Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

Pirapantat tiraTTu of civanjAna yokikaL - III
5. kalaicaippiLLaittamiz &
6. amutAmpikai piLLaittamiz
(in Tamil, Unicode format)

சிவஞானயோகிகள் அருளிச் செய்த பிரபந்தத்திரட்டு - III
5. கலைசைப்பிள்ளைத்தமிழ்
6. அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்.


Acknowledgements:
Our sincere thanks to the Digital Library of India for providing us with a scanned image files version of this literary work.
This etext has been prepared via Distributed Proof-reading implementation of Project Madurai
We thank the following for their help in the preparation of this etext:
S. Karthikeyan, Nalini Karthikeyan, A Karunakaran, Yogheswaran,
R.Navaneethakrishnan, RJ Anju, S. Subathra and V. Devarajan.
PDF and Web versions Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This Etext file has the verses in tamil script in Unicode format
So you need to have a Unicode Tamil font and the web browser set to "utf-8" to view the Tamil part properly.
© Project Madurai 2008.
to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
header


கணபதி துணை
திருச்சிற்றம்பலம்

திருவாவடுதுறை ஆதீனத்துத் திராவிடமகாபாஷ்யகர்த்தராகிய
சிவஞானயோகிகள் அருளிச் செய்த பிரபந்தத்திரட்டு

இராமநாதபுர சமஸ்தானம்
ம-ள-ள-ஸ்ரீ பொன்னுச்சாமித்தேவரர்களுடைய புத்திரர்
ம-ள-ள-ஸ்ரீ பாண்டித்துரைத்தேவரவர்கள் விரும்பியவண்ணம்

மதுராபுரிவாசியாகிய இ.இராமசுவாமிப்பிள்ளை என்று
விளங்குகின்ற ஞானசம்பந்தப்பிள்ளையால்
அகப்பட்டபிரதிகள்கொண்டு பரிசோதித்து
சென்னை: இந்து தியாலஜிகல் யந்திரசாலையிலும்
சித்தாந்த வித்தியாநுபாலனயந்திரசாலையிலும்
பதிப்பிக்கப்பட்டது
----
கணபதிதுணை.
திருச்சிற்றம்பலம்.
  சிறப்புப்பாயிரம். (செய்யுள் 1-2)
  ஆசிரியர் கருத்து. (செய்யுள் 3)
  விநாயகக்கடவுள் வணக்கம். (செய்யுள்-4)
  காப்புப்பருவம். (5-10)
  செங்கீரைப்பருவம் (11-15 )
  சப்பாணிப்பருவம்.(16-20)
  முத்தப்பருவம்.(21-25)
  வருகைப்பருவம் (29-33)
  அம்புலிப்பருவம். (34-38)
  சிற்றிற்பருவம். (39-43)
  சிறுபறைப்பருவம்.(43-47)
  சிறுதேர்ப்பருவம் (48-53)
  ---

கணபதி துணை.

5. கலசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்.

சிறப்புப்பாயிரம். (செய்யுள் 1-2)

இலகுசக னீரெட்டு நூற்றுநாற்
          பத்தேழினிற்கரங் கும்ப மிருபத்
    தேழிரே வதிவெள்ளி பூர்வபக்
          கத்துதிகையேர்க்கவுல வஞ்சுப் பிரம்
கலவியுறு சுபதினங் கன்னிலக்
          கினமதிற்கலசைப் பதிக்குள் வாழ்செங்
    கழுநீர் விநாயகர்த மீதுபிள்ளைத்
          தமிழ்க்கவிபாடி வானோருண
அலைமலிக டற்கடைந் தமிழ்தூட்டு
          மாலென்னவவனியிற் புலவர் செவியால்
    ஆர்ந்திடத் துறைசைவாழ் சிவஞான
          தேசிகனரங்கேற்றி னானா தலால்
நலசுகுண மணிகுவளை யணிபுயன்
          வீரப்பனல்குமக ராச யோகன்
    நங்கள்கே சவபூப னநுசர்சேய்
          சுற்றமுநன்மைதரு வாழ்வு றுகவே.

இன்றிழக்கு மூக்கன்றே யீர்ந்துமா னங்கொடுத்தான்
என்றுசய வீரனையே யேத்துவாள்-மன்றவே
நற்கலைமான் றூயசிவ ஞானமுனி யோதுதமிழ்ச்
சொற்சுவையை நோக்குந் தொறும். (2)

இவ்விரண்டு செய்யுட்களும் நூலாசிரியர் காலத்தன.

ஆசிரியர் கருத்து. (செய்யுள் 3)

அகளவடி வானபர மானந்த னேனு
      மெய்யடியவர்க டம்மை யாள
அருளுரு வெடுத்தலா லதனிளமை
      நோக்கிமுனந்நலார் கூறு மொழியாத்
தகவுபெறு சிறுதேரை யீற்றிற்றழீ
      இநலந்தாங்குகாப் பாதி பத்தும்
தண்டாத வாஞ்சையிற் கலசையுற்
      பலயானை தன்னையா னின்றேத் தினேன்
இகலுமொரு வேடம் பரித்துவரு மொருவனுழை
      யெல்லோரு மொல்லைக் குழீஇ
இயல்பாக வவ்வுருவ முடையவரி னும்பெருமை
      யெண்ணிப் பெருஞ்சொல் வமும்
மிகவுதவு நீர்மையை மதித்தியல்ப தாத்துதி
      விளம்புமத் தாதிய ரினும்
வினையினேன் றன்னிடத் தோவாத
      பேரருள் விளைத்திடு மெனக்கு றித்தே. (3)

விநாயகக்கடவுள் வணக்கம். (செய்யுள்-4)

மணிபூத்த மருமத்து நெடுமான் முதற்புலவர்
      வான்பதம் வேட்ட வர்க்கு
வழங்குவோ னுந்தனது பதமிரந் தோர்க்குதவு
      வள்ளலுந் தானே யெனும்
தணிபூத்த தன்றந்தை போற்பிற குறித்ததூஉந்
      தற்குறித் தேன்ற தொழிலும்
தானேக டைக்கூட்ட வல்லசெங் கழுநீர்த்
      தடங்களிறை யஞ்ச லிப்பாம்
அணிபூத்த தொய்யிற் கரும்புசிலை யாகவிழி
      யம்பினைப் பூட்டி மடவார்
அம்புயக் கிழவனைச் சீதரனை வென்றவர்க
      ளறிவினைத் திறைகோ டலும்
பணிபூத்த மலர்மகளி ராங்கதனை மீட்டிடும்
      படிவந்தி ருந்து செவ்வி
பார்க்குந் திருக்கலைசை மன்னிவாழ் தன்னையே
      பாடுமென் கவித ழையவே. (4)

காப்புப்பருவம். (5-10)


திருமால்

கார்கொண்ட கருநிறக் காளத்தை வெண்டிரைக்
          கைகளி னெடுத்து நீட்டும்
    கடும்பிழையை நோக்காது திருவினொடு
          சுவையமது கதிர்மணி தனக்கு தவிடும்
பேர்கொண்ட நன்றியே பாராட்டி வெண்கேழ்ப்
          பெருங்கடற் பள்ளி கொண்டு
    பிறங்குநீர்ப் புவிமிசைப் புருடோத் தமப்பெரும்
          பெயர்நிறுவு மண்ணல் காக்க
ஏர்கொண்ட தன்னைத் தளைப்பவரு மூருநரு
         மிலரென்ப துலகு தேறற்
    கெடுத்தவெம் பாசமோ டங்குசந் தன்கரத்
          தேந்திமத தாரை சிதறிப்
பார்கொண்ட வெண்டிசைத் தறுகட் களிற்றுடல்
          பனிப்பச் செவிக்கா லெழீஇப்
    பகிரண்ட முற்றும் புகுந்துலாய்க் கலைசையிற்
          பதியுமோர் களிறு தனையே. (5)

சிதம்பரேசர்.
வேறு.

மறமலிந்துல கேழினு முயிர்களஞ்ச வுலாவுபு
வதைசெயும்புர நீறுசெய் புன்சிரிப் பாற்கடி
மலர்துவன்றிய வார்குழ லுமையிளம்பிடி பூதர
மகளுளஞ்சுக வாழ்வில மிழ்ந்திடத் தேக்கியும்
மதுகரங்குண மாய்வளை சிலைகொணர்ந்தம ராடிய
மதனைவென்றருள் சீர்நய னந்தனிற் பாற்குரு
மதியொடுங்கதிர் வானவ னொளியிறந்தமை யாலயர்
மகிதலங்களி கூர்தர வின்பினைக் கூட்டியும்

வெறிகமழ்ந்தறு காலுண மதுவுமிழ்ந்தலர் தாமரை
      மிசைவதிந்தவ னோர்முடி விண்டகைப் பூத்தனில்
விரிகருங்கட லூடெழு கொடியவெங்கடு வானனி
      வெருவுமும்பர்மு னேயப யந்தனைக் காட்டியும்
விறல்பிறங்குக டாமிசை யெதிருமந்தக னார்தமை
      மெலிவுகொண்டுயிர் வீடவு தைந்தபொற் றாட்டுணை
வினையினென்றலை மேலருள் செயவிரங்கியு மேர்மரு
     வியசிதம்பர ரூபனை யன்புறப் போற்றுதும்

அறவொழுங்குத னாதிட முழுவதுஞ்செறி நீள்கரை
     யகல் விசும்பென நீடுத ரங்கமிக் கார்த்தெறி
அவிர்செழுங்கதிர் மாமணி பரவியெங்கணு மேவுவ
     ததனிலொன்றிய மீனவி னந்தனக் கேற்றிட
அயல்வழிந்திடு மாறுத னகநிரம்பிய வாலொளி
     யணவுதண்புனல் வாவிகு ளிர்ந்திருட் கூட்டம
தழியமென்கதிர் வீசிய வெளியவம்புலி போலுற
     வருகுவந்துத ணீரைமு கந்தெடுத் தாற்றல்செய்

துறையுமங்கைய ராடவ ரதுவழங்கிடு மாரமு
     துணுமரம்பையர் வானவர் தங்களிற் றோற்றவிண்
உலகெனும்புகழ் மீறிய கலைசையம்பதி யேதன
     துறையுளென்றுநி லாவிவ ணங்கிநிற் போர்க்கருள்
உதவுமெம்பெரு மானையெவ் வுயிர்களுங்கொடு மாமல
     மொருவியன்புரு வாகிய டங்கவைத் தாட்கொளும்
உகளபங்கய பாதனை யுலகமெங்கணு மாயெனை
     யுடையசெங்கழு நீர்மத தந்தியைக் காக்கவே. (6)

சிவகாமியம்மை.
வேறு.

கரும்பு குழையச் சுரும்பொலிப்பக் கடிப்போதுகுத்த
      மதனையெம்மான்
கண்டு மிகையா மெனக்கருதிக் கனலிக்
      கூட்டு மாற்றலும்பின்

கந்தமலி பங்கயத் திருமுக மசைத்தொறூஉங்
      கார்க்குஞ்சி மீது கவினக்
கால்யாத்த வெண்மலர்த் தொங்கல்பின் னான்றுலாய்க்
      கண்ணத் தளாவி வாசம்
தந்தமத நீரிற் படிந்துகரு நிறமாய்த்
      தணந்துழிப் பற்று மந்நீர்
தனையுதறி முன்னைத் தனாதுநிற மெய்தித்
      தரங்கந் துரங்க நிரையிற்
கொந்தலரு கும்புன்னை மீமிசைத் தாவிக்
      குதிக்குமணி யாழி யகடு
குழியக் குறைத்துக் கறுத்துமழை தூஉய்வெண்மை
      கொண்டுவளர் கொண்ட லேய்ப்பச்
சிந்துரமு கத்தசெங் கழுநீ ரினங்களிறு
      செங்கீரை யாடி யருளே
திருந்துமடி யார்க்கருள் புரிந்தகலை சைப்பிரான்
      செங்கீரை யாடி யருளே. (7)

வேறு.

கொங்கவர் நின்னடி சென்னியில் வைத்துக் கூப்பிய கையொடுநின்
      குளிருளமகிழ்தருதொழில்புரிதாதியர் கொள்கையினிரைநிரையாய்த்
தங்கிய பங்கய மங்கையர் முதலிய தபனிய வுலகுறையுந்
      தையலர் மருமத் தொய்யில் பரித்த தனக்கரி யுலவைகளுள்
திங்களி னொளிர்தன துலவை நிகர்ப்பன தேர்தர வெதிர்நோக்கித்
      திரிவது போலிரு புறமு மலர்ந்தவிர் திருமுக மினிதசைய
அங்குச மேந்திய செங்கழு நீர்க்களி றாடுக செங்கீரை
      அணிகிளர் கலைசை நகர்க்கு ளிருந்தவ னாடுக செங்கீரை. (8)

சுரும்புமு ரன்றலர் கொன்றை செறித்த துலங்கொளி வார்சடிலத்
      தோன்றலை யெய்திய ணைத்திடு காலைத் தோளொடு மருமமெலாம்
இரும்புணு றும்படி யுழுதரு தகைமை யிரண்டற் குஞ்சமமாய்
      இயைவது நோக்கி மகிழ்ந்திவை தம்மு ளிணங்கச் செய்வதென
விரும்பிம யத்து மடப்பிடி கோட்டொடு வில்லுமிழ் தன்னுலவை
      மேவிட வைத்துக் கொங்கைத் தீம்பய மென்மெல வுண்டுமணம்
அரும்பிய செவ்வாய்ச் செங்கழு நீர்க்களி றாடுக செங்கீரை
      அணிகிளர் கலைசை நகர்க்கு ளிருந்தவ னாடுக செங்கீரை (9)

வேறு
பொங்கொளி வீசுபொ லங்குழை காது புகுந்தேர் கொண்டாடப்
      பொன்றிகழ் தோளணி தொங்கலி னோடுபு லம்பா நின்றாடத்
துங்கநி லாவுத டங்கையி னீர்சுல வுங்கார் வென்றாடத்
      துன்றிய தேமலி குஞ்சிய னோடுதொ குந்தார் விண்டாடப்
பங்கய னாதியர் வந்துத வாதப தந்தா வென்றாடப்
      பண்பறு நேரலர் நெஞ்சழல் வாயுறு பஞ்சாய் நைந்தாடச்
செங்கழு நீர்மத தந்திவி நாயக செங்கோ செங்கீரை
      தென்கலை சாபுரி தங்கிய நாயக செங்கோ செங்கீரை. (10)

செங்கீரைப்பருவமுடிந்தது.
----- X

தாலப்பருவம்.

புதிய வாசந் தனைப்பரப்பிப் புறத்தே யெங்குந் திரிந்தயரும்
      பொறிவண் டினங்க டமையழைத்தம் புயத்தே னூட்டிப் பகலோம்பி
முதிய நிசிவந் திடும்போது முகைவிண் டலர்ந்த நறுங்குமுத
      மூரிச் செழுந்தேன் முகந்தூட்டி முழுதுங் காத்துக் கடல்வரைப்பின்
வதியு மிரவோர் தமைக்கீர்த்தி மகளாந் தூதின் வரக்கூவி [யோர்
      மகிழ்ந்தெப்போது மெவ்வாறும் வழங்கிக் காக்கும் பெருங்கொடை
கதிய தடஞ்சூழ் திருக்கலைசைக் களிறே தாலோ தாலேலோ
      கருணை முதிர்ந்த செங்கழுநீர்க் கன்றே தாலோ தாலேலோ. (1)

தொடுக்குந் தெரியற் கருங்கூந்தற் றோகை யனையார் துடுமெனநீர்த்
      துறையுட் பாய்ந்து விளையாடத் துண்ணென் றெழுந்து மேற்சென்று
தடுக்கும் பசுங்கோட் டலர்கனிகாய் சாடித் தனது வயிறுருவத்
      தாக்கு நெடுவா ளையுமதனைத் தன்னுட் பிணிக்குந் தேனடையும்
அடுக்கும் பரிதி நுழைந்துதின மலைக்கும் பகைமை மீக்கொண்டங்
      கடர்த்துப் பறித்த வவன்றிருத்தே ரச்சு மதுகோத் திடுமுருளும்
கடுக்கும் பொழில்சூழ் திருக்கலைசைக் களிறே தாலோ தாலேலோ
      கருணை முதிர்ந்த செங்கழுநீர்க் கன்றே தாலோ தாலேலோ (2)

வேறு

வேய்மரு டோளியர் குஞ்சி திருத்தி மிலைச்சிய செம்மணியின்
      விற்பயில் கொண்டைவெய் யோனெனவாங்கி யுடைத்திருகூறு செய்தே
தேய்மதி கொண்டபி ரான்சடை மேலெழில்செய்கெனவோர்பிளவைச்
      சேர்த்துப் பின்னொரு பிளவுமை யாண்முடி செருகிச் சமமாகத்
தூய்மதி யென்றிறை மார்பணி கொம்பைத் தொடையி லறுத்துடனத்
      தோகை முடிக்கணி சைத்து மகிழ்ச்சி துளும்பித் தந்தையொடும்
தாய்மகிழ் கூர நடித்தருள் செல்வா தாலோ தாலேலோ
      தகைபெறு செங்கழு நீர்மத வேழந் தாலோ தாலேலோ. (3)

வெண்டலை யேந்திய வேணிமுடிப்பான் மெய்யினும் வெம்பனிசூழ்
      வெற்பன் மடக்கொடி மெய்யினு மேறி மிதித்தா டுந்தோறும்
வண்டலை யக்கடி வீசுக வுட்புறம் வாக்கும தப்புனலும்
      வார்தரு தடவுக் கைத்துளை யுமிழு மதப்புன லுஞ்சிரமேற்
கொண்டலை நிகரக் கொட்டுவ திருமுது குரவர் தமக்குமணம்
      குலவிய யமுனையு மந்தா கினியுங் கொடுவந் தாட்டல்பொரும்
தண்டலை சூழ்கலை சைச்சிறு களபந் தாலோ தாலேலோ
      தகைபெறு செங்கழு நீர்மத வேழந் தாலோ தாலேலோ. (4)

வேறு.

மலைம டந்தையருள் பாலா தாலோ தாலேலோ
      மதமி குந்திழிக போலா தாலோ தாலேலோ
அலகி லன்பர்பணி காலா தாலோ தாலேலோ
      அருள்சு ரந்திடும்வி சாலா தாலோ தாலேலோ
இலகு கின்றபணி மார்பா தாலோ தாலேலோ
      இனிய மந்திரசொ ரூபா தாலோ தாலேலோ
பொலிபெருங் கருணை யாளா தாலோ தாலேலோ
      புகழ்பெ றுங்கலைசை வாணா தாலோ தாலேலோ. (5)

தாலப்பருவமுடிந்தது.
-------
சப்பாணிப்பருவம்.

பக்குவமு திர்ந்துசிவ புண்ணியநி ரம்பிமல பாகம்பி றந்து சத்தி
      பதிந்துவினை யொப்புப் பழுத்தவர்கள் பந்தநோய் பாற்றுமொரு செங்கை மலரும்
அக்கருணை யடியவர்க ளுயிருடன் பொருள்காய மாமெவ் வகைப்பந் தமும்
      அங்கீக ரிக்குமோர் கைமலரு மாறுபா டாதரித் திடுசெய் கையான்
மிக்குறும் பகைமைமேன் மேலெய்தி யாங்கது விலக்கத் தமக்கு யர்ந்தோர்
      மேதினிக் கின்மையாற் போராட் டியற்கையின் மெலியாம லொன்றை யொன்று
தக்கவகை தாக்குதல் கடுப்பக் கவின்செயவொர் சப்பாணி கொட்டி யருளே
      தங்குகலை சைப்பதிச் செங்குவளை நாயகன் சப்பாணி கொட்டி யருளே. (1) (1)

வயங்குமுழு மதியத் திருஞ்சுவைப் புத்தமுது வாய்மடுத் துண்ண வெண்ணி
      வருகின்ற தகுவர்குல மொப்பக் கலித்தலை மடிக்குந் திரைப்பு னற்பூம்
கயங்கிளர்செ ழுங்கமல வாண்முகத் தூற்றெழூஉங் கலுழிக் கடாம டுப்பக்
      கருதிவரு மெல்லிசைத் தும்பியும் வண்டுங் கறங்குமி ஞிறுஞ்சு ரும்பும்
பயங்கதுவ மொய்த்தவை விரைந்தோட வோச்சுறூஉம் பண்புபொர வேற்போர்க் குவான்
      பரிசிலைய ளித்தளித் துச்சிவந் தாங்கொளி பரப்பிமணி யாழி பூண்டு
தயங்குமிரு கைகளா லெழிப்பூப்ப மதகளிறு சப்பாணி கொட்டி யருளே
      தங்குகலை சைப்பதிச் செங்குவளை நாயகன் சப்பாணி கொட்டி யருளே. (2) (2)

      வேறு.

