Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராமாயணம் - அயோத்தியா காண்டம்
இரண்டாம் பகுதி, படலங்கள் 6 - 12

rAmAyaNam
of kampar /canto 2 (ayOtyA kanTam), part 2
(paTalams 6/12, verses 2016-2604)
In tamil script, unicode/utf-8 format
  Acknowledgements:
  Our Sincere thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany for
  providing us with a romanized transliterated version of this work and for permissions
  to publish the equivalent Tamil script version in Unicode encoding
  We also thank Mr. S. Govindarajan for proof-reading the Tamil script version
  Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

  © Project Madurai, 1998-2012.
  to preparation
  of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
  are
  http://www.projectmadurai.org/

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராமாயணம் - அயோத்தியா காண்டம்
(இரண்டாவது பகுதி) /படலங்கள் 6-12

2.6 . கங்கைப் படலம் 2016- 2087
2.7 . வனம்புகு படலம் 2088- 2134
2.8 . சித்திரகூடப் படலம் 2135 -2190
2.9 . பள்ளி படைப் படலம் 2191 -2331
2.10 . ஆறு செல் படலம் 2332 - 2390
2.11 . குகப்படலம் 2391 - 2462
2.12 . திருவடிசூட்டு படலம் 2463-2604


2.6 . கங்கைப் படலம் (2016- 2087 )

2016 இராமபிரான் சீதாபிராட்டியுடனும் இலக்குமணனுடனும் செல்லுதல்
வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறையப்
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான் ;
மையோ ! மரகதமோ ! மறிகடலோ ! மழை முகிலோ !
ஐயோ ! இவன் வடிவு என்பது ஒர் அழியா அழகு உடையான் .
2.6.1.
2017 பெருமானும் பிராட்டியும் நெறி இடை கண்ட காட்சி (2017-2023)
அளி அன்னது ஒர் அறல் துன்னிய
      குழலாள் , கடல் அமுதின்
தெளிவு அன்னது ஒர் மொழியாள் ,
      நிறை தவம் அன்னது ஒர் செயலாள் ,
வெளி அன்னது ஒர் இடையாளொடும்
      விடை அன்னது ஒர் நடையான்
களி அன்னமும் மட அன்னமும்
      உடன் ஆடுவ கண்டான் .
2.6.2
2018 அஞ்சு அம்பையும் ஐயன் தனது அலகு அம்பையும் அளவா
மஞ்சங்களை வெலல் ஆகிய நயனங்களை உடையாள் ,
துஞ்சும் களி வரி வண்டுகள் குழலின்படி சுழலக்
கஞ்சங்களை மஞ்சன் கழல் நகுகின்றது கண்டாள் .
2.6.3
2019 மா கந்தமும் மகரந்தமும் அளகம் தரும் மதியின்
பாகம் தரும் நுதலாளொடு பவளம் தரும் இதழான்
மேகம் தனி வருகின்றது மின்னோடு என மிளிர் பூண்
நாகம் தனி வருகின்றது பிடியோடு என நடவா .
2.6.4.
2020 தொளை கட்டிய கிளை முட்டிய சுருதிச் சுவை அமுதின்
கிளை கட்டிய கருவிக் கிளர் இசையின் பசை நறவின்
விளை கட்டியின் மதுரித்து எழு கிளவிக் கிளி விழி போல்
களை கட்டவர் தளை விட்டு எறி குவளைத் தொகை கண்டான் .
2.6.5.
2021 அருப்பு ஏந்திய கலசத் துணை , அமுது ஏந்திய மத மா
மருப்பு ஏந்திய எனலாம் முலை , மழை ஏந்திய குழலாள் ,
கருப்பேந்திரம் முதலாயின கண்டாள் ; இடர் காணாள் ;
பொருப்பு ஏந்திய தோளானொடு விளையாடினள் போனாள் .
2.6.6.
2022 பல் நந்து உகு தரளம் தொகு படர் பந்திகள் படு நீர் ,
அன்னம் துயில் வதி தண்டலை , அயல் நந்து உறை புளினம் ,
சின்னம் தரு மலர் சிந்திய செறி நந்தனவனம் , நன்
பொன் நந்திய நதி , கண்டு உளம் மகிழ்தந்தனர் போனார் .
2.6.7.
2023 கால் பாய்வன முது மேதிகள் , கதிர் மேய்வன கடை வாய்
பால் பாய்வன நறை பாய்வன மலர் வாய் அளி படரச்
சேல் பாய்வன கயல் பாய்வன செங்கால் மட அன்னம்
போல் பாய் புனல் மடவார் படி நெடு நாடு அவை போனார் .
2.6.8.
2024 இராமன் முதலியோர் கங்கைக்கரையை அடைதல்
பரிதி பற்றிய பல் பகல் முற்றினர் ,
மருத வைப்பின் வளம் கெழு நாடு ஒரீஇச்
சுருதி கற்று உயர் தோம் இலர் சுற்று உறும்
விரி திரைப் புனல் கங்கையை மேவினார் .
2.6.9.
2025 கங்கைக்கரையில் உள்ள தவச்செல்வர் இராமனைக் காண வருதல்
கங்கை என்னும் கடவுள் திரு நதி
தங்கி வைகும் தபோதனர் யாவரும் ,
'எங்கள் செல்கதி வந்தது ' என்று ஏம் உறா
அம் கண் நாயகற் காண வந்து அண்மினார் .
2.6.10.
2026 இராமனைக் கண்ட தவச்செல்வர் செயல் (2026-2029)
பெண்ணில் நோக்கும் சுவையில் , பிறர் தமக்கு
எண்ணின் நோக்கி , இயம்பரும் இன்பத்தைப்
பண்ணின் நோக்கும் பர அமுதைப் பசும்
கண்ணின் நோக்கினார் , உள்ளம் களிக்கின்றார் .
2.6.11.
2027 எதிர் கொடு ஏத்தினர் , இன் இசை பாடினர் ,
வெதிர் கொள் கோலினர் , ஆடினர் , வீரனைக்
கதிர் கொள் தாமரைக் கண்ணனைக் கண்ணினால்
மதுர வாரி அமுது என மாந்துவார் .
2.6.12.
2028 மனையின் நீங்கிய மக்களை வைகலும்
நினையும் நெஞ்சினர் , கண்டிலர் , நேடுவார் ,
அனையர் வந்து உற ஆண்டு எதிர்ந்தார்கள் போல்
இனிய மா தவப் பள்ளி கொண்டு எய்தினார் .
2.6.13.
2029 பொழியும் கண்ணீர்ப் புதுப் புனல் ஆட்டினர் ,
மொழியும் இன் சொலின் மொய்ம் மலர் சூட்டினர் ,
அழிவு இல் அன்பு எனும் ஆர் அமுது ஊட்டினர் ,
வழியின் வந்த வருத்தத்தை வீட்டினர் .
2.6.14.
2030 தவச்செல்வர் இராமனை நீராடி அமுதுசெய்க எனல்
காயும் கானில் கிழங்கும் கனிகளும்
தூய தேடிக் கொணர்ந்தனர் ; 'தோன்றல் ! நீ
ஆய கங்கை அரும் புனல் ஆடினை ,
தீயை ஓம்பினை , செய் அமுது ' என்றனர் .
2.6.15.
2031 இராமன் சீதாபிராட்டியுடன் நீராடுதல்
மங்கையர்க்கு விளக்கு அன்ன மாதையும்
செங்கை பற்றினன் , தேவரும் துன்பு அறப்
பங்கயம் அத்து அயன் பண்டு தன் பாதத்தின்
அம் கையின் தரும் கங்கையின் ஆடினான் .
2.6.16.
2032 கங்கை இராமனைப் போற்றுதல்
கன்னி நீக்க அரும் கங்கையும் கைதொழாப்
'பன்னி நீக்கரும் பாதகம் பார் உளோர்
என்னின் நீக்குவர் , யானும் இன்று என் தந்த
உன்னின் நீக்கினென் உய்ந்தனென் ஆம் ' என்றாள் .
2.6.17.
2033 கங்கையில் நீராடிய இராமன் தோற்றம் (2033-2034)
வெம் கண் நாகக் கரத்தினன் , வெள் நிறக்
கங்கை வார் சடைக் கற்றையன் , கற்பு உடை
மங்கை காண நின்று ஆடுகின்றான் , வகிர்த்
திங்கள் சூடிய செல்வனில் தோன்றினான் .
2.6.18.
2034 தள்ளும் நீர்ப் பெருங் கங்கைத் தரங்கத்தான் ,
வள்ளி நுண் இடை மா மலராளொடும்
வெள்ளி வெள் நிறப் பாற்கடல் மேலை நாள்
பள்ளி நீங்கிய பான்மையில் தோன்றினான் .
2.6.19.
2035 சீதாபிராட்டி கங்கையில் நீராடுதல் (2035-2038)
வஞ்சி நாணி வணங்க , மட நடைக்கு
அஞ்சி அன்னம் ஒதுங்க , அடிக்கு மென்
கஞ்சம் நீரில் ஒளிப்பக் கயல் புகப்
பஞ்சி மெல் அடிப் பாவையும் ஆடினாள் .
2.6.20.
2036 சீதாபிராட்டிகூந்தலின் நறுமணம் கங்கை கமழ்தல்
தேவர்தேவன் செறி சடைக் கற்றையுள்
கோவை மாலை எருக்கு ஒடு கொன்றையின்
பூவும் நாறலள் , பூ குழல் கற்றையின்
நாவி நாள் மலர் கங்கையும் நாறினாள் .
2.6.21.
2037 நுரைக் கொழுந்து எழுந்து ஓங்கி நுடங்கலால்
நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி ,
உரைத்த சீதை தனிமையை உன்னுவாள் ,
திரைக் கை நீட்டிச் செவிலியின் ஆட்டினாள் .
2.6.22.
2038 சீதையின் குழற்கற்றை கங்கைநீரிடைத் தாழ்ந்து குழைந்த காட்சி
மங்கை வார் குழல் கற்றை மழைக் குலம்
தங்கும் நீரிடைத் தாழ்ந்து குழைப்பன ,
கங்கையாற்றுடன் ஆடும் கரியவள்
பொங்கும் நீர் சுழி போவன போன்றவே .
2.6.23.
2039 சீதை பாற்கடலிடைத் தோன்றிய திருமகள்போல விளங்குதல்
சுழி பட்டு ஓங்கிய தூங்கு ஒலி ஆற்றுத் தன்
விழியில் சேல் உகள் வால் நிற வெள்ளத்து
முழுகித் தோன்றுகின்றாள் , முதல் பால் கடல்
அழுவத்து அன்று எழுவாள் என ஆயினாள் .
2.6.24.
2040 கங்கையின் பேறு
செய்ய தாமரைத் தாள் பண்டு தீண்டலால்
வெய்ய பாதகம் தீர்த்து விளங்கினாள் ;
ஐயன் மேனி எலாம் அளைந்தாள் ; இனி
வையம் மா நரகத்திடை வைகுமோ ?
2.6.25.
2041 இராமன் முனிவர் விருந்தினனாதல்
துறை நறும் புனல் ஆடிச் சுருதியோர்
உறையுள் எய்தி , உணர்வு உடையோர் உணர்
இறைவற் கைதொழுது , ஏந்து எரி ஓம்பிப் பின்
அறிஞர் காதற்கு அமை விருந்தாயினான் .
2.6.26.
2042 இராமன் முனிவர்சாலையில் விருந்துண்டு மகிழ்தல்
வருந்தித் தான் தர வந்த அமுதையும்
'அருந்தும் நீர் ' என்று அமரரை ஊட்டினான் ,
விருந்து மெல் அடகு உண்டு விளங்கினான் ;
திருந்தினார் வயின் செய்தன தேயுமோ ?
2.6.27.
2043 குகன் இயல்பு (2043-2050)
ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு
நாயகன் , போர்க் குகன் எனும் நாமத்தான் ,
தூய கங்கைத் துறை விடும் தொன்மையான் ,
காயும் வில்லினன் கல் திரள் தோளினான் .
2.6.28.
2044 துடியன் , நாயினன் , தோல் செருப்பு ஆர்த்த பேர்
அடியன் , அல் செறிந்த அன்ன நிறத்தினான் ,
நெடிய தானை நெருக்கினன் , நீர் முகில்
இடியினோடு எழுந்தால் அன்ன ஈட்டினான் .
2.6.29.
2045 கொம்பு துத்தரி கோடு அதிர் பேரிகை
பம்பை பம்பு படையினன் , பல்லவம் அத்து
அம்பன் , அம்பிக்கு நாதன் , அழிகவுள்
தும்பி ஈட்டம் புரை கிளை சுற்றினான் .
2.6.30.
2046 காழம் இட்ட குறங்கினன் , கங்கையின்
ஆழம் இட்ட நெடுமையினான் , அரை
தாழ விட்ட செம் தோலன் , தயங்குறச்
சூழ விட்ட தொடு புலி வாலினான் .
2.6.31.
2047 பல் தொடுத்த அன்ன பல்கு கவடியன் ,
கல் தொடுத்தன்ன போலும் கழலினன் ,
அல் தொடுத்தன்ன குஞ்சியன் , ஆளியின்
நெற்றெடு ஒத்து நெரி புருவத்தினான் .
2.6.32.
2048 பெண்ணை வன் செறும்பில் பிறங்கிச் செறி
வண்ண வன் மயிர் வார்ந்து உயர் முன்கையான் ,
கண் அகன் தட மார்பு எனும் கல்லினன்
எண்ணெய் உண்ட இருள் புரை மேனியான் .
2.6.33.
2049 கச்சொடு ஆர்த்த கறைக் கதிர் வாளினன் ,
நச்சு அராவின் நடுக்கு உறும் நோக்கினன் ,
பிச்சர் ஆம் அன்ன பேச்சினன் , இந்திரன்
வச்சிராயுதம் போலும் மருங்கினான் .
2.6.34.
2050 ஊற்று மொய் நறவு ஊனொடு மீன் நுகர்
நாற்றம் மேய நகை இல் முகத்தினான் ,
சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான் ,
கூற்றம் அஞ்சக் குமிறும் குரலினான் .
2.6.35.
2051 குகன் இராமனைக் காண வருதல் (2051-2052)
சிருங்கிபேரம் எனத் திரைக் கங்கையின்
மருங்கு தோன்றும் நகர் உறை வாழ்க்கையன் ,
ஒருங்கு தேனொடு மீன் உபகாரத்தன் ,
இருந்த வள்ளலைக் காண வந்து எய்தினான் .
2.6.36.
2052 சுற்றம் அப்புறம் நிற்கச் சுடு கணை
வில் துறந்து , அரை வீக்கிய வாள் ஒழித்து ,
அற்றம் நீத்த மனத்தினன் , அன்பினன் ,
நல் தவப் பள்ளி வாயிலை நண்ணினான் .
2.6.37.
2053 குகன் இலக்குவனிடம் தன்னை அறிவித்தல்
கூவா முன்னம் இளையோன் குறுகி , 'நீ
ஆவான் யார் ? ' என , அன்பின் இறைஞ்சினான் ,
'தேவா ! நின் கழல் சேவிக்க வந்தனென் ,
நாவாய் வேட்டுவன் நாய் அடியேன் ' என்றான் .
2.6.38.
2054 இலக்குவன் இராமனிடம் குகன்வரவு கூறுதல்
'நிற்றி ஈண்டு ' என்று புக்கு ,
        நெடியவன் தொழுது , தம்பி ,
'கொற்றவ ! நின்னைக் காணக்
        குறுகினன் ; நிமிர்ந்த கூட்டச்
சுற்றமும் தானும் , உள்ளம்
        தூயவன் , தாயின் நல்லன் ,
எற்றும் நீர்க் கங்கை நாவாய்க்கு
        இறை , குகன் , ஒருவன் ' என்றான் .
2.6.39.
2055 குகன் இராமனைக் கண்டு மனமுருகுதல்
அண்ணலும் விரும்பி , 'என்பால்
        அழைத்தி நீ அவனை ' என்னப்
பண்ணவன் 'வருக ' என்றான் ;
        பரிவினன் விரைவிற் புக்கான் ;
கண்ணனைக் கண்ணின் நோக்கிக்
        கனிந்தனன் ; இருண்ட குஞ்சி
மண் உறப் பணிந்து , மேனி
        வளைந்து , வாய் புதைத்து நின்றான் .
2.6.40.
2056 குகன் கையுறை யேற்குமாறு இராமனை வேண்டுதல்
'இருத்தி நீ ' என்னலோடும்
        இருந்திலன் ; எல்லை நீத்த
அருத்தியன் , 'தேனும் மீனும்
        அமுதினுக்கு அமைந்த ஆகத்
திருத்தினென் , கொணர்ந்தேன் ; என் கொல்
        திரு உளம் ' ? என்ன , வீரன் ,
விருத்த மாதவரை நோக்கி
முறுவலன் , விளம்பலுற்றான் .
2.6.41.
2057 குகன் கையுறையை இராமன் பாராட்டுதல்
'அரிய , தாம் உவப்ப , உள்ளத்து
        அன்பினால் அமைந்த , காதல்
தெரிதரக் கொணர்ந்த , என்றால்
        அமுதினும் சீர்த்த ! அன்றே
பரிவினில் தழீஇய என்னில் ,
        பவித்திரம் ; எம் அனோர்க்கும்
உரியன ; இனிதின் நாமும்
        உண்டனெம் ; அன்றே ' என்றான் .
2.6.42.
2058 கங்கை கடக்க நாவாயொடு வழிநாள் வருமாறு குகனிடம் இராமன் கூறுதல்
சிங்க ஏறு அனைய வீரன் ,
        பின்னரும் செப்புவான் , 'யாம்
இங்கு உறைந்து , எறி நீர்க் கங்கை
        ஏறுதும் நாளை ; யாணர்ப்
பொங்கும் நின் சுற்றத்தோடும்
        போய் , உவந்து , இனிது உன் ஊரில்
தங்கி , நீ நாவாயோடும்
        சாருதி விடியல் ' என்றான் .
2.6.43.
2059 குகன் வேண்டுகோள்
கார் குலாம் நிறத்தான் கூறக்
        காதலன் உணர்த்துவான் , 'இப்
பார் குலாம் செல்வ ! நின்னை
        இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வனேன் யான் ,
        இன்னலின் இருக்கை நோக்கித்
தீர்கிலேன் ; ஆனது , ஐய !
        செய்குவென் அடிமை ' என்றான் .
2.6.44.
2060 குகன் கருதறிந்த இராமன் கூறுதல்
கோதை வில் குரிசில் அன்னான் கூறிய கொள்கை கேட்டான் ,
சீதையை நோக்கித் தம்பி திரு முகம் நோக்கித் 'தீராக்
காதலன் ஆகும் ' என்று கருணையின் மலர்ந்த கண்ணன் ,
'யாதினும் இனிய நண்ப ! இருத்தி ஈண்டு எம்மொடு ' என்றான் .
2.6.45.
2061 திருநகர் தீர்ந்த செய்தியறிந்து குகன் வருந்தல்
திரு நகர் தீர்ந்த வண்ணம் ,
        மாணவ ! தெரித்தி ! என்னப்
பருவரல் தம்பி கூறப்
        பரிந்தவன் பையுள் எய்தி ,
இரு கண் நீர் அருவி சோரக்
        குகனும் ஆண்டு இருந்தான் ; 'என்னே !
பெரு நிலக் கிழத்தி நோற்றும்
        பெற்றிலள் போலும் ' என்னா .
2.6.46
2062 கதிரவன் மறைதல்
விரி இருள் பகையை ஓட்டித்
        திசைகளை வென்று , மேல் நின்று ,
ஒரு தனித் திகிரி உந்தி ,
        உயர் புகழ் நிறுவி , நாளும்
இரு நிலத்து எவர்க்கும் உள்ளத்து
        இருந்து அருள் புரிந்து வீந்த
செரு வலி வீரன் என்னச்
        செம் கதிர் செல்வன் சென்றான் .
2.6.47.
2063 சீதாபிராட்டியும் இராமனும் தருப்பைப்புல்லில் உறங்க இலக்குவன் காத்து நிற்றல்
மாலை வாய் நியமம் செய்து , மரபுளி இயற்றி , வைகல்
வேலை வாய் அமிர்து அன்னாளும் வீரனும் விரித்த நாணல்
மாலைவாய்ப் பாரின் பாயல் வைகினர் , வரி வில் ஏந்திக்
காலை வாய் அளவும் தம்பி இமைப்பிலன் காத்து நின்றான் .
2.6.48.
2064 குகன் இராமலக்குவர்களை நோக்கி வருந்திநிற்றல்
தும்பியின் குழாத்தில் சுற்றும்
        சுற்றத்தன் , தொடுத்த வில்லன் ,
வெம்பி வெந்து அழியாநின்ற
        நெஞ்சினன் , விழித்த கண்ணன் ,
தம்பி நின்றானை நோக்கித்
        தலை மகன் தனிமை நோக்கி
அம்பியின் தலைவன் கண்ணீர்
        அருவி சோர் குன்றில் நின்றான் .
2.6.49.
2065 கதிரவன் தோற்றம்
துறக்கமே முதல ஆய
        தூயன யாவையேனும்
மறக்குமா நினையல் ; அம்மா !
        'வரம்பு இல தோற்றும் மாக்கள்
இறக்கும் ஆறு இது ' என்பான்போல்
        முன்னை நாள் இறந்தான் , பின்னாள்
'பிறக்கும் ஆறு இது ' என்பான்போல்
        பிறந்தனன் பிறவா வெய்யோன் .
2.6.50.
2066 கதிரவன் தோன்றும் காலை நிகழ்ச்சி
செம் செவ்வே சேற்றில் தோன்றும்
        தாமரை , தேரில் தோன்றும்
வெம் சுடர்ச் செல்வன் மேனி
        நோக்கின விரிந்த ; வேறு ஒர்
அஞ்சன ஞாயிறு அன்ன
        ஐயனை நோக்கிச் செய்ய
வஞ்சி வாழ் வதனம் என்னும்
        தாமரை மலர்ந்தது அன்று ஏ .
2.6.51.
2067 இராமன் குகனை விரைவில் நாவாய் கொணர்க எனல்
நாள் முதற்கு அமைந்த யாவும்
        நயந்தனன் இயற்றி , நாமத்
தோள் முதற்கு அமைந்த வில்லான் ,
        மறையவர் தொடரப் போனான் ,
ஆள் முதற்கு அமைந்த கேண்மை
        அன்பனை நோக்கி , 'ஐய !
கோள் முதற்கு அமைந்த நாவாய்
        கொணருதி விரைவின் ; என்றான் .
2.6.52.
2068 இராமனிடம் குகன் வேண்டுகோள் (2068-2072)
ஏவிய மொழி கேளா , இழி புனல் பொழி கண்ணான் ,
ஆவியும் உலைகின்றான் , அடியிணை பிரிகல்லான் ,
காவியின்மலர் காயா கடல் மழை அனையானைத்
தேவியொடு அடிதாழாச் சிந்தனை உரை செய்வான் .
2.6.53.
2069 'பொய்ம் முறை இலர் , ஆல் எம் புகலிடம் வனமே , ஆல்
கொய்ம் முறை உறு தாராய் ! குறைவு இலெம் ; வலியேம் ; ஆல்
செய்ம் முறை குறு ஏவல் செய்குதும் ; அடியோமை
இம்முறை உறவு என்னா இனிது இரு , நெடிது எம் ஊர் .
2.6.54.
2070 'தேன் உள , தினை உண்டு , ஆல் தேவரும் நுகர்தற்கு ஆம்
ஊன் உள , துணை நாயோம் உயிர் உள , விளையாடக்
கான் உள , புனல் ஆட கங்கையும் உளது , அன்று ஓ
நான் உள தனையும் நீ இனிது இரு ; நாட , எம்பால் ' .
2.6.55.
2071 'தோல் உள துகில் போலும் , சுவை உள தொடர் மஞ்சம்
போல் உள பரண் , வைகும் புரை உள , கடிது ஓடும்
கால் உள , சிலை பூணும் கை உள , கலி வானின்
மேல் உள பொருளேனும் விரைவொடு கொணர்வேம் ஆல் .
2.6.56.
2072 'ஐயிருபத்தோடு ஐந்தாயிரர் உளர் ஆணை
செய்குநர் , சிலை வேடர் , தேவரின் வலியார் , ஆல்
உய்குதும் அடியோம் , எம் குடில் இடை ஒருநாள் நீ
வைகுதி எனின் , மேல் ஒர் வாழ்வு இலை பிறிது ' என்றான் .
2.6.57.
2073 குகனிடம் இராமன் கூறுதல்
அண்ணலும் அது கேளா அகம் நிறை அருள் மிக்கான் ,
வெள் நிற நகை செய்தான் , 'வீர ! நின் உழை யாம் அப்
புண்ணிய நதி ஆடிப் புனிதரை வழிபாடு உற்று
எண்ணிய சில நாளில் குறுகுதும் ; இனிது ' என்றான் .
2.6.58.
2074 குகன் கொணர்ந்த ஓடத்தில் இராமன் முதலியோர் ஏறுதல்
சிந்தனை உணர்கிற்பான் , சென்றனன் , விரைவோடு
தந்தனன் நெடுநாவாய் ; தாமரை நயனத்தான்
அந்தணர் தமை எல்லாம் 'அருளுதிர் விடை ' என்னா ,
இந்துவின் நுதலாளோடு இளவலொடு இனிது ஏறா .
2.6.59.
2075 இராமன் குகன் நாவாயில் கங்கை கடத்தல் (2075-2077)
'விடுநதி கடிது ' என்றான் ; மெய் உயிர் அனையானும்
முடுகினன் நெடு நாவாய் ; முரி திரை நெடு நீர் வாய்
கடிதினின் மட அன்னக் கதி அது செல , நின்றார்
இடர் உற , மறையோரும் எரி உறும் மெழுகு ஆனார் .
2.6.60.
2076 பால் உடை மொழியாளும் பகலவன் அனையானும்
சேல் உடை நெடு நல் நீர் சிந்தினர் விளையாடத்
தோல் உடை நிமிர் கோலில் துழவிட , எழும் நாவாய்
கால் உடை நெடு ஞெண்டில் சென்றது கடிது ; அம்மா !
2.6.61.
2077 ஓடம் கங்கையின் தென்கரை சேர்தல்
சாந்து அணி புளினத்தின் தடம் முலை உயர் கங்கை
காந்து இன மணி மின்னக் கடி கமழ் கமலத்தில்
சேந்து ஒளி விரியும் தெள் திரை எனும் நிமிர் கையால்
ஏந்தினள் ஒரு தானே ஏற்றினள் இனிது அப்பால் .
2.6.62.
20786 இராமன் குகனிடம் சித்திரகூடத்துக்குச் செல்லும் நெறி வினவுதல்
அ திசை உற்று , ஐயன் , அன்பனை முகம் நோக்கிச்
'சித்திரகூடத்தில் செல் நெறி பகர் ' என்னப்
பத்தியின் உயிர் ஈயும் பரிவினன் அடி தாழா ,
'உத்தம ! அடி நாயேன் ஓதுவது உளது ' என்றான் .
2.6.63.
2079 தன்னை உடனழைத்துச் செல்லுமாறு இராமனிடம் குகன் வேண்டுதல் (2079-2082)
'நெறி இடுநெறி வல்லேன் ; நேடினென் வழுவாமல்
நறியன கனி காயும் நறவு இவை தரவல்லேன் ;
உறைவிடம் அமைவிப்பேன் ; ஒரு நொடிவரை உம்மைப்
பிறிகிலென் ; உடன் ஏகப் பெறுகுவென் எனில் , நாயேன் . '
2.6.64.
2080 'தீயன அவை யாவும் திசைதிசை செல நூறித்
தூயன உறை கானம் துருவினென் வர வல்லேன் ,
மேயின பொருள் நாடித் தருகுவென் , வினைமற்றும்
ஏயின செய வல்லேன் , இருளினும் நெறி செல்வேன் . '
2.6.65.
2081 'கல்லுவென் மலை மேலும் கவலையின் முதல் யாவும் ,
செல்லுவென் நெறி தூரம் , செறி புனல் தரவல்லேன் ,
வில்லினம் உளென் , ஒன்றும் வெருவலென் , இருபோதும்
மல்லினும் உயர் தோளாய் ! மலர் அடி பிரியேன் ஆல் .
2.6.66.
2082 'திருவுளம் எனின் , மற்று என் சேனையும் உடனே கொண்டு
ஒருவலென் ஒரு போதும் உறைகுவென் ; உளர் ஆனார்
மருவலர் எனின் , முன்னே மாள்குவென் ; மிகை அல்லேன் ;
பொரு அரு மணி மார்பா ! போதுவென் உடன் ' என்றான் .
2.6.67.
2083 குகனை நோக்கி இராமன் கூறுதல் (2083-2086)
அன்னவன் உரை கேளா , அமலனும் உரை நேர்வான் ,
என் உயிர் அனையாய் நீ ; இளவல் உன் இளையான் ; இந்
நல் நுதலவள் நின் கேள் ; நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது ; நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன் '
2.6.68.
2084 'துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது ; அது அன்றிப்
'பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது ' என உன்னேல் ;
முன்பு உளெம் ஒரு நால்வேம் , முடிவு உளது என உன்னா
அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம் . '
2.6.69.
2085 'படர் உற உளன் உம்பி கான் உறை பகல் எல்லாம் ;
இடர் உறு தகையாயோ ? யான் என உரியாய் நீ ;
சுடர் உறு வடி வேலாய் ! சொல் முறை கடவேன் , நான்
வடதிசை வரும் அ நாள் நின் உழை வருகின்றேன் . '
2.6.70.
2086 'அங்கு உள கிளை காவற்கு அமைதியின் உளன் உம்பி ;
இங்கு உள கிளை காவற்கு யார் உளர் ? உரைசெய்யாய் ;
உன் கிளை எனது அன்றோ ? உறு துயர் உறல் ஆமோ ?
என் கிளை இது கா என் ஏவலின் இனிது ' என்றான் .
2.6.71.
2087 குகன் விடைபெறுதலும் இராமன் முதலியோர் கானகத்துப் புகுதலும்
பணிமொழி கடவாதான் , பருவரல் இகவாதான் ,
பிணி உடையவன் என்னும் பேதினன் , விடை கொண்டான் ;
அணி இழை மயிலோடும் , ஐயனும் , இளையோனும் ,
திணி மரம் நிறை கானில் சேண் உறும் நெறி சென்றார் .
2.6.72.
-------------------------------


