணக்கார வீட்டுப் பிள்ளை. அகம்பாவம் பிடித்தவன். வம்புப் பேச்சுப் பேசும் வழக்கம் ரொம்ப உண்டு. ஆசிரியர்களைப் பற்றிக்கூடச் சில சமயம் கன்னாபின்னா என்று மரியாதைக் குறைவாகப் பேசுவான். அவனோடு நான் சகவாசமே வைத்துக் கொள்வதில்லை.

ஒருநாள் நான் ஹெட்மாஸ்டர் வீட்டுக்குப் போய்விட்டு ஹாஸ்டலுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது வைத்தியநாதனும் இன்னொரு பையனும் சாலை ஓரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். என்னைச் சுட்டிக் காட்டி வைத்தியநாதன் ஏதோ சொன்னான். இன்னொரு பையன் 'ஓஹோ!' என்று சிரித்தான். அதைக்கூட நான் பொருட்படுத்தவில்லை. நான் பாட்டுக்குச் சாலையின் இன்னொரு ஓரமாகப் போனேன். ஆனால் வைத்தியநாதனுக்கு அன்றைக்கு ஏதோ பிசாசு பிடித்திருந்தது. ஆகையால் என் காதில் விழும்படி அவன் ஹெட்மாஸ்டர் பெண் தேவகியைப் பற்றிப் பேசினான். என்னையும் அவளையும் சேர்த்தே பேசினான், என்ன பேசினான் என்று இங்கே எழுதி என் பேனாவையும் காகிதத்தையும் கறைப்படுத்த நான் விரும்பவில்லை.

அதைக் கேட்டேனோ இல்லையோ, எனக்கு ஆவேசம் வந்துவிட்டது. அவ்வளவு தைரியமும் தேகபலமும் எனக்கு எப்படி அச்சமயம் வந்தன என்பதை நினைத்தால் இப்போது கூட வியப்பாயிருக்கிறது. ஒரே பாய்ச்சலில் அவனருகில் சென்று அவன் கன்னத்தில் பளீர் என்று ஒரு அறை விட்டேன். வைத்தி நல்ல தடியன்; 'புட்பால்' நன்றாக ஆடுவான். காற்பந்து ஆடி ஆடிக் காலில் அவனுக்கு வைரம் பாய்ந்திருந்தது. என்னை ஒரு உதைவிட்டான். என் முழங்காலில் பட்டுப் பிராணனே போய்விட்டது. ஆயினும் நான் பணிந்து விடவில்லை. இரண்டு பேரும் சிறிது நேரம் துவந்த யுத்தம் செய்தோம். வீதியில் விழுந்து புரண்டோ ம். வைத்தி என் கழுத்தைப் பிடித்து நெருக்க ஆரம்பித்தான். எனக்கு மூச்சுத் திணற ஆரம்பித்துவிட்டது. நல்ல வேளையாக அந்தச் சமயத்தில் எங்கள் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் வந்தார். ஹெட்மாஸ்டரைக் காட்டிலும் அவர் பிள்ளைகளின் கட்டுப்பாட்டை நிலை நிறுத்துவதில் கண்டிப்பானவர். அவர் எங்கள் அருகில் வந்து அதட்டியதும் இருவரும் சண்டையை நிறுத்தினோம். இருவரையும் அவர் கடுமையாகத் திட்டிவிட்டுப் பள்ளிக்கூடம் வந்ததும் தண்டிக்கப் போவதாகச் சொன்னார். வைத்தி உடனே "என் பேரில் தப்பில்லை, ஸார்! நான் பாட்டுக்குச் சுந்தரத்துடன் பேசிக் கொண்டிருந்தபோது இவன் தான் வலுச்சண்டைக்கு இழுத்தான். திடுதிடுவென்று வந்து கன்னத்தில் பளீர் என்று அறைந்தான். சுந்தரத்தை வேணுமானால் கேட்டுப் பாருங்கள்!" என்றான். "சுந்தரத்தைக் கேட்பதென்ன? இவனையே கேட்கிறேன். வைத்தி சொல்வது உண்மையா?" என்று என்னைப் பார்த்து ஆசிரியர் அதட்டிக் கேட்டார். நான் பதில் சொல்லாமல் திகைத்து நின்றேன். வைத்தி கூறியது என்னவோ உண்மைதான். முதலில் வைத்தியின் கன்னத்தில் அறைந்தவன் நான் தான். ஆனால் எதற்காக? அந்தக் காரணத்தை வெளியிட்டுச் சொல்ல எனக்கு இஷ்டமில்லை. அதைச் சொல்வதைக் காட்டிலும் ஆசிரியரின் தண்டனையைப் பெறுவதற்கும் மற்றவர்களிடம் அவமானப் படுவதற்கும் தாயாராயிருந்தேன். தேவகியையும் என்னையும் சேர்த்து வைத்தி பேசிய ஆபாச வார்த்தைகளை எப்படி நான் திருப்பிச் சொல்வேன்? சொன்னால் அந்தப் பேச்சு ஊரெல்லாம் ஒரு நிமிஷத்தில் பரவி விடுமே? அதைவிட என் நாவைத் துண்டித்து விடுவதே மேல் என்று நினைத்தேன்.

உதவித் தலைமை ஆசிரியர் ஜகதீசய்யர் ஹெட்மாஸ்டரிடம் எங்கள் தெருச் சண்டையைப் பற்றிச் சொல்லிவிட்டார். ஹெட்மாஸ்டர் என்னை அழைத்து விசாரித்தார். வைத்தியுடன் வலுச் சண்டைக்குப் போனதற்குக் காரணம் கேட்டார். நான் சொல்ல மறுத்தேன். வேறு யாரிடம் சொன்னாலும் அவரிடம் சொல்லக் கூடாதல்லவா? கடைசியில் "இந்தத் தடவை மன்னித்துவிட்டேன். இனிமேல் இப்படியெல்லாம் செய்யாதே!" என்று எச்சரித்தார். அத்துடன் அச்சம்பவம் முடிந்துவிட்டதாகத் தோன்றியது.

ஆனால் ஹெட்மாஸ்டர் என்னை நடத்திய முறையில் சீக்கிரத்திலேயே வித்தியாசத்தைக் கண்டு கொண்டேன். பழைய அபிமானமும் நம்பிக்கையும் என்னிடம் இல்லையென்றே தோன்றியது. அவர்களுடைய வீட்டுக்கு நான் வருவதைக் கூட அவ்வளவாக அவர் விரும்பவில்லையென்று காணப்பட்டது. அதைக் காட்டிலும் முக்கியமாக, நானும் தேவகியும் பேசுவதைப் பார்த்தால் ஹெட்மாஸ்டரின் முகம் சுருங்கிற்று. "தேவகி! என்ன வீண் பேச்சு? போய்ப் பாடத்தைப் படி!" என்பார். இதுமட்டுமல்லாமல் என்னிடம் அவர் தனிமையில் பேச நேரும்போது "கிருஷ்ணசாமி! தேவகிக்கு ஒரு நல்ல வரன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் வாழ்க்கையில் ரொம்பவும் வறுமையால் கஷ்டப்பட்டவன். தேவகியையாவது நல்ல பணக்காரப் பிள்ளைக்குப் பார்த்துக் கொடுத்து விட விரும்புகிறேன். பணக்காரப் பிள்ளையாயிருந்தால் மட்டும் போதாது; குறைந்தது பி.ஏ. படித்தவனாயிருக்க வேண்டும். பெருமாளுடைய சித்தம் எப்படியிருக்கிறதோ? உனக்கு யாராவது நல்ல வரன் தெரிந்திருந்தால் சொல்லு!" என்று கூறுவார்.

இந்த வார்த்தை என் நெஞ்சை வாள் கொண்டு அறுப்பது போலிருக்கும். எனக்கு நானே புத்தி சொல்லிக் கொண்டு ஆறுதல் அடையப் பார்ப்பேன். "தேவகிக்கு எப்படியும் ஒரு நாள் கலியாணம் நடக்க வேண்டியதுதானே? ஆஸ்திபாஸ்தி ஒன்றுமேயில்லாத நாம் அதைப்பற்றி யோசித்து என்ன பயன்? நமக்குப் படிப்பும் கொஞ்சம். பி.ஏ. வகுப்பை எட்டிப் பார்க்கவும் முடியாது. வயதுப் பொருத்தம் கூட இல்லை. பின்னே, எதற்காகக் கவலைப்பட வேண்டும்? ஹெட்மாஸ்டர் சொல்வது நியாயந்தானே?" என்று பலவிதமாக எண்ணி யோசித்து முடிவு செய்வேன். ஆனாலும் தேவகிக்குக் கலியாணம் நடக்கப் போகிறது என்ற எண்ணம் என் மனதில் ஏதோ ஒரு வேதனையைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

"வைத்திக்கும் எனக்கும் சண்டை எழுந்த காரணத்தைப் பற்றி ஹெட்மாஸ்டருக்குத் தெரிந்திருக்குமோ, ஒரு வேளை சுந்தரம் சொல்லியிருப்பானோ?" என்று எண்ணி எண்ணி என் உள்ளம் தத்தளித்தது. அல்லது வைத்தியே ஒருவேளை ஏதாவது உளறியிருக்கலாம்; குற்றத்தை என்பேரில் சுமத்தியிருக்கலாம். ஆனாலும் அதைப்பற்றி யாரிடமும் பேசவோ, கேட்கவோ முடியவில்லை. சண்டைக்குப் பிறகு வைத்தியும் நானும் பேசுவதேயில்லை. என்னைப் பற்றி அவன் நான் இல்லாத சமயங்களில் ஏதேதோ கோள் சொல்லி அவதூறு பேசி வருகிறான் என்று தெரிந்திருந்தது. ஆயினும் பழைய அநுபவம் காரணமாக அதைப்பற்றிக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருந்துவிட்டேன். இரண்டாவது தடவை அவனோடு சண்டை போட எனக்கு இஷ்டமில்லை.

இப்படியாகக் காலம் போய்க் கொண்டிருந்தது. என் வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த புத்துணர்ச்சியும் ஆனந்தமும் மறைந்துவிட்டன. கவலையும் சந்தேகமும் மனதை அரித்துக் கொண்டிருந்தன. இவ்வளவுக்கு மிடையில் தேவகி எப்போதும்போல் என்னிடம் பிரியம் காட்டி வந்தது ஒன்றுதான் ஒருவாறு திருப்தி அளித்து வந்தது. "ஏன் இப்பொழுதெல்லாம் வீட்டுக்கு வருவதில்லை?" என்று தேவகி என்னைப் பார்க்கும் போதெல்லாம் கேட்கத் தவறுவதில்லை. ஆனால் அவளுடைய தகப்பனார் நான் வருவதை விரும்பவில்லையென்று அவளிடம் நான் எப்படிச் சொல்வேன்? சொன்னால்தான் அதில் பயன் என்ன?

5

ஒரு நாள் ரங்கநாயகி அம்மாள் என்னைக் கூப்பிட்டு அனுப்பி, "கிட்டா! கோவிலுக்குப் போய் பெருமாளையும் தாயாரையும் சேவித்து விட்டு வரவேணும். நீ என் கூட வருகிறாயா?" என்று கேட்டாள். மாமியின் அன்புக்கு மாறு சொல்ல முடியாமல் சம்மதித்தேன். மாமியுடன் நான் கோவிலுக்குப் போவதை யாராவது பையன்கள் பார்த்தால், "கிச்சாமி மறுபடியும் ஹெட்மாஸ்டர் வீட்டு மாமியைக் காக்காய் பிடிக்கிறான்!" என்று சொல்லிப் பரிகசிப்பார்கள் என்பது தெரிந்துதானிருந்தது. அதையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. தைரியமாகப் பூஜை சாமான்களை எடுத்துக் கொண்டு மாமியைத் தொடர்ந்து போனேன். வழியில் மாமி அநுதாபம் நிறைந்த குரலில், "கிட்டா! என்னிடம் நீ நிஜத்தைச் சொல்லிவிடு. இவருக்கு - தேவகியின் அப்பாவுக்கு - உன் பேரில் என்ன கோபம்? நீ என்ன அப்படிப்பட்ட குற்றத்தைச் செய்து விட்டாய்? எதுவாயிருந்தாலும் என்னிடம் சொல்லி விடு! நான் அவரிடம் பேசிச் சரிப்படுத்துகிறேன்!" என்றாள். மாமியின் அன்பு என்னை உருக்குவிட்டது. அழமாட்டாக் குறையாக நான் உண்மையைச் சொல்லிவிட்டேன். உண்மை என்றால், வைத்திய நாதன் உளறியதை அப்படியே சொல்லிவிடவில்லை. ஒரு மாதிரி அவனுடைய வம்புப் பேச்சைப் பற்றிக் குறிப்பாகச் சொல்லி, அதனால் நேர்ந்த சண்டையைப் பற்றியும் சொன்னேன்.

இதைக் கேட்ட மாமி, "அழகாயிருக்கிறது! இதற்குத்தானா உன் பேரில் எரிந்து விழுகிறார்? ஊரிலே நாலு காலாடிகள் ஏதாவது பேசிக் கொண்டுதானிருப்பார்கள். இப்படி நடக்கலாம் என்று நான் எதிர்பார்த்ததுதானே? 'இந்தப் பட்டிக்காட்டு ஊரில் புருஷப் பிள்ளைகளின் பள்ளிக் கூடத்தில் தேவகியைச் சேர்க்கலாமா?' என்று அப்போதே நான் சொன்னேன். அதைக் கேட்காமல் சேர்த்து விட்டார். இப்போது உன் பேரில் கோபித்துக் கொண்டு என்ன பயன்? ஹெட்மாஸ்டர் என்னமோ ரொம்ப நல்லவர் தான். ஆனால் கேட்பார் பேச்சைக் கேட்கும் சுபாவம் கொஞ்சம் உண்டு. அந்த உதவித் தலைமை வாத்தியார் ஜகதீசய்யர் ஏதோ இல்லாததும் பொல்லாததும் சொல்லி வத்தி வைத்திருக்கிறார். நீ, பாவம், என் வயிற்றில் பிறந்த பிள்ளை மாதிரி எவ்வளவோ விசுவாசமாயிருந்தாய். தேவகிக்கு உடன் பிறந்த தம்பி, தமையன் ஒருவரும் இல்லையே என்ற குறை எனக்கு உண்டு. அந்தக் குறை தீரும்படி நீ அவளுடைய கூடப் பிறந்த தமையன் மாதிரி பிரியமாக இருந்தாய். பாவம்! ஊரில் உள்ளவர்கள் சேர்ந்து உன்னை ஆகவொட்டாமல் அடித்துவிட்டார்கள். ஆனால் நீ கொஞ்சங்கூடக் கவலைப்படாதே! நான் இவரிடம் சொல்லிச் சரிப்படுத்தி விடுகிறேன். பெருமாள் சந்நிதியிலும் தாயார் சந்நிதியிலும் நான் இன்றைக்கு உனக்காகவே வேண்டிக் கொள்ளப் போகிறேன்!" என்றாள். இந்த அன்பான வார்த்தைகளினால் என் மனம் மேலும் உருகிவிட்டது. பெருமாளையும் தாயாரையும் சேவிக்கும்போது அன்றைக்கு நானும் அவ்விதமே வேண்டிக் கொண்டேன். "ஹெட்மாஸ்டருக்கு என் பேரில் இருந்த அன்பும் மதிப்பும் முன் போலவே ஏற்படவேண்டும்" என்று பிரார்த்தித்தேன்.

என்னுடைய பிரார்த்தனையும் மாமியின் பிரார்த்தனையும் வீண் போகவில்லை. சில நாளைக்கெல்லாம் ஹெட்மாஸ்டர் பழையபடி என்மேல் பிரியமாயிருக்கத் தொடங்கினார். இது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி தந்தது. ஆயினும் நான் ஊருக்குப் பயந்து, அதாவது மற்றப் பையன்களின் வம்புப் பேச்சுக்குப் பயந்து, கொஞ்சம் ஜாக்கிரதையாகவே நடந்து கொண்டேன். முன்போல் தினசரி இரண்டு வேளையும் ஹெட்மாஸ்டர் வீட்டுக்குப் போவதில்லை. அடியோடு போகாமல் இருப்பதுமில்லை. வாரத்துக்கு இரண்டு மூன்று தடவை போய்ப் பார்த்துப் பேசிவிட்டு வருவேன். தேவகியாவது மாமியாவது கேட்டால், "இந்த வருஷம் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைக்குப் போகவேண்டும் அல்லவா? பாடங்கள் கஷ்டமாயிருக்கின்றன. சிரத்தையாகப் படிக்க வேண்டியிருக்கிறது. படித்து நல்ல மார்க் வாங்கிப் பாஸ் செய்தால் தானே பள்ளிக்கூடத்துக்குக் 'கிதாப்' உண்டாகும்? ஹெட்மாஸ்டருக்கும் நல்ல பெயர் ஏற்படும்?" என்று பதில் சொல்வேன். ஆனால் ஹெட்மாஸ்டரிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் என் மனதில் ஏற்பட்டிருந்த அபிமானம் மட்டும் எள்ளளவும் குறையவில்லை.

இப்படிச் சில மாதங்கள் சென்றன. அரை வருஷப் பரீட்சை முடிந்து கிறிஸ்துமஸ் விடுமுறையும் கழிந்தது. தை மாதம் பிறந்தது. 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று ஒரு பழமொழி உண்டு அல்லவா? எனக்கும் ஒரு வழிபிறந்தது. அதாவது ஹெட்மாஸ்டர் வீட்டில் முன்போல் நெருக்கமான பழக்கம் ஏற்படுவதற்கு ஒரு வழி பிறந்தது. அது, தேவகிக்குக் கலியாணம் நிச்சயமான செய்திதான்!

கிறிஸ்மஸ் விடுமுறைக்காக நான் கிராமத்துக்குப் போய்விட்டுத் திரும்பியதும் இந்தச் செய்தியை அறிந்தேன். ஹெட்மாஸ்டரும் அவர் மனையாளும் எனக்கு ஆள்மேல் ஆள் விட்டார்கள். நானும் அவசரமாய் அவர்கள் வீட்டுக்குப் போனேன். "தேவகிக்குக் கலியாணம் நிச்சயமாகியிருக்கிறது" என்கிற செய்தியைக் குதூகலத்துடன் சொன்னார்கள். வரனும் ரொம்ப நல்ல வரன் என்று தெரிந்தது. எங்கள் ஹெட்மாஸ்டர் மிக நல்ல மனிதர்; அவருடைய மனையாளோ மகா உத்தமி. அப்படிப்பட்ட தம்பதிகளுடைய ஆசை நிறைவேறாமற் போகுமா? "உங்களுடைய குணத்துக்குத்தான் இவ்வளவு நல்ல வரன் கிடைத்தது" என்று சொன்னேன். பையன் ஒரு தாசில்தாருடைய மகன். பி.ஏ. படித்துக் கொண்டிருந்தான். வரதட்சணை கூட அதிகம் கேட்கவில்லையாம். பெண்ணின் அழகையும் சமர்த்தையும் பார்த்து அதிக நிபந்தனை ஒன்றும் போடாமல் கலியாணத்துக்கு ஒப்புக் கொண்டு விட்டார்களாம்.

முன்னேயெல்லாம் 'தேவகிக்குக் கலியாணம்' என்ற பேச்சு எனக்குக் கிலேசத்தை அளித்தது என்று சொன்னேன் அல்லவா! இப்போது கலியாணம் நிச்சயமாகி விட்டது என்று தெரிந்ததும் எனக்கு எந்தவிதமான கிலேசமும் ஏற்படவில்லை. என் தலையிலே இருந்த சுமையும் இருதயத்தை அமுக்கிய பாரமும் இறங்கிவிட்டது போன்ற உணர்ச்சி உண்டாகிக் குதூகலம் ஏற்பட்டது. தேவகியின் சமர்த்துக்கும் அழகுக்கும் இவ்வளவு நல்ல வரனுக்குக் கலியாணம் ஆகவேண்டியது நியாயந்தான். பத்மநாப ஐயங்கார்-ரங்கநாயகி அம்மாளின் உத்தம குணத்துக்கு, அவர்களுக்கு இப்படிப்பட்ட மாப்பிள்ளை கிடைக்க வேண்டியதும் நியாயந்தான். எல்லாம் கடவுளுடைய கருணை. பெருமாளையும் தாயாரையும் ரங்கநாயகி அம்மாள் சேவித்ததின் பலன் கைமேல் கிடைத்துவிட்டது. எனக்கும் ஒரு பெரிய பொறுப்புத் தீர்ந்தது. ஹெட்மாஸ்டரிடம் நான் கொண்டிருந்த பக்திக்கு எவ்விதமான களங்கமும் சொல்வதற்கு இனிமேல் யாரும் துணியமாட்டார்கள் அல்லவா?

இத்தகைய எண்ணங்களினால் நான் அளவிலாத உற்சாகமடைந்து கலியாண ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டேன். முன்போல் பெரும்பாலும் ஹெட்மாஸ்டர் வீட்டிலேயே காலங்கழிக்கத் தொடங்கினேன். பந்தலை அப்படிப் போட வேண்டும், மேளத்துக்கு இன்னாரைச் சொல்ல வேண்டும், சமையலுக்கு இன்னாரை ஏற்பாடு செய்ய வேண்டும், இன்னின்ன சாமான்களை இன்னின்ன இடத்தில் வாங்கிச் சேகரம் செய்ய வேண்டும், கலியாணக் கடுதாசி இப்படி அச்சடிக்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் இடைவிடாமல் மாமியுடன் விவாதித்து வந்தேன். கலியாண ஏற்பாடுகள் சம்பந்தமாக என்னால் இயன்ற ஒத்தாசைகளையும் மாமிக்குச் செய்து வந்தேன்.

ஆனால் இந்தக் கலியாண ஏற்பாடுகளிலும் பேச்சு வார்த்தைகளிலும் கொஞ்சங்கூட உற்சாகங்காட்டாமலிருந்தாள் தேவகி. "எனக்குக் கலியாணத்துக்கு இப்போது என்ன அவசரம்? அம்மாவும், அப்பாவும் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்! கொஞ்சங்கூட எனக்குப் பிடிக்கவில்லை!" என்று தேவகி அடிக்கடி சொன்னாள். சாதாரணமாகக் கன்னிப் பெண்கள் எல்லாருமே கலியாணப் பேச்சு வந்தால் இப்படிப் பிடிக்காதது போலக் காட்டிக் கொள்வதுண்டு. தேவகியும் அவ்விதந்தான் வெளிக்குச் சொல்லுகிறாள் என்று முதலில் நினைத்தேன். அவள் அப்படிப் பேசும்போதெல்லாம் பரிகசித்துச் சிரித்தேன். போகப் போக, தேவகி உண்மையாகவே கலியாணத்தை ஆட்சேபிக்கிறாளோ என்ற சந்தேகம் உதித்தது. அப்போது அவளிடம் எதிர்க்கட்சி பேசிப் புத்திமதியும் சொன்னேன். "உன் தாயார் தகப்பனாருக்கு நீ ஒரே பெண். உனக்குக் காலா காலத்தில் கலியாணம் பண்ணிப் பார்க்க வேண்டும் என்று அவர்களுக்கு ஆசையாயிராதா? அதை நீ ஆட்சேபித்து என்ன லாபம்? இந்த மாதிரி வரன் தான் சுலபத்தில் கிடைக்குமா? பையன் பி.ஏ. படிக்கிறானாம்!..." என்று வரனைப் பற்றி வர்ணிக்கத் தொடங்கினேன். அதற்குத் தேவகி, "பி.ஏ. என்றால் அவ்வளவு அதிசயமா? எத்தனையோ ஆயிரம் பேர்கள் பி.ஏ. படிக்கிறார்கள். கலியாணம் செய்து கொள்ள எனக்கு இஷ்டம் இருக்க வேண்டாமா? இந்தக் காலத்தில் 'பெண்கள் விடுதலை' என்றும், அதுவென்றும், இதுவென்றும் பேசுகிறார்களே? நான் 'கலியாணம் வேண்டாம்' என்று சொல்லும்போது என்னை நிர்ப்பந்தப் படுத்துவது என்ன நியாயம்? எல்லாம் தெரிந்த எங்கள் அப்பாவே இப்படிச் செய்கிறதுதான் எனக்கு அர்த்தமாகவில்லை! நீங்களாவது என் அப்பா - அம்மாவிடம் கொஞ்சம் எனக்காகப் பேசுவீர்கள் என்று நினைத்தேன். நீங்களும் அவர்களுடைய கட்சி பேசுவது எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது!" என்றாள். இதைக் கேட்டதும் எனக்கு உண்மையாகவே கொஞ்சம் தயக்கம் உண்டாகிவிட்டது. ஒரு வேளை தேவகிக்கு இஷ்டமில்லாத பையனுக்கு அவளைப் பலவந்தமாகக் கலியாணம் செய்து கொடுத்துவிடப் பிரயத்தனம் செய்கிறார்களோ என்ற கவலை ஏற்பட்டது.

"ஆமாம், தேவகி! அந்தப் பையனை உனக்கு உண்மையாகவே பிடிக்கவில்லையா, என்ன? அப்படியானால்..." என்பதற்குள், தேவகி, "அப்படியானாலுமில்லை, இப்படியானாலுமில்லை. அந்தப் பையனை எனக்குப் பிடிக்கிறதா, இல்லையா என்ற கேள்வி எங்கே வந்தது? சாப்பாடே இல்லையென்று சொல்லும்போது 'இலை பொத்தல்' என்று புகார் சொன்ன கதையாக அல்லவா இருக்கிறது? எனக்குக் கலியாணம் பண்ணிக் கொள்ளவே இஷ்டமில்லை. பி.ஏ., எல்.டி., பாஸ் செய்துவிட்டு 'டீச்சர்' உத்தியோகத்துக்குப் போய்ச் சுதந்திரமாய் வாழவேண்டும் என்று எனக்கு விருப்பமாயிருக்கிறது. மாப்பிள்ளையைப் பிடித்திருக்கிறதா, இல்லையா என்று என்னைக் கேட்டால் என்ன பிரயோஜனம்? என்னைப் பார்க்க வந்த பையனை நான் முகம் எடுத்துப் பார்க்கவேயில்லை. பின்னே, எப்படிப் பதில் சொல்ல முடியும்?" என்றாள். இதிலிருந்து தேவகியின் ஆட்சேபமெல்லாம் வெளிப்படைக்குத்தான் என்று நான் தீர்மானித்துக் கொண்டேன். பிறகு "இந்த மாதிரியெல்லாம் அசந்தர்ப்பமாய்ப் பேசாதே! கலியாணம் பண்ணிக் கொள்ளாமல் 'நன்னரி'யில் சேர்ந்து விடுவதெல்லாம் ஐரோப்பியர்களுக்குச் சரி; ஹிந்துக்களாகிய நமக்குச் சரிப்படுமா? அந்தமாதிரி எண்ணத்தை அடியோடு மறந்துவிடு! அப்பா அம்மா சொல்கிறபடி கேளு!" என்று அழுத்தமாய்ப் புத்திமதி சொல்லத் தொடங்கினேன். "இப்போது இப்படித்தான் 'கலியாணம் வேண்டாம்' என்று சொல்லிக் கொண்டிருப்பாய். நாளைக்குக் கலியாணம் ஆகிவிட்டால் என்னையெல்லாம் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டாய். 'கிட்டா' என்று ஒருவன் இருக்கிறான் என்பதையே மறந்துபோய் விடுவாய்!" என்று சில சமயம் பரிகாசமும் செய்தேன்.

இந்தமாதிரி நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஹெட்மாஸ்டரோ அல்லது மாமியோ வந்துவிட்டால், உடனே தேவகி பேச்சை நிறுத்திவிட்டு யோசனையில் ஆழ்ந்து விடுவாள். அவள் அப்படி என்ன யோசனை செய்தாள் என்பது அவளுக்கும் அவளது அந்தராத்மாவுக்குந்தான் தெரியும். பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அந்த பரந்தாமனுக்கும் ஒரு வேளை தெரிந்திருக்கலாம்.

6

கலியாணத் தேதி குறிப்பிட்டாகிவிட்டது. பந்தக்கால் முகூர்த்தம் நடந்து, கலியாணக் கடுதாசி அச்சிடவும் கொடுத்தாகிவிட்டது. கலியாணத்துக்கு வேண்டிய சாமான்களில் பாதிக்குமேல் சேகரம் செய்தாகி விட்டது. மணப் பெண்ணுக்கு நிச்சயதார்த்தப் புடவையும் மாப்பிள்ளைக்கு முகூர்த்த வேஷ்டியும் கூட வாங்கியாகிவிட்டது. இவ்வளவு ஏற்பாடுகளும் ஆன பிறகு, திடீரென்று 'ஹெட்மாஸ்டர் பெண்ணின் கலியாணம் நின்று போய் விட்டது' என்ற வதந்தி ஊரில் பரவியது.

என் தாயாரைப் பார்ப்பதற்காக இரண்டு நாள் நான் கிராமத்துக்குப் போயிருந்து திரும்பி வந்தேன். திரும்பி வந்தவுடனே அந்தச் செய்தி காதில் விழுந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. உண்மையை அறிந்து கொள்வதற்காக அவசர அவசரமாக ஹெட்மாஸ்டர் வீட்டுக்குப் போனேன். வீட்டு வாசலில் கலியாணத்துக்காகப் போட்டிருந்த பந்தலை ஆட்கள் அப்போதுதான் பிரித்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் காட்சி என் மனதில் சொல்ல முடியாத வேதனையை உண்டு பண்ணியது. வீட்டுக்குள்ளே போனேன். ஹெட்மாஸ்டராவது, அவர் மனைவியாவது அங்கே காணப்படவில்லை. தேவகி மட்டும் கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக் கொண்டிருந்தாள். சந்திரபிம்பம் போன்ற அவளுடைய முகம் வாடி வதங்கியிருந்தது. அவளுடைய தலை மயிர் அவிழ்ந்து தொங்கியது. கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியதின் அடையாளங்கள் காணப்பட்டன.

"தேவகி! இது என்ன? பந்தலை ஏன் பிரிக்கிறார்கள்? நான் கேள்விப்பட்டது உண்மையா?" என்றேன்.

"ஆமாம், கிட்டா! உண்மைதான். கலியாணம் நின்று போய்விட்டது. நான் 'வேண்டாம் வேண்டாம்' என்று அடித்துக் கொண்டேனே, அதை இவர்கள் கேட்டால்தானே? அப்போது நான் சொன்னதைக் கேட்கவில்லை; இப்போது நன்றாய் அவமானப் பட்டார்கள். இவர்களுக்கு நன்றாய் வேண்டும்! இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்!" என்றாள். தேவகியின் இனிய குரலில் அவ்வளவு குரோதம் எப்படி வந்து புகுந்தது என்று ஆச்சரியப்பட்டேன்.

"என்ன காரணம்? கலியாணம் ஏன் நின்றது?" என்று கேட்டேன்.