மும்மல மாமத முற்றுப் போத முழுத்தறி யறவீசி
      முகிழ்த்தல ரன்பின் சங்கிலி யுதறி முதிர்ந்தவ ருட்கூடத்
திம்மென நீங்கி வெளிக்கொடு புவன மெனுங்கடு வனமோடி
      எப்பா கர்க்கு மடங்கல வாகி யியங்கு முயிர்க்கரிகள்
தம்மைவி டாது தொடர்ந்து பிணிப்பத் தகுமங் குசபாசம்
      தாங்குதல் கண்டுந் தம்போ லெண்ணிச் சார்பவை தமைநகையாக்
கொம்மைம லர்க்கைகள் கொட்டுவ தேய்ப்பக் கொட்டுக சப்பாணி
      குலைகெழு தடநிறை கலைசைந கர்க்கிறை கொட்டுக சப்பாணி. (3)


மட்டுமிழ் கொன்றை மிலைச்சுபொ லஞ்சடை வள்ளலு நள்ளிருள்கூர்
      வண்டுளர் குழலுமை யாளுங் கைதொடும் வள்ளத் தறுசுவையும்
தொட்டுவ ளாவி யளைந்தவர் மிசைமுடி தொட்டடிமட்டுமுறத்
      தூவிவி டுத்தணி வீதிபு குந்து தொடர்ந்து சிறார்குழுமி
இட்டுநி றைத்திடு புழுதிக் குவைகளை யெற்றி யுழக்கியநீ
      இயைந்திடு மப்புழு தித்துகள் போம்படி யெண்ணிக் கைகளினைக்
கொட்டுவ தெனவெழில் கொட்டிடவோர்முறைகொட்டுக சப்பாணி
      குலைகெழு தடநிறை கலைசைந கர்க்கிறை கொட்டுக சப்பாணி. (4)

வேறு.

விரிதிரை பொங்கியு லாவும ளக்கர்ம ணிப்பாயன்
      மிசைவிட முந்தும ராவணை யிற்றுயில் புத்தேளும்
மருமல ரம்புய மேவுமி ருக்கைம றைக்கோவும்
      மதமழை சிந்துவெ ளானையெ ருத்தனு மற்றோரும்
அருடரு கென்றுப ராவிநி னைத்தது செப்பாமுன்
      அவரவர் சிந்தையி னார்வன முற்றும ளித்தோகை
கருதிடு செங்கழு நீரிறை கொட்டுக சப்பாணி
      கலைசைபு ரந்தருள் காரண கொட்டுக சப்பாணி. (5)

சப்பாணிப்பருவமுடிந்தது.
------
முத்தப்பருவம்.

அதிருந் தரங்க முரசறைய வளிபண் பாடத் துள்ளுவரால்
      அனைத்தும் வெடிபோய்த் தாவிமறிந் தாடிக் குதிக்கச் சங்கினங்கள்
பிதிருந் தரளம் பரிசிலெனப் பேணிச் சொரியும் புனற்றடஞ்சூழ்
      பெருநீர்க் கலைசைச் செங்கழுநீர்ப் பிள்ளா யல்குன் மணிப்பாம்பும்
கதிரும் பசும்பொற் றனக்கோடுங் காயத் துடையே நீயணியும்
      கலனாம் பணிக்குங் கோட்டினுக்குங் கடுத்து வெருவே மணுகலந்து
முதிருஞ் சிவப்பூர் செழுங்கனிவாய் முத்தந் தருக முத்தமே
      முழுது முணர்ந்த பரபோக முதல்வா முத்தந் தருகவே. (1)

கொத்துநிரைத்தமலர்ச்சோலைக் குயில்கூஉங் கலைசைச் செங்கழுநீர்க்
      குழகா வம்மை யுனையீன்ற கோமான் றனக்குப் பணிநிலைக்க
வைத்து நிரைத்த பலவண்ட வருப்பும் வெள்ளிற் சனியெனநீ
      மதித்துக் கவளங் கொளக்கரத்தால் வளையே லெந்தாய் தளவமலர்
ஒத்து நிரைத்த நகையாடி யுன்னோ டுரிமை பாராட்டும்
      ஓசை மடவா ரெனயாமு முலவா வின்பக் கடன்மூழ்க
முத்து நிரைத்த கனிவாயான் முத்தந் தருக முத்தமே
      முழுது முணர்ந்த பரபோக முதல்வா முத்தந் தருகவே. (2)

வேறு.

துளிதூங்கு தேந்தொடை மிலைச்சிய கருங்கூந்தல்
     சுவன்மிசைப் புரள நின்று
தொடித்தோள் பெயர்த்தர மடந்தையர்க ளிருபுறந்
     தூமணிக் கவரி வீசத்
தெளிதூங்கு நவமணி குயிற்றியணி வாலுளைச்
     சிங்கஞ் சுமந்த தவிசில்
செங்கோ னடாத்துமிறை வைப்புமுத லெங்கணுஞ்
     செல்லப் பரந்து விரியும்
அளிதூங்கு மெமதுளப் பங்கயங் குவியவது
     வல்காமை நிற்கு மளவும்
அவிரொளி பெறாதவெம் முகமதியு மாலிப்ப
     வமிழ்தம் பொழிந்தா லெனக்
களிதூங்கு நகைநிலவு சிறிதே யரும்புநின்
     கனிவாயின் முத்த மருளே
கலைசைநகர் வந்தசெங் கழுநீர் மதக்களிறு
     கனிவாயின் முத்த மருளே. (3)

திரைபூத் தொடுங்குவ தெனப்படி யளிக்குலஞ்
          சிறைபுடை பெயர்த்தொ டுக்கித்
    தீஞ்சுவை மடுத்துண்டு களிதரப் பூங்கவு
          டிறந்தூற் றிருந்து வட்டும்
விரைபூத்த கடமுங் கொலைத்தொழில் பழுத்தொழுகும்
          வெய்யகூர்ங் கோடு மெங்கள்
   மென்மலர் முகத்திற் பெறுங்கறையு மூறும்
          விளைத்திடின் விளைக்க வெங்கண்
மரைபூத்த கண்ணிமைக் குள்ளெழுது மையும்
          வயங்கு மூக்கணியு மையன்
    வதனத் திருங்கறையு மூறுஞ் செயாவன்பு
          வாய்ப்பப் பவக்க டற்கோர்
கரைபூத்த செம்மொழிப் பழமறை முளைத்தநின்
          கனிவாயின் முத்த மருளே
    கலைசைநகர் வந்தசெங் கழுநீர் மதக்களிறு
          கனிவாயின் முத்த மருளே. (4)

வேறு.

மறைநெறி யொழுகுநர் தங்களை யாள மதித்தம றைப்பொருளே
    வளிவெளி சலநில மங்கி யெலாமுரு வத்துநி றுத்தவனே
நிறைவளை மகளிர் நலம்படர் வோர்த நினைப்பிலொ ளித்தவனே
    நிருமல வறிவினர் சிந்தை நிலாவிய நிர்க்குண வற்புதமே
அறைகடலுலகொடு பங்கயன் மாலை யளித்துவ ளர்த்தவனே
    அவரவர் பெறவுறு பந்தமும் வீடு மமைத்தவ றக்கடலே
முறைவளர் கலைசைகொள் செங்கழு நீரிறை முத்தம ளித்தருளே
    முனிவர்க ளமரர்கள் வ்ந்தடி தாழ்பவ முத்தம ளித்தருளே. (5)

முத்தப்பருவமுடிந்தது.
------
வருகைப்பருவம்

சுத்தவொளி யாகியறி வாகிமல மாயைத்
      தொடக்கிற் படாத நிறைவாய்த்
தொல்லுலக மெங்கணுங் கரைபுரண்டலைமோது
      சுகாதீத வாரியி லெமை
வைத்தருள வெம்போ லெடுத்தநின் றிருமேனி
      மழமையைக் கண்டி னமென
மதித்தளவ ளாவிவிளை யாடக் குறித்தோடி
      வருமிள மகார்கள் குழுமி
மொய்த்தவழி நீதவழ்ந் தெதிர்வரவு காண்டலு
      முழுக்களிறி தென்ன வெருவி
மொய்யொளிக் கண்களைக் கையாற் புதைத்தலறி
      முன்விரைந் தோட முளரிக்
கைத்தலத் தங்குசம் பாசந் தரித்தசெங்
      கழுநீர்ப் பிரான்வ ருகவே
கண்கதுவு மெழில்கொண்டு விண்கதுவு மாளிகைக்
      கலைசைநா யகன்வ ருகவே. (1)

அலங்கொளி ததும்பிக் கொழுந்துவிடு நித்தில
      மலைத்துக் கொழிக்கு மலையால்
ஆற்றல்புரி தன்கரை கரைத்துத் தமக்குறுதி
      யாக்குநர்த மூக்க மாய்க்கும்
விலங்கனைய புல்லியர் பொரூஉம்புனற் பூந்தடம்
      விலங்கா மலங்கு மீன்போல்
விழையுநின் முன்புறங் காண்டோறு மூற்றிய
      விலாழிக் கடாங்கொள் களபக்
குலங்களெதிர் கொண்டோகை கூர்ந்திடப் பின்புறக்
      கோமளங் காணுந் தொறும்
குழமைச் சிறாருங் குழீஇத்தொடர்ந் துன்போற்
      குலாவிவர வெம்மு ளத்துக்
கலங்குமரு ளீர்ந்திட் டிலங்குமருள் காட்டுசெங்
      கழுநீர்ப் பிரான்வ ருகவே
கண்கதுவு மெழில்கொண்டு விண்கதுவு மாளிகைக்
      கலைசைநா யகன்வ ருகவே. (2)

மண்டலத் துண்டுடுத் திளநகை மட்ந்தையர்
      வடந்தழுவு கொங்கை தோயும்
மருளன்றி யருளிலாப் பூரியரு மாரியரும்
      வாக்குமன மெட்டா தநீ
கொண்டநற் றிருமேனி யுண்மையைத் தத்தந்
      குறிப்பினுக் கேற்ப மொழியும்
கொள்கைபோற் சேயிடையி னின்வரவு கண்டுசிலர்
      கூடும்பொ துக்காட் சியால்
வெண்டாள நீள்கோட்டு வாவென்று ளங்கொள்ள
      வேறுசில ருற்று நோக்கி
வேழமன் றீங்கிது தவழ்ந்துவிளை யாடுநம்
      விநாயகன் கோல மென்னக்
கண்டனர் மொழிந்துளத் தள்ளூற வெங்கள்செங்
      கழுநீர்ப் பிரான்வ ருகவே
கண்கதுவு மெழில்கொண்டு விண்கதுவு மாளிகைக்
      கலைசைநா யகன்வ ருகவே. (3)

வேறு.

இருகை யூன்றித் தவழ்ந்துமழ வேற்றின் வருந்தோ றாங்காங்கே
    எறுழ்வன் புழைக்கை நெட்டுயிர்ப்பா னிருமா நிலத்தைக் குழிப்பதுவும்
பெருகுங் கடைக்கால் செயுஞ்செவிவான் பிளப்ப தேய்ப்பப் பல்காலும்
    பெயர்ந்து மடங்கி ய்சைந்தாடும் பீடுந் தத்தம் பொறிதமக்கு
மருவும் புலனை யவற்றிடமா மண்ணை யகழ்ந்தும் வெளிப்ப்ரப்பை
    வளைத்துங் கவவிக் கொடுத்துதவும் வண்மை காட்ட வசைந்தசைந்து
முருகுவிரியுந் தொடைப்புயத்து முதல்வா வருக வருகவே
    மூரிக் கலைசைச் செங்கழுநீர் முனியே வருக வருகவே. (4)

உருகு ம்டியா ரள்ளூற வுள்ளே யூறுந் தேன்வருக
    உண்ணத் தெவிட்டாச் சிவானந்த வொளியே வருக புலன்வழிபோய்த்
திருகு முளத்தார் நினைவினுக்குச் சேயாய் வருக வெமையாண்ட
    செல்வா வருக வுமையீன்ற சிறுவா வருக விணைவிழியால்
பருகு மமுதே வருகவுயிர்ப் பைங்கூழ் தழைக்கக் கருணைமழை
    பரப்பு முகிலே வருகநறும் பாகே வருக வரைகிழித்த
முருக வேட்கு முன்னுதித்த முதல்வா வருக வருகவே
    மூரிக் கலைசைச் செங்கழுநீர் முனியே வருக வருகவே. (5)

வருகைப் பருவமுடிந்தது.
---------
அம்புலிப்பருவம்.

தண்டரள மேந்தித் தயங்குநீள் கோட்டைத்
      தழீஇச்சித் திரம்பெற் றவான்
தனியுவாத் தரவந்து மல்குநா கத்தார்க
      டண்டாது சூழ்ந்து மகிழ்வு
கொண்டிட விலங்குதொட் டிக்கலையி னளியமிழ்து
      கொட்டியெமை யாளு முக்கண்
குழகன் படைத்தபெரு வையஞ் சுமந்தாற்று
      கொள்கையி னுருக்கொண் டெதிர்
கண்டவ்ர் வியப்புறும் படியருண மணியுருக்
      கவினாரு மொளிவீ சிடும்
காட்சியா னின்னையிவ னொத்துளா னீயுமிக்
      கடவுளை நிகர்த்து ளாய்காண்
அண்டரும் பழமறையு மோலமிட நின்றவனொ
      டம்புலீ யாட வாவே
அருட்குண நிரம்புசெங் கழுநீர் மதக்களிறொ
      டம்புலீ யாட வாவே. (1)

ஒளிவந்த நீயுடற் கூறுபடு வெம்பாந்த
      ளொன்றனுக் கஞ்சி யஞ்சி
உழிதந்து திரிவையிவ னண்டபகி ரண்டமு
      மொருங்கஞ்ச வெய்து யிர்க்கும்
துளிவந்த காரிபடு துளைவெள் ளெயிற்றுவாய்த்
      துத்திப் படக்கோ ளராத்
தொகையெலா மெய்யினுங் கையினுங் கலனெனச்
      சூழ்ந்துகொண் டான்வெண் மைகூர்ந்
திளிவந்துதேயுங் களங்கவுரு வுடையைநீ
      யிவன் செம்மை வாய்ந்து தேயா
தென்றுமக ளங்கவுரு வுடையனா கலினிவனை
      யெவ்வாறு மொப்பா யலை
அளிவந்து நின்னையு மழைத்தனன் காண்விரைந்
      தம்புலீ யாடவாவே
அருட்குண நிரம்புசெங் கழுநீர் மதக்களிறொ
      டம்புலீ யாட வாவே. (2)

கரும்பினை நெருக்கிநெரி செய்ததன் றேறலைக்
      காற்றுநெட் டாலை யேய்க்கும்
கயமுகன் கையகப் பட்டுநல நீங்குசுரர்
      களைகணாய்த் தோன்றி யவனைத்
துரும்புபட வென்றழித் தவ்வமர ரோடுநின்
      றுயருந் தவிர்த்த ளித்த
சூழ்கருணை நீயறிவை யன்றியும் யாருந்
      தொடங்குதொழி லினிது முற்ற
இரும்புவியி லூறுதீர்த் தருள்பவனு மிவனலா
      லில்லையிவ னிசையை யின்னும்
இயம்பிடி னுலப்புறா தீங்குநீ வரினுன்பி
      னெய்திடும் பாம்பு மணியும்
அரும்பணிக ளொடுவைத்து மீண்டுதொட ராதுசெயு
      மம்புலீ யாட வாவே
அருட்குண நிரம்புசெங் கழுநீர் மதக்களிறொ
      டம்புலீ யாட வாவே. (4)

தெருளாத தக்கனார் வேள்வியை யழித்தும்பர்
      சென்னியை யுருட்டி நினையும்
தேய்த்தசய வீரனு மிவன்றம்பி யென்பதுந்
      திருமார்ப வைம திப்ப
உருளாழி கைக்கொண்டு மற்றவ னிரந்தாங்
      குஞற்றும்விக டக்கூத் தினுக்
குள்ளம் பெருங்கருணை பூத்தபின் னாங்கதனை
      யுதவினா னிவனென் பதும்
வெருளாது சீறிய வரக்கனைப் பந்தாடி
      விட்டதுங் கேட்டி லாய்போல்
வேண்டிநா மேவலி னழைத்திடவு மதியாது
      விண்ணாறு சேறி கண்டாய்
அருளா திவன்கடியில் வேறுபுக லேதுனக்
      கம்புலீ யாட வாவே
அருட்குண நிரம்புசெங் கழுநீர் மதக்களிறொ
      டம்புலீ யாட வாவே. (4)

வையகம் போற்றுமெம் மானிவனை நீயவ
      மதித்துவெஞ் சாப மெய்தி
வசையிடைப் பட்டனைமு னின்றுமவ மதிசெய்து
      வாராம லொழியி னங்கண்
எய்தியொரு தண்டமும் புரியவேண் டாதிவ
      ணிருந்தாங் கிருந்து நீள்கை
எடுத்துவிண் ணுறநிமிர்த் தொருதுருவ னார்பிணித்
      திடுஞ்சூத் திரத்தி னின்றும்
ஒய்யென வறுத்துனைப் பற்றிப் படுப்பனிவ
      னுடல்பூண்ட பாப்பி னத்துள்
ஒன்றறியி னண்ணாந்து தாவியுனை யுண்டுபின்
      னுமிழாது விடினும் விடுமால்
ஐயமிலை யாகலான் மற்றிவன் வெருளுமுன
      மம்புலீ யாட வரவே
அருட்குண நிரம்புசெங் கழுநீர் மதக்களிறொ
      டம்புலீ யாட வரவே. (5)

அம்புலிப்பருவமுடிந்தது.
---------------
சிற்றிற்பருவம்.