2.7 . வனம்புகு படலம் (2088- 2134)

2088 இராமன் வனம்புக்க காலநிலை
பூரியர் புணர் மாதர் பொது மனம் என , மன்னும்
ஈரமும் உளது இல் என்று அறிவு அரும் இளவேனில் ,
ஆரியன் வரலோடும் , அமுது அளவிய சீதக்
கார் உறு குறி வானம் காட்டியது அவண் எங்கும் .
2.7.1.
2089 இராமன் சென்ற வழியின் இயல்பு
வெயில் இளம் நிலவே போல் விரி கதிர் இடை வீசப்
பயில் மரம் நிழல் ஈனப் பனி புரை துளி மேகம்
புயல் தர , இள மென் கால் பூ ! அளவியது எய்த ,
மயில் இனம் நடம் ஆடும் வழி இனியன போனார்
2.7.2.
2090 இராமன் சீதாபிராட்டிக்கு வழியிடைக் காட்சி மகிழ்ந்து காட்டல் (2090-2105)
'மன்றலின் மலி கோதை மயில் இயல் மடம் மான் ஏ !
இன் துயில் வதி கோபம் அத்து இனம் விரவின எங்கும்
கொன்றைகள் சொரி போதின் குப்பைகள் , குலம் மாலைப்
பொன் திணி மணி மானப் பொலிவன பல காணாய் . '
2.7.3.
2091 'பாண் இனம் ஞிமிறு ஆகப் படும் மழை பணை ஆக ,
நாணின தொகு பீலி கோலின நடம் ஆடல் ,
பூண் இயல் ! நின சாயல் பொலிவது , பல கண்ணில்
காணிய எனல் ஆகும் களி மயில் இவை காணாய் . '
2.7.4.
2092 'சேந்து ஒளி விரி செம் வாய் பசுமை கிளி செறி கோலக்
காந்தளின் மலர் ஏறிக் கோதுவ , கவின் ஆரும்
மா தளிர் நறும் மேனி மங்கை ! நின் மணி முன்கை
எந்தின எனல் ஆகும் இயல்பின இவை காணாய் !
2.7.5.
2093 'நெய்ஞ் ஞிறை நெடு வேலின் நிறம் உறு திறம் முற்றிக்
கைஞ் ஞிறை நிமிர் கண்ணாய் ! கருதின இனம் என்றே
மெய்ஞ் ஞிறை விரி சாயல் கண்டு நின் விழி கண்டு
மஞ்ஞையும் மடம் மானும் வருவன இவை காணாய் . '
2.7.6.
2094 'பூவலர் குரவோடும் புடை தவழ் பிடவு ஈனும்
மா அலர் சொரி சூழல் துயில் எழும் மயில் ஒன்றின்
தூவி இன் மணம் நாறத் துணை பிரி பெடைதான் , அச்
சேவலொடு உற ஊடித் திரிவதன் இயல் காணாய் . '
2.7.7.
2095 'அருந்ததி அனையாளே ! அமுதினும் இனியாளே !
செருந்தியின் மலர் தாங்கும் செறி இதழின் அசோகம் ,
பொருந்திய களி வண்டில் பொதிவன , பொன் ஊதும்
இருந்தையின் எழு தீ ஒத்து எழுவது ஒர் இயல் பாராய் . '
2.7.8.
2096 'ஏந்து இளம் முலையாளே ! எழுதரும் எழிலாளே !
காந்தளின் முகை கண்ணில் கண்டு , ஒரு களி மஞ்ஞை ,
'பாந்தள் இது ' என உன்னிக் கவ்வியபடி பாராத் ,
தேம் தளவுகள் செய்யும் சிறு குறு நகை காணாய் . '
2.7.9.
2097 'குன்று உறை வயம் மாவின் குருளையும் இருள் சிந்திப்
பின்றின எனல் ஆகும் பிடி தரு சிறு மாவும்
அன்று அல பிரிவு ஒல்லா அண்டர்தம் மனை ஆவின்
கன்று ஒடு விளையாடும் களியன பல காணாய் . '
2.7.10.
2098 'அகில் புரை குழல் மாதே ! அணி இழை எனல் ஆகும்
நகும் மலர் நிறை மாலைக் கொம்புகள் , நதி தோறும்
துகில் புரை நுரை நீரில் தோய்வன , துறை ஆடும்
முகிழ் இள முலையாரில் மூழ்குவ பல காணாய் . '
2.7.11.
2099 'முற்றுறும் முகை கிண்டி முரல்கில சிறு தும்பி ,
வில் திரு நுதல் மாதே ! அம் மலர் விரி கோங்கின்
சுற்று உறும் மலர் ஏறித் துயில்வன சுடர் மின்னும்
பொன் தகடு உறும் நீலம் புரைவன பல காணாய் . '
2.7.12.
2100 'கூடிய நறை வாயில் கொண்டன , விழிகொள்ளா
மூடிய களி மன்னும் முடுகின , நெறி காணா ,
ஆடிய சிறை மா வண்டு அந்தரின் இசை முன்னம்
பாடிய பெடை கண்ணா வருவன , பல காணாய் . '
2.7.13.
2101 'கன்னியர் அணி கோலம் கற்று அறிகுநர் என்னப்
பொன் அணி நற வேங்கை கோங்குகள் புது மென் பூ ,
அன்னம் மெல் நடையாய் ! நின் அளி வளர் அளகப் பூம்
சின்ன நல் மலர் மானச் சிந்துவ பல காணாய் . '
2.7.14.
2102 'மணம் கிளர் மலர் வாரும் மாருதம் வர , வாசக்
கணம் கிளர்தரு சுண்ணம் கல் இடையன கானம் அத்து ,
அணங்கினும் இனியாய் ! உன் அணி வடம் முலை முன்றில்
சுணங்கு இனம் அவை மானத் துறுவன பல காணாய் . '
2.7.15.
2103 'அடி இணை பொறை கல்லா என்று கொல் , அதர் எங்கும் ,
இடையிடை மலர் சிந்தும் இனம் மரம் இவை காணாய் !
கொடியினொடு இள வாசக் கொம்புகள் , குயிலே ! உன்
துடி புரை இடை மானத் துவள்வன இவை காணாய் ! '
2.7.16.
2104 'வாள் புரை விழியாய் ! உன் மலர் அடி அணி மானத்
தாள் புரை தளிர் வைகும் தகை ஞிமிறு இவை காணாய் !
கோள் புரை இருள் வாசக் குழல் புரை மழை காணாய் !
தோள் புரை இளம் வேயின் தொகுதிகள் இவை காணாய் !
2.7.17.
2105 'பூ நனை சினை துன்றிப் புள் இடையிடை பம்பி ,
நால் நிற நளிர் வல்லி கொடி நவை இல பல்கி ,
மான் இனம் மயில் , மாலைக் குயில் இனம் வதி கானம் ,
தீ நிகர் தொழில் ஆடைத் திரை பொருவன பாராய் ! '
2.7.18.
2106 சூரியாத்தமனம்
என்று , நல் மடவாளோடு இனிதினின் விளையாடிப்
பொன் திணி திரள் தோளான் போயினன் நெறி ; போதும்
சென்றது குடபால் ; அ திரு மலை இது அன்று ஓ ?
என்றனன் , வினை வென்றோர் மேவு இடம் எனலோடும்
2.7.19.
2107 பரத்துவாச முனிவன் இராமனை எதிர்கொள்ளல்
அருத்தியன் அகம் விம்மும் அன்பினன் , 'நெடும் நாளில்
திருத்திய வினை முற்றிற்று இன்று ' எனல் தெரிகின்றான் ,
பரத்துவன் எனும் நாமப் பரம் முனி பவம் நோயின்
மருத்துவன் அனையானை வரவு எதிர்கொள வந்தான் .
2.7.20
2108 பரத்துவாச முனிவன் இயல்பு (2108-2109)
குடையினன் , நிமிர் கோலன் , குண்டிகையினன் , மூரிச்
சடையினன் , உரி மானின் சருமன் , நல் மரம் நாரின்
உடையினன் , மயிர் நாலும் உருவினன் , உயிர் பேணும்
நடையினன் , மறை நாலும் நடம் நவில்தரு நாவான் .
2.7.21
2109 செம் தழல் புரி செல்வன் , திசை முக முனி செவ்வே
தந்தன உயிர் எல்லாம் தன் உயிர் என நல்கும்
அந்தணன் , 'உலகு ஏழும் அமை ' எனின் , அமர ஈசன்
உந்தியின் உதவாமே உதவிடு தொழில் வல்லான் .
2.7.22
2110 பரத்துவாச முனிவன் வருந்தல்
அ முனி வரலோடும் , அழகனும் மலர் தூவி
மும்முறை தொழுதான் ; அம் முதல்வனும் எதிர் புல்லி ,
'இ முறை உருவோ நான் காண்குவது ? ' என உள்ளம்
விம்மினன் , இழி கண்ணீர் விழி வழி உக நின்றான் .
2.7.23
2111 பரத்துவாசன் வினவுதல்
''அகல் இடம் நெடிது ஆளும் அமைதியை , அது தீரப்
புகல் இடம் எமது ஆகும் புரை இடை , இது நாளில் ,
தகவு இல தவ வேடம் தழுவினை வருவான் என் ?
இகல் அடு சிலை வீர ! இளையவனொடும் '' என்றான் .
2.7.24
2112 பரத்துவாசமுனிவன் இரங்குதல்
உற்றுள பொருள் எல்லாம் உணர்வுற உரைசெய்தான் ;
நல் தவ முனி , 'அந்தோ ! விதி தரும் நவை ' என்பான் ,
'இற்றது ; செயல் உண்டோ இனி ? ' என இடர்கொண்டான் ,
'பெற்றிலள் தவம் அந்தோ பெரும் நிலமகள் ' என்றான் .
2.7.25
2113 பரத்துவாச முனிவன் கூறுதல் (2113-2114)
“ ‘துப்பு உறு துவர் வாயில் தூ மொழி இவளோடும்
அப்பு உறு கடல் ஞாலம் ஆளுதி கடிது ' என்னா ,
ஒப்பு அறும் மகன் உன்னை , 'உயர் வனம் உற ஏகு ' என்று
எப் பரிவு உயிர் உய்ந்தான் என் துணை அவன் ? '' என்றான் .
2.7.26
2114 'அல்லலும் உள , இன்பம் அணுகலும் உள , அன்றோ !
நல்லவும் உள , செய்யும் நவைகளும் உள , அன்றோ !
இல்லை ஒர் பயன் நான் இன்று இடர் உறும் இதின் , ' என்னாப்
புல்லினன் , உடனே கொண்டு இனிது உறை புரை புக்கான் .
2.7.27
2115 பரத்துவாச முனிவன் விருந்தோம்பல்
புக்கு , உறை இடம் நல்கிப் பூசனை முறை பேணித்
தக்கன கனி காயும் தந்து , உரை தரும் அன்பால்
தொக்க நல் முறை கூறித் தூயவன் உயிர்போலும்
மக்களின் அருள் உற்றான் ; மைந்தரும் மகிழ்வுற்றார் .
2.7.28
2116 பரத்துவாசன் நினைவும் செயலும்
வைகினர் ; கதிர் நாறும் அளவையின் மறையோனும் ,
'உய்குவென் இவனொடு யான் உடன் உறைதலின் ' என்பான் .
செய்தனன் இனிது எல்லாம் , செல்வனை முகம் முன்னாக்
'கொய் குலம் மலர் மார்ப ! கூறுவது உளது ' என்றான் .
2.7.29
2117 பரத்துவாச முனிவன் வேண்டுகோள் (2117-2118)
'நிறையும் நீர் மலர் நெடும் கனி கிழங்கு காய் கிடந்த ;
குறையும் தீயவை ; தூயவை குறைவு இல ; எம்மோடு
உறையும் இவ் வழி , ஒருங்கினில் உயர் தவம் முயல்வார்க்கு
இறையும் ஈது அலாது , இனியது ஒர் இடம் அரிது ; இன்னும் .
2.7.30
2118 ''கங்கையாளொடு கரியவள் நாமகள் கலந்த
சங்கம் ஆதலின் பிரியலென் ; தாமரைச் செம் கண்
அம் கண் நாயக ! அயனுக்கும் அரும் பெறல் தீர்த்தம்
எங்கள் போலியர் தரத்தது அன்று ; இருத்தி ஈண்டு '' என்றான் .
2.7.31
2119 இராமன் கூறிய மறுமாற்றம்
பூண்ட மாதவன் அ மொழி விரும்பினன் புகல ,
'நீண்டது அன்று இது , நிறை புனல் நாட்டுக்கு நடு ஆம் ;
மாண்ட சிந்தைய ! இவ் வழி வைகுவென் என்றால் ,
ஈண்ட யாவரும் நெருங்குவர் ' என்றனன் , இராமன் .
2.7.32
2120 பரத்துவாச முனிவன் மீட்டும் பகர்தல்
'ஆவது உள்ளதே ! ஐய ! கேள் , ஐயிரண்டு அமைந்த
காவதப் பொழிற்கு அ புறம் கழிந்தபின் காண்டி ,
மேவு காதலின் வைகுதி , விண்ணினும் இனிதாத்
தேவர் கைதொழும் சித்திரகூடம் என்று உளது ஆல் . '
2.7.33
2121 இராமன் முதலியோர் பரத்துவாசமுனிவனிடம் விடைபெற்றுச் சென்று யமுனைக்கரையடைதல்
என்று காதலின் ஏயினன் ; அடி தொழுது , ஏகிக்
கொன்றை அம் குழல் கோவலர் முல்லையும் குறுகிச்
சென்று , செம் கதிர் செல்வனும் நடு உறச் சிறு மான்
கன்று நின்று உகள் கரை உடை காளிந்தி கண்டார் .
2.7.34
2122 இராமன் முதலியோர் யமுனை நதியைக் கண்டு கடத்தல் (2122-2123)
ஆறு கண்டனர் , அகம் மகிழ்ந்து இறைஞ்சினர் , அறிந்து ,
நீறு தோய் மணி மேனியர் , நெடும் புனல் படிந்தார் ,
ஊறும் மென் கனி கிழங்கினோடு உண்டு நீர் உண்டார் ;
'ஏறி ஏகுவது எங்ஙனம் ? ' என்றலும் இளையோன் .
2.7.35
2123 வாங்கு வெம் கழை துணித்தனன் , மாணையின் கொடியால்
ஒங்கு தெப்பம் ஒன்று அமைத்து , அதின் , உம்பரின் உலம்போல்
வீங்கு தோள் அண்ணல் தேவியொடு இனிது வீற்றிருப்ப ,
நீங்கினன் அந்த நெடும் நதி இரு கையால் நீந்தி .
2.7.36
2124 இலக்குவன் நீந்தியதன் விளைவு .
ஆலை பாய் வயல் அயோத்தியர் ஆண்டகைக்கு இளையான்
மாலை மால் வரைத் தோள் எனும்மந்தரம் திரியக்
காலை வேலையின் உற்றது , கழிந்த நீர் ; கடிதின்
மேலை வேலையில் பாய்ந்தது ; மீண்ட நீர் வெள்ளம் .
2.7.37
2125 சுரம் புகுதல்
அனையர் அப் புனல் ஏறினர் , அ கரை அணைந்தார் ,
புனையும் வற்கலைப் பொற்பினர் , நெடும் நெறி போனார் ,
சினையும் மூலமும் முகடும் வெந்து இரு நிலம் தீய்ந்து
நினையும் நெஞ்சமும் சுடுவதோர் நெடுஞ்சுரம் நேர்ந்தார் .
2.7.38
2126 இராமன் நினைவால் பாலை மாறிய பரிசு (2126-2133)
'நீங்கல் ஆற்றலள் சனகி ' என்று அண்ணலும் நினைந்தான் ,
ஓங்கு வெய்யவன் உடுபதி எனக் கதிர் உகுத்தான் ;
தாங்கு வெம் கடந்து உலவைகள் தழை கொண்டு தழைத்த ;
பாங்கு வெம் கனல் பங்கய வனங்களாய்ப் பரந்த !
2.7.39
2127 வறுத்து வித்திய அனையன வல் அயில் பரல்கள் ,
பறித்து வித்திய மலர் எனக் குளிர்ந்தன பசைந்த ;
இறுத்து எரிந்தன வல்லிகள் இளம் தளிர் ஈன்ற ;
கறுத்த வாள் அரவு எயிறு இன் ஊடு அமுது உகக் களித்த ,
2.7.40
2128 குழுமி மேகங்கள் குமுறின குளிர் துளி கொணர்ந்த ;
முழு வில் வேடரும் முனிவரின் முனிகிலர் ; உயிரைத்
தழுவி நின்றன பசி இல பகை இல தணிந்த ;
உழுவையின் முலை மான் இளங் கன்றுகள் உண்ட .
2.7.41
2129 கல் அளைக் கிடந்து அகடு வெந்து அயர்கின்ற கதழ் பாம்பு
அல்லல் உற்று இல , அலை புனல் கிடந்தன அனைய ;
வல்லை உற்ற வேய் புற்றொடும் எரிவன , மணிவாழ்
புல் எயிற்று இளம் கன்னியர் தோள் எனப் பொலிந்த .
2.7.42
2130 படர்ந்து எழுந்த புல் , பசும் நிறம் கம்பளம் பரப்பிக்
கிடந்த போன்றன ; கேகயம் , தோகைகள் கிளர ,
மடந்தைமார் என நாடகம் வயின் தொறும் நவின்ற ;
தொடர்ந்து பாணரில் பாங்கு இசை முரன்றன தும்பி .
2.7.43
2131 பாலை வெம்மை நீங்கிய காரணம்
காலம் இன்றியும் கனிந்தன கனி ; நெடுங் கந்தம்
மூலம் இன்றியும் முகிழ்த்தன ; நிலன் உற முழுதும்
கோல மங்கையர் ஒத்தன கொம்பர்கள் ; இம்பர்ச்
சீலம் அன்றியும் செய் தவம் வேறும் ஒன்று உளது ஓ ?
2.7.44
2132 எயினர் தங்கு இடம் இருடிகள் இருப்பிடம் ஏய்ந்த ;
வயின் வயின் தொறும் மணி நிறக் கோபங்கள் மலர்ந்த ;
பயில் மரம் தொறும் பிரிந்தன பேடையைப் பயிரும்
குயில் இரங்கின ; குருந்தம் நின்று அரும்பின முருந்தம் .
2.7.45
2133 பாலை வெம்மை நீங்கிக் குளிர்ந்தமை
பந்தம் ஞாட்பு உறு பாசறை பொருள் வயின் பருவம்
தந்த கேள்வரை உயிர் உறத் தழுவினர் பிரிந்த
கந்த ஓதியர் சிந்தையில் கொதித்தது , அக் கழலோர்
வந்த போது அவர் மனம் எனக் குளிர்ந்தது அவ் வனமே .
2.7.46
2134 இராமன் முதலியோர் சித்திரகூட மலையைக் காணுதல்
வெளிறு நீங்கிய பாலையை மெல் எனப் போனார் ,
ஒளிறு வான் மதிக் குழவி தன் சூல் வயிற்று உதைப்பப்
பிளிறும் மேகத்தைப் பிடியெனப் பெரும் பனைத் தட கை
களிறு நீட்டும் அச் சித்திரகூடத்தைக் கண்டார் .
2.7.472.8 . சித்திரகூடப் படலம் (2135 -2190 )