"என்ன காரணமோ! என்னைக் கேட்டால், எனக்கு என்ன தெரியும்? அப்பாவும் அம்மாவும் என்னைப் பிடுங்கி எடுப்பது போதாது என்று நீ வேறே கேள்வி கேட்பதற்கு வந்துவிட்டாயா?" என்றாள் தேவகி.

கோபத்திலும் ஆத்திரத்திலும் மரியாதை கூடத் தவறிவிட்டாள்! ஆயினும் அதற்காக அவளைக் குற்றம் சொல்ல என் மனம் இடம் கொடுக்கவில்லை.

இந்தச் சமயத்தில் வீட்டு வாசலில் ஹெட்மாஸ்டரின் குரல் கேட்டது.

"ஏண்டா! இன்னுமா பந்தலைப் பிரித்தாகவில்லை? சீக்கிரம் பிரித்து எறிந்து விட்டுத் தொலையுங்களடா!" என்று பத்மநாப ஐயங்கார் சத்தமிட்டுக் கத்தினார். அது ஹெட்மாஸ்டரின் குரல்தானா? ஆமாம், அவருடைய குரலேதான்! ஹெட்மாஸ்டரின் குரல்தான் அவ்வளவு கர்ணகடூரமாகியிருக்கிறது!

பாவம்! ஹெட்மாஸ்டருக்கு மனதில் எவ்வளவு தாபம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது ஊகிக்கக் கூடியது தானே? அவருக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்றும், என்ன விதமாக ஆறுதல் சொல்லுவது என்றும் யோசித்தேன். யோசித்துக் கொண்டே வீட்டு வாசற்புறம் போக நாலு அடி எடுத்து வைத்தேன். இதற்குள் பத்மநாப ஐயங்கார் உள்ளே வந்து விட்டார். வந்தவர், என்னைப் பார்த்தார். ஐயோ! அந்தப் பார்வை! சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்துத் திரிபுரத்தை எரித்துவிட்டார் என்பதில் எனக்குச் சிறிதும் அதிசயம் கிடையாது! ஆனால் அன்றைக்குத் தேவகியின் தகப்பனார் என்னைப் பார்த்த பார்வை என்னை ஏன் எரிக்கவில்லை என்பதைப் பற்றிய அதிசயந்தான் இன்னமும் எனக்குத் தீரவில்லை.

சற்று நேரம் தீ எழும் கண்களால் என்னைப் பார்த்துக் கொண்டேயிருந்தவர், சட்டென்று நிதானித்துச் சமாளித்துக்கொண்டு, "ஓகோ! நீ வேறு துக்கம் விசாரிக்க வந்து விட்டாயா! சரி! இங்கே வா!' என்று சமிக்ஞையும் காட்டிவிட்டு அவருடைய சொந்த அறைக்குள் நுழைந்தார். உடலெல்லாம் பதற, நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்ள நானும் உள்ளே போனேன். இதற்குள் அவர் நிதானித்துக் கொண்டு விட்டதாகத் தோன்றியது. குரலில் அவ்வளவு கடுமையில்லை; சாவதானமாகத்தான் பேசினார். ஆனால் அவர் கூறிய விஷயம் என்னைக் கதி கலங்க அடித்துவிட்டது.

"கிருஷ்ணசாமி! நான் சொல்வதைச் சரியாக வாங்கிக் கொள். பதில் பேசாதே! இனிமேல் நீ இந்த ஊரில், என்னுடைய பள்ளிக்கூடத்தில், படிக்கச் சௌகரியப்படாது. நியாயமாக உன்னை பள்ளிக்கூடத்திலிருந்து 'டிஸ்மிஸ்' செய்யவேண்டும். அதற்கு வேண்டிய முகாந்தரம் இருக்கிறது. ஆனால் நீ தகப்பனில்லாத ஏழைப் பையன். நீ எப்பேர்ப்பட்ட பெரிய தீங்கு செய்திருந்தபோதிலும் உன்னை அடியோடு கெடுத்துவிட எனக்கு விருப்பமில்லை. நாளைக்குப் பள்ளிக்கூடம் வந்தாயானால் உனக்கு 'டிரான்ஸ்பர் சர்டிபிகேட்' கொடுத்து விடுகிறேன். எப்படியும் இந்த வருஷம் போனது போனதுதான். அடுத்த வருஷத்தில் வேறு எந்த ஊர் ஹைஸ்கூலிலாவது சேர்ந்துபடி, இங்கே செய்ததுபோல் அயோக்கியத்தனம் செய்யாமல், யோக்கியமாக நடந்துகொள்! என்னால் உன்னை மன்னிக்க முடியாது. கடவுளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள். கடவுளின் கருணை எல்லையற்றது. அவர் ஒரு வேளை உன்னை மன்னித்தாலும் மன்னிக்கக் கூடும்!"

மேற்கூறிய வார்த்தைகளை அப்படியே ஹெட்மாஸ்டர் கூறியதாக நான் உறுதி சொல்ல முடியாது. இம்மாதிரி தோரணையில் பேசினார் என்றுதான் சொல்லலாம். ஏற்கெனவே கலக்க முற்றிருந்த என் மனதில் அவர் கூறிய வார்த்தைகள் அவ்வளவு தெளிவாகப் பதியவில்லை. எல்லாம் ஒரே குழப்பமாயிருந்தது. ஆயினும் விஷயம் என்னவென்பது விளங்கிவிட்டது. நான் ஏதோ மன்னிக்க முடியாத பெரிய குற்றம் செய்து விட்டேன். அதனால் அந்த ஊர்ப் பள்ளிக்கூடத்தில் இனி நான் படிக்கமுடியாது. அந்த வருஷம் வேறு ஊர்ப் பள்ளிக்கூடத்தில் போய்ச் சேர்ந்து படிக்கவும் முடியாது. ஒரு வருஷம் போனதுதான்!

படிப்பைப்பற்றி அவ்வளவாக நான் கவலைப் படவில்லை; வாழ்நாளில் ஒரு வருஷம் என்ன பிரமாதம்? ஆனால் ஹெட்மாஸ்டர் என் விஷயத்தில் அவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டதுதான் சொல்ல முடியாத துன்பத்தை அளித்தது. அப்படிப்பட்ட தண்டனை பெறுவதற்கு நான் குற்றம் என்ன செய்தேன்? 'குற்றம் என்ன?' 'குற்றம் என்ன?' என்று என் உடம்பில் உள்ள ஒவ்வொரு அணுவும் துடிதுடித்துக் கேட்டது; ஒவ்வொரு நரம்பும் அலறி அழுது கேட்டது.

தயங்கித் தட்டுத் தடுமாறி என் நாவும், "ஸார்! நான் என்ன குற்றம் செய்தேன்? எதற்காக என்னைப் பள்ளிக்கூடத்திலிருந்து தள்ளுகிறீர்கள்?" என்று கேட்டது.

"அட அயோக்கியா! கேள்வி வேறு கேட்கிறாயா? போ! என் கண் முன் நிற்காமல் போய்த் தொலை! இனி என் முகத்திலேயே விழிக்காதே! இங்கே நின்றாயோ உன்னைக் கொன்று விடுவேன். மேலே ஒரு வார்த்தை பேசினாலும் உன்னை 'டிஸ்மிஸ்' செய்து விடுவேன்! கெட் அவுட்!" என்று ஹெட்மாஸ்டர் கூச்சலிட்டார்.

மேலே நான் அங்கு நின்றால், என்னை அவர் கொல்வது ஒருபுற மிருக்கட்டும்; வரம்பு மீறிய கோபத்தினால் அவருடைய உயிருக்கே ஏதாவது ஆபத்து நேர்ந்துவிடும் என்று தோன்றியது. விம்மிக் கொண்டே அந்த வீட்டிலிருந்து வெளியேறினேன். பந்தலில் இருந்த கீத்துகளை யெல்லாம் இதற்குள் பிரித்துக் கீழே போட்டிருந்தார்கள். கம்புகள் மட்டும் நின்றன. போகிற போக்கில் அந்தக் கம்புகளில் ஒன்றைப் பிடுங்கிக் கிழே தடாரென்று போட்டு விட்டுப் போனேன். வீதியில் நடந்தபோது எட்டுத் திசைகளும் சுழன்றன. சூரியன் இருண்டு பட்டப்பகல் நள்ளிரவாயிற்று. வானம் இடிந்து என் தலையில் விழுந்து அமுக்கி மூச்சுவிட முடியாமல் திணறச் செய்தது. இந்த நிலையில் எப்படியோ தட்டுத் தடுமாறித் தள்ளாடி என்னுடைய அறைக்குப் போய்ச் சேர்ந்தேன்.

7

கழுகுக்கு மூக்கில் வேர்க்கும் என்று ஒரு பழமொழி உண்டு. சமீபத்தில் எங்கேயாவது இரை கிடைப்பதாயிருந்தால் கழுகுக்கு மூக்கில் வேர்க்குமாம்! வைத்திக்கும் சுந்தரத்துக்கும் அப்படியே மூக்கில் வேர்க்கும் போலிருக்கிறது. நான் வந்திருப்பதையும் என்னுடைய மனோ நிலையையும் தெரிந்து கொண்டு அவர்கள் என்னுடைய அறைக்கு வந்து சேர்ந்தார்கள். அவ்வளவாக நான் அவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்வதில்லையென்று சொல்லியிருக்கிறேன். ஆயினும் விஷமிகளுக்கு வெட்கம் ஏது? என்னைத் தேடி வந்து சேர்ந்தார்கள்.

எனக்கு ஏற்பட்டிருந்த துக்கத்தையும் அவர்கள் பேரில் வந்த கோபத்தையும் வெகு பிரயாசைப் பட்டு நான் அடக்கிக் கொண்டேன். கொஞ்சம் நான் பொறுமையாயிருந்தால், தேவகியின் கலியாணம் தடைப்பட்ட காரணத்தை அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம் என்று என்னுடைய உள்ளுணர்ச்சி சொல்லிற்று.

"எங்கே அப்பா வந்தீர்கள்? என்ன விசேஷம்!" என்று கேட்டேன்.

"என்ன விசேஷமா? ஊரெல்லாம் ஒரே அமர்க்களமாயிருக்கிறது; 'என்ன விசேஷம் என்று மெள்ளக் கேட்கிறாயே? ஹெட்மாஸ்டர் பெண்ணின் கலியாணம் நின்று போனது உனக்குத் தெரியாதா?" என்றான் வைத்தியநாதன்.

"அது தெரியாமல் இருக்குமா? தெரியும். அதற்காக நாம் என்னத்தைச் செய்வது?" என்றேன் நான்.

"என்னத்தைச் செய்வதாவது? ஏன்? பேஷாகச் செய்யலாம். நம்மில் யாராவது ஒருவர் தேவகியைக் கலியாணம் செய்து கொள்ளலாம். 'போட்ட பந்தலைப் பிரிக்க வேண்டாம்' என்று ஹெட்மாஸ்டரிடம் சொல்லலாம்" என்றான் சுந்தரம்.

"பேஷான யோசனைதான். இதை நீ ஹெட்மாஸ்டரிடம் சொல்லிப் பார்ப்பதுதானே? என்னிடம் சொல்லி என்ன பிரயோஜனம்?" என்றேன்.

"ஹெட்மாஸ்டரிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் நீ தேவதா விஸ்வாசம் வைத்திருந்தாயே என்று உன்னிடம் சொன்னோம். நீ என்னடா என்றால், ஏனோ தானோ என்று பேசுகிறாய். அது போனால் போகட்டும். கலியாணம் ஏன் நின்றது என்பதைப் பற்றி உனக்குத் தெரிந்திருக்குமே?" என்றான் வைத்தி.

"எனக்குத் தெரியாது, அப்பா, எனக்கு ஒன்றும் தெரியாது."

"சும்மாச் சொல்கிறாய்! உனக்குத் தெரியாமல் இருக்குமா?"

"சத்தியமாய் எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரிந்திருந்தால், சொல்லுங்கள்! கேட்கிறேன்."

"உனக்கே தெரியாது என்றால், எங்களுக்கு எப்படித் தெரியும்? ஆனால் ஊரில் அதைப் பற்றிப் பலவிதமாய்ப் பேசிக் கொள்கிறார்கள்."

"ஊரில் என்ன பேசிக் கொள்கிறார்கள்?"

"சம்பந்தி வீட்டாருக்கு ஏதோ ஒரு மொட்டைக் கடிதம் இந்த ஊரிலிருந்து போனதாகச் சொல்லிக் கொள்கிறார்கள்."

"அப்படி அந்த மொட்டைக் கடிதத்தில் என்ன எழுதியிருந்ததாம். கலியாணம் நின்று போகும்படி?"

"தேவகி வேறொரு பையன் மீது காதல் கொண்டிருப்பதாக அந்தக் கடிதத்தில் எழுதியிருந்ததாம்."

"இது என்ன முட்டாள்தனம்? ஒரு மொட்டைக் கடிதத்தை நம்பியா கலியாணத்தை நிறுத்தி விடுவார்கள்? அந்த சம்பந்திகள் அவ்வளவு முட்டாள்களா?"

"இல்லை, அப்பா! அதில் இன்னொரு சூட்சுமம் இருக்கிறது. அந்த மொட்டைக் கடிதம் கலியாணப் பெண் தேவகி எழுதியது போலவே எழுதியிருந்ததாம். அதில் அந்தப் பெண், தான் காதலிப்பது இன்னார் என்று கூட எழுதியிருந்தாளாம்..."

என் நெஞ்சு இப்போது தடக், தடக் என்று அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. மேலே வைத்தி என்ன சொல்லப் போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ள அவ்வளவு ஆவலாயிருந்தது.

"அப்புறம்?" என்றேன்.

"தேவகி யார் பெயரைக் குறிப்பிட்டிருப்பாள் என்று நீதான் சொல்லேன், பார்க்கலாம்."

"எனக்கு எப்படித் தெரியும்? கடிதத்தை நான் பார்க்கவில்லையே?"

"பார்க்காவிட்டால் என்ன? உனக்குத் தெரியாமலா இருக்கும்?"

"தெரியவே தெரியாது. மொட்டைக் கடிதத்தைப் பற்றிய செய்தியே இப்போது நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்."

"ஆமாம், அப்பா, ஆமாம்! உனக்கு ஒன்றுமே தெரியாது. நீ பால் மணம் மாறாப் பாலகன். நான் கேள்விப்பட்டதைச் சொல்கிறேன். இதற்காக என் பேரில் கோபித்துக் கொள்ளாதே! அந்தக் கடிதத்தில் தேவகி உன்னுடைய பெயரைக் குறிப்பிட்டு உன்னை அவள் காதலிப்பதாக வெட்ட வெளிச்சமாய் எழுதியிருந்தாளாம்!"

"சிவ சிவா! பொய்! சுத்தப் பொய்!" என்றேன் நான். ஆயினும் என் நெஞ்சு ஏன் அப்படி விம்மி மேலெழுந்தது? என் தலைக்குள் ஏன் அவ்வளவு பெரிய அலைகள் குமுறி மோதின?

சுந்தரம் மேலும் கூறினான்:- "இன்னொரு விஷயங்கூட ஊரில் பேசிக் கொள்கிறார்கள், கிட்டா! உனக்குத் தெரிந்திருப்பது நல்லது என்று சொல்கிறேன். உண்மையில் தேவகி அந்தக் கடிதத்தை எழுதவில்லையென்றும், தேவகி எழுதியது போல, அவளுடைய எழுத்தை 'போர்ஜரி' செய்து வேறு யாரோ எழுதிவிட்டார்கள் என்றும் சொல்கிறார்கள்."

"ஐயோ! இது என்ன அநியாயம்? அப்படி யார் செய்திருப்பார்கள்?"

"என்னடா அப்பா, பரமசாதுவைப் போல் பேசுகிறாயே? நீ தான் அந்தப் 'போர்ஜரி'க் கடிதம் எழுதினாய் என்றல்லவா ஊரில் பேச்சாயிருக்கிறது?"

எனக்கு வந்த கோபத்துக்கும் ஆத்திரத்துக்கும் அளவேயில்லை. என் பொறுமை அதன் எல்லைக்கு வந்து விட்டது. கடைசியாக ஒரு பெருமுயற்சி செய்து "வைத்தி! சுந்தரம்! நீங்கள் என்னோடு சண்டை பிடிப்பதற்காக வந்திருக்கிறீர்களா? அப்படியானால் சொல்லிவிடுங்கள். தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவானேன்?" என்று கேட்டேன்.

"சேச்சே! அதெல்லாம் ஒன்றுமில்லை, அப்பா! உன்னோடு சண்டை பிடித்து எங்களுக்கு இப்போது என்ன ஆகவேணும்? இது நல்லவர்களுக்குக் காலம் இல்லை. ஏதோ நீ எங்கள் 'கிளாஸ்-மேட்' ஆயிற்றே, வெளியே பேசிக் கொள்வதை உன் காதிலே போட்டு வைக்கலாம் என்று வந்தால், நீ இப்படிச் 'சண்டைக்கு வந்திருக்கிறீர்களா?' என்று கேட்கிறாய். அழகாய்த்தானிருக்கிறது. நாங்கள் போகிறோம்!" என்று சொல்லிவிட்டு இருவரும் போய்த் தொலைந்தார்கள். அறைக்கு வெளியில் போனதும் அவர்கள் சிரித்துக் கொண்டுபோன சத்தம் என் காதில் விழுந்தது.

8

வைத்தியநாதனும் சுந்தரமும் சேர்ந்து சிரித்த சிரிப்பின் ஒலி என்னை நெருப்பாகத் தகித்தது. அவர்களுடைய சிரிப்பில் இடி விழட்டும் என்று சபித்தேன். என் உள்ளத்தில் அவ்வளவு பேரும் புயலை அவர்கள் உண்டு பண்ணிவிட்டுப் போனார்கள். அவர்கள் கூறியதையெல்லாம் ஒவ்வொன்றாய் எண்ணிப் பார்த்தேன். அவற்றில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கலாம் என்றும் சிந்தித்தேன். மாப்பிள்ளை வீட்டாருக்கு மொட்டைக் கடிதம் போனது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். கலியாணம் தடைப்பட்டதற்கு ஏதேனும் காரணம் இருந்து தீரவேண்டும் அல்லவா?

ஆனால் அந்தக் கடிதம் எழுதியது யாராயிருக்கும்? தேவகியே எழுதினாள் என்பது உண்மையாயிருக்குமா? அதில் என் பெயரைக் குறிப்பிட்டிருந்ததும் நிஜமாயிருக்க முடியுமா? - அதை எண்ணும் போதே எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. ஆனால் கொஞ்சம் நிதானித்து யோசித்து அது உண்மையாயிருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தேன். என்னைப் பற்றித் தேவகி அப்படி எழுதியிருக்கும் பட்சத்தில் சற்று முன்னால் என்னை அம்மாதிரி வரவேற்றிருக்க மாட்டாள். அவ்வளவு அலட்சியமாகவும் வெறுப்பாகவும் பேசியிருக்க மாட்டாள். என்னிடம் அவள் காதல் கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் உண்மையாயிருக்கும் பட்சத்தில், ஹெட்மாஸ்டர் காலிலே விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்ளலாம். தேவகிக்குத் தகுந்த கணவனாவதற்கு நான் பெரும் பிரயத்தனம் செய்வதாக வாக்குறுதி அளிக்கலாம். அவளை நான் மணந்து கொள்வதற்கு அவர் கூறும் எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால் அது உண்மையாயிருக்க முடியாது. தேவகி அத்தகைய கடிதம் எழுதியிருக்க முடியாது. பின், யார் எழுதியிருக்கக்கூடும்? ஏன்? இந்த அயோக்கிய சிகாமணி வைத்தியும் சுந்தரமும் செய்த வேலையாக இருக்கலாம். ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுத்து என்னையும் அவமானப்படுத்தி சந்தி சிரிக்கவைப்பதற்கு அவர்கள் இந்தச் சூழ்ச்சி செய்திருக்கலாம்.

சட்டென்று ஒரு விஷயம் எனக்கு ஞாபகம் வந்தது. தேவகி வியாசங்கள் எழுதிய நோட் புத்தகத்தை ஒரு தடவை நான் என் அறைக்கு எடுத்து வந்திருந்தேன். அவளது வியாசம் ஒன்றைத் திருத்திக் கொடுப்பதற்காகத்தான். அதே சமயத்தில் வைத்தியும் என் அறைக்கு வந்திருந்தான். அந்த நோட் புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ அதைப்பற்றிக் 'கிறுதக்'காகக் கூடக் கேட்டான். அப்புறம் அன்றைக்கு அந்த நோட் புத்தகத்தைக் காணாமல் நான் தேடியதும், அதைப் பற்றிக் கவலைப் பட்டதும், திடீரென்று மறுநாள் அந்த நோட் புத்தகம் என் அறையில் வந்து முளைத்திருந்ததும் ஞாபகத்துக்கு வந்தன. அந்தக் கணத்தில், குற்றவாளி யார் என்பது என் மனத்திற்கு ஐயமற விளங்கிவிட்டது. அந்த அயோக்கியன் வைத்தியினுடைய வேலைதான். இதைப்போய் உடனே ஹெட்மாஸ்டரிடம் சொல்லி என் பேரிலுள்ள சந்தேகத்தையும் தப்பெண்ணத்தையும் போக்கிக் கொள்ளவேண்டும். குற்றவாளி யார் என்பது ருசுவாகிவிட்டால், பிறகு நின்றுபோன கலியாணத்தைத் திரும்பவும் பேசி முடித்து நடத்தி வைப்பது கூடச் சாத்தியமாகலாம் அல்லவா?

இப்படியெல்லாம் ஆகாசக்கோட்டைகளைக் கட்டிக்கொண்டு மறுபடியும் ஹெட்மாஸ்டரின் வீட்டுக்கு விரைந்து சென்றேன். அடடா! அங்கே எனக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றம் காத்திருந்தது?

நான் எவ்வளவோ அன்பும் மதிப்பும் வைத்து என்னுடைய இருதயத்திலே கோயில் கட்டிப் பூசை செய்து வந்த தெய்வமாகிய தேவகி இப்படி என் பேரில் அபாண்டமான பெரும் பழியைப் போடுவாள் என்று நான் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்?

ஆனால் அவள் பேரில் குற்றம் சொல்லுவதிலும் பயனில்லைதான். அவள் என்ன செய்வாள், பாவம்? சந்தர்ப்பங்களின் சேர்க்கை அப்படி அவள் கூட என்பேரில் சந்தேகப்படும்படியாகச் செய்து விட்டது.

நான் ஹெட்மாஸ்டரின் வீட்டுக்குள் புகுந்த போது தேவகி விசித்து அழும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. ஹெட்மாஸ்டர் இரையும் சத்தமும் அவருடைய மனைவி தன் பெண்ணுக்குப் பரிந்து ஏதோ சொல்லும் சத்தமும் கூடக் கேட்டது. இந்தச் சமயத்தில் நான் உள்ளே போய் உண்மையை வெளிப்படுத்தித் தேவகியை அவளுடைய தந்தையின் கோபத்திலிருந்து மீட்க வேண்டும் என்ற ஆசையுடன் தடபுடலாகப் பிரவேசம் செய்தேன். ஆசை அதிகமாகிற பொழுது அறிவு மழுங்கிவிடும் என்பது எவ்வளவு உண்மையான வார்த்தை!

நான் உள்ளே சென்றதும் அந்த மூன்று பேரும் பூசை வேளையில் கரடி புகக் கண்டவர்கள் போல் மிரண்டு விழித்து என்னைப் பார்த்தார்கள்.

ஹெட்மாஸ்டர் என்னைப் பார்த்ததும் ஏதோ சொல்ல வாயெடுத்தவர், பேசவே முடியாதவராய், திறந்த வாய் திறந்தபடி நின்றார்.

மாமியோ கண்ணீர் ததும்பிய கண்களோடு என்னைப் பார்த்தாள். 'பாவம்! இந்தச் சமயத்திலா நீ வந்து சேர வேண்டும்?' என்று மாமியின் கண்கள் கருணையோடு கூறின.

தேவகிதான் முதலில் வாயைத் திறந்து பேசினாள், அடடா! எவ்வளவு கர்ண கடூரமான வார்த்தைகள் அவளுடைய வாயிலிருந்து வெளி வந்தன? தேவகியின் குரலைக் குயிலின் குரலோடும் அவளுடைய பேச்சைக் கிளியின் மழலையோடும் ஒப்பிட்டுப் பார்த்து இறுமாந்திருந்த என்னை அவளுடைய கொடுமையான வார்த்தைகள் எப்படிப் புண்படுத்தி வேதனை செய்தன?

"என்னைப் போட்டு ஏன் பிடுங்கி எடுக்கிறீர்கள், அப்பா! உங்கள் அருமைச் சிஷ்யன் கிச்சாமி, இவன் தான் என்னுடைய வியாச நோட் புத்தகத்தை எடுத்துப் போய்ச் சில நாள் வைத்திருந்தான். இந்தத் தடியன் தான் என்னுடைய எழுத்து மாதிரி எழுதி அந்தப் பொய்க் கடிதம் போட்டிருக்கவேண்டும்!" என்றாள் தேவகி.

அவ்வளவுதான்; ஹெட்மாஸ்டர் ரௌத்ராகாரமடைந்து என்னை நோக்கி நடந்து வந்தார். "அடபாவி! சண்டாளா! என்னுடைய குடியைக் கெடுத்துவிட்டு மறுபடியும் என்ன தைரியமாய் இந்த வீட்டுகுள்ளே நுழைகிறாயடா!" என்று அலறிக்கொண்டே என்னருகில் வந்து என் கழுத்தைப் பிடித்து வேகமாக ஒரு தள்ளுத் தள்ளினார்.

தள்ளிய வேகத்தில் எதிரிலேயிருந்த சுவரிலே போய் முட்டிக் கொண்டேன். ஒரு நிமிஷம் என் பொறி கலங்கிற்று.

"ஐயையோ! உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா, என்ன? அந்தப் பிள்ளை பேரில் உங்கள் கோபத்தைக் காட்டுகிறீர்கள்?" என்று மாமி பரிந்து கூறியது கிணற்றுக்குள்ளிருந்து பேசியதுபோல் என் காதில் விழுந்தது. மாமியின் குரல் கேட்டுக் கொண்டிருக்கும் போதே வீட்டை விட்டு வெளியேறினேன். பிறகு அந்த வீட்டுக்குள் நுழையவே இல்லை.

அன்றிரவே அந்த ஊரை விட்டுக் கிளம்பி விட்டேன். பள்ளிக்கூடத்தில் 'டிரான்ஸ்பர் சர்டிபிகேட்' வாங்குவதற்காகக் கூடத் தாமதிக்கவில்லை. மறுபடி ஹெட்மாஸ்டர் முகத்தில் விழிக்கவே நான் விரும்பவில்லை. அன்றிரவு கிளம்பியவன் தான்; பிறகு அந்த ஊரின் எல்லையைக் கூட இன்று வரையில் நான் மிதிக்கவில்லை. அன்றைய நிகழ்ச்சி, - அன்று எனக்கு நேர்ந்த அதிர்ச்சி, - என்னுடைய வாழ்க்கையின் போக்கையே மாற்றி அமைக்க காரணமாயிருந்தது.

கிராமத்துக்குப் போய் அம்மாவிடம் சொல்லிக் கொண்டு கல்கத்தாவுக்குப் பிரயாணமானேன். கல்கத்தாவில் என்னுடைய தூரத்து உறவினர் ஒருவர் இருந்தார். பெரிய கம்பெனியில் அவர் மானேஜர் உத்தியோகம் பார்த்தார். அவரை அண்டி முதலில் அவருடைய வீட்டில் சமையல் வேலை செய்தேன். பிறகு அவருடைய கம்பெனியில் குமாஸ்தாவானேன். நாளடைவில் பொறுப்புள்ள பெரிய உத்தியோகங்கள் கிடைத்தன. கடைசியில் சென்னையிலேயே மேற்படி கம்பெனியின் கிளை ஆபீஸுக்கு மானேஜரானேன். பணமும் பல வசதிகளும் என்னைத் தேடிக் கொண்டு வந்தன.

பல வருஷ காலம் மணம் செய்து கொள்ளாமலே இருந்தேன். என் முப்பதாவது வயதில் வாழ்க்கையின் தனிமையைப் பொறுக்க முடியாமல் கலியாணம் செய்து கொண்டேன். என்னுடைய இல்வாழ்க்கையைப் பற்றிக் குறை ஒன்றும் சொல்வதற்கில்லை. நம் நாட்டில் பெரும்பாலோருடைய இல்வாழ்க்கையைப் போல் என் குடும்ப வாழ்க்கையும் லோகாபிராமமாக நடந்து வருகிறது.

எப்போதாவது சில சமயங்களில், ஹெட்மாஸ்டர் பெண் தேவகியைப் பற்றி நான் நினைத்துக் கொள்வதுண்டு. அவளை மணந்திருந்தால் என்னுடைய வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமயமாயிருந்திருக்கும் என்று அசட்டுக் கனவுகள் காண்பதுண்டு. அப்பொழுதெல்லாம், கடைசிச் சந்திப்பில் அவள் என்பேரில் சுமத்திய அநியாயப் பழியை நினைந்து அவள் பேரில் வெறுப்பை வேண்டுமென்று வருவித்துக் கொள்வேன். ஆயினும், அது என்ன அதிசயமோ, தெரியவில்லை! எவ்வளவு முயன்றாலும் தேவகியைப் பற்றி வெறுப்பாக என்னால் நினைக்க முடிவதில்லை. அவள் எங்கே இருக்கிறாளோ, அவளுடைய வாழ்க்கையின் சுக துக்கங்கள் எப்படியோ, - என்று நினைக்கும் போது ஒரு தனிப்பட்ட அநுதாப உணர்ச்சி ஏற்படும். தேவகியைப் பற்றிய சிந்தனையில் நான் ஆழ்ந்திருக்கும்போது யாராவது ஏதாவது கேட்டால் என் காதிலேயே ஏறாது. சுய ஞாபகம் வந்ததும் "என்ன சொன்னீர்கள்? ஏதோ ஞாபகமாய் இருந்துவிட்டேன்!" என்பேன்.

பொருட் காட்சி மைதானத்தில் தேவகியைத் திடீரென்று பார்த்ததிலிருந்து அவள் விஷயமான அநுதாப உணர்ச்சி ஒன்றுக்கு நூறு மடங்காயிற்று. அவளுடைய தோற்றத்தையும் ஆடை ஆபரணங்களையும் பார்த்தால் அவ்வளவு செழிப்பான நிலையில் அவள் இருக்கக்கூடும் என்று தோன்றவில்லை. குழந்தைகளைப் பார்த்தாலும் அப்படியேதானிருந்தது. பாவம்! என்ன கஷ்டப் படுகிறாளோ, என்னமோ? அவளுக்கு நான் ஏதேனும் உதவி செய்வது சாத்தியமானால், அதைக் காட்டிலும் எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றுமே இராது.