கூன்பாய் வடிவச் சிலைநுதலுங் குவவுத் தனமும் வாய்த்தமலைக்
    குமாரி யுளமும் விழியுமகிழ் கூரக் குறும்பு விளையாடி
வான்பாய் கருணை பூத்திங்கும் வந்தா யெந்தாய் சிறுவீடு
    வகுக்குந் தொடக்கத் துனைப்போற்ற மறந்தேஞ் சிறியே மதனானீ
தான்பாய் வெகுளி மீக்கொண்டுன் றன்மை காட்டலடாதுனக்கித்
    தாழ்வுதீரச் சிறுசோறு தருவே முன்னர் வாவிதொறும்
தேன்பாய் கலைசைச் செங்கழுநீர்ச் சிறுவா சிற்றில் சிதையேலே
    தெள்ளித் தெளிந்தோர்க் கள்ளூறுஞ் செல்வா சிற்றில் சிதையேலே. (1)

விருந்து விளிப்போ மெனக்கருதும் வேலையடிகே ளிவணீயே
    விரும்பி வந்தா யெனமகிழ்ச்சி மீக்கூர் தலினாற் செவ்வாயின்
முருந்து தோன்ற முறுவலித்தே மல்லா லொருநின் கரிமுகம்போன்
    முகமும் பூதப் பெருவயிறு முடங்குங் குறட்டா ணகுநடையும்
இருந்த வாறு நோக்கிநகைத் திட்டே மல்லே மிடந்தோறும்
    இருக்கு முழக்குந் தேவாரத் திசையுந் துவன்றி யோங்கவளம்
திருந்துங் கலைசைச் செங்கழுநீர்ச் சிறுவா சிற்றில் சிதையேலே
    தெள்ளித்தெளிந்தோர்க் கள்ளூறுஞ் செல்வா சிற்றில் சிதையேலே. (2)

தவளம் பழுத்த கூனலிளஞ் சசிநே ருனது கோட்டினொடு
    தடந்தாழ் புழைக்கைக் கெதிராகத் தனத்தோ டுரோமா வலிதாங்கும்
பவளம் பழுத்த சேயிதழார் பயிலு மனைக ளன்றியொன்றும்
    பற்றாச் சிறியேஞ் சிறுவீடுன் பதத்துக் கிலக்கோ பசுபோதக்
கவளந் தெவிட்டு மதகளிறே கண்ணின் மணியே நான்மறையும்
    கதறித் திரிந்துங் கண்டறியாக் கதியே துறைக டொறுந்தரளம்
திவளுங் கலைசைச் செங்கழுநீர்ச் சிறுவா சிற்றில் சிதையேலே
    தெள்ளித் தெளிந்தோர்க் கள்ளூறுஞ் செல்வா சிற்றில் சிதையேலே. (3)

நென்னற் பொழுது விருந்தாக நின்னை விளிப்பேங் கடக்கலுழி
    நீத்தஞ் சிற்றி லழிக்குமெனு நினைவால் விடுத்தே நான்மறையும்
உன்னற் கரிய பரம்பொருளே யுண்மை யிதுவா மவமதியால்
    உன்னை யழையா திருந்தேமென் றுள்ளங் கறுவிச் சிறியேமை
இன்னற் படுப்பக் குறும்புபல வியற்றா நின்றாய் நின்பெருமைக்
    கேலா தடிகேள் பெருங்கருணைக் கெல்லா யெளியேந் தவப்பேறே
தென்னற் கலைசைச் செங்கழுநீர்ச் சிறுவா சிற்றில் சிதையேலே
    தெள்ளித் தெளிந்தோர்க் கள்ளூறுஞ் செல்வா சிற்றில் சிதையேலே. (4)

பெருத்த வயிறு தயங்கமெல்லப் பெயர்ந்து நடந்து குடங்கைமிசைப்
    பெரும்பண் ணியமு மேந்தியேம்பாற் பேணி வருநின் கரவினைக்கண்
டருத்தி யொடுநீ யுண்டபரி கலசே டத்தை யடியேங்கட்
    களிக்க வருவா யென்றுவகை யரும்பி வழிபார்த் திருந்தேமை
வருத்த லழகோ விக்கினஞ்செய் மன்னனெனும்பேர் பேதையரேம்
    மாட்டுத் தெரிப்ப தொருபுகழோ மடவாரூடன் மவுணரென்றும்
திருத்துங் கலைசைச் செங்கழுநீர்ச் சிறுவா சிற்றில் சிதையேலே
    தெள்ளித் தெளிந்தோர்க் கள்ளூறுஞ் செல்வா சிற்றில் சிதையேலே. (5)

சிற்றிற்பருவமுடிந்தது.
-----
சிறுபறைப்பருவம்.

குறுகுறுந டந்தெய்தி யெம்பிரான் றிருமேனி
      குழையமே லேறி வேணிக்
கொத்தினைக் கோட்டினிற் கோத்தலைத் துதறிவான்
      குளிர்புனல் புழைக்கை யெற்றிப்
பொறியரவு தலைமாலை வெள்ளென்பு கைம்மாப்
      புலிச்சரும முதல ணியெலாம்
பொள்ளென வெடுத்தெடுத் தங்கைய னலிற்பெய்து
      போக்கியிள மதியை வன்றி
எறுழுலவை யொன்றப் பொருத்தித் திருக்கைமா
      னிடைவைத்து முற்று மதிசெய்
திருவிசும் புய்த்துவான் றருத்தரும் பேரணிகொ
      டெங்கணு மலங்க ரித்துச்
சிறுமையிலை யினியென வசைக்குங் கரங்கொண்டு
      சிறுபறை முழக்கி யருளே
தென்கோ விருந்தநக ருற்பலவி நாயகன்
      சிறுபறை முழக்கி யருளே. (1)

இருக்கோல மிட்டின்னு மறியாத நின்றா
      ளிறைஞ்சாது தபுமாந் தருக்
கிறுதியிற் கட்நடை நெருப்புகச் சீறிவரு
      மியமன் றருக்கோ தையும்
உருக்கோல மேவச் சிரக்கவச மாகமை
      யுண்டவிழி வாளி புருவம்
ஒருதனுவெ னக்கொண்ட சேனைக ணிரைத்தம
      ருழக்குமதன் வெற்றி முரசும்
கருக்கோடி கோடியுற் றுழல்புறச் சமயக்
      கருத்தினர் குரைக்கு மொலியும்
காதுறா வண்ணமமிழ் தஞ்சொரிவ தேய்ப்பக்
      கறங்கவடி யார்க ளுள்ளத்
திருக்கோயின் மேவிவிளை யாடுமிள மதகளிறு
      சிறுபறை முழக்கி யருளே
தென்கோ விருந்தநக ருற்பலவி நாயகன்
      சிறுபறை முழக்கி யருளே. (2)

வேறு.

சழக்குப் படுசில பேய்கண் மடிந்தவர் சரிகுடர் வலைதாங்கித்
    தடவுந் தோற்பல கைத்தொகை யாவுந் தளைதரு தெப்பமெனப்
பழக்கித் திரையெறி குருதிச் செக்கர்ப் பாவைப் பூம்புனலுள்
    படர்ந்து நெடுந்தசை மூளைவ ழும்புகள் பற்றிவி ருந்தயர
உழக்கிக் கடல்படு படைகள னைத்து முடைந்துபி திர்ந்தலற
    ஒன்னலர் சென்னி யுருட்டிக் கயமுக னுரமிரு பிளவுசெய்து
முழக்குற் றிடுவிறன் மாமுர சாள முழக்குக சிறுபறையே
    முற்படு கலைசையி லுற்பல வேழ முழக்குக சிறுபறையே. (3)

குடங்கைகு வித்திமை யோர்தொழ நின்று குனிக்குந் தாதையிடம்
    குறுகியு ரத்தொளிர் பன்றிக் கோடுங் குளிர்சடை யிளமதியும்
உடங்குப றித்துக் குணிலிற் கைக்கொண் டுயர்துடி கொட்டியவன்
    உரித்தணி யும்பற் கோடுபி டுங்கிமு னந்தியி யத்தையெழீஇ
வடங்கிளர் கொங்கைத் துர்க்கைமி தித்திவர் மயிடத் துலவைபறீஇ
    மாலவ னின்னிய மோதியெ வர்க்கு மகிழ்ச்சி தரக்களியான்
முடங்கலு றாதெதி ராட்டயர் களிறு முழக்குக சிறுபறையே
    முற்படு கலைசையி லுற்பல வேழ முழக்குக சிறுபறையே. (4)

வேறு.

மலைவற முப்பொரு ளியல்புதெ ளித்தரு ளொருமுதலே
    மலையென முற்படு வினைகள றச்செயு மெமதுயிரே
அலையும னத்தையு நிலையினி றுத்திடு மருளுருவே
    அமிழ்தினி னித்துட லிடனுமு கிழ்த்தொளிர் சிவவிளைவே
உலைவறு கறபக மெனவருள் கொட்டிய மழகளிறே
    உலகம னைத்துநி னுடலில டக்கிய நிறைபொருளே
கலைசையி னுற்பல விறைவமு ழக்குக சிறுபறையே
    கடலொலி பிற்பட வினிதுமு ழக்குக சிறுபறையே. (5)

சிறுபறைப்பருவமுடிந்தது.
-----------------
சிறுதேர்ப்பருவம்.

செக்கர்க் குரூஉமணிச் சுடிகைப் பொறிபடச்
      சேடன்சு மந்தாற் றிடும்
திண்புடவி முழுதுங் கிளைத்தறுத் தப்புறஞ்
      சென்றுதன் பகைவாழ் விடம்
ஒக்கப் பெருந்துகள் படுத்திமோட் டாமையோ
      டுடையநிண முண்டு பல்லின்
ஒண்குடரி னுதிகவ்வி யீர்த்துரீஇச் சிவபிரா
      னுகளபதமன்று தேடப்
புக்குற்ற கேழல்பல் லூழிக ளிடந்தெய்த்த
      புலமெலா மொருக ணத்தில்
போந்துகீ ழண்டச் சுவர்த்தலை துளைத்துப்
      புறங்கோத்த நீர்சு வற்றித்
திக்கெட்டு முட்டியுல வாகுப் பரிப்பாக
      சிறுதே ருருட்டி யருளே
சிற்பரன் றென்கலைசை யுற்பலவி நாயகன்
      சிறுதே ருருட்டி யருளே. (1)

நிறந்துளை கொடும்படை திறந்தபுண் வழிதோறு
      நெருப்பெனக் குருதி பாய
நெடுங்கிரி யெனப்புரண் டார்த்துக் கடாக்கரியி
      னிரையெலா மெங்கு மின்னுப்
புறந்தர விடித்தெழுங் கார்முகிற் கூட்டம்
      பொரக்கிடந் தலற மள்ளர்
பொன்முடி கரங்கால்வழும்புகுடர் சோரிப்
      புனன்மேன் மிதப்ப முற்றும்
பறந்தலைப் புக்குநரி கொடிகழுகு வெம்பேய்
      பருந்தொடு விருந்து செய்யப்
பகைத்தகுவர் சேனைக் கடற்கிடைத் தோணியிற்
      பாயுங் கொடிஞ்சி கிடுகால்
சிறந்ததிண் டேர்பல வருட்டும் பகட்டண்ணல்
      சிறுதே ருருட்டி யருளே
சிற்பரன் றென்கலைசை யுற்பலவி நாயகன்
      சிறுதே ருருட்டி யருளே. (2)

விண்ணத் தியங்கும் பசும்புரவி யேழ்பூண்ட
      வில்லுமிழ் கொடிஞ்சி யந்தேர்
வீற்றிருந் தூருஞ் சுடர்ப்பரிதி வானவன்
      வியந்துனைக் காணுந் தொறும்
பண்ணப் பணைத்தநந் தேரினும் விசைத்தேகு
      பாழிமான் றேரு மிருளைப்
பருகிக்க திர்க்கற்றை காலுநம் மொளியின்மேம்
      பட்டபே ரொளியும் வாய்ப்பத்
தண்ணற்க ருங்கட லுடுக்கைத் தலத்துச்
      சரிக்குமொரு பரிதிப் பிரான்
தானாகு மென்றுள்ள மருளநின் றிருமேனி
      தண்பவள வொளிவீ சிடத்
திண்ணப் பொலஞ்சகட் டவிர்மணிக் கூவிரச்
      சிறுதே ருருட்டி யருளே
சிற்பரன் றென்கலைசை யுற்பலவி நாயகன்
      சிறுதே ருருட்டி யருளே. (3)

அலைக்குமயில் வேல்விழிக் கன்னிமைப் பருவத்
      தணங்கினர் முலைக்கு நிகராம்
அம்பொற் பொருப்பினைக் கோட்டினாற் கன்னிமை
      யழிந்தபரு வத்து மடவார்
முலைக்குநி கராகச் செய்யும்பிரம சாரியே
      மூதண்ட மூன்று மந்த
மூரிப் பொலஞ்சிகரி பேர்த்தெடுத் தங்கையான்
      முனியென்ன வாங்கி முற்றும்
தொலைக்குமடன் முப்புரிசை வென்றநாட் சிவபிரான்
      றுண்ணென் றுகைத்த திண்டேர்த்
தொன்னிலை யழித்தக் கிரிக்குவான் பூதரச்
      சொற்பெயரை நிலைபெ றுத்தும்
சிலைக்குநிக ரொற்றையங் கோட்டுத் தனிக்களிறு
      சிறுதே ருருட்டியருளே
சிற்பரன் றென்கலைசை யுற்பலவி நாயகன்
      சிறுதே ருருட்டி யருளே. (4)

பெருங்கருணை சூற்கொண் டிருந்தசிவ காமிப்
      பிராட்டியார் சிதம்ப ரேசப்
பெருமா னெனப்படுங் கீர்த்தியிரு முதுகுரவர்
      பேணியுனை யேக காலத்
தொருங்குமார் பத்துற வெடுத்தணைத் தொண்முத்த
      முண்டுச்சி மோந்து கொள்ள
உன்னுதோ றிருவர்களு மொற்றித்த வடிவுகொண்
      டுறைபயன் பெற்று மகிழ
வருங்கரட மாமதச் சிந்துரக் களபமே
      மதிமுடிச் சடில மோலி
மாசுணப் பேரனியி னைங்கைக்கு றுத்தாண்
      மதிவகிர்ந் தனைய வொற்றைச்
சிருங்கனே சச்சிதா னந்தபர போகமே
      சிறுதே ருருட்டி யருளே
சிற்பரன் றென்கலைசை யுற்பலவி நாயகன்
      சிறுதே ருருட்டி யருளே. (5)

வண்டின் முழக்கமுகை விண்டலர் பசுந்துழாய்
      மாலையம் படலை மார்பின்
மாயோன் கிடக்கையை யுடுக்கையென் றாண்டமட
      மங்கைக்கு மகுட மான
தொண்டைமண் டலம்வாழ மகுடம்ப தித்தபொற்
      சுடர்மணி நிகர்த்த தொல்சீர்த்
தொட்டிக்க லைப்பதி தழைக்கவப் பதிமருவு
      தூயசிவ பத்தர் வாழக்
கண்டிகையும் வெண்ணீறு மஞ்செழுத் தும்பொலிவு
      காட்டவை திகமார்க் கமும்
கரிசற்ற சைவமும் வளர்ந்தோங்க வாங்குங்
      கடற்புவி மகிழ்ச்சி தூங்கத்
திண்டிமந் தாக்குங் குறட்கணஞ் சூழநீ
      சிறுதே ருருட்டி யருளே
சிற்பரன் றென்கலைசை யுற்பலவி நாயகன்
      சிறுதே ருருட்டி யருளே. (6)

சிறுதேர்ப்பருவமுடிந்தது.
---
பருவம் பத்துக்குச் செய்யுள் (53)
---X---
கலைசைப்பிள்ளைத்தமிழ் முடிந்தது.
---X---
மெய்கண்டதேவர் திருவடிவாழ்க.
சிவஞானயோகிகள் திருவடிவாழ்க.
---------------------------------

6. குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்.


ஆசிரியர் கருத்து.

மனம்வாக்கி லெட்டாத சிற்சத்தி யாயிடினு
          மன்பதைக ளுய்ய வேண்டி
    மலையரையன் முதலோ ரிடத்தவ தரித்தொரு
          மடப்பிள்ளை யாய்வ ருதலால்
இனநாட்டி வாழ்த்திடுவர் பெரியோர்கள் வாழ்த்தற்
          கெடுத்தவித் தார கவிதாம்
    எண்ணிடிற் பலவா மவற்றிற்கு முதலாக
          வேன்றபெண் பிள்ளைக் கவி
முனிவோட்டு காப்புநற் கீரைதால் சப்பாணி
      முத்தம்வா ரானை மற்று
    மொழியுமம் புலிப்பருவ மம்மானை நீரூசன்
          முறையினை யிருப ருவமும்
நனிவாய்த்த வகவலின் விருத்தத்தி னாற்பாடி
         நவிலுமுத் திங்கண் முதலா
    நயந்தமூ வெழுதிங்க ளளவினிற் கேட்பிக்கு
          நன்மைய தெனப் புகல்வரே.

அவையடக்கம்.

இளம்பருவ விளையாட்டை நோக்குழித் திருவுரு
          விடத் தாசை மிகுதி யுண்டா
    மென்பதால் வித்தார கவிக்கெலா முன்னுற
          வியன்றபிள் ளைக்க வியிதைக்
குளந்தையிற் சோமேசர் மார்பினைக் கொங்கையாற்
          குழைவித்த வமுத வல்லி
    கோமளப் பருவத்தி லருகொன்று தாதியர்சொல்
          கூற்றெனப் புகழ்த லுற்றேன்
வளம்பெருகு மிமையவரு மேத்தொணாப் பெருமாட்டி
          மகிமையென் புன்மொ ழிகளால்
    வாழ்த்தரிய தாமெனினு மாங்கவள் கிரிக்கிறைவன்
         மகளாகி யதுவு மல்லால்
உளங்கொடியர் வாழ்வலைச் சேரியினு மவதரித்
         தொளிர்பாசி சங்கு பூட்டி
    உண்மகிழ்ந் தருளுதலி னென்மொழிக் கும்பெரி
          துவந்தருள் சுரக்கு மெனவே.
---

விநாயகக்கடவுள் வணக்கம்.

மணிகொண்ட கோடொரு மருங்குண்மை
      யாற்பெண்மை வடிவென்று மஃதின் மையோர்-
மருங்குண்மை யாலாண்மை வடிவென்று
      மீதுகீழ் மாறிய திருக்காட்சியால்,
அணிகொண்டவுயர்திணையதென்றுமஃ
      றிணையென்றும் யார்க்குங் கிளக்க வரிதாம்-
ஐங்கரச் சிந்துரத் தின்கழற் செஞ்சரண
      மஞ்சலித் துத்து திப்பாம்,
பணிகொண்ட துத்திப் படத்திற் கிளைத்தவிர்
      பரூஉமணி விளக்கி னொருபாற்-
      பாயிருட் படலஞ் செறிந்தொளிர்வ தென்னவப்
      பாம்பணை கிடக்குமொருவன்,
திணிகொண்ட மல்லற் புயக்குவடு விம்மத்
      திளைக்குமகள் வாணி பிரியாத்-
தென்குளந் தாபுரி யிருந்தவமு தாம்பிகை
      செழுந்தமிழ்க் கவித ழையவே.

காப்புப்பருவம்.

திருமால்.

சீர்கொண்ட கஞ்சக் கிழத்திதன் காந்தனைச்
      சிறைசெய்த வாறறிந்தாற்-
செயிர்த்துநந் திருமனைவி மகன்மருகி தமையெலாஞ்
      சிறைசெய்யு மென்ற றிந்தும்,
ஏர்கொண்ட மைத்துனக் கேண்மையா லர்ச்சுனற்
      கிறுதிநாள் பயவா மையே-
எண்ணிமுன் பரிதியைப் பரிதியாற்
      றடைசெய்த வேந்தற்பிரான்புரக்க,
பேர்கொண்ட மேனிலச்சோபான மிசையேறு
      பேதைமார் முகனோக் கிநம் -
      பேரரசு கொள்ளவரு மதிபோலு மிதுவெனாப்
      பெரிதுமேக் குற்ற வர்கடங்,
கார்கொண்ட பின்னற் கரும்பாந்தள் கண்டுளங்
      கவலாது களிகூர்ந் துதண்-
      கலைமதியம் வைகுபொழில் சூழ்குளத் தூர்வருங்
      கடவுட் பிராட்டி தனையே. (1)

சிவபெருமான்.

வேறு.