2135 இராமன் சீதாபிராட்டிக்குச் சித்திரகூட மலைவளம் காட்டல் (1-38)
நினையும் தேவர்க்கும் நமக்கும் ஒத்து ஒரு நெறி நின்ற
அனகன் அம் கணன் ஆயிரம் பெயர் உடை அமலன்
சனகன் மா மட மயிற்கு அந்தச் சந்தனம் செறிந்த
கனக மால் வரை இயல்பு எலாம் தெரிவு உற காட்டும் .
2.8.1
2136 வாளும் வேலும் விட்டு , அளாயின அனையகண் மயிலே !
தாளின் ஏலமும் தமாலமும் தழைதரு சாரல் ,
நீள மாலைய துயில்வன , நீர் உண்ட கமம் சூல்
காளமேகமும் நாகமும் தெரிகில காணாய் !
2.8.2
2137 குருதி வாள் எனச் செம் வரி பரந்த கண் குயிலே !
மருவி மால் வரை உம்பரில் குதிக்கின்ற வருடை ,
சுருதி போல் தெளி மரகதக் கொழுஞ்சுடர் சுற்றப் ,
பருதி வானவன் பசும் பரி புரைவன பாராய் !
2.8.3
2138 வடம் கொள் பூண் முலை மடம் மயிலே ! மதக் கத மா
அடங்கு பேழ் வயிற்று அரவு உரி , அமை தொறும் தொடக்கித்
தடங்கள் தோறும் நின்று ஆடுவ , தண்டலை அயோத்தி
நுடங்கும் மாளிகைத் துகில் கொடி நிகர்ப்பன நோக்காய் !
2.8.4
2139 உவரிவாய் அன்றிப் பாற்கடல் உதவிய அமுதே !
துவரின் நீள் மணித் தடம் தொறும் , இடம் தொறும் , துவன்றிக்
கவரி பால் நிற வால் புடை பெயர்வன கடிதில்
பவள மால் வரை அருவியைப் பொருவிய பாராய் .
2.8.5
2140 சலம் தலைக்கொண்ட சீயத்தால் தனி மதக் கதம் மா
உலந்து வீழ்தலின் , சிந்தின உதிரத்தின் , மடவார்
புலந்த காலை அற்று உக்கன குங்குமப் பொதியில்
கலந்த முத்து என , வேழ முத்து இமைப்பன காணாய் .
2.8.6
2141 நீண்ட மால் வரை மதி உற , நெடு முடி நிவந்த
தூண்டு மா மணிச் சுடர் சடைக் கற்றையில் தோன்ற ,
மாண்ட வால் நிற அருவி அம் மழ விடைப் பாகன்
காண் தகும் சடைக் கங்கையை நிகர்ப்பன காணாய் !
2.8.7
2142 தொட்ட வார் சுனை சுடர் ஒளி மணியொடும் தூவி
விட்ட சென்றன , விடா மத மழையன வேழம் ,
வட்ட வேங்கையின் மலரொடும் ததைந்தன வயங்கும்
பட்டம் நெற்றியில் சுற்றிய போல்வன பாராய் !
2.8.8
2143 இழைந்த நூல் இணை மணிக் குடம் சுமக்கின்றது என்னக்
குழைந்த நூண் இடைக் குவி இள வன முலைக் கொம்பே !
தழைந்த சந்தனச்சோலை தன் செலவினைத் தடுப்ப
நுழைந்துபோகின்றது ஒக்கின்ற மதியினை நோக்காய் .
2.8.9
2144 உருகு காதலில் தழை கொண்டு மழலை வண்டு ஓச்சி ,
முருகு நாறு செம் தேனினை முழைநின்றும் வாங்கிப்
பெருகு சூல் இளம் பிடிக்கு ஒரு பிறை மருப்பு யானை ,
பருக வாயினில் கையில் நின்று , அளிப்பது பாராய் .
2.8.10
2145 அளிக்கும் நாயகன் மாயை புக்கு அடங்கினன் எனினும் ,
களிப்பில் இந்தியத்து யோகியைக் கரக்கிலன் அதுபோல்
ஒளித்து நின்று உளர் ஆயினும் , உருத் தெரிகின்ற
பளிங்கு அறை சில பரி முகம் மாக்களை பாராய் .
2.8.11
2146 ஆடுகின்ற மா மயிலினும் அழகிய குயிலே
கூடுகின்றிலர் கொடிச்சியர் தம் மனம் கொதிப்ப
ஊடுகின்றனர் , கொழுநரை உருகினர் நோக்கப்
பாடுகின்றன கின்னர மிதுனங்கள் பாராய் .
2.8.12
2147 வில்லி வாங்கிய சிலை எனப் பொலி நுதல் விளக்கே !
வல்லிது ஆம் கழை தாக்கலின் வழிந்து இழி பிரசம் ,
கொல்லி வாங்கிய குன்றவர் கொடி நெடும் கவலை
கல்லி வாங்கிய குழிகளை நிறைப்பன காணாய் !
2.8.13
2148 ஒருவு இல் பெண்மை என்று உரைக்கின்ற உடலின் கு உயிரே !
மருவு காதலின் இனிது உடன் ஆடிய மந்தி ,
அருவி நீர் கொடு வீசத் தான் அ புறத்து ஏறிக்
கருவி மா மழை உதிர்ப்பது ஓர் கடுவனைக் காணாய் !
2.8.14
2149 வீறு பஞ்சு இன்றி அமுதம் நெய் மாட்டிய விளக்கே !
சீறு வெம் கதிர் செறிந்தன , பேர்கல , திரியா ,
மாறு இல் மண்டிலம் நிரம்பிய மாணிக்கம் மணி கல்
பாறை , மற்று ஒரு பரிதியில் பொலிவன பாராய் !
2.8.15
2150 சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவே !
நீல வண்டு இனம் படிந்து எழ , வளைந்தன நிமிர்வ
கோல வேங்கையின் கொம்பர்கள் , பொன் மலர் தூவிக்
காலில் நிற்று தொழுது எழுவன நிகர்ப்பன காணாய் !
2.8.16
2151 வில்கொள் வாள் நுதல் விளங்கு இழை இளம் தளிர் கொழுந்து ஏ !
எல் கொள் மால் வரை உம்பரின் , இரும் புனம் காக்கும்
கொல் கொள் வேல் கணார் குரீஇ இனத்து எறி குருவிந்தக்
கற்கள் , வானிடை மீன் என விழுவன காணாய் !
2.8.17
2152 வரிகொள் நோன் சிலை வயவர் தம் கணிச்சியின் மறிந்த
பரிய கார் அகில் சுட , நிமிர் பசும் புகைப் படலம் ,
அரிய வேதியர் ஆகுதிப் புகையொடும் அளவிக்
கரிய மால்வரைக் கொழுந்து என படர்வன காணாய் .
2.8.18
2153 நானம் நாள் மலர் நறை அகில் நாவி தேன் நாறும்
சோனை வார் குழல் சுமை பொறாது இடுகு இடைத் தோகாய் !
வான யாறு மீன் மலர்ந்தன எனப் புனல் வறந்த
கான யாறுகள் கணம் மணி இமைப்பன காணாய் .
2.8.19
2154 மஞ்சு அளாவிய மாணிக்கப் பாறையின் மறைவ
செஞ்செவே நெடு மரகதப் பாறையில் தெரிவ ,
விஞ்சை நாடியர் கொழுநரொடு ஊடிய விமலப்
பஞ்சு அளாவிய சீர் அடி சுவடுகள் பாராய் .
2.8.20
2155 சுழித்த செம் பொன் இன் தொளை புரை உந்தி இன் துணையே !
கொழித்த மா மணி அருவியொடு இழிவன , கோலம்
அழித்து மேவிய அரம்பையர் அறல் புரை கூந்தல்
கழித்து நீக்கிய கற்பக நறு மலர் காணாய் !
2.8.21
2156 அறை கழல் சிலைக் குன்றவர் அகன் புனம் காவல்
பறை எடுத்து ஒரு கடுவன் நின்று அடிப்பது பாராய் ,
பிறையை எட்டினள் பிடித்து , ''இதற்கு இது பிழை '' என்னாக்
கறை துடைக்கு உறும் பேதை ஓர் கொடிச்சியைக் காணாய் .
2.8.22
2157 அடுத்த பல் பகல் அன்பரைப் பிரிந்தனர் என்பது
எடுத்து நந்தமக்கு இயம்புவ எனக் கரிந்து இருண்ட
தொடுத்த மாதவிச் சூழலில் , சூர் அரமகளிர்
படுத்து வைகிய பல்லவ சயனங்கள் பாராய் .
2.8.23
2158 நினைந்தபோதினும் அமிர்து ஒக்கும் நேரிழை ! நிறை தேன்
வனைந்த வேங்கையில் , கோங்கினில் , வயின்றொறும் தொடுத்துக்
குனிந்த ஊசலில் கொடிச்சியர் எடுத்த இன் குறிஞ்சிக்
கனிந்த பாடல் கேட்டு , அசுணமா வருவன காணாய் .
2.8.24
2159 இலவும் இந்திரகோபமும் புரை இதழ் இனியாய் !
அலவும் நுண் துளி அருவி நீர் , அரம்பையர் ஆடக்
கலவை , சாந்து , செம் குங்குமம் கற்பகம் கொடுத்த
பலவும் தோய்தலின் , பரிமளம் கமழ்வன பாராய் !
2.8.25
2160 செம்பொனால் செய்து , குலிகம் இட்டு எழுதிய செப்பு ஓர்
கொம்பு தாங்கியது எனப் பொலி வனம் முலை கொடியே !
அம் பொன் மால் வரை அலர் கதிர் உச்சி சென்று அணுகப்
பைம் பொன் மா முடி மிலைச்சியது ஒப்பது பாராய் .
2.8.26
2161 மடந்தைமார்களில் திலதம் ஏ ! மணி நிறத் திணி கல்
தொடர்ந்த பாறையில் வேய் இனம் சொரி கதிர் முத்தம்
இடம் தொறும் கிடந்து இமைப்பன , எக்கு இளம் செக்கர்
படர்ந்த வான் இடை தாரகை நிகர்ப்பன பாராய் .
2.8.27
2162 குழுவும் நுண் தொளை வேயினும் , குறி நரம்பு எறிவுற்று
எழுவு தண் தமிழ் யாழினும் , இனிய சொல் கிளியே !
முழுவதும் மலர் விரிந்த நாண் முருக்கு இடை மிடைந்த
பழுவம் , வெம் கனல் கதுவியது ஒப்பது பாராய் .
2.8.28
2163 வளைகள் காந்தளில் பெய்தன அனைய கை மயிலே !
தொளை கொள் தாழ் தடக் கை நெடும் துருத்தியில் தூக்கி ,
அளவு இல் மூப்பினர் அரும் தவர்க்கு , அருவி நீர் கொணர்ந்து ,
களபம் மால் கரி குண்டிகைச் சொரிவன காணாய் !
2.8.29
2164 வடுவின் மாவகிர் இவை எனப் பொலிந்த கண் மயிலே !
இடுகு கண்ணினர் , இடர் உறும் மூப்பினர் , ஏக ,
நெடுகு கூனல் வால் நீட்டின , உருகுறும் நெஞ்சக்
கடுவன் , மா தவர்க்கு அரும் நெறி காட்டுவ காணாய் .
2.8.30
2165 பாந்தள் தேர் இவை பழிபடப் பரந்த பேர் அல்குல் !
ஏந்தும் நூல் மணி மார்பினர் ஆகுதிக்கு இயையக்
கூந்தல் மென் மயில் குறுகின , நெடுஞ்சிறை கோலிக்
காந்து குண்டத்தில் அடங்கு எரி எழுப்புவ காணாய் !
2.8.31
2166 அலம்பு வார் குழல் ஆய் மயில் பெண் அரும் கலம் ஏ !
நலம் பெய் வேதியர் மார்பினுக்கு இயைவு உற நாடிச்
சிலம்பி , பஞ்சினில் சிக்கு அறத் தெரிந்த நூல் , தேமாம்
பலம் பெய் மந்திகள் , உடன் வந்து , கொடுப்பன பாராய் .
2.8.32
2167 தெரிவைமார்க்கு ஒரு கட்டளை எனச் செய்த திருவே !
பெரிய மாக் கனி , பலாக் கனி , பிறங்கிய வாழை
அரிய மாக் கனி , கடுவன்கள் அன்பு கொண்டு அளிப்பக்
கரிய மா , கிழங்கு அகழ்ந்தன கொணர்வன காணாய் !
2.8.33
2168 ஐவனக் குரல் , ஏனலின் கதிர் , இறுங்கு , அவரை ,
மெய் வணக்கு உறு வேய் இனம் ஈன்ற மெல் அரிசி ,
பொய் வணக்கிய மா தவர் புரை தொறும் புகுந்து , உன்
கை வணத்த வாய்க் கிள்ளை தந்து அளிப்பன காணாய் .
2.8.34
2169 இடி கொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும்
கடிய மாசுணம் , கற்று அறிந்தவர் என அடங்கிச்
சடை கொள் சென்னியர் , தாழ்வு இலர் தாம் மிதித்து ஏறப்
படிகள் ஆம் எனத் தாழ் வரை கிடப்பன பாராய் .
2.8.35
2170 அசும்பு பாய் வரை அரும் தவம் முடித்தவர் , துணைக் கண்
தசும்பு வேய்ந்தவர் ஒத்தவர் தமக்கு விண் தருவான் ,
விசும்பு தூர்ப்பன ஆம் என , வெயில் உக விளங்கும்
பசும் பொன் மானங்கள் , போவன வருவன பாராய் !
2.8.36
2171 இனைய யாவையும் ஏந்திழைக்கு இயம்பினன் காட்டி ,
அனைய மால் வரை அருந்தவர் எதிர் வர , வணங்கி ,
வினையின் நீங்கிய வேதியர் விருந்தினன் ஆனான் ;
மனையில் மெய் எனும் மாதவம் புரிந்தவன் மைந்தன் .
2.8.37
2172 சூரியன் மறைதல்
மா இயல் உதயம் ஆம் துளப வானவன் ,
மேவிய பகை இருள் அவுணர் வீந்து உகக்
கா இயல் குடவரைக் காலம் நேமி மேல்
ஏவிய திகிரி போல் , இரவி ஏகினான் .
2.8.38
2173 செக்கரும் மதியும் தோன்றுதல்
சக்கரம் தானவன் உடலில் தாக்குற ,
எக்கிய சோரியில் பரந்தது , எங்கணும்
செக்கர் ; அ தீயவன் வாயில் தீர்ந்து , வேறு
உக்க வான் தனி எயிறு ஒத்தது , இந்து ஏ .
2.8.39
2174 மாலைக்கால வருணனை (2174-2175)
ஆனனம் மகளிருக்கு அளித்த தாமரைப்
பூ நனி முகிழ்த்தன அலரி போனபின்
மீன் என விளங்கிய வெள்ளி ஆம்பல் வீ
வான் எனும் மணித் தடம் மலர்ந்த எங்கும் ஏ .
2.8.40
2175 மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின ;
தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின ;
நிந்தை இல் சகுந்தங்கள் நீளம் நோக்கின ;
அந்தியை நோக்கினான் அறிவை நோக்கினான் .
2.8.41
2176 இராமன் முதலிய மூவரும் மாலை வழிபாடியற்றல்
மொய் உறு நறு மலர் முகிழ்த்தவாம் சில ;
மை அறு நறு மலர் மலர்ந்தவாம் சில ;
ஐயனொடு இளவற்கும் அமுது அன்னாளுக்கும்
கைகளும் கண்களும் கமலம் போன்றவே .
2.8.42
2177 இராமன் இலக்குவன் அமைத்த சாலையை அடைதல்
மாலை வந்து அகன்றபின் , மருங்கு இலாள் ஒடு
வேலை வந்து உறைவிடம் மேயதாம் எனக்
கோலை வந்து உமிழ் சிலைத் தம்பி கோலிய
சாலை வந்து எய்தினான் , தவத்தின் எய்தினான் .
2.8.43
2178 இலக்குவன் அமைத்த சாலையின் அமைதி (2178-2181)
நெடுங் கழை குறுந்தறி நிறுவி , மேல் நிரைத்து ,
ஒடுங்கல் இல் நெடும் முகடு ஒழுக்கி , ஊழ் உற
இடுங்கல் இல் கை விசித்து ஏற்றி , எங்கணும்
முடங்கல் இல் வரிச்சு மேல் விரிச்சு மூட்டி ஏ .
2.8.44
2179 தேக்கு அடைப் படலையின் செறிவு செய்து , பின் ,
பூக் கிளர் நாணலின் புல்லு வேய்ந்து , கீழ்த்
தூக்கிய வேய்களில் சுவரும் சுற்றுறப்
போக்கி , மண் எறிந்து , அவை புனலில் தீற்றி ஏ .
2.8.45
2180 வேறு இடம் , இயற்றினன் மிதிலை நாடிக்கும்
கூறின நெறி முறை குயிற்றிக் குங்குமச்
சேறு கொண்டு அழகு உறத் திருத்தித் திண் சுவர்
ஆறு இடு மணியொடு தரளம் அப்பியே .
2.8.46
2181 மயில் உடைப் பீலியின் விதானம் மேல் வகுத்து ,
அயில் உடைச் சுரிகையால் அருகு தூக்கு அறுத்து ,
எயில் இளம் கழைகளால் இயற்றி , ஆறு இடு
செயல் உடைப் புதுமலர் பொற்பச் சிந்தியே .
2.8.47
2182 இலக்குவன் அமைத்த சாலையில் இராமன் குடிபுகல் (2182-2183.)
இன்னணம் இளையவன் இழைத்த சாலையில் ,
பொன் நிறத் திருவொடும் , குடிபுக்கான் ; அரோ
நல் நெடுந் திசைமுகன் அகத்தும் , நம் அனோர்க்கு
உன்னரும் உயிர் உளும் , ஒக்க வைகுவான் .
2.8.48
2183 மாயம் நீங்கிய சிந்தனை , மா மறை ,
தூய பாற்கடல் , வைகுந்தம் , சொல்லல் ஆம்
ஆய சாலை , அரும் பெறல் அன்பினான் ,
நேய நெஞ்சின் விரும்பி நிரம்பினான் .
2.8.49
2184 இராமன் உட்கோள்
''மேவு கானம் , மிதிலையர் கோன் மகள்
பூவின் மெல்லிய பாதமும் போந்தன ;
தாவில் எம்பி கை சாலை சமைத்தன ;
யாவை யாதும் இலார்க்கு இயையாத ஏ . ''
2.8.50
2185 இராமன் இளையவனை நோக்கிக் கூறல் (2185-2186)
என்று சிந்தித்து , இளையவன் பார்த்து , 'இரு
குன்று போலக் குவவிய தோளினாய் !
என்று கற்றனை நீ ! இது போல் ' எனாத்
துன்று தாமரைக் கண் பனி சோர்கின்றான் ;
2.8.51
2186 'அடரும் செல்வம் அளித்தவன் ஆணையால் ,
படரும் நல் அறம் பாலித்து , இரவியில்
சுடரும் மெய்ப் புகழ் சூடினென் , என்பது என் ?
இடர் உனக்கு இழைத்தேன் நெடுநாள் ' என்றான் .
2.8.52
2187 இலக்குவன் கூறுதல்
அந்த வாய் மொழி ஐயன் இயம்பலும் ,
நொந்த சிந்தை இளையவன் நோக்கினான் ,
'எந்தை ! காண்டி ! இடரினுக்கு அங்குரம்
முந்தி வந்து முளைத்தது அன்று ஓ ? ' என்றான் .
2.8.53
2188 மீட்டும் இராமன் நினைதல்
ஆக , செய் தக்கது இல்லை ; அறத்தில் நின்று
ஏகல் என்பது அரிது என்றும் எண்ணினான் ;
ஓகை கொண்டவன் உள் இடர் நோக்கினான்
சோக பங்கம் துடைப்பு அரிதால் எனா .
2.8.54
2189 இராமன் மீட்டும் கூறுதல்
பின்னும் தம்பியை நோக்கி , பெரியவன் ,
'மன்னும் செல்வத்துக்கு உண்டு வரம்பு ; இதற்கு
என்ன கேடு உண்டு ? இவ் எல்லையில் இன்பம் அத்து ஐ
உன்னு ; மேல் வரும் ஊதியம் அத்து ஓடு ' என்றான் .
2.8.55
2190 கவிக் கூற்று
தேற்றித் தம்பியைத் தேவரும் கை தொழ
நோற்று இருந்தனன் , நோன் சிலையோன் ; இ பால்
ஆற்றல் மாதவன் ஆணையில் போனவர்
கூற்றின் உற்றது கூறல் உற்றாம் அரோ .
2.8.56


2.9 . பள்ளி படைப் படலம் (2191 -2331)