அது மட்டுமல்ல; தேவகியும் அவளுடைய தந்தையும் என்பேரில் கொண்ட சந்தேகம் ஆதாரமற்றது என்பதை எப்படியேனும் நிரூபிக்க வேண்டும். அப்படி என் பேரில் அவர்கள் அநியாயப் பழி சுமத்தியதற்காக வெட்கப்படும்படியும் செய்ய வேண்டும்! - இந்த ஒரு காரியம் நிறைவேறினால் பிறகு என் வாழ்க்கையில் குறைபடுவதற்கே இடம் ஒன்றுமிராது. அது நிறைவேறுகிற வரையில் என் உள்ளத்தில் குறையும் வேதனையும் இருந்து கொண்டுதானிருக்கும்.

ஹெட்மாஸ்டர் பத்மநாப அய்யங்காரும், அவளுடைய உத்தம பத்தினியான ரங்கநாயகி அம்மாளும் உயிரோடு சௌக்கியமாயிருக்கிறார்களா? அதைக்கூடத் தேவகியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் போய்விட்டேனே? என்றாலும், பாதாகமில்லை; எல்லாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை காலையில் தெரிந்து போகிறது!

9

ஞாயிற்றுக் கிழமை பொழுது விடிந்தது. காலையில் நான் விழித்து எழுந்ததும் என் மனதில் உண்டான முதல் நினைவு, அன்றைக்குத் தேவகியின் வீட்டுக்குப் போக வேண்டும் என்பதுதான்.

பொழுது விடிந்தவுடனேயே, காரை எடுத்துக் கொண்டு தேவகியின் வீட்டுக்குப் போக வேண்டும் என்று தோன்றியது. அந்த எண்ணத்தைப் பலவந்தமாகக் கட்டுப்படுத்திக் கொண்டேன். அவ்வளவு சீக்கிரமாகப் போனால், யாராவது சிரிப்பார்கள். மேலும் அப்போது பனிக்காலம். காலை ஏழு மணிவரையில் மூடுபனி கொட்டிக் கொண்டிருந்தது. சில வீடுகளில் அதற்குள் எழுதிருக்கக் கூட மாட்டார்கள். அதிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் நிச்சயமாக நேரங்கழித்தே எழுந்திருப்பார்கள். காலை எட்டு மணி வரையில் பனியின் சிலு சிலுப்பு இருந்தது. பொழுது விடிந்து எழுந்திருந்து காலைக் கடன்களை முடித்துக் காப்பி சாப்பிட அவகாசம் கொடுக்க வேண்டுமல்லவா?

கடைசியாக, எட்டரை மணிக்குப் புறப்பட்டேன். தேவகி கொடுத்திருந்த விலாசம் சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு சந்து. அந்தச் சந்தைக் கண்டு பிடித்து, வீட்டு நம்பரையும் கண்டு பிடிப்பதற்குள், மணி ஒன்பது ஆகிவிட்டது. ஆனால் நான் எண்ணியது போல் வீடு அவ்வளவு மோசமாயில்லை. அது ஒரு மச்சு வீடு. கீழ்க் கட்டிலும் மேன் மாடியிலும் பல அறைகள் உள்ள விசாலமான வீடு.

காரைக் கொண்டு போய் நிறுத்தியதும் யாராவது வீட்டுக்குள்ளிருந்து வந்து விசாரிப்பார்கள் என்று நினைத்தேன். யாரும் வெளியே வருகிற வழியாக இல்லை. வீட்டு வாசலில் படிகட்டில் நின்று, "ஸார்! ஸார்!" என்றேன். கீழ்க்கட்டிலிருந்து பதில் ஒன்றும் வரவில்லை. மேலேயிருந்து, ஒரு கடுமையான புருஷக் குரல், "யார் அங்கே?" என்று சத்தமிட்டது. ஒரு விநாடி "இது என்ன வம்பு? ஒரு வேளை விலாசம் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் வேறு யார் வீட்டுக்காவது வந்து விட்டோ மா?" என்று நினைத்தேன்.

வாசற் படிக்கட்டிலிருந்து வீதியில் இறங்கி அண்ணாந்து பார்த்தேன். மேல் மாடி அறையின் ஜன்னல் கதவை யாரோ படீர் என்று சாத்தினார்கள்.

மேல் கட்டில் வேறு யாராவது குடியிருக்கலாம் என்று எண்ணிக் கொண்டு மறுபடியும் வாசற்படி ஏறிக் கதவண்டையில் வந்து "ஸார்! ஸார்!" என்றேன். அதற்கும் பதில் இல்லாமற் போகவே, தைரியத்தைக் கையில் பிடித்துக் கொண்டு, கதவை இரண்டு தட்டி "தேவகி! தேவகி!" என்றேன். பிறகு, பாதி சாத்தியிருந்த கதவைத் திறந்தேன்.

உள்ளே முற்றத்தில் கொட்டிக் கொண்டிருந்த தண்ணீர்க் குழாயண்டை ஒரு வேலைக்காரி பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தாள். ஒரு குழந்தை குழாயண்டை நின்று குழாயிலிருந்த தண்ணீரில் கையை வைத்து விசிறி அடித்துக் கொண்டிருந்தது.

அந்தக் குழந்தையைப் பார்த்ததும் என் மனம் நிம்மதியடைந்தது. அந்தக் குழந்தை பொருட் காட்சி மைதானத்தில் தேவகியுடன் நான் பார்த்த குழந்தைதான். ஆகவே, இது தேவகியின் வீடு என்பதில் சந்தேகமில்லை. ஒரு வேளை உள்ளே சமையற்கட்டில் தேவகி இருக்கலாம். குழாயிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டேயிருப்பதால் நான் மெதுவாய்க் கூப்பிட்டது காதில் விழவில்லை போலும்.

என்னுடைய இரண்டு கையையும் பலமாகத் தட்டவே வேலைக்காரி நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். கையை அலம்பிவிட்டு ஏதோ முணுமுணுத்துக் கொண்டே என் அருகில் வந்தாள். "என்னாங்க, சாமி!" என்றாள்.

"தேவகி அம்மாளைப் பார்ப்பதற்காக வந்தேன். அந்த அம்மாளின் வீடு இதுதானே?" என்றேன்.

"அம்மா அடுத்த வீதிக்குப் போயிருக்காங்க. ஒரு சிநேகிதி அம்மாளின் குழந்தைக்கு ஆண்டு நிறைவுக் கலியாணம். அதற்காகப் போயிருக்காங்க!" என்றாள் வேலைக்காரி.

"எப்போது திரும்பி வருவார்கள்?"

"தெரியாதுங்க. அனேகமாக இப்பவே வந்தாலும் வந்துடுவாங்க!"

இதென்ன தொந்தரவு என்று நினைத்துக் கொண்டு, "வீட்டிலே வேறு யாருமில்லையா! அந்த அம்மாளின் புருஷர்?..." என்றேன்.

வேலைக்காரி கொஞ்சம் திகைத்து நின்றுவிட்டு, "அவங்க வெளியூருக்குப் போயிருக்காங்க! இன்னும் திரும்பி வரவில்லைங்க!" என்றாள்.

அவளுடைய திகைப்பின் காரணம் அப்போது எனக்குப் புரியவில்லை. பிற்பாடு தெரிந்தது.

"தேவகி அம்மாளின் தகப்பனார் பத்மநாப ஐயங்கார் இருக்காரா?" என்று கேட்டேன்.

"அவரு இருக்காரு! அதோ அந்தக் காமரா அறையிலே எட்டிப் பாருங்க!" என்று சொல்லிவிட்டு வேலைக்காரி தன்னுடைய வேலையைப் பார்ப்பதற்குப் போய் விட்டாள்.

வேலைக்காரி சுட்டிக் காட்டிய அறையின் கதவு சாத்தியிருந்தது. சற்று நேரம் உட்கார்ந்திருக்கலாம் என்றால் ஒரு பெஞ்சியா, நாற்காலியா ஒன்றும் கிடையாது. மேலும், அந்த வேலைக்காரி காமரா உள்ளுக்குள் எட்டிப் பார்க்கச் சொன்னதின் அர்த்தம் என்ன?

அந்த அறை ஜன்னலின் கீழ்ப்பாதிக் கதவுகள் சாத்தியிருந்தன. அருகில் சென்று மேற்பகுதி வழியாக எட்டிப் பார்த்தேன். உள்ளே நான் பார்த்த காட்சி ஒரு நிமிஷம் என்னைப் பிரமிக்கும்படி செய்து விட்டது.

ஒரு வயதான மனிதர் அந்த அறையின் சுவர் ஓரமாகத் தலைகீழாக நின்று கொண்டிருந்தார். அவருடைய தலையை ஒரு தலையணையில் வைத்துக் கொண்டிருந்தார். கால்களைச் சுவர் மீது சாத்தியிருந்தார். மிகவும் சங்கடப்பட்டுக் கொண்டு நின்றார் என்பது தெளிவாயிருந்தது. ஆனால் அவருடைய முகம் எனக்குத் தெரியவில்லை. எனினும் அவர் ஹெட்மாஸ்டர் பத்மநாப ஐயங்காராக இருக்கலாம் என்று தோன்றியது. முகத்தைப் பார்த்தால் நிச்சயமாய்ச் சொல்லி விடலாம்.

ஆயினும் தலைகீழாக நின்று கொண்டிருக்கிறவரிடம் எப்படிப் பேசுவது? ஜன்னல் ஓரமாகவே நின்று காத்துக் கொண்டிருந்தேன்.

ஒரு நிமிஷத்துக்கெல்லாம் அந்த மனிதரின் கால்கள் கீழே வந்தன. அவர் எழுந்து நின்றார். அறைக்குள் மங்கலான வெளிச்சமே யிருந்த போதிலும் அவர் பத்மநாப ஐயங்கார் தான் என்பது தெரிந்துவிட்டது.

இதுதான் சமயம் என்று "ஸார்! ஸார்!" என்றேன்.

ஐயங்கார் என் பக்கம் சட்டென்று திரும்பிப் பார்த்துக் கடுகடுப்பான முகத்துடன் "யார் அது, சுத்த நியூஸென்ஸ்! இந்த வீட்டில் ஒரு நிமிஷமாவது 'பிரைவஸி' என்பதே கிடையாது!" என்றார்.

"மன்னிக்கவேண்டும் ஸார்! நான் தான் உங்கள் பழைய மாணாக்கன் கிச்சாமி! என்னை ஞாபகம் இல்லையா?" என்றேன்.

உடனே ஹெட்மாஸ்டரின் முகம் மலர்ந்தது. "அடே டேடேடே! நம்ம தண்டாங்கோரை கிச்சாமியா? வா! வா! தேவகி கூடச் சொன்னாள், நீ வருவாய் என்று. நான் தான் மறந்துவிட்டேன். வா! உள்ளே வா!" என்று சொல்லிக் கொண்டே வந்து அறையின் கதவைத் திறந்தார். உள்ளே போனதும் தானும் உட்கார்ந்து என்னையும் ஒரு நாற்காலியில் உட்காரச் சொன்னார்.

மூக்குக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு என்னை நன்றாய் உற்றுப் பார்த்து விட்டு, "ஆமாம், நீ கிச்சாமிதான்! ஆனால் எப்படி மாறிப் போயிருக்கிறாய்? ஷர்ட்டு, கோட்டு, கையிலே ரிஸ்ட்வாச்சு, பையிலே பார்க்கர் பேனா எல்லாம் பிரமாதமாயிருக்கிறதே; வாசலில் நிற்கிற கார் கூட உன்னுடையது தானாக்கும்! ஜோரான ஸ்டூடி பேக்கர் கார் அல்லவா? தேவகி சொன்னது சரிதான். நல்ல பணம் சம்பாதிச்சுட்டே போலிருக்கிறது. எல்லாம் பெருமாளுடைய அருள். ரொம்ப சந்தோஷம். ஆனாலும் எப்படி மாறிப் போயிருக்கிறாய்? என்னுடைய 'ஸ்டூடண்ட்' கிச்சாமி நீதான் என்று நம்புவதே கஷ்டமாய்த் தானிருக்கிறது. இப்போது எங்கே இருக்கே? என்ன செய்யறே? எல்லாம் சவிஸ்தாரமாய்ச் சொல்லு பார்க்கலாம்?" என்றார்.

"பிஸினஸ் செய்து கொண்டிருக்கிறேன், ஸார்! ஏதோ உங்கள் ஆசீர்வாதத்தினாலே இது வரை எல்லாம் சௌக்கியமாகவே இருந்து வருகிறது. தியாகராஜ நகரிலே வசித்து வருகிறேன். தாங்கள் இங்கே வந்து ரொம்ப வருஷம் ஆகிவிட்டதோ?"

"ஏன்? ரிடையர் ஆனதிலிருந்து இங்கேதான் இருந்து வருகிறேன். வேறு எங்கே போகிறது? இது என் பிதிரார்ஜித வீடு."

"அப்படியா? ரொம்ப சந்தோஷம்! உங்களை நான் பார்த்துக் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருஷம் இருக்குமே? ஆனால் உங்களுடைய தோற்றத்தில் மட்டும் மாறுதலே இல்லை. அன்று மாதிரியே இன்றைக்கும் இருக்கிறீர்கள், ஸார்!"

"நீ சொல்கிறது உண்மை. வயது எனக்கு இப்போது 75 ஆகிறது. ஆனால் நான் இதைச் சொன்னால் ஒருவரும் நம்புவதில்லை. எல்லாரும் அறுபது வயதுதான் மதிப்பிடுகிறார்கள். எதனாலே இப்படி இருக்கேன் தெரியுமா! எல்லாம் யோகாசனத்தின் மகிமைதான். நீ வருகிறபோது கூட ஆஸனந்தான் செய்து கொண்டிருந்தேன். நீ வேணுமானால் பாரு! நான் நூறு வயது இருக்கப் போகிறேன். நான் சுரம் தலைவலி என்று படுத்து இன்றைக்கு வருஷம் பதினைந்து ஆகப்போகிறது."

"எந்த வருஷத்திலே, ஸார், நீங்கள் ரிடையர் ஆனீர்கள்? ரிடையர் ஆனவரையில் தண்டாங்கோரையில் தான் ஹெட்மாஸ்டராயிருந்தீர்களா!"

"ஆமாம், கிட்டா, ஆமாம்! வேறு எங்கே நான் போகிறது? தண்டாங்கோரையிலே அந்த நாட்களை நினைத்தாலே எனக்குச் சந்தோஷமாயிருக்கிறது. அதுவும் நீங்கள் எல்லாம் படித்துக் கொண்டிருந்த போது, எப்பேர்ப்பட்ட நல்ல ஸெட்? நீங்கள் எவ்வளவு சிரத்தையாய்ப் படித்தீர்கள்! உபாத்தியாயர்களிடம் எவ்வளவு மரியாதையாயிருந்தீர்கள்! - இந்தக் காலத்துப் பிள்ளைகள் அடியோடு கெட்டுப் போய் விட்டார்கள்! படிக்கிறதில்லை, பரீட்சைப் பேப்பரைத் திருடப்பார்க்கிறது; அப்படித் திருடிப் பரீட்சைப் பேப்பர் முழுதும் தெரிந்திருந்தாலும், பரீட்சையிலே சரியாகப் பதில் எழுதி மார்க் வாங்க முடிகிறதில்லை! இந்தக் காலத்து மாணாக்கர்கள் ரொம்ப ரொம்ப மட்டமானவர்கள். அடாடா! நீங்கள் எல்லாம் படித்தபோது எவ்வளவு நன்றாயிருந்தது? அப்போது வகுப்புகளுக்கு வருவதே ஒரு சந்தோஷம்!"

"எனக்குக் கூட அந்த நாட்களை நினைத்துப் பார்த்தால் எவ்வளவோ சந்தோஷமாயிருக்கிறது, ஸார்! உங்களிடம் படித்த பிறகு வேறு யாரிடமும் படிக்க நான் இஷ்டப்படவில்லை."

"ஆமாம், ஆமாம்! நீ டிரான்ஸ்பர் சர்டிபிகேட் வாங்கிக் கொள்ளக் கூட வரவில்லை பாவம்! உன்னை வீணாக..."

"அதனால் என்ன, ஸார்! ஒன்றும் குறைவில்லை. அப்படியே படிப்பை விட்டு விட்டுப் போய் 'பிஸினஸ்' துறையில் சேர்ந்ததினாலேதான் இன்றைக்கு நான் நன்றாயிருக்கிறேன். என்னுடைய ஆபீஸில் எனக்குக் கீழே முப்பது 'கிராஜுவேட்'டுகள் குமாஸ்தா வேலை பார்க்கிறார்கள், ஸார்!"

"ரொம்ப சந்தோஷம். நான் ஆதியிலிருந்து என் கீழ் படித்த மாணாக்கர்களுக்கெல்லாம் இதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தேன். 'உத்தியோகம் உத்தியோகம் என்று ஆலாய்ப் பறக்காதீர்கள்! ஏதாவது வியாபாரம், கைத்தொழில், பாங்கிங்க், - இப்படிப் பார்த்துப் புகுந்து கொள்ளுங்கள்' என்று படித்துப் படித்துச் சொல்வேன். நீ ஒருவனாவது என்னுடைய வார்த்தையை மதித்து நடந்து இந்த மாதிரி நல்ல நிலைமைக்கு வந்திருக்கிறாயே, அதைப் பற்றி எனக்கு எவ்வளவோ சந்தோஷமாயிருக்கிறது. ஆனால், பாவம், உன் மாமிதான் கண்ணை மூடி விட்டாள். என்னைப் பரிதவிக்க விட்டுப் போய்விட்டாள். இன்றைய தினம் அவள் உயிரோடிருந்து நீ 'ஜம்' என்று 'ஸ்டூடி பேக்கர்' காரில் வந்து இறங்கியதைப் பார்த்திருந்தால் அப்படியே பூரித்துப் போயிருப்பாள். அவளுக்கு உன் பேரில் அலாதியான பிரியம். எத்தனையோ மாணாக்கர்கள் என்னிடம் படித்திருக்கிறார்கள். அவளிடமும் பக்தியுடன் பழகியிருக்கிறார்கள். ஆனால் உன்னிடம் அவளுக்கு ஏற்பட்ட பாசத்தைப் போல் வேறு யாரிடமும் ஏற்படவில்லை. தண்டாங்கோரையில் புதுக் குடித்தனம் போட்ட போது நீ செய்த உதவிகளைப் பற்றி அவள் சொல்லாத நாள் கிடையாது. என்னிடம் கூட அவளுக்கு ரொம்பக் கோபம். உன் பேரில் நான் அநியாயமாய்ப் பழி போட்டுத் துரத்திவிட்டேன் என்று. ஆனால் அந்த நிலைமையில் நான் என்ன செய்திருக்க முடியும், கிச்சா! நீயே சொல்லு!"

"ஆமாம், ஸார்! நீங்கள் என்ன செய்திருக்க முடியும்?" என்றேன் நான். ரங்கநாயகி அம்மாள் காலமாகி விட்டாள் என்னும் செய்தி என்னைத் துயரத்தில் ஆழ்த்திவிட்டது. மாமி கடைசி வரை என்னை நினைவு வைத்துக் கொண்டிருந்தாள் என்பது என் மனதை உருக்கி விட்டது.

இதே சமயத்தில் வாசலில் கலகலவென்று பேச்சுக் குரல் கேட்டது. அடுத்த நிமிஷம் தேவகி தன்னுடைய மூத்த குழந்தைகள் இருவருடனும் வீட்டுக்குள்ளே வந்தாள்.

என்னைப் பார்த்ததும், "ஓகோ! கிட்டாவா? வாசலில் நிற்கும் மோட்டார் கார் உங்களுடையது தானா? யாருடையதோ என்று பார்த்தேன். நீங்கள் இன்றைக்கு வருகிறதாகச் சொன்னதையே மறந்து போய் விட்டேன். நல்லவேளை! ஆண்டு நிறைவு நடந்த வீட்டில் சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும் என்று வற்புத்தியும் தட்டிக் கழித்து விட்டு வந்தேனே? அதுவே நலதாய்ப் போயிற்று!" என்றாள்.

ஸ்திரீகளின் சபல சித்தத்தைப் பற்றி என்னவென்று சொல்வது? இன்றைக்கு என்னை அவள் தான் வரும்படி சொன்னாள். ஆனால் நானே வருகிறேன் என்று சொன்னதாக இப்போது சொல்கிறாள். அது மட்டுமல்லாமல், என்னை வரச் சொல்லிவிட்டு, அதை அடியோடு மறந்தும் போய் விட்டாள்! நானோ மூன்று நாலு நாளாய்க் கனவிலே கூட அதே நினைவாயிருந்தேன். நன்றாயிருக்கிறதல்லவா, கதை?

10

தேவகி உள்ளே வந்து உட்கார்ந்ததும் ஹெட்மாஸ்டர் "பார்த்தாயா, தேவகி? நம்ம தண்டாங்கோரை கிச்சாமி எப்படி ஜோராய் 'ஸ்டூடி பேக்கர்' கார் வைத்துக் கொண்டு இருக்கிறான், பார்த்தாயா? சற்றே நீ இவனுடன் பேசிக் கொண்டிரு. நான் ஸ்நானம் செய்து விட்டு வந்து விடுகிறேன்" என்று சொல்லிப் போனார்.

தேவகி தன் குழந்தைகளை ஒவ்வொருவராய்க் கூப்பிட்டு, "இதோ உங்கள் சித்தியா வந்திருக்கிறார். நமஸ்காரம் பண்ணு!" என்றாள். (வைஷ்ணவர்கள் சித்தப்பாவைச் 'சித்தியா' என்று சொல்வது வழக்கம்.) "இவர் எங்கள் சித்தியாவா? இத்தனை நாள் எங்களை ஏன் வந்து இவர் பார்க்கவில்லை?" என்றது ஒரு குழந்தை. அதற்கு, "இப்போதுதான் உங்கள் சித்தியாவுக்கு தயவு வந்திருக்கிறது. அதற்கு நான் என்ன செய்கிறது?" என்றாள் தேவகி. இதற்குப் பதில் சொல்லவே எனக்குத் தெரியவில்லை.

குழந்தைகள் நமஸ்காரம் செய்துவிட்டு அவரவர்களும் கையில் ஒரு புஸ்தகத்தை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள்.

"அந்த நாளில் நீ படிப்பிலே கெட்டிகாரியாக இருந்தது போலவே உன் குழந்தைகளும் இருக்கிறார்கள்" என்றேன் நான்.

"போதும், போதும். நான் படித்த இலட்சணத்தை நீங்கள் தான் மெச்ச வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைக்கே போகாமல் படிப்பை நிறுத்திவிட்டேன். ஆனால் அது உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்கள் தான் திடீரென்று ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல், சர்டிபிகேட்' கூட வாங்கிக் கொள்ளாமல், மாயமாய்ப் போய் விட்டீர்களே?" என்றாள்.

இவ்வளவு சீக்கிரத்தில் அந்த விஷயத்தைப் பற்றிப் பேச எனக்கு இஷ்டமில்லை. கடைசியில் தேவகியிடம் விடை பெற்றுக்கொண்டு போகும்போது அந்த 'போர்ஜரி' கடிதத்தின் உண்மை வெளியாயிற்றா என்று கேட்க நினைத்தேன். ஆரம்பத்திலிருந்து அதைப் பற்றிக் கேட்டுப் பேச்சை விரஸமாக்குவானேன்?

ஆகையால், பேச்சை வேறு பக்கம் திரும்ப விரும்பி, "தேவகி! உன் தாயார் காலமாகி விட்டாளாமே? இப்போதுதான் ஹெட்மாஸ்டர் சொன்னார்!" என்றேன்.

உடனே தேவகி கடல் மடை திறந்ததுபோல் தன் தாயாரைப் பற்றிப் பேச ஆரம்பித்தாள். அன்னையின் அருமை பெருமைகளைப் பற்றியும் அற்புத குணங்களைப் பற்றியும் வர்ணித்துக் கொண்டேயிருந்தாள். எனக்கும் மாமியைப் பற்றிக் கேட்கப் பிரியமாயிருந்தது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் இங்கே சொல்லிக் கதையை வளர்த்த நான் விரும்பவில்லை. மேலே விஷயத்துக்குப் போகிறேன்.

திடீரென்று தேவகி, "அம்மாவைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் எனக்கு நேரம் போவதே தெரிவதில்லை. இனிமேல்தான் அடுப்பு மூட்டித் தளிகை செய்தாக வேண்டும். நான் போகட்டுமா? அப்பா சீக்கிரம் வந்து விடுவார்!" என்றாள்.

"எனக்கும் போக வேண்டியதுதான். நேரமாயிற்று. ஆனால் உன் புருஷனைப் பற்றி நீ ஒன்றும் சொல்லவில்லையே, தேவகி! அவரைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என்றுதான் நான் முக்கியமாக வந்தேன். அவர் வீட்டில் இப்போது இல்லையா? ஒரு வேளை ஊரிலேயே இல்லையா?" என்று கேட்டேன்.

தேவகி அந்தப் பழைய நாட்களில் சில சமயம் திடீரென்று சிந்தனையில் ஆழ்ந்து பேசாமலிருப்பாள் என்று சொன்னேன் அல்லவா? அந்தமாதிரி இப்போதும் இருந்தாள். திடீரென்று அவளுடைய பிராயத்தில் இருபது வயது குறைந்து பழைய கன்னிப் பெண் தேவகியாக மாறிவிட்டதாகவே தோன்றியது. யோசனையில் ஆழ்ந்திருந்த அந்த நிமிஷத்தில் அவளுடைய முகபாவம் அப்படியிருந்தது.

"தேவகி! இருபத்தைந்து வருஷத்தில் நீ கொஞ்சம் கூட மாறவில்லை" என்று நான் சொன்னதும், அவள் திடுக்கிட்டுப் பகற் கனவிலிருந்து விழித்துக் கொண்டவாளாய், "என்ன கேட்டீர்கள்?" என்றாள்.

"உன்னுடைய புருஷரைப் பற்றித்தான் கேட்டேன்; அவரைப் பார்க்க முடியாதா?" என்றேன்.

தேவகி சிறிது நேரம் உச்சிமோட்டைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, "ஆம், அவரைப் பார்க்க முடியாது. அது பெரிய கதை. இப்போதே சொல்ல வேண்டுமா?" என்றாள்.

11

தேவகி தன்னுடைய கணவனைப் பற்றி "இப்போதே சொல்லத்தான் வேண்டுமா?" என்று கேட்டபோது, அவளுடைய குரலில் எல்லையில்லாச் சோகம் தொனித்தது. நான் எதிர்பார்த்தபடியே அவளுடைய இல்லற வாழ்க்கை துர்ப்பாக்கிய வாழ்க்கைதான் போலும்!

என் இருதயம் கனிந்து உருகிற்று. கண்ணில் கண்ணீர் வந்துவிடும் போலிருந்தது. ஒருவாறு சமாளித்துக் கொண்டு, "உனக்கு அது கஷ்டம் தருவதாயிருந்தால், இப்போது சொல்ல வேண்டாம். இன்னொரு சமயம் பார்த்துக் கொள்ளலாம்!" என்றேன்.

"இல்லை, இல்லை! அதை இப்போதே சொல்லி விடுவதுதான் நல்லது. அந்த விஷயம் ஒன்று மனதில் பாரமாய் இருப்பானேன்?" என்று தேவகி சொல்லிவிட்டுத் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை ஒருவாறு கூறினாள். அதன் சுருக்கம் வருமாறு:-

தேவகிக்கு முதலில் நிச்சயிக்கப்பட்ட கலியாணம் நின்று போன மூன்று வருஷத்துக்குப் பிறகு வேறு வரனுக்குக் கலியாணம் ஆயிற்று. கலியாணம் ஆனதும் குடும்பம் சென்னைக்குக் வந்து விட்டது. தேவகியின் கணவன் வைத்தியக் கல்வி படித்துத் தேறி டாக்டர் ஆனான். ஹைதராபாத் சமஸ்தானத்தில் டாக்டர்களுக்கு நல்ல வருமானம் என்று கேள்விப்பட்டு இருவரும் அங்கே போனார்கள். எதிர்பார்த்த படியே அங்கு நல்ல வருமானமும் வந்தது. பல வருஷ காலம் அவர்களுடைய இல்லற வாழ்க்கை சந்தோஷமாக நடந்து வந்தது.

பிறகு, ஹைதராபாத்துக்குச் சனியன் பிடித்தது! ரஸாக்கியர்களின் கொடூர ஆட்சி அந்த நவாப் சமஸ்தானத்தில் ஏற்பட்டது. அத்துடன் கம்யூனிஸ்டுகளின் தொல்லையும் சேர்ந்து கொண்டது. ஹைதராபாத்தில் வசித்த ஜனங்கள் எல்லாரையும் போல் தேவகியும் அவள் குடும்பத்தாரும் எப்போதும் என்ன ஆபத்து நேருமோ என்று கதிகலங்கிக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார்கள்.

ஒருநாள் இரவு பத்து மணிக்கு யாரோ சிலர் அவர்களுடைய வீட்டு வாசலுக்கு வந்து தடதடவென்று கதவை இடித்தார்கள். கதவைத் திறந்ததும் கறுப்பு முகமூடி அணிந்த ஐந்தாறு தடியர்கள் வீட்டுக்குள் புகுந்தார்கள். டாக்டரை அவருடைய மருந்துப் பெட்டியையும், மற்ற அவசியமான கருவிகளையும் எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். 'ஏதோ வைத்தியத்துக்குத் தானே கூப்பிடுகிறார்கள்?' என்று எண்ணி டாக்டர் அவர்களுடன் சென்றார். வாசலில் போலீஸ் வண்டியைப் போன்ற கூண்டு மோட்டார் வண்டி ஒன்று நின்றது. அதில் டாக்டரை ஏற்றி அழைத்துப் போனார்கள். அன்றைக்குப் போனவர் அப்புறம் திரும்பி வரவேயில்லை. எவ்வளவோ பிரயத்தனம் செய்தும் அவர் இருக்குமிடத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை. தேவகி தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து தன் தந்தையின் வீட்டில் தஞ்சம் புகுந்தாள். அது முதல் அப்பாவின் ஆதரவில் இருந்து வருகிறாள். எவ்வளவோ பத்திரிகைகளில் விளம்பரம் செய்து பார்த்தும், ஹைதராபாத் சர்க்காருக்கு மனுப் போட்டுப் பார்த்தும், தேவகியின் கணவனைப் பற்றி நாளது வரையில் தகவல் ஒன்றும் தெரியவில்லை!

இந்தத் துயரமான, பீதிகரமான வரலாற்றைத் தேவகி சொல்லிவிட்டு, கண்களில் துளித்த கண்ணீரைப் புடவைத் தலைப்பினால் துடைத்துக் கொண்டு "நான் வீட்டு வேலையைப் பார்க்கப் போகட்டுமா? இன்னும் சொல்ல வேண்டியது, பேச வேண்டியது எவ்வளவோ இருக்கிறது! இன்னொரு நாள் சொல்கிறேன்" என்றாள்.

அவள் போவதற்காக எழுந்து நின்றதும் எனக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

"தேவகி! என்னிடம் நீ கொஞ்சம் கூடச் சங்கோசப் படக்கூடாது. உனக்கு ஏதாவது எப்போதாவது என்னால் ஆகக்கூடிய உதவியிருந்தால் உடனே சொல்ல வேண்டும். அப்படி உனக்கு உதவி செய்யக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தால் அதைப் பெரும் பாக்கியமாகக் கருதுவேன்" என்றேன்.