அளிசு ரந்தமரர் பசிகெ டும்படியி னமிழ்து தந்தகதிர் கொள்சடைக் காட்டிடை-
      அழல்வி டஞ்சொரியு மரவி னம்பசிய வறுகுவெண்டலைகள் பல்குறச் சூட்டியும்,
அரிய யன்பரச வவரி டும்பைசெறு மல்ர்செ ழுங்கமலம் வெல்கரத் தோட்டிடை-
      அணைவு றும்பொருள்கள் கருக வெம்புசுட ரவிரு மங்கியினை வெய்தெனக் காட்டியும்,

இளிவ ரும்பொன்மலை வளையு முன்பவுண ரெயிலொ ருங்கவிய வெள்ளுபொற் றோட்கிடை-
      இடுவ னங்களினி லுயிர்ம டிந்தவர்த மிகழு மென்பினையு மைதெனப் பூட்டியும்,
எழுத ருஞ்சொன்மறைமுடிவு மன்பர்தம திதய மும்பரவ நல்குமெய்த் தாட்டுணை-
      எமதுபுன்றலையு முறந யந்துமரு ளியப ரம்பரனை யுள்ளுறச் சேர்த்துதும்,

தளிர்து வன்றியிருள் படநி ழன்று குளிர் தழுவி வண்டுதுதை செய்துணர்ப் பூத்திரள்-
      ததைவு கொண்டு நறு மணம ளைந்துமகி தலம சும்புபட வெள்ளமட் டூற்றெழு-
தரவ ளர்ந்துமுகி லகடு டைந்தழகு தபவு தைந்துதிசை யெல்லையைக் காத்திடு-
      தறுக ணெண்கரியை முடுகு றுங்கருவி தகுமி தென்றெவரும் விள்ளமொய்த் தார்த்தவிர்,

ஒளியு மிழ்ந்துலவு பரிதி மண்டலமு முடுப மண்டலமு நில்லெனத் தாழ்த்திவிண்-
      ணுலகு சென்றுசுரர் தருவொ டும்பழகி யுறவு கொண்டுமகிழ் பல்வளக் காக்களின் -
      உறைப சுங்கிளிகள் சுருதி சந்தையுடனுரைசெய் கின்றதனை மல்குபுத் தேட்குலம்-
      ஒளியி ருந்துகவர் பதிகு ளந்தைவரு முரைவி ளங்கமுத வல்லியைக் காக்கவே. (2)

விநாயகக்கடவுள்.

வேறு.

ஒற்றைச் சுதைத்தனுக் கோட்டியெங்
      கணுமின்னி யோவாதுமும்மாரிபெய்-
தொண்பூ தலத்துலவு செங்கொண்டல்
      போலுமென் றுன்னியச் சுற்றியாமிதற்,
கெற்றைக்கு மூர்தியா யுற்றிடக் கடவமென்
      றிருண்மேக மருகுவந்தாங்-
      கிலகுகரு மூடிகத் தாதிப் பிரான்சரண
      மேத்தெடுப் பாமெம்பிரான்,
கற்றைப் பிறைக்கொழுந்தொளிர்சடில
      வட்டமேற் கணமணிப் படம்விரித்துக்-
கண்வளருமகிநீர்மை தலையுவா ஞான்றுசெங்
      கதிர்க்கிர கணங்கடுக்கும்,
பெற்றித் திறந்தெரிந் தானந்த வெள்ளப்
      பெருங்கடல் குடைந்தாடுறூஉம்-
பெண்ணணங் கரசியைத் தென்குளத் தூரெம்
      பிராட்டியைக் காக்கவென்றே. (3)

முருகக்கடவுள்.

மாங்குயி றுரந்துசுவை யூற்றெழ
      மிழற்றுமொழி வானமீன்மாதரறுவர் -
      மருமத் தெழுந்தபொன் வள்ளத்தி
      னமிழ்துண்டு மருவிவாழ் தற்குரியதன்,
தேங்கமல வீட்டினைத் தனதெனக் கொண்டுவாழ்
      திசைமுகனை வெய்துயிர்த்துச் -
      சிரநான்கு மோதப் புடைத்துப் பிணித்துவன்
      சிறையிட்ட தேவை நினைவாம்,
ஒங்கலொரு வில்லாவளைத்தெயி னகைத்தனலை
      யூட்டியருள் சோமேசனார் -
      ஒருமூ விழிக்கிடைந் தஞ்சிச் சரண்புகுந்
      தோலமிடு புண்டரீகம்,
பூங்குவளை மாரனுக் கருள்செய்து முகமெனப்
      போர்கொண்ட வாள்விழியெனப் -
      பொய்த்தநுண் ணிடையெனத் தாங்குங் குளந்தா
      புரிக்குளமுதைக்காக்கவே. (4)

பிரமதேவர்.

தவளக் குரூஉமணி குயிற்றியொளிர் தபனியத்
      தனதுமனைவாயினிறுவுந் -
      தண்ணிய விதழ்க்கத வடைத்துத் திறக்குந்
      தனித்தொழிலை வண்டு முரலும்,
பவளச் சரோருகத் தன்னைதன் னோடுற்
      பவித்தபுல வற்கு மந்தப் -
      பண்ணவற் கெதிரான புலவற்கு மாகப்
      பணித்தவிறை வன்புரக்க,
கவளக் கடாங்கவிழ் கவுட்டுணை நெடுங்கைக்
      களிற்றுப் பிடர்த்தலைவருங் -
      கண்ணா யிரங்கொண்ட விண்ணாடர் கோமகன்
      கற்பகச் சோலை விடபந்,
துவளக் குடங்கைத் தலத்தினிற் கோட்டித்
      துணைத்தமுலை மாதர் மலர்கொய் -
      தூமணித் தெற்றிக ணெருங்கிய குளந்தைவரு
      சுந்தரப் பெண்ண முதையே. (5)

தேவேந்திரன்.
வேறு.

அதிருந் தரங்கக் குண்டகழி யளறு படப்புக் குழக்கிமுழக் -
      கசனிக் கிகலிக் கலித்துமதத் தடுக்க லெடுத்துத் தெறித்துவெகுண்,
டெதிருங் குழுஉக்கொள் படைகவல வீடறுங் கறைத்தாட் பரூஉத்தடக்கை -
      இறைக்குங் கடவெண் களிற்றியானை யெருத்தத் திவரும் புருகூதன்,
முதிருஞ் சுவைத்தெள் ளமிழ்தொழுகு முழுவெண்ணிறத்து மதிக்குழவி -
      முருகு விரியுங் கதவுணதி முழுகித் திளைக்குஞ் சடைப்பெருமான்,
கதிரும் விழிக ளிருள்சீப்பக் கங்குற் பொழுதி னொருங்கிருந்துங் -
      கலவிக் குறிப்பிற் குளநாணுங் கமலா கரியைப் புரக்கவே. (6)

இலக்குமி.

கடிப்போ தலர்த்திக் கருஞ்சுரும்பர் களித்துத் துயில்கூர் கற்பகப்பூங் -
      கானம் பயிலுங் காமர்நகர்க் கவலை துரந்தின் னமிழ்தளித்துப்,
படிப்பாற் பயிலு மகளிடத்துற் பவித்துப் புவன மூன்றனையும்-
      பரிக்குந் திகிரிப் படைப்பாணிப் பகவன் மருமத் துறைமடந்தை,
விடப்பாம் பிரவி வெம்மைமிசை மேவா வண்ணங் குடைகவிப்ப-
      விரிக்குங் கதிர்ச்செம் பவளநிற வேணி யணையாப் புனிற்றுமதி,
முடிப்பா லரசு வீற்றிருக்கு முதல்வ னிடப்பா லிருந்துலக-
      முழுது முயிர்த்த குளந்தைநகர் மொய்பூங் குழலைப் புரக்கவே. (7)


சரசுவதி.

வேறு.

அளிக்கா தரவுற்றுச் சுவைத்தகள்-
      அளித்தார் வனசத்துப்பொகுட்டயன்,
உளத்தா மரைநச்சத் திளைத்தவன் -
      உரைப்பா லருள்பெற்றுத் தரித்தவள்,
களத்தால் மடக்கிச் சுரர்க்கிடர்-
      களைத்தேய வொறுத்துக் கடைக்கணி,
குளத்தூர் நயனத்தற் கிடத்தமர் -
      குளத்தூரமுதத்தைப் புரக்கவே. (8)

காளி.

வேறு.

துளிக்கும் பசுந்தே னுவட்டெடுத்துச் சொரியுஞ் செழுந்தாமரைப்பொகுட்டுத் -
      தோன்றற் பெருமான் முதற்கடவுட் டொகுதிப்பைங்கூழ் களைக்கருக்கிக்,
களிக்கு மகிடா சுரக்களையைக் களைந்து சிரமேற் பாசடையிற் -
      கமல மெனத்தாள் பதித்திவர்ந்த கன்னியெனுந்தெய் வதங்காக்க,
பளிக்கு மணிமா டங்கடொறும் பதிந்ததமது சாயலினைப் -
      பாரா வினமென் றிளஞ்சேய்கள் பரிந்து பரிந்து வருகவென,
விளிக்குங் குளந்தைத் திருநகரின் வெளிய மதியந் தவழுமுடி -
      விளங்குங் கதிர்ச்செம் பவளமலை மீது படர்பைங்கொடியினையே. (9)

சத்தமாதர்.

வேறு.

இலகொளி யுமிழ்தரு சிறையோ திமத்தவள் -
எழிலுறுதவளவல்விடையூர் திறத்தவள் -
எறுழ்வலி மயில்கட வினள்வே றிரிப்பவள் -
இருசிறை யொருகலு ழனையேறி நிற்பவள்,

உலகதிர் தரவரு மரியே றுகைப்பவள் -
உமிழ்கட மழைபொழி யயிரா வதத்தவள் -
உழிதரு குழிவிழி யுடல்பேய் நடத்துநள் -
உவரெழு மகளிர்த மொளிர்தாள் பழிச்சுதும்,

அலகைகணடமிடு மழலார் களத்தினில் -
அமரர்க டபமுடல் கழிபா னிறக்கலன் -
அரவொடு திணிவரை நிகர்தோ ளிடைப்பொலி -
அணியென வணிதரு பெருமா னிடத்தமர்,

நிலவிரி நகையவ ளிருமூ வகைப்படு -
நெறிகளு நிறுவிய வொருமா தவக்கொடி-
நிலமிசை யுயரிய கமலாக ரத்துறை-
நிருமலிமலைமக டனையே புரக்கவே. (10)

முப்பத்துமுக்கோடி தேவர்.

வேறு.

சிறகரளி மொய்த்திகழ் கொழுதுமது வைப்பசி
      சிதையமடுத்துக் களித்தாடு தேமலர்-
செருகுமள கக்கன மதர்நெடு விழிக்கடல்
      சிறிது குடித்துக் கறுத்தார மேவிய-
திணிமுலை மலைச்சொரி திதலைநிதி யத்திரள்
      செழுவிய பொற்புக் கடற்பாய வாரெழில்-
செறிதருமடித்திரை யிடையற லொழுக்கிய
      திறமைநிகர்த்தொத் தொழுக்கா முரோமமுங்,
குறைவற வளித்தருள் குவலய மடக்கொடி
      குளிர்கெட நச்சிக் கறைப்போர்வை யாலுடல்-
கொழுவிய தெனத்திசை முழுவது மடக்கிய
      குமரி யிருட்டைப் படச்சாடு மாதவர்-
குலவுகிர ணச்சுவை யுணவினை யுணத்தனி
      குறுகிய பொற்சக்கரச்சேவல் போலொளிர்-
குருமணி குயிற்றிய புயமலை குழைக்கெதிர்
      குயமுடி யைச்சற் றெடுத்தேறு பார்வையும்,
வெறிகமழுமுற்பல நறுமலர் மறைப்பினில்
      விழைத னலத்தைப் படித்தேக நீள்செவி-
வியனில மிறுத்தமை யெணிமற மிகுத்தவை
      வெருவிவிழற்செற் றுகைத்தோடி நீடிய-
விரிமலர் தனக்கொரு மறைவிடமெனப்படும்
      விதியே னெனப்புக்கு விற்காதி னோடமர்-
வினையிலி கரத்துழை சடைவன முறற்கெழ
      விரைவில் விளைத்துக்குதித்தாடு பார்வையும்,
இறைமையு மளப்பறு மழகொளிர நிற்பவளிமய
      மலைக்கட் கொடிப்போல மேவிய-
இனியமட மைக்குயின் மரகத மயிற்பெடை
      யிரையுமி ருக்குக் குளத்தூரி னாடியென்-
னிருமைவினை முற்றற வெனையுமடி மைக்கொளு
      மெழிலமிழ் தச்சத்திவைப்பான காவலர்-
எரிகதி ருருத்திரர் விறல்வசு மருத்துவ
      ரெனுமிவர் முப்பத்து முக்கோடி தேவரே. (11)

காப்புப்பருவ முடிந்தது.

செங்கீரைப்பருவம்.

பொருவரிய வண்டப் பரப்பைமுழு
      தாளும் புராதனர் முகத்து விழியாப்-
போந்துலவு நங்கொழுநர் தம்மைத்
      தடுத்திடர் புரிந்தகைக் கமல நமையும்,
பருவர லுறுத்துமென் றஞ்சிமென்
      குமுதமும் பங்கயமு மொன்றை யொன்று-
பாதுகாப் பத்துயிலு மென்றர மடந்தையர்
      பரிந்துகொண் டாடு சீர்த்தி,
இருகைமல ரும்புவி பதித்தொரு
      முழந்தா ளிருத்தியொரு தாண்மேனிமிர்த்-
திந்த்ரதிரு விற்கிடை தொடுத்தவெண்
      டரளநிரை யேய்ப்பநுதல் வேர்பொடிப்பத்,
திருமுக நிமிர்த்தொரு குளந்தையமு
      தாம்பிகை செங்கீரையாடி யருளே-
சிற்சபையி னெற்றிவிழி யற்புதனை
      யாட்டுமயில் செங்கீரையாடி யருளே. (1)


பொங்கரி பரந்தசிறை வண்டினம் விருந்துணப்
      பூங்கமல நாண்மு கையெலாம்-
      போதாக வெழுபரித் தேர்கடாய்க்
      கடன்முகடு பூப்பவரு பரிதிப் பிரான்,
சங்கின முயிர்த்தவெண் டரளவட மணியுமித்தாமரை
      முகிழ்த்து ணையும்யான்-
      றண்டாத மெல்லிதழ் முறுக்குடைத்
      தல்லாது தணவலென் றருகு போந்து,
வெங்கதிர்க் கற்றைகள் பரப்பியுல வுதலேய்ப்ப
      மின்னும கரக்கு ழைகதிர்-
      வீங்கிள முலைத்தலை யுமிழ்ந்துதண்
      புயமீது விளையாடி நிற்ப வதனத்,
திங்கண்மிசையாடக் குளந்தையமு
      தாம்பிகை செங்கீரை யாடி யருளே-
      சிற்சபையி னெற்றிவிழி யற்புதனை
      யாட்டுமயில் செங்கீரை யாடி யருளே. (2)

கார்பூத்த மறுவுண்ட வெண்கதிர்க் கலைமதி கவின்றநின் கமல வதனங்-
      காண்டோறு மறுவற்ற மதியீ தெனாவுட் கவன்றுமுன் னிற்கவஞ்சிப்,
பார்பூத்த தென்குளத் தூர்ப்பொங்கர் காவணம் பரியமதினூழை யூடு-
      பையென நுழைந்தொளித் தோடநிற் பணியவரு பங்கயச் செல்வி முதலோர்,
ஏர்பூத்த வங்கையர விந்தமலர் கூம்பவவரிணைவிழிக் குவளை யெல்லாம்-
      இரும்புனற் றேத்துளி பொடித்துமிழ்ந் தலரவரு ளெனுமமிழ்த தாரை கான்று,
சீர்பூத்த முகமதிய மாடவமு தாம்பிகை செங்கீரை யாடி யருளே-
      சிற்சபையி னெற்றிவிழியற்புதனை யாட்டுமயில் செங்கீரை யாடி யருளே. (3)

மணிதுற்ற தவிசெனப் பருமணிப் பருமம் வயங்குமடி மீதிருத்தி-
      மதிக்கடவு டன்மனை யெனக்குலாய்த் தன்னமிழ்தம் வாக்குவ தெனத்தீம் பயம்,
பணிலத்தின் வாய்க்குமுத மூட்டிமற் றிதுமாச பரியாது சாலாதெனப்-
      பாரிழைத் தொருபொட்டு நுதன்மதிக் கிட்டுப் பசுங்கழையின் மஞ்ஞை நின்றாங்,
கணிபெற்ற புயமே லணைத்திரு மதித்தேவ ரவளாய்க் குழீஇய தேய்ப்ப-
      அழகிய முகத்துமுத் தாடியெழின் மேனைசீ ராட்டமகிழ் கூர்ந்து கொடியேம்,
திணிவைத்த நெஞ்சங் கரைக்குமமு தாம்பிகை செங்கீரை யாடி யருளே-
      சிற்சபையி னெற்றிவிழி யற்புதனை யாட்டுமயில் செங்கீரையாடி யருளே. (4)

முக்கனி செறித்தநறு நீர்ப்பந்தர் முல்லைவெண் முலகயனைய மூர லறுகான் -
மூசிய விளம்பொங்கர் தேசுறு மலர்ப்பொய்கை முதலான வறம்யா வையும்,
தொக்கமறை யாகம விதிப்படி யியற்றுநாட்டோலாத கருணை கூர்ந்து -
துண்ணென வெழுந்தரு டிருச்சோம நாதனார் தூமேனி குழைவித் தவை,
இக்கரமு மிக்கரமு மித்தனமு மித்தனமு மென்றுயிர்த் தோழியர் களாய் -
ஏத்துமட மாதரார் தம்மைத் தெளித்திடுவ தேய்ப்பமுக மதிய மசையத்,
திக்கெட்டு மேத்துங் குளந்தையமு தாம்பிகை செங்கீரை யாடி யருளே,
சிற்சபையி னெற்றிவிழி யற்புதனை யாட்டுமயில் செங்கீரை யாடி யருளே, (5)

வேறு

பொங்கெழி னின்முக மாடுதொ றுங்கமழ் போதரி நீள்விழிகள்
      பொற்செவி யிற்பல காலுமெ திர்ந்து புகுந்து மறிந்துலவச்
செங்கதிர் நீள்குழை தம்மொடு தாமெதிர் சென்று மணிக்கலொடுஞ்
      செயிரறு பொன்னி னரும்பு பிதிர்ந்து தெறித்திட மோதுதிறந்
தங்கிளை சார்ந்திடை யாவகை சாற்றமொய் தாம வயிற்படையாற்
      றண்குரு தித்துளி வீழ்தர வீரர்க டம்மொடு தாமெதிரா
அங்கை கலந்தம ராடுத லாமென வாடுக செங்கீரை
      அளந்தறி யாதகு ளந்தைநி லாவமு தாடுக செங்கீரை. ((6)

பல்லுயி ருங்களி கூர்கரு ணைக்கடல் பம்பிவ ளைந்ததெனப்
      பாலொளி கான்ற நறும்புனல் சூழ்ந்து பரந்தொளிர் கம்பையிடை
வில்லுமிழ் மின்னுரு வச்சுடர் வேணிவின் ணோனைவ டந்தழுவி
      வீங்கிள மெம்முலை மார்புழ வங்கையின் மேதகு தோள்குழையப்
புல்லிய ணைப்பது போல்வயி ரங்கள் பொதிந்தவிர் தொட்டிலினும்
      பொன்னணி பாவையொ டாடிய ணைத்துப் பொழுதுக ழித்தருளும்
அல்லிம லர்க்குழல் வல்லிப ராபரை யாடுக செங்கீரை
      அளந்தறி யாதகு ளந்தைநி லாவமு தாடுக செங்கீரை. (7)

குலத்தில் வளர்த்திடு மன்னையர் செந்துகில் கூர்மடி மீதிமயக்
      குன்றி னரக்கலர் வாழ்க்கை யெனக்களி கொண்டு குலாவியவர்
கலைப்பொலி முகமதி யுங்குழன் முகிலுங் கண்டென வாய்க்குமுதங்
      கதிர்த்த நகைத்தள வலர வரும்பக் கைக்கம லங்குவியா
முலைக்கம லச்செழு முகையொடு நட்பு முயங்கிட வாடலுறும்
      மூரிவ ள்த்துத ரத்திரு வாலெழின் மொய்த்து மிகத்தழைய
அலக்க ணறச்சுவை யாரமிழ் துண்பவ ளாடுக செங்கீரை
      அளந்தறி யாதகு ளந்தைநி லாவமு தாடுக செங்கீரை. (8)

வேறு.