2191 தூதுவர் பரதனுக்குத் தம் வரவுணர்த்துவித்தல்
பொருவு இல் தூதுவர் போயினர் பொய் இலார்
இரவும் நன் பகலும் கடிது ஏகினார் ;
பரதன் கோயில் உற்றார் ; ''படிகாரிர் ! எம்
வரவு சொல்லுதிர் மன்னவன் கு ஏ '' என்றார் .
2.9.1
2192 பரதன் தந்தை நலம் கேட்டல்
தூதர் வந்தனர் உந்தை சொல்லோடு எனக்
காதல் முந்திக் களிக்கின்ற சிந்தையான் ,
போதுக என்ன உள் புக்கவர் கைதொழத்
''தீது இலன் கொல் ? திரு முடியோன் '' என்றான் .
2.9.2
2193 இராம இலக்குவர் நலம் கேட்டல்
வலியன் என்று அவர் கூற , மகிழ்ந்தனன் ;
''இலைகொள் பூண் இளம் கோன் எம்பிரானொடும்
உலைவில் செல்வத்தன் ஓ ? '' என , 'உண்டு ' எனத்
தலையின் ஏந்தினன் தாழ் தடக் கைகளே .
2.9.3
2194 திருமுகம் கொடுத்தல்
மற்றும் சுற்றத்து உளார்க்கும் வரன்முறை
உற்ற தன்மை வினாவி உவந்த பின் ,
''இற்றது ஆகும் , எழுதரு மேனியாய் !
கொற்றவன் தன் திருமுகம் கொள்க என்றார் .
2.9.4
2195 பரதன் திருமுகம் பெறுதல்
என்று கூறலும் , ஏத்தி இறைஞ்சினான் ,
பொன் திணிந்த பொரு இல் தட கையால்
நின்று வாங்கி , உருகிய நெஞ்சினான் ,
துன்று நாள் மலர்ச் சென்னியில் சூடினான் .
2.9.5
2196 பரதன் மகிழ்ச்சி (2196-2197)
சூடிச் சாதனம் தோய்த்து உடை சுற்று மண்
மூடு தோட்டின் முடங்கல் நிமிர்த்தனன் ,
ஈடு நோக்கி , வந்து எய்திய தூதர்க்குக்
கோடி மேலும் நிதியம் கொடுத்தனன் .
2.9.6
2197 வாள் நிலா நகை தோன்ற , மயிர் புறம்
பூண , வான் உயர் காதலில் பொங்கினான் ;
தாள் நிலாம் மலர் தூவினன் , தம்முனைக்
காணலாம் எனும் ஆசை கடாவ ஏ .
2.9.7
2198 பரதன் புறப்பாடு
'எழுக சேனை ' என்று ஏவினன் ; எய்தினன்
தொழுது , கேகயர் கோமகன் சொல்லொடும் ,
தழுவு தேரிடைத் தம்பியொடு ஏறினான் ;
பொழுதும் நாளும் குறித்திலன் போயினான் .
2.9.8
2199 சேனை செல்லுகை (2199-2207)
யானை சுற்றின ; தேர் இரைத்து ஈண்டின ;
மான வேந்தர் குழுமினர் ; வாள் உடைத்
தானை சூழ்ந்தன ; சங்கம் முரன்றன ;
மீன வேலையின் விம்மின பேரியே .
2.9.9
2200 கொடி நெருங்கின ; தொங்கல் குழுமின ;
வடி நெடும் கண் மடந்தையர் ஊர் மடப்
பிடி துவன்றின ; பூண் ஒளி பேர்ந்தன ;
இடி துவன்றின மின் என எங்குமே .
2.9.10
2201 பண்டி எங்கும் பரந்தன பல் இயம்
கொண்டு இயம்பின கொண்டலின் ; கோதையில்
வண்டு இயம்பின ; வாளியின் வாவுறும்
செண்டு இயங்கு பரியும் செறிந்த ஏ .
2.9.11
2202 தொளை முகத்திற் சுருதி விளம்பின ;
உளை முகத்தின , உம்பரின் ஏவிடில்
விளை முகத்தன , வேலையின் மீதுசெல்
வளை முகத்தன , வாசியும் வந்த ஏ .
2.9.12
2203 வில்லின் வேதியர் , வாள் செறி வித்தகர் ,
மல்லின் மல்லர் , சுரிகையின் வல்லவர் ,
கொல்லும் வேல் , குந்தம் கற்று உயர் கொற்றவர் ,
தொல்லை வாரணப் பாகரும் சுற்றினார் .
2.9.13
2204 எறி பகட்டு இனம் , ஆடுகள் , ஏற்று இனம் ,
குறி கொள் கோழி , சிவல் , குறும்பூழ் , நெடும்
பொறி மயிர்க் கவுதாரிகள் போற்று உறும்
நெறியின் மாக்களும் முந்தி நெருங்கினார் .
2.9.14
2205 நிறைந்த மாந்தர் நெருங்கினர் நெஞ்சினில் ,
'பறந்து போதும் கொல் ? ' என்று பதைக்கின்றார் ;
பிறந்து தேவர் உணர்ந்து , பெயர்ந்து முன்
உறைந்த வான் உறுவார்களை ஒக்கின்றார் .
2.9.15
2206 ஊன் அளைந்த உடற்கு உயிர் ஆம் எனத்
தான் அளைந்து தழுவின தண்ணுமை ;
தேன் அளைந்து செவி உற வார்த்து என
வான் அளைந்தது மாகதர் பாடல் ஏ .
2.9.16
2207 ஊறு கொண்ட முரசு உமிழ் ஓதையை
வீறு கொண்டன வேதியர் வாழ்த்து ஒலி ;
ஏறு கொண்டு எழும் மல்லர் இடிப்பினை
மாறு கொண்டன வந்திகர் ஏத்து அரோ .
2.9.17
2208 பரதன் கோசலநாட்டை அடைதல்
ஆறும் கானும் அகல் மலையும் கடந்து
ஏறி , ஏழ் பகல் நீந்திப் பின் , எந்திரம் அத்து
ஊறு பாகு மடை உடைத்து ஒள் முளை
நாறு பாய் வயல் கோசலம் நண்ணினான் .
2.9.18
2209 கோசலநாட்டின் அழகு இழந்த தோற்றம் (2209-2217)
ஏர் துறந்த வயல் ; இள மைந்தர் தோள்
தார் துறந்தன ; தண்டலை நெல்லினும்
நீர் துறந்தன ; தாமரை நீத்து எனப்
பார் துறந்தனள் பங்கயச் செல்வியே .
2.9.19
2210 பிதிர்ந்து சாறு பெரும் துறை மண்டிடச்
சிதர்ந்து சிந்தி அழிந்தன தேம் கனி ;
முதிர்ந்து , கொய்யுநர் இன்மையின் , மூக்கு அவிழ்ந்து
உதிர்ந்து உலர்ந்தன ஒள் மலர் ஈட்டமே .
2.9.20
2211 'ஏய்ந்த காலம் இது , இதற்கு ஆம் ' என
ஆய்ந்து மள்ளர் அரிகுநர் இன்மையால் ,
பாய்ந்த சூதப் பசுநறும் தேறலால்
சாய்ந்து ஒசிந்து முளைத்தன சாலியே .
2.9.21
2212 எள் குலாம் மலர் ஏசிய நாசியர் ,
புள் குலா வயல் பூசல் கடைசியர் ,
கட்கிலார் களை , காதல் கொழுநரோடு
உள் கலாம் உடையாரின் உயங்கினார் .
2.9.22
2213 அலர்ந்த பசுமை கூழ் , அகன் குளக் கீழன ,
மலர்ந்த வாயில் புனல் வழங்காமையால்
உலர்ந்த ; வன்கண் உலோபர் கடைத்தலைப்
புலர்ந்து நிற்கும் பரிசிலர் போலவே .
2.9.23
2214 ஓதுகின்றில கிள்ளையும் ; ஓதிய
தூது சென்றில , வந்தில தோழர் பால் ;
மோது கின்றில பேரி , முழா ; விழாப்
போது கின்றில பொன் அணி வீதியே .
2.9.24
2215 பாடல் நீத்தன பண் தொடர் பாண் குழல் ;
ஆடல் நீத்த அரங்கொடு அகன் புனல் ;
சூடல் நீத்தன சூடிகை ; சூளிகை
மாடம் நீத்தன மங்கல வள்ளையே .
2.9.25
2216 நகை இழந்தன வாள் முகம் ; நாறு அகில்
புகை இழந்தன மாளிகை ; பொங்கு அழல்
சிகை இழந்தன தீவிகை ; தேம் மலர்த்
தொகை இழந்தன தோகையர் ஓதியே .
2.9.26
2217 நாவின் நீத்தரும் நல் வளம் துன்னிய
பூவி நீத்து என நாடு பொலிவு ஒரீஇத்
தேவி நீத்து அரும் சேண் நெறி சென்றிட
ஆவி நீத்த உடல் எனல் ஆயதே .
2.9.27
2218 நாட்டின் நிலைகண்ட பரதன் நிலை
என்ற நாட்டினை நோக்கி , இடர் உழந்து ,
ஒன்றும் உற்றது உணர்ந்திலன் , உன்னுவான் ,
'சென்று கேட்பது ஒர் தீங்கு உளது ஆம் ' எனா ,
நின்று நின்று , நெடிது உயிர்த்தான் அரோ .
2.9.28
2219 பரதன் நகரத்தின் நிலையை நோக்குதல் (2219-2225)
மீண்டும் ஏகி , அம் மெய் எனும் நல் அணி
பூண்ட வேந்தன் திருமகன் , புந்திதான் ,
தூண்டு தேரினும் முந்து உறத் தூண்டுவான் ,
நீண்ட வாயில் நெடும் நகர் நோக்கினான் .
2.9.29
2220 ''அண்டம் முற்றும் திரிந்து அயர்ந்தாய் , அமுது
உண்டு போதி '' ; என்று ஒண் கதிர்ச் செல்வனை
விண் தொடர்ந்து விலக்குவ போல்வன ,
கண்டிலன் கொடியின் நெடும் கானமே .
2.9.30
2221 'ஈட்டும் நன் புகழ்க்கு ஈட்டிய யாவையும் ,
வேட்ட வேட்டவர் கொண்மின் விரைந்து ' எனக்
கோட்டி மாக்களைக் கூவுவ போல்வன ,
கேட்டிலன் முரசின் கிளர் ஓதையே .
2.9.31
2222 கள்ளை மாக் கவர் கண்ணியன் கண்டிலன் ,
பிள்ளை மாக் களிறும் , பிடி ஈட்டமும் ,
வள்ளல் மாக்கள் நிதியும் , வயிரியர் ,
கொள்ளை மாக்களின் கொண்டனர் , ஏகவே .
2.9.32
2223 காவல் மன்னவன் கால் முளை கண்டிலன் ,
ஆவும் , மாவும் , அழி கவுள் வேழமும் ,
மேவு காதல் நிதியின் வெறுக்கையும் ,
பூவின் வானவர் கொண்டனர் போகவே .
2.9.33
2224 சூழ் அமைந்த சுரும்பும் , நரம்பும் , தம்
ஏழ் அமைந்த இசை இசையாமையால் ,
மாழை உண்கண் மயில் எனும் சாயலார்
கூழை போன்ற பொருநர் குழாங்களே .
2.9.34
2225 தேரும் , மாவும் , களிறும் , சிவிகையும் ,
ஊரும் பண்டியும் , ஊருநர் இன்மையால் ,
யாரும் இன்றி , எழில் இல , வீதிகள் ,
வாரி இன்றிய வாலுக ஆற்றின் ஏ .
2.9.35
2226 பரதன் சத்துருக்கனிடம் கூறல் (2226-2227)
அன்ன தன்மை அகம் நகர் நோக்கினன் ;
பின்னை அ பெரியோர்தம் பெருந்தகை ,
'மன்னன் வைகும் வளம் நகர் போலும் ஈது ?
என்ன தன்மை ! இளையவனே ! ' என்றான் .
2.9.36
2227 'வேற்று அடங்கலர் ஊர் என மெல்லிது ஆல் ;
சூல் தடங் கருங் கார் புரை தோற்றத்தான்
சேல் தடம் கண் திரு ஒடு உம் நீங்கிய
பால் தடங்கடல் ஒத்தது , பார் ' என்றான் .
2.9.37
2228 சத்துருக்கன் கூறல்
குரு மணி பூண் அரசிளங் கோளரி
இரு கை கூப்பி இறைஞ்சினன் , 'எய்தியது
ஒரு வகைத்து அன்று உறுதுயர் ; ஊழி வாழ்
திருநகர்த் திருத் தீர்ந்தனள் ஆம் ? என்றான் .
2.9.38
2229 பரதன் தயரதன் மாளிகையை அடைதல்
அனைய வேலையில் , அச்சுடைத் தேர் அரண்
மனையின் நீள் நெடு மங்கல வாயிலை
நினையு மாத்திரத்து எய்தலும் நேமியான்
தனையனும் , தந்தை சார்விடம் மேவினான் .
2.9.39
2230 பரதன் , தந்தையைக் காணாது ஐயுறல்
விருப்பின் எய்தினன் , வெம் திறல் வேந்தனை
இருப்பு நல் இடம் எங்கணும் கண்டிலன் ,
'அருப்பம் அன்று இது ' என்று ஐயுறவு எய்தினான் ;
பொருப்பும் நாண உயர்ந்த புயத்தினான் .
2.9.40
2231 தாய் அழைப்பதாக ஒருத்தி கூறல்
ஆய காலையில் , ஐயனை நாடித் தன்
தூய கையில் தொழல் உறுவான் தனைக்
'கூயள் அன்னை , குறுகுதிர் ஈண்டு ' என
வேய் கொள் தோளி ஒருத்தி விளம்பினாள் .
2.9.41
2232 வணங்கிய பரதனைக் கைகேயி வினவல்
வந்து தாயை அடியில் வணங்கலும் ,
சிந்தை ஆரத் தழுவினள் , 'தீது இலர்
எந்தை என் ஐயர் எங்கையர் ? ' என்றனள் ;
அந்தம் இல் குணத்தான் உம் , அது ஆம் என்றான் .
2.9.42
2233 தயரதன் யாண்டுளன் எனப் பரதன் வினவல்
'மூண்டு எழு காதலான் முளரித் தாள் தொழ
வேண்டினென் எய்தினென் ; உள்ளம் விம்முமால் ;
ஆண்தகை நெடு முடி அரசர் கோமகன்
யாண்டையான் ? பணித்திர் ; ' என்று இருகை கூப்பினான் .
2.9.43
2234 கைகேயியின் விடை
ஆனவன் உரைசெய அழிவு இல் சிந்தையாள் ,
'தானவர் வலி தவ நிமிர்ந்த தானை அத்
தேன் அமர் தெரியலான் , தேவர் கைதொழ ,
வானகம் எய்தினான் ; வருந்தல் நீ ' என்றாள் .
2.9.44
2235 தந்தை இறந்தது கேட்ட பரதன் நிலை
எறிந்தன கடிய சொல் செவியுள் எய்தலும் ,
நெறிந்து அலர் குஞ்சியான் நெடிது வீழ்ந்தனன் ;
அறிந்திலன் , உயிர்த்திலன் , அசனி ஏற்றினால்
மறிந்து உயர் மராமரம் மண் உற்றென்னவே .
2.9.45
2236 பரதன் நொந்து கூறுதல்
வாய் ஒளி மழுங்கத் தன் மலர்ந்த தாமரை
ஆய் அலர் நயனங்கள் அருவி சோர்தரத்
'தீ எரி செவியில் வைத்து அனைய தீய சொல்
நீ அலது உரைசெய நினைப்பர் ஓ ? ' என்றான் .
2.9.46
2237 பரதன் தந்தையை நினைந்து வருந்திக் கூறுதல் (2237-2246)
எழுந்தனன் , ஏங்கினன் , இரங்கிப் பின்னரும்
விழுந்தனன் , விம்மினன் , வெய்து உயிர்த்தனன் ,
அழிந்தனன் , அரற்றினன் , அரற்றி இன்னன
மொழிந்தனன் பின்னரும் , முருகின் செவ்வியான் .
2.9.47
2238 'அறம் தனை வேர் அறுத்து , அருளைக் கொன்றனை ,
சிறந்த நின் தண் அளித் திருவைத் தேசு அழித்து ,
இறந்தனை ஆம் எனில் , இறைவ ! நீதியை
மறந்தனை ; உனக்கு இதின் மாசு மேல் உண்டு ஓ ? '
2.9.48
2239 'சினக் குறும்பு எறிந்து , எழு காமம் தீ அவித்து ,
இனக் குறும்பு யாவையும் எற்றி , யாவர்க்கும்
மனக்கு உறும் நெறி செலும் வள்ளியோய் ! மறந்து '
உனக்கு உறும் நெறி செலல் ஒழுக்கின் பாலது ஓ ? '
2.9.49
2240 'முதலவன் முதலிய முந்தையோர் பழங்
கதையையும் புதுக்கிய தலைவன் , கண் உடை
நுதலவன் சிலை வில் இன் நோன்மை நூறிய
புதல்வனை எங்ஙனம் பிரிந்து போயினாய் ? '
2.9.50
2241 'செம் வழி உருட்டிய திகிரி மன்னவ !
எ வழி மருங்கினும் இரவலாளர்தாம்
இ வழி உலகினில் ; இனிய நண்பினோர் ;
அ வழி உலகினும் உளர் கொல் ஓ ? ஐயா ! '
2.9.51
2242 'பல் பகல் நிழற்றும் நின் கவிகைப் பாய் நிழல்
நிற்பன பல் உயிர் உணங்க , நீ நெடுங்
கற்பக நறும் நிழல் காதலித்தியோ ? --
மல் பக மலர்ந்த தோள் மன்னர் மன்னனே ! '
2.9.52
2243 'இம்பர் நின்று ஏகினை , இருக்கும் சார்பு இழந்து
உம்பர் வந்து உன் கழல் ஒதுங்கினார் கொலாம் ?
சம்பரன் அனைய அத் தானைத் தானவர்
அம்பரம் அத்து இன்னமும் உளர் கொல் ஓ ? ஐயா ! '
2.9.53
2244 'இயம் கெழு தானையர் இறுத்த மாத் திறை
உயங்கலின் மறையவர்க்கு உதவி , உம்பரின் ,
அயம் கெழு வேள்வியோடு அமரர்க்கு ஆக்கிய
வயங்கு எரி வளர்த்தனை வைக வல்லை ஓ ? '
2.9.54
2245 'ஏழ் உயர் மதக் களிற்று இறைவ ! ஏகினை ,
வாழிய கரியவன் , வறியன் கை எனப்
பாழி அம் புயத்து நின் பணியின் நீங்கலா
ஆழியை , இனி , அவற்கு அளிக்க எண்ணியோ ? '
2.9.55
2246 'பற்றிய தவத்தினில் பயந்த மைந்தற்கு
முற்று உலகு அளித்து , அது முறையின் எய்திய
கொற்றவன் முடிமணக் கோலம் காணவும்
பெற்றிலை போலும் , நின் பெரிய கண்களால் ! '
2.9.56
2247 பரதன் சிறிது தேறுதல்
ஆற்றலன் , இன்னன பன்னி ஆவலித்து
ஊற்று உறு கண்ணினன் உருகுவான்தனைத்
தேற்றினள் அன்னைதான் ; சிறிது தேறிய
கூற்று உறழ் வரி சிலைக் குரிசில் கூறுவான் .
2.9.57
2248 பரதன் இராமனை வணங்க வேண்டும் எனல்
'எந்தையும் யாயும் எம்பிரானும் எம்முனும்
அந்தம் இல் பெரும் குணம் அத்து இராமன் ஆதலால் ,
வந்தனை அவன்கழல் வைத்தபோது அலால் ,
சிந்தை வெம் கொடும் துயர் தீர்கலாது ' என்றான் .
2.9.58
2249 கைகேயி , 'அவன் கானத்தான் ' எனல்
அவ் உரை கேட்டலும் , அசனி ஏறு என ,
வெவ் உரை வல்லவள் , மீட்டும் கூறுவாள் ,
''தெவ் அடு சிலையினாய் ! தேவி , தம்பி , என்று
இவ் இருவோர் ஒடு உம் கானத்தான் '' என்றாள் .
2.9.59
2250 பரதன் நைந்து கூறல்
'வனத்தினன் ' என்று , அவள் இசைத்த மாற்றத்தை
நினைத்தனன் , இருந்தனன் நெருப்பு உண்டான் என ;
'வினை திறம் யாது இனி விளைப்பது ? இன்னமும்
எனைத்து உள கேட்பன துன்பம் , யான் ? ' என்றான் .
2.9.60
2251 பரதன் வினா (2251-2252)
ஏங்கினன் விம்மலோடு இருந்த ஏந்தல் , 'அப்
பூ கழல் காலவன் வனம் அத்து போயது ,
தீங்கு இழைத்ததன் இன் ஓ ? தெய்வம் சீறியோ ?
ஓங்கிய விதியினோ ? யாதினோ ? ' எனா .
2.9.61
2252 ''தீயன இராமனே செய்யுமேல் , அவை
தாய் செயல் அல்லவோ , தலம் அத்து உளோர்க்கு எலாம் ?
போயது தாதை விண் புக்க பின்னர் ஓ ?
ஆயதன் முன்னர் ஓ ? அருளுவீர் '' என்றான் .
2.9.62
2253 கைகேயியின் விடை
''குருக்களை இகழ்தலின் அன்று ; குன்றிய
செருக்கினால் அன்று ; ஒரு தெய்வத்தாலும் அன்று ;
அருக்கன் ஏ அனைய அவ் அரசர் கோமகன்
இருக்கவே , வனத்து அவன் ஏகினான் '' என்றாள் .
2.9.63
2254 பரதன் வினா
''குற்றம் ஒன்று இல்லையேல் , கொதித்து வேறு உளோர்
செற்றதும் இல்லையேல் தெய்வத்தால் அன்று ஏல்
பெற்றவன் இருக்கவே பிள்ளை கான் புக
உற்றது என் ? பின் அவன் உலந்தது என் ? '' என்றான் .
2.9.64
2255 கைகேயியின் விடை
'வாக்கினால் வரம் தரக் கொண்டு , மைந்தனைப்
போக்கினேன் வனம் அத்து இடை போக்கிப் பார் உனக்கு
ஆக்கினேன் ; அவன் அது பொறுக்கலாமையால் ,
நீக்கினான் தன் உயிர் நேமி வேந்து ' என்றாள் .
2.9.65
2256 கைகேயி சொல்கேட்ட பரதன் சினம் நிலை (2256-2259)
சூடின மலர்க்கரம் , சொல்லின்முன் , செவி
கூடின ; புருவங்கள் குதித்துக் கூத்து நின்று
ஆடின ; உயிர்ப்பினோடு , அழல் கொழுந்துகள்
ஓடின ; உமிழ்ந்தன உதிரம் கண்களே .
2.9.66
2257 துடித்தன கபோலங்கள் ; சுற்றும் தீச்சுடர்
பொடித்தன மயிர் தொளை ; புகையும் போர்த்தது ;
மடித்தது வாய் ; நெடு மழைக் கை , மண் பக
அடித்தன , ஒன்றொடு ஒன்று அசனி அஞ்சவே .
2.9.67
2258 பாதங்கள் பெயர்தொறும் , பாரும் மேருவும் ,
போதம் கொள் நெடுந்தனிப் பொருவில் கூம்பொடு ,
மாதங்கம் வரு கலம் மறுகிக் கால் பொர ,
ஓதம் கொள் கடலினின்று உலைவ போன்றவே .
2.9.68
2259 அஞ்சினர் வானவர் அவுணர் ; அச்சத்தால்
துஞ்சினர் ஏனையோர் ; சொரி மதத் தொளை
எஞ்சின திசை கரி ; இரவி மீண்டனன் ;
வெம் சினம் கூற்றும் தன் விழி புதைத்ததே .
2.9.69
2260 கவிக் கூற்று
கொடிய வெம் கோபத்தால் கொதித்த கோள் அரி ,
கடியவள் தாய் எனக் கருதுகின்றிலன் ;
'நெடியவன் முனியும் ' என்று அஞ்சி நின்றனன் ;
இடி உரும் அனைய வெம் மொழி இயம்புவான் .
2.9.70
2261 பரதன் கைகேயியை இகழ்தல் (2261-2275)
'மாண்டனன் எந்தை , என் தன்முன் மாதவம்
பூண்டனன் , நின் கொடும் புணர்ப்பின் ஆல் என்றால் ,
கீண்டில் என் வாய் ; அது கேட்டும் நின்ற யான்
ஆண்டனனே அன்றோ அரசை ஆசையால் ? '
2.9.71
2262 'நீ இனம் இருந்தனை , யானும் நின்றனென் ,
'ஏ ' எனும் மாத்திரத்து எற்று கிற்றிலென் ;
ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால்
தாய் எனும் பெயர் எனைத் தடுக்கற் பாலது ஓ ? '
2.9.72
2263 'மாளவும் உளன் ஒரு மன்னன் வன் சொல் ஆல் ,
மீளவும் உளன் ஒரு வீரன் ; மேய பார்
ஆளவும் உளன் ஒரு பரதன் ஆயினால் ,
கோள் அலது அறம் நெறி ; குறை உண்டாகும் ஓ ? '
2.9.73
2264 '''சுழியுடைத் தாயுடைக் கொடிய சூழ்ச்சியால் ,
வழி உடைத்தாய் வரும் மரபை மாய்த்து , ஒரு
பழி உடைத்து ஆக்கினன் , பரதன் பண்டு '' எனும் ,
மொழி உடைத்து ஆக்கலின் முறைமை வேறு உண்டோ ? '
2.9.74
2265 'கவ்வு அரவு இது என இருத்திர் ; கற்பு எனும்
அவ் வரம்பு அழித்து , உமை அகத்துளே வைத்த
வெவ் அரம் பொருத வேல் அரசை வேர் அறுத்து ,
இவ் வரம் கொண்ட நீர் , இனி என் கோடிர் ஓ ? '
2.9.75
2266 'நோயீர் அல்லீர் ; நும் கணவன்தன் உயிர் உண்டீர் ;
பேயீரே ! நீர் இன்னம் இருக்கப் பெறுவீரே ?
மாயீர் ! மாயா வன் பழி தந்தீர் ! முலை தந்தீர் !
தாயீரே நீர் ? இன்னும் எனக்கு என் தருவீரே ?
2.9.76
2267 ஒன்றும் பொய்யா மன்னனை வாயால் , உயிரோடும்
தின்றும் , தீரா வன் பழி கொண்டும் , திரு எய்தி ,
என்றும் நீரே வாழ உவந்தீர் ; அவன் ஏகக்
கன்றும் தாயும் போவன கண்டும் கழியீரே !
2.9.77
2268 ''இறந்தான் தந்தை 'ஈந்த
      வரத்திற்கு இழிவு ' என்னா ;
'அறந்தான் ஈது ' என்று அன்னவன்
      மைந்தன் அரசு எல்லாம்
துறந்தான் ; 'தாயின் சூழ்ச்சியின்
      ஞாலம் அவனோடும்
பிறந்தான் , ஆண்டான் ' என்னும் இது
      என்னால் பெறல் ஆம் ஏ ? ''
2.9.78
2269 'மாளும் என்றே தந்தையை
      உன்னான் , வசை கொண்டாள்
கோளும் என்னாலே எனல்
      கொண்டான் ; அது அன்று ஏல் ;
மீளும் அன்றே ? என்னையும்
      மெய்யே உலகு எல்லாம்
ஆளும் என்றே போயினன்
      அன்றோ அரசு ஆள்வான் ? '
2.9.79
2270 ''ஓதா நின்ற தொல் குல மன்னன் உணர்வு அப்பால்
யாதானும்தான் ஆக ; 'எனக்கே பணி செய்வான் ,
தீதா நின்ற சிந்தனை செய்தான் அவன் ' என்னப்
போதாதோ , என் தாய் இவள் கொண்ட பொருள் அம்மா ? ''
2.9.80
2271 'உய்யா நின்றேன் இன்னமும் ;
      என்முன் உடன் வந்தான் ,
கை ஆர் கல்லைப் புல் அடகு
      உண்ணக் கலம் ஏந்தி ,
வெய்யோன் நான் இன் சாலியின்
      வெண் சோறு அமுது என்ன ,
நெய்யோடு உண்ணா நின்றது ,
      நின்றார் நினையார் ஓ ? '
2.9.81
2272 ” ‘வில் ஆர் தோளான் மேவினன் வெம் கானகம் ' என்ன ,
நல்லான் அன்றே துஞ்சினன் ; நஞ்சே அனையாள் ஐக்
கொல்லேன் , மாயேன் ; வன் பழியால் ஏ குறைவு அற்றேன்
அல்லேனோ யான் ! அன்பு உடையார்போல் அழுகின்றேன் ! ''
2.9.82
2273 'பாரோர் கொள்ளார் ; யான் உயிர்
      பேணிப் பழி பூணேன்
தீராது ஒன்றோ துன்பும் ! இவ்
      ஊரில் திரு நில்லாள் ;
ஆரோடு எண்ணிற்று ? ஆர் உரை
      கொண்டாய் ? அறம் எல்லாம்
வேரோடும் கேடு ஆக
      முடித்து , என் விளைவித்தாய் ? '
2.9.83
2274 'கொன்றேன் நான் என் தந்தையை ,
      மற்று உன் கொலை வாயால் ;
ஒன்றோ ? கானத்து அண்ணலை
      உய்த்தேன் ; உலகு ஆள்வான்
நின்றேன் ; என்றால் , நின் பிழை
      உண்டோ ? பழி உண்டோ ?
என்றேனும் தான் என் பழி
      மாயும் இடம் உண்டோ ? '
2.9.84
2275 'கண்ணாலே என் செய்வினை
      இன்னும் சில காண்பார்
மண்ணார் ; பாராது எள்ளுவர் ;
      வாளா பழி பூண்டேன் ;
'உண்ணா நஞ்சம் கொல்கிலது '
      என்னும் உரை உண்டு என்று
எண்ணா நின்றேன் ; அன்றி
      இரேன் என் உயிரோடு ஏ .
2.9.85
2276 'ஏன்று , உன் பாவிக் கும்பி வயிற்றின் இடை வைகித்
தோன்றும் தீராப் பாதகம் அற்று , என் துயர் தீரச்
சான்றும் தானே நல் அறம் ஆகத் தகை ஞாலம்
மூன்றும் காண , மா தவம் யானே முயல்கின்றேன் . '
2.9.86
2277 'சிறந்தார் சொல்லும் நல் உரை
      சொன்னேன் ; செயல் எல்லாம்
மறந்தாய் செய்தாய் ஆகுதி ;
      மாயா உயிர் தன்னைத்
துறந்தாய் ஆகின் , தூயையும்
      ஆதி ; உலகம் அத்து ஏ
பிறந்தாய் ஆதி ; ஈது அலது
      இல்லை பிறிது ' என்றான் .
2.9.87
2278 பரதன் கோசலையைத் தொழச் செல்லுதல்
இன்னணம் , இனையன இயம்பி , யானும் இப்
பன்ன அரும் கொடு மனப் பாவி பாடு இரேன் ;
துன்ன அரும் துயர் கெடத் தூய கோசலை
பொன் அடி தொழுவன் ' என்று எழுந்து போயினான் .
2.9.88
2279 பரதன் கோசலையை வணங்கிப் புலம்புதல்
ஆண்தகை , கோசலை அருகர் எய்தினன் ,
மீண்டு மண் கிழிதர வீழ்ந்து , கேழ் கிளர்
காண்தகு தடம் கை இன் கமலச் சிறு அடி
பூண்டனன் , கிடந்தனன் , புலம்பினான் அரோ !
2.9.89
2280 பரதன் புலம்பிக் கூறல் (2280-2284)
'எந்தை எவ் உலகு உளான் ? எம்முன் யாண்டையான் ?
வந்தது , தமியென் , இம் மறுக்கம் காணவோ ?
சிந்தையின் உறுதுயர் தீர்த்திர் ஆல் ' எனும்
அந்தரம் அத்து அமரரும் அழுது சோரவே .
2.9.90
2281 'அடி தலம் கண்டிலென் யான் என் ஐயனை ;
படி தலம் காவலன் , பெயரற் பாலனோ ?
பிடித்திலிர் போலும் நீர் ; பிழைத்திரால் ' எனும்
பொடி தலம் தோள் உறப் புரண்டு சோர்கின்றான் .
2.9.91
2282 'கொடியவர் யாவரும் குலங்கள் வேர் அற
நொடிகிலர் ; யான் அது நுவல்வது எங்ஙனம் ?
கடியவள் வயிற்றினில் பிறந்த கள்வனேன் ,
முடிகுவென் , அரும் துயர் முடிய ' என்னும் ; ஆல் .
2.9.92
2283 'இரதம் ஒன்று ஊர்ந்து , பார் இருளை நீக்கும் அவ்
வரதனில் ஒளி பெற மலர்ந்த தொல் குலம்
பரதன் என்று ஒரு பழி படைத்தது ' என்னும் ஆல்
மரகத மலை என வளர்ந்த தோளினான் .
2.9.93
2284 'வாள் தொடு தானையான் வானில் வைகிடக்
காடு ஒரு தலைமகன் எய்தக் கண் இலா
நாடு ஒரு துயரிடை நைவது ஏ ? ' எனும்
தாள் தொடு தடக்கை அத் தருமமே அனான் .
2.9.94
2285 பரதன் தூயன் என்பதைக் கோசலை உணர்தல்
புலம்பு உறு குரிசில் தன் புலர்வு நோக்கினாள் ,
குலம் பொறை கற்பு இவை சுமந்த கோசலை
'நிலம் பொறை ஆற்றலன் , நெஞ்சம் தூய்து ' எனாச்
சலம் பிறிது உற , மனம் தளர்ந்து கூறுவாள் .
2.9.95
2286 கோசலையின் வினா
மை அறு மனத்து ஒரு மாசு உளான் அலன் ;
செய்யன் ஏ என்பது தேரும் சிந்தையாள் ,
'கைகயர் கோமகள் இழைத்த கைதவம் ,
ஐய ! நீ அறிந்திலை போலும் ஆல் ? ' என்றாள் .
2.9.96
2287 பரதன் சூள்கூறத் தொடங்கல்
தாள் உறு குரிசில் , அத் தாய் சொல் கேட்டலும் ,
கோள் உறு மடங்கலில் குமுறி விம்முவான் ,
நாள் உறு நல் அறம் நடுங்க , நாவினால்
சூள் உறு கட்டுரை சொல்லல் மேயினான் .
2.9.97
2288 பரதன் சூளுரைகள் (2288-2305)
'அறம் கெட முயன்றவன் , அருள் இல் நெஞ்சினன் ,
பிறன் கடை நின்றவன் , பிறரைச் சீறினோன் ,
மறம் கொடு மன் உயிர் கொன்று வாழ்ந்தவன் ,
துறந்த மாதவர்க்கு அருந்துயரம் சூழ்ந்துளோன் . '
2.9.98
2289 'குரவரை மகளிரை வாளில் கொன்று உளோன் ,
புரவலன் உறு பொருள் புனைவில் வாரினோன் ,
விரவலர் வெரிந் இடை விழிக்க மீண்டுளோன் ,
இரவலர் அரும் நிதி எறிந்து வௌவினோன் . '
2.9.99
2290 'தழைத்த தண் துளவினோன் தலைவன் அல்லன் என்று
அழைத்தவன் , அற நெறி அந்தணாளரில்
பிழைத்தவன் , பிழைப்பு இலா மறையைப் பேணலாது ,
இழைத்த வன் பொய் எனும் இழுதை நெஞ்சினோன் '
2.9.100
2291 'தாய் பசி உழந்து உயிர் தளரத் தான் தனிப்
பாய் பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும் ,
நாயகன் பட நடந்தவனும் , நண்ணும் அத்
தீ எரி நரகம் அத்து கடிது செல்க யான் . '
2.9.101
2292 'தாளினில் அடைந்தவர் தம்மைத் தற்கு ஒரு
கோள் உற அஞ்சினன் கொடுத்த பேதையும் ,
நாளினும் அறம் மறந்தவனும் , நண் உறும்
மீளரு நரகு இடை கடிது வீழ்க யான் . '
2.9.102
2293 'பொய்க் கரி கூறினோன் , போருக்கு அஞ்சினோன் ,
கை கொளும் அடைக்கலம் கரந்து வவ்வினோன் ,
எய்த்த இடம் அத்து இடர் செய்தோன் , என்று இன்னோர் புகும்
மெய்க் கொடு நரகு இடை விரைவின் வீழ்க யான் . '
2.9.103
2294 அந்தணர் உறையுளை அனலி ஊட்டினோன் ,
மைந்தரைக் கொன்று உளோன் , வழக்கில் பொய்த்து உளோன் ,
நிந்தனை தேவரை நிகழ்த்தினோன் , புகும்
வெந்துயர் நரகத்து வீழ்க யானுமே .
2.9.104
2295 'கன்று உயிர் ஓய்ந்து உகக் கறந்து பால் உண்டோன் ,
மன்று இடை பிறர் பொருள் மறைத்து வவ்வினோன் ,
நன்றியை மறந்திடும் நயம் இல் நாவினோன் ,
என்று இவர் உறும் நரகு என்னது ஆகவே . '
2.9.105
2296 'ஆறு தன் உடன் வரும் அம் சொல் மாதரை
ஊறு கொண்டு அலைக்கத் தன் உயிர் கொண்டு ஓடினோன் ,
சோறு தன் அயல் உளோர் பசிக்கத் துய்த்து உளோன்
ஏறும் அக் கதியிடை யானும் ஏறவே . '
2.9.106
2297 'எஃகு எறி செரு முகத்து ஏற்ற தெவ்வருக்கு
ஒஃகினன் , உயிர் வளர்த்து உண்ணும் ஆசையான் ,
அஃகல் இல் அற நெறி ஆக்கியோன் பொருள்
வெஃகிய மன்னன் , வீழ் நரகின் வீழ்க யான் . '
2.9.107
2298 'அழி வரும் அரசியல் எய்தி , ஆகும் என்று ,
இழி வரு சிறு தொழில் இயற்றி , ஆண்டு , தன்
வழி வரு தருமத்தை மறந்து , மற்று ஒரு
பழி வரு நெறி படர் பதகன் ஆக யான் . '
2.9.108
2299 'தஞ்சு என ஒதுங்கினர் , தனது பார் உளோர் ,
எஞ்சல் இல் மறுக்கினோடு இரியல் போயுற ,
வஞ்சி சென்று இறுத்தவன் வாகை மீ கொள ,
அஞ்சின மன்னவன் ஆக யானும் ஏ . '
2.9.109
2300 'கன்னியை அழிசெயக் கருதினோன் , குரு
பன்னியை நோக்கினோன் , பருகினோன் நறை ,
பொன் இகழ் களவினில் பொருந்தினோன் , என
இன்னவர் உறு கதி என்னது ஆகவே . '
2.9.110
2301 'ஊண் நல உண் வழி நாயின் உண்டவன் ,
'ஆண் அலன் , பெண் அலன் , ஆர் கொல் ஆம் ? ' என
நாணலன் , நரகம் உண்டு என்னும் நல் உரை
பேணலன் பிறர் பழி பிதற்றி , ஆக யான் . '
2.9.111
2302 'மறு இல் தொல் குலங்களை மாசு இட்டு ஏற்றினோன் ,
சிறு விலை எளியவர் உணவு சிந்தினோன் ,
நறியன அயலவர் நாவின் நீர்வர
உறு பதம் நுங்கிய ஒருவன் ஆக யான் . '
2.9.112
2303 'வில்லினும் வாளினும் விரிந்த ஆண் தொழில்
புல்லிடை உகுத்தனென் பொய்ம்மை யாக்கையைச்
சில் பகல் ஓம்புவான் செறுநர் சீறிய
இல் இடை இடு பதம் ஏற்க , என் கையால் . '
2.9.113
2304 'ஏற்றவற்கு ஒருபொருள் உள்ளது , இன்று என்று
மாற்றலன் , உதவலன் , வரம்பு இல் பல் பகல்
ஆற்றினன் உழற்றும் ஓர் ஆதன் எய்தும் அக்
கூற்று உறு நரகின் ஓர் கூறு கொள்க யான் . '
2.9.114
2305 பிணிக்கு உறும் முடை உடல் பேணிப் பேணலார்த்
துணிக்குறு வயிர வாள் தடக்கை தூக்கிப் போய் ,
மணிக் குறு நகை இள மங்கைமார் கண்முன் ,
தணிக்குறு பகைஞரைத் தாழ்க , என் தலை . '
2.9.115
2306 'கரும்பு அலர் செந் நெல் அம் கழனிக் கான நாடு
அரும் பகை கவர்ந்து உண , ஆவி பேணினென் ,
இரும்பு அலர் நெடும் தளை ஈர்த்த கால் ஒடும்
விரும்பலர் முகத்து எதிர் விழித்து நிற்க யான் . '
2.9.116
2307 'தீ அன கொடியவள் செய்த செய்கையை
நாயினேன் உணரின் நல் நெறியில் நீங்கலாத்
தூயவர்க்கு இடர் இழைத்து உழலும் தோம் உடை
ஆயவர் வீழ்கதி அதனின் வீழ் கதி யான் . '
2.9.117
2308 கோசலை பரதனைத் தழுவிப் பாராட்டல் (2308-2310)
தூய வாசகம் சொன்ன தோன்றலைத்
தீய கானகம் திருவின் நீங்கி முன்
போயினான் வரக் கண்ட பொம்மல் ஆள் ,
ஆய காதலால் , அழுது புல்லினாள் .
2.9.118
2309 செம்மை நல் மனத்து அண்ணல் செய்கையும் ,
அம்மை தீமையும் , அறிதல் தேற்றினாள் ;
கொம்மை வெம் முலை குமுறு பால் உக ,
விம்மி விம்மி நின்று , அழுது வீங்கினாள் .
2.9.119
2310 'முன்னை நும் குல முதலுளோர்கள்தாம் ,
நின்னை யாவரே நிகர்க்கும் நீர்மையார் ?
மன்னர் மன்னவா ! ' என்று , வாழ்த்தினாள்
உன்ன உன்ன நைந்து உருகி விம்முவாள் .
2.9.120
2311 கோசலை பரதனைத் தந்தைக்கு இறுதிக்கடன் செய்க எனல்
'மறு இல் மைந்தனே ! வள்ளல் உந்தையார் ,
இறுதி எய்தி நாள் ஏழ் இரண்டின ;
சிறுவர் செய் கடன் செய்து தீர்த்தி ' என்று
உறுவல் மேயினாள் உரையின் ஏயினாள் .
2.9.121
2312 பரதன் வசிட்டனோடு சென்று தயரதன் உடலைக் காணுதல்
அன்னை ஏவினாள் அடி இறைஞ்சினான் ,
பொன்னின் வார் சடை புனிதனோடும் போய்த்
தன்னை நல்கியத் தரும நல்கினான்
பன்னு தொல் அறப் படிவம் நோக்கினான் .
2.9.122
2313 பரதன் அழுகை
மண்ணின்மேல் விழுந்து அலறி மாழ்குவான் ,
அண்ணல் , ஆழியான் , அவனி காவலான் ,
எண்ணெய் உண்ட பொன் எழில் கொள் மேனியைக்
கண்ண நீரினால் கழுவி ஆட்டினான் .
2.9.123
2314 தயரதன் உடம்பை விமானத்தேற்றுதல்
பற்றி அவ் வயின் பரிவின் வாங்கினார் ;
சுற்றும் நால் மறை துறை செய் கேள்வியார் ,
கொற்ற மண் கணை குமுற , மன்னனை
மற்று ஒர் பொன்னின் மா மானம் ஏற்றினார் .
2.9.124
2315 தயரதன் உடம்பை யானைமேல் வைத்துக்கொண்டு போதல்
கரை செய் வேலை போல் , நகரி கை எடுத்து ,
உரை செய் பூசல் இட்டு , உயிர் துளங்கு உற ,
அரச வேலை சூழ்ந்து , அழுது , கை தொழ
புரசை யானையில் கொண்டு போயினார் .
2.9.125
2316 வாத்தியங்களின் இரக்க ஒலி
சங்கு பேரியும் , தழுவு சின்னமும் ,
எங்கும் எங்கும் நின்று இரங்கி ஏங்குவ ,
மங்குல் தோய் நகர் மகளிர் ஆம் எனப்
பொங்கு கண் புடைத்து அழுவ போன்ற ஏ .
2.9.126
2317 தயரதன் உடலம்கொண்டு சரயுநதியை அடைதல்
மாவும் , யானையும் , வயங்கு தேர்களும் ,
கோவும் , நான்மறைக் குழுவும் , முன்செலத்
தேவிமார் ஒடு உம் கொண்டு , தெள் திரை
தாவு வார் புனல் சரயு எய்தினார் .
2.9.127
2318 ஈமப்பள்ளியில் தயரதனை ஏற்றிப் பரதனைக் கடன்செய் அழைத்தல்
எய்தி , நூல் உளோர் மொழிந்த யாவையும்
செய்து , தீ கலம் திருத்திச் செல்வனை ,
வெய்தின் ஏற்றினார் ; 'வீர ! நுந்தைபால்
பொய் இல் மாக் கடன் கழித்தி போந்து ' என்றார் .
2.9.128
2319 கடன்செய எழுந்த பரதனை வசிட்டன் தடுத்தல்
என்னும் வேலையில் , எழுந்த வீரனை ,
'அன்னை தீமையால் அரசன் நின்னையும்
துன்னு துன்பத்தால் , துறந்து போயினான் ,
முன்னரே ' என முனிவன் கூறினான் .
2.9.129
2320 பரதன் துயர்நிலை (2320-2324)
'துறந்து போயினான் ' எனவே , 'தோன்றல் நீ
பிறந்து பேர் அறம் பிழைத்தது ' என்றல் போல் ,
இறந்து போயினான் ; இருந்தது ஆண்டு அது
மறந்து வேறு ஒரு மைந்தன் ஆம் கொல் ஆம் !
2.9.130
2321 இடிக்கண் வாள் அரா இடைவது ஆம் எனாப்
படிக்கண் வீழ்ந்து அகம் பதைக்கும் நெஞ்சினான் ,
தடுக்கல் ஆகலாத் துயரம் தன் உளே
துடிக்க , விம்மி நின்று அழுது சொல்லுவான் .
2.9.131
2322 'உரைசெய் மன்னர் மற்று உன்னில் என்னில் யார் ?
இரவி தன் குலத்து எந்தை முந்தையோர்
பிரத பூசனைக்கு உரிய பேறு இலேன் ,
அரசு செய்யவோ ஆவது ஆயினேன் ? '
2.9.132
2323 'பூவில் நால் முகன் புதல்வன் ஆதியாம்
தாவு இல் மன்னர் , தம் தரும நீதியால்
தேவர் ஆயினார் ; சிறுவன் ஆகியே ,
ஆவ ! நான் பிறந்து அவத்தன் ஆனவா ! '
2.9.133
2324 'துன்னு தாள் வளம் சுமந்த தாழையில்
பன்னு வான் குலைப் பதடி ஆயினேன்
என்னை , என்னையே ஈன்று காத்த என்
அன்னையார் எனக்கு அழகு செய்தவா ! '
2.9.134
2325 சத்துருக்கனால் இறுதிக்கடனை நிறைவேற்றுதல்
என்று கூறி நின்று இடரில் மூழ்கும் அத்
துன்று தாரவற்கு இளைய தோன்றலால்
அன்று நேர் கடன் அமைவது ஆக்கினான் ,
நின்று நான்மறை நெறிசெய் நீர்மையான் .
2.9.135
2326 தயரதனுடைய தேவிமார் அறுபதினாயிரவரும் தீப்புகுதல்
இழையும் ஆரமும் இடையும் மின்னிடக்
குழையும் மா மலர்க் கொம்பு அனார்கள் தாம் ,
தழை இல் முண்டகம் தழுவு கான் இடை
நுழையும் மஞ்ஞை போல் , எரியில் மூழ்கினார் .
2.9.136
2327 அங்கி நீரினும் குளிர , அம்புயத்
திங்கள் வாள் முகம் திரு விளங்கு உறச்
சங்கை தீர்ந்து , தம் கணவர்பின் செலும்
நங்கைமார் புகும் உலகம் நண்ணினார் .
2.9.137
2328 ஈமக்கடன் முடித்த பரதன் மனையை அடைதல்
அனைய செய்கையால் , அரசர் கோமகற்கு
இனைய தன்மையால் இயைவ செய்து , பின் ,
மனையின் எய்தினான் மரபின் வாழ்வினை
வினையின் எய்தும் ஓர் பிணியின் வெ•கலான் .
2.9.138
2329 பரதன் இறுதிக்கடனை முடித்தல்
ஐந்தும் ஐந்தும் நாள் ஊழி ஆம் என ,
மைந்தன் , வெம் துயர்க் கடலின் வைகினான் ;
தந்தை தன் வயின் தருமம் யாவையும்
முந்து நூல் உளோர் முறையின் முற்றினான் .
2.9.139
2330 வசிட்டன் பரதனை அடைதல்
முற்றும் முற்றுவித்து உதவி , மும்மை நூல்
சுற்றம் யாவையும் தொடரத் தோன்றினான் ;
வெற்றி மாதவன் , வினை முடித்த அக்
கொற்ற வேல் நெடுங் குமரற் கூடினான் .
2.9.140
2331 மந்திரிமார் நகரப் பெருமக்களோடு பரதனை அடைதல்
'மன்னர் இன்றியே வையம் வைகல் தான்
தொன்மை அன்று ' எனத் துணியும் நெஞ்சினார் ,
அன்ன மா நிலம் அத்து அறிஞர்தம்மொடும் ,
முன்னை மந்திரம் கிழவர் முந்தினார் .
2.9.141