தேவகி சில கண நேரம் யோசனை செய்துவிட்டு, "ஆமாம்; நானே ஒரு உதவி உங்களைக் கேட்கலாமென்றுதானிருந்தேன். நாளை மாலை இன்னொரு தடவை பொருட்காட்சிக்குப் போகவேண்டும் என்று குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள். பஸ்ஸில் இவர்களை அழைத்துக் கொண்டு போய் வருவது ரொம்பவும் கஷ்டமாயிருக்கிறது. உங்களிடம் தான் பெரிய மோட்டார் வண்டி இருக்கிறதே! நாளை சாயங்காலம் சுமார் நாலு மணிக்கு வந்து எங்களைப் பொருட்காட்சிக்கு அழைத்துப் போக முடியுமா?" என்று கேட்டான்.

"இது என்ன பிரமாதம்? பேஷாக வந்து அழைத்துப் போகிறேன்!" என்று உற்சாகத்துடன் சொன்னேன்.

தேவகி சமையல் உள்ளுக்குச் சென்றதும், நானும் வெளிக் கிளம்பலாம் என்று யத்தனித்தேன். அச்சமயம் ஹெட்மாஸ்டர் ஸ்நான அறையிலிருந்து வந்துவிட்டார். "என்ன, கிருஷ்ணசாமி! புறப்படுகிறாயா?" என்றார்.

"புறப்பட வேண்டியதுதான்; உங்களிடம் விடை பெறுவதற்காகத்தான் காத்திருக்கிறேன்!" என்றேன்.

அவருடைய அறைக்குள் போனதும் "சற்றே உட்காரு, அப்பா, கிருஷ்ணசாமி! அவசரம் ஒன்றும் இல்லையே? கொஞ்சம் கழித்துப் போகலாம் அல்லவா?" என்றார்.

அதன்படியே நான் உட்கார்ந்தேன். ஏனெனில் என்னுடைய சந்தேகத்தை இன்னும் நான் நிவர்த்தி செய்து கொண்டபாடில்லை. தேவகியின் கையெழுத்துப் போல் எழுதியிருந்த அந்த 'போர்ஜரி' கடிதத்தை எழுதியது யார் என்னும் உண்மை அவர்களுக்குப் பிற்பாடு தெரிந்ததா? குற்றவாளி நான் இல்லை என்பதை அவர்கள் அப்புறமாவது தெரிந்து கொண்டார்களா? இதை அறிந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆர்வம் அதிகமாயிருந்தது. ஆனால் அந்தப் பேச்சை எடுப்பதற்குச் சங்கோசமாயிருந்தது.

நான் உட்கார்ந்தும் ஹெட்மாஸ்டர் "தேவகி உன்னிடம் என்ன சொன்னாள்? என் பேரில் ஏதாவது புகார் சொன்னாளா? நான் யோகாசனம் செய்வது பற்றிக் குறை சொல்லியிருப்பாளே?" என்று கேட்டார்.

"அதெல்லாம் இல்லை, ஸார்! உங்களைப் பற்றி தேவகி ஏன் புகார் சொல்லப் போகிறாள்? பாவம், அவளுக்கு நேர்ந்த கஷ்டகாலத்தில் நீங்களாவது தஞ்சம் கொடுப்பதற்கு இருந்தீர்களே? தேவகியின் புருஷனுடைய கதியைப் பற்றிக் கேள்விப்பட்டேன். நினைக்க நினைக்க ரொம்ப வருத்தமாயிருக்கிறது!" என்றேன்.

"ஓஹோ! புருஷனைப் பற்றியும் சொல்லி விட்டாளா? என்ன சொன்னாள்?" என்றார் ஹெட்மாஸ்டர்.

"ஹைதராபாத்தில் நடந்ததையெல்லாம் சொன்னாள். ஒரு நாள் இராத்திரி கறுப்பு முகமூடி போட்டுக் கொண்டு ஐந்தாறு பேர் வந்து டாக்டரை அழைத்துக் கொண்டு போனதைப் பற்றிச் சொன்னாள். அப்புறம் அவர் திரும்பியே வரவில்லையாமே?"

"அதை உன்னிடமும் சொல்லி விட்டாளா? கிருஷ்ணசாமி! நான் சொல்கிறேன், கேள்! தேவகி என்னுடைய பெண்தான். இருந்தாலும் அவள் சில சமயம் செய்கிறது எனக்குப் பிடிக்கிறதில்லை. இந்த மாதிரி வருகிறவர் போகிறவர்களிடம் எல்லாம்..." என்று ஹெட்மாஸ்டர் கூறியதும் நான் குறுக்கிட்டேன்.

"என்ன, ஸார், அப்படிச் சொல்கிறீர்கள்? என்னை வருகிறவர், போகிறவர்களோடு சேர்த்து விட்டீர்களே? ஏதோ பழைய விசுவாசத்தை நினைத்து என்னிடம் தன்னுடைய கஷ்டத்தைச் சொல்லலாம் என்று எண்ணித்தான் தேவகி சொன்னாள். அதற்காக நீங்கள் தேவகியைக் கோபித்துக் கொள்ள வேண்டாம்!" என்றேன்.

ஹெட்மாஸ்டர் தம்முடைய பிசகை உணர்ந்தவர் போல், "ஆமாம், கிருஷ்ணசாமி, உன்னிடம் சொன்னால் தவறில்லைதான். ஆனாலும் நாம் தான் கஷ்டப்படுகிறோம் என்றால், நம்மைச் சேர்ந்தவர்களிடமெல்லாம் நம்முடைய கஷ்டங்களைச் சொல்லி அவர்களையும் அநாவசியமாகக் கஷ்டப்படுத்தக் கூடாது அல்லவா?" என்றார்.

"சிநேகிதம் என்பது பின் எதற்காக? நம்முடைய கஷ்டங்களைச் சொல்லிக் கொள்வதற்கும் சமயா சமயங்களில் உதவியாயிருப்பதற்குந்தானே? என்னை வேற்று மனிதனாக நீங்கள் நினைக்கக் கூடாது. அது இருக்கட்டும்... உங்களுக்கு என்ன தோன்றுகிறது? அந்தக் கறுப்பு முகமூடி தரித்தவர்கள் ரஸாக்கியர்களாயிருப்பார்களா? அல்லது கம்யூனிஸ்டுகளாயிருப்பார்களா? ஹைதராபாத்தில் எனக்குத் தெரிந்த வர்த்தர்கள், - செல்வாக்கு உள்ளவர்கள், - சிலர் இருக்கிறார்கள். உங்கள் மாப்பிள்ளையைக் கண்டு பிடிப்பதற்கு நான் ஏதாவது முயற்சி செய்து பார்க்கட்டுமா?" என்று கேட்டேன்.

"பேஷாக முயற்சி செய்து பார்க்கலாம்; ஆனால் பலன் ஒன்றுமிராது!" என்றார் ஹெட்மாஸ்டர்.

அவர் இவ்விதம் கூறிய தொனி என் மன அமைதியைக் கெடுத்தது.

"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள் எல்லாப் பிரயத்தனங்களும் செய்து பார்த்து விட்டீர்களா?" என்று கேட்டேன்.

"நான் ஒரு முயற்சியும் செய்யவில்லை!" என்றார் தேவகியின் தந்தை. பிறகு என் அருகில் வந்து மெல்லிய குரலில், "கிருஷ்ணசாமி! தேவகியின் சுபாவம் இன்னும் உனக்குத் தெரியவில்லையா? பாவம்! உன்னை அவள், ஏமாற்றி விட்டாள். அவள் வார்த்தையை நீ நம்பவே நம்பாதே அவ்வளவும் கட்டுக் கதை. தேவகியின் கணவன் இந்த ஊரிலேதான் இருக்கிறான்!" என்றார்.

இதைக் கேட்டதும், எனக்கு எவ்வளவு திகைப்பு ஏற்பட்டிருக்குமென்பதை வாசகர்களே ஊகித்து அறிந்து கொள்ளலாம்.

"தேவகி அவ்வளவு பொய் புனை சுருட்டுச் சொல்லுவாள் என்று நான் எதிர்பார்க்கவில்லைதான். அப்படியானால் உங்கள் மாப்பிள்ளை இந்த ஊரில் தான் இருக்கிறாரா? இந்த ஊரில் என்றால் எங்கே?" என்றேன்.

"பைத்தியம் பிடித்தவர்கள் எங்கே இருப்பார்களோ, அங்கேதான்!"

"என்ன, என்ன?"

"ஆமாம், கிருஷ்ணசாமி! ஒரு நாள் உனக்கு உண்மை தெரியாமலிராது. இந்த அசட்டுப் பெண் அதை மறைத்து வைக்க முயல்வதால் என்ன பயன்? என் மாப்பிள்ளைக்குக் கொஞ்சம் பைத்தியம். கொஞ்சம் என்ன? ஒரே முற்றின பைத்தியம். அதுவும் சில நாளாய்..." என்று நிறுத்தினார்.

அதற்கு மேலே கேட்பதற்கு எனக்கும் விருப்பம் இல்லை. மனம் ஒரேயடியாய்க் குழம்பி விட்டது. தேவகியிடம் முன்னைக் காட்டிலும் அதிக அநுதாபம் ஏற்பட்டது. அவள் என்னிடத்தில் பொய் சொன்னது பற்றி எனக்குக் கொஞ்சமும் கோபமோ மனஸ்தாபமோ ஏற்படவில்லை. தன் புருஷன் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்கிறான் என்று எந்த ஸ்திரீதான் தயக்கமின்றிச் சொல்வாள்? புருஷனைப் பற்றிக் கேட்டதும் தேவகியின் முகத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் எனக்கு நினைவு வந்தன. பாவம்! அவளைப் போய்க் கேட்கப் போனேனே? புண்ணிலே குச்சியை எடுத்துக் குத்துவது போல. ஹெட்மாஸ்டர் இவ்விதம் சொன்ன பிறகு, அந்தப் பழைய 'போர்ஜரி' கடிதத்தைப் பற்றிப் பிரஸ்தாபிக்கக் கூட எனக்கு மனம் வரவில்லை. அதற்கு இப்போது என்ன அவசரம்? பிறகு கேட்டுக் கொண்டால் போகிறது.

"சரி, ஸார்! போய்விட்டு நாளை வருகிறேன்! குழந்தைகளைப் பொருட்காட்சிக்கு அழைத்துப் போவதற்காகத் தேவகி நாளை சாயங்காலம் வரச் சொல்லியிருக்கிறாள்" என்று கூறிவிட்டுக் கிளம்பினேன்.

அதே சமயத்தில் அந்த வீட்டின் மேல் மச்சிலிருந்து ஒரு பயங்கரமான சத்தம் கேட்டது. அது என்ன சத்தம் என்று சொல்ல முடியாது. சிம்மத்தின் கர்ஜனை, புலியின் உறுமல், ஓநாயின் ஊளை, - இவற்றையெல்லாம் விட அந்தச் சத்தம் பயங்கரமாயிருந்தது. கதைகளிலே நாம் படித்திருக்கும் ராட்சதர்கள் ஒருவேளை அப்படித்தான் சத்தமிடுவார்கள் போலும்.

என் உடம்பிலும் ஒவ்வொரு ரோமமும் குத்திட்டு நின்றது. என்னுடைய கால்கள் கீழே நிலைத்து நிற்க முடியாமல் நடுநடுங்கின.

"ஸார்! ஸார்! இது என்ன?" என்று கேட்டேன்.

"எது என்ன என்று கேட்கிறாய்? அடுத்த வீட்டில் ஏதோ புருஷன் பெண்டாட்டி சண்டை போலிருக்கிறது! அதைப் பற்றி நமக்கு என்ன?" என்றார் ஹெட்மாஸ்டர்.

அந்த வீட்டிலிருந்து நான் கிளம்பிச் சென்ற போது ரேழி நடையில் வைத்திருந்த சைக்கிளில் கால் தடுக்கிற்று. கட்டை விரலில் காயம் உண்டாயிற்று.

ஆனால் காயம்பட்டது என்பதாக எனக்கு அப்போது தெரியவேயில்லை. வீடு சென்ற பிறகுதான் தெரிந்தது.

வாசலில் நின்ற மோட்டாரில் நான் ஏறி உட்கார்ந்து காரைச் செலுத்திய போது 'ஸ்டியரிங்'கில் வைத்த என் கைகள் நடுங்கின; 'ஆக்ஸிலேட'ரில் வைத்த என் காலும் நடுங்கிற்று.

மோட்டாரை விடுவதற்கு முன்னால் தற்செயலாக அந்த வீட்டின் மேல் மாடிப் பக்கம் பார்த்தேன். திறந்திருந்த ஜன்னல் வழியாக ஒரு பயங்கரமான மனித உருவம் என்னை நோக்கிக் கொண்டிருந்தது. அந்த உருவத்தின் முகத்தில் பைத்தியம் என்று எழுதி ஒட்டியிருந்தது!

12

அன்றைக்கும் மறுநாளும் எனக்கு தேவகியின் நினைவாகவே இருந்தது. ஆனாலும் அவளைப் பற்றி என்ன அபிப்பிராயம் கொள்வது என்று தெரியவில்லை. அவளுடைய கணவனைப் பற்றிய உண்மை என்ன? ஹைதராபாத் குழப்பத்தின் போது அவனை ரஜாக்கர்கள் கொண்டு போனார்கள் என்பதும், பிறகு அவன் திரும்பி வரவேயில்லை என்பதும் உண்மையா? அல்லது தேவகியின் தகப்பனார் கூறியபடி அவனுக்குப் பைத்தியம் பிடித்துப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்கிறான் என்பது உண்மையா? அல்லது என் கண்ணாலே பார்த்தபடி, அதே வீட்டில் மேல்மாடியில் அந்தப் பைத்தியம் பிடித்த கணவனை அடைத்துப் போட்டிருப்பது உண்மையா?

எல்லாவற்றையும் சேர்த்து யோசித்துப் பார்க்கும்போது கடைசியில் நான் கண்ணால் கண்டதே உண்மையாயிருக்கலாம் என்று தோன்றியது. தேவகியும் அவள் தகப்பனாரும் கூறிய பொய்களுக்குச் சுலபமாகக் காரணம் கண்டு பிடிக்கலாமல்லவா? பாவம்! தேவகிக்குத் தன்னுடைய கணவனைப் பற்றிய உண்மையைச் சொல்வது கஷ்டமாகத்தானேயிருக்கும்? அதிலும் என்னிடம்? அந்த வேலைக்காரி முதலில் பதில் சொல்லத் தயங்கிவிட்டுப் பிறகு எங்கேயோ தேவகியின் கணவன் போயிருப்பதாகவும் திரும்பி வரவில்லையென்றும் சொன்னாள், அல்லவா? புதிய மனிதர்களிடம் அந்த மாதிரி சொல்லும்படியாகத் தேவகி அவளுக்குக் கட்டளையிட்டிருக்க வேண்டும். தேவகியின் தகப்பனாருக்குப் பாவம், அவ்வளவு முழுப் பொய் சொல்ல விருப்பமில்லை. அவர் பாதி உண்மையைச் சொன்னார். தேவகியின் கணவனுக்குப் பைத்தியம் என்று ஒப்புக் கொண்டார். ஆனால் அதே வீட்டு மாடியில் தேவகியின் கணவனை அடைத்து வைத்திருக்கிறது என்று சொல்ல அவருக்கு மனம் வரவில்லை. அதனாலேயே பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருப்பதாகச் சொன்னார்.

இதையெல்லாம் எண்ணி எண்ணிப் பார்த்த போது ஒரு பக்கத்தில் எனக்கு எவ்வளவோ பரிதாபமாயிருந்தது. தேவகிக்கு இந்தக் கதியா வரவேண்டும்? இப்படிப்பட்ட புருஷனா அவளுக்கு வாய்க்க வேண்டும்? அடடா! ஹெட்மாஸ்டர் எப்படியெல்லாம் சொப்பனம் கண்டு கொண்டிருந்தார்? என்னென்ன ஆகாசக் கோட்டைகளைக் கட்டினார்? கொஞ்சமும் சங்கோசமில்லாமல் என் முகத்துக்கு நேரே தேவகிக்குப் பணக்காரக் கணவனாக வரன் பார்க்கிறேன்; உனக்கு அவளைக் கொடுக்க முடியாது; அந்த எண்ணத்தை விட்டு விடு!" என்று பச்சையாகச் சொன்னாரே? இத்தனைக்கும் நான் அதைப் பற்றி ஒரு வார்த்தைகூட அவரிடம் பிரஸ்தாபிக்கவேயில்லையே? யாரோ காலிப்பயல்கள் சொன்னதைக் கேட்டுக் கொண்டும் ஊர் வதந்தியை வைத்துக் கொண்டும் என் பேரில் எரிந்து விழுந்தாரே? என் மீது அபாண்டமான பழியும் சுமத்தினாரே? இப்போது என்ன ஆயிற்று? தேவகிக்கு எப்படிப்பட்ட கணவன் வாய்த்தான்? கடவுளே! என்னைப் பரமயோக்யன் என்று அதுகாறும் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் என் மனதின் ஆழத்தில் ஒளிந்திருந்த தீய பிசாசின் வலிமை தெரிந்தது. தேவகி அப்படிப்பட்ட துர்க்கதியை அடைந்திருக்கக் கண்டது வெளிப்படையாக என் மனதில் பரிதாபத்தை உண்டாக்கிய போதிலும் உள்ளுக்குள்ளே ஒருவித திருப்தியையும் உண்டாக்கிற்று. அத்துடன், அத்தகைய பரிதாப கதிக்கு உள்ளான தேவகிக்கு என்னாலான உதவிகளைச் செய்ய வேண்டும் என்னும் ஆர்வமும் முன் வந்து நின்றது.

இந்த எண்ணத்தோடு கூட தேவகியைப் பற்றிய தாழ்வான ஒரு எண்ணமும் என் மனதில் உதிக்கக் கண்டேன். சீச்சீ! பைத்தியக்காரப் புருஷனை மேல் மாடியில் அடைத்துப் போட்டுவிட்டு இவளுக்குப் பொருட்காட்சி வேடிக்கை என்ன வேண்டிக்கிடந்தது? அடுத்த வீதி ஆண்டு நிறைவுக் கல்யாணத்துக்குப் போக எப்படி மனம் வந்தது? எவ்வளவு கடின நெஞ்சு அவளுக்கு? ஒரு தடவை போனது போதாது என்று இன்னொரு நாளும் பொருட் காட்சிக்குப் போக வேண்டுமாமே? அடாடா! ஒரு காலத்தில் நான் இவளை தேவ கன்னிகை என்று நினைத்துப் போற்றினேன் அல்லவா? இவளுடைய பணிவிடைக்காக என் வாணாளையே அர்ப்பணம் செய்யத் தயாராகயிருந்தேன் அல்லவா! சீ!

ஆனால் கொஞ்சம் நிதானித்துப் பார்த்தால், அவள் பேரில் அவ்வளவு நிஷ்டூரம் சொல்வதற்கு இடம் என்ன இருக்கிறது? எப்படியும் மூன்று குழந்தைகளுக்குத் தாயார். அந்தக் குழந்தைகளைச் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டியதுதானே அவசியம? புருஷனுக்கு ஏதோ துர்க்கதி நேர்ந்து விட்டது என்பதற்காகக் குழந்தைகளையும் கஷ்டப்படுத்துவது நியாயமாகுமா? நாலு இடங்களுக்கு அழைத்துக் கொண்டு போய்க் காட்டினால்தானே குழந்தைகள் தந்தையின் நிலையை மறந்து சந்தோஷமாயிருக்க முடியும்?

இப்படி முன்னுக்குப் பின் முரணான எண்ணங்களால் என் உள்ளம் கலங்கிக் கொண்டிருந்தது. என் மனதில் தோன்றிய கேள்விகளுக்கு நானே சமாதானம் கண்டு பிடித்துத் திருப்தியடையப் பார்த்தேன். ஆயினும் பூரண திருப்தி ஏற்படவில்லை.

மறுநாள் திங்கட்கிழமை, நான் ஆபீஸுக்குக் கிளம்பிப் போனபோது வழியில் பார்க்டவுனில் 'டாக்டர் சுந்தரம் எல்.ஐ.எம்.' என்று போட்டிருந்த போர்டு என் கண்களைக் கவர்ந்தது. ஏற்கெனவேயே சில சமயம் நான் இந்த போர்டைப் பார்த்துவிட்டுக் கட்டிடத்தையும் உற்றுப் பார்த்திருக்கிறேன். சுந்தரம் என்று பெயருள்ள எத்தனையோ ஆயிரம் பேர் நாட்டில் இருக்கிறார்கள். ஆயினும் இந்த 'டாக்டர் சுந்தரம்' போர்டு எனக்குத் தண்டாங்கோரையில் என்னுடன் ஹைஸ்கூலில் படித்த சுந்தரத்தை நினைவூட்டிற்று. அதற்கு ஒரு காரணமும் இல்லாமற் போகவில்லை. இரண்டொரு தடவை அந்த ஆயுர்வேத மருந்துக் கடையில் ஜன்னல் வழியாக ஒரு முகம் தெரியும். அந்த முகம் ஏதோ எப்போதோ எனக்குத் தெரிந்த முகம் போலத் தோன்றும். பல தடவை இதைப் பற்றி யோசித்து, 'ஆமாம்; இவன் அந்தத் தண்டங்கோரை சுந்தரமாயிருக்கக் கூடும்' என்று தீர்மானித்தேன். காரிலே அந்த வழியாகப் போய்க் கொண்டிருக்கையில் ஏற்பட்ட மின்னல் எண்ணங்கள் இவை. மோட்டாரை நிறுத்தி விசாரிப்பதற்கு வேண்டிய அக்கறை அப்போதெல்லாம் எனக்கு ஏற்படவில்லை. எதற்காக விசாரிக்க வேண்டும்? விசாரித்து அந்த சுந்தரமாயிருந்தால் தான் என்ன பயன்? இவனுடைய சிநேகத்தைப் புதுப்பித்துக் கொண்டு இப்போது எனக்கு ஆக வேண்டியது என்ன? ஒன்றுமில்லை!

ஆனால் நான் இந்தத் திங்கட்கிழமையன்று அந்த வழியாகப் போனபோது, காரை நிறுத்தி அவன் தண்டாங்கோரை சுந்தரம்தானா என்று விசாரிப்பதற்குத் தடுக்க முடியாத ஆர்வம் கொண்டேன். காரை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே போனேன். சுந்தரம் மாதிரிதான் இருந்தது. ஆனால், அவனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.

அவனிடம், வைத்தியம் பார்த்துக் கொள்ள வந்தவர்கள் யாரும் அப்போது அங்கு இருக்கவில்லை. நான் அவன் மேஜைக்கெதிரே கிடந்த பெஞ்சியில் உட்கார்ந்ததும், "உங்களுக்கு என்ன உடம்பு? எங்கே, கையைக் காட்டுங்கள்!" என்று வைத்திய பரிசீலனை செய்யத் தயாரானான்.

நான் கொஞ்சம் தயங்கினேன்.

"சீக்கிரம் சொல்லுங்கள். எனக்கு இன்றைக்குச் சீக்கிரம் டிஸ்பென்ஸரியைச் சாத்திக் கொண்டு போகவேண்டும்" என்றான்.

"நான் உடம்பு பார்த்துக் கொள்ள வரவில்லை. எனக்கு உடம்பு ஒன்றுமில்லை. வேறொரு விஷயம் விசாரிப்பதற்காக வந்தேன். ஒரு வேளை நீங்கள் என் பழைய சிநேகிதனாயிருக்கலாம் என்று நினைத்தேன். டாக்டர்! நீங்கள் தண்டாங்கோரை ஹைஸ்கூலில் எப்போதாவது படித்ததுண்டா?" என்று கேட்டேன்.

அவன் என்னை அதிசயத்துடன் உற்றுப் பார்த்து, "ஆமாம், படித்திருக்கிறேன். நீங்கள் யார்? ஒரு வேளை... ஒரு வேளை ... அடேடே! நம்ம கிச்சாமி போலிருக்கிறதே!" என்றான் .

"ஆமாம், சுந்தரம்! நான் அந்த கிருஷ்ணசாமி தான்!"

"பலே! பலே! நம்ம 'சோப்பளாங்கி' கிருஷ்ணசாமியா? மன்னித்துக் கொள்! அப்போது, நாம் பள்ளிக்கூடத்தில் படித்தபோது, நீ யாரோடும் சண்டைக்கு வரமாட்டாயல்லவா? யாராவது உன்னோடு சண்டைக்கு வந்தாலும் நீ பின்வாங்கிப் போய்விடுவாயல்லவா? அதனால் உன்னை நாங்கள் 'சோப்பளாங்கி கிச்சாமி' என்று சொல்வோம். உன் காதிலும் விழுந்திருக்கலாம். ஆனால் அதைப் பற்றியெல்லாம் இப்போது என்ன? கார், கீர் வைத்துக் கொண்டு ஜோராய் இருக்கிறாப் போலிருக்கிறதே! என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"

நான் நடத்தும் தொழிலைப் பற்றிச் சுந்தரத்திடம் சொன்னேன். அவனும் தன்னைப் பற்றி சுருக்கமாகச் சொன்னான். தண்டாங்கோரையில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த பிறகு இந்த பட்டணத்துக்கு வந்து ஆயுர் வேத கலாசாலையில் சேர்ந்து மூன்று வருஷம் படித்து எல்.ஐ.எம். பட்டம் பெற்று டாக்டர் ஆனானாம். வைத்தியத் தொழிலிலும் மருந்து விற்பனையிலும் மாதம் முந்நூறு, நானூறு ரூபாய் அவனுக்கு இப்போது வருமானம் வருகிறது என்று அறிந்தேன்.

"உங்கள் வீட்டில் யாருக்காவது ஏதாவது வியாதி என்றால், நேராக இங்கே வந்துவிடு. மருந்துகள் எல்லாம் நானே சாஸ்திரீயமாய்ச் செய்கிறேன். டைபாய்டு சுரத்துக்கு ஒரு மருந்து கண்டுபிடித்திருக்கிறேன். இங்கிலீஷ் வைத்தியத்தில் டைபாய்டு சுரத்துக்கு மருந்தே கிடையாது என்று தெரியுமல்லவா! உன் முகம் கூட அவ்வளவு நன்றாயில்லை. ஒரு மாதிரி வெளுத்துப் போயிருக்கிறது. ஆறு மாதம் நீ சியவனப்பிராஸ லேகியம் விடாமல் சாப்பிட்டால் குணம் தெரியும். அப்புறம் அதை விடவே மாட்டாய். இன்னொரு நாளைக்கு வா, மற்ற மருந்துகளைப் பற்றி விவரமாகச் சொல்லுகிறேன். இன்றைக்குக் கொஞ்சம் எனக்கு அவசர வேலையிருக்கிறது. போகட்டுமா?" என்று எழுந்தான்.

"கொஞ்சம் உட்கார், சுந்தரம்! இன்னொரு நாளைக்கு அவசியம் வந்து உன்னிடமுள்ள மருந்துகளிலெல்லாம் ரகத்துக்குக் கொஞ்சமாக வாங்கிப் போகிறேன். ஒரு முக்கியமான விஷயம் உன்னைக் கேட்கலாம் என்று இன்றைக்கு வந்தேன். அதை மட்டும் சொல்லிவிட்டுப் போ! நாம் படித்த போது ஹெட்மாஸ்டர் பத்மநாப ஐயங்கார் என்று இருந்தாரே? அவரைப் பற்றியும் அவர் குமாரி தேவகியைப்பற்றியும் உனக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்க வந்தேன். தெரிந்தால் சொல்லு!"

சுந்தரம் என்னை ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்து விட்டு, "அவர்களைப் பற்றி என்ன கேட்கிறாய்? உனக்கு என்ன தெரிய வேண்டும்?" என்றான்.

"அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா?"

"இந்த ஊரில்தான் எங்கேயோ இருக்கிறார்கள் என்று கேள்வி. நான் கூட இரண்டொரு தடவை பார்த்திருக்கிறேன். சிந்தாதிரிப் பேட்டையிலோ கோமளீசுவரன் பேட்டையிலோ இருக்கிறார்கள் போலிருக்கிறது. நீ எதற்காகக் கேட்கிறாய்?"

"ஆமாம். அவர்கள் சிந்தாதிரிப் பேட்டையிலே தான் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் வீடு கூட எனக்குத் தெரியும். நேற்று அவர்கள் வீட்டுக்குப் போய் வந்தேன்."

"அப்படியா! ரொம்ப சரி! நீதான் போய் வந்திருக்கிறாயே, என்னை என்ன கேட்கிறாய்?"

"ஒன்றுமில்லை. தேவகியின் புருஷனைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்டேன்!"

"தேவகியின் புருஷனைப் பற்றி உனக்கு என்ன இவ்வளவு கவலை?"

"இல்லையப்பா! அவள் புருஷனைப் பற்றிப் பலவிதமாகக் கேள்விப்பட்டேன். ஒருவேளை உண்மை உனக்குத் தெரிந்திருக்கலாமோ என்று எண்ணிக் கேட்டேன். வேறொன்றுமில்லை!"

"பலவிதமாக அப்படி என்ன கேள்விப் பட்டாய்?"

நேற்றுக் காலை தேவகியின் வீட்டில் நடந்ததையெல்லாம் சுந்தரத்திடம் சொன்னேன். தேவகி சொன்னதும், அவள் தகப்பனார் சொன்னதும், நான் பார்த்ததும் ஒன்றுக்கொன்று முரணாயிருந்ததையும் சொன்னேன்.

"அவ்வளவும் பொய்! உன்னை நன்றாய் ஏமாற்றிவிட்டிருக்கிரார்கள்!" என்றான் சுந்தரம்.

"அவ்வளவும் பொய்யா? பின் எதுதான் உண்மை? உனக்குத் தெரியுமா?" என்றேன்.

"அவள் புருஷன் எப்போதோ 'கயா'வாகி விட்டான்! உனக்கு விதவா விவாகம் செய்து கொள்வதில் அபிப்பிராயம் இருந்தால்..."

"சீச்சீ! இது என்ன சுந்தரம்? அபஸ்மாரமாய்ப் பேசுகிறாயே? எனக்குப் பெண்டாட்டி பிள்ளைகுட்டி எல்லாரும் இருக்கிறார்கள்."

"ரொம்ப சரி! அப்படியென்றால் பேச்சை விட்டுவிடு!"

"என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று சொன்னாயே? அது என்ன என்று மட்டும் சொல்லி விடு! பாவம்! அவர்களைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாயிருந்தது!"

"பரிதாபமா? அந்த நீலி நன்றாகத்தான் உன்னை மயக்கி விட்டிருக்கிறாள். என்னைக் கேட்டால் அவள் வசிக்கும் வீட்டுப் பக்கமே போகாதே என்பேன். தேவகியின் கணவனை ரஸாக்கர்கள் கொண்டு போகவும் இல்லை; அவனுக்குப் பைத்தியம் பிடிக்கவும் இல்லை. ஆசாமி தூக்குப் போட்டுக் கொண்டு செத்துப் போய்விட்டான்!"