வானமெ ழுங்கரு மேகவி னங்கள்வ றந்தீ ரம்போய்வன்
      மால்வரை யெங்கணு மோடிட வென்றிமிர் வண்டூ தும்போது
நானமு யங்கிய வாசந றுங்குழ னந்தா வந்தீப
      நாவிலெ ழுந்தொளிர் தூமவொ ழுங்கென நன்றார் மென்சாயன்
மேனிநி றந்தரு மேனைய ணங்குவி ழைந்தார் வங்கூர
      மீறிவ ளர்ந்தழ கானகு ளந்தைவி ளங்கா நின்றூறு
தேனிறை கொன்றையி னானிட நின்றவள் செங்கோ செங்கீரை
தேவர்தொ ழுங்கலி யாண சௌந்தரி செங்கோ செங்கீரை. (9)

கோலநெ டும்பனி மாலிம யம்பயில் கொம்பே செம்பாத
      கோகன தந்தொழு வாருள நின்றகொ ழுந்தே பைந்தேனே
ஞாலம ளந்தவ னாடும ரும்பெற னங்காய் வெங்கோப
      நாமவி டஞ்செறி காமரு கண்டர்த நண்பே தண்போதோ
டேலம ளைந்திருள் கூருந றுங்குழ லெந்தா யெம்பாசம்
      ஈறுப டும்படி ஞானம ணங்கம ழின்பே யன்பாளர்
சீலமி குங்கும லாகரம் வந்தவள் செங்கோ செங்கீரை
      தேவர்தொ ழுங்கலி யாண சௌந்தரி செங்கோ செங்கீரை. (10)

செங்கீரைப்பருவ முடிந்தது.
-------

தாலப்பருவம்.

மதுரங் கொழிக்குங் கொழுந்தேறன் மடுத்துச் சுரும்ப ரடைகிடக்கு -
      மலர்ப்பூந் தடத்தைக் காண்டலுஞ் செம் மணிகால் குடுமிப்பணியுலகம்,
இதுவு மரவந் தனக்கிடமா யிருக்குங் கொல்லா மென்றழுக்கா -
      றெய்தித் தன்கீழ்ப் படத்தாழ்த்து மியல்பை யறிந்தா லெனக்கரைக்கட்,
பொதுளி யுறவு கொண்டநறும் பொதும்பர் நாக ருலகெனுமொப் -
      புமையாற் புலவோர் பதிதாழ்த்திப் பொற்றா துதிர்க்குந் திருக்குளந்தைப்,
பதியின் மகிழு நறியசுவைப் பாகே தாலோதாலேலோ -
      பணில முயிர்த்த தரளநகைப் பாவாய் தாலோ தாலேலோ. (1)

இருள்கால் சீத்துச் சோதிவெயி லெறிக்குஞ் செக்கர் மணித்தொகையின் -
      இழைக்கும் பசும்பொற் றலத்துயர்த்த விருங்கே தனத்தின் மிசையுயிர்கட்,
கருள்கால் கலைவெண் முழுமதிய மமரும் பரிசுதழனாப்பண் -
      அமைத்த தூணத் தருந்தவஞ்செய் யறவோர்கடுக்கு மேனிலத்துச்,
சுருள்கான் மலர்ப்பூங் கூந்தலிளந் தோகை யனையார்க்கெதிர்நடிக்குஞ்-
      சுரமா மகளிர் விழித்தொழிற்குத் தோற்றுச் சமழ்க்குந் திருக்குளந்தைப்,
பருகா வமிழ்தே பெருங்கருணைப் பரையே தாலோ தாலேலோ-
      பணில முயிர்த்த தரளநகைப் பாவாய் தாலோ தாலேலோ. (2)

மணங்கேழ் வனச மூற்றெடுத்து மதுவார் பொருட்டுச் சுறாச்சுமந்து-
      வயிறு வருந்திக் கருவுயிர்க்க வயின்பார்த் துழலும் பெடைஞெண்டைக்,
கணங்கே ழயின்முட் டாட்படுத்துக் கவைத்தாளிடையற் றலையூடு-
      கருவண் டினங்கள் புடைசூழக் கலந்து முரலத் துவக்குண்டு,
சுணங்கேர் முலைப்பெண் ணணங்குநினைச் சுமந்து மகளிர் தாலெடுப்பத்-
      துயலு மணித்தொட் டிலைக்காட்டுந் தொடுநீர் வாவித் திருக்குளந்தைப்,
பணங்கே ழரவப் பேரல்குற் பரையே தாலோ தாலேலோ-பணில,
      முயிர்த்த தரளநகைப் பாவாய் தாலோ தாலேலோ. (3)

கந்தங் கமழு நறுங்களபக் கலவை யளைந்த முலைக்குவடாங்-
      கரடக் களிற்றின் மருப்பினிடைக் கவின்ற வுரோமப் புழைக்கரத்தால்,
நொந்தங் கலமந் திறுங்கொடிபோ னுணுகித் துவளுஞ் சிற்றிடையார்-
      நுவலுங் கிளவிக் கிடைந்தகுயி னுவலா தடங்கி யவ்விசையின்,
சந்தம் பலநா ளகம்பயிலத் தழுவிச் சிலநாள் வாய்விண்டு-
      சாற்றியொப்பு நோக்கியொவ்வாத் தவறாற் பின்பும் வாயடைக்கும்,
பைந்தண் பொழில்சூழ் குளந்தைநகர்ப் பரையே தாலோ தாலேலோ-
      பணில முயிர்ய்த்த தரளநகைப் பரவாய் தாலோ தாலேலோ. (4)

சுரும்பர் துளைக்க வுவட்டெடுத்துச் சொரியு மிரதச் செழுங்கரும்பைச்-
      சுவைத்துக் கதலிக் குலைசாடித் தூங்குந் தெங்கம் பழஞ்சிதறி,
விரிந்த பசுநெட்டிலைக்கமுகின் மேவிக் ககனத் தருவையதன்-
      மீதுபடர்பூங் கொடிவழிபோய் மிதித்துக் குனித்து விளையாடி,
வரிந்த கழையி னெடுங்கயிற்று வழிபோய் நடிக்கும் பொருநர்திற-
      மானக்குரக்குக் குலங்குதிக்கும் வளஞ்சேர் பொதும்பர் சூழ்குளத்தூர்,
பரிந்து தொழுவோர் மனத்துநறும் பாகே தாலோ தாலேலோ-
      பணிலமுயிர்த்த தரளநகைப் பாவாய் தாலோ தாலேலோ. (5)

வேறு.

சுலவித் தரளப் பவளக் குவைகள் சுருட்டிக் கரைபுரளுந்துவலைத்
      திரைமைக் கடனின் றெழுமிரு சுடர்கண்மு னச்சுடர்தஞ்
சிலையிற் கவினக் குயிலு முருப்புன றீயைப் புடைபெருகச்
      சிந்திப் பனிகூர் பொழுதிற் புனலிற் சேர்ந்தற மாற்றுநரை
உலறத்தெறுவெப்புடைவேனிற்பொழுதொள்ளெரிவாய்த்தவநோன்
      புழப்பவரைப்பொரு நொச்சிமதிற்குல மோங்கு குளந்தையெனுந்
தலனிற் பொலிவு பெறகப்பயி லுங்கொடி தாலோ தாலேலோ
      தகரக் குழலா யமுதப் பிடியே தாலோ தாலேலோ. (6)

கொங்கு விரிந்த நறுங்க மலங்கள் கொழிக்கு மதுப்புனலாக்
      குவிதர வூழ்த்துதிர் தண்ணிய தாது குலிக்கு மெருக்குவையாப்
பங்கநிரந்த வயற்கண் விளைந்து பழூத்தெழு நெற்குலைபோய்ப்
      பசும்புர வித்திரள் பூட்டிய தேரிற் பரிதிக் கடவள்புடைப்
பொங்கொளி வெண்க வரித்தொகை வீசுவ போல வொசிந்தசையும்
      பொற்பு மிகுங்கம லாகரமேவிய பூரணி மெய்யடியார்
தங்கள் பணிக்கென வெம்மை யளித்தவ டாலோ தாலேலோ
      தகர குழலா யமுதப் பிடியே தாலோ தாலேலோ. (7)

பவளக் கொடிபடர் வேலைமுகட்டிற் பாயொளி கான்றெழுசெம்
      பரிதி நிகர்ப்பச் செம்மணிமாலை பரப்பிய மைக்குழன்மேற்
றிவளக் கதிர்விடு கொண்டை திருத்திச் செஞ்சுடர் வாண்மகரத்
      திருவணி யக்கடன் மகர மெனத்தனி செருகிப் பகைஞருளந்
துவளச் சிலைபடு கணையென நுதலிற் சுட்டி தரித்தருகிற்
      சுடர்பிர தாப மெனப்பொட் டெழுதித் துன்னிய கீர்த்தியெனத்
தவளப் பணிமூக் கிட்டொளிர் பாவாய் தாலோ தாலேலோ
      தகரக் குழலா யமுதப் பிடியே தாலோ தாலேலோ. (8)
      வேறு,
பரந்த வெண்புணரி மீதோன் வேதா மாதேவர்
      பணிந்து தொண்டுசெய வேலே சேலே போலாடுங்
கருங்க ணுந்துமளி யீவாய் பாவாய் தாவாது
      கறங்கு வண்டளக மானேதேனே யேனோர்தம்
புரங்க டந்தநகை வாயார் தூயார் சேயார்பாற்
      புணர்ந்தி டும்பசிய தோகாய் நீகா வாய்காவென்
றிரங்கு மன்பரக வாழ்வே தாலோ தாலேலோ
      இலங்கு ளந்தைவரு தாளாய் தாலோ தாலேலோ. (9)

மலங்க டங்குமரு ளூராய் தாலோ தாலேலோ
      மலங்க டங்குமரு ளூராய் தாலோ தாலேலோ
கலங்க லந்தவரை யேயாய் தாலோ தாலேலோ
      கலங்க லந்தவரை யேயாய் தாலோ தாலேலோ
புலங்க டந்தபர நாடாய் தாலோ தாலேலோ
      புலங்க டந்தபர நாடாய் தாலோ தாலேலோ
இலங்கு ளந்தைவரு தாளாய் தாலோ தாலேலோ
      இலங்கு ளந்தைவரு தாளாய் தாலோ தாலேலோ. (10)

தாலப்பருவ முடிந்தது.
------------

சப்பாணிப்பருவம்

உருப்பொலி மணிப்புன லுடுக்கைப் புவிக்கொடி யுரத்திற் குலாவுமாக்கள் -
உருத்தொன்றை யாற்றினெதிர் பத்தாற்று வோமெனுமுரைக்கிலக் கியமாகவொண்,
குருப்பொலி விரற்செறி செறித்துப் பொலந்தொடிகள் கொழுவித் தனைப் ப்ரிவினாற் -
கொண்டாடு நின்றிருத் தாதைகிளை யொன்றைக் குழைத்துப் பணித்தவிறைவன்,
திருப்பொலி க்டுக்கைதழை தோட்டுவடு பத்தையுஞ் செழுந்தழும் பாக்குழைத்துத் -
திறல்கொண்ட நறுமலர்க் காந்தளங் கைத்தலஞ் சேந்தழகெறிப்ப விமையோர்,
தருப்பொலி மலர்த்தொடைக் கூந்தல்முதாம்பிகை சப்பாணி கொட்டியருளே,
தண்டமிழ்ச் சுவைகண்ட தென்குள்த் தூரம்மை சப்பாணி கொட்டியருளே. (1)

உள்ளொளி ததும்பிமேற் பொங்கிப் புறத்தினு முவட்டெடுத் துப்பரந்தாங் -
கொழுகொளிய வெண்ணீறு மெய்ம்முழுது மட்டித்துயர்ந்தவடி யார்கள்குழுமி,
வெள்ளொளியி னானுஞ்சி வத்துதி முழக்கானும் வேங்கைமக வுக்களித்த,
விதிவச நினைந்தின்னும் வேண்டுவார்க் கருளாமை வேண்டுது மெனுங்கருத்தாற்,
றெள்ளுதீம் பாற்கடல் வளைந்தெனச் சூழ்போந்து சேர்ந்தனர் நெருங்குபொதியிற் -
றெய்வத் திருக்கேள்வ ராட்டினுக் கேற்குந் திருத்தாள மென்னமலரைத்,
தள்ளியெழில் பூத்தநின் செங்கைத் தலங்கொண்டொர் சப்பாணி கொட்டியருளே -
தண்டமிழ்ச் சுவைகண்ட தென்குள்த் தூரம்மை சப்பாணி கொட்டியருளே. (2)

ஐவகைச் சுத்தியு மமைத்துவான் கம்பைநதி யருகன்பு பூப்பமலரால் -
அஞ்சலி நிறைத்துமே னோக்கிமுக மதியினெதி ரல்கிய தெனக்குலிந்து,
மெய்வகைத் துவாதசாந் தத்தலத் தானந்த வெள்ளப் பெருஞ்சோதியை -
விரிமலர்த் தவிசாகி யேற்றுமுன் போலென்ன மீண்டுங் குவிந்திழிந்தாங்,
குய்வனைச் சிவலிங்க நாப்பணா வாகித்தவ் வும்பனய னச்சுடரெதிர் -
உறக்குவிந் தலர்விரைவு மானமுத்திரைகொடுத் துல்வாது பூசைமுற்றஞ்,
சைவமுறை யாற்றுகைப் பங்கயஞ் சேப்பவொரு சப்பாணி கொட்டியருளே -
தண்டமிழ்ச் சுவைகண்ட தென்குள்த் தூரம்மை சப்பாணி கொட்டியருளே. (3)

கடவுட் பொலம்பூமி காண்டற் கெழுந்தெனக் கடையுகப் பெருவெள்ளநீர்க் -
      கடன்மிசை மீதந்திட்ட பூந்தராய் தழையவரு கௌணியர்கள் குலமணிக்கு,
முடவுப் பிறைக்கண்ணி மோலிப் பிரான் சைவ முறைநெறிச் சோகாப்பவன் -
      மூடப் புறச்சமய முழுவதுஞ் சோகாப்ப மூண்டசிலை யோடுபுல்லும்,
அடவிக் களிக்குந் தமிழ்க்குரிசி னீறிட வமண்கைய ருண்ணீறிட -
      அருண்மடை திறந்தூற்று திருமுலைப் பால்கறந் தமிழ்தஞா னங்குழைத்துத்,
தடவுப்பொன் வள்ளத்து வைத்தூட்டு செங்கைகொடு சப்பாணி கொட்டியருளே -
      தண்டமிழ்ச் சுவைகண்ட தென்குளத் தூரம்மை சப்பாணி கொட்டியருளே. (4)

தீங்கனிக் கிளவியால் யான்றவக் கோட்டிய செழுங்கழையுமுகமூரனீள் -
      சேயரிக் கண்ணான் மெலித்தவர விந்தமுந் தேங்கமழு நறுமுல்லையும்,
பூங்குவளை மலருங் கதிர்த்தபொன் மேனியிற்போரிட் டொழித்ததளிர்கள் -
      பொங்கியொளிர் மாழையும் பிண்டியுஞ் சோகாந்து போதுவன வற்றையணையா,
எங்குகட லுலகமுத லெல்லாம் பணித்திடு மிருஞ்சமர்த் திண்மையுதவி -
      யிடையர*த வில்லென்று மம்பென்றும் வைத்ததென் னென்றுநீ யொன்றொடொன்றைத்,
தாங்கொளி ததும்பிடத் தாக்கியாங் கங்கைகொடு சப்பாணி கொட்டியருளே -
      தண்டமிழ்ச் சுவைகண்ட தென்குளத் தூரம்மை சப்பாணி கொட்டியருளே. (5)
     
வேறு.

தவப்பய னைத்தொழு வார்க்கருள் செய்ய தடக்கையி ணேற்றுபொலந்
தடவுத் தொடியிற் செறியு மணிக்கட் டத்திப் பாய்ந்திடுநின்
சிவக்கு மரிக்க ணிழற்று நிழற்றுணை செவ்விய நவ்விமறிச்
சீர்செய னோக்கி மகிழ்ந்துற வாடச் சேர்க்குது மென்றுமனம்
உவப்ப வுவப்ப மறிந்து மறிந்து முறக்க வவிக்கவவி
உயிர்த்து வளர்த்தருள் கூர்திரு மேனை யுளங்குளி ரச்சுழலும்
குவைக்கவின் மொய்த்தளிர்க்கையி னம்பிகை கொட்டுக சப்பாணி
குளந்தை வயங்க வயங்கு மிளங் குயில் கொட்டுக சப்பாணி. (6)

அரக்கெழில் கொண்டு கனிந்த செழுங்கனி யாகச் சேயொளியை
அள்ளியி றைக்கு முருக்கலர் போலழ காரதரத்தினையும்
சுரக்கு நறுஞ்சுவை வாணமிழ் தேந்து சுடர்த்திரு வள்ளமெனத்
தூயம ணித்தர ளத்தொடை பூண்டு துணைத்த தனத்தினையும்
பரக்கு நிறத்தளி ரென்று பசுங்கதிர் பம்பிய மேனியையும்
பார்த்துத் துய்த்திட வாயூ றுஞ்சிறு பச்சை யிளங்கிளிதன்
குருச்சிறை தைவரு மங்கையி னம்பிகை கொட்டுக சப்பாணி
குளந்தை வயங்க வயங்கு மிளங்குயில் கொட்டுக சப்பாணி. (7)

முழங்கு மிசைச்சிறை வண்டு விருந்துணு முண்டக நாண்மலர்கள்
மூரிம ணித்தவி சாக வளர்ந்தருண் மூவிரு செவ்வுருவும்
தழங்கு குளங்கரை யெய்தி யெடுத்தெழி றங்கிடு மோருருவாத்
தழுவி முலைக்குவ டார வணைத்தெதிர் தாங்குத லாற்றகிலா
தழுங்கி விடுத்தொழி கங்கையுள் வெள்கி யழுங்கி விளர்ப்பமுலை
அமிழ்த மருத்தி வளர்த்தருள் கூர்ந்தரு மைச்செய லாற்றியநின்
கொழுங்கவின்மொய்த்த செழுங்கையினம்பிகைகொட்டுகசப்பாணி
குளந்தை வயங்க வயங்கு மிளங்குயில் கொட்டுக சப்பாணி. (8)

வேறு.

மதுகர முலவிய துளப வுரத்தினன் மட்டாரும்
மரைமலர் நிலவிய மறைமுனி பொற்றவி சிற்றேவர்
முதுமணி முடிகுனி தரவர சிற்பொலி புத்தேளும்
முதலிய வனைவரு முளரிநி கர்த்தக ரத்தால்விண்
ணதிதரு புனலொடு தருமலர் நச்சியி ணைத்தாளின்
நவையறு விதிமுறை சொரிதர மிக்ககு ளத்தூர்வாழ்
இதமுறு பரசுக வடிவினள் கொட்டுக சப்பாணி.
இமகிரி தரவரு முமையவள் கொட்டுக சப்பாணி. (9)

அருள்பெறு மடியவர் விழியளி சுற்றும ணத்தேனே
அவனியி னிடையற மெவையும்வ ளர்த்தசு வைப்பாகே
திருமல ரமரர்கள் சொரிதரு பத்மப தத்தாயே
தெளிமறை நெறியின ருளமொளிர் வித்தசு கப்பேறே
தெளிமறை நெறியின ருளமொளிர் வித்தசு கப்பேறே
முருகவிழ் மதுவழி நறுமலர் மொய்த்தகு ழற்கோதாய்
முனிவரர் மறையவ ரடியர்ப ழிச்சுகு ளத்தூரின்
இருமையு மிதவிடு மடமயில் கொட்டுக சப்பாணி
இமகிரி தரவரு முமையவள் கொட்டுக சப்பாணி. (10)

சப்பாணிப்பருவ முடிந்தது.
--------

முத்தப்பருவம்.