2.10 . ஆறு செல் படலம் (2332 - 2390 )

2332 மந்திரிமார் முதலியோர் பரதனை அடைதல்
வரன்முறை தெரிந்து உணர் மறையின் மா தவம் அத்து
அரு மறை முனிவனும் , ஆண்டையான் என ,
விரைவின் வந்து ஈண்டினர் ; விரகின் எய்தினர் ;
பரதனை வணங்கினர் ; பரியும் நெஞ்சினர் .
2.10.1
2333 மந்திரக் கிழவரும் , நகர மாந்தரும் ,
தந்திரத் தலைவரும் , தரணி பாலரும் ,
அந்தர முனிவரோடு அறிஞர் யாவரும் ,
சுந்தரக் குரிசிலை மரபில் சுற்றினார் .
2.10.2
2334 சுமந்திரன் வசிட்டன்முகத்தைக் கருத்துடன் நோக்குதல்
சுற்றினர் இருந்துழிச் சுமந்திரப் பெயர்ப்
பொன் தடந் தேர்வலான் , புலமை உள்ளத்தான் ,
கொற்றவற்கு உறு பொருள் குறித்த கொள்கையான்
முற்றுணர் முனிவனை முகத்து நோக்கினான் .
2.10.3
2335 சுமந்திரன் நோக்கினால் கூறியதை வசிட்டன் வாக்கால் பரதனுக்கு உரைத்தல் (2335-2342)
நோக்கினால் சுமந்திரன் நுவலல் உற்றதை ,
வாக்கினால் அன்றியே உணர்ந்த மாதவன் ,
'காக்குதி உலகு ! நின் கடன் அது ஆம் ' எனக்
கோக் குமரனுக்கு அது தெரியக் கூறுவான் .
2.10.4
2336 'வேதியர் , அருந்தவர் , விருத்தர் , வேந்தர்கள் ,
ஆதியர் நின் வயின் அடைந்த காரியம் ,
நீதியும் தருமமும் நிறுவ ; நீ இது ,
கோது அறு குணத்தினாய் ! மனத்துள் கோடியால் . '
2.10.5
2337 தருமம் என்று ஒரு பொருள் தந்து நாட்டுதல்
அருமை என்பது பெரிது அறிதி ; ஐய ! நீ ;
இருமையும் தருவதற்கு இயைவது ; ஈண்டு இது ,
தெருள் மனத்தார் செயும் செயல் இது ஆகுமால் .
2.10.6
2338 'வள் உறு வயிர வாள் அரசு இல் வையகம்
நள் உறு கதிர் இலாப் பகலும் , நாள் ஒடு உம்
தெள் உறு மதி இலா இரவும் , தேர்தரின்
உள் உறை உயிர் இலா உடலும் ஒக்குமே .
2.10.7
2339 தேவர் தம் உலகினும் , தீமை செய்து உழல்
மா வலி அவுணர்கள் வைகும் நாட்டினும் ,
ஏ எவை உலகம் என்று இசைக்கும் அன்னவை
காவல் செய் தலைவரை இன்மை கண்டிலம் .
2.10.8
2340 முறை தெரிந்து ஒருவகை முடிய நோக்குறின் ,
மறையவன் வகுத்தன , மண்ணில் , வான் இடை ,
நிறை பெருந்தன்மையின் நிற்ப , செல்வன ,
இறைகளை இல்லன யாவை ? காண்கிலம் .
2.10.9
2341 பூத்த நாள் மலர் அயன் ஆதிப் புண்ணியர்
ஏத்து வான் புகழினர் , இன்றுகாறும் கூக்
காத்தனர் ; பின் , ஒரு களைகண் இன்மையால்
நீத்த நீர் உடைகல நீரது ஆகுமால் .
2.10. 10
2342 'உந்தையோ இறந்தனன் ; உம்முன் நீத்தனன் ; $
வந்ததும் அன்னை தன் வரத்தில் , மைந்த ! நீ , $
அந்தம் இல் பேர் அரசு அளித்தி ; அன்னது $
சிந்தனை எமக்கு ' எனத் தெரிந்து கூறினான் .
2.10.11
2343 வசிட்டன் சொல்லைக் கேட்ட பரதன் நிலை (2343-2344)
'தஞ்சம் இவ் உலகம் , நீ தாங்குவாய் ' எனச்
செம் செவ்வே முனிவரன் செப்பக் கேட்டலும் ,
'நஞ்சினை நுகர் ' என , நடுங்குவாரினும்
அஞ்சினன் அயர்ந்தனன் அருவிக் கண்ணின் ஆன் .
2.10.12
2344 நடுங்கினன் ; நாத் தடுமாறி , நாட்டமும்
இடுங்கினன் ; மகளிரின் இரங்கும் நெஞ்சினன் ;
ஒடுங்கிய உயிரினன் ; உணர்வு கைதரத்
தொடங்கினன் , அரச அவைக்கு உள்ளம் சொல்லுவான் .
2.10.13
2345 பரதன் தன் உள்ளம் கருத்தை உரைத்தல் (2345-2349)
மூன்று உலகினுக்கும் ஓர் முதல்வன் ஆய் முதல்
தோன்றினன் இருக்க , யான் மகுடம் சூடுதல் ,
சான்றவர் உரைசெயத் தருமம் ஆதலால் ,
ஈன்றவள் செய்கையின் இழுக்கு உண்டாகும் ஓ ?
2.10.12
2346 'அடைவு அருங் கொடுமை என் அன்னை செய்கையை
நடை வரும் தன்மை நீர் , 'நன்று இது ' என்றிர் ஏல் ,
இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து இது
கடை வரும் தீ நெறிக் கலியின் ஆட்சியோ ? '
2.10.13
2347 வேந்து அவை இருந்த நீர் , விமலன் உந்தியில்
பூத்தவன் முதலிய புவியுள் தோன்றினார் ,
மூத்தவர் இருக்கவே , முறைமையான் நிலம்
காத்தவர் உளர் எனின் காட்டிக் காண்டிர் ஆல் .
2.10.14
2348 நல் நெறி என்னினும் , நான் இந் நானில
மன் உயிர்ப் பொறை சுமந்து இருந்து வாழ்கிலேன் ;
அன்னவன் தனை கொணர்ந்து , அலங்கல் மா முடி
தொல் நெறி முறைமையின் சூட்டக் காண்டிர் ஆல் .
2.10.15
2349 ''அன்று எனின் , அவனொடும் அரிய கான் இடை
நின்று , இனிது இரும் தவம் நெறியின் ஆற்றுவென் ;
ஒன்று இனி உரைக்கில் என் உயிரை நீக்குவென் ''
என்றனன் ; என்றபோது , இருந்த பேர் அவை .
2.10.16
2350 அவையோர் மகிழ்ச்சி (2350-2351)
ஆன்ற பேர் அரசனும் இருப்ப , ஐயனும்
ஏன்றனன் மணி முடி ஏந்த , ஏந்தல் நீ ,
வான் தொடர் திருவினை மறுத்தி ; மன் இளந்
தோன்றல்கள் யார் உளர் நின்னின் தோன்றினார் .
2.10.19
2351 'ஆழியை உருட்டியும் , அறங்கள் போற்றியும் ,
வேள்வியை இயற்றியும் , வளர்க்க வேண்டும் ஓ ?
ஏழின் ஒடு ஏழ் எனும் உலகும் எஞ்சினும்
வாழிய நின் புகழ் ! ' என்று வாழ்த்தினார் .
2.10.20
2352 பரதன் , இராமனை அழைத்துவரல்பற்றி முரசறைவிக்கச் சத்துருக்கனிடம் கூறல்
குரிசிலும் தம்பியைக் கூவிக் 'கொண்டலின்
முரசு அறைந்து , ''இ நகர் முறைமை வேந்தனைத்
தருதும் ஈண்டு '' என்பது சாற்றித் தானையை ,
விரைவினில் எழுக ! என விளம்புவாய் ' என்றான் .
2.10.21
2353 சத்துருக்கன் சொல்லக் கேட்ட மக்கள் மகிழ்ச்சி
நல்லவன் உரைசெய , நம்பி கூறலும்
அல்லலில் அழுங்கிய அன்பின் மா நகர் ,
ஒல் என ஒலித்தது ஆல் ; உயிர் இல் யாக்கையைச்
சொல் எனும் அமிழ்தினால் துளித்தது என்னவே .
2.10.22
2354 கவிக் கூற்று (2354-2355)
அவித்த ஐம்புலத்தவர் ஆதியாய் உள
புவி தலை உயிர் எலாம் , ''இராமன் பொன் முடி
கவிக்கும் '' என்று உரைக்கவே களித்தலால் , அது
செவி புலம் நுகர்வது ஓர் தெய்வத் தேன் கொல் ஆம் .
2.10.23
2355 படு முரசு அறைந்தனர் , ''பரதன் தம்முனைக்
கொடி நகர்த் தரும் ; அவன் கொணர சேனையும்
முடுகுக '' என்ற சொல் மூரி மா நகர் ,
உடு பதி வேலையின் உதயம் போன்றதே .
2.10.24
2356 படையின் புறப்பாடு
எழுந்தது பெரும்படை , ஏழு வேலையின்
மொழிந்த பேர் ஊழியில் முழங்கி ; முந்து எழ
அழிந்தது கேகயன் மடந்தை ஆசை ; போய்க்
கழிந்தது துயர் , நெடும் காதல் தூண்டவே .
2.10.25
2357 படையின் செலவு (2357-2384)
பண்ணின புரவி தேர் பகடு பண்டியும்
மண்ணினை மறைத்தன ; வளர்ந்த மா கொடி
விண்ணினை மறைத்தன ; விரிந்த மா துகள்
கண்ணினை மறைத்தன , கமலத் தோனை ஏ .
2.10.26
2358 ஈசன் இவ் உலகினை அழிக்கும் நாள் எழும்
ஓசையின் நிமிர்ந்து உளது , ஒல்லென் பேர் ஒலி ;
காசையில் கரியவற் காண மூண்டு எழும்
ஆசையின் நிமிர்ந்தது , அவ் அனிக ராசியே .
2.10.27
2359 படியொடு திரு நகர் துறந்து , பல் மரம்
செடி ஒடு தொடர் வனம் நோக்கி , சீதையாம்
கொடி ஒடு நடந்த அக் கொண்டல் ஆம் எனப்
பிடியொடு நடந்தன பெருங்கை வேழமே .
2.10.28
2360 சேற்று இள மரை மலர் சிறந்த ஆம் எனக்
கால் தளம் பொலிதரு கன்னிமாரொடும்
ஏற்று , இளம் பிடி குலம் , இகலில் மெல் நடை
தோற்று , இள மகளிரைச் சுமப்ப போன்றவே .
2.10.29
2361 வேதனை வெயில் கதிர் தணிக்க , மென் மழைச்
சீத நீரொடு நெடும் கொடி உம் சென்றன ;
கோதை வெம் சிலையவன் கோலம் காண்கிலா
மாதரின் நுடங்குவ , வரம்பு இல் கோடியே .
2.10.30
2362 வெண் மதி மீச் செல மேகம் ஊர்ந்து என
அண்ணல் வெம் கதிரவன் , அளவு இல் மூர்த்தி ஆய் ,
மண் இடை இழிந்து , ஒரு வழி கொண்டால் என ,
எண் அரு மன்னவர் களிற்றின் ஏகினார் .
2.10.31
2363 தேர் மிசைச் சென்றது ஒர் சிந்து ; செம்முகக்
கார் மிசை கழிந்தது ஆர்கலி ; ஒர் கார்க் கடல்
ஏர் மிசை இவுளிமேல் ஏகிற்று ; எங்கணும்
பார் மிசை படர்ந்தது , பதாதிப் பௌவமே .
2.10.32
2364 தாரையும் , சங்கமும் , தாளம் , கொம்பொடு ,
வார் விசி பம்பையும் , துடியும் , மற்றவும் ,
பேரியும் இயம்பல சென்ற பேதைமைப்
பூரியர் குழாம் அத்து இடை அறிஞர் போலவே .
2.10.33
2365 தா அரு நாண் முதல் அணி அலால் , தகை
மேவரு கலங்களை வெறுத்த மேனியர் ,
தேவரும் மருள் கொளத் தெரியும் காட்சியர் ,
பூ உதிர் கொம்பு என மகளிர் போயினார் .
2.10.34
2366 அதிர் கடல் வையகம் அனைத்தும் காத்தவன்
விதி வரும் தனிக் குடை மீது இலாப் படை ,
பொதி பல கவிகை மீன் பூத்தது ஆகிலும்
கதிர் மதி நீங்கிய கங்குல் போன்றதே
2.10.35
2367 செல்லிய செலவினால் , 'சிறிய திக்கு ' எனச்
சொல்லிய சேனையைச் சுமந்தது ஏ எனில் ,
ஒல்லொலி வேலை நீர் உடுத்த பாரை , 'ஓர்
மெல்லியல் ' என்றவர் மெய்யரே கொலாம் ?
2.10.36
2368 தங்கு செம் சாந்து அகில் கலவை சார்கில ,
குங்குமம் கோட்டில , கோவை முத்து இல ,
பொங்கு இளம் கொங்கைகள் புதுமை வேறு இல ,
தெங்கு இளம் நீர் எனத் தெரிந்த காட்சிய .
2.10.37
2369 இன் துணையவர் முலை எழுது சாந்தினும்
மன்றல் அம் தாரினும் மறைந்து இலாமை ஆல் ,
துன்று இளங்கொடி முதல் தூறு நீங்கிய
குன்று எனப் பொலிந்தன குவவுத் தோள்களே .
2.10.38
2370 நறை அறு கோதையர் நாள் செய் கோலம் அத்து இன்
துறை அற , அஞ்சனம் துறந்த நாட்டங்கள்
குறை அற நிகர்த்தன கொற்றம் முற்றுவான் ,
கறை அறக் கழுவிய கால வேலையே .
2.10.39
2371 விரி மணி மேகலை விரவி ஆர்க்கில
தெரிவையர் அல்குல் , தார் ஒலி இல் தேர் என ;
பரிபுரம் ஆர்க்கில பவளச் சீறடி ,
அரி இனம் ஆர்க்கிலாக் கமலம் என்னவே .
2.10.40
2372 மல்கிய கேகயன் மடந்தை வாசகம்
நல்கியது அரிவையர் நடுவிற்கே கொல் ஆம் !
புல்கிய மலர் வடம் பூண்கிலாமையால்
ஒல்கிய ஒருவகைப் பொறை உயிர்த்தவே .
2.10.41
2373 'கோமகன் பிரிதலின் , கோலம் நீத்து உள
தாமரைச் செல்வியும் , தவத்தை மேவினாள் ;
காமனும் , அரும் துயர் கடலில் மூழ்கினான்
ஆம் ' என நிகழ்ந்தது அவ் அளவில் சேனையே .
2.10.42
2374 மண்ணையும் , வானையும் , வயங்கு திக்கையும் ,
உண்ணிய நிமிர் கடல் ஒக்கும் என்பது என் ?
கண்ணினும் மனத்தினும் கமலம் அத்து அண்ணல் தன்
எண்ணினும் நெடிது அவண் எழுந்த சேனை ஏ !
2.10.43
2375 அலை நெடும் புனல் அறக் குடித்தலால் , அகம்
நிலைபெற நிலை நெறி நிறுத்தலால் , நெடு
மலையினை மண் உற அழுத்தலால் , தமிழ்த்
தலைவனை நிகர்த்தது அத் தயங்கு தானை ஏ .
2.10.44
2376 அறிஞரும் சிறியரும் ஆதி அந்தமாச்
செறி பெருந் தானையும் திருவும் நீங்கலால் ,
குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்ட நாள் ,
மறி கடல் ஒத்தது அவ் அயோத்தி மாநகர் .
2.10.45
2377 பெரும் திரை நதிகளும் , வயலும் , பெட்பு உறு
மரங்களும் , மலைகளும் , மண்ணும் , கண் உறத்
திருந்தலில் , அயோத்தி ஆம் தெய்வ மா நகர்
அருந்தெரு ஒத்தது அ படை செல் ஆறு அரோ !
2.10.46
2378 'தார்கள் தாம் , கோதை தாம் , தாமம் , தாம் , தகை
ஏர் கடாம் , கலவை தாம் , கமழ்ந்தின்று ' என்பர் ஆல்--
கார்கள் தாம் என மிகக் கடுத்த கை மலை
வார் கடாம் அல்லது , அம்மன்னன் சேனையே .
2.10.47
2379 ஆள் உலாம் கடலினும் அகன்ற அக் கடல் ,
தோள் உலாம் குண்டலம் முதல தொல் அணி
கேள் உலாம் மின் ஒளி கிளர்ந்தது இல்லை ஆல் ;
வாள் உலாம் நுதலியர் மருங்குல் அல்லது ஏ .
2.10.48
2380 மத்தளம் முதலிய வயங்கு பல் இயம்
ஒத்தன சேறலின் , உரை இலாமையின் ,
சித்திரச் சுவர் நெடுஞ் சேனை தீட்டிய
பத்தியை நிகர்த்தது அ படை இன் ஈட்டம் ஏ .
2.10.49
2381 ஏடு அறு கோதையர் விழியின் எய்த கோல்
ஊடு உற உரம் தொளைத்து உயிர் உணாவகை ,
ஆடவர்க்கு அரும் பெரும் கவசம் ஆயது--
காடு உறை வாழ்க்கை அக் கண்ணன் நண்ணல் ஏ .
2.10.50
2382 கனங்குழைக் கேகயன் மகளின் கண்ணிய
சினம் கிடந்து எரிதலின் தீய்ந்தவே கொலாம்
அனங்கன் ஐங் கொடுங்கணை கடந்த ஆடவர்
மனம் , கிடந்து உண்கில மகளிர் கொங்கையே .
2.10.51
2383 இன்னணம் நெடும்படை ஏக , ஏந்தலும் ,
தன்னுடைத் திரு அரைச் சீரை சாத்தினான் ;
பின் இளையவனொடும் , பிறந்த துன்பொடும் ,
நல் நெடும் தேர் மிசை நடத்தல் மேயினான் .
2.10.52
2384 தாயர் முதலியோர் உடன்வரப் பரதன் செல்லுதல்
தாயரும் , அருந் தவத்தவரும் , தந்தையின்
ஆய மந்திரியரும் , அளவு இல் சுற்றமும் ,
தூய அந்தணர்களும் , தொடர்ந்து சூழ்வரப்
போயினன்-- திரு நகர்ப் புரிசை வாயிலே .
2.10.53
2385 சத்துருக்கன் கூனியைக் கொல்ல முயலுதல்
மந்தரைக் கூற்றமும் , வழிச்செல்வாரொடும்
உந்தியே போதல் கண்டு , இளவல் ஓடி ஆர்த்து ,
அந்தரத்து ஏற்றுவான் அழன்று , பற்றலும் ,
சுந்தரத் தோளவன் விலக்கிச் சொல்லுவான் .
2.10.54
2386 பரதன் தடுத்துக் கூறுதல் (2386-2387)
''முன்னையர் முறைகெட முடித்த பாவியைச்
சின்னபின்னம் செய்து என் சினத்தைத் தீர்வென் ஏல் ,
'என்னை இன்று என் ஐயன் துறக்கும் ' என்று அலால் ,
'அன்னை ' என்று உணர்ந்திலென் ஐய ! நான் '' என்றான் .
2.10.55
2387 'ஆதலால் , முனியும் இன்று ஐயன் ; அந்தம் இல்
வேதனைக் கூனியை வெகுண்டும் என்னினும் ,
கோது இலா அருமறை குலவு நூல் வலாய் !
போதும் நாம் ' என்று கொண்டு அரிதில் போயினான் .
2.10.56
2388 இராமன் தங்கிய சோலையில் பரதன் தங்குதல் (2388-2389)
மொய் பெருஞ் சேனையும் மூரி ஞாலமும்
கை கலந்து அயல் ஒரு கடலின் சுற்றிட ,
ஐயனும் தேவியும் இளைய ஆளியும்
வைகிய சோலையில் தானும் வைகினான் .
2.10.57
2389 அல் அணை நெடுங் கண் நீர் அருவி ஆடினன் ,
கல் அணை கிழங்கொடு கனியும் உண்டிலன் ,
வில் அணைத்து உயர்ந்த தோள் வீரன் வைகிய
புல் அணை மருங்கில் , தான் பொடியின் வைகினான் .
2.10.58
2390 பரதன் ஊர்திகளை விடுத்துக் காலால் நடத்தல்
ஆண்டு நின்று , 'ஆண் தகை , அடியின் ஏகினான்
ஈண்டிய நெறி ' எனத் தானும் ஏகினான் ;
தூண்டிடு தேர்களும் துரக ராசியும்
காண்தகு கரிகளும் தொடரக் காலினே .
2.10.59


2.11 . குகப்படலம் (2391 - 2462 )