"ஐயோ! எப்போது? எதற்காக?"

"எப்போது என்று எனக்குத் தெரியாது. சில வருஷம் ஆயிற்று என்று கேள்வி. எதற்காகத் தற்கொலை செய்து கொண்டான் என்றா கேட்கிறாய்? எல்லாம் அந்தப் பரதேவதை தேவகியின் தொல்லையைப் பொறுக்க முடியாமல் தான்! கிச்சாமி! நீ கூட அந்த நாளில் தேவகியைக் கலியாணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணம் வைத்திருந்தாயல்லவா?"

"கிடையவே கிடையாது! அந்தப் பொய்க் கதையைக் கட்டி விட்டவர்கள் நீயும் வைத்தியுந்தான்."

"அப்படியே யிருக்கட்டும். நீ தேவகியைக் கலியாணம் செய்து கொள்ளாதது உன் அதிர்ஷ்டந்தான். அதனாலேதான் நீ இன்றைக்குப் பிழைத்திருக்கிறாய். இல்லாவிட்டால் அவள் புருஷம் செய்தது போல் நீயல்லவா தற்கொலை செய்து கொண்டிருப்பாய்! போகட்டும். நான் புறப்படட்டுமா?" என்று கேட்டுக் கொண்டே சுந்தரம் எழுந்து நடந்து ரேழியில் நிறுத்தியிருந்த சைக்கிள் வண்டியைச் சரிபார்க்க ஆரம்பித்தான். நானும் காரில் ஏறிக் கொண்டு புறப்பட்டேன்.

சுந்தரம் கூறியது இன்னும் என் மூளையைக் குழப்பி விட்டது என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா? அவன் சொன்னதே ஒரு வேளை உண்மையாயிருக்குமோ என்றும் சிந்திக்க ஆரம்பித்தேன். எது எப்படியிருந்தாலும் தேவகியிடம் ஒத்துக் கொண்டபடி இன்று சாயங்காலம் அவள் வீட்டுக்குப் போய் அவளையும் குழந்தைகளையும் பொருட்காட்சிக்கு அழைத்துப் போக வேண்டியது. பிறகு எப்படி உசிதமென்று தோன்றுகிறதோ, அப்படி நடந்து கொண்டால் போகிறது.

இவ்விதம் எண்ணமிட்டுக் கொண்டே வீடு சென்றேன். ஆனால் விவரமாகாத ஏதோ ஒரு விஷயம் என் மனதை உறுத்திக் கொண்டிருந்தது. அது என்னவென்று ஆனமட்டும் ஞாபகப்படுத்திக் கொண்டு பார்த்தேன். ஆனாலும் அது ஞாபகத்துக்கு வரவில்லை. 'தொண்டையிலிருக்கிறது வாயில் வரமாட்டேனென்கிறது' என்று சில சமயம் சொல்லுகிறோமல்லவா? அந்த மாதிரி என் உள்ளத்தில் தெளிவில்லாத ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருவது போல் தோன்றி, ஆனால் ஞாபகத்துக்கு வராமல் தொல்லைப்படுத்தியது.

13

அன்று மாலை நான் சிந்தாதிரிப்பேட்டையில் தேவகியின் வீடு சென்ற போது குழந்தைகள் மூன்று பேரும் அழகாக 'டிரஸ்' பண்ணிக் கொண்டு பொருட்காட்சிக்குப் புறப்படச் சித்தமாயிருந்தார்கள். வாசலில் என் மோட்டார் போய் நின்றதும் அவர்கள் "அம்மா! சித்தியா வந்து விட்டார்!" "தாத்தா! கார் வந்து விட்டது!" என்று கோஷமிட்டது என் காதில் விழுந்தது. என்னைப் பார்த்ததும் ஹெட்மாஸ்டர், "வந்து விட்டாயா, கிருஷ்ணசாமி! இவர்களுடைய பேச்சை நான் நம்பவில்லை. நீ வருவாய் என்றே எதிர்பார்க்கவில்லை. வண்டியுடன் வந்தவரையில் விசேஷந்தான்!" என்றார்.

தேவகி சிரித்த முகத்துடன் வந்து என்னை வரவேற்றாள். தேவகியின் இனிமையான தோற்றத்தையும் டாக்டர் சுந்தரம் அவளைப் பற்றிக் கூறியதையும் என் மனதிற்குள் ஒப்பிட்டுப் பார்த்தேன். அவன் கூறியது போல் இவள் பொல்லாத நீலியாக இருக்க முடியுமா, இவளுடைய தொல்லையைப் பொறுக்காமல் இவள் கணவன் தூக்குப் போட்டுக் கொண்டிருக்க முடியுமா என்று வியந்தேன். அவளுடைய கழுத்தின் என் கவனம் சென்றது. இரண்டு மெல்லிய சங்கிலிகள் அவள் கழுத்தை அலங்கரித்தன. ஆனால் அவற்றில் மாங்கலியம் இருக்கிறதா, இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.

தேவகி என்னை வரவேற்ற பின்னர் அவளுடைய தந்தையைப் பார்த்து, "அப்பா! நான் சொன்னேனே, பார்த்தீர்களா? இவர் ஒரு நாளும் வரமாட்டார் என்று நீங்கள் சொன்னீர்களே? யாருடைய வாக்குப் பலித்தது? போகட்டும்; நீங்கள் இன்று நாடகத்துக்கு வரப்போகிறீர்களா, இல்லையா? ஐந்து நிமிஷத்துக்குள் வராவிட்டால் உங்களை விட்டு விட்டு நாங்கள் புறப்பட்டுப் போய் விடுவோம்!" என்றாள்.

"இதோ வந்து விட்டேன், தேவகி! நான் இன்றைக்கு நாடகத்துக்கு வராவிட்டால் அப்புறம் இந்த வீட்டில் இருக்க முடியுமா? எல்லாரும் சேர்ந்து என் பிராணனை வாங்கிவிட மாட்டீர்களா? கொஞ்சம் பொறுங்கள்! இதோ டிரஸ் பண்ணிக் கொண்டு வந்து விடுகிறேன்!" என்று சொல்லிவிட்டுத் தம்முடைய அறைக் கதவைப் படார் என்று சாத்திக் கொண்டார்.

நான் தேவகியைப் பார்த்து "உன்னுடைய அப்பாவுக்கு என் பேரில் உள்ள கோபம் எல்லாம் போய்விட்டதா?" என்று கேட்டேன்.

"என்ன கோபம்?" என்று தேவகி வியப்புடன் கேட்டாள்.

"தண்டாங்கோரை பள்ளிக்கூடத்தில் படித்த போது என் பேரில் அப்பா ஒரு நாள் ரொம்பக் கோபித்துக் கொண்டாரே, ஞாபகம் இல்லையா?"

"அழகாய்த்தானிருக்கிறது. அதையெல்லாம் அப்பா மறந்து போய் எவ்வளவோ நாள் ஆயிற்று. உங்கள் பேரில் அப்பாவுக்கு ரொம்ப அபிமானம். அப்பா அம்மா இரண்டு பேரும் கொஞ்ச நாள் வரையில் உங்களைப் பற்றி அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார்கள். அடாடா! நீங்கள் எல்லாரும் அந்த நாளில் உபாத்தியாயர்களிடம் எவ்வளவு பக்தி விசுவாசத்துடன் இருந்தீர்கள்? என்னிடத்திலே கூடத்தான் எவ்வளவு மரியாதையாக இருந்தீர்கள்? இந்தக் காலத்துப் பிள்ளைகளும் இருக்கிறார்களே? கொஞ்சமும் மட்டு மரியாதை இல்லாதவர்கள்! கொஞ்ச நாளைக்கு முன்பு குவீன் மேரிஸ் காலேஜில் நடந்த கார்னிவல் கொண்டாட்டத்தில் ஆண் பிள்ளை மாணாக்கர்கள் எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டார்கள் என்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்களே! இவர்களுந்ந்தான் விழுந்து விழுந்து இங்கிலீஷ் படிக்கிறார்கள்! இங்கிலீஷ் கதைகளில் 'ஷிவல்ரி'யைப் பற்றி எவ்வளவெல்லாம் இருக்கிறது? அதையெல்லாம் இவர்கள் படித்து என்ன பயன்? ஏட்டுச் சுரைக்காய்தான்! நம்முடைய மனுதர்ம சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறபடியாவது இவர்கள் ஸ்திரிகளிடம் பக்தி விசுவாசத்துடன் நடந்து கொள்கிறார்களா? அதுவும் இல்லை. இந்தக் காலத்து மாணாக்கர்களுக்கு இங்கிலீஷ் நாகரிகமும் வரவில்லை; நம்முடைய பழைய தர்மமும் பயன்படவில்லை. இரண்டிலும் உள்ள தீமைகள் மட்டும் இவர்களுக்கு வந்திருக்கின்றன. இதைப் பற்றி அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். தண்டாங்கோரை ஹைஸ்கூலில் நீங்கள் எல்லாரும் அந்த நாளில் என்னிடம் எவ்வளவு மரியாதையாக நடந்து கொண்டீர்கள் என்று அடிக்கடி பாராட்டிப் பேசுவார்!..."

இப்படியாக தேவகி கடல் மடை திறந்தது போல் பிரசங்கம் செய்து கொண்டே போனாள். மூச்சு விடாமல் பேசும் அவளுடைய சுபாவம் இன்னமும் அப்படியேதான் இருந்தது என்று தெரிந்து கொண்டேன். ஆனால் அவள் கூறியதெல்லாம் உண்மையென்று என் மனம் ஒப்பவில்லை. ஏன்? நான் படித்த காலத்திலே கூடப் பெண்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளத் தெரியாத காலிப் பசங்கள் இருக்கத் தான் செய்தார்கள். வைத்தியநாதனும் சுந்தரமும் இருக்கவில்லையா! அதையெல்லாம் மறந்து விட்டு இவள் பிரமாதமாய்ப் பேசிக் கொண்டே போகிறாளே! போனால் போகட்டும்! எனக்கு என்ன வந்தது? அந்தக் கடிதத்தைப் பற்றிய உண்மையை மட்டும் எப்படியாவது தெரிந்து கொள்ள விரும்பினேன். ஆகையால் தேவகியின் பேச்சில் பலவந்தமாகக் குறுக்கிட்டு, "அதெல்லாம் இருக்கட்டும், தேவகி! அந்தக் கடிதத்தைப் பற்றிய உண்மை அப்புறம் தெரிந்ததா?" என்றேன்.

"எந்தக் கடிதம்?" என்று தேவகி தலையைக் கோணலாக வைத்துக் கொண்டு கேட்டாள்.

"எந்தக் கடிதமாவது? உனக்கு நிச்சயம் செய்திருந்த முதல் கலியாணத்தைத் தடைசெய்த கடிதந்தான்!..."

"அதுவா?" என்று கேட்டுவிட்டுத் தேவகி கலீரென்று சிரித்தாள். எனக்கோ கோபம் பொங்கிக் கொண்டு வந்தது. அந்தக் கடிதத்தினால் நான் அடைந்த துன்பம்தான் எத்தனை? இப்போது நினைத்தாலும் மனம் வெட்கி வேதனை அடைகிறது! ஆனால் இவள் அதைக் குறித்துச் சிரிக்கிறாள்!

சிரிப்பைச் சட்டென்று நடுவில் நிறுத்திவிட்டு, "ஆமாம்; அப்படியானால் அந்தக் கடிதத்தை நீங்கள் எழுதவில்லையா?" என்று கேட்டாள்.

"சத்தியமாய் எழுதவில்லை!" என்று நான் ஆத்திரமாய்க் கூறினேன்.

"அடே அப்பா! அதைப்பற்றி இப்போது என்னத்துக்கு இவ்வளவு ஆத்திரம்? போனது போய்விட்டது. நீங்கள் அதை எழுதவில்லை யென்பது எனக்குத் தெரியும். உங்களுக்கு அவ்வளவு தைரியம் இல்லையென்பதும் எனக்குத் தெரியும். ஆகையால் நானே எழுதிவிட்டேன்!" என்று தேவகி ஒரு அணுகுண்டைப் போட்டாள்.

"நீ எழுதினாயா! நீயா எழுதினாய்? அப்படியானால் என் பேரில் பழி சொன்னாயே, ஏன்?" என்று மேலும் ஆத்திரத்துடன் கேட்டேன்.

"அது ஒரு காரியத்துக்காக எழுதினேன். ஒரு காரியம் என்ன? உண்மையைச் சொல்லி விடுகிறேனே! எனக்கு அப்பா நிச்சயம் செய்திருந்த கலியாணம் பிடிக்காததால் எழுதினேன். அப்பா கோபித்துக் கொண்ட போது உங்கள் பேரில் பழியைப் போட்டு வைத்தேன். அந்தச் சமயத்துக்கு அப்படிச் சொல்ல வேண்டியிருந்தது. அப்புறம் அப்பாவின் கோபம் தணிந்த பிறகு உண்மையை ஒப்புக் கொண்டேன். அதற்குள் நீங்கள் போயே போய் விட்டீர்கள். அதற்கு நான் என்ன செய்கிறது!" என்றாள் தேவகி.

என் மனம் அப்போது ஒரு பக்கம் கோபத்தினாலும் ஒரு பக்கம் பச்சாத்தாபத்தினாலும் குழப்பம் அடைந்தது. அந்தக் கலியாணம் பிடிக்கவில்லையென்றால், வேறு யாரிடமாவது இவளுடைய மனம் சென்றிருந்ததா? அது ஒருவேளை நானாகவே இருக்குமா? அவசரப்பட்டு மனம் வெறுத்து ஊரை விட்டுப் போனதினால் என் வாணாளையே பாழாக்கிக் கொண்டேனா?

அப்படி எண்ணியபோது தேவகியை மணம் செய்து கொள்ளாதது என் அதிர்ஷ்டந்தான் என்று டாக்டர் சுந்தரம் கூறியது நினைவு வந்தது. இவள் யாரோ ஒருவனைக் கலியாணம் செய்து கொண்டு தானே இருக்க வேண்டும்? அவன் யார்? அவனுடைய கதி என்ன? டாக்டர் சுந்தரம் சொன்னதுபோல் அவன் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்தானா? அல்லது அந்த வீட்டு மாடி ஜன்னல் வழியாகப் பார்த்த பைத்தியந்தான் இவளுடைய புருஷனா? புருஷனுடைய நிலைமை அப்படியிருக்கும்போது இவள் பொருட்காட்சிக்கு நாடகம் பார்க்கப் புறப்படுகிறாளே? இதை என்னவென்று சொல்வது? இவள்தான் இப்படி என்றால், இவள் தகப்பனாரும் அல்லவா ஒத்துக்கு மத்தளம் போடுகிறார்!

அவளுடைய புருஷனைப் பற்றியும் அந்த வீட்டு மாடிமேல் உள்ள ஆளைப் பற்றியும் தேவகியைக் கேட்பதற்கு மனதைத் திடப்படுத்திக் கொண்டேன். ஆனால் அந்தச் சமயத்தில் ஹெட்மாஸ்டர் கோட்டு, தலைப்பாகை முதலியவை அணிந்து கொண்டு புறப்படத் தயாராக வந்து விட்டார். எனவே ஒன்றும் கேட்க முடியவில்லை.

வாசலில் காரில் ஏறி உட்கார்ந்த பிறகு என் கண்கள் மட்டும் மேலே மச்சு ஜன்னலை உற்று நோக்கின. அங்கே இப்போது அந்தப் பயங்கர முகத்தைக் காணவில்லை.

பாவம்! அந்தப் பைத்தியத்தை உள் அறையில் போட்டுப் பூட்டி விட்டார்களோ, என்னமோ? அல்லது அதனால் தொந்தரவாயிருக்கிறதென்று பைத்திய ஆஸ்பத்திரிக்கு அப்புறம் அனுப்பி விட்டார்களோ, என்னமோ! இருந்தாலும் இந்தத் தேவகியைப் போல் இருதயமற்ற ஸ்திரீயை உலகத்திலேயே காண முடியாது! இவளுடைய வலையில் நான் விழாமல் தப்பியது நான் செய்த புண்ணியந்தான். சீச்சீ! இது என்ன கேவலமான எண்ணம்! துர்ப்பாக்கியசாலியான தேவகியை நாமும் சேர்ந்து நிந்திக்க வேண்டுமா? இவளுக்கு நேர்ந்த கஷ்டங்களுக்கெல்லாம் ஒரு வேளை நானே காரணமாயிருந்திருக்கலாம். அப்படி அவசரப்பட்டுக் கொண்டு தண்டாங்கோரையை விட்டு நான் புறப்படாதிருந்தால், இவளுடைய வாழ்க்கையே வேறு விதமாயிருந்திருக்கலாம் என்னுடைய வாழ்க்கையுங் கூடத்தான்!...

இத்தகைய எண்ணங்கள் என் மனத்தை அலைத்துக் கொண்டேயிருக்கையில் பொருட்காட்சியும் வந்துவிட்டது. தேவகி முதலியவர்கள் காரிலிருந்து அவசர அவசரமாக இறங்கினார்கள். நாடகமேடை மைதானத்துக்குப் போவதில் அவர்களுக்கிருந்த பரபரப்பைச் சொல்லி முடியாது.

நான் வண்டியிலிருந்து இறங்காமலிருப்பதைக் கண்ட தேவகி "நாடகம் பார்க்க நீங்கள் வர வில்லையா?" என்று கேட்டாள்.

"நீங்கள் போய் இடம் பிடித்துக் கொண்டு உட்காருங்கள். எனக்குக் கொஞ்சம் காரியம் இருக்கிறது. பார்த்து விட்டுப் பிறகு வந்து விடுகிறேன்!" என்றேன்.

"திரும்பி வீட்டுக்குப் போவதற்கு எங்களைத் திண்டாட விட்டு விடாதீர்கள்!" என்றாள் தேவகி.

"அப்படியெல்லாம் செய்வேனா? கட்டாயம் வந்து உங்களை அழைத்துப் போகிறேன்!" என்றேன்.

"அவசியம் நீங்கள் வந்து நாடகத்தையும் பார்க்க வேண்டும். இன்று நாடகம் ரொம்ப நன்றாயிருக்குமாம்!" என்று சொல்லிக் கொண்டே தேவகி விரைவாக நடந்தாள். அவளைத் தொடர்ந்து மற்றவர்களும் போனார்கள்.

14

எனக்கு நாடகம், ஸினிமா என்றாலே அவ்வளவாகப் பிடிப்பதில்லை. அதிலும் அன்றைக்கு என் மனோ நிலைமை நாடகம் பார்த்து ரஸிப்பதற்கு அனுகூலமாக இல்லை. உண்மையாகவே காரியமும் கொஞ்சம் இருந்தது. அதை முடித்துவிட்டு இரவு ஏழரை மணிக்குத் திரும்பவும் பொருட்காட்சி மைதானத்துக்குப் போனேன். நாடகம் இன்னும் நடந்து கொண்டிருந்தது. அதைப் பார்க்க ஏராளமான கூட்டம். அத்தனை ஆயிரம் பேரும் நாடகப் பைத்தியம் பிடித்தவர்கள் என்ற எண்ணமே எனக்கு வியப்பு அளித்தது. அந்தப் பெருங் கூட்டத்தின் ஒரு ஓரத்தில் நின்று நாடக மேடையைக் கவனித்தேன்.

அச்சமயத்தில் நாடக மேடையிலும் ஒரு பைத்தியம் நின்று கொண்டிருந்தது! கோரமான முகத்துடனும் கோரணிகளுடனும் அந்தப் பைத்தியம் ஏதேதோ பயங்கரமாகக் கத்திக் கொண்டிருந்தது. அந்தக் கத்தலின் கோரமானது ஒலிபெருக்கியின் மூலம் வந்தபோது இன்னும் அதிக கோரமாய் ஒலித்தது. முதலில் சற்று நேரம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்புறம் சற்றுப் புரிந்தது. நாடக மேடையில் ஒரு பாழடைந்த வீட்டில் நின்று அந்தப் பைத்தியக்காரன் சத்த மிட்டான். அந்த வீட்டில் ஒரு காலத்தில் வசித்திருந்த அவனுடைய மனைவி மக்களை எண்ணிப் புலம்புவதாகத் தோன்றியது.

தேவகியும் அவள் தகப்பனாரும் குழந்தைகளும் கூட்டத்தில் எங்கே இருக்கிறார்கள் என்று பார்த்தேன். நாடக மேடைக்கு வெகு சமீபத்தில் அவர்கள் காணப்பட்டார்கள். கடவுளே! இவர்களுடைய புத்தியை என்னவென்று சொல்வது? வீட்டிலேயே ஒரு பைத்தியத்தை வைத்துக் கொண்டு இங்கே நாடகத்திலும் பைத்தியத்தைப் பார்க்க இவர்கள் வந்தார்களே? இந்த இலட்சணத்தில் எனக்குக்கூட "ரொம்ப நல்ல நாடகம்; பார்க்கத் தவற வேண்டாம்!" என்று எச்சரித்தார்களே! இவர்களுடைய கல் நெஞ்சையும் ராட்சத குணத்தையும் என்ன வென்று சொல்லுவது?

பிறகு நாடக மேடையில் நடந்த துரிதமான சம்பவங்கள் எனக்கு மேலும் மேலும் வியப்பை அளித்தன.

அந்தப் பைத்தியக்காரன் அந்தப் பாழும் வீட்டின் விட்டத்தில் ஒரு கயிற்றை மாட்டி அதில் தூக்கிட்டுக் கொள்ள முயன்றான். அப்போது விட்டம் திடீரென்று முறிந்து அவன் தலையில் விழுந்தது! அச்சமயம் யாரோ ஒரு ஸ்திரீ தலை தெறிக்க ஓடி வந்து கீழே கிடந்த பைத்தியக்காரனைக் கட்டிக் கொண்டு அழுதாள். இத்துடன் அக் காட்சி முடிவடைந்தது.

அடுத்த காட்சியில் அந்தப் பைத்தியக்காரன் ஒரு ஆஸ்பத்திரிப் படுக்கையில் கிடந்தான். அவனுக்குச் சுயப் பிரக்ஞை வரப் போகிறது என்று டாக்டர் சொன்னார். பிரக்ஞை வந்ததும் அவன் முன்போல் பைத்தியம் போல் கூச்சலிடாமல் சாவதானமாகப் பேசினான். அவன் அருகில் இருந்த ஸ்திரீ "இப்போது ஹைதராபாத்தில் ரஸாக்கியர் ஆட்சி இல்லை. நைஜாம் ராஜ்யம் சுதந்திர இந்தியாவோடு சேர்ந்து விட்டது!" என்று சொன்னாள். உடனே அவன் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து உற்சாகமாகப் பேசினான். அவனும் அந்த ஸ்திரீயும் சிறிது நேரம் கொஞ்சிக் குலாவினார்கள்.

பிறகு நாடக மேடையில் இருபது முப்பது பேர் கூட்டமாய் நின்று,

"கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே!"

என்று பாடினார்கள். பிறகு திரை விழுந்தது. நாடகமும் முடிந்தது.

இதெல்லாம் என் மனதில் எவ்வளவு குழப்பத்தை உண்டாக்கியிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா? தேவகி முதலியவர்கள் என்னிடம் சொன்னதற்கும் இந்த நாடக நிகழ்ச்சிகளுக்கும் இருந்த பொருத்தம் எப்படி ஏற்பட்டது? தற்செயலாக ஏற்பட்டதா? அல்லது... அல்லது...

யோசிக்க யோசிக்கக் குழப்பம் அதிகமேயாயிற்று. அந்தக் குழப்பத்துக்கிடையே தேவகியும் அவளுடைய குழந்தைகளும் நின்ற இடத்தைக் கண்டு பிடித்து அங்கே போய்ச் சேர்ந்தேன். நாடகம் பிரமாதம் என்பதாகச் சிலாகித்துப் பேசிக் கொண்டே அவர்கள் என்னைப் பின் தொடர்ந்து வந்து காரிலும் ஏறிக் கொண்டார்கள். என்னிடம் அவர்கள் அபிப்பிராயம் கேட்டபோது நானும் "நாடகம் நன்றாயிருந்தது!" என்று சொல்லி வைத்தேன். வீட்டுக்குப் போனதும் எல்லாச் சந்தேகங்களையும் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு விடுவது என்று தீர்மானித்தேன்.

ஆனால் வீடுவந்து சேர்ந்து அவர்கள் எல்லாருடனும் நானும் உள்ளே போனதும் ஒன்றுமே கேட்க எனக்கு மனம் வரவில்லை. என்னத்தைக் கேட்பது? எப்படிக் கேட்பது? எது கேட்டாலும் அசட்டுப் பட்டம் எனக்கு வந்து சேரும் என்று தோன்றியது.

ஆகவே விடைபெற்றுக் கொண்டு போக எண்ணி, "நான் போய் வரட்டுமா?" என்றேன்.

"நன்றாயிருக்கிறது. அதற்குள்ளே போகிறதாவது? இவர்களுடைய அப்பா இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார். அவரையும் பார்த்துவிட்டுச் சாப்பிட்டு விட்டுப் போகலாம்!" என்றாள் தேவகி.

"இவர்களுடைய அப்பாவா? அது யார்?" என்று கேட்டேன்.

"இன்னும் உங்களுக்குத் தெரியவில்லையா, என்ன? தெரிந்துகொண்டு விட்டீர்கள் என்றல்லவா இருந்தேன்? இன்று நாடகத்தில் 'ஹீரோ'வாக நடித்தவர்தான்!" என்றாள் தேவகி.

"அப்படியா? முந்தாநாள் நான் கேட்டபோது ஏதோ ஹைதராபாத்தில் நடந்ததாகச் சொன்னாயே?"

"ஆமாம்; அதுவுந்தான் நாடகத்தில் வந்ததே! நான் சொன்னபடியே அவரைக் கறுப்பு முகமூடி அணிந்த ரஸாக்கர்கள் வந்து அழைத்துப் போனார்களே?" என்றாள் தேவகி.

"அப்படியானால் முந்தாநாள் இந்த வீட்டு மச்சுமேல் இருந்தவர்?..."

"அவரேதான்! முந்தாநாள் நீங்கள் வந்திருந்தபோது மச்சுமேல் கடைசி ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. வேஷம் கூடப் போட்டுப் பார்த்துக் கொண்டார்கள். அதனாலேதான் உங்களை இவரால் பார்த்துப் பேச முடியவில்லை. 'யாருக்கும் சொல்லக் கூடாது' என்று கண்டிப்பாக உத்தரவு போட்டிருந்தார்! நான் சொன்னதை யெல்லாம் நீங்கள் நிஜம் என்றே நினைத்துக் கொண்டீர்களா, என்ன?"

எனக்கு அளவில்லாத கோபம் வந்தது. பொய்யும் சொல்லிவிட்டு அதை நம்பியதற்காக என் பேரில் குற்றமும் அல்லவா சொல்கிறாள்? அழகாயிருக்கிறது காரியம்!

இந்தச் சமயத்தில், உள்ளே உடுப்பைக் கழற்றி வைப்பதற்காகப் போயிருந்த ஹெட்மாஸ்டர் வந்தார்.

"அப்பா! இவரிடம் முந்தாநாள் நீங்கள் உண்மையைச் சொல்லவில்லையா?" என்று தேவகி கேட்டாள்.

"சொல்லாமல் என்ன? முக்காலே மூன்று வீசம் உண்மையைத்தான் சொன்னேன். உன் புருஷன் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருப்பதாகச் சொன்னேன். இந்த வீடு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில்லையென்று யார் சொல்லுவார்கள்? இல்லாவிட்டால் இப்படிப்பட்ட அழகான நாடகத்தைப் போட உன்னுடைய புருஷனுக்குத் தோன்றியிருக்குமா!" என்றார் பத்மநாப ஐயங்கார்.

அவர் சொன்னபடி இந்த வீடு பைத்தியக்கார ஆஸ்பத்திரியோ, என்னமோ! ஆனால் இங்கு வந்ததின் பலன் என்னை இவர்கள் பைத்தியமாக அடித்து விட்டார்கள் என்பது நிச்சயம்! என்னுடைய இந்த அபிப்பிராயத்தை உறுதிப் படுத்துவதற்கு அப்போது இன்னொரு சம்பவம் நேர்ந்தது. வாசலில் சைக்கிள் மணிச் சத்தம் கேட்டது.

"அப்பா வந்துவிட்டார்!" என்று குழந்தைகள் குதித்தார்கள்.

ஆம்; அடுத்த நிமிஷம் அவர்களுடைய அப்பா வீட்டுக்குள் பிரவேசித்தார். அந்த அப்பா யார் என்று நினைக்கிறீர்கள்? பிரபல ஆயுர்வேத வைத்தியரான டாக்டர் சுந்தரம் எல்.ஐ.எம். அவர்கள்தான்!

அன்று காலையில் டாக்டர் சுந்தரத்தின் மருத்துவ சாலையில் அவனை விட்டுப் பிரிந்த போது ஏதோ ஒன்றை ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றும் ஞாபகத்திற்கு வரவில்லையென்று சொன்னேன் அல்லவா? அது என்னவென்று இப்போது பளீர் என்று நினைவு வந்தது. அந்த வீட்டு ரேழியில் முந்தா நாள் என் காலில் தடுக்கிக் காயப்படுத்திய அதே சைக்கிள் தான் டாக்டர் சுந்தரத்தின் மருத்துவ சாலையிலும் இருந்தது. அசோக சக்கரக்கொடி இரண்டிலும் இருந்தது என்பது இப்போது நினைவுக்கு வந்தது.

டாக்டர் சுந்தரம் என்னைப் பார்த்ததும், "ஹலோ! கிருஷ்ணசாமி! இந்த வீட்டுப் பக்கமே வராதே என்று சொன்னேனே, அதை உண்மையாக எடுத்துக் கொண்டு விடுவாயோ என்று பயந்து போனேன். நீ வந்தது பற்றி ரொம்ப சந்தோஷம். நாடகம் எப்படி இருந்தது? உனக்குப் பிடித்திருந்ததா?" என்று கேட்டான்.

நான் பதில் சொல்வதற்குள் குழந்தைகள் "ரொம்ப நன்றாயிருந்தது, அப்பா!" என்று கூச்சலிட்டார்கள்.

தேவகி சுந்தரத்தைப் பார்த்து, "போதும், போதும்! இந்த மாதிரி அசந்தர்ப்ப நாடகத்தை இனிமேல் நீங்கள் போடவே வேண்டாம். எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. நீங்கள் பைத்தியமாக நடித்தபோது உண்மையிலேயே உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதோ என்று எனக்குப் பயமாய்ப் போய்விட்டது. அப்புறம் யாரோ ஒரு தடியன் புடவையைக் கட்டிக் கொண்டு வந்து உங்களைப் 'பிராண நாதா!' என்று அழைத்தபோது எனக்குச் சகிக்கவேயில்லை. இந்த மாதிரி நாடகம் போடவில்லையென்று யார் அழுதார்கள்?" என்றாள்.