பகைத்த புரிசை மூன்றுமொரு பதத்தி னிறுத்துத் திருக்குளந்தைப் -
      பதியிற் கருணை பூத்தலர்ந்த பரமா னந்தப் பெருவாழ்வை,
நிகர்ப்பச் சிறுவெண் மதிகிடந்த நெடுவா ணுதன்மேற் போந்துலவி -
      நெறிக்கும் புருவச் சிலைகோட்டி நெய்த்துப் பழுத்த கொலைவேல்போல்,
வகுத்த மதர்க்கட் சரந்தொடுத்து மணிமே கலைசூ ழல்குலந்தேர்-
      வாய்ப்ப வெளிக்கொண் டெமதுமும்மை மலச்சோ வழலப்புன்மூரல்,
முகிழ்க்குந் தரளச் செங்கனிவாய் முத்தந் தருக முத்தமே-
      முருகு விரியு நறுங்களப முலையாய் முத்தந் தருகவே. (1)

வளைத்த கருப்புச் சிலையெடுத்து வனசக் கணையு மாங்கணையும்-
      வாசங் கமழு நறுநீல மலர்ப்பூங் கணையு மசோகினிடைத், தளைத்த
நனைதாழ் கொடுங்கணையுந் தழுவிக் கொணர்ந்தென் னொடுந்தொடுத்துச்-
      சகல புவனங் களும்பணிக்குந் தண்ணங் குடையெங் குரிசிலைக்கண்,
டிளைத்த வெரியாற் படப்பொருத திருவார் குளந்தைச் சிவவாழ்வைச்-
      சிந்தைமருட்டிப் பணிப்பலெனத் திறல்கொண் டெழுந்த தளவம்போன்,
முளைத்த முறுவற் செங்கனிவாய் முத்தந் தருகமுத்தமே-
      முருகு விரியு நறுங்களப முலையாய் முத்தந் தருகவே. (2)

பிதிரும் பொறிபொற் சிறைவிரித்துப் பெருந்தேன் மடுத்துத்தாதளைந்து -
      பெடையோ டாடிக் களிபூத்துப் பிறழா வகையின்னிசைபாடி,
அதிரும் பலவண் டினமுழக்க வலரும் பொகுட்டுத்தேங்கமல -
      வலர்க்குந் தனக்கும் பகைமையுற வமைத்துக் குளத்தூரமர்ந்தருளிக் -
கதிரும் பெருமா னுளக்கமலந் தனையு மலர்த்தி வயமாக்கிக் -
      கலப்பா னெழுந்தா லெனவதனக் கலைவாண் மதியி னரும்புநிலா,
முதிரும் பவளச் செங்கனிவாய் முத்தந் தருக முத்தமே-
      முருகு விரியு நறுங்களப முலையாய் முத்தந் தருகவே. (3)

கொழுது வரிவண் டினமுரலாக் குளிர்பூந் தொடையன் முடிசாய்த்துக் -
      கும்பிட் டிறைஞ்சுங் கடவுளர்தங் குழாத்தைச் சிறிதுமதியாத,
பழுது நிலவாத் திருக்குளந்தைப் பதிவா ழிறையோன் விழிச்சுடரின் -
      பரிசு நோக்கி மணியிதழ்க்க பாடஞ் சிறிதே திறந்துருவம்,
எழுதும் வினைஞர் தொழிற் கடங்கா வெழிலார் தனதொள் ளொளிகாட்டி-
      எழுந்தச் சுடரை வயமாக்கி யேக்கற் றமையம் பார்த்திருப்ப,
முழுது மடிமைக் கொளுநகைவாய் முத்தந் தருகமுத்தமே-
முருகு விரியு நறுங்களப முலையாய் முத்தந் தருகவே. (4)


இகந்த மனத்தாற் கடல்கடைந்த விமையோர் வெருவ வெழுங்காளம்-
      எடுத்துப் பருகுந் திருக்குளந்தை யிறைவன் பவளத் திருவாய்க்கும்,
சுகந்த னிலைமை தவாதோங்கத் தாவிக் குதிக்குஞ் சிறுமறிமான்-
      தழங்கு மரும்பே ரொலிமுழுதுந் தாங்குஞ் செவிக்கு மருந்தாக,
உகந்த வொளிதுன் றியவெயிற்றி னூறு மகிழ்தப் பெருக்காறும்-
      உரைப்பா ணமிழ்தப் பெருக்காறு மூட்டிக் களிகூர்ந்தெழிற் கடலை,
முகந்த பவளச் செங்கனிவாய் முத்தந் தருக முத்தமே-
      முருகு விரியு நறுங்களப முலையாய் முத்தந் தருகவே. (5)

வேறு.

அசும்புபட வாய்நீர் வழிந்தோட வோடிவந் தணையுமைங் கரக்களிற்றை-
      ஆகத் திடைக்கொண்ட னாப்பட் டடித்தென வணைத்தலும் பணைத்து வளர்பொற்,
றசும்புதனை யெதிருமிரு களிறெனத் தன்மத் தகங்கொண்டு தாக்கி மயிரின்-
      றண்ணிய வொழுக்கினை யணைக்குமொரு கந்தெனத் தடவுக்கை யாற் சுழியவவ்,
விசும்புண்மறை பட்டெழுந் தெண்ணிலா வெனநகை விரித்தொல்லை மேலெடுத்து-
      வெகுளிதீர்த் துளங்குழைய முத்தாடி வைத்தாடும் வியனகர்க் குளந்தை வாழ்வே,
பசும்பொனவிர் திருமேனி யழகொளிர நின்றுநின் பனிவாயின் முத்தமருளே-
      பங்கயச் செல்விதொழு மங்கையர்க்கரசி நின் பனிவாயின் முத்தமருளே. (6)

சேட்டின மணிச்சோதி நீட்டுமிலை ஞாங்கர் நுதி தீட்டுநின் னாட்டத்தினாற்-
      றெள்ளிய வருட்பார்வை வெள்ளமமிழ் தம்மைநீ தேக்கிடவு நீக்கி யளகக்,
காட்டினைக் காட்டிமயல் பூட்டிளம் பேட்டனக் கவினடைக் கன்னியரிடைக்-
      கட்டுண்டு மட்டுண்டு தட்டுண்டு பட்டிறுங் காளையரின் மாளுநரென,
மூட்டியபொன் மாடகத் தியாழுக்கு மிசையூட்டு மொழியமிழ்த மூட்டவிட்டு-
      மோட்டிருங் கோட்டுக் குவட்டைநிகர் வட்டமுலை முத்தையமிழ் தென்றேக்கறூஉம்,
பாட்டிசைக்கிள்ளைக்கு மீட்டுமிசையூட்டுநின் பனிவாயின் முத்தமருளே-
      பங்கயச் செல்விதொழு மங்கையர்க் கரசிநின் பனிவாயின் முத்தமருளே. (7)

மடல்கொண்ட பூந்துழாய்ப் படலைமணி மார்பினான் மறைக்கிழவ னாதியண்ட-
      வாணரும் பதைபதைத் தோட்டெடுப் பக்கொடிய வளைகடற் புனன்மீதெழும்,
விடமுண்ட சோமேச னார்க்கினிய வாயமிழ்த மெல்லெனப் பருகுவித்து-
      விளியாத வண்ணமென்கொங்கையஞ் சஞ்சீவி வெற்புங் கொடுத்து மற்றும்,
உடனொன்றி மணிமிடற் றுலவா திருத்தலா னொருகணப் பொழுதுமகலா-
      துருப்பாதி யிற்கலந் தனுதினம் பாதுகாத் தொண்குளத் தூரின்மருவும்,
படமொன்று மரவல்கு லெழிலமுத வல்லிநின் பனிவாயின் முத்தமருளே-
      பங்கயச் செல்விதொழு மங்கையர்க் கரசிநின் பனிவாயின் முத்தமருளே. (8)

வேறு

சுறவே றியகொடி முதலா கியபடை சுற்றிவ ரத்தனிபோய்ச்
சுவைநீள் சிலைகொடு மலரார் பகழிது ரக்கும தக்கொடுவேள்
இறவே நுதல்விழி வழியூ டழலெழு வித்ததி றற்பெருமான்
எரிபோ லொளிவிடு சடைமா முடியினி ருக்கும திக்கடவுள்
வெறியார் திலகம தணிவா ணுதலெழி லிற்குளம் வட்கிநறா
விரிபூ விதழியை நடுமே னியினிறு விப்பொரு வக்கருதும்
முறிபோ லுருவினள் கமலா கரமயின் முத்தம ளித்தருளே
முதுநான் மறையறி வறியா வடிவினண் முத்தம ளித்தருளே. (9)

பெருகா ரமிழ்தருளொளிசேர்மதியெழில் பெற்றநு தற்கொடியே
பிறவா வருணெறி தருவா யெனுமவர் பெட்பினு ளச்சுவையே
மருவார் தகரமு மளிவீழ் மலரும ணத்தகு ழற்றிருவே
மதியா தவருள மருவா திருளென வைத்தம டப்பிடியே
உருகா நெறியெம துளமா சறவுமொ றுக்கும றக்கடலே
உருவா யளவரு மருவாய் நிறைபொரு ளுக்கொரு வைப்பிடமே
முருகார் பொழிலணி கமலா கரமயின் முத்தம ளித்தருளே
முதுநான் மறையறி வறியா வடிவினண் முத்தம ளித்தருளே. (10)

முத்தப்பருவ முடிந்தது.
----------
     
வாரானைப்பருவம்.

வெள்ளித் தகட்டையரில் கொள்ளத் துறுத்தனைய வெள்ளிய சிறைப்பவளவாய்-
      வெள்ளோதி மத்திறள்கள் செஞ்சிலம் பொலியினையு மென்மடப் பிடியினத்தை,
எள்ளிக் கவின்கொண்ட திருநடைப் பொலிவினையு மெய்யாது கற்கவெண்ணி-
      இகபரப் பெருவாழ்வு வேட்டவர்க் கருளுநின் னிணையடிக் கமலமலரை,
உள்ளித் தொடர்ந்துசூழ் மொய்த்திடுஞ் சூழலிடை யுற்றுநீ யச்சூழலி-
      னொடும்பெயர்ந் தவிர்மதிய மூர்ந்துவர லேய்ப்பவொளி மாமணிக ளிருகரையினும்,
அள்ளிச் சொரிந்துலவு பாலிநா டாளவரு மமுதாம்பி கைவருகவே-
      அருண்மடை திறந்தூற்று புன்மூர லழகொளிர வம்பொனாயகி வருகவே. (1)

துளிபட்ட தேந்தொடைக் கூந்தலைக் காரென்று தோகைமுன்னாடிவரமென்-
      றுணைமலர்ப் பாதநடை கற்கவன்னத்திர டொடர்ந்துபின் னோடிவரவுட்,
களிபட்ட தீங்கிளவி கற்குநின் செந்தெளிர்க்கைக்கிள்ளை பாடிவரவான்-
      கருணைபொழி கட்கடைப்பார்வையை வியந்துமான் கன்றினங் கூடிவரமெய்,
யொளிபட்ட வேதக் குழாங்கதறி யோலிட் டுனைப்பெரிது நேடிவரவில்-
      லுமிழ்மணிக் கோவைக் குரூஉப்பரும மீமிசை யுடுத்தவிடை வாடிவரமை,
அளிபட்ட பூஞ்சோலை சூழ்குளத் தூரில்வரு மமுதாம்பி கைவருகவே-
      அருண்மடை திறந்தூற்று புன்மூர லழகொளிர வம்பொனா யகிவருகவே. (2)

வில்லுமிழ் குரூஉமணிச் சுடிகைப் பணிக்குழாம் விரித்தபை நெரித்துருத்து-
      வீசுங் கலாபப் பசுந்தோகை யீட்டங்கண் மெல்லியலு நடையும்வேட்டு,
வல்லுறழ் மணிக்கோவை தாழ்ந்தமென் கொங்கைநின் மருங்குறச் சூழ்ந்து வரவவ்-
      வளரிளஞ் சாயலா னடையினான் வேறறிய மாட்டாது மருளுமெம்மை,
எல்லொளித் தண்ணிலா நகைகொண்டு தேற்றிமற் றிருக்காதி யானநான்கும்-
      இன்னங்கிடந்துமுறை யிட்டுமறி வரியநின் னியல்பினைக் காட்டியருளி,
அல்லுமிழ் தடம்பொங்கர் சூழ்குளத் தூரில்வரு மமுதாம்பி கைவருகவே-
      அருண்மடை திறந்தூற்று புன்மூர லழகொளிர வம்பொனா யகிவருகவே. (3)

வயிரா வணந்தொறு மெழுங்குளத் தூர்வந்து வான்கோடி ரண்டாயிரம்-
      வாய்த்ததனை யாளும் பிரானைமரு மத்திரு மருப்பினா லாளாண்மையும்,
செயிரா வணங்கினைப் பல்லுயிரு மெய்தத்தெறூஉ மலக் களிறைந்தையும-
      திக்கெட்டு மண்டப் பரப்புங் கடந்திறச் செற்றிடும் விழிவீரமும்,
பயிரா வணஞ்சொரியு மேகத்தி னருள்கூர்ந்த பதநடையு நோக்கியஞ்சிப்-
      பனிமா லடுக்கலெனு நுந்தைநின்னுரிமையாற் பரிந்துபின் வருதலேய்ப்ப,
அயிரா வணம்பின்பு தொடரத் தொடைக்கூந்த லமுதாம்பிகைவருகவே- -
      அருண்மடை திறந்தூற்று புன்மூர லழகொளிர வம்பொனா யகிவருகவே. (4)

விந்தையங் கிரிதனக் கிகலியுள் ளதுமுற்றும் வீந்தவீ றின்மையுந்தண்-
      வெள்ளிவே தண்டமொ ரரக்கன் பெயர்த்திட்ட மென்மையுங் ககனமீறும்,
மந்தர முதற்கிரி யிடைக்கட் பொலிந்தண்ட மார்க்கத் திரண்டுசுடரும்-
      வலமாய் வரப்புவிக் காதார மானதன் வன்மையையு நோக்கி நோக்கிச்,
சிந்தைகளி கூருமா மேருவைச் சிவபிரான் செங்கமல வங்கைபத்தும்-
      சேர்ந்துநித் தலுமுழக் கத்தளர்ந்தொசியாது செம்மாந்து விம்மியெள்ளும்,
அந்தனச்சிகரிமிசை யருவிநித் திலமிட்ட வமுதாம்பி கைவருகவே-
      அருண்மடை திறந்தூற்று புன்மூர லழகொளிர வம்பொனா யகிவருகவே. (5)

வேறு.

தெய்வச் சுருதி தமிழ்க்கன்றித் தீட்டா நிலைமைத் தெனவுலகிற்
றெரிக்குங் காழித் திருஞானச் செம்மற் குழவிக் கருண்ஞானம்
பெய்து குழைக்க வோமுலையாம் பெரியமலைவா யுறுத்துமென்றோ
பெருமான் றனையுங் குழைத்தவலிப் பெற்றி யறிந்து தடுத்தோபூங்
கையி லிலகு நகக்குறிபற் கதுவ நோமென் றோதீம்பால்
கறந்து கொடுத்தா யெனச்சகிமார் கனிந்து பாட நகைமுகிழ்க்கும்
வைவைத் தமைத்த மதர்வேற்கண் வாழ்வே வருக வருகவே
வளங்கூர் குளந்தைப் பதியமுத வல்லி வருக வருகவே. (6)

குஞ்சி யசைய வசைந்துவருங் குமரப் பெருமான் றனையேந்துங்
குளிர்பூங் கரத்துத் தொடி கறங்கக் கொடிபோ லொசியுஞ் சிறுமரு
அஞ்சி நுடங்க வம்மருங்கு லணிந்த பருமங் கதிர்த்தேங்க [ங்குல்
அணங்கு மிடைகண்டிரங்குவபோலவிரு மணிநூ புரமொலிப்பப்
பஞ்சி திருத்துஞ் சீறடிகள் பதிந்த சுவடு தொறுமிமையோர்
பனிகான் மோலி நினாபுரளப் பதுமை முதலோர் களிதூங்க
மஞ்சி வரும்பூங் குழற்கற்றை மாதே வருக வருகவே
வளங்கூர் குளந்தைப் பதியமுத வல்லி வருக வருகவே. (7)

கடிகொண்டலரு நறுங்கடுக்கைக் கடவுண் மகிழப் பேரண்ட
கடாகப் பரப்பே சிற்றிலெனக் கருமப் பகுப்பே சிறுசோறாம்
படிகொண் டுயிராம் பாவைகட்குப் பைதன் மலநோய்ப்* பசியிரியப்
பல்கா லயிற்றி விளையாடிப் பரமா னந்தப் பெருவீட் வெ*முதே
குடிகொண் டிருக்குந் தீங்கரும்பே கொள்ளத் தெவிட்டா* சுவைய
குன்றம் பயந்த நறுங்கனியே கொழிக்குங் கருணைப் பெருக்காறே
மடிகொண் டயரா தெமைப்புரக்கும் வாழ்வே வருக வருகவே
வளங்கூர் குளந்தைப் பதியமுத வல்லி வருக வருகவே. (8)

தீது விளைக்குங் களப்பணியுந் தேவர்குரவன் மனைச்செல்வி
திருக்கற் பளித்த களப்பணியுந் திளைத்துக் கலவி செயப்புகுங்காற்
கோது விளைக்கும் பேரச்சக் குணமு நாணுங் கொடுக்குமெனக்
குறியேனினது சாயலுமின் கொழிக்குங் காஞ்சி யல்குலுமே
போது விளைக்குஞ் சடைக்காட்டிற் புகுந்து வெளிக்கொளாதொளிக்கப்
பொலிவு தருமா லெனச்சகிமார் புகலச் சற்றே நகைத்தளிகள்
வாது விளைக்கு முடிசாய்க்கு மாதே வருக வருகவே
வளங்கூர் குளங்தைப் பதியமுத வல்லி வருக வருகவே. (9)

அயில்கண் டனையஞ் சலித்தேத்து மன்னை வருக பெருங்கருணையாழி வருக
      தீவினையே மாவித் துணையே வருகவிடந்
துயில்கண் டனையம் பலத்தாட்டுஞ் சுடர்பொற் கொடியே வருகவிளஞ்
      சுகமே வருக நறுங்குதலை தோற்றுங் கிளவி யெனுமதுரம்
பயில்கண் டனையர் செவிக்கூட்டும் பசுங்கோ கிலமே வருகவென்றும்
      பருகத் தெவிட்டாச் சுவையமுதப் பாவாய் வருக பசுந்தோகை
மயில்கண் டனைய விளஞ்சாயன் மாதே வருக வருகவே
      வளங்கூர் குளந்தைப் பதியமுத வல்லி வருக வருகவே. (10)

வாரானைப்பருவமுடிந்தது.
--------

அம்புலிப்பருவம்.