2391 பரதன் கங்கையையடைதல்
பூ விரி பொலன் கழல் பொரு இல் தானையான்
காவிரிநாடு அன்ன கழனி நாடு ஒரீஇத்
தாவர சங்கமம் என்னும் தன்மைய
யாவையும் இரங்கிடக் கங்கை எய்தினான் .
2.11.1
2392 பரதனொடு சென்ற சேனையுள் யானையின் மிகுதி
எண்ணரும் சுரும்பு தம் இனத்துக்கு அல்லது
கண் அகன் பெரும் புனல் கங்கை எங்கணும்
அண்ணல் வெம் கரி மதம் அத்து அருவி பாய்தலால்
உண்ணவும் குடையயும் உரித்து அன்று ஆயதே .
2.11.2
2393 குதிரைகளின் மிகுதி
அடி மிசைத் தூளி , புக்கு , அடைந்த தேவர்தம்
முடி உறப் பரந்தது ; ஓர் முறைமை தேர்ந்து இலேம் ;
நெடிது உயிர்த்து உண்டவும் நீந்தி நின்றவும்
பொடி மிசைப் புரண்டவும் புரவி ஈட்டமே .
2.11.3
2394 காலாட்படையின் மிகுதி
பாலை ஏய் நிறம் அத்து ஒடு பண்டு தான் படர் ,
ஓலை ஏய் நெடுங்கடல் ஓடிற்று இல்லை ஆல் ;
மாலை ஏய் நெடுமுடி மன்னன் சேனையாம்
வேலையே மடுத்தது அக் கங்கை வெள்ளமே .
2.11.4
2395 பரதன் பின் சென்ற படையின் அளவு
கான்தலை நண்ணிய காளை பின் படர்
தோன்றலை , அவ் வழி தொடர்ந்து சென்றன
ஆன்றவர் உணர்த்திய அக்குரோணிகள்
மூன்று பத்தாயிரத்து இரட்டி முற்றுமே .
2.11.5
2396 படைவரக்கண்ட குகன் நினைவும் செயலும் (2396-2401)
அப்படை கங்கையை அடைந்த ஆயிடைத்
'துப்பு உடைக் கடலின் நீர் சுமந்த மேகத்தை
ஒப்பு உடை அண்ணலோடு உடற்ற ஏ கொல் ஆம்
இ படை எடுத்தது ' என்று எடுத்த சீற்றத்தான் .
2.11.6
2397 குகன் எனும் பெயரிய கூற்றின் ஆற்றலான் ,
தொகை முரண் சேனையைத் துகளின் நோக்குவான் ,
நகை மிகக் கண்கள் தீ நாற நாசியில்
புகை உறக் குனிப்புறும் புருவப் போர் விலான் .
2.11.7
2398 மை உறவு உயிர் எலாம் இறுதி வாங்குவான் ,
கை உறு கவர் அயில் பிடித்த காலன்தான்
ஐ ஐநூறாயிரம் உருவம் ஆயின
மெய் உறு தானையான் , வில்லின் கல்வியான் .
2.11.8
2399 கட்டிய சுரிகையன் , கடித்த வாயினன் ,
வெட்டிய மொழியினன் , விழிக்கும் தீயினன் ,
கொட்டிய துடியினன் , குறிக்கும் கொம்பினன்
'கிட்டியது அமர் ' எனக் கிளரும் தோளினான் .
2.11.9
2400 'எலி எலாம் இ படை ; அரவம் யான் ' என ,
ஒலி உலாம் சேனையை உவந்து கூவினான் ;
வலி உலாம் உலகினில் வாழும் வள் உகிர்ப்
புலி எலாம் ஒரு வழி புகுந்த போலவே .
2.11.10
2401 மருங்கு அடை தென் கரை வந்து தோன்றினான் ;
ஒருங்கு அடை நெடும் படை ஒல் என் ஆர்ப்பினோடு
அருங் கடை யுகம் தனில் , அசனி மா மழை
கருங்கடல் கிளர்ந்து என கலந்து சூழவே .
2.11.11
2402 குகன் தன் படையினர்க்கு இட்ட கட்டளை (2402-2403)
தோன்றிய புளிஞரை நோக்கிச் 'சூழ்ச்சியின்
ஊன்றிய சேனையை உம்பர் ஏற்றுதற்கு
ஏன்றனென் ; என் உயிர் துணைவன் கு ஈகுவான்
ஆன்ற பேர் அரசு ; நீர் அமைதிர் ஆம் ' என்றான் .
2.11.12
2403 ''துடி எறி ; நெறிகளும் துறையும் சுற்றுற
ஒடி எறி ; அம்பிகள் யாதும் ஓட்டலிர் ;
கடி எறி ; கங்கையின் கரை வந்தோர்களைப்
பிடி ; எறி பட '' எனப் பெயர்த்தும் கூறுவான் .
2.11.13
2404 குகன் மீட்டும் கூறல் (2404-2413)
அஞ்சன வண்ணன் , என் ஆர் உயிர்
      நாயகன் , ஆளாமே ,
வஞ்சனையால் அரசு எய்திய
      மன்னரும் வந்தார் ஏ !
செஞ்சரம் என்பன தீ
      உமிழ்கின்றன , செல்லா ஓ ?
உஞ்சு இவர் போய்விடின் , ''நாய் குகன் ''
      என்று எனை ஓதார் ஓ ?
2.11.14
2405 ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவார் ஓ ?
வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில் ஆள் ஓ ?
தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ ?
'ஏழைமை வேடன் இறந்திலன் ' என்று , எனை ஏசார் ஓ ?
2.11.15
2406 முன்னவன் என்று நினைந்திலன் ;
      மொய் புலி அன்னான் , ஓர்
பின்னவன் நின்றனன் என்றிலன் ;
      அன்னவை பேசானேல் ,
என் இவன் என்னை இகழ்ந்தது ? இவ்
      எல்லை கடந்து அன்றோ ?
மன்னவர் நெஞ்சினில் , வேடர்
      விடும் சரம் வாயா ஓ ?
2.11.16
2407 பாவமும் நின்ற பெரும்பழியும் பகை நண்பு ஓடு உம்
ஏவமும் என்பவை மண்ணுலகு ஆள்பவர் எண்ணார் ஓ ?
ஆ ! அது போக ! என் ஆர் உயிர்த் தோழமை தந்தான்மேல்
போவது , சேனையும் ஆர் உயிரும் கொடு போய் அன்று ஓ ?
2.11.17
2408 அரும் தவம் என் துணை ஆள ,
      இவன் புவி ஆள்வான் ஓ ?
மருந்து எனின் அன்று உயிர் ; வண் புகழ்
      கொண்டு பின் மாயேன் ஓ ?
பொருந்திய கேண்மை உகந்தவர்
      தம்மொடு போகாது ஏ
இருந்ததும் நன்று கழிக்குவென்
      என்கடன் இன்று ஓடு ஏ .
2.11.18
2409 தும்பியும் மாவும் மிடைந்த பெரும்படை சூழ்வாரும்
வம்பு இயல் தார் இவர் வாள் வலி கங்கை கடந்து அன்று ஓ ?
வெம்பிய வேடர் உளீர் ! துறை ஓடம் விலக்கீர் ஓ
நம்பி முன்னே இனி நம் உயிர் மாய்வது நன்று அன்றோ ?
2.11.19
2410 போன படைத் தலை வீரர் தமக்கு இரை போதா இச்
சேனை கிடக்கிடு ; தேவர் வரின் , சிலை மா மேகம்
சோனை படக் குடர் சூறை பட சுடர் வாளோடும்
தானை படத் தனி யானை படத் திரள் சாயேன் ஓ .
2.11.20
2411 நின்ற கொடைக் கை என் அன்பன் உடுக்க , நெடும் சீரை
அன்று கொடுத்தவள் மைந்தர் பலம் அத்து ஐ , என் அம்பாலே
கொன்று குவித்த நிணம் கொள் பிணக் குவை கொண்டு ஓடித்
துன்று திரைக் கடல் , கங்கை மடுத்து இடை தூராது ஓ ?
2.11.21
2412 ''ஆடு கொடிப் படை சாடி , அறத்தவரே ஆள
வேடு கொடுத்தது , பார் '' எனும் இப் புகழ் மேவீர் ஓ ?
நாடு கொடுத்த என் நாயகனுக்கு இவர் , நாம் ஆளும்
காடு கொடுக்கிலர் ஆகி , எடுத்தது காணீர் ஓ ?
2.11.22
2413 மா முனிவர்க்கு உறவு ஆகி , வனம் அத்து இடை ஏ வாழும்
கோ முனியத் தகும் என்று , மனம் அத்து இறை கொள்ளாதே ,
ஏ முனை உற்றிடில் , ஏழு கடல் படை என்றாலும்
ஆ முனையின் சிறு கூழ் என இப்பொழுது ஆகாது ஓ ?
2.11.23
2414 சுமந்திரன் பரதனிடம் குகன் தன்மை சொல்லல் (2414-2416)
என்பன சொல்லி , இரும்பு அன மேனியர் ஏனோர் முன்
வன் பணை வில்லினன் , மல் உயர் தோளினன் , வாள் வீரற்கு
அன்பனும் , நின்றனன் ; நின்றது கண்டு , அரி ஏறு அன்ன
முன்பனில் வந்து , மொழிந்தனன் மூரிய தேர் வல்லான் .
2.11.24
2415 ''கங்கை இருகரை உடையான் ,
      கணக்கு இறந்த நாவாயான் ,
உங்கள் குலத் தனி நாதற்கு
      உயிர் துணைவன் , உயர் தோளான் ,
வெம் கரியின் ஏறு அனையான் ,
      வில் பிடித்த வேலையினான் ,
கொங்கு அலரும் நறும் தண் தார்க்
      குகன் என்னும் குறி உடையான் ''
2.11.25
2416 ''கல் காணும் திண்மையான் ,
        கரை காணாக் காதலான் ,
அல் காணில் கண்டு அனைய
        அழகு அமைந்த மேனியான் ,
மல் காணும் திரு நெடும் தோள்
        மழை காணும் மணி நிறத்தாய் !
நின் காணும் உள்ளத்தான் ,
        நெறி எதிர் நின்றனன் '' என்றான் .
2.11.26
2417 பரதன் குகனைக்காண விரைதல்
தன்முன்னே , அவன் தன்மை
        தன் துணைவன் முந்து உரைத்த
சொல் முன்னே உவக்கின்ற
        துரிசு இலாத் திரு மனத்தான் ,
'மன் முன்னே தழீஇக் கொண்ட
        மனக்கு இனிய துணைவன் ஏல் ,
என் முன்னே ; அவற் காண்பென்
        யானே சென்று ' என எழுந்தான் .
2.11.27
2418 பரதன் தோற்றங்கண்ட குகன் நிலையும் செயலும் (2418-2421)
என்று எழுந்து தம்பியொடும் எழுகின்ற காதலொடும்
குன்று எழுந்து சென்றது எனக் குளிர் கங்கை கரை குறுகி
நின்றவனை நோக்கினான் , திருமேனி நிலை உணர்ந்தான் ,
துன்று கரு நறும் குஞ்சி எயினர்கோன் துண் என்றான் .
2.11.28
2419 வற்கலையின் உடையானை மாசு அடைந்த மெய்யானை
நல் கலை இல் மதி என்ன நகை இழந்த முகத்தானை
கல் கனியக் கனிகின்ற துயரானைக் கண் உற்றான் ,
வில் கையின் நின்று இடைவீழ , விம்முற்று நின்று ஒழிந்தான் .
2.11.29
2420 ''நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான் ; அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான் ; தவம் வேடம் தலைநின்றான் ;
துன்பம் ஒரு முடிவு இல்லை ; திசை நோக்கி தொழுகின்றான் ;
எம்பெருமான் பின்பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு ? '' என்றான் .
2.11.30
2421 ''உண்டு இடுக்கண் ஒன்று ; உடையான் ,
        உலையாத அன்புடையான்
கொண்ட தவவேடமே
        கொண்டிருந்தான் ; குறிப்பு எல்லாம்
கண்டு உணர்ந்து பெயர்கின்றேன் ;
        காமின்கள் நெறி ; '' என்னாத்
தண் துறை ஓர் நாவாயில்
        ஒரு தனியே தான் வந்தான் .
2.11.31
2422 பரதன் வணங்கக் குகன் தழுவுதல்
வந்து , எதிரே தொழுதானை வணங்கினான் ; மலர் இருந்த
அந்தணனும் தனை வணங்கும் அவனும் , அவனடி வீழ்ந்தான் ;
தந்தையினும் களி கூரத் தழுவினான் , தகவு உடையோர்
சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியான் .
2.11.32
2423 குகன் வினாவும் பரதன் கூறும் விடையும்
தழுவின புளிஞர் வேந்தன்
        தாமரைச் செம் கணான் ஐ
'எழுவினும் உயர்ந்த தோளாய் !
        எய்தியது என்னை ? ' என்ன ,
'முழுது உலகு அளித்த தந்தை
        முந்தையோர் முறையில் நின்றும்
வழுவினன் , அதனை நீக்க
        மன்னனைக் கொணர்வான் ' என்றான் .
2.11.33
2424 பரதன்பால் தீதின்மை கண்ட குகன் வணங்கிக் கூறல் (2424-2426)
கேட்டனன் கிராதர் வேந்தன் ;
        கிளர்ந்து எழும் உயிரன் ஆகி ,
மீட்டும் மண்ணதனில் வீழ்ந்தான் ;
        விம்மினன் , உவகை வீங்கத்
தீட்ட அரு மேனி மைந்தன்
        சேவடிக் கமலப் பூவில்
பூட்டிய கையன் பொய் இல்
        உள்ளத்தன் புகலல் உற்றான் .
2.11.34
2425 தாய் உரை கொண்டு , தாதை
        உதவிய தரணி தன்னைத்
தீ வினை என்ன நீத்துச்
        சிந்தனை முகத்தில் தேக்கிப்
போயினை என்ற போழ்து ,
        புகழினோய் ! தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின் கேழ்
        ஆவரோ ? தெரியின் அம்மா !
2.11.35
2426 என் புகழ்கின்றது ஏழை
        எயினனேன் ? இரவியென்பான்
தன் புகழ்க் கற்றை மற்றை
        ஒளிகளைத் தவிர்க்குமா போல ,
மன் புகழ் பெருமை நுங்கள்
        மரபினோர் புகழ்கள் எல்லாம்
உன் புகழ் ஆக்கிக்கொண்டாய்
        உயர் குணம் அத்து உரவு தோளாய் !
2.11.36
2427 பரதன்பால் குகன் ஒப்பற்ற அன்பு கொள்ளுதல்
என இவை அன்ன மாற்றம்
        இவைவன பலவும் கூறிப்
புனை கழல் புலவு வேல் கைப்
        புளிஞர் கோன் பொரு இல் காதல்
அனையவற்கு அமைவில் செய்தான் ;
        ஆர் அவற்கு அன்பு இலாதார்
நினைவு அரும் குணம் கொடு
        அன்றோ இராமன்மேல் நிமிர்ந்த காதல் .
2.11.37
2428 இராமன் உறைந்த இடத்தைப் பரதனுக்குக் குகன் காட்டுதல்
அ வழி அவனை நோக்கி ,
        அருள் தரு வாரி அன்ன
செம் வழி உள்ளத்து அண்ணல் ,
        தென் திசை செங்கை கூப்பி ,
'எ வழி உறைந்தான் நம் முன் ? '
        என்றலும் , எயினர் வேந்தன் ,
'இ வழி வீர ! யானே
        காட்டுவல் ; எழுக ' என்றான் .
2.11.38
2429 இராமன் பள்ளிகொண்ட இடம் கண்ட பரதனுடைய செயலும் சொல்லும் (2429-2430)
கார் எனக் கடிது சென்றான் ;
        கல் இடை படுத்த புல்லின்
வார் சிலைத் தடக்கை வள்ளல்
        வைகிய பள்ளி கண்டான் ;
பார் மிசைப் பதைத்து வீழ்ந்தான் ;
        பருவரல் பரவை புக்கான் .
வார் மணிப் புனலால் மண்ணை
        மண்ணுநீர் ஆட்டும் கண்ணான் .
2.11.39
2430 இயன்றது என் பொருட்டின் ஆல் இவ்
        இடர் உனக்கு என்ற போழ்தும் ,
அயின்றனை கிழங்கும் காயும்
        அமுது என , அரிய புல்லில்
துயின்றனை எனவும் , ஆவி
        துறந்திலென் ; சுடரும் காசு
குயின்று உயர் மகுடம் சூடும்
        செல்வமும் கொள்வென் யானே .
2.11.40
2431 பரதன் , இலக்குவன் இரவை எங்கே கழித்தான் ? எனக் குகன் கூறல் (2431-2432)
தூண் தர நிவந்த தோளான்
        பின்னரும் சொல்லுவான் , 'அந்
நீண்டவன் துயின்ற சூழல்
        இது எனில் , நிமிர்ந்த நேயம்
பூண்டவன் , தொடர்ந்து பின்னே
        போந்தவன் , பொழுது நீத்தது
யாண்டு ? ' என இனிது கேட்டான் ;
        எயினர் கோன் இதனைச் சொன்னான் .
2.11.41
2432 'அல்லை ஆண்டு அமைந்த மேனி
        அழகனும் அவளும் துஞ்ச ,
வில்லை ஊன்றிய கையோடும்
        வெய்து உஇர்ப்பு ஓடு உம் வீரன் ,
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய் !
        கண்கள் நீர் சொரிய கங்குல்
எல்லை காண்பு அளவும் நின்றான் ;
        இமைப்பு இலன் நயனம் ' என்றான் .
2.11.42
2433 பரதன் இலக்குவன் நிலைகண்டு பாராட்டுதலும் தன் நிலைகண்டு நொந்து கூறலும்
என்பத்தைக் கேட்ட மைந்தன் ,
        '''இராமனுக்கு இளையார் ' என்று
முன்பு ஒத்த தோற்றத் தேம் இல் ,
        யான் என்றும் முடிவு இலாத
துன்பத்துக்கு ஏது ஆனேன் ;
        அவன் அது துடைக்க நின்றான் ;
அன்பத்துக்கு எல்லை உண்டோ ?
        அழகிது என் அடிமை '' என்றான் .
2.11.43
2434 பரதன் , கங்கை கடத்துவிக்குமாறு குகன்பால் வேண்டுதல்
அ இடை , அண்ணல் தானும் ,
        அன்று அரும் பொடியின் வைகித்
'தெவ் இடைதர நின்று ஆர்க்கும்
        செறி கழல் புளிஞர் கோமாஅன் !
இவ்விடைக் கங்கையாற்றின்
        ஏற்றினை ஆயின் , எம்மை
வெவ் இடர் கடல் நின்று ஏற்றி ,
        வேந்தன்பால் விடுத்தது ' என்றான் .
2.11.44
2435 குகன் கட்டளையால் நாவாய்கள் வருதல் (2435-2436)
'நன்று ' எனப் புளிஞர் வேந்தன்
        நண்ணினன் தமரை ; 'நாவாய்
சென்று இனி தருதிர் ' என்ன ,
        வந்தன ; சிவன் சேர் வெள்ளிக்
குன்றெனக் குனிக்கும் அம்பொற்
        குவடு என குபேரன் மானம்
ஒன்று என நாணிப் பல வேறு
        உருவு கொண்டனைய ஆன .
2.11.45
2436 நங்கையர் நடையின் அன்னம்
        நாண் உறு செலவின் நாவாய் ,
கங்கையும் இடம் இலாமை ,
        மிடைந்தன கலந்த எங்கும் ;
அங்கொடு இங்கு இழித்தி ஏற்றும்
        அமைதியின் அமரர் வையம் அத்து
இங்கு ஒடு அங்கு இழித்தி ஏற்றும்
        இரு வினை என்னல் ஆன .
2.11.46
2437 குகன் நாவாய்கள் வந்தமை கூற , அவற்றில் படைகளை யேற்றும்படி
பரதன் சுமந்திரனிடம் சொல்லுதல்
'வந்தன வரம்பு இல் நாவாய் ;
        வரி சிலை குரிசில் மைந்த !
சிந்தனை யாவது ? ' என்று
        சிருங்கிபேரியர் கோன் செப்பச்
சுந்தர வரி விலானும்
        சுமந்திரன் தன்னை நோக்கி ,
'எந்தை ! இத் தானை தன்னை
        ஏற்றுதி , விரைவின் ' என்றான் .
2.11.47
2438 படைகள் கங்கையைக் கடத்தல்
குரிசிலது ஏவலால் அக்
        குரகதத் தேர் வலானும்
வரிசையின் வழாமை நோக்கி ,
        மரபு உளி வகையின் ஏற்றக்
கரி பரி இரதம் காலாள்
        கணக்கு அறு கரையில் வேலை
எரி மணி திரையின் வீசும்
        கங்கை ஆறு ஏறிற்று அன்றே .
2.11.48
2439 யானைகள் கங்கையை நீந்திக் கடத்தல் (2439-2441)
இடி படு முழக்கம் பொங்க , இன மழை மகர நீரை
முடிவு உற முகப்ப , ஊழி இறுதியில் மொய்ப்ப போலக்
கொடியொடு வங்கம் வேலைக் கூம்பு ஒடு படர்வ போல
நெடிய கை எடுத்து நீட்டி நீந்தின நெடுங்கை வேழம் .
2.11.49
2440 யானைகள் இறங்கி நீந்துதலால் கங்கைநீர் கரைகடந்தோடுதல்
சங்கமும் மகர மீனும் தரளமும் மணியும் தள்ளி ,
வங்கம் நீர் கடலும் வந்து தன் வழிப் படர , மானப்
பொங்கு வெம் களிறு நூக்கக் கரை ஓரீஇப் போயிற்று ; அம்மா !
கங்கையும் இராமற் காணும் காதலது என்ன மாதோ .
2.11.50
2441 கங்கையில் நீந்தும் யானைகளின் மத்தகத் தோற்றம்
பாங்கின் உத்தரியம் மானப் படர் திரை தவழப் பாரின்
வீங்கு நீர் அழுவம் தன்னுள் விழும் மதக் கலுழி வெள்ளம் அத்து
ஓங்கல்கள் தலைகள் தோன்ற ஒளித்து , அவண் உயர்ந்த கும்பம் ,
பூங்குழல் கங்கை நங்கை முலை எனப் பொலிந்த மாதோ !
2.11.51
2442 தேருறுப்புக்கள் நாவாயில் அக்கரை சேர்தல்
கொடிஞ்சு ஒடு தட்டும் அச்சும் ஆழியும் கோத்த மொட்டும்
நெடும் சுவர் கொடியும் யாவும் நெறி வரும் முறையின் நீக்கி ,
விடும் சுவல் புரவியோடும் வேறு வேறு ஏற்றிச் சென்ற
மடிஞ்சபின் உடம்பு கூட்டும் வினை என வயிரத் தேர்கள் .
2.11.52
2443 குதிரைகள் நாவாய் மீது அக்கரை சேர்தல்
நால் இரண்டு ஆய கோடி நவை இல் நாவாய்கள் மீது ஆ
சேல் திரண்டு அனைய ஆய கதியொடு நிமிரச் சென்ற ;
பால் திரண்ட அனைய மெய்ய , பயம் திரண்டனைய நெஞ்ச ,
கால் திரண்ட அனைய கால , கடும் நடை கலினப் பாய்மா
2.11.53
2444 ஓடத்திற் செல்லும் மாதர்களின் தோற்றம் (2444-2446)
ஊடு உற நெருக்கி , ஓடத்து ஒருவர்முன் ஒருவர் கிட்டிச்
சூடகத் தளிர்க்கை மாதர் தழுவினர் , துவன்றித் தோன்றப்
பாடு இயல் களி நல் யானைப் பந்தி அம் கடையின் குத்தக்
கோடுகள் மிடைந்த என்ன , மிடைந்தன குவவுக் கொங்கை .
2.11.54
2445 பொலம் குழை மகளிர் , நாவாய்ப் போக்கின் ஒன்று ஒன்று தாக்க ,
மலங்கினர் , இரண்டு பாலும் மறுகினர் , வெருவி நோக்க ,
அலங்கு நீர் வெள்ளம் தள்ளி அழிதர , அங்கும் இங்கும்
கலங்கின வெருவிப் பாயும் கயல் குலம் நிகர்த்த கண்கள் .
2.11.55
2446 இயல்வு உறு செலவின் நாவாய்
        இரு கையும் எயினர் தூண்டத்
துயல்வன துடுப்பு வீசும்
        துவலைகள் , மகளிர் மென் தூசு
உயல்வு உறு பரவை அல்குல்
        ஒளிப்பு அறத் தளிப்ப , உள்ளத்து
அயர்வு உறும் மதுகை மைந்தர்க்கு
        அயா வுயிர்ப்பு அளித்தது அம்மா !
2.11.56
2447 நாவாய்கள் சென்று சென்று திரும்புந் தோற்றம்
இ கரை இரைத்த சேனை எறிகடல் முகந்த ஏகி ,
அ கரை அடைய வீசி , வறியன அணுகும் நாவாய் ,
புக்கு அலை ஆழி நல் நீர் பொறுத்தன , போக்கி போக்கி ,
அக்கணம் உவரி மீளும் அகல் மழை நிகர்த்த ; அம்மா !
2.11.57
2448 நாவாய்கள் கப்பல்கள் போலச் செல்லுதல்
அகில் இடு தூபம் அன்ன
        ஆய் மயில் பீலி ஆர்த்த
முகிழ் உடை முரண் மாத் தண்டு
        கூம்பு என , முகிலின் வண்ணத்
துகில் ஒடு தொடுத்த செம் பொன்
        தகடு இடை தொடுத்த முத்தம்
நகு கொடி நெடிய பாயின்
        நவ் எனச் சென்ற ; நாவாய் .
2.11.58
2449 மகளிர் ஏறிய ஓடங்கள் வானம் ஊர்தி போல விளங்குதல்
ஆனனம் கமலம் அத்து அன்ன , மின் அன்ன அமிர்தச் செவ்வாய்த்
தேன் நனை குழலார் ஏறும் அம்பிகள் சிந்தும் முத்தம்
மீன் என , விரிந்த கங்கை விண் எனப் பண்ணை முற்றி ,
வானவர் மகளிர் ஊரும் மானமே நிகர்த்த மாது ஓ !
2.11.59
2450 ஓடங்கள் உயிர்படைத்தவைபோல நடத்தல்
துளி படத் துழாவு திண் கோல் துடுப்பு இரு காலில் தோன்ற ,
நளிர் புனல் கங்கை யாற்றில் நண்டு எனச் செல்லும் நாவாய் ,
களி உடை மஞ்ஞை அன்ன கனம் குழைக் கயல் கண் மாதர்
ஒளிர் அடிக் கமலம் தீண்ட , உயிர் படைத்தனவே ஒத்த .
2.11.60
2451 முனிவர் வான்வழிச் சென்று கங்கையினைக் கடத்தல்
மை அறு விசும்பில் மண்ணில் மற்றும் ஓர் உலகில் முற்றும்
மெய் வினை தவமே ; அன்றி , மேலும் ஒன்று உளதோ ? கீழோர்
செய்வினை நாவாய் ஏறித் தீண்டலர் , மனத்தில் செல்லும்
மொய் விசும்பு ஓடம் ஆகத் தேவரின் முனிவர் போனார் .
2.11.61
2452 படையாவும் நகர மக்கள் அனைவரும் கங்கை கடந்தமை
'அறுபதினாயிரம் அக்குரோணி ' என்று
இறுதி செய் சேனையும் , எல்லை தீர் நகர்
மறு அறு மாந்தரும் , மகளிர் வெள்ளமும் ,
செறி திரைக் கங்கை பின் கிடக்கச் சென்ற ஏ .
2.11.62
2453 பரதன் நாவாயில் ஏறுதல்
சுழித்து நீர் வரு துறை ஆற்றைச் சூழ் படை
கழித்து நீங்கியது எனக் கள்ள ஆசையை
அழித்து , வேறு அவனி பண்டு ஆண்ட வேந்தரை
இழித்து , மேல் ஏறினான் , தானும் ஏறினான் .
2.11.63
2454 பரதன் குகனுக்குக் கோசலையை அறிமுகமாக்குதல்
சுற்றத்தார் தேவரொடும் தொழ நின்ற
        கோசலையைத் தொழுது நோக்கிக்
'கொற்றம் தார் குரிசில் ! இவர் ஆர் ? ' என்று
        குகன் வினவக் 'கோக்கள் வைகும்
முற்றத்தான் முதல் தேவி , மூன்று உலகும்
        ஈன்றானை முன் ஈன்றானைப்
பெற்றத்தால் பெறும் செல்வம் யான் பிறத்தல்
        ஆல் துறந்த பெரியாள் ' என்றான் .
2.11.64
2455 பரதன் கோசலைக்குக் குகனை அறிமுகமாக்குதல்
என்றலுமே அடியின் மிசை நெடிது வீழ்ந்து
        அழுவானை , ''இவன் யார் '' என்று
கன்று பிரி காரா இன் துயர் உடைய கொடி
        வினவக் கழல் கால் மைந்தன்
இன் துணைவன் இராகவனுக்கு ; இலக்குவற்கும்
        இளையவற்கும் எனக்கும் மூத்தான் ;
குன்று அனைய திரு நெடுந்தோள் குகன் என்பான் ,
        இ நின்ற குரிசில் என்றான் .
2.11.65
2456 கோசலை கூறிய வாழ்த்துரை
நைவீர் அலீர் மைந்தீர் ! இனித் துயரால்
        நாடு இறந்து காடு நோக்கி
மெய் வீரர் பெயர்ந்ததுவும் நலம் ஆயிற்று ஆம்
        அன்றே ? விலங்கல் திண் தோள்
கை வீரக் களிறு அனைய காளை இவன்
        தன்னோடு கலந்து நீங்கள்
ஐவீரும் ஒருவீராய் , அகல் இடத்தை
        நெடுங்காலம் அளித்திர் என்றாள் .
2.11.66
2457 சுமித்திரையை அறிவித்தல்
அறம் தானே என்கின்ற அயல் நின்றாள்
        தனை நோக்கி , 'ஐய ! அன்பின்
நிறைந்தாளை உரை ' என்ன , ''நெறி திறம்பாத்
        தன் மெய்யை நிற்பது ஆக்கி ,
இறந்தான் தன் இளந்தேவி , யாவர்க்கும்
        தொழுகுலம் ஆம் 'இராமன் பின்பு
பிறந்தானும் உளன் ' என்னப் பிரியாதான் தனைப்
        பயந்த பெரியாள் '' என்றான் .
2.11.67
2458 குகன் கைகேயியைச் சுட்டி , இவர் யார் ? என்று வினவுதல்
சுடும் மயானம் அத்து இடை தன் துணை ஏகத்
        தோன்றல் துயர்க் கடலின் ஏகக் ,
கடுமை ஆர் கானம் அத்து இடை கருணை ஆர்
        கலி ஏகக் கழல் கால் மாயன்
நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம் தன்
        மனம் அத்து ஏ நினைந்து செய்யும்
கொடுமையால் அளந்தாளை '' 'யார் இவர் ? ' என்று
        உரை '' என்னக் குரிசில் கூறும் .
2.11.68
2459 பரதன் குகனுக்குக் கைகேயியை அறிமுகமாக்குதல்
படர் எலாம் படைத்தாளைப் பழி வளர்க்கும்
        செவிலியைத் தன் பாழ்த்த பாவிக்
குடரிலே நெடுங்காலம் கிடந்தேன் கு உம் உயிர்ப்
        பாரம் குறைந்து தேய ,
உடர் எலாம் , 'உயிர் இலா எனத் தோன்றும்
        உலகத்தே ஒருத்தி அன்றே
இடர் இலா முகத்தாளை அறிந்திலை ஏல்
        இந் நின்றாள் என்னை ஈன்றாள் .
2.11.69
2460 பரதன் ஏறிய ஓடம் தென்கரை அடைதல்
என்னக் கேட்டு அவ் இரக்கம் இலாளையும் ,
தன் நல் கையின் , வணங்கினன் தாய் என ;
அன்னப் பேடை சிறை இலதாய்க் கரை ,
துன்னிற்று என்னவும் வந்தது தோணியே .
2.11.70
2461 தாய்மார் சிவிகையில் வரப் பரதன் நடந்து செல்லுதல்
இழிந்த தாயர் சிவிகையின் ஏகத் தான்
பொழிந்த கண்ணீர்ப் புது புனல் போயினான் ;
ஒழிந்திலன் குகனும் , உடன் ஏகினான் ;
கழிந்தனன் பல காவதம் காலின் ஏ .
2.11.71
2462 பரதன் வரப் பரத்துவாச முனிவன் எதிர்கொள்ளல்
பரத்தின் நீங்கும் பரத்துவன் என்னும் பேர்
வரத்தின் மிக்கு உயர் மாதவன் வைகு இடம்
அருத்தி கூர அணுகினன் ; ஆண்டு அவன் ,
விருத்தி வேதியரோடு எதிர் மேவினான் .
2.11.72