அப்போது சுந்தரம் தேவகியின் தகப்பனாரைப் பார்த்து, "பாருங்கள், மாமா! இந்த அழகான கதையைக் கற்பனை செய்து கொடுத்ததே இவள்! இப்போது என் பேரில் குற்றம் சொல்கிறாள்! இதற்கு நான் என்ன செய்கிறது?" என்றான்.

இந்தச் சமயத்தில் நான், "ஆமாம்; உன் மனைவிக்கு அந்த நாளிலிருந்தே இது வழக்கந்தானே? தான் செய்த காரியத்துக்குப் பழியைப் பிறர் தலையில் போடுவது?" என்றேன்.

சுந்தரம் என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்தான். "ஓகோ! அந்த போர்ஜரி கடிதத்தைப் பற்றிச் சொல்கிறாயோ? அது தேவகி மட்டும் செய்ததில்லை; அவளும் நானும் சேர்ந்து யோசனை செய்து பண்ணிய காரியந்தான். அதை இன்னும் நீ மறக்கவில்லையா?" என்றான்.

"விஷயமே எனக்கு இப்போதுதானே தெரிந்தது? இனிமேல் மறந்துவிடவேண்டியதுதான்" என்றேன்.

ஹெட்மாஸ்டர் அப்போது, "சுந்தரம்! நியாயமாக நீயும் தேவகியும் கிருஷ்ணசாமியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும். நீங்கள் என்னை ஏமாற்றியதாவது போகட்டும். தேவகிக்கு இஷ்டமில்லாத இடத்தில் கலியாணம் நிச்சயம் செய்தது என்னுடைய பிசகு. அதனால் நான் அடைந்த தொந்தரவுக்கு உங்களைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. ஆனால் கிருஷ்ணசாமியின் பேரில் பழியைப் போட்டீர்களே? அது ரொம்ப அநியாயம்! எத்தனை வருஷமாகியும் அது இன்னும் அவன் மனதில் உறுத்திக் கொண்டிருக்கிறது! நீங்கள் அவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளாவிட்டால் உங்களுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்!" என்றார்.

"இதெல்லாம் ஒன்றும் வேண்டியதில்லை, ஸார்! யார் யாரை மன்னிக்கிறது?" என்றேன் நான். ஹெட்மாஸ்டரின் வார்த்தைகள் என்னை உருக்கிவிட்டன.

"ஆமாம், அப்பா! அவர் அப்படியெல்லாம் மனதில் ஒன்றை வைத்துக் கொள்கிறவர் அல்ல, அவருடைய நல்ல சுபாவம் அப்போதே நமக்குத் தெரியுமே?" என்றாள் தேவகி.

"மனதில் கோபம் வைத்துக் கொள்கிறவனாயிருந்தால் இன்றைக்கு இந்தச் சந்து வீட்டைத் தேடி வந்திருப்பானா? நான் அவ்வளவு அவனைப் பயமுறுத்தியிருந்துங்கூட!" என்றான் சுந்தரம்.

"சுந்தரம்! மற்ற எதைப்பற்றியும் எனக்குக் கோபம் இல்லை. ஆனால் தேவகியின் தொல்லையைப் பொறுக்காமல் அவளுடைய புருஷன் தூக்குப்போட்டுக் கொண்டான் என்று சொன்னாயே, அதை மட்டும் நான் மறக்க முடியாது!" என்றேன்.

"ஆம், அப்பா, கிருஷ்ணசாமி! உன்னிடம் சொன்னதை நிறைவேற்றலாம் என்றுதான் பார்த்தேன். தூக்குப் போட்டுக்கொள்ள முயன்ற போது விட்டம் முறிந்து என் தலையில் விழுந்தால் அதற்கு நான் என்னத்தைச் செய்கிறது? என் பேரில் வஞ்சனை இல்லை!" என்றான் சுந்தரம்.

"போதும் இந்தப் பேச்சு! முகத்தில் இன்னும் கொஞ்சம் பைத்தியக் களை இருக்கிறது! குழாயடிக்குச் சென்று முகத்தை நன்றாய் சோப்புப் போட்டுத் தேய்த்து அலம்பி விட்டு வாருங்கள்! அதற்குள் நான் இலையைப் போடுகிறேன்" என்றாள் தேவகி.

"இன்றைக்கு இந்த வீட்டில் சாப்பாடுகூட உண்டா? தளிகை யார் செய்தார்கள்!" என்றான் சுந்தரம்.

"நாடகத்திற்குப் புறப்படுவதற்கு முன்பே தளிகை செய்து வைத்து விட்டுத்தான் கிளம்பினேன். புளியோதரை செய்திருக்கிறேன். கிருஷ்ணசாமி! உங்களுக்குக் கூடப் புளியோதரை பிடிக்குமே? அம்மா செய்து போட்டால் ஆசையோடு சாப்பிடுவீர்களே!" என்றாள் தேவகி.

அப்போது தேவகியின் தாயார் ரங்கநாயகி அம்மாளைப்பற்றிய ஞாபகங்கள் என் மனதில் பொங்கி எழுந்தன. அடாடா! எத்தனை அன்பு! எவ்வளவு அபிமானம்! அந்த அம்மாள் கையினால் பாகம் செய்த புளியோதரை, திருக்கண்ணமுது முதலியவைகளை எவ்வளவு ஆசையோடு அந்த நாளில் சாப்பிட்டிருக்கிறேன்!

"எனக்குப் புளியோதரை பிடிக்கும் என்பது வாஸ்தவந்தான். ஆனால் இன்றைக்கு வேண்டாம். வீட்டுக்குப் போகவேண்டும்" என்று சொல்லிக் கொண்டு கிளம்பினேன்.

"அப்படியானால் இன்னொரு நாள் சாப்பிடுவதற்குக் கட்டாயம் வரவேண்டும்" என்றாள் தேவகி.

"ஆம், அப்பா! பழைய சிநேகத்தை மறந்து விடாதே! அடிக்கடி வந்து கொண்டிரு!" என்றான் சுந்தரம்.

அவனுடைய அழைப்பை ஹெட்மாஸ்டரும் ஆமோதித்தார். "கிருஷ்ணசாமி! இன்னொரு நாள் வந்தால் உனக்கு யோகாசனத்தைப் பற்றி எல்லாம் சொல்கிறேன்!" என்றார்.

"அவர் சொல்வது ஒன்றையும் நீ நம்பாதே! யோகாசனத்தின் மகிமையைப் பற்றி அவர் பிரமாதமாகப் பிரசங்கம் செய்வார். அவருடைய அலமாரியில் பார்த்தால் ஐந்தாறு வித லேகியம் வைத்திருப்பார். நீ ஒருநாள் என்னுடைய டிஸ்பென்ஸரிக்கு வா! ஆறு மாதம் சியவனப்பிராஸ லேகியத்தைச் சாப்பிட்டுப் பார்!" என்றான் சுந்தரம்.

"அவர் கிடக்கிறார்! நீங்கள் மருந்துக் கடைக்குப் போக வேண்டாம். இங்கே வாருங்கள்!" என்றாள் தேவகி.

குழந்தைகள், "சித்தியா! நாளைக்கு வந்து எங்களைக் காரில் ஏற்றிக் கொண்டு பீச்சுக்கு அழைத்துப் போங்கள்!" என்றன.

"ஆகட்டும்! இன்னொரு நாள் அவசியம் வருகிறேன்!" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.

காரில் ஏறி உட்கார்ந்ததும், "இந்தச் சிந்தாதிரிப்பேட்டைப் பக்கமே இனிமேல் தலைகாட்டுவதில்லை!" என்று எண்ணிக்கொண்டேன்.

எல்லாருமாகச் சேர்ந்து எனக்கு அசட்டுப் பட்டம் கட்டிப் பைத்தியமாக அடித்து விட்டார்களே?

போனால் போகட்டும்! எப்படியாவது அவர்கள் சௌக்யமாக இருந்தால் சரி. தேவகியும் அவளுடைய கணவனும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அதுதான் வேண்டியது. ஹெட்மாஸ்டரும் உற்சாகமாக இருக்கிறார். வேறு என்ன வேண்டும்?

வெள்ளிய நிலவு பிரகாசித்துக் கொண்டிருந்தது. பனியினால் உலகமே குளிர்ந்திருந்தது.

பழைய நினைவுகள் குமுறிக் கொண்டு வந்தன. கடைசியாக, இந்தச் சுந்தரமா தேவகியைக் கலியாணம் செய்து கொண்டான்? என்னையும் வைத்தியநாதனையும் அடிக்கடி சண்டை மூட்டி விட்டு இவன் பரம சாதுவைப் போல் நடித்தவன் அல்லவா? அந்த நடிப்புத் திறமைதான் இன்றைக்கு அவனிடம் பிரகாசிக்கிறது! பொல்லாத அமுக்கன்!

ஏதோ போகட்டும்! தேவகி தன் மனதுக்கொத்த புருஷனை மணந்து திருப்தியாக இருக்கிறாள் அல்லவா? அதுதான் வேண்டியது.

அன்று வரை நான் அறியாத மன நிம்மதியை அன்று கண்டேன்.

அந்த நிம்மதியைக் குலைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. ஆகையினாலேயே சிந்தாதிரிப்பேட்டைக்கு அப்புறம் நான் போகவில்லை. இந்த வருஷத்துப் பொருட்காட்சிக்குக் கூடப் போகவில்லை.

தேவகியின் வாழ்க்கை இப்படியே நீடித்துச் சந்தோஷமாயிருக்கும்படி பெருமாள் அருள் புரியட்டும்.

கல்கி வார இதழ்
12-5-50 - 12-3-50
---------------

59. பால ஜோசியர்

1

பிரசித்தி பெற்ற பால ஜோசியம் பட்டாபிராமன் பி.ஏ.யைப் பற்றி அநேகர் கேள்விப்பட்டிருக்கலாம். அவனுடைய ஜோசிய விளம்பரங்களையும் பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம். பட்டாபிராமன் நல்ல புத்திசாலி; குணவான்; யோக்யன்; சுறுசுறுப்புள்ளவன்; யாருக்கும் கெடுதல் நினைக்காதவன்; எல்லாரும் ஒன்றாயிருக்க வேண்டுமென்று நினைக்கப் பட்டவன். இதெல்லாம் உனக்கெப்படித் தெரியும் என்று நீங்கள் கேட்கலாம். எனக்குத் தெரிவதற்குக் காரணம் இருக்கிறது. ஏனெனில் அந்தப் பிரசித்தி பெற்ற பாலஜோசியம் பட்டாபிராமன் என்பது அடியேன் தான்!

இந்தக் காலத்தில் சில பேர் "ஜோசியர்" என்று பெயர் வைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றிப் பிழைக்கிறார்களே, அந்த மாதிரி மோசக்காரர் கூட்டத்தில் சேர்ந்தவன் நானல்ல. உண்மையாகவே ஜோதிட சாஸ்திரத்தில் அறிவைச் செலுத்தி வெகுவாக ஆராய்ச்சி செய்தேன். அந்த சாஸ்திரத்தில் உண்மைத் தத்துவம் இருக்கிறது என்பதை ஐயமின்றி உணர்ந்தேன். என்னுடைய ஆராய்ச்சி அறிவை நன்கு பயன் படுத்தி, ஜாதகம் முதலியவை நன்கு பார்த்துத்தான் மற்றவர்களுக்குப் பலன் சொல்லி வந்தேன். "ஆமாம் இதெல்லாம் ஏன் இறந்த காலத்தில் சொல்கிறாய்?" என்று நீங்கள் கேட்கக்கூடும். வாஸ்தவம்; இறந்த காலத்தில் தான் சொல்கிறேன். ஏனெனில் ஜோசியத் தொழிலை நான் விட்டு விட்டேன். என் ஜோசிய விளம்பரங்களை நீங்கள் பத்திரிகைகளில் இனிமேல் பார்க்கமாட்டீர்கள். என் சொந்த விஷயத்தில் நான் நம்பிக்கை இழந்த ஒரு சாஸ்திரத்தை மற்றவர்கள் விஷயத்தில் உபயோகப்படுத்தவும், அதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் எனக்கு விருப்பமில்லை. என் மனச்சாட்சி அதற்கு இடங்கொடுக்கவில்லை.

ஜோசியத்தில் நான் நம்பிக்கை இழந்தது எப்படி? அதைச் சொல்வதற்குத்தான் முன் வந்திருக்கிறேன். ஆனால், ஜோசியத்தில் நான் ஏன் நம்பிக்கை இழந்தேன் என்று சொல்வதற்கு முன்னால், அதில் எனக்கு நம்பிக்கை வந்தது எப்படி என்பதைச் சொல்ல வேண்டும்.

பள்ளிக் கூடத்திலும் சரி கலாசாலையிலும் சரி, படிப்பில் நான் முதன்மையாகவே இருந்து வந்தேன். எல்லாப் பரீட்சைகளிலும் நல்ல மார்க்குகள் வாங்கி வந்தேன். பி.ஏ. வகுப்பில் படித்த போது எனக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய துக்கம் நேர்ந்தது. என் தகப்பனார் திடீரென்று காலஞ் சென்றார். அவர் தாலுகா குமாஸ்தா உத்தியோகத்திலிருந்தவர். தமது சொற்ப சம்பளத்தில் பணம் மீத்து என்னைப் படிக்க வைத்து வந்தார். சிறு பிராயத்திலேயே தாயாரை இழந்த துரதிர்ஷ்டசாலி நான். ஆகவே, தகப்பனார் தான் எனக்கு தாயாகவுமிருந்து என்னைக் காப்பாற்றி வந்தார். அவருடைய மரணம் என்னைக் கலங்கச் செய்துவிட்டது. பரீட்சைக்கு ஒரு மாதம் இருக்கும் போது அவர் இறந்தபடியால், அந்த வருடம் நான் பரீட்சைக்குப் போக முடியவில்லை. அடுத்த செப்டம்பரில் பரீட்சைக்குப் போனேன். அது வரைக்கும் எல்லாப் பரீட்சைகளிலும் முதல் வகுப்பிலேயே தேறி வந்த நான், பி.ஏ. பரீட்சையில் மூன்றாம் வகுப்பில் தான் தேறினேன்.

அதற்குப் பிறகு என்ன செய்வதென்று கவலை உண்டாயிற்று. சட்ட கலாசாலையில் படிக்கலாமென்று முன்னால் எண்ணமிருந்தது. இப்போது அது முடியாத காரியமாயிற்று. பணத்துக்கு எங்கே போவது? ஏதாவது உத்தியோகம் தேடுவதைத் தவிர வேறு வழியில்லை. சென்னைப் பட்டணத்துக்கு வந்து உத்தியோகம் தேடத் தொடங்கினேன். எவ்வளவோ முயற்சிகள் செய்தும் எனக்கு வேலை கிடைக்க வில்லை. முப்பது ரூபாய் சம்பளந்தான் நான் தேடியது. அது கூடக் கிடைக்கவில்லை. என்னைவிடக் குறைந்த படிப்புள்ளவர்களுக்கெல்லாம் கிடைத்தது. எனக்கு மட்டும் கிடைக்கவில்லை. "அவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள், நமக்கு அதிர்ஷ்டமில்லை" என்று எண்ணத் தொடங்கினேன்.

அப்போது நான் அறிந்த இன்னொரு செய்தி அதிர்ஷ்டத்தின் மேல் எனக்கு அதிக நம்பிக்கை உண்டாக்கிற்று. என்னுடன் ஹை ஸ்கூலில் நாலாவது பாரம் முதல் கோபாலகிருஷ்ணன் என்ற பையன் படித்து வந்தான். மார்க்கு வாங்குவதில் அவனுக்கும் எனக்குந்தான் முக்கியமான போட்டி. ஆனாலும், அநேகமாக நான் தான் அவனைவிட அதிக மார்க்கு வாங்குவேன். என் தகப்பனாரின் மரணத்தினால் நான் பரீட்சைக்குப் போக முடியாத வருஷத்தில் அவன் பி.ஏ. முதல் வகுப்பில் தேறினான். அவனுடைய கெட்டிக்காரத்தனத்தைக் கண்ட மயிலாப்பூர் வக்கீல் ஒருவர், தம் பெண்ணை அவன் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்ற நிபந்தனையின் பெரில், அவனை ஐ.சி.எஸ். பரீட்சைக்குப் படிக்க அனுப்பியிருக்கிறார் என்று அறிந்தேன். இதைப் பற்றி அவனுடைய சிநேகிதர்கள் சிலர் பரிகாசம் செய்தார்கள். "ஐ.சி.எஸ். உத்தியோகத்துக்காக அடிமை ஒப்பந்தம் எழுதிக் கொடுத்துவிட்டான்" என்று சொன்னார்கள். ஆனால், இது பொறாமையால் எழுந்த பேச்சு என்பதை நான் அறிவேன். இன்று இப்படி பரிகாசம் செய்கிறவர்கள், நாளைக்கு அவன் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஸப் கலெக்டராக வந்ததும், அவனிடம் போய்க் கையைக் கட்டிக் கொண்டு நிற்பார்கள். அதுவரை எனக்கு வேலை கிடைக்காவிட்டால் நானும் அவனிடம் போனாலும் போவேன். ஒருவேளை, அவன், "இப்போது பார்க்கமுடியாது" என்று டவாலிச் சேவகனிடம் சொல்லி அனுப்பிவிடுவான். என்னைப் பார்ப்பதற்கு அவன் மனமுவந்து சம்மதித்தாலும், உத்தியோகம் என்று சொன்னதும், "உத்தியோகத்துக்கு நான் எங்கே அப்பா போவேன்? முன் காலத்திலே போல இப்போது கலெக்டர்களுக்கு அதிகாரம் ஏது? பப்ளிக் ஸர்விஸ் கமிஷன் அல்லவா நியமனம் செய்கிறது? 'கம்யூனல் ரொடேஷன்' வேறு இருக்கிறது" என்பான்.

இதை நினைக்க நினைக்க, வாழ்க்கையின் விசித்திரத்தைப் பற்றி எனக்கு மேலும் மேலும் வியப்புண்டாயிற்று. கோபாலகிருஷணன் என்னைவிட எந்த விதத்திலும் புத்திசாலி அல்ல; ஆனாலும், அவன் ஏன் கலெக்டராக வேண்டும்? நான் ஏன் இப்படி வேலைக்குத் திண்டாட வேண்டும்? இதற்கு அதிர்ஷ்டம் காரணமில்லாது வேறு என்ன இருக்க முடியும்? இன்னும், உலகத்தை நான் சுற்று முற்றும் பார்த்து, வாழ்க்கை விசித்திரங்களைக் கவனிக்கத் தொடங்கினேன். கொஞ்சமும் லாயக்கில்லாதவர்கள் எல்லாம் பெரிய பெரிய பதவிகளில் உட்கார்ந்து கொண்டு அதிகாரம் செலுத்தினார்கள். புத்திசாலிகளும் குணசாலிகளும் ஜீவனோபாயத்துக்கே திண்டாடிக் கொண்டிருந்தார்கள். எதிர்பாராத விதத்தில் சிலர் திடீரென்று பணக்காரர்கள் ஆனார்கள்; அதே மாதிரி எதிர்பாராத விதங்களில் சிலர் திடீரென்று ஏழைகளானார்கள்.

நான் உத்தியோகம் தேடி அலைந்த போது, இம்மாதிரி விசித்திரங்கள் பலவற்றை அறிந்தேன். இவற்றையெல்லாம் பார்க்கப் பார்க்க, "நம்முடைய சாமர்த்தியத்தினாலும் முயற்சியினாலும் மட்டும் ஒன்றும் நடப்பதில்லை. மனுஷ்யனுடைய காரியங்களை நடத்தும் வேறு சக்திகள் இருக்கின்றன" என்ற உறுதி பலப்பட்டு வந்தது. இந்த உலக வாழ்க்கையில் வெற்றியடைந்தவர்கள் எல்லாரும் தங்கள் சாமர்த்தியத்தினாலேயே வெற்றியடைந்து விடவில்லை; சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு உதவி செய்திருக்கின்றன. தோல்வியடைந்தவர்கள் எல்லாரும், தங்கள் முட்டாள்தனத்தினாலேயே தோல்வியடைந்து விடவில்லை. சந்தர்ப்பங்கள் உதவி செய்யாதபடியினாலேயே தோல்வியடைந்தார்கள்.

இவ்வாறு ஒரு மனுஷனுக்குச் சந்தர்ப்பங்கள் உதவி செய்வதும் செய்யாததும், குருட்டுத்தனமாக நடக்கும் காரியமா? அல்லது, ஏதாவது ஒரு நியதியின்படி நடக்கிறதா? அதாவது அதிர்ஷ்டம் என்பதெல்லாம் குருட்டு அதிர்ஷ்டந்தானா? அல்லது காரண காரியக்கிரமம் உண்டா?

ஒருவனுடைய வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் அவ்வப்போது தற்செயலாகவே உண்டாகின்றனவா? அல்லது, பிறக்கும்போதே, இந்த ஜீவனுக்கு இந்திந்தக் காலத்தில் இன்னின்ன மாதிரி நடக்குமென்று ஏற்பட்டு விடுகின்றதா?

இத்தகைய சிந்தனைகளில் என் மனம் அடிக்கடி ஈடுபடத் தொடங்கியது. அதன் பயனாக, "மனித வாழ்க்கையில், எல்லாம் முன்னால் நியமித்தபடிதான் நடக்கிறது" என்ற ஒரு நம்பிக்கை என் உள்ளத்தில் பலமாக வேரூன்றிவிட்டது. எல்லாம் முன்னால் நியமித்தபடியே நடக்கின்றனவென்றால், அப்படி நடக்கப் போவதை முன்னதாகவே அறிந்து கொள்வது சாத்தியமா? "இது சாத்தியம்" என்பதாக ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது. அதில் உண்மை இருக்குமோ?

ஒரு மனிதனுடைய பிறந்த வேளையை வைத்துக் கொண்டு அவனுடைய வருங்காலத்தையெல்லாம் நிர்ணயிப்பது சாத்தியமாயிருக்குமோ? கிரகசஞ்சாரத்தைக் கொண்டு மனிதனுடைய வாழ்வை நிர்ணயிக்க முடியுமோ? இவ்வாறு ஜோசியத்தில் என்னுடைய புத்தி பிரவர்த்தித்தது.

2

ஒரு நாள் மாலை ஐந்து மணி இருக்கும். என்னுடைய அறைக்குள் ஒரு சிறு பையன் வந்தான். அவனுக்குப் பத்து வயதிருக்கலாம். முகம் குறுகுறுவென்று களை வடிந்து கொண்டிருந்தது. அவன் வாழ்க்கையில் மிக மேலான நிலைக்கு வரப் போகிறான் என்று ஜோசியம் சொல்வதற்கு ஜாதகம் பார்க்க வேண்டியதில்லை; முகத்தைப் பார்த்தே சொல்லிவிடலாம்.

"ஸார்! ஜோசியர் நீங்கள் தானா, ஸார்?" என்று கேட்டான். அவன் குரலில் ஒரு கனிவு இருந்தது.

"ஆமாம், அப்பா! உனக்கு என்ன வேணும்?" என்றேன்.

"அம்மாவுக்கு உடம்பு சரியாயில்லை; உங்களைக் கூட்டிக் கொண்டு வரச்சொன்னாள்" என்றான்.

அவனுடைய முகத்தில் தோன்றிய சோகக் குறிக்கும், குரலில் தொனித்த கனிவுக்கும் எனக்குக் காரணம் தெரிந்தது. ஆனாலும், அவன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாததற்காக நான் போய் என்ன பிரயோஜனம்?

"நான் வைத்தியனில்லையே, அப்பா!" என்றேன்.

"வைத்தியத்துக்காக இல்லை, ஸார்! ஏதோ ஜாதகம் பார்க்க வேணுமாம்; அதற்காகத்தான். உங்களை அவசியம் வந்துவிட்டுப் போகச் சொன்னாள், ஸார்!" என்றான்.

உடனே நான் அங்கவஸ்திரத்தை எடுத்துப் போட்டுக் கொண்டு அந்தப் பையனுடன் கிளம்பினேன்.

"வீடு எங்கே இருக்கிறது, தம்பி!" என்றேன்.

"கிட்டத்தான் ஸார், இருக்கிறது. நான் அழைத்துக் கொண்டு போகிறேன்" என்றான் பையன்.

சாலையில் நடந்து கொண்டே "வீட்டில் அப்பா இல்லையா, தம்பி?" என்று கேட்டேன்.

"எங்க அப்பா செத்துப் போய்ட்டார், ஸார்! ஆறு வருஷம் ஆச்சு" என்றான்.

சற்றுப் பொறுத்து, "உனக்கு அண்ணா இருக்கிறாரா?" என்று கேட்டேன்.

"இரண்டு அண்ணா இருக்கா, ஸார்! ஒருத்தன் தான், ஆகாசப் படையிலே சேர்ந்திருக்கான். உங்களுக்குத் தெரியாதா, ஸார்?" என்றான். அவனுடைய குரலில் பயத்தோடு பெருமையும் கலந்திருந்தது.

எழும்பூரிலிருந்து ஒரு பையன் 'ஏர் பைலட்டாகச் சேர்ந்திருக்கிறான் என்று நான் முன்னமே கேள்விப்பட்டிருந்தேன். பிற்பாடு அவன் சீமைக்கு 'ராயல் ஏர் போர்ஸில்' சேர்வதற்குப் போயிருக்கிறானென்றும் சொன்னார்கள். அவனுடைய தம்பி தான் இவன். அவன் தாயாரைத்தான் பார்க்கப் போகிறோமென்றதும் எனக்கு ஒருவிதப் பெருமை உண்டாயிற்று.

ஜன நடமாட்டம் அதிகமில்லாத ஒதுக்குப்புறமான சாலையில் அவர்கள் வீடு இருந்தது. வாசலில் மதிள் சுவர் தாண்டியதும் ஒரு சின்னஞ்சிறு தோட்டம், அதற்குப் பின்னால் வீடு. வீட்டு வாசலில் சின்னத் தாழ்வாரம் இருந்தது. நாங்கள் வீட்டை அடைந்ததும், பையன், "இதோ நான் போய் அம்மாவிடம் சொல்கிறேன், ஸார்!" என்று கூறிவிட்டு உள்ளே போனான். வெளித் தாழ்வாரத்தில் கிடந்த நாற்காலியில் நான் உட்கார்ந்தேன். அடுத்த நிமிஷம் உள்ளிருந்து யாரோ வந்த சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். ஓர் இளம் பெண் என் முன்னால் நின்றாள். முக ஜாடையிலிருந்து, அவள் பையனுடைய தங்கையென்று ஊகித்துக் கொண்டேன். ஆச்சரியம் நிறைந்த தன் பெரிய கண்களை அகல விரித்து அவள் என்னை நோக்கினாள். என்னுடைய நெஞ்சை என்னமோ செய்தது. இப்படி ஓர் இளம் பெண்ணுடன் நேருக்கு நேர் பார்த்துப் பேசி எனக்கு வழக்கம் கிடையாது. எனவே, கலக்கத்துடன் எழுந்து நின்றேன்.

"நீங்கள் தான் பால ஜோசியரா?" என்று அந்தப் பெண் கேட்டாள்.

உடனே, கொஞ்சம் தைரியம் வந்து, "ஆமாம்" என்றேன்.

அவளுடைய இதழ்களில் ஒரு விஷமச் சிரிப்பின் ரேகை காணப்பட்டது.

"பால ஜோசியர் என்றால், பச்சைக் குழந்தையாயிருப்பீர்களாக்கும் என்று நினைத்தேன்!"

நான் கொல்லென்று சிரித்துவிட்டேன்.

அவள் சட்டென்று தன் வாயைப் பொத்திக் கொண்டதும் என் சிரிப்பு நின்றது. அவள் இரகசியம் பேசும் குரலில், "எங்க அம்மாவுக்கு உடம்பு சரியாயில்லை. அவளுக்கு மன வருத்தம் உண்டாகும்படியாக நீங்கள் ஒன்றும் சொல்லக்கூடாது. உங்களை ரொம்பவும் கேட்டுக் கொள்கிறேன்" என்றாள்.

என்னைக் கூப்பிட்ட காரணம் ஒருவாறு எனக்குப் புலப்படத் தொடங்கியது.

மறுபடியும் அவள், "எங்கள் அண்ணா ஆகாசப் படையில் சேர்ந்திருக்கிறான், தெரியுமோ, இல்லையோ? அவன் ஜாதகத்தைப் பார்க்கச் சொல்வாள். ஒன்றும் ஆபத்து இல்லை என்று நீங்கள் சொல்லிவிட வேணும் தெரிகிறதா?" என்று மன்றாடும் குரலில் சொல்லி, என்னை ஏறிட்டுப் பார்த்தாள். அவளுடைய கண்களில் நீர் துளித்திருப்பதைக் கண்டேன். அந்தக் கண்ணீர்த் துளிகள் என் நெஞ்சைப் பிளந்தன.

பையன் உள்ளேயிருந்து ஓடி வந்து, "அம்மா வரச் சொல்கிறாள், ஸார்!" என்றான்.

உள்ளே போனேன். இதற்குள் மணி ஆறு ஆகிவிட்டபடியால் வெளிச்சம் வெகுவாக மங்கியிருந்தது. அது பழைய நாள் முறையில் கட்டி வீடு. முற்றம், தாழ்வாரம், கூடம் இப்படியிருந்தது. கூடத்தில், ஒரு நாடாக் கட்டில் போட்டிருந்தது. அதில் ஒரு அம்மாள், படுத்திருந்தவர், என்னைக் கண்டதும் எழுந்து உட்கார்ந்தார். அவருக்கு வயது சுமார் ஐம்பது இருக்கும். அவரைப் பார்த்ததும் எனக்கு ஒருவித பயபக்தி உண்டாயிற்று. (அடிக்கடி "ஒருவித" என்று சொல்கிறேனில்லையா? இந்த உணர்ச்சிகளெல்லாம் எனக்கு முற்றும் புதியவையானபடியால் அப்படிச் சொல்ல வேண்டியிருக்கிறது.)

நான் அருகில் சென்றதும், "நீங்கள் ஏன் அம்மா எழுந்திருக்கிறீர்கள்? படுத்துக் கொள்ளுங்கள்" என்றேன்.

"பாதகமில்லை; நீங்கள் உட்காருங்கள்" என்று அந்த அம்மாள் கூறினார்.

கீழே விரித்திருந்த பாயில் நான் உட்கார்ந்ததும், அந்த அம்மாள், "ஒரு ஜாதகம் பார்ப்பதற்காக உங்களைக் கூப்பிட்டனுப்பினேன். எனக்கு உடம்பு சரியாயில்லை. இல்லாவிட்டால் நானே வந்திருப்பேன்" என்றார்.

"அதற்கென்ன, மாமி! எனக்கு வருவதற்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை" என்றேன்.

அந்த அம்மாள் தன் தலைமாட்டிலிருந்து ஒரு சிறு கைப்பெட்டியைத் திறந்து, அதற்குள்ளிருந்த ஒரு ஜாதகத்தை எடுத்தார்.

"பாலா! உள்ளே போய் ஹரிகேன் லாந்தர் ஏற்றி வாங்கிக் கொண்டு வா!" என்றார்.