பொன்பூத் தலர்ந்தவன் மரவங்கண் மாலரி பொருங்களிற் றின மளாவிப்-
      பொங்குமலை வாய்வருங் காரணத் தாற்செய்ய பொன்னஞ் சிலம்படியினின்,
மின்பூத்து நாளும் புலம்புறச் சூழ்தலான் மிடையுமங் கமலமயர-
      மிக்குறுங் குவலய மடங்கலுங் களிதூங்க விரியொளிக் கதிர்வீசலாற்,
கொன்பூத்த பெருமானை யணைதலால் வேளெனுங் குழகற்கு மகிழ்செய்தலாற்-
      கோமளப் பெண்செய்கை நின்செய்கை போலுமாற் கூர்ந்துணரி னிவளையன்றி,
அன்பூற் றெடுப்பவிளை யாடுதுணை வேறில்லை யம்புலீ யாடவாவே-
      அழகுவள ருங்குளத்தூரமுத வல்லியுட னம்புலீ யாடவாவே. (1)

மண்டலம் புகழாத வன்படுஞ் செவ்வியின் மாண்டவரையுச்சிமீது-
      வயங்கிய கரஞ்சேர்த்தி யாணவ விருட்குழா மாற்றிநற் பசுமென்பயிர்,
கண்டக மகிழ்ந்துநெடு வானுற விளந்தொளி கலந்தமணி கான்ற கதிர்நீள்-
      கடிநாறு தன்னடி வணங்கவெளி வந்துதெண கடலுலக முற்றுமேத்த,
விண்டல நெருங்குமீன் கணமாதர் புடைசூழ மேவியுல கந்தனதியல்-
      வீறுபெற நோக்கினா லீரெண்கலைப்பொலிவு மெய்மையிற் காட்டு முறையால்,
அண்டர்தொழுமெம்மையா ளம்மையை நிகர்ப்பைநீ யம்புலீ யாடவாவே-
      அழகுவள ருங்குளத் தூரமுத வல்லியுட னம்புலீ யாடவாவே. (2)

கங்கையும் பாந்தளுந் தும்பையுஞ் செம்பொற் கடுக்கைச் செழுந்தொடையலுங்-
      கபாலமுங் கொக்கிறகு மூற்றிருந் தொழுகுதேங்கமழ்ந்தபூ மத்தமுநறுங்,
கொங்குதவ ழாத்தியும் வன்னியு மெருக்குங் குளிர்ந்தவறு கம்புல்லுமேற்-
      கோமளப் புலவோ ரிறைக்குமந் தாரமுங் கொய்துதவர் தூற்றுமலருந்,
தங்கிய பிரான்சடைக் காட்டினிலுனக்குரிமை சற்றலால் வேறுமுண்டோ-
      தாவிலெண் ணான்கவய வத்தினுஞ்செம்பாதி தனதெனக் கொண்டுவாழும்,
அங்கவ ணினக்கதிகமென்பதற்கையமிலை யம்புலீ யாடவாவே -
      அழகுவள ருங்குளத் தூரமுத வல்லியுட னம்புலீ யாடவாவே. (3)

உருநிறை யுவாத்தோறும் வாக்குநின் னமிழ்துண்ட வும்பர்த்தலத்தி னிமையோர் -
      உவாக்கட லுயிர்த்தவிட முன்னிற்றலாற்றற்கு மொல்கினர்கள் சாவாதிரார்,
குருநிறை மணிக்கச் சணிந்தலிவள்பவளவாய்க் கொழியமுதம் வாய்மடுத்த -
      கோமளச் சோமேசர் விடமயின் றாற்றலுங் கொண்டன ரிறத்தலிலர்மற்,
றிருணிறை யிராவினை விளைத்தியிவ ளுண்ணிறையு மிருளிரா வினைமுழுவதும் -
      இரித்திடுவ ளாதலா லிவளொடும் பொன்னோ டிரும்பனையை மன்றவரிபாய்,
அருணிறை கடைக்கண்வைத் தெம்மையா ளம்மையுடனம்புலீ யாடவாவே -
      அழகுவள ருங்குளத் தூரமுத வல்லியுட னம்புலீ யாடவாவே. (4)

தெளிக்குமெய் யன்பி்னால் வழிபட்ட நாளுனது செல்லனோய் தவிர்த்தளித்த -
      திருச்சோம நாதனா ருண்டருளு நஞ்சுஞ் சினந்தவிர்ந் துள்ளொடுங்கத்,
துளிக்குமெழி லங்கைத் தலத்திற் றடுத்திட்ட சுவையமிழ் திருப்பவமிழ்தந் -
      துணைக்கரத் தேந்திப் பசிப்பிணி தெறத்தினந் துயருழந் துழல்வோரெனக்,
களிக்குமுறை தேற்றாது வாளரா வுண்டுண்டு கக்கத்திகைத்து வெருவிக் -
      ககனவெளி யோடியும் வடகுவடுசுற்றியுங் கவலுநின் செய்கைநன்றே,
அளிக்குல மிரைக்குங் கடிக்குழற் கன்னியுட னம்புலீ யாடவாவே -
      அழகுவள ருங்குளத்தூ ரமுத வல்லியுட னம்புலீ யாடவாவே. (5)

வணங்குமுறை யாற்றனது திருவுளப் படிநிற்கு படிநிற்கு மாந்தர்க்குமலதிரோத -
      மாயேய காமிய மருட்பிணி யவிழ்த்துநான் மறைமுடிவு மெட்டாததோர்,
குணங்குறி கடந்தபே ரானந்த வெள்ளக்கொழுங்கட றிளைத்தாடிடக் -
      கொடுத்தருளூம் வள்ளன்மை நிற்கமற்றுலகினுங் குளிர்தூங்க வெண்ணான்கறம்,
இணங்குவே தாகம வழித்துறை வழாவகை யியற்றியது காணாயலை -
      ஈங்குநீ வரினினது கறைபோக்கி வேண்டியது மீந்தருள் கொழித்தருளுவாள்,
அணங்குகொண்டந்தரத் தலையாதெ மம்மையுட னம்புலீ யாடவாவே -
      அழகுவள ருங்குளத் தூரமுத வல்லியுட னம்புலீ யாடவாவே. (6)

குடங்கைமல ராற்செம்பொன் மேருவைத் தனுவெனக் கோட்டிய மலைக்குமருகன் -
      கோமளச் சிலைமார்பு மைந்தனை யிரட்டித்த குவவுப் புயக்கு வடுமேல்,
வடங்கதுவு மோட்டிளங் கோங்கினும் வண்டினு மலங்கக் குழைத்தவணினை -
      வருகென் றழைத்திடவுமதியா திருத்தியிவள் வன்கதக் கனலிதோய்த்த,
தடங்கட் கொடும்படைச் செய்யசுடர் வேல்கொண்டு தாக்கினுயிர் பொன்றிவிடுதல் -
      சரதமற் றெங்கெங் கொளிப்புறினு மிவளிலாத் தானமொன் றில்லைகண்டாய்,
அடங்கிய தடங்கமல நெஞ்சா தனத்திருவொ டம்புலீயாடவாவே-
      அழகுவள ருங்குளத் தூரமுத வல்லியுடனம்புலீ யாடவாவே. (7)

துடிபட்ட கைத்தலத் தெம்பிரான் மகிழ்தருஞ் சுந்தரப் பெண்ணமிழ்தெனத் -
      தோன்றும் பிராட்டியைமு னெண்ணாத தக்கனார் துயர்கூர்ந்து பட்டபாட்டை,
முடிபட்ட வானவர் குழாத்தோடு முடனின்று முழுவதும் பட்டறிதியிம் -
      மொய்குழற் செல்விதனையவமதித் தின்றுநீ முன்னுறா தகன்றொழிவையேற்,
கடிபட்ட விதழ்தின்று கறுவினா னின்னிலைமை கடிபட்டு மாழ்குவையலாற் -
      கலைமுழு மதித்தே வெனும்பழைய பெயரொடுங் கலைமதி யிலாததேவென்,
றடிபத்த பாவிற் புதுப்பெயரு மாளுவா யம்புலீ யாடவாவே-
      அழகுவளருங்குளத் தூரமுத வல்லியுடனம்புலீ யாடவாவே, (8)

சங்கையா னங்கையிவ ளெம்பிரான் புலவியிற் றடங்கருங் கட்கடைநுதி -
      சற்றே கறுப்புழித் தாமரைச் சீறடிக டாக்குங் கடுந்தொழிலினாற்,
கங்கையா டித்துடித் திவள்கருணை யாற்றினைக் கைகூப்பு மிறையேந்துமான் -
      கதறிவிழி மானைத் தொழுந் தொடையல் வண்டெலாங் கருங்குழற் றாவுமரவம்,
மங்கையா டாதபைப் பாந்தளைக் காவென்று வாவுமற் றாங்குநீயும் -
      வாணுதன் மதிக்கிறைஞ்சிடுவையன் றேயதனை மதியாத தென்னைகொலெமக்,
கங்கையாமலகமென வன்புகூ ரம்மையுட னம்புலீ யாடவாவே -
      அழகுவள ருங்குளத் தூரமுத வல்லியுட னம்புலீ யாடவாவே. (9)

கைப்போது நீட்டிமுன் விரித்துனை யழைப்பவுங் காணாதி போல்வந்திலாக் -
      காரணத் தாலம்மை சீறுதலு மங்கையைக் கரும்பாந்த ளென்றஞ்சினான்,
இப்போது தாழ்க்கலான் வருவனென் றிதுகாறு மிவ்வாறு தப்புவித்தோம் -
      இன்னுநீவாராது மத்தரிற் றிரிதியே லினியுனக் கேதுபுகலோ,
செப்போது கொங்கைப் பிராட்டியிவள் சோமேசர் செங்கண் புதைத்தஞான்று -
      தினகரச் செல்வனொ டழுங்கித் திகைத்தநின் றிறமறந் தனைபோலுமால்,
அப்போது பட்டதை நினைந்துமற் றிவளுட னம்புலீ யாடவாவே -
      அழகுவளருங்குளத் தூரமுத வல்லியுட னம்புலீ யாடவாவே. (10)

அம்புலிப்பருவமுடிந்தது.
------------

அம்மானைப்பருவம்.

வம்பிய றொடைக்கூந்தன் மீமிசைக் கதிர்வீசவாள்பட்ட கோற்றொடிக்கை-
      மலரினைக் கண்டுசில வண்டத்து மதியங்கள் வனசமிதெனுங்கருத்தாற்,
பம்பியட ரிருள்கண்டு முகிழாமை யாற்றமைப் பரிசித்தல் வேட்டதாகப்-
      பாவித்துறுந்தொறுந் தன்றுணைமை யன்மையாற் பங்கயம் விதிர்த்துவெகுளா,
வெம்பியகல் வானத் தெழுந்தோ டிடத்தள்ளி விடலெனச் செங்கைகளால்-
      வேலினை யிகந்தொருவி வார்தரு கொடும்புருவ வில்லொடு கிடந்து மிளிரும்,
அம்பிய றடங்கணொளி கொண்டுலவு நித்திலத் தம்மானை யாடியருளே
      ஆரண முழக்குகம லாகர புரத்தலைவியம்மானை யாடியருளே. (1)

இருள் பூத்த நெறிசுரி கருங்குழ லரம்பையர்க ளெண்ணிலார்கவரி வீச-
      எறிசுடர் மணித்தவிசு வீற்றிருந் தரசுபுரி யேந்தல்குல வரைகளோடுந்,
தெருள்பூத்த நுந்தைசிர கீர்த்தமை குறித்துச் செயிர்த்தவனை யண்டமுகடுந்-
      தெறிபடக் கைக்கொண் டெறிந்தோச்சிமீளத் திகைத்துவீழ் தோறுமுன்றன்,
மருள்பூத்த வெகுளிதணி யாமையாற் பின்னரும் வன்கண்மை கொண்டோச்சல் போன் -
      மருங்குசூழ் தோழியர்த மிணைவிழியி னீழலை மரீஇச்சுலவி யோடியாட
அருள்பூத்த கைகளா லொளிபூத்த மரகதத் தம்மானை யாடியருளே-
      ஆரண முழக்குகம லாகர புரத்தலைவி யம்மானை யாடியருளே. (2)

ஒழுங்குபடு மண்டகோ டிகடொறு நிலாவுறூஉ மொண்கமலமாநிதிகளும்-
      ஒலிகொண்ட வெண்சங்க நிதிகளுஞ் சார்ந்தவர்க்குத்வுநின் கரநோக்கிவான்,
செழுங்கதியு முய்த்தளித் திடுநிதிய மீதெனத் தேர்ந்துவந் தளவளாவித்-
      திருவாய்ந்து விடைகொண்டு தம்பதி குறித்துமேற் சேண்வழி நடத்தலேய்ப்பக்,
கொழுங்கதிர் பரப்பிக் கவின்றசெம் மணியாற் குயிற்றுமம் மனைகள் பலவுங்-
      குளிர்நிலாக் கான்றுவெள் ளொளிவீசு முத்தங் கொழிக்குமம் மனைகள் பலவும்,
அழுங்குமணி மேகலைச் சிற்றிடை யெடுத்தெடுத் த்ம்மானை யாடியருளே-
      ஆரண முழக்குகம லாகர புரத்தலைவி யம்மானை யாடியருளே. (3)

தேங்கலுழி யூற்றெடுத் தோடுமம் போருகச் செல்வமட வாரிருவருந்-
      திங்களைக் கண்டினி யிருக்கினெமை நந்தவிசு சிறைசெயுமெனக்கவன்று,
பூங்கமலம் விட்டொரீஇத் தங்கொழுநர் பதியுறப்போமிடைத் திரும்பிநோக்கிப்-
      புகழ்ந்திவை மதிக்குமுன முகிழாமை தேர்ந்துளம் பூரித்து வருவதேய்ப்பத்,
தோங்கனியு மும்மலத்துகளீர்க்கு நின்முகஞ் சுடர்பூப்ப வங்கையேந்தித் -
      துரிசற்ற பவளத் திழைத்தனவு நித்திலத் தொகையிற் குயிற்றியனவும்,
ஆங்கமணி வால்வளை தழங்கிட வெடுத்தெடுத் தம்மானை யாடியருளே -
      ஆரண முழக்குகம லாகர புரத்தலைவி யம்மானை யாடியருளே. (4)

புத்தமிழ் துகுத்துமணி மோலியங் கடவுளர் புரைப்பசிப் பிணிதவிர்த்துப் -
      பூதல மருங்கினும் பைங்கூழ்த் தொகுப்பெலாம் பூரிப்ப மாந்தர்முகனுஞ்,
சித்தமு மலர்ந்துகளி கூரச்செழுங்கலைத் தீங்கதிர் பரப்பியுலவுந் -
      திங்கட் பிரான்செந் துவர்க்கொடி படர்ந்தவெண் டிரைமுகட் டெழுங்காலையுந்,
தத்தலை விரிக்குங் குடாதுகட லுட்புகுஞ் சமயத்தி னுஞ்சேத்தல்போற் -
      றடங்கையி லெடுத்தெறியுமேல்வையினு மற்றது தடங்கையிற் புகும்போழ்தினும்,
அத்தமுமிழ் சேயொளி கவர்ந்தொளிரு நித்திலத் தம்மானை யாடியருளே -
      ஆரண முழக்குகம லாகர புரத்தலைவி யம்மானை யாடியருளே. (5)

மருள்கான்ற நெஞ்சச் சழக்கைத் தடிந்தின்ப வான்கதி கொடுக்குநின்கை -
      வயங்குபொற் கடகத் திருங்கவின் முகந்துமலர் வள்ளலை நிகர்த்துவிழியின்,
இருள்கான்ற நீலங் கவர்ந்தராப் பாயலிடையேந்தலை நிகர்த்துநுதலின் -
      இட்டசிந் துரவெழில் கவர்ந்துநின்கொண்கரை யிணைந்துமேற் போந்துலாவித்,
தெருள்காண் றெவற்றினுந் தோய்வற்று நின்றவச் சிற்பரம் பொருளையொத்துச் -
      சேணாடர் கொண்டாட வாடச் செழுங்கருணை தேக்கிநிறை சோமேசனார்,
அருள்கான்ற கண்களி பயப்பமணி நித்திலத் தம்மானை யாடியருளே -
      ஆரண முழக்குகம லாகர புரத்தலைவி யம்மானை யாடியருளே.(6)

வேறு.

முத்த மிழைத்தன வும்பவ ளத்திரண் மொய்த்தன வுங்கலைகண்
      முற்று நிறைந்த பசுங்கிர ணச்செழு முழுமதி யாமெனவும்
எத்திசை யுங்கதிர் கான்றிருள் சீத்தெழு மென்றூழா மெனவும்
      எண்ணி யுணற்கெழு மூன்று ளராவு மிருஞ்சிறை நேமியுநின்
னுத்தி முலைக்கு மியற்கு மிடைந்தய லோடவும் வெம்பசியால்
      உயங்கு சகோர மயங்கி யுடன்றிரி வுற்று வருந்தவுமென்
னத்த னுளத்தி னடிக்கு மடப்பிடி யாடுக வம்மனையே
      அரந்தை துரந்து குளந்தை புரந்தவ ளாடுக வம்மனையே. (7)

வடங்கெழு கொங்கை நிகர்ப்ப வளர்ந்த வடாது பொருப்பினைநின்
      மகிணர் கரத்தினி லின்னும் வளைத்திடு மாறொரு சூழ்ச்சிநினைந்
துடங்கழி மூன்று புரங்களை மீண்டு முலாவ வெழுப்பிவரம்
      உதவி வெளிக்கண் விடுத்தல் கடுத்திட வொள்ளொளி முத்தினுமேர்
முடங்க லுறாதொளிர் நீல மயத்தினு மொய்த்த பசும்பொனினும்
      முற்ற வமைத்து விடுத்தரு ளம்மனை மூன்றும்விண் மீதுலவ
அடங்கிய வன்ப ருளங்குடி கொண்டவ ளாடுக வம்மனையே
      அரந்தை துரந்து குளந்தை புரந்தவ ளாடுக வம்மனையே. (8)

உய்ய வரந்தரு நித்தன் முகத்தி லுயங்க முனந்தகையும்
      ஒண்கர மின்னு மொறுத்த லுறாதுற வாடி நயப்பமெனா
வெய்ய நெருப்பெழு செங்கதி ருங்குளிர் வீசு பனிக்கதிரும்
      மேவியகங்கையி னோடுறு கேண்மை விளைத்துவிண் ணேகுதல்போற்
செய்ய மணிப்பவ ளத்தி னிழைத்த செழுந்திர ளம்மனையுந்
      தெள்ளிய முத்தி னிழைத்த கதிர்க்குவை சிந்திய வம்மனையும்
ஐய நுசுப்பொசி யத்தளி ரங்கையி னாடுக வம்மனையே
      அரந்தை துரந்து குளந்தை புரந்தவ ளாடுக வம்மனையே. (9)

கதிருமிழ் நீல மணித்திரண் மொய்த்த கருஞ்சுட ரம்மனைநின்
      கட்படை யாலடி யார்மல மோடல் கடுப்ப வெழுந்துலவ
முதிரொளி துற்ற செழும்பவ ளத்திரண் முற்றிய வம்மனையம்
      மும்மலம் வென்ற திறற்பிர தாப முளைத்தெழ லொத்தெழவெண்
மதிநிகர் முத்த நிரைத்து வனைந்தவம் மானைய தன்பிறகே
      வயங்கிய கீர்த்தி திரண்டெழு கின்றது மான வெழுந்துலவ
அதிர்வளை யங்கையி னாலமுதாம்பிகை யாடுக வம்மனையே
      அரந்தை துரந்து குளந்தை புரந்தவ ளாடுக வம்மனையே. (10)

அம்மானைப்பருவமுடிந்தது.
---------

நீராடற்பருவம்.