2.12 . திருவடிசூட்டு படலம் (2463 - 2604 )

2463 பரதன் வணங்க முனிவன் ஆசி கூறுதல்
வந்த மா தவத்தோன் ஐ அம் மைந்தனும் ,
தந்தை ஆம் எனத் தாழ்ந்து வணங்கினான் ;
இந்து மோலி அன்னானும் , இரங்கினான் ,
அந்தம் இல் நலத்து ஆசிகள் கூறினான் .
2.12.1
2464 பரத்துவன் பரதனை வினாதல்
'எடுத்த மா முடி சூடி , நின்பால் இயைந்து
அடுத்த பேர் அரசு ஆண்டிலை , ஐய ! நீ ,
முடித்த வார் சடைக் கற்றையை , மூசு தூசு
உடுத்து நண்ணுதற்கு உற்று உளது யாது ? ' என்றான் .
2.12.2
2465 பரதன் விடையிறுத்தல் (2465-2466)
சினக் கடும் திறல் சீற்ற வெம் தீயினால்
மனக் கடுப்பினன் , மா தவத்து ஓங்கலை ,
'எனக்கு அடுப்பது இயம்பிலை நீ என்தான் ?
உனக்கு அடுப்பது அன்று , ஆல் , உரவோய் ! ' எனா .
2.12.3
2466 மறையின் கேள்வற்கு மன் இளம் தோன்றல் , பின் ,
'முறையின் நீங்கி முது நிலம் கொள்கிலேன் ;
இறைவன் கொள்கிலன் ஆம் எனின் , யாண்டு எலாம்
உறைவென் கானத்து ஒருங்கு உடனே ' என்றான் .
2.12.4
2467 பரதன் உரையால் முனிவர்கள் மகிழ்தல்
உரைத்த வாசகம் கேட்டலும் , உள் எழுந்து
இரைத்த காதல் இரும் தவத்தோர்க்கு எலாம்
குரைத்த மேனியொடு உள்ளம் குளிர்ந்தவால் ,
அரைத்த சாந்துகொடு அப்பியது என்னவே .
2.12.5
2468 அந்தி வந்தடைதல்
அன்ன காதல் அருந்தவர் , 'ஆண்தகை !
நின்னை ஒப்பவர் யார் உளர் நீ அலால் ? '
என்ன வாழ்த்திடும் ஏல்வை , இரவியும்
பொன்னின் மேருவில் போய் மறைந்திட்டது ஏ .
2.12.6
2469 பரதன் சேனைக்குப் பரத்துவன் விருந்து அளித்தல் (2469-2479)
ஆய காலையில் ஐயனைக் கொண்டு தன்
தூய சாலை குறுகினன் தோம் இலான் ;
'மேய சேனைக்கு அமைப்பென் விருந்து ' எனாத்
தீயின் ஆவுதி செங்கையின் ஓக்கினான் .
2.12.7
2470 துறந்த செல்வன் நினையத் துறக்கம்தான்
பறந்து வந்து படிந்தது ; பல்சனர் ,
பிறந்து வேறு ஒர் உலகு பெற்றார் என ,
மறந்து வைகினர் முன்னைத் தம் வாழ்வு எலாம் .
2.12.8
2471 நந்தல் இல் அறம் நந்தினர் ஆம் என ,
அந்தரத்தின் அரம்பையர் , அன்பினர் ,
வந்து உவந்து எதிர் ஏற்றனர் , மைந்தரை ,
இந்துவின் சுடர் கோயில் கொண்டு ஏகினார் .
2.12.9
2472 நானம் நன்கு உரைத்தார் , நளிர் வான் இடை
ஆன கங்கை அரும் புனல் ஆட்டினார் ;
கான மா மணிக் கற்பகம் தாங்கிய
ஊனம் இல் மலர் ஆடை உடுத்தினார் .
2.12.10
2473 கொம்பின் நின்று நுடங்குறு கொள்கையார் ,
செம் பொனின் கல ராசி திருத்தினார் ;
அம்பரத்தின் அரம்பையர் , அன்பொடும் ,
உம்பர் கோன் நுகர் இன் அமிழ்து ஊட்டினார் .
2.12.11
2474 அஞ்சு அடுத்த அமளி , அலத்தகப்
பஞ்சு அடுத்த பரிபுரப் பல்லவம் ,
நஞ்சு அடுத்த நயனியர் , நவ்வியின்
துஞ்ச , அத்தனை மைந்தரும் துஞ்சினார் .
2.12.12
2475 ஏந்து செல்வம் அத்து இமையவர் ஆம் எனக்
கூந்தல் தெய்வ மகளிர் கொண்டாடினார் ,
வேந்தர் ஆதி , சிவிகையின் வீங்கு தோள்
மாந்தர் காறும் , வரிசை வழாமலே .
2.12.13
2476 மாதர் யாவரும் வானவர் தேவியர்
கோது இல் செல்வத்து வைகினர் , கொவ்வை வாய்த்
தீது இல் தெய்வ மடந்தையர் , சேடியர் ,
தாதிமார் , எனத் தம் பணி கேட்பவே .
2.12.14
2477 நந்து அம் நந்த வனங்களில் , நாள் மலர்க்
கந்தம் உந்திய கற்பகக் காவில் , நின்று
அந்தர் வந்தென , அந்தி தன் கை தர
மந்தம் முந்த , நடந்தது வாடை ஏ .
2.12.15
2478 மான்று அளிக் குலம் மா மதம் வந்து உணத்
தேன் தளிர்த்த கவளமும் , செம் கதிர்
கான்ற நெல் தழைக் கற்றையும் , கற்பகம்
ஈன்று அளிக்க , நுகர்ந்தன யானையே .
2.12.16
2479 நரகதர்க்கு அறம் நல்கும் நலத்த நீர்
கர கதக் கரி கால் நிமிர்த்து உண்டன ;
மரகதத்தின் கொழுந்து என வார்ந்த புல்
குரகதம் அத்து இன் குழாங்களும் கொண்டவே .
2.12.17
2480 பரதன் காய்கிழங்கு உண்டு புழுதியில் வதித்தல்
இன்னர் , இன்னணம் யாவரும் , இந்திரன்
துன்னு போகங்கள் துய்த்தனர் ; தோன்றல்தான் ,
அன்ன காயும் கிழங்கும் உண்டு , அவ் இராப்
பொன்னின் மேனி பொடி உறப் போக்கினான் .
2.12.18
2481 இரவு நீங்கிக் கதிரவன் தோன்றுதல்
நீல வல் இருள் நீங்கலும் , நீங்குறும்
மூலம் இல் கனவில் , திரு முற்று உற ,
ஏல நல்வினை துய்ப்பவர்க்கு ஈறுசெல்
காலம் என்னக் கதிரவன் தோன்றினான் .
2.12.19
2482 துறக்கம் நீங்கப் படையினர் உறக்கம் நீங்கல்
ஆறி நின்று அறம் ஆற்றலர் வாழ்வு எனப்
பாறி வீந்தது செல்வம் ; பரிந்திலர்
தேறி , முந்தைத் தம் சிந்தையர் ஆயினார் ,
மாறி வந்து பிறந்து அன்ன மாட்சியார் .
2.12.20
2483 சேனை எழுந்து பாலையை யடைதல்
காலை என்று எழுந்தது ; கண்டு , வானவர் ,
'வேலை ' என்று , 'அனிகம் ' என்று ஏங்கி விம்முறச்
சோலையும் கிரிகளும் சுண்ணமாய் எழப்
பாலை சென்று , அடைந்தது பரதன் சேனை ஏ .
2.12.21
2484 சேனை பாலையைக் கடத்தல் (2484-2486)
எழுந்தது துகள் ; அதின் , எரியும் வெய்யவன்
அழுந்தினன் , அவிப்ப அரும் வெம்மை ஆறினான் ;
பொழிந்தன கரி மதம் , பொடி வெங் கானகம்
இழிந்தன , வழி நடந்து ஏற தொணாமை ஏ .
2.12.22
2485 வடி உடை அயில் படை மன்னர் வெண் குடை
செடி உடை நெடு நிழல் செய்த ; தீப் பொதி
படி உடைப் பரல் உடைப் பாலை , மேல் உயர்
கொடி உடைப் பந்தரின் , குளிர்ந்தது எங்குமே .
2.12.23
2486 'பெருகிய செல்வம் நீ பிடி ' என்றாள் வயின்
திருகிய சீற்றத்தால் செம்மையாய் , நிறம்
கருகிய அண்ணலைக் கண்டு , காதலின்
உருகிய , தளிர்த்தன உலவை ஈட்டமே .
2.12.24
2487 சேனை சித்திரகூடம் சேர்தல்
வன் தெறு பாலையை மருதம் ஆம் எனச்
சென்றது , சித்திரகூடம் சேர்ந்தது ஆல் ;
ஒன்று உரைத்து , 'உயிரினும் ஒழுக்கம் நன்று ' எனப்
பொன்றிய புரவலன் பொரு இல் சேனையே .
2.12.25
2488 பரதன் சேனையை இலக்குவன் காணுதல் (2488-2489)
தூளியின் படலையும் , துரகம் , தேரொடு ,
மூள் இருஞ் சினக் கரி முழங்கும் ஓதையும் ,
ஆள் இருங் குழுவினர் ஆரவாரமும் ,
'கோள் இரும் படை இது ' என்று உணரக் கூறவே .
2.12.26
24897 எழுந்தனன் இளையவன் , ஏறினான் நிலம்
கொழுந்து உயர்ந்து அனையது ஓர் நெடிய குன்றின்மேல் ,
செழும் திரைப் பரவையைச் சிறுமை செய்த அக்
கழுந்து உடை வரி சிலைக் கடலை நோக்கினான் .
2.12.27
2490 இலக்குவன் சீற்றம் கொள்ளல்
'பரதன் , இப் படை கொடு , பார் கொண்டான் , மறம்
கருதி , உள் கிடந்தது ஓர் கறுவு காதலால் ,
விரதம் உற்று இருந்தவன் மேல் , வந்தான் ; இது
சரதம் , மற்று இலது ' எனத் தழங்கு சீற்றத்தான் .
2.12.28
2491 இலக்குவன் இராமனை அடைதல்
குதித்தனன் பாரிடைக் குவடு நீறு எழ
மிதித்தனன் , இராமனை விரைவின் எய்தினான் ,
'மதித்திலன் , பரதன் நின்மேல் வந்தான் , மதில்
பதிப் பெருஞ் சேனையின் பரப்பினான் ' எனா .
2.12.29
2492 இலக்குவன் போர்க் கோலம் கொள்ளல்
கட்டினன் சுரிகையும் கழலும் ; பல் கணைப்
புட்டிலும் பொறுத்தனன் ; கவசம் பூட்டு அமைத்து
இட்டனன் ; எடுத்தனன் வரிவில் ; ஏந்தலைத்
தொட்டு அடி வணங்கி நின்று , இனைய சொல்லினான் .
2.12.30
2493 இலக்குவன் வீரவுரை பகர்தல் (2493-2504)
'இருமையும் இழந்த அப் பரதன் ஏந்து தோள்
பருமையும் , அன்னவன் படைத்த சேனையின்
பெருமையும் , நின் ஒரு பின்பு வந்த என்
ஒருமையும் கண்டு , இனி உவத்தி உள்ளம் நீ . '
2.12.31
2494 'படர் எலாம் படப் படும் பரும யானையின்
திடர் எலாம் உருட்டின , தேரும் ஈர்த்தன ,
குடர் எலாம் திரைத்தன , குருதி ஆறுகள்
கடர் எலாம் மடுப்பன பலவும் காண்டி ஆல் . '
2.12.32
2495 'கருவியும் , கைகளும் , கவச மார்பமும் உம் ,
உருவின உயிரினோடு , உதிரம் தோய்வு இல
திரிவன , சுடர்க் கணை , திசைக் கை யானைகள்
வெருவரச் செய்வன , காண்டி , வீர ! நீ . '
2.12.33
2496 'கோடகத் தேர்படு , குருதி தாவிய
ஆடகத் தட்டு இடை , அலகை , அற்று உகு
கேடகத் தடக்கைகள் கவ்விக் கிந்தின ,
நாடகம் நடிப்பன காண்டி , நாத ! நீ . '
2.12.34
24976 'பண் முதிர் களிறு ஒடு பரந்த சேனையின்
எண் முதல் அறுத்து , நான் இமைப்பின் நீக்கலால் ,
விண் முதுகு உளுக்கவும் , வேலை ஆடையின்
மண் முதுகு ஆற்றவும் காண்டி , வள்ளல் ! நீ . '
2.12.35
2498 ''நிவந்த வான் குருதியின் நீத்தம் நீந்தி மெய்
சிவந்த சாதகரொடு சிறு கண் கூளியும் ,
கவந்தமும் , 'உலகம் நின் கையது ஆயது ' என்று ,
உவந்தன குனிப்பன காண்டி , உம்பர் போல் . ''
2.12.36
2499 'சூழி வெம் கட கரி , துரக ராசிகள் ,
பாழி வன் புயம் அத்து இகல் வயவர் பட்டு அற ,
ஆழி வெம் குருதியால் அழிந்த வேலைகள்
ஏழும் , ஒன்றாகி நின்று இரைப்பக் காண்டி ஆல் . '
2.12.37
2500 'ஆள் அற , அலங்கு தேர் அழிய , ஆடவர்
வாள் அற , வரிசிலை துணிய , மா கரி
தாள் அறத் தலை அறப் புரவி , தாளொடும்
தோள் அற வடி கணை தொடுப்பக் காண்டியால் . '
2.12.38
2501 'தழைத்த வான் சிறையன , தசையும் கவ்வின ,
அழைத்த வான் பறவைகள் , அலங்கு பொன் வடிம்பு
இழைத்த வான் பகழி புக்கு இருவர் மார்பிடைப்
புழைத்த வான் பெருவழி போகக் காண்டியால் . '
2.12.39
2502 'ஒரு மகள் காதலின் உலகை நோய் செய்த
பெருமகன் ஏவலின் பரதன் தான் பெறும்
இரு நிலம் ஆள்கை விட்டு , இன்று , என் ஏவலால்
அரு நரகு ஆள்வது காண்டி , ஆழியாய் ! '
2.12.40
2503 '''வையகம் துறந்து வந்து அடவி வைகுதல்
எய்தியது உனக்கு ' என , நின்னை ஈன்றவள்
நைதல் கண்டு உவந்தவள் , நவையின் ஓங்கிய
கைகயன் மகள் , விழுந்து அரற்றக் காண்டியால் . ''
2.12.41
2504 ''அரம் சுட அழல் நிமிர் அலங்கல் வேலினாய் !
விரஞ்சு ஒரு நொடியில் , இவ் அனிக வேலையை
உரம் சுடு வடிக்கணை ஒன்றில் வென்று , முப்
புரம் சுடும் ஒருவனின் , பொலிவென் யான் '' என்றான் .
2.12.42
2505 இராமன் இலக்குவனை மறுத்துக் கூறல் (2505-2510)
'இலக்குவ ! உலகம் ஓர் ஏழும் ஏழும் நீ
கலக்குவன் என்பது கருதினால் , அது
விலக்குவது அரிது ; அது விளம்ப வேண்டும் ஓ ?
புலக்கு உரித்து ஒரு பொருள் புகலக் கேட்டி ஆல் '
2.12.43
2506 'நம் குலத்து உதித்தவர் , நவையின் நீங்கினார் ,
எங்கு உலப்புறுவர்கள் ? எண்ணின் , யாவரே
தம் குலத்து ஒருவரும் தருமம் நீங்கினார் ?
பொங்கு உலத் திரள் ஒடு உம் பொருத தோளினாய் ! '
2.12.44
2507 'எனைத்து உள மறை அவை இயம்பல் பாலன ,
பனை திரள் கரக் கரிப் பரதன் செய்கையே ;
அனைத்திறம் அல்லன அல்ல ; அன்னது
நினைத்திலை , என்வயின் நேய நெஞ்சின் ஆல் . '
2.12.45
2508 'பெருமகன் ஏவலின் , பிறந்த காதலின்
வரும் என நினைகையும் , மண்ணை என் வயின்
தரும் என நினைகையும் தவிரத் தானையால்
பொரும் என நினைகையும் புலமைப் பாலது ஓ ? '
2.12.46
2509 'பொன் ஒடும் பொரு கழல் பரதன் போந்தனன் ,
நல் நெடும் பெரும்படை நல்கல் அன்றியே ,
என்னொடும் பொரும் என இயம்பற் பாலதோ ?
மின் ஒடு உம் பொருவுற விளங்கும் வேலினாய் ! '
2.12.47
2510 'சேண் உயர் தருமத்தின் தேவைச் செம்மையின்
ஆணியை , அன்னது நினைக்கல் ஆகுமோ ?
பூண் இயல் மொய்ம்பினாய் ! போந்தது ஈண்டு எனைக்
காணிய ; நீ இது பின்னும் காண்டியால் ! '
2.12.48
2511 பரதனும் தம்பியும் முதலில் வருதல்
என்றனன் , இளவலை நோக்கி , ஏந்தலும்
நின்றனன் ; பரதனும் , நிமிர்ந்த சேனையைப்
'பின் தருக ' என்று , தன் பிரிவு இல் காதலின்
தன் துணைத் தம்பியும் தானும் முந்தினான் .
2.12.49
2512 இராமன் பரதனை நோக்குதல்
தொழுது உயர் கையினன் , துவண்ட மேனியன் ,
அழுது அழி கண்ணினன் , 'அவலம் ஈது ' என
எழுதிய படிவம் ஒத்து , எய்துவான் தனை ,
முழுது உணர் சிந்தையான் முடிய நோக்கினான் .
2.12.50
2513 இராமன் இலக்குவனிடம் கூறுதல்
கார்ப் பொரு மேனி அக் கண்ணன் காட்டினான் ,
'ஆர்ப்பு உறு வரி சிலை இளைய ! ஐய ! நீ ,
தேர்ப் பெருந் தானை அப் பரதன் சீறிய
போர்ப் பெருங் கோலத்தைப் பொருந்த நோக்கு ' எனா .
2.12.51
2514 இலக்குவன் கண்ணீர் வடித்து நிற்றல்
எல் ஒடுங்கிய முகத்து இளவல் நின்றனன் ,
மல் ஒடுங்கிய புயத்தவனை வைது எழும்
சொல்லொடும் சினம் அத்து ஒடும் உணர்வு சோர்தர ,
வில் ஒடு உம் கண்ணின் நீர் நிலம் அத்து வீழவே .
2.12.52
2515 தொழுதுகொண்டே பரதன் தோன்றுதல்
கோது அறத் தவம் செய்து குறிப்பின் எய்திய
நாதனைப் பிரிந்தனள் , நலத்து நீங்கினாள் ,
வேதனைத் திருமகள் மெலிகின்றாள் விடு
தூது எனப் பரதனும் தொழுது தோன்றினான் .
2.12.53
2516 பரதன் இராமனடியில் விழுதல்
'அறம்தனை நினைந்திலை ! அருளை நீத்தனை !
துறந்தனை முறைமையை ! ' என்னும் சொல்லினான் ,
மறந்தனன் , மலர் அடி வந்து வீழ்ந்தனன் ,
இறந்தனன் தாதையை எதிர்கண்டு என்னவே .
2.12.54
2517 இராமனும் அழுதல்
உண்டு கொல் உயிர் என ஒடுங்கினான் உருக்
கண்டனன் , நின்றனன் கண்ணன் , கண் எனும்
புண்டரீகம் பொழி புனல் அவன் சடா
மண்டலம் நிறைந்துபோய் வழிந்து சோரவே .
2.12.55
2518 இராமன் பரதனைத் தழுவுதல்
அயா உயிர்த்து , அழு கண் நீர் அருவி மார்பிடை
உயா உற திரு உளம் உருகப் புல்லினான் ,
நியாயம் அத்தனைக்கும் ஓர் நிலயம் ஆயினான் ,
தயா முதல் அறம் அத்து இன் ஐ தழீஇயது என்னவே .
2.12.56
2519 இராமன் தந்தையின் நலத்தை வினாவுதல்
புல்லினன் நின்று , அவன் புனைந்த வேடம் அத்து ஐ
பல் முறை நோக்கினான் , பலவும் உன்னினான் ;
'அல்லலின் அழுங்கினை , ஐய ! ஆள் உடை
மல் உயர் தோளினான் வலியன் ஓ ? ' என்றான் .
2.12.57
2520 தந்தை இறந்ததைப் பரதன் கூறுதல்
அரியவன் உரைசெயப் பரதன் , 'ஐய ! நின்
பிரிவு எனும் பிணியினால் , என்னைப் பெற்ற அக்
கரியவள் வரம் எனும் காலன் ஆல் , தனக்கு
உரிய மெய் நிறுவிப் போய் , உம்பரான் ' என்றான் .
2.12.58
2521 இராமன் மயங்கி விழுதல்
'விண் இடை அடைந்தனன் ' என்ற வெய்ய சொல் ,
புண் இடை அயில் எனச் செவி புகாமுனம் ,
கண் ஒடு மனம் சுழல் கறங்கு போல ஆய் ,
மண் இடை விழுந்தனன் வானின் உம்பரான் .
2.12.59
2522 தந்தை இறந்தமைக்கு இராமன் புலம்பல் (2522-2529)
இரு நிலம் சேர்ந்தனன் இறை , உயிர்த்திலன் ,
உரும் இனை அரவு என உணர்வு நீங்கினான் ;
அருமையின் உயிர்வர அயாவுயிர்த்து , அகம்
பொருமினன் பல் முறை , புலம்பினான் அரோ .
2.12.60
2523 'நந்தா விளக்கு அனைய நாயகனே ! நானிலத்தோர்
தந்தாய் ! தனி அறத்தின் தாயே ! தயாநிலையே !
எந்தாய் ! இகல் வேந்தர் ஏறே ! இறந்தனையே ?
அந்தோ ! இனி , வாய்மைக்கு ஆர் உளரே மற்று ? ' என்றான் .
2.12.61
2524 'சொல் பெற்ற நோன்பின் துறையோன் அருள் வேண்டி ,
நல் பெற்ற வேள்வி , நவை நீங்க , நீ இயற்றி ,
என் பெற்று , நீ பெற்றது இன் உயிர் போய் நீங்கல் ஓ ?
கொல் பெற்ற வெற்றிக் கொலை பெற்ற கூர் வேலோய் ! '
2.12.62
2525 'மன் உயிர்க்கு நல்கு உரிமை
        மண் பாரம் நான் சுமக்கப்
பொன் உயிர்க்கும் தாரோய் !
        பொறை உயிர்த்த ஆறு இதுவோ ?
உன் உயிர்க்கும் கூற்றாய்
        உலகு ஆள உற்றேன் ஓ ?
மின் உயிர்க்கும் தீவாய்
        வெயில் உயிர்க்கும் வெள் வேலோய் ! '
2.12.63
2526 'எம் பரத்தது ஆக்கி அரசுரிமை , இந்தியங்கள்
தம் பரத்தில் வீழாத் தவம் இழைத்த ஆறு இது ஓ ?
சம்பரப் பேர்த் தானவனைத் தள்ளிச் சதமகற்கு , அன்று ,
அம்பரத்தின் நீங்கா அரசு அளித்த ஆழியாய் ! '
2.12.64
2527 'வேண்டும் திறத்தாரும் வேண்டா அரசாட்சி
பூண்டு , இவ் உலகுக்கு இடர் கொடுத்த புல்லனேன் ,
மாண்டு முடிவது அல்லால் , மாயா உடம்பு இது கொண்டு ,
ஆண்டு வருவது இனி , யார் முகத்தே நோக்கவோ ? '
2.12.65
2528 'தேன் அடைந்த சோலைத்
        திருநாடு கைவிட்டுக்
கான் அடைந்தேன் என்னத்
        தரியாது , காவல ! நீ
வான் அடைந்தாய் ; இன்னம்
        இருந்தேன் நான் , வாழ்வு உகந்து ஏ ;
ஊன் அடைந்த தெவ்வர்
        உயிர் அடைந்த ஒள் வேலோய் ! '
2.12.66
2529 'வண்மையும் , மானமும் , வானவர்க்கும் பேர்க்ககிலாத்
திண்மையும் , செங்கோல் நெறியும் , திறம்பாத
உண்மையும் , எல்லாம் உடனே கொண்டு ஏகினை ஏ !
தண்மை தகை மதிக்கும் ஈந்த தனி குடையோய் ! '
2.12.67
2530 இராமனைப் பலரும் தாங்கித் தேற்றுதல்
என்று எடுத்துப் பற்பலவும் பன்னி , இடர் உழக்கும்
குன்று எடுத்த போலும் குவவுத் தோள் கோள் அரியை ,
வன் தட கைத் தம்பியரும் , வந்து அடைந்த மன்னவரும் ,
சென்று எடுத்துத் தாங்கினார் ; மா வதிட்டன் தேற்றினான் .
2.12.68
2531 முனிவர் மன்னர் முதலியோர் வருதல்
பன் அரிய நோன்பின் பரத்துவனே ஆதியாம்
பின்னு சடையோரும் , பேர் உலகம் ஓர் ஏழின்
மன்னவரும் , மந்திரியர் எல்லாரும் , வந்து அடைந்தார் ;
தன் உரிமைச் சேனைத் தலைவோரும் தாம் அடைந்தார் .
2.12.69
2532 வசிட்டன் பேசத் தொடங்குதல்
மற்றும் வரற்பாலர் எல்லாரும் வந்து அடைந்து ,
சுற்றும் இருந்த அமைதியினில் , துன்பு உழக்கும்
கொற்றக் குரிசில் முகம் நோக்கிக் கோ மலரோன்
பெற்ற பெருமைத் தவ முனிவன் பேசுவான் .
2.12.70
2533 வசிட்டன் மரணத்தின் உண்மையைக் கூறுதல் (2533-2539)
'''துறத்தலும் நல் அறத் துறையும் அல்லது ,
புறத்து ஒரு துணை இலை , பொருந்தும் மன்னுயிர்க்கு ,
இறத்தலும் பிறத்தலும் இயற்கை ' என்பதை
மறத்தி ஓ , மறைகளின் வரம்பு கண்ட நீ ? ''
2.12.71
2534 ''உண்மை இல் பிறவிகள் உலப்பு இல் கோடிகள்
தண்மையில் வெம்மையில் தழுவின எனும்