அந்த வீட்டுக்கு மின்சார விளக்குப் போடவில்லை என்பதை அப்போதுதான் கவனித்தேன்.

"வீட்டுக்காரனிடம் நாங்கள் எவ்வளவோ சண்டைபிடிக்கிறோம், இன்னமும் லைட் போட மாட்டேனென்கிறான்" என்றார் அந்த அம்மாள்.

"அதனாலென்ன, மாமி! ஹரிகேன் வெளிச்சமே போதும்" என்றேன்.

லாந்தர் வந்ததும், ஜாதகத்தை வாங்கிப் பார்த்தேன். வாசலில் எனக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை நன்றாய் ஞாபகத்திலிருந்தது. ஜாதகம் எப்படியிருந்தாலும் அதைப் பற்றி ஒன்றும் கெடுதலாய்ச் சொல்வதில்லையென்று தீர்மானித்துக் கொண்டேன். ஆனால், என்ன ஆச்சரியம்! அந்த ஜாதகத்தில் கெடுதலாக ஒன்றுமேயில்லை! எவ்வளவோ கவனமாக ஆராய்ந்து கணக்குப் போட்டுப் பார்த்தேன். அது ஒரு சாதாரண ஜாதகம். நன்மையோ, கெடுதலோ, பிரமாதமாக ஒன்றுமில்லை. முக்கியமாக, இந்த வருஷத்தில் விசேஷ சம்பவம் எதுவும் ஜாதக ரீதிப்படி நேர்வதற்கில்லை.

எனக்கு இன்னது சொல்வதென்று தெரியவில்லை. உள்ளது உள்ளபடி "ஒன்றுமேயில்லை" என்றால், அந்த மாமிக்கு நம்பிக்கை உண்டாகாது. எனக்கு ஒன்றும் தெரியாது என்று தீர்மானித்துப் போகச் சொல்லி விடலாமல்லவா? அவர் என்னைப் பற்றி அம்மாதிரி அபிப்பிராயங் கொள்வதை நான் விரும்பவில்லை. ஆகவே, கொஞ்சம் யோசனை செய்து 'ரொம்ப உயர்ந்த ஜாதகம் அம்மா! இந்த மாதிரி ஜாதகம் சாதாரணமாய்ப் பார்க்க முடியாது. இந்த வருஷத்திலே ஒரு கண்டம் இருக்கிறது. ஆனால் ஆபத்து ஒன்றும் வராது, நிச்சயம். சுபகிரஹங்களின் சக்தி பலமாய் இருக்கிறது" என்றேன்.

என்னுடைய பேச்சின் பாதியிலேயே அந்த அம்மாளின் முகத்தில் புன்னகை ஏற்பட்டதைப் பார்த்தேன். நான் பேசி முடித்ததும் அது சிரிப்பாக மாறிற்று. பலவீனத்தினால், சிரிப்பு இருமலில் முடிந்தது.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏதோ தப்புப் பண்ணி விட்டோ ம் என்று மட்டும் உணர்ந்தேன்.

"இப்படித்தான் நீங்கள் எல்லாருடைய ஜாதகமும் பார்த்துச் சொல்கிறதா?" என்று அந்த மாமி கேட்டபோது, நான் பதில் சொல்லத் தெரியாமல் சிரித்து மழுப்பப் பார்த்தேன்.

அவர் விடவில்லை "வாசலில் வந்து பத்மா உங்களிடம் என்ன சொன்னாள்? ஒன்றும் ஆபத்தில்லையென்று சொல்லச் சொன்னாளா? அவள் அங்கு அவசரமாய் ஓடி வந்தபோதே எனக்குத் தெரியும்" என்றார்.

நான் மௌனமாயிருந்தேன்.

"பத்மா! இங்கே வா!" என்று மாமி கூப்பிட்டாள். பத்மா, வெண்ணெய் திருடிய கிருஷ்ணன் முகத்தைப் போல முகத்தை வைத்துக் கொண்டு வந்தாள். "ஏன் அம்மா" என்று பரிவாகக் கேட்டாள்.

"உனக்கு எத்தனை வயது இப்போது?"

"புருஷர்களிருக்கும் போது ஸ்திரீகள் வயதைச் சொல்லலாமா அம்மா?" என்றாள் பத்மா குறும்புச் சிரிப்புடன்.

"பாதகமில்லை, சொல்லு!"

"பதினேழு வயது."

"எனக்கெத்தனை வயது?"

"ஐம்பத்திரண்டு வயது."

"உன்னை விட எனக்கு முப்பத்தைந்து வயது அதிகமாயிற்றே! என்னைக் காட்டிலும் சமத்து நீயென்று நினைத்துக் கொண்டு காரியம் செய்யலாமா?" என்றார்.

பத்மா என்னைக் கோபமாய்ப் பார்த்தாள்.

"அவர் பேரில் குற்றமில்லை, பத்மா! சாமர்த்தியமாய்த்தான் பொய் சொல்லப் பார்த்தார். ஆனால் ஜாதகமே வேறேயாயிருந்தால், அவர் என்ன செய்வார்? உன் அண்ணா ஜாதகத்தைப் பார்க்க இவரைக் கூப்பிடவில்லை, பத்மா! அதைப் பார்த்து இப்போது என்ன ஆகப் போகிறது? உன் கல்யாணத்துக்காக வந்திருக்கும் வரன் ஜாதகம் இது" என்றார்.

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. பத்மாவைப் பார்த்தேன். அவள் தலையைக் குனிந்து கொண்டிருந்தாள்.

மாமி மறுபடியும், "நீ போ, பத்மா!" என்றார்.

பத்மா மாடிப் படிகளின் மேல் குதித்துக் கொண்டு ஏறினாள். அவள் போவதையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். மாடித் திருப்பத்தில் சற்று நின்று திரும்பிப் பார்த்தாள். கண்களை ஒரு தடவை சிமிட்டு, தலையை நாலு தடவை இப்படியும் அப்படியும் அசைத்தாள். பிறகு ஓடிப் போனாள். அந்த தலையசைத்தலுக்கு என்ன அர்த்தம்? "ஜாதகப் பொருத்தம் சரியாயில்லை" யென்று சொல்லச் சொல்கிறாளா?

பிறகு நான் பத்மாவின் அம்மாவைப் பார்த்து, "நான் ஏமாந்துதான் போனேன். உங்களையும் ஏமாற்றப் பார்த்தேன். தயவு செய்து மன்னிக்க வேண்டும்" என்றேன்.

"இப்போது சரியாய்ப் பார்த்துச் சொல்லுங்கள்" என்றார் பத்மாவின் தாயார்.

இதில் ஒன்றும் எனக்குக் கஷ்டம் ஏற்படவில்லை. முன்னமே நான் சொன்னதுபோல, அந்த ஜாதகம் ரொம்ப சாதாரண ஜாதகம் விசேஷம் ஒன்றுமே கிடையாது. பத்மாவை நான் பார்த்து அரை மணிக்கு மேல் ஆகவில்லையெனாலும், "அவளுக்குத் தகுந்த வரனில்லை" என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டேன். அப்படிப் பட்டவர்த்தனமாய் அவள் தாயாரிடம் சொல்லவில்லை. குறிப்பாகத் தெரியப்படுத்தினேன். மேலும், "இந்த ஜாதகத்திற்கு இந்த வருஷம் கல்யாணம் ஆகுமென்று தோன்றவில்லையே" என்றும் சொல்லி வைத்தேன்.

இந்த ஆராய்ச்சியின் போது, பத்மாவின் தாயாருக்கு ஜோசியம், ஜாதகம் பார்த்தல் முதலியவைகளைப் பற்றி நல்ல பரிச்சயமுண்டென்று தெரிந்தது. இன்னும், அவர் உயர்ந்த படிப்பும், உலக ஞானமும் உள்ளவரென்றும் தெரிந்து கொண்டேன்.

"என் தலையில் இந்தப் பெரிய பொறுப்பைச் சுமத்திவிட்டு அவர் போய் விட்டார். இவளுடைய தமையன்கள் தலைக்கு ஒரு போக்காயிருக்கிறார்கள். எனக்கோ நாளுக்கு நாள் உடம்பு நன்றாயில்லை. இந்தப் பெண்ணுக்கு எப்படியாவது ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைத்துவிட்டால், என் மனம் நிம்மதியடையும். தகுந்த வரன் கிடைக்கமாட்டேனென்கிறது. ஒன்று சரியாயிருந்தால், இன்னொன்று சரியாயில்லை" என்று அந்த அம்மாள் சொல்லிப் பெருமூச்சு விட்டார்.

"உங்களுடைய பெண்ணுக்கு தகுந்த வரனாய்க் கிடைப்பது கஷ்டந்தான்" என்று நான் சொன்னேன். சொன்னவுடனே, ஏதாவது பிசகாய்ச் சொல்லி விட்டோ மோ என்று சந்தேகம் வந்துவிட்டது.

"இன்னும் ஏதாவது பார்க்க வேணுமா, நான் போகலாமா, மாமி!" என்று கேட்டேன்.

"இன்றைக்கு நாழிகையாகிவிட்டது. இன்னொரு நாள் வருகிறீர்களா? என் பிள்ளைகளின் ஜாதகத்தையும் காட்டுகிறேன்" என்றார்.

"கட்டாயம் வருகிறேன்" என்று சொல்லிவிட்டு, நான் எழுந்து சென்றேன்.

நான் வாசல் பக்கம் போய், மதில் சுவரைத் தாண்டியதும், பின்னால், "ஸார், ஸார்" என்று சத்தம் கேட்டது. பாலன் நின்று கொண்டிருந்தான். "கொஞ்சம் இருக்கச் சொல்கிறா, ஸார்!" என்றான். திரும்பிப் போனேன். அதற்குள் பத்மா வந்து தன் கையிலிருந்த ஏதோ ஒன்றைப் பாலனிடம் கொடுத்து, என்னிடம் கொடுக்கச் சொன்னாள். அது ஒரு ஐந்து ரூபாய் நோட்டு. நான் அதை வாங்கி மறுபடியும் பாலனுடைய சட்டைப் பையில் போட்டுவிட்டு, "இன்னொரு நாளைக்கு வரப்போகிறேன். அப்போது வாங்கிக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டுப் போனேன். மறுபடியும் மதில் வாசலைத் தாண்டும் போது திரும்பிப் பார்த்தேன். பத்மா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்புறம் நான் திரும்பிப் பார்க்காமலே சென்றேன். ஆனால், பத்மாவின் கண்களும், முகமும் என் மனத்தை விட்டகலவில்லை. இது எனக்கு ஒரு புதிய அநுபவமாயிருந்தது. ஒரு பெண்ணின் கண்களுக்கு அவ்வளவு சக்தி உண்டென்று அதற்கு முன் நான் நினைத்ததேயில்லை.

3

மறுநாள் அந்தக் குடும்பத்தைப் பற்றி அக்கம் பக்கத்தில் விசாரித்தேன். பத்மாவின் தகப்பனார் பெரிய உத்தியோகத்தில் இருந்தாரென்றும், ஐந்து வருஷத்துக்கு முன்னால் இறந்து போனாரென்றும் அறிந்தேன். அதற்குப் பிறகு பாகீரதி அம்மாள் எழும்பூரில் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு செட்டாகக் குடித்தனம் பண்ணி, குழந்தைகளையும் படிக்க வைத்து வந்தாள். பையன்கள் இரண்டு பேரும் பி.ஏ.பரீட்சை தேறினார்கள். ஒருவன் ஆகாச விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டு சில மாதங்களுக்கு முன்புதான் 800 ரூபாய் சம்பளத்தில் 'பைலட்' வேலையில் அமர்ந்தான். அப்போது ஊரெல்லாம் அவனுடைய சாமர்த்தியத்தையும் அதிர்ஷ்டத்தையும் புகழ்ந்து கொண்டார்கள். பிறகு யுத்தம் வந்தது. கே. ராமஸ்வாமி பிரிட்டிஷ் ஆகாசப் படைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாயும், சீக்கிரம் சீமைக்குப் போகிறதாயும் பத்திரிகைகளில் கொஞ்ச நாளைக்கு முன் பிரசுரமாகியிருந்தது. அவனுடைய சகோதரன் கிருஷ்ணசாமி ஏதோ ஒரு அமெரிக்க வியாபாரக் கம்பெனியில் 'டிராவலிங் ஏஜெண்ட்' என்று தெரிந்தது.

இந்தியர்களுக்குள் ஆகாசப் படையில் சேர்ந்தவர்கள் அப்போது வெகு சிலரேயாதலால், மேற்சொன்ன விவரங்கள் எல்லாம் அநேகம் பேருக்குத் தெரிந்திருந்தன.

இப்படியாகப் பிரசித்தி பெற்றிருந்த குடும்பத்திலேதான் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. இரண்டு நாள் கழித்து ஒரு நாள் சாயங்காலம் மறுபடியும் அவர்கள் வீட்டுக்குப் போனேன். வாசற்படியில் வழி பார்த்து நின்றவள் போல் பத்மா நின்றாள். "எங்கள் அம்மாவுக்கு என்னமோ உங்களை ரொம்பப் பிடித்துப் போயிருக்கிறது. முந்தா நாளும் நேற்றும் நீங்கள் ஏன் வரவில்லையென்று கேட்டுக் கொண்டிருந்தாள். இன்று மறுபடியும் பாலனை அனுப்பலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள்" என்றாள்.

உள்ளே சென்றேன். பாகீரதி மாமி முன் போலவே நாடாக் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் எழுந்து உட்கார முயன்றார். "ஏன், மாமி நீங்கள் எழுந்திருக்கிறீர்கள்? படுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இன்னும் உடம்பு சரியாகவில்லையா? யாராவது டாக்டர் வந்து பார்க்கிறாரா?" என்று கேட்டேன்.

"என் வியாதி மனோ வியாதிதான். அதை எந்த டாக்டராலும் தீர்க்க முடியாது. இந்தப் பெண்ணுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிவிட்டேனானால், மனது கொஞ்சம் நிம்மதியடையும்" என்றார்.

அப்போது பத்மா, "போ, அம்மா! உனக்கு எப்போதும் இதுதான் வேலை. இந்தப் பேச்சு எனக்குப் பிடிக்கவேயில்லை" என்றாள்.

"உன்னை யார் இங்கே கூப்பிட்டார்கள்? நீ போ மாடிக்கு" என்றார் பாகீரதி மாமி.

"பாலா, வாடா நாம் மாடிக்குப் போகலாம். அம்மா ஏதாவது உளறிண்டு கிடக்கட்டும்" என்று பத்மா சொல்லிவிட்டு, பாலனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மாடிக்குப் போனாள்.

மாமியைப் பார்த்து, "அன்றைக்கு உங்கள் பிள்ளைகளின் ஜாதகத்தைக் காட்டுவதாய்ச் சொன்னீர்கள் அல்லவா?" என்றேன்.

அவர் கைப்பெட்டியை திறந்து ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொடுத்தார். அதைக் கவனமாக ஆராயத் தொடங்கினேன். ஆரம்பத்திலேயே என் நெஞ்சு துணுக்கென்றது. அது ஒரு விசேஷ ஜாதகந்தான். இருபது வயதில் பளிச்சென்று ஒரு பிரகாசம் உண்டாயிற்று. இருபத்திரண்டாவது வயதில் அது திடீரென்று மங்கி அடியோடு மறைந்தது.

பாகீரதி மாமியின் முகத்தை நிமிர்ந்து பார்க்கவே எனக்குப் பயமாயிருந்தது. ஒருவாறு சமாளித்துக் கொண்டு அவரைப் பார்த்து, "ஆகாசப் படையில் சேர்ந்திருக்கிறானே, அந்தப் பையனின் ஜாதகந்தானே இது?" என்றேன்.

"ஆமாம்."

நான் மிகுந்த தயக்கத்துடன், "கண்டம் பலமாய்த் தானிருக்கிறது. ஆனாலும் பயமில்லை. ஆயுள்காரகன் நல்ல இடத்தில் இருக்கிறானல்லவா?" என்றேன்.

"அது எப்படி?" என்று கேட்டார்.

நான் ஏதேதோ சொல்லிப் பார்த்தேன். அதற்கெல்லாம் அவர் ஆட்சேபணை சொல்லி வந்தார். கடைசியில், நான், "இதிலெல்லாம் என்ன அம்மா இருக்கிறது? யார் அவ்வளவு சரியாக ஜாதகம் கணித்து வைத்திருக்கிறார்கள்? சாஸ்திரத்தைத் தான் நாம் என்ன பூராவும் கண்டு விட்டோ மோ? ஜோதிடம் பெரிய சமுத்திரம். ஒரு விநாடியை ஒன்பது அம்சமாகப் பிரித்தால், ஒவ்வொரு அம்சத்தில் பிறந்ததற்கும் தனித் தனிப் பலன் உண்டு என்று சாஸ்திரம் சொல்கிறது. அப்படியெல்லாம் பிறந்த வேளையை நிர்ணயித்து யார் ஜாதகம் கணிக்கிறார்கள்?" என்றேன்.

பிறகு அவர் கவனத்தை வேறு விஷயத்தில் திருப்பலாமென்று "ஆமாம், உங்களுக்கு இன்னொரு பிள்ளை இருக்கிறார் அல்லவா? அவருடைய ஜாதகம் இருக்கிறதா?" என்று கேட்டேன்.

"அவனுக்கும் இதே ஜாதகந்தான்" என்றார்.

ஒரு நிமிஷம் எனக்குத் திகைப்பாயிருந்தது. அப்புறம், ஒரு எண்ணம் தோன்றவே, "என்ன சொல்கிறீர்கள்? இரண்டு பேரும்..." என்று தயங்கினேன்.

"ஆமாம், ராமுவும் கிருஷ்ணனும் இரட்டைப் பிள்ளைகள். இரண்டு நிமிஷம் முன் பின்னாகப் பிறந்தார்கள்" என்றாள் பாகீரதி மாமி.

எனக்குச் சொல்ல முடியாத ஆச்சரியம் உண்டாயிற்று. ஏதோ ஒரு ஆறுதலும் ஏற்பட்டது. அந்த விஷயத்தை நினைத்துப் பார்க்கப் பார்க்க, பழைய மனச்சோர்வு மாறி, உற்சாகம் வளர்ந்தது.

"பார்த்தீர்களா அம்மா! இதிலிருந்தே தெரியவில்லையா நம்முடைய ஜோசிய ஆராய்ச்சியெல்லாம் எவ்வளவு அரை குறையானதென்று? இரண்டு பேருக்கும் ஒரே ஜாதகம். ஆனாலும் இரண்டு பேருடைய போக்கும் முழுதும் வித்தியாசமாயிருக்கிறதல்லவா? ஒருவன் யுத்த களத்துக்குப் போக, இன்னொருவன் இங்கே சௌக்யமாயிருப்பானேன்? இவன் எப்போது இங்கே சௌக்கியமாயிருக்கிறானோ, அவனும் சௌக்யமாகத் திரும்பி வந்து சேருவான். ஜாதகத்தைக் கொண்டு வீணாக மனத்தைக் கஷ்டப்படுத்திக் கொள்ளாதீர்கள். பகவான் அப்படியெல்லாம் உங்களைச் சோதிக்க மாட்டார்" என்றேன்.

என்னுடைய அனுதாபம் நான் எதிர்பார்த்ததற்கு நேர் எதிர்விதமான பலனை அளித்தது. அவருடைய கண்களில் கண்ணீர் ததும்பிற்று. நல்ல வேளையாக, இச்சமயத்தில் மாடியிலிருந்து பாலன், "அம்மா! அண்ணா வருகிறான்" என்று கூவிக் கொண்டு கீழே ஓடி வந்தான். மாமி சட்டென்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். பாலன் வாசற்புறம் ஓடிச் சற்று நேரத்துக்கெல்லாம் அண்ணாவின் கையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு வந்தான்.

"கிருஷ்ணா! வா!" என்றார் மாமி.

கிருஷ்ணசாமி ஸுட்டு தரித்து, தொப்பியணிந்து கொண்டிருந்தான். தொப்பியை எடுத்துச் சுவரிலிருந்த ஸ்டாண்டில் மாட்டிவிட்டு, ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்தான்.

"ஏனம்மா, உடம்பு இன்னும் சரியாகவில்லையா? டாக்டரை அழைத்துக் காட்டலாமென்றால், கேட்கிறதில்லை. தனக்காகவும் தெரியாது. சொன்னாலும் கேட்பதில்லையென்றால், அப்படிப்பட்டவர்களுடன் என்ன செய்கிறது" என்று ஒரு பிரசங்கம் செய்துவிட்டு, சட்டென்று என்னைப் பார்த்து, "இந்தப் பேர்வழி யார்? யாராவது புது ஜோசியரோ?" என்று கேட்டான்.

அதற்கு மாமி "ஆமாம், கிருஷ்ணா! இவர் ஜோசியர் தான். பால ஜோசியர் பட்டாபிராமன் பி.ஏ. என்று பத்திரிகையில் விளம்பரம் வந்தது. நாம் கூட ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தோமல்லவா?" என்றார்.

கிருஷ்ணசாமி என்னை அருவருப்புடன் பார்த்தான். "ஏன் சார்! உங்களுக்கு வேறு வேலை ஒன்றும் கிடைக்கவில்லையோ? ஜோசியத்தில் புகுந்தீர்கள்?" என்றான்.

எனக்குக் கோபமாய் வந்தது. ஆனாலும், மாமியின் நல்ல குணத்தை நினைத்துக் கோபத்தை அடக்கிக் கொண்டேன். வேடிக்கையாகப் பதில் சொல்ல எண்ணி, "பேஷ்! என்னை விடப் பெரிய ஜோசியராயிருக்கிறீரே நீர்? வேறு வேலை ஒன்றும் கிடைக்காதபடியால்தான் உண்மையில் நான் ஜோசியத் தொழில் ஆரம்பித்தேன். இப்போது வேலை நிறைய இருக்கிறது" என்றேன்.

கிருஷ்ணசாமி சிரித்துக் கொண்டு, "நிஜம் சொல்கிற ஜோசியரை நான் இப்போதுதான் முதல் தடவையாகப் பார்க்கிறேன்" என்றான்.

பிறகு, "போட்டும்! இந்த யுத்தம் எப்படி முடியும். சொல்லும் பார்க்கலாம். உமது ஜோசியத்தில் அது வருகிறதா?" என்று கேட்டான்.

"இங்கிலீஷ்காரன் தான் ஜயிப்பான்" என்றேன் நான்.

"எப்படிச் சொல்கிறீர்? இங்கிலாந்தின் ஜாதகம் உம்மிடம் இருக்கிறதோ?"

"எனக்கு மனுஷ்யர்களுடைய ஜாதகந்தான் பார்க்கத் தெரியும். தேசங்களின் ஜாதகம் பார்க்கும் வித்தை இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. பத்திரிகைகளில் வரும் செய்திகளைப் பார்த்துத்தான் சொல்கிறேன்."

"ரொம்ப அழகுதான். பத்திரிகைகளில் வரும் செய்திகள் எல்லாம் வேதவாக்கு என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர் போலிருக்கிறது" என்று சொல்லி விட்டு, மாமியைப் பார்த்து, "ராமு சீமைக்குப் போய்விட்டானே, தெரியுமோ இல்லையோ, அம்மா!" என்று கேட்டான்.

"தெரியும். தந்தி வந்தது. பத்திரிகையிலும் பார்த்தேன்" என்றார் மாமி.

"உளுத்துப் போன இந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை இவன் போய்த்தான் காப்பாற்றப் போகிறான்!" என்றான் கிருஷ்ணசாமி. இதற்குள், பத்மாவும் மாடியிலிருந்து கீழே வந்து சேர்ந்தாள். அவள் ராமுவின் கட்சி பேசத் தொடங்கினாள். இங்கிலீஷ்காரர்கள் தான் நல்லவர்கள் என்றும் அவர்கள் தான் ஜயிக்கவேண்டுமென்றும் சொன்னாள். இதனால் கிருஷ்ணசாமியின் கோபம் அதிகமாயிற்று. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மேலும் அதற்கு சேவை செய்யப் போயிருக்கும் ராமுவின் மேலும் தனக்குள்ள கோபத்தையெல்லாம் கொட்டித் தீர்த்தான். இடையில், "நீர் என்ன கதர் கட்டியிருக்கிறீரே, காங்கிரஸ் வாதியோ?" என்று கேட்டான். நான் "இல்லை" யென்று மறுத்ததும், காங்கிரஸ்காரர்களுக்கெல்லாம் "டோ ஸ்" கொடுக்க ஆரம்பித்தான். சுத்தக் கோழைகள், பயங்காளிகள், உத்தியோகத்துக்கு ஆசைப்பட்டு ஜான் புல்லின் காலில் விழுகிறவர்கள் என்றெல்லாம் திட்டினான். இந்தியா தேசத்துக்கு மோக்ஷம் இந்தக் கையாலாகாத காங்கிரஸ் தலைவர்களால் வரப் போகிறதில்லையென்றும், அதற்கு வேலை செய்கிறவர்கள் வேறே இருக்கிறார்களென்றும், அவர்கள் தக்க சமயத்தில் வெளிக் கிளம்பிப் புரட்சியை நிலை நாட்டுவார்களென்றும், 'மார்க்ஸீய'த்தினால் தான் உலகத்துக்கே விமோசனம் வரப்போகிறது என்றும் சரமாரியாகப் பொழிந்தான்.

அன்றிரவு எனக்கு நன்றாய்த் தூக்கம் பிடிக்கவில்லை. அந்த அதிசயமான குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரையும் பற்றி மாறி மாறி எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், அவர்களுக்குள்ளெல்லாம் பத்மாவின் குதூகலமும் குறும்பும் நிறைந்த முகந்தான் அதிகமாக என் மனக் கண் முன் வந்து கொண்டிருந்தது. அந்த அழகிய முகத்தில் கண்ணீர் வெள்ளமாய்ப் பெருகும் காலம் அவ்வளவு சீக்கிரத்தில் வரப்போகிறதென்று நான் எதிர்பார்க்கவேயில்லை.

4

இன்னொரு நாள் சாயங்காலம் பாலன் வந்து என்னை அம்மா அழைத்து வரச் சொன்னதாகக் கூறினான். உடனே நான் கிளம்பினேன். அப்போது நன்றாய் அஸ்தமித்துவிட்டது. வானத்தில் பூரண சந்திரனைக் கண்ட கடலைப் போல் என் உள்ளமும் கொந்தளித்தது. பத்மாவைப் பார்க்கப் போகிறோமென்ற எண்ணந்தான் அதற்கு காரணமென்று சொல்ல வேண்டியதில்லையல்ல்வா?

அன்று மாமி கட்டிலில் படுத்திருக்கவில்லை. கீழே தரையில் உட்கார்ந்திருந்தார்.

"உடம்பு கொஞ்சம் தேவலை போலிருக்கிறதே!" என்றேன்.

"கொஞ்சம் சுமாராயிருக்கிறது" என்றார் மாமி.

"இந்த வீட்டில் இன்னும் ஏதாவது மாறுதல் இருக்கிறதா, பாருங்கள்" என்றாள் பத்மா.

சுற்றுமுற்றும் பார்த்தேன். புதிதாக மின்சார விளக்கு போட்டிருந்தது சட்டென்று தெரிந்தது.

"ஓகோ! விளக்குப் போட்டிருக்கிறதே!" என்றேன்.

பத்மாவும் பாலனும், கூச்சல் போட்டுக் கொண்டு, விளக்குகளை ஏற்றியும் அணைத்தும் விளையாடத் தொடங்கினார்கள்.

"நீங்கள் என்ன பச்சைக் குழந்தைகளா? சும்மா இருங்கள்" என்றார், அவர்களுடைய தாயார். பிறகு என்னைப் பார்த்து, "உங்களை ஒரு காரியத்துக்காக அழைத்து வரச் சொன்னேன். ஒரு ரேடியோ வேண்டும். பார்த்து நல்ல ஸெட்டாக வாங்கித் தர வேண்டும். லண்டன் செய்திகள் நன்றாய்க் கேட்கும் ஸெட்டாய் இருக்க வேண்டும்" என்றார்.

மாமி அடிக்கடி வீட்டுக்கு மின்சார விளக்குப் போடவில்லையே என்று குறைப்பட்டதன் காரணம் அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. ரேடியோ வைக்க வேண்டுமென்று அவருக்கு ஆசை. அந்த ஆசையின் காரணமும் எனக்குப் புலப்படாமல் இல்லை. பிள்ளை சீமைக்குப் போயிருக்கிறபடியால், அவ்விடத்துச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள வேண்டுமென்று அவர் விரும்பினார்.

"அதற்கென்ன? பேஷாகப் பார்த்து நல்ல ஸெட்டாய் வாங்கிக் கொண்டு வருகிறேன். நான் கூட அடிக்கடி வந்து கேட்கலாமல்லவா?" என்றேன்.

"கூடவே கூடாது" என்றாள், தூரத்திலிருந்து பத்மா. "நீங்களே எல்லாவற்றையும் கேட்டுவிட்டால், பிறகு நாங்கள் என்னத்தைக் கேட்கிறது?" என்று விஷமமாகச் சொன்னாள்.

"அவள் கிடக்கிறாள். நீங்கள் கட்டாயம் வர வேண்டும். தினந் தினம் வந்து, யுத்தச் செய்திகளைக் கேட்டு எனக்குத் தமிழில் சொல்ல வேண்டும்" என்றார் மாமி.

பிறகு எல்லாரும் மாடிக்குப் போய், வெண்ணிலாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். பாகீரதி மாமி தம்முடைய பிள்ளைகளைப் பற்றியே பேசினார். பேச்சு வேறு எந்தப் பக்கம் போனாலும், மறுபடியும் தமது பிள்ளைகளிடமே அவர் கொண்டு வந்து விட்டார். குழந்தை வயதில் அவர்கள் எவ்வளவு சமத்தாயிருந்தார்கள் என்று சொன்னார். இரட்டைப் பிள்ளை பெற்றது பற்றி ஊரார் தம்மைப் பரிகாசம் செய்ததையும், தாம் வெட்கப்பட்டதையும், ஆனால் குழந்தைகளைச் சேர்ந்தாற்போல் பார்க்கும்போதெல்லாம் தம் மனத்திற்குள் உண்டான சந்தோஷத்தையும் சொன்னார். சின்ன வகுப்புகளில் அவர்கள் ஒரே பள்ளிக் கூடத்தில் ஒரே வகுப்பில் படித்து வந்தார்களாம். கொஞ்சம் வயதான பிறகு அவர்களுக்கு வெட்கம் உண்டாகி வெவ்வேறு பள்ளிக் கூடங்களுக்குப் போய் விட்டார்களாம். படிப்பில் கெட்டிக்காரர்களாயிருந்தது போலவே, எல்லாக் காரியங்களிலும் கெட்டிக்காரர்களாம். வாயைப் போல் கையாம்.

"ஆனால் பிடிவாதம் மட்டும் ரொம்ப அதிகம். அவரவர்கள் பிடித்ததையே சாதிப்பார்கள். யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அன்று மாதிரிதான் இன்றும் என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள்" என்று அந்த அம்மாள் சொல்லிப் பெருமூச்சு விட்ட போது, எனக்கு அந்தப் பிள்ளைகள் மீது வெகு கோபம் வந்தது.

"எத்தகைய மூர்க்கர்கள்! இப்படிப்பட்ட தாயாரை சந்தோஷமாய் வைத்திருக்க அவர்கள் கொடுத்து வைக்கவில்லையே! பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு' என்னும் பழமொழி எவ்வளவு சரியாயிருக்கிறது!" என்று எண்ணினேன்.

மறுநாளே நல்ல ரேடியோ ஸெட்டு ஒன்று வாங்கி அவர்கள் வீட்டில் கொண்டு போய்ச் சேர்த்தேன். ரேடியோக் கம்பெனியிலிருந்து ஆட்கள் வந்து, 'ஏரியல்' முதலியவை அமைத்து விட்டுப் போனார்கள்.

"ராமு மட்டும் இருந்தால், இதெல்லாம் அவனே செய்து விடுவான். ஆளையே கூப்பிட மாட்டான்" என்றார் மாமி. அப்படிச் சொல்லும் போதே அவருடைய தொண்டையை அடைத்துக் கொண்டது. தாயின் அன்பு என்பது எவ்வளவு மகத்தானது என்பது எனக்கு மேலும் மேலும் நன்றாய்த் தெரிந்தது. தாயின் அன்பை அறியாத என்னுடைய வாழ்க்கை எவ்வளவு சூன்யமானது என்றும் உணர்ந்தேன்.

ரேடியோ வைத்தது முதல், நான் தினந்தோறும் மாலை நேரத்தில் அவர்கள் வீட்டுக்குப் போகத் தொடங்கினேன். பாதி நாள் அங்கேயே சாப்பிட்டு விடுவேன். இராத்திரி 9.30க்கு லண்டன் ரேடியோச் செய்திகள் கேட்டு மாமிக்குச் சொல்லிவிட்டுப் பிறகுதான் திரும்புவேன்.

இப்படி மூன்று, நாலு மாதங்கள் சென்றன. நாள் போவதே தெரியவில்லை. என் வாழ்க்கையில் இவ்வளவு சந்தோஷமாக இதற்கு முன் நான் இருந்தது கிடையாது. உலகமே மோகனம் பெற்று விளங்கியது. சந்திரன் புதிய ஒளியுடன் பிரகாசித்தான். தென்றல் புதிய இனிமையுடன் வீசிற்று. அந்தி வானம் முன்னெப்போதுமில்லாத அழகு பெற்று விளங்கிற்று. நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் என்னைக் கண் சிமிட்டிக் கூப்பிட்டுத் தங்கள் காதல் கதைகளை என்னிடம் அந்தரங்கமாகக் கூறின. புஷ்பங்களின் ஸுகந்தம் என்னைப் பரவசப்படுத்திற்று. பட்சிகளின் கானம் அமுதகீதமாக என் செவியில் பாய்ந்தது. மனுஷர்கள் யாரைப் பார்த்தாலும், நல்லவர்களாகவும் சிநேகத்துக்கு உரியவர்களாகவும் தோன்றினார்கள்.

ஆனாலும், இத்தகைய ஆனந்தம் நிலைத்திருக்க வேண்டும் என்ற பயம் மட்டும் எனக்கு அடிக்கடி தோன்றும். ஏதோ ஒரு பெரிய விபத்து வரப்போகிறதென்று திகிலுடன் கூடிய உணர்ச்சி உள்ளத்தின் அடிவாரத்தில் இருந்து கொண்டேயிருந்தது.

ரேடியோவில் தினம் லண்டன் செய்திகள் தொடங்கும்போது, மாமியின் முகத்தில் ஆவல் ததும்பிக் கொண்டிருக்கும். செய்திகள் முடிந்ததும் அந்த முகத்தில் ஏமாற்றம் காணப்படும். மாமி என்ன எதிர்பார்த்தார்! ரேடியோவில் பிள்ளையைப் பற்றியச் செய்தி வருமென்றா? இது என்ன பைத்தியக்கார ஆசை! இப்படி எண்ணிய நான் சீக்கிரத்திலேயே என் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. ஒரு நாள் லண்டன் பி.பி.ஸி. செய்தி அறிவிப்பின் கடைசியில், "நாளைய தினம் ஒரு விசேஷ சம்பவம். வழக்கம் போல் செய்திகள் முடிந்ததும், ராயல் ஆகாசப் படையைச் சேர்ந்த இந்திய விமானி ஒருவர் தமது அநுபவங்களைச் சொல்வார்" என்று அறிவிக்கப்பட்டது. இது எனக்கே ஒருவிதப் பரபரப்பை அளித்தது. மாமிக்குக் கேட்கவா வேண்டும்? இரவில், அவர் தூங்கவேயில்லையென்றும், பத்மாவை அடிக்கடி எழுப்பி, "ஒருவேளை ராமு பேசுவானோ?" என்று கேட்டுக் கொண்டிருந்ததாகவும் மறுநாள் அறிந்தேன்.

அன்று மாலை மாமி ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு யுகமாகக் கழிக்கிறார் என்று நன்கு தெரிந்தது. கடைசியாக, 9.30 அடித்தது. லண்டன் செய்தியும் ஆரம்பமாயிற்று. பத்து நிமிஷம் செய்திகள் படித்தானதும், "இப்போது இந்திய ஆகாச விமானி பேசுவார்" என்று அறிவிக்கப்பட்டது. உடனே, தொண்டையைக் கனைத்துக் கொண்டு, ஓர் இந்திய இளைஞனின் குரல் பேசத் தொடங்கியது. ஆகா! அப்போது மாமியின் முகத்தைப் பார்க்கணுமே! 'கன்றின் குரலைக் கேட்டுக் கனிந்து வரும் பசுப்போல' என்ற பாட்டின் அர்த்தம் அதற்கு முன்னால் எனக்கு விளங்கியதேயில்லை. அப்போதுதான் விளங்கிற்று.

பேச்சு முடியும் வரையில் மாமி கண் கொட்டாமல் ரேடியோவையே பார்த்துக் கொண்டிருந்தார். அந்த உயிரற்ற கருவியில், பிள்ளையின் முகத்தையே அவர் பார்த்தது போலிருந்தது. பேச்சு முடிந்ததும், கண்களில் ததும்பிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, தழதழத்த குரலில், "குழந்தை என்ன சொன்னான்?" என்று கேட்டார். நான் சொன்னேன். முதலில் லண்டன் நகர் மீது ஜெர்மன் விமானங்கள் வந்து கண்ட இடத்தில் குண்டு போடும் அக்கிரமத்தை அவன் விவரித்தான். பிறகு, லண்டன் ஜனங்கள் ஸ்திரீகளும் குழந்தைகளும் உள்பட எவ்வளவு தீரத்துடன் அதையெல்லாம் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினான். மகாபாரத யுத்தத்தைப் போல் இதுவும் தர்ம யுத்தம் தானென்றும் சொல்லி, இப்பேர்ப்பட்ட யுத்தத்தில் பங்கு எடுத்துக் கொள்ளத் தனக்குக் கிடைத்த பாக்கியத்தைப் பாராட்டினான். கூடிய சீக்கிரத்தில் பகைவர்களுடைய நாட்டுக்குச் சென்று பழிக்குப் பழி வாங்கும் விருப்பம் தனக்கு அபரிமிதமாக இருப்பதாகவும், அதை நிறைவேற்றும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறினான். கடைசியாக, இந்திய மக்கள் எல்லாரும் தங்களுடைய சொந்த சண்டை சச்சரவுகளையெல்லாம் மறந்து விட்டு மனித நாகரிகத்தைக் காப்பதற்காகப் போராடும் பிரிட்டனுக்குப் பூரண ஒத்தாசை செய்யவேண்டுமென்று வேண்டிக் கொண்டு பேச்சை முடித்தான்.

இதையெல்லாம் நான் தெரிவித்தபோது, மாமி, பத்மா, பாலன் எல்லாரும் ராமுவையே நேரில் பார்ப்பதுபோல் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிறகு, சற்று நேரம் மௌனம் குடி கொண்டிருந்தது.

பத்மா, திடீரென்று, "ஏனம்மா, இந்தப் பேச்சைக் கிருஷ்ணசாமி கேட்டிருப்பானா, அம்மா!" என்றாள்.

மாமி பதில் சொல்லவில்லை.

"கேட்டிருந்தால் கிருஷ்ணசாமிக்குக்கூட மனமும் மாறிப் போயிருக்கும்" என்றாள் பத்மா.

மறுநாள் தான் அவர்கள் வீட்டுக்குப் போன போது, மாமி நாடாக் கட்டிலில் படுத்திருப்பதைக் கண்டேன். பழையபடி அவருக்கு உடம்பு அசௌகர்யம் என்று தெரிந்தது.

"அண்ணாவிடமிருந்து வந்த கடிதத்தை வாசித்துக் காட்டு" என்று பத்மாவிடம் சொன்னார்.

"எந்த அண்ணா?" என்று கேட்டேன்.

"ராமு அண்ணாவிடமிருந்துதான். இன்றையத் தபாலில் வந்தது. ஆனால் போஸ்டு பண்ணி ஒரு மாதத்துக்கு மேலாச்சு" என்றாள் பத்மா.

பிறகு, கடிதத்தை வாசித்தாள். கிட்டத்தட்ட ரேடியோவில் பேசியது போலவே கடிதத்தின் முற்பகுதி இருந்தது. கடைசியில், பின்வருமாறு உருக்கமாக எழுதியிருந்தான்.

"அம்மா! கூடிய சீக்கிரத்தில் நான் பகைவர்களுடைய தேசங்களுக்கு விமானத்தில் செல்வேன். ஒரு நாளைக்குத் திரும்பி வராமல் போனாலும் போவேன். சர்க்கார் உனக்கு சமாசாரம் தெரிவிப்பார்கள்.


தாயாருக்குப் பிள்ளை செய்யவேண்டிய கடமை ஒன்றும் நான் செய்யவில்லை. இருந்தாலும், உலகத்தில் தர்மத்தையும் நாகரிகத்தையும் காப்பாற்றுவதற்காக உன் பிள்ளை உயிரை விட்டான் என்றால், அது உனக்குப் பெருமை இல்லையா, அம்மா?

தெரிந்தோ, தெரியாமலோ உன மனதுக்கு வருத்தமுண்டாகும்படியான காரியங்கள் எவ்வளவோ நான் செய்திருப்பேன். அதற்காகவெல்லாம் என்னை நீ மன்னித்து விட வேண்டும்.

சிறு பிராயத்தில் என்னுடைய பிடிவாதங்களையெல்லாம் நீ பொறுத்துக் கொண்டு என்னைக் காப்பாற்றி வளர்த்தாய். இன்னமும் நான் உனக்குக் குழந்தைதானே? இப்போதும் என்னுடைய பிடிவாதத்தை மன்னித்து விடு.

கிருஷ்ணசாமி, பத்மா, பாலன் எல்லாருக்கும் என்னுடைய அன்பைத் தெரியப்படுத்து, நான் அவர்களுடைய ஞாபகமாகவே இருக்கிறேன். அவர்களுக்கு நான் கொடுத்த தொந்தரவுகளையெல்லாம் மறந்து மன்னித்துவிடும்படி சொல்லு.

இப்படிக்கு
உன் பிடிவாதக்காரப் பிள்ளை
ராமு.

பத்மா இப்படி வாசித்து முடித்தபோது, அவர்கள் மூன்று பேர்களுடைய கண்ணிலும் ஜலம் தளும்பிற்று.

"பின் குறிப்பையும் வாசி!" என்று மாமி சொன்னார்.

"நான் மாட்டேன்" என்று பத்மா நாணத்துடன் கூறினாள்.

"அப்படியானால் கடிதத்தை அவரிடம் கொடு" என்றார் மாமி.

பத்மாவிடமிருந்து கடிதத்தை வாங்கிப் பார்த்தேன். அதில் கையெழுத்துக்குப் பிறகு பின்வருமாறு எழுதியிருந்தது.

"பத்மாவுக்குக் கல்யாணமாகிக் குழந்தை பிறக்கும் போது, முதலில் பிறக்கும் ஆண் குழந்தைக்கு என் பெயரை வைக்கச் சொல்லு - ராமு"

பத்மா கடிதத்தை என்னிடம் கொடுத்தவுடனேயே பாலனுடன் மாடிக்குப் போய் விட்டாள். அவள் வெட்கப்பட்டது இயற்கையேயல்லவா?

பிறகு, மாமி என்னைப் பார்த்து, "உங்களை முதலில் அழைத்து வரச் சொன்னது எதற்கு என்று ஞாபகமிருக்கிறதா?" என்று கேட்டார்.

"ஞாபகமிருக்கிறது. பத்மாவுக்கு வரன் ஜாதகம் பார்க்க" என்றேன்.

"அப்போது ஒரு ஜாதகத்தோடு நிறுத்தி விட்டோ ம். இன்னும் சில வரன்களின் ஜாதகம் இன்று பார்க்கலாமா? பத்மாவுக்குக் கல்யாணம் ஆகி விட்டால், என் மனதிலிருந்து பெரிய பாரம் நீங்கும். எது எப்படியிருக்குமோ?" என்றார்.

நான் சற்று யோசித்து, "அம்மா, நான் ஒரு சமாசாரம் சொல்லட்டுமா?" என்றேன்.

மாமி பேசாமல் என் முகத்தைப் பார்த்தார்.

"வேறு ஜாதகங்கள் என்னத்திற்காகப் பார்க்க வேண்டும்? நானே பத்மாவைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன். உங்களுக்கெல்லாம் சம்மதமாயிருந்தால்" என்றேன்.

மாமியின் முகத்தில் அப்போதுதான் கொஞ்சம் மலர்ச்சியைப் பார்த்தேன். அவர் சற்று நிதானித்து, "எனக்குப் பூரண சம்மதம். ஆனால், உங்களைச் சேர்ந்த பந்துக்கள் - பெரியவர்களைக் கேட்க வேண்டாமா?" என்றார்.

"எனக்கு ஒருவருமேயில்லை. நீங்கள் தான்" என்றேன்.

"அப்படியானால், பத்மாவை மட்டுந்தான் கேட்கவேண்டும். அவளை நீங்களே கேட்டு விடுங்கள். இந்தக் காலத்திலேயெல்லாம் அப்படித்தான் வழக்கமாயிருக்கிறது" என்றார்.

"நான் அவ்வளவு நாகரிகக்காரன் இல்லை, மாமி! நீங்கள் தான் கேட்டுச் சொல்ல வேண்டும்" என்றேன் நான்.

இரண்டு நாள் கழித்து ஒரு நாள் காலையிலேயே பாலன் வந்து கூப்பிட்டான். கிருஷ்ணசாமி அண்ணா வந்திருப்பதாய்ச் சொன்னான். நான் வீட்டுக்குள் நுழையும் போதே, "வாருங்கள், மாப்பிள்ளை!" என்று கிருஷ்ணசாமி அழைத்ததும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

நான் போய் உட்கார்ந்ததும் மாமி, "கிருஷ்ணசாமியிடம் சமாசாரத்தைச் சொன்னேன். அவனுக்குப் பூரண சம்மதமென்கிறான்" என்றார்.

அப்போது, கிருஷ்ணசாமி, "பத்மாவுக்குத் தகுந்த வரனா என்று அம்மா கேட்டாள். 'நம்ம பத்மாவுக்கு தகுந்த வரன் ஒரு நாளும் கிடைக்கப் போவதில்லை. யார் பண்ணிக்கிறேன்னு வரானோ அவன் கழுத்திலே கட்டி விடு' என்று சொல்லிண்டிருந்தேன். அதற்குள் நீரே வந்துவிட்டீர்" என்றான்.

"ஒன்றுமில்லை - அவருக்குத் தகுந்த பெண் கிடைக்கிறதுதான் கஷ்டம்" என்றாள் பத்மா.

இப்படிப் பத்மா எனக்குப் பரிந்து பேசியது எவ்வளவோ எனக்கு சந்தோஷமளித்தது. ஆனால், கிருஷ்ணசாமிக்கு என் பேரிலிருந்த அருவருப்பு நீங்கி அவன் கல்யாணத்துக்குச் சம்மதித்தது அதைவிட மகிழ்ச்சியளித்தது.

"பத்மாவுக்குத் தகுந்த வரன் கிடைப்பது கஷ்டந்தான். நீங்கள் தமையன்மார்கள் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும். செய்யாதது உங்கள் தவறுதானே?" என்றேன்.

"ஆமாம், மாப்பிள்ளை, ஆமாம்! எங்கள் தப்புத்தான். ஆனால் எங்களுக்கு இதற்கெல்லாம் சாவகாசம் ஏது? நான் தேசத்தைக் காப்பாற்றப் போகிறேன். ராமு உலகத்தையே காப்பாற்றுவதற்குப் போயிருக்கிறான்!" என்றான் கிருஷ்ணசாமி. பிறகு, ராமுவின் ரேடியோப் பேச்சைப் பற்றி திட்டு திட்டென்று திட்டத் தொடங்கினான்.

கடைசியில், "இன்று ராத்திரி நான் மறுபடியும் கோயமுத்தூர், மலையாளம் பக்கம் போகிறேன். வருவதற்கு ஒரு மாதம் ஆகும். அதற்குள் கல்யாணத்துக்கு முகூர்த்தம் வைத்தால், எனக்குத் தந்தி அடியுங்கள். எங்கள் ஆபீஸில் கேட்டால், விலாசம் சொல்வார்கள். ஒருவேளை நான் வராமற் போனாலும், கல்யாணத்தை நடத்திவிடுங்கள். என்னுடைய ஸ்தூல சரீரம் வராவிட்டாலும் சூக்ஷ்ம சரீரத்தில் அன்று உங்களுடன் இருப்பேன்" என்றான் கிருஷ்ணசாமி.

எங்கள் கல்யாணம் நிச்சயமாகி, முகூர்த்தத் தேதியும் வைக்கப்பட்டது. திருவான்மியூர் கோவிலில் கல்யாணத்தை நடத்துவதென்று தீர்மானமாயிற்று.

இதற்குப் பிறகு நாலைந்து நாள் பாகீரதி மாமி வெகு உற்சாகமாக இருந்தார். கல்யாணத்தை அப்படிச் செய்ய வேண்டும், இப்படிச் செய்ய வேண்டுமென்று, திட்டம் போடவும் சாமக்கிரியைகள் வாங்கிச் சேர்க்கவும் ஆரம்பித்தார்.

5

ஒரு நாள் பாலன் திடுதிடுவென்று என் அறைக்கு ஓடி வந்தான். அவன் விம்மிக் கொண்டே, "அம்மாவுக்கு உடம்பு ஜாஸ்தியாயிருக்கிறது; பேச மாட்டேனென்கிறாள்" என்றான். நான் அவனைப் பின்னால் விட்டு விட்டு அதி வேகமாகச் சென்று அவர்கள் வீட்டை அடைந்தேன்.

மாமி மூர்ச்சையடைந்து கிடந்தார். பக்கத்தில் பத்மா நின்று ஹோவென்று அழுது கொண்டிருந்தாள். சமையற்கார அம்மாள் கையைப் பிசைந்து கொண்டு நின்றாள். அந்த மாதிரி அரை மணி நேரமாய்க் கிடப்பதாகச் சொன்னாள்.

நான் நடுக்கத்துடன் மாமியின் கையைப் பிடித்துப் பார்த்தேன். நாடி அடித்துக் கொண்டிருந்தது. மூக்கில் மூச்சும் வந்து கொண்டிருந்தது. கொஞ்சம் தைரியமடைந்து, முகத்தில் இலேசாக ஜலத்தை தெளித்தேன். விசிறி கொண்டு வந்து விசிறினேன். அவர் கண்ணைத் திறந்து பார்த்தார். கொஞ்சம் கொஞ்சமாக ஸ்மரணை அடைந்தார். "எனக்கு ஒன்றுமில்லை; ஏன் அழுகிறீர்கள்?" என்று பத்மாவையும் பாலனையும் தேற்றினார்.

நான் கேட்டதற்கு, "என்னமோ திடீரென்று உடம்பில் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டது. மார்பை அடைத்தாற் போலிருந்தது. அப்புறம் ஒன்றும் தெரியவில்லை" என்றார்.

அன்று முதல், மாமியின் உற்சாகமெல்லாம் போய்விட்டது. கல்யாண ஏற்பாடுகளைப் பற்றிக் கூட அவர் பேசவில்லை. பிரமை பிடித்தவர் போல உட்கார்ந்திருந்தார். கேட்டால், "உடம்பை என்னவோ செய்கிறது. மார்பு படபடவென்று அடித்துக் கொள்கிறது" என்றார். ஆகாரமும் ரொம்பக் குறைந்துவிட்டது.

நான் பிடிவாதம் பிடித்து ஒரு டாக்டரை அழைத்துக் கொண்டு வந்தேன். அவர் பார்த்துவிட்டு, "தேகம் பலவீனமாயிருக்கிறது. வேறொன்றுமில்லை" என்று சொல்லி, டானிக் எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார்.

மாமிக்கு தேகத்தின் உபாதையை விட மனோ வேதனை அதிகமாயிருந்ததாகத் தெரிந்தது. தினந்தினம் "இன்றைக்குத் தபால் ஒன்றும் வரவில்லையா?" என்று கேட்டுக் கொண்டிருந்தார். கடைசியில், தபால் வந்தது. வெறுந் தபாலாக வரவில்லை. தலையில் விழும் இடியாக வந்தது.

அது சென்னை அரசாங்கத்தின் முத்திரையிட்ட தபால். கவர்னரின் அந்தரங்கக் காரியதரிசி எழுதியிருந்தார். 'பைலட்' ராமஸ்வாமி அரும் பெரும் தீரச் செயல்கள் பல புரிந்த பிறகு, விமானப் போர் ஒன்றில் உயிர் நீத்ததாகவும், அவருடைய வீர மரணம் இந்தியா தேசத்துக்கே புகழ் தரக் கூடியதென்றும் அதில் எழுதியிருந்தது. அந்த வீரப் புதல்வரின் தாயாருக்குக் கவர்னர் பெருமானின் மனமார்ந்த அநுதாபமும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தபால் வந்தபோது நான் இருந்தேன். நான் தான் முதலில் கடிதத்தைப் படித்தேன். படித்துவிட்டு, "ஐயோ, அம்மா! இப்படி இடி போல செய்தி வந்திருக்கிறதே!" என்று கதறினேன்.

மாமி, "ராமு!" என்று ஒரு பெரிய சப்தம் போட்டார். உடனே மூர்ச்சையாகி விழுந்தார்.

முன் தடவையில் போலவே, அரை மணி நேரம் கழித்து அவருக்கு மூர்ச்சை தெளிந்தது. கடிதத்தை வாங்கிப் பார்த்துக் கொண்டேயிருந்தார். நான், தட்டுத் தடுமாறி, "அம்மா! கிருஷ்ணசாமிக்குத் தந்தியடித்துவிட்டு வரட்டுமா?" என்றேன். மாமி பதிலே சொல்லவில்லை.

"இந்தச் செய்தியை அவனுக்குத் தெரியப்படுத்தவில்லை. உடனே வரச்சொல்லி மட்டும் தந்தியடிக்கிறேன்" என்றேன்.

மாமி இதற்கும் பேசாமலிருந்தார். அவருக்குச் சம்மதந்தான் என்றெண்ணி உடனே கிளம்பிச் சென்றேன்.

கிருஷ்ணசாமியின் அப்போதைய விலாசம் தெரிந்து கொள்வதற்காக அவன் வேலை செய்த கம்பெனியை டெலிபோனில் கூப்பிட்டுக் கேட்டேன். அங்கிருந்து பேசியவர் முதலில் "இதோ விசாரித்துச் சொல்கிறேன்" என்றார். சற்று நேரங் கழித்து வந்து, "ஸார், நீங்கள் யார்?" என்று கேட்டார்.

"நான் அவர்களுடைய குடும்ப சிநேகிதன்" என்றதும், "ஏதோ முக்கியமான சமாசாரம் இருக்கிறதாம், உங்களை மானேஜர் நேரில் வரச் சொல்கிறார்" என்றார்.

என் இதயம் திக்திக்கென்று அடித்துக் கொள்ளத் தொடங்கியது. அந்தக் கம்பெனியின் காரியாலயத்துக்குப் போனேன். மானேஜர் என்னைப் பார்த்ததுமே, "ரொம்ப துக்ககரமான சமாசாரம், ஸார்" என்றார். பிறகு, அவருக்கு கள்ளிக் கோட்டையிலிருந்து வந்த கடிதத்தை எடுத்துக் காட்டினார்.

கதையை வளர்த்துவானேன்? மேற்குக் கடற்கரை ஜில்லாக்களில், அதிகாரிகளின் உத்தரவை மீறி ஒரு நாள் பல இடங்களில் கூட்டங்கள் நடந்தனவல்லவா? அந்த யுத்த கண்டனக் கூட்டங்களில் ஒன்றில் கிருஷ்ணசாமியும் இருந்தான். அன்று போலீஸ் துப்பாக்கிப் பிரயோகத்தில் மாண்டு போனவர்களில் கிருஷ்ணசாமியும் ஒருவன்.

இந்தச் செய்தியினால் என் உள்ளம் என்ன நிலைமை அடைந்ததென்று விவரிக்க நான் முயலவில்லை. அதைக் காட்டிலும், மாமியிடம் இந்தச் செய்தியை எப்படித் தெரிவிப்பது என்னும் எண்ணமே எனக்கு அதிக வேதனையையும் பீதியையும் அளித்தது. போகும் போதெல்லாம், செய்தியை மறைத்துவிடலாமா, கொஞ்ச நாள் கழித்துச் சொல்லலாமா என்றெல்லாம் எண்ணிக் கொண்டு போனேன்.

வீட்டுக்குள் நான் நுழைந்ததும், மாமி என்னை வெறித்து நோக்கி, "எங்கே கிருஷ்ணசாமி! இன்னும் வரவில்லையா?" என்று கேட்டார். உடனே என்னுடைய முன் யோசனையெல்லாம் பறந்து போய்விட்டது. "ஐயோ! அம்மா! ஜாதகம் இப்படிப் பலித்துப் போய்விட்டதே!" என்று கதறினேன்.

பத்து தினங்கள் ஆயின. இந்தப் பத்து நாளும் எப்படிச் சென்றதென்று எனக்கே தெரியாது. பத்மாவும் பாலனும் ஓயாத கண்ணீரும் கம்பலையுமாகத்தான் இருந்தார்கள் அவர்களுக்கு ஆறுதல் சொல்வதுதான் எனக்கு வேலையாயிருந்தது. ஆனால் மாமி அழவில்லை. அவர் கண்ணிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வரவில்லை. பிரமை பிடித்தவரைப் போல் உட்கார்ந்திருந்தார். ஆகாரமும் கிடையாது தூக்கமும் கிடையாது.

முதலில் அவர் மூர்ச்சையாகி விழுந்த அன்று தான், ராமு, கிருஷ்ணசாமி இரண்டு பேருக்கும் மரணம் சம்பவித்தது. அதற்கு முன்னாடி மாமியைப் பார்த்தவர்கள் இந்தப் பதினைந்து நாட்களுக்குப் பிறகு பார்த்தால் அடையாளமே கண்டுபிடிக்க முடியாது. அப்போது அவருடைய தலைமயிர் பழுப்பு வர்ணமாயிருந்தது. இரண்டொரு நரைதான் காணப்பட்டது! இந்தப் பதினைந்து நாட்களில் தலை தும்பைப் பூப்போல வெளுத்துவிட்டது. முன்னே அவரை 45 வயதுதான் சொல்லத் தோன்றும். இப்போது பார்த்தாலோ, 65 வயது. அவ்வளவு வித்தியாசம் ஏற்பட்டு விட்டது. ஆனால் இதிலெல்லாம் எனக்கு ஆச்சரியமே கிடையாது. அவர் எப்படி உயிரை வைத்துக் கொண்டிருந்தார் என்பதுதான் எனக்குப் பெரும் ஆச்சரியமளித்தது.

"பத்மாவுக்குக் கல்யாணம் ஆகவில்லை; அவளை இப்படி அநாதியாய் விட்டுவிட்டுப் போகக் கூடாது" என்ற எண்ணமே அவருடைய உயிருக்கு அவ்வளவு பலம் அளித்துக் காப்பாற்றியிருக்க வேண்டும்.

முன்னால் நிச்சயித்த முகூர்த்தத் தேதியிலேயே திருவான்மியூர் கோவிலில், எங்களுக்குக் கல்யாணம் நடந்தது. அந்த மாதிரி அதிசயமான கல்யாணத்தை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். மணப்பெண் அன்றைக்கெல்லாம் அழுது கொண்டேயிருந்தாள். "அழாதே, பத்மா! கிருஷ்ணசாமிதான் வாக்குறுதி கொடுத்திருந்தானே, சூக்ஷ்ம சரீரத்திலாவது வந்து சேருவேனென்று? அவன் வந்திருப்பான்" என்று நான் அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தேன்.

கலியாணம் ஆகி பட்டணத்துக்குத் திரும்பி வந்து மாமிக்கு நமஸ்காரம் பண்ணினோம். மாமி, என்னுடைய தலையை தம் கரத்தினால் தொட்டு, கனிவு நிறைந்த குரலில், "ஸ்வாமி என்னுடைய இரண்டு பிள்ளைகளை அழைத்துக் கொண்டார்; ஒரு பிள்ளையைப் புதிதாய்க் கொடுத்தார்" என்றார். பிறகு, பத்மாவைக் கட்டிக் கொண்டு உச்சிமோந்தார். அவருடைய கண்களில் ஜலம் ததும்பி வழிந்தது. பிள்ளைகள் இறந்த செய்தி வந்த பிறகு அவர் இன்றுதான் முதல் முதல் கண்ணீர் விட்டார். அதைப் பார்க்க எனக்குப் பெரும் ஆறுதலாயிருந்தது.

அவ்வளவுதான் எங்கள் கதை. இன்னும் ஒரே ஒரு விஷயம் தான் சொல்வதற்கு பாக்கியிருக்கிறது. "ஜோசியத்தில் நம்பிக்கை போய்விட்டதாகச் சொன்னீரே அது எப்படி? ஜோசியத்தில் நம்பிக்கை உண்டாகும்படியான காரியமல்லவா நடந்திருக்கிறது?" என்று நீங்கள் கேட்கலாம். இது உண்மையே. ஆனால் எனக்கு ஜோசியத்தில் நம்பிக்கை போய் விட்டதும் உண்மைதான். ஜோசியத்தில் ஒருவருக்கு நம்பிக்கை இருந்தால், வாழ்க்கையில், எந்தக் காரியத்தில் அந்த நம்பிக்கையைப் பயன்படுத்த வேண்டும்? ஒரு மனிதனுடைய வாழ்வில் கல்யாணத்தைக் காட்டிலும் முக்கியமான சம்பவம் என்ன இருக்கிறது? அதற்கல்லவா அவசியமாக ஜோசியம