தேங்கிய செழுங்கலைத் திங்களுக் கருள்செய்த செல்வர்முடிமீதுதானுந் -
      திளைத்தாடு முரிமையாற் றிளைத்தாடு வோர்க்கெலாந் தீப்பிணிப் பவந்தெறுதலால்,
ஓங்கிய கவித்திரைக் கங்கையொன்றே நம்மை யொத்ததா மென்றதனொடும் -
      உறவாடல் வேட்டெழுந்தாலென்ன விண்ணத் துயர்ந்துடுக் கூட்டமலைமேற்,
றாங்கிய கிளைக்குலங் கான்றமணி யைத்தனது சாதியென வோகைகூரத்-
      தண்கதிர்க் கடவுளொடு செங்கதிரை யண்டத் தடஞ்சுவர்ப் பிடரினேற்றி,
வீங்கிய வொலிக்கூட்ட மீன்றுவரு பாலிநதி வெள்ளநீராடி யருளே
      வெறிநறாச் சோலைசூழ் தென்குளத் தூரம்மை வெள்ளநீ ராடியருளே. (1)

இருகவு ளுடைந்தூற்று பூங்கடாங் கமழ்முகத் தெறுழ்வலிக் குழூஉக்களிறெலாம்-
      எழிலிக் குழாத்திற் பெயர்ந்துழி தருஞ்சிகரி யிடமாதி நான்குமாற்றத்,
தருவள னடங்கத் தழீஇக்கொண்டு பின்னவை தளர்ந்துகலி கூராவகை-
      சாலவெதி ரொன்றுக் கனந்தமாப்பெருவளன் றண்டா தளித்து வரிசூழ்,
அருநில னிடத்தொருவர்தினையளவை யாற்றிடினு மருளினிலை பெறுவாழ்க்கையோ-
      டழியாத திருவுமெதி ராங்கவர்க் குதவுநின் னடியவரை யொத்து மாக்கள்,
வெருவியய லோடத் தழங்கிவரு பாலிநதி வெள்ளநீ ராடியருளே-
      வெறிநறாச் சோலைசூழ் தென்குளத் தூரம்மை வெள்ளநீ ராடியருளே. (2)

வளைத்தமுப் புரிசைத் தலத்தினின் றயில்கொண்டவாளிக்கு ழாமெழுதல்போல்-
      வயங்கிய பசும்பொற் றிரட்குவட் டினையும்வல வாளரித் திரளையுநெடுந,
துளைத்தகை முகக்கடாக் குஞ்சரத் தினையுஞ் சுழிக்குமச் சுழிமூன்றினுந் -
      துண்ணென வெழுந்தநெட் டுடல்வாளை தெய்வத் துறைப்புனற் கங்கைநதியிற்,
றிளைத்ததிற நோக்குவார்க் கிப்புனல் படிந்தாடு செய்தவப் பயனையிந்தத்-
      திண்பூத பரிணம தேகத்தி லுதவுமா தீர்த்தமிது வெனவியப்பு,
விளத்துவிண்ணாடும் பழிச்சவரு பாலிநதி வெள்ளநீ ராடியருளே-
      வெறிநறாச் சோலைசூழ் தென் குளத் தூரம்மை வெள்ளநீ ராடியருளே. (3)

திரைத்தொலி பரப்பியலை வீசும் பெருங்கடற் றீம்பயம் பருகியார்த்துச்-
      செல்லின மெழுந்துநெடு வான்படர்த லுந்தனது தீர்த்தம் படிந்தாடுநர்,
புரைத்தொகை விளைக்குமல மாயைகன் மக்குழாம் பொள்ளென விரிந்தோடலும்-
      புரையக் கருங்குழற் காட்டுமலர்கூரும் பொலஞ்சிறைத் தும்பிமுழுதும்,
இரைத்துமணி வானத்தெழுந்தோட நீராடு மேந்திளங் கொங்கைமடவார்-
      ஏறிட்ட மணியணிகள் சிந்திய கரைக்கணின் னிணையடி வருந்தாவகை,
விரைத்துணர் நிரம்பப் பரப்பிவரு பாலிநதி வெள்ளநீ ராடியருளே -
      வெறிநறாச் சோலைசூழ் தென்குளத் தூரம்மை வெள்ளநீ ராடியருளே. (4)

கொழுந்தாம மாடவது சுற்றுங் குழற்கற்றை கூட்டுவிட்டாடவதனிற்-
      குடிகொண்ட மாதர்ச் சுருப்பின முகேரனக் குரல்விளைத் தாடவதுசூழ்,
செழுந்தா துகுங்கஞ்ச வெள்ளனந் திரையூடு சேர்ந்தாட வதனருகுநின் -
      றிருமேனி கண்டின மெனப்பிணி முகக்குலஞ் சிறைவிரித் தாடவதுபோல்,
எழுந்தாடு தெய்வப் பிணாக்குழாங்கண்டுகண் டின்பநீ ராடவவர்தோள் -
      இணங்கும் பெரும்புலவர்கைகொட்டி யாடவெள் ளீர்ம்புனற் கங்கைபுவிமேல்,
விழுந்தாங்கொழுங்குகொண் டாடிவரு பாலிநதி வெள்ளநீ ராடியருளே-
      வெறிநறாச் சோலைசூழ் தென்குளத் தூரம்மை வெள்ளநீ ராடியருளே. (5)

வேறு.

ஏந்து பிறைவெண் மருப்புரற்கா லெழில்கூர் மலைவாரணத்திள்கள் -
      எய்திப் பரவை கலக்குமலை யேய்ப்பத் துளைந்து விளையாடி,
நீந்தி யணைந்து கரையேறி நிறையுங் களிப்பு மீக்கொண்டு -
      நிலாவெண் டரளக் குவைபெயர்த்து நீள்வா ரிதியின் கரைக்கணலை,
மாந்து முகிலா லியைச்சொரிந்தான் மானச் சிதறும் பரப்பினிடை -
      வான்மீ னடுவட் பலமதியம் வதிந்தா னிகர்ப்பச் சங்கினங்கள்,
போந்து துயிலும் பாலிநதிப் புதுநீ ராடி யருளுகவே -
      பொற்பார் குளந்தை யமுதவல்லி புதுநீ ராடி யருளுகவே. (6)

வழியுஞ் செழுந்தேங் கமலமலர் மடவா ரமிழ்தே புனலகத்து -
      மறைந்தால் யாங்க ணினைப்பிடிக்க வல்லே மெனவஞ் சினங்கூறச்,
சுழியும் புன்னீ யவ்வாறு துண்ணென் றொளிப்ப மற்றவர்தாந் -
      துருவிக் காணா தெங்கொழுநர் சோதிப் பிரான்றா டலையென்ன,
மொழியு முறுப்போ ரிரண்டையுமே முன்னிக் காணார் யாமிவளை -
      முழுதுங்காணே மெனநாணி முடிசாய்த் தொதுங்கி நிற்பவருள்,
பொழியும் பசியமுகில்பாலிப் புதுநீ ராடி யருளுகவே -
      பொற்பார் குளந்தை யமுதவல்லி புதுநீ ராடி யருளுகவே. (7)

திரையுந் தனது நறும்புனலிற் றிளைத்து முழுகு மடவார்தஞ் -
      செழுந்தேந் தொடையற் சுருப்பினங்கள் சேட்சென் றகலும் படிவிலக்கி,
உரையுந் தொழிலு முள்ளமுந்தன் னுழைச்சேர்த் தழுந்து வோர்மலநோய் -
      ஒருவுந் தொழிலைத் தெரித்திதழி யுறழப் பொன்னும் வெண்டலைபோல்,
நுரையுஞ் சடைபோற் றுவர்க்கொடியு நுணுகுமதிபோற் கரிக்கோடும் -
      நுடங்க நடித்து வெளுத்துமறை நுவலற்கரிய பரம்பொருளைப்,
புரையுஞ் செல்வப் பெரும்பாலிப் புதுநீ ராடி யருளுகவே -
      பொற்பார் குளந்தை யமுதவல்லி புதுநீராடி யருளுகவே. (8)

வேறு.

முகமல ரினையொளி யுகுமதி யாமென முண்டக நொந்தயர
      முன்கையி லேற்றிய சங்கொடு சங்க முழங்கிக் கரைபுரள
மகர விருங்குழை யெதிரிய கெண்டை மலங்கு கயற்குலம்வார்
      வாளை கலங்கி யெழுந்து குதிப்ப வயங்கு சுணங்கிலமென்
றகநெகு புற்புத முலையி னுடைந்திற வறல்குழல் போற்றகரம்
      அணிந்தில மெனநின தடியிற் றன்கவி னழியத் திருமருவிப்
புகழ்நிறை யுங்கம லாகரி பாலிப் புதுநீ ராடுகவே
      பூரண ஞான புராதனி பாலிப் புதுநீ ராடுகவே. (9)

விற்புரு வங்குழை யக்கரு நீல விழித்துணை செங்குவளை
      வெல்லநின் மேனி தழைப்ப முகேரென வீங்கிய நீர்குடையா
நிற்புகழ்தெய்வ மடந்தையர் மீதினி னீள்சிவி றித்துளையான்
      நிரைத்த குறுந்துளி தம்முட லெங்கு நிரத்தலும் வானவர்தங்
கற்புரை தோள்கள் புதைத்தன ராடக் கடவுள் சடாமகுடக்
      கங்கை யவன்றலை யைந்தொடு மாடக் காசினி கொண்டாடப்
பொற்பு மிகுங்கம லாகரி பாலிப் புதுநீ ராடுகவே
      பூரண ஞான புராதனி பாலிப் புதுநீ ராடுகவே. (10)

நீராடற்பருவமுடிந்தது.
---------

ஊசற்பருவம்.

ஒழுகொளி பரப்பிக் கதிர்த்தெழும் பரிதியை யொழுக்கித் திரட்டி யதுபோல்-
      உரகமுமிழ் செம்மணித் தூணிறுவி யதனும்ப ரொளிநிலாக் கான்றகலைகள்,
முழுதுநிறை திங்களை யுருட்டி நீட்டியதேய்ப்ப முதிர்வயிர விட்டமிட்டம்-
      முழுமதியி னின்றிழியு மமிழ்ததாரைகளென்ன முத்தணி வடங்கடூக்கிப்,
பழுதகலு நவமணிப் பலகையிடை மூட்டியப் பலகைமேன் மதியமிழ்துணப்-
      பச்சிளங் கிள்ளையொன் றேறினா லென்னப் பரிந்திருந் தருளி முலைமேற்,
புழுகொழுகவுயிர்களுக் கருளொழுகு மமுதம்மை பொன்னூச லாடியருளே-
      பூரண மதிக்கருள் புரிந்தகம லாகரீ பொன்னூச லாடியருளே. (1)

செயலைந் தாருவை யுதைந்தாடு தொறுமச் செழுந்தருப் பூக்கள் சொரியுஞ்-
      செயலுதைக் காற்றாது தனைநீங்க வெண்ணிநந் தேவைத் தணந்துவிளையாட்,
டியலைமேல் கொண்டநின் மீதலர்ப் பூம்பகழி யிளையாது சொரிவ தெனவும்-
      இதுகண் டதற்குநேர் விழிச்சுரும் பீந்தருளி யிளநிலா நகைமுகிழ்ப்ப,
அயலூறூஉங் கொடிமுல்லை யூழ்த்தலர் சொரிந்திட லருந்துணைமை பூண்டுதானும்-
      அலர்வாளி பெய்திடுந் திறனெனவு மேர்காட்ட வைம்படை பொறுத்த பச்சைப்,
புயலொடு பிறந்தருட் கடலொடு வளர்ந்தமின் பொன்னூச லாடியருளே -
      பூரண மதிக்கருள் புரிந்தகம லாகரீ பொன்னூச லாடியருளே. (2)

நிலம்பொலி யுயிர்ப்பயிர் மலக்கொடுந் தழல்வெம்மை நீத்துமெய்ஞ் ஞானமலரா-
      நின்மலா னந்தச் செழுங்கனி கனிந்தோங்க நிறையருட் சூல் கொண்டுபொற்,
கலம்பொலியு முருவெலாம் பச்சென்று தோற்றிக் கருங்குழற் கற்றை நாப்பட்-
      கதிர்த்தசிறு கீற்றினான் மின்னியொளி கூர்நுதற் கார்முகங் கவினவாங்கிச்,
சிலம்பொலிசெய் கிங்கிணிப் பருமத்தி னாற்பெருந் தீங்குர லெடுத் திடையறாத்-
      திருவருட் டாரைபொழி செய்கைக்கு வாய்ப்பவான் சேர்ந்துலாய் நிற்ற லுறழப்,
புலம்பொலியு மடியார்கள் சிந்தைகுடி கொண்டவள் பொன்னூச லாடியருளே-
      பூரண மதிக்கருள் புரிந்தகம லாகரீ பொன்னூச லாடியருளே. (3)

மனக்குல மிடைந்துபின் காட்டவிசை கொண்டாடும் வன்மையா னினதுருவெலாம்-
      மணித்திர ணிரைத்தெனச் சிறுவெயர்பொடித்தலும் வழிநின்று பணிகேட்டுநின்,
னனக்கவி னடைத்திறங் கற்கவரும் வெள்யானை யஞ்சிச் செவிக் காலெறிந்-
      தநதரக்கங்கையை மடுத்துத் துளித்துவெய ராற்றுமத் திவலை பரவா,
நினக்கடிமைபூண்டுமுன் போற்றுமிமை யோர்முத னெடுந்தருப் புல்லி றுதியின்-
      நிரத்தலா லனைத்துநின் மயமெனுஞ் செஞ்சொல்லை நிலையுறுத் திடுவதேய்ப்பப்,
புனக்கிளி நிகர்த்தமென் றீங்கிளவி யமுதம்மை பொன்னூச லாடியருளே-
      பூரண மதிக்கருள் புரிந்தகம லாகரீ பொன்னூசலாடியருளே. (4)

திங்களொளி காட்டுமுக மீதுலவு நாட்டச் செழுங்கயலுதைந் தூக்கலாற்-
      செம்பொனி னிழைத்தரமக ரக்குழைக ளுஞ் செவிச் செங்கனக வூசலாடப்,
பங்கய விருக்கைமட மாதரது நோக்கியிரு பாலுமிரு வேமாட் டவும்-
      பாயுங் கயற்குல மசைக்குமவ் வூசலிற் பாய்ந்திலதிவ் வூச லெனநீள்,
அங்கையின் வலித்துநனி யாட்டுதொறு நின்வா யரும்புநகை நில வெழிலினுக்-
      காங்கவர் முகத்திங்கள் சாயப்புராணமறை யாகம மளந் தறிவரும்,
புங்கவன் மருங்குகுடி கொண்டவமு தாம்பிகை பொன்னூச லாடி யருளே-
      பூரண மதிக்கருள் புரிந்தகம லாகரீ பொன்னூச லாடி யருளே. (5)

திண்ணிய பொலஞ்சிகரி வாங்கிய பிரான்சென்னி தெரிகலா மறையோதிமஞ்-
      செப்புபழி மொழிமாறு மாறுனக் கூர்தியாய்ச் சேர்ந்துநின் றாள்சுமந்து,
தண்ணிய நினாதுகண்ணருள்கிடைத் துன்னுழிச் சார்ந்திறைவ னூடறீரத்-
      தாள்பணியு மேல்வைமுடி கண்டுகொண் டுயர்கீர்த்தி தாங்குவா னெண்ணிவரலும்,
கண்ணியவவ் வஞ்சனை யறிந்ததனை யலமரக் காண்டுமென வுன்னியேறிக்-
      ககனத்து முன பின்ன தாகக் கடாவுதல் கடுப்பவெண் டரளமொய்த்துப்,
புண்ணிய மலர்ந்தனைய வொண்பலகை யேறிநீ பொன்னூச லாடியருளே-
      பூரண மதிக்கருள் புரிந்தகம லாகரீ பொன்னூச லாடியருளே. (6)

அரவமுமிழ் செம்மணித் திரள்சுற் றிழைத்திடை யலங்கொளிய நிலத்தால்-
      அமைத்தத னடுச்செழுஞ் செம்பட் டலங்கரித் தவிர்பலகை மீதிருத்தல்,
இரவகல வெங்கதி ருகும்பரிதி மண்டல மிளம்பனிக் கதிர்மண்டலம்-
      எரிக்கடவுண் மண்டலங் கீழ்தொட்டு முறைமூன்று மேய்ந்தபூந் தவிசிலடியார்,
பரவநீ நின்றநிலை யொப்பவா னந்தமெய்ப்பண்ணவன் விழிச்சுடர்கணின்-
      பாலணுகு காட்சியப் பரிசறிந் தெம்மையும் பரூஉமணித் தவிசெனக்கொள்,
புரவுபூண் டருளென்று வேண்டுதல் கடுப்பவுயர் பொன்னூச லாடியருளே-
      பூரண மதிக்கருள்புரிந்தகம லாகரீ பொன்னூச லாடியருளே (7)

சுத்தமு மசுத்தமு மெனப்படுங் கொடுமாயை தூணாக விருளாணவந்-
      தொடுத்தநெடு விட்டமாக் கருமப் பெரும்பகுதி தூக்கிய வடங்களாக,
வைத்தமா யேயமே பலவகையா முடிவிலா வான்புவன கோடிதூற்றும்-
      மகிழ்ந்தாடு வெளியாக வாருயிர்க் குழவிகளை மரணம் பிறப்பென்னுநோய்,
மொய்த்தமணி யூசல்வைத் தாட்டிக் கடைத்தலை முடங்கா தெடுத்தனைத்து-
      முதுகுறை வளித்துமேற் பரமுத்தி வீடுய்த்து மூவாத வானந்தமாம்,
புத்தமிழ் தருத்திமெய்த் தாயாய் வளர்ப்பவள் பொன்னூச லாடியருளே-
      பூரண மதிக்கருள் புரிந்தகம லாகரீ பொன்னூச லாடியருளே. (8)

நாந்தகப் பொருபடை விதிர்த்தனைய விமையாத நாட்டத் தரம்பைமாரும்-
      நளினக் கரங்கூப்பி யெதிர்நிற்கு முகில்வண்ண நாயகன் முதற்றேவரும்,
வேய்ந்தசெம் பொற்பெரும் பூண்களி னிழைத்தபல வேறுகுல மணிஈடொறுமவ்-
      விரிகதிர்ப் பேதத்தி னுக்கேற்ப நின்னூசன் மின்னிழல் பரப்புதோற்ற்ம்,
வாய்ந்தமெய்த் தொண்டுசெயு மன்பர்க ளுளந்தொறும் வயங்குபரி பாகபேத-
      மார்க்கத்தி னுக்கிசைய மன்னிநீ விளையாடும் வாய்மையைக் காட்டவளிவீழ்,
பூந்தகரவார்கருங் கூந்தலமு தாம்பிகை பொன்னூச லாடியருளே -
      பூரண மதிக்கருள் புரிந்தமக லாகரீ பொன்னூச லாடியருளே. (9)

அண்டப் பரப்பெங்கு மண்டிப் படர்ந்தபே ரானந்தவெள்ளம்வாழ -
      அருட்சரியை கிரியைசிவ யோகமொடு ஞானமெனு மதிகசிவ தருமம்வாழக்,
கண்டவர்க் கினியநஞ் சோமேசர் வாழநின் கட்கடைக்கருணைவாழக் -
      காசினி யொருங்குசிவ பத்திகுரு பத்திசங் கம்பத்தி செய்துவாழ,
வேண்டிருப் பூதியுய ரக்கமணி வாழமெய் விளைக்குமஞ் செழுத்துவாழ -
      வேதநெறி சைவநெறி வாழக் குளந்தைநகர் மேன்மேற் செழித்துவாழப்,
புண்டர நுதற்றொண்டர் தங்குழாம் வாழநீ பொன்னூச லாடியருளே -
      பூரண மதிக்கருள் புரிந்தகம லாகரீ பொன்னூச லாடியருளே. (10)

ஊசற்பருவமுடிந்தது.

ஆகப்பருவம் பத்துக்குச் செய்யுள் - 103

குளத்தூர்ப் பிள்ளைத்தமிழ் முடிந்தது.

மெய்கண்டதேவர் திருவடிவாழ்க.
சிவஞானயோகிகள் திருவடிவாழ்க.
-----------------------------------------------------------