வண்மையை நோக்கிய , வலிய கூற்றின்பால்
கண்மையும் உளது எனக் கருதல் ஆகுமோ ? ''
2.12.72
2535 ''பெறுவதன் முன் உயிர் பிரிதல் காண்டியால் ,
மறு அறு கற்பினில் வையம் யாவையும்
அறுவதினாயிரம் ஆண்டும் ஆண்டவன்
இறுவது கண்டு , அவற்கு இரங்கல் வேண்டுமோ ? ''
2.12.73
2536 ''சீலமும் , தருமமும் சிதைவு இல் செய்கையாய் !
சூலமும் , திகிரியும் , சொல்லும் தாங்கிய ,
மூலம் வந்து உதவிய , மூவர்க்கு ஆயினும் ,
காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ ? ''
2.12.74
2537 ''கண் முதல் காட்சிய , கரை இல் நீளத்த ,
உள் முதல் பொருட்கு எலாம் ஊற்றம் ஆவன ,
மண் முதல் பூதங்கள் மாயும் என்ற போது ,
எண் முதல் உயிர்க்கு நீ இரங்கல் வேண்டும் ஓ ? ''
2.12.75
2538 ''புண்ணிய நறு நெயில் , பொரு இல் காலம் ஆம்
திண்ணிய திரியினில் , விதி என் தீயினில் ,
எண்ணிய விளக்கு அவை இரண்டும் எஞ்சினால் ,
அண்ணலே ! அவிவதற்கு ஐயம் யாவதோ ? ''
2.12.76
2539 ''இவ் உலகத்தினும் இடர் உளே கிடந்து ,
அவ் உலகத்தினும் நரகில் ஆழ்ந்து , தம்
வெவ் வினை துய்ப்பன விரிந்த யோனிகள் ,
எவ் அளவில் செல எண்ணல் ஆகுமோ ? ''
2.12.77
2540 தயரதன் விண்டுவின் உலகினை அடைந்தான் எனல்
''உண்டு கொல் இது அலது உதவி நீ செய்வது ?
எண் தகு குணத்தினாய் ! தாதை என்றலால் ,
புண்டரீகத் தனி முதற்கும் போக்கு அரு
விண்டுவின் உலகு இடை விளங்கினான் அரோ ! ''
2.12.78
2541 தந்தைக்கு நீர்க்கடன் செலுத்தக் கூறுதல் (2541-2542)
''ஐய ! நீ யாது ஒன்றும் அவலிப்பாய் அலை ;
உய் திறம் அவற்கு இனி இதனின் ஊங்கு உண்டோ ?
செய்வன வரன் முறை திருத்திச் சேந்த பின்
கையினால் ஒழுக்குதி கடன் எலாம் '' என்றான் .
2.12.79
2542 ''விண்ணு நீர் மொக்குளின் விளியும் யாக்கையை
எண்ணி நீ அழுங்குதல் இழுதைப் பாலதால் ;
கண்ணின் நீர் உகுத்தலின் கண்டது இல்லை ; போய்
மண்ணு நீர் உகுத்தி , நீ , மலர் கையால் '' என்றான் .
2.12.80
2543 இராமன் நீர்க்கடன் செலுத்துதல் (2543-2544)
என்ற பின் , ஏந்தலை ஏந்தி , வேந்தரும் ,
பொன் திணிந்து அன சடைப் புனிதனோடும் , போய்ச்
சென்றனர் செறி திரைப் புனலில் ; 'செய்க ' என ,
நின்றனர் இராமனும் , நெறியை நோக்கினான் .
2.12.81
2544 புக்கனன் புனலினில் , முழுகிப் போந்தனன் ,
தக்க நல் மறையவன் சடங்கு காட்டத் தான்
முக்கையின் நீர் விதி முறையின் ஈந்தனன் ,
ஒக்க நின்று உயிர் தொறும் உணர்வு நல்குவான் .
2.12.82
2545 இராமன் பன்னசாலைக்குத் திரும்புதல்
ஆனவன் பிற உள யாவும் ஆற்றிப் பின்
மான மந்திரத்தவர் , மன்னர் , மாதவர் ,
ஏனையர் பிறர்களும் , சுற்ற ஏகினன் ,
சானகி இருந்த அச் சாலை எய்தினான் .
2.12.83
2546 பரதன் சீதையின் காலில் விழுந்து அழுதல் (2546-2547)
எய்திய வேலையில் , தமியள் எய்திய
தையலை நோக்கினன் , சாலை நோக்கினான் ,
கைகளின் கண்மலர் புடைத்துக் கால் மிசை ,
ஐயன் , அப்பரதன் , வீழ்ந்து அரற்றினான் அரோ .
2.12.84
2547 வெம் துயர் தொடர்தர , விம்மி விம்மி , நீர்
உந்திய நிரந்தரம் , ஊற்று மாற்றில
சிந்திய , குரிசில் அச் செம்மல் சேந்த கண் ,
இந்தியங்களில் எறி கடல் உண்டு என்னவே .
2.12.85
2548 இராமன் தந்தை இறந்தமை சீதைக்குக் கூறல்
அந்நெடும் துயர் உறும் அரிய வீரனைத்
தன் நெடும் தடக்கையால் இராமன் தாங்கினான் ,
நல் நெடும் கூந்தலை நோக்கி , 'நாயகன் ,
என் நெடும் பிரிவினால் , துஞ்சினான் ' என்றான் .
2.12.86
2549 தயரதன் மாண்டது கேட்டுச் சீதை துயருறல் (2549-2550)
துண்ணொனும் நெஞ்சினாள் துளங்கினாள் , துணைக்
கண் எனும் கடல் நெடும் கலுழி கான்றிட ,
மண் எனும் செவிலிமேல் வைத்த கையினாள் ,
பண் எனும் கிளவியால் பன்னி , ஏங்கினாள் .
2.12.87
2550 கல் நகு திரள் புயக் கணவன் பின் செல ,
நல் நகர் ஒத்தது நடந்த கானமும் ;
'மன்னவன் துஞ்சினன் ' என்ற மாற்றத்தால் ,
அன்னமும் துயர் கடல் அடி வைத்தாள் , அரோ !
2.12.88
2551 சீதை நீராடி மீளுதல்
ஆயவள் தன்னை நேர்ந்து அங்கை ஏந்தினர் ,
தாயரின் , முனிவர் தம் தருமப் பன்னியர் ,
தூய நீர் ஆட்டினர் , துயரம் நீக்கினர் ,
நாயகற் சேர்த்தினர் , நவையுள் நீங்கினார் .
2.12.89
2552 தாயரும் சுமந்திரனும் வந்தடைதல்
தேன் தரும் தெரியல் அச் செம்மல் நால்வரை
ஈன்றவர் மூவரோடு , இருமை நோக்குறும்
சான்றவர் குழாம் அத்து ஒடு உம் , தருமம் நோக்கிய
தோன்றல் பால் , சுமந்திரன் தொழுது தோன்றினான் .
2.12.90
2553 தந்தை எங்கே என்று தாயரிடம் இராமன் அழுதல்
'எந்தை யாண்டையான் ? இயம்புவீர் ! ' எனா ,
வந்த தாயர் தம் வயங்கு சேவடி
சிந்தி நின்றனன் சேந்த கண்ண நீர் ,
முந்தை நான்முகத்தவற்கும் முந்தையான் .
2.12.91
2554 எல்லோரும் வருந்துதல்
தாயரும் தலைப் பெய்து தாம் தழீஇ ,
ஓய்வு இல் துன்பினால் உரறல் ஓங்கினார் ;
ஆய சேனையும் , அணங்கு அனார்களும் ,
தீயில் வீழ்ந்து தீ மெழுகின் , தேம்பினார் .
2.12.92
2555 தாயர் சீதையைத் தழுவிக்கொண்டு வருந்துதல்
பின் அவ் வீரரைப் பெற்ற பெற்றி அப்
பொன் அனார்களும் சனகன் பூவையைத்
துன்னி , மார்பு உறத் தொடர்ந்து புல்லினார் ,
இன்னல் வேலை புக்கு இழிந்து அழுந்துவார் .
2.12.93
2556 சேனையும் நகரமக்களும் எல்லோரும் வந்துசேர்தல்
சேனை வீரரும் , திரு நல் மா நகர்
மால் நை மாந்தரும் , மற்று உளோர்களும் ,
ஏனை வேந்தரும் , பிறரும் , யாவரும்
கோனை எய்தினார் , குறையும் சிந்தையார் .
2.12.94
2557 மாலை வருதல்
படம் செய் நாகம் அணை பள்ளி நீங்கினான்
இடம் செய் தொல் குலத்து இறைவன் ஆதலால் ,
தடம் செய் தேரினான் , தானும் நீரினால்
கடம் செய்வான் எனக் கடலின் மூழ்கினான் .
2.12.95
2558 மறுநாள் யாவரும் இராமனைச் சூழ்ந்திருத்தல்
அன்று தீர்ந்தபின் , அரச வேலையும் ,
துன்று செஞ்சடைத் தவரும் , சுற்றமும் ,
தன் துணைத் திருத் தம்பிமார்களும் ,
சென்று சூழ , ஆண்டு இருந்த செம்மல் தான் .
2.12.96
2559 பரதனின் விரதவேடம் குறித்து இராமன் வினாவல்
'வரதன் துஞ்சினான் ; வையம் ஆணையால்
சரதம் நின்னதே ; மகுடம் தாங்கலாய் ,
விரத வேடம் நீ என் கொல் வேண்டுவான் ?
பரத ! கூறு ' எனாப் பரிந்து கூறினான் .
2.12.97
2560 பரதன் வருந்திக் கூறுதல் (2560-2565)
என்றலும் , பதைத்து எழுந்து , கைதொழா
நின்று , தோன்றலை நெடிது நோக்கி , 'நீ
அன்றி யாவரே அறத்து உளோர் ? அதில்
பின்றுவாய் கொலாம் ? ' என்னப் பேசுவான் .
2.12.98
2561 'மனக்கு ஒன்றாதன வரத்தின் , நின்னையும்
நினக்கு ஒன்றா நிலை நிறுவி , நேமியான்
தனைக் கொன்றாள் தரும் தனையன் ஆதலால் ,
எனக்கு ஒன்றா , தவம் அடுப்பது எண்ணினால் . '
2.12.99
2562 'நோவது ஆக இவ் உலகை நோய் செய்த
பாவ காரியின் பிறந்த பாவியேன் ,
சாவது ஓர்கிலேன் , தவம் செய்வேன் அலேன் ,
யாவன் ஆகி , இப் பழி நின்று ஏறுவேன் ? '
2.12.100
2563 'நிறையின் நீங்கிய மகளிர் நீர்மையும் ,
பொறையின் நீங்கிய தவமும் , பொங்கு அருள்
துறையின் நீங்கிய அறமும் , தொல்லையோர்
முறையின் நீங்கிய அரசின் முந்துமோ ? '
2.12.101
2564 'பிறந்து நீயுடைப் பிரிவு இல் தொல் அறம்
துறந்து மாதவம் தொடங்குவாய் என்றால் ,
மறந்தும் நீதியில் திறம்பி , வாளின் கொன்று
அறம் தின்றான் என , அரசு அது ஆள்வென் ஓ ? '
2.12.102
2565 'தொகை இல் அன்பினால் இறைவன் துஞ்ச , நீ
புகையும் வெஞ்சுரம் புகுதப் புந்தியால்
வகை இல் வஞ்சனாய் அரசு வௌவ , யான்
பகைவனே கொலாம் இறவு பார்க்கின்றேன் ? '
2.12.103
2566 மீண்டு அரசாள்க எனப் பரதன் இராமனை வேண்டுதல்
'உந்தை தீமையும் , உலகு உறாத நோய்
தந்த தீவினைத் தாய் செய் தீமையும் ,
எந்தை ! நீங்க , மீண்டு அரசு செய்க ' எனாச்
சிந்தை யாவதும் தெரியக் கூறினான் .
2.12.104
2567 இராமன் பரதனை மறுத்துக் கூறுதல் (2567-2574)
சொற்ற வாசகத் துணிவு உணர்ந்த பின் ,
'இற்றதோ இவன் மனம் ! ' என்று எண்ணுவான் ,
'வெற்றி வீர ! யான் விளம்பக் கேள் ' எனா ,
முற்ற நோக்கினான் மொழிதல் மேயினான் .
2.12.105
2568 'முறையும் , வாய்மையும் , முயலும் நீதியும் ,
அறையும் மேன்மையோடு அறனும் ஆதியாம்
துறையுள் யாவையும் , சுருதி நூல் விடா
இறைவர் ஏவலால் இயைவ காண்டியால் . '
2.12.106
2569 'பரவு கேள்வியும் , பழுது இல் ஞானமும் ,
விரவு சீலமும் , வினையின் மேன்மையும் ,
உர விலோய் ! தொழற்கு உரிய தேவரும் ,
குரவரே எனப் பெரிது கோடி ஆல் . '
2.12.107
2570 'அந்த நல் பெருங் குரவர் ஆர் எனச்
சிந்தை தேர்வு உற தெரிய நோக்கினால் ,
தந்தை தாயர் என்று இவர்கள் தாம் அலால் ,
எந்தை ! கூற வேறு எவரும் இல்லை ஆல் . '
2.12.108
2571 'தாய் வரம் கொளத் தந்தை ஏவலால்
மேய நம் குலத் தருமம் மேவினேன் ;
நீ வரம் கொளத் தவிர்தல் நீர்மையோ ?
ஆய்வு அரும் புலத்து அறிவு மேவினாய் ! '
2.12.109
2572 'தனையர் ஆயினார் தந்தை தாயரை
வினையின் நல்லது ஓர் இசையை வேய்தலோ ,
நினையல் ஓவிடா நெடிய வன் பழி
புனிதலோ , ஐய ! புதல்வர் ஆதல்தான் ? '
2.12.110
2573 'இம்மை பொய் உரைத்து இவறி , எந்தையார்
அம்மை வெம்மை சேர் நரகம் ஆள , யான்
கொம்மை வெம் முலைக் குவையின் வைகி வாழ்
செம்மை சேர் நிலம் அத்து அரசு செய்வெனோ ? '
2.12.111
2574 'வரன் நில் உந்தை சொல் மரபினால் , உடைத்
தரணி நின்னது என்று இயைந்த தன்மையால் ,
உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால் ,
அரசு நின்னதே , ஆள்க ' என்ன வே .
2.12.112
2575 பரதன் இராமனை மீண்டும் முடிபுனைய வேண்டுதல் (2575-2576)
'முன்னர் வந்து உதித்து , உலகம் மூன்றினும்
நின்னை ஒப்பு இலா நீ பிறந்த பார்
என்னது ஆகில் , யான் இன்று தந்தனென் ;
மன்ன ! போந்து நீ மகுடம் சூடு ' எனா .
2.12.113
2576 'மலங்கி வையகம் வருந்தி வைக , நீ ,
உலம் கொள் தோள் உனக்கு , உறுவ செய்தி ஓ ?
கலங்குறா வணம் காத்தி போந்து ' எனாப்
பொலம் குலாவு தாள் பூண்டு , வேண்டினான் .
2.12.114
2577 பரதனை அரசாளும்படி இராமன் ஆணையிடுதல் (2577-2580)
'பசைந்த சிந்தை நீ பரிவின் வையம் என்
வசம் செய்தால் , அது முறைமையோ ? வசைக்கு
அசைந்த எந்தையார் அருள , அன்று , நான் ,
இசைந்த ஆண்டு எலாம் இன்றொடு ஏறும் ஓ ? '
2.12.115
2578 'வாய்மை என்னும் ஈது அன்றி , வையகம்
தூய்மை என்றும் ஒன்று உண்மை சொல்லும் ஓ ?
தீமை தான் அதில் தீர்தல் ; அன்றியே ,
ஆய் , மெய் ஆக , வேறு அறையல் ஆவது ஏ ? '
2.12.116
2579 'எந்தை ஏவ , ஆண்டு ஏழொடு ஏழ் எனா
வந்த காலம் நான் வனத்துள் வைக , நீ ,
தந்த பாரகம் தன்னை , மெய்ம்மையால்
அந்த நாள் எலாம் ஆள் , என் ஆணை , ஆல் . '
2.12.117
2580 'மன்னவன் இருக்க ஏ உம் ,
        ''மணி அணி மகுடம் சூடுக ''
என்ன , யான் இயைந்தது , அன்னான்
        ஏயது மறுக்க அஞ்சி ;
அன்னது நினைந்து நீ என்
        ஆணையை மறுக்கல் ஆம் ஓ ?
சொன்னது செய்தி , ஐய !
        துயர் உழந்து அயரல் ! ' என்றான் .
2.12.118
2581 வசிட்டன் கூறத் தொடங்குதல்
ஒள்ளியோன் இனைய எல்லாம்
        உரைத்தலும் , உரைக்கல் உற்ற
பள்ளம் நீர் வெள்ளம் அன்ன
        பரதனை விலக்கிப் பண்டு
தெள்ளிய குலத்தோர் செய்கை
        சிக்கு அறச் சிந்தை நோக்கி ,
'வள்ளியோய் ! கேட்டி ' என்னா ,
        வசிட்ட மா முனிவன் சொன்னான் .
2.12.119
2582 வசிட்டன் இராமன் ஆளுதலே முறை எனல் (2582-2587)
'கிளர் அகன் புனலுள் நின்று , அரி , ஓர் கேழல் ஆய் ,
இளை எனும் திருவினை ஏந்தினான் அரோ ,
உளைவு அரும் பெருமை ஓர் எயிற்றின் உள் புரை
வளர் இளம் பிறை இடை மறுவின் தோன்றவே . '
2.12.120
2583 'ஆதிய அமைதியின் இறுதி , ஐம்பெரும்
பூதமும் வெளி ஒழித்து எவையும் புக்க பின்
நாதன் அவ் அகன் புனல் நல்கி , நண்ணரும்
சோதி ஆம் தன்மையின் துயிறல் மேயினான் . '
2.12.121
2584 'ஏற்ற இ தன்மையின் , அமரர்க்கு இன் அமுது
ஊற்றுடைக் கடல்வணன் உந்தி உந்திய
நூற்று இதழ்க் கமலம் அத்து இன் , நொய்தின் யாவையும்
தோற்றுவித்து உதவிட , முதல்வன் தோன்றினான் . '
2.12.122
2585 'அன்று அவன் உலகினை அளிக்க , ஆகியது
உன் தனிக் குலம் முதல் ; உள்ள வேந்தர்கள்
இன்று அளவினும் முறை இகந்து உளார் இலை ;
ஒன்று உளது உரை இனம் , உணரக் கேட்டி யால் . '
2.12.123
2586 'இத இயல் இயற்றிய குரவர் யாரினும்
மத இயல் களிற்றினாய் ! ''மறு இல் விஞ்சைகள்
பதவிய இருமையும் பயக்கப் பண்பினால்
உதவிய ஒருவனே உயரும் '' என்பரால் . '
2.12.124
2587 'என்றலால் யான் உனை எடுத்து விஞ்சைகள்
ஒன்று அலாதன பல உதவிற்று உண்மையால் ,
அன்று எனது , இன்று எனது ஆணை , ஐய ! நீ
நன்று போந்து அளி , உனக்கு உரிய நாடு ' என்றான் .
2.12.125
2588 இராமன் வசிட்டனை மறுத்து வினாவுதல் (2588-2591)
'கூறிய முனிவனைக் குளிர்ந்த தாமரை
சீறிய கைகளால் தொழுது , செங்கணான் ,
'ஆறிய சிந்தனை அறிஞ ! ஒன்று உரை
கூறுவது உளது ' எனக் கூறல் மேயினான் .
2.12.126
2589 'சான்றவர் ஆக , தன் குரவர் ஆக , தாய்
போன்றவர் ஆக , பொன் புதல்வர் ஆக தான் ,
தேன் தரு மலர் உளான் சிறுவ ! செய்வென் என்று
ஏன்றபின் , அவ் உரை மறுக்கும் ஈட்டதோ ? '
2.12.127
2590 'தாய் பணித்து உவந்தன , தந்தை செய்கென
ஏய , எ பொருள்களும் இறைஞ்சி மேல் கொளா
தீய அப் புலையனின் , செய்கை தேர்கிலா
நாய் எனத் திரிவது நல்லது அல்லதோ ? '
2.12.128
2591 'முன் உறப் பணித்தவர் மொழியை யான் என
சென்னியில் கொண்டு , ''அது செய்வென் '' என்றதன்
பின் உறப் பணித்தனை , பெருமையோய் ! எனக்கு
என் இனிச் செய்வகை ? உரைசெய் ஈங்கு ' என்றான் .
2.12.129
2592 பரதன் தானும் காடுறைவதாகக் கூறல்
முனிவனும் 'உரைப்பது ஓர் முறைமை கண்டிலம்
இனி ' என இருந்தனன் ; இளைய மைந்தனும் ,
'அனையதேல் ஆள்பவர் ஆள்க நாடு ; நான்
பனி படர் காடு உடன் படர்தல் மெய் ' என்றான் .
2.12.130
2593 இமையவர் விசும்பில் நின்று பரதன் நாடாள வேண்டும் எனல் (2593-2594)
அ வழி இமையவர் அறிந்து கூடினார் ,
'இ வழி இராமனை இவன் கொண்டு ஏகுமேல் ,
செம் வழித்து அன்று நம் செயல் ' என்று எண்ணினார் ,
கவ்வையர் , விசும்பு இடை கழறல் மேயினார் .
2.12.131
2594 'ஏத்தரும் பெரும் குணத்து இராமன் இவ் வழி
போத்து அரும் தாதை சொல் புரக்கும் பூட்சியான்
ஆத்த ஆண்டு ஏழினோடு ஏழும் அந் நிலம்
காத்தல் உன் கடன் ; இவை கடமை ' என்றனர் .
2.12.132
2595 பதினான்காண்டும் ஆளும்படி இராமன் கட்டளையிடுதல்
வானவர் உரைத்தலும் , 'மறுக்கற்பாலது அன்று ;
யான் உனை இரந்தனென் , இனி என் ஆணையால்
ஆனது ஓர் அமைதியின் அளித்தி பார் ' எனா ,
தான் அவன் துணை மலர்த் தடக்கை பற்றினான் .
2.12.133
2596 பதினான்காண்டில் திரும்பாவிடில் பரதன் சாவேன் எனல்
'ஆம் எனில் , ஏழ் இரண்டு ஆண்டில் , ஐய ! நீ
நாம நீர் நெடு நகர் நண்ணி நானிலம்
கோ முறை புரிகிலை என்னின் , கூர் எரிச்
சாம் , இது சரதம் ! நின் ஆணை சாற்றினேன் ! '
2.12.134
2597 இராமன் இசைதல்
என்பது சொல்லிய பரதன் , யாதும் ஓர்
துன்பிலன் அவனது துணிவை நோக்கினான் ;
அன்பினன் , உருகினன் , 'அன்னது ஆக ' என்றான் ,
தன்புகழ் தன்னினும் பெரிய தன்மையான் .
2.12.135
2598 இராமன் மரவடி நல்குதல்
விம்மினன் பரதனும் , வேறு செய்வது ஒன்று
இன்மையின் , 'அரிது ' என எண்ணி ஏங்குவான் ,
'செம்மையின் திரு வடி தலம் தந்தீக ' என
எம்மையும் தருவன இரண்டும் நல்கினான் .
2.12.136
2599 பரதன் மர அடிகளை தலைமேற்கொண்டு செல்லுதல்
அடி தலம் இரண்டையும் அழுத கண்ணினான் ,
முடி தலம் இவை என முறையின் சூடினான் ;
படி தலம் அத்து இறைஞ்சினன் , பரதன் போயினான் ,
பொடித்தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான் .
2.12.137
2600 பரதனுடன் வந்த யாவரும் திரும்புதல் (2600-2601)
ஈன்றவர் முதலிய எண் இல் சுற்றமும் ,
சான்றவர் குழுவொடு தவம் அத்து உளோர்கள் உம் ,
வான் தரு சேனையும் , மற்றும் சுற்றுற ,
மூன்று நூல் கிடந்த தோள் முனியும் போயினான் .
2.12.138
2601 பண்டை நூல் தெரி பரத்துவனும் போயினான் ;
மண்டு நீர் நெடு நகர் மாந்தர் போயினார் ;
விண்டு உறை தேவரும் விலகிப் போயினார் ;
கொண்டல் தன் ஆணையால் குகனும் போயினான் .
2.12.139
2602 பரதன் அயோத்திநகருட் புகாதிருத்தல்
பாதுகம் தலைக்கொடு பரதன் பைம் புனல்
மோது கங்கையின் கரை கடந்து முந்தினான் ,
போது உகும் கடி பொழில் அயோத்தி புக்கிலன் ,
ஓது கங்குலில் நெடிது உறக்கம் நீங்கினான் .
2.12.140
2603 இராமன் பாதுகை அரசாளப் பரதன் தொழுதிருத்தல்
நந்தி அம் பதி இடை , நாதன் பாதுகம்
செந் தனிக் கோல் முறை செலுத்தச் சிந்தையான்
இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான் ,
அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான் .
2.12.141
2604 இராமனும் இலக்குவனும் சீதையும் தெற்கே செல்லுதல்
'குன்றினில் இருந்தனன் என்னும் கொள்கையால்
நின்றவர் நலிவரால் நேயம் அத்து ஆல் ' எனாத்
தன் துணைத் தம்பியும் , தானும் , தையலும் ,
தென் திசை நெறியினைச் சேறல் மேயினான் .
2.12.142

---------------
அயோத்தியா காண்டம் முற்றிற்று

This file was last updated on 16 June 2012